Section A01 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 15 alphabetical subsections

  1. அ section: 112 entries
  2. ஆ section: 55 entries
  3. இ section: 95 entries
  4. ஈ section: 22 entries
  5. உ section: 115 entries
  6. ஊ section: 9 entries
  7. எ section: 109 entries
  8. ஏ section: 19 entries
  9. ஐ section: 26 entries
  10. ஒ section: 39 entries
  11. ஓ section: 12 entries
  12. ஒள section: 6 entries
  13. க section: 82 entries
  14. ங section: 2 entries
  15. ச section: 14 entries

A01

[Version 2l (transitory): latest modification at 02:04 on 21/04/2017, Hamburg]

எழுத்து-1 (717 entries)

[TIPA file A01 (and pages 1-291 in volume printed in 2004)]

அ section: 112 entries

அ -

{Entry: A01__001}

உந்தியில் தோன்றிய உதானன் என்ற காற்று மிடற்றை அடைந்தபின், வாயை அங்காத்தலால் பிறக்கும் எழுத்து இது. இதுவே எழுத்துக்களுள் முதன்மையானது. எல்லா எழுத்துக் களும் பிறப்பதற்கும் வாயினை ஓரளவு திறத்தல் வேண்டுதலின் எல்லா எழுத்துக்களிலும் அகரம் கலந்திருக்கிறது என்பர் நச்சினார்க்கினியர் (தொ. எ. நச். 46). அகரம் உயிரெழுத்துக் களில் முதலாவது. எகரம் முதல் ஒளகாரம் ஈறான உயிர்களிலும் அகரக்கூறு கலந்துள்ளது என்பது சான்றோர் கொள்கை. தனிமெய்களைக் குறிப்பிடுமிடத்தே அகரத்தைச் சேர்த்தே ‘வல்லெழுத்தென்ப கசட தபற’ (19) என்றாற்போல ஒலித்துக் காட்டுவர் (46). அகரம் தனித்துச் சுட்டிடைச் சொல்லாக வரும் (31); அவன் - அவள் - அவர் - அது - அவை என்ற பெயர் களில் அகச்சுட்டாகவும், அக்கொற்றன் முதலிய பெயர்களில் புறச்சுட்டாகவும், ‘அத் தம்பெருமான்’ (சீவக. 221) போன்ற இடங்களில் பண்டறி சுட்டாகவும் வரும்.

வந்தன போன்ற வினைமுற்றுக்களிலும் வினைமுற்றுப் பெயர் களிலும் பலவின்பால் விகுதியாகவும் (210), வருக முதலிய வியங்கோள் வினைமுற்று விகுதியாகவும் (210), செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திலும், செய்யிய என் னும் வாய்பாட்டு வினையெச்சத்திலும் இறுதிவிகுதியாகவும் (210), ‘தன்வழிய காளை’ (சீவக. 494) போன்ற இடங்களில் அசைச்சொல்லாகவும் அகரம் நிகழும். நெடுமுதல் குறுகும் சொற்களான தாம் - நாம் - யாம் - தான் - யான் - முதலியன அகரச்சாரியை பெற்றுப் பின்னர் நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்கும் (161). எனவே, அகரம் நெடுமுதல் குறுகும் மொழி களின் ஈற்றில் சாரியையாகவும் வரும். அகரம் ஆறாம் வேற் றுமைப் பன்மை யுருபாக ‘எனகைகள்’ என்பன முதலாகவும் வரும்; வடசொற்களில் மறுதலைப் பொருளைக் காட்ட ‘அரூபம்’ என்றாற்போல முன் அடையாக வரும்; உம்மை எஞ்சிய இருபெயருள் (223) முதற்பெயர் ஆகாரஈற்றதாய இடத்தும் (உவாஅப் பதினான்கு), குறிலை அடுத்த ஆகார ஈற்றுச்சொல் முன்னரும், ஆகார ஈற்று ஓரெழுத்தொரு மொழி முன்னரும் (பலாஅக் கோடு, காஅக்குறை) எழுத்துப் பேறளபெடையாக (226) வரும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெற்று ஆன் என்றாகிய இடத்து வருமொழி மென் கணத்தில் தொடங்கு மிடத்தும் (ஆனநெய்) 232, பொருந் - வெரிந் - என்ற சொற்களின் வேற்றுமைப் புணர்ச்சியிலும் (299), எகின் என்ற சொல் வருமொழியொடு புணருமிடத்தும் (எகினக்கால், எகினச் சேவல்) 337, கன் என்ற சொல்லின் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் (கன்னக் குடம்) 346, வல் என்ற சொற்கு முன் நாய் - பலகை - என்பன வரு மிடத்தும் (வல்லநாய், வல்லப் பலகை) 374 அகரம் சாரியை யாக வரும். தொல்காப்பியனார் கூறும் அக்குச்சாரியையை நன்னூலார் அகரச் சாரிiயாகக் கொள்வர். (தொ. சூ.வி. பக். 8)

அ ஆ கங இனம் ஆயினமை -

{Entry: A01__002}

அ ஆ - என்பன இரண்டற்கும் தானம் - கண்டம்; முயற்சி - அங்காத்தல்; பொருள் - அங்கு ஆங்கு என்றல் முதலாக வருதல்;வடிவு - அ ஆ - என்ற வரிவடிவு; இவ்வாறு மாத்திரை ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம் ஆயின.

க ங - என்பன இரண்டற்கும் முயற்சி - அடிநா அடியண்ணம் சேர்தல்; அளவு - தனித்தனி அரை மாத்திரை; பொருள் - குளக் கரை, குளங்கரை - என்றல் முதலாக வருதல்; இவ்வாறு தான மும் வடிவும் ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம் ஆயின. (நன். 72 இராமா.)

அ ஆ முதலியன இனமாதல் -

{Entry: A01__003}

அ, ஆ என்பன இரண்டும், இடத்தானும் - முயற்சியானும் - அறாயிரம் ஆறாயிரம் என்னும் பொருளானும் - வடிவானும் -ஒருபுடை ஒத்து இனமாயின.

இ, ஈ என்பன இரண்டும், இடத்தானும் - முயற்சியானும் - இராயிரம் ஈராயிரம் என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ஐகாரம், இவற்றுள் இடத்தானும் முயற்சியானும் ஒத்து இகரத்தொடு கூடி இனமாயிற்று.

உ, ஊ என்பன, இடத்தானும் - முயற்சியானும் - உங்கு ஊங்கு என்னும் பொருளானும் - வடிவானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ஒளகாரம், இவற்றுள் இடத்தானும் முயற்சியானும் ஒத்து உகரத்தொடு கூடி இனமாயிற்று.

எ, ஏ என்பன, இடத்தானும் - முயற்சியானும் - எழாயிரம் ஏழாயிரம் என்னும் பொருளானும் - வடிவானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ஒ, ஓ என்பன, இடத்தானும் - முயற்சியானும் - ஒராயிரம் ஓராயிரம் என்னும் பொருளானும் - வடிவானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

க, ங இரண்டும், முயற்சியானும் - மாத்திரையானும் - குளக்கரை குளங்கரை என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ச, ஞ இரண்டும், முயற்சியானும் - மாத்திரையானும் - மச்சிகன் மஞ்சிகன் என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமா யின.

ட, ண இரண்டும், முயற்சியானும் - மாத்திரையானும் - மட்குடம் மண்குடம் என்னும் பொருளானும் - ஒரு புடை ஒத்து இனமாயின.

த, ந இரண்டும், முயற்சியானும் - மாத்திரையானும் - பாழ்த்தூறு பாழ்ந்தூறு என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ப, ம இரண்டும், முயற்சியானும் - மாத்திரையானும் - வேய்ப்புறம் வேய்ம்புறம் என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ய, ர இரண்டும், இடத்தானும் - மாத்திரையானும் - வேயல் வேரல் என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ல, வ இரண்டும், இடத்தானும் - மாத்திரையானும் - எல்லாவகை எவ்வகை என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ழ, ள இரண்டும், இடத்தானும் - மாத்திரையானும் - காழக உடையான் காளக உடையான் என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின.

ற, ன இரண்டும் முயற்சியானும் - மாத்திரையானும் - நற்கு நன்கு என்னும் பொருளானும் - ஒருபுடை ஒத்து இனமாயின. (நன். 71 மயிலை.)

‘அ’ ஆவாகத் திரியும் வடநடைப்பதம் -

{Entry: A01__004}

அதிதிமக்கள் - ஆதித்யர், தசரதன் மகன் -தாசரதி, சனகன் மகள் - சானகி, தனுவின் மக்கள் - தானவர், சகரன் மக்கள் - சாகரர். (தொ. வி. 86)

அ, இ இணைந்து இசைத்தல் -

{Entry: A01__005}

அகரமும் இகரமும் சேர்ந்து எகரமாக ஒலிக்கும் என்பர் வடநூலார். எகரத்தில் உள்ள கூட்டம் வடமொழியில் போலத் தமிழ்மொழியில் அத்துணைத் தெளிவாதல் இல்லை. வடமொழியில் உப + இந்த்ர = உபேந்த்ர முதலிய சொற்களின் சந்தியில் புணர்ச்சி தெளிவாதல் போலத் தமிழ்மொழியில் தெளிவாகக் காண்டற்கு இல்லை. சேர்க்கையினது நொய்ம்மை யால் வடமொழியில் ஏகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கையின் திண்மையால் எ, ஏ என்ற குறில்நெடில் வேறுபாடும் உளதாயிற்று. (எ. ஆ. பக். 8).

தமிழில் எகரம், இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆதலா னும், இகரஒலியின் திரிபு ஆதலானும், ‘அஇ - எ’ என்ற அமைப்புத் தமிழிற்குப் பொருந்தாது. (எ. ஆ. பக். 7).

அகரமும் இகரமும் கூடி ஐகாரம் போல ஒலிக்கும். தமிழில் அஇவனம் என்பது ஐவனம் போல ஒலிக்கும். பாகதத்தில் தைத்ய - தஇச்சோ, சைத்ர - சஇத்தோ, பைரவ - பஇரவோ எனவரும்.

தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, கை - கயி, ஐது - அயிது எனவரும். கன்னடத்திலும் இவ்வாறே பாரயிஸிதம் - பாரை ஸிதம், தேரயிஸிதம் - தேரைஸிதம், கோரயிஸிதம் - கோரை ஸிதம் என வரும். தமிழிலும் இவ்வாறே வைத்தியன் - வயித் தியன் என வரும்.

எனவே, தமிழிற்போலப் பாகதம், தெலுங்கு, கன்னடம் என்ற மொழிகளிலும் ஐகாரத்திற்குப் போலியாக அஇ வருமாறு உணரப்படும்.

ஐ என்பது அஇ என்பனவற்றின் சந்தியக்கரம் என்று கூறுதல் பொருந்தாது. மொழியிடைப்பட்ட எழுத்துக்களின் இயல்பு கூறும் தொல்காப்பிய மொழிமரபில் இச்செய்தி கூறப்பட் டிருத்தலின், இது தனியெழுத்தின் இயல்பு கூறுவதன்று. (எ, ஆ. பக். 57, 58)

‘அ இ உ முதல் தனி வருதல்’ -

{Entry: A01__006}

அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன்கண் அகரம் போலப் பின் எழுத்துக்களொடு தொடர்ந்துநின்று ஒரு பொருளை உணர்த்தாது, மலையன் என்பதன்கண் பகுதிபோல வேறுநின்று சுட்டுப்பொருள் உணர்த்தலின், அகத்து வரும் இதனையும் ‘தனிவரின்’ என்றார். (இவ்வாறே இகரஉகரங் களுக்கும் கொள்க.) (நன். 66 சங்கர.)

அ, உ இவற்றின் கூட்டம் -

{Entry: A01__007}

அகரக்கூறும் உகரக்கூறும் கலப்பதால் ஒகரம் பிறத்தல் உண்மையே யாயினும், வடமொழியில் அது தெற்றெனப் புலனாதல் போலத் திராவிடமொழிகளில் புலனாதல் இன்மை யின், அது கூறிப் பயனின்று. கங் கா + உதகம் = கங் கோதகம் என வடமொழிச்சந்தியில் அகரமும் உகரமும் ஓகரமாதல் தெளிவு. வடமொழியில் சேர்க்கையின் நொய்ம் மையால், ஓகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கை யின் திண்மையால் ஒ, ஓ எனக் குறில் நெடில் இரண்டும் உளவாயின.

அகரமும் உகரமும் கூடித் தமிழில் ஒளகாரம் போல ஒலிக்கும்.

ஒளவை - அஉவை

பௌர - பஉரோ, கௌரவ - கஉரவோ எனப் பாகதத்திலும் இதனைக் காணலாம். தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, ஒளர - அவுர, ஒள - அவு எனவரும். கன்னடத்திலும் இவ் வாறே தௌதலே - தவுதலே, கௌகுழ் - கவுகுழ் எனவரும். எனவே, பாகதத்திலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒளகாரத்திற்குப் போலியாக அஉ வரும் என்க.

தொல்காப்பிய மொழிமரபில் கூறப்படும் இப்போலி யெழுத் தமைப்பினை, அஉ என்பனவற்றின் சந்தியக்கரம் ஒள எனக் கூறல் பொருந்தாது. (எ. ஆ. பக். 57, 58, 59)

‘அஃகாக் காலையான’ -

{Entry: A01__008}

(ஆய்தம்) சுருங்கி நில்லாது நீண்ட காலத்து என்பது பொருள். (தொ. எ. 40 இள.)

(ஆய்தம்) சுருங்காத இடத்து உள்ள சொற்கள் என்பது.

(தொ. எ. 40 நச்.)

(ஆய்தம்) தான் சுருங்கி நில்லாத இடத்து (தான் அரை மாத்திரையாய் ஒலிக்காத இடத்து) (எ.கு. பக். 49)

ஆய்தம் அஃகாஇடத்து; அஃதாவது ஆய்தம் நீங்காவிடத்து (உருவினையும் இசையினையும் உணர்த்தும் குறிப்புமொழிகள் ஆய்த எழுத்தாலேயே இயலும் என்றவாறு). (எ. ஆ. பக். 40).

அஃகிய மஃகான் -

{Entry: A01__009}

மகரக் குறுக்கம். ‘மவ்வோடு, ஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’ என்பது அவிநயம். (நன். 59 மயிலை.)

‘குறள் மஃகான்’ காண்க.

அஃறிணை விரவுப்பெயர் -

{Entry: A01__010}

உயர்திணை அஃறிணை என்ற இருதிணைக்கும் பொதுவான சாத்தன் முதலிய பெயர்கள் விரவுப்பெயர்களாம். இவை உயர்திணையைச் சுட்டுமிடத்து உயர்திணை விரவுப்பெயர் எனவும், அஃறிணையைச் சுட்டும்போது அஃறிணை விரவுப் பெயர் எனவும் பெயர்பெறும். எ-டு : சாத்தன் வந்தான் - உயர்திணை விரவுப்பெயர்; சாத்தன் வந்தது - அஃறிணை விரவுப்பெயர். இஃது ஒருசாரார் கருத்து.

சாத்தன், சாத்தி, முடவன், முடத்தி - என வரும் விரவுப் பெயர்க்கண் உயர்திணைக்கு உரியவாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற ஈற்றெழுத்துக்களே, அஃறிணை ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தின எனல் வேண்டும். அஃறிணைக்கு ஒருமைப் பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறுகள் அன்றி, ஆண்பால் பெண்பால்களை உணர்த்தும் ஈறுகள் இல்லை. ஆதலின், அஃறிணை விரவுப்பெயர் என்பது, ‘உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர்’ என விரவுப்பெயரின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. தொல்காப்பியனார் ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றே மூன்றிடங்களில் (எ. 155, 157; சொ. 173) குறிப்பிட்டுள்ளார், ‘உயர்திணை விரவுப்பெயர்’ என்று அவர் யாண்டும் சுட்டா மையே, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்பது உயர்திணை விரவுப்பெயர்க்கு இனத்தைக் குறித்தது என்பது பொருந்தாமையைப் புலப்படுத்தும். இவ்வாறு உரைப்பார் நச்சினார்க் கினியர். (தொ. எ. 155)

அஃறிணை விரவுப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__011}

அஃறிணை விரவுப்பெயர் அவ்வழி, வேற்றுமை என்ற இரு திறத்துப் புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் இயல்பாக முடியும்.

எ-டு : சாத்தன் குறியன், மாண்டான், வலியன், அடைந் தான்; சாத்தி குறியள், மாண்டாள், வலியள், அடைந்தாள் என அவ்வழிக்கண்ணும்,

சாத்தன் கை, மாட்சி, வன்மை, அழகு; சாத்தி கை, மாட்சி, வன்மை, அழகு என வேற்றுமைக் கண்ணும்

வன்மை - மென்மை - இடைமை - உயிர் - என்ற நாற்கணங் களும் வந்துழியும் இயல்பாயினவாறு.

னகர ஈற்று விரவுப்பெயரின் முன் தகர நகர முதல் மொழிகள் வரின், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், றகர னகர மாகத் திரியும்.

எ-டு : சாத்தன் + தீயன், நல்லன் = சாத்தன்றீயன், சாத்த னல்லன் சாத்தன் + தீமை, நன்மை = சாத்தன்றீமை, சாத்தனன்மை (தொ. எ. 155 நச்.)

கப்பி + தந்தை = கப்பிந்தை, சென்னி + தந்தை = சென்னிந்தை என, இயல்பாகாது வருமொழிமுதல் தகரஉயிர்மெய் கெட்டுப் புணர்ந்தவாறு. (தொ. எ. 246 நச்.)

அக்குச்சாரியை புணருமுறை -

{Entry: A01__012}

எவ்வகைப்பட்ட பெயர்ச்சொல் முன்னரும் வல்லெழுத்து வருமொழி முதற்கண்வரின், இடையில் வரும் அக்குச் சாரியை, அகரம் நீங்கிய ஏனைய எழுத்துக்களெல்லாம் கெடப் புணரும். இது வருமொழி இயல்புகணம் வரினும் ஒக்கும்.

எ-டு : குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை

மன்று + அக்கு + பெண்ணை = மன்றப்பெண்ணை

தமிழ் + அக்கு + நூல் = தமிழநூல் - மென்கணம்

தமிழ் + அக்கு + யாழ் = தமிழயாழ் - இடைக்கணம்

தமிழ் + அக்கு + அரையர் = தமிழவரையர் - உயிர்க் கணம் (தொ. எ. 128 நச்.)

அக்குச் சாரியை பெறுவன -

{Entry: A01__013}

பொருட்புணர்ச்சிக்கண், ஊகார ஈற்று ஊ என்னும் பொருட் பெயர் னகரச் சாரியையோடு அக்குச்சாரியை பெறுதலு முண்டு.

ஊ + ன் + அக்கு + குறை = ஊனக்குறை - எனவரும். (தொ. எ. 269 நச்.)

மகரஈற்று ஈம் - கம் - என்ற பெயர்கள், நாற்கணமும் வருமொழி முதற்கண் வரின், தொழிற்பெயர் போல முன்பு பெற்ற ஈமு - கம்மு - என்ற நிலைமொழித் தொழிலாகிய உகரம் கெட்டு, ஈம்+அக்கு + நெருப்பு = ஈமநெருப்பு, கம் + அக்கு + சாடி = கம்மச் சாடி எனப்புணரும். (தொ. எ. 329)

ழகரஈற்றுத் தாழ் என்ற பெயர் கோல் என்ற வருமொழி யொடு புணருமிடத்து இடையே அக்குச்சாரியை வரும். தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல். இது தாழைத் திறக்கும் கோல் எனப் பொருள்படும். (தொ. எ. 384)

தமிழ் என்ற ழகரஈற்றுச் சொல்லும், நாற்கணமும் வருமொழி யாகப் புணருமிடத்து வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறும். தமிழ் + அக்கு + சேரி = தமிழச்சேரி; தமிழ் + அக்கு + நாடு = தமிழநாடு. (தொ.எ. 385)

மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாத சில குற்றியலுகர ஈற்றுப் பெயர்முன் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருமொழி நிகழின், அக்குச்சாரியை வருதலுமுண்டு. குன்று + அக்கு + கூகை = குன்றக் கூகை; மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை. (தொ.எ. 418)

உருபுபுணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறுமாறு இல்லை.

அகக்கருவி -

{Entry: A01__014}

எழுத்ததிகாரம் குறிப்பிடும் புணர்ச்சியாகிய செய்கைக்கு உதவும் கருவி வகைகள் நான்கனுள் அகக்கருவி என்பதும் ஒன்று.

எழுத்துக்களின் இலக்கணமும் மொழியின் இலக்கணமும் தொன்றுதொட்டுப் புணர்ச்சிக்குக் கருவியாதலின், நிலை மொழி வருமொழிப் புணர்ச்சிக்கண் நிலைமொழியீறும் வருமொழிமுதலும் அத்தொடரின் அகத்தே அமைதலின், நிலைமொழியீற்றெழுத்தைப் பற்றிய விதிகளைக் கூறும் நூற்பாக்களும் வருமொழி முதலெழுத்தைப் பற்றிய விதி களைக் கூறும் நூற்பாக்களும் அகக்கருவியாகும்.

‘எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா’ (தொ. எ. 272) என்பது நிலைமொழியீறு பற்றியது.

‘அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதல் ஆகி // உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே; // அவைதாம், // கசதப என்றா நமவ என்றா // அகர உகரமோடு அவையென மொழிப’ (தொ. எ. 170) என்பது வருமொழி முதல் பற்றியது. (தொ. எ. 1 நச். உரை)

அகச்செய்கை -

{Entry: A01__015}

எழுத்ததிகாரத்துக் கூறப்படும் செய்கையாவது புணர்ச்சியாம். அச்செய்கையின் நான்கு வகைகளுள் அகச்செய்கை என்பதும் ஒன்று. உயிரீறு, புள்ளியீறு, குற்றியலுகர ஈறு ஆகியவை வருமொழி முதலொடு புணரும்வழி நிகழும் புணர்ச்சி நிலையைக் குறிப்பிடும் இயல்கள் ‘அகத்தோத்து’ எனப்படும். நிலைமொழியீறு வருமொழியில் வன்கணம் முதலிய வரும் வழி இன்னஇன்னவாறு முடியும் என்று கூறுவது அகச் செய்கையாம்.

எ-டு: பொன் + குடம் = பொற்குடம் (தொ. எ. 332)

நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்தது என்று கூறுதல் போல்வன அகச்செய்கையாம். (தொ. எ. 1. நச். உரை)

‘அகத்து எழு வளி இசை’ -

{Entry: A01__016}

மூலாதாரத்து எழுகின்ற காற்றின் ஓசை ‘அகத்தெழு வளியிசை’ எனப்படும். (தொ. எ. 102 நச். உரை)

உள் நின்று எழும் வளியான் ஆகிய இசை. (தொ.எ. இள. உரை)

(உந்தியில் தோன்றும் ஒலியைப் பரை என்றும், அங்கிருந்து இதயத்தை அடைந்த நாதரூபமான ஒலிவடிவத்தைப் பைசந்தி என்றும், பிறர்செவியில் கேட்கப்பெறாத மெல்லோசை யாய்ச் சொல்லுவான் தன்னுள் உணர்தற்கு ஏதுவாய்ப் பைசந்திக்கு மேல் இதயத்திலிருந்து எழும் நாதரூபமான ஒலியை மத்திமை என்றும், இம்மூன்றும் பிறர் கேட்குமாறு செவிப்புலனுக்கு எட்டா நிலைமைய ஆதலின் இவை ‘அகத்தெழு வளியிசை’ என்றும் கூறப்பட்டன.)

‘அகத்தெழு வளியிசை’ -

{Entry: A01__017}

நாத தத்துவமாக எழுந்து மூலாதாரம் முதல் ஆஞ்ஞை ஈறாக அகத்தே திரிதரும் ஓசை. தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூவகையான இடங்களில் நின்று ஓசைக்காற்றினால் எழும் எனப்பட்ட எல்லா எழுத்துக்களையும் பல் - இதழ் - நா - மூக்கு - அண்ணம் - எனப்பட்ட ஐவகை உறுப்புக்களின் இடமாகக் கிளந்து அவ்வவற்றின் பிறப்பு இயல்புகளொடு செவிப்புலனாக வெளிப்படுத்துமிடத்து, அகத்து எழுகின்ற வளிஇசை ஒன்றற் கொன்று முரண்பட்டு வருதலைக் குற்றமற ஆராய்ந்து மாத்திரையான் அளவிட்டு மேற்கோடல், நிறைமொழி மாந்தராகிய அந்தணரது மந்திரநூலின்கண்ணது. இயற்றமிழ் எழுத்துக்களுக்கு இலக்கணம் கூறும் இந்நூலில் அதனைக் கூறாமல், புறத்துச் செவிப்புலனாக எழுந்து தம் உருவம் தோன்ற இசைக்கும் எழுத்தோசைகளின் அளவையே தாம் கூறியுள்ளதாகத் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.

யோக நிலையில் அமர்ந்த முனிவர் மன்பதை உய்யும் பொருட்டு அகத்தெழு வளியிசையை உருவேற்றுவர். அம் மந்திர ஒலிகள் இடத்திற்கு ஏற்ப மாத்திரை வேறுபடும். அவைதாமும் அவர் அகச்செவிக்குள் புலனாம். (தொ. எ. 102 ச. பால.)

அகப்புறக் கருவி -

{Entry: A01__018}

இது கருவிவகை நான்கனுள் ஒன்று. புணர்ச்சிக்குரிய திரிபுகள் இவை என்பதும், இயல்புபுணர்ச்சி திரிபுபுணர்ச்சி வகைகளும், நிலைமொழி யீற்றில் இணையும் சாரியை வருமொழியொடு புணருங்கால் அடையும் திரிபுகளும் ஆகி, நிலைமொழி வருமொழிகள் புணர்தற்கு ஏற்றனவாய் வரும் விதிகள் பற்றிய நூற்பாக்கள் அகப்புறக் கருவிகளாம்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்துள் நான்காம் இயலாகிய புணரியல், நிலைமொழி - வருமொழி - இயல்புபுணர்ச்சி - திரிபுபுணர்ச்சி - சாரியைகள் - அவை இணையுமாறு - உடம்படு மெய் - முதலியன பற்றிக் கூறலின், அவ்வியல் அகப்புறக் கருவியாம். (தொ. எ. 1 நச். உரை)

அகப்புறச் செய்கை -

{Entry: A01__019}

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. இது நிலைமொழியீறு பெறும் முடிவைக் கூறாது நிலைமொழியீறு பெற்றுவரும் எழுத்து முதலியவற்றின் முடிவு பற்றிக் கூறும் புணர்ச்சி யிலக்கணம் பற்றிய நூற்பாக்களின் இயல்பைச் சுட்டுவ தாகும்.

அது, புள்ளியீற்றுள் உகரம் பெறும் என்று விதித்த ஞ - ண - ந - ம - ல - வ - ள - ன - என்ற எட்டு ஈறுகளும் வருமொழி முதலில் யகரமோ உயிரோவரின், அவ்வுகரம் பெறா என்று விலக்குவது போல்வது.

‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி

யகரமும் உயிரும் வருவழி இயற்கை’ (தொ. எ. 163. நச்.)

எ-டு : உரிஞுக்கடிது என உகரம் பெறும் ஞகரஈறு, அவ்வுகரம் பெறாமல் உரிஞ் அனந்தா என்றாற்போல வருவது. இஃது ஈறறெழுத்தின் விதி ஆகாது, ஈற்றெழுத்துப் பெற்றுவரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின், அகப்புறச் செய்கை ஆயிற்று.

நகரஈறு உகரம் பெறும் என்பதனை விலக்கி, வேற்றுமைக்கண் உகரம் கெட அதனிடத்து அகரம் வரும் (பொருநுக்கடிது - பொருநக் கடுமை) (தொ. எ. 299) என்றாற் போல்வனவும், குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரமாகிய எழுத்துப் பேறளபெடை பெறும் (226) என்பதனை, இராக்காலத்தைக் குறிக்கும் இரா என்ற சொல் வேற்றுமையில் பெறாது (227) என்று விலக்குதல் போல்வனவும், நிலைமொழியீறு பற்றி அமையாமல் ஈறுபெறும் எழுத்துப் பற்றி அமைதலின், இவை பற்றிய நூற்பாக்கள் அகப்புறச் செய்கையன வாம். (தொ. எ. 1 நச். உரை)

அகம் முன் செவிகை வருவழிப் புணர்ச்சி -

{Entry: A01__020}

அகம் என்னும் சொல்லின்முன்னர்ச் செவி - கை - என்பனவரின், நிலைமொழியிடையில் நின்ற உயிரும் மெய்யும் கெடும்.

வருமாறு : அகம் + செவி > அம் + செவி = அஞ்செவி; அகம் + கை > அம் + கை = அங்கை

ஒரோவழி, அகஞ்செவி, அகங்கை என இடைநின்ற உயிர்மெய் கெடாது முடியும் இயல்பும் கொள்க. ஆண்டு ஈற்று மகரம் வன்கணத்துக்கு இனமாகத் திரிந்தது. (நன். 222)

அகர ஆகார ஈற்று மரப்பெயர் உருபு புணரும்போது சாரியை பெறுதல் -

{Entry: A01__021}

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் பொதுவாக இன்சாரியை பெற்று உருபுகளொடு புணரும் (தொ. எ. 173 நச்.); ஆயின், ஏழனுருபொடு புணருமிடத்து இன்சாரியையாவது அத்துச் சாரியையாவது பெற்று முடியும்.

எ-டு : விளவினை - விளவிற்கு. . . . . . விளவின்கண், விளவத் துக்கண்; பலாவினை - பலாவிற்கு. . . . . . பலாவின்கண், பலாவத்துக்கண். (தொ. எ. 181 நச்.)

அகர இகரம் எகரம் ஆதல் -

{Entry: A01__022}

வடமொழியில் அகர இகரம் எகரம் ஆகும். வடமொழியில், உப + இந்த்ர = உபேந்த்ர என அகரஇகரம் ஏகாரமாதல் போல, எகரத்தி லுள்ள கூட்டம் தமிழ்மொழியில் தெளிவாக இல்லை. ஆதலின் தமிழில் எகரத்தின் ஒலியை அகர இகரக் கூறுகளின் ஒலி என்றல் சாலாது. (எ. ஆ. பக். 7, 8)

அகர இகரம் ஐகாரம் ஆதல் -

{Entry: A01__023}

அகரமும் இகரமும் இணைந்து ஐகாரம் போன்று இசைக்கும் போலியெழுத்தினை உண்டாக்கும். ஐவனம் - அஇவனம். இப்போலி இக்காலத்து இல்லை. (தொ. எ. 54 நச்.)

‘அஇ இணைந்து இசைத்தல்’ காண்க.

அகரஈற்று அண்மை விளிப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__024}

விளியேற்கும் பெயர்கள் ஈற்றெழுத்துக் கெட்டு விதி அகர ஈற்றுப் பெயர்களாக நின்றுழி, வருமொழிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : ‘ஊரன்’ ஊர என நின்று ஊர கேள், நட, வா, அடு என இயல்பாகப் புணரும். (தொ. எ. 210. நச்.)

அகரஈற்று அம்ம என்னும் உரைப்பொருட் கிளவிப் புணர்ச்சி -

{Entry: A01__025}

அம்ம என்பது தான் கூறுவதனைக் கேட்டற்கு ஒருவனை எதிர் முகமாக்குதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல். ‘அம்ம கேட்பிக்கும்’. (தொ. சொ. 276 சேனா.)

அஃது அம்ம என்று இயல்பாகவும், அம்மா என ஆகார ஈறாக நீண்டும் வருமொழி நாற்கணத்தொடு புணரும்வழி இயல் பாகப் புணரும்.

அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா

அம்மா சாத்தா, நாகா, வளவா, அரசா - எனவரும்.

(தொ. எ. 210, 212 நச்.)

அகரஈற்று அன்ன என்ற இடைச்சொற் புணர்ச்சி -

{Entry: A01__026}

அகரஈற்று அன்ன என்ற உவமஉருபு வருமொழியில் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : புலியன்ன சாத்தன், நாகன், வடுகன், அரசன்

அகரஈற்றுள் பலவாக வருகின்ற உவமவுருபுகளுள் இயல்பாகப் புணர்வது இஃதொன்றே. (தொ. எ. 210 நச்.)

அகரஈற்று இடைச்சொற் புணர்ச்சி -

{Entry: A01__027}

அகரஈற்று மான - விறப்ப - என்ன - உறழ - தகைய - நோக்க - எள்ள - விழைய - புல்ல - பொருவ - கள்ள - மதிப்ப - வெல்ல - வீழ - கடுப்ப - ஏய்ப்ப - மருள - புரைய - ஒட்ட - ஒடுங்க - ஓட - நிகர்ப்ப - போல - மறுப்ப - ஒப்ப - காய்ப்ப - நேர - வியப்ப - நளிய - நந்த - ஆர - அமர - ஏர - ஏர்ப்ப - கெழுவ - கொண்ட முதலிய உவமச் சொற்களும், என என்னும் எச்சமும், சுட்டும், ஆங்க என்னும் உரையசைக்கிளவியும் வருமொழி வன்கணம் வரின் வந்த வல்லெழுத்து மிகும்.

வருமாறு : புலிபோலப் பாய்ந்தான் - உவமக்கிளவி; கொள் ளெனக் கொண்டான் - எனவென் எச்சம்; அக் கொற்றன் - சுட்டிடைச் சொல்; ‘ஆங்கக் குயிலு மயிலும் காட்டி’- ஆங்க என்னும் உரையசைக் கிளவி.

வருமொழியில் ஞநம - யவ - என்ற மென்கணமும் இடைக்கண மும் வரின், சுட்டு நீங்கலான ஏனைய இடைச்சொற்கள் இயல்பாகப் புணரும்; உயிர்க்கணம் வரின் உடம்படுமெய் பெறும்.

வருமாறு : புலிபோல ஞான்றான் ..... புலிபோல வடைந்தான்;

(வ் : உடம்படுமெய்), கொள்ளென நினைந்தான் ..... வாவென வடைந்தான்; (வ் : உடம்படுமெய்) ஆங்க மருண்டு .... ஆங்க வடைந்து; (வ் : உடம்படு மெய்) (தொ. எ. 204 நச்.)

அகரஈற்றுள் அன்ன என்னும் உவமச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

வருமாறு : புலி யன் ன சாத்தன், நாகன், வளவன், அரசன்;
அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா.

(தொ.எ. 210 நச்.)

அகரஈற்று உரிச்சொல் புணர்ச்சி -

{Entry: A01__028}

அகரஈற்று உரிச்சொல் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்கும் இனமான மெல்லெழுத்து மிக்கும் புணரும்; ஏனைய கணங்கள் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : தட + கை = தட க்கை; தவ + கொண்டான் = தவ க் கொண்டான்; குழ + கன்று = குழ க் கன்று - இவை வல்லெழுத்து மிக்கன.

தட + செவி = தட ஞ்செவி; கம + சூல் = கம ஞ்சூல் - இவை மெல்லெழுத்து மிக்கன.

தவ + நெடிய = தவநெடிய

தவ + வலிய = தவவலிய

தவ + அரிய = தவ (வ்) அரிய - என மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் வந்துழி, இயல்பு ஆகியவாறு. (உடம்படுமெய் பெறுதலும் இயல்பு புணர்ச்சியாம்.) (தொ. எ. 203 நச்.)

அகரஈற்று எழுவாய்த்தொடர்ப் புணர்ச்சி -

{Entry: A01__029}

அகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் வருமொழி வன்கணம் வரின், வந்த வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : விளக்குறிது, விளச்சிறிது, விளத்தீது, விளப்பெரிது;

விளஞான்றது; விளவலிது; விள (வ்) அரிது எனவரும்.

(தொ. எ. 203 நச்.)

அகரஈற்றுச் சுட்டின் புணர்ச்சி -

{Entry: A01__030}

அகர ஈற்றுக் சுட்டிடைச்சொல் வருமொழி வன்கணத்தொடு வந்த வல்லெழுத்து மிக்கும், மென்கணத்தொடு வந்த மெல் லெழுத்து மிக்கும், யகர வகரம் வருவழியும் உயிர் வருவழியும் வகரம் மிக்கும், செய்யுளில் அகரம் நீண்டும் புணரும்.

வருமாறு : அக்கொற்றன், அச்சாத்தன், அத்தேவன், அப்பூதன் - வலி; அஞ்ஞாண், அந்நூல், அம்மணி - மெலி; அவ்யானை, அவ்வளை - இடை; அ + அடை > அ + வ் + அடை > அவ் + வ் + அடை = அவ்வடை; அ + ஆடை > அ + வ் + ஆடை > அவ் + வ் + ஆடை = அவ்வாடை

நிலைமொழி அகரம் அவ் என்றாகித் தனிக்குறில் முன் ஒற்றாய் வருமொழி முதல் உயிர் வந்தமையால் அவ்வொற்று இரட்டிப்பப் புணர்ந்தவாறு.

செய்யுட்கண் சுட்டு நீளுமிடத்துப் புணர்தல் வருமாறு -

அ + இடை = ஆயிடை - தொ. பாயிரம்

அ + இரண்டு = ஆயிரண்டு - தொ. எ. 85 நச்.

அ + அறுமூன்று = ஆவறுமூன்று - தொ. சொ. 56 சேனா.

அ + வகை = ஆவகை - தொ. களவு. 22 நச்.

அ + வயின் = ஆவயின் - தொ. கற்பு. 8 நச்.

எனச் சுட்டு நீண்டவிடத்து, யகர வகர உடம்படுமெய் பெற்றும், வருமொழி முதலெழுத்து இரட்டியாமலும், புணர்ந்தவாறு. (தொ. எ. 204 - 208 நச்.)

அகரஈற்றுப் ‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’ யின் புணர்ச்சி -

{Entry: A01__031}

பன்மைப் பொருளை யுணர்த்தும் அகரஈற்றுப் பெயர் களாகிய ஐந்தும் வருமொழி நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

அப்பெயர்களாவன பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்பன.

(தொ. சொ. 168 சேனா.)

வருமாறு : பல்லகுதிரை, பலகுதிரை, சிலகுதிரை, உள்ள குதிரை, இல்ல குதிரை (தொ. எ. 210 நச்.)

அகரஈற்றுப் பெயரெச்சப் புணர்ச்சி -

{Entry: A01__032}

அகரஈற்றுப் பெயரெச்சம் வருமொழி நாற்கணம்வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : உண்டசோறு, மருந்து, வரகு, உணவு(தொ. எ. 210நச்.)

செய்ம்மன என்ற செய்யும் என்னும் பொருளதாகிய பெயரெச்சமும் இங்ஙனமே நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : (யான்) உண்மன சோறு, மருந்து, வரகு, உணவு (தொ. எ. 210 நச்.)

அகரஈற்று மரப்பெயரின் பொருட்புணர்ச்சி -

{Entry: A01__033}

அகரஈற்று மரப்பெயர் பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின் இனமான மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : விள : விள ங்கோடு, விள ஞ்செதிள், விள ந்தோல், விள ம்பூ; அத : அத ங்கோடு, அத ஞ்செதிள், அத ந் தோல், அத ம்பூ (தொ. எ. 217 நச்.)

விளவின்கோடு எனச் சிறுபான்மை உருபிற்குப் பயன்படும் இன் சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் வரும். (தொ. எ. 219 நச். உரை)

அகரஈற்று வியங்கோள் வினைமுற்றுப் புணர்ச்சி -

{Entry: A01__034}

அகரஈற்று வியங்கோள் வினைமுற்று நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : (அவன்) செல்க காட்டின்கண், நாட்டின்கண், வீட்டின்கண், அரணின்கண்.

அவற்றுள், வாழிய என்னும் முற்று ஈற்றுயிர்மெய் கெட்டு வாழி என நின்று இயல்பாக முடிதலுமுண்டு. (211) (தொ. எ. 210. நச்.)

அகரஈற்று வினைமுற்றுப் புணர்ச்சி -

{Entry: A01__035}

அகரஈற்றுத் தெரிநிலைவினைமுற்றும் குறிப்புவினைமுற்றும் நாற்கணங்கள் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : உண்டன குதிரை, செந்நாய், தகர், பன்றி; உண்டன நாய், யானை, அரிமா

‘கரியன’ என்ற குறிப்புவினைமுற்றையும் நிறுத்தி, இவ்வாறே வன்கணமும் இயல்புகணமும் கூட்டி முடிக்க. (தொ. எ. 210 நச்).

அவற்றுள் வாழிய என்னும் வியங்கோள் வினைமுற்று ஈற்றுயிர்மெய் கெட்டும் கெடாதும் நாற்கணத்தொடும் புணரும்.

வருமாறு : வாழிய கொற்றா, வாழி கொற்றா; வாழிய நாகா, வளவா, அரசா; வாழிநாகா, வளவா, அரசா (தொ. எ. நச். 211).

அகரஈற்றுச் செய்ம்மன என்னும் முற்றும் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். (210)

அகரஈற்று வினையெச்சப் புணர்ச்சி -

{Entry: A01__036}

அகரஈற்று வினையெச்சம் பொதுவாக வன்கணம் வரின் மிக்கும், ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : உணக் கொண்டான்; உண நின்றான் (தொ. எ. 204 நச்.)

அவற்றுள், சாவ என்னும் வினையெச்சம் ஈற்றுயிர்மெய் கெட்டுப் புணர்தலு முண்டு.

வருமாறு : சாவக் குத்தினான்; சாக்குத்தினான்

சாவ ஞான்றான்; சாஞான்றான் (தொ.எ. 209 நச்.)

இங்ஙனமே, அறிய என்னும் வினையெச்சம் ஈற்றுயிர் மெய் கெட்டுப் புணர்தலுமுண்டு.

வருமாறு : ‘பால்அறி வந்த உயர்திணைப் பெயரே’ (தொ. சொ. 162 சேனா.)

செய்யிய என்னும் வினையெச்சம் பொதுவாக நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : உண்ணிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந் தான். (உயிர்க்கணம் வருமிடத்து வகர உடம்படு மெய் பெறுதல் இயல்பு புணர்ச்சியே). (தொ.எ. 210 நச்.)

அகரஈற்றுள் இயல்பாகப் புணர்வன -

{Entry: A01__037}

அன்ன என்னும் உவமச்சொல், அண்மை விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று, செய்ம்மன - செய்யிய - செய்த - என்ற வினைகள், அம்ம என்ற இடைச்சொல், பலவற்றை உணர்த்தும் பெயர்கள், வினைமுற்றுக்கள் என்பன வருமொழி வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : புலி அன்ன சாத்தன் - உவம இடைச்சொல்; ஊர கேள் - அண்மை விளிப்பெயர்; அவன் செல்க காட்டின்கண் - வியங்கோள் வினைமுற்று; உண்மன சாத்தன் - செய்ம்மன என்னும் முற்று; யான் உண்மன சோறு - செய்ம்மன எனும் பெயரெச்சம்; உண்ணிய சென்றான் - செய்யிய என்னும் வினை யெச்சம்; உண்ட சோறு - செய்த என்னும் பெய ரெச்சம்; அம்ம கொற்றா - அம்ம என்னும் இடைச்சொல்;பல குதிரை - பலவற்றை உணர்த்தும் பெயர்; உண்டன குதிரை - கரியன குதிரை - தெரி நிலையும் குறிப்பு மாகிய வினைமுற்றுக்கள். (தொ. எ. 210 நச்.)

அகரஈறு இயல்பாக முடிவன ஆறு -

{Entry: A01__038}

செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இறந்தகால - நிகழ்கால - எதிர்மறை - குறிப்பு - அகரஈற்றுப் பெயரெச்சங்கள், வினையடி நான்கினும் பிறந்த முற்றுக்கள், ஆறாம் வேற்றுமை யாகிய அகர உருபு, அஃறிணைப்பன்மைப் பெயர், அம்ம என்னும் இடைச்சொல் - என்பன வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகவே முடியும்.

எ-டு : உண்ணிய கொண்டான் - செய்யிய என்னும் வினை யெச்சம்; உண்ட , உண்ணாநின்ற, உண்ணாத, பெரிய சாத்தன் - பலவகைப் பெயரெச்சம்

முற்றிற்கும் பொருள்வேறுபாடன்றிச் சொல்வேறுபாடு இன்மையின் இவையே எடுத்துக்காட்டாம். வாழ்க சாத்தா - வியங்கோள் முற்று

வினைமுற்று எச்சமாகியவழியும் இயல்பாம்.

எ-டு : உண்ட கண்டன - முற்றெச்சம்; அமர் முகத்த குதிரை, அமர் முகத்த கலக்கின: இவையும் அது. தன கைகள் - ஆறன் அகரஉருபு; பல கொடுத்தான் - அஃறிணைப் பன்மைப் பெயர்; அம்ம சாத்தா - அம்ம இடைச் சொல் (நன். 167)

அகரம் உகரம் ஒகரம் ஆதல் -

{Entry: A01__039}

ஒகரம் உகரம் பிறக்கும் இடத்தே பிறப்பது. உய் - ஒய், துளை -தொளை, துடை - தொடை, துகை - தொகை எனச் செய்யுளி லும் வழக்கிலும் உகரஒகரங்கள் விரவி வருகின்றன.

உய் - ஒய் எனவும் சுரிவ - சொரிவ எனவும் கன்னடத்திலும், புகழ்தல் - பொகட்த எனவும் முகைகள் - மொக்குலு எனவும் தெலுங்கிலும் உகர ஒகரங்கள் விரவிவருதல் அறியப்படும்.

வடமொழியில் அகரஉகரங்களின் சந்தியக்கரம் ஓ என்று குறிக்கப்படுகிறது. கங் கா + உதகம் = கங் கோதகம் (சந்திர + உதயம் = சந்திரோதயம்) எனச் சந்தியில் அகர உகரங்கள் ஓகாரமாகும் புணர்ச்சி வடமொழியில் தெளிவாதல் போலத் தமிழில் தெளிவாக இல்லை. ஆதலின் அகரஉகரங்கள் ஒகர மாதல் தமிழிற்குப் பொருத்தமின்று. (எ. ஆ. பக். 7, 8)

அகரஉகரம் ஒளகாரம் ஆதல் -

{Entry: A01__040}

அகரமும் உகரமும் இணைந்து ஒளகாரத்தின் போலி யெழுத்தை உண்டாக்கும். எ-டு : ஒளவை - அஉவை.

பாகதத்திலும் பௌர - பஉரோ, கௌரவ - கஉரவோ என வரும். தெலுங்கிலும் கன்னடத்திலும் வகரஉடம்படுமெய் பெற்று, ஒளடு - அவுடு எனவும், தௌதலெ - தவுதலெ, கௌகுழ் - கவுகுழ் எனவும் வரும். தமிழிலும் மௌனம் - மவுனம் என வரும்.

தொல்காப்பிய மொழிமரபில் தனியெழுத்தின் இயல்பு கூறா மல் மொழியிடைப்பட்ட எழுத்துக்களின் இயல்பே கூறப்படு தலின், ‘அஉ என்னும் இவற்றின் சந்தியக்கரம் ஒள’ என்று கூறுதல் பொருந்தாது. (தொ. எ. 55 நச்) (எ. ஆ. பக். 57, 58, 59)

அகர எழுத்துப்பேறளபெடை வருமிடங்கள் -

{Entry: A01__041}

ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை எழுத்துப் பேறளபெடையாக அகரம் பெற்று வரும்.

எ-டு : உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் (தொ. எ. 223 நச்.)

பண்புத்தொகைக்கண் அராஅப்பாம்பு எனவும், எழுவாய்த் தொடர்க்கண் இராஅக் கொடிது எனவும், பெயரெச்சமறைத் தொடர்க்கண் இராஅக் காக்கை எனவும், அகரம் எழுத்துப் பேறளபெடையாக வரும்.

இயல்புகணத்துப் புணர்ச்சிக்கண்ணும் இறாஅவழுதுணங் காய் - என அகரப்பேறு நிகழும். (தொ.எ. நச். உரை)

ஆகாரஈற்று வேற்றுமைக்கண், குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரஈற்றுப்பெயர், ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார ஈற்றுப் பெயர் - இவை வருமொழியொடு கூடும் பொருட் புணர்ச்சிக்கண் அகரம் எழுத்துப்பேறளபெடையாக வரும்.

எ-டு : பலா அக் கோடு, கா அக் குறை; பலா அ இலை, பலா அ நார் - என இயல்புகணத்தும் அகரம் வரும்.

இரா என்ற சொல் பெயராய் இராக்காலத்தை உணர்த்துவ தாயின், அஃது எழுவாய்த் தொடர்க்கண் அகரம் பெறுமே யன்றி, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அகரமாகிய எழுத்துப் பேறளபெடை பெறாது, இராக்கொண்டான் - இராக்கூத்து - என்றாற் போல முடியும். (தொ. எ. 226, 227)

அகரச்சாரியை வரும் இடங்கள் -

{Entry: A01__042}

உருபுபுணர்ச்சியில், தாம் - யாம் - நாம் - தான் - யான் என்பவை தம் எம் நம் தன் என் எனத் திரிந்தவழி, அவை நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து இடையே அகரச் சாரியை வரும்.

வருமாறு : தாம் > தம் > தம > தமக்கு, தமது, தமவ எனவரும். ஏனையவும் அன்ன.

இவை அது உருபு ஏற்குமிடத்து, அவ்வுருபின் முதலெழுத் தாகிய அகரம் கெட, தாம் + அது > தம் + அது > தம + து = தமது என்றாற்போல முடியும்; குவ்வுருபு ஏற்குமிடத்து இடையே ககர ஒற்று மிகும். (தொ. எ. 161 நச்.)

நும் என்ற சொல்லும் முன்னையவை போல நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து, அகரச்சாரியை இடையே பெற்று முற்கூறிய திரிபுகளைக் கொள்ளும். (தொ.எ. 162 நச்.)

ஆ என்ற ஆகாரஈற்றுப் பெயர் னகரமெய்யினைச் சாரியை யாகப் பெற்று ஆன் என ஆகுமிடத்துப் பெரும்பான்மையும் வருமொழியில் மென்கணம் வரின் அகரச்சாரியை பெற்று ஆனநெய், ஆனமணி என வருதலு முண்டு. (தொ.எ. 232 நச்.)

நகார ஈற்றுச்சொற்களாகிய பொருந் - வெரிந் - என்பவை வேற்றுமைப் புணர்ச்சிக்கண் நாற்கணமும் வருமொழி முதற்கண் வருவழி அகரச் சாரியை பெறும்.

வருமாறு : பொரு நக் கடுமை; பொரு ந ஞாற்சி, வன்மை, அருமை; வெரி நக் கடுமை; வெரி ந ஞாற்சி, வன்மை, அருமை. (தொ.எ. 299 நச்.)

மரப்பெயர் அல்லாத பறவையை உணர்த்தும் எகின் என்ற பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி முதலில் நாற்கணம் வருவழியும் அகரச் சாரியை பெறும்.

வருமாறு : எகினக்கால்; எகினமாட்சி, வலிமை, அடைவு

(தொ.எ. 337 நச்.)

கன் என்ற சொல் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண், வருமொழி முதலில் நாற்கணம் வருவழியும், எகின் என்ற பறவைப் பெயர் போல, அகரச்சாரியை பெறும்.

வருமாறு : கன் னக்குடம்; கன் னமாட்சி, வலிமை, அடைவு.

(தொ.எ. 346 நச்.)

சூது என்ற பொருளில் வரும் வல் என்ற சொல்முன் பலகை - நாய் - என்ற வருமொழிகள் புணருமிடத்து, வல்லுப் பலகை - வல்லு நாய் - என உகரம் பெறுதலேயன்றி, வல்லப் பலகை - வல்ல நாய் - என அகரச் சாரியை பெறுதலுமுண்டு. (தொ.எ. 374 நச்.)

பொருட்புணர்ச்சிக்கண் விதிக்கப்பட்ட அகரச்சாரியை ஆறன் பொருளில் வந்ததாகும். கன்னடத்தில் ஆறனுருபாகவே அகரம் உள்ளது. அவ்வாறாயின் எகினக்கால் என்பது எகினது கால் என்று பொருள் பெறும். அகரச்சாரியை விதித்துள்ள ஏனைய இடங்களிலும் ஆறன் பொருளே வந்துள்ளது. ஆனமணி, பொருநக் கடுமை, கன்னக் குடம், வல்லப் பலகை, வல்லநாய் முதலியன ஆறாம் வேற்றுமைப் பொருளனவாகவே இருத்தல் கருதத்தக்கது. (எ. ஆ. பக். 157)

அகரத்தின் தொகை வகை விரி -

{Entry: A01__043}

அகரம் எனத் தொகையான் ஒன்றும், உயிர் அகரமும் உயிர் மெய் அகரமும் என வகையான் இரண்டும், உயிர் அகரம் ஒன்றும் உயிர்மெய் அகரம் பதினெட்டும் என விரியான் பத்தொன்பதும் ஆம். உயிர்மெய் அகரம் க ங ச ஞ ..... ற ன எனக் காண்க. (நன். 60 மயிலை.)

அகரம் ஆகாரமாகத் திரியும் வடநடைப் பகுபதம் -

{Entry: A01__044}

அதிதிமக்கள் - ஆதித்யர்; தசரதன் மகன் - தாசரதி; சனகன் மகள் - சானகி; தனுவின் மக்கள் - தானவர்; சகரன் மக்கள் - சாகரர் (தொ. வி. 86 உரை)

அகரம் எழுத்துக்களுள் முதலாவதன் காரணம் -

{Entry: A01__045}

அகரம் தானே நடந்தும் நடந்து உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் - அரி - அயன் - அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒருமுதலாயும் அறம்பொருளின்பம் என்னும் முப்பொருளின் முதற்பொருட்கும் அருள் - அன்பு - அணி - அழகு - முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும், முன்வைக்கப்பட்டது. (நன். 72 மயிலை.)

அகரமானது சைதந்நிய மாத்திரமாய்த் தனித்தும், எல்லா வுயிர் கட்கும் காரணனாகி அவற்றொடு கலந்தும் அவற்றின் முன் நிற்கும் ஆதிபகவனே போல, நாதமாத்திரையாய்த் தனித்தும், எல்லா எழுத்திற்கும் காரணமாய் அவற்றொடு கலந்தும் அவற்றின் முன் நிற்றலால் ‘அம் முதல்’ என்றார். (நன். 73 இராமா.)

அகரம் ஏனைய முதலெழுத்துக்களொடு சிவணுதல் -

{Entry: A01__046}

தனிமெய்களின் நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும். ‘வல்லினம் க் ச் ட் த் ப் ற்’ என்னாது, ‘வல்லினம் க ச ட த ப ற’ என்றே கூறுதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. எனவே, தனிமெய்களை நாவால் கருத்துப்பொருளாக இயக்கும் இயக்கமும் கையால் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும், அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்றவாறு.

இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு போல ஏனைய பதினோருயிர்க்கண்ணும் அது கலந்து நிற்கும். இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண் ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய்க் கலந்து நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல், அகரமும் ஏனை உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற் றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. இஃது ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று வள்ளுவர் உவமை கூறியமையானும், கண்ணன் “எழுத் துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” எனக் கூறியவாற்றா னும் உணரப்படும். (தொ. எ. 46 நச். உரை)

“எழுத்துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” என்று கண்ணன் கூறிய தொடருக்கு, “என்னை ஓரெழுத்தாகத் தியானிக்க வேண்டுமாயின், அகரமாகத் தியானிக்க வேண்டும்” என்பதே கருத்து. ‘அகர. . . . . உலகு’ என்ற விடத்துக் கடவுள் உலகிற்கு எவ்வாறு முதற்காரணமோ, அவ்வாறு எழுத்துக்களுக் கெல்லாம் அகரம் முதற்காரணம் என்று கொள்ள வேண்டா; கடவுளும் அகரமும் முறையே உலகத்திற்கும் எழுத்திற்கும் முதன்மையாய் இருத்தலின், முதன்மையே பொதுத் தன்மை யாகக் கொள்ளல் தகும். (எ. கு. பக். 56)

அகரம் முனை -

{Entry: A01__047}

அகரஈற்றுச் சொல்லின் முன் - என்னும் பொருளது இத் தொடர். முன், முனை, முன்னர் என்பன ஒரு பொருளன. (தொ. எ. 125 நச். உரை)

முன்னோனை ‘முனைவன்’ என்பது ஒரு சொல் விழுக் காடாம், முன் என்பதனை முனை என்ப ஆதலின். (தொ. பொ. 649 பேரா.)

‘அகரமுதல் னகரஇறுவாய்’ தொடரிலக்கணம் -

{Entry: A01__048}

அகரமாகிய முதலையுடையனவும், னகரமாகிய இறுவாயினை யுடையனவும். (தொ. எ. இள. உரை)

அகரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த (தொ. எ. 1 நச். உரை)

‘அகரம் முதல் னகர இறுவாய்’ என்பன அகரத்தை முதலாவ தாகவும் னகரத்தை ஈறானதாகவும் கொண்டு முடியும் முப்பது எழுத்துக்கள்.

(‘அகரம் முதல் னகர இறுவாய்’ என்புழி, அகரம் னகரம் என்பன பண்பல்ல ஆயினும், பண்புதொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய இயைபுபற்றிப் பண்புத்தொகை எனப்பட,) ‘அகரமுதல் னகர இறுவாய்’ என்பன பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம். இம்முப்பது எழுத்துக்களும் அகரமும் னகரமும் சேர்ந்தனவே ஆதலின், இது விடாத அன்மொழித் தொகை யாம்.

அகர ஈறு - அகரமாகிய ஈற்றையுடைய சொல்.

புள்ளி ஈறு - மெய்யெழுத்தாகிய ஈற்றையுடைய சொல்

என்பனவும் விடாத அன்மொழித் தொகையாம். இதனை வடநூல் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்னும். (எ. கு. பக். 3)

‘அகரமுதல் னகரஇறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித்தொகை; நச்சினார்க்கினியர்க்கு எழுவாய்த் தொடர்கள்.

(அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாவும் உடைய என்று பொருள் செய்யின், அகரமுதல் - னகரஇறுவாய் - என்பன இரண் டாம் வேற்றுமைத்தொகை).

அகரமோடு உயிர்த்தல் -

{Entry: A01__049}

அகரத்தொடு தோன்றுதல்; மெய்கள் அகரத்தொடு புணரும் வழி, தம் வடிவிலுள்ள புள்ளியை நீக்கி அப்புள்ளி நீங்கிய வடிவமே தம் வடிவமாக வரிவடிவில் தோன்றுதல். க் + அ = க.

ககரமெய்யின் புள்ளி நீங்கிய வடிவமே அஃது அகரத்தோடு இணைந்து உயிர்மெய்யாங்கால் உரிய வடிவமாம் என்று குறிப்பிடும் இப்பகுதியில், உயிர்த்தல் என்பதற்குத் தோன்று தல் என்ற பொருளே தக்கது; ஒலித்தல் என்பது தக்கதன்று. இத்தொடர் வரிவடிவம் பற்றிய இடத்தது. (தொ. எ. 17)

உயிர்த்தல் என்பதற்கு ஒலித்தல் என்பது பொருளன்று; உரு உருவாகி உயிர்த்தலும், உருவுதிரிந்து உயிர்த்தலும், புள்ளி யுண்டாதலும், இலவாதலும் வரிவடிவிற்கேயன்றி ஒலிவடி விற்கு இன்மையின், தோன்றுதல் என்பதே பொருளாம். (சூ.வி.பக். 43)

அங்காத்தல் -

{Entry: A01__050}

முதல்நாவும் முதல்அண்ணமும் சேர்கின்ற இடம் திறத்தல். (எ.கு. பக். 90)

அங்கை என்ற முடிவு -

{Entry: A01__051}

அகம் என்ற நிலைமொழியின் முன் வருமொழியாகக் கை என்ற பெயர் வரின், அகரம் நீங்கலான ஏனையெழுத்துக்கள் நிலைமொழியில் கெட, எஞ்சிநின்ற அகரத்தொடு கை என்பது இணையும்போது, இடையே ககரத்தின் இனமெல்லெழுத் தாகிய ஙகர ஒற்றுவர, அகம் + கை > அ + கை > அங் + கை = அங்கை என முடிவுபெறும். (தொ. எ. 315 நச்.)

பிற்காலத்தில், அகம் + செவி = அஞ்செவியாயிற்று. ‘அஞ்செவி நிறைய ஆலின’ (முல்லைப். 89)

அங்ஙனம் முதலிய சொற்கள் -

{Entry: A01__052}

யரழக்களின் முன் மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துக் களும் ஙகரமும் மயங்கும் என்ற செய்தியில், ஙகரத்தை உயிர் மெய்யாகக் கொண்டு, வேய்ஙனம் - வேர்ஙனம் - வீழ்ஙனம் என்று உதாரணம் காட்டுவர். ஙனம் என்ற சொல்லைத் தொல்காப்பியனார் குறிப்பிடவில்லை. யரழ முன்னர் ஙகரம் மயங்குதற்கு வேய்ங்குழல் - ஆர்ங்கோடு - பாழ்ங்கிணறு என்பனவே தக்க உதாரணமாம். இவற்றை ஈரொற்றுடனிலைக்கு உதாரணமாகக் கோடல் கூடாது. ஈரொற்றுடனிலை ஒரு மொழிக்கண்ணது. அதற்கு எடுத்துக் காட்டுத் தேய்ஞ்சது, மேய்ந்தது, சேர்ந்தது, வாழ்ந்தது முதலியனவாக ஒருமொழிக் கண் வருவனவாம். தொல்காப்பியனார் காலத்தில் ஙகரம் முதலாய் வரும் சொல் தமிழில் இல்லை; ஆங்கனம், ஈங்கனம், ஊங்கனம், யாங்கனம், என்ற சொற்களே உண்டு. ஆங்ஙனம், ஈங்ஙனம், ஊங்ஙனம், யாங்ஙனம் - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம் என்பன பிற்காலத்தில் திரிந்து வழங்கிய சொற்களே.

ஙகரம் தன் முன்னர்த் தான் மயங்குவதற்குப் ‘பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும் உரைத்தனரே’ (கலி. 11:9) என்பது போன்ற ஒற்றளபெடையே உதாரணமாம். (எ. ஆ. பக். 26 - 29)

யாங்கனம் - நற். 381 - 6

புறநா. 8-6, 30-11, 39-13, 49-3 மணி. 5 : 41

ஆங்கனம் - தொ. பொ. 358-1; மலைபடு. 402; கலி. 28 : 21; சிலப். 7 : 47 - 1; மணி. 2 : 58; 3 : 26; 11 : 36, 122; 16 : 104, 128; இறை. கள. 3 - 1; 5 - 1

ஈங்கனம் - குறுந் 336 - 2; புறநா. 208 - 4

அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் - சீவக 1359 (முதலியன).

இவையும் ‘தங்கிய’ என்ற ஈற்றடி எதுகையை நோக்க, அங்கனம் முதலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆங்ஙனம் : இதனை ஆ + கனம் என்று பிரிப்பின் பொருளின்று. ஆங்கு + அனம் என்று பிரித்தால், அனம் என்பது தனம் என்பதன் மரூஉவாய், ஆங்ஙனம் என்பது அப்படிப்பட்ட தன்மை என்னும் பொருளில் முதற்கண் வழங்கிப் பின்னை அத்தன்மை என்னும் பொருளில் அமைவதாயிற்று. நன்கனம் - செவ்வனம் - என்பனவற்றை நோக்கின், நிலைமொழியோடு அனம் என்பதுவே சேர்ந்துள்ளது என்பது புலப்படும்.

ஆங்கனம் முதலியவை பிற்காலத்தில் ஆங்ஙனம் - அங்ஙனம் - முதலாகத் திரியவே, “சுட்டுக்கள் - யாவினா - எகரவினா என்பனவற்றை அடுத்து ஙகரமும் மொழிக்கு முதலாகும்” என்று நன்னூலார் குறிப்பிடுவாராயினார். (தி. மொ. மூ. பெ. பக். 118).

அசைச்சொல் மியா -

{Entry: A01__053}

மியா என்ற முன்னிலை அசைச்சொல்லிலுள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இஃது ஒருசொல்லில் வரும் குற்றிய லிகரம். கேண்மியா என்ற சொல்லில் யா என்னும் எழுத்தின் தொடர்பால், மகரத்தை ஊர்ந்து வரும் இகரம் குற்றியலிகர மாக ஒரு மாத்திரையிற் குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும். (நன். 93)

அசைபற்றிக் குற்றுகர வகை கோடல் -

{Entry: A01__054}

‘நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை // ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதிஎன்(று) // ஏழ்குற் றுகரக்(கு) இடனென மொழிப’ என்னும் இவ்வேழிடத்தும் (அசைபற்றி) வரும் குற்றியலுகரங் கள் நெடிற்றொடர் முதலாகிய ஆறு தொடர்களுள்ளும் அடங்கும். இவ்வாறு ஏழிடம் கொள்வார்க்குச் சுண்ணாம்பு - ஆமணக்கு - பிண்ணாக்கு - முதலாயினவும், ஆய்தம் தொடர்ந் தனவும் அடங்கா என்றறிக.(நன். 93 மயிலை.)

அசைபற்றிக் குற்றியலுகரம் வருமாறு -

{Entry: A01__055}

எ-டு : காசு - நெடிலசையை அடுத்தது; வரகு - குறிலிணை அசையை அடுத்தது; மலாடு - குறில்நெடில் அசையை அடுத்தது; காற்று - நெடிலொற்று அசையை அடுத்தது; எழுத்து - குறிலிணையொற்று அசையை அடுத்தது; விலாங்கு - குறில்நெடிலொற்று அசையை அடுத்தது. கப்பு - குற்றொற்று அசையை அடுத்தது.

இவையேழும் முறையே நெடிற்றொடர் - உயிர்த்தொடர் - உயிர்த்தொடர் - வன்தொடர் - வன்றொடர் - மென்றொடர் - வன்றொடர்க்குற்றியலுகரங்களாக அடங்குமாறு காண்க.

அஞ்செவி அஞ்சிறை அங்கை : தொடர்வகை -

{Entry: A01__056}

நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றாற்போலச் செவியகம் - கையகம் - என்னும் இவ்விடவுறுப்புத்தற்கிழமைப் பெயரொடு முடிந்த ஆறாம் வேற்றுமைத்தொகைச் சொல்லை முன் பின்னாக வழங்கலின், இவ்விரண்டும் இலக்கணப் போலி யாய்த் தழாத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம் என்க. அகஞ்சிறை என்பது ஏனையவற்றின் சிறை போலப் புறத்தின் கண்ண அன்றி அகத்தின்கண்ண ஆதலின் ஏழாம் வேற்றுமைத் தொகை. (நன். 222. சங்கர.)

அண்பல் முதல் -

{Entry: A01__057}

பல்லினது அணிய இடம் (தொ. எ. 96. இள. உரை)

அண்பல்லின் அடி (நச். உரை)

அண்பல் : வினைத்தொகை. நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமாகிய பல் என்று அதற்கொரு பெயராயிற்று. (அண்பல் நாவிளிம்பு அணுகுதற்காகவே அமைந்தன அல்ல. இங்ஙனம் உள்பொருள் அல்லதனை உள்பொருள் போலக் குறிப்பிடு தல் தந்து புணர்ந்துரைத்தல் என்ற உத்திவகையாம்.) (தொ. எ. 86 நச். உரை)

மேல்வாய்ப் பற்களுக்குப் பின்னருள்ள அண்ணம் (எ. கு. பக்.40)

மேற்பல்லின் முதலிடம் (எ. ஆ. பக். 78)

மேல்வாய்ப்பல்லின் அடி என்பதே தெளிவான பொருளாம்.

அணி என்ற இடைச்சொல் புணர்ச்சி -

{Entry: A01__058}

அணி என்பது அணிய இடத்தை உணர்த்தும் இகரஈற்று இடைச் சொல். அஃது அணிக்கொண்டான் என்றாற்போல வன்கணத்தொடு புணரும்வழி இடையே வல்லொற்று மிகும். (தொ. எ. 236 நச்.)

அணி + அணி = அண்ணணி எனப் புணர்ந்து, அது வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி இடையே வல்லொற்றுப் பெறும்.

வருமாறு : அண்ணணிக் கொண்டான். (தொ. எ. 246 நச்.)

அணுத்திரள் ஒலி

{Entry: A01__059}

ஒலி அணுத்திரளைக் காரணமாகக் கொண்டு அவற்றின் காரியமாக வரும் எழுத்து. மொழிக்கு முதற்காரணம் எழுத் தானாற் போல, எழுத்துக்கு முதற்காரணம் ஒலிஅணுத்திரள் என்பது பெறப்படும். (நன். 58 சங்)

அத்தின் அகரம் அகரமுனைக் கெடுதல் -

{Entry: A01__060}

நிலைமொழி அகரஈற்றுச் சொல்லாக நிற்க, அது வருமொழி யொடு சேருமிடத்து இடையே அத்துச்சாரியை வரின், அத்துச் சாரியையின் அகரம் கெட, ஏனைய எழுத்துக்களே நிலை மொழியொடு புணரும் என்பது விதி.

எ-டு : மக+அத்து+கை > மக+த்து+கை = மகத்துக்கை

(தொ. எ. 125.நச்).

ஒழிக + இனி > ஒழிக்+இனி = ஒழிகினி; உற்ற + உழி > உற்ற் + உழி = உற்றுழி; செய்க + என்றான் > செய்க்+என்றான் = செய்கென்றான்; நாடாக + ஒன்றோ > நாடாக்+ஒன்றோ = நாடாகொன்றோ

இவ்வாறு வருமொழிமுதற்கண் இ உ எ ஒ என்பன வரின், நிலைமொழியீற்று அகரம் கெடுதலே பெரும்பான்மை. மக + அத்து = மகத்து என, இங்கும் நிலைமொழியீற்று அகரமே கெட்டது எனல் வேண்டும். நிலைமொழியீற்று அகரம் கெட வருமொழி அகரம் சேர ‘மகத்து’ என்றாயிற்று என்பதனை விட, வருமொழிமுதல் அகரம் கெட்டுப் புணர்ந்தது என்று கூறுதல் எளிதாகலின் அங்ஙனம் கூறப்பட்டது.

மக + அத்து > மக் + அத்து = மகத்து என்பதனைவிட, மக + அத்து > மக + த்து = மகத்து என்றல் எளிதாகலின், முடிந்த முடிவில் வேற்றுமையின்று ஆதலின் இவ்வாறு கூறப்பட்டது. (எ.ஆ.பக். 101)

அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிறவுயிர் முன்னரும் ஒரோவழிக் கெடுதலுண்டு.

எ-டு : அண்ணா + அத்து + ஏரி = அண்ணாத்தேரி; திட்டா + அத்து + குளம் = திட்டாத்துக்குளம் (தொ. எ. 133 நச்.உரை)

நிலைமொழி மெய்யீற்றதாக, அத்துச்சாரியை வரின், நிலை மொழி ஒற்றுக் கெடாது முடிதலுமுண்டு.

எ-டு : விண் + அத்து + கொட்கும் = விண்ணத்துக் கொட்கும்

வெயில் + அத்து + சென்றான் = வெயிலத்துச் சென் றான்; இருள் + அத்து + சென்றான் = இருளத்துச் சென்றான் (நச். 133 உரை)

அத்துச்சாரியை புணருமாறு -

{Entry: A01__061}

அகரஈற்றுச்சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து அச் சாரியையின் அகரம் கெடப் புணரும்.

எ-டு : மக + அத்து + கை > மக + த்து + கை = மகத்துக்கை

மெய்யீற்றுச் சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து நிலைமொழியின் ஈற்றுமெய் பெரும்பாலும் கெடும்.

எ-டு : மரம் + அத்து + கோடு > மர + அத்து + கோடு > மர+ த்து + கோடு = மரத்துக் கோடு; வருமொழி வன்கணம் வரின், வந்த வல்லொற்று இடையே மிகும்.

சிறுபான்மை நிலைமொழி யீற்றுமெய் கெடாமல், வெயி லத்துச் சென்றான் - இருளத்துச் சென்றான் - விண்ணத்துக் கொட்கும் - என்று முடிதலுமுண்டு. (தொ. எ. 133 நச். உரை)

அத்துச்சாரியையின் அகரம் கெடுதல் -

{Entry: A01__062}

அத்துச்சாரியை வருமிடத்து, நிலைமொழியீற்றில் இயல்பு வகையாலோ விதிவகையாலோ அகரம் நிற்ப, அத்துச் சாரியை யின் அகரம் கெட்டு முடியும்.

எ-டு : மக + அத்து + கை = மகத்துக்கை - இயல்பு அகரஈறு; மரம் + அத்து + குறை > மர + அத்து + குறை = மரத்துக் குறை - விதி அகரஈறு (நன். 252)

அத்துச்சாரியை வரும் இடங்கள் -

{Entry: A01__063}

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபொடு புணரு மிடத்தும், மகரஈற்றுப் பெயர்கள் உருபொடு புணருமிடத்தும், அழன் புழன் என்ற சொற்கள் உருபொடு புணருமிடத்தும் இடையே அத்துச் சாரியை வரும்.

எ-டு : விள + அத்து + கண் = விளவத்துக்கண்; பலா + அத்து + கண் = பலாவத்துக்கண் (தொ. எ. 181 நச்.); மரம் + அத்து + ஐ = மரத்தை (தொ.எ. 185 நச்.); அழன் + அத்து + ஐ = அழத்தை; புழன் + அத்து + ஐ = புழத்தை (தொ.எ. 193 நச்.); எகின் + அத்து + ஐ = எகினத்தை (தொ.எ. நச். உரை)

இனி, பொருட்புணர்ச்சிக்கண், கலம் என்ற சொல்முன் குறை என்ற சொல் உம்மைத்தொகைப்படப் புணருமிடத்து அத்துச்சாரியை இடையே வரக் கலத்துக்குறை என முடியும். (தொ.எ. 168 நச்.)

மக என்ற பெயர் பொருட்புணர்ச்சிக்கண் மகத்துக்கை என அத்துச் சாரியை இடையே பெறும். (தொ.எ. 219 நச்.)

நிலா என்ற சொல் நிலாஅத்துக் கொண்டான் என அத்துச் சாரியை பெறும். (தொ.எ. 228 நச்.)

பனி, வளி, மழை, வெயில், இருள், விண், மகர ஈற்று நாட்பெயர், ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் என்னுமிவையும் இடையே அத்துச்சாரியை பெற்று முடிவன.

எ-டு : பனியத்துச் சென்றான் - தொ.எ. 241 நச்.

வளியத்துச் சென்றான் - தொ.எ. 242 நச்.

மழையத்துச் சென்றான் - தொ.எ. 287 நச்.

வெயிலத்துச் சென்றான் - தொ.எ. 377 நச்.

இருளத்துச் சென்றான் - தொ.எ. 402 நச்.

விண்ணத்துக் கொட்கும் - தொ.எ. 305 நச்.

மகத்தாற் கொண்டான் - தொ.எ. 331 நச்.

ஆயிரத் தொன்று - தொ.எ. 317 நச்.

‘அதன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே’ -

{Entry: A01__064}

உரையாசிரியன்மார் எல்லாம் ‘மகன்வினை கிளப்பின்’ என்று பாடம் ஓதினர். மகனது வினையைக் கூறுமிடத்து வல் லெழுத்து மிகும் என்று பொருள் கூறி, ‘மகன்றாய்க் கலாம்’ என எடுத்துக்காட்டி, மகன் தாயொடு கலாய்த்த கலாம்- என்று பொருள் கூறினர்.

மகன் வினையே அன்றி, ‘மகள் தாய்க் கலாம்’ என மகள் வினை கிளப்பினும், வாளா ‘தாய்க் கலாம்’ எனவே கிளப்பினும், வல்லெழுத்து மிகுதல் ஆம்;தாய் என்பது விரவுப்பெயர் ஆதலின், மகவு - பிள்ளை - என அஃறிணைச் சொற்களைக் கூட்டிக் கூறினும், இவ்விதி பொருந்தும். ஆதலானும் ‘மகன்’ என வரைந்து கூறுதல் குன்றக் கூறலாம். அன்றியும், வல் லெழுத்து மிகுதற்கு மகன் என்னும் சொல் எவ்வாற்றானும் ஏதுவாகாமையும் காண்க. ‘அதன்வினை’ என்பது ‘முதனிலை’ என்னும் சீரொடு பொழிப்பெதுகை பொருந்தி யாப்பிசை சிறந்து நிற்றலும் காண்க. (தொ.எ. 359 ச.பால.)

அதாஅன்று -

{Entry: A01__065}

‘அது +அன்று’ என்னும் புணர்மொழி ‘அதாஅன்று’ என்பது. இப்புணர்மொழித் தொடர் ‘அஃதன்று’ என முற்றாயும், ‘அதுவே அன்றியும்’ என எச்சமாயும் சங்க விலக்கியத்துள் பயின்று வருதல் காணலாம். ஆகவே, இச் சொற்கள் வினா விடை முறையில் ‘அதுவா? அன்று’ என நின்று (அது- ஆ - அன்று) அதா - அன்று, அதாஅன்று - என்று புணர்ந்துள்ளமை அறியலாம். (தொ.எ. 258. ச.பால.)

அதாஅன்று என்ற சொல்லமைப்பு -

{Entry: A01__066}

அது என்ற நிலைமொழி அன்று என்ற வருமொழியொடு கூடுமிடத்து நிலைமொழித் துகரம் ‘தா’ எனத்திரிய, அதாஅன்று என முடியும். (தொ. எ. 258 நச்.)

அதாஅன்று என்பது அதுவன்றி என்னும் பொருளது. அன்றி என்ற வினையெச்சம் அன்று எனத்திரிந்ததோ எனக் கருத வேண்டியுள்ளது. இதனால், இன்றி என்பது இன்று எனத் திரிவது போல, ஒரோவழி அன்றி என்பதும் அன்று எனத் திரிதலும் பெறப்படும்.

அது இது உது என்பன மூலத் திராவிட மொழியில் அத் இத் உத் என மெய்யீற்றுச் சொற்களாக இருந்தன. அது இது உது என்பன வட மலையாளத்தில் போலவே, தமிழிலும் அத இத உத எனச் சிலவிடங்களில் வழங்கியிருத்தல் கூடும். அகரஈற்றின் முன் அகரம் வரின், ஒருசொல் நீர்மையில் இவ்விரண்டு அகரமும் ஓர் ஆகாரமாகி வழங்கும். ஆதலின் அத + அன்று = அதான்று என்று வந்தது. மர + அடி = மராடி என்றாவது போல்வது இது. வருமொழி ‘அன்று’ என்பதைத் தெரிவிக்க, அதாஅன்று என்று அகரம் அறிகுறி என்ற அளவில் எழுதப் பட்ட தாகும். (எ. ஆ. பக். 143)

அதிகாரம் -

{Entry: A01__067}

பதினான்கு வகையான உரையுள், அதிகாரமாவது எடுத்துக் கொண்ட அதிகாரம் இதுவாதலின் இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தொடு பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். (நன். 21 சங்கர.)

அதிகாரம் என்ற சொற்பொருள் -

{Entry: A01__068}

அதிகாரம் - முறைமை (தொ. எ. 1. நச். உரை)

அதிகாரம் - அதிகரித்தல். வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல் பலசூத்திரங்களொடு சென்றியைதலையும், ஒன்றன் இலக்கணம் பற்றி வரும் பலசூத்திரத் தொகுதியையும் அதிகாரம் என்ப. (தொ. சொ. 1 சேனா. உரை)

அதிகாரம் அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று, வேந்தன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச் செய்வது போல, ஒருசொல் நின்றுழி நின்று பலசூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது. மற்றொன்று, சென்று நடாத்தும் தண்டத்தலைவர் போல, ஓரிடத்து நின்ற சொல் பலசூத்திரங்களொடு சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிப்பது. இவற்றை முறையே வடநூலார் யதோத்தேச பக்கம் எனவும், காரியகால பக்கம் எனவும் கூறுப. (சூ. வி. பக். 17) (நன். 56 சிவஞா).

எ-டு : எழுத்துப் பற்றிவரும் பலசூத்திரங்களின் தொகுதி எழுத்ததிகாரம் எனப்பட்டது.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 34ஆம் சூத்திரத்தி லுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற தொடர் ‘குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்து நிற்றல் வேண்டும்’ என்று சென்றியைந்து தன் பொருளைப் பயப் பிப்பது அதிகாரத்தான் வந்ததாகும்.

அதிகாரம் : சொற்பொருள் விளக்கம் -

{Entry: A01__069}

அதிகாரம் - அதிகரித்தல். ‘அதிகாரம் என்ற சொற்பொருள்’ காண்க.

அதுமுன் வரும் அன்று -

{Entry: A01__070}

‘அது’ நிலைமொழியாக, அதன்முன் வரும் ‘அன்று’ செய்யுட் கண் அதான்று என முடியும். அதுவன்றி என்பது அதன் பொருள். (நன். 180)

‘அதைமற்றம்ம’ என்ற சொற்றொடர் அமைப்பு -

{Entry: A01__071}

அது + மற்று + அம்ம > அது + ஐ + மற்று + அம்ம = அதை மற்றம்ம.

அது என்ற சொற்கும் மற்று என்ற சொற்குமிடையே ஐகாரச் சாரியை வந்தவழி, நிலைமொழி உகரம் கெட அது ‘அத்’ என்றாக, அதனோடு ஐகாரம் சேர்ந்து ‘அதை’ என்றாகி வருமொழியோடு அதைமற்றம்ம எனப் புணர்ந்தது. (தொ. எ. 258 நச். உரை)

அந்தர்ப்பாவிதணிச் -

{Entry: A01__072}

ணிச் என்பது பிறவினை விகுதியாகும். அந்தர்ப்பாவிதம் என்பது மறைதல் என்னும் பொருளது. எனவே, அந்தர்ப்பா- விதணிச் என்பது பிறவினைவிகுதி மறைந்திருப்பதாம்.

தெரிவித்து என்ற சொல்லில் பிறவினையைக் காட்டும் விவ் விகுதி வெளிப்படையாக உள்ளது. தெரிந்து என்ற சொல் தெரிவித்து என்று பொருள் தருமிடத்துப் பிறவினை விகுதி மறைந்துள்ளது.

தபு என்பது ‘நீ சா’ என்ற பொருளில் தன்வினையாம்; ‘நீ ஒன்றனைச் சாவப்பண்ணு’ என்ற பொருளில் பிறவினையாம்; பிறவினைப் பொருளில் ‘தபு வி’ என்பதன்கண் உள்ள பிறவினை விகுதி மறைந்து வந்தது. அஃது அந்தர்ப்பாவித ணிச் என்பர் பிரயோகவிவேக நூலார். அவரைப் பின்பற்றிச் சிவஞான முனிவரும், “தெரிவித்து எனற்பாலது ‘தெரிந்து’ என வந்தமை அந்தர்ப்பாவித ணிச் ஆகிய பிறவினை விகுதி தொக்கு நிற்றல்” என்றார். (பா. வி. சிவ. பக். 10).

அந்தர்ப்பாவித ணிச் என்பது தமிழ்மரபுக்கு ஏலாது என்பதை அரசஞ் சண்முகனார் விளக்கிக் கூறியுள்ளார். (பா. வி. பக். 218 - 220)

அநுவாதம் -

{Entry: A01__073}

முன்னர்க் கூறப்பட்ட ஒருசெய்தியையே பின்னரும் பிறிதொரு காரணம் பற்றி எடுத்துக்கூறுதல் கூறியது கூறல் என்ற குற்ற மாகாது, அநுவாதம் என்னும் வழிமொழிதலாய் அடங்கும்.

எ-டு : ‘ அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்

அஆ குடு துறு என் ஏன் அல் அன்’ (நன். 140).

என, அன் என்பதனைப் படர்க்கை ஆண்பால் விகுதியாதல் காரணத்தால் முன்னர்க் கூறித் தன்மையொருமை விகுதி யாதல் காரணத்தால் பின்னரும் கூறுதல் கூறியது கூறல் என்னும் குற்றமாகாது, வழிமொழிதல் என்னும் அநுவாத மாம்.

‘கூறின பின்னும் கூறின சில; அவை

அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக’

என்னும் இலக்கண க் கொத்து 7 உரையினை நோக்குக.

அப்பும் உப்பும் கலந்தமை போல்வது -

{Entry: A01__074}

தனிமெய்யின் மாத்திரை அரை, உயிர்க்குறிலின் மாத்திரை ஒன்று; உயிர்நெடிலின் மாத்திரை இரண்டு. ஆயின் உயிர் மெய்க்குறிலின் மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெடிலின் மாத்திரை இரண்டு. நீர் தனித்து அளந்தபோதும் நாழியாய் அரைநாழி உப்பைக் கலந்தபோதும் ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வது, ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் பெற வேண்டிய உயிர்மெய்க் குறிலும் உயிர் மெய் நெடிலும் முறையே ஒரு மாத்திரையும் இரு மாத்திரை யும் பெறும் நிலை. நீர் உப்பின் சுவையது ஆயினவாறு போல, உயிர்மெய்யிலுள்ள உயிரும் மெய்க்குரிய வன்மை - மென்மை - இடைமை - என்ற ஒலிகளைப் பெறும் என்பது. (தொ. எ. 10, 47 நச். உரை)

அம்முச் சாரியை திரியுமாறு -

{Entry: A01__075}

அம்முச் சாரியையின் மகரம் வருமொழி முதற்கண் ககர சகர தகரங்கள் வருமிடத்து முறையே ஙகர ஞகர நகரங்களாகத் திரியும்; வருமொழி முதற்கண் மென்கணமும் இடைக்கண மும் வருமிடத்தே கெடும். உயிர்க்கணம் வருமிடத்தே மகரம் கெடுதலும் அம்முச் சாரியை முழுதும் கெடுதலும் ஆம். (பகரத்திற்கு இனமெல்லெழுத்து மகரம் ஆதலின், பகரம் வருமொழி முதற்கண் வருமிடத்து அம்முச் சாரியையின் மகரம் இயல்பாகவே நிற்கும்.)

எ-டு : புளி + அம் + கோடு = புளிய ங் கோடு; புளி + அம் + செதிள் = புளிய ஞ் செதிள்; புளி + அம் + தோல் = புளிய ந் தோல்; புளி + அம் + ஞெரி = புளிய ஞெரி; புளி + அம் + யாழ் = புளிய யாழ்; புளி + அம் + இலை = புளிய விலை (வகரம் உடம்படுமெய்); புளியிலை (யகரம் உடம்படுமெய்); (புளி + அம் + பழம் = புளியம்பழம் - இயல்பு)(தொ. எ. 129, 130 நச்.)

அம்முச் சாரியை வருமிடங்கள் -

{Entry: A01__076}

பொருட்புணர்ச்சிக்கண் கீழ்க்கண்ட சொற்கள் நிலைமொழி- யாம்.

புளி என்னும் மரப்பெயர் - புளியங்கோடு, புளியஞெரி

(தொ. எ. 244 நச்.)

எரு, செரு என்னும் சொற்கள் - எருவங்குழி, செருவக்களம் (260)

பனை, அரை, ஆவிரை என்னும் மரப்பெயர்கள் - பனங்காய், அரையங்கோடு, ஆவிரங்கோடு (283)

ஆண் என்ற மரப்பெயர் - ஆணங்கோடு (304)

எகின் என்ற மரப்பெயர் - எகினங்கோடு (336)

னகர ஈற்று இயற்பெயர்முன்னர் மக்கள் முறைப்பெயர் - கொற்றங்கொற்றன், சாத்தங்கொற்றன் (350)

பீர் என்னும் சொல் - பீரங்கொடி (365)

பூல், வேல், ஆல் என்னும் மரப்பெயர்கள் - பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு (375)

குமிழ் என்ற மரப்பெயர் - குமிழங்கோடு (386)

குற்றுகர ஈற்றுச் சொற்கள் ஆகிய ஏறு, சூது, வட்டு, புற்று முதலியன - ஏறங்கோள், சூதம்போர், வட்டம் போர், புற்றம் பழஞ்சோறு முதலாகப் புணரும். (417)

இவற்றுள், செரு என்பதன்முன் அம்மின் இறுதி கெடும்; பனை ஆவிரை என்பவற்றின் ஈற்று ஐகாரம் கெடும்; னகர ஈற்று இயற் பெயரின் ஈற்று அன் கெட்டு அம்முப் புணரும் என்பன கொள்க.

அம்முன் இகரயகரம் ஐ ஒத்து இசைத்தல், அம்முன் உகரவகரம் ஒள ஒத்து இசைத்தல் -

{Entry: A01__077}

உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், அஇ - அஉ - என இங்ஙனம் கூறிய குற்றுயிர்களை வலிந்து மயக்கிக் கூறின் ஐகார ஒளகாரம் போல் இசைத்தலானும், குற்றொற்றுக்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலின் இரண்டுமாத்திரையவாகிய ஐகார ஒளகாரங்களோடு ஒவ்வாமையின் ஒலிவகையான் மயக்கிக் கூறின் அவை ஒத்திசைத்தலானும், அவற்றுள்ளும் வகரம் பிறப்பு வேறுபாட்டான் ஒலியும் ஒருபுடை ஒத்தலானும் ‘எய்தின்’ என்றார்.

வருமாறு : அஇ = ஐ, அய் = ஐ; கஇ = கை, கய் = கை.

அஉ = ஒள, அவ் = ஒள; கஉ = கௌ, கவ் = கௌ (நன்.125 சங்கர.)

அரிமா நோக்கு -

{Entry: A01__078}

சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரை யும் நோக்குமது போல, இறந்த சூத்திரத்தினோடும் எதிர்ந்த சூத்திரத்தினோடும் ஒரு சூத்திரம் இயைபுபடக் கிடக்கும் நிலை. எ-டு : தொ.எ. 88 நச். (நன். 18 மயிலை.)

அரில் தபத் தெரிதல் -

{Entry: A01__079}

அரில் - மயக்கம்; தப - கெட.

இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன்றாகப் பிறழக்கொள்ளும் திரிபும் ஆகிய மயக் கங்கள் நீங்குமாறு தெரிவித்தல். தெரிதல் என்ற தன்வினை தெரிவித்தல் என்ற பிறவினைப் பொருளது என்ப. (தொ. சி. பாயி.)

கடா அறத் தெரிந்து கூறி - இள.

குற்றமற ஆராய்ந்து கூறி - நச்.

குற்றமறத் தெரிவித்து - சிவ. பா. வி., எ.கு.

‘அரில்தபத் தெரிந்து’ என்பதனைத் தன்வினையாகக் கொண்டு, நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி (ஒன்றனுள் பிறிதொன்று கலவாத மரபினையுடைய தனது நூல்முறையைக் காட்டி) என்று உரை கூறுவர், அரசஞ் சண்முகனார். (பா. வி. பக். 161)

“தெரிந்து என்பதற்கு விளங்கி என்று பொருள்கூறி மரபின் வினை ஆக்காது, கடாஅறத் தெரிந்து கூறி எனவும், குற்றமற ஆராய்ந்து கூறி எனவும், தெரிவித்து எனவும் ஆசிரியன் வினையாக்கி அம்மூவரும் உரைத்தார். கடாஅறத் தெரிதலும் குற்றமற ஆராய்தலும் நூல் செய்யுங்காலை வேண்டப்படுதல் அன்றி நூல் அரங்கேற்றுங்காலை வேண்டப்படாமையானும், ஓர் ஏதுவுமின்றிக் ‘கூறி’ என்னும் சொல் வருவித்தல் கூடாமை யானும், ‘தெரிவித்து என்பது தெரிந்து என நின்றது’ எனல் இலக்கணம் ஆகாமையானும் அவருரை பொருந்தா என்பது.” (பா. வி. பக். 215).

சண்முகனார் கருத்தால், ‘நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி, ஒன்றனுள் ஒன்று கலவாத மரபினையுடையது தொல்காப்பியம்’ என, ‘அரில் தபத் தெரிதல்’ என்பது தொல்காப்பிய நூலுக்கு அடைமொழி ஆகும்.

அரில் தப நாடல் -

{Entry: A01__080}

இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன் றாகவே உறுதியாகக் கொள்ளும் திரிபும் ஆகிய மயக்கங்கள் நீங்க ஆராய்தல். (தொ. எ. 102 நச்.)

அரை என்ற மரப்பெயர் சாரியை பெறுதல் -

{Entry: A01__081}

அரை (அரச மரம்) என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் அரையங் கோடு - அரைய நுனி - அரையவட்டு என்றாற்போல, அச் சாரியைக் குரிய திரிபுகள் பெற்றுப் புணரும். (தொ. எ. 283. நச்.)

அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__082}

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதது அல்வழிப் புணர்ச்சியாம். அது வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகை, இந்நான்கன் புறத்தும் பிறந்த அன் மொழித் தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், இருவகை வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத்தொடர் எனப் பதினான்காம். (இத்தொகை தொகா நிலைத் தொடர்களில் நிலைமொழியும் வருமொழி யும் புணருமாறு அல்வழிப்புணர்ச்சியாம்).

எ-டு : கொல்யானை, கருங்குதிரை - பலாமரம், மதிமுகம், கபில பரணர், கருங்குழல் (வந்தாள்) - இவையாறும் தொகைநிலைத் தொடர். பொன்னன் வந்தான், பொன்னா வா, வந்த மன்னன் - பெரிய மன்னன், வந்துபோனான் - மெல்லப் போனான், வந்தான் பொன்னன் - குழையன் பொன்னன், மற்றொன்று, நனிபேதை, பாம்பு பாம்பு - என முறையே காண்க. (தெரிநிலையும் குறிப்புமாக இருவகைப் பெய ரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர்கள் வினை முற்றுத் தொடர்கள் கொள்ளப்பட்டன). (நன். 152)

அல்வழிப் புணர்ச்சிக்கு உரியன -

{Entry: A01__083}

எழுவாயும், விளியும், தெரிநிலைவினையும் குறிப்புவினையு மாகிய முற்றுச்சொற்களும், பெயரெச்சமும் வினையெச்சமும் ஆகிய எச்சச் சொற்களும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய இவை (நிலைமொழியாக நிற்ப,) தமக்கேற்ற பெயரொ டும் வினையொடும் புணரும் புணர்ச்சியும், விரைவு ஆதியின் வரும் அடுக்கும், உவமைத் தொகையும், உம்மைத் தொகையும் (என்னுமிவற்றுள் நிலைமொழி வருமொழியாகிய) தமக்கேற்ற பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும் அல்வழிப் புணர்ச்சியாம். (இ. வி. எழுத். 54)

அல்வழிப் பொருட்பெயர், வேற்றுமைப் பொருட்பெயர் -

{Entry: A01__084}

வினைச்சொல்லைச் சார்ந்த முதற்பெயராகி விரிக்குமிடத்து வேற்றுமை யுருபு பெறாது நிற்கும் பெயரே அல்வழிப் பொருட் பெயர். (எ-டு : மரம் பெரிது).

கல்லெடுத்தான் - கல்வீடு - கல்லியல்பு - என்பவற்றுள் உருபு தோன்றாதாயினும் பொருளை விரித்தால் கல்லையெடுத்தான் - கல்லால் ஆகிய வீடு - கல்லினது இயல்பு - என்று அவ்வுருபு கூட்ட வேண்டினமையால், இதிலே கல் என்னும் சொல் வேற்றுமைப் பொருட்பெயர் எனப்படும்.

அவ்வுருபு தோன்றாமலும் கூட்டாமலும் விரித்துரைக்கப் படும் பெயர் அல்வழிப் பொருட்பெயர் எனப்படும். (தொ. வி. 22 உரை)

அல்வழியாவன -

{Entry: A01__085}

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதன அல்வழிப் புணர்ச்சியாம். ‘வேற்றுமை அல்வழி’ என்பதே அதன் முழுப்பெயர்; சுருக்கம் கருதி இஃது ‘அல்வழி’ எனப்படுகிறது.

எழுவாய் வேற்றுமையானது பொருண்மை சுட்டல் - வியங்கொள வருதல் - வினைநிலை உரைத்தல் - வினாவிற்கு ஏற்றல் - பண்பு கொள வருதல் - பெயர்கொள வருதல் - என்ற ஆறுபயனிலைகளொடும் புணர்ந்த புணர்ச்சியும், முற்றானது பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும், பெய ரெச்சமும் வினையெச்சமும் முறையே பெயரொடும் வினை யொடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமத்தொகையும் உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் தம்முள் நிலைமொழி வருமொழியாகப் புணர்ந்த புணர்ச்சியும், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொ டும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித்தொகை பெயர் வினைகளோடு புணர்ந்த புணர்ச்சியும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த புணர்ச்சி யும் அல்வழிப் புணர்ச்சியாம். (தொ. எ. 112 நச்.)

புணர்ச்சி என்பது நிலைமொழி வருமொழி இரண்ட னிடையே நிகழ்வதாதலின், பண்புத்தொகையும் வினைத் தொகையும் பிரித்துப் புணர்க்கப்படா (தொ. எ. 483) என்று ஆசிரியர் கூறியதனான், அவற்றை இருசொல்லாக அவற்றின் இயல்பான நிலையில் கொள்ளுதல் இயலாது என்று கருதி, நச்சினார்க்கினியர் ‘வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றுவழிப் புணரும் புணர்ச்சி’ என்று விளக்கிக் கூறினார்.

‘அவ்வளபு உடைய கூட்டி எழூஉதல்’ -

{Entry: A01__086}

இரண்டு மாத்திரையவாகிய நெடில்கள் நீண்டொலித்தலை வேண்டும்போது நீட்டத்துக்குத் தேவையான அளவு அந்நெடில்களுக்கு இன மொத்த குறில்களைப் பிளவுபடாமல் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக. (தொ. எ. 6. இள. உரை)

வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக, இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவராயின், தாம் கருதிய மாத்திரையைக் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரையை எழுப்புக. (நச். உரை)

நெடிலொடு குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர் அப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டி னார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழி அல்லது எண்ணெய் புலப்படா வாறு போல என உணர்க. (நச். உரை)

(எழு : தன்வினை; எழூ உ : பிறவினை - அளபெடை பொருள் வேறுபாடு தந்தது.)

தமிழிலக்கியங்களில் அளபெடையை அசைநிலையாகச் சில இடங்களில் கொண்டமையானும், நெட்டெழுத்தை இரண் டெழுத்தாகக் கொண்டு இரண்டசைகளாகக் கொள்ளாமை யானும் இவ்வாறு கூறினார். (எ.கு. பக். 15)

‘அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின’ ஆதல் -

{Entry: A01__087}

பிறப்பிடம் : கங முதல்நா முதல்அண்ணம், சஞ - இடைநா இடையண்ணம், டண - நுனிநா நுனியண்ணம் - என இவை உறப் பிறக்கும்.

கங, சஞ, டண என்பவற்றிற்குப் பிறப்பிடமும் முயற்சியும் மூவகையினவே; ஆயின் மெல்லெழுத்தின் பிறப்பிற்கு மூக்கொலி துணை செய்யும் என்ற ஒன்றே வேறுபாடு. ஆதலின் க முதல்நாவிலும் ங முதல் அண்ணத்திலும் பிறக்கும் என்றாற் போலக் கொள்ளற்க என்பது. (தொ. எ. 92. நச்.உரை)

‘முதல்நா அண்ணம்’ என்பது முதல்நாவொடு பொருந்திய அண்ணம் என்று பொருள்படும். ‘இடைநா அண்ணம்’ முதலியவற்றுக்கும் இஃது ஒக்கும். (எ. கு. பக். 93).

அவப்பிரஞ்சனம் -

{Entry: A01__088}

அவப்பிரஞ்சனமாவது இழிசனர் பேசுமொழி. (மு.வீ. மொழி. 28).

அவலோகிதன் -

{Entry: A01__089}

பலரும் ஆய்ந்து போற்றும் பண்புடையன் அவலோகிதன் என்னும் பௌத்தப் பெரியோன் எனவும், அவனிடத்தில் அகத்தியன் மாணாக்கனாக இருந்து பாடம் கேட்டுத் தெளிந்து உலகோர் பயன்பெறத் தமிழிலக்கணத்தை இயற்றித் தந்தான் எனவும் வீரசோழியம் அவலோகிதனைப் பற்றிக் குறிக்கிறது. (வீ. சோ. பாயி. 2)

அவா ‘வேட்கை’யொடு புணர்தல் -

{Entry: A01__090}

வேட்கை என்பது நிலைமொழியாக, அவா என்பது வரு மொழியாகப் புணரும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வேட்கை + அவா = வேணவா என்று புணரும். வேட்கை + அவா > வேட் + அவா > வேண் + அவா = வேணவா. வேட்கை. யான் தோன்றிய அவா என்பது பொருள். வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டும் என மேன்மேல் நிகழும் ஆசை. வேட்கையும் அவாவும் என அல்வழிப் புணர்ச்சி கொள்ளினும் ‘வேணவா’ என்ற முடிபு ஒக்கும். (தொ. எ. 288 நச். உரை)

வேள் + அவா > வேண் + அவா = வேணவா என முடிந்தது. ஆள் - ஆண் எனவும், எள் - எண் எனவும் திரிந்தாற்போல, வேள் - வேண் எனத் திரிந்து புணர்ந்தது எனலாம். (எ. ஆ. பக். 148)

‘அவைதாம் இயற்கைய ஆகும் செயற்கைய’ பொருள் -

{Entry: A01__091}

இயற்கை - சாரியை பெறாது முடிதல்; செயற்கை - செய்கை. நெட்டெழுத்தை அடுத்து வரும் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள் உருபுகளை ஏற்குமிடத்துப் பொதுவிதிப்படி இன்சாரியை பெறாது, (இனஒற்று அடுத்து) இயல்பாக முடியும் செய்கையை யுடையன.

எ-டு : காடு + ஐ > காட்டு + ஐ = காட்டை

ஆறு + ஐ > ஆற்று + ஐ = ஆற்றை

குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுத்து முடிந்தவாறு.

கவடு + ஐ > கவட்டு + ஐ = கவட்டை

முயிறு + ஐ > முயிற்று + ஐ = முயிற்றை

என, உயிர்த்தொடர்களையும் உரையாசிரியர்கள் கொண்ட னர். (தொ. எ. 197 நச்).

‘அழன்’ உருபேற்கையில் பெறும் சாரியை -

{Entry: A01__092}

அழன் என்ற சொல் உருபேற்குமிடத்து அத்துச்சாரியையும் இன்சாரியையும் தனித்தனிப் பெற்று முடியும்; ஒரோவழி இருசாரியைகளையும் பெறுதலுண்டு.

வருமாறு : அழன் + அத்து + ஐ = அழத்தை; அழன் + இன் + ஐ = அழனினை; அழன் + அத்து + இன் + ஐ = அழத்தினை

பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வருவழி னகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு, அழன் + குடம் > அழ + குடம் > அழக் + குடம் = அழக்குடம்; அழன் + கொடி > அழ + கொடி > அழ + க் + கொடி = அழக்கொடி - என முடியும். அழன் - பிணம், பேய். (தொ. எ. 193, 354 நச். உரை)

‘அளபு இறந்து உயிர்த்தல்’ -

{Entry: A01__093}

உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் ஒரு மாத்திரை அளவின. உயிர்நெடிலும் உயிர்மெய் நெடிலும் இரண்டு மாத்திரை அளவின. இவை தமக்கு ஓதப்பட்ட ஓசையளவினைக் கடந்தொலித்தல் அளபிறந்து உயிர்த்தலாம். (தொ. எ. 33 நச்.)

(இசைநூலிடத்து, உயிர் 12 மாத்திரை யளவும் மெய் 11 மாத்திரை யளவும் நீண்டொலித்தலுமுண்டு என்ப.) (நன். 100 மயிலை.)

‘அளபு இறந்து இசைத்தலும்’: இச்சூத்திரத்தின் நோக்கும் பயனும் -

{Entry: A01__094}

இயற்றமிழ்ச் செய்யுளுள், உயிரெழுத்துக்கள் நான்கு மாத்திரையினும் கடந்து இசைத்தலும், ஒற்றெழுத்துக்கள் அளபெடையைக் கடந்து இசைத்தலும் உள. அவை ஏழிசை யொடும் பொருந்திய நரம்பினையுடைய யாழ் நூலிடத்தன வாம் என்ப - என்னும் இச்சூத்திரத்தால், பாக்களை ஓசை நயம்படக் கூறுதற்கண்ணும், கொச்சகக் கலி- பரிபாடல் - பண்ணத்தி - ஆகியவற்றைப் பண்ணோடு ஒப்பக் கூறுதற் கண்ணும், உயிரும் ஒற்றும் மாத்திரையளவு நீண்டிசைக்கு மிடத்து, அவற்றிற்கு இயற்றமிழ் இலக்கணத்துள் விதி யின்மையின், அவற்றை இசைத்தமிழ் இலக்கண முறையான் அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்பது இச்சூத்திரத்தின் நோக்கும் பயனும் ஆம். (தொ.எ.33 ச.பால.)

அளபெடை இலக்கணம் -

{Entry: A01__095}

அளபெடை என்பது நெடில் நீண்டொலிக்குமிடத்தும், குறில் நெடிலாகி நீண்டொலிக்குமிடத்தும் அந்நீட்சிக்கேற்ப ஒலிக்கப்பெறும் ஒலியளவை உணர உடன்ஒலிக்கப்பெறும் இனக்குறில்களாம். இரண்டு மாத்திரை அளவிற்றாய நெடில் ஒலி மூன்று நான்கு மாத்திரையாக நீண்டொலிக்க அதன் இனக்குறில் முறையே ஒன்று இரண்டு அடுத்திணைத்து ஒலிக்கப்படும். தொல்காப்பியனார்க்கு இனமான குறிலே அளபெடை யெழுத்தாம்.

நெடிலொன்றே தனித்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாக ஒலிக்க, அதன் இனக்குறில் ஒன்றோ இரண்டோ அறிகுறியாக எழுதப்படும் என்பது நன்னூலார் கொள்கை.

இனி, மெய் அளபெடுக்குமிடத்து அந்த மெய்யே மீண்டும் ஒலிக்கப்படும். வரிவடிவில் அம்மெய்யே இரட்டித்து எழுதப்படும்.

உயிரளபெடையானது இயற்கையளபெடை, செயற்கை யளபெடை, எழுத்துப்பேறளபெடை, இசைநூலளபெடை, குற்றெழுத்தளபெடை, நெட்டெழுத்தளபெடை, இன்னிசை யளபெடை, சொல்லிசை யளபெடை எனப் பலவகைப்படும்.

எ-டு : இயற்கையளபெடை - குரீஇ; செயற்கையள பெடை - ‘துப்பாய தூஉ மழை’ (குறள் 12); எழுத்துப்பேறளபெடை - உவா அப்பதினான்கு; குற்றெழுத்தளபெடை - தழூ உ (தழு); நெட்டெழுத் தளபெடை - ஆடூ உ; இன்னிசையளபெடை - ‘கெடுப்பதூ உம் கெட்டார்க்குச்......’ எடுப்ப தூஉம் (குறள் 15); சொல்லிசையளபெடை - எ ழூஉ (எழுப்பி)

இவ்வளபெடை பொருள்வேறுபாடு அறிவிப்பதூஉம் உண்டு.

எ-டு : எழு : தன்வினை, எழூஉ : பிறவினை;

வெள - கைப்பற்று, வெள உ - கைப்பற்றியே விடு.

(தொ. சொ. 283 நச். உரை)

அளபெடை எழுத்துக்களின் தொகை -

{Entry: A01__096}

அளபெடைகளைத் தனியெழுத்தாகத் தொல்காப்பியனார் எண்ணவில்லை. நெடில் ஏழும் அளபெடுத்தலின், இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் அளபெடையெழுத்து ஏழ் என்றனர். இ.வி. நூலாரும் அளபெடை ஏழ் என்றே கூறினார். தனி - முதல் - இடை - கடை - என அளபெடையை நால் வகைப் படுத்திக் கூறுவாருமுளர்.

நன்னூலார் தனிநிலையை முதல்நிலையில் அடக்கி, ஏழ் நெட்டெழுத்துக்களும் மொழி முதல் இடை கடை என்ற மூவிடத்தும் வர, அளபெடை 21 என்றார். நெடில் ஏழனுள் ஒளகாரம் மொழிமுதலிலேயே அளபெடையாக வருதல் கூடும்; ஏனைய ஆறும் மொழிமூவிடத்தும் வரும். ஆதலின் அளபெடை எண்ணிக்கை 19 ஆக, அவற்றுடன் இன்னிசை யளபெடை சொல்லிசையளபெடை என்ற இவற்றைக் கூட்டி அளபெடை 21 என்பர் சங்கரநமச்சிவாயர். இன்னிசை சொல் லிசையளபெடைகள் முற்கூறிய அளபெடையுள் அடங்கும் ஆதலின், 21 என்று இவற்றைக் கூட்டிக் கொள்ளுதல் சாலாது. அளபெடையின் கணக்கில் குரீஇ முதலிய இயற்கை யளபெடையையும் கொள்ளுதல் வேண்டும்.

அளபெடை என்பன நெடிலையடுத்து ஓசை நிறைக்க வரும் இனக் குற்றுயிராகிய ஐந்தே ஆதலின், அவற்றைச் சார்பெழுத் தாகக் கொண்டு தனியே கணக்கிடுதல் தொல்காப்பிய னார்க்குக் கருத்தன்று.

அளபெடை பிளவுபடா ஓசையாயின், ‘கடாஅக் களிற்றின் மேல்’, ‘படாஅ முலைமேல்’ (குறள் 1087) என்பனவற்றில் க, டாஅ; ப, டாஅ - என்று அலகு பிரித்தல் வேண்டும். இவ்வாறு பிரித்தால் தளை சிதையும். ஆதலின் கடா, அ; படா, அ - என்றே பிரித்தல் வேண்டும். ஓசையை நெடிலாகவும் குறிலாகவும் பகுத்து அசைகொள்ளவேண்டு மெனில், ஒரு நெடிலையே இருகுறிலாகப் பகுத்துக் கடா என்பதனைக் கட, அ என்றும் அசை கொள்ளலாம்; அவ்வாறு யாரும் கொள்வதில்லை. ஆதலின் அளபெடை என்ற குற்றெழுத்துத் தனக்கொத்த நெடிலை அடுத்த தனிக்குறிலாய் அசைநிலை பெறுதல், சீரும் தளையும் சிதையின் அசைநிலை பெறாமை - ஆகிய இருநிலை யும் பெறுதல் உணரப்படும். (எ. ஆ. பக். 44, 45)

(‘காட்டில் வளந்தழைத்தல் காணூஉக் களித்துத்தன்’ என்னும் வெண்பா அடிக்கண், அளபெடையாகிய உகரக் குற்றுயிர் அலகு பெறாது நிற்ப, காணூ என்ற சொல் போல வருஞ்சீரோடு இயற்சீர்வெண்டளையான் இசைந்தவாறு.)

அளபெடையில் இனக்குறில் குறி ஆதல் -

{Entry: A01__097}

ஒலிவேற்றுமையால் எழுத்துப் பலவாயின. அங்ஙனமாக நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப் பிறக்கும் அள பெடையை இரண்டெழுத்துக் கூடி மூன்று மாத்திரை ஆயிற்று எனக் கொள்ளின், இரண்டு எழுத்தொலி அங்ஙனம் ஒன்றில்லை. அதற்கு அளபெடை என்னும் பெயர் ஏலா தொழியும். ஆதலின் அவ்வாறு இரண்டெழுத்தொலியாகக் கொள்ளாது அறிகுறியே என்று கோடற்குக் ‘குறியே’ என்றார். தொல்காப்பியனார், ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத்து’ என்றும், அவற்றின் பின் அறிகுறியாக வரும் ஒத்த குற்றெழுத்து என்றும் கூறினார் (எனவே, நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப் பிறக்கும் மூன்று மாத்திரை அளவிற்றாம் எழுத்தே உயிரளபெடையாம் என்பது.) (நன். 91 சங்கர.)

அளபெடையில் குற்றுயிர் ஈறாய் நின்று உடம்படுமெய் பெறாமை -

{Entry: A01__098}

நெடில் அளபெடுக்குமிடத்து இனமொத்த குற்றுயிர் வரிவடிவில் அறிகுறியாக வரும். அக்குற்றுயிர் நெடிலொடு தொடர்ந்து உடம்படுமெய்யுடன் ஈறாம் தன்மையதன்றித் தனித்து நிற்றலின், ‘குற்றுயிர் அளபின் ஈறாம்’ என்றார். (ஆஅ என்ற அளபெடை இடையே வகரஉடம்படுமெய் பெற்று ஆ+வ்+அ = ஆவ என்றும், ஈஇ என்ற அளபெடை இடையே யகரஉடம்படுமெய் பெற்று ஈ + ய் + இ = ஈயி என்றும் ஒலிக்கப் படுவதோ வரிவடிவில் எழுதப்படுவதோ இல்லை.) அறிகுறி மாத்திரமாய் நிற்கும் இவ்வெழுத்தைக் ‘குற்றுயிர்’ என்றாரே யன்றி, அதனைத் தனியே ஓரெழுத்து என்றாரல்லர். (நன். 108 சங்கர.)

அளபெடையின் ஓசை -

{Entry: A01__099}

அளபெடையாவது நெடிலொடு கூடி வரும் குற்றெழுத்தாகும். நெடிலோசையொடு குறிலோசை பிளவுபடாது இணைந்து வருவதாம். கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பின்னர் அப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத் தல்லது புலப்படா, எள்ளாட்டிய வழியல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என்பது. (தொ. எ. 6 நச். உரை)

உயிரளபெடையில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் தனித்தனியே நிற்கும் ஆதலின், ‘கடாஅ’ என்பதனைக் கடா, அ என்று பிரித்து அசை அமைக்கிறோம். ஆதலின் அளபெடையில் நெடிலும் குறிலும், நீரும் நீரும் சேர்ந்தாற் போலவும் கோட்டு நூறும் மஞ்சளும் கூடினாற் போலவும் இணையாது, விரலும் விரலும் சேர்ந்தாற் போல இணைந்துள்ளவை என்பது உணரப்படும். (எ. ஆ. பக். 46).

அளபெடையின் வகை -

{Entry: A01__100}

இயற்கையளபெடை, செயற்கையளபெடை, இன்னிசை யளபெடை, சொல்லிசையளபெடை, நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை, எழுத்துப்பேறளபெடை என அளபெடை எட்டு வகைப் படும்.

எ-டு : அழைத்தல், விலைகூறல், புலம்பல் - இவற்றில் எழுத்துச் செயற்கையின்றிப் பிறந்தது இயற்கை யளபெடை. (சே எய், நூறோ ஒஒ நூறு, அம்மா- வோ ஒ)

செய்யுளில் சீர்தளை கெட்டவிடத்துப் புலவன் கொள்ளுதல் செயற்கை யளபெடை (‘நற்றாள் தொழா அ ரெனின்’ குறள் 2)

‘கெடுப்ப தூஉம் கெட்டார்க்குச் .... (குறள். 15) : குற்றுகரம் அளபெடுத்த இன்னிசையளபெடை.

‘தளை இ’ ஐகாரக்குறுக்கம் அளபெடுத்த சொல்லிசை யளபெடை; ஆ அ : நெடிலளபெடை; ம ணீஇ : குற்றெழுத்து நெட்டெழுத்தாகி அளபெடுத்த குறிலளபெடை; சின ந்ந்து : ஒற்றளபெடை; சந்திரனை அரா அப் பற்றிற்று : விகாரத் தெழுந்த எழுத்துப்பேறளபெடை. (மு. வீ.எழுத். 32)

அளபெடையின் வகைகள் எட்டு -

{Entry: A01__101}

உயிரளபெடை எட்டு இயற்சீர்களின் பாற்பட்டு எண்வகை யாக அமையும். எட்டு இயற்சீர்களாவன நேர்நேர் - நிரைநேர் - நேர்நிரை - நிரைநிரை - நேர்நேர்பு - நேர்நிரைபு - நிரைநேர்பு - நிரைநிரைபு என்பன.

எ-டு : ஆ, அ - நேர் நேர்; ஆ, அங்கு - நேர்நேர்பு; கடா, அ - நிரை நேர்; ஆ, அவது - நேர் நிரைபு; ஆ, அழி - நேர் நிரை; புகா, அர்த்து - நிரைநேர்பு; படா, அகை - நிரை நிரை; விரா, அயது - நிரைநிரைபு

இவ்வாறு எண்வகையாக உயிரளபெடைகளைச் சீர்நிலையை யொட்டிக் கொள்வர். (தொ. எ. 41 நச். உரை; தொ. பொ. 329 பேரா. உரை)

அளபெடையின் வகைகள் நான்கு -

{Entry: A01__102}

உயிரளபெடை, தனிநிலை - முதனிலை - இடைநிலை - இறுதி நிலை - என நால்வகைத்து.

எ-டு : ‘ஆ அ அளிய அலவன்’ - தனிநிலை; ஆ அழி - முதல்நிலை; படா அகை - இடைநிலை; ‘நல்ல படா அ பறை’ - இறுதிநிலை (குறள் 1115)

சொல்லமைப்பினை ஒட்டி உயிரளபெடை நான்கு வகைக ளாகப் பகுக்கப்பட்டவாறு. (தனிநிலையை முதனிலையுள் அடக்கி உயிரளபெடை மூவகைத்து என்றலுமுண்டு). (தொ. பொ. 329 பேரா. உரை)

அளபெடையைக் குறிக்கும் பெயர்கள் -

{Entry: A01__103}

அளபு, புலுதம், அளபெடை என்பன ஒருபொருட்கிளவி களாம். (மு. வீ. எழுத். 33)

அளபெடை வேறெழுத்து ஆகாமை -

{Entry: A01__104}

தொல்காப்பியனார் அளபெடையை முதலெழுத்துள் அடக்கிக் கொண்டார். நன்னூலார் முதலாயினார் அள பெடையைச் சார்பெழுத்தாகக் கொண்டனர். தனக்கெனப் பிறப்பிட மின்றித் தான் சார்ந்த எழுத்தின் பிறப்பிடமே தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டொலிக்கும் எழுத்தே சார்பெழுத் தாம். அந்நிலை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றற்கே உரியது ஆதலின், அவற்றையே தொல்காப்பியனார் சார்பெழுத்தாகக் கொண்டார்; அள பெடை உயிரெழுத்துள் அடங்கலின் அதனைத் தனியெழுத் தாகக் கொண்டிலர்.

அளபெடை, நெட்டெழுத்தோடு இனக்குற்றெழுத்து நின்று நீண்டிசைப்ப தொன்று எனினும், மொழிக்காரணமாய் வேறுபொருள் தாராது இசைநிறைத்தல் மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின், வேறெழுத்து எனவைத்து எண்ணப் படாததாயிற்று. இப்பெற்றி அறியாதார் நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேர நின்றாற்போல இணைந்து அளபெடுக் கும் எனவும், அளபெடையெழுத்து உயிரெழுத்துள் அடங் காது எனவும், சார்பெழுத்து என வேறு வைத்து எண்ணப் படும் எனவும், தமக்கு வேண்டியவாறு கூறுப. நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேரநின்றாற்போல அளபெழும் என்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடை என்னாது அள பெடை என்னும் குறியீடே சான்றாகும். அளபெடை யாப்பி னுள் ஓசை பற்றியே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையு மாகப் பிரிக்கப்படும். (சூ. வி. பக். 24)

அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகும் ஒன்பதெழுத்து -

{Entry: A01__105}

க ச த ப ந ம வ அ உ என்பன, அளவுப்பெயர் நிறைப்பெயர் என்பனவற்றின் மொழி முதலாகிய ஒன்பது எழுத்துக்களாம். அவை கலம் - சாடி - தூதை - பானை - நாழி - மண்டை - வட்டி - அகல் - உழக்கு - என்ற அளவுப்பெயர்க்கண்ணும், கழஞ்சு - சீரகம் - தொடி - பலம் - நிறை - மா - வரை - அந்தை - முதலிய நிறைப் பெயர்க்கண்ணும் காணப்படுவன. இப்பெயர்கள் அக்காலத்து வழங்கின (தொல்காப்பியனார் கலம் (எ. 168), பனை (169), உழக்கு (457), நாழி, உரி (240) பதக்கு, தூணி (239) என்ற அளவுப் பெயர்களையும் கா என்ற நிறைப்பெயரையும் (169) நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளார்). (தொ. எ. 170 நச். உரை)

இம்மி - ஓரடை - இடா - என்ற பெயர்களும், ஒரு ஞார் - ஒரு துவலி - என்ற பெயர்களும் உரையாசிரியர்களால் கொள்ளப் பட்டன. (தொ. எ. 170 நச்.)

இம்மி - ஓரடை - ஓராடை என்பனவற்றை இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார். (தொ. எ. 171)

அளவுப்பெயரும், நிறைப்பெயரும், பொருட்பெயரும், ஒன்று முதல் எட்டு ஈறாக உள்ள எண்களொடு புணர்தல்:

{Entry: A01__106}

ஒருகலம் ஒருகழஞ்சு ஒருகடல் - ஒன்று ‘ஒரு’ என்றாகும்.

இருகலம் இருகழஞ்சு இருசுடர் - இரண்டு ‘இரு’ என்றா கும். (தொ. எ. 446 நச்.)

முக்கலம் முக்கழஞ்சு முச்சுடர் - மூன்று ‘மு’ என நின்று வந்த வல்லெழுத்து மிகும். (447)

நாற்கலம் நாற்கழஞ்சு நாற்பொருள் - நான்கு ஈறுகெட்டு னகரம் றகரம் ஆகும். (442)

ஐங்கலம் ஐங்கழஞ்சு ஐந்தீ - ஐந்தன் நகரம் வரும் வல் லெழுத்தினது இன மெல் லெழுத்து ஆகும். (448)

அறுகலம் அறுகழஞ்சு அறுசுவை - ஆறு ‘அறு’ எனக் குறுகிப் புணரும். (440)

எழுகலம் எழுகழஞ்சு எழுபொருள் - ஏழ் ‘எழு’ எனத் திரிந்து புணரும் (389)

எண்கலம் எண்கழஞ்சு எண்பொருள் - எட்டு ஈறுகெட்டு டக ரம் ணகரமாகத் திரிந்து புணரும். (444)

வருமொழி முதலில் ந ம வ என்பனவும் உயிரும் வரின், எட்டு ‘எண்’ என்றாக, வருமொழி நகரம் ணகரமாக எண்ணாழி எனவும், எண் மண்டை - எண் வட்டி - என வேறு திரிபு இன்றியும், எண் + அகல் = எண்ணகல் என்றாற் போல நிலை மொழியில் தனிக்குறிலை யடுத்த ணகர ஒற்று இரட்டித்தும் புணரும். (450)

ஒன்பது, ஒன்பதின் அகல் - ஒன்பதின் சாடி - எனவும், ஒன்பதிற்றுக் கலம் - ஒன்பதிற்றகல் - எனவும், ‘இன்’ பெற்றும் ‘இன்’ இற்றாகத் திரிந்தும் புணரும். (459)

ஐந்தும் மூன்றும், வருமொழியில் ந ம வரின், வந்த ஒற்று மிகும்.

வருமாறு : ஐந்நாழி, ஐம்மண்டை; முந்நாழி, மும்மண்டை (451)

மூன்று, வருமொழியில் வகரம் வருவழி ஈறுகெட்டு (நெடு முதல் குறுகி) னகரம் வகரமாகிப் புணரும். வருமாறு: முவ்வட்டி (452)

நான்கு, வகரமுதன்மொழி வருவழி, ஈறுகெட்டு னகரம் லகரமாகிப் புணரும். வருமாறு : நால் வட்டி (453)

ஐந்து, வகரமுதன்மொழி வருவழி ஈறுகெட்டு இடை நகரம் கெட்டும் வகரஒற்று மிக்கும் புணரும். வருமாறு : ஐவட்டி, ஐவ்வட்டி (454)

ஒன்று இரண்டு என்பன நிலைமொழிகளாக, வருமொழி முதலில் உயிர்வரின், ‘ஒரு’ ஓராகவும், ‘இரு’ ஈராகவும் திரிந்து,
ஓரகல் - ஈரகல் - ஓருழக்கு - ஈருழக்கு என்றாற் போலப் புணரும். (455)

மூன்றும் நான்கும் ஐந்தும் நிலைமொழிகளாக, வருமொழி முதலில் வகரம் வரின், முவ்வகல் - முவ்வுழக்கு, நாலகல் - நாலுழக்கு, ஐயகல் - ஐயுழக்கு - என வரும். (456)

ஆறு என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், ஆறகல் - ஆறுழக்கு - என இயல்பாகப் புணரும். (458)

மூன்று என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், மூன்று + உழக்கு = மூவுழக்கு, மூன்று + அகல் = மூவகல் என்றாற் போல, நிலைமொழியில் முதலெழுத்து நீங்கலான ஏனைய கெட்டு உடம்படுமெய் பெற்றுப் புணரும். (457)

அளவையின் எழுவகைகள் -

{Entry: A01__107}

1. நிறுத்து அளத்தல் - கழஞ்சு முதலிய நிறைப் படிக்கற்களைத் தராசின் ஒரு தட்டிலிட்டு, நிறுத்தறிய வேண்டிய பொருளை மறுதட்டிலிட்டு நிறுத்தளத்தல்; 2. பெய்து அளத்தல் - எண்ணெய் முதலியவற்றை அளவுகலன்களில் ஊற்றி அளத்தல்; 3. தெறித்து அளத்தல் - ஒன்றனை ஒலித்து ஒலி யுண்டாக்கி அவ் வொலியைச் செவிகருவியாக அளந்து கோடல்; 4. தேங்கமுகந்து அளத்தல் - நெல் முதலியவற்றை அளவுகலன்களின் மேல் குவியுமாறு குவியுமளவும் பெய்தளத் தல்; 5. நீட்டி அளத்தல் - சாண், முழம் முதலிய நீட்டல் அளவைகளால் துணி முதலியவற்றை அளத்தல்; 6. எண்ணி அளத்தல் - ஒன்று இரண்டு முதலாக எண்ணியளத்தல்; 7. சார்த்தி அளத்தல் - ஒன்றன் அளவொடு மற்றொன்றன் அளவை ஒப்பிட்டு அளத்தல்; கண்ணிமைப்பொழுது, கைந்நொடிப்பொழுது ஆகிய அளவைகளோடு எழுத்தின் அளவை ஒப்பிட்டளத்தல். (தொ. எ. 7 நச். உரை)

அறாயிரம் : புணர்ச்சி முடிபு -

{Entry: A01__108}

ஆறு + ஆயிரம் > அறு + ஆயிரம் > அற் + ஆயிரம் = அறாயிரம்.

ஆறு என்பது நெடுமுதல் குறுகி அறு என்றாக, ஈற்று முற்றுகரம் கெடவே, அது வருமொழி ஆயிரத்தொடு புணர்ந்து அறாயிரம் என்றாயிற்று. (எ. ஆ. பக். 175).

அன் சாரியை வருமிடங்கள் -

{Entry: A01__109}

அ) உருபு புணர்ச்சி: அது இது உது என்னும் சுட்டுப் பெயர்கள் அன்சாரியை இடையே வர உருபொடு புணர்ந்து, நிலை மொழி உகரம் கெட, அது + அன் + ஐ > அத் + அன் + ஐ = அதனை என்றாற் போலப் புணரும். (தொ. எ. 176 நச்.) ஏழ் என்பது உருபோடு அன்சாரியை பெற்றுப் புணரும். ஏழனை என வரும். (194) குற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர்கள் அன்சாரியை பெற்று உருபொடு புணரும். ஒன்றனை, இரண்டனை என வரும். (198) யாது என்ற வினாப்பெயரும், அஃது இஃது உஃது என்ற சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்கும். அஃது முதலியவற்றின் ஆய்தம் கெடும். யாதனை, அதனை, இதனை, உதனை என வரும். (200)

ஆ) பொருட்புணர்ச்சி: அது இது உது என்பன பொருட் புணர்ச்சிக்கண் அதன்கோடு - இதன்கோடு - உதன்கோடு - என்றாற் போல அன்சாரியை பெற்று முடியும். (263); ஏழ் என்னும் எண்ணுப்பெயர், ஏழன்சுக்கு - ஏழன்காயம் - என்றாற் போல அன்சாரியை பெறும். (388); குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர், ஒன்றன் காயம் - ஒன்றன் சுக்கு - என்றாற் போல அன் சாரியை பெறும். (419); பெண்டு என்னும் சொல்லும் பெண் டன்கை என்றாற் போல் அன்சாரியை பெறும். (421); யாது அஃது இஃது உஃது என்பன உருபு புணர்ச்சி போலப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் யாதன்கோடு - அதன்கோடு - இதன்கோடு - உதன்கோடு - என்றாற் போல அன்சாரியை பெறும். (422)

அன்றி, இன்றி என்பனவற்றின் முடிபு -

{Entry: A01__110}

இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனக் குற்றியலுகர ஈறாகத் திரிந்தவழி, வருமொழி வன்கணம் வரினும் இயல் பாகப் புணரும்.

‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’ (பொ. 111. ந ச்.)

‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’ (பொ. 151 . நச்.)

‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும் (பொ. 151. நச்.)

‘தாஇன்று உரிய தத்தம் கூற்றே’ (பொ. 241. நச்.)

எனத் தொல்காப்பியத்தில் ‘இன்றி’ என்பது செய்யுளின்பம் கருதி ‘இன்று’ என வழங்கப்பட்டது.

‘அதுவன்றி’ என்பது அதாஅன்று எனத் திரிந்து வந்துள்ளது.

இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரமும் காதுக்கு இனிமையாக இராமையான், ஒன்று உகரமாக மாறியிருத்தல் வேண்டும். அன்றி என்பதிலுள்ள இகரம் உகரமாகத் திரிய வேண்டியதின்று. அது பிற்காலத் திரிபு போலும்.

இன்றி என்ற வினையெச்சம் ‘விருந்தின்றிக் கழிந்த பகல்’, என்றாற் போல, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ‘இன்று’ என வினைமுற்றுப் போல ஈறுதிரிந்த வடிவம் கொண்டவழி, வருமொழி வன்கணம் மிகாது இன்னோசை பயத்தலின், செய்யுளில் பயில வழங்கப்பட்டது. அந்நிலை ‘அன்றி’ என்பதற்கும் பின்னர் ஏற்பட்டது.

வருமாறு : நாளன்றிப் போகி - நாளன்று போகி’ (புறநா. 124)

உப்பின்றிப் புற்கை உண்க - உப்பின்று புற்கை உண்க’ ( தொ. எ. 237 நச்.)

அன்றி, இன்றி என்ற வினையெச்சம் -

{Entry: A01__111}

அன்றி, இன்றி என்ற குறிப்பு வினையெச்சங்கள் வன்கணம் வரின் பொதுவிதியால் வல்லெழுத்து மிக்கு முடியும். இகர ஈறு உகரமாகத் திரிந்து அன்று - இன்று - என்றாகுமிடத்து இயல்பாகப் புணரும்.

எ-டு : ‘நாளன்று போகி’ (புறநா. 124),

‘உப்பின்று புற்கை யுண்க’ (நன். 173)

அனுவதித்தல் -

{Entry: A01__112}

முன்னர்க் கூறியதனைப் பின்னுமொரு பயன்கருதி வழி மொழிதல். ணன முன்னும் வஃகான் மிசையும் மக் குறுகு ம்’ (நன். 96) என்று முன்னர்க் கூறியதனை,

‘லளமெய் திரிந்த னணமுன் மகாரம்

நைந்தீர் ஒற்றாம் செய்யு ளுள்ளே’

என அனுவதித்தார்.

இவ்வநுவாதத்தின் பயன் : மகரம் குறுகுதற்குத் தொடரும் னகரமும் ணகரமும் முறையே லகரமும் ளகரமும் திரிந்தன என்பதும், இம் மகரக்குறுக்கம் செய்யுட்கண்ணது என்பதும் உணர்த்துதல். (நன். 120. சங்கர.)

‘அநுவாதம்’ காண்க.

ஆ section: 55 entries

ஆ -

{Entry: A01__113}

அஃறிணையில் பெண்பாலை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று. இது பெற்றம், மரை, எருமை இவற்றின் பெண்பாலை உணர்த்தும்.

ஆ என்ற இவ்வோரெழுத்தொருமொழி, வருமொழி வன்கணத்தொடும் சிறுபான்மை ஏனைய கணங்களொடும் புணரும்வழி னகரவொற்றைச் சாரியையாகப் பெற்றுப் புணரும்.

எ-டு : ஆ ன்கணம், ஆ ன்நெய்(ஆனெய்), ஆ ன்வரிசை, ஆ னினம்; சிறுபான்மை, மென்கணம் வருவழி னகரச் சாரியையோடு அகரச் சாரியையும் பெற்றுப் புணரும். எ-டு : ஆ னநெய், ஆ னமணி (தொ. எ. 231, 232 நச்.)

ஆகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி -

{Entry: A01__114}

எழுவாய்த் தொடரில் ஆகார ஈற்றுப் பெயரை அடுத்து வன்கணம் வரின், அவ்வந்த வல்லொற்று இடையே மிக்கு முடியும். ஆயின், ஆ - மா - யா - என்ற ஓரெழுத்து மொழிகள் மிகா.

எ-டு : மூங்காக் கடிது, தாராக் கடிது (ஆ குறிது, மா குறிது, யா குறிய)

செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சமும், செய்யா என்னும் எதிர்மறைப் பெயரெச்சமும், வன்கணம் வரின், வந்த வல்லொற்று மிக்கு முடியும். ஆயின் எதிர்மறை வினைமுற் றும், வினைப்பெயரும், தன்மைவினைமுற்றுவினாவும் மிகா.

எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சோறு (உண்ணா குதிரைகள், உண்கா கொற்றா; உண்கா - உண்பேனோ)

தனிக்குறிலை அடுத்த ஆகார ஈற்றுப்பெயர் நிலைமொழியாக நிற்க, வருமொழி வன்கணம் முதலாகிய பெயர் வந்து உம்மைத் தொகையாகப் புணரின், அகரம் எழுத்துப்பேறளபெடையாக வர, வந்த வல்லெழுத்து மிகும்.

எ-டு : உவா அப் பதினான்கு, இரா அப் பகல்

ஆகாரஈற்றுப் பெயர் நிலைமொழியாக வரும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை, எழுவாய் முடிபு, பெயரெச்ச மறை என்பனவும் எழுத்துப்பேறளபெடையொடு வல் லெழுத்து மிகப் பெறும்.

எ-டு : அரா அப்பாம்பு, இரா அக் கொடிது, இரா அக் காக்கை (இல்லாத காக்கை என்னும் பொருட்டு) என முறையே காண்க.

இயல்புகணத்தும் அகரப்பேறு இறா அ வழுதுணங்காய் - என்றாற் போல வரும்.

ஆகார ஈற்று விளித்தொடரும், இடைச்சொற்றொடரும் மிகா.

எ-டு : ஊரா கேள்; கேண்மியா கொற்றா. (தொ. எ. 221-224 நச்.)

ஆகார ஈற்றுள் இயல்பாகப் புணர்வன -

{Entry: A01__115}

1. ஆ என்னும் பெயர் - ஆ குறிது, ஆ குறிய; 2. மா என்னும் பெயர் - மா குறிது, மா குறிய; 3. ஈற்றயல் நீண்டு ஆகாரமாகி ஈறு கெட்ட விளிப்பெயர் - ஊரா கேள்; 4. யா என்னும் வினாப்பெயர் - யா குறிய; 5. பலவின்பால் எதிர்மறை வினை முற்றும் வினைப்பெயரும் - உண்ணா குதிரைகள்; 6. மியா என்னும் ஆகார ஈற்று இடைச்சொல் - கேண்மியா கொற்றா; 7. தன்தொழிலைச் சொல்லும் ஆகார ஈற்று வினைமுற்றுச் சொல் - உண்கா கொற்றா (உண்கா - உண்பேனோ)

இவ்வேழும் வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும் ஆகார ஈற்றுச் சொற்களாம். (தொ. எ. 224. நச்.)

பலவற்றிறுதியில் வினைமுற்றொடு வினையாலணையும் பெயரையும் கொள்ளல் வேண்டும் (5 காண்க). (எ.கு. பக். 213.)

ஆகார ஈற்றுள் ‘குறியதன் இறுதிச் சினைகெட உகரம்’ பெற்று வருவன -

{Entry: A01__116}

குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயராகிய ஈரெழுத்து மொழிகள் இறுதி ஆகாரம் அகரமாகக் குறுகிப் பின் உகரம் பெறுதல் பெரும்பான்மையும் செய்யுட்கே உரித்து; சிறு பான்மை உலகநடையிலும் வரும்.

எ-டு : இறா - இறவுப் புறத்தன்ன’ (நற். 19 )

சுறா - சுறவுக் கோட்டன்ன’ (நற். 19)

புறா - புறவுப் புறத்தன்ன’ (குறுந். 274)

‘புறவு நிலையன்ன’ என இயல்புகணம் வரினும் இத் திரிபு நிலை உண்டாம். சிறுபான்மை ஆகாரம் குறுகி உகரம் பெறாமல் முடிதலும் கொள்க. அரவுயர் கொடி, முழவுறழ் தோள், சுறவுயர் கொடி என வரும். (ஈண்டு வகரம் உடம்படு மெய்யாக வந்தது). (தொ. எ. 234 நச்.)

ஆகார ஈறு பெறும் எழுத்துப்பேறளபெடை -

{Entry: A01__117}

குற்றெழுத்தை அடுத்தும் தனித்தும் வரும் ஆகார ஈற்றுப் பெயர்கள் அல்வழிப்புணர்ச்சியில் உம்மைத்தொகைக்கண் ணும், சிறுபான்மை பண்புத்தொகை - எழுவாய்த் தொடர் - பெயரெச்ச மறை - இவற்றின்கண்ணும், நிலைமொழி வரு மொழிகளுக்கிடையே ஆகாரஈற்றை அடுத்து அகரமாகிய எழுத்துப்பேறளபெடை வரும்.

எ-டு : உவா அப்பதினான்கு உம்மைத்தொகை; காஅக்குறை (காவும் குறையும் - கா : ஒரு நிறைப்பெயர்); அரா அப் பாம்பு - பண்புத்தொகை; இரா அக் கொடிது - எழுவாய்த் தொடர்; இரா அக் காக்கை - பெயரெச்ச மறைத் தொடர் (இராத காக்கை); இறா அ வழு துணங்காய் - உம்மைத் தொகை (இயல்புகணம்)

இந்நிலை வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் உண்டு.

எ-டு : பலாஅக்கோடு, காஅக்குறை - ஆறாம் வேற்று மைத்தொகை; பலாஅவிலை, (பலா+இலை) பலாஅநார் - ஆறாம் வேற்றுமைத் தொகை. (இயல்புகணம் இவை)

இராப்பொழுதை உணர்த்தும் இரா என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இவ் அகரம் பெறாது. இராக்காக்கை, இராக் கூத்து எனவரும். இராவிடத்துக் காக்கை, இராவிடத்துக் கூத்து என்று இவை பொருள்படும்.

ஆகார ஈற்றுச் சொற்கள் சாரியை பெறுமிடத்தும் இடையே இவ்வெழுத்துப் பேறளபெடை பெறுதலுமுண்டு.

எ-டு : அண்ணா அ + அத்து + ஏரி = அண்ணா அத்தேரி; திட்டா அ + அத்து + குளம் = திட்டா அத்துக்குளம்; உவா அ + அத்து + ஞான்று + கொண்டான் = உவா- அத்துஞான்றுகொண்டான்; இடா அ + இன் + உள் + கொண்டான் = இடா அவினுட் கொண்டான்

நிலா என்று சொல் அகர எழுத்துப்பேறளபெடை பெறாது அத்துச்சாரியை பெறுதலுமுண்டு. நிலா + அத்து + கொண் டான் = நிலாஅத்துக் கொண்டான். (நிலாவத்து என வகர உடம்படுமெய் பெறுதலுமாம்)

சாரியை பெறாது வேற்றுமைப்புணர்ச்சிக்கண் நிலாஅக்கதிர், நிலாஅமுற்றம் - என எழுத்துப்பேறளபெடை பெற்று முடிதலு முண்டு. (தொ. எ. 223, 226 - 228 நச். உரை)

ஆகுபெயர்ப் பதம் -

{Entry: A01__118}

ஆகுபெயர்ப்பதமும் காரணத்தினான் ஆமே எனினும், விகுதியின்றிப் பகுதியான பகாப்பதம் தானே பிறிதுமொரு பொருளை விளக்கும். அவை தெங்கு, கடு, புளி, குழிப்பாடி, சீனம், ஏறு, குத்து, நாழி - என்னும் தொடக்கத்தன. (நன். 131 மயிலை.)

ஆசான் உவக்கும் திறத்துக்கு உவமை -

{Entry: A01__119}

‘எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்’ புரிந்ததை, மறையோன் வேண்ட மாண்டாரைப் பண்டு அழைத்துத் தந்த கண்ணனிடத்தும், துரோணாசாரியன் வேண்ட வலக்கைப் பெருவிரல் அறுத்துத் தந்த வனசரனிடத்தும் காண்க. (நன். 46 இராமா.)

ஆசிரியர் தொல்காப்பியனார் ஒருமொழிஇலக்கணம் கூறாமை -

{Entry: A01__120}

தொல்காப்பியனார் விரிவஞ்சி ஒருமொழியிலக்கணம் கூறா ராயினார். பாணினியார் எட்டு அத்தியாயத்துள் விகுதிமாத்தி ரைக்கே மூன்று அத்தியாயம் கூறி, விகுதிப்புணர்ச்சிக்கண் படும் செய்கை முதலியனவும் வேறு கூறினார். அவற்றுள்ளும் அடங்காது எஞ்சி நின்ற சொற்களைப் பின்னுள்ளோர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாகவே புணர்த்துச் செய்கைசெய்து முடித்தனர்.

“இந்திரனுக்குப் பிரகற்பதி ‘இவை வழு, இவை வழுஇல்லன’ என வடசொற்களைத் தனித்தனி எடுத்து ஓதலுற்றார்க்குத் தெய்வ யாண்டில் ஆயிரம் சென்றது; சென்றும் சொற்கள் முடிந்தில” என்பது மாபாடியத்துள் கண்டது. தமிழ்மொழி யும் அவ்வாறு பெருகிக் கிடத்தலின் எடுத்தோதப் புகின் முடிவு பெறாது ஆதலின், சிலவற்றை எடுத்தோத்தானும் சிலவற்றை இலேசானும், சிலவற்றைப் புறனடையானும் சிலவற்றை உத்திவகையானும் உணர்ந்து கொள்ளுமாறு தொகுத்துத் தொல்காப்பியனார் நூல் செய்தார்.

நன்னூலார் பதவியலில் ஒருமொழியிலக்கணம் கூறினார்.

ஆயின், தொல்காப்பியனரால் புணர்க்கப்படாத சொற்களைப் பின்னுள்ளோர் பிரித்து முடித்தல் முதல்நூலொடு மாறு கொளக் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர். (தொ. எ. 482 உரை)

‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் சிதைவுக்கு எடுத்துக்காட்டுப் பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடல் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 663 உரை)

ஆசிரியர் தொல்காப்பியனார் பத்தொன்பது என்பதற்குப் புணர்ச்சிவிதி கூறாமை -

{Entry: A01__121}

பதினொன்று முதல் பதினெட்டு ஈறாகிய எண்ணுப்பெயர் களுக்குப் புணர்ச்சி விதி கூறிய தொல்காப்பியனார் பத்தொன் பது என்பதற்கு விதி கூறவில்லை. பத்து என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் ஒன்பது என்பதன் முதலெழுத்தாகிய உயிர் சார இடம் கொடுக்கும் இயல்பு புணர்ச்சியாதலின் அதனைக் கூறிற்றிலர். இதனால் குற்றியலுகரம் கெடாது என்பதும், மெய்யீறு போல் உயிர்ஏற இடம் கொடுக்கும் என்பதும் பெற்றாம். (எ. ஆ.பக். 171.)

ஆசிரியவசனம் : பிற பெயர்கள் -

{Entry: A01__122}

ஆசிரியவசனம் எனினும், மேற்கோள் எனினும், பழஞ்சூத்திரத் தின் கோள் எனினும் ஒக்கும். (நன். 9 சங்கர.)

ஆட்சியும் காரணமும் பற்றிய குறி -

{Entry: A01__123}

குறி - அடையாளம், இடப்படும் பெயர். ஆட்சி அச் சொல்லைப் பின்னர் எடுத்துப் பயன்படுத்துதல்; காரணம் - அப்பொருளுக்கு அப்பெயர் ஏற்பட்டதன் காரணமாம். ஆகவே, பின்னர்ச் சுருக்கமான பெயரால் எடுத்துக் குறிப்பதற்கும், பெயரிடுவதற்குரிய காரணத்தை அறிவிப்பதற்கும் முன்னர்ப் பெயரிடுவது ஆட்சியும் காரணமும் பற்றிய குறியாம்.

எ-டு : ‘ஒளகார இறுவாய்ப் - பன்னீரெழுத்தும் உயிரென மொழிப’ (தொ. எ. 8 நச்.)

அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களுக்கும் உயிர் என்ற பொதுப்பெயர், பின்னர்ப் புணர்ச்சி பற்றி இவற்றை உயிர் என்ற பெயரான் எடுத்துக் கூறுவதற்கு எளிமையாக அமைதல் ஆட்சி பற்றிய குறியாம். பதினெட்டு மெய்களையும், அகரம் முதல் ஒளகாரம் ஈறாக உள்ள பன்னீரெழுத்துக்களும், உடம்பினை உயிர் இயக்குதல் போல இயக்குதலின், அவற்றிற்கு உயிர் என்ற பொதுப்பெயர் வழங்குதல் காரணம் பற்றிய குறியாம். (தொ. எ. 8 நச். உரை)

ஆடூ மகடூ என்ற சொற்கள் -

{Entry: A01__124}

ஆடூ மகடூ என்பன முறையே உயர்திணை ஆண்பால் - பெண்பால் - ஒருமைப்பெயர்களாம். இவை ஊகார ஈற்றுச் சொற்கள். இவை வருமொழியோடு இணையுங்கால் இடையே எழுத்துப் பேறாகிய உகரம் பெறுதலுமுண்டு என்பர் உரை யாசிரியன்மார்.

எ-டு : ஆடூஉக் குறியன், மகடூஉக் குறியள் -அல்வழிப் புணர்ச்சி; ஆடூஉக்கை, மகடூஉக்கை - வேற்றுமைப் புணர்ச்சி (தொ. எ. 267 நச்).

இவை வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இன்சாரியை பெறுதலு முண்டு என்பர் தொல்காப்பியனார். ஆடூஉவின்கை, மகடூஉவின் கை என வரும். (தொ.எ. 271 நச்.)

பொதுவாகத் தொல்காப்பியனார் உயர்திணைப் பெயர் களுக்கு இன்சாரியை விதித்தாரல்லர். ஆடூ, மகடூ என்ற பெயர்களுக்கு இன்சாரியை அமையாதாயினும், அவை சொல்லால் அஃறிணை போறலின் இன்சாரியை வருதல் குற்றமில்லை எனப்பட்டது. (எ. ஆ. பக். 144).

ஆண் என்ற பொதுபெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__125}

ஆண் என்ற பொதுப்பெயர், அவ்வழி வேற்றுமை என்ற இருவழியிலும், வன்கணம் வருமொழி முதலில் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : ஆண் கடிது; ஆண்கை (தொ. எ. 303 நச்.)

ஆண்பாற்பெயர்ப்பகுபத முடிவு -

{Entry: A01__126}

அரசுத்தொழிலையுடையான் அரசன், வாணிகம் உடையான் வாணிகன், உழவையுடையான் உழவன், வேளாண்மை செய்வான் வேளாளன், கணக்கால் முயன்றுண்பான் கணக்கன், குந்தத்தொழிலால் உண்பான் குந்தவன், வலையால் முயன் றுண்பான் வலையன், உவச்சத்தொழிலால் முயன்றுண்பான் உவச்சன், தச்சுத் தொழிலால் முயன்றுண்பான் தச்சன், வண்ணாரத் தொழிலால் முயன்றுண்பான் வண்ணான், கணவாளத் தொழிலால் முயன்றுண்பான் கணவாளன் - என்று இவ்வாறே ஆண்பாற் பகுபதங்களெல்லாம் முடிக்கப் படும். (நன். 144 மயிலை.)

ஆண்மரப்பெயர் பெறும் சாரியை -

{Entry: A01__127}

ஆண் என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அம்முச் சாரியை பெற்று ஆணங்கோடு - ஆணநார் - என்றாற்போல முடியும். (தொ. எ. 304 நச்.)

ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை -

{Entry: A01__128}

ஆண் பெண் என்பன விரவுப்பெயராயினும், தனியே கூறிய வழிப் பெண்ணும் ஆணும் பிள்ளையும் உயர்திணைக்கே உரியன. வாளாதே, பெண் வந்தது என்று கூறியவழி அஃறிணைப்பொருள் என்பது உணரலாகாது. பெண்குரங்கு வந்தது என்று விதந்தே கூறவேண்டும். பெண் பிறந்தது, ஆண் பிறந்தது, பிள்ளை பிறந்தது என்று அடையடாது சொல்லிய வழி உயர்திணைக்கேயாம். ஆண் பெண் என்பன உயர்திணைப் பெயர்களாயினும், அஃறிணைப் பெயர்கள் போலப் புணர்ச்சி விதி பெறும் என்பது. (தொ. பொ. 624 பேரா.)

“ஆண் பெண் என்பன, ஆண் வந்தது, பெண் வந்தது என இரு திணைக்கண்ணும் அஃறிணை முடிபே பெறுதலின், ‘அஃறிணை இயல்பின’ என்றார்” என்பர் நச்சினார்க்கினியர். (தொ. எ. 303)

ஆதி விருத்திசந்தி -

{Entry: A01__129}

ஒரு பதத்தினுள்ளே முன்னின்ற இகர ஈகார ஏகாரங்கள் ஐகாரமாகவும், உகர ஊகார ஓகாரங்கள் ஒளகாரமாகவும், அகரம் ஆகாரமாகவும், ஏழாமுயிர் ஆர் ஆகவும் திரிந்து வருதல் ஆதி விருத்திசந்தியாம்.

வருமாறு : இ - சிவனைப் பணிவோன் : சைவன்; ஈ - வீரத்தின் தன்மை : வைரம்; ஏ - கேவலத் தன்மை : கைவல் யம்; உ - புத்தனைப் பணிவோன் : பௌத்தன்; ஊ - சூரன் தன்மை : சௌரியம்; ஓ - கோசலன் புத்திரி: கௌசல்யை; அ - தசரதன் புத்திரன் : தாசரதி; ரு - க்ருத்திகை புத்திரன்: கார்த்திகேயன் (தொ. வி. 38 உரை)

ஆ, மா, கோ ‘இன்’ அடைதல் -

{Entry: A01__130}

ஆ, மா, கோ இம்மூன்று பெயர்களும் இன்சாரியை பெறு தலுமாம்.

வருமாறு : ஆவை - ஆவினை, மாவை - மாவினை, கோவை - கோவினை. (மு. வீ. புண. 16)

ஆ, மா, கோ புணருமாறு -

{Entry: A01__131}

ஆ மா கோ என்ற மூன்று பெயர்களுள், ஆ பசுவினை யுணர்த்தும் பெயர்; மா விலங்கின் பொதுப்பெயர்; கோ இறைவனை யுணர்த்தும் பெயர். இவை உருபுகள் புணருமிடத்து னகரச்சாரியை பொருந்தவும் பெறும்.

வருமாறு : ஆ + ஐ = ஆவை, ஆ னை; மா + ஐ = மாவை, மா னை; கோ + ஐ = கோவை, கோ னை.

இவை னகரச்சாரியையோடு உகரச்சாரியையும் பெறும்.

எ-டு : நான்கனுருபொடு புணருமிடத்து ஆ னுக்கு - மா னுக்கு - கோ னுக்கு - என வரும். ஆ வுக்கு - மா வுக்கு - கோ வுக்கு - உகரச்சாரியை ஒன்றே பெறுதல். ஆ வினுக்கு - மா வினுக்கு - கோ வினுக்கு - இன்சாரி- யையும் உகரச்சாரியையும் பெறுதல். ஆ வினை, மா வினை, கோ வினை என இப்பெயர்கள் இன்னுருபு ஒழிந்த ஏனை யுருபுகளொடு புணர்கையில் இன் சாரியை பெறுதலும் கொள்க.

காட்டுப்பசுவைக் குறிக்கும் ஆமா என்ற பெயரும் ஆமானை, ஆமாவினை, ஆமானுக்கு, ஆமாவினுக்கு என னகரச்சாரியை, இன்சாரியை, உகரச் சாரியை என மூன்றும் பெறுமாறும் காண்க. (நன். 248)

ஆ, மா, மியா அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__132}

அல்வழிக்கண் ஆ மா என்ற பெயர்களும், மியா என்ற முன்னிலை அசைச்சொல்லும் வன்கணம் வருமொழி முதற்கண் வரினும் இயல்பாகவே முடியும்.

எ-டு : ஆ குறிது, மா குறிது, கேண்மியா கொற்றா (நன். 171)

ஆய்த இறுதி -

{Entry: A01__133}

‘சுட்டுமுதலாகிய ஆய்த இறுதி’ - சுட்டினை முதலாக வுடைய அஃது இஃது உஃது என்ற சொற்கள். ஆய்தம் ஈறாக எச்சொல்லிலும் வாராது. அஃது ஈற்றயல் எழுத்தாகவே வந்துள்ளது. தொல்காப்பியனார் ஈற்றயல் எழுத்தையும் ஈறு என்று குறிப்பிடும் வழக்கமுடையவர் என்பது பெறப்படும்.

எனவே, ‘ஆய்த இறுதி’ என்பது ஆய்த ஈற்றயல் சொல் என்னும் பொருளது. (தொ. எ. 200, 422 நச்.)

ஆய்த எழுத்து அளபெடுத்தல் -

{Entry: A01__134}

நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொற்கள் ஆய்த வோசை மிக்கு நடக்கும். செய்யுளிசை நிறைக்க ஆய்தம் அளபெடுத்தலுண்டு. சிலவிடங்களில் ஆய்தம் இசைநிறைக் காகவே இடையே தோன்றி அளபெடுத்தலுமுண்டு.

வருமாறு : ‘கஃஃ றென் னும் கல்லதர் அத்தம்’ - நிறம் பற்றியது.

‘சுஃஃ றெ ன்னும் தண்தோட்டுப் பெண்ணை’- ஓசை பற்றியது.

‘எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர், வெஃஃகு வார்க்கில்லை வீடு’ - இசை நிறைக்க ஆய்தம் அளபெடுத்தது.

‘விலஃஃகு வீங்கிருள் ஓட்டுமே மாதர், இலஃஃகு முத்தின் இன ம்’ - இசை நிறைக்க ஆய்தம் தோன்றி அள பெடுத்தது.

வெண்பாவில் தேமா என்ற ஈரசைச்சீரை உண்டாக்க எஃஃ, வெஃஃ என ஆய்தம் அளபெடுத்தது. விலகு, இலகு என்பனவே சொல்லாயினும், அவை வருஞ்சீரொடு நேரே இணையின் தளை பிழைக்கும் ஆதலின், விலஃகு என வரினும் அதே புளிமாவாய்த் தளை தவறுதலின், விலஃஃகு என்று தோன்றிய ஆய்தத்தை அளபெடையாக்கப் புளிமாங்காயாய் வரும் சீரொடு வெண்டளைக்கேற்ப ஒன்றும் என்பது. (தொ. எ. 40 நச்.)

ஆய்தக் குறுக்கம் -

{Entry: A01__135}

நிலைமொழி தனிக்குறிலை அடுத்த லகர ளகர ஈற்றுப் பெயர்களாக நிற்ப, வருமொழி முதலில் தகரம் வரின், அல் வழிப்புணர்ச்சிக்கண், நிலைமொழியீற்று லகர ளகரங்கள் ஆய்தமாகத் திரியும். அவ்வாய்தம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாக ஒலிக்கும் ஆய்தக்குறுக்கமாம்.

எ-டு : கல் + தீது = கஃறீது; முள் + தீது = முஃடீது (நன். 97)

ஆய்தக்குறுக்கம் என ஒன்றில்லாமை -

{Entry: A01__136}

‘குறியதன்முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே’ (எ. 38) என ஒருமொழிக்கண் வரும் ஆய்தம் கூறி, ‘ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்’ (39) என நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்குமிடத்துக் கஃறீது - முஃடீது - எனத் தன் அரைமாத் திரையே இசைக்கும் தன்மை தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியனார் அதனைப் புணர்மொழிக்கண் வரும் ஆய்தமாகக் கூறினமையின், ஆய்தக்குறுக்கம் என ஒன்று இன்று என்பது. (இ. வி. எழுத். 5 உரை)

ஆய்தத்தின் இடம் நெடுங்கணக்கில் ஆமாறு -

{Entry: A01__137}

சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகரஆகாரங்கள் போல அங்காந்து கூறும் முயற்சியான் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பதாயினும் எழுத்தியல் தழா ஓசைபோலக் கொள்ளலாகாது எழுத்தே யாகும் என்று மெய்யெழுத்தின்பாற் படுத்துப் ‘புள்ளி’ என்று பெயர் வழங்கப்படுவது ஆதலானும், உயிர்பன்னிரண்டும் மெய்பதினெட்டும் ஆகிய இவ்விரண் டற்குமிடையே வைக்கப்பட்டது. (இ. வி. எழுத். 8 உரை)

ஆய்தத்தின் தோற்றம் -

{Entry: A01__138}

சார்பெழுத்தாகிய ஆய்தம், குற்றெழுத்தை அடுத்து உகர உயி ரெழுத்தை யூர்ந்த வல்லினப் புள்ளி (யாகிய கு சு டு து பு று - என்ற உயிர்மெய்யின்) முன்னர், சொல்லினிடையே வாய் திறந்து உரப்பிக் கூறும் ஒலியால், மெய்யெழுத்துப் போன்ற இயல்பொடு தோன்றும். மாத்திரை வகையால் மெய் யெழுத்தைப் போன்று ஒலிப்பினும், உயிரேற இடங் கொடா மல் தனித்து நிற்கும் தன்மைத்து ஆய்தப் புள்ளி. (சுவாமி. எழுத். 18)

ஆய்தத்தின் பிறப்பிடம் -

{Entry: A01__139}

ஆய்த எழுத்து நெஞ்சின்கண் நிலைபெற்று ஒலிக்கும் ஓசை யானும் அங்காந்து கூறும் முயற்சியானும் பிறக்கும். (இ. வி. எழுத். 13).

ஆய்தத்தின் பிறப்பு -

{Entry: A01__140}

ஆய்தம் சார்பெழுத்துள் ஒன்று ஆதலின், தனக்குமுன் நிற்கும் வல்லெழுத்தோடு ஒத்து அது பிறக்குமிடத்தில் பிறக்கும். முதலிலுள்ள குற்றெழுத்து ஆய்தத்துக்குச் சார்பாயினும், முன்நிற்கும் வல்லெழுத்தின் பிறப்பிடமே ஆய்தத்துக்கும் பிறப்பிடமாக வரும். ஆய்தம் தலையிடத்தில் பிறக்குமென இளம்பூரணரும் நன்னூலாரும் பிறப்பிடம் கூறுவர். நச்சி னார்க்கினியரும் இ.வி. நூலாரும் ஆய்தத்துக்குப் பிறப்பிடம் நெஞ்சு என்பர். ஆய்தம் தனக்கு முன்னுள்ள வல்லெழுத்துப் பிறக்குமிடத்தே பிறந்து, அதன்ஒலியையே தனது ஒலிக்கும் அடிப்படையாகக் கொண்டது. (முன் - இடமுன்)

எஃகு, கஃசு, அஃது, பஃது, பஃறி என்பன எக்கு, கச்சு, அத்து, பத்து, பற்றி என்பன போல ஒலிக்கும்.

முட்டீது, முஃடீது, கற்றீது, கஃறீது என்பனவற்றின் ஆய்தம் டகரறகர ஒலியை ஒட்டியமைவதால், டகர றகரங்கள் ஆய்தமாகத் திரியும் என்று கூறப்பட்டன. எனவே ஆய்தம் தனக்கு முன்னுள்ள எழுத்தை நோக்க அறுவகை ஒலிகளை யுடையது எனலாம். (எ. ஆ. பக். 84, 85).

பண்டைக் காலத்தில், ஆய்தம் என்பது ஓரிடத்தில் பிறவாது ஆறு இடங்களில் பிறந்தது என்பதும், அக்காரணம் பற்றி அறுவகைப்பட்டது என்பதும் வெளிப்படை. அவ்வாறே குற்றியலிகரமும் குற்றியலுகரமும், அவற்றின் பற்றுக் கோடாகிய வல்லினமெய் முதலியன பிறக்குமிடங்களில் பிறந்து பலவகைப்பட்டன என்பதும் வெளிப்படை. இவற்றுள் முற்றியலிகரமும் குற்றியலிகரமும் ஓரினம் அல்ல என்பதும் விளங்கும். எஃகு, கஃசு, முஃடீது, இஃது, அஃபோகம், கஃறீது என்ற இடங்களில் ஆய்தத்தின் ஒலி மாறுபட்டிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். இது முட்டீது என்றது முஃடீது என்றேனும், கற்றீது என்றதும் கஃறீது என்றேனும் மாறலாம் என்று கூறப்படுதலால் விளங்கும்.

சார்பெழுத்துக்களின் பிறப்பிடம் அவற்றிற்குச் சார்பான எழுத்துக்களுக்கு அருகிலுள்ள அவற்றை ஒலிக்கத் தகுந்த இடமே யாகும். (எ. கு. பக். 103 - 105).

ஆய்தத்தைக் குறிக்கும் பெயர்கள் -

{Entry: A01__141}

அஃகேனம் எனினும், தனிநிலை எனினும், ஆய்தம் எனினும் ஒக்கும். (மு. வீ. எழுத். 28)

ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: A01__142}

ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறு, வருமொழிக்கண் வன்கணம் வரினும், அல்வழி வேற்றுமை என்ற ஈரிடத்தும் இயல்பாகப் புணரும்.

எ-டு : எஃகு கடிது, எஃகு பெரிது - அல்வழி (தொ. எ. 425 நச்.); எஃகு கடுமை, எஃகு பெருமை - வேற்றுமை (413 நச்.)

ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகரம் -

{Entry: A01__143}

மொழியீற்றுக் குற்றியலுகரத்தின் அயலெழுத்து ஆய்தமா யின், அக்குற்றியலுகரம் ஆய்தத்தொடர்மொழிக் குற்றிய லுகரமாம்.

எ-டு : எஃகு, கஃசு

இக்குற்றியலுகரம் அல்வழிக்கண் இயல்பாகப் புணரும். வேற்றுமைக்கண் இயல்பாயும், இன்சாரியை அடுத்து இயல்பாயும் புணரும்.

எ-டு : எஃகு கடிது, கஃசு தீர்ந்தது - அல்வழி; எஃகு கடுமை, எஃகின் கடுமை - வேற்றுமை (நன். 181, 182)

ஆய்தப் புள்ளி -

{Entry: A01__144}

ஆய்தமான புள்ளி ஆய்தப்புள்ளி. ‘ஆய்தப்புள்ளி’ என்றார், இதனையும் ஒற்றின்பால் சார்த்துதற்கு என்க. ஒற்றேல், உயிரேறப்பெறல் வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிர் ஏறப்பெறாது என்க. (நன். 89 மயிலை.)

ஆய்தம் இடையெழுந்து ஒலித்தல் -

{Entry: A01__145}

ஆய்தம் ஒருமொழிக்கண்ணும் (எஃகு), தொடர்மொழிக் கண்ணும் (அஃகடிய), விதித்த முதலெழுத்துக்கள் இருமருங் கும் நின்றெழுப்ப, இருசிறகு எழுப்ப எழும் உடலது போல, இடையெழுந்து ஒலிப்பதன்றி ஒருவாற்றானும் ஈறாய் வரும் தன்மையது அன்று. ஆதலின், அஃகடிய முதலியவற்றின்கண் (வகரம்) திரிந்த ஆய்தம், அஃகான் முதலியவற்றின்கண் தோன்றிய ஆய்தம் போலத் தொடர்மொழிக்கண் இடையில் நிற்றலாகக் கொள்ளப்பட வேண்டுமன்றி, விதியீறாக வந்த தன்று. இவ்வாறு அதன் உண்மை துணிந்து அதனை இறுதிக் கண் விலக்கி ஒற்றளபெடை 42 என்று ஆமாறு காண்க. (நன். 92 சங்கர.)

ஆய்தம் எட்டு ஆதல் -

{Entry: A01__146}

வல்லினவகையான் இயல்பாக வந்த ஆய்தம் ஆறு. [எஃகு (அஃகான்), கஃசு, இருபஃது, சுஃறென்னும்; ஏனைய டகர பகரங்கள் ஆய்தத்தைத் தொடர்ந்து வந்தனவாகக் கஃடு, கஃபு - என எடுத்துக்காட்டுவர் ]; புணர்ச்சி விகாரத்தால் வந்த ஆய்தம் ஒன்று (அவ் + கடிய = அஃகடிய); செய்யுள்விகாரத் தால் வந்த ஆய்தம் ஒன்று (செய்வது எனற்பாலது செய்வஃது எனவிரியும்); ஆக அரைமாத்திரையாக ஒலிக்கும் ஆய்தம் எட்டாம். (நன். 90 சங்கர.)

ஆய்தம் சார்பெழுத்தாதல் -

{Entry: A01__147}

கஃறீது முஃடீது என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனானும் ஈண்டுப் ‘புள்ளி’ என்றதனானும் ஒற்றின் பாற்படுமேனும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் இடம்பற்றி நிகழ்வதொன்றாகலின், ஆய்தம் சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று. (இ. வி. 17 உரை)

ஆய்தம் பற்றிய கருத்து -

{Entry: A01__148}

ஆய்தம் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்றாய் ஏனையவை போலப் புள்ளி பெறும். இதன் தமிழ்ப்பெயர் அஃகேனம் என்பது. ஆய்தம் ஆச்ரிதம் என்பதன் திரிபு. பழைய ஏடுகளில் ஆய்தமானது, : என இவ்வாறு இரண்டு புள்ளிகளோடு எழுதப்பட்டது. ஒலியில் அது தன்முன் வரும் வல்லெழுத்தின் ஒலியைப் பெறுகிறது. (முன் - இடமுன்) நெடுங்கணக்கில் ஆய்தம் உயிர்வரியின் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது வடமொழியிலுள்ள விஸர்க்கம் போல்வது. வடமொழியில் விஸர்க்கம் ககர பகரங்கள் வருமிடத்து அவற்றின் ஒலி பெறும். “அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டு எழுதுப” என்று நச். கூறுவதால், அவர்காலத்தில் ஆய்தம் இரண்டு புள்ளி வடிவினதாகவே எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

ஆய்தத்துக்குத் தனியே ஒலியின்று. அஃது அடுத்து வரும் வல்லின மெய்யின் ஒலிக்கு ஏற்பத்தானும் திரிந்தொலிக்கும். இக்காலத்தார் ககரமெய்யை அடுத்த ஆய்த ஒலியையே ஏனைய வல்லெழுத்துக்களை அடுத்த ஆய்தத்துக்கும் ஒலியாகக் கொண்டுள்ளனர். தன் சார்பின் பிறப்பொடு சிவணி ஆய்தம் ஒலிக்கும் எனத் தொல்காப்பியனார் கூறலின், ஆய்தம் வல் லெழுத்து ஆறனையும் அடுத்த எழுத்தாகக் கொண்டுவரும் அறுவகை இடங்களிலும் அவ்வொலியை ஒட்டி அறுவகை ஒலித்தாகும். அடுத்த வல்லொலிக்கும் ஆய்த ஒலிக்கும் மிகக் குறைந்த ஒலிவேறுபாடே இருத்தலின், முட்டீது, முஃடீது, கற்றீது கஃறீது என்றாயினமை உளங்கொளத் தக்கது. (எ. ஆ. பக். 14, 84, 85)

ஆய்தம் நெடுங்கணக்கில் ஒளகாரத்துக்குப் பின்னரும் ககரமெய்க்கு முன்னரும் இட்டு, முதலெழுத்துக்களை 31 என்று கணக்கிடும் வழக்கம் வீரசோழிய காலத்தை ஒட்டி வந்தது. (எ. கு. பக். 5)

ஆய்தத்தை ஒலிக்கும்போது வாய் சிறிது திறந்தும் சிறிது மூடியும் இருத்தலின், அதனை இடையெழுத்துப் போன்ற மெய் எனக் கூறல் தகும். (எ. கு. பக். 48)

ஆய்தமும் மெய்யாதல் -

{Entry: A01__149}

மெய்யெழுத்துக்குப் புள்ளி என்பதும் பெயர்; ஆய்தமும் புள்ளி யெழுத்தாம். மெய்யின் மாத்திரை அரை; ஆய்தத்தின் மாத்திரையும் அரை. மெய் புணரும் இயலைப் புள்ளி மயங் கியல் என்றே தொல். பெயரிட்டுள்ளார். ஆய்தத்தை அவர் ‘ஆய்தப் புள்ளி’ என்றே குறிப்பிடுகிறார். ஒருமெய் மற்றொரு மெய்யாகத் திரியும் புணர்ச்சிக்கண், கல் + தீது = கஃறீது (தொ. எ. 369. நச்.), முள் + தீது = முஃடீது (399) என்பன இடையே கூறப்படுதலானும் ஆய்தம் மெய்யாகவே கொள்ளப்படும். (தொ. எ. 38, 39 நச். உரை)

ஆயிடை : உடம்படுமெய் பெறாமை -

{Entry: A01__150}

‘இவ்வணி, ஆயிடை : உடம்படுமெய் பெறாமை’ காண்க.

ஆயியல்பு இன்று -

{Entry: A01__151}

அவ்வியல்பு என்பது செய்யுளின்கண் அகரச்சுட்டு நீண்டு யகர உடம்படுமெய் பெற்று ஆயியல்பு என்று வரும். ஆயியல்பு இன்று - அந்த இயற்கையைப் பெறாது; அஃதாவது அந்த ஈற்றுப் பொதுமுடிபைப் பெறாது என்பது.

பூ என்ற ஊகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் பொதுவாக அவ்வீற்றுச் சொற்களுக்குக் கூறப்படும் உகரப் பேறும் வல்லெழுத்து மிகுதலும் பெறாது, வருமொழி முதல் வல்லெழுத்துக்கு இனமான மெல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மை என்பது.

வருமாறு : பூ + கொடி = பூங்கொடி (தொ. எ. 268 நச்.)

ஆயிரம் அத்துப் பெறுதல் -

{Entry: A01__152}

ஆயிரம் தன்னைவிடக் குறைந்த அளவிற்றாகிய எண்ணுப் பெயர் தன்முன் வருமிடத்தே, வழக்கமாகிய ஏ என்னும் சாரியை பெறாது, அத்துச்சாரியை பெற்றுப் புணரும். சிறுபான்மை மகரம் கெட்டு வல்லெழுத்து மிகுதலுமுண்டு.

வருமாறு : ஆயிரம் + ஒன்று > ஆயிரம் + அத்து + ஒன்று = ஆயிரத்தொன்று; ஆயிரம் + பத்து > ஆயிரம் + அத்து + பத்து = ஆயிரத்துப்பத்து; ஆயிரம் + பத்து > ஆயிர + பத்து = ஆயிரப்பத்து (தொ. எ. 317 நச்).

ஆயிரம் என்ற சொல்லமைப்பு -

{Entry: A01__153}

ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய தமிழ் இலக்கணஇலக்கியங்களில் பயின்று வந்துள்ளது.

ஸகஸ்ரம் என்ற ஆரியச்சொல் சாசிரம் எனக் கன்னடத்தில் இன்றும் வழங்குகிறது. ‘சாசிரம்’ ஆயிரம் எனத் திரிந்து அமைந்திருக்கலாம். (எ. ஆ. பக். 153).

‘ஆர்’ ‘பீர்’ மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__154}

ஆர் என்ற மரப்பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும் வழி இடையே மெல்லெழுத்துப்பேறும், சிறுபான்மை அம்முச் சாரியையும் அத்துச்சாரியையும் எய்தும்.

எ-டு : ஆர் + கோடு = ஆர்ங்கோடு; - ஆர் + கண்ணி = ஆரங் கண்ணி (அம்); பீர் + அலர் = பீரத்தலர் (அத்து) (தொ. எ. 363 நச்.)

‘ஆல்’ மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__155}

ஆல் என்ற மரப்பெயர், வன்கணம் - மென்கணம் - இடைக் கணம் - வருமொழி முதலில் வருமிடத்து அம்முச்சாரியை பெற்று வருமொழிக்கேற்பத் திரிந்து முடியும். உயிர்க்கணம் வருமிடத்து அம்முச்சாரியை பெறுதலின்று.

எ-டு : ஆல் + அம் + கோடு = ஆலங்கோடு; ஆல் + அம் + ஞெரி = ஆலஞெரி; ஆல் + அம் + விறகு = ஆல விறகு; ஆல் + இலை = ஆலிலை

இது வேற்றுமைப்புணர்ச்சி. (தொ. எ. 375 நச்.)

ஆவயின் என்ற சொல்லமைப்பு -

{Entry: A01__156}

ஏழாம்வேற்றுமை யிடப்பொருள் உணர்த்தும் வயின் என்ற சொல் அகரமாகிய சுட்டிடைச்சொல்லொடு புணர்ந்து அவ்வயின் என்றாகி (தொ. எ. 334. நச்), செய்யுட்கண் சுட்டு நீண்டு ஆவயின் என்று முடிந்து அவ்விடத்தில் என்ற பொருளில் வரும். (தொ. எ. 250 நச்.)

ஆவயினான - அவ்விடத்துக்கண் (தொ.எ. 148)

ஆவிரை என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__157}

ஆவிரை என்ற மரப்பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்- கண் அம்முச்சாரியை பெற்று, நிலைமொழியீற்று ஐகாரம் கெட, ஆவிர் என்றாகி, ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள், ஆவிரந்தோல் என்றாற் போலப் புணரும். (தொ. எ. 283 நச்.)

ஆவியும் ஒற்றும் அளவிறந்து இசைக்கும் இடம் -

{Entry: A01__158}

உயிரும் மெய்யும் இசை - விளி - பண்டமாற்று - நாவல் - குறிப் பிசை - முறையீடு - புலம்பல் - முதலாய இடங்களில் தம் மாத் திரையளவினைக் கடந்து ஒலிக்கும். இசையின் அளவிறந்து ஒலிக்குமிடத்து உயிர் 12 மாத்திரை ஈறாகவும், மெய் 11 மாத்திரை ஈறாகவும் ஒலிக்கும் என்பர் இசைநூலார். நாவல் - நெற்போர் தெழிப்போர் பகட்டினங்களை ஓட்டுவதொரு சொல். பண்டமாற்று - பண்டங்களை (விலை கூவி) விற்றல்.

எ-டு : நாவலோஒஒ என்றிசைக்கும் நாளோதை’ - நாவல்

‘உப் போஒஒ எனவுரைத்து மீள்வாள்’ - பண்டமாற்று

‘கஃஃஃ றென் னும் கல்லத ரத்தம்’, ‘சுஃஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’ - குறிப்பிசை (நன். 101)

ஆவியும் ஒற்றும் தமக்குச் சொன்ன மாத்திரையின் மிக்கு இசைக்கவும் பெறும். நாவலும் முறையீடும் புலம்பும் குறிப்பிசையும் முதலாயின கொள்க.

‘கஃஃ றென்னும் கல்லதர் அத்தம்’ என்பது குறிப்பிசை.

உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் நீளும் என்றார் கந்தருவநூலுடையார். அவை வந்தவழிக் காண்க. (நன். 100 மயிலை.)

‘ஆறன் உருபிற்கு ஈறாகு புள்ளி அகரமொடு நிலையல் -

{Entry: A01__159}

நெடுமுதல் குறுகும் சொற்களாகிய தாம் - யாம் - நாம் - தான் - யான் - நீ - என்ற சொற்கள், உருபேற்குமிடத்தும் உருபு தொக்க பொருட் புணர்ச்சிக்கண்ணும், முதல் குறுகித் தம் - எம் - நம் - தன் - என் - நின் - என்றாகி, அகரச்சாரியை பெற்றுத் தம, எம - முதலாக நின்று, ஆறன் உருபொடு புணரும். ஆறாம் வேற்றுமையுருபுகள் அது, அ என்பன. அகரத்தொடு புணரும்- வழி உடம்படுமெய் பெற்றுத் தமவ - எமவ - நமவ - தனவ - எனவ - நினவ என முடியும். அது உருபொடு புணருமிடத்து, அது உருபின் அகரம் கெட, தம + அது > தம + து = தமது என்றாற்போலப் புணரும் என்பர் தொல்காப்பியனார். (எ. 115 ந.)

நன்னூலார் நிலைமொழியின் ஈறு அகரம் பெறும் என்றோ, வருமொழியாகிய அதுஉருபின் அகரம் கெடும் என்றோ கூறாது வாளா விடுத்தார்.

நன்னூலாருக்கு, தாம் + அது = தமது எனப் புணரும். தனிக் குறில் முன் ஒற்று ஆறாம் வேற்றுமைக்கு இரட்டாது என்று அவர் விதித்தார்.

கன்னடமொழியில், தனது - தமது - தன்உயிர் - தம்உயிர் முதலியவற்றைத் தொல். கூறுவது போலவே, தன் + அ + அது, தம் + அ + அது, தன் + அ + உயிர், தம் + அ + உயிர் என்று பிரித்துக் கூட்டுகின்றனர். அம் மொழியில் அகரம் ஆறன் உருபாகும். தெலுங்கில் பன்மை ஏற்ற பெயர்களுக்கு அகரமே உருபாக வருகிறது. தமிழிலும் ஆறன்பன்மை உருபு ‘அ’ என்று நன்னூலாரும் கூறியுள்ளார். ‘அது’ அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயராதலின், உயர்திணைக்கு அது சாலாது என்று, நம்பியது மகன் என்னாது, நம்பிக்கு மகன் என நான்க னுருபினை இணைத்தனர்.

ஆறாம் வேற்றுமைக்கு நன்னூலார் ஆது என்ற உருபும் கூறினார்.

தன் + அ + அது > தன + அது = தனாது; மர + அடி = மராடி இரண்டு அகரங்கள் ஆகாரமான வடிவமே அது. இந்த ஆது உருபு தன் - என் - நின் - என்பனவற்றிற்கே வருவது; இராம னாது - கண்ணனாது எனப் பிற பெயரொடு வாராது. இதனை நோக்க, நெடுமுதல் குறுகும் மொழியிறுதியில் வரும் அகரம் - உருபு முதலெழுத்தாகிய அகரம் இரண்டும் சேர்ந்து ‘ஆ’ ஆக, அதுஉருபை அதன்உண்மை நோக்காது ஆது என்றதோர் உருபாக நன்னூலார் குறிப்பிட்டது போதரும். (எ. ஆ. பக். 96.)

ஆறன்உருபின் அகரம் கெடும் இடமும் கெடாத இடமும் -

{Entry: A01__160}

யான் - யாம் - நாம் - தான் - தாம் - நீ - என்பன நெடுமுதல் குறுகி, என் - எம் - நம் - தன் - தம் - நின் - என்றாகி, அகரச்சாரியை பெற்று, என - எம - நம - தன - தம - நின என்றாயவழி (தொ. எ. 161 நச்.), வருமொழி முதற்கண் அது என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபின் அகரம் கெட, என + அது > என + து = எனது என்றாற்போலப் புணரும். நும் என்பதும் நும் + அது > நும + து = நுமது எனப் புணரும். வருமொழி முதற்கண் அகரம் என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபு கெடாது, என + அ > என + வ் + அ = எனவ என்றாற் போல (இடையே வகரஉடம்படுமெய் பெற்று) அந்நெடுமுதல் குறுகும் சொற்கள் புணரும். (தொ. எ. 115 நச். உரை.)

ஆறு விகாரமும் மூன்று திரிபில் அடங்குமாறு -

{Entry: A01__161}

விரித்தல் விகாரம் தோன்றலாகவும், வலித்தல் - மெலித்தல் - நீட்டல் - குறுக்கல் என்னும் விகாரங்கள் திரிதலாகவும், எஞ்சிய தொகுத்தல் விகாரமும் முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலும் கெடுதலாகவும் அடங்கும். ஆகவே செய்யுள் விகாரமும் மூன்றென அமையும். (இ. வி. எழுத். 58.)

ஆன்சாரியை, ஆன்உருபு இவற்றிடை வேறுபாடு -

{Entry: A01__162}

ஆன்சாரியை தோன்றியவிடத்து யாதானும் ஓர்உருபினை அஃது ஏற்கும் ஆற்றலுடையது. எ-டு : ஒருபான் + ஐ = ஒரு பானை; ஒருபான் + கு = ஒருபாற்கு. ஆன்உருபு தோன்றிய விடத்து அது வேறோர் உருபினை ஏலாது. எ-டு : வாளான் வெட்டினான், வாணிகத்தான் ஆயினான். (தொ. எ. 119 நச். உரை)

ஆன்சாரியை வரும் இடங்கள் -

{Entry: A01__163}

ஒருபஃது இருபஃது.... எண்பஃது என்ற சொற்கள் உருபுக ளொடு புணருமிடத்து, அச்சொற்களிலுள்ள ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை வர, ஒருபான் இருபான்... எண்பான் - என நின்று உருபேற்று, ஒருபானை, ஒருபானொடு ..... எண்பானை - எண்பானொடு - எனப் புணரும். ஒன்பது என்பதும் ஒன்பான் என ஆன்சாரியை பெற்றுத் திரிந்து, ஒன்பானை - ஒன்பா னொடு என உருபேற்றுப் புணரும்.

எ-டு : ‘ஒன்பான் முதனிலை’ - (தொ. எ. 463 நச்.)

‘ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே’ - (தொ. எ. 475) (தொ. எ. 199 நச்.)

இகர ஐகார ஈற்று நாட்பெயர், தம் முன்னர் வினைச்சொல் வரு மிடத்து இடையே ஆன்சாரியை பெற்றுப் புணரும்.

எ-டு : பரணியாற் கொண்டான், சித்திரையாற் கொண் டான் (தொ. எ. 247, 286 நச்.)

மகரஈற்று நாட்பெயர் அத்துச் சாரியையோடு ஆன்சாரியை பெற்று வருமொழியாக வரும் வினைச்சொல்லொடு புணரும்.

எ-டு : மகத்தாற் கொண்டான் (தொ. எ. 331 நச்.)

வினையெனவே, வினைப்பெயரும் அடங்கும்.

பரணியாற் கொண்டவன், சித்திரையாற் கொண்டவன், மகத்தாற் கொண்டவன் எனக் கொள்க. இவை ஏழாம் வேற்றுமைப் பொருளன.

ஆன்சாரியை வேற்றுமைப்புணர்ச்சிக்கண் திரியுமாறு -

{Entry: A01__164}

நாட்பெயர்க்கு முன் வரும் ஆன்சாரியையின் னகரம், வரு மொழி வினையாகவும் வினைப்பெயராகவும் வன்கணம் முதலெழுத்தாகவரின், றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : பரணியாற் கொண்டான், சித்திரையாற் கொண் டான், மகத்தாற் கொண்டான்

ஒருபாற்கு என உருபுபுணர்ச்சிக்கண்ணும், வன்கணம் வரின், ஆன் சாரியையது னகரம் றகரமாகத் திரியும். (தொ. எ. 123, 124 நச்.)

ஆன்மாச்சிரயம் -

{Entry: A01__165}

இது ‘தன்னைப் பற்றுதல்’ என்னும் குற்றம்.

ஏனைய எழுத்துக்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் அகரம் தன் தோற்றத்துக்கும் தானே காரணம் என்று கூறுதல் ஆன்மாச்சிரயமாம்.

காரணமும் காரியமும் ஒன்று என்று கொள்ளும் நிலையில் இக் குற்றம் ஏற்படும். காரணம் முன்னரும் காரியம் பின்னரும் வருதலே முறை. இம்முறையை விடுத்து இரண்டும் ஒன்றெனல் குற்றமாம். (சூ. வி. பக். 50).

‘ஆனின் னகரமும்’ - உம்மையை இரட்டுற மொழிதல் -

{Entry: A01__166}

‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே, நாள்முன் வரூஉம் வன்முதல் தொழிற்கே’ - (எ. 125) உம்மையை இரட்டுறமொழி- தலான் எதிரது தழீஇய தாக்கி, இன்னின் னகரமும் நாள் அல்லவற்று முன் வரும் வன்முதல் தொழிற்கு அதனோரற்று எனக் கொண்டு, ‘பனியிற் கொண்டான்’ முதலியன கொள்ளப் படும்.

இன்னின் னகரம் றகரம் ஆதற்கு இது பயன்படுகிறது. (தொ. எ. 125 இள. உரை)

“உம்மை இறந்தது தழீஇயது ஆக்கி” என்பர் நச். (தொ.எ. 124 உரை)

ஆனைமுகத்தானை ‘மும்மதத்தன்’ என்றல் -

{Entry: A01__167}

கழுத்திற்குமேலன்றி யானைஉறுப்பு இல்லாத கடவுள் விநாயகன். வேழமுகத்திற்கேற்ப அவனுக்கு இருமதமே உள என்றல் பொருந்தும். மற்று, ‘மும்மதத்தன்’ என்றது எவ்வாறு பொருந்துமெனின், பஞ்சாட்சரத்தின் பேதமாகிய எட் டெழுத்து - ஆறெழுத்து - நாலெழுத்து - முதலாயினவும் ‘பஞ்சாட்சரம்’ என்றே கூறப்படுதலின், மும்மதத்தின் வகை யாகிய ஒருமதம் இருமதங்களும் ‘மும்மதம்’ எனப்படுதல் பொருந்தும் என்பது. குற்றியலுகரம் 36 எனத் தொகை கொடுத் தமை, நெடிற்றொடர் முதலிய ஆறனையும் வன்மையூர் உகரம் (கு சு டு து பு று என்னும்) ஆறனோடு உறழ்தலால் என்க. மயக்க விதி இன்மையின் இடையின மெய்யினை டகார றகாரங்கள் ஊர்ந்த உகரம் தொடராது ஆதலின், அவ்விரண் டனையும் விலக்கியே கணக்கிடல் வேண்டும். அவ்வாறு விலக்காமை, ஆனைமுகத்துக் கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற் போன்ற நியாயத்தின்பாற் பட்டது. (நன். 94 சங்கர.)

இ section: 95 entries

இ -

{Entry: A01__168}

இஃது உயிரெழுத்து வரிசையுள் மூன்றாவது; அங்காப்போடு அண்பல் முதலினை நாவிளிம்பு உறப் பிறப்பது; ஒருமாத்திரை அளவினதாம் குற்றெழுத்து.

இஃது அண்மைச் சுட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் - இவன், இக்கொற்றன்.

இஃது ஒரு சாரியை - மண் + யாது = மண்ணியாது; வேள் + யாவன் = வேளியாவன். (நன்- 206 சங்)

ய ர ல முதலவாகும் ஆரியச் சொற்களை இயக்கன், இராமன், இலாபம் என வடசொல் ஆக்க இது முன் வருவது.

ஆரியச் சொற்களை வடசொல்லாக்க, வாக்யம் - வாக்கியம் க்ரமம் - கிரமம், சுக்லம் - சுக்கிலம் என, வல்லொற்றுக்களை அடுத்த ய ர ல இவற்றுக்கு இடையே இது வருவது. (நன். 148, 149 சங்.)

இது விரவுப்பெயர் விகுதி - செவியிலி; ஆண்பாற்பெயர் விகுதி - வில்லி; பெண்பாற்பெயர் விகுதி - கூனி; அஃறிணைப் பெயர் விகுதி - கனலி; வினைமுதற்பெயர் விகுதி - அலரி; செயப்படுபொருள் விகுதி - ஊருணி; கருவிப்பொருள் விகுதி - மண்வெட்டி; ஏவல் ஒருமை விகுதி - செல்லுதி; வியங்கோள் விகுதி - காண்டி (காண்க); வினையெச்ச விகுதி - ஓடி; தொழிற் பெயர் விகுதி - வெகுளி; பகுதிப்பொருள் விகுதி - உருளி. (இலக்கணச் சுருக்கம் முதலியன)

இ ஈ முதலியவற்றின் பிறப்பிடமும் முயற்சியும் -

{Entry: A01__169}

இ ஈ எ ஏ ஐ என்பனவற்றின் பிறப்பிடம் மிடறு. இ ஈ என்பன அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலால் பிறப்பன. அண்பல் முதலாவது மேல்வாய்ப்பற்களுக்குப் பின்னர் உள்ள அண்ணம். (எ. கு. பக். 90).

பல்லினது அணிய இடத்தினை நாவினது அடிவிளிம்பு சென்று உற, இ ஈ முதலியன பிறக்கும் என்பர் இளம்பூரணர் (தொ. எ. 86). இ ஈ முதலியன அண்பல்லும் அடிநாவிளிம்பும் உறப் பிறப்பன என்பர் நச்.

இகரம் முதலாயின வடமொழியில் தாலவ்யம் எனப்படுத லின், இடைநாக்குத் தாலுவினைச் சார அவை பிறக்கும். தாலுவாவது மூர்த்தாவின் மேற்பகுதி (அண்ணம்) ஆதலின், அடிநாக்கின் விளிம்பு அண்பல்லைப் பொருந்துதலின்று.

‘அண்பல் முதல்நா விளிம்பு உறல்’ (86) என்ற தொடரை ‘அண்பல் முதல்நாவிளிம்பு உறல்’ என்று பிரித்துப் பொருள் கொள்ளாது, ‘அண்பல்முதல் நாவிளிம்பு உறல்’ என்று பிரித்துப் பொருள்கொள்ளல் வேண்டும். இடைநாக்குத் தாலுவினில் அடுத்தலால் இகர ஈகாரம் பிறக்கும்.

இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தெழுத்துக்கும் பிறப்பிடமும் முயற்சியும் ஒன்றாகக் கூறப்படினும், எகர ஏகாரங்களுக்கு முயற்சியில் சிறிது வேறுபாடுண்டு. ஐகாரத்தில், கண்டத்துப் பிறக்கும் அகரம் முதலிலும் தாலுவில் பிறக்கும் ஏகாரம் முடிவிலும் உள்ளன என்பதும், அவற்றின் ஒலி முறையே அரைமாத்திரை யும் ஒன்றரை மாத்திரையும் ஆம் என்பதும் அறியப்படு கின்றன. (எ. ஆ. பக். 77, 78, 79)

இக்குச்சாரியை புணருமாறு -

{Entry: A01__170}

இக்குச்சாரியை இகர ஐகார ஈற்று நிலைமொழிகளொடு புணரும்வழி அது தன் முதலெழுத்தாகிய இகரம் கெடப் புணரும்; வருமொழி வன்கணம் மிகும்.

எ-டு : ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண் டான்; சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக் குக் கொண்டான் (தொ. எ. 126, 127 நச்.)

இக்குச்சாரியை வரும் இடங்கள் -

{Entry: A01__171}

இகர ஐகார ஈற்றுத் திங்கட்பெயர்கள், வருமொழி வல் லெழுத்து முதலாகிய வினைச்சொல்லோடு ஏழாம் வேற்று மைப் பொருளிற் புணருமிடத்து, இடையே இக்குச்சாரியை வரும்.

எ-டு : ஆடிக்குக் கொண்டான், சித்திரைக்குக் கொண் டான்

தமிழில் திங்கட்பெயர்கள் பன்னிரண்டும் இகர ஐகார ஈற்றுள் அடங்கும். ஆடிக்கு, சித்திரைக்கு என்பன ஆடிக்கண், சித்திரைக்கண் என ஏழாம் வேற்றுமைப் பொருள்படுவன. (தொ. எ. 248, 286 நச்.)

இகரஈற்று அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__172}

உயர்திணைக்கண் இகரஈற்றுப் பெயர், நம்பிக்கொல்லன் - நம்பிச்சான்றான் - நம்பித்துணை - நம்பிப்பிள்ளை - எனவும், செட்டிக்கூத்தன் - செட்டிச்சாத்தன் - செட்டித்தேவன் - செட்டிப் பூதன் - எனவும், இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கண் வருமொழி வன்கணம் வரின் மிகும்.

அஃறிணைக்கண் இகரஈற்றுப் பெயர், மாசித்திங்கள் - அலிக் கொற்றன் - காவிக்கண் - குவளைக்கண் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையின் இடையே வருமொழி வல்லெழுத்து மிகும்.

பருத்தி குறிது - எழுவாய்த்தொடர் இயல்பாகப் புணரும். உண்ணுதி சாத்தா என வினைமுற்றுத் தொடர் இயல்பாகப் புணரும். கிளி குறிது கிளிக்குறிது எனச் சிறுபான்மை எழுவாய்த் தொடர் உறழ்ந்து முடியும். ஓடிச் சென்றான் என வினை யெச்சம் மிக்கது. ‘சென்மதி பாக’ என இகரஈற்று இடைச் சொல் இயல்பாக முடிந்தது. கடிகா என இகர ஈற்று உரிச் சொல் இயல்பாக முடிந்தது. இனிக் கொண்டான் அணிக் கொண்டான் இக் கொற்றன் என இகர ஈற்று இடைச்சொல் மிக்கது (தொ. எ. 236 நச்.) ( 158 நச். உரை)

அவ்வழி கொண்டான், அவ்வழிக் கொண்டான் என இகர ஈற்று இடைச்சொல் உறழ்ந்து முடிந்தது. (159 நச். உரை)

இகரஈற்று இடைச்சொல் புணர்ச்சி -

{Entry: A01__173}

அதோளி - இதோளி - உதோளி - எதோளி - என்ற இடப் பொருளை உணர்த்தி நின்ற இகரஈற்று இடைச்சொற்கள், அதோளிக் கொண்டான் என்றாற்போல் வல்லெழுத்து மிக்கு முடியும். அவ்வழி - இவ்வழி - உவ்வழி - எவ்வழி - என்பன, அவ்வழி கொண்டான் அவ்வழிக் கொண்டான் என்றாற் போல உறழ்ந்து முடியும்.

இனி - அணி - என்பனவும், சுட்டிடைச்சொல்லும், வன்கணம் வரின் வந்த வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : இனிக்கொண்டான், அணிக்கொண்டான், இக் கொற்றன். (இனி - இப்பொழுது; அணி - அணிய இடத்து; இ - இவ்விடத்து) (தொ. எ. 159, 236. நச்).

இகரஈற்றுச்சுட்டுப் புணர்ச்சி -

{Entry: A01__174}

இகரஈற்றுச் சுட்டிடைச்சொல், வன்கணம் வரின், வந்த வல்லெழுத்தும், மென்கணம் வரின் வந்த மெல்லெழுத்தும், இடைக்கணமாகிய யகரவகரங்கள் வரின் வகரமும் இடையே பெற்றுப் புணரும்; உயிர்முதல்மொழி வருமிடத்துக் குறிலை அடுத்த ஒற்றாக வகரம் இரட்டிக்கும்; செய்யுட்கண் இகரம் நீண்டு புணரும்.

வ-று: இ + கொற்றன் = இக்கொற்றன்; இ + ஞாலம் = இஞ்ஞாலம்; இ + நாய், மாடு = இந்நாய், இம்மாடு; இ + யானை = இவ்யானை; இ + வாடை = இவ்வாடை; இ + ஆடு = இவ்வாடு; இ + வயினான = ஈவயினான (தொ. எ. 238 நச்.)

இகர ஈற்றுத் திங்கட்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__175}

தமிழில் மாதங்களின் பெயர்கள் இகரம் ஐகாரம் என்ற இரண்டு ஈறுகளே பெற்றுள. இகர ஈற்றுத் திங்கட்பெயர், வருமொழி வன்கணத்தில் தொடங்கும் வினையும் வினைப் பெயரும் என்ற இவற்றொடு புணருமிடத்து, இக்குச்சாரியை யும் இயைபு வல்லெழுத்தும் பெற்றுப் புணரும்.

எ-டு : ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான்; ஆடி + கொண்டவன் = ஆடிக்குக் கொண்டவன்

ஆடிக்கு என்பது ஆடிமாதத்தின்கண் என்னும் ஏழன் பொருளது. (தொ. எ. 248 நச்.)

இகரஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__176}

நாள் - நாள்மீன். தமிழில் நாண்மீன்களின் பெயர்கள் இகரஈறு - ஐகார ஈறு - மகரஈறு - என்ற மூவீற்று மொழிகளாகவே உள்ளன. இகரஈற்று நாட்பெயர்கள், வருமொழி வன்கணத்தில் தொடங்கும் வினை வினைப்பெயர் என்ற இவற்றொடு புணரு மிடத்து, ஆன்சாரியை பெற்று ஆனின் னகரம் றகரமாகத் திரிந்து முடியும்.

எ-டு : பரணி + கொண்டான் = பரணியாற் கொண்டான்; பரணி + கொண்டவன் = பரணியாற் கொண்டவன்.

இதற்குப் பரணிக்கண் என ஏழன்பொருள் விரிக்க. (தொ. எ. 247 நச்.)

இகரஈற்றுப் பெயர் அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: A01__177}

இகரஈற்று உயர்திணைப்பெயர் வன்கணம் வரின் மிக்குப் புணரும். எ-டு : எட்டிக்குமரன், நம்பிப்பேறு (தொ. எ. 154 நச்.)

இகரஈற்றுப் பொதுப்பெயர், இருபெயரொட்டாயின் மிக்கும், எழுவாய்த் தொடராயின் இயல்பாயும் வன்கணம் வந்துழிப் புணரும். எ-டு : சாத்திப்பெண், சாத்தி பெரியள் என முறையே காண்க. (தொ. எ. 155 நச்.)

இவை அல்வழி முடிபு.

இகரஈற்று அஃறிணைப்பெயர், வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிக்கும், சிறுபான்மை உறழ்ந்தும் புணரும். எ-டு : கிளிக்கால், கிளிச்சிறகு - மிகுதி; கிளிகுறுமை, கிளிக்குறுமை - உறழ்ச்சி (தொ. எ. 235 நச்.)

இகரஈறு இகரம் கெட்டு அம்முச்சாரியை பெறுதலுமுண்டு.
எ-டு : கூதாளி + கோடு = கூதாளங்கோடு; கணவிரி + கோடு = கணவிரங்கோடு (தொ. எ. 246 நச்.)

இகரஈறு வருமொழியோடு இகரம் கெட்டுப் புணர்தலு முண்டு. எ-டு : கட்டி + இடி = கட்டிடி; கட்டி + அகல் = கட்டகல் (தொ. எ. 246. நச்.)

சில இகரஈறு அம்முப் பெறாது மெல்லெழுத்துப் பெறுதலு முண்டு. எ-டு : புளிங்காய், புளிம்பழம் (தொ. எ. 246 நச்.)

இவை வேற்றுமை முடிபு.

‘இகர உகரத்து இயற்கையும் அற்றே’ -

{Entry: A01__178}

பிறரெல்லாம் ‘எகர ஒகரத்து இயற்கையும்’ என்று பாடம் ஓதினர். சார்பெழுத்து மூன்றனுள் ஆய்தப் புள்ளி நீங்கலான ஏனைய குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆகியவற்றின் இயல்பும் மெய்யெழுத்திற்குக் கூறிய அவ்வாறே ஆம். அஃதாவது இவையும் அரைமாத்திரையளவு புள்ளி பெற்று ஒலிக்கும் என்றவாறு. வரிவடிவின்கண் அடையாளம் செய்துகோடல் இவற்றிற்கும் ஒக்கும். (தொ. எ. 16 ச. பால.)

இகரம் எகரமாகத் திரியும் வடநடைப் பதம் -

{Entry: A01__179}

சிபி மருமான் செம்பியன் என்புழி, நிலைமொழி முதல் இகரம் எகரமாகத் திரிந்தது. (தொ. வி. 86 உரை)

இகரமுனை -

{Entry: A01__180}

முனை, முன், முன்னர் என்பன ஒருபொருளன. இகரம் நிலை மொழி ஈற்றெழுத்தாக வருவதன் முன்னர் என்றவாறு. (தொ. எ. 126 நச்.)

இகர யகரம் போலியாய் இருத்தல் -

{Entry: A01__181}

மொழியிறுதிக்கண் யகரம் வருமிடத்து அதற்குப் போலியாக இகரம் வந்து இசைக்கும். எ-டு : நாய் - நாஇ (தொ. எ. 58 நச்.)

இகர விகுதியின் இயல்பு -

{Entry: A01__182}

இகர ஈறு தனித்து இயலாமையின் யாதானும் ஒரு மெய் யினை ஊர்ந்து வரும். அம்மெய் காலம் காட்டாது; அது காலம் காட்டின் இகர விகுதி காலம் காட்டாது. (எ-டு: சேறி- இகரம் எதிர்காலம் காட்டிற்று (செல்+த்+இ); ஆண்டுத் தகரம் காலம் காட்டாமல் நின்றது. அஃது எழுத்துப் பேறாம். சென்றி, செல்லாநின்றி- என்புழி இடைநிலைகள் காலம் காட்டின; ஆண்டு இகரவிகுதி காலம் காட்டாது முன் னிலை யொருமைப் பாலையே சுட்டுவது. (நன். 145 சங்கர.)

இகரவிகுதி வினைமுதற்பொருண்மை உணர்த்தல் -

{Entry: A01__183}

இகரவிகுதி வினைமுதற்பொருண்மையை உணர்த்துதலைச் சேர்ந்தாரைக் கொல்லி - நூற்றுவரைக் கொல்லி - நாளோதி - நூலோதி - முதலிய சொற்களில் காணலாம். இவற்றுக்கு முறையே தன்னைச் சேர்ந்தவரை அழிப்பது - ஒரேநேரத்தில் நூறுபேர்களை அழிப்பது - நட்சத்திரங்களைச் சொல்லு பவன் - நூலினை ஓதுபவன் - என்று பொருள் கூறுக. (சூ. வி. பக். 33)

இசைநிறை அளபெடை -

{Entry: A01__184}

செய்யுட்கண் ஓசையைநிறைக்க வரும் உயிரளபெடைகளும், ஒற்றளபெடைகளும் (செய்யுள்) இசை நிறை அளபெடை களாம். அளபெடையுள் இவையே பெரும்பாலவாய் நிகழ்வன.

எ-டு : றாஅ ர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்

செ றாஅஅ ய் வாழிஎன் நெஞ்சு’

‘க ண்ண் கருவிளை கார்முல்லை கூர் எயிறு’

‘உறாஅர்’ என அளபெடுக்கவில்லையேல் ஓரசையாகிச் சீர் நிலை எய்தாது. ‘செறாஅஅய்’ என ஈரளபு எடாதொழியின் தளை சிதையும். ‘கண்ண்’ என ணகரமெய் அளபெடாவிடில் ‘கண்’ ஓரசையேயாகிச் சீர்நிலை எய்தாது. ஆதலின் இவை இரண்டளபெடையும் செய்யுளிசை நிறைக்க வந்தனவாம். (நன். 91 இராமா.)

இசைநிறைவு ஆதல் -

{Entry: A01__185}

நெடில் நீண்டிசைக்க வேண்டின், அந்நீட்சிக்குரிய ஓசையை அந்நெடிலின் இனமாகிய குறில் உடன்வந்து நிறைத்தல்.

எ-டு : ஐ ஒள நீண்டிசைக்க வேண்டின், அவற்றை அடுத்து முறையே இகர உகரங்கள் வந்து அந்த நீளவேண் டிய இசையை நிறைவுசெய்தல். ஐஇ ஐஇஇ; ஒளஉ ஒளஉஉ எனவரும். (தொ. எ.42 நச்.)

இசையிடன் மகரம் குறுகுதல் -

{Entry: A01__186}

லகரளகரங்கள் திரிந்த னகரணகரங்களின் முன் (இடமுன்) வரும் மகரம், தான் மொழியின் ஈற்றெழுத்தாக, தனக்கு முன்னருள்ள எழுத்தின் ஓசையான் தன் அரைமாத்திரையின் குறுகுதல். போன்ம், மருண்ம் என வரும். (முன் - காலமுன்).

இசையிடன் - தனக்கு முன்னருள்ள எழுத்தின் ஓசையிடத்து. (தொ. எ. 13 இள., நச்.) (பிறன்கோட் கூறல் எனும் உத்தி என்பது தவறு) இடையிடன் - இசைநூலிடத்து (தொ. பொ. 665 பேரா.) இதுவே பிறன்கோள் கூறல் என்றும் உத்திவகை.

இசையின் திரிதல் -

{Entry: A01__187}

எடுத்தல் படுத்தல் நலிதல் என்ற ஓசைவேறுபாட்டான் புணர்ச்சி வேறுபடுதல்.

‘செம்பொன்பதின்றொடி’ என்ற புணர்மொழி, செம்பு என்ற சொல்லை எடுத்துச் சொல்லியவழிச் செம்பு ஒன்பதின்தொடி எனவும், பொன் என்ற சொல்லை எடுத்துச் சொல்லியவழிச் செம்பொன் பதின்தொடி எனவும் பிரிந்து பொருள்பட்டு ஒரேவகையான புணர்மொழி ஆயினவாறு. (தொ. எ. 141 நச்.)

‘இசையொடு சிவணிய’ -

{Entry: A01__188}

குரல் முதலிய ஏழிசையொடு பொருந்திய (தொ. எ. 33 இள.)

ஓசையொடு கூடிய ஆசிரியம் வெண்பா கலி வஞ்சி என்ற நால்வகைப் பாடல்கள். சிவணிய : வினையாலணையும் பெயர் (அஃறிணைப் பன்மை) (தொ. எ. நச். உரை)

இடப்பெயர்ப் பகுபதம் -

{Entry: A01__189}

வானான், வானாள், வானார், வானது, வானன, வானேன், வானேம், வானாய், வானீர் - என இவ்வாறு வருவன இவ் விடத்தினையுடையார் என்னும் பொருண்மை இடப் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.)

இடம் வரை கிளவி -

{Entry: A01__190}

மேல் என்ற இடத்தை வரையறுத்துணர்த்தப் பயன்படும், மேல் என்பதன் திரிபாகிய ‘மீ’ என்ற சொல் ‘இடம் வரை கிளவி’ எனப்பட்டது.

இது வருமொழியொடு புணரும்வழி இயல்பாகவும், வல் லெழுத்து மிக்கும், சிறுபான்மை மெல்லெழுத்து மிக்கும் புணரும். வருமாறு : மீகண், மீக்கோள், மீந்தோல் (தொ. எ. 251 நச்.)

இடமுன் -

{Entry: A01__191}

‘முன்’ எனப் பொதுப்படக் கூறினும், அது காலமுன் எனவும் இடமுன் எனவும் இருவகையாகக் கொள்ளப்படும். கால முன்னைப் பயன்படுத்தினால், ‘முன்னர்க் கூறப்பட்டது’ என்று கூறவேண்டும். எனவே, ‘காலமுன்’ இறந்தகாலச் செய்தியைக் குறிப்பதாம். இட முன்னைப் பயன்படுத்தினால், ‘முன்னர்க் கூறப்படும்’ என்று கூற வேண்டும். எனவே, ‘இடமுன்’ எதிர்காலச் செய்தியைக் குறிப்பதாம்.

இனி, ஒரு சொல்லில் வைத்து நோக்குமிடத்து, ‘அது’ என்ற சொல்லில் அ என்பது முன்னர் ஒலிக்கப்படுதலின் அது ‘காலமுன்’ எனப்படும். ‘து’ என்பது ‘காலப்பின்’ ஆகும். அ என்ற ஒலி கேட்கப்பட்டபின் இனிமேல் கேட்கப்படும் ஒலி என அமையும் ‘து’ என்பது ‘இடமுன்’ ஆகும்; அப்பொழுது முன்னர்க் கேட்கப்பட்ட அ என்ற ஒலி ‘இடப்பின்’ ஆகும்.

‘ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்’ - தொ. எ. 27 நச்.

‘லளஃகான் முன்னர்’ - தொ. எ. 24 நச்.

‘மஃகான் புள்ளிமுன்’ - தொ. எ 28 நச்.

‘யரழ என்னும் புள்ளி முன்னர்’ - தொ. எ. 29 நச்.

‘முன்னர்த் தோன்றும்’ - தொ. எ. 35 நச்.

‘ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்’ - தொ. எ. 25 நச்.

‘குறியதன் முன்னர்’ - தொ. எ. 38 ந ச்.

‘யரழ என்னும் மூன்றுமுன் ஒற்ற’ - தொ. எ. 48 இள.

‘னகாரை முன்னர்’ - தொ. எ. 52

முதலிய இடங்களில் முன் - முன்னர் - என்பன ‘இடமுன்’ என்ற பொருளிலேயே வந்துள்ளன.

‘இடனுடைத்து’ என்ற சொல்லமைதி -

{Entry: A01__192}

‘இடனுடைத்து’ என்றது, ‘இத்திரிபு பெரும்பான்மை அன்று; ஒரோவழியே வரும்’ என்ற பொருளது. இதனைக் காணலாம் இடங்கள் சில:

‘ஆன்ஒற்று அகரமொடு நிலைஇடன் உடைத்தே’ - தொ. எ. 232 நச்.

‘ழகர உகரம் நீடுஇடன் உடைத்தே’ - தொ. எ. 261 நச்.

‘வெரிந்என் இறுதி முழுதும் கெடுவழி

வரும்இடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை’ - தொ. எ. 300 நச்.

‘இகர இறுபெயர் திரிபுஇடன் உடைத்தே’ - தொ. எ. 154 நச்.

(எ. ஆ. பக். 117).

இடு என்ற விகுதி -

{Entry: A01__193}

இடு என்ற விகுதி தனக்கென ஒருபொருளின்றிப் பகுதியைச் சார்ந்து பகுதிப்பொருள்விகுதியாய், மேல் இடைநிலை விகுதி என்பன பெற்றுச் சொல்லை நிரப்ப உதவுவது.

எ-டு : எழுந்திட்டான், கடந்திடுவான் (இவை எழுந்தான், கடப்பான் என்னும் பொருளன). (சூ. வி. பக். 41)

இடுகுறி காரணப் பெயர் -

{Entry: A01__194}

ஒரு காரணம் பற்றாது ஒரு பொருட்குத் தொன்றுதொட்டு இடப்பட்டு வரும் பெயர் இடுகுறி எனப்படும். அஃது இடு குறிப் பொதுப்பெயர் எனவும், இடுகுறிச் சிறப்புப்பெயர் எனவும் இருவகைத்து.

மரம்: இடுகுறிப் பொதுப்பெயர்; பலா - இடுகுறிச் சிறப்புப் பெயர்.

ஒரு காரணம் பற்றி ஒருபொருட்கு அமையும் பெயர் காரணப் பெயர் எனப்படும். அதுவும் பொது சிறப்பு என இருவகைத்து.

அணி : காரணப் பொதுப்பெயர்; முடி: காரணச் சிறப்புப் பெயர்.

இனி, காரண இடுகுறிப் பெயராவது காரணம் பற்றி அமையும் பெயர், அக்காரணம் நிகழும் எல்லாவற்றிற்கும் பெயராகாது அவற்றுள் ஒன்றற்கே இடுகுறிப்பெயர் போல வருவது.

எ-டு : முக்கண்ணன் - முக்கண்ணையுடைய இறைவர் பலருள் சிவனுக்கே பெயராவது.; அந்தணர் - கருணையுடைய பலருள் பார்ப்பாருக்கே பெயரா வது; மறவர் - வீரமிக்க பலருள் ஒரு சாதியார்க்கே பெயராவது; முள்ளி - முட்செடிகள் பலவற்றுள் ஓரினச் செடிக்கே பெயராவது. (நன். 62 இராமா.)

இடுகுறி, காரணம், பொதுவும் சிறப்புமென நான்காவன -

{Entry: A01__195}

ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர்; (அவற்றுள்) அ ஆ, க ங என்ற தொடக்கத்தின இடுகுறிச் சிறப்புப்பெயர்.

குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் தொடக்கத்தன காரணப் பொதுப்பெயர்; குற்றிகரம், குற்றுகரம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்னும் தொடக்கத்தன காரணச் சிறப்புப்பெயர். (நன். 61 மயிலை.)

இடுகுறிப்பெயர், காரணப்பெயர் வகை -

{Entry: A01__196}

ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுடையோ ரானும் இட்ட குறியாகிய பெயர் இடுகுறிப் பெயர்; காரணத் தான் வரும் பெயர் காரணப்பெயர். இவை பல பொருட்கும் பொதுப்பெயராகியும், ஒரு பொருட்குச் சிறப்புப் பெயராகி யும் வரும்.

எ-டு : மரம் - இடுகுறிப் பொதுப்பெயர்; பனை - இடுகுறிச் சிறப்புப் பெயர்; அணி - காரணப் பொதுப்பெயர்: முடி - காரணச் சிறப்புப் பெயர் (நன். 62 சங்கர.)

இடை, உரி, வடசொல், போலி, மரூஉ இவற்றது புணர்ச்சி -

{Entry: A01__197}

ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், வண்டின்கால், நாயின் கால், தேரின்செலவு, யாழின்புறம் என வேற்றுமைக்கண் சாரியை இடைச்சொற்கள் (ன், இன்) இயல்பாயின. தடந் தோள் என அகரஈற்று உரிச்சொல் (தட) மெல்லெழுத்து மிக்கது. மழகளிறு, உறுகால் (நற். 300) என உரிச்சொல் (மழ, உறு) இயல்பாயின. அளிகுலம் (கோவையார் 123), வயிரகடகம், தாமகண்ணன், கனகசாதி, கமலபாதம், தனதடம் என வட சொல் இயல்பாயின. இல்முன் - முன்றில், படைமுன் - முன்படை, கண்மீ - மீகண், பொதுவில் - பொதியில், வேட்கை நீர் - வேணீர் (கலி. 23), வேட்கை அவா - வேணவா (நற். 61), பின் - பின்றை என்னும் தொடக்கத்துப் போலிமொழிகளும், அருமருந்தன்னான் - அருமந்தான், கிழங்கன்ன பழஞ்சோறு- கிழங்கம் பழஞ்சோறு, குணக்குள்ளது - குணாது, தெற்குள்ளது - தெனாது, குடபாலது - குடாது, மலையமானாடு - மலாடு, சோழனாடு - சோணாடு, பாண்டியனாடு - பாண்டி நாடு, தஞ்சாவூர் - தஞ்சை, பனையூர் - பனசை, சேந்தமங்கலம் - சேந்தை, ஆற்றூர் - ஆறை, ஆதன்தந்தை - ஆந்தை, பூதன்தந்தை - பூந்தை, வடுகன்தந்தை - வடுகந்தை என்னும் தொடக்கத்து மரூஉமொழிகளும், நிலைவருமொழிகளில் ஏற்கும் செய்கை அறிந்து முடிக்க. இவற்றுள், அருமந்தான் முதலானவற்றை வலித்தல் முதலிய விகாரங்களான் அமைக்க என்பாரும், ஆந்தை முதலானவற்றை இலக்கண மொழிகளாக வேறெடுத்து முடிப்பாரும் உளர். (நன். 238 மயிலை.)

இடைக்குறை -

{Entry: A01__198}

பகாப்பதத்தில் இடையே ஓரெழுத்துக் குறைந்தும் எழுத்துக் குறையாத சொல்லின் பொருளைத் தருவது.

எ-டு : ஓதி: இஃது ‘ஓந்தி’ என்பதன் இடைக்குறை; ஓணான் என்னும் பொருட்டு. தொகுத்தல் விகாரம் பகுபதத்தின் கண்ணது; இது பகாப்பதத்தின் கண்ணது என்பதே வேறுபாடு. (நன். 156)

இடைத்தொடர்க் குற்றியலுகரம் -

{Entry: A01__199}

ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாய் ஈற்றயலெழுத்து இடை ஒற்றாக அமையும் சொல்லின் ஈற்றிலுள்ள குற்றிலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரமாம். இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் அல்வழிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப் புணரும்;வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும் புணரும். எ-டு : தெள்குகடிது - அல்வழி; தெள்குகால், தெள்கின் கால் - வேற்றுமை(நன். 182)

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: A01__200}

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : தெள்கு கடிது, தெள்கு சிறிது; தெள்குகால், தெள்கு சிறை (தொ. எ. 425, 413 நச்.)

வருமொழி உயிர்க்கணம் வரின், குற்றியலுகரத்தின்மேல் உயிரேறி முடியும். எ-டு : தெள்கு + அடைவு = தெள்கடைவு, தெள்கு + அருமை = தெள்கருமை (தொ. எ. 413 நச்.)

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் உருபுக ளொடு புணரும்வழி இன்சாரியை பெறும். எ-டு : தெள்கு + ஐ > தெள்கு + இன் + ஐ = தெள்கினை; தெள்கு + ஆல் > தெள்கு + இன் + ஆல் = தெள்கினால்; அச்சாரியை பொருட் புணர்ச்சிக் கண்ணும் வரும். எ-டு : தெள்கின்கால், தெள்கின் ஞாற்சி (தொ. எ. 195 நச்.)

இடைநிலைகளை ஏலாத வினைகள் -

{Entry: A01__201}

றகரத்தொடு கூடிவந்த உகரஈறும் உம்ஈறுமான வினை முற்றுக்கள் கழிந்த காலமும் வருங்காலமும் (சென்று, சென்றும்; சேறு, சேறும்), தகரத்தொடு கூடிநின்ற அவ்விரண்டு ஈற்று வினையும் இறப்பும் எதிர்வும் (வந்து, வந்தும்; வருது, வருதும்), டகரத்தொடு கூடிநின்ற அவ்விரண்டு ஈற்றுவினை யும் இறந்தகாலமும் (உண்டு, உண்டும்), மின்ஈறும், ஏவல் பொருண்மையில் வரும் அனைத்தீறுகளும், வியங்கோட் பொருளனவும், இகர ஈறும், மார் ஈறுமான வினைகள் எதிர் காலமும் (உண்மின், உண், உண்க - வாழி - வாழியர், சேறி, உண்மார்), பகர ஈற்று வினை இறந்தகாலமும் எதிர்காலமும் (உண்ப), செய்யும் என்னும் வாய்பாட்டு வினை நிகழ்வும் எதிர்வும் (உண்ணும்), எதிர்மறைவினை முக்காலமும் (உண்ணான்) காட்டும். (நன். 144 மயிலை.)

இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆவன -

{Entry: A01__202}

இடைநிலையாவன பெரும்பாலும் இனைய இத்துணைய என்றளத்தற்கு அரியவாய்ப் பதம் முடிப்புழிக் காலமும் பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவன.

சாரியையாவன அன் ஆன் முதலாக எடுத்தோதப்பட்டு எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாய்ப் பெரும்பாலும் இன் னொலியே பயனாக வருவன.

சந்தியாவன இன்னது வந்தால் இன்னது இன்னதாம் என வருவன.

விகாரமாவன பதத்துள் அடிப்பாடும் செய்யுள்தொடையும் ஒலியும் காரணமாக வலித்தல் மெலித்தல் முதலாயினவாக வருவன. இவை இடைநிலை முதலானவற்றால் முடியாதவழி வருவன எனக் கொள்க. (நன். 132 மயிலை.)

இடைநிலை மெய்மயக்கத்தைக் குறிக்கும் பெயர்கள் -

{Entry: A01__203}

சங்கம் எனினும், புணர்ச்சி எனினும், சையோகம் எனினும், மயக்கம் எனினும், புல்லல் எனினும், கலத்தல் எனினும் இடை நிலை மெய்மயக்கம் என்னும் ஒருபொருட் கிளவி. (மு. வீ. எழுத். 66)

இடைநிலை மெய்மயக்கம் -

{Entry: A01__204}

ஒரு மொழியிலும் இருமொழியிலும் க ச த ப என்ற மெய்கள் தம்முன் தாமே மயங்கும்; ர ழ - என்ற இரண்டு மெய்களும் தம்முன் பிறவே மயங்கும்; ஏனைய பன்னிரண்டும் தம்முன் தாமும், தம்முன் பிறவும் மயங்கும்.

க ச த ப - என்ற நான்கு மெய்களும்நீங்கலாக ஏனைய பதினான்கு மெய்களும் பிறமெய்களொடு கூடும் கூட்டம் வேற்றுநிலை மெய்மயக்கமாம். ரழ - என்ற இரண்டு மெய்களும் ஒழித்து ஒழிந்த பதினாறு மெய்களும் தம்மொடு தாம் கூடும் கூட்டம் உடனிலை மெய்மயக்கமாம். இவ்விரு பகுதி மயக்கமும் மொழியிடையே நிகழும். மெய்யுடன் உயிரும், உயிருடன் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு அள வில்லை. (நன். 110)

இடையெழுத்து ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி -

{Entry: A01__205}

வல்லினம் போன்று வல்லென்று ஒலியாமலும் மெல்லினம் போன்று மெல்லென்று ஒலியாமலும் இடைநிகர்த்ததாய் ஒலித்தலானும், இடைநிகர்த்ததாய மிடற்றுவளியான் பிறத்தலானும் இடையினம் என்பது காரணப் பெயராயிற்று. மேல் யரலவழள என்ற ஆறு மெய்களையும் இடையெழுத்து என்ற பெயரான் ஆள்வதற்கு நூல்மரபில் பெயரிடப்பட்டது. ஆதலின் இடையெழுத்து என்பது ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. (தொ. எ. 21. இள., நச். உரை).

உயிரெழுத்துக்கள் வளியைத் தடுக்காமல் வெளிவிடுதலின், தாமே ஒலிக்க இயல்கின்றன. வளியை நன்கு தடுத்தலின் வல் லெழுத்து மெல்லெழுத்துக்கள் தாமே ஒலிக்க வருவனவாய் இல்லை. சிறிதளவு தடுத்தலின், இடையெழுத்துக்கள் தாமே ஓராற்றான் ஒலித்தல் கூடும். ஒலிக்கும் திறத்தில் உயிரெழுத்துக் கட்கும் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கட்கும் இடைப்பட் டிருத்தலானே ய ர ல வ ழ ள - க்கள் இடையெழுத்து எனப் பட்டன. (எ. ஆ. பக். 11.)

முழுதும் வாய்திறக்க உண்டாம் உயிருக்கும், வாய் முழுதும் மூட உண்டாம் வல்லின மெல்லினங்கட்கும், வாய் சிறிது மூடியும் சிறிது திறந்தும் இருத்தலால் உண்டாம் ய ர ல வ ழ ள - க்கள் இடையாய் நிற்றலின் இடையெழுத்து எனப்பெயர் பெற்றன. (எ. கு. பக். 29)

இடையெழுத்து வேறுபெயர்கள் -

{Entry: A01__206}

இடைமை எனினும், இடைக்கணம் எனினும், இடை எனினும், இடையெழுத்து என்னும் ஒருபொருட்கிளவி. இடையினம் என்பதும் அது. (மு. வீ. எழுத். 19)

இடை வரும் உயிர்மெய் -

{Entry: A01__207}

சொல்லின் இடையில் வரும் உயிர்மெய் உயிரெழுத்தாகவே கொள்ளப்படும். படவே, வரகு என்பது உயிர்மெய்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படாது, உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றே பெயர் பெறுகிறது. (தொ. எ. 106 நச். உரை)

இம்பர் என்ற சொல்லாட்சி -

{Entry: A01__208}

இம்பர் என்ற சொல் ‘இடமுன்’ என்ற பொருளில் வருவது. காலம் பற்றி நோக்கின் இம்பர் என்பது ‘காலப்பின்’ ஆகும்.

‘நெட்டெழுத் திம்பரும்... குற்றியலுகரம் - தொ. எ. 36-காடு

‘நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்’ - தொ. எ. 196 -காட் டு

‘அகரத் திம்பர் யகரப் புள்ளி’ - தொ. எ. 56 - அய்

‘குற்றெழுத் திம்பரும்...... உகரக் கிளவி’ - தொ. எ. 267 - உடூஉ

என்ற இடங்களில் இம்பர் என்பது இடம் பற்றி வரும் முன் என்ற பொருளில் தொல்காப்பியத்தில் வழங்குவதாம். ஆகவே, “இம்பர் - உம்பர் என்பன கால இட வகைகளால் மயங்கும்” என்று சிவஞான முனிவர் கூறுவது (சூ. வி. பக். 25) பொருந்தாது, ‘இம்பர்’ இடமுன்னாகவே வருகிறது. (எ. ஆ. பக். 62)

இமை, நொடி அளவாதல் -

{Entry: A01__209}

இமை என்றது இமைத்தலை; நொடி என்றது நொடித்தலை (நொடி - ஒலி). இரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை உணர்த்தி நின்றன. ‘இயல்பு எழும்’ என்னும் பெயரெச்சம் இமை, நொடி என்னும் பெயர்களொடு முடிந்தது. எழுத்தொலி முதலிய வற்றை இயல்பு கெடுத்து ஒருவன் வேண்டியவாறே எழுப்பி னும் அவ்வாறு எழாநிற்கும்; இமையும் நொடியும் இயல்பு கெடுத்து எழுப்ப வேண்டினும், அவ்வாறே எழாது இயல் பாகவே எழாநிற்கும் ஆதலின் ‘இயல்பு எழும்’ என்றும், மேலைச் சூத்திரத்து எழுத்தொலிகளை வேண்டியவாறே எழுப்பாது இவ்வளவான் எழுப்புக என்றும் கூறினார். (நன். 100 சங்கர.)

‘இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்’ -

{Entry: A01__210}

‘நின்’ என்பதன் ஈறு பெரும்பான்மையும் இயல்பாம் (நன்.218) என்ற விதிப்படி இயல்பாகாது இரண்டாம் வேற்றுமைத் தொகையில் றகரமாகத் திரியும்.

எ-டு : ‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப’ (தொல். செய். 106)

ணகரஈறு வேற்றுமைப் புணர்ச்சியில் டகரமாகத்திரியும் (நன். 209) என்ற பொதுவிதிப்படி திரியாது இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இயல்பாம். (நன். 255 சங்கர.)

எ-டு : மண் கொணர்ந்தான்

இயல்புகணம் -

{Entry: A01__211}

வருமொழியாக வன்கணமாகிய க ச த ப - முதலாகிய மொழிகள் வருமிடத்தே திரிபுகள் நிகழும். மென்கணமாகிய ஞ ந ம - முதலாகிய மொழிகள், ய வ முதலாகிய இடைக்கண மொழிகள், உயிர் முதலாகிய உயிர்க்கண மொழிகள் வரும் வழி நிலைமொழியும் வருமொழியும் பெரும்பான்மையும் இயல்பாகவே புணர்தலின், இம்மூன்று கணங்களும் இயல்பு கணம் எனப்பட்டன. (தொ. எ. 144 நச்.)

இயல்புகணம் வருமொழியாக வரின் திரியுமிடம் -

{Entry: A01__212}

தொடர்மொழிகளின் முன் ஞ ந ம என்ற மென்கணம் முதலா கிய மொழிகள் வரின் மெல்லெழுத்து மிக்கு முடிதலுமுண்டு.

எ-டு : கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர்நுனி, கதிர்ந்நுனி; கதிர்முரி, கதிர்ம்முரி.

சிறுபான்மை ஓரெழுத்து மொழிகளும் ஈரெழுத்து மொழி களும் மெல்லெழுத்து மிக்கு முடிதலுமுண்டு.

எ-டு : பூஞெரி, பூஞ்ஞெரி; பூநுனி, பூந்நுனி; பூமுரி, பூம்முரி;

காய்ஞெரி, காய்ஞ்ஞெரி; காய்நுனி, காய்ந்நுனி; காய்முரி, காய்ம்முரி.

சிறுபான்மை, கைஞ்ஞெரித்தார் - கைந்நீட்டினார் - கைம் மறித்தார் -என ஓரெழுத்து மொழிகளும், மெய்ஞ்ஞானம் - மெய்ந்நூல் - மெய்ம் மறந்தார் - என ஈரெழுத்து மொழிகளும், மெய்ம்மை - பொய்ம்மை முதலிய பண்புப்பெயர்களும் மிக்கே முடியும் என்பாரும், இவற்றை நலிந்து கூறப் பிறத்தலின் இயல்பு என்பாருமுளர். பூஞாற்றினார் - போல்வன மிகாதன. (தொ. எ. 145 நச். உரை.)

இயல்பு புணர்ச்சி (1) -

{Entry: A01__213}

நிலைமொழி வருமொழியொடு புணரும்வழித் தோன்றல் திரிதல் கெடுதல் என்ற மாற்றங்கள் நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ இருமொழிக்கும் இடையிலோ நிகழா மல் இருமொழியும் இயல்பாகப் புணரும் புணர்ச்சி இயல்பு புணர்ச்சியாம்.

1. நிலைமொழி மெய்யீற்றதாக, வருமொழிமுதலில் உயிர் வருவழி, வருமொழி உயிர் நிலைமொழி யீற்றோடு புணர்வது. எ-டு : அவன் + அழகியன் = அவனழகியன்.

2. நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக, வருமொழி உயிர் முதலதாக வருவழி, அவ்வுயிர் அக்குற்றிய லுகரத்தின் மேல் ஏறிமுடிவது. எ-டு : நாகு + அரிது = நாகரிது.

3. நிலைமொழி உயிரீற்றதாக, வருமொழி உயிர்முத லாக, இடையே உடம்படுமெய் பெற்றுப் புணர்வது. எ-டு : பலா + அழகிது = பலாவழகிது.

இவையாவும் இயல்பு புணர்ச்சியாம்.

கல் + எறிந்தான் = கல்லெறிந்தான் என, தனிக்குறில்முன் ஒற்று வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டி முடிவதும் இயல்பு புணர்ச்சி என்பர் நச். (தொ. எ. 144 நச். உரை.)

இயல்பு புணர்ச்சி (2) -

{Entry: A01__214}

நிலைமொழியும் வருமொழியும், இடையே தோன்றல் - நிலை மொழி ஈறு திரிதல் - நிலைமொழி ஈறு கெடுதல் - வருமொழி முதல் கெடுதல் - வருமொழி முதல் திரிதல் - என்ற திரிபுகள் இன்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சியாம். ‘உடல்மேல் உயிர் வந்தொன்றி’, ஆல் + இலை = ஆலிலை என்றாற் போல வருவனவும், உடம்படுமெய் இடையே தோன்றி மணி + அழகிது = மணியழகிது என்றாற்போல வருவனவும் இயல்புபுணர்ச்சியுள் அடங்கும். உயிர்வரின், நிலைமொழிக் குற்றொற்று இரட்டுவதும் அது. (நன். 153, 162, 204, 205)

இயல்புபுணர்ச்சிக்கு வரும் வருமொழிகள் -

{Entry: A01__215}

உயிரொடு கூடிய ஞ ந ம - ய வ - முதலாகு மொழிகளும் உயிரெழுத்துக்கள் முதலாகு மொழிகளும் இயல்புபுணர்ச் சிக்கு வரும் வருமொழிகளாம்.

விள என்ற நிலைமொழிbயாடு, ஞான்றது - நீண்டது - மாண்டது - யாது - வலிது - அழகிது - ஆடிற்று - இனிது - ஈண்டிற்று - உண்டு - ஊறிற்று - எழுந்தது - ஏய்ந்தது - ஐது - ஒன்றியது - ஓங்கிற்று - ஒளவியத்தது - என, இம்மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணமாகிய வருமொழியைப் புணர்க்க, அவை இயல் பாகப் புணர்ந்தவாறு. (தொ. எ. 144 நச்).

இயல்பு, விகாரம்இவற்றை உணர்த்தும்பிற சொற்கள் -

{Entry: A01__216}

இயல்பு எனினும், தன்மை எனினும், சுபாவம் எனினும் ஒக்கும். விகாரம் எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும் ஒக்கும். (நன். 151 சங்கர.)

இயல்பொடு விகாரத்து இயையும் புணர்ப்பு -

{Entry: A01__217}

மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப்பதம் பகுபதம் என்னும் இரண்டு பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழிப் பொருளிலோ வேற்றுமைப் பொருளிலோ பொருந்துமிடத்து, நிலைமொழியும் வரு மொழியும் இயல்பாகவும் திரிபுற்றும் புணர்வது புணர்ச்சியாம்.

எ-டு : மணி + அழகு, நிலம் + வலிது, மணி + பெரிது, நிலம் + அழகிது - நிலைமொழியீற்று உயிரும் மெய்யும் வரு மொழி முதல் மெய்யும் உயிரும் முறையே தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப் புணர்ந்தன.

அவன் + வந்தான், பொன் + வண்டு, பொன்னன் + கை, கிளி + அழகிது - பகுபதமும் பகாப்பதமும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப் புணர்ந்தன. (நன். 151)

இயலும் படலமும் -

{Entry: A01__218}

இயல் என்றது ஒருசாதிப்பொருள் கொண்டது என்பதும், படலம் என்பது பலசாதிப்பொருள் கொண்டது என்பதும் ஆயிற்று. இயல் என்பதற்கு உதாரணம் இந்த நூலிலே எழுத்தியல் என்பதில் எழுத்திலக்கணமே வருதலும், பதவியல் என்பதில் பதத்து இலக்கணமே வருதலும், புணரியல் என்பதில் புணர்ச்சியிலக்கணமே வருதலும் ஆம்.

படலம் என்பதற்கு உதாரணம், படலவுறுப்பைக் கொண் டிருக்கிற காவியங்களில், இயல்போல ஒருவழிப்படாமல், பாட்டுடைத் தலைவன் கதையைச் சொல்வதும் அல்லாமல் மலை வருணனை- கடல் வருணனை - நாடு நகரம் முதலிய பல வருணனைகளும் கலந்து வருதலும் காண்க. (நன். 17 இராமா.)

இயற்கை அளபெடை -

{Entry: A01__219}

குரீஇ, ஆடூஉ, மகடூஉ - என்றாற் போல்வன இயற்கை அளபெடை. (நன். 91 இராமா.)

‘இயற்கைய ஆகும் செயற்கைய’ -

{Entry: A01__220}

ஈரெழுத்தொரு மொழிகளுள் நெடிலை யடுத்து இடையே ஒற்றுமிக்க டுகர றுகர ஈற்றுச் சொற்கள், ஏனைய குற்றியலுகர ஈறுகளுக்கு விதிக்கப்பெற்ற இன்சாரியை பெறாது இயல்பாய் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிவு பெறும் இயல்பின.

இயற்கை - (ஈண்டுச்) சாரியை பெறாமை; செயற்கை - செய்தியை யுடைமை; இயற்கைய ஆதல் - சாரியை பெறா திருத்தல். (தொ. எ. 198 இள. 197 நச்.)

எ-டு : யாடு + ஐ = யாட்டை; யாடு + கால் = யாட்டுக்கால்

யாறு + ஐ = யாற்றை; யாறு + கால் = யாற்றுக்கால்

இவற்றுக்கு இன்சாரியை விலக்கவே, வேறு சாரியை பெறுங் கொல் என்ற ஐயத்தை அகற்ற, அவை சாரியை எதுவும் பெறாத இயல்பினையுடைய என்று கூறப்பட்டது. (எ.ஆ.பக். 131).

இவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் உயிர்த் தொடர்க்கும் கொண்டு, முயிறு + ஐ = முயிற்றை - எனச் சாரியை பெறாது இடையொற்று மிக்குப் புணர்தலைக் கொண்டனர்; பிற்காலத்தே, யாட்டினை - யாட்டின் கால், யாற்றினை - யாற்றின் கால், முயிற்றை - முயிற்றின்கால் எனச் சாரியை பெறுதலும் பெறாமையும் நிகழ்கின்றவாற்றைக் குறிப்பிட்டனர்.

‘யாத்த என்ப யாட்டின் கண்ணே’ (தொ. பொ. 602 பேரா.) என இன்சாரியை பெற்றமை காண்க.

இயற்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__221}

இயற்பெயர் - பெற்றோர் மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்.

நிலைமொழி இயற்பெயராக, வருமொழிக்கண் தந்தை என்ற முறைப்பெயர்வரின், இயற்பெயரின் ஈற்றிலுள்ள ‘அன்’ என்பதும், தந்தை என்ற வருமொழியின் முதற்கண் அகரம் ஏறிவந்த தகர ஒற்றும் கெட, சாத்தன் + தந்தை > சாத்த் + அந்தை = சாத்தந்தை - என்றாற்போல் புணரும். (தொ. எ. 347 நச்.)

ஆதன், பூதன் என்பன நிலைமொழியாக, வருமொழியாகத் தந்தை என்ற சொல் வரின், நிலைமொழி ‘தன்’ கெட்டு ஆ எனவும் பூ எனவும் நிற்க, வருமொழி முதற்கண் உள்ள தகரம் முழுதும் கெட, ஆ + ந்தை, பூ + ந்தை = ஆந்தை, பூந்தை என முடியும். (348 நச்.)

இயற்பெயர் பண்படுத்துப் பெருஞ்சாத்தன் என்றாற் போல வரின், இயற்பெயருக்கு அமைந்த சிறப்புப் புணர்ச்சியை விடுத்துப் பொதுப் புணர்ச்சி பெற்று, பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை - என்றாற் போல முடியும். (349 நச்.)

இன்னார்க்கு மகன் இன்னான் என்ற உறவுமுறையில் இயற்பெயர்கள் புணரும்வழி, நிலைமொழி இயற்பெயர் ஈற்றிலுள்ள ‘அன்’ கெட, அதனிடத்து அம்முச்சாரியை வந்து தனக்குரிய திரிபேற்று வருமொழியொடு புணரும். எ-டு : சாத்தன் + கொற்றன் > சாத்த் + அம் + கொற்றன் = சாத்தங் கொற்றன். (350 நச்.)

இது போன்ற இடங்களில் ‘அன்’ கெட்டு ‘அம்’ புணரும் என்று கூறுதலை விட, நிலைமொழியீற்று னகரம் வருமொழி வல்லெழுத்துக் கேற்ற மெல்லெழுத்தாகத் திரியும் என்றல் எளிது. எ-டு : பிட்ட ங் கொற்றன், அந்துவ ஞ் சாத்தன், அந்துவ ந் தாயன், அந்துவ ம் பிட்டன். (எ. ஆ. பக். 158).

பிறபெயர் இயற்பெயரொடு தொக்கவழிக் கொற்றங்குடி - சாத்தங்குடி - என அன்கெட்டு அம் வந்து புணர்தலும், சாத்த மங்கலம் - கொற்ற மங்கலம் என மென்கணத்தின் முன்னர் அம்மின் மகரம் கெடுதலும். வேடன் + மங்கலம், வேடன் + குடி என்பன முறையே வேட்டமங்கலம், வேட்டங்குடி என அம்முச்சாரியை பெறுதலொடு நிலைமொழி ஒற்று இரட்டு தலும் கொள்ளப்படும். (தொ. எ. 350 நச். உரை)

தான் பேன் கோன் என்ற இயற்பெயர்கள் திரிபின்றி இயல் பாகப் புணரும். தான் கொற்றன், பேன் கொற்றன், கோன் கொற்றன் என இயல்பாக முடிந்தவாறு. (351 நச்.)

இயற்றப்படும், ஏவப்படும் தெரிநிலை வினைப்பகுதிகள் -

{Entry: A01__222}

தெரிநிலை வினைப்பகுதிகள் இருவகைப்படும். இயற்றும் வினைமுதலான் இயற்றப்படும் தெரிநிலை வினைப்பகுதிகள், ஏவும் வினைமுதலான் ஏவப்படும் தெரிநிலைவினைப் பகுதிகள் - என்பன அவை.

எ-டு : நடந்தான் : இயற்றப்படும் தெரிநிலை வினைப்பகுதி; நடப்பித்தான், வருவித்தான்: ஏவப்படும் தெரிநிலை வினைப்பகுதி (நன். 137, 138 இராமா.)

‘இரண்டு தலையிட்ட முதல் ஆகு இருபஃது’ -

{Entry: A01__223}

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் இருபத்திரண்டு. அவையாவன பன்னிரண்டு உயிரும், க ச த ந ப ம வ ய ஞ என்ற ஒன்பது மெய்களை ஊர்ந்த உயிரும், மொழிமுதற் குற்றியலுகர மும் ஆம். (தொ. எ. 103 நச்.)

இரண்டு முதல் ஒன்பான்களொடு மா என்ற சொல் புணர்தல் -

{Entry: A01__224}

மா என்னும் சொல் இரண்டு முதல் ஒன்பான் முடிய உள்ள எண்களோடு இயல்பாயும் திரிந்தும் புணரும்.

வருமாறு : ஒருமா, இருமா இரண்டுமா, மும்மா மூன்றுமா, நான்மா நான்குமா, ஐம்மா ஐந்துமா, அறுமா ஆறுமா, ஏழ்மா எழுமா, எண்மா எட்டுமா, ஒன்பதின்மா ஒன்பதிற்றுமா ஒன்பதுமா. (ஒருமா எனப் புணருமே யன்றி, ஒன்றுமா என இயல்பாகப் புணராது.) (தொ. எ. 480, 389 நச்.)

இரா அகரம் பெறுதலும், பெறாமையும் -

{Entry: A01__225}

இரா என்பது இரவுக்காலத்தைக் குறிக்கும் ஆகார ஈற்றுப் பெயரும், இராத என்ற பொருள் தரும் எதிர்மறைப் பெயரெச்சமும் ஆம்.

இரவுக் காலத்தைக் குறிக்கும் இரா என்ற காலப்பெயர் இருபெயர்உம்மைத்தொகையில் இராஅப்பகல் என எழுத்துப்பேறளபெடையாகும் அகரம் பெறும். அங்ஙனமே எழுவாய்த்தொடரிலும் இராஅக் கொடிது என அகரம் பெறும். ஆயின் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் பெயர்கொண்டு முடியினும் வினை கொண்டு முடியினும் அகரப்பேறின்றி முடியும்.

இராக்கொண்டான் - இராவிடத்துக் கொண்டான் என ஏழன் பொருளது; இராக்காக்கை - இராவிடத்துக் காக்கை என ஏழன் பொருளது; இராக்கூத்து - இராவிடத்துக் கூத்து என ஏழன் பொருளது; இராஅக் காக்கை - இல்லாத காக்கை என்னும் பெயரெச்ச எதிர்மறை; இராஅக் கூத்து - இல்லாத கூத்து என்னும் பெயரெச்ச எதிர்மறை.

எனவே, இரா என்பது பெயரெச்சமறை ஆகியவிடத்து அகர எழுத்துப்பேறளபெடை பெறும். அஃது இரவுக் காலத்தைக் குறிக்கும் பெயராயவழி அல்வழிப் புணர்ச்சியில் அகரம் பெறும்; வேற்றுமைப் புணர்ச்சியில் அது பெறாது. (தொ. எ. 223, 227 நச். உரை) (எ. ஆ. பக். 137)

இராப் பெயர்க்கு ‘இன்’ இன்மை -

{Entry: A01__226}

இரா என்னும் பெயர்ச்சொல் இன்சாரியை பெறாது முடியும் என்க. வருமாறு : இராக் கொண்டான். (மு.வீ.புண. 94)

இரு என்ற விகுதி -

{Entry: A01__227}

இரு என்ற விகுதி தனக்கென ஒருபொருளின்றிப் பகுதியைச் சார்ந்த பகுதிப்பொருள் விகுதியாய், மேல் இடைநிலை விகுதி என்பன பெற்றுச் சொல்லை நிரப்ப உதவுவது.

எ-டு : எழுந்திருந்தான் - எழுந்தான் என்னும் பொருளது.

உண்டிருந்தான் - உண்டான் என்னும் பொருளது.

எழுந்திருந்து, உண்டிருந்தான் என்பன வினையெச்சமும் வினைமுற்றுமாய்ப் பிரிக்கப்படாத ஒருசொல் நீர்மையன. (சூ. வி. பக். 41).

இருதிசை புணர்தல் -

{Entry: A01__228}

வடக்கு தெற்கு குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என நான்கு திசைகளில் ஒருதிசைப்பெயர் நிலைமொழியாகவும் மற்றொரு திசைப்பெயர் வருமொழியாகவும் அமைந்து புணரும்வழி, இரு மொழிக்குமிடையே ஏ என்னும் சாரியை வரும்.

வருமாறு : வடக்கே தெற்கு, குணக்கே குடக்கு, கிழக்கே மேற்கு, வடக்கே கிழக்கு, தெற்கே குணக்கு, தெற்கே குடக்கு, வடக்கே குணக்கு - என்றாற்போல வருதல் காண்க. (தொ. எ. 431 நச்).

பெருந்திசைகளாவன வடக்கும் தெற்கும்; இவற்றொடு கோணத் திசைகளாகிய குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என்பன புணரும்வழி, வடகுணக்கு - வடகிழக்கு - வடகுடக்கு - வடமேற்கு - தென்குணக்கு - தென்கிழக்கு - தென்குடக்கு - தென்மேற்கு - என, நிலைமொழிகளாகிய வடக்கு ‘வட’ எனவும் தெற்கு ‘தென்’ எனவும் திரிந்து வருமொழிகளொடு புணரும். (தொ.எ. 432 நச்.)

தொல்காப்பியனார் காலத்து வடக்கு ‘வடகு’ என்றே வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். (கிழக்கு மேற்கு என்பன குணக்கு குடக்கு என்ற பெயர்களாலேயே வழங்கப்பட்டன). (எ. ஆ. பக். 170).

இருமொழிக் குற்றியலிகரம் -

{Entry: A01__229}

நிலைமொழி குற்றியலுகரச்சொல்லாக, வருமொழி யகர முதல் மொழியாக வரின், நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் கெட, அவ்விடத்தே வரும் இகரம் குற்றியலிகரமாம்.

எ-டு : நாகு + யாது = நா கியாது; வரகு + யாது = வர கியாது;
குரங்கு + யாது = குரங்
கியாது

‘முப்பே பிணியே வருத்தம் மென்மையோ, டியாப்புற வந்த இளிவரல் நான்கே’ (தொ. பொ. 254 பேரா.) (தொ.எ. 35,410 நச்.)

இருமொழிக் குற்றியலுகரம் -

{Entry: A01__230}

நிலைமொழி குற்றியலுகரஈற்றதாய் வருமொழி நாற்கணத் தொடும் அல்வழிப் பொருளிலும் வேற்றுமைப் பொருளிலும் புணரும்வழி, நிலைமொழியீற்றுக் குற்றியலுகரங்கள் யாவும் முற்றியலுகரமாக ஓசை நிரம்பும். ஆயின், வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம், வருமொழி வல்லெழுத்து முதலதாக வரின், முற்றியலுகரம் ஆகாது அரைமாத்திரை ஒலியிற்றாய குற்றியலுகரமாகவே நிற்கும்.

எ-டு : நா கு கடிது, வர கு கடிது, எஃ கு கடிது முதலிய சொற்றொடர்களில் நிலைமொழியீற்றெழுத்து முற்றியலுகரம் ஆயிற்று.

செக் குக்கணை, சுக் குக்கொடு என்ற தொடர்களில் நிலை மொழி யீற்றெழுத்து அரைமாத்திரை அளவிற்றாய குற்றிய லுகரம் ஆம். (தொ. எ. 409, 410 இள. உரை)

நாகு + யாது = நாகியாது என்ற தொடரில், நிலைமொழியீறு முற்றியலுகரமாகிவிடவே, அதனிடத்தில் குற்றியலிகரம் வருமிடத்து, முற்றியலுகரம் கெடக் குற்றியலிகரம் வந்து, நா கியாது என்று முடியும் என்றார் தொல்காப்பியனார். (எ.ஆ.பக். 166)

பெருமுரசு, திருமுரசு - என்பன முற்றியலுகர ஈற்றன என்பர் நச். (தொ.எ.36. நச்)

இருமொழிப் பொதுவெழுத்தும், வடமொழிச் சிறப்பெழுத்தும் -

{Entry: A01__231}

வடமொழியுள் ‘அச்சு’ என்று வழங்கும் உயிர் பதினாற னுள்ளும், இடையில் நின்ற ஏழாமுயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டுமான ஆறும் ஒழிந்து நின்ற ஆ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் பத்தும்,

‘அல்’ என்று வழங்கும் மெய் முப்பத்தேழனுள்ளும், க ச ட த ப என்னும் ஐந்தன் வருக்கத்துள் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க ங ச ஞ ட ண த ந ப ம என்னும் பத்தும், ய ர ல வ என்னும் நான்கும், ளவ்வுமான இருபத்தைந்தும் தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாம்.

இவையன்றி, மேல் உயிரில் ஒழிந்த ஆறும், ஐந்து வர்க்கங் களிலும் இடைகளில் ஒழிந்த பதினைந்தும், முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழுமான இருபத் தெட்டும் வடமொழிக்கே உரியவாய்த் தமிழ்மொழிக்கு வருங்கால் தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும். (நன். 145 மயிலை.)

இருவிள என்ற பெயர் -

{Entry: A01__232}

இருவிள என்பது அகர ஈற்றுப் பெயர்களில் ஒன்று. இருவிள என்பது ஓலை, வேணாட்டகத்து ஓரூர், கருவூரினகத்து ஒருசேரியும் என்ப.

இப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், இருவிளக்கொற்றன்- என வல்லொற்று மிக்குப் புணரும். இருவிளவிலுள்ள கொற்றன் என்பது பொருள். இருவிளக்குறுமை என்பது இரு விளவினது குறுமை என்னும் பொருளது. அவ்வழியிலும், இருவிளக் கடிது - இருவிளச் சிறிது - இருவிளத் தீது - இருவிளப் பெரிது - என வல்லொற்று மிக்குப் புணரும். (தொ.எ. 216 நச். உரை)

இல் என்னும் இன்மைச் சொல் புணர்ச்சி -

{Entry: A01__233}

இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்பதனை நிலை மொழியாகக் கொண்டு, வருமொழி வல்லெழுத்து முதல் மொழியாகப் புணரின், ஐகாரமும் வல்லெழுத்தும் பெறுதல்- ஐகாரம் பெற்று இயல்பாகவே புணர்தல்- ஆகாரமும் வல்லெழுத்தும் பெறுதல் - சாரியை எதுவும் பெறாது இயல் பாகவே முடிதல் - என்ற நான்கு நிலைகள் உளவாம்.

வருமாறு : இல் + பொருள் - இல்லைப் பொருள், இல்லை பொருள், இல்லாப் பொருள், இல் பொருள் - என முறையே காண்க. (தொ.எ.372நச்.)

‘இல்’ என்னும் பண்படி நின்று வருமொழியுடன் புணர்வழி, ஐகாரமும் ஆகாரமும் இடையே சாரியையாக வருதலின், இல்லைப் பொருள் - இல்லை பொருள் - இல்லாப் பொருள் - என்பன ‘இல்பொருள்’ என்னும் இயல்பு புணர்ச்சி போல் பண்புத்தொகையே ஆம். (நன். 233 சங்கர.)

‘இல் கல்’ என்ற சொல் முடிவு -

{Entry: A01__234}

இல்லை கல் - என்ற வினைமுற்றுத் தொடரும், இல்லாததாகிய கல்- என்று பொருள்படும் பண்புத்தொகையும் இல்கல் என்று முடியும். வினைமுற்றுத் தொடராகியவழி, இல் கல் என்பதன் நிலைமொழி லகரஒற்றின்மேல் ஒலியூன்றிப் பிரித்தொலிக்க. பண்புத்தொகை ஆகியவழி, ஒரு திரண்மையாக, விட் டிசைக்காது ஒலிக்க. (தொ. எ. 373 இள. உரை)

இல்லம் என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__235}

இல்லம் என்ற மரப்பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்- கண், உதி - ஒடு- சே- விசை- என்ற மரப்பெயர்களைப் போல, வருமொழி முதலில் வன்கணம் வரின், மகரம் கெட்டு வன்கணத்துக்கு இனமான மெல்லொற்று மிக்குப்புணரும்.

எ-டு : இல்லம் + கோடு, தோல் = இல்லங்கோடு, இல்லந் தோல் (தொ. எ. 313 நச்.)

‘கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற’ (கலி.142)

என அத்துச் சாரியை பெறுதலுமுண்டு.

உருபுபுணர்ச்சிக்கண் சாரியை இன்றி ‘இல்லமொடு’ (அகநா.4) என ஒடுஉருபு ஏற்கையில் இயல்பாகப் புணரும். அத்துச் சாரியை பெறுதலே பிற்காலத்துப் பெரும்பான்மை எனலாம்.

‘இல்லென் கிளவி இன்மை செப்பு’ மிடத்துப்புணர்நிலை -

{Entry: A01__236}

எ-டு : சாத்தன்இல்லைக்கொடியன், சிறியன், தீயன், பெரியன் (பொருள்:சாத்தன் கொடுமை சிறுமை தீமை பெருமை இல்லாதவன்)

இவன் கண்ணில் குருடன் (கண் இல்லாமையால் குருடன்).

இவன் பண்பில்லாச் சிறியன் (பண்பு இல்லாமையால் சிறியன்).

இவை பண்பு உணர்த்தின.

இல்லை கொடியன் - என மிகாது வரின், அது வினைக்குறிப்பு முற்றாம்.

இல்லாக் கொற்றன் - என வலி மிகின், அஃது ஈறு கெட்ட எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சமாம்.

இல்லை என்னும் குறிப்புமுற்று, முன்னர் இருந்து பின்னர் இல்லாத நிலையைக் குறிக்கும். எ-டு: வலி இல் குதிரை

இன்மை என்னும் பண்புப்பெயர் எப்பொழுதும் இல்லா மையை உணர்த்தும். எ-டு: கொம்பு இல் குதிரை

ஈண்டுக் கூறிய ‘இன்மை’ என்பது ‘பொருண்மை சுட்டல்’ ஆகிய உண்மை என்னும் பண்புச்சொற்குரிய எதிர்மறைச் சொல்லாம். (தொ.எ.372 ச.பால.)

இலக்கணத்தொடு பொருந்தா மரூஉமுடிபு -

{Entry: A01__237}

இம்மரூஉமுடிபிற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறார்.

அருமருந்தன்ன, நாகப்பட்டினம், ஆற்றூர், சோழன்நாடு, பாண்டியன்நாடு - முதலாயின முறையே அருமந்த, நாகை, ஆறை, சோணாடு, பாண்டிநாடு - முதலாக வழங்குதல் ‘வழங்கியல் மருங்கின் மருவொடு திரி’யும் இலக்கணத்தொடு பொருந்தா மரூஉமுடிபாகும்.

நச்சினார்க்கினியர் ஆங்காங்கே குறிப்பிடும் இலக்கணத் தொடு பொருந்தா மரூஉமுடிபுகள் சில வருமாறு:

புளியின் காயினைப் புளிங்காய் எனல் (தொ.எ. 130நச்.)

அதனை இதனை என்பவற்றை அதினை

இதினை எனல் (தொ.எ. 176 நச்.)

உதி என்பதனை ஒதி எனல் (தொ.எ.243 நச்.)

வேடக்குமரியை வேட்டுவக்குமரி எனல் - தொ.எ. 338 ந ச்.

மண்ணங்கட்டியை மண்ணாங்கட்டி எனல் - தொ.எ. 405 நச்.

கானங்கோழியைக் கானாங்கோழி எனல் - தொ.எ. 405 நச்.

கல்லம்பாறையைக் கல்லாம்பாறை எனல் - தொ.எ. 405 நச்.

மூவுழக்கு என்பதனை மூழக்கு, மூழாக்கு எனல் - தொ.எ. 457 நச்.

எழுமா என்பதனை ஏழ்மா எனல் - தொ.எ. 480 நச்.

இலக்கணத்தொடு பொருந்திய மரூஉமுடிபு -

{Entry: A01__238}

இம்முடிபிற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறுவர்.

மேல் என்பது மீ என மருவிற்று (தொ.எ. 250 நச்.), கண்மீ- முதலியன மீகண் - முதலியனவாக மருவி வழங்கும் (250 நச்.), ‘இல்முன்’ முன்றில் என்றாகும் (தொ.எ. 355 நச்.). ‘யாவர்’ யார் என்றும், ‘யாது’ யாவது என்றும் ஆம். (தொ.எ. 172 நச்.)

இலக்கணப்போலி, மரூஉமொழிகள் புணர்ச்சி -

{Entry: A01__239}

இல்முன் ‘முன்றில்’ என வரும்;பொதுஇ(வி)ல் ‘பொதியில்’ என வரும். இவ்வாறு வரும் இலக்கணப்போலி மொழிகளும் மரூஉமொழிகளும் நிலைமொழி வருமொழிகளுள் ஏற்கும் செய்கை அறிந்து முடிக்கப்படும். (நன். 239 சங்கர.)

இலக்கணை -

{Entry: A01__240}

இலக்கணை என்பது ஒன்றை ஒன்றாகவும், ஒரு பொருளின் தன்மையை மறறொரு பொருளின் தன்மையாகவும் கூறுவது.

எ-டு : இயற்கையைச் செயற்கையாக் கூறுவது; ‘நின்ற சொல்முன் இயல்பா கும்மே’ (தொ. எ. 144 நச்.) என, இயற்கைத் தன்மைக்கு ஆக்கம் வருவித்தல். (நன். 151 இராமா.)

‘இலம்படு’:புணர்நிலை முடிபு -

{Entry: A01__241}

இலம் + படு = இலம்படு. இலம் என்பது இன்மை என்னும் பெயர்ப்பொருட்டாய் நின்றது. இலம் என்னும் தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச்சொல் வேறு, இது வேறு. படுதல் - உண்டாதல், தோன்றுதல், உறுதல், அடைதல் - முதலாகப் பல பொருள்படும். இலம்படு (புலவர்)- வறுமைப் பட்ட, வறுமைப்படும் (புலவர்).

இன்மையானது உற்ற - என அல்வழியாயும், இன்மையை உற்ற - என வேற்றுமையாயும் இத்தொடர் பொருள் விரியும். (தொ. எ. 316 ச.பால.)

இலம்பாடு என்ற சொல்லமைப்பு -

{Entry: A01__242}

இலம் என்பது இல்லாமைக்குறிப்பு உணர்த்தும் உரிச்சொல்; பாடு என்பது உண்டாதல் என்று பொருள்படும் வினைக் குறிப்புப் பெயர். இலம்பாடு என்பது இல்லாமை யுண்டாதல் என்னும் அல்வழிப் பொருளது. இலம் என்ற நிலைமொழி பாடு என்ற வருமொழியொடு புணருமிடத்து மகரக்கேடும் திரிபும் இன்றி, ‘இலம்பாடு’ என்று இயல்பாகவே முடியும். (தொ. எ. 316 நச்.)

இலேசு -

{Entry: A01__243}

‘சில்வகை எழுத்தின் செய்யுட்டாகும்’நுற்பாவிலே மிகை யாகக் காணப்படும் சொல் இலேசு எனப்படும். இலக்கண உரையாசிரியன்மார் இம்மிகைச் சொல்லை வாளா விடுக்காது, நூல் செய்த காலத்துக்குப் பிற்பட்டுத் தம் காலத்தில் வழங்கும் செய்திகளில் நூலில் குறிப்பிடப்படாமல் விடுபட்டவற்றை இம்மிகைச்சொல் பெறப்பட வைப்பதாகக் கூறுதல் மரபு.

எ-டு : ‘பல்லவை நுதலிய அகர இறுபெயர்

வற்றொடு சிவணல் எச்ச மின்றே’ (தொ. எ. 174 நச்.)

இந்நூற்பாவில் ‘எச்சமின்றே’ என்ற சொற்றொடர் மிகை. இஃது இன்றி ‘வற்றொடு சிவணும்’ என்று கூறினும் நுற்பா வின் பொருள் முற்றும். இம்மிகைச்சொல்லைக் கொண்டு, “173ஆம் நுற்பாவில் இன்சாரியை பெற்றன பிறசாரியை பெறுதல் கொள்க. நிலாத்தை, துலாத்தை, மகத்தை என வரும். இன்னும் இதனானே, பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாம் உருபு வற்றுப் பெற்றே முடிதல் கொள்க” என்று நச்சினார்க் கினியர், நுற்பாவில் கூறப்படாத செய்திகளைக் குறிப்பிட் டுள்ளார்.

இது போன்ற பல செய்திகளும் இலேசு என்ற மிகைச் சொல்லால் உரையாசிரியன்மாரால் கொள்ளப்படுகின்றன.

‘சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது’ (தொ.பொ.353 பேரா.)

அசை சீராயவழி அவை மூன்றெழுத்தின் இறவா என்பது ‘தான்’ என்பதனை இலேசுப்படுத்திக் கொள்வதால் கொள்ளப் படும் - என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வணி, ஆயிடை: உடம்படுமெய் பெறாமை -

{Entry: A01__244}

இ + அணி = இவ்வணி என இடையே வகரமெய் வந்து முடித லன்றி, இ + அணி இ + ய் + அணி = இய்யணி என யகர உடம் படுமெய் பெற்று முடியாது. சுட்டிடைச்சொல் செய்யுளில் நீண்டவழி, ஆ + இடை என இடையே யகரமெய் வந்து முடித லன்றி, ஆ + இடை > ஆ + வ்+ இடை = ஆவிடை என வகர உடம்படுமெய் பெற்று முடியாது. (நன். 162 மயிலை. உரை)

இறந்தகால இடைநிலை -

{Entry: A01__245}

க ட த ற - என்னும் நான்கு மெய்களும் ‘இன்’னும் ஆகிய ஐந்தும் ஐம்பால் மூவிடத்தும் இறந்தகாலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதங்களில் இடைநிலைகளாம். இவற்றுள், ககரம் முதனிலை எழுத்தாயே வரும்; தகரம் முதனிலை எழுத்தாகாமல் வரும்; ஏனைய டகரமும் றகரமும் முதனிலை எழுத்தாயும் அதற்கு இனமாயும் வரும்.

எ-டு : நக்கான்; உரைத்தான்; விட்டான், உண்டான்; உற்றான், தின்றான்; உறங்கினான்.

உரையிற் கோடலால், நக்கிலன் - உரைத்திலன் - உண்டிலன் - நின்றிலன் - உறங்கிலன் என எதிர்மறைக்கண் இவ்விடை நிலைகள் எதிர்மறையைக் காட்டும் ‘இல்’ இடைநிலையொடு வருமாறு காண்க.

எஞ்சியது, போயது. போய - என யகரமும், போயன - என அன்னும், போனான், போனது - என னகரமும் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். (இ. வி. எழுத். 47)

எஞ்சியது தப்பியது நீங்கியான் - என இகரத்தை அடுத்த யகர ஒற்றும் (எஞ்சு + இ + ய் + அ + து; தப்பு +இ + ய் + அ+து; நீங்கு +இ +ய் + ஆன்), போயது போய - என யகர ஒற்றும் (போ+ய்+அ), போனான் போனது - என னகர ஒற்றும் (போ +ன் + ஆன்;போ + ன் + அ + து)சிறுபான்மை இறந்த காலம் காட்டும். (நன். 142 இராமா.)

[இன் என்ற இறந்தகால இடைநிலையது விகாரமே இகரமும் னகரமும் என்பர் சிவஞா. (142) ]

இறுதிச் சினை கெடல், நீடல் -

{Entry: A01__246}

தொல்காப்பியனார் ஒரு சொல்லின் முதலெழுத்து அல்லாத எழுத்துக்களைச் சினை எனவும், முதலெழுத்தினை முதல் - முதனிலை - எனவும் குறிப்பிடும் இயல்பினர். முதலெழுத்து நெடிலாயின், அது குறுகும்போது ‘சினைகெடல்’ எனவும், முதலெழுத்துக் குறிலாயின் அது நீளும்போது ‘சினை நீடல்’ எனவும் கூறுதலுமுண்டு.

இறுதிச்சினை கெடலாவது ஈற்றெழுத்தாகிய நெடிலின் ஒரு கூறாகிய ஒரு மாத்திரை கெட அது குறிலாதல். நிலா > நில.

குற்றெழுத்தின் நீட்டம் நெடில். அஃது இரண்டு மாத்திரை அளவிற்று. அதன் செம்பாதி ஒரு மாத்திரை கெட்டு அது குறிலாதலைச் ‘சினை கெடல்’ என்றார். ஆண்டைக் கொண் டான், ஈண்டைக் கொண்டான், ஊண்டைக் கொண்டான்: இவை சுட்டுச்சினை நீடியவை. (தொ. எ. 234, 159 நச்.)

இறுதிப்போலி வேறு சில -

{Entry: A01__247}

இறுதிப்போலியை முன் சொன்ன நிலைதடுமாற்றத்தால், சுரும்பு - சுரும்பர், அரும்பு - அரும்பர் (குற்றுகரத்திற்கு ‘அர்’ போலி), சாம்பல் - சாம்பர், பந்தல் - பந்தர், குடல் - குடர் (லகரத்திற்கு ரகரம் போலி), மதில் - மதிள் (லகரத்திற்கு ளகரம் போலி) முதலியனவும் கொள்க. (நன். 122 இராமா.)

‘இறுதிமெய்’ என வீரசோழியம் குறிப்பது -

{Entry: A01__248}

18 மெய்யெழுத்துக்களுக்கும் 18 உயிர்மெய் வரிசை உண்டாதல் வெளிப்படை. அவ்வுயிர்மெய் வரிசையில் அவ்வம் மெய் இறுதியில் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க் - எனக் காண்க. ஏனைய மெய்களும் இவ்வாறே அவ்வவ் வுயிர்மெய் வரிசையில் ஈற்றில் கொள்ளப்படும். உயிர்மெய் வரிசையில் மெய் இறுதியில் நிற்றல் பற்றி ‘இறுதிமெய்’ எனப்பட்டது. (வீ.சோ. சந்திப்.2)

இன் இடைநிலை வருமாறு -

{Entry: A01__249}

இன்இடைநிலை எஞ்சியது (எஞ்சு + இ(ன்) + அ + து) எனக் கடைக் குறைந்தும், போனது (போ + (இ)ன் + அ + து) என முதல் குறைந்தும் வரும். (நன். 142 சிவஞா.)

இன்உருபு இன்சாரியை பெறாமை -

{Entry: A01__250}

இன் என்னும் ஐந்தனுருபு இன்சாரியை பெற்றுப் புணர்தல் இன்னோசைத்தன்று என்று கருதிப்போலும், தொல்காப்பிய னார் இன்உருபு இன்சாரியை பெறாது என்றார். அவர் கருத்துப்படி, ஊரின் நீங்கினான் - என்று கூறுவதே முறை; ஊரினின் நீங்கினான் எனல் பிழை.

ஆயின், தொல்காப்பினார்க்குப் பிற்பட்ட காலத்தே உலகவழக்கில் ‘பாம்பினிற் கடிது தேள்’ என்பது போலவும், செய்யுள்வழக்கில் ‘கற்பினின் வழாஅ நற்பல உதவி’ (அகநா.86), ‘அகடுசேர்பு பொருந்தி அளவினிற் றிரியாது’ (மலைபடு.33) எனவும் அருகி வருவனவும் காணப்படுகின்றன. (தொ.எ. 131 நச். உரை)

இன்உருபு, இன்சாரியை : வேறுபாடு -

{Entry: A01__251}

இன் என்பது சாரியை ஆயினவிடத்து யாதானுமோர் உருபு ஏற்கும். அஃது உருபானவிடத்துப் பிறிதோர் உருபை ஏலாது. இது தம்முள் வேற்றுமை. எ-டு : விளவினை, விளவினான், விளவிற்கு, விளவினது, விளவின்கண் - என இன்சாரியையின் பின்னர் (ஐந்தனுருபு நீங்கலான பிற) உருபுகள் வந்தவாறு.

ஊரின் நீங்கினான் - என இன் உருபாயவழிப் பிறிதோர் உருபினை ஏலாமை காண்க. (தொ.எ. 119 நச்.)

இன்சாரியை உள்வழி ஐஉருபு நிலையாமை -

{Entry: A01__252}

பெயர்ச்சொல் இன்சாரியை பெற்றவிடத்து இரண்டாம் வேற்றுமை யுருபு தவறாது வருதல் வேண்டும் என்று தொல். கூறும். (தொ.எ.157 நச்.) ஆயின் தொல்காப்பியத்திலேயே ‘சார்ந்துவரல் மரபின் மூன்று’ (1) (மரபினையுடைய மூன்று), ‘ஆயிரு திணையின் இசைக்குமன’ (சொ.1) (திணையினையும் இசைக்கும்) என, இன்சாரியை பெற்று இரண்டனுருபு விரியா மலேயே சொற்றொடர் அமைந்திருத்தலைக் காணலாம்.

‘மறங்கடிந்த அருங்கற்பின்

சில்சொல்லின் பல்கூந்தல்... துணைத் துணைவியர்’ (புறநா.166)

கற்பினையும் சொல்லினையும் கூந்தலையுமுடைய துணைவி யர் - என இலக்கியத்திலும் இன்சாரியை வந்து ஐஉருபு விரியாத பொருட் புணர்ச்சியையும் காண்கிறோம். (தொ. எ. 157நச். உரை)

இன்சாரியை வரும் இடங்கள் -

{Entry: A01__253}

அ) உருபு புணர்ச்சிக்கண்

1. அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள - என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் உருபேற்கு மிடத்து இன்சாரியை பெறும்.

எ-டு : விளவினை, பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வெளவினை, (தொ.எ.173 நச்.)

2. ஞ், ந் - ஈற்றுச் சொற்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும். வருமாறு : உரிஞினை, வெரிநினை (182)

3. மகரஈற்றுப் பெயர்கள் சில உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும். எ-டு : உருமினை, திருமினை (186)

4. தெவ் என்ற உரிச்சொல் படுத்தல்ஓசையான் பெயராகி உருபேற்கு மிடத்து இன்சாரியை பெறும். வருமாறு : தெவ் வினை, தெவ்வினொடு; தெவ்விற்கு..... தெவ்வின்கண் (184)

5. அழன், புழன் - என்ற னகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து இன்சாரியையும் பெறும். வருமாறு : அழனினை, புழனினை (193)

6. ஒற்று இரட்டும் நெடில்தொடர் உயிர்த் தொடர் நீங்கலான பிற தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து இன்சாரியை பெறும். எ-டு : நாகினை, நாகினொடு; வரகினை, வரகினொடு (எஃகினை, பட்டினை, பஞ்சினை, சால்பினை) (195)

இவையெல்லாம் ஐந்தனுருபு ஏற்குமிடத்தே இன்சாரியை பெற மாட்டா. (131)

ஆ) பொருட்புணர்ச்சிக்கண்

1. குற்றியலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றின் முன் குறை என்னும் சொல் வருமிடத்து இடையே இன்சாரியை வரும். எ-டு : உழக்கின் குறை, ஆழாக்கின் குறை, கழஞ்சின் குறை

இவை உம்மைத்தொகைப் பொருளன. உழக்கும் அதனின் குறையும் முதலாகப் பொருள் கொள்க. உழக்கிற்குறை, ஆழாக்கிற்குறை, கழஞ்சிற்குறை: இவை ஆறாம் வேற் றுமைப் பொருட்புணர்ச்சி (தொ.எ.167 நச்.)

2. பனை என்ற அளவுப்பெயர் முன்னும், கா என்ற நிறைப் பெயர் முன்னும் குறை என்ற சொல் வந்து உம்மைத் தொகைப்படப் புணருமிடத்து இன்சாரியை வரும். வருமாறு : பனையின் குறை, காவின் குறை (169)

3. மக என்ற சொல் மகவின்கை என்றாற்போல இன்சாரியை பெறும். (218)

4. பனி என்ற சொல் பனியிற்சென்றான் என்றாற்போல இன்சாரியை பெறும். (241)

5. வளி என்ற சொல் வளியிற் சென்றான் என்றாற் போல இன்சாரியை பெறும். (242)

6. ஆடூ என்ற சொல் ஆடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும். (271)

7. மகடூ என்ற சொல் மகடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும். (271)

8. சே என்ற பெற்றத்தின் பெயர் சேவின் வால் என்றாற் போல இன்சாரியை பெறும். (271)

9. மழை என்ற சொல் மழையிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை பெறும். (287)

10. வெயில் என்ற சொல் வெயிலிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை பெறும். (377)

11. இருள் என்ற சொல் இருளிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை பெறும். (402)

12. வண்டு என்ற சொல் வண்டின்கால் என்றாற் போல இன்சாரியை பெறும். (420)

13. பெண்டு என்ற சொல் பெண்டின்கை என்றாற் போல இன்சாரியை பெறும். (420)

14. பத்து நிலைமொழியாக, ஒன்று - மூன்று முதல் எட்டு ஈறான எண்கள் - இவை வருமொழியாகப்புணரும்வழி, பதி னொன்று - பதின்மூன்று - பதினான்கு - பதினைந்து - பதினாறு - பதினேழ்- பதினெட்டு- என இன்சாரியை இடையே பெறும். (433)

15. பத்து ஆயிரத்தொடு பதினாயிரம் எனவும், ஒன்பது ஆயிரத் தோடு ஒன்பதினாயிரம் எனவும் புணரும். (435, 470)

16. பத்து நிலைமொழியாக, நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருமொழியாக வரினும், ஒன்பது நிலைமொழியாக அவை வரினும் இடையே இன்சாரியை வரும்.

எ.டு : பதின்கலம், பதின்கழஞ்சு; ஒன்பதின்கலம், ஒன்பதின் கழஞ்சு (436, 459)

17. ஒருபஃது, இருபஃது முதலியன ஆயிரத்தொடும் நிறைப் பெயர் அளவுப்பெயர்களொடும் புணருமிடத்து இடையே இன்சாரியை வரும்.

வருமாறு : ஒருபதினாயிரம், இருபதினாயிரம், ஒருபதின் கழஞ்சு, ஒருபதின்மண்டை, இருபதின் கழஞ்சு, இருபதின் மண்டை (476, 477)

18. ஆ, மா- என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து வரும் இன்சாரியையின் இகரம் கெடுதலுமுண்டு.

வருமாறு : ஆவினை, ஆனை; மாவினை, மானை (120)

பதின்கலம் - பதிற்றுக்கலம் என்றாற்போல, இன்சாரியை ‘இற்று’ எனத் திரிதலும் கொள்க. (121 நச். உரை)

‘இன்தொகுதி மயங்கியல் மொழி’ -

{Entry: A01__254}

செவிக்கு இனிதாகச் சொற்றிரளிடத்து நிலைமொழியும் வருமொழியுமாய் ஒட்டி நின்றாற்போல இணைந்து நின்றும் பொருளுணர்த்தாது, பிரிந்து நின்று பின்னர்ச்சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்கள்.

இது பா என்னும் உறுப்பு நிகழ, பொருள்ஒட்டாமல் சான்றோர் சொற்களைச் சேர்த்தலின் நிகழ்வது.

எ-டு : ‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்

பரல்அவல் அடைய இரலை தெறிப்ப’ (அகநா. 4)

‘மருப்பின் இரலை’ எனப் பொருள் பொருத்தமுற ஒட்ட வேண்டியது, ‘மருப்பிற் பரல்’ எனத் தழாஅத் தொடராய் ஈறு திரிந்து புணர்ந்தது.

‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகநா. 3)

‘ஓமைச்சினை’ என ஒட்டிநின்று பொருளுணர்த்த வேண்டிய தொடருக்கு இடையே ‘காண்பின்பெரு’ என்பன இன்னோ சைக்கு வந்து, ‘ஓமைக் காண்பின்’ எனத் தழாஅத் தொடராய் நிலைமொழி வருமொழிக்குரிய புணர்ச்சி பெற்று வல்லொற்று மிக்குப் புணர்ந்தது.

‘தெய்வ மால்வரைத் திருமுனி அருளால்’ (சிலப் 3 : 1)

‘தெய்வ வரை’ என நிலைமொழி வருமொழியாய்ப் புணர வேண்டியது, ‘தெய்வமால்’ எனத் தழாஅத் தொடராய், நிலைமொழி வருமொழிக்குரிய புணர்ச்சி பெற்று மகரஈறு குன்றிப் புணர்ந்தது.

இவ்வாறு மெய்பிறிதாதல் - மிகுதல் - குன்றல் - என்ற மூவகைத் திரிபும் பெற்றுச் செய்யுட்கண் புணர்ந்து வரும் தழாஅத் தொடர்களே ‘இன்தொகுதி மயங்கியல் மொழிகள்’ ஆம். (தொ. எ. 111 நச். உரை)

இன்றி என்ற வினையெச்சம் ஈறு திரிதல் -

{Entry: A01__255}

இன்றி என்ற வினையெச்சம் விருந்தின்றிக் கழிந்த பகல் ’ என்றாற் போல, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ஈறு திரிந்து ‘இன்று’ என வினைமுற்றுப் போல அமைந்தவழி, வருமொழி வன்கணம் மிகாது இன்னோசை பயத்தலின் செய்யுளில் பயில வழங்கப்படுகிறது.

எ-டு :

‘உப்பின்று புற்கைஉண்கமா கொற்கையோனே’

‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’ (தொ.பொ. 111. நச்.)

‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’ (தொ.பொ. 151 நச்.)

‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்’ ( தொ.பொ. 151 நச்.)

‘தாவின்று உரிய தத்தம் கூற்றே’ (தொ.பொ. 241 நச்.)

எனத் தொல்காப்பியத்தில் இன்றி என்பது ‘இன்று’ என்று செய்யுளின்பம் கருதி வழங்கப்பட்டுள்ளது. (தொ. எ. 237 நச்.)

இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரம் செவிக்கு இனிமை யாக இல்லாததால், ஒன்று உகரமாக மாறியிருக்கவேண்டும். எனவே, அன்றி என்பதன்கண் உள்ள இகரம் உகரமாகத் திரிய வேண்டுவதில்லை. அத் திரிபு சற்றுப் பிற்காலத்தது என்ப. அதுவன்றி என்பது அதாஅன்று எனத் திரிந்ததோ என்பது நோக்கத்தக்கது.

இன்னிசை அளபெடை -

{Entry: A01__256}

பொருள் வேறுபாடோ யாப்பமைதியோ கருதாது, குற் றெழுத்து வரவேண்டிய இடத்தில் குறில் நெடிலாகி அள பெடுத்திருக்கும் இடங்களிலுள்ள அவ்வகை அளபெடையை, அது செய்யுளிசை நிறைக்க வந்ததன்மையின், இன்னோசை ஒன்றற்காகவே அஃது அமைந்திருத்தல் வேண்டும் என்ற கருத்தான், இன்னிசை அளபெடை என்ப.

பாட்டுக்களில் இன்னோசை அமைந்திருந்தலே வேண்டும் ஆதலானும், இன்னோசை இல்லாவிடத்து ஓசை சிதைந்தது எனவே படும் ஆதலானும், இன்னிசை அளபெடை என்று வேறு பெயரிட்டு ஒரு சார் உயிரளபெடையைப் பகுத்துக் கோடல் வேண்டுவதின்று என்பர் ஒரு சாரார்.

கெடுப்பதும்... எடுப்பதும் எல்லாம் மழை’ (குறள் 15) எனினும் செய்யுளோசை கெடாது அமையுமாயினும், கெடுப்பதுஉம்... எடுப்பதுஉம் எல்லாம் மழை ’ எனக் குறில் நெடிலாகி அளபெடுத் ததனால் வேறு பயனின்றி இனிய ஓசையொன்றே பயனாத லின், இத்தகையன இன்னிசையளபெடை என்றே பெயர் பெறல் வேண்டும் என்பது சிலர் கருத்து. சிலர் இவற்றைக் குற்றெழுத்தளபெடையில் அடக்குவர். (எ. ஆ. பக். 42) (நன்.91 உரை)

இன்னின் இகரம் கெடுதல் -

{Entry: A01__257}

இன்சாரியையின் இகரம், ஆ என்ற சொல்லையடுத்து அச் சாரியை வருமிடத்துக் கெடுதலுமுண்டு. மா என்ற சொற்கும் இதனைக் கொள்ப.

வ-று : ஆ+இன்+ஐ - ஆவினை, ஆனை; மா+இன்+ஐ - மாவினை, மானை; ஆ+இன்+கோடு - ஆவின் கோடு, ஆன் கோடு; மா+இன்+கோடு - மாவின் கோடு, மான்கோடு

நிலைமொழியீற்று நெடிலுக்குமுன் குறிலை முதலாகவுடைய மொழிகள் வருமிடத்துப் புணர்ச்சிக்கண் அக்குறில் கெடுதலு முண்டு ஆதலின், ஆ என்ற சொல்லின் முன் வந்த இன்சாரியை யின் இகரம் கெட்டது. நீ இர் - நீர், மூ உழக்கு = மூழக்கு, போ + இன் +ஆன்= போனான் - எனப் பிற நெட்டெழுத்தின் முன்னும் வந்த குற்றெழுத்துக்கள் கெடுதலைக் காணலாம். (எ. ஆ. பக். 99)

இன எழுத்து -

{Entry: A01__258}

அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒஓ- இவை தம்முள் இனமாம். க ங, ச ஞ, ட ண, த ந, ப ம, ற ன - என வல்லினம் மெல்லினம் தம்முள் இனமாம். இடையினத்திற்கு இனமின்று. இங்ஙனம் இனம் அடைத்தல் அளபெடையிலும் புணர்ச்சியிலும் பயன்படும். (நன். 71)

இனஒற்று மிகுதல் -

{Entry: A01__259}

தொல்காப்பியனார் க ச ட த ப ற - க்களுக்கு ங ஞ ண ந ம
ன-க்களை யாண்டும் இனவெழுத்து என்றோ இனஒற்று என்றோ கூறினரல்லர். முன்னர் வரும் வல்லெழுத்து மிகு தலையே இனஒற்றுமிகுதல் என்று கூறியுள்ளார்.

எ-டு : நூறு என்னும் எண்ணுப்பெயர் ஒன்று முதல் ஒன்பான்கள் வருமொழியாய் வருமிடத்து இனஒற்று மிகும் என்று கூறியது போல்வன. வருமாறு : நூறு + ஒன்று > நூற்று + ஒன்று = நூற்றொன்று (தொ.எ.472 நச்.) (எ.ஆ.பக்.167)

இனம் என்பதற்குக் காரணம் -

{Entry: A01__260}

மார்பு முதலிய தானம், இதழ்அசைவுமுதலிய முயற்சி, மாத்திரை என்ற அளவு, பொருள், ஒலிவடிவு, வரிவடிவு - இவற்றுள் ஒன்றும் பலவும் ஒத்து வருதல் இனம் அடைத் தற்குக் காரணம். பொருளாவது பாலன் விருத்தன் ஆனாற் போலக் குறியதன் விகாரமே நெடில் ஆதலின், இரண்டற்கும் பொருள் ஒன்று என்று முதல்நூலால் நியமிக்கப்பட்ட பொருள். (நன். 72 சங்.)

இனம் ஒத்தல் -

{Entry: A01__261}

இனம் ஒத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல்.

அஆ, இஈ, உஊ, எஏ, ஒஓ என்ற உயிர்களும், கங,சஞ, டண, தந, பம, றன - என்ற மெய்களும் இனம் ஒத்தனவாம்.

அஆ- எழுவாய்த்தொடர்ப் புணர்ச்சியும், பிறப்பும், ஓசையும், வடிவும் ஒக்கும். இஈஐ - வடிவு ஒவ்வா; ஏனைய ஒக்கும்.

உஊஒள - உஊ வடிவு ஒக்கும். ஒள வடிவு ஒவ்வாது; ஏனைய ஒக்கும்.

எஏ, ஒஒ - வடிவும் ஏனையவும் பெரும்பாலும் ஒக்கும்.

கங, சஞ, டண, தந, பம, றன - பிறப்பு ஒக்கும்; ஏனைய பெரும் பாலும் ஒவ்வா. புணர்ச்சிக்கண் வல்லினத்துக்கு இனமெல் லெழுத்தாய்ப் புணர்ச்சி ஒக்கும். (தொ.எ.41 நச். உரை)

இனி என்ற இடைச்சொல் புணர்ச்சி -

{Entry: A01__262}

இனி என்பது இப்பொழுது என்னும் காலத்தை உணரநின்ற இடைச்சொல். அஃது இனிக்கொண்டான் என்றாற்போல், வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்குப் புணரும். (தொ. எ. 236 நச்.)

இனி + இனி - இன்னினி என்றாம். அஃது இன்னினிக் கொண் டான் என்றாற்போல வன்கணம் வரின் மிக்குப் புணரும். ‘இனி’ பெயர்ச்சொல் நிலையது. (246 நச். உரை)

ஈ section: 22 entries

ஈகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__263}

ஈகாரஈற்றுப் பெயர், அல்வழிக்கண் எழுவாய்த்தொடராயின், வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், மென் கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும், உயிர்க்கணம் வரின் உடம்படுமெய் பெற்றும் புணரும்.

எ-டு : ஈக் கடிது, ஈ நன்று, ஈ யாது, ஈ யடைந்தது (தொ. எ. 249 நச்.)

(இக்காலத்து, வருமொழி வன்கணம் வரினும், எழுவாய்த் தொடரை இயல்புபுணர்ச்சியாகவே கொள்ளும் வழக்கம் மிக்குளது.)

ஈகார ஈற்று அல்வழிப்புணர்ச்சியுள் இயல்பாவன -

{Entry: A01__264}

அல்வழிப்புணர்ச்சிக்கண் நீ என்ற முன்னிலை ஒருமைப்பெய ரும்,பீ என்ற இடக்கர்ப்பெயரும், மேலிடத்தை உணர்த்தும் மீ என்ற பெயரும் இயல்பாகப் புணரும். ‘மீ’ வலிமெலி மிகுதலு முண்டு. (நன். 178)

வருமாறு : நீ குறியை, பீ குறிது, மீகண்; மீக்கண், மீந்தோல் (தொ. எ. 250, 251 நச்.)

‘மீ’ மெல்லெழுத்து மிகுதல் தொல்காப்பியனார் காலத் துக்குப் பிற்பட்டது.

ஈகார ஈற்றுச் சிறப்பு விதிகள் -

{Entry: A01__265}

ஆ - என்ற சொல் முன் வரும் பீ என்ற ஈகார ஈற்றுச் சொல், ஈகாரம் குறுகிப் பகரம் மிக்கு ஆப்பி - எனப் புணரும். இப் புணர்மொழிதான் நிலைமொழியாக நிற்ப, நாற்கணம் வரினும், அல்வழிக்கண் இயல்பாக முடியும்.

எ-டு : ஆப்பி +குளிரும், நன்று வலிது, அரிது = ஆப்பி குளிரும், ஆப்பி நன்று, ஆப்பி வலிது, ஆப்பி யரிது

பீ நீ மீ - என்பன அல்வழிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப் புணரும். எ-டு : பீகுறிது, சிறிது, தீது, பெரிது; நீ குறியை, சிறியை, தீயை, பெரியை; மீகண், செவி, தலை புறம்.

மீ என்ற சொல்லுக்கு வல்லெழுத்து மிகுதலும் மெல்லெழுத்து மிகுதலுமாகிய புணர்ச்சி ஒரோவழி உண்டு. எ-டு : மீக்கூற்று, மீந்தோல் (நன். 178)

ஈகாரஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி -

{Entry: A01__266}

ஈகாரஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிகும்; பிற கணங்கள் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : ஈக்கால், ஈச்சிறை, ஈத்தலை, ஈப்புறம்; ஈமாட்சி, ஈவன்மை, ஈயாட்டம்,

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் நீ என்ற முன்னிலைப் பெயர் நின் எனத் திரிந்து வருமொழியோடு இயல்பாகப் புணரும். இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் நின் என்பது (வன்கணம் வருமிடத்து) நிற் எனத் திரிந்து புணரும். உயிர்க்கணம் வரின் னகர ஒற்று இரட்டும்.

எ-டு : நின்கடமை, நின்நா(னா)டு, நின்யாழ், நின்னழகு, நிற் புறங்காப்ப (தொ. எ. 252, 253 நச்.)

ஈம் கம் உரும்: புணருமாறு -

{Entry: A01__267}

இம்மூன்று சொல்லும் அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், முதனிலைத் தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத மெய் வருமொழி முதலில் வரின், உகரச் சாரியை பெற்றுப் புணரும்; ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெறும்.

எ-டு : ஈமுக் கடிது, கம்முக் கடிது, உருமுக் கடிது - அல்வழி; ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை - வேற்றுமை; ஈமக்குடம், கம்மக்குடம் - வேற்றுமை (நன். 223)

‘ஈம்’ புணருமாறு -

{Entry: A01__268}

ஈம் - சுடுகாடு. ‘ஈம்’ நிலைமொழியாக, அல்வழிப் புணர்ச்சி யிலும் வேற்றுமையின் குணவேற்றுமைப் புணர்ச்சியிலும், வருமொழி வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணமும் வரின் உகர மாத்திரம் பெற்றும் புணரும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண் உகரம் கெட இடையே அம்முச்சாரியை பெற்றுப் புணரும். இருவழியினும் உயிர்க்கணம் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : ஈமுக் கடிது, ஈமு மாண்டது, ஈமு வலிது - அல்வழி; ஈமுக் கடுமை, ஈமு மாட்சி, ஈமு வன்மை - வேற்றுமை யில் குணவேற்றுமைப் புணர்ச்சி; ஈமக் குடம், ஈம நெருப்பு, ஈம விறகு - பொருட்புணர்ச்சி; ஈமடைந்தது, ஈ மடைவு - இருவழியிலும் உயிர்க்கணம். (தொ. எ. 328, 329 நச்.)

ஈரளபு இசைத்தல் -

{Entry: A01__269}

தமிழில் உயிர்நெட்டெழுத்தும் உயிர்மெய்நெட்டெழுத்தும் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரை அளவிற்றாக ஒலிக்கும்.

(தொ. எ. 4, 10 நச்.)

‘ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்’ பொருள் -

{Entry: A01__270}

பிறரெல்லாம் ‘ஈறியல் மருங்கினும்’ என்று பாடம் ஓதினர்.

முப்பாற் புள்ளியாகிய ஆய்த எழுத்தினது இசைமை (எழுத் தாக இசைக்கும் தன்மை) உயிரினது மருங்காகவும் ஒற்றினது மருங்காகவும் தோன்றி வரும்.

ஈர் இயல் - உயிரியல்பும் ஒற்றியல்பும். உயிரியல்பாவது, இசைத்துச் செய்யுளின்கண் அலகு பெற்று வருதல்; ஒற்றியல் பாவது, அலகு பெறாது அசைக்கு உறுப்பாகி வருதல்.

எ-டு: ‘அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு’ (குறள் 943)

‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்’ (குறள். 236)

முறையே இவ்வீரிடத்தும் ஆய்தம் உயிரியல் மருங்காய் அலகு பெற்றும், ஒற்றியல் மருங்காய் அலகு பெறாது அசைக்கு உறுப்பாயும் நின்றவாறு. (தொ. எ. 39 ச.பால.)

ஈரெழுத்துமொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: A01__271}

கு சு து பு - என்ற நான்கனையும் ஈற்றெழுத்தாகவும், நெட்டெழுத்து ஒன்றை முதலெழுத்தாகவும் கொண்ட ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள், வேற்றுமை அல்வழி என்ற இருவழியும் இயல்பாகப் புணரும்,

எ-டு : நாகுகால், நாகுஞாற்சி, நாகுவால், நாகசைவு - வேற்றுமை; நாகு கடிது, நாகு நன்று, நாகு வலிது, நாகரிது - அல்வழி (தொ. எ. 412, 425 நச்.)

ஆறு என்ற எண்ணுப்பெயர், நிறை அளவுப் பெயர்களாகிய வன்கணம் வரின், அல்வழிக்கண் முதல் குறுகி இயல்பாகப் புணரும் (440); உயிர் முதல் மொழி வரின், நெடில் குறுகாது இயல்பாகப் புணரும். வ-று : அறுகலம், அறு கழஞ்சு; ஆறகல், ஆறுழக்கு. (தொ.எ. 449, 458 நச்.)

அவ்வெண்ணுப்பெயர் ஆயிரம் வருமொழியாயின் இயல்பா யும் நெடில் குறுகியும் புணரும். வருமாறு : ஆறாயிரம், அறாயிரம் (தொ.எ. 469 நச்.)

யாது என்னும் வினாப்பெயர் அன்சாரியை பெற்று வேற் றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் புணரும்.

எ-டு : யாதன் கோடு (தொ.எ. 422 நச்.)

ஈரெழுத்தொருமொழியாம் குற்றுகர ஈற்றுப்பெயர் சிறு பான்மை அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணரும். எ-டு : ஏறங்கோள் (சீவக. 489) (தொ.எ. 417 நச்.)

சிறுபான்மை உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை என இன்சாரியை பெறுவதுபோலப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் யாட்டின் கால் என்றாற் போல இன்சாரியை பெறுதலுமுண்டு. (தொ.எ. 412 நச்.)

டு று - என்பனவற்றை ஈற்றிலுடைய ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் இனஒற்று இடையே மிக, வருமொழிக்கண் வந்த வல்லெழுத்து இடையே மிகும். பொருட்புணர்ச்சிக்கண் இயல்புகணம் வரினும் இனஒற்று இடையே மிகும்.

எ-டு : யாட்டை, யாட்டொடு; பாற்றை, பாற்றொடு; (தொ. எ. 196 நச்.) யாட்டுக்கால், யாட்டுநிணம், யாட்டுவால், யாட்டதள்; ஏற்றுக்கால், ஏற்றுநிணம், ஏற்றுவால், ஏற்றதள் (தொ.எ. 411)

உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை, பாற்றினை - என்றாற்போல இன்சாரியை பெறுதலும் கொள்க. (தொ.எ. 197)

ஈரேவல் -

{Entry: A01__272}

செய் என்ற ஏவல்வினையை அடுத்து வி-பி- என்ற விகுதிகளுள் ஒன்று வருமாயின், செய்வி என்னும் ஓரேவல்மேல் ஓரேவல்; இவ்விகுதி மீண்டும் இயையின் செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஈரேவல் நிகழும்.

எ-டு : நட - நடப்பி - நடப்பிப்பி; வா - வருவி- வருவிப்பி

செய் என்னும் ஏவல்வினைக்கண், ஏவல் வினைமுதல் ஒன்று; இயற்றும் வினைமுதல் ஒன்று. செய்வி என்பதன்கண், ஏவல் வினைமுதல் இரண்டு; இயற்றும் வினைமுதல் இரண்டு. செய்விப்பி என்பதன்கண், ஏவல் வினைமுதல் மூன்று; இயற்றும் வினைமுதல் மூன்று.

நட - நடத்து - நடத்துவி - நடத்துவிப்பி; வருந்து - வருத்து - வருத்துவி- வருத்துவிப்பி - எனவும் வரும். (நன். பத. 11 இராமா.)

ஈரொற்று உடனிலை -

{Entry: A01__273}

சொற்களில் யரழ என்னும் ஒற்றுக்களை அடுத்துக் கசதந பமஞங- என்ற வல்லெழுத்துக்களும் மெல்லெழுத்துக்களும் வர, இவ்வாறு வெவ்வேறு ஒற்றுக்கள் இரண்டு இணைந்து வருநிலை ஈரொற் றுடனிலையாம்.

எ-டு : வே ய் க்க, வா ய்ச்சி, வா ய்த்தல், வா ய்ப்பு; கா ய் ங்கனி, தே ய்ஞ்சது, கா ய்ந்தனம், கா ய்ம்புறம்; பீ ர்க்கு, நே ர்ங்கல்; வா ழ்க்கை, வாழ் ந்தனம்

செய்யுட்கண் லகர ளகரங்கள் திரிந்த னகரணகரங்களை அடுத்த மகரம் ஈரொற்றாய் வந்து மாத்திரை குறுகும்.

வருமாறு : போலும் > போல்ம் > போன்ம்; மருளும் > மருள்ம் > மருண்ம். (தொ. எ. 29, 48, 51 நச்.)

மருண்ம் போல்வன தொல்காப்பியத்திற்குப் பிற்காலத்தன.

ஈரொற்றுடனிலை ஒருமொழியிலும் இருமொழியிலும் வரும்; சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் என்பது பெற்றாம்.

ஈரொற்றுடனிலை, மூவொற்றுடனிலை பற்றி வீரசோழியம் குறிப்பன -

{Entry: A01__274}

ஈரொற்றுடனிலை, மூவொற்றுடனிலை என்பன மொழி யிடைத் தோன்றும் இடைநிலை மெய்ம்மயக்கங்கள். வந்தார் என்புழி, தா என்ற எழுத்தை த்-ஆ என்று பிரிக்குமிடத்தே, வந்த்ஆர் என ஈரொற்றுடனிலையாம். சார்ந்தார் என்புழி, தா என்ற எழுத்தை அவ்வாறு பிரிக்குமிடத்தே, சார்ந்த்ஆர் என மூவொற்றுட னிலையாம். (வீ. சோ. சந்திப். 4)

ஈரொற்றுத்தொடர் இடைத்தொடர் ஆகாமை -

{Entry: A01__275}

யரழ - என்னும் மூன்று ஒற்றுக்களையும் அடுத்துக் கசதபங ஞநம-க்கள் ஈரொற்றாக வர, அவற்றை அடுத்துக் குற்றியலுகர ஈறு அமையும். அப்பொழுது குற்றியலுகரத்துக்கு முன்னே வந்த எழுத்து ஈரொற்றுத் தொடரில் வல்லெழுத்தாகவோ மெல்லெழுத்தாகவோ இருக்கும். அடுத்த எழுத்தைக் கொண்டே குற்றியலுகரத்துக்குப் பெயரிடப்படும் ஆதலின், குற்றியலுகரத்தை அடுத்த எழுத்து ஈரொற்றுத் தொடரில் இடையெழுத்தாக வாராமையால், ஈரொற்றை இடையே கொண்ட குற்றியலுகர ஈற்றுச் சொல் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகமாட்டாது.

எ-டு : மொய் ம்பு, நொய் ம்பு, மொய் த்து, பொய் த்து; ஆர் க்கு, ஈர் க்கு; வாழ் த்து, வாழ் ந்து.

இரண்டு ஒற்று இடைக்கண் தொடர்ந்துநிற்கும் சொல்லின் கண், இடையின ஒற்று முன்நின்றால், மேல் இடையினம் தொடர்ந்து நில்லா; வல்லினமும் மெல்லினமுமே தொடர்ந்து நிற்கும். ஆதலின் சொல்லில் இடையின ஒற்று இருப்பினும், குற்றியலுகரத்தை அடுத்த (ஈற்றயல்) எழுத்து வல்லொற் றாகவோ மெல்லொற்றாகவோ இருத்தலின், அவ்வல் லொற்று மெல்லொற்றுப் பெயராலேயே குற்றியலுகரம் குறிப்பிடப் பெறும் என்பர் நச். (தொ. எ. 407)

ஈரொற்றுத் தொடர்மொழி -

{Entry: A01__276}

குற்றியலுகர ஈற்றுச் சொற்களில் ஈற்றுக் குற்றியலுகரத்துக்கு முன்னாக வல்லொற்றோ மெல்லொற்றோ வர, அதற்கு முன்னாக இடையொற்று ஒன்று வர அமையும் சொற்கள் ஈரொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் எனப்படும். எ-டு : மொய்ம்பு, எய்ப்பு, ஆர்ந்து, ஆர்த்து, வாழ்ந்து, வாழ்த்து. (தொ. எ. 407 நச்.)

ஈற்றயல் அசை பற்றிக் குற்றியலுகரத்தைக் கணக்கிடுமாறு நிரம்பாமை -

{Entry: A01__277}

அது இது முதலிய முற்றுகரத்தை நீக்கவேண்டித் தனிக்குறிலி னாகிய அசையை விடுத்து,

தனிநெட்டெழுத்தை அடுத்த குற்றியலுகரம் - காடு; தனிநெடிலொற்றை அடுத்த குற்றியலுகரம் - காட்டு; குற்றொற்றை அடுத்த குற்றியலுகரம் - கண்டு; குறிலிணையை அடுத்த குற்றியலுகரம் - பரசு; குறிலிணை ஒற்றை அடுத்த குற்றியலுகரம் - வறண்டு; குறில் நெடில் அடுத்த குற்றியலுகரம் - பலாசு; குறில் நெடில் ஒற்றை அடுத்த குற்றியலுகரம் - கிடேச்சு

என அசைபற்றிக் குற்றியலுகரம் வருமிடம் ஏழ் என்று கொள்ளின், பிண்ணாக்கு-சுண்ணாம்பு - பட்டாங்கு - விளை யாட்டு- இறும்பூது - முதலிய சொற்கள் இவற்றுள் அடங்கா. பிண்ணாக்கு - சுண்ணாம்பு -பட்டாங்கு - விளையாட்டு-என்பனவற்றை ஈற்றயலசை பற்றி நெட்டொற்றிறுதிக் குற்றிய லுகரமாகவும்,இறும்பூது என்பதனை நெடிலிறுதிக் குற்றிய லுகரமாகவும் அடக்கிக் கொள்ளினும், போவது - வருவது - ஒன்பது - முதலியன ஏழ்வகையுள் ஒன்றனுள்ளும் அடங்காமை யின், அசையைக்கொண்டு குற்றியலுகரத்தை ஏழ் வகையுள் அடக்குதல் நிரம்பாத இலக்கணமாம். (சூ. வி. பக். 29)

ஈற்றின் வரும் உயிர்மெய்கள் -

{Entry: A01__278}

உதாரணம்

இல்லன கூடுதல்

க் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள - - 10

ச் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ - - - 9

ஞ் அ ஆ இ ஈ உ ஊ x ஐ ஓ - - - ஏ 8

ட் அ ஆ இ ஈ உ ஊ x ஐ x - - - ஏ,ஓ (2) 9

ண் அ ஆ இ ஈ உ ஊ x ஐ x - - - ஏ,ஓ (2) 9

த் அ ஆ இ ஈ உ ஊ x ஐ ஓ - - - ஏ (1) 9

ந் அ ஆ x ஈ - - ஏ ஐ ஓ ஒ - - இ (1) 8

ப் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ - - - 9

ம் அ ஆ இ ஈ உ ஊ x ஐ ஓ ஏ (1) 9

ய் அ ஆ x x x ஊ x ஐ ஓ - - - இ,ஈ,உ,ஏ (4) 9

ர் அ ஆ இ ஈ உ ஊ x ஐ x - - - ஏ,ஓ (2) 9

ல் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ x - - - ஓ (1) 9

வ் அ ஆ இ ஈ - - ஏ ஐ x ஒள - - ஓ (1) 8

ழ் அ ஆ இ ஈ உ ஊ x ஐ x - - - ஏ,ஓ (2) 9

ள் அ ஆ இ ஈ உ ஊ x ஐ x - - - ஏ,ஓ (2) 9

ற் அ ஆ இ ஈ உ ஊ x ஐ ஓ - - - ஏ (1) 9

ன் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ - - - 9

கூடுதல் 20 161

மேலை அட்டவணையில் ஈற்றில் வரும் உயிர்மெய்கள் எடுத்துக்காட்டுடையவை-141, எடுத்துக்காட்டில்லாதவை-20 ஆக 161ஆம்.

எகரம் எந்த மெய்யொடும் ஈற்றில் வாராது. ஒகரம் நகரமெய் யுடனேயே வரும் (நொ). ஒளகாரம் ககர வகர மெய்களுடனே வரும்(கௌ,வெள).

உயிர்களுள் ஒளகாரம் நீங்கலான ஏனைய பதினொன்றும் மொழி யிறுதியில் வரும். (தொ. எ. 77 நச்.)

ஈற்று உயிர்மெய் -

{Entry: A01__279}

சொல்லின் ஈற்று உயிர்மெய் உயிர்ஈறாகவே கொள்ளப்படும். உயிர்மெய்யாவது மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னு மாக ஒலிக்கும் கலப்பெழுத்து ஆதலின், அதன் முதல்ஒலி மெய்யொலி, ஈற்றொலி உயிரொலியாம். ஆகவே உயிமெய் மொழிமுதலில் வரின் மெய்யெழுத்தாகவும், மொழியிறுதி யில் வரின் உயிரெழுத்தாகவும் கொள்ளப்படும்.

‘பல’ என்பது ப் + அ + ல் + அ என்று அமைதலின், ஈற்றுயிர் மெய் உயிரீறாகவே புணர்ச்சிக்கண் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 106 நச்.)

ஈற்று நிலை -

{Entry: A01__280}

உயிர் 12, ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் - என்ற மெய் 11, குற்றிய லுகரம் - என்ற 24 எழுத்துக்களும் மொழியீற்றில் வருவனவாம். உயிர்க் குற்றெழுத்துக்கள் அளபெடையில் தனித்து ஈறாக வரும். ஆ அ, ஈ இ, ஊஉ, ஏஎ, ஓஒ - என வருமாறு காண்க. எகரம் அளபெடைக்கண் தனித்து ஈறாதலன்றி, மெய்யொடு கூடி ஈறாக வாராது. ஒகரம் நகரத்தொடு கூடி ‘நொ’ எனவும், ஒளகாரம் ககரத்தொடும் வகரத்தொடும் கூடிக் கௌ- வெள- எனவும் ஈறாம். (நன். 107, 108)

ஈற்றுவினாப் புணர்ச்சி -

{Entry: A01__281}

நிலைமொழி ஈறாக வரும் ஆ ஏ ஓ-என்னும் வினாவிடைச் சொற்களும், முதலாகவரும் யா என்னும் அஃறிணைப்பன்மை வினாப்பெயரும் வருமொழி வன்கணம் வருவழி இயல்பாம்.

எ-டு : உண்கா + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கா கொற்றா....... உண்கே + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கே கொற்றா......... உண்கோ + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கோ கொற்றா.......... யா + குறிய, சிறிய, தீய, பெரிய = யா குறிய..............

யா இயல்பு பற்றி உடன் கூறப்பட்டது. (நன். 159 மயிலை.)

‘ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையல்’ -

{Entry: A01__282}

நெடுமுதல் குறுகும் மொழிகள் யான் யாம் நாம் நீ தான் தாம் என்பன. நீஇர் என்பதும் அத்தகையதே. இவைமுறையே என் எம் நம் நின் தன் தம் நும்-என்று நெடுமுதல் குறுகிநிற்கும். இவை நான்கனுருபாகிய கு என்பதனொடும், ஆறனுருபுக ளாகிய அது அ என்பவற்றொடும் புணரும்வழி, அகரச் சாரியை பெற்று, என எம நம நின தன தம நும - என்றாகி, என + கு = எனக்கு, என + அது = எனது, என + அ = எனவ என்றாற் போலப் புணரும். அது உருபின் அகரம் கெட்டு விடும். எனவ என்புழி வகரம்உடம்படுமெய். (தொ. எ. 161 நச்.)

தனாது - எனாது - என்பனவும் தன + அது, என + அது - என்றே பிரித்துக் கொள்ளப்படவேண்டுவனவாம். நிலைமொழி யீனும் வருமொழி முதலும் ஆகிய இரண்டு அகரங்கள் ‘ஆ’ என ஒரு நெடில் ஆயின. ‘ஆது’ உருபு அன்று. ‘ஆது’ நெடு முதல் குறுகும் மொழிகளிலேயே காணப்படுவதும் நோக்கத் தக்கது. (எ. ஆ. பக். 96)

ஈறு இயல் மருங்கு -

{Entry: A01__283}

நிலைமொழி ஈற்றெழுத்து வருமொழி முதலெழுத்தொடு புணர்ந்து நடக்குமிடம். நிலைமொழியீறு உயிராகவோ மெய்யாகவோ இருக்கலாம்; வருமொழி முதலும் அவ்வாறே இருக்கலாம். ஈறு உயிர்மெய்யாயின் உயிராகவும், முதல் உயிர்மெய்யாயின் மெய்யாகவும் கொள்ளப்படும். (தொ. எ. 39, 171 நச்.)

ஈன் புணருமாறு -

{Entry: A01__284}

ஈன் இவ்விடம் என்று பொருள்பெறும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொல்லாம். இவ்விடைச் சொல் பெயர்த்தன்மை பெற்று வருமொழியொடு புணர்வ தாம். வருமொழியில் வன்கணம் முதலெழுத்தாக வரின், ஈற்கொண்டான்-என்றாற்போல னகரம் றகரமாகத் திரிந்து புணரும்; ஈன்கொண்டான் என்ற இயல்பு புணர்ச்சியுமுண்டு. (தொ. எ. 333 நச்.)

உ section: 115 entries

உ -

{Entry: A01__285}

உகரம் தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிரெழுத்து. இஃது அங்காப்போடு இதழ்குவித்தலான் பிறப்பது; ஊகாரத்திற்கு அளபெடையெழுத்தாக வருவது(ஊ உங்கு); யகர ரகர லகர முதல் ஆரியச்சொற்கள் வடசொற்களாகத் தமிழில் வழங்கும் போது, அவற்றை இயக்கும் மொழிமுதலெழுத்தாக வருவது ( உயுத்தம், உரோமம், உலோகம்); ஆரியச்சொல்லில் வல் லெழுத்தை யடுத்து மகரம் வகரம் வருவனவற்றை வட சொல்லாக்குமிடத்து அவ்வல்லெழுத்தை ஊர்ந்து, ஒலித் தலை எளிமையாக்குவது(பக்வம் - பக்குவம்; பத்மம்-ப துமம்); ஆரியச்சொற்களில் மொழிமுதற்கண் ஶ், ஸ் - வருமிடங்களில் அவற்றை வடசொல்லாக்குகையில் அவ் வெழுத்துக்களின் இடத்தே தான் வந்து ஒலிப்பது( சுத்தி, ஸ்வாமி - சுவாமி); தமிழ்ச்சொற்களில் இடையிலும் ஈற்றிலும் சாரியையாக வருவது (பல்-பல் லு,அவன் + கு(அவற்கு)-அவனுக்கு); ஒளகார ஈற்றுத் தொழிற்பெயரும், ஞணநமல வளன- ஒற்றீற்றுத் தொழிற்பெயர்களும் வருமொழியொடு புணருமிடத்து இடையே சாரியையாக வருவது (கௌ வுக் கடிது, உரி ஞுக் கடிது, மண் ணுக் கடிது, பொரு நுக் கடிது, திரு முக் கடிது, சொல் லுக் கடிது, தெவ் வுக் கடிது, துள் ளுக் கடிது, மின் னுக் கடிது); சேய்மை அண்மைக்கு இடைப்பட்ட நிலையைக் குறிக்கும் சுட்டாக வருவது( உவன், உப்பக்கம்); தொழிற் பெயர் விகுதியாகவும், பண்புப்பெயர் விகுதியாகவும், வினை யெச்ச விகுதியாகவும் நிகழ்வது(வர வு, செல வு; மழ வு, குழ வு; செய்து(செய் + த் + உ)).

உக்குறள் மெய்விட்டோடல் முதலியன -

{Entry: A01__286}

நிலைமொழியீற்றில் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர் வரின், நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் தான் ஏறிய மெய்யை நிறுத்தித் தான் கெட்டுவிடும்; வருமொழி முதலில் யகரம் வரின், தான் இகரமாகத் திரியும். முற்றியலுகரமும் நிலைமொழியீற்றில் ஒரோவழிக் கெடும்.

எ-டு : காடு + அரிது > காட் + அரிது = காடரிது; காடு + யாது > காடி + யாது = காடியாது: குற்றியலுகர ஈறு

கதவு + அழகிது > கதவ் + அழகிது = கதவழகிது: முற்றியலுகரஈறு.

அது+அன்+ஐ > அத்+அன்+ ஐ = அதனை: இதுவுமது.

ஒரோவழிக் குற்றியலுகரம் கெடாது நின்று வருமொழி யோடு உடம்படுமெய் பெற்றுப் புணர்தலுமுண்டு.

எ-டு : ஆது + உம் > ஆது + வ் + உம் = ஆதுவும் (நன். 300) - இடையே வகர உடம்படுமெய் வந்தது. (நன். 164)

உகரஈற்று அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__287}

உகரஈற்றுப் பெயர் எழுவாய்த்தொடராதற்கண், வருமொழி வன்கணம் வரின் மிக்கும், மென்கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும், உயிர்க்கணம் வரின் உடம்படுமெய் பெற்றும் புணரும்.

எ-டு : கடுக் குறிது, கடு நன்று, கடு வலிது, கடு வரிது

(தொ. எ. 254 நச்.)

உகரஈற்றுச் சுட்டுப்பெயர்கள் எழுவாய்த்தொடராதற்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : அது குறிது, அது நன்று, அது வலிது, அது வழகியது (தொ.எ. 257 நச்.)

செய்யுளில் அது + அன்று = அதாஅன்று எனவும், அது + ஐ + மற்று + அம்ம = அதைமற்றம்ம எனவும் புணரும். (தொ.எ. 258 நச்.)

வரும்,மிகும், தொகும், பெறும், படும் - முதலியன அசையை நிரப்புதற்காக வரூஉம், மிகூஉம், தொகூஉம், பெறூஉம், படூஉம் -முதலனவாக நீண்டு உகர அளபெடை பெறுதலு முண்டு.

‘ஒளஎன வரூஉம் உயிரிறு சொல்லும்’ (தொ.எ.152 நச்.)

‘முத்தை வரூஉம் காலம் தோன்றின்’ (164)

‘தம்மிடை வரூஉம் .... நும்மிடை வரூஉம்’ (191)

‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’ (233)

‘வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழியும்’ (251)

‘தம்ஒற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை’ (260)

‘விண்என வரூஉம் காயப் பெயர்வயின்’ (305)

‘அகர ஆகாரம் வரூஉங் காலை’ (311)

‘மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான’ (350)

‘தகரம் வரூஉங் காலை யான’ (399)

‘ஒற்றுநிலை திரியாது அக்கொடு வரூஉம்’ (418)

‘முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே’ ( 433)

‘நிறையும் அளவும் வரூஉங் காலை’ (436)

‘நுறா யிரமுன் வரூஉங் காலை’ (471)

‘லனஎன வரூஉம் புள்ளி இறுதிமுன்’ (481)

‘அஆ வஎன வரூஉம் இறுதி’ (தொ.சொ. 9 நச்.)

‘யாதென வரூஉம் வினாவின் கிளவி’ (32)

‘வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்’ (52, 53)

‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்’ (127)

‘விளிநிலை பெறுஉம் காலம் தோன்றின்’ (153)

‘திரிபுவேறு படூஉம்’, ‘பிரிபுவேறு படூஉம்’ (174, 224)

‘இஐ ஆய்என வரூஉம் மூன்றும்’ (225)

‘இர்ஈர் மின்என வரூஉம் மூன்றும்’ (226)

‘ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி’ (243)

‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’ ( 246)

‘அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்’ (292)

‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்’ (301)

‘பேம் நாம் உரும்என வரூஉம் கிளவி’ (365)

முதலியன காண்க.

ஈற்று ழகரஉகரம் நீண்டு அளபெடுத்து உகரஈற்றுச் சொல்லா தலுமுண்டு.

எ-டு : எழு - எழூஉ, குழு - குழூஉ, தழு - தழூஉ, பழு - பழூஉ

(தொ. எ. 261 நச்.)

உகரஈற்றுச் சுட்டுபெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__288}

உகரஈற்றுச் சுட்டுப்பெயர்கள் அது இது உது என்பன. அவை எழுவாய்த் தொடர்க்கண் இயல்பாகப் புணரும்.

எ-டு : அது குறிது, அது நன்று, அது வலிது (தொ.எ. 257நச்.)

உருபுபுணர்ச்சிக்கண் அது முதலிய சுட்டுப்பெயர்கள் இறுதி உகரம் கெட்டு அன்சாரியை பெற்று உருபுகளொடு புணரும். நான்கனுருபிற்குச் சாரியை னகரம் றகரம் ஆகும்.

வருமாறு : அது + ஐ > அது + அன் + ஐ > அத் + அன் + ஐ = அதனை; அது + கு > அது + அன் + கு > அத் + அற் + கு = அதற்கு

அதனான், அதனின், அதனது, அதன்கண்; இதனை, உதனை, இதனான், உதனான், இதற்கு , உதற்கு - முதலாக ஒட்டிப் புணர்க்க.

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அது முதலிய சொற்கள் ஈற்று உகரம் கெட்டு அன்சாரியை பெற்று நாற்கணத்தொடும் இயல்பாகப் புணரும்,

எ-டு : அதன்கோடு, அதன்மயிர், அதன்வால், அதனழகு

(தொ.எ. 263 நச்.)

உகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: A01__289}

உகரஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும் .

எ-டு : கடுக்காய், கடுநன்மை, கடுவலிமை, கடுவருமை

(தொ. எ. 259 நச்).

எரு, செரு என்ற சொற்கள் அம்முச்சாரியை பெறும். செரு என்ற சொல்லின் சாரியை அம்மின் மகரம் கெட, அகரம் மாத்திரம் செரு என்பதனொடும் புணர, வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், ஏனைய கணம் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : எருவங்குழி, எருவஞ்சேறு, எருவந்தாது, எருவம்பூழி;

எருவ ஞாற்சி, எருவ வன்மை; எருவ வருமை;

செருவக்களம், செருவச்சேனை, செருவத்தானை செருவப்பறை; செருவ நன்மை, செருவ வன்மை, செருவ வெழுச்சி. (தொ.எ. 260 நச்.)

சிறுபான்மை எருக்குழி, செருக்களம். எனச் சாரியை பெறாது வல்லெழுத்து மிக்கு முடிதலும், எருங்குழி - என மெல் லெழுத்து மிகுதலும் கொள்க.

சிறுபான்மை, உருபுபுணர்ச்சிக்குப் பயன்படும் இன்சாரியை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்குப் பயன்படுதலுமுண்டு.

எ-டு : எருவினை, எருவின் குழி; செருவினை, செருவின் கடுமை (தொ.எ. 260 நச். உரை)

ஒடுமரப்பெயர், உதிமரப்பெயர் போல, வன்கணம் வரின் மெல்லெழுத்து மிக்குப் புணரும்.

எ-டு : ஒடுங்கோடு, ஒடுஞ்செதிள், ஒடுந்தோல், ஒடும்பூ

(தொ.எ. 262 நச். உரை)

சிறுபான்மை ஒருவங்காடு என்றாற்போல அம்முப் பெறுதலுமுண்டு. (நச். உரை)

எழுவின்புறம், கொழுவின் கூர்மை - என இவையும் இன்சாரியை பெற்றன.

உது + காண் = உதுக்காண்-என வல்லெழுத்து மிக்கே வருதலும் கொள்க. (263 நச். உரை)

உகரச்சுட்டு -

{Entry: A01__290}

உகரம் எதிர்முகமின்றிப் பின்நிற்கும் பொருளையும் சுட்டும் எனக் காண்க. உகரம் அவ்வாறு சுட்டிநிற்பதை ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ (குறள் 620) என்பதற்குப் ‘பின் பக்கமாய் முதுகு காட்டக் காண்பர்’ எனப் பொருள் கூறுவதால் காண்க. (நன். 66 இராமா.)

உகரம் நடுவிலுள்ள பொருளையும் (‘அவன் இவன் உவன்’) மேலுள்ள பொருளையும் (உம்பர்) குறித்து வருதலும் கொள்க.

உகரச்சுட்டுப் புணர்ச்சி -

{Entry: A01__291}

உகரச்சுட்டு வன்கணம் வரின் வந்த வல்லெழுத்து மிக்கும், ஞநம முதற்கண் வரும் சொற்கள் வருமொழியாக வரின் அவ்வந்த மெல்லெழுத்து மிக்கும், யகர வகரங்கள் வரினும் உயிர்வரினும் வகரம் மிக்கும், செய்யுளில் உகரம் நீண்டும் புணரும்.

எ-டு : உக்கொற்றன், உச்சாத்தன், உத்தேவன், உப்பூதன்; உஞ்ஞாண், உந்நூல், உம்மணி; உவ்யாழ், உவ்வட்டி; உவ்வரசு; ஊவயினான. (தொ. எ. 255,256 நச்.)

உகரச்சுட்டின்முன் வகரம் வந்துழி, உயிர்முதல் வரின், தனிக்குறில் முன் ஒற்றாய் வகரம் இரட்டும்.

உ + அரசு > உவ் + அரசு > உவ் + வ் + அரசு = உவ்வரசு

உகரம் குறுகுஇடன் ஆறு -

{Entry: A01__292}

ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர்மொழி, இடைத் தொடர் மொழி, ஆய்தத்தொடர்மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி-என்ற ஆறு இடங்களிலும் உகரம் குறுகிக் குற்றுகரமாகும்.

எ-டு : நா கு, வர கு, தெள் கு, எஃ கு, கொக் கு, குரங் கு - என முறையே காண்க. (தொ. எ. 406 நச்.)

உகரம் நகரத்தொடு நவிலாமை -

{Entry: A01__293}

உகரம் தானே நின்றும் பிறமெய்களொடு நின்றும் பயில்வ தன்றி, நகரத்தொடு பயிலாது. நகரம், பொருந - .நா - பொருநி - நீ - பொருநூ, (நூ) -நே - நை - நொ - நோ - என்று பிறஉயிர்க ளொடு கூடி ஈறாமாறு காண்க.

(பொருநி, பொருநூ - ஒப்பிட்டு; நூ - எள்)

நகரஈறு வருமொழியொடு புணரும்வழியே உகரச்சாரியை பெற்றுப் பொருநுக் கடிது என்றாற்போல வரும். எனவே, இயல்பாக ஒருமொழிக்கண் உகரம் நகரத்தொடு கூடி மொழி யிறுதிக்கண் வாராது என்பது. (தொ. எ. 74 நச்)

உகரம் நிறைதல் -

{Entry: A01__294}

தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம், வருமொழி நிலை மொழியொடு புணர்ந்துவரும் அல்வழி வேற்றுமைப் பொருள்நிலைகளில், இருமொழிக்கண்ணும் இடைவருதற் கண் மாத்திரை மிக்கு முற்றியலுகரமாக ஒலிக்கும். அங்ஙனம் ஒலிக்குங்கால், வல்லொற்றுத் தொடர்மொழி ஈற்றுக் குற்றிய லுகரம் மாத்திரம், வருமொழியாய் வல்லெழுத்து வருவழி, அரைமாத்திரை அளவிற்றாகவே ஒலிக்கும். அதுவும் நிலை மொழியீற்றில் ககரஉகரம்(கு) நிற்க, வருமொழி முதலில் ககர வருக்கம் வரும்வழியே தான் அரை மாத்திரை அளவிற் றாதலு முண்டு. (‘நிலையும்’ என்பது நச். பாடம்)

எ-டு : உண் டு சென்றான் - ஒரு மாத்திரை; செக் குக் கணை - அரை மாத்திரை; சுக் குக் கொடு - அரை மாத்திரை. (தொ.எ. 409, 410 இள. உரை) ( எ. ஆ. பக். 163, 165)

உகரம் வகரத்தொடு வாராது எனல் -

{Entry: A01__295}

கனவு, அரவு, நிலவு, இரவு, இறவு, புதவு - முதலிய சொற்கள் முறையே கனா, அரா, நிலா, இரா, இறா, புதா - முதலிய ஆகார ஈற்றுச் சொற்களே.

இவை செய்யுட்கண் ஆகாரம் குறுகி உகரம் பெற்றுக் கனவு, அரவு - முதலியவாக வரும். புணர்வு, சார்வு, சேர்வு, சோர்வு, அளவு, தளர்வு - முதலிய வுகரஈற்றுச் சொற்கள் தொடக்கத்தில் புணர்பு, சார்பு, சேர்பு, சோர்பு, அளபு, தளர்பு முதலாகப் புகரஈற்றுச் சொற்களே என்பது உய்த்துணரப்படும், இவ்வாறு பகரத்தை வகரமாக ஒலிக்கும் இயல்பினானே, வட சொற் களிலும் ஆரியசொற்களிலும் உள்ள பகரம் வகரமாக ஒலிப்ப தாயிற்று, கோபம் - கோவம், ஆபத்து - ஆவத்து, தபம் - தவம், ஆதபன்-ஆதவன், பாதபம்- பாதவம் என வருதல் காணப் படும்.

உகரம் வகரத்தொடு வரும் என்பார் கதவு,கனவு முதலிய உகரவிகுதி பெற்றவற்றையும் இயல்பான சொற்களாகவே கொண்டனர். (எ. ஆ. பக். 70)

‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ -

{Entry: A01__296}

ஞணநமலவளன - என்ற எட்டு மெய்களையும் இறுதியாக வுடைய முதனிலைத் தொழிற்பெயர்கள், வருமொழி வன்கணத்தொடும் மென்கணத்தொடும் இடைக்கணத்து வகரத்தொடும் புணரும்வழி உகரச்சாரியை பெறும்; வருமொழி முதற்கண் யகரமோ உயிரெழுத்தோ வரின் உகரச்சாரியை பெறாது இயல்பாக முடியும்.

எ-டு : மண்: மண்ணுக் கடிது; மண்ணு மாண்டது; மண்ணு வலிது, மண் யாது; மண்ணெழுந்தது.

மண் - கழுவுதல் என்னும் பொருளது. (தொ. எ. 163 நச்.)

உச்சகாரம் இருமொழிக்கு உரித்தாதல் -

{Entry: A01__297}

மொழியிறுதியில் முற்றியலுகரமாக வரும் உகரத்தொடு கூடிய சகரமெய்யாகிய சு என்பது தமிழில் இரண்டு சொற்களிலேயே வரும். அவையாவன உசு, முசு - என்பன. உசு-உளு; முசு- குரங்கின் வகை.

பசு என்பது ஆரியச் சிதைவாதலின் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளப்பட்டிலது.

தமிழிலுள்ள ஏனைய சொற்களின் ஈற்றில் வரும் சுகரங்கள் எல்லாம் குற்றியலுகரங்களாம். (தொ. எ. 75 நச்.)

உச்சகாரமொடு நகாரம் சிவணல் -

{Entry: A01__298}

தமிழில் சு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உசு, முசு, என்ற இரண்டே. அதுபோல, நகரமெய்யீற்றுச் சொற்களும் இரண்டே உள. அவையாவன பொருந், வெரிந் - என்பன. பொருந் - ஒப்பிடுதல்; வெரிந் - முதுகு. (தொ. எ. 79 நச்.)

உடம்படுமெய் -

{Entry: A01__299}

நிலைமொழியீற்று உயிரையும் வருமொழிமுதல் உயிரையும், உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், இணைத்து வைத்தற்கு இடையே வரும் மெய் உடம்படுமெய் எனப்படும். ‘உடம்படுமெய் வேண்டும்’ என்னாது ‘உடம்படுமெய் வரையார்’ என்று தொல்காப்பியனார் கூறுதலின், உடம்படு மெய் யாண்டும் பெற்றே வரல் வேண்டும் என்ற வரையறை இல்லை. இதனை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், இலக்கண விளக்க ஆசிரியர் முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். இது கன்னட மலையாள மொழிகளிலும் கொள்ளப்படுகிறது.

இ ஈ ஏ ஐ - முன் யகரமும், அஆஉஊஓஒள முன் வகரமும் வருகின்றன. ஆகார ஓகாரங்களின் முன் ஒரோவழி மாயிரு ஞாலம் - கோயில் - என்றாற்போல, யகர உடம்படுமெய் வருதலும் கொள்க.

‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ என்று முத்துவீரியம் மொழிகிறது. (புணரியல் 24)

இடையண்ணத்தில் பிறப்பனவாகிய இஈஎஏஐ- இவற்றுக்கு முன், இடையண்ணத்தில் பிறப்பதாகிய யகரமும், இதழில் பிறப்பனவாகிய உ ஊ ஒ ஓ ஒள - இவற்றுக்குமுன் இதழில் பிறப்பதாகிய வகரமும் உடம்படுமெய்யாக வருகின்றன.

அஆ- இரண்டும் இவ்விடங்களுள் ஒன்றினும் பிறப்பன அல்ல ஆயினும், வாய் அங்காந்து ஒலிக்கப் பிறக்கும் அவ்வொலி இதழிடையேயன்றி ஒலிப்பது இயலாதாகலின், அவ்வெழுத் துக்களின் முன் இதழில் தோன்றும் வகரம் வருவதாயிற்று.

அ ஆ இ ஈ எ ஏ ஐ ஓ - இவ்வீறுகளுக்கு முன் யகரம் வரும் எனவும், உஊஓஒள- இவற்றின் முன் வகரம் வரும் எனவும் சப்தமணி தர்பணம் (55) கூறுகிறது. தெலுங்கு மொழியிலும் அகரஆகார ஈறுகளுக்கு முன் யகரம் வருகிறது.

நிலைமொழியீறு தாலவ்யமானால் யகரமும், ஓஷ்ட்ரஸ்வர மானால் வகரமும் உடம்படுமெய்யாக வரும் என்று கேரளபாணிநீயம் கூறுகிறது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற நான்கு மொழி களிலும் ஆகார ஒளகாரங்களின் முன்னர் யகரம் வருதல் அறியப்படுகிறது. இவற்றின் முன் யகரம் வருமொழி நோக்கி வந்தது எனல் அமையும். வடமொழியில் இகர ஈகாரங்களின் முன்னர் இகர ஈகாரம் அல்லாத பிற உயிர் வரின், அந்த இகர ஈகாரங்கள் யகரம் ஆகும்; உகர ஊகாரங்கள் இவ்வாறே வகரம் ஆகும்.

எ-டு : ததி + அத்ர = தத் யத்ர; நதீ + ஏஷா = நத் யேஷா; மது + அத்ர = மத் வத்ர; வது + ஆனனம் = வத் வானனம்

தமிழில் இ ஈ உ ஊ கெடாமல் நிற்க, முறையே யகர வகரம் வரும். வடமொழியில் அவை கெட யகர வகரம் வரும். இஃதொன்றே வேறுபாடு. (எ. ஆ. பக். 107, 108, 109)

‘னகார விறுவாய்’ - தொ.எ.9; ‘அவ் வியல் நிலையும்’ - எ.12; ‘ஆ யிரு திணையின்’ - சொ. 1; ‘ஆ யிரண் டென்ப’ - எ.117; ‘ஆ வின் இறுதி’ - 120; ‘இல்லா வெல்லா மெய்யும்’ - 17; ‘நொடி யென வவ்வே’ - 7; ‘கூட்டி யெழுஉதல்’ - 6; ‘ஈ யாகும்’ - சொ. 123; ‘உரு வாகி’ - எ.17; ‘அம்மூ வாறும்’ - 22; ‘ஏ ஒள வென்னும்’ - எ.173; ‘உளவே யவ்வும்’ - சொ. 68; ‘மூப்பே யடிமை’ - 57; ‘உயர்திணைப்பெயரே யஃறிணை’ - 117; ‘அரை யளபு குறுகல்’ - எ.13; ‘ஓ ஒள வென விசைக்கும்’ - 87

அ உ ஊ ஓ ஒள - இவற்றின் பின்னர் வகரமும், இ ஈ ஏ ஐ - இவற்றின் பின்னர் யகரமும், ஆவின் பின்னர் யகரவகரங் களும் வரும் என்பதைக் காண்கிறோம். (எ. கு. பக். 144)

‘உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்’ எனத் தொல்காப்பியனார் பொதுப்பட ஓதினாரேனும், உயிர்களை உடம்படுத்தற்குரியன இடப்பிறவியான் அவ்வுயிரோடு ஒத்த இடையெழுத்து என்பதும், அவற்றுள்ளும் மொழி முதற்கண் வருதற்குரியன யகர வகரங்களே யாதலின் அவையே ஈண்டைக்கு வரப்பெறும் என்பதும் பெறப்படும். அவற்றுள் ளும் பெரும்பாலும் இஈஏஐ - முன் யகரமும், ஏனை உயிர் களின் முன் வகரமும் வரும் என்பது ஏற்புழிக்கோடல் என்பதனால் பெறப்படும். (சூ. வி. பக். 42)

உயிரோடு உயிர்க்கு மயக்கம் இல்லாததினாலே, அவ்விரண்டும் உடன்படுதற்பொருட்டு இடையே வரும் மெய்யினை உடம்படுமெய் என்றார். இனி, வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனினும் அமையும். இந்த உடம்படுமெய்யின் தோற்றம், தோன்றல் விகாரம் போலாகாது, இடைவிட்ட உலோகங்களை இணைக்கும் பற்றாசு போல வருதலின், இயல்பு புணர்ச்சி. (நன். 162 இராமா.)

நிலைமொழியீற்றுயிர் இ ஈ ஐ - என இருப்பின் யகர உடம்படு மெய்யும், ஏனைய உயிரீறுகளின் முன் வகர உடம்படு மெய்யும், ஏகார ஈற்றின் முன் இவ்விரண்டும் இடையே வரும்.

எ-டு : மணி + அழகிது = மணியழகிது; ஆ + அழகிது = ஆவழகிது; சே + அழகிது = சேயழகிது, சேவழகிது (162 இராமா.)

‘உடம்படுமெய் அன்று’ எனக் கூறும் வகரம் -

{Entry: A01__300}

‘விண்வத்துக் கொட்கும்’, ‘செல்வுழிச் செல்க’, ‘சார்வுழிச் சார்ந்த தகையன்’- என மெய்யீற்றின் முன் உயிர் வருங்கால் (விண் + அத்து, செல் + உழி, சார் + உழி), இங்ஙனம் ‘உடம்படு மெய் அன்று’ எனக் கூறும் வகரம் தோன்றின. (நன். 163 சங்கர.)

உடம்படுமெய் உயிர் ஈற்றுக்கே வருதல் -

{Entry: A01__301}

‘விண்வத்துக் கொட்கும்’ என மெய்யீற்றின் முன்னரும் உயிர் வரின் உடம்படுமெய் பெறும் என்பாருமுளர். உயிர்ஈற்றின் முன் உயிர்முதல்வரின், உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மை யின் புணர்ச்சியின்றி விட்டிசைத்து நிற்கும் ஆதலின், உடம் படாத அவ்விரண்டும் உடம்படுதற்பொருட்டாக இடையே வரும் மெய்யை உடம்படுமெய் என்ப ஆதலின், வரும் உயிரேறி ஒற்றுமைப்பட்டுப் புணர்தற்குரிய மெய்யீற்றின் வழித்தோன்றும் மெய்யை உடம்படுமெய் என்பது பொருந் தாது. உடன்படல் ‘உடம்படல்’ என மரீஇயிற்று. ‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை’ (குறள் 890) எனவருதல் காண்க. உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப் பொருள் கூறுதலும் ஒன்று. (நன். 162 சங்கர.)

உடம்படுமெய் செய்கை ஓத்தில் கூறப்படாமை -

{Entry: A01__302}

நிலைமொழி உயிரீறாக வருமொழி உயிர் முதலாக வரின், உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையான், அவ்வீருயிர் களையும் இணைத்து உடம்படுத்தற்கு இடையே அடுத்துவரும் மெய்களாகிய யகர வகரங்கள் உடம்படுமெய்களாம். ஆகவே, விண்+ அத்து = விண்வத்து - என நிலைமொழியீற்றில் மெய் நிற்புழி இடையே வரும் வகரம் எழுத்துப்பேறேயன்றி உடம்படுமெய் அன்றாம்.

தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதல் நான்கு இயல்கள் கருவி ஓத்து; அடுத்த ஐந்து இயல்களும் செய்கை ஓத்து.

உடம்படுமெய் இருமொழிகளையும் உடம்படுவித்தற்கு வரும் கருவியாதலின், தொல்காப்பியனார் உடம்படுமெய்யைக் கருவி ஓத்து நான்கனுள் நான்காவதாகிய புணரியலில் கூறி னார். இது புணர்மொழிச் செய்கையாயின், செய்கை ஓத்தில் கூறப் பட்டிருக்கும். (சூ. வி. பக். 42)

ஆதலின், உடம்படுமெய் பெறுதல் இயல்புபுணர்ச்சி வகையுள் ஒன்று.

உடம்படுமெய் புணர்பு எழுத்துக்கள் -

{Entry: A01__303}

உயிரான் முடிந்த சொல்லும் உயிரால் தொடங்கின சொல்லும் தம்முள் புணருங்கால், அவ்விரண்டு உயிர் நடுவே ஒற்றிசைத்தல் வேண்டும் இசைப்படும் எழுத்தே புணர்பெழுத்து எனப்படும்.

இ ஈ எ ஐ - என்னும் நிலைமொழி உயிரீற்றின் முன் வரு மொழிப் பன்னீருயிரும் புணரில், யகர உடம்படுமெய்யாம். அஆஉஊஏஓஒள- என்னும் நிலைமொழி உயிரீற்றின் முன் வருமொழிப் பன்னீருயிரும் புணரில் வகர உடம்படுமெய் யாம். ஏகார ஈற்றின் முன் பன்னீருயிரும் புணரில் இவ்விரு விதியும் பெறும். (தொ. வி. 20 உரை)

‘உடல்மேல் உயிர்வந்து ஒன்று’தல் -

{Entry: A01__304}

நிலைமொழி ஈறு மெய்யெழுத்தாக வருமொழி முதல் உயிரெழுத்தாயின், வருமொழிமுதல் உயிர் நிலைமொழி யீற்றுமெய்யை ஊர்ந்து உயிர்மெய்யாய்ப் புணரும். இஃது இயல்பு புணர்ச்சியாம்.

எ-டு : ஆல்+ இலை = ஆலிலை (நன். 204)

உடன்நிலை மெய்ம்மயக்கம் -

{Entry: A01__305}

சொற்களில் ரகரழகர ஒற்றுக்கள் நீங்கலான ஏனைய பதினாறு ஒற்றுக்களும் தம்முன் தாமே வந்து சொல்லமையும் நிலையில் அவற்றின் சேர்க்கை உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

எ-டு : காக்கை எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, கிண்ணம், தத்தை, வெந்நெய், உப்பு, அம்மை, வெய்யர், எல்லி, தெவ்வர், கள்ளி, கொற்றி, கன்னி - என முறையே காண்க. (தொ. எ. 30 நச்.)

ரழ - அல்லாத மெய்கள் ஒருமொழியிலும் இருமொழியிலும் தம்மொடு தாம் மயங்கும் மயக்கம் உடனிலை மயக்கமாம்.

எ-டு : பக்கம், தச்சன், பட்டம், சத்தம், கப்பம், செற்றம், அங்ஙனம், அஞ்ஞானம், கிண்ணம், வெந்நீர், கம்மம், கன்னம், வெய்யர், வெல்லம், தெவ்வர், கள்ளம். (நன். 118)

உடன்நிலை மொழி -

{Entry: A01__306}

நிலைமொழியோடு ஓசை இயைந்து நிற்றலையுடைய வருமொழி. எ-டு : மீக்கோள், மீப்பல், மீங்குழி, மீந்தோல் - இவற்றுள் கோள், பல் - முதலிய வருமொழிகள் உடன்நிலை மொழிகளாம். (தொ. எ. 251 நச். உரை)

உடுக்கை : சொல்லமைப்பு -

{Entry: A01__307}

உடுக்கை - உடுத்துதல் என்னும் தொழிலையும் உடுக்கப்படும் ஆடையையும் குறிக்கும். உடுக்கை என்பது உடுத்துதல் என்னும் புடைபெயர்ச்சியை உணர்த்துங்கால், ‘கை’ விகுதி யுடையது. (உடு+க்+கை).அஃது உடுக்கப்படும் ஆடையை உணர்த்துங் கால், ‘ஐ’ விகுதியுடையது (உடு+க்+க்+ஐ) (சூ. வி. பக். 33)

கைவிகுதி தொழிற்பெயரை உணர்த்துவது; ஐவிகுதி செயப்படு பொருளை உணர்த்துவது.

உடைப்பொருள் நீரவாய் வரும் முதனிலை -

{Entry: A01__308}

கருமையன் - செம்மையன் - ‘பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்’ (திருவா. 5:93) - எனவும், வலைச்சி -புலைச்சி - எனவும், கறுப்பன் - சிவப்பன்- அளியன்- அன்பன்- எனவும் வரும் பண்புப் பகுபதங்கட்குக் கருமை செம்மை இன்மை உண்மை என்ற பண்புப் பெயர்களும், வலைமை - புலைமை - என்ற சாதிப்பண்பு உணர நிற்கும் பெயர்களும், கறுப்பு சிவப்பு அளி அன்பு - என்ற பல்வேறு வகைப்பட்ட பண்புப்பெயர்களும் நெறிப்பட வாராது உடைப்பொருள் நீரவாகி வரும் முதனிலையாகக் கொள்ளப் படும். (இ. வி. 45 உரை)

‘உடைமையும் இன்மையும் ஒடுவயின்’ ஒத்தல் -

{Entry: A01__309}

ஏனை உருபுகள் வரும்வழி வேண்டும் சாரியை பலவற்றையும் மூன்றனுருபாகிய ஒடு வேண்டாது. வரும்.

மகர ஈற்று மொழிகள், இரண்டனுருபு நான்கனுருபு முதலிய வற்றொடு புணருமிடத்து, இடையே அத்துச்சாரியை பெற்றே வரும். ஒடுஉருபுக்கு இவ்விதி விலக்காகும்.

எ-டு : மரம் + ஐ = மரத்தை; மரம் + கு = மரத்துக்கு; மரம் + ஒடு = மரத்தொடு, மரமொடு

கேரள பாணினீயத்துள்ளும், தனத்தை, தனத்தொடு தன மொடு, தனத்திற்கு முதலிய உதாரணங்கள் காட்டப்பட் டுள்ளன.

உருமினை, வளத்தினை, காலத்தினை - உருமிற்கு, வளத்திற்கு, காலத்திற்கு, எனச் சாரியை பெற்றே வருவன, ஒடு உருபிற்கு, உருமினொடு உருமொடு - வளத்தினொடு வளமொடு - காலத்தினொடு காலமொடு - எனச் சாரியை பெற்றும் பெறாமையும் வருதல் கொள்ளப்படும்.

காமமொடு (முருகு அடி 134) சீற்றமொடு (பதிற். 16) ‘காலமொடு’ (தொ.சொ.250 சேனா.) எனப் பண்டைய செய்யுள்களிலும் தொல்காப்பிய நூற்பாவிலும் காணலாம்.

பலவற்றொடு என்பது போலவே, பலவொடு என வருதலும் தொல்காப்பியர் கருத்தாம். நெஞ்சமொடு (தொ. பொ. 40, 113, 204 நச்.), பக்கமொடு (41), கரணமொடு (142), ஆர்வமொடு (146), உள்ளமொடு (146,147), சுற்றமொடு (192) - எனத் தொல்காப் பியத்தும் மகர ஈற்றுச் சொற்கள் பல சாரியை இன்றி வருதல் காணப்படுகிறது. ஆயின் பல என்பது பலவொடு என்று அதன்கண் காணப்படாமை நோக்க, பலவற்றொடு என அது சாரியை பெற்றே வருதல் வேண்டும் என்பது நச். கருத்து. (எழு. 132 நச்.) (எ. ஆ. பக். 103,104)

பல்ல, பல, சில, உள்ள, இல்ல - என்ற பெயர்கள் ஒடு உருபேற்குமிடத்து வற்றுச்சாரியை பெற்றே வரும்.

வருமாறு: பல்லவற்றொடு, பலவற்றொடு, சிலவற்றொடு, உள்ளவற்றொடு, இல்லவற்றொடு. (தொ. எ. 132, 174, நச்.)

உண்ணா குதிரை உண்ணாக் குதிரை , உண்ணாகிடந்தன -உண்ணாக் கிடந்தன : வேறுபாடு -

{Entry: A01__310}

உண்ணா குதிரை(கள்) என்புழி, ‘உண்ணா’உண்ணாதவை என வினையாலணையும் பெயராகப் பொருள்படும். உண்ணா தனவாகிய குதிரை(கள்) என்க. ஆண்டு வலி மிகாது. ‘உண்ணா’ முற்றாய வழியும் அது.

உண்ணா கிடந்தன என்புழி, ‘உண்ணா’ உண்ணாதனவாய் என முற்றெச்சமாகப் பொருள்படும். உண்ணாதனவாய்க் கிடந்தன என்க. ஆண்டும் வலி மிகாது.

எதிர்மறைப் பெயரெச்சமும் செய்யா என்றும் வாய்பாட்டு வினையெச்சமுமாக ‘உண்ணா’ என்பது நிற்பின், வருமொழி வல்லெழுத்து மிகப்பெறும், உண்ணாக் குதிரை- உண்ணாத குதிரை; உண்ணாக் கிடந்தன- உண்டு கிடந்தன. (நன். 171 சங்கர.)

உண்மை செப்பும் உண்டு என்னும் சொல்லின் புணர்ச்சி -

{Entry: A01__311}

உண்மை செப்புதலாவது, ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மை யாகிய பண்பை உணர்த்துதல். இது ‘பொருண்மை சுட்டல்’ எனவும்படும். (தொ. சொ. 66 சேனா.)

உண்டு என்பது நிலைமொழியாக வருமொழி முதலில் வன்கணம் வரின், உண்டு என்பது இயல்பாகப் புணர்தலும், உண்டு என்பதன் இறுதி கெட்டு ணகரம் ளகர ஒற்றாகி உள் என நின்று வருமொழியொடு புணர்தலும் என்ற இரு நிலைமையும் பெறும்.

வருமாறு : உண்டு+பொருள் = உண்டு பொருள், உள் பொருள்.

உண்டு என்பதன் முன் இயல்புகணம் வருவுழிக் கேடும் திரிபும் இன்றி, உண்டு ஞானம் - உண்டு வட்டு - உண்டு அடை (உண்டடை) - என இயல்பாகப் புணரும். (தொ. எ. 430 நச்.)

உத்தேசம், விதேயம் என்பன -

{Entry: A01__312}

ஒவ்வொரு நுற்பாவின் தோற்றத்துக்கும் உத்தேசியமும் விதேயமும் இன்றியமையாதன. உத்தேசியம் நுதலியது (கருதியது). விதேயம் - உணர்த்தியது. தெரிந்த பொருளை நுதலித் தெரியாத பொருளைக் கூறுதலே முறையாதலின், நுதலிய பொருளாகிய உத்தேசியம் மாணாக்கர்க்குத் தெரிந்ததாயும், உணர்த்த வேண்டிய பொருளாகிய விதேயம் தெரியாததாயும் இருக்கும். பொது இயல்பாய்த் தெரிந்தது நுதலிய பொருளாய் வருவதும், சிறப்பியல்பாய்த் தெரிய வேண்டியது உணர்த்த வேண்டிய பொருளாய் வருவதும் ஆம்.

எ-டு : கோயில் சாத்தனால் கட்டப்பட்டது என்ற தொடரில், கோயில் என்பது நுதலிய பொருளாகிய உத்தேசியம்; ‘சாத்தனால் கட்டப்பட்டது’ என்பது உணர்த்திய பொருளாகிய விதேயம். ‘கோயில்’ தெரிந்ததாயினும், இன்னாரால் கட்டப்பட்டது என்று தெரியாதானுக்கு உணர்த்திய செய்தி தெரியாததாம்.

‘எழுத்தெனப்படுப அகர முதல னகர இறுவாய் முப்பஃது’ - இதன்கண், எழுத்து என்பது தெரிந்த பொருள்; முப்பஃது என்ற எண் தெரியாத பொருள். எழுத்து என்பதனைப் பொது வியல்பால் உணர்ந்த ஒருவனுக்குத் தமிழில் வழங்கும் எழுத் துக்கள் அகர முதல னகர இறுவாய் அமைந்த முப்பதே - என்றுணர்த்துவதே சூத்திரக் கருத்து ஆதலின், எழுத்து - உத்தேசியம், முப்பஃது- விதேயம் - பிறவும் அன்ன. (எ.ஆ.பக். 4,5)

உதி என்ற மரப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__313}

உதி என்ற மரப்பெயர் வருமொழி வன்கணம் வரின் ஒத்த மெல்லெழுத்து இடையே மிக்குப் புணரும்.

எ-டு : உதி ங்கோடு, உதி ஞ்செதிள் உதி ந்தோல், உதி ம்பூ.

பிற்காலத்து அம்முச்சாரியை பெற்று நாற்கணத்தொடும் புணரும் நிலையும் ஏற்பட்டது.

எ-டு : உதி யங்கோடு, உதி யமரம், உதி யவட்டை, உதி யஆரம் (உதியவாரம்) (தொ. எ. 243 நச்.)

உதுக்காண்: புணருமாறு -

{Entry: A01__314}

உது என்பதனொடு காண் என்ற சொல் புணரும்வழி, வல்லொற்று மிக்கு உதுக்காண் - என முடியும். (தொ. எ. 263 நச். உரை)

(இதற்கு உதனைக் காண்பாயாக என்று இரண்டு சொல்லாய்க் கொண்டு பொருள் கூறலுமுண்டு. இதனை ஒட்டி நின்ற இடைச்சொல்லாய் உங்கே என்று ஏழாம் வேற்றுமை இடப் பொருணர்த்துவது என்று கூறலுமுண்டு. பரி. குறள் 1185

‘உப்பகாரம் இருவயின் நிலையல்’ -

{Entry: A01__315}

பகரமெய்யை ஊர்ந்து வரும் முற்றுகரச் சொல் ஒன்றே. அஃது ஏவல் வினை, தொழிற்பெயர் ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மை யுடைத்தாம்.

அது ‘தபு’ என்னும் சொல். அது ‘கெடுவாயாக’ என ஏவற் பொருட்டாக வருவது; பெயராமிடத்துத் ‘தவறு’ என்பது பொருள். அஃது இக்காலத்துத் தப்பு என வழங்குகிறது. (தொ. எ. 76. ச.பால.)

உப்பகாரம் ஒன்று -

{Entry: A01__316}

பு என்ற முற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொல் ‘தபு’ என்ற ஒன்றே ஆகும் அதனைப் படுத்துக் கூறின், ‘நீ சh’ என்ற தன்வினைப் பொருள்படும்; எடுத்து ஒலிப்பின், ‘நீ ஒன்றனைச் சாவப்பண்’ என்று பிறவினைப் பொருள்படும். (தொ. எ. 76 நச்.)

உப்பகாரமொடு ஞகாரையும் அற்று’ ஆதல் -

{Entry: A01__317}

பு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொல் தமிழில் ‘தபு’ என்று ஒன்றேயாய் இருத்தல் போல, ஞகார ஒற்றீற்றுச் சொல்லும் ‘உரிஞ்’ என ஒன்றேயாய் உள்ளது. ஆயின் தபு என்பது படுத்துக்கூறத் தன்வினையாகவும் எடுத்துக்கூறப் பிறவினை யாகவும் பொருள்படுதல் போல, உரிஞ் என்ற சொல் எடுத்தல் படுத்தல் ஒலிவேற்றுமையான் பொருள் வேற்றுமை தாராது. (தொ. எ. 80 நச்.)

உப்பும் நீரும் போல -

{Entry: A01__318}

உயிர்மெய்யில், அரைமாத்திரை அளவு கொண்ட மெய் யொலி, ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் கொண்ட உயிரொலியில், உப்பானது நீரில் கரைந்து தன்னளவு கெடுதல் போல, கரைந்து போகவே, உயிரின் மாத்திரையே உயிர்மெய்யினது மாத்திரையாக ஒலிக்கப்பெறும். (தொ. எ. 18 நச். உரை)

உபசர்க்கங்கள் -

{Entry: A01__319}

பிர : பிரயோகம் ஆ : ஆகாரம்

பரா : பராபவம் நி : நிவாசம்

அப : அபகீர்த்தி அதி : அதிமதுரம்

சம் : சங்கதி அபி : அபிவிருத்தி

அநு : அநுபவம் சு : சுதினம்

அவ : அவமானம் உற் : உற்பாதம்

நிர் : நிர்க்குணம் பிரதி : பிரதிகூலம்

துர் : துர்க்குணம் பரி : பரிபாகம்

வி : விகாரம் உப : உபயோகம்

இப்பதினெட்டும் வடமொழிகளுக்கு முதலடுத்து வெவ்வேறு பொருளை விளக்கிவரும் உபசர்க்கங்களாகும். (தொ. வி. 86 உரை)

உம், கெழு என்ற சாரியைப் புணர்ச்சி -

{Entry: A01__320}

உம் என்பதும், கெழு என்பதும் சாரியையாகவும் வரும்.

‘வானவரி வில்லுந் திங்களும் போலும்’ - உம்மின் மகரம் வருமொழி நோக்கி நகரஒற்றாகவும் திரியாமல் இயல்பாகவும் அமைந்தது. இதற்கு ‘வானவரி வில்லிடைத் திங்கள்’ என ஏழனுருபு விரித்துப் பொருள் செய்தல் வேண்டும்.

‘மாநிதிக் கிழவனும் போன்ம்’ (அகம். 66) மாநிதிக் கிழவனைப் போலும் என்று பொருள் செய்க.

‘கல்கெழு கானவர்’ (குறுந். 71) கல்லைக் கெழீஇயின கானவர் என்று பொருள் செய்க.

‘கான்கெழு நாடு’ (அகநா. 93) கானைக் கெழீஇயின நாடு என்று பொருள் செய்க.

‘பூக்கேழ்த் தொடலை’ (அக. 28) ‘துறைகேழ் ஊரன்’ (ஐங். 11) ‘செங்கேழ் மென்கொடி’ (அக. 80) - கெழு என்பது கேழ் எனத் திரிந்து நின்றது. (தொ. எ. 481 நச். உரை)

‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ புணருமாறு -

{Entry: A01__321}

இடையே உம் என்ற எண்ணிடைச்சொல் மறைய, உம்மைத் தொகையாய் நிற்கும் இருபெயர்கள் கூடிய தொகைச்சொற்கள், நிலைமொழி ஆகார ஈற்றுச் சொல்லாயின், வருமொழி வன்கணத்தில் தொடங்கின், இடையே எழுத்துப்பேறள பெடையாகிய அகரமும் வல்லெழுத்தும் மிக்குப் புணரும். இயல்புகணம் வருமொழியாக வரினும் அகரம் பெறும்.

எ-டு : உவா+பதினான்கு = உவாஅப்பதினான்கு (வன்கணம்)

இரா + பகல் = இராஅப்பகல் (வன்கணம்)

இறா + வழுதுணங்காய் = இறாஅ வழுதுணங்காய் (இயல்புகணம்)

இவை முறையே - உவாவும் பதினான்கும் எனவும், இரவும் பகலும் எனவும், இறாவும் வழுதுணங்காயும் எனவும் பொருள்பட்டவாறு. (தொ. எ. 223 நச். உரை)

உய்த்துவிடும், காட்டிவிடும் : சொல்லிலக்கணம் -

{Entry: A01__322}

உய்த்து என்ற வினையெச்சத்தொடும் காட்டி என்ற வினை யெச்சத்தொடும் விடு என்ற விகுதி புணர்ந்து முதனிலைத் தன்மைப்பட்டு உய்த்துவிடு காட்டிவிடு என்ற முதனிலை களாகி, பின்னர் உம் முதலிய விகுதிகளொடும் சேர்ந்து, உய்த்துவிடும் காட்டிவிடும் - முதலிய வினைச்சொற்களை உண்டாக்கும். இச் சொற்களைப் பரிமேலழகர் முதலாயினார் ‘ஒரு சொல்’ என்றமை, இவை உய்த்துவிடு காட்டிவிடு - என்று முதனிலைகளோடு இணைந்து மேல் விகுதிகளொடு சேர்ந்து சொல்லை உண்டாக்குதலினாலேயாம். இங்ஙனம் விடு போன்ற விகுதிகள் பகுதிகளோடு இணைந்து பகுதித் தன்மைப் பட்டு மேல்வரும் விகுதிகளோடு இணைதல் வடநூலார்க்கும் உடன்பாடாம். (சூ. வி. பக். 42)

உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__323}

உயிரீறும் புள்ளியீறுமாக வரும் உயர்திணைப் பெயர்கள், வருமொழியில் நாற்கணங்களும் வரினும், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் பெரும்பான்மையும் இயல்பாகப் புணரும்.

எ-டு : நம்பி குறியன்; நம்பிகை

அவள் குறியள்; அவள்கை

கபில பரணர், மருத்துவமாணிக்கர் - நிலைமொழி னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன.

ஆசீவகப் பள்ளி, நிக்கந்தக் கோட்டம் - நிலை மொழி னகரஈறு கெட்டு வல்லெழுத்து மிக்குப் புணர்ந்தன.

ஈழவக் கத்தி, வாணிகத் தெரு - நிலைமொழி ரகர ஈறு கெட்டு, வல்லெழுத்து மிக்குப் புணர்ந்தன.

பிரம கோட்டம், பிரமக் கோட்டம் - நிலைமொழி னகரஈறு கெட்டு, வல்லெழுத்து உறழ்ந்தது.

பலர் + சங்கத்தார், பலர் + அரசர் - பல்சங்கத் தார், பல்லரசர் - இவை ரகரஈறும் அதன்முன் நின்ற அகரமும் கெட்டுப் புணர்ந்தன.

இகர ஈற்று உயர்திணைப் பெயர் வேற்றுமையிலும் அல்வழியி லும் மிக்கு முடிதல் பெரும்பான்மை.

எ-டு : எட்டிப்பூ, நம்பிப்பேறு - ஆறாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி; நம்பித்துணை, செட்டிக்கூத்தன்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை;

ஐகார ஈறு சிறுபான்மை அல்வழிக்கண் மிக்குப் புணரும்.

எ-டு: நங்கைப் பெண், நங்கை ச்சானி (தொ. எ. 153, 154 நச். உரை)

ஆடூஉக் குறியன், மகடூஉ க் குறியள் - ஊகார ஈறு உகரமும் வல்லெழுத்தும் பெற்ற அல்வழிப் புணர்ச்சி. (தொ.எ. 265 நச். உரை)

ஆடூ உக்கை, மகடூ உக்கை - ஊகார ஈறு உகரமும் வல்லெழுத்தும் பெற்ற வேற்றுமைப் புணர்ச்சி (தொ.எ. 267 நச். உரை)

ஆடூவின்கை, மகடூவின்கை - ஊகாரஈறு இன்சாரியை பெற்ற வேற்றுமைப் புணர்ச்சி

(தொ.எ. 271 நச். உரை)

உயர்திணைப்பெயர்புணர்ச்சியிடத்து விகாரப்படுதல் -

{Entry: A01__324}

ஆடூஉ க் குறியன், மகடூஉக் குறியள் (சிறியன் சிறியள்,தீயன் தீயள், பெரியன் பெரியள் - என ஏனை வன்கணமும் கொள்க) எனவும், ஆடூஉக்கை, மகடூஉக்கை (செவி, தலை, புறம் - என ஏனை வன்கணமும் கொள்க) எனவும், எட்டிப்பூ எட்டிப் புரவு, காவிதிப்பூ காவிதிப்புரவு, நம்பிப்பூ நம்பிப்பேறு - எனவும் உயர்திணைப் பெயர்முன் சில மிக்கன.

மக்க ட் குணம், மக்கட்சுட்டு, மக்கட்டலை, மக்கட் புறம் - எனத் திரிந்தன.

கபிலபரணர், பலசான்றார் - என ஈறு (ன்,ர்) கெட்டு இயல்பாயின.

ஆசீவக ப் பள்ளி, கணக்காயப் பள்ளி, ஈழவக் கத்தி, கோலிகப் புடவை, வண்ணாரப் பெண்டிர் - என நிலைமொழி ஈறு (ர், ர்,ர், ன், ம் ) கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கன.

வாசுதேவ கோட்டம் வாசுதேவக் கோட்டம், பிரம கோட்டம் பிரமக் கோட்டம் - என நிலைமொழி ஈறு(ன்) கெட்டு வருமொழி வல்லினம் இயல்பும் மிகலுமாக விகற்பம் ஆயிற்று.

பார்ப்பனக்கன்னி, சேரி, தோட்டம், பிள்ளை, மரபு, வாழ்க்கை - என, (பார்ப்பான் என்னும்) நிலைமொழி ஈற்றயல் குறுகி அகரம் மிக்கது; வன்கணம் வருவழி வல்லினம் மிகலும், ஏனைய மெய்க்கணம் வருவழி இயல்பாதலும் கொள்க. (நன். 158 மயிலை.)

உயர்திணைப்பெயர், விரவுப்பெயர் கு, கண் உருபொடு புணர்தல் -

{Entry: A01__325}

உயர்திணைப்பெயர் குவ்வுருபு அடுத்தவழி வல்லெழுத்து மிகுதலும், கண் உருபு அடுத்தவழி மிகாமையும் உடைத்து. விரவுப்பெயர் நிலையும் அதுவே.

எ-டு : நம்பிக்கு; நம்பிகண்; நங்கைக்கு; நங்கைகண்; அவனுக்கு; அவன்கண்; அவளுக்கு; அவள்கண் - என உயர்திணைப் பெயர் கு, கண் - இவற்றொடு புணர்ந்தவாறு.

கொற்றிக்கு; கொற்றிகண் கோதைக்கு; கோதை கண்; தாய்க்கு; தாய்கண்; மகனுக்கு; மகன்கண் - என விரவுப்பெயர் கு, கண் இவற்றொடு புணர்ந்த வாறு. (தொ. எ. 114 நச். உரை)

உயர்திணை வினைச்சொல் முடிபு -

{Entry: A01__326}

உயர்திணை வினைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன உள.

உண்கு, உண்டு, வருது, சேறு, உண்பல், உண்டேன், உண்பேன் - என்னும் தன்மைவினைகள் கொற்றா - சாத்தா- தேவா- பூதா - ஞெள்ளா - நாகா - மாடா - யவனா - வளவா - ஆதா - என்ற நாற்கணத்தொடும் புணரும்வழி இயல்பாகும்.

உண்டீர்+ சான்றீர், உண்டீர்+ பார்ப்பீர் - என முன்னிலைக் கண்ணும், உண்ப, உண்டார் + சான்றார் பார்ப்பார் - எனப்படர்க்கைக்கண்ணும் இயல்பாகப் புணர்ந்தன.

உண்டனெஞ் சான்றேம் - மகரம் திரிந்து புணர்ந்தது.

உண்டே நாம் - மகரம் கெட்டுப் புணர்ந்தது.

(தொ. எ. 153 நச். உரை)

உயிர்: ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி -

{Entry: A01__327}

அகரம் முதல் ஒளகாரம் இறுவாயுள்ள பன்னிரண்டு எழுத்துக் களையும் உயிர் என்ற பொதுப்பெயரானே வழங்குவது ஆட்சியாம். உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டனையும் இயக்கி உயிர்மெய்யாம் நிலையில் வரிவடிவின்றி நிற்றலின், உயிர் என்ற பெயர் காரணம் பற்றியதாயிற்று. மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்கும் நிலையும் தனித்து நிற்கும் நிலையும் உயிரெழுத்துக்கு உண்டு, இறை ஒன்றேயாய் நிற்கும் தன்மையும், பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல. (தொ. எ. 8 நச். உரை)

உயிர் இயல் -

{Entry: A01__328}

உயிரின் மாத்திரையும், பெயரும், ஒன்று என்னும் எண்ணிக்கை யும் உயிரின் இயல்பாம். அ,க - ஒரு மாத்திரை, அகரம் என்ற பெயர், ஒன்று என்ற எண் - என்பன இவற்றில் உயிரின் இலக்கணமாம். (தொ. எ. 10 நச். உரை)

உயிர்இயல் திரியாமை -

{Entry: A01__329}

உயிரானது மெய்யொடு கூடி உயிர்மெய் ஆகிய காலத்தும் தன் மாத்திரையும் குறியும் எண்ணும் திரியாதிருத்தல்.

அ என்புழி நின்ற ஒரு மாத்திரையும், குறில் என்ற பெயரும், ஒன்று என்ற எண்ணும், அவ்வகரம் ககரமெய்யை ஊர்ந்து க என நின்றவழியும் ஒத்தல் போல்வன; ஆ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்று என்னும் எண்ணும் கா என நின்ற வழியும் ஒத்தல் போல்வன. (தொ. எ. 10 இள., நச். உரை)

உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவி -

{Entry: A01__330}

உயிரெழுத்துக்களை ஈறாக உடைய முன்னிலை வினைச் சொற்கள், முன்நின்றான் தொழில் உணர்த்துவனவும் அவனைத் தொழிற் படுப்பனவும் என இருவகைய,

இ, ஐ - என்பன முன்நின்றான் தொழிலை உணர்த்துவன.

எ-டு : உண்டி, உண்டனை.

முன்நின்றhனைத் தொழிற்படுத்துவன, அகரம் முதல் ஒளகாரம் இறுவாய் எகரம்நீங்கலாகப் பகுதி மாத்திரையாய் நின்று எடுத்தலோசையான் முன்னிலை ஒருமை ஏவல் பொருண்மை உணர்த்துவன. அவை நட, வா, மடி, சீ, விடு, கூ, ஏ, வை, நொ, போ, வெள என வரும். (தொ. எ. 151 நச். உரை)

உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவியின் புணர்ச்சி -

{Entry: A01__331}

முன்நின்றான் தொழிலை யுணர்த்தும் இகர ஈறும் ஐகார ஈறும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு: நிற்றி கொற்றா, உண்டனை கொற்றா.

முன்நின்றானைத் தொழிற்படுத்தும் உயிரீறுகள் வன்கணம் வரின் இயல்பாகப் புணர்வனவும், உறழ்ந்து முடிவனவும் உள.

எ-டு : கொணா கொற்றா, எறி கொற்றா - இயல்பு

நட கொற்றா, நடக் கொற்றா - உறழ்வு (தொ. எ. 151 நச். உரை)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் -

{Entry: A01__332}

ஈற்றுக் குற்றியலுகரத்தை அடுத்த எழுத்து உயிர்மெய்யாக இருப்பின் அச்சொல்லீற்றுக் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். அஃது அல்வழிக்கண் வன்கணம் (மென்கணம், இடைக்கணம்- இவை) வருமொழி முதற்கண் வருமிடத்து இயல்பாகப் புணரும்.

எ-டு : வரகு + கடிது = வரகு கடிது (வரகு ஞான்றது, வரகு யாது)

வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும் புணரும்;சிறுபான்மை வல்லினமெய் இரட்டும்.

எ-டு : வரகு +கதிர் = வரகுகதிர், வரகின் கதிர்; வெருகு + கண் = வெருக்குக்கண்; எருது+ கால் = எருத்துக்கால்.

உயிர்த்தொடர்க் குற்றுகரம் டற மெய்களை ஊர்ந்து வரு மிடத்து, வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி வன்கணம் வரின், அவ்வல்லின மெய்கள் இரட்ட வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம்வரின், அவ்விரட்டுதலோடு இயல்பாக முடியும்.

எ-டு : முருடு+ கால், ஞாற்சி, யாப்பு, அடி = முருட்டுக்கால், முருட்டுஞாற்சி, முருட்டியாப்பு, முருட்டடி

முயிறு+ கால், நிறம், வன்மை, அடி = முயிற்றுக் கால், முயிற்றுநிறம், முயிற்றுவன்மை, முயிற்றடி.

சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், அல்வழிக் கண் இரட்டுதலும், சிறுபான்மை இருவழியும் பிற ஒற்று இரட்டுதலும் உள. எ-டு : நாடு கிழவோன் எனவும், காட்டரண் எனவும், வெருக்குக்கண் எருத்துமாடு எனவும் முறையே காண்க. (நன். 182, 183)

உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: A01__333}

உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண் வல்லினம் வரினும் இயல்பாகப் புணரும்

எ-டு : வரகு கடிது, கிடந்தது குதிரை, கரிது குதிரை

(தொ. எ. 425 நச். உரை)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணம் வரின் இனஒற்று மிக்கு வல்லெழுத்துப் பெறுதலும், இயல்புகணம் வருவழி இனஒற்று மிகுதலும் உள.

எ-டு : கரடு + கானம் = கரட்டுக் கானம்; குருடு + கோழி = குருட்டுக் கோழி; திருடு + புலையன் = திருட்டுப் புலையன்; வெளிறு + பனை = வெளிற்றுப் பனை; எயிறு + பல் = எயிற்றுப் பல்

இவை வன்கணம் புணர்ந்தன.

வறடு + ஆடு = வறட்டாடு; குருடு + எருது = குருட்டெருது.

இவை இயல்புகணம் புணர்ந்தன. (தொ.எ. 425 நச். உரை)

வேற்றுமைக்கண் டு று ஈறாகிய சொற்கள், வருமொழி வன்கணம் வரின் இனஒற்றும் வல்லெழுத்தும் மிகும்; இயல்புகணம் வரின் இனஒற்று மிகும்.

எ-டு : முயிறு+ கால் = முயிற்றுக்கால்; கயிறு + புறம் = கயிற்றுப்புறம்; வயிறு + தீ = வயிற்றுத் தீ; பகடு + கால் = பகட்டுக்கால்; அகடு + தீ = அகட்டுத்தீ; முகடு + பகுதி = முகட்டுப்பகுதி

இவை வன்கணம் புணர்ந்தன.

பகடு +ஞாற்சி = பகட்டுஞாற்சி; முயிறு + ஞாற்சி = முயிற்றுஞாற்சி

இவை இயல்புகணம் புணர்ந்தன.

கு சு து பு - என்ற ஈறுகள் இயல்பாகப் புணரும்

எ-டு : வரகுகால், வரகுகதிர், வரகுசினை, வரகுதாள், வரகு பதர், வரகுஞாற்சி. (பிற ஈறுகளும் கொள்க.)

உருபுபுணர்ச்சி போல இன்சாரியை பெறுதலுமுண்டு.

எ-டு : வரகினை - வரகின் கதிர் (தொ.எ. 412 நச். உரை)

உயிர் மயங்கியல் -

{Entry: A01__334}

இது தொல்காப்பிய எழுத்ததிகாரத்து ஏழாம் இயல். புணர்ச்சி பற்றிய அகத்தோத்தின் முதல் இயல் இது. இதன்கண் அகரம் முதல் ஒளகாரம் ஈறாகிய பன்னிரண்டு உயிர்களையும் ஈறாக உடைய சொற்கள், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், பெரும்பான்மை வன்கணத்தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணரும் செய்கை நிலை 93 நுற்பாக்களில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. இகர ஐகார ஈற்று அல்வழி முடிபும், இயல்புகணத்தின் பொதுப்புணர்ச்சி முடிபும் தொகைமரபினுள் கூறப்பட்டமையின் (தொ.எ.158, 144 நச்.), ஏனையவே உயிர்மயங்கியலில் கூறப்பட்டன.

உயிர்மெய் -

{Entry: A01__335}

உயிரும் மெய்யும் இணைந்து தோன்றும் சார்பெழுத்து உயிர் மெய்யாம். மெய் உயிரொடு கூடுமிடத்து - அகரத்தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய தன் வடிவே வடிவாகவும், ஆகாரத் தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய வடிவொடு கால்பெற்றும், இகர ஈகாரங்களொடு கூடும்வழி மேல் விலங்கும் - உகர ஊகாரங்களொடு கூடும்வழிக் கீழ்விலங்கும் - எகர ஏகார ஐகாரங்களோடு கூடும்வழி அவ்வவற்றைக் குறிக்கும் கொம்பும் - ஒகர ஓகாரங்களொடு கூடும்வழிக் கொம்பும் காலும், ஒளகாரத்தொடு கூடும்வழி அதற்கென உரிய கொம்பொடு கூடிய காலும் பெற்று வடிவு திரிந்தும், மெய்யின்மேல் ஏறிய உயிரெழுத் தின் மாத்திரையே தனக்குரிய மாத்திரையாய், உயிர் வடிவத்தைப் பெறாது, உயிர்மெய் என்ற பெயருடன் மெய் யொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் ஒலிக்கும் சார் பெழுத்து உயிர்மெய்யெழுத்தாம். பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யுடன் பொருந்த 216 உயிர்மெய் யெழுத்துத் தோன்றும். (நன்.89)

உயிர்மெய்: இலக்கணம் -

{Entry: A01__336}

அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு புணர்த்திய மெய் தன்னளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின், ‘எண்’ அதிகாரத்துள் உயிர்மெய்யை ஒன்றாகச் சொன்ன ஆசிரியர் ‘ஈறு’ அதிகாரத்துள் இரண் டாக வைத்து இலக்கணம் கூறினார். இவ்வாற்றான் உயிர்மெய் என்னும் சொல், மாத்திரை வகையான் உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகவும், ஒலிவகை யான் உம்மைத்தொகையாகவும் கொள்ளப்படும். (நன். 109 சங்கர.)

உயிர்மெய் ஈறு -

{Entry: A01__337}

சொற்களின் ஈறுகளை உயிரீறு மெய்யீறு என்று இரண்டாகப் பகுத்துக் காணுமிடத்து, உயிர்மெய், மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாக ஒலித்தல் என்ற தொடர்பு பற்றி, உயிர்மெய் ஈறு உயிரீறாகவே கொள்ளப்படும். (தொ. எ. 106 நச்.)

உயிர்மெய் ஈறு உயிரீறே -

{Entry: A01__338}

மொழிகளின் ஈற்றிலே நின்ற உயிர்மெய்யை உயிரீறு எனலாம்; என்னை? ‘மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே’ (தொ.நூன். 18) என்றார் ஆகலின். ‘உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே’ (தொ. புண. 4) என்பதனால், பிரித்தால் உடல் முன் உயிர் பின்னாம் ஆதலான் எனக் கொள்க. அன்றியும், வாளும் கூடும் இருப்பின், “வாளைக் கொடுவா” என்னும் அத்துணை யல்லது, “கூட்டைக் கொண்டுவா” என்பது இல்லை. ஆதலான் இங்ஙனம் சொல்லப்பட்டது. (நேமி. எழுத். 8 உரை)

உயிர்மெய் எழுத்துக்கள்சிறப்பில என்பது -

{Entry: A01__339}

எழுத்ததிகாரம் செய்கை பற்றியது ஆதலானும், செய்கைக்குப் பயன்படுவன உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்துக்களே ஆதலானும், உயிர்மெய் எழுத்துக்களைப் பிரித்து மொழி முதற்கண்வரின் மெய்யெழுத்து எனவும், மொழிஇறுதிக்கண் வரின் உயிரெழுத்து எனவும் பகுத்துக் கொள்ளுதலான் உயிர்மெய் எழுத்துக்கள் சிறப்பில என்பது. (எ. ஆ. பக். 5)

உயிர்மெய்: ஒற்றுமை நயம், வேற்றுமை நயம் -

{Entry: A01__340}

ஒற்றுமைநயம் என்பதன்கண் பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதும், பல எழுத்துக்கள் ஒலிஅளவான் ஒன்றாக இருத்தலும் கொள்ளப்பட்டுள்ளன.

உ ஊ ஒ ஓ ஓள- என்பன பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதற்கு எடுத்துக்காட்டு. காக்கை, கோங்கு - என்பனவற்றின் இடையிலுள்ள மெய்கள் ஓரிடத்தில் பிறந்து ஒலியளவான் அரைமாத்திரை ஒலித்தல் என்னும் தன்மையில் ஒன்று பட்டமை ஒற்றுமைநயமாம்.

தொடரும் எழுத்துக்கள் வெவ்வேறிடத்தில் பிறத்தல் வேற்றுமை நயம் என்ற கருத்தில், வேய்க ஊர்க வீழ்க - என யரழ-க்கள் முன்பு ககரம் வருதல் வேற்றுமைநயம் என்று கொள்ளப்பட்டது. (எ.ஆ)

உயிர்மெய்யினைத் தனி ஓரெழுத்தாகக் கோடல் ஒற்றுமை நயம்.

‘லகரம் றகரஒற்று ஆகலும் உரித்தே’ - பல என்பதன் லகரஉயிர்மெய் ‘லகரம்’ என்று குறிக்கப்பட்டதும்,

‘ஆயிடை வருதல் இகார ரகாரம்’ - ‘ரகாரம்’ என்பது உயிர்-மெய்யாய்த் தொள்ளாயிரம் என்பதன்கண் வருதல் குறிக்கப் பட்டதும்,

‘முன்னர் தோன்றும் லகார மகாரம்’ - ‘பொலம்’ என்பதன் லகரஉயிர்மெய் ‘லகாரம்’ என்று குறிக்கப்பட்டதும்

என்னும் இவை ஒற்றுமை நயமாம். (தொ. எ. 214, 463, 356 நச்.)

(எ.ஆ.பக். 137)

இனி, உயிர்மெய்யினை மெய்யெழுத்தாகக் கோடல் வேற்றுமை நயம் ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (தொ. எ. 19 நச்.) - இங்குக் ககரம் முதலிய உயிர்மெய்கள் ககரஒற்று முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேற்றுமை நயம்.

உயிர்மெய்யினை ஓரெழுத்தாகக் கொண்டு மாத்திரை கோடல் ஒற்றுமை நயம். அவ்விடத்து ‘உயிர்மெய்’ உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. உயிர்மெய்யினை ஒலி பற்றி ஈரெழுத்தாக எண்ணுதல் வேற்றுமை நயம். வேற்றுமை கொள்ளுமிடத்தே ‘உயிர்மெய்’ உம்மைத்தொகையாம். (தொ. எ. 17 இள. உரை)

உயிர்மெய்க்கு மாத்திரை கொள்ளுங்கால், உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றல் ஒற்றுமைநயம். அதனை வேறுபடுத்துக் கூறுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றல் வேற்றுமைநயம். (தொ. எ. 18 நச். உரை)

உயிர்மெய் சார்பெழுத்தாதல் -

{Entry: A01__341}

உயிர்மெய் என்பதனை ஒற்றுமைநயம் கொள்வழி உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாக வும், வேற்றுமைநலம் கொள்வழி உம்மைத்தொகையாகவும் கொள்க. உயிரும் மெய்யும் கூடுகின்ற கூட்டத்தினை ‘எல்லா மெய்யும்’ என மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்னர்க் கூறப்படுதல் நோக்கிப்போலும். இங்ஙனம் வருதலான் ‘உயிர் மெய்’ சார்பெழுத்து என முதலெழுத் தின் வேறாயிற்று. (இ. வி. 18 உரை)

உயிர்மெய்ந்நிலை தம் இயல் மயக்கம் கிளத்தல் -

{Entry: A01__342}

உயிர்மெய் எழுத்தில் பன்னீருயிரும், மெய்யின் தன்மையாகிய வன்மை - மென்மை - இடைமை - என்பவற்றில், தம்முடைய குறுமை நெடுமை என்ற தன்மைகள் இணைந்தனவாகக் கூறுதல். உயிர்மெய்க் குறில் நெடில்களை வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து - என்று குறிப்பிடுதல் இக் கருத்துப் பற்றியே. (தொ. எ. 47 நச். உரை)

உயிர்மெய் பிறக்குமாறு -

{Entry: A01__343}

வாயிதழ்களின் பன்னிரண்டு கோணங்களில் வெளிவருகின்ற உயிர்ப்பு இசையினை, நாவானது அண்பல்லொடும் அண்ணத் தொடும் உற்றும், உறழ்ந்தும், இதழானது பல்லொடும் இதழொடும் இயைந்தும், தடைப்படுத்தியும் வெளிப்படுத்தும் நிலைமையால் வருவன உயிர்மெய்யெழுத்துக்களாம். (தொ.எ. பக். 10. ச. பால.)

உயிர்மெய்: பெயர்க்காரணம் -

{Entry: A01__344}

பன்னீருயிரும் பதினெட்டு மெய்யொடும் தனித்தனிக் கூட, மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் அமையும் கலப்பெழுத்து உயிர்மெய்யாம். ஆகவே, உயிர்மெய் என்பது ஒலிப்பு வகையால் உம்மைத்தொகை; மாத்திரை கோடற்கண் உம்மைத்தொகை அன்மொழி என்க. (தொ. எ. 17 நச். உரை)

உயிர்மெய் மயக்கு -

{Entry: A01__345}

மெய்யொடு மெய் மயங்குதலன்றி, உயிருடன் மெய்யும் மெய் யுடன் உயிரும் மாறி உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறை இன்றி வேண்டியவாறு மயங்கும். இனி ‘உயிர் மெய் மயக்கு அளவின்றே’ என்பதற்கு உயிர்மெய் முன் உயிர்மெய் மயங்குதல் வரையறை இன்று என்று பொருள் கூறுவாருமுளர். இங்ஙனம் உயிர்மெய்யை இரண்டெழுத் தாகப் பிரித்து மயக்கவிதியும் கூறும் ஆசிரியர் அதனையே ஒன்றாக வைத்து மயக்கவிதி கூறார் ஆதலானும், கூறினும் இடைநிலை மயக்கம் முழுதும் இச்சூத்திரத்துள் அடங்காமை யானும் அது பொருந்தாது. (நன். 110 சங்கர.)

உயிர்மெய்யினது மாத்திரை -

{Entry: A01__346}

உயிர்மெய் மெய்யும் உயிரும் இணைந்து பிறப்பதோர் எழுத்து எனினும், உப்பு நீரில் கரைந்து தன்னளவு கெடுதல்போல, மெய்யின் ஒலி உயிரொலியில் கரைந்துவிடுவதால், உயிர் மெய்க்கு மாத்திரை உயிரினது மாத்திரையேயாம். ஆகவே, உயிர்மெய்க்குறில் ஒரு மாத்திரையும், உயிர்மெய்நெடில் இரு மாத்திரையும் பெறும் என்பது. ஒலிவகையான் உம்மைத் தொகையாகும் ‘உயிர்மெய்’, மாத்திரை வகையான் உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாம். (தொ. எ. 17 நச். உரை)

உயிர்மெய்யினைப் பிரித்துக் காண்டல் -

{Entry: A01__347}

உயிர்மெய்யில் மெய், தன்னொடு கூடிநின்ற உயிர் புணர்ச்சி யிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தான் முன்னர்ப் பெற்ற புள்ளி வடிவே பெறும்.

எ-டு : ஆலிலை - ஆல்+இலை; அதனை - அது+அன்+ஐ

(தொ. எ. 139 நச்.)

உயிர்மெய் முதலிய ஒன்பதும் சார்பெழுத்து ஆமாறு -

{Entry: A01__348}

உயிர்மெய் என்பது சார்பெழுத்து ஆமாறு ‘உயிர்மெய் சார்பெழுத்தாதல்’ என்ற தலைப்பில் காண்க.

கஃறீது - முஃடீது - என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனானும், ‘ஆய்தப்புள்ளி’ எனச் சூத்திரம் செய்தத னானும், இதனையும் உடன்கூட்டி ஒற்றளபெடை பதினொன்று என்றதனாலும், ஆய்தம் ஒற்றின்பாற்படுவதேனும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் இடம் பற்றி நிகழ்வதொன்று ஆகலின், சார்பெழுத்தென ஒற்றின் வேறாயிற்று.

கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல, உயிரளபெடை நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்தில் பிறந்து பின் பிளவுபடாது ஒலிக்கின்ற ஒன்று; எள் ஆட்டிய வழியல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல, நெடிலும் குறிலும் கூடி ஒலிக்கும் கூட்டத்தல்லது அது புலப்பட்டு நில்லாது. இயற்கை யளபெடையும் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட செயற்கை யளபெடையும் என இரண்டு திறத்ததாய், அலகு பெறாதும் அலகு பெற்றும் அது நிற்பது. ஆதலின் உயிரளபெடை சார்பெழுத்தென உயிரின் வேறா யிற்று.

ஒற்றளபெடை ஒருமாத்திரையாய் அலகு பெறுதலானும் பிறவாற்றானும் சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.

சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோலாகாது சந்தனக் கோலேயாம். அதுபோல, உயிரினது குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி வேற்றுமையானும். பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும் சிதையுமிடத்தே அலகுகாரியம் பெறாமையானும் குற்றிகரமும் குற்றுகரமும் சார்பெழுத்து என உயிரின் வேறாயின.

கை - பை - மை - என்பனவும், கௌ - வெள - என்பனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகும். இங்ஙனம் (ஒரு மாத்திரை யும் ஒன்றரை மாத்திரையுமாக) அளவு குறுகுதலானும், சீரும் தளையும் சிதையுமிடத்தே அலகு பெறாமையானும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து என, உயிரின் வேறாயின.

கால் மாத்திரையாக அளவு குறுகியொலிக்கும் மகரக்குறுக்க மும் சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.

இவ்வாற்றான் உயிர்மெய் முதலாய ஒன்பதும் சார்பெழுத்து எனப்பட்டன. (இ. வி. 18, 17, 19, 20, 16, 21, 22 உரை)

உயிர்மெய் முதலியன சார்பெழுத்து ஆகாமை -

{Entry: A01__349}

தமக்கெனப் பிறப்பிடம் ஒன்று தனிப்பட்ட முறையில் இன்றித் தாம் சார்ந்த எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிட மாய்க் கொண்டு ஒலிக்கும் குற்றியலிகரம்- குற்றியலுகரம் - ஆய்தம் - என்ற மூன்றுமே சார்பெழுத்தாம்.

தனி எழுத்துக்களாகிய குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் தனித்தோ, அகரஉயிரைச் சார்ந்தோ இயங்கும் ஆற்றலின்றி மொழியிடைப் படுத்தே உணரப்பட வேண்டுத லின் சார்பெழுத்தாயின. ஏனைய உயிர்மெய் முதலியன சார்பெழுத்து ஆகா.

ஆல் என்புழி உயிர் முன்னும் மெய்பின்னும் மயங்கினாற் போல, லா என்புழி மெய் முன்னும் உயிர் பின்னும் நின்று மயங்கினவே அல்லது, உயிரும் மெய்யுமாகிய தம் தன்மை திரிந்து வேறாயின அல்ல;உயிர்மெய் ஆகிய காலத்தும், குறின்மை நெடின்மை என்ற உயிர்த்தன்மையும் வன்மை மென்மை இடைமை என்ற மெய்த்தன்மையும் தம் இயல்பின் திரிவுபடவில்லை. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது’ ‘பொன்மணி’ போல இயல்புபுணர்ச்சியேயாம். புணர்ச்சியில் மெய்யையும் உயிரையும் பிரித்துக் கொள்வர். ‘துணங்கை’ என்பது மெய் முதல் உயிர்ஈறு எனவும், ‘வரகு’ என்பது உயிர்த் தொடர்மொழிக் குற்றியலுகரம் எனவும் கூறுமிடத்தே, உயிர் மெய் உயிராகவும் மெய்யாகவும் பகுத்துக் கொள்ளப்படு கிறது. ஆதலின் கலப்பெழுத்தாகிய உயிர்மெய் சார்பெழுத்து ஆகாது.

அளபெடை, நெட்டெழுத்தோடு இனமான குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைப்பதொன்று ஆயினும், மொழிக் காரணமாய் வேறுபொருள் தாராது இசைநிறைத்தல் மாத்திரை பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்து என்று வைத்து எண்ணப்படாததாயிற்று.

ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பன ஒரு காரணம் பற்றிக் குறுகின ஆதலின், சிறுமரம் பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம் ஆகாதது போல, வேறெழுத்து எனப்படா.

வடவெழுத்துள் உயிரெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும், ஒற்றெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும், வல்லெழுத்தின் முன் மெல்லெழுத்து வந்து மயங்குழி அவ் வல்லெழுத்தோடு ஒப்ப இடையே தோன்றும் எனப்பட்ட வியம எழுத்தும் என்னும் இவற்றையே சார்பெழுத்தாக வடநூலார் கொண்டனர்.

கால்மாத்திரை பெறும் வன்றொடர்க் குற்றியலுகரம் மாத்திரைக் குறுக்கம் பற்றித் தனியெழுத்தாகக் கொள்ளப்பட வில்லை. இவற்றை நோக்கச் சார்பெழுத்து மூன்றேயாம் என்பது. (சூ. வி. பக். 29, 30)

உயிர்மெய் முதலியன சார்பெழுத்தாதல் -

{Entry: A01__350}

சார்பெழுத்தென மூன்றே கொண்டார் தொல்காப்பியனார். அவர் கொண்ட குற்றியலிகரம் - குற்றியலுகரம் - ஆய்தம் - என்ற மூன்றும் நீங்கலான உயிர்மெய் முதலிய ஏழும் சார்பில் தோன்றுதலானும், முதலெழுத்தாம் தன்மை அவற்றிற்கு இன்மையானும், முதலும் சார்பு மன்றி மூன்றாவதொரு பகுதி சொல்லலாவது இன்மையானும், உயிர்மெய் முதலிய பத்தும் சார்பாகவே கொள்ள வேண்டும் என்பது. (நன். 59 மயிலை.)

உயிர் மெய்யோடு இயைதல் -

{Entry: A01__351}

உயிர்மெய் என்ற கலப்பெழுத்தை உண்டாக்க உயிரானது மெய்யொடு பொருந்தும். அங்ஙனம் பொருந்தினும் அது தன் மாத்திரையும் பெயரும் எண்ணும் திரிந்து நில்லாது.

அ என்புழி நின்ற ஒரு மாத்திரையும், குறில் என்ற பெயரும், ஒன்று என்ற எண்ணும் க என்புழியும் ஒக்கும். ஆ என்புழி நின்ற இரு மாத்திரையும், நெடில் என்ற பெயரும், ஒன்று என்ற எண்ணும் கா என்புழியும் ஒக்கும் பிறவும் அன்ன. (தொ. எ. 10. நச். உரை)

உயிர்மெய் வடிவு மெய்யின் வேறாதல் -

{Entry: A01__352}

புள்ளிமாத்திரமே பெறும் மெய்போலன்றி, உயிர்மெய்கள் கொம்பும், காலும், கட்டும், வீச்சும் என இவை வேறுபடுதலின், வரிவடிவு பலவாக வேறுபட்டு வருவனவாம். (நேமி. எழுத். 7 உரை)

ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தல் - (இள., நச். உரை) (தொ. எ. 17)

உயிர்வினாவுடன் யாவினாவும் கூட்டியுரைத்தல் -

{Entry: A01__353}

ஆ எ ஏ ஓ என்ற உயிர்வினாவுடனே யா என்னும் உயிர்மெய் வினாவைக் கூட்டியுரைத்தமை மயங்கக் கூறல் என்னும் குற்றம் ஆகாது. என்னையெனில், இது தொகைவகைவிரிபடச் செய்கின்ற நூல் ஆகலானும், முதல்வினா (எ, யா) என்னும் பொருள் ஒப்புமையானும் என்பது. (நன்.66 மயிலை.)

உயிரது குறுக்கம் உயிரே -

{Entry: A01__354}

சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு போல, உயிர்களின் குறுக்கமாகிய குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஐகாரக் குறுக்கம் என்பன உயிரேயாம்.

குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறெழுத்துக்களாகக் கொள்ளப்பட்டன என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரது கருத்தாம். (தொ. எ. 2 இள., நச். உரை)

உயிரது குறுமை நெடுமை அளவிற் கோடல் -

{Entry: A01__355}

உயிர் ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் குறில், அதே உயிர் இரண்டு மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் நெடிலாம். ஆகவே, ஒலியின் குறுக்கம் நீட்டம் இவற்றைக் கொண்டே குறிலும் நெடிலும் தோன்றின. எனவே, புணர்ச்சியிடத்துக் குறிலிணையை நெடிலாகக் கொள்ளலாம். உயிர்மெய்க்கும் இஃது ஒக்கும்.

எ-டு : கோள்+ நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது

குறள் + நிமிர்ந்தது = குறணிமிர்ந்தது

தனிநெடிலை யடுத்த ஒற்றுக்களுக்குக் கூறும் புணர்ச்சிவிதி குறிலிணை ஒற்றுக்கும், சிறுபான்மை குறில்நெடில் ஒற்றுக்கும் (வரால் + நிமிர்ந்தது = வரானிமிர்ந்தது; கோல் + நிமிர்ந்தது = கோனிமிர்ந்தது) கொள்ளப்படுதற்கு இதுவே அமைதியாம். (தொ. எ. 50 இள. 161 உரை)

உயிரளபெடை (1) -

{Entry: A01__356}

எழுத்துப் பல ஆயின ஒலிவேற்றுமையானன்றே? அங்ஙனம் ஆதலின் நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப் பிறப்பதே அளபெடை என்பார் ‘நெடில் அளபெழும்’ என்றும், ‘அவற்ற வற்று இனக்குறில் குறியே’ என்றும் கூறினார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் நீரும் நீரும் சேர்ந்தாற்போல நெட் டெழுத்தொடு குற்றெழுத்து ஒத்துநின்று நீண்டிசைப்பதே அளபெடை என்பார், `குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத், திம்பர் ஒத்தகுற் றெழுத்தே’ (எழுத். 41) என்றார். இப்பெற்றி அறியாதார், நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேர நின்றாற்போல இணைந்து நின்று அளபெடுக்கும் எனத் தமக்கு வேண்டியவாறே கூறுப. நெடி லும் குறிலும் அவ்வாறு நின்று அளபெடுக்கும் என்றல் பொருந்தாமைக்கு `எழுத்தெடை’ என்னாது அளபெடை என் னும் குறியீடே சான்றாதல் அறிக. அற்றேல், ஓர் எழுத்தினையே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகப் பிரித்து அசைத்து அதனால் சீர்செய்து தளையறுத்தல் பொருந்தாது எனின், அற்றன்று; ‘எழுத்து வகையான்’ என்னாது,

‘மாத்திரை வகையான் தளைதம கெடாநிலை

யாப்பழி யாமைஎன்று அளபெடை வேண்டும்’

எனக் கூறுப ஆதலின், எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசைபற்றி யல்லது எழுத்துப் பற்றி அல்ல என்க. (நன். 91 சிவஞா.)

உயிரளபெடை (2) -

{Entry: A01__357}

உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு மிடத்துத் தனிநிலை - முதனிலை - இடைநிலை - இறுதிநிலை- என்னும் நான்கனோடும் உறழ 7 x 4 =28 ஆம்.

என்னை?

‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்

நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே’

‘ஐ ஒள என்னும் ஆயீர் எழுத்திற்கு

இகர உகரம் இசைநிறைவு ஆகும்’ (தொ. எ. 41, 42.)

என்றாராகலின்.

வரலாறு : ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ - என்பன தனிநிலை அளபெடை.

மாஅரி, வீஇரம், கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை - இவை முதனிலை அளபெடை.

படாஅகை, பரீஇயம், கழுஉமணி, பரேஎரம், வளைஇயம், உரோஒசம், அநௌஉகம் - இவை இடைநிலை அளபெடை.

பலாஅ, குரீஇ, கழுஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அநௌஉ - இவை இறுதிநிலை அளபெடை.

பிறவும் அன்ன. (நேமி. எழுத். 3 உரை)

உயிரளபெடை இருபத்தொன்று ஆதல் -

{Entry: A01__358}

செப்பலோசை முதலிய ஓசை குன்றாது நெட்டெழுத்து ஏழும் மொழி முதலிடை கடைகளில் நின்று அளபெடுக்குங்கால், ஒளகாரம் மொழி இடைகடைகளில் வரப்பெறாமையால், அவ்விடங்களில் அஃது ஒழிய நின்று அளபெடுக்கும் அளபெடை பத்தொன்பதோடு, இன்னிசை நிறைப்பவும் சொல்லிசை நிறைப்பவும் அளபெடுக்கும் அளபெடை இரண்டும் கூட்டி, உயிரளபெடை எழுமூன்றாய் வருமாறு காண்க. (நன். 91 சிவஞா.)

உயிரளபெடை சார்பெழுத்தாதல் -

{Entry: A01__359}

கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்தில் பிறந்து பின் பிளவு படாது ஒலிக்கின்றது ஒன்று ஆகலானும், எள்ளாட்டிய வழியல்லது எண்ணெய் புலப்படாவாறு போல நெடிலும் குறிலும் கூடிய கூட்டத் தல்லது புலப்படாது நிற்பது ஒன்று ஆகலானும், அதுதான் இயற்கை யளபெடையும் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட செயற்கை யளபெடையுமாய் அலகு பெறாதும் பெற்றும் நிற்பது ஒன்று ஆகலானும், சார்பெழுத்து என உயிரின் வேறாயிற்று. (இ.வி. 19)

உயிரீற்றின் முன் உயிர் வந்து புணருமாறு பற்றி வீரசோழியம் குறிப்பிடுவது -

{Entry: A01__360}

இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி புணருமிடத்து இடையே யகார ஒற்று வந்து தோன்றும். இவை அல்லாத மற்ற உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி புணருமிடத்து இடையே வகார ஒற்று வந்து தோன்றும். ஏகார ஈற்று நிலை மொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி புணருமிடத்து யகார வகார ஒற்றுக்கள் இரண்டும் வந்து தோன்றும். ஒரோ விடத்து நிலைமொழியினது ஈற்றில் நின்ற பதமாவது, உயிர் மெய்யாவது, உயிராவது, ஒற்றாவது அழிந்து புணரும். (வீ.சோ. சந்திப். 13)

வீரசோழியத்திலும் அதன் உரையிலுமே, உடம்படுமெய்யாம் எழுத்துக்கள் பற்றியும், நிலைமொழி இன்ன ஈற்றுக்கு இன்ன உடம்படுமெய் என்பது பற்றியும் முதன்முதலாக வரையறை கூறப்பட்டுள்ளது. இதனை யொட்டியே நன்னூல் விதிக்கும்.

நிலைமொழியீறு கெட்டு முடிவது நேமிநாதத்தில் விளக்கப் பட்டுள்ளது.

வருமாறு : ஒருபது + ஒன்று > ஒருபது+ஆன் + ஒன்று = ஒருபானொன்று - நிலைமொழியில் பது என்ற பதத்தின் ‘அது’ கெட்டது.

வாழிய + சாத்தா =வாழிசாத்தா - நிலை மொழி யில் யகர உயிர்மெய் கெட்டது.

பனை + காய் > பனை + அம் + காய் > பன் + அம் + காய் =பனங்காய் - நிலைமொழியில் ஈற்று ஐகாரஉயிர் கெட்டது.

மரம்+அடி > மர+அடி =மரவடி - நிலை மொழியீற்று மகரமெய் கெட்டது. (வகரம் : உடம்படுமெய்) (நேமி. எழுத். 19, 13 உரை)

உயிரீற்றின் முன் வன்கண முதல் மொழி -

{Entry: A01__361}

இயல்பினாலும் விதியினானும் இறுதியாக நின்ற (நிலை மொழியீற்று) உயிர்களின் முன்னர் (வருமொழி முதலில்) வரும் கசதப-க்கள் பெரும்பாலும் மிகும்.

விதி உயிரீறாவன:முன்னைய உயிரீறும் மெய்யீறும் ஒழிய உயிரீறாய் நிற்பனவும், யாதானுமோர் உயிர் இறுதிக்கண் தோன்றி நிற்பனவும் ஆம்.

எ-டு: நம்பிக் கொற்றன் - உயர்திணைக்கண் இயல்பு இகர ஈறு வலி மிக்கது; ஆடூஉக் குறியன் - உயர்திணைக்கண் விதி உகரஈறு வலிமிக்கது; சாத்திப் பெண் - விரவுத் திணைக்கண் இயல்பு இகரஈறு வலி மிக்கது; தாராக் கடிது, ஒற்றைக்கை - அஃறிணைக்கண் இயல்பு ஆகார ஈறும் விதி ஐகாரஈறும் வலி மிக்கன.

வட்டக் கல், தாழக்கோல் - அஃறிணைக்கண் விதி அகரஈறுகள் வலி மிக்கன.

இவை அல்வழிப் புணர்ச்சி.

நம்பிப்பூ, ஆடூஉக் கை - உயர்திணைக்கண் இயல்பு இகரஈறும் விதி உகரஈறும் வலி மிக்கன. விளக்கோடு, கடுக்காய், ஆட்டுக்கால் - அஃறிணைக்கண் இயல்பு அகர உகர ஈறும் விதிக் குற்றியலுகரஈறும் வலி மிக்கன. இவை வேற்றுமைப் புணர்ச்சி.

ஆடிக் கொண்டான், ஆடாக் கொண்டான், ஆடூஉக் கொண் டான், ஆடெனக் கொண்டான், ஆடக் கொண்டான், உண் பாக்குச் சென்றான், பூத்துக் காய்த்தது, பொள்ளெனப் பரந்தது, சாலப் பகைத்தது, இருளின்றிக் கண்டான் - பல வகைத் தெரி நிலை குறிப்பு வினையெச்சங்களின் உயிரீறுகள் வலிமிக்கன.

மற்றைச் சாதி, கடிக் கமலம், சொன்றிக் குழிசி, கங்கைக் கரை- இடை உரி திசை வடசொற்களின் உயிரீறுகள் வலிமிக்கன.

நொக் கொற்றா, துக் கொற்றா - உயிரீற்று ஏவல் முன் வலி மிக்கன. (நன். 165 சங்.)

உயிரீற்றுப் புணரியல் என்ற குறியீடு -

{Entry: A01__362}

பொதுவகையால் புணரும் இயல்பும், பல செய்திகளை உள்ளடக்கித் தொக்குப் புணரும் இயல்பும், குற்றுகர ஈற்றுச் சொற்கள் நின்று புணரும் இயல்பும் ஆகிய பிற புணர்ச்சி இயல்புகளும் இவ்வியலில் கூறப்படுகின்றன. தலைமை பற்றி ‘உயிரீற்றுப் புணரியல்’ என்ற விசேடணம் கொடுக்கப்பட்டது. இவ்விசேடணம், முற்கூறிய பிற புணர்ச்சி இயல்புகளை உணர்த்துதலோடு இயைபு நீக்காது, உயிரீறு புணர்தல் ஆகிய தன்னோடு இயைபின்மை மாத்திரை நீக்கியது. இக் குறியீடு ‘ஆ தீண்டு குற்றி’ என்பது போலத் தலைமை பற்றிய அடையடுத்து வந்தது. (இ. வி. எழுத். 53 உரை)

உயிரீற்று மரப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__363}

உயிரீற்று மரப்பெயர் முன் வன்கணம் வந்துழி, பொதுவிதி யால் இடையே வல்லெழுத்து மிகுதலேயன்றி, அவ்வல்லெழுத் துக்கு இனமான மெல்லெழுத்து மிகுதலுமுண்டு. இது வேற்றுமைப் புணர்ச்சி.

எ-டு : பலாக்காய், இலந்தைக்கனி : வல்லெழுத்து மிக்கன.

விளங்காய், களங்கனி, மாங்கொம்பு, மாம்பழம்: இனமெல்லெழுத்து மிக்கன. (நன். 166)

உயிரெழுத்தின் இலக்கணம் -

{Entry: A01__364}

உயிரெழுத்து உதானன் என்னும் மேலெழும் ஓசைக்காற்றி னால் தோன்றி, வாயுறுப்புக்களின் ஒற்றுதல் தொழிலின்றி இதழ்களின் கோணத்தால் மிடற்றுவளியாலே, கண்டத்தி னின்று தம் நிலை திரியாமல் உயிர்ப்பொடு பிறந்து செவிப் புலனாகும்; தனித்தும், மெய்யினை ஊர்ந்தும், சொல்லாயும், சொல்லுறுப்பாயும் அமைந்து பொருள் குறித்து நிற்கும்; மெய்யெழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்து ஆவதற்குத் துணை யாய் அவற்றை இயக்கி அவற்றின் பிறப்பிடமே இடமாகத் தோன்றி வரும்; தனித்து இசைக்குங்கால், குறுமை நெடுமை கொள்ளும்;உயிர்மெய்க்குத் துணையாகுங்கால், வன்மை மென்மை இடைமை கொள்ளும்; தனித்தும் மெய்யினை ஊர்ந்தும் செய்யுட்கண் பல ஓசைகளை நிகழ்த்தி அலகு பெறும்; பண்ணிசைக்கும் வண்ணத்திற்கும் காரணமாகி நிற்கும். அகரம் தவிர்த்த ஏனைய உயிரெழுத்துக்கள் மெய் யொலிகளைச் சிறிது திரியச் செய்யும். யாவும் அவற்றிற்குக் குறுமை நெடுமைகளைக் கற்பித்தலைச் செய்யும். உயிரெழுத் துக்கள் மொழி முதற்கண் தனித்தும், இடையிலும் ஈற்றிலும் அளபெடையாகவும், விகாரமாகவும் வரும்; தம்முன் தாம் தொடர நேரின், உடம்படுமெய் பெற்றுத் தொடரும்; உயிர் மெய்க்குத் துணை யாகி வருங்கால், வரிவடிவின்கண் தம் கூறுகளை நிறுத்தித் தம் வரிவடிவை இழந்துவிடும். (தொ. எ. பக். 18, 19 ச. பால.)

உயிரெழுத்துப் பிறக்குமாறு -

{Entry: A01__365}

வாயுறுப்புக்களின் செயற்பாடின்றி அவை சமநிலையில் நிற்க, வாய் அங்காப்ப,மிடற்று எழு வளியிசையாக வெளிப்படும் உயிர்ப்பு இசையே அகரம் என்னும் அடிப்படை எழுத்தாம். இவ்அகரம் எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாகவும் துணை யாகவும் அகநிலையில் எழுத்தாம். அஃதாவது அகர ஒலியின் திரிபுகளே பல்வேறு எழுத்துக்களாகச் செவிப்புலனாம். அகர எழுத்தே வாயிதழ்களின் கோணத்தாலும், நாவிளிம்பின் விரிவாலும் சுருக்கத்தாலும், ஏனைய பதினொரு வகையாகிய பன்னிரண்டு உயிரெழுத்துக்களாக நிகழ்கிறது. (தொ.எ. பக். 10. ச. பால.)

உரலாணி இட்டாற்போலச் செறிதல் -

{Entry: A01__366}

பலகாலும் பயன்படுத்தியதால் உட்குழி தேய்ந்து ஆழ்ந்த பள்ளமான உரலில் பள்ளத்தை மறைக்கும்படி இடும் மரஆப்பு உரலாணி எனப்படும். அவ்வுரலாணி பள்ளத்தில் அழுத்தமாக இணைந் திருக்கும். அதுபோல, ய் என்ற மெய் தோன்ற, அடிநா மேல்வாயை உரலாணி யிட்டாற்போலச் செறியும் என்பது. (தொ. எ. 99. நச். உரை)

உயிரைக் குறிக்கும் பெயர்கள் -

{Entry: A01__367}

அச்சு எனினும், ஆவி எனினும், சுரம் எனினும், பூதம் எனினும், உயிர் எனினும் ஒரு பொருட்கிளவி. (மு. வீ. எ. 7)

உருபியல் நுவலும் செய்தி -

{Entry: A01__368}

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் ஆறாம் இயலாகிய உருபியல் 30 நுற்பாக்களை உடையது. அவை நுவலும் செய்தி- களாவன:

அ ஆ உ ஊ ஏ ஒள - என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் வேற்றுமை யுருபுகளை ஏற்கும்போது பொதுவாக இன்சாரியை பெறும். சில அகரஈற்றுப் பெயர்களும், யா என்ற ஆகார ஈற்றுப் பெயரும் வற்றுச்சாரியை பெறும். சுட்டு முதல் உகரஈறு அன்சாரியை பெறும். சுட்டு முதலாகிய ஐகார ஈறு வற்றுச் சாரியை பெறும். யாவை என்பதும் வற்றுச்சாரியை பெறும். நீ என்பது நின் என்றாகும். ஓகார ஈறு ஒன்சாரியை பெறும். அஆ ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபு ஏற்கும்போது
அத்துச் சாரியையும் பெறும். ஞ் ந் - ஈறுகள் இன்சாரியை பெறும். மகரஈறு அத்தும் இன்னும் பெறும். எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றும், உயர்திணைக்கண் நம்மும் பெறும். யான், யாம், நாம், தான், தாம் - என்பன நெடுமுதல் குறுகும். எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும் என்பது நும்முச்சாரியையும் பெறும். அழன், புழன் - என்பன அத்தும் இன்னும் பெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும். குற்றியலுகர ஈறுகள் இன்சாரியை பெறும், அவற்றுள் எண்ணுப்பெயர்கள் அன்சாரியை பெறும். அஃது இஃது உஃது என்பனவும், யாது என்பதும் அன்சாரியை பெறும். திசைப் பெயர்க்கு முன் ஏழனுருபு வரின் இன்சாரியை பெறுதலும், பெறாமல் புணர்தலும் என இருதிறனும் உள.

இன்ன செய்திகள் நிலைமொழிகள் உருபுகளை வருமொழி யாகக் கொண்டு புணரும்வழி நிகழ்வனவாகக் கூறப்பட்டுள.

உயிரீற்றுள் இகரஈற்றுப் பெயர்களும், நீ என்னும் பெய ரொன்றும் ஒழிந்த ஈகாரஈற்றுப் பெயர்களும், அவை இவை உவை யாவை- என்ற நான்கும் ஒழிந்த ஏனைய ஐகாரஈற்றுப் பெயர்களும், தான் யான் - என்ற இரண்டும் ஒழிந்த ஏனைய னகரஈற்றுப் பெயர்களும், ஏழ் என்ற எண்ணுப்பெயர் ஒழிந்த ஏனைய ழகரஈற்றுப் பெயர்களும் - இவை யெல்லாம் உருபொடு கூடுமிடத்துச் சாரியை பெற்றும் பெறாமலும் புணரும்.

அஆஉஊஏஓஒள - என்ற ஏழ் உயிரீற்றுப் பெயர்களும், ஞ் ந் ம்வ்- என்ற நான்கு மெய்யீற்றுப் பெயர்களும், ஒற்று இடை மிகும் ஈரெழுத்தொரு மொழிக் குற்றியலுகரச் சொற்கள் ஒழிந்த ஏனைய பெயர்களும், தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் உருபொடு கூடுமிடத்துச் சாரியை பெற்றே வரும்.

நும் தாம் யாம் நாம் - என்ற மகரஈற்றுப் பெயர்களும், தான் யான் என்ற னகரஈற்றுப் பெயர்களும், இடை ஒற்றுமிகும் ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் சாரியை பெறாமல் வரும்.

உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண்ணும் செல்லுமிடத்து அவை அகத்தோத்துக்களில் மாட்டேற்றான் குறிக்கப்படும். (தொ. எ. 173 - 202 நச்.) (எ. ஆ. பக். 133)

உருபின் முடிவன பொருட்புணர்ச்சியிலும் ஒத்தல் -

{Entry: A01__369}

உருபுபுணர்ச்சிக்கண் எல்லாம் என்பது அஃறிணை ஆனகாலை அற்றுச்சாரியையும் உருபின்மேல் உம்மும், உயர்திணை ஆன காலை நம்முச் சாரியையும் உருபின்மேல் உம்மும் பெறும் என்பார், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்வாறே, எல்லாவற்றுக்கோடும் - எல்லா நங்கையும் - எனவும்,

தான் தாம் நாம் - என்பன முதல் குறுகும் எனவும், யான் யாம் - என்பன என் எம் எனவும் நீ என்பது நின் எனவும் நீயிர் என்பது நும் எனவும் ஆகும் எனவும் கூறுவார், ஈண்டும் அவ்வாறே, தன்கை தங்கை நங்கை - எனவும், என்கை எங்கை -எனவும், நின்கை நும்கை - எனவும்,

ஆ மா கோ - என்பன னகரச் சாரியை பெறும் என்பார், ஈண்டும் அவ்வாறே ஆன்கோடு மான்கோடு கோன்குணம் - எனவும்,

சுட்டு முதல் வகரம் அற்றுச்சாரியை பெறும் என்பார், ஈண்டும் அவ்வாறே அற்றுப் பெற்று அவற்றுக்கோடு - எனவும்,

முறையே கொள்ளவைப்பது. (நன். 237 மயிலை.)

உருபு ஏற்கும்போது அத்துச்சாரியை பெறுவன -

{Entry: A01__370}

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபு ஏற்குமிடத்து இடையே அத்துச்சாரியை பெறுதலுமுண்டு. மகரஈற்றுப் பெயர்களும், அழன் புழன் என்ற னகரஈற்றுப் பெயர்களும் உருபுகள் ஏற்குமிடத்து அத்துச்சாரியை பெறுதலுமுண்டு.

எ-டு : விள +கண் > விள + அத்து + கண் = விளவத்துக் கண்; பலா+ கண் > பலா + அத்து + கண் = பலா வத்துக்கண் (தொ. எ. 181 நச்.); மரம் + ஐ > மரம் + அத்து + ஐ = மரத்தை (தொ.எ. 185 நச்.); அழன் + ஐ > அழன் + அத்து + ஐ = அழத்தை; புழன் + ஐ > புழன் + அத்து + ஐ = புழத்தை. (தொ.எ. 193 நச்.)

உருபு ஏற்கும்போது அன்சாரியை பெறுவன -

{Entry: A01__371}

அது இது உது - அஃது இஃது உஃது - யாது - ஒன்று முதல் பத்து ஈறாய எண்ணுப்பெயர்கள் - ஆகியவை அன்சாரியை பெற்று உருபேற்கும்.

வருமாறு: அது + அன் + ஐ = அதனை; இது + அன் + ஐ = இதனை; உது + அன் + ஐ = உதனை (தொ. எ. 176 நச்.)

அஃது + அன் + ஐ = அதனை; இஃது + அன் + ஐ = இதனை; உஃது + அன் + ஐ = உதனை (தொ. எ. 200 நச்.)

(இடையே உள்ள ஆய்தம் கெடும் என்க)

யாது + அன் + ஐ = யாதனை (தொ.எ. 200 நச்.)

ஒன்று + அன் + ஐ = ஒன்றனை (தொ.எ. 198 நச்.)

ஏழ் + அன் + ஐ = ஏழனை (தொ.எ. 194 நச்.)

பத்து + அன் + ஐ = பத்தனை (தொ.எ. 198 நச்.)

உருபு ஏற்கும்போது ஆன்சாரியை பெறுவன -

{Entry: A01__372}

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்ணுப்பெயர்கள் நிலைமொழி யாய் நிற்க, பத்து அல்லது பஃது வருமொழியாய் வருமிடத்து, பத்து பஃது - என்ற சொல்லின் பகர ஒற்று நீங்கலாக எஞ்சியுள்ள அத்து அஃது கெட, ஆன்சாரியையும் உருபும் புணரும் நிலைமையும் உண்டு.

வருமாறு : ஒரு பஃது+ ஐ > ஒருப் + ஆன் + ஐ = ஒருபானை

எண்பஃது + ஐ > எண்ப் + ஆன் + ஐ = எண்பானை

ஒருபது + ஐ > ஒருப் + ஆன் + ஐ = ஒருபானை

ஒன்பது + ஐ > ஒன்ப் + ஆன் + ஐ = ஒன்பானை

இருபது + ஐ = இருபானை, முப்பது + ஐ = முப்பானை.... முதலாயின கொள்க. (தொ. எ. 199 நச். உரை)

உருபு ஏற்கும்போது இடைஒற்று இரட்டித்து உருபு ஏற்பன -

{Entry: A01__373}

டு று என்பனவற்றை ஈறாகவுடைய ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களும், சிறுபான்மை உயிர்த் தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்களும் இடையே ஒற்று மிக்கு இன்சாரியை பெறாமல் உருபேற்கும். பிற்காலத்தே இன்சாரியை பெறும் மரபும் ஏற்பட்டது.

எ-டு : யாடு + ஐ = யாட்டை., யாட்டினை; பாறு + ஐ = பாற்றை, பாற்றினை; குருடு + ஐ = குருட்டை, குருட்டினை; முயிறு + ஐ = முயிற்றை, முயிற்றினை

(தொ. எ. 196, 197 நச். உரை)

உருபு ஏற்கும்போது இன்சாரியை பெறுவன -

{Entry: A01__374}

அஆஉஊஏஒள- ஞ் ந் ம்வ் ன் - குற்றுகரம் - என்பவற்றை ஈறாகக் கொண்ட பெயர்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.

எ-டு : விளவினை, பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வெளவினை (தொ. எ. 173 நச்.)

உரிஞினை, பொருநினை - (தொ.எ. 182 நச்.)

உருமினை - (தொ.எ. 186 நச்.)

தெவ்வினை - (தொ.எ. 184 நச்.)

அழனினை, புழனினை - (தொ.எ. 193 நச்.)

நாகினை, வரகினை - (தொ.எ. 195 நச்.)

ஓகார ஈறு : கோவினை, சோவினை, ஓவினை - 180 நச். உரை

உருபியல் புறனடையான் உயிரீற்றுள் இகர ஈகார ஐகார ஈறுகள் இன்சாரியை பெற்றும் பெறாதும் உருபேற்கும்.

எ-டு : கிளியினை கிளியை; தீயினை, தீயை; தினையினை, தினையை

புள்ளியீற்றுள் ணகர யகர ரகர லகர ளகரங்கள் இன்சாரியை பெற்றும் பெறாமலும் உருபேற்கும்.

எ-டு : மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை; கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை (தொ.எ. 202 நச்.)

உருபு ஏற்கும்போது ஒன்சாரியை பெறுவன -

{Entry: A01__375}

உருபுபுணர்ச்சிக்கண் ஓகார ஈற்றுப் பெயர்கள் சில ஒன்சாரியை பெற்று உருபேற்கும். எ-டு : கோ+ஒன்+ஐ = கோஒனை (தொ. எ. 180 நச்.)

இது பிற்காலத்து‘ன்’ சாரியை ஆயிற்று. சோ - முதலிய ஓகார ஈற்றுச் சொற்கள் ஒன்சாரியை பெறும் வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

உருபு ஏற்கும்போது தம்முச் சாரியை பெறுவது -

{Entry: A01__376}

உருபேற்குமிடத்து எல்லாரும் என்பது தம்முச்சாரியை பெற்று உருபேற்று உம்மையை இறுதிக்கண் கொண்டு, எல்லார் தம்மையும் - எல்லார்தம்மொடும் - எல்லார்தமக்கும் - என்றாற் போலப் புணரும். (தொ. எ. 191 நச்.)

உருபு ஏற்கும்போது தொடக்கம் குறுகும் பெயர்களின் நிலை -

{Entry: A01__377}

யான் யாம் நாம் நீ தான் தாம் - என்பன தொடக்கம் குறுகி முறையே என் எம் நம் நின் தன் தம் - எனத் திரிந்து, என்னை எம்மை நம்மை நின்னை தன்னை தம்மை - என்றாற் போல உருபேற்கும். (தொ. எ. 179, 188, 192 நச்.)

உருபு ஏற்கும்போது நம்முச்சாரியை பெறுவது -

{Entry: A01__378}

எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணையைக் குறிக்கு மிடத்து, நம்முச்சாரியையும் உருபின்மேல் உம்மும் பெறும்.

வருமாறு : எல்லாநம்மையும், எல்லாநம்மொடும் (தொ. எ. 190 நச்.)

உருபு ஏற்கும்போது நும்முச்சாரியை பெறுவது -

{Entry: A01__379}

எல்லீரும் என்பது நும்முச்சாரியை பெற்று உருபேற்று உம்மை இறுதிக்கண் அடைய, எல்லீர்நும்மையும், எல்லீர்நும்மொடும் என்றாற் போல வரும். (தொ. எ. 191 நச்.)

உருபு ஏற்கும்போது வற்றுச்சாரியை பெறுவன -

{Entry: A01__380}

பல்ல பல சில உள்ள இல்ல - என்னும் அகர ஈற்றுப் பெயர்கள், யாவினா, அவை இவை உவை- என்பன, யாவை என்பது, எல்லாம் என்னும் மகரஈற்றுப் பெயர், அவ் இவ் உவ் - என்ற வகரஈற்றுப் பெயர்கள் - என்பன வற்றுச்சாரியை பெற்று உருபேற்கும்.

வருமாறு : பல்லவற்றை, பலவற்றை, சிலவற்றை, உள்ள வற்றை, இல்லவற்றை (தொ. எ. 174 நச்.); யாவற்றை (தொ.எ. 175 நச்.); அவையற்றை, இவையற்றை, உவையற்றை (தொ.எ. 177 நச்.); யாவை + வற்று + ஐ = யாவற்றை (தொ.எ. 178 நச்.); எல்லா வற்றையும் (தொ.எ. 189 நச்.); அவற்றை, இவற்றை, உவற்றை (தொ.எ. 183 நச்.)

என, அகர ஆகார ஐகார மகர வகர ஈற்றுச் சொற்கள் சில வற்றுச்சாரியை பெற்று உருபேற்றன.

உருபுகள் நாற்பது ஆமாறு -

{Entry: A01__381}

பெயர் - ஐ - ஒடு - கு - இன்- அது - கண்- விளி- என்ற எட்டும், ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல - என்ற ஐம்பாற் பெயரொ டும் உறழ, வேற்றுமையுருபுகள் நாற்பதாம். (நம்பி- நம்பியை- நம்பியொடு- நம்பிக்கு- நம்பியின்- நம்பியது- நம்பிகண் - நம்பியே - என ‘ஒருவன்’ என்னும் வாய்பாட்டு ஆண்பாற் பெய ரோடு எட்டு உருபுகளும் வந்தன. ஏனைய நான்கு பால்கட்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.) (நன். 242)

உருபுகள் நிலைமொழியாய் நின்று புணர்தல் -

{Entry: A01__382}

ஒருபெயர் உருபேற்கையில் பெயர் நிலைமொழியாகவும் உருபு வருமொழியாகவும் இருக்கும். பெயர் அவ்வுருபினை ஏற்றபின் உருபு பெயரினது ஒரு கூறாகித் தானும் பெயரொடு சேர்ந்து நிலைமொழியாகி வருமொழியொடு புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அடங்கும்.

எ-டு : நம்பியைக் கொணர்ந்தான், மலையொடு பொருதது, ஊர்க்குச் சென்றான்.

இவ்வாறு உருபு நிலைமொழி ஈறாகி வருமொழியொடு திரிந்தும் இயல்பாகவும் புணர்ந்தவாறு. இவ்வகையாக உருபு விரிந்து நிலைமொழியின் ஈறாகி வருமொழியொடு புணர் தற்குத் தொல்காப்பியத்தில் தனியே விதி இல்லை. (தொ.எ. 202 நச்.)

உருபு திரிந்து உயிர்த்தல் -

{Entry: A01__383}

வரிவடிவு திரிந்து தோன்றுதல் என்பது பொருள். மெய்கள் உயிர்களொடு கூடுமிடத்தே, அகரத்தொடு கூடியவழிப் புள்ளி நீங்கிய தம் பண்டை வடிவே வடிவமாயும், ஏனைய உயிர்களொடு கூடும்வழித் தம் மெய்வடிவில் சிறிது திரிபு கொண்டு மேல்விலங்கு கீழ்விலங்கு பெற்றும், கொம்பு பெற்றும், கொம்பும் காலும் பெற்றும், கால்பெற்றும் வரிவடிவில் எழுதப்படுதல்.

வருமாறு : கா, ஙா - கால்கள் பெற்றன. தி, தீ - மேல் விலங்கு பெற்றன. பு, பூ - கீழ் விலங்கு பெற்றன. கெ, கே, கை - கொம்பு பெற்றன. கொ, கோ, கௌ - கொம்பும் காலும் பெற்றன. (தொ. எ. 17 நச். உரை)

உருபு புணர்ச்சி -

{Entry: A01__384}

நிலைமொழியாகிய பெயர்கள், உருபுகளை வருமொழியாகக் கொண்டு இடையே, ஈறுகட்கு ஏற்ப இன் அன் அத்து வற்று ஆன் ஒன்- முதலிய சாரியைகள் பெற்றும் பெறாமலும் புணரும் புணர்ச்சி உருபுபுணர்ச்சியாம்.

எ-டு : மரம் + அத்து + ஐ = மரத்தை - அத்துச்சாரியை (தொ. எ. 185 நச்.); ஆ + ஐ = ஆனை- (இ)ன்சாரியை (தொ.எ. 120 நச்.); பொன் + ஐ = பொன்னினை, பொன்னை; இன்சாரியை பெற்றும் பெறாதும் உருபொடு புணர்ந்தது. (தொ.எ. 202 நச்.); மலை + ஒடு = மலை யொடு; சாரியை பெறாதும் ஈறு திரியாதும் உருபொடு புணர்ந்தது. (தொ.எ. 202 நச்.)

உருபுகளின் புணர்ச்சி இடைச்சொற் புணர்ச்சியே எனினும் பெரும்பாலும் வேற்றுமைப் புணர்ச்சியின் இயல்பில் அமையும். ஈண்டு உருபு என்றது, எழுவாயும் விளியும் ஒழிந்த ஏனைய ஆறு உருபுகளையேயாம்.

உருபொடு புணரும் நிலைமைக்கண், யான் யாம் நாம் நீ நீர் தான் தாம் -என்ற மூவிடப் பெயர்கள் முறையே என் எம் நம் நின் நும் தம் தம் - என நெடுமுதல் குறுகி வருதல் வேற்றுமைப் பொருள் நோக்கம் பற்றி நிகழ்வதாதலின் உருபுபுணர்ச்சிக்குச் சிறப்பாகக் கொள்ளப்படும். இது பொருட்புணர்ச்சிக் கும்ஒக்கும். (நன். 242 சங்கர.)

உருபுபுணர்ச்சி சிறப்பு விதி -

{Entry: A01__385}

எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச் சாரியையும், உயர்திணைக்கண் நம்முச்சாரியையும் பெற்று உருபேற்கும்; உருபினை அடுத்து உம்மை பெறும்.

வருமாறு : எல்லாவற்றையும், எல்லாநம்மையும்

எல்லாரும் எல்லீரும் - என்பன எல்லார் எல்லீர் என முறையே நின்று, அவற்றின்பின் முறையே தம் நும் என்ற சாரியை பெற்று உருபேற்று ஈற்றின்கண் உம்மை பெற்று முடியும்.

வருமாறு : எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும்

மூவிடப் பெயர்கள் நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம் என நின்று உருபொடு புணரும். நான்கனுருபு ஏற்குமிடத்து இம் முதல் குறுகிய பெயர்கள் அகரச் சாரியை பெறும். நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து, என் எம்- முதலிய தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈறாக அமைந்த இச்சொற்கள் பொதுவிதிப்படி ஈற்று ஒற்று இரட்டமாட்டா.

வருமாறு : என்னை, என்னால், என்னின், என்கண்

எம், நம் - முதலியவற்றொடும் இவ்வாறே ஒட்டுக.

யான் + கு > என் + கு > என் + அ + கு > என + கு = எனக்கு

யான் + அது > என் + அது = எனது

பிறவற்றோடும் இவ்வாறே ஒட்டிக் காண்க

ஆ மா கோ - என்ற பெயர்கள் னகரச் சாரியை பெற்றும் பெறாமலும் உருபேற்கும்.

வருமாறு : ஆனை, ஆவை; மானை, மாவை: கோனை, கோவை (வகரம் : உடம்படுமெய்)

ஒருபது முதல் எண்பது ஈறாகிய எட்டு எண்ணுப்பெயர்களும் ஒன்பது என்ற எண்ணுப்பெயரும் உருபொடு புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வரின், ‘பது’ என்பதில் பகரமெய் நீங்கலாக ஏனைய கெடப் புணர்ந்து முடியும்.

வருமாறு: ஒருபது+ஆன்+ ஐ > ஒருப் + ஆன்+ ஐ = ஒரு பானை; எண்பது+ ஆன் + ஐ > எண்ப் + ஆன் + ஐ = எண்பானை; ஒன்பது + ஆன் + ஐ > ஒன்ப் + ஆன் + ஐ = ஒன்பானை

ஆன்சாரியை இடையே வாராதொழியின், ஒருபதை - ஒருபஃதை, எண்பதை - எண்பஃதை, ஒன்பதை - ஒன்பஃதை - என்றாற் போல முடியும்.

அவ், இவ், உவ் - என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி அற்றுச் சாரியை பெற்று, அவற்றை -இவற்றை - உவற்றை - என்றாற் போல முடியும்.

அஃது இஃது உஃது - என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி, ஆய்தம் கெட்டு அன்சாரியை பெற்றுப் புணரும்.

வருமாறு : அதனை, இதனை, உதனை - என்றாற் போல முடியும். அது இது உது - என்பனவும் உருபேற் புழி அதனை - இதனை - உதனை - என்றாற் போலப் புணரும். (நன். 245 - 251)

உருபுபுணர்ச்சி பொருட்புணர்ச்சிக்கும் பொருந்தி வருதல் -

{Entry: A01__386}

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உருபிற்குச் சென்ற சாரியையை (அவ்வுருபு தொக்க) பொருட்புணர்ச்சிக்கும் கொள்வர். ஆயின் அது தொல்காப்பியனார்க்கு உடன்பாடு அன்று. உருபிற்குச் சென்ற சாரியை பொருட்புணர்ச்சிக்கும் ஒக்குமாயின், அவர் மாட்டெறிந்தே கூறுவார்.

‘நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும்’ (தொ. எ. 253 ந ச்.)

‘சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்’ (263)

‘உருபியல் நிலையும் மொழியுமா ருளவே’ (294)

என மாட்டெறிந்து, மாட்டேற்றான் அதிகாரவல்லெழுத்து விலக்கப்படாது ஆதலின், அதனை நீக்க ‘வல்லெழுத்து இயற்கை’ என்பார்.

எ-டு : நீ + ஐ > நின் + ஐ = நின்னை (தொ. எ. 179 நச்.)

நீ + கை > நின் + கை = நின்கை (253)

அது + கு > அது + அன் + கு > அத் + அன் + கு = அதற்கு; (176)

அது + கை > அது + அன் + கை > அத் + அன் + கை = அதன்கை (263)

கோ + ஐ > கோ + ஒன் + ஐ = கோஒனை (180)

கோ + கை > கோ + ஒன் + கை = கோஒன்கை (294)

உருபுபுணரியல் உரைப்பன -

{Entry: A01__387}

வேற்றுமையுருபுகள் நிலைமொழியொடும் வருமொழி யொடும் புணருமாறும், இடையே சாரியை பெறுங்கால் வரும் திரிபுகளும், விகுதி பதம் சாரியை உருபு - இவை பொது விதியான் புணர்வனவும், இரண்டாம் மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிகளின் சிறப்புவிதியும், எழுத்ததிகாரப் புறனடையும் உருபுபுணரியலில் இடம் பெற்றுள்ளன. நன்னூல் எழுத்ததி காரத்து இறுதியியலாம் ஐந்தாவது இது. இதன்கண் 18 நுற்பாக்கள் உள. (நன். 240-257)

உருபுபுணரியலில் திசைப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__388}

உருபுபுணரியலில், திசைப்பெயர்கள் இன்சாரியை பெற்றும் பெறாமலும், ஐகாரம் பெற்றும், பலவாக விகாரப்பட்டும் புணரும்.

எ-டு : அ) வடக்கின்கண், வடக்கண்;தெற்கின்கண், தெற்கண்; குணக்கின்கண், குணக்கண்; குடக்கின்கண், குடக்கண்; கிழக்கின்கண், கிழக்கண்; மேற்கின்கண், மேற்கண் - இவை இன்சாரியை பெற்றும் பெறாமலும் உரு பொடு புணர்ந்தன.

ஆ) கிழக்கின்கண் - கீழை; மேற்கின்கண் - மேலை; - இவை ஐகாரச்சாரியை பெற்றன.

இ) கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை; வடசார், வடபுடை - இவை சாரியை இன்றிப் பல விகாரப்பட்டு உருபொடு புணர்ந்தன.(தொ. எ. 201 நச். உரை)

உரும் என்ற பெயர் புணருமாறு -

{Entry: A01__389}

உரும் என்ற பெயர், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், வன்கணம் வரின் உகரப்பேறும் வல்லெழுத்தும், மென்கண மும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரப்பேறும் எய்திப் புணரும். உயிர்க்கணமும் யகரமும் வரின் உகரப்பேறின்றி இயல்பாகப் புணரும்.

எ-டு : உரும் + கடிது, கடுமை = உருமுக் கடிது, உருமுக் கடுமை; உரும் + நீண்டது, நீட்சி = உருமு நீண்டது, உருமு நீட்சி; உரும் + வலிது, வன்மை = உருமு வலிது, உருமு வன்மை; உரும் + அடைந்தது, அடைவு = உருமடைந்தது, உருமடைவு; உரும் + யாது, யாப்பு = உரும் யாது, உரும்யாப்பு. (தொ. எ. 328 நச். உரை)

‘உருவினும் இசையினும் அருகித் தோன்றும்’ குறிப்புமொழி -

{Entry: A01__390}

நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொற்கள்.

எ-டு : ‘கஃஃ றென்னும் கல்லதர் அத்தம்’ - கருமை :நிறம்

‘சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’

- சுர்ர்:ஓசை. இச்சொற்களில் ஆய்தம் அளபெடுத் துள்ளது. (தொ. எ. 40 நச். உரை).

உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல்’ -

{Entry: A01__391}

விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும், இதற்குப் பொருந் தாது என உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ, அவ்விதியை அதற்குக் கொள்க.

விகுதிப் புணர்ச்சி: ‘றவ்வொடு உகர உம்மை’ (நன். 145) - சென்று என்புழி இறந்தகாலமும், சேறு என்புழி எதிர்காலமும் பொருந்தும்.

பதப்புணர்ச்சி :‘அல்வழி இ ஐ’ (176) - ஆடி திங்கள்- என இயல்பாம் என்றும், பருத்திக் குறிது - என மிகும் என்றும் கொள்ளற்க. பருத்தி குறிது - என எழுவாய்க்கண் இயல்பாம் எனவும், ஆடித் திங்கள் - எனப் பண்புத்தொகைக்கண் மிகும் எனவும் கொள்க.

சாரியைப் புணர்ச்சி: ‘பதமுன் விகுதியும்’ (243)- நாட்டினின் நீங்கினான்- என ‘இன்என வரூஉம் வேற்றுமை யுருபிற்கு’ இன்சாரியை வரும் எனவும், நாட்டுக்கண் இருந்தான் - எனக் கண்ணுருபிற்கு இன்சாரியை வாராது எனவும் கொள்ளற்க. நாட்டின் நீங்கினான் - என இன் உருபிற்கு இன்சாரியை வாராது என்றும், நாட்டின்கண் இருந்தான்- எனக் கண்ணுரு பிற்கு இன்சாரியை வரும் என்றும் கொள்க.

உருபுபுணர்ச்சி: ‘ஒற்றுயிர் முதலீற்று’ (242)- நம்பிகண்- எனக் கண்ணுருபு (வல்லொற்று) மிகாது எனவும், நம்பிக்கு- எனக் குவ்வுருபு ‘மன்’ என்ற மிகையால் வலி மிகும் எனவும் கொள்க.

இவ்வாறு பொருள் காணாமல், மேற்காணும் நால்வகைப் புணர்ச்சியுள் ஒன்றற்குச் சொன்னவிதி மற்றொன்றற்கும் கொள்க எனப் பொருள் கொள்வாருமுளர். (நன். 254 சங்கர.)

‘உரைப்பொருட் கிளவி’ புணர்ச்சி -

{Entry: A01__392}

உரைப்பொருட்கிளவியாவது எதிர்முகமாக்கும் பொருளை யுடைய அம்ம என்னும் இடைச்சொல். இஃது அம்ம கொற்றா என இயல்பாயும் அம்மா கொற்றா என நிலைமொழி ஈறு நீண்டு இயல்பாயும் புணரும். (தொ. எ. 210, 212 நச்.)

அம்ம என்னும் உரைப்பொருட்கிளவியின் நீட்டம் விளியின் - கண்ணேயே வரும். (தொ. சொ. 153 சேனா.)

கேள் என்று சொல்லுதற்கண் வருவது அம்ம என்னும் இடைச்சொல். (எ. கு. பக். 200)

உரையசைக் கிளவி -

{Entry: A01__393}

தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக் கும் சொல். அது கேள் முதலிய முன்னிலை ஏவல் ஒருமைச் சொல். (தொ. எ. 34 நச். உரை)

கேண்மியா என்பதன்கண் மியா என்பது உரையசைச் சொல். (தொ. எ. 34. இள. உரை)

‘ஆங்க என்னும் உரையசைக் கிளவி’ (தொ .எ. 204 நச்.)

‘அம்ம என்னும் உரைப்பொருட் கிளவி’ (210)

‘அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி’ (தொ. சொ . 267 சேனா.)

என்பனவற்றை நோக்கின், மியா என்பதே உரையசைக் கிளவி;கேள் என்பது உரையசைக் கிளவி ஆகாது.

‘ஏவல் குறித்த உரையசை மியாவும்’ (தொ. எ. 244 நச்.) என ஆசிரியர் கூறுதலின், மியா என்பதே உரையசைக் கிளவி. (எ.ஆ.பக். 36)

வருமாறு : கேண்மியா கொற்றா - என இயல்பாகப் புணரும். (தொ. எ. 224 நச்.)

உரையசைக்கிளவிப் புணர்ச்சி -

{Entry: A01__394}

கட்டுரைக்கண்ணே அசைத்த நிலையாய் வரும் ஆங்க என்னும் இடைச்சொல் உரையசைக் கிளவியாம். கட்டுரை - புனைந்துரை;அசைத்தல் - சேர்த்துதல்.

‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக்

கேள்வனை விடுத்துப் போகி யோளே’

என்புழி, ஆங்க என்பது அங்ஙனே எனப் புனைந்துரைத்து நின்றது. சிறிது பொருள் உணர்த்துவனவற்றை உரையசை என்ப. (தொ. சொ. 279 நச். உரை)

அகரஈற்று ஆங்க என்னும் உரையசை இடைச்சொல் வன்கணம் வந்துழி மிக்குப் புணரும். ஆங்கக் கொண்டான் என வரும். (தொ. எ. 204 நச்.)

உரையிற் கோடல் -

{Entry: A01__395}

உரையிற் கோடல் என்பது உத்திவகைகளுள் ஒன்று. தொல் காப்பியம் கூறியவற்றுள் இஃது இடம் பெற்றிலது. இவ் வுத்திவகையை உரையாசிரியன்மார் எடுத்தாண்டுள்ளனர். நூற்பா வாயிலாக நேராக உணர்த்தப்படாத இன்றியமை யாத செய்திகளை உரைவாயிலாக வெளியிடுவது இவ்வுத்தி வகை குறிப்பிடும் செய்தியாம்.

எ-டு : மகரம் தன் அரைமாத்திரையின் குறுகும் என்பதே நூற்பாச் செய்தி. அது கால்மாத்திரையாகக் குறுகும் என்பது உரையிற்கோடல். (தொ.எ. 13 நச். உரை)

‘புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை’ என்பதுதான் நூற்பாச் செய்தி. உயிர் வருவழிப் புளியவிலை என சாரியை மகரம் கெடுதலும், புளியிலை என அம்முச் சாரியை முழுதும் கெடுவதும் உரையிற் கோடல். (தொ.எ. 130 நச்.)

‘ஏ என் இறுதிக்கு எகரம் வரும்’ என்பதே நூற்பாச் செய்தி. ஏஎக் கொட்டில் - ஏஎ நெகிழ்ச்சி - என எகரப்பேறு யாண்டும் கொள்ளாது ஏற்புழிக் கொள்க என்பது உரையிற்கோடல். (தொ.எ. 227 நச்.)

தெவ் என்ற சொல் தொழிற்பெயர் போல உகரம் பெறும் என்பதே நூற்பாச் செய்தி. தெவ்வுமாட்சி என்பதனொடு தெம் முனை எனவும் வரும் என்று குறிப்பிடுவது உரையிற்கோடல். தெவ்வுமுனை ‘தெம்முனை’ எனவும் வரும். (தொ.எ. 382 நச்.)

ஐகாரம் ஒருமாத்திரை அளவிற்றாகக் குறுகும் நிலையுமுண்டு என்பதே நூற்பாச் செய்தி. ஐகாரம் முதல் இடை கடை என்ற மூன்றிடத்தும் குறுகும் என்பதும், ஒளகாரம் மொழி முதற் கண் குறுகும் என்பதும் உரையிற்கோடல். (தொ. எ. 57 நச்.)

தொ. எ. இளம்பூரணர் உரையிலும் இவ்வுத்திவகை 131, 141, 155, 211, 269, 471 முதலிய நூற்பாக்களில் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாற்றான், எடுத்தோத்தான் சொல்லப்படாமல், இலேசுக ளானும் கொள்ளப்பட இயலாமல் உள்ள செய்திகள் உரையிற் கோடல் என்ற உத்திவகையான் கொள்ளப்படுதலை உரை களில் காணலாம்.

உரையின் இருகூறு, மூவகை, ஆறும் ஏழும் பத்தும் பதின்மூன்றும் ஆகிய கூறுகள் -

{Entry: A01__396}

தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என்பன இரு கூறாம்.

பொழிப்பு, அகலம், நுட்பம் என்பன மூவகையாம்.

எடுத்துக்கோடல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொரு ளுரைத்தல், வினாதல், விடுத்தல் - என்பன ஆறு கூறாம்.

பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம், பதப்பொருளுரைத் தல், ஏற்புழிக் காட்டல், எண்ணல்- என்பன எழுகூறாம்.

‘சொல்லே, சொல்வகை, சொற்பொருள் சோதனை,

மறைநிலை, இலேசு, எச்சம், நோக்கே, துணிவே,

கருத்தே, செலுத்தல் என்று ஈரைந்து கிளவியும்

நெறிப்பட வருவது பனுவல் உரையே’

என்பன பத்துக்கூறாம்.

சூத்திரம் தோற்றல், சொல் வகுத்தல், சொற்பொருளுரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் காட்டல், அதிகார வரவு காட்டல் - என்பன பதின்மூன்று கூறாம்.

இம்மத விகற்பம் எல்லாம் ‘பாடம் கருத்தே’ என்னும் இச்சூத் திரத்துப் பதினான்கனுள்ளே அடங்கும். (நன். 20 மயிலை.)

உரைவகை சில -

{Entry: A01__397}

உரை செய்தற்பொருட்டு எடுத்தெழுதிய மூலமும், “மன்று பறித் துண்ணேல்’ என்பதனை ‘மண்பறித் துண்ணேல்’ எனப் பாடம் ஓதுவாருமுளர்” என்றாற் போல்வனவும் பாடவுரை.

குன்றியக்கால் என்பது குன்றிக்கால் என விகாரப்பட்டுநின்றது
(குறள் 14) என்றாற் போலச் சொல்லுக்களைக் குறித்து எழுதும் உரை சொல்வகையுரை.

‘மதிமருட்டும் சிறுநுதற் பேரமர்க்கட் செய்யவாய் ஐய நுண் ணிடையாய்’ (யா. கா. 4) என்பதற்கு, ‘அறிவினை மயக்கும் சிறுநுதல் முதலிய உறுப்புக்களை உடையாய்’ எனத் தொகுத்து எழுதுமுரை தொகுத்துரை.

உதாரணம் எடுத்தெழுதும் உரை உதாரணவுரை. இதனை மேற்கோளுரை, காட்டுரை, எடுத்துக்காட்டுரை என வழங்குவர்.

என் நுதலிற்றோவெனின் எனவும், என்பாரும் உளராலோ வெனின் எனவும் வினாவி எழுதும் உரை வினாவுரை.

இது கருதிற்று எனவும், இது கருதி என்க எனவும் எதிர்மொழி எழுதும் உரை விடையுரை.

சூத்திரத்து உட்பொருளன்றி அங்கே வேண்டியிருந்தால் பெய்துரைப்பதுவிசேடவுரை.

வேற்றுமையுருபு முதலியன தொக்கு நிற்பின் அவற்றை விரித்தெழுதுவது விரிவுரை.

அதிகரித்தல், ‘வருவிக்கப்பட்ட’தென அதிகாரத்தொடு பொருந்தக் காட்டி எழுதும்உரை அதிகாரவுரை.

சந்தேகப்பட நின்றவிடத்து, இதற்கு இதுவே பொருள் எனத் துணிந்து எழுதும் உரை துணிவுரை. (நன்.21 இராமா.)

உளவெனப்பட்ட, படாத அளவு நிறைப்பெயர்கள் -

{Entry: A01__398}

உளவெனப்பட்ட அளவுப் பெயர்கள்: கலம் சாடிதூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு - என்ற ககரம் முதலாகிய ஒன்பது எழுத்துக்களையும் முதலாகக் கொண்டு வரும் சொற்களாம்.

உளவெனப்பட்ட நிறைப்பெயர்கள்: கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை- என்பனவும், உகரமுதல் நிறைப்பெயர் உண்டேல் அதுவும் ஆம்.

உளவெனப்படாத அளவுப்பெயர்கள் இம்மி ஓரடை மிடா என்பனவும், தேயவழக்காய் வரும் ஒருஞார் ஒருதுவலி- என்பனவும் ஆம். (தொ. எ. 170 நச். உரை)

உறழ்ச்சி வாரம் -

{Entry: A01__399}

திரிதரும் கூறு என்று இத்தொடர் பொருள்படும்; “உந்தியில் தோன்றும் காற்றினது திரிதரும் கூறுகள் பரா, பைசந்தி, மத்யமா என்பவை. இவை அக்காற்று உந்தி முதல் மிடறுவரை எய்துதற்குரிய இடைப்பகுதியில் அக்காற்றின் திரிதரு கூறுகள் பற்றி இடப்பட்ட பெயர்கள் ஆகும். பரையில் எழுத்துக்கள் எல்லாம் ஒரே தன்மையாய் இருக்கும்; அது மூலாதாரத்தில் நிகழும். பைசந்தி உந்தியில் தோன்றும்; அது யோகிகளுக்கே புலப்படும். மத்யமை நெஞ்சில் தோன்றும்” என வடமொழி இலக்கணங்கள் கூறுகின்றன. (தொ. எ. 102 நச்.) (எ. கு. பக். 106)

நாம் பேசும் எழுத்தொலி நான்காவது கூறாகிய வைகரீ. அது ‘துரீயம் வாசம் மனுஷ்யா வதந்தி’ என்று கூறப்படுகிறது. (எ. ஆ. பக். 86)

ஊ section: 9 entries

ஊ -

{Entry: A01__400}

இது தமிழ் நெடுங்கணக்கில் ஆறாவது உயிர்; உகரஉயிரைத் தனக்கு இனமாகக் கொண்டு அங்காப்போடு இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்தாகும்.

இது செய்யூ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி. (தொ.சொ.228 சேனா.)

ஊ என்ற பெயர் புணருமாறு -

{Entry: A01__401}

ஊ என்பது இறைச்சியை உணர்த்தும் பெயர். அஃது ஆ என்ற சொல் போல னகர ஒற்றினைச் சாரியையாகப் பெற்று ஊன் என்றாகும்.

அல்வழிக்கண் ஊன் என்பது இயல்பாகப் புணரும் (நகரமுதல் நீங்கலாக வருமொழி கொள்க.)

எ-டு : ஊன் கிடந்தது, ஊன் மெலிது, ஊன் வலிது, ஊனரிது (தொ. எ. 269 நச்.)

வேற்றுமைக்கண் னகரச் சாரியையொடு, வருமொழி நாற்கணம் வரினும் இயல்பாகப் புணர்தலும், அக்குச்சாரியை பெற்று வன்கணம் வரின் மிக்கும் ஏனைக்கணம் வரின் இயல்பாயும் புணர்தலும் நிகழும்.

எ-டு : ஊன்குறை, ஊன்மென்மை, ஊன்வலிமை, ஊனருமை; ஊனக்குறை, ஊனஞாற்சி, ஊன வன்மை, ஊன வருமை - என இருநிலை யுமுண்டு. (தொ.எ. 270 நச். உரை)

ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்காய்த் தொல்காப்பிய னார் காலத்தது; அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (தொ.எ. 269 நச். உரை)

ஊகார ஈற்று அல்வழிப் பொதுப்புணர்ச்சி -

{Entry: A01__402}

ஊகார ஈற்று அல்வழி எழுவாய்த்தொடர் வன்கணம் வரின் மிக்கும் ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும்

எ-டு : கொண்மூக் கடிது, கொண்மூ ஞான்றது, கொண்மூ வலிது, கொண்மூ வரிது (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 264 நச்.)

ஊகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கு முடிதலும், சிறுபான்மை எழுத்துப்பேறள பெடை பெற்று வருதலும், ஏனைய கணம் வரின் இயல்பாகப் புணர்தலும் நிகழும்.

எ-டு : ஆடூக் குறியன், ஆடூஉக் குறியன்; மகடூக் குறியள், மகடூஉக் குறியள்;ஆடூ நல்லன், ஆடூ வல்லன், ஆடூ வெளியன் (வகரம் உடம்படுமெய்). (தொ.எ. 265 நச். உரை)

ஊகார ஈற்று ஏவல்ஒருமைமுற்றுப் புணருமாறு -

{Entry: A01__403}

ஊகாரஈற்று ஏவலொருமைமுற்று வருமொழி வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : கைதூக் கொற்றா, கைதூ நாகா, கைதூ வளவா, கைதூ வரசா (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 265 நச்.)

ஊகார ஈற்று வினையெச்சப் புணர்ச்சி -

{Entry: A01__404}

ஊகாரஈற்று வினையெச்சங்கள் வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : உண்ணூக் கொண்டான், உண்ணூ நடந்தான், உண்ணூ வாழ்ந்தான், உண்ணூ வடைந்தான் (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 265 நச்.)

ஊகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: A01__405}

ஊகாரஈற்றுப் பெயர் வன்கணம் வந்துழி மிக்கும், ஏனைய கணங்கள் வந்துழி இயல்பாகவும் புணரும்.

எ-டு : கொண்மூக் குழாம்; கொண்மூநீட்சி, கொண்மூ வளர்ச்சி; கொண்மூ வடைவு (வகரம் உடம்படு மெய்)

அவற்றுள் குற்றெழுத்தை அடுத்த ஊகாரஈறும், ஓரெழுத் தொரு மொழி ஊகாரஈறும் எழுத்துப்பேறளபெடையும் பெறும்.

எ-டு : உடூஉக் குறை, உடூஉ ஞாற்சி, உடூஉ வன்மை, உடூஉ வடைவு; தூஉக்குறை, தூஉநீட்சி, தூஉ வன்மை, தூஉ வாசை

உயர்திணைப்பெயரும் ஆடூஉக்கை மகடூஉக்கை - என்றாற் போல எழுத்துப்பேறளபெடை பெறும்.

பூ என்னும் பெயர் எழுத்துப்பேறளபெடை உகரம் பெறாமல், வன்கணம் வந்துழி வந்த வல்லெழுத்தும் அதற்கொத்த மெல் லெழுத்தும் பெற்றும், ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : பூக்கொடி, பூங்கொடி; பூநீட்சி, பூவண்ணம், பூவழகு

ஊ என்ற பெயர் னகரச்சாரியையும் அதனோடு அக்குச்சாரி யையும் பெற்று வன்கணத்தொடு புணரும்.

எ-டு : ஊன் குறை, ஊன் செய்கை; ஊனக்குறை, ஊனச் செய்கை

ஆடூ, மகடூ - என்பன இன்சாரியை பெற்றுப் புணர்தலு முண்டு.

எ-டு : ஆடூவின் கை, மகடூவின் கை, செவி, தலை, புறம்- என முடிக்க. (தொ. எ. 266-271 நச்.)

ஊகாரம் வகரத்தொடு நவிலாமை -

{Entry: A01__406}

ஊகாரம் வகரமெய் வருக்கத்தோடு இணைந்து ஈறாகாது. ஆகவே வகரமெய், யாண்டும் ஈறாக வாராத எகரம், விலக்கப் பட்ட ஊகாரம், நகரமெய்யோடன்றி ஈறாகாத ஒகரம் என்ற மூன்று உயிர் நீங்கலாக ஏனைய ஒன்பது உயிர்களொடும் மொழிக்கு ஈறாக வரும்.

எ-டு : உவ, வா, கருவி, ஒருவீ, கதவு, வே, வை, உறுபவோ, வெள (தொ. எ. 74 நச்.)

ஊகாரமும் ஓகாரமும் ஒளகாரமாகத் திரியும் வடநடைப் பகுபதம் -

{Entry: A01__407}

ஊவும் ஓவும் ஒளவாகத் திரியும். சூரன் என்னும் சூரியன் மகனாம் சனி சௌரி எனவும், கோசலையிடத்து (கோசல நாட்டிடத்து)ப் பிறந்தாள் கௌசலை எனவும், சோமன் என்னும் சந்திரனுடைய மகனாம் புதன் சௌமன் எனவும் வரும்.

ஐயாகத் திரிவன எல்லாம் அயி என்றும், ஒளவாகத் திரிவன எல்லாம் அவு என்றும் முடியும். (அயிந்திரம், கவுரவர் - எனக் காண்க) (தொ.வி.86 உரை)

ஊன்: புணருமாறு -

{Entry: A01__408}

‘குயின், ஊன் : புணர்ச்சி’ காண்க.

எ section: 109 entries

எ -

{Entry: A01__409}

இது தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது எழுத்து; ஒரு மாத்திரை அளவிற்றாய குறில். இதன் இனமாகிய நெடில் ஏ. எகரம் அகரக்கூறும் இகரக்கூறும் சேர்ந்து அமைந்தது என்ற கருத்துத் தமிழ் எகரத்துக்கு அவ்வளவு பொருந்தாது. எகரம் வாயை அங்காத்தலோடு அண்பல் அடியை நாவிளிம்பு உறப் பிறக்கும் எழுத்துக்களுள் ஒன்று. இது மொழிமுதற்கண் வினாவாக வரும். எவன் என்ற வினாவினைக்குறிப்புக்கு இஃது அடியாக வருவது; அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றுவது. இதனைத் தமிழ்ச்சிறப்பெழுத்து ஐந்தனுள் ஒன்று என்ப. இது பிராகிருதத்திலும் உள்ளது. யகர முதல் வடசொற்கள் தமிழில் எகர முதலாக, யந்த்ர- எந்திரம், யமன்- எமன் என்றாற் போல வரும். எகரம் அளபெடைக்கண்ணேயே ஈறாகி வரும். அஃது எம்மெய்யெழுத்தொடும் கூடி ஈறாகாது.

எகரம் ஈறாதல் எகரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: A01__410}

எகரம் பெயர்க்கண் மொழி ஈறாக வாராது. அது முன்னிலை ஏவல் ஒருமைக்கண் அளபெடையாய் மொழியிறுதியில் வரும். வன்கணம் வருவழி மிக்கும், பிறகணத்து இயல்பாயும் முடியும்.

எ-டு : ஏஎக் கொற்றா, ஏஎ நாகா, ஏஎ வளவா, ஏஎ வரசா (வகரம் உடம்படுமெய்)

ஏஎ - எனக்கு ஒரு கருமம் பணி என்னும் பொருட்டு. (தொ. எ. 272. நச். உரை)

தேற்றப்பொருட்கண் எகரம் ஏகாரஇடைச்சொற்கு அள பெடை யெழுத்தாய் இறுதியில் வரும்.

எ-டு : யானேஎ கொண்டேன், யானேஎ நடந்தேன், யானேஎ வந்தேன், யானேஎ யடைந்தேன் (யகரம் உடம்படு மெய்) (தொ.எ. 273 நச்.)

எகர ஒகர வடிவு -

{Entry: A01__411}

‘எகரம் ஒகரம் மெய் புள்ளி பெறும்’ என்ற சூத்திரத்தை ‘ஏகார ஓகாரம் மெய் புள்ளி பெறும்’ எனத் திருத்த வேண்டிற்று என் னெனில், இக்காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளி யிட்டெழுதுவது பெருவழக்கு ஆயினமையால் என்க. (நன். 98 இராமா.)

எகரம் புள்ளி பெறுதல் -

{Entry: A01__412}

உயிரெழுத்துக்களுள் எகரம் ஒகரம் ஒழிந்த பத்து எழுத்துக் களும் புள்ளியில்லனவாய் வழங்க, இவ்விரண்டு எழுத்துக்கள் மாத்திரம் புள்ளி பெற்று வழங்குதல் நோக்க, தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்லாசிரியர்கள், எகர ஒகரங்கள் வடமொழியில் இல்லை யாதலின், அவற்றிற்கு வடமொழியில் வரிவடிவு அமைக்க வாய்ப்பு இன்மையான், தமிழில் எகர ஒகரங்களுக்கு வேறுவடிவு அமைக்காமல், ஏகார ஓகாரங்க ளின் வரிவடிவின்கண் (எ ஒ என்பன பண்டை நெடில் வரி வடிவு) புள்ளியிட்டு (எ {{special_puLLi}} ஓ {{special_puLLi}} - என) வழங்கினர் என்பது தோன்று கிறது.

முதன் முதலில் தமிழிலக்கணம் வகுத்த ஆசிரியர் வடமொழி நோக்கித் தமிழ்நெடுங்கணக்கு வைப்புமுறையிலே வேறுபாடு செய்தது போலவே, வரிவடிவிலும் வேறுபாடு செய்தனர் என்று தோன்றுகிறது.

மேலே புள்ளியிடுவதன்மூலம் மாத்திரை பாதியாகக் குறைப்பதை அறிவிக்கும் மரபினைத் தமிழிலக்கண நூலார் கொண்டனர். (எ. ஆ. பக். 20)

எ : 2 மாத்திரை, எ {{special_puLLi}} : ஒரு மாத்திரை; ஒ : 2 மாத்திரை, ஒ {{special_puLLi}} : ஒரு மாத்திரை; க : ஒரு மாத்திரை, க் : அரை மாத்திரை; ம் : அரை மாத்திரை, ம் {{special_puLLi}} : கால் மாத்திரை; கு : ஒரு மாத்திரை, கு {{special_puLLi}} : (குற்றிய லுகரமாம்) அரை மாத்திரை.

எகரமுதல் வயின் -

{Entry: A01__413}

எகரமாகிய முதல்வினாவையுடைய வயின் என்ற சொல். அஃது எவ்வயின் என்பது (எவ்விடம் என்னும் பொருட்டு).

‘எவ்வயின்’ னகர ஈற்றதாய் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொல். இது பெயர் நிலையதாய் வரு மொழி வன்கணத்தொடு புணரும்வழி ஈற்று னகரம் றகரமாகத் திரிய ‘எவ்வயிற் பெயரும்’ என்றாற் போல முடியும்.

இயல்புகணம் வருமொழி முதற்கண் வரின் இயல்பாகப் புணரும். (எவ்வயின்+ நடந்தான் என்புழி, எவ்வயினடந்தான் எனத் திரிபு நிகழ்தலின், மென்கணத்துள் நகரம் நீங்கலாகக் கொள்க.) (தொ. எ. 334. நச்.)

‘எகரமுதல் வினாவின் இகர இறுதி’ -

{Entry: A01__414}

1. எதோளி என்ற வினாச்சொல்: இஃது எவ்விடம் என்னும் பொருளது. இஃது எதோளிக் கொண் டான் - என வருமொழி வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

2. எவ்வழி என்ற வினாச்சொல்: இதுவும் எவ்விடம் என்னும் பொருட்டு. இஃது எவ்வழி கொண்டான், எவ்வழிக் கொண்டான்- என (இயல்பாயும் மிக்கும்) வருமொழி வன்கணம் வரின் உறழ்ந்தும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். இவை பெயர் நிலையின. (தொ. எ. 159 நச். உரை)

எகர வினா முச்சுட்டு புணர்ச்சி விதி -

{Entry: A01__415}

எ - அ இ உ - என்னும் வினா சுட்டு இடைச்சொற்கள் நிலை-மொழியாக நிற்ப, வருமொழி முதற்கண் உயிர்க்கணமோ இடைக்கணத்து யகரமோ வரின், இடையே வகர ஒற்று மிகும்.

எ-டு : எ+ அணி = எவ்வணி, எ + யானை = எவ்யானை;
அ, இ, உ + யானை = அவ்யானை, இவ்யானை, உவ்யானை (அ+அணி - அவ்வணி; பிறவும் கொள்க.)

வருமொழி முதற்கண் யகரம் ஒழிந்த பிற மெய்கள் வரின், வந்த அம்மெய்களே மிக்கு முடியும்.

எ-டு : எக்குதிரை, எச்சேனை, எத்தண்டு, எப்படை; எங்ஙனம், எஞ்ஞாலம், எந்நாடு, எம்மனை, எவ்விதம்

சுட்டிடைச்சொற்கும் இவ்வாறே ஒட்டுக.

செய்யுளில் சுட்டு நீண்டவழி இடையே யகரம் தோன்றும். (அது வருமொழிமுதல் உயிர் வருமிடத்தேயே என்க.)

வருமாறு : அ + இடை > ஆ + ய் + இடை = ஆயிடை

சுட்டு நீண்டவழியும் பொதுவிதிப்படி மெய்வரின் வந்த மெய் மிகுதலுமுண்டு. யாவினாவும் அது.

வருமாறு : ஆங்ஙனம், ஈங்ஙனம், ஊங்ஙனம்; யாங்ஙனம் (நன். 163)

எகின் புணர்ச்சி -

{Entry: A01__416}

எகின் என்பது ஒரு மரத்தையும் ஒரு பறவையையும் குறிக்கும் சொல்.

எகின் என்ற மரப்பெயர், ஆண் என்ற மரப்பெயர் போல, அம்முச்சாரியை பெற்று ஏற்ற திரிபுகளுடன் வருமொழி யொடு புணரும்.

எ-டு: எகினங்கோடு, எகினநார், எகினவட்டை, எகினவியல்பு (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 336 நச்.)

பறவையைக் குறிக்கும் எகின் என்ற பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி, அகரமும் வல்லெழுத்துப் பேறும், சிறுபான்மை மெல்லெழுத்துப்பேறும், இயல்பு கணங்களொடு புணரும்வழி அகரப்பேறும் எய்தி முடியும்.

எ-டு : எகின் + கால் = எகினக்கால், எகினங்கால்; எகின் + நீட்சி = எகினநீட்சி; எகின் + யாப்பு = எகினயாப்பு; எகின் + அடைவு = எகினவடைவு (தொ.எ. 337 நச்.)

உருபுபுணர்ச்சிக்கண் எகின் என்ற பெயர் அத்தும் இன்னும் பெற்று எகினத்தை, எகினினை- எனப் புணரும். (தொ.எ. 194 இள. உரை)

எகின், புளியமரம்- அன்னப்பறவை - என இரு பொருளது.

‘எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல’ -

{Entry: A01__417}

ஒளகாரம் நீங்கலாகப் பதினோருயிர்களும் பதினெட்டு மெய்க் கண்ணும் வந்து மொழிக்கு ஈறாம் என்ற பொதுவிதி யில், பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாதற்கண் ஒழிவில என்றவாறு.

அவையாவன தொ.எ. 70 முதல் 76 முடியக் கூறப்பட்டு உதாரணம் காட்டப்பெற்ற ஞகரமும் நகரமும் வகரமும் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும் ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும், எகரமும் ஒகரமும் ஒளகாரமும் ஒழிந்த ஒன்பது உயிரும் ஏறி மொழிக்கு ஈறாம் எழுத்துக்க ளாம்.

மொழிக்கு ஈறாய் வரும் என்று சொல்லப்பட்ட ஈறுகளில் சில இக்காலத்து வழக்கில் இல்லை. ‘ஈற்றில் வரும் உயிர்மெய்கள்’ காண்க.

மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் 161. இக்காலத்து உதாரணம் இல்லன 20.

மொழிக்கு ஈறாகாத ஏனைய எழுத்துக்களும் தம்பெயர் கூறுதற்கண் மொழிக்கு ஈறாம். (தொ. எ. 77 நச்.)

சகர ஞகர நகர வகரங்களொடு கூடி இவ்விவ்வுயிர்கள் ஈறாகா என்று விலக்கினாற்போல, ஏனைய மெய்களுக்கும் கூற வேண்டுவது முறையாதலின், அம்மெய்களொடு, முன்விலக்கப் பட்ட எ ஒ ஓள என்றமூன்றும் ஒழிந்த ஒன்பது உயிர்களும் கூடி ஈறாகும் என்றவாறு.

மொழிக்கு ஈறாகாதன தம் பெயர் கூறவே, மொழிக்கு ஈறாகி வருதலுக்கு ஆட்சி இல்லை ஆதலின், தொல்காப்பியனார் மொழிக்கு ஈறாகாதனவும் தம் பெயர் கூறும்வழி மொழிக்கு ஈறாகும் என்று கூறவில்லை. (எ. ஆ. பக். 71)

எடுத்தல் படுத்தல் ஓசைகள் -

{Entry: A01__418}

சொற்களைக் கூறுங்கால் பொருள் சிறக்கும் எழுத்தினை எடுத்தும், அயல் எழுத்தினை நலிந்தும், ஏனைய எழுத்துக் களைப் படுத்தும் கூற வேண்டும். எடுத்தல் படுத்தல் முதலிய ஓசைகளும் எழுத்துச்சாரியையும் தனித்தியங்கும் ஆற்ற லுடைய உயிர்க்கேயன்றி அவ்வாற்றல் இல்லாத மெய்க்கு இல்லை.

வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் பகுதியில் பொருள் சிறந்து நிற்கும். பெயர்ச்சொல் அவ்வாறன்றி விகுதி யில் பொருள் சிறந்து நிற்கும்.வினைச்சொற்கள் பகுதியில் பொருள் சிறத்தலின் விகுதிப்பொருள் வேறு விளக்குதற்கு ‘உண்டான் சாத்தன்’ என்றாற்போலப் பெயர் ஒருதலையான் வேண்டப்பட்டது. இனி, உண்டான் கரியான் என்னும் பெயர்ச்சொற்கள் விகுதியில் பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குதற்கு வேறோர் பெயர் வேண்டாது, ‘உண்டான் வந்தான்’ ‘கரியான் வந்தான்’ எனத் தாமே எழுவாயாய்ப் பயனிலை கொண்டும், ‘கரியானைக் கொணா’ என உருபேற்றும் வரும். உண்டான், கரியான் முதலிய வினைச் சொற்களும் வேறு; உண்டான், கரியான் முதலிய பெயர் களும் வேறு.

தொல்காப்பியனார் பெயர்களுள் வினைப்பெயர் என்ற பகுப்பைக் கூறியுள்ளார். சேனாவரையர் அதற்கு “வருவார், செல்வார் என்பன; தச்சன், கொல்லன்- என்பனவும் அவை” என எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.

“உண்டான்- தின்றான் - என்று படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர், வினைச்சொல் போலத் திணையும் பாலும் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன் ஆன் முதலிய ஈற்றவாய் வருதலின் தொழில்நிலையை ஒத்தன” என்றும் அவர் தொ.சொ. 70ஆம் நுற்பாவில் கூறியுள்ளார். பண்பு அடியாக வரும் பெயர் பண்புப்பெயர் என்றாற்போல, வினை அடியாக வரும் பெயர் வினைப்பெயர் என்பதே சேனா வரையர் கருத்து.

வினை வினைக்குறிப்பு முற்றுக்களை ஓசை வேறுபாட்டான் பெயராகுமெனில், பெயராயவாற்றானே ஓசை வேறுபடும், ஓசை வேறுபாட்டான் பெயராகும் என ‘ஒன்றை ஒன்று பற்றுதல்’ என்னும் குற்றம் தங்குமாதலின், வினைமுற்றும் வினைப்பெயரும் வெவ்வேறு சொற்களே; அங்ஙனமாயினும், சொல்சுருங்குதல் பொருட்டு எழுத்தொப்புமை நோக்கிப் ‘பல பொருள் ஒருசொல்’ என்ப. (சூ. வி. பக். 54, 55)

எண் என்னும் உணவுப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__419}

எள்ளினை உணர்த்தும் எண் என்னும் உணவுப்பெயர், எட்கசிவு என்றாற்போல ணகரம் டகரமாகத் திரிந்து புணர்வது போல அல்வழிக்கண்ணும் சிறுபான்மை எட்கடிது எனத் திரிதலும், பெரும்பான்மை எண் சிறிது - எண் பெரிது - என்றாற் போல இயல்பாதலும் உடையது. இயல்புகணம் வருமொழி முதற்கண் வரின் இருவழியும் இயல்பாகப் புணரும்,

எ-டு : எண் மாண்டது, எண்மாட்சி; எண் யாது, எண் யாப்பு; எண் ணழகிது, எண்ணழகு (தொ. எ. 308, 144 நச்.)

வருமொழி நகரம் வரின் அது ணகரமாகத் திரிதலும், உயிர் வரின் ணகரம் இரட்டுதலும் பொதுவிதிச் செய்கைகளாம்.

எண் + நன்று = எண் ணன்று; எண் + நன்மை = எண்ணன்மை; எண் + அடைந்தது = எண்ணடைந்தது, எண் + அடைவு = எண்ணடைவு. (தொ. எ. 150, 160 நச்.)

எண்கள் ‘இன்’ பெறுதல் -

{Entry: A01__420}

எண்ணுப்பெயரெல்லாம் இன்சாரியை பெறும்.

எ-டு : ஒன்றினை, இரண்டினை, மூன்றினை, நான்கினை, பிறவுமன்ன. (மு. வீ. புண. 69)

எண்ணுப்பெயர் உருபொடு புணர்தல் -

{Entry: A01__421}

ஏழ் என்ற எண்ணுப்பெயர் ழகரமெய் ஈற்றது. ஏனைய ஒன்று முதல் பத்து ஈறாகிய எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈற்றன. இவை பெரும்பான்மை அன்சாரியை பெற்று உருபொடு புணரும்; சிறுபான்மை இன்சாரியை பெறும்.

எ-டு : ஒன்றனை, ஏழனை, பத்தனை; ஒன்றினை, ஏழினை, பத்தினை (தொ.எ. 194, 198 நச். உரை)

எண்கள் ‘அன்’ பெறுதல் தொல்காப்பியமரபு. (தொ. எ. 198 நச்.)

எண்ணுப்பெயர்களுக்குச் சிறப்பு விதி -

{Entry: A01__422}

எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறவும் வருமொழியாக அமைய, நிலைமொழியாக ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நிற்பின், முதல் இரண்டு எண்கள் முதல் நீளும்;மூன்று ஆறு ஏழு - என்பன முதல் குறுகும்; ஆறு ஏழு - அல்லாதவற்றின் ஈற்றின் உயிர்மெய்யும், ஏழு என்ற எண்ணின் ஈற்றுயிரும் கெடும். ஒன்று என்பதன் னகரஒற்று ரகர ஒற்று ஆகும்; இரண்டு என்பதன் ணகர ஒற்றும் ரகரத்தை ஊர்ந்து நின்ற அகரமும் கெட, அவ்விரண்டு ரகரத்தின் மேலும் உகரம் வருதலுமுண்டு. (ஆண்டு அவ்விரண்டு எண்களிலும் முதலுயிர் நீடல் இல்லை என்க.) மூன்று என்னும் எண்ணின் னகரஒற்றுக் கெடுதலும், வரும் ஒற்றாகத் திரிதலும் ஆம். நான்கன் ஒற்று லகரஒற்றும் றகரஒற்றும் ஆம். ஐந்து என்பதன் ஒற்று வரு மொழி முதல் ஒற்றாகியும், அதற்கு இனமாகியும், கெட்டும் முடிவதாம். எட்டு என்பதன் டகரமெய் ணகரமெய் ஆகும்.

வருமாறு : ஒன்று+ இலை, கோடு = ஓர் இலை (ஓரிலை), ஒரு கோடு; இரண்டு + இலை, கோடு = ஈர் இலை (ஈரிலை) இருகோடு; மூன்று + ஒன்று = மூ ஒன்று (மூவொன்று); மூன்று + கழஞ்சு, நாழி, வண்டு = முக்கழஞ்சு, முந்நாழி, முவ்வண்டு; நான்கு + எடை, குணம் = நால்எடை (நாலெடை), நாற்குணம்; ஐந்து + மூன்று, கழஞ்சு, எடை = ஐம்மூன்று, ஐங்கழஞ்சு, ஐ எடை (ஐ யெடை); ஆறு + பத்து = அறுபது; ஏழு + கழஞ்சு = எழு கழஞ்சு, ஏழ்கழஞ்சு; எட்டு + குணம் = எண்குணம் (நன். 188-193)

எண்ணுப்பெயர் பெறும் பொதுச்சாரியை -

{Entry: A01__423}

எண்ணுப்பெயர்கள் உருபேற்குமிடத்தும், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் அன்சாரியை பெறும்.

எ-டு : ஒன்றனை, இரண்டனை - (தொ. எ. 198 நச்.); ஏழனை, ஏழற்கு - (தொ. எ. 194 நச்.); ஒன்றன்காயம், இரண்டன் காயம் - (தொ. எ. 419 நச்.); ஏழன்காயம், ஏழன்சுக்கு - (தொ. எ. 388 நச்.)

எண் நிறை அளவுப்பெயர்கள் ஏகாரச் சாரியை பெறுதல் -

{Entry: A01__424}

உயிரீறும் புள்ளியீறும் ஆகிய எண்ணுப்பெயர்களும், நிறைப் பெயர்களும், அளவுப்பெயர்களும் தமக்கு இனமாகிய பெயர் களாய்த் தம்மில் குறைந்த பெயர்கள் தமக்கு வருமொழியாக வந்து புணருமிடத்து இடையே ஏகாரச் சாரியை பெறும்.

எ-டு : ஒன்று+ கால் = ஒன்றே கால் எண்

கால் + காணி = காலே காணி }

கழஞ்சு + குன்றி = கழஞ்சே குன்றி

கொள் + ஐயவி = கொள்ளேயையவி } நிறை

நாழி + ஆழாக்கு = நாழியே யாழாக்கு

கலன் + தூணி = கலனே தூணி } அளவு

எண் நிறை அளவுப் பெயர்களுக்கு அரை என்பது வருமொழி யாய்ப் புணருமிடத்துச் சாரியை வாராது.

ஒன்றரை, கழஞ்சரை, கலவரை (வகரம் உடம்படுமெய்) என முறையே காண்க. (தொ. எ. 164, 165, நச்.)

‘எண் முறை நிலை’ -

{Entry: A01__425}

நெஞ்சு, மிடறு, தலை,மூக்கு, அண்ணம், நா, பல், இதழ்- என்று எண்ணப்பட வேண்டிய முறை அமையும் நிலை. இவை எழுத்தின் தோற்றத்திற்குரிய பிறப்பிடமும் கருவியும் ஆகும். (எ. கு. பக். 85)

எண்வகை அளபெடை -

{Entry: A01__426}

‘அளபெடையின் எட்டுவகை’ காண்க.

எதிர்கால இடைநிலை -

{Entry: A01__427}

பகரமும் வகரமும் ஆகிய இரண்டு ஒற்றும் மூவிடத்து ஐம்பால்களிலும் எதிர்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபத இடைநிலைகளாம்.

வருமாறு : உண்பன், உறங்குவன்

உரையிற் கோடலான், சிறுபான்மை பிற இடைநிலைகளும் எதிர்காலம் காட்டுதல் கொள்ளப்படும்.

வருமாறு : ‘அண்க ணாளனை நகுகம் யாமே’ (அகநா. 32:21) இடைநிலை : க்; ‘பாடுக ம் வாவாழி தோழி’ (கலி. 41: 1) இடைநிலை : க்; ‘ஐய சிறிதென்னை ஊக்கி, (கலி. 37: 15) இடைநிலை : க்; ‘ஈதல் மாட்டு த்தி பெரும, (கலி. 86: 32); இடைநிலை: த்; உண் டி - இடைநிலை: ட்; உரைத் தி - இடைநிலை: த்; தின் றி - இடைநிலை: ற்

இவ்வாறு ககரமும் டகரமும் தகரமும் றகரமும் எதிர்காலம் காட்டின. (இ. வி. எழுத். 49; நன். 144 இராமா.)

எதிர்கால விகுதி -

{Entry: A01__428}

குடுதுறு - என்னும் குற்றியலுகர ஈற்று உண்கு - உண்டு - வருது - சேறு -முதலிய தன்மை ஒருமை வினைமுற்றுக்களும், உம் என்னும் இறுதி இடைச்சொல்லின் உகரம் ஏறிய கும் டும் தும் றும் என்னும் இவ் வீற்று உண்கும்- உண்டும்- வருதும் - சேறும் - முதலிய தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும், பகர உயிர்மெய்யும், மாரும் என்னும் இவ்வீற்று உரிஞுப- உண்ப - கொண்மார்- முதலிய உயர்திணைப் பன்மை வினைமுற்றுக் களும், மின் என்னும் ஈற்று உண்மின்- உரிஞுமின்- முதலிய முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்களும், வியங்கோள் திறத்து வரும் கவ்வும் யவ்வும் ரவ்வும் அல்லும் ஆலும் மாரும் உம்மும் மையும் என்னும் இவ்வீற்றுச் செல்க- வாழிய- வாழியர்- ‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ (குறள் - 196) - ‘மரீஇயது ஒராஅல்’ (தொ.சொ. 443 சேனா.) - ‘காணன்மார் எமரே’ - ‘வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்’ - ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ - முதலிய வியங்கோள் முற்றுக்களும், அல்லும் ஆலும் ஏலும் காணும் என்னும் இவ்வீற்று உண்ணல் - மறால்- அழேல் - சொல்லிக்காண்- முதலிய முன்னிலை ஏவலொருமை வினைமுற்றுக்களும், உண்ணலன்- உண்ணான்- முதலிய எதிர்மறை வினைமுற்றுக் களும் எனச் சொல்லப்படுவனவாகிய பகுபதங்கள் எல்லாம் எதிர்காலம் காட்டும். (இ. வி. 50 உரை)

எதிர்மறை -

{Entry: A01__429}

வினைநிகழ்ச்சி இன்மையைக் குறிப்பது எதிர்மறையாம். எதிர்மறையினை ஆகாரஈறும், ஆ ஏ ஆல் இல் - என்ற இடை நிலைகளும் காட்டும். ஆகார ஈறும், அல் இடைநிலையும், ஆவும், ஏயும் முக்காலத்துக்கும் பொதுவாவன.

எ-டு: புலிகள் புல் உண்ணா - ஆகார ஈறு

(உண்+ஆ) முக்காலத்துக்கும் பொது.

அவன் உண்ணலன் - அல் இடைநிலை

(உண்+அல்+அன்) முக்காலத்துக்கும் பொது.

அவன் உண்ணான் - ஆகார இடைநிலை (உண்+(ஆ)+ஆன்) முக்காலத்துக்கும் பொது

யான் உண்ணேன் - ஏகார இடைநிலை

(உண்+(ஏ)+ ஏன்) முக்காலத்துக்கும் பொது

உண்டிலன் - உண்+ ட்+ இல் + அன் - இறந்தகால எதிர்மறை;

உண்கின்றிலன் - உண் + கின்று + இல் + அன் - நிகழ்கால எதிர்மறை;

உண்கிலன் - உண் + க் + இல் + அன் - எதிர்கால எதிர்மறை.

மேலை மூன்றுவினைமுற்றுக்களிலும் கால இடைநிலை யோடு எதிர்மறை யிடைநிலை ‘இல்’ புணர்ந்து வந்தவாறு. (வினை நிகழ்ச்சி இல்லனவற்றை உடையன போலக் காலத் தொடு புணர்த்து உரைத்தல் இலக்கணையாம்.) (நன். 145 சங்.)

எதிர்மறை இடைநிலை காலம் காட்டல் -

{Entry: A01__430}

‘எதிர்மறை மும்மையும் ஏற்கும்’ என்புழி, மும்மையும் என்னும் முற்றும்மையை ‘முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆகும்’ என்பதனான் எச்சவும்மையாக்கி, நடந்திலன் நடவாநின்றிலன் - என எதிர்மறை (இல்) ஒரு காலம் ஏற்று வருதலும் கொள்க. (நடந்திலன் : இறந்தகால எதிர்மறை; ஏனையது நிகழ்கால எதிர்மறை) சென்றி, செல்லாநின்றி - என வருமாயின் இடை நிலை காலம் காட்டிய இகர ஈற்றவாம். (நன். 145 சங்கர.)

எதிர்மறை ஏவல் விகுதி -

{Entry: A01__431}

ஏல், அல், அன்மோ, அற்க- விகுதிகள் எதிர்மறை ஏவலொருமை யாம். ஏல் - செய்யேல், அல் - செய்யல், அன்மோ - செய்யன்மோ, அற்க - செய்யற்க - என இவை ஒருமையாக வரும்.

ஆமின், அன்மின், அற்பீர் - விகுதிகள் எதிர்மறை ஏவல் பன்மையாம்.

ஆமின் - செய்யாமின், அன்மின் - செய்யன்மின், அற்பீர் - செய்யற்பீர் - என்றும், முனியாமின் முனியன்மின் முனியற்பீர் - என்றும் வரும்.

அற்க என்னும் விகுதி மூவிடத்து ஐம்பாற்கும் ஏற்பதன்றி வியங் கோளினும் ஆம். (தொ. வி. 114 உரை)

எதிர்மறை வடநடைப் பகுபதம் -

{Entry: A01__432}

எதிர்மறைப் பகுபதம் மொழி முதற்கண் ஒற்று உளவாயின் அவ்வும், உயிர் உளவாயின் அந்நும், இருவகை மொழிக்கு நிருவும் புணர்ந்து பொருளின்மையும் பிறிதும் எதிர்மறையும் காட்டும் வடநடைப் பதங்களாம்.

சயமிலான் - அசயன்; நீதியின்மை - அநீதி; மலமின்மை - அமலம்; சீரணமின்மை - அசீரணம்; சரமின்மை - அசரம்; தருமம் இன்மை - அதருமம். பிறவுமன்ன.

அகம் என்னும் பாவமில்லான் அநகன்; அங்கமில்லான் அநங்கன்; ஆதியின்மை- அநாதி; ஆசாரமின்மை - அநா சாரம். பிறவுமன்ன.

மலமின்மை - நிருமலம்; நாமம் இல்லான்- நிருநாமன்; ஆயுதம் இல்லான்- நிராயுதன்; உவமையில்லான் - நிருவமன். பிறவுமன்ன.

மூவழியும் பகுபதப்பெயர் வடநடையால் வந்தவாறு காண்க. வடநுலார் பகுபதத்தைத் தத்திதம் என்பர். (தொ. வி. 87)

எதிர்மறைவினை அமைப்பு -

{Entry: A01__433}

நட வா முதலிய ஏவல்வினைப் பகாப்பதத்தைப் பகுதியாக நிறுத்தி இடைநிலையின்றி ஏன் ஏம் ஓம் ஆய் ஈர் ஆன் ஆள் ஆர் ஆ து அ - என்ற விகுதிகளை ஏற்றி முடிக்கின், மூவிடத்து ஐம்பால் எதிர்மறை வினைமுற்று உண்டாகும்.

எ-டு : நடவேன் (யான்), நடவேம்(யாம்), நடவோம்(யாம்), நடவாய்(நீ), நடவீர் (நீர்), நடவான் (அவன்), நடவாள் (அவள்), நடவார் (அவர்), நடவா (குதிரைகள்), நடவாது (யானை), நடவாவின (அவை)- என்று வரும். (தொ. வி. 112 உரை)

எருபுணருமாறு -

{Entry: A01__434}

எரு என்ற பெயர் நிலைமொழியாய் வருமொழி வன்கணத் தொடு புணருமிடத்து, வல்லெழுத்தும் இனமான மெல் லெழுத்தும் மிகும். உயிர் நீங்கலாக ஏனைய கணத்தொடு புணருமிடத்து அம்முச் சாரியை இடையே வருதலுமுண்டு.

எ-டு : எருக்குழி, எருங்குழி - வல்லெழுத்தும் மெல்லெழுத் தும் முறையே மிக்கன. எருவங்குழி, எருவஞாற்சி, எருவயாப்பு - அம்முச் சாரியை பெற்றன. எரு + ஈட்டம் = எரு வீட்டம் - என இயல்பாக உடம்படு மெய் பெற்றுப் புணர்ந்தது. (தொ. எ. 260 நச். உரை)

உருபேற்குமிடத்து இன்சாரியை பெற்று எருவினை முதலாக
(தொ.எ. 173) வருவது போலப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் எருவின் குறுமை எனச் சிறுபான்மை இன்சாரியை பெறுத லும் கொள்க. (தொ. எ. 260 நச். உரை)

எல்லா எழுத்தும் மெய்ந்நிலை தம்மியல் மயக்கம் கிளத்தல் -

{Entry: A01__435}

‘உயிர் மெய்ந்நிலை தம்மியல் மயக்கம் கிளத்தல்’ காண்க.

எல்லாம் என்பது உருபுஏற்றல் -

{Entry: A01__436}

எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணையைக் குறிக்கு மிடத்து உருபேற்குமாயின் அற்றுச்சாரியையும் அடுத்து உருபினையும் கொண்டு முற்றும்மையை இறுதியில் பெற்று எல்லாவற்றையும் என வரும். எல்லாவற்றொடும், எல்லா வற்றுக்கும் முதலாகப் பிற உருபுகளொடும் கூட்டுக.

இனி, அப்பெயர் உயர்திணைக்கண் வருமாயின் உருபேற்கு மிடத்து, நம்முச்சாரியையையும் அடுத்து உருபினையும் பெற்று இறுதியில் முற்றும்மையைஏற்று, எல்லாநம்மையும் - எல்லாநம்மொடும் - எல்லா நமக்கும் - என்றாற் போல வரும். (நன். 245 சங்.)

எல்லாம் என்னும் பொதுப்பெயர் புணருமாறு -

{Entry: A01__437}

எல்லாம் என்பது இருதிணைப் பொதுப்பெயர்களுள் ஒன்று. இது வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அஃறிணையை உணர்த்தும் வழி வற்றுச்சாரியையும், உயர்திணையை உணர்த்தும்வழி நம்முச்சாரியையும் பெறும்; இறுதியில் உம்மைச் சாரியை பெறும். உருபேற்றற்கண்ணும் இந்நிலை உண்டு; இயல்பு கணத்து முன்னும் இஃதுண்டு.

எ-டு : எல்லாவற்றையும் - (தொ. எ. 189 நச்.); எல்லா நம்மையும் - (தொ.எ. 190 நச்.); எல்லாவற்றுக் கோடும் - (தொ.எ. 322நச்.); எல்லாநங்கால்களும் - (தொ. எ. 324 நச்.)

எல்லாவற்றுஞாணும், யாழும், உறுப்பும். (தொ. எ. 322 நச்.)

எல்லாநஞ்ஞாணும், எல்லாநம்யாழும், எல்லாநம்முறுப்பும் (தொ. எ. 324 நச்.)

அல்வழிக்கண் வற்றுச்சாரியை பெறாது இயல்பு ஆதலும், ஈறு கெடுதலும், வலிமெலி மிகுதலும், இறுதிக்கண் உம்முச் சாரியை பெறுதலும் நிகழும். வருமொழி இயல்புகணமாயின் எல்லாம் என்பதன் மகரம் கெட்டுப் புணரும்; சிறுபான்மை இயல்பாகப் புணரும்.

எ-டு : எல்லாக் குறியவும் என ஈறுகெட்டு வலியும் உம்மும் மிக்கன; எல்லாக் கொல்லரும் - ஈறு கெட்டு வலியும் உம்மும் மிக்கன; எல்லாங் குறியரும் - ஈறு கெட்டு மெலியும் உம்மும் மிக்கன; எல்லா ஞாணும் யாழும் வட்டும் அழகும் - ஈறு கெட்டு உம் மிக்கது; எல்லாம் வாடின, எல்லாம் ஆடின என இயல்பு. எல்லா ஞான்றாரும், வணிகரும், அரசரும் என ஈறுகெட்டு உம் மிக்கது. (தொ. எ. 322 -324 நச். உரை)

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யும் உயிரும் ஆதல் -

{Entry: A01__438}

மொழிமரபில் மொழிக்கு முதலாய் வருவனஉயிர் உயிர்மெய் குற்றியலுகரம் எனவும், மொழிக்கு இறுதியில் வருவன உயிர் மெய் உயிர்மெய் குற்றியலுகரம் எனவும் கூறப்பட்டன. மொழி முதற் குற்றியலுகரமும், மொழிமுதல் உயிர்மெய்யும் மெய் யாகவே கொள்ளப்படும். மொழியிறுதி உயிர்மெய் உயிருள் அடங்கும். எனவே மொழிக்கு இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டுள் அடக்கப்பட்டன. (தொ. எ. 103 நச்.)

எல்லாரும் என்ற பெயர் புணருமாறு -

{Entry: A01__439}

எல்லாரும் என்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர், அல்வழிப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்தவழி மகரம் இனமெல்லொற் றாகத் திரிந்தும், மென்கணம் வந்தவழி மகரம் கெட்டும், இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்தவழி இயல்பாகவும் புணரும்.

எ-டு : எல்லாரு ங் கடியர், எல்லாரு ஞ் சான்றார் - மகரம் மெல்லொற்றாதல்; எல்லாரு ஞான்றார்; எல்லாரு நாணினார் - மகரம் கெடுதல்; எல்லாரும் வளவர், எல்லாரு மடைந்தார் - இயல்பாகப் புணர்தல்.

எல்லாரும் என்பது வேற்றுமையுருபுஏற்குமிடத்து, உம்மையை நீக்கி எல்லார் என்றாகித் தம்முச்சாரியை பெற்றுப் பின்னர் உருபும் உம்மையும் பெற்று எல்லார்தம்மையும், எல்லார் தம்மொடும், எல்லார்தமக்கும் - என்றாற் போல வரும். பொருட்புணர்ச்சிக்கும் இஃது ஒக்கும்.

எ-டு : எல்லார்தம்(ங்)கையும், எல்லார்தம்(ஞ்)ஞானமும், எல்லார்த(ம்)மாட்சியும், எல்லார்தம்மழகும்.

உம்மையை நீக்கிச் சாரியை பெறாது உருபேற்று ஈற்றில் உம் பெற்று, எல்லாரையும் எல்லாரொடும் எல்லார்க்கும் என வருதலே பெரும்பான்மை. (தொ. எ. 191 நச்., நன். 246)

‘எல்லா வழியும் நின்ற சொல்முன் இயல்பு’ ஆவன -

{Entry: A01__440}

நின்ற சொல்- நிலைமொழி. நிலைமொழிகள் உயிர்12, மெய் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் - என 11, குற்றியலுகரம் ஒன்று - என்னும் 24 ஈற்றவாய் இருக்கும். இவற்றின் முன் வருமொழி முதலாய் ஞ் ந்ம் என்ற மெல்லின மெய்களும், ய் வ் என்ற இடையின மெய்களும், பன்னீருயிர்களும் வருமாயின், பெரும் பான்மையும் திரிபின்றி இயல்பாகப் புணரும். (தொ. எ. 144 நச்.)

எல்லீரும் என்ற பெயர் புணருமாறு -

{Entry: A01__441}

எல்லீரும் என்னும் முன்னிலை உயர்திணைப்பெயர் அல்வழிப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்தவழி மகரம் இனமெல் லெழுத்தாகத் திரிந்தும், மென்கணம் வந்தவழி மகரம் குன்றி யும், இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்தவழி இயல்பாகவும் புணரும்.

எ-டு : எல்லீருங் கடியீர், எல்லீருஞ் சிறியீர், எல்லீருந் தீயீர் - மகரம் திரிதல்; எல்லீரு ஞான்றீர், எல்லீரு நல்லீர், எல்லீரு மாண்டீர் - மகரம் கெடுதல்; எல்லீரும் யாவீர், வாரீர், எல்லீருமடைந்தீர் - இயல்பு.

எல்லீரும் என்பது உருபேற்குமிடத்து உம்மையை நீக்கி எல்லீர் என்று நின்று நும்முச் சாரியை பெற்றுப்பின்னர் உருபும் உம்மையும் பெற்று, எல்லீர்நும்மையும் எல்லீர் நும்மொடும் எல்லீர்நுமக்கும் - என்றாற் போலப் புணரும். இது பொருட் புணர்ச்சிக்கும் ஒக்கும்.

எ-டு : எல்லீர்நுங்கையும், எல்லீர்நுஞ்ஞாணும், எல்லீர் - நும்யாப்பும், எல்லீர்நும்மழகும் ;

உம்மையை நீக்கிச் சாரியை பெறாது உருபேற்று இறுதியில் உம்மை பெற்று, எல்லீரையும் எல்லீரொடும் எல்லீர்க்கும்- என வருதலும் கொள்க. (தொ. எ. 191 நச். உரை) (நன். 246)

எவன் என்ற குறிப்பு வினையாலணையும் பெயர் உருபேற்றல் -

{Entry: A01__442}

எவன் என்பது குறிப்பு வினைமுற்று. அது படுத்தல்ஓசையான் பெயராயவழி, எவன் என நிறுத்தி வற்றும் உருபும் கொடுத்து, வற்றின்மிசை ஒற்று என னகரத்தைக் கெடுத்து, ‘அவை’ முதலியவற்றிற்கு வற்றுச்சாரியையின் வகர ஒற்றைக் கெடுத்தது போல (எ.122) இதற்கு வகரத்தை முழுதும் கெடுத்து உருபேற்றி, எவ+ற்று+ஐ= எவற்றை - எவற்றொடு - என முடிக்க. மீண்டும் நிலைமொழி வகரத்தைக் கெடுத்து எற்றை - எற்றொடு - எனவும் முடிக்க.

எனவே, எவன் என்ற குறிப்பு வினைப்பெயர் உருபேற்கும் போது எவற்றை எற்றை- எவற்றொடு எற்றொடு - என இரு திறத்தானும் வரும்.

தொல்காப்பியனார் காலத்தில் எவன் என்பது குறிப்பு வினைமுற்றாகவே அஃறிணை இருபாற்கும் பொதுவினையாக இருந்தது. (தொ. சொ. 219 சேனா.), (தொ. எ. 122,193 நச். உரை)

எழு, எழூஉ: வேறுபாடு -

{Entry: A01__443}

எழு:தன்வினை; எழு +உ = எழூ : பிறவினை. முதனிலை உகரத்தொடு பிறவினைப் பொருளில் வரும் உகரம் சேர ‘எழூ’ என்றாயிற்று. இச்சொல் இயல்பான ஊகார ஈற்றுச் சொல் லன்று; பிறவினைப் பொருளில் வரும் உகரம் சேர எழூ என்றா யிற்று என்பதனை விளக்க, ‘எழூஉ’என்று, முதனிலையொடு சேர்ந்த உகரத்தை அறிவித்தற்காக உகரம் அறிகுறியாய் எழுதப்பட்டது. இங்ஙனம் எழு முதலியவற்றுடன் உகரம் சேர்ந்து (இரு குறில் ஒரு நெடிலாய்) எழூ முதலியனவாகிப் பின் எழூஉ - முதலியனவாக இருத்தல் பண்டை வழக்கு. உகரம் சேர்ந்து, எழு +உ = எழுவு என்றாற்போல வருதல் பிற்கால வழக்கு.

மக +அர் = மகார். விகுதி அகரம் சேர்ந்ததை அறிவித்தற் காகவே, ‘மகாஅர்’ என்று இடையே அகரம் இட்டு எழுதுப. (எ. ஆ. பக். 16)

எழுத்ததிகாரப் புறனடையால் கொள்ளப்படுவன -

{Entry: A01__444}

தட என்ற உரிச்சொல், தடவுத் திரை என, வன்கணத்தொடு புணரும்வழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றது. தடவு நிலை (புற.140) என இயல்புகணத்தின்கண் உகரம் பெற்றது.

அத என்ற அகரஈற்று மரப்பெயர், அதவத்தங்கனி என, அத்துச்சாரியையும் அம்முச்சாரியையும் பெற்றது.

‘கசதபத் தோன்றின்’ (எ.203) என, அகர ஈறாகிய எழுத்துத் தன்னை உணரநின்றவழியும் வல்லெழுத்து மிக்கது.

நறவங்கண்ணி, குரவ(ம்) நீடிய - என, ஆகார ஈறு அகர ஈறாகி உகரம் பெற்றவழியும், வேற்றுமை அல்வழி என இரு நிலையி லும் அம்முச்சாரியை பெற்றது.

முளவுமா, பிணவு நாய் - என, இயல்புகணம் வரின் அம்முப் பெறாதாயிற்று.

முழவொடு ஆகுளி (மலைபடு.3), சுற எறிமீன், ‘இர வழங்கு சிறுநெறி’ (அக. 318) - ஆகார ஈறு அகர ஈறாகி உகரம் பெறாது வந்தது. (முழ + ஒடு)

‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அக. 97) - இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முச்சாரியை பெற்றது.

தீயின் அன்ன - (மலைபடு. 145) - ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது.

திருவத்தவர் (நாலடி. 57) - உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துச்சாரியை பெற்றது.

ஏப் பெற்ற (சீவக. 2965) - ஏகார ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது.

‘கைத்து உண்டாம் போது’ (நாலடி 19) - ‘கைத்து இல்லர் நல்லர்’ - ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது.

புன்னையங்கானல், முல்லையந் தொடையல் - ஐகார ஈறு வேற் றுமைக்கண் அம்முப் பெற்றது.

கோ யில் - ஓகாரஈறு யகர உடம்படுமெய் பெற்றது.

அஞ்செவி - அல்வழிக்கண், அகம் என்ற நிலைமொழி ககரமும் அகரமும் (க) கெட்டது.

மர வம்பாவை, மர வநாகம் - வேற்றுமை அல்வழி என இரண்டன்கண்ணும் அம்முப் பெற்று மகரம் (மென்கணம் வருவழிக் ) கெட்டு முடிந்தது. (மரப்பாவை, நாகமரம் என்பன பொருள்)

‘கா னம் பாடினேம்’ (புற.144) ‘பொன்னந்திகிரி’, ‘பொன்னங் குவடு’ - கான் பொன் - என்ற னகர ஈற்றுப் பெயர்கள் இருவழி யும் அம்முப் பெற்றன.

‘வெதி ரத்துக் கால்பொரு’ (நற்.62) - ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது.

‘நாவ லந் தண்பொழில், (சிலப். 17: 1),’கான லம் பெருந்துறை’ (ஐங்.158) லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது.

நெய்த லஞ் சிறுபறை - லகரஈறு அல்வழிக்கண் அம்முப் பெற்றது.

‘ஆ யிடை இருபேராண்மை’ (குறுந். 43) அவ் + இடை : அகரம் நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது.

அன்றி யனைத்தும்’- அகரச் சுட்டு ‘அன்றி’ எனத் திரிந்தது.

தெங்கின் பழம் - குற்றுகர ஈறு பொருட்புணர்ச்சிக்கண் இன்சாரியை பெற்றது.

தொண்டு தலையிட்ட’ - ஒன்பது ‘தொண்டு’ எனத்
திரிந்தது.

அருமருந்தான், சோழனாடு, பாண்டியனாடு, தொண்டை - மான் நாடு, மலையமான் நாடு, பொதுவில் - இவை முறையே அருமந்தான், சோணாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு, மலாடு, பொதியில் - என்று திரிந்து மருவி வழங்கின. (தொ. எ. 483 நச். உரை)

எழுத்ததிகாரம் கூறும் இரு செய்திகள் -

{Entry: A01__445}

இப்படலத்தில் விதிக்கப்படுவன எல்லாம் கருவியும் செய்கை யும் என இரு வகைப்படும். அவற்றுள் கருவி எழுத்தியல் பதவியல் என்னும் இரண்டு ஓத்தானும், செய்கை உயிரீற்றுப் புணரியல் முதலிய மூன்று ஓத்தானும் கூறப்படும். கருவி பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் இரண்டு ஓத்தினும் கூறப்படுவன பொதுக்கருவி. உயிரீற்றுப் புணரியல் முதற்கண் புணர்ச்சி இன்னதெனக் கூறப்படுவனவும், உருபு புணரியல் இறுதிக்கண் சாரியைத் தோற்றம் கூறப்படுவனவும் செய்கை ஒன்றற்கேயுரிய கருவியாதலின் சிறப்புக் கருவியாம். (நன். 56 சிவஞா.)

எழுத்ததிகாரம்: சொல்விளக்கமும் பொருள்நிலையும் -

{Entry: A01__446}

எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகரித்தலையுடையது என அன்மொழித்தொகையாய் அப்படலம் முழுதுக்கும் காரணக் குறியாயிற்று. எழுத்தினை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியாகிய படலம் எழுத்ததிகாரம் ஆயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்றவிடத்து, ‘எழுத்தினது’என்ற ஆறாம் வேற்றுமை ஏற்ற சொல் எழுவாயின் பொருளதாய், ‘அதிகாரத்தையுடையது’ என்ற வினையைக் கொண்டு முடிந்தது. வேற்றுமை வினைகொண்டு முடிவது காரகமாம். ஆறாவது நேராக வினையைக் கொண்டு முடியாது. ஆகவே எழுவாயின் பொருளிலேயே அது வினை கொண்டு முடிந்தது. எழுத்ததிகாரம் என்பது ஆறாவது வினைமுதற் பொருண்மை யின்கண் வந்த காரகமாம். (சூ. வி. பக். 17)

எழுத்ததிகாரம் - எழுத்தை உணர்த்திய அதிகாரம் (இள. நச்.)

அதிகாரம் - முறைமை

எழுத்ததிகாரத்தில் எழுத்து இனைய என்றல், இன்ன பெயர என்றல், இன்ன முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன புணர்ச்சிய என்றல், இன்ன வடிவின என்றல், இன்ன தன்மைய என்றல் - என்ற எட்டு வகையானும், எழுத்துக்களின் உண்மைத்தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன் திரிபு அது என்றல், திரிந்ததன் திரிபு பிறிது என்றல், திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும் என்றல், நிலையிற்று என்றல், நிலையாது என்றல், நிலையிற்றும் நிலையாதும் என்றல் - என்ற எட்டு இறந்த பலவகையானும் எழுத்து உணர்த்தப்பட்டது. (தொ. எ. 1 இள., நச். உரை)

எழுத்ததிகாரம்: தொடரிலக்கணம் -

{Entry: A01__447}

அதிகாரம் என்பது ஈண்டு அதிகரித்தலை யுடையதாம். அதனை யுடையது எனவே, எழுத்தை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றவாறாயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்புழி, ஆறாவது வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம். (நன். 56 சிவஞா.)

எழுத்தாகா ஒலிகள் -

{Entry: A01__448}

முற்கு வீளை இலதை - முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும், எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத, எழுத்தாகா ஒலிகளாம். முற்கு - வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல் கர்ச்சனை; வீளை - சீழ்க்கையிடும் ஒலி; இலதை - அடிநா அடியில் தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம், நச்.)

தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித் தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா. வி. பக். 170)

எழுத்தியல் பதவியல் தொடர்பு -

{Entry: A01__449}

மேல் எழுத்திலக்கணம் பன்னிரண்டு பகுதியால் உணர்த்தப் படும் என்றவற்றுள், எழுத்திற்கேயுரிய பத்திலக்கணமும் எழுத்தியலான் உணர்த்தி, அவற்றின்பின் நின்றது அவ் வெழுத்தினான் ஆகிய பதம் ஆதலின் அதனைப் பதவியலால் உணர்த்துதலின் இவ்வியல் மேலையியலோடு இயைபுடைத் தாம். (நன். 127 மயிலை.)

எழுத்திலக்கணப் புறனடை -

{Entry: A01__450}

எழுத்துக்கள் சொற்களாக ஆயினும், அச்சொற்கள் தம்மொ டும் உருபொடும் புணரினும், எழுத்துக்களின் இலக்கணம் ஒரு தன்மைத் தாகவே இருக்கும். (நன். 127)

எழுத்திலக்கணம் -

{Entry: A01__451}

மொழிக்கு முதற்காரணமாயும் நாதத்தினது காரியமாயும் வரும் ஓசை எழுத்து எனப்படும். எழுத்தோசை காரணம் ஆமாறும், மொழி அதன் காரியம் ஆமாறும், நாதம் காரணம் ஆமாறும் எழுத்தோசை அதன் காரியம் ஆமாறும் காண்க. (இ. வி. எழுத். 3 உரை)

எழுத்தின் தோற்றமும் வகுப்பும் விகாரமும் என்ற இம்மூன்ற னுள், எழுத்து வகைப்பாடு எல்லாம் அடங்கும். என்னை? தோற்றம் என்புழி எழுத்துப் பிறக்கும் இடமும் முறையும் எண்ணும் எனவும், வகுப்பு என்புழி முதல் சார்பு உயிர்மெய் முதலிய கூறுபாடு எனவும், விகாரம் என்புழிப் பதத்திலும் புணர்ப்பிலும் வரும் திரிபாக்கம் முதலிய வேறுபாடு எனவும் தோன்றும். (தொ. வி. 2. உரை)

எழுத்திலக்கண வகை -

{Entry: A01__452}

எழுத்திலக்கணம் எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை முதல்நிலை ஈற்றுநிலை இடைநிலை போலி- எனவும், பதம் புணர்ப்பு - எனவும், பத்து அகத்திலக்கணமும் இரண்டு புறத்திலக்கணமுமாகப் பன்னிரு வகைப்படும். (நன். 57)

எழுத்திற்கு நால்வகையால் பெயரிடல் -

{Entry: A01__453}

இடுகுறிப் பொதுப்பெயரும், இடுகுறிச் சிறப்புப்பெயரும், காரணப் பொதுப்பெயரும், காரணச் சிறப்புப்பெயரும் என எழுத்து நால்வகையாற் பெயரிடப்படும்.

உயிர், உயிர்மெய், உடம்பு - என்பன இடுகுறிப் பொதுப் பெயர்;

அவற்றுள், அ ஆ க ங - என்பன இடுகுறிச் சிறப்புப்பெயர்;

குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் - முதலியன காரணப் b பாதுப்பெயர்;

குற்றியலிகரம் குற்றியலுகரம் - முதலியன காரணச் சிறப்புப் பெயர் எனக் கொள்க. ஆகையால் ‘நாகு’எனும் மொழி ஈற்றெழுத்து (கு), இடுகுறிப் பொதுப்பெயரால் உயிர்மெய் என்றும், இடுகுறிச் சிறப்புப் பெயரால் ‘கு’என்றும், காரணப் பொதுப்பெயரால் குற்றெழுத்து என்றும், காரணச் சிறப்புப் பெயரால் குற்றியலுகரம் என்றும் பெயரொடு வழங்கும். (தொ. வி. 72 உரை)

எழுத்தின் பிறப்பிடங்கள் -

{Entry: A01__454}

எழுத்தின் பிறப்பிடங்கள் தலை, மிடறு, நெஞ்சு என்ற மூன்றுமாம். இவற்றுள் உயிரும் இடையினமெய்களும் மிடற்றுவளியானும், வல்லினம் தலைவளியானும், மெல்லினம் மூக்குவளிக் கலப்பாலும், ஆய்தம் நெஞ்சுவளியாலும் பிறக்கும். (தொ. எ. 84, 88, 101 நச். உரை)

எழுத்தின் பிறப்பிற்கு முயற்சித் தானங்கள் -

{Entry: A01__455}

பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் ஆகிய ஐந்தும் எழுத்தின் பிறப்பிற்குரிய முயற்சித் தானங்கள்.

இ ஈ ஏ ஏ ஐ - என்ற ஐந்தும் சிறப்பாகப் பற்களையும், உ ஊ ஒ ஓ ஓள- என்ற ஐந்தும் சிறப்பாக இதழ்களையும், ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற ஆறும் சிறப்பாக மூக்கினையும், க் ச் ட் - என்பன சிறப்பாக மேல்வாயினையும் நாவினையும், த் - என்பது சிறப்பாக நாவினையும் பற்களையும், ற் ய் ர் ழ் - என்பன சிறப்பாக நாவினையும் மேல்வாயினையும், ல் ள் - என்பன நா பற்கள் மேல்வாயினையும், ப் - என்பது இதழ்களையும், வ் - என்பது இதழ்களையும் பற்களையும், - முயற்சித் தானங்களாகக் கொண்டு பிறப்பனவாம். (தொ. எ. 86 - 99 நச்.)

எழுத்தின் மாத்திரை -

{Entry: A01__456}

உயிரளபெடை நான்கு மாத்திரைய ஆதலும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலும் ஆரிடத்துள்ளும் அவை போல்பவற்றுள்ளும் அருகி வந்து செய்யுள் வழு வமைதியாய் முடிதலின் அவற்றை ஒழித்து, எல்லார்க்கும் ஒப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும் ஒருமாத்திரையுமே ஆதலின் ‘மூன்று உயிரளபு’ என்றும், ‘ஒன்றே குறிலொடு ஐ ஒளக் குறுக்கம்’ என்றும் கூறினார். குற்றியலுகரம் புணர்மொழி இடைப்படின் குறுகிக் கால் மாத்திரை பெறுதல் உரையிற் கோடல் என்பதனால் கொள்க. உயிர்மெய்க்கு அளவு கூறாதொழிந்தார், மேல் ‘உயிரளவாய்’ (89) என்றலின். (நன். 99 சிவஞா.)

உயிரளபெடைமூன்றும், நெட்டெழுத்து இரண்டும், குற்றெழுத்து - ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்- ஒற்றளபெடை - இவை தனித்தனி ஒன்றும், ஒற்றெழுத்து- குற்றியலிகரம்- குற்றியலுகரம் - ஆய்தம் - இவை தனித்தனி அரையும், மகரக் குறுக்கம்- ஆய்தக் குறுக்கம்- இவை தனித்தனியே காலும் மாத்திரை பெறும். உயிர்மெய்யின் மாத்திரை உயிர்மாத் திரையே ஆதலின் உயிர்க்குறில் உயிர்நெடில் மாத்திரையே இவற்றிற்கும் ஆம். (நன். 99)

எழுத்தின் வரிவடிவம் -

{Entry: A01__457}

மெய்யின் வடிவும் உயிர்மெய்யின் வடிவும் பலமுறை வேறுபடாமையானும், எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம் எப்போதும் ஒரு வடிவு ஆகையானும், மயக்கம் நீப்பது வேண்டி மேற்புள்ளி கொடுத்தார் புலவர். ஆகையால் குற்றெழுத்தின்மேல் நீண்ட புள்ளியும், ஒற்றெழுத்தின் மேல் சுழித்த புள்ளியும் வரும் என்றுணர்க. (தொ. வி. 12 உரை)

எழுத்தினை எட்டிறந்த பலவகையான் உணர்த்தல், எழுத்தினை எட்டுவகையான் உணர்த்தல் -

{Entry: A01__458}

‘எழுத்ததிகாரம்: சொல் விளக்கமும் பொருள் நிலையும்’ - பிற்பகுதி காண்க.

எழுத்தினைக் குறிக்கும் பெயர்கள் -

{Entry: A01__459}

இரேகை எனினும், வரி எனினும், பொறி எனினும், எழுத்து எனினும் ஒரு பொருட்கிளவி. (மு. வீ. எழுத். 3)

எழுத்து அளவிறந்து ஒலிக்கும் இடம் -

{Entry: A01__460}

உயிரும் மெய்யும்ஆகிய எழுத்துக்கள் இசை,விளி, பண்ட மாற்று, நாவல், குறிப்பிசை, முறையீடு, புலம்பல்- முதலிய வற்றில் தம் மாத்திரை எல்லை கடந்து ஒலிக்கும் . (இசை நூலார் உயிர் 12 மாத்திரை வரையிலும், மெய் 11 மாத்திரை வரையிலும் நீண்டொலிக்கும் என்ப.

எ-டு:

‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’ - பண்டமாற்று

‘நாவலோஒ என்றிசைக்கும் நாளோதை’ - நாவல்

‘கஃஃஃ றென்னும் கல்லதர் அத்தம்’ - குறிப்பிசை

‘அண்ணாவோஒஒ’ - விளி (புலம்பலும் ஆம்) (நன். 101)

எழுத்து இன்னது என்பது -

{Entry: A01__461}

சொல் தோன்றுதலுக்குக் காரணமான ஒலி எழுத்து எனப்படும். எழுத்து என்பது கட்புலனாகா உருவும் கட்புலனாகிய வடிவும் உடையதாக வேறுவேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம். (தொ. எ. 1 நச். உரை)

எழுத்தெனப்படுவது யாதோ எனின், கண் முதலாய பிறவற்றுக் குப் புலனாகாது செவிப்புலனேயாகும் ஒலிவடிவும், செவி முதலாய பிறவற்றுக்குப் புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வரிவடிவும் உடைத்தாய், தனித்து நின்றாயினும் சார்ந்து நின்றாயினும், தன்னை உணர்த்தலுடன் பொரு ளுணர்த்தும் சொல்லாகலும் அச் சொல்லுக்கு உறுப்பு ஆகலும் ஆகிய இரு தன்மையும் ஒருங்கு பெற்றாயினும், அன்றி உறுப்பாக இயைதல்தன்மை ஒன்றே பெற்றாயினும் நிற்கும் ஒலியாம். (பா. வி. பக். 170)

காற்றுக் கட்புலனாகா உருவினதாயினும் மெய்ப்புலனாயுற்று இன்பதுன்பம் ஆக்கலானும், இயங்குதலானும், மரம் முதலிய வற்றை இயக்கலானும், இக்காற்று வலிது - இக்காற்று மெலிது - எனக் கூறப்படலானும், பொருள் என்று கொள்வோம். அதுபோல, ஒலியும் உந்தி முதலாகத் தோன்றி, தலை - மிடறு - நெஞ்சு - பல் - இதழ் - நா- மூக்கு - மேல்வாய் - என்ற எண்வகை நிலத்தும் பிறந்து, கட்புலனாம் தன்மையின்றிச் செவிக்கண் சென்றுறும் ஊறு உடைமையானும், இன்பதுன்பம் ஆக்க லானும், வன்மை - மென்மை - குறுமை - நெடுமை - கோட லானும், விசும்பின்கண் இயங்குவதொரு தன்மை யுடைமை யானும், பேரொலிக்கண் மண் அதிர்தல் காணப்படலானும், காற்றால் காரியப்படும் தன்மை யுடையதாகும். (பா. வி. பக். 171)

மொழிக்கு முதற்காரணம் ஆகின்ற அணுத்திரளின் காரியம் ஒலி எழுத்தாம். அணுத்திரள் என்றது நாதம். ஒலி என்றது அதன் காரிய ஒலி. அணு என்றது ஒலிநுட்பத்தை. ‘அணுத் திரள் ஒலி எழுத்து’ எனின், முற்கு-வீளை - இலதை - முதலிய குறிப்பிசைகளும் அணுத்திரளே ஆதலால் அவை எழுத் தாகாமையானும், ‘மொழி முதற் காரணமாம் ஒலி எழுத்து’ எனின், அவ்வொலி இன்ன ஒலி என விளங்காமையால், ‘நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப, எழும் அணுத்திரள் ஒலி’ எனக் காட்ட வேண்டுதலானும் ‘மொழி முதற் காரண மாம் அணுத்திரள் ஒலி எழுத்து’ என்றார். (நன். 58 இராமா.)

எழுத்து, உயிர் வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற நான்கு இனமாதல் -

{Entry: A01__462}

நம் உடம்பினுள் சுவாசப்பையினின்றும் வெளிப்படும் வளி குரல்வளையுள் புகுந்து, அடியண்ணம் இடையண்ணம் முதலிய இடங்களில் பட்டு வெளிப்படுதலின் ஒலி உண்டா கிறது. அவ்வளி அண்ணம் முதலிய இடங்களில் படுகையில், நாவின் செய்கையால் ஒலி வேறுபடுவதாகும். வளியை நாவின் நுனி - இடை - அடி - விளிம்பு - ஆகியவற்றுள் ஒன்றனால் அடி யண்ணம் இடையண்ணம் முதலிய இடங்களில் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும். தடுக்கும்போது சிறிதளவு தடுத்தலும் முழுதும் தடுத்தலும் இயலும். உயிரெழுத்துக்களை ஒலிக்கும்போது வளியை நாவினால் தடுக்காமல் வெளிவிடு கின்றோம்; வல்லெழுத்து மெல்லெழுத்துக்களை ஒலிக்கும் போது நன்கு தடுத்து வெளிவிடுகின்றோம்; இடையெழுத்துக் களை ஒலிக்கும்போது வளியைச் சிறிதளவு தடுக்கின்றோம். வளியைத் தடுக்காமல் வெளிவிடுதலின் உயிரெழுத்துக்கள் தாமே ஒலிக்க இயல்கின்றன. வளியை நன்கு நடுத்தலின் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கள் தாமே ஒலிக்க வருவனவா யில்லை. சிறிதளவு தடுத்தலின் இடையெழுத்துக்கள் தாமே ஓராற்றான் ஒலிக்க இயலும். ஒலிக்கும் திறத்தில், உயிரெழுத்துக் களுக்கும் வல்லெழுத்து மெல்லெழுத்துக்களுக்கும் இடைப் பட்டிருத்தலானே ய் ர் ல் வ்ழ் ள் - என்பன இடையெழுத் துக்கள் எனப்பட்டன. மெல்லெழுத்து, வல்லெழுத்தை ஒத்துப் பிறந்து ஒலி சிறிதுசிறிதாக மூக்கின் வழியாக வெளியிடப் படுதலின் வேறாயின. இக்காரணத்தால் மெல்லெழுத்துக்கள் வல்லெழுத்துக்களினின்றும் வேறுபட, எழுத்துக்கள் உயிர் - வலி - மெலி - இடை - என நால்வேறு இனங்கள் ஆயின. (எ. ஆ. பக். 11, 12)

எழுத்து என்பதன் சொல்லமைப்பு -

{Entry: A01__463}

எழுதப்படுவது என்னும் பொருட்கண், எழுது என்னும் முதனிலைத் தொழிற்சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருளை உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’ (தொ.சொ. 450 சேனா.) என்னும்சூத்திரத்து ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல்’ என்னும் உத்திவகையான் அவ்வைகாரம் கெட்டுக் கெட்ட வழித் தகரம் இரட்டித்து எழுத்து என்று முடிந்தது.

எழுது என்னும் முதனிலை ‘எழுத்து’ எனத் தானே திரிந்து நின்று, அஃது ஆகுபெயரான் எழுதப்படுவதாகிய செயப்படு பொருளை உணர்த்திற்று என்றல் பொருந்தாது. ஒரு காரண மின்றித் திரிதல் கூடாமையானும், நட-வா-கரு-செ- முதலிய முதனிலைகள் எல்லாம்விகுதியோடன்றித் தனித்தியங்கல் ஆற்றாமையானும், இம்முதனிலைகள் உரிச்சொற்கள் ஆதலின்பெயர்த்தன்மைப்பட்டுழியல்லது ஆகுபெயர் ஆதற்கு ஏலாமையானும் என்பது. (சூ. வி. பக். 31, 32)

எழுத்து என்பது எழுதை என்பதன் திரிபாயின், நட என்பது நடவாய் என்பதன் திரிபு என்று கொள்ளும்போது, நட என்பது போல நடவாய் என்பதும் வழங்குமாறு போல, எழுத்து என்பது போல எழுதை என்பதும் வழக்காற்றில் இருத்தல் வேண்டும்; அங்ஙனம் இன்மையின், எழுத்து என்பது எழுதை என்பதன் திரிபு எனல் சாலாது. விளங்கு - பெருகு- மடங்கு- முதலாய முதனிலைகள், விளக்கு - பெருக்கு - மடக்கு- முதலாகத் திரிந்து, விளங்குவது- பெருகுவது - மடங்குவது - எனப் பொருள்படுமிடத்து வினைமுதலும்,

கெடு என்பது, கேடு எனத் திரிந்து ஒருவன் கெடுதற்குக் காரணமாகிய தீவினையை உணர்த்தும்வழிக் கருவியும்,

நீந்து - முடங்கு - இடுகு - என்பன, நீத்து - முடக்கு - இடுக்கு - எனத் திரிந்து நீந்துமிடத்தையும் முடங்குமிடத்தையும் இடுகு மிடத்தையும் உணர்த்தும்வழி நிலனும்,

பாடு - சூடு - கருது - என்பன, பாட்டு - சூட்டு - கருத்து - எனத் திரிந்து பாடப்படுவது - சூடப்படுவது - கருதப்படுவது - எனப் பொருள்படும்வழிச் செயப்படுபொருளும்,

சுடு என்பது சூடு எனத் திரிந்து சுடுதலானாகிய வடுவினை உணர்த்துமிடத்துப் பயனும் -

என வினை கொள்வவற்றுள்ளே தொழில் ஒழிந்த ஏனைய பொருள்களை ஆகுபெயரான் உணர்த்துமாறு போல,

எழுது - உண் - முதலாகிய முதனிலைகளும் எழுத்து - ஊண்- முதலியனவாகத் திரிந்து தொழிற்பெயர்ப்பொருளையும், ஆகு - பெயராகிச் செயப்படுபொருளையும் உணர்த்தும் என்பது. முதனிலை திரிந்து ஆகுபெயராகிக் காலம் உணர்த்தல் வந்துழிக் கொள்க. (பா. வி. பக். 229, 230)

எழுத்து ஓரன்ன -

{Entry: A01__464}

1. எழுத்தோடு ஒரு தன்மையன, 2. எழுத்தான் ஒரு தன்மையன. 1, ‘சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே, எழுத்தெனப் படுப முப்பஃது’ எனவே, சார்ந்து வரல் மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில எனவும் பொருள் தந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கும் என, அம்முப்பதனை யும் உபமானமான மேம்பட்ட பொருளாயும் இம்மூன்றனை யும் உபமேயமான அவற்றின் தாழ்ந்த பொருளாயும் காட்டுதற்கு, ‘எழுத்தோடு ஒருதன்மையன’ என்று பொருள் தரும் ‘எழுத்தோ ரன்ன’ என்று குறிப்பிட்டார். (தொ. எ. 2 இள., நச். உரை) (பொ. 663 பேரா.)

2. எழுத்தான் ஒரு தன்மையன என்பது, ஒலிவடிவில் எடுத்தல் படுத்தல் ஓசையான் வெவ்வேறு பொருள்தரும் சொற் றொடர்கள் வரிவடிவில் எழுதும்போது ஒன்றாகவே எழுதப் படுதல்.

எ-டு : செம்பு ஒன்பதின்தொடியும், செம்பொன் பதின் தொடியும் வரிவடிவில் ‘செம்பொன்பதின்றொடி’ என ஒன்றாக எழுதப்படுதல் போல்வன. (தொ. எ. 141 நச். உரை)

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி’ -

{Entry: A01__465}

இரண்டு வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கும் சொற் றொடர்கள் ஒலிக்கும்போது எடுத்தல் படுத்தல் ஓசைகளான் வெவ்வேறாக உணரப்படினும், வரிவடிவில் எழுதும்போது ஒன்றாகவே சேர்த்து எழுதப்படும் நிலை.

செம்பு ஒன்பதின்தொடி, செம்பொன் பதின்தொடி- என்பன இரண்டும் வரிவடிவில் ‘செம்பொன்பதின்றொடி’ என ஒன்றாகிச் செம்பு என்பதனையும் செம்பொன் என்பதனையும் முறையே எடுத்து ஒலித்தவழி வெவ்வேறு பொருள் உணர்த்தும் சொற்றொடர் ஆதல்.

இஃது ‘எழுத்துக்கள் ஒன்று பலவாதல்’ நிலையைச் சுட்டுவ தாம். (தொ. எ. 1 நச். உரை)

தமிழ்மொழியில் சொற்றொடர்களின் பொருள் அறியப் படாதவரை புணர்ச்சி வேற்றுமைக்கண்ணதா அல்வழிக் கண்ணதா என அறிதல் இயலாமையின்,எழுத்துக்களது ‘ஒன்று பலவாதல் நிலை’யை நன்கு உணர்தல் வேண்டும். (எ. கு. பக். 145)

எழுத்துக் கட்புலனாகா உரு என்பது -

{Entry: A01__466}

உரு என்றது மனன் உணர்வாய் நிற்கும் கருத்துப்பொருளை. அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடை எறியப்படுதலானும், இன்பதுன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவும் கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத் தோன்றி நெஞ்சு - மிடறு - தலை- மூக்கு - அண்ணம் - நா - பல் - இதழ் - என்ற எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாம் தன்மையின்றிச் செவிக்கண் சென்றுறும் ஊறு உடைமை யானும், விசும்பில் பிறந்து இயங்குவதொரு தன்மையுடைமை யானும், காற்றின் குணமாவதோர் உருவாம்; வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவே ஆயிற்று, (தொ. எ. 1 ந.ச். உரை)

எழுத்துக் கட்புலனாகிய வடிவு பெறுதல் -

{Entry: A01__467}

செவிப்புலனாகிய எழுத்தொலியை மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும் உணர்தற்கு எழுத்துக்களுக்கு வெவ்வேறு வடிவம் காட்டி எழுதப்பட்டு நடத்தலின், கட் புலனாகிய வரிவடிவும் எழுத்திற்கு உளதாயிற்று .

மகரக்குறுக்கம் வெளியேயுள்ள புள்ளியொடு தன் வட்டத்தி னுள்ளும் ஒரு புள்ளி பெறும்(ம் {{special_puLLi}}) என்றாற் போல்வன வரி வடிவிற்கு எடுத்துக்காட்டு. (தொ.எ. 14, 16 நச்.)

எழுத்துக்கள் தம்பெயர் குறிப்பிடப்படுதல் -

{Entry: A01__468}

மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களும் தம்பெயர் குறிப்பிடுமிடத்து மொழிக்கு முதலாக வரும்.

வருமாறு : ‘ஙகரமொடு தோன்றும்’ - (தொ.எ. 29 நச்.); ‘டகார மாகும்’ - 302; ‘ணகார இறுதி’ - 302; ‘யகார இறுதி’ - 357; ‘ரகார இறுதி’ - 362; ‘லளஃகான் முன்னர்’ - 24; ‘ழகார இறுதி’ - 383; ‘ளகார இறுதி’ - 396; ‘றகார மாகும்’ - 332; ‘னகார இறுதி’ - 332.

என மொழிக்கு முதலாகாத ங ட ண ய ர ல ழ ள ற ன- என்பனவும் தம்பெயர் குறிப்பிடுமிடத்து மொழிக்கு முதலில் வந்தவாறு. (தொ. எ. 66 நச்.)

எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவு அட்டவணை -

{Entry: A01__469}

தொல்காப்பியம் 1 2 1 1 ½ ½ ½ ½ - ¼ - -

வீரசோழியம் 1 2 1 1 ½ ½ ½ ½ - ¼ - -

நேமிநாதம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 -

நன்னூல் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 -

இலக்கண
விளக்கம் 1 2 1 1
½ ½ ½ ½ - ¼ - -

தொன்னூல்

விளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

சுவாமிநாதம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ - -

முத்துவீரியம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ - 1

அறுவகை
யிலக்கணம் 1 2 1
½ 1 ½ ½ ½ ½ ½ - ¼ - -

எழுத்துக்களது ஒன்று பலவாதல் நிலை -

{Entry: A01__470}

ஒன்று பலவாகும் சொற்றொடர்களைப் பொதுமொழி என்ப. வரிவடிவில் ஒன்றாகக் காணப்படும் சொற்றொடர் ஒலிவடி வில் எடுத்தல் படுத்தல் வேறுபாட்டான் பல்வேறு சொற் றொடர்கள் ஆகும்.

‘எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி’ காண்க. (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது குறைவு -

{Entry: A01__471}

எழுத்துக்கள் தமக்கு இயல்பாயுள்ள ஒலித்தல் அளவில் குறைந்த குறுக்கங்கள் ஆதல்.

எ-டு : ஐகாரக் குறுக்கம் (தொ. எ. 57), மகரக்குறுக்கம் (தொ.எ. 13) (தொ. எ. 1 நச். உரை)

அறுவகையிலக்கண நூல் ஆ ஈ ஊ ஏ ஓ- என்பன நெடில் என்றும், ஐ ஒள-இரண்டும் 1 ½ மாத்திரை பெறுவன என்றும், எனவே இவற்றைக் ‘குறில்நெடில்’ என்றும் கொள்வர் என்றும் குறிப்பிடும்.

எழுத்துக்களது கூட்டம் -

{Entry: A01__472}

மெய்யோடு உயிர்கள் கூடி உயிர்மெய்யை உண்டாக்குதல் முதலியன. (தொ. எ. 17நச்.) (1 நச். உரை)

எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு அது’ என்ற நிலை -

{Entry: A01__473}

அல்+திணை=அற்றிணை, அஃறிணை.

நிலைமொழி ஈற்றில் லகரம் வர, வருமொழி முதலில் தகரம் வந்தால், நிலைமொழி ஈற்று லகரமும் வருமொழி முதல் தகரமும் றகரமாகத் திரியும் என்பது விதி. லகரம் திரியாமையு முண்டு. (தொ.எ.149,369 நச்.)

நிலைமொழி ஈற்று லகரம் றகரமாகத் திரிதலேயன்றி ஆய்த மாகத் திரியினும், அதனை லகரமாகத் கருதி வருமொழித் தகரத்தை றகரமாகத் திரித்துக் கொள்வது. ‘திரிந்ததன் திரிபு அது’ என்ற நயமாம்.

திரிந்தது லகரம்; அதன் திரிபு ஆய்தம். திரிபாகிய ஆய்தத்தை லகரமாகவே கருதிப் புணர்ப்பது அது என்பது.

‘மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்’ என்று கூறிப் பின்னர் அறு என்பது அகல் என்பதனொடு புணருமிடத்து ‘அறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ (தொ. எ. 458 நச்.) என்னாது, ‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ என்றலும், (தொ. எ. 440 நச்.)

‘மூன்றன் முதல்நிலை நீடலும் உரித்தே

உழக்குஎன் கிளவி வழக்கக் தான’ (தொ. எ. 457 நச்.)

என்றலும் போல்வன திரிந்ததன் திரிபு அதுவாம்.

திரிந்தது ஆறு; அதன் திரிபு அறு; ஆறு என்பதும் அறு என்பதும் ஒன்றே;

திரிந்தது மூன்று;அதன் திரிபு முன்று;மூன்று என்பதும் முன்று என்பதும் ஒன்றே - என்று கருதி அமைக்கும் நயம் இது.

எனவே, இந்நயத்தால் ஆறு என்று கூறினும் அறு என்று கொண்டும், மூன்று என்று கூறினும் முன்று என்று கொண்டும் பொருள் செய்யவேண்டும் என்பது,

“அறு என்னாது ஆறு என்றார், திரிந்ததன் திரிபு அது என்னும் நயத்தான்” (தொ. எ. 458 நச்.) (1 நச். உரை)

எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும்’ என்றல் -

{Entry: A01__474}

நெடுமுதல் குறுகும் மொழிகள் யான் யாம் நாம் நீ தான் தாம்- என்பன. அவை ஆறனுருபும் நான்கனுருபும் ஏற்கும்போது. அகரச்சாரியை பெற்று,முறையே என எம நம நின தன தம-என்றாகி, உருபுகளொடு புணரும்.

என+கு = வல்லெழுத்தை முதலாக உடைய வேற்றுமை யுருபு ஆதலின் இடையே வல்லொற்று மிக்கு எனக்கு என்றாயிற்று.

என+அ = எனவ என்றாயிற்று (இடையே வகரம் உடம்படு மெய்).

என+அது =ஆறாம் வேற்றுமையுருபாகிய அது என்பதன்கண் உள்ள அகரம், நிலைமொழி(என்+அ=என-என்று) அகரச்சாரியை பெற்று நின்றமையின் கெட, என+து=எனது என்றாயிற்று. நெடுமுதல் குறுகும் சொற்களின் ஈற்றில் வரும் அகரமே கெடும் என்னாது, கெடுகின்ற அகரம் வேறே என்றல் ‘திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும்’ஆம்.

திரிந்தது - யான் ‘என்’ எனத் திரிந்தமை;

திரிந்ததன் திரிபு - ‘என்’ என்பது ‘என’ எனத் திரிதல்;

திரிந்ததன்திரிபு அதுவும் பிறிதும் எனல் - என்+அ=‘என’ என்றாகி, அதனோடு அதுஉருபு சேரும்போது, முன்சேர்ந்த அகரச்சாரியை கெடாது அது உருபின் அகரம் கெடும் எனல். (திரிபு அது; அகரப்பேறு; பிறிது; ‘அது’வின் அகரக்கேடு. இவ்விரண்டும் இப்புணர்ப்பில் உண்மை காண்க. (தொ. எ. 161,114,115 நச்.) (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்ற நிலை -

{Entry: A01__475}

நிலைமொழிஈறு பிறிதோர் ஈறாகவே திரிந்து புணரும் என்றல்.

எ-டு : மரம்+கோடு = மரக்கோடு

மகரமாகிய ஈறுகெட்டு மர என்றே விதி அகர ஈறாகி நின்று, அகர ஈற்றுக்குரிய செய்கை பெற்று மரக்கோடு என வருமொழி யொடு புணர்கிறது. (தொ. எ. 310 நச்)

எ-டு : பொன்+குடம் = பொற்குடம்

னகரஈறு றகர ஈறாகத் திரிந்தே வருமொழியொடு புணரும் என்றல் திரிந்ததாகிய னகரத்தின் திரிபாகிய றகரம் நின்றே வேற்றுமைப் புணர்ச்சியில் வன்கணத்தொடு புணர்தல் (தொ. எ. 332). (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது நிலை -

{Entry: A01__476}

எழுத்துக்கள் மொழிமுதற்கண் நிற்கும் நிலையும், ஈற்றின்கண் நிற்கும் நிலையும்.

மொழிமுதற்கண் நிற்கும் எழுத்துக்கள் பன்னிரண்டு உயிரும், உயிரொடு கூடிய க்ச்த்ப் ஞ்ந்ம் ய்வ் - என்ற ஒன்பது மெய்யும், மொழிமுதற் குற்றியலுகரமும் ஆகிய இருபத்திரண்டாம்.

மொழிஈற்றில் நிற்கும் எழுத்துக்கள் பன்னீருயிரும், ஞ்ண்ந்ம்ன் - என்ற மெல்லினமெய் ஐந்தும், ய் ர் ல் வ் ழ் ள் - என்ற இடை யினமெய் ஆறும்,ஈற்றுக் குற்றியலுகரம் ஒன்றும் ஆகிய இருபத்து நான்காம். (தொ. எ. 59-76 நச்.) (தொ.எ.1 நச். உரை)

எழுத்துக்களது‘நிலையாது’என்ற நிலை -

{Entry: A01__477}

நிலைமொழி வருமொழிகளாக இணைத்து எழுதப்படினும், நிலைமொழி ஈறு வருமொழி முதல் இவற்றிற்குரிய புணர்ச்சி பெற்றும், பொருள் பொருத்தமுற அமையாத தழாஅத் தொடர்களின் நிலை.

‘தெய்வ மால்வரைத் திருமுனி’ (சிலப். 3: 1)

‘தெய்வம் முனி’ என்றே நிலைமொழி வருமொழி ஆகற் பாலன; இடையே ‘மால்வரைத் திரு’ என்பன செய்யு ளோசை நலம் கருதி வந்தன.

தெய்வம் மால்வரை-என்பன பொருளியைபு இலவேனும், நிலைமொழி வருமொழி போலப்புணர்ந்து ‘தெய்வமால் வரை’ என்றாதல் தழாஅத் தொடராய், ‘நிலையாது’என்ற நிலை பெற்றவாறு.

நிலையாது என்றல் - நிலைமொழி வருமொழிக்கண் பொருள் தொடர்பு நிலையாது என்றல். (தொ. எ. 111 நச். உரை)

எழுத்துக்களது ‘நிலையிற்று’என்ற நிலை -

{Entry: A01__478}

நிலைமொழியும் வருமொழியும் பொருள் பொருத்தமுறப் புணரும் தழுவுதொடர்ப் புணர்ச்சி விதிகள் ‘நிலையிற்று என்றல்’ என்ற நிலையின.

இங்ஙனம் பொருள் பொருத்தமுற நிலைமொழி வருமொழிகள் அமைதலாலே, நிலைமொழியை ‘நிறுத்தசொல்’என்றும், வரு மொழியைக் ‘குறித்துவரு கிளவி’என்றும் பெயரிட்டார் தொல்காப்பியனார். (தொ. எ. 107 நச்.) (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது ‘நிலையிற்றும் நிலையாதும்’ என்ற நிலை -

{Entry: A01__479}

ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சிநிலை அது போன்ற பிறிதோரிடத் தில் நிலைபெறாது என்றல்.

குற்றெழுத்தை அடுத்த ஆகார ஈற்றுச் சொல் வருமொழியொடு புணர்கையில் ‘நிலாஅக்கதிர், என்றாற்போல அகரமாகிய எழுத்துப்பேறளபெடை பெறும் (தொ. எ. 226 நச்.) என்று கூறி, இரவுப்பொழுதினை உணர்த்தும் இரா என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இராவிடத்துக் காக்கை என்ற பொருளில் ‘இராக் காக்கை’ என, அகர எழுத்துப்பேறள பெடை பெறாது (தொ. எ. 227 நச்.) என்றல் ‘நிலையிற்றும் நிலையாதும்’என்ற நிலையாம். (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது பிறப்பமைதி -

{Entry: A01__480}

எழுத்துக்கள் கருக்கொள்ள ஒலி ஊன்றும் இடமாகிய உறுப் புக்கள் தலையும் மிடறும் நெஞ்சும் ஆம். ஈண்டு, தலை கருத்து மையமாக உணர்வு அடிப்படை யாகும்;மிடறு, உணர்வு மையமாகக் குரல்வளை நரம்புகளை இயக்கும்; நெஞ்சு வளியிசையைப் பூரித்துச் செலுத்தும்.

ஓசையை ஒலியெழுத்துக்களாக வெளிப்படுத்தும் உறுப்புக்கள் மிடறும் மூக்கும். ஈண்டு,மூக்காவது உள்மூக்கு.

இனி எழுத்துக்களை வரிவடிவமைக்கும் உறுப்புக்கள் நிலை யுறுப்பும் இயங்குறுப்புமாக இருவகைப்படும். அண்ணமும் பல்லும் நிலையுறுப்பாம்; நாவும் இதழும் இயங்குறுப்பாம். (தொ. எ. பக்- XL ச.பால.)

எழுத்துக்களது மயக்கம் -

{Entry: A01__481}

இன்ன எழுத்துக்கு இன்னஎழுத்து நட்பெழுத்து, இன்ன எழுத்துப் பகையெழுத்து என்பதனை உட்கொண்டு, ஒரு மொழி தொடர்மொழி என்ற ஈரிடத்தும் , க்ச்த்ப் - என்ற நான்கும் தம்மொடு தாமே இணைந்து வரும்;ர்ழ் என்ற இரண்டும் தம்மொடு பிறவே இணைந்து வரும்; ஏனைய மெய் பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் இணைந்து வரும்.

இன்ன இன்ன மெய்களோடு இன்ன இன்ன மெய்கள்தாம் இணைந்து வரும் என்ற செய்திகளை உட்கொண்ட பகுதி எழுத்துக்களது மயக்கம் பற்றிக் கூறுவதாம். மயக்கம்- சேர்க்கை. (தொ. எ. 23 - 30 நச்.) (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களது மொழியாக்கம் -

{Entry: A01__482}

மொழியாக்கமாவது எழுத்தினான் சொல்லை ஆக்கிக் கொள்ளுதலாம். அஃதாவது உயிரெழுத்தோ மெய்யோடு உயிர் கூடுவதனாலாகிய உயிர்மெய் எழுத்தோ, தனித்தோ இரண்டெழுத்துக்கள் இணைந்தோ, இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தோ, தம்மை உணர்த்துவதனொடு நில்லாமல் பிறபொருளையும் சுட்டும் நிலையில் அமைவதாம்.

எ-டு : ஆ,கா - ஓரெழுத்தொருமொழி; ஆல் - ஈரெழுத் தொருமொழி; நிலவு - மூவெழுத்தொருமொழி; உத்தரட்டாதியான் - ஒன்பதெழுத்தொரு மொழி;

ஒன்பதனுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட தனி மொழி தமிழில் இல்லை. (தொ. எ. 45 நச்.) (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களின் இனம் -

{Entry: A01__483}

எழுத்துக்களை உயிர்-மெய்- சார்பு - என மூவினம் ஆக்கலும், அவற்றுள்ளும் உயிரைக் குறில் - நெடில் - என ஈரினம் ஆக்கலும், மெய்யை வல்லினம் - மெல்லினம் - இடையினம் - என மூவினம் ஆக்கலும் எழுத்துக்களின் இனமாம். (தொ.எ. 2, 3, 4, 8, 9, 19, 20, 21. நச்.)

எழுத்துக்களின் இனமும் முறையும் -

{Entry: A01__484}

அ ஆ-க்கள் பிறப்பானும் செய்கையானும், அங்கு ஆங்கு என்னும் பொருளானும் வடிவானும்; இ ஈக்கள் பிறப்பானும் செய்கையானும், இங்கு ஈங்கு என்னும் பொருளானும்; உ ஊக்கள் பிறப்பானும் செய்கையானும்,உங்கு ஊங்கு என்னும் பொருளானும் வடிவானும்; எ ஏக்கள் பிறப்பானும் செய்கையானும், எவன் ஏவன் என்னும் பொருளானும் வடிவானும்; ஒ ஓ-க்கள் பிறப்பானும் செய்கையானும் வடிவானும் ஒத்து ஓரினமாயின.

இன்னும் இவை அளபெடுப்புழி நெட்டெழுத்தொடு குற் றெழுத்திற்கு ஓசை இசையுமாற்றானும் ஓரினமாம் என் றுணரப்படும். குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒருமாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின். அன்றி இரண்டை முன் கூறின் ஆகாது; ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண் டாவதன்றி, இரண்டு என்பது ஒன்று இன்று ஆதலின். இதனான் ஒன்றுதான் பலகூடி எண் விரிந்தது என்பது உணரப்படும்.

கங-க்களும், சஞ-க்களும், டணக்களும், தந-க்களும், பம-க்களும் முயற்சியானும் மாத்திரையானும் செய்கையானும்; யர-க்கள் இடத்தானும் மாத்திரையானும் செய்கையானும், லவ-க்கள் இடத்தானும் மாத்திரையானும், ‘கல்வலிது’ ‘சொல்வலிது’ - என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள் பலவாத லானும்; ழள-க்கள் இடத்தானும் மாத்திரையானும் ‘இடை யெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தவின்பத்திற்கு இயைபு ஆதலானும்; றன-க்கள் முயற்சியானும் மாத்திரை யானும் செய்கையானும் ஒத்து ஓரினமாயின.

இனி எழுத்துக்களின் முறை வருமாறு:

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு’ எனத் திருவள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களுள் அகரமாக நிற்கின்றேன் யான்’ என்று உண்மை கூறியவாற்றானும், இறைவன் எல்லாப் பொருளின் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் எல்லா எழுத்தின்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது ஆகலின், அச்சிறப்பு நோக்கி எல்லா எழுத்திற்கும் முன்னர் அகரம் வைக்கப்பட்டது. அகரத்திற்கு இனமாகலின் அதன்பின்னர் ஆகாரம் வைக்கப்பட்டது. பிறப்பும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் அகரத்தோடு அளவும் ஒத்தலின் அதன் பின்னர் இகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் ஈகாரமும் வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் இகரத்தோடு அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் உகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் ஊகாரமும் வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் உகரத் தோடு அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் எகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஏகாரமும் வைக்கப்பட்டன. பிறப்பும் செய்கையும் ஏகாரத்தோடு அளவும் ஒத்தலின், தனக்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அதன் பின்னர் ஐகாரம் வைக்கப்பட்டது. இடமும் செய்கையும் ஒத்தலின் அதன் பின்னர் ஒகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஓகாரமும் வைக்கப்பட்டன. பிறப்பும் செய்கையும் வடிவும் ஓகாரத்தோடு அளவும் ஒத்தலின், தனக்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அவற்றின் பின்னர் ஓளகாரம் வைக்கப்பட்டது.

இவ்வாறு உயிரெழுத்துக்கள் தம்முள் இயைய முறையே வைக்கப்பட்டன. இனி மெய்யெழுத்துக்களின் முறை வைப்பு வருமாறு.

முதல்நாவும் முதலண்ணமும் உறப் பிறத்தலான் மெய்களில் முன்னர்க் ககரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஙகரமும், இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் ககரத்தோடு இடம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்ச் சகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஞகரமும், நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் சகரத்தோடு இடம் ஒத்தலானும் அவற்றின் பின்னர் டகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ணகரமும், நுனிநாவும் அண்பல்முதலும் உறப் பிறத்தலானும் அளவானும் டகரத்தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்த் தகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் நகரமும், இதழியையப் பிறத்தலானும் அளவானும் தகரத் தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்ப் பகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் மகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.

வல்லெழுத்துக்களை முன்னாகக் கூறி, அவற்றிற்குஇனம் ஒத்த மெல்லெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறி, இடை யெழுத்து ஆறனையும் அவற்றின் பின்னாகக் கூறினார். வல்லெழுத்துள் நான்கும், மெல்லெழுத்துள் மூன்றும், இடையெடுத்துள் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறைவைப்பு அமைந்தது. உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி கண்ணுற்று அடையப் பிறத்தலான், இடை யெழுத்துக்களுள் முன்னர் யகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ரகரமும், இடமும் அளவும் ஒத்தலானும் சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அவற்றின் பின்னர் லகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் வகரமும், இடமும் அளவும் வகரத்தொடு முயற்சியும் ஒத்தலானும் சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அதன்பின்னர் ழகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ளகரமும், அளவானும் ழகரம் போலத் தமிழெழுத்து ஆகலானும் அவற்றின்பின்னர் றகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் னகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.

றகரனகரங்களை வல்லின மெல்லினங்களைச் சாரவையாது இறுதிக்கண் வைத்தமை, அவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்கும், னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்புக் கருதியும் என்பது. (இ.வி.எழுத். 8 உரை)

(சூ.வி. கூறும் ‘எழுத்துக்களின் முறைவைப்பு (2)’ - காண்க.)

எழுத்துக்களின் பிரிவு -

{Entry: A01__485}

உயிர்மெய் புணர்ச்சிக்கண் மெய் எனவும் உயிர் எனவும் பிரிந்து வேறு நிற்றல். உயிர்மெய்யை மொழிமுதற்கண் மெய் முதல் எனவும், மொழியிறுதிக்கண் உயிரீறு எனவும், இடைக்கண் வரினும் உயிர் எனவும் பிரித்துக்கொண்டு புணர்ச்சி விதி கூறப்படுதலைக் காண்கிறோம்.

‘நிலவு’ என்பதனை ந்+இ+ல்+ அ+வ் + உ - என்று பிரித்துக் கோடற்கண், உயிர்மெய்முதல் மெய்முதலாகவும், உயிர்மெய் யீறு உயிரீறாகவும் அமைதலைக் காண்கிறோம்.

வரகு என்பதன்கண், வ+ர்+அ+கு- என இடையேயுள்ள உயிர் மெய்யைப் பிரிப்பின், கு என்ற ஈற்றெழுத்துக்கு அயலதாக வருவது ர என்ற உயிர்மெய்யிலுள்ள அகர உயிராதலின், வரகு என்பதனை உயிர்த்தொடர் மொழியாகிய குற்றியலுகர ஈற்றுச் சொல் என்கிறோம். (தொ. எ. 103, 106 நச்.) (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களின் பிறப்பிடமும் கரணமும் -

{Entry: A01__486}

எழுத்தை ஒலிக்கையில் எந்த இடத்தில் தொடுதல் நிகழ் கிறதோ, அந்த இடம் அதன் பிறப்பிடமாகும். எதற்கு எது தொடுதலைச் செய்கிறதோ, அதற்கு அது கருவியாகும்.

தொடுதல்-உபஸம்ஹாரம்-ஸமஸ்பர்ச்நாதி ஸம்ச்லேஷம்; தொடும் கருவி - கரணம்.

அகரஆகாரங்களுக்குப் பிறப்பிடம் கண்ட்டம்(மிடறு). அகர வுயிர்க்கு இதழையும் கவுளையும் மிகக் குவித்தல் செய்யாமை யும், ஆகாரவுயிர்க்கு இதழையும் கவுளையும் மிக விரித்தல் செய்யாமையும் வேண்டும்;இவையே அகர ஆகாரங்களின் தோற்றத்துக்குக் கருவி. (எ. ஆ. பக். 77)

நெஞ்சு மிடறு தலை-இவற்றை ஆசிரியர் கூறியதற்குக் காரணம் அவ்வளி கொப்பூழிலிருந்து புறப்பட்டு அவற்றின் வழியே சென்று வாயை அடைதலேயாம். வாய்க்குள் காற்று வந் தடைந்த பின்னரே, அஃது உயிராகவோ வல்லின மெல்லின மாகவோ இடையினமாகவோ ஆகும். சிறிது மூடியும் சிறிது திறந்தும் இருக்க எழுத்தாகுமாயின் அஃது இடையெழுத் தாகவேனும் றகரமாகவேனும் ஆகும். வாய் முழுதும் மூடப்பட் டிருக்க அவ்வளி எழுத்தாகுமாயின் றகரம் ஒழிந்த வல்லின மெல்லின எழுத்தாம். வல்லினம் ஒலிக்கும் போது தொண்டையி லுள்ள இரண்டு நரம்புகள் இடம் விட்டு நிற்கும்; மெல் லினங்கள் ஒலிக்கும்போது அவை நெருங்கி நிற்கும்.(எ. கு. பக். 87)

‘வல்லினம் உரம், ஆய்தம் சிரம், உயிர் இடை கண்டம், மெலி மூக்கு’ என்ற வீரசோழிய உரையும் நன்னூலும் பொருந்தா. உந்தி முதலாகத் தோன்றிய வளி எவ்வெழுத்தாக மாறினும் மிடற்றினின்று வாய்க்குள் வரும் வரை தன்நிலையில் திரியாது, வாய்க்கண் அவ்விடத்தில் அவ்வளி மெய்யாக மாறும்போது தடைபடும்;உயிராக மாறும்போது அவ்வளி தடைபடாமல் வாய்விட்டு வெளிவரினும் அஃது அவ்வுயிராக மாறும் இடம் வாய்தான்.

பன்னீருயிரும் தத்தம் இடங்களில் திரியா(-திரிந்து) ஒலிக்கும். திரிதலுக்குக் காரணம் கருவி. எழுத்துக்களுக்குப் பிறப்பிடம் நெஞ்சு - மிடறு - தலை - எனவும், கருவி,மூக்கு - அண்ணம் - நா - பல் - இதழ் - எனவும் முறையே கொள்க. (எ. கு. பக். 87-89)

எழுத்துக்களின் பிறப்பு -

{Entry: A01__487}

உந்தியில் தோன்றும் காற்று, மார்பு - கழுத்து- மூக்கு - தலை- என்னும் தானங்களில் உற்று, பல் - இதழ் - நா- அண்ணம்- என்னும் இவற்றின் முயற்சி வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்தொலியாய் வெளிப்படுதல் எழுத்துக்களின் பிறப்பாம். (நன். 74)

எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வீரசோழியக் குறிப்பு -

{Entry: A01__488}

உந்தியினின்று எழுகின்ற வாயு, உரம்(-மார்பு)-சிரம் - கண்டம்- மூக்கு- இவற்றின் இடமாகப் பொருந்திப் புறப்படும்போது அண்ணம்-பல்-இதழ்- நா-என்னும் உறுப்புக்களின் முயற்சி யால் வெவ்வேறு எழுத்தொலியாய்ப் பிறக்கும். (வீ. சோ. சந்திப். 6)

இவற்றுள் உரத்தை வல்லினமும், சிரத்தை ஆய்தமும், கண்டத்தை உயிரும் இடையினமும், மூக்கை மெல்லினமும் இடமாகப் பொருந்தும் என்ப. (6. உரை)

எழுத்துக்களின் பெயர் -

{Entry: A01__489}

முதல், சார்பு; உயிர், மெய் (முதல்);குறில், நெடில் (உயிர்); வல்லினம், மெல்லினம், இடையினம் (மெய்); உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் (சார்பு) - என இவை எழுத்தின் பெயர் களாம். (நன். 59, 60, 63, 68-70)

எழுத்துக்களின் பெயர் காரணக்குறியாதல் -

{Entry: A01__490}

உயிர்கள் போல மெய்களை இயக்குதலான் உயிர் என்றும், தமக்கு இனமாகி ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்துக்களை நோக்கத் தாம் குறியவாய் ஓரளபு இசைத்தலான் குறில் என்றும், தமக்கு இனமாகி ஓரளபு இசைக்கும் குற்றெழுத் துக்களை நோக்கத் தாம் நெடியவாய் ஈரளபு இசைத்தலான் நெடில் என்றும், சுட்டுப்பொருளை உணர்த்துதலான் சுட்டு என்றும், வினாப் பொருளை உணர்த்துதலான் வினா என்றும்,

மெய் போல உயிரான் இயங்குதலான் மெய் என்றும், மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கத்தாம் வல்லென்று இசைத்தலானும் வல்லென்ற தலைவளியான் பிறத்தலானும் வல்லெழுத்து என்றும், வல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கத் தாம் மெல் லென்று இசைத்த லானும், மெல்லென்ற மூக்குவளியான் பிறத்தலானும் மெல் லெழுத்து என்றும், மெல்லெழுத்தையும் வல்லெழுத்தையும் நோக்கத் தாம் இடைநிகரவாய் ஒலித்தலானும், இடை நிகர்த் தாய மிடற்று வளியான் பிறத்தலானும் இடையெழுத்து என்றும், தம்மால் இயலும் சார்பெழுத்திற்குக் காரணமாகி முதல் நிற்றலான் முதலெழுத்து என்றும், அவையே தம்மொடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் தோன்றலான் சார்பெழுத்து என்றும், ஓரளபு இசைக்கும் இகரஉகரம் குறுகி அரையளபு இசைத்தலான் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றும், அடுப்புக்கூட்டுப் போல ஆய்தவடி வாக எழுதப்படுதலின் ஆய்தம் என்றும், உயிரும் மெய்யும் கூடி ஒலித்தலான் உயிர்மெய் என்றும், உயிர் அளபெடுத்த லான் உயிரளபெடை என்றும், ஒற்று அளபெடுத்தலான் ஒற்றளபெடை என்றும், ஈரளபு இசைக்கும் ஐகாரம் ஒளகாரம் குறுகி ஓரளபு இசைத்தலான் ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் என்றும், அரையளபு இசைக்கும் மகரம் குறுகிக் கால்அளபு இசைத்தலான் மகரக்குறுக்கம் என்றும், அ ஆ என்பன அ ஆ என்று இசைத்தலான் அஆ என்றும் காரணக் குறி ஆயின. (இ. வி. எழுத். 7 உரை)

எழுத்துக்களின் பொதுப்பிறப்பிடம் -

{Entry: A01__491}

பன்னீருயிரும் இடையெழுத்து ஆறும் மிடற்றின்கண்ணும், வல்லெழுத்து ஆறும் உச்சியின்கண்ணும், மெல்லெழுத்து ஆறும் மூக்கின்கண்ணும் நிலைபெற்றிசைக்கும் ஓசையான் பிறக்கும். (இ. வி. 10)

எழுத்துக்களின் முதலும் ஈறும் -

{Entry: A01__492}

தனிஎழுத்து ஒவ்வொன்றற்கும் அதுவே முதலும் ஈறும் ஆகும். உயிர்மெய் எழுத்திற்கு ஒலித்த முறையே மெய் முதலும், உயிர் ஈறும் ஆகும். புணர்ச்சிக்கண், உயிர்மெய் முதலை மெய்முதல் எனவும், உயிர்மெய் ஈற்றை உயிரீறு எனவும் கூறுதல் காண்க. அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு புணர்த்திய மெய் தன் மாத்திரை தோன்றாது ஒன்றாய் நிற்றலின் உயிர்மெய்யை ஓரெழுத்து என்றும், ஒலித்து நின்ற நெறியான் ஈரெழுத்து என்றும் கொள்ப. ‘உயிர்மெய்’ என்பது ஒலி வகையான் உம்மைத்தொகை, மாத்திரை வகையான் உம்மைத்தொகை அன்மொழி. (நன். 109 சங்.)

எழுத்துக்களின் முறைவைப்பு (1) -

{Entry: A01__493}

“எழுத்துக்கட்கு எல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” (தொ. எ. 46) என்பதனான் கூறுப. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த் தும் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துக்கட்குக் கிடக்கை முறை ஆயினவாறு கூறுதும்:

“குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின். அன்றி, இரண்டை முற்கூறினாலோ எனின், ஆகாது; ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டு என்பதொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பலகூடியே எண் விரிந்ததென்று உணர்க.

“இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எ. 31) எனச் சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. அவை ஐம்பாற்கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற் றெழுத்து இலவேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங் களின் பின்னர் ஐகார ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யொடு கூடி நின்றல்லது தானாக ஓரெழுத்தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ இ உ எ- என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் - என மெய்யொடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களொடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் ‘நொ’ என மெய்யொடு கூடியே தன் பொருளுணர்த்து வதல்லது தானாகப் பொருள் உணர்த்தாது என்றுணர்க. இன்னும் அ ஆ, உ ஊ, எ ஏ, ஒ ஓ, - என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ ஈ ஐ - தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அளபெடுக்குங்கால், நெட்டெழுத்தொடு குற்றெழுத்திற்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்கள் ஆதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுள் பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.

“இனி, ககார ஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார நகாரமும், பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்துவைத்தார். முதல் நாவும் முதலண்ணமும், இடைநாவும் இடையண்ணமும், நுனிநாவும் நுனியண்ணமும் நுனிநாவும் அண்பல் முதலும் உறுதலும், இதழ்இயைதலும் ஆகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக் களைக் க ச ட த ப ங ஞ ண ந ம - என இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த் திரிதலானும் றகாரமும் னகாரமும் சேர வைத்தார். இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடை யெழுத்துக்களில் யகாரம் முன் வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணம் கண்ணுற்றடையப் பிறத்தலின். ரகாரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதேனும், செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மில் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கல்வலிது சொல்வலிது - என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள் பெரும்பான்மை என்பது பற்றி லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் ‘இடையெழுத் தென்ப யரல வழள’ (தொ. எ. 21) என்றால் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார்போலும்.” (தொ. எ. 1 நச். உரை)

எழுத்துக்களின் இனமும் முறையும் என்ற தலைப்பில், இலக்கணவிளக்க நூலார் சுட்டும் முறைவைப்பினைக் கண்டு கொள்க. (இ. வி. எழுத். 8 உரை)

(நன்னூல் விருத்தியுரை சூ.வி. உரையே.)

எழுத்துக்களின் முறைவைப்பு (2) -

{Entry: A01__494}

சிறப்பு, இனம் - என்ற இரண்டு காரணத்தானும் ஒன்றன் பின் ஒன்றாக எழுத்துக்கள் அகர முதலாக னகரம் ஈறாக வழங்கி வருதலே எழுத்துக்கள் நிற்கும் முறையாம். தனித்தியங்கும் ஆற்றலுடைய உயிரெழுத்துக்கள் அவ்வாறு இயங்கும் ஆற்றல் இல்லாத மெய்யெழுத்துக்களுக்கு முன் நிற்கின்றன. உயிரெழுத்துக்களுள்ளும், குற்றெழுத்துக்கள் அவற்றது விகாரமாகிய நெட்டெழுத்துக்களுக்கு முன்நிற்கின்றன. மெய் யெழுத்துக்களுள், வலியார் மெலியவர்களுக்கு முன் நிற்பது போல, வல்லெழுத்துக்கள் மெல்லெழுத்துக்களுக்கு முன் நிற்கின்றன. இவை நிற்குமுறை சிறப்பு எனும் காரணம் பற்றியது. குற்றெழுத்துக்களை அடுத்து அவற்றின் இனம் ஒத்த நெட்டெழுத்துக்கள் முறையே நிற்பதும், வல்லெழுத்துக்களை அடுத்து அவற்றின் இனம் ஒத்த மெல்லெழுத்துக்கள் முறையே நிற்பதும் இனம் என்னும் காரணம் பற்றியன. (நன். 73)

“உயிர்களுள் அ இ உ - என்பன முறையே அங்காந்து கூறும் முயற்சியானும், அவ்வங்காப்போடு அண்பல்லடி நாவிளிம் புறக் கூறும் முயற்சியானும், அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியானும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள் அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின், அவற்றைச் சார வைக்கப்பட்டன. நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற் போலக் குற்றெழுத்து இரண்டு ஒத்து நின்று நீண்டிசைப்ப தொன்று ஆதலின், அஃது உணர்ந்து கோடற்குக் குற்றெழுத்துக் களின் பின்னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்டன. இனி எகரமாவது அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்திசைத்து நரமடங்கல் போல் நிற்பதொன்று ஆகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக் கூறும் தம்முள் ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்று ஆகலானும், அவை அவற்றின் பின்னர் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனம் ஆகலின், அவற்றின் பின் முறையே வைக்கப் பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆதலின் எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும், அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆகலின் ஒகர ஓகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறாதல் பற்றி ஏ ஓ ஐ ஒள - என்னும் நான்கினையும் வடநூலார் சந்தியக்கரம் என்ப. கையடனார் நரமடங்கல் போல் என்று உவமையும் கூறினார். இக்கருத்தே பற்றி ஆசிரியர் ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுதற்கு, அகர இகரங்களே அன்றி அவற்றிடையே யகரமும் ஒத்து இசைக்கும் என்பார், ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும், ஐயென் நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்றும், ‘மெய்பெற’ என்ற இலேசானே, ஒள என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுதற்கு அகர உகரங்களே அன்றி அவற்றிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும்......‘இகர யகரம் இறுதி விரவும்’ என்றும் கூறினார்.

“இனி, கங - க்களும் சஞ-க்களும் டண-க்களும் தந-க்களும் பம-க்களும் அடிநா அண்ணம் - இடைநா அண்ணம் - நுனிநா அண்ணம் - அண்பல் அடி - இதழ் - என்னும் இவற்றின் முயற்சி யால் பிறத்தலான், அப்பிறப்பிடத்தின் முறையே முறையாக வைக்கப்பட்டன. வலியாரை முன் வைத்து மெலியாரைப் பின் வைத்தல் மரபாகலின், வல்லெழுத்துக்கள் முன்னும் அவ்வவற் றிற்கு இனம் ஒத்த மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னு மாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும் நோக்கியல்லது இடை நிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின் அது பற்றி இடை யெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின் வைக்கப்பட்டன.

“ழகர றகர னகரங்கள் மூன்றும் தமிழெழுத்து என்பது அறிவித்ததற்கு இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் ழகரம் இடையெழுத்தாகலின், அதுபற்றி இடையெழுத்தொடு சார்த்தி அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழியில் லகாரம் ளகாரமாகவும் உச்சரிக்கப் படுவதன்றி தனியே ஓரெழுத்து அன்மையின், அச்சிறப்பின்மை பற்றி இடை யெழுத்தாகிய ளகாரம் ழகாரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. யரலவ-க்கள் நான்கும் முறையே அடியண்ணமும் இடை யண்ணமும் அண்பல்முதலும் இதழும் என்னும் இவற்றின் முயற்சியால் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறை யாக வைக்கப்பட்டன.” (சூ. வி. பக். 22-25)

உயிரெழுத்துக்கள் தனித்து இயங்கும் இயல்பின ஆதலின், அவை அவ்வியல்பு இல்லாத மெய்யெழுத்துக்கட்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள் அகரம், வேறு முயற்சியின்றி வாய் அங்காந்து கூறப் பிறத்தலின் அச்சிறப்பு நோக்கி முதற்கண் வைக்கப்பட்டது. அதனையே பின்னும் ஒரு மாத்திரையளவு நீட்டி ஒலிக்கப் பிறத்தலின் ஆகாரம் அதன் பின் வைக்கப் பட்டது. மேல், குற்றெழுத்துக்களுக்குப் பின்னர் நெட்டெழுத் துக்களை நிறுத்தியதற்கும் இவ்வாறே கொள்க. இகரம், மேற்பல்லின் அணிய இடத்தில் நாவிளிம்பு உறப் பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி அதன்பின் வைக்கப்பட்டது. உகரம், இதழ் குவித்து ஒலிக்கப் பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி இகரத்தின் பின் வைக்கப்பட்டது. உயிரெழுத்துக்களுள் அ இ உ என்னும்மூன்றுமே சிறப்புடையன; அதனானே அவை பொருள்களைச் சுட்டி உணர்த்த வரலாயின.எகரம் இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், இகர ஒலியினது திரிபு ஆகலானும் அச்சிறப்பின்மை நோக்கி உகரத்தின் பின் வைக்கப்பட்டது. ஐகாரம் அகரமும் இகரமும் கூடிப் பிறப்பது ஆதலின், அஃது ஏகாரத்தின் பின் வைக்கப்பட்டது. ஒகரம் உகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், உகர ஒலியினது திரிபு ஆகலானும், அகர இகரம் கூடிப்பிறக்கும் ஐகாரத்தின் பின் வைக்கப்பட்டது. ஒளகாரம் அகரமும் உகரமும் கூடிப் பிறப்பது ஆதலின், ஓகாரத்தின் பின் வைக்கப்பட்டது. ஆகவே பிறப்பிடத்து முறையும், சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கியே உயிரெழுத்துப் பன்னிரண்டும் வைக்கப்பட்டுள்ளன. இனி மெய்யெழுத்துக்களின் முறை வருமாறு:-

ககார ஙகாரங்கள் அடிநா அடியண்ணத்தை உறப் பிறத்தலின் முதலில் வைக்கப்பட்டன. சகார ஞகாரங்கள் இடைநா இடை யண்ணத்தை உறப் பிறத்தலின் அவற்றின் பின் வைக்கப் பட்டன. டகார ணகாரங்கள் நுனிநா நுனியண்ணத்தை உறப் பிறத்தலின் அவற்றின் பின் வைக்கப்பட்டன. றகார னகாரங்கள் நுனிநாக்கு மேல்வளைந்து சென்று அண்ணத்தை ஒற்றப் பிறத்தலின், டகார ணகாரங்களை அடுத்து வைக்கப் படல் வேண்டும்; இவ்விரண்டு எழுத்துக்களும் வடமொழியில் இல்லாமையின் ஈற்றில் வைக்கப்பட்டன. தகார நகாரங்கள் மேற்பல்லின் அடியில் நாநுனி பரந்து ஒற்றப்பிறத் தலின் (றன-க்களின் பின்னர் வைக்கப்படவேண்டுவனவாகவும்,
றன-க்கள் இறுதியில் வைக்கப்பட்டதனால்), டண-க்களின் பின்னர் வைக்கப்பட்டன. பகார மகாரங்கள் இதழ்கள் சேரப் பிறத்தலின், தந-க்களின் பின் வைக்கப்பட்டன. இவற்றால் அடியண்ணம் முதல் இதழ்வரையிலு முள்ள இடங்களில் பிறத்தல் காரணமாக, கங - சஞ - டண - றன - தந - பம - க்கள் முறையாய் அமைவனவாதல் காண்க. கங-க்கள் முதலிய வற்றுள் இரண்டிரண்டு எழுத்துக்கள் ஓரோர் இடத்தில் பிறப்பன வாயினும், வல்லெழுத்துக்கள் மார்பின் வளியால் பிறந்து வலியவாய் ஒலித்தலானும், மெல்லெழுத்துக்கள் மூக்கின் வளியால் பிறந்து மெலியவாய் ஒலித்தலானும், அச் சிறப்பு நோக்கி வல்லெழுத்துக்கள் முன்னும், சிறப்பின்மை நோக்கி மெல்லெழுத்துக்கள் அவற்றின் பின்னும் வைக்கப் பட்டன. இனி இடையெழுத்துக்களின் முறை வருமாறு:

மிடற்று எழுந்த வளி அண்ணம் சேர்ந்து பிறத்தலின், யகரம் முதலில் வைக்கப்பட்டது. நுனிநாக்கு மேற்சென்று அண்ணத்தை வருடுதலான், ரகரமும் ழகரமும் பிறப்பன எனினும், அவற் றுள்ளும் இடம் நோக்கி ழகரம் முன்னும் ரகரம் அதன்பின் னும் வைக்கப்படல் வேண்டும். ஆயினும் ழகரம் வடமொழி யில் இல்லாமையின், வடமொழியிலுள்ள இடையெழுத்துக் களின் பின் - அஃதாவது யரலவ-க்களுக்குப் பின் - வைக்கப் பட்டது. ரகாரம் பிறப்பிடம் நோக்கி (ழகாரத்தின் பின்னர்) வைக்கப்பட வேண்டுவதாயினும் ழகாரம் வகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டதனான்) யகாரத்தின்பின் வைக்கப் பட்டது. ளகாரம் நாவிளிம்பு தடித்து அண்ணத்தை வருடப் பிறத்தலின், அது ரகாரத்தின் பின்னர் வைக்கப்பட வேண்டுவ தாயினும், வடமொழியில் தனியெழுத்தாக இல்லாததனான், ழகரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ழகாரம் ளகாரம் ஆகிய இரண்டு எழுத்துக்களும் வடமொழியில் இல்லையாயினும், அவற்றுள்ளும் பிறப்பிடம் நோக்கி ழகாரம் முன்னும் ளகாரம் பின்னுமாக வைக்கப்பட்டன. நாவிளிம்பு தடித்து அண்பல் லடியை ஒற்றுதலான் லகாரம் பிறக்கின்றது ஆகலின், அது ழகார ளகாரங்களின் பின்னர் வைக்கப்பட வேண்டுவதாயி னும் அவ்விரண்டு எழுத்துக்களும் ஈற்றில் வைக்கப்பட்டமை யின், அது ரகாரத்தின் பின்வைக்கப்பட்டது. வகரம் மேற்பல் லும் இதழும் இயையப் பிறத்தலின், அது லகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ஆகவே, இடையினங்கள் ஆறும் பிறப்பிடம் காரணமாக, ய ழ ர ள ல வ - என வைக்கப்பட வேண்டுவன. அவற்றுள் ழகார ளகாரங்கள் வடமொழியில் இல்லாமை கருதி ஈற்றில் வைக்கப்பட்டன ஆகலின், ய ர ல வ ழ ள - என்று அமைந்துள்ளன. இவற்றால்,

அ, ஆ; க ங - இவை அடியண்ணத்திலும்,

இ, ஈ; ச ஞ ய - இவை இடையண்ணத்திலும் (தாலத்திலும்),

எ, ஏ, ஐ; ட, ண, ழ, ர - இவை நுனியண்ணத்திலும்,

ற, ன, (ள) - இவை நுனியண்ணத்தை அடுத்த இடத்திலும்,

த, ந, ல - இவை பல்லின் அடியிலும்,

உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ - இவை இதழிலும் பிறப்பனவாதல் தெளிவாகும். (எ. ஆ. பக். 7 -10)

எழுத்துக்களின் வடிவம் -

{Entry: A01__495}

எழுத்துக்கள் தொன்றுதொட்டு வழங்கும் பழைய வரிவடி வினையுடையன. அங்ஙனம் வழங்குமிடத்துத் தனித்தும் மெய்யூர்ந்தும் வரும் எகரமும் ஒகரமும் ஆகிய இரண்டு உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் தம்மேல் புள்ளி பெறும் என்பர் நன்னுலார். (பிற்கால ஓலைச்சுவடிகளில் இந் நிலை காணலாம். புள்ளியிடுதல் மாத்திரையைச் செம்பாதி யாகக் குறைப்பதற்கும் பயன்படும்.) (நன். 98)

எழுத்துக்களுக்கு வெவ்வேறு ஒலி உண்டாவதன் காரணம் -

{Entry: A01__496}

சுவாசப்பையினின்று வெளிப்படும் வளி அடியண்ணம் முதலிய இடங்களில் படுகையில் நாவின் செய்கையால் வெவ்வேறு எழுத்தொலி ஆகின்றது. வெவ்வேறுவகை ஒலி உண்டாவதன் காரணம் ஐந்து. அவை 1. உள்முயற்சி, 2, வெளி முயற்சி, 3. கூட்டம், 4. வழி வேறுபாடு, 5. இட வேறுபாடு - என்பன.

உள்முயற்சி: உள்நின்று எழும் வளியை வெளியே விடும்போது, நாவின் நுனி இடை அடிவிளிம்பு - ஆகியவற்றுள் ஒன்றனால் வளியை அடியண்ணம் இடையண்ணம் முதலிய இடங்களில் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும். தடுக்கும்போது சிறிதளவு தடுத்தலால் இடையினமெய்களும், முழுதும் தடுத்தலால் வல்லின மெல்லின மெய்களும், தடுக்காமல் விடுவதால் உயிரெழுத்துக்களும் தோன்றுகின்றன.

வெளிமுயற்சி- வளியை வெளிவிடும்போது நம் குரல்வளை யின் இருபக்கத்தும் உள்ள ஐவ்வுகள் பிரிந்து விரிந்தும், சேர்ந்து சுருங்கியும், நாதஒலியையும் சுவாச ஒலியையும் உண்டாக்கும். வல்லெழுத்துக்கள் சுவாச காரியம், மற்ற எல்லா எழுத்துக் களும் நாதகாரியம்.

கூட்டம்: ஓரொலியில் மற்றோர் ஒலியையும் ஒருங்கு சேர்த்தல். செம்பும் ஈயமும் சேர்ந்து வெண்கலமாவது போலப் பிரிக்கமுடியாதபடி ஒன்றேயாய், இரண்டொலியின் சேர்க்கையால் ஓரொலியேயாய் அமையும் தமிழ் ஐகார ஒளகாரங்கள் இப்பகுப்பைச் சார்ந்தன என்ப.

வழி வேறுபாடு: உள்நின்று வெளிப்படும் வளி வெளியே வரும் வழிகளின் வேறுபாடு. அண்ணம் வரை வரும் வளியை அதற்குமேல் வாய்வழியாகவோ மூக்குவழியாகவோ வெளி விடுதல் கூடும். வல்லினம் நீங்கலான ஏனைய எழுத்துக்களை ஒலிக்கும்போது குரல்வளையின் துவாரம் சுருங்கச் செய்து சிறிது சிறிதாக வெளிவரும் வளியை மூக்கின் வழியாக வெளிவிட்டால் அவ்வளி மெல்லினம் ஆகும். வடமொழியில் உயிர், ய வ ல-க்களும் மூக்கின் வழியாக வெளிவருதலுமுண்டு. அவை அநுநாஸிகம் எனப் பெயர் பெறும்.

இட வேறுபாடு: எழுத்துப் பிறப்பதற்குரிய வாயின் உள் ளிடங்கள் ஆகிய அடியண்ணம், இடையண்ணம், நுனி யண்ணம், நுனியண்ணத்தை அடுத்த இடம் (வர்த்ஸம்), பல், பல்லின் மேலிடம், இதழ்- என்ற இடவேறுபாட்டானே வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் ஆறு ஆறு ஆயின. (எ. ஆ. பக். 11-13)

எழுத்து காரணப் பெயராதல் -

{Entry: A01__497}

எழுத்து என்பது ‘எழுப்புதலையுடையது’ என்னும் பொருளைத் தரும் கருவிப்பெயர். அஃது ஈண்டுச் செவிப்புலனாம் ஒலி யெழுத்தைச் சுட்டிக் கட்புலனாம் வரிவடிவத்திற்கும் உரியதாக நிற்றலின், காரணப் பெயராம். சாத்தன் என்பா னொருவனது உடம்பு, உயிரும் உணர்வுமாகத் திகழும் அச் சாத்தனைச் சுட்டி உணர்த்துமாறு போல, எழுத்து வரிவடி வினையுற்று நின்று ஒலியுருவை உணர்த்தும் தன்மைத்தாய் இலக்கணக்குறியீடு ஆயிற்று. (தொ.எ.பக். 71 ச.பால.)

எழுத்துச் சாரியைகள் -

{Entry: A01__498}

காரம், கரம், கான் -என்பன எழுத்துச் சாரியைகள். காரச் சாரியை ஒன்றே தமிழுக்கும் ஆரிய மொழிக்கும் பொதுவான சாரியை. காரச்சாரியை ஒன்றே உயிர் மெய் எல்லாவற்றுக்கும் வரும்.

வருமாறு : ஆகாரம், ஈகாரம், ஊகாரம்........... ஓளகாரம், அகாரம், ககாரம்.

காரம், கரம், கான்- என்ற மூன்றும் உயிர்க்குறிலுக்கும் உயிர்மெய்க் குறிலுக்கும் வரும்.

எ-டு: அகாரம், அகரம், அஃகான்; மகாரம், மகரம், மஃகான். (குறில் கான்சாரியை பெறுங்கால் இடையே ஆய்தம் வருதல் கொள்ளப்படும்.)

ஐ, ஒள- என்பன கான்சாரியையும் பெற்று ஐகான், ஒளகான் - என வரும்.

ஆனம், ஏனம், ஓனம் - என்ற எழுத்துச்சாரியைகளும் உள. உயிர்மெய் நெடிலுக்குச் சாரியை இல்லை. (தொ. எ. 134- 137 நச். உரை)

மெய் பதினெட்டும் அகரத்தையும், நெட்டுயிர் ஏழும் காரத்தையும், ஐகார ஒளகாரங்கள் காரத்துடனே கானையும், உயிரும் உயிர்மெய்யுமான குற்றெழுத்துஐந்தும் காரம், கான்- இவற்றுடனே கரம் என்பதனையும் சாரியையாகச் சார்ந்து நடக்கும். (நன். 125 மயிலை.)

எழுத்துச்சாரியை பிற -

{Entry: A01__499}

‘பிற’ என்றதனாலே, குறிலொடு கான்சாரியை புணரும்போது இடையே ஆய்தம் தோன்றுதலும் (அஃகான்), அ ஆனா - எ ஏனா - ஒ ஓனா- ஐயனா - ஒளவனா - என, ஆனா ஏனா ஓனா அனா - முதலிய சாரியைகள் பெற்று வருதலும், ‘அ இ உ’ ‘ஆ ஈ ஊ’ எனச் சாரியை பெறாது வருதலும் கொள்க. (நன். 126 இராமா.)

எழுத்துப் பிறப்பு -

{Entry: A01__500}

பன்னீருயிர்க்கும் ஆறுஇடையினத்திற்கும் மிடறே முதலிட மாகவும், ஆறு வல்லினத்திற்கும் நெஞ்சே முதலிடமாகவும். ஆறு மெல்லினத்திற்கும் உச்சியே முதலிடமாகவும், அன்றி உதடும் மூக்கும் அண்ணமும் பல்லும் நாவும் என இவ் வைந்தே துணையிடமாகவும், எழுத்தெல்லாம் பிறக்கும் என்றுணர்க. (தொ. வி. 3 உரை)

எழுத்துப்பேறு அளபெடை -

{Entry: A01__501}

இஃது உயிரளபெடை வகைகளுள் ஒன்று. இஃது இன் னோசைக்காகவோ, செய்யுளில் இசை நிறைப்பதற்காகவோ அமைந்ததன்று. குறிலை அடுத்த ஆகார ஈற்றுப் பெயர்க்கும் தனி ஆகார ஈற்றுப் பெயர்க்கும் உம்மைத்தொகைக்கண்ணும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அகரமும், குறிலை அடுத்தும் தனித்தும் வரும் ஊகார ஈற்றுப் பெயர்க்கு வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரமும், ஏகார ஈற்றுக்கு எகரமும், ஓகார ஈற்றுக்கு ஒகரமும் எழுத்துப் பேறளபெடை யாக வரும்.

உ வாஅப் பதினான்கு - உம்மைத் தொகை (தொ. எ. 223 நச்.)

பலாஅக்கோடு உவாஅப் பட்டினி

அராஅக் குட்டி - வேற்றுமைத்தொகை 226 நச்.

உடூஉக் குறை - வேற்றுமைத் தொகை 267 நச்.

ஏஎக் கொட்டில் - வேற்றுமைத் தொகை 277 நச்.

கோஒக் கடுமை - வேற்றுமைத் தொகை 292 நச்.

இவ்வெழுத்துப் பேறளபெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது. நீ இர்- என்பது (326 நச்.) பண்டு ஒருமொழிக்கண் வந்த எழுத்துப்பேறள பெடை எனலாம். இது குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் நெட்டெழுத்து அல்லாவழி வந்த புலுதச்சந்தி (பி.வி. 5)

எழுத்துப்பொருள்படுமாறு -

{Entry: A01__502}

அகரம் முதல் னகரம் ஈறாகிய முப்பதுக்கும் எழுத்து என்பது தனித்தனியாகவும் ஒரு சேரவும் பொதுப்பெயர். “எழுத்து என்பது ஒரு பொருள்; அதற்கு அ ஆ - முதலியன பெயர்” என்பது பொருந்தாது. எழுத்து என்பது முப்பதனுக்கும் பொதுப்பெயர் எனவே, குறில் - நெடில் - உயிர் - வன்மை - மென்மை - இடைமை - என்பன சிறப்புப்பெயராம். (சூ. வி. பக். 19, 20)

எழுத்து என்னும் தொழிற்பெயர், அப்பொருளை விட்டுப் பால்பகா அஃறிணைப் பொருட் பொதுப்பெயராய், அப் பொருளை விட்டு ஓவியம் முதலியன போல அன்றி அகரம் னகரம் முதலிய வடிவை உணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளை விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடியாகுபெயராய், அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்தது எழுத்து’ எனக் கருமகருத்தாவையும் கருவிக்கருத்தாவையும் உணர்த்தும் நான்மடியாகு பெயராய் நின்று பல பொருள் பட்டது. (இ. கொ. பக். 52)

எழுத்துப் போலி -

{Entry: A01__503}

அகரமும் வகரஒற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த ஆகலும், அகரமும் யகரஒற்றும் கூடி ஐகாரத்தின் பயத்த ஆகலும் எழுத்துப் போலியாம்.

எ-டு : அவ்வை - ஒளவை எனவும், அய்யர் - ஐயர் எனவும் வரும். (நேமி. எழுத். 9)

மொழியிறுதியில் மகரத்திற்கு னகரம் போலியாக வரும். எ-டு : முகம்- முகன்.

மொழி முதலிலும் இடையிலும் சகர ஞகர யகரங்களுக்கு முன் அகரத்துக்கு ஐகாரம் போலியாக வரும்.

எ-டு : பசல் - பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல் - மையல்;

அரசு - அரைசு. இலஞ்சி - இலைஞ்சி, அரயர் - அரையர்

மொழி இடைக்கண் சிலவிடத்து ஐகாரத்தின் பின்னரும் யகர ஒற்றின் பின்னரும் நகரத்துக்கு ஞகரம் போலியாக வரும்.

எ-டு:மைந்நின்ற - மைஞ்ஞின்ற - செய்யுள்

ஐந்நூறு - ஐஞ்ஞூறு - உலக வழக்கு

செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற - செய்யுள்

சேய்நலூர் - சேய்ஞலூர் - உலக வழக்கு (நன். 122- 124)

எழுத்தும் பதமும் -

{Entry: A01__504}

எழுத்து, தூளிலே மஞ்சள் புகையிலை முதலியன வடிவு வேறு படுவது போல வேறுபடாமல், மாலையினிடத்தே மலர்போல நிற்பதனால் ‘முன்னனைத்து’ என்றார். (நன். 127 இராமா.)

எழுத்துமுப்பத்துமூன்று எனல் -

{Entry: A01__505}

தொல்காப்பியனார் வடமொழியில் வல்லுநராய் ஐந்திரம் நிறைந்தவராயினும், தமிழ்மரபை யுட்கொண்டே, “தமிழ் மொழிக்குரிய எழுத்துக்கள் உயிர் 12, மெய் 18 ஆகிய முப்பதுமே” என்றார். ஒரு மொழியைச் சார்ந்து வரும் இயல்பு அன்றித் தனித்தியங்கும் இயல்பு தமக்கு இல்லை என்றலின் அவைதம்மை எடுத்தோதிக் காட்டலாகாக் குற்றியலிகரம் - குற்றியலுகரம் - ஆய்தம் - என்பன, தனித்து எழுதப்படா ஆயினும் மொழியொடு சார்த்தி எழுதப்படுதலின், எழுத்து என்னும் குறியீட்டுக்கு உரியன ஆதலின் அவற்றை ‘எழுத்து ஓரன்ன’ என்று குறிப்பிட்டு, அம்மூன்றனையும் சேர்க்கத் தமிழெழுத்து முப்பத்து மூன்று என்று அவர் தெரிவித்தது தமிழ்மரபு பற்றியே என்பது. (தொ. எ. 1)

எழுத்து முறை காட்டல் -

{Entry: A01__506}

எழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல் போல எழுத்திலக்கணம் சொல்லுள் சென்று மயங்காத முறைமை- யானே எழுத்திலக்கணம் தெரிவித்து...(தொ. பாயி. இள. உரை)

மூவகை இலக்கணமும் மயங்காத முறைமையால் செய்கின்ற மையின், எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி... (நச். உரை)

இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் முன்னூலுள் போல விரவாத தன்மையானே, இயற்றமிழை வேறுபிரித்து முறையானே உலகிற்கு அறிவித்து.... (சூ.வி. பக். 3)

ஒன்றனுள் பிறிதொன்று கலவாத மரபினையுடைய நூல் முறையைக் காட்டி....

‘முறைகாட்டி’ என்பதனை இரண்டன் தொகையாக்காமல் ‘முறையானே அறிவித்து’ என்ற மூன்றன்தொகையாகக் கொள்ளின், ‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே’ (தொ.எ.280. நச்.) என்ற நூற்பாவிதிப்படி வல்லெழுத்து மிக்கு, ‘முறைக்காட்டி’ என அமைதல் வேண்டும். அங்ஙனம் காணப்படாமையின் ‘முறை காட்டி’ என்பது மூன்றன் தொகை ஆகாது. (பா. வி. பக். 234)

மேலும் பாயிரத்துள் அவையரங்கேறலைக் கூறலே முறை யன்றி, உலகிற்கு அறிவித்தலைக் கூறல்இலக்கணமன்று ஆதலின், ’முறை காட்டி’ என்ற தொடர்க்கு ‘முறையானே உலகிற்கு அறிவித்து’ என்று பொருள் செய்தல் பொருந்தாது. (பா. வி. பக். 141)

எழுத்துவகையான் நால்வகைப் புணர்ச்சி -

{Entry: A01__507}

நிலைமொழி உயிரீறு, நிலைமொழி மெய்யீறு, வருமொழி உயிர்முதல், வருமொழி மெய்முதல் - என்ற நிலைகள் உண்மை யான், உயிரீறு உயிர்முதல்- உயிரீறு மெய்முதல் - மெய்யீறு மெய்முதல் - மெய்யீறு உயிர் முதல் - என்ற நால்வகையான் புணர்ச்சி நிகழும். (தொ. எ. 107 நச்.)

எழுத்தெண்ணிக்கை -

{Entry: A01__508}

எழுத்து எனத் தொகையான் ஒன்றும், முதலெழுத்தும் சார்பெழுத்தும் என வகையான் இரண்டும், இவ்விரண்டன் பகுதியும் கூட்ட விரியான் தமிழெழுத்து இருநூற்றெழுபதும் ஆம் என உய்த்துணர்க. (இ. வி. 5 உரை)

இலக்கண விளக்க ஆசிரியர் தனியெழுத்தை யுட்கொண்டே, உயிர்மெய் 216, உயிரளபெடை 7, ஒற்றளபெடை 11, ஏனைய வாகிய குற்றியலிகரம் - குற்றியலுகரம் - ஐகாரக்குறுக்கம்- ஒளகாரக் குறுக்கம் - ஆய்தம் - மகரக் குறுக்கம்- ஆகிய ஆறும் ஒவ்வொன்று, ஆகச் சார்பெழுத்து விரி 240;

உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்து 30;இவ்விருதிறமும் கூட்டத் தமிழ் எழுத்து 270 ஆம் என்றார்.

‘எழுத்தெனப்படுப’ என்ற முதல் சூத்திரச் செய்தி -

{Entry: A01__509}

எல்லாரானும் அறியப்படும் எழுத்துக்களுள், தமிழ் மொழிக்குத் தொல்காப்பியனார் கொண்ட முதலெழுத் துக்கள் முப்பதே, சார்பெழுத்துக்கள் மூன்றே எனஎழுத்தின் தொகையை அறிவித்தலே ‘எழுத்தெனப் படுப’ என்ற முதல் சூத்திரச் செய்தியாகும். பிற்காலத்துக் குணவீரபண்டிதர் தம் சின்னூலில் முதலெழுத்துக்கள் 31 எனவும், நன்னூலார் முதலெழுத்துக்கள் 30 சார்பெழுத்துக்கள் 10 எனவும், இலக்கணவிளக்க நூலார் சார்பெழுத்து 9 எனவும் கூறுதல் போல்வன தொல்காப்பியனார்க்கு உடன்பாடல்ல. தொல்காப் பியனார் காலத்துக்கு முன்னும் தமிழெழுத்தின் தொகை பற்றி முரண்பட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம் ஆயினும், அவற்றை உடன்படாது, ‘முதலெழுத்துக்கள் முப்பதே, சார்பெழுத்துக்கள் மூன்றே’ என்று தொகை கோடற்கே இச்சூத்திரம் எழுந்தது. (எ. ஆ. பக். 5)

எழுத்து என்பது ஒலியெழுத்தினையே குறிக்கும். வரி-வடிவத்தை உருபு, இயற்கை என்ற சொற்கள் குறிக்கும். (எ.கு. பக். 4 (14-17சூ.)

அகரத்தை முதலாகவும் னகரத்தை ஈறாகவும் உடையவற்றிற்கு எழுத்து என்னும் பொதுப்பெயர் விதித்தற்கு எழுந்தது இச்சூத்திரம். (சூ. வி. பக். 19)

அகரத்தை முதலாகவும் னகரத்தை ஈறாகவும் உடையவற்றிற்கு எழுத்து என்று குறியிட்டாளுதலே இச்சூத்திரக் கருத்து. (எ. கு. பக். 6)

எழுத்தை எழுவகையான் உணர்த்துதல் -

{Entry: A01__510}

எழுத்தை எழுவகையான் உணர்த்தினான். எழுவகையாவன 1. எழுத்து இனைய என்றலும், 2. இன்ன பெயரின என்றலும், 3. இன்ன முறையின என்றலும், 4. இன்ன பிறப்பின என்றலும், 5. இன்ன மாத்திரையின என்றலும், 6. இன்ன வடிவின என்றலும், 7. இன்ன புணர்ச்சியின என்றலும் ஆம். (நேமி. எழுத். பாயி. உரை)

எழுத்தோசை வெளிப்படல் -

{Entry: A01__511}

பரை பைசந்தி மத்திமை வைகரி- என்னும் நால்வகை வாக்கி னுள், அகத்து எழுவனவாகிய பரை முதல் மூன்றனையும் ஒழித்து, ‘எழுந்து புறத்து இசை’ப் பதாகிய வைகரிவாக் கினையே (தொ.எ. 102 நச்.) இவர் எழுத்துக்களின் பிறப்பாம் என்றார்.

பரைவாக்கு - உந்திஓசை; பைசந்திவாக்கு- நெஞ்சு ஓசை அல்லது நினைவு ஓசை; மத்திமைவாக்கு - மிடற்று ஓசை; வைகரிவாக்கு - செவிஓசை.

இவற்றின் விகற்பமெல்லாம் சைவாகமத்துள் காண்க. (இ. வி. 9 உரை)

‘எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளிஇசை’ -

{Entry: A01__512}

உந்தியில் தோன்றும் காற்றின் உள்ளே திரிதரும் கூற்றினவாகிய பரை - பைசந்தி - மத்திமை - என்ற பகுதிகள் நீங்க, தலை -மிடறு- நெஞ்சு- என்ற நிலைக்களங்களில், பல் இதழ் நா மூக்கு மேல்வாய் - என்ற ஐந்தன் முயற்சியானே எழுத்தொலியாக வெளியே செவிப்புலனாகப் புலப்படும் வைகரிஒலியே இலக்கண நூல்களில் எடுத்து விளக்கிச் சொல்லப்படுவதாம். (தொ. எ. 102 நச்.)

எழுவாயும் விளியும் அல்வழி ஆயினமை -

{Entry: A01__513}

எட்டு வேற்றுமைகளில் உருபுகள் தொக்கும் விரிந்தும் நின்று புணரும் ஆற்றலுடைய இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை ஈறாகிய ஆறும் வேற்றுமை குறித்த புணர்நிலை யன. எழுவாயுருபும் விளியுருபும் தொக்கு நிற்கும் ஆற்றலின்றி விரிந்தே நிற்றலின், அவற்றை வேற்றுமைப் புணர்ச்சியில் சேர்க்காது ‘அல்வழிப்புணர்ச்சி’ என்றனர்.

எழுவாய் வேற்றுமை ஆறு பயனிலையொடும் (தொ. சொ.66 சேனா.) புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன் பொரு ளொடு (-முடிக்கும் சொல்லொடு) புணர்ந்த புணர்ச்சியும் அல்வழியாயின. (தொ. எ. 112. நச். உரை)

எள்ளாட்டியவழி யல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல -

{Entry: A01__514}

“நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்து பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டி னார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க” என்று, ‘நெடில் குறில்’ என்ற இரண்டன் கூட்டமாகிய பிளவுபடாத ஓசையே அளபெடை என்ற கருத்தில் நச். குறிப்பிட்டுள்ளார். (தொ. எ. 6. நச்.)

நெடிலையும் குறிலையும் சேர்த்துச் சொன்னாலன்றித் தனித்துச் சொல்லுமிடத்து அளபெடை ஒலி புலப்படாது. ‘எள்ளாட்டுதல்’ சேர்த்துச் சொல்லுதற்கும், ‘எண்ணெய் புலப்படுதல்’ அளபெடை ஒலி தோன்றுதற்கும் உவமமாம்.

என்ப: சொல்லிலக்கணம் -

{Entry: A01__515}

என்ப என்பது பகர ஈற்றுப் பலரறிசொல்லாகவும், அகர ஈற்றுப் பலவறி சொல்லாகவும் வரும்.

பலரறிசொல் என் + ப- எனப் பகுக்கப்பட்டு இறுதிநிலை யாகிய பகரமே எதிர்காலம் காட்ட அமைந்திருப்பதாம். பலவறிசொல் என் + ப் + அ - எனப் பகுக்கப்பட்டு, அகரம் பலவின்பாலை மாத்திரம் உணர்த்த, பகர இடைநிலை எதிர்காலம் காட்ட அமைந்திருப்பதாம்.

ஆகவே, என்ப என்ற பலரறிசொல் பகர ஈற்றது, பலவறிசொல் அகர ஈற்றது என்பது உணரத்தக்கது. (சூ. வி. பக். 52)

பலவறிசொல் ஈறு அகரம் அன்று; வகரமே என்பது பாலசுந்தரனார் கருத்து. (எ. 1)

என்மனார்: சொல்லமைப்பு -

{Entry: A01__516}

‘செய்ம்மன என்னும் தொழில்இறு சொல்லும்’ (தொ. எ. 210. நச்.)

‘செய்ம்மன செய்யும் செய்த என்னும்’ (தொ. சொ. 222 சேனா.)

‘இசைக்குமன சொல்லே’ ( தொ. சொ. 1)

என்று செய்ம்மன என்னும் வாய்பாடு ஒன்று தொல்காப்பியத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வினைமுற்றுச் சொல் என்பர் சேனாவரையர்; பெயரெச்சச் சொல் என்பர் நச்.

செய்யும் என்னும் வினைமுற்றுப் போலவே பண்டு வழங்கிய செய்(ம்) மன என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேரச் ‘செய்மனார்’ என்று ஆகும். அதே வாய்பாட்டினதாகும் என்மன என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேர என்மனார் என்று ஆகும்.

என்ப+மன்+ஆர்; என்ப என்ற முற்றுச்சொல்லின் பகரம் கெடுத்து, மன் ஆர்- இவற்றை இணைக்க என்மனார் என்றாயிற்று என்று இளம்பூரணர், கல்லாடர், யாப்பருங்கல உரையாசிரியர், இறையனார் களவியல் உரையாசிரியர் என்னுமிவர்கள் கொள்வர். சேனாவரையர் என் +மன்+ஆர் எனக் கொண்டு, மன் எதிர்கால இடைநிலை என்னும் கருத்துடையார். (எ. ஆ. பக். 17)

எனப்படுப: சொல்லிலக்கணம் -

{Entry: A01__517}

என் என்னும் முதனிலைமீது செயப்படுபொருண்மை உணர்த்தும் படு என்னும் விகுதியும் அகரச்சாரியையும் வந்து புணர்ந்து ‘எனப்படு’ என்று நின்றவழி, அதுவும் முதனிலைத் தன்மைப்பட்டு மேல்வரும் அகரவிகுதியும் பகர இடைநிலை யும் பெற்று ‘எனப்படுப’ என முடிந்த பலவறி சொல்லாம். (சூ. வி. பக். 40,41)

ஏ section: 19 entries

ஏ -

{Entry: A01__518}

இஃது அம்பு என்ற பொருளில் வரும் பெயர்ச்சொல்; ‘எனக்கு ஒரு கருமம் பணி’ என்ற பொருளில் வரும் முன்னிலை ஏவல் வினைச்சொல்; தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை, இசைநிறை, விளிக்குறிப்பு, எதிர்மறை, இகழ்ச்சிக்குறிப்பு, இரக்கக்குறிப்பு - முதலிய பொருள்களில் வரும் இடைச் சொல்; பெருக்கம் என்ற பொருளில் வரும் உரிச்சொல்.

ஏவினா இடைச்சொல் ஏவன், அவனே - எனமொழி முதலிலும் இறுதியிலும் வரும்.

ஏ எம்பெருமான் - விளிக்குறிப்பு; விளியிறுதியில் வருதலே பெரும்பான்மை.

‘ஏ எ இஃதொத்தன் நாணிலன்’ - இகழ்ச்சிக் குறிப்பு.

‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’ - இசைநிறை.

‘ஏஎ பாவம்’ - இகழ்ச்சிக்குறிப்பு முதற்கண்ணேயே வரும்.

ஏ எனும் சொல் புணருமாறு -

{Entry: A01__519}

ஏ என்பது அம்பு என்ற பொருளில் வரும் பெயராக, வல்லெழுத்து முதலாகிய வருமொழியொடு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், ‘எனக்கு ஒரு கருமம் பணி’ என்ற பொருளில் ஒருமை ஏவல்வினைமுற்றாக, வல்லெழுத்து முதலாகிய வருமொழியொடு விளிப்பொருளில் வரும் அல் வழிப்புணர்ச்சிக்கண்ணும் அளபெடை எகரமும் வல்லெழுத் தும் பெறும்.

எ-டு : ஏ+ கொட்டில் = ஏஎக் கொட்டில் - வேற்றுமை

ஏ+கொற்றா = ஏஎக் கொற்றா - அல்வழி

சிறுபான்மை ஏப்புழை, ஏஞாயில் என்றாற் போல அளபெடை எழுத்துப் பெறாது வருதலுண்டு. (தொ. எ. 277, 272 நச். உரை)

ஏகார இடைச்சொல் மொழி ஈறாகியவழித் தேற்றப் பொரு ளில் வரும் ஏகாரம் மாத்திரம் எகரம் பெற்றும், ஏனைய அது பெறாமலும் இயல்பாக வருமொழியொடு புணரும்.

எ-டு : ‘யானேஎ கள்வன்’ - தேற்ற ஏகாரம் (273 நச்.)

மொழி முதற்கண் இகழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு - இவற்றின்கண் வரும் ஏகாரம் எகரம் பெறுதலும், இசைநிறை ஏகாரம் அடுக்கி வருதலும், ஏனைய பொருளில் வரும் இறுதி ஏகாரங்கள் இயல்பாக வருதலும் கொள்ளப்படும்.

ஏ ஓ முன் வன்கணம் வருதல் -

{Entry: A01__520}

ஏகார ஓகார இடைச்சொற்கள் நிலைமொழி ஈற்றில் நிற்ப, வரு மொழி முதற்கண் வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.

எ-டு : ‘யானே கள்வன்’; ‘யானோ தேறேன்’ (குறுந்.21) (நன். 201)

ஏகார ஈற்று இயல்புபுணர்ச்சி -

{Entry: A01__521}

மாறுகோடலையுடைய எச்சப்பொருள், வினாப்பொருள், பிரிநிலைப் பொருள், ஈற்றசைப் பொருள், எண்ணுப் பொருள் - முதலியவற்றில் வரும் ஏகார இடைச்சொல் வருமொழி வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : யானே கொண்டேன்? - என்பது யான் கொண் டிலேன் என மாறுகோடல் ஆகிய எதிர்மறைப் பொருளைச் சொல்லு வானது ஒலித்தல் குறிப்பான் உணர்த்துவது.

நீயே கொண்டாய்? - ஏகாரம் சொல்வானது ஒலித்தல் குறிப்பான் வினாப்பொருளை உணர்த்துவது.

அவருள் இவனே தக்கவன்- ஏகாரம் பலரினின்றும் ஒருவனைப் பிரித்தமையான், பிரிநிலைப் பொருளை உணர்த்துவது.

காடு கழிந்தோரே காதலர் - ஈற்றசைப் பொருளில் வந்தது.

நிலனே நீரே தீயே - எண்ணுப் பொருளில் வந்தது.

இவையாவும் இயல்பாகப் புணர்ந்தவாறு.

தேற்றப்பொருளில் வரும் ஏகாரம் அளபெடுத்தலும், ஈற்றசை யாக வரும் ஏகாரம் சிறுபான்மை ஒரு மாத்திரை நீண் டொலித்தலும் பண்டை மரபு.

சாத்தனே செல்க - ஏகாரம் விளிப்பொருளில் வந்தது. (இசை நிறை, இகழ்ச்சிக்குறிப்பு, இரக்கக் குறிப்பு- முதலிய பொருள் களில் வரும் ஏகாரங்கள் அடுக்கியும் அளபெடுத்தும் வரினும் அவையும் வன்கணம் வருமிடத்தும் இயல்பாகவே புணரும்.) (தொ.எ. 275 நச். உரை)

ஏகார ஈற்றுப் பொதுப்புணர்ச்சி -

{Entry: A01__522}

ஏகாரஈற்றுச் சொல் ஊகாரஈற்றுச் சொல் போல வருமொழி யில் வன்கணம் வந்துழி அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : ஏக் கடிது, சேக் கடிது - அல்வழி

ஏக்கடுமை, வேக்குடம் - வேற்றுமை (வேக்குடம் - வேதலையுடைய குடம்)

சிறுபான்மை உருபிற்குச் சென்ற சாரியை பொருட்புணர்ச்சிக்- கண்ணும் பொருந்த, ஏவின் கடுமை- என இன்சாரியை பெறுதலு முண்டு.

வேற்றுமைக்கண் ஏகார ஈறு வருமொழி வன்கணம் வரின் எகரப்பேறும் வல்லினமும் பெற்று முடிதலும், இயல்பு கணத்துள் எகரம் பெற்று முடிதலும் கொள்க.

எ-டு : ஏஎக்கொட்டில்; ஏஎநெகிழ்ச்சி, ஏஎவன்மை, ஏஎ அருமை (ஏஎவருமை)

சே என்ற பெயர் மரத்தைக் குறிப்பின் வருமொழி வன்கணம் வரின் இயல்பான மெல்லெழுத்துப்பேறும், பெற்றத்தைக் குறிப்பின் இன்சாரியைப் பேறும் கொள்ளும்;

சேங்கோடு (மரம்) ; சேவின் கோடு, சேவின் மணி, சேவினிமில் (பெற்றம்)

சிறுபான்மை இன் பெறாது ‘சேமணி’ என இயல்பாக முடிதலும் கொள்க. (தொ. எ. 274, 276-279 நச்.)

‘ஏவல் கண்ணிய வியங்கோள்’ புணருமாறு -

{Entry: A01__523}

ஏவல் கண்ணிய வியங்கோளாவது ஏவல் தன்மை கருதிக் கூறப்பட்ட ஏவல்பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகரஈற்று வினைச்சொல். அது வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : (அவன்) செல்க காட்டின்கண், செறுவின்கண், தானைக்கண், போரின்கண்

‘ஏவல் கண்ணிய’ எனவே, ஏவல் கண்ணாத வியங் கோளும் உண்டு. அஃறிணை ஏவற்பொருண்மையை முற்ற முடிக்காது.

எ-டு : (அது) செல்க காட்டின்கண்,....

தொல்காப்பியனார் அகரஈறு ஒன்றனையே வியங்கோள் ஈறாக எடுத்தோதியுள்ளார்; வியங்கோள் படர்க்கையிடத் திற்கே உண்டு என்றும் கூறியுள்ளார். (தொ. எ. 210. நச்.)

ஏவல் கண்ணாத வியங்கோளுக்கு ‘மன்னிய பெரும நீயே’ என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுத் தந்துள்ளார் (211 இள.). கூறுகின்றான், அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டும் என்றே கருதிக்கூறலின், அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம் என்பர் நச்.

வாழிய என்பது ஏவல் கண்ணாதது என்பதும், வாழி என்பது ஏவல் கண்ணியதுஎன்பதும் இளம்பூரணர் கருத்து. (212 இள.)

‘ஏவல் குறித்த உரையசை மியா’ புணருமாறு -

{Entry: A01__524}

முன்னிலை ஏவல்வினையைக் கருதி வரும் எதிர்முகமாக்கும் சொல்லினைச் சேர்ந்த மியா என்னும் ஆகார ஈற்றுச் சொல். இஃது இடைச்சொல்லாம். இது வருமொழி வன்கணத்தோடு இயல்பாகப் புணரும்.

எ-டு : கேண்மியா +கொற்றா = கேண்மியா கொற்றா (தொ. எ. 224 நச்.)

முன்னிலையில் ஏவல்வினைச்சொல்லைக் குறித்து வரும் உரை யசையாகிய மியா என்னும் ஆகார ஈற்று இடைச்சொல். (225 இள.)

நச்சினார்க்கினியர் ‘உரையசை’ என்பதற்குக் கேள் என்றாற் போன்ற எதிர்முகமாக்கும் சொல் என்று பொருள் கொண் டார். இளம்பூரணர் வினையைச் சேர்ந்தே முன்னிலைப் பொருள் தரும் மியா என்ற இடைச்சொல் என்றே பொருள் கொண்டார்.

ஏவல் குறித்த உரையசை என்பதும், முன்னிலை அசைச்சொல் என்பதும் ஒருபொருட் கிளவியாகும். ஆகவே, முன்னிலை அசைச்சொல்லாகிய மியா என்பதே ஏவல் குறித்த உரை யசைச் சொல்லாம். (எ.கு.பக். 213)

ஏவல் விகுதி ஒருமை -

{Entry: A01__525}

ஆய் தி மோ - விகுதி ஒருமை ஏவலாம்.

ஆய் - உரையாய், தி- உரைத்தி, மோ- உரைமோ- என்றும்,

நடவாய்- கேளாய், போதி- அருள்தி, கொண்மோ- சென்மோ - என்றும் வரும். (தொ. வி. 113 உரை)

ஏவல்விகுதிப் பன்மை -

{Entry: A01__526}

ஈர் தீர் மின் மினீர் - விகுதி பன்மை ஏவலாம்.

ஈர் - உரையீர் கேளீர், தீர் - போதீர் அருள்தீர், மின்- உரைமின்

கேண்மின், மினீர்- உரைமினீர் கேண்மினீர் - என்று வரும்.

அன்றி, குவ்விகுதி ஒருமைக்கும் பன்மைக்கும் ஆகும்.

‘அன்னையே அனையார்க் கிவ்வா றடுத்தவாறு அருளுகு என்றான்’ ( கம்பரா. I : 9 : 16)

‘நீ இங்கு இருக்கு என் றேகி’ (சிலப். 24)

‘ஏற்றியல் காண்டும் நாம் இவண் தருகு என்னவே’ (சீவக. 1837)

என்பவற்றில் அருளுகு, இருக்கு, தருகு - என்பன ஒருமைக்கு ஏவலாம். மீளவும், ‘ எந்தைமார்கள் எழுகு என்றான்’ (சீவக.) என்பதனுள் எழுகு பன்மைக்கு ஏவலாம். (பாட்டடி நிகழிடம் தெரிந்திலது.)

ஒரோவழி இவ்விகுதி வியங்கோள் வினைக்கும் ஆம்.

‘ஆயிர மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகு என்று ஏயினன்’ (கம்பரா. I : 9 : 21)

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்குஎன வாழ்த்தி’ (சிலப். 5:73, 74)

என்பவற்றில் உண்டாகு, சுரக்கு - என்பன உண்டாக, சுரக்க - என வியங்கோளாய் வந்தவாறு காண்க.

அன்றியும், வரல் தரல் - என்னும் சொல், வாராய் தாராய் - வருதி தருதி - என்றும், வாரீர் தாரீர் வருதீர் தருதீர் - என்றும், வம்மின் தம்மின் வம்மினீர் தம்மினீர் - என்றும் வருதலும் அறிக. (தொ. வி. 113 உரை)

ஏவல்வினை உகரச்சாரியை பெறுதல் -

{Entry: A01__527}

உரிஞ், மண், துன் - முதலியவற்றை எடுத்து உச்சரித்து பெயரை வருவித்து ஏவல் வினையாக்கி உகரம் பெறுமாறு காண்க. (உரிஞ்- உராய், மண் - கழுவு, துன் - நெருங்கு)

எ.டு: உரிஞு கொற்றா, சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா, என மூவின மெய் வருவழியும் உகரம் பெற்றவாறு.

‘நனி’ என்றதனால், மணலை வாரு, சருகை வாரு- என ரகரம் ஏவற்கண் உகரம் அரிதின் பெறும். (நன். 206 மயிலை. உரை)

ஏவல்வினைக்குச் சிறப்பு விதி -

{Entry: A01__528}

செய் என்பது ஏவல். அதனொடு பிறவினை விகுதியாகிய வி, பி - இவற்றில் ஏற்றதொன்று இணையின் ஈரேவலாம். மீண்டும் பிவ்விகுதி இணையின் மூவேவலாம். அஃதாவது செய்யென்ற ஏவல்மேல் ஏவலும், ஈரேவலும் ஆம்.

எ-டு : செய் - செய்வி - செய்விப்பி; உண் - உண்பி - உண்பிப்பி; வா - வருவி - வருவிப்பி (நன். 138)

ஏழ் உருபேற்குமிடத்துச் சாரியை பெறுமாறு -

{Entry: A01__529}

ஆயிரத்துக்குக் கீழுள்ள எண்ணுப்பெயர்களுள் ஏழ் என ழகர ஈறாக வரும் எண்ணுப்பெயர்கள் தவிர, ஏனைய யாவும் குற்றியலுகர ஈற்றனவாம்.ஏழ் என்பதொன்றே மெய்யீற்று எண்ணுப்பெயராம். ஆயினும் ஏழ் என்பது, ஒன்று முதலிய ஏனைய எண்ணுப்பெயர்களைப் போல, உருபேற்குமிடத்துத் தொல்காப்பியனாரது காலத்தே அன்சாரியை பெற்று உருபேற்றது; பிற்காலத்தே இன்சாரியை பெற்று உருபேற்கும்.

வருமாறு : ஏழனை, ஏழனொடு, ஏழற்கு;ஏழினை, ஏழி னொடு, ஏழிற்கு (தொ. எ. 194 நச்.)

ஏழ் என்ற எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__530}

ஏழ் என்ற ழகர ஈற்று எண்ணுப்பெயர் உருபேற்குங்கால் அன்சாரியை பெறும். (தொ.எ. 194 நச்.)

வருமாறு : ஏழனை, ஏழனொடு

பொருட்புணர்ச்சிக் கண்ணும் ஏழ் அன்சாரியை பெறும்.

எ-டு: ஏழன்காயம், ஏழன்சுக்கு, ஏழன்தோரை, ஏழன்பயறு, (இவற்றிற்கு ஏழனாற் கொண்ட காயம் - என்றாற்போல, வேற்றுமை வழியான் பொருள் செய்க.) (388 நச். உரை)

ஏழ் என்பது நிலைமொழியாக, வருமொழிக்கண் எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வரின், ஏழ் என்பது ‘எழு’ என்று முதல் குறுகி ழகரம் உகரம் ஏற்றுப் புணரும்.

எ-டு : எழுநான்கு, எழுகழஞ்சு, எழுநாழி

சிறுபான்மை பொருட்பெயர் வருமொழியாய வழியும், ஏழ் ‘எழு’ எனத் திரிந்து புணரும்.

எ-டு : எழுகடல், எழுசிலை, எழுதிசை, எழுபிறப்பு (389 நச். உரை)

ஏழ் நிலைமொழியாக வருமொழியாகப் பத்து என்பது வரின் எழுபஃது எனப் புணரும். (390 நச்.)

ஏழ் நிலைமொழியாக ஆயிரம் வருமொழியாகவரின், ஏழ் என்பது ‘எழ்’ எனக் குறுகி, எழாயிரம் எனப்புணரும். (391 நச்.)

ஏழ் நிலைமொழியாக வருமொழி நூறாயிரம் வரின், இயல்பாக ஏழ் நூறாயிரம் என்றே புணரும். (392 நச்.)

சிறுபான்மை ஏழாயிரம் எனவும், எழு நுhறாயிரம் எனவும் அமைதலும் உண்டு. வருமொழிப் பொருட்பெயர்கள் இயல்பு கணத்தில் தொடங்கினும், ஏழ் நெடுமுதல் குறுகி உகரம் பெற்று, எழுஞாயிறு, எழுநாள், எழுவகை - எனப் புணரும். (392 நச். உரை)

தாமரை வெள்ளம் ஆம்பல் என்ற பேரெண்கள் வர, ஏழ் தாமரை - ஏழ்வெள்ளம் - ஏழாம்பல் - என இயல்பாகப் புணரும். உயிர்முதல் மொழி வரினும், ஏழகல் - ஏழுழக்கு- ஏழொன்று - என இயல்பாகப் புணரும். (393, 394 நச்.)

ஏழன் தொகையில் நிலைமொழிப் பெயர் வருமொழி வினையொடு முடியுமாறு -

{Entry: A01__531}

ஏழாம் வேற்றுமையுருபு தொக்க தொகையில் நிலைமொழிப் பெயர் வருமொழி வினையொடு புணருமிடத்துப் பொதுவிதி யால் ஐகார இறுதி வன்கணம் வந்தவழி வல்லெழுத்து மிகா மலும், மகர ஈறு துவரக் கெட்டு வல்லெழுத்து மிகாமலும் இயல்பாக முடியும்.

எ-டு : ‘வரைபாய் (வருடை)’, ‘புலம்புக்கனனே புல்லணல் காளை’ (புற. 258) (தொ. எ. 157 நச்.)

ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணர நின்ற இடைச்சொற்கள் புணருமாறு -

{Entry: A01__532}

அதோளி, இதோளி, உதோளி, எதோளி, ஈதோளி, ஆண்டை, ஈண்டை, ஊண்டை, யாண்டை- என்னுமிவை வன்கணம் வந்துழி மிக்குப் புணரும். அவ்வழி, இவ்வழி, உவ்வழி, ஆங்கவை, ஈங்கிவை, ஊங்கவை, யாங்கவை - என்னுமிவை வன்கணம் வந்துழி இயல்பாயும் மிக்கும் உறழ்ந்தும் புணரும். இவை பெயர் நிலையின. (தொ. எ. 159. நச். உரை 160 இள.உரை)

ஆயிடை முதலியன திரிபுடையனவாம்; இவையும் வன் கணம் வந்துழி உறழ்ந்து புணரும். (159 நச். உரை)

இனி, அணி - என்பன மிக்குப் புணரும். (236 நச்.)

அங்கண், இங்கண், உங்கண், எங்கண், ஆங்கண், ஈங்கண், ஊங்கண், யாங்கண், அவண், இவண், உவண், எவண்- என்னுமிவை, வன்கணம் வந்துழி, ணகர ஒற்று டகர ஒற்றாகத் திரிந்தே முடிவன. (307 உரை நச்.)

ஆன், ஈன், பின், முன் - என்னுமிவை வன்கணம் வந்துழி னகரஒற்று றகரஒற்றாகத் திரிந்தேபுணரும். (333 நச்.)

அவ்வயின், இவ்வயின், உவ்வயின், எவ்வயின் - என்னுமிவையும் வன்கணம் வந்துழி னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிந்தே புணரும். (334 நச்.)

ஊன் (உவ்விடம்) என்பது ஊன் கொண்டான் என்றாற்போல இயல்பாகவே புணரும். (333 நச். உரை)

அவ்வாய், இவ்வாய், உவ்வாய், எவ்வாய்- என்னுமிவை வன்கணம் வரின் வந்த வல்லெழுத்து மிக்குப் புணரும். (361 நச். உரை.)

அக்கால் என்பது வன்கணம் வரின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும். (368 நச். உரை)

அதோள், இதோள், உதோள், எதோள் - என்னுமிவை வன்கணம் வரின் ளகரம் டகரமாகத் திரிந்து புணரும். (398 நச். உரை)

ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு- என்னுமிவை வன்கணம் வரின் வல்லொற்று மிக்கும் ‘யாங்கு’ஒன்றும் ஒரோவழி இயல்பாகவும் புணரும். (427, 428 நச். உரை)

முந்து, பண்டு, இன்று, அன்று - என்பன வன்கணம் வரின் இயல்பாகப் புணரும். (429 நச். உரை)

முந்தை, பண்டை, இன்றை, அன்றை- என்பன வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கே புணரும். இவை யாவும் பெயர் நிலையின. (159 நச். உரை)

ஏனை எகின் புணருமாறு -

{Entry: A01__533}

எகின் என்பது புளிய மரத்தையும் அன்னப் பறவையையும் குறிக்கும். ‘ஏனை ஏகின்’ என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் சொல். ‘எகின்’ காண்க.

ஏனை ‘ஒத்த காட்சியின்’ இயறல் -

{Entry: A01__534}

எழுத்தொலிக்கு வரையறுக்கப்பட்டநிலைக்களமாகிய தலை - மிடறு - நெஞ்சு - என்ற மூன்றனுள், வல்லினம், தலைவளி யானும், உயிரும் இடைக்கணமும் மிடற்றுவளியானும் பிறத் தலின், எஞ்சிய நெஞ்சுவளியான்ஆய்தம் பிறக்கும் என்பது இத்தொடரின் கருத்தாக நச். கூறுவார். இ.வி. ஆசிரியரும் இக்கருத்தைப் பின்பற்றிக் கூறியுள்ளார். (தொ. எ. 101. நச்.)

ஏனை மூன்று -

{Entry: A01__535}

அரைமாத்திரை பெறுவனவற்றுள், 18 மெய்களையும் தவிர, அவை போல அரைமாத்திரை அளவினவாய் ஒலிக்கும் குற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்று எஞ்சிய மூன்றெழுத் துக்கள் ‘ஏனை மூன்று’ஆம். (தொ. எ. 12 நச்.)

ஏனை வகரம் புணருமாறு -

{Entry: A01__536}

வகரத்தை ஈறாக உடைய சொற்கள் அவ் இவ் உவ் தெவ்- என நான்காம். முதலன மூன்றும் சுட்டுப்பெயர்களாம். ஏனை வகர ஈற்றுச் சொல்லாகிய தெவ் என்பது உரிச்சொல்லாம். அது படுத்தல் ஓசையான் பெயராம். அது பெயராகியவழி இன் சாரியை பெற்று உருபேற்றுத் தெவ்வினை - தெவ்வினொடு- தெவ்விற்கு- என்றாற் போலப் புணரும். (தொ.எ. 184. நச்.)

அஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வருமொழி வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்துப்பேறும், மென்கணத்தும் இயல்புகணத்து வகரத்தும் உகரப் பேறும், யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஒற்றிரட்டுதலும் எய்திப் புணரும். மகர முதல்மொழி வருவழி, தெவ் என்பதன் ஈற்று வகரஒற்று மகரஒற்றாகத் திரிந்து புணர்தலுமுண்டு.

எ-டு : அல்வழி வேற்றுமை

தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை

தெவ்வு நன்று தெவ்வு நன்மை

தெவ்வு வலிது தெவ்வு வலிமை

தெவ் யாது தெவ்யாப்பு

தெவ்வரிது தெவ்வருமை

(வகரம் உடம்படுமெய்)

தெம்மாண்டது,

தெவ்வு மாண்டது அல்வழி

தெம்மாட்சி, தெவ்வு மாட்சி வேற்றுமை

(தொ. எ. 382 நச். உரை)

ஐ section: 26 entries

ஐ -

{Entry: A01__537}

இஃது ஒன்பதாம் உயிரெழுத்து. அகரமும் இகரமும், அகரமும் யகரமும் இதற்குப் போலியாக வருவன. இஃது அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலால் பிறக்கிறது. இது விலங்கல் வளியான் தோன்றுவது என்ப.

இது, பற வை - பறத்தலைச் செய்வது என வினைமுதற் பொருள் விகுதியாகவும்,

தொ டை-தொடுக்கப்படுவது எனச் செயப்படுபொருள் விகுதியாகவும்,

பார் வை - பார்த்தற்குக் கருவி யாவது எனக் கருவிப்பொருள் விகுதியாகவும்,

கொ லை - கொல்லுதலாகிய தொழில் எனத் தொழிற்பெயர் விகுதியாகவும்,

தொல்லை - பழமைத் தன்மை எனப் பண்புப்பெயர் விகுதியாகவும்,

அவனை (ஐ) என இரண்டாம் வேற்றுமை உருபாகவும்,

சென்றனை - செல்(ன்) + ற் + அன் + ஐ என முன்னிலை ஒருமை விகுதியாகவும்,

பண்டு - பண்டை என ஒரு சாரியையாகவும்

வியப்புப்பொருளில் வரும் உரிச்சொல்லாகவும் (‘ஐ வியப்பா கும்’ தொ. சொ. 385 சேனா.) - எனப் பல திறமாக வருவது.

அ இ ய் - இவற்றின் சேர்க்கையால் ஐகாரம் உண்டாயிற்று என்பர் சிவஞான முனிவர். (சூ.வி. பக். 25)

ஐ அம் பல்என வரூஉம் அல்பெயர் -

{Entry: A01__538}

ஐ, அம், பல் - என்ற ஈறுகளையுடைய அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அல்லாத எண்ணுப்பெயர்கள். ஐ: தாமரை;அம்: வெள்ளம்; பல்: ஆம்பல். தாமரை - வெள்ளம்- ஆம்பல் - என்பன தமிழில் பேரெண்கள்.

இவை வருமொழியாக, நிலைமொழி ஏழ் என்பதுநிற்பின், இயல்பாக ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழ்ஆம்பல் - எனப் புணரும். (தொ. எ. 393 நச்.)

ஐ ஒரு மாத்திரை அளவிற்றாதல் -

{Entry: A01__539}

ஐகாரம் ஒரு சொல்லின் முதல் இடைகடை என்ற மூவிடத் தும் குறுகும். அது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டு ஒலிக்கு மிடத்துக் குறுகுதலே பெரும்பான்மை.

‘ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்

மெய்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே’

‘அடைப்பையையாய் கோல்தா எனலும்’

(‘யாரை’ என்புழிப்போல ஐகாரம் அசை; ‘அடைப்பையாய்’ என்பதே விளி.)

தவளை, குவளை

என ஐகாரம் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் மொழிக் கண் குறுகிற்று. (தொ. எ. 57 நச். உரை)

மொழிமுதற்கண் ஐகாரம் குறுகின் ஒன்றரை மாத்திரை அளவிற்று எனவும், இடைக்கண்ணும் இறுதிக்கண்ணும் குறுகின் ஒரு மாத்திரை அளவிற்று எனவும் கொள்ப. (நன். 95. சிவ.) (அவிநயம்.)

மொழிமுதற்கண் ஐகாரம் குறுகாது என்றார் இளம்பூரணர்.

(தொ. எ. 57)

சிவஞானமுனிவரும் இக்கருத்தினர். (சூ. வி. பக். 31)

நச். ஓரெழுத்தொருமொழியும் குறுகும் என்றார். கை, பை- என்பன குறுகின் கய், பய், - என ஒன்றரை மாத்திரை அளவினவாம். (தொ. எ. 57 உரை)

ஐகாரம் மொழிமுதற்கண் குறுகாது. இடையினும் இறுதி யினும் சிறுபான்மை குறுகும். அவ்வாறு குறுகுமிடத்து ஒரு மாத்திரையளவு ஒலித்தல் பெரும்பான்மை; ஒன்றரை மாத்திரை ஒலித்தல் சிறுபான்மை எனக் கொள்க. (எ. ஆ. பக். 65)

ஐகாரம் ஒன்றரை மாத்திரை அளவிற்றாய்க் குறுகும் என்பது யாப்பருங்கல உரை. நேமிநாதம் மூன்றிடத்தும் ஐகாரம் குறுகும் என்றது. வீரசோழியம் ஐகாரம் ஒன்றரை மாத்திரை யாய்க் குறுகும் என்றது. நன்னூல் ஐகாரம் மூவிடத்தும் குறுகும் என்றது. இலக்கண விளக்கமும் அதுவே.

ஐ ஒளக் குறுக்கங்களின் மாத்திரை -

{Entry: A01__540}

ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒரோ வொன்று ஒன்றரை மாத்திரை. ஒன்றரை அறிவது எற்றாலோ எனின், ‘கட’ என்புழி டகரஅகரம் ஒருமாத்திரை ஆயவாறும், ‘கடா’ என்புழி டகரஆகாரம் இரண்டு மாத்திரை ஆயவாறும், ‘கடை’ என்புழி டகரஐகாரம் ஒரு மாத்திரையில் ஏறி இரண்டு மாத்திரையின் குறைந்தவாறும் கண்டுகொள்க. (நேமி. எழுத். 5 உரை)

ஐ ஒளக் குறுக்கம் -

{Entry: A01__541}

ஐகாரக் குறுக்கம் மொழி முதற்கண் ஒன்றரை மாத்திரையா யும், ஏனைய இடங்களில் ஒரு மாத்திரையாயும், ஒளகாரக் குறுக்கம் மொழி முதற்கண் ஒன்றரை மாத்திரையாயும் குறுகும் என்பது உய்த்துணர்ந்து கொள்க. அவ்வாறு உய்த்துணர்ந்து கொள்ளாக்கால்,

‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவார்’ (நாலடி. 39)

எனவும்,

‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்’ (குறள் 774)

எனவும்,

‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும்’ (குறள். 169)

எனவும் வரும் இலக்கியங்களுக்கு இலக்கணம் இன்றாய் முடியும். (நன். 95 சிவஞா.)

ஐ ஒளக் குறுக்கம் சார்பெழுத்தாதல் -

{Entry: A01__542}

கை, பை, மை, கௌ, வெள - என்பனவும் பொருளைச் சுட்டிய வழிக் குறுகும் எனக் கொள்க. இங்ஙனம் அளவு குறுகலானும், சீரும் தளையும் சிதையுமிடத்து அலகு பெறாமையானும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து எனஉயிரின் வேறாயின. (இ. வி. 21 உரை)

ஐ ஒளத் தோற்றம் பற்றி வீரசோழியம் குறிப்பது -

{Entry: A01__543}

ஐ ஒள - என்பன ஈரெழுத்தொலிச் சேர்க்கையால் ஆகிய சந்தியக்கரங்கள். இவை உயிர்நெடிலேயாயினும் ஒன்றரை மாத்திரையே ஒலிக்கும் என்கிறது வீரசோழியம். (சந்திப். 3)

அகரம் வகரத்தோ டியைந்து ஒள ஆகும் போலியைத் தொல் காப்பியனார் குறிப்பிடவில்லை. அவர்கருத்துப்படி ஐ என்பது ‘அய்’ எனப் போலிஎழுத்தாக வரும். (தொ.எ. 56 நச்.)

ஐ ஒள மாத்திரை பற்றி வீரசோழியம் கூறுவது -

{Entry: A01__544}

நெட்டெழுத்துக்களுள் ஐகார ஒளகாரங்கள் தனித்தனி ஒன்றரை மாத்திரை அளவின என்பது வீரசோழியம் குறிப் பிடும் புதுச்செய்தி. (அவை சந்தியக்கரங்கள் ஆதலின் அம் மாத்திரையளவே பெறும் என்பது ஆசிரியர் புத்த மித்திரனார் கருத்து. அவற்றைக் குறுக்கங்களாகக் கொண்டு எழுதும் பெருந்தேவனார் உரைப்பகுதி பிழைபட்டுள்ளது.) (சந்திப். 5)

ஐகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி -

{Entry: A01__545}

ஐகாரஈற்றுப் பெயர் எழுவாய்த்தொடர்க்கண் இயல்பாயும் உறழ்ந்தும் புணரும்.

எ-டு : காரை குறிது - இயல்பு; தினை குறிது, தினைக்குறிது - உறழ்ச்சி

ஐகாரஈற்றுப் பெயர் இருபெயரொட்டு ஆதற்கண் மிக்குப் புணரும்.

எ-டு : சித்திரைத்திங்கள், புலைக்கொற்றன்.

உவமத்தொகைக்கண்ணும் குவளைக்கண்- என்றாற்போல மிக்குப் புணரும். வினை இடை உரிச் சொற்கள் பெரும் பான்மை மிக்குப் புணரும்.

எ-டு : ஒல்லைக் கொண்டான் - ஐகார ஈற்று வினைச்சொல் வல்லெழுத்து மிக்கது; தில்லைச் சொல் - ஐகார ஈற்று இடைச்சொல் வல்லெழுத்து மிக்கது; பணைத் தோள் - ஐகார ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கது.

எனவே, ஐகார ஈ.ற்றுச் சொற்கள் எழுவாய்த்தொடர்க்கண் பெரும்பான்மை இயல்பாகவும், சிறுபான்மை உறழ்ந்தும், இருபெயரொட்டும் உவமத்தொகையும் என்பனவற்றின்கண் மிக்கும், வினை இடை உரிச்சொற்களாயின் பெரும்பான்மை மிக்கும் புணரும். (தொ. எ. 158. நச். உரை)

ஐகார ஈற்றுக் கேட்டாமூலம் பாறாங்கல் என்னுமிவை புணர்ந்தவாறு -

{Entry: A01__546}

ஐகார ஈற்றுக் கேட்டை - பாறை- என்ற சொற்கள், ஈற்று ஐகாரம் கெட்டு ஆம் சாரியையும் அம்முச்சாரியையும் பெற்று, வருமொழிகளொடு கேட்டை + மூலம் = கேட்டாமூலம்; பாறை+ கல் = பாறங்கல் எனப் புணர்ந்தவாறு. பாறாங்கல் என்பதும் அது. (ஆண்டுச் சாரியை ‘ஆம்’ என்க.) (தொ. எ. 284, 288 நச். உரை)

ஐகார ஈற்றுச் சொல் வேற்றுமைப்புணர்ச்சி -

{Entry: A01__547}

வேற்றுமைப் புணர்ச்சியின்கண், ஐகார ஈற்றுச்சொல் இறுதி ஐகாரம் கெட்டு அம்முச்சாரியை பெற்றும், ஐகாரம் கெடாது அம்முச்சாரியை பெற்றும், ஐகாரம் கெடாது வருமொழி வல்லெழுத்து மிக்கும் முடிவன உள.

எ-டு : வழுதுணை + காய் > வழுதுண் + அம் + காய் = வழு துணங்காய்; புன்னை + கானல் > புன்னை + அம் + கானல் = புன்னையங்கானல்; முல்லை + புறவம் = முல்லைப்புறவம் (நன். 202)

ஐகார ஈற்றுத் திங்கட் பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__548}

தமிழில் திங்கட் பெயர்கள் இகர ஐகார ஈற்றன. ஐகார ஈற்றுத் திங்கட் பெயர் வருமொழியொடு புணரும்வழி இடையே இக்குச் சாரியை பெறும்.

சித்திரை+இக்கு+கொண்டான் = சித்திரைக்குக் கொண் டான் - என வரும். சித்திரைத்திங்களின்கண் கொண்டான் என்பது பொருள். (தொ. எ. 286, 127 நச்.)

ஐகார ஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__549}

தமிழில் நாட்பெயர்கள் இகர ஐகார மகர ஈற்றன. ஐகார ஈற்று நாட்பெயர் வருமொழியொடு புணரும்வழி ஆன்சாரியை இடையே பெறும். வன்கணம் வரின் ஆனின் னகரம் றகரம் ஆகும்.

சித்திரை + ஆன் + கொண்டான் = சித்திரையாற் கொண்டான் - என வரும். சித்திரைநாளின்கண் கொண்டான் என்பது பொருள். (தொ. எ. 286, 127 நச்.)

ஐகார ஈற்று மரப்பெயர்கள் புணருமாறு -

{Entry: A01__550}

ஆவிரை, பனை, தூதுணை, வழுதுணை, தில்லை, ஓலை, தாழை - முதலியன ஈற்று ஐகாரம் கெட்டு அம்முச்சாரியை பெற்று வருமொழியொடு புணரும்; சிறுபான்மை உருபிற்குச் சென்ற இன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவ துண்டு.

வருமாறு : ஆவிரை + காய் > ஆவிர்+ அம்+ காய்= ஆவிரங் காய்; பனை + காய் > பன் + அம்+ காய் = பனங் காய்; தூதுணை + காய் > தூதுண் + அம் + காய் = தூதுணங்காய்; வழுதுணை + காய் > வழுதுண்+ அம் + காய் = வழுதுணங்காய்; தில்லை + காய் > தில்ல் + அம் + காய் = தில்லங் காய்; ஓலை + போழ் >ஓல் + அம் + போழ் = ஓலம்போழ்; தாழை + காய் > தாழ் + அம் + காய் = தாழங்காய் (தொ. எ. 283 நச்.)

ஈற்று ஐகாரம் கெடாமல் இன்சாரியை பெற்று, ஆவிரையின் காய் - பனையின் காய் - துதுணையின் காய் - வழுதுணையின் காய் - தில்லையின் காய் - ஓலையின்போழ் - தாழையின் காய் - (விசையின் கோடு - ஞெமையின் கோடு - நமையின் கோடு) - எனவும் வரும். (தொ. எ. 283, 285 நச். உரை)

ஐகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: A01__551}

ஐகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கு முடியும். இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் இயல்பாகப் புணரும்.

எ-டு : யானைக்கோடு, யானைச்செவி, யானைத்தலை, யானைப்புறம். இரண்டாம் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், ‘முறைகாட்டி’ - தினை கொணர்ந் தான் - பனை பிளந்தான் - என இயல்பாகப் புணரும்

உருபேற்றவழியும் யானையைக் கொணர்ந்தான் - என்றாற் போல வல்லெழுத்து மிகும். (தொ. எ. 280 நச்.)

ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் -

{Entry: A01__552}

ஐகாரம் தன்னைச் சுட்டுமளவில் குறுகாது மற்று மொழியின் முதல் இடை கடை என்ற மூவிடங்களிலும் தன் இயல்பான இரண்டு மாத்திரையிற் குறுகிவரும். ஒளகாரமும் மொழி முதற்கண் மாத்திரம் வருதலின் ஆண்டு அவ்வாறு குறுகி வரும். மொழி முதற்கண் வரும் ஐகார ஒளகாரங்களின் மாத்திரை ஒன்றரை எனவும், மொழி இடையிறுதிகளில் வரும் ஐகாரத்தின் மாத்திரை ஒன்று எனவும் கொள்க.

எ-டு : ஐப்பசி - மைப்புறம், வலையன், குவளை, மௌவல் (நன். 95)

ஓரெழுத்தொருமொழியாம் ஐகாரம் தனித்து வருமிடத்தும், நிலைமொழி வருமொழியாய்த் தொடர்ந்து வருமிடத்தும் குறுகாது.

ஐகார ஒளகாரங்கட்கு மாற்றெழுத்துக்கள் -

{Entry: A01__553}

மொழி முதற்கண் அகரமும் இகரமும் இணைந்து ஐகாரத் திற்கு மாற்றெழுத்துக்களாம். மொழி முதற்கண் அகரமும் உகரமும் இணைந்து ஒளகாரத்திற்கு மாற்றெழுத்துக்களாம்.

எ-டு : அ) ஐவனம் என்பது அயிவனம் என வரும். (யகர உடம்படுமெய் பெற்று வருதலே சான்றோர் வழக்கில் காணப்படுகிறது. அய்இவனம் - அயிவனம்)

வைரம், கைலை என்பன வயிரம் கயிலை எனவரும். (இவை வடசொற்கள்)

ஆ) கௌரியர் என்பது கவுரியர் எனவும், மௌரியர் என்பது மவுரியர் எனவும், மௌலி என்பது மவுலி எனவும்,

ஒளடதம் என்பது அவுடதம் எனவும் வரும். (இவை வட சொற்கள்).

இனி, மொழியிடையிலும் ஈற்றிலும் வரும் ஐகாரத்திற்குப் பிறிதொருவகை மாற்றெழுத்து வருமாறு:

அகரத்தின் பின்னர் இகரமேயன்றி, அகரமும் அதன்பின் யகர ஒற்றும் ஐ என்னும் நெட்டெழுத்தினது பொருள்பட வரும்.

எ-டு : நிலையம் - நிலயம்; குவளை - குவளய்; வினையம் - வினயம்

அய் என்னும் இவ்வெழுத்துக்கள் மொழி முதல் ஐகாரத் திற்கு மாற்றெழுத்துக்களாய் வரின் மாத்திரையளவு ஒன்றுமே வேறுபடுகிறது. ஓசையாலும் அசைகொள்ளும் நிலையாலும் எவ்வேறுபாடும் அங்கு இன்று. ஆதலின், இவ்வெழுத்துக்கள் மாற்றெழுத்துக்களாய் மொழியிடையிலும் ஈற்றிலுமே வரும் என்று உய்த்துணரப்படும்.

இம்மாற்றெழுத்தின் பயனாவது, செய்யுட்கண் சீரும் தளையும் சிதைய வருமிடத்து அவை சிதையாமல் செய்துகோடலாம்.

எ-டு : ‘அன்னையையான் நோவ தவமால்’ என்புழி, வெண்பாவில் நாலசைச்சீர் வந்து சீரும் தளையும் சிதையும்; அன்னயையான்’ என மாற்றெழுத்தாற் கூறின் அவை சிதையாவாம் என்க. (தொ.எ.56. ச.பால.)

ஐகாரக் குறுக்கம் -

{Entry: A01__554}

‘ஐ ஒரு மாத்திரை அளவிற்றாதல்’ காண்க.

‘ஐகாரக் குறுக்கம் மொழி முதற்கண் வாராமை -

{Entry: A01__555}

ஐகாரம் மொழிமுதற்கண் குறுகும் எனவும், கை - பை - முதலியனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகும் எனவும் கூறுதல் பொருந்தாது. இடையன் மடையன் தினை பனை - என்புழிக் குறுகுதல் போல, ‘வைகலும் வைகல் வரக்கண்டும்’ (நாலடி. 39) என்புழி ஐகாரம் முதற்கண் குறுகாமை செவி கருவியாக உணரப்படுதலானும், ‘வைகலும் வைகல்’ என்புழிக் குறுகுமாயின், ‘வைகல்’ என்பது குறிலிணை ஒற்றாய் வெண்டளை சிதைதலானும், ஐகாரம் மொழியிடைப்படுத்து இசைப்பின் யாண்டு வரினும் குறுகும் என்றல் பொருந்தாமை யானும், ஐகாரம் மொழி முதற்கண் குறுகாது எனவே கொள்ளு தல் சிவஞான முனிவர் கருத்தாம். எழுத்ததிகார ஆராய்ச்சி யும் இதனையே கொள்கிறது. (சூ. வி. பக். 31, எ. ஆ. பக். 65)

ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் -

{Entry: A01__556}

ஐகாரவிகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் நடவை, சேக்கை, உடுக்கை, தொடை, விடை - போன்றவற்றில் காணப்படுகிறது.

நடவை - நடத்தப்படுவது - பகுதி: நட

சேக்கை - தங்கப்படுவது - பகுதி: சே

உடுக்கை - உடுக்கப்படுவது - பகுதி: உடு

தொடை - தொடுக்கப்படுவது - பகுதி: தொடு

விடை - விடுக்கப்படுவது - பகுதி:விடு

சூ.வி. பக். 33

ஐகார வேற்றுமைத் திரிபுகள் -

{Entry: A01__557}

1. ‘மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு வருதல்’: அஃதாவது மெல்லெழுத்து மிக வேண்டிய இடத்து வல்லெழுத்து மிகுதல்.

அகர ஈற்று மரப்பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சியில் வன் கணம் வரின், வந்த வல்லெழுத்தின் இனமெல்லெழுத்து மிகும். (தொ. எ. 217 நச்.) எ-டு : விள ங்கனி, விள ம்பூ

ஆயின் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் விளக் குறைத்தான் - என வந்த வல்லெழுத்தே மிகும்.

2. ‘வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றல்’:

மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மகரம் கெட, வந்த வல்லெழுத்து இடையே மிக்குப் புணர்தல் மரபு (310 நச்.) எ-டு : மரக்கிளை, மரச்சினை, மரத்தோல், மரப் பட்டை.

ஆயின் இரண்டாம் வேற்றுமைத்தொகையாயின், மகரம் கெட, வந்த வல்லெழுத்தின் இனமெல்லெழுத்தே மிகும். எ-டு : மரங் குறைத்தான்.

3. ‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றல்’:

யகர ஈற்றுத் தாய் என்னும் முறைப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். (358 நச்.) எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.

ஆயின் இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில், தாயைக் கொன்ற கொலை - என்ற பொருளில், தாய்க் கொலை - என வல்லெழுத்து மிக்குப் புணரும்.

4. ‘உயிர்மிக வருவழி உயிர்கெட வருதல்’:

குற்றெழுத்தை அடுத்தோ தனித்தோ வரும் ஆகார ஊகார ஏகார ஈற்றுப் பெயர்கள், வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம் வர, எழுத்துப்பேறளபெடையும் வல்லெழுத்தும் மிக்குப் புணரும். (226, 267, 277 நச்.) எ-டு : பலாஅக்கோடு, உடூஉக்குறை, ஏஎக்கொட்டில்

ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், வருமொழி முதற்கண் வன்கணம் வரின், வந்த வல்லெழுத்தே மிக்குப் புணரும். எ-டு : பலாக் குறைத்தான், கழூக் கொணர்ந்தான், ஏக் கட்டினான்

5. ‘சாரியை உள்வழிச் சாரியை கெடுதல்’:

வண்டு, பெண்டு - என்பன வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண் இன்சாரியை பெற்றுப் புணரும் என்பது விதி. (420 நச்.) எ-டு : வண்டின்கால், பெண்டின் தலை

ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை இன்றி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : வண்டு கொணர்ந்தான், பெண்டு கொணர்ந்தான்

6. ‘சாரியை உள்வழித் தன்உருபு நிலையல்’:

சாரியை பெறுமிடத்து, வண்டின் கால் - பெண்டின் தலை - என ஆறாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதைப் போலல் லாது, பெரும்பாலும் தன்னுருபு நிலைபெற்றே வண்டினைக் கொணர்ந்தான் - பெண்டினைக் கொணர்ந்தான் - என்று தன்னுருபு விரிந்தே வருதல்.

7. ‘சாரியை இயற்கை உறழத்தோன்றல்’:

புளி, பனை, வேல் - முதலிய மரப்பெயர்கள் அம்முச்சாரியை பெற்றே வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழிப் புணரும். (244, 283, 375 நச்.) எ-டு : புளியங்காய், புளியஞ் செதிள்;பனங்காய், பனந்தோல்; வேலங்காய், வேலம்பட்டை

ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை பெறாது வன்கணம் வந்துழி, வல்லெழுத்து மிகாமலும் மிக்கும், ஈறு திரியாமலும் திரிந்தும் புணரும். எ-டு : புளி குறைத்தான், புளிக் குறைத்தான்; பனை தடிந்தான், பனைத் தடிந்தான்; வேல் தடிந்தான், வேற்றடிந்தான்

8. ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல்’:

உயர்திணைப் பெயர்கள் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப் புணரும்என்பது விதி. (153 நச்.) எ-டு : நம்பி கை, நம்பி தலை; நங்கை கை, நங்கை செவி.

ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கு வன்கணம் வந்துழிஉருபு விரிந்து வருமொழி வல்லெழுத்து மிக்கு வரல்வேண்டும்.
எ-டு : நம்பியைக் கொணர்ந்தான், நங்கையைக் கண்டான்

சிறுபான்மை உருபு மறைந்து, ‘ஒன்னார்த் தெறலும்’ (குறள் 264), என்று மிக்கும், ‘ஆடூஉ அறிசொல்’ என்று உகரப்பேறு எய்தியும், அவற்கண்டு (அக. 48) மகற் பெற்றான், மகட் பெற்றான் என ஈறு திரிந்தும், ‘மழவர் ஓட்டிய’ (அகநா.1) என்று இயல்புகணத்துக்கண் இயல்பாயும் வருதலுமுண்டு.

9. அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையல்’:

உயர்திணையோடு அஃறிணை விரவும் பொதுப்பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் உயர்திணைப்பெயர் போல வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும். (155 நச்.) எ-டு : சாத்தன் கை, கொற்றன் செவி, சாத்திதலை

ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கண் உருபு விரிந்தே வருதல் வேண்டும். (155 நச்.)

எ-டு: கொற்றனைக் கொணர்ந்தான், சாத்தனைத் தகைத்தான். சிறுபான்மை சாத்தற் கண்டு, கொற்றற் சார்ந்து - என இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கு நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலுமுண்டு. (உருபு தொக்கமை யாற்றான் இத்திரிபு என்க)

10. ‘மெய்பிறிது ஆகுஇடத்து இயற்கை ஆதல்’:

ணகர னகர ஈறுகள் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் முறையே டகர றகரங்களாகத் திரியும் என்பது பொதுவிதி. (302, 332 நச்.) எ-டு : மட்குடம், பொற்குடம்

ஆயின் இரண்டாம் வேற்றுமையுருபு தொக்க புணர்ச்சியில் வன்கணம் வருமொழியாக வருவுழித் திரிபின்றிப் புணரும்.
எ-டு : மண் கொணர்ந்தான், பொன் கொணர்ந்தான்

11. ‘அன்ன பிறவும் ஐகார வேற்றுமைத் திரிபு’:

யான் என்பது என் என்று திரிந்து வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். ஏனை நெடுமுதல் குறுகும் பெயர்களும் அவ்வாறே முடியும்.

எ-டு : என்கை, என்செவி, என்தலை, என்புறம்

ஆயின், யான் யாம் நாம் நீ தான் தாம் - என்பன நெடுமுதல் குறுகி என் எம் தம் நின் தன் நம்- என்றாகிய நிலையில், இரண்டன் உருபு தொக்க புணர்ச்சிக்கண், என்+ கண்டு = எற்கண்டு; தன்+ கொண்டான் = தற்கொண்டான்; நம் + புணர்வு = நப்புணர்வு; என்றாற்போல, நிலைமொழி ஈற்று மெய் திரிந்து புணரும். (உருபு தொக்கமையாற்றான் இத்திரிபு என்க.)

ஐகாரஈற்றுப் பெயரும் ரகரஈற்றுப் பெயரும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வன்கணம் வரின், வல்லெழுத்து மிக்குப் புணரும் என்பது பொது விதி. (280, 362 நச்.)

எ-டு : யானைக்கோடு, தேர்க்கால்

ஆயின், இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் வன்கணம் வரினும் இயல்பாம்.

எ-டு : தினை பிளந்தான், மயிர் குறைத்தான்

சிலவிடத்தே இன்சாரியை பெறும் நிலைமொழிகள் இரண்ட னுருபு விரியாது வருமொழியொடு புணரும் நிலையும் அருகியுண்டு. எ-டு : ‘மறங்கடந்த அருங்கற்பின்... துணைவியர்’ (புற. 166) (கற்பினையுடைய துணைவியர்) ‘சில்சொல்லின்.... துணைவியர்’ (சொற்களையுடைய துணைவியர்) ‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’ (சொ.1) (இருதிணை யினையும் இசைக்கும்)

இவையே யன்றிப் பொதுவிதியைப் பின்பற்றிக் கடுக்குறைத் தான் (254 நச்.) செப்புக்கொணர்ந்தான் (414 நச்.) என்று முடிவனவும், மைகொணர்ந்தான்- மைக்கொணர்ந்தான், வில்கோள் - விற்கோள் என உறழ்வனவும் கொள்க. (தொ. எ. 157 நச். உரை)

கழி குறைத்தான், தினை பிளந்தான் - என்ற இயல்பும் கொள்க. (158 இள. உரை)

ஐந்தன் ஒற்று யகரமாதல் -

{Entry: A01__558}

வருமொழியில் ஆயிரம் வரின், நிலைமொழியாகிய ஐந்து என்பதன் ஈறாகிய துகரம் கெட, நின்ற ‘ஐந்’ என்பதன் நகர ஒற்று யகர ஒற்றாக, ஐய்+ஆயிரம் = ஐயாயிரம் என்றாயிற்று என்பர் தொல். (தொ. எ. 468 நச்.)

‘ஐவகை அடியும்’ என்புழி, ஐகாரம் நீங்கலாக ஏனைய எழுத்துக்கள் கெட்டுப் புணர்வது போல், ஐ+ ஆயிரம்= ஐயாயிரம் என, யகர உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்தது என்பதே ஏற்றது.

ஐயீராயிரம், ஐயுணர்வு - என்பனவற்றை நோக்க, யகரம் உடம்படுமெய் என்பதே பொருந்தும். (எ. ஆ. பக். 175)

ஐ நெட்டுயிர் என்பது -

{Entry: A01__559}

ஐகாரத்தை நெடில் என்று சொல்வதற்கு அதற்கு இனமான குற்றெழுத்து இன்றேனும், நெடில் போல இரண்டு மாத்திரை அளவிற்றாய் ஒலித்தலின் அதனை நெடிலாகவே கூறி, அதன் ஒலியமைப்பை நோக்கி ஐகாரத்துக்கு இகரத்தை இனமாகக் கொள்ள வைத்து அளபெடை எழுத்தமைப்புக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. (தொ. எ. 4 இள., நச். உரை)

ஐயீற்றுடைக் குற்றுகரம் -

{Entry: A01__560}

பண்டைக் காலம் - இற்றை நாள் - எனவும், அற்றைக் கூலி - இற்றை நலம்- எனவும் வரும். ‘ஐயீற்றுடைக் குற்றுகரம்’ எனப் பொதுப்படக் கூறியமையால், நேற்றைப் பொழுது என (மென்தொடர்க் குற்றியலுகரம் அல்லா)ப் பிற தொடர்கள் ஐகாரம் பெறுதலும், ‘ஐயீற்றுடைக் குற்றுகரம்’ என உடைமை யாக்கிக் கூறியமையால், ஒற்றை - இரட்டை - வேட்டை- என ஒருமொழியாய் நின்று ஐகாரம் பெறுதலும், ஈராட்டை மூவாட்டை - எனத் தொடர்மொழியாய் நின்று ஐகாரம் பெறுதலும் கொள்க. (நன். 185 சங்கர.)

ஐயீற்றுப் பகாப்பதம் ஈறுகெட ‘ஏயன்’ விகுதி பெறுதல் -

{Entry: A01__561}

ஐயீற்றுப் பகாப்பதங்களில் ஐ ஒழித்து விகுதியாக ‘ஏயன்’ என்று முடிந்தால், ‘ஈன்ற மகன்’ என்று காட்டும் வடநடைப் பகுபதங்களாம்.

கார்த்திகையின் மகன் கார்த்திகேயன், கங்கையின் மகன் காங்கேயன், விநதையின் மகன் வைநதேயன்- என்று வரும் (தொ.வி. 86 உரை)

‘ஐயும் மெய்யும் கெட்ட இறுதி’யும் அதன் இயலும் -

{Entry: A01__562}

இறுதி ஐயும் மெய்யும் கெட்டுச் சாரியை பெற்று உருபேற்கும் சொல் ‘யாவை’ என்பது. யாவை என்ற சொல் வற்றுச் சாரியையும் உருபும் பெற்றுப் புணருமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட வகர ஒற்றும் கெட்டு யா என நின்று, யாவற்றை - யாவற்றொடு - என்றாற் போலப் புணரும். (தொ. எ. 183 நச்.)

இது போலவே, அவ் இவ் உவ் - என்பனவும், வற்றின்மிசை ஒற்றாக நிலைமொழியீற்று வகரம் கெட, அ இ உ -என நின்று, வற்றும் உருபும் பெற்றுப் புணரும்.

வருமாறு : அவ்+ வற்று + ஐ > அ +வற்று + ஐ = அவற்றை

அவ் +வற்று + ஒடு > அ +வற்று + ஒடு = அவற்றொடு (தொ. எ. 183. நச்.)

ஒ section: 39 entries

ஒ -

{Entry: A01__563}

இது தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்துக்களில் பத்தாவது; அங்காத்தலோடு இதழ் குவிதலான்பிறக்கும் உயிரெழுத்துக் களுள் ஒன்று; தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தனுள் ஒன்று; ஓகார நெடிலுக்கு இனமான குறில்; ஓகாரம் அளபெடுக்கு மிடத்து அதனை அடுத்து வருவது; நகரஒற்று ஒன்றுடனேயே கூடி (நொ - என) மொழியிறுதியில் வருவது; முன்னிலை ஏவ லொருமை வினையாகிய ஓ என்பது அளபெடுக்குமிடத்தும், சிறப்புப் பொருளில் வரும் ஓகாரம் அளபெடுக்குமிடத்தும், மொழியிறுதியில் ஒகரம் அளபெடை யெழுத்தாக நிகழும்.

ஒகர ஈற்றுப் புணர்ச்சி -

{Entry: A01__564}

முன்னிலை மொழிக்கண் வரும் ஒகரஈறு வன்கணம் வரின் மிக்குப் புணரும்.

எ-டு : ஓஒக் கொற்றா; ஓ - ‘இங்ஙனம் செய்தலை ஒழி’ என்னும் பொருளது. (தொ. எ. 272 நச்.)

சிறப்புப் பொருளில் வரும் ஒகரஈறு வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : நீயோஒ கொடியை (273 நச்.)

ஒகரம் புள்ளி பெறுதல் -

{Entry: A01__565}

‘எகரம் புள்ளி பெறுதல்’ காண்க.

ஒகரம் மொழியீறாதல் -

{Entry: A01__566}

ஒகரம் நகரமெய்யுடன் கூடியே ‘நொ’ என மொழியீறாம். அது வன்கணம் வரினும் இயல்பாகப் புணர்தலே பெரும் பான்மை; மென்கணம் வரின் மெலி மிகுதலும் ஆம்.

எ-டு : நொ கொற்றா - இது விட்டிசைத்தலின் வல்லெழுத்து மிகாதாயிற்று.

நொந் நாகா, நொம் மாடா - என மெல்லெழுத்து மிக்கும்

நொ நாகா, நொ மாடா - என விட்டிசைத்து இயல்பாகவும் வரும்.

நச்சினார்க்கினியர் நொக் கொற்றா என வல்லெழுத்து மிகும் என்றார். ஓரெழுத்தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க என்றார் அவர். (தொ. எ. 151 நச்.)

ஓ என்ற முன்னிலை ஏவல்வினை, வருமொழி வன்கணம் வந்தவிடத்து அளபெடுத்து வல்லெழுத்து மிக்கு முடியும்வழி, ஒகரம் நிலைமொழி யீற்றில் வரும். (272 நச்.)

எ-டு : ஓஒக் கொற்றா

சிறப்புப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் அளபெடுத்து வருமொழி வன்கணம் வரினும் இயல்பாக முடியும். (273 நச்.)

எ-டு : யானோஒ கொடியன்

ஒட்டிய ஒற்று இடை மிகுதல் -

{Entry: A01__567}

ஒட்டிய ஒற்றாவது நிலைமொழி ஈற்றெழுத்தை ஒட்டி வருமொழி முதலில் வரும் உயிர்மெய்எழுத்தின்கண் உள்ள மெய்யெழுத்து.

நிலைமொழியாகும் அ இ உ - என்ற மூன்று சுட்டிடைச் சொற்களும் வருமொழி மென்கணத்தொடு புணரும்வழித் தமக்குப் பொருந்திய ஒற்றுக்களாக வருமொழி முதற்கண் வரும் ஒற்றுக்கள் மிக்குப் புணர்தல்.

எ-டு : அஞ்ஞாண், அந்நூல், அம்மணி - தொ.எ. 205 நச்.

இஞ்ஞாண், இந்நூல், இம்மணி - தொ.எ.238 நச்.

உஞ்ஞாண், உந்நூல், உம்மணி - 256 நச்.

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கு -

{Entry: A01__568}

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்காவது சொற்கள் சாரியை பெறுதற்கு ஏற்ற மொழியமைப்பாம். ஆகவே எல்லாச் சொற்களும் சாரியை பெறுதல் வேண்டும் என்ற வரையறை இன்று. மேலும் இன்ன இன்ன சொற்கள் இன்ன இன்ன சாரியை பெறுதல் வேண்டும் என்ற வரையறையும் உண்டு. இவ்வரை யறை சான்றோர் வழக்கும், சான்றோர் செய்யுளும் நோக்கிக் கொள்ளப்பட்டதாம்.

நிலா என்பது அத்துச்சாரியை பெறும் என்ற விதியை (எ. 228 நச்.), (வருமொழி பெயராய் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி ஆகியவிடத்து) ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கு அன்மையின், நிலாக்கதிர் - நிலாமுற்றம் - என்பன பெறாவாயின. (தொ.எ. 132 நச்.)

ஒட்டுப்பெயர் -

{Entry: A01__569}

பல சொற்கள் ஒட்டி நின்று ஒரு பெயரைக் குறிக்க வருவது ஒட்டுப்பெயராம். பகாப்பதம் இரண்டு முதல் ஏழெழுத்து ஈறாகவும், பகுபதம் இரண்டு முதல் ஒன்பது எழுத்து ஈறாகவும் தொடரும். ஆனால் கங்கை கொண்ட சோழபுரம், இரத நூபுரச்சக்கரவாளம் (சூளா. இரத.12.), பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - என்றல் தொடக்கத்து ஒட்டுப்பெயர்க்கு வரையறை இல்லை என்க.(நன். 129 மயிலை.)

ஒடு என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__570}

ஒடு என்ற மரப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், உதி என்ற மரப்பெயர் போல, வருமொழி வன்கணம் வரின் ஒத்த மெல்லெழுத்து இடையே மிக்கு முடியும்.

எ-டு : ஒடுங்கோடு, ஒடுஞ்செதிள், ஒடுந்தோல், ஒடும்பூ

சிறுபான்மை ஒடுவங்கோடு - என, அம்முச்சாரியை இடையே பெறுதலும் உண்டு. (தொ. எ. 262 நச். உரை)

ஒத்த ஒற்று மிகல் -

{Entry: A01__571}

வருமொழி முதலில் க ச த ப - என்ற எழுத்துக்கள் வரின், அவ்வொற்றுக்களே நிலைமொழி வருமொழிகளுக்கு இடையே மிகுதல்.

எ-டு : விளக்குறிது, விளச்சிறிது, விளத்தீது, விளப்பெரிது

எனவே, நிலைமொழியீறும் வருமொழி வல்லினமுதலும் புணரும்வழி, இடையே வரும் வல்லொற்று வருமொழி முதலில் வரும் வல்லொற்றேயாம். அவை இயைபு வல்லெழுத்து எனப்படும். (தொ. எ. 203 நச்.)

ஒத்த குற்றெழுத்து -

{Entry: A01__572}

உயிர்நெடில்களுக்கு இனமாக வரும் அவ்வக் குற்றெழுத் துக்கள். ஆகாரத்துக்கு அகரமும், ஈகாரத்துக்கு இகரமும், ஊகாரத்துக்கு உகரமும், ஏகாரத்துக்கு எகரமும், ஓகாரத் துக்கு ஒகரமும் ஒத்த குற்றெழுத்துக்களாம். ஐகாரத்துக்கு இகரமும், ஒளகாரத்துக்கு உகரமும் அளபெடையாய் இசை நிறைக்கும் ஒத்த குற்றெழுத்துக்கள். (தொ. எ. 41, 42 நச்.)

ஒருபஃது முதலியவற்றின் முன் ஏனைய எண்கள் -

{Entry: A01__573}

ஒருபஃது முதலாய எட்டு எண்கள் நிலைமொழியாக நிற்ப, வரு மொழியாகஒன்று முதல் ஒன்பது எண்களும் அவை யூர்ந்த பிறபெயரும் வருமாயின், நிலைமொழியின் ஆய்தம் கெடத் தகர ஒற்று அங்கு வரும்.

வருமாறு : ஒருபஃது + ஒன்று > ஒருபத்து + ஒன்று = ஒருபத் தொன்று; எண்பஃது + ஒன்பது >எண்பத்து + ஒன்பது = எண்பத்தொன்பது; இருபஃது + மூன்று கலம் > இருபத்து + மூன்றுகலம் = இருபத்து மூன்றுகலம்.

ஒருபது முதலியவற்றுக்கும் இப்புணர்ச்சி ஒக்கும்.

ஒருபது + ஒன்று = ஒருபத்தொன்று - எனவரும். (நன். 196)

ஒருபஃது முதலியவை உருபேற்கும்போது அடையும் திரிபுகள் -

{Entry: A01__574}

ஒருபஃது முதலியன உருபேற்குமிடத்து இடையே ஆன் சாரியை வர, பஃது என்பதன் பகர ஒற்று நீங்கலாக ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை பெற்று, ஒருபானை, இருபானை, முப்பானை, நாற்பானை, ஐம்பானை, அறுபானை, எழு பானை, எண்பானை - என முடியும். (தொ.எ.199 நச்.)

பொதுவிதியான் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும் மரபை ஒட்டி, ஒருபஃது + அன் + ஐ = ஒருபஃதனை...... எண்பஃதனை என முடிதலுமுண்டு. ( 199 நச். உரை)

ஒன்பஃது என்பதும் பஃது என முடியும் சொல்லாதலின், அதுவும் ஒன்பானை, ஒன்பஃதனை - என்று உருபேற்கும் முடிவு கொள்ளும். ( 199 நச். உரை)

ஒருபஃது முதலியவை நிறை அளவுப் பெயர்களொடு புணருமாறு -

{Entry: A01__575}

ஒருபஃது முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருவழி, ஒருபதின்கழஞ்சு, ஒருபதின்கலம், ஒருபதிற்றுக்கழஞ்சு, ஒருபதிற்றுக்கலம்- என ‘இன்’ பெற்றும் இன் ‘இற்று’ ஆகியும் புணரும்.

இம்முடிபை ஒருபஃது முதல் எண்பஃது முடியவும் கொள்க.

எண்பதின்கலம், எண்பதிற்றுக்கலம் - எனப் புணர்க்க.

வருமொழி பொருட்பெயராயவழியும் பதிற்றுவேலி, பதிற்றுத் தொடி- என்றாற் போல முடிவனவும் கொள்க. (தொ. எ. 436 நச்.)

உயிர் வருவழிப் பதிற்றகல், பதிற்றுழக்கு - என இன் ‘இற்று’ ஆகும் என்க. (121 நச். உரை)

ஒருபது முதலியவை உருபொடு புணர்தல் -

{Entry: A01__576}

ஒருபது, இருபது..... எண்பது - என்னும் எட்டு எண்கள் நிலை மொழியாக நிற்க, உருபு வந்து புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வருதலுமுண்டு; வாராமையுமுண்டு. அது வருமிடத்து நிலைமொழியில் ‘பது’ என்பதன்கண் பகர ஒற்று நீங்கலாகப் பிற கெடும். ஒன்பது என்ற நிலைமொழிக்கும் இது பொருந்தும். ஒருபஃது இருபஃது.... ஒன்பஃது - என ஆய்தம் பெறினும் இவ்விதி பொருந்தும்.

எ-டு: ஒருபது, ஒருபஃது+ ஐ > ஒருப் + ஆன் + ஐ = ஒரு பானை; ஒன்பது, ஒன்பஃது +ஐ > ஒன்ப் + ஆன்+ ஐ = ஒன்பானை. ஒருபது, ஒருபஃது + ஐ = ஒருபதை, ஒரு பஃதை; ஒன்பது, ஒன்பஃது + ஐ = ஒன்பதை, ஒன் பஃதை எனச் சாரியை பெறாது; முடிந்தன. (நன்.249)

ஒரு புணர்ச்சிக்கண் முத்திரிபும் வருதல் -

{Entry: A01__577}

மகத்தாற் கொண்டான் - மக(ம்)+ அத்து+ ஆன்+ கொண்டான்; இப்புணர்ச்சிக்கண், அத்தும் ஆனும் மிகுதல்; அத்தின் அகரம் கெடுதல்; ஆன் சாரியையின் னகர ஒற்று றகர ஒற்றாக மெய் பிறிது ஆதல்.

இவ்வாறு ஒரு புணர்ச்சிக்கண்ணேயே, மெய்பிறிதாதல் - மிகுதல் - குன்றல் - என்ற முத்திரிபுகளும் வந்தன. (தொ. எ. 109 நச்.)

எ-டு : யhனை + கோடு = யானைக்கோடு - வலி மிகல்; நிலம் + பனை = நிலப்பனை - மகரம் கெடுதல், பகரம்மிகல்; பனை + காய் = பனங்காய் - ஐ கெடுதல், ‘அம்’மிகல், அம்மின் மகரம் ஙகரமாகத் திரிதல். இவ்வாறு ஒரு புணர்ச்சியில் இரண்டு மூன்று விகாரமும் வருதல் காண்க. (நன். 157)

ஒருமொழி இலக்கணம் -

{Entry: A01__578}

‘ஆசிரியர் தொல்காப்பியனார் ஒருமொழி இலக்கணம் கூறாமை ’ காண்க.

ஒல்வழி ஒற்று மிகுதல் -

{Entry: A01__579}

நிலைமொழிகளை அடுத்து வல்லெழுத்தை முதலாவதாகக் கொண்ட கு - கண் - என்ற வேற்றுமையுருபுகள் புணரின், பொருந்துமிடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் மிகும். சிறுபான்மை இயல்பாதலும், சிறுபான்மை நிலை மொழி ஈறுதிரிதலும் உள.

எ-டு: மணிக்கு, மணிக்கண்; ஈக்கு, ஈக்கண்; தினைக்கு, தினைக்கண்; வேய்க்கு, வேய்க்கண்; வேர்க்கு, வேர்க் கண்; வீழ்க்கு, வீழ்க்கண் - இவை வல்லொற்றுமிக்கன. வல்லொற்று மிகும் நிலைமொழி ஈறுகள் இ, ஈ, ஐ, ய், ர், ழ் - என்ற ஆறாகும்.

தாம், நாம் - என்பன கண்ணுருபு வருமிடத்து, நெடுமுதல் குறுகி மகரம் கெட்டு ஙகர மெல்லொற்று மிகுவனவாம்.

தங்கண், நங்கண் - என வரும்.

உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் கண்உருபு இயல்பாகப் புணரும்.

எ-டு : நம்பிகண், நங்கைகண், அரசர்கண்;

தம்பிகண், தந்தைகண், தாய்கண் - என வரும்.

உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் குவ்வுருபு மிக்குப் புணரும்.

எ-டு : நம்பிக்கு, நங்கைக்கு, அரசர்க்கு;

தம்பிக்கு, தந்தைக்கு, தாய்க்கு - என வரும்.

இங்ஙனம் கண்உருபு வருவழி இயல்பாகும் நிலைமொழி ஈறுகள் இ, ஐ, ய், ர் - என்பன.

வேற்கு, வேற்கண்; வாட்கு, வாட்கண் - என லகர ளகர ஈறுகள்திரிந்தன. (தொ. எ. 144 நச். உரை)

‘ஒவ்வொன்று கொடு’: தழாத் தொடர் -

{Entry: A01__580}

‘ஒவ்வொன்று கொடு’ என்றால், இம்முறையே பலவற்றையும் கொடு எனப் பொருள்தந்து நிற்றலின், ‘ஒவ்வொன்று’ என்பது அடுக்கன்று; வேற்றுமை அல்லன எல்லாம் அல்வழி ஆதலின், தழாத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம் என்பது. (நன். 199 சங்கர.)

ஒழிந்ததன் நிலை -

{Entry: A01__581}

ஒழியிசை ஓகாரத்தின் நிலை. ஓகார இடைச்சொல் சுட்டும் பல பொருள்களில் ஒழியிசைப் பொருளும் ஒன்று. ஏனைய ஓகாரங்களை அடுத்த நிலைமொழியீறுகள் வருமொழி வன் கணத்தோடு இயல்பாகப் புணர்வது போலவே, ஒழியிசை ஓகாரமும் இயல்பாகப் புணரும்.

எ-டு : கொளலோ கொண்டான் . (கொண்டு உய்யக்கொண் டான் அல்லன் என்பது பொருள்.); செலலோ சென்றான் (சென்று உய்யச் சென்றான் அல்லன்.); தரலோ தந்தான் (தந்து உய்யத் தந்தான் அல்லன்); போதலோ போந்தான் (போந்து உய்யப் போந்தான் அல்லன்) - இவை இயல்பாகப் புணர்ந்தன. (தொ. எ. 291 நச். உரை)

ஒற்றளபெடை -

{Entry: A01__582}

ங்ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஃ - என்னும் பதினொரு புள்ளியும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுக்கும், என்னை?

‘வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழித்தாங்கு

அல்மெய் ஆய்தமோடு அளபெழும் ஒரோவழி’

என்ப வாகலின்.

வரலாறு : மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், வெல்ல்க, கொள்ள்க, எஃஃகு - இவை குறிற்கீழ் அள பெழுந்தன.

அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, மருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு - இவை குறிலிணைக்கீழ் அளபெழுந்தன. (நேமி. எழுத். 3 உரை)

செய்யுட்கண் ஓசையை நிறைப்பதற்கு ங ஞ ண ந ம ன வ ய ல ள - என்ற பத்து மெய்யெழுத்துக்களும் ஆய்தமும், குறில்கீழும் குறிலிணைக்கீழும், மொழி யிடையினும் இறுதியிலும் தம் மாத்திரையின் மிக்கு ஒருமாத்திரையாக ஒலிப்பது ஒற்றள பெடையாம். அவ் வொற்று அளபெடுத்தமை தோன்ற அதுவே அடுத்து வரிவடிவில் அறிகுறியாக எழுதப்படும்.

எ-டு :

‘நங்ங் களங்கறுப்பாம் நாம்’

‘இலங்ங்கு வெண்பிறைசூ டீசன் அடியார்க்கு’

‘வெஃஃகு வார்க்கில்லை வீடு’

‘இலஃஃகு முத்தின் இனம்’

பதினொரு புள்ளியெழுத்துக்களும் குறில்கீழும் குறிலிணக் கீழும் சொல்லின் இடையும் இறுதியுமாகிய நான்கிடத்தும் அளபெடுப்பவே, வரும் ஒற்றளபெடை 44 ஆகும். ஆய்தம் மொழியிடைக் கணன்றி வாராமையின், இறுதிக்கண் இரண்டு நிலைகளையும் அதற்கு நீக்க ஒற்றளபெடை 42ஆம். (நன். 92)

ஒற்றளபெடை சார்பெழுத்தாதல் -

{Entry: A01__583}

ஒரு மாத்திரையாய் அலகு பெறுதலானும் பிறவாற்றானும் ஒற்றளபெடை சார்பெழுத்து என, ஒற்றின் வேறாயிற்று. (இ.வி. 20 உரை)

ஒற்றளபெடை தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக் கூறப்படாமை -

{Entry: A01__584}

ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின், எழுத்ததிகாரத்துக் கூறப்படாமல், பொருளதிகாரத்துச் செய்யுளியலில் கூறப் பட்டது. (ஆயின் ‘ஒற்றிசை நீடல்’ (எ.33 நச்.) என எழுத்ததி காரத்தில் அது சுட்டப்பட்டுள்ளது) (தொ. எ. 6 நச். உரை)

ஒற்று இசை நீடல் -

{Entry: A01__585}

மெய்யெழுத்துக்கள் தமக்குரிய அரைமாத்திரையின் நீண் டொலித்தல். ஒற்றுக்கள் இசைநூலின்படி பதினொரு மாத்திரையளவு நீண்டிசைக்கும் என்ப. ஒற்றுக்கள் நீண் டொலிக்குமிடத்து ஒற்றளபெடை என்று பெயர் பெறும். ஓர் ஒற்று ஒலி நீளும்போது அடுத்து எழுதப்படும் அதே ஒற்று ஒற்றளபெடை எழுத்தாகும். (தொ. எ. 33 நச்.)

ஒற்றுதலும் வருடுதலும் -

{Entry: A01__586}

ஒற்றுதல் தட்டுதல் எனவும் அழுத்தித் தடவுதல் எனவும் பொருள் பெறும். வருடுதல் மெல்லத் தடவுதல் என்று பொருள் பெறும்.

நாநுனி மேல்நோக்கிச் சென்று மேல்வாயை ஒற்றுதலால் ற ன -வும், நாநுனி மேல்நோக்கிச் சென்று மேல்வாயை வருடுத லால் ர ழ - வும் பிறக்கும். எனவே, வருடுதலால் இடைநிகரான ஒலியும், ஒற்றுதலால் அழுத்தமான ஒலியும் பிறக்கும் என்பது. (ற ன ர ழ: மெய்யெழுத்தைக் குறிப்பன.) (தொ. எ. 94, 95 நச்.)

ஒன் சாரியை -

{Entry: A01__587}

ஓகார ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் ஒரோவழி ஒன்சாரியை பெறும். ஒன்சாரியை பிற்காலத்து ‘ன்’ சாரியை ஆயிற்று.

எ-டு : கோ+ ஒன் + கை = கோஒன்கை - (தொ.எ.294 நச்.)

கோ+ ஒன் + ஐ = கோஒனை (180 நச்.)

ஒன்பது ‘நூறு’ என்பதனொடு புணர்தல் -

{Entry: A01__588}

ஒன்பது என்பதன் ஒகரத்தொடு தகரம் சேர, (‘பது’ கெட) னகரம் ளகரமாகி இரட்ட, வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆகத் திரியத் தொள்ளாயிரம்- என முடியும்.

ஒன்பது + நூறு > தொன்பது + நூறு > தொன்+ நூறு >

தொள்ள் + நூறு > தொள்ள் +ஆயிரம் = தொள்ளாயிரம்

(தொ. எ. 463 நச்.)

ஒன்பது ‘பஃது’ என்பதனொடு புணர்தல் -

{Entry: A01__589}

நிலைமொழி ஒன்பது;வருமொழி பஃது. நிலைமொழி ஒகரத்தொடு தகரஒற்றுச் சேர (நிலைமொழி ‘பது’ கெட), னகரம் ணகரமாகி இரட்ட, வருமொழியின்கண் ஆய்தமும் பகரமும் கெட, ஊகாரம் வரத் துகரம் றுகரமாகத் திரிய, நிலைமொழி ணகரத்தின்மேல் ஊகாரம் ஏறி முடியத் தொண்ணூறு ஆகும்.

ஒன்பது+ பஃது > தொன்பது+ பஃது > தொன்+ பஃது > தொண்ண் + பஃது > தொண்ண்+ ஊறு= தொண்ணூறு. (தொ. எ. 445. நச்.)

‘ஒன்பதும் இனைத்தே’ -

{Entry: A01__590}

ஒன்பது என்பதன் ஈற்றுயிர்மெய்யைக் கெடாது குற்றுகர ஈற்றுப் பொதுவிதியான் உயிர் ஒன்றுமே கெட, இன்னும் இற்றும் ஏற்பது ஏற்று நிற்றலின் ‘ஒன்பதும் இற்றே’ எனத் தன்மையணி ஆக்காது, உவமையணி ஆக்கி ‘இனைத்தே’ என்றார். ஒன்பது என்பதன் இறுதி பத்து என்பது போல முரணி நிற்றலின், அதனோடு இது மாட்டெறியப்பட்டது.

வருமாறு : ஒன்பது+ ஆயிரம் > ஒன்பத் +இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்

ஒன்பது + ஒன்று > ஒன்பத் + இற்று + ஒன்று = ஒன்பதிற்றொன்று (நன். 197 சங்கர.)

ஒன்பதுவகை மயக்கம் -

{Entry: A01__591}

உயிரோடு உயிர், உயிரொடு மெய், உயிரோடு உயிர்மெய், மெய்யொடு மெய், மெய்யோடு உயிர், மெய்யோடு உயிர்மெய், உயிர்மெய்யோடு உயிர்மெய், உயிர்மெய்யோடு உயிர், உயிர் மெய்யொடு மெய் - என்பன ஒன்பது வகை மயக்கங்களாம். இவற்றுள் மெய், அடுத்துவரும் தனிமெய்யுடனோ, அடுத்து வரும் உயிர்மெய்யிலுள்ள மெய்யுடனோ மயங்கும் மயக்கமே சிறந்தமையின், இலக்கண ஆசிரியர்களால் அதுவே விளக்கப் பட்டது.

எ-டு: பா ர்த்தார் - தனிமெய்யொடு தனிமெய்; யா த்தார் - தனிமெய்யோடு உயிர்மெய் (தொ.எ.22 நச். உரை)

ஒன்பது, வருமொழியொடு புணருமாறு -

{Entry: A01__592}

ஒன்பது இன்சாரியை பெற்று வருமொழிகளொடு புணரும். இன்சாரியை ‘இற்று’ எனத் திரிந்து புணர்தலுமுண்டு.

ஒன்பதின் கலம், ஒன்பதிற்றுக் கலம், ஒன்பதின் சாடி, ஒன்பதிற்றுச் சாடி முதலாக அளவுப்பெயரும், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதிற்றுக் கழஞ்சு, ஒன்பதின் தொடி, ஒன்பதிற்றுத் தொடி - முதலாக நிறைப்பெயரும், ஒன்பதினாயிரம், ஒன் பதிற்றுக்கோடி - முதலாக எண்ணுப்பெயரும் என இவற் றொடு நிலைமொழி ‘ஒன்பது’ புணர்ந்தவாறு. (தொ. எ. 459, 470 நச்.)

ஒன்பதினாழி என்புழி, வருமொழி நகரம் வருவழி, இன்சாரியையின் னகரம் கெட, வருமொழி நகரம் னகரமாகத் திரிந்து புணரும். (459 நச்.)

ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு = தொள் ளாயிரம்; ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம், ஒன்பது + கழஞ்சு, கலம் = ஒன்பதின்கழஞ்சு, ஒன்பதின் கலம்; ஒன்பது + ஒன்று, இரண்டு, குருணி = ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற் றிரண்டு, ஒன்பதிற்றுக் குருணி - என வரும்.

ஒன்பது+ பத்து : வருமொழி பத்து ‘நூறு’ஆம்;ஒகரத்தொடு தகரமெய் பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும்; னகரம் ணகரமாகத் திரியும்.

ஒன்பது + பத்து > ஒன்பது + நூறு > தொன்பது + நூறு > தொண் + நூறு = தொண்ணூறு.

ஒன்பது + நூறு : வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆம். ஒகரத்தொடு தகர மெய்பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும் : னகரம் ளகரமாகத் திரியும். ஒன்பது + நூறு > ஒன்பது + ஆயிரம் > தொன்பது + ஆயிரம் > தொன் + ஆயிரம் > தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம்.

ஒன்பது, எண் நிறை அளவுப்பெயர்களும் பிறபெயரும் வரு மொழியாக நிகழுமிடத்து, இன் இற்று - என்ற சாரியையுள் ஏற்பதொன்று இடையே வரப் புணரும். எடுத்துக்காட்டு மேலே குறிக்கப்பட்டுள்ளமை காண்க. (நன். 194, 197)

ஒன்பது விகாரமும் திரிபுமூன்றில் அடங்குதல் -

{Entry: A01__593}

விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்ட லும் குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்துக் குறைதலும் கெடுதலாகவும் அடக்கி ஒன்பது செய்யுள் விகாரமும் திரிபு மூன்றென அமையும் என்பது. (இ.வி. 58)

செய்யுளிடத்து அல்வழி வேற்றுமையால் வரும் மூன்று விகாரமும் வலித்தல் முதலிய ஒன்பது விகாரமும் வருதலால் வேறுபாடு அறிவதற்கும், விரித்தல் தோன்றல் விகாரமாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்டலும் குறுக்கலும் திரிதலாக வும், தொகுத்தலும் மூவழிக்குறைதலும் கெடுதலாகவும், இந்த மூவகையுள் அவ்வொன்பது வகை விகாரங்களும் அடங்கும் என்பது அறிவித்தற்கும், செய்யுட்கேயுரிய ஒன்பது விகாரங் களையும் புணர்ச்சி விகாரங்களொடு கூறினார். (நன். 156 இராமா.)

ஒன்றனை ஒன்று பற்றுதல் -

{Entry: A01__594}

இது வடமொழியில் இதரேதராச்ரயம் என்னும் குற்றமாம்; அந்யோந்யாச்ரயம் எனவும் பெயர் பெறும். இதனைத் தடுமாற்றம் எனவும் கூறுப.

இடனும் பற்றுக்கோடும் சார்ந்து உகரம் குறுகும் எனவும், இடனும் பற்றுக்கோடும் குற்றியலுகரத்துக்குச் சார்பாக வரும் எனவும் கூறுதல் ஒன்றனை ஒன்று பற்றுதலாம். (சூ. வி. பக். 50)

வினைமுற்றுச் சொல் பெயராயவாற்றால் ஓசை வேறுபடும் எனவும், ஓசை வேறுபட்ட காரணத்தான் வினைமுற்றுச் சொல் பெயராம் எனவும் கூறுதலும் ‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்றும் குற்றமாம். (சூ. வி. பக். 54)

குற்றியலிகரம் என்னும் குறியீட்டால் நாகு+ யாது = நாகியாது - என்று புணர்ச்சிவிதி கூறி, அங்ஙனம் செய்கை செய்த பின்னர் அவ்வெழுத்தைக் குற்றியலிகரம் என்று கூறுவது ‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்னும் குற்றமாம் எனின், ஆகாது. நாகு+யாது=நாகியாது - என்று புணர்ந்தவழி, அப்புணர்ச்சி வழு என்று காணலுற்றுழி, ‘யகரம் வருவழி இகரம் குறுகும்’ என்னும்சூத்திரம் வழாநிலை உணர்த்த வந்ததல்லாது, முன் இல்லாத குற்றியலிகரத்தை விதிக்க வந்ததன்று ஆதலின், இங்ஙனம் கோடற்கண் ‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்ற குற்றமில்லை. (சூ. வி. பக். 20, 21)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நூறு என்ற நிலைமொழியொடு புணர்தல் -

{Entry: A01__595}

நூறு என்பது நூற்றொன்று நூற்றிரண்டு, நூற்றுமூன்று, நூற் றெட்டு, நூற்றுப்பத்து, நூற்றுக்கோடி, நூற்றுத் தொண்ணூறு, நூற்றுக்குறை, நூற்றிதழ்த் தாமரை, நூற்றுக்காணம், நூற்றுக் கால் மண்டபம்- என இனஒற்று மிக்கு, வன்கணமாயின் வருமொழி வல்லெழுத்து மிக்குப் புணரும். (தொ. எ. 472. நச்.)

நூற்றொருபஃது, நூற்றிருபஃது, நூற்றெண்பது - என ஆண்டும் ஈற்றின் இனஒற்று இடையே மிக்குப் புணரும். நூற்றுக்கலம், நூற்றுக்கழஞ்சு - முதலாயினவும் அன்ன. (473, 474 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நூறு என்ற வருமொழியொடு புணர்தல் -

{Entry: A01__596}

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்களின் (ஏழ் நீங்கலாக உள்ளவை) ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடும் கெட்டு, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, ஒன்று இரண்டு - என்பன ஒரு இரு - என்றாகி, மூன்றன் ஒற்று நகரமாக, நான்கும் ஐந்தும் ஒற்றுநிலை திரியாவாகப் புணரும்.

வருமாறு : ஒரு நூறு, இரு நூறு, முந்நூறு, நானூறு, ஐந்நூறு, அறுநூறு, எண்ணூறு. (தொ. எ. 460- 462 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் பஃதொடு புணர்ந்து உருபேற்றல் -

{Entry: A01__597}

ஒன்று +பஃது+ ஆன் + ஐ

ஒன்று என்பதனொடு பத்து என்பது புணர்ந்து ஒருபஃது என்றாகும். இவ்வாறே இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது (எழுபஃது) எண்பஃது - என்பனவும் ஆம்.

ஒருபஃது முதலியன உருபுகளொடு புணரும்வழி, பஃது என்பதன்கண் உள்ள பகர ஒற்று நீங்கலான ஏனைய கெட, ஆன்சாரியை பெற்று ஒருப்+ஆன்= ஒருபான்- என்றாகி, ஒருபானை - ஒருபானால் - ஒருபாற்கு- ஒருபானின் - ஒருபானது - ஒருபான்கண்- என உருபேற்கும். இங்ஙனமே இருபானை, இருபானால்.... முதலாயினவும் கொள்க. (தொ. எ. 199 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் முன் ‘பத்து’ புணர்தல் -

{Entry: A01__598}

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் நிலைமொழியாக நிற்க, வருமொழியாகப் பத்து என்ற எண்ணுப்பெயர் வருமிடத்து, வருமொழி இடையொற்று நீங்கிப் ‘பது’ எனவும் அஃது ஆய்தமாகத் திரியப் ‘பஃது’ எனவும் அமைந்து புணரும்.

வருமாறு : ஒன்று + பத்து = ஒருபது, ஒருபஃது

எட்டு + பத்து = எண்பது, எண்பஃது (நன்.195)

நிலைமொழி திரிதல் ‘எண்ணுப்பெயர்களுக்குச் சிறப்புவிதி’ என்பதன்கண் காண்க.

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்களோடு ஆயிரம் புணருமாறு -

{Entry: A01__599}

ஒராயிரம், ஓராயிரம், இராயிரம், ஈராயிரம் : ஒரு, இரு - என்பன உகரம் கெட்டும் முதலெழுத்து உள்ளபடியும் நீண்டும் புணரும். (தொ. எ. 464, 465 நச்.)

மூவாயிரம், முவ்வாயிரம் - மூன்றன் னகரம் வகரமாக, முதலெழுத்து உள்ளபடியும் குறுகியும் புணரும். (466 நச்.)

நாலாயிரம் - நான்கன் னகரம் லகர ஒற்று ஆகும். (467 நச்.)

ஐயாயிரம் - ஐந்தன் நகரம் யகரமாகும். (468 நச்.)

ஆறாயிரம், அறாயிரம் - உகரம், வருமொழி ஆ ஏறி முடிந்தும், முதல் ஆகாரம் குறுகியவழிக் கெட்டும் புணரும். (469 நச்.)

ஏழாயிரம், எழாயிரம் - ‘ஏழ்’ இயல்பாகியும் நெடில் குறுகி யும் புணரும். (392, 391 நச்.)

எண்ணாயிரம் - எட்டு ‘எண்’ ஆகி ணகரஒற்று இரட்டிப் புணரும். (444, 160 நச்.)

ஒன்று முதலான எண்கள் இரட்டுமாறு -

{Entry: A01__600}

ஒன்று முதல் பத்து ஈறான எண்களுள் ஒன்பது ஒன்றும் நீங்கலான ஒன்பது எண்ணுப்பெயர்களும் இரட்டுமாயின் (நிலைமொழி எண்ணுப்பெயரே வருமொழியாகவும் நிகழுமாயின்), நிலைமொழியின் முதலெழுத்து நீங்கலாகப் பிறவெல்லாம் கெடும். வருமொழி முதலில் உயிர் வருமாயின் வகரமெய்யும், மெய்வருமாயின் அவ்வந்த மெய்யும் இடையே மிகப்பெறும். (நிலைமொழி நெடில் முதல் குறுகும் என்க.)

வருமாறு : ஒன்று+ ஒன்று > ஒ + ஒன்று > ஒ + வ் + ஒன்று = ஒவ்வொன்று; மூன்று + மூன்று > மு + மூன்று > மு+ம்+மூன்று = மும்மூன்று. பிறவும் இவ்வாறே இவ்விரண்டு, நந்நான்கு, ஐவைந்து, அவ்வாறு, எவ் வேழு, எவ்வெட்டு, பப்பத்து - என முடியு மாறு கொள்க. (நன். 199)

ஒன்று முன்னர் உயிரும் யாவும் வந்து புணருமாறு -

{Entry: A01__601}

வருமொழி முதலில் உயிரோ, யா என்ற உயிர்மெய்யோ வரு மிடத்து, நிலைமொழியாகிய ‘ஒன்று’என்பது ‘ஒரு’ என்று திரிந்த நிலையை நீக்கி ‘ஓர்’ என்றாகி,

ஓரகல், ஓராடு, ஓரிலை, ஓரீ, ஓருரல், ஓரூசல், ஓரெருது, ஓரேணி, ஓரையம், ஓரொழுங்கு, ஓரோடம், ஓரௌவியம், ஓர்யானை - எனவரும். ஈரடை, ஈர்யானை, மூவசை, மூயானை - எனச் செய்யுட்கண் வருதலும் கொள்ளப்படும்.

(வருமொழி அஃறிணையாயவழியே இம்முடிபு கொள்க.)

ஒன்று முதலிய எண்ணுப்பெயர்கள் அஃறிணையாம். எண்ணியற் பெயரே உயர்திணையாம். (தொ. எ. 479 நச். உரை)

ஓ section: 12 entries

ஓ -

{Entry: A01__602}

இது தமிழ் நெடுங்கணக்கில் பதினொன்றாம் உயிர்; அங்காத்தலோடு இதழ் குவித்து எழுப்பும் உயிரொலிகளுள் ஒன்று; பெயராகவும் வினையாகவும் வரும் ஓரெழுத்தொரு மொழியாம் நெடில். ஓகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு - முதலிய பல பொருளில் வரும்.

ஓஒ பெரியன் - என உயர்வுசிறப்புப் பற்றியும், ஓ ஒ கொடியன்- என இழிவுசிறப்புப் பற்றியும், ஓஒ தமக்கோர் உறுதி உணராரே எனக் கழிவிரக்கப் பொருள் பற்றியும், ஓ பெரிதுவப்பக் கேட்டேன்- என மகிழ்ச்சிக்குறிப்புப் பற்றியும், ஓஒ கொடிது கொடிது - என வியப்புக் குறிப்புப் பற்றியும், ஓ தெரிந்தது - என ஞாபகக்குறிப்புப் பற்றியும், ஓ மகனே - என விளிக்குறிப்புப் பற்றியும் - ஓகாரம் அளபெடுத்தும் அளபெடாதும் முதற்கண் வரும்.

ஓகார இடைச்சொல் புணருமாறு -

{Entry: A01__603}

ஓகார இடைச்சொல் எப்பொருளில் வரினும் வருமொழி வன்கணத்தோடு இயல்பாகவே புணரும்.

இவருள், யானோ தேறேன்’(குறுந்.21) - பிரிநிலை; நன்றோ தீதோ - தெரிநிலை; ஓஒ கொண்டான் - சிறப்பு; ‘ களிறென் கோ கொய்யுளைய மா என்கோ’ - எண் (புற.387); யானோ கொண்டேன் - மாறுகோள் எச்சம்; நீயோ கொண்டாய்? - வினா; புற்றோ புதலோ - ஐயம்; கொளலோ கொண்டான் - ஒழியிசை. (தொ. எ. 290, 291 நச். உரை)

ஓகாரஈற்று இயல்பு புணர்ச்சி -

{Entry: A01__604}

ஓகார இடைச்சொல் மொழியீற்றில் மாறுகோள் எச்சம், வினா, ஐயம், ஒழியிசை - என்ற பொருள்கள்மேலும், தெரி நிலை, எண், சிறப்பு, ஈற்றசை - என்ற பொருள்கள்மேலும் வரும். அது வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : யானோ கொண்டேன்.

கோ என்ற பெயர் இல் என்ற வருமொழியொடு புணரும்வழி, ஒகரமாகிய எழுத்துப்பேறளபெடை பெறாது (வகர) உடம்படுமெய் பெற்று இயல்பாகப் புணரும்.

வருமாறு : கோ+இல் > கோ+வ்+இல் = கோவில்

(தொ. எ. 290, 291,293, நச்.) (மு.வீ. புணர். 24)

ஓகாரஈற்றுச் சாரியை -

{Entry: A01__605}

ஓகாரஈற்றுப் பெயர் உருபேற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக் - கண்ணும் ஒன்சாரியை பெறும். சாரியை பெறுங்கால் வருமொழி வல்லெழுத்து மிகாது.

எ-டு : கோ+ ஐ > கோ + ஒன் + ஐ = கோஒனை

(தொ.எ.180 நச்.)

கோ+கை > கோ+ ஒன் + கை = கோஒன்கை

(294 நச்.)

பிற்காலத்தில் ஒன்சாரியை னகரச் சாரியையாகவே, கோனை, கோன்கை என்று புணர்வ ஆயின.

ஓகாரஈற்றுச் சொல் இல்லொடு கிளத்தல் -

{Entry: A01__606}

நிலைமொழி ஓகார ஈற்றுச் சொல்லாக, வருமொழி இல் என்ற சொல் வரின், ஓகார இறுதிக்குரிய ஒன்சாரியை பெறாது உடம்படுமெய் அடுத்து இயல்பாகப் புணரும்.

வருமாறு: கோ+ இல்= கோவில் (வகரம் உடம்படுமெய்)

(தொ.எ. 293 நச்.)

‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ (மு.வீ. புணரியல் 24) என்பதனால் யகர உடம்படுமெய் பெற்று, கோ + இல் = கோயில் - என்றாதலே இக்காலத்துப் பெரும்பான்மை ஆயிற்று.

ஓகாரஈற்றுப் பொதுப்புணர்ச்சி -

{Entry: A01__607}

ஓகார ஈறு அல்வழிக்கண் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்குப் புணரும்.

எ-டு : ஓக் கடிது, சோக் கடிது (தொ. எ.289 நச்.)

ஓகார இடைச்சொல் எப்பொருளில் வரினும், வன்கணம் வரினும் இயல்பாகவே புணரும்.

எ-டு : யானோ கொண்டேன் (290, 291 நச்.)

ஓகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் எழுத்துப்பேறளபெடையாகிய ஒகரமும் வல்லெழுத்தும் பெறுதலும், உருபுபுணர்ச்சி போல் ஒன்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு.

எ-டு : ஓஒக் கடுமை, கோஒக் கடுமை, சோஒக் கடுமை;

கோஒன்கை, கோஒன்செவி (292, 294 நச்.)

ஓகாரஈறு ஒன்சாரியை பெறுதல் -

{Entry: A01__608}

‘ஓகார ஈற்றுப் பொதுப்புணர்ச்சி’ காண்க.

ஓசை இரண்டாவன -

{Entry: A01__609}

எடுத்துக் கூறலும், படுத்துக் கூறலும் என ஓசை இருவகைப் படும். (மு.வீ. எழுத். 39)

ஓர் அளபு ஆகும் ஐகாரமும் ஒளகாரமும் -

{Entry: A01__610}

மொழி இடையிலும் கடையிலும் அஇ, அய் - என்பன போல ஒலிக்கும் ஐகாரம் ஒரே மாத்திரை அளவிற்றாதலும் அருகி நிகழ்வது.

சீவக சிந்தாமணியில் (933) ‘இவையின், கவிஞர், சுவையின், அவையின்’ என அடியெதுகையில் ஐகாரம் இகரம் போல ஒரு மாத்திரை அளவு ஒலிப்பதைக்குறிப்பதாம். ஆயின், மொழி முதற்கண் ஐகாரம் சுருங்காது.

பிற்காலத்தில், மொழி முதல் ஐகாரம் ‘அய்’ போலவும், ஒளகாரம் ‘அவ்’ போலவும் ஒலித்தலின், வீரசோழியமும் நேமிநாதமும் ஐ - அய் எனவும், ஒள - அவ் எனவும் ஒலிக்கும் என்றன. அதனால் அந்த ஐ, ஒள - ஒன்றரை மாத்திரை ஒலிக்கும். அவை அவ்வாறு ஒலித்தல் மொழிமுதற்கண்ணாம்.

‘கௌவை, வெவ்வேல், அவ்வேலே’; ‘கொய்தகை, செய்யசந், கைதரு, பெய்தொளி’ - என்ற அடி முதற்சீர்களை நோக்கி, ஒள- அவ் எனவும், ஐ- அய் எனவும் ஒலிப்பதைக் காணலாம். (பு. வெ. மா. 4 : 23; சீவக. 1267)

தொல்காப்பியனார்க்கு ஒளகாரக்குறுக்கம் உடன்பாடன்று. (எ. ஆ. பக். 63, 64)

ஓர் அளபு இசைத்தல் -

{Entry: A01__611}

ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலித்தல். அ இ உ எ ஒ - என்ற குற்றுயிர் ஐந்தும், இவை மெய்மீது பொருந்த உண்டாகும் உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் தொண்ணூறும் - ஒவ்வொன் றும் ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிப்பதாம். (தொ.எ. 3, 10 நச்.)

ஐகாரக்குறுக்கம் மொழி இடைகடைகளில் ஒருமாத்திரை அளவிற்கு ஒலிப்பது முண்டு. குற்றுகரம் புணர்மொழியிடை முற்றியலுகரமாய் ஒருமாத்திரை அளவிற்றாகும். (57, 409 இள.)

ஒளகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒருமாத்திரை அளவினவாக ஒலிக்கும் என்பது நன்னூல். (98)

ஓர் மயக்க வகை -

{Entry: A01__612}

மகரஈறான அஃறிணைப் பெயர்களுள் சில னகரத்தோடு உறழ்ந்து வரும் என்பது ஓர் மயக்கவகை உணர்த்தலாம்.
எ-டு: நிலம் - நிலன்.

மொழி முதலிலும் இடையிலும் நின்ற அகர ஐகாரங்கள் தம்மில் வேறுபாடின்றிச் சகர ஞகர யகரங்களின் முன் வரின் ஒக்கும் என்பதும் அது. எ-டு : பசல் - பைசல்; மஞ்சு - மைஞ்சு; மயல் - மையல்; அரசு - அரைசு; இலஞ்சி - இலைஞ்சி; அரயர் - அரையர்.

ஐகாரம் யகரம் என்ற இவற்றின்வழியே வரும் நகரத்துடன் ஞகரம் உறழும் என்பாருமுளர்.

எ-டு : ஐந்நூறு - ஐஞ்ஞூறு; மெய்ந் நன்று - மெய்ஞ் ஞன்று (நன். 121 - 123 மயிலை.)

ஓரெழுத்தொரு மொழி -

{Entry: A01__613}

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள - என்ற நெட்டெழுத்துக்கள் ஏழும் எழுத்தாம் தன்மையன்றிச் சொல்லாம் தன்மையும் பெறும் ஆற்றல ஆதலின், ஓரெழுத்தொரு மொழிகளாம்.

ஆ - பசு; ஈ - கொடு; ஊ- இறைச்சி; ஏ- அம்பு; ஓ - மதகுநீர் தாங்கும் பலகை; ஐ - வியப்பு; ஒள- அவை (ஒளகாரம் உயிர் மெய்க்கணல்லது வாராது என்பதே நச். கருத்து)

இனி, குற்றெழுத்துக்களுள் அ இ உ - சுட்டிடைச் சொற் களாகவும், எகரம் வினாஇடைச்சொல்லாகவும், ஒகரம் ஒப்பிடுதலைக் குறிக்கும் பகுதியாகவும் வரினும் இவை இடைச்சொற்களாதலின், பெயர் வினைகளாக வரும் நெட்டெழுத்துக்களை ஒத்த சிறப்பில. (தொ.எ. 43, 44 நச்.)

உயிர் நெட்டெழுத்துக்களிலும் ஒளகாரத்தை விலக்கி ஏனைய ஆறனையும் கொள்வதே தொல்காப்பியனார் கருத்தாம். அவர் ஒளகாரத்தை ‘ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிர்’ என்பர். (தொ.சொ. 281 சேனா.)

உயிர் வருக்கத்தில் ஆறு, மகர வருக்கத்தில் ஆறு, த ப ந - வருக்கங்களில் ஐவைந்து, க வ ச வருக்கங்களில் நந்நான்கு, யகர வருக்கத்தில் ஒன்று - ஆகிய நெடில்கள் 40, நொ து - என்னும் குறில்கள் இரண்டு - ஆக நாற்பத்திரண்டும் ஓரெழுத்தொரு மொழிகளாம். இவை சிறப்புடையன. சிறப்பில்லாதன பிறவுமுள.

வருமாறு : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ; மா மீ மூ மே மை மோ; தா தீ தூ தே தை; பா பூ பே பை போ; நா நீ நே நை நோ; கா கூ கை கோ; வா வீ வை வெள; சா சீ சே சோ;யா; நொ து - என்பன.

உயிர்க்குற்றெழுத்துக்கள் ஐந்தும், குவ்வும், கௌ வெள பீ சை என்னும் உயிர்மெய்நெட்டெழுத்துக்களும் சிறப்பில.

(நன். 129 இராமா.)

இவற்றின் பொருள்:

ஆ - பசு; ஊ- இறைச்சி; ஏ-அம்பு; ஐ- வியப்பு; ஓ- மதகுநீர் தாங்கும் பலகை; மீ, மே - மேல்; மூ- மூத்தல் என்பதன் பகுதி; மோ - மோத்தல் என்பதன் பகுதி; தூ - பற்றுக்கோடு; தே- தெய்வம், பா- பாட்டு; பே- நுரை; நே - அன்பு; நை- வருந்து; நோ- நோய்; கூ-பூமி; கோ- அரசு; வீ- மலர்; வை- கூர்மை; வெள- கைக்கொள்; சீ- நீக்கு; சே-எருது; சோ- அரண்; யா- யாவை; நொ-துன்பப்படு; து-உண். இவையாவும் தமக்குத் தாமே முதலும் இறுதியும் ஆவன. (நன். சங். 129)

தொல்காப்பியனார் உயிர்மெய்யை விடுத்து நெடில் ஏழுமே ஓரெழுத்தொருமொழிகள் என்றும், குற்றெழுத்து ஐந்தும் மொழியாக நிறைந்து நில்லா என்றும் கூறினார். எனவே, குற்றெழுத்துக்களுள் அ இ உ - சுட்டாகவும் எ வினாவாகவும் வரும் என்ற கருத்துப்படவும் உயிர் வருக்கத்திற்கே ஓரெழுத் தொருமொழி கூறியுள்ளார். ( தொ. எ. 43, 44 நச்.)

இனி, சிறப்பில்லனவும் ஓரெழுத்தொருமொழியுள் சில உளவாயின. அவை ஆறாம் உயிரும், பகர ஈகாரமும், சி சூ சை கௌ வெள- என்பன போல்வனவும் கொள்க. (நன். 128 மயிலை.)

வகரஈற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான் உணர்த்தி நிற்றலான் ஒள என்னும் ஓரெழுத்தொரு மொழியும், சுட்டு - வினா- உவமைப் பொருளைத் தரும் இடைச்சொல் - ஆதலான் குற்றுயிர் ஐந்தான் ஆகிய ஓரெழுத்தொருமொழி களும், கௌ- என்னும் உயிர்மெய்யானாய ஓரெழுத்தொரு மொழியும், இவைபோல்வன பிறவும் சிறப்பில்லன எனக் கொள்க. (நன். 129 சங்கர.)

ஒள section: 6 entries

ஒள -

{Entry: A01__614}

இது நெடுங்கணக்கின்உயிர்வரிசையில் பன்னிரண்டாவ தாகிய இறுதி யெழுத்தாம். இஃது அங்காத்தலோடு இதழ் குவிதலால் பிறக்கும் ஐந்தெழுத்துக்களுள் ஒன்று. இஃது அளபெடுப்புழி உகரம் இசைநிறைக்க வரும். இஃது அள பெடுக்குங் காலத்தும் அளபெடை இன்றி வருங்காலத்தும் பொருள் வேறுபடுதலுண்டு எனத் தொல்காப்பியம் கூறும். ‘அஉ’ என்பது ஒளகாரத்தின் போலிவடிவாம்; ‘அவ்’ என்பதும் அது. ஒளகாரம் மொழி முதற்கண் குறுகும் என்பர் சிலர். ‘அஉவ்’ என்பவற்றின் கூட்டம் ஒளகாரம் என்பர் சிவஞான முனிவர் (சூ. வி. பக். 25). உயிரெழுத்துக்களுள் தனித்து இறுதியில் வாரா எழுத்து இஃது.

ஒளகாரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: A01__615}

ஒளகாரஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும், வருமொழி வன்கணம் வரின் உகரப்பேறும் வல் லெழுத்தும், மென்கணம் இடைக்கணம் வரினும் உகரப் பேறும்எய்திப் புணரும். சிறுபான்மை உருபு புணர்ச்சிக்கு வகுத்த இன்சாரியை பெற்றும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி நிகழும்.

எ-டு : கௌவுக் கடிது, கௌவுச் சிறிது, கௌவுத் தீது, கௌவுப் பெரிது; கௌவு ஞான்றது, நீண்டது, மாண்டது; கௌவு யாது, வலிது, - என அல் வழிக்கண்ணும்; கௌவுக்கடுமை, கௌவுச்சிறுமை, கௌவுத்தீமை, கௌவுப்பெருமை; கௌவுஞாற்சி, நீட்சி, மாட்சி; கௌவுயாப்பு, வலிமை; - என வேற்றுமைக்கண்ணும் உகரம் பெற்றும், வன்கணம் வரின் வல்லெழுத்தும் உடன்பெற்றும் புணர்ந்த வாறு. (உயிர்க்கணம் வரின் உகரம் பெறாது உடம்படு மெய் பெற்றே முடிதல் கௌவழகிது, கௌவழகு - என இருவழியும் கொள்க.)

இனி, வேற்றுமைப் பொருட்புணர்ச்சி இன்சாரியை பெற்று, கௌவின் கடுமை, கௌவின் ஞாற்சி, கௌவின் வலிமை, கௌவினருமை- என முடிந்தவாறும் காண்க. (தொ. எ. 295 நச்.)

ஒளகாரஈறு உருபொடு புணர்தல் -

{Entry: A01__616}

ஒளகாரஈற்றுச் சொல் இன்சாரியை பெற்று உருபேற்கும்.

எ-டு : கௌவினை, கௌவினொடு, கௌவிற்கு.... கௌவின் கண் (தொ. எ. 173 நச்.)

ஒளகாரஈறு முன்னிலைவினைக்கண் வாராமை -

{Entry: A01__617}

ஒளகாரஈறு முன்னிலை ஒருமை ஏவற்கண் வாராது. அஃது அவ்வாறு வருவதாயின் உகரச்சாரியை பெற்றே வரும்; வன்கணம் வரின் உறழ்ந்து முடியும்.

எ-டு : கௌவு கொற்றா, வெளவு சாத்தா, வெளவு தேவா, வெளவு பூதா; கௌவுக் கொற்றா, வெளவுச் சாத்தா.... (தொ. எ. 152 நச்.)

ஒளகாரக் குறுக்கம் -

{Entry: A01__618}

ஒளகாரக் குறுக்கம் வருமாறு: ஒளவை, பௌவம் - என முதற்கண் ஒளகாரம் குறுகிற்று. இடையும் ஈறும் வந்தவழிக் கண்டுகொள்க.

‘மும்மை இடத்தும் ஐஒளவும் குறுகும்’ என எங்கும் ஒட்டிக் கொள்க. (ஐகாரம் மொழி மூவிடத்தும் குறுகுமாறு போல, ஒளகாரமும் மொழி மூவிடத்தும் வந்து குறுகும் என்பது நேமிநாத ஆசிரியர் கருத்து. ஒளகாரம் மொழி இடைகடை களில் வாராமையின் அவ்விடங்களில் ஒளகாரக் குறுக்கம் இன்று என்பது தெளிவு.) (நேமி. எழுத். 4 உரை)

‘ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்’ காண்க.

ஒளகாரம் அளபெடுத்தும் அளபெடாதும் வருதல் -

{Entry: A01__619}

ஒளஒள இனிச் சாலும் - மாறுபாடு; ஒளஉ இனி வெகுளல் - போதுமானது என்ற குறிப்பு; ஒளஉ ஒருவன் இரவலர்க்கு ஈத்தவாறு - வியப்பு (சொ. 281 சேனா.)

கௌ - ‘நினக்குக் கருத்தாயின் கைக்கொள்’ என்ற ஐயப் பொருள்; கௌஉ - ‘கைக்கொண்டேவிடு’ என்ற துணிவுப் பொருள்; வெள - ‘நினக்குக் கருத்தாயின் கைப்பற்று’ என்ற ஐயப்பொருள்; வெளஉ - ‘கைப்பற்றியேவிடு’ என்ற துணிவுப் பொருள். (சொ. 283 நச்.)

க section: 82 entries

கடப்பாடு அறிதல் -

{Entry: A01__620}

கடப்பாடு - தொன்றுதொட்டு வரும் மரபு. கடப்பாடு அறிதல் - தொன்றுதொட்டு வரும் நெறிமுறையை அறிதல். (தொ. எ. 37 நச்.)

கடைக்குறை -

{Entry: A01__621}

ஒரு பகாப்பதம் ஈற்றில் குறைந்துநின்று குறையாத சொல்லின் பொருள் தந்து செய்யுளில் பயன்படுவது கடைக்குறை என்னும் விகாரமாம்.

எ-டு : ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ (நீலம் என்பதன் கடைக் குறை ‘நீல்’ என்பது) (நன். 156)

கண்கால் புறம் முதலியன -

{Entry: A01__622}

கண், கால், புறம் - முதலியன பெயராயும் வேற்றுமையுருபாயும் நிற்கும். உருபாயவழி உருபின் செய்கையும் பெயராயவழிப் பெயரின் செய்கையும் கொடுக்க. (தொ. எ. 202 நச். உரை)

கண்ணிமை அளவு -

{Entry: A01__623}

இயல்பாக ஒருமுறை இரு கண்களும் இமைத்தற்கு நிகழும் கால அளவு. இஃது எழுத்தொலி அளவு காண்பதற்கு ஒரு மாத்திரை என்னும் அளவினைக் குறிப்பதாம். (தொ. எ. 7 நச்.)

கம்: புணருமாறு -

{Entry: A01__624}

கம் என்பது கம்மியரது தொழில். இத்தொழிலை உணர்த்தும் கம் என்ற சொல் இருவழியும், தொழிற்பெயர் போல, வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும் பெற்றுப் புணரும்.

எ-டு : கம்முக் கடிது, கம்மு மாண்டது, கம்மு வலிது - அல் வழி; கம்முக்கடுமை, கம்முமாட்சி, கம்முவலிமை - வேற்றுமை; யகரம் வருவழி கம் யாது, கம் யாப்பு - என இருவழியும் இயல்பாகப் புணரும்; உயிர் வருவழி மகரம் இரட்டித்து கம் மடைந்தது, கம்மடைவு - எனப் புணரும். (தொ.எ.328 நச். உரை) வேற்றுமைக்கண் பெயர் வருமொழியாக நிகழின், அக்குச் சாரியை இடையே பெற்றுக் கம்மக்குடம், கம்மநெருப்பு, கம்மவிறகு - என்றாற் போலப் புணரும். (329 நச். உரை)

கமுகந் தோட்டம்

{Entry: A01__625}

தோட்டத்துள் பிற மரம் செடிகொடிகள் உளவாயினும், மிகுதி பற்றிய வழக்கால் கமுகந்தோட்டம் எனப்படுமாறு போல, உயிரீற்றுப் புணரியலுள் புணரியல் பற்றிய பிற பொதுச் செய்திகள் இடம் பெறினும், பெரும்பான்மையும் உயிரீற்றின் முன் வருமொழிப் புணர்ச்சியே கூறப்படுதலின், அப்பெயர், மிகுதி பற்றிய வழக்கால் வந்தது. (நன். 151 சங்கர.)

கரியவை முதலிய சொற்கள் உருபேற்றல் -

{Entry: A01__626}

யாவை என்ற வினாப்பெயர் இறுதி ஐகாரம் வகரத்தொடும் கெட வற்றுச் சாரியை பெற்று யாவற்றை - யாவற்றொடு - என முடிவது போல, ஐகார ஈற்றுப் பண்புகொள் பெயர்களாகிய கரியவை - நெடியவை - குறியவை - முதலியனவும் ஈறு மெய் யொடும் கெட, வற்றுச்சாரியை இடையே பெற்றுக் கரிய வற்றை - நெடியவற்றை - குறியவற்றை - என்றாற் போல உருபொடு புணரும். இவை கருமை - நெடுமை - குறுமை - முதலிய பண்புப் பெயரன்றிக் கரியவை - நெடியவை - குறியவை - முதலான பண்பு கொள் பெயராக நின்று ‘வை’ கெட்டு ‘வற்றுப்’ பெற்றுப் புணர்ந்தன. (தொ.எ. 178 நச். உரை)

கருவியின் நால் வகைகள் -

{Entry: A01__627}

அகக்கருவி, அகப்புறக்கருவி, புறக்கருவி, புறப்புறக்கருவி - எனக் கருவி நால்வகைப்படும். இவை முறையே புணர்ச்சிக்குரிய நிலைமொழி பற்றி வரும்விதிகளைக் கூறுவன, புணர்ச்சி யிலக்கணம்- திரிபு- புணர்ச்சிவகை- சாரியை- முதலியன பற்றிக் கூறுவன, நிலைமொழி வருமொழிகளாய் நிற்கும் மொழிகளைக் கூறுவன, மொழிகள் ஆதற்குரிய எழுத்துக் களின் இலக்கணமும் பிறப்பும் கூறுவன ஆம்.

(தொ.எ. 1 நச். உரை)

கன்:புணருமாறு -

{Entry: A01__628}

கன் என்பது கன்னாருடைய தொழிலையும், கன்னானையும், செம்பு என்ற உலோகத்தினையும் குறிப்பதாகும். அஃது அல்வழிக்கண் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர்வரின் னகரம் இரட்டுதலும் பெற்று முடியும்.

எ-டு : கன்னுக் கடிது; கன்னு நன்று, கன்னு வலிது; கன் யாது; கன் னரிது.

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் அல்வழிக்கோதிய விதியும் பெறும்; உகரச்சாரியையை விடுத்து அக்குச்சாரியை பெறுதலு முண்டு.

எ-டு : கன்னுக்கடுமை, கன்னக்கடுமை, கன்னக்குடம், எனவும்; கன்னுஞாற்சி, கன்னஞாற்சி - எனவும்; கன்னுவன்மை, கன்னவன்மை - எனவும் வரும்.

(தொ. எ. 345, 346, நச். உரை)

யகரம் வருவழி இயல்பாகவும், உயிர் வருவழி னகரம் இரட்டித்தும் புணரும். எ-டு : கன்யாப்பு, கன்னருமை

சிறுபான்மை அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல் லெழுத்தும், மென்கணத்து அகரமும் கொள்ளப்படும்.

எ-டு : கன்னங் கடிது, கன்ன ஞான்றது, கன்ன மாண்டது

கன்னங்கடுமை எனச் சிறுபான்மை குண வேற் றுமைக்கண்ணும் வரும். (345, 346 நச். உரை)

மின் - பின் - பன்- எனும் னகரஈற்றுப்பெயர் போலவே, கன் என்னும் நிலைமொழியும், இருவழிக்கண்ணும் தொழிற்பெயர் போலவே உகரம் பெற்று முடியும். கன் என்பது வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின், பொருட் பெயரொடு புணருங் கால் அகரம் பெற்று வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : கன்னுக் கடிது, கன்னுச் சிறிது கன்னுத் தீது, கன்னுப் பெரிது; கன்னு ஞான்றது, கன்னு நீண்டது, கன்னு மாண்டது; கன்னு வலிது - அல்வழி

கன்னுக்கடுமை, கன்னுச்சிறுமை, கன்னுத்தீமை, கன்னுப்பெருமை; கன்னுஞாற்சி, கன்னுநீட்சி, கன்னு மாட்சி; கன்னுவலிமை - வேற்றுமை

கன்னக்குடம், கன்னச்சாடி, கன்னத்தூதை, கன்னப் பானை - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி

இனி, குணப்பெயரொடு புணருங்காலத்தும், சிறுபான்மை அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும், அகரமும் மெல் லெழுத்தும் பெற்று முடிதலும் கொள்க. கன்னக் கடுமை, கன்னங்கடுமை - எனவரும். (இ.வி.எழுத். 127)

கா என்னும் நிறைப்பெயர் புணருமாறு -

{Entry: A01__629}

கா என்னும் நிறைப்பெயர் குறை என்ற வருமொழியொடு புணரும்வழி, இடையே இன்சாரியை பெறும். காவின் குறை - எனவரும். இஃது உம்மைத்தொகை. சிறுபான்மை காக்குறை எனச்சாரியை பெறாது வல்லெழுத்து மிகுதலுமுண்டு. (தொ. எ. 169 நச். உரை)

காரியகால பக்கம் -

{Entry: A01__630}

இஃது அதிகாரத்தின் இருவகையுள் ஒன்று. அரசனுடைய படையில் தாமே சென்று நடத்தும் தண்டத்தலைவரைப் போல, ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடும் சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது காரியகால பக்கமாம்.

எ-டு : ‘குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்’ (தொ.எ.34 நச்.) என்ற நுற்பாவிலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற சொற்றொடர் ‘குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்தே’ (36 நச்.) என்ற நுற்பாத் தொடரொடு சென்றியைந்து பொருள் பயப்பிப்பது போல்வன. ஏனைய வகை யதோத்தேச பக்கமாம். (சூ.வி.பக். 17)

காலப்பெயர்ப் பகுபதம் -

{Entry: A01__631}

காரான், காராள், காரார், காரது, காரன, காரேன், காரேம், காராய், காரீர் - என இவ்வாறு வருவன, இக்காலத்தை யுடையார் என்னும் பொருண்மைக் காலப்பெயர்ப் பகுபத மாம். (கார் என்னும் காலப்பெயர் அடியாக இவை பிறந்தவை) (நன். 133. மயிலை.)

காலம் காட்டும் விகுதிகள் -

{Entry: A01__632}

று, றும் - இரண்டும் இறப்பும் எதிர்வும் காட்டும்.

எ.டு : சென்று, சென்றும் (சென்றேன், சென்றோம்); சேறு, சேறும் (செல்வேன், செல்வோம்).

து,தும் - இரண்டும் அவ்விரு காலமும் காட்டும்.

எ-டு : வந்து, வந்தும் (வந்தேன், வந்தோம்); வருது, வருதும் (வருவேன், வருவோம்)

டு, டும்- இரண்டும்இறப்பினைக் காட்டும்.

எ-டு : உண்டு, உண்டும் (உண்டேன், உண்டோம்)

கு, கும்- இரண்டும் எதிர்வினைக் காட்டும்.

எ-டு : உண்கு, உண்கும் (உண்பேன், உண்போம்)

மின், ஏவல்வினைகளின் ஈறுகள், வியங்கோள், இ, மார் - இவை எதிர்வினைக் காட்டும்.

எ-டு : உண்மின், உண்- தின்- செல்- வா, உண்க, உண்ணுதி, உண்மார் (வந்தார்)

பவ்விகுதி இறப்பும் எதிர்வும் காட்டும்.

எ-டு : உண்ப

செய்யும் என்னும் முற்று நிகழ்வும் எதிர்வும் காட்டும்.

எ-டு : (குதிரை) உண்ணும்

எதிர்மறை ஆகாரவிகுதி முக்காலமும் காட்டும்.

எ-டு : உண்ணா (நன். 145)

கிருத்து

{Entry: A01__633}

வினைப்பகுதிமேல் வரும் பெயர்விகுதி கிருத்து எனப்படும்.

எ-டு : நடப்பது, செல்பவன் - என்பவற்றிலுள்ள துவ்விகுதி, அன்விகுதி போல்வன. (சூ. வி. பக். 55)

‘கிளந்த அல்ல செய்யுளுள் திரிந’ -

{Entry: A01__634}

எடுத்து ஓதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவன என்பது இச்சொற்றொடரின் பொருள். அவை வருமாறு:

அகரஈற்று உரிச்சொல் தடவுத்திரை, தடவுநிலை - என வருதல்.

அதவத்தங்கனி - என அகரஈற்றுப் பெயர் அத்துப் பெறுதல்.

நறவங் கண்ணி, குரவம் நீடிய - என ஆகாரஈற்றுப் பெயர் அகரமாகக் குறுகி அம்முச்சாரியை பெறுதல்.

முழ, இர, சுற- என ஆகாரஈறு குறுகி உகரம் பெறாது வருதல்.

கள்ளியங்காடு - என இகரஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெறுதல்.

‘தீயின் அன்ன’ - என ஈகாரஈறு வேற்றுமைக்கண் இன் பெறுதல்.

‘திருவத்தவர்’ - என உகரஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெறுதல்.

‘ஏப் பெற்ற மான்’- என ஏகாரம் வேற்றுமைக்கண் எகரப்பேறின்றி வருதல்.

‘கைத்து உண்டாம் போழ்து’, ‘கைத்து இல்லவர்’- என ஐகார ஈறு அத்துப் பெற்று வருதல்.

புன்னையங்கானல், முல்லையந்தொடையல் - என ஐகார ஈறு அம்முப் பெறுதல்.

கோயில் - என ஓகாரஈறு யகர உடம்படுமெய் பெறுதல்.

அகம்+ செவி = அஞ்செவி என அல்வழிக்கண் ககரஒற்றும் மகரமும் கெடுதல்.

மரவம் பாவை, மரவ நாகம் - என இருவழியும் மரம் என்பதன் மகரம் கெட அம்முப் பெறுதல். (மரத்தால் ஆனபாவை, நாகமரம்)

கான்- பொன்- என்பன, கானம் - பொன்னந்திகிரி - பொன்னங் குவடு - என னகரஈறு இருவழியும் அம்முப் பெறுதல்.

‘வெதிரத்து நரல் இசை’ - என ரகரஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெறுதல்.

‘நாவலந் தண்பொழில்’- ‘கானலம் பெருந்துறை’- என லகர ஈறு வேற்றுமையில் அம்முப் பெறுதல்.

நெய்தலஞ் சிறுபறை - என அல்வழிக்கண் லகரஈறு அம்முப் பெறுதல்.

அவ் + இடை = ஆயிடை - என வகர ஒற்று வேறுபட முடிதல்.

தெவ் +முனை = தெம்முனை - என வகரம் கெட்டு மகரம் பெற்று முடிதல்.

அ என்னும் சுட்டு ‘அன்றி’ எனத்திரிதல்.

கோங்கின் முகை, தெங்கின் பழம் - எனக் குற்றியலுகர ஈறு ‘இன்’ பெறுதல். (தொ. எ. 483. நச் உரை)

ஆரங்கண்ணி - என ஆர் என்ற ரகரஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்று முடிந்தது.

முளவு மா, பிணவு நாய் - என அல்வழிக்கண் மென்கணம் வந்துழி, ‘குறியதன் இறுதிச்சினை’ கெட்டு உகரம் பெற்று முடிந்தன.

‘அருமருந்தன்னான்’ எனற்பாலது, அருமருந்தான் அரு மந்தான் - என மரூஉவாய் முடிந்தது.

சோணாடு - மலாடு - என்பனவும் சோழனாடு - மலைய-மானாடு -என்பவற்றின் மரூஉமுடிபாம். பொதுவில் எனற் பாலது பொதியில் என முடிந்ததும் அது. (483 இள. உரை)

கிளைப்பெயர்கள் புணருமாறு. -

{Entry: A01__635}

கிளைப்பெயர்கள், ணகரம் - னகரம்- குற்றியலுகரம்- என்ற மூன்று ஈற்றன. கிளைப்பெயராவன ஓரினத்தை உணர்த்தும் பெயர்கள். உயர்திணையில் இவை திரிபின்றி வருமொழி யொடு புணரும்.

எ-டு : உமண்குடி, சேரி, தோட்டம், பாடி

எயின்குடி, சேரி, தோட்டம், பாடி

புரோசுகுடி, சேரி, தோட்டம், பாடி

பார்ப்பு + குழவி = பார்ப்பனக் குழவி - என அன்சாரியையும் அக்குச் சாரியையும் பெற்றது. இது பார்ப்பினுள் குழவி - என வேற்றுமை முடிபிற்று.

அரசு + அக்கு+ கன்னி = அரசக்கன்னி, என அக்குச்சாரியை பெற்றது. (தொ. எ. 307, 338, 418 நச்.)

எயினக்கன்னி என னகரஈறு அக்குப் பெறுதலும், வெள்ளா ளன்+ குமரி = வெள்ளாண்குமரி - எனவும் வேளாண்குமரி எனவும் முடிதல் போல்வனவும் கொள்ளப்படும்.(338 நச். உரை)

கீழ்:புணருமாறு -

{Entry: A01__636}

கீழ் என்ற சொல் வருமொழி வன்கணம் வரின் இயல்பாகவும் மிக்கும் புணரும்; இயல்பே வலியுடைத்து.

எ-டு : கீழ் + குலம் = கீழ்குலம், கீழ்க்குலம் (கீழாகிய குலம் எனப் பண்புத்தொகையாதலின் அல்வழிப்புணர்ச்சி என்க.) (கிழக்கு என்னும் திசைப்பெயரின் திரிபாகிய கீழ் வேறு: கீழ்மைப்பண்பினைக் குறிக்கும் இந்நிலை- மொழி வேறு.) (நன். 226)

கீழ்மை என்னும் பண்பொடு வருமொழி புணர்தல் பதவியலுள் முடித்துப் போந்தமையின், ‘கீழிருந்தும் கீழ்அல்லார் கீழ் அல்லவர்’ (குறள் 973) என்றாற் போலக் கீழ் என்பது ஈண்டுப் பண்பாகுபெயராம். ஆகவே, கீழ்குலம் கீழ்க்குலம், கீழ்சாதி கீழ்ச்சாதி - என்னும் இத்தொடர்கள் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம் என்க. (226 சங்கர.)

கீழ் என்பது நிலைமொழியாக வருமொழி முதலில் வன்கணம் வருமாயின் வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும் என்றஇரு நிலையும் பெற்றுப் புணரும்.

எ-டு : கீழ்க்குளம், கீழ்குளம்; கீழ்ச்சேரி, கீழ்சேரி; கீழ்த் தோட்டம், கீழ்தோட்டம்; கீழ்ப்பாடி, கீழ்பாடி (தொ. எ. 395 நச்.)

நெடுமுதல் குறுகாது உகரம் பெற்றுக் கீழு குளம், கீழுசேரி, கீழு - தோட்டம், கீழுபாடி - எனவும் வரும். (396 இள. உரை)

குணசந்தி -

{Entry: A01__637}

அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் இகர ஈகாரங்கள் முதலாகிய சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஏகாரம் வரும்.

எ-டு : நர+இந்திரன் = நரேந்திரன்; உமா+ஈசன்= உமேசன்

அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் உகர ஊகாரங்கள் முதலாகிய சொல் வரின், நிலைமொழியிறுதி யும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஓகாரம் வரும்.

எ-டு : தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ உற்பத்தி = கங்கோற் பத்தி. (மு. வீ. மொழி. 39, 40)

அகரஆகாரங்களில் ஒன்றன் முன்னர் இகரஈகாரங்களில் ஒன்று வந்தால் ஏகாரமும், அவ்விரண்டில் ஒன்றன் முன் உகர ஊகாரங்களில் ஒன்று வந்தால் ஓகாரமும்முறையே நிலைப்பத ஈறும் வரும்பத முதலும் கெடத் தோன்றுதல் குணசந்தியாகும்.

எ-டு : சுர+ இந்திரன் = .சுரேந்திரன், நர + இந்திரன் = நரேந்திரன்; தரா + இந்திரன் = தரேந்திரன், சர்வ + ஈசுரன் = சர்வேசுரன்; உமா + ஈசன் = உமேசன், சித + இந்து= சிதேந்து;

அமல + உற்பவி = அமலோற்பவி, மகா + உதரம் = மகோதரம்; சுத்த + உதகம் = சுத்தோதகம், ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன்; மந்திர + ஊகி = மந்திரோகி, தாம + உதரன் = தாமோதரன்; தயா + உற்பத்தி = தயோற்பத்தி, தயா + ஊர்ச்சிதன் = தயோர்ச்சிதன். (தொ.வி. 38 உரை)

குணப்பெயர்ப் பகுபதம் -

{Entry: A01__638}

செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன், செய்யேம், செய்யாய், செய்யீர், - என இவ்வாறு வருவன இக்குணத்தையுடையார் என்னும் பொருண்மைக் குணப்பெயர்ப் பகுபதமாம். (ஈண்டுச் செம்மை என்ற குணப்பண்பின் அடியாக இப்பெயர்ப் பகுபதங்கள் பிறந்தன.) (நன். 133 மயிலை.)

குமிழ் என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: A01__639}

குமிழ் என்ற மரப்பெயர்,பீர் என்ற கொடியின் பெயர் போல, ஒருவழி மெல்லெழுத்தும், ஒருவழி அம்முச்சாரியையும் பெற்றுப் புணரும்.

எ-டு : குமிழ்ங்கோடு, குமிழங்கோடு (தொ. எ. 386 நச்.)

குயின், ஊன் புணர்ச்சி -

{Entry: A01__640}

இவ்விருவகைப் பெயரும் இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் வருமொழி முதல் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். குயின் - மேகம்: ஊன் - இறைச்சி.

எ-டு : குயின் கடிது,சிறிது, தீது, பெரிது - அல்வழி

குயின்கடுமை, சிறுமை, தீமை, பெருமை - வேற்றுமை

ஊன் கடிது, சிறிது, தீது பெரிது - அல்வழி

ஊன்கடுமை, சிறுமை, தீமை, பெருமை - வேற்றுமை (நன். 216)

குயின் என்ற சொல் புணருமாறு -

{Entry: A01__641}

குயின் என்பது மேகத்தை உணர்த்தும் சொல். அது வேற்றுமைக் கண் வன்கணம் வரும்வழியும் திரியாது இயல்பாய்ப் புணரும்

எ-டு : குயின்குழாம், செலவு, தோற்றம், பறைவு (தொ. எ. 335 நச்.)

குற்றியலிகரம் (1) -

{Entry: A01__642}

நாகு யாது - என்ற தொடரில், கு ஒரு மாத்திரை பெற்ற முற்றியலுகரம். அது கெட, அதனிடத்து இகரம் வந்து ஒலி குன்றி அரைமாத்திரை அளவிற்றாய குற்றியலிகரம் ஆகும். ஆகவே, குற்றியலுகரமே குற்றியலிகரமாகத் திரியும் என்று நன்னூல் முதலியன கூறும் செய்தி தொல்காப்பியனார் கருத்தன்று.

குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணும் தொடர்மொழிக் கண்ணும் வரும். ஒருமொழிக்கண் முன்னிலை அசைச்சொல் லாகிய மியா என்பதன் மகரத்தை ஊர்ந்து வரும் இகரம் குற்றியலிகரமாம்.

குற்றியலுகரம் இருமொழிக்கண் இடையே வருமிடத்து முற்றியலுகரமாம். நிலைமொழியீற்று உகரம் கெட, அவ் விடத்து நாகு + யாது = நா கியாது எனக் குற்றியலிகரம் வரும். (தொ. எ. 409, 411 இள.)

குற்றியலிகரம் செய்யுளில் மெய் போல அலகு பெறாது; மெய் அளபெடுத்தல் போல் அளபெடுக்காது. குற்றியலிகரத்துக்கும் முற்றியலிகரத்துக்கும் இடையே பொருள் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டைக் கற்போர் எளிதாக உணரவேண்டிக் குற்றியலிகரத்தின் மேல் புள்ளியிட்டுக் காட்டுப.

நாடி )யாது, கொக்கி )யாது, குறும்பி )யாது - குற்றியலிகரம்

நாடி யாது, கொக்கி யாது, குறும்பி யாது - முற்றியலிகரம் (எ. ஆ. பக். 89) (செய். 4 நச். உரை)

குற்றியலிகரம் (2) -

{Entry: A01__643}

ஒருமாத்திரை பெற்ற இகரம் தன் மாத்திரை குறைந்து அரையாக ஒலிப்பது குற்றியலிகரமாம். வருமொழி முதலில் யகரம் வர, நிலைமொழி ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ் விகரம் குற்றியலிகரமாம். மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லின் மகரத்தை ஊர்ந்து நின்ற இகரமும் தன் மாத்திரையில் குறைந்தொலிக்கும் குற்றியலிகரமாம். ஈற்றுக் குற்றியலுகரம் 36 ஆதலின் அவ் வகையால் வருவனவும், அசைச்சொல் மியாவின்கண் வருவதும் என இவ்வாறு குற்றியலிகரம் 37 ஆமாறு காண்க. (நன். 93)

குற்றியலிகரம், குற்றியலுகரம் சார்பெழுத்தாதல் -

{Entry: A01__644}

சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு போல, உயிரின் குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி வேற்றுமையானும், பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும் சிதையுமிடத்து அலகு பெறாமை யானும், குற்றியலிகர குற்றியலுகரங்கள் சார்பெழுத்து என உயிரின் வேறாயின. (இ.வி. 16)

குற்றியலிகரம், குற்றியலுகரம் : பெயர்க்காரணம் -

{Entry: A01__645}

கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், ‘போலும்’ என்புழி அரைமாத்திரையாய் நின்ற மகரம் ‘போன்ம்’ என லகரம் னகரமாய்த் திரிந்து ஈரொற்றுடன் நின்ற காரணத்தால் பின்னர்க் கால்மாத்திரையாய் நின்றாற்போல, முன்னர் ஒருமாத்திரையாய் நின்று பின்னர் ஒரு காரணம் பற்றி அரைமாத்திரை ஆகாமல், மகரமும் வல்லெழுத்துமாகிய மெய்யினைச் சார்ந்து என்றும் அரைமாத்திரையாயே நிற்கும் ஒரு தன்மைய ஆயினும், அப்பெற்றி உணராது, இவை அரை மாத்திரை பெறுதல் மகரக்குறுக்கம் போலச் செயற்கையால் போலும் என்று உலகம் மலையாமைப் பொருட்டு, இவை இங்ஙனம் ஆதல் இயல்பு என்பார், குற்றிகரம் குற்றுகரம் என்றொழியாது, குற்றியலிகரம் குற்றியலுகரம் என்று குறியிட்டார்.

‘இகரம் குறுகும்’, (தொ. எ. 410) ‘உகரம் குறுகிடன்’ (எ. 406) என்ற தொடர்களுக்கு, இகரம் அணுகும் (வந்து பொருந்தும்), உகரம் வந்து பொருந்தும் இடன் - என்பனவே பொருள். (சூ. வி. பக். 27)

குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகல் -

{Entry: A01__646}

குற்றியலிகரம் சொற்கள் புணர்ந்தியலும் நிலைமைக்கண் தனக்குரிய அரை மாத்திரையினும் குறுகி ஒலித்தற்கும் உரியது; குறுகி ஒலியாமையே பெரும்பான்மை என்க.

எ-டு : ஆடு+யாது= ஆடியாது; கவடு + யாது = கவடி யாது; தொண்டு+ யாது = தொண்டியாது - ஈண்டுக் குற்றியலிகரம் குறுகி ஒலித்தன.

தெள்கு + யாது = தெள்கியாது; நாகு+ யாது = நாகியாது - ஈண்டுக் குற்றியலிகரம் குறுகாது அரை மாத்திரையே ஒலித்தன.

முன்னவை குறுகும் என்றற்கும் பின்னவை குறுகா என்றற்கும் காரணம் வருமாறு: ஆடி (திங்கள்), கவடி (வெள்வரகு), தொண்டி (ஊர்) என்னும் (முற்றியல்) இகர ஈற்றுப் பெயர்கள் யாது என்னும் வருமொழியொடு புணருமிடத்து, ஆடியாது - கவடியாது - தொண்டியாது - என வரும். ஆதலின், ஆடு+யாது = ஆ டியாது. கவடு + யாது= கவ டியாது, தொண்டு + யாது = தொண் டியாது - என வரும் இவ்விருதிறத்திற்கும் வேற்றுமை புலப்பட வேண்டி, குற்றியலுகரம் கெட ஆண்டுத் தோன்றும் ஆடி - கவடி - தொண்டி - என்னும் குற்றியலிகரத்தின் மாத்திரை அரையினும் குறுகிக் காலாக ஒலிக்க வேண்டுவ தாயிற்று. திங்கட் பெயராகிய ஆடி முதலியவற்றது இயல்பு இகர ஈற்றினை ஒரு மாத்திரையளவிற்கு இசைத்தல் வேண்டும்.

இனித் தெள் கியாது - நா கியாது - என்பவை குறுகாமைக்குக் காரணம், தெள்கி - நாகி - என்பன இயற்பெயர்கள் ஆகாமை யால் நிலைமொழி தெள்கு - நாகு - என ஐயமின்றி உணரப் படும் ஆதலின், அவை அரை மாத்திரையாகவே குறையாது ஒலிக்கும் என்றவாறு. (தொ.எ.35. ச. பால.)

குற்றியலிகரம் ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்’தாதல் -

{Entry: A01__647}

குற்றியலிகரம் தனிமொழிக்கண்ணே யன்றி, நிலைமொழி வருமொழியொடு புணர்தல் இயன்ற நிலைமையாகிய தொடர் மொழிக்கண்ணும் வந்து பொருந்துதல் உடையதாம். இங்ஙனம் வருவது இருமொழிக் குற்றியலிகரம் ஆம்.

குறுகுதல் - அணுகுதல், வந்து பொருந்துதல்.

குற்றியலிகரம் ஆய்தம் போல வேறெழுத்தாவதாம்; அன்றி, ஒரு மாத்திரை பெற்று நின்ற இகரம், மகரக்குறுக்கம் போல, ஒரு காரணம் பற்றி அரைமாத்திரையாய்க் குறைந்து நின்றதன்று. (சூ. வி. பக். 27, 28)

குற்றியலிகரம் முதலியன தமிழ்ச்சிறப்பெழுத்து ஆதல் -

{Entry: A01__648}

இங்கு (பெருங்காயம்), ஏது தாது என்பன குற்றியலுகர ஈறு போல இருப்பினும், அவை வடசொல்லாதலின் முற்றியலுகர ஈற்றனவே, குற்றியலுகர ஈற்றன அல்ல என்க. எனவே, குற்றிய லுகரம் திரிந்து குற்றியலிகரம் ஆதலும் வடமொழிக்கண் இல்லை. ஆய்தம் தமிழ்ச்சிறப்பெழுத்து என்பது வெளிப்படை. ஆகவே, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் வடமொழிக்கண் காணப்படாத, தமிழிற்கே உரிய சிறப்பெழுத் துக்களாம். (சூ. வி. பக். 28)

குற்றியலிகர முற்றியலிகரம் பொருள் வேறுபாடு -

{Entry: A01__649}

நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக வருமொழி முதலில் யகரம் வரின், உகரம் கெடக் குற்றியலிகரம் பெற்றுப் புணரும்.

இயல்பான முற்றியலிகரச் சொல் முன்னரும் யகரம் வந்து புணரும்.

கொக்கு நாடு குறும்பு என்பன முதலான குற்றியலுகர ஈற்றுச்சொற்களும், கொக்கி நாடி குறும்பி என்பன முதலான முற்றியலிகர ஈற்றுச் சொற்களும், கொக்கியாது - நாடியாது -குறும்பியாது என்றே புணரும். நிலைமொழியீறு கி டி பி எனக் குற்றியலிகரம் ஆகியவழி, நிலைமொழிகள் கொக்கு நாடு குறும்பு என்பன; கி டி பி முற்றியலிகரம் ஆகியவழி நிலை மொழிகள் கொக்கி நாடி குறும்பி என்பன. (குறும்பு பாலைநிலத்தூர்; குறும்பி - புற்றம் பழஞ்சோறு)

குற்றியலுகர ஈற்று அல்வழிப்புணர்ச்சி -

{Entry: A01__650}

குற்றியலுகர ஈற்றுச் சொற்களெல்லாம் பெரும்பாலும் அவ்வழிக்கண் இயல்பாக முடியும்.

எ-டு : நாடு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது, குரங்கு கடிது - என வல்லொற்றுத் தொடர்மொழி நீங்கலாக ஏனையவை இயல்பாகப் புணரும்.

வல்லொற்றுத் தொடர்மொழி கொக்குக் கடிது என வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து இடையில் மிக்குப் புணரும்.

குற்றியலுகர ஈற்று வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் இயல்பாகப் புணரும்.

எ-டு : கிடந்தது குதிரை, கரிது குதிரை

குற்றியலுகர ஈற்று நிலைமொழி வன்கணம் வர இருபெய ரொட்டுப் பண்புத்தொகைபடப் புணருமிடத்து, இனஒற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும், இயல்புகணம் வர அவ்வாறு புணருமிடத்து இனஒற்று மிகுதலும் உண்டு.

எ-டு : கரடு + கானம் = கரட்டுக்கானம்; குருடு + கோழி = குருட்டுக் கோழி; கரடு + வழி = கரட்டு வழி; குருடு + மனிதன் = குருட்டு மனிதன்.

சிறுபான்மை அன்சாரியையும் அக்குச்சாரியையும் பெறுதலு முண்டு. எ-டு : பார்ப்பு + குழவி > பார்ப்பு + அன் + அக்கு + குழவி = பார்ப்பனக்குழவி

குற்றியலுகர ஈற்றுச் சொற்களுள், மெல்லொற்று வல்லொற் றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் உள; மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும் வல்லொற்றும் பெறுவனவும் உள.

எ-டு : ஓர்யாண்டு + குழவி = ஓர்யாட்டைக் குழவி பண்டு + சான்றோர் = பண்டைச் சான்றோர்

இயல்புகணம் வந்தவழி, மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் மாத்திரம் பெற்று முடிவனவும் உள.

எ-டு : ஓர்யாண்டு + யானை = ஓர்யாட்டை யானை ஐயாண்டு + எருது = ஐயாட்டை யெருது

வினையெச்சத் தொடர்க்கண் வன்தொடர்க்குற்றியலுகர ஈறு வன்கணம் வரின் மிக்குப் புணரும்.

எ-டு : செத்துக் கிடந்தான், நட்டுப் போனான்

மென்தொடர்க்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாக வருமொழி வன்கணத்தொடு புணரும்.

எ-டு : இருந்து கொண்டான், வந்து போயினான்

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்களாகிய ஆங்கு ஈங்கு ஊங்கு யாங்கு யாண்டு ஆண்டு ஈண்டு - முதலியனவும், அங்கு இங்கு உங்கு எங்கு - முதலியன வும், மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களா யினும் வன்கணம் வந்துழி மிக்குப் புணரும்.

ஆங்குச்சென்றான்.... யாங்குச்சென்றான்.... ஈண்டுச் சென்றான்.... அங்குச் சென்றான்..... முதலாகப் புணர்தல் காண்க.

ஆண்டு என்பது இடைச்சொல்லாயின், ஆண்டுச் சென்றான் என வல்லெழுத்து மிகும். ஆள் என்ற பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்ச மாயின், ஆண்டு கொண்டான் என இயல்பாக முடியும். (தொ. எ. 425 - 429 நச்).

உண்டு என்பது உண்மைத்தன்மைப் பண்பினை உணர்த்திய-வழி, நாற்கணமும் வரினும் உண்டு பொருள், ஞானம், யாழ், ஆடை என இயல்பாயும், பகரம் வருமொழிமுதலில் வருவழி,

உண்டு பொருள், உள்பொருள் என இருமுடிவும் பெற்றும் புணரும்.

உள்பொருள் என ஓசை பிளவுபடாது கூறின் பண்புத் தொகை யாம்; ஓசை இடையறவுபடச் சொல்லின் (‘உண்டு பொருள்’ என்பது பொருளாதலின்) குறிப்பு வினைமுற்றுத் தொடராம். (நச். உரை).

குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சியின் சிறப்புவிதி -

{Entry: A01__651}

அவ்வழிப்புணர்ச்சிக்கண், வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றின் முன் வருமொழி வன்கணம் வரின் மிகும்; ஏனைத் தொடர்க் குற்றியலுகர ஈறுகள் இயல்பாகப் புணரும்.

எ-டு : பாக்குக் கடிது; நாடு சிறிது, எஃகு தீது, வரகு பெரிது, வந்து போனான், எய்து பொருள்.

வேற்றுமைப் புணர்ச்சிக்கண், இடைத்தொடர் - ஆய்தத் தொடர் - இடையில் ஒற்று மிகப் பெறாத நெடில் தொடர் -இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் - என்னும் இக்குற்றிய லுகர ஈறுகள் வன்கணம் வரின் மிகா.

எ-டு : மார்பு கடுமை, எஃகு சிறுமை, நாகு தீமை, அரசு பெருமை

டு று - இறுதியாகிய நெடில்தொடரும் உயிர்த்தொடரும் நிலை மொழியாக நிற்ப, வருமொழிமுதல் வன்கணம் வரின், நிலைமொழி ட் ற் என்பன இடையில் மிக, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும்; பிறகணம் வரினும் இரட்டுதல் கொள்க.

எ-டு : யா ட்டுக் கால், பா ற்றுச் சிறை; முர ட்டு மனிதன், வயி ற்றிடை

இப்புணர்ச்சி பெரும்பான்மையும் வேற்றுமைக்கண்ணது. ‘முரட்டு மனிதன்’: அல்வழி முடிபு.

சில மென்தொடர்க் குற்றுகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சி யில் வன்தொடர்க் குற்றுகரங்கள் ஆகும்.

எ-டு : மருந்து + பை = மருத்துப்பை; கன்று + ஆ = கற்றா

சில மென்தொடர்க் குற்றியலுகரங்கள் புணர்ச்சிக்கண் ஐகார ஈற்றனவாம். வன்தொடராய்த் திரிந்து ஈற்று ஐகாரம் பெறுவனவுமுள.

எ-டு : பண்டு + காலம் = பண் டைக்காலம்; இன்று + நாள் = இற் றைநாள்.

திசைப்பெயர்கள் ஈற்றுக் குற்றியலுகரம், பிறதிசைப்பெயரும் ஏனைய பெயரும் வருமொழியாக நிகழுமிடத்து, தான் ஏறிய மெய்யொடு கெட, ஈற்றயல் ககர ஒற்றுக் கெட்டும், றகரம் னகரமாகவும் லகரமாகவும் திரிந்தும், பிறவாறும் புணரும்.

எ-டு : வடக்கு + கிழக்கு, மேற்கு, சேரி = வடகிழக்கு, வட மேற்கு, வடசேரி; தெற்கு + கிழக்கு, மேற்கு, சேரி = தென்கிழக்கு, தென்மேற்கு, தென்சேரி; மேற்கு + காற்று, ஊர் = மேல்காற்று, மேலூர்; கிழக்கு + காற்று, சேரி = கீழ்காற்று, கீழைச்சேரி; மேற்கு + சேரி = மேலைச்சேரி.

தெங்கு என்ற நிலைமொழிமுன் ‘காய்’ வரின், நிலைமொழி முதலெழுத்து நீண்டு ஈற்றுயிர்மெய் கெட்டுத் தேங்காய் என முடியும். (இடையே அம்சாரியை பெற்றுத் தெங்கங்காய் என முடிதலுமுண்டு). (நன். 181 - 187)

குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: A01__652}

குற்றியலுகர ஈற்றனவாகிய (அகக்காழனவாகிய) மரப்பெயர் களும் (புறக்காழனவாகிய) புற்பெயர்களும் அம்முச்சாரியை பெற்று வன்கணத்தொடு புணரும்.

எ-டு : தேக்கு + அம் + கோடு, செதிள் தோல், பூ = தேக்கங் கோடு, தேக்கஞ் செதிள், தேக்கந்தோல், தேக்கம் பூ; கமுகு + அம் + காய் = கமுகங்காய்; சீழ்கு + அம் + புல் = சீழ்கம்புல்; கம்பு + அம் + புலம் = கம்பம் புலம்; பயறு + அம் + காய் = பயற்றங்காய்.

(தொ. எ. 415 நச்).

மரப்பெயர்களுள் ஈற்றயல் எழுத்தாகிய மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாத மரப்பெயர்களும், திரியும் மரப் பெயர்களும் உள.

எ-டு : புன்கு + அம் + கோடு = புன்கங்கோடு;குருந்து + அம் + கோடு = குருந்தங்கோடு - மெல்லொற்று வல் லொற்று ஆகாதன.

வேம்பு + அம் + கோடு = வேப்பங்கோடு; கடம்பு + அம் + காய் = கடப்பங்காய்; ஈஞ்சு + அம் + குலை = ஈச்சங்குலை - இவை மெல்லொற்று வல்லொற்றாகத் திரிந்தன. (416 நச்.)

குற்றியலுகர ஈறு முன்னிலை வினைக்கண் வாராமை -

{Entry: A01__653}

முன்னிலை ஏவலொருமை வினைக்கண் குற்றியலுகர ஈறு வாராது. வாராதெனவே, முன்னிலை ஏவலொருமைக்கண் வரும் கு சு டு து பு று ஈறுகள் முற்றியலுகரமாகவே ஒலிக்கப் படும். எ-டு : முறுக்கு, பரசு, கட்டு, கத்து, எழுப்பு, தீற்று (தொ. எ. 152 நச். உரை)

குற்றியலுகர எண்ணிக்கை -

{Entry: A01__654}

தனிநெடில் ஏழுடனே, ஆய்தம் ஒன்றும், மொழி இடையீறு களில் வரப்பெறாத ஒளகாரம் ஒழித்து ஒழிந்த உயிர் பதினொன்றும், வல்லெழுத்து ஆறும், மெல்லெழுத்து ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரம் ஒழித்து ஒழிந்த இடையெழுத்து ஐந்தும் ஆகிய முப்பத்தாறு எழுத்துக்களுள், யாதானும் ஒன்று ஈற்றுக்கு அயலெழுத்தாகத் தொடரப்பட்டு, மொழியிறுதிக்கண் வல்லெழுத்துக்களுள் யாதானும் ஒன்று பற்றுக்கோடாக அதனை ஊர்ந்து வரும் உகரம் தன் அரை மாத்திரையின் குறுகும். (ஈற்றயல் எழுத்தாகிய இடவகை யான் குற்றியலுகரம் 36 ஆயிற்று) (நன். 94 சிவஞா.)

குற்றியலுகரப் புணரியல் -

{Entry: A01__655}

இது தொல்காப்பிய எழுத்துப்படலத்தின் ஒன்பதாவதாகிய இறுதி இயல். உகரம் குறுகி வரும் இடங்கள், ஈரொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரங்கள், தொடர்மொழியில் வரும் உகரம், பலவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களின் வேற்றுமை - அல்வழி - என்ற இரு நிலையிலும் நிகழும் புணர்ச்சிகள், சுட்டுப்பெயர் வினாப்பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர் இவற்றின் புணர்ச்சிகள், விரிவான முறையில் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, புள்ளிமயங்கியலில் ஒழிந்து நின்ற செய்யுள்முடிபுகள், புணரியல்நிலையிடைப் பகுத்துக் காணாது உள்ளபடியே கொள்ளத்தக்க தொடர்கள், எழுத்ததிகாரப் புறனடை - என்பன குற்றியலுகரப் புணரிய லுள் காணப்படுகின்றன. (தொ. எ. 406 - 483 நச்.)

குற்றியலுகரப் பொதுப்புணர்ச்சி -

{Entry: A01__656}

நிலைமொழியீற்றின்கண் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர் வருமாயின், குற்றியலுகரம் தான் ஏறிநின்ற மெய்யை விடுத்துத் தான் கெடும்; சிறுபான்மை கெடாது நின்று உடம்படுமெய் பெற்றுப் புணரும்.

எ-டு : நாகு + அரிது > நாக் + அரிது = நாகரிது; அழைப்பது + ஏ > அழைப்பது + வ் + ஏ = அழைப்பதுவே (நன். 303); ஆது + உம் > ஆது + வ் + உம் = ஆதுவும் (நன். 300) (நன். 164)

குற்றியலுகரம் (1) -

{Entry: A01__657}

இது தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்று. இது தனக்கெனத் தனிப்பட்ட முறையில் பிறப்பிட மின்றித் தான் ஏறிநிற்கும் மெய்யின் பிறப்பிடமே தனக்குப் பிறப்பிடமாகக் கோடலின், ஒரே எழுத்தாகிய குற்றியலுகரம் பிறப்பிடம் நோக்கி ஆறாகக் கொள்ளப்படுகிறது. இது தமிழிலும் மலையாளத்திலுமே உள்ளது. குற்றியலுகரம் ஏழு தொடர்க்கண் வரும் எனவும், அதனால் நாற்பத்திரண்டு ஆகும் எனவும், ஆறு தொடர்க்கண் வரும் எனவும், அதனால் முப்பத்தாறு ஆகும் எனவும் கூறுவன ஏற்புடையன அல்ல. தொடர்நோக்கிக் குற்றியலுகரத்தை ஆறாகக் கோடலே அமையும். அஃது ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர் மொழி, இடையொற்றுத்தொடர்மொழி, ஆய்தத்தொடர் மொழி, வல்லொற்றுத்தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி என எடுத்துக்கூறி விதி கூறுதற்குப் பயன்படு கிறது. மொழிமுதற்கண் வரும் குற்றியலுகரத்தையுடைய சொல் கிளைப்பெயராகிய நுந்தை என்பது. இம் மொழிமுதற் குற்றியலுகரம் ஒன்றே. இது நுந்தை என்ற பெயர்க்கணன்றி, வினைக்கண் வாராது. இக்குற்றியலுகரம் புள்ளி பெறுத லின்று.

தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது புள்ளியீறு ஆகும். அதற்கு மாத்திரை அரை.

அல்வழி வேற்றுமைப் பொருண்மைக்கண் வரும் தொடர்- மொழிக் குற்றியலுகரம் இருமொழிக்கு இடையே வருவழி, அது முற்றியலுகரமாம். ஆயின் வல்லொற்று இறுதிக் குற்றியலுகரம் வருமொழிக்கண் வல்லெழுத்து வருவழித் தன் பழைய அரை மாத்திரை அளவிற்றாகவே, செக்குக்கணை - சுக்குக்கொடு முதலிய சொற்றொடர்களில் நிற்பதுமுண்டு.

வல்லொற்றுத்தொடர்மொழி ஈற்றுக் குற்றியலுகரம் வல் லெழுத்து முதன்மொழி வருமொழியாகியவழிக் கால் மாத்திரை பெறும் எனவும், ஏனைய அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அரைமாத்திரை பெறும் எனவும் கூறுவது தொல்காப்பியனார் கருத்துக்கு ஏலாது. பன்மொழிப் புணர்ச்சி யாகிய செய்யுளில் முற்றியலுகரம் குற்றியலுகரம் இரண்டனைக் கொண்டும் நேர்பு நிரைபு அசைகளை அமைத்துக் கொண் டமை, குற்றியலுகரம் தொடர்மொழிக்கண் ஒருமாத்திரை பெறும் இயைபை நோக்கியே ஆம்.

பெயர்ச்சொற்களுள் அரைமாத்திரை பெறும் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள் அச்சொல்லே ஏவல்வினையாயின் அவை ஒருமாத்திரை பெறும் முற்றியலுகர ஈற்றுச் சொல்லாம். பெருக்கு - கட்டு - காது - என்பன பெயராயின், குற்றுகர ஈறாய் அரைமாத்திரை பெறும் ஈற்றெழுத்துடையனவாம். குற்றிய லுகர ஈறு ஏவல் வினைக்கண் வாராது என்பது தொல்காப்பி யனார் கருத்தாம்.

குற்றியலுகரம் மெய்யீறு போலத் தன்மீது வருமொழிமுதல் உயிர் ஏற இடம் கொடுக்கும். முற்றியலுகரஈறு கெடும் என்று கூறும் தொல்காப்பியனார் ஓரிடத்தும் குற்றியலுகரம் கெடும் என்று குறிப்பிடவில்லை. எனவே, குற்றியலுகரம் மெய்யீறு போல அரைமாத்திரை கொள்வதனொடும் புள்ளி பெறுவத னொடும் அமையாது, மெய்யீற்றின் செய்கை பெற்றுப் புள்ளியீற்றுள் அடக்கப்பட்டது.

குற்றியலுகர ஈற்றில் அவ்வுகரம் கெட நின்ற மெய்யீற்றின் மீது உயிர் ஏறி முடியும் என்று கூறுவதும் சாலாது. மொழியிறுதி யில் வாராத க் ச் ட் த் ப் ற் என்ற வல்லினமெய்கள் ஆறனையும் ஈற்றில் கொள்ள உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எழுத்தே குற்றியலுகரம். மெய்யின் தானத்தில் வந்துள்ள குற்றியலுகரத்தின் நிலையும் மெய்யெழுத்துக்களின் நிலையே. குற்றியலுகரம் மெய்க்குரிய அரைமாத்திரை அளவே ஒலித்த லின், ஆண்டு உகரஒலி அம்மெய்யெழுத்தினைத் தெரிவிக்கும் துணையே நின்றது. ஒலித்தல் எளிமை கருதியே, ஏழ் உண் தின் வவ் மண் பல் எண் முதலிய சொற்கள் ஏழு உண்ணு தின்னு வவ்வு மண்ணு பல்லு எண்ணு முதலிய சொற்களாகத் திரிதலை இன்றும் காண்கிறோம்.

குற்றியலுகரம் தொடர்மொழிக்கண் ஒருமாத்திரை பெற்று முற்றியலுகரம் போல நிற்றலினால்தான், செய்யுளில் அசைக் குரிய எழுத்துக்கள் உயிர் - உயிர்மெய் - குற்றியலுகரம் - என மூன்றாகக் கொள்ளப்பட்டுள்ளன.

செய்யுளாயினும் சீரிடை அடுத்த சொல்லொடு சேராது ஓசை இடையறவுபட்டவழிக் குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்றே யாகி அலகு பெறாத நிலையைக் காண்கிறோம். இது பிற்கால நிலை.

‘குன்று கோடு நீடு’ - மூவசைச்சீர்

சீர் ஈற்றில் வரும் குற்றுகரம் முற்றுகரம்ஆகி அலகு பெறுதலை யும் காண்கிறோம்.

‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ - பருந்து: முற்றுகர ஈறு. குற்றியலுகரத்தைத் தொல்காப்பியனார் உயிரீற்றில் அடக்கவில்லை. ஈற்றுக் குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது மெய்யீறு போலக் கொள்ளப்பட்டு உயிரேற இடம் கொடுக்கும் என்பதே தொல். கருத்து.

நன்னூலார் குற்றியலுகரத்தை உயிரீற்றுள் அடக்கி அக்குற்றிய லுகரம் உயிர்வரின் கெடும் என்றார். (வே. ரெட்டியார் ஆய்வுக்கருத்து)

குற்றியலுகரம் (2) -

{Entry: A01__658}

தனிநெடில், ஆய்தம், (மெய்யினை ஊர்ந்த) உயிர், வல்லின மெய், மெல்லினம், இடையினமெய் என்னும் இவற்றுள் ஒன்று ஈற்றயல் எழுத்தாக வர, சொல்லின் இறுதியில் வல்லினப் புள்ளியை ஊர்ந்து வரும் உகரம், தன் ஒரு மாத்திரையின் குறைந்து அரைமாத்திரையாக ஒலித்தலின் குற்றியலுகரமாம். ஈற்றயலெழுத்தை நோக்கிக் குற்றியலுகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் - ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம் - உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் - வன்தொடர்க் குற்றியலுகரம், மென் தொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறு வகைப்படும். இவற்றுள் நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் ஒன்றே ஈரெழுத்தொரு மொழியாக வரும்; ஏனைய எல்லாம் பல எழுத்துக்களாலாகிய மொழியாக வரும்.

குற்றியலுகரம் ஆறு வல்லின மெய்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு வருதலின், ஆறு வகையும் ஆறு ஈற்றெழுத்தொடும் உறழக் குற்றியலுகரம் 36 என்பர்.

எ-டு : நாகு, கஃசு, கவடு, பத்து, சென்று, மார்பு என ஆறு தொடர்க் குற்றியலுகரங்களையும் முறையே காண்க. (நன். 94)

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி அறுவகைப்படும் என்பது -

{Entry: A01__659}

நெட்டெழுத்து ஏழு, ஆய்தம் ஒன்று, இடையிறுதிகளில் வாராத ஒளகாரம் நீங்கலாக உயிர் பதினொன்று, வல்லெழுத்து ஆறு, மெல்லெழுத்து ஆறு, வல்லெழுத்துக்களொடு தொட ராத வகரம் நீங்கலாக இடையெழுத்து ஐந்து - ஆகிய இவற்றை அடுத்து வரும் குற்றியலுகரம், ஈற்றயலெழுத்தை நோக்கிக் கணக்கிட (7+1+11+6+6+5) முப்பத்தாறாம்; இடத்தை நோக்க, நெடில் - ஆய்தம் - உயிர் - வலி - மெலி - இடை - என்னும் இவற்றை அடுத்து வருதலின் அறுவகைப்படும். (நன். 94 சிவஞா).

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 42 ஆதல் -

{Entry: A01__660}

தனிநெடில், குறிலிணை, குறில்நெடில், நெடிலொற்று, குறிலிணை ஒற்று, குறில்நெடிலொற்று, குற்றொற்று என்ற ஏழு அசைகளையும் அடுத்து க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு மெய் களையும் ஊர்ந்து குற்றியலுகரம் வரவே, அதன் எண்ணிக்கை (7 X 6 =) 42 ஆகும் என்ப. இங்ஙனம் வகுத்த வரையறையில், பிண்ணாக்கு - சுண்ணாம்பு - பட்டாங்கு - விளையாட்டு - இறும்பூது முதலியன அடங்கா. அவற்றுள்ளே, ணாக்கு - ணாம்பு - டாங்கு - யாட்டு என்பனவற்றை நெடிலொற்றிறுதி எனவும், பூது என்பதனை நெடிலிறுதி எனவும் கொண்டு, இவற்றின்கண் வரும் குற்றியலுகரம் என்று கொள்ளினும், போவது - வருவது - ஒன்பது - என்பது - முதலியன இப்பகுதியில் அடங்கா. ஆதலின் குற்றியலுகரத்தை அதன்முன் நிற்கும் அசைகள் பற்றி 42 என்று கணக்கிடல் சாலாது.(நன். 94 சங்கர.)

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 36 எனல் -

{Entry: A01__661}

ஈற்றயல் எழுத்தைச் சிறப்பாகக் கொண்டு, நெடில் 7-ஆய்தம் - ஒள நீங்கலான உயிர் 11 - வல்லினம் 6 - மெல்லினம் 6 - வகரம் நீங்கலான இடையினம் 5 ஆக 36 என்று தொகை கொள்வர். இம்முறையில் எகர ஒகரங்களொடு வல்லுகரம் சேர்ந்துவரும் சொல்லின்மையால், அவையிரண்டையும் நீக்கக் குற்றிய லுகரம் 34 ஆகும். ஆதலின் இம்முறை எண்ணிக்கையும் சாலாது.

தனிநெடில், ஆய்தம், உயிர், வலி, மெலி, இடை என்ற அறுவகைப்பட்ட இவற்றைத் தொடர்ந்து கு சு டு து பு று என்ற ஆறு குற்றியலுகரங்களும் வருதலின், குற்றியலுகரம் 36 என்ப. இடையெழுத்துக்கள் ஆறனுள் எந்த எழுத்தையும் டு று என்ற எழுத்துக்கள் தொடராமையின், இவற்றை நீக்கக் குற்றியலுகரம் முப்பத்து நான்கே ஆதலின், இம்முறையில் குற்றியலுகரத்தைக் கணக்கிட்டு 36 எனலும் சாலாது.

குற்றியலுகரம் தான் ஊர்ந்து வரும் வல்லினமெய் பற்றியோ, தன்முன் உள்ள எழுத்தின் இனம் பற்றியோ ஆறு என்ற கணக்கிடுதலே பொருத்தமானதாம். குற்றியலுகரம் எழுத்து வேற்றுமையால் ஆறு; இடவேற்றுமையால் ஆறு என இவ் விரு திறனையும் உறழ்ந்து கூறாமல் தனித்தனியாகக் கூறுதலே தக்கது. (எ. ஆ. பக். 163).

குற்றியலுகரம் ஒரோவழி உடம்படுமெய் பெறுதல் -

{Entry: A01__662}

‘தன்முக மாகத் தானழைப் பதுவே’ (நன். 303) - இதில் ‘அழைப்பது’ குற்றுகரமொழி; அதனோடு ஏகார இடைச் சொல் வந்து ‘அழைப்பதே’ என முடிய வேண்டியது வகர உடம்படுமெய் பெற்று ‘அழைப்பதுவே’ என நின்றது. ‘ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்’ (நன். 300) - இதன்கண் ‘ஆது’ குற்றுகரமொழி; அதனோடு உம் என்னும் இடைச்சொல் வந்து ‘ஆதும்’ என் முடிய வேண்டியது, வகர உடம்படுமெய் பெற்று ‘ஆதுவும்’ என நின்றது. (நன். 164 இராமா.)

குற்றியலுகரம் கெடுதல் -

{Entry: A01__663}

‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என நன்னூலார் நூற்பா அமைத்தமை போலத் தொல்காப்பியனார் பொதுவிதி அமைத்திலர். அவர் நூறு என்பதன் முன்னும் ஆறு என்பதன் முன்னும் முறையே ஒன்று முதலிய எண்களும் ஆயிரமும் வந்து புணரின், நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் கெட, நின்ற ஒற்றின்மேல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்றார். (நூறு+ ஒன்று = நூற்றொன்று; ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்) ஒன்றினம் முடித்தல் என்பதனால் ஏனைய குற்றியலுகரமும் உயிர்முதல் மொழி வரின் கெட, நின்ற ஒற்றின்மேல் வருமொழி முதல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்பது பெற்றாம்.

குற்றியலுகரத்தின்மீது உயிரேறி முடியும் எனின், அங்ஙனமே முற்றியலுகரத்தின் மீதும் உயிரேறி முடியலாம். அவ்வாறே ஒருவரும் கூறிலர். குற்றியலுகரத்துக்கும் உயிர் என்னும் குறியீடு கொண்டமையின், ஒற்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறி முடிதல் பொருந்தாது. நாகரிது - என்புழி, இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி பெறப்படாமையின், குற்றியலுகர ஓசை இத்தொடர்க்கண் இல்லை. யகரம் வருவழி இகரம் உகரத்தின் மீது ஏறி முடியும் என்னாது, உகரம் கெட, இகரம் குறுகிக் குற்றியலிகரமாகி வரும் என்பதே ஆசிரியர்கருத்து. எனவே, குற்றியலுகரம் உயிர் வருவழிக் கெடுமே அன்றி உயிரேற இடம் தாராது. (சூ. வி. பக். 40)

நூறு முன் மூன்று, நான்கு என்பன புணரும்வழிக் குற்றிய லுகரம் கெட்டதாயின், நூற்ற் மூன்று - நூற்ற் நான்கு - என்றே அத்தொடர் அமையும். ஆறு முதல் குறுகி ‘அறு’ என்று முற்றியலுகர ஈற்றது ஆயினமையின், அவ்வுகரம் கெட்டது. குற்றியலுகரத்துக்கு உயிர் என்னும் குறியீட்டைத் தொல். வழங்கவில்லை. தொடர்மொழியில் குற்றியலுகரம் முற்றிய லுகரம் என்ற தொல். கருத்தை யுட்கொண்டால், குற்றிய லுகரம் கெடும் என்று கருதற்கு இடன் ஏற்படாது - என்பன போன்ற கருத்துக்களால் சிவஞானமுனிவர் கருத்து மறுக்கப் படுகிறது. (தொ. எ. 472, 469 நச்.) (எ. ஆ. பக். 176, 177)

குற்றியலுகரம் புணரும் முறை -

{Entry: A01__664}

ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். அதுவும் புள்ளியீற்றுள் அடங்கும். குற்றியலுகரம் புள்ளியீறு போல உயிரேற இடம்கொடுக்கும் என்பதே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், இ.வி. ஆசிரியர், எ. ஆ. ஆசிரியர் ஆகியோர் கருத்தாம். நன்னூலார் உயிர் வரின் நிலைமொழியீற்றுக் குற்றிய லுகரம் கெடும் என்றார். குற்றியலுகரமும் முற்றியலுகரம் போலக் கெடும் என்பதே சிவஞானமுனிவர் கருத்தாம்.

நாகு + அரிது = நாகரிது. நாகரிது என்புழி, முன்னர்க் குற்றுகர ஓசையும் பின்னர் உயிரோசையும் பெற்று, அவ்விரண்டும் கூடிநின்றல்லது அப்பொருள் உணர்த்தல் ஆகாமையின், உயிரேறுங்கால் குற்றுகரம் கெட்டுப் போக நின்ற ஒற்றின்மேல் உயிர் ஏறிற்று என்றல் பொருந்தாது. (இ.வி. எழுத். 65 உரை)

குற்றியலுகரம் புள்ளி பெறுதல் -

{Entry: A01__665}

ஈற்றுக் குற்றியலுகரம் முற்றியலுகரத்தின் மாத்திரையில் தான் பாதியே பெறுவது என்பதைக் குறிப்பிட, மெய்யீறு போலப் புள்ளியிட்டு எழுதப்பெறும் என்பர் பேராசிரியர், மயிலை நாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், எ.கு. ஆசிரியர், எ.ஆ. ஆசிரியர் முதலியோர். புள்ளி பெறாது என்னும் கருத்தினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். நன்னூலார் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை.

மொழி முதலில் குற்றுகரம் வரும் நுந்தை என்ற சொல்லி லுள்ள நு - புள்ளி பெறாது. (எ.கு. பக். 110)

‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ (தொ. எ. 105 நச்.) என்று நூற்பாவில், குற்றியலுகரமும் எனப் பொதுப்படக் கூறியத னால், மொழிமுதல் குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்பது தொல்காப்பியனார்க்கு உடன்பாடாகலாம்.

குற்றியலுகரம் முப்பத்தாறு -

{Entry: A01__666}

குற்றியலுகரம் முப்பத்தாறு என்றது என்னெனின், ஒருமதம் குறைந்த ஆனைமுகக்கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற்போல, இலக்கணை என்னும் விதி பற்றிக் கூறினார் என்க. நெடில் ஏழும், ஆய்தம் ஒன்றும், மொழி இடையிலும் இறுதியிலும் வாராத ஒளகாரம் நீங்கிய உயிர் பதினொன்றும், வல்லொற்று ஆறும், மெல்லொற்று ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரஒற்று நீங்கிய இடையொற்று ஐந்தும் ஆக முப்பத்தாறும் ஈற்றயல் எழுத்தாக வர, அவற்றை நோக்கக் குற்றியலுகரம் முப்பத்தாறு என்ப. (நன். 94 இராமா.)

‘ஆனைமுகத்தானை மும்மதத்தன் எனல்’ காண்க.

குற்றியலுகரம் மெழிமுதற்கண் வரல் -

{Entry: A01__667}

நுந்தை என்ற முறைப்பெயரிடத்து வரும் ‘நு’, இதழைச் சிறிது குவித்த அளவில் தோன்றும் ஒலியாய், மொழிமுதற்கண் வரும் குற்றியலுகர மாயிற்று. இதனை முற்றியலுகரமாக ஒலிப்பினும் பொருள்வேறுபா டின்று. (தொ. எ. 67, 68 நச்.)

‘குற்றியலுகரமும் அற்று’ -

{Entry: A01__668}

குற்றியலுகரமும் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். (தொ. எ. 106 இள., 105 நச். உரை)

குற்றியலுகரமும் மெய்யீறு போல ஈற்றில் வருவழிப் புள்ளி பெறும். (பேரா., சூ. வி., எ. கு., எ.ஆ.)

குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். புள்ளி பெறுதல் மாத்திரை செம்பாதியாதலைக் குறிப்பதாகலா னும், குற்றியலுகரம் புள்ளிபெறுதல் ‘முப்பாற் புள்ளி’ என்ற தொடராலேயே புலனாவதாகலானும், மொழிமுதற்கண் வரும் குற்றுகரம் புள்ளி பெறாது என்பது ஆசிரியர் கருத்தாகாது.

குற்றியலுகர முற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: A01__669}

குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்று; வரிவடிவில் புள்ளி பெறுவது. எனவே ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யீறு போலப் புள்ளியீறாகும். புள்ளியீற்றின்மீது வருமொழிமுதலில் வரும் உயிரேறி முடியும். ஆகவே, குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடம் கொடுப்பது. குற்றியலுகரம் கெடாது; முற்றிய லுகரமாயின் உகரம் கெட நின்ற மெய்யின்மீது உயிரேறி முடியும்.

“அறு என்ற முற்றுகரத்திற்கே ஈண்டு கேடு கூறினார்; என்னை? குற்றுகரமாயின் ஏறிமுடிதலின்” (தொ. எ. 469.நச். உரை)

“அஃது + அன் + ஐ - ஆய்தம் கெடாமுன்பே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றுக; ஆய்தம் கெட்டால் அது முற்றுகரமாய் முடிதலின்.” (422 நச். உரை)

இத்தொல்காப்பிய எழுத்ததிகார நச். உரைப்பகுதிகள் உளங்கொளத் தக்கன.

குற்றியலுகர முற்றியலுகரப் பொருள் வேறுபாடு -

{Entry: A01__670}

பெருக்கு, கட்டு முதலாயின பெயராகியவழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களாம். அவை முன்னிலை ஏவலொருமை வினையாகியவழி முற்றியலுகர ஈற்றுச் சொற்களாம். காது, கத்து, முருக்கு, தெருட்டு முதலாயினவும் அன்ன. (தொ. எ. 68 நச். உரை)

குற்றியலுகர முறைப்பெயர் -

{Entry: A01__671}

நுந்தை என்ற முறைப்பெயரில் முதலெழுத்தாகிய நகரத்தை ஊர்ந்து குற்றியலுகரம் வந்துள்ளது. இதனை இதழைச் சிறிது குவித்துக் குற்றியலுகரமாக ஒலிப்பினும், மிகுதியும் குவித்து முற்றியலுகரமாக ஒலிப்பினும் பொருள் வேறுபாடு இல்லை. (தொ. எ. 68 நச். உரை)

குற்றுகரஈற்றுத் தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள் -

{Entry: A01__672}

நட வா - முதலாக அஃகு ஈறாகக் கூறப்பட்ட இவ்விருபத்து மூன்றும் உயிரும் ஒற்றும் குற்றுகரமும் ஆகிய ஈற்றவாகிப் படுத்தலோசையான் அச்செய்கைமேல் பெயர்த்தன்மைப் பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்பன. (வினைப்பகுதி களாகிய முதனிலைத் தொழிற்பெயரின் இயல்புடைய இவற்றை வடநூலார் ‘தாது’ என்ப). குற்றுகரத்தை வேறு பிரித்ததனால், போக்கு - பாய்ச்சு - ஊட்டு - நடத்து - எழுப்பு - தீற்று - இத் தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும் கொள்க. (இ.வி. 43 உரை)

குற்றுகர ஈற்று நாற்பெருந்திசைகள் -

{Entry: A01__673}

அவை வடக்கு,தெற்கு, குணக்கு, குடக்கு என்பன. (நன்.185 மயிலை.)

குற்றுகரம், குற்றிகரம் இரண்டின்மேலும் புள்ளியிடுதலின் பயன் -

{Entry: A01__674}

தாது - ஏது - என்றல் தொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு - கொட்டு - என்றல் தொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றி யாது - நாடியாது - எட்டியாண்டுளது - என்றல் தொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடுகளும் அறிதற்பொருட்டுக் குற்றுகரம் குற்றிகரங்களுக்கு மேல் புள்ளி கொடுப்பாருமுளர். (நன். 97 மயிலை.)

ஆரியமொழிகளில் ஈற்றுக்குற்றுகரம் நிகழாது. எள் + து, கொள்+து - இவை எட்டு கொட்டு என வந்த சொற்கள் ஏவல் வினையாதலின் ஆண்டுக் குற்றுகரம் வாராது. எட்டு - கொட்டு - என்பன புணர்மொழியாகாது தனிச்சொல்லாய் நின்றவழி வினைச்சொல்லாகாமல் பெயராயினவிடத்தே குற்றுகரமாம். குன்றி - நாடி - எட்டி - என்பன நிலைமொழியாகாது, குன்று- நாடு - எட்டு என்பனவே நிலைமொழியாய். வருமொழி முதற் கண் யகரம் வருதலின் ஈற்று உகரம் திரிந்த இகரமே குற்றிய லிகரமாம்.

குற்றுகர வாய்பாட்டு வினைப்பகுதிகள் -

{Entry: A01__675}

குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனான், போக்கு பாய்ச்சு உருட்டு கடத்து எழுப்பு தீற்று - என்றல் தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும், அல்லா ஈறுகளான் வரும் வாய்பாடுகள் உள்ளனவும் ‘செய்’ ஏவலில் அடங்கும் என்று கொள்க. (நன். 136 மயிலை.)

குற்றெழுத் தளபெடை -

{Entry: A01__676}

குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாய் நீண்டு மீண்டும் ஒலி மிக அளபெடை எழுத்துப் பெறும் நிலை குற்றெழுத்தள பெடையாம்.

வரும் என்பது, ‘வரூஉம் இறுதி’ (தொ. சொ. 9) ‘யாதென வரூஉம்’ (சொ. 32) என்றாற் போல, வரூஉம் எனக் குற்றெழுத் தளபெடை ஆயிற்று.

எ-டு : எ ழு - ‘எ ழூஉத் தாங்கிய கதவு’ (புறநா. 97)

கு ழு - ‘கு ழூஉக் களிற்றுக் குறும்பு’ (புறநா. 97)

ழு - ‘ப ழூஉப்பல் அன்ன’ (குறுந். 180)

ரு - ‘ப ரூஉப்பிணிய தொடி’ (புறநா. 97)

இவ்வாறு குற்றெழுத்துள்ளவிடத்து அளபெடை வந்தது.

(தொ. எ. 261 நச். உரை)

‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறை’ யாமை -

{Entry: A01__677}

குற்றெழுத்து (உயிர்) ஐந்தாவன அ இ உ எ ஒ என்பன. இவற்றுள் முதல் மூன்றும் சுட்டு இடைச்சொல்; எகரம் வினாஇடைச்சொல்; ஒகரம் ‘ஒப்பு’ என்ற பண்பின் பகுதி யாய்த் தனித்து வாராது என்ப.

இவை பெயரோ வினையோ ஆகாமல் இடைச்சொல்லாகப் பெயர்ச்சொல்லைச் சார்ந்து நின்றே சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்துதலானும், ஒகரம் ஒப்புப்பண்பின் பகுதி என்பது எல்லார்க்கும் உடன்பாடு அன்மையானும், இவை மொழிநிரம்புதல் இல்லை என்பது. ‘ஐந்தும் மொழி நிறைபில’ எனவே, நான்கு இடைச்சொல்லாய் மொழி நிறைக்கலாம் என்பதும் கருத்தாம். (தொ. எ. 44 நச். உரை)

குற்றெழுத்துக்கள் இடைநின்ற ஒற்றை மாத்திரை மிகுத்தல் -

{Entry: A01__678}

குற்றெழுத்துப் பலவாக வருதலான் தோன்றும் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம். அக்குற்றெழுத்துப் பயின்று வருதலான், இடைநின்ற ஒற்றின் ஒலி மிகும்.

எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி’
(அகநா. 4)

என முன்னும் பின்னும் நின்ற குற்றெழுத்துக்களின் ஓசையான் ஙகர ஒற்றொலி நீண்டவாறு. (குரங்ங்குளை) (தொ. எ. 50 நச். உரை)

குற்றெழுத்து வேறுபெயர்கள் -

{Entry: A01__679}

குறுமை எனினும், இரச்சுவம் எனினும், குற்றெழுத்து எனினும் ஒருபொருட்கிளவி. (மு.வீ. எழுத். 9)

குற்றொற்றாக வாரா மெய்கள் -

{Entry: A01__680}

ரகரஒற்றும் ழகரஒற்றும் தனிக்குறிலின்பின் ஒற்றாக வாரா. அவை நெடில், குற்றிலிணை இவற்றின் பின்னரே ஒற்றாக வரும்; குறிற்கீழ் உயிர்மெய்யாகவே வரும்.

எ-டு : தார், அவர், வர, கரு; தாழ், இதழ், உழ, மழு (தொ. எ. 49 நச். உரை)

குறள் மஃகான் -

{Entry: A01__681}

மகரக்குறுக்கம். லகர ளகர மெய்கள் திரிந்த னகர ணகரங்களின் முன் வரும் மகரம், தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரையாய் ஒரு மொழி இறுதிக்கண் வரும். நிலைமொழி மகரஈற்று வினையாக நிற்க, வருமொழி முதற்கண் வகரம் நிகழுமாயின், நிலைமொழியீற்று மகரம் குறுகிக் கால் மாத்திரையாய் இருமொழிக்கண் வரும். இவ்வாறு இட வகையால் மகரக் குறுக்கம் மூன்றாம்.

வருமாறு : போலும் > போல்ம் > போன்ம், மருளும் > மருள்ம் > மருண்ம் - ஒருமொழி மகரக்குறுக்கம்
தரும் வளவன் - இருமொழி மகரக்குறுக்கம். (நன். 96)

குறிச்சூத்திரம் -

{Entry: A01__682}

பலவற்றையும் குறித்து அறிய வரும் சூத்திரம் குறிச்சூத்திரம். ‘அம்முதல் ஈராறு ஆவி’ எனவும், ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ எனவும், அறிதல் அளவாய் வரும் சூத்திரங்கள் குறிச் சூத்திரங்கள். (நன். 20 இராமா.)

குறி, செய்கை விளக்கம் -

{Entry: A01__683}

சூத்திரவகை ஆறனுள் இவை சில. குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை பெயர், இவை வினை என்றல் தொடக்கத்து அறிதல்மாத்திரையாய் வருவன. குறி என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கை யாவன பதம் முன் விகுதியும் பதமும் உருபும் புணரும் புணர்ச்சி விதி அறிந்து, அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழிப் புணர்த்தலைச் செய்தலும், பெயரும் வினையும் கொள்ளும் முடிபு விதி அறிந்து அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழி முடித்தலைச் செய்தலும் முதலியன. (நன். 20 சங்கர.)

‘குறித்து வரு கிளவி’ -

{Entry: A01__684}

நிலைமொழிப் பொருள் நிரம்புதற்கு அதனைக் குறித்து வரும் சொல்லாகிய வருமொழி.

எ-டு : சாத்தன் வந்தான் - என்ற தொடரில், சாத்தன் என்பது நிலைமொழியாகிய நிறுத்த சொல்; வந்தான் என்பது வருமொழியாகிய குறித்து வரு கிளவி. (தொ. எ. 107 நச்.)

குறிப்பிசை -

{Entry: A01__685}

‘ஆவியும் ஒற்றும் அளவிறந்து ஒலிக்கும் இடங்கள்’ காண்க.

குறியதன் கீழ் ஆ -

{Entry: A01__686}

தனிக்குறிலை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர் குறுகுதலும், அதனோடு உகரம் ஏற்றலும், இயல்பாகவே ஆகாரஈறாய் வருதலும் என்ற மூன்று நிலையும் செய்யுட்கு உரிய.

எ-டு : நிலா, நில, நிலவு; பலா, பல, பலவு;

சுறா, சுற, சுறவு; கனா, கன, கனவு

‘நி லா வணங்கு’ எனவும், ‘நில விரி கானல்’ எனவும், ‘என் செய்யுமோ நிலவு’ எனவும் செய்யுட்கண் வருமாறு காண்க. (நன். 172)

குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டல் -

{Entry: A01__687}

தனிக்குற்றெழுத்தை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் ஒற்றுக்கள் வருமொழி முதற்கண் உயிர்வரின் இரட்டும். இங்ஙனம் ஒற்று இரட்டுவன ஞகார ஙகார ரகார ழகாரம் ஒழிந்தன. ஈற்றில் வரும் மெய்கள் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்ற பதினொன்றாம். இவற்றுள் ஞகாரம் உரிஞ் என்ற ஒரே மொழிக்கண்ணும், நகாரம் பொருந் - வெரிந் - என்ற இரு மொழிக்கண்ணும் அன்றி வாரா. இவை குற்றொற்று அல்ல. ர ழ என்பன குற்றொற்றாக வாரா. எனவே, ண ம ன ய ல வ ள என்ற ஏழு மெய்களுமே தனிக்குறிலை அடுத்து மொழி யீறாய் வரின் இரட்டும்.

எ-டு : மண் + அரிது = மண்ணரிது; கம் + அரிது = கம்மரிது; பொன் + அகல் = பொன்னகல்; மெய் + அருமை = மெய்யருமை; கல் + அரிது = கல்லரிது; தெவ் + அரிது = தெவ்வரிது; கள் + அருமை = கள்ளருமை.

இரட்டுதல் இருவழிக்கண்ணும் ஆம். (தொ. எ. 160 நச். உரை)

குறியது -

{Entry: A01__688}

குற்றெழுத்து; குறில் எனவும்படும். இப்பெயரான், உயிர்க்குற் றெழுத்தும், உயிர்மெய்க்குற்றெழுத்தும் அமையும். இதன் மாத்திரை ஒன்று. (தொ. எ. 160 நச்).

குறில் -

{Entry: A01__689}

அ இ உ எ ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரையே பெறும் உயிர்க்குற்றெழுத்தாம். இவை 18 மெய்கள்மீது ஏறவே அமையும் (18 X 5 =) 90 எழுத்துக்களும் உயிர்மெய்க் குற்றெழுத்தாம். குறிலுக்கு மாத்திரை ஒன்று. (நன். 64, 87)

குறிலிணை, குறில்நெடில் முன்னர் ஒற்றுமெய் கெடுதல் -

{Entry: A01__690}

குறில் மாத்திரை நீண்டு நெடிலாகும். ஆகவே, குறில் நெடில் என்பன மாத்திரைகொண்டு வெவ்வேறு பெயர் பெற்றன. இருகுறில் இணைந்து இரண்டு மாத்திரை கொண்டனவும், குறில் நெடில் இணைந்து மூன்று மாத்திரை கொண்டனவும், இரண்டு மாத்திரை அளவிற்றாய நெடில்போல, வரு மொழிக் கண் த் ந் வரின், நிலைமொழியீற்றிலுள்ள ல் ள் - என்ற மெய்கள் கெடும். (வருமொழி முதலிலுள்ள தகரம் றகரமாக வும் டகரமாகவும் திரியும்; நகரம் னகர ணகரங்களாகத் திரியும்.)

எ-டு : கோள் + தீது = கோடீது; விரல் + தீது = விரறீது; வரால் + தீது = வராறீது; கோள் + நிமிர்ந்தது = கோணி மிர்ந்தது; விரல் + நிமிர்ந்தது = விரனிமிர்ந்தது; வரால் + நிமிர்ந்தது = வரானிமிர்ந்தது;

தொல். நெடில்முன் ஒற்றுக் கெடற்கே விதி கூறி, குறிலிணை முன்னரும் குறில்நெடில் முன்னரும் ஒற்றுக் கெடற்கு விதி கூறாது, போந்த பொருளால் கொள்வித்தார். (தொ. எ. 50 இள. உரை)

குறுக்கல் விகாரம் -

{Entry: A01__691}

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுட்கண் தளை சிதையாமை வேண்டி நெட்டெழுத்துக் குறுகுவது குறுக்கல் விகாரமாம். எ-டு : ‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’

‘தீயேன்’ எனற்பாலது இயற்சீர்வெண்டளை பிழையாமைப் பொருட்டாகத் ‘தியேன்’ என நெடில் குறுகி நின்றது. (நன்.155)

கூட்டி எழூஉதல் -

{Entry: A01__692}

எழு - தன்வினை; எழூஉ - பிறவினை. கூட்டி எழூஉதலாவது சேர்த்து எழுப்புதல். இதனால் தன்வினையைப் பிறவினை யாக்குதற் பொருட்டாக அளபெடை பயன்படுத்தவாறு புலனாம். இது சொல்லிசை யளபெடையின்பாற்படும். (தொ. எ. 6 நச்.)

கெடுதல் -

{Entry: A01__693}

புணர்ச்சி விகாரம் மூன்றனுள் கெடுதலும் ஒன்று.

எ-டு : மரம் + வேர் = மரவேர்

நிலைமொழியீற்று மகரம் கெட்டமை இவ்விகாரமாம். (நன். 154)

கேண்மியா : சொல்லமைப்பு -

{Entry: A01__694}

கேள் என்ற முன்னிலை வினைப்பகுதியொடு ‘மியா’ என்ற உரையசைச்சொல் சேரக் கேண்மியா என்றாகும் என்பர் தொல்காப்பினார்.

‘கேண்ம்’ என்ற சொல்லொடு, யா என்னும் (முன்னிலை) அசைச்சொல், இடையே இகரம் தோன்றப்பெற்றுச் சேர, கேண்மியா என்றாகும் என்பர் இக்கால ஆய்வாளர். (எ. ஆ. பக். 36)

கைந்நொடி அளவு -

{Entry: A01__695}

கட்டைவிரலை நடுவிரலில் ஊன்றி இரண்டனையும் முறுக்கி ஒலியெழுப்புதற்கண் நிகழும் கால இடைவெளியும், எழுத்தின் அளவாகிய ஒருமாத்திரை கால இடைவெளியும் ஒன்றாகும். இவ்வாறு ஒலிஎழுப்புதற்கண், நினைத்தமாத்திரையானே கால்மாத்திரையும், கட்டைவிரலை நடுவிரலில் ஊன்றியவழி அரை மாத்திரையும், முறுக்கியவழி முக்கால் மாத்திரையும், ஓசை எழுப்பியவழி ஒரு மாத்திரையும் ஆகிய காலக்கழிவு நிகழும் என்ப.

நொடித்தல்தொழிலில் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும், அ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். (தொ. எ. 7 நச். உரை)

கொல்யானை முதலிய வினைத்தொகையை ஒரு சொல்லாகக் கோடல் -

{Entry: A01__696}

முக்காலத்துக்கும் பொதுவான வினைத்தொகையை ஒரு காலத்திற்குரிய பெயரெச்சத் தொடராக விரித்தல் குன்றக் கூறலாம் என்று கருதி, வினைத்தொகையை நிலைமொழி வருமொழியாகப் பகுத்தவழித் தொகைப்பொருள் சிதையும் என்ற கருத்தான் ஆசிரியர் வினைத்தொகையைப் ‘புணரியல் நிலையிடை உணரத் தோன்றாது’ என, ஒருசொல் நீர்மைய தாகவே கொண்டமையின், நச். வினைத்தொகையை ஒரு சொல்லாகக் காட்டும் எடுத்துக்காட்டுக்களொடு குறிப்பிட் டுள்ளார். (தொ. எ. 24 நச்.)

கொள் என்னும் விகுதி -

{Entry: A01__697}

கொள் என்பது வினைப்பயன் வினைமுதலைச் சென்றடைத லாகிய தற்பொருட்டுப் பொருட்கண் வந்த விகுதி. இதனை வடநூலார் ‘ஆற்பனேபதம்’ என்ப.

எ-டு : செய்துகொண்டான்.

இதன்கண், செய்தலாகிய வினையின் பயன் எழுவாயாகிய ஆண்பாற்பொருளையே சென்றடைதல் உணர்த்தப்பட்டது. (சூ.வி. பக். 41)

கோ எனும் சொல் புணருமாறு -

{Entry: A01__698}

கோ என்ற ஓகார ஈற்றுச்சொல் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஒன்சாரியைபெற்று வருமொழி யொடு புணரும். ஒன்சாரியை பிற்காலத்து ‘ன்’ சாரியை ஆயிற்று.

எ-டு : கோ + ஒன் + ஐ = கோஒனை; கோ + ஒன் + கை = கோஒன்கை

ஓகாரஈற்றுப் பெயர் ஒகரமாகிய எழுத்துப்பேறளபெடை பெறுதலும், வருமொழி வல்லெழுத்து மிக்குப் புணர்தலும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உண்டு.

எ-டு : கோ + கடுமை = கோஒக்கடுமை

கோ என்பது அரசனைக் குறிக்கும் உயர்திணைப்பொருளது ஆயினும், கோ வந்தது என்றாற் போல அஃறிணை வினை யொடு முடிதலின், சொல்லான் அஃறிணையாம். அரசு, அமைச்சு, தூது, புரோசு, ஒற்று முதலாயினவும் அன்ன. (தொ. எ. 292, 293 நச். உரை)

கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் -

{Entry: A01__699}

சுண்ணாம்பும் மஞ்சளும் இரண்டறக் கூடியவழியே செந்நிறம் தோன்றுவது போல, நெடிலும் குறிலும் இணைந்து ஒன்றாகக் கூடிய கூட்டத்துப் பிறந்து, பின்னர் அப்பிளவுபடா ஓசையை அளபெடை என்று தொல். வேண்டினார் என்பர் நச்சினார்க் கினியர். (எ. 6 நச். உரை) அளபெடை இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகப் பிரித்து அசை கொள்ளப்படுதலானும், அளபெடைக் குறில் அலகு பெறாத நிலையுமுண்டு ஆதலானும், அளபெடைக்கண் நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேரநின்றாற்போல அளபெடுக்கும் என்பதே தொல். கருத்தாதல் பெறப்படுகிறது. (எ. ஆ. பக். 45,46).

கோ, மா என்னும் சொற்கள் யகரம் பெறுதல் -

{Entry: A01__700}

கோ, மா என்பவற்று முன் உயிர் வரின், வகரமே அன்றி யகரமும் உடம்படுமெய்யாம்.

வருமாறு : கோ + இல் = (கோவில்) கோயில்

மா + இரு (ஞாலம்) = மாயிரு (ஞாலம்)

(மு.வீ. புண. 25)

கோன் என்ற சொல் புணருமாறு -

{Entry: A01__701}

கோன் என்ற இயற்பெயர் ‘தந்தை’ என்ற முறைப்பெயரொடும், ‘மகன்’ என்ற முறையில் குறித்து வரு கிளவியாக வரும் ஏனைய இயற்பெயர்களொடும் பொருந்தும்வழி, னகரஈற்ற இயற் பெயர்களின் சிறப்புவிதி பெறாமல், அஃறிணை இயற்பெயர் களுக்குரிய பொதுவிதியான் இயல்பாக முடியும்.

வருமாறு : கோன் + தந்தை = கோன்றந்தை

கோன் + கொற்றன் = கோன் கொற்றன் (தொ. எ. 351 நச்.)

ங section: 2 entries

ஙகரம் முதல் ஆதல் -

{Entry: A01__702}

ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒருசொல்லாய் வரினும், தனித்து வரும் தன்மையதன்றி, முடவன் கோல் ஊன்றி வந்தாற்போலச் சுட்டும் வினாவும் ஆகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான் ‘வழி’ என்றும், ஏனைய மெய்கள் போல முதலாகா மையின் ‘அவ்வொடு’ என்னாது ‘அவ்வை ஒட்டி, என்றும், ஒருவாற்றான் முதலாதலின் இழிவு சிறப்பாக ‘ஙவ்வும்’ என்றும் கூறினார். (நன். 106 சங்கர.)

ஙகரம் மொழிமுதல் ஆகாமை -

{Entry: A01__703}

நன்னூலார் ‘சுட்டியா...... முதலாகும்மே’ என்று ஙகரம், அ இ உ என்னும் மூன்று சுட்டும் - யாவினாவும் - எகரவினாவும்- என்னும் இவற்றின்வழி, அகரத்தொடு மொழிமுதலாகும் என்று கூறியமை பொருந்தாது. மொழிக்கு முதலாம் எழுத்து இவை, ஈறாவன இவை என ஈண்டுக் கருவி செய்தது, மேல் புணரியலில், நிலைமொழி ஈறு வருமொழி முதலோடு இயையப் புணர்க்கும் பொருட்டன்றே? அவ்வாறு புணர்த்தற்கு இயைபில்லாத ஙகரமும், அங்ஙனம் - இங்ஙனம் - உங்ஙனம் - யாங்ஙனம் - எங்ஙனம் - என இவ்வாறு மொழிக்கு முதலாம் என்றல் பயனில் கூற்றாம். அன்றியும், அங்கு - ஆங்கு - யாண்டு- யாண்டையது - அன்ன - என்ன - என்றாற்போலும் இவ்வொற் றுக்களும் (ங், ண், ன் என்பன) மொழிக்கு முதலாம் என்றல் வேண்டுதலின், அவர்க்கும் அது கருத்தன்று என்பது. (இ.வி. எழுத். 27 உரை)

ச section: 14 entries

சகர அகரம் மொழிமுதற்கண் வாராமை -

{Entry: A01__704}

சத்தான் என்று வழங்கற்பால சொல் செத்தான் என்று தமிழில் வழங்குகிறது. இச்சொல் தெலுங்கில் சச்செனு எனவும், கன்னடத்தில் சத்தனு எனவும், மலையாளத்தில் சத்து எனவும் வழங்குகிறது. இவற்றால் சகரஅகரம் பண்டு சகரஎகரச் சாயையில் தமிழில் ஒலித்திருக்கும் என்று உய்த்துணரலாம்.

சரி சமழ்ப்பு சட்டி சருகு சவடி சளி சகடு சட்டை சவளி சவி சரடு சந்து சதங்கை சழக்கு முதலிய சொற்கள் தொல்காப்பிய னார் காலத்து வழங்கப்பட்டில என்பது அறியத்தக்கது. (எ. ஆ. பக். 66, 67)

சகரம் மொழிமுதல் ஆதல் -

{Entry: A01__705}

சரி சமழ்ப்பு சட்டி சருகு சவடி சளி சகடு சட்டை சவளி சவி சரடு சந்து சதங்கை சழக்கு முதலியன வழக்கு செய்யுள் எனும் ஈரிடத்தும் வரும் சகரமுதன் மொழிகள். (நன். 105 மயிலை.)

சகர முதன்மொழி -

{Entry: A01__706}

‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே, அ ஐ ஒளஎனும் மூன்றலங் கடையே’ என்பது முதலாக இன்னோரன்ன சில எழுத்துக் களை மொழிக்கு முதலாகா என ஆசிரியர் தொல். விலக்கினா ரெனின், இவ்வடமொழிகளும் திசைச்சொற்களும் அக்காலத்து இவ்வாறு தமிழின்கண் பயின்று வாராமை பற்றி என்க. (நன். 106 சிவஞா.)

சங்கதம் முதலாகிய நான்கு -

{Entry: A01__707}

சொல், சங்கதம் எனவும் பாகதம் எனவும் சநுக்கிரகம் எனவும் அவப்பிரஞ்சனம் எனவும் நான்கு வகைப்படும். (மு.வீ. மொழி. 28)

சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாமை -

{Entry: A01__708}

சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது; அது போல, இகரஉகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிராகற் பாலன. அவற்றைப் புணர்ச்சிவேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கி வேறு எழுத்து என்று வேண்டினார். (தொ. எ. 2 இள. உரை)

இகர உகரம் குறுகிநின்றன, விகாரவகையான் புணர்ச்சி வேறு படுதலின். இவற்றை இங்ஙனம் குறியிட்டு ஆளுதல் எல்லாருக் கும் ஒப்ப முடிந்தது. சந்தனக் கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது; அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். (2 நச். உரை)

ஐகாரக்குறுக்கம் முதலியன ஒரு காரணம் பற்றிக் குறுகின வாகலின், சிறுமரம் பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம் ஆகாதவாறு போல, வேறெழுத்து எனப்படா. (சூ.வி. பக். 30).

சந்தி முடிவு மூன்றே -

{Entry: A01__709}

தோன்றிய சந்தியும், திரிந்த சந்தியும் கெட்ட சந்தியும் எனச் சந்தி மூன்றாம்.

யானைக்கோடு என்பது தோன்றிய சந்தி; மட்குடம் என்பது திரிந்த சந்தி; மரவேர் என்பது கெட்ட சந்தி. (இவற்றுள் முறையே ககரமெய் தோன்றியவாறும், ணகரம் டகரமாய்த் திரிந்தவாறும், மகரம் கெட்டவாறும் காண்க.)

சந்தியினை நால் என இயல்புசந்தியும் கூட்டிச் சிலர் சொல்ல, இந்நூலுடையார் இயல்புசந்தியை நீக்கியது என்னையோ எனின், இயல்புசந்திகளில் மிக்கும் திரிந்தும் கெட்டும் வருவன இல்லை யாதலின், முடிக்கவேண்டும் சந்திகள் இல்லாமலே (இல்லாமையாலே என்பது பொருள்) நீக்கினார். (நேமி. எழுத். 12 உரை)

சந்தியக்கரம் -

{Entry: A01__710}

அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் தம்முள் ஒத்து எய்தின் ஐ என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும். அகரத்துடன் உகரமும் வகரமும் தம்முள் ஒத்து ஒருதன்மையவாக எய்தின் ஒள என்னும் நெட் டெழுத்து ஒலிக்கும்.

‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தியான், அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்து எகரம் ஒலிக்கும்; அகரக் கூறும் உகரக் கூறும் தம்முள் ஒத்து ஒகரம் ஒலிக்கும் எனக் கொள்க.

இனி இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, தமிழ் நூற்பயிற்சி ஒன்றுமேயுடையார் எழுத்துப்போலி உணர்த்திற்று என்று பொருள் கொண்டு,

அ இ = ஐ; அய் = ஐ; கஇ = கை; கய் = கை

அ உ = ஒள; அவ் = ஒள; கஉ = கௌ; கவ் = கௌ

என உதாரணம் காட்டுவர். அவ்வாறு பொருள்கொண்டு உதாரணம் காட்டுமாற்றால் பெரும்பயன் இன்மையானும், வடநூலொடு மாறுபடும் ஆதலானும் அது பொருந்தாது என்க. (நன். 125 சிவஞா.)

‘சார்’: புணருமாறு -

{Entry: A01__711}

சார் என்னும் மரப்பெயர் வன்கணம் வந்துழி இனமெல் லெழுத்து மிகும்.

எ-டு : சார்ங்கோடு, சார்ஞ்செதிள், சார்ந்தோல், சார்ம்பூ

வருமொழி முதற்கண் காழ் என்ற சொல் வரின், வருமொழி வன்கணம் மிக்குப் புணரும்.

சார் + காழ் = சார்க்காழ் என வரும் (தொ. எ. 363, 364 நச்.)

சார்பு வேறுபெயர்கள் -

{Entry: A01__712}

புல்லல் எனினும், சார்தல் எனினும், புணர்தல் எனினும், சார்பென்னும் ஒருபொருட் கிளவி. (மு. வீ. எழுத். 23)

சார்பெழுத்தின் இடமும் முயற்சியும் -

{Entry: A01__713}

சார்பெழுத்துக்கள் தத்தம் முதலெழுத்துக்கள் தோன்றும் இடமே தமக்குப் பிறப்பிடமாய் அவற்றின் தோற்றத்துக்குரிய முயற்சியே தம் தோற்றத்துக்கும் முயற்சியாய்ப் பிறக்கும். ஆகவே, அவை தமக்கெனத் தனிப்பிறப்பிடமோ முயற்சியோ உடையன அல்ல. (நன். 87)

சார்பெழுத்து -

{Entry: A01__714}

தனித்தானும் ககரஒற்று முதலியன போல அகரமொடு சிவணி யானும் இயங்கும் இயல்பின்றி, ஒரு மொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாகவுடைய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்தாம். சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றும் அகரம் போலத் தனித்து நிற்றல் ஆற்றாமையின், நெடுங்கணக்கினுள் பெறப் படா ஆதலின், இவை ‘எழுத்து ஓரன்ன’ எனப்பட்டன. (சூ. வி. பக். 18, 19)

தமக்கெனத் தனித்த பிறப்பிடமின்றித் தாம் சார்ந்த எழுத்தின் பிறப்பே பிறப்பிடமாகத் தோன்றும் குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றே சார்பெழுத்தாம். (தொ. எ. 101 நச்.)

உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்தைச் சார்ந்து அவற்றின் இடமாகப் பிறப்பன சார்பெழுத்துக்களாம். அவையாவன உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றிய லிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்ற பத்தாம். (நன். 60)

உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலானும், ஆய்தம் உயிர்போல ஒரோவழி அலகு பெற்றும் மெய்போல ஒரோவழி அலகு பெறாதும் ஒருபுடை ஒத்து அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனையவை தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின. (நன். 60 சங்.)

தம்மொடு தாம் சார்ந்தும், இடன் சார்ந்தும், இடனும் பற்றுக் கோடும் சார்ந்தும் விகாரத்தால் வருதலின் சார்பெழுத் தாயின. (மயிலை.)

சார்பெழுத்து ஒன்பது என்றல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடே -

{Entry: A01__715}

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்து என்ற ஆசிரியர் தொல்காப்பியனாரும், ஏனைய உயிர்மெய் உயிரளபெடை ஒற்றளபெடை ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக் குறுக்கம் என்ற ஆறனையும் பின்னர் ஒருவாற்றான் தழுவுதலானும், (முதலும் சார்பும் அன்றி) மூன்றாவதொரு பகுதி இன்றாதலானும், முதலெழுத்தாம் தன்மை இவ்வொன்பதற்கும் இன்மையானும், அவை சார்பில் தோன்றுதலுடைமையானும், இவ்வாறனையும் அவற்றுடன் தலைப்பெய்து ‘ஒன்பதும் சார்பின் பால’ என்றார். (இ. வி. எழுத். 5 உரை).

சார்பெழுத்துக்களது பிறப்பு -

{Entry: A01__716}

சார்பெழுத்துக்கள் மூன்றும், தாம் சார்ந்து தோன்றும் தலைமை யெழுத்துக்களின் வளியிசை - வினைக்கள முயற்சி - பிறப்பியல்புகளோடு ஒருங்கொத்து, தத்தம் இயல்பொடு கூடி அவ்விரண்டு தன்மையும் ஒத்த தோற்றத்தோடு உருவாகிப் பிறக்கும்.

வருமாறு : மியா என்பதன்கண் நிற்கும் குற்றியலிகரம், மகரத்தினது பிறப்பிடமாகிய இயைந்த இதழை யும் யகரத்தின் பிறப்பிடமாகிய அடிநா அண்ணத் தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.

நாகரிது என்னும் சொற்களுள் நிற்கும் குற்றியலுகரம், தனது பற்றுக்கோடாகிய ககரமெய் பிறப்பிடத்தையும் சார்பாகிய அகரத்தின் பிறப்பிடத்தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.

அஃது என்னும் சொற்கண்நிற்கும் ஆய்தம், அகரத்திற்கும் தகர மெய்க்கும் உரிய அண்ணம் - பல்- நா- ஆகிய உறுப்புக்களின் தொழிலான் அவற்றைச் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். (தொ.எ.101. ச.பால.)

சார்பெழுத்துக்களின் எண்ணிக்கை பற்றிய இலக்கண நூலார் கொள்கை -

{Entry: A01__717}

இல க்கண தொல் வீரசோழி நேமி நன் தொன்னூல் முத்து சுவாமி

விளக்கம் காப்பியம் யம் நாதம் னூல் விளக்கம் வீரிய ம் நாதம்

(9) (3) (5) (9) (10) (9) (2) (10 )

உயிர்மெய் 216 - - 216 216 216 216 216

ஆய்தம் 1 1 - - 8 8 1 1

உயரளபெடை 7 - 7 7 21 21 - 7

ஒற்றளபெடை 11 - - 11 42 42 - 11

குற்றியலிகரம் 1 1 1 1 37 37 - 1

குற்றியலுகரம் 1 1 1 1 36 36 - 1

ஐகாரக்
குறுக்கம்
1 - 1 1 3 3 - 1

ஒளகாரக்
குறுக்கம்
1 - 1 1 1 1 - 1

ஆய்தக்
குறுக்க
ம் - - - 1 2 - - 1

மகரக்குறுக்கம் 1 - - 1 3 3 - 1

உறுவிரி 240 3 11 240 369 367 217 241

192

177

178

191

190

179

180

189

குறில்

நெடில்

ஐகாரக் குறுக்கம்

ஒளகாரக் குறுக்கம்

ஆய்தம்

மெய்

குற்றியலிகரம்

குற்றியலுகரம்

ஆய்தக் குறுக்கம்

மகரக் குறுக்கம்

உயிரளபெடை

ஒற்றளபெடை

223

262

267

266