Section B02 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 15 alphabetical subsections

  1. ச (CONTINUED from A01) section: 82 entries
  2. ஞ section: 4 entries
  3. ட section: 2 entries
  4. ண section: 5 entries
  5. த section: 88 entries
  6. ந section: 70 entries
  7. ப section: 134 entries
  8. ம section: 145 entries
  9. ய section: 15 entries
  10. ர, ல section: 5 entries
  11. வ section: 106 entries
  12. ழ section: 5 entries
  13. ள section: 3 entries
  14. ற section: 1 entries
  15. ன section: 12 entries

B02

[Version 2l (transitory): latest modification 2017/02/21, 09:20, Pondy time]

எழுத்து-2 (677 entries)

[TIPA file B02 (and pages 1-287 in volume printed in 2004)]

ச (CONTINUED from A01) section: 82 entries

சார்பெழுத்து வகை -

{Entry: B02__001}

தொல்காப்பியத்தில் 3, இலக்கண விளக்கத்தில் 9, வீர சோழியத்தில் 5, நேமிநாதத்தில் 9, நன்னூலில் 10, தொன்னூல் விளக்கத்தில் 9, முத்துவீரியத்தில் 2, சுவாமிநாதத்தில் 10 என இவ்வாறு சார்பெழுத்து வகைப்படும்.

சாரியை -

{Entry: B02__002}

இடைச்சொல் வகைகளுள் ஒன்று சாரியை. வேறாகி நின்ற இருமொழியும் தம்மில் சார்தல்பொருட்டு இடையே இயைந்து நிற்பது சாரியையாம். (தொ. எ. 118 நச். உரை)

சாரியைகள் பெயரொடு பெயரும் வினையும் இணைய வேற்றுமை யுருபுகள் இடையே விரிந்து வரும் தொகாநிலைக் கண்ணும், வேற்றுமையுருபுகள் மறைந்து வரும் தொகை நிலைக்கண்ணும், தாம் இன்ன ஈற்றுக்கு இன்ன சாரியைதான் வரும் என்று வரையறுத்த மரபுநிலை பெரும்பாலும் மாறா மல், அவ்விரு சொற்களுக்கும் நடுவிலேயே பெரும்பான்மை யும் வரும். ஒருசில இடங்களில் தனிமொழி இறுதியிலும் சாரியை வரும். (தொ. எ. 132 நச்.)

பதம் முன் விகுதியும் பதமும் உருபுமாகச் சார்ந்து கிடந்த வற்றை இயைக்க வரும் இடைச்சொல் சாரியையாம்.

எ-டு : நடந்தனன் - விகுதிப்புணர்ச்சி : ‘அன்’ சாரியை

புளியங்காய் - பதப்புணர்ச்சி : ‘அம்’ சாரியை

அவற்றை - உருபுபுணர்ச்சி : ‘அற்று’ ச் சாரியை

மார்பம் : தனிமொழியிறுதிக்கண் ‘அம்’ சாரியை

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் என்பனவும் பிறவும் (தான், தாம், ஆம், ஆ முதலியன) பொதுவான சாரியைகளாம்.

வருமாறு : ஒன் றன் கூட்டம், ஒரு பாற் கு, வண் டின் கால், தொடை யல் , பல வற்றை , பதி ற்று ப்பத்து, மர த்து க்கண், மன் றம் , எல்லார் தம் மையும், எல்லா நம் மையும், எல்லீர் நும் மையும், கல னே தூணி, நடந் தது , சாத் தனு க்கு, ஏற் றை , உய் கு வை, ஆ ன் , அவன் றான் , அவர் தாம் , புற்றாஞ் சோறு, இல் லாப் பொருள் (இல்லை பொருள்)

தொல். காலத்து வற்று, அக்கு, இக்கு - என்னும் சாரியைகள் பிற்காலத்தே முறையே அற்று, அ, கு என்னும் சாரியைகளாகக் கொள்ளப்பட்டன. அல், அம், ஐ, ன், தான், தாம் என்பன இறுதியில் வந்தன. (நன். 244).

தொடர்மொழியாகப் பதத்தொடு பதமும், பகுபதமாகப் பகுதியொடு விகுதியும், பெயர்ப்பொருளாகப் பெயரோடு உருபும் புணருங்காலே, நிலைப்பதத்திற்கும் வரும் பதம் விகுதி உருபுகட்கும் இடையே, சில எழுத்தும் சில பதமும் ஒரோவிடத்து வரின் அவை சாரியை எனப்படும்.

அ - த க்கு, ஏ - கல னே தூணி, உ - சாத்த னு க்கு, ஐ - மற் றை யவர்,

கு - மொழி கு வன், ன் - ஆ ன் கன்று, அன் - ஒன் றன் கூட்டம்,

ஆன் - இரு பான் (இருபானை), இன் - வண் டினை , அல் - ‘நறுந் தொடை யல் சூடி’, அற்று - பல வற்றை , இற்று - பதிற்று ப்பத்து, அத்து - நி லத்தி யல்பு, அம் - புளி யங் காய், தம் - எல்லார் தம் மையும், நம் - எல்லா ம் மையும், நும் - எல்லீர் நும் மையும் - என முறையே பதினேழு சாரியை என்றவாறு காண்க. இவை போல்வன பலவுமுள எனக் கொள்க. (தொ. வி. 52 உரை).

சாரியை இயற்கை -

{Entry: B02__003}

வழிவந்து விளங்கும் சாரியை, இடைநின்று இயலும் சாரியை எனச் சாரியை இருவகைத்தாம்.

மா ன் - கோ ஒன் - என்றாற் போல்வன சொல்லின் ஈற்றில் நின்றியலும் சாரியைகள்; சே வின் தோல், சித்திரை க்கு க் கொண்டான், எகி னங் கோடு- என்றாற்போல்வன (பொருள் நிலைக்கு உதவுவனவாய்ச்) சொற்களின் இடையே வந்து அவற்றை இணைப்பதற்கு இயலும் சாரியைகள்; ஈண்டு அவை முறையே இன், இக்கு, அம்- என்பனவாம்.

சாரியை வேற்றுமையுருபு நிலைபெறுமிடத்து உடைமையும் இன்மையும் ஒத்தனவாம். அஃதாவது சாரியை வருதலு முடைத்து; வாராமையும் ஆம் என்றவாறு

எ-டு : ஆவைக் கொணர்ந்தான், ஆவினைக் கொணர்ந் தான்; பூவொடு மணந்த கூந்தல், பூவினொடு மணந்த கூந்தல்; சொற்குப் பொருள், சொல்லிற்குப் பொருள்; நெல்லது பொரி, நெல்லினது பொரி; தேர்க்கண் நின்றான், தேரின்கண் நின்றான்.

இனிச் சாரியை பெற்றே நிகழ்வன வருமாறு:

எ-டு : மரத்தை வெட்டினான், பலவற்றொடு முரணினான், கூழிற்குக் குற்றேவல் செய்தான், ஆவினது கன்று, நிலாவின்கண் ஒளி

வேற்றுமையுருபு நிலைபெறும் புணர்ச்சி உருபுபுணர்ச்சி; அவ்வுருபு தோன்றாது அப்பொருண்மை தொக்குப் புணர்வது பொருட்புணர்ச்சி. பொருட்புணர்ச்சிக்கண் சாரியை வருதலு முண்டு; வாராமையும் அமையும்.

எ-டு : மகக்கை - மக வின் கை மக த்து க்கை; மட்குடம் - மண் ணின் குடம் (மண்ணினாகிய குடம்); கரும்பு வேலி - கரும் பின் வேலி; பலாஅக்கோடு - பலா வின் கோடு; புறம்நின்றான் - புறத் தின் கண் நின்றான். (தொ. எ. 132 ச. பால.)

‘சாரியை இயற்கை உறழத் தோன்றல்’ -

{Entry: B02__004}

‘சாரியை உள்வழிச் சாரியை கெடுதல்’ -

{Entry: B02__005}

‘சாரியை உள்வழித் தன்உருபு நிலையல்’ -

{Entry: B02__006}

‘ஐகார வேற்றுமைத் திரிபு’ காண்க.

சாரியை நிலையும் கடப்பாடு -

{Entry: B02__007}

உருபுகள் புணருமிடத்து இன்ன ஈறு இன்ன சாரியை பெறும் என்ற வரலாற்று முறைமையே சாரியை நிலையும் கடப் பாடாம்.

உருபேற்கும்போது, அ ஆ உ ஊ ஏ ஒள என்ற ஆறு ஈறும் இன் சாரியை பெறுதல்; பல்ல பல சில உள்ள இல்ல, யா வினா என்பன வற்றுச் சாரியை பெறுதல்; அவை இவை உவை என்பன வற்றுச் சாரியையும், சில உருபிற்கு வற்றுச்சாரியை யோடு இன்சாரியையும் பெறுதல்; ஓகார ஈறு ஒன்சாரியை பெறுதல். அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல்; (தொ. எ. 173 - 181 நச்).

ஞகர நகர ஈறுகள் இன் பெறுதல் 182 ; அவ் இவ் உவ் என்பன வற்றுப் பெறுதல் 183 ; தெவ் என்பது இன் பெறுதல் 184 ; மகரஈற்றுப் பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல் 185, 186 ; யான் யாம் நாம் தாம் தான் என்பன என் எம் நம் தம் தன் எனவும், நீ ‘நின்’ எனவும், நும் என்பது இயல்பாகவும் அமைந்து உருபேற்றல் 187, 188, 192 ; எல்லாம் என்ற பெயர் உயர்திணைப்பொருட்கண் நம் சாரியையும், அஃறிணைப் பொருட்கண் வற்றுச் சாரியையும் பெறுதல் 190, 189 ; எல்லார் என்ற பெயர் தம்மும் உம்மும் பெறுதல் 191 ; எல்லீர் என்ற பெயர் நும்மும் உம்மும் பெறுதல் 191 ; அழன் புழன் என்பன அத்தும் இன்னும் பெறுதல் 193 ; ஏழ் என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெறுதல் 194; குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் இன்சாரியை பெறுதல் 195 ; எண்ணுப் பெயர்கள் அன்சாரியை பெறுதல் 198 ; அஃது இஃது உஃது என்ற சுட்டுப் பெயர்கள் ஆய்தம் கெட்டு அன்சாரியை பெறுதல் 200 ; யாது என்ற வினாப்பெயர் அன்சாரியை பெறுதல் 200 ; திசைப்பெயர்கள் ஏழனுருபு ஏற்குமிடத்து இன்சாரியை பெறுதலும் பெறாமை யும் 201 என்பன போல்வன பெயர்ச்சொற்கள் உருபேற்கு மிடத்துச் சாரியை நிலையும் கடப்பாடுகளாம். (தொ. எ. 173 - 202 நச்.)

சாரியை நிலையும் கடப்பாடு இல்லன -

{Entry: B02__008}

உருபேற்கும்போது சாரியை பெறும் என்று கூறாத ஈறுகள் உயிருள் இகர ஈறும், மெய்யுள் ணகர யகர ரகர லகர ளகர ஈறுகளுமாம். இவை இன்சாரியை பெற்றும் பெறாதும் உருபேற்கும்.

கிளியினை, கிளியை; மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை; கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை என உருபேற்குமாறு.

கூறப்பட்ட ஈற்றுச்சொற்கள் நீங்கலாக, அவ்வீற்றுள் ஒழிந்த சொற்களும் பொன்னினை பொன்னை (னகர ஈறு), தாழினை தாழை (ழகர ஈறு), தீயினை தீயை, ஈயினை ஈயை, வீயினை வீயை (ஈகார ஈறு), தினையினை தினையை, கழையினை கழையை (ஐகார ஈறு) என்றாற் போல, இன்சாரியை பெற்றும் பெறாமலும் உருபேற்கும்.

நம்பியை நங்கையை என்றாற்போல வரும் உயர்திணைப் பெயர்களும், கொற்றனை சாத்தியை என்றாற் போல வரும் விரவுப்பெயர்களும் சாரியை பெறாமல் உருபேற்கும். (தொ. எ. 202 நச். உரை)

சாரியைப் புணர்ச்சி -

{Entry: B02__009}

ஒரு சொல்லின்முன் ஒரு சொல்லோ விகுதியோ உருபோ புணருமிடத்து ஒன்றும் பலவுமாகிய சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பித்தலும் நிகழும்.

எ-டு : நடந்தனன்: அன்சாரியை; நடந்தான்: சாரியை இன்று. புளியமரம், புளியங்காய்: அ, அம் சாரியை; புளிக்கறி: சாரியை இன்று. நெல்லின் குப்பை, நெற்குப்பை: இன்சாரியை வருதலும் வாராமையும் ஆகிய விகற்பம். காலமொடு: காலத்தொடு, அத்துச் சாரியை வருதலும் வாராமையும் ஆகிய விகற்பம். மரத்தை, மரத்தினை: முறையே ஒரு சாரியையும் (அத்து), இரு சாரியையும் (அத்து, இன்) பெற்றன. அவற்றை, அவற்றினை: முறையே ஒரு சாரியையும் (அற்று), இரு சாரியையும் (அற்று, இன்) பெற்றன. ‘மாடத்துக்கு’ என அத்துச் சாரியை வேண்டியவழி, சாரியை வாராது ‘மாடக்கு’ என வருதல், தொகுத்தல் ஆகிய செய்யுள்விகாரமாம். (நன். 243).

சாரியை பற்றிய செய்தி -

{Entry: B02__010}

நடந்தனன் : இஃது அன்சாரியை வேண்டியே நின்றது.

நடந்தான் : இது சாரியை வேண்டாது நின்றது.

இவை விகுதிப்புணர்ச்சி.

புளியமரம் எனவும் புளிக்கறி எனவும், நெல்லின் குப்பை எனவும் நெற்குப்பை எனவும் பதப்புணர்ச்சிக்கும்; அவற்றை மரத்தை எனவும், தன்னை என்னை எனவும், ஆனை ஆவை எனவும் உருபுபுணர்ச்சிக்கும்; முறையே சாரியை வேண்டியும் வேண்டாதும் நின்றவாறு காண்க.

முகத்தினான் - குளத்தங்கரை - அவற்றினை - அவற்றினுக்கு - மரத்தினுக்கு - என்றாற் போல்வனவற்றில், முறையே அத்து இன், அத்து அம், அற்று இன், அற்று இன் உ, அத்து இன் உ - எனப் பலசாரியை வருதல் காண்க.

நிலக்கு - மாடக்கு - என்றாற்போல்வன நிலத்துக்கு - மாடத் துக்கு - எனச் சாரியை வேண்டியவழி இல்லாததனாலே செய்யுள் விகாரமாம் என்க. (நன். 243 இராமா.)

சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமும் -

{Entry: B02__011}

நிலைமொழியின் முன்னர் விகுதியும் பதமும் உருபும் வந்து புணருமிடத்து இடையே ஒன்றும் இரண்டும் சாரியை வந்து நிற்றலும், வாராதொழிதலும், ஒன்றற்கே ஓரிடத்து வந்து ஓரிடத்து வாராது வழங்குதலும் ஆம்.

எ-டு : து, உண்டது - சாரியை (அ) வேண்டியே நின்றன.

வெற்பன், பொருப்பன், சாரியை வேண்டாவாயின.

ஊரன், வீரன் }

உண் டன ன், உண்டான்; சாரியைப் பேறு (அன்,கு)

மொழி கு வன், மொழிவன் } விகற்பித்து வந்தன.

இவை விகுதிப்புணர்ச்சி.

அரை யே முந்திரிகை, கல னே இருநாழி - சாரியை (ஏ) வேண்டியே நின்றன.

அத்திக்காய், அத்தி கடிது - இருவழியும் சாரியை வேண்டா வாயின.

புளி யங் காய், புளி குறிது - சாரியைப் பேறு (அம்) வேற்றுமை யில் வேண்டியும், அல்வழியில் வேண்டாதும் உறழ்ச்சி ஆயிற்று.

இவை பதப்புணர்ச்சி

அவற்றை, அவையிற்றை - சாரியை (அற்று, இற்று) வேண்டியே நின்றன.

வேயை, வேயால், வேய்க்கு - சாரியை வேண்டாவாயின.

செருவை - விளவை, சாரியைப் பேறு (இன்)

செருவிற்கு - விளவிற்கு } விகற்பித்து வந்தன.

இவை உருபுபுணர்ச்சி. (நன். 242 மயிலை.)

விகுதிப் புணர்ச்சிக்கண், உண்டது - ஊரது என்றாற் போல்வன சாரியை (அ) வரவேண்டியே நின்றன; வெற்பன் - பொருப்பன் என்றாற் போல்வன சாரியை வேண்டாது நின்றன; வருவன, வருவ - உண்பன, உண்ப என்றாற் போல்வன இருவகையும் ஒப்ப நின்றன.

பதப்புணர்ச்சிக்கண், பலவற்றுக்கோடு - சிலவற்றுக்கோடு - என்றாற்போல்வன சாரியை (அற்று) வரவேண்டியே நின்றன; அத்திக்காய் - அகத்திக்காய் - என்றாற் போல்வன சாரியை வேண்டாது நின்றன; விளவின்கோடு, விளங்கோடு, அதவின் கோடு, அதங்கோடு - என்றாற் போல்வன இருவகையும் ஒப்ப நின்றன.

உருபுபுணர்ச்சிக்கண், மரத்தை, மரத்தொடு - அவற்றை, அவற்றொடு - என்றாற்போல்வன சாரியை (அத்து, அற்று) வரவேண்டியே நின்றன; நம்பியை - நம்பியொடு - கொற்றனை, கொற்றனொடு - என்றாற் போல்வன சாரியை வேண்டாது நின்றன; மண்ணினை, மண்ணை - வேயினை, வேயை - என்றாற் போல்வன இருவகையும் ஒப்ப வந்தன. பூவினொடு விரி கூந்தல், பூவொடு விரிகூந்தல் - என்றாற்போல்வனவும் இருவகையும் ஒப்ப வந்தவாறு.

அவையிற்றிற்கு, இவையிற்றிற்கு - என்றாற்போல்வன சாரியை பலவும் (இற்று, இன்) வந்தன. (இ.வி.எழுத். 61 உரை)

சாவ என்னும் வினையெச்சம் புணருமாறு -

{Entry: B02__012}

சாவ என்னும் செயவென் எச்சம், பொதுவிதியான் வருமொழி வன்கணம் வரின் வந்த வல்லொற்று மிக்கும், இயல்புகணம் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : சாவக்குத்தினான், சாவ ஞான்றான், சாவ யாத்தான், சாவ வடைந்தான் (வகரம் உடம்படுமெய்)

(தொ. எ. 204 நச்.)

ஈறாகிய வகர உயிர்மெய் கெட, வன்கணம் வரின் வல்லொற்று மிக்கும், ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் இச்சொல் புணர்வதுண்டு.

எ-டு : சாவ + குத்தி = சாக்குத்தி; சாவ + ஞான்றான் = சாஞான்றான்; சாவ + வந்தான் = சாவந்தான்; சாவ + அடைந்தான் = சாவடைந்தான் (வகரம் உடம்படு மெய்) (தொ. எ. 209 நச்.)

சாவ என்னும் வினையெச்சம் ஈற்றுயிர்மெய் குன்றியது போலவே, அறிய என்ற செயவென் எச்சமும் ஈற்றுயிர்மெய் குன்றிப்

‘பால் அறிவந்த உயர்திணைப் பெயரே’ (தொ. சொ. 164. நச்)

என்றாற் போல வருவதுண்டு.

சாவ என்பது, அகரஈற்று வினையெச்சம் ஆதலின், வருமொழி முதல் வன்கணம் வருமிடத்து மிக்குப் புணரும்; ஒரோவழி ஈற்று வகர உயிர்மெய் கெட்டு வன்கணம் மிக்குப் புணரும்.

எ-டு : சாவ + குத்தினான் = சாவக் குத்தினான், சாக் குத்தி னான் ‘கோட்டுவாய்ச் சாக்குத்தி’ (முல்லைக். 5 :35) (நன். 169)

சில என்ற பெயர் ஏனைய பெயர்களொடு புணருமாறு -

{Entry: B02__013}

சில என்பது ஏனைய பெயர்களொடு புணரும்வழி ஈற்று அகரம் கெட்டும் புணரும்; வருமொழி உயிர் வரின் லகரஒற்று இரட்டும். (மென்கணம் வருவழி லகரம் னகரம் ஆகும்.)

எ-டு : சில்காடு, சேனை, தானை, பறை; யானை, வேள்வி; சில்லணி, சில்லிலை.

ஈற்று அகரம் கெடாமல் சில காடு - சில சேனை - என்றாற் போல இயல்பாகப் புணர்தலுமுண்டு. (தொ. எ. 214 நச்.)

சில + மணி > சில் + மணி = சின்மணி என மென்கணத்தொடு புணருமாறு காண்க. (369 நச்.)

‘சில விகாரமாம் உயர்திணை’ -

{Entry: B02__014}

பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்களது ஈற்று மெய் யெழுத்து அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும் என்ற விதிக்கு விலக்காக, சிலவிடங்களில் நிலைமொழியீறு திரிந்து வருமொழி வல்லெழுத்து மிகுதலும் மிகாமையுமுண்டு.

எ-டு : கபிலபரணர், வடுகநாதன், அரசவள்ளல் - நிலைமொழியீற்று னகரம் கெட்டது.

ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்பள்ளி - நிலைமொழி யீறு கெட்டு வல்லெழுத்து மிக்கது.

குமரன் + கோட்டம் = குமரகோட்டம், குமரக் கோட்டம் - நிலைமொழியீறு கெட்டு வருமொழி வல்லெழுத்து மிகாமலும் மிக்கும் விகற்பித்தது.

இவ்வாறு இருவழியும் உயர்திணையுள் சில தமக்கேற்ற விகாரமாயின. (நன். 159 சங்கர.)

சிறப்பில்லா எழுத்துக்கள் -

{Entry: B02__015}

அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்துக்களாம். அளபெடை தனக்கென வரிவடிவின்றி நெட்டெழுத்தின் பின்னர் ஓசை நிறைக்க வரும் இனக்குற் றெழுத்தே யாதலின் சிறப்பின்று. உயிர்மெய் புணர்ச்சிக்கண் மொழிமுதலில் மெய்யாகவும், இடையிலும் ஈற்றிலும் உயிராகவும் கொள்ளப்படுதலின், தனக்கெனத் தனிப்பட்ட முறையில் புணர்ச்சி வேறுபாடு இன்மையின், சிறப்புடைத் தன்று. வரிவடிவம் ஒலிவடிவைக் காட்டும் அறிகுறி மாத்திரை யாய், ‘எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி’க்கண் பொருளை அறிவுறுத்தும் ஆற்றலின்றிக் காலம்தோறும் மாறி வருதலின் சிறப்பிற்றன்று. (தொ. எ. 1. இள. உரை)

சிறப்பில்லாத ஓரெழுத்தொரு மொழிகள் -

{Entry: B02__016}

‘ஓரெழுத்தொருமொழி’ காண்க.

சிறப்புக் கருவி -

{Entry: B02__017}

தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் நான்காம் இயலாகிய புணரியலில் கூறப்படுவன செய்கை ஒன்றற்கே உரியவாகலின், அடுத்த ஐந்து இயல்களிலும் கூறப்படும் செய்கையை நோக்க, இப்புணரியலில் கூறப்படுவன யாவும் சிறப்புக்கருவிகளாம். (சூ. வி. பக். 17).

சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல் -

{Entry: B02__018}

ஒலியெழுத்துச் சிறப்புடைமையின் எடுத்தோதினார்; என்னை? ‘சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல்’ என்பது தந்திரவுத்தி ஆகலான். ஒரு சாரார் வேண்டும் உணர்வெழுத்து முதலான விகற்பம் எல்லாம் இவ்வதிகாரப் புறநடையுள் (சூ. 256) காண்க. (நன். 57 மயிலை.)

சிறு நூல் -

{Entry: B02__019}

சூத்திரம் என்னும் ஓர் உறுப்பினையே அடக்கி, ஓத்து படலம் முதலியன இன்றி வரும் இலக்கண நூல்.

எ-டு : இறையனார்களவியல் (பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை முதலியனவும் கொள்க.)(சிவஞா. பா.வி.பக். 9)

சின்: புணருமாறு -

{Entry: B02__020}

சின் என்ற இடைச்சொல் முன்னிலைக்கே சிறப்பாயினும் ஏனையிடத்தும் ஒரோவழி வரும் அசைச்சொல்லாம். (தொ. சொ. 276, 277 நச்.)

அது வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி வேற்றுமைப் பொருட் புணர்ச்சி போல னகரஒற்று றகரஒற்றாய்த் திரிந்து புணரும்.

‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகநா. 7 )

என வரும். (தொ. எ. 333 நச். உரை)

சினை எழுத்து -

{Entry: B02__021}

ஒரு சொல்லுக்கு இடைகடைகளில் உறுப்பாய் வரும் எழுத்துக்கள் சினையெழுத்துக்களாம். (சொல்லின் முதற்கண் வரும் எழுத்துச் சினை எனப்படாது. அதனை ‘முதல்’ என்றலே மரபு).

எ-டு : ‘யாஎன் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ (தொ.எ. 34)

‘ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ (எ. 56)

குறில் நீண்டவிடத்துச் ‘சினை நீடல்’ எனவும், நெடில் குறுகிய விடத்துச் ‘சினை கெடல்’ எனவும் கூறும் மரபுண்டு.

எ-டு : ‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ (159 நச்.)

‘சுட்டுச்சினை நீடிய மென்தொடர் மொழி’ (427 நச்.)

‘குறியதன் இறுதிச் சினைகெட’ (234 நச்.)

சினை என்னும் சொல்லாட்சி -

{Entry: B02__022}

சினையாவது கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறு ஆதலின், ‘குறியதன் இறுதிச் சினை’ (குற்றெழுத்தினை அடுத்து நிற்கும் ஆகார ஈற்றுச் சொல்லின் இறுதியில் நிற்கும் ஆகாரம்) என்புழி, எழுத்தினது கூறு ‘சினை’ எனப்பட்டது.

முதலும் சினையு ம் பொருள்வேறு படாஅ, நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே (சொல். வேற். மயங். 6) என்றதனான், ஒன்றற்குச் சினையாவதே பிறிதொன்றற்கு முதலாக வருமாத லின், சொற்றொடரின் சினையாக நிற்கும் சொல்தான் முதலாயவழி, அதற்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து அச்சொற்குச் சினையாம்.

யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு (மொழிமரபு) என்புழி, மியா என்னும் சொற்கு உறுப்பாய் நிற்கும் ‘யா’ என்னும் உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது.

சுட்டுச்சினை நீடிய ஐஎன் இறுதி (தொகைமரபு 17), ‘சுட்டுச் சினை நீடிய மென்தொடர் மொழியும் (குற்றிய. 22) என்புழி, சுட் டெழுத்தின் மாத்திரையளவு சினை எனப்பட்டது.

நூறென் கிளவி ஒன்றுமுதல் ஒன்பா ற்கு, ஈறுசினை ஒழியா இனஒற்று மிகுமே (குற்றிய. 67) என்புழி, றகரமெய்யினை ஊர்ந்து நின்ற குற்றுகரம் சினை எனப்பட்டது.

இவ்வாறே மொழியிடையிறுதிகளில் ஐகார எழுத்தின் மாற் றெழுத்துக்களாக வரும் அய் என்பதும் மொழியின் உறுப்பாக வருதலின், ‘ஐயென் நெடுஞ்சினை’ எனப்பட்டது. (தொ. எ.234 ச.பால.)

சினை நீடல் -

{Entry: B02__023}

நெட்டெழுத்துக் குற்றெழுத்தாதலைச் ‘சினை கெடல்’ என்றாற் போலக் குற்றெழுத்து நெட்டெழுத்தாதலைச் ‘சினை நீடல்’ என்ப.

சுட்டுச்சினை நீடிய இறுதி (தொ. எ. 159 நச்.) ஆண்டை, ஈண்டை, ஊண்டை - என்பன. இவற்றுள் முதலெழுத்து அ இ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள் ஆகும்.

சுட்டு ச்சினை நீடிய மென்தொடர் மொழி (427 நச்.) ஆங்கு, ஈங்கு, ஊங்கு என்பன. இவற்றுள் முதலெழுத்து அ இ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள் ஆகும்.

சொல்லில் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக் களைச் ‘சினை’ என்றல் ‘ஐ என் நெடுஞ்சினை’, ‘ஈறுசினை ஒழியா’ (56, 472 நச்.) முதலிய இடங்களிலும் காணலாம்.

சினைப்பெயர்ப் பகுபதம் -

{Entry: B02__024}

தாளான், தாளாள், தாளார், தாளது, தாளன, தாளேன், தாளேம், தாளாய், தாளீர் என இவ்வாறு வருவன ‘இவ் வுறுப்பினை யுடையார்’ என்னும் பொருண்மைச் சினைப் பெயர்ப் பகுபதம். (தாள் என்னும் சினைப்பெயர் அடியாக இப்பெயர்ப்பகுபதங்கள் தோன்றின). (நன். 133 மயிலை.)

சுக்குக் கொடு : குற்றியலுகர ஓசை அளவு -

{Entry: B02__025}

சுக்கு + கொடு = சுக்குக் கொடு. நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகர ஈற்றது; வருமொழி ககர வல்லெழுத்து முதலது. இந்நிலையில் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் தன் மாத்திரையின் குறுகுகிறது என்பது எல்லா ஆசிரியர்க்கும் உடன்பாடு. இக்குற்றியலுகரம் ககர ஈற்றுக் குற்றியலுகர மாகவே எல்லா ஆசிரியராலும் கொள்ளப்பட்டுள்ளது.

நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரம், அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழியொடு புணருமிடத்து, முற்றிய லுகரமாகவே நீண்டொலிக்கிறது என்பர் ஒரு சாரார். அங்ஙனம் ஏனைய குற்றியலுகரங்கள் முற்றியலுகரங்களாக ஒருமாத்திரையளவு நீண்டு ஒலிக்கும்போது, சுக்குக் கொடு என்றாற் போன்ற ககர வல்லொற்றுத்தொடர்க் குற்றிய லுகரங்கள் வருமொழியில் அதே ககர வல்லொற்று வரு மிடத்துக் முற்றியலுகரமாக நீண்டொலியாது பண்டைக் குற்றியலுகரமாகவே அரைமாத்திரையளவு ஒலிக்கும் என்பது ஒருசாரார் கருத்து. (தொ. எ. 409, 410 இள. உரை)

மற்றொரு சாரார், அல்வழி வேற்றுமைப் புணர்ச்சியில் நிலை மொழி யீற்றுக் குற்றியலுகரம் வருமொழி முதலெழுத்தொடு புணருமிடத்தும் தன் அரைமாத்திரையில் நிலைபெற் றிருக்கும்; ஆனால் வன்தொடர்மொழி ஈற்றுக் குற்றியலுகரம் வருமொழி முதற்கண் அதே வல்லெழுத்து வரின், தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை அளவிற்றாகும் என்பர். (408, 409 நச். உரை)

நச்சினார்க்கினியரைப் பின்பற்றி இலக்கணக்கொத்து ஆசிரியர், இலக்கண விளக்க ஆசிரியர் (எழுத். 16), சிவஞான முனிவர் (சூ.வி. பக். 30, 31) முதலாயினாரும் கால்மாத்திரை அளவைக் குறிப்பர்.

ஆயின் இளம்பூரணர் கூறுவதே தொல். கருத்தாகும் என்பதே இக்கால ஆய்வாளர் துணிவு. நன்னூலார் முதலாயினார் இச்செய்தியைக் குறிக்கவில்லை.

சுட்டின்முன் ஆய்தம் -

{Entry: B02__026}

அ இ உ என்னும் சுட்டின்முன் வரும் ஆய்தச் சொற்களாகிய அஃது இஃது உஃது என்பனவற்றின் ஆய்தம், அச்சுட்டுப் பெயர்கள் உருபொடு புணரும்வழி அன்சாரியை இடையே வரின், கெடவே, அச்சுட்டுப் பெயர்கள் அது இது உது எனநின்று புணரும்.

வருமாறு : அஃது + ஐ > அஃது + அன் + ஐ > அது + அன் + ஐ = அதனை.

இதனை, உதனை என்பனவும் இவ்வாறே கொள்க. (நன். 251)

சுட்டு -

{Entry: B02__027}

அ இ உ என்பன மூன்றும் சுட்டுப்பொருளனவாகச் சொல்லின் பகுதியாக இணைந்தோ, சொல்லின் புறத்தே இணைந்தோ வருமாயின், முறையே அகச்சுட்டு எனவும் புறச்சுட்டு எனவும் பெயர் பெறும்.

எ-டு : அவன், இவன், உவன் - அகச்சுட்டு.

அக்கொற்றன், இக்கொற்றன், புறச்சுட்டு உக்கொற்றன் } (நன். 66)

‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ புணருமாறு -

{Entry: B02__028}

சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகாரஈற்று இடைச் சொற்கள் ஆண்டை ஈண்டை ஊண்டை என்பனவும், ஆயிடை போல்வனவு மாம். அவற்றுள் முதலன மூன்றும் வருமொழி வன்கணம் வந்துழி மிக்கே புணரும். ஆயிடை போல்வன உறழ்ந்து முடியும்.

எ-டு : ஆண்டைக் கொண்டான், ஈண்டைக் கொண்டான், ஊண்டைக் கொண்டான் - மிகுதி

ஆயிடைக் கொண்டான், ஆயிடை கொண்டான் - உறழ்ச்சி (தொ. எ. 159 நச். உரை)

‘சுட்டுச்சினை நீடிய மென்தொடர் மொழி’ புணருமாறு -

{Entry: B02__029}

சுட்டிடைச் சொல்லாகிய சினையெழுத்து நீண்ட மென் தொடர்க் குற்றியலுகர ஈற்று மொழிகள் ஆங்கு, ஈங்கு, ஊங்கு - என்பன. வன்கணத்தொடு அவை புணரும்வழி வருமொழி வல்லெழுத்து மிக்கே புணரும்.

எ-டு : ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான். (தொ. எ. 427 நச்.)

சுட்டுச்சினை நீளா மென்தொடர் மொழி புணருமாறு -

{Entry: B02__030}

சுட்டுச்சினை நீளா மென்தொடர் மொழிகள் அங்கு, இங்கு, உங்கு என்பன. அவை(யும்) வன்கணத்தொடு புணரும்வழி வருமொழி வல்லெழுத்து மிக்கே முடியும்.

எ-டு : அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண்டான். (தொ. எ. 429 நச்.)

சுட்டு முதல் உகர இறுதிச் சொல் புணருமாறு -

{Entry: B02__031}

சுட்டிடைச் சொல்லை முதலாக உடைய உகர ஈற்றுச் சொற்கள் அது இது உது என்பன. அவை உருபொடு புணரு மிடத்து ஈற்று முற்றியலுகரம் கெட, அன்சாரியை பெற்று அதனை இதனை உதனை என்றாற் போலப் புணரும். (தொ. எ. 176 நச்.)

அவை அல்வழிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

வருமாறு : அது குறிது, சிறிது, தீது, பெரிது; இது குறிது, சிறிது, தீது, பெரிது; உது குறிது, சிறிது, தீது, பெரிது. (257 நச்.)

அது என்னும் சுட்டுப்பெயர் நிலைமொழியாக, வருமொழி ‘அன்று’ என்ற சொல் வரின் இயல்பாகப் புணர்தலேயன்றி, ஈற்று உகரம் ஆகாரமாகத் திரிந்து புணர்தலுமுண்டு.

வருமாறு : அது + அன்று = அதுவன்று (வகரம் உடம்படு மெய்); அதாஅன்று (258 நச்.)

‘அது’ நிலைமொழியாக ஐ என்ற இடைச்சொல்லொடு புணரும்வழி, உகரம் கெட, அதைமற்றம்ம எனப் புணர்ந்து வரும். (258 நச். உரை)

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் அது முதலியன முற்றியலுகரம் கெட்டு அன்சாரியை பெற்று வருமொழி யொடு புணரும்.

எ-டு : அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; அதன் ஞாண், இதன்ஞாண், உதன்ஞாண்; அதன்வட்டு, இதன்வட்டு, உதன்வட்டு; அதனினிமை, இதனி னிமை, உதனினிமை (263 நச்.)

சுட்டுமுதல் உகரம் -

{Entry: B02__032}

சுட்டிடைச் சொல்லை முதலாக வுடைய உகர ஈற்றுச் சொற்களாகிய அது இது உது என்பன.

‘சுட்டுமுதல் உகர இறுதிச் சொல் புணருமாறு’ காண்க. (தொ. எ. 176 நச்).

‘சுட்டுமுதல் வயின்’ புணருமாறு -

{Entry: B02__033}

வயின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொல்லாகவும் பெயராகவும் வரும். ‘சுட்டு முதல் வயின்’: அவ்வயின், இவ்வயின், உவ்வயின் என்பன. அவை வருமொழி வன்கணத்தொடு புணர்வழி ஈற்று னகரஒற்று றகரஒற்றாய்த் திரிய, அவ்வயிற் கொண்டான். இவ்வயிற் கொண்டான் உவ்வயிற் கொண்டான் - என்றாற் போலப் புணரும். சுட்டோடு இணைந்த வயின் பெயராகும். (தொ. எ. 334 நச்.)

‘சுட்டு முதலாகிய ஆய்த இறுதி’ச் சொல் புணருமாறு -

{Entry: B02__034}

தொல்காப்பியனார் ஈற்றயல் எழுத்தையும் ஈறு என்ப ஆதலின், சுட்டு முதலாகிய ஆய்த இறுதிப் பெயர்கள் அஃது, இஃது, உஃது என்பன. அவை உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அன்சாரியை பெற்று ஆய்தத்தைக் கெடுத்துப் புணரும்.

எ-டு : அஃது + அன் + ஐ = அதனை; அஃது + அன் + கோடு = அதன்கோடு (தொ. எ. 200, 422 நச். )

அது முதலிய முற்றியலுகர ஈற்றுச் சொல்லும், அஃது முதலிய குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் உருபுபுணர்ச்சிக்கண்ணும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அதனை - அதன்கோடு - முதலியனவாகப் புணரும். இவற்றின் நிலைமொழியை அது வென்றோ அஃது என்றோ உறுதியாகக் கூற இயலாது.

அஃது முதலியன அல்வழிக்கண் வருமொழி முதல் உயிரெழுத் தாயின் அஃதழகியது என்றாற்போல இயல்பாகப் புணரும்; வருமொழிக்கண் மெய்முதலாகிய எழுத்து வரின் ஆய்தம் கெட., அஃது + கடிது = அது கடிது; அஃது + நன்று = அது நன்று என்றாற் போலப் புணரும்; வருமொழி யகரம் வருவழி, அஃது + யாது = அஃதியாது, அது யாது என்ற இருநிலையும் பெறும். (தொ. எ. 423, 424 நச்.)

‘சுட்டு முதலாகிய ஐ என் இறுதி’ புணருமாறு -

{Entry: B02__035}

சுட்டிடைச் சொல்லை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொற்கள் அவை இவை உவை என்ற மூன்றாம். இவை மூன்றும் அவ்வழிக்கண் வன்கணம் வந்துழி இயல்பாக முடியும்.

எ-டு : அவை கடிய, இவை கடிய, உவை கடிய

(தொ. எ. 158 நச்.)

இவை உருபேற்கும்போதும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும், வற்றுச்சாரியை இடையே ஏற்று, வற்றுச்சாரியை வகரஒற்றுக் கெட்டு அற்றுச்சாரியையாக, அதனொடு புணரும்.

எ-டு : அவை + வற்று + ஐ > அவை + அற்று + ஐ = அவை யற்றை (யகரம் : உடம்படுமெய்) (122, 177 நச்.)

அவை + வற்று + கோடு > அவை + அற்று + கோடு = அவையற்றுக்கோடு (281 நச்.)

‘சுட்டு முதலாகிய வகர இறுதி’ புணருமாறு -

{Entry: B02__036}

சுட்டிடைச் சொல்லை முதலாகக் கொண்ட வகர ஈற்றுச் சொற்களாவன அவ் இவ் உவ் என்ற மூன்றாம். அவை உருபேற்குமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணும் வற்றுச்சாரியை இடையே பெற்று, நிலைமொழி வகரத்தை வற்றின்மிசை ஒற்று எனக் கெடுக்க, அவ் + வற்று + ஐ = அவற்றை, அவ் + வற்று + கோடு = அவற்றுக்கோடு என்றாற் போலப் புணரும்.

அல்வழிக்கண் அவ் இவ் உவ் என்பன நிலைமொழியாக, வருமொழி முதலில் வல்லெழுத்து வரின் நிலைமொழி வகரஒற்று ஆய்தமாகவும், மெல்லெழுத்து வரின் வந்த மெல்லெழுத்தாகவும் திரிந்தும், இடையெழுத்து வரின் இயல்பாகவும், உயிர்எழுத்து வரின் ஒற்று இரட்டியும் புணரும்.

அவ் + கடிய = அஃகடிய, அவ்+சிறிய = அஃசிறிய, அவ் + தீய = அஃதீய, அவ் + பெரிய = அஃபெரிய என வரும். இவற்றுள் பின்னைய மூன்று புணர்ச்சியும் இக்காலத்து அரிய.

அவ் + ஞாண் = அஞ்ஞாண், அவ் + நூல் = அந்நூல், அவ் + மணி = அம்மணி, அவ் + யாழ் = அவ்யாழ், அவ் + வட்டு = அவ் வட்டு; அவ் + ஆடை = அவ்வாடை. (தொ. எ. 183, 378-381 நச்.)

சுட்டு யகரம் பெறும் இடம் -

{Entry: B02__037}

‘சுட்டு நீளின்’ எனவே நீளுதல் உடன்பாடு என்பதும், அது நிச்சய மன்று என்பதும், ‘யகரம் தோன்றும்’ எனவே, இந்த நீட்சி அடி தொடை முதலிய நோக்கி ‘நீட்டுவழி நீட்டல்’ விகாரம் அன்று என்பதும், ‘யகரமும்’ என்ற இழிவு சிறப் பும்மையால் யகரம் உயிர் வரும்வழியன்றிப் பிறவழித் தோன் றாது என்பதும், வன்கணம் வரின் சுட்டு நீளாது என்பதும் பெறப்பட்டன. (அ+இடை=ஆயிடை) (நன். 163 இராமா.)

சுட்டு, வினா -

{Entry: B02__038}

சுட்டு, வினா என்ற பொருளைத் தருவதால் அ இ உ, ஆ ஏ ஓ இவற்றை இடைச்சொற்கள் என்று கூறுதலே ஏற்றது; எழுத்து என்று கூறுதல் கூடாது. அ இ உ, ஆ ஏ ஓ என்பன எழுத்தாம் தன்மையன்றி மொழி நிலைமைப்பட்டு வேறொரு குறிபெற்று நிற்றலின், இவற்றை நூல்மரபின் இறுதிக்கண் மொழி மரபினைச் சாரவைத்தார் என்றார் நச். இவை சொல் நிலைமை யில் பெறும் குறியாதலின், குறில்நெடில்களைச் சார ஆண்டு வையாது மொழிமரபினைச் சார வைத்தார் என்றார் இளம் பூரணர். இவ்விருவர்க்கும் இவை இடைச்சொற்களே என்பது கருத்தாகும். இவற்றைக் குற்றெழுத்து நெட்டெழுத்து என்றாற்போலச் சுட்டெழுத்து வினாவெழுத்து என்று தொல். குறிப்பிடாமல், சுட்டு வினா என்றே குறிப்பிட்டார். நன்னூல் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர் முதலில் ‘சுட்டெழுத் தாம்’ என்று எழுத்தியலில் (11) கூறினும், ஏனை ஈரிடங்களாகிய உயிரீற்றுப்புணரியல் (13) பெயரியல் (19) என்ற இவற்றில் சுட்டிடைச்சொல் என்றே குறிப்பிட்டுள்ளார். தொல். இவற்றை நிறுத்த சொல்லாக வைத்துப் புணர்ச்சிவிதி கூறியதனானும் (எ. 334) இவை சொல்லாதல் பெற்றாம். நன்னூலாரும் 66, 67, 163, 179, 235, 250, 251, 276, 279, 280, 314, 422, 423 ஆம் எண்ணுடைய நூற்பாக்களில் சுட்டு வினா என்று குறிப்பிட்டாரேயன்றிச் சுட்டெழுத்து வினாவெழுத்து என்று யாண்டும் குறிப்பிடவில்லை.

கன்னடம் தெலுங்கு மலையாள மொழிகளில் ஆ ஈ என்ற சுட்டுக்களை ஸர்வநாமம் என்று வழங்குதலும் அறியற்பாலது. ஆதியில் ஆ ஈ ஊ என்பனவே சுட்டுக்கள். அ இ உ என்பன அவற்றின் திரிபுகள்.

தொல்காப்பியனார் காலத்தில் ஆ ‘தன்தொழில் உரைக்கும் வினா’ ஆகும் (எ. 224 நச்). ஏ ஓ இரண்டும் பழங்காலத்தில் முறையே முன்னிலை படர்க்கை வினாக்களாக இருந்திருக் கலாம். பிற்காலத்து அம்முறை நீங்கிவிட்டது.

எழுத்தைப் பற்றிய நூல்மரபில் தொல். யா வினாவைக் கூறாமல், வினாப்பெயராதலின் பெயரியலில் கூறினார். (சொ. 169 நச்.) எகரம் வினாவாக அன்றி,

‘எப்பொரு ளாயினும் அல்லது இல்லெனின்’ (சொ. 35 நச்.)

‘எந்நில மருங்கின் பூவும் புள்ளும்’ (பொ. 19 நச்.)

என்பனபோலத் தொடர்புடைப் பொருள் குறித்தும் வருதலின், அது கூறப்படவில்லை. எகரம் யா வினாவின் திரிபு. யாவன் முதலியன எவன் முதலியனவாகத் திரியும். (எ. ஆ. பக். 30 - 32)

சுட்டு, வினா : ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி -

{Entry: B02__039}

அ இ உ என்ற மூன்றும் சுட்டுப்பொருள் தரும் இடைச் சொல்லாம். ஆ ஏ ஓ என்ற மூன்றும் வினாப்பொருள் தரும் இடைச்சொல்லாம். இவற்றோடு எகரம் யகரஆகாரம் என்பனவும் பிற்காலத்துக் கொள்ளப்பட்டன.

சுட்டுப்பொருள் வினாப்பொருள் என்பனவற்றைத் தெரிவிக் கும் காரணம் பற்றி இவை சுட்டு வினா எனப்பட்டன. மேல் புணர்ச்சி கூறுதற்கண் இவற்றை அ இ உ, ஆ ஏ ஓ - என எழுத்தைக் கூறி விளக்காமல், சுட்டு வினா என்று குறிப்பிட்டு விளக்குவது கொண்டு இப்பெயர்களைப் பின்னர் ஆளுவதற்கு வாய்ப்பாக முன்னே பெயரிட்டமை ஆட்சி நோக்கிய குறியாம். (தொ. எ. 31, 32 நச் உரை).

சுட்டு வினா கிளை முறைப் பெயர்கள் பகாப்பதம் ஆகாமை -

{Entry: B02__040}

அவன் இவன் உவன் என்னும் சுட்டுப்பெயரும், எவன் யாவன் என்னும் வினாப்பெயரும், தமர் நமர் நுமர் என்னும் கிளைப் பெயரும், தந்தை எந்தை நுந்தை என்னும் முறைப்பெயரும், இவை போல்வன பிறவும் சுட்டுப்பொருளும் வினாப்பொரு ளும் கிளைப்பொருளும் முறைப்பொருளும் (பிறபொருளும்) காரணமாகப் பிறபொருட்கு வரும் பெயராய், பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின் பொருளும் தந்து வெள்ளிடைக் கிடக்கும் பகுபதமாய்ப் பகுக்கப்படுதலால், இவற்றைப் பகாப்பதம் எனக் கூறின் அது பொருந்தாது. (நன். 132 சங்கர.)

சுட்டு வேறு பெயர்கள் -

{Entry: B02__041}

காட்டல் எனினும், குறித்தல் எனினும் சுட்டு என்னும் ஒரு பொருட்கிளவி. (மு. வீ. எழுத். 29)

சுண்ணத்தின் அரிசனம், மாலையின் மலர் : உவமை விளக்கம் -

{Entry: B02__042}

அரிசனம் முதலியவற்றால் அமைந்த சுண்ணத்தில் அரிசனம் முதலியன உருவிழந்து கிடத்தலின் அவற்றைப் பிரித்தல் இயலாது. ஆயின், மலர்களால் சமைத்த மாலையில் மலர்கள் உருவிழவாமல் இருத்தலின், அவற்றைப் பிரித்தெடுத்தல் இயலும். எழுத்தினான் ஆகிய பதத்துள் எழுத்துக்கள் தம் இயல்பு கெடாது நிற்றலின், பதம் சுண்ணம் போல்வதன்று, மாலை போல்வதேயாம். ஆதலின், ‘எழுத்தே’ என்றார். (நன். 127 சங்கர.)

சுப் -

{Entry: B02__043}

ஐ ஒடு கு இன் அது கண் முதலிய வேற்றுமையுருபுகளை வடநூலார் சுப் என்ப. (சூ. வி. பக். 55)

சுவாமிநாதம் குறிப்பிடும் சாரியைகள் -

{Entry: B02__044}

பதத்தொடு விகுதி - பதம் - உருபு - என இவை புணருமிடத்துச் சாரியை ஒன்றோ பலவோ வருதலும் தவிர்தலும் (இவ்விருநிலையும் ஒருங்கே பெறுதலாகிய) விகற்பமும் நிகழும். அவ்வாறு வரும் சாரியைகள் : அன், ஆன், இச்சு, இன், அத்து, நம், தன் (தம்), நும், ஐ , கு, ன், அல், இ, ஞ், ட், ய், து, அள், அவ், அண், அ, ஈ, அக்கு, ஓ, ஏல், ஆ, அற்று, ஆல், உ - முதலியன. (‘முப்பத்து நான்கு’ எனத் தொகை கொடுக்கப் பட்டுள்ள சாரியை அவ்வெண்ணிக்கை நிரம்புமாறு இல்லை.) ‘இச்சினத்து நந்தனுமை’ என்று பாடம் கொள்க. பெயரிடை நிலைகள் சிலவற்றைச் சுவாமிநாத கவிராயர் ஆகிய இந் நூலா சிரியர் சாரியையாகக் கொண்டுள்ளார்; எழுத்துப்பேறும் உடம்படுமெய்யும்கூடச் சாரியையாக எண்ணப்பட்டுள. அவையெல்லாம் பொருந்தாமை வெள்ளிடை. (சுவாமி. எழுத். 26).

சுவாமிநாதம் குறிப்பிடும் புணர்ச்சி முடிபுகள் -

{Entry: B02__045}

புணர்ச்சிவிதிகளைத் தொகுத்து மூன்று சூத்திரங்களுள் அடக்கி மொழிகிறது சுவாமிநாதம்.

1. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் - வேல் + ஒன்று = வேலொன்று,

2. தனிக்குறிலை அடுத்து வரும் புள்ளிமுன் உயிர் இரட்டுதல் - பொன் + அணி = பொன்னணி,

3. நிலைமொழியீற்றுக் குற்றுகரம் உயிர் வருமிடத்துக் கெட, மெய்மேல் உயிர் ஏறிமுடிதல் - நாடு + அரிது = நாடரிது,

4. வன்கணம் வருமிடத்து உயிரீற்று நிலைமொழி வந்த வல்லொற்று மிகுதல் - வாழை + பழம் = வாழைப்பழம்,

5. அன்றி, அவ்வல்லினமெய்க்கு இனமான மெல்லொற்று மிகுதல் - மா + பழம் = மாம்பழம்,

6. நிலைமொழியீற்று உயிர் குறுகுதல் - நிலா + கண் > நில + இன் + கண் = நிலவின்கண்,

7. மேலை உயிர் குறுகுதலோடு ஓர் உகரம் ஏற்றல் - கனா +
இடை
> கனவு + இடை = கனவிடை,

8. வருமொழி முதலெழுத்துக் கெடுதல் - மக + அத்து > மக + த்து = மகத்து,

9. நிலைமொழி முதல் குறுகுதல் - நீ + கை = நின்கை,

10. நிலைமொழி முதலெழுத்தன்றிப் பிற எல்லாம் நீங்கல் - ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று,

11. வருமொழி நடுவெழுத்துக் கெடுதல் - இரண்டு + பத்து = இருபது,

12. நிலைமொழி நடுவே ஒற்றுமிகுதல் - ஆறு + நீர் = ஆற்றுநீர்,

13. நிலைமொழியோ வருமொழியோ இரண்டுமோ கெட்டுப் புத்துருவமாக இடம்பெறல் - ஒன்பது + பத்து = தொண்ணூறு,

14. நிலைமொழியீற்று ஒற்று உகரச்சாரியை பெறுதல் - தெவ்+ கடிது = தெவ்வுக் கடிது,

15. ஈற்றில் ஒற்று இரட்டுதல் (நிலைமொழி நடுவே வல்லொற்று மிகுதல் (12) என முன்காட்டியதே கொள்க. டகரமும் றகரமும் இரட்டும் ஒற்றுக்கள்; பிற இரட்டா.)

16. நிலைமொழி வருமொழிகளில் பல கெடுதல் - பூதன் + தந்தை > பூதன் + அந்தை > பூத் + அந்தை > பூ + ந்தை = பூந்தை,

17. நிலைமொழியீற்று நெட்டுயிர் அளபெடை ஏற்றல் - பலா + கோடு = பலாஅக்கோடு,

18. உயிர் வருமிடத்து நிலைமொழி டகரம் ணகரம் ஆதல் - வேட்கை + அவா > வேட் + அவா > வேண் + அவா = வேணவா,

19. நிலைமொழியீற்று மகரம் வன்கணம் வருமிடத்து இன ஒற்றாகத் திரிதல் - மரம் + குறிது, சிறிது, தீது, பெரிது = மரங்குறிது, மரஞ்சிறிது, மரந்தீது, மரம்பெரிது, (மகரம் பகரத்திற்கு இனமாதலின் திரிதல் வேண்டா ஆயிற்று)

20. நிலைமொழியீறு ஆய்தமாகத் திரிதல் - அல் + திணை = அஃறிணை,

21. வகரம் வருமொழியாகப் புணரின் நிலைமொழி முதல் நீண்டு இடையே ஒற்று வருதல் - (எடுத்துக்காட்டுப் புலப்பட்டிலது) (நீண்டவழி ஒற்றுவாராது: ஆவயின்; நீளாதவழியே ஒற்று வரும் : அவ்வயின்)

22. நிலைமொழியீற்று னகர ணகரங்கள் முன்னர்த் தகரம் வருவழி, அது முறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் - மான் + தோல் = மான்றோல்; பெண் + தன்மை = பெண்டன்மை,

23. நிலைமொழி அவ்வாறே நிற்ப, நகரம் வருமிடத்து, அது முறையே னகரமாகவும் ணகரமாகவும் திரிதல் - மான் + நன்று = மானன்று, ஆண் + நல்லன் = ஆணல்லன், (நிலைமொழி ஈற்றுமெய் கெடும் என்க.)

24. நிலைமொழி யீறாக லகரமும் ளகரமும் நிற்ப, ஞகர மகரங்கள் வருமிடத்து, லகர ளகரங்கள் முறையே னகர ணகரங்களாகத் திரிதல் - அகல் + ஞாலம், மாட்சி = அகன் ஞாலம், அகன் மாட்சி; மக்கள் + ஞானம், மாட்சி = மக்கண்ஞானம், மக்கண்மாட்சி,

25. நிலைமொழி அவ்வாறே நிற்ப, ககர சகர பகரங்கள் வருமிடத்து, லகரளகரங்கள் முறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் - கல் + குறுமை, சிறுமை, பெருமை = கற்குறுமை, கற்சிறுமை, கற்பெருமை; முள் + கூர்மை, சிறுமை, பெருமை = முட்கூர்மை, முட்சிறுமை, முட் பெருமை,

26. நிலைமொழியீறாக ணகர னகரங்கள் நிற்ப, தகரம் வரு மிடத்து, அம்மெய் முறையே டகரமாகவும் றகரமாகவும் திரிதல் - கண் + தரும் = கண்டரும், பொன் + தரும் = பொன்றரும்,

27. நிலைமொழியீறாக லகர ளகரங்கள் நிற்ப, தகரம் வருமிடத்து, அம்மெய்கள் முறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் - கல் + தூண் = கற்றூண்; கள் + தாழி = கட்டாழி. (வருமொழி முதல் தகரமும் முறையே றகரடகரங்களாகக் திரிதலும் கொள்க),

28. நிலைமொழி அவ்வாறே நிற்ப, நகரம் வருமிடத்து, நிலைமொழியீறும் வருமொழி முதலும் ஆகிய மெய்கள் முறையே னகரமும் ணகரமுமாகத் திரிதல் - (நிலைமொழி தனிக்குறில் முன் ஒற்றாக நிற்குமிடத்து இவ்விதி கொள்க.) கல் + நன்று, நன்மை = கன்னன்று, கன்னன்மை; கள் + நன்று, நன்மை = கண்ணன்று, கண்ணன்மை,

29. நிலைமொழியீற்று இகரம் வன்கணம் வருமிடத்து உகரமாகத் திரிதல் - (விண்) இன்றி + பொய்ப்பின் = விண்ணின்று பொய்ப்பின்; (நாள்) அன்றி + போகி = நாளன்று போகி,

30. நிலைமொழியீற்று இகரம் வன்கணம் வருமிடத்து, இயல்பு ஆதலும் வலி மிகுதலும் ஆகிய உறழ்ச்சி பெறுதல் - கிளி + குறிது = கிளிகுறிது, கிளிக்குறிது,

31. நிலைமொழியீற்று ஐகாரம் அகரமாகத் திரிதல் - காவ லோனைக் களிறஞ்சும்மே > காவலோனக் களிறஞ்சும்மே

32. நிலைமொழியீற்று ணகரம் ளகரம் ஆதல் - உணவினைக் குறிக்கும் ‘எண்’ எள் என வருதல், ‘ஆண்’ ஆள் என வருதல்,

33. ஒரு புணர்ச்சி பல விதி பெறுதல் - ஆதன் + தந்தை > ஆதன் + அந்தை > ஆத் + அந்தை > ஆ + ந்தை = ஆந்தை,

34. இடைச்சொல் இடையே வந்தியைதல் - வண்டு + கால் > வண்டு + இன் + கால் = வண்டின்கால்; கலன் + தூணி = கலனே தூணி (இன், ஏ : சாரியை இடைச்சொற்கள்).

(எழுத். 29 - 31)

சுவாமிநாதம் குறிப்பிடும் வினை விகுதிகள் -

{Entry: B02__046}

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும், ஐ, இ, மின், இர், ஈர், க, ய, ர், ஆல், ஏல் முதலானவை வினைவிகுதிகள். (இவற்றுட் சில பெயர் விகுதிகளாகவும் வரும்.) அன்விகுதி இரண்டாமுறையாக எண்ணியது தன்மை யொருமை வினைமுற்றுக் கருதி. மற்று இகரவிகுதிக்கும் மின்விகுதிக்கும் இடையே ‘அ - யார்’ எனக் குறிக்கப்பட்டுள்ள வற்றின் உண்மையுருவம் புலப்பட்டிலது. பாட பேதம் இருக்க வேண்டும்போலும். ‘ஆய’ பாடபேதம் ஆகலாம். (நன்னூல் சொன்னவையே ‘தானெடுத்து மொழி’யப்பட்டுள.) (சுவாமி. எழுத். 25)

சுவைப்புளிப்பெயர் புணருமாறு -

{Entry: B02__047}

புளிச்சுவையை உணர்த்தும் புளி என்ற பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின், மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : புளிங்கூழ், புளிஞ்சாறு, புளிந்தயிர், புளிம்பாளிதம்

புளிப்பையுடைய கூழ் என்றாற்போல விரியும். (தொ. எ. 245 நச்.)

மரத்தையன்றிச் சுவையைக் குறிக்கும் புளி என்ற சொல்முன் வன்கணம் வருமிடத்து வந்த வல்லெழுத்தும், அதன் இனமாகிய மெல்லெழுத்தும் இடையே மிக்குப் புணரும்.

எ-டு : புளி + கறி = புளி க் கறி, புளி ங் கறி

புளிப்பாகிய கறி எனப் பொருள்படின் அல்வழிப் புணர்ச்சி யாம்; புளிப்பையுடைய கறியெனின் வேற்றுமைப் புணர்ச்சி யாம். (நன். 175)

செக்குக்கணை : குற்றியலுகர மாத்திரை -

{Entry: B02__048}

செக்கு + கணை = செக்குக்கணை; செக்கினது கணையமரம் என ஆறாம் வேற்றுமைப்பொருளது. நிலைமொழி இறுதி ககர உகரமாகும் வன்றொடர்க் குற்றியலுகரஈற்றுச் சொல்; வருமொழி ககரமுதல். நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் தன் மாத்திரையில் குறைகிறது.

எஞ்சிய விளக்கங்களைச் ‘சுக்குக் கொடு : குற்றியலுகர ஓசை அளவு’ என்பதன்கண் காண்க. (தொ. எ. 409, 410 இள. உரை 408, 409 நச். உரை)

செம்மை, சிறுமை முதலியன பண்புப் பகுதி ஆகாமை -

{Entry: B02__049}

செம்மை கருமை சிறுமை முதலியன உடைப்பொருளவாகிய செம்மையன் - கருமையன் - சிறுமையன் - முதலியவற்றிற் கல்லது, இன்னன் என்று பொருளவாகிய செய்யன் - கரியன் - சிறியன் முதலியவற்றிற்குப் பகுதி ஆகா. விகுதிப்புணர்ச்சிக்கண் குழையன் என்பது போல், செம்மையன் - கருமையன் - சிறுமையன் எனப் புணர்வதல்லது மையீறு கெடாது. வலைச்சி புலைச்சி முதலியன (வலைமை - புலைமை முதலாய வற்றின்) மையீறு கெடுதல் ‘விளம்பிய பகுதி வேறாதலும் விதியே’ என நன்னூலாசிரியர் கூறிய விதியால் அமையும். பதப்புணர்ச்சிக்கண் கருங்குதிரை என்பது கருமையாகிய குதிரை என விரியாமையின், கரு என்பது பண்பல்லது, கருமை என்ற பண்புப்பெயர் நின்று புணர்ந்தது என்றல் பொருந்தாது. அப்பண்புப்பெயர் நின்று புணருங்கால் கருமைக்குதிரை எனப் புணர்வதல்லது கருங்குதிரை எனப் புணராது.

இவ்வாற்றால், செம்மை கருமை சிறுமை முதலியன பண்புப் பகுதி ஆகா என்பது பெறப்படும். (இ. வி. எழுத். 45 உரை)

‘செய் என் ஏவல்வினைப் பகாப்பதம்’ -

{Entry: B02__050}

நட வா முதலிய இருபத்து மூன்று ஈற்றவாகிய சொற்கள் செய் என்னும் ஏவல்வினையும், செய் என்னும் வினையினது பகாப்பதமாகிய பகுதியும் ஆம்.

எடுத்துக்கொண்ட ஏவற்பொருளும் பகுதிப்பொருளும் தந்து நிற்கும் நட வா முதலிய வாய்பாடுகளை எண்ணித் தொகுத்த ‘இருபான் மூன்றாம் ஈற்ற’ என்னும் தொகை ‘செய்யென் ஏவல்’ என்னும் பயனிலையொடும் ‘செய்யென் வினைப் பகாப்பதம்’ என்னும் பயனிலையொடும் தனித்தனி முடிந்தது. இஃது இரட்டுறமொழிதல் என்னும் உத்தி.

செய் என்னும் வாய்பாட்டு ஏவல்வினையும், ஏனை வினை களின் (பகாப்பதம் ஆகிய) பகுதியுமாக நட வா மடி சீ விடு கூ வே வை நொ போ வெள உரிஞ் உண் பொருந் திரும் தின் தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்ற 23 ஈற்றுச்சொற்களும் வரும். (நன். 137 சங்கர.)

செய்யாய் என்பதே ஏவல்வினை எனக் கொண்டு, இவை இருபத்து மூன்றும் செய் என்ற ஏவல்வினையின் பகுதியும், செய் என்ற ஏனை வினையின் பகுதியும் என்பர் சிவஞான முனிவர். (137)

நடந்தான், வந்தான் முதலிய வினைகளின் (பகாப்பதமாகிய) பகுதி நட வா முதலியன.

நட வா முதலிய இருபத்துமூன்றாம் ஈற்றவும் செய் என்னும் ஏவலினது பகாப்பதமாகிய பகுதியும், ஏனை வினையினது பகாப்பதமாகிய பகுதியும் ஆம். ‘செய்யென் வினைப்பகாப் பதம்’ என்ற துணையானே ‘செய் என் ஏவற் பகாப்பதம்’ அடங்காதோ? வேறு கூறவேண்டியது என்னை யெனின்,

நட வா உண் தின் என்றல் தொடக்கத்து முதனிலைகளே விகுதியொடு புணராது தனித்து நின்ற ஓசை வேறுபாட்டான் முன்னிலை ஏவலொருமை எதிர்கால முற்றுப் பொருண்மை உணர்த்தினவோ, விகுதியொடு புணர்ந்து நின்றே அப் பொருண்மை உணர்த்தினவோ என்று ஐயுறுவார்க்கு (விகுதி யொடு புணர்ந்து நின்றே உணர்த்தின என்று) ஐயம் அறுத் தற்குக் கூறியது என உணர்க. (137 சிவஞா.)

செய்கைச் சூத்திரம் -

{Entry: B02__051}

‘ணன வல்லினம் வரட் டறவும்’ (நன். 209)

எனவும்,

‘எழுவா யுருபு திரிபில் பெயரே

வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே’ (295)

எனவும்,

‘முதல்அறு பெயரலது ஏற்பில முற்றே’ (323)

எனவும்

வருவன போல்வன செய்கைச் சூத்திரங்கள். (நன். 20 இராமா.)

செய்கையின் நால்வகைகள் -

{Entry: B02__052}

அகச்செய்கை, அகப்புறச் செய்கை, புறச்செய்கை, புறப்புறச் செய்கை என்பன செய்கையின் நால்வகைகள்.

நிலைமொழி ஈறு இன்ன இன்னவாறு முடியும் என்பது அகச் செய்கை. நிலைமொழியீறு பெறும் முடிபன்றி, நிலைமொழி யீறு பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கூறுவது அகப்புறச் செய்கை. வருமொழிச் செய்கை கூறுவது புறச் செய்கை. நிலைமொழி யீறும் வருமொழிமுதலும் செய்கை பெறாது நிற்ப, அவ்விரண்டனை யும் பொருத்துதற்கு இடை யில் உடம்படுமெய் போன்ற ஓர்எழுத்து வருவது போல்வன புறப்புறச் செய்கை. (தொ. எ. 1 நச். உரை)

செய்யா என்னும் எச்சம் புணர்தல் -

{Entry: B02__053}

செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால உடன்பாட்டு வினையெச்சமும், செய்யா என்னும் வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சமும் வருமொழி வல்லெழுத்து வரின், அவ்வல் லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சென்றான், உண்ணாத் தந்தான், உண்ணாப் போயினான்.

உண்ணாக் கொற்றன், உண்ணாச் சாத்தன், உண்ணாத் தேவன்; உண்ணாப் பூதன் (தொ. எ. 222 நச்.)

உண்ணா என்ற வாய்பாடே தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலியவற்றில் காணப்படுகிறது. ‘உண்ணாத’ என ஈறு விரிந்து அகர ஈறாகிய சொல் திருக்குறள்காலம் தொட்டே வழக்கில் உள்ளது. ‘உளவரை தூக்காத ஒப்புரவாண்மை’
(கு. 480) முதலியன காண்க.

உண்ணா என்பதே ‘உண்ணாத’ என்றாகின்றது என்பதனை நோக்காது, “உண்ணாத என்பது ‘உண்ணா’ என ஈறுகெட்டு நின்றது; அஃது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாம்” என்று கூறுவது வியப்பான செய்தியாம்.

செய்யாத என்ற பெயரெச்சம் புணருமாறு -

{Entry: B02__054}

பண்டு, செய்யா என்ற பெயரெச்ச மறையே செய்யும் - செய்த - என்ற உடன்பாட்டு வாய்பாடுகளுக்கு எதிர்மறையாக வந்தது. அது வன்கணம் வரின் மிக்குப் புணரும்.

செய்யா என்பதே பிற்காலத்துச் செய்யாத என ஈறு விரிந்து வந்தது. அது வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : உண்ணாத குதிரை, உண்ணாத செந்நாய், உண்ணாத தகர், உண்ணாத பன்றி. (தொ. எ. 210 நச். உரை)

செய்யான், செய்யேன், செய்யாய் : சொல்லமைப்பு -

{Entry: B02__055}

செய்யான், செய்யேன், செய்யாய் என்பன உடன்பாட்டுப் பொருள் உணர்த்துமிடத்து, செய் + ஆன், செய் + ஏன், செய் + ஆய் என முதனிலையும் இறுதிநிலையுமாய்ப் பகுக்கப்பட்டு நிற்கும். (செய்தலை உடையான், உடையேன், உடையாய் - எனப் பொருள் செய்க.)

செய்யான், செய்யேன், செய்யாய் என்பன எதிர்மறைப் பொருள் உணர்த்துமிடத்து, இடையே எதிர்மறைப் பொருளை உணர்த்த ஆகாரஇடைநிலை புணரவே, செய் + ஆ + ஆன், செய் + ஆ + ஏன், செய் + ஆ + ஆய் என முதனிலை இடை நிலை ஈறு எனப் பகுக்கப்படல் வேண்டும். இடைநிலை ஆகார மாதல், செய்யாது - செய்யாத - தெருளாதான் - அருளாதான் என மெய்முதலாகிய விகுதியொடு புணரும் சொற்களில் காணலாம். செய்யான், செய்யேன், செய்யாய் என உயிர் முதலாகிய விகுதி புணர்வுழி, அவ் ஆகாரம் சந்தி நோக்கிக் குன்றியதே ஆம். (சூ. வி. பக். 32, 33)

“எதிர்மறை இடைநிலைகளாவன அல்லும் இல்லும் ஏயும் பிறவுமாம். உண்ணாய் உண்ணேன் என்புழி முறையே எதிர்மறை ஆகாரமும் ஏகாரமும் கெட்டு நின்றன எனல் வேண்டும்” எனபர் சேனாவரையர். (தொ. சொ. 450)

எனவே உண் + ஏ + ஏன் = உண்ணேன் என்றாயிற்று என்பது சேனா. கருத்து.

செய்வாய் என்பதன் மறையாகிய ‘செய்யாய்’ எனும் சொல் படுத்தலோசையான் செய் என்று பொருள் தரும் என்பர் நச். (தொ. சொ. 451)

செய்யுள் இறுதிப் போலிமொழி -

{Entry: B02__056}

செய்யுளின் இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல், ‘பொன்னொடு கூவிளம் பூத்தது போன்ம்’ என்றாற் போல, போன்ம் எனத் திரிந்து முடியும்.

செய்யுளின் இடை இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல்லும்

‘அரம்தின்வாய் போன்ம் போன்ம் போன்ம்

பின்னும் மலர்க்கண் புனல்’ (பரிபா. 10 : 97, 98)

என்றாற்போல, போன்ம் எனத் திரிந்து வரும். செய்யுளடி இடையில் வரும் போலும் என்னும் சொல்லும்,

‘பொன்போன்ம் பல் வெண்முத்தம் போன்ம்’ (மா. அ. பாடல் 160)

என்றாற் போல, ‘போன்ம்’ எனத் திரிந்து வரும்.

இவற்றை நோக்க, செய்யுளிறுதிச் சொல்லாக வரும் போலும் என்பது பண்டு போன்ம் எனத் திரிந்தது போல, செய்யுள் இடை இறுதியிலும் அடிஇடை இறுதியிலும் வரும் போலும் என்ற சொல்லும் ‘போன்ம்’ எனப் பிற்காலத்துத் திரிவதாயிற்று என்பது போதரும்.

இதனை யுட்கொண்டு நச். ‘செய்யுளிறுதிப் போலிமொழி’ என்பதனைச் ‘செய்யுள் போலிமொழி இறுதி’ என மாற்றிப் பொருள் கொண்டமை உய்த்துணரலாம். (தொ. எ. 51 நச். உரை)

‘செய்யுள் கண்ணிய தொடர்மொழி’ -

{Entry: B02__057}

செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப் படும் செய்யுள்முடிபுடைய சொற்கள்.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற நால் வகைப்பட்ட சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ச்சிப்பட அமைவன செய்யுளாம். (தொ. சொ. 397 நச்.)

அத்தொடர்,

‘யாயே கண்ணினும் கடுங்கா தலளே’ (அகநா. 12 )

என்றாற் போலப் பொருள் பொருத்தமுறத் தழுவுதொடராகத் தொடரலாம்.

அன்றி,

‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்

பரல்அவல் அடைய இரலை தெறிப்ப’ (அகநா. 4)

என ‘மருப்பின் இரலை’ என்று பொருள் அமையவும், ‘மருப்பிற் பரல்’ எனத் தழாஅத் தொடராகவும் தொடரலாம். (தொ. எ. 213 நச்.)

செய்யுள் விகாரங்களை எழுத்ததிகாரத்தில் கூறுதல் -

{Entry: B02__058}

அல்வழி வேற்றுமைப் புணர்ச்சியால் வரும் விகாரங்கள் தோன்றல், திரிதல், கெடுதல் என்பன. வலித்தல் மெலித்தல் முதலான ஆறும், ஒருமொழி மூவழிக் குறைதலும் ஆகிய செய்யுள் விகாரங்கள் ஒன்பது. இம்மூன்றும் ஒன்பதும் ஆகிய விகாரங்கள் செய்யுளகத்தே வருதலின், இவ்விரு திறத்தவற் றிடையே வேறுபாடு அறிதற்குச் செய்யுள் விகாரங்களை எழுத்ததிகாரத்தே கூறினார். (நன். 156 சங்கர.)

செய்யுள் விகாரம் ஆறு -

{Entry: B02__059}

செய்யுட்கண் தளையும் தொடையும் நோக்கி நிகழும் விகாரங்களாவன வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்பன ஆறும். இவற்றைத் தனித்தனியே காண்க. (நன். 155)

செய்யுள் விகாரமும் குறையும் -

{Entry: B02__060}

தனித்த ஒரு மொழியின்கண் வரும் விகாரங்கள் ஒன்பதாம். மெலித்தலும் வலித்தலும் குறுக்கலும் நீட்டலும் தொகுத்த லும் விரித்தலும் அன்றி ஒரு மொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலும் ஆம்.

வாய்ந்தது என்பது வாய்த்தது - என வலித்தல் விகாரம்.

தட்டை என்பது தண்டை - என மெலித்தல் விகாரம்.

நிழல் என்பது நீழல் - என நீட்டல் விகாரம்.

பாதம் என்பது பதம் - எனக் குறுக்கல் விகாரம்.

தண்துறை என்பது தண்ணந்

துறை - என விரித்தல் விகாரம்.

வேண்டாதார் என்பது - எனத் தொகுத்தல்

வேண்டார் விகாரம்.

தாமரை என்பது ‘மரையிதழ் - என மொழி முதற்

புரையும் அஞ்செஞ் சீறடி’ குறைந்த விகாரம்.

யாவர் என்பது யார் - என மொழி இடைக் குறைந்த விகாரம்.

நீலம் என்பது ‘நீல் உண்கண்’, - என மொழிக் கடைக்

‘நீல் நிறப் பகடு’ குறைந்த விகாரம். (தொ. வி. 37 உரை)

செய்யுளுக்கே உரிய விதிகள் -

{Entry: B02__061}

அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டு ‘ஆயிரு திணை’ (தொ. எ. 208 நச்), ‘ஊவயினான’ (256) என்றாற்போல வருதலும், பலவற்றிறுதி நீண்டு ‘பலாஅஞ் சிலாஅம்’ என உம்மைத் தொகையாக வருதலும் (213), ஆகார ஈற்றுள், குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரஈறாகக் குறுகி உகரம் பெற்று (இறா - சுறா - புறா முதலியன) இறவு - சுறவு - புறவு முதலியனவாக வருதலும் (234),

இன்றி - அன்றி - என்பன உகரஈறாகி, ‘உப்பின்று’ - ‘நாளன்று’ - என அமைந்து வன்கணத்தோடு இயல்பாகப் புணர்தலும் (237),

‘அது’ என்ற உகரஈறு வருமொழி ‘அன்று’ என்பது வரின், ஆகாரமாகத் திரிந்து ‘அதாஅன்று’ எனப் புணர்தலும், ஐ வருமிடத்து உகரம் கெட்டு ‘அதை மற்றம்ம’ என்றாற்போலப் புணர்தலும் (258),

வேட்கை + அவா = வேணவா என முடிதலும் (288),

விண் என வரும் ஆகாயப்பெயர் அத்துச்சாரியை பெற்று விண்ணத்துக் கொட்கும் - விண்வத்துக் கொட்கும் - என்றாற் போலப் புணர்தலும் (305),

பொன் என்பது பொலம் எனத் திரிந்து வருமொழி நாற்கணங் களொடும் புணர்தலும் (356),

இலம் என்ற உரிச்சொல் படு என்ற வருமொழியொடு புணரும்வழி ‘இலம்படு’ என இயல்பாக முடிதலும் (316) ,

‘வானவரி வில்லும் திங்களும்’ என்புழி ‘வில்லும்’ எனச் சாரியை உம் வந்து வானவரி வில்லுள் திங்கள் - என்று வேற்றுமை முடிபாதல் போல்வனவும், கெழு என்ற உரிச்சொல் ‘துறை கேழ் ஊரன்’ என்றாற் போலத் திரிந்து புணர்வதும் (481)

தொல்காப்பியனாரான் செய்யுள்முடிபாகக் கூறப்பட்டனவாம்.

செய்விப்பி என்னும் இருமடி ஏவல் பகாப்பதம் -

{Entry: B02__062}

செய் என்னும் ஏவல்வினையை அடுத்து வி, பி - என்னும் இரண்டு விகுதிகளுள் ஒன்று வரின் செய்வி என்னும் பொருளைப் பெறும். இவையிரண்டும் ஒருங்கு வரினும், (பி) இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல் தோன்ற மூவராவான் ஒரு கருத்தனைக் காட்டும்.

நடப்பி, வருவி, மடிவி முதலாகச் செய்வி என்னும் ஏவல் வினைப் பகாப்பதம் வந்தவாறு.

நடத்துவிப்பி, வருவிப்பி, மடிவிப்பி முதலாகவும், நடப்பிப்பி, கற்பிப்பி, முதலாகவும், (வி பி) இரண்டும் இணைந்தும் ஒன்றே (பி) இணைந்தும் ‘செய்விப்பி’ என்னும் ஏவல்மேல் ஏவல் பகாப்பதம் (இருமடி ஏவல்) வந்தவாறு. (நன். 137 மயிலை.)

செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டு முதல் நீண்டவை -

{Entry: B02__063}

உண் - தின் - கொள் என்னும் வினை முதல்நிலைகள் செயப்படு பொருண்மை உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டு, கெட்டவழி முதல் நீண்டு முறையே ஊண் - தீன் - கோள் - என நிற்பவை போல்வன.

ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் நடவை - சேக்கை - உடுக்கை - தொடை - விடை என்றாற் போல்வன வற்றுள் காணப்படும்.

ஊண், தீன், கோள் முதலியன முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆதலும் உரிய. (சூ.வி. பக். 33)

செயற்கை அளபெடை -

{Entry: B02__064}

இசை நிறைத்தற்பொருட்டுச் செய்யுளில் அளபெடுத்து வருவன செயற்கை அளபெடை எனக் கொள்க.

எ-டு : ‘நற்றாள் தொழாஅர் எனின்’ (நன். 91 இராமா.)

செயற்கை ஈறு இரு வகைத்தாதல் -

{Entry: B02__065}

வட்டக்கல் - சதுரப்பாறை - என்றாற் போல மகரமாகிய ஒற்றீற்றினை ஒழித்து (வட்ட, சதுர என) உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும், தாழக்கோல் - தமிழப்பள்ளி - என்றாற்போல (தாழ் + அ + கோல்; தமிழ் + அ + பள்ளி) இடையே (அகரத்தை) எய்துவித்து உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும் எனச் செயற்கை யீறு இருவகைத்தாம். (இ. வி. எழுத். 82 உரை)

‘செரு’ இயற்கைத் தம் ஒற்று மிக்குப் புணருமாறு -

{Entry: B02__066}

செரு என்ற பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வருவழி, அம்முச்சாரியை பெற்று, அதன் மகரம் கெட வருமொழி வல்லெழுத்து மிக்குச் செருவக்களம் - செருவச்சேனை - செருவத்தானை - செருவப்பூழி என்றாற் போல முடியும்; சாரியை பெறாதவழிச் செருக்களம் - செருச் சேனை - செருத்தானை - செருப்பூழி - என வருமொழி வல்லெழுத்தே மிக்கு முடியும். (தொ. எ. 260 நச்.)

‘செரு’ இருவழியும் புணருமாறு -

{Entry: B02__067}

செரு உகர ஈற்றுப் பெயராதலின் உருபேற்குமிடத்து இன்சாரியை பெற்றுச் செருவினை - செருவினால் - என்றாற் போலப் புணரும். (தொ. எ. 173 நச்.)

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், அம்முச்சாரியை பெற்று, அம்மின் மகரம் கெட, வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்குச் செருவக்களம் என்றாற்போலவும், சாரியையின்றிச் செருக்களம் என்றாற்போலவும் புணரும்; மென்கணம் வரின், வேற்றுமைப் புணர்ச்சியுள், அம்மின் மகரம் கெடச் செருவஞாற்சி - செருவநன்மை - செருவமாட்சி என்றாற் போலவும், இடைக்கணம் வரினும் அவ்வாறே செருவயாப்பு - செருவவன்மை - என்றாற் போலவும் புணரும். (260 நச்.)

உயிர்க்கணம் வரின், இடையே வரும் அம்முச்சாரியையின் மகரம் கெடுதலும் அம்முப் பெறாமையும் என்ற இருநிலையும் உண்டு. செருவவடைவு, செருவடைவு எனவரும். (இடையே வகரம் உடம்படுமெய்) (130 நச்.)

இனி அல்வழிப் புணர்ச்சிக்கண், வன்கணம் வரின் மிக்கும், ஏனைக் கணம் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : செருக் குறிது, செருச் சிறிது, செருத் தீது, செருப் பெரிது; செரு ஞான்றது, நீண்டது, மாண்டது; செரு யாது, வலிது; செரு வரிது (வகரம் உடம்படுமெய்) (254 நச்.)

செல் என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__068}

செல் என்ற பெயர்ச்சொல் மேகம் என்னும் பொருளது. அது நிலைமொழியாக, வருமொழி முதற்கண் வன்கணம் வரின், அல்வழி வேற்றுமை என்னும் ஈரிடத்தும் லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : செல் + கடிது = செற்கடிது (அல்வழி); செல்+கடுமை = செற்கடுமை (வேற்றுமை)

சிறிது தீது பெரிது எனவும், சிறுமை தீமை பெருமை எனவும் ஏனைய வல்லெழுத்தொடு முறையே இருவழியும் ஒட்டுக. (தொ. எ. 371 நச்.)

செல்வுழி, சார்வுழி என்ற சொற்கள் -

{Entry: B02__069}

செல் + உழி = செல்வுழி; சார் + உழி = சார்வுழி; இடையே உடம்படுமெய் அன்று என்று கூறும் வகரம் தோன்றியது என்பர் சங்கர நமச்சிவாயர். (நன். 163 உரை)

செல்வுழி, சார்வுழி என்பன பிரித்துப் புணர்க்கப்படா, வினைத் தொகை யாதலின். அவற்றிடையே வகரம் வந்தது என்று கொள்வது சாலாது என்பர் நச். (தொ. எ. 140 உரை)

செல்வு சார்வு என்பனவே நிலைமொழிகளாதலின், அவை செல்வுழி சார்வுழி என இயல்பாகவே புணர்ந்தன. ஆண்டு வகரம் இடையே வரவில்லை என்பது எழுத்ததிகார ஆராய்ச்சி. (எ. ஆ. பக். 150)

செவிப்புலனாம் எழுத்து -

{Entry: B02__070}

செவிப்புலனாம் எழுத்துக்கள், ‘தனித்துவரல் மரபின’ எனவும், ‘சார்ந்து வரல் மரபின’ எனவும் இருவகைய. தனித்துவரல் மரபின, உயிரும் மெய்யும் என இருவகைய, அவற்றுள் உயிர் குறிலும் நெடிலும் என இருவகைப்படும். மெய் வளிநிலையும் ஒலிநிலையும் என இருவகைப்படும். வலி மெலி இடை- என்ற மூவின மெய்களும் வளிநிலைப்பாற்படுவன; புள்ளியொற் றும் உயிர்மெய்யும் ஒலிநிலைப்பாற்படுவன. இனிச் சார்ந்து வரல் மரபின, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் என மூன்றாம். (தொ.எ..பக். XL ச.பால.)

சே என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__071}

சே என்பது ஒருவகை மரத்தையும் பெற்றத்தையும் குறிக்கும். அப்பெயர் மரத்தைக் குறிக்குமிடத்து வருமொழி வன்கணம் வரின், உரிய மெல்லெழுத்து மிக்கு முடியும்; பெற்றத்தைக் குறிக்குமிடத்து இன்சாரியை பெறும். இது வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணது.

எ-டு : சே + கோடு, செதிள், தோல், பூ = சேங்கோடு, சேஞ்செதிள், சேந்தோல், சேம்பூ - மரம்

சே + கோடு, செவி, தலை, புறம் = சேவின்கோடு, சேவின்செவி, சேவின்தலை, சேவின்புறம் - பெற்றம்

சே, பெற்றத்தைக் குறிக்குமிடத்து வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இயல்புகணத்தும் இன்சாரியை பெறும்.

சேவினலம், சேவின்வால், சேவினிமில் என்றாற்போல முடியும்.

இயல்புகணத்து இன்பெறாது சேமணி என வருதலுமுண்டு. (தொ. எ. 278, 279 நச். உரை)

அல்வழிப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்,

சேக் கடிது, சேச் சிறிது, சேத் தீது, சேப் பெரிது என வல்லெழுத்து மிக்கும், இயல்புகணம் வரின்,

சே ஞான்றது, சே வலிது, சே வரிது (வகரம் உடம்படுமெய்) என்றாற்போல இயல்பாயும் புணரும். (274 நச்.)

‘சேய் என் கிளவி’யும் அது புணருமாறும் -

{Entry: B02__072}

“வாழுங்காலம் நெடுங்காலம் ஆகுக!” என்று வாழ்த்தும் ‘வாழிய’ என்னும் அகர ஈற்றுக் குறிப்பு வியங்கோள்வினை ‘சேய் என் கிளவி’ ஆகும். அஃது இயல்பாயும் ஈறு கெட்டும் வருமொழியொடு புணரும்.

எ-டு : வாழிய கொற்றா, ஞெள்ளா, வளவா, அரசே;

வாழி கொற்றா, ஞெள்ளா, வளவா, அரசே (தொ. எ. 211 நச்.)

சொல் இரட்டிக்கும்போது வரும் விகாரம் -

{Entry: B02__073}

ஒன்றன் மிகுதியைக் காட்ட, அதன் பெயர் இரட்டி, முதன் மொழி ஈற்று ஒற்று உளதெனில் கெட்டு, அதன்அயல் உயிர் ஆகாரமாகத் திரிந்து வல்லினம் மிகாமல் வழங்கும்.

எ-டு : கோடா கோடி (பல பல கோடி), காலா காலம் (பலபல காலம்), நீதாநீதி, கோணாகோணம், குலாகுலம், தூராதூரம், தேசாதேசம், கருமாகருமம் (தொ. வி. 39 உரை)

சொல் என்ற பொருட்பெயர் புணருமாறு -

{Entry: B02__074}

சொல் என்பது நெல்லைக் குறிக்கும் சொல். அஃது அல்வழி வேற்றுமை என்னும் ஈரிடத்தும் வன்கணம் வரின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : சொற் கடிது, சொற் சிறிது, சொற் றீது, சொற் பெரிது;

சொற்கடுமை, சொற்சிறுமை, சொற்றீமை, சொற் பெருமை (தொ. எ. 371 நச்.)

‘சொல் சிதர் மருங்கு’ -

{Entry: B02__075}

நிலைமொழி வருமொழி ஆகியவற்றினிடையே சாரியை வந்து புணரும். அச்சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்து நிலைமொழி வருமொழி சாரியை என்று பகுத்துக் காண்டலே சொற்சிதர் மருங்காகும்.

எ-டு : விளவின்கோடு என்பது புணர்மொழி. இதன்கண், விள - நிலைமொழி; கோடு - வருமொழி; இன் - சாரியை. இவ்வாறு பகுத்துக் காண்டல் இது. (தொ. எ. 132 நச்.)

சொல் நான்காதல் வேண்டுதலின் இன்றியமையாமை -

{Entry: B02__076}

சொல் நான்காக வேண்டியது என்னையெனில், பெயர்ச்சொல் பொருளை விளக்குகிறது; வினைச்சொல் பொருளது தொழிலை விளக்குகிறது; இடைச்சொற்கள் இவ்விரண்டற் கும் விகுதியுருபுகளாகியும், வேற்றுமை உவமை சாரியை யுருபுகளாகியும், சில வினையாகியும், தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை பிரிப்பு கழிவு ஆக்கம் இசைநிறை அசைநிலை குறிப்பு முதலான பொருண்மை விளக்குகின்றன; உரிச்சொல் பெயராம் எனினும், பொருளை விளக்குதலின்றியும் பெரும் பான்மையும் உருபேற்றல் இன்றியும், பொருட்குணத்தையே விளக்குகிறது. உரிச்சொற்களுள் சில வினை போல் வருகின் றன. ஆதலின் சொல்லிற்கு இந்நாற்பகுதியும் இவண்கிடப்பும் வேண்டு மெனவே கொள்க. (நன். 130 மயிலை.)

சொல்நிலையால் பகுபதம், பொருள்நிலையால் பகாப்பதம் -

{Entry: B02__077}

பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின் பொருளும் தரும் ஒரு சொல்லைப் பகுபதம் என்றமையின், சொன்மை பொருண்மை இன்மை செம்மை சிறுமை நடத்தல் வருதல் முதலிய சொற்கள், பகுதி விகுதியாகப் பகுக்கப்படுதலானும், விகுதிக்கு வேறு பொருளின்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் நிற்றலானும், சொல்நிலையால் பகுபதம் என்றும் பொருள் நிலையால் பகாப்பதம் என்றும் கொள்ளப்படும். (நன். 132 சங்கர.)

சொல் மூவிடத்தும் குறைதல் -

{Entry: B02__078}

சொல் ஒரோவழி அருகிச் செய்யுட்கண் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் குறைந்து வருதலுமுண்டு. இக்குறைவிகாரம் பகாப்பதத்தின்கண்ணேயே நிகழும்.

எ-டு : தாமரை ‘மரை’ என வருவது தலைக்குறை; ஓந்தி ‘ஓதி’ என வருவது இடைக்குறை; நீலம் ‘நீல்’ என வருவது கடைக்குறை (நன். 156 சங்கர.)

(தொகுத்தல் விகாரம் பகுபதத்தின்கண் நிகழ்வது என வேறுபாடறிக).

சொல்லிசை அளபெடை -

{Entry: B02__079}

தேற்றப்பொருள், சிறப்புப்பொருள் - இவை குறிக்க வரும் அளபெடைகள் ‘இயற்கை அளபெடை’ என்பர் நச்சினார்க் கினியரும் பேராசிரியரும்.

எ-டு : அவனேஎ நல்லன்; அவனோஒ கொடியன்

(தொ. பொ. 329 பேரா., நச்.)

வடமொழிக்கண் அளபெடைகள் சேய்மைவிளி முதலியவற் றுக்கண் அன்றித் தமிழ்மொழியிற் போல இசை குன்றியவழி மொழிக்கண் வருதல் இல்லை. அளபெடையாவது தொல் காப்பியனார் கருத்துப்படி நீரும் நீரும் சேர்ந்தாற் போல்வ தும், கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ் வண்ணம் போல்வதும் அன்று; அது விரலும் விரலும் சேர்ந்தாற் போல்வது. ஆஅழி என்பது மூவெழுத்துப் பாதிரி (கூவிளம்) என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிட் டுள்ளமை இக்கருத்தை வலியுறுத்தும்.

முதனிலைகளொடு து(த்) அல்லது இ சேர்ந்து இறந்தகாலத்தை உணர்த்துதல் தமிழ்வழக்கு.

செய் + து = செய்து தட + இ = தடைஇ

ஓடு + இ = ஓடி கட + இ = கடைஇ

போகு + இ = போகி கவ + இ = கவைஇ

கொள் + இ = கொளீஇ பச + இ = பசைஇ

செல் + இ = செலீஇ நச + இ = நசைஇ

(அகரம் ஐகாரம் ஆயின)

ஆதலின் வினையெச்ச விகுதியாகிய இகரம் சேர்ந்தது. சேர்ந்த இகரத்தைக் குறிப்பிட அறிகுறியாய் வரும் இகரத்தைக் கொண்டு பசைஇ முதலிய சொற்களைச் சொல்லிசை அளபெடை என்று குறிப்பிடுதல் சாலாது.

பச + இ = பசைஇ; நச + இ = நசைஇ

நசை என்ற பெயர் வினையெச்சமானதால் அது சொல்லிசை அளபெடை என்று கூறுதல் சாலாது. ஒருசொல் மற்றொரு சொல் ஆதற்கண் வரும் அளபெடையே சொல்லிசை அள பெடையெனின், குரீஇ என்பதன்கண் உள்ள அளபெடை எவ்வளபெடை ஆகும்? அதற்கு வேறொரு பெயரிடல் வேண்டும். நன்னூலார் அளபெடை 21 வகைப்படும் என்றார். ஒளகாரம் சொல்லின் இடையிலும் ஈற்றிலும் வாராமையால், அளபெடை 21 வகைப்படுதற்கு வாய்ப்பு இன்றாய், ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பன முதலிடைகடைகளிலும், ஒளகாரம் முதலி லும் வருதலின் 19 வகையதாகவே, ஏனைய இரண்டு எண் ணிக்கையை நிரப்ப, இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடை என்பனவற்றைக் கொள்ளுதல் சாலாது. இன் னிசையும் சொல்லிசையும் மேற்குறிப்பிட்ட 19 வகையுள் அடங்கிவிடும். (எ. ஆ. பக். 41, 42, 43, 44)

‘உரன சைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரன சைஇ இன்னும் உளேன்’ (குறள். 1263)

என அளபெடுத்துச் சொல்லிசை நிறைக்க வருவனவும் கொள்க. சொல்லிசை நிறைத்தலாவது: நசை என்பது ஆசை; ஆசைப்பட்டு என வினையெச்சம் நிறைதற்பொருட்டு நசைஇ என அளபெடுத்து நிற்கும். (நன். 91 இராமா.)

வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் என்னுமிவை ஈறு திரிந்து அளபெடுத்து வருவனவும், தன்வினையைப் பிறவினை யாக்க அளபெடுத்து வருவனவும் சொல்லிசை அளபெடை யாம்.

எ-டு : நிறுத்தும் - நி றூஉம் : பெயரெச்சமும் முற்றும் திரிந்து அளபெடுத்தவாறு.

செலுத்தி - செ லீஇ, உடுத்தி - உ டீஇ, அளவி - அ ளைஇ என வினையெச்சம் திரிந்து அளபெடுத்த வாறு.

துன்புறும், இன்புறும் என்ற தன்வினைகள் துன்புறூஉம் இன்புறூஉம் என அளபெடுத்துப் பிறவினைப் பொருள வாயின (குறள். 94) துன்புறும் - தான் துன்புறும்; துன்புறூஉம் - பிறரைத் துன்புறுத்தும்.

இவையாவும் சொல்லிசை அளபெடையாம். (நன். 91)

சொல்வகையான் நால்வகைப் புணர்ச்சி -

{Entry: B02__080}

பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடு பெயரும் புணர்வதால், புணர்ச்சி சொல்வகையான் நால்வகைத்து ஆயிற்று. சிறப்பில்லா இடைச் சொற் புணர்ச்சியும் உரிச்சொற்புணர்ச்சியும் சிறுபான்மை எடுத்தோத்தானும் எஞ்சிய புறனடையானும் கொள்ளப்படும். (தொ. எ. 108 நச்)

சொற்களில் ஒற்றும் குற்றுகரமும் எண்ணப்படுதல் -

{Entry: B02__081}

ஒற்றும் குற்றுகரமும் எழுத்தெண்ணப்படா எனச் செய்யுளிய லுள் கூறினமை பற்றிக் கால் மால் கல் வில் நாகு தெள்கு எஃகு கொக்கு கோங்கு என்பனவற்றை ஓரெழுத்தொருமொழி எனவும், சாத்தன் கொற்றன் வரகு குரங்கு என்பனவற்றை ஈரெழுத்தொருமொழி எனவும் கூறின், ஆகாது. என்னை யெனில், செய்யுட்கண் அவை இசை பற்றி எண்ணப்படா எனவும், மொழியாக்கத்தின்கண் பொருள்பற்றி எண்ணப் படும் எனவும் கொள்க. (இ.வி. எழுத். 38 உரை)

சோழ நாடு, பாண்டி நாடு இவற்றின் முடிபு -

{Entry: B02__082}

‘ஓரோர் மறுவில் பதம் கெட்டு வரும்’ என்பதனால், சோழன் என நிறுத்தி நாடு என வருவித்து, ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து (அகரம் வருவித்துச்) சோழ நாடு என முடிக்க. பாண்டியன் என நிறுத்தி நாடு என வருவித்து ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஒற்றுப் போம்’ என்பதனால் யகரஒற்றை அழித்துப் பாண்டிநாடு என முடிக்க. (நேமி. எழுத். 16 உரை)

ஞ section: 4 entries

ஞகர ஈற்றுப்பெயர் புணருமாறு -

{Entry: B02__083}

ஞகர ஈற்றுப் பெயர் உரிஞ் என்ற ஒரு சொல்லே. இஃது உருபேற்கு மிடத்து இன் சாரியை பெறும். அல்வழிக்கண்ணும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் உகரம் பெற்று, வருமொழி வன்கணம் வரின் வலிமிக்கும், ஏனைய கணங்களுள் மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வரின் உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : உரிஞுக் கடிது; உரிஞு ஞான்றது, உரிஞு வலிது, உரிஞ் யாது, உரிஞரிது; உரிஞுக்கடுமை; உரிஞுஞாற்சி, உரிஞுவலிமை; உரிஞ் யாப்பு, உரிஞருமை - என இருவழியும் முடிந்தவாறு. (தொ. எ. 296, 297 நச்.)

உரிஞ் முன்னிலை ஏவலொருமை வினையாகுமிடத்து, வருமொழி வன்கணம் வரின் உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்ந்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : உரிஞு கொற்றா, உரிஞுக் கொற்றா; உரிஞு நாகா, உரிஞு வளவா; உரிஞ் யவனா, உரிஞனந்தா என முறையே புணருமாறு காண்க. (152 நச். உரை)

ஞகர நகர ஈறுகள் உருபேற்குமாறு -

{Entry: B02__084}

ஞகர ஈற்றுச்சொல் உரிஞ் ஒன்றே; நகர ஈற்றுச் சொற்கள் பொருந் வெரிந் என்னும் இரண்டே. உரிஞ் - தேய்த்துக் கொள்; பொருந் - ஒப்பிடு; வெரிந் - முதுகு என்னும் பொருளன.

இச்சொற்கள் உருபேற்கையில் இடையே இன்சாரியை பெறுவன. (உரிஞ், பொருந் என்னுமிவை தொழிற்பெயர்ப் பொருளவாய் உருபொடு புணரும்).

எ-டு : உரிஞினை, உரிஞினால்; பொருநினை, பொரு நினால்; வெரிநினை, வெரிநினால் (தொ. எ. 182 நச்)

ஆயின் இவை ஐந்தாம் உருபாகிய இன்னொடு பொருந்த மாட்டா. இவ்வுருபு இச்சொற்களோடு இணையுமிடத்து இன்சாரியை இடையே வாராது. உரிஞின், பொருநின், வெரிநின் என ஐந்தனுருபோடு இச் சொற்கள் வருமாறு காண்க. உரிஞினின், பொருநினின், வெரிநினின் என இடையே சாரியை புணர்தல் மரபன்று. (131 நச்.)

ஞாபகம் -

{Entry: B02__085}

ஞாபகம் என்பது ஒருவகை அறியும் கருவி. இது ‘ஞாபகம் கூறல்’ என்ற உத்திவகையின் வேறானது. இது நேரிடையாகக் கூறப்படாத செய்திகளை அறிவினான் அறியச் செய்வது.

பனியிற் கொண்டான், வளியிற் கொண்டான் எனத் தொழிற் கண் (கொண்டான் முதலியன) இன்னின் னகரம் திரியும் எனவே, பெயர்க்கண் இன்னின் னகரம் திரிதலும் திரியாமை யும் கொள்ளப்படும் என்பது ஞாபகத்தான் பெறப்படும்.

குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி - எனத் திரிந்து வந்தன.

குருகின் கால், எருத்தின் புறம் - எனத் திரியாது வந்தன.

(தொ. எ. 124 நச்.)

பல + பல என்பதன்கண் நிலைமொழி அகரம் கெடற்கு விதி கூறப்படவில்லை; “லகர ஒற்று றகர ஒற்றாகும்” என்பதே கூறப்பட்டுள்ளது. “அகரம் கெடும்” என்பது ‘வாராததனான் வந்தது முடித்தல்’ என்னும் உத்திவகை; ஞாபகம் என்பாரு முளர். (214 நச். உரை 215 இள. உரை)

‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ...... அவற்றோ ரன்ன’ என ஞாபகமாகக் கூறிய அதனால், மாங்கோடு என அகரம் இன்றியும் வரும். (231 நச். உரை)

ஞெமை என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__086}

ஞெமை என்ற மரத்தை உணர்த்தும் பெயர் அல்வழிப் புணர்ச்சியில் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : ஞெமை கடிது, சிறிது, தீது, பெரிது; ஞெமை ஞான்றது, நீண்டது, மாண்டது; ஞெமை யாது, வலிது; ஞெமை யழகிது. (யகரம் உடம்படுமெய்) (தொ. எ. 158 நச்.)

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், சே என்ற மரப்பெயர் போல, வன்கணம் வருவழி இனமாகிய மெல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வருவழி இயல்பாகவும் புணரும்.

எ-டு : ஞெமைங்கோடு, ஞெமைஞ்செதிள், ஞெமைந் தோல், ஞெமைம்பூ; ஞெமைஞாற்சி, நீட்சி, மாட்சி; ஞெமை யாப்பு, வன்மை; ஞெமையருமை (யகரம் உடம்படு மெய்) (282 நச்.)

ட section: 2 entries

டு று ஆகிய குற்றியலுகர ஈறுகள் உருபேற்குமாறு -

{Entry: B02__087}

டு று ஆகிய குற்றியலுகரஈற்றுச் சொற்கள் முறையே டகரறகர ஒற்றுக்கள் இடையே மிக்கு உருபேற்றலும், இன்சாரியை பெற்று உருபேற்றலும் உள.

எ-டு : யாடு + ஐ = யாட்டை, யாட்டினை

யாறு + ஐ = யாற்றை, யாற்றினை

(தொ. எ. 196, 197 நச்.)

டு று ஆகிய குற்றியலுகர ஈறுகள் வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி -

{Entry: B02__088}

டு று ஆகிய குற்றியலுகர ஈற்று ஈரெழுத்து மொழியும் உயிர்த் தொடர் மொழியும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் இனமாகிய ஒற்று இடையே மிக வன்கணம் வரின் வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம் வரின் இனஒற்று இடையே மிக்கு இயல்பாக முடியும்.

எ-டு : யாடு + கால் = யாட்டுக்கால்; பாறு + சினை = பாற்றுச் சினை; முயிறு + சினை = முயிற்றுச்சினை. (தொ. எ. 411 நச்.) யாடு + ஞாற்சி = யாட்டுஞாற்சி; முயிறு + ஞாற்சி = முயிற்றுஞாற்சி; பாறு + வலிமை = பாற்று வலிமை; முயிறு + வலிமை = முயிற்றுவலிமை

இனி அல்வழிக்கண், குருடு கடிது, களிறு கடிது என்றாற் போல இயல்பாகும். (425 நச்.)

ண section: 5 entries

ணகரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__089}

ணகர ஈற்றுப் பெயர், வன்கணம் வரின், வேற்றுமைப் புணர்ச்சியாயின் ணகரம் டகரமாகத் திரியும்; ஏனைய கணம் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : மண் + குடம் = மட்குடம்; மண் + சாடி = மட்சாடி; மண் + தூதை = மட்டூதை; மண் + பானை = மட்பானை - வன்கணம் வர, ணகரம் டகரமாயிற்று.

மண்ணெகிழ்ச்சி, மண்மாட்சி; மண்யாப்பு, மண்வலிமை - என மென்மையும் இடைமையும் வர இயல்பாயிற்று. உயிர்க்கணம் வரின், மண் + அடைவு = மண்ணடைவு என, தனிக்குறில் முன் ஒற்றிரட்டிப் புணரும். (தொ. எ. 148 நச்.)

இரண்டாம்வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஈறு திரியாது, மண்கொணர்ந்தான், மண் கை என இயல்பாகப் புணரும். (302 நச்.)

ஆண் பெண் என்ற பொதுப்பெயர்கள், எப்பொழுதும் அஃறிணைப்பெயர் அல்வழியில் புணருமாறு போல, வேற்றுமைப்புணர்ச்சியிலும் இயல்பாகப் புணரும். (303 நச்.)

எ-டு : ஆண் கை, பெண் கை

ஆண் என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று வருமொழி யொடு புணரும்.

எ-டு : ஆணங்கோடு, ஆணநார், ஆணவலிமை, ஆண வடைவு (வகரம் உடம்படுமெய்) (304 நச்.)

விண் என்ற ஆகாயத்தின் பெயர் அத்துச்சாரியை பெற்றும், அதனொடு வகரம் பெற்றும் சாரியை இன்றியும் புணரும் இம்முடிபு செய்யுட்கண்ணது.

எ-டு : விண்ணத்துக் கொட்கும் (அத்து)

விண்வத்துக் கொட்கும் (வ் + அத்து)

‘விண்குத்து நீள்வரை’ (இயல்பு) (305 நச்.)

ணகார ஈற்றுத் தொழிற்பெயர், அல்வழி வேற்றுமை இரு வழியும், வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : மண்ணுக் கடிது, மண்ணுக்கடுமை; மண்ணு ஞான்றது, மண்ணுஞாற்சி; மண்ணு வலிது, மண்ணு வன்மை; மண் யாது, மண்யாப்பு; மண்ணரிது; மண்ணருமை (உயிர் வருவழிச் தனிக்குறில் முன் ஒற்று இரட்டும்); மண் - கழுவுதல் என்னும் பொருளது. (306 நச்.)

உமண் என்ற ணகாரஈற்றுக் கிளைப்பெயர் உமண்குடி - உமண்சேரி - என்றாற்போல இயல்பாகப் புணரும்.

கவண்கால், பரண்கால் என்பன இயல்பாகப் புணரும்.

மண்ணப்பத்தம், எண்ணநோலை - என்பன அக்குச்சாரியை பெறும்.

அங்கண் இங்கண் உங்கண் எங்கண், ஆங்கண் ஈங்கண் ஊங்கண் யாங்கண், அவண் இவண் உவண் எவண் என்ற ணகார ஈற்று ஏழாம் வேற்றுமை ப் பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் ஈற்று ணகரம் டகரமாகிப் புணரும். இவ்விடைச்சொற்கள் பெயர்ச்சொல் நிலையின.

எ-டு : அங்கட்கொண்டான் ............... எங்கட் கொண்டான்

ஆங்கட் கொண்டான் ............. யாங்கட் கொண்டான்

அவட் கொண்டான் ................. எவட் கொண்டான்

(307 நச்.)

‘எண்’ என்ற உணவு எள்ளின் பெயர் அல்வழிக்கண் இயல்பாகவும் திரிந்தும், வேற்றுமைக்கண் திரிந்தும் வருமொழி வன்கணத்தொடு புணரும்.

எ-டு : எண் கடிது, எட்கடிது; எட்கடுமை (308 நச்.)

முரண் என்ற தொழிற்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் ணகரம் டகரமாகத் திரிந்தும் உறழ்ச்சி பெற்றும் புணரும். அல்வழிக்கண் இயல்பாகப் புணரும்.

எ-டு : முரட்கடுமை, முரட்பெருமை - என்ற திரிபும்

முரண்கடுமை முரட்கடுமை, அரண்கடுமை அரட்கடுமை என்ற உறழ்ச்சியும் கொள்ளப்படும்.

இனி அல்வழிக்கண், முரண்கடிது, சிறிது, தீது, பெரிது; நெகிழ்ந்தது, நீண்டது, மாண்டது; வலிது, யாது; அழகிது - என நாற்கணத்தும் இயல்பாக முடிந்தது. (309 நச்.)

உருபுபுணர்ச்சிக்கண் மண்ணினை, மண்ணை என இன்சாரியை பெற்றும் பெறாமலும் வரும். (202 நச்.)

அல்வழிக்கண் ணகர ஈற்றுப்பெயர் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : மண் கடிது, மண் சிறிது, மண் தீ(டீ)து, மண் பெரிது;
மண் ஞான்றது, மண் ணீண்டது, மண் மாண்டது;
மண் யாது, மண் வலிது; மண்ணழகிது (தனிக்குறில் முன் ஒற்றாதலின் உயிர்வர இரட்டியது) (147 நச்.)

ணகர ஈறு அல்வழிப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : மண் கடிது, எண் சிறிது (நன். 209)

வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் நிலைமொழி யீற்று ணகரம் டகரமாகத் திரியும்; பிறகணம் வரின் இயல்பாம்.

எ-டு : மண் + குடம் = மட்குடம்

மண் + ஞாற்சி, யாப்பு, அழகு = மண்ஞாற்சி, மண்யாப்பு, மண்ணழகு (நன். 209)

தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகரம் வருமொழி நகரம் ணகரமாகத் திரிந்தவழித் தான் கெடும். இருவழியும் இம்முடிபு கொள்க.

எ-டு : ஆண் + நல்லன், நன்மை = ஆணல்லன், ஆணன்மை

பரண் + நன்று, நன்மை = பரணன்று, பரணன்மை

பசுமண் + நன்று, நன்மை = பசுமணன்று, பசுமணன்மை (நன். 210)

பாண் என்ற சாதிப்பெயர், உமண் என்ற குழூஉப்பெயர், பரண் கவண் - என்ற பெயர்கள் போல்வன வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : பாண்குடி, உமண்சேரி, கவண்கால், பரண்கால்

உணவு எண் (எள்), சாண் - என்பன வன்கணம் வரின் இருவழி யும் ணகரம் இயல்பாதலும் டகரமாதலும் ஆகிய உறழ்ச்சி பெறும்.

எ-டு : எண்கடிது எட்கடிது, எண்கடுமை எட்கடுமை;

சாண்கோல் சாட்கோல், சாண்குறுமை சாட்குறுமை

பாண் அகரச்சாரியை பெற்றுப் பாண் + குடி = பாணக்குடி எனவரும். அட்டூண்து(டு)ழனி என இயல்பும், மண்குடம் மட்குடம் என்ற உறழ்வும், இன்ன பிறவும் கொள்க. (நன். 211 சங்கர.)

ணகார ஈற்று ஏழாம் வேற்றுமைப் பொருளவாம் இடைச்சொல் புணருமாறு -

{Entry: B02__090}

ணகார ஈற்றுக் கிளைப்பெயர் புணருமாறு -

{Entry: B02__091}

ணகார ஈற்றுத் தொழிற்பெயர் புணருமாறு -

{Entry: B02__092}

‘ணகர ஈற்றுப் புணர்ச்சி’ காண்க.

ணகாரம் முன்னர் மகாரம் குறுதல் -

{Entry: B02__093}

செய்யுளில் (லகரமெய் திரிந்த னகரத்தை அடுத்து வரும் மகரம் தனது அரை மாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை யாக ஒலித்தலேயன்றி) ளகரமெய் திரிந்த ணகரத்தை அடுத்து வரும் மகரமும் தனது மாத்திரையின் குறுகிக் கால்மாத்திரை யாக ஒலிக்கும் (தன்னின முடித்தல் என்னும் உத்தியால் இம்மகரக் குறுக்கம் கொள்ளப்பட்டது).

எ-டு : (போலும் > போல்ம் - போன்ம்) மருளும் > மருள்ம் - மருண்ம். (தொ. எ. 52 நச். உரை)

த section: 88 entries

தகரஉகரம் நிகழ்காலம் காட்டுதல் -

{Entry: B02__094}

‘யாமவண் நின்றும் வருதும்’ (சிறுபாண். 143) எனத் தும் ஈற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்றுச் சிறுபான்மை நிகழ்காலம் காட்டுதலும், தோற்றுது, வருது, போகுது எனத் துவ்வீற்று ஒன்றன்படர்க்கை வினை நிகழ்காலம் காட்டுதலும் கொள்க. (நன். 145 இராமா.)

‘தத்தம் திரிபே சிறிய’ என்பது -

{Entry: B02__095}

அ ஆ, இ ஈ எ ஏ ஐ, உ ஊ ஒ ஓ ஒள, க் ங், ச் ஞ், ட் ண், த் ந், ப் ம், ர் ழ், ல் ள், ற் ன் - இவை பிறக்கும் இடங்களும் முயற்சியும் ஒன்றாக இருப்பினும், எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானும், தலைவளி மூக்குவளி மிடற்றுவளி என்றவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வோர் கூறி உணர்தல் வேண்டும் என்பது. (தொ. எ. 88 நச். உரை)

‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்ற எழுத்தொலிப் புறனடை, உயிரெழுத்துக்களின் பிறப்பைப் பற்றிய நூற்பாக்களை அடுத்துள்ளது. இதனைச் சிங்கநோக்காக, முன்னர்க் கூறிய உயிர்க்கும் பின்னர்க் கூறும் மெய்க்கும் கொள்வர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும். மெய்யெழுத்துக்களின் பிறப்பைக் கூறுமிடத்து இரண்டிரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கூறுகிறார் தொல். ஆயினும் மெல்லெழுத்து ஆறற்கும் மூக்குவளி வேறுபாடே யன்றி இடவேறுபாடு இன்மையானும், லளக்களுக்கு முயற்சிவேறுபாடு கூறியிருத்த லானும், இ ஈ எ ஏ ஐ - உ ஊ ஒ ஓ ஒள - இவற்றின்கண் சிறிது முயற்சி வேறுபாடு உண்மையானும், உயிரொலி வேறுபாடு களைக் குறிக்கத் ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்ற புறனடை கூறப்பட்டது. இது சிங்கநோக்காய் மெய்க்கும் புறனடை ஆகாது. (எ. ஆ. பக். 79)

எழுத்ததிகாரக் குறிப்புரையாசிரியரது கருத்தும் இதுவே.

(எ. கு. பக். 92)

‘தத்தம் பகாப்பதங்களே பகுதி’ -

{Entry: B02__096}

பெயர்ப் பகுபதங்களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் தத்தம் முதனிலையாய் அமையும் பகாப்பதங்களே பகுதி யாகும். பகுபதத்துள் ஏனைய உறுப்புக்களும் பகாப்பதங்களே எனினும், தனித்துக் கூறும் சிறப்புடைய பகாப்பதம் பெயர் வினை வேர்ச்சொற்களாகிய பகுதியே என்பது. இப்பகுதிகள் பிரித்தவழிப் பகுதியாய் உறுப்பின் பொருள் தாராமையின், இப்பகுதியையும் இடைப்பகாப்பதம் என்பர் சங். இப்பகுதி சொற்களுக்கு ஏற்ப வேறுபடுதலுமுண்டு.

எ-டு : செய்தான் : செய் - பகுதி; செய்வித்தான் : செய்வி - பகுதி; எழுந்தான் : எழு - பகுதி; எழுந்திருந்தான் : எழுந்திரு - பகுதி; எழுந்திட்டான் : எழுந்திடு - பகுதி (நன். 134)

நட வா முதலான முதனிலைகள் எல்லாம் உரிச்சொற்கள் என்பர் சிவஞா. குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகிய பொருட் பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல். (சூ.வி. பக். 34)

பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின், அதனை உணர்த்தும் சொல் உரிச்சொல் எனப்பட்டது. நால்வகைச் சொற்களுள் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பல. (சூ.வி. பக். 35)

தத்திதம் -

{Entry: B02__097}

பெயர்ப்பகுபதத்தின் விகுதி தத்திதம் எனப்படும்.

எ-டு : தச்சன் (அன்), வண்ணாத்தி (இ), பொன்னாள் (ஆள்)

இவை போன்ற பெயர்ச்சொற்களிலுள்ள அன் இ ஆள் போன்ற விகுதிகள் தத்திதன் எனப்படும். (சூ. வி. பக். 55)

தத்திதம் பற்றிய திரிபுகள் -

{Entry: B02__098}

மொழி முதல் இகர ஏகாரங்கள் ஐகாரமாகும்; மொழிமுதல் உகர ஊகார ஓகாரங்கள் ஒளகாரமாகும். மொழிமுதல் அகரம் ஆகார மாகும்.

வருமாறு : அ) கிரியிலுள்ளன கைரிகம்; வேரம் விளைப்பது வைரம்

ஆ) குருகுலத்தார் கௌரவர்; சூரன்மகன் - சௌரி; சோமன்மகன் சௌமியன்

இ) சனகன் மகள் சானகி

(அ) வேரம் - கோபம்; வைரம் - பகைமை) (மு. வீ. மொழி. 43 - 45)

தத்திதாந்த முடிவுகள் சில -

{Entry: B02__099}

அருகன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக் கருதியவிடத்து, அகரத்தை ஆகாரமாக்கி ஆருகதன் என முடிக்க.

‘தசரதன் மகன் தாசரதி’ என்புழி, நிலைமொழி (தசரதன்) ஈற்றில் நின்ற ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, இகரச் சுட்டை மிகுத்துத் தகர ஒற்றிலே உயிரை ஏற்றி, முதல் நின்ற தகரஅகரத்தை ஆகார மாக்கித் தாசரதி என முடிக்க.

சிவன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக் கருதியபொழுது, இகரத்தை ஐகாரம் ஆக்கிச் சைவன் என முடிக்க.

புத்தன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக் கருதியபொழுது, உகரத்தை ஒளகாரமாக்கிப் பௌத்தன் என முடிக்க.

இருடிகள் என நிறுத்தி, இவர்களால் செய்யப்பட்டது யாது எனக் கருதியபொழுது, ‘இரு’ என்பதனை ‘ஆர்’ ஆக்கி, இகரச் சுட்டை மிகுத்து ரகரஒற்றிலே உயிரை ஏற்றி, ‘கடைக்குறைத் தல்’ என்பதனாலும் ‘ஒரோர் மறுவில் பதம் கெட்டு வரும்’ என்பதனாலும் ‘இகள்’ என்னும் பதத்தைக் கெடுத்து ‘அம்’ என்னும் பதத்தை மிகுத்து ஆரிடம் என முடிக்க.

இருசொல்லிடத்து, நரன் என நிறுத்தி, இந்திரன் என வருவித்து, நிலைமொழி யிறுதியில் நின்ற ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஏஆம் இகரத்திற்கு’ என்பதனான், இகரத்தை ஏகாரமாக்கி ரகர ஒற்றின்மேல் உயிரை ஏற்றி நரேந்திரன் என முடிக்க.

குலம் என நிறுத்தி, உத்துங்கன் என வருவித்து, நிலைமொழி ஈற்றில் நின்ற அம் என்னும் பதத்தைக் கெடுத்து, உகரத்தை ஓகாரமாக்கி, லகரஒற்றின்மேல் உயிரை ஏற்றிக் குலோத் துங்கன் என முடிக்க.

கூப + உதகம் = கூபோதகம் என்பதும் அது. பிறவும் அன்ன.

வேரம் என நிறுத்தி, இதன் முதிர்ச்சி யாது என்று கருதிய விடத்து, ஏகாரத்தை ஐகாரமாக்கி வைரம் என முடிக்க.

கேவலம் ‘கைவலம்’ (கைவல்யம்) என்றாயிற்று. வேதிகன் ‘வைதிகன்’ என்பதும் அது.

கோசலை (கோசலம் என்பது பொருந்தும்) என நிறுத்தி, இதனுள் பிறந்தாள் யாவள் எனக் கருதியவிடத்து, ஓகாரத்தை ஒளகாரமாக்கிக் கௌசலை என முடிக்க.

சோமபுத்திரன் ‘சௌமியன்’ என முடிக்க. சௌமியனாவான் புதன். பிறவும் அன்ன. (நேமி. எழுத். 10, 11 உரை)

‘தம் அகப்பட்ட’ -

{Entry: B02__100}

தமக்குக் குறைந்தன; நிலைமொழி குறிப்பிடும் சொல்லுக்கு இனமான சொல்லாய், அதனைவிடக் குறைந்த அளவைக் குறிப்பிடும் பெயர்.

எ-டு : நாழியே யாழாக்கு, கழஞ்சே குன்றி, ஒன்றே கால்

நாழியைவிட ஆழாக்கும், கழஞ்சைவிடக் குன்றியும், ஒன்றனை விடக் காலும் (முறையே அளவு நிறை எண்ணுப் பெயராய்க்) குறைந்த அளவைக் குறிக்கின்றன. இவை உம்மைத்தொகை. இடையே வந்த ஏகாரம் சாரியை. (தொ. எ. 164 நச்.)

‘தம்இயல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம் எண்ணின் தொகுதி’ -

{Entry: B02__101}

நிலைமொழியும் வருமொழியுமாய் வாராது தம் முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதி.

பத்து என நிறுத்திப் பத்து எனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்து எனவும் பஃபத்து எனவும் வழங்கும்.

இவ்வாறு பத்து + பத்து = பப்பத்து, பஃபத்து என வருதல் போல்வன உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தமக்கு இலக்கணமாக உடையன. இவற்றின் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிக்கு இலக்கணவிதி கூறப்படமாட் டாது. (தொ. எ. 482 நச்.)

தம் நம் நும் என்ற சாரியைகள் -

{Entry: B02__102}

தம் நம் நும் - என்பன தாம் நாம் நீம் - என்ற பெயர்களின் திரிபே ஆதலின் தொல். இவற்றை நன்னூலார் போலச் சாரியைக ளோடு இணத்துக் கூறவில்லை. (எ. அ. பக். 129)

தாம் நாம் நீயிர் (நீம்) என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய தம் நம் நும் என்பனவற்றைச் சாரியை இடைச்சொல் என்பர்.

எல்லாம் என்னும் பொதுப்பெயரின் அடியாகப் பிறக்கும் எல்லீர் - எல்லார் - என்ற சொற்களை அவை சார்ந்து, இடப் பொதுமை நீக்கி, எல்லா(ம்)நம்மையும், எல்லீர் நும்மையும், எல்லார்தம்மையும் என உரிமைப்படுத்தலின், அவற்றைப் பெயர் என்றலே அமையும். (எ. ஆ. பக். 97)

‘தம்மின் ஆகிய தொழில் மொழி’ -

{Entry: B02__103}

கருத்தாவாகிய நிலைமொழிப் பொருளான் ஆகிய (செயப் பாட்டு) வினைச்சொற்கள்.

மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியுள் ஒற்றும் உயிரும் இறுதி யாய் நின்ற சொல்முன்னர்க் கருத்தாவாகிய நிலைமொழிப் பொருள்களால் ஆகிய செயப்பாட்டு வினைச்சொற்கள் வரின், அங்ஙனம் வரும் வல்லினம் (வேற்றுமைப் பொதுமுடி பான் மிக்கு முடிதலே யன்றி) விகற்பமும் இயல்பும் ஆகும்.

எ-டு : பேய் கோட்பட்டான், பேய்க் கோட்பட்டான் - உறழ்ச்சி; புலி கோட்பட்டான், புலிக் கோட்பட்டான் - உறழ்ச்சி; பேய் பிடிக்கப்பட்டான், புலி கடிக்கப் பட்டான் - இயல்பு.

இவற்றுள் தம்மினாகிய தொழில் ‘பட்டான்’ என்பதாம். கோள் என்பது முதலியவாய் (பிடித்தல், கடித்தல்) இடைப் பிற வருவன தம் தொழிலாம். இவ் விரண்டனையும் ஒரு சொல்லாக்கித் ‘தம்மினாகிய தொழில்’ என்றார், பட்டான் என்புழி, இது பட்டான் என்னும் பொருள் தோன்றக் கோள் என்பது முதலியன அதனை விசேடித்து நிற்கும் ஒற்றுமை நயம் கருதி. பிடிக்கப்பட்டான் கடிக்கப்பட்டான் என்புழி, பிடிக்க கடிக்க என்னும் வினையெச்சங்கள் பட்டான் என்னும் முற்று வினை கொண்டன. இது வேற்றுமை நயம் கருதிற்று. (இவ் வினையெச்சங்கள் முறையே பேய் புலி என்னும் எழுவாய்க்குரிய பயனிலைகள்; ‘பட்டான்’ சாத்தன் என்னும் எழுவாய்க்குரிய முற்றுவினை). (நன். 256 சங்கர.)

எழுவாயிலும் மூன்றாம் வேற்றுமையிலும் கருத்தா உள ஆதலால், தம் தொழிலையே இங்கு ‘தம்மினாகிய தொழில்’ என்றாரெனின், ‘பேய் பிடித்தது’ என்னும் எழுவாயில் ‘பேயால் பிடித்தது’ என மூன்றாம் வேற்றுமையுருபு விரிந்து நிற்கக் கூடாமையால், தம் தொழிலும் தம்மினாகிய தொழி லும் எழுவாய்க் கருத்தாவும் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவு மாய்த் தம்முள் வேறுபாடுடையனவாம். ஆக்கல் போக்கல் என்றாற் போல்வன எழுவாயிலே வரும் வினைமுதற்குத் தம் தொழில்; ஆக்கப்படுதல் போக்கப்படுதல் என்றாற் போல்வன மூன்றாம் வேற்றுமையிலே வரும் வினைமுதற்குரிய தம்மி னாகிய தொழில். (நன். உருபு.17 இராமா.)

‘தம்மினாகிய தொழிற்சொல்’ புணருமாறு -

{Entry: B02__104}

தம்மினாகிய தொழிற்சொல்லாவன மூன்றாம் வேற்றுமைக் குரிய வினைமுதற்பொருளான் உளவாகிய தொழிற்சொற்கள். அஃதாவது மூன்றாம் வேற்றுமைக்குரிய கருத்தா ஆகிய நிலை மொழிப் பொருள்களான் ஆகிய செயப்பாட்டு வினைச் சொற்கள்.

எ-டு : புலிகோட்பட்டான்.

இது புலியான் கொள்ளப்பட்டான் என்ற மூன்றாம் வேற்றுமை எழுவாயை ஏற்ற செயப்பாட்டு வினையொடு கூடிய சொற் றொடராம்.

உயிரீறு புள்ளியீறு ஆகிய நிலைமொழிகளின் முன் வன்கணத் தில் தொடங்கும் இச்செயப்பாட்டு வினைச்சொற்கள் வரின், இயல்பாகவும் உறழ்ந்தும் முடியும்.

எ-டு : புலி + கோட்பட்டான் = புலிகோட்பட்டான்-இயல்பு; வளி + கோட்பட்டான் = வளிகோட்பட் டான், வளிக்கோட்பட்டான் - உறழ்ச்சி; நாய் + கோட்பட்டான் = நாய் கோட்பட்டான் - இயல்பு

சூர் + கோட்பட்டான் = சூர்கோட்பட்டான் - இயல்பு; சூர்க்கோட்பட்டான் - உறழ்ச்சி.

பேய் + கோட்பட்டான் = பேஎய்கோட்பட்டான் ,

பேஎய்க்கோட்பட்டான்= எகரப்பேற்றோடு உறழ்ச்சி

பாம்பு + கோட்பட்டான் = பாம்பு கோட்பட்டான், பாப்புக் கோட்பட்டான் - நிலைமொழி ஒற்றுத் திரிதலோடு உறழ்ச்சி

இது மூன்றாம் வேற்றுமையுருபு தொக்க பெயர் நிலை மொழியாய் நிற்க வரும் புணர்ச்சியை உணர்த்துகிறது. (தொ. எ. 156 நச்.) (எ. கு. பக். 159)

தமிழ், ஆரியம்: பொது சிறப்பெழுத்துக்கள் -

{Entry: B02__105}

அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற உயிர் பத்தும், க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ள் என்ற மெய்பதினைந்தும் தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான எழுத்துக்களாம். ஊகாரத்தின் பின்னுள்ள நான்கும் ஒளகாரத்தின் பின்னுள்ள இரண்டும் ஆகிய உயிர்கள் 6, கங - சஞ - டண - தந - பம என்ற ஐவருக்கத்திடையே நிற்கும் மும்மூன்று மெய்களாக வருவன 15, (‘சிவம்’ என்பதன் முதல் எழுத்தாகிய) ஷ ஸ ஹ க்ஷ ஷ்க ஷ்ப எனவரும் மெய்கள் 7 என்னும் 28 சிறப்பெழுத்துக்கள் ஆரியத்தின்கண் உள்ளன. ற் ன் ழ் எ ஒ என்ற எழுத்துக்களும், உயிர்மெய் உயிரளபெடை அல்லாத எட்டுச் சார்பெழுத்துக் களும் தமிழுக்கே சிறப்பாக உரியன. (நன். 146, 150)

தமிழ் என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__106}

தமிழ் என்ற ழகர ஈற்றுப் பெயர் அக்குச் சாரியை பெற்று வருமொழியொடு புணரும். இது வேற்றுமைப்புணர்ச்சி.

எ-டு : தமிழ் + கூத்து > தமிழ் + அக்கு + கூத்து = தமிழக் கூத்து

தமிழ் + நாடு > தமிழ் + அக்கு + நாடு = தமிழநாடு

தமிழ் + அரையர் > தமிழ் + அக்கு + அரையர் = தமிழ வரையர் (வகரம் உடம்படுமெய்)

இயல்புகணத்துக்கண் சாரியை பெறாது புணர்தலுமுண்டு.

எ-டு : தமிழ்நாடு, தமிழ்வணிகர், தமிழரையர்

வன்கணம் வந்துழி அக்குப் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகாது புணர்தலுமுண்டு.

எ-டு : தமிழ் + தரையர் > தமிழ் + அக்கு + தரையர் = தமிழ தரையர் (தொ. எ. 385 நச்.)

தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள் -

{Entry: B02__107}

‘எகர ஒகர ஆய்த ழகர

றகர னகரம் தமிழ்; பொது மற்றே’ - லீலாதிலக மேற்கோள்

(எ. ஆ. முன்னுரை)

எனவே, எ ஒ ஆய்தம் ழ ற ன என்பன தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள். இவற்றுள் எகர ஒகரம் இரண்டும் பிராகிருதத்திலும் உள.

இனித் தொன்னூல் விளக்கம் கூறுமாறு : எகர ஒகரங்கள் என இரு குற்றுயிர் எழுத்தும், ற ன ழ என மூன்று ஒற்றும் - ஆக முதலெழுத்து ஐந்தும், கூறிய பத்துச்சார்பெழுத்துள்ளே ஆய்தமும் ஒற்றளபும் ஆறுகுறுக்கமும் என எண் சார்பெழுத் தும் தமிழ்மொழிக்கு உரியன. (தொ. வி. 6 உரை)

தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள் ஐந்தானும் திரிதல் -

{Entry: B02__108}

ஆரியச் சொற்கள் தமிழில் வடசொல்லாக வருமிடத்துத் தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள் ஆகிய எ ஒ ழ ற ன என்ற எழுத்துக்களாகத் திரிதலும் காணப்படுகிறது.

எ - தைவம் என்பது தெ ய்வம் எனத் தமிழில் வழங்கும்.

ஒ - கோங்கணம் என்பது கொ ங்கணம் எனத் தமிழில் வழங்கும்.

ழ - அமிர்தம் என்பது அமி ழ் தம் எனத் தமிழில் வழங்கும்.

ற - அத்புதம் என்பது அ ற் புதம் எனத் தமிழில் வழங்கும்.

ன - சிவ: என்பது சிவ ன் எனத் தமிழில் வழங்கும்.

என இவை முதலாகக் காண்க. (இ. கொ. 87)

தவளைப் பாய்த்து -

{Entry: B02__109}

சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. தவனை பாய்கின்றவிடத்தே இடை யிடை நிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபு கொள்வது. (நன். 18 மயிலை.)

எ-டு : ‘ஆவியும் ஒற்றும்’ என்னும் சூத்திரம் (101) ஒன்றிடை யிட்டு நின்ற மேலைச்சூத்திரமாகிய ‘மூன்று உயிரளபு’ என்பதற்குப் புறனடை உணர்த்தியமை.

தழாஅத்தொடர் -

{Entry: B02__110}

புணர்ச்சியில்வழிப் புணர்ச்சி பெற்றாற்போல நிற்பன இக் காலத்தே தழாத்தொடர் எனப்படும். பொருள்தொடர்ச்சி இல்லாத இரு சொற்கள் நிலைமொழி வருமொழி போலத் தொடர்ந்து சந்தி பெறும் நிலையே தழாஅத்தொடர் நிலையாம்.

எ-டு : ‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ ( அகநா. 3)

ஓமை என்ற சொல் சினை என்பதனொடு பொருள் தொடர் புடையது. அது பொருள்தொடர்பில்லாத ‘காண்பின்’ என்ற சொல்லை வருமொழியாகக் கொண்டு அதனோடு ‘ஓமைக் காண்பின்’ என்று புணர்வது தழாத்தொடராம். (எ. ஆ. பக். 93)

நிலைமொழி வருமொழிகள் பொருள் பொருத்தமுறத் தழுவாத தொடர் தழாத்தொடராம். எ-டு : கைக்களிறு

கை என்ற நிலைமொழி களிறு என்ற வருமொழியொடு பொருள் பொருத்தமுறத் தழுவாமையால் தழாஅத் தொடர். கையை உடைய களிறு என இடையே சொற்களை வருவித்துப் பொருள் செய்ய வேண்டும். உருபும் பொருளும் உடன்தொக்க தொகையெல்லாம் வேற்றுமைக்கண் வந்த தழாஅத்தொட ராம். (தொ.வி. 22 உரை)

‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பின்

பரலவல் அடைய இரலை தெறிப்ப’ (அகநா. 4 )

‘மருப்பின் இரலை’ என்பது பொருள் பொருத்தமுறத் தழுவு தொடர். ‘மருப்பிற் பரல்’ என்பது பொருள் பொருத்தமுறத் தழுவாமையால், தழாஅத் தொடராம். இதுவும் வேற்றுமைப் புணர்ச்சி.

‘சுரை ஆழ அம்மி மிதப்ப’

இதன்கண், சுரை மிதப்ப, அம்மி ஆழ என்பனவே தழுவு தொடராம். ‘சுரை யாழ’ என்பதும் ‘அம்மி மிதப்ப’ என்பதும் அல்வழிக்கண் வந்த தழாஅத் தொடராம். (நன். 152 சங்கர.)

தழாஅத் தொடராகிய அல்வழிப்புணர்ச்சியும் வேற்றுமைப்புணர்ச்சியும் -

{Entry: B02__111}

‘சுரை யாழ அம்மி மிதப்ப’ என்பது ‘சுரை மிதப்ப அம்மி யாழ’ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் (பயனிலையாகத்) தழுவாமையால், இப்படி வருகின்றன எல்லாம் தழாத்தொட ராகிய அல்வழிப்புணர்ச்சியாம். ‘கைக் களிறு’ என்பது கையை உடைய களிறு என விரிக்கப்படுதலால், கை என்பது களிறு என்பதைத் தழுவாமையால், இப்படி வருகின்றவை எல்லாம் தழாத் தொடராகிய வேற்றுமைப் புணர்ச்சியாம். (தொ. வி. 22 உரை)

தழுவுதொடர் -

{Entry: B02__112}

வேற்றுமைத் தழுவுதொடர் ஐ முதலிய ஆறுருபுகளும் விரிந்து நிற்ப நிகழ்தலின் ஆறாம்; அல்வழிக்கண் தழுவுதொடர் வினைத்தொகை முதலிய ஐந்துதொகைகளும், எழுவாய்த் தொடர் முதலிய ஒன்பது தொகாநிலைகளுமாகப் பதினான் காம். இவ்வாறு தழுவுதொடர்கள் வேற்றுமை அல்வழிப் பொருள் நோக்கத்தான் அமைவன. (நன். 152)

தளா என்ற பெயர் வேற்றுமைப் பொருளில் புணருமாறு -

{Entry: B02__113}

தளா என்ற பெயர் நிலைமொழியாக, வருமொழி வன்கணம் வரின், அகரமாகிய எழுத்துப்பேறளபெடையொடு வல் லெழுத்தோ மெல்லெழுத்தோ பெறுதலும், இன்சாரியை பெறுதலும், அத்துச்சாரியை பெறுதலும் அமையும். தளா என்பது ஒரு மரப்பெயர்.

தளா + கோடு = தளாஅக்கோடு, தளாஅங்கோடு, தளா வின் கோடு, தளாஅத்துக்கோடு (அத்தின் அகரம் ‘தளாஅ’ என்ற அகரத்தின் முன் கெட்டது).

தளா என்ற பெயர் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.

வருமாறு : தளாவினை, தளாவினால்......... தளாவின்கண்

(தொ. எ. 173 நச்.)

இது பொருட்புணர்ச்சிக்கும் வரும். இன்சாரியை இடையே வர, வருமொழி முதற்கண் வன்கணம் வரினும் மிகாது.

எ-டு : தளாவின் கோடு, தளாவின் செதிள், தளாவின் தோல், தளாவின் பூ (230 நச்.)

தற்சமம் -

{Entry: B02__114}

ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாம் என்க.

எ-டு : அமலம், கமலம், காரணம் (மு. வீ. மொழி. 34)

தற்சுட்டளவு -

{Entry: B02__115}

ஐகாரம் தன்னைக் கருதித் தன்பெயர் கூறுமளவில் குறுகாது. சுட்டளவு என்பது வினைத்தொகை. ‘அளவு’ என்றார், எழுத்தின் சாரியை தொடரினும் குறுகும் என்பது கருதி. இனி ‘அளபு’ எனப் பாடங்கொண்டு அளபு என்பதனை அள பெடையாக்கித் தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபெடுத் தற்கண்ணும் ஐகாரம் குறுகாது என்பர். தன் இயல்பாய இரண்டு மாத்திரையினின்றும் குறுகுதல் இல்லனவற்றை ஒழிப்பார், விகாரத்தான் மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாய் மிக்கொலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின் அது பொருந்தாது. (நன். 95 சங்கர.)

தற்சுட்டு அளபு ஒழி ஐ, ஒள -

{Entry: B02__116}

தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபெடுத்தற்கண்ணும் அல்லாதவழி வந்த ஐகாரம் முதல் இடைகடை என்னும் மூவிடத்தும் குறுகும். அவ்வாறு வந்த ஒளகாரம் மொழிமுதற் கண் குறுகும்.

எ-டு : ப்பசி, மை ப்புறம்; ம டை யன், உ டை வாள்; குவ ளை , தி னை ; மௌ வல்

அந்தௌ, அத்தௌ என்பன கடையிலே குறைந்தன எனின், அவை ஒருபொருட்சிறப்புடையவாய் நடப்பன அல்ல என்க. (நன். 94 மயிலை.)

தற்பவம் -

{Entry: B02__117}

ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தானும் தமிழில் சிதைந்து வருவது தற்பவமாம் என அறிக.

எ-டு : சுகி, போகி (சிறப்பு); அரன், அரி (பொதுவும் சிறப்பும்) (மு. வீ. மொழி. 32)

தன்உரு இரட்டல் -

{Entry: B02__118}

நிலைமொழி தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ஒற்றாக அமைய, வருமொழி முதற்கண் உயிர்க்கணம் வருமாயின், நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று ஒற்று இரட்டித்து வருதல்.

எ-டு : கல் + எறிந்தான் > கல் + ல் + எறிந்தான் = கல் லெறிந்தான் - வேற்றுமை

கல் + அரிது > கல் + ல் + அரிது = கல்லரிது - அல்வழி

(தொ. எ. 160 நச்.)

இங்ஙனம் ஒற்று இரட்டுதலை இயல்புபுணர்ச்சியுள் அடக்குவர் நச்.

தன் உரு இரட்டும் ஈறுகள் -

{Entry: B02__119}

தனிக்குறிலை அடுத்து வரும் மெய் வருமொழி உயிர்க்கணம் வரின் தன் உரு இரட்டும் எனவே, தனிக்குறிலை அடுத்து வரும் ண் ம் ய் ல் வ் ள் ன் என்பனவே தம்முரு இரட்டு வனவாம்.

ஞகார ஈற்றுச்சொல் உரிஞ் - ஒன்றே. நகார ஈற்றுச்சொல் பொருந், வெரிந் என்பன இரண்டே . ஙகாரம் மொழிக்கு ஈறாகாது. வல்லெழுத்து ஆறும் மொழிக்கு ஈறாகா. ர் ழ் இரண்டும் தனிக்குறிலை அடுத்து வாரா. இங்ஙனம் விலக்கப் பட்ட 11 மெய்யும் நீங்கலான ஏனைய ஏழு மெய்களுமே தனிக்குறில்முன் ஒற்று ஈறாய் வரும் தகுதிய ஆதலின், தன் உரு இரட்டல் இவற்றிற்கே உண்டு.

எ-டு: மண் + உயர்ந்தது = மண்ணுயர்ந்தது; மண் + உயர்ச்சி = மண்ணுயர்ச்சி; கம் + அரிது = கம்மரிது; கம் + அருமை = கம்மருமை; மெய் + இனிது = மெய்யினிது; மெய் + இனிமை = மெய்யினிமை; பல் + அழகிது = பல்லழகிது; பல் + அழகு = பல்லழகு; தெவ் + அரிது = தெவ்வரிது; தெவ் + அருமை = தெவ்வருமை; கள் + இனிது = கள்ளினிது; கள் + இனிமை = கள்ளினிமை; பொன் + உயர்ந்தது = பொன்னுயர்ந்தது; பொன் + உயர்ச்சி = பொன்னுயர்ச்சி

இவை முறையே அல்வழிப்புணர்ச்சியும் வேற்றுமைப் புணர்ச்சியுமாம். (தொ. எ. 160 நச்.)

தன், என், நின் என்பவற்றின் முன் வன்கணம் -

{Entry: B02__120}

தன், என், நின் என்பவை நிலைமொழியாக நிற்ப, வல் லெழுத்து முதலிய வருமொழி நிகழுமாயின், தன் என் என்பவற்று ஈற்று னகரம் வல்லினத்தோடு உறழும்; நின் ஈறு பெரும்பான்மையும் இயல்பாகவே புணரும். இது வேற்றுமைப் புணர்ச்சி.

எ-டு : தன் + பகை = தன்பகை, தற்பகை - னகரம் றகரத் தோடு உறழ்தல்; என் + பகை = என்பகை, எற்பகை - னகரம் றகரத்தோடு உறழ்தல்; நின் + பகை = நின்பகை - இயல்பு (நன். 218)

‘தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல்’ -

{Entry: B02__121}

வடநூல் மேற்கோளாக ஒருமொழிகளை விதந்து பகாப்பதம் பகுபதம் எனக் காரணக்குறி தாமே தந்து, அவற்றை நல்விருந் தென நாவலர் பயில, ‘எழுத்தே தனித்தும்’ என்னும் சூத்திரம் முதலாக ‘நடவா மடிசீ’ என்னும் சூத்திரம் ஈறாகப் பகாப்பதம் பகுபதம் எனப் பலமுறை கூறல் ‘தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல்’ என்னும் உத்தியாம். (நன். 137 சங்கர.)

‘தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவி’ -

{Entry: B02__122}

தன்னுடைய செயலைக் குறிப்பிடும் ஆகார ஈற்றுத் தன்மை வினாச்சொல்.

எ-டு : உண்கா. இஃது ‘யான் உண்பேனோ’ என்னும் பொருளது.

ஒருகாலத்தில் ஆ - தன்மை வினாவைக் குறித்தது போலவே, ஏ ஓ - என்பன முன்னிலை படர்க்கை வினாக்களைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம். அதன் உண்மை இப்பொழுது அறியப் படுமாறின்று. (எ. ஆ. பக். 31)

தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவி வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகவே புணரும்.

எ-டு : உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா (தொ. எ. 224 நச்.)

தனிக்குறில் அடுத்த உகரஈற்றுச் சொற்கள் -

{Entry: B02__123}

நடு - படு - அறு - பொறு - என்பன போலத் தனிக்குறிலை அடுத்து வரும் வல்லெழுத்துக்களை ஏறி வந்த உகரங்கள் குறுகாதன. இவையும் தொடக்கத்தில் மெய்யீற்றுச் சொற்களே. இவை தனிக் குற்றெழுத்துக்களைச் சார்ந்தவை ஆதலின் இவற்றை ஒலிக்க வந்த உயிரின் ஒலி நன்கு கேட்கிறது. ஏனை இடத்து வல்லொற்றுக்கள் நெட்டெழுத்தினையும் இரண்டு மூன்று எழுத்துக்களையும் அடுத்து வருதலின், அவ்வீற்று மெய்களை ஒலிக்க வரும் உகர உயிரின் ஒலிக்கும் முயற்சி குறைதலின், அது நன்கு கேட்கப்படாமையால், குற்றிய லுகரம் ஆகும். நடு - படு - முதலிய சொற்களில் உகர உயி ரொலி நன்கு கேட்கப்படுதலின், அவ்வுகரம் முற்றியலுகரம் ஆகும். (எ. ஆ. பக். 162)

தனிக்குறில் முன் ஒற்று இரட்டாதன -

{Entry: B02__124}

அவ் இவ் உவ் என்ற வகரஈற்று மூன்று அஃறிணைப் பன்மைச் சுட்டுப்பெயர்க்கு முன்னர் அற்றுச்சாரியை வந்தாலும், அ இ உ என்னும் முச்சுட்டின் முன்னும் எகரவினா முன்னும் இச் சாரியை வந்து வகரமெய் பெற்றாலும் தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர இரட்டாவாறு கொள்க. (இச்சூத்திரத்து ‘வழி’ என்ற மிகையால் உரையாசிரியர் கொண்டது இது.) (நன். 249 மயிலை.)

தனிநிலை -

{Entry: B02__125}

தனிநிலையாவது ஆய்தம். உயிர்களொடும் மெய்களொடும் கூடியும் கூடாதும் அலி போலத் தனித்து நிற்றலின், ஆய்தம் ‘தனிநிலை’ எனப்படும். ஆய்தம் உயிர்போல

‘அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றா னெடிதுய்க்கு மாறு’ (குறள். 943)

என அலகு பெற்றும்,

‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று’ (236)

என அலகு பெறாதும்,

ஒருபுடை ஒத்து உயிரும் மெய்யுமாகிய அவற்றினிடையே சார்ந்து வருதலான் சார்பெழுத்தாயிற்று. (உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலானும், ஏனையவை தத்தம் முதலெழுத் தின் திரிபுவிகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின). (நன். 60 சங்கர.)

தனிநிலை அளபெடை வேண்டாவாதல் -

{Entry: B02__126}

ஆசிரியர் தனிநிலை அளபெடை வேண்டிற்றிலர், அது நெட் டெழுத்து ஓரெழுத்தொரு மொழியாய், முதனிலை அளபெடையாகவோ, இறுதிநிலை அளபெடையாகவோ அடங்கும் ஆதலின். (இ. வி. எழுத். 192 உரை)

தனிமொழி ஆய்தம் -

{Entry: B02__127}

ஆய்தம் மொழிக்கு முதலிலோ இறுதியிலோ வாராது. மொழிக்கு இடையில் குற்றெழுத்தை அடுத்து உயிரொடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலிடத்ததாய் வரும்.

எ-டு : எஃகு, கஃசு, அஃகாமை, எஃகம் (தொ. எ. 38 நச்.)

எழுத்துச்சாரியை இணையுமிடத்தும் அஃகான் - மஃகான் என எழுத்திற்கும் சாரியைக்கும் இடையே ஆய்தம் வருத லுண்டு. (136 நச்.)

தனிமொழிக் குற்றியலிகரம் -

{Entry: B02__128}

கேண்மியா, சென்மியா முதலாகத் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் கேள், சொல் முதலிய சொற்களை அடுத்து வரும் மியா என்ற இடைச்சொல்லி லுள்ள மி என்ற எழுத்தில் மகரத்தை ஊர்ந்து வரும் இகரம். இது குற்றியலிகரமாய் ஒரு சொல்லினுள்ளேயே நிகழ்வது.

மியா என்ற சொல் இடம்; மகரம் பற்றுக்கோடு; ‘யா’ என்ற சினையும் மகரம் போல இகரம் குறுகுதற்கு ஒரு சார்பு. (தொ. எ. 34 நச்.)

தனிமொழிக் குற்றியலுகரம் -

{Entry: B02__129}

தனிநெட்டெழுத்தை அடுத்தும் தொடர்மொழியின் ஈற்றிலும் குற்றியலுகரம் வல்லினமெய் ஆறனையும் ஊர்ந்து வரும்.

எ-டு : நாகு, காசு, காடு, போது, மார்பு, காற்று (நாகு, பலாசு, வெய்து, கஃசு, பட்டு, கன்று)

நெட்டெழுத்தும் தொடர்மொழியும் ஆகிய இவற்றது இறுதி இடம்; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடனும் பற்றுக்கோடும் கூறவே, குற்றியலுகரம் மொழிக்கு ஈறாதலும் பெறப்படும்.

நுந்தை என்ற முறைப்பெயரின் முதலெழுத்தாகும் நு என்பதும் இதழை முற்றக் குவியாது ஒலிக்குங்கால் குற்றிய லுகரமாம். நகரத்தை ஊர்ந்து வரும் இஃதொன்றே மொழி முதற் குற்றியலுகரமாம். இம்முறைப்பெயர் இடம்; நகரம் பற்றுக்கோடு.

இங்கு (பெருங்காயம்), ஏது, பரசு - என்ற வடசொற்கள் குற்றிய லுகர ஈற்றுச் சொற்கள் ஆகா. இடனும் பற்றுக்கோடும் உளவேனும் இவற்றின் ஈற்று உகரம் குற்றெழுத்துப் போலவே ஒலிக்கப்படும். இது முற்றியலுகரமாம். (தொ. எ. 36. 67 நச். உரை)

தாது -

{Entry: B02__130}

வினைச்சொல்லின் பகுதி தாது எனப்படும்.

எ-டு : உண்டான் முதலிய வினைச்சொற்களிலுள்ள உண் முதலியன தாதுவாம். (சூ.வி. பக். 55)

தாய் என்ற முறைப்பெயர் புணருமாறு -

{Entry: B02__131}

விரவுப்பெயருள் முறைப்பெயர் என்ற வகையைச் சார்ந்த தாய் என்ற சொல், வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், வரு மொழி வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.

தாய் என்ற சொல் தனக்கு அடையாக முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, வருமொழியில் வன்கணம் வரின் மிக்குப் புணரும்.

எ-டு : மகன்தாய்க் கலாம், மகன்தாய்ச் செரு, மகன்தாய்த் துறத்தல், மகன்தாய்ப் பகைத்தல்

என வல்லொற்று மிக்கே வரும். இவை, மகன் தாயொடு கலாய்த்த கலாம், மகன் தாயொடு செய்த செரு, மகன் தாயைத் துறத்தல், மகன் தாயைப் பகைத்தல் - என விரியும் வேற்றுமைப் பொருண்மையவாம். (தொ. எ. 358, 359 நச்.)

‘தாழ் என் கிளவி’ -

{Entry: B02__132}

தாழ் என்னும் பெயர்ச்சொல் கோல் என்னும் சொல்லொடு புணர்கையில், இடையே அக்குச்சாரியை வருதற்கு உரித்து மாம்; எதிர்மறையும்மையான் அச்சாரியை வாராமைக்கு உரித்துமாம்.

வருமாறு : தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல்; உம்மை-யான், தாழ்க்கோல் எனவும் முடியும்.

இத்தொகை ‘தாலிப் பொன்’ என்பது போல, தாழிற்குரிய கோல்- என விரியும். தாழாகிய கோல் என இருபெய ரொட்டாகக் கொள்ளின், கோல் என்பது கணையமரத்தைக் குறிக்கும். தாழ்க்கோலினைத் திறவுகோல் எனக் கொண்டு தாழைத் திறக்கும் கோல் என இரண்டாவது விரித்தனர் உரையாசிரியன்மார். திறவுகோலாவது திறக்கும் கருவி. அதனைத் தாழ் என்றல் பொருந்தாது. (தொ. எ. 384 ச. பால.)

தாழ் என்ற பெயர் கோலொடு புணர்தல் -

{Entry: B02__133}

தாழ் என்ற நிலைமொழி கோல் என்ற வருமொழியொடு புணருமிடத்து, இடையே அக்குச்சாரியை பெற்றுத் தாழக் கோல் எனவும், வல்லெழுத்து மிக்குத் தாழ்க்கோல் எனவும் புணரும். தாழ்க்கோல் என்பதே பெரும்பான்மை. இதனைத் தாழைத் திறக்கும் கோல் என வேற்றுமைவழியிலும், தாழாகிய கோல் என அல்வழியிலும் பொருள் செய்யலாம். (தொ. எ. 384 நச்).

தாழக்கோல் : தொடர்வகை -

{Entry: B02__134}

தாழைத் திறக்கும் கோல் என விரியும். இஃது இரண்டன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை. தாழக்கோல் எனினும் திறவுகோல் எனினும் ஒக்கும். தாழாகிய கோல் என விரிப்பின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம். முன்னது வேற் றுமைப் புணர்ச்சி; பின்னது அல்வழி. (நன். 225 சங்கர.)

தான் என்ற இயற்பெயர் தந்தை, மக்கள் முறைமையொடு புணர்தல் -

{Entry: B02__135}

தான் என்ற இயற்பெயர், தந்தை என்ற முறைப்பெயரொடும் மக்கள் முறைமையுடைய இயற்பெயர்களொடும் புணரும்வழி, தான் என்ற சொல்லின் னகரம் திரிபு பெறாமல் இயல்பாகவே புணரும்.

வருமாறு : தான்த (ற) ந்தை, தான்கொற்றன். (தொ. எ. 351 நச்.)

தானம் முயற்சி அளவு பொருள் வடிவு -

{Entry: B02__136}

தானம் - உரம் (மார்பு) முதலியன; முயற்சி - இதழ்முயற்சி முதலியன; அளவு - மாத்திரை; பொருள் - பாலன் விருத்த னானாற்போல, குறிலது விகாரமே நெடிலாதலின், இரண் டற்கும் பொருள் ஒன்று என்று முதனூலால் நியமிக்கப்பட்ட பொருள்; வடிவு ஒலிவடிவும் வரிவடிவும். இவற்றுள் ஒன்றும் பலவும் ஒத்து எழுத்துக்கள் தம்முள் இனமாய் வருதல் காண்க. (நன். 72 சங்கர.)

திங் -

{Entry: B02__137}

வினைமுற்று விகுதி ‘திங்’ எனப்படும். எனவே, வினைமுற்றுத் ‘திஙந்தம்’ என்னும் பெயரதாகும்.

எ-டு : நடந்தான் என்பது திஙந்தம்; ஆன் என்பது திங்.

(சூ. வி. பக். 55)

திங்கள் நிலைமொழியாக, வருமொழித் தொழில்நிலைக் கிளவியொடு புணருமாறு -

{Entry: B02__138}

மாதங்களின் பெயர்கள் இகர ஐகார ஈற்றனவே. இகர ஐகார ஈற்றனவாய் வரும் மாதப்பெயர்களின் முன் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வினைச்சொற்கள் முடிக்கும் சொற்களாக வரின், இடையே இக்குச் சாரியை வரும்.

எ-டு : ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண் டான்; ஆடி + இக்கு + வந்தான் = ஆடிக்கு வந்தான்; சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான்; சித்திரை + இக்கு + வந்தான் = சித்திரைக்கு வந்தான்

இவற்றிற்கு ஆடிமாதத்தின்கண், சித்திரை மாதத்தின்கண் என வேற்றுமைப்பொருள் விரிக்கப்படும். (தொ. எ. 248 நச்.)

திசைப்பெயர்கள் புணருமாறு -

{Entry: B02__139}

பெருந்திசைகள் வடக்கு, தெற்கு என்பன. இரண்டு பெருந் திசைகள் தம்மில் புணரும்வழி இடையே ஏகாரச்சாரியை வரும்.

வருமாறு : வடக்கே தெற்கு, தெற்கே வடக்கு. இவை உம்மைத் தொகை. (தொ. எ. 431 நச்.)

பெருந்திசைகளொடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்கு மிடத்து, அவ்வுகரம் ஏறிநின்ற ஒற்றும் அவ்வீற்று உகரமும் (வடக்கு என்பதன்கண் ஈற்றயல் ககர ஒற்றும்) கெட்டு முடிதல் வேண்டும். தெற்கு என்னும் திசைச்சொல்லொடு புணருங் கால், தெற்கு என்பதன் றகர ஒற்று னகர ஒற்றாகத் திரியும்.

கோணத்திசைகள் கிழக்கு, மேற்கு என்பன. இவை பண்டு குணக்கு - குடக்கு என்னும் பெயரின.

வருமாறு : வடகிழக்கு, வடகுணக்கு, வடமேற்கு, வடகுடக்கு; தென்கிழக்கு, தென்குணக்கு, தென்மேற்கு, தென் குடக்கு

பெருந்திசைப் பெயரொடு பொருட்பெயர் புணரினும்,

வடகால், வடசுரம், வடவேங்கடம்; தென்கடல், தென்குமரி, தென்னிலங்கை என வரும்.

கோணத் திசைப்பெயர்களொடு பொருட்பெயர் புணரும்வழி,

கிழக்கு + கரை = கீழ்கரை; கிழக்கு + கூரை = கீழ்கூரை; மேற்கு + கரை = மேல்கரை, மீகரை; மேற்கு + கூரை = மேல்கூரை, மீகூரை; மேற்கு + மாடு = மேன்மாடு; மேற்கு + பால் = மேல் பால்; மேற்கு + சேரி = மேலைச்சேரி - என்றாற் போல முடியும். (எ. 431, 432 நச். உரை)

‘வடகு’ என்பதே வடக்கு என்பதன் பண்டைச் சொல் ஆகலாம். (எ. ஆ. பக். 170)

வடக்கு கிழக்கு குணக்கு குடக்கு என்ற நிலைமொழிகள் ஈற்று உயிர்மெய்யும் அதன்மேல் நின்ற ககர ஒற்றும் கெடும். தெற்கு, மேற்கு என்ற நிலைமொழிகளின் றகரம் முறையே னகரமாக வும் லகரமாகவும் திரியும். பிறவாறும் நிலைமொழித் திசைப் பெயர் விகாரப்படுதலும் கொள்க.

வருமாறு : வடக்கு + கிழக்கு, மேற்கு, திசை, மலை, வேங்கடம் = வடகிழக்கு, வடமேற்கு, வடதிசை, வடமலை, வடவேங்கடம்; குடக்கு + திசை, நாடு = குடதிசை, குடநாடு; குணக்கு + கடல், பால் = குணகடல், குணபால்.

கிழக்கு என்பதன் ழகரத்து அகரம் கெட்டு முதல்நீண்டு வருதலும் அவற்றோடு ஐகாரச் சாரியை பெறுதலும் கொள்க; அகரச் சாரியை பெறுதலும் கொள்க.

இது ‘மேற்கு’க்கும் பொருந்தும்.

கிழக்கு + திசை = கீழ்த்திசை, கீழைத் திசை, கீழத்திசை;

கிழக்கு + நாடு = கீழ்நாடு, கீழைநாடு, கீழநாடு;

தெற்கு + கிழக்கு, மேற்கு, குமரி, மலை, வீதி = தென்கிழக்கு, தென்மேற்கு, தென்குமரி, தென்மலை, தென்வீதி;

மேற்கு + திசை, கடல், வீதி = மேல்திசை (மேற்றிசை), மேலைத் திசை, மேலத்திசை; மேல்கடல், மேலைக்கடல், மேலக்கடல்; மேல் வீதி, மேலைவீதி, மேலவீதி.

வடக்குமலை, தெற்குக்கடல் முதலாக வரும் இயல்பும், கீழ்மேற்றென்வடல் போன்ற முடிவும், பிறவும் கொள்க. (நன். 186 சங்.)

திசையொடு திசை புணருங்கால், நிலைமொழி பெருந்திசை எனவும், வருமொழி கோணத்திசை எனவும், நிலைமொழியாய் நிற்பன வடக்கும் தெற்குமே எனவும், தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும் மேற்கு என்பதன் றகரம் லகரமாகவும் திரியும் எனவும், வருமொழித் தகரம் திரியும் எனவும், (கிழக்கு என்பதன்) ழகரத்து அகரம்கெட்டு முதல் நீண்டே (கீழ் என) வரும் எனவும், பெருந்திசையொடு பெருந்திசை புணர்வழி இடையே ஏ என் சாரியை வரும் எனவும் (வடக்கே தெற்கு) கொள்க. (இ. வி. 105 உரை)

திரட்டு என்ற புணர்ச்சி விகாரம் -

{Entry: B02__140}

இருசொற்கள் ஒருமொழியாக ஒரோவிடத்து நிலைமொழி ஈற் றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் ஒன்றாகத் திரண்டு விகற்ப மாகும்.

நிலைமொழி ஈற்றுயிர் நீங்க, வருமொழி முதலிலுள்ள அ ஆ என்பன இரண்டும் ஆ ஆகும். எ-டு : வே தா ங்கம், வே தா கமம்.

நிலைமொழி ஈற்றுயிர் (அ ஆ இ ஈ உ ஊ என்பன) கெடுதல் எல்லாவற்றுக்கும் கொள்க.

வருமொழி முதலிலுள்ள இ ஈ என்பன ஈ ஆகும்.
எ-டு : சுசீந்திரம், கிரீசன்

வருமொழி முதலிலுள்ள உ ஊ என்பன ஊ ஆகும்.
எ-டு : குரூபதேசம்

வருமொழி முதலிலுள்ள இ ஈ என்பன ஏ ஆகும்.
எ-டு : சுரேந்திரன்

வருமொழி முதலிலுள்ள உ ஊ என்பன ஓ ஆகும்.
எ-டு : கூபோதகம் (தொ. வி. 38 உரை)

திரிதல் விகாரம் -

{Entry: B02__141}

நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் ஓரெழுத்து மற்றோ ரெழுத்தாய் மாறுதல்.

எ-டு : பொ ன் + குடம் = பொ ற் குடம் - நிலைமொழி னகரம் றகரமாகத் திரிந்தது.

பொன் + தீ து = பொன் றீ து - வருமொழித் தகரம் றகரமாகத் திரிந்தது.

பொ ன் + தூ ண் = பொ ற்றூ ண் - நிலைமொழியீற்று னகரமும், வருமொழி முதல் தகரமும் றகரமாகத் திரிந்தன. (நன். 154)

திரிபிடன் மூன்று -

{Entry: B02__142}

மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் எனத் திரிபு மூவகைப்படும். மெய் பிறிதாதலாவது, ஓர் எழுத்து மற்றோரெழுத்தாய்த் திரிவது.

எ-டு : யான் + ஐ = என்னை; யான் என்பது என் எனத் திரிதல்
மெய் பிறிதாதல். மெய் - வடிவு.

பொன் + குடம் = பொற்குடம்; னகர ஒற்று றகர ஒற்றாய்த் திரிந்ததும் அது.

இத்திரிபு மெய்களிடையே பெரும்பான்மையும், உயிர் களிடையே சிறுபான்மையும் நிகழும்.

நாய் + கால் = நாய்க்கால் - மிகுதல் (ககரம் மிக்கது)

மரம் + வேர் = மரவேர் - குன்றல் (மகரம் கெட்டது)

(தொ. எ. 108, 109 நச்.)

நன்னூலார் இத்திரிபை விகாரம் எனப் பெயரிட்டு, மெய்பிறி தாதலைத் திரிதல் என்றும், மிகுதலைத் தோன்றல் என்றும், குன்றலைக் கெடுதல் என்னும் பெயரிட்டு, தோன்றல் - திரிதல் - கெடுதல் - என விகாரம் மூவகைப்படும் என்பர். (நன். 154)

இவை ஒரு புணர்ச்சிக்கண் ஒன்றே வருதல் வேண்டும் என்ற வரையறை யின்றி இரண்டும் மூன்றும் வருதலுமுண்டு.

எ-டு : மக + கை > மக + அத்து + கை > மக + த்து + கை = மகத்துக்கை

‘அத்து’த் தோன்றி, அதன் அகரம் குன்ற, வருமொழிக் ககரம் மிக்கது. (தொ. எ. 219 நச். உரை)

மகம் + கொண்டான் > மகம் + அத்து + ஆன் + கொண்டான் = மகத்தாற் கொண்டான்.

நிலைமொழியீற்று மகரஒற்றுக் குன்ற, அத்தும் ஆனும் மிக, ஆனின் னகரம் றகரமாக மெய் பிறிதாயிற்று. (331 நச்.)

திரிபு எனப்படாத புணர்ச்சிகள் -

{Entry: B02__143}

திரிபு எனப்படாத புணர்ச்சி இயல்புபுணர்ச்சியாம். இதன்கண், இயல்பாகப் புணர்தலொடு, தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈற்றின்முன் வருமொழி உயிர் வரின், நிலைமொழியீற்று ஒற்று இரட்டுதலும், நிலைமொழியீற்று உயிர்க்கும் வருமொழிமுதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் கோடலும், நிலை மொழியீற்று மெய்மீது வருமொழி முதல் உயிரேறி முடித லும் ஆகிய மூன்றும் அடங்கும்.

எ-டு : அவன் + கொடியன் = அவன் கொடியன் - இயல் பாகப் புணர்தல்.

பல் + அழகிது = பல்லழகிது - ஒற்று இரட்டல்.

விள + அரிது = விளவரிது - உடம்படுமெய் தோன்றல்.

அவள் + அழகியள் = அவளழகியள் - மெய்மேல் உயிரேறி முடிதல்.

“வருமொழி உயிர்க்கணமாயின் ஒற்று இரட்டியும், உடம்படு மெய் பெற்றும், உயிரேறியும் முடியும் கருவித்திரிபுகள் திரிபு எனப்படா; இவ்வியல்பின்கண்ண.” (தொ. எ. 144 நச். உரை)

திரிபுடையவற்றில் மரபுநிலை திரிந்தன -

{Entry: B02__144}

சார்பெழுத்து மூன்று என்று தொல். கூறியிருப்ப, சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் கூட்டிச் சார்பெழுத்தாக எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர் திணை என்னாது விரவுத்திணை எனச் சாதித்தலும், பாலைக்கு நிலம் பகுத்துக்கோடலும் போல்வன திரிபுடையவற்றில் மரபுநிலை திரிந்தன. (சூ. வி. பக். 8,9)

திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன -

{Entry: B02__145}

தொல்காப்பியத்தில் செய்யுளியலுள் கூறப்பட்ட ஒற்றள பெடையை, அளபெடை அதிகாரப்பட்டமை நோக்கி, நன்னூல் எழுத்தியலில் உயிரளபெடையைச் சாரக் கூறுதலும், தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈற்றுநிலை என்னும் நால் வகையிடங்களைத் தனிநிலையை முதல்நிலையில் அடக்கி மூவிடமாகக் கூறுதலும், தங்கை நங்கை எங்கை, தஞ்செவி நஞ்செவி எஞ்செவி, தந்தலை நந்தலை, எந்தலை - இவற்றில் மகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிகும் என்று தொல். கூறவும், நன்னூல் மகரமே இனமெல்லெழுத்தாகத் திரியும் என்று கூறுதலும், அகம் என்பதன்முன் கை வரின், அகரம் நீங்கலாக, ஏனைய எழுத்துக்கள் கெட்டு மெல்லெழுத்து மிகும் என்று தொல். கூறவும், இடையிலுள்ள ககர உயிர்மெய் கெட மகரம் திரிந்து முடியும் என்று நன்னூல் கூறுதலும், ஒன்று இரண்டு என்பனவற்றின் ஈறுகெட நின்ற ஒன் - இரண் - என்பனவற்றின் ஒற்று ரகரம் ஆகும் எனவும், இரர் என்பதன் ரகர உயிர்மெய் கெடும் எனவும் தொல். கூறவும், நன்னூல் ஒன்று என்பதன் னகரம் ரகரமாகத் திரிய, இரண்டு என்பதன் ணகர ஒற்றும் (ரகர உயிர்மெய்யிலுள்ள) அகர உயிரும் கெடும் என்றலும், நாகியாது என்புழிக் குற்றியலுகரம் கெட அவ்விடத்துக் குற்றியலிகரம் வரும் என்று தொல். கூறவும், நன்னூல் குற்றியலுகரமே குற்றியலிகரமாகத் திரியும் என்ற லும், நெடுமுதல் குறுகி நின்ற மொழிகளாகிய தன் தம் என் எம் நின் நும் என்ற நிலைமொழிகள் அகரச்சாரியை பெறும் என்று கூறிப் பின் ‘அது’ உருபு வரும்போது அவ்வுருபின் அகரம் கெடும் என்று தொல். கூறவும், நன்னூல் ‘குவ்வின் அவ்வரும்’ என அகரச்சாரியை நான்கனுருபிற்கே கோடலும், தொல்காப்பியம் கூறும் அக்குச் சாரியையை நன்னூல் அகரச் சாரியை என்றலும், தொல். கூறும் இக்குச் சாரியையும் வற்றுச்சாரியையும் நன்னூல் முறையே குகரச் சாரியை அற்றுச் சாரியை என்றலும், தொல். இன்சாரியை இற்றாகத் திரியும் என்று கூறவும், நன்னூலார் இற்று என்பதனைத் தனிச் சாரியையாகக் கோடலும், தொல். அ ஆ வ என்பன பலவின் பால் வினைமுற்று விகுதி என்னவும், நன்னூல் வகரத்தை அகரத்துக்கண் அடக்கிப் பலவின்பால் விகுதி அ ஆ என்ற இரண்டே என்றலும், தொல். அகம் புறம் என்று பகுத்த வற்றைப் பின்னூல்கள் அகம் - அகப்புறம் - புறம் - புறப்புறம் - என நான்காகப் பகுத்தலும், தொல். கூறும் வெட்சித்திணை உழிஞைத்திணைகளின் மறுதலை வினைகளை வீற்று வீற்றாதலும் வேற்றுப்பூச் சூடுதலும் ஆகிய வேறுபாடு பற்றிப் பின்னூல்கள் வேற்றுத் திணையாகக் கூறுதலும் போல்வன. வேறுபடினும், புணர்ச்சி முடிபும் சொல்முடிபும் பொருள் முடிபும் வேறுபடாமையின், மரபுநிலை திரியாவாயின. இவ்வுண்மை அறியாதார் புறப்பொருளைப் பன்னிரண்டு திணையாக் கூறும் பன்னிருபடலம் முதலியவற்றை வழீஇயின என்று இகழ்ந்து கூறுப. (சூ. வி. பக். 7, 8)

தீர்க்க சந்தி -

{Entry: B02__146}

நிலைமொழியீற்று அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் வரு மொழி முதல் அகர ஆகாரங்களில் ஒன்று வந்தால் (அவை யிரண்டும் கெட இடையே) ஓர் ஆகாரமும், நிலைமொழி யீற்று இகர ஈகாரங்களில் ஒன்றன்முன் வருமொழி முதல் இகர ஈகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஈகாரமும், நிலைமொழியீற்று உகர ஊகாரங் களில் ஒன்றன்முன் வருமொழி முதல் உகர ஊகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஊகார மும், தோன்றுதல் தீர்க்க சந்தியாம். (நிலைப்பத ஈறும் வருமொழி முதலும் ஆகிய உயிர்கள் கெடவே, தீர்க்க சந்தியாக நெட்டுயிர் தோன்றும்).

எ-டு : வேத + ஆகமம் = வேதாகமம் (குள + ஆம்பல் = குளாம்பல்); பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்; சிவ + ஆலயம் = சிவாலயம்; சரண + அரவிந்தம் = சரணார விந்தம்; சேநா + அதிபதி = சநாதிபதி; சுசி + இந்திரம் = சுசீந்திரம்; கிரி + ஈசன் = கிரீசன்; குரு + உதயம் = குரூதயம்; தரு + ஊனம் = தரூனம் (தொ. வி. 38 உரை)

அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் அகர ஆகாரங்கள் முதலாகிய சொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஆகாரமாகும்.

எ-டு : பத + அம்புயம் = ப தா ம்புயம் : சேநா + அதிபதி = சேநாதிபதி

இகர ஈகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் இகர ஈகாரங்கள் முதலாகிய சொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஈகாரமாகும்.

எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; கரி + இந்திரன் = கரீந்திரன்

உகர ஊகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் உகர ஊகாரங்கள் முதலாகிய சொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஊகாரமாகும்.

எ-டு : குரு + உபதேசம் = குரூபதேசம்; சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம். (மு. வீ. மொழி. 36 -38)

து + கொற்றா: வல்லெழுத்து மிகல் வேண்டாமை -

{Entry: B02__147}

து + கொற்றா = துக்கொற்றா என வலிமிகும் என்பர் சங்கர நமச்சிவாயர். ‘நொ து முன் மெலி மிகலுமாம்’ என்ற உம்மைக்கு, “இயல்பாதலே யன்றி மெலி மிகுதலுமாம்” என்று பொருள் செய்ய வேண்டுமே யன்றி, வலி மிகலுமாம் என்று பொருள் கொள்ளுதல் சாலாது. நொ கொற்றா, து கொற்றா என்பன இடையே வல்லெழுத்து மிகாது வரின் ‘வாழைபழம்’ போலாகும் ஆதலின் அது பொருந்தா தெனின், வாழைப்பழம் என்பது தொகைச்சொல் ஆதலின் ஒரு சொல் நீர்மைத்து. ஆயின் இத்தொடரோ பிளவுபட்டிசைப்பது ஆதலின் மிகாது வருதல் இதற்கு அமையும் என்பது. (எ. ஆ. பக். 113)

தூக்கிற் சுட்டு நீடல் ‘நீட்டும்வழி நீட்டல்’ ஆகாமை -

{Entry: B02__148}

அ + வயினான, இ + வயினான, உ + வயினான, அ + இருதிணை = ஆவயினான, ஈவயினான, ஊவயினான, ஆயிருதிணை என வரும்.

இவ்வாறு செய்யுட்கண் சுட்டு நீளுதல் இருமொழிப் புணர்ச்சிக்கண்ணேயே வரும். ஆதலின் இஃது அடிதொடை நோக்கி வரும் ‘நீட்டும்வழி நீட்டல்’ என்னும் விகாரம் ஆகாமை உணரப்படும்.

எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)

இதன்கண், ‘பொத்தறார்’ எனற்பாலது மேலடித் ‘தீத் தொழிலே’ என்ற எதுகை நோக்கி முதல் ஒகரம் நீண்டது. ஆதலின் இவ்விகாரம் புணர்மொழிக்கண் அன்றி ஒரு மொழிக் கண்ணேயே நிகழ்வது என்க. (இ. வி. எழுத். 80 உரை)

தூணி என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__149}

தூணி என்ற அளவுப்பெயர் நிலைமொழியாய்த் தன்னுடைய செம்பாதி அளவிற்றாகிய பதக்கு என்ற பெயரோடு உம்மைத் தொகைப்படப் புணருங்கால், பொதுவிதிப்படி (தொ. எ. 164 நச்.) ஏகாரச் சாரியை பெற்றுத் தூணியே பதக்கு என்று புணரும். இஃது அடையடுத்து இருதூணிப் பதக்கு என்றாற் போலவும் வரும்.

தூணிக் கொள், தூணிச் சாமை, தூணித் தோரை, தூணிப் பாளிதம்; இருதூணிக்கொள், தூணித்தூணி முதலியனவும் வருமொழி வன்கணம் மிக்குப் புணரும்.

சிறுபான்மை இக்குச்சாரியை பெற்றுத் தூணிக்குத் தூணி எனவும், இருதூணிக்குத் தூணி எனவும் இன்னோரன்னவாக வருதலும் கொள்க. தூணிப்பதக்கு - உம்மைத் தொகை. (தொ. எ. 239 நச். உரை)

தூணிக்குத் தூணி -

{Entry: B02__150}

‘தூணித் தூணி’ எனத் தூணி என்னும் அளவுப் பெயர் தனக்கு முன்னர்த் தான் வரின் வல்லெழுத்து மிகும்; தூணியும் தூணியும் என உம்மைத்தொகை. தூணிக்குத் தூணி- என இக்குச்சாரியை பெறுதலும் கொள்க என்றனர் உரையாசி ரியன்மார். அது ‘நாளுக்கு நாள்’ என்றாற் போலத் தொறு என்னும் பொருள்பட நின்ற இடைச்சொல் ஆதலின், சாரியை எனப்படாது என்க. (தொ. எ. 239 ச. பால.)

‘தெங்கு’ காயொடு புணர்தல் -

{Entry: B02__151}

தெங்கு நிலைமொழி; காய் வருமொழி. நிலைமொழியினது முதலுயிர் நீண்டு ஈற்றுயிர்மெய் கெட்டு வருமொழி புணர்ந்து தேங்காய் என முடியும். இடையே அம்முச்சாரியை பெற்றுத் தெங்கங்காய் எனப் பொதுவிதியால் முடிதலுமுண்டு. (நன். 187)

‘தெரிந்து வேறு இசைத்தல்’ -

{Entry: B02__152}

இச்சொற்றொடர் தொல். எழுத். 53 ஆம் நூற்பாவில் வந்துள் ளது. எழுத்துக்களைச் சொற்கு உறுப்பாக்கி ஒலிக்காமல் தனியே எடுத்து அவ்வெழுத்துக்களின் ஓசை புலப்பட ஒலித்தல். இங்ஙனம் தனித்தெடுத்து ஒலித்தாலும் அவ்வெழுத் துக்களின் இயல்பு மாறாது.

எ-டு : ஆல் என்ற சொல்லிலுள்ள ஆகாரமும், தனித்து வரும். ஆ என்ற எழுத்தும் ஓசையும் மாத்திரையும் திரியா என்பது. (தொ. எ. 53 இள. உரை)

ஒற்றும் குற்றுகரமும் பொருள்தரும் நிலையை ஆராய்ந்து, எழுத்ததிகாரத்துள் அவற்றை எழுத்துக்களாக எண்ணினும், மாத்திரை குறைந்து நிற்கும் நிலையை நோக்கி எழுத்தெண் ணப்படா எனச் செய்யுளியலில் வேறாகக் கூறுதல். (53 நச். உரை)

தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள் -

{Entry: B02__153}

நட முதலாக அஃகு ஈறாகக் கிடந்த எல்லா வினைச்சொற் களும், உயிரும் ஒற்றும் குற்றுகரமும் ஆகிய இருபத்து மூன்று ஈற்றினவாய்ப் படுத்தல் ஓசையான் அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினை மாத்திரமே உணர்த்தி நிற்கும் தன்மை யுடையன. இவை இயற்றும் வினைமுதலான் நிகழ்த்தப்படும் தெரிநிலைவினைமுற்றுப் பகுபதத்தினுடைய பகுதிகள். குற்றுகரத்தை வேறு பிரித்ததனால், போக்கு - பாய்ச்சு - ஊட்டு - நடத்து - எழுப்பு - தீற்று - இத்தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும் கொள்ளப்படும். (இ. வி. எழுத். 43 உரை)

தெவ் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__154}

தெவ் என்ற உரிச்சொல் படுத்தல் ஓசையான் பெயராயவழி இன்சாரியை பெற்று உருபேற்கும்.

எ-டு : தெவ்வினை, தெவ்வினொடு (தொ. எ. 184 நச்.)

தெவ் என்பது அல்வழி, வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ஒற்று இரட்டுதலும் பெற்றுப் புணரும். வருமொழி மகரம் வரின், ஈற்று வகரம் மகரம் ஆதலும் உண்டு.

எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வுக்கடுமை; தெவ்வு நீண்டது, தெவ்வுநீட்சி; தெவ்வு வலிது, தெவ்வுவலிமை; தெவ் யாது, தெவ்யாப்பு; தெவ் வரிது, தெவ்வருமை; (வகரம் இரட்டுதல்); தெவ்வு மன்னர், தெம் மன்னர் (தொ. எ. 382, 483 நச். உரை)

தெவ் என்பது தொழிற்பெயர் போல உகரச்சாரியை பெற்று அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வருமொழி வன்கணம் மென்கணம் இடைக்கணம் என்ற முக்கணத்தொடும் புணரும். வருமொழி முதலில் மகரம் வருமிடத்தே தெவ் என்பதன் வகரம் உகரம் பெறாமல் மகரமாகத் திரிந்து முடிதலுமுண்டு.

எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வு நீண்டது, தெவ்வு வலிது; - அல்வழி

தெவ்வுக்கடுமை, தெவ்வுநீட்சி, தெவ்வுவலிமை - வேற்றுமை

தெவ் + மன்னர் = தெம்மன்னர் (நன். 236)

வருமொழி முதலில் யகரம் வரின் இயல்பாகப் புணர்தலும் இகரம் பெறுதலும் ஆம்.

எ-டு : தெவ் + யாது = தெவ்யாது, தெவ்வியாது - அல்வழி

தெவ் + யாப்பு = தெவ்யாப்பு, தெவ்வியாப்பு - வேற்றுமை (நன். 206)

‘தெற்றன்றற்று’; சொற்பொருள் -

{Entry: B02__155}

தெளியப்பட்டது என்னும் பொருளது இச்சொல். ‘ஒற்று மெய் கெடுதல் தெற்றன்றற்று’ - ஒற்றுத் தன்வடிவம் கெடுதல் தெளியப்பட்டது என்றவாறு. (தொ. எ. 133 நச்.)

தேசிகம் -

{Entry: B02__156}

தேசிகம் என்பது திசைச்சொல்லாம்.

எ-டு : தாயைக் குறிக்கத் ‘தள்ளை’ என வழங்கும் சொல்; தந்தையைக் குறிக்க ‘அச்சன்’ என வழங்கும் சொல். (மு. வீ. மொழி. 33)

தேன் என்ற நிலைமொழி புணருமாறு -

{Entry: B02__157}

தேன் என்பது நிலைமொழியாக, வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாக வரின், திரிபு உறழ்ச்சி பெறுதலும், னகரம் கெட்டு வல்லெழுத்து மிகுதலும் ஆகிய இருநிலையும் உடைத்து.

எ-டு : தேன் + குடம் = தேன்குடம் (இயல்பு), தேற்குடம் (திரிபு); தேன்குடம் - தேற்குடம் - என விகற்பித்து வருதல் உறழ்ச்சி; தேக்குடம்: (ஈறுகெட, வலி மிகுதல்)

சிறுபான்மை னகரம்கெட்டு வருமொழி வல்லெழுத்துக்கு இனமான மெல்லெழுத்து மிகுதலும் உடைத்து.

எ-டு : தேன் + குடம் = தேங்குடம்

வருமொழிமுதல் மெல்லினம் வரின் நிலைமொழியாகிய தேன் என்பதன் னகரஒற்றுக் கெடுதலும் கெடாமையும் உடைத்து.

எ-டு : தேன் + ஞெரி = தேஞெரி, தேன்ஞெரி; தேன் + மொழி = தேமொழி, தேன்மொழி.

சிறுபான்மை னகரம் கெட்டு வருமொழி மெல்லெழுத்து மிகுதலும் மிகாமையும் உடைத்து.

எ-டு : தேன் + ஞெரி = தேஞ்ஞெரி, தேஞெரி

தேன் என்பது நிலைமொழியாக இறால் வருமொழி ஆகிய வழித் தேனிறால், தேத்திறால் என இருவகையாகவும் புணரும்.

தேன் என்பது அடை என்ற வருமொழியொடு புணரும்வழித் தேனடை என இயல்பாகவும், தேத்தடை என னகரம் கெட்டுத் தகரம் இரட்டியும் புணரும்.

தேன் + ஈ = தேத்தீ - எனத் திரிபுற்றுப் புணரும்;

தேனீ - என இயல்பாகவும் புணரும். (தொ. எ. 340 - 344 நச். உரை)

தேன் நிலைமொழியாக நிற்ப, வருமொழி முதல் மெய்வரின், இயல்பாகப் புணரும்.

எ-டு : தேன் கடிது, தேன் ஞான்றது, தேன் வலிது; தேன் கடுமை, தேன்ஞாற்சி, தேன்வலிமை

வருமொழிமுதல் மென்கணமாயின் இயல்பாதலேயன்றி நிலை மொழி யீற்று னகரம் கெடுதலுமுண்டு.

எ-டு : தேன்மொழி, தேமொழி; தேன்மலர், தேமலர்

வன்கணம் வருமிடத்தே, இயல்பாதலேயன்றி, நிலைமொழி யீற்று னகரம் கெட வல்லினமாவது அதற்கு இனமான மெல் லினமாவது மிகுதலுமுண்டு.

எ-டு : தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு; தேன்குடம், தேக்குடம், தேங்குடம்.

அல்வழியும் வேற்றுமையும் என இருவழியும் இவ்வாறு காண்க. (தேன், பூவின் தேனையும் மணத்தையும் குறிக்கும்) (நன். 214)

தொகுத்தல் விகாரம் -

{Entry: B02__158}

செய்யுள்விகாரம் ஆறனுள் இதுவும் ஒன்று. உருபு முதலிய இடைச்சொல் அன்றி எழுத்து மறைதல் தொகுத்தல் விகார மாம். இஃது ஒருமொழிக்கண் நிகழாது; இருமொழிக் கண்ணேயே நிகழும். குறை விகாரம் பகுபதமாகிய ஒரு மொழிக்கண்ணது. எ-டு : ‘மழவரோட்டிய’

‘மழவரை ஓட்டிய’ என உயர்திiணப் பெயருக்கு ஒழியாது வர வேண்டிய ஐகாரஉருபு செய்யுட்கண் தொக்கமை தொகுத்தல் விகாரமாம்.

தொட்ட + அனைத்து என்புழி, நிலைமொழியீற்று அகரம் விகாரத்தால் தொக்கு, தொட்ட் + அனைத்து = தொட் டனைத்து என முடிந்தது. இதுவும் இவ்விகாரமாம். (நன். 155 உரை)

தொகை என்பதன் ஒன்பது வகை விரி -

{Entry: B02__159}

தொகையுள் தொகை - எழுத்து; தொகையுள் வகை - எழுத்து முப்பது; தொகையுள் விரி - எழுத்து முப்பத்துமூன்று; வகையுள் தொகை - முப்பது; வகையுள் வகை - முப்பத்து மூன்று; வகையுள் விரி - அளபெடை தலைப்பெய்ய, நாற்பது; விரியுள் தொகை - முப்பத்து மூன்று; விரியுள் வகை - நாற்பது; விரியுள் விரி - உயிர்மெய் தலைப்பெய்ய (216 +40 =) 256. (தொ. எ. 1 இள. உரை)

தொகைப்பதம் -

{Entry: B02__160}

தொகைப்பதம், இரண்டும் பலவும் ஆகிய பகாப்பதமும் பகுபதமும், நிலைமொழி வருமொழியாய்த் தொடர்ந்து, இரண்டு முதலிய பொருள் தோன்ற நிற்கும். அவை யானைக் கோடு, கொல்யானை, கருங்குதிரை என்றல் தொடக்கத்தன. (நன். 131 மயிலை.)

தொகைமரபு -

{Entry: B02__161}

தொகைமரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் ஐந்தாம் இயலாகும். இது முப்பது நூற்பாக்களை உடையது.

உயிரீறும் புள்ளியீறும் முறையே உயிர்மயங்கியலிலும் புள்ளி மயங்கியலிலும் ஈறுகள்தோறும் விரித்து முடிக்கப்படுவன, இவ்வியலில் ஒரோஒரு சூத்திரத்தான் தொகுத்து முடிபு கூறப்பட்டமையின், இவ்வியல் தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. (நச். உரை)

தொகைமரபு குறிப்பிடும் செய்திகள் -

{Entry: B02__162}

க ச த ப -க்குரிய மெல்லெழுத்துக்கள் முறையே ங ஞ ந ம - என்பன.

இயல்புகணங்களாகிய ஞ ந ம, ய வ, உயிர் இவற்றை முதலாக உடைய சொற்கள், 24 ஈறுகளின்முன் வருமொழியாக வரின் இயல்பாகப் புணரும். அதன்கண் சில வேறுபாடுகள் உள.

ணகர னகரங்கள் அல்வழிக்கண் இயல்புமுடிபின; வேற்றுமைக் கண்ணும் இயல்புகணம் வரின் இயல்பு முடிபின.

ல ன - முன் வரும் த ந-க்கள் முறையே ற ன - க்கள் ஆம்; ண ள - முன் வரும் த ந - க்கள் முறையே ட ண - க்கள் ஆம்.

ஏவலொருமை வினைகள் இயல்பாகவும் உறழ்ந்தும் முடியும்.

ஒள, ஞ் ந் ம் வ் என்ற ஈற்று ஏவல்வினைகள் உகரம் பெற்று உறழ்ந்து முடியும்.

உயர்திணைப் பெயர்களும் விரவுப்பெயர்களும் இயல்பாகப் புணரும்.

இகர ஐகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் மிக்கு முடியும்.

மூன்றாம்வேற்றுமையது எழுவாய்முன் வரும் செயப்பாட்டு வினை இயல்பாகவும் உறழ்ந்தும் புணரும்.

ஐகார வேற்றுமையின் திரிபுகள் பல வகையாக உள.

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் சொற்கள் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவு மாக இரு திறப்படுவன.

தனிநெடில், குறிலிணை, குறில்நெடில் இவற்றை அடுத்து வரும் ஒற்று (வருமொழி முதலில் நகரம் வந்துவிடத்து) இயல் பாகாது கெடும். தனிக்குறிலை அடுத்து ஒற்று உயிர்வரின் இரட்டும்.

நெடுமுதல் குறுகும் மொழிகள் ஆறனுருபொடும் நான்கனுரு பொடும் புணரும்வழி இயைந்த திரிபுகள் சில பெறும்.

உகரத்தொடு புணரும் ஞ ண ந ம ல வ ள ன என்னும் ஒற்றிறுதிச் சொற்கள், யகரமும் உயிரும் வருமொழி முதலில் வரின் உகரம் பெறாது இயல்பாகப் புணரும்.

எண் நிறை அளவுப்பெயர்கள் தமக்கேற்ற திரிபேற்றுப் புணரும்.

யாவர், யாது என்றவற்றின் சொல்லமைப்பு, புறனடை - என்றின்னோரன்ன செய்திகளும் தொகைமரபில் கூறப்பட் டுள்ளன. (தொ. எ 143 - 172 நச்.)

தொகை வகை விரி யாப்பு -

{Entry: B02__163}

நால்வகை யாப்பினுள் ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்று போந்ததன்றித் ‘தொகை வகை விரி’ எனப் போந்ததில்லையே எனில், நடுவு நின்ற ‘வகை’ பின்னின்ற விரியை நோக்கின் தொகையாகவும், முன்னின்ற தொகையை நோக்கின் விரியாக வும் அடங்குதலின் இது ‘தொகை வகை விரி யாப்பு’ என்பதன் பாற்படும் என்க. எனவே, தொகை விரி என இரண்டாய் வரினும், மரத்தினது பராரையினின்றும் கவடு - கோடு - கொம்பு - வளார் - பலவாய் ஒன்றோடொன்று தொடர்பு பட்டு எழுந்து நிற்றல் போல், தொகையினின்றும் ஒன்றோ டொன்று தொடர்புபடப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும், தொகை விரி யாப்பேயாம் என்க. (நன். சிறப்புப். சங்கர.)

தொடக்கம் குறுகும் மூவிடப் பெயர்கள் புணருமாறு -

{Entry: B02__164}

தொடக்கம் குறுகும் மூவிடப் பெயர்கள் யான் யாம் நாம் நீ தான் தாம் என்பன. இவை முதலெழுத்தாகிய தொடக்கம் குறுகி என் எம் நம் நின் தன் தம் என நின்று உருபேற்கும்.

எ-டு : என்னை, எம்மை, நம்மை, நின்னை, தன்னை, தம்மை; என்னால்.....

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண், என்கை, எங்கை, நங்கை, நின்கை, தன்கை, தங்கை என வன்கணம் வரின் னகரம் இயல்பாகவும், மகரம் வரும் வல்லின மெய்க்கு இனமெல்-லெழுத்தாய்த் திரிந்தும் புணரும்.

மென்கணத்துத் தன்ஞாண், தன்னாண், தன்மாட்சி; தஞ்ஞாண், தந்நாண், தம்மாட்சி முதலாகவும்,

இடைக்கணத்துத் தன்யாப்பு, தம்யாப்பு முதலாகவும்,

உயிர்க்கணத்துத் தன்னருமை, தம்மருமை முதலாகவும், மகரம் வருமொழி ஞகரமும் நகரமும் வரின் (அவ்வந்த மெல்லொற் றாகத்) திரிந்தும், உயிர்வரின் இரட்டியும் புணரும்.

ஆறாம் வேற்றுமை ஏற்கும்போதும், நான்காம் வேற்றுமை ஏற்கும் போதும், அகரச் சாரியை பெற்று, என எம நம நின தன தம என்றாகி, வல்லொற்று மிக்கு நான்கனுருபோடு எனக்கு எமக்கு முதலாகவும், ஆறுனுருபுகளுள் அது என்பதனை ஏற்குமிடத்து, அவ்வுருபின் அகரம் கெட, என + அது > என + து = எனது என்பது முதலாகவும் இத்தொடக்கம் குறுகும் பெயர்கள் வருமொழியொடு புணரும். (தொ. எ. 115, 161, 192, 188, 320, 352 நச்.)

தொடர்மொழி -

{Entry: B02__165}

ஒருபொருளின்பின் ஒருபொருள் செல்லுதலைத் ‘தொடர்ச்சி யாகச் செல்கிறது’ என்று கூறும் மரபு இன்றும் இல்லை. இரண்டற்கு மேற்பட்ட பல பொருள்களே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்கின்றன என்று கூறுதல் மரபு. இரண்டு தொடரன்று. தொல்காப்பியனார் இரண்டெழுத்து மொழியினைத் தொடர் என்னார்; ‘பல’ என்பதன் இறுதியைத் ‘தொடர் அல் இறுதி’ (எ. 214 நச்.) என்பார். வடமொழியில் ஒருமை இருமை பன்மை என்பன வசனத்திற்கே யன்றி, மொழியின் எழுத்துக்களுக்கு அன்று. ‘ஒன்று இரண்டு தொடர்’ என்பது தமிழ்வழக்கே. இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்களாலாகிய மொழிகளையே ‘தொடர் மொழி’ என்றல் தொல். கருத்து. இங்ஙனம் ஓரெழுத்தொரு மொழி ஈரெழுத்தொருமொழி - தொடர்மொழி - என்று ஆசிரியர் கொண்டமை, குற்றியலுகரத்தைப் பாகுபடுக்க வேண்டி, ஈரெழுத்தொருமொழி - உயிர்த்தொடர்மொழி - இடைத் தொடர் மொழி - ஆய்தத் தொடர்மொழி - வன்தொடர் மொழி - மென்தொடர் மொழி என்ற முறை கொள்வதற் காகவேயாம்.

குற்றியலுகரம் குற்றெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றாது எனவும், நெட்டெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றும் எனவும், நெட் டெழுத்தை முதலாகக் கொண்ட ஈரெழுத்தைச் சார்ந்து ஈற்றில் தோன்றும் எனவும் கூறுவதற்காகவே மொழியை மூவகையாகப் பகுத்தாரே அன்றி, வடமொழியைப் பின்பற்றி அவ்வாறு பகுத்தாரல்லர், வடமொழியில் சொல் அவ்வாறு பகுக்கப்படாமையின். (எ. ஆ. பக். - 48, 49)

தொடர்மொழிஈற்றுக் குற்றியலுகரம் ஒன்றியற் கிழமையாதல் -

{Entry: B02__166}

தொழிற்பண்பும் குணப்பண்பும் ஒருபொருளினின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையன ஆதலின், அவை ஆறாம் வேற் றுமைத் தற்கிழமைப் பொருளில் ஒன்றியற்கிழமை என்னும் பகுப்பின்பாற்பட்டன. தொடர்மொழியீற்றுக் குற்றியலுகரம், அச்சொல்லின் வேறுஅல்லதாய் அச் சொல்லொடு பிரிக்க முடியாத தொடர்புடையது ஆதலின் அஃது ஒன்றியற் கிழமையதாயிற்று.

எ-டு : காட்டு: இதன்கண் தொடர்மொழியீற்றுக் குற்றிய லுகரம் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளமை காண்க. (தொ. எ. 36 நச். உரை)

‘தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல’ ஆதல் -

{Entry: B02__167}

குறிலிணை - குறில்நெடில் - அடுத்த ஒற்றுக்கள் எல்லாம் நெடிலை யடுத்த ஒற்றுப்போல் (வருமொழி முதலில் நகரம் வரின்) கெட்டு முடியும்; இங்ஙனம் கெட்டு முடியும் ஒற்றுக்கள் ண், ன், ம், ல், ள் - என்ற ஐந்தாம்.

எ-டு : கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் = தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; வேல் + நன்று = வேனன்று; தோள் + நன்று = தோணன்று -

என ஈறுகெட, வருமொழி நகரம், மகர ஈறு நீங்கலாக, ஏனைய இடங்களில் திரிந்தது.

பசுமண் + நன்று = பசுமணன்று; முகமன் + நன்று = முகமனன்று; உரும் + நன்று = உருநன்று; குரல் + நன்று = குரனன்று; அதள் + நன்று = அதணன்று;

எனக் குறிலிணை அடுத்த ஐந்து ஈறுகளும், வருமொழி நகரம் மகர ஈறு நீங்கலாக ஏனைய நாலிடத்தும் திரிய, கெட்டன.

மறான் + நல்லன் = மறானல்லன்; கலாம் + நன்று = கலாநன்று; குரால் + நன்று = குரானன்று; எதோள் + நன்று = எதோணன்று;

எனக் குறில்நெடிலை அடுத்த இவ்வொற்றுக்கள் கெட, வருமொழி நகரம், மகர ஈறு நீங்கலாக ஏனைய இடங்களில் திரிந்தது.

தகரமும் வருமொழி முதலில் வரின், லகர ளகர ஈறுகள் முன் திரியக் கூடியதே.

எ-டு : குரல் + தீது = குரறீது; அதள் + தீது = அதடீது (தொ. எ. 50 இள. உரை)

‘தொடர்மொழி....... இயல’ - மாத்திரைகள் தம்முள் தொடர்ந்து நடக்கின்ற சொல்லெல்லாம் நெட்டெழுத்து மாத்திரைமிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம். உயிரும் உயிர் மெய்யும் அளபிறந்து இசைக்குங்கால், குறிலோ நெடிலோ இசைப்பது என்ற ஐயம் நீங்க, அளபெடைக் குற்றெழுத்து நெட்டெழுத்தொடு சேர்ந்து ஒன்றாகி மாத்திரை நீண்டிசைக் கும் என்றவாறு. (நச். உரை)

‘தொடரல் இறுதி’ புணருமாறு -

{Entry: B02__168}

மூன்றெழுத்தும் அதற்கு மேற்பட்டனவும் கொண்ட சொல் தொடர்மொழியாம். அஃது ஒன்பது எழுத்தளவும் நீளக்கூடும். பரணி : மூன்றெழுத்து; உத்தரட்டாதியான் : ஒன்பதெழுத்து. தொடர் அல்லாத இறுதி- ஈரெழுத்தையுடைய சொற்க ளாகிய பல, சில என்பன.

தொடரல்லாத சொல் ஓரெழுத்தொரு மொழியும் ஈரெழுத் தொரு மொழியும் ஆம். அகர ஈற்றுள் ஓரெழுத்தொரு மொழி அகரச்சுட்டே ஆதலின், ‘தொடர் அல் இறுதி’ யாவன ஓரெழுத்தொரு மொழியை விலக்கி ஈரெழுத்தொரு மொழியையே உணர்த்தின.

வருமாறு : பல + பல = பலபல, பலப்பல, பற்பல, பல்பல;

சில + சில = சிலசில, சிலச்சில, சிற்சில, சில்சில (தொ. எ. 214 நச். உரை) (நன். 170)

‘பல்’ என்னும் வேர்ச்சொல்லொடு பன்மையைக் குறிக்கும் அகரவுயிர் கூடப் பல என்றாகும். பிறசொல்லொடு கூடிய வழி அகரம் கெடப் ‘பல்’ என நின்றே பல்யானை, பல்பொருள் என வரும்.

லகரம் றகர ஒற்றாதல் - பல் + பல = பற்பல

சில் + சில = சிற்சில

லகர உயிர்மெய் றகர ஒற்றாகத் திரியும் என்பதே நூற்பாவின் பொருள். அகரம் கெட்டமைக்கு விதியின்மையின் அதனை வாராததனால் வந்தது முடித்தல் என்ற உத்திவகையான் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்டனர். லகரத்தை ஒற்றாகக் கொண்டமையான் அன்னோர் இங்ஙனம் குறிக்க வேண்டுவதாயிற்று. (எ. ஆ. பக். 137)

தொல்காப்பியனார் ‘பல’ என்பது இருமொழிப் புணர்ச்சியில் ‘பல்’ என்றாதலைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்:

‘பல்வேறு செய்தியின்’ (சொ. 463 சேனா.)

‘பன்முறை யானும்’ (சொ. 396 சேனா.)

‘பல்வேறு கவர்பொருள்’ (பொ. 114 நச்.)

‘பல்வேறு மருங்கினும்’ (பொ. 114 நச்.)

பல்லாற்றானும் (பொ. 168 நச்.)

‘பல்குறிப் பினவே’ (பொ. 286 நச்.)

‘சில் வகை’, ‘பல்வகையானும்’ (பொ. 655 நச்.)

இத்தொல்காப்பிய நூற்பாத் தொடர்களால், பல சில என்பன லகரமாகிய உயிர்மெய்யின் அகரம் கெட லகர ஒற்றாகிப் புணர்தல் பெற்றாம்.

தொடரில் பொருள் சிறக்குமிடம் -

{Entry: B02__169}

சொற்கள் நிலைமொழி வருமொழி செய்தால் முன்மொழி யிலே பொருள் நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இரு மொழியினும் பொருள் நிற்பனவும், இரு மொழியும் ஒழிய வேறொரு மொழியிலே பொருள் நிற்பன வும் என நான்கு வகைப்படும். (பின், முன் என்பன இடம் பற்றி வந்தன.) அவை வருமாறு:

அரைக்கழஞ்சு என்புழி, முன்மொழியிற் பொருள் நின்றது.

வேங்கைப்பூ என்புழி, பின்மொழியிற் பொருள் நின்றது.

தூணிப்பதக்கு என்புழி, இருமொழியினும் பொருள் நின்றது.

பொற்றொடி (வந்தாள்) என்புழி, இருமொழியினும் பொருள் இன்றி ‘இவற்றை யுடையாள்’ என்னும் வேறொருமொழி யிலே பொருள் நின்றது. (நேமி. எழுத். 12 உரை)

தொடரெழுத் தொருமொழி வரையறை -

{Entry: B02__170}

ஒருசொல் பகாப்பதமாயின் ஏழெழுத்தின்காறும், பகுபத மாயின் ஒன்பது எழுத்தின்காறும் அமைதல் கூடும்.

எ-டு : அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்தரட்டாதி - பகாப்பதம் ஈரெழுத்து முதல் ஏழ் எழுத்தின்காறும் உயர்ந்தது.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத் தான், உத்தராடத்தான், உத்தரட்டாதியான் - பகுபதம் ஈரெழுத்து முதல் ஒன்பது எழுத்தின்காறும் உயர்ந்தது.

நடத்துவிப்பிக்கின்றான், எழுந்திருக்கின்றனன் - என்பன போலப் பகுதி முதலிய உறுப்புக்கள் வேறுபட்டு வருவன வற்றிற்கு இவ்வரையறை இல்லை. (நன். 130)

தொண்ணூறு, தொள்ளாயிரம் -

{Entry: B02__171}

‘ஒன்பது வருமொழியொடு புணருமாறு’ காண்க.

தொல்காப்பிய எழுத்ததிகாரச் செய்தி -

{Entry: B02__172}

எழுத்துக்களின் பெயர் அளவு மயக்கம் - முதலியவற்றை முதலாவதாகிய நூல்மரபில் கூறி, அதன்பின் மொழிகளின் வகையையும் மொழிகளின் முதலிலும் இறுதியிலும் நிற்கும் எழுத்துக்களையும் மொழிமரபில் கூறி, அதன்பின் எழுத்துக் களின் பிறப்பிடத்தைப் பிறப்பியலில் கூறி, அதன்பின் மொழிகள் புணரும் வகையையும் புணருமிடத்து நிகழும் திரிபுகளையும் புணரியலில் கூறி, அதன்பின் உயிரீறு புள்ளியீறு ஆகிய மொழிகளுள் புணர்ச்சிக்கண் ஒரே விதி பெறுவனவாகிய பல ஈறுகளைத் தொகுத்து அவை புணரு மாற்றைத் தொகைமரபில் கூறி, அடுத்து வேற்றுமையுருபுக ளொடு புணருமிடத்துச் சாரியை பெறுவன ஆகிய உயிரீறு புள்ளியீறுகளை உருபியலில் கூறி, அடுத்து உயிரீற்று மொழிக ளொடு மொழிகள் புணரும் புணர்ச்சியை உயிர் மயங்கியலுள் ளும், புள்ளியீற்று மொழிகளொடு மொழிகள் புணரும் புணர்ச்சியைப் புள்ளி மயங்கியலுள்ளும், குற்றியலுகர ஈற்று மொழிகளொடு மொழிகள் புணரும் புணர்ச்சியைக் குற்றிய லுகரப்புணரியலுள்ளும் கூறி, இவ்வாறு எழுத்ததிகாரம் 483 நூற்பாக்களால் அமைந்துள்ளது. (எ. ஆ. பக். 1)

தொல்காப்பியம் குறிப்பிடும் சாரியைகள் -

{Entry: B02__173}

இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன் - என்பன வும், தம் நம் நும் உம் ஞான்று கெழு ஏ ஐ - என்பனவும் தொல்காப்பியத்துள் குறிக்கப்படும் சாரியைகள். அவை முறையே நச்சினார்க்கினியத்தில் நிகழும் நூற்பா எண்கள் வருமாறு: (எழுத்ததிகாரத்துள் காண்க).

இன் - 120; வற்று - 122; அத்து - 125; அம் - 129;

ஒன் - 180; ஆன் - 199; அக்கு - 128; இக்கு - 126;

அன் - 176; தம் - 191; நம் - 190; நும் - 191;

உம் - 481; ஞான்று - 226, 331 உரை; ஏ - 164; ஐ - 80

தொல்காப்பியமும் ஐந்திரமும் -

{Entry: B02__174}

அகத்தியனார் தென்திசைக்குப் போந்த பின்னர்த் தென் திசையினும் ஆரியம் வழங்கத் தலைப்பட்டது. தமிழேயன்றி வடமொழியும் தொல்காப்பியனார் நிறைந்தார் என்பது விளங்க ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப்பட்டார். அகத்தியனார்க்கு ஐந்திர இலக்கணமே உடன்பாடு. தொல் காப்பியனார்க்கு வடநூல் அறிவுறுத்திய ஆசிரியரும் அகத்தியனாரே. தொல்காப்பியனார் அகத்தியம் நிறைந்தமை எல்லாரானும் அறியப்படுதலின் வடமொழியினும் வல்லுந ராயினார் என்பது விளக்கிய ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன்’ எனப்பட்டார்.

தொல்காப்பியனார் ஐந்திரம் நோக்கி நூல் செய்தாரெனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கண் படும் செய்கைகளும், குறியீடு களும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல் லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற் பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடு களும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியில் பெறப்படாமையானும், தாமே படைத்துச் செய்தாரெனின் ‘முந்துநூல் கண்டு’ என்பத னொடு முரணுதலானும். எல்லாரும் தொல்காப்பியனாரை அகத்தியனாருடைய முதல்மாணாக்கன் என்றே சிறப்பித்த லானும் ஐந்திரம் தொல்காப்பியனார் செய்த நூலுக்கு முதல் நூல் ஆகாது. (சிவஞா. பா. வி. பக். 6, 12)

தொல்காப்பியன் என்ற சொல்லமைப்பு -

{Entry: B02__175}

‘தொல்காப்பியம் உடையான்’ என்னும் பொருட்கண் அம்முக் கெட்டு அன்விகுதி புணர்ந்து தொல்காப்பியன் என நின்று, பின்னர்த் ‘தொல்காப்பியனால் செய்யப்பட்ட நூல்’ என்னும் பொருட்கண் அன் விகுதி கெட்டு அம்விகுதி புணர்ந்து தொல்காப்பியம் என முடிந்தது. (சிவஞா. பா. வி. பக். 16)

இதன் பொருந்தாமை சண்முகனாரால் விளக்கப்பட்டது. (பா.வி.ப. 233, 234)

தொல்காப்பியன், கபிலன் என்னும் பெயரிறுதி இவனால் செய்யப்பட்டது என்னும் பொருள் தோன்ற அம் என்பதோர் இடைச்சொல் வந்து அன் கெடத் தொல்காப்பியம் கபிலம் என நின்றது. (தொ. சொ. 114 சேனா.)

தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி என ஈறுதிரிதலும் கொள்க. (119 நச். உரை)

வினைமுதல் உரைக்கும் கிளவி - வினைசெய்தான்பெயர் சொல்ல, அவன் செய்பொருள் அறிய நிற்றல். அது தொல் காப்பியம், கபிலம் என்பன. (சொ. 110 இள. உரை)

வினைமுதல் உரைக்கும் கிளவி - தொல்காப்பியம், கபிலம்

(சொ. 116 கல். உரை)

தொல்காப்பியம், கபிலம், இவ்வாடை சேணிகன், கோலிகன்-

(115 பழைய உரை)

“அம்விகுதி, எச்சம் - தேட்டம் - நாட்டம் - முதலியவற்றுள் எஞ்சு - தேடு - நாடு - முதலாகிய வினைமுதல்நிலையொடு கூடியே வினைமுதற்பொருள் முதலாய அறுவகையுள் ஒருபொருளை உணர்த்தலன்றிப் பெயர்முதனிலையொடு கூடி விகுதிப்பொருள் உணர்த்தல் யாண்டும் இன்மையானும்,

பெயர்முதனிலையொடு கூடின் பகுதிப்பொருளையே உணர்த்தல் குன்று சங்கு முதலாய பெயரொடு கூடிக் குன்றம் எனவும் சங்கம் எனவும் நின்றுழி, விகுதிப்பொருள்களுள் ஒன்றும் உணர்த்தாமையின் அறியப்படும் ஆகலானும்,

அம்விகுதி பிறபெயரொடு கூடி விகுதிப்பொருள் உணர்த்தா விடினும் அகத்தியன் தொல்காப்பியன் முதலாய உயர்திணைப் பெயரொடு கூடியவழி உணர்த்துமெனின், தேடப்படுவன எல்லாம் தேட்டம் ஆயினாற்போல, அகத்தியன் முதலாயவ ரால் செய்யப்படுவன எல்லாம் அகத்தியம் எனவும் தொல் காப்பியம் எனவும் கபிலம் எனவும் பெயர்பெறல் வேண்டும்; அவ்வாறு அவர் செய்த தவம் முதலியவற்றுக்கெல்லாம் பெயராகாமல் அவர் செய்த நூல்களையே உணர்த்தலான் அதுவும் பொருந்தாமையானும்,

செய் என்பது எல்லாத் தொழிற்கும் பொதுவாதலன்றி நூல் செய்தற்கு மாத்திரம் பெயராகாமையானும் என்பது.” (பா. வி. பக். 233, 234)

தொல்லை இயற்கை நிலையல் -

{Entry: B02__176}

பழைய அரைமாத்திரையே பெறுதல் - இள.

முன்பு கூறிய கால்மாத்திரையே பெறுதல் - நச்.

குற்றியலுகரம், அல்வழி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் முற்றியலுகரமாக நிறைந்து நிற்றலைத் தவிர்ந்து பழைய அரைமாத் திரையே பெறுதல், வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றியலுகர ஈற்றின்முன் வருமொழி வன்கணம் வருமிடத்து உள்ளது.

எ-டு : நா கு கடிது - கு : ஒரு மாத்திரை; கொக் கு க் கடிது = கு: அரைமாத்திரை (தொ. எ. 410 இள. உரை)

அல்வழியிலும் வேற்றுமையிலும் அரைமாத்திரை பெறும் குற்றியலுகரம், ‘இடைப்படின் குறுகும்’ (37) என்றதனான், கூறிய அரை மாத்திரையினும் குறுகி நிற்கும் இயல்பிலே நிற்ற லும் உரித்து; பழைய அரைமாத்திரை பெறுதலும் உரித்து.

எ-டு : கொக்குப் பெரிது - கு : அரைமாத்திரை

கொக்குக் கடிது - கு : கால் மாத்திரை (409 நச். உரை)

தொழிற்பெயர் இயல -

{Entry: B02__177}

ஞ் ண் ந் ம் ல் வ் ள் ன் - ஈற்று முதனிலைத் தொழிற்பெயர்கள் வருமொழியொடு புணரும்வழி உகரச்சாரியை பெற்றுப் புணர்தல்.

உரிஞ் மண் பொருந் திரும் செல் வவ் துள் தின் - என்பன முறையே அப்புள்ளியீற்றுத் தொழிற்பெயர்கள். அவை முறையே

உரிஞுக் கடிது, மண்ணுக் கடிது, பொருநுக் கடிது, திருமுக் கடிது, செல்லுக் கடிது, வவ்வுக் கடிது, துள்ளுக் கடிது, தின்னுக் கடிது என அல்வழிக்கண்ணும்,

உரிஞுக்கடுமை, மண்ணுக்கடுமை, திருமுக்கடுமை, செல்லுக் கடுமை, வவ்வுக்கடுமை, துள்ளுக்கடுமை, தின்னுக்கடுமை என வேற்றுமைக்கண்ணும்

உகரச்சாரியை பெற்றுப் புணரும். வன்கணம் வருவழி அவ்வல்லெழுத்து மிகும்.

நகர ஈறு வேற்றுமைக்கண் பொருநக் கடுமை என உகரம் கெட அகரம் பெறும். (தொ. எ. 296 - 299, 306, 327, 345, 376, 382, 401 நச்.)

ஆசிரியர் னகரஈறு வகரஈறு இவற்றை விதந்து கூறிற்றிலர்.

(345, 382 நச்.)

தொழிற்பெயர்ப் பகுபதம் -

{Entry: B02__178}

ஊணான், ஊணாள், ஊணார், ஊணது, ஊணன, ஊணேன், ஊணேம், ஊணாய், ஊணீர் என இவ்வாறு வருவன, இத்தொழிலையுடையார் என்னும் பொருண்மைத் தொழிற் பெயர்ப் பகுபதம். ஊண் என்னும் தொழிற்பெயர் அடியாகப் பிறந்தவை அவை. (நன். 133 மயிலை. உரை)

தொழிற்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__179}

தொல்காப்பியனார் வினைப்பகுதிகளைத் தொழிற்பெயர் என்றே குறிப்பிடுவார். ஞ் ண் ந் ம் ல் வ் ள் ன் - ஒற்றுக்கள் ஈற்றனவாகிய தொழிற்பெயர்கள் இருவழியும் வன்கணம் வரின் உகரமும் வந்த வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமாத்திரம் பெற்றும், யகரம் வரின் இயல்பாகவும், உயிர்க்கணம் வரினும் இயல்பாக வும், (தனிக்குறில் முன் ஒற்றாய் நிலைமொழி இருப்பின் இரட்டியும்) புணரும். (தொ. எ. 296 - 299 நச். உரை முதலியன).

முரண் என்ற தொழிற்பெயர் இவ்விதிக்கு மாறாய், முரண் கடிது - என அல்வழியினும், முரண்கடுமை முரட்கடுமை என (டகரத்தோடு உறழ்வாய்) வேற்றுமையினும் புணரும். (309 நச்.)

கன் பொருந் - என்பன வேற்றுமைக்கண் உகரச்சாரியை விடுத்து அகரச் சாரியை பெற்றுக் கன்னக் கடுமை - பொருநக் கடுமை - என்றாற் போலப் புணரும். (346, 299 நச்.)

உருபிற்கு இன்சாரியை பெறுவன சிறுபான்மை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் பெறும்.

எ-டு : உரிஞினை, பொருநினை; உரிஞின்குறை, பொருநின் குறை - (182 நச்.)

உரிஞுக் கடிது, உரிஞுக் கடுமை - (296 நச்.)

பொருநுக் கடிது, பொருநக் கடுமை - (298, 299 நச்.)

மண்ணுக் கடிது, மண்ணுக் கடுமை - (306 நச்.)

செம்முக் கடிது, செம்முக் கடுமை - (327 நச்.)

கொல்லுக் கடிது, கொல்லுக் கடுமை - (376 நச்.)

வவ்வுக் கடிது, வவ்வுக் கடுமை - (382 நச்.)

துள்ளுக் கடிது, துள்ளுக் கடுமை - (401 நச்.)

கன்னுக் கடிது, கன்னக் குடம் - (345, 346 நச்.)

உரிஞ் யாது, உரிஞ்யாப்பு; பொருந் யாது, பொருந் யாப்பு;

மண் யாது, மண்யாப்பு; தும் யாது, தும்யாப்பு;

கொல் யாது, கொல்யாப்பு; வவ் யாது, வவ்யாப்பு;

துள் யாது, துள்யாப்பு; கன் யாது, கன்யாப்பு

(தொ. எ. 163 நச்.)

உரிஞழகிது, உரிஞருமை; பொருநழகிது, பொருநருமை;

மண் ணழகிது, மண்ணருமை; தும் மரிது, தும்மருமை;

கொல் லரிது, கொல்லருமை; வவ் வரிது, வவ்வருமை;

துள் ளரிது, துள்ளருமை; கன் னரிது, கன்னருமை.

(163 நச்.)

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரங்கள் -

{Entry: B02__180}

சாரியை பெறுதலும், உயிரும் ஒற்றும் உயிர்மெய்யும் என்றிவை மிகுதலும், தோன்றல் என்பதாம். இச்சொன்ன பெற்றியே முன் நின்ற எழுத்து வேறுபட நிற்றல் திரிபாம். இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுதல் கேடு என்பதாம். இம்மூன்று விகாரமும் இருமொழி மூவிடத்துமாம்.

எ-டு : புளி ங்காய் என இடையே அம்மு மிக்கது.

வா வில், மலை த் தலை, உரி நெய் என முறையே உயிரும் (அ), ஒற்றும் (த்), உயிர்மெய்யும் (ய) மிக்கன.

றுபது, ம ட் குடம், ‘திருத்தார்நன் றென்றேன் தி யேன்’ என முறையே உயிரும் (ஆ), ஒற்றும் (ண்), உயிர்மெய்யும் (தீ) திரிந்தன. உயிர்மெய்க்கு இவ் வாறன்றித் திரிபுண்டாயினும் காண்க.

பல்சாத்து, மரவேர், அங்கை என முறையே உயிரும் (அ), ஒற்றும் (ம்), உயிர்மெய்யும் (க) கெட்டன. (நன். 153 மயிலை.)

தோன்றல் விகாரம் -

{Entry: B02__181}

இது புணர்ச்சி விகாரம் மூன்றனுள் ஒன்று. இருமொழிகள் புணருமிடத்து இடையே சாரியையோ, வருமொழி வன்கணத் திற்கேற்ப ஒருமெய்யெழுத்தோ தோன்றுதல் தோன்றல் விகாரமாம்.

எ-டு : புளி + பழம் = புளியம்பழம் - ‘அம்’ சாரியை தோன்றியது.

நாய் + கால் = நாய்க்கால் - ககரமெய் தோன்றியது.

பூ + கொடி = பூங்கொடி - ககரத்திற்கு இனமான ஙகரமெய் தோன்றியது. (நன். 154)

ந section: 70 entries

நகர ஈற்றுத் தொழிற்பெயர் -

{Entry: B02__182}

நகர ஈற்றுத் தொழிற்பெயர் பொருந் என்பது. அஃது அல்வழிப் புணர்ச்சிக்கண் உகரச்சாரியை பெற்றுப் பொருநுக் கடிது, பொருநு நன்று, பொருநு வலிது என்றாற் போலவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரச்சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெற்றுப் பொருநுக்கடுமை - பொருநக்கடுமை, பொருநுநன்மை - பொருநநன்மை, பொருநுவலிமை, பொருந வலிமை என்றாற்போலவும் முடியும். (நன். 208)

நகரஈற்றுப் பொதுப்புணர்ச்சி -

{Entry: B02__183}

நகர ஈற்றுச் சொற்கள் இரண்டே. அவை வெரிந், பொருந் என்பன. இச்சொற்கள் அல்வழிக்கண் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும் புணரும்; வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரச் சாரியைக்கு மாறாக அகரச் சாரியை பெறும். வெரிந் என்னும் சொல் வன்கணம் வருவழி நகரம் கெட்டு மெல்லெழுத்தோ வல்லெழுத்தோ பெற்றுப் புணரும். சிறுபான்மை உருபுக்குச் செல்லும் சாரியையாகிய இன் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கும் பெறுதலுண்டு.

எ-டு : பொருநுக் கடிது, பொருநு ஞான்றது, பொருநு வலிது, பொருந் யாது, பொருந் அரிது - இவை அல் வழி முடிபு. (தொ. எ. 298 நச்)

பொருநக்கடுமை வெரிநக்கடுமை, பொருந ஞாற்சி, வெரிநஞாற்சி, பொருநவன்மை, வெரிநவன்மை, பொருநயாப்பு, வெரிநயாப்பு, பொருநருமை வெரி நருமை - இவை வேற்றுமை முடிபு. (299 நச்.) வெரிங்குறை வெரிஞ்செய்கை வெரிந்தலை வெரிம் புறம்; வெரிக்குறை வெரிச்செய்கை வெரித்தலை வெரிப்புறம் - வேற்றுமை முடிபு. (300, 301 நச்.)

பொருநினை வெரிநினை (182 நச்.)

பொருநின்குறை, வெரிநின்குறை (299 நச். உரை)

நகர ஈறு -

{Entry: B02__184}

நகர ஈறு ஒரு சொற்கே உரித்தாம். பொருந் என வரும். (மு. வீ. எழுத். 90)

நகரம் எதிர்மறைப் பெயரோடு இணையும் முறை -

{Entry: B02__185}

நின்ற மொழியின் பொருளை மாற்றுதற்கு முதலில் நிறுத்திய நகர உயிர்மெய், அப்பொருள்மொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாகில், அவ்வுயிர் ஒழிய உடல் போம். (‘அ’ என நிற்கும்) அஃது உயிராயின், நகரஉயிர்மெய் பிரிந்து உயிர் முன்னும் உடல் பின்னும் ஆம். (‘அந்’ என நிற்கும்).

வரலாறு:

சஞ்சலம் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து, நகர உயிர்மெய்யை முன்னே வருவித்துச் ‘சார்ந்தது உடலாயின் தன் உயிர்போம்’ என்பதனால் பிரித்து நகர ஒற்றைக் கெடுத்து, ‘அசஞ்சலன்’ என முடிக்க.

பயம், களங்கம் என இவையும் அவ்விலக்கணத்தான் அபயன், அகளங்கன் என முடிக்க.

உபமன் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து, நகர உயிர்மெய்யை முன்னர் நிறுத்திச் ‘சார்ந்தது தான் ஆவியேல் தன் ஆவி முன் ஆகும்’ என்பதனால் பிரித்து அகரத்தை முன்னர் நிறுத்தி, நகரஒற்றின்மேல் உயிரை (உகரம்) ஏற்றி, அநுபமன் என முடிக்க.

அகம் என்பது பாவம்; இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து, இவ்விலக்கணத்தால் அநகன் என்க. உசிதம் என்பது யோக்கியம்; அஃது இல்லாதது அநுசிதம் என முடிக்க.

(நேமி. எழுத். 11 உரை)

நச்சினார்க்கினியர் குறிப்பிடும் ஈரெழுத்து மொழி முதலியன -

{Entry: B02__186}

செய்யுளியலில் ஒற்றும் குற்றியலுகரமும் எழுத்தாக எண்ணப் படாததை உட்கொண்டு, அதனை எழுத்ததிகாரத்தும் ஏற்றி, ஒற்றையும் குற்றியலுகரத்தையும் விடுத்துச் சொற்களில் எழுத்தைக் கணக்கிடு முறையை நச்சினார்க்கினியர் குறிப்பிட் டுள்ளார். ஆனால் அம் முறையை அவரே நெடுகப் பின்பற்றிலர்.

ஆ, கா - ஓரெழுத்தொருமொழி; மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி; குரவு - மூவெழுத்தொருமொழி; கணவிரி - நாலெழுத்தொருமொழி; அகத்தியனார் - ஐயெழுத் தொரு மொழி; திருச்சிற்றம்பலம் - ஆறெழுத் தொருமொழி; பெரும்பற்றப்புலியூர்-ஏழெழுத்தொருமொழி (தொ. எ. 45 நச்.)

நடத்து, நடத்துவி, நடத்துவிப்பி: விளக்கம் -

{Entry: B02__187}

இவ்வாய்பாடுகளுள் நடத்து வருத்து முதலியன ஏவல்வினை- முதல் இரண்டையும் இயற்றும் வினைமுதல் இரண்டையும் மூவருள் இருவர்க்கு ஒரு கருத்தனையும்,

நடத்துவி வருத்துவி முதலியன ஏவல் வினைமுதல் மூன்றையும் இயற்றும் வினைமுதல் மூன்றையும் நால்வருள் மூவர்க்கு ஒரு கருத்தனையும்.

நடத்துவிப்பி வருத்துவிப்பி முதலியன ஏவல்வினைமுதல் நான்கையும் இயற்றும் வினைமுதல் நான்கையும் ஐவருள் நால்வர்க்கு ஒரு கருத்தனையும், தந்து நின்றன. இங்ஙனம் இருவர்முதல் ஐவரை உள்ளுறுத்த வாய்பாடுகளை எடுத்துக் கூறவே, வரம்பின்றி ஏவல்மேல் ஏவலும் இயற்றல்மேல் இயற்றலுமாய் வருவனவற்றிற்கு வாய்பாடு இன்று என்பதும் பெற்றாம். (நன். 138 சங்கர.)

நடப்பி, நடப்பிப்பி ஏவற்பகாப்பதம் ஆகாமை -

{Entry: B02__188}

எடுத்தலோசையான் முன்னிலை ஏவலொருமை வினை முற்றுப் பகாப்பதங்களாகிய நட - நடப்பி என்றாற் போல் வனவே பகுதியாம் எனவும், நடப்பிப்பி - வருவிப்பி - நடத்து விப்பி என இவை (வி பி விகுதிகள்) இணைந்துவரும் எனக் கூறியவற்றை இருமடியேவற் பகாப்பதம் எனவும், நடப்பிப் பித்தான் - வருவிப்பித்தான், நடத்துவிப்பித்தான் என்றாற் போல்வனவற்றிற்கு நடப்பிப்பி முதலானவையே பகுதியாம் எனவும் கூறுவாருமுளர். அவர் கூறுவது பொருந்தாது. என்னையெனில், அவ்வாறு கூறுவார்க்கும், நடப்பிப்பி முதலானவை பகுதியாகுமிடத்து, அப்பொருண்மையில் திரிந்து படுத்தலோசையால் அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்கும் எனக் கூறவேண்டுதலின், முன்னிலை ஏவல்வினைமுற்றுப் பகாப் பதங்கள் பகுதி ஆகா என்பது உணரப்படும். மேலும் இரு முறை ஏவுதல் கூறியது கூறல் ஆதலின் அவை இழிவழக்காம். அப் பகுதிகளால் பிறந்த பகுபதங்களும் அவ்வாறே இழி வழக்காய் முடியும். (இ. வி. எழுத். 44)

நட, வா முதலியன -

{Entry: B02__189}

நட வா முதலிய இருபத்து மூன்று ஈற்றவாகிய இவை முதலாகிய சொற்களெல்லாம் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றாகவும், ஏனைய வினைகளின் பகுதியாகவும் வரும். செய் என்னும் வாய்பாட்டின இவை.

முன்னிலை ஏவலொருமை வினை ‘நடவாய்’ என்பதே கொண்டு, நட என்பது ஏவல்வினைக்குப் பகுதியே, அஃது ஏவல்வினை அன்று என்பார் சிவஞானமுனிவர். (நன். 137)

நட வா முதலியன உரிச்சொற்களே -

{Entry: B02__190}

‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ ஆதலின், அவற்றைப் பெயர் வினை இடை உரி எனப் பாகுபாடு செய்தது, உயர்திணை அஃறிணை என்றல் தொடக்கத்தன போலப் பொருள் வேறுபாடு பற்றிக் கருவி செய்தற் பொருட் டேயாம். அவற்றுள் குறிப்பும் பண்பும் இசையும் பற்றி வருவன எல்லாம் ஒருநிகராக, சிலவற்றை உரிச்சொல் எனவும் சிலவற்றை வேறுசொல் எனவும் கோடல் பொருந்தாமையின் அவற்றை உரிச்சொல் என்றே கொள்ளவேண்டும். இவை குணப்பண்பு, தொழிற்பண்பு என இரண்டாய் அடங்கும். குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகிய பொருட்பண்பினை உணர்த்தும் சொல் உரிச்சொல்லேயாம்.

நடந்தான் என்புழி நடத்தலைச் செய்தான் என உருபு விரிதலின், நட என்பது பெயர்ச்சொல் அன்றோ எனின், நடந்தான் ஒருமொழித்தன்மைப்பட்டு நிற்றலின், அது நட வைத்தான் எனத் தன்சொல்லால் பிரித்துக் காட்டல் ஆகாமையின், நடத்தலைச் செய்தான் எனப் பிறசொல்லால் காட்டி முடிக்கப்படும். நட என்பது தல் என்ற பகுதிப்பொருள் விகுதி பெற்றவழிப் பெயர்ச்சொல்லாம் ஆதலின், ஆண்டு உருபேற்றல் அமையும். வடநூலுள்ளும் பிரியாத் தொகை பிறசொல்லால் விரித்துக் காட்டப்படும். (சூ. வி. பக். 34 - 36)

நட வா முதலியன முன்னிலை ஏவலொருமைவினை ஆகாமை -

{Entry: B02__191}

நடவாய் வாராய் முதலிய முன்னிலை ஏவலொருமை எதிர்கால வினைமுற்றுச் சொற்கள் ஆய் விகுதி குன்றி நட வா முதலியன- வாய் நின்றன அல்லது, முதனிலைகளே ஓசைவேறுபாட்டால் முன்னிலை ஏவல் ஒருமை வினைகள் ஆகா. (சூ. வி. பக். 32)

நந்தம்மை, நுந்தம்மை : சாரியை வழுவமைதியாதல் -

{Entry: B02__192}

படர்க்கைக்குரிய தம்முச்சாரியை, நந்தம்மை நுந்தம்மை எனத் தன்மையிலும் முன்னிலையிலும் வருதல் ‘ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே’ (380) என்னும் இடவழுவமைதியாம். (நன். 246 சங்கர.)

நன்னூல் எழுத்ததிகாரத் தற்சிறப்புப் பாயிரம் -

{Entry: B02__193}

‘பூமலி அசோகின்’ என்று தொடங்கும் நூற்பா, வணக்கம் அதிகாரம் என்னும் இரண்டனையும் சொல்லுதலின், தற் சிறப்புப் பாயிரமாம். ‘பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகற் றொழுது’ என வணக்கம் சொன்னவாறு; ‘நன் கியம்புவன் எழுத்தே’ என அதிகாரம் சொன்னவாறு. (இவ்வாறே சொல்லதிகாரத்தும் ‘முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதனடி தொழுது’ என வணக்கமும், ‘அறை குவன் சொல்லே’ என அதிகாரமும் சொன்னவாறு காண்க.) நூலினை நுவல்வான் புகுந்து ஈண்டு வணக்கம் வைக்க வேண் டியது என்னையெனின், ‘வழிபடு தெய்வம் வணக்கம் செய்து, மங்கல மொழி முதலாக வகுப்பவே, எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம், இடுக்கண் இன்றி இனிது முடியும்’ என்பவாகலின் ஈண்டு வணக்கம் செய்யப்பட்டது. (நன். 55 மயிலை.)

நன்னூல் சார்பெழுத்துப் பத்து என்றதன் நோக்கம் -

{Entry: B02__194}

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்று எனக் கருவிசெய்தார் ஆதலின், இவ் வாசிரியர் செய்கையும் செய்யுளியலும் நோக்கிச் சார் பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார் என்பதுணர்க. (நன். 60 சிவஞா.)

நன்னூல் மயிலைநாதர் உரையில் அகத்தியச் சூத்திரங்கள் -

{Entry: B02__195}

‘பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்.’ (நன். 130)

‘வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்

தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்

உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே’. (நன். 258 )

‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே

அடிசில் பொத்தகம் சேனை அமைந்த

கதவம் மாலை கம்பலம் அனைய’ (நன். 259)

‘அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்

பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த

பன்னிரு திசையிற் சொன்னயம் உடையவும்’ (நன். 272 )

‘ஏழியல் முறையது எதிர்முக வேற்றுமை

வேறென விளம்பான் பெயரது விகாரமென்று

ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்

இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ (நன். 290)

‘வினைநிலை உரைத்தலும் வினாவிற் கேற்றலும்

பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே’. (நன். 294)

‘ஆறன் உருபே அது ஆது அவ்வும்

வேறொன்று உரியதைத் தனக்குரி யதைஎன

இருபாற் கிழமையின் மருவுற வருமே

ஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை’. (நன். 299)

‘மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்

முற்றி நிற்பன முற்றியல் மொழியே,’ (நன். 322)

‘முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்

முற்றுச்சொல் என்னும் முறைமையின் திரியா’. (நன். 332)

‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது

பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே’ (நன். 339)

‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது

வினைகொள் ளும்மது வினையெச் சம்மே. (நன். 341)

‘எனைத்துமுற் றடுக்கினும் அனைத்துமொரு பெயர்மேல்

நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே

வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்

பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய’, (நன். 354)

‘கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி

நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்

காணா ஐயமும் பல்லோர் படர்க்கை’. (நன். 377)

‘உலக வழக்கமும் ஒருமுக் காலமும்

நிலைபெற உணர்தரும் முதுமறை நெறியான்’ (நன். 381)

‘அசைநிலை இரண்டினும் பொருள்மொழி மூன்றினும்

இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும்’. (நன். 394)

நன்னூல் மயிலைநாதர் உரையில் அவிநயச் சூத்திரங்கள் -

{Entry: B02__196}

‘பதினெண் மெய்யும் அதுவே மவ்வோடு

ஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’ (நன். 59)

‘ஆற்ற லுடைஉயிர் முயற்சியின் அணுஇயைந்து

ஏற்றன ஒலியாய்த் தோற்றுதல் பிறப்பே’ (ந ன். 73)

‘கசதப ஙவ்வே ஆதியும் இடையும்

டறஇடை ணனரழ லளஇடை கடையே

ஞநமய வவ்வே மூன்றிடம் என்ப’. (நன். 101)

‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்

சுட்டுதற் கண்ணேயாம் சொல்’. (நன். 127)

‘அவைதாம்

பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றா

இரண்டன் பாலாய் அடங்குமன் பயின்றே’, (நன். 130)

‘றனழஎ ஒவ்வும் தனியும் மகாரமும்

தன்மைத் தமிழ்பொது மற்று’, (நன். 149)

‘அழிதூஉ வகையும் அவற்றின் பாலே’, (நன். 263)

‘காலம் அறிதொழில் கருத்தனோடு இயையப்

பால்வகை தோறும் படுமொழி வேறே’. (நன். 319)

பத்து எச்சங்கள் (நன். 359)

தொகைப்பொருள் சிறக்குமிடம் (நன். 369)

நன்னூல் மயிலைநாதர் உரையில் தொல்காப்பியச் சூத்திரங்கள் -

{Entry: B02__197}

‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்,’ (மொழிமரபு 34) (நன். 105)

‘சொல்லெனப் படுப பெயரே வினையென்று

ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.’ (பெயரியல் 4) (நன். 130)

‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலை காலமொடு தோன்றும், (வினயியல் 1) (ந ன். 319)

‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்

வருவகை தானே வழக்கென மொழிப’. (பொருளியல் 28) (நன். 357)

‘உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே

பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்’, (எச்சவியல் 25) (நன். 371)

‘பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்

அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே’. (கிளவியாக்கம் 51) (நன். 377)

‘எண்ணுங் காலும் அதுஅதன் மரபே’. (47) (நன். 388)

‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே...’

‘புல்லும் மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘நந்தும் முரளும் ஈரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘சிதலும் எறும்பும் மூவறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘ஞெண்டும் தும்பியும் நான்கறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘மாவும் மாக்களும் ஐயறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ (மரபியல் 27-32) (நன். 443-448)

நன்னூலார் ‘தானெடுத்து மொழிந்த’ தொல்காப்பியச் சூத்திரங்கள் -

{Entry: B02__198}

‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.’ (நன். பாயிரம். 6)

‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.’ (நன். 89 மயிலை)

‘அத்தின் அகரம் அகரமுனை இல்லை.’ (நன். 251)

‘யாதன் உருபின் கூறிற் றாயினும்

பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.’ (நன். 316)

‘முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்

அந்நிலை மருங்கின் மெய்ஊர்ந்து வருமே.’ (நன். 335)

‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்.’ (நன். 403)

‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே.’ (நன். 407)

‘மாஎன் கிளவி வியங்கோள் அசைச்சொல்.’ ( நன். 438)

நால்வகைத் தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன்னும் வலி இயல்பாதல் -

{Entry: B02__199}

உண்ட உண்ணாநின்ற உண்ணாத - எனவும், கடைக்கணித்த சித்திரித்த வெளுத்த கறுவிய அமரிய - எனவும், திண்ணென்ற பொன்போன்ற - எனவும், சான்ற உற்ற - எனவும்,

வினை பெயர் இடை உரியடியாகப் பிறந்த நால்வகைத் தெரிநிலைப் பெயரெச்சத்தையும் நிலைமொழியாக நிறுத்தி வருமொழியாகக் குதிரை - செந்நாய் - தகர் - பன்றி - என்னும் வன்கணம் முதலாகிய சொற்களைப் புணர்ப்பவே இயல்பாக முடிந்தவாறு. (நன். 167 சங்கர.)

நாவல் என்னும் குறிப்பு -

{Entry: B02__200}

நாவல் என்பது நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொரு சொல்.

‘காவல் உழவர் கடுங்களத்துப் போரேறி

நாவலோஒஒ என்றிசைக்கும் நாளோதை’ (முத்தொள்.)

என்பதனால் இஃது அறியலாகும். (நன். 101 சங்கர.)

நாழிமுன் உரி புணருமாறு -

{Entry: B02__201}

நாழி என்னும் முகத்தல் அளவுப்பெயர் முன்னர், உரி என்னும் முகத்த லளவுப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து, அந் நாழி என்னும் சொல்லின் இறுதியில் நின்ற இகரம் தானேறிய மெய்யொடும் கெடும். அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும். (இரண்டு உரி கொண்டது ஒரு நாழி. நாழியும் உரியும் என உம்மைத்தொகையாய் இஃது அல்வழிப் புணர்ச்சியாம்).

வருமாறு : நாழி + உரி > நா + உரி > நா + ட் + உரி = நாடுரி. (தொ. எ. 240 நச், நன். 174)

‘நாள்முன் வரூஉம் வன்முதல் தொழில்நிலைக்கிளவி’ புணருமாறு -

{Entry: B02__202}

இகர ஐகார மகர ஈற்று விண்மீன் பெயர்கள் நிலைமொழி களாக நிற்ப, வருமொழிகளாக வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வினைச்சொற்கள் வரும்வழி, இடையே ஆன் சாரியை வரும்.

எ-டு : பரணி + கொண்டான் > பரணி + ஆன் + கொண்டான் = பரணியாற் கொண்டான்; சித்திரை + கொண்டான் > சித்திரை + ஆன் + கொண்டான் = சித்திரையாற் கொண்டான்; மகம் + கொண்டான் > மகம் + அத்து + ஆன் + கொண்டான் = மகத்தாற் கொண்டான்; இவை வேற்றுமைப் புணர்ச்சி; ஏழாவதன் பொருள் விரித்துரைக்கப்படும். (தொ. எ. 124, 247, 286, 331 நச்.)

நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் ஆதல் -

{Entry: B02__203}

இன் ஒன் ஆன் அன் என்ற னகரஈற்றுச் சாரியைகள் நான்கும் நிலைமொழி நான்கனுருபாகிய கு என்பதனொடு புணருங் கால், தாம் இடையே வரத் தம்முடைய னகரம் றகரமாகத் திரியும்.

எ-டு : விள + இன் + கு = விளவிற்கு - (தொ. எ. 173 நச்.)

கோ + ஒன் + கு = கோஒற்கு - (180)

இரண்டு + பத்து + கு > இருப் + ஆன் + கு = இருபாற்கு- (199)

அது + அன் + கு = அதற்கு - (176)

நிகழ்கால இடைநிலை -

{Entry: B02__204}

ஆநின்று, கின்று, கிறு - ஆகிய மூன்றும் மூவிடத்தும் வரும் ஐம்பாற்கண்ணும் நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபத இடைநிலைகளாம்.

எ-டு : நடவாநின்றான் (நட + ஆநின்று + ஆன்); நடக்கின் றான் (நட + க் + கின்று + ஆன்); நடக்கிறான் (நட + க் + கிறு + ஆன்) (நன். 143; இ. வி. எழுத். 48)

உரையிற்கோடலால், உண்ணாநின்றிலன் - உண்கின்றிலன்அ - என எதிர்மறைக்கண் ஆநின்று கின்று என்னும் இடை நிலைகள் வேறுசில எழுத்தொடு கூடி நிகழ்காலம் காட்டும் எனவும்,

உண்ணா கிட ந்தான் -உண்ணா விரு ந்தான் - எனக் கிடவும் இருவும், உரைக்கிற்றி - ‘ நன்றுமன் என்இது நாடாய் கூ றி ’ - என றகரமும்,

கானம் கடத் தி ர் எனக் கேட்பின் ’ (கலி. 7 : 3) எனத் தகரமும்,

நோக்கு வே ற்கு, உண் பே ற்கு என முறையே வினை வினைப் பெயர்க்கண் வகரமும் பகரமும் சிறுபான்மை நிகழ்காலம் காட்டும் எனவும் கொள்க. (இ. வி. 48 உரை)

நிலா ‘இன்’ னொடு வருதல் -

{Entry: B02__205}

நிலா என்னும் சொல் இன்சாரியை பெற்று வரும்.

எ-டு : நிலா + காந்தி = நிலாவின் காந்தி (மு. வீ. புண. 93)

நிலா என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__206}

நிலா என்பது குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர். இது வருமொழி வன்கணம் வரின் எழுத்துப்பேறளபெடையும் வல்லெழுத்தும் பெற்றும், ஏனைய கணங்கள் வந்துழி எழுத்துப் பேறளபெடை மாத்திரம் பெற்றும் புணரும். (ஈண்டு அகரம் எழுத்துப்பேறளபெடையாம்.)

எ-டு : நிலாஅக்கதிர், நிலாஅமுற்றம் (தொ. எ. 226 நச்.)

நிலா என்ற சொல் அத்துச்சாரியை பெற்று, நிலாஅத்துக் கொண்டான், நிலாஅத்து ஞான்றான் என வரும். (228 நச்.)

செய்யுட்கண் நிலா என்பது நில என்றாகி உகரச்சாரியை பெற்று நிலவு என்றாகி வருமொழியொடு புணர்தலுமுண்டு.

எ-டு : நிலவுக்கதிர் (234 நச்.)

நிலைமொழி யீறு, மூவினமெய் வருமொழி முதற்கண் நிகழுமிடத்துப் புணருமாறு -

{Entry: B02__207}

மெய் அல்லது உயிரீறாக நிற்கும் நிலைமொழி மூவினமெய் வருமிடத்து ஏற்கும் முடிவு ஆறு வகைகளாம். அவை இயல்பு, மிகுதல், உறழ்ச்சி, திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என்பன வாம். இக்கருத்து இலக்கணக்கொத்தினின்றும் கொள்ளப் பட்டது. (இ.கொ. 113, 114)

எ-டு : நிலா + முற்றம் = நிலாமுற்றம்; வாழை + பழம் = வாழைப்பழம்; கிளி + குறிது = கிளிகுறிது, கிளிக் குறிது; பொன் + குடம் = பொற்குடம்; மரம் + வேர் = மரவேர்; நாளி + கேரம் = நாரிகேளம் என முறையே காண்க. (சுவாமி. எழுத். 28)

நிலைமொழி வருமொழி அடையடுத்தும் புணர்தல் -

{Entry: B02__208}

அடையாவன நிலைமொழி வருமொழிகளை உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்பட ஆக்க வல்லன ஆம்.

எ-டு : பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று - நிலை மொழி அடை. ஆயிரம் + இருபஃது = ஆயிரத் திருபஃது - வருமொழி அடை. பதினாயிரம் + இரு பஃது = பதினாயிரத்திருபஃது - இருமொழி அடை.

வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் பிளந்து முடிய, பண்புத்தொகையும் வினைத்தொகையும் பிளந்து முடியாமை யின், ஒரு சொல்லேயாம்.

அன்மொழித்தொகையும் தனக்கு வேறொரு முடிபின்மையின் ஒருசொல்லேயாம். இத்தொகைச்சொற்களெல்லாம் அடை யாய் வருங்காலத்து ஒரு சொல்லாய் வரும்.

உண்ட சாத்தன் வந்தான் எனப் பெயரெச்சம் அடுத்த பெயரும், உண்டு வந்தான் சாத்தன் என வினையெச்சம் அடுத்த முற்றும் ஒருசொல்லேயாம். இங்ஙனம் தொகைநிலையாகவும் தொகா நிலையாகவும் அடையடுத்த சொற்களும் நிலைமொழி வரு மொழிகளாகப் புணரும்.

எ-டு : பன்னிரண்டு + கை = பன்னிருகை - நிலைமொழி அடை யடுத்து உம்மைத்தொகைபட நின்றது.

ஓடிற்று + பரிமா = ஓடிற்றுப் பரிமா - வருமொழி அடை அடுத்து இருபெயரொட்டுப் பண்புத்தொகை பட நின்றது. (தொ. எ. 110 நச். உரை)

‘நிலையியலான’ -

{Entry: B02__209}

நிற்றலை இலக்கணமாக உடைய எழுத்து. நுந்தை என்ற முறைப்பெயரில் நிற்றலை இலக்கணமாக உடைய (நகரத்தை ஊர்ந்து வருகின்ற) குற்றியலுகரம். (தொ. எ. 68 நச்.)

நிலையிற்று என்றலும், நிலையாது என்றலும் -

{Entry: B02__210}

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வருதல் நிலை யிற்று என்றலாம்.

எ-டு : சாத்தன் வந்தான், வந்தான் சாத்தன் (நிறுத்த சொல்லை முடித்தலைக் குறித்து வரும் சொல் ‘குறித்துவரு கிளவி’ எனப்படும்.)

பதினாயிரத் தொன்று, ஆயிரத் தொருபஃது, பதினாயிரத் தொருபஃது என நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் இருமொழியும் அடையடுத்தும் வந்தவாறு.

முன்றில், மீகண் - இவை இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ.

சோணாடு, பாண்டிநாடு - இவை இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ .

இனி, நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபு இன்றி வருதல் நிலையாது என்றலாம்.

எ-டு :

‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகநா. 3:2)

‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்

பரலவல் அடைய இரலை தெறிப்ப (அகநா. 4 : 34)

‘தெய்வ மால்வரைத் திருமுனி அருளால்’ (சிலப். 3 : 1)

இவ்வடிகளில் முறையே ஓமைச்சினை - மருப்பின் இரலை - தெய்வ வரை - என ஒட்டி ஓமையினது சினை - மருப்பினை யுடைய இரலை - தெய்வத்தன்மையையுடைய வரை - எனப் பொருள் தருகின்றவை, முறையே காண்பு - பரல் - மால் என்பவற்றோடு ஒட்டினாற் போல ஒட்டி மிக்கும் திரிந்தும் கெட்டும் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபின்றி வருதல் காண்க. (இ. வி. எழுத். 53 உரை)

நிறுத்த சொல் -

{Entry: B02__211}

புணர்ச்சிக்குரிய இரண்டு சொற்களில் முதலில் கொள்ளப் படும் சொல் நிறுத்தசொல் எனப்படும் நிலைமொழியாம். இது குறித்து வரு கிளவியாகிய வருமொழியுடன் கூடும்போது இயல்பாகவும் திரிபுற்றும் புணரும். அந்நிறுத்த சொல் பெரும் பான்மையும் பெயராகவோ வினையாகவோ இருக்கும்; சிறுபான்மை இடைச்சொல்லோ உரிச்சொல்லோ ஆதல் கூடும். (தொ. எ. 107 நச்.)

நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் அடையொடு தோன்றல் -

{Entry: B02__212}

அடை என்றது, உம்மைத்தொகையினையும் இருபெய ரொட்டுப் பண்புத் தொகையினையும். (அடையொடு தோன் றியவழி நிலைமொழி அல்லது வருமொழி உம்மைத்தொகை யாகவும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையாகவும் நிற்கும் என்றவாறு.) அவை அல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும் பண்புத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொழித்தொகையும் தனக்கு வேறொரு முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி ஒழிந்த வேற்றுமைத் தொகையும் உவமத்தொகையும் தன்னினம் முடித்தல் என்பத னால் ஒருசொல் எனப்படும். உண்ட சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒரு சொல் எனப்படும்.

எ-டு : பதினாயிரத் தொன்று - நிலைமொழி அடை

ஆயிரத் தொருபஃது - வருமொழி அடை

பதினாயிரத் திருபஃது - இருமொழி அடை

இவ்வடைகள் ஒருசொல்லேயாம். (தொ. எ. 111 இள.)

நீ என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__213}

நீ என்னும் முன்னிலை ஒருமைப் பொதுப்பெயர் எழுவாயாய் வரும்போது நாற்கணத்தொடும் இயல்பாகவும், உருபேற்கும் போது நின் எனத் திரிந்தும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வன்கணம் வரின் னகரம் றகரமாகத் திரிந்தும் வருமொழியொடு புணரும்.

எ-டு : நீ குறியை, ஞான்றாய், வலியை, அரியை என நாற் கணத்தோடும் அல்வழியில் இயல்பாகப் புணர்ந்த வாறு.

நின்கை, ஞாற்சி, வலிமை, அழகு என நீ ‘நின்’ எனத் திரிந்து வருமொழி நாற்கணத்தும் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாக முடிந்தவாறு.

உயிர் வருமொழி முதற்கண் வருமிடத்தே, ‘நின்’ என்பதன் னகரம் (தனிக்குறில்முன் ஒற்று ஆதலின்) இரட்டியது. (இவ்விரட்டுதலும் இயல்பு புணர்ச்சியே என்ப)

நின் + புறங்காப்ப = நிற்புறங்காப்ப - என இரண்டன் தொகைக்கண் னகரம் றகரமாகத் திரிந்து புணர்ந்த வாறு. (தொ. எ. 250, 253, 157 நச்.)

நீட்டல் விகாரம் -

{Entry: B02__214}

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடை நயம் நோக்கிக் குற்றெழுத்து இனமொத்த நெடிலாக விகாரப் படுவது நீட்டல் விகாரமாம்.

எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)

பொத்து என்பதே சொல். மேலடியுள் ‘தீத்தொழிலே’ என்ற முதற்சீரை நோக்கி எதுகைவேண்டிப் ‘பொத்தறார்’ எனற் பாலது ஒகரம் நீண்டு ‘போத்தறார்’ என்று நீட்டல் விகாரம் ஆயிற்று, எதுகைத் தொடைக்கு முதற்சீர்களின் முதல் எழுத்து அளவொத்து நிற்றல் வேண்டுதலின். (நன். 155 சங்.)

நீடவருதல் ‘நீட்டும்வழி நீட்டல்’ அன்மை -

{Entry: B02__215}

நீட வருதலாவது செய்யுட்கண் அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டு வருமொழியோடு ‘ஆயிடை’ ‘ஈவயினான’ ‘ஊவயி னான’ என்றாற் போலப் புணர்வதாகும். ‘நீட்டும்வழி நீட்டல்’ விகாரம், (நிழல் - நீழல் என்றாற்போல) ஒருமொழிக் கண் நிகழ்வதாம் செய்யுள்விகாரம். ஆதலின் இவை தம்முள் வேறுபாடுடையன. (தொ. எ. 208 நச். உரை)

நீரொடு கூடிய பால் -

{Entry: B02__216}

நிலைமொழிப் புள்ளியீற்றொடு வருமொழி முதல் உயிர் கூடி (உயிர்மெய்யாக) நிற்றல் நீரொடு கூடிய பால்போல் நிற்றல் என்று ஒற்றுமைநயம் கூறினார். உயிர்மெய் மெய்யின் மாத்திரை தோன்றாது உயிரெழுத்தின் மாத்திரையே தன் மாத்திரையாக நிற்கும் நயம் ஒற்றுமைநயமாம். (மெய் முன்னரும் உயிர் பின்னருமாக உச்சரிக்கப்படுவது ஓசைபற்றி வரும் வேற்றுமை நயம்). (இ. வி. எழுத். 64 உரை)

நுந்தை ‘நு’ குற்றியலுகரம் அன்மை -

{Entry: B02__217}

கு ற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் எனத் தொல். குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாரெனின்,

‘நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண்

வந்த தெனின்உயிர்மெய் யாமனைத்தும் - சந்திக்கு

உயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி யின்றி

மயல்அணையும் என்றதனை மாற்று’

என்பதால் விதியும் விலக்கும் அறிந்துகொள்க. (நன். 105 மயிலை. உரை)

நுந்தை ‘நு’ குற்றியலுகரம் ஆதல் -

{Entry: B02__218}

நகரம் மேற்பல் முதலிடத்து நாநுனி பரந்து ஒற்றப் பிறத்த லானும், உகரம் இரண்டு இதழும் குவித்துக் கூறப் பிறப்பது ஆதலானும், இரண்டு நகர ஒலிகளுக்கு இடையே நன்கு இதழ் குவித்துக் கூறும் முயற்சி நிலையாமையான், உகரம் அரை மாத்திரை அளவாக ஒலிக்கும் என்பது உய்த்துணரத்தக்கது.

நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண் வந்தது என்றால், சந்தியில், மொழிமுதற்கண் வரும் உயிர்மெய்கள் எல்லாம் உண்மையான புணர்ச்சிநிலை மாறும் என்று கொண்டு, மயிலைநாதர் நுந்தை குற்றியலுகரம் அன்று என்றார்.

இவன் + நுந்தை = இவனுந்தை; னு: ஒருமாத்திரை யுடையது. (எ. ஆ. பக். 68, 69)

நுந்தை என்பதிலுள்ள உகரம் குற்றியலுகரமாகவும் முற்றியலு கரமாகவும் ஒலிக்கப்பட்டதை நோக்கி இச்சூத்திரம் கூறினார். (எ. கு. பக். 76)

நுந்தாய் என்பது நுந்தையின் விளியாகவும், நும் தாய் என்று பொருள் படவும் என இருதிறம்பட வருதலின் முற்றியலு கரமாம். (எ.கு. பக். 77) (தொ. எ. 68 நச்.)

‘நும்’ அந்நிலை திரியாமை -

{Entry: B02__219}

நும் என்ற முன்னிலைப் பன்மைச்சொல் நான்கன் உருபொடும் ஆறன் உருபொடும் புணருங்கால், தன் - என் - நின் - முதலிய நெடு முதல் குறுகும் சொற்களைப் போலவே, தானும் குற்றொற்று இரட்டாமையும், ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையலும் உடையது.

வருமாறு : நும் + கு > நும் + அ + கு = நுமக்கு;

நும் + அது > நும் + அ + அது > நும் + அ + து = நுமது;

நும் + அ > நும் + அ + அ > நும் + அ + வ் + அ = நுமவ (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 162 நச்.)

நும் என்ற பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__220}

தொல்காப்பியனார் நும் என்பதனைப் பெயராகக் கொண்டு அஃது அல்வழிப்புணர்ச்சிக்கண் நீஇர் எனத்திரிந்து வரு மொழியொடு புணரும் எனவும், வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ஈறுகெட்டு வருமொழி வன்கணத்துக்கேற்ற மெலி மிக்கும், மென்கணம் வரின் அம் மெல்லெழுத்தே மிக்கும் புணரும் எனவும், ஐ உருபு ஏற்குமிடத்து ஈற்று மெய் (ம்) இரட்டியும், நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து அகரச்சாரியை பெற்றும், நான்கனுருபிற்கு வருமொழி வல்லொற்று மிக்கும். ‘அது’ உருபு ஏற்குமிடத்து அவ்வுருபின் அகரம் கெட்டும், ‘கண்’ உருபு ஏற்குமிடத்து மகரம் கெட்டு வருமொழிக்கேற்ப ஙகர மெல்லொற்று மிக்கும் புணரும் எனவும் கூறியுள்ளார்.

வருமாறு : நீஇர் கடியீர், நீஇர் நல்லீர் - அல்வழி

நுங்கை, நும்செவி, நுந்தலை (நும்புறம் : இயல்பு);

நுஞ்ஞாண், நுந்நன்மை, நும்மாட்சி - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி

நும் + ஐ = நும்மை; நும் + அ + க் + கு = நுமக்கு; நும் + அ + (அ)து = நுமது; நும் + கண் = நுங்கண் - உருபு புணர்ச்சி (தொ. எ. 114, 115, 187, 325, 326 நச்.)

நும் தம் எம் நம் ஈற்று மகரம் திரியுமாறு -

{Entry: B02__221}

நீர் தாம் யாம் நாம் என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய நும் தம் எம் நம் என்பனவற்று முன் ஞகர நகர முதன்மொழி வருமிடத்தே, நிலைமொழி ஈற்று மகரம் முறையே ஞகர நகரங்களாகத் திரியும். (நீர் என்பதன் திரிபாகிய உம் என்பதற்கும் இஃது ஒக்கும்). இது வேற்றுமைப் புணர்ச்சி.

எ-டு : நும், தம், எம், நம் + ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண், எஞ்ஞாண், நஞ்ஞாண்; நும், தம், எம், நம், + நாண் = நுந்நாண், தந்நாண், எந்நாண், நந்நாண்

உம் + ஞாண், நாண் = உஞ்ஞாண், உந்நாண்

மகர முதல்மொழி வரின் நும்+மணி = நும்மணி என இயல் பாகப் புணரும். பிறவற்றுக்கும் கொள்க. (நன். 221)

நும் ‘நீஇர்’ ஆதல் -

{Entry: B02__222}

நீஇர் என்பதனைத் தொல். ‘நும்மின் திரிபெயர்’ என்றார். நும் என்பது பெயர் வேர்ச்சொல்; நீஇர் என்பது அதன் முதல் வேற்றுமை ஏற்ற வடிவம் என்று தொல். கூறியுள்ளார்.

நும் என்பது உகரம் கெட்டு ஈகாரம் பெற்று நீ என ஆகும்; நும் என்பதன் ஈற்று மகரம் ரகர ஒற்றாக, ‘நீர்’ என வரும்; அதுவே இடையே இகரம் வர ‘நீஇர்’ என்றாகும்.

ஆகவே, நும் என்பது நீம் நீர் நீஇர் என முறையே திரிந்து முதல்வேற்றுமை வடிவம் பெறும் என்பது. (தொ. எ. 326 நச்.)

பிற்காலத்தார் ‘நீஇர்’ என்பதன் இகரத்தை அளபெடை யாகக் கொண்டு நீக்கி ‘நீர்’ என்பதே முன்னிலைப்பன்மைப் பெயர் எனக் கொள்ளலாயினர். சிலர் நீஇர் என்பதனை நீயிர், நீவிர் எனத் திரித்து வழங்கலாயினர்.

நூல்மரபின் பெயர்க்காரணம் -

{Entry: B02__223}

நூல்மரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இய லாகும். இது 33 நூற்பாக்களையுடையது. இதன் பெயர்க் காரணம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள.

இவ்வதிகாரத்தான் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்தலின் நூல்மரபு என்னும் பெயர்பெற்றது இவ்வியல் என்பர் இளம்பூரணர்.

இந்த இயலில் கூறப்படும் விதிகள் மூன்று அதிகாரத்திற்கும் பொதுவாதலின் நூல்மரபு என்னும் பெயர்த்தாயிற்று இவ் வியல் என்பர் நச்சினார்க்கினியர்.

எழுத்ததிகாரத்துள் கூறப்படும் எழுத்திலக்கணத்தினைத் தொகுத்துணர்த்துதலான் அதிகார மரபு எனப்படுவதன்றி நூல்மரபு எனப்படாது எனவும், இந்த இயலில் கூறப்படுவன செய்கை இயல்களுக்கும் பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி, மூன்று அதிகாரத்துக்கும் பொது ஆகாமையின் அக்கருத்துப் பற்றி நூல்மரபு எனப் பெயரிடவில்லை எனவும் முறையே இளம்பூரணர் உரையை யும் நச். உரையையும் மறுத்துச் சிவஞான முனிவர்,

“நூலினது மரபு பற்றிய பெயர்கள் கூறலின் நூல்மரபு என்னும் பெயர்த்து. மலை கடல் யாறு குளம் என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றிய பெயர்கள் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து குறில் நெடில் உயிர் உயிர்மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூல் ஆசிரிய னால் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூல்மரபு பற்றிய பெயராயின. ஏனை ஓத்துக்களுள் விதிக்கப்படும் பெயர்களும் நூல்மரபு பற்றி வரும் பெயராதல் உணர்ந்து கோடற்கு இது முன் வைக்கப்பட்டது” என்றார்.(சூ.வி. பக். 18)

‘நூல் மரபு ’ என்பதன்கண் உள்ள நூல், நூல் எழுதுதற்கு அடிப்படைக் காரணமாய எழுத்து என்ற பொருளை உணர்த்திற்றுப் போலும். (எ. ஆ. பக். 3)

நூற்கு இன்றியமையா மரபு பற்றிய குறிகளை விதிக்கும் இயல் நூல்மரபு. (எ. கு. பக். 3)

நூல்மரபு கூறும் மெய்ம்மயக்கம் -

{Entry: B02__224}

க் ச் த் ப் என்பன நான்கு மெய்களும் தம்மொடு தாமே மயங்கும்.

ர் ழ் என்பன இரண்டு மெய்களும் தம்மொடு பிறவே மயங்கும்.

ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும் தம் மொடு பிறவும் மயங்கும்.

ட் ற் ல் ள் என்பனவற்றின் முன் க் ச் ப் என்பன மயங்கும்.

அவற்றுள், ல் ள் - என்பனவற்றின்முன் ய் வ் - என்பனவும் மயங்கும்.

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற மெல்லினப்புள்ளிகளின் முன் க் ச் ட் த் ப் ற் - என்ற வல்லினப்புள்ளிகள் முறையே மயங்கும்.

அவற்றுள், ண் ன் என்பனவற்றின் முன் க் ச் ஞ் ப் ம் ய் வ் என்ற மெய்களும் மயங்கும்.

ஞ் ந் ம் வ் என்ற மெய்களின் முன் யகரமும் மயங்கும்; அவற்றுள் மகரத்தின் முன் வகரமும் மயங்கும்.

ய் ர் ழ் என்பனவற்றின்முன் க் ச் த் ந் ப் ம் ய் வ் என்பனவும் ஙகரமும் மயங்கும் - என்று மெய்ம்மயக்கம் கூறப்படுகிறது.

இம்மெய்மயக்கத்தை நச். ஒருமொழிக்கண்ணது என்பர்; ஏனையோர் இருமொழிக்கண்ணது என்பர். (தொ.எ. 22-30 நச்).

நூல்மரபு: சொற்பொருள் -

{Entry: B02__225}

இசைப்பதும் ஒலிப்பதுமாகிய ஒலியெழுத்துக்களின் மரபு களை உணர்த்தும் பகுதி- என்பது இத்தொடரின் பொருள். இஃது ஆறன் தொகை; அன்மொழித் தொகையான், எழுத் தொலிகளைப் பற்றிய இலக்கணம் கூறும் இயலை உணர்த்தி நின்றது. நூல் என்பதன் இயற்பொருள் ஒலியெழுத்து. அது ‘சினையிற் கூறும் முதலறிகிளவி’ என்னும் ஆகுபெயரான், புத்தகமாகிய நூலினை வழக்கின்கண் உணர்த்தலாயிற்று. மரபு என்பது மருவுதல் என்னும் தொழிற்பெயரின் அடியாகப் பிறந்த குறியீட்டுச் சொல்; தொன்றுதொட்டு நியதியாக வருதல் என்னும் பொருட்டு. அஃது ஈண்டுத் தமிழ்நெறி உணர்ந்த சான்றோரான் தொன்றுதொட்டு வழங்கப்பெற்று வரும் இலக்கண நெறியை உணர்த்தி நின்றது என்க. எனவே, இவ்விய லுள் கூறப் பெறும் எழுத்தொலி மரபுகள் தமிழ்மொழிக்கே உரியவை என்பது பெறப்படும். (தொ. எ. பக். 72 ச. பால.)

நூல்மரபு தனியெழுத்துக்களின் இயல்பே கூறுதல் -

{Entry: B02__226}

முதல் நூற்பா - முதலெழுத்து, சார்பெழுத்து: தொகை ; 2 - சார் பெழுத்துக்களின் பெயர்;3 - 13 - எழுத்துக்களின் மாத்திரை அளவு முதலாயின; 14 - 18 - சில எழுத்துக்களின் வரிவரிவு; 19 - 21 - மெய்யெழுத்துக்களின் வகை; 22 - 30 - எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்குமாறு; 31, 32 - சில உயிரெழுத்துக் களுக்கு வேறு பெயர்; 33 - எழுத்துக்களின் அளவினைக் குறித்துப் பிறநூற் கொள்கை;

இவ்வாறு நூல் எழுதுதற்கு அடிப்படைக் காரணமாகிய தனி யெழுத்துக்களின் இயல்பே நூல்மரபில் கூறப்பட்டுள்ளது. (எ. ஆ. பக். 3)

நூல்மரபு நுவல்வன -

{Entry: B02__227}

எழுத்து 30, சார்ந்து வரும் எழுத்து 3, குற்றுயிர் 5, நெட்டுயிர் 7, மாத்திரை நீளுமாறு, மாத்திரைக்கு அளவு, உயிர் 12, மெய் 18, உயிர்மெய்க்கு அளவு, மெய் சார்பெழுத்து இவற்றின் அளவு, மகரக் குறுக்கம், அதன் வடிவு, மெய்யின் இயற்கை, எகர ஒகர இயற்கை, உயிர்மெய் இயல்பு, உயிர்மெய் ஒலிக்கு மாறு, வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மெய்வகை, மெய்ம்மயக்கம் பற்றிய மரபு, சுட்டு, வினா, உயிரும் மெய்யும் வரம்புமீறி ஒலிக்கும் இடம் - என்பன நூல்மரபினுள் கூறப் பட்டுள்ளன. (தொ. எ. 1 - 33 நச்.)

நூல்மரபு மூன்றதிகாரக் கருத்தும் கொண்டமை -

{Entry: B02__228}

எழுத்துக்களின் பெயரும் முறையும் எழுத்ததிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியன. எழுத்ததிகாரத்துக் கூறிய முப்பத்துமூன்றனைப் பதினைந்து ஆக்கி ஆண்டுத் தொகை கோடலின், தொகை வேறாம். அளவு, செய்யுளியற்கும் எழுத்திகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும் கூறிய மாத்திரை இரண்டிடத் திற்கும் ஒத்த அளவு; ஆண்டுக் கூறும் செய்யுட்கு அளவு கோடற்கு எழுத்ததிகாரத்துக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எ. 33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறிந்தொழுகு மாற்றான் உணரப்படும். இன்னும் குறிலும் நெடிலும் மூவகை இனமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. முறையும் எழுத்ததிகாரத்திற்கும் செய்யு ளியற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் எழுத்ததி காரத்திற்கே உரியனவாகக் கூறியன. ‘அம்மூவாறும்’ (எ. 22) என்னும் சூத்திரம் முதலியவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின், சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம் மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் கூறலின் இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று. (தொ. எ. 1 நச். உரை)

நூற்றொன்று..... நூற்றொன்பது: புணர்நிலை -

{Entry: B02__229}

நூறு நிலைமொழியாக, வருமொழிக்கண் ஒன்றுமுதல் ஒன்பது ஈறாகிய எண்ணுப்பெயர் வரின், இடையே றகரஒற்று மிக நிலைமொழி ‘நூற்று’ என்று நிற்ப, ஒன்று முதலிய உயிர் முதல் மொழிகள் வருமொழியாகுமிடத்துக் குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். கொடுப்பவே, நூறு + ஒன்று = நூற்றொன்று எனப்புணரும். நூற்று + மூன்று, நூற்று + நான்கு இவை இயல்பாகப் புணரும்.

நூற்பாவுள் ‘ஈறு சினை ஒழிய’ என்பது இறுதிச்சினையாகிய ‘று’ என்ற எழுத்துக் கெடாது நிற்ப என்று பொருள்படும்.

‘ஒழியா’ என்பது பாலசுந்தரனார் பாடம். அதன் நுட்பத் தினையும் உணர்க. (எ. ஆ. பக். 176, தொ. எ. 472 நச்.)

நூறாயிரம், நிலைமொழிகளான ஒன்று முதல் ஒன்பதுகாறும் உள்ளவற்றொடு புணர்தல் -

{Entry: B02__230}

ஒன்றுமுதல் ஒன்பான் நிலைமொழிகளாக, வருமொழியாக ‘நூறாயிரம்’ வரும்வழி, நூறு என்னும் வருமொழியொடு முடிந்தாற் போலவே விகாரம் எய்தி முடியும்.

வருமாறு : ஒன்று + நூறாயிரம் = ஒருநூறாயிரம்; இரண்டு + நூறாயிரம் = இருநூறாயிரம்; மூன்று + நூறாயிரம் = முந்நூறாயிரம்; நான்கு + நாறாயிரம் = நானூ றாயிரம்; ஐந்து + நூறாயிரம் = ஐந்நூறா யிரம்; ஆறு + நூறாயிரம் = அறுநூறாயிரம்; ஏழ் + நூறாயிரம் = எழுநூறாயிரம்; எட்டு + நூறா யிரம் = எண்ணூறாயிரம்; ஒன்பது + நூறாயிரம் = ஒன்பதினூறாயிரம்.

நூறு, நிலைமொழிகளான ஒன்று முதல் ஒன்பான்காறும் உள்ளவற்றொடு புணர்தல் -

{Entry: B02__231}

ஒன்று + நூறு = ஒருநூறு - (தொ. எ. 460 நச்.)

இரண்டு + நூறு = இருநூறு - (தொ. எ. 460 நச்.)

மூன்று + நூறு = முந்நூறு - (தொ. எ. 461 நச்.)

நான்கு + நூறு = நானூறு - (தொ. எ. 462 நச்.)

ஐந்து + நூறு = ஐந்நூறு - (தொ. எ. 462 நச்.)

ஆறு + நூறு = அறுநூறு - (தொ. எ. 460 நச்.)

ஏழ் + நூறு = எழுநூறு - (தொ. எ. 392 நச்.)

எட்டு + நூறு = எண்ணூறு - (தொ. எ. 460 நச்.)

ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் - (தொ. எ. 463 நச்.)

நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் ஒன்றியற்கிழமை யாதல் -

{Entry: B02__232}

தொழிற்பண்பும் குணப்பண்பும் ஒருபொருளினின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையன ஆதலின், இவை ஆறாம் வேற்றுமைத் தற்கிழமைப் பொருளில் ஒன்றியற்கிழமை என்ற பகுப்பின்பாற் பட்டன.

நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் அச்சொல்லொடு வேறல்லதாக, அச்சொல்லொடு பிரிக்கமுடியாத தொடர் புடையது ஆதலின் அஃது ஒன்றியற் கிழமைத்தாயிற்று, நிலத்தது அகலம் என்புழி அகலம் நிலத்தினின்று பிரிக்க முடியாது ஒன்றுபட்டிருப்பது போல.

காடு - நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் (டகரம் பற்றுக் கோடு)

இச்சொல்லுள் ஈற்றுக் குற்றியலுகரம் பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளமை காண்க. (தொ. எ. 36 நச். உரை)

நெட்டெழுத்து வேறு பெயர்கள் -

{Entry: B02__233}

நெடுமை எனினும், தீர்க்கம் எனினும் நெட்டெழுத்து என்னும் ஒருபொருட்கிளவி. (மு. வீ. எழுத். 11)

‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதல்’ -

{Entry: B02__234}

ண் ன் ம் ல் ள் என்ற ஐந்து ஒற்றுக்களும் தனிநெடிலை அடுத்து நிலைமொழி இறுதியில் வர, வருமொழிக்கண் முதலில் நகரம் வரின், நிலைமொழி ஈற்று ஒற்றுக் கெடும். வருமொழிக்கண் முதலில் தகரம் வரின், ல் ள் ஒற்றுக்கள் கெடும்.

எ-டு : கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் = தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; பால் + நன்று = பானன்று; கோள் + நன்று = கோணன்று; பால் + தீது = பாறீது; கோள் + தீது = கோடீது.

நெடிலுக்குக் கூறிய விதி குறிலிணை, குறில் நெடில் இவற்றுக்கும் ஒக்கும்.

எ-டு : விரல் + தீது = விரறீது, குறள் + நன்று = குறணன்று

வரால் + தீது = வராறீது, பரண் + நன்று = பரணன்று

(தொ. எ. 160 நச்.)

நெடில் -

{Entry: B02__235}

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் உயிர்நெடிலாம். இவை 18 மெய்யுடன் கூட 18 x 7 = 126 உயிர்மெய் நெடிலாம். இவை தனித்தனி இரண்டுமாத்திரை பெறும். அளபெடைக்கண் ஐகார நெடிலுக்கு இகரமும், ஒளகார நெடிலுக்கு உகரமும் இனக்குறிலாகக் கொள்ளப்படும்.

எ-டு : விலைஇ, கௌஉ.

நெடில், நெடுமை, நெட்டெழுத்து என்பன ஒருபொருளன. (நன். 65)

நெடில் உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியுள் சில -

{Entry: B02__236}

நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் சில வருமொழியொடு புணருமிடத்து வேற்றுமையில் இனஒற்று (ட், ற்) மிகாமையும், அல்வழியில் மிகுதலும் உளவாம்.

எ-டு :

‘காடகம் இறந்தார்க்கே’ (யா.வி. மேற்.)

‘நாடு கிழவோனே’ ( பொருந. 248

‘கறை மிடறணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)

இவை வேற்றுமைக்கண் மிகாவாயின.

(மிகுதலாவது டற ஒற்று இரட்டுதலான் வரு மிகுதி.)

காட்டரண், குருட்டுக் கோழி, முருட்டுப் புலையன்; களிற்றி யானை, வெளிற்றுப் பனை, எயிற்றுப்பல்; இவை அல்வழிக் கண் மிக்கன. வெருக்கு க் கண், எரு த் துக்கால் (செவி தலை புறம்) - எனப் பிற மெய்கள் மிக்கன. (நன். 182 மயிலை.)

நெடில்தொடர்க் குற்றியலுகரம் -

{Entry: B02__237}

மொழியின் ஈற்றெழுத்து உகரம் ஏறிய வல்லொற்று ஆறனுள் (கு சு டு து பு று) ஒன்றாக, அயலெழுத்துத் தனிநெடிலாக இருப்பின், அவ்வீற்று உகரம் நெடில்தொடர்க் குற்றிய லுகரம் எனப்படும். இதனைத் தொல். ஈரெழுத்தொரு மொழிக் குற்றியலுகரம் என்னும்.

எ-டு : நாகு, காசு, காடு, காது, வெளபு, யாறு (நன். 94)

நெடிலோடு உயிர்த்தொடர் இரட்டல் -

{Entry: B02__238}

டகர றகர மெய்களை ஊர்ந்து வரும் குற்றியலுகரம் நிற்கும் நெடில்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் உயிர்த் தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் நாற்கணமும் வரு மிடத்து, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் டகர றகர ஒற்றுக்கள் பெரும்பான்மையும் இரட்டும்.

எ-டு : ஆடு + கால், மயிர், வலிமை, அடி = ஆட்டுக்கால், ஆட்டுமயிர், ஆட்டு வலிமை, ஆட்டடி

பாறு + கால், மயிர், வலிமை, அடி = பாற்றுக்கால், பாற்றுமயிர், பாற்றுவலிமை, பாற்றடி

முருடு + கால், நிறம், வலிமை, அடி = முருட்டுக்கால், முருட்டுநிறம், முருட்டுவலிமை, முருட்டடி.

முயிறு + கால், நிறம், வலிமை, அடி = முயிற்றுக்கால், முயிற்றுநிறம், முயிற்றுவலிமை, முயிற்றடி.

சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், சிறு பான்மை அல்வழிக்கண் இரட்டுதலும், சிறுபான்மை இருவழி யிலும் பிற ஒற்று இரட்டுதலும் கொள்க.

எ-டு : நாடு கிழவோன், ‘கறைமிட றணியலும் அணிந் தன்று’ (புறநா. கடவுள்.) - வேற்றுமையில் இரட்டா வாயின.

காட்டரண், களிற்றியானை - அல்வழியில் இரட்டின.

வெருகு + கண் = வெருக்குக் கண் - வேற்றுமை

எருது + மாடு = எருத்துமாடு - அல்வழி பிற ஒற்றுக்கள் இரட்டின.

நெடிலோடு உயிர்த்தொடர்க்கண் டகர றகர ஒற்று இரட்டாமை -

{Entry: B02__239}

எ-டு :

‘காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’ (பொருந. ஈற்றடி)

‘காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண்’ (யா. வி. மேற்.)

‘கறை மிடறு அணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)

இவை வேற்றுமைப் புணர்ச்சி. (நன். 183 சங்கர.)

நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம் -

{Entry: B02__240}

சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும் முயற்சியால் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பது ஒன்றேனும் எழுத்தியல் தழா ஓசை போலக் கொள்ளினும் கொள்ளற்க, எழுத்தேயாம் என்று ஒற்றின்பாற்படுத்தற்குப் ‘புள்ளி’ எனப் பெயர் பெறுதலா னும், உயிரும் ஒற்றுமாகிய இரண்டிற்குமிடையே வைக்கப் பட்டது. (இ. வி. 8 உரை)

நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம் பற்றி வீரசோழியத்திற் கண்டது -

{Entry: B02__241}

ஆய்தம் உயிரையும் மெய்யையும் சார்ந்து இடையே வருதலின், தமிழ் நெடுங்கணக்கில் உயிர் பன்னிரண்டையும் அடுத்து மெய் பதினெட்டன் முன்னர் உயிர்க்கும் மெய்க்கும் நடுவே வைக்கப் பட்டது. (ஆய்தம் உயிர்போல அலகு பெற்றும் மெய் போல அலகு பெறாமலும் செய்யுளுள் வழங்கும் இரு நிலை மையும் உடைமையால், அஃது உயிரும் மெய்யுமாகிய அவற்றிடையே வைக்கப்பட்டது எனலாம்) (வீ. சோ. சந்திப். 1)

நெடுங்கணக்கின் அமைப்பு முறை -

{Entry: B02__242}

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாதலின் முதற்கண் வைக்கப்பட்டது. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பான் னகரம் பின்வைத்தார். குற்றெழுத்துக்களை முன் னாகக் கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின்.

அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. எகரம் அதன் பின் வைத்தார், அகர இகரங்களொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்களின் இனமான குற்றெழுத்து இலவேனும், பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஒளகாரங்கள் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு கூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின் பின்வைத்தார். இன்னும் அஆ, உஊ, ஒஓ ஒள - இவை தம்முள் வடிவு ஒக்கும்; இ ஈ ஐ வடிவு ஒவ்வா.

இனி, ககாரஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார நகாரமும், பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதல்அண்ணமும், இடைநா வும் இடையண்ணமும், நுனிநாவும் நுனிஅண்ணமும், இதழ் இயைதலும் ஆகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞ ண ந ம என இம்முறையே வைத்தார். பிறப்புஒப்புமையானும், னகரம் றகரமாகத் திரிதலானும் றகாரமும் னகாரமும் சேரவைத்தார். இவை தமிழ் எழுத்து என்று அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்.

இனி இடையெழுத்துக்களில் யகரம் முன் வைத்தார், அஃது உயிர் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணம் கண்ணுற்ற அடையப் பிறத்தலின். ரகரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதே னும் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்முள் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கால் வலிது - சொல் வலிது என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள் பெரும்பான்மை என்பது பற்றி, லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் இயைபில வேனும், ‘இடையெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்த இன்பத்திற்கு இயைபுடைமை பற்றிச் சேரவைத்தார் போலும். (தொ. எ. 1 நச். உரை)

(எழுத்துக்களின் முறை வைப்பு (2) - காண்க.)

‘நெடுநீர்மை அளபு’ என வீரசோழியம் குறிப்பிடுவது -

{Entry: B02__243}

வடமொழி மரபை ஒட்டி ஒலி நீண்ட நெட்டெழுத்தையே அளபெடை என்கிறது வீரசோழியம். நெடுநீர்மையுடைய தாவது உயிரளபெடை. (ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு நெடிலைச் சார்ந்தொலிக்கும் குறிலே அளபெடை யெழுத் தாம்). (வீ. சோ. சந்திப். 2)

நெடுமுதல் குறுகாத இயல்பான சாரியைகள் புணருமாறு -

{Entry: B02__244}

தம் நம் நும் - என்ற சாரியை இடைச்சொற்கள் இயல்பாக அமைந்தவை. அவை தாம் நாம் நீஇர் என்பவற்றின் திரிபு அல்ல.

எல்லாம் எல்லீர் எல்லார் - என்பன உருபேற்குமிடத்து இடையே வரும் நம் நும் தம் என்பன, நாம் நீஇர் தாம் என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து நம் நும் தம் என நெடுமுதல் குறுகி அகரச்சாரியை பெறுமாறு போல, அகரச்சாரியை பெற்று, வருமொழியாக வரும் உருபொடு புணரும்.

(ஈண்டு உருபுகள் குவ்வும் அதுவும் என்க.)

வருமாறு : எல்லாம் + கு > எல்லாம் + நம் + அ + கு + உம் = எல்லாநமக்கும்; எல்லீர் + கு > எல்லீர் + நும் + அ + கு + உம் = எல்லீர் நுமக்கும்; எல்லார் + கு > எல்லார் + தம் + அ + கு + உம் = எல்லார் தமக்கும் என்று, இறுதியில் உம்முச்சாரியை பெற்றுப் புணரும்.

எனவே, நம் நும் தம் என்ற சாரியை இடைச்சொற்கள் வேறு; நாம் நீஇர் தாம் என்பன முதல் குறுகி வரும் நம் நும் தம் என்பன வேறு என்பது. (தொ. எ. 161 நச். உரை)

நெடுமுதல் குறுகும் மொழிகள் -

{Entry: B02__245}

யான் நீ தான் யாம் நாம் தாம் என்பன உருபேற்குமிடத்து நெடுமுதல் குறுகி என் நின் தன் எம் நம் தம் என்று நிற்பனவாம்.

எ-டு : யான் + கு > என் + அ + கு = எனக்கு

நீ + கு > நின் + அ + கு = நினக்கு (தொ. எ. 161 நச்.)

யான் யாம் நாம் நீ நீர் தான் தாம் என்பன நெடுமுதல் குறுகுவன. இவை முறையே நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம் என்றாகி வேற்றுமையுருபு ஏற்கும். என்னை என்னால் எனக்கு என்னின் எனது என்கண் என ஆறுருபுகளோடும் பிறவற்றையும் ஒட்டிக் காண்க. (நான்காவதும் ஆறாவதும் வருவழி, நெடுமுதல் குறுகிநின்றவை அகரச்சாரியை பெறும் என்க.) (நன். 247)

நெல் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__246}

நெல் என்ற பொருட்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் லகரம் றகரமாகப் புணரும்.

எ-டு : நெல் + கடிது = நெற்கடிது - அல்வழி

நெல் + கடுமை = நெற்கடுமை - வேற்றுமை

(தொ. எ. 371 நச்.)

நெல் செல் கொல் சொல் : முடியுமாறு -

{Entry: B02__247}

இந்நான்கு பெயர்களும் வன்கணம் வருவழிப் பொதுவிதியான் (இயல்பாதலும் லகரம் றகரமாகத் திரிதலும் ஆகிய) உறழ்ச்சி பெறாது, அல்வழிக்கண்ணும் வேற்றுமைப் புணர்ச்சி போல லகரம் றகரமாகத் திரிந்து முடியும்.

வருமாறு : நெற்கடிது செற்கடிது கொற்கடிது சொற் கடிது, சிறிது, தீது, பெரிது.

(செல் - மேகம்; கொல் - கொல்லுத்தொழில்; அன்றிக் கொல்லனுமாம்). (நன். 232 சங்கர.)

‘நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி’ -

{Entry: B02__248}

ஒருவழிப்பட வாராத சொல்தன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்கள். இவை உயிரீற்றவாகவும், புள்ளியீற்றவாகவும் வரும்; குறிப்புப் பற்றியும், இசை பற்றியும், பண்பு பற்றியும் வரும். இவை உலகவழக்கில் மருவி வருவன. இவற்றை நிலை மொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறவேண்டுவது இன்று.

எ-டு : கண் விண்ண விணைத்தது, விண் விணைத்தது - குறிப்பு; ஆடை வெள்ள விளர்த்தது, வெள் விளர்த் தது - பண்பு; கடல் ஒல்ல ஒலித்தது, ஒல் ஒலித்தது - இசை; விண்ண, வெள்ள, ஒல்ல : உயிரீறு; விண், வெள், ஒல் : புள்ளியீறு.

விண்ண விண், வெள்ள வெள், ஒல்ல ஒல் என ஒவ்வோர் உரிச்சொல்லும் உயிரீறாகவும் புள்ளியீறாகவும் வருதலின் ஒன்றன்கண் அடக்கலாகாமையின், ‘நெறிப்பட வாரா’ வாயின. (தொ. எ. 482 நச். உரை)

நேமிநாத எழுத்ததிகாரம் -

{Entry: B02__249}

நேமிநாதம் என்னும் சின்னூலில் எழுத்ததிகாரம் இயல்பகுப் பின்றி உள்ளது. இதன்கண் எழுத்துக்களின் முதல்வைப்பு, துணைவைப்பு, பிறப்பு, முதல்நிலை, இறுதிநிலை, வடமொழி யாக்கம், வடமொழி எதிர்மறை முடிபு, பொதுப்புணர்ச்சி, உடம்படுமெய், உயிரீற்றுச் சந்திமுடிவு, ஒற்றிற்றுச் சந்தி முடிவு, குற்றியலுகரச் சந்திமுடிவு, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, பகுபத அமைப்பு முதலியவற்றைக் காணலாம். இஃது இருபத்து நான்கு வெண்பாச் சூத்திரங்களால் ஆகியது.

நேமிநாதம் -

{Entry: B02__250}

திரிபுவன தேவன் என்ற பெயரிய முதற்குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1118) காலத்தில் தொண்டைநாட்டுப் பொன்விளைந்த களத்தூர் எனப்பட்ட களந்தை என்னும் ஊரில் தோன்றிய குணவீரபண்டிதர் என்னும் சமணச் சான்றவர், தென் மயிலா புரி நீல்நிறக்கடவுள் நேமிநாதர் பெயரால், தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு எழுத்து - சொல் - என்ற இரண்டு அதிகாரங்களைப் பாயிரத்தொடு 97 வெண்பாக்க ளால் நேமி நாதம் என்னும் இலக்கணநூலாக இயற்றினார். இந்நூல் சின்னூல் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதன் எழுத்ததிகாரத்தே இயல்பகுப்பு இல்லை; சொல்லதிகாரம் தொல்காப்பியச் சொல்லதிகாரம் போல ஒன்பது இயல் களைக் கொண்டது. இந்நூற்கு ‘வயிரமேக விருத்தி’ என்ற அழகிய சுருக்கமான உரை உள்ளது.

நொ, து மூவினத்தொடும் புணருமாறு -

{Entry: B02__251}

நொ, து இவ்விரண்டும் (முன்னிலை ஒருமை ஏவல்) வினை யாதலின், நொக்கொற்றா நொச்சாத்தா நொத்தேவா நொப் பூதா - எனவும், நொஞ்ஞெள்ளா நொந்நாகா நொம் மாடா எனவும், நொய்யவனா நொவ்வளவா - எனவும், மூவினம் வருவழியும் அவ்வம்மெய்யே மிக்கன. து என்பதனொடும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. (நன். 158, 165 சங்கர.)

ப section: 134 entries

ப்ரக்ருதி பாவ ஸந்தி -

{Entry: B02__252}

திரிந்த புணர்ச்சிகள் மூன்று. அவை மெய் பிறிதாதல் (ஆதேசம்), குன்றல் (லோபம்), மிகுதல் (ஆகமம்) என்பன.

மூன்று திரிபுகளுள், யாதானும் ஒன்று வரவேண்டிய இடத்தில் அது வரப்பெறாதே இயல்பாகப் புணர்வது இயல்புபுணர்ச்சி எனப்படும். இது வடமொழியில் பிரகிருதி பாவ ஸந்தி எனப்படும்.

மெய்பிறிதாதலைத் திரிதல் எனவும், குன்றலைக் கெடுதல் எனவும், மிகுதலைத் தோன்றல் எனவும், திரிந்த புணர்ச்சியை விகாரப் புணர்ச்சி எனவும் நன்னூல் கூறும். (எ. ஆ. பக். 92)

பகாப்பதம் -

{Entry: B02__253}

பகுபதம் போலப் பகுத்துப் பார்த்தால் பகுதி விகுதி முதலிய பயன் விளைவின்றி, இடுகுறியாய்ப் பகுக்கப்படாமல் பகுதி மாத்திரமேயாய் நிற்கும் பெயர் - வினை - இடை - உரி - என்ற நால்வகைச் சொல்லும் பகாப்பதமாம்.

எ-டு : நிலம், நீர்; நட, வா; மன், கொன்; உறு, கழி (நன். 131)

பகாப்பதம், பகுபதம் தன்னொடும் பிறிதொடும் புணர்தல் -

{Entry: B02__254}

எ-டு : பொன்முடி, பொன்கொள் - பெயரொடு பெயர், பெயரொடு வினை; வா போ, உண் சாத்தா - வினை யொடு வினை, வினையொடு பெயர்; ‘அது மற்றம்ம தானே’ (சீவக. 2790) - இடையோடு இடை; ‘அது கொல் தோழி காம நோயே’ (குறுந். 5) - பெயரோடு இடை; ‘கொம்மைக் குழகு ஆடும்’ - உரியோடு உரி; ‘ மல்லற் செல்வமொடு ’ - உரியொடு பெயர்;

பதம் நான்கும் தனித்தனியே தன்னொடும் பிறிதொடும் புணர்ந்தன.

மலையன் மன்னவன், மலையன் மன் - பெயர்ப் பகுபதத்தொடு பெயர்ப்பகுபதமும் பெயர்ப்பகாப்பதமும்.

உண்டான் தின்றான், உண்டான் சாத்தன் - வினைப் பகுபதத் தொடு வினைப்பகுபதமும் பெயர்ப் பகாப் பதமும்.

பகுபதம் தன்னொடும் பிறிதொடும் தனித்தனியே புணர்ந்தன.

(நன். 150 மயிலை.)

பகாப்பதம் போல்வன -

{Entry: B02__255}

பகாப்பதம் பகுக்கப்படாத இயல்பின்கண்ணே மிக்குச் செல்லும் எனவே, பின்வரும் பதங்கள் முடிந்த இயல்பின் கண்ணும் சிறுவரவிற்றாகப் பகாப்பதம் கொள்ளப்படும். அவை பகுக்கப்படினும் பகாப்பதம் போல்வனவே என்றவாறு. அவை வருமாறு :

அவன், அவள், அவர், தமன், தமள், தமர் என்றாற்போல்வன. இவை ஈறு பகுக்கப்படினும் பகுதி வேறு பொருள்படாதன.

சாத்தன், கொற்றன் - என்றாற் போல்வன சாத்தையுடையான் சாத்தன், கொற்றை யுடையான் கொற்றன் என்றாற் போல ஈறு பகுக்கப்பட்டுப் பகுதி வேறு பொருள்படும்; இடுகுறிமாத்திரை யாயே நிற்குமிடத்து அவ்வாறு பொருள்படா.

கங்கை கொண்ட சோழபுரம், சோழனலங்கிள்ளி, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றாற் போல்வன நிலைமெழி வருமொழியாகப் பகுக்கப்பட்டுப் பல பொருள் உணர்த்தினும், தொன்றுதொட்டு ஒருபிண்டமாய ஒரு பொருளையே உணர்த்தி நிற்பன.

மேலும், சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்றாற்போலும் விரவுப்பெயர்கள் பகுதிவிகுதியாகப் பகுக்கப்படினும், விகுதி வகையான் உயர்திணை ஒருமையே யன்றி அஃறிணை ஒருமையும் இவை உணர்த்தும் என்றற்கு விதி இல்லாமையால், உயர்திணையோடு அஃறிணை விரவி வரும் விரவுப்பெயர் களும் சிறுபான்மை பகாப்பதம் போல்வனவாம். (இ. வி. எழுத். 40)

பகுதிப்பொருள் விகுதி -

{Entry: B02__256}

தமக்கென ஒருபொருளின்றிப் பகுதியின் பொருளே தம்பொரு ளாய்ப் பகுதியோடு இணைந்து பகுதித்தன்மைப் பட்டுப் பின் இடைநிலை விகுதிகளோடு இணைந்து சொல் லாக்கத்துக்கு உதவுவன. இரு, இடு முதலியன பகுதிப்பொருள் விகுதி. எழுந்திருந்தான், எழுந்திட்டான் என்புழி, இரு இடு என்பன பகுதிப்பொருள் விகுதியாய், முதனிலையோடு இயைதற்குரிய துச்சாரியை பெற்று எழுந்திரு எழுந்திடு - என்று நின்றவழி, அவையும் முதனிலைத் தன்மைப்பட்டு மேல்வரும் விகுதி முதலியன ஏற்கும். எழுந்திருக்கின்றான் எழுந்திருப்பான் எழுந்திடுகின்றான் எழுந்திடுவான் என்பன முறையே நிகழ்காலம் எதிர்காலம் காட்டும். சொற்களில் இரு இடு - என்ற பகுதிப்பொருள் விகுதி வந்தமைக்கு எடுத்துக்காட்டாம். (சூ. வி. பக். 41)

பகுதியை இடைப்பகாப்பதம் எனல் -

{Entry: B02__257}

‘முதனிலைப் பெயர்வினை’ என்னாது ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றமையின், இருவகைப் பகுபதத்துள்ளும் (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்) பகுதியும் ஓர் உறுப்பு ஆதலின் விகுதி முதலியவற்றொடு தொடர்ந்து நிற்பதன்றிப் பிரிந்து நில்லாமையானும், பிரிந்தவழிப் பகுதியாய் உறுப்பின் பொருள் தாராமையானும் இருவகைப் பகுதி உறுப்புக்களும் ‘இடைப்பகாப்பதம்’ என்பது பெற்றாம். (நன். 134 சங்கர.)

பகுதி முதலிய ஆறு -

{Entry: B02__258}

பகுதி, பெரும்பாலும் வேறுபடாது பகுபதத்தின் முதற்கண் நிற்பது; விகுதி, வேறுபட்டு இறுதிக்கண் நிற்பது. இடைநிலை, பெரும்பாலும் இனையது இத்துணையது என அளத்தற்கு அரிதாய்ப் பதம் முடிப்புழிக் காலமும் பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவது. சாரியை, அன் ஆன் முதலாக எடுத்தோதப்பட்டு எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாகச் சிறுபான்மை பொருள்நிலைக்கு உதவிசெய்து பெரும்பாலும் இன்னொலியே பயனாக வருவது. சந்தி, இன்னது வந்தால் இன்னது ஆம் எனப் புணர்வழித் தோன்றும் செய்கை. விகாரம், செய்யுள் தொடையும் பதத்துள் அடிப்பாடும் ஒலியும் காரணமாக வலித்தல் மெலித்தல் முதலாக ஆக்குவது. இஃது இடைநிலை முதலியவற்றால் முடியாதவழி வருவது. (இ. வி. எழுத். 42 உரை)

தன் இயல்பினான் நிற்பது பற்றிப் பகுதி என்றும், அவ்வாறு நிற்கும் பகுதிப்பொருளைத் தன்னகப்படப் பின்னின்று விகாரப்படுத்தலால் விகுதி என்றும், பகுதிவிகுதிகளின் இடை நிற்பதால் இடைநிலை என்றும், பகுதி விகுதிகளைச் சார்ந்து இயைந்து நிற்றலால் சாரியை என்றும், நிலைமொழி வரு மொழி சந்தித்ததால் உண்டாகிய தோன்றல் திரிதல் கெடுதல் களைச் சந்தி என்றும், செய்யுள் அடி தொடை முதலிய வற்றால் வலித்தல் மெலித்தல் முதலிய விகாரப்படுதலால் விகாரம் என்றும் காரணக்குறியாய் வந்தன. (நன். 133 இராமா.)

பகுபதம் -

{Entry: B02__259}

இடுகுறியாய் நிற்கும் பகாப்பதம் போலாது, பகுதி விகுதி யாகவும் அவற்றோடு ஏனைய உறுப்புக்களாகவும் பகுக்கப் படும், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னு மிவை பற்றி இவை காரணமாக வரும் பெயர்களும், தெரிநிலை யாயும் குறிப்பாயும் காலத்தைக் கொள்ளும் முற்று வினை யெச்சம் பெயரெச்சம் என்னும் வினைச்சொற்களும் பகுபத மாம். வினைமுற்றுப் பகுபதம் எனவே, அம்முற்று வேற்றுமை கொள்ள வரும் வினையாலணையும் பெயரும் பகுபதமாம். புளி, கடு முதலிய ஆகுபெயர்கள் காரணத்தான் வருமேனும் விகுதி முதலிய உறுப்பு இன்மையின் அவை பகுபதம் ஆகா. நட, வா முதலியன விகுதியொடு புணராமையின் பகுபதம் ஆகா எனக் கொள்க.

எ-டு : பொன்னன், அகத்தன், ஆதிரையன், கண்ணன், கரியன், ஊணன் - பெயர்ப் பகுபதம் ஆறு.

நடந்தான், நடக்கின்றான், நடப்பான் - தெரிநிலை உடன்பாட்டு வினைமுற்று.

நடந்த, நடக்கின்ற, நடக்கும் - தெரிநிலை உடன் பாட்டுப் பெயரெச்சம்.

நடந்து, நடக்க, நடக்கின் - தெரிநிலை உடன்பாட்டு வினையெச்சம்.

நடவான் - எதிர்மறை வினைமுற்று

நடவாத; நடவாமல் - எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கள்

பொன்னன், அகத்தன், ஆதிரையன் - குறிப்பு வினைமுற்று

கரிய, பெரிய; அன்றி, இன்றி - குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்கள்

நடந்தான், நடந்தவன் - தெரிநிலை வினையா லணையும் பெயர்

பொன்னன்.... ஊணன் - குறிப்பு வினையாலணையும் பெயர். (நன். 132 சங்.)

பகுதி விகுதி இடைநிலைகள் -

{Entry: B02__260}

பொருள் ஆதி அறுவகைப் பகாப்பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம். போல், நிகர் - இவை இடைப் பகுதிகளாம். சால், மாண் - இவை உரிப் பகுதிகளாம். செம்மை, சிறுமை - இவை பண்புப் பெயராகிய விகாரப் பகுதிகளாம். புக்கான், பெற்றான், விட்டான் என்றும் (பகுதி விகாரப்பட்டு) வரும்.

கேள், கொள், செல், தா, சா, வா, கல், சொல் - இவையும் விகாரப்பகுதிகளாம். (வினைச்சொல்லாங்கால், இவை விகாரப்படுவன.)

உழு, தொழு, உண், தின் - இவை இயல்புப் பகுதிகளாம்.

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், து, ஐ, அ - பிறவும் ஐம்பாற் பெயர்ப் பகுபத விகுதியே.

காலம் காட்டா இடைநிலைகள் ஆமாறு உணர்த்துதும்:

பெயர்ப்பகாப்பதமும் வினைப்பகாப்பதமும் ஆகிய பகுதி நிறுத்தி நச்சாரியையும் ஞச்சாரியையும் இடைநிலையாக வைத்து அவ்வப்பாலுக்குரிய விகுதியை ஈற்றின்கண்ணே தந்தது பகுபதமாம்.

கிளை இளை கடை நடை - எனப் பெயர்ப்பகுதியும், அறி துணி குறை மொழி - என வினைப்பகுதியும் நிறுத்தி, ந் ஞ் - என இடைநிலையும் அர் என இறுதிநிலையும் கூட்டிக் கிளைநர் இளைநர் கடைநர் நடைநர் - என்றும், கிளைஞர் இளைஞர் கடைஞர் நடைஞர் - என்றும், அறிநர் துணிநர் குறைநர் மொழிநர் - என்றும், அறிஞர் துணிஞர் குறைஞர் மொழிஞர் - என்றும் புணர்ந்து வருதல் காண்க.

‘நண்ணலும் நெறியே’ என்ற மிகையால், வலைச்சி வண்ணாத்தி - இவற்றுள் சகரமெய்யும் தகரமெய்யும் இடைநிலையாயின. பிறவும் அன்ன. (தொ. வி. 83 - 85 உரை)

படுத்தல் ஓசையால் பெயராதல் -

{Entry: B02__261}

தாழ்ந்த ஓசையான் கூறுவது படுத்தலோசையாம். வினையைப் பெயராக்க வேண்டிய இடத்தும் உரிச்சொல்லைப் பெயராக்க வேண்டிய இடத்தும் படுத்தலோசையால் கூறுதல் வேண்டும்.

எவன் என்பது படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ. சொ. 221 நச். உரை)

அஃது இயல்பாக வினாவினைக்குறிப்புச் சொல்.

தெவ் என்பது உரிச்சொல்லாயினும், படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ. எ. 184 நச். உரை)

‘படு’ விகுதி செயப்படுபொருள் உணர்த்தல் -

{Entry: B02__262}

‘எனப்படுப’ என்பது ‘என்’ என்னும் முதனிலைமீது செயப்படு பொருள் உணர்த்தும் ‘படு’ விகுதியும் அகரச் சாரியையும் வந்து புணர்ந்து ‘எனப்படு’ என நின்றவழி, அதுவும் முதனிலைத் தன்மைப்பட்டு, மேல் வரும் அகரவிகுதியும் பகரஇடை நிலையும் பெற்று ‘எனப்படுப’ என முடிந்த பலவறிசொல்.

‘இல்வாழ்வான் என்பான்’ (குறள் 41) என்பதனைச் செயப்படு பொருள் உணர்த்தும் படு விகுதியை விரித்தே ‘எனப்படுவான்’ என்று பொருள் செய்தலானும் படு விகுதி செயப்படுபொருள் உணர்த்தும் இயல்பிற்று என்பது பெறப்படும். (சூ.வி. பக். 40,41)

பண்புத்தொகை இருவகை -

{Entry: B02__263}

பண்பு தொக்க தொகையும், பெயர் தொக்க தொகையும் எனப் பண்புத்தொகை இருவகைப்படும். கருங்குவளை என்பது பண்பு தொக்க தொகையாம்; ஆயன் சாத்தன் என்பது பெயர் தொக்க தொகையாம். (நன். 152 இராமா.)

பண்புப் பகாப்பதங்கள் -

{Entry: B02__264}

செம்மை, சிறுமை. சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை என்பன வும், இவற்றுக்கு மறுதலையான வெண்மை கருமை பொன்மை பசுமைகள், பெருமை, அணிமை, நன்மை, தண்மை, பழைமை, வன்மை, கீழ்மை, நொய்ம்மை, இன்மை, பருமை என்பனவும் இவைபோல்வன பிறவும் பண்புப் பகாப்பதம். (நன்.134 மயிலை.)

இக்கூறிய வாய்பாடுகள் எல்லாம் சொல் நிலையால் பகுபத மாயினும், மைவிகுதிக்குப் பகுதிப்பொருளன்றி வேறுபொரு ளின்மையின், பொருள்நிலையால் பகுக்கப்படா என்பார் ‘பண்பிற் பகா நிலைப்பதம்’ என்றார். (நன். 135 சங்கர.)

பண்புப் பகுதிக்குச் சிறப்புவிதி -

{Entry: B02__265}

பண்புப் பகுதிகளாகிய கரு, செவ் முதலியன மைவிகுதியொடு சேர்ந்து கருமை, செம்மை முதலியனவாகிப் பண்புப் பொருளி னின்றும் வேறுபொருள் வகுக்கப்படாத நிலைப்பதம் ஆகும். மைவிகுதிக்குப் பண்புப்பொருளன்றி வேறுபொருள் இன்மை யின், செம்மை கருமை முதலியன சொல்நிலையால் பகுபதம் போன்று இருப்பினும் பொருள்நிலையால் பகாப்பதமேயாம். (நன். 135 சங்கர.)

பண்புப்பகுதி புணருமாறு -

{Entry: B02__266}

செம்மை சிறுமை முதலிய பண்புச்சொற்கள் வருமொழியாக நிகழும் விகுதியோ அன்றிப் பதமோ புணரும்வழி, இறுதி விகுதியாகிய மை போதலும், பண்புச்சொல்லின் இடையே நின்ற உகரம் இகரமாதலும், அதன் முதற்கண் நின்ற குறில் நெடிலாதலும், முதற்கண் நின்ற அகரம் ஐகாரமாதலும், இடையே நின்ற வல்லொற்று இரட்டுதலும், முன்நின்ற மெய் திரிதலும், வருமொழி வல்லெழுத்திற்கு இனமான மெல் லொற்று மிகுதலும், பிறவும் உரியனவாம். ஈறுபோதல் எல்லா விகாரத்துக்கும் கொள்க.

எ-டு : நன்மை + அன் > நல் + அன் = நல்லன் - ஈறு போதல்

கருமை + அன் > கரி + அன் = கரியன் - ஈறுபோதலும் இடை உகரம் இகரம் ஆதலும்

பசுமை + அடை > பாசு + அடை = பாசடை - ஈறு போதலும், ஆதி நீடலும்

சிறுமை + உயிர் > சிற்ற் + உயிர் = சிற்றுயிர் - ஈறு போதலும், தன் ஒற்று இரட்டலும்

பசுமை + தார் > பசுந் + தார் = பசுந்தார் - ஈறு போதலும், இன ஒற்று மிகுதலும்

பசுமை + தார் > பைந் + தார் = பைந்தார் - ஈறுபோத லும், ஈற்றயல் உயிர்மெய் கெடுதலும், முதல் அகரம் ஐ ஆதலும், இன ஒற்று மிகுதலும்

செம்மை + ஆ > செம் + ஆ > செத் + ஆ > சேத் + ஆ = சேதா - ஈறு போதலும், ஈற்றயல் மகரம் தகரமாகத் திரிதலும், முதல் உயிர் நீடலும்

செம்மை + அன் = செம்மையன் - யகர உடம்படு மெய் பெற்று இயல்பாக முடிந்தது. (நன். 136)

கருங்குதிரை முதலாயின (பண்புத்தொகை ஆதலின்) பகுபதம் அல்லவேனும், பண்பு அதிகாரப்பட்டமையால் பதப்புணர்ச்- சிக்கும் ஈண்டே சொன்னார் என்க. (பண்புத்தொகையெல் லாம் பண்புப்பெயர்ப் புணர்ச்சி பெறுமாறு கொள்க). (நன். 135 மயிலை.)

பத்தின்முன் இரண்டு புணருமாறு -

{Entry: B02__267}

‘பத்து’ நிலைமொழி; ‘இரண்டு’ வருமொழி. நிலைமொழி யீற்று உயிர்மெய்யாம் தகர உகரம் கெட, ஈற்றயல் தகர ஒற்று னகர ஒற்றாக, ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி,

பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னி ரண்டு என்றாகும். (நன். 198)

பத்தின் முன் எண் நிறை அளவுப் பெயர்களும் பிற பெயர்களும் புணருமாறு -

{Entry: B02__268}

பத்து என்பதன்முன் ஒன்று முதல் பத்து ஈறாகிய எண்ணுப் பெயர்களும், ஆயிரம் கோடி என்ற எண்ணுப் பெயர்களும், நிறைப்பெயர் அளவுப்பெயர்களும், பிற பெயர்களும் வந்து புணருமிடத்து, நிலைமொழியீற்று உயிர்மெய் கெட, இன்னும் இற்றும் ஆகிய சாரியைகளுள் ஏற்றதொன்று இடையே வரும்.

வருமாறு : பதினொன்று, பதின்மூன்று, பதினாயிரம், பதின் கழஞ்சு, பதின்கலம், பதின்மடங்கு - இன்சாரியை பெற்றுப் புணர்ந்தன.

பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி, பதிற்றுத்தூணி - இற்றுச் சாரியை பெற்றுப் புணர்ந்தன.

இவ்விதி ஒன்பது என்னும் நிலைமொழிக்கும் பொருந்தும்.

வருமாறு : ஒன்பதினாயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம், ஒன்பதின் மடங்கு; ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்றுக் குறுணி

பத்துக்கோடி, ஒன்பது கோடி எனச் சாரியை பெறாது இயல் பாக முடிதலும் கொள்க. (நன். 197)

‘பத்து’ ஆயிரத்தொடு புணர்தல்

{Entry: B02__269}

பத்து என்பதனோடு ஆயிரம் புணரும்வழியும், குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டு இன்சாரியை பெற்றுப் பதினாயிரம் என
முடியும். (தொ. எ. 435 நச்)

‘பத்து’ ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்களொடு புணர்தல் -

{Entry: B02__270}

பத்து என்பதன் இறுதிக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட, இன்சாரியை இடையே வர, பத்து + இன் + ஒன்று = பதினொன்று என வரும்.

பதின்மூன்று, பதினைந்து, பதினாறு, பதினேழ், பதினெட்டு என்பனவும் அன்ன.

‘பதின் நான்கு’ - இன்னின் னகரம் கெட, வருமொழி நகரம் னகரமாய்த் திரிய, பதினான்கு என முடியும்.

பத்து + இரண்டு : ‘பத்தின் முன் இரண்டு புணருமாறு’ காண்க.

பத்து + இரண்டு என்புழி, நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட, தகர ஒற்று னகரமாகி இரட்டிப்ப, பன் + ன் + இரண்டு = பன்னிரண்டு ஆயிற்று. (தொ. எ. 433, 434நச்.)

‘பத்து’ நிறைப்பெயர் அளவுப்பெயர் இவற்றொடு புணர்தல் -

{Entry: B02__271}

பத்து நிலைமொழியாக, வருமொழிக்கண் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருங்கால், இடையே இன்சாரியை வரும்.

எ-டு : பதின்கழஞ்சு, பதின்மா, பதின்கலம், பதின்சாடி

(தொ. எ. 436 நச்.)

வருமொழி உயிராயின் இன்சாரியை ‘இற்று’ ஆகும்.

எ-டு : பத்து + இன் + அகல் = பதிற்றகல்; பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு (121 நச். உரை)

பத்து ‘பஃது’ ஆதல் -

{Entry: B02__272}

அடிப்படைச்சொல் பத்து என்பதே. பத்து என்பதன் இடையே தகரஒற்றுக் கெட அவ்விடத்து ஆய்தம் வரப் பஃது என்றாகும் என்பர் தொல்.

பஃது என்பதன் ஆய்தஒலி ஈற்றெழுத்தாகிய தகரஒலியை ஒட்டித் திரிந்து ஒலிப்பதாகும். அதுவே நாளடைவில் தகரம் போல ஒலிக்கப்படத் தொல். காலத்துக்கு முன்னரேயே பத்து என்பது இயற்சொல் போல வழக்கத்தில் மிகுந்துவிட்டது என்பதும், பஃது அதன் திரிபாகக் கொள்ளப்பட்டது என்பதும் போதரும். (எ. ஆ. பக். 172)

‘பத்து’ பிறபெயரொடு புணருமாறு -

{Entry: B02__273}

நிறையும் அளவும் அல்லாத பிறபெயர் வந்துழி, இன்சாரியை ‘இற்று’ எனத் திரிய, பதிற்றுவேலி, பதிற்றியாண்டு, பதிற்றடுக்கு, பதிற்றுமுழம், பதிற்றொன்று,பதிற்றிரண்டு, பதிற்றுநான்கு, பதிற்றைந்து, பதிற்றாறு, பதிற்றேழ், பதிற்றெட்டு, பதிற் றொன்பது, பதிற்றுப்பத்து எனப் பண்புத் தொகைக்கண் முடிந்தவாறு.

பதின்முழம் முதலாக இன்சாரியை திரியாமையும் கொள்க.

(தொ. எ. 436 நச். உரை)

‘பத்து’ வருமொழியாக, ஒன்று முதல் எட்டனொடு புணர்தல் -

{Entry: B02__274}

வருமாறு : ஒன்று + பத்து > ஒன்று + பஃது = ஒருபஃது, ஒருபது (தொ. எ. 438, 439)

இரண்டு + பத்து > இரண்டு + பஃது = இருபஃது, இருபது (தொ. எ. 438, 439)

மூன்று + பத்து > மூன்று + பஃது = முப்பஃது, முப்பது (தொ. எ. 440, 441)

நான்கு + பத்து > நான்கு + பஃது = நாற்பஃது, நாற்பது (தொ. எ. 442)

ஐந்து + பத்து > ஐந்து + பஃது = ஐம்பஃது, ஐம்பது (தொ. எ. 443)

ஆறு + பத்து > ஆறு + பஃது = அறுபஃது, அறுபது (தொ. எ. 440 நச்.)

ஏழ் + பத்து > ஏழ் + பஃது = எழுபஃது,
எழுபது (தொ. எ. 389 நச்.)

எட்டு + பத்து > எட்டு + பஃது = எண்பஃது, எண்பது (தொ. எ. 444 நச்.)

பத்தொன்பது -

{Entry: B02__275}

‘ஆசிரியர் தொல்காப்பியனார் பத்தொன்பது என்பதற்குப் புணர்ச்சி விதி கூறாமை’ காண்க. (நிலைமொழிக் குற்றுகரஈறு வருமொழி முதல் ஒகரவுயிர் ஏறிமுடியும் என்பது.)

பதம் எனப்படுவது -

{Entry: B02__276}

எழுத்து ஓரெழுத்தாகத் தனித்தோ இரண்டு முதலாகத் தொடர்ந்தோ பொருள் தருவது பதம் எனப்படும். (பதம், மொழி, சொல் இவை ஒரு பொருட் கிளவிகள்). (நன். 128)

இறிஞி - மிறிஞி எனில் எழுத்துத் தொடருமேனும் தன்னை யுணர்த்து மன்றிப் பிறபொருள் தாராமையின் பதம் ஆகாது என்பார் ‘பொருள் தரின்’ என்றார். தன்னை உணர்த்தின் எழுத்தாம்; பிறபொருளைச், சுட்டுத ற்கண்ணேயாம் சொல் என்ப ஆதலின், பொருள் என்றது பிற பொருள் என்பார் ‘உணர்த் தின்’ என்னாது ‘தரின்’ என்றார். அணு வென்னும் ஒலி நுட்பத் தால் எழுத்தானாற்போல, எழுத்தென்னும் ஒலி நுட்பத்தால் மொழியாம் என்பார் ‘பதம்’ என்றார். இப் பதவியலுக்கு மேற்கோள் ஆரியமே என்பார் மொழி என்னாது ‘பதம்’ என்றார். (நன். 128 சங்கர.)

பதவியல், புணரியல் தொடர்பு -

{Entry: B02__277}

பதவியலுள் பதங்கள் ஆமாறு உணர்த்தி, புணரியலுள் பதங்கள் தம்முள் புணருமாறு உணர்த்தினமையின் இவை தம்முள் இயைபுடையன. (நன். 150 மயிலை.)

பரசு, இங்கு, ஏது முற்றியலுகர ஈற்றன வாதல் -

{Entry: B02__278}

மழு என்ற படைக்கலத்தைக் குறிக்கும் பரசு என்பதும், பெருங் காயம் என்று பொருள்படும் இங்கு என்பதும், காரணம் என்ற பொருளில் வரும் ஏது என்பதும் வடசொற்கள் ஆதலின், ஆரியச் சொற்களுக்குக் குற்றியலுகர ஈறு இன்மையின், ஆரியச்சொற்கள் திரிந்த வடசொற்களாகிய இவை குற்றிய லுகர ஈறு ஆகாது முற்றியலுகர ஈற்ற ஆயின. (தொ. எ. 36, 152 நச். உரை)

பரசு - வழிபடு; இங்கு - தங்கு - என்று (தமிழில்) ஏவலொருமை வினையானாலும், முன்னிலைக்கண் குற்றியலுகர ஈறு வாராது என்ற கருத்தான் இவை முற்றியலுகர ஈறுகளேயாம்.

ஆரியச்சொல்லுக்குக் குற்றியலுகர ஈறு இல்லாமல் இருக்க லாம். ஆனால் அவை தமிழிற்கேற்ப வடசொல்லாகத் திரிக்கப் பட்ட நிலையில், ஏனைய தமிழ்ச்சொற்கள் போல, இங்கு ஏது தாது என்பன முதலான வடசொற்களும் குற்றியலுகர ஈற்றன என்று கோடலே பொருந்தும். (எ. கு. பக். 46)

பரிபாடை -

{Entry: B02__279}

தமிழில் உத்திவகைகள் வடமொழியில் பரிபாடை என்ற சொல்லால் வழங்கப்படும்.

‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ என்றாற்போலச் செவ்வனம் சொல்லுதல் உத்தியாம். செவ்வனம் சொல்லாது வேறொருவாற்றான் பொருந்தும் வகை உரைப்பது உத்தி வகையாம். உத்தி ‘யுக்தி’ (பொருந்தும் விதம்) என்ற ஆரியச் சொல்லின் திரிபாகும். (தொ. பொ. 665 பேரா.)

சிவஞானமுனிவர் உத்தி என்பது பரிபாடை ஆகும் என்பர். (சிவஞா. பா. வி. பக். 9)

பருந்தின் விழுக்காடு -

{Entry: B02__280}

பருந்து நடுவே விழுந்து தான் கருதிய பொருளை எடுத்துக் கொண்டு போவது போல முடிக்கப்படும் பொருளை முடித்துப்போம் இயல்பினதாகிய சூத்திரநிலை பருந்தின் விழுக்காடு எனப்படும். (‘பருந்தின் வீழ்வு’ என்பதும் அது.) (நன். 18 மயிலை.)

எ-டு : ‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக் குறுகும்’

(நன். 96)

என்னும் இச்சூத்திரம் நன். 341, 114, 227, 120 என மேல்வரும் சூத்திரங்கள் எல்லாவற்றையும் வேண்டி நின்றவாறு.

‘பல்லவை நுதலிய அகர இறுபெயர்’ -

{Entry: B02__281}

பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்ற ஐந்தும் பலவின்பாலைக் காட்டும் அகர ஈற்று அஃறிணைப் பெயர்களாம். (தொ. சொ. 168 சேனா.)

‘பலவற் றிறுதிப் பெயர்க்கொடை’ (தொ. எ. 210 நச்.) காண்க.

பல்வகைப் பெயரின் எச்சம் முன் வலி இயல்பாதல் -

{Entry: B02__282}

எ-டு : உண்ட, உண்ணாநின்ற + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனத் தொழில்கொள் பெயரெச்சம் முன் இயல்பாயின.

பொன்னன்ன, பொன்போன்ற, பொன்னனைய, பொன்னி- கர்த்த, பொன்னொத்த + குதிரை, செந்நாய், தகர், பன்றி என உவமைப்பண்பு கொள் பெயரெச்சம் முன் இயல்பாயின.

பெரிய, சிறிய, செய்ய, இனிய, தண்ணிய + கமலம் - சரோருகம் - தாமரை - பங்கயம் எனப் பலவகைப் பண்புகொள் பெய ரெச்சம் முன் இயல்பாயின.

உண்ணாத, தின்னாத + குதிரை, செந்நாய், தகர், பன்றி எனப் பெயரெச்ச எதிர்மறை முன் இயல்பாயின. (நன். 166 மயிலை.)

பல என்பது ஏனைய பெயர்களொடு புணர்தல் -

{Entry: B02__283}

பல என்பது தன்முன் பிறபெயர் வரின், லகரம் றகர ஒற்றாகாது, அகரம் கெட்டுப் புணரும்.

எ-டு : பல்கடல், சேனை, தானை, பறை, யானை, வேள்வி என வரும்.

உயிர் வருவழித் தனிக்குறில் முன் ஒற்று இரட்டிப் பல்லணி, பல்லாண்டு, பல்லிலை என்றாற்போல வரும்.

‘பல்வேறு கவர்பொருள்’ (தொ. பொ. 114 நச்.)

‘எண்ணரும் பன்னகை’ (114 நச்.)

‘பல்லாற்றானும்’ (168 நச்.)

‘பல்குறிப்பினவே’ (286 பேரா.)

‘பன்முறையானும்’ (தொ . சொ. 396 நச்.)

(தொ. எ. 214 நச்.)

பல, சில தம்முள் புணருமாறு -

{Entry: B02__284}

பல சில என்பன தம்மொடு தாம் புணரின் இயல்பும், வல்லினம் மிகுதலும், நிலைமொழியீற்று அகரம் கெடுதலும், அந்த லகரமெய் றகரமெய் ஆதலும், ஏனைய பெயர் வரு மொழியாக வருமிடத்து நிலைமொழியீற்று அகரம் விகற்ப மாதலும், (லகரமெய் றகரமாகச் சிறுபான்மை திரிதலும்) உள.

வருமாறு : பலபல, பலப்பல, பல்பல, பற்பல

சிலசில, சிலச்சில, சில்சில, சிற்சில

பலபொருள், பல்பொருள்; சிலபொருள், சில் பொருள்; பற்பகல், சிற்கலை (நன். 170)

பல : சொல்லிலக்கணம் -

{Entry: B02__285}

பல என்னும் சொல் பெயரெச்சக் குறிப்பாயும் ( பல குதிரைகள் ஓடின), குறிப்பு வினைமுற்றாயும் (குதிரைகள் பல ), குறிப்பு முற்று ஈரெச்சம் ஆகும் பெயரெச்சக் குறிப்பாயும் வினை யெச்சக் குறிப்பாயும் [ (பல குதிரைகள் ஓடின (பலவாகிய), குதிரைகள், பல ஓடின (பலவாய்) ], குறிப்பு வினையாலணையும் அஃறிணைப் பன்மைப் பெயராயும் [ பல ஓடின (பலவாகிய குதிரைகள்) ], பொருளாதி ஆறனுள் பண்பு காரணமாக வரும் அஃறிணைப் பன்மைப் பெயராயும் (குதிரைகள் ஒன்றல்ல, பல) என அறுவகைப்பட்டுப் பொருள்நோக்கம் முதலியவற்றால் இன்னதென்று துணியப்படும். (நன். 167 சங்கர.)

பல : பண்பு அன்று, பெயர் என்பது -

{Entry: B02__286}

பல, சில - என அகர ஈற்றனவாக வைத்துப் புணர்த்த காரணம் யாதெனில், அப்பண்புகள் பன்மை சின்மை - எனப் பகுதிப் பொருள் விகுதி (மை) யோடேனும், பலர் - பல, சிலர் - சில - என விகுதிப் பொருள் விகுதியோடேனும் (அர், அ) அன்றித் தனித்துநில்லா ஒற்றுமை நயம் பற்றி என்பது. (நன். 170 சங்கர.)

பலமொழிகளிலும் சிலவிதிகள் ஒருதன்மையவாய் இருத்தல் -

{Entry: B02__287}

குறிலை அடுத்த ஒற்று வருமொழி முதலில் உயிர் வரின் இரட்டும்.

எ-டு : சொல் + அரிது = சொல்லரிது

‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டல்’ (தொ. எ. 160 நச்.)

‘மொதலொள் ஹ்ரஸ் வைகஸ்வர

மொதவெ பரம் ஸ்வரமதாகெ நணலயளங்கள்

குதயிஸுகும் த்வித்வம்’ (கருணாடக ப்தமணி 79)

என்பது கன்னட இலக்கணம்.

‘ஙமோ ஹ்ரஸ்வாதசி ஙமுன் நித்யம்’ (பாணினீ. 8 : 3 : 32)

என்பது வடமொழி இலக்கணம்.

வடமொழியில் சில எழுத்துக்களின் பின் குறிலை அடுத்து நிற்கும் மெய்யும் இரட்டுகிறது.

எ-டு : ப்ரத் ங்ஙா த்மா, ஸு கண்ணீ : - என்பன காண்க.

(எ. ஆ. முன்னுரை பக். iii )

பலவகை எழுத்துக்கள் -

{Entry: B02__288}

‘உருவே உணர்வே ஒலியே தன்மை

னஈ ர் எழுத்தும் ஈரிரு பகுதிய’

1. காணப் பட்ட உருவம் எல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி

வழுவில் ஓவியன் கைவினை போல

எழுதப் படுவது உருவெழுத் தாகும்’

2. கொண்டஓர் குறியால் கொண்ட அதனை

உண்டென்று உணர்வது உணர்வெழுத்து ஆகும்’

3. ‘இசைப்படு புள்ளின் எழாஅல் போல

செவிப்புலன் ஆவது ஒலியெழுத்து ஆகும்’

4. ‘முதற்கா ரணமும் துணைக்கா ரணமும்

துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்

அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்

மிடற்றுப்பிறந்து இசைப்பது தன்மை யெழுத்தே’

என்னும் இந்நான்கு பகுதியுள் ஒலியெழுத்தே செவிப்புல னாய்ப் பொருள்தரும் சிறப்புநோக்கி அதனை எடுத்தோதி னார். (நன். 256 மயிலை.)

‘பலவற் றிறுதி நீடுமொழி’ (1) -

{Entry: B02__289}

‘பலாஅஞ் சிலாம்’ : அம் என்பது உம்மின் திரிபே. பலவும் சிலவும் என்பது பொருள். அம், ஈண்டு எண்ணுப்பொருளில் வந்ததாகும்.

கன்னடமொழியில் எண்ணுப்பொருளில் அம், உம் என்ற ஈரிடைச் சொற்களும் வருகின்றன.

பல + அம் = பலாஅம் என்றாகும். வருமொழி அம்சாரியை என்பதனைக் குறிக்கவே அகரம் இடையே வந்துள்ளது. ‘பலாஅம்’ என்பதன்கண் அகரம் அறிகுறி அளவினதே. (எ. ஆ. பக். 135, 136)

‘பலவற்றிறுதி நீடுமொழி’ (2) -

{Entry: B02__290}

செய்யுள் வழக்கினையும் ஓசையினையும் கருதிவரும் தொடர் மொழிக்கண், பலவற்றை உணர்த்திவரும் இறுதி அகரம் நீண்டு வரும் சொற்களும் உள.

பல்ல - பல - சில்ல - சில - என்பவற்றுள் பல்ல - சில்ல - என்னும் தொடர்மொழிகள் வினையொடு தொடருங்கால் நின்றவாறே தொடருமாயின் ஓசைநயம் இன்மை கருதிச் சான்றோர் தம் செய்யுளுள் பல்லா கூறினும் பதடிகள் உணரார், சில்லா கொள்கெனச் செ ப்புநர் உளரே என்றாற் போல வழங்கியிருத்தல் வேண்டு மெனத் தெரிகிறது.

உரையாசிரியன்மார் காட்டும் பலாஅம்- சிலாஅம்- என்பன பலவும் சிலவும் என்பவற்றின் விகாரம் ஆம். அவ்வாறாயின் அச்சொற்கள் மகர ஈற்றினவேயன்றி அகர ஈறாமாறில்லை. (தொ.எ.213 ச.பால.)

‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’ -

{Entry: B02__291}

பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தனையும், ‘அன்ன என்னும் உவமக்கிளவி’ முதலியவற் றொடு சேர்த்துக் கொடுத்தல்.

அஃதாவது பன்மைப் பொருள் உணர்த்தும் பல்ல - பல - சில - உள்ள - இல்ல - என்ற ஐந்து பெயர்களையும், அகர ஈற்றுள் வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும் அன்ன - அண்மை விளி - செய்ம்மன - ஏவல்வினை - செய்த என்னும் பெயரெச்சம் - செய்யிய என்னும் வினையெச்சம் - அம்ம என்னும் உரை யசை - என்பனவற்றொடு சேர்த்து எண்ணுதல். (தொ. எ. 210 நச்.)

பலவற்றை உணர்த்தும் அகரஈற்றுப் பெயர்கள் எல்லாவற்றை யும் கொள்க. (எ-டு : கரியன, செய்யன, நல்லன, தீயன) (எ. கு. பக். 209)

பலவற்றிறுதி புணருமாறு -

{Entry: B02__292}

பலவற்றைக் குறிக்கும் பல்ல - பல - சில -உள்ள - இல்ல - என்னும் சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை இடையே பெற்றுப் புணரும்.

எ-டு : பல்லவற்றை, பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை.... பல்லவற்றுக்கண்,

பல்லவற்றுக் கோடு, பலவற்றுக்கோடு, சிலவற்றுக் கோடு, உள்ளவற்றுக்கோடு, இல்லவற்றுக் கோடு, செதிள், தோல், பூ (தொ. எ. 174, 220 நச்.)

அல்வழிக்கண், பலகுதிரை - என்றாற்போல இயல்பாகப் புணரும். (தொ. எ. 210 நச்.)

‘பலாஅஞ் சிலாஅம்’ -

{Entry: B02__293}

‘பலவற்றிறுதி நீடுமொழி’ காண்க.

பலசில என்பன உம்மைத் தொகையாகப் புணர்ந்தவழிச் செய்யுட்கண் ‘பலாஅஞ் சிலாஅம்’ எனத் திரிந்து புணர்தலு முண்டு. இத் தொடருக்குப் பலவும் சிலவும் என்பது பொருள். இப்புணர்ச்சி செய்யுட்கே உரியது. இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண். (தொ. எ. 213 நச். உரை)

பவ்வீ, நீ, மீ முன் வல்லினம் வந்து புணருமாறு -

{Entry: B02__294}

‘பீ’ என்னும் இடக்கர்ப்பெயர், நீ என்னும் முன்னிலைப் பெயர், மேலாய பண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் மீ என்னும் சொல் - இவற்றின்முன் வருமொழி முதல் வன்கணம் வருமிடத்தே அல்வழிக்கண் இயல்புபுணர்ச்சியாம். மீ இயல் பாகப் புணர்தலேயன்றி வலியும் மெலியும் மிக்குப் புணர்தலு முண்டு.

எ-டு : பீகுறிது, நீ குறியை, மீகண்; மீக்கூற்று, மீந்தோல்

மீகண் என்பது கண்மீ என்பதன் இலக்கணப்போலி யாய் அல்வழி ஆயிற்று. மீக்கூற்று - மேலாய சொல் லாற் பிறந்த புகழ் எனப் பண்புத்தொகை அன்மொழி. மீந்தோல் - மேலாய தோல் எனப் பண்புத்தொகை.

(நன். 178 சங்.)

ப, வ நிகழ்காலம் காட்டுதல் -

{Entry: B02__295}

உண்ணாகிடந்தான் - உண்ணாவிருந்தான் என, ஆகிடந்து - ஆவிருந்து என்பனவும், வருதி - பெயர்தி - வருந்துதி - பொருதி - புலம்புதி - எனத் தகரஒற்றும், உண்பல் - வருவல் - எனவும் நோக்குவேற்கு - உண்பேற்கு - எனவும் முறையே வினையும் வினையாலணையும் பெயரும் ஆகிய இவற்றில் பகர வகர ஒற்றுக்களும், சிறுபான்மை நிகழ்காலம் காட்டும். (நன். 143 இராமா.)

பள், கள் புணருமாறு -

{Entry: B02__296}

பள், கள் என்பன ‘புள்’ என்ற பொருட்பெயர் போல இரு வழியும் உகரச் சாரியையும் பெற்றுப் புணரும். இருவழியும் ளகரம் டகரமாய்த் திரிந்து முடிதலும் ஆம்.

வருமாறு : பள்ளுக்கடிது, பள்ளுக்கடுமை; பட்கடிது, பட் கடுமை; கள்ளுக்கடிது, கள்ளுக்கடுமை; கட் கடிது, கட்கடுமை, (404 இள. உரை.)

பன் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__297}

பன் என்பது பஞ்சினைப் பிரித்தெடுக்கும் தொழிலையும் பஞ்சினையும் குறிக்கும்.

அஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழி உகரமும், யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஒற்று இரட்டுதலும் பெற்றுப் புணரும்.

எ-டு : பன்னுக் கடிது, பன்னு நெடிது, பன்னு வலிது, பன் யாது, பன் னரிது; பன்னுக் கடுமை, பன்னு நெடுமை, பன்னுவலிமை, பன்யாப்பு, பன்னருமை. (தொ. எ. 345 நச்.)

பன்னிரண்டு : புணர்நிலை -

{Entry: B02__298}

பத்து + இரண்டு : பத்து என்பதன் ஈற்றுயிர்மெய் கெட நின்ற ‘பத்’ என்பதன் தகர ஒற்றுக் கெட, ப என்ற தனிக்குறிலை அடுத்து னகரஒற்று இரட்டித்துப் ‘பன்ன்’ என்று நிற்ப, இரண்டு என்ற வருமொழி புணரப் பன்னிரண்டு என முடிந்தது என்பர் தொல்.

பத்து என்பதற்குப் பான் என்பது பரியாயப் பெயர். பான் + இரண்டு : நிலைமொழி முதலெழுத்துக் குறுகிப் ‘பன்’ என்றாகி நிற்க, தனிக்குறில்முன் ஒற்றிரட்டிப் பன்னிரண்டு எனப் புணர்ந்தது எனலாம்.

இங்ஙனமே பன்னொன்று, பன்மூன்று, பன்னான்கு, பன்னாறு எனக் கன்னடமொழிக்கண் வழங்குதல் காணத்தக்கது. (எ. ஆ. பக். 171)

பனாஅட்டு : சொல்லமைப்பு -

{Entry: B02__299}

பனை + அட்டு : ஈற்று ஐகாரம் தனக்கு முன் உயிர்முதல் மொழி வர, ஒரு சொல் தன்மைப்படப் புணருமிடத்துச் சொல்லின் இடையது ஆதலின், அஃது ஒருமாத்திரை அளவு ஒலிக்கும். ‘பனைஅட்டு’ பனஅட்டு என்றொலிக்கும். பன என்பதன் ஈற்று அகரமும் அட்டு என்பதன் முதல் அகரமும் சேர்ந்து ஓர் ஆகாரமாகிப் பனாட்டு என ஒலிக்கும். வரு மொழி ‘அட்டு’ என்பதனை அறிவிக்க, ஆகாரத்தின் முன்னர் அகரம் அறிகுறியாக எழுதப்படும்; எழுதப்படுதலன்றி அகரம் ஒலிக்கப்படாது. இங்ஙனம் பனாஅட்டு என்ற சொல் அமையும்.

நன்னூலார் அகரத்தை விடுத்துப் பனாட்டு என்றே கூறினார். (பனாட்டு - பனையினது தீங்கட்டி) (எ. ஆ. பக். 146)

பனி என்ற காலப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__300}

பனி என்ற காலப்பெயர் நிலைமொழியாய் வருமொழி வன் கணத்தொடு புணருமிடத்து அத்துச்சாரியையும் இன்சாரியை யும் பெறும்.

எ-டு : பனியத்துக் கொண்டான் - பனியிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான்.

பனிக்காலத்தில் கொண்டான் என்றாற்போல ஏழன் பொருள் விரிக்கப்படும். (தொ. எ. 241 நச்.)

பனுவல் -

{Entry: B02__301}

பல இலக்கணங்களையும் உள்ளடக்கி இயற்றப்படும் இலக் கணநூல் பொதுவாகப் பனுவல் என்றே குறிப்பிடப்படும். (தொ. எ. பாயிரம்)

பனை என்பதன் புணர்ச்சி -

{Entry: B02__302}

பனை என்பது அம்முப் பெற்று ஐ கெட்டுப் பனங்காய், பனஞ்செதிள், பனந்தோல், பனம்பூ என வரும். பனை ஈண்டுப் புல்லினம்.

பனை + அட்டு = பனாஅட்டு என ஐ கெட்டு ஆகாரம் புணர்ந்து முடியும்.

இது போலவே, ஓரை + நயம் = ஓராநயம், விச்சை + வாதி = விச்சாவாதி, கேட்டை + மூலம் = கேட்டா மூலம், பாறை + கல் = பாறாங்கல், பாறங்கல் என முடியும்.

பனை + கொடி = பனைக்கொடி (தொ. எ. 283 - 285 நச்.)

பனையின் குறை என்றாற்போல உருபிற்குச் சென்ற சாரியை பொருட் புணர்ச்சிக்கண்ணும் வரும். (பனையினது குறை முதலாக ஆறன் பொருள்பட உரைக்க). (285 நச். உரை)

பனை என்ற (மரப்) பெயர் நிலைமொழியாக நிற்ப, கொடி வருமொழி யாயின் இடையே ககரமெய் மிகும். பிற வன்கணம் வரின், நிலைமொழியீற்று ஐகாரம் கெட இடையே அம்முச் சாரியை மிகும். ‘திரள்’ வருமொழியாயின் வலி மிகுதலும் ‘ஐ’ போய் அம்முச் சாரியை பெறுதலுமாம். ‘அட்டு’ வருமொழி யாயின் நிலைமொழியீற்று ஐ கெட வருமொழி முதல் அகரம் நீளும். இவையெல்லாம் வேற்றுமைப் புணர்ச்சி.

வருமாறு : பனை + கொடி = பனைக்கொடி (பனை உருவத்தை எழுதிய கொடி); பனை + காய், செறும்பு, தூண், பழம் > பன் + அம் + காய், செறும்பு..... = பனங்காய், பனஞ்செறும்பு, பனந்தூண், பனம்பழம்; பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்; பனை + அட்டு > பன் + ஆட்டு = பனாட்டு.

(பனந்தூண் - பனையால் செய்யப்பட்டதூண்; பனாட்டு - பனையினது தீங்கட்டி) (நன். 203)

பனை என்னும் அளவுப் பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__303}

பனை என்னும் அளவுப் பெயர் குறை என்னும் வருமொழி யொடு புணரும்வழி இன்சாரியை பெறும்; சிறுபான்மை இன்சாரியை பெறாது வருமொழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க.

வருமாறு : பனையின் குறை, பனைக்குறை

இதற்குப் பனையும் அதிற் குறைந்ததும் என உம்மைத் தொகைப்படப் பொருள் கூறுக. (தொ. எ. 169 நச்.)

பாகதம் -

{Entry: B02__304}

நாடுகளெல்லாம் வழங்கும் மொழி பாகதமாம். (மு. வீ. மொழி. 30)

பாகதவகை -

{Entry: B02__305}

தற்பவம், தேசிகம், தற்சமம் என பாகதம் மூவகைப்படும்.

(மு. வீ. மொழி. 31)

பாரிசேடம் -

{Entry: B02__306}

பாரிசேடம் - எஞ்சியது. இது பிரமாணங்களுள் ஒன்று. பகுபதத்துள் பகுதி விகுதி முதலிய உறுப்பெல்லாம் பகாப்பதம் ஆயினும், விகுதி முதலியவற்றை மேல் விதந்து கூறலின், ஈண்டுத் ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றது முதனிலைகளையே என்பது பாரிசேடத்தால் பெற்றாம். (பிரமாணம் - அளவை) (நன். 134 சங்கர.)

பால்வரை கிளவி -

{Entry: B02__307}

ஒருபொருளின் பகுதியை உணர்த்தும் சொற்களாகிய அரை, கால், முக்கால், அரைக்கால் முதலியன.

செம்பால் - சமபாதி (தொ. பொ. 463 பேரா.)

பால் - ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின்மேற்றாதல்.

(தொ. பொ. 13 நச். உரை)

பாலும் நீரும் போல -

{Entry: B02__308}

மெய்யும் உயிரும் உயிர்மெய்க்கண் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன்கலந்ததாகும்; விரல்நுனிகள் தலைப்பெய்தாற் போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது. (தொ. எ. 18 இள. உரை)

பாழ் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__309}

பாழ் என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின் அவ்வல்லெழுத்தினோடு ஒத்த மெல் லெழுத்தும் மிக்கு முடியும்.

எ-டு : பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு

இது பாழுட் கிணறு என ஏழாவது விரியும். வினைத்தொகை யாயின், பாழ்கிணறு என இயல்பாகவே புணரும். (தொ. எ. 387 நச். உரை)

பிட்டன் + கொற்றன் : புணருமாறு -

{Entry: B02__310}

பிட்டனுக்கு மகன் கொற்றன் என்ற கருத்தில், நிலைமொழி ‘அன்’ கெட்டு ‘அம்’ புணர்ந்து, அது வருமொழிக் கேற்பத் திரிந்தது என்று கூறுவதைவிட, நிலைமொழி ஈற்று னகரம் வருமொழிக்கேற்ற மெல்லெழுத்தாகத் திரியும் என்றல் ஏற்றது.

பிட்டன் + கொற்றன் = பிட்டங் கொற்றன்; அந்துவன் + சாத்தன் = அந்துவஞ் சாத்தன்; விண்ணன் + தாயன் = விண்ணந்தாயன்; கொற்றன் + பிட்டன் = கொற்றம் பிட்டன் (எ. ஆ. பக். 158)

பிடா என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: B02__311}

பிடா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அகர எழுத்துப்பேறளபெடையோடு, இனமெல்லெழுத்து மிகுத லும், அவ்வல்லெழுத்தே மிகுதலும், உருபிற்குச் செல்லும் இன்சாரியை பெறுதலும் ஆம்.

எ-டு : பிடா + கோடு = பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு, பிடாவின்கோடு; பிடாஅத்துக் கோடு என அத்துப் பெறுதலுமுண்டு. (தொ. எ. 229, 230 நச். உரை)

பிரகிருதி -

{Entry: B02__312}

இது தமிழில் முதனிலை எனவும், பகுதி எனவும் கூறப்படும். இது பகுபதத்தினது முதல் பிரிவாய் நிற்றலின் முதனிலை (முதல் நிலை) எனப்பட்டது. பகாப்பதத்தின் சொல் முழுதும் பகுதியாம். இப்பகுதி, இடைநிலை விகுதி முதலிய ஏனை உறுப்புக்களொடு சேருமிடத்து விகாரப்படுதலுமுண்டு. இரு, இடு முதலிய விகுதிகள் தன்னொடு சேரும்போது அவற்றைத் தன்னுள் அடக்கிய பகுதியாதலுமுண்டு. பகுதி இல்லாத சொல்லே இல்லை எனலாம்.

எ-டு : உண்டான் - உண் : பகுதி

யானை - இப்பகாப்பதம் முழுதும் பகுதி.

வந்தான் - வா என்ற பகுதி குறுகி வ என நின்றது.

எழுந்திருந்தான் - எழுந்திரு : பகுதி

நட (ஏவலொருமை) - நட : பகுதி; ‘ஆய்’ விகுதி குன்றி வந்தது. (சூ. வி. பக். 41)

பிரத்தியயம் -

{Entry: B02__313}

விகுதி இடைநிலை வேற்றுமையுருபுகள் ஆகிய இடைச் சொற்கள் வடமொழியில் பிரத்தியயம் எனப்படும். வடமொழி யில் விகுதியே காலம் காட்டலின், இடைநிலை வினைமுதற் பொருண்மை முதலியன பற்றி வரும். (சூ. வி. பக். 55)

பிராதிபதிகம் -

{Entry: B02__314}

பொருளுடையதாய், வினைமுதனிலை அல்லாததாய், இடைச் சொல் அல்லாததாய் வரும், பெயர் அடிப்படைச் சொல் வடமொழியில் பிராதிபதிகம் எனப்படும். தமிழில் பிராதி பதிகமே முதல்வேற்றுமை ஆகும். வடமொழியில் பிராதி பதிகம் வேறு, முதல் வேற்றுமை ஏற்ற சொல்வடிவம் வேறு.

உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொடராது பட்டாங்கு நிற்கும் பெயர்கள் பிராதிபதிகம் ஆம்.

எ-டு : ஆ, அவன் (பி. வி. 7)

பிரித்துப் புணர்க்கப்படாத தொடர்கள் -

{Entry: B02__315}

‘புணரியல் நிலையிடை யுணரத் தோன்றாதன’ - காண்க.

‘பிறப்பியல்’ நுவல்வது -

{Entry: B02__316}

உந்தியிலிருந்து பிறக்கும் காற்று, தலை - மிடறு - நெஞ்சு-இவற்றில் நிலைபெற்றுப் பல் - இதழ் - நா - மூக்கு - மேல்வாய் - என்ற ஐந்தன் முயற்சிப் பிறப்பான் வெவ்வேறு எழுத்தொலி யாய்த் தோன்றும்.

பன்னீருயிரும் மிடற்றுவளியான் இசைக்கும். அ ஆ - அங்காப்பானும், இ ஈ எ ஏ ஐ - அங்காப்போடு அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலானும், உ ஊ ஒ ஓ ஒள - இதழ் குவித்துக் கூறுதலானும் பிறக்கும். (அங்காத்தலை எல்லாவற் றுக்கும் கொள்க.)

க் ங், ச்ஞ், ட்ண் - முறையே முதல்நா அண்ணம், இடைநா அண்ணம், நுனிநா அண்ணம் உறப் பிறக்கும். த் ந் - அண்பல் அடியை நுனிநாப் பரந்து ஒற்றலானும், ற் ன் - நுனிநா அண்ணம் ஒற்றலானும், ர் ழ் - நுனிநா அண்ணம் வருடலா னும், ல் - நாவிளிம்பு வீங்கி அண்ணத்தை ஒற்றலானும், ள் - நாவிளிம்பு அண்ணத்தை வருடலானும், ப் ம் - இரண்டு இதழ்களும் இயைதலானும், வ் - மேற்பல்லைக் கீழிதழ் இயை தலானும், ய் - அடிநா அண்ணம் கண்ணுற்று அடைதலானும், மெல்லெழுத்து ஆறும் தம் பிறப்பிடம் முயற்சி இவற்றொடு மூக்கொலி பொருந்தலானும் பிறக்கும். இவற்றின் ஒலி களிடையே சிறு வேறுபாடுகள் உள.

சார்பெழுத்துக்கள் தத்தம் அடிப்படை எழுத்துக்களின் பிறப்பிடமும் முயற்சியும் தமக்கும் உரிமையவாகப் பிறக்கும். ஆய்தம் தனக்குப் பொருந்திய நெஞ்சுவளியால் பிறக்கும் என்பர் நச்.

உந்தியில் தோன்றும் எழுத்து மிடற்றை அடையும் வரை நிகழும் திரிதரு கூறுகள் ஆகிய பரை, பைசந்தி, மத்யமா என்பன இலக்கண நூல்களுக்கு ஏலா. வெளிப்படும் ஒலியான வைகரி என்பதே இலக்கண நூல்களான் உணர்த் தப்படும். இன்ன செய்திகள் தொல்காப்பிய எழுத்துப்படல மூன்றாம் இயலாகிய பிறப்பியலில் 20 நூற்பாக்களான் விளக்கப் பட்டுள. (தொ. எ. 83 - 102 நச்.)

பிறப்பின் புறனடை -

{Entry: B02__317}

பல எழுத்துக்களுக்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்படினும், எடுத்தல், படுத்தல், நலிதல் என்ற எழுத்துக்குரிய ஒலிமுயற்சி- யான் ஒன்றற்கொன்று பிறப்பு வேறுபாடுகள் அவ்வற்றுள் சிறிது சிறிது உளவாம். ‘தந்தது’ என்பதன்கணுள்ள தகரங் களின் ஒலிவேறுபாடு போல்வன காண்க. (நன். 88)

பிறப்புக்கு முதல்துணை இடவகை -

{Entry: B02__318}

எழுத்துக்கள் நெஞ்சும் தலையும் மிடறும் என்னும் முதல் இடவகையினும், நாவும் அண்ணமும் இதழும் எயிறும் மூக்கும் என்னும் துணை இட வகையினும் புலப்படும். (நேமி. எழுத். 6)

பிறப்பொலியில் திரிபு -

{Entry: B02__319}

ஒவ்வொரு தானத்துப் பிறக்கின்ற எழுத்துக்கள் கூட்டிக் கூறப் பட்டனவாயினும், நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள் சிறியன சிறியனவாக உள. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் - என்ற வகையானும், தலையிசை மிடற்றிசை நெஞ்சிசை மூக்கிசை - என்ற வகை யானும் பிறவகையானும் வேறுபடுதல். ‘ஐ’ விலங்கலோசை உடையது. (இ. வி. எழுத். 14 உரை.)

பிற மேல் தொடர்தல் -

{Entry: B02__320}

வன்மை ஊர் உகரம் தன் மாத்திரையின் குறுகுதற்கும் மொழி நிரம்புதற்கும் காரணம், அவ்வோரெழுத்துத் தொடர்தல் மாத்திரையின் அமையாது, பிற எழுத்துக்களுள் ஒன்றும் பலவும் மேல் தொடரவும் பெறுதல்.

‘பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்’ (130) என்று வரை யறுத்தவற்றில் இங்ஙனம் ஈற்றயலும் ஈறுமாகக் கூறிய இரண்டும் ஒழித்து ஒழிந்த ஏழும் ஐந்தும் ஆகிய எழுத்துக் களைப் ‘பிறமேல் தொடரவும் பெறுமே’ என்றார். ‘தொடர வும்’ என்ற உம்மை இறந்தது தழீஇ நின்றது. ‘பெறுமே’ என்றது, தனிநெடில் ஒழிந்த ஐந்து தொடரும்; வன்மை ஊர் உகரம் குறுகுதற்கும் மொழி நிரம்புதற்கும் மேல் தொடர் தலும் இன்றியமையாமையின். (நன். 94 சிவஞா.)

பின் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__321}

பின் என்ற சொல் பின்னுதல் தொழிலையும், கூந்தலை வாரிப் பின்னிய பின்னலையும் உணர்த்தும். இஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்துழி உகரமும், உயிர் வந்துழி ஒற்றிரட்டுதலும் பெற்றுப் புணரும்.

எடு : பின்னுக்கடிது; பின்னு நன்று, பின்னு வலிது, பின் யாது, பின் னரிது; பின்னுக்கடுமை; பின்னுநன்மை, பின்னுவலிமை, பின்யாப்பு, பின்னருமை. (தொ. எ. 345 நச்.)

பின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களுள் ஒன்று. இது பெயராகவும் வினை யெச்சமாகவும் நிற்கும். இடைச்சொல்லும் வினையெச்சமும் இயல்பாக முடியும்.

எ-டு : என்பின் சென்றான், உண்டபின் சென்றான்

பின் என்ற பெயர் வன்கணம் வருமொழியாக வந்துழி, பிற் கொண்டான் - என னகரம் றகரமாகத் திரிந்தும், பின்கொண் டான் - என இயல்பாகவும் புணரும். (தொ. எ. 333 நச்.)

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறல் -

{Entry: B02__322}

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்றவற்றை முறையே இறந்தது விலக்கல், எதிரது போற்றல் - என்னும் உத்திகளால் விலக்கியும் போற்றியும் கூறுதல் முதலியன (வழிநூற்குப்) பின்னோன் வேண்டும் விகற்பம் கூறலாம். (நன். 7 சங்கர.)

பீ என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__323}

பீ என்பது மலத்தைக் குறிக்கும் இடக்கர்ப் பெயர். அது பீ குறிது என்றாற் போல வருமொழி வன்கணத்தோடும் இயல் பாகப் புணரும்.

ஆ என்ற நிலைமொழிமுன் பீ என்பது வருமொழியாய்ப் புணருமிடத்து இகரமாகக் குறுகி வலிமிக்கு ஆப்பி எனப் புணரும். (தொ. எ. 250, 233 நச்.)

பீர் என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__324}

பீர் என்பது வருமொழி வன்கணம் வந்துழி மெல்லெழுத்து மிக்குப் புணரும். பீர் அத்துப் பெறுதலும், அம்முப் பெறுத லும், இயல்பாதலும் ஆம்.

பீர்ங் கொடி - மெல்லெழுத்து மிக்கது; ‘பீரத் தலர்’ - அத்துப் பெற்றது; ‘பீரமொ டு பூத்த’ - அம்முப் பெற்றது; ‘பீர்வாய்ப் பிரிந்த’ - இயல்பாயிற்று. (தொ. எ. 363, 364 நச். உரை)

புடை நூல் -

{Entry: B02__325}

புடை நூலாவது சார்புநூல். முதனூல் வழிநூல்களுக்குச் சிறு பான்மை ஒத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாயிற்று. (நன். 8 இராமா.)

புடைபெயர்ச்சி விகுதி புணர்ந்து கெட்டவை, கெட்டுப் பின் முதல் நீண்டவை -

{Entry: B02__326}

‘கெடு வாக வையாது’ (குறள் 117) என்புழிக் கெடு என்பது புடைபெயர்ச்சியை உணர்த்தும் தல்விகுதி கெட்டு நின்றது. (‘ அறி கொன்று’ குறள் 638 - ‘களிறுகளம் படுத்த பெருஞ் செய் ஆடவர்’ நெடுநல். 171 என்பன போல்வனவும் அன்ன.)

கேடு என்பது புடைபெயர்ச்சியை உணர்த்தும் தல்விகுதி கெட்டுப் பின்னர் முதல் எகரம் நீண்டது. (கோள், ஊண் என்பன போல்வனவும் அன்ன) (சூ. வி. பக். 33)

புணர்ச்சி -

{Entry: B02__327}

மெய்யையும் உயிரையும் முதலும் இறுதியுமாக உடைய பகாப்பதம் பகுபதம் என்னும் இருவகைச் சொற்களும் தன்னொடு தானும் தன்னொடு பிறிதுமாய் வேற்றுமைப் பொருளிலாவது அல்வழிப் பொருளிலாவது பொருந்து மிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவும் மூவகைத் திரிபு கொண்டும் பொருந்துவது புணர்ச்சியாம். உயிர்மெய்யை மெய்முதல் எனவும் உயிரீறு எனவும் பகுத்துக் கொள்க. திசைச்சொல்லும் வடசொல்லும் பெயர்வினை இடை உரி நான்கும் பகாப்பதம் பகுபதம் என்ற இரண்டனுள் அடங்கும். (நன். 151)

புணர்ச்சிக்கண் க ச த ப-க்குரிய இயற்கை மெல்லெழுத்து -

{Entry: B02__328}

புணர்ச்சிக்கண் க ச த ப -க்களுக்குரிய இயற்கை மெல் லெழுத்துக்கள், அவை தோன்றும் இடத்திலேயே தோன்றி மூக்கின் வளியிசையான் சற்று வேறுபட்டொலிக்கும் ங ஞ ந ம -க்களாம்.

எ-டு : விள + கோடு = விள ங் கோடு; விள + செதிள் = விள ஞ் செதிள்; விள + தோல் = விள ந் தோல்; விள + பூ = விள ம் பூ (தொ. எ. 143 நச்.)

புணர்ச்சிக்குரிய நாற்கணம் -

{Entry: B02__329}

வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் என்ற நான்கும் புணர்ச்சிக்கண் வருமொழி முதலெழுத்திற்குரிய நாற்கணங்களாம். இவற்றுள் வன்கணம் நீங்கலான ஏனைய மூன்று கணங்களும் பெரும்பாலும் இயல்பாகப் புணர்தலின் இயல்புகணம் எனப்படும். (தொ. எ. 203 - 207 நச்.)

புணர்ச்சி நிலைபெற்று அமைதல் -

{Entry: B02__330}

புணர்ச்சியாவது நிலைமொழி ஈற்றெழுத்தொடு வருமொழி முதலெழுத்துப் புணர்வது. நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப்பிறந்து கெட்டுப்போக, வருமொழியது முத லெழுத்துப் பின்னர்ப் பிறந்து கெட்டமையான், முறையே பிறந்து கெடுவன ஒருங்குநின்று புணருமாறு இன்மையின் புணர்ச்சி என்பதொன்று இன்றாம்பிற எனின், அச்சொற் களைக் கூறுகின்றோரும் கேட்கின்றோரும் அவ் வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணே உணர்வராகலின், அவ்வோசைகள் உள்ளத்தின்கண்ணே நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் கண்கூடாகப் புணர்க் கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்பது. (தொ. எ. 108 நச். உரை)

புணர்ச்சியில் விகாரங்கள் -

{Entry: B02__331}

புணர்ச்சியில் விகாரம் ஏழாம்.

முதலாவது தோன்றல்.

எ-டு : குன்று - குன்றம், செல்உழி - செல்வுழி. முறையே அம், வ் - தோன்றின.

இரண்டாவது திரிதல்.

எ-டு : மாகி - மாசி (ககரம் சகரமாகத் திரிந்தது)

மூன்றாவது கெடுதல்.

எ-டு : யார் - ஆர், யாவர் - யார் (முறையே யகர மெய்யும் வகர உயிர்மெய்யும் கெட்டன)

நான்காவது நீளல்.

எ-டு : பொழுது - போது, பெயர் - பேர் (ஒகரமும் எகரமும் முறையே நீண்டன)

ஐந்தாவது நிலைமாறுதல்.

எ-டு : வைசாகி - வைகாசி (சகரம் ககரம் நிலைமாறின). நாளிகேரம் - நாரிகேளம், தசை - சதை, ஞிமிறு - மிஞிறு, சிவிறி - விசிறி.

ஆறாவது மருவி வழங்குதல்.

எ-டு : என்றந்தை - எந்தை

ஏழாவது ஒத்து நடத்தல்.

எ-டு : நண்டு - ஞண்டு, நெண்டு - ஞெண்டு, நமன் - ஞமன் (நகரத்திற்கு ஞகரம் போலியாக வந்தது).

(தொ. வி. 37 உரை)

புணர்ச்சியும் மயக்கமும் -

{Entry: B02__332}

புணர்ச்சியும் மயக்கமும் வெவ்வேறே. புணர்ச்சி என்பது நிலைமொழி வருமொழிகள் தத்தம் தன்மை திரியாமல் செப்பின் புணர்ச்சி போல நிற்பது. மயக்கம் என்பது மணியுள் கோத்த நூல்போலத் திரிபுற்று நிற்பது. நிலைமொழியீற்றுக் குற்றுகரம் வருமொழி நாற்கணங்களொடும் புணருமிடத்து எய்தும் திரிபுகளைத் தனக்கு முன்னும் பின்னும் நிற்கும் எழுத்துக்களே பெறத் தான் திரிபுறுதல் இன்மையின், குற்றியலுகர மயங்கியல் என்னாது புணரியல் என்றார். தனித்து வரல் மரபினையுடைய உயிரீறு புள்ளியீறுகள் அன்ன அல்லவாம். (தொ.எ.பக்.311 ச.பால.)

புணர்ச்சியை எழுத்ததிகாரத்துக் கூறியமை -

{Entry: B02__333}

புணர்ச்சியாவது சொற்கள் ஒன்றோடொன்று அல்வழிப் பொருளிலோ வேற்றுமைப்பொருளிலோ புணர்வதனைக் கூறுதலின் சொல்லதிகாரத்துக் கூறற்பாலது எனினும், நிலைமொழியீற் றெழுத்தினொடு வருமொழி முதலெழுத்து இயைதலே புணர்ச்சி எனப்படுதலின், எழுத்தினோடு எழுத்துப் புணரும் புணரியலை எழுத்ததிகாரத்தில் கூறுதலே முறையாகும். ‘நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு, குறித்துவரு கிளவியின் முதலெழுத்து இயை’தலே புணர்ச்சி என்பது தொல். எழுத்ததிகார 108 ஆம் நூற்பாவால் புலனாம். (எ.ஆ. பக். 1)

புணர்ச்சி விகாரங்கள் -

{Entry: B02__334}

பதத்தொடு பதம் புணருங்கால், சந்தி காரணமாகப் பலமுறை நிலைப்பத ஈற்றெழுத்தாயினும் வரும்பத முதலெழுத்தாயினும் பலவிடத்து ஒருப்பட இரண்டும் வேறெழுத்தாகத் திரிதலும், முற்றும் கெடுதலும் ஆகும். பலமுறை இருபத நடுவே ஆக்கமாக மிகலும் ஆம். இம்மூவிகாரம் அன்றியும், சிலமுறை இருபதம் ஒருபதமாகத் திரண்டு கலப்புழிச் சில எழுத்து அவ்வழி விகாரப்படும் எனக் கொள்க.

அவை திரிபு (மெய் பிறிது ஆகல்), அழிவு (குன்றல்), ஆக்கம் (மிகுதல்), திரட்டு (வேத + ஆகமம் = வேதாகமம் போன்ற வடமொழிப் புணர்ச்சி) என்பனவாம். (தொ. வி. 21 உரை)

புணர்ச்சி விகாரமும் புணர்ச்சி இல் விகாரமும் -

{Entry: B02__335}

இலக்கணக் கொத்தினைத் தழுவி உரைக்கப்படும் இவ்விகாரங் களுள், புணர்ச்சி விகாரம் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி யால் நிகழும் தோன்றல் - திரிதல் - கெடுதல் - இம்மூன்றுமாம்.

எ-டு : ஊர் + குருவி = ஊர்க்குருவி; வேல் + தலை = வேற் றலை; பழம் + நன்று = பழநன்று என முறையே காண்க.

இருமொழிப் புணர்ச்சியானன்றி ஒருமொழிக்கண்ணேயே நிகழும் தோன்றல் - திரிதல் - கெடுதல் - நிலைமாறுதல் - விரித்தல் - நீட்டல் - குறுக்கல் - வலித்தல் - மெலித்தல் - தொகுத்தல் - முதல் இடைக் கடைக் குறைகள் - என்பன புணர்ச்சி இல் விகாரமாம்.

எ-டு : யாது - யாவது; அழுந்துபடு - ஆழ்ந்துபடு; யாடு - ஆடு; மிஞிறு - ஞிமிறு, விளையுமே - விளையும்மே; இது - ஈது; தீயேன் - தியேன்; குறுந்தாள் - குறுத்தாள்; தட்டையின் - தண்டையின்; சிறியவிலை - சிறியிலை; தாமரை - மரை; ஓந்தி - ஓதி; நீலம் - நீல் (சுவாமி. எழுத். 27)

புணர்நிலைச் சுட்டு -

{Entry: B02__336}

சொல்லப்பட்ட ஒரு சொல்லோடு அடுத்த சொல் கூடும் நிலைமையாகிய கருத்து. இந்நிலையில் முதலில் நிற்கும் சொல்லை ‘நிறுத்த சொல்’ என்றும், அடுத்து வரும் சொல்லைக் ‘குறித்து வரு கிளவி’ என்றும் கூறுப. நிறுத்த சொல்லொடு குறித்து வரு கிளவி கூடும் நிலைமைக்கண், நிறுத்த சொல்லின் இறுதி எழுத்தும், குறித்து வரு கிளவியின் முதலெழுத்தும் தம்முள் புணர்தலே புணர்ச்சியாம்.

(தொ. எ. 107 நச்.)

புணர்மொழி ஆய்தம் -

{Entry: B02__337}

நிலைமொழி தனிக்குறிலை அடுத்த லகரஒற்று ஈற்றதாகவோ ளகரஒற்று ஈற்றதாகவோ இருப்ப, அல்வழிப் புணர்ச்சியில் வருமொழிக்கண் தகரம் முதலெழுத்தாக வரின், லகரமும் ளகரமும் ஆய்தமாகத் திரிந்து புணரும் நிலையுமுண்டு. அங் ஙனம் திரியும் நிலையில் ஆய்தம் புணர்மொழிக்கண் வரும்.

எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது; முள் + தீது = முட்டீது, முஃடீது

இத்திரிபுகளை நோக்க, ஆய்தம் றகரத்தை அடுத்தபோது அதன் ஒலியதாகவும் டகரத்தை அடுத்தபோது அதன் ஒலிய தாகவும் பண்டு ஒலிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. (தொ. எ. 39, 369, 399 நச்.) (எ. ஆ. பக். 85)

புணர்மொழிக் குற்றியலிகரம் -

{Entry: B02__338}

நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நிற்ப, வருமொழி முதலில் யகரம் வரின், அவ்வுகரம் முற்றத் தோன்றாதாக அதனிடத்துக் குற்றியலிகரம் வரும்.

எ-டு : நாகு + யாது = நாகியாது; வரகு + யாது = வரகியாது; எஃகு + யாது = எஃகியாது; கொக்கு + யாது = கொக்கி யாது; குரங்கு + யாது = குரங்கியாது; போழ்து + யாது = போழ்தியாது. (தொ. எ. 410 நச்)

புணர்மொழிக் குற்றியலுகரம் -

{Entry: B02__339}

நிலைமொழி குற்றியலுகர ஈறாய் வருமொழியொடு புணரு மிடத்து அல்வழி வேற்றுமை என்ற இருநிலையிலும் குற்றிய லுகரம் நிலைபெற்றிருக்கும்.

எ-டு : நாகு கடிது, நாகு கடுமை (தொ. எ. 408 நச். உரை)

அல்வழி வேற்றுமை என்ற இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாய் நிறைந்துவிடும். ஆயின் நிலைமொழியிறுதி வல்லொற்றுத் தொடர்க் குற்றியலுகரமாக, அதுவும் ககர உகரமாக, வரு மொழியாகக் ககர முதல் மொழி வரின், குற்றியலுகரம் முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நிற்கும்.

எ-டு : நாகு கடிது, வரகு கடிது; நாகுகடுமை, வரகுகடுமை எனக் குற்றியலுகரம் முற்றியலுகரமாயிற்று.

செக்குக்கணை, சுக்குக்கொடு எனக் குற்றியலுகரம் புணர் மொழிக்கண் முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நின்றது. (தொ. எ. 409, 410 இள. உரை)

புணரியல் -

{Entry: B02__340}

இது தொல்காப்பிய எழுத்துப்படலத்து நான்காம் இயல்; 40 நூற்பாக்களை உடையது. இதன்கண், எல்லாச் சொற்களும் உயிரீறு புள்ளியீறு இவற்றுள் அடங்கும் என்பதும், குற்றிய லுகர ஈறு புள்ளி யீற்றுள் அடங்கும் என்பதும், உயிர்மெய்யீறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும், மெய்யீறுகள் எல்லாம் புள்ளி பெறும் என்பதும், மெய்ம் முதல்கள் எல்லாம் உயிரொடு கூடி உயிர்மெய் முதலாகும் என்பதும், மெய்ம்முதல் உயிர் முதல் என்பன மெய்யீறு உயிரீறு என்பவற்றொடு புணரும் என்பதும், பெயரொடு பெயரும் தொழிலும் தொழிலொடு பெயரும் தொழிலும் புணருமிடத்து இயல்பே யன்றித் திரிபும் நிகழும் என்பதும், அத்திரிபானது மெய்பிறி தாதல் - மிகுதல் - குன்றல் - என்ற மூன்றனுள் அடங்கும் என்பதும், நிலைமொழியும் வருமொழியும் அடையொடு கூடியும் புணரும் என்பதும், புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி யும் அல்வழிப்புணர்ச்சியும் என இருவகைப்படும் என்பதும், எழுவாய்த்தொடரும் விளித்தொடரும் அல்வழியாகும், இரண்டாம் வேற்றுமைத்தொடர் முதல் ஏழாம் வேற்றுமைத் தொடர் ஈறாக ஆறுமே வேற்றுமைப் புணர்ச்சியாகும் என்ப தும், புணர்ச்சிக்கண் கு - கண் - அது - என்ற உருபுகள் பெறும் விகாரம் இவை என்பதும், வேற்றுமைப் புணர்ச்சிக்கு நிலைமொழி பெயரே என்பதும், உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பெயரை அடுத்தும் சாரியை வரும் என்பதும், சாரியைகள் இவை என்பதும், நிலைமொழி வரு மொழிகளுக்கு இடையே வரும் சாரியைகளுள் திரிபுடையன உள என்பதும், சாரியை பெறாதனவும் உள என்பதும், எழுத்துச் சாரியைகள் இவை என்பதும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்புபுணர்ச்சி என்பதும், மெய்யீறு போல்வது குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி என்பதும், உடம்படு மெய் உயிரீற்றையும் உயிர்முதலையும் இணைக்க இடையே வரும் என்பதும், எழுத்துக்கள் ஒன்று பலவாதல் ஒலியானேயே தெளிவாக உணரப்படும் என்பதும் இந்நாற்பது நுற்பாக்க ளால் குறிக்கப்பட்டுள்ளன. (தொ.எ. 103-142.)

‘புணரியல் நிலையிடை உணரத் தோன்றா’தன -

{Entry: B02__341}

புணர்ச்சிக்கண் நிலைமொழி வருமொழிகளாகப் பகுத் துணரப்படாதன நான்கு. அவை வருமாறு:

1. குறிப்பு, பண்பு, இசை - என்ற பொருண்மைக்கண் உயிரீறும் புள்ளியீறுமாய் நிற்கும் சொல்லாகி ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற் களாகிய உரிச்சொற்கள்:

எ-டு : கண் விண்ண விணைத்தது, கண் விண் விணைத்தது - குறிப்பு உரிச்சொல்; ஆடை வெள்ள விளர்த்தது, ஆடை. வெள் விளர்த்தது - பண்புஉரிச்சொல்; கடல் ஒல்ல ஒலித்தது, கடல் ஒல் ஒலித்தது - இசை உரிச் சொல்

இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றனுள் அடக்கலாகாமையின் நெறிப்பட வாராதன.

2. உயர்திணை அஃறிணை என்ற ஈரிடத்தும் உளவாகிய ஒருவன் - ஒருத்தி- பலர்- ஒன்று- பல - என்னும் ஐம்பா லினையும் அறிதற்குக் காரணமான பண்புகொள் பெயர் தொகும் தொகைச்சொல்: கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள் என்பன. இவற்றுள் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியவாகிய குதிரைகள் - என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்பு கொள் பெயர் தொக்கவாறு.

கரு என்ற பண்பு இருதிணை ஐம்பாலுக்கும் பொது ஆதலின், ஒருபாலுக்குரிய சொல்லான் விரித்தல் கூடாமையின், கரும்பார்ப்பான் முதலியவற்றைக் கரு + பார்ப்பான் முதலியனவாகப் பிரித்துக் காண்டல் கூடாது.

3. செய்யும், செய்த - என்ற பெயரெச்சச் சொற்களி னுடைய காலம் காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்கும் சொற்கள்:

எ-டு : ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை, செல்செலவு - என நிலன் - பொருள் - காலம் - கருவி - வினைமுதற்கிளவி - வினை- இவற்றைக் கொண்டு முடியும் பெயரெச்சத்தொகை யாம் வினைத்தொகைகளை விரிக்குங்கால், செய்த என்ற பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், (ஆடாநின்ற அரங்கு- ஆடும் அரங்கு- எனச்) செய்யும் என்ற பெயரெச்சத்து ஈறு விரிந்த உம் ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும் அவற்றினா னாய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒரு சொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின், அவற்றை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையின், ஆடரங்கு முதலிய வற்றை ஆடு+ அரங்கு முதலவாகப் பிரித்துப் புணர்க்கலாகாது என்றார்.

4. தமது தன்மையைக் கூறுமிடத்து, நிறுத்த சொல்லும் குறித்து வரும் கிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப் பெயரினது தொகுதி:

பத்து என நிலைமொழி அமைத்துப் பத்து என்ற வருமொழி யைக் கொணர்ந்து புணர்க்கப்படாது, பப்பத்து எனவும் பஃபத்து எனவும் வழங்குமாறு உணரப்படும்.

ஒரோவொன்று என்பதும் அது. ‘ஓரொன்று ஓரொன்றாக் கொடு’ என்று அடுக்குதல் பொருந்தும்.

பத்து+ பத்து - என்ற நிறுத்திப் புணர்ப்பின், அஃது உம்மைத் தொகையோ பண்புத்தொகையோ ஆகுமன்றிப் ‘பத்துப் பத்தாகத் தனித்தனி’ - என்று பொருள் தாராமையின், பப்பத்து என்பதனை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக் காண்டல் கூடாது என்பது. (தொ. எ. 482 நச். உரை)

அ) கொள்ளெனக் கொண்டான் - என்புழிக் ‘கொள்’ என்ற நிலைமொழியோடு ‘என’ என்ற வருமொழி இடைச்சொல்லைப் பிரித்துப் புணர்க்கப்படாது, ‘என’ என்ற இடைச்சொல்லைப் பிரித்தால் அது பொருள் தாராது ஆதலின்.

உறுப்பிலக்கணம் என்று கூறிப் பகுபதத்தைப் பகுதி விகுதி இடை நிலை சாரியை சந்தி விகாரம் - எனப் பின்னுள்ளோர் பிரித்துப் புணர்த்தலும் இளம்பூரணர்க்கும் நச்சினார்க்கினி யர்க்கும் பேராசிரியர்க்கும் உடன்பாடு அன்று. (எ. 482 இள. உரை) (பொ. 663 பேரா. உரை)

புதியன புகுதல் -

{Entry: B02__342}

முற்காலத்து இல்லாத சில பிற்காலத்து இலக்கணமாக வருதல். அவை வருமாறு:

தன்மை ஒருமைக்கண் அன்விகுதியும், பன்மைக்கண் ஓம் விகுதியும், நீர் உண்ணும் - நீர் தின்னும் - என உம் ஈற்றவாய் வரும் பன்மை ஏவலும், அல்ஈற்று வியங்கோள் எடுத்தோதாத பிற ஈற்றவாய் இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் வாழ்த்து முதலிய ஏவற்பொருளவாய் நிகழ்வனவுளவேல் அவையும்,

உண்டு என்பது அஃறிணை ஒருமைக்கேயன்றிப் பிறவற்றிற்கும் பொதுவினையாய் வருதலும்,

யார் என்னும் வினா வினைக்குறிப்புமுற்று அஃறிணைக்கண் வருதலும், யார் என்பது ஆர் என மரீஇ வருதலும், ஈ-தா-கொடு - என்னும் மூன்றும் இழிந்தோன் - ஒப்போன் - மிக்கோன் - இரப்புரையாக முறையே வாராமல் மயங்கி வருவன உளவேல் அவையும்,

மன் - கொல்- எனற்பால இடைச்சொற்கள் மன்னை - கொன்னை - என வருவனவும்,

‘அவனே கொண்டான்’ என்புழி ஏகாரம் ஒரோவழி ‘அவன் கொள்கிலன்’ என எதிர்மறைப்பொருள் தருதலும், (இன்னோ ரன்னவும்) புதியன புகுதலாம். (நன். 332, 337-339, 349, 407, 420, 422 சங்கர.)

புரோவாதம் -

{Entry: B02__343}

யாதானும் ஒரு நிமித்தத்தான் ஒன்றனை முற்கூறி வேறொரு நிமித்தத்தான் அதனையே பின்னும் கூறுதல் அநுவாதம். அநுவாதத்திற்கு முன்னர்க் குறிப்பிடப்படுவது புரோவாதம். புரோவாதத்தை உணர்ந்தால்தான் அநுவாதத்தை உணர முடியும்.

எ-டு : ‘ அன் ஆன் அள் ஆள் ஆர் ஆர் ப(ம்) மார்

அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன் ’ (நன். 140)

முதலிற் கூறப்பட்ட ‘அன்’ விகுதி புரோவாதம்; பின்னர்க் கூறப்பட்ட ‘அன்’ அநுவாதம். இரண்டாவது அன்விகுதியை நோக்க முதலாவது புரோவாதம் ஆம். (சூ. வி. பக். 19)

புழன் : உருபொடு புணருமாறு -

{Entry: B02__344}

புழன் என்பது உருபேற்குமிடத்து அத்தும் இன்னும் மாறி வரப் பெறும்.

வருமாறு: புழத்தை, புழனினை

இருசாரியையும் ஒருங்கே பெற்றுப் புழத்தினை எனவும் வரும்.

(தொ.எ.193 நச். உரை)

புள்: புணருமாறு -

{Entry: B02__345}

பறவையை உணர்த்தும் புள் என்ற பொருட்பெயர் இருவழி யும் வன்கணம் வந்துழித் தொழிற்பெயர் போல உகரமும் வல்லெழுத்தும் பெறுவது பெரும்பான்மை; மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரப் பேறும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ளகரஒற்று இரட்டுதலும் எய்தலாம்.

எ-டு : புள்ளுக் கடிது, புள்ளுக்கடுமை; புள்ளு ஞான்றது, புள்ளுஞாற்சி; புள்ளு வலிது, புள்ளுவலிமை; புள் யாது, புள்யாப்பு; புள்ளரிது, புள்ளருமை.

புள் என்பதன் ளகரம் வன்கணம் வந்துழி டகரமாகவும், மென்கணம் வந்துழி ணகரமாகவும் திரிதலுமுண்டு.

எ-டு : புட் கடிது, புட்கடுமை; புண் ஞான்றது, புண்ஞாற்சி. புள் என்பதன்முன் இடைக்கணம் வருமொழியா யின் உகரம் பெற்றும் பெறாதும் புணரும்.

எ-டு : புள்ளு வலிது, புள்ளு வலிமை; புள் வலிது, புள் வலிமை (தொ. எ. 403 நச்.)

புள்ளி இறுதி -

{Entry: B02__346}

மெய்யினை ஈறாக உடைய சொற்கள். மெய்யீறுகளாவன, ஞ் ண் ந் ம் ன் ய் ர்ல் வ் ழ் ள் என்ற பதினொன்றாம்.

எ-டு : உரிஞ், உண், பொருந், மரம், பொன், தேய், பார், செல், தெவ், வாழ், கேள். (தொ.எ.78. நச்.)

‘புள்ளி இறுதி முன்னிலைக் கிளவி’ -

{Entry: B02__347}

மெய் ஈறாக அமையும் முன்னிலைச் சொற்கள். முன்னிலைச் சொற்கள், முன்னின்றான் செயலை உணர்த்துவனவும், முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவும் என இருவகைய. முன்னின்றானைத் தொழிற்படுத்துவன ஏவல்வினை எனவும் படும்.

யகர ரகர ஈறுகள் முன்னின்றான் நின்றார்தம் தொழில் உணர்த்துவன.

எ-டு : உண்பாய் - யகர ஈறு; உண்பீர் - ரகர ஈறு

னகர ஈறு முன்னின்றாரைத் தொழிற்படுக்கும் ஏவல் பொருள் தரும்.

எ-டு : உண்மின் கொற்றீர் - னகரஈறு

ஞ்ண் ந் ம் ல் வ் ள் ன் - ஈற்று ஏவல்வினைகள் உகரம் பெறும்.

எ-டு : உரிஞு கொற்றா, உண்ணு கொற்றா, பொருநு கொற்றா, திருமு கொற்றா, கொல்லு கொற்றா, வவ்வு கொற்றா, கொள்ளு கொற்றா, பன்னு கொற்றா.

இவற்றுள் ண் ல் ள் ன் - என்பன உகரம் பெறாமலும் வரும்.

எ-டு : உண் கொற்றா, கொல் கொற்றா, கொள் கொற்றா, பன் கொற்றா.

ய் ர் - என்ற ஈற்று ஏவல்வினைகள் உறழ்ந்து முடியும்.

எ-டு : எய் கொற்றா, எய்க் கொற்றா; ஈர் கொற்றா, ஈர்க் கொற்றா

ழகர ஈற்று ஏவல்வினை இயல்பாகும்.

எ-டு : வாழ் கொற்றா

எனவே, முன்னின்றான் தொழில் உணர்த்தும் முன்னிலை ஈறுகள் ய் ர் - என்பன; முன்னின்றானைத் தொழிற்படுப்பன ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ்ள் - என்ற பதினோ ரீறுகளாம். (தொ. எ. 151 சொ.225, 226 நச்.)

புள்ளி ஈற்று முன் உயிர் -

{Entry: B02__348}

நிலைமொழி புள்ளியீற்றதாக, வருமொழி முதலில் உயிர் வரின், அவ் வருமொழி உயிர் நிலைமொழியீற்றுப் புள்ளி யெழுத்தொடு கூடி உயிர்மெய்யாய்விடும்.

எ-டு : ஆல் + இலை = ஆலிலை; நாகு + அரிது = நாகரிது

மெய்யீறு புள்ளி பெறுவது போலக் குற்றியலுகர ஈறும் புள்ளி பெறும் எனவே, புள்ளியீறு என்பதனுள் மெய்யீறு குற்றுகர ஈறு என இரண்டும் அடங்கும். உயிர், மெய்யீற் றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்து இயலும்.

உயிர், இயல்பாய மெய்யீற்றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்து இயலுதல் போலவே, விதியான் வந்த மெய்யீறு குற்றியலுகர ஈறு இவற்றொடும் சேர்ந்து இயலும்.

எ-டு : அதனை - அத் + அன் + ஐ அவற்றொடும் - அவ் + வற்று + ஒடு + உம்

அது என்பது உகரம் கெட்டு ‘அத்’ ஆயிற்று. முற்றியலுகர மாகிய ஒடு என்பது அவற்று என்பதனொடு சேர்ந்து அவற்றொடு - எனக் குற்றியலுகர ஈறாகி ‘உம்’ புணர்ந்து, குற்றியலுகரத்தின் மீது உகரஉயிர் ஊர அவற்றொடும் என்றாயிற்று.

உயிர்முதல்மொழி வர, நிலைமொழியீற்றுமுற்றியலுகரம் கெடும் என்று கூறிய தொல். குற்றியலுகரம் கெடும் என்னா ராய் இயல்பாகப் புணரும் என்றே யாண்டும் கூறலின், குற்றியலுகர ஈற்றின் மேலும் உயிர் ஊர்ந்து வரும் என்பதே அவர் கருத்து. (எ. ஆ. பக். 105)

புள்ளியீறாகிய குற்றியலுகரம் ஏற்ற எழுத்தில் குற்றியலுகரம் கெட எஞ்சிநிற்கும் மெய்யின்மீது உயிர் ஏறி முடியும். இது சிவஞான. கருத்து. பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் கருத்தும் அதுவே.

எ-டு : நாகு + அரிது > நாக் + அரிது = நாகரிது (எ. கு. பக். 142)

புள்ளி பெறும் எழுத்துக்கள் -

{Entry: B02__349}

ஏகார ஓகாரங்களொடு வரிவடிவில் வேறுபாடில்லாத எகர ஒகரங்கள், மெய்யெழுத்துக்கள், ஈற்றுக் குற்றியலுகரங்கள், ஆய்தம் - என்பன புள்ளி பெறும்.

மகரக்குறுக்கம் மேற்புள்ளியோடு உட்புள்ளியும் பெறும். (ம் {{special_puLLi}} )

புள்ளி, எழுத்தின் இயல்பான மாத்திரையைப் பாதியாகக் குறைத்ததைத் தெரிவிப்பதற்கு அறிகுறியாக வரும். (தொ. எ. 15, 16, 14, 105, நச்.) (பொ. 320 பேரா.)

புள்ளி மயங்கியல் -

{Entry: B02__350}

புள்ளி மயங்கியல் தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் எட்டாவது இயலாகும். இது 110 நுற்பாக்களை உடையது.

ஞகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; நகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; ணகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; மகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; னகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; யகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ரகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; லகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; வகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ழகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ளகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ஓத்தின் புறனடை - என்பன இதன்கண் அடங்கியுள. இப் புறனடை சிங்கநோக்காக முன்னுள்ள உயிர் மயங்கியலுக்கும் பின்னுள்ள குற்றியலுகரப் புணரியலுக்கும் ஒக்கும். (தொ.எ.296- 405 நச்.)

புள்ளி மயங்கியல் புறனடைச் செய்தி -

{Entry: B02__351}

மண்ணப் பத்தம் - அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற்றது.

பொன்னப்பத்தம் - அல்வழிக்கண் னகர ஈறு அக்குப் பெற்றது.

மண்ணங்கட்டி - அல்வழிக்கண் ணகர ஈறு அம்முப் பெற்றது.

பொன்னங்கட்டி - அல்வழிக்கண் னகர ஈறு அம்முப் பெற்றது.

மண்ணாங்கட்டி - அல்வழிக்கண் மரூஉ முடிவு.

கானாங்கோழி - அல்வழிக்கண் மரூஉ முடிபு.

வேயின்தலை - யகரஈறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது.

நீர் குறிது - ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பு; வேர்குறிது, வேர்க்குறிது - ரகர ஈறு அல்வழிக்கண் உறழ்ச்சி; வடசார்க் கூரை, மேல்சார்க் கூரை - ரகர ஈறு வல்லெழுத்துப் பெற்ற மரூஉமுடிபு; அம்பர்க் கொண்டான், இம்பர்க் கொண்டான், உம்பர்க் கொண்டான், எம்பர்க் கொண்டான் - என ஏழன் உருபின் பொருள்பட வந்த பெயர்கள் வல்லொற்றுப் பெற்றன.

தகர்க்குட்டி, புகர்ப்போத்து - ரகரஈறு இருபெயரொட் டின்கண் வல்லொற்று மிக்கது.

விழன் காடு - லகரஈறு வேற்றுமைக்கண் றகரம் ஆகாது னகரம் ஆயிற்று.

கல்லம்பாறை, உசிலங்கோடு, எலியாலங்காய், புடோலங்காய் - லகர ஈறு அம்முப் பெற்றது.

கல்லாம்பாறை - மரூஉ முடிபு பெற்றது

அழலத்துக் கொண்டான் - அத்துப் பெற்றது.

அழுங்கற் போர், புழுங்கற் சோறு - லகரஈற்று அல்வழித்திரிபு.

வீழ் குறிது, வீழ்க் குறிது - ழகரஈற்று அல்வழி உறழ்ச்சி.

தாழம்பாவை - ழகரஈறு அல்வழியில் அம்முப் பெற்றது.

யாழின் கோடு - ழகரஈறு ‘இன்’ பெற்றது.

முன்னாளைப் பரிசு, ஒருநாளைக் குழவி - ளகரஈறு ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்றது.

குளத்தின் புறம் - மகரஈறு அத்தும் இன்னும் பெற்றது.

பொன்னுக்கு, பொருளுக்கு, நெல்லுக்கு, பதினேழு, பல்லுக்கு, சொல்லுக்கு - வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் புள்ளி யீறுகள் உகரம் பெற்றன.

பல் +கு = பற்கு - என உருபேற்புழி, லகரம் றகரமாகத் திரிந்தது. (தொ.எ.405 நச்.)

புள்ளும் வள்ளும் புணருமாறு -

{Entry: B02__352}

புள், வள் - என்பன தொழிற்பெயர் போல யகரம் அல்லாத மெய்ம்முதல்மொழி வருமிடத்தே உகரச்சாரியை பெறுதலு முண்டு; பொதுவிதிப்படி அல்வழியில் ஈற்று ளகரம் டகரத் தோடு உறழ்ந்து வருதல் மிகுதி; வேற்றுமையில் ளகரம் டகரமாகத் திரிதலே மிகுதி என்க.

புள் + கடிது = புள் கடிது, புட் கடிது, புள்ளுக் கடிது - அல்வழி

புள் + கடுமை = புட்கடுமை, புள்ளுக்கடுமை - வேற்றுமை

வள் + கடிது = வள் கடிது, வட் கடிது, வள்ளுக் கடிது - அல்வழி

வள் + கடுமை = வட்கடுமை, வள்ளுக்கடுமை - வேற்றுமை புண் மெலிது, புண்மென்மை; புள் வலிது, புள்வலிமை - என ஏனைக்கணத்தொடும் புணர்த்து முடிக்க. (நன். 234)

புளிமரப்பெயர் புணருமாறு -

{Entry: B02__353}

புளி என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று வருமொழி யொடு புணரும்.

எ-டு: புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல், புளியம்பூ; புளியஞெரி, புளியநுனி, புளியமுரி; புளியயாழ், புளியவட்டு -

என வன்கணம் வருவழி அம்முப் பெற்றும், மென்கணமும் இடைக்கணமும் வருவழி அம்மின் மகரம் கெட்டும் புணர்ந்தவாறு. (தொ. எ. 244 நச்.)

புறக்கருவி -

{Entry: B02__354}

இது கருவிவகை நான்கனுள் ஒன்று. ஈண்டுக் கருவியாவது நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிக்குக் கருவியாக உதவு வது. புறக்கருவியாவது நிலைமொழி வருமொழிகளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூறுவது. அது செய்கையாகிய புணர்ச்சிக் குரிய கருவி கூறாது, புணர்ச்சி நிகழ்த்துவதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவி ஆயிற்று. ஆகவே மொழிமரபு என்னும் இயல் புறக்கருவியாம். (தொ. எ. 1 நச். உரை)

புறச்செய்கை -

{Entry: B02__355}

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. செய்கையாவது நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி. நிலைமொழிக்குப் புறமாய் அதனை அடுத்து வந்து புணரும் வருமொழிச் செய்கை கூறுவது புறச் செய்கையாம்.

லகர னகர ஈறுகளின் முன் வரும் தகரம் றகரமாகவும் நகரம் னகரமாக வும் திரிதலும், ளகர ணகர ஈறுகளின் முன் வரும் தகர நகரங்கள் டகர ணகரங்களாகத் திரிதலும் போல்வன புறச் செய்கையாம்.

எ-டு : கல்+தீது = கற்றீது; பொன் + தீது = பொன்றீது; கல் + நன்று = கன்னன்று; பொன் + நன்று = பொன்னன்று; முள் + தீது = முட்டீது; முள் + நன்று = முண்ணன்று; கண் + தீது = கண்டீது; கண் + நன்று = கண்ணன்று

இவற்றுள் வருமொழி முதலெழுத்தின் திரிபு புறச்செய்கை யாம். (தொ. எ. 149, 150 நச்.)

புறப்புறக் கருவி -

{Entry: B02__356}

இது கருவிவகை நான்கனுள் ஒன்று. மொழிகள் ஆதற்குரிய எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்பும் கூறும் நுல்மரபும் பிறப்பியலும் புறப்புறக் கருவிகளாம். அவை புணர்ச்சிக்குரிய புறக்கருவிகளாகிய, மொழிகளை ஆக்கும் எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்பும் கூறுதலின் புறப்புறக்கருவிகள் ஆயின. (தொ. எ. 1 நச். உரை)

புறப்புறச் செய்கை -

{Entry: B02__357}

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் செய்கை பெறாது நிற்ப, அவ்விரண்டை யும் பொருத்துவதற்கு உடம்படுமெய் போன்ற ஓரெழுத்து வருவது புறப்புறச் செய்கையாம்.

எ-டு : மணி+ அழகிது > மணி + ய் + அழகிது = மணி யழகிது

கோ + அழகிது > கோ + வ் + அழகிது = கோவழகிது

இடையே யகரஒற்றும் வகரஒற்றும் புறப்புறச் செய்கையான் வந்தன. (தொ. எ. 1, 140 நச். உரை)

புறனடை -

{Entry: B02__358}

இது நூற்பா வகை ஆறனுள் ஒன்று. சிறப்பு நூற்பாக்களின் புறத்தே அடுத்து வருதலின் (புறன் + அடை) இது புறனடை எனப்படும். நுற்பாக்களின் புறத்தே நடத்தலின் ( புறம்+ நடை) புறநடை எனினும் அமையும். (இ.கொ. 86)

புறனடை நூற்பா, சிறப்பு நுற்பாக்களில் கூறப்படாது எஞ்சி நிற்கும் செய்திகளைக் கோடற்கு வழிகோலுவதாய் உள்ளது.

பிண்டம், தொகை, வகை, குறி, செய்கை, புறனடை- என நூற்பா அறுவகைப்படும். பெரும்பான்மையும் ஒவ்வோரியல் இறுதியிலும் புறனடை நூற்பா அவ்வியற் செய்தியை நிறைவு செய்வதற்காக இடம் பெறும். (நன். பாயி. 20)

பூ என்பதன் முன் வல்லினம் -

{Entry: B02__359}

பூ என்ற பெயர் நிலைமொழியாக நிற்க, வல்லினம் வருமொழி முதற்கண் நிகழுமாயின், இடையே வல்லெழுத்து மிகுதலே யன்றி அதற்கு இனமான மெல்லெழுத்தும் மிகும்.

எ-டு : பூ + கொடி, சோலை, தடம், பொழில் = பூக்கொடி, பூங்கொடி; பூச்சோலை, பூஞ்சோலை; பூத்தடம், பூந்தடம்; பூப்பொழில், பூம்பொழில்.

வன்மைமென்மை மிகுதல் செவியின்பம் நோக்கிக் கொள்க. பூத்தொழில், பூத்தொடை எனவும், பூம்பொழில் எனவும் வழங்குதல் காண்க. (நன். 200 சங்.)

பூ : புணருமாறு -

{Entry: B02__360}

மலரை உணர்த்தும் பூ என்ற சொல் அல்வழிக்கண் வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். வேற்றுமைக்கண் வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து மிகுதலும் இனமெல்லெழுத்து மிகுதலும் உரித்து.

எ-டு: பூக்கடிது; பூ நன்று, பூவறிது, பூ வழகியது (வகரம்

உடம்படுமெய்); பூக்கொடி, பூங்கொடி (தொ. எ. 264, 268 நச்.)

பூதி முதலியவற்றில் தீட்டிய வரிவடிவு -

{Entry: B02__361}

‘புள்ளிவிட் டவ்வொடு’ என்னும்சூத்திரத்தில் வரிவடிவு ஒலிவடிவு என்னும் எழுத்தின் இருதிறனும் விரவிக் கூறினார், திருநீறு முதலியவற்றில் தீட்டிய வரிவடிவம் ஒலிவடிவு போலப் பயன் தரும் ஒற்றுமை குறித்து.

புள்ளிவிட்டு அவ்வொடு முன் உருவாதல், ஏனை உயிரோடு உருவு திரிதல், உயிரின் வடிவொழித்தல் - வரி வடிவம்;

உயிர் அளவாதல், ஒற்று முன்னாய் ஒலித்தல் - ஒலிவடிவம் (நன். 89 சங்கர.)

பூல்:புணருமாறு -

{Entry: B02__362}

பூல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் வன்கணம் வரின் உறழ்ந்தும், இடை உயிர்க்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் அம்முச் சாரியையும் சிறுபான்மை ஆம்சாரியையும் பெற்றுப் புணரும். மென்கணத்துள்ளும் ஞகரமகரங்கள் வருவழி லகரம் னகரமாய்த் திரியும் என்க.

எ-டு : பூல்கடிது, பூற்கடிது - பூல்(ன்) ஞான்றது, பூல் வலிது, பூலழகிது - அல்வழி; பூலங்கோடு, பூலஞெரி, பூல விறகு; பூலாங்கோடு, பூலாங்கழி - வேற்றுமை. (தொ. எ. 368, 375 நச். உரை)

பெண்பாற்பெயர்ப் பகுபதம் சிலவற்றது முடிபு -

{Entry: B02__363}

பெண்பாற்பெயர்ப் பகுபதம் முடிப்புழி இன்ன குலத்தார் என்னும் பொருண்மை தோன்ற முடிக்க.

அரசி என்னும் பகுபதம் முடியுமாறு: ‘தத்தம்..... பகுதியாகும்’ (நன். 133) என்பதனான் அரசு என்னும் பகுதியைத் தந்து, ‘அன் ஆன்’ (139) என்பதனான் இகர விகுதியை நிறுவி, ‘உயிர்வரின் உக்குறள்’ (163) என்பதனான் உகரத்தைக் கெடுத்துச் சகர ஒற்றின்மேல் ‘உடல்மேல்’ (203) என்பதனான் இகரஉயிரை ஏற்றி முடிக்க.

பார்ப்பனி: ‘தத்தம்... பகுதியாகும்’ என்பதனான் பார்ப்பான் என்னும் பகுதியை முதல்வைத்து, அதனை ‘விளம்பிய பகுதி’ (138) என்பத னான் பார்ப்பன்- என அன் ஈறாக்கி, ‘அன் ஆன்’ என்பதனான் இகர விகுதியைக் கொணர்ந்து உயிரேற்றி முடிக்க.

வாணிச்சி: வாணிகன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பதனான் ‘கன்’ கெடுத்து, இகரவிகுதியைக் கொணர்ந்து சகர இடைநிலையை வருவித்து அதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.

உழத்தி: உழவன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பத னான் ‘வன்’கெடுத்து, இகர விகுதி கொணர்ந்து, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ (140) என்பதனான் தகர இடைநிலையை வருவித்து, அதனை மிகுவித்து, உயிரேற்றி முடிக்க.

தச்சிச்சி: தச்சன் என்னும் பகுதியை ‘அன்’ கெடுத்து நிறுவி, இகர விகுதியைக் கொணர்ந்து ‘இலக்கியம் கண்டதற்கு’ என்பதனான் ‘இச்’ என்னும் இடைநிலையை வருவித்து உயிரேற்றி முடிக்க. (நன். 144 மயிலை.)

பெயர்இடைநிலைகள் -

{Entry: B02__364}

வானவன், மீனவன், வில்லவன், எல்லவன், கதிரவன், சூரியவன் - என்பன அகர இடைநிலை பெற்றன.

சேரமான், கட்டிமான் - என்பன மகர இடைநிலை பெற்றன.

வலைச்சி, புலைச்சி - என்பன சகர இடைநிலை பெற்றன.

புலைத்தி, வண்ணாத்தி - என்பன தகர இடைநிலை பெற்றன.

வெள்ளாட்டி, மலையாட்டி - என்பன டகர இடைநிலை பெற்றன.

கணக்கிச்சி, தச்சிச்சி- என்பன ‘இச்’ இடைநிலை பெற்றன.

சந்தி வகையானும் பொதுச்சாரியை வகையானும் முடியாவழி இவ்வாறு வருவன இடைநிலை எனக் கொள்க. (நன். 140 மயிலை.)

அறிஞன் என்பது ஞகர இடைநிலை பெற்றது.

ஓதுவான், பாடுவான் - என்பன வகர இடைநிலை பெற்றன.

வலைச்சி, புலைச்சி - என்பன சகர இடைநிலை பெற்றன.

வண்ணாத்தி, பாணத்தி; மலையாட்டி, வெள்ளாட்டி; தந்தை, எந்தை, நுந்தை- என்பன தகர இடைநிலை பெற்றன. (நன். 141 சங்கர.)

அறிஞன், வினைஞன், கவிஞன் - ஞகரஒற்று இடைநிலை பெற்றன.

ஓதுவான், பாடுவான் - வகரஒற்று இடைநிலை பெற்றன.

வலைச்சி, இடைச்சி - சகரஒற்று இடைநிலை பெற்றன.

செட்டிச்சி, தச்சிச்சி - ‘இச்சு’ என்னும் இடைநிலை பெற்றன.

கதிரவன், எல்லவன், வானவன் - அகர உயிராம் இடைநிலை பெற்றன.

சேரமான், கோமான், வடமன் - மகரஒற்று இடைநிலை பெற்றன. (நன். 141 இராமா.)

உண்டவன் உரைத்தவன் உண்ணாநின்றவன் உண்பவன் - முதலிய வினைப்பெயர்கள் முக்கால இடைநிலைகள் (ட், த், ஆநின்று, ப் முதலிய) பெற்றவாறும், வானவன் மீனவன் வில்லவன் எல்லவன் கதிரவன் கரியவன்-முதலியவை‘அ’ என்னும் இடைநிலை பெற்றவாறும், சேரமான் கட்டிமான்-முதலியவை மகர இடைநிலை பெற்றவாறும், வலைச்சி பனத்தி மலையாட்டி முதலியவை முறையே சகர தகர டகர இடை நிலை பெற்றவாறும், செட்டிச்சி, தச்சிச்சி - முதலியவை ‘இச்சு’ என்னும் இடைநிலை பெற்றவாறும் காண்க. பிறவும் அன்ன. (இ. வி. 52. உரை)

பெயர்நிலைச்சுட்டு -

{Entry: B02__365}

பெயர்நிலைச் சுட்டாவது சுட்டுநிலைப் பெயர் என்றவாறு. அவை பொருளை ஒருவர் சுட்டுதற்குக் காரணமான நிலையையுடைய பெயர்கள். அவை உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைய. பொதுப்பெயரென ஒன்று இன்று. அஃது அஃறிணைப் பெயராகவோ உயர் திணைப் பெயராகவோ, ஒருநேரத்தில் ஒன்றாகத்தான் இருத்தல் வேண்டும். ஆதலின், பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் அஃறிணைப்பெயர் என்ற இரண்டனுள் அடங்கும். (தொ. எ. 117நச். உரை)

பெயர்நிலைச்சுட்டு-பெயராகிய பொதுநிலைமையது கருத்து. (118 இள. உரை)

பெயர் புணரும் நிலையாகிய கருத்தின்கண் (எ. கு. பக். 124)

பெயர்ப்பகுபதம் தன்னொடும்பிறிதொடும் புணர்தல் -

{Entry: B02__366}

மலையன் மன்னவன்- மலையன் மன் எனவும், வானவன் வாளவன் - வானவன் வாள் எனவும், பரணியான் பாரவன் - பரணியான் பார் எனவும், இளையள் மடவாள் - இளையள் பெண் எனவும், கரியான் மலையன் - கரியான் கால் எனவும், ஊணன்தீனன் - ஊணன் உரம் எனவும் பெயர்ப்பகுபதம் தன்னொடும் பிறிதொடும் வந்தது. (நன்.150 மயிலை.)

பெயர்ப்பகுபதம் பிரிப்பு -

{Entry: B02__367}

பெயர்ப் பகுபதம் பிரித்தால், பகுதி பகாப்பதமும் விகுதி வேறு பொருளில் இடைச்சொல்லுமாய்த் தொடர்ந்து நின்று பொருளை விளக்கும். அவை ஊரன், வெற்பன், வில்லி, வாளி- என்பன. (நன்.131 மயிலை,)

பெயர் புணர்நிலை வேற்றுமை வழிய -

{Entry: B02__368}

பெயர் புணர்நிலை - பெயர்ச்சொல் இணையும்வழி. பெயர்ச் சொல் புணரும் வழியிலேயே வேற்றுமைப் புணர்ச்சி அமையும். நால்வகைச் சொற்களும் இருவழியும் புணரும் என எய்தியதனை மறுத்துப் பெயர்ச்சொல் புணரும் நிலையே வேற்றுமையாம் எனவே, வினைச்சொல் முதலியமூன்றும் புணரும்வழி அல்வழிய ஆவன அன்றி, வேற்றுமை வழிய வாரா;பெயர்ச்சொற்கள், வேற்றுமைவழி - அல்வழி - என இருவழியும் ஆம் என்பது. (சூ. வி. பக். 51)

எ-டு :சாத்தன் மகன்-பெயரொடு பெயர்-வேற்றுமைப் புணர்ச்சி

நிலம் கடந்தான்-பெயரொடு வினை - வேற்றுமைப் புணர்ச்சி

வந்த சாத்தன்-வினையொடு பெயர் -அல்வழிப்புணர்ச்சி

மற்றிலது-இடையொடு வினை - அல்வழிப்புணர்ச்சி

நனிபேதை- உரியொடு பெயர் - அல்வழிப்புணர்ச்சி

தவச்சேயது-உரியொடு வினை - அல்வழிப்புணர்ச்சி

மற்றைப் பொருள்- இடையொடு பெயர்- அல்வழிப் புணர்ச்சி

நால்வகைப் புணர்ச்சியும் வேற்றுமை அல்வழி என இரண் டாய் அடக்கலின், வினைவழியும் உருபு வரும் என்பதுபட நின்றதனை இது விலக்கிற்று. (தொ. எ. 117 இள. உரை)

“ஆயின் இவ்விலக்குதல் ‘வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது’ என்ற வினையியல் முதல் சூத்திரத்தான் பெறுதும் எனின், அது முதனிலையைக் கூறியதாம்.” (தொ. எ. 116 நச். உரை)

பெயர் விகுதி பெறுதல் -

{Entry: B02__369}

வில்லன் வில்லான், வளையள் வளையாள், ஊரர் ஊரார், வில்லி வாளி அரசி செட்டிச்சி, காதறை மூக்கறை -இவை வினையின் விகுதிகள் சில பெயரில் வந்தன. (அன் ஆன், அள் ஆள், அர் ஆர், இ, ஐ - என்பன.) (நன். 140 சங்கர.)

பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறல் -

{Entry: B02__370}

இடையும் உரியும் பெயர்வினைகளை அடுத்தல்லது தாமாக நில்லாமையின் பெயர்வினைகளுக்கே புணர்ச்சி கூறப் பட்டது. (தொ.எ.109 இள. உரை)

இடைச்சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்கும் செய்கைப் பட்டுழிப் புணர்ப்பு சிறுபான்மை ஆதலின் அவை விதந்து கூறப் பெறவில்லை. (108 நச். உரை)

பெருநூல் -

{Entry: B02__371}

ஒரு பொருள் கிளந்த சூத்திரம், இனமொழி கிளந்த ஓத்து, பொதுமொழி கிளந்த படலம் - என்னும் இம்மூன்று உறுப்ப hன் இயன்ற இலக்கணம். (சிவஞா. பா. வி. பக். 9)

எ-டு : தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், சின்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம்.

பேன் என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__372}

பேன் என்பது பண்டைக்கால இயற்பெயர்களுள் ஒன்று. பேன் என்ற இயற்பெயர் தந்தை என்ற முறைப்பெயராடும், மக்கள் முறைமையில் வரும் இயற்பெயர்களொடும் புணரும்வழி, இயற்பெயர்களுக்குரிய சிறப்புப் புணர்ச்சி விதி பெறாது, அஃறிணை விரவுப்பெயரின் பொதுவிதியான் முடியும்.

எ-டு : பேன்+ தந்தை = பேன்றந்தை (பேனுக்குத் தந்தை)

பேன் + கொற்றன் = பேன்கொற்றன் (பேன் என்ப வனுக்கு மகனாகிய கொற்றன்) (தொ.எ.351 நச்.)

பொது எழுத்து -

{Entry: B02__373}

ஆரிய உயிர் பதினாறனுள், நடுவிலிருக்கும் நான்குயிரும் கடையிலிருக்கும் இரண்டுயிரும் அல்லாத பத்துயிரும் ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாகும். இனி, ஆரிய மெய் முப்பத்தேழனுள், ககரமுதல் ஐந்து வருக்கங்களின் முதலில் நிற்கின்ற க ச ட த ப-க்களும், கடையில் நிற்கின்ற ங ஞ ண ந ம -க்களும், ய ர ல வ ள-க்களும் இருமைக்கும் பொது வெழுத்துக்களாம். (மு. வீ. மொழி. 11-13)

பொதுக் கருவி -

{Entry: B02__374}

தொல்காப்பிய எழுத்ததிகாரத்து முதல் மூன்று இயல்களாகிய நூல்மரபு, மொழிமரபு, பிறப்பியல் என்பன. முதலெழுத்து சார்பெழுத்து, மொழி முதலில் வருவன, இறுதியில் வருவன, நட்பெழுத்து, பகையெழுத்து, எழுத்துக்களின் தோற்றம்- இவை பற்றியே இம்மூன்று இயல்களும் கூறுகின்றன. இவை செய்கைக்கு நேரான கருவி அன்மையின் பொதுக்கருவி ஆயின. (சூ. வி. பக். 17)

பொதுப் புணர்ச்சி -

{Entry: B02__375}

இருபத்துநான்கு ஈற்றுச் சொற்களின் முன் வருமொழி முதல் ஞ ந ம ய வ என்னும் மெய்கள் வரின் இயல்பாகப் புணரும். தனிக்குற்றெழுத்தை அடுத்த யகரமெய், தனியாக நிற்கும் உயிரும் உயிர்மெய்யுமாகிய ஐகாரம், நொ து என்ற உயிர்மெய் யெழுத்துக்கள் - இவற்று முன் ஞ ந ம ய வ - வரின், அம் மெய்கள் மிகுதலுமுண்டு. நிலைமொழி ஈற்றில் ண ள ன ல - என்ற மெய்கள் நிற்குமாயின், வருமொழி முதற் கணுள்ள நகரம் ணகரமாகவும் னகரமாகவும் திரியும்.

எ-டு : விள ஞான்றது, விள நீண்டது, விள மாண்டது, விள யாது, விள வலிது;

மெய்ஞானம், மெய்ஞ்ஞானம்; கைநீட்சி, கைந்நீட்சி;

நொ நாகா, நொந் நாகா; து நாகா, துந் நாகா. (ஞெள்ளா, மாடா, யவனா - என்பவற்றையும் கூட்டி வரு மெய்யெழுத்து மிகுக்க.)

மண், முள், பொன், கல்+நன்று = மண்ணன்று, முண்ணன்று, பொன்னன்று, கன்னன்று

(நிலைமொழியீற்று ளகரம் ணகரமாகவும், லகரம் னகரமாக வும் திரியும் என்க.) (நன். 158)

பொதுப்பெயர்களுக்கும் உயர்திணைப்பெயர்களுக்கும் ஈறான மெய்கள் வல்லின முதல் மொழி வருமிடத்தே இயல்பாம். உயிரும் யகர ரகரமெய்களும் ஆகிய இவ்வீற்று அவ்விருவகைப் பெயர்கள் முன்னர் வருமொழி முதற்கண் வரும் க ச த ப - என்னும் வல்லின மெய்கள் மிகா. உயர்திணைப் பெயர்கள் சில நாற்கணங்களொடு புணருமிடத்தே நிலை வருமொழிகள் விகாரப்படுவனவும் உள.

எ-டு : சாத்தன், ஆண் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = சாத்தன் குறியன், சாத்தன் சிறியன், சாத்தன் றீயன், சாத்தன் பெரியன்;ஆண் குறியன், ஆண் சிறியன், ஆண் டீயன், ஆண் பெரியன்; சாத்தன், ஆண் + கை, செவி, தலை, புறம் = சாத்தன்கை, சாத்தன் செவி, சாத்தன்றலை, சாத்தன்புறம்; ஆண்கை, ஆண்செவி, ஆண்டலை, ஆண்புறம்.

பொதுப்பெயர் அல்வழி வேற்றுமை இருவழியும் இயல்பாக முடிந்தன.

ஊரன், அவன் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = ஊரன் குறியன், ஊரன் சிறியன், ஊரன் றீயன், ஊரன் பெரியன்; அவன் குறியன், அவன் சிறியன், அவன் றீயன், அவன் பெரியன்;

ஊரன், அவன் + கை, செவி, தலை, புறம் = ஊரன்கை, செவி, தலை, புறம்; அவன் கை, செவி, தலை, புறம்.

உயர்திணைப்பெயர் இருவழியும் இயல்பாக முடிந்தன.

சாத்தி, தாய் +குறியள், சிறியள், தீயள், பெரியள்= சாத்தி குறியள், சாத்தி தீயள்....., தாய் குறியள், தாய் தீயள்.....

சாத்தி, தாய் + கை, செவி, தலை புறம்= சாத்திகை, சாத்தி செவி,..........., தாய்கை, தாய்செவி,.............

நம்பி, சேய் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = நம்பி குறியன், நம்பி சிறியன்..., சேய் குறியன், சேய் சிறியன்,.....

நம்பி + கை, செவி, தலை, புறம் = நம்பிகை, நம்பிசெவி....., சேய்கை, சேய்செவி.....

அவர், ஒருவர் + குறியர், சிறியர், தீயர், பெரியர் = அவர் குறியர், அவர் சிறியர்,............., ஒருவர் குறியர், ஒருவர் சிறியர்,............ + கை, செவி, தலை, புறம்= அவர்கை, அவர்செவி,.........., ஒருவர்கை, ஒருவர்செவி,...........

உயிரும் யகர ரகர மெய்யும் ஆகிய ஈற்றுப் பொதுப்பெயர் களும் உயர்திணைப்பெயர்களும் அல்வழி வேற்றுமை என இருவழியிலும் இயல்பாக முடிந்தன.

விராடன் + அரசன் =விராடவரசன்; கபிலன் + பரணன் = கபிலபரணர்; வடுகன் + நாதன்

= வடுகநாதன்; அரசன் + வள்ளல் = அரசவள்ளல் - இவை அல்வழிப் புணர்ச்சி.

ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப் பள்ளி; குமரன் + கோட்டம் = குமர கோட்டம், குமரக் கோட்டம் - இவை வேற்றுமைப் புணர்ச்சி

இருவழியும் உயர்திணைப்பெயர் விகாரப்பட்டது. நிலை மொழி ஈறு கெடுதல் காண்க. ஒரோவழி வருமொழி முதல் வல்லெழுத்து மிகுதலும் காண்க. வருமொழி முதலெழுத்து மிகுதல் வருமொழிச் செய்கை எனப்படும். (நன். 159 சங்.)

நிலைமொழி ஈற்றில் நிற்கும் ஆ ஏ ஓ - என்னும் வினா இடைச்சொல் முன்னரும், நிலைமொழியாக நிற்கும் யா என்னும் வினாப்பெயரின் முன்னரும், உயிரும் மெய்யுமாகிய ஈற்றினையுடைய விளிப்பெயர் முன்னரும் வன்கணம் வரின் இயல்பு புணர்ச்சியாம்.

எ-டு : உண்கா சாத்தா? அவனே கொண்டான்? உண்கோ சாத்தா? யா குறியன? நம்பீ கொள், விடலாய் சொல்

(உண்கா - உண்பேனோ என்னும் பொருளையுடையது; ஆகாரஈற்று வினா) (நன். 160)

உயிரும் ய ர ழ - மெய்களும் ஆகிய ஈற்றினையுடைய முன்னிலை வினையும் ஏவல்வினையும், வருமொழி முதல் வன்கணம் வரின் இயல்பாகவும் உறழ்ந்தும் புணரும்.

எ-டு : உண்டி, உண்டனை, உண்டாய்+ கொற்றா = உண்டி கொற்றா - முதலாக இயல்பாக முடிந்தன.

உண்டீர் + கொற்றீர் = உண்டீர் கொற்றீர் - என இயல்பாக முடிந்தது.

முன்னிலைவினை முன்னர் வன்கணம் வந்து இயல் பாக முடிந்தவாறு.

வா கொற்றா, பாய் சாத்தா, சேர் தேவா, வாழ் புலவா - என, உயிர் ய ர ழ இறுதி ஏவல்வினை முன் வன்கணம் வர இயல்பாயிற்று

நட கொற்றா, நடக் கொற்றா; எய் கொற்றா, எய்க் கொற்றா; ஈர் கொற்றா, ஈர்க் கொற்றா; தாழ் கொற்றா, தாழ்க் கொற்றா; - என, இவை உறழ்ச்சி முடிபு.

இயல்பாதல் முன்னிலைவினைக்கண்ணும், உறழ்தல் ஏவல் வினை சிலவற்றின்கண்ணும் கொள்ளப்படும். (நன். 161)

பொருட்டன்மை -

{Entry: B02__376}

பொருட்டன்மையாவது, ஒருபொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்கும் தன்மை. (நன். 287 சிவஞா.)

பொருட்புணர்ச்சி -

{Entry: B02__377}

வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வேற்றுமையுருபு மறைந்து நிற்க, அவ்வுருபின் பொருள் அவ்வுருபு மறைந்தவழியும் திரிபுறாது நிற்க, வேற்றுமையுருபு தொக்கு நிற்கும் நிலைமொழி, பெரும்பான்மை வருமொழி முதலெழுத்தாம் வன்கணத் தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணரும் புணர்ச்சி.

பொதுவாகப் பொருட்புணர்ச்சி என்பது அஃறிணைப் பெயர் களுக்கே கொள்ளப்படும். தொல். உயர்திணைப்பெயர் களையும் விரவுப்பெயர்களையும் விதந்து ஓதியே முடிப்பார் என்பது. (தொ.எ. 153 நச். உரை)

உருபு தொக்கு நின்ற பொருட்புணர்ச்சியே எழுத்ததிகார இறுதி இயல்கள் மூன்றன்கண்ணும் பெரும்பாலும் கூறப்பட் டுள. (203 நச். உரை)

பொருட்பெயர்ப் பகுபதம் -

{Entry: B02__378}

குழையன் குழையள் குழையர் குழையது, குழையன குழையேன் குழையேம் குழையாய் குழையீர் - என இவ்வாறு வருவன ‘இப்பொருளினை உடையார்’ என்னும் பொருண்மைப் பொருட் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.)

பொருநுதல் -

{Entry: B02__379}

ஒருவர் மற்றொருவர் போல வேடங்கொள்ளும் பொருநரது தொழில் பொருநுதல் ஆதலின், அஃது ஒத்தல் என்னும் பொருளுடையது. (நன். 208 சங்கர.)

பொருள் ஆதி ஆறும் முதல் சினையுள் அடங்குதல் -

{Entry: B02__380}

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறு வகைப் பெயருள், பொருள் முதல் மூன்றும் முதலும், சினை முதல் மூன்றும் சினையுமாய் அடங்கும் என்பது அறிவித்தற்கு இம்முறை வைத்தார் என்க. (நன். 131 மயிலை., இ.வி. 45 உரை)

பொருள் தெரியா ஒலிகள் -

{Entry: B02__381}

கடலொலி, சங்கொலி போல்வன பொருள் புலப்பட மாட்டாத ஒலிகள். (தொ.எ. 1 நச். உரை)

பொருள் வரைந்து இசைக்கும் ஐகார வேற்றுமை -

{Entry: B02__382}

ஏனை வேற்றுமைகளது பொருட்புணர்ச்சியது பொதுமுடி பினைத் தான் நீக்கி வேறு முடிபிற்றாகும் இரண்டாம் வேற்றுமை. (தொ.எ. 157 நச்.)

போலி இடைநிலைமயக்கம் ஆகாமை -

{Entry: B02__383}

போலிகளை இடைநிலை மயக்கத்தின் பாற்படுத்திப் பொருள் கூறுவாருமுளர். இங்ஙனம் கூறிய எழுத்துக்கள் மொழிக்கு உறுப்பாகி ஒன்று நின்ற நிலைக்களத்து மற்றொன்று அது போல மொழி நிரம்ப நிற்பதன்றி ஒன்றோடொன்று மயங்கி இரண்டெழுத்தும் உடன் நிற்பது இன்மையானும், முதல் ஈறு இடைநிலைகளுக்குப் புறனடையும் கூறிக் குறைவறுத்தமை யானும், ‘உறழா நடப்பன’ என்றும் ‘ஒக்கும்’ என்றும் ‘உறழும்’ என்றும் உவமஉருபு கொடுத்து இம் மூன்று சூத்திரம் கூறுத லானும், போலி இடைநிலை மயக்கத்தின்பாற் படாது என்க. (நன். 124 சங்கர.)

போலி ஐகார ஒளகாரம் -

{Entry: B02__384}

அ இ, அய் - என்பன ஐகாரத்துக்குப் போலியாக வரும். ஐகாரச் சினைக்குப் போலியாக வரும் என்று தொல். கூறுதலின், சினை யெழுத்தாவது மொழியின் முதலில் வரும் எழுத்தைக் குறிக்காமல் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்தைக் குறித்தலின், மொழி இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரமே ‘அய்’ என வரும்’; மொழி முதற்கண் ‘அஇ’ ஐகாரத்துக்குப் போலியாக வரும்.

அஉ என்பது ஒளகாரத்துக்குப் போலியாக வரும், ஒளகாரம் மொழி முதற்கண் வருமே அன்றி இடையிலும் இறுதியிலும் வாராமையின், இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரத் துக்கு‘அய்’ போலியாவது போல, ஒளகாரத்துக்கு ‘அவ்’ போலியாகும் என்று தொல்காப்பினார் குறிப்பிடவில்லை.

வீரசோழியமும் நேமிநாதமும் மொழிமூவிடத்தும் ஐகாரத் துக்கு ‘அய்’ போலியாகும் என்றும், ஒளகாரத்துக்கு ‘அவ்’ போலியாகும் என்றும் கூறின. ஆயின், “அஇ-ஐ,அஉ-ஒள” என்பதனை அவை குறிப்பிடவில்லை, (எ.ஆ.பக்.59,60)

நன்னூலார் அஇ,அய்-என்பன ஐ போலவும், அஉ,அவ்-என்பன ஒள போலவும் ஆகும் என்று கூறியுள்ளார். பிற்காலத்து ஐ, ஒள-என்பனவற்றிற்கு அய் அவ்-என்ற போலிகளையும் எதுகைக்குக் கொண்டனர். (பி.வி.5உரை)

போலிமொழி -

{Entry: B02__385}

போலும் என்னும் சொல் இது. இச்சொல்லில் உகரம் கெட்டு, எஞ்சிய லகாரம் னகாரமாகிப்‘போன்ம்’எனச் செய்யுளில் ஈரொற்று உடனிலைச் சொல்லாய் வரும்போது ஈற்று மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாய் மகரக் குறுக்கமாம். (தொ. எ. 51 நச்.)

ம section: 145 entries

மஃகான் புள்ளியீறு பெறும் சாரியைகள் -

{Entry: B02__386}

மகரஈறு அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வருமொழியாகும் உருபுகளொடும் பெயர்களொடும் புணரும்.

எ-டு : மரம்+ஐ > மரம்+அத்து+ஐ=மரத்தை; மரம் + அத்து + இன் + ஐ = மரத்தினை.

மரம்+கோடு > மரம் + அத்து + கோடு = மரத்துக்கோடு; மரம் + அத்து + இன் + கோடு = மரத்துக்கோடு. (தொ.எ. 185, 186 நச்.)

மக்கள் என்ற பொதுப்பெயர் புணருமாறு -

{Entry: B02__387}

மக்கள் என்ற பொதுப்பெயர் இருவழியும் இயல்பாதலே யன்றிச் சில விடங்களில் வருமொழி முதலில் வன்கணம் வந்துழி ளகரம் டகரமாகத் திரிதலும் உரித்து.

எ-கு: மக்கள்+தலை=மக்கட்டலை-வேற்றுமை

மக்கள்+சுட்டு=மக்கட்சுட் (தொ.சொ. 1) - அல்வழி (தொ.எ.404.நச்.)

மக என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__388}

மக என்ற இளமைப் பெயர் இன்சாரியையும் அத்துச் சாரியை யும் பெற்றுப் புணரும். இன்சாரியை பெறுதல் பெரும் பான்மை.

எ-டு : மக+இன்+கை,ஞாண்,வட்டு,ஆடை=மகவின் கை,மகவின் ஞாண்; மகவின்வட்டு, மகவினாடை ; மக+அத்து+கை=மகத்துக்கை;

மக+பால்+யாடு= மகப்பால்யாடு, மகம்பால்யாடு-என வலித்தலும் மெலித்தலும் பெற்று வருதலு முண்டு. (தொ. எ. 218, 219 நச். உரை)

மகர ஈற்று அல்வழிப் புணர்ச்சி -

{Entry: B02__389}

மகரஇறுதிப் பெயர் அல்வழிக்கண் ஈற்றுமகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ப இனமெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : மரங் குறிது, மரஞ் சிறிது,மரந் தீது, மரம் பெரிது-எனக் காண்க. மரம் பெரிது என்புழித் திரிபுஇன்று என்பது ஆணை கூறலாம். (தொ. எ. 314 நச். உரை)

வட்டத்தடுக்கு, சதுரப்பலகை, ஆய்தப்புள்ளி, வேழக்கரும்பு, நீலக்கண்-என்னும் பண்புத்தொகைக்கண் நிலைமொழியீற்று மகரம் கெட்டு வருமொழிமுதல் வல்லெழுத்து மிக்கு முடிந்தன.

ஆய்த உ(வு)லக்கை, அகர முதல - இவை இயல்புகணத்தின் கண் மகரம் கெட்டு முடிந்தன.

செல்லுங் கொற்றன், உண்ணுஞ் சோறு; கவளமாந்து மலைநாடன், பொரு மாரன், தாவு பரி, பறக்கு நாரை, அடு போர், வருகாலம்;கொல்லும் யானை, பாடும் பாணன் - இவை முறையே மகரம் திரிந்தும், கெட்டும், நிலைபெற்றும் வந்த பெயரெச்சம் (பெயரெச்சத் தொடர்).

கலக்கொள், கலச்சுக்கு, கலத்தோரை கலப்பயறு - இவை அளவுப் பெயர்க்கண் மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கன.

எல்லாக் கொல்லரும், எல்லாப் பார்ப்பாரும் - என இவை மகரம் கெட்டு வலிமிக்கன.

பவளவாய் - என உவமத்தொகைக்கண்ணும், நிலநீர் என எண் ணிடத்தும் மகரம் கெட்டது.

மர ஞான்றது, மர நீண்டது, மர மாண்டது ‘உரையசைக் கிளவியு ஞாங்கர்’(எ. 204 நச்.),அதன்குண நுதலி’ (சொ. 416)- என இயல்புகணத்துக்கண் மகரம் கெட்டது. (314 நச்.)

மரம் யாது, மரம் வலிது, மரமடைந்தது - என இயல்பு கணத்துக்கண் மகரம் கெடாது நின்றது. (தொ.எ. 314)

அகம்+ கை - ககரம் கெட்டு மகரமும் கெட்டு, மெல்லெழுத்து மிக்கு அங்கை - என முடிந்தது. - 315

இலம்+படு = இலம்படு - என இயல்பாகப் புணர்ந்தது - 316

ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று - என ஆயிரம் அத்துப் பெற்றது. - 317

அஃது அடையடுத்த இடத்தும் பதினாயிரத்தொன்று - என்றாற் போல அத்துப் பெற்றது. - 318

ஆயிரம் + கலம், சாடி = ஆயிரக்கலம், ஆயிரச் சாடி - என மகரம் கெட்டு வலி மிக்கது. - 319

நும் என்பது அல்வழிக்கண் நீஇர் - எனத் திரிந்தது. -326

மகர ஈற்றுத் தொழிற்பெயர் செம்முக் கடிது, செம்மு ஞான்றது - என்றாற் போல உகரம் பெற்றது. -327

ஈம், கம், உரும் - என்ற பெயர்கள் உகரம் பெற்று ஈமுக்கடிது என்றாற் போல வந்தன. - 328

மகர ஈற்றுச் சிறப்பு விதி -

{Entry: B02__390}

மகர ஈற்று நிலைமொழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்தே மகரஈறு கெட, வருமொழி வல்லெழுத்தோ அதன் இன மெல்லெழுத்தோ மிக்கு முடியும். அல்வழிக்கண் உயிரும் இடைக்கணமும் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடாது இயல்பாக முடிதலுமுண்டு.

எ-டு : குளம்+ கரை= குளக்கரை, குளங்கரை - வேற்றுமை

குளம் +அழகிது, யாது = குளமழகிது, குளம் யாது - அல்வழி (நன். 220)

நும் தம் எம் நம் - என்பவற்று ஈற்று மகரம் வருமொழி முதலில் ஞகரமோ நகரமோ வருமிடத்து அவ்வம் மெய்யாகத் திரியும்.

நும், தம், எம், நம் +ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண், எஞ்ஞாண், நஞ்ஞாண்

+ நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்

வருமொழி முதலில் மகரம் வருமிடத்து நிலைமொழியீற்று மகரம் இயல்பாகப் புணரும்.

நும் +மணி = நும்மணி; பிறவும் கொள்க. (நன். 221)

அகம் என்னும் நிலைமொழி முன்னர் வருமொழியாகச் செவி - கை - என்பன வரின், அகங்கை - அகஞ்செவி - எனப் பொது விதியால் முடிதலே அன்றி, நிலைமொழியிடையேயுள்ள ககர உயிர்மெய் கெட, அம்+ செவி = அஞ்செவி, அம்+கை = அங்கை - என முடியும்.

அஞ்செவி, அங்கை - என்பன இலக்கணப்போலியாய்த் தழாஅத் தொடராம்.

அகம்+சிறை = அஞ்சிறை - எனப் புணர்த்தலும் ஈண்டுக் கொள்ளப்படும். (நன். 222 சங்.)

ஈம், கம், உரும் - என்பன, தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத ஏனைய மெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே அன்றி அகரச்சாரியையும் பெறும்.

எ-டு : ஈமுக் கடிது, ஈமு நீண்டது, ஈமு வலிது; கம்முக் கடிது, கம்மு நீண்டது, கம்மு வலிது; உருமுக் கடிது, உருமு நீண்டது, உருமு வலிது - இவை அல்வழி.

ஈமுக்கடுமை, ஈமுநீட்சி, ஈமுவன்மை; கம்முக்கடுமை, கம்முநீட்சி, கம்முவன்மை; உருமுக்கடுமை, உருமு நீட்சி, உருமுவன்மை - இவை வேற்றுமை.

ஈமக்குடம், கம்மக்குடம்- வேற்றுமையில் அகரச்சாரியைப் பேறு.

(ஈமத்துக்குரிய குடம், கம்மியரது தொழிலால் சமைத்த குடம் - எனப் பொருள் செய்க.) (நன். 223)

மகர ஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__391}

மகர ஈற்று நாட்பெயர் ஆன்சாரியை பெறுவதற்கு முன் அத்துச் சாரியையும் பெற்று வருமொழி வினை நாற்கணத் தொடும் புணரும்.

எ-டு : மக+ அத்து+ ஆன் - மகத்தாற் கொண்டான், மகத் தான் ஞாற்றினான், மகத்தான் வந்தான், மகத்தா னடைந்தான்

இதற்கு ஏழனுருபு விரித்து மகத்தின்கண் என்று பொருள் செய்யப்படும். (தொ.எ.331 நச்.)

மகர ஈற்றில் அமைந்த நாள்களின் பெயர்கள் மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், விசாகம், அனுடம், மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம், சதயம் எனப் பதினாறாம்.

இப்பெயர்கள் நிலைமொழிகளாக வருமொழிக்கண் வினைச் சொல்வரின், இடையே அத்துச்சாரியையும் ஆன்சாரியையும் வரும். வருமொழி வன்கணம் வரின், ஆன்சாரியையின் னகரம் றகரமாகும்.

மகர ஈற்றுப் பொதுவிதி -

{Entry: B02__392}

மகரஈற்றுச் சொற்கள் வருமொழியொடு புணருமிடத்து, இறுதி மகரம் கெட்டு விதி உயிரீறாய் நின்று, இயல்பு உயிரீறு போல், வருமொழி முதற்கண் உயிர்வரின் உடம்படுமெய் பெற்றும், வன்கணம் வரின் அவ்வல்லினமெய் மிக்கும், மென் கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும் புணரும்; வன்கணம் வருமிடத்தே கெடாது வந்த வல்லினத்துக்கு இனமான மெல்லின மெய்யாகத் திரிதலும் ஆம்.

எ-டு : வட்டம் +ஆழி > வட்ட +ஆழி > வட்ட+ வ் +ஆழி = வட்டவாழி; வட்டம் + கடல் > வட்ட +கடல் > வட்ட+க் + கடல் = வட்டக்கடல்; வட்டம் + நேமி > வட்ட + நேமி = வட்டநேமி; வட்டம் + வாரி > வட்ட + வாரி = வட்டவாரி

இவை அல்வழிப் புணர்ச்சி

மரம்+ அடி > மர + அடி > மர + வ் + அடி = மரவடி; மரம் + கால் > மர + கால் > மர + க் + கால் = மரக்கால்; மரம்+ நார் > மர + நார் = மரநார்; மரம் + வேர் > மர + வேர் = மரவேர்

இவை வேற்றுமைப் புணர்ச்சி.

நாம் + கடியம்= நாங் கடியம் ; அடும் + களிறு= அடுங் களிறு - அல்வழி; நம் + கை = நங்கை - வேற்றுமை. (நன். 219)

மகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: B02__393}

வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வரின், மகர ஈறு கெட வருமொழி முதலில் வந்த வல்லொற்று இடையே மிகும்.

எ-டு: மரக்கோடு, மரப்பூ, முண்டகக் கோதை

இயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்ளப்படும்.

எ-டு: மரஞாண், மரநூல் - மகரம் கெட்டது. இவை நான்கன்தொகை. மரமணி, மரயாழ், மரவட்டு, மரவுரல் - மகரம் கெட்டது. நங்கை, எங்கை, தங்கை - நம் எம் தம் - என்பனவற்றின் மகரம் கெட்டு இன மெல்லெழுத்து மிக்கது. (தொ .எ. 310 நச்.)

வருமொழியில் அகரமும் ஆகாரமும் முதலில் வருமிடத்து மகர ஒற்றுக் கெட்டு ஈற்றில் நின்ற அகரம் நீண்டு முடிதலும் நீடாமையும் உரியது. ஆகாரம் அகரமாகிவிடும்.

எ-டு:மரம் +அடி= மராஅடி, மரவடி; குளம் + ஆம்பல் = குளாஅம்பல்,குளவாம்பல் (தொ.எ.311 நச்.)

கோணம் +கோணம் =கோணாகோணம்; கோணம் + வட்டம் = கோணா வட்டம்

இவை ஏழன்தொகை.

மகர ஈற்றுப் பெயர் மகரம் கெடுதலொடு வலிமெலி மிகுதலும் உரித்து.

எ-டு : குளக்கரை, குளங்கரை - வலிமெலி உறழ்வு.

குளத்துக் கொண்டான், ஈழத்துச் சென்றான், குடத்து வாய், பிலத்துவாய் - என மகரம் கெட்டு அத்துப் பெறுதலுமுண்டு.

‘புலம் புக்கனனே, ‘கலம் பெறு கண்ணுளர்’ - என இயல்பாதலு முண்டு. (312 நச். உரை)

இல்லம் என்ற மரப்பெயர் மகரம் கெட்டு மெல்லெழுத்துப் பெறும்.

எ-டு: இல்லங்கோடு, இல்லஞ்செதிள் (312 நச். உரை)

தாம் யாம் நாம் - என்பன தம் எம் நம் - என முதல் குறுகி ஈறு கெட்டு இனமெல்லெழுத்து மிகும்.

எ-டு : தங்கை, எங்கை, நங்கை, தஞ்செவி... தந்தலை.....

எல்லாரும் எல்லீரும் என்பனவும் எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும் - என முடியும். இஃது எல்லார்தம் மணியும் என்புழி மகரம் கெடாது உம்முப் பெற்றது. எல்லீர்நும்மணியும் என்புழியும் அது.

தமகாணம், நுமகாணம், எமகாணம் - என அகரச்சாரியை பெறுதலும், நும் என்பதும் நுங்கை, நுஞ்செவி - என்றாற் போல மகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிகுதலும் கொள்க. (320, 325 நச். உரை)

எல்லாம் என்பது, எல்லாநங்கையும் எல்லாநஞ்செவியும் - என மகரம் கெட்டு நம்முச்சாரியை ஈறு வருமொழி வன்கணத்துக்கு ஏற்ப இனமெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். (324 நச். உரை)

ஈம் கம் - என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச்சாரியை பெற்றுப் புணரும்.

எ-டு : ஈமக்குடம், கம்மக்குடம் (329 நச்.)

தொழிற்பெயர்கள், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழி உகரமும், யகரமும் உயிரும் வந்துழி இயல்பும் பெற்றுப் புணரும்.

எ-டு : தும்முக் கடிது; தும்மு நீண்டது,தும்மு வலிது, தும் யாது, தும் மிது. (327 நச்.)

(தனிக்குறில் முன் ஒற்று இரட்டுதல் இயல்பாம்.)

நாட்டக்கடுமை, ஆட்டக்கடுமை - தொழிற்பெயர் மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கது.(327 நச். உரை)

நாட்பெயர்கள் அத்தும் ஆனும் பெற்றுப் புணரும்.

எ-டு : மகம்+ அத்து+ஆன்+ கொண்டான் = மகத்தாற் கொண்டான் (மகம் என்ற நாளின்கண் கொண்டான் - என்பது பொருள்.) (331 நச்.)

மகரக் குறுக்கம் -

{Entry: B02__394}

பத்துச் சார்பெழுத்துக்களுள் ஒன்று. லகர ளகரங்கள் திரிந்த னகர ணகர மெய்களை அடுத்து வரும் மகரம் தன் இயல்பான அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாக ஒலிக்கும். நிலைமொழி ஈற்று மகர மெய்யின் முன்னர் வகர முதல் மொழி வருமாயினும் அவ்விருமொழிப் புணர்ச்சிக்கண் நிலைமொழி ஈற்று மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாம்.இவ்வாறு இடவகையால் மகரக்குறுக்கம் மூன்றாயிற்று.

வருமாறு : ‘திசையறி மீகானும் போன்ம்’ (போலும் > போல்ம் = போன்ம்) ‘மயிலியல் மாதர் மருண்ம்’ (மருளும் > மருண்ம்= மருண்ம்)

தரும் வளவன் (செய்யுமென்னும் வாய்பாட்டது நிலைமொழி என்க.) (நன்.96)

மகரக் குறுக்கம் சார்பெழுத்து ஆகாமை -

{Entry: B02__395}

‘அரையளவு குறுகல்’ என்பதன் பொருள், (மகரம்) தன் இயற்கை (அரை) மாத்திரையின் அரையளவாகக் குறுகுதல் என்பது. (எ.கு.பக். 22)

வேறோர் எழுத்தினது ஓசையால் மகரம் குறுகுதல். மகரம் குறுகுதல் இயற்றமிழுக்கும் உரியதாதலின், இது பிறன்கோட் கூறல் ஆகாது. சார்பெழுத்தாவது மற்றொரு முதலெழுத்தைச் சார்ந்து அதன் பிறப்பிடமே தன் பிறப்பிடமாகக் கொள்வ தாம். குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் - என்ற மூன்றுமே அந் நிலையின ஆதலின், தமக்கெனத் தனிப் பிறப்பிடத்தை யுடைய உயிர்மெய் முதலியன சார்பெழுத்தாகா. (எ.கு. பக். 23)

மகரக்குறுக்கம் சார்பெழுத்து ஆதல் -

{Entry: B02__396}

(அரைமாத்திரை மகரமெய் கால்மாத்திரையாக ஒலிக்கும்) அளவு குறுகலான மகரக்குறுக்கம் சார்பெழுத்து என மெய்யின் வேறாயிற்று. (இ. வி. 22 உரை)

மகரக்குறுக்கம் பிறன்கோட் கூறல் ஆகாமை -

{Entry: B02__397}

‘மகரக்குறுக்கம் இசையிடன் அருகும்’ (தொ. எ. 13). என்று கூறப்பட்டுள்ளது. ‘இசையிடன்’ என்பதற்கு வேறோர் எழுத்தின் ஓசையின்கண்’ என்பதே பொருள். பேராசிரியர் இசை நூலின்கண் என்று பொருள் கொண்டு, இதனைப் பிறன்கோட்கூறல் என்னும் உத்திக்கு உதாரணமாகக் காட்டி னார். ஆசிரியர் இசைநூலிடத்தின்கண் - எனத் தெளிவாகக் கூறாமையானும், மகரக்குறுக்கம் இயற்றமிழின் கண் வருவ தோர் இலக்கணம் ஆகையானும், மகரக்குறுக்கம் பற்றிய செய்தி பிறன்கோட் கூறல் ஆகாது. (எ.ஆ. பக். 19)

மகரக் குறுக்க வரிவடிவம் -

{Entry: B02__398}

ஒவ்வோர் எழுத்தும் பெற்ற மாத்திரையைப் பாதியாக்க, அதன் மேல் புள்ளியிடுவது பண்டை வழக்கம், பண்டைக் காலத்தில் ஏகார ஓகாரங்களுக்கும் எகர ஒகரங்களுக்கும் வரி வடிவு ஒன்றே. ஏகார ஓகாரங்களிலிருந்து எகர ஒகரங்களைப் பிரித்துக் காட்ட, அவற்றின் வரிவடிவுமேல் புள்ளியிடப் பட்டன.

எ - நெடில்:இரு மாத்திரை; எ ) - குறில் : ஒரு மாத்திரை

ஒ - நெடில்:இரு மாத்திரை; ஒ ) - குறில் : ஒரு மாத்திரை

க - ஒரு மாத்திரை; க் - அரை மாத்திரை

கு - ஒருமாத்திரை; நா கு ) - அரை மாத்திரை

ம் - அரை மாத்திரை; ம் {{special_puLLi}} - கால் மாத்திரை

இவ்வாறு, மகரக்குறுக்கம் வரிவடிவில் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெற்றது. “மகரம் குறுகிக் கால்மாத்திரையாய் உட்புள்ளி பெறும்” என்று வீரசோழிய உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (சந்திப். 19) (எ.ஆ.பக்.20)

மகரம் த வ ய ஆதல் -

{Entry: B02__399}

பண்பான சொற்களின் இடையே நின்ற மகரம் திரிந்து தகர வகர யகரமாகவும் பெறும் என்றார் நேமிநாத ஆசிரியர்.

வரலாறு: செம்மை என நிறுத்தி ஆம்பல் என வருவித்து, ‘ஆங்கு உயிர்மெய் போம்’ என்பதனால் மகர ஐகாரத்தை அழித்து, ‘மகரம் தவய ஆம்’ என்பதனால் மகர ஒற்றைத் தகரமாக்கி, முதல் உயிரை நீட்டி, ‘செம்மை உயிர் ஏறும் செறிந்து’ என்பதனால் தகர ஒற்றிலே உயிரை (ஆ)ஏற்றிச் சேதாம்பல் - என முடிக்க.

செம்மை என நிறுத்தி அலரி - ஆடை - என வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, முன்நின்ற மகரஒற்றை வகரம் ஆக்கிக் ‘குற்றொற்று இரட்டும்’ என்பதனால் வகர ஒற்றை இரட்டித்து, ‘ஒற்றுண்டேல் செம்மை உயிர் ஏறும் செறிந்து’ என்பதனால் வகர ஒற்றில் உயிரை ஏற்றிச் செவ்வலரி- செவ்வாடை - என முடிக்க.

ஐம்மை என நிறுத்தி அரி என வருவித்து, மகர ஐகாரத்தைக் கெடுத்து, மகர ஒற்றை யகரம் ஆக்கி யகர ஒற்றில் உயிரை (அ) ஏற்றி, ஐயரி - என முடிக்க.

பண்பீற்று நிலைமொழியில் மகரம் தகர வகர யகரம் ஆவது வருமொழிக்கு முதலாக உயிர்வரின் - என அறிக.

(நேமி. எழுத். 18 உரை)

மகரம் மயங்காத னகர ஈறு ஒன்பது என்றல் பொருந்தாமை -

{Entry: B02__400}

‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப

புகரறக் கிளந்த அஃறிணை மேன’ (தொ. மொழிமரபு 49)

என்று எகின் - செகின் - எயின் - வயின் - குயின்- அழன்- புழன்- புலான்- கடான்- என வரும் ஒன்பதும் மயங்காதன எனக் கொள்ளின், பலியன் - வலியன்- வயான் - கயவன்- அலவன்- கலவன்- கலுழன் - மறையவன்- செகிலன்- முதலாயினவும் மயங்கப்பெறா - என மறுக்க. (நன். 121 மயிலை.)

இம்மயக்கம் ஏற்புழிக்கோடலான் குறிலிணையை அடுத்த னகரம் பற்றியதே. (இல. சூறா. ப. 65.)

மகரம் னகரத்தோடு ஒத்தல் -

{Entry: B02__401}

‘மகர இறுதி’ என்றதனான் பால் பகா அஃறிணைப்பெயர் என்பது பெற்றாம். மகரம் னகரத்தோடு ஒத்தலாவது, பெய ரிறுதிக்கண் மகரம் நின்ற நிலைக்களத்து னகரம் நிற்பினும் வேற்றுமை இன்றி ஒத்தல்.

எ-டு : ‘அகன் அமர்ந்து....முகன் அமர்ந்து’ (குறள் 84) (நன். 122 சங்கர.)

மகரம் னகரமோடு உறழாது நடப்பன -

{Entry: B02__402}

‘உறழா நடப்பன உளவே’ எனவே, உறழாதன பெரும் பான்மையவாம். அவை வட்டம் பட்டம் குட்டம் மாடம் கூடம் கடாம் படாம் கடகம் சடகம் நுகம் மகம் ஆரம் பூரம் உத்தரம் வீக்கம் நோக்கம் ஊக்கம் - என்றல் தொடக்கத்தன. (நன். 121 மயிலை.)

உறழாதன பெரும்பால என்க. அவை வட்டம், குட்டம், மாடம், கூடம்- முதலாயின. (நன். 122 சங்கர.)

மகன், மகள், மக்கள்: திணைவிளக்கம் -

{Entry: B02__403}

மகன், மகள், மக்கள் - என்பன மக்கட்கதியிலுள்ளாரை உணர்த்தி நிற்பின், உயர்திணைப் பெயர்களாம்; முறையை உணர்த்தி நிற்பின் பொதுப்பெயர்களாம். (நன். 158 மயிலை.)

‘மகன் வினை’ கிளத்தல் -

{Entry: B02__404}

தாய் என்னும் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, யகர ஈற்றுப் புணர்ச்சியாய், வல்லெழுத்து வருமொழி முதலில் வந்துழி, அவ்வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு: மகன் றாய்க் கலாம் - மகன் தாயொடு கலாய்த்த கலாம்

மகன் றாய்ச்செரு - மகன் தாயொடு செய்த செரு

மகன் றாய்த் துறத்தல் - மகன் தாயைத் துறத்தல்

மகன் றாய்ப் பகைத்தல் - மகன் தாயைப் பகைத்தல்

- என வேற்றுமைவழிப் பொருள் கொள்ளப்படும்.

வினை: ஈண்டுப் பகைமேற்று. நச். (தொ. எ. 359 நச்.)

மகன்வினை - மகற்குத் தாயான் பயன்படு நிலைமையன்றி அவ ளொடு பகைத்த நிலைமையைக் குறித்தல். (360 இள. உரை)

மதம்

{Entry: B02__405}

மதம் என்பது மனத்தின் கொள்கை. நூல் தழுவிய மதங்கள் பலவா யிருக்கத் தலைமை நோக்கி மதம் ஏழு என்பது நூல்வழக்கு. (நன். 11 இராமா.)

மரப்பெயர்ப் புணர்ச்சி ஐ வகை -

{Entry: B02__406}

அ) மெல்லெழுத்து மிக்கு முடிவனவும்
(எ-டு: விளங்கோடு, அதங்கோடு, மாங்கோடு)

ஆ) வல்லெழுத்து மிக்கு முடிவனவும்
(எ-டு: பலாஅக்காய், அத்திக்காய், புன்னைக்காய்)

இ) அம்முச்சாரியை இடையே பெற்று முடிவனவும்
(எ-டு: புளியங்கோடு, அரையங்கோடு, தேக்கங்கோடு)

ஈ) ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும், ஒருகால் வல் லெழுத்துப் பெற்றும் உறழ்ந்து முடிவனவும்

(எ-டு: யாஅங் கோடு, யாஅக்கோடு; பிடாஅங் கோடு; பிடாஅக்கோடு; தளாஅங்கோடு, தளாஅக் கோடு)

ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும் ஒருகால் அம்முப் பெற்றும் உறழ்ந்து முடிவனவும்

(எ-டு: உதிங்கோடு, உதியங்கோடு: ஒடுங்கோடு, ஒடுவங்கோடு)

உ) ஒருகால் அம்முப் பெற்றும், ஒருகால் அம்முப் பெறாது வல்லெழுத்துப் பெற்றும் உறழ்ந்து முடிவனவும்

(எ-டு: புன்னையங்கானல், புன்னைக்கானல்; முல்லையந் தொடையல், முல்லைத் தொடையல் )-

என மரப்பெயர்ப் புணர்ச்சி ஐவகையாம். (இ.வி.எழுத். 83 உரை)

மரபு என்பதன் ஒருபொருட்கிளவிகள் -

{Entry: B02__407}

இலக்கணம், முறைமை, தன்மை - என்பன மரபு என்பதனோடு ஒரு பொருட்கிளவிகள். (தொ. எ. 1 நச். உரை)

மரம் அல்லாத எகின்முன் வல்லினம் -

{Entry: B02__408}

எகின் என்ற பெயர் அன்னப்பறவையைக் குறிக்கும்வழி வேற்றுமைக்கண்ணும் வன்கணம் வருமிடத்தே இயல்பாத லும், இருவழியும் அகரச் சாரியை பொருந்த வல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ மிகுதலும் ஆம்.

எ-டு : எகின்கால், எகின்செவி, எகின்றலை, எகின்புறம் என வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பு. எகினப்புள், எகினம்புள் என அல்வழியில் அகரம் மருவ வலி மெலி மிக்கன. எகினக்கால், எகினங்கால் என வேற்றுமையில் அகரம் மருவ வலிமெலி மிக்கன. எகின மாட்சி, எகின வாழ்க்கை, எகின வழகு என வேற்றுமையில் பிறகணம் வரினும் அகரச்சாரியை மருவிற்று. (நன். 215)

மராஅடி: சொல்லமைப்பு -

{Entry: B02__409}

மரம்+ அடி > மர + அடி > மராடி > மராஅடி.

மகரஇறுதி கெட, மர அடி என நிலைமொழி இறுதியும் வருமொழி முதலுமாகிய இரண்டு அகரங்கள் ஆகாரமாகி ‘மராடி’ என்று முடிய, வருமொழி அடி என்ற சொல் என்ப தனை அறிவிக்க அறிகுறியாக அகரம் இடப்பட, மராஅடி என்றாயிற்று. (எ. ஆ. பக். 151)

மருவின் தொகுதியும் மயங்கியல் மொழியும் -

{Entry: B02__410}

வேற்றுமை முதலான பொருள்படச் சொற்கள் தொக்குத் திரிந்து ஒரு சொல்லாய் மருவி நிற்கும் சொற்களும், இடம் மாறித் திரிந்து நிற்கும் சொற்களும் என இவை. இவ்விருதிறச் சொற்களும்புணர்நிலையைக் கருதுமிடத்து, நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் நின்று புணர்தற் குரியன. இழிசினர் வழக்கும் பிழைபடுசொற்களும் கவர் பொருள்படு வனவும் அவ்வாறு நின்று புணரப்பெறா.

எ-டு:சோணாடு, மலாடு, தெனாது, வடாது - இவை மரூஉ மொழிகள்.

மீகண், முன்றில், நுனிநா, புறநகர் - இவை மயங்கியல் மொழிகள்.

வந்திச்சி, போச்சு, ஆகச்சே, தங்கச்சி முதலியன - இவை இழிசினர் வழக்கு.

சோழன்நாடு, மலையமான்நாடு, தெற்கின்கண்ணது, வடக்கின் கண்ணது - என்பன முறையே சோணாடு முதலிய வாகத் திரிந்து ஒரு சொல்லாய் மருவிநின்றன. கண்மீ, இல்முன், நாநுனி, நகர்ப்புறம் - என்பன முறையே மீகண் முதலியவாகச் சொற்கள் பின்முன் இடமாறி நின்றன. (தொ. எ. 111 ச. பால.)

மருவின் பாத்தி -

{Entry: B02__411}

மருமுடிபின் பகுதி. மருமுடிபு இலக்கணத்தொடு பொருந்திய மரு, இலக்கணத்தொடு பொருந்தா மரு - என இருபகுதிப் படும்.

யாவர் என்னும் பலர்பால் படர்க்கைப் பெயர் இடையே வகரம் கெட்டு உயர்திணை முப்பாற்கும் பொதுவான ‘யார்’ என்ற வினைக்குறிப்புப் போல வடிவு கொண்டு வருதல், யாது என்னும் அஃறிணை ஒருமை வினாப்பெயர் இடையே வகர உயிர்மெய் வர ‘யாவது’ என வருதல் - போல்வன உலக வழக் கினும் செய்யுள் வழக்கினும் மருவி வந்த இலக்கணத்தொடு பொருந்திய மருவாம். முன் + இல் = முன்றில், மேல் + கண் = மீகண்- முதலியனவும் இலக்கணத்தொடு பொருந்திய மருவாம்.

அருமருந்தன்ன - அருமந்த, சோழனாடு- சோணாடு, ஆற்றூர் - ஆறை முதலியன இலக்கணத்தொடு பொருந்தா மரு. (தொ. எ. 172, 250, 355; 483 நச். உரை)

மரூஉச் சொற்களின் பகுதிகள் புணரும்போது இடம் மாறும்.

எ-டு : நுனிநா, முன்றில் (எ. கு. பக். 118)

மரூஉ, மயங்கியல் மொழி தழாத்தொடர் -

{Entry: B02__412}

மருவிய சொற்களும், மயங்குதல் இயன்ற சொற்களும் புணரும் நிலைமைக்கண் உரியன உளவாம்.

எ-டு: முன்றில், மீகண் (இவை மரூஉ);

‘தெய்வ மால் வரை’ (மயங்கியல் மொழி)

இவை நிலைமொழி வருமொழிகள் தழாஅத் தொடராகப் புணர்ந்தன. (மு. வீ. புண. 5)

மரூஉமொழி -

{Entry: B02__413}

‘மருவின் பாத்தி’ காண்க.

மழை என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__414}

மழை என்ற ஐகார ஈற்றுச் சொல், வன்கணம் வருவழி அல்வழிப் புணர்ச்சிக்கண் இயல்பாகவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அத்தும் இன்னும் பெற்றும் புணரும்.

எ-டு : மழை கடிது, சிறிது தீது, பெரிது - அல்வழி; மழையத்துச் சென்றான், மழையிற் சென்றான் -வேற்றுமை; மழையின்கண் சென்றான் - என்பது பொருள். (தொ. எ. 287 நச்.)

மன்:புணருமாறு -

{Entry: B02__415}

மன் என்னும் னகர ஈற்று இடைச்சொல், வேற்றுமைப் புணர்ச்சி போல், ஈற்று னகரம் றகரமாய்த்திரிந்து வன்கணத் தொடு புணரும். எ-டு: ‘அதுமற் கொண்கன் தேரே’ (தொ. எ. 333 நச்.)

மா என்ற பெயர்ச்சொல் புணருமாறு -

{Entry: B02__416}

மா என்ற பெயர் விலங்குகளையும் மாமரத்தையும் உணர்த்தும். இஃது அல்வழிக்கண் வன்கணம் வந்துழியும் இயல்பாம்.

எ-டு : மா +குறிது, சிறிது தீது பெரிது = மா குறிது, மா சிறிது, மா தீது, மா பெரிது,

வேற்றுமைக்கண், மா என்பது மரமாயின், அகர எழுத்துப் பேறளபெடையும் இனமெல்லெழுத்தும் பெற்று முடியும்; விலங்கைக் குறிக்குமாயின் னகரச் சாரியை பெற்று வருமொழி வன்கணத்தோடு இயல்பாக முடியும்.

எ-டு: மாஅந்தளிர், மாஅங்கோடு; மான்கோடு

மாங்கோடு என, மாமரத்தைக் குறிக்கும் சொல் அகரம் பெறாது மெல்லெழுத்து மிகுதலுமுண்டு; மாவின் கோடு - எனச் சிறுபான்மை இன்சாரியை பெறுதலுமாம். (தொ.எ.231 நச். உரை)

மாத்திரை -

{Entry: B02__417}

இஃது ஒரு காலஅளவின் பெயராம். இயல்பாகக் கண்ணை இமைத்தல் நேரமும், கையை நொடித்தல் நேரமும் ஒரு மாத்திரையாம். கை நொடித்தலின்கண், நினைத்த அளவில் கால்மாத்திரையும், கை நொடித்தற்குக் கட்டைவிரலை நடு விரலொடு சேர்த்த அளவில் அரைமாத்திரையும், அவ்விரு விரல்களையும் முறுக்கும் அளவில் முக்கால்மாத்திரையும், விடுத்து ஒலித்த அளவில் ஒருமாத்திரையும் ஆகிய காலம் கழியும் என்பர்.

எழுத்தொலியை மாத்திரை என்ற காலஅளவு கொண்டு கணக்கிடுவர். (தொ. எ. 7 நச். மு. வீ. எழுத். 98)

மாத்திரை அளவுகள் -

{Entry: B02__418}

கண்ணிமைத்தல் நேரமும் கைநொடித்தல் நேரமும் ஒரு மாத்திரை நேரத்தைப் பொதுவாகக் குறிப்பன. ஓர் அகங் கைக்கு மேல் நான்கு அங்குலம் இடைகிடப்ப மற்றோர் அகங்கையை வைத்துக் கொண்டு மெல்லவும் விரையவும் இன்றி அடித்தல், விரைதலும் நீட்டித்தலு மின்றி முழங் காலைக் கையால் சுற்றுதல் - முதலியனவும் ஒரு மாத்திரை அளவின. குருவி கூவுதல் ஒரு மாத்திரைக்கும், காகம் கரைதல் இரண்டு மாத்திரைக்கும், மயில் அகவுதல் மூன்று மாத்திரைக் கும், கீரியின் குரல் அரை மாத்திரைக்கும் அளவு. நோயில்லாத இளையோன் குற்றெழுத்தினைக் குறைந்த அளவில் எத்துணை நேரம் ஒலிப்பானோ அத்துணை நேரம் ஒரு மாத்திரை எனப்படும். (எ. ஆ. பக். 18)

மாத்திரை அளவுகள் பற்றிய விரிவான அட்டவணை -

{Entry: B02__419}

அறுவகை இலக்கண நூலார் ஆ ஈ ஊ ஏ ஓ - என்பன நெடில் என்றும், ஐ ஒள- என்பன இரண்டும் தனித்தனி ஒன்றரை மாத்திரை பெறுவன என்றும், ஆகவே அவற்றைக் குறில் நெடில் என்றும் கொள்வர்.

நூல்கள்

தொல்காப்பியம் 1 2 1 ½ ½ ½ ½ - ¼ 1 1

வீரசோழியம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ - ¼ 3 1

நேமிநாதம் 1 2 1 ½ 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

நன்னூல் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

இலக்கண

விளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ - ¼ 3 1

தொன்னூல்

விளக்கம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

சுவாமிநாதம் 1 2 1 ½ ,1 1 ½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

முத்துவீரியம் 1 2 1 1 ½ ½ ½ ½ ¼ ¼ 3 1

அறுவகை

இலக்கணம் 1 2 1 ½ 1 ½ ½ ½ - - - - - -

மாத்திரைக்கு இமை, நொடி ஈரளவு கோடல் -

{Entry: B02__420}

கட்புலனாகிய இமைக்காலமும், செவிப்புலனாகிய நொடிக் காலமும் கருதிக் கோடற்கு இரண்டு ஓதினார். (நன். 99 மயிலை.)

மார், அல், ஐ விகுதிகள் -

{Entry: B02__421}

‘காணன்மார் எமர்’ என மாரீறு எதிர்மறை வியங்கோ ளிடத்தும், டு து று - என்பன ஒன்றன் படர்க்கையிடத்தும், அல்விகுதி ‘மகன்எனல் மக்கட் பதடிஎனல்’ (குறள் 196) என வியங்கோள் எதிர்மறையிலும் உடன்பாட்டிலும், ஐ ஈறு ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ என வியங்கோள் எதிர்மறையிலும் வரும். (நன். 140 இராமா.)

‘மானம் இல்லை’ -

{Entry: B02__422}

இத்தொடர் தொல்காப்பியத்தில் பயில வழங்குகிறது ‘மானம்’ என்ற இச்சொல் வழங்கப்படுமிடத்து முன்மொழி பெரும் பான்மையும் மகரமெய் ஈற்றதாய் உள்ளது. சந்தியில் மகரம் கெட ‘மிகினு மான மில்லை’ என்றே தொடர் அமைகிறது. மானம் என்றும் ஆனம் என்றும் அப்புணர்மொழியில் சொல்லைப் பிரிக்கலாம். இனம்பூரணரும் நச்சினார்க்கினிய ரும் மானம் என்பதே சொல்லாகக்கொண்டு ‘மானமில்லை’ என்ற தொடர்க்குக் குற்றமில்லை’ என்று பொருள் செய்தனர். (தொ.எ. 199, 271 நச். முதலியன.)

‘ஆனம்’ என்பதே சொல்லாகக் கொண்டு (ஆனம் - ஹானம்) ‘குற்றம்’ என்று கருத்துக் கொள்வார் சிலர். (எ.கு.பக்.190) ஆயின், தொ.சொல். 111ஆம்நூற்பாவில் (சேனா.) இப்பிரிப்புப் பொருந்தாமை காண்க.

மானம் இல்லை - வரைவு (நீக்குதல்) இல்லை - என்பர் சிலர்.

மானம் குற்றம் என்ற பொருளில் மானமில்லை மற்றவன் மா ட்டென பெருங்கதை - I : 47: 225 என்ற தொடரில் வந்துள்ளது.

மிக்குப் புணரும் புணர்ச்சியின் இருவகை -

{Entry: B02__423}

மிக்குப் புணரும் புணர்ச்சி, எழுத்து மிகுதலும், சாரியை மிகுதலும் என இரு வகைத்து.

எ-டு : விள+கோடு = விளங்கோடு - ஙகரமெய் மிக்கது.

மக+ கை = மகவின்கை - இன்சாரியை மிக்கது.

(தொ.எ. 112 நச்.)

மிகற்கை -

{Entry: B02__424}

மிகற்கை - மிகுதல்; இயல்பாகப் புணர வேண்டிய இடத்தில் வல்லெழுத்து மிகுதலாகிய நிலை தோன்றுதல்.

தாய் என்பது வன்கணம் வந்துழி இயல்பாகப் புணரும் என்றவிதிக்கு மாறாக இரண்டாம் வேற்றுமைத் தொகையில், தாய்+ கொலை = தாய்க் கொலை - என்று மிகுதலை ‘மிகற்கை’ என்றார். (தொ.எ.157. நச்.)

மின் பின் பன் கன்:புணர்ச்சி -

{Entry: B02__425}

மின் முதலிய இந்நான்கு சொற்களும், தொழிற்பெயர் போல, யகரம் நீங்கிய பிறமெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். கன் என்பதொன்றும் அகரச்சாரியை பெற்று வருமொழி வல்லெழுத்தும் இனமெல்லெழுத்தும் மிக்கு உறழும்.

எ-டு: மின்னுக் கடிது, மின்னு நீண்டது, மின்னு வலிது; மின்னுக் கடுமை, மின்னுநீட்சி, மின்னுவலிமை - என அல்வழி வேற்றுமை இருவழியும் உகரச்சாரியை பெற்றது. ஏனைய மூன்றொடும் இவ்வாறே பொருந்த ஓட்டுக. கன்னுக் கடிது, கன்னுக் கடுமை - மேற்கூறிய பொதுவான முடிபு. கன்னத் தட்டு, கன்னந் தட்டு - ‘கன்’ அகரம் பெற்று மெல்லினத்தோடு உறழ்ந்தது.

(கன் - சிறுதராசுத் தட்டு) (நன். 217)

மின்: புணருமாறு -

{Entry: B02__426}

மின் என்ற சொல் மின்னுதல் தொழிலையும் மின்னலையும் குறிக்கும். இஃது அல்வழியிலும் வேற்றுமையிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும், யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஈற்று ஒற்று இரட்டுதலும் பெற்றுப் புணரும்.

எ-டு : மின்னுக் கடிது; மின்னு நன்று, மின்னு வலிது, மின் யாது; மின்னரிது -அல்வழி. மின்னுக்கடுமை; மின்னு நன்மை, மின்யாப்பு, மின்னுவலிமை; மின்னருமை - வேற்றுமை (தொ.எ.345 நச்.)

‘மீ என மரீஇய இடம் வரை கிளவி’ -

{Entry: B02__427}

மீ என்பது இயல்பான சொல் அன்று; மேற்கு என்ற சொல் மீ என மரீஇயிற்று என்றார் நச்சினார்க்கினியர்.

மேல் என்ற சொல் ஈற்றுமெய் கெட்டு ஏகாரம் ஈகாரமாக மருவுதல் இயல்பு ஆதலின், மேல் என்பது மீ என மருவிற்று என்பது சிறக்கும். (தொ.பொ.பக். 742 பேரா.)

இடம் வரைதல் - மேலிடத்தை வரையறுத்துச் சுட்டுதல். (எ.ஆ.பக். 142 தொ.எ. 250 நச்.)

மீகண், மீக்கூற்று, மீக்கோள், மீந்தோல் சொல் முடிவு -

{Entry: B02__428}

மீகண் என்பது கண்ணினது மேலிடம் எனப் பொருள் தந்து நிற்குமேனும், ஆறனுருபின் பயனிலையாம் மீ என்னும் வருமொழி நிலைமொழியாய் நின்று வல்லெழுத்து மிகாது புணர்ந்தமையின் இலக்கணப் போலியாய் அல்வழியாயிற்று.

மீக்கூற்று என்பது புகழ். அது மேலாய சொல்லான் பிறந்த புகழ் என்னும் மேம்பாடு எனப் பொருள் தந்து நிற்றலின், பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

மீக்கோள் என்பது மேற்போர்வை. அது யாக்கையின்மேல் கொள்ளுதலையுடைய போர்வை - எனப் பொருள் தந்து நிற்றலின், ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மீ என்றது இடப்பொருளோடு ஏழாம் வேற்றுமையுருபின் பொருள் பட நின்றதேனும், கண்ஆதி உருபு வேண்டாமையின், வேற்றுமைத் தொகை யாயிற்று.

மீந்தோல் என்பது மேற்றோல். அது மேலாய தோல் - எனப் பொருள் தந்து நிற்றலின் பண்புத்தொகை. இஃது இக் காலத்துப் பீந்தோல் என மரீஇயிற்று. (நன். 178 சங்கர.)

மீ : புணருமாறு -

{Entry: B02__429}

மீ என்பது மேல் என்ற சொல்லின் மரூஉ. அது வருமொழி வன்கணம் வரின் இயல்பாகவும், வருமொழி வல்லெழுத்து மிக்கும், வருமொழி வல்லெழுத்துக்கு இனமான மெல் லெழுத்துப் பெற்றும் புணரும். இஃது அல்வழி முடிவு. (எ.ஆ. பக். 142)

எ-டு : மீகண், மீசெவி, மீதலை, மீபுறம்;மீக்கோள், மீப்பல்;

மீங்குழி, மீந்தோல் - மேலாகிய கண் முதலாகப் பொருள் செய்க.

மீகண் என்பதற்கு மேலிடத்துக்கண் என்று வேற்றுமைப் பொருள்பட உரை கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினி யரும். கண் என்பதனை இடப்பெயராகக் கொண்டு மீ ஆகிய கண் - மேலிடம்- என்று பொருள் கொள்வாருமுளர். (எ.கு.பக். 229)

மீன் புணருமாறு -

{Entry: B02__430}

மீன் என்ற சொல் அல்வழிப் புணர்ச்சியில் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்; வேற்றுமைப் பொருட்புணர்ச்கிக்கண் வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும்.

எ-டு : மீன் கரிது, சிறிது, தீது, பெரிது : அல்வழி; மீன்கண், மீற்கண்; மீன்சினை, மீற்சினை; மீன்றலை, மீற்றலை; மீன்புறம், மீற்புறம் - வேற்றுமை உறழ்ச்சி முடிபு. (தொ.எ.339 நச்.)

‘மீன்’ வன்கணத்தொடு புணர்தல் -

{Entry: B02__431}

மீன் என்னும் நிலைமொழி ஈற்று னகரம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்தே றகரத்தோடு உறழ்ந்து முடியும்; அல்வழிக்கண் இயல்புபுணர்ச்சியாம்.

எ-டு : மீன் + கண் =மீற்கண், மீன்கண்; மீன் +செவி = மீற்செவி, மீன்செவி; மீற்றலை, மீன்றலை;மீற்புறம், மீன்புறம் - என்பனவும் காண்க.

மீன் கடிது, சிறிது, தீது, பெரிது - என அல்வழிக்கண் இயல்பாயிற்று. (நன். 213)

முடிவிடம் கூறல் -

{Entry: B02__432}

ஆசிரியன் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதியுள்ள இடத்தைச் சொல்லுதல் முடிவிடங்கூறல் என்னும் உத்தி. லளஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் என்னும் இச் சூத்திரம், குறில்வழி லள-த்தவ் வணையின் ஆய்தம், ஆகவு ம் பெறூஉம் அல்வழி யானே (நன். 228) என்னும் சூத்திரத்தை நோக்கிக் கூறலின், முடிவிடங்கூறல் என்னும் உத்தியின் பாற்படும். (நன். 97 சங்கர.)

முத்துவீரிய எழுத்ததிகாரச் செய்திகள் -

{Entry: B02__433}

இந்நூல் எழுத்ததிகாரம் எழுத்தியல், மொழியியல், புணரியல்- என்ற மூன்று இயல்களையுடையது. அதிகாரத் தற்சிறப்புப் பாயிரம் நீங்கலாக இவற்றில் முறையே 115, 45, 298 ஆக 458 நூற்பாக்கள் உள. எழுத்தியலில் நன்னூலின் எழுத்தியற் செய்தி சுருக்கியும் விரித்தும் கூறப்பட்டுள்ளது. எழுத்து, உயிர்மெய், மயக்கம்- முதலியவற்றின் பரியாயப் பெயர்கள் கூறப்பட் டுள்ளன. அளபெடை எட்டுவகைப்படும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. மொழியியலின் தொடக்கத்தில் ஓரெழுத்தொரு மொழிகள், பெயர் வினை என்ற பகுப்பு, மொழி எழு வகைப்படும் என்ற பிறர்கூற்று - என்பன குறிப்பிடப்பட்டுள. வடமொழி எழுத்துக்கள் தமிழில் திரிந்து வழங்குமாறும் வடமொழித் தீர்க்க குண விருத்தி சந்திகளும், வடசொற்கள் தமிழில் திரிந்து வழங்குமாறும் விரித்துப் பேசப்பட்டுள. புணரியலில், பொதுப் புணர்ச்சி - உருபு புணர்ச்சி - உயிரீறு மெய்யீறு குற்றியலுகரஈறு ஆகியவற்றின் புணர்ச்சி- யாவும் நன்னூலையும் தொல்காப்பியத்தையும் ஒட்டிக் கூறப்பட்டுள. கோ-மா- என்பன யகர உடம்படுமெய் பெறுதல், எண்ணுப் பெயர்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறுதல், ழகரம் தகரம் வருவழி டகர மாதல், ழகரமானது நகரம் வருவழி ணகரமாதல் - முதலியன புதியன புகுதலாக இப்புணரியலுள் இடம் பெற்றுள.

முத்துவீரிய எழுத்தியல் சுட்டும் பரியாயப் பெயர்கள் -

{Entry: B02__434}

எழுத்து - இரேகை, வரி, பொறி- என்பன (நுற்பாஎண்3)

உயிர் - அச்சு, ஆவி, சுரம்,பூதம் - என்பன (7)

குற்றெழுத்து - குறுமை, இரச்சுவம், குறில் - என்பன (9)

நெட்டெழுத்து - நெடுமை, தீர்க்கம், நெடில் - என்பன (11)

மெய் - ஊமை, உடல், ஒற்று, காத்திரம் - என்பன (13)

வல்லெழுத்து - வன்மை, வன்கணம், வலி- என்பன (15)

மெல்லெழுத்து - மென்மை, மென்கணம், மெலி- என்பன (17)

இடையெழுத்து - இடைமை, இடைக்கணம், இடை-என்பன (19)

சார்பு - புல்லல், சார்தல்,புணர்தல் என்பன (23)

ஆய்தம் - அஃகேனம், தனிநிலை - என்பன (28)

சுட்டு - காட்டல், குறித்தல் - என்பன (29)

வினா - வினவல், கடாவல் - என்பன (30)

அளபெடை - அளபு, புலுதம்- என்பன (33)

இடைநிலை சங்கம், புணர்ச்சி, சையோகம், புல்லல்,

மெய் மயக்கம் } கலத்தல், மயக்கம், இடைநிலை என்பன (66) மாத்திரை - மட்டு, அளவு, மிதம், வரை - என்பன (97)

முத்துவீரிய எழுத்தியலுள் காணப்படும் விசேடக் குறிப்புக்கள் சில -

{Entry: B02__435}

மெல்லெழுத்தின் பிறப்பிடம் தலை (எழுத். 43). எடுத்தலும் படுத்தலும் என ஓசை இருவகைத்து (59). நகரம் ‘பொருந்’ என ஒரு சொற்கண்ணேயே இறுதியாக வரும் (90). கைந்நொடி யாகிய மாத்திரை உன்னுகிற காலத்துக் கால் மாத்திரை, விரலை ஊன்றுகின்ற காலத்து அரை, விரல்களை முறுக்குகிற காலத்து முக்கால், முறுக்கியவற்றை ஓசைப்பட விடுக்கிற காலத்து ஒன்று- என முறையே அமையுமாறு (98)- இன்னோரன்ன செய்திகள் பிற இலக்கண நூலில் காணப்படாவாய் இந் நூற்கே விசேடமான குறிப்புக்களாம்.

முத்துவீரியப் புணரியலுள் காணப்படும் சில சிறப்புச் செய்திகள் -

{Entry: B02__436}

தழாத் தொடர்களை ‘மயங்கியல் மொழி’ என்று குறிக்கும் மு.வீ. தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியது. அவையும் நிலை வருமொழிகளாக நின்று புணர்தற்குரியன.

எ-டு: தெய்வ மால் வரை’ (‘மால் தெய்வ வரை’ என்க.)(5)

ஆ,மா,கோ- என்று பெயர்கள் இன்சாரியை பெறுதலுமாம்.

எ-டு : ஆவினை, மாவினை, கோவினை (16)

கோ,மா, இவற்றின் முன் யகர உடம்படுமெய் வருதலுமாம்.

வருமாறு: கோயில், மாயிரு ஞாலம் (25)

எண்கள் எல்லாம் இன்சாரியை பெறும்.

எ-டு : ஒன்றினை, நான்கினை (69)

நிலா என்னும் பெயர் இன்சாரியை பெறும். (தொல். கூறுவது வேறு. 228 நச்.) வருமாறு.: நிலாவின் காந்தி (93)

இரா என்னும் பெயர்க்கு இன்சாரியை இல்லை (தொல். கூறுவது வேறு. 227. நச்.) (94)

ழகரம் வேற்றுமைக்கண் தகர நகரங்கள் வருமிடத்தே, முறையே டகர ணகரமாகத் திரியும். (இப்புணர்ப்பு வீரசோழியத்துள் கண்டது)

எ-டு :கீழ்+ திசை = கீட்டிசை; சோழ + நாடு = சோணாடு (210, 211)

முத்துவீரியம் -

{Entry: B02__437}

19ஆம் நுற்றாண்டில் முத்துவீர உபாத்தியாயர் என்பவரால், தொல்காப்பியம் நன்னூல் முதலியவற்றில் அரியவாகக் கூறப் பட்டுள்ள செய்திகளை எளிமைப்படுத்திக் கூறுவதற்காக இயற்றப்பட்ட ஐந்திலக்கண நுல் முத்துவீரியம். இஃது எழுத்து சொல் பொருள் யாப்பு அணி - என்னும் ஐம்பிரிவுகளை யுடையது. அவற்றுள் எழுத்ததிகாரம், எழுத்தியல் மொழி யியல் புணரியல் - என்னும் முப்பகுப்பினது. சொல்லதிகாரம், பெயரியல் வினையியல் ஒழிபியல்- என்னும் முப்பிரிவிற்று. பொருளதிகாரம், அகவொழுக்க இயல் களவொழுக்க இயல் கற்பொழுக்க இயல் - என்னும் முப்பாலது. யாப்பதிகாரம், உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்ற மூவியலினது. இனி எஞ்சிய அணியதிகாரம், சொல்லணியியல் பொருளணியியல் செய்யுளணியியல் - என்ற மூன்று இயல்களான் இயன்றது. இந்நூற்கு உரை வரைந்தவர் திருநெல்வேலித் திருப்பாற்கடல் நாதன் கவிராயர் என்று கருதுகிறோம். ஐந்து அதிகாரங் களிலும் முறையே 458, 310, 92, 266, 159, ஆக 1285 நுற்பாக்கள் உள்ளன. ஐந்து அதிகாரங்களிலும் உள்ள தற்சிறப்புப் பாயிர நுற்பாக்களையும் கூட்ட 1290நுற்பாக்களாம்.

முத்துவீரியம் சுட்டும் அளபெடை வகைகள் -

{Entry: B02__438}

இயற்கையளபெடை - அழைத்தல், விலைகூறல், புலம்பல் - இவற்றுள் வருவது

செயற்கை - செய்யுளில் சீர்தளை கெட்ட விடத்துப் புலவன் கொள்வது.

இன்னிசை யளபெடை - ‘கெடுப்பதூஉம்’ எடுப்பதூஉம்’ (குறள் 15)

சொல்லிசை யளபெடை - தளைஇ (தளைந்து என்பது திரிந்து அளபெடுத்தது.)

நெடிலளபெடை - தனி நெட்டெழுத்து அளபெடுப்பது : ஆஅ

குறிலளபெடை - குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது:

பழூஉப் பல்

ஒற்றளபெடை - கண்ண்

எழுத்துப்பேறளபெடை - உவாஅப் பதினான்கு

முத்துவீரியம் சுட்டும் தத்திதம் பற்றிய செய்திகள் -

{Entry: B02__439}

மொழி முதற்கண் நிற்கும் இகர ஏகாரங்கள் ஐகாரம் ஆகும்.

எ-டு : கிரியில் உள்ளன கைரிகம்: வேரத்தால் வருவது வைரம் (வேரம் - கோபம்; வைரம் - பகைமை)

மொழி முதற்கண் நிற்கும் உகர ஊகார ஓகாரங்கள் ஒளகாரம் ஆகும். எ-டு: குருகுலத்தில் வந்தவர் கௌரவர்; சூரன்மகன் சௌரி; சோமன் புதல்வன் சௌமியன்.

மொழி முதற்கண் நிற்கும் அகரம் ஆகாரம் ஆகும். எ-டு: சனகன் மகள் சானகி; தசரதன் புதல்வன் தாசரதி. (மொழி. 43 - 45)

முத்துவீரியம் சுட்டும் ‘பேசுங் கிளவி’ -

{Entry: B02__440}

‘பேசுங் கிளவி’ யாகிய வழங்கும் சொல் சங்கதம், பாகதம், சனுக்கிரகம், அவப்பிரஞ்சனம் - என நால்வகைப்படும். இந் நான்கனுள், சங்கதமும் சனுக்கிரகமும் தேவர்மொழி யாகும். அவப்பிரஞ்சனம் என்பது இழிந்தோரது மொழி. ஏனைய பாகதம் என்பது நாடுகளெல்லாம் வழங்கும் மொழி.

பாகதம் தற்பவம் எனவும், தற்சமம் எனவும், தேசிகம் எனவும் மூவகைப்படும். ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தானும் தமிழில் சிதைந்து வருவது தற்பவமாம். எ-டு : சுகி, போகி; அரன், அரி.

ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாம். எ-டு : அமலம், காரணம், கமலம்.

தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும். எ-டு: தாயைத் தள்ளை என்று வழங்குவதும், தந்தையை அச்சன் என்று வழங்குவதும் காண்க. (மொழி. 26-33)

முத்துவீரியம் சுட்டும் மொழியிடை எழுத்தெண்ணிக்கை -

{Entry: B02__441}

மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பது எழுத்து இறுதியாகத் தொடர்ந்து வரும். (பகுபதம், பகாப்பதம் - என நன்னூல் பதத்தைப் பாகுபடுத்தியமை போல மு.வீ. பாகுபடுத்திலது-)

எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான், உத்தராடத்தான், உத்தரட்டாதி யான் - என முறையே காண்க. (மொழி. 9)

முத்துவீரியம் சுட்டும் மொழிவகை -

{Entry: B02__442}

முத்துவீரியம் ஏழ் மொழிவகைகளைச் சுட்டுகிறது. அவை வருமாறு:

நிலம், நீர் - பிரிக்கப்படாத தனிமொழி

தேரன், ஊரன் - பிரிக்கப்படும் இணைமொழி

அரசர் வந்தார் - தொடர்ந்து வரும் துணைமொழி

நங்கை, வேங்கை - தனிமொழியும்,(நம்+கை, வேம்+கை -எனத்) தொடர்மொழியும் ஆகும் பொதுமொழி

சந்திரன் - ஒருமையைக் காட்டும் தணமொழி

முனிவர்கள் - பன்மையைக் காட்டும் கணமொழி

ஆண், பெண் - இவை இருதிணையிலும் கலந்து பொதுவாக வரும் கலப்புறு மொழி (மொழி. 8)

முத்துவீரியம் சுட்டும் வடமொழிச் சந்திகள் -

{Entry: B02__443}

முத்துவீரியம், தீர்க்கசந்தி குணசந்தி விருத்திசந்தி- ஆகிய மூவகை வடமொழிச் சந்திகளைக் குறிக்கிறது. நிலைமொழி யும் வருமொழியும் வடசொல்லாக அமையுமிடத்தே இவை நிகழ்கின்றன.

அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலிலும் அ ஆ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட,இடையில்ஓர் ஆகாரம் தோன்றும்.

எ-டு :பத + அம்புயம் = பதாம்புயம்; சேநா + அதிபதி = சேநாதிபதி

ஆ) நிலைமொழியீற்றில் இ ஈ நிற்க வருமொழி முதலிலும் இ ஈ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஈகாரம் தோன்றும்,

எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; புரீ + ஈசன் = புரீசன்.

இ) நிலைமொழியீற்றில் உ ஊ நிற்க, வருமொழி முதலிலும் உஊ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஊகாரம் தோன்றும்.

எ-டு: குரு + உதயம் = குரூதயம்; சுயம்பூ + ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம்.

இவை மூன்றும் தீர்க்க சந்தியாம்.

அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் இ ஈ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஏகாரம் தோன்றும்.

எ-டு: நர + இந்திரன் = நரேந்திரன்; உமா + ஈசன் = உமேசன்

ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் உ ஊ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஓகாரம் தோன்றும்.

எ-டு: தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ ஊர்மி = கங்கோர்மி.

இவை இரண்டும் குணசந்தியாம்.

அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஏ ஐ வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஐகாரம் தோன்றும்.

எ-டு: சிவ + ஏகநாதன் = சிவைகநாதன்; மகா + ஐசு வரியம் = மகைசுவரியம்.

ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஓ ஒள வருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஒளகாரம் தோன்றும்.

எ-டு : கலச + ஓதனம் = கலசௌதனம்; மகா + ஒளடதம் = மகௌடதம். (மொழி. 34-41)

இவை இரண்டும் விருத்திசந்தியாம்.

முத்துவீரியம் சுட்டும் வடமொழியாக்கம் -

{Entry: B02__444}

ஆரிய உயிரெழுத்துப் பதினாறனுள் நடுவில் நிற்கும் நான்கும் இறுதியில் நிற்கும் இரண்டும் அல்லாத ஏனைய பன்னிரண்டும், ஆரிய மெய்யெழுத்து முப்பத்தேழனுள் ககரம் முதல் ஐந்து வருக்கங்களின் முதலில் நிற்கும் க ச ட த ப - என்பனவும் அவற்றின் இறுதியில் நிற்கும் ங ஞ ண ந ம - என்பனவும் ய ர ல வ ள - என்பனவும் ஆகிய பதினைந்தும் ஆரியம் தமிழ் என்னும் இருமொழிக்கும் பொதுவெழுத்துக்களாம். இனி, ஆரியத் திற்கே சிறப்பான எழுத்துள், மேறகூறியவாறு இடை யிலும் இறுதியிலும் நிற்கும் உயிர் ஆறும், பொது நீங்கலாக எஞ்சிய மெய் இருபத்திரண்டும் இடம் பெறும்.

ஆரியத்திற்குரிய சிறப்பெழுத்துக்கள் தமிழில் வடசொல்லாகு மிடத்தே திரியப் பெறும். அவை திரியுமாறு:

8ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் ய எனவும் திரியும். 30ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் ய எனவும் திரியும். 31ஆம் மெய் யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் ட எனவும் திரியும். 32ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் த எனவும் திரியும். 33ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் அ எனவும் இடையில் க எனவும் திரியும். 35ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் க எனவும் இடையில் க்க் எனவும் திரியும். (மொழி. 11 - 20)

ஆகார இறுதிப் பெயர் ஐகாரமாகவும், ஈகார இறுதிப்பெயர் இகரமாகவும் திரியப் பெறும். எ-டு : மாலா- மாலை; புரீ - புரி.

பிறவும் நன்னூலாரைப் பின்பற்றியே மொழிந்துள்ளவாறு காண்க. (மொழி. 23-26)

தத்திதம் பற்றிய குறிப்பு ‘முத்துவீரியம் சுட்டும் தத்திதம்’ என்பதன்கண் காண்க.

முதல் ஈரெண்ணின்முன் உயிர் வருங்கால் புணர்ச்சி -

{Entry: B02__445}

ஒன்று இரண்டு- என்பனவற்றின் முன் உயிர்முதல் மொழி வரின், ஒன்று இரண்டு- என்பன ஒரு இரு- எனத் திரிந்து நின்ற நிலையில் உகரம் கெட, ஒர் இர் - என்றாகி, முதல் நீண்டு ஓர் ஈர் எனத் திரிந்து வருமொழியொடு புணரும்.

எ-டு: ஒன்று + அகல் = ஓரகல், ஒன்று + உழக்கு = ஓருழக்கு: இரண்டு +அகல்= ஈரகல், இரண்டு+ உழக்கு= ஈருழக்கு (தொ.எ.455நச்.)

முதல் எழுத்து -

{Entry: B02__446}

மொழி தோன்றுதற்குக் காரணமான அடிப்படை எழுத்துக் களாகிய உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பது எழுத்துக்கள் முதலெழுத்து எனப்படும். இனி, ஒருசொல்லின் முதலில் வரும் எழுத்து முதலெழுத்து எனவும், முதனிலை எனவும் கூறப்படும்.

எ-டு : ‘சுட்டுமுதல் ஆகிய இகர இறுதி’ - அதோளி (தொ.எ.159 நச்.)

‘எகர முதல் வினாவின் இகர இறுதி’ -எதோளி (எ. 159)

‘சுட்டு முதல் உகரம்’ - அது (எ . 176)

‘சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி’ - அவை (எ. 177)

‘சுட்டு முதல் வகரம்’ - அவ் (எ . 183)

‘மூன்றன் முதனிலை நீடலும் உரித்தே’ - மூவுழக்கு (எ . 457)

‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ - ஆறகல் (எ . 458)

‘அகம் என் கிளவிக்கு... முதல்நிலை ஒழிய’ - அங்கை (எ. 315)

முதல், சார்பு: தொகை வகை விரி -

{Entry: B02__447}

முதலெழுத்திற்கு ‘முதல்’ என்றது தொகையாகவும், ‘உயிரும் உடம்பும்’ என்றது வகையாகவும், ‘முப்பது’ என்றதுவிரியாக வும்; சார்பெழுத்திற்குச் ‘சார்பு’ என்றது தொகையாகவும். ‘பத்தும்’ என்றது வகையாகவும், ‘ஒன்றொழி முந்நூற்றெழு பான்’ என்றது விரியாகவும்;

இவ்விருதிறத்து எழுத்திற்கும் ‘எழுத்து’ என்றது தொகை யாகவும், ‘முதல்சார்பு’ என்றது வகையாகவும், இவ்விரு திறத்து எழுத்தின் விரியும் கூட்டி ‘ஒன்றொழி நானூறு’ என்பது விரியாகவும் கொள்க. (நன். 61. இராமா.)

முதல்நிலை வினைப்பெயர் -

{Entry: B02__448}

திரை நுரை அலை தளிர் - என்றாற் போல்வன வினைமுதற் பொருண்மை யுணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டு, முதனிலை மாத்திரையாய் நின்று வினைப்பெயர் ஆதல் பற்றி, முதனிலை வினைப்பெயர்- முதனிலைத் தொழிற்பெயர் - என்று கூறப்பெறும். (சூ.வி.பக். 33)

முதல், வழி, சார்பு: விளக்கம் -

{Entry: B02__449}

முதனூலுக்கு வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கின் முதனூலாகவும், முதனூலை நோக்கின் வழிநூலாக வும், அயல்நூலை நோக்கச் சார்புநூலாகவும் நிற்கும். எனவே, முதனூல் மாத்திரையாய் நிற்பது இறைவன்நூலும், வழிநூல் மாத்திரையாய் நிற்பது இறுதி நூலும் அன்றி, இடைநிற்கும் நூல்கள் எல்லாம் ஒருவற்கு மைந்தனாயினான் மற்றவற்குத் தந்தை ஆயினாற்போல, முதனூலாயும் வழிநூலாயும் நிற்கும். (நன். 8 சங்கர.)

‘முதலா ஏன தம்பெயர் முதலு’தல் -

{Entry: B02__450}

உயிரொடு சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று குறிப்பிடப் பட்டன அல்லாத, மொழிக்கு முதலாகாத மெய்களும் தம்மைக் குறிப்பிடுமிடத்து மொழிக்கு முதலில் வரும். மொழிக்கு முதலாகாத மெய்கள் ங் ட் ண்ர் ல் ழ் ள் ற் ன் - என்ற ஒன்பதும் ஆம்.

வருமாறு: ‘லனஎன வரூஉம் புள்ளி முன்னர்’ (தொ.எ. 149 நச்.); ‘டகாரம் ஆகும்’(எ. 302); ‘ணகார இறுதி (எ. 302); ‘னகார இறுதி’ - (எ. 332); ‘ளகார இறுதி’ (எ. 396) ‘ரகார ழகாரமாய்’ (எ. 95 நச்.); ‘றஃகான் னஃகான்’ (எ. 66, 94)

முதலெழுத்தின் தொகை வகை விரி -

{Entry: B02__451}

முதலெழுத்து - எனத் தொகையான் ஒன்றும், உயிரெழுத்து உடம்பெழுத்து - என வகையான் இரண்டும், உயிர் பன்னிரண் டும் உடம்பு பதினெட்டும் என விரியான் முப்பதும் ஆம் முதலெழுத்து. (நன். 58 மயிலை.)

முதலெழுத்துக்களின் இடப்பிறப்பும் முயற்சிப்பிறப்பும் -

{Entry: B02__452}

உயிரும் இடையின மெய்யும் மிடறும், மெல்லினமெய் மூக்கும், வல்லினம் மார்பும் இடமாகக் கொண்டு பிறக்கும். இஃது இடப் பிறப்பு. முயற்சிப்பிறப்பு வருமாறு:

அ, ஆ - அங்காத்தலானும், இ, ஈ, எ, ஏ, ஐ - அங்காப்பொடு, மேல்வாய்ப்பல்அடியை நாவிளிம்பு உறுதலானும், உ., ஊ, ஒ, ஓ, ஒள - அங்காப்போடு, இதழ் குவிதலானும் பிறக்கும். (அங்காப்பினைப் பிறவற்றுக்கும் கொள்க.)

க், ங் - நாவின்அடி மேல்வாயடியை உறுதலானும், ச்,ஞ் - நாவின் நடு மேல்வாய்நடுவை உறுதலானும், ட், ண் - நாவின் நுனி மேல்வாய்நுனியை உறுதலானும், த், ந் - முன்வாய்ப்பல் அடியை நாநுனி உறுதலானும், ப், ம் - கீழ்மேல் உதடுகள் உறுதலானும், ய் - நாவின்அடி மேல்வாயின் அடியை நன்றாக உறுதலானும், ர், ழ் - நாவின் நுனி மேல்வாயை வருடுதலானும், ல் - முன்வாய்ப்பல் அடியை நாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், ள் - மேல்வாயை நாவிளிம்பு வீங்கி வருடுதலானும், வ் - கீழுதடு மேற்பல்லை உறுதலானும், ற், ன் - மேல்வாயை நாவின் நுனி மிக உறுதலானும் பிறக்கும்.

(உறுதல் - பொருந்துதல்; வருடுதல் - தடவுதல்; ஒற்றுதல் - தட்டுதல்) (நன். 75 - 86)

முதலெழுத்து, சார்பெழுத்து : பெயர்க்காரணம் -

{Entry: B02__453}

தாமே தமித்து நிற்கையின் முதலெழுத்து என்றாயின. அவையே தம்மொடு தாம் சார்ந்தும், இடம் சார்ந்தும், இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும் விகாரத்தான் வருதலின் சார்பெழுத்து என்றாயின. (நன்.60 மயிலை.)

முதற்போலி சில -

{Entry: B02__454}

‘மண் யா த்த கோட்ட மழகளிறு’ - ‘மண் ஞா த்த கோட்ட மழகளிறு’. ‘பொன் யா த்த தார்’ - ‘பொன் ஞா த்த தார்’ என ‘யா’நின்ற இடத்து ‘ஞா’ நிற்பினும் அமையும் என்றார் தொல்காப்பியனார்.

‘ணனஎன் புள்ளிமுன் யாவும் ஞாவும்

வினையோ ரனைய என்மனார் புலவர்’ (தொ.எ.146 நச்.) (ந ன். 124 இராமா.)

முதனிலை இறுதிநிலை இடைநிலைகளுக்குப் புறனடை -

{Entry: B02__455}

எழுத்துக்கள் தம் பெயரைச் சொல்லி நிலைமொழி வருமொழி களாய்ப் புணருமிடத்தே, தமக்குக் கூறப்பட்ட விதியைக் கடந்து, மொழி முதலாகா எழுத்துக்கள் முதலாகியும் மொழி யிடை மயங்க லாகா எழுத்துக்கள் மயங்கியும் இயலும்.

எ-டு:‘அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்’

(தொ. எ. 24 நச்.)

இதன்கண், தன் பெயரை மொழிதலின் லகரம் மொழிமுத லாயும் ‘அவற்றுள்’ என்பதன் ஈற்று ளகரத்தொடு மயங்கியும் வந்தவாறு.

‘கெப் பெரிது’ என்புழி’ என்புழி, ‘கெ’ தன் பெயர் மொழி தலின் ‘எகரம் மெய்யோடு ஏலாது’ என்ற விதி யிறந்து மெய்யோடு ஈறாய் நின்றவாறு. (நன். 121)

முதனிலை காலம் காட்டல் -

{Entry: B02__456}

தொட்டான், விட்டான், உற்றான், பெற்றான், புக்கான், நட்டான்- என்பனவற்றுள் இடைநிலை இன்றி முதனிலை விகாரமாய் இறந்த காலம் காட்டின. இவற்றுள் முறையே தொடு விடு உறு பெறு புகு நகு - என்பன முதனிலைகள். (நன். 145 சங்கர.)

முதனிலைத் தொழிற்பெயர், ஏவல் வினை புணருமாறு -

{Entry: B02__457}

யரழ-க்களை ஒழிந்த எட்டு மெய்யெழுத்துக்களையும் (ஞ் ண் ந் ம் ல் வ் ள் ன்) இறுதியாகவுடைய முதனிலைத் தொழிற் பெயர்களும் ஏவல்வினைகளும், வருமொழியாக யகரமெய் ஒழிந்த பிறமெய்களை (க் ச் த் ப் ஞ் ந் ம் வ்) முதலாகவுடைய சொற்கள் வருமாயின், பெரும்பான்மையும் உகரச்சாரியை பெற்றுப் புணரும். சில ஏவல்வினைகள் அவ்வுகரச் சாரியை பொருந்தா.

இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர்களும் ஏவல்வினைகளும் முறையே உரிஞ், உண், பொருந், திரும், வெல், வவ், துள், தின் - என்பன. க ச த ப முதலிய எட்டு மெய்களை முதலாகக் கொண்ட வருமொழி முறையே கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, என்பவற்றை முதனிலைத் தொழிற்பெயரொடு புணர்க்க இடையே உகரச்சாரியை நிகழ்ந்து முடியுமாறு காண்க.

உரிஞுக் கடிது, உரிஞுச் சிறிது, உரிஞுத் தீது, உரிஞுப் பெரிது,

உரிஞு ஞான்றது, உரிஞு நீண்டது, உரிஞு மாண்டது, உரிஞு வலிது - எனவரும்.

உண், பொருந் - முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்து முடிக்க. வன்கணம் வருவழிச் சாரியைப் பேற்றினைஅடுத்து வல்லெழுத்து மிகுதலும், பிறகணம் வருவழி உகரப் பேற் றோடு இயல்பாக முடிதலும் கொள்க.

இனி, இவ்வெட்டு ஏவல்வினைகளும் நிலைமொழியாக நிற்ப, க ச த ப முதலிய எட்டுமெய்களை முதலாகவுடைய வரு மொழிகள் முறையே கொற்றா, சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா - எனக் கொண்டு சாரியைப் பேற்றினைத் தந்து முடிக்க. வன்கணம் வருமிடத்து வலிமிகு தல் இல்லை.

வருமாறு: உரிஞு கொற்றா, உரிஞு சாத்தா, உரிஞு தேவா, உரிஞு பூதா; உரிஞு ஞெள்ளா, உரிஞு நாகா, உரிஞு மாடா, உரிஞு வளவா.

இவ்வாறே உண், பொருந் - முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்து முடிக்க.

உகரச்சாரியை பெற்றும் பெறாமலும் வரும் ஏவல்வினைகள் ண் ன் ல் ள் என்னும் நான்குமெய் ஈற்றனவாம். ஏனைய நான்கு ஈறுகளும் உகரம் பெற்றே வரும் எ-டு: உண் கொற்றா, தின் சாத்தா, வெல் பூதா, துள் வளவா - இவை உகரம் பெறாமல் வந்தன. (நன். 207)

‘முப்பாற் புள்ளி’ (1) -

{Entry: B02__458}

மூன்று புள்ளி வடிவிற்றாய ஆய்தம். (தொ. எ.2. இள., நச். உரை)

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் - என்ற புள்ளி பெறும் எழுத்துக்கள் மூன்றும். (சூ.வி.பக். 26; தொ.பொ. (சூ. 665 : 6) பக். 735 பேரா.) (எ.ஆ.பக். 13; எ.கு. பக். 10,11)

“ஆய்தம் என்று ஓசைதான் அடுப்புக்கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்று” என்பது உணர்த்துதற்கு ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’ என்றார். இதற்கு வடிவு கூறினார், ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாது ஓசைவிகாரமாய் நிற்பதொன்று ஆதலின். இதனைப் புள்ளி வடிவிற்று எனவே, ஏனைய எழுத்துக்கள் எல்லாம் வரிவடிவின ஆதல் பெறப்படும். (தொ.எ. 2 நச். உரை)

முப்பாற் புள்ளி (2) -

{Entry: B02__459}

ஆய்தம் என்னும் முப்பாற் புள்ளி. ‘புள்ளி’ ஈண்டு ஒலியைக் குறிக்கும். இவ்வெழுத்து நா-அண்ணம்-முதலாய உறுப்புற்று அமையப் பிறவாமல், வாயிதழ் அங்காப்ப மிடற்றிசையான் அரைமாத்திரை யளவொடு பிறப்பது. ஆதலின் அது தான் சார்ந்துவரும் அ இ உ என்னும் குற்றுயிரோசைகளின் சாயலைப் பெற்றொலிக்கும். (எகர ஒகரங்கள் இகர உகர ஒலியுள் அடங்கும்.) ஆய்தம் உயிர் ஏறலின்றி யாண்டும் ஒலிப்போடு வரும் பண்பினது என்பது விளங்க, ஒலிக்குறிப் புடையதாகிய இதனை விதந்து ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’ என்றார் ஆசிரியர். ‘முப்பாற்புள்ளி’ எனவே, அதன் வரிவடிவும் முக்கோணமாக அமைத்துக் கொள்ளப்படும். ஆய்தம் யாண்டும் ஒலிப்பொடு நிற்றலின், இதனை உயிர் ஊர்வதில்லை. அரை மாத்திரை யளவிற்று ஆதலின் இது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றுக்கும் இடைப்பட்டு நிற்றலின், உயிர் போலவும் ஒற்றுப் போலவும் ஆய்தம் முறையே அலகு பெற்றும் பெறாதும் வரும். (தொ. எ. 2 ச. பால.)

முரண் என்னும் தொழிற்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__460}

முரண் என்ற தொழிற்பெயர் ஏனைய தொழிற்பெயர் போல உகரச் சாரியையும் வருமொழி வன்கணமாயின் வல்லெழுத்து மிகுதலும் பெறாது, பொதுவிதிப்படி அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும், வேற்றுமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்றுப் புணரும்.

எ-டு : முரண்கடிது, ஞெகிழ்ந்தது, யாது, இழிந்தது - அல்வழிக்கண் இயல்பு. முரட்கடுமை, முரண் ஞெகிழ்ச்சி, முரண்வலிமை, முரணடைவு - என வேற்றுமைக்கண் வன்கணம் வரின் ணகரம் டகர மாகத் திரிந்தும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாக வும் புணர்ந்தது.

முரண் + நீட்சி = முரணீட்சி - என வருமொழி முதல் நகரம் திரிந்தவழி நிலைமொழியீற்று ணகரம் கெட்டது. (தொ. எ. 150 நச்.)

முரண் + கடுமை = முரண்கடுமை, முரட்கடுமை. அரண்+ கடுமை = அரண்கடுமை, அரட்கடுமை -

என்ற உறழ்ச்சி முடிவும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் உண்டு. (தொ.எ. 309 நச்.உரை)

முற்றாய்தம் -

{Entry: B02__461}

தனக்குரிய அரைமாத்திரையைக் குறையாமல் பெறும் ஆய்தம் முற்றாய்தமாம். அது தனக்கு முன் குற்றெழுத்தைக் கொண்டு, தனக்குப் பின்னர்ப் பெரும்பான்மையும் கு சு டு து பு று - என்ற ஆறெழுத்துக்களுள் ஒன்று பெற்று மொழியின் இடையில் நிகழும்.

அஃகு, கஃசு, ஒன்பஃது - முதலாக ஈற்று வல்லின வகையால் வரும் முற்றாய்தம் ஆறாம். (குற்றியலுகரமே அன்றி வல்லினப் புள்ளியை ஊர்ந்து பிற உயிர் வரினும் அஃது ஆய்தத்தை அடுத்துவரும் உயிர்மெய்யாம். எ-டு: பஃறி)

அவ்+ கடிய = அஃகடிய; அ +கான் = அஃகான் - எனப் புணர்ச்சி வகையான் வரும் முற்றாய்தம் ஒன்றாம்.

இலகு - இலஃஃகு, விலகி - விலஃஃகி - எனச் செய்யுள் விகாரத் தால் (விரித்தல்) வரும் முற்றாய்தம் ஒன்றாம்.

இவ்வாற்றால் முற்றாய்தம் எட்டு ஆதல் அறியப்படும். (நன். 90 உரை)

முற்றியலுகரம் கெட்டு முடிதல் -

{Entry: B02__462}

அது இது உது - என்பன அன்சாரியையொடு பொருந்தும்வழி, உகரம் கெட, அதன் இதன் உதன் - எனவரும். அவை இன்சாரியையொடு புணரும்வழியும் உகரம் கெட, அதின் இதின் உதின் - என வரும். (தொ. எ. 176 நச். உரை)

ஆறு என்பது அறு என நின்றவழி, வருமொழியாக ‘ஆயிரம்’ வரின், அறு என்பதன் உகரம் கெட, அற் + ஆயிரம் = அறாயிரம் - என முடியும். (469)

சுட்டுமுதல்உகரமே அன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக் கெடுதலுமுண்டு. கதவழகியது, களவழகியது, கனவழகியது- என்பனவற்றின்கண் இறுதி உகரம் கெட நின்ற ஒற்றின்மேல் வருமொழி முதல் அகரம் ஏறி முடிந்தவாறு, (176 நச்.)

எல்லாம் என்பது வற்றும் உருபும் பெற்று ஈற்றில் உம்மை பெறுவழி, எல்லாவற்றையும்- எல்லாவற்றொடும் - என வரும். ‘ஒடு’ என்பதனோடு ‘உம்’ சேருமிடத்து, ஒடுவின் உகரம் கெட ‘ஒடும்’ என உம்மொடு புணரும். (189 நச்.)

அது +அன்று, இது+அன்று, உது+ அன்று, அதன்று, இதன்று, உதன்று - என உகரம் கெட்டு நின்ற தகர ஒற்றோடு உயிர் புணரும். (258 நச்.)

முற்றுகர ஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__463}

ஒடு என்ற மூன்றனுருபு, ஆறனுருபு, ஏழு எண்ணும் இயல்பு எண்ணுப் பெயரும் ஒரு இரு - என்றாற்போலத் திரிந்த எண்ணுப் பெயரும், முற்றுகர ஈற்று வினைப்பகுதி (அடு, பெறு- போல்வன), அது இது உது என்ற சுட்டுப்பெயர் - ஆகியவற்றின் ஈற்று முற்றுகரம் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : சாத்தனொடு சென்றான் - மூன்றனுருபு

எனது தலை - ஆறனுருபு

ஏழு கடல் - இயல்பு எண்ணுப்பெயர்

ஒருகல், இருசொல் - திரிந்த எண்ணுப்பெயர்

அடுகளிறு, பெறுபொருள் - முற்றுகர ஈற்று வினைப் பகுதி

அது சென்றது, இது கண்டான் - ஒருமைச் சுட்டுப் பெயர்.

இவை இயல்பாகப் புணர்ந்தன.

உதுகாண், உதுக்காண் - என இயல்பாயும் விகாரமாயும் வருவன அருகியே காணப்படுகின்றன. ‘உதுக்காண்’ என்பது உங்கே என்ற பொருளில்வரும் ஒட்டி நின்ற இடைச்சொல் என்பாருமுளர். ‘உவக்காண்’ என்பதும் உங்கே என்று பொருள் படும் ஒட்டி நின்ற இடைச்சொல் (குறள் 1185 பரி.) (நன். 179)

முற்றுகரம் கெடுதல் -

{Entry: B02__464}

நிலைமொழியீற்றில் நிற்கும் முற்றியலுகரம் வருமொழி முதற் கண் உயிர் வருவழிக் கெடுதலும் உண்டு. அல்வழி வேற்றுமை - என இருவழியும் கொள்க.

எ-டு: உயர்வு + இனிது= உயர்வினிது; கதவு + அடைத்தான் = கதவடைத்தான் (நன். 164)

முன்: புணருமாறு -

{Entry: B02__465}

முன் என்ற சொல் பெயராகவும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்ற இடைச்சொல்லாகவும், குறிப்பு வினை யெச்ச ஈறாகவும் வரும். அச்சொல் வன்கணம் வரின் இயல் பாகவும் ஈற்று னகரம்திரிந்தும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : முன் கொண்டான், முற் கொண்டான்; முன் ஞான் றான், முன் வந்தான். வன்கணம்வரின் திரிதலே பெரும்பான்மை. உயிர்வரின், தனிக்குறில்முன் ஒற்றாகிய நிலைமொழி னகரம் இரட்டும். முன் + அடைந்தான்= முன்னடைந்தான். (தொ. எ. 333 நச்.)

முன்றில் : சொல்லமைப்பு -

{Entry: B02__466}

முன் என்ற நிலைமொழியை அடுத்து இல் என்ற வருமொழி புணருமிடத்து, இடையில் னகரம் தனிக்குறில் முன் ஒற்றாக இரட்டி முன்+ன்+இல்=முன்னில் என வருதலே முறை. அதனைவிடுத்து நிலைமொழியீற்று னகரஒற்றை அடுத்து அதன் இனமாகிய றகரஒற்று வந்து சேர, முன்+ற்+இல் = முன்றில் என வருதல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉமுடி பாம். இல்லத்தினது முன்னிடம் (முற்றம்) என்று பொருள் படும் இச்சொல், இல்+முன்= இன்முன்- என முறையே புணர்ந்து வாராமல் முன்பின் நிலைமாறி முன்றில் என்று வந்தமை மரூஉவின்பாற்படும். இங்ஙனம் முன்பின் தொக்கன வற்றைப் பிற்காலத்தார் இலக்கணப் போலி என்பர். (தொ.எ. 355 நச். உரை)

இது கடைக்கண், என்றாற்போல வரும் மரூஉமுடிபு போலன்றி, முன்னில் என ஒற்று இரட்டி முடியற்பாலது, இரு மொழிக்கும் இயல்பு இலதோர் ஒற்று மிக்கு முடிந்த மரூஉமுடிபு. (னகரத்தோடு இயையுடையது ற்.) (356 இள. உரை)

‘முன்னதின் ஏனைய முரணுதல்’ -

{Entry: B02__467}

ஒன்பஃது - நிலைமொழி; பத்து, நூறு - வருமொழி

நிலைமொழியாகிய எட்டின்மேல் ஒன்று, ஒன்பஃது - எனப் பஃது என்னும் இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல, வரு மொழியாகிய (எண்பதில் மேல்) பத்தை ‘நூறு’ எனவும், (எண்ணூற்றின் மேல்) நூற்றை ‘ஆயிரம்’ எனவும் திரித்து- என்பது பொருள். (முன்னதின் - முன்மொழி போல; இன்: ஐந்தனுருபு)

ஒன்பஃதினாலே பத்தையும் நுற்றையும் பெருக்கி எனப் பொருள் கொள்வாருமுளர். ‘முரணி’ என்ற சொற்கு அது பொருளன்று ஆதலானும், அது பொருளாமேனும் அதனால் வருமொழி இவ்வாறு திரிந்தது எனத் தோன்றாமையானும், தோன்றின் நிலைமொழிக்கும் விகாரம் கூற வேண்டாமை யானும் அது பொருந்தாது என்க. (நன். 194 சங்கர.)

‘முன்னப் பொருள’ ஆதல் -

{Entry: B02__468}

இரண்டு வெவ்வேறு பொருள்களை உணர்த்தும் சொற் றொடர்கள், சொற்கள் புணருமிடத்து ஒரேவகையான எழுத்துக்களான் ஆகிய தொடர்களாய் வரிவடிவில் எழுதப் படுகையில், இத்தொடருக்கு இப்பொருள் என்று சொல்லு வான் குறிப்பானே அமையும் நிலையில், அவை ‘முன்னப் பொருள’ எனப்படும். அஃதாவது வெளிப்படையாகத் திரிபு அறப் பொருளுணர்த்த இயலாதனவாய்ச் சொல்லுவான் குறிப்பானும் அத்தொடரை எடுத்தல் படுத்தல் ஓசைக் குறிப் பானுமே உணரப்படுவன என்பது.

செம்பொன் + பதின்தொடி, செம்பு + ஒன்பதின் தொடி இரண்டும் ‘செம்பொன்பதின்றொடி’ என்றே அமைவன.

செம்பு என்ற சொல்லை எடுத்து ஒலிப்பதனானும், செம் பொன் என்பதனை எடுத்து ஒலிப்பதனானுமே இது பொருள் தெரிய உணரப்படும். மேலும் கூறுபவன் பேசுவது செம்பைப் பற்றியா, பொன்னைப் பற்றியா - என்பதனை உணர்ந்தாலும் தெளிவாகப் பொருள் புலப்படும். (தொ. எ. 142 நச். உரை)

முன்னப்பொருள ஆவன - குறிப்பினான் பொருள் உணரப் படும் தொடர்கள்.

முன்னிலை மொழிக்கண் இறுதியில் வாரா எழுத்துக்கள் -

{Entry: B02__469}

ஒள என்ற உயிர், ஞ் ந் ம் வ் - என்ற மெய்கள், குற்றியலுகரம்- என்பன முன்னிலை ஏவலொருமை வினைக்கண் தாமே ஈறாக வாரா. எனவே, ஒளவும், ஞ்ந் ம் வ் - என்னும் மெய்களும் உகரம் பெற்று முன்னிலை வினைக்கண் ஈறாக வரும், குற்றியலுகரம் முற்றியலுகரமாக நீண்டு முன்னிலை வினைக்கண் ஈறாக வரும்.

எ-டு: கௌவு கொற்றா, கௌவுக் கொற்றா; உரிஞு கொற்றா, உரிஞுக் கொற்றா; பொருநு கொற்றா, பொருநுக் கொற்றா; திருமு கொற்றா, திருமுக் கொற்றா; தெவ்வு கொற்றா, தெவ்வுக்கொற்றா; கூட்டு கொற்றா, கூட்டுக் கொற்றா - இவ்வீறுகள் ஆறும் உகரம் பெற்று வல்லினம் மிகாமலும் மிக்கும் உறழ்ந்தன. (தொ. எ. 152 நச்.)

முன்னிலை மொழிக்கு ஒள ஞ் ந் ம் வ் குற்றியலுகரம் இவற்றை விலக்கியதன் காரணம் -

{Entry: B02__470}

முன்னிலை ஒருமை விகுதிகள் இ ஐ ஆய் - என்பன. இகரம் நீ என்ற பெயரிலுள்ள ஈகாரத்தின் திரிபு. ஆய் என்பது ஐ என்பதன் நீண்ட வடிவே. ஐயன் என்ற பெயரின் முதனிலை ஐ. ஒளவை என்ற பெயரின் முதனிலை ஒள. கன்னட மொழி யில் ஆடூஉ முன்னிலைவினைகளில் ஐ-சேர்ந்து ‘கேள்வை’ என வரும்; மகடூஉ முன்னிலைவினைகளில் ஒள- சேர்ந்து ‘கேள் வெள’ என வரும். இவ்வாறே தமிழிலும் பண்டைக் காலத்தில் ஆடூஉ முன்னிலைவினைக்கண் ஐயும், மகடூஉ முன்னிலை வினைக்கண் ஒளவும் சேர்த்து வழங்கினர். பிற்காலத்துப் படர்க்கைக்கண்ணேயன்றி முன்னிலைக் கண்ணும் அஃறிணை வழக்கு வந்தமையால் அவ்வேறுபாடு வேண்டா என ஒழிக்கப்பட்டபோது, ஒள முன்னிலைக்கண் வருதல் நீக்கப்பட்டது.

முன்னிலைப் பன்மைக்கண் செய்யும்- இரும்- என்பன போன்ற ஏவலில் காணும் உம்விகுதி பண்டைச் செய்யுளில் காணப்பட வில்லை. ‘உண்ம் என இரக்கும்’ (புறநா. 178) ‘தின்ம் எனத் தருதலின்’ (150) - என மகர ஈற்று முன்னிலைச் சொல் வந்துள்ளன. இச்சொற்களை நோக்க, மகரமெய் பன்மையைக் குறிக்கிறது. செய்கும்- வருதும்- என்ற தன்மைப்பன்மை முற்றுப் போல, உண்ம்- தின்ம்- என்பன முன்னிலைப் பன்மை வினையைக் குறிக்கின்றன. செந்தமிழில் நீம் என்பதன்கண் உள்ள மகரத்தை விலக்கியதனால், வினைக்கண்ணும் உண்ம் என்பது போல மகர ஈறு வாராது விலக்கப்பட்டது. ஒளவும் மகரமும் தொல். காலத்து முன்னரே விலக்கப்பட்டன.

மொழியிறுதிக் குற்றியலுகரமும் முற்றியலுகரமாக ஒலிக்கும். அவ்வாறு ஒலித்தல் முன்னிலைவினைக்கண்ணே என்பதும், ஆண்டுப் பொருள் வேறுபடும் என்பதும், நச்சினார்க்கினியர் காது கட்டு கத்து முருக்கு தெருட்டு - என முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நிற்கும் என்று இதனை விளக்கியுள்ளார் என்பதனை நோக்கக் குற்றிய லுகரத்து இறுதி முன்னிலை வினைக்கண் வாராது என்பதும் பெறப்படும்.

ஞகரம் ‘உரிஞ்’ எனத் தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும், நகரம் ‘வெரிந்’ என்ற பெயர்ச்சொற்கண்ணும் ‘பொருந்’ என்ற தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும் வருமாதலின் அவை வினைக்கண் வாரா. “ஞ் ந்- முன்னிலை ஏவற்கண் வரும்; ஆண்டு அவை உகரம் பெறும்” என்று நன்னூலார் கூறியது போலத் தொல். குறிப்பிடாமையால், ஞ ந-க்கள் தொழிற் பெயர்க்கண் அன்றி முன்னிலை வினைக்கண் வாரா.

வகரம் அவ் இவ் உவ் - என்னும் சுட்டுக்களிலும், தெவ் என்னும் பெயர்ச்சொல்லிலுமன்றி வருதல் இன்மையின், அது முன்னிலை வினைக்கண் வாராது என விலக்கப்பட்டது.

இவ்வாறு ஒள- ஞ் ந் ம் வ் - குற்றியலுகரம் - என்பன முன்னிலை வினைக்கண் வாரா என விலக்கப்பட்டன. (எ. ஆ. பக். 115, 116)

முன்னிலை மொழிக்கு முற்றத் தோன்றாதன -

{Entry: B02__471}

முன்னிலை மொழியாவது முன்னிலைவினை. முன்நின்றான் தொழில் உணர்த்துவனவும் முன்நின்றானைத் தொழிற் படுத்துவனவும் - என முன்னிலைவினை இரு வகைத்து. முன்நின் றானைத் தொழிற்படுத்துவனவற்றைத் தெளிவு கருதி ‘ஏவல் வினை’ என்று கூறலாம். இவ்வேவல் வினை ஒருமைக்கு எல்லா ஈற்று வினைப்பகுதிகளும் பயன்படலாம்;என்றாலும் ஒள என்னும் உயிரீறு, ஞ் ந் ம் வ் - என்னும் புள்ளியீறு, குற்றிய லுகர ஈறு - என்பன முன்னிலை ஏவல் ஒருமை வினையாக வாரா. இவை ஏவல் வினையாக வரவேண்டுமாயின், உயிரீறும் புள்ளியீறும் உகரம் பெற்று வரவேண்டும்; குற்றியலுகர ஈறு முற்றியலுகர ஈறாகிவிடும்.

எ-டு: கௌவு கொற்றா; உரிஞு கொற்றா, பொருநு கொற்றா, திருமு கொற்றா, தெவ்வு கொற்றா, கூட்டு கொற்றா - இவற்றுள் வருமொழி வல்லெழுத்து விகற்பித்து மிகுதல் கொள்க.

கூட்டு என்பது ஏவலொருமை முற்றாகியவழி முற்றியலுகர ஈற்றது. (தொ.எ.152 நச். உரை)

குற்றியலுகரஈறு வருமொழி வல்லெழுத்து மிக்குக் கூடுக் கொற்றா எனவும் வரும் (இயல்பாதலே அன்றி). (153 இள.உரை)

முன்னிலை வினை, ஏவல் -

{Entry: B02__472}

முன்னிலைவினை என்பது தன்மைவினை படர்க்கைவினை கட்கு இனமாகிய முன்னிலை வினையைக் குறிக்கும். இனமின்றி முன்னிலை யொன்றற்கே உரியது ஏவல்வினை. ஆகலின் முன் னிலைவினை என்பது ஏவல்வினையை உணர்த்தாமையின் ‘ஏவல்’ எனத் தனியே அதனை விதந்து கூறினார். (நன். 161 சங்கர.)

மூவகைக் குறைகள் -

{Entry: B02__473}

அடிதொடை முதலிய நோக்கித் தொகுக்கும்வழித் தொகுத்தல் அன்றி, வழக்கின்கண் மரூஉப்போலச் செய்யுட்கண் மரூஉவாய், அடிப்பாடாக ஒருமொழி முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் குறைந்து வருதலும் செய்யுள்விகாரமாம். (நன். 156 சிவஞா.)

மூவகைக்குறை செய்யுள்மரூஉ அன்மை -

{Entry: B02__474}

முதல் இடை கடைக் குறையாகிய மூன்றும் வழக்கின்கண் மரூஉப் போலச் செய்யுட்கண் மரூஉவாய் அடிப்பாடாக வரும் என்றும் பொருள் கூறுவர். அது பொருந்தாது, அறுவகை விகாரங்களும் செய்யுள் செய்யும் சான்றோர் அழகு பெற அச்செய்யுளில் வேண்டுழி வருவிக்க வரும் என்பதன்றே? அதை நோக்கி இச்சூத்திரத்தை மாட்டெறிந்தார் ஆதலால், இதற்கும் செய்யுட் செய்யும் சான்றோர் வருவித்துழி வரும் என்பதே கருத்து. இது கருதியன்றே ‘ஒவ்வொரு மொழி’ என்பதை ‘ஒருமொழி’ என இவர் இச்சூத்திரம் செய்தார்? இன்னும் அது பொருந்தாது என்பதற்குப் ‘பசும்புற் றலைகாண் பரிது’ (குறள் 16) என்பதில் காண்பது என்பது ‘காண்பு’ எனக் கடைக் குறைந்ததும், ‘சான்றோர் என்பிலர் தோழி’ என்பதில் ‘சான்றோர் என்பார் இலர்’ என்பது ‘என்பிலர்’ எனக் கடைக் குறைந்ததுமே சான்றாதல் உணர்க. இனி, வழக்கிடத்தும் இலைக்கறியை ‘லைக்கறி’ எனவும், ‘நிலா உதித்தது’ என்பதற்கு ‘லா உதித்தது’ எனவும், ‘இராப்பகல்’ என்பதற்கு ‘ராப்பகல்’ எனவும், கேழ்வரகு ‘கேவரகு’, நீர்ச்சிலை ‘நீச்சீலை’, போகி றான் ‘போறான்’, பாடுகிறான் ‘பாடுறான்’ எனவும், ‘ஆனை யேறும் பெரும்பறையன்’ என்னும் மரபு பற்றி வந்த ‘தோட்டி யான் என்பதைத் ‘தோட்டி’ எனவும் தண்ணீர் ‘தண்ணீ’ வெந்நீர் ‘வெந்நீ’ எனவும் முறையே இம்மூவகை விகாரங்களும் வருதல் கொள்க. (நன். 156 இராமா.)

மூவகைப் பெயரெச்சக் குறிப்பு முன் வலி வரின் இயல்பாதல் -

{Entry: B02__475}

அமர்முகத்த, கடுங்கண்ண, சிறிய, பெரிய, உள, இல, பல, சில (இவை பெயரடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு): பொன்னன்ன (இஃது இடைச்சொல்லடியாகப் பிறந்தது): கடிய (இஃது உரிச்சொல்லடியாகப் பிறந்தது) - இவற்றை நிலைமொழியாகவும், குதிரை - செந்நாய் - தகர்- பன்றி - என்ப வற்றை வருமொழியாகவும் கொண்டு புணர்ப்பவே, இயல்பாக முடியும். (நன். 167 சங்கர.)

மூவகை மெய்த் தோற்றத்துக்கு உரிய வளிகள் -

{Entry: B02__476}

வல்லினம் தலைவளியான் பிறப்பது; மெல்லினம் மூக்கு வளியான் பிறப்பது; இடையினம் மிடற்றுவளியான் பிறப்பது.

(தொ.எ. 88 நச். உரை)

மூவராவான் ஒரு கருத்தன் -

{Entry: B02__477}

செய் என்னும் ஏவல்வினையின் பின்பு வி-பி- என்னும் இரண் டனுள் ஒன்று வரின், செய்வி என்னும் பொருளைப் பெறும். இவையிரண்டும் ஒருங்கு வரினும், ஒன்றே இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல் தோன்ற, மூவராவான் ஒரு கருத்தனைக் காட்டும். (ஏவுவார் மூவர்; இயற்றுதல் கருத்தா ஒருவன்.)

எ-டு : நடப்பி, வருவி, மடிவி, சீப்பி, கேட்பி, அஃகுவி-

இவை செய்வி என்னும் ஏவல்வினைப் பகாப்பதம்.

நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி, கற்பிப்பி - விபி என்பன இரண்டும் இணைந்தும் ஒன்றே இணைந் தும் வந்த செய்விப்பி என்னும் ஏவல்மேல் ஏவல் பகாப்பதம். (நன். 137 மயிலை.)

மூவளபு இசைத்தல் -

{Entry: B02__478}

மூன்று மாத்திரை அளவு ஒலித்தல். இது தனித்த ஓரெழுத் திற்கு இன்று. எனவே, ஈbழுத்துக் கூடிய இடத்தேயே மூன்று மாத்திரை பெறும் என்பது. இதனால் அளபெடை என்பது நெடிலை அடுத்த இனக்குறிலே என்பது பெறப்படும். வட மொழியில் ஓரெழுத்தே அளபெடுக்குங்கால் மூன்று மாத்திரை அளவு ஒலிக்கும் என்பது தமிழ் நூலார்க்கு உடன்பாடின்மை பெறப்படும். (தொ. எ. 5)

மூவிடத்தும் நெடில்ஏழும் அளபெடுத்தல் -

{Entry: B02__479}

வாஅகை, ஈஇகை, ஊஉகம், பேஎகன், தைஇயல், தோஒகை, மௌஉவல் - எனவும்,

படாஅகை, பரீஇகம், கழுஉமணி, பரேஎரம் வளைஇயம், புரோஒசை, மனௌஉகம் - எனவும்,

குராஅ, குரீஇ, குழூஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அனௌஉ - எனவும் முறையே மொழி முதல் இடை கடை என்ற மூவிடத் தும் ஏழ்நெட்டெழுத்தும் அளபெடுத்தன. (நன். 90 மயிலை.)

மூவிடத்து மகர ஈற்றுப் பெயர் அல்வழிப் புணர்ச்சி -

{Entry: B02__480}

மூவிடத்து மகர ஈற்றுப் பெயர்கள் எல்லாரும், எல்லீரும், தாம், நாம், யாம், எல்லாம் - என்பன. அவை வருமொழி வன்கண மாயின் ஈற்று மகரம் இனமெல்லெழுத்தாய்த் திரியும்.

வருமாறு: எல்லாருங்குறியர், எல்லீருங்குறியீர், தாங்குறியர், தாங் குறிய, நாங் குறியம், யாங் குறியேம்.

மென்கணமாகிய ஞகரமும் நகரமும் வரின், எல்லாருஞ் ஞான்றார், எல்லாருந் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர், எல்லீருந் நீண்டீர், தாஞ் ஞான்றார், தாந் நீண்டார், நாஞ் ஞான்றாம், நாந் நீண்டாம், யாஞ் ஞான்றாம், யாந் நீண்டாம் - என வருமொழி மெல்லெழுத்தாகிய ஞகர நகரமாக மகரம் திரியும்.

இடையினமும் உயிரும் வரின், எல்லாரும் யாத்தார், வந்தார், அடைந்தார் - என மகரம் இயல்பாகப் புணரும். எல்லாம் என்பது வன்கணம் வரின் ஈற்று மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு வருமொழியொடு புணர்ந்து இறுதிக்கண் உம்முச் சாரியை பெறும். எல்லாம்+குறிய > எல்லா +குறிய > எல்லாக் + குறிய+உம்= எல்லாக் குறியவும். ஏனைக் கணங்கள் வரின் மகரஈறு கெட்டு வருமொழியொடு புணர்ந்து இறுதிக்கண் உம்முச் சாரியை பெறும்.

எல்லாம்+ ஞாண், நூல், மணி, வட்டு, அடை= எல்லா ஞாணும், எல்லாநூலும், எல்லாமணியும், எல்லாவட்டும், எல்லா வடையும் (வகரம் உடம்படுமெய்)

எல்லாம் வாடின, எல்லாமாடின - என இயல்பாக முடிதலும் கொள்க.

சிறுபான்மை எல்லாம் என்பது, வலி வரின் மகரம் கெட்டு மெலிமிக்கு இறுதியில் உம்முப் பெற்று எல்லாங் குறியவும், எல்லாஞ் சிறியவும் - என வரும்.

உயர்திணைக்கண் எல்லாம் என்பது, எல்லாக் கொல்லரும், எல்லா நாய்கரும், எல்லா வணிகரும், எல்லா அரசரும் - என ஈறு கெட்டு, வன்கணத்து வலிமிக்கு ஏனைய கணத்து இயல்பாகப் புணர்ந்தும்,

எல்லாங்குறியரும், எல்லாஞ்சிறியரும்- என ஈறு கெட்டு இனமெல்லெழுத்து மிக்குப் புணர்ந்தும், இவ்விரு திறத்தும் இறுதியில் உம்முச்சாரியை பெற்று முடிதல் கொள்க.

எல்லாங் குறியர், எல்லாங் குறியீர், எல்லாங் குறியேம் - என ஈறு கெட்டு இனமெல்லெழுத்து மிக்கு இறுதிக்கண் உம்முப் பெறாது வருதலும், எல்லாம் வந்தேம், எல்லா மடைந்தேம்- என இடைக்கணமும் உயிர்க்கணமும் வரின் இயல்பாகப் புணர்தலுமுள.

நும் என்பது, ‘நீஇர்’ எனத் திரிந்து பயனிலை கொண்டு முடியும். எ-டு : நீஇர் கடியிர். (தொ.எ.320- 323 , 326 நச்.)

மூவிடத்தும் மகரஈற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: B02__481}

எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும் என்பது நும்முச்சாரியையும், எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச்சாரியையும் உயர்திணைக்கண் நம்முச்சாரியையும் பெற்றுவரும். எல்லாரும் எல்லீரும் என்பவற்று இறுதி உம்முச் சாரியை பிரித்து வருமொழிக்குப் பின்னர்க் கூட்டப்பெறும்.

எ-டு : எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும் - எனவும் எல்லாவற்றுக்கோடும், எல்லாநங்கையும் - எனவும்

தம் நும் நம் - என்பவற்றது மகரத்தை வருமொழி வல்லெழுத் திற் கேற்ப இனமெல்லெழுத்தாகத் திரித்தும், எல்லாம் என்பதன் ஈற்று மகரத்தைக் கெடுத்தும் புணர்க்க. இயல்பு கணம் வரினும் இச் சாரியைகள் வரும்.

எ-டு : எல்லார்தம்யாழும், வட்டும், அணியும் - எனவும்

எல்லீர்நும்யாழும், வட்டும், அணியும் - எனவும்

எல்லாவற்றுயாப்பும், வலியும், அடைவும் - எனவும்

எல்லாநம்யாப்பும், வலியும், அடைவும் - எனவும் வருமாறு காண்க.

தாம் நாம் யாம் - என்பன தம் நம் எம் - என்றாகி வருமொழிக் கேற்ப. ஈற்று மகரம் கெட, இனமெல்லெழுத்து மிக்கு,

தங்கை, தஞ்செவி, தந்தலை - என வரும். (நங்கை.... எங்கை..... முதலாகக் கொள்க.)

மென்கணத்து மகரமும் இடையினமும் உயிரும் வரின் இயல்பாயும், தனிக்குறில்முன் ஒற்று இரட்டியும் முடிதலும் கொள்க.

எ-டு: தஞ்ஞாண், தந்நூல் - ஈற்று மகரம் கெட, வருமொழி மெல்லொற்று இரட்டுதல்.

தம்மணி, தம்யாழ், தம்வட்டு - இயல்பு

தம் + இலை (தம்மிலை) - தனிக்குறில் முன் மகரம் உயிர்வர இரட்டுதல்

(நம் எம் - என்பவற்றொடும் ஒட்டுக.)

தம காணம், எம காணம், நும காணம் - என ஈறு அகரச் சாரியை பெறுதலுமுண்டு.

நும்மின் மகரம் வலி வரின் கெட்டு மெல்லொற்று மிக்கும், ஞகர நகரங்கள் வரின் அவ்வொற்று இரட்டியும், மகர யகர வகரங்கள் வரின் இயல்பாயும், உயிர்வரின் மகர ஒற்று இரட்டியும் புணரும்.

எ-டு : நுஞ்செவி; நுஞ்ஞாண், நுந்நூல்; நும்மணி, நும் யாழ், நும்வட்டு; நும்மாற்றல்.

எல்லாரும் எல்லீரும் - என்பன இடையே தம் நும் - சாரியை பெறாமல் எல்லார்கையும் எல்லீர்கையும் - என்றாற் போல வருமொழியொடு புணர்தலுமுண்டு. (தொ. எ. 320, 322, 324, 325 நச். உரை)

மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி: சிறப்பு விதி -

{Entry: B02__482}

மூன்றாம் வேற்றுமை எழுவாய் நிலைமொழியாய் நிற்ப, அவ் வெழுவாயாகிய நிலைமொழிப்பொருளால் ஆகின்ற செயப்பாட்டு வினைச்சொல் வருமொழியாக வருமிடத்து, வருமொழி முதற்கண் வரும் வல்லினம் பொதுவிதியால் மிக்கு முடிதலே யன்றி, உறழ்ச்சியும் இயல்பும் ஆகும். உயிரீறு மெய்யீறு- என்ற இருவகை நிலைமொழியும் கொள்க. இப்புணர்மொழி மூன்றாம்வேற்றுமைத்தொகை.

எ-டு: அராத் தீண்டப்பட்டான், சுறாப் பாயப்பட்டான் - என்று மிக்கு முடிதலே பெரும்பான்மை.

பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான்; உறழ்ச்சி

புலிகோட்பட்டான், புலிக்கோட்பட்டான் }

பேய்பிடிக்கப்பட்டான், புலிகடிக்கப்பட்டான் இயல்பு.

கோட்படுதல் என்பது மூன்றாம் வேற்றுமை எழுவாயால் ஒரு சாத்தற்கு ஏற்பட்ட நிலை. கொள்ளுதல் மூன்றாம் வேற்றுமை எழுவாயின் தொழில்.

தம் தொழில்: சாத்தன் உண்டான் என்புழி, சாத்தனாகிய எழுவாயின் தொழில்.

தம்மினாகிய தொழில் : சாத்தன் புலி கடிக்கப்பட்டான் என்புழி, ஓர் எழுவாயால் சாத்தனுக்கு ஏற்பட்ட தொழில்; அஃதாவது கடிக்கப்படுதல். (நன். 256)

‘மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்து’ -

{Entry: B02__483}

மூன்றை முடியிலே யிட்ட முப்பதிற்று எழுத்துக்கள் எனவே, முப்பத்து மூன்றாகும் தமிழெழுத்துக்கள் என்றவாறு.

பேரெண்ணை முன்னர்க் கூறிச்சிற்றெண்ணை அடுத்துக் கூறுதல் தமிழ்மரபு. சிற்றெண்ணை முன்னர்க் கூறிப் பேரெண்ணைப் பின்னர்க் கூறுதல் வடமொழி மரபு.

‘மூன்று தலையிட்ட முப்பது’ என்பது காத்தியாயனர் மதம். முப்பத்து மூன்று: தமிழ்மரபு.

மொழிக்கு முதலாகும் என்ற 22 எழுத்துக்களும், மொழிக்கு ஈறாகும் என்ற 24 எழுத்துக்களும் தமிழ்எழுத்துக்கள் முப்பத்து மூன்றில் அடங்குவனவே. (தொ.எ.103 நச்.)

‘மெய் உயிர் நீங்கின் தன்னுரு ஆதல்’ -

{Entry: B02__484}

உயிர்மெய் எழுத்தில் உயிரைப் பிரித்தால் மெய் தன்னுடைய பழைய வடிவத்தைப் பெறும்.

ஆலிலை - ஆல் + இலை; அதனை - அதன் + ஐ

எனவே, உயிர்மெய் என்பது பிரிக்கும் நிலையில் அமைந்த கலப்பெழுத்தாம். (தொ. எ. 139 நச்.)

‘மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதல்’ -

{Entry: B02__485}

ணகர னகர ஈற்று மெய்கள் நிலைமொழி ஈறாகுமிடத்து வருமொழி முதற்கண் வன்கணம் வரின் ணகர னகரங்கள் முறையே டகர றகரங்களாய் மெய் பிறிதாகும் (வடிவு திரியும்)- என்ற விதி பயன்படுத்தப்பட வேண்டிய இடத்து, இரண்டாம் வேற்றுமைப்புணர்ச்சியாயின், அத்திரிபு பெறாது இயல்பாகப் புணர்தல்.

எ-டு: மண்+ குடம் = மட்குடம் - மெய் பிறிது ஆதல்

பொன் +குடம் = பொற்குடம் - மெய் பிறிது ஆதல்

மண் + கொணர்ந்தான் = மண் கொணர்ந்தான்

பொன் + கொணர்ந்தான் = பொன் கொணர்ந்தான் - என ணகர. னகர ஈறுகள் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இயல்பாய் முடிந்தன. (தொ.எ. 157 நச்.)

மெய் பிறிது ஆதல் -

{Entry: B02__486}

இது புணர்ச்சியில் நிகழும் மூவகைத் திரிபுகளுள் ஒன்று. மெய் பிறிது ஆதல் - வடிவு வேறுபடுதல்.

எ-டு : மண்+ குடம் = மட்குடம் - ணகரம் டகரமாய் வடிவு வேறுபட்டது. சொல் + கேட்டான்= சொற் கேட்டான் - லகரம் றகரமாய் வடிவு வேறுபட்டது.

யான் + ஐ = என்னை- ‘யா’ என்பது ‘எ’என வடிவு வேறுபட, னகரம் இரட்டித்தது.

இங்ஙனம் ஓரெழுத்துப் பிறிதோர் எழுத்தாய்த் திரியும் திரி பினைத் தொல். ‘மெய் பிறிதாதல்’ என்றார். (தொ.எ. 109 நச்.)

‘மெய்ம்மை யாகல்’ -

{Entry: B02__487}

இயல்பாகப் புணர்தல். மெய்ம்மை பட்டாங்கு ஆதலின், இயல்பாம். நாய்+ கோட்பட்டான் = நாய் கோட்பட்டான் - இது ‘மெய்ம்மை யாதல்’ என்னும் இயல்பு புணர்ச்சி. (தொ.எ. 156 நச். உரை)

மெய்மயக்கம் -

{Entry: B02__488}

ஒரு சொல்லின்கண்ணும் புணர்மொழியின்கண்ணும் ஒரு மெய் தன்னொடும் பிறமெய்களொடும் கூடும் கூட்டம். ‘இடைநிலை மெய்மயக்கம்’, காண்க.

மெய்மயக்கம் : உடனிலைமயக்கம், வேற்றுநிலை மயக்கம் -

{Entry: B02__489}

மெய் பதினெட்டனுள்ளும் க் ச் த் ப் - என்னும் நான்கும் ஒழித்து நின்ற பதினாலு மெய்யும் ஒன்றன்பின் ஒன்று மாறி வந்து ஒன்றுவது (வேற்றுநிலை) மெய்மயக்கமாம். ரகர ழகரம் ஒழித்து நின்ற பதினாறு மெய்யும் தம் முன்னர்த் தாம் வந்து ஒன்றுவது உடனிலை மயக்கமாம். இச்சொல்லப்பட்ட இரு கூற்று முப்பது மயக்கும் மொழியிடையிலேயாம். உயிர்மெய் மயக்கம் இன்னதன் பின்னர் இன்னதாம் என்ற வரையறை இல்லை. (நன். 109 மயிலை.)

மெய்மயக்கம் ஒருமொழி இருமொழிக்கண் கோடல் -

{Entry: B02__490}

இன்ன மெய்க்கு இன்ன மெய் நட்பெழுத்து, இன்னமெய் பகையெழுத்து என்பதனை உட்கொண்டே மெய்மயக்கமும் புணர்ச்சிவிதிகளும் அமைந்தன.

லகரளகரங்களின் முன் யகரம் மயங்கும் என்பதனுக்கு எடுத்துக் காட்டுத் தரும்போது, கொல்யானை, வெள்யாறு- என்ற வினைத்தொகை பண்புத்தொகைகளை ஒரு மொழியாகக் கொண்டு நச். குறிப்பிட்டு, இத்தொகையல்லாத் தனி மொழிக்கண் சொற்கள் ஆசிரியர்காலத்து இருந்து பின்னர் இறந்தனபோலும் என்று கருதுகிறார்.

இங்ஙனமே ஞ்ந் ம் வ் - என்னும் புள்ளி முன்னர் யகரம் வந்து மயங்குதற்கு உரிஞ் யாது, பொருந் யாது, திரும் யாது, தெவ் யாது - என்று இருமொழிகளைப் புணர்த்து எடுத்துக்காட்டுத் தருதலை விரும்பாது, உதாரணங்கள் இறந்தன என்றார். நூல் மரபு ஒருமொழிக்குள் அமையும் செய்திகளைச் சொல்லவே அமையும் ஆதலின், ஒரு சொல்லிலேயே மெய் மயக்கம் வரும் செய்தியைக் காட்ட வேண்டும் என்பது நச். கருத்து. இரு மொழிக்கண் வரும் மெய்மயக்கம் ‘புணர்ச்சி’ என்ற வேறு பெயரில் அமைதலின், அதனை மெய்மயக்கத்துள் அடக்குதல் கூடாது என்பது அவர் கருத்து. (தொ. எ. 24, 27 நச். உரை)

மெய்மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொது வாதலின், மேற்கூறிய புணர்மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றான் கூறியவா றாயிற்று என்பர் இளம்பூரணர். (23 இள. உரை)

மெய்மயக்கம் நிகழும் இடன் -

{Entry: B02__491}

தொல். தனிமொழி இலக்கணத்தை மொழிமரபின்கண் கூறியுள்ளார்; மெய்மயக்கத்தை நூல்மரபில் கூறியுள்ளார். இம்மெய்மயக்கம் ஒரு மொழிக்கண் கொள்ள வேண்டுவதோர் இலக்கணமாயின், ஆசிரியர் தனிமொழியினைப் பற்றிக் கூறும் மொழிமரபில் கூறியிருப்பார். மொழியின் முதலில் நிற்கும் எழுத்துக்கள், ஈற்றில் நிற்கும் எழுத்துக்கள் இவற்றைக் கூறுமிடத்தேயே மொழியிடை நிற்கும் மெய்மயக்கத்தைக் கூற வேண்டும். மொழிமரபில் கூறாது நுல்மரபில் மெய்மயக்கம் கூறிய அதனால், இதனை ஒருமொழிக்கண்ணேயே கொள்ள வேண்டுவதன்று. இங்குக் கூறப்பட்ட செய்தி, இன்ன மெய் யெழுத்தினோடு இன்ன மெய்யெழுத்து மயங்கும் என்று அவற்றின் இயல்பினைக் கூறிய அத்துணையே ஆகும். இதனை இடைநிலை மயக்கம் என்று கூறுவது தக்கதன்று; மெய்மயக் கம் என்றலே தகும். இம்மயக்கத்திற்கும் புணர்நிலைக்கும் வேற்றுமை உண்டு. புன்கால், பல்குதல் - முதலிய சொற்களில் ககரத்தொடு மயங்கிய னகர லகர மெய்கள், சந்தியில் பொற் குடம், பாற்குடம்- என்றாற் போலத் திரிவன ஆயின. (எ. ஆ. பக். 23, 24)

மெய்மயக்கம் நுல்மரபில் கூறப்பட்ட காரணம் -

{Entry: B02__492}

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களும் ஈற்றில் வரும் எழுத்துக்களும் மொழியிடைப்படுத்து உணரப்பட வேண்டு தலின், தனியெழுத்துப் பற்றிய நூல்மரபில் கூறப்படாது, மொழியிடைப்படுத்து உணரப்படுவனவற்றைக் குறிக்கும் மொழிமரபில் வைக்கப்பட்டன. மொழியிடையே வரும் இடைநிலை மெய்மயக்கமும் மொழியிடைக் காணப்படுவ தொன்றாதலின் அதுவும் மொழிமரபில் வைக்கப்பட வேண்டு மெனின், மொழிக்கு இடையே வரும் எழுத்தென்னாது, இவ் வெழுத்துக்கு இவ்வெழுத்து நட்பு, அல்லன பகை - என்ற செய்தியையே விளக்குதலின், இச்செய்தி நுல்மரபில் கூறப் பட்டது. (சூ.வி. பக். 57)

‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணி’யே வருதல் -

{Entry: B02__493}

தனிமெய் அரைமாத்திரை அளவிற்று. அது நாச் சிறிது புடை பெயரும் சிற்றொலி ஆதலின், தனிமெய்யைக் கூறிக் காட்ட லாகாது. ஆகவே, அகர உயிரொடு சேர்த்து மெய்யினை உயிர்மெய்யாக ஒலித்தலும், அகரம் ஏறிய மெய்யாகக் கூறிக் காட்டலும் மரபாயின.

எ-டு :

‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (தொ.எ. 19 நச்.)

‘மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன’ (தொ.எ. 20 நச்.)

‘இடையெழுத் தென்ப யரல வழள’ (தொ. எ. 21 நச்.)

இவ்வாறு மெய்கள் அகரத்தொடு சிவணியே ஒலிவடிவிலும் வரிவடிவிலும் காட்டப்பெறுகின்றன. (தொ. எ. 46 நச்.)

மெய்யின் இயற்கை -

{Entry: B02__494}

உருவாகி வடிவு பெறும் மெய்யெழுத்துக்களின் தன்மை யாவது, அவை ஒலிப்பு உடையனவாயும் நிற்றல். புள்ளி யொடும்+ நிலையல் = புள்ளியொடு நிலையல். உம்மையான், புள்ளியொடு நில்லாமல் உயிரோடியைந்து உயிர்மெய்யாகவும் நிற்கும் எனக்கொள்க. (உயிர் மெய் - உயிர்க்கும் மெய்) மெய்யானது ஒலிப்பின்றி உருவாதலும், உயிர்ப்பு உந்த அரை மாத்திரையளவு ஒலித்தலும், உயிர் இயைய இசைத்தலும் ஆகிய மூன்று நிலைகளை யுடைத்து என்பது பெறப்படும். (தொ. எ. 15 ச. பால.)

மெய்யும் ஒற்றும் புள்ளியும் -

{Entry: B02__495}

பதினெட்டு மெய்களும் வடிவு கொள்ளும் நிலைமைக்கண் செவிப் புலனாவதில்லைஆதலின், அந்நிலை மெய் என்றும் ஒற்று என்றும் கூறப்படுகிறது. அவற்றைச் செவிப்புலனாக்க வேண்டின், அகரம் முதலிய உயிர்ப்பிசைகளான் உந்தாமல், அனுகரண ஓசையை உயிர்ப்பாக்கி உந்த அவை செவிப்புல னாகும். அங்ஙனம் வெளிப்படுத்தத் துணைபுரியும் ஓசையை அரைமாத்திரையளவே இசைத்தல் வேண்டும் என, மெய்யின் அளவே அரையென மொழிப என்பர் தொல்காப்பியனார். அம்மெய்யினது முழுத்தன்மையும் புலப்படுத்த வேண்டின், அகரவுயிரைச் சாரியையாகக் கொடுத்து அதனால் வெளிப் படுத்தல் வேண்டும். இதனை ஆசிரியர் மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் என்றார்.

இவ்வாறாக அனுகரண உயிர்ப்பிசையும் அகரச்சாரியையும் இன்றி அம்மெய்கள் மொழியுறுப்பாக ஓர் உயிரெழுத்தையோ உயிர்மெய் யெழுத்தையோ சார்ந்து அவற்றின்பின் வருமிடத்து நன்கு ஒலிக்கும் அந்நிலையை (அல்-கால்-அவல்- காவல்) ஆசிரியர் ‘புள்ளி’ எனச் சுட்டிக் கூறுவர். ஆகலின் புள்ளிமெய் ஒருமொழியின் இடையிலும் ஈற்றிலுமே நிற்கும். இதனை மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்றார்.

ஒலிப்புற்று நிற்கும் புள்ளிமெய்கள் அந்நிலைமைக்கண் உயிர் ஏற இடம் தாரா; ஒலிப்புநிலை நீங்கி வடிவுகொண்ட முன்னைய நிலையில்தான் உயிரேற இடம் தரும். இதனைப் ‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது , மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே’ என்பார் ஆசிரியர். அங்ஙனம் மெய்யினை ஊர்ந்து அம்மெய்யினை வெளிப்படுத்துங்கால், உயிர் தன் தலைமைப்பாட்டினையும் பிறப்பிடத்தையும் இழந்து மெய்க்குத் துணையாகிறது. மெய் தலைமைப் பாடுற்று உயிர் மெய் என நிகழ்கிறது. ஆதலின் உயிர்மெய்யினை மெய்யின் பிறிதொரு நிலையாகவே ஆசிரியர் கூறுகிறார். புள்ளி யில்லா எல்லா மெய்யும்... உயிர்த்த லாறே என்பது தொல். சூத்திரம். (தொ. எ. பக். 11 ச. பால.)

மெய்யெழுத்தின் இலக்கணம் -

{Entry: B02__496}

மெய்யெழுத்துத் தனித்தொலிக்கும் இயல்பின்றி, வாயுறுப்புக் களான் உருவாகி வடிவுற்று அனுகரண ஓசையான் ஒலிநிலை எய்தி, தடையுற்று வெடித்தும் அடைவுற்று நழுவியும் தடை யின்றி உரசியும் நெகிழ்ந்தும், நெஞ்சுவளி - மிடற்றுவளி - மூக்குவளி - இசைகளான் வெளிப்பட்டுச் செவிப்புலனாம்; உயிரும் உயிர்மெய்யுமாகிய எழுத்துக்களின்பின் உயிரிசை அலகின் துணையான் புள்ளியுற்று ஒலிக்கும்; வாயுறுப்புக் களின் தொழில் முயற்சியும் வளியிசையும் காரணமாக வன்மை - மென்மை - இடைமை - என்னும் தன்மைகளைப் பெறும்; உயிரிசையைத் துணையாகக் கொண்டு அவற்றின் உந்து தலான் உயிர்மெய்யாகி இசைத்து அலகு பெறும்; உயிரும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஏற இடங்கொடுத்து, அவ் வழித் தனது மாத்திரையை இழந்து, ஏறிய உயிரின் மாத்திரை யளவே தனக்கு அளவாகக் கொண்டு, உயிர்மெய் என்னும் குறியீடு பெற்று நிற்கும்; மொழிக்கண் விட்டிசை யாது தொடர்ந்து வரும்;உடன்நிற்றற்கு ஏலாத மெய் இணைய வருவழித் திரிந்து பிளவுபடாமல் தொடரும்; தனக்குப் பின் வரும் உயிர்மெய்யின் ஒலியை மயக்கித் திரிபுபடுத்தும்; உயிரைக் கூடியோ சார்ந்தோ சொல்லாயும் சொல்லுறுப்பா யும் அமைந்து பொருள் விளக்கும்; பண்ணிசைகளையும் வண்ணங்களையும் உண்டாக்கும்; உயிர்ப்பிசைகளை ஏற்று நெடுமை - குறுமை - என்னும் குறியீடு பெறும்; தம்மை ஊர்ந்த உயிர்களுக்கு வன்மை - மென்மை - இடைமை - என்னும் குறியீடுகளை எய்துவிக்கும்;தாம் உயிர்மெய் ஆவதற்குத் துணைசெய்யும் உயிர்களைத் தமக்குரிய பிறப்பிடத்தினின்று பிறக்கச் செய்து தாமே தலைமை பெறும்;மெய்-புள்ளி- உயிர்மெய்- என்னும் மூவகையாகச் செயற்பாடு பெற்றுவரும். (தொ. எ. பக். 19, 20 ச. பால.)

‘மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே’ -

{Entry: B02__497}

நிறுத்த சொல்லின் இறுதி நிற்கும் புள்ளியெழுத்தின் முன் குறித்துவருசொல்லின் முதல் வரும் உயிர்தான் பிளவுபட்டு இசைக்காமல், அரை மாத்திரை ஒலிப்புடையதாய் நிற்கும் புள்ளியெழுத்தின் இயல்பினைக் கெடுத்து, ஒலிப்பு இல்லாத மெய்வடிவாக்கி அதனொடு பொருந்தி இசைக்கும்.

எ-டு : நூல் +அழகு =நூலழகு; பால் + ஆறு =பாலாறு; ஆல்+இலை =ஆலிலை; அருள் +ஈகை = அருளீகை; புகழ் + ஒளவியம் =புகழெளவியம் (தொ. எ. 138 ச. பால.)

மெய்: வேறு பெயர்கள் -

{Entry: B02__498}

ஊமை எனினும், ஒற்று எனினும், உடல் எனினும், காத்திரம் எனினும் மெய்யென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ. எழுத். 13)

மெல்லினம் -

{Entry: B02__499}

ங்ஞ்ண் ந் ம் ன் - என்ற ஆறு மெய்யெழுத்துக்களும் மெல் லென்ற மூக்கொலியால் பிறப்பன ஆதலின் மெல் லினத்தைச் சார்ந்தனவாம். (இம் மெல்லெழுத்தின் பிறப்பிடம் மூக்கு என்னும் நன்னூல். முத்து வீரியம் எழுத். 43ஆம் நுற்பா மெல் லினம் ஆறும் பிறக்கும் இடம் தலை என்கிறது.) (நன். 69)

மெல்லெழுத்து ஆட்சியும் காரணமும் நோக்கிய பெயராதல் -

{Entry: B02__500}

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற ஆறு மெய்களும் மெல்லெழுத்தாம். இவற்றைப் பின்னர் ‘மெல்லெழுத்து மிகினும்’(323), ‘மெல் லெழுத்து இயற்கை’- (145) என்றாற்போல எடுத்துக் குறிப்பிட வேண்டியும், இவை மென்மையான மூக்கொலியான் பிறத்தல் கருதியும் இவற்றை மெல்லெழுத்து என்றார். (தொ.எ. 20 நச். உரை)

மெல்லெழுத்து இயற்கை உறழ்தல் -

{Entry: B02__501}

மொழிக்கு முதலில் வருவன வல்லின உயிர்மெய் - 4, மெல்லின உயிர்மெய் -3, இடையின உயிர்மெய்-2, உயிர் - 12 என்பன. இவற்றுள் வல்லினம் அல்லாத மென்மை இடைமை உயிர்க்கணங்கள் ‘இயல்பு கணம்’ எனப்படும். இவை வரு மொழி முதலில் வரின், நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ திரிபு ஏற்படாமல் இயல்பாகப் புணர்தலே பெரும்பான்மை. ஆனால் முதல்மொழி தொடர்மொழியாய் நிற்க அதனை அடுத்து வரும் மென்கணம் இயல்பாதலே யன்றிச் சிறுபான்மை மிக்கும் புணரும்.

எ-டு : கதிர்+ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர் +நுனி = கதிர்நுனி, கதிர்ந்நுனி; கதிர் +முரி = கதிர்முரி, கதிர்ம்முரி

இவ்வாறு மெல்லெழுத்து இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடிதலு முண்டு. (தொ. எ. 145 நச்.)

மெல்லெழுத்து மிகா மரப்பெயர்கள் -

{Entry: B02__502}

‘பெறுநவும்’ என்ற உம்மையால், அத்திக்காய் - அகத்திக்காய் - ஆத்திக்காய் - இறலிக்காய்- இலந்தைக்காய் - முதலாயின மெல்லெழுத்துப் பெறா எனக் கொள்க. (நன்.165 மயிலை.)

மெல்லெழுத்து: வேறு பெயர்கள் -

{Entry: B02__503}

மென்மை எனினும், மென்கணம் எனினும், மெலி எனினும் மெல்லெழுத்தென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ.எழு. 17)

‘மெல்லொற்று வல்லொற்றிறுதிக் கிளைஒற்று ஆதல்’ -

{Entry: B02__504}

‘மெல்லொற்று இறுதிவல்லொற்றும் கிளைவல்லொற்றும்’ - என்று பிரித்துப் பொருள் செய்தனர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். (தொ.எ.415, 414)

எ-டு :குரங்கு+கால்= குரக்குக்கால் - மெல்லொற்று ஙகரம் இறுதி வல்லொற்றாதல். எண்கு +குட்டி = எட்குக் குட்டி - மெல்லொற்று ணகரம் தன் கிளையான டகர ஒற்றாதல்.

என்று எடுத்துக்காட்டுத் தந்தனர்.

கிளையொற்று என்பது அவ்வவ் வருக்க ஒற்றுக்களை.

‘மெல்லொற்றுக் கிளைவல்லொற்றாகும்’- என்ற தொடர்க்கு, மெல்லொற்றுத் தொடர்மொழிக்கண் நின்ற மெல்லொற் றெல்லாம் இறுதியில் நிற்கும் வல்லொற்றாகும்; அஃதாவது இறுதியில் நிற்கும் வல்லொற்றாய்த் திரியும் என்பது.

எ-டு: ஓர்யாண்டு + குழவி = ஓர்யாட்டைக் குழவி

கன்று +திரள் = கற்றுத்திரள்

யாண்டு, கன்று - என்பன போன்றவற்றிலுள்ள ணகரனகரங்கள் டகர றகரங்களாகிய இனஒற்றுக்களாகத் திரிதல் கண்டு, அந்த ணகர னகரங்கள் பிற எழுத்துக்களொடு கூடி நின்றவழியும் அவ்வாறு திரியும் என்ற கருதி, எண்கு+ குட்டி = எட்குக் குட்டி, என்பு +காடு = எற்புக்காடு - எனப் பிற்காலத்தில் வழங்கியமை தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று. (எ. ஆ. பக். 168. 169)

மெலித்தல், மெலிப்பு -

{Entry: B02__505}

வல்லெழுத்தை இனமெல்லெழுத்தாக மெய்பிறிதாக்கிக் கோடல். அஃதாவது வல்லெழுத்தை இனமெல்லெழுத்தாகத் திரித்தல்

மகரஈற்றுப் பெயர் வன்கணம் வருமொழி முதலில் வரின் ஈற்று மகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்து இடையே மிக்கு,
மரம் +கிளை =மரக்கிளை - என்றாற் போல வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வரும். ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகப் புணரும்போது, மரம் +குறைத்தான் =மரங் குறைத்தான் - என வல்லெழுத்து மிக வேண்டிய இடத்து இனமெல்லெழுத்து வருதல் ‘மெலிப்பொடு தோன்றல்’ ஆகும். மெலிப்பு - மெல்லெழுத்து. (தொ.எ.157 நச்.)

மென்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி -

{Entry: B02__506}

அல்வழிக்கண் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : குரங்கு கடிது, பஞ்சு சிறிது, வண்டுதீது, பந்து பெரிது, நண்பு பெரிது, கன்று பெரிது.

1. மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், 2. மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும்,
3. மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும் வல் லெழுத்தும் பெற்று முடிவனவும் உள.

எ-டு : 1. யாண்டு - ஓர்யாட்டை யானை, ஐயாட்டை எருது

2. அன்று, இன்று - அற்றைக் கூத்தர், இற்றைப் போர்

3. மன்று, பண்டு - மன்றைத் தூது, மன்றைப் பனை; பண்டைச் சான்றோர். (தொ.எ.425 நச். உரை)

ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு - என்பன வல்லொற்று மிக்கு, ஆங்குக் கொண்டான் - என்றாற் போல முடியும். யாங்கு என்பது யாங்குக் கொண்டான் - என வருதல் பெரும்பான்மை; யாங்கு கொண்டான்- என இயல்பாயும் முடியும். (நச் . உரை 427-429)

மென்தொடர்மொழி வேற்றுமைக்கண் வன்கணம் வரின் வல் லெழுத்து மிகுதலுமுண்டு. எ-டு: குரங்குக்கால்

இடையே மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து வல்லெழுத்து மிகுதலுமுண்டு.

எ-டு : இருப்புத் தொடர், குரக்குக்கால்

தத்தம் இனமான வல்லொற்றாகத் திரிதலுமுண்டு.

எ-டு : எண்கு+குட்டி =எட்குக்குட்டி; என்பு + காடு: எற்புக்காடு; அன்பு + தளை=அற்புத்தளை.

பறம்பிற் பாரி, குறும்பிற் சான்றோர் - என மெல் லொற்றுத் திரியாமையும் உண்டு.

இயல்பு கணத்திலும் குரக்கு ஞாற்சி, குரக்கு விரல், குரக்கு (உ)கிர் - என மெல்லொற்று இனவல்லொற் றாதலுமுண்டு. (414 நச். உரை)

மென்தொடர்மொழிக் குற்றுகரஈற்று மரப்பெயர்கள் (புல்லும் அடங்கும்) அம்முப் பெற்றுத் தெங்கங்காய், சீழ்கம்புல், கம்பம் புலம், கமுகங்காய் என வருதலும் கொள்க. (தெங்கு, கமுகு - இவையிரண்டும் புல்லினம்.) (415 நச். உரை)

மெல்லொற்று வல்லொற்று ஆகாது அம்முச்சாரியை பெறும் மரப்பெயர்களும் உள. எ-டு: குருந்தங் கோடு, புன்கஞ் செதிள் (416 நச். உரை)

அக்குச்சாரியை பெறுவனவும் உள. எ-டு:குன்றக்கூகை, மன்றப் பெண்ணை (418 நச். உரை)

மெல்லொற்று வல்லொற்றாகத் திரியும் மரப்பெயர்களும் கொள்க. (புல்லினமும் அடங்கும்) எ-டு: வேப்பங் கோடு, ஈச்சங் குலை; (ஈஞ்சு : புல்லினம்) (416 நச். உரை)

நிலைமொழியீற்றில் மென்தொடர்க் குற்றியலுகரம் நிற்ப, வருமொழி முதற்கண் வன்கணம் வரினும், அல்வழிப் புணர்ச்சி யில் இயல்பாக முடியும். (நன். 181)

எ-டு: வந்து கண்டான், சென்றான், தந்தான், போயினான்.

ஏழாம் வேற்றுமைஇடப்பொருள் உணரநின்ற அங்கு இங்கு உங்கு எங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு - என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

எ-டு: அங்குக் கண்டான், இங்குச் சென்றான், ஆண்டுத் தந்தான், யாண்டுப் போனான்.... முதலாகக் காண்க.

ஏழாம் வேற்றுமைக் காலப்பொருள் உணரநின்ற அன்று இன்று என்று பண்டு முந்து- என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன்வரும் வல்லினம் இயல்பாகவே முடியும்.

எ-டு: அன்று கண்டான், இன்று சென்றான், பண்டு தந்தான், முந்து போயினான் (நன். 181 சடகோ. உரை)

வேற்றுமைப் புணர்ச்சிக்கண், மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று மொழிகளுள் சில நிலைமொழிகள் (நாற்கணம்வரினும்) தமக்கு இனமாகிய வன்தொடர்க்குற்றியலுகர மொழி களாகத் திரியும்.

எ-டு: மருந்து +பை = மருத்துப்பை; குரங்கு + மனம் = குரக்குமனம்; இரும்பு + வலிமை = இருப்புவலிமை; கன்று +ஆ =கற்றா (கன்றொடு கூடிய பசு)

இவை வேற்றுமைப் புணர்ச்சி. வேப்பங்காய் என்பதும் அது; இடையே அம்முச்சாரியை மிக்கது.

நஞ்சு + பகைமை= நச்சுப் பகைமை (உவமத்தொகை)

இரும்பு +மனம் =இருப்புமனம் (இதுவுமது)

என்பு + உடம்பு = எற்புடம்பு (இருபெயரொட்டு)

இவை அல்வழிப் புணர்ச்சி.

குரங்கு +குட்டி =குரங்குக்குட்டி, குரக்குக்குட்டி (வேற்றுமை)

அன்பு+தளை =அன்புத்தளை, அற்புத்தளை (அல்வழி)

இருவழியும் விகற்பித்து வந்தவாறு. (நன். 184)

அன்று, இன்று, (பண்டு, முந்து) ஐயாண்டு, மூவாண்டு- என்பன அற்றைப் பொழுது, இற்றை நாள் (பண்டைக்காலம், முந்தை வளம்) ஐயாட்டைப் பிராயத்தான், மூவாட்டைக் குழவி- என ஐகாரச்சாரியை ஈற்றில் பெற்றுப் புணர்ந்தன. அன்று முதலிய நான்கும் மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து ஐகாரச் சாரியை ஏற்றலும், பண்டு- முந்து- என்பன திரிபின்றி ஐகாரம் ஏற்றலும் காண்க. (நன். 185)

மென்தொடர்க் குற்றியலுகரம் -

{Entry: B02__507}

உகரம் ஏறிய வல்லொற்றுக்களுள் ( கு சு டு து பு று) ஒன்று மொழியீற்றதாய் நிற்ப அதன் அயலெழுத்து ஒரு மெல்லின மெய்யாக வரின், அம்மொழியின் ஈற்றிலுள்ள குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரமாம். குற்றியலுகரத்துக்கு மாத்திரை அரை.

எ-டு : அங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, நன்று

மெல்லொற்று ஆறு ஆதலின், அதனை அடுத்து வரும் மென்தொடர்க் குற்றியலுகரமும் ஆறாம். (நன். 94)

மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் -

{Entry: B02__508}

இருந்து கொண்டு, கண்டு சென்றான், சென்று தந்தான் - என்றாற் போல இவ்வகைக் குற்றியலுகரஈற்று வினையெச்சம் இயல்பாகப் புணரும். (தொ. எ. 427. நச்.)

ஏழாவதன் காலப்பொருளவாகிய சொற்கள் இயல்பாகப் புணர்வன உள.

எ-டு : பண்டு கொண்டான், முந்து கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான், என்று கொண்டான். (430 இள.)

உண்டு என்ற சொல், உண்டு பொருள் - உள் பொருள்- என இருவகையாகப் புணரும். (எ. 430 நச்.)

உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை,

உண்டு ஞானம், உண்டு யாழ், உண்டு ஆடை - என இயல்பாகப் புணர்வனவே பெரும்பான்மை. (430 நச். உரை)

வண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்று வண்டின் கால் என வரும். (420 நச்.)

பெண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை யோடு அன்சாரியையும் பெற்றுப் பெண்டின்கை - பெண்டன்கை - என வரும். (421 நச்.)

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து - என்ற எண்ணுப் பெயர்கள் அன்சாரியை பெற்று ஒன்றன் காயம் - என்றாற் போலப் புணரும். ஒன்றனாற் கொண்ட காயம் என வேற்றுமைப் புணர்ச்சி (419 நச்.)

மென்தொடர்மொழிப் புணர்ச்சி -

{Entry: B02__509}

குரங்கு, கழஞ்சு, எண்கு, மருந்து, பாம்பு, என்பன- மென் தொடர்க்குற்றுகரஈற்றுச் சொற்கள். இவை வேற்றுமைப் புணர்ச்சியில், மெல்லொற்று வல்லொற்றாகத் திரிய வரு மொழி வல்லெழுத்து மிக்கு முடியும்; இயல்புகணமாயின் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல் ஒன்றுமே உண்டு-

வருமாறு: குரக்குக்கால், குரக்குச்செவி, குரக்குத்தலை, குரக்குப் புறம் - எனவும், குரக்குஞாற்சி, குரக்குநிணம், குரக்கு முகம், குரக்குவிரல், குரக்கு (உ) கிர்- எனவும் வரும்.

ஞெண்டு, பந்து, பறம்பு, குறும்பு - என்றாற் போல்வன மெல் லொற்று வல்லொற்று ஆகாதன; வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும், இன்சாரியை ஏற்று அதன் னகரம் றகர மாகத் திரிந்து முடிதலும் ஏற்ற பெற்றியாகக் கொள்க.

வருமாறு: ஞெண்டுக்கால், பந்துத்திரட்டு; பறம்பிற் பாரி, குறும்பிற் சான்றோர்.

‘மன்னே’ என்றதனான். குரக்குக்குட்டி - குரங்கின்கால், பாப்புத் தோல்- பாம்பின் தோல்- என ஒன்று தானே ஓரிடத்துத் திரிந்தும் ஓரிடத்துத் திரியாதும் வருதலும் கொள்க. இன்னும் அதனானே, ’அற்புத்தளை’ (நாலடி 12:2) அன்பினாற் செய்த தளை - என வேற்றுமை யாதலேயன்றி, அன்பாகிய தளை-என அல்வழியும் ஆதலின், அல்வழிக்கண்ணும் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல் கொள்க. (இ.வி.எழுத். 103)

மென்தொடர் வேற்றுமைக்கண் வன்தொடராய்த் திரிவனவும், திரியாதனவும், இரண்டுமாவனவும்

{Entry: B02__510}

குரக்குக்கால், கழச்சுக்கோல், எட்டுக்குட்டி, மருத்துப்பை, பாப்புக்கால் எற்புச்சட்டம் - எனத் திரிந்தன. நாற்கணத் தொடும் ஒட்டுக.

ஞெண்டுக்கால், வண்டுக்கால், பந்துத் திரட்சி, கோங்கிலை, இசங்கிலை, புன்கங்காய், பொதும்பிற் பூவை, குறும்பிற் கொற்றன் - என்றல் தொடக்கத்தன திரியாவாம்.

குரக்குக்கடி, குரங்கின் கடி, வேப்பங்காய், வேம்பின் காய், பாப்புத்தோல், பாம்பின் தோல் - என்றல் தொடக்கத்தன திரிந்தும் திரியாதும் வந்தன. (நன். 183 மயிலை.)

மொழி இடைப் போலி -

{Entry: B02__511}

மொழி இடைக்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய - என்னும் மெய்களுக்கு முன்னர்ப் போலியாக வரும்.

எ-டு : அரசு - அரைசு, இலஞ்சி - இலைஞ்சி, அரயர் -அரையர்.

ஐகாரத்தில் பின்னரும் யகரத்தின் பின்னரும், சிறுபான்மை யாக நகரத்திற்கு ஞகரம் போலியாக வரும்.

எ-டு : மைந்நின்ற - மைஞ்ஞின்ற; கைந்நின்ற - கைஞ்ஞின்ற; செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற; நெய்ந்நின்று - நெய்ஞ் ஞின்று; இவை செய்யுள் வழக்கு.

உலக வழக்கிலும் ஐந்நூறு, ஐஞ்ஞூறு, சேய்நலூர் சேய்ஞலூர் என வருமாறு காணக. (நன். 123, 124)

மொழி இறுதிப் போலி -

{Entry: B02__512}

குறிலிணை அடுத்த மகரஈற்று அஃறிணைப் பெயர்களின் ஈற்று மகரத்துக்கு னகரம் போலியாக வருதலுண்டு.

எ-டு : அகம் - அகன் ; முகம் -முகன்; நிலம்- நிலம்; கலம் - கலன் (நன். 122)

இனி, குற்றியலுகரஈற்றுப் பெயரின் இறுதி உகரத்துக்கு ‘அர்’ போலியாக வருதலும், ஈற்று லகரத்துக்கு ரகரம் போலியாக வருதலும், ஈற்று மகரத்துக்கு லகரம் போலியாக வருதலும், சிறுபான்மை லகரத்துக்கு ளகரம் போலியாக வருதலும் உரையிற் கோடலாம்.

எ-டு : சுரும்பு, சுரும்பர், வண்டு - வண்டர், சிறகு - சிறகர் ;

பந்தல் - பந்தர், சாம்பல் - சாம்பர், குடல் - குடர்;

திறம்- திறல், பக்கம் - பக்கல், கூவம் - கூவல்;

மதில் - மதிள் (நன். சடகோப. உரை)

மொழி இறுதி வரும் எழுத்துக்கள் -

{Entry: B02__513}

உயிர் பன்னிரண்டும், ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் மெய்யெழுத்துப் பதினொன்றும், குற்றியலுகரமும் மொழி யிறுதிக்கண் நிற்கும் எழுத்துக்களாம். ஆக அவை இருபத்து நான்கு. (நன். 107)

தாமேயும் அளபெடுப்புழியும் மெய்யொடு கூடியும் வரும் உயிரீறு நூற்றறுபத்து மூன்றும், மெய்யீறு பதினொன்றும், குற்றுகர ஈறு ஒன்றும் - ஆகப் பொதுவகையானும் சிறப்பு வகையானும் ஈறு நூற்றெழுபத்தைந்தும் கொள்க. அவற்றுள் உதாரணம் காணாதன இருபத்திரண்டு. அவையும் வந்துழிக் காண்க. (இ.வி. 29 உரை)

அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ - என்னும் உயிர் ஒன்பதும், ணகர மகர னகரம் என்னும் மெல்லினம் மூன்றும், ய ர ல வ ழ ள - என்னும் இடையினம் ஆறும் மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் (ஒகரம் நகரத்தொடு கூடி ‘நொ’ என இவ்வொரு சொல்லிடத்தே மாத்திரம் ஈறாக வரும் என்பர் உரையாசிரியர்) (நே. எழுத். 8)

உயிரெழுத்துக்களுள் எகர ஒகரம் நீங்கலான ஏனைய பத்தும், மெல்லின எழுத்துக்களுள் ணகார மகார னகாரங்களாகிய மூன்றும், இடையின எழுத்துக்களுள் வகாரஒற்று நீங்கலான ஐந்தும் மொழி இறுதி எழுத்துக்களாம். (வீ.சோ. சந்திப். 8)

அருகியே மொழியீறாக வரும் ஞகார நகார வகார ஒற்றுக்களை விடுத்து ஏனையவற்றையே வீரசோழியம் குறிப்பிடுகிறது.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் -

{Entry: B02__514}

உயிரெழுத்துப் பன்னிரண்டும், ககார சகார தகார நகார பகார மகார வருக்கங்களும், வகார வருக்கத்தில் உ ஊ ஒ ஓ- அல்லாத எட்டும், யகார வருக்கத்தில் அ ஆ உ ஊ ஓ ஓள- ஆகிய ஆறும், ஞகார வருக்கத்தில் அ ஆ எ ஓ - ஆகிய நான்கும் என்னும் இவையனைத்தும் தமிழ்ச் சொல்லுக்கு மொழி முதல் எழுத்துக்களாம். ஆக, அவை 12, 72, 8, 6,4 - என 102 ஆம். (வீ. சோ. சந்திப்.7)

உயிர் பன்னிரண்டும், ககர வருக்க உயிர்மெய்கள் பன்னி ரண்டும், சகர வருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், தகர வருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், நகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், பகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும். மகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், வகர வருக்க உயிர்மெய்கள் எட்டும், ஞகர வருக்கத்தில் மூன்றும், யகர வருக்கத்தில் மூன்றும் ஆக, இத்தொண்ணுற்றெட்டு எழுத்தும் மொழிக்கு முதலாம்.

(வகரம் அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒள - என்னும் எட்டுயிரொடும், ஞகரம் ஆ எ ஒ - என்னும் மூன்றுயிரொடும், யகரம் ஆ ஊ ஓ - என்னும் மூன்றுயிரொடும் கூடி மொழி முதலாம் என்க.) (நே. எழுத். 7)

உயிர் பன்னிரண்டும், ககர சகர தகர நகர பகர மகர வருக்க உயிர்மெய்கள் தனித்தனியே பன்னிரண்டு பன்னிரண்டாக எழுபத்திரண்டும், உ ஊ ஒ ஓ- அல்லாத எட்டு உயிர்களொடு கூடிய வகரவருக்க உயிர்மெய் எட்டும், அ ஆ உ ஊ ஓ ஒள- என்னும் ஆறு உயிர்களொடு கூடிய யகரவருக்க உயிர்மெய் ஆறும், அ ஆ எ ஒ - என்னும் நான்கு உயிர்களொடு கூடிய ஞகர வருக்க உயிர்மெய் நான்கும், அகர உயிரொன்றொடும் கூடிய ஙகர உயிர்மெய் ஒன்றும் ஆக 103 எழுத்துக்கள் மொழிக்கு முதலாவன. (நன். 102-106)

மொழிக்கு முதலாம் எழுத்துக்கள் பொதுவும் சிறப்புமாம் இருவகையானும் தொண்ணுற்று நான்காம் என்பது அறிக. ‘சுட்டுயா எகர....... முதலாகும்மே’ (நன். 106) என்றாரும் உளராலோ எனின், முதலாவன இவை ஈறாவன இவை என ஈண்டுக் கருவி செய்தது மேல் நிலைமொழியீறு வருமொழி முதலோடு இயையப் புணர்க்கும்பொருட்டன்றே? அவ்வாறு புணர்த்தற்கு இயைபில்லாத ஙகரமும் அங்ஙனம் - இங்ஙனம் - உங்ஙனம்- யாங்ஙனம்- எங்ஙனம் - என இவ்வாறு மொழிக்கு முதலாம் என்றல் பயனில் கூற்றாம் என மறுக்க, அன்றியும், அங்கு- ஆங்கு, யாண்டு - யாண்டையது, அன்ன - என்ன என்றாற்போலும் இவ்வொற்றுக்களும் மொழிக்கு முதலாம் என்றல் வேண்டுதலான், அவர்க்கும் அது கருத்தன்று என்க. (இ.வி.27 உரை)

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களின் அட்டவணை -

{Entry: B02__515}

தொல் வீர நேமி நன்னூல் இல க்கண முத்து சுவாமி

காப்பியம் சோழியம் நாதம் விளக்க ம் வீரியம் நாதம்

உயிர் 12 12 12 12 12 12 12

க 12 12 12 12 12 12 12

ச 9 12 12 12 10 12 12

12 12 12 12 12 12 12

ந 12 12 12 12 12 12 12

ப 12 12 12 12 12 12 12

ம 12 12 12 12 12 12 12

வ 8 8 8 8 8 8 8

1 6 3 6 1 6 8

ஞ 3 4 3 4 3 4 6

குற்றியலுகரம் 1 - - - - - -

ங - - - 1 - - -

கூடுதல் : 94 102 98 103 94 102 106

உயிர் 12 12 12 12 12 12 12

வல்லினம் 45 48 48 48 46 48 48

மெல்லினம் 27 28 27 29 27 28 30

இடையினம் 9 14 11 14 9 14 16

குற்றியலுகர ம் 1 - - - - - -

கூடுதல்: 94 102 98 103 94 102 106

மொழிக்கு முதலும் இறுதியுமாம் எழுத்துக்கள் -

{Entry: B02__516}

பன்னீருயிரும், உயிரொடு கூடிய க ச த ப ஞ ந ம ய வ - என்னும் ஒன்பது மெய்யும், குற்றியலுகரமும் மொழிக்கு முதலாவன.

இவற்றுள் க த ந ப ம - என்னும் ஐந்து மெய்களும் பன்னீருயிரொடும் கூடி மொழிக்கு முதலாம். சகரமெய் அ ஐ ஒள - நீங்கலான ஒன்பது உயிர்களொடும், வகரமெய் உ ஊ ஒ ஓ - நீங்கலான எட்டு உயிர்களொடும், ஞகரமெய் அ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஓள- நீங்கலான மூன்று உயிர்களொடும், யகரமெய் ஆ என்பதனொடும் - கூடி உயிர்மெய்யாகி மொழிக்கு முதலில் வரும். வரவே, மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள் உயிர் 12, க த ந ப ம - வருக்கங்கள் (5 x 12=) 60, ச-9, வ - 8, ஞ-3, ய - 1, குற்றியலுகரம் 1-ஆக, 94 ஆகும்.

மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் உயிர் - 12, ஙகரம் நீங்கலான மெல்லினம் - 5, இடையினம் - 6, குற்றியலுகரம் - 1, ஆக 24 எழுத்துக்களாம். இவற்றுள் உயிர்மெய் முதலை மெய்முதலாக வும், உயிர்மெய்யீற்றை உயிரீறாகவும் கொண்டு, மொழிக்கு முதலும் ஈறுமாக வரும் எழுத்துக்களை உயிர் - மெய் - குற்றியலுகரம் - என்ற மூன்று தலைப்பில் அடக்கி, மொழிக்கு முதலாவன உயிர் - 12, மெய் - 9, குற்றியலுகரம் - 1, ஆக, 22 எனவும், மொழிக்கு ஈறாவன உயிர் - 12, மெய் -11, குற்றியலுகரம் - 1 ஆக 24 எனவும் சுருக்கிக் கூறுப. (தொ.எ. 103 நச்.)

மொழிப்படுத்திசைத்தல் -

{Entry: B02__517}

உயிர், மெய், உயிர்மெய்- என்ற எழுத்துக்களை ஒரு சொல்லில் அமைத்து ஒலித்துக் காட்டுதல்.

எ-டு : ஆல் - உயிர் முதல், மெய் ஈறு; பல - உயிர்மெய் முதல், உயிர் மெய் ஈறு. (தொ. எ. 53 இள.)

ஒற்றும் குற்றுகரமும் அரை மாத்திரை அளவினவாகக் குறைந்து ஒலிக்குமேனும், அவை மொழியாக்கத்துக்குப் பயன்படுதலின் அவற்றையும் சேர்த்துச் சொற்களை உண்டாக்குதல்.

ஆடு - உயிர்முதல், உயிர்ஈறு; ஆல் - உயிர்முதல், மெய்ஈறு;

வரகு - மெய்முதல், குற்றியலுகர ஈறு

ஆ என்பது வேறு; ஆல் என்று லகர மெய்சேர்ந்தால் வரும் சொல் வேறு. வர என்பது வேறு; வரகு என்ற குற்றியலுகர ஈற்றுச் சொல் வேறு. (தொ. எ. 53, நச். உரை)

மொழிபுணர் இயல்பு நான்கு -

{Entry: B02__518}

பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடு பெயரும் புணரும்போது, இயல்பாகப் புணர்தல் ஒன்று, திரிந்து புணர்தல் (மெய்பிறிதாதல்) - மிகுதல் - குன்றல் - என மூன்று, ஆக மொழிகள் தம்முள் கூடுமுறை நான்காம்.

எ-டு: சாத்தன்+ வந்தான் = சாத்தன் வந்தான் - இயல்பு; பொன் +பூண் = பொற்பூண் - மெய் பிறிது ஆதல்; நாய்+ கால் = நாய்க்கால் - மிகுதல்; மரம் + வேர் =மரவேர் - குன்றல்; சாத்தன் + கை = சாத்தன் கை -பெயரொடு பெயர்; சாத்தன் + வந்தான் = சாத்தன் வந்தான் - பெயரொடு வினை; வந்தான் + போயி னான் = வந்தான் போயினான் - வினையொடு வினை; வந்தான் + சாத்தன் = வந்தான் சாத்தன் - வினை யொடு பெயர் (தொ. எ. 108)

மொழிமரபின் ஒழிபாகப் புணரியல் கூறுவது -

{Entry: B02__519}

தொல்காப்பிய எழுத்துப்படலம் நான்காம் இயலாகிய புணரியலின் முதல் நான்கு நுற்பாக்களும் மொழிமரபின் ஒழிபாக அமைந்துள்ளன.

1. மொழிக்கு முதலில் வரும் உயிர் - உயிர்மெய் - குற்றியலுகரம் - என்ற மூன்றும், மொழிக்கு இறுதியில் வரும் உயிர் - மெய் - உயிர்மெய்- குற்றியலுகரம் - என்ற நான்கும் மெய் - உயிர் - என்னும் இரண்டனுள் அடங்கும் என்பதும், 2. ஈற்றில் வரும் மெய் புள்ளி பெற்று நிற்கும் என்பதும், 3. குற்றியலுகரமும் அவ்வாறு புள்ளி பெற்று நிற்கும் என்பதும், 4. உயிர்மெய் ஈறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும் - மொழிமரபின் ஒழிபாய்ப் புணர்ச்சிக்கு உபகாரப்படுதலின் புணரியல் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஒருமொழியிலக்கணம் கூறலின், புணரியல் பற்றியன அல்ல;மொழிமரபின் ஒழிபே. (தொ.எ.104-107 இள .உரை)

மொழிமரபு கூறும் ஈரொற்றுடனிலை -

{Entry: B02__520}

தனிமொழியில் யகர ரகர ழகர மெய்களுக்கு முறையே ஙகரமும் ககரமும், ஞகரமும் சகரமும், நகரமும் தகரமும், மகரமும் பகரமும் இணைந்து ஈரொற்றாய் நிற்றலே மொழிமரபில் கூறப்பட்ட ஈறொற்றுடனிலையாம்.

இவற்றுள் பலவற்றிற்கு உதாரணம் இறந்தது.

எ-டு : ங்க ஞ்ச ந்த ம்ப

ய் தேய்ஞ்சது மேய்ந்தது மொய்ம்பு

ர் - சேர்ந்தது -

ழ் - வாழ்ந்தது -

வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு- என்பன இரு மொழிப் புணர்ச்சிக்கண் வரும் ஈரொற்றுடனிலை யாதலின், இவை நூன்மரபின் மெய்ம்மயக்கத்திற்கே எடுத்துக்காட் டாகும். மொழிமரபில் கூறுவன யாவும் தனிமொழிக்கே உரிய செய்தியாம்.

வேய்ங்குழல் - முதலியன புள்ளிமயங்கியல் 65, 68, 92ஆம் நுற்பாக்களில் கூறப்பட்டுள. (எ. ஆ. பக். 49 - 51)

மொழிமரபு தனிமொழியில் நிற்கும் எழுத்திலக்கணமே கூறல் -

{Entry: B02__521}

நூற்பாக்கள் - 1-7 : நூல்மரபில் கூறிய சார்பெழுத்துப் பற்றியன.

8,9 : அளபெடைக்கு ஆவதொரு விதி

10-12 : மொழிகள் வகை

13, 14 : மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் முறை, அவை மொழித்தன்மைப்பட்டு மயங்கும் மயக்கம்

15-19: ஒருமொழிக்கண் மயங்கும் ஈரெழுத்துக்களும் அவற்றின் அளபும்

20-24 : மொழிக்கண் நிற்கும் ஐ ஒள எழுத்துக்களில் படுவதொரு வேறுபாடும் அளபும்

25 : மொழியிறுதியில் நிற்கும் இகரத்தின் வேறுபாடு

26-35: மொழிமுதற்கண் நிற்கும் எழுத்துக்கள்

36-48: மொழிஈற்றில் நிற்கும் எழுத்துக்கள்

49 : மொழியிறுதியில் நிற்கும் னகரத்தின் மாற்றம்

35,37,39,40: தனிமொழியில் நிற்கும் சார்பெழுத்தைக் கூறி, இயைபுபட்டமையால் புணர்மொழிக்கண் படும் சார்பெழுத்தும் ஈண்டே கூறப்பட்டன, சூத்திரச் சுருக்கமும் பொருளியைபும் கருதி.

இவவாற்றான், மொழிமரபு தனிமொழியில் நிற்கும் எழுத் திலக்கணமே கூறியதாம். (எ. ஆ. பக். 35)

மொழிமரபு நூல்மரபினது ஒழிபு ஆமாறு -

{Entry: B02__522}

மொழிமரபு தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் இரண்டாம் இயல். இதன்கண் 49 நூற்பாக்கள் உள. முதல் இயலாகிய நூல் மரபிற்குரிய ஒழிபுகள் மொழிமரபில் விளக்கப்படுகின்றன. துனித்துக் கூற இயலாது மொழிப்படுத்தே உணரப்பட வேண்டிய சார்பெழுத்துக்கள் பற்றிய செய்தியும் இதன்கண் கூறப்பட்டுள.

மொழிமரபின்கண்ணே முதல் 7 நூற்பாக்கள் சார்பெழுத்தின் ஒழிபு. அடுத்த இரண்டு நூற்பாக்கள் உயிரளபெடையின் ஒழிபு. அடுத்த மூன்று நூற்பாக்கள் நெடில் குறில் இவற்றின் ஒழிபு. அடுத்த நூற்பா மெய்யின் ஒழிவு. 14ஆம் நூற்பா முதல் இயலிறுதி முடிய மெய்மயக்கத்தின் ஒழிபு. இப்பகுதியில் 14ஆம் நூற்பா முதல் 20ஆம் நூற்பா முடிய மயக்கம்; அடுத்த ஐந்து நூற்பாக்கள் போலி; 26ஆம் நூற்பா முதல் 35ஆம் நூற்பா முடிய மொழிக்கு முதலாவன; அடுத்து வரும் 13 நூற்பாக்களும் மொழிக்கு இறுதியாவன. இறுதி நூற்பா போலி பற்றியது.

இவ்வாற்றான் மொழிமரபு நூல்மரபினது ஒழியே யாகும். (சூ.வி. பக். 57)

மொழி மரபு:பெயர்க்காரணம் -

{Entry: B02__523}

மொழிமரபு என்னும் ஆறன்தொகை, மொழியினுடைய மரபுகளைக் கூறும் இயல்- என விரிதலின் அன்மொழித் தொகை. நூல்மரபில் கூறிய எழுத்துக்கள் மொழியாகும் முறைமையும், அவை மொழிக்கண் நிற்கும் நிலையும், மொழிப் பொருள் மாறாமல் எழுத்து மாறி வரும் போலி மரபும் பற்றிக் கூறுதலின்,இவ்வியல் மொழிமரபு எனப்பட்டது. (தொ. எ. பக். 98 ச. பால.)

மொழி முதற்காரணம் அணுத்திரள் ஒலி -

{Entry: B02__524}

மொழிக்கு முதற்காரணம் எழுத்தானாற்போல, எழுத்திற்கு முதற்காரணம் அணுத்திரள் என்பது பெற்றாம். முற்கு வீளை முதலியவற்றிற்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரிய மாய் வரும் ஒலி எழுத்தாகாமையின், ‘மொழி முதற்காரணமாம் ஒலி’ என்றார். சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்று உருவமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின், அநாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கூறாது, ஆதிகாரண மாகிய செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற் காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று, அணுத்திரள் ஒன்றுமே துணிவு எனின், ‘பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல்’ என்னும் மதம்படக் கூறினார் என்றுணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை. (நன். 58 சங்கர.)

மொழிமுதற் போலி -

{Entry: B02__525}

மொழிமுதற்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய - என்னும் மெய்களுக்கு முன் போலியாக வரும். (முன் : காலமுன்)

எ-டு: பசல் - பைசல் , மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல்.

இனி, ச ஞ ய - மெய்களுக்கு முன்னர் ஐகாரத்துக்கு அகரம் மொழிமுதற் போலியாக வருதலும் கொள்ளப்படும்.

எ-டு: வைச்ச- வச்ச. ஐஞ்சு- அஞ்சு, பைய - பய. (நன். 123)

மொழி மூவழிக் குறைதல் -

{Entry: B02__526}

செய்யுளில் ஓசைநயம் கருதி ஒரோவழி அருகிப் பெயர்ச் சொற்கள் முதல்இடைகடைகளில் ஓரெழுத்துக் குறைந்து முதற்குறையாகவும் இடைக்குறையாகவும் கடைக்குறையாக வும் வருதல் செய்யுள்விகாரத்தின்பாற்படும். இக்குறை விகாரம் பகாப்பதத்தின் கண்ணது. (தொகுத்தல் விகாரம் புணர்மொழிக்கண்ணதாம்.)

எ-டு : ‘மரையிதழ்’ (குறுந். 140) - தாமரை என்பது முதல் குறைந்தது. ‘ஓதி முது போத்து’ - ஓந்தி என்பது இடை குறைந்தது. ‘நீலுண் துகிலிகை’ - நீலம் என்பது கடைக் குறைந்தது (அம்). (நன்.156)

மொழியாய்த் தொடர்தல் -

{Entry: B02__527}

எழுத்துக்கள் பலவற்றைக் கூட்டி நெருக்கி ஒருதொடர்ப்படக் கூறுமிடத்தும் தத்தம் வடிவும் அளவும் முதலாயின இயல்பின் திரியா, தனித்து நின்றாற் போலும் யாண்டும். (நன். 126 மயிலை.)

எழுத்து ஒன்றோடொன்று மாலையில் தொடுக்கப்பட்ட மலர் போலத் தொடர்ந்து மொழியாகும். மாலையிலிருந்து மலர்களைச் சிதையாமல் உதிர்ப்பது போல மொழியிலுள்ள எழுத்துக்களைச் சிதைவின்றிப் பிரிக்கலாம்.

சுண்ணத்தின்கண் அரிசனம் (மஞ்சட்பொடி) பிரிக்கப் படாமை போல்வதன்று, இத்தொடர்ச்சி. (நன். 127 சங்கர.)

மொழியிடை எழுத்தெண்ணிக்கை -

{Entry: B02__528}

மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பதெழுத்து இறுதியாகத் தொடர்ந்து வரும்.

எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான், உத்தராடத்தான், உத்தரட்டாதியான். (மு. வீ. மொழி. 10)

மொழியியல் மொழி வகை ஏழு -

{Entry: B02__529}

‘முத்துவீரியம் சுட்டும் மொழிவகை’ காண்க.

மொழிவகை -

{Entry: B02__530}

எல்லா மொழியும் ஓரெழுத்துப்பதம், தொடரெழுத்துப் பதம் எனவும், பகாப்பதம் பகுபதம் எனவும் இவ்விரண்டாய் அடங்கும் என்பதாம். இறிஞி, மிறிஞி- முதலாயின தொடர்ந்தன வேனும், பொருள் தாரா ஆகலின் பதம் ஆகா என்க (நன். 127 மயிலை)

ய section: 15 entries

யகரஇறுதிப் பொதுப்புணர்ச்சி -

{Entry: B02__531}

யகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் எழுவாய்த்தொடரில் இயல்பாகப் புணரும்.

எ-டு: நாய் கடிது, சிறிது, தீது, பெரிது

ஏழன் உருபின் பொருள்பட முடிவன, அவ்வாய்க் கொண் டான் - இவ்வாய்க் கொண்டான் - உவ்வாய்க் கொண்டான் - எவ்வாய்க் கொண்டான் - என வல்லெழுத்து மிக்குமுடியும். அவ்வாய் முதலியன இடப்பெயர்கள்.

யகரஈற்று வினையெச்சமும், தாய்க் கொண்டான் -தூய்ப் பெய்தான் - என வல்லெழுத்து மிக்கு முடியும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை, பொய்ச்சொல்-மெய்ச்சொல் - எய்ப்பன்றி - என வல்லெழுத்து மிக்கு முடியும்.

வேய் கடிது, வேய்க் கடிது - என எழுவாய்த்தொடருள் உறழ்ந்து முடிவனவும் உள.

யகரஈற்றுப் பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் மிக்கும், ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.

எ-டு : நாய்க்கால், நாய்ச்செவி, நாய்நலம், நாய்வால், நா யருமை

தாய் என்னும் பொதுப்பெயர் உயர்திணைக்கண் வன்கணம் வரினும் இயல்பாம்.

எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்

தாய் என்பதற்கு அடையாக வந்த மகன் செயல் கூறுமிடத்து, மகன்றாய்க்கலாம், மகன்றாய்ச்செரு, மகன்தாய்த்துறத்தல், மகன்தாய்ப்பகைத்தல் - என வலி மிகும்.

வேய்க்குறை, வேய்ங்குறை - என வலி மெலி உறழ்ந்து முடிதலு முண்டு. (தொ. எ. 357 - 361 நச்.)

யகரத்தின் பிறப்பு -

{Entry: B02__532}

தைத்திரிய பிராதிசாக்கியத்தில், நடுநாவின் விளிம்பு அண்ணத்தை நன்கு பொருந்துதலால் யகரம்பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மிடற்றெழு வளியிசை, அண்ணத்தை நாச்சேர்ந்த இடத்து, அவ்வண்ணத்தை அணைந்து செறிய யகரம் பிறக்கும் என்பர் இள. மிடற்றில் எழும் வளி அண்ணத்தை நாப் பொருந்துவதால் உரலாணி இட்டாற் போல் செறிய யகரம் பிறக்கும் என்பர் நச்.

அடிநா அடியண்ணத்தை உற, யத் தோன்றும் என்று நன்னூலார் கூறுவது, யகரம் கண்ட்யம் ஆகிவிடும். தாலவ்யம் ஆகிய யகரத்தை இங்ஙனம் கூறுவது பொருந்தாது. இதனை இலக்கணவிளக்க நூலாரும் மறுத்துள்ளார். நன்னூல் கூறும் முறையில் பிறக்கும் ஒலி ஒருவகையான கனைப்புப் போறலின், அங்ஙனம் தோன்றுவதனை யகரஎழுத்தாகக் கொள்ளல் கூடாது. (ஈண்டு யகரம் என்றது யகர மெய்யினை.) (எ. ஆ. பக். 83,84)

யகரம் ஆவோடு மாத்திரம் முதலாதல் -

{Entry: B02__533}

இ - ஈ - எ - ஏ - க்-களுக்குப் பிறப்பிடமாகிய இடையண்ணமே யகரத்துக்கும் பிறப்பிடம் ஆதலின், மொழி முதற்கண்யி யீ யெ யே - என்பன ஒலித்தல் அரிதாகும்போலும். உ ஊ ஒ ஓ ஒள - இதழ் குவியப் பிறப்பன ஆதலின், இடையண்ணத்தில் பிறக்கும் யகரத்தொடு மொழிமுதற்கண் அவை வருதல் அரிதாயிற்று. யகரஒலி, மிடற்றுச் சேர்ந்த வளி அண்ணம் கண்ணுற்றடையப் பிறப்பதாகலின், யகரத்தை மொழி முதலாக ஒலித்தல் சற்றுக் கடினம் ஆதலின், யகரம் மொழி முதற்கண் வரும் என்று தொல். கூறவில்லை. யா என்பதன்கண் யகர ஒலியினும் வாயை நன்கு அங்காத்தல் செய்யும் ஆகார ஒலியே விஞ்சி யிருத்தலின், அது மொழி முதற்கண் வந்தது. எனினும், பிற்காலத்தில் அதுவும் ஒலித்தல் அரிதெனக்கருதி ஆகார மாகவே ஒலிக்கப்பட்டது. யானை யாடு யாண்டு யாறு- என்பன ஆனை ஆடு ஆண்டு ஆறு எனவே பிற்காலத்துப் பயின்று வருகின்றன. (எ.ஆ.பக்.68)

‘யகரம் வருவழி இகரம் குறுகு’தல் -

{Entry: B02__534}

குறித்து வருகிளவியின் முதலாக யகரம் வருமிடத்து, நிலை மொழியீற்றுக் குற்றுகர எழுத்தொலி முற்றும் தோன்றா தொழிய, ஆண்டுக் குற்றியலிகரம் வந்து தனது அரை மாத்திரையினும் குறுகிக் காலாக ஒலிக்கும். குற்றியலுகரம் யகரமெய்யொடு புணரும் புணர்மொழிக்கண், குற்றியலிகரம் அதற்கு மாற்றெழுத்தாக வரும் என்க.

குற்றியலிகரம் குறுகும் இடமும் குறுகா இடமும் பொருள் நோக்கி உணர்தல் வேண்டும்.

ஆடு+ யாது = ஆ டி யாது; கவடு + யாது = கவ டி யாது; தொண்டு + யாது = தொண் டி யாது; இக்குற்றியலிகரம் குறுகி ஒலிக்கும் என்க.

தெள்கு + யாது = தெள் கி யாது; வரகு + யாது = வர கி யாது

இக்குற்றியலிகரம் குறுகாது அரை மாத்திரையே ஒலிக்கும் என்க. ‘குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகுதல்’ காண்க. (தொ. எ. 410 ச.பால.)

யகரமும் வகரமும் உடம்படுமெய் ஆதல் -

{Entry: B02__535}

நிலைமொழி உயிரீற்றதாய் வருமொழி உயிர்முதலதாய் நிகழின், உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், இரு மொழிகளையும் இணைப்பதற்கு இடையே அவ் வீருயிர் களையும் உடம்படுவிக்கும் மெய்யொன்று வருதல்வேண்டும். வரும் மெய் உயிர்தோற்றுமிடத்திலேயே தோன்றுவதாய் இருத்தல் வேண்டும். உயிர் தோன்றும் மிடற்றொலியில் தோன்றும் மெய்கள் இடையினமெய்களே. அவற்றுள்ளும் உயிர் போல மொழிக்கு முதலில் வரும் ஆற்றலுடையன யகர வகரங்களே. யகரத்தொலி இ ஈ ஐ - இவற்றின்ஒலியோடு ஒத்ததாயிருத்தலின் இம்மூன்று உயிர்ஈறுகளுக்கும் யகரமும், ஏனைய உயிர்கள்ஈற்றுக்கு வகரமும் உடம்படுமெய்களாய் வரும். ஏகாரத்துக்கு இவ்விரண்டு உடம்படுமெய்களும் வந்து பொருந்தும். சிறுபான்மை அளபெடைக்கண் வரும் எகர ஈற்றுக்கும் இஃது ஒக்கும்.

எ-டு: விள + வ் +அழகியது - விளவழகியது; கிளி + ய் + அழகியது - கிளியழகியது; சே + அழகியது -சே ழகியது, சே ழகியது

(அவனே ழகன் - என ஏகாரஇடைச்சொற்கு யகர உடம்படு மெய்யே வரும்)

சேஎ + அழகியது - சேஎயழகியது, சேஎவழகியது

(தொ. எ. 140 நச்.), (சூ. வி. பக். 42)

‘ளகார வி றுவாய்’ - (தொ. எ. 9 நச்); ‘அவ் வி யல் நிலை யும்’ - 12; ‘ஆ யி ரு திணையின்’ - சொ. 1; ‘ஆ யி ரண் டென்ப’ - எ.117; ‘ஆ வி ன் இறுதி’ - 120; ‘புள்ளியில்லா வெ ல்லாமெய்யும்’ - 17; ‘நொடி யெ ன’ - 7; ‘கூட்டி யெ ழூஉதல்’ - 6; ‘ஈ யா கும்’ - (சொ. 121 சேனா.); ‘உரு வு ரு வாகி’ - (தொ. எ. 17 நச்.); ‘அம் மூ வா றும்’ - 22; ‘ஆ எ ஒ வெ னும்’ - 64; ‘உளவே வ்வும்’ - (சொ. 67 சேனா.); ‘மூப்பே டிமை’ - 56; ‘உயர்தினைப் பெயரே ஃறிணை’ - (எ. 117)

இவ்வாற்றால், அ உ ஊ ஒ ஓ ஒள - என்பன வகரமும், இ ஈ ஏ ஐ என்பன யகரமும், ஆ - அவ்விரண்டும் உடம்படுமெய்யாகப் பெறும் என்றறியலாம்.

(நிலைமொழியீற்று ஏகாரம் இடைச்சொல்லாயின் யகர உடம்படுமெய்யும் பெயரீற்று ஏகாரமாயின் வகர உடம்படு மெய்யும் பெறும் என்பது ஆன்றோர் வழக்கிற்கண்டது. எ-டு: அவரே ரியர், சே வி ன் கோடு; சே - இடபம்)

யதோத்தேச பக்கம் -

{Entry: B02__536}

இஃதுஅதிகாரம் என்பதன் இருவகைகளில்ஒன்று. வேந்தன் ஒருவன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன் ஆணையின் நடப்பச் செய்வது போல, ஒரு சொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன்பொருளே நுதலிவரச் செய்வது யதோத்தேச பக்கமாம். எழுத்தை நுதலி வரும் பல ஓத்தினினது தொகுதியை எழுத்ததிகாரம் என்பது யதோத்தேச பக்கமாம் (சூ. வி. பக். 17)

ய ர ழ ஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__537}

நிலைமொழியீற்றில் யகர ரகர ழகர மெய்கள் நிற்ப, அல் வழிக்கண் வன்கணம் வருமாயின் இயல்பும், சிறுபான்மை வல்லினமெய் மிகுதலும் ஆம். வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்து வல்லினம் மிகுதலும், வல்லினமாவது மெல்லினமாவது மிகுந்து விகற்பித்தலும் விதியாம்.

எ-டு : வேய் கடிது, வேர் சிறிது, வீழ் தீது (எழுவாய்த் தொடர்) - இயல்பு; மெய்க்கீர்த்தி, கார்ப்பருவம், யாழ்க்கருவி (இருபெயரொட்டுப் பண்புத்தொகை); போய்ச் சேர்ந்தான் (வினையெச்சத் தொடர்) - வலி மிகுதல். இவை அல்வழிப் புணர்ச்சி.

நாய்க்கால், தேர்த்தட்டு, யாழ்ப்பத்தர் - வேற்றுமைப் புணர்ச்சி யில் வலி மிகுதல்; வேய் க் குழல் வேய் ங் குழல், ஆர் க் கோடு ஆர் ங் கோடு, பாழ் க் கிணறு பாழ் ங் கிணறு - வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் இனத்தோடு உறழ்ந்தது.

பாழ்க்கிணறு : பாழுட்கிணறு என ஏழன்தொகையாகப் பொருள்படும். பாழாகிய கிணறு எனில் பண்புத்தொகையாய் அல்வழி முடிபாம். (நன். 224)

யா என் சினை -

{Entry: B02__538}

ஒருசொல்லின் உறுப்பாகும் எழுத்துச் சினையெழுத்து எனப்படும். அதுவே சொல்லின் முதலெழுத்தாக வரின், முதலெழுத்து எனவும் முதனிலை எனவும் முதல் எனவும் கூறப்படும். ஈற்றெழுத்தாக வருவது இறுதி எனப்படும். குறில் நெடிலாக நீளுதல் சினை நீடல் எனப்படும்.

‘யா என்சினைமிசை’ - ‘மியா’ என்பதன்கண் உள்ள யா என்ற எழுத்து. (தொ. எ. 34 நச்.)

‘ஐ என் நெடுஞ்சினை’ - ஐ என்ற உறுப்பெழுத்து (தொ.எ.56நச்.)

‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ - அ ‘ஆ’ ஆதல் (தொ.எ. 159)

‘சுட்டுச்சினை நீடிய மென்றொடர்மொழி’ - அ ‘ஆ’ ஆதல். (தொ. எ. - 427)

‘யா என் வினாவின் ஐ என் இறுதி’ புணருமாறு -

{Entry: B02__539}

‘யா என் வினாவின் ஐ என் இறுதி’ யாவது ‘யாவை’ என்ற பலவின்பால் வினாப்பெயர். இஃது அல்வழிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : யாவை கடிய, நல்ல, வல்ல, அரிய

யாவை என்பது நிலைமொழியாக உருபொடு புணருமிடத்து இடையே வற்றுச் சாரியை வரும்; யாவை என்பதன் இறுதி வகரஐகாரம் அடியோடு கெட, யா + வற்று + ஐ = யாவற்றை - என்றாற்போலப் புணரும்.

யா என்ற வினாப்பெயரும் யாவை என்னும் பொருளுடைய-தாய் வற்றுச் சாரியை பெற்று, யா + வற்று + ஐ = யாவற்றை - என்றாற்போல முடியும். எனவே, யாவற்றை என்ற சொல்லின் நிலைமொழி யாவை என்பதா, யா என்பதா - என அறுதி யாகக் கூறல் இயலாது. (‘அதனை’ என்பதன் நிலைமொழி போல என்க.)

ஆயின் யாவை என்பது பொருட்புணர்ச்சிக்கண் நிலை மொழியாக வருதலில்லை. யா என்பதுதான் நிலைமொழியாக வரும். யாவற்றுக்கோடு - என்பதன்கண் நிலைமொழி யா - என்பதேயன்றி யாவை என்பது அன்று என்க. (தொ. எ. 175, 178 நச்.)

யா என்ற சொல் புணருமாறு -

{Entry: B02__540}

யா என்பது வினாப்பெயராகவும், அசைநிலை இடைச் சொல்லாகவும், ஒரு மரத்தின் பெயராகவும் வரும்.

யா, வினாப்பெயராகவோ மூவிடங்களுக்கும் பொதுவான அசைநிலை இடைச்சொல்லாகவோ வருங்கால், வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

‘யாது யா யாவை என்னும் பெயரும்’ (சொ.169 நச்.) என, யா - என்ற வினாப்பெயரைத் தொல். சுட்டியுள்ளார். ‘யாகா பிற பிறக்கு... அசைநிலைக்கிளவி’ (தொ. பொ. 281 நச்.) என, யா என்ற அசைச்சொல் சுட்டப்பட்டுள்ளது.

எ-டு : யா குற்றமுடையன? - வினாச்சொல்

யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியற்கு - அசை நிலை இடைச்சொல்

இவை வன்கணம் வரினும் இயல்பாகப் புணர்ந்தன.

யா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும் வழி, அகரமாகிய எழுத்துப்பேறளபெடையும், வருமொழி வல்லினத்துக்கு இனமான மெல்லெழுத்தும் பெற்றுப் புணரும்.

எ-டு : யா அங் கோடு, யா அஞ் செதிள், யா அந் தோல், யா அம் பூ

அகரப்பேற்றோடு, இனமெல்லெழுத்தேயன்றி வருமொழி வல் லெழுத்து மிகுதலுமுண்டு.

எ-டு : யா அக் கோடு, யா அச் செதிள் யா அத் தோல், யா அப் பூ

இனி, உருபேற்குமிடத்து அகரமும் மெல்லெழுத்து வல் லெழுத்து என்பனவும் பெறாது யாவினை, யாவினொடு - என்றாற் போலப் பெறும். இன்சாரியையை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவதுண்டு.

எ-டு : யாவின்கோடு, செதிள், தோல், பூ

அகரப்பேற்றோடு அத்துச்சாரியை பெறுதலுமுண்டு.

எ-டு : யாஅத்துக்கோடு, யாஅத்துச்செதிள், யாஅத்துத் தோல், யாஅத்துப்பூ

எழுவாய்த்தொடரில் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.

எ-டு : யா கிடந்தது, செறிந்தது, தகர்ந்தது, பிளந்தது, (தொ. எ. 229,230 நச். உரை)

யா என்ற அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். அல்வழி வேற்றுமை என இருவழியும் கொள்க.

எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரிய

யா கொணர்ந்தான், சேர்ந்தான், தந்தான், பார்த்தான் (நன். 160)

யா, ஞா போலி -

{Entry: B02__541}

ணகரஈற்றுச் சொற்களையும் னகரஈற்றுச் சொற்களையும் அடுத்து வருமொழியாக யா என்னும் முதலையுடைய வினைச்சொல் வரின், யகரஆகாரத்துக்குப் போலியாக ஞகரஆகாரம் (வினைச்சொல் முதலாக) வரும்.

எ-டு : மண் யா த்த - மண் ஞா த்த; பொன் யா த்த - பொன் ஞா த்த; யாச் செல்லும்வழி ஞாச் செல்லும், ஞாச் செல்லும்வழியாச் செல்லாது.

(மண் ஞான்றது - என்பது மண்யான்றது - என வாராமை காண்க) (தொ. எ. 146 நச்.)

யாது : புணருமாறு -

{Entry: B02__542}

யாது என்ற அஃறிணை ஒருமை வினாப்பெயர் அன்சாரியை பெற்று உருபொடு புணரும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் இஃது ஒக்கும்.

எ-டு : யாது + அன் + ஐ = யாதனை; யாது + அன் + கோடு = யாதன்கோடு (தொ .எ. 200, 422 நச்.)

அல்வழியில் வன்கணம் வரினும் யாது என்பது இயல்பாகப் புணரும்.

எ-டு : யாது கடிது, சிறிது, தீது, பெரிது (தொ. எ. 425 நச்.)

யா வினா புணருமாறு -

{Entry: B02__543}

யா என்பது அஃறிணைப் பலவின்பால் வினாப்பெயர். அஃது அல்வழிக்கண் இயல்பாயும், வேற்றுமையுருபு ஏற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக்கண்ணும் வற்றுச் சாரியை பெற்றும் புணரும்.

எ-டு : யா குறிய, சிறிய, தீய, பெரிய; யாவற்றொடு, யாவற் றுக்கு; யாவற்றுக்கோடு, யாவற்றுச் செதிள், யாவற்றுத்தோல், யாவற்றுப்பூ (தொ. எ. 224, 175 நச்.)

‘யாவும் ஞாவும் வினையோ ரனைய’ ஆதல் -

{Entry: B02__544}

‘யா, ஞா - போலி’ - காண்க.

‘யாவை’ உருபொடும் பொருளொடும் புணருமாறு -

{Entry: B02__545}

‘யாஎன் வினாவின் ஐஎன் இறுதி’ - காண்க.

ர, ல section: 5 entries

ரகாரஈற்றுப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__546}

ரகாரஈறு வேற்றுமைக்கண் வல்லெழுத்து வரின் அவ்வல் லெழுத்து மிக்கு முடியும்.

எ-டு : தேர்க்கால், தேர்ச்செலவு

சிறுபான்மை வேர்ங்குறை, வேர்க்குறை - என்ற உறழ்ச்சி முடிவும் பெறும். (தொ. எ. 362 நச்.)

ஆர், வெதிர், சார், பீர் - என்பன மெல்லெழுத்து மிக்கு, ஆர் ங் கோடு, வெதிர் ங் கோடு, சார் ங் கோடு, பீர் ங் கோடு - என்றாற்போல வரும். ஆ ரங் கண்ணி - என ஆர் அம்முப் பெறுதலும், பீர த்த லர் எனப் பீர் அத்துப் பெறுதலும் கொள்க.

கூர் ங் கதிர்வேல், ஈர் ங் கோதை, குதிர் ங் கோடு, விலர் ங் கோடு, அயிர் ங் கோடு, துவர் ங் கோடு, சிலிர் ங் கோடு - என்றாற் போல்வன மெல்லெழுத்து மிக்குப் புணர்ந்தன

சார் + காழ் = சார்க்காழ் - என வல்லெழுத்து மிகும்.

பீர் என்பது அம்முப்பெற்று ‘பீரமொடு பூத்த புதன்மலர்’ என்றாற் போலவும் வரும். (தொ.எ.362-365 நச்.)

இனி, அல்வழிக்கண், நீர் குறிது (இயல்பு), வேர் குறிது, வேர்க் குறிது (உறழ்ச்சி);வடசார்க் கூரை, மேல்சார்க் கூரை (வல் லெழுத்து மிக்க மரூஉமுடிவு)- என வருமாறு காண்க.

அம்பர் க் கொண்டான், இம்பர் க் கொண்டான், உம்பர் க் கொண் டான், எம்பர் க் கொண்டான் - என ரகரஈற்றுள் ஏழன் பொருள்பட வந்தன வல்லொற்றுப் பெற்றன.

தகர் க் குட்டி, புகர் ப் போத்து - என்ற பண்புத்தொகைகள் வல்லெழுத்து மிக்கன. (தொ. எ. 405. நச்.)

ர, ழ குற்றொற்று ஆகாமை -

{Entry: B02__547}

ர், ழ் - குற்றெழுத்தின் பின்னர் உயிர்மெய் எழுத்தாகவே வரப் பெறும்; குற்றெழுத்தின் பின்னர் ஒற்றாக வரப்பெறா.

எ-டு : மருங்கு, மருந்து, அரும்பு, ஒருங்கு; ஒழுங்கு, கொழுஞ்சி, உழுந்து, தழும்பு - என வருமாறு காண்க. மர்ங்கு, மர்ந்து, ஒழ்ங்கு, கொழ்ஞ்சி - முதலாகக் குற்றொற் றாக வாராமையும் காண்க.

கன்னடத்தில் இர், விழ் - என வருதல் போலத் தமிழில் வாராது; உகரம் கூடி இரு, விழு - என்றே வரும் (கார், வீழ் - என நெடிற்கீழ் ஒற்றாய் வருதல் காண்க.) (தொ. எ.49 நச்.)

‘அர்’ என்பது விகுதியாய், வந்தனர் என்றாற் போல மொழிக்கு உறுப்பாய் வருதலன்றிப் பகுதியாய் வாராது.

ர, ழ, ற பிறப்பு -

{Entry: B02__548}

ர, ற - பிறப்பிடம் ஒன்றே. முயற்சியிலே வேறுபாடுள்ளது. “றகாரத்திற்கு நுனிநா அண்ணத்தை நன்கு தாக்கும். ரகாரத் திற்கு நுனிநா அண்ணத்தைப் பட்டும் படாமலும் தடவும். ரகாரம் பிறக்குமிடத்தில் நன்கு ஒற்றின் றகாரம் பிறக்கும்” என்று கன்னடமொழியில் கூறப்பட்டுள்ளது. (எ.ஆ.பக். 82)

ரகாரம் போன்றே ழகாரமும் நுனிநா மேல்நோக்கிச் சென்று மேல்வாயைப் பட்டும் படாமலும் தடவுதலால் பிறக்கும்.

ற் ன், ர் ழ் - நான்கன் பிறப்பிடமும் ஒன்றாக இருப்பினும், ற் ன் - உண்டாகும்போது பட்டும் படாமலும் நாநுனி அண்ணத்தை ஒற்றுகிறது; ர் ழ் - உண்டாகும்போது அண்ணத்தைத் தடவுகிறது. ஆயின் ரகாரத்தை ஒலிக்கும் போது காற்றிற்கு வாயை விட்டு வெளியே செல்ல எவ்வளவு இடன் இருக்கிறதோ, அவ்வளவு இடன் ழகாரத்தை ஒலிக்கும் போது இல்லை. (எ.கு.பக். 99)

லகார ஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__549}

லகாரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரின் றகரத்தோடு உறழும்.

எ-டு : கல் குறிது, கற் குறிது, கல் சிறிது, கற் சிறிது.

வினைச்சொல் ஈறு திரிந்து வந்தானாற் கொற்றன், பொருவா னாற் போகான் - என லகரம் றகரமாகத் திரியும். அத்தாற் கொண்டான், இத்தாற் கொண்டான், உத்தாற் கொண்டான், எத்தாற் கொண்டான், அக்காற் கொண்டான் - என்று ஈறு திரிவனவும் உள.

வருமொழி முதலில் தகரம் வரின் நிலைமொழியீற்று லகரம் றகரமாகத் திரிதலே யன்றி ஆய்தமாகவும் திரியும்.

எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது;

நெடிலை அடுத்த லகரம், தகரம் வருமொழி முதற்கண் வரின் தான் கெட, வருமொழித் தகரம் றகரமாகத் திரியப் பெற்று முடியும்; அன்றித் தானும் றகரமாகத் திரியவும் பெறும்.

எ-டு : வேல் + தீது = வேறீது, வேற்றீது - என இரு முடிபும் கொள்க.

நெடிலை அடுத்த லகரம் வன்கணம் வருவழி இயல்பாதலும், றகரமாகத் திரிதலு முண்டு.

எ-டு : பால் + கடிது = பால் கடிது; வேல்+ கடிது = வேற் கடிது

நெல், செல், கொல், சொல் - என்பன வன்கணம் வருவழி, லகரம் றகரமாகத் திரிந்தே புணரும்.

எ-டு : நெ ற் காய்த்தது, செ ற் கடிது, கொ ற் கடிது, சொ ற் கடிது

இன்மையை உணர்த்தும் இல் - என்பது வன்கணத்தொடு புணருமிடத்து, ஐகாரச் சாரியை பெற்று வலிமிகுதலும் மிகாமையும், ஆகாரம் பெற்று வலிமிகுதலும் - என மூவகை யான் முடியும்.

வருமாறு: இல்லைக் கொற்றன், இல்லை கொற்றன், இல்லாக் கொற்றன்.

இல் என்பது இயல்புகணத்தோடு இல்லை ஞாண், இல்லை வானம், இல்லை அணி என ஐகரம் பெற்றுப் புணரும்.

இல் என்பது எண்ணில் குணம், பொய்யில் ஞானம், மையில் வாண்முகம் - என இயல்பாகவும் புணரும்.

தா +இல்+நீட்சி = தாவினீட்சி- என, லகரம் கெட வரு மொழி நகரம் னகரமாகத் திரிந்து புணர்தலுமுண்டு.

வல் என்பது தொழிற்பெயர் போல இருவழியும் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர்வரின் இரட்டுதலும் பெறும்.

எ-டு : வல்லுக்கடிது; வல்லுஞான்றது, வல்லுவலிது; வல்யாது; வல்லரிது - அல்வழி. வல்லுக்கடுமை, வல்லுஞாற்சி, வல்லுவலிமை; வல்யாப்பு, வல்லருமை - வேற்றுமை. இவ்வாறு இருவகை முடிபும் பெறும். வல் + நாய் = வல்ல நாய், வல்லு நாய்; வல் + பலகை =வல்லப் பலகை, வல்லுப் பலகை - இவற்றுள் அகரமும் உகரமும் சாரியை.

பூல் வேல் ஆல் - என்பனஅம்முச்சாரியை இடையே பெற்று,

பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு; பூலஞெரி, வேல ஞெரி, ஆலநெரி; பூலவிறகு, வேலவிறகு, ஆலவிறகு; பூலஈ (வீ)ட்டம்- என்றாற் போல வரும்.

பூல், பூலாங்கோடு பூலாங்கழி - என ஆம்சாரியை பெறுதலு முண்டு.

லகார ஈற்றுத் தொழிற்பெயர்கள் இருவழியும் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ஒற்று இரட்டுதலும் பெறும்.

எ-டு : புல்லுக் கடிது; புல்லு ஞான்றது, புல்லு வலிது; புல் யாது; புல் லரிது - அல்வழி. புல்லுக்கடுமை; புல்லு ஞாற்சி, புல்லுவலிமை; புல்யாப்பு; புல்லருமை - வேற்றுமை.

கன்னல் கடிது, பின்னல் கடிது - அல்வழிக்கண் இயல்பாக முடிந்தது. கன்ன ற் கடுமை, பின்ன ற் கடுமை - வேற்றுமைக்கண் லகரம் றகரமாகத் திரிந்தது. மென்கணம் வந்துழி, வேற் றுமைக்கண் கன்ன ன் ஞாற்சி, பின்ன ன் மாட்சி - என லகரம் னகரமாயிற்று, கன்ஞெரி கன்மாட்சி - போல.

ஆடல் பாடல் கூடல் நீடல்- என்பன ஆடற்கடுமை பாடற் கடுமை கூடற்கடுமை நீடற்கடுமை - என வேற்றுமைக்கண் லகரம் றகரமாயின, க ற் குறை நெ ற் கதிர் - போல.

வெயில் என்பது அத்தும் இன்னும் பெற்று, வெயிலத்துச் சென்றான் - வெயிலிற் போனான் - என வரும். வெயிலத்து ஞான்றான். வெயிலின் ஞான்றான்- என இயல்பு கணத்தும் கொள்க. (தொ. எ. 366-377 நச்.)

லகரஈறு வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி முதல் வன்கணம் வருமிடத்து றகரமாகத் திரியும்; அல்வழிக் கண்றகரத்தோடு உறழும். இனி இருவழியும் மென்கணம் வருமிடத்தே நிலைமொழியீற்று லகரம் னகரமாகத் திரியும்; இடைக்கணம்வரின் இயல்பாகப் புணரும். தனிக் குற்றெ ழுத்தை அடுத்து லகரஈறு வருமொழி முதல்உயிர்வரின் இரட்டும்.

எ-டு : கல்+ குறை = கற்குறை - வேற்றுமை; கல் + குறிது= கல் குறிது, கற் குறிது - அல்வழி; கல் + ஞெரிந்தது= கன் ஞெரிந்தது - அல்வழி; கல் + ஞெரி = கன்ஞெரி - வேற்றுமை; கல்+ யாது= கல் யாது - அல்வழி; கல் + யானை = கல்யானை - வேற்றுமை;கல் + அழகிது = கல் லழகிது - அல்வழி; கல் + அழகு = கல்லழகு - வேற்றுமை. (நன். 227)

தனிக்குறிலை அடுத்த லகரம் வருமொழி முதல் தகரம் வருவழி றகரமாதலே அன்றி, ஆய்தமாகத் திரிதலும் அல் வழிப் புணர்ச்சிக்கண் நிகழும்.

எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது (நன். 228)

தனிக்குறிலைச் சாராது தனிநெடில் குறிலிணை முதலிய வற்றை அடுத்து மொழியீற்றில் நிற்கும் லகரம், அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வரும் தகரம் (றகரமாக) திரிந்தபின் தான் கெடும்;அல்வழி வேற்றுமை என ஈரிடத்தும் வருமொழி முதலில் நகரம் (னகரமாகத் ) திரிந்தபின் தான் கெடும். வன்கணம் வருமிடத்து நிலைமொழியீற்று லகரம் அல்வழிக்கண் (விகற்பமின்றி) இயல்பாதலும் திரிதலும் உரித்து; வேற்றுமைக்கண் (திரியாமல்) இயல்பாதலும் உரித்து.

எ-டு : தோன்றல்+ தீயன் = தோன்றறீயன் - அல்வழியில் தகரம் திரிந்த பின் லகரம் கெட்டது.

தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன், தோன்றல் + நன்மை = தோன்றனன்மை - இருவழியும் னகரம் திரிந்தபின் லகரம் கெட்டது.

கால் +கடிது = கால்கடிது; வேல் + படை = வேற் படை -அல்வழியில் வலிவர, லகரம், இயல்பாதலும், திரிதலும் காண்க.

கால் +குதித்து = கால் குதித்து - வேற்றுமையில் வலிவர, லகரம் இயல்பாயிற்று.

வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் தோன்றல் +தீமை = தோன்ற றீமை - என, வருமொழி முதல் தகரம் திரியுமிடத்து நிலைமொழி யீற்று லகரம் கெடுதலும், கால் +துணை = காற்றுணை என, லகரம் கெடா(து நின்று றகரமாகத் திரிந்த)மையும், கொல் களிறு என, வினைத்தொகைக்கண் நிலைமொழியீற்று லகரம் இயல்பாதலும் பிறவும் உரையிற் கோடலாம். (நன். 229)

லகரஈற்றுத் தொழிற்பெயர் அல்வழி வேற்றுமை என ஈரிடத்தும் உகரச்சாரியை பெறாது. வன்கணம் வருமொழி முதலில் வருமிடத்தே அல்வழிக்கண் உறழாமல் இயல்பாக முடியும் லகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உள.

எ-டு : ஆடல் சிறந்தது, ஆடனன்று, ஆடல் யாது, ஆட லழகிது; ஆடற் சிறப்பு, ஆடனன்மை, ஆடல்வனப்பு, ஆடலழகு; ஈரிடத்தும் உகரச்சாரியை பெறாமல் முடிந்தன.

நடத்தல் கடிது - என அல்வழிக்கண் வலி வரின் உறழாமல் இயல்பாக முடிந்தது. (பின்னல் கடிது பின்னற்கடிது, உன்னல் கடிது உன்னற்கடிது - என அல்வழியில் வன்கணம் வருவழி நிலைமொழியீற்று லகரம் றகரத்தோடு உறழ்ந்து முடிதலே பெரும்பான்மை என்க.) (நன். 230)

வல் என்ற லகரஈற்றுப்பெயர் தொழிற்பெயர்போல இருவழி யும் உகரம் பெற்றுப் புணரும்; பலகை, நாய் - என்ற சொற்கள் வருமொழியாக வரின், வேற்றுமைப் புணர்ச்சியில் உகரமே யன்றி அகரச்சாரியையும் பெறும்.

எ-டு : வல்லுக்கடிது, வல்லுக்கடுமை; வல்லுப்பலகை, வல்லப்பலகை; வல்லுநாய், வல்லநாய்

(வல்லுப் பலகை - வல்லினது அறை வரைந்த பலகை;வல்லு நாய் - வல்லினுள் நாய்.)

வல்லுப்புலி, வல்லப்புலி - எனப் பிற பெயர் வரினும் அகரப் பேறு கொள்க. வல்லாகிய நாய் - என இரு பெயரொட்டாய வழி, அகரச் சாரியை பெறாது, (நன். 231)

நெல், செல், சொல், கொல் - என்பன அல்வழிப்புணர்ச்சிக் கண் வேற்றுமைப்புணர்ச்சியிற் போல லகரம் றகரமாகத் திரியும். (செல் - மேகம்; கொல் - கொல்லன், கொல்லன் தொழில்; சொல் - நெல்)

எ-டு : நெற் கடிது, செற் சிறிது, கொற் றீது, சொற் பெரிது

(நன். 232)

இன்மைப் பண்பை உணர்த்தும் இல் என்னும் சொல் வரு மொழியொடு புணரும்வழி இயல்பாக முடிதலும், ஐகாரச் சாரியை பெற்று வருமொழிமுதல் வல்லினம் மிக்கும் மிகாமலும் விகற்பமாதலும், ஆகாரச்சாரியை பெற்று வருமொழி வல்லினம் மிகுதலும் பொருந்தும்.

எ-டு : இல் + பொருள் = இல்பொருள், இல்லைப்பொருள், இல்லை பொருள், இல்லாப் பொருள்

வருமொழி நாற்கணமும் கொள்க. (சாரியைப் பேற்றுக்கும் பொருந்தும்)

இல் + ஞானம், வன்மை, அணி = இல்லை ஞானம், இல்லை வன்மை, இல்லை யணி; இல்லா ஞானம், இல்லா வன்மை, இல்லா வணி (யகரவகரங்கள் உடம்படு மெய்)

ஐகாரமும் ஆகாரமும் சாரியை யாதலின், இப்புணர்மொழிகள் யாவும் பண்புத்தொகையே. (நன். 233)

ல, ள பிறப்பு -

{Entry: B02__550}

நா விளிம்பு தடித்து பல்லினது அணிய இடத்துப் பொருந்த அவ்விடத்து அவ்வண்ணத்தை ஒற்ற லகாரமும், அதனைத் தடவ ளகாரமும் பிறக்கும் என்றார் இள. நா மேல்நோக்கிச் சென்று தன்விளிம்பு அண்பல் அடியிலே உறாநிற்க, அவ் விடத்து அவ்வண்ணத்தை நாத் தீண்ட லகாரமும், அவ் வண்ணத்தை நாத் தடவ ளகாரமும் பிறக்கும் என்றார் நச்.

இவர்தம் உரைகளால், ல் ள் - என்பவற்றின் பிறப்பிடம் ஒன்றே, முயற்சி தீண்டுதலும் தடவுதலும் ஆகிய வேறுபாடுகள் என்பது பெறப்படும்.

லகாரம் பல்லின் முதலில் பிறப்பது என்பதே தொல்காப் பியனார், நன்னூலார், இலக்கணவிளக்க ஆசிரியர் முதலி யோர் கருத்து. வடமொழியிலும் லகாரத்தின் பிறப்பிடம் பல்லினடி என்பதே கூறப்படுகிறது.

எனவே, லகரத்தின் பிறப்பிடம் அண்பல்அடி, முயற்சி ஒற்றுதல்; ளகரத்தின் பிறப்பிடம் அண்ணம், முயற்சி வருடுதல் - எனக் கொள்க. (எ.ஆ.பக். 82, 83)

வ section: 106 entries

வகரஈற்றுச் சுட்டுப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: B02__551}

அவ் இவ் உவ் - என்ற அஃறிணைப் பன்மைச் சுட்டுப்பெயர்கள், வருமொழியாக உருபுகள் புணருமிடத்து அற்றுச்சாரியை பெறும். (உடன் ‘இன்’சாரியை பெறுதலும் கொள்க. தனிக் குறில்முன் ஒற்று உயிர்முதல்சாரியை வருவழி இரட்டாமையும் காண்க.)

வருமாறு : அவ், இவ், உவ் + ஐ = அவற்றை, இவற்றை, உவற்றை; அவற்றினை, இவற்றினை, உவற்றினை.

(வகர ஈற்று ஏனைய பெயராகிய தெவ் என்பது உருபு புணர்ச்சிக்கண் இன்சாரியை பெற்று, தெவ் + ஐ = தெவ்வினை - என்றாற் போல முடிதலும் கொள்க.) (நன். 250)

வகரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__552}

வகரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரின் வகரம் கெட ஆய்தம் வர, அவ் + கடிய, சிறிய, தீய, பெரிய = அ கடிய, அ சிறிய, அ தீய, அ பெரிய - என்றாற் போலப் புணரும்; மென்கணம் வரின், அவ் + ஞாண் = அ ஞ் ஞாண் - என்றாற் போல வந்த மெல்லெழுத்தாகும்; இடைக்கணம் வரின் அவ்யாழ் - என இயல்பாயும், உயிர்க்கணம் வரின் அவ்வாடை அவ்வில் - என ஒற்றிரட்டியும் புணரும்.

வேற்றுமைக்கண் அவ் இவ் உவ் - என்பன உருபு புணருமிடத் தும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியையும் அதனோடு இன்னும் பெற்று முடியும்.

வருமாறு : அவற்றை, அவற்றால்; அவற்றுக்கோடு, அவற்றுத் தோல் - ‘வற்று’ப் பெற்றது. அவற்றினை; அவற்றின் கோடு - வற்றும் இன்னும் பெற்றது.

தெவ் என்பது தொழிற்பெயர் போல, வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர்வரின் இரட்டுதலும் பெற்றுப் புணரும்; மகரம் வரின் வகரம் மகரமாதலுமுண்டு.

எ-டு : தெவ்வுக் கடிது; தெவ்வு ஞான்றது, தெவ்வு மாண்டது, தெவ்வு வலிது.

தெவ் யாது, தெவ் வரிது; தெம் மாண்டது - என முறையே காண்க. (தொ. எ. 378- 382 நச்.)

வகரஈற்றுச் சொற்கள் அவ், இவ், உவ், தெவ் - என்பன நான்கே. முதலன மூன்றும் அஃறிணைப்பன்மைச் சுட்டுப்பெயர். அவற்று ஈற்று வகரம் அல்வழிக்கண் வன்கணம் வருமிடத்தே ஆய்தமாகவும், மென்கணம் வருமிடத்தே வந்த மெல்லெழுத் தாகவும், இடைக்கணம் வருமிடத்தே இயல்பாகவும் புணரும். தெவ் என்பது தொழிற்பெயர் போல இருவழியும் உகரச் சாரியை பெற்று வன்கணம் வரின் அவ் வல்லொற்று மிக்கும், ஏனைக் கணம் வரின் இயல்பாகவும் புணரும். வருமொழி முதற்கண் மகரம் வரின் இருவழியும் வகரம் உகரச்சாரியை பெறாது மகரமாகத் திரிதலுமுண்டு.

எ-டு : அவ் + கடிய = அஃகடிய; அவ் + ஞான்றன = அஞ் ஞான்றன; அவ் + யாவை = அவ் யாவை

ஏனைய இரண்டற்கும் இவ்வாறே வருமொழிபுணர்த்து முடிக்க. (நன். 235)

தெவ் + கடிது, நன்று, வலிது = தெவ்வுக் கடிது, தெவ்வு நன்று, தெவ்வு வலிது - அல்வழி; தெவ் + கடுமை, நன்மை வன்மை = தெவ்வுக்கடுமை, தெவ்வுநன்மை, தெவ்வுவன்மை - வேற்றுமை; தெவ் + மாண்டது = தெவ்வு மாண்டது, தெம் மாண்டது - அல்வழி; தெவ்+ மாட்சி = தெவ்வுமாட்சி, தெம் மாட்சி - வேற்றுமை; தெவ் + மன்னர் = தெம்மன்னர் - அல் வழி; தெவ் + முனை = தெம்முனை - வேற்றுமை . (நன். 236)

வகரஈறு உருபேற்கையில் பெறும் சாரியைகள் -

{Entry: B02__553}

வகரஈற்றுச் சொற்கள் அவ் இவ் உவ் தெவ் - என்பன நான்கே. முதல் மூன்றும் வற்றுச்சாரியை பெற்று உருபொடு புணரும்.

வருமாறு : அவற்றை, இவற்றை, உவற்றை; சிறுபான்மை வற்றோடு இன்சாரியையும் பெறும்; அவற்றினை, இவற்றினை, உவற்றினை - என்றாற் போல வரும்.

தெவ் என்ற உரிச்சொல் படுத்தல்ஓசையான் பெயராயவழி, தெவ்வினை, தெவ்வினொடு. என்றாற்போல இன்சாரியை ஒன்றுமே பெறும். (தொ. எ. 183, 184 நச்.)

வகரஈறு பற்றிய கருத்துக்கள் -

{Entry: B02__554}

வகரஈறுடைய சொற்கள் அவ் இவ் உவ் தெவ் - என்ற நான்கே. வீரசோழியம் வகர ஈற்றைக் குறிப்பிடவே இல்லை.

லீலாதிலகம் என்னும் மலையாள மணிப்ரவாள இலக்கண நூலுள் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “உகரத்தின் முன் உயிரெழுத்து வந்தால் நியமமாக வகாரமே வரும். மரு + உண்டு = மருவுண்டு; வடுவுண்டு, காண்மூவது. ‘போவுதோ வெ ன்ற வாறே’ என்று ஓகாரத்தின் முன்னரும் வகரம் வரும். ஆயின், மருவ் வடுவ் - என்று வகரவீறாயுள்ள சொற்களே ‘உண்டு’ என்பதனொடு சேர்ந்து மருவுண்டு வடுவுண்டு - என்றாயின என்னலாகாதோ எனில், அவ்வாறன்று. அவ் இவ் தெவ் என்று வகரஈற்றுச் சொற்கள் மூன்றே உள. ’உவ்’ என்றது பாண்டிய பாஷையில் (செந்தமிழில்) மட்டுமே உள்ளது: பொதுவான தன்று.”

ஆதலின் பழைய மலையாள மொழியிலும் வகர ஈற்றுச் சொற்கள் உள்ளமை அறியலாம். அவ் இவ் தெவ் - என்னும் சொற்கள் தமிழிலக்கியங்களில் இன்றும் வழங்குகின்றன. வீரசோழியம் வகரம் ஈற்றில் வாராது என்று கூறுதல் பொருத்தமன்று. (எ.ஆ.பக். 72, 73)

‘வகரக் கிளவி நான்மொழி ஈற்றது’ ஆதல் -

{Entry: B02__555}

வகரம் என்ற மெய்யை ஈற்றெழுத்தாக வுடைய சொற்கள் அவ் இவ் உவ் என்ற மூன்று பலவின்பால் சுட்டுப்பெயர்களும், தெவ் என்ற உரிச்சொல்லும் ஆகும். தெவ் என்ற உரிச்சொல் படுத்த லோசையான் பெயராகி உருபேற்றும் பயனிலை கொண்டும் வரும். எனவே, வகரமெய் நான்கு பெயர்களுக்கே ஈற் றெழுத்தாய் வரும் என்பது. (தொ. எ. 81. நச்.)

வகரம் உ ஊ ஒ ஓ வொடு வாராமை -

{Entry: B02__556}

உ ஊ ஒ ஓ - என்பன இரண்டு உதடும் குவியப் பிறப்பன ஆதலின், மேற்பல்லும் கீழுதடும் இயையப் பிறக்கும் வகரத்தொடு சேர்த்து அவற்றை ஒலித்தல் அரிதாம், வகரம் ஒளகாரத்தோடு இயையும்வழி ‘வவ்’ என்று வகரமாக ஒலித்த லின், அஃது ஒரளவு ஒலித்தல் எளிதாதலின், வெள- மொழி முதற்கண் வருதல் கொள்ளப்பட்டது. (எ.ஆ. பக். 67)

‘வகாரம் இயையின் மகாரம் குறுகும்’ -

{Entry: B02__557}

மகரம் குறுகுதற்குக் காரணம் தோன்ற வேண்டுமாயின் ‘இயையின்’ என்ற பாடம் கொள்ளற்பாலது. பிறரெல்லாம் ‘வகாரமிசையும்’ என்றே பாடம் ஓதினர். அவ்வாறு ஓதின், அது மகரக்குறுக்கம் வருமிடம் கூறியதாகவே முடியும். இடம் கூறுதலே ஆசிரியர் கருத்தாயின், இச்சூத்திரம் மொழிமரபில் இடம் பெற வேண்டும். புணர்ச்சி வகையான் எய்தும் மகரத்தி னது திரிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாதலின் ‘இயையின்’ என்றலே பாடமாதல் ஏற்கும். (தொ. எ. 330 ச. பால.)

வடக்கு என்ற திசைப் பெயர் -

{Entry: B02__558}

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு.

தொல். வடக்கு என்ற சொல்லின் இறுதியெழுத்தாகிய குகரம் கெடும் என்று கூறினாரன்றி, இடைநின்ற ககர ஒற்றுக் கெடும் என்று கூறினாரல்லர். எனவே, அவர் காலத்தில் பாகு (பாக்கு), பிறகு (பிறக்கு), காபு (காப்பு)- முதலிய சொற்கள் போல வடகு (வடக்கு) என்ற சொல்லே பயின்று வந்திருத்தல் வேண்டும். அது வடக்கு எனப் பிற்காலத்தில் மருவிற்றுப்போலும். (எ. ஆ. பக். 170)

வடநடைப் பகுபதம் -

{Entry: B02__559}

பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும் உயிர் மெய்யாயினும் வரின், நிலைமொழி முதற்கண் நிற்கும் இ ஈ - இரண்டும் ஐ எனத் திரிந்து பகுபதங்களாம். ஏகாரம் ஐயாகத் திரியும்; ஊவும் ஓவும் ஒளவாகத் திரியும்.

எ-டு: ந்திரன் இருக்கும் திசை ந்திரி. கி ரியில் உள்ளன கை ரிகம். சி லையால் ஆகிய மலை சை லம். மி திலை யுள் பிறந்தாள் மை திலி. நி யாயநூல் உணர்ந்தோன் நை யாயிகன். வி யாகரணம் உணர்ந்தோன் வையா கரணன்.

இவையெல்லாம் இகரம் ஐயாகத் திரிந்தன.

கி ரியில் பிறந்தாள் கௌ ரி என ஒரோவிடத்து இகரம் ஒளகாரமாகத் திரிந்தது. வே தவழி நின்று ஒழுகுவார் வை திகர். காரம் ஐயாகத் திரிந்தது.

சூ ரன் என்னும் சூரியன் மகனாம் சனி சௌ ரி - காரம் ஒள வாகத் திரிந்தது.

சோ மன்மகனாம் புதன் சௌ மன் - காரம் ஒள வாகத் திரிந்தது. (தொ.வி. 86 உரை)

வடநூலுள் ஓரெழுத்துப் பதினெட்டாதல் -

{Entry: B02__560}

அ என்பதனை ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது குற்றெழுத்து; இரு மாத்திரை அளவிற்றாக ஒலிக்குங்கால் அது நெட்டெழுத்து; மூன்று மாத்திரை அளவிற்றாக ஒலிக் குங்கால் அஃது அளபெடை எழுத்து. அம்மூன்றும் எடுத்தல் - படுத்தல் - நலிதல் - என்ற ஓசைவேறுபாட்டால் ஒன்று மூன் றாய் ஒன்பது வகைப்படும். அவ்வொன்பது வகையும் மூக்கின் வளியொடு சார்த்தியும் சார்த்தாதும் ஒலிக்குமாற்றால் ஒவ் வொன்றும் இவ்விருவகைத்தாய்ப் பதினெட்டாம்; அவ்வாறு வேறுபடினும் உயிரெழுத்தாம் தன்மையில் திரியாவாய்ப் பதினெட்டும் ஓரினமாம். (சூ.வி.பக். 24)

வடமொழியாக்கச் சிறப்பு விதி -

{Entry: B02__561}

வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் தமிழெழுத்துக் களாகச் சிலவிதிகளையுட் கொண்டு திரித்துக் கொள்ளப்படும். அவை வருமாறு:

வடமொழியாகிய ஆரியத்தின் ஏழாம் உயிர் இகரமாகவும் இருவாகவும் திரியும்

எ-டு : ரி ஷபம் - டபம்; ரி ஷி - இரு டி

க ச ட த ப - என்ற ஐந்து வருக்கங்களின் இடையிலுள்ள மூவெழுத்துக்களும் முதலிலுள்ள க ச ட த ப - க்களாகவே கொள்ளப்படும்.

தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும் இடைக்கண் யகரமாகவும் திரியும்.

எ-டு : யம் - யம்; பங்க ம் - பங்க ம்

தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் யகரமாகவும் திரியும்.

எ-டு : ஶி வன் - சி வன்; தே ம் - தே ம்.

தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் டகரமாகவும் திரியும்.

எ-டு : ண்முகம் - ண்முகம்; சஷ் டி - சட் டி

தமிழில் மொழிமுதற்கண் சகரமாகவும், இடைக்கண் சகர தகரங்களாகவும் திரியும்.

எ-டு : ஸாது - சா து; வா ம் - வா ம்; மா ம் - மா ம்

தமிழில் மொழிமுதற்கண் ஏறிநின்ற உயிராகவும் இடைக்கண் ககரமாகவும் திரியும்.

எ-டு : ரி, ஹா ரம் - அரி, ஆரம்; மோ ம், மோ ம்

க்ஷ தமிழில் மொழிமுதற்கண் ககரமாகவும், இடைக்கண் இரண்டு ககரமாகவும் திரியும்.

எ-டு : க்ஷ யம் - யம்; ப க்ஷ ம் - ப க் கம்

ஆகாரஈறும் ஈகாரஈறும் தமிழில் முறையே ஐகாரமாகவும் இகரமாகவும் திரியும்

எ-டு : மா லா - மா லை ; குமா ரீ - குமா ரி (நன். 147)

வடமொழியில் ரகர முதற்சொற்கள் தமிழில் அகரம் முதலிய முக்குறில்களையும் முன்னர்க்கொண்டும், லகர முதற் சொற்கள் இகர உகரங்களை முன்னர்க் கொண்டும், யகர முதற்சொற்கள் இகரத்தை முன்னர்க் கொண்டும் வரும்.

எ-டு : ரங்கம் - ரங்கம், ராமன் - ராமன், ரோமம் - ரோமம்; லாபம் - லாபம், லோபம் - லோபம்; யக்ஷன் - இயக்கன் (யுத்தம் - உயுத்தம் என உகரம் கொள்வதுண்டு) (நன். 148)

ஆரியமொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப் போல நடக்குங்கால், பின்நிற்கும் யகர ரகர லகரங்கள் மீது இகரமும், மகர வகரங்கள் மீது உகரமும், நகர மீது அகரமும் வந்து வடசொல்லாய்த் தமிழாகும். ரகரத்திற்குப் பின் உகரமும் வரும்.

எ-டு: வாக்யம் - வாக்கியம், வக்ரம் - வக்கிரம், சுக்லம்- சுக்கிலம்; பத்மம் - பதுமம், பக்வம் - பக்குவம்; ரத்நம் - அரதனம்; அர்க்கன் - அருக்கன், அர்த்தம்- அருத்தம், தர்மம் - தருமம் (நன். 149)

வடிவு ஒளித்தல் -

{Entry: B02__562}

வரி வடிவில் உயிர்மெய் எழுத்துக்கள் அவ்வுயிரின் வடிவினைத் தம்முள்ளே மறைத்தல், (’ஒளித்து’ என்பது இவர் பாடம். (நன். 89 இராமா.)

வண்டு, பெண்டு என்ற சொற்கள் புணருமாறு -

{Entry: B02__563}

வண்டு பெண்டு - என்ற குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் உருபு புணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இன் சாரியை பெறும். இரண்டன் தொகைக்கண் சாரியையின்றி இயல்பாகப் புணரும்; அல்வழிப் புணர்ச்சியிலும் இயல்பாகப் புணரும்.

எ-டு : வண்டினை, வண்டின் கால்; பெண்டினை, பெண்டின் கால்; வண்டு கொணர்ந்தான், பெண்டு கொணர்ந்தான்; வண்டு கடித்தது,பெண்டு சிறந்தாள்.

பெண்டு என்பது வேற்றுமையுருபு புணர்ச்சிக்கண் அன்சாரி யையும் பெறும்.

எ-டு : பெண்டனை, பெண்டன்கால் (தொ. எ. 420,421)

வருக்கத்தொற்று -

{Entry: B02__564}

கவ்வுக்கு ஙவ்வும், சவ்வுக்கு ஞவ்வும், டவ்வுக்கு ணவ்வும், தவ்வுக்கு நவ்வும், பவ்வுக்கு மவ்வும், றவ்வுக்கு னவ்வும் வருக்கத் தொற்றாம். (வல்லினமெய்க்கு இனமான மெல்லொற்றுக் களை ‘வருக்கத்து ஒற்று’ என்றார்.) (நேமி. எழுத். 3 உரை)

வல்லின மெல்லின இடையின இயல்பு -

{Entry: B02__565}

வல்லினம் கல்மேல் விரலிட்டாற் போலவும், மெல்லினம் மணல்மேல் விரலிட்டாற் போலவும், இடையினம் மண்மேல் விரலிட்டாற் போலவும் எனக் கொள்ளப்படும். (நேமி. எழுத். 2 உரை)

வருக்கம் பற்றி வீரசோழியத்தில் வரும் குறிப்பு -

{Entry: B02__566}

வல்லினமெய்யும் அதனைச் சார்ந்த மெல்லின மெய்யும் வருக்கமாம். இடையினத்துக்கு வருக்கம் அஃதாவது இன வெழுத்து இல்லை. கங சஞ, டண, தந, பம, றன - எனப் பிறப்பிடத்தான் ஒத்து முயற்சியில் சிறிது மூக்கொலியான் வேறுபடும் மெல்லினங்கள் அவ்வவ் வல்லெழுத்துக்கு இனமாகி வருக்க எழுத்து எனப்பட்டன. (வீ.சோ.சந்திப். 2)

(ககர மெய்யினை ஊர்ந்துவரும் பன்னீருயிரெழுத்துக்களும் ககர வருக்கமாம். இவ்வாறே ஏனைய மெய்யினை ஊர்ந்து வரும் பன்னீ ருயிரெழுத்துக்களும் அவ்வம் மெய்வருக்கமாம். இவ்வாறு வருக்கம் அவ்வம்மெய்யெழுத்துக்களைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்களைக் குறித்து வருதல் உரையுள் பிற விடத்துக் காணப்படும்.) (சந்திப். 7)

வருமொழித் தகர நகரங்களின் திரிபு -

{Entry: B02__567}

நிலைமொழியீற்றில் னகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் றகரம் ஆகும். நிலைமொழியீற்றில் னகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம் னகரம் ஆகும்.

நிலைமொழியீற்றில் லகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் றகரம் ஆகும். நிலைமொழியீற்றில் லகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம் னகரம் ஆகும்.

நிலைமொழியீற்றில் ணகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் டகரம் ஆகும். நிலைமொழியீற்றில் ணகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம் ணகரம் ஆகும்.

நிலைமொழியீற்றில் ளகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் தகரம் டகரம் ஆகும். நிலைமொழியீற்றில் ளகரம் நிற்ப, வருமொழி முதலில் வரும் நகரம் ணகரம் ஆகும்.

அல்வழி வேற்றுமையென ஈரிடத்தும் இவ்விதி பொருந்தும்.

எ-டு : பொன் + தீது = பொன் றீ து; பொன் + நன்று = பொன் ன்று

கல் + தீது = கற் றீ து, கஃறீது; கல் + நன்று = கன் ன்று

மண் + தீது = மண் டீ து; மண் + நன்று = மண் ன்று

முள் + தீது =முட் டீ து, முஃடீது; முள் + நன்று = முண் ன்று.

இவை அல்வழி.

இனி வேற்றுமைக்கண்ணும் பொன் றீ மை, பொன் ன்மை; கற் றீ மை, கன் ன்மை; மட் டீ மை, மண் ன்மை; முட் டீ மை, முண் ன்மை - என வருமொழிமுதல் தகர நகரங்கள் திரியு மாறு காண்க. (நன். 237)

வரையார் என்ற சொல்லமைப்பு -

{Entry: B02__568}

‘வரையார்’ என்று கூறப்படும் இடங்களில் எல்லாம் “இவ் விதி தவறாது கொள்ளப்படவேண்டும் என்ற நியதி இல்லை; ஏற்ற பெற்றி இடம் நோக்கிக் கொள்ளலாம்” என்று விதி நெகிழ்க்கப்பட்டுள்ளது. எனவே, ‘வரையார்’ என்று கூறும் விதிகள் “எல்லாம் வேண்டும்” என்பது போல நியமிக்கும் விதி ஆகா என்பது பெறப்படும்.

எ-டு : ‘உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்’ (தொ. எ. 140 நச்.)

‘மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்’ (145)

‘உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்’ (212)

‘பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்’ (421)

‘வினையெஞ்சு...... அவ்வகை வரையார்’ (265)

‘இறுதியும் இடையும்....... நிலவுதல் வரையார்’ (சொ. 103 சேனா.)

வல் என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__569}

வல் என்னும் பொருட்பெயர் தொழிற்பெயர் போல வன் கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரமும் உயிரெழுத்தும் வரின் இயல்பும் பெற்றுப் புணரும். உயிர் வருவழி வல் என்பதன் ஈற்று லகரம் தனிக்குறிலொற்று ஆதலின் இரட்டும்.

எ-டு : வல்லுக் கடிது; வல்லு ஞான்றது, வல்லு வலிது; வல் யாது, வல்லரிது - அல்வழி. வல்லுக்கடுமை; வல்லு ஞாற்சி, வல்லுவலிமை; வல்யாப்பு; வல்லருமை - வேற்றுமை (தொ. எ. 373 நச்.)

வல்லாறு -

{Entry: B02__570}

வல்லின மெய்கள் ஆறு. அவை க் ச்ட் த் ப் ற் - என்பன. (தொ. எ. 36 நச்.)

வல்லினம் -

{Entry: B02__571}

க் ச் ட் த் ப் ற் - என்னும் ஆறுமெய்களும் வல்லென்ற நெஞ்சுவளியால் பிறத்தலின் வல்லினத்தன ஆயின. (நன். 68)

வல்லின மெல்லின இடையின மெய்களின் இயல்பு -

{Entry: B02__572}

வல்லினம் கல்மேல் விரலிட்டாற்போலவும், மெல்லினம் மணல்மேல் விரலிட்டாற்போலவும், இடையினம் மண்மேல் விரலிட்டாற் போலவும் எனக் கொள்க. (நேமி. எழுத். 2 உரை)

வல்லெழுத்துஆட்சியும் காரணமும் நோக்கிய குறியாதல் -

{Entry: B02__573}

க் ச் ட் த் ப் ற் - என்ற மெய்யெழுத்துக்களை ‘வல்லெழுத்து மிகினும்’ (230), ‘வல்லெழுத் தியற்கை’ (215) என்று பின்னர் ஆள்வர். வல்லென்ற தலைவளியால் பிறப்பது கொண்டு வல்லெழுத்து எனப்பட்டன (19). ஆகவே இப்பெயர் ஆட்சி யும் காரணமும் நோக்கியது. (தொ. எ. 19 நச். உரை)

வல்லெழுத்து இயற்கை உறழ்தல் -

{Entry: B02__574}

வல்லெழுத்து நிலைவருமொழிகளிடையே மிகுதலும் மிகாமையும் ஆகிய இயல்பு.

எ-டு : பல + பல = பல ப் பல, பலபல (தொ. எ. 215 நச்.)

சிறுபான்மை அகரம் கெட, லகரம் ஆய்தமாகவும் மெல் லெழுத்தாகவும் திரிந்து முடிதல். பல, சில - ஈற்று அகரம் கெடப் பல் - சில் - என நின்று முடியுமாறு:

எ-டு : பல் + தானை = ப றானை; சில் + தாழிசை = சி றாழிசை; சில் + நூல் = சி ன் னூல்

சிறுபான்மை அகரம் கெட லகரம் திரிந்தும், திரியாதும் முடிதல்.

எ-டு : பல + பல = ப ற் பல, பலபல; சில + சில = சி ற் சில, சிலசில (தொ. எ. 215 நச். உரை)

வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபின் புணர்ச்சி -

{Entry: B02__575}

வல்லெழுத்து முதலாகிய வேற்றுமையுருபுகள் கு, கண் - என்பன. இவை வருமொழியாக நிலைமொழிப் பெயரொடு புணருமிடத்து,

1. மணிக்கு மணிக்கண், தீக்கு தீக்கண், மனைக்கு மனைக்கண் - என இகர ஈகார ஐகார ஈறுகள் முன்னும், வேய்க்கு வேய்க்கண், ஊர்க்கு ஊர்க்கண், பூழ்க்கு பூழ்க்கண் - என யகர ரகர ழகர ஈறுகள் முன்னும் வல்லெழுத்து மிக்குப் புணரும்.

2. தங்கண், நங்கண், நுங்கண், எங்கண் - என மகரம் கெட்டு ஙகரமாகிய மெல்லொற்று மிக்கது.

3. அ+கண்= ஆங்கண், இ +கண் = ஈங்கண் - எனக் குற்றெழுத்து நீண்டு இடையே மெல்லொற்று மிக்கது.

நான்கன் உருபிற்கு மெல்லொற்று மிகாது.

4. நம்பிகண் நங்கைகண் அரசர்கண்-என உயர்திணைப் பெயர்களும், தாய்கண் - என விரவுப்பெயரும் கண்உருபு வரும்வழி வல்லொற்று மிகாவாயின.

5. நம்பிக்கு, நங்கைக்கு, அரசர்க்கு, தாய்க்கு - என நான்கன் உருபிற்கு வல்லொற்று மிக்கது.

6. அவன்கண், அவள்கண் - என உயர்திணைப் பெயர்க்கண் கண்உருபு இயல்பாகப் புணர்ந்தது.

7. பொற்கு பொற்கண், வேற்கு வேற்கண், வாட்கு வாட்கண் - என (னகர லகர ளகரங்கள்) முறையே (றகரமாகவும் டகரமாகவும்) திரிதலுமுண்டு.

8. கொற்றிக்கு கொற்றிகண், கோதைக்கு கோதைகண் - என விரவுப்பெயர் முன் குகரம் வருவழி வல்லொற்று மிக்கும், கண்உருபு வருவழி இயல்பாகவும் புணர்தலும் கொள்ளப் படும். (தொ. எ. 114 நச். உரை)

வல்லெழுத்துவேறு பெயர்கள் -

{Entry: B02__576}

வன்மை எனினும், வன்கணம் எனினும், வலி எனினும், வல் லெழுத்து என்றும் ஒரு பொருட்கிளவி.(மு. வீ. எழுத்து 15)

வலித்தல் -

{Entry: B02__577}

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடைநலம் கருதி மெல்லினஒற்று இனமான வல்லினஒற்றாகத் திரிதல்.

எ-டு : ‘முத்தை வரூஉம் காலம் தோன்றின்

ஒத்த தென்ப ஏஎன் சாரியை’ (தொ. எ. 164 நச்.)

முந்தை என்ற சொல் அடுத்த அடிக்கண் முதற்சீராய் நிகழும் ‘ஒத்தது’ என்றதன் எதுகை கருதி நகரம் தகரமாக வலித்தது. இஃது ஒரு சொற்கண்ணேயே நிகழ்வது. (நன். 155)

வலித்தல் முதலியன தோன்றல் முதலிய விகாரங்களுள் அடங்குதல் -

{Entry: B02__578}

விகாரம் அதிகாரப்பட்டமையானும், மேலிற் பகுபத முடி விற்கும் சிறுபான்மை வேண்டுதலானும், யாப்பிற்கே உரிய பிறவும் இவ்வதிகாரத்துள்ளே சொல்லப்படுதலானும், விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்ட லும் குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்துக் குறைதலும் கெடுதலாகவும் அடக்கிச் செய்யுள்விகாரம் இம்மூன்றுமாம் எனவும் அமையும் என்பது போதருதற்கும் யாப்பிற்கே உரிய இவ்வொன்பது வகை விகாரத்தை ஈண்டே வைத்தார் என்க. (நன். 155 மயிலை.)

வலிப்பு -

{Entry: B02__579}

மெல்லொற்று வல்லொற்றாதல்; இரண்டாம் வேற்றுமைத் திரிபுகளுள் ஒன்று.

எ-டு : விள + காய் = விளங்காய் - என விள என்னும் அகர ஈற்று மரப்பெயர் வருமொழி முதல் வன்கணம் வந்துழி, இன மெல்லெழுத்து இடையே மிகும் என்ற விதிக்கு மாறாக, விள + குறைத்தான் = விளக் குறைத் தான் - என வல்லொற்று மிக்கு வந்தது. வலிப்பாவது வல்லொற்று. (தொ. எ. 157 நச். உரை)

வழக்கு உணர்த்துவது -

{Entry: B02__580}

சில சொல் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த் திற்று, இது வீட்டை உணர்த்திற்று- என உணர்விப்பது. (தொ.எ.1. நச்.)

‘வழங்கியல் மருங்கின் மருவொடு திரிந’ -

{Entry: B02__581}

உலக வழக்கிலே எளிமையாக ஒலிப்பதற்காக மருவி வழங்கும் இலக்கணத்தொடு பொருந்தா மரு.

எ-டு : அருமருந்தன்ன - அருமந்த, ஆற்றூர் - ஆறை, மரவடி - மராடி, நாகப்பட்டினம் - நாகை, சோழனாடு-சோணாடு, மலையமானாடு - மலாடு (நன். 267)

வள் : புணருமாறு -

{Entry: B02__582}

வள் என்ற பெயர் தொழிற்பெயர் போல இருவழிக்கண்ணும் வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்துழி உகரம் பெற்றும், யகரம் வருவழி இயல்பாயும், உயிர் வருவழி ளகர ஒற்று இரட்டியும் புணரும்.

எ-டு : வள்ளுக் கடிது;வள்ளு ஞான்றது, வள்ளு வலிது; வள் யாது, வள் ளரிது - அல்வழி. வள்ளுக்கடுமை; வள்ளுஞாற்சி, வள்ளுவலிமை; வள்யாப்பு, வள் ளருமை - வேற்றுமை.

சிறுபான்மை இருவழியும் வன்கணம் வருவழி ளகரம் டகரமாகி வட்கடிது, வட்கடுமை- என வருதலும், மென்கணம் வரின் ளகரம் ணகரமாகத் திரிந்து வண் ஞான்றது, வண் ஞாற்சி - என வருதலும், இடையினத்து வகரத்தின் முன் வள் வலிது, வள்ளு வலிது - என உகரம் பெறாதும் பெற்றும் வருதலும் கொள்ளப்படும். (தொ. எ. 403 நச். உரை)

வளி:புணருமாறு -

{Entry: B02__583}

வளி என்னும் காற்றின் பெயர் அத்துச்சாரியையும் இன்சாரி யையும் பெற்றுப் புணரும்.

எ-டு : வளியத்துக் கொண்டான், வளியத்து நின்றான், வளியத்து வந்தான், வளியத் தடைந்தான்; வளியிற் கொண்டான், வளியினின்றான், வளியின் வந்தான், வளியினடைந்தான்

என நாற்கணத்தும் வந்தவாறு. இவை வேற்றுமைப் புணர்ச்சி; ஏழாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்க. (தொ. எ. 242 நச்.)

வளியிசை -

{Entry: B02__584}

வளியிசை ‘மெய்தெரி வளியிசை’ எனவும், ‘அகத்தெழு வளியிசை’ எனவும் இருவகைப்படும். அகத்தெழு வளியிசை யாவது, புறச்செவிக்குப் புலனாகாமல் அகத்தே இயங்கும் மந்திர எழுத்துக்கள். மெய்தெரி வளியிசை, இசை எனவும் ஒலி எனவும் ஓசை எனவும் கலப்பிசை எனவும் நால்வகைத் தாம். அவற்றுள் இசையானது உயிர் பன்னிரண்டும் குற்றிகர குற்றுகரங்களும் ஆம்; ஒலியானது புள்ளி யுற்று ஒலிக்கும் மெய் பதினெட்டுமாம்; ஓசையானது ஆய்தமாம்; கலப்பிசை யானது உயிர்ப்புடையனவாய் வரும் உயிர்மெய்யாம். (தொ. எ. பக். XL ச.பால.)

வன்தொடர்க்குற்றியலுகர ஈறு புணருமாறு -

{Entry: B02__585}

வன்தொடர்க்குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வரு மொழி முதலில் வருமாயின், அவ்வந்த வல்லெழுத்தே மிகும்.

எ-டு : கொக்குக் கடிது, தச்சுக் கடிது, பொற்புப் பெரிது

வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் கொக்குக்கால், கொக்குச் சிறகு - என்றாற் போல வல்லொற்று மிகும். (தொ. எ. 414, 426 நச்.)

சிறுபான்மை அம்முச்சாரியை பெற்று, வட்டு + அம் + போர் = வட்டம் போர், புற்று + அம் + பழஞ்சோறு = புற்றம்பழஞ் சோறு - என்றாற் போல வரும். (தொ. எ. 417)

‘வன்தொடர்மொழிக் குற்றியலுகரஈற்று வினையெச்சம், செத்துக் கிடந்தான் - செற்றுச் செய்தான் - நட்டுப் போனான் - என்றாற் போல மிக்கே முடியும். (தொ. எ. 427)

எட்டு என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்று எட்டன் காயம் - என்றாற் போலப் புணரும். (தொ. எ. 149)

இரண்டு சாரியை தொடர்ந்து பார்ப்பு+அன்+அக்கு+குழவி = பார்ப்பனக்குழவி என முடிதலுமுண்டு. (தொ. எ. 418)

வன்தொடர்க் குற்றியலுகரம் -

{Entry: B02__586}

ஈற்றெழுத்து வல்லினப்புள்ளி ஆறனுள் ஒன்றை ஊர்ந்துநிற்க (கு சு டு து பு று - க்களுள் ஒன்றாக,) அயலெழுத்து வல்லினப் புள்ளியாய் மூன்று முதலிய எழுத்துக்களால் நிகழும் சொல் லின் ஈற்றுகரம் வன்தொடர்க் குற்றியலுகரமாம்.

எ-டு : பாக் கு தச் சு பாட் டு முத் து காப் பு காற் று

ஈற்றயல் வல்லினப்புள்ளி ஆறாதலின் வன்றொடர்க் குற்றிய லுகரம் ஆறாயிற்று. (நன். 94)

அக்குற்றியலுகரம் நிலைமொழியீற்றில் நிற்ப, அல்வழிப் புணர்ச்சியிலும், வருமொழி முதல் வன்கணமாயின் மிக்கு முடியும்.

எ-டு : கொக்கு ப் பறந்தது.

சில மென்தொடர்க்குற்றியலுகரம் வன்தொடர்க்குற்றிய லுகரம் ஆகியக்காலும் வல்லெழுத்து மிகப் பெறும்.

எ-டு : மருந்து + பை > மருத்து + பை = மருத்துப்பை (நன். 181, 184)

வன்முதல் தொழில் -

{Entry: B02__587}

வல்லெழுத்தை முதலாக உடைய வினைச்சொல். இது வருமொழியாய், நிலைமொழிக்கு முடிக்கும் சொல்லாய் வரும்.

எ-டு : பரணியாற் கொண்டான்.

கொண்டான் என்ற வருமொழியே முடிக்கும் சொல்லாக வந்த வன்முதல் தொழிற்சொல்லாம். (தொ. எ. 124)

வன்மை, மென்மை, இடைமை முறைவைப்பு -

{Entry: B02__588}

வல்லினத்துள் க ச த ப - என்ற நான்கும், மெல்லினத்துள் ஞ ந ம - என்ற மூன்றும், இடையினத்துள் ய வ - என்ற இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி, வன்மை மென்மை இடைமை - என்பன முறையே வைக்கப்பட்டன. (தொ. எ. 21 நச். உரை)

வன்ன ஆகமம் -

{Entry: B02__589}

இடையே ஓரெழுத்து வந்து சேர்வது. யாது என்ற ஒன்றன்பால் வினாப்பெயரின் இடையிலே வகரஉயிர்மெய் வந்து புணர, அஃது யாவது என்று வழங்குவது போல்வன. (தொ. எ. 172 நச்.)

வன்ன நாசம் -

{Entry: B02__590}

ஒரு சொல்லின் இடையே ஓரெழுத்து நீங்கவும் அச்சொல் அப் பொருளையே பயந்து நிற்பது. யாவர் என்ற பலர்பால் பெயரிடையே வகரம் கெட, அஃது ‘யார்’ என நின்றவழியும், பலர்பால் பெயராகவே வழங்குவது போல்வன. (தொ. எ. 172 நச்.)

வாழிய என்பது புணருமாறு -

{Entry: B02__591}

வாழிய என்னும் அகர ஈற்று வியங்கோள் வினைமுற்றுச் சொல் ‘வாழும் காலம் நெடுங்காலம் ஆகுக’ என்னும் பொருளதாய், வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். அஃது ஈறுகெட்டு வாழி என்று ஆகியவழியும் நாற்கணத்தோடும் இயல்பாகப் புணரும்.

எ-டு : வாழிய கொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே; வாழி கொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே (தொ. எ. 211 நச்.)

வாழிய என்பது வாழும் பொருட்டு என்ற பொருளில் செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாயின், ஈறு கெடாது நாற்கணத்தோடும் இயல்பாகப் புணரும்.

எ-டு : வாழிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந்தான். (தொ. எ. 210)

வாழிய என்னும் சேய் என் கிளவி - சேய்மையிலுள்ள வாழுங் காலத்தை உணர்த்தும் சொல். (எ.கு.பக். 203)

வாழிய என்று சொல்லப்படுகின்ற, அவ்வாழுங்காலம் அண்மைய அன்றிச் சேய்மைய என்றுணர்த்தும் சொல். அது ஏவல் கண்ணாத வியங்கோள். (212 இள. உரை)

வாழிய என்பது வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டும் என்னும் கருத்தினனாகக் கூறுதலின் அஃது ஏவல் கண் ணிற்றே யாம். (211 நச். உரை)

‘வாழிய என்னும் செய்கென் கிளவி’ -

{Entry: B02__592}

வாழிய என்று கூறப்படும் செய்க என்னும் வாய்பாட்டு வியங்கோட் கிளவி. இதன் இறுதி நிற்கும் யகர உயிர்மெய் வருமொழி நாற்கணம் வரினும் கெடுதலும் உரித்தாகும்; உம்மையான் கெடாது நிற்றலும் ஆம்.

வருமாறு : வாழிய + கொற்றா, சாத்தா, தேவா, பூதா; நாகா, மாடா; வளவா; அழகா

இவை வாழி கொற்றா... வாழியழகா - என இறுதி யகரம் கெட்டும், வாழிய கொற்றா... வாழிய வழகா- என இயல்பாயும் முடிந்தவாறு.

‘செய என்கிளவி’ என்ற பாடம் ஏடெழுதுவோரால் நேர்ந்தது.

(தொ. எ. 211 ச. பால.)

‘வாழிய என்னும் செயவென் கிளவி’ -

{Entry: B02__593}

வாழிய என்பதனைச் செய்யியவென் கிளவியாகக் கொண்டு, வாழிய கொண்டான் - வாழி கொண்டான் - என்று உதாரணம் காட்டுதல் வேண்டும் என்பது. (எ.ஆ. பக். 135)

‘வாழிய என்னும் செய்யிய கிளவி’ என்ற பாடம் இருந்திருக் கலாம். (எ. ஆ. பக். 135)

நச்சினார்க்கினியத்தில் ‘வாழிய என்னும் செயவென் கிளவி’ என்ற பாடமும், ‘வாழுங்காலம் நெடுங்காலம் ஆகுக!’ என்னும் பொருளைத் தரும் வாழிய என்று சொல்லப்படும் செயவென் எச்சக்கிளவி - என்ற உரையும் உள்ளன.

வாழிய கொற்றா - என்று உதாரணம் பிழையாகத் தரப் பட்டுள்ளது. வாழிய கொண்டான், வாழி கொண்டான், என்றாற் போல உதாரணம் இருத்திருத்தல் வேண்டும்.

‘வாழிய என்னும் சேயென் கிளவி’ என்பது இளம்பூரணர் பாடம். அதுவே நச். கொண்ட பாடமாகவும் இருந்திருக்க லாம். ‘செயவென் கிளவி’ என்பது மூலத்திலும் உரையிலும் பிழைபட எழுதப்பட்டிருக்கலாம். (எ. ஆ. பக். 135)

விகரணி -

{Entry: B02__594}

இடைநிலை விகரணி எனப்படும். அறிஞன் என்பதன்கண் உள்ள ஞகர இடைநிலை போல்வன விகரணியாம். வட மொழியில் வினைச்சொற்களில் உள்ள விகுதியே காலம் காட்டுதலின், இடைநிலைகள் வினைமுதற்பொருண்மை முதலியன பற்றி வரும். (சூ.வி.பக். 55)

விகாரப்பட்ட சொற்கள் -

{Entry: B02__595}

அறுவகைச் செய்யுள் விகாரத்தாலும் மூவகைக் குறைகளா லும் உண்டான சொற்கள் விகாரப்பட்ட சொற்களாம்.

எ-டு : குறுந்தாள், தட்டை, பொத்து (அறார்), தீயேன், விளையுமே, சிறிய இலை, தாமரை, ஆரல், நீலம் - என்ற இயற்கைச்சொற்கள் முறையே குறுத்தாள், தண்டை, போத்து (அறார்), தியேன், விளையும்மே, சிறியிலை, மரை, ஆல், நீல் - என விகாரப்பட்டு வந்தன. (நன். 155)

விகாரம் மூன்று -

{Entry: B02__596}

புணர்ச்சிக்கண் தோன்றல், திரிதல், கெடுதல் - என்ற மூன்று விகாரங்கள் அமையும்.

எ-டு : நாய் + கால் = நாய் க் கால் - ககரம் தோன்றல்விகாரம். நெல் + கதிர் = நெ ற் கதிர் - லகரம் றகரமாதல் திரிதல். மரம்+ வேர் = மரவேர் - மகரம் கெடுதல் விகாரம். (நன். 154)

விகாரம் எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும் ஒக்கும்.

விகுருதி -

{Entry: B02__597}

இது பகுபதத்தின் இடைநிலை விகுதி ஆகியவற்றைக் குறிக்கும் வடசொல். படர்க்கை வினைமுற்றுக்களில் திணை பால் எண் இடங்களை விகுதி காட்டும்; தன்மை முன்னிலை வினை முற்றுக்களில் ஒருமைப்பால், பன்மைப்பால், இடம் - இவற் றையே விகுதி காட்டும். ஏனைய எச்சவினைகள் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான விகுதியை ஏற்று வரும். நடவாய் - உண்ணாய் - என்பவற்றில் விகுதிகுன்றி நட - வா - என வருதலுமுண்டு. இவையன்றித் தொழிற் பெயர் விகுதிகள், பகுதிப்பொருள் விகுதி, ஒருதலை என்னும் பொருட்கண் வரும்விகுதி, (விடு, ஒழி), தற்பொருட்டுப் பொருட்கண் வரும் விகுதி (கொள்) - முதலியன உளவேனும், அவை வினைமுற்று விகுதிகளைப் போலச் சிறவா. (சூ. வி. பக். 41)

விசேடம் -

{Entry: B02__598}

விசேடமாவது சூத்திரத்து உட்பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவன தந்துரைக்கும் உரை வகை. (நன். 21 சங்.)

விசை என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: B02__599}

விசை என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சே என்ற மரப்பெயர் போல, வருமொழி வன்கணம் வரின், இடையே இனமெல்லெழுத்து மிக்குப் புணரும். எ-டு : விசை ங் கோடு, விசை ஞ் செதிள், விசை ந் தோல், விசை ம் பூ.

அல்வழிப் புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : விசை கடிது, நெடிது, வலிது, அணித்து (தொ. எ. 282 நச்.)

விடு, ஒழி என்ற விகுதிகள் -

{Entry: B02__600}

விடு, ஒழி - என்பன செயல்நிகழ்ச்சி ஒருதலை என்னும் பொருட்கண் வரும் விகுதிகளாம். எ-டு : செய்துவிட்டான், செய்தொழிந்தான். (சூ. வி. பக். 41)

விண் என்ற பெயர் புணருமாறு -

{Entry: B02__601}

விண் என்னும் ஆகாயத்தை உணர்த்தும் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறுதலுமுண்டு; இயல்பாக வருமொழியொடு புணர்தலுமுண்டு. அல்வழிக் கண் அது நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். அவற்றுள், உயிர்முதல் மொழி வரின் ணகரம் இரட்டும்.

எ-டு : விண் +கொட்கும் =விண் த்துக் கொட்கும் என வும், வகர எழுத்துப்பேறு பெற்று விண்வ த் து க் கொட்கும் எனவும் வரும்.

விண்குத்து (நீள்வரை வெற்ப) - எனச் சாரியை எதுவும் பெறாதும் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வரும்.

விண்கடிது, மாண்டது, வலிது, அரிது - என அல்வழிக்கண் வருமாறு காண்க. (தொ.எ.305 நச்.)

விதத்தல் -

{Entry: B02__602}

விதத்தலாவது இன்னது இன்னவிடத்து இன்னதாம் என எடுத்து விதித்தலாம். (நன். 164 மயிலை.)

விதி ஈறு -

{Entry: B02__603}

முன்னைய உயிரீறும் மெய்யீறும் ஒழிய உயிரீறாய் நிற்பன வும், யாதானும் ஓருயிர் இறுதிக்கண் தோன்றி நிற்பனவும் ஆம்.

எ-டு : மரம் + பலகை > + பலகை = மரப்பலகை: விதிஉயிரீறு; பொன் + குடம் > பொற் + குடம் = பொற்குடம் : விதி மெய்யீறு; உவா + பதினான்கு > உவாஅ + பதினான்கு = உவாஅப்பதினான்கு : (விதி உயிரீறாகிய) அகரப் பேறு; ஆ + ஐ > ன் + ஐ = ஆனை (விதி மெய்யீறாகிய) னகரப் பேறு (நன். 165 சங்கர.)

வி,பி இணையாப் பிறவினை -

{Entry: B02__604}

போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, பயிற்று - என்பன காண்க. உரையிற் கோடலால், இறுகு, இறு க் கு, ஆடு - ஆ ட் டு, வருந்து - வரு த் து, எழும்பு, எழு ப் பு, தேறு - தே ற் று - என வருதலும் காண்க. (நன். 138 இராமா.)

வி,பி பொருளில் வரும் விகுதிகள் -

{Entry: B02__605}

வா - தன்வினை, வருவி - பிறவினை; உண்- தன்வினை, உண்பி-பிறவினை.

இங்ஙனமே தன்வினையைப் பிறவினை ஆக்குதற்கண் குற்றிய லுகரங்கள் ஆறும் பயன்படுத்தப்படுகின்றன.

தன்வினை:போ, பாய், உண், நட, எழு, தின்;

பிறவினை;போக் கு , பாய்ச் சு , ஊட் டு , நடத் து , எழுப் பு , தீற் று

(சூ. வி. பக். 41)

வியாகரணம் -

{Entry: B02__606}

ஒரு வாக்கியத்தின் பகுதியவான சொற்களை வேறாக்கி மற்றைப் பகுதியோடுள்ள தொடர்பினைத் தெளிவாகக் காட்டுவது ‘வியாகரணம்’ என்று பதஞ்சலியார் கூறியுள்ளார். ஓர்ப்பு, ஆகமம், எளிமை, ஐயம் தீர்த்தல் - என்பன இலக் கணத்தின் பயன். எனவே, இலக்கணம் சொற்றொடரமைதியை ஆராய்ந்தறிந்து (ஓர்ப்பு), வழுவில்லாத சொற்களையும் அவற்றின் தொடர்பையும் (ஆகமம்) எளிய முறையில் ஐயமறக் கூறுதலையே நோக்கமாகக் கொண்டது. சொற்களின் பொருட்காரணமும் வரலாறும் கூறும் நோக்கம் அதற்கு இல்லை. (எ.ஆ.முன்னுரை பக். 11)

விரல் நுனிகள் தலைப்பெய்தாற் போல -

{Entry: B02__607}

புணர்ச்சிக்கண் நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தும் குறித்து வருகிளவியின் முதலெழுத்தும் விரல்நுனிகள் தலைப்பெய் தாற் போல வேறு நின்று கலந்தனவாம். (தொ. எ. 18 இள. உரை)

விரலும் விரலும் சேர நிற்றல் -

{Entry: B02__608}

உயிர்மெய்யெழுத்தில் மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் விரலும் விரலும் சேர நின்றாற்போல மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் இணைந்து நிற்கும். (தொ.எ.18 நச். உரை)

விரவுப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__609}

விரவுப்பெயர், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரினும் பெரும்பாலும் இயல்பாகப் புணரும்.

எ-டு : சாத்தி குறியள், சாத்தன் குறியன் - அல்வழி

சாத்தி செவி, சாத்தன் செவி - வேற்றுமை

(தொ. எ. 155 நச். உரை)

னகார ஈற்று இயற்பெயர்கள் சாத்தன் + தந்தை = சாத்தந்தை - என்றாற் போல விகாரப்பட்டுப் புணரும். (347 நச். உரை)

‘விரவுப்பெயரின் விரிந்தும் நின்றும்’ புணர்தல் -

{Entry: B02__610}

இரண்டனுருபு, விரவுப்பெயர்க்கண் விரிந்தும் விரிதல் ஒழிந்தும் நிகழும். எல்லா வேற்றுமையும் விரிந்தும் தொக்கும் வருதல் போலாது, இவ்விரண்டாம் வேற்றுமை உயர்திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் விரிதலே தகுதி யாய், தொகுதலே தகுதியாயும் வலிந்துகோடலாயும் வரும் என்பது தோன்ற, ‘விரிந்தும் தொக்கும், விரிந்து நின்றும்’ என்றார். நின்று- ஒழிந்து (விரிதல் ஒழிந்து- என்றவாறு)

எ-டு : கொற்றனைக் கொணர்ந்தான் : ஐயுருபு விரிந்து நின்றது (தகுதி)

ஆண்பெற்றாள், பெண் பெற்றாள் : ஐயுருபு விரியாது நின்றது (உருபு விரித்துப் பொருள் செய்தல் வலிந்து கோடல்)

தற்கொண்டான், நிற்புறங்காப்ப : (உருபு தொக்கு வந்தமை தகுதி யாயிற்று, னகரம் திரிந்தமையின்.

(நன். 255 சங்கர.)

விரித்தல் -

{Entry: B02__611}

செய்யுள்விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளில் ஓசைநலன் கருதி இடையே ஓர் ஒற்று விரிக்கப்படுவது இவ்விகாரம்; பிற எழுத்தும் சாரியையும் விரியினும் ஆம். இவ்விரித்தல் யாப்பு நலனேயன்றித் தொடைநயம் பற்றியும் நிகழும்.

எ-டு : ‘சிறியிலை வெதிரின் நெல்விளை யு ம் மே’ - யாப்பு நலன் கருதி மகரம் விரிந்தது.

‘தண்துறைவன்’ எனற்பாலது ‘தண்ணந்துறைவன்’ என அம்சாரியை விரிந்தது.

‘மனி த் தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே’ - எதுகைநலம் கருதித் தகரம் விரிந்தது. (நன். 155)

விரிவு, அதிகாரம், துணிவு -

{Entry: B02__612}

இவை சில உரை வகைகள். விரிவாவது, வேற்றுமை முதலிய தொக்குநின்றவற்றை விரிக்க வேண்டுழி விரித்தல். அதிகார மாவது, எடுத்துக்கொண்ட அதிகாரம் இதுவாதலின் இச் சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத் தொடு பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். துணிவாவது, ஐயுறக் கிடந்தவழி இதற்கு இதுவே பொருளென உரைத்தல். (நன். 21 சங்கர.)

விருத்தி சந்தி -

{Entry: B02__613}

நிலைப்பத ஈற்று அகரஆகாரங்களில் ஒன்றன்முன், வரும் பத ஏகார ஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமும், அவ்விரண் டில் ஒன்றன்முன் ஓகார ஒளகாரங்களில் ஒன்று வந்தால் ஒளகாரமும், முறையே நிலைப்பத ஈறும் வரும்பத முதலும் ஆகிய உயிர்கள் கெடத் தோன்றுதல் விருத்தி சந்தியாம்.

எ-டு : சிவ + ஏகம் = சிவைகம்; சிவ + ஐக்கியம் = சிவைக்கியம்; தரா + ஏகவீரன் = தரைகவீரன்; ஏக + ஏகன் = ஏகைகன். கலச + ஓதனம் = கலசௌதனம்; மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்; கோமள + ஓடதி = கோமளௌடதி; திவ்விய + ஒளடதம் = திவ்வியௌடதம்; மகா + ஓடதி = மகௌடதி; மகா + ஒளடதம் = மகௌடதம்

(தொ. வி. 38 உரை)

அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஏகார ஐகாரங்களை முதலிலேயுடைய சொல் வரின், நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலும் கெட்டு ஐகாரம் வரும். அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஓகார ஒளகாரங் களை முதலிலேயுடைய சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழி முதலும் கெட்டு ஒளகாரம் வரும்.

வருமாறு : சிவ + ஏகநாதன் = சிவைகநாதன், சிவ + ஐக்கியம் = சிவைக்கியம், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்;

கலச + ஓதனம் = கலசௌதனம், மந்திர + ஒளடதம் = மந்திரௌடதம், (மு. வீ. மொழி. 41, 42)

விளம்பிய பகுதி வேறாதல் -

{Entry: B02__614}

136ஆம் சூத்திரத்துச் சொல்லப்பட்ட எனைவகைப் பகுதி யுள்ளும் சில பொருளான் வேறுபட்டும், சில மிக்கும். சில திரிந்தும், சில ஈறு கெட்டும் நிற்கையும் குற்றமாகா.

எ-டு : வா என்னும் பகுதி, வந்தான் - வருகின்றான் - என்புழி, ருகரம் மிக்கும் திரிந்தும் வரும்.

கொள் என்னும் பகுதி, கொண்டான் - கோடு - கோடும் - என்புழி, ளகரம், ணகரமாகியும் கெட்டும் ஆதி நீண்டும் வந்தது.

வலைச்சி, புலைச்சி - என்றல் தொடக்கத்துப் பெயர்ப் பகுபதம் எல்லாம் வலைமை புலைமை - முதலான பெயர்ப்பகுபதத்து ஈறு கெட்டு ‘இ’ ஏற்று வந்தன.

(நன். 138 மயிலை.)

வேறுபடாதது பிரகிருதியாமன்றி வேறுபட்டது பிரகிருதி யாகாதேனும், தந்தையைக் குறிக்க மகன் எனப்பட்டா னொருவன் தன் மகனைக் குறிக்கத் தந்தையானாற் போலப் பிறவினைப்படுத்த வரும் இவ்விகுதிகளும் (வி, பி.) மேல்வரும் அன் ஆன் முதலிய விகுதிகளைக் குறிக்கப் பகுதியாம் ஆதலின், ‘விதியே’ எனப் புறனடை தந்தார்.

இச்சூத்திரத்திற்கு வா என்னும் பகுதி முதலியன வந்தான் - வருகின்றான் - முதலாக விகாரப்படுதலைப் பொருளாகக் கூறுவாருமுளர். இவ்விகாரங்கள் பகுபத உறுப்பாய் மாட் டெறிந்து கொள்ளப்பட்ட மூன்று சந்தியுள்ளும் ஒன்பது விகாரத்துள்ளும் அமைந்துகிடத்தலின் அது பொருந்தாது என்க. (நன். 139 சங்கர.)

விளிப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__615}

உயிரீறும் மெய்யீறுமாகிய விளிவேற்றுமைப்பெயர் வன்கணம் முதலாகிய வருமொழி புணருமிடத்து இயல்பாக முடியும்.

எ-டு : கொற்றா கேள், மடவாய் சொல் (நன். 160)

வினா -

{Entry: B02__616}

ஆ ஏ ஓ- என்பன மூன்றும் வினா இடைச்சொற்களாம். இவை வினாப்பொருள் உணர்த்தும்வழி இவற்றை வினாஎழுத் துக்கள் என்றுரைத்தல் சாலாது; வினாஇடைச்சொற்கள் என்றே கூறல் வேண்டும். இவை எழுத்தாம் தன்மையொடு மொழியாம் தன்மையும் எய்துதலின், மொழிமரபை யொட்டி நூன்மரபின் இறுதிக்கண் வைக்கப்பட்டன.

ப்பொருளாயினும்’ (தொ.சொ.35 சேனா.), ‘யாது யா யாவை’ (தொ. சொ. 167 சேனா.) என்ற நுற்பாக்களை நோக்க, எகரமும் யகரஆகாரமும் வினா இடைச்சொற்களாம்.

வருமாறு : அவ னா , அவ னே , அவ னோ ; ப்பொருள், யா வை (தொ. எ. 32 நச்.)

வினா இடைச்சொற்கள் -

{Entry: B02__617}

எ யா - என்பன மொழி முதலிலும், ஆ ஓ - என்பன மொழி யீற்றிலும், ஏ- மொழி முதல் ஈறு என ஈரிடத்தும் வினாப் பொருளை உணர்த்தி வரும். மொழி முதல்வினா மொழி யொடு பிரிக்கமுடியாத தொடர்புடையது; ஈற்றுவினா மொழிக்குச் சிதைவின்றிப் பிரிக்கப்படும் நிலையது.

வருமாறு : எவன், யாவன், ஏவன்; அவனா, அவனோ, அவனே. மொழிக்கு உறுப்பாக வரும் வினா இடைச்சொல்லை அகவினா என்றும், மொழி யின் புறத்ததாய்த் தன்னை வேறு பிரித்துழியும் நின்ற சொல் பொருள் தருவதாய் வரும் வினா இடைச்சொல்லைப் புறவினா என்றும் கூறுப.

எ-டு : வன் - அகவினா; க்குதிரை - புறவினா (நன். 67)

வினா:வேறு பெயர்கள் -

{Entry: B02__618}

வினவல் எனினும், கடாவல் எனினும் வினா என்னும் ஒரு பொருட்கிளவியாம். (மு. வீ. எழுத். 30)

வினைக்குறிப்பு, வினைக்குறிப்புப் பெயர்:வேறுபாடு -

{Entry: B02__619}

வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் தெரிநிலைவினை போல முதனிலையில் பொருள் சிறந்து நிற்கும்; வினைக்குறிப்புப் பெயர்ச்சொல் அவ்வாறன்றி விகுதியில் பொருள் சிறந்து நிற்கும். எனவே, பொருளாதி ஆறும் காரணமாக வரும் வினைகுறிப்புச் சொற்கள் (பெயரும் வினையும் ஆதலின்) முதனிலை விகுதி ஆகிய அவ்விரண்டிலும் பொருள் சிறந்து நிற்கும் என உய்த்துணர்ந்து கொள்க. (நன். 132 சிவஞா.)

வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை - இவை அல்வழி ஆகாமை -

{Entry: B02__620}

வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை - என்பனவற்றை அல்வழிச் சந்தியாக எடுத்தோதாராயினார். என்னையெனில், வினைத்தொகையும் பண்புத்தொகையும் அல்வழிப் பொருள ஆயினும், விரித்தவழி, முறையே முக் காலம் உணர்த்தும் தன்மையவாயும் ஐம்பாலும் உணர்த்தும் தன்மையவாயும் நிற்கும் தத்தம் தொகைப்பொருள் சிதைதலின் பிரிக்கப்படாமையால் பிரிவு இல் ஒட்டுக்களாம் ஆதலின், ஈண்டு நிலைமொழி வருமொழி செய்து பிரிக்கப்படாது ‘மருவின் பாத்தி’யவாய்க் கொல்யானை அரிவாள் ஆடரங்கு செல்செலவு புணர்பொழுது செய்குன்று- எனவும், கருங் குதிரை நெடுங்கோல் பாசிலை பைங்கண் சேதா - எனவும் வருவன போல்வன முடிந்தாங்கு முடியும் ஆகலானும், அன்மொழித் தொகையானது வேற்றுமைத்தொகை முதலிய ஐவகை நிலைக்களங்களிலும் பிறந்து, பொற்றொடி பவளவாய் திரிதாடி வெள்ளாடை தகரஞாழல் - என ஒரு சொல் நீர்மைத்தாய்ப் பெயர்த்தன்மை எய்தி, ‘பொற்றொடி தந்த புனைமடல்’ எனப் பயனிலையொடு புணர்ந்துழி எழுவா யாயும், ‘சுடர்த்தொடி கேளாய் (கலி. 51) என முடிக்கும் சொல்லொடு புணர்ந்துழி விளியாயும் அல்வழிப் புணர்ச்சி யாதலும், தகரஞாழல்பூசினாள் - தகர ஞாழலைப்பூசினாள் - என வேற்றுமையுருபு தொக்கும் விரிந்தும் முடிக்கும் சொல்லொடு புணர்ந்துழி வேற்றுமைப் புணர்ச்சியாதலும் உடைய ஆகலானும் ஓதாராயினார் என்க.

(எச்சத்தை முற்றினைச் சாரக் கூறாத முறையல கூற்றினானே,) வட்டப் பலகை - சாரைப்பாம்பு - என்பனபோலும் இரு பெய ரொட்டுப் பண்புத்தொகைகள் அல்வழிப் பொருளவாய்ப் புணர்ச்சி எய்தல் கொள்க. (இ. வி. 54 உரை)

வினைத்தொகை முதலியன ஒருமொழி ஆகாமை -

{Entry: B02__621}

வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித் தொகை - என்னும் அல்வழிப்புணர்ச்சியவாகிய தொகைநிலைத் தொடர்மொழிகளை ஒருமொழிகள் என்பாருமுளர். அவர் கூற்றுத் தாய்மலடி என்றாற் போலும்! (நன். 152 சங்கர.)

வினைத்தொகை முதலியன விரியுமாறு -

{Entry: B02__622}

வினைத்தொகை முதலிய ஐந்தும் விரிந்தவழி, வினைத்தொகை பெயரெச்சமாயும், பண்புத்தொகை இரண்டும் பெயரெச்சக் குறிப்பாயும், உவமைத்தொகை இரண்டாம் வேற்றுமையொடு பயனிலையாயும், உம்மைத்தொகை இடைச்சொற் சந்தியாயும், அன்மொழித்தொகை சொற்களும் சந்திகளும் பலவாயும் விரியும்.

எ-டு : கொல்யானை : கொன்ற யானை - எனவும், கருங் குதிரை : கரிதாகிய குதிரை - எனவும், ஆயன்சாத்தன்: ஆயனாகிய சாத்தன்- எனவும், பொற்சுணங்கு : பொன்னைப் போன்ற சுணங்கு - எனவும், இராப் பகல்: இரவும் பகலும் - எனவும், பொற்றொடி : பொன்னாலாகிய தொடியினை யுடையாள் - எனவும் விரியும். (நன். 152 சங்கர.)

வினைப்பகுதிகள் தொழிற்பெயர் ஆமாறு -

{Entry: B02__623}

ஆசிரியர் தொல்காப்பியனார் வினைப்பகுதிகளைப் பெயர் என்கிறார். தொழிற்பெயராவன முதனிலைத்தொழிற்பெயர் களேயாம். தொல். கூறும் தொழிற்பெயர்கள் எல்லாம் முதனிலைத்தொழிற்பெயர்களையே சுட்டும். தும் - செம் - திரும் - என்பன போன்ற தொழிற்பெயர்களே அவரால் குறிப்பிடப்படுவன. நாட்டம்-ஆட்டம் - என்பனவற்றை மகர ஈற்றுத் தொழிற்பெயராகக் கொள்ளின், தும் - செம் - என்பவை, தும்மல் - செம்மல் - என வழங்குதலின் அவற்றை லகரஈற்றுத் தொழிற்பெயராகக்கொள்ள நேரிடும். முதனிலைத்தொழிற் பெயர்களொடு விகுதி பெற்ற தொழிற்பெயர்களையும் கோடல் ஆசிரியர் கருத்தன்று. வினைப்பகுதிகளைத் தொழிற் பெயர் என்னும் தொல்காப்பியனார் அங்ஙனம் பகுதியாதற்கு ஏலாத விகுதி பெற்ற தொழிற்பெயர்களை வினைப்பகுதியாகக் கொள்ள வில்லை; கொள்ளவும் இயலாது. (எ. ஆ. பக். 155)

வினைப்பகுதி வேறாதல் -

{Entry: B02__624}

நடந்தான் என்புழி வினைப் பகுதி நட என்பது. நடத்தினான் என்புழி வினைப்பகுதி நடத்து என்பது. உண்பித்தான் என்புழி வினைப்பகுதி உண்பி என்பது. எழுந்திருந்தான் என்புழி வினைப்பகுதி எழுந்திரு என்பது.

இவ்வாறு சொல்லமைப்பிற்கேற்ப, வினைப்பகுதியை (விகுதி முதலிய உறுப்பொடு கூட)க் கொள்ள வேண்டும். வினைப் பகுதி சொல்லாகுமிடத்துத் திரிந்து விகாரப்படுதலுண்டு.

எ-டு : வா - வந்தான்; தொடு - தொட்டான்; கொணா - கொணர்ந்தான், (நன். 139)

வினைப்பகுபதம் -

{Entry: B02__625}

நடந்தான், நடக்கின்றான், நடப்பான் - என முக்கால வினை முற்றுப் பகுபதம் வந்தன. நடந்த, நடக்கின்ற, நடக்கும் - என முக்காலப் பெயரெச்சப் பகுபதம் வந்தன. நடந்து, நடக்க, நடக்கின் - என முக்காலவினையெச்சப் பகுபதம் வந்தன. இவையெல்லாம் உடன்பாடு.

நடவான், நடவாத, நடவாது- இவை எதிர்மறை. இவை முறையே வினைமுற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் ஆகிய தெரிநிலை வினைப்பகுபதங்கள்.

பொன்னன், அகத்தன், ஆதிரையன், கரியன், கண்ணன், ஊணன், அற்று, இற்று,எற்று - என இவை குறிப்பு வினை முற்று. கரிய, பெரிய - என இவை குறிப்புப் பெயரெச்சம். இவை உடன்பாடு.

அல்லன், இல்லன், அன்று, இன்று- என இவை முற்று. அல்லாத, இல்லாத என இவை பெயரெச்சம். அன்றி, இன்றி, அல்லாமல், இல்லாமல் - என இவை வினையெச்சம். இவை முறையே எதிர்மறைமுற்றும், எதிர்மறைப் பெயரெச்ச வினை யெச்சங்களுமாகிய குறிப்புவினைப் பகுபதங்கள். (நன். 132 இராமா.)

வினைப்பெயர்ப் பகுபதம் -

{Entry: B02__626}

ஒரு தொழிற்சொல் எட்டு வேற்றுமையுருபும் ஏற்கின் வினைப் பெயராம்; அன்றித் தன் எச்சமான பெயர் கொண்டு முடியின் முற்றுவினைச்சொல்லாம்.

உதாரணம் உண்டான் என்பது.

உண்டானை, உண்டானொடு - எனவும், உண்டான் சாத்தன், உண்டான் தேவன்- எனவும் வரும்.

அன்றியும் எடுத்தலோசையால் சொல்ல வினைப்பெயராம்; படுத்தலோசையால் சொல்ல முற்றுவினைப் பதமாம். (நன். 131 மயிலை.)

வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து கெட்டு முடிந்தவை -

{Entry: B02__627}

திரை, அலை, நுரை, தளிர், பூ, காய், கனி - என்றாற் போல்வன வினைமுதற்பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டன. திரை அலை நுரை தளிர் - போன்றவை விகுதி குன்றி முதனிலை மாத்திரையாய் நிற்றல்பற்றி இவற்றை முதனிலை வினைப்பெயர் என வழங்குப.

இகரவிகுதி வினைமுதற்பொருளை யுணர்த்தல் சேர்ந்தாரைக் கொல்லி, நுற்றுவரைக்கொல் லி , நாளோ தி , நூலோதி - போல்வனவற்றுள் காணப்படும். (சூ. வி. பக். 33)

வினைமுற்று விகுதிகள் -

{Entry: B02__628}

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ - இவை படர்க்கை வினைமுற்று விகுதிகள்.

கு,டு,து,று, என், ஏல், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் - இவை தன்மை வினைமுற்று விகுதிகள்.

ஐ, ஆய், இ, மின், இர், ஈர் - இவை முன்னிலை வினைமுற்று விகுதிகள்.

ஈயர், க, ய - இவை வியங்கோள் விகுதிகள்.

உம்- செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுவிகுதி. பிறவும் சில உள. (நன். 140)

வினையின் விகுதி பெயர்க்கண்ணும் வருதல் -

{Entry: B02__629}

வில்லி, வாளி, உருவிலி, திருவிலி, பொறியிலி, செவியிலி, அரசி, பார்ப்பனி, செட்டிச்சி, உழத்தி, கிழத்தி, கணவாட்டி, வண்ணாத்தி, காதறை, செவியறை- என ‘வினையின் விகுதி பெயரினும் சிலவே’ என அறிக. (நன். 139 மயிலை.)

வீரசோழியச் சந்திப்படல அமைப்பு -

{Entry: B02__630}

28 காரிகைகளையுடைய சந்திப்படலமாகிய வீரசோழிய எழுத்ததிகாரத்துள், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்கள், அவற்றின் பிறப்பு, மொழி முதல் ஈறு இடை யெழுத்துக்கள், சந்தியில் இயல்புபுணர்ச்சி விகாரப்புணர்ச்சி, வடமொழியில் நகர உபசர்க்கமாகிய எதிர்மறைச்சொற்புணர்ச்சி, வடமொழி யில் தத்திதப் பெயர்ப்புணர்ச்சி, தமிழில் இயல்பு விகாரப் புணர்ச்சிகள், சிறப்பாக ழகரம் ளகரம்போல் புணர்ச்சிக்கண் அமையும் தன்மை, நகரம் ஞகரமாகத் திரியும் இடங்கள்- முதலியவை இடம் பெறுகின்றன.

வீரசோழியத்தில் காணப்படும் சில அரிய புணர்ச்சி முடிவுகள் -

{Entry: B02__631}

இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் நகாரம் புணருமிடத்து, வந்த நகாரம் ஞகாரம் ஆகும்

எ-டு : கவி + நன்று = கவி ஞன்று; தீ + நன்று = தீ ஞன்று; பனை + நன்று = பனை ஞன்று

ழகார ளகார ஒற்றீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் தகாரம் புணருமிடத்து, நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் திரிந்து தனித்தனியே இரண்டும் டகாரம் ஆம்; நிலைமொழி ஈறுகெட, வருமொழி முதலில் வரும் தகரம் மாத்திரம் டகரம் ஆதலுமுண்டு. இம்முடிபு வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணது.

எ-டு : பாழ் + தீமை = பாட்டீமை, பாடீமை

நாள் + தீமை = நாட்டீமை, நாடீமை (சந்திப். 15)

லகார ஒற்றீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் யகாரம் புணருமிடத்து, இடையே ஓர் இகரம் தோன்றும். யகார ஒற்றீற்று நிலைமொழி முன்னர் வருமொழி முதல் நகாரம் புணருமிடத்து, வந்த நகாரம் ஞகாரம் ஆகும்.

எ-டு : அ) கல் + யாது = கல்லியாது - அல்வழி

கல் + யாப்பு = கல்லியாப்பு - வேற்றுமை

ஆ) செய் + நின்ற = செய்(ஞ்)ஞின்ற

(அ) நன்னூலார் ‘தன்னொழி மெய்முன்’ (மெய். 3 மயிலை.) என்ற நுற்பாவில் லகரஈற்றுக்கு மாத்திரமன்றி யகரமெய் அல்லாத எல்லா ஈற்றுக்கும் பிறன்கோட் கூறலாக இவ்விகா ரத்தைச் சுட்டியுள்ளார். (ஆ) அவர் ஐகாரமும் யகரமும் ஆகிய இவை நிலைமொழி இறுதியில் நிற்க, வருமொழி முதற்கண் நகரம் வரின், நகரம் ஞகரம் ஆகும் என (நகரத்துக்கு ஞகரம் மொழியிடைப் போலியாக வருமாற்றை) இரண்டு ஈறுகளை யும் இணைத்துக் கூறியுள்ளார்.) (சந்திப். 17)

ழகாரஈறு, வருமொழி முதலில் வன்கணம்வரின், டகார மாகவோ ணகாரமாகவோ திரியும்.

எ-டு : தமிழ் +சொல் = தமிட்சொல்; பாழ் + செய = பாண் செய

ழகாரஈறு, வருமொழி முதலில் நகாரம் வரின், தான் அழிய, நகாரம் ணகாரமாகத் திரியும்.

எ-டு : பாழ் + நன்று > பா + நன்று = பாணன்று

ழகார ஈறு, மகாரம் வருமிடத்தே ணகாரம் ஆகும்.

எ-டு : பாழ் + மேலது = பாண்மேலது (சந்திப். 18)

ஒரோவழி, அ) நிலைமொழி டகாரம் ணகாரம் ஆதலும், ஆ) நிலைமொழி வருமொழியொடு புணருமிடத்தே ஒற்று வந்து தோன்றுதலும், இ) ஆகாரஈறு குறுகி உகரம் பெறுதலும் கொள்க.

வருமாறு : அ) வேட்கை + அவா > வேண் + அவா = வேணவா (தொ. எ. 289 இள.)

ஆ) முன் + இல் > முன் +ற் + இல் = முன்றில்

(தொ. எ. 356)

இ) நிலா > நில > நில + உ = நிலவு (தொ. எ. 235)

(சந்திப். 24)

அ) வருமொழி முதற்கண் உயிரோ உயிர்மெய்யோ வரின், நிலைமொழிஈற்று மெய் கெட, ஈற்றயல் நீடலும், ஆ) வருமொழிமுதல் உயிர் கெடலும், இ) நிலைமொழியினது ஈற்றயல் உகரம் கெட அதனால் ஊரப்பட்ட லகரம் னகரமாக வும் ளகரம் ணகரமாகவும் திரிதலும் கொள்ளப்படும்.

எ-டு : அ) மரம் + அடி > மர + அடி = மராடி குளம் + ஆம்பல் > குள + ஆம்பல் = குளாம்பல் கோணம் + கோணம் > கோண + கோணம் = கோணா கோணம். (தொ. எ. 312 இள. உரை)

ஆ) மக + கை > மக + அத்து + கை = மகத்துக்கை - அத்துச் சாரியையினது அகரம் கெட்டது.

ஆடி + கொண்டான் > ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான்; சித்திரை + கொண்டான் > சித்திரை+ இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் - இக்குச்சாரியையினது இகரம் கெட்டது. (தொ. எ. 126, 127, 128)

இ) போலும் > போல்ம் > போன்ம் (தொ. எ. 51)

மருளும் > மருள்ம் > மருண்ம் (ந.எ.119 மயிலை.)

(சந்திப். 25)

வீரசோழியம் -

{Entry: B02__632}

இவ்வைந்திலக்கண நூல் வீரராசேந்திரன் (கி.பி.1063-68) என்ற சோழப்பேரரசன் ஆட்சியில், பொன்பற்றி என்ற சிற்றூரில் குறுநில மன்னராக வாழ்ந்த, புத்தமதத்தைப் பின்பற்றியவரான புத்தமித்திரனார் என்பவரால் தம்மன்னன் விருதுப்பெயர் தோன்ற ‘வீரசோழியம்’ என்னும் பெயர்த்தாக யாக்கப் பெற்றது. இதன்கண் 183 கட்டளைக் கலித்துறைச் சூத்திரங்கள் உள. இவற்றின் வேறாகப் பாயிரம் மூன்று கட்டளைக் கலித்துறைப் பாடல்களாகப் புனையப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்து, சொல், பொருள் - என மூன்று அதிகாரங்களை உடையது. எழுத்ததிகாரம் சந்திப்படலம் என்ற ஒரே படலத்தை உடையது (28 காரிகைகள்). சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் - காரகப் படலம் - தொகைப்படலம் - தத்திதப்படலம் - தாதுப்படலம் - கிரியாபதப் படலம் - என்ற ஆறு படலங்களையுடையது. (முறையே 9, 6, 8, 8, 11, 13 காரிகைகள். ஆக, கூடுதல் 55 காரிகைகள்; இறுதியில் இரண்டு வெண்பாக்கள்.) தொல்காப்பியத்தை அடுத்தமைந்த முழு முதனூல் இஃதெனினும், இதன்கண் வடமொழி மரபு பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. இதன் பொருளதிகாரம், பொருட் படலம் - யாப்புப்படலம் - அலங்காரப் படலம் - என்ற மூன்று பகுப்பினதாய், முறையே 21 36 41 = 98 காரிகைகளையுடையது. பொருட் படலத்தில் அகத்திணைத் துறைகள் திணை அடிப்படையில் முல்லைநடையியல் குறிஞ்சிநடையியல் என்றாற் போல விரித்துக் கூறப்பட்டுள்ளன. புறத்திணையின் பாடாண் பகுதியில் நாடக இலக்கணச் செய்திகள் பலவும் இடம் பெறுகின்றன. செய்யுள் பற்றிய யாப்புப் படலத்தில் தமிழ்ப்பாக்கள் - பாவினங்கள் - இவற்bறாடு, வடமொழி விருத் தங்கள் - தாண்டகங்கள் - மணிப்பிரவாளம் போன்றவற்றின் குறிப்பும் இடம் பெறுகின்றன. அலங்காரப் படலம் வட மொழித் தண்டியாசிரியர் வரைந்த காவ்யாதர்சத்தைப் பெரும்பாலும் மொழிபெயர்த்து அமைக்கப்பட்டுள்ளது. சித்திரகவிகள் சில விளக்கப்பட்டுள. இந் நூலுக்குப் பெருந் தேவனார் என்பார் அரிய உரை இயற்றியுள்ளார். அவ்வுரை இந்நூலினைக் கற்கப் பெரிதும் உதவுகிறது.

வீரசோழியம் எண்ணுப்பெயர்த் திரிபுகளாகக் கூறுவன -

{Entry: B02__633}

ஒன்று ஒரு - ஓர் - எனவும், இரண்டு இரு - ஈர்- எனவும், மூன்று
மு மூ - எனவும், நால் நான்கு எனவும், ஐந்து ஐ எனவும் ஆறு அறு எனவும், ஏழ் எழு எனவும், எட்டு எண் எனவும், ஒன்பது ஒன்பான் - தொண் - தொள் - எனவும், பத்து பான் - பன் - நூறு - பஃது - எனவும், நூறு ஆயிரம் எனவும் திரியப் பெறும்.

வருமாறு : ஒருகல், ஓரரசு; இருகுடம், ஈராழாக்கு; முந்நீர், மூவுழக்கு; நான்குகல்; ஐந்துகில்; அறுமுகம்; எழுகழஞ்சு; எண்கால்;

ஒன்பது + செய்தி, பத்து, நூறு = ஒன்பான் செய்தி, தொண்ணூறு, தொள்ளாயிரம்; ஒன்று + பத்து; பத்து + இரண்டு; ஒன்பது + பத்து; ஒன்று + பத்து = ஒருபான், பன்னிரண்டு, தொண்ணூறு, ஒருபஃது; ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் (சந்திப். 23)

(நான்கு என்பதே இயற்சொல்; ‘நால்’ அதன் திரிபு. ஆயின் உரையாசிரியர் பிறழக் கொண்டுள்ளார். அவர் கருத்துப் படியே திரிபு குறிக்கப்பட்டுள்ளது)

தொண்ணூறு, தொள்ளாயிரம் - என்பவற்றுக்குத் தொல்- காப்பியமும், நேமிநாதமும், நன்னூலும் தனித்தனி விதி கூறும்.

வீரசோழியம் எழுத்தொலியாகக் கூறும் நால்வகையாவன -

{Entry: B02__634}

எடுத்தல், படுத்தல், நலிதல், உரப்பல் - என்ற நால்வகையால் மெய்கள் பிறக்கும் என்று வீரசோழியம் கூறுகிறது. (சந்திப். 4)

வீரசோழியம் குறிப்பிடும் குறுக்கங்கள் -

{Entry: B02__635}

குற்றியலிகரம், குற்றியலுகரம், மகரக்குறுக்கம்- என்பனவே வீரசோழியம் குறிப்பிடும் குறுக்கங்கள். இவை முறையே அரையும் அரையும் காலும் ஆகிய மாத்திரை பெறுவன. (சந்திப். 5, 19)

வீரசோழியம் குறிப்பிடும் நகார எதிர்மறை உபசருக்கப் புணர்ச்சி -

{Entry: B02__636}

வடமொழிக்கண் ஒரு சொல்லிற்குரிய பொருளை நீக்குதற் பொருட்டாக, அச்சொல்லின் முன்னர் ஒரு நகாரம் வரப் பெறும். அச்சொல் மெய்முதல் மொழியாயின், அச்சொல் முன் நகாரத்தின் மேலேறி நின்ற அகரவுயிர் நிற்க மெய் கெடும். வருமொழி உயிர்முதலாயின், நகாரத்தின் மேல்நின்ற உயிர் பிரிய அது முன்னும் ஒற்றுப் பின்னுமாக நிலைமாறி (ந > ந்அ > அந்) நிற்கும்.

எ-டு : ந + சத்தியம் > அ + சத்தியம் = அசத்தியம்

ந + அகன் > அந் + அகன் = அநகன் (அனகன்)

(சந்திப். 11)

(இச்செய்தி நேமிநாதத்திலும் உள்ளது.)

வீரசோழியம் குறிப்பிடும் மூன்று விகாரங்கள் -

{Entry: B02__637}

வடமொழிக்கண் ஒரு சொல்லினிடமாகவும் இருசொற்களி னிடமாகவும் ஆகமம் - ஆதேசம் - உலோபம் - என்ற மூன்று விகாரங்கள் நிகழும். அவை முறையே தமிழில் தோன்றல் - திரிதல் - கெடுதல் - எனப் பெயர்பெறும். இவ்விகாரங்களை எழுத்து, சொல் என இரண்டன்கண்ணும் பொருத்தி, மொழி முதல் இடை கடை - என மூன்றானும் உறழப் பதினெட்டாம். (சந்திப். 10)

இவ்வாறு பகுத்தல் தொல்காப்பியத்தில் இல்லை. தொல் காப்பியனார் ஒருமொழியில் நிகழும் மாற்றங்கள் பற்றிக் கூறாராயினார்.

வீரசோழியம் குறிப்பிடும் விருத்திகுணசந்திகள் -

{Entry: B02__638}

வடமொழித் தனிச்சொல் அமைப்பினுள் இடையே நிகழும் திரிபு பற்றிவீரசோழியம் குறிப்பிடுகிறது. அகரத்திற்கு ஆகாரமும், இகரத்திற்கு ஐகாரமும், உகரத்திற்கு ஒளகாரமும், ‘இரு’ என்பதற்கு ‘ஆர்’ என்பதும் ஆதேசமாக வந்து விருத்தி எனப்படும். உகரத்திற்கு ஓகாரமும். இகரத்திற்கு ஏகாரமும் ஆதேசமாக வந்து குணம் எனப்படும்.

(ஆதேசம் - திரிந்த எழுத்து) இந்த விருத்தியும் குணமும், தத்திதப் பெயர் முடிக்குமிடத்தும் தாதுப்பெயர் முடிக்கு மிடத்தும் வரப்பெறும். இவற்றுள் முதல் நான்கு திரிபுகளும் ஆதிவிருத்தி எனவும், பின் இரண்டும் குணம் எனவும் வடநூலுள் கூறப்படும்.

விருத்தி தத்திதப் பெயர் தாதுப்பெய ர்

அ ‘ஆ’ ஆதல் தசரதன் மகன் தாசரதி வஸ் - வாஸம்

இ ’ஐ’ஆதல் விதர்ப்பநாட்டு மன்னன் இஷ - ஐஷு

வைதருப்பன்

உ ‘ஒள’ஆதல் குருமரபில் பிறந்தவர் சுசி - சௌசம்

கௌரவர்

இரு‘ஆர்’ஆதல் இருடிகளால் செய்யப் கிரு - கார்யம்

பட்டவை ஆரிடம்

குணம்

உ ‘ஓ’ஆதல் குசலத்தை யுடைய நாடு புத் - போதம்

கோசலம்

இ ‘ஏ’ ஆதல் சிபிமரபினன் செம்பியன் ஶ்ரு-ஶ்ரோத்ரம்

ப்ரவிஶ்- ப்ரவேஶம்

(தத்திதம் - பெயர்விகுதி;தாது - வினைப்பகுதி) (சந்திப். 12)

வீரசோழியம் மகரக்குறுக்கம் பற்றிக் குறிப்பது -

{Entry: B02__639}

மகரஈறு, வருமொழி முதலில் வகரம் வரின் மகரக் குறுக்கமாகி உட்பெறு புள்ளி பெறும்.

வருமாறு: வரும்+ வளவன் + வரும் @ வளவன் - நிலைமொழி யீற்று மகரம் குறுகிக் கால்மாத்திரை பெற்று வந்தது.

மகரக்குறுக்கம் மேலால் பெறும் புள்ளியோடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது; ‘உட்பெறு புள்ளி உருவா கும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது. புள்ளியிடுவது மாத்திரை செம்பாதி குறைந்துள்ளது என்பதனைக் குறிப்பிடுவ தாம். (‘ம’என்ற உயிர்மெய் பாதியாக மாத்திரை குறைந்தால் ‘ம்’ என்று வரிவடிவில் மேலே புள்ளி பெறுகிறது. அது தானும் கால்மாத்திரையாக மேலும் குறைந்தால் ‘ம் {{special_puLLi}} ’ என்று உட் புள்ளியும் உடன்பெறுகிறது) (சந்திப். 19)

வெதிர்: புணருமாறு -

{Entry: B02__640}

வெதிர் என்ற சொல் அல்வழிப்புணர்ச்சியில் வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : வெதிர் கடிது, நன்று, வலிது, அரிது (தொ. எ. 405 நச்.)

உருபுபுணர்ச்சிக்கண் சாரியை பெறாதும் பெற்றும் வரும்.

எ-டு : வெதிர் + ஐ = வெதிரை, வெதிரினை (தொ. எ. 202)

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி முதலில் வன்கணம் வந்துழி இனமெல்லெழுத்து மிக்குப் புணரும்.

எ-டு : வெதிர் ங் கோடு, வெதிர் ஞ் செதிள், வெதிர் ந் தோல், வெதிர் ம் பூ

‘வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை’ (நற். 62.) என வெதிர் அத்துச்சாரியை பெறுதலு முண்டு. (தொ. எ. 363 நச். உரை)

வெயில் : புணருமாறு -

{Entry: B02__641}

வெயில் என்ற சொல் அல்வழிக்கண் வன்மை இடைமை உயிர்க்கணங்கள் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : வெயில் கடிது, சிறிது, தீது, பெரிது; வெயில் யாது, வலிது; வெயிலடைந்தது.

மென்கணத்துள் ஞகரமும் மகரமும் வருவழி நிலைமொழி யீற்று லகரம் னகரம் ஆகும்; நகரம் வருவழி லகரம் கெட, நகரம் னகரமாகத் திரியும்.

எ-டு : வெயில் + ஞான்றது, மாண்டது, நீண்டது= வெயின் ஞான்றது, வெயின் மாண்டது, வெயினீண்டது. (தொ. எ. 367)

உருபேற்றற்கண் வெயில் இன்சாரியை பெறாதும் பெற்றும் வரும்.

எ-டு : வெயில் + ஐ = வெயிலை, வெயிலினை

(தொ. எ. 202 நச். உரை)

வேற்றுமைப்புணர்ச்சிக்கண், வெயில் மழை என்ற சொல் போல, அத்துச்சாரியை பெறுதலோடு இன்சாரியை பெறுதலு முண்டு.

எ-டு : வெயிலத்துக் கொண்டான், வெயிலத்து ஞான்றான், வெயிலத்து வந்தான், வெயிலத்தடைந்தான்; வெயி லிற் கொண்டான், வெயிலின் ஞான்றான், வெயிலின் வந்தான், வெயிலினடைந்தான். (தொ. எ. 377)

வெரிந்:புணருமாறு -

{Entry: B02__642}

வெரிந் என்ற சொல் அல்வழிக்கண் இயல்பாகப் புணரும்.

எ-டு : வெரிந் கடிது சிறிது, தீது, பெரிது; ஞான்றது, மாண்டது, யாது, வலிது, அழகிது.

வெரிந் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.

எ-டு : வெரிநினை, வெரிநினான், வெரிநிற்கு

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழி ஈறுகெட்டு வருமொழி வல்லெழுத்தும் அதன் இனமாகிய மெல்லெழுத்தும் மிக்குப் புணரும்.

எ-டு : வெரி க் குறை, வெரி ச் சிறை, வெரி த் தலை, வெரி ப் புறம்; வெரி ங் குறை, வெரி ஞ் சிறை, வெரி ந் தலை, வெரி ம் புறம்.

வெரிந் + நிறுத்த = வெரிநிறுத்த (அக. 37) வெரிந் + நிறம் = வெரிநிறம் - இருவழியும் மென்கணத்துள் நகரம் வருவழி நிலைமொழி யீற்று நகரம் கெட்டது. (தொ. எ. 300, 301 நச்.)

வெள்யாறு: இலக்கணக்குறிப்பு -

{Entry: B02__643}

வெள்யாறு என்பது பண்புத் தொகை. இதனை வெள் + யாறு- எனப் பிரிப்ப, வெள் என்பது வெளியனாகிய - வெளியளாகிய, வெளியராகிய - வெளியதாகிய - வெளியவாகிய - என்ற ஐம்பாற்கு முரிய பண்புப்பகுதி. இதனை யாறு என்ற வரு மொழிக்கேற்ப ‘வெளியதாகிய’ என ஒன்றன்பால் விகுதி யுடைய சொல்லாக விரித்துக் காண்டல், ஐம்பாலுக்கும் உரிய விகுதி முதலியன பெற்று விரியும் அதன் முழுத்தகுதிக்கு ஏலாது. ஏலாமையின், பண்புத்தொகையைப் பகுக்காமல் ஒரு சொல்லாகவே கோடல் தொல். கருத்தாதலின், நச்சினார்க் கினியர் பண்புத்தொகையை ஒரு சொல்லாகவே கொண்டார். (தொ. எ. 24, 482 நச். உரை)

வேண்டா கூறி வேண்டியது முடித்தல் -

{Entry: B02__644}

தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி, அதனால் நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்.

எட்டு என்ற நிலைமொழி நிறை அளவுப் பெயர்களாகிய வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி, எட்டு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டு ஈற்றயல் டகரம் ணகரமாக வன்கணத்தொடு புணரும்.

எ-டு : எண் கழஞ்சு, சீரகம், தொடி, பலம்

வருமொழி இயல்புகணத்தின்கண்ணும் எட்டு இவ்வாறே முடிந்து புணரும்.

எ-டு : எண்மண்டை, எண்மா; எண்வட்டி, எண்வரை; எண்ணகல், எண்ணந்தை.

எ. 144ஆம் நாற்பாவால் முன்னரே பெறப்பட்ட இதனைக் குறிப்பிட வேண்டா; குறிப்பிட்ட இவ்வேண்டா கூறலான், எண் என்பது தனிக்குறில் முன் ஒற்றாதலின், வருமொழி நிறை அளவுப் பெயர்கள் உயிர் முதலவாக வரின், எண் + அகல் = எண்ணகல், எண் + அந்தை = எண்ணந்தை - என ணகர ஒற்று இரட்டிப் புணர்தல் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 450 நச். உரை)

உயர்திணைக்கண் ‘இ உ ஐ ஓ’ என்ற நான்கு ஈற்றுப் பெயர்களே விளியேற்கும் என்று கூறி, அவை விளியேற்கு மாறும் கூறிப் பிறகு ‘உயர்தினை மருங்கின் ஏனை உயிரே தாம்விளி கொள்ளா’ (தொ.சொ. 126 நச்.) எனவும், அஃறிணைக் கண் னரலள- என்ற நான்கு ஈற்றுப் பெயர்களே விளியேற்கும் என்று கூறிப் பின் ‘ஏனைப் புள்ளி யீறு விளிகொள்ளா’ (தொ. சொ. 131) எனவும் கூறுவது வேண்டாகூறி வேண்டியது முடித்தல். அஃதாவது உயர்திணைப் பெயர்களும் விரவுப் பெயர்களும் குறிப்பிட்ட முறையானன்றி பிறவாற்றானும் விளியேற்கும் என்ற செய்தியைக் கொள்ள வைப்பதாம். மேலும் கூறிய ஈறுகளன்றி ஏனைய ஈறுகள் இருதிணைப் பெயர் களிலும் விளியேற்பனவற்றையும் கொள்ளச் செய்வதாம்.

எ-டு : கணி - கணியே, கரி - கரியே; மக - மகவே; ஆடூ - ஆடூவே; மகன் - மகனே, மன்னவன் - மன்னவனே; நம்பன் - நம்பான்; வாயிலோன் - வாயிலோயே; இறைவர் - இறைவரே, திருமால் - திருமாலே, தம்முன் - தம்முனே; நம்முன் - நம்முனா; அடிகள் -அடிகேள்; பெண்டிர்- பெண்டிரோ; கேளிர் - கேளீர்; ஆய் - ஆயே; கிழவோன் - கிழவோயே; மாயோன் - மாயோயே. (தொ. சொ. 126, 131 நச்.)

வேணவா:சொல்லமைப்பு -

{Entry: B02__645}

வேட்கை என்ற நிலைமொழி அவா என்ற வருமொழியொடு புணரும்வழி இறுதிக் ககரஐகாரம் கெட்டு டகரஒற்று ணகர ஒற்றாகி, வேண் +அவா =வேணவா- என்று புணரும். வேட்கை யாவது ஒருபொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அவா - அப்பொருளைப் பெறல் வேண்டும் என மேன்மேல் நிகழ் கின்ற ஆசை. வேணவா- வேட்கையான் உளதாகிய அவா - என மூன்றன் தொகை. வேட்கையும் அவாவும் என உம்மைத் தொகையுமாம். (தொ. எ. 288 நச்.)

ஆள்- ஆண்; எள் - எண்- என இவ்வாறு ளகரமெய் ணகர மெய்யாகத் திரிதல் கூடும். வேட்கை என்பதன் முதனிலை யாகிய வேள் என்பதன் ளகரமெய் ணகரமெய்யாகத் திரிந்து நின்று அவா என்ற சொல்லொடு புணர்ந்து’ ‘வேணவா’ என்றாயிற்று எனல் பொருந்தும். (எ. ஆ. பக். 148)

வேல் என்ற மரப்பெயர் புணருமாறு -

{Entry: B02__646}

வேல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் பெரும்பாலும் இயல்பாகப் புணரும். (வன்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் இம்மூன்றும் கொள்க. மென்கணத்துள் ஞகர மகரங்கள் வருவழி லகரம் னகர மாகும்; நகரம் வருவழி லகரம் கெட நகரம் னகரமாகத் திரியும்)

எ-டு : வேல்கடிது, சிறிது, தீது, பெரிது; யாது, வலிது, அழகிது; வேன் ஞான்றது, வேன் மாண்டது, வேனீண்டது.

உருபுபுணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறும்.

எ-டு : வேலத்தை, வேலத்தால், வேலத்துக்கண்

(தொ. எ. 405, 202 நச்.)

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.

எ-டு : வேலங்கோடு, வேலஞ்செதிள், வேலந்தோல், வேலம் பூ; வேலஞெரி, வேலநுனி, வேலமுரி; வேலவிறகு; வேலவழகு (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 375)

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் -

{Entry: B02__647}

மொழியிடையே மெய்யுடன் மெய் மயங்கும்போது க ச த ப என்ற நான்கு மெய்யும் பிற மெய்யொடு மயங்காமல் தம் மொடு தாமே மயங்கும். ர ழ - என்ற இரண்டு மெய்யும் தம்மொடு தாம் மயங்காமல் தம்மொடு பிறவே மயங்கும். ஏனைய பன்னிரண்டுமெய்களும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். கசதப நீங்கலான பதினான்கு மெய்களும் பிறமெய் களொடு கூடும் கூட்டம் வேற்றுநிலை மெய்மயக்க மாம். ஒரு மொழி புணர்மொழி இரண்டும் கொள்ளப்படும். அவை வருமாறு:-

ஙகரத்தின் முன் ககரமும், வகரத்தின் முன் யகரமும் மயங்கும்.

எ-டு : பங்கு, தெவ் யாது

ஞகரநகரங்களின் முன் அவற்றுக்கு இனமாகிய சகரதகரங் களும் யகரமும் மயங்கும்.

எ-டு : பஞ்சு, உரிஞ் யாது; பந்து, பொருந் யாது

டகர றகரங்களின் முன் கசப என்னும் மெய்கள் மயங்கும்.

எ-டு : வெட்கம், மாட்சி, திட்பம்; கற்க, பயிற்சி, கற்பு.

ணகரனகரங்களின் முன் அவற்றின் இனமாகிய டகரறகரங் களும், க ச ஞ ப ம ய வ - என்னும் மெய்களும் மயங்கும்.

எ-டு : விண்டு, உண்கு, வெண்சோறு, வெண்ஞமலி, பண்பு, வெண்மை, மண் யாது, மண் வலிது.

கன்று, புன்கு, நன்செய், புன்ஞமலி, இன்பம், நன்மை, பொன் யாது, பொன் வலிது.

மகரத்தின் முன் ப ய வ - என்னும் மூன்று மெய்களும் மயங்கும்.

எ-டு : நம்பன், கலம் யாது, கலம் வலிது.

ய ர ழ - என்னும் மெய்களின் முன் மொழிக்கு முதலாம் என்ற பத்து மெய்களும் மயங்கும்.

எ-டு : பொய்கை, கொய்சகம், எய்து, செய்நர், செய்ப, சேய்மை, ஆய்வு, பாய்ஞெகிழி, (வேய்ங்குழல்)

(யகரத்தின் முன் யகரம் மயங்குதல் உடனிலை மெய் மயக்கம்.)

சேர்க, வார்சிலை, ஓர்தும், சேர்நர், மார்பு, சீர்மை, ஆர்வம், போர்யானை, நேர்ஞெகிழி, (ஆர்ங்கோடு)

மூழ்கி, வீழ்சிலை, வாழ்தல் வாழ்நன்,சூழ்ப, கீழ்மை, வாழ்வு, வீழ்யானை, வாழ்ஞெண்டு, (பாழ்ங்கிணறு)

லகரளகரங்களின் முன் க ச ப வ ய - என்னும் இவ்வைந்து மெய்களும் மயங்கும்.

எ-டு : நல்கி, வல்சி, சால்பு, செல்வம், கல்யாணம் (கொல் யானை); வெள்கி, நீள்சிலை, கொள்ப, கேள்வி, வெள்யானை (நன். 110- 117)

க ச த ப- என்ற நான்கனையும் ஒழித்த ஏனைய பதினான்கு மெய்களும் சொற்களையுண்டாக்குமிடத்துத் தம்மொடு தாமே இணைந்து வாராமல் பிறமெய்களோடு இணைந்து வரும் சேர்க்கை வேற்றுநிலை மெய் மயக்கமாம்.

எ-டு : அங்கு, மஞ்சள், கட்சி, கண்டு, பந்து, கம்பம், வெய்து, பார்த்து, செல்வம், தெவ் யாது, போழ்து, தெள்கு, ஒற்கம், கன்று. (தொ. எ. 22 நச்.)

வேற்றுமை இயற்கை -

{Entry: B02__648}

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வந்துழி, இடையே வல்லொற்று மிகுதல் வேற்றுமை இயல் பாகும்.

எ-டு : உரி + குறை = உரிக் குறை; உரியும் அதில் குறைந்ததும் - என உம்மைத் தொகை.

உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு - முதலியனவும் இடையே வல்லொற்று மிக்க உம்மைத்தொகைகளாம். சில அல்வழித்தொடர்கள் ‘வேற்றுமை இயற்கையாம்’ என்று கூறப்படவே, அவை வேற்றுமைப்புணர்ச்சி அல்ல என்பது தெளிவாகும். (தொ. எ. 166 நச். உரை)

வேற்றுமை உருபு ஆறு -

{Entry: B02__649}

ஐ ஒடு கு இன் அது கண் - என்பன இரண்டு முதல் ஏழ் ஈறான வேற்றுமை யுருபுகளாம். இவை விரிந்தும் தொக்கும் புணரும் புணர்ச்சியே வேற்றுமைப் புணர்ச்சியாம். எழுவாய்வேற்- றுமைப்புணர்ச்சியும் விளிவேற்றுமைப்புணர்ச்சியும் அல் வழிப் புணர்ச்சியாம். (தொ. எ. 113 நச்.)

வேற்றுமை எட்டு, ஆறு எனல் -

{Entry: B02__650}

பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை எட்டு என்பார், இங்கே எழுவாய்க்கும் விளிக்கும் உருபு பெயரும் பெயரின் விகாரமுமே அன்றி வேறில்லாமையால், அந்த இரண்டையும் நீக்கி, தமக்கென உருபுடையன இடை நின்ற ஆறு வேற்றுமையுமே ஆதலால், அவற்றின் உருபு ஆறும் தொக்கும் விரிந்தும் இடைநிற்க, அந்த ஆறோடும் பதங்கள் புணரும் புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி என்றார். (நன். 152 இராமா.)

‘வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்று’: விளக்கம் -

{Entry: B02__651}

தொல். ஈறுதோறும் அல்வழிப் புணர்ச்சியில் எழுவாய்த் தொடர்க்கு விதி கூறி அதே விதி வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கும் ஒக்குமாயின் ‘வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே’ என்று கூறிச் செல்லும் இயல்பினர். இந்நிலை அகர ஆகார ஈகார உகர ஊகார ஏகார ஓகார ஈறுகளுக்கு ஓதப் பட்டுள்ளது. (தொ.எ.216, 225, 252, 259, 266, 276, 292, நச்.)

வேற்றுமைத்தொகைகளுள் இயைந்து வருவன -

{Entry: B02__652}

ஐம்முதல் ஆறு உருபு தொக்கு நிற்பத் தொடர்ந்து வரு மொழிகள் இயல்பும் திரிபும் குறைதலும் மிகுதலுமாக வரும்.

எ-டு : மணிகொடுத்தான் - இயல்பு; க ற் கடாவினான் - திரிபு; திண்கொண்ட (தோள்) - குறைதல் (திண் மை + கொண்ட = திண்கொண்ட); பலாக்குறைத்தான் - மிகுதல். (தொ. வி. 91 உரை)

வேற்றுமை நயமின்றி ஒற்றுமைநயம் -

{Entry: B02__653}

உயிர்மெய்யான ககரஙகரங்கள் முதலியவற்றுக்கும் தனி மெய்யான ககரஙகரங்கள் முதலியவற்றிற்கும் வடிவு ஒன்றாக எழுதப்படும் இடமும் உண்டு. மெய்களை அகரத்தொடு புணர்த்து எழுதுவது வேற்றுமை நயமாகும். அதனை விடுத்து மெய்களுக்கு இயற்கையான புள்ளிகளோடு அவற்றை வரிவடிவில் எழுதுதல் ஒற்றுமை நயமாகும். அப்பொழுது அவை ஒவ்வொன்றற்கும் மாத்திரை அரையாகும். (தொ. எ. 11 இள.உரை)

அவ் வரைமாத்திரையுடைய மெய் ஒவ்வொன்றனையும் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயரும் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேல் பெய்து, காக்கை - கோங்கு - கவ்வை - எனக் காட்டுப. மெய் என்பது அஃறிணைஇயற்பெயர் ஆதலின் மெய் என்னும் ஒற்றுமை பற்றி ‘அரை’ என்றார். (தொ. எ. நச். உரை)

நூல்மரபினகத்து மெய்மயக்கம் வேற்றுமைநயம் கொண்டது. அஃதாவது மெய்யோடு உயிர்மெய் மயங்குமேனும் அவ்வுயிர் மெய்யில் மெய்யைப் பிரித்துக்கொண்டு மெய்மயக்கம் எனப் பட்டது. மொழிமரபில் கூறும் ஈரொற்றுடனிலை இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வரும் ஒற்றுமைநயம் பற்றியது.

எ-டு : தஞ்சம் - ஞகரமெய் சகரமெய்யொடு மயங்கிய மயக்கம்

வாழ்ந்தனம் - ழகரமெய் நகரமெய்யொடு மயங்கிய ஈரொற்றுடனிலை. (தொ. எ. 48. இள. உரை)

வேற்றுமைப்புணர்ச்சி -

{Entry: B02__654}

வேற்றுமையுருபு தொக நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சியாம். வேற்றுமைப் பொருள்பட நிலைவருமொழிகள் இயைவது இது. வேற்றுமை யுருபு பெயரொடு புணரும் புணர்ச்சியும் வேற்றுமைப் புணர்ச்சியாம். வேற்றுமை யுருபுகள் விரிந்த நிலையில் உருபீற்று நிலைமொழி வருமொழியோடு புணர்வதும் வேற்றுமைப் புணர்ச்சியே.

எ-டு : கல்லெறிந்தான் - அவ் + ஐ = அவற்றை - கல்லா லெறிந்தான் - என முறையே காண்க.

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிசிறப்புவிதி -

{Entry: B02__655}

உருபு புணர்ச்சிக்குக் கூறியன எல்லாம் பொருட் புணர்ச்சிக்கும் ஒக்கும். உருபு தொக நிலைவருமொழிகள் வேற்றுமைப் பொருள்படப் புணர்தலின் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி எனப்பட்டது. அவ் இவ் உவ் - என்பன உருபேற்குமிடத்து அற்றுச்சாரியை பெறுதல்போலப் பொருட்புணர்ச்சிக்கும் பெறும் என்றல் போல்வன. (வேற்றுமைப் பொருட்புணர்ச்சி வருமொழி பெயராயவழியே கொள்ளப்படும்.)

வருமாறு : அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றை

அவ் + கோடு > அவ் + அற்று + கோடு = அவற்றுக் கோடு ( ஆறன் தொகை) (நன். 238)

தொல்காப்பிய வற்று நன்னூலில் அற்று எனப்படும்.

வேற்றுமை வரும் இடம் -

{Entry: B02__656}

வேற்றுமையுருபுகள் தம் பொருளைத் தரப் பெயர்களை அடுத்து வரும்; ஏனை வினை இடை உரிகளை அடுத்து வாரா. (வினைமுற்றை யடுத்து வருமிடத்தே முற்றுப் பெயர்த் தன்மை பெற்று வினையாலணையும் பெயராம். வந்தானை என்பது வந்தவனை எனப் பொருள்படும்) (நன். 241)

ழ section: 5 entries

ழகரஈற்றுப் புணர்ச்சி விதி -

{Entry: B02__657}

ழகரஈற்றுப் பெயர்முன் வருமொழி முதலில் க ச த ப - க் களாகிய வன்கணம் வரின், அல்வழிக்கண் இயல்பாதலும் மிகுதலும், வேற்றுமைக்கண் மிகுதலும் இனமெல்லெழுத் தோடு உறழ்தலும் பொதுவான விதியாம்.

எ-டு : வீழ் கடிது - அல்வழிக்கண் எழுவாய்த் தொடர் இயல்பு; பூழ்ப் பறவை - அல்வழிக்கண் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை மிகுதல்; பூழ்ச்சிறை - வேற்றுமைக்கண் (ஆறன் தொகை) மிகுதல்: பாழ்க் கிணறு, பாழ்ங்கிணறு - வேற்றுமைக்கண் வல்லினம் மெல்லினம் உறழ்தல்; (பாழுட் கிணறு) - பாழாகிய கிணறு (பண்புத் தொகை) என அல்வழிக்கண்ணும் இவ்வுறழ்ச்சி முடிபே கொள்க. (நன். 224)

தமிழ் என்ற சொல் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் நாற்கணமும் வருமிடத்து, அகரச்சாரியை பெறுதலுமுரித்து.

எ-டு : தமிழ் + பிள்ளை, நாகன், வடுகன், அரசன் = தமிழப் பிள்ளை, தமிழநாகன், தமிழவடுகன், தமிழவரசன்; தமிழ் + சுவை = தமிழின் சுவை - என இன்சாரியைப் பேறும் கொள்க.

தாழ் என்ற சொல் கோல் என்ற வருமொழியொடு புணரு மிடத்தும் அகரச்சாரியை பெறும். தொல்காப்பியத்து அத்து நன்னூலில் அகரமெனப்பட்டது.

வருமாறு : தாழ் + கோல் = தாழக்கோல் - தாழைத் திறக்கும் கோல் - என வேற்றுமைப் புணர்ச்சி (நன். 225)

கீழ் என்ற சொல்முன் வல்லின முதல் மொழி வருமிடத்துப் புணர்ச்சிக்கண் வல்லினம் மிகுதலும் மிகாமையும் ஆகிய இருநிலையு முண்டு.

எ-டு : கீழ்குலம், கீழ்க்குலம்; கீழ்சாதி, கீழ்ச்சாதி

‘கீழ்’ பண்பாகுபெயராய்க் கீழ்க்குலம் முதலியன இருபெய ரொட்டுப் பண்புத்தொகை ஆதலின், இஃது அல்வழிப் புணர்ச்சியாம். (நன். 226)

ழகரஈற்றுப் பெயர் உருபொடு புணர்தல் -

{Entry: B02__658}

ழகரஈற்றுப் பெயர்கள் உருபொடு புணரும்வழி அன்சாரியை யும் இன்சாரியையும் பெறும்.

எ-டு : பூழ் + ஐ = பூழனை, பூழினை; யாழ் +ஐ = யாழனை, யாழினை; ஏழ் +ஐ = ஏழனை, ஏழினை. (தொ. எ. 194 நச். உரை)

தாழ் + ஐ= தாழினை, தாழை - எனச் சிறுபான்மை இன் சாரியை பெற்றும் சாரியை எதுவும் பெறாதும் உருபு ஏற்பனவும் உள. (தொ. எ. 202 நச். உரை)

ழகரஈற்றுப் பொதுப்புணர்ச்சி -

{Entry: B02__659}

ழகரஈறு அல்வழிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : யாழ் குறிது, சிறிது, தீது, பெரிது

சிறுபான்மை வல்லெழுத்து மிக்கும் மிகாதும் புணரும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை அக்குப் பெறுதலு முண்டு. எ-டு : தாழப்பாவை

தொல்காப்பிய அக்கு நன்னூலில் அகரமாகும். (தொ. எ. 405 நச். உரை)

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் மிக்குப் புணரும்.

எ-டு : பூழ்க்கால், சிறை, தலை, புறம் (தொ. எ. 383)

தாழைத் திறக்கும் கோலாகிய தாழக்கோல் என்பது தாழ் + அக்கு + கோல் - என அக்குச்சாரியையொடு புணர்ந்த முடிபு. (தொ. எ. 384)

தமிழ் என்பதும் அக்குப் பெற்றுத் தமிழக்கூத்து, தமிழமன்னர், தமிழவள்ளல், தமிழஅ(வ)ரையர்- என்றாற் போல நாற்கணத் தொடும் புணரும். சிறுபான்மை தமிழ்க்கூத்து, தமிழ்நாடு - என அக்குப் பெறாமலும் முடியும். (தொ. எ. 385 உரை)

குமிழ், மகிழ் - முதலிய மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிக்கோ, அம்முச்சாரியை பெற்றோ நாற்கணத்தொடும் புணரும்.

எ-டு : குமிழ்ங்கோடு, குமிழங்கோடு; குமிழநார், குமிழ வளர்ச்சி, குமிழஇ (வி)லை); மகிழ்ங்கோடு, மகிழங் கோடு; மகிழநார், மகிழவளர்ச்சி, மகிழஇ (வி)லை

பாழ் என்பது வன்கணம் வரின் வல்லெழுத்தும் மெல் லெழுத்தும் உறழும்.

எ-டு : பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு; இது பாழுட் கிணறு- என விரியும். (387)

ஏழ் என்ற எண்ணுப்பெயர் உருபேற்குமிடத்தும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அன்சாரியை பெற்றுப் புணரும். பொருட் புணர்ச்சிக்கண் எழு எனத் திரிந்தும் புணரும்.

எ-டு : ஏழனை, ஏழனொடு; ஏழன்காயம் ஏழன்சுக்கு - 388; ஏழ் + கலம், கழஞ்சு, கடல் = எழுகலம், கழஞ்சு, கடல் -389; ஏழ் + பத்து = எழுபஃது; ஏழ் + ஆயிரம் = எழாயிரம்; ஏழ் + நூறாயிரம் = ஏழ்நூறாயிரம்; ஏழ் + தாமரை = ஏழ் தாமரை; ஏழ்+வெள்ளம் = ஏழ் வெள்ளம்; ஏழ் + ஆம்பல் = ஏழாம்பல்; ஏழ் + அகல், உழக்கு = ஏழகல், ஏழுழக்கு (390 - 394); கீழ் + குளம்= கீழ்குளம், கீழ்க்குளம் - என்ற உறழ்ச்சி முடிவு. (395)

ழகரஉகரம் நீண்டு உகரம் பெறுதல் -

{Entry: B02__660}

செய்யுளில் ழகரஉகர ஈற்றுச் சொல்லின் உகரம் ஊகாரமாக நீண்டு மேலும் அளபெடை பெறுவதுண்டு.

எ-டு : எழு - எழூஉ., குழு- குழூஉ, தழு- தழூஉ

எனவே, குறில் நின்றவிடத்தும் அதனை நெடிலாக்கி அள பெடுத்து மேலும் நீட்டலுமுண்டு என்பது பெறப்படுகிறது. இதனை இலக்கணக்கொத்துக் குற்றெழுத்தளபெடை என்னும்.

எழு, தழு - முதலிய சொற்கள் உகர ஈறு ஊகார ஈறாகியவழி, ஊகாரஈறு இயல்பானதன்று, அஃது உகர ஈறு என்று தெரி விக்கவே உகரம் அறிகுறியாக எழுதப்பட, எழூஉ- தழூஉ- முதலிய சொற்கள் உண்டாயின. (எ. ஆ. பக். 144)

ழகரஉகரமே யன்றி, ஏனைய உகரமும் நீளும் என்பதனைத் தொல். உடம்பொடு புணர்த்துக் கூறியுள்ளார்.

வருமாறு : ‘அஆ வ என வரூஉம் இறுதி’ -(தொ.சொ. 9 நச்.)

‘தம்மொற்று மிகூஉம்’ - (தொ.எ.260 நச்.)

‘விண்ணென வரூஉம் காயப்பெயர்’- (தொ.எ.305) (தொ.எ.261 நச். உரை)

ழகரம் வேற்றுமைக்கண் புணருமாறு -

{Entry: B02__661}

வேற்றுமைக்கண் ழகரம் டகரமெய்யாகத் திரியும்.

எ-டு : கீழ் + திசை= கீட்டிசை

ழகரம், தகரம் வரின் டகரமாகவும் நகரம் வரின் ணகரமாகவும் திரியும்.

எ-டு : திகழ் + தசக் கரம் = திகடசக்கரம்; சோழ + நாடு = சோணாடு. (மு. வீ. புண. 210, 211)

ள section: 3 entries

ளகரஈற்றுத் தொழிற்பெயர் -

{Entry: B02__662}

ளகரஈற்றுத் தொழிற்பெயர் அல்வழி வேற்றுமை என ஈரிடத் தும் உகரம் பெறாது; நாற்கணமும் வருவழி முடியுமாறு:

எ-டு : கோள் +கடிது = கோள் கடிது, கோட் கடிது - அல் வழி - உறழ்ச்சி; கோள் + கடுமை = கோட்கடுமை - வேற்றுமை - திரிபு; கோள் + நன்று = கோணன்று - அல்வழி - கெடுதல்; கோள் +நன்மை = கோணன்மை - வேற்றுமை கெடுதல்; கோள் + வலிது = கோள் வலிது - அல்வழி - இயல்பு; கோள் + வலிமை = கோள் வலிமை - வேற்றுமை - இயல்பு; கோள்கடிது, சிறிது, தீது, பெரிது - அல்வழி - இயல்பு. (நன். 230)

ளகரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__663}

ளகரஈற்று வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி முதல் வன்கணம் வரின் ஈற்று ளகரம் டகரம் ஆகும்; அல்வழிப் புணர்ச்சியில், வன்கணம் வரின் ளகரம் டகரத்தோடு உறழும்; இருவழிக்கண்ணும் மென்கணம் வரின் ஈற்று ளகரம் ணகரமாகும்; இடைக்கணம் வரின் இயல்பாகப் புணரும்.

எ-டு : முள் + குறை= முட்குறை - வேற்றுமை - திரிதல்; முள் + குறிது = முள் குறிது, முட் குறிது - அல்வழி - உறழ்ச்சி; முள் + ஞெரி = முண்ஞெரி - வேற்றுமை - திரிதல்; முள் + ஞெரிந்தது = முண் ஞெரிந்தது - அல்வழி - திரிதல்; முள் +யாப்பு=முள்யாப்பு - வேற்றுமை -இயல்பு; முள் + யாது = முள் யாது - அல்வழி - இயல்பு (நன். 227)

தனிக்குறிலை அடுத்த ளகரஒற்று அல்வழிக்கண் தகரம் வருமொழி முதல் வருவழி டகரமாதலேயன்றி ஆய்தமாகவும் திரியும்

எ-டு : முள் + தீது = முட்டீது, முஃடீது (நன். 228)

தனிக்குறிலைச் சாராது தனிநெடிலையோ குறிலிணை முதலிய வற்றையோ சார்ந்த ளகரஈறு, அல்வழிக்கண், வருமொழி முதல் தகரம் திரிந்தபின் தான் கெடும்; அல்வழி வேற்றுமை - என இருவழியும் வருமொழி முதல் நகரம் திரிந்தபின் தான் கெடும்; அல்வழிக்கண் தகரம்நீங்கலான ஏனைய வன்கணம் வரின் இயல்பும் திரிபும் பெறும்;வேற்றுமைக்கண் பெரும் பாலும் இயல்பாம்.

எ-டு : வேள் +தீயன் =வேடீயன் - அல்வழி; வேள் +நல்லன் = வேணல்லன் - அல்வழி; வேள் + நன்மை = வேணன்மை - வேற்றுமை; மரங்கள் +கடிய= மரங்கள் கடிய - அல்வழி (எழுவாய்த் தொடர்); வாள் +படை = வாட்படை - அல்வழி (இரு பெயரொட்டுப் பண்புத்தொகை); வாள் + போழ்ந்திட்ட = வாள் போழ்ந் திட்ட - இது வேற்றுமை; மூன்றன் தொகை

இனி,வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், வருமொழித் தகரம் திரிந்தவிடத்து நிலைமொழியீற்று ளகரம் கெடுதலும், அல் வழிக்கண் நிலைமொழியீற்று ளகரம் டகரமாதலும், தனிக் குறிலை யடுத்த ஈற்று ளகரம் அல்வழியில் உறழாமல் இயல் பாதலும் கொள்ளப்படும்.

எ-டு : வேள் +தீமை =வேடீமை; தாள் +துணை = தாட் டுணை; கொள் +பொருள் =கொள்பொருள் - என முறையே காண்க. (நன். 229)

ளகாரஈறு புணருமாறு -

{Entry: B02__664}

ளகாரஈறு, அல்வழிக்கண் வன்கணம் வந்துழி, முள்கடிது- முட்கடிது- என்றாற் போல உறழ்ந்து புணரும்; முள்குறுமை- முட்குறுமை, கோள்குறுமை, கோட்குறுமை, வாள்கடுமை- வாட்கடுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் உறழ்ந்து புணரும்.

ஏழன் உருபின் பொருள்பட வரும் அதோள் இதோள் உதோள் எதோள் - என்பன அதோட் கொண்டான், இதோட் கொண்டான், உதோட் கொண்டான், எதோட் கொண் டான். - என ளகரம் டகரமாகத் திரிந்து புணரும். (தொ. எ. 398 நச். உரை)

வருமொழியில் தகரம் வரின் நிலைமொழியீற்று ளகரம் டகரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரியும்.

எ-டு : முள் +தீது = முட்டீது, முஃடீது (399)

நெடிலை அடுத்த ளகரஒற்று இயல்பாகவும், குறிலை அடுத்த ளகரஒற்று டகரமாகத் திரிந்தும் புணரும்.

எ-டு : கோள் + கடிது = கோள் கடிது; புள் + தேம்ப = பு ட் டேம்ப; கள் + கடிது = க ட் கடிது (400)

உதள் கடிது - என இயல்பாயும், உதணன்று - என நகரம் வருமொழி முதலில் வருவழி நிலைமொழியீற்று ளகரம் கெட்டும், உதளங்காய் - என அம்முச்சாரியை பெற்றும் புணர்தலுண்டு. உதள் - ஆண்ஆடு, ஒரு மரம். (400 உரை)

ளகரஈற்றுத் தொழிற்பெயர்கள் அல்வழியில் உகரம் பெற்றும், வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், மென்கணம் வரின் உகரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் முறையே இயல் பாகவும், தனிக்குறில் முன் ஒற்று இரட்டியும் புணரும்.

எ-டு : துள்ளுக் கடிது; துள்ளு ஞான்றது; துள்யாது; துள்ளரிது. (401 உரை)

மெலிவரின் இருவழியும் ணகரமாகும்.

எ-டு : மு ண் ஞெரிந்தது; மு ண் ஞெரி, மு ண் மாட்சி (397)

கோள் கடிது கோட் கடிது - எனத் தொழிற்பெயர்கள் உறழ்ந்து முடிவனவுமுள. வாள் கடிது வாட் கடிது - என வருவனவும் கொள்க. (401 உரை)

புள், வள்- என்ற பெயர்களும் தொழிற் பெயர் போல அல் வழிக்கண் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணம் வரின் உகரம் மாத்திரம் பெற்றும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ளகரஒற்று இரட்டுதலும் பெற்றும் புணரும்.

எ-டு : புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது; புள்ளு ஞான்றது, வள்ளு ஞான்றது; புள்யாது; புள்ளினிது. (403)

வேற்றுமைக்கண் ளகரம் டகரமாக, வன்கணம் வரின், முட் குறை- வாட்கடுமை - எனத் திரிந்து முடியும். (396)

மென்கணம் வரின் ளகரம் ணகரமாதல் மேல் கூறப்பட்டது.

தொழிற்பெயர் அல்வழிபோல வேற்றுமைக்கண்ணும், துள்ளுக்கடுமை, துள்ளுஞாற்சி, துள்ளுவலிமை, துள் யாது, துள்ளருமை - எனப் புணரும். (இடைக்கணத்து வகரம் மென்கணம் போன்றது.)

இருள் என்பது இருளத்துச் சென்றான் - இருளிற் சென்றான் - என முடியும். (402)

புள், வள்- என்பன வேற்றுமைக்கண் புள்ளுக்கடுமை, புள்ளு ஞாற்சி, வலிமை; வள்ளுக்கடுமை; வள்ளுஞாற்சி, வலிமை என வரும். (403)

ற section: 1 entries

ற, னபிறப்பு -

{Entry: B02__665}

நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தொட, டகரம் ஒலிக்கும் என்று பிராதிசாக்கியம் கூறுகிறது. தொல். அம்முயற்சியை ற் ன் - என்ற மெய்களுக்குச் சொல்லியுள்ளார். இதனால் றகரம் வடமொழியில் டகரஒலியை உடையது என்பது புலனாம்.

இக்காலத்து றகரம், இரட்டித்து வருமிடங்களில் ஒருவாறாக வும், னகரத்தொடு சேர்ந்து வருமிடங்களில் ஒருவாறாகவும், தனியே நிற்குமிடங்களில் ஒருவாறாகவும் ஒலிக்கிறது.

றகரம், டகரம் பிறக்குமிடத்தை அடுத்துக் கீழில் பிறப்பது. றகரம், தனியே வருமிடங்களில் வல்லொலியின்றி ஒலிப்ப தாயிற்று. இக்காலத்து ரகர றகர ஒலிவேறுபாடின்றி ஒலிக்கப் படுதலே பெரும்பான்மை.

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற (- நன்கு தாக்க) றன - வும், அணரி நுனிநா அண்ணம் வருட (பட்டும் படாமலும் வருமாறு தடவ) ர ழ - வும் பிறக்கும். (எ.ஆ.பக். 80, 81)

றகரத்தை ஒலிக்கும்போது போல, னகரத்தை ஒலிக்கும்போது, நாநுனி அண்ணத்தொடு மெய்யுறுதலின்று; பரந்து நிற்றலும் இன்று. றகரம் பிறக்கும் இடம் அண்பல்முதல்; னகரம் பிறக்குமிடம் அதற்குப் பின்னுள்ள அண்ணம். (எ.கு.)

ன section: 12 entries

னஃகான் றஃகான் ஆதல் -

{Entry: B02__666}

பத்து என்னும் நிலைமொழி எண்ணுப்பெயரின்முன் உயிர்முத லாகிய அகல் - உழக்கு- என்ற அளவுப்பெயர்களும் அந்தை என்ற நிறைப் பெயரும் வருவழி இடையே இன்சாரியை வரும். அதன் னகரம் றகரமாகத் திரிய, பத்து +இன் =பதின்;பதின் +அகல்=பதிறகல், பதின் +உழக்கு =பதிறுழக்கு, பதின்+ அந்தை = பதிறந்தை - என வரும். றகரத்தைப் பிறப்பிடம் நோக்கி நன்கு ஒலித்தலால் இரட்டித்தல்ஓசை ஏற்பட, பதிற்றகல்- பதிற் றுழக்கு- பதிற்றந்தை - என ஒலிக்கும். பிற்காலத்தவர் றகரத்தை நன்கு ஒலியாராய் ரகரம்போல ஒலித்தலான், ஓசை அழுத்தம் காட்ட இரட்டித்து எழுதும் நிலை ஏற்பட்டது. பொறை காபு பாகு- என்பன பிற்காலத்தில் பொற்றை காப்பு பாக்கு - என ஒற்று மிக்கு வழங்கலாயினமை நோக்கத்தகும். (எ.ஆ.பக். 99, 100)

னகரஇறுதி அல்வழிப் புணர்ச்சி -

{Entry: B02__667}

மன் சின் - ஆன் ஈன் பின் முன் - என்ற னகரஈற்று அசைச் சொற்கள் இரண்டும், ஏழாம்வேற்றுமைப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கள் நான்கும், னகர ஈற்று வினையெச்ச மும், வன்கணம் வருமிடத்து, னகரம் றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : ‘அதுமற் கொண்கன் தேரே’

‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அக .நா. 7),

ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண் டான், முற்கொண்டான்; வரிற் கொள்ளும், சொல்லிற் செய்வான் (தொ. எ. 333 நச். உரை)

ஆன்கொண்டான், ஈன்கொண்டான் - என்ற இயல்பும் கொள்க. ஊன் கொண்டான் - என இயல்பாகவே முடியும். ஆன், ஈன் பெயர் நிலையின. (333 நச். உரை)

அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின் - என ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள், வன்கணம் வருமிடத்து, னகரம் றகரமாகத் திரிந்து முடியும்.

எ-டு : அவ்வயிற் கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற் கொண்டான், எவ்வயிற் கொண்டான்.

சுட்டு வினா அடுத்த வயின் பெயர்நிலையினது. (தொ. எ. 334)

மின் பின் பன் கன் - என்பன, தொழிற்பெயர் போல உகரம் பெற்றும், வன்கணம் வரின் வலி மிக்கும், ஏனைக் கணத்து இயல்பாயும், யகரம் வருவழி உகரம் இன்றியும், உயிர் வருவழி னகரம் இரட்டியும் புணரும்.

எ-டு : மின்னுக் கடிது;மின்னு நீண்டது, வலிது; மின் யாது; மின் னரிது,

பின் பன் கன் - என்பவற்றுக்கும் இவ்வாறே முடிக்க.

(-345)

கன் என்பது வன்கணம் வரின் அகரமும் மெல்லெழுத்தும் பெறும்; ஏனைக்கணத்து அகரம் மாத்திரமே பெறும்;

யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் இரட்டுதலும் கொள்க.

எ-டு : கன்னங் கடிது; கன்ன ஞான்றது, கன்ன வலிது; கன் யாது, கன்னரிது. (-346)

னகரஈற்று இயற்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__668}

சாத்தன் கொற்றன் முதலிய இயற்பெயர் முன் தந்தை என்ற முறைப்பெயர் வருமொழியாய் வரின், தந்தை என்பதன் தகரம் கெட அஃது ‘அந்தை’ என நிற்கும். சாத்தன் முதலியவற்றில் ‘அன்’ ஈறு கெட, அவை சாத்த்- முதலியவாக நிற்கும்; பின்னர்ப் புணரும்

வருமாறு : சாத்தன் +தந்தை > சாத்த்+ அந்தை =சாத்தந்தை; கொற்றன் +தந்தை > கொற்ற் +அந்தை = கொற் றந்தை; சாத்தன் றந்தை, கொற்றன் றந்தை - என்ற இயல்பு முடியும் கொள்க. (தொ. எ. 347 நச்.)

ஆதன் பூதன் - என்பனவற்றின் முன் ‘தந்தை’ வரின், நிலை மொழிகளின் ‘தன்’ என்ற சினையும் வருமொழித் தகரமும் கெட்டு முடியும்.

வருமாறு : ஆதன்+ தந்தை > ஆ + ந்தை = ஆந்தை; பூதன்+ தந்தை > பூ + ந்தை = பூந்தை; ஆதந்தை, பூதந்தை - எனப் புணர்தலுமுண்டு. (348 உரை)

அழான் +தந்தை =அழாந்தை , புழான் +தந்தை =புழாந்தை- எனவும் வரும். (தொ. எ. 347 நச். உரை)

பெருஞ்சாத்தன் முதலிய அடையடுத்த இயற்பெயர்கள் தந்தை என்ற சொல்லோடு இயல்பாகப் புணரும்.

பெருஞ்சாத்தன் றந்தை, கொற்றங்கொற்றன் றந்தை - என வருமாறு காண்க. (349)

முதல் இயற்பெயர் தந்தை பெயராக, வருமொழி மகன் பெயராக வரின், நிலைமொழியீற்று ‘அன்’ கெட்டு அம்முச் சாரியை வந்து புணரும்.

எ-டு : கொற்றன் + கொற்றன் > கொற்ற் +அம் + கொற்றன் = கொற்றங்கொற்றன்

சாத்தன் + கொற்றன் > சாத்த் + அம் +கொற்றன் = சாத்தங் கொற்றன்

கொற்றன்+ குடி=கொற்றங்குடி, சாத்தன்+ குடி =சாத்தங் குடி - என அன் கெட்டு அம்முப் பெற்று வழங்கும் தொடர் களும் உள.

கொற்றன் +மங்கலம், சாத்தன்+ மங்கலம் - என்பன நிலை மொழியீற்று ‘அன்’ கெட்டு அம்முப் புணர்ந்து அம்மின் மகரம் கெட, கொற்றமங்கலம் சாத்தமங்கலம் - என முடிந்தன.

வேடன் + மங்கலம், வேடன் + குடி - என்பன ‘அன்’ கெட்டு அம்முப் புணர்ந்து நிலைமொழி டகர ஒற்று இரட்ட, வேட்டமங்கலம் வேட்டங்குடி - என முறையே அம்மின் மகரம் கெட்டும் வருமொழி வல்லொற்றுக்கு இனமான மெல் லெழுத்தாகத் திரிந்தும் முடிந்தன. ( 350 உரை)

தான் பேன் கோன் - என்ற இயற்பெயர்கள் வருமொழி முதற் கண் தகரம் றகரமாகத் திரியும்; பிற வன்கணம் வருமிடத்து இயல்பாகப் புணரும்.

எ-டு : தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை; தான்கொற் றன் பேன் கொற்றன் கோன் கொற்றன். (351)

னகரஈற்றுச் சாதிப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__669}

‘னகரஈற்றுப் புணர்ச்சி - காண்க.

னகரஈற்றுத் தன்மைப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__670}

னகரஈற்றுத் தன்மைப்பெயர் யான் என்பது. அஃது அல்வழிக் கண் யான் கொடியேன், யான் செய்வேன் - என்றாற் போல, வல்லினம் வரினும் இயல்பாகப் புணரும்.

வேற்றுமைப்புணர்ச்சிக்கண், உருபுபுணர்ச்சிபோல யான் என்பது என் எனத் திரிந்து என்னை என்னான் என்று உருபேற்பது போல, என் கை - என் செவி - என்றலை- என்புறம் -என வருமொழியொடு புணரும்; இயல்புகணத்தின்கண்ணும் என்ஞாண் - என்னூல் - என்மணி, என்யாழ் - என்வட்டு; என்ன(அ)டை - என்னா(ஆ)டை - எனப் புணரும்.

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், என்+புகழ்ந்து = எ ற் புகழ்ந்து, என் + பாடி = எற்பாடி - என னகரம் றகரமாகத் திரியும். (தொ.எ.352, 353 நச். உரை)

னகரஈற்றுப் படர்க்கைப்பெயர்ப் புணர்ச்சி -

{Entry: B02__671}

னகரஈற்றுப் படர்க்கைப்பெயர் அல்வழிக்கண் நாற்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.

எ-டு : தான் குறியன், தான் ஞான்றான், தான் வலியன், தானடைந்தான் (தொ. எ. 353 நச்.)

உருபுபுணர்ச்சிக்கண் தான் என்பது தன் எனக்குறுகித் தன்னை தன்னொடு - என உருபேற்றாற் போலப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் தன்கை தன்செவி தன்றலை தன்புறம், தன்ஞாண், தன்வலி, தன்ன(அ)டை- எனப் புணரும்.

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், தற்புகழ்ந்து - தற்பாடி - என னகரம் றகரமாகத் திரிந்து புணரும். (352)

னகரஈற்றுப் புணர்ச்சி -

{Entry: B02__672}

வேற்றுமைக்கண் நிலைமொழியீற்று னகரம் வருமொழி முதற்கண் வல்லினம் வரின் றகரம் ஆகும்; பிறவரின் இயல் பாகும்; அல்வழிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகும்.

எ-டு: பொன்+ கழஞ்சு=பொற்கழஞ்சு, பொன்+தகடு =பொற்றகடு: வேற்றுமைக்கண், வல்லினம் வர னகரம் றகரம் ஆதல்; பொன்ஞாற்சி, பொன்யாப்பு : மெலிஇடைவர இயல்பு ஆதல்; பொன்கடிது, ஞான்றது, யாது : அல்வழிக்கண் மூவின மெய் வரினும் னகரம் இயல்பு ஆதல்.

தனிக்குறிலைச் சாராது ஈரெழுத்து ஒருமொழி தொடர்மொழி களைச் சார்ந்து நிலைமொழியீற்றில் வரும் னகரம், வரு மொழிக்கு முதலாக வந்த நகரம் னகரமாகத் திரிந்தவிடத்துத் தான் கெடும். இருவழியும் கொள்க.

எ-டு: கோன் + நல்லன், நன்மை= கோனல்லன், கோனன்iம; அரசன்+நல்லன், நன்மை = அரசனல்லன், அரச னன்மை; செம்பொன் + நல்லன், நன்மை = செம்பொ னல்லன், செம்பொனன்மை (நன். 209, 210)

னகரஈற்றுச் சாதிப்பெயர், வல்லினம் வருமொழிமுதற்கண் வரத் திரியாது இயல்பாதலும், அகரச்சாரியை பெறுதலும் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணவாம்.

எ-டு : எயின் +குடி, சேரி, தோட்டம் பாடி = எயின்குடி, சேரி, தோட்டம், பாடி; எயினக்குடி, எயினச்சேரி, எயினத்தோட்டம், எயினப்பாடி - என வரும்.

எயினமரபு, எயினவாழ்வு, எயினவ(அ)ணி - என ஏனைக் கணத்தும் வேற்றுமைக்கண் அகரச்சாரியை கொள்க.

எயினப்பிள்ளை, எயினமன்னவன் - என அல்வழிக் கண்ணும் அகரச்சாரியைப்பேறு கொள்க. (நன். 212)

மீன் என்னும் பெயரீற்று னகரம் வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம் வருவழி றகரத்தோடு உறழும் (றகரமாகத் திரிந்தும் திரியாமலும் வரும்).

எ-டு: மீன் + கண், செவி =மீற்கண், மீன்கண்;மீற்செவி, மீன்செவி (நன். 213)

தேன் என்னும் னகரஈற்றுப்பெயர் மூவின மெய்களொடும் புணருமிடத்து இறுதி னகரம் இயல்பாதலும். மென்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக் கெடுதலும், வன்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக் கெடுமிடத்து வந்த வல்லினமோ அதன் மெல்லினமோ மிகுதலும் ஆம். இவ்விதி இருவழிக்கண்ணும் கொள்க.

அல்வழிப் புணர்ச்சி:

தேன்கடிது, தேன் ஞான்றது, தேன்யாது இயல்பு; தேன்மொழி, தேமொழி - மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு - வலிவரின் இயல்பும், வலிமெலி உறழ்வும்

வேற்றுமைப் புணர்ச்சி :

தேன்கடுமை, தேன்மாட்சி, தேன்யாப்பு - இயல்பு; தேன்மலர், தேமலர் - மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன் குடம், தேக்குடம், தேங்குடம் - வலிவரின் இயல்பும், வலி மெலி உறழ்வும் (நன். 214)

எகின் என்னும் அன்னப்பறவையை உணர்த்தும் னகர ஈற்றுப் பெயர் (அல்வழியில் இயல்பாதலே யன்றி) வேற்றுமைப் புணர்ச்சியிலும் வன்கணம் வருமிடத்தே இறுதி னகரம் இயல் பாதலும், இருவழியிலும் அகரச்சாரியை மருவ வல்லெழுத் தாவது அதற்கு இனமெல்லெழுத்தாவது மிகுதலும் ஆம்.

எ-டு : எகின்கால், சினை, தலை, புறம் - வேற்றுமையில் வலிவர இயல்பாதல்; எகின் +புள் =எகினப்புள், எகினம்புள் - அல்வழியில் அகரம் வர வலிமெலி மிகுதல்; எகின் +கால் = எகினக்கால், எகினங்கால் - வேற்றுமையில் அகரம் வர, வலிமெலி மிகுதல்.

எகினமாட்சி, எகின வாழ்க்கை, எகினவ(அ)ணி - என ஏனைய கணத்தின்கண்ணும் அகரச்சாரியைப் பேற்றினைக் கொள்க. (நன். 215)

குயின், ஊன்- என்னும் னகரஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் இயல்பாகப் புணரும்.

எ-டு : குயின்கடுமை, ஊன்சிறுமை (நன். 216)

மின் பின் பன் கன் - என்ற நான்கு சொற்களும், அல்வழி வேற்றுமை என இருவழியும், மூவின மெய்களொடும் புணரு மிடத்து, தொழிற்பெயர் போல உகரச்சாரியை பெற்றுப் புணரும். கன் என்பது உகரச்சாரியையேயன்றி அகரச்சாரியை பெற்று, வன்கணம் வருவழி வந்த வல்லெழுத்தாதல் அதன் இனமான மெல்லெழுத்தாதல் மிகப் பெறும். (பிற சொற்க ளுக்கும் வன்கணம் வருவழி சாரியைப் பேற்றொடு வலி மிகுதல் கொள்க.)

எ-டு : மின் + கடிது, நன்று, வலிது = மின்னுக் கடிது,மின்னு நன்று, மின்னு வலிது - அல்வழி; மின் + கடுமை, நன்மை, வலிமை = மின்னுக் கடுமை, மின்னுநன்மை, மின்னுவலிமை - வேற்றுமை.

இவ்வாறே பின் - முதலிய மூன்று சொற்கும் கொள்க.

கன் + தட்டு = கன்னத்தட்டு, கன்னந்தட்டு - அல்வழி (இருபெயரொட்டு); கன் + தூக்கு = கன்னத்தூக்கு, கன்னந்தூக்கு - வேற்றுமை .

(மின்- மின்னல்; பன் - ஒருபுல் ; கன் - சிறுதராசுத்தட்டு)

தன், என் - என்பவற்று ஈற்று னகரம் வருமொழி வல்லெழுத் தோடு உறழும். எ-டு : தன் + பகை =தன்பகை, தற்பகை; என்+பகை = என்பகை, எற்பகை.

‘நின்’ ஈறு இயல்பாகப் புணரும். எ-டு: நின்பகை (நன். 218)

மின்கடிது, பன்கடிது; மின்கடுமை, பன்கடுமை - என இரு வழியும் இயல்பாகப் புணர்தலும், மான்குளம்பு வான்சிறப்பு- என வேற்றுமைக்கண் இயல்பாகப் புணர்தலும், வரிற் கொள்ளும் எனச் செயின் என்னும் வாய்பாட்டு வினை யெச்சம் ஈற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலும் சிறு பான்மை கொள்ளப்படும். (சங். உரை)

னகரஈற்று வினையெச்சப் புணர்ச்சி -

{Entry: B02__673}

னகரஈற்று வினையெச்சத்தொடர் அல்வழியாயினும், வரு மொழி வன்கணம் வந்துழி வேற்றுமைத்தொடர் போல ஈற்று னகரம் றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : வரின் + கொள்ளும் = வரிற் கொள்ளும்.

(தொ. எ. 333 நச். உரை)

னகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி -

{Entry: B02__674}

னகரஈறு வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் றகரமாகத் திரிந்து புணரும்.

எ-டு : பொற்குடம், பொற்சாடி, பொற்றூதை, பொற் பானை, (தொ. எ. 332 நச்.)

குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும்.

எ-டு : குயின்குழாம், குயின்றோற்றம்

கான்கோழி, கோன்குணம், வான்கரை - எனச் சிலவும் இயல்பாகப் புணரும். (335 உரை)

எகின் என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.

எ-டு : எகினங்கோடு, எகினஞ்செதிள், எகினந்தோல், எகினம்பூ (336)

எகின் என்னும் அன்னத்தின் பெயர் அகரச்சாரியை பெற்று, வன்கணம் வரின் வல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ பெற்றும், ஏனைய கணங்கள் வரின் அகரப்பேற்றோடு இயல்பாயும் புணரும்.

எ-டு : எகினக்கால், எகினங்கால்;எகினஞாற்சி, எகின வலிமை, எகினவ (அ) டைவு; எகின் சேவல், எகினச் சேவல் - என்ற உறழ்ச்சி முடிவு முண்டு. இஃது ஆறன் தொகை. (337)

எயின் முதலிய கிளைப்பெயர்கள் எயின்குடி, எயின்பாடி- என இயல்பாகப் புணரும். சிறுபான்மை எயினக்கன்னி, எயினப் பிள்ளை - என அக்கும் வல்லெழுத்தும், எயினவாழ்வு - என அக்கும் பெற்றுப் புணரும். (338 உரை)

பார்ப்பான் + கன்னி, குமரி, சேரி, பிள்ளை - என்பன ஆகாரம் அகரமாகக் குறுகி அக்கும் வல்லெழுத்தும் பெற்றுப் பார்ப்- பனக்கன்னி பார்ப்பனக்குமரி பார்ப்பனச்சேரி பார்ப்பனப்- பிள்ளை - என முடிதலும், பார்ப்பனவாழ்வு- என அக்கு மாத்திரம் பெற்று முடிதலும் உள.

வெள்ளாளன் + குமரி, பிள்ளை, மாந்தர், வாழ்க்கை, ஒழுக்கம் - என்பன வெள்ளாண்குமரி - என்றாற்போல நிலைமொழி யீற்று ‘அன்’ கெட நின்ற ளகரம் ணகரமாக்கிப் புணர்க்கப் படும். அதுவே இடையிலுள்ள ளகரம் கெடுத்து முதல் நீட்டி வேளாண்குமரி - முதலாக வருதலுமுண்டு.

பொருநன்+வாழ்க்கை = பொருநவாழ்க்கை - எனப் புணரும்.

வேட்டுவன் +குமரி =வேட்டுவக்குமரி எனப் புணர்வது மரூஉவழக்கு. (338 உரை)

மீன் என்ற பெயர் னகரம் றகரத்தோடு உறழ்ந்து முடியப் பெறும்.

எ-டு : மீன்கண், மீற்கண்; மீன்றலை, மீற்றலை (339)

தேன் + குடம் = தேன்குடம், தேற்குடம், தேக்குடம்- என்றாற் போல, தேன் என்பது வல்லெழுத்து இயையின் இயல்பாயும், னகரம் றகரமாகத் திரிந்தும், னகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கும் புணரும். னகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிக்குத் தேங்குடம் - தேஞ்சாடி - தேந்தூதை - தேம்பானை - என முடிதலு முண்டு. (340, 341)

தேன் என்பதன் முன் மென்கணம் வரின் ஈற்று னகரம் கெட்டும் கெடாமையும் புணரும். எ-டு : தேன்ஞெரி தேஞெரி, தேன்மொழி தேமொழி (342). மேலும் தேஞ்ஞெரி, தேந்நுனி, தேம்மொழி - என னகரம் கெட்டு மெல்லெழுத்து மிகுதலு முண்டு;தேஞெரி, தேநுனி, தேமொழி - என னகரம் கெட்டு இயல்பாய் முடிதலுமுண்டு. தேன் +இறால் =தேனிறால் எனவும், தேத்திறால் எனவும் புணரும். தேன்+அடை= தேத்தடை எனவும், தேன் +ஈ=தேத்தீ எனவும் புணரும்; தேனடை, தேனீ - என்ற இயல்பும் ஆம். (343, 344 உரை)

மின் பின் பன் கன் - என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் தொழிற் பெயர் போல, வன்கணம் வரின் உகரமும் வல் லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும்,உயிர்வரின் தனிக்குறில்முன் ஒற்றாகிய னகரம் இரட்டுதலும் பெற்றுப் புணரும்.

எ-டு : மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை கன்னுக்கடுமை; மின்னுஞெகிழ்ச்சி மின்னுஞாற்சி; மின்னுவலிமை; மின்யாப்பு; மின்னருமை. பிறவும் முடிக்க.

மின் முதலியன மின்னுதல் முதலிய தொழில்களையும் மின்னல் முதலியவற்றையும் உணர்த்தித் தொழிற்பெயராகவும் பொருட் பெயராகவும் வரும். (345)

கன் என்பது அகரச்சாரியை பெற்றுக் கன்னக்குடம்- கன்ன ஞாற்சி - கன்னவலிமை - எனவும், கன்னக்கடுமை கன்னங் கடுமை - எனவும் புணர்தலுமுண்டு. (346)

சாத்தன் +தந்தை =சாத்தந்தை, ஆதன் +தந்தை =ஆந்தை, பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை, கொற்றன் + கொற்றன் = கொற்றங்கொற்றன், கொற்றன் + குடி = கொற்றங் குடி, கொற்றன் +மங்கலம் = கொற்றமங்கலம், தான் - பேன்- கோன்+ தந்தை= தான்றந்தை - பேன்றந்தை - கோன்றந்தை - என முடியுமாறு கொள்க. (இவை இவ்வீற்றெழுத்துப் பற்றி முன்னர்ப் பிறவிடங்களில் முடிக்கப்பட்டுள. ஆண்டு நோக்குக.) (347, 351)

அழன் + குடம் = அழக்குடம் - என ஈறு கெட்டு வல்லெழுத்து மிக்கது. வன்கணம் வரின் னகரஈறு கெட வல்லெழுத்து மிகும் என்க. (354)

முன் +இல் =முன்றில் - என இடையே றகரமெய் பெற்றுப் புணரும். (355)

‘பொன்’ என்பது செய்யுளில் ‘பொலம்’ என்றாகும். பொலம் என்பதன் ஈற்று மகரம் வன்கணம் வரின் இனமெல்லெழுத் தாகும்; மென்கணம் வருமிடத்துக் கெடும்.

எ-டு : பொலங்கலம், பொலஞ்சாடி, பொலந்தூதை, பொலம்படை, பொல நறுந்தெரியல், பொலமலர். (356 உரை)

னகரஈற்றுள் அல்வழிக்கண் திரிவன -

{Entry: B02__675}

மன் சின் - என்ற அசைச்சொற்களும், ஆன் ஈன் பின் முன் - என்ற ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச் சொற்களும், வினையெச்சங்களும் னகரம் றகரமாகத் திரியும். அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின்- என்ற ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்களின் ஈற்று னகரமும் றகரமாகத் திரிந்து வருமொழியொடு புணரும். ஆன் முதலியன பெயர்த்தன்மைய. (தொ. எ.333, 334 நச்.)

எகின் + சேவல் = எகினச் சேவல் - என (இரு பெயரொட்டு)ப் பண்புத்தொகை அகரமும் வல்லெழுத்தும் பெறும். - 337

னகரம் மகரத்தொடு மயங்கும் நிலை -

{Entry: B02__676}

பண்டைக் காலத்தில்அஃறிணையில் தொடர்மொழிப் பெயர்கள் பல னகரஈற்றவாய் இருந்தன. பின்னர் அவற்றை மகரஈறாக வழங்கலாயினர். அவ்வாறு மகரஈறாகக் கொள்ளா மல் விடப்பட்ட பெயர்கள் ஒன்பதே. அவை எகின் செகின் விழன் பயின் குயின் அழன் புழன் கடான் வயான் - என்ப. பலியன் வலியன் புலான் கயான் அலவன் கலவன் கலுழன் மறையன் செகிலன் - முதலியனவும் மயங்கப்பெறா என்பர் மயிலைநாதர். (நன். 121)

“ஒன்றன்பால்பெயர் விகுதியாகக் காண்கின்ற ‘அம்’ பழங் காலத்தில் ‘அந்’ என்றிருந்தது. பின் நகரம் அநுஸ்வாரமாய் மாறிப் போயது. நகரத்துக்கு அநுஸ்வார உச்சாரணம் நிகழக் கூடியதே.

தாந் + தாந் = தா0ஸ்தாந் ; ரம் + ஸ்யதே = ரஸ்யதே;

மந் + ஸ்யதே = ம0ஸ்யதே.

“வடமொழியிற்போல மலையாளத்திலும் ‘அந்’ விகுதி ‘அம்’ என்றாகியது என்று கொள்வதே அமைதி. தமிழிலும் கடம் பலம்- முதலிய சொற்கள் கடன் பலன் - முதலியனவாக உலக வழக்கில் காணப்படுகின்றன. பவணந்தி ஒன்றன்பால் பெயர் விகுதிகளில் அம் என்றும், அன் என்றும் விகுதி வரலாம் என்று விதித்துள்ளார். (எ-டு: நீத்தம், நோக்கம்; வலியன், கடுவன்)

“பழங்காலத்தில் அஃறிணையிலும் அந்(அன்) என்பதுதான் விகுதியாக இருந்தது. கிரமமாக ஆண்பாலினின்று வேற்றுமை தெரிவிக்கவேண்டி நகரத்தை அநுஸ்வாரமாக மாற்றி ‘அம்’ என்றாக்கினர். கடன் பலன் முதலிய சொற்கள் பழைய வழக் காற்றில் எஞ்சினவாகும் - என்று ஊகித்தற்கு நல்ல வகை உண்டு” - என்பது கேரள பாணினீயம்.

கன்னடத்திலும் மரன் மரம் - என்ற இருவடிவம் உண்டு. தெலுங்கில் ம்ரான் (மரன்) கொலன் (குளன்) - என னகரம் ஒன்றே உள்ளது. இவற்றால் னகரமே மகரமாக, குளன் ‘குளம்’ என்று மாறியது புலப்படும். இலக்கண விளக்கமும் தொல் காப்பியத்தை ஒட்டி, னகரத்திற்கு மகரம் போலியாக வரும் என்கிறது. னகரத்தொடு மகரம் மயங்காத சொற்கள் ஒன்பது எவை என்பது புலப்படவில்லை. அஃறிணையிலும் ஆண்பாற் பெயர்களாகக் கூடிய கடுவன் அலவன் வலியன் கள்வன்- போன்ற சொற்கள் ஒன்பது இருக்கலாம். இவை ஆண்பாற் பெயர்கள் ஆதலின் னகரஈறாகவே இருத்தல் அமையும் என விடப்பட்டனபோலும். (எ.ஆ.பக். 73-75)

ஆசிரியர் காலத்தே னகரத்தொடர்மொழி மகரஈறாக மிகுதி யும் மயங்கிற்று. ஈரெழுத்தொருமொழியில் அம்மயக்கம் இல்லை. மகரத்தொடர்மொழி னகரத்தொடர்மொழியாக மயங்காது. (எ.கு.பக். 83)

னகர மகரப் போலியுட்படாத சொற்கள் -

{Entry: B02__677}

பொதுவாக மரன் நிலன் முகன் - போல்வன மரம் நிலம் முகம் - முதலாக னகரத் துக்கு மகரம் போலியாக வரும்.

எகின் செகின் விழன் பயின் குயின் அழன் புழன் கடான் வயான் - என்பன ஒன்பதும் னகரம் மகரமாகத் திரியாதன. வட்டம் குட்டம் ஓடம் பாடம் - போன்ற மகர ஈ றுகளும் னகரமாகத் திரியாதன. (தொ. எ. 82 நச் உரை)

குறிலிணை ஒற்றாகிய னகரமே மகரத்தொடு மயங்கும் என்பது ஏற்புழிக்கோடலான் பெறப்படும். (இ. வி. சூ. 30; ப. 65)

163

164

173

172

165

166

குறில்

நெடில்

ஐகாரக்

குறுக்கம்

ஒளகாரக்

குறுக்கம்

ஆய்தம்

மெய்

குற்றியலிகரம்

குற்றியலுகரம்

ஆய்தக்குறுக்கம்

மகரக்குறுக்கம்

உயிரளபெடை

ஒற்றளபெடை

171

170

167