Section C03 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 5 alphabetical subsections

  1. அ section: 191 entries
  2. ஆ section: 92 entries
  3. இ section: 172 entries
  4. ஈ section: 14 entries
  5. உ section: 137 entries

C03

[Version 2l (transitory): latest modification at 14:16 on 21/04/2017, Hamburg]

சொல்-1 (606 entries)

[TIPA file C03 (and pages 1-256 in volume printed in 2004)]

அ section: 191 entries

அஃறிணை -

{Entry: C03__001}

உலகப் பொருள்களின் இருவகைப் பகுப்புக்களில் அஃறிணை ஒன்றாம். திணை ஒழுக்கம் என்னும் பொருளது. உயர் திணைக்கு மறுதலை அஃறிணையாம். இதனை ‘இழிதிணை’ என்றும் கூறுப. (நன். 245)

அஃறிணை என்ற பண்புத்தொகைநிலைத்தொடர், உயர்வு அல்லாததாகிய ஒழுக்கம் என்று பொருள்பட்டு, மக்கள் அல்லாத ஏனைய உயிருடைய பொருள் - உயிரிலவாகிய பொருள் - ஆகிய இருதிறத்தவற்றையும் குறிக்கும். (தொ. சொ. 1 நச். உரை)

சிலசொற்கள் பொருளான் உயர்திணையவற்றைக் குறிப்பினும், சொல்லளவில் இருதிணைக்கும் பொதுவாய்க் குடிமை நன்று - குடிமை நல்லன், அரசு நன்று - அரசு நல்லன் - என இரு திணை முடிபும் பெறுவதுண்டு. (தொ. சொ. 57 நச்.)

சில சொற்கள் பொருளான் உயர்திணையவாயினும் சொல் லான் அஃறிணையாய் அஃறிணைமுடிபே கொண்டு, காலம் ஆயிற்று - உலகு நொந்தது - பூதம் புடைத்தது - என்றாற்போல முடிவு பெறுவது முண்டு. (தொ. சொ. 58 நச்.)

உயர்வு அல்லாத பொருளாகிய உயிருடையனவும் உயிரில்லன வும் அஃறிணையாம். திணை - பொருள். அல்பொருள் என்னாது அஃறிணை என்றது, அவ்வாறு ஆளுதல்வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறியாம். (தொ. சொ. 1 தெய். உரை)

அல்லாததாகிய திணை எனக் குணப்பண்பு பற்றி வந்த பண்புத்தொகை. ‘உயர்திணை அல்லாதது ஆகியது’ என உயர்திணை என்னும் சொல் வருவித்து முடிக்க. உயர்திணை என்பதற்கு ஏற்ப, ‘இழிதிணை’ என்று (என்பது) இல் என்னும் பொருள்நோக்கம் என உணர்க. (தொ. சொ. 1 கல். உரை)

மானிடம் என்பதும், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி கதிர் மதி திரு - முதலிய சொற்களும் பொருளான் உயர்திணையாயினும் சொல்லான் அஃறிணை முடிபு பெறும். (நன். 260 மயிலை.)

‘திணை நிலன் குலம் ஒழுக்கம்’ என்ப ஆதலின், திணை என்னும் பலபொருள் ஒருசொல் ஈண்டுக் குலத்தின்மேல் நின்றது. உயர்திணை அல்லாத திணை அஃறிணை எனப் பட்டது. அஃறிணை என்பது பண்புத்தொகை.(நன். 261 சங்கர.)

அஃறிணை இயற்பெயர் -

{Entry: C03__002}

அஃறிணைப்பொருள்மேல் விரவிவரும் இயற்பெயர் பொரு ளும் உறுப்பும் பண்பும் தொழிலும் இடமும் காலமும் பற்றி வரும். அவை ஒருமைக்கும் பன்மைக்கும் பொது; வினை யாலேயே பால் காட்டும்.

எ-டு : ஆ, தெங்கு - பொருள்; இலை, பூ - உறுப்பு ; கருமை, வட்டம் - பண்பு; உண்டல், ஓடல் - தொழில்; அகம், புறம் - இடம் ; யாண்டு, திங்கள் - காலம். ஆ வந்தது என்றவழி ஒருமை; ஆ வந்தன என்றவழிப் பன்மை. (தொ. சொ. 166 தெய். உரை)

தொல்காப்பியனார் ‘அஃறிணை இயற்பெயர்’ என்று பெயரிட்டு வழங்கியதனை நன்னூலார் பால் பகா அஃறிணைப் பெயர் என்பர். ‘ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே’ என்ப தற்கு இலக்கணக் கொத்து இதனைக் காட்டுகிறது. (இ. கொ. 6, 130.)

அஃறிணை இயற்பெயர் பால் விளக்குமாறு -

{Entry: C03__003}

அஃறிணை இயற்பெயராவன அஃறிணை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவான பெயர்களாம். அவை ‘கள்’ விகுதி சேர்ந்தவிடத்துப் பன்மைக்கு உரியவாய்ப் பலவின்பாலை விளக்கும். தனித்து நின்றவழி அப்பெயர்கள் ஒருமை சுட்டுவன என்றோ, பன்மை சுட்டுவன என்றோ வரையறுத்துக் கூற இயலாது. முடிக்கும் சொல் சிறப்பு வினையாகவோ சிறப்புப் பெயராகவோ அமையும்வழியே அவற்றின் பால் உணரப் படும்.

எ-டு : ஆ, குதிரை - ஒருமைக்கும் பன்மைக்கும் பொது.

ஆக்கள், குதிரைகள் - பலவின்பாற் பெயர்

ஆ வந்தது, ஆ அது; சிறப்பு வினையும் பெயரும்

குதிரை வந்தது, குதிரை } அவை முடிக்க வந்தன

அவை

ஒருமைக்கோ பன்மைக்கோ சிறப்பாக உரிய வினைகளும் பெயர்களும் சிறப்புவினையும் பெயருமாம். (தொ. சொ. 169, 171 சேனா. உரை)

[ஆ வரும் என்புழி, வரும் என்பது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவான வினை; இவ்வினைகொண்டு ஆ ஒருமை யென்றோ பன்மையென்றோ உணர முடியாது. ஆ வேறு, ஆ இல்லை - என்பனவும் அது.]

ஆவின் கோடு, குதிரையின் குளம்பு - என்னும் முடிக்கும் பெயர்களும் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலின், ஆ-குதிரை - என்பனவற்றை ஒருமையென்றோ பன்மையென்றோ இத் தொடர்களில், வரையறுத்துக் கூறல் முடியாது.

(தொ. சொ. 169, 171 சேனா.உரை)

அஃறிணை உம்மைத்தொகை இயல்பு -

{Entry: C03__004}

அஃறிணை ஒருமை உம்மைத்தொகைகளும், பொது ஒருமை உம்மைத்தொகைகளும் தத்தம் பன்மையீற்றனவேயாம் என்னும் நியதிய அல்ல என்றாராயிற்று. அவை வருமாறு:

உண்மையின்மைகள் - உண்மையின்மை, நன்மைதீமைகள் - நன்மைதீமை, இராப்பகல்கள் - இராப்பகல், நிலம்நீர்தீக் காற்றாகாயங்கள் - நிலம்நீர்தீக்காற்றாகாயம் என்பனவும்; தந்தை தாயர் - தந்தைதாய்கள் - தந்தைதாய், சாத்தன் சாத்தியர் - சாத்தன்சாத்திகள் - சாத்தன்சாத்தி - என்பனவும் பன்மை யீற்றானும் இயல்பாகிய ஒருமையீற்றானும் வந்தன. (நன். 372 சங்.)

அஃறிணை ஒப்பினான் ஆகிய பெயர் -

{Entry: C03__005}

வினைச்சொற்களை ஈறு பற்றியும் வாய்பாடு பற்றியும் விளக்கும் ஆசிரியர் தொல்காப்பியனார், பெயர்ச்சொற்களை எடுத்தோதியே விளக்கும் இயல்பினர். அஃறிணைப் பெயர்கள் இவையிவை என்று எடுத்து விளக்குறும்போது ஒப்பினான் ஆகிய பெயர்வகையைக் குறிப்பிடுகிறார்.

ஒப்பினான் ஆகிய பெயர் - உவமத்தினான் பெற்ற பெயர்ச் சொல். எ-டு : பொன்னன்னது, பொன்னன்ன (தொ. சொ. 170 நச். உரை) பொன்போல்வது, பொன்னனையது, யானைப் போலி (தொ. சொ. 164 தெய். உரை)

அஃறிணைஒருமை துவ்விகுதி காலஎழுத்துப் பெறுதல், அஃறிணைஒருமை றுவ்விகுதி காலஎழுத்துப் பெறுதல் -

{Entry: C03__006}

‘அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று’க் காண்க.

அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று -

{Entry: C03__007}

அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று து று டு என்னும் ஈற்றான் வரும். அவற்றுள், து முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; று இறந்த காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; டு வினைக்குறிப்பு ஒன்றற்கே வரும்.

எ-டு : நடந்தது - நடவாநின்றது - நடப்பது, அணித்து; கூயிற்று, அற்று ; பொருட்டு - குண்டுகட்டு.

தகரஉகரம் இறந்தகாலத்து வருங்கால், புக்கது - உண்டது - வந்தது - சென்றது - போயது - உரிஞியது - எனக் கடதற வும் யகரமும் ஆகிய உயிர்மெய்ப் பின் வரும். போனது என்பது சிதைவுச்சொல். நிகழ்காலத்தின்கண், நடவாநின்றது - நடக் கின்றது - உண்ணாநின்றது - உண்கின்றது - என நில் கின்று என்பவற்றோடு அகரம் பெற்று வரும். எதிர்காலத்தின்கண், உண்பது - செல்வது - எனப் பகரமும் வகரமும் பெற்று வரும்.

றகரஉகரம், புக்கன்று உண்டன்று வந்தன்று சென்றன்று - எனக் கடதற என்பனவற்றின் முன் ‘அன்’ பெற்று வரும்; கூயின்று, கூயிற்று - போயின்று, போயிற்று - என ஏனையெழுத்தின் முன் ‘இன்’ பெற்று வரும். வந்தின்று என்பது எதிர்மறை வினை.

டகரஉகரம், குறுந்தாட்டு - குண்டுகட்டு - என வரும்.

(தொ. சொ. 217 சேனா. உரை)

அஃறிணைக்கண் ஆண்பெண் பாகுபாடின்மை -

{Entry: C03__008}

‘அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை’ என்பது சூத்திரம். ஆண் பெண் என்ற விகற்பம் அஃறிணைப் பெயர்க்கண் அன்றி அவ்வினைக்கண் இன்மையின் ‘ஆண்’ என்றமையான் உயர்திணை என்பதும் ‘பால்’ என்றமையான் முற்று என்ப தும், மேலைச் சூத்திரத்து ‘முற்று வினைப்பதம் ஒன்றே’ என விதந்தாற்போல இதனுள் விதவாமையின், இருவகை முற்றிற்கும் பொது என்பதும் பெற்றாம். (நன். 325 சங்.)

அஃறிணைக்கண் ஒன்றன்பாலே கொண்டமை -

{Entry: C03__009}

அஃறிணைக்கண் சேவல் என்றல் தொடக்கத்து ஆண்பாலும் பெடை என்றல் தொடக்கத்துப் பெண்பாலும் உளவேனும், அவ்வாண்பாலும் பெண்பாலும் உயிருள்ளனவற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின் அப்பகுப்பு ஒழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ‘ஒன்று’ எனப்பட்டது. (நன். 263. சங்.)

அஃறிணைக்கண் தன்மைவினை இன்றாதல் -

{Entry: C03__010}

கிளியும் பூவையும் தன்வினையான் உரைக்கும் ஆதலின், அஃறிணைக்கண் தன்மைவினை இன்று என்பது என்னை யெனின், கிளியும் பூவையும் ஆகிய சாதியெல்லாம் உரையா டும் என்னும் வழக்கு இன்மையானும், அவ்வகை உரைக்குங் கால் ஒருவன் உரைத்ததைக்கொண்டு உரைக்கும் ஆகலானும், ஒருவன் பாடின பாட்டை நரப்புக்கருவியின் கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டும் ஆகலானும், அவ்வாறு வருவன மக்கள்வினை ஆகலான் தன்மைவினை இன்று என்பதே தொல்காப்பிய முடிபு. (தொ. சொ. 210 தெய். உரை)

அஃறிணைக் குறிப்புமுற்று -

{Entry: C03__011}

இன்று இல உடைய அன்று உடைத்து அல்ல உளது உண்டு உள - என்னும் சொற்களும், பண்புகொள் கிளவி - பண்பி னாகிய சினைமுதற் கிளவி - ஒப்பொடு வரூஉம் கிளவி - முதலி யனவும் அஃறிணைக் குறிப்புமுற்றுக்களாம்.

உண்டு என்பது உண்மையையும் பண்பையும் குறிப்பையும் உணர்த்தும்.

எ-டு : ஆ உண்டு: உண்மைத் தன்மை. இது ‘பொருண்மை சுட்டல்’ எனப்படும்.

உயிருக்கு உணர்தல் உண்டு: பண்பு

இக்குதிரைக்கு இக்காலம் நடை உண்டு: குறிப்பு

உண்டு என்பதன் எதிர்மறையாகிய இன்று என்பது பொய்ம் மையையும் இன்மைப்பண்பினையும் இன்மைக் குறிப்பையும் உணர்த்தும்.

எ-டு : முயற்குக் கோடு இன்று: பொய்ம்மை

இக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று : பண்பு

இக்குதிரைக்கு ஈண்டு நடை இன்று : குறிப்பு

உடைத்து, உடைய என்பன பெரும்பான்மையும் உறுப்பின் கிழமையும் பிறிதின்கிழமையும் பற்றி வரும்.

எ-டு : யானை கோடு உடைத்து: உறுப்பின் கிழமை - பண்பு; மேரு சேர் காகம் பொன்னிறம் உடைத்து: குறிப்பு (பிறிதின்கிழமை); குருதி படிந்துண்ட காகம் குக்கிற் புறம் உடைத்து, உடைய: (களவழி.5); (பிறிதின் கிழமை); ‘அறிந்த மாக்கட்டு’ (அகநா. 15), ‘குறை கூறும் செம்மற்று’ (கலி.40), உயர்ந்ததாதல் மேற்று, வைகற்று, ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா. 173) - இவை பிறிதின் கிழமையாகிய உடைமைப்பொருள் பட வந்தன.

வடாஅது, தெனாஅது - ஏழன் பொருள்பட வந்தன.

மூவாட்டையது, செலவிற்று என்பன காலமும் தொழிலும் பற்றி வந்தன.

பண்புகொள் கிளவி - கரிது, கரிய முதலியன.

பண்பினாகிய சினைமுதற்கிளவி - வெண்கோட்டது, வெண் கோட்டன; நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய.

ஒப்பொடு வரூஉம் கிளவி - பொன்னன்னது, பொன்னன்ன

இவையன்றி, நன்று தீது நல்ல தீய முதலியனவும் கொள்ளப் படும். (‘எவன்’ என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவாய குறிப்பு வினைமுற்று.) (தொ. சொல். 222 நச். உரை.)

இன்று என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடின்று என்பது. இல என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடில என்பது. கோட்டினது இன்மை முதற்கு ஏற்றிக் கூறும்வழி இவ்வாறாம். இனி அக்கோடுதனக்கே இன்மை கூறும்வழி இவ்வெருத்திற்குக் கோடின்று - என ஒரு பொருள்முதல் கூறி-யானும், இவ்விடத்துக் கோடின்று - என ஓரிடம் கூறியானும், இக்காலத்துக் கோடின்று என ஒரு காலம் கூறியானும் வரும். (தொல். சொல். 222 கல். உரை)

அஃறிணைச் சொல் -

{Entry: C03__012}

அஃறிணை உயிருடையதும் உயிரில்லதும் என இரண்டாம். அவற்றுள் உயிருடையது ஆணும் பெண்ணும், ஆண்சிலவும் பெண்சிலவும், ஆண்பன்மையும் பெண்பன்மையும், அவ் விரண்டும் தொக்க சிலவும், அவ்விரண்டும் தொக்க பலவும், உயிரில்லது ஒருமையும் சிலவும் பலவும் - என இவ்வாற்றான் பல பகுதிப்படுமேனும், சொல்வகை நோக்க இரண்டல்லது இன்மையின் இரண்டே ஆயின என்பது. (தொ. சொ. 4 கல். உரை)

அஃறிணை : தொகையிலக்கணம் -

{Entry: C03__013}

உயர்திணை அல்லாதது ஆகிய திணை அஃறிணை, உய ரொழுக்கம் அல்லதாகிய ஒழுக்கம் எனப் பண்புத்தொகை. அஃது ஆகுபெயரான் அஃறிணைப் பொருளை உணர்த்திற்று. (தொ. சொ. 1 நச். உரை)

அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று -

{Entry: C03__014}

அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று அ ஆ வ - என்னும் விகுதிகளான் அமையும். அகரம் மூன்று காலமும் பற்றி வரும். ஆகாரம் எதிர்மறைவினையாய் மூன்று காலத்துக்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும். வகரம் தனித்தும் உகரம் பெற்றும் வரும்.

அகரம் இறந்தகாலம் பற்றி வருங்கால், க ட த ற என்னும் நான்கன் முன்னும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; ஏனை யெழுத்தின் முன் ரகார ழகாரம் ஒழித்து ‘இன்’ பெற்று வரும்; நிகழ்காலத்தில், நில் - கின்று - என்பனவற்றோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; எதிர்காலத்தில் பகரத்தொடும் வகரத்தொடும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்.

எ-டு : தொக்கன, தொக்க ; உண்டன, உண்ட ; வந்தன, வந்த; சென்றன, சென்ற - எனவும், போயின , போய - என வும், உண்ணாநின்றன, உண்ணாநின்ற; உண்கின்றன, உண்கின்ற - எனவும், உண்பன, உண்ப ; வருவன, வருவ - எனவும் வரும்.

உரிஞுவன, உரிஞுவ - என உகரத்தோடு ஏனை எழுத்துப்பேறும் ஏற்றவழிக் கொள்ளப்படும். வருவ, செல்வ - என்பன அகர ஈறு ஆதலும் வகர ஈறாதலும் உடைய.

ஆகாரம் காலஎழுத்துப் பெறாது உண்ணா தின்னா - என வரும். வகரம், உண்குவ தின்குவ - என எதிர்காலத்துக்கு உரித்தாய்க் குகரம் அடுத்தும், ஓடுவ பாடுவ - எனக் குகரம் அடாதும் வரும். உரிஞுவ திருமுவ - என உகரம் பெறுதலும் ஏற்புழிக் கொள்ளப்படும். (தொ. சொ. 216 சேனா. உரை)

அஃறிணைப் பால் பகுப்பு -

{Entry: C03__015}

அஃறிணைப் பெயர்க்கண் ஆண்பால் பெண்பால் பகுப்பு உண்டு. ஆண்பாலைத் தெரிவிக்கும் சேவல் ஏற்றை முதலிய சொற்களும், பெண்பாலைத் தெரிவிக்கும் பேடை பெடை முதலிய சொற்களும் அத்திணையில் உள. ஆயின், அஃறிணை வினைமுற்றின்கண் ஆண்பால்ஈறு பெண்பால்ஈறு என்பன தனித்தனியே இல்லை. ஒன்றன்பால் என்னும் ஒருபகுப்பினுள் ளேயே எல்லாம் அடங்கி விடும். ஆதலின், அஃறிணை ஆணொ ருமை பெண்ணொருமை என்ற இரண் டனையும் அடக்கும் ஒன்றன்பால், ஆண்பன்மை பெண்பன்மை என்ற இரண்டனை யும் அடக்கும் பலவின்பால், என்னும் இரண்டு பாற்பகுப்புக் களே அஃறிணை வினையை யொட்டி அமைந்துள.

“அஃறிணைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் உயிருள்ளன வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின், எல்லாவற்றிற்கும் பொருந்த, அவ்வாண் பெண் பகுப்பினை ஒழித்து, ஒன்று எனப்பட்டது என்க.” (நன். 263. சங்.)

அஃறிணைப் பிரிப்பு -

{Entry: C03__016}

அஃறிணையை ஒன்று பல என்று பிரித்துக் கூறல்.

எ-டு : ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்?’ (தொ. சொ. 24 இள. உரை)

ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணை இயற் பெயராகிய பொதுச்சொல் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப் பட்டது.

எ-டு : ஒன்றோ பலவோ என்று ஐயம் ஏற்பட்டவழி, ஒன்று கொலோ பலகொலோ செய்புக்க பெற்றம்’ என வினவுதல். பெற்றம் : அஃறிணை இயற்பெயர்.

(தொ. சொ. 24 நச். உரை)

ஒருமையும் பன்மையும் வினையாற் பிரிக்கப்படுதலின், ஆகுபெயரான் அஃறிணை இயற்பெயர் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப்பட்டது. (தொ. சொ. 24 கல். உரை)

அஃறிணைப் பிரிப்பு என்றதனான், பொதுமை (பன்மை) யின் பிரிவது ஒருமையாதலின் ஒருமைச்சொல்லால் சொல்லுதல்.

எ-டு : குற்றியோ மகனோ தோன்றுகின்ற அது?

(தொ. சொ. 24 தெய். உரை)

அஃறிணைப் பெயர்கள் -

{Entry: C03__017}

பெயர்களை ஈறு பற்றிப் பகுத்தல் இயலாமையின், அவற்றை எடுத்தோதியே குறிப்பிடுதல் தொல்காப்பிய மரபாகும்.

அது இது உது, அஃது இஃது உஃது, அவை இவை உவை, அவ் இவ் உவ், யாது யா யாவை, பல்ல பல சில உள்ள இல்ல, வினைப்பெயர், பண்புகொள் பெயர், இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப்பெயர், ஒப்பினாகிய பெயர் - என்பனவும்

பிறிது பிற, மற்றையது மற்றையன, பல்லவை சில்லவை, உள்ளது இல்லது, அன்னது அன்ன - போல்வன பிறவும்,

அஃறிணைப் பொருள்கள் பலவற்றின் இயற்பெயர்களும் அஃறிணைப் பெயர்களாம்.

இவற்றுள் அது என்பது முதல் இல்ல என்பது ஈறாக உள்ளனவும், பிறிது என்பது முதல் அன்ன ஈறாக உள்ளனவும் ஒருமை பன்மை காட்டுவன. இயற்பெயர்கள் ஒருமைபன்மை இரண்டற்கும் பொது. இவை கொண்டுமுடியும் வினை களைக் கொண்டே இவற்றின் பால் உணரப்படும். (தொ. சொ. 169 - 172.நச்.)

சுட்டு முதலாகிய உகர ஐகார ஈற்றுப் பெயரும், எண்ணின் பெயரும், உவமைப் பெயரும், சாதிப் பெயரும், வினாப் பெயரும், உறுப்பின் பெயரும் அஃறிணைப்பெயராம். அவை வருமாறு:

அது இது உது, அவை இவை உவை - சுட்டுப்பெயர்.

ஒன்று, இரண்டு, மூன்று - எண்ணின் பெயர்.

பொன்னன்னது, பொன்னன்னவை - உவமைப்பெயர்.

நாய், நரி, புல்வாய் - சாதிப் பெயர்.

எது எவை, யாது யாவை - வினாப் பெயர்.

பெருங்கோட்டது, பெருங்கோட்டவை - உறுப்பின் பெயர்.

இவை அஃறிணைப் படர்க்கைப் பெயராமாறு அடைவே கண்டுகொள்க. (நேமி. பெயர். 4 உரை)

அஃறிணைப்பெயர் கள்ளொடு சிவணுதல் -

{Entry: C03__018}

அஃறிணை இயற்பெயர்கள் ஒருமைக்கும் பன்மைக்கும் பொது ஆவன. அவை கள் விகுதியொடு கூடியவழியே பன்மைப்பால் உணர்த்துவன.

எ-டு : ஆக்கள், குதிரைகள்.

‘கற்பனகள்’ (சீவக. 1795) என்ற சொல்லில் ‘கற்பன’ என்பதே பலவின்பாலை உணர்த்துதலின், ஆண்டுக் கள்ஈறு இசை நிறைத்து நின்றதாம். (இதனைப் பிற்காலத்தார் விகுதிமேல் விகுதி என்ப.)

வேந்தர்கள் (யா. க. 67 உரை), பிறந்தவர்கள் (சீவக. 2622), எங்கள் (சீவக. 1793) எனக் ‘கள்’ உயர்திணைக்கண்ணும் இசை நிறைத்து நின்றவாறு. (தொ. சொ. 171 நச். உரை.)

அஃறிணைப்பெயர் விளி ஏற்றல் -

{Entry: C03__019}

அஃறிணைப்பெயர்கள் உயிரீற்றனவாயினும் புள்ளியீற்றன வாயினும் விளியேற்குமிடத்து ஏகாரம் பெற்று விளியேற்றலே பெரும்பான்மை.

எ-டு : கிளி - கிளியே ; மரம் - மரமே - ஏகாரம் பெற்று விளியேற்றன. முயல் - முயால்; நாரை- நாராய் - சிறுபான்மை பிறவாற்றான் விளியேற்றன

‘நெஞ்சம்! வருந்தினை’

‘வெண்குருகு! கேண்மதி’ சிறுபான்மை அண்மைக்கண் இயல்பாய் விளியேற்றன. (தொ. சொ. 153 நச். உரை)

அஃறிணைப்பெயர் விளிநிலை பெறூஉம் காலம் -

{Entry: C03__020}

அஃறிணைப் பொருள்களில், பழக்கப்பட்ட விலங்குகளும் பறவைகளும் தவிர ஏனைய விளித்தலை உணராதன. ஆயின் புனைந்துரை கலந்த செய்யுட்கண்,

‘முன்னிலை யாக்கலும் சொல்வழிப் படுத்தலும்’ (தொ. பொ. 101)

வேண்டுமிடத்தேயே அஃறிணைப் பொருள்கள் விளிநிலை பெறும். (‘தும்பி!....... கண்டது மொழிமோ’ குறுந். 2) (தொ. சொ. 153 நச். உரை)

அஃறிணைப்பெயரில் சாதிஒருமை, சாதிப்பன்மை -

{Entry: C03__021}

இனமுடைய பலபொருள்களைச் சாதி என்பர். அத்தகைய பல பொருள்களையும் சுட்டும் வகையில் ஒருமையில் வரும் சொல் சாதி ஒருமை (சாதி ஏகவசனம்) எனப்படும். இஃது ஈறு தோன் றியதும், தோன்றாததும் என இருவகைத்து. ‘நூல்எனப் படுவ து நுவலுங் காலை’ (தொ. பொ. 478), ‘உலகத்தார் உண்டு என்ப து ’ (குறள் 850) என்பன போன்றவை ஈறு தோன்றிய சாதி ஒருமை. ‘ குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (குறள் 29) ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ’ (குறள் 43) என்பன போன்றவை ஈறு தோன்றாத சாதி ஒருமை. இவை வருமொழி நோக்காமலேயே தமக்குரிய ஒருமைப் பாலை விட்டுப் பன்மைப்பாலையே விளக்குதலின், அஃறிணைக் கண் சாதி யொருமை ஆயின.

‘எண்என்ப ஏனை எழுத்துஎன்ப’ (குறள் 392) என்றாற் போல்வன அஃறிணைப் பெயரில் சாதிப்பன்மை. (இ. கொ. 130, பி. வி. 50)

‘அஃறிணை மருங்கினும் அறையப் படுமே’ -

{Entry: C03__022}

கேளாதவற்றைக் கேட்குந போலவும், பேசாதனவற்றைப் பேசுவன போலவும், நடவாதனவற்றை நடப்பன போலவும், இத்தொழில்கள் அல்லன பிற செய்யாதனவற்றைச் செய்வன போலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும். இவையெல் லாம் மரபு வழுவமைதியாம்.

எ-டு : ‘நன்னீரை வாழி அனிச்சம்!’ (குறள் 1111)

‘இரவெல்லாம் நின்றாயால் ஈர்ங்கதிர்த் திங்காள்!’

‘பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்’ (குறள் 709)

இவ்வழி அவ்வூர்க்குப் போம்.

‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ (குறள் 293) (நன். 409 சங்.)

அஃறிணையில் ‘இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப்பெயர் -

{Entry: C03__023}

எண்ணுப் பெயரெல்லாம் அஃறிணையாம்.

எ-டு : ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்

இவை இவ்வளவு எண்ணிக்கையுடையன என்று வரையறுக் கப்பட்டவை. இவையே இத்துணைய என்று வரையறுக்கப் பட்ட எண்ணுக்குறிப்பெயர்களாய் ஆகுபெயர் ஆகாமலேயே பொருளைத் தாமே உணர்த்தும். (தொ. சொ. 170 நச். உரை)

அஃறிணையில் தொழிலிற் பிரிந்த ஆண்ஒழி மிகுசொல் -

{Entry: C03__024}

யானை நடந்தது - என்புழி, யானை என்னும் அஃறிணைப் பெயர் ஆண்பெண் இரண்டற்கும் பொது. ஆயினும் ‘நடந்தது’ என்னும் வினையான், யானை தொழிலிற் பிரிந்த ஆண் ஒழி மிகு சொல். [ இப்பெற்றம் அறம் கறக்கும் (இள.) ] (தொ. சொ. 50 நச். உரை)

அஃறிணையில் தொழிலிற் பிரிந்த பெண்ஒழி மிகுசொல் -

{Entry: C03__025}

யானை ஓடிற்று - என்புழி, யானை என்னும் அஃறிணைப் பெயர் ஆண்பெண் இரண்டற்கும் பொது. ஓடுதல் ஆண் யானைக்கே உரியது ஆதலின் யானை ஈண்டுத் தொழிலிற் பிரிந்த பெண்ஒழி மிகு சொல். [ இப் பெற்றம் உழவு ஒழிந்தன. (இள.) ] (தொ. சொ. 50 நச். உரை)

அஃறிணையில் பால்காட்டும் வினைவிகுதிகள் -

{Entry: C03__026}

அஃறிணைக்கு வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு, துவ்வும் றுவ்வும் டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறிசொல்; அவ்வும் ஆவும் வவ்வும் இறுதியாய் வருவன பலவறிசொல்.

எ-டு :

து :
உண்டது உண்ணாநின்றது உண்பது - இவை வினை.
கரியது செய்யது - இவை வினைக்குறிப்பு.
று :
கூயிற்று தாயிற்று - இவை வினை
கோடின்று குளம்பின்று - இவை வினைக்குறிப்பு.
டு :
குண்டுகட்டு குறுந்தாட்டு என்பனவும் அவை.
அ :
உண்டன உண்ணாநின்றன உண்பன - இவை வினை.
ஆ :
உண்ணா தின்னா - என்பன எதிர்மறுத்து வந்தனவாயினும் வினை.
வ :
உண்குவ தின்குவ - இவை வினை.

(நேமி. மொழி. 5 உரை)

அஃறிணையில் பெயரில் பிரிந்த ஆண்ஒழி மிகுசொல், அஃறிணையில் பெயரில் பிரிந்த பெண்ஒழி மிகுசொல் -

{Entry: C03__027}

‘பெயரினும் தொழிலினும் பிரிபவை’ காண்க.

அஃறிணை விரவுப்பெயர் -

{Entry: C03__028}

இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுப்பெயர் எனப் படும். இஃது ஒருபோது ஒருதிணையையே குறிப்பிடும். உயர்திணையைக் குறிக்குமிடத்து ‘உயர்திணை விரவுப்பெயர்’ எனவும் அஃறிணையைக் குறிக்குமிடத்து ‘அஃறிணை விரவுப் பெயர்’ எனவும் பெயர் பெறும் என்பது சேனாவரையர், தெய்வச்சிலையார் முதலியோர் கருத்தாம். தொல்காப்பியத் தில் ‘உயர்திணை விரவுப்பெயர்’ என்ற தொடர் யாண்டும் இல்லை. ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்ற தொடரே தொ.எ. 155, 157; சொ. 152 நச். என்னும் மூன்று இடங்களில் வந்துள்ளது.

நச்சினார்க்கினியர், உயர்திணை விரவுப்பெயர்க்கு மறுதலை அஃறிணை விரவுப்பெயர் என்று குறிப்பிடாது, விரவுப் பெயரின் உண்மைத்தன்மைத் தோற்றம் குறிக்கவே, அல் வழியை ‘வேற்றுமை அல்வழி’ என்று குறிப்பிடுவது போல, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்று பெயரிட்டார் என்பர். அஃறிணை விரவுப்பெயராவது உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர். சாத்தன் என்ற சொல்லில் உயர்திணை ஆண்பாற்குரிய அன் விகுதி அஃறிணை ஆண்பாலையும் சுட்டுதற்கு வருதலின் உயர்திணையோடு அஃறிணை விரவி அமைவதே விரவுப்பெயர் என்பது.

அஃறிணைக்கு ஒன்மைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த் தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின், அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை ஆண் பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணையொடு சென்று விரவிற்று என்று அவற்றின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. ஆதலின், ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்புழி, அஃறிணை என்ற அடை சேனாவரையர் முதலாயினார்க்குப் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய் இனத்தைச் சுட்டும் அடை. நச்சினார்க் கினியர்க்கும் கல்லாடர்க்கும் அது தன்னோடு இயைபின்மை நீக்கிய விசேடணம்; அஃதாவது செஞ்ஞாயிறு என்றாற் போல இனத்தைச் சுட்டாத அடை.

எ-டு : சாத்தன் வந்தான், சாத்தி வந்தாள் - உயர்திணை விரவுப்பெயர்; சாத்தன் வந்தது, சாத்தி வந்தது -அஃறிணை விரவுப்பெயர்

இது சேனாவரையர் முதலாயினார் கருத்து.

சாத்தன் சாத்தி - என்பன இருதிணை வினைகளும் கொண்டு முடிதலின், இவை அஃறிணை விரவுப்பெயர் என்பது நச்சி னார்க்கினியர் முதலாயினார் கருத்து. (தொ. எ. 155 நச். உரை) (சொ. 120, 150 சேனா. உரை) (சொ. 152 நச். 153 கல் உரை)

அஃறிணைவிரவுப்பெயர் தன் முடிக்கும் சொல்லாம் வினையி னாலேயே இன்ன திணையைச் சுட்டுகிறது என்பது புலப்படும். (முடிக்கும் சொல் பெயரும் ஆம்.)

எ-டு : சாத்தன் வந்தான், (அவன்) - உயர்திணை

சாத்தன் வந்தது, (அது) - அஃறிணை

(தொ. சொ. 174 நச். உரை)

அஃறிணை விரவுப்பெயர் - உயர்திணைப்பெயரோடு அஃறிணை விரவி வரும் பெயர்கள். (தொ. சொ. 153 கல். உரை)

அஃறிணை விரவுப்பெயர் விளியேற்றல் -

{Entry: C03__029}

அஃறிணை விரவுப்பெயர், உயர்திணை விரவுப்பெயருக்கு ஓதப்பட்ட விதிகளைப் பின்பற்றியே விளியேற்கும். நீயிர் - தான் - என்ற ரகர னகர ஈற்று விரவுப்பெயர்கள் விளி ஏலா.

எ-டு : சாத்தி - சாத்தீ, பூண்டு - பூண்டே, தந்தை - தந்தாய், சாத்தன் - சாத்தா, கூந்தல் - கூந்தால், மக்கள் - மக்காள்.

இவை அண்மை விளியாங்கால், சாத்தி - பூண்டு - தந்தை - சாத்த - என வருதலும் கொள்க.

இனிக் கூறியவாறன்றி, பிணா வாராய் - அழிதூ வாராய் - என ஓதாத ஆகார ஊகாரங்கள் இயல்பாய் விளியேற்றலும்,

சாத்தன் வாராய் - மகள் வாராய் - தூங்கல் வாராய் - என எடுத்தோதிய

ஈறுகள் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்றலும்,

மகனே - தூங்கலே - என, ஏகாரம் பெற்று விளியேற்றலும் கொள்ளப்படும். (தொ. சொ. 150 சேனா. உரை) (152 நச். உரை)

அஃறிணை வினைஈறு ஏழ் -

{Entry: C03__030}

அஃறிணை ஒருமைவினை ஈறு: து று டு ; பன்மைஈறு: அ ஆ வ; பொதுஈறு: னகரம் - என அஃறிணை வினைமுற்று ஈறாவன ஏழாம்.

எ-டு : வந்தது, போயிற்று, குண்டுகட்டு; வந்தன, வாரா, வருவ; எவன் அது? (எவன் அவை?) (தொ. சொ. 218, 219, 221 நச்.)

அஃறிணை வினைக்குறிப்பு -

{Entry: C03__031}

அஃறிணை வினைக்குறிப்பு ஆமாறு: கரிது கரிய, அரிது, அரிய, தீது தீய, கடிது கடிய, நெடிது நெடிய, பெரிது பெரிய, உடைத்து உடைய, வெய்து வெய்ய, பிறிது பிற - இவையும் பிறவும் அஃறிணை வினைக்குறிப்பாம். (நேமி. வினை. 10 உரை.)

அஃறிணை வினைப்பெயர் -

{Entry: C03__032}

வினைமுற்றுக்கள் பகுதியில் பொருள் சிறக்கும். வினைப் பெயர்கள் விகுதியிலேயே பொருள் சிறக்கும். ஆதலின், வினை முற்றுக்கள் எடுத்தும், பெயர்கள் படுத்தும் சொல்லப்படும். வினைமுற்றுக்கள் எடுத்தலோசையான் அமைவன ஆதலின் அஃறிணை வினை முற்றுக்கள்படுத்தலோசையான் அஃறிணை வினையாலணையும்பெயர்களாம்.

எ-டு : வருவது - வருவதாகிய பொருள்

வருவன - வருவனவாகிய பொருள்

என வினைமுற்று வினைப்பெயர் ஆயினவாறு. (இவ்வினைப் பெயர்களைப் பிற்காலத்தார் வினையாலணையும்பெயர், வினைமுற்றுப்பெயர் எனப் பெயரிட்டு வழங்குப.)

(தொ. சொ. 170 நச். உரை)

அஃறிணை வினைவிகுதிகள் -

{Entry: C03__033}

து று டு - என்பன அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுக் களையும், அ ஆ வ - என்பன அஃறிணைப் பலவின்பால் முற்றுக்களையும் அமைக்கும் வினைவிகுதிகளாம். ஆகவே அஃறிணை வினைமுற்று விகுதி ஆறு ஆம். (தொ. சொ. 218 சேனா.)

அகக் கரணம் -

{Entry: C03__034}

மூன்றாம்வேற்றுமைப் பொருள்களில் ஒன்றான கரணம் (கருவி) இருவகைப்படும். அவை அகக்கரணம் புறக்கரணம் என்பன. வடமொழியுள் முன்னது அப்பியந்தரம் என்றும் பின்னது பாகியம் எனவும் வழங்கும். ‘மனத்தால் மறுவிலர்’ (நாலடி 180), ‘மனத்தானாம் உணர்ச்சி’ (குறள் 453), ‘உள்ளத் தால் உள்ளல்’ (குறள் 282) என்றல் போல்வன அகக்கரணம். (கண்ணால் கண்டான், ‘நெய்யால் எரி நுதுப்பேம்’ (குறள் 1148) என்றல் போல்வன புறக்கரணம்). (பி. வி. 12)

அகக்கருவி -

{Entry: C03__035}

மூன்றாம் வேற்றுமைக்குப் பொருளான கருவி என்பதனை இலக்கணக்கொத்து மூவகைப் படுக்கும். அவையாவன அகக்கருவி, புறக்கருவி, ஒற்றுமைக் கருவி - என்பன.

எ-டு : மனத்தான் நினைத்தான் - மனம் : அகக்கருவி; வாளான் வெட்டினான் - வாள் : புறக்கருவி; அறிவான் அறிந் தான் - அறிவு : அறிதலுக்கு ஒற்றுமைக் கருவி (இ. கொ. 33)

அகண்ட பதம் -

{Entry: C03__036}

தமிழில் பகாப்பதம் என்பது இது. இது வடமொழியில் பிராதிபதிகம் எனப்படும். இதன் இலக்கணம் வருமாறு: பொருளுடையதும், வினைப்பகுதி ஆகாததும், விகுதி உருபு இடைநிலை போன்ற எதுவும் ஆகாததும், அவற்றான் முடிந் துள்ளதாகாததும் ஆகிய பெயர்ப்பகாப்பதமே பிராதிபதிகம் என்பது. தமிழில் பெயர்ப்பகாப்பதமே வேற்றுமையுருபு பெற்று இரண்டாவது முதல் ஏழாவது வரையிலான வேற்றுமை களாம். (பி.வி.7)

அகதிதம் -

{Entry: C03__037}

வினை ஒன்று இரண்டு செயப்படுபொருள்களைப் பெறுதல். ஒரு சில வினைகளே இங்ஙனம் வருபவை. ஐ வேற்றுமை பெற்ற இரண்டனுள் ஒன்று ஆறாம் வேற்றுமையாக விரிவது. மற்றொன்று, அங்ஙன மின்றிச் செயப்படுபொருள் காட்டும் இரண்டாவதாகவே பொருள்படுவது.

எ-டு : பசுவினைப் பாலைக் கறந்தான், ஆனையைக் கோட்டைக் குறைத்தான்.

இவை பசுவினது பாலைக் கறந்தான் - எனவும், ஆனையது கோட்டைக் குறைத்தான் - எனவும் பொருள்படும்.

ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் என்னும் தொட ரில், ஆசிரியனது என்று ஆறாம்வேற்றுமை விரிய இட மில்லை. இதனை வடமொழியில் துகன்மகம் (துவி கர்மகம்) என்பர். (பி. வி. 12)

அகநிலைச் செயப்படுபொருள் -

{Entry: C03__038}

வந்தான் என்பதற்கு வருதலைச் செய்தான் என்பதே பொரு ளாதாலின், வருதலை என்பது அகநிலைச் செயப்படுபொரு ளாம். வருதல் : வினை; செய்தல்: தொழில் ஆதலின் எந்த வினைச் சொல்லின்கண்ணும் ஒரு தொழில் இருக்கும் என்ப தனைக் கொண்டு இங்ஙனம் கூறப்பட்டது. கண்டான் முதலிய வினைச் சொற்கள் காணுதலைச் செய்தான் என்றல் முதலாக விரிக்கப் படுதல் காண்க. (இ. கொ. 31.)

அகநிலைச் செயப்படுபொருளாவது அந்தர்ப்பாவித கர்மம். எல்லா வினைச்சொற்களும் ஒருவகையில் செயப்படுபொரு ளுடையன போலவே ஆம் என்னும் இலக்கண நூலுடை யோர் கருத்தும் தோன்ற வருவதொரு விளக்கம் இது.

வந்தான் என்புழி, வருதலைச் செய்தான் - என இரண்டனுருபு அடுத்து வரும் தொழிற்பெயராகக் கொள்ளப்படுதலின், செய்தலுக்கு வருதல் செயப்படுபொருளாய் - உட்கிடையாய் - அமைந்திருத்தலின் - இஃது அகநிலைச் செயல்படுபொருள் ஆயிற்று.

வருதலைச் செய்தான் என்பதன்கண், வருதல் வினை என்பதும் செய்தல் தொழில் என்பதும் சேனாவரையர் உரையானும் தெளியப்படும். (தொ. சொ. 112) (பி. வி. 12)

அகப்பாட்டெல்லை, புறப்பாட்டெல்லை -

{Entry: C03__039}

விளியுருபிற்குப் பெயரிறுதி அகப்பாட்டெல்லை. ஏனை ஆறு உருபிற்கும் பெயரிறுதி புறப்பாட்டெல்லை. இவ்விரண்டு எல்லைகளையும் தழுவிக்கோடற்கு ‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ என்றார். (நன். 291 சங்.)

அகம் புறம் முதலிய சொற்கள் -

{Entry: C03__040}

அகம் புறம் முதலியன ஓரிடத்தினை வரையறுத்து உணர்த் தும் - வழி ஆறாவதாம்; இடம் என முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதாம்.

எ-டு : மனையகத்து இருந்தான் - மனையினது அகத்து இருந்தான்; ஆறாம் வேற்றுமை.

அறையகத்து இருந்தான் - அறைக்கண் இருந்தான்; ஏழாம் வேற்றுமை. (தொ. சொ. 83 கல். உரை)

அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்கள் -

{Entry: C03__041}

‘ஆ ஓ ஆகும் பெயருமா ருளவே’ என்ற எச்சவும்மையான், ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாக வரும் பெயர்களன்றி, ஈற்றயல் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்களும் உள என்பது பெற்றாம்.

எ-டு : கிழவன் - கிழவோன் (‘நாடுகிழ வோனே’ பொருந. 248)

கிழவள் - கிழவோள் (‘கிழவோள் தேஎத்து’ இறை. அ. 8) (தொ. சொ. 189 தெய். உரை)

அகன்மக பரப்பை பதம் -

{Entry: C03__042}

வடமொழியில் குறிலை ஈறும் ஈற்றயலுமாகக் கொண்ட வினைச்சொற்கள் பரஸ்மைபதம் எனப்படும். குறித்த வினை பிறர்க்கு எனின் பரப்பைபதம் என்றும், தமக்கு எனின் ஆற்பனேபதம் என்றும் இருந்த மிகப் பண்டைய சொல் வழக்கம் மறைந்துவிட்டதொன்று. ஆகவே ஈறும் ஈற்றயலும் குறிலாக உள்ள வினைச்சொற்கள் பரப்பைபதம் என்றும், பிற ஈறும் ஈற்றயலும் கொண்ட வினைச்சொற்கள் ஆற்பனேபதம் என்றும் வழங்குவதே இன்றுள்ள வழக்கம். தமிழில் இப் பாகுபாடு இல்லை. செயப்படுபொருள் குன்றாத வினை முற்றுச் சொல்லொடு வரும் செயப்படுபொருள் கருத்தாவாக - எழுவாயாக - அமையும். இது ‘செயப்படு பொருளைச் செய்தது போல’ என்னும் விதிப்படி, சோறு அட்டது - கூரை வேய்ந்தது - என்பன போல வரும். இது கருமகருத்தா என வடமொழியில் வழங்கப்படுகிறது. இது போன்ற வினைச்சொற்கள் அகன்மக பரப்பை பதமாம். (பி. வி. 11 {{OR 36?: TVG_1973, p.239}})

அச்சக் கிளவிக்கண் உருபு மயங்குதல் -

{Entry: C03__043}

அச்சப்பொருள்மேல் வரும் சொல்லிற்கு வேற்றுமையுருபு தொக அதன் பொருள் நின்றவழி, ஐந்தாம் வேற்றுமையுருபும் இரண்டாம் வேற்றுமையுருபும் ஒத்த உரிமையவாய் மயங்கும்.

எ-டு : பழி அஞ்சும்

இத்தொகைநிலைத் தொடரை விரிப்புழி, ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளைக் கொண்டால் பழியின் அஞ்சும் எனவும், இரண்டாம் வேற்றுமைச் செயப்படுபொருளைக் கொண் டால் பழியை அஞ்சும் எனவும் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கியவாறு. (தொ. சொ. 101 நச்.)

அச்சப் பொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் -

{Entry: C03__044}

பேம் நாம் உரும் - என்னும் மூன்றும் அச்சமாகிய குறிப்பை உணர்த்தும் உரிச்சொற்கள். வருமாறு :

‘மன்ற மராஅத்த பே(ம்)முதிர் கடவுள்’ (குறுந். 87)

‘நாம நல்லரா’ (அகநா. 72)

(நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்து நின்றது)

‘உரும்இல் சுற்றமொடு’ (பெரும்பாண். 447) (தொ. சொ. 365 நச். உரை)

அச்சும் அல்லும் -

{Entry: C03__045}

அச் - உயிரெழுத்துக்கள். ஆவி, சுரம் (ஸ்வரம்) என்பனவும் அவையே. வடமொழி இலக்கணத்தின் அடிப்படையாகக் கொள்ளும் மாகேசுவர சூத்திரங்கள் பதினான்கு.

இவற்றின் இடையேயுள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்த்துக் குறியீடு கொள்வது, வடமொழி இலக்கணமான வியாகரண சாத்திர மரபு. இந்த முறையில் முதல் நான்கு சூத்திரங்களையும் சேர்க்க அச் (சு) என நிற்குமதனுள் உயிரெழுத்துக்கள் அடங்கும். (குறிலாய் உள்ளவற்றின் நெடிலும் கொள்ளப்படும்.) அம் என்னும் அநுஸ்வாரமும் அ: என்ற விஸர்க்கமும் சேர, வட மொழியில் உயிரெழுத்துக்கள் பதினாறாம்.

இவ்வாறு சூத்திரங்களில் முதலெழுத்தினையும் ஈற்றெழுத் தினையும் இணைத்துக் குறியீடுகள் கொள்ளுமுறை பிரத்தி யாகாரம் எனப்படும்.

அல் (ஹல்) - மெய்யெழுத்து - வியஞ்சனம் - என்பதும் இதுவே. பிரத்தியாகார முறையில் ஐந்தாவது மாகேசுவர சூத்திரத்தின் முதல் எழுத்தான ஹ என்பதனையும், பதினான்காவது சூத்திரத்தின் இறுதி யெழுத்தான ல் என்பதனையும் சேர்க்க வந்த குறியீடே ஹல் என்பது.

இதனுள் வடமொழியின் மெய்யெழுத்துக்கள் முப்பத் தைந்தும் அடங்கும். அவை க ச ட த ப - வருக்கங்கள் (5 x 5) இருபத்தைந்தும், ய ர ல வ ஶ ஷ ஸ ஹ ள க்ஷ - என்னும் பத்தும் சேர முப்பத்தைந்து ஆம்.

உயிரின்றித் தாம் இயங்கா ஆதலானும், இவையின்றி உயிர் களும் சிறவா ஆதலானும், தாமே தனித்து இயங்கும் ஆற்றல் அற்ற மெய்யெழுத்துக்கள் வியஞ்சனம் எனப்பட்டன.

இவற்றை மகாப் பிராணன், அர்த்தப் பிராணன், அற்பப் பிராணன் என இவற்றின் ஒலி பற்றிப் பிரிப்பதுமுண்டு. தமிழில் மூவினப் பகுப்புப் போன்றது இது. ஐந்து வர்க்கங் களின் 2, 4ஆம் எழுத்துக்களும், ஷ ஸ ஹ என்பனவும் மகாப் பிராணன்; ய ர ல வ ள - என்பன அர்த்தப் பிராணன்; ஐவர்க்கங் களின் 1, 3, 5ஆம் எழுத்துக்கள் அற்பப் பிராணன். (இப்பகுப்பு அனைவர்க்கும் உடன்பாடு அன்று.) (பி. வி. 4)

அசேதனம் செய்வினை -

{Entry: C03__046}

வினைவகைகளாக இலக்கணக்கொத்துக் கூறுவன பலவற் றுள் இஃது ஒன்று; அறிவற்ற பொருள்கள் செய்யும் வினை.

எ-டு : விளக்குக் காட்டிற்று, விடம் கொன்றது, காற்று அலைத்தது, இருள் மறைத்தது - என வருமாறு காண்க. (இ. கொ. 81)

அசைச்சொல் விளியாதல் -

{Entry: C03__047}

ஒன்றனைக் கேட்பித்தல் பொருளில் வரும் அம்ம என்னும் அசைநிலை இடைச்சொல் தனக்கெனப் பொருளின்று ஆயினும், அம்ம என்று இயல்பாயும் அம்மா என்று நீண்டும், விளியேற்கும் பெயரொடு தொடர்ந்து வரும். வருமாறு : அம்மா சாத்தா (தொ. சொ. 153 சேனா.)

‘அசைநிலைக் கிளவி ஆகி வருந’ -

{Entry: C03__048}

இஃது இடைச்சொல் வகை ஏழனுள் ஒன்று. இடைச்சொற்கள் தமக்கென ஒருபொருளின்றித் தாம் சார்ந்த பெயர்வினை களை அசையப்பண்ணும் நிலைமையவாய் வருவன அசை நிலையாம். (தொ. சொ. 252 நச். உரை)

எ-டு : ‘அதுமற்று அவலம் கொள்ளாது’ (குறுந். 12)

- பெயரை அடுத்த அசை

‘அந்தில் கச்சினன் கழலினன்’ (அகநா. 76)

- வினையை அடுத்த அசை

(ஓ மற்று அந்தில் ஆர் ஏ குரை மா மியா இக மோ மதி இகும் சின் யா கா பிற பிறக்கு அரோ போ மாது ஆக ஆகல் என்பது என்ப - முதலியன அசைநிலைக்கிளவியாய் வரும் இடைச் சொற்களாம்.)

அசைநிலைக் கிளவி ஆகும் ஆரைக்கிளவி -

{Entry: C03__049}

ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலையாகும்வழி உம்மையை அடுத்தும், உம்ஈற்றை அடுத்தும் வருதலே பெரும்பான்மை.

எ-டு : ‘பெயரினாகிய தொகையுமார் உளவே’ (வேற். 6)

- ஆர் உம்மையை அடுத்து வந்தது.

‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எழுத். மொழி. 28)

- ஆர் உம்ஈற்றை அடுத்து வந்தது. (தொ. சொ. 273 நச். உரை)

அசைநிலை பொருள் உணர்த்துதல் -

{Entry: C03__050}

தாம் சார்ந்த சொற்களின் பொருளை உணர்த்தியும், அச் சொற்களை அசைத்தும் நிற்றலின் அசைநிலை பொருள் குறித்தனவேயாம். (தொ. சொ. 157 நச். உரை)

அசைநிலை முதலியன பொருள் குறித்தல் -

{Entry: C03__051}

அசைநிலை இசைநிறை ஒருசொல்லடுக்கு - என்பன பொருள் குறித்திலவே எனின், அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன. அன்றியும், எல்லாச் சொல்லும் பொருள்குறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்ளப்படும்; ‘இவ்வூரார் எல்லாம் கல்வியுடையார்’ என்றவழி, கல்லாதார் உளராயினும் கற்பார் பலர் என்பது குறித்து நின்றாற்போலக் கொள்ளப்படும்.

(தொ. சொ. 151 தெய். உரை)

அசைநிலையாக அடுக்கி வரும் சொற்கள் -

{Entry: C03__052}

கண்டீர் கொண்டீர் (கேட்டீர்) சென்றது போயிற்று - என்னும் சொற்கள், கண்டீரே கொண்டீரே (கேட்டீரே) சென்றதே போயிற்றே - என வினாவொடு கூடிக்கண்டீரே கண்டீரே - முதலாக அடுக்கிவரும்போது வினைச்சொல்லாகாது அசைச்சொற்களாம்.

கேட்டை நின்றை காத்தை கண்டை - என்பன அடுக்கியும் அடுக்காதும் வந்து அசைநிலை ஆகும்.

(தொ. சொ. 425, 426 சேனா. உரை)

ஆக ஆகல் என்பது - என்பன, ஆகவாக - ஆகலாகல் - என்ப தென்பது - என்று அடுக்கி நின்றவழியே அசைநிலையாம். (தொ. சொ. 280 சேனா. உரை)

அசைநிலையாக வரும் இடைச்சொற்கள் -

{Entry: C03__053}

யா கா பிற பிறக்கு அரோ போ மாது மா மன் (சாரியை யாகிய) இன் ஐ சின் மாள தெய்ய என ஓரும் அத்தை ஈ இசின் ஆம் ஆல் என்ப அன்று - என்பன அசைநிலையாய் வரும்.

வருமாறு :

யா பன்னிருவர் மாணாக்கர் - ‘இவன் இவண் காண்டிகா’ கலி. 99 - ‘தான் பிற வரிசை அறிதலின்’ புற. 140 - ‘நசைபிறக்கு ஒழிய’ புற. 15 - ‘இருங்குயில் ஆலுமரோ’ கலி. 33 - ‘பிரியின் வாழா தென்போ தெய்ய - ‘விளிந்தன்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே’ நற். 178 - ‘ஓர்கமா தோழி’ - ‘அதுமன் கொண்கன் தேரே’ - ‘காப்பின் ஒப்பின்’ வேற். 11 - ‘நேரை நோக்க நாரரி பருகி’ - ‘தண்ணென் றிசினே’ ஐங். 73 - ‘சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசிலர்’ - ‘சொல்லேன் தெய்ய’ - ‘அறிவார் யாரஃ திறுவுழி இறுகென’ - ‘அஞ்சுவ தோரும் அறனே’ கு. 366 - ‘செலியர் அத்தைநின் வெகுளி’ புற. 6 - ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’ - ‘காதல் நன்மா நீமற் றிசினே’ - ‘பணியுமாம் என்றும் பெருமை’ கு. 978, - ‘ஈங்கா யினவால்’ - ‘புனற் கன்னிகொண் டிழிந்தது என்பவே’ சீவக. 39 - ‘சேவடி சேர்தும் அன்றே’ சீவக. 1. (தொ. சொ. 281, 297 298 நச். உரை)

அடிமறிமாற்றுப் பொருள்கோள் -

{Entry: C03__054}

பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்து நீக்காது கூட்டும் அடியை யுடையனவும், யாதானும் ஓரடியை எடுத்து அச்செய்யுளின் இறுதிநடுமுதல்களில் யாதானும் ஓரிடத்துக் கூட்டினும் பொருளோடு ஓசைமாட்சியும், ஓசையொழியப் பொருள் மாட்சியும் வேறுபடாத அடியையுடையனவும் அடிமறி மாற்றுப் பொருள்கோளாம். வருமாறு :

‘நடுக்குற்றுத் தற்சேர் ந்தார் துன்பம் துடையார்

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்

மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினைஉலந்தக் கால்’ (நாலடி. 93)

இதனுள், “கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; விடுக்கும் வினை உலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றினும் செல்வம் நில்லாது; (இஃது அறியாதார்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்” என அடிகளை ஏற்கு மிடத்து எடுத்துக் கூட்டுக.

‘மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாக் கட்பனி வரல்ஆ னாவே

வேறாம் என்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே’

இதனுள், எவ்வடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடாமை காண்க.

‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்ற ம்

விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலும் குற்றமே யாம்.’ (நான்மணி. 26)

இதனுள், ஈற்றடி ஒழிந்த மூன்றடியுள் யாதானும் ஒன்றை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொரு ளும் ஓசையும் வேறுபடாமையும், ஈற்றடியை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்து ஓசைவேறுபட்டுப் பொருள் வேறுபடாமையும் காண்க. (நன். 419 சங்.)

பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்துக் கூட்டும் அடிகளை யுடையவற்றை, பொருளும் ஓசையும் வேறுபடாத அடிமறி மாற்றுப் பொருள்கோளாகவே கொண்டார், சில உறுப்புக் குறைந்தாரையும் மக்கள் என்றாற்போல. (நன். 419 சங்.)

அடுக்கிய எச்ச முடிவு -

{Entry: C03__055}

வினையெச்சமும் அடுக்கி வரும் ; பெயரெச்சமும் அடுக்கி வரும். வினையெச்சம் ஒருவாய்பாட்டானும் பலவாய்பாட் டானும் அடுக்கி ஒரே முடிபு கொள்ளும்.

எ-டு : ‘வருந்தி, அழிந்து, கொய்துகொண்டு, ஏற்றி, இன்றி, மறந்து, மிசைந்து, அறம்பழித்துத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்’

(புறநா. 159 : 6 - 14) - என, செய்து என்னும் ஒரு வாய்பாட்டு வினையெச்சமே அடுக்கி வந்து. ஒருவினையே கொண்டு முடிந்தது.

உண்டு பருகூத் தின்னுபு வந்தான் - என, பலவாய்பாட்டு வினையெச்சங்கள் அடுக்கி வந்து ஒரு வினையே கொண்டு முடிந்தன.

‘வருந்தி முலையள் அழிந்து இன்றி மிசைந்து உடுக்கையள் (அறம்) பழித்து’ - எனச் செய்து என் எச்சத்தினிடையே அவ்வினையெச்சமுற்றும் (முலையள்)அதன் குறிப்பெச்சமும் (இன்றி) உடன் அடுக்கி முடிந்தன.

எ-டு : ‘பாயுந்து, தூக்குந்து, தரூஉந்து, பாயும் மிழலை’- எனப் பெயரெச்சம் ஒருமுறையான் அடுக்கி ஒரு பெயர் கொண்டு முடிந்தது. (புறநா. 24)

முதல் எச்சம் கொண்டு முடியும் சொல்லை ஏனைய எச்சங் களும் கொண்டுமுடியும்வழியேதான் எச்சங்கள் அடுக்கி வரும். (தொ. சொ. 235 நச். உரை)

அடுக்கின் பலவகைச் சொல்நிலை -

{Entry: C03__056}

பாம்புபாம்பு - பெயரடுக்கு

‘தேம் பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை

வேந்தனை வேந்தர்மண் கொண்டானை.........

வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ?’

- ஓருருபு அடுக்கியது.

சாத்தன் மரத்தை வாளான் குறைத்தான் - பலஉருபு அடுக்கி வந்தன.

உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்

நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் - வினையும் வினைக்குறிப்பும் அடுக்கி வந்தன.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ - பெயரெச்ச அடுக் கு

(குறள் 448)

வந்து உண்டு தங்கிப் போயினான் - வினையெச்ச அடுக்கு

‘வருகதில் அம்ம’ அகநா. 276 - இடைச்சொல் அடுக்கு

‘தவ நனி நெடிய ஆயின’ ஐங். 259 - உரிச் சொல் அடுக்கு

(அடுக்கின் வகைகளைப் பெயர்மாத்திரம் குறித்தார் தெய்வச் சிலையார்) (தொ. சொ. 99 தெய். உரை)

அடுக்கின் வகைகள் -

{Entry: C03__057}

பெயரும் முற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் உருபும் என இவை அடுக்குதலான் அடுக்கு ஐந்தாம்; இரட்டைக் கிளவியையும் உடன்கொள்ளின் ஆறும் ஆம். அடுக்குப் பின்வருமாறு பல திறப்படும்.

ஒன்று பல அடுக்குதல் :
‘அரியானை அந்தணர்தம் சிந்தையானை’ (தேவா. vi. 1) (இருபெய ரும் சிவபெருமானையே குறிப்பன.)
வேறு பல அடுக்குதல் :
வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான் (உருபுகள் பல.)
விதியாய் அடுக்குதல் :
‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று’ (கு. 1101) (செய்து என்னும் வாய் பாட்டு விதி வினையெச்சங் கள்)
மறையாய் அடுக்குதல் :
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ கு. 448. (எதிர்மறையாகிய பெயரெச்சங்கள்)
விதி மறை கூடி அடுக்குதல் :
சோறு உண்டு கை கழுவாது வந்தான் (உண்டு : விதி; கழுவாது: எதிர்மறை)
பல சொல் கூடி ஒரு பொருளாய் அடுக்குதல் :
வயிறு மொடுமொடு என்றது இரட்டைக் கிளவி; உண்ண வேண்டா என்பது குறிப்பு) படை படை : அச்சப் பொருட்டாகிய அடுக்கு.
பலபொருட்கு ஒரு சொல்லாய் அடுக்குதல் :
ஒவ்வொருவருக்கே இவ்விரு பணம் கொடு (தனித்தனியே ஒவ்வொரு வர், தனித்தனியே இரண்டிரண்டு பணம்)
இருவகை தமக்கும் பொதுவாய் அடுக்குதல் :
வேறுவேறு - என்பன, ஒருகால் ‘அவனும் வேறு இவனும் வேறு’ எனப் பல பொருளாயும் ‘அவன் வேறு வேறு’ என விரைவு பற்றி ஒரு பொருளாயும் நிற்கும்.
இயல்பாய் அடுக்கல் :
பாம்பு பாம்பு, தீத்தீத்தீ
விகாரமாய் அடுக்கல் :
பஃபத்து (பத்து + பத்து) (இ. கொ. 120)

அடுக்கு அல்லவை அடுக்குப் போறல் -

{Entry: C03__058}

சொற்பின்வருநிலை போன்ற அணியிலக்கணம் கொண்டு சொற்கள் அடுக்குப் போல வருதல்.

எ-டு :

‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று’ (குறள் 296)

(பொய்யாமையைத் தவறாது செய்யின்; செய்யாமையைச் செய்யாமையாவது - செய்தல்)

‘இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை’ (குறள் 310)

(இறந்தார் - சினத்தின்கண் மிக்கவர், இறந்தார் - செத்தவர்; துறந்தார் - (சினம்) விட்டவர், துறந்தார் - பிறவியைத் துறந்த மெய்ஞ்ஞானிகள்) (இ. கொ. 121)

அடுக்குத்தொடர் -

{Entry: C03__059}

ஒரு சொல் அசைநிலைக்கண் இரண்டு முறையும், விரைவு - வெகுளி - உவகை - அச்சம் - அவலம் - முதலிய பொருள் நிலைக்கண் இருமுறையும் மும்முறையும், செய்யுளிசை நிறைக்குமிடத்து இருமுறையும் மும்முறையும் நான்முறையும் அடுக்கும்.

எ-டு : 1. ஒக்கும் ஒக்கும் : அசைநிலை அடுக்கு

2. உண்டேன் உண்டேன்,

போ போ போ : விரைவு

வருக வருக,

பொலிக பொலிக பொலிக : உவகை

பா ம்பு பாம்பு தீத்தீத்தீ : அச்சம்

உய்யேன் உய்யேன்,

வாழேன் வாழேன் வாழேன் : அவலம்

எய் எய், எறி எறி எறி : வெகுளி

இவை பொருள்நிலை அடுக்கு.

3. ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’

‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’
‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’

இசைநிறை அடுக்கு (நன். 395 சங்.)

அடுக்குதல் -

{Entry: C03__060}

இரண்டு முதல் பல சொற்கள் அடுக்கி வருவது.

1. ‘ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ குறள். 448 ‘மூவா முதலா உலகம்’ (சீவக. 1.)

நிகழ்காலப் பெயரெச்சம் எதிர்மறையாக அடுக்கி வந்தது.

2. வந்து வந்தே கழிந்தது (கோவை. 61) - ‘யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்’ - (நாலடி. 213)

என ஒரே வினையெச்சம் இரண்டு அடுக்கியது.

3. ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும்’ (குறள்.1101) - எனச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பல அடுக்கி வந்தன.

4. ‘சென் றது சென்றது’, ‘வந்தது வந்தது’ (நாலடி.4) என வினை முற்று அடுக்கியது.

5. அவரவர், தீத்தீத்தீ - எனப் பெயர்கள் அடுக்கின.

இவை யெல்லாம் மக்களிரட்டையும் விலங்கிரட்டையும் போலப் பிரிந்தும் பொருள் தருவனவாம்.

6. இனி இரட்டைக்கிளவியாகிய ‘கலகல’ - நாலடி 140, - ‘குறுகுறு’ (புற.88) - என்பன போன்றவை பிரித்தால் பொருள்படா. துடிதுடித்து, புல்லம்புலரி, செக்கச்சிவந்த, கன்னங்கரிய - என்பன போன்றவை பிரித்தால் பின் மொழியே பொருள் தரும்; முன்மொழி பொருள் தாராது.

இவ்விரு நிலையினையுடைய சொற்கள் இலையிரட்டை பூவிரட்டை - போன்ற பிரிக்கப்படாத இரட்டைக் கிளவி களாம். (பி.வி. 39.)

வடமொழியிலும், சிவசிவ - ரக்ஷ ரக்ஷ - புநப்புந : என இரண்டு சொல் அடுக்கி வருதல் உண்டு. வினைச்சொல் வகையில், தேதீவ்யமான - முதலாகச் சிறப்புப் பொருளில் இரட்டித்தல் உண்டு என்பர் பி.வி. நூலார் (பி.வி. 39)

அடுக்குப் பலபொருள் பற்றி வருதல் -

{Entry: C03__061}

ஒக்கும் ஒக்கும், மற்றோமற்றோ, அன்றேஅன்றே - அசைநிலை அடுக்கு

கள்ளர்கள்ளர், பாம்புபாம்பு, தீத்தீத்தீ, போபோபோ - விரைவு பற்றியது.

எய்எய், எறி எறி எறி - வெகுளி பற்றியது.

வருக வருக, பொலிக பொலிகபொலிக (திவ்.) - உவகை பற்றியது.

படை படை, எங்கே எங்கே எங்கே - அச்சம் பற்றியது.

உய்யேன் உய்யேன், வாழேன் வாழேன்; மயிலே மயிலே மயிலே, மடவாய் மடவாய் மடவாய்,

‘புயலேர் ஒலிகூந்தல் இனியாய் இனியாய்

குயிலேர் கிளவி நீ உரையாய் உரையாய்

அயில்வேல் அடுகண் அழகீஇ அழகீஇ’

‘ஐயாஎன் ஐயாஎ ன் ஐயா அகன்றனையே’ (சீவக.1802)

- அவலம் பற்றியது.

இவை பொருள்நிலை அடுக்கு.

‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’

‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’

‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’

இவை இசைநிறை அடுக்கு.

“அசைநிலை இரண்டினும், பொருள்நிலை (இரண்டினும்) மூன்றினும், இசைநிறை (இரண்டினும் மூன்றினும்) நான்கி னும் ஒருமொழி தொடரும்” என்றார் அகத்தியனார். (நன். 394 மயிலை.)

அடைசினைமுதல் மயங்காமை -

{Entry: C03__062}

வண்ணச்சினைச்சொல் முதலில் அடைமொழியும் அடுத்துச் சினைப்பெயரும் அடுத்து முதற்பெயருமாக அமைந்து வருதலே வழக்கு. [ அடையாவது ஒரு பொருளது குணம் (இள.) ]

எ-டு : செங்கால்நாரை, பெருந்தலைச்சாத்தன்

வழக்கினுள் மரபு எனவே, செய்யுளில் ‘செவிசெஞ்சேவல்’, ‘வாய்வன்காக்கை’ (புற. 238) என மயங்கியும் வரும் என்பது.

வழக்கினுள் முதலொடு குணமிரண்டு அடுக்கி ‘இளம்பெருங் கூத்தன்’ என்றாற் போலவும், செய்யுளுள் சினையொடு குணம் இரண்டு அடுக்கிச் ‘சிறுபைந்தூவி’ (அக. 57) என்றாற் போலவும் வருதலுமுண்டு.

அடையும் சினையுமாகப் பல அடுக்கி இறுதியில் முதலைக் குறிப்பிடும் சொல்லைக் கொண்டு, ‘பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கண் பேதை’ எனச் செய்யுளுள் மயங்கி வருதலுமுண்டு. (தொ. சொ. 26 நச். உரை)

‘பெருந்தோள்...... பேதை’ என்புழி, பெருந்தோட்பேதை - சிறு நுசுப்பிற் பேதை - பேரமர்க்கட் பேதை - எனப் பிரித்து இணைத்தாலும், பெருந்தோள் சிறுநுசுப்பு பேரமர்க்கண் - என்பன உம்மைத்தொகையாய் இணைந்து பேதை என்னும் முதற்பெயரோடு இணைந்தன என்றாலும், மயக்கம் இன்மை யின், அத்தொடர்க்கண் அடைசினைமுதல் என்பன மயங்க வில்லை என்பது சேனாவரையர் கருத்து.

அடைமொழி இனம் அல்லதும் தருதல் -

{Entry: C03__063}

‘பாவம் செய்தான் நரகம் புகும்’ என்றமையான், அத்தொடர் ‘புண்ணியம் செய்தான் சுவர்க்கம் புகும்’ என்ற இனத்தைத் தருதலே யன்றி, அவன் ‘இது செய்யின் இது வரும்’ என்றறியும் அறிவிலி என்னும் இனம் அல்லதனையும் தந்தது.

‘சுமந்தான் வீழ்ந்தான்’ என்றால், ‘சுமவாதான் வீழ்ந்தான் அல்லன்’ என்னும் கருத்துச் சொல்லுவார்க்கு இன்றாதலின் அவ்வினத்தை ஒழித்து, ‘சுமையும் வீழ்ந்தது’ என்னும் அல்லதனைத் தந்தது. (நன். 402 சங்.)

‘காலை எழுந்து கருமத்திற் செல்வான் கோழி கூவிற்று’ என்றால், ‘ஏனைப் புட்கள் கூவுகில’ என்னும் கருத்துச் சொல்லுவானுக்கு இன்றாதலின் அவ்வினத்தை ஒழித்து, ‘பொழுது புலர்ந்தது’ என்னும் இனம் அல்லதனைத் தந்தது.

‘பெய்முகில் அனையான்’ என்றால், ‘கைம்மாறு கருதாத பெருங்கொடையாளன்’ என்னும் இனம் அல்லதனை இனம் இலதாகிய அடைமொழி தந்தது. இவ் அடை கொடாது ‘முகில் அனையான்’ என வாளா கூறினும் இக்கொடைப் பொருள் தருமோ எனின், அவ்வாறு கூறின் ‘முகில் வண்ணன்’ எனவும் பொருள்படும் ஆதலின், அதனை ஒழித்துக் கொடைப் பொருளுக்கு உரிமை செய்தது இவ் அடையே (‘பெய்’) என்க. (நன். 443 இராமா.)

அடைமொழி வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் இனம் உடையனவும் இல்லனவும் ஆதல் -

{Entry: C03__064}

வழக்கின்கண், நெய்க்குடம் - குளநெல் - கார்த்திகை விளக்கு - பூமரம் - செந்தாமரை - குறுங்கூலி - என்னும், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - பற்றிய அடைகள் இனம் உடையனவாய் இனத்தை நீக்கி வந்தன. உப்பளம் - ஊர்மன்று - நாள்அரும்பு - இலைமரம் - செம்போத்து - தோய்தயிர் - இவற்றுள் பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன.

இனிச் செய்யுள்வழக்கில் வருமாறு:

‘பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்’ (கு. 913), ‘கான் யாற்று அடைகரை’ (இனிய. 5), ‘முந்நாள் பிறையின் முனியாது வளர்ந்தது’, ‘ கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன காயா’ (சீவக. 1558), ‘சிறுகோ ட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு’ (குறுந். 18), ‘ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமிர்தே’ - பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் உடையன வாய் இனத்தை நீக்கி வந்தன. ‘பொற்கோட்டு இமயம்’ (புற. 2), ‘ வட வேங்கடம் தென் குமரி’ (தொ. பாயி), ‘ வேனில் கோங் கின் பூம்பொகுட்டு அன்ன’ (புற. 321) ‘ சிறகர் வண்டு செவ்வழி பாட’ (சீவக. 74), ‘ செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்’ (புற. 38), ‘ முழ ங்கு கடல் ஓதம்’ - பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன. (நன். 401 சங்.)

அடைமொழி வழுவாமல் காத்தலும் வழுவமைதியும் -

{Entry: C03__065}

அடை சினை முதல் - என்பன முறையே வருதல் வழக்கிற்கு உரித்து.

எ-டு : செங்கால்நாரை.

‘ஈரடை முதலோடு ஆதலும் வழக்கியல்’:

எ-டு : மனைச்சிறு கிணறு, ‘சிறுகருங் காக்கை’ (ஐங். 391)

ஈரடை சினையொடு செறிதலும், இம்முறை மயங்கி வருதலும் செய்யுட்கு உரிய.

எ-டு : சிறுபைந்தூவி, கருநெடுங்கண்; ‘பெருந்தோள்

சிறுமருங்குல் பேரமர்க்கண் பேதை’ (நன். 403 சங்.)

அண்மைச்சொல் விளி ஏற்றல் -

{Entry: C03__066}

உயிரீற்றுப் பெயர்கள் அண்மை விளிக்கண் இயல்பாகும்.

எ-டு : நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி. னகாரஈற்றுப் பெயர்கள் அண்மைவிளியில் அன் ஈறுகெட்டு அகரமாகும்.

எ-டு : துறைவன் - துறைவ, ஊரன் - ஊர, சோழன் - சோழ

லகார ளகார ஈற்றுப் பெயர்கள் ஈற்றயல் நெடிதாயின் இயல் பாய் விளியேற்கும்.

எ-டு : ஆண்பால், பெண்பால், கோமாள், கடியாள் இந் நிலைமை பெரும்பான்மையும் உயர்திணைக்கே கொள்ளப்படும். (தொ. சொ. 129, 133, 147 நச். உரை)

அண்மையால் தொடர்தல் -

{Entry: C03__067}

‘ஆற்றங்கரையில் ஐந்து கனிகள் உள’ என்றாற் போல்வனவற் றுள் சொற்கள் அண்மைநிலையால் தொடர்ந்தன. அண்மை : ஆற்றிற்குக் கரை சமீபம் ஆதலால் ஆறு + கரை = ஆற்றங்கரை என அவ்வாறு தொடர்தல். (நன். 260 இராமா.)

அதற்கு உடன்படுதல் -

{Entry: C03__068}

ஒன்றற்கு ஒரு பொருளை மேல் கொடுப்பதாக உடன்படுதல். இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றன் செயற்கு உடன்பாடு கூறியவழியும் நான்காவதாம்.

எ-டு : சாத்தற்கு மகள் உடன்பட்டார், சான்றோர் கொலைக்கு உடன்பட்டார். (தொ. சொ. 76. சேனா. உரை)

அதற்குக் காதல் -

{Entry: C03__069}

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்று காதலுடைத்தாதல் என்னும் பொருட்டு.

எ-டு : நட்டார்க்குக் காதலன், புதல்வற்கு அன்புறும் (தொ. சொ. 76 சேனா. உரை)

அதற்குச் சிறப்பு -

{Entry: C03__070}

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. சிறப்பு - ஒன்றற்கு ஒன்று சிறத்தல். சிறப்பு என்பது இன்றி யமையாமை பற்றி வரும்.

எ-டு : வடுக அரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர்.

கற்பார்க்குச் சிறந்தது செவி. (தொ. சொ. 76 சேனா. உரை)

அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி -

{Entry: C03__071}

இதனை விட்ட ஆகுபெயர் என்ப. அஃதாவது ‘ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்’ டும் ஆகுபெயர். [ இதனை ‘விட்ட அன்மொழித்தொகை’ என அன்மொழித்தொகைக்கும் கொள்வர் சிவஞான முனிவர் (சூ.வி) ] (பி. வி. 24)

அதற்கு நட்பு -

{Entry: C03__072}

ஒன்றற்கு ஒன்று நட்பாதல் என்னும் பொருட்டாய இஃது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.

எ-டு : அவற்கு நட்டான், அவற்குத் தமன்.

(தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்குப் பகை -

{Entry: C03__073}

ஒன்றற்கு ஒன்று பகையாதல் என்னும் பொருட்டாய இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.

எ-டு : அவற்குப் பகை, அவற்கு மாற்றான்

(தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்குப் படு பொருள் -

{Entry: C03__074}

பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒருபங்கில் படும் பொருள்; ஒன்றற்கு உரிமையுடையதாகப் பொதுவாகிய பொருள் கூறிடப்படுதல். இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று.

எ-டு : சாத்தற்குக் கூறு கொற்றன் (தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்குப் படுபொருளாவது உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும்வழியும் நான்காவதாம்.

எ-டு : இதற்கு நிறம் கருமை ; இதற்கு வடிவம் வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச்சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்கு விலை இது.

அதற்குப் படு பொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம் பொருளும் காலத்திற்கு ஆம் பொருளும் ஆகி வருவன கொள்க.

வருமாறு: அவற்குச் சோறு உண்டு, ஈழத்திற்கு ஏற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை - என வரும். (தொ. சொ. 74 தெய். உரை)

அதற்கு வினையுடைமை -

{Entry: C03__075}

ஒன்றற்குப் பயன்படுதல் என்னும் பொருட்டாகிய இது நாலாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. வினை - ஈண்டு, உபகாரம்.

எ-டு : கரும்பிற்கு வேலி, ‘நில த்துக்கு அணிஎன்ப நெல்லும் கரும்பும்’ (நான். 9), மயிர்க்கு எண்ணெய். (தொ. சொ. 76 சேனா., 77 நச். கல். உரை)

உருபு ஏற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும்வழியும் நான்காம் வேற்றுமைப்பாலன.

எ-டு : அவர்க்குப் போக்கு உண்டு, அவர்க்கு வரவு உண்டு, கரும்பிற்கு உழுதான். (தொ. சொ. 74 தெய். உரை.)

அதற்கு வினையுடைமை முதலியன -

{Entry: C03__076}

கோடற் பொருளுக்கு உரியவாய் வருமிவையெல்லாம் நான்காம் வேற்றுமைப்பாலனவாம்.

அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு உழுதான், நெல்லுக்கு (நெல்லு விதைப்பதற்கு) உழுதான்.

அதற்கு உடன்படுதல் - சாத்தன் மணத்திற்கு உடன்பட் டான்.

அரசன் போருக்கு உடன்பட்டான்.

அதற்குப் படுபொருள் - ‘நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு.’ (நாலடி. 221)

அதுவாகு கிளவி - தாலிக்குப் பொன் கொடுத்தான். ஆடைக்கு நூல் தந்தான். (கிளவி - பொருள்)

அதற்கு யாப்புடைமை - மழைக்குக் குடைபிடித்தான். பசிக்கு உணவு அளித்தான்.

நட்பு - நெருப்புக்கு நெய் வார்த்தான்; கபிலர்க்கு நண்பன் பாரி.

பகை - நெருப்புக்கு நீர் விட்டான்; பாம்பிற்குப் பகை மயில்.

காதல் - தலைவன் தலைவிக்குப் பூச்சூட்டினான்; நட்டார்க்குக் காதலன்.

சிறப்பு -‘மனைக்கு விளக்கம் மடவாள்’ (நான். 101) ; கல்விக்குச் சிறந்தது செவி.

அன்ன பிற பொருள்களாவன : அவன் போர்க்குப் புணை யாவான்; அடியார்க்கு அன்பு செய்தான் - போல்வன (தொ. சொ. 76 ச. பால.)

அதற்கு யாப்புடைமை -

{Entry: C03__077}

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்று பொருத்தமுடைத்தாதல் என்னும் பொருண்மை இது.

எ-டு : கைக்கு யாப்புடையது கடகம். (தொ. சொ. 76 சேனா. உரை)

அதற்கு யாப்புடைமையாவது உருபேற்கும் பொருட்கு வலியாதல் உடைமை.

எ-டு : போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள். (தொ. சொ. 74 தெய். உரை)

அதற்பொருட்டாதல் -

{Entry: C03__078}

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒரு பொருளினை மேல் பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல். [ ஒரு பொருட்டாக என்பதுபட வருதல் (தெய்.) ]

எ-டு : கூழிற்குக் குற்றேவல் செய்யும். (தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்றகு கிளவி -

{Entry: C03__079}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான் ஒன்று தகுதல் என்னும் பொருண்மை இது.

எ-டு : வாயாற் றக்கது வாய்ச்சி, அறிவான் அமைந்த சான்றோர். இது கருவிப்பாற்படும். (தொ. சொ. 74 சேனா. உரை.)

அதற்றகு கிளவியாவது அதனால் தகுதியுடைத்தாயிற்று என்னும் பொருண்மை தோன்ற வருவது.

எ-டு : கண்ணான் நல்லன் - நிறத்தான் நல்லன் - குணத்தான் நல்லன் - என உறுப்பும் பண்பும் பற்றி வருவன. (தொ. சொ. 75 தெய். உரை.)

அதன் வினைப்படுத்தல் -

{Entry: C03__080}

ஒன்றனான் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை. இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.

எ-டு : சாத்தனான் முடியும் இக்கருமம்; நாயான் கோட் பட்டான்.

இது வினைமுதலின்பாற் படும். (தொ. சொ. 74 சேனா. 75 நச். உரை)

அதன் வினைப்படுதலாவது ஒன்றன் தொழில்மேல் வருதல்.

எ-டு : புலி பாய்தலான் பட்டான்; ஓட்டான் கடிது குதிரை.

(தொ. சொ. 72 தெய். உரை.)

‘அதனால்’ என்னும் சொல்லமைப்பு -

{Entry: C03__081}

அது என்னும் சுட்டுப் பெயர் இடையே அன்சாரியை ஏற்று ஆல்உருபு பெற்று அதனால் என வந்து தனிப்பட்ட ஒன்றனைச் சுட்டி வரும்.

எ-டு : ‘ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’ (குறள் 642)

இதன்கண், ‘அதனால்’ என்னும் உருபேற்ற சுட்டுப்பெயர் ‘சொற் சோர்வு’ என்பதனைச் சுட்டி வந்தது.

இனி, பிரிக்க முடியாத நிலையில் ஒன்றாயமைந்து வரும் ‘அதனால்’ என்ற இடைச்சொல் முதல்வாக்கியத்தை அடுத்த வாக்கியத்தோடு இணைக்கும் இணைப்பு இடைச்சொல்லாக வரும்.

எ-டு : சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும்.

ஈண்டு ‘அதனால்’ முதல் வாக்கியத்தை இரண்டாவதனோடு இணைக்கும் இணைப்பிடைச் சொல்லாகப் பயன்பட்டவாறு காண்க. இதனை ஆசிரியர் ‘சுட்டுமுத லாகிய காரணக் கிளவி’ எனவும், அது சுட்டுப்பெயர் போலச் சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொற்குப் பின் கிளக்கப்படும் எனவும் கூறுவர். (தொ. சொ. 40 சேனா. உரை)

‘அதனால்’ சுட்டுப்பெயருள் அடங்காமை -

{Entry: C03__082}

‘மழை பெய்தது அதனால் யாறு பெருகும்’ என்னுமிடத்தே, அதனால் என்னும் இச்சுட்டு, பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், ‘காரணக்கிளவி’ கருவி ஆதலா னும் சுட்டுப்பெயருள் அடங்காது. ஆதலின் இஃது ஆலுருபு ஏற்ற சுட்டுப்பெயர் ஆகாது. (தொ. சொ. 38 தெய். உரை.)

‘அதனான் செயப்படற்கு ஒத்த கிளவி’ -

{Entry: C03__083}

‘அவனான் செய்யத் தகும் காரியம்’ என்ற மூன்றாம் வேற்றுமைத் தொடர் ‘அவற்குச் செய்யத்தகும் காரியம்’ என நான்காம் வேற்றுமைத் தொடராகவும் வரும். (தொ. சொ. 111 நச். உரை)

அதனின் ஆதல் -

{Entry: C03__084}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றனான் ஒன்று ஆதல் என்னும் பொருண்மை இது.

எ-டு : வாணிகத்தான் ஆயினான்.

இது காரக ஏதுவாகிய கருவியின் பாற்படும்.

(தொ. சொ. 74 சேனா. உரை)

அதனின் ஆதலாவது ஆக்கத்திற்கு ஏதுவாகி வருவது.

எ-டு : வாணிகத்தான் ஆயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையான் பைங்கூழ் நல்லவாயின.

(தொ. சொ. 72 தெய். உரை)

அதனின் இயறல் -

{Entry: C03__085}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.

எ-டு : மண்ணான் இயன்ற குடம் - மண் முதற்காரணம். முதற் -காரணமாவது காரியத்தொடு தொடர்புடையது. இது கருவி.

(தொ. சொ. 74 சேனா. உரை)

ஒன்றனான் ஒன்று பண்ணப்படுதல் என்னும் பொருண்மை இது. இயலப்படுதற்குக் காரணமாகிய பொருள்மேல் உதாரண வாய்பாட்டான் வருவது.

எ-டு : மண்ணினான் இயன்ற குடம்; அரிசியான் ஆகிய சோறு (தொ. சொ. 72 தெய். உரை)

அதனின் கோடல் -

{Entry: C03__086}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான் ஒன்றைக் கோடல் என்னும் பொருண்மை இது.

எ-டு : காணத்தான் கொண்ட அரிசி - இது கருவியின்பாற் படும். (தொ. சொ. 74 சேனா. உரை.)

‘அதனைக் கொள்ளும் பொருள்’ -

{Entry: C03__087}

‘இவளைக் கொள்ளும் இவ்வணி’ என்ற இரண்டாம் வேற்றுமைத் தொடர் ‘இவட்குக் கொள்ளும் இவ்வணி’ என நான்காம் வேற்றுமைத்தொடராகவும் வரும். (தொ. சொ. 111 நச். உரை)

அதனொடு மயங்கல் -

{Entry: C03__088}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்று விரவி வருதல் என்னும் பொருண்மை இது.

எ-டு : பாலொடு கலந்த நீர், எண்ணொடு விராய அரிசி. (தொ. சொ. 72 தெய். , 74 சேனா. உரை)

‘அதனோடு இயைந்த ஒப்பு அல் ஒப்புரை’ -

{Entry: C03__089}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒப்பு அல்லாத ஒப்பினை உரைப்பது இது. ஒப்பல்லதனை ஒப்பாகக் கூறலின் ‘ஒப்புஅல் ஒப்புரை’ ஆயிற்று.

எ-டு : ‘பொன்னோ டிரும்பனையர் நின்னொடு பிறரே’

பொன்னோடு இரும்பை உவமித்தலை ஒப்பர் நின்னொடு பிறரை உவமிக்குமிடத்து - என்பது பொருள். (தொ. சொ. 74 சேனா. உரை.)

உவமையின்றி இதுவும் அதுவும் ஒக்கும் என அளவினானும் நிறையினானும் எண்ணினானும் வருவன.

எ-டு : இதனோடு ஒக்கும் அது, அக்கூற்றோடு ஒக்கும் இக்கூற்று. (தொ. சொ. 72 தெய். உரை.)

நூலொடு நார் இயைந்தது போலும், முத்தொடு பவளம் கோத்தது போலும் - என ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒப்பு அல்லா ஒப்பினை உரைத்தல். இஃது ஒடு என்னும் மூன்றாம் வேற்றுமைக்குரிய பொருண்மையுள் ஒன்று. (தொ. சொ. 75. கல். உரை.)

‘அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி’ -

{Entry: C03__090}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒரு வினையாகல் என்னும் பொருண்மை இது.

எ-டு : ஆசிரியனொடு வந்த மாணாக்கன்

வருதல் தொழில் இருவர்க்கும் ஒத்தலின், ஒருவினைக் கிளவி ஆயிற்று. (தொ. சொ. 74 சேனா. உரை.)

ஒருவினையான் இருபொருள் முடிவது இது.

எ-டு : படையொடு வந்தான் அரசன் (தொ. சொ. 72 தெய். உரை.)

இதன்கண் ‘ஒடு’ உயர்ந்த பொருளோடு இணைந்து வரும் என்பர் சேனாவரையர் (91) முதலியோர். ‘ஒடு’ இழிந்த பொரு ளோடு இணைந்து வரும் என்பர் தெய்வச்சிலையார் (88).

‘அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி’ -

{Entry: C03__091}

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்று இயைந்த வேறு வினையாகல் என்னும் பொருண்மை இது.

எ-டு : ‘மலையொடு பொருத மாஅல் யானை’ - இத்தொட ருள், மலை - யானை - என்னும் இரண்டனுள், மலைக்கு வினை இன்மையின் இது வேறுவினை ஆயிற்று. (தொ. சொ. 75 நச். உரை.)

பொருதல் யானைக்குஅல்லது இன்மையின் இது வேறு வினைக் கிளவி ஆயிற்று. (தொ. சொ. 74 சேனா. உரை)

வேறு வினையுடைய இரண்டு சொற்கள் தொடர்வது இப் பாருண்மை.

எ-டு : காவொடு அறக்குளம் தொட்டான் - இதன்கண், தொடுதல்வினை குளத்திற்கு அல்லது காவிற்கு இன்று ஆதலின், இது வேறுவினைக் கிளவி ஆயிற்று. (தொ. சொ. 72 தெய். உரை)

காவொடு அறக்குளம் தொட்டான் என்பது எடுத்துக்காட்டு. வேறுவினை என்பது ஒன்றன்கண்ணே வினையாதல். இதனுள், தொடுதல் குளம் ஒன்றற்கே ஏற்ற வினையாதல் காண்க. (தொ. சொ. 75 கல். உரை)

அதிகரண காரகபேதம் -

{Entry: C03__092}

இடப்பொருள் என்னும் ஏழாம் வேற்றுமையுள், 1) உரிமை என்னும் விடயம், 2) ஒற்றுமை எனவும் கூட்டம் எனவும் இருவகைப்படும் ஓரிடம், 3) எங்கும் பரந்திருத்தல் - என இடம் மூவகைப்படும்.

1. கடலுள் மீன் திரிகிறது; ‘நெடும்புனலுள் வெல்லும் முதலை’ (குறள் 495); ‘பகல்வெல்லும் கூகையை க் காக்கை’ (கு 431) - இவை விடயம் என்னும் ஆதாரப்பொருளான இடம். புனல் முதலைக்கும் பகல் காக்கைக்கும் உரிமை. கடல் ஓடா...... நிலத்து’ (குறள். 496) என்புழி, எதிர்மறை யாலும் விடயம் உரிமை என்பது அறிக. கடல் நாவாய்க்கும், நிலம் தேர்க்கும் உரிமை.

2. ஓரிடம் - ஒற்றுமை மேவுதலால் வந்தது; அ) மதிக்கண் மறு, கையின்கண் விரல், குன்றின்கண் குவடு, ஆண்டின்கண் இருது - போன்றன. பிரிதலின்றித் தொடர்புபட்ட சமவாய சம்பந்தம் எனும் தற்கிழமை இடமாகும் இது. ஆ) பாயின்கண் இருந்தான், தேர்க்கண் இருந்தான் - போல்வன பிரிதற்கு இயலும் தொடர்பான சையோக சம்பந்தம் எனும் பிறிதின் கிழமை.

3. எங்கும் பரந்திருத்தல் (அபிவியாபகம்) - எள்ளின்கண் நெய், தயிரின்கண் நெய் போல்வன எங்கும் மேவுதல். இஃது ஒரு பொருளின்கண் பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக் கலந்திருத்தல் என்ற ஏழாம் வேற் றுமைப் பொருளான அபிவியாபகம் வந்தது.

ஆதாரம் என்பது ஏழாம்வேற்றுமை ஏற்ற பெயர் இட மாகவும் காலமாகவும் ஆதல். அதன்கண் உள்ள அல்லது நிகழும் அல்லது தொடர்பு கொள்ளும் பொருள் ஆதேயம் எனப்படும். இங்ஙனம் வரும் ஆதார ஆதேயங்கள் அருவா யும் உருவாயும் வரும்.

எ-டு : வடக்கண் வேங்கடம், ஆகாயத்தின்கண் பருந்து - இவற்றுள், ஆதாரம்: அரு, ஆதேயம் : உரு. ‘நல்லார் கண் பட்ட வறுமை’ (குறள். 408), உடலில் உணர்வு - இவற்றுள், ஆதாரம் : உரு, ஆதேயம் : அரு. (பி. வி. 13)

அதிகரணத் துதியை -

{Entry: C03__093}

ஏழாம் வேற்றுமைப் பொருளில் வரும் இரண்டாம் வேற்றுமை. நெறியில் சென்றான் என்ற பொருளில் நெறியைச் சென்றான் - என வருவது. இஃது இந்நூலில் வேற்றுமைப் பொருள்மயக்கம் எனப்படுகிறது. (பி. வி. 15)

அதிகாரத்தால் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: C03__094}

நூல்களில், சிறப்பாகச் சூத்திரங்களான் இயன்ற இலக்கண நூல்களில், ஓரிடத்தே நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றியைதல் அதிகாரம் எனப்படும். இது வடமொழியில் அநுஷங்கம் எனப்படுதலுமுண்டு (பி. வி. 50). ‘அதிகாரம்’ காண்க. (எடுத்துக்காட்டு (1))

அதிகாரம் -

{Entry: C03__095}

அதிகாரம் என்னும் சொற்கு முறைமை என்று பொருள் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்; பேராசிரியர் முறைமை, இடம், கிழமை என்று பொருள் கூறுவார் (பொ. 666). ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்று இயைதலையும், ஒன்றன் பொருள் பற்றி வருகின்ற பல ஓத்துக் களின் தொகுதியையும் அதிகாரம் என்பார் சேனாவரையர்.

எ-டு : 1) ‘விளிவயி னான’ என்னும் தொடர் (133 சேனா.) விளிமரபில் இத்தொடருள்ள சூத்திரத்திற்கு முன்ன ரும் பின்னரும் உள்ள சூத்திரங்களொடு சென் றியைதல்.

2) எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதி காரம் - என்பன.

அதிகாரம் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தல் -

{Entry: C03__096}

அதிகாரம் என்பது முறைமை - மரபு - இலக்கணம் - என்னும் பொருள்களையுடைய சொல். சொற்பொருள் உரைக்கும் ஏதுக்களாக, இ.கொ. தருபவற்றுள் இதுவும் ஒன்று. ‘கூடின் இன்பம் பிரியின் துன்பம்’ என்பது அகப்பொருட்கண்ண தாயின், அவ்வதிகாரம் பற்றித் “தலைவன் தலைவியொடு கூடின் இன்பம்; ,ஓதல் பகை தூது பொருள் முதலியவற்றால் உடன்படாது அவளை நீங்கில் அளவில் துன்பம்” என்றும், புறச்செய்யுட்கண் வரின், “கற்றாருடன் கலை பயிலின் அளவு பட்ட இன்பம்; நித்தியம் நைமித்திகம் காமியம் - முதலிய விரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம்” என்றும் கூறுக. (இ. கொ. 129)

‘சொற்பொருள் உரைக்க ஏதுக்களாவன’ காண்க.

அதுவாகு கிளவி -

{Entry: C03__097}

இது நான்காம் வேற்றுமை கொண்டு முடியும் சொற்களில் ஒன்று. உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிவதொரு பொருண்மை இது.

எ-டு : கடிசூத்திரத்துக்குப் பொன் . (தொ. சொ. 76 சேனா. உரை)

பொன் கடிசூத்திரமாகத் திரியும் ஆதலின் ‘அதுவாகு கிளவி’ என்றார். கிளவி - பொருள். ஒன்று ஒன்றாகத் திரிந்து வரும் பொருட்கு வருவது இப்பொருண்மை. (தொ. சொ. 74 தெய். உரை)

அதுவென் வேற்றுமை உயர்திணைத்தொகைக்கண் பெறும் நிலை-

{Entry: C03__098}

நம்பிமகன் - உயர்திணைத்தொகைக்கண் அது என் உருபு வாரா மல் நம்பிக்கு மகன் - என நான்கன்உருபு வருதல் வேண்டும்.

நம்பியது மகன் - என ஆறாவது விரிப்பதாயின் அது என்னும் அஃறிணை ஒருமை காட்டும் உருபு உயர்திணைப் பெயரோடு இணைதல் ஏலாது. ஆதலின், நான்காவதன் முறைப்பொருள் தோன்ற ‘நம்பிக்கு மகன்’ என விரித்தல் வேண்டும்.

(தொ. சொ. 94 சேனா. உரை)

நின்மகன் - நினக்கு மகன் ஆகியவன், எம்மகன் - எமக்கு மகன் ஆகியவன், என்மகள் - எனக்கு மகள் ஆகியவள் என ஆக்கம் கொடுத்து நான்கனுருபு விரித்துக் கூறல் வேண்டும். (தொ. சொ. 95 நச். உரை)

நம்பிக்கு மகன் என்பது இலக்கணம் இல்வழி மயங்கல், ‘நம்பியது மகன்’ என்பது இன்மையின் என்க. (தொ. சொ. 96 கல். உரை)

அந்தம் தமக்கு இல்லாதன -

{Entry: C03__099}

தெய்வமும் பேடும் ஆகிய அவ்விருவகையும், நரகர் - அலி - மகண்மா-முதலியவையும் தம் பொருள் அறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடைய அல்லவாயினும், உயர்திணைக்குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும்.

வருமாறு :

தேவன் வந்தான் - தேவி வந்தாள் - தேவர்வந்தார்; பேடன் வந்தான் - பேடி வந்தாள் - பேடர் வந்தார்; நரகன் வந்தான் - நரகி வந்தாள் - நரகர் வந்தார்; அலி வந்தான் - அலி வந்தாள் - அலியர் வந்தார்; மகண்மா வந்தாள்; பேடு வந்தது - பேடுகள் வந்தன; தேவன்மார் - தேவர்கள் ; தேவியர் - தேவிமார் - தேவிகள் ; பேடன்மார் - பேடர்கள் - பேடியர் - பேடிமார் - பேடிகள் - என்றாற் போல் வருவனவும் கொள்க. (இ.வி. 165)

அந்தர்ப்பாவித கருமம் -

{Entry: C03__100}

அகநிலைச் செயப்படுபொருள். வந்தான் என்பது வருதலைச் செய்தான் எனப் பொருள்படுதலின், வருதல் என்பது அகநிலைச் செயப்படுபொருள். (பி.வி. 12)

அந்தர்ப்பாவிதணிச் -

{Entry: C03__101}

ணிச் என்பது பிறவினை விகுதி; பிறவினை விகுதி மறைந்து நிற்றல் இது.

எ-டு : கோழி கூவிப் போது புலர்ந்தது - என்புழிக் கூவி என்- பதனைக் கூவுவித்து எனப் பிறவினையாக்கிப் பொருள்கொள்ளுதல் ஆம். ‘யானை ஒடித்துண்டு எஞ்சிய யா (குறுந். 232) என்புழி ‘எஞ்சிய’ என்ப- தனை எஞ்சுவித்த எனப் பிறவினையாக்கிப் பொருள் கொள்ளுதல் ஆம். ‘குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்’ (குறள் 171) என்புழிப் ‘பொன்றி’ என்பதற்குப் பொன்றச்செய்து என்று பிறவினை யாக்கிப் பொருள் கொள்ளப்படும். அவ்வாறு பொருள் கொண்டார் பரிமேலழகர்.

இவ்வெடுத்துக்காட்டுக்களில் பிறவினை விகுதி மறைந்து நிற்றல் காண்க. (பி. வி. 39)

அந்தில் -

{Entry: C03__102}

அந்தில் என்ற இடைச்சொல், ஆங்கு என்னும் இடப் பொருளை உணர்த்தலும், அசைநிலைச் சொல் ஆதலும் என்னும் ஈரியல்பினை உடையது.

எ-டு : ‘வருமே, சேயிழை அந்தில் கொழுநற் காணிய, இடம். (குறுந். 293) - ‘அந்தில் கச்சின ன் கழலினன்’ (அக. 76) - அசைநிலை (தொ. சொ. 269 நச்., 267 சேனா. உரை)

‘அந்து ஈற்று ஓ’ -

{Entry: C03__103}

அந்து என்பதன் ஈற்றில் ஓகாரம் புணர அமைவது ‘அந்தோ’ என்ற இடைச்சொல்.

எ-டு : ‘அந்தோ எந்தை அடையாப் போரில்’ (புற. 261) என ‘அந்தோ’என்பது இரக்கக் குறிப்பு உணர்த்தும்.

அந்தோ - சிங்களத் திசைச்சொல். (தொ. சொ. 284 நச். உரை)

அநபிகிந கருத்தா -

{Entry: C03__104}

தெரியா நிலை எழுவாய் - கருத்தா. தச்சனால் எடுக்கப்பட் டது மாடம் என்புழி, மாடம் கருத்தா என்று தெரியப்படாம லேயே செயப்படுபொருள் நிலை மாறிக் கருத்தாவாக வருதலின், தெரியாநிலைக் கருத்தா ஆயிற்று. (பி.வி. 11)

அநபிகித கருமம் -

{Entry: C03__105}

தெரியாநிலைச் செயப்படுபொருள். வினைச்சொல் கொள் ளும் ஆற்றலால் செயப்படுபொருள் இது என, ஆராயப்படா மலேயே, இயல்பாகப் புலப்படும் நிலை. அஃது ஐந்து வகைப்படும்.

1. ஈச்சிதம் - கருத்துள்வழி 2) அநீச்சிதம் - கருத்துஇல்வழி 3) அவ்விருவழியும் 4) கருத்தா கருமம் ஆதல் 5) அகதிதம் என்பன அவை.

இவற்றுள் முதலிரண்டையும் கல்லாடர் முதலாயினார் கருத்துள்வழிச் செயப்படுபொருள் - கருத்தில்வழிச் செயப் படு பொருள் - என்ப.

எ-டு : 1) பாயை நெய்தான், துவர ப் பசித்தவன் சோற்றை உண்டான் என்பவற்றுள், பாயை நெய்தல் - சோற்றை உண்டல் - இரண்டும் கருத்துள்வழிச் செய ப்படு பொருள்கள்.

2) சோற்றைக் குழைத்தான், தீக்கனாவைக் க ண்டான் - என்பவற்றுள், இரண்டும் கருத்தில்வழிச் செயப்படு பொருள்கள்.

3) ஊரைச் செல்வான் பசும்புல்லை மிதித்தான், பாற்சோறு உண்கின்ற சிறுவன் அதன்கண் வீழ்ந்த தூளியை (தூசியை)த் தின்றா ன் - என்பவற்றுள், புல்லை மிதித்தலும் தூசியைத் தின்றலும் அநீ ச்சிதம்; ஊரைச் சேறலும் பாற்சோறு உண்டலும் ஈச்சிதம். ஆதலால் இஃது அவ்விருவழியும் வந்தவாறு.

4) மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான் ஆசிரியன், மகட் போக்கிய தாய் - என்பவற்றுள், மாணாக்கன் மகள் என்னும் இருவரும் தனித்தனியே போவாரும் போக் கப்படுவாரும் ஆகலின் கருத்தாவே கருமம் ஆயிற்று.

5) ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் - என்புழியும் பசுவினைப் பாலைக் கறந்தான் - என் புழி யும் வரும் ‘துகன்மம்’ அகதிதம் ஆகிய ஈருருபு இணைதல். (பி. வி. 12)

அநித்திய சமாசம் -

{Entry: C03__106}

அநித்தம் எனவும்படும். இவை தொக்கும் தொகாமலும் வருவன.

இரண்டுமா - இருமா, மூன்றுறுப்பு - மூவுறுப்பு, நான்கு கடல் - நாற்கடல், ஐந்தறிவு - ஐயறிவு, ஆறுமுகம் - அறுமுகம், ஏழ்கடல் - எழுகடல், எட்டுத்திசை - எண்டிசை - என்றிவ் வாறு தொகா மலும் தொக்கும் என இருநிலைமைக்கண்ணும் வருதலான் அநித்தியம்; ஒருநிலையை மாத்திரமே ஏற் புடைத்து எனக் கொண்டால் நித்தியம் ஆம் என்க.

வேட்கை + அவா என்பது ‘செய்யுள் மருங்கின்’ (தொ. எ. 288 நச்) என்ற விதிப்படி வேணவா என இருத்தல் நித்தியம்.

ஐவாய வேட்கை அவாவினை’ (நாலடி. 59) என்புழி, இயல்பாய் நிற்றல் அநித்தியம். (பி. வி. 27)

அநித்திய லிங்கம் -

{Entry: C03__107}

லிங்கம் - பால். சொற்களின் பால் ஒரே நிலைத்தாய் இல்லாமல் திரிதல் அநித்திய லிங்கமாம். இது வடமொழிப் பண்புத் தொகைத் தொடர்களில், பண்புச்சொற்களைப் பண்புடைச் சொற்களின் பாலை யுடையவாக்கி (விசேடணம் விசேடியத்தின் பாலைப் பெறும் என்ற மரபிற்கு ஏற்ப)ப் புணர்க்கும் மரபு பற்றியது. தமிழிலும் கருஞ்சாத்தன் - கருஞ் சாத்தி - கருஞ்சாத்தர் - கருங்குதிரை - கருங்குதிரைகள் - என்பன வற்றை விரிக்குங்கால், கரியன் சாத்தன் - கரியள் சாத்தி - கரியர் சாத்தர் - கரிது குதிரை - கரியன குதிரைகள் - என்றே விரித்தல் வேண்டும் என்பது தொல்காப்பியம் கூறு முறை. ‘கரிய’ எனப் பொதுப்பட விரித்தலுமுண்டு. நன்னூல் ஆசிரியர், வாமனன் - சிநேந்திரன் - போன்றாருடைய சத்தநூல் கொள்கை பற்றிக் ‘கருமை குதிரை’ என்பது போலப் புணர்த்துவார். மேலே கூறியவாறு ‘கரியது குதிரை’ என விரித்தால் ‘குதிரை கரியது’ என எழுவாயும் பயனிலை யுமாகவே முடிவதன்றித் தொகை ஆகாது என்பதும் ஒரு கருத்து. (பி.வி. 49)

அநிரா கர்த்திரு சம்பிரதானம் -

{Entry: C03__108}

மறாவிடத்துக் கொடை - கேளாது ஏற்றல். முக்கண் மூர்த்திக்குப் பூ இட்டான் - என்பது போன்றவற்றில் வரும் நான்காம் வேற்றுமை, மாறாவிடத்துக் கொடைப் பொருளில் அமையும். முக்கண் மூர்த்தியாம் இறைவன் தனக்குப் பூவிட வேண்டும் எனக் கேட்டிலன். பூ இடுதல் மக்கள் இயல்பு. இறைவன் இதனை மாறாமல் ஏற்பான். இது கிடப்புக் கோளி என்பதன் பாற்படும். (வீ.சோ.) (பி. வி. 13.)

அநுமந்திரு சம்பிரதானம் -

{Entry: C03__109}

விருப்பாய் ஏற்றல். நான்காவது வேற்றுமைப் பொருளாகிய கொடை கொள்வோனால் அனுமதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுதல். இஃது ஆர்வக்கோளி எனப்படும். (வீ. சோ.)

எ-டு : ஆசிரியன் மாணாக்கனுக்குக் கசையடி கொடுத் தான் - இது மாணாக்கன் திருந்துதல் வேண்டும் என்று விரும்பிக் கொடுத்தமையானும், மாணாக் கனும் தன்னலம் கருதி அதனை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டமையானும் இப்பெயர் பெற்றது. (பி. வி. 13)

அநுவாதம் -

{Entry: C03__110}

ஒருமுறை ஒரு நிமித்தத்தால் முன்னர்ச் சொன்னதை மீண்டும் ஓரிடத்து வேறொரு நிமித்தத்தால் கூறுதல். இஃது இலக்கண நூல்களில் அண்மைநிலையும் தெளிவும் கருதிக் கைக் கொள்ளப்படும் நூற்புணர்ப்பு. இது கூறியது கூறல் என்னும் குற்றமாகாது; வழிமொழிதல் என்னும் சிறப்பேயாம். (இ. கொ.7)

அநேகவற்பாவி -

{Entry: C03__111}

பன்மைப்பொருளில் வரும் எண்தொகை. பஞ்சபாண்டவர், மூவேந்தர் - போல்வன எடுத்துக்காட்டாம். (பி. வி. 21)

‘பன்மொழி ஒப்புத்தொகை’ என்னும் துவிகு சமாசத்திற்கு முக்கோக்கள் என உதாரணங்காட்டுவார் வீரசோழிய உரையாசிரியர் (கா. 46)

அப்பிரதானம் -

{Entry: C03__112}

சிறப்பின்மை. ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் - என்பதில், ஒடுஉருபு உயர்ந்த சொல்லொடு வந்தது. இது தமிழ்மரபு. வடமொழிமரபு மாறி வரப்பெறும்.

எ-டு : மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான். (பி. வி. 16)

அப்பொருட்கிளவி -

{Entry: C03__113}

அப்பொருள் என்றது, அன்ன பொருளை; ‘இவ்வாடையும் அந்நூலான் இயன்றது’ என்றது போல. இச்சொற்றொடர் நான்காம் வேற்றுமை முடிக்கும் சொல் பற்றிய நூற்பாவில் உள்ளது. ‘அப்பொருட் கிளவியும்’ என்றதனான், பிணிக்கு மருந்து - நட்டார்க்குத் தோற்கும் - அவற்குத் தக்காள் இவள் - உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர் - என்பன போல்வன கொள்ளப்படும். (தொ. சொ. 76 சேனா. உரை)

இச்சொற்குப் பொருள் இது, அவற்குச் சோறுண்டு, நினக்கு வலி வாள், அவ்வூர்க்கு இவ்வூர் காதம், ‘ மனைக்குப் பாழ் வாணுதல் இன்மை’, (நான். 20) ‘போர்க்குப் புணைமன்’ (பு.வெ. 80), ‘ ன் சீர்இயல் நல்லாள்தான் அவற்கு ஈன்ற மைந்தன்’ - என்றாற் போல்வன கொள்க. (தொ. சொ. 77 நச். உரை)

மக்கட்குப் பகை பாம்பு - போல்வன கொள்க. (தொ. சொ.77 ப. உரை)

இவ்வூர்க்கு அவ்வூர் காதம், நாளைக்கு வரும், இவற்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன் - பிறவும் இந்நிகரன எல்லாம் கொள்க. (தொ. சொ. 74 தெய். உரை)

பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு - என்பன போல வருவனவும் கொள்க. (தொ. சொ. 74 இள. உரை)

அபாதான காரக பேதம் -

{Entry: C03__114}

எல்லையாகிய அவதி என்னும் ஐந்தாம் வேற்றுமை. நீக்கம் என்பது இதன் பொருள். இஃது அசலம் (நிலையானது), சலம் (இயங்குவது) என இருபொருளில் வரும். எதனின்நின்றும் நீக்கம் நிகழுமோ, அது சலமும் அசலமும் ஆம்.

எ-டு : -

மலையின் இழிந்தான்
நிலையானது
குதிரையின் இழிந்தான்
இயங்குவது

வெகிச்சீமை என்னும் புறப்பாட்டு எல்லை என்பதும் இதற்குப் பொருளாம்.

எ-டு : ‘குற்றத்தின் நீங்கி’ (கு. 502) - குற்றத்தின் எல்லையி னின்றும் நீங்கி;

‘சிறுமையின் நீங்கிய’ (கு. 98) - சிறுமையின் எல்லையி னின்றும் நீங்கிய (பி. வி. 11)

அபிவியாபகம் -

{Entry: C03__115}

எள்ளின்கண் எண்ணெய், தயிரின்கண் நெய் - என்றாற் போல, ஒரு பொருளின்கண் பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக் கலந்திருத்தல். (பி. வி. 13)

‘அதிகரண காரகபேதம்’ காண்க.

அபேத சட்டி -

{Entry: C03__116}

ஆறாம் வேற்றுமையின் தற்கிழமை வகை. ‘எனதுயிர்’ என்னுமிடத்து, யான் வேறு என்னுயிர் வேறு இல்லை. ‘இராகு வினது தலை’ என்பதும் அது. அபேதம் - வேறாதல் இன்மை.

(பி. வி. 17)

அபேத சம்பிரதானம் -

{Entry: C03__117}

ஈவோன் ஏற்போன் - என்பாரிடை வேற்றுமையின்றி ஒருவனே இருவரும் ஆதல். இப்பொருளில் வரும் நான்காம் வேற்றுமை.

எ-டு : ‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு’ (குறள். 847)

இக்குறளில், ‘அறிவிலான் தானே தனக்குத் தீங்கு செய்து கொள்வான்’ என வருதலின், ஈவோனும் ஏற்போனும் ஒருவனே ஆதல் காண்க. (பி. வி. 13)

அம் ஆம் எம் ஏம் விகுதிகள் முதலியன -

{Entry: C03__118}

அம் ஆம் - என்ற இந்த இரண்டு விகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள் முன்னிலையிடத்தாரையும், எம் ஏம் ஓம் - என்ற இந்த மூன்று விகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள் படர்க்கையிடத்தாரையும், உம் இடைச்சொல்லை ஊர்ந்த க ட த ற ஒற்றுக்களாகிய கும் டும் தும் றும் என்னும் இந்நான்கு விகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள் முன்னிலை படர்க்கை என்னும் இரண்டு இடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினை, வினைக் குறிப்பு முற்றாம்.

உம்மைகளை ஐயவும்மையாக்கி, அம் ஆம் - என்பன முன்னிலையாரையாயினும் படர்க்கையாரையாயினும், உண்டனம் உண்டாம் யானும் நீயும் - எனவும், உண்டனம் உண்டாம் யானும் அவனும் - எனவும் தம்மொடு படுக்கும் என வும்; ஆக்கவும்மைகளாக்கி அம் ஆம் என்பன முன்னிலை யாரையும் படர்க்கையாரையும் உண்டனம் உண்டாம் யானும் நீயும் அவனும் - என ஒருங்கு தன்னொடு படுக்கும் - எனவும் காண்க. (நன். 332 சங்.)

அம்ம -

{Entry: C03__119}

அம்ம என்னும் இடைச்சொல் ‘யான் ஒன்று கூறுகிறேன், கேள்’ என்று ஒருவர்க்குக் ‘கேட்பிக்கும்’ பொருண்மையை உணர்த்தி நிற்கும். இதனைத் தொல்காப்பியனார் ‘உரைப் பொருட் கிளவி’ (எ. 210, 212 நச்.) என்று குறிப்பிடுவர். இது படர்க்கையானை முன்னிலையான் ஆக்கும் விளிப்பொருட்- கண் வரும். இஃது அம்மா என நீண்டும் தன் பொருளை உணர்த்தும்.

எ-டு : அம்மா கொற்றா. (தொ. சொ. 278, 155 நச். உரை)

அம் முப்பாற் சொல் -

{Entry: C03__120}

உயர்திணைப்பொருள் பற்றி வரும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் மூன்று பகுதிய என்பது. ஆண் பெண் அலி - ஆண்பன்மை - பெண்பன்மை - ஆண் பெண் பன்மை - அலிப்பன்மை - இவையெல்லாம் தொக்க பன்மை - எனப் பலவகைப்படுமால் எனின், ஆசிரியர் பொருள் நோக்கிக் கூறினாரல்லர்; சொல்முடிபு மூவகை என்றே கூறினார். ஆண் பன்மையும் பெண்பன்மையும் இவ்விரண்டும் தொக்க பன்மையும் ‘வந்தார்’ என்றாற் போலவே முடிதலின், உயர் திணை முப்பாலினுள் அடங்கின. முப்பாற்சொற்களாவன ஆண் - பெண் - பலர் என்பன. (தொ. சொ. 2. தெய். உரை)

அயம் ‘கலு’ ராஜா ஆஸீத் -

{Entry: C03__121}

‘இவன்தானோ அரசனாக இருந்தான்?’ என்பது இத் தொடரின் பொருள். இதன்கண் ‘கலு’ என்பது வேண்டாச் சொல்; தொடருக்கு அணி செய்யவே இது சேர்ந்தது. இது ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்’ என்று தமிழ்வழக் கிலும் வரும். ஒப்பில்போலியாக வருவது போன்றது ‘கலு’ என்பது. (பி. வி. 50)

அர்த்தப் பிராணன் -

{Entry: C03__122}

எழுத்துக்களின் ஒலி பற்றி வடமொழியில் மகாப் பிராணன் - அற்பப் பிராணன் - அர்த்தப் பிராணன் - என்ற பிரிவுண்டு. முதலாவதற்கும் இரண்டாவதற்கும் இடைப்பட்டது அர்த்தப் பிராணன். ய ர ல வ ள என்னும் எழுத்துக்கள் இவை. (பி. வி. 4)

அரவப் பொருளில் வரும் உரிச்சொல் -

{Entry: C03__123}

கம்பலை சும்மை கலி அழுங்கல் - என்ற நான்கும் அரவம் ஆகிய இசைப்பொருண்மையினை உணர்த்தும்.

வருமாறு : ‘ களிறுகவர் கம்பலை போல’ (அக. 96), ‘கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’ (மதுரை. 263), ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த’ (அக. 11). ‘உயவுப்புணர்ந் தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) (தொ. சொ. 349 நச். உரை)

அரி என்னும் உரிச்சொல் -

{Entry: C03__124}

அரி என்னும் உரிச்சொல் ஐம்மை (மென்மை) என்ற குறிப்புணர்த்தும்.

‘அரிமயிர்த் திரள்முன்கை’ (புற. 11) என வரும்.

(தொ. சொ. 356 சேனா. உரை)

அருத்தாபத்தி -

{Entry: C03__125}

இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறியவழி, அச்சொல் தனக்கு இனமாகிய பிற பொருளைக் குறிப்பால் உணர்த்துதல். அறம் செய்தான் துறக்கம் புகும் - என்றால், மறம் செய்தான் துறக்கம் புகான் எனவும், ‘இழிவறிந்து உண் பான்கண் இன்பம்’ எய்தும் (குறள் 946) - என்றால், கழிபேர் இரையான் இன்பம் எய்தான் - எனவும் இனம் செப்புதல்.

மேலைச்சேரிக் கோழி அலைத்தது - என்புழிக் கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டது என்பதும், குடம் கொண்டாள் வீழ்ந்தாள் - எனவே குடம் வீழ்ந்தது என்பதும் இனம் செப்பின. ‘ஆ வாழ்க அந்தணர் வாழ்க’ முதலாயின, ஒழிந்த விலங்கும் மக்களும் சாக முதலாகப் பொருள்படாமையின் இனம் செப்பாதன. (தொ. சொ. 61 நச். உரை)

கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டலும் குடம் வீழ்தலும் பொருளாற்றலான் பெறப்பட்டன அன்றிச் சொல்லாற்ற லான் பெறப்பட்டன அல்ல. ஆ வாழ்க முதலியவற்றில் சொல்லுவான் ‘ஒழிந்தன சாக’ என்று கருதினானாயின், அவை யும் இனம் செப்புவனவாம். (தொ. சொ. 60 சேனா. உரை)

அருத்தாபத்தி இனம் செப்புவது, தன்னொடு மறுதலைப் பட்டு நிற்பதொன்று உள்வழி யாயிற்று; மறுதலைப்பாடு பல உள்வழிச் செப்பாது. ஆவிற்கு மறுதலை எருமை ஒட்டகம் எனப் பலவுள. அந்தணர்க்கு மறுதலை அரசர் வணிகர் வேளாளர் எனப் பலரும் உளர். அங்ஙனம் பல மறுதலை உள்வழிச் செப்பாது என்று கூறினார் நச்சினார்க்கினியர். சேனாவரையரும் இளம்பூரணரும் காட்டிய எல்லா எடுத்துக் காட்டுக்களையும் தந்தனர் கல்லாடரும் பழைய உரைகாரரும். (தொ. சொ. 61 நச். கல். உரை, ப. உ.)

தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும் பொருளும் காட்டி நின்றது. இஃது இனம் செப்பியது.

அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றி அந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது.

இனம் அல்லாதன செப்புதலும் உரித்து. குடம் சுமந்தான் விழுந்தான் என்றவழிச் சுமவாதான் விழுந்திலன் என்ற பொருளே யன்றிக் குடம் வீழ்ந்தது என்றவாறும் காண்க. (தொ. சொ. 59 தெய். உரை)

‘அல்’ ஈறு ‘அன்’ எனத் திரிதல் -

{Entry: C03__126}

உண்பல் தின்பல் - என எதிர்காலம் பற்றி வரும் தன்மை யொருமை வினைமுற்று, இதுபோது, அதனை உண்பன் - தின்பன் - என அன்ஈறாக வழங்கும் என்ப. (தொ. சொ. 200 இள. உரை)

கூறுவன் என்று தனித்தன்மை சொன்னாரும் உளராலோ எனின், இக்காலத்து அல்ஈற்று வினை அன்ஈறாய் நடக்கவும் பெறும்; என்னை? ‘அல்வினை ‘அன்’னாய்த் திரியவும் பெறுமே’ என்றாராதலின்.

எ-டு : ‘(பந்தம் அடிதொடை பாவினம்) கூறுவன்’ - என்றார் அமித சாகரர். (நேமி. வினை. 2 உரை.)

(அல்ஈற்று வினை எதிர்காலத்தில் மாத்திரமே வரும்; அன் ஈற்று வினை முக்காலத்தினும் வரும். ஆதலின் அதனை அல்ஈற்றின் திரிபு என்றல் ஏலாது.)

அல்ஈறு காலம் உணர்த்துதல் -

{Entry: C03__127}

அல்ஈறு பகரமோ வகரமோ பெற்றுத் தன்மையொருமை வினைமுற்றாய் எதிர்காலத்து வரும்.

எ-டு : உண்பல் (ப்), வருவல் (வ்)

உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலமும் பெறும்; ஒழிவல் - தவிர்வல் - என எதிர்மறை வாய்பாட்டிலும் வரும்.

(தொ. சொ. 205 நச். உரை)

‘அல்லது இல்’ -

{Entry: C03__128}

‘அல்லது இல்’ என்பது ஒருவகை விடை பகர்தல் வாய்பாடு. இவ்வாய்பாட்டினைப் பயன்படுத்தி விடைபகர வேண்டின், வினாய பொருளையல்லது பிறிதாய் அதற்கு இனமான பொருளைக் குறிப்பிட்டு ‘அதுவல்லது இல்லை’ எனல் வேண்டும். ‘பயறு உளவோ?’ என்று வினாவினாற்கு, ‘உழுந் தல்லது இல்லை’ என்றாற் போல விடை கூறல் வேண்டும்.

அல்லது என்பது அஃறிணையொருமைச் சொல்லாயினும், ‘அல்லது இல்’ என்ற வாய்பாடு இருதிணை ஐம்பால் மூவிடத்தும் பொதுவாக வருதலின், யானல்லதில்லை - யாமல்லதில்லை - நீயல்லதில்லை - நீஇர்அல்லதில்லை - அவனல்லதில்லை - அவளல்லதில்லை - அவரல்லதில்லை - அதுவல்லதில்லை அவையல்லதில்லை,

‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்

யானல தில்லைஇவ் வுலகத் தானே’ (அக. 268)

என வழக்கினும் செய்யுட்கண்ணும் வரும் ஒரு விடை மரபு வழுவமைதி இது. இது வினாயதற்கு விடைகூறும்வழிச் ‘சொல் தொகுத்து இறுத்தல்’ என்ற செப்புவகையாம். வினாயதனை மறுப்பதன்றி வினாவாத பிறிதொன்றனையும் உடன்பட்டுக் கூறுதலின் வழுவாய், வினாயதற்கு இனமாவதனைக் கூறலின் அமைக்கப்பட்டது. (தொ. சொ. 35 நச். உரை)

அல்வழிப் புணர்ச்சி -

{Entry: C03__129}

வேற்றுமை அல்லாவழிப் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சியாம். வினைத்தொகையும், பண்பு உவமை உம்மை அன்மொழி - என்னும் நான்கும் விரியவும் தொகவும் வரும் தொடர்ச்சியும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்புமுற்றுத் தொடர், இடைச் சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத் தொடர் - என் னும் ஒன்பதும் ஆக, இப்பதினான்கும் அல்வழிப்புணர்ச்சி எனப்படும். (நன். 151 மயிலை.)

அலி என்ற பெயர் கொள்ளும் வினை -

{Entry: C03__130}

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி - பேடி; பெண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி - அலி. அலிக்கு ஆண்மை திரித லுண்டேனும் பெண்மை திரிதல் பெரும்பான்மை ஆதலின், ஆண்பாலை யொட்டி ஆண்பால் வினையினைக் கொண்டு, அலி வந்தான் என முடியும். (பேடிக்குப் பெண்மை திரித லுண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை ஆதலின் பெண்பாலை ஒட்டிப் பேடி பெண்பால் வினையினைக் கொண்டு முடியும்; பேடி வந்தாள் - எனவரும்.) பேடு போல ‘அலி’ இருபாலையும் குறித்து வருவதாகவும் கொள்ப; அஃறிணையாகவும் கொள்ப. (நன். 264.)

அலி பேடி மகண்மா நிரயப்பாலர் : இவற்றை முடிக்கும் சொல் -

{Entry: C03__131}

அலி ஆண்பால் முடிபும், பேடியும் மகண்மாகவும் பெண்பால் முடிபும், நிரயப்பாலர் பலர்பால் முடிபும் பெறும். அலி வந்தான், பேடி வந்தாள் - மகண்மா வந்தாள், நிரயப்பாலர் வந்தார் - என முடிக்க. (தொ. சொ. 4 நச். உரை)

அலுக்கு -

{Entry: C03__132}

உருபு முதலியன தொகாமை. வடமொழியில் வினைச் சொற்களுக்கு உள்ள விகரணி எழுத்துப் போலத் தமிழுக்கும் அ ஆ முதலிய சில எழுத்துக்களைக் கூறுகிறார், பி.வி. நூலார். அவ்வகையால், உண்ணுவோம் என்பது அலுக்கு. உண்டான் என்பது லுக்கு; உகரம் தொக்கு வந்தது அது. (பி.வி. 41.)

இகழ்வார்ப் பொறுத்தல் ‘உயர்திணை மருங்கின் ஒழியாது

(குறள் 151) வருவதற்கு (தொ. எ. 157) உரிய

கேளிர்ப் பிரிப்பர் (குறள் 187) ஐயுருபு தொக்கு வந்தமை விகாரம். இது ‘லுக்கு’ எனப்படும்.

புதல்வரைப் பெறுதல், மன்னரைச் சேர்ந்தொழுகல், ‘சேர்ந்தாரைக் கொல்லி’ (குறள் 306) நம்பியைக் கொணர்ந் தான் - இவை மேலை விதிப்படி உருபு வெளிப்பட்டே நிற்றற் குரியன ‘அலுக்கு’ எனப்படும். (பி.வி.. 27)

அவ்வியய தத்திதன் -

{Entry: C03__133}

இடைச்சொற்கள் அடியாக வந்த பெயர்ப் பகுபதங்கள்: 1. அவ்வீடு - அந்த வீடு - இந்நாடு - இந்த நாடு - எனச் சுட்டுப் பெயர்கள் பிளந்து நின்றாற்போல நில்லாது வந்த இடப்பெயர்த் தன்மைப்பட்ட இடைச்சொற்களும்,

2. எண் முதலியவை ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்துவனவும் தமிழுக்கு அவ்வியய தத்திதன் ஆகும்.

எ-டு : 1. ஆங்குக் கொண்டான், ஆன்(ற்) கொண்டான், ஈன்(ற்) கொண்டான்

ஆங்கு : சுட்டாகும் முதலெழுத்து நீண்ட சொல். ஆன், ஈன் : அகர இகரங்களை அடியாகக் கொண்டு திரிந்த சொற்கள்.

அவ்வயின், இவ்வயின், எவ்வயின் (வினா); அங்கண், இங்கண், அவ்வாய், ஆயிடை - இவை இடப்பொருள் உணர்த்தும் (ஏழாம் வேற்றுமை) இடைச்சொல்லான தத்திதம்.

யாங்கு, யாண்டு, எங்கு - என்பனவும் அன்ன.

2. ஒருவயின், இருவயின், பலவயின்; இவை எண்ணோடு இயைந்து இடப்பொருளை உணர்த்துவன.

வடாஅது (வேங்கடம்), தெனாஅது (குமரி), குணாது, குடாஅது - எனத் திசைப்பெயர்களும், ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா. 173) எனப் பண்புப்பெயர்களும் அடியாக வந்த விகுதி ஏற்ற வினைக்குறிப்புப் பெயரெல்லாம் தத்திதனே ஆம்.

வடமொழியில் யத்திர (எவ்வயின்) தத்திர (அவ்வயின்) அத்திர (இவ்வயின்), யத : (எதனால்) தத : (அதனால்) இத : (இங்கு) - என வினாவும் சுட்டுமாக வருவனவற்றை விவட்சி தார்த்தம் (சுட்டிக் காட்ட விரும்பியவற்றைப் பொருளாக உடையன) என்பர்.

அப்பொருள் இப்பொருள் இக்கொற்றன் - போல்வன சுட்டும் பெயருமாகத் தொக்க தொகைநிலைச் சொற்களாம்; தத்திதன் ஆகா. (பி.வி. 33)

(இடைச்சொற்கள் இங்ஙனம் அவ்விய தத்திதாந்த பதம் எனக் கூறப்படுதல் அனைவர்க்கும் உடன்பாடானதன்று. தமிழுக்கு இது புதுமை. வீரசோழியம் இவற்றைத் தத்திதன் என்று கூறவில்லை. இலக்கணக் கொத்து இவற்றை இப்பொரு ளுணர்த்தும் வினாச்சுட்டு எண் பெற இடைச்சொல்லாகவே எழுந்து நின்றன என விளக்கி, இவற்றைப் பகுபதம் எனக் காட்டி, யாண்டு யாங்கு எங்கே எங்கண் எவண் எங்ஙனம் யாங்ஙனம் - எனவும், ஆன ஈன அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு அவண் இவண் உவண் அம்பர் இம்பர் உம்பர் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் - எனவும் உதாரணமும் காட்டியுள்ளது.)

அவ்வியய பூர்வபதம் -

{Entry: C03__134}

அவ்வியயீபாவ சமாசம் என்ற இடைத்தொகைச் சொற் றொடரில் முன்மொழி இடைச்சொல்லாக இருத்தல்.

எ-டு : மற்றை ஆடை (பி. வி. 23)

அவ்வியயம் -

{Entry: C03__135}

இடைச்சொல் உரிச்சொல் முதலியன அவ்வியயமாம்

(பி. வி. 42)

அவ்வியயம் என்னும் உபசர்க்கம் -

{Entry: C03__136}

உபசர்க்கம் என்பது சொல்லுக்கு முன் வருவது.

எ-டு : கைம்மிகல், மீக்கூர்தல் (கை, மீ) (பி. வி. 45)

அவ்வியயீ பாவ சமாசம் -

{Entry: C03__137}

இஃது இடைச்சொல்தொகை. அவ்வியம் என்பது, ஆண் பெண் அலி என்னும் வடமொழிச்சாத்திரலிங்கங்கள் (பால்) மூன்றிலும் ஒன்று போன்றதாய், வேற்றுமைகளுக்கும் பொது வாய், வேற்றுமைப் படாததாய், ஒருமை இருமை பன்மை என்னும் மூன்றிலும் மாறுபடாததாய் வரும் சொல் - என்பது வடமொழி மரபு.

தமிழில் இடைச்சொற்களும் அவ்வியயங்களைப் போல வருதலைக் கருதிப் பி.வி. நூலார் இடைச்சொல் முன்னும் பின்னும் வரும் தொடர்களை அவ்வியயீ பாவ சமாசம் எனக் கொள்கிறார். உண்மையில் அத்தொடர்கள் தொகாநிலை யாகவே நிற்கின்றன. தொல்காப்பியனாரும் இடைச்சொல் ‘முன்னும் பின்னும் மொழியடுத்து வருதல்’ உடைத்தென்றே கூறுவார். இஃது இருவகை கொண்டது, 1. முன்மொழிப் பெயர் 2. பின்மொழிப் பெயர் - என.

எ-டு : வாள்மன், அதுமன்; மற்றைஆடை, கொன்னூர் - என முறையே காண்க (பி. வி. 23)

‘அவர்அல பிற’ -

{Entry: C03__138}

அவரல்லாதவை அஃறிணை என்னாது ‘பிற’ என்றது, ‘அவரல’ என்றே ஒழியின் மக்கள் அல்லாத உயிருடைய பொருள்களையே சுட்டும் என்று ஐயுற்று, மக்கள் அல்லாத உயிருடைய பொருள் - ஏனை உயிர் இலவாகிய பொருள் - என்னும் இரண்டனையும் அஃறிணை என்று கோடற்கே அஃறிணை ‘அவரல பிற’ எனப்பட்டது. (தொ. சொ. 1 தெய். உரை)

‘அவரல பிறவே’ : தொடரமைப்பு -

{Entry: C03__139}

‘அவரின் அல்ல’ என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகையாய் ‘அவரல’ என வரும். (அவரின் நீங்கிய அவரல்லாதவை) இனி ‘அல்ல பிற’ என்பது அல்லவும் பிறவும் என உம்மைத்தொகை. (தொ. சொ. 1 இள. உரை)

அவன, அவள : ஈற்று அகரம் -

{Entry: C03__140}

அவன அவள - என்னும் சொற்களிலுள்ள ஈற்று அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு. (அவனுடையவாகிய கண்கள், அவளுடையவாகிய கண்கள் - எனப் பன்மைப் பெயர் கொடுத்து முடித்துக் காண்க.) (தொ. சொ. 76 இள. உரை)

அவாய்நிலை -

{Entry: C03__141}

தொடர்மொழிக்கண் நிலைமொழியும் வருமொழியும் இணைதற்குரிய திறங்களுள் அவாய்நிலை என்பதும் ஒன்று. (தொ. சொ. 1 சேனா. உரை) (இ. வி. 161)

அவாய் நிலையாவது ஒரு சொல் தன்னொடு சேர்ந்து பொருள் முடித்தற்குரிய மற்றொரு சொல்லை அவாவி நிற்பது. ‘ஆ நடக்கின்றது’ என்புழி, ஆ என்னும் நிலைமொழி நடக்கின்றது என்னும் வருமொழியை அவாவிநின்று, ஆ நடக்கின்றது என்னும் தொடர்மொழியாகிப் பொருள் நிரப்புகிறது.

‘அவை முதலாகிய பெண்டன் கிளவி’ -

{Entry: C03__142}

சுட்டு முதலாகிய பெண்தன் கிளவி என்பது, சுட்டுக்களை முதலாகக் கொண்டு பெண்மை பற்றி வரும் பெயர்ச்சொற் களாம். அவை அன்னள் இன்னள் அன்னாள் இன்னாள் - என வரும்.

அன்னள் - அன்னாள் - ஒப்பொடு வரும் கிளவி ஆகா. அன்ன என்பதே உவமக்கிளவியாதலின் அன்னவள் என்றே அவை வருதல் வேண்டும். பிறவும் ‘சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும்’ என்பதனுள் காண்க. (தொ. சொ. 164 ச. பால.)

‘அவை முதலாகிய பெண்டு என் கிளவி’ -

{Entry: C03__143}

சுட்டினை முதலாகவுடைய அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி - எனப் பெண்டாட்டி என்னும் பொருண்மை உணர வரும் பெயர்ச்சொற்கள். (பெண்டாட்டி - பெண்). உயர்திணைப் பெயர்களாக மூன்று நூற்பாக்களால் குறிக்கப் பட்ட பெயர்களுள் இவையும் சில. (தொ. சொ. 166 கல். உரை)

உயர்திணைப் பெயர்களில் அருகி வழங்கும் பெயர்களில் இவை குறிக்கப்படுகின்றன. அவை என்றது, சுட்டு மூன்றனை யும். வருமாறு : அப்பெண்டு இப்பெண்டு உப்பெண்டு.

‘பெண்டன் கிளவி’ பாடமாயின், அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி - என்பனவும் ஆம். (தொ. சொ. 165 நச். உரை)

அவையல் கிளவி -

{Entry: C03__144}

நன்மக்களிடைக் கூறத்தக்கன அல்லாத சொற்கள். இவற்றை அவ்வாய்பாட்டை மறைத்துப் பிற வாய்பாட்டான் கூறல் வேண்டும். அங்ஙனம் மறைக்குமிடத்தும், தொன்றுதொட்டு வழங்கி வருவனவற்றை மறைத்துப் பிற வாய்பாட்டான் கூறுதல் வேண்டா. இங்ஙனம் மறைத்துக் கூறுதல் தகுதி எனப்படும்.

எ-டு : ‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’ (எ. 233) - ஈகார பகரத்தை ஓர் உயிர்மெய்யெழுத்தாகக் கூறின் அவை யல் கிளவியாம். அதையே உயிரும் மெய்யு மாகப் பிரித்து வேறொரு வாய்பாட்டான் கூறின் அமை வுடைத்தாம்.

கண்கழீஇ வருதும்; கால்மேல் நீர்பெய்து வருதும், கை குறிய ராய் இருந்தார், பொறை உயிர்த்தார், ‘புலிநின்று இறந்த நீர்அல் ஈரத்து (நற். 103), கருமுக மந்தி, செம்பின் ஏற்றை - இவை இடக்கரடக்கிக் கூறியன.

ஆப்பி, யானை இலண்டம், யாட்டுப் பிழுக்கை - என்பன மருவி வந்தமையின் கொள்ளப்பட்டன.

(தொ.சொ.443 சேனா. நச். உரை)

அவையல்கிளவி, தகுதி : வேறுபாடு -

{Entry: C03__145}

அவையல் கிளவியாவது இழிந்தோர் கூறும் இழிசொற்களை நன்மக்களிடை மறைத்துக் கூறுதல்; மறைத்துக் கூறாக்கால் வழுவாம். தகுதியாவது ‘செத்தான்’ எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டதைத் தகுதி நோக்கிச் சிறுபான்மை ‘துஞ்சி னான்’ என வழங்குதல். செத்தான் என வழங்குதலும் வழா நிலையேயாம். இஃது இரண்டற்கும் இடையே வேற்றுமை. (தொ. சொ. 442 நச். உரை)

அழுங்கல் என்னும் உரிச்சொல் -

{Entry: C03__146}

அழுங்கல் என்னும் உரிச்சொல் ஓசையாகிய இசையினையும், இரக்கமும் கேடும் ஆகிய குறிப்பினையும் உணர்த்தும்.

எ-டு :‘உயவுப் புணர்ந்தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) - ஓசை.

‘அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே’

(அக. 66) - இரக்கம்.

‘குணன்அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும்’

(நாலடி. 353) - கேடு. (தொ. சொ. 350 சேனா. உரை)

‘அளபின் எடுத்த இசைய’ -

{Entry: C03__147}

இரண்டு மாத்திரையின் இகந்து மூன்று மாத்திரையாய் அளபெடுத்துக்கொண்டு நீண்டிசைப்பன.

எ-டு : உண்டேஎ மறுமை - தேற்ற ஏகாரம்

‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ (கள. 36) - சிறப்பு ஓகாரம். (தொ. சொ. 261 சேனா. உரை)

அளபெடுக்கும் ஆன்ஈற்றுப் பெயர் ஆ ‘ஓ’ ஆகாமை -

{Entry: C03__148}

அழாஅன் கிழாஅன் - என்னும் அளபெடைப்பெயர்கள் அளபெடுத்தால் ஆகாரம் ஓகாரம் ஆகா. (தொ. சொ. 197 நச். உரை)

“உழாஅன் கிழாஅன் என்பனவோ எனின், அவை அன்ஈற்றுப் பெயர்கள் (உழவன் கிழவன்) ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றன. அவை ஆன் ஈறாயவழி, உழவோன் கிழவோன் - எனத் திரியுமாறு அறிக.” (தொ. சொ. 195 சேனா. உரை)

உழவன் கிழவன் என்னும் அன்ஈற்றுப் பெயர்களே உழவோன் கிழவோன் - எனத் திரிந்துள. உழவான் கிழவான் - என ஆன் ஈற்றுச் சொற்களே இல்லை. ஆதலின் சிறுபான்மை அன்ஈறும் ஓன்ஈறு ஆகும் என்பது அறிக. (நச்.)

அளபெடை நிகழ வரையறை -

{Entry: C03__149}

உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் விளிக்கண் அளபெடுக்கும். (தொ. சொ. 155 கல். உரை)

அளபெடைப் பெயர் விளியேற்றல் -

{Entry: C03__150}

அளபெடைப் பெயர்கள் இயல்பாகவே வினியேற்கும். தொழீஇ - அழாஅன் - மகாஅர் - மாஅல் - கோஒள் - என்னும் இகர னகர ரகர லகர ளகர ஈற்று அளபெடைப் பெயர்கள் இயல்பாக விளியேற்கும். பெயர்நிலையும் விளிநிலையும் ஒன்றேயாய் நிற்கும் என்பது. (தொ. சொ. 122, 132, 138, 146 இள. உரை)

‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்’ -

{Entry: C03__151}

அளபெடை தன் இயல்பு மாத்திரையின் மிக்கு நான்கு மாத் திரையும் ஐந்து மாத்திரையும் பெற்று நிற்கும் இகர ஈற்றுப் பெயர். ஈகார ஈற்றுப் பெயர் அளபெடுத்து இகர ஈறாகும்.

எ-டு : தொழீஇஇ, தொழீஇஇஇ

(என முறையே நான்கு மாத்திரையும் ஐந்து மாத்திரையுமாக அளபெடுத்தன) (தொ. சொ. 125 சேனா. உரை)

விளியேற்றற்கண் அளபெடையெழுத்து மிகக் கூடிய, அளபெடையான் இயல்பாக இற்ற இகர ஈற்றுப் பெயர்.

எ-டு : தொழீஇ : இது தொழுத்தை என்பதன் திரிபு (தொழிலையுடையவள் என்னும் பொருட்டு). (தொ. சொ. 127 நச். உரை)

‘அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்’ விளியேற்குமாறு -

{Entry: C03__152}

அளபெடை தன் இயல்பான மாத்திரையின் மிக்கு நான்கு மாத்திரை பெற்று நிற்கும் இகரஈற்றுப் பெயர்கள் ஏனைய இயல்பான இகரஈற்றுப் பெயர் விளியேற்குமிடத்து இகரம் ஈகாரம் ஆவது போல ஆகாது, விளியேற்கும் செய்கை யுடையன.

எ-டு : தொழீஇ - தொழீஇஇ, தொழீஇஇஇ (என முறையே நான்கு மாத்திரையும் ஐந்து மாத்திரை யுமாக அளபெடுக்கும்.) (தொ. சொ. 127 நச். உரை)

அளபெடை மிக்க இகரஈற்றுப் பெயர் தொழீஇ என்பது. அஃது இயல்பாகவே நின்று விளியேற்று ஓசை வேறுபாட் டான் விளியாதலை உணர்த்தும்.

(தொழீஇ - தொழிலையுடையவள். தொழீஇஇ - எனப் பின்னும் ஓரளபெடை ஈரளபெடை பெற்று விளியேற்றல் இவ்வுரையாளர்க்கு உடன்பாடு அன்று.) (தொ. சொ. 121 தெய். உரை)

அளபெடை விளியேற்குமிடத்து ‘இயற்கைய ஆகும் செயற்கை’ நிலை -

{Entry: C03__153}

உயர்திணையிடத்து இகரஈற்று அளபெடைப்பெயர் விளி யேற்கு மிடத்து, ஏனைய இகரஈற்றுப் பெயர் போல இ ‘ஈ’ ஆகாமல், மாத்திரைமிக்கு இகரஈறாகவே நிற்கும். இ ‘ஈ’ ஆகாமை யான் ‘இயற்கைய ஆகும்’ என்றும், மாத்திரை மிகுதலின் ‘செயற்கைய’ என்றும் கூறினார்.

எ-டு : தொழீஇ - தொழீஇஇ, தொழீஇஇஇ

(தொ. சொ. 125 சேனா. உரை)

இங்ஙனமே ஆன்ஈறும், ரகார லகார ளகார ஈறுகளும் விளியேற்கும்.

எ-டு : கிழாஅன், உழாஅன் - கிழாஅஅன், உழாஅஅன் (தொ. சொ.135)

சிறாஅர், மகாஅர் - சிறாஅஅர் மகாஅஅர் (தொ. சொ. 141)

மாஅல் - மாஅஅல்; கோஒள் - கோஒஒள் (தொ. சொ. 149)

அளபெடை விளியேற்றல் -

{Entry: C03__154}

இகரம் னகரம் ரகரம் லகரம் ளகரம் ஆகிய ஐந்து ஈற்றுப் பெயர்களும் அளபெடுக்கும். அளபெடைப் பெயரின் ஈற்று இகரம் ஈகாரம் ஆகாது மாத்திரை நீளும். ஏனைய ஈறுகளின் ஈற்றயல் உயிர்மெய்நெடிலை யடுத்த அளபெடையெழுத்து ஒன்றற்குமேல் இரண்டு மூன்று நீண்டொலிக்கும்.

எ-டு : தொழீஇஇ, அழாஅஅன், சிறாஅஅர், மாஅஅல், கோஒஒள் (தொ. சொ. 128, 138, 144, 152 கல். உரை)

அளைமறி பாப்புப் பொருள்கோள் -

{Entry: C03__155}

செய்யுட்கண் ஈற்றில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்ற பொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள் கோளாம். அளை மறி பாம்பு - புற்றிலே தலைவைத்து மடங்கும் பாம்பு. அது போலுதலால் இப்பொருள்கோள் அப்பெயர்த் தாயிற்று.

எ-டு :

‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறிமுன்னி முயலா தாரே.’

இதனுள், ‘வாழ்ந்த......... முயலாதார்’ மூழ்ந்த பிணி.......முனிவார், சூழ்ந்த வினை ....... சுழல்வார், தாழ்ந்த உணர்வினராய்........ தளர் வார் - எனத் தலைகீழாய் ஈற்றடி இடையிலும் முதலிலும் சென்று கூடுதல் காண்க. (நன். 417 சங்.)

அறம் போற்றி வாழ்மின் : உருபு விரியுமாறு -

{Entry: C03__156}

அறம் போற்றி - அறத்தைப் போற்றி - எனப் போற்றப்படுவது அறம் என்னும் பொருளும் பட்டது. அறத்தால் போற்றி வாழ்மின் - எனப் போற்றப்படுவார்தாம் என்னும் பொருளும் பட்டது. (போற்றத்தக்காரை அறத்தால் போற்றி வாழ்மின் என்றவாறு.) (தொ. சொ. 93 தெய். உரை)

அறிசொல் -

{Entry: C03__157}

அறிதற்குக் கருவியாகிய சொல், பொருளை அறிதற்குச் சொல் கருவியாக நின்று உதவுதலின். (தொ. சொ. 2 நச். உரை)

அறிதற் கருவி -

{Entry: C03__158}

கருவியாவது வினைமுதல் தொழிற்பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது. அக்கருவி இயற்றுதற் கருவியாகிய காரகக் கருவியும், அறிதற் கருவியாகிய ஞாபகக் கருவியும் என இருவகைப்படும். ஞாபகமாவது அறிவிப்பது. உணர்வி னான் உணர்ந்தான்; புகையினான் எரியுள்ளது என உணர்ந் தான்: இவற்றிற்கு அறிவு முதற்காரணமாம். ஆகவே, இவை அறிதற் கருவியாகிய ஞாபகக் கருவியாம்.

(தொ. சொ. 74 நச். உரை)

’அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்க்கும்’ வினா -

{Entry: C03__159}

எ-டு : இம்மரங்களுள் கருங்காலி யாது?

நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?

(தொ. சொ. 32 சேனா. உரை)

மரங்களுள் கருங்காலியும் உள்ளது அறியப்பட்டு அஃது யாது என்று வினாவப்பட்டது. எருது ஐந்தும் நம்முடையன என்பது அறியப்பட்டு அவற்றுள் ஒன்று காணப்பட்டிலது என்பதும் அறியப்பட்டு, அக்கெட்ட எருது பற்றி வினாவப் பட்டது.

பொதுவாக வினாக்களே மிகுதியும் அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்கே வருதலின், யா யாவை யாவன் யாவள் யாவர் யார் யாண்டு யாங்கு - முதலாயின அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்க்கும் வினாவாகவே உள. (தொ. சொ. 31 சேனா. உரை)

அறிந்து செய்வினையும், அறியாது செய்வினையும் -

{Entry: C03__160}

இலக்கணக்கொத்து வினைவகை விளக்கத்தில் இவற்றைக் குறிக்கும். தூசியொடு பாலைப் பருகினான் என்புழி, பாலைப் பருகுதல் அறிந்து செய்வினை; தூசியையும் சேர்த்துப் பருகுதல் அறியாது செய்வினையாம். (இ. கொ. 81)

அறிபொருள் வினா -

{Entry: C03__161}

இது வினாவகை மூன்றனுள் ஒன்று. ஏனையன அறியான் வினாவும் ஐயவினாவும். அவ்விரண்டும் வழாநிலை. அறிந்த பொருளை வினாவுதல் தக்கதன்று எனினும் ஒரு காரணம் பற்றி வினவுதலின் இது வழுவமைதியாம்.

இவ்வறிபொருள் வினா, அறிவு ஒப்புக் காண்டல் - அவனறிவு தான் காண்டல் - மெய் அவற்குக் காட்டல் - என மூவகைத்து.

(தொ. சொ. 13 சேனா. உரை)

கற்சிறார் தம்முள் கற்ற செய்தி பற்றி வினாவி விடைகோடல் அறிவொப்புக் காண்டலாம். ஆசிரியன் மாணாக்கனை அவன் தன்மாட்டுக் கற்ற பொருள்பற்றி வினாவுதல் அவனறிவினைத் தான் உணர்ந்து கோடற்கும், அவன் பிறழ உணர்ந்தவழி உண்மையான செய்தியை அவற்குக் காட்டற் கும் ஆதலின், இவ்வறிபொருள் வினாவின் மூவகையும் ஒருபயன் நோக்கி அமைந்தன.

அறிபொருள் வினாவின் வேண்டற்பாடு -

{Entry: C03__162}

அறியப்பட்ட பொருளையே வேறு அறிதலும் அறிவுறுத் தலும் முதலிய பயன்நோக்கி வினாவுதல் அறிபொருள் வினா. இதன்கண் அறிவு ஒப்புக் காண்டலும், அவன் அறிவு தான் காண்டலும், மெய் அவற்குக் காட்டலும் அடங்கின. இப்பயன் கருதி அறிபொருள் வினாவும் வேண்டற்பாலதே. (தொ. சொ. 13 நச். உரை)

அறியாப் பொருள் -

{Entry: C03__163}

ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமை யின், பொதுவகையான் உணர்ந்து சிறப்புவகையான் அறி யாமையின் வினாவுகின்ற வினா அறியாப் பொருள்வயின் வினாவாம். (தொ. சொ. 12 சேனா. நச். உரை)

அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும் வினாக்கள் -

{Entry: C03__164}

பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்புவகையான் அறியப் படாத பொருளை வினாவுதற்குரிய வினாச்சொற்கள் யாது, எவன் என்பனவாம்.

எ-டு : இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருள் எவன்?

இக்காலத்து எவன் என்பது என் எனவும் என்னை எனவும் மருவிற்று. யா - யாவை - யாவன் - யாவள் - யாவர் - யார் - யாண்டு - யாங்கு - என்னும் தொடக்கத்தன திணையும் பாலும் இடனும் முதலாகிய சிறப்பு வகையானும் சிறிது அறியப் பட்டன ஆதலின், அவை அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றாமையின், யாது எவன் - என்ற இரண்டுமே ‘அறியாப் பொருள்வயின் செறியத் தோன்று’ வனவாகக் கொள்ளப் பட்டன. (தொ. சொ. 31 சேனா. உரை)

அறியான் வினா -

{Entry: C03__165}

வினாவகை மூன்றனுள் முதலாவது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையின், பொதுவகை யான் அறிந்து சிறப்புவகையான் அறியலுறுவான் வினாவுவது அறியான் வினா. இவ்வினா வழாநிலை. “இச்சொற்குப் பொருள் யாது?” என்று பொருள் அறியாதான் அறிந்தவனை வினாவுவது அறியான்வினா. வினா, அறியலுறவினை வெளிப்படுப்பது. (தொ. சொ. 13 சேனா. உரை)

அறுத்தல் -

{Entry: C03__166}

அறுத்தலாவது இரண்டாம் வேற்றுமை முடிக்கும் சொற் களுள் ஒன்று. அஃதாவது சிறிது இழவாமல் முதலை யாயினும் சினையையாயினும் இருகூறு செய்தல்.

எ-டு : மரத்தை அறுத்தான் (தொ. சொ. 72 சேனா. உரை)

‘அறுபொருட் பெயரும்’ : உம்மை விளக்கம் -

{Entry: C03__167}

‘செய்வது ஆதி அறுபொரு ட் பெயரும்’ என்புழி வரும் உம்மையை ‘ஆறும் தருவது வினையே’ (320) என்னும் உம்மை போல வைத்து, அறுபொருட் பெயரில் சில குறைந்தும், இன்னதற்கு - இது பயன் - என்னும் இருபொருட் பெயரும் பிற பெயரும் கூடியும் எஞ்ச நிற்பது - எனவும் பொருள் உரைத்துக்கொள்க. அவை வருமாறு:

ஆடின கொடி, துஞ்சின கொடி - இவை செய்வது ஆதி அறுபொருட் பெயருள் சில குறைந்து எஞ்ச நின்றன. (முறையே செயப்படுபொருளும் அதனொடு கருவியும் குறைந்தன என்க.)

உண்ட இளைப்பு எனவும், ‘குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி’ (முருகு. 199) எனவும், குடிபோன ஊர் எனவும், பொன் பெரிய நம்பி - எனவும் பிற பெயர்கள் எஞ்சநின்றன. உண்ட இளைப்பு என்பது உண்ட காரணத்தான் வரும் காரியமாகிய இளைப்பு ஆதலால் செயப்படுபொருள் கொண்டதெனின் அமை யாதோ எனில், சாத்தன் உண்டசோறு என்புழிச் சோற்றை உண்ட சாத்தன் - எனச் சோறு என்பது இரண்டா முருபு ஏற்றாற்போல இளைப்பு என்பது அவ்வுருபு ஏலாமையின், அது செயப்படுபொருள் ஆகா தென்க. இவ்வெச்சம் காரணப் பொருட்டாயே நின்றதென்க. எனவே இப் பெயரெச்சங்கள் காரணப் பொருட்டாயும் காரியப் பொருட்டாயும் என இவ்விருதிறத்த வாயும் வருதல் காண்க. (நன். 340 சங்.)

அறுபொருள் (இடுகுறி) மரபு (காரண)ப் பெயர் -

{Entry: C03__168}

தேவன் தேவி மகன் மகள் மக்கள் மாந்தர் மைந்தர் ஆடூஉ மகடூஉ நாகன் நாகி யானை குதிரை ஆமா நாய் நரி மயில் குயில் பொன் மணி மரம் பனை தெங்கு நீர் வளி நெருப்பு - என்றும் (பொருள்), வான் நிலம் அகம் புறம் கீழ் மேல் குழி அவல் - என்றும் (இடம்), ஊழி யாண்டு அயனம் இருது மதி பக்கம் நாள் இரா பகல் யாமம் நாழிகை மாத்திரை - என்றும் (காலம்), கை தலை கால் சினை தளிர் பூ காய் - என்றும் (சினை), வட்டம் சதுரம் குறுமை நெடுமை கருமை சிவப்பு தண்மை வெம்மை கைப்பு இனிப்பு புளிப்பு விரை மணம் உண்மை இன்மை தீமை வன்மை மென்மை - என்றும் (குணம்), ஊண் தீன் உணல் தினல் உணப்படல் தினப்படல் ஏவப்படல் உணப் பாடு தினப்பாடு (தொழில்) என்றும் வரும் இத்தொடக்கத்தன பொருள் ஆதி இடுகுறி மரபு காரணப்பெயர். (நன். 274 மயிலை.)

அறுவகைச் செய்யுள் விகாரங்கள் -

{Entry: C03__169}

வலித்தல் மெலித்தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் - என்பன அறுவகைச் செய்யுள் விகாரங்களாம்.

வலித்தல் - ‘முந்தை’ முத்தை எனத் திரிதல்

‘முத்தை ரூஉம் காலம் தோன்றின்

ஒத்த தென்ப ஏ-என் சாரியை’ (தொ. எ. 164 நச்.)

மெலித்தல் - ‘தட்டை’ தண்டை எனத் திரிதல்

‘தண்டையின் இனக்கிளி கடிவோள்

பண்டையள் அல்லள் மானேக் கினனே.’

விரித்தல் - ‘தண்துறை’ தண்ணந்துறை எனத் திரிதல்.

‘தண்ணந் துறைவன் கொடுமை... நாணி’ (குறுந்9. )

தொகுத்தல் - ‘இடைச்சொல்’ இடை எனப்படுதல்.

‘இடை யெனப் படுப பெயரொடும் வினையொடும’ (தொ. சொ. 251)

நீட்டல் - ‘விடும்’ வீடும் என உயிர்நீடல்.

‘வெள்வளை நல்கான் வீடு மென் உயிரே.’

குறுக்கல் - ‘தீயேன்’ தியேன் என நெட்டுவது குறுகுதல்

‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ (தொ. சொ. 403 நச். உரை)

இவை எதுகை முதலிய தொடை நோக்கியும், சீர் அமைதி நோக் கியும் அமைவன. ‘பாசிலை ’, ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்றாற் போல்வன இரண்டு விகாரம் வருவன.

குறுந்தாள் என்பது

‘குறுத்தாள் பூதம் சுமந்த

அறக்கதிர் ஆழிநம் அண்ணலைத் தொழினே’ என்புழி

மெல்லெழுத்து இனவல்லெழுத்தாக வலித்தது.

மழவரை என்னும் இரண்டனுருபு மழவ ரோட்டிய’ (அகநா. 1) என்புழித் தொகுத்தல். பச்சிலை என்பது ‘பாசிலை’ என நீட்டல்.

உண்டார்ந்து என்பது ‘உண்டருந்து’ என நெட்டுயிர் குறுக்கல்.

(தொ. சொ. 398 இள. உரை)

குறுக்கை (ஐங். 266), மு த்தை - வலித்தல் (ஙகரமும் நகரமும் இனவல்லெழுத்தாக வலித்தன.)

‘சுடுமண் பாவை’, ‘குன்றிய லுகரத் திறுதி’ (சொ. 9) - மெலித்தல் (டகரமும் றகரமும் இனமெல்லெழுத்தாக மெலித்தன.)

தண்ணந் துறைவன் - விரித்தல் (அம்முச்சாரியை இடையே விரிந்தது.)

மழவரோட்டிய - தொகுத்தல் (உயர்திணைக்கண் ஒழியாது வரவேண்டும் ஐகாரம் தொக்கது) செவ்வெண்ணின் தொகை தொக்கு வருதலும் தொகுத்தலாம்.

வீடுமின், பாசிலை - நீட்டல் (முறையே இகர உயிரும் அகர உயிரும் நீண்டன.)

உண்டருந்து, அழுந்துபடு - குறுக்கல் (உண்டார்ந்து, ஆழ்ந்து படு - என்புழி வரும் ஆகாரம் குறுகிற்று) (தொ. சொ. 403 சேனா. உரை)

இவற்றுக்கு முறையே முத்தை - தண்டை - தண்ணந்துறைவர் - வேண்டார் வணக்கி - பாசிழை - தியேன் - என உதாரணம் காட்டுவார் தெய்வச்சிலையார். (தொ. சொ. 399 உரை)

அறுவகைத் தொகையான் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: C03__170}

மொழி வருவித்துச் சொற்பொருள் முடிக்கும் வகைகளுள் ஒன்று இது. அறுவகைத் தொகைநிலைத் தொடர்களையும் விரித்துரைத்துப் பொருள் கொள்ளுதல்.

எ-டு : முறிமேனி என்ற தொடரை முறி (தளிர்) போலும் என்பதனுடன் அமையாது, மாவினது தளிரின் நிறத்தையும் அதன் தட்பத்தையும் போன்று கண்ணுக் கும் மெய்க்கும் இன்பம் தரும் மேனி - என்று வருவித் துரைத்தல் போல்வன. (இ. கொ. 89.)

அறுவகைப் பெயர்கள் -

{Entry: C03__171}

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்னும் ஆறும் பற்றி வரும் பெயர்கள் வினைமுற்றிற்கு முடிக்கும் சொற்களாய் வழும்.

எ-டு : செய்தான் அவன் - நல்லன் அவன், குளிர்ந்தது நிலம், வந்தது கார், குவிந்தன கை, பரந்தது பசப்பு, ஒழிந்தது பிறப்பு - என அவை முறையே வந்தவாறு. (நன். 323 சங்.)

அறுவகை வினா -

{Entry: C03__172}

அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா - என வினா அறுவகைத்தாம்.

ஆசிரியன் மாணாக்கனை ‘இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது?’ என்று வினாவுதல் அறிவினா.

மாணாக்கன் ஆசிரியனை அவ்வாறு வினாவுதல் - அறியா வினா.

‘குற்றியோ மகனோ அங்கே தோன்றும் உரு?’ - ஐய வினா.

‘பொன்உளவோ மணியுளவோ, வணிகீர்?’ - கொளல் வினா.

‘சாத்தனுக்கு ஆடை இல்லையோ?’ என்பது கொடுத்தல் வினா.

‘சாத்தா உண்டாயோ?’ என்பது ஏவல் வினா. (நன். 385 சங்.)

அன்ஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்குமாறு -

{Entry: C03__173}

அன்ஈறு ‘ஆ’வாகத் திரிந்து விளியேற்கும்.

எ-டு : துறைவன் - துறைவா, ஊரன் - ஊரா

அண்மைவிளிக்கண் ஈறு கெட்டு அகர ஈற்றதாக விளியேற்கும்.

எ-டு : துறைவன் - துறைவ, ஊரன் - ஊர

முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும்.

எ-டு : மகன் - மகனே, மருமகன் - மருமகனே

அவன் இவன் உவன் - என்ற சுட்டுப்பெயர்களும் யாவன் என்ற வினாப்பெயரும் விளியேலா. (தொ. சொ. 130,131, 136, 137 சேனா. உரை)

‘அன் ஈற்று ஓ’ -

{Entry: C03__174}

அன்னோ என்னும் இடைச்சொல். ‘அன்னோ என்னா வதுகொல் தானே’ (புற. 345) என இவ்விடைச்சொல் இரக்கக் குறிப் புணர்த்தும். (தொ. சொ. 284 நச். உரை.)

அன்பு அருள் ஆசை அறிவு அறியாமையால் துணிதல் -

{Entry: C03__175}

பொருள்களைத் துணிவது பற்றி இ. கொ. மூன்று வகை கூறும். அவையாவன பொருளைப் பொருள் எனல், பொரு ளல்ல தனைப் பொருள் எனல், இது பொருளன்று என்று அறிந்தும் இதுவே பொருள் எனல் - என்பன. இவற்றுள் முன் னதும் பின்னதும் வழு அல்ல; நடுவிலுள்ளது வழுவேயாம்.

இதற்குப் புறனடையாக அன்பு முதலியவற்றால் துணியும் திறனும் முன் கூறிய மூன்றனுள் அடங்கும் என்றார். (இ. கொ. 122, 123.)

பொருளல்லதனைப் பொருள் என்றல் அறியாமையால் துணிதல். பொருளைப் பொருள் எனல் அறிவால் துணிதல். ஏனையது அன்பு அருள் ஆசை என்னும் இவை காரணமாகத் துணிதல்.

‘அன்மைக் கிளவி’ -

{Entry: C03__176}

பால்ஐயத்தையும் திணைஐயத்தையும் துணிந்து கூறும்வழி, அவற்றிற்கு அன்மைத்தன்மை ஏற்றிக் கூறுதல் மரபு. ஒரு பொருள் ஒரு பொருளன்றாம் தன்மையை உணர்த்தும் சொல், ஐயத்துக்கு வேறாய்த் துணிந்து கொள்ளப்பட்ட பொருளின்- கண்ணது.

அன்மைக்கிளவி துணிபொருட்கண் வருவதற்கு எடுத்துக் காட்டு :

இவன் பெண்டாட்டி அல்லன், ஆண்மகன்.

இவள் ஆண்மகன் அல்லள், பெண்டாட்டி.

இவன் குற்றி அல்லன், மகன்.

இவ்வுரு மகன் அன்று, குற்றி.

இப்பெற்றம் பல அன்று, ஒன்று.

இப்பெற்றம் ஒன்று அல்ல, பல.

இவன் என்னும் எழுவாய் அல்லன் என்பதனொடு முடிந்தது; ஆண்மகன் என்பது இவன் என்னும் சுட்டுப் பெயர்க்குப் பெயர்ப் பயனிலையாய் நின்றது. பெண்டாட்டியின் அல்லன் - என ஐந்தனுருபு விரித்தலும் ஆம். (பெண்டாட்டியின் நீங்கிய அன்மைத் தன்மையுடையவன்.) (தொ. சொ. 25 நச். உரை)

அன்மைக்கிளவி மறுக்கப்படும் பொருள்மேல் ஆம் என்று கூறிச் சேனாவரையர் ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி; பெண்டாட்டி அல்லள், ஆண்மகன் - என்று உதாரணம் காட்டுவர். இத்தொடருக்கு ‘இவ்வுருபு ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி’ - என உருபு என்ற சொல் காட்டியே பொருள் உரைக்க வேண்டும். உருபு என்னும் அஃறிணைப்பெயர் அல்லன் அல்லள் என்ற உயர்திணையொடு முடியாது.

இவள் ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி; இவன் பெண் டாட்டி அல்லள், ஆண்மகன் - என்று சுட்டுப்பெயர் கூட்டி னும் வாக்கியம் பிழையற முடியாது. ‘குற்றியோ மகனோ?’ என்று ஐயுற்று மகன் என்று துணிந்தவழி, குற்றித்தன்மை ஆண்டு இல்லை. ஆண்டு இல்லாத குற்றித்தன்மையன்அல்லன் மகன் ஆதலின், அஃது அல்லாதான்மேல் அன்மை ஏற்றலே ஆசிரியர் கருத்தாம். ஆதலின் அன்மைச்சொல் துணியப்பட்ட சொல்மேல் ஏற்றப்படுதலே சிறப்பு. (தொ. சொ. 25 நச். உரை)

‘அன்மைக் கிளவி தன்மை சுட்டல் வேறிடத்தான’ -

{Entry: C03__177}

துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக்கிளவி துணியப்பட்ட பொருளைச் சுட்டல் உரித்து. தன்மை அப்பொருட்கு இயல்பு எனவே, தன்மை சுட்டல் துணியப்பட்ட பொருட்கண் ஆயிற்று.

மகன் என்று துணிந்தவழிக் குற்றியல்லன், மகன் என்க.

குற்றி என்று துணிந்தவழி மகனன்று, குற்றி என்க.

ஆண்மகன் என்று துணிந்தவழிப் பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் என்க.

பெண்டாட்டி என்று துணிந்தவழி ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி என்க.

பல என்று துணிந்தவழி ஒன்று அல்ல, பல என்க.

ஒன்று என்று துணிந்தவழிப் பல அன்று, ஒன்று என்க.

துணியப்பட்ட பொருட்கு வேறாகிய பொருட்கண் அன்மைக் கிளவி வரும் என்ற சேனாவரையர் கருத்தே இவர்க்குப் பெரிதும் உடன்படாம் என்பது இவருரையின் இறுதிப் பகுதியால் புலப்படும். (தொ. சொ. 25 தெய். உரை)

அன்மை துணிபொருளிடத்துக் கூறல் -

{Entry: C03__178}

ஆண்மகன் என்று துணிந்தவழி, பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் எனவும், பெண்டாட்டி என்று துணிந்தவழி ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி எனவும், குற்றி என்று துணிந்தவழி மகனன்று குற்றி எனவும், மகன் என்று துணிந்த வழி குற்றி அல்லன் மகன் எனவும், பல என்று துணிந்தவழி ஒன்று அல்ல பல எனவும், ஒன்று என்று துணிந்தவழி பல அன்று ஒன்று எனவும், துணியப்பட்ட பொருள்மேல் அன்மைத்தன்மை வைத்துக் கூறுக. . (தொ. சொ. 25 கல். உரை)

நச்சினார்க்கினியரும் இவ்வாறே கொள்வர். (25)

அன்மை முதலியன பண்பும் குறிப்பும் ஆதல் -

{Entry: C03__179}

பண்பு - ஒரு பொருள் தோன்றுங்காலத்து உடன்தோன்றி அது கெடும்துணையும் நிற்பது. குறிப்பு - பொருட்குப் பின்னர்த் தோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது.

எப்பொருளும் அல்லன் இறைவன் - பண்பு.

அவன்தான் இவன் அல்லன் - குறிப்பு.

எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் - பண்பு.

மாற்றார் பாசறை மன்னன் உளன் - குறிப்பு.

பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன் - பண்பு.

மாற்றார் பாசறை மன்னன் இலன் - குறிப்பு.

மெய் வலியன் (வன்மை) - பண்பு.

‘சொலல் வல்லன்’ (வல்லுதல்) - குறிப்பு.

(தொ. சொ. 216 நச். உரை)

அன்மொழிக்கு அன்மொழி -

{Entry: C03__180}

‘தகர ஞாழல்’ என்ற தொடர் தகரமும் ஞாழலும் கூட்டி அமைத்த சாந்து என்ற பொருளில் அன்மொழித்தொகை யாகிப் பின்னர் அச்சாந்தைப் பூசினவள் என்று பொருள் பட்டு அன்மொழிக்கு அன்மொழி ஆயிற்று. வடமொழியில், துவிரேபம் என்பது இரண்டு ரகரங்களைக் கொண்ட சொல் என அன்மொழித்தொகையாகிப் பின்னர் அத்தகைய சொல் லான பிரமரத்தை - வண்டினை-க் குறித்தலால் இஃது அன் மொழிக்கு அன்மொழியாம். (பி.வி. 24)

அன்மொழித்தொகை -

{Entry: C03__181}

தொக்க இருமொழியும் அல்லாத அன்மொழி மறைந்து நின்று பொருளை வெளிப்படுப்பது அன்மொழித்தொகை. இவ்வன்மொழித் தொகை, வேற்றுமைத்தொகை - வினைத் தொகை - பண்புத் தொகை - உவமத்தொகை - உம்மைத்தொகை - என்ற தொகைகளின் புறத்து வரும்.

இவ்வன்மொழித்தொகையும் இருபெயரொட்டாகுபெயரும் ஒன்று என்பர் சிலர்; வெவ்வேறு என்பர் சிலர்.

வினைத்தொகையும் உவமத்தொகையும் பிறந்து அவற்றின் புறத்தே அன்மொழித்தொகை பிறக்கும் என்று தொல்காப் பியனார் வெளிப்படையாகக் கூறவில்லை; பண்புத்தொகை உம்மைத் தொகை வேற்றுமைத்தொகை - என்னும் இவற்றின் ஈற்றில் நின்று இயலும் அன்மொழித்தொகை என்றே கூறுகிறார். (418 நச்.)

இவ்வன்மொழித்தொகையை விட்ட அன்மொழித்தொகை, விடாத அன்மொழித்தொகை - எனப் பகுப்பர் சிவஞான முனிவர். (சூ.வி.)

‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்’ (குறள் 570) - இதன்கண் கடுங்கோல் : அன்மொழித்தொகை; கோலின் கடுமை அரசன் மேல் நின்றது. ஆதலின் இது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

‘தகரஞாழல் பூசினார்’ - தகரஞாழல்: இவையிற்றை உறுப் பாக அமைக்கப்பட்ட சாந்தினையும் தகரஞாழல் என்ப ஆதலின் அன்மொழித்தொகை ஆயிற்று. ‘தூணிப்பதக்கு: அளவிற்குப் பெயராதலின்றி அளக்கப்படும் பொருளுக்குப் பெயராயவழி அன்மொழித்தொகையாம். (தூணியும் பதக்கும்) இவை உம்மை பற்றி வந்தன.

பொற்றொடி என்பது வேற்றுமைத்தொகை; பொற்றொடி வந்தாள் - என அதனையுடையாட்குப் பெயராகியவழி (வேற் றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த) அன்மொழித் தொகை யாம். பொன், தொடியையுடையாளது செல்வத்தைக் காட்டுத லின், இவ்விரண்டு சொல்லும் அதனையுடை யாளைக் குறித் தவாறும் அறிக.

துடியிடை : துடி இடையை விசேடித்தலன்றி, உடையாளை விசேடியாது.

தாழ்குழல் : ‘தாழ்ச்சி’ குழலை விசேடிக்குமேயன்றி உடை யாளை விசேடியாது. ஆதலின் இவ்விரண்டன் புறத்தும் அன்மொழித்தொகை பிறவாது. இவை இருபெயரொட்டு ஆகுபெயராம். (தொ. சொ. 413 தெய். உரை)

குறிப்பால் பொருள் தரும் தொடர்களில் அன்மொழித் தொகையும் ஒன்று. வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத் தொகைமொழிகளுக்கும் புறத்தே அவையல்லாத புறமொழி களாகிய உருபு தொகுதல் அன்மொழித் தொகையாம்.

எ-டு : பூங்குழல் - தாழ்குழல் - கருங்குழல் - துடியிடை - தகர ஞாழல்

எனவரும். இவை விரிவுழி, பூவையுடைய குழலினை யுடை யாள் - தாழ்ந்த குழலினை யுடையாள் - கருமையாகிய கூந்தலை யுடையாள் - துடியன்ன இடையினை யுடையாள்- தகரமும் ஞாழலும் விராய்ச் சமைந்த சாந்து - என விரியும்.

(நன். 269, 369 சங்.)

அன்மொழித்தொகை ஈற்று நின்று இயலுதல் -

{Entry: C03__182}

முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்துதான் பின்னர்ப் பண்புத்தொகை முதலியவற்றான் கூறக் கருதியவழி, அத்தொகைகளின் இறுதிச் சொற்கண் எழுந்து படுத்தலோசையான் அத்தொகைச் சொல் தோன்றிப் பொருள் விளக்குதலின், அன்மொழித் தொகை ஈற்று நின்று இயலுவதாயிற்று.

எ-டு : வெள்ளாடை - தகரஞாழல் - பொற்றொடி

இவை வெள்ளாடை உடுத்தாள் - தகரஞாழல் பூசினாள் - பொற்றொடி தொட்டாள் - என இறுதிச்சொற்கண் எழுந்து படுத்தலோசையான் தொகை தோன்றியவாறு.

(தொ. சொ. 418 நச். உரை)

அன்மொழித்தொகை : சொற்பொருள் -

{Entry: C03__183}

அன்மொழித்தொகை என்பதற்குப் பொருள், குறிக்கப்படு பொருளுக்கு அல்லாத மொழி எனவும், அப்பொருள் தொக்கு நிற்றலின் தொகை எனவும் கொண்டு, குறிக்கப்படு பொருளுக்கு அல்லாத மொழியில் அப் பொருள் தொக்கு நிற்பது என்பதே சிறந்து காட்டிற்று. இனிப் பயனிலைக்கு அல்லாத மொழி அன்மொழி எனவும், அப்பயனிலைக்கு உரிய பொருள் அதனில் தொக்கு நிற்றலின் தொகை எனவும் கொண்டு அன்மொழித்தொகை எனப்பட்டது எனினும் அமையும். (நன். 410 இராமா.)

‘அன்றி அனைத்தும்’ என்ற சொற்றொடர் அமைப்பு -

{Entry: C03__184}

அ + அனைத்தும் = அன்றியனைத்தும் ; அகரச் சுட்டு அன்றி என ஈறு திரிந்து நின்றது. (தொ. சொ. 66 சேனா. உரை)

அ என்னும் சுட்டு அன்றி எனத் திரிந்தது. (தொ. எ. 483 நச். உரை.)

அன்று, அல்ல - என்னும் சொல்லிலக்கணம் -

{Entry: C03__185}

அன்று, அல்ல - என்பன ஒருமையும் பன்மையும் உணர்த்தும் அஃறிணைக் குறிப்புமுற்றுக்களாம். இவை ‘உழுந்து அன்று பயறு’, ‘உழுந்தல்ல பயறு’ எனப் பண்புணர்த்தியும், ‘வேலன் று வென்றி தருவது’ (குறள் 546), ‘படையல்ல வென்றி தருவன’ எனக் குறிப்புணர்த்தியும் நிற்கும். (தொ. சொ. 222. நச். உரை)

‘அன்று ஈற்று ஏ’ -

{Entry: C03__186}

அன்றே என்னும் இடைச்சொல். ‘இஃது ஊழ்அன்றே!’ என்றால், ‘அஃது இங்ஙன் நுகர்வியாது ஒழியுமோ?’ என்னும் குறிப்புணர்த்தும். (தொ. சொ. 284 நச். உரை)

‘அன்ன பிறவும்’ என்பதனால் வரும் விரவுப்பெயர்கள் -

{Entry: C03__187}

பிராயம் பற்றியும் இடம் பற்றியும் தொழில் பற்றியும் வரும் பெயர்கள் விரவுப்பெயராம். (முறையே முதியான் வந்தான், வந்தது எனவும்; நிலத்தான் வந்தான், வந்தது எனவும்; சுமையான் வந்தான், வந்தது எனவும் காண்க.) (தொ. சொ. 170 தெய். உரை)

‘அன்ன பிறவும்’ எனப்பட்ட அஃறிணைப் பெயர்கள் -

{Entry: C03__188}

ஆ நாய் கழுதை ஒட்டகம் புலி புல்வாய் - எனச் சாதி பற்றி வருவன, நிலம் நீர் தீ வளி ஆகாயம் - எனப் பூதப் பெயராகி வருவன, உண்டல் தின்றல் - முதலாகப் பால் காட்டாத தொழிற் பெயராகி வருவன, கருமை செம்மை முதலாகப் பால் காட் டாத பண்புப்பெயராகி வருவன, மற்றையது மற்றையன பிறிது பிற - என்பனவும், பிறவும் ஆம். (தொ. சொ. 173 கல். உரை)

‘அன்ன பிறவும்’ எனப்பட்ட உயர்திணைப் பெயர்கள் -

{Entry: C03__189}

ஏனாதி வாயிலான் வண்ணத்தான் சுண்ணத்தான் பிறன் பிறள் பிறர் தமன் தமள் தமர் நுமன் நுமள் நுமர் மற்றையான் மற்றையாள் மற்றையார் - முதலியன ஆம். (தொ. சொ. 169 கல். உரை)

‘அன்ன மரபின் காலம் கண்ணிய’ கிளவி -

{Entry: C03__190}

‘அன்ன மரபின் காலம் கண்ணிய கிளவி’ எனவே, பான் - பாக்கு - வான் - வாக்கு என்பனவும் கொள்ளப்படும்.

எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் கு ற்றம்’ (நான்மணி. 28)

‘புணர்தரு செல்வம் தருபாக்குச் செ ன்றார்’ (கார். 11)

‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ (பு. வெ . 99)

கொள்வாக்கு வந்தான்

என இவ்விகுதி ஈற்று வினைச்சொற்கள் எதிர்காலம் காட்டின.

(தொ. சொ. 231 நச். உரை)

அன்னோர் : சொல்லிலக்கணம் -

{Entry: C03__191}

அன்னோர் என்பது உவம உருபாகிய இடைச்சொல் (அன்ன) முதனிலையாகப் பிறந்த பெயர்.

எ- டு : ‘நும்ம னோரு(ம்) மற்று இனையர் ஆயின்

எம்ம னோர்இவண் பிறவலர் மாதோ’ (புற. 210)

(தொ. சொ. 414 நச். உரை.)

ஆ section: 92 entries

ஆ என்ற மறைவிகுதி தெரிநிலை வினைக்கே வருதல் -

{Entry: C03__192}

இல்லன, இல்ல - என்னும் எதிர்மறை வினைக்குறிப்பு முற்றின்- கண் மறைப்பொருளைப் பகுதியே தந்து நிற்றலின், இதற்கு எதிர்மறை ஆகாரம் வேண்டாமையின், ஏற்புழிக்கோடலான் இம்மறைவிகுதி தெரிநிலைக்கே எனக் கொள்க.

எ-டு : உண்ணா, நடவா (நன். 329 சங்.)

ஆக்க உம்மை -

{Entry: C03__193}

நெடியனும் வலியனும் ஆயினான் - என்பன ஆக்கம் குறித்து நிற்றலின் ஆக்கவும்மை. இஃது ‘அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே’ எனப் பண்பு பற்றியும் வரும். ‘செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே’ என்பதூஉம் வழுவை இலக்கண மாக்கிக் கோடல் குறித்தமையின் அதன்பாற்படும். (இ. வி. 256)

நெடியனும் வலியனும் ஆயினான் என்புழி, உம்மை ஆக்கம் குறித்து நின்றது. நெடியன் ஆயினானும் வலியன் ஆயினா னும் ஒருவனே என ஒரு பொருள்தன்னையே சொல்லுதலின், இவ்வும்மை எண்ணும்மை ஆகாது. (தொ. சொ. 257 கல். உரை)

ஆக்கப்பெயரும் ஆகுபெயரும் -

{Entry: C03__194}

சொல்லானது பொருளை உணர்த்தும் நிலைமைக்கண், சொல்லினது இலக்கணமாக, வெளிப்படை குறிப்பு என்னும் இரண்டும் நிகழும். இவ்விரண்டு நிலையும் எழுவாயாக வரும் பெயர்க்கும் ஒத்தலின், அப்பெயர் வெளிப்படையாகச் செம் பொருள் தருமாயின் அதனை ஆக்கப்பெயர் எனவும், யாதா னும் ஓர் இயைபான் குறிப்புப்பொருள் தருமாயின் அதனை ஆகுபெயர் எனவும் இலக்கண நூலோர் கொண்டனர்.

எ-டு : தெங்கு வளர்ந்தது : தென்னையைக் குறித்தலின், ஆக்கப்பெயர். தெங்கு தின்றான் : தேங்காயைக் குறித்தலின், ஆகுபெயர். (தொ. சொ. 113 ச. பால.)

ஆக்கப் பொருண்மை -

{Entry: C03__195}

மன், உம் - என்னும் இடைச்சொற்களுடைய பொருண்மை களுள் ஆக்கப்பொருண்மையும் ஒன்று. ‘ஆக்கம்’ ஆதல் தன்மையைக் குறிக்கும்.

எ-டு : ‘அதுமன் எம்பரிசில்’ (புற. 147) - அதுவாம் எம் பரிசில் என ‘மன்’ ஆக்கப்பொருளில் வந்தது.

ஆக்கம், உம்மையடுத்த சொற்பொருள்மேல் ‘ஆகும் நிலைமை’ குறித்து வரும்.

எ-டு : வாழும் வாழ்வு, உண்ணும் ஊண் - எனத் தொழிலி னது ஆக்கத்தை உம்மை குறித்து வந்தது. ‘வாழும் வாழ்வு’ என்புழி, உம்மை பெயரெச்ச விகுதிஇடைச் சொல் அன்றோ எனின், ஆம்; அதன்கண்ணும் இடைச்சொல் வரும் என்பது.

பாயும் என்பது பாயுந்து என வரும். ‘உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே’ (287) என்பது விதி.

நெடியனும் வலியனும் ஆயினான் - என்புழி, உம்மை (ஆக்கம் பற்றாது) எண்ணும்மையாய் வந்தது; தனியே வரின் எச்ச வும்மையாம். இக்கருத்துக் கல்லாடரால் மறுக்கப்பட்டது. ‘ஆக்கஉம்மை’ காண்க. (தொ. சொ. 249, 252 தெய். உரை)

ஆக்கம் காரணம் இன்றி வருதல் -

{Entry: C03__196}

ஒரு காரணத்தான் தன்மை திரிந்த பொருள் அக்காரணம் கூறப்படாமலும் வழக்கினுள் கூறப்படும்.

எ-டு : மயிர் நல்லஆயின, பயிர் நல்லஆயின. (தொ. சொ. 22 நச். உரை)

ஆக்கம் காரண முதற்று ஆதல் -

{Entry: C03__197}

ஒரு காரணத்தான் தன்மை திரிந்த செயற்கைப்பொருள் காரணச்சொல்லை முன்னாகப் பெற்று வரும்.

எ-டு: கடுக் கலந்த கைபிழி எண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லவாயின; எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான் பைங்கூழ் நல்லவாயின. (தொ. சொ. 21 நச். உரை)

ஆக்கம் காரண முதற்று என்பது -

{Entry: C03__198}

ஆக்கம் காரணத்தை முதலாக உடையது என்பதாம். ஆக்கம் முற்கூறிக் காரணம் பிற்கூறுதலுமுண்டு ஆதலின், காரணத்தை ஆக்கத்தின் முன்னர்க் கூறவேண்டும் என்ற வரையறை இன்று. முன்னர்க் கூறுவதே பெரும்பான்மை என்க.

(தொ. சொ. 21 கல். உரை)

‘ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி’ -

{Entry: C03__199}

மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக்- கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல் ஏதுப்பொருண்மையை நோக்கும் நோக்கு ஒரு தன்மையது. இது காரக ஏது.

எ-டு : வாணிகத்தின் ஆயினான், வாணிகத்தான் ஆயினான் - ஆன், இன் என்னும் இரண்டுருபுகளும் ஏதுப் பொருண்மைக்கண் ஒப்ப வந்தன. (தொ. சொ. 93 நச். உரை)

ஆக்க வினைக்குறிப்பின் இயல் -

{Entry: C03__200}

நல்லன் என்பது இய.ற்கை வினைக்குறிப்பாயின், விரிதல் தொகல் என்னும் இரண்டனுள் ஒருவாற்றானும் ஆக்கம் வேண்டாது ‘சாத்தன் நல்லன்’ என்றே வரும் என்பதாயிற்று, அங்ஙனமாகவே, வினைக்குறிப்பு ஆக்க வினைக்குறிப்பு என்றும் இயற்கை வினைக்குறிப்பு என்றும் இருவகைப்படும் எனவும், அவை இவ்வாறு நடக்கும் எனவும் கூறினாராயிற்று. வினையாயினும் ஆக்கத்தை நோக்கி ‘இயற்கை’ எனப்பட்டது. (நன். 347 சங்.)

ஆக்க வினைக்குறிப்பு -

{Entry: C03__201}

வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பும் ஆக்க வினைக் குறிப்பும் என இருவகைத்து. இயற்கை வினைக்குறிப்பு, சாத்தன் நல்லன் - என்றாற்போல ஆக்கம் வேண்டாது வரும். செயற்கை வினைக்குறிப்பாகிய ஆக்க வினைக்குறிப்பு; சாத்தன் நல்லனாயினான் - சாத்தன் நல்லன்; கல்வியால் பெரியனாயினான் - கல்வியால் பெரியன்; கற்று வல்லனா யினான் - கற்று வல்லன் - என ஆக்கச்சொல் விரிந்தும் தொக்கும் வரும். (நன். 347 சங்.)

செயற்கைப் பொருள், காரணச்சொல் முன் வர ஆக்கச்சொல் பின் வரப்பெற்றும், காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல் பெற்றும், ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச் சொல் வரப்பெற்றும் நிகழும்; இவ்விருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் பெறும். வருமாறு :

அ) கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின; எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்த மையால் பயிர் நல்லவாயின.

ஆ) மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின.

இ) கடுவும்........ பெற்றமையால் மயிர் நல்ல : எருப்பெய்து........ யாத்தமையால் பயிர் நல்ல

ஈ) மயிர் நல்ல, பயிர் நல்ல (நன். 405 சங்.)

ஆக, ஆகல், என்பது : பிரிவில் அசைநிலை -

{Entry: C03__202}

ஆக - ஆகல் - என்பது - என்பன தாம் சேர்ந்த சொற்களின் பொருள்களைப் பிரிதலின்றி உணர்த்தும் அசைநிலையாம்.

எ-டு : ‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறநா. 144)

‘அருளாய் ஆகலோ கொடிதே’ (புறநா. 144)

‘...... நோய்தீர நின்குறி வாய்த்தாள் என்பதோ’ (கலி.127)

என ஆக - ஆகல் - என்பது - என்னும் குறிப்புச்சொற்கள் தாம் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்தி நின்றன. தாம் சார்ந்த சொற்களை அசைத்தே நிற்கும் என்றலின், இவை பிரிவில் அசைநிலையாம். (தொ. சொ. 282 நச். உரை.)

ஆக என்ற பிரிவில் அசை -

{Entry: C03__203}

பிரிவில் அசையாவன, தாம் சார்ந்த சொற்களின் பொருள் களைப் பிரிதலின்றி உணர்த்தும் அசை.

எ-டு :‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறநா. 144)

‘எம்சொல்லற் பாணி நின்றனன் ஆக’ (குறிஞ்சிப் 152)

செய என் எச்சம் முற்றாய்த் திரிவுழி ஆக என்னும் இடைச் சொல் வந்து அவ்வெச்சப்பொருளை உணர்த்திப் பாட - நிற்க - என்ற பொருள் தந்தவாறு.

ஒருவன் கூறியது கேட்ட மற்றவன்விடையில் ஆகஆக என அடுக்கி வந்து தனித்து நின்று அசையாகாமல், உடன்படா மையும் ஆதரம்இன்மையும் ஆகிய பொருள்தந்து நிற்கும் என்றார் சேனாவரையர். அசைநிலை பொருள் தந்து நிற்கும் என்றல் பொருந்தாது. (தொ. சொ. 282 நச். உரை)

ஆகமம், ஆதேசம், லோபம் - என்பன

{Entry: C03__204}

DUMMY

யானைக்கோடு -
ககர ஒற்று மிக்கது ; மிகுதல் : ஆகமம்
மரப்பாவை -
நிலைமொழியீற்று மகரம் கெட்டு வருமொழி முதல் பகர ஒற்று மிக்கது; இது கெட மிகல் : ஆதேசம்
மரவேர் -
நிலைமொழியீற்று மகரம் கெட்டது; கெடுதல்: லோபம்

இவை போன்ற விகாரங்கள் தனிமொழியில் வருவனவுமுள.

‘உரிச்சொல்மேன’ -
மேல : லகரம் னகரமாகத் திரிந்தது (தொ. சொ. 298 சே. உரை)
‘கண்ணகன் பரப்பு’ -
அகல் : லகரம் னகரமாகத் திரிந்தது (அக.176)
மாகி - மாசி - :
ககரம் சகரமாகத் திரிந்தது

இவை எழுத்துத் திரிபு ஆகிய வன்ன விகாரம்.

வைசாகி - வைகாசி
தசை - சதை
இவை வன்ன விபரியயம். (மாறாட்டம்)
யாவர்-யார், யாது-யாவது :
இவை விதிபெற்று வந்த வன்ன நாசமும், வன்ன ஆகமமும் (தொ. எ. 172 நச்.)
முன்னில் - முன்றில், நில்-நின்மே :
இவையும் அவை.

இனி யாதொரு விதியுமின்றிச் சான்றோர் கூறியதே விதியாய் வருவனவும் உள.

மீ என்ற தாதுவின்மீது வரும் ‘ஊரன்’ என்ற பிரத்தியம் சேரக் காரணமின்றியே மீயூர - மையூர - என்றாகாமல், மயூர என வந்தது, வன்ன விகாரம்.

நாளிகேரம் (தெங்கு) நாரிகேளம் என வந்தது, வன்ன விபரியயம்.

பிருஷதுதரன் என்பது தகரம் கெட்டு வந்தது, வன்னநாசம்.

கூட ஆத்மா (மறைந்துள்ள ஆத்மா) ‘கூடோத்மா’ என வந்ததும் வன்ன விகாரம்.

ஹிம்ஸ என்பது ஸிம்ஹ (சிங்கம்) என வந்தது, வன்ன விபரியயம்.

ஹம்ஸம், அஞ்சம் - அன்னம் - என வன்ன ஆகமத்தால் வந்தது.

வலித்தல் மெலித்தல் போன்ற செய்யுள் விகாரங்கள் எதுகை முதலியன கருதியும், யாப்பில் சீர் தளை பிழை நேராமல் காக்கவும் வருவன ஆதலின் அவை இவ்வகையில் சேரா.

இனிப் புணர்ச்சி விகாரங்களைப் பி.வி. உரை காட்டுமாறு:

அராஅப் பாம்பு - நிலைமொழியும் வருமொழியும் மிக்க ஆகமம்

பொற்றாலி - இருமொழியும் திரிந்த விகாரம்

தொண்ணூறு (ஒன்பது + பத்து) - இருமொழியும் முற்றும் திரிந்தன.

ஆதன்தந்தை - ஆந்தை. உபயபதமும் (நிலைமொழி வரு மொழி இரண்டும்) கெட்ட லோபம்.

பூதன் தந்தை - பூந்தை. இதுவும் அது.

மராஅடி - பூர்வபதலோப விகாரம் (முன்மொழி கெட்டுத் திரிந்தது)

பனாஅட்டு, அதாஅன்று - பூர்வபத விகாரம்

இவை மூன்றும் வகர உடம்படுமெய் பெறாமை பிரகிருதி பாவம் (பெற வேண்டியதைப் பெறாமல் இயல்பானது). வடமொழியில், பிரம்மருஷி - ஹரீஏதௌ - என்பன போலத் தமிழிலும் ‘நாடு கிழவோன்’ (பொருந. 248), ‘காடகம் இறந்தோற்கே’ - என வந்தமையும் அது. (நாட்டுக் கிழவோன், காட்டகம் என இவை வரற்பாலன.)

புணர்ச்சி விகாரங்கள் யாவும் ஆகமம் - ஆதேசம் - லோபம் - என்ற மூன்றனுள் அடங்கும்.

சட் + முகம் = சண்முகம், வாக் + மூலம் = வாங்முலம், வாக் 1 + ஈசன் = வாகீ 3 சன்; பொன் + குடம் = பொற்குடம் : இவை போன்ற திரிதல் விகாரமும் ஆதேசம் என்பர்.

எழுத்துத் திரிதலையும், தசரதன்மகன் தாசரதி - என முதலெழுத்து அடையும் விருத்தியையும், வினைப்பதங் களுடன் சேரும் ஆ - ஆகு, சொல் - சொல்லு என்ற உகரம் போன்றவற்றையும் விகாரம் எனக் கொள்வர் சிலர்.

கிளி கடிந்தார், கிளிக்கடிந்தார்; குளங்கரை, குளக்கரை; இல்பொருள், இல்லை பொருள், இல்லைப் பொருள், இல்லாப் பொருள் - என்பனபோல, இருவகையாகவும் பலவகையாகவும் விதிபெற்று வருவன விகற்பம் - உறழ்ச்சி - எனப்படும்.

கஃறீது - கல்தீது : இது விகார விகாரம். அது தனித்தலைப்பிற் காண்க.

மேற்றிசை, பொன்னாடு : வருமொழி விகாரம். (பி.வி. 26)

ஆகல் என்ற பிரிவில் அசை -

{Entry: C03__205}

‘அருளாய் ஆகலோ கொடிதே’ (புறநா. 144)

‘அனையை ஆகல் மாறே’ (புறநா. 4)

ஆகல் என்ற வினைக்குறிப்புச்சொல் சார்ந்துநின்ற சொற் பொருளையே உணர்த்தும். ஒருவன் ஒன்று கூறக் கேட்ட மற்றவன் கூறும் விடையில் ‘ஆகல்ஆகல்’ என்பது தனித்து நின்று அசையாகாமல் அடுக்கி வந்து உடன்படாமையும் ஆதர மின்மையும் ஆகிய பொருள்தந்து நிற்கும் என்றார் சேனாவரையர். வேறுபொருள் தந்து நிற்றல் அசைநிலைக்கு ஏலாது. (தொ. சொ. 282 நச். உரை)

ஆகாங்கிசை -

{Entry: C03__206}

ஆகாங்க்ஷை; ஒருசொல் பொருள் விளங்க வேறொரு சொல்லை வேண்டி நிற்கும் இஃது அவாய்நிலை எனப்படும்.

(பி.வி. 19)

எ-டு : ‘உயர்திணை என்மனார் (தொ. சொ.1) என்புழி, என்மனார் என்ற வினை ‘புலவர்’ என்னும் தோன்றா எழுவாயை அவாவி நின்றது.

ஆகார விகுதி -

{Entry: C03__207}

ஆகாரம் பலவின்பால் விகுதி. இஃது எதிர்மறைக்கண்ணேயே வரும். இல்லன, இல்ல - என்னும் எதிர்மறைக் குறிப்புமுற்றின் பகுதியே மறைப்பொருள் தந்து நிற்றலின் அவற்றிற்கு எதிர்மறை ஆகாரம் வேண்டாமையின், ஆகார மறைவிகுதி தெரிநிலை வினைக்கே கொள்ளப்படும்.

எ-டு : குதிரைகள் உண்ணா, ஓடா. (நன். 329 சங்.)

ஆகிய : சொல்லிலக்கணம் -

{Entry: C03__208}

செந்தாமரை - ஆயன்சாத்தன் - வேழக்கரும்பு - அகரமுதல - சகரக்கிளவி - எனவும், செந்நிறக்குவளை - கரும்புருவச்சிலை - எனவும் வரும் இன்னோரன்ன பண்புத்தொகைகள் விரியு மிடத்து, செம்மையாகிய தாமரை - ஆயனாகிய சாத்தன் - முதலாகவும், செம்மையாகிய நிறமாகிய குவளை முதலாகவும் விரியும். இவ் ஆகிய என்னும் உருபின்கண் ஆக்கவினை இன்மையின், இலக்கணையால், செய்த என்னும் வாய்பாட் டிற் படுவதொரு வினையிடைச்சொல் இஃது என்று உணர்க.

(நன். 365 சங்.)

ஆகுபெயர் -

{Entry: C03__209}

ஒரு பொருளின் பெயர் அதனொடு பிரிக்கக்கூடிய தொடர்போ, பிரிக்கமுடியாத தொடர்போ உடைய பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். அது ‘தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணும்’ தற்கிழமை ஆகுபெயர், ‘ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டும்’ பிறிதின்கிழமை ஆகுபெயர் - என இரு வகைத்து. ஆகுபெயர், முதலிற் கூறும் சினைஅறி கிளவி - சினையிற் கூறும் முதல் அறிகிளவி - பிறந்தவழிக் கூறல் - பண்புகொள் பெயர் - இயன்றது மொழிதல் - இருபெயரொட்டு - வினைமுதல் உரைக்கும் கிளவி - அளவுப்பெயர் - நிறைப்பெயர் - முதலியன பற்றி வரும். இவையேயன்றிக் கருவிஆகுபெயர், உவமஆகுபெயர், தொழில்ஆகுபெயர், காரணஆகுபெயர், வரையறைப் பண்புப்பெயர் ஆகுபெயர், காரியஆகுபெயர், ஈறு திரிந்த ஆகுபெயர் - முதலாகப் பலவாறாக வருதலு முண்டு. (தொ. சொ. 115 - 119 நச். உரை)

யாதானும் ஒரு பொருத்தத்தினான் ஒன்றன்பெயர் ஒன்றதாக வருவது. வருமாறு : ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப்பொருளை முதலான் கூறும் பெயர்ச்சொல்; கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயர் ஆயிற்று.

‘சினையிற் கூறும் முதலறி கிளவி’ யாவது முதற்பொருளைச் சினையான் கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது. நடப் படுவது பூவினது முதல் ஆதலின் அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெயர் ஆயிற்று.

‘பிறந்தவழிக் கூறல்’ என்பது இடத்து நிகழ் பொருளை இடத்தான் கூறுதல். வேளாகாணி என்பது, வேளாகாணியிற் பிறந்த ஆடையைக் குறித்தது. யாழ் கேட்டான் என்புழி, யாழிற் பிறந்த ஓசையையும் யாழ் என்றமையால், பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயராம்.

‘பண்புகொள் பெயர்’ ஆவது பண்பின் பெயரால் பண்புடை யதனைக் கூறல். நீலம் என்பது அந்நிறத்தையுடைய மணியைக் குறிப்பது இது.

‘இயன்றது மொழிதல்’ ஆவது இயன்றதனான் மொழிதல், இயன்றதனை மொழிதல் என விரியும். காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதலும், காரணப் பொருளைக் காரியத்தான் மொழிதலும் இவ்வாகுபெயராம். பொன் பூண்டாள் எனவும், இஃதோர் அம்பு - இஃதோர் வேல் என வும் வருமிடத்து, ‘பொன்’ பொன்னினான் ஆகிய அணிகலத் தையும் ‘அம்பு’ ‘வேல்’ என்பன அவை உடம்பிற்பட்ட வடு வையும் இவ் ஆகுபெயரான் உணர்த்தின. நெல்லாதல் காண மாதல் ஒருவன் கொடுப்பக் கொண்டவன், ‘இன்றைக்குச் சோறு பெற்றேன்’ என்பான். அவ்வழிச் சோற்றுக்குக் காரண மாகிய நெல்லும் காணமும் சோறு என இவ்ஆகுபெயரான் சொல்லப்பட்டன.

‘இருபெயரொட்டு’ என்பது இரண்டு பெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது. துடியிடை என்பது துடிபோன்ற இடையினையுடை யாளைக் குறிப்பது இவ்வாகுபெயராம்.

‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ என்பது வினையும் முதலும் உரைக்கும் கிளவி என உம்மைத்தொகையாகக் கொள்ளப் படும். படவே, வினையான் உரைக்கும் கிளவியும் வினைமுத லான் உரைக்கும் கிளவியும் ஆகுபெயர் என்றவாறு. எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும் சொல்லப்பட்ட தனையும் அப்பெயரான் வழங்குதலின் வினையான் உரைக்கப் பட்ட ஆகுபெயராம்; சாலியனான் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது வினைமுதலான் உரைக்கப் பட்ட ஆகுபெயராம்.

தாழ்குழல் என்பது, அதனையுடையாட்கு ஆகி வந்தது, ஈண்டு, குழல் ‘தாழ்’ என்னும் அடையடுத்து வந்தவாறு - அடை யடுத்து வந்த ஆகுபெயர். (தொ. சொ. 111 தெய். உரை)

பொருளே இடமே காலமே சினையே குணமே தொழிலே என்னும் ஆறுடனே, இவற்றின் பகுதிய ஆகிய நால்வகை அளவையே சொல்லே தானியே கருவியே காரியமே கருத்தாவே என்னும் ஆறும் ஆதியாக வரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானே அப்பொருளுக்கு இயைந்த பிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறி வருவன ஆகுபெயர்களாம்.

இயையாதவற்றிற்கு வருவன பலபொருள் ஒருசொல் அன்றி ஆகுபெயர் ஆகா என்பதாம். ‘தொன்முறை உரைப்பன’ என்றமையான், ஆகுபெயர்மேல் ஆகுபெயராயும் அடை யடுத்தும் இருபெயரொட்டாயும் வழக்கின்கண்ணும் செய்யுட் கண்ணும் பயின்று பலபொருள் ஒருசொல் போல வருவன அன்றி, இடையே தோன்றியவாறு ஆக்கப்படுவன அல்ல என்பது பெறப்படும். (நன். 290 சங்.)

குறிப்பால் பொருளுணர்த்தும் பெயர்களுள் ஆகுபெயரும் ஒருவகை. பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறுடனே, இவற்றின் பகுதியவாகிய எண்ணல் - எடுத்தல் - முகத்தல் - நீட்டல் - என்னும் நால்வகை அளவுப் பெயர் சொல் தானி கருவி காரியம் கருத்தன் என்னும் ஆறும் அடிப்படையாக வரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானே அப்பொருளினுக்கு இயைந்த பிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறி வருவன ஆகுபெயராம். உவமையாகுபெயர், விட்ட ஆகுபெயர், விடாத ஆகுபெயர், ஆகுபெயர்மேல் ஆகுபெயர், இருபெய ரொட் டாகு பெயர் என்பனவும் கொள்க.

வரலாறு :

‘தாமரையும் புரையும் காமர் சேவடி (குறுந். கட.)
முதற்பொருளின் பெயர்சினையாகிய மலருக்கு ஆயிற்று; பொருளாகு பெயர்.
‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ (குறள் 24)
அகன் என்னும் உள் இடப்பெயர் - அங்கு இருக்கும் மனத்திற்கு ஆயிற்று; இடவாகுபெயர்.
கார் அறுத்தது -
கார்காலப் பெயர் அக்காலத்து விளையும் பயிர்க்கு ஆயிற்று; காலவாகுபெயர்
வெற்றிலை நட்டான் -
சினைப்பெயர் முதலாகிய கொடிக்கு ஆயிற்று; சினையாகு பெயர்.
நீலம் சூடினாள் -
நிறக்குணப்பெயர் நீலக்குவளை மலர்க்கு ஆயிற்று; குணவாகு பெயர்.
வற்றலோடு உண்டான் -
வற்றல் என்னும் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்கு ஆயிற்று; தொழிலாகுபெயர்.
காலாலே நடந்தான், இரண்டு பலம் தா, நாழி உடைந்தது, கீழைத்தடி விளைந்தது.
நால்வகை அளவைப் பெயரும் முறையே என்னும் உறுப்பு, இரண்டு பலப்பொருள், நாழி என்னும் கருவி, கீழைக் கழனி - இவற்றுக்கு ஆகி வந்தமை அவ்வவ் ஆகுபெயராம்.
இந்நூற்கு உரை செய்தான் -
உரை என்னும் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆயிற்று; சொல்லாகுபெயர்.
விளக்கு முறிந்தது -
தானியின் பெயர் அதற்குத் தான மாகிய தண்டிற்கு ஆயிற்று; தானி யாகு பெயர்.
திருவாசகம் ஓதினான் -
வாசகம் என்னும் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய நூற்கு ஆயிற்று; கருவியாகு பெயர்.
இந்நூல் அலங்காரம் -
அலங்காரம் என்னும் காரியத் தின் பெயர் அதனை உணர்த்தும் கருவியாகிய நூற்கு ஆயிற்று: காரிய ஆகுபெயர்.
இந்நூல் திருவள்ளுவர் -
கருத்தாவின் பெயர் அவர் இயற்றிய நூற்கு ஆயிற்று: கருத்தா ஆகு பெயர்.
காளை வந்தான், பாவை வந்தாள்
உவமை யாகுபெயரால் முறையே வீரனையும் பெண்ணையும் குறித் தன.
கடுத் தின்றான், புளி தின்றான்
கடுவும் புளியும் சுவையாகிய தம் பொருளை விடாதுநின்று தம் பொருளின் வேறல்லாத காயையும் பழத்தையும் குறித்தன - விடாத ஆகுபெயர்.
ஊர் வந்தது
ஊர் என்பது இடமாகிய தன் பொருளை விட்டுத் தன்னிடத்து உள்ள மக்களை உணர்த்திற்று - விட்ட ஆகுபெயர்.
புளி முளைத்தது -
சுவை பழத்திற்காய், பழத்தின் பெயர் மரத்திற்கு ஆயினமையின், இருமடியாகுபெயர்.
கார் அறுத்தார் -
கருமைநிறப் பெயர் மேகத்திற் காய், மேகத்தின் பெயர் அது பெய்யும் பருவத்திற்காய், அப் பருவப்பெயர்தானும் அக் காலத்து விளையும் பயிர்க்கு ஆயினமை யின், மும்மடியாகுபெயர்.
வெற்றிலை நட்டான், மருக்கொழுந்து நட்டான், அறுபதம்
வெறுமை - மரு - ஆறு - என்னும் அடைமொழிகள், இலை - கொழுந்து - பதம் - என்னும் சினை களை விசேடிக்க, அச் சினைகள் தத்தம் முதலாகிய கொடியையும் செடியையும் வண்டினையும் குறித் தன - அடை யடுத்த ஆகுபெயர்.
வகரக் கிளவி (தொ. எ. 81 நச்)
வகரமாகிய எழுத்து; பின்மொழி ஆகுபெயரான் கிளவி எழுத்தைக் குறிக்க, முன்மொழி ஆகுபெயர்ப் பொருளாகிய எழுத்தை விசே டிக்க, இவ்விருபெயரும் ஒட்டி வந்தமையின் இருபெயரொட் டாகுபெயர். (நன். 290 நாவ.)

ஆகுபெயர், அன்மொழித்தொகை : வேறுபாடு -

{Entry: C03__210}

ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் தம் பொருள் உணர்த்தாது பிறிது பொருள் உணர்த்தலான் ஒக்குமாதலின், அவைதம்முள் வேற்றுமை யாதோ என்னின், ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு இயைபு பற்றிய பிறிதொன் றனை உணர்த்தி ஒருமொழிக்கண்ணதாம்; அன்மொழித் தொகை இயைபு வேண்டாது இருமொழியும் தொக்க தொகையாற்றலான் பிறிது பொருள் உணர்த்தி இருமொழிக் கண்ண தாம். இவை தம்முள் வேற்றுமை என்க.

இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன்றோ எனின், அன்று; என்னை? வகரக் கிளவி - அதுவாகு கிளவி - மக்கட் சுட்டு - என்னும் இருபெயரொட்டு ஆகுபெயருள், வகரமும் அதுவாகலும் மக்களும் ஆகிய அடைமொழிகள், கிளவி - சுட்டு - என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடி யாது, எழுத்தும் சொற்பொருளும் பொருளும் ஆகிய ஆகு பெயர்ப் பொருளை உணர்த்த, இருபெயரும் ஒட்டிநிற்கும் மாதலின். இனி, பொற்றொடி என்னும் அன்மொழித்தொகை யுள், பொன் என்பது அவ்வாறு அன்மொழித்தொகைப் பொருளை விசேடியாது தொடியினையே விசேடித்து நிற்ப. இவ்விரண்டன் தொகையாற்றலால் அன்மொழித்தொகைப் பொருளை உணர்த்துமாறு அறிக. இக்கருத்தே பற்றி, மக்கட் சுட்டு முதலியவற்றைப் பின்மொழி ஆகுபெயர் என்பாரு முளர். (பின்: காலப்பின்) (நன். 290 சிவஞா.)

அன்மொழித்தொகைச்சொல், செய்யுள் ஆக்குவோன் ஒருவரை அதிசயம் முதலாயின காரணம் பற்றித் தான் சொல் லுவதாகவும் பிறர் சொல்லுவதாகவும் சொல்லும் போது அந்தந்த இடங்களில் வருவதன்றி, ஆகுபெயர் போல் நியதிப் பெயராய் வருவதன்று. அவ்வாறாயினும் அன் மொழித் தொகைச் சொல்லும் ஆகுபெயரும் தம் பொருள் உணர்த்தா மலே பிறிது பொருள் உணர்த்தலால் ஒக்குமாத லின், தம்முள் வேற்றுமை யாதோ எனின், ஆகுபெயர் ஒன்றின் பெயரால் அதனோடு இயைபு பற்றிப் பிறிதொன்றை உணர்த்தி ஒவ் வொரு சொல்லில்தானே வருவதாம். அன்மொழித் தொகைச் சொல் இயைபு வேண்டாமல் இருமொழிகள் தொக்க தொகை யாற்றலினாலேயே பிறிது பொருள் உணர்த்தி இருமொழி யிடத்து வருவதாம். (நன். 290 இராமா.)

ஆகுபெயர் ஈறு திரிதல் -

{Entry: C03__211}

தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி - என்பன ஆகுபெயர் ஈறு திரிந்தனவாம். (தொ. சொ. நேமி. 119 நச். உரை)

இவ்வாடை கோலிகன், இவ்வாடை சாலியன் - என்பனபோல, அகத்தியம் தொல்காப்பியம் கபிலம் என்றாற் போல்வனவும் வினைமுதல் பெயரால் அவரான் இயற்றப் பட்ட பொருளைக் கூறின. இவை ஈறு திரிதல் உரையில் கொள்க. (இ. வி. 192 உரை)

‘ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கம்’ : கருத்து வேறுபாடு -

{Entry: C03__212}

ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கமாம், கடு என்பது தனக்குரிய முதற்பொருளை (மரம்) உணர்த்தாது சினைப் பொருளை (காய்) உணர்த்தலின். (தொ. சொ. 119. நச். உரை)

ஆகுபெயர் எழுவாய்வேற்றுமையாய் இருத்தலேயன்றி ஏனைய வேற்றுமையும் ஏற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமையாய் நின்றவழியும் அது பிறிதொரு வேற்றுமைப் பொருட்கண் சென்று மயங்காமையின் வேற்றுமை மயக்கம் எனப்படாமையானும், ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கம் ஆகாது என்ப (114 சேனா. உரை).

ஆகுபெயர் ஏனைய பெயர் போல எழுவாய் வேற்றுமையாய் அமைந்து பின் ஏனைய வேற்றுமைகளையும் ஏற்பது.

பொற்றொடி - பொற்றொடியை அணிந்தவள் - என இரண்டா வதன் பொருண்மைத்து.

தொல்காப்பியம் - தொல்காப்பியனால் செய்யப்பட்டது - என மூன்றாவதன் பொருண்மைத்து.

தண்டூண் - தண்டூண் ஆதற்குக் கிடந்தது - என நான்காவதன் பொருண்மைத்து.

பாவை - பாவையினும் அழகியாள் - என ஐந்தாவதன் பொருண்மைத்து.

கடு - கடுவினது காய் - என ஆறாவதன் பொருண்மைத்து.

குழிப்பாடி - குழிப்பாடியுள் தோன்றியது - என ஏழாவதன் பொருண்மைத்து.

இவ்வாறு வேற்றுமைப்பொருள் உள்வழியே ஆகுபெயர் ஆவது, பிறவழி ஆகாது எனக் கூறியவாறு. (தொ. சொ. 117 நச். உரை)

முதலிற் கூறும் சினையறி கிளவியும், சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்புகொள் பெயரும், இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள்மயக்கம்; பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள்மயக்கம்; இயன்றது மொழித லும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற் றுமைப் பொருள் மயக்கம். இவ்வாறு ஆகுபெயரை வகைப் படுத்துவார் தெய்வச்சிலையார். (தொ. சொ. 112 தெய். உரை)

ஆகுபெயரின் ஒரு கூறு அன்மொழித்தொகை என்பது. இருபெயரொட்டாகுபெயர் அன்மொழிப் பொருள்மேல் நின்ற இருபெயரொட்டு ஆகும் பொற்றொடி போல்வன என்பர், இளம்பூரணரும் சேனாவரையரும் பழைய உரைகார ரும். கல்லாடர், “பொற்றொடி என்பது படுத்தலோசைப் பட்ட வழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசைப் பட்டவழி ஆகுபெயராம்” என்பர். தெய்வச்சிலையார், “இரு பெயரொட்டு என்பது இரண்டு பெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருட்பெயராகி வருவது; அது ‘துடியிடை’ என்பது. துடிநடுப்போன்ற இடையினையுடை யாளைத் ‘துடியிடை’ என்ப ஆதலின் ஆகுபெயர் ஆயிற்று. இஃது உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ எனின், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டு வரும்; அன்மொழித்தொகை யாவது அப்பொருளின் வேறுபட்டு வரும். அன்னது ஆதல் அன்மொழித் தொகை என்பதனானும் விளங்கும். ‘தாழ்குழல்’ என்றவழி, அதனை உடையாட்குப் பெயராகி வருதலின் ஆகு பெயராயிற்று. இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகையன்றோ எனின், ஆண்டு எடுத்தோதாமை யானும், பொருள் ஒற்றுமைப் படுதலானும் ஆகாது என்க.” என்பர். (துடியிடை, தாழ்குழல் - போன்ற தொடர்களில், சினையாகிய இடை குழல் - முதலியவற்றின் ஆகுபெயர்ப் பொருள் அவற்றின் முதலாகவே வரும் ஆதலின், தெய்வச் சிலையார் இவற்றை ஆகுபெயர் என்றார். வினைத்தொகை உவமத்தொகைப் புறத்து அன்மொழித்தொகை பிறக்கும் எனத் தொல்காப்பி யனார் கூறவில்லை.)

நச்சினார்க்கினியரும் சிவஞான முனிவரும் இருபெய ரொட்டு ஆகுபெயர் வேறு, அன்மொழித்தொகை வேறு என்னும் கருத்தினர். (தொ. சொ. 115 நச். உரை.)

சேனாவரையர், “இருபெயரொட்டினை ஆகுபெயர் ஆதல் காரணத்தான் ஆகுபெயர் வகையில் கூறினார்; அன்மொழித் தொகையாதல் காரணத்தான் தொகையதிகாரத்தில் கூறினார்” என்றார். (தொ. சொ. 114 சேனா. உரை)

ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கமே -

{Entry: C03__213}

செயப்படுபொருள் முதலிய வேற்றுமையுருபுகள் தம் பொரு ளின் தீர்ந்தும் தீராமலும் பிறவேற்றுமையொடு மயங்குதல் போல, ஆக்கப் பெயர்களும் தம் பொருளின் தீர்ந்தும் தீராமலும் ஆகுபெயராய் வந்து மயங்குதலின், ஆகுபெயர் பற்றிய இலக்கணத்தை வேற்றுமைமயங்கியலுள் ஆசிரியர் ஓதினார். ஆதலின் ஆகுபெயர் எழுவாய் என்பது தெளிவாம்.

எழுவாய் வேற்றுமையாய் நிற்குமோர் ஆக்கப்பெயர், தன் இயற்பொருளை உணர்த்தாமல் தன்னொடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி, அப்பொருளுணர்த்துங்கால் அஃது எழுவாயாகிய பெயரின் மயக்கமே என்பதை ஓர்ந்து ஆகுபெயர் இலக்கணத்தை வேற்றுமை மயங்கியலுள் ஓதினார் ஆசிரியர்.

மரபு காரணமாக ஆகுபெயர்களுள் பல, ஆக்கப் பெயராகவே இருவகை வழக்கிலும் வழங்கும். எ-டு : புளி என்பது ஒரு சுவையின் பெயர். அஃது அதனையுடைய பழத்திற்கு ஆகிப் பின்னர் அப்பழத்தினையுடைய மரத்திற்கு ஆயிற்று. ஆயினும் இதுபோது மரம் ஆக்கப்பெயராகவும் பழம் ஆகுபெயராகவும் வழங்குகின்றன. (தொ. சொ. 113 ச. பால.)

ஆகுபெயர்க்கண் வேற்றுமைகளைப் போற்றி உணருமாறு -

{Entry: C03__214}

ஆகுபெயர்கள் செயப்படுபொருள் முதலாய வேற்றுமை களின் தொடர்பினால் வருமாதலின், இவ்விவ் வேற்றுமைப் பொரு ளான் இப்பொருள் ஆகுபெயராயிற்று எனப் போற்றி உணர்தல் வேண்டும்.

வருமாறு :

மஞ்சள் உடுத்தாள் -
என்பது மஞ்சளைத் தோய்த்த ஆடையை உடுத்தாள் என இரண் டாம் வேற்றுமை பற்றி வந்த ஆகு பெயர்.
கடுத் தின்றான் -
என்பது கடுவினது காயைத் தின் றான் என ஆறாம் வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர்.

இவை தம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்தன.

குழிப்பாடி உடுத்தான் -
என்பது குழிப்பாடி எனும் இடத்தில் நெய்து வந்த ஆடையை உணர்த்த லின், ஏழாம் வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர்.

இஃது ஒப்பில் வழியால் பிறிது பொருள் சுட்டி வந்தது.

பொன் அணிந்தான் -
என்பது பொன்னாலாகிய அணி கலனை அணிந்தான் என மூன்றாம் வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர்.
இஃது ஒரு வாள்
- என்பது வாளான் வெட்டப்பட்ட வெட்டு புண் என ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டி வந்த ஆகுபெயர்.

ஆதலின் மூன்றாம் வேற்றுமை இருநிலைத்தாயும் வருமாறு காண்க. (தொ. சொ. 116 ச. பால.)

ஆகுபெயர்ப் புறனடை கூறுவன -

{Entry: C03__215}

யாழ், குழல் என்பன அவற்றிற் பிறந்த ஓசையை ஆகுபெயரான் உணர்த்தும். பசுப் போல்வானைப் பசு என்றலும், பாவை போல்வாளைப் பாவை என்றலும், எண்ணிற்கு ஏதுவாகிய இடங்களையும் ஒன்று - பத்து - நூறு - என்றலும், எழுத்து என்பது எழுத்திலக்கணத்தை உணர்த்தலும் ஆகுபெயராம். ஆகுபெயர் ஈறு திரிதலுமுண்டு. (தொ. சொ.114 இள. உரை.)

ஏறு, குத்து என்னும் தொழிற்பெயர் இஃதோர் ஏறு - இஃது ஒரு குத்து - என அத்தொழிலினான் ஆகும் வடுவின்மேல் ஆகுபெயராய் வந்தன. (தொ. சொ. 117 சேனா. உரை)

நெல்லாதல் காணமாதல் பெற்றானொருவன் ‘சோறு பெற்றேன்’ எனக் காரணப் பொருட்பெயர் காரியத்தின்மேல் ஆகுபெயராய் வந்தது. ‘ஆறுஅறி அந்தணர்’ (கலி.கட.) என்புழி ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண் பினை யுடைய அங்கத்தை உணர்த்தி நிற்றலும், ‘நூற்றுலாம் மண்டபம்’ என்புழி (சீவக. 2734) அவ்வெண்ணுப்பெயரினை அறிகுறியாகிய அலகுநிலைத் தானமும் அப்பெயரதாய் நிற்றலும், அகரம் முதலிய எழுத்துக்களை உணர்த்துவதற்குக் கருவியாகிய வரிவடிவுகளும் அப்பெயர் பெற்று நிற்றலும் கொள்க. கடிசூத்திரம் செய்ய இருந்த பொன்னைக் கடிசூத் திரம் என்றும், தண்டூண் ஆதற்குக் கிடந்த மரத்தைத் தண்டூண் என்றும் காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு இட்டு வழங்குவனவும், எழுத்து - சொல் - பொருள் - என்பன வற்றிற்கு இலக்கணம் கூறிய அதிகாரங்களை எழுத்து - சொல் - பொருள் - என்பன உணர்த்தி நிற்றலும் கொள்க. தொல் காப்பியம், வில்லி, வாளி - என ஈறு திரிதலும் கொள்க.

(தொ. சொ. 119 நச். உரை)

பாவை - திரு - என வடிவு பற்றியும், பசு - கழுதை - எனக் குணம் பற்றியும், புலி - சிங்கம் - எனத் தொழில் பற்றியும் ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகிவருவனவும் ஆகுபெயர் என்றே கொள் ளப்படும். ‘எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின்’ (பதிற். 38) : தோட்டி யுடையானைத் தோட்டி என ஆகுபெய ரான் கூறினார். இவை ஆகுபெயர் ஆகுங்கால், பாவை வந்தாள் - சிங்கம் வந்தான் - எனத் தத்தம் பொருண்மை வாய் பாட்டான் முடியும். (தொ. சொ. 114 தெய். உரை)

இனி, ஒன்று பத்து நூறு ஆயிரம் - என்னும் எண்ணுப் பெயர்களும் வரையறைப் பண்பின் பேர் பெற்ற ஆகுபெயர் எனக் கொள்க. தாழ்குழல், திரிதாடி - என்பன இருபெய ரொட்டு அன்மையின் ஈண்டே கொள்க. பொன்னாலாகிய கலத்தைப் பொன் என்றலும், மண்ணாலாகிய கலத்தை மண் என்றலும் ஆகுபெயர். (தொ. சொ. 120 கல். உரை)

ஆகுபெயரின் இருவகை -

{Entry: C03__216}

ஆகுபெயராவது ஒன்றன் பெயரை ஒன்றற்கு இட்டுச் சொல்லுமது. அதுதான் தன்னொடு தொடுத்த பொருள்மேல் வருதலும், தனக்கு எவ்வியைபும் இல்லாததன்மேல் வருதலும் என இரண்டாம். அவைதாம் ஈறுதிரிந்து நிற்கவும் பெறும். அவை வருமாறு :

கடுவது காய் தின்றானைக் கடுத் தின்றான் என்றும், புளியினது காய் தின்றானைப் புளித் தின்றான் என்றும் கூறும் இவை, தம் முதலொடு சேர்ந்த ஆகுபெயர். பூ நட்டு வாழும், இலை நட்டு வாழும்: இவை சினையாகுபெயர். நீலம் அடுத்ததனை நீலம் என்றும், சிவப்பு அடுத்ததனைச் சிவப்பு என்றும், ஏறு பட்ட இடத்தை ஏறு என்றும், அடிபட்டதனை அடி என்றும், வெள்ளாளர் காணியிற் பிறந்ததனை வெள் ளாளர்காணி என்றும், சாலியனான் நெய்யப்பட்ட தனைச் சாலியன் என்றும், நாழியால் அளக்கப்பட்டதனை நாழி என்றும், துலாத்தால் எடுக்கப்பட்டதனைத் துலாம் என்றும் வருவன தம் முதலுக்கு அடையாய் வரும் ஆகுபெயர். இனி, தொல் காப்பியம் - அவிநயம் - வில்லி - வாளி - என்பன ஈறு திரிந்து வந்தன.

இருபெயரொட்டாய் வரும் ஆகுபெயரும் உள. அவை பொற்றொடி - வெள்ளாடை - கனங்குழை - என்பன. அன் மொழித்தொகையாய்க் காட்டப்பட்டனவாயினும், ஆகு பெயர்த்தன்மைக்கு ஈங்குப் பெறும். (நேமி. உருபு. 3 உரை)

ஆகுபெயரின் நால்வகை இயல்புகள் -

{Entry: C03__217}

ஆகுபெயர்கள் தத்தம் பொருளிடத்துச் சிவணலும், தம்மொடு சிவணலும், பொருத்தமில்லாத நெறிக்கண் சுட்ட லும், பிறிதின் கிழமைப் பொருள் சுட்டலும் ஆகிய அந்நால் வகை இயல்புகளை யுடையன.

எ-டு : தத்தம் பொருளிடத்துச் சிவணுதல் :

முதற்பொருள் சினைப்பொருளைக் குறித்தல். கடுத்தின்றான் என்புழி, கடு என்னும் முதல் அதன் காயினைக் குறித்தது. பொன்னினான் ஆகிய அணிகலத்தைப் பொன் என்றலும் அது.

தம்மொடு சிவணுதலாவது சினைப்பொருள் முதற் பொருளைக் குறித்தல். பூ நட்டு வாழும் என்புழி, பூ என்னும் சினை கொடி யாகிய முதலைக் குறித்தது. நீலநிறத்தையுடைய மணியை நீலம் என்றலும், சோற்றுக்குக் காரணமான நெல்லைச் சோறு என்றலும், துடி போன்ற இடையினை யுடையாளைத் துடியிடை என்றலும், தாழ்குழலினை யுடையாளைத் தாழ்குழல் என்ற லும் எடுத்துக்காட்டாம்.

ஒப்பில்வழிக்கண் சுட்டியது :

எ-டு : வேளாகாணி . பயிர் செய்யப்படாத நிலம் வேளா காணியாம்; அஃது அதனை யுடையானைக் குறித்தது.

பிறிது பொருளைச் சுட்டியது :

எ-டு : சாலியன். சாலியனாற் செய்யப்பட்ட ஆடையை அக்கருத்தாவின் பெயர் குறித்தல் போலுவது.

(தொ. சொ. 112 தெய். உரை)

ஆகுபெயரை ‘வேற்றுமை மருங்கிற் போற்றல்’ -

{Entry: C03__218}

ஆகுபெயர் ஐ முதலிய ஆறு வேற்றுமைப் பொருண்மையிடத் தும் இயைபுடைத்தாய் வரும். மக்கட் சுட்டை (மக்களைச் சுட்டுவதனை) உயர்திணை என்ப, தொல்காப்பியனாற் செய் யப்பட்டது, தண்டூண் ஆதற்குக் கிடந்தது, பாவையினும் அழகி யாள், கடுவினது காய், குழிப்பாடியுள் தோன்றியது - எனவரும். (தொ. சொ. 117 நச். உரை)

ஆகுபெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட்கண்ணே வருவது. அவை அப்பொருட் கண்ணே வந்தவாறு: முதலிற் கூறும் சினையறி கிளவியும், சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்பு கொள் பெயரும், இருபெயரொட்டும் (துடியிடை) ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம்; பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள் மயக்கம்; இயன்றது மொழிதலும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். (தொ. சொ. 112 தெய். உரை)

ஆங்க -

{Entry: C03__219}

ஆங்க என்னும் இடைச்சொல் உரையசையாகும். அஃதாவது கட்டுரைக்கண்ணே அசைத்த நிலையாய் வரும்; என்றது, புனைந்துரைக்கண்ணே சேர்க்கப்பட்டு வரும் என்றவாறு.

எ-டு : ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக்

கேள்வனை விடுத்துப் போகி யோளே’

ஒரு செய்தியைக் கூறிப் பிறகு ‘ஆங்க’ என்ற சொல்லைக் குறிப் பிடுமிடத்து அங்ஙனே என்று அவ்விடைச்சொல் பொருள் தரும். சிறிது பொருளுணர்த்துவன உரையசை.

(தொ. சொ. 279 நச். உரை)

ஆங்கு : அசைநிலை ஆதல் -

{Entry: C03__220}

அந்திலும் ஆங்கும் இடப்பொருளும் அசைநிலையும் ஆம் என நன்னூலார் சூத்திரம் செய்தார். அஃது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தன்று என்பது அவர் சூத்திரத்தா னும், ஆங்கு என்பது இடச்சுட்டுப் பெயர்ச்சொல் ஆதலா னும், ‘ஆங்கு அசைநிலை’ எனக் கூறி ‘ஆங்க’ என உதாரணம் காட்டியதினாலும் பொருந்தாது என்க. இனி, ஆங்க என்னும் அகர ஈற்று இடைச்சொல் அசைநிலை எனக் கொள்ளின் அமையும். என்னெனின், ‘ஆங்க உரையசை’ எனக் கூறியதனா னும், ‘ஆங்கக் குயிலும் மயிலும் கா ட்டி’ எனவும் ‘ஆங்கத் திறனல்ல யாம்கழற’ (கலி. 85) எனவும் பயின்று வருதலானும் என்க.

(நன். 369 இராமா.)

ஆடூஉ வினை ஈறு -

{Entry: C03__221}

அன் ஆன் - என்பன இரண்டும் ஆடூஉவினை ஈறுகளாம்.

எ-டு : உண்டனன், உண்டான். (தொ. சொ. 5 சேனா. உரை)

ஆண் ஒழி மிகு சொல் -

{Entry: C03__222}

‘ஆண் ஒழி மிகு சொல்’ என்பதனைப் பெயரானும் தொழி லானும் உறழ இரண்டாம்; இவற்றை உயர்திணை அஃறிணை- யான் உறழ நான்காம். அவையாவன: உயர்திணை யிடத்துப் பெயரில் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்லும், தொழிலில் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்லும் என இரண்டு வகைப் படும் என இரண்டு காட்டியவழி, அஃறிணை மேலும் இவ் விரண்டும் வர நான்காம். அவை வருமாறு :

பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் - என்றல், உயர்திணையிடத்துப் பெயரின் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்.

இன்று இச்சேரியார் தைந்நீராடுவர் - என்றல், உயர் திணை யிடத்துத் தொழிலின் தோன்றும் ஆண்ஒழி மிகுசொல். இவையிரண்டும் உயர்திணை எனக் கொள்க.

நம்பி நூறு எருமை உடையன் - என்றல், அஃறிணையிடத்துப் பெயரின் தோன்றும் ஆண் ஒழி மிகுசொல்.

இன்று இவ்வூரில் பெற்றம் எல்லாம் அறத்திற்குக் கறக்கும் - என்றல், அஃறிணையிடத்துத் தொழிலின் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல். இவையிரண்டும் அஃறிணை எனக் கொள்க. (நேமி. மொழி. 12 உரை)

ஆண்பால் படர்க்கை வினை -

{Entry: C03__223}

அன், ஆன் என்ற விகுதிகளையுடைய வினைமுற்று ஆண்பால் படர்க்கை வினையாம். நடந்தனன் நடந்தான், நடவாநின்றனன் நடவாநின்றான், நடப்பன் நடப்பான், குழையன் குழையான் - என வரும். ஆண்பால் பாகுபாடு உயர்திணை வினைக்கண் அன்றி அஃறிணை வினைக்கண் இன்மையின், ஆண்பால் வினை முற்று எனவே உயர்திணை ஆண்பால் வினைமுற்று என்பதே பொருள். (நன். 325 சங்.)

ஆண்பால் பெயர் -

{Entry: C03__224}

னகர ஈறாகி, கிளை எண் குழூஉ - முதலிய பொருளான் வரும் பெயர், திணை தேம் ஊர் வான் அகம் புறம் - முதலிய நிலத் தான் வரும் பெயர், யாண்டு இருது மதி நாள் - முதலிய காலத் தான் வரும் பெயர், தோள் குழல் மார்பு கண் காது - முதலிய உறுப்பான் வரும் பெயர், அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பு - முதலிய பண்பான் வரும் பெயர், ஓதல் ஈதல் முதலிய பல வினையான் வரும் பெயர், (மேற்கூறிய பெயர் களை அடுத்து வரும்) சுட்டு வினா பிற மற்று - ஆகிய இடைச் சொற்களை முதலாகக் கொண்டு வரும் பெயர், நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல், இவையன்றி, வில்லி வாளி சென்னி - என்றல் தொடக்கத்து உயர்திணை ஆண் பாலைக் குறித்து வரும் பெயர்கள் எல்லாம் ஆண்பாற் பெயர்கள் ஆம். வருமாறு :

தமன் நமன் நுமன் எமன்; ஒருவன்; அவையத்தான் அத்தி கோசத்தான்; பொன்னன் - பொருளான் வரு பெயர்.

வெற்பன் மறவன் இடையன் ஊரன் சேர்ப்பன்; சோழியன் கொங்கன்; கருவூரான் மருவூரான்; வானத்தான் அகத்தான் புறத்தான்; மண்ணகத்தான் - இடத்தான் வரு பெயர்.

மூவாட்டையான், வேனிலான், தையான், ஆதிரையான், நெருநலான் - காலத்தான் வரு பெயர்.

திணிதோளன், செங்குஞ்சியன், வரைமார்பன், செங்கண்ணன், குழைக்காதன், குறுந்தாளன் - சினையான் வரு பெயர்.

பெரியன் புலவன் பொன்னொப்பான் கூனன் கரியன் மானிட வன் பார்ப்பான் சேரன் ஆசிரியன்; நல்லன் தீயன் - குணத் தான் வருபெயர்.

ஓதுவான் ஈவான் கணக்கன் - தொழிலான் வரு பெயர்.

அவன் - எவன் யாவன் ஏவன் - பிறன் - மற்றையான் - சுட்டு முதலிய நான்கானும் வரு பெயர். (நன். 276 சங்.)

ஆண்பால் பெயர் : இன்னன -

{Entry: C03__225}

‘இன்னன’ என்றதனானே, ஆண்மகன் ஏனாதி காவிதி எட்டி வில்லி வாளி குடுமி சென்னி கிள்ளி வழுதி செட்டி கொற் றந்தை சேய் ஏந்தல் செம்மல் அண்ணல் ஆண்டையான் ஆங்கணான் ஆயிடையான் - என்றாற்போல்வனவும் கொள்க. அந்தணன் முதலியன ஒரோவழிப் பாம்பு முதலியனவற் றையும் உணர்த்து மன்றே? அவ்வழி அஃறிணைப் பெயரா மேனும், உயர்திணை ஆண்பால் உணர்த்துதல் பெரும்பான்மை யாகலின் சாதிப்பெயராகக் கூறினார். (இ. வி. 177 உரை)

‘இன்னன’ என்றமையால், வில்லி வாளி சக்கிரி வழுதி சென்னி கிள்ளி பாரி - என்றாற்போல உயர்திணை ஆண்பாற் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்க. (நன். 276 சங். இராமா.)

ஆண்பால் வினைமுற்று விகுதிகள் -

{Entry: C03__226}

அன் ஆன் என்பன படர்க்கை ஒருமை ஆண்பால் வினை முற்று விகுதிகளாம். இவ்விரண்டும் முக்காலமும் எதிர்மறை யும் பற்றி வரும்.

எ-டு : உண்டனன்; உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன்; உண்ணலன்;

இவை அன்விகுதி பெற்று வந்தன.

உண்டான் ; உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்; உண்ணாநின்றிலான், உண்கின்றி லான்; உண்பான், உண்குவான்; உண்ணான்.

இவை ஆன் விகுதி பெற்று வந்தன.

உண்டனன்அல்லன், உண்டான்அல்லன் - எனப் பிற வாய்பாட் டால் வரும் எதிர்மறையும் அறிக. (தொ. சொ. 207 நச். உரை)

‘ஆண்மை அடுத்த மகன்என் கிளவி’ -

{Entry: C03__227}

ஆளும் தன்மை யடுத்த ‘ஆண்மகன்’ என்னும் சொல். இது பொதுவாக ஆண்மகனை உணர்த்தலின் உயர்திணைப் பெயர்.

(தொ. சொ. 165 நச். உரை)

ஆண்மை இளமை - முதலிய எட்டும் இருதிணைக்கும் உரிய ஆதல் -

{Entry: C03__228}

ஆண்மை : ஆளும் தன்மை - ‘ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்’ (குறுந். 43) என இருபாலையும் உணர்த் திற்று. ‘ஊரா ண் இயல்பினாள்’ (நாலடி. 384) என விகார மாயும் நிற்கும்.

ஆண்மை : ஆண்பாலாம் தன்மை, ‘ ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்’ (சொ. 183) என உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுவாகிய விரவுப்பெயர்க் கண்ணும் வரும்.

ஆண்மை : ஆள்வினை.

இவ்வாண்மையும் பெண்மையும் உயர்திணை ஆண்பாலை யும் பெண்பாலையும் உணர்த்தா என்று கருதி,

‘ஆண் பால் எல்லாம் ஆண்எனற் குரிய

பெண்பால் எல்லாம் பெண்எனற் குரிய’ (மர. 50)

என அஃறிணைக்கே ஓதி, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே’ (மர. 69) என்று கிளந்து கூறாவழி உயர்திணையை உணர்த்தும் என்று மரபியலில் கூறினார்.

இளமை : காமச் செவ்வி நிகழ்வதொரு காலம். ‘இளமை கழிந்த பின் றை வளமை, காமம் தருதலும் இன்றே’ (நற். 126) - என உயர்திணை இருபாலும் உணர்த்தும்.

மூப்பு : ‘மூப்புடை முதுபதி’ (அகம். 7) என உயர்திணை இருபாலையும் உணர்த்திற்று. இளமையும் மூப்பும் பொருள்மேல் நில்லாது பண்பின்மேல் நிற்பின் அஃறிணையையும் உணர்த்தும்.

விருந்து : ‘விருந்தெதிர் கோடலும்’ (சிலப். 16 : 73) என உயர் திணை இருபாலையும் உணர்த்திற்று. ‘ஆங்கவை விருந்தாற்றப் பகல்அல்கி’ (கலி. 66) என அஃறிணைக் கும் இது வரும்.

பெண்மை : கட்புலன் ஆவதோர் அமைதித்தன்மை - பெண் பாலாம் தன்மை. ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்’ (சொ. 182) என விரவுப்பெயரைப் பகுத்தலின், இஃது இருதிணைக்கும் பொது.

அரசு : ‘அரசுபடக் கடந்தட்டு’ (கலி. 105) என ஆண்பால் உணர்த்திற்று. ‘பெண்ணரசி ஏந்தினளே’ (சீவக. 736) என ஈறு வேறாயவழிப் பெண்பாலும் உணர்த் தும். ‘அரசுவா வீழ்ந்த களத்து’ (கள. 35) என அஃறி ணைக்கும் வரும். குழவி, மக : குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை, கிழவ அல்ல மக்கட் கண் ணே’ (மர. 23) என அஃறிணைக்கேயன்றி உயர்திணை இருபாற்கும் வரும். (தொ. சொ. 57 நச். உரை)

ஆண்மை சுட்டிய பெயர் -

{Entry: C03__229}

ஆண்மை சுட்டிய பெயர் என்பது இருதிணைக்கும் பொது வான விரவுப்பெயர் வகைகளுள் ஒன்று. ஆண்மை பற்றி வரும் பெயர் நான்கு. அவையாவன ஆண்மை இயற்பெயர், ஆண்மைச் சினைப்பெயர், ஆண்மைச் சினைமுதற் பெயர், ஆண்மை முறைப்பெயர் - என்பன. அவை அஃறிணை ஆண் ஒன்றற்கும் உயர்திணை ஒருவனுக்கும் உரியன.

எ-டு :

சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான்
இயற்பெயர்
முடவன் வந்தது, முடவன் வந்தான்
சினைப்பெயர்
முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான்
சினைமுதற் பெயர்
தந்தை வந்தது, தந்தை வந்தான்
முறைப்பெயர் (தொ. சொ. 181 சேனா., 183 நச். உரை)

நுந்தை வந்தது, நுந்தை வந்தான் - முறைப்பெயர். எந்தை உயர் திணைப்பெயராதலின் அஃறிணைக்கண்ணும் வந்து விரவுப் பெயர் ஆகாது. (தொ. சொ. 183 நச். உரை)

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி -

{Entry: C03__230}

ஆண்மையில் திரிந்து, பெண்மை நோக்கி நின்ற பெயர்ப் பொருளாம் பேடி. அது பேடிவந்தாள் - என வரும். சிறு பான்மை பேடி வந்தான் என ஆண்பாற்கும் ஏற்கும். (தொ. சொ. 12 இள. உரை)

ஆண்மை திரிந்த பொருளைக் குறிக்கும் பேடி என்ற சொல் பெண்பால் வினைகொண்டு முடியுமன்றி ஆண்பால் வினை கொண்டு முடியாது.

ஆண்மை திரிந்த பெயர் - பேடி பேடியர் பேடிமார் - என்பன.

இவை பெண்பால் வினையும் பலர்பால் வினையும் கொண்டு முடியும் எனல் இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதி. (பேடி வந்தாள்; பேடியர், பேடிகள், பேடிமார் வந்தார்) (தொ. சொ. 12 கல். உரை)

உயர்திணையிடத்துப் பெண்மையைக் கருத வேண்டி ஆண்மைத்தன்மை நீங்கிய பேடி என்ற பெயரான் சொல்லப் படும் பொருண்மை. இப்பெயர் ஆண்பாற்சொல்லான் சொல்லும் இடனில்லை, பெண்பாலானும் பலர்பாலானும் சொல்லுக என்றவாறு. பேடி வந்தாள், பேடியர் வந்தார் - என வரும். சிறுபான்மை பேடி வந்தான் என்பதும் ஆம். (தொ. சொ. 12 கல். உரை)

இப்பெயர் பேடி என்பது. இது பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும் சிறுபான்மை பேடிவந்தான் எனவும் முடிவு பெறும். (தொ. சொ. 4, 12 ப. உரை)

ஆண்மை பெண்மை விரவுப்பெயர்கள் -

{Entry: C03__231}

ஆண்மைவிரவுப்பெயர் பெண்மை விரவுப் பெயர் ஒவ்வொன் றும் நந்நான்காம், முதற்பெயரும் சினைப்பெயரும் சினை முதற் பெயரும் முறைப்பெயரும் பற்றி வருதலின்.

எ-டு : அ) சாத்தன் வந்தான், வந்தது; மோவாய் எழுந்தான், எழுந்தது - (‘ முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை’); முடவன் வந்தான், வந்தது; தந்தை வந்தான், வந்தது (தொ. சொ. 177 தெய். உரை)

ஆ) சாத்தி வந்தாள், வந்தது; முலை எழுந்தாள், எழுந்தது (பெருமுலை எனப் பண்பு அடுத்து வருவதே பொருந்தும்); முடத்தி வந்தாள், வந்தது; தாய் வந்தாள், வந்தது. (தொ. சொ. 176 தெய். உரை)

ஆதாரம், ஆதேயம் -

{Entry: C03__232}

ஏழாம் வேற்றுமைப் பொருளான ஒன்றுக்கு இடமாயிருப் பது ஆதாரம். இஃது உருவாகவும் அருவாகவும் இருக்கும்.

எ-டு : வடக்கண் வேங்கடம் எ ன்புழி, வடக்கு ஈண்டு அரு.

ஆதேயமாவது ஓரிடத்தில் இருப்பது (ஆதாரத்தில் இருப்பது ஆதேயமாம்).

எ-டு : ‘நல்லார்கண் பட்ட வறுமை’ (குறள். 408) என்புழி, ஆதேயமாம் வறுமை அரு. (‘அதிகரண காரக பேதம்’ காண்க) (பி. வி. 13)

ஆ, போ - என்ற பகுதிகள் -

{Entry: C03__233}

ஆகு போகு - என்பன முதனிலை எனின், ஆகினான் போகி னான் - என முற்றும் அதன்கண் தோன்றல் வேண்டும். அங்ஙனம் வழங்காமையின், ஆ போ - என்பன முதனிலை யாய்க் காலம் காட்டும் யகரஒற்றுப் பெற்று ஆயினான் - போயினான் - என முற்றாய்த் திரியும் என்று கொள்க. (தொ. சொ. 230 நச். உரை)

ஆய் என்னும் ஈறு செய்யுளுள் திரிதல் -

{Entry: C03__234}

ஆய் என்னும் முன்னிலை வினையீறும் பெயரீறும் செய்யு ளுள் ஆ ‘ஓ’ வாகத் திரியும்.

எ-டு : வந்தாய் மன்ற - ‘வந்தோய் மன்ற’ அக. 80

செப்பாதாய் - ‘செப்பாதோய்’ நற். 70. (தொ. சொ. 212, 195 சேனா. உரை)

ஆய், ஓடி - என்பனவற்றின் ஈறுகள் -

{Entry: C03__235}

ஆய் என்பது ஆதலைச் செய்து எனவும், ஓடி என்பது ஓடுதலைச் செய்து எனவும் செய்து என்னும் வாய்பாட்டுப் பொருளவாய் நிற்றலின், ஆய் முதலிய யகர ஈறுகளும் ஓடி முதலிய இகர ஈறுகளும் செய்து என்னும் வாய்பாட்டு உகர ஈறுகளின் திரிபாகவே கொள்ளப்படும்.

ஆய், ஓடி - என்பனவற்றின் எதிர்மறை, செய்து என்னும் வாய் பாட்டு எதிர்மறையாக, ஆகாது - ஓடாது - என்பனவாகவே நிற்றலானும், அவை செய்து என்னும் வாய்பாட்டைச் சேர்ந்தன வேயாம். (தொ. சொ. 228 சேனா. உரை)

ஆய் விகுதி வருமிடம் -

{Entry: C03__236}

ஆய் என்னும் முன்னிலைஒருமைவிகுதி மறையினும் ஏவலி னும் தொழிலினும் வரும். எ-டு : உண்ணாய், உண்டாய்.

உண்ணாய் - உண்ணமாட்டாய் என்ற எதிர்மறையாகவும், நீ உண் என்னும் ஏவலாகவும் வரும். உண்டாய் என்பது முன்னிலை ஒருமை இறந்தகால முற்று.

நட வா முதலிய ஏவல் வினைகள் ஆய்விகுதி குன்றி வருவன வாம். (தொ. சொ. 217 தெய். உரை)

ஆயன் சாத்தன் வந்தான் : முடிபு -

{Entry: C03__237}

ஆயன் சாத்தன் என்புழி, ஆயன் என்பதும் பெயர்; சாத்தன் என்பதும் பெயர். ஆயினும் இரண்டற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையின், சாத்தன் என்பதும் வந்தான் என்பதும் ஆயன் என்பதற்கே பயனிலை. அதனால் சாத்தன் என்பது ஆண்டுப் பெயர்ப் பயனிலையாய் நின்றது.

(எழுவாய் வேற்றுமை ஆயிற்று - என உரைப்பகுதி பிழைபட வுள்ளது.) (தொ. சொ. 66 இள. உரை.)

‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’ -

{Entry: C03__238}

அவ்விரு திணையினையும் சொல் சொல்லும்.

(தொ. சொ. 1 இள., நச்., கல்., ப. உ.)

அவ்விரு திணையின்கண்ணும் சொல் இசைக்கும்.

(1 சேனா. உரை)

சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாதலின் அவ்விரு திணை யின்கண்ணும் என ஏழாவது விரிக்கப்பட்டது. ‘செலவினும் வரவினு ம்’ (28) முதலிய இடத்தும் செலவின்கண்ணும் வரவின் - கண்ணும் என ஏழாவதே விரிக்கப்படும். (சேனா. உரை)

இரண்டாம் வேற்றுமையுருபு இன்சாரியை வருமிடத்தே விரிந்தே வரல் வேண்டும் என்பது விதியாதலின் இரண்டாவது விரித்தல் ஏலாது எனில், ‘அரு ங்கற்பின்... துணைவியர்’, ‘சிலசொல்லின்... துணைவியர்’ (புறநா. 166) எனச் சான்றோர் செய்யுளிலும், ‘சார்ந்து- வரல் மரபின் மூன்று’ எனத் தொல்காப்பிய முதல் நூற்பாவிலும் இன்சாரியை உள்வழி இரண்ட னுருபு தொக் கும் வரும் மரபுண்மையான், அவ்விருதிணையினையும் சொல் குறிப்பிடும் என இரண்டாவது விரிக்கப்பட்டது.

‘இசைப்பு இசையாகும்’ என்றதனான் இசைக்கும் என்பதன் பொருள் ஒலிக்கும் என்பதே ஆயினும், சொல்லுக்குப் பொருள் உணர்த்தும்வழியல்லது ஒலித்தல் கூடாமையின், உணர்த்தும் என்னும் தொழிலை இசைக்கும் என்னும் தொழி லான் கூறியவாறாகக் கொள்க. பொருளை உணர்த்துவான் ஒரு சாத்தனே எனினும், அவற்கு அது கருவியாக அல்லது உணர்த்தலாகாமையின், அக்கருவிமேல் தொழில் ஏற்றிச் ‘சொல்லுணர்த்தும்’ என்று கருவிகருத்தாவாகக் கூறினார்.

(1 நச்., கல். உரை)

பொருளின்றேல் சொற்களின் தோற்றம் இல்லை. ஆதலின் சொல் ஆயிரு திணையின்கண் தோன்றி அவற்றை இசைக்கும் எனக் கொள்க. ‘ஆயிரு திணையினை இசைக்கும்’ என்று இரண்டாவது விரிப்பின், பொருளும் சொல்லும் வேறு வேறாகத் தோன்றும் எனவும், சொற்கள் இடுகுறியாகக் கட்டிய வழக்கு எனவும் பொருள்பட்டு மொழியியலுக்கும் அறிவியலுக்கும் முரண் உண்டாம். சொல் தன்னை யுணர்த்திப் பின் பொருளையும் அறிவிக்குமாறு போல, முதற்கண் சொல் பொருளை இடமாகக்கொண்டு தோன்றிப் பின்னர் அப் பொருளை அறிவிப்பது அதன் தன்மையாம். (1. ச. பால.)

ஆயிருபாற் சொல் -

{Entry: C03__239}

அஃறிணைப்பொருண்மை, உயிர்ப்பொருள் - உயிரில் பொருள் - எனவும், உயிர்ப்பொருட்கண் ஆண் பெண் எனவும், அவை யெல்லாம் பொருள்தோறும் ஒருமையும் பன்மையும் ஆகிய பாகுபடுமாயினும் அவையெல்லாம் ஒருமையாயின் வந்தது எனவும் பன்மையாயின் வந்தன எனவும் சொல்முடிவு நோக்கி வழங்கப்படுதலின், அஃறிணை ஒன்று - பல - என்னும் இரண்டு பகுப்பினை உடையதாயிற்று.

(தொ. சொ. 3 தெய். உரை)

ஆயெண் கிளவி : முடிபு -

{Entry: C03__240}

‘அவ்வெண் கிளவி’ என்னும் அகரச்சுட்டு நீண்டு யகர உடம்படுமெய் பெற்றது. அவ்வெட்டுச் சொற்களும் என்பது பொருள். (தொ. சொ. 204 நச்.)

ஆர் என்னும் இடைச்சொல் இயற்கை -

{Entry: C03__241}

ஆர் என்பது பலர்பால் வினைமுற்று இறுதிநிலையாக வரும்; இயற்பெயர் உயர்திணைப் பெயர்களின் முன்னர் உயர்த்துதற் பொருட்டாய் நிகழும்.

எ-டு : சாத்தன், நரி - சாத்தனார், நரியார் : இயற்பெயர்; தொண்டன் - தொண்டனார் : உயர்திணைப் பெயர்; வந்தார் - பலர்பால் வினைமுற்று விகுதி.

உம்மையின் பின்னரும் உம் ஈற்றின் பின்னரும் இவ் விடைச் சொல் அசைநிலையாக வரும்.

எ-டு : ‘பெயரி னாகிய தொகையுமார் உளவே’ (சொ. 67) - உம்மைப் பின் ‘ஆர்’ அசைநிலை.

‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எ-டு) - உம் ஈற்றின் பின் ‘ஆர்’ அசைநிலை.

ஆர் என்னும் இடைச்சொல்லை ஏற்ற பெயர் பலர்பால் வினையையே கொண்டு முடியும். சாத்தனார் வந்தார், தொண்டனார் வந்தார் - எனக் காண்க. (தொ. சொ. 270, 271 சேனா. உரை)

ஆர்த்த தாதுகம் -

{Entry: C03__242}

இது வடமொழியில் வினைச்சொற்களின் வகைகளான ஸார்வ தாதுகம் ஆர்த்த தாதுகம் - என்னும் இரண்டனுள் ஒன்று. முதலாவதான ஸார்வ தாதுகம் என்பதில் லட் என்ற நிகழ்கால வினைமுற்றுக்களும், பெரும்பாலும் விதிக்கும் பொருளில் வரும் லோட் - லிங் - என்ற முற்றுக்களும், இறந்த கால வினை முற்றான லங் என்பதும், நிகழ்காலப் பெயரெச்சம் போன்ற சில எச்சமும் அடங்கும். மற்ற அனைத்துமே ஆர்த்த தாதுகம் ஆம். தமிழ்மரபில், செய்து - செய - என்னும் வாய் பாட்டு வினை யெச்சங்கள் ஆர்த்த தாதுகம் எனக் கொள்ள லாகும். (பி. வி. 38)

ஆர்த்தி -

{Entry: C03__243}

தண்டியாசிரியர் உவமஉருபுகளைச் சார்த்தி (ஸார்த்தி) - ஒப்புள்ள பொருள் வகையாலே ஆவன என்றும், ஆர்த்தி - ஒப்பில் வழியால் பொருள்படுவன என்றும் இருவகையாகக் கூறுவர். அவற்றுள் ஒப்பு உள்வழியால் வருவன : போல, ஒப்ப - என்பன; இவை சார்த்தி. ஆர்த்தி என்பன: அன்ன, மான, உறழ - போல்வனவாம். (பி. வி. 6)

ஆர்ப்புப் பற்றிய சொற்கள் -

{Entry: C03__244}

கம்பலை என்றும், சும்மை என்றும், கலி என்றும், அழுங்கல் என்றும், ஆர்ப்பு என்றும் இவை அரவப் பெயராம்.

வரலாறு : ஊர் கம்பலை யுடைத்து, ‘ தள்ளாத சும்மை மிகும்’, (சீவக. 20) மன்றார் கலிக் க ச்சி; ‘அழுங்கல் மூதூர்’ (அக. 122), ‘ஆர்ப்புடை மூதூ ர்’ இவை அரவப் பொருள. (நேமி. உரி. 2 உரை)

ஆரியம் ‘திசைச்சொல்’ ஆகாமை -

{Entry: C03__245}

ஆரியச்சொல் ஒரு நிலத்திற்கே உரித்தன்றிப் பதினெண் நிலத்திற்கும் விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய் வருதலின் திசைச்சொல்லுள் அடங்காமையின் வேறு கூறி னார். அற்றேல் வடசொல் என்றது என்னையெனில், ஆண்டு வழக்குப் பயிற்சி நோக்கி என்க. (இ. வி. 175 உரை)

‘ஆல்’ உடனிகழ்ச்சியில் வருதல் -

{Entry: C03__246}

‘தூங்கு கையால் ஓங்குநடைய, உறழ் மணியால் உயர்மருப்பின’ (புற. 22)

‘பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன், பெண்டகை யால் பேரமர்க் கட்டு’ (கு. 1083)

என்புழி ஆல்உருபு உடனிகழ்வதாக வேற்றுமை செய்தது. (கையோடு, மணியோடு, பெண்தகையோடு - என்பன பொருள்.) [ ஆன் உருபோடு அபேதமாக ஆலுருபு ஈண்டுக் கொள்ளப் பட்டது. ] (நன். 297 சங்.)

ஆவயின் மூன்றோடு : முடிபு -

{Entry: C03__247}

அவ்வயின் என்பது ‘ஆவயின்’ எனத் திரிந்து நின்றது. அப்பொருளிடத்து வரும் மூன்றோடு - என்பது பொருள்.

(தொ. சொ. 162 சேனா.)

‘ஆவும் ஆயனும் செல்க’ : இத்தொடர் வழுவமைதி ஆதல் -

{Entry: C03__248}

ஆவும் ஆயனும் - என இனம் அல்லாததனோடு எண்ணின மையான் வழுவாய், வியங்கோள்வினை இருதிணைக்கும் முடிவு ஏற்றலின் வழுவமைதி ஆயிற்று. இது வியங்கோளைக் கொண்டு முடியும் எண்ணுப் பெயர். உம்மையெண்ணும் ‘என’ எண்ணும் தொகைபெற்றும் பெறாதும் வரும். இரு திணையையும் எண்ணித் தொகை கொடுத்தற்கண் இடர்ப் பாடு உண்டு ஆதலின், தொகை பெற வேண்டும் என்ற வரை யறை இல்லாத உம்மையெண்ணான் எண்ணப்பட்ட பெயர் கள் கொள்ளப் பட்டன. (தொ. சொ. 45 இள. உரை)

ஆற்பனே பதம் -

{Entry: C03__249}

வினைச்சொல் வகை இது; தனக்குப் பயன்படும் வினை களுக்குப் பெயர். பிறர்க்குப் பயன்படுவது பரப்பைபதம். இவ் வேறுபாடு தமிழில் இல்லை; வடமொழியிலும் வழக்கிழந்து பலகாலம் ஆயிற்று. (பி. வி. 36)

ஆற்றுப்படையில் ஒருமைப்பெயர் பன்மைமுடிபு பெறுதல் -

{Entry: C03__250}

ஆற்றுப்படையில் சுற்றத்தொடு சுற்றத்தலைவனை ஆற்றுப்- படுத்தற்கண் அவனை முன்னிலை ஒருமையில் ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ என விளித்து, ‘இரும்பே ர் ஒக்கலொடு பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடு. அடி. 50, 157) என முன்னிலைப் பன்மையில் முடிக்கும் வழக்கம் வழுவமைதியாம்.

(தொ. சொ. 462 நச். உரை)

‘ஆறறி அந்தணர்’: ஆறு என்பதன் இலக்கணம் -

{Entry: C03__251}

ஆறு என்பது எண்ணுப்பெயரன்று. அது வரையறைப் பண்புப் பெயர். அஃது ஆகுபெயராய் ஆறுஅங்கத்தை உணர்த்தி நின்றது.

‘இனைத்தெனக் கிளக்கும் எ ண்ணுக்குறிப்பெயர்’ ஆகிய ஆறு என்பது ஆகுபெயர் ஆகாமலேயே பொருளை உணர்த்தும் ஆற்றலுடையது. தொல்காப்பியனார்க்கு எண்ணுப்பெயர் ஆகுபெயராய் எண்ணப்பட்ட பொருளை உணர்த்த வேண்டும் என்ற கருத்தில்லை. (தொ. சொ. 119 நச். உரை)

ஆறறிவுயிர் என்ற பகுப்பு வேண்டாமை -

{Entry: C03__252}

ஆறறிவுயிரும் ஒன்றுண்டால் எனின், ஆசிரியர் தொல்- காப்பியனார் மனத்தையும் ஒருபொறியாக்கி அதனான் உணரும் மக்களையும் விலங்கினுள் ஒருசாரனவற்றையும் ‘ஆறறிவுயிர்’ என்றார். நன்னூலாசிரியர் அம்மனக்காரியம் மிகுதி குறைவாலுள்ள வாசியல்லது அஃது எல்லா உயிர்க் கும் உண்டு என்பார் மதம் பற்றி, ‘வானவர் மக்கள் நரகர் விலங்கு புள், ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே’ என்று சொன்னார் என்க. (நன். 448 மயிலை.)

ஆறன் உடைமைப் பொருளுக்கு இரண்டாவது விரியுமாறு -

{Entry: C03__253}

வனைந்தான் என்னும் தெரிநிலை முற்றுச்சொல் செய்தான் என்னும் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்துமாறி நின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழனையும் விரித்து நிற்குமாறு போல, உடையன் என்னும் வினைக்குறிப்பு முற்றுச்சொல்லும் உடையனாய் இருந்தான் என்று விரிந்துழி, உணரப்படும் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும் உள்ளடக்கி வினைமுத லோடு அமைந்துமாறி நின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழனையும் விரித்து நிற்கும் ஆதலின், உடையன் என்பதனுள் அடங்கி நின்ற செயப்படு பொருளுக்குக் ‘குழையை’ என உருபு விரித்தல் அதற்கு இயல்பு என்று உணர்க. (தொ. சொ. 215 நச். உரை)

ஆறன் உருபிற்கும் பெயர்க்கும் வேற்றுமை -

{Entry: C03__254}

பெயர்கள் வேற்றுமையை ஏற்கும்; அவையேயன்றி ஆற னுருபும் அவ்வுருபுகளை ஏற்கும். அஃதேல், பெயரோடு இதற்கு வேற்றுமை யாதோ எனின், உருபு ஏற்புழியும் தன் இரு கிழமைப் பொருளினும் திரியாது நிற்றலாம். (சாத்தனது - சாத்தனதை - சாத்தனதால் - சாத்தனதற்கு - சாத்தனதனின் - சாத்தன தனது - சாத்தனதன்கண் - என வரும்.) (நன். 292 மயிலை.)

ஆறன்உருபு அல்லாத ஏனைய வேற்றுமைகள் வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கோடல் -

{Entry: C03__255}

சாத்தனது வந்தது - சாத்தன வந்தன - எனவும், சாத்தனது நன்று - சாத்தன நல்லன - எனவும், ஆறன் ஒருமை பன்மை யுருபுகள் வினையும் வினைக்குறிப்பும் கொண்டன. ஏனைய வேற்றுமைகள் வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் களையே கொண்டு முடியுமாறு வருமாறு:

அறத்தை அடைந்தவன் - மறத்தை மறந்தவன் - திருவைச் சேர்ந்தவன் - எனவும், பொருளை யுடையவன் - புதல்வனை இல்லவன் - அறத்தை ஆக்கல் - மறத்தை மாற்றல் - எனவும் இரண்டாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது.

சுடரினால் கண்டவன் - அரசனால் பெற்றவன் - நெய்யான் நுகர்ந்தவன் - எனவும், குணத்தால் பெரியவன் - இனத்தால் செவ்வியன் - அரசனால் பெறுதல் - வாளால் வணக்குதல் - எனவும் மூன்றாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது.

இரவலர்க்கு ஈந்தவன் - பொருட்குப் போனவன் - எனவும், எனக்கு இனியவன் - அவர்க்கு நல்லவன் , இரவலர்க்கு ஈதல் - எனவும் நான்காவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது.

மலையின் இழிபவன் - மன்னரின் வாழ்ந்தவன் - பொன்னின் திகழ்பவன் - வாளியின் செகுத்தவன் - எனவும், காக்கையிற் கரியவன் - அறிவிற் பெரியவன் - வாளியிற் செகுத்தல் - எனவும் ஐந்தாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது.

அரங்கின்கண் அகழ்ந்தவன் - ஆகாயத்தின்கண் சென்றவன் - ஆண்டின்கண் போனவன் - குணத்தின்கண் ஒழிந்தவன் - எனவும், நாட்டின்கண் நல்லது, கூதிர்க்கண் உள்ளது - வாளின்கண் உள்ளது - அரங்கின்கண் அகழ்தல் - பரணிக் கண் பிறத்தல் - எனவும் ஏழாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது. (நன். 318 மயிலை.)

ஆறன்உருபு உருபு ஏற்றல் -

{Entry: C03__256}

பெயரேயன்றி ஆறனுருபும், ஐயும் ஆலும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் விளியும் என்று கூறப்படும் அவ்வுருபுகளை யும் ஏற்கும். ஏற்புழிக் கோடலான், எழுவாயும் விளியும் ஒழித்து ஏனையவே கொள்க. பெயரோடு இதற்கு வேற்றுமை, உருபு ஏற்புழியும் தன் இரு கிழமைப் பொருளினும் திரிபின்றி நிற்றலாம்.

சாத்தனதனை சாத்தனதனால் சாத்தனதற்கு சாத்தனதனின் சாத்தனதனது சாத்தனதன்கண் - என வரும். (இ. வி. 195 உரை)

ஒரோவழிப் பெயரேயன்றி ஆறனுருபும் சாத்தனது. சாத்தனதை சாத்தனதால் - சாத்தனதற்கு - சாத்தனதனின் - சாத்தனதனது - சாத்தனதன்கண் - காத்தனதே - என எட்டு வேற்றுமையிலும் உருபேற்று வரும். ஆறாவது உருபேற்றவழி தன் இரு கிழமைப் பொருளும் ஏற்ற உருபின் பொருளும் தோன்ற நிற்கும். எழுவாயுருபு ஏனைய உருபுகளை ஏற்பின் உருபின் பொருளே புலப்படுமன்றி எழுவாயுருபின் பொருள் புலப்படாது. (எழுவாயுருபு தன் பயனிலை கொள்ள நிற்குமாதலின் அது பிற உருபுகளை ஏலாது; ஏற்குமேல் அது பெயர் எனப்படுவ தன்றி எழுவாயுருபு எனப்படாது) ஆதலின் தன்னிலையில் நின்ற பெயரே எட்டுருபும் ஏற்றது என்க. (நன். 293 சங்.)

ஆறன்உருபுகள் -

{Entry: C03__257}

அது என்னும் ஆறாம் வேற்றுமையுருபு ஆது எனவும் அ எனவும் திரிந்து வருதலால் ஆறன் உருபு ஒன்றே என்பது நேமி நாத நூலார் கருத்து. நன்னூலார் அது ஆது என்பன ஒருமை யுருபு எனவும் அகரம் பன்மையுருபு எனவும் கொள்வர். (எனது தலை, எனாது தலை, என கைகள்)

வரலாறு : சாத்தனது வாள், கொற்றனது வேல் - இவை பிறிதின்கிழமை.

தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பல குழீஇய தற்கிழமையும் - வேறு பல குழீஇய தற்கிழமையும் - ஒன்றியல் தற்கிழமையும் - உறுப்பின் தற்கிழமையும் - மெய் திரிந்தாகிய தற்கிழமையும் என. அவை வருமாறு:

ஒன்று பல குழீஇய தற்கிழமை - எள்ளது குப்பை;

வேறு பல குழீஇய தற்கிழமை - படையது குழாம்;

ஒன்றியல் தற்கிழமை - நிலத்தது அகலம்;

உறுப்பின் தற்கிழமை - யானையது கோடு;

மெய் திரிந்தாகிய தற்கிழமை - எள்ளது சாந்து;

பிறவும் அன்ன.

‘அது’ விகாரப்பட்டு ஆது என நின்று, நினது குதிரை - நினாது குதிரை, எனது வேல் - எனாது வேல் - என வரும். ஆறாம் வேற் றுமை அகரமாய் நிற்கவும் பெறும். அவை வரு மாறு : உத்திய கண் கரிய, கோளரிய கண் பெரிய, யானைய கோடு பெரிய, ஆனேற்ற கோடு கூரிய - என்பன. (நேமி. வேற். 5 உரை)

ஆறன்உருபு கெட அதன் உடைமைப்பொருள் விரியுமாறு -

{Entry: C03__258}

நின்மகள் (அக. 48) : அது உருபு கெட அதன் உடைமைப் பொருள் விரிந்து நின்னுடைய மகள் என விரியும். எம் மகன் (கலி.85) எம்முடைய மகன் என உடைமைப்பொருள் விரியும். இவற்றிற்கு நான்காவது விரிப்புழி, நினக்கு மகளாகியவள் - எமக்கு மகனாகியவன் - என ஆக்கம் கொடுத்துக் கூறவேண் டும்; ஆண்டு அம் முறை செயற்கையாம். ஆதலின் அது பொரு ளன்று. நின்மகள் எம் மகன் - என்பனவற்றை நின்னுடைய மகள் - எம்முடைய மகன் - என அதுவுருபு கெடுத்து அதன் உடைமைப்பொருளையே விரித்தல் வேண்டும். (தொ. சொ. 95 நச். உரை)

ஆறன்உருபு தொடர்இறுதிக்கண் நில்லாமை -

{Entry: C03__259}

ஆறனுருபு தொடரிறுதிக்கண் நில்லாது; நிற்குமேல் அது வினைக்குறிப்பாம். சாத்தனது ஆடை என்பது ஆடை சாத்தனது என மாற்றியுரைக்கப்படின், எழுவாய்த் தொடராகச் ‘சாத்த னது’ என்பது வினைக்குறிப்புமுற்றாம். (தொ. சொ. 104 நச். உரை)

ஆறன்உருபு பிற உருபு ஏற்றல் -

{Entry: C03__260}

அது என்பது ஆறாம் வேற்றுமைக்கு உருபாம் எனினும், அதுவே முதற்பெயரொடு கூடி அன்சாரியை பெற்று ஐ முதல் கண் ஈறாய ஆறு உருபுகளொடும் புணர்ந்து வரும் எனக் கொள்க.

வருமாறு : ‘சாத்தனது’ என்பது சாத்தனதனை - சாத்தன தனால் - சாத்தனதற்கு - சாத்தனதனின் - சாத்தனதனது - சாத் தனதன் கண் - என ஆறுருபும் ஏற்று வருதல் காண்க.

(தொ.வி. 63 உரை)

ஆறன்உருபு பெயர் வினை கொண்டமை -

{Entry: C03__261}

சாத்தனது குணம், சாத்தனது கை, நெல்லது குப்பை, படையது குழாம், எள்ளது சாந்து, சாத்தனது ஆடை - என ஆறனுருபு பெயர் கொண்டது.

சாத்தனது வந்தது, சாத்தன வந்தன - எனவும், சாத்தனது நன்று. சாத்தன நல்ல - எனவும் ஆறனுருபு வினையும் வினைக்குறிப்பும் கொண்டது. ‘ஆறன்உருபு உருபு ஏற்றல்’ காண்க. (நன். 318 மயிலை.)

ஆறாம் வேற்றுமை -

{Entry: C03__262}

ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது, ஆது, அ - என்பன. அதுவும் ஆதுவும் ஒருமை; அகரம் பன்மையுருபாம். இவ் வேற்றுமைப் பொருள், பண்பு - உறுப்பு - ஒன்றன் கூட்டம் - பலவின் ஈட்டம் - திரிபின் ஆக்கம் - என்னும் தற்கிழமைப் பொருளும், ஏனைய பிறிதின்கிழமைப் பொருளுமாய்த் தன்னை ஏற்ற பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலாம். பண்பு என்பதன்கண் குணப்பண்பும் தொழிற்பண்பும் அடங் குதலின், பொருள் ஆதி ஆறனுள் சினை குணம் தொழில் இம்மூன்றும் தற்கிழமை; ஏனைய பொருள் இடம் காலம் இம்மூன்றும் பிறிதின்கிழமை. ஒன்றன் கூட்டம் - பலவின் ஈட்டம் - திரிபின் ஆக்கம் - ஆகிய மூன்றும் பண்பு உறுப்பு இவற்றுடன் கூட, இவை ஐந்தும் தற்கிழமையாம் என்க.

அது - ஆது - அ - என்பன அஃறிணை யுருபுகளே. உயர்-திணைக்கண் ‘உடைய’ என்னும் சொல்லுருபும், முறைப் பொருட்கண்ணே குகர உருபும் வரும்.

எ-டு : எனது தலை, எனாது தலை, என கைகள்; எனக்கு மகன். (நன். 300)

ஆறாம் வேற்றுமை உருபு ஏற்ற சொல்லின் இலக்கணம் -

{Entry: C03__263}

ஆறாம் வேற்றுமையுருபு ஏற்ற சொல் தொடரிடையே வரின், உருபின் பொருள் தந்து உடைமைச் சொல்லைக் கொண்டு முடியும்; தொடரிறுதிக்கண் வரின் வினைக்குறிப்பாம்.

‘அம்முப் பாற்சொல் உயர்திணைய’ என்புழி, ஆறன்பன்மை யுருபாகிய அகரம் ஏற்ற அச்சொல் பெயராகாது குறிப்பு முற்றாய் நின்றது. (தொ. சொ. 2 நச். உரை)

ஆறாம் வேற்றுமைப் பெயர்க்காரணம் -

{Entry: C03__264}

நான்காம் வேற்றுமையால் போந்த கொள்வோனையும் கொடைப்பொருளையும் ஐந்தாம் வேற்றுமையாகிய ‘இதனின் இற்று இது’ என விகற்பித்து உணர்ந்து கொடுத்தல், தற்கிழமையும் பிறிதின்கிழமையும் ஆகிய இவ்விரு கிழமைப் பொருள் உடையோர் செயல் என்பது தோன்றுமாறு இவ் வேற்றுமை ஆறாம் வேற்றுமை எனப்பட்டது.

(நன். 300 சங்.)

ஆறாம் வேற்றுமைப் பொருளும் முடிக்கும் சொற்களும் -

{Entry: C03__265}

ஆறாம் வேற்றுமைப் பொருள் ‘இதனது இது’ என்னும் உடைமைப் பொருளாம். அது தற்கிழமை பிறிதின்கிழமை என இருவகைப்படும். தற்கிழமை - ஒன்று பல குழீஇய தற் கிழமை, வேறு பல குழீஇய தற்கிழமை, ஒன்றியல் கிழமை, உறுப்பின் கிழமை, மெய் திரிந்தாய தற்கிழமை என ஐவகைப் படும். பிறிதின்கிழமை, பொருள் இடம் காலம் என மூவகைப் படும்.

I. தற்கிழமை

எ-டு :

(அ) குழூஉக் கிழமை

எள்ளது குப்பை: ஒன்று பல குழீஇய தற்கிழமை.

படையது குழாம்: வேறு பல குழீஇய தற்கிழமை.

(ஆ) ஒன்றியல் கிழமை (இயற்கையும் நிலையும்)

சாத்தனது இயற்கை, நிலத்தது அகலம்
இயற்கைக் கிழமை.
சாத்தனது நிலைமை, சாத்தனது இல்லாமை
நிலைக் கிழமை.

(இ) உறுப்பின் கிழமை.

யானையது கோடு, புலியது உகிர்

(ஈ) மெய் திரிந்தாய தற்கிழமை.

சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு - செயற்கைக்கிழமை (செயற்கையாவது தன்தன்மை திரிந்து வேறாம் தன்மையாதல்)

அரசனது முதுமை, அரசனது முதிர்வு - முதுமைக்கிழமை (முதுமையாவது அறிவின் முதிர்ச்சி ; மூப்பு அன்று)

சாத்தனது வினை, சாத்தனது செலவு - வினைக்கிழமை

II. பிறிதின்கிழமை

அ) பொருட் பிறிதின்கிழமை -

சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் - உடைமைக் கிழமை.

மறியது தாய், மறியது தந்தை - முறைமைக் கிழமை.

இசையது கருவி, வனைகலத்தது திகிரி - கருவிக் கிழமை.

அவனது துணை, அவனது இணங்கு - துணைக் கிழமை.

நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது

விலைத்தீட்டு - கலக் கிழமை.

(கலக்கிழமை இருபொருட்கு உரிமையாகலின் உடைமைக் கிழமையின் வேறாயிற்று)

ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் - முதற்கிழமை.

கபிலரது பாட்டு, பாரியது பாட்டு, பரணரது பாட்டியல் செய்யுட் கிழமை.

(தெரிந்த மொழியான் செய்யப்படுதலின் செய்யுள் ‘தெரிந்து மொழிச் செய்தி’ எனப்பட்டது)

ஆ) இடப் பிறிதின்கிழமை

முருகனது குறிஞ்சிநிலம் - கிழமைக் கிழமை. (நிலம்)

இ)காலப் பிறிதின்கிழமை

வெள்ளியது ஆட்சி - கிழமைக் கிழமை. (காலம்)

காட்டது யானை - வாழ்ச்சிக்கிழமை - பொருட் பிறிதின்கிழமை.

யானையது காடு - வாழ்ச்சிக்கிழமை - நிலப் பிறிதின்கிழமை.

வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால் தற்கிழமையும் ஆம்.

எட்சாந்து, கோட்டுநூறு - முழுதும் திரிந்தன.

சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள் - சிறிது திரிந்தன (தொ. சொ. 81 நச். உரை)

ஆறாவதற்கு ஓதிய முறைப்பொருட்கண் நான்காவது வருதல் -

{Entry: C03__266}

உயர்திணைப்பொருள் இரண்டு முறைப்பொருள் தோன்ற இணையுமிடத்து, அவ்வாறாவதன் முறைப்பொருட்கண் உருபு விரிக்குமிடத்து நான்காவது விரியும்.

எ-டு : நம்பிமகன் - நம்பிக்கு மகன் என நான்காவது விரிந்த வாறு. (ஆறன்உருபு கெட்டுப்போக அதன் உடைமைப் பொருள் விரியும், நம்பியுடைய மகன் என.)

(தொ. சொ. 95 நச். உரை)

ஆறாவதன் உயர்திணைத் தொகை விரியுமாறு -

{Entry: C03__267}

ஆறாவதன் உடைமைப்பொருள் தோன்ற அமையும் சாத்தன் மகன் என்பது சாத்தற்கு மகன் என நான்காவது விரியும். சாத் தனது மகன் என ஆறாவதன் அதுவுருபு விரிப்பின், அவ்வுருபு அஃறிணைப் பொருள் சுட்டுதலின், மகன் என்ற பெயரொடு பொருந்தாது திணைவழுவாக முடிதலின், ஆறனுருபாகிய அது என்பதனை விடுத்து நான்கனுருபாகிய குகரமே விரிக்கப்படல் வேண்டும். ‘அது’ இடையே தோன்றாது என்பது சேனாவரையர் கருத்து. (தொ. சொ. 94 சேனா. உரை)

ஆறாவதன் உறுப்பியல் தற்கிழமை பற்றிய முடிக்கும் சொற்கள், ஆறாவதன் ஒன்று பல குழீஇய தற்கிழமை பற்றிய முடிக்கும் சொற்கள் -

{Entry: C03__268}

‘தற்கிழமை’ காண்க.

ஆறாவதன் உறைநிலமும் உறைபொருளும் -

{Entry: C03__269}

ஆறனுருபு உறைநிலப் பெயரையும் உறைபொருளாம் பெயரை யும் அடுத்து வந்து பெயர் கொண்டு முடியும். இது வாழ்ச்சிக் கிழமையாம்.

எ-டு : காட்டது யானை - காடு : உறைநிலம்

யானையது காடு - யானை : உறைபொருள்

காட்டது யானை என ‘அது’ விரிதலேயன்றிக் காட்டுள் யானை - என ஏழாவது விரிதலுமாம். (தொ. சொ. 97தெய். உரை)

ஆறாவதன்கண் சிறிது திரிந்தனவும் முழுதும் திரிந்தனவும் -

{Entry: C03__270}

‘ஆறாம் வேற்றுமைப் பொருளும் முடிக்கும் சொற்களும்’ காண்க.

ஆறாவதன் காலப் பிறிதின்கிழமை பற்றிய முடிக்கும் சொல் -

{Entry: C03__271}

ஆறாவதன் நிலப் பிறிதின்கிழமை பற்றிய முடிக்கும் சொல் -

{Entry: C03__272}

ஆறாவதன் பொருட் பிறிதின்கிழமை பற்றிய முடிக்கும் சொல் -

{Entry: C03__273}

‘ஆறாவதன் பிறிதின்கிழமை’ காண்க.

ஆறாவதன் தற்கிழமை -

{Entry: C03__274}

ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப் பொருள்களில் தன்னிடத் திலிருந்து எளிதின் பிரிக்கமுடியாத செய்திகளை உணர்த்தும் தற்கிழமை, ஒன்று பல குழீஇய தற்கிழமை - வேறு பல குழீஇய தற்கிழமை - ஒன்றியற்கிழமை - உறுப்பின் கிழமை - மெய் திரிந்து ஆய தற்கிழமை - என ஐவகைப்படும்.

எ-டு :

எள்ளது குப்பை - ஒன்று பல குழீஇய தற்கிழமை
படையது குழாம் - வேறு பல குழீஇய தற்கிழமை
குழூஉ
சாத்தனது இயற்கை - இயற்கைக் கிழமை
சாத்தனது இல்லாமை - நிலைக்கிழமை
ஒன்றியற் கிழமை
யானையது கோடு, புலியது உகிர் - உறுப்புத் தற்கிழமை
சாத்தனது செலவு - வினை
சாத்தனது கற்றறிவு - செயற்கை
சாத்தனது முதிர்வு - முதுமை
இவை மெய்திரிந்தாய தற்கிழமை.
எட்சாந்து, கோட்டு நூறு
முழுதும் திரிந்தன
சாத்தனது நட்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள்
சிறிது திரிந்தன (தொ. சொ. 81 நச். உரை)

ஆறாவதன் பிறிதின்கிழமை -

{Entry: C03__275}

ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப்பொருள்களில் தன்னிடத் திலிருந்து எளிதின் பிரிக்கக் கூடிய தொடர்புடைய உடைமை களின் தொடர்பு பிறிதின்கிழமை எனப்படும். இது பொருட் பிறிதின்கிழமை. இடப் பிறிதின்கிழமை, காலப் பிறிதின் கிழமை என மூவகைப்படும்.

எ-டு : சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் - உடைமைக் கிழமை.

மறியது தாய், மறியது தந்தை - முறைமைக்கிழமை.

இசையது கருவி, வனைகலத்தது திகிரி - கருவிக்கிழமை.

அவனது துணை, அவனது இணங்கு - துணைக்கிழமை.

நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு -

கலக்கிழமை.

ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் - முதற்கிழமை.

கபிலரது பாட்டு, பாரியது பாட்டு - தெரிந்து மொழிச் செய்திக்கிழமை.

காட்டது யானை - வாழ்ச்சிக்கிழமை.

இவையாவும் பொருட்பிறிதின்கிழமை.

வெள்ளியது ஆட்சி - கிழமைக்கிழமை.

இது காலப் பிறிதின்கிழமை.

முருகனது குறிஞ்சி நிலம் - கிழமைக்கிழமை.

யானையது காடு - வாழ்ச்சிக்கிழமை.

இவை நிலப்பிறிதின்கிழமை. (தொ. சொ. 81 நச். உரை)

செயற்கை, வினை - ஆகுபெயராயவழிப் பிறிதின்கிழமையாம்.

எ-டு : சாத்தனது செயற்கை (செயற்கையால் வந்துற்ற விளைவு)

சாத்தனது வினை (வினையால் வந்துற்ற விளைவு)

உடைமை : சாத்தனது உடைமை (தற்கிழமையும் படும் போலும்)

முறைமை, கருவி, துணை, கலம், முதல்: பிறிதின்கிழமை

எ-டு : ஆவினது கன்று, சாத்தனது வாள், சாத்தனது துணை, சாத்தனது (ஒற்றிக்)கலம், சாத்தனது முதல் (இத் தோட்டம்) - என முறையே காண்க.

பாரியது பாட்டு : பிறிதின் கிழமை

கபிலரது பாட்டு : மெய் திரிந்தாய தற்கிழமை (பாடம் பிழைபட்டுள்ளது.) (தொ. சொ. 81 கல். உரை)

ஆறாவதன் பொருள் வேறுபாடு சில -

{Entry: C03__276}

இயற்கைக் கிழமை - பொருட்கு இயல்பாகிய பண்பு.

எ-டு : நிலத்தது வலி, நீரது தண்மை, தீயது வெம்மை

உடைமைக் கிழமை - உடைப்பொருளின் பாகுபாடு உணர நில்லாது பொதுமை உணர நிற்பது. அப்பொதுக்கிழமை யினும் வரும் இவ்வேற்றுமைக் கிழமை.

எ-டு : சாத்தனது உடைமை

சாத்தனது குழை என்பதனோடு இதனிடை வேற்றுமை என்னையெனின், சாத்தனது உடைமை குழை எனவும் வந்து குறிப்புவினைப் பொருளொடு முடிதலின் வேறு ஓதப்பட்டது.

முறைமைக் கிழமை - உடையானும் உடைப்பொருளுமன்றி முறைமையாகிய கிழமையான் வருவது.

எ-டு : ஆவினது கன்று, மறியது தாய்

கிழமைக் கிழமை - ‘இவற்கு இவள் உரியள்’ எனும் பொருள் பட வருவது.

எ-டு : அரசனது உரிமை

முதுமைக் கிழமை - முதுமை என்பது பரிணாமம் குறித்து நின்றது. ‘வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் இளமையும் கொள்க.

எ-டு : சாத்தனது முதுமை, சாத்தனது இளமை

கருவிக் கிழமை - உடைமை குறியாது ‘இதற்கு இது கருவி’ என வருவது.

எ-டு : யானையது தோட்டி, வனைகலத்தது திகிரி.

துணைக்கிழமை - நட்பின்மேல் வருவது. ‘வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் பகையும் கொள்க.

எ-டு : சாத்தனது துணை இது, சாத்தனது பகை (மாறு பாடும் இனம் ஆகுமோ எனின், அதுவும் அப்பொருள் குறித்து நிற்றலின் இனமாம்).

தெரிந்து மொழிச் செய்தி - தெரிந்த மொழியினது செயல் கூறல்.

எ-டு : பாட்டது கருத்து, பாட்டது பொருள்.

நிலைக்கிழமை - அவரவர் நின்ற நிலை.

எ-டு : சாத்தனது இல்வாழ்க்கை, சாத்தனது தவம்.

திரிந்து வேறுபடுவன -

எ-டு : எண்ணது சாந்து, கோட்டது நூறு. (தொ. சொ. 78 தெய். உரை)

ஆறாவதன் வகைகள் -

{Entry: C03__277}

‘குறை என்பதன் வகைகள்’ காண்க. (இ. கொ. 57)

ஆறாவதன் வாழ்ச்சிக்கிழமைக்கண் ஏழாவது மயங்குதல் -

{Entry: C03__278}

‘வாழ்ச்சிக் கிழமை’ காண்க.

ஆறாவதில் சிறிது திரிவதும் முழுதும் திரிவதும்

{Entry: C03__279}

‘சிறிது திரிவதும் முழுதும் திரிவதும்’ காண்க.

ஆறாவது குறையன்றி வேறு பொருளும் தருதல் -

{Entry: C03__280}

இலக்கணக்கொத்தில் ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப் பொருள் ‘குறை’ என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வட மொழியில் ‘சேஷம்’ என்றிருப்பதன் மொழிபெயர்ப்பு இது. ஆறாம் வேற்றுமை கிழமைப்பொருள் உணர்த்துவதன்றியும் வேறு பொருளும் உணர்த்தும். ‘வாளது வெட்டு’ என்புழி, வாளினால் வெட்டப்பட்ட வெட்டு எனக் கருவிப்பொருளை ஆறாவதன் உருபு உணர்த்திற்று. (இ. கொ.57)

‘ஆறுபோயினாரெல்லாம் கூறை கோட்படுதல்’ -

{Entry: C03__281}

இத்தொடர் சேனாவரையர் உரையில் மூன்றிடங்களில் நிகழ் கிறது. ‘ஆறு போயினாரெல்லாம் கூறை கோட்பட்டார்’ என்றவிடத்து, தேவர்க்குக் கூறையின்மையின், அது கோட்படு தலும் இல்லையாம். அவ்வாறே, “மேல் மயக்கம் கூறப்பட்ட வேற்றுமையே அன்றி அவைபோல்வன பிறவும், தொன்று தொட்டு வரும் வழக்கின் பிழையாது, உருபானும் பொருளா னும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளும் தன்பொருளும் ஆகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாம் திரிபுடையன அல்ல ஆராய்ந்து உணர் பவர்க்கு” (தொ. சொ. 101) என்னுமிடத்து, ஏதுப்பொருட்- கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஒருபொருளே பற்றி நிற்றலின் ‘இருவயின் நிலையற்கு’ ஏலாமையான், ஏனைய வேற்றுமைகளுக்கே அவ்வாறு நிலையல் பொருந்தும். நச்சி னார்க்கினியரும் இவ்வுவமத் தொடரை ஈண்டு எடுத்தாள் கிறார்.

“இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமையவாதலின், உயர்திணைக்கண் சென்றுழி உயர்திணைப் பெயராவும் அஃறிணைக்கண் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடும் விரவுப்பெயரெல்லாம், ஆராயுங்கால், தத்தம் மரபின் வினையோடு இயைந்தல்லது திணை விளங்க நில்லா” (தொ.சொ.172) என்புழி, எல்லாப் பெயரும் தத்தம் மரபின் வினையான் திணை விளங்கும் என்றாரேனும், இப் பொதுப்பெயருள் முன்னிலைப்பெயர்க்குத் தத்தம் மரபின் வினையில்லாமையால் அதனால் திணை விளங்காது; அத னால் அப் பெயர் நீங்கலான ஏனைப்பெயர்களே வினையான் திணை விளங்குவன ஆதலின் அவற்றையே கொள்க. இவ் விடத்தும் அவ்வுவமத்தொடர் எடுத்தாளப்பட்டது.

“முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறு வேறு பொருள் உணர்த்தல் உரிச்சொல்லிடத்து இயை புடைத்தன்று” (தொ. சொ. 395) என்னும் நூற்பாவில், பிரிதலும் பிரியாமையும் பொருளுணர்த்துவனவற்றிற்கே யாதலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல, இடைச் சொற்கு இவ்வாராய்ச்சி எய்தாது, அது பொருளுணர்த் தாமையான் என்றவாறு. காலமயக்கத்துள் இத்தொடர் எடுத்துக்காட்டாக வருகிறது. (245 சேனா.)

‘ஆறும் தருவது வினையே’ : உம்மை நயம் -

{Entry: C03__282}

‘முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆகும்’ என்றதனால் ‘ஆறும் தருவது வினை’ என்பதற்கு அத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொருளுரைத்துக் கொள்க. அவை வருமாறு :

கொடி ஆடிற்று, கொடி துஞ்சும் - என்புழி, முன்னையது செயப்படுபொருளும், பின்னையது செயப்படுபொருளொடு கருவியும் குறைந்து வந்தன. கொடி துஞ்சும் என்பதற்குக் காற்றினது அபாவத்தைக் கருவியாகக் கூறினும் அமையும்.

இன்னும் ‘ஆறும்’ என்னும் முற்றும்மையை உயர்வு சிறப் பும்மை ஆக்கி, ‘இழிந்தன சில உள; அவையும் வேண்டுமேல் கொள்க’ எனவும் பொருளுரைத்துக் கொள்க. அவை யாவை யெனின், ‘இன்னதற்கு’ எனவும் ‘இதுபயன்’ எனவும் வருவனவாம். குடத்தைத் தனக்கு வனைந்தான், பிறர்க்கு வரைந்தான் - என்னும் ‘இன்னதற்கு’ என்பதும் ‘அறம் முதலிய பயன் கருதி வனைந்தான்’ என்னும் ‘இது பயன்’ என்பதும் ஏதுவின்பாற்பட்டுக் கருவியுள் அடங்கவும் பெறும் ஆதலின் இழிந்தவை ஆயின. (நன். 320 சங்.)

ஆன்ஈற்று உயர்திணைப் பெயர் விளி ஏற்குமாறு -

{Entry: C03__283}

ஆன்ஈற்றுப் பெயர் பொதுவாக இயல்பின் விளியேற்கும்.

எ-டு : சேரமான், மலையமான்

தொழிற்பெயரும் பண்புப்பெயரும் ஆன் ‘ஆய்’ ஆகி விளியேற்கும்.

எ-டு : வந்தான் - வந்தாய், சென்றான் - சென்றாய்;

கரியான் - கரியாய், தீயான் - தீயாய்.

அளபெடைப் பெயர்கள் மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளியேற்கும்.

எ-டு : உழாஅஅன், கிழாஅஅஅன்.

தான் என்ற படர்க்கைப் பெயரும், யான் என்ற தன்மைப் பெயரும் விளியேலா. (தொ. சொ. 132-134 135, 137 சேனா. உரை)

இ section: 172 entries

இகரஈற்று வினைகள் எதிர்காலம் முதலியன காட்டல் -

{Entry: C03__284}

இகரஈற்று மொழிகட்கு இகரம் எதிர்காலம் காட்டுவதன்றி இடைநிலை நின்றும் காலம் காட்டும் என்பது தோன்ற ஐ ஆய் என்னும் விகுதிகளோடு இகரவிகுதியை உடன் கூறினார்.

இகரம் எதிர்காலம் காட்டுதல் ‘இ(ம்)மார் எதிர்வும்’ (145) என்ற காலம் காட்டும் விகுதிச் சூத்திரத்தான் அறியலாம். இடை நிலை நின்று இறந்தகாலமும் நிகழ்காலமும் காட்டும்.

உண்டி : டகர இடைநிலை நிற்ப, இகரஈற்று முற்று இறந்த காலம் காட்டியது. உண்ணாநின்றி : இடைநிலை நிகழ்காலம் காட்டியது. இகரவிகுதி எதிர்கால இடைநிலையும் பெற்று வருதல் வழக்கில் இல்லை. (இரண்டு வரினும் எது எதிர் காலம் காட்டிற்று என்ற ஐயப்பாடு எழும்.) (நன். 335 சிவ.)

வருவி நடப்பி - முதலியவற்றை இகர விகுதி வகர இடை நிலையும் பகர இடைநிலையும் பெற்று எதிர்காலம் காட்டி வந்தமைக்கு உதாரணமாகக் காட்டுதல் சிவஞானமுனிவர்க்கு உடன்பாடன்று.

இசைக்குமன : சொல்லிலக்கணம் -

{Entry: C03__285}

‘இசைக்குமன’ என்பது செய்ம்மன என்னும் வாய்பாட்டுத் தொழிற்பெயர். அது ‘செய்யுமன’ என விரிந்து நின்றது. ‘இசைக்குமன சொல்லே’ என அது பெயர்ப் பயனிலை கொண்டது. (இசைக்குமவை என்பது பொருள்.) (தொ. சொ. 1 தெய். உரை)

இசை குறிப்பு எச்சங்கள் -

{Entry: C03__286}

‘தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல், எ ம்மை மறைத் திரோ என்று’ (குறள் 1318) என்புழியும், ‘அந்தாமரை அன்னமே நின்னையான் அகன்று ஆற்றுவானோ’ (கோவை. 12) என்புழியும் முறையானே நும்மோடு யாதும் இயை பில்லாத என்னை’ எனவும், உயிரினும் சிறந்த நின்னை’, ‘இருதலைப் புள்ளின் ஓருயிரேன் ஆகிய யான்’ எனவும் வந்த தொடர் மொழிகள் எச்சமாய் நின்ற இசைப்பொருளை உணர்த்தலான் இசையெச்சமாயின வாறு காண்க. இவ்விசை விகாரத்தை வடநூலார் ‘காகு’ என்ப.

‘உ ண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல், கண்டார் மகிழ்செய்தல் இன்று’ (குறள் 1090) என்புழியும், ‘கண்ணுளார் காத லவராகக் கண்ணும், எழுதேம் கரப்பாக்கு அறிந்து’ (1127) என்புழியும் முறையானே ‘மகிழ்செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள்குறிப்பு ஆராய்ந்தறியாமையின் யான் அது பெற்றிலேன்’ எனவும், ‘யான் இடையீடின்றிக் காண்கின்ற வரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை?’ எனவும் வந்த தொடர்மொழிகள் எச்சமாய் நின்ற குறிப்புப் பொருளை வெளிப்படுத்தலான் குறிப்பெச்சம் ஆயினவாறு காண்க.

(இ. வி. 350 உரை)

‘இசைத்தலும் உரிய வேறிடத் தான்’ : பொருள் -

{Entry: C03__287}

‘பால்பிரிந்து இசையா’ என ஓதப்பட்ட காலம் - உலகம் - உயிர் - உடம்பு - முதலான சொற்கள் எல்லாம் உயர்திணை யிடத்தனவாம் ஆயினும் அஃறிணையாய் இசைத்தலும் உரிய (இருதிணைக்கும் பொதுவாகிய சொல்லானும் இசைத்தலும் உரிய.)

எ-டு : காலம் வந்தது, வரும்; உலகு கிடந்தது, உயிர் போயிற்று. உடம்பு விட்டது, தெய்வம் தந்தது, வினை விளைந்தது, பூதம் செறிந்தது, ஞாயிறு எழுந்தது, திங்கள் எழுந்தது, சொல் (வேதம்) பயன்தந்தது, வியாழம் எழுந்தது, வெள்ளி பட்டது, பரணி தோன்றிற்று, பூதம் புடைத்தது, பேய் பிடித்தது, (இவற்றுக் கெல்லாம் ‘கிடக்கும்’ முதலாகச் செய்யும் என்னும் முற்றையும் பொதுவினையாகத் தந்து முடிக்க.) (தொ. சொ. 58 தெய். உரை)

இசைநிறை அடுக்கிற்கு வரையறை -

{Entry: C03__288}

செய்யுட்கண் இசைநிறை அடுக்கிற்கு வரையறை நான்கு ஆகும். ஆகவே, இசைநிறை இரண்டு முறையானும் மூன்று முறையானும் நான்கு முறையானும் அடுக்கி வரும்.

எ-டு : ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’ - இரண்டு முறை.

‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள் - மூன்று முறை.

‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ - நான்கு முறை. (தொ. சொ. 423. சேனா. உரை.)

இசைநிறைக் கிளவி -

{Entry: C03__289}

அசைநிலைக் கிளவி போலப் பிரிந்துநில்லாது, ஒரு சொல் லோடு ஒற்றுமைப்பட்டு இசை நிறைத்தற் பொருட்டாகி நிற்பன. (தொ. சொ. 246 தெய். உரை.)

இசைநிறைக் கிளவி ஆகி வருவன -

{Entry: C03__290}

இசைநிறைக்கிளவி இடைச்சொல்வகை ஏழனுள் ஒன்று. இசைநிறைக் கிளவிகள் செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வருவன.

ஏ, குரை, ஆங்க, ஒப்பில்போலி என்பன இசைநிறைத்தற்கு வருவன.

‘ஏஏ இஃதொத்தன் நாணிலன்’ (கலி.62)

(தொ. சொ.274 நச். உரை)

‘அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே’ (புறநா. 5)

(தொ. சொ. 274 நச். உரை)

‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’

(தொ. சொ. 279 நச். உரை)

‘நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்’ ( நாலடி 124)

(தொ. சொ. 280 நச். உரை)

இசைநிறை பொருள் உணர்த்துதல் -

{Entry: C03__291}

சொற்கள் ஓசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டு தலின், இசைநிறையும் பொருளுணர்த்திற்றேயாம்.

எ-டு : ‘அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே’ (புறநா.5) (தொ. சொ. 157 நச். உரை)

இசைநூல் அளபெடை -

{Entry: C03__292}

இலக்கணக்கொத்து விளக்கும் அளபெடை வகைகளுள் ஒன்று. மொழியின் முதல்இடைகடைகளில் வரும் குற்றெழுத் தளபெடை, நெட்டெழுத்தளபெடை, ஒற்றெழுத்தளபெடை என்ற மூன்றும், இயற்கையளபெடையும் செயற்கையள பெடையும் எழுத்துப்பேறளபெடையும் இசைநூலளபெடை யும் என நால்வகையாக வரும்.

விளி பண்டமாற்று ஆர்த்தல் புலம்பல் முறையிடுதல் - முத லானவிடத்துச் சொற்குப் பின் தோன்றாது கூடப் பிறப்பது இயற்கையளபெடையாம்.

எ-டு : ‘உப்போஒஒ என உரைத்து’ ‘அண்ணாவோஒஒஒ’

சீர்தளை வழுவினவிடத்துச் சொல் பிறந்த பின் புலவன் பெய்து கொள்ளுதல் செயற்கையளபெடையாம்.

எ-டு : ‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (குறள். 2)

எழுத்துப்பேறு (அளபெடை) உயர்மயங்கியல் முதலான இடங்களில் ‘அராஅப் பாம்பு’ முதலான தொகைகளில் காணலாம்.

இசையளபெடை வழக்கினுள் காமரத்தாரிடையே (இசை பாடுவோரிடம்) காண்க. (இ. கொ. 90)

இசையெச்சம் -

{Entry: C03__293}

ஒரு தொடர்க்கண் இரண்டு முதலிய சொற்கள் எஞ்சி நின்று பிற பொருள் உணர்த்தற்கு வருவிக்கப்படும் நிலையில் இருப்பது இசையெச்சமாம்.

எ-டு : ‘அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு முண்டோ தவறு’ (கு. 1154)

என்னும் தொடர்க்கண் ‘நீத்தார்க்கே தவறு’ என்ற செய்தி எஞ்சி நிற்பதும்,

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு” (குறள்.1)

என்னும் குறட்பாவின் இடையில் ‘அதுபோல’ என்ற சொற்றொடர் மறைந்திருப்பதும் இசையெச்சம் என்றார் சேனாவரையர். (தொ. சொ. 440)

‘வயிறு மொடுமொடுத்தது’ என்றால், இசையின் குறிப்பா கிய ‘உண்ண வேண்டா’ என்னும் எஞ்சுபொருளைத் தானே கூறி நின்றது இசையெச்சம் என்றார் நச்சினார்க்கினியர். (தொ. சொ. 440)

இசையெச்சம் ஒன்றற்கு மேற்பட்ட சொற்கள் எஞ்சி நிற்பதாம்.

நன்னூலார், வினையியலின் ஒழிபாகிய பெயரெச்ச வினை யெச்ச முடிவும், இடையியலின் ஒழிபாகிய ஏனை உம்மை - சொல் - பிரிப்பு - என - ஒழியிசை - எதிர்மறை - ஆகிய அறு வகை எச்ச முடிபும் எடுத்து விதந்தார். இவ்வாறு எடுத்து விதத்தற்கு வரையறைப்படாது வரும் சொல்லெச்சங்களை யெல்லாம் தொகுத்து ‘இசையெச்சம்’ என இறுதிக்கண் கூறி னார். இசை என்பது சொல். இசையெச்சம் எனப் பொதுப் படக் கூறினமையின், இவ்வெச்சமும் இது கொள்வதும் பெயர் வினை இடை உரி - என்னும் நால்வகைச் சொல்லுள் ஒன்றும் பலவும் தனித்தும் தொடர்ந்தும் வரும் என்பது பெற்றாம். அவற்றுள் இசையெச்சம் வருமாறு :

‘இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று’ (குறள். 308)

இதன்கண், பிறவுயிர்க்கு இன்னா செய்யின் அவை பிழை யாது தமக்கு வருதல் கருதித் தம்மாட்டு அன்பும் - பிறவுயிர்கள் மாட்டு அருளும் - இன்னாசெய்தலான் மேல் வளரும் பிறப்பின் அச்சமும் - நம்மால் இன்னா செய்யப்பட்டாரை நாம் அடைந்து இரத்தல் கூடினும் கூடும், அதனால் யார் மாட்டும் இன்னா செய்யக் கடவேம்அல்லேம் என்னும் வருங் கால உணர்ச்சியும் - இலராய், ஒருவர் தன்னால் ஆற்றக் கூடாத இன்னாதவற்றைத் தன்கண் செய்தாராயினும், அவர் தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாது தன்னை அடைந்தாராயின், அவர் செய்த இன்னாமை கருதி அவரை வெகுளாது அவற்றை மறந்து அவர் வேண்டும் குறை முடித்து, முன்செய்த இன்னாமையால் கூசியொகுதல் தவிர் தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலாயின தன்கண் குறிப் பின்றி நிகழ அவர்க்கு இனியவனாயிருத்தல் தன் சால்புக்கு நன்று - என, நால்வகைப் சொற்களுள் வேண்டுவன எல்லாம் தந்து அகலம் கூற வேண்டி நிற்பன இசையெச்சமாம் என்க. (நன். 360 சங்.)

இசை என்பது சொல். இசை எனப் பொதுப்படச் சொன்னதினாலே, இந்த எச்சமும் இது கொண்டு முடிவதும் பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொல்லுள் ஒன்றும் பலவும் தனித்தும் தொடர்ந்தும் வரும். ‘இப்பட்டுச் சீனம்’ என்றவழி, ‘இப்பட்டுச் சீனத்து உள்ளது’ என ஒருசொற் கூட்டி உரைப்பதும் பிறவும் இசையெச்சம் என்க.

(நன். 401 இராமா.)

இசையெச்சமாவது சொல் எஞ்சிநின்று குறிப்பால் பொரு ளுணர்த்தல். ஒரு சொல் எஞ்சுவது சொல்லெச்சம் என்றும், இரண்டு சொற்கள் எஞ்சுவது இசையெச்சம் என்றும் பி.வி. நூலார் குறிப்பர்.

எ-டு : ‘நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று’ (குறள் 1318)

எம்மை என்பதற்கு ‘நும்மோடு யாதும் தொடர்பில்லாத எம்மை’ என்று பொருளுரைத்தல். இப்பொருள் இசையெச்சத் தால் வந்த குறிப்பு. இதனை அலங்கார நூலார் ‘காகு’ என்பர். ‘காகு’ காண்க. (பி. வி. 50)

இசையெச்சம் : அதன் ஐவகை -

{Entry: C03__294}

ஒரு சொல் இரண்டு பொருள்பட நின்றவழி, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளை உணர்த்தும் இசை எஞ்சிநிற்கு மன்றே? அஃது இசையெச்சமாவது என்றுணர்க. ஏற்கும் சொற்களே கொள்ளப்படும்.

பெயர்நிலைக் கிளவியின் ஆகுந - வேங்கை என்பது ஒரு மரத்திற்குப் பெயராயினும் புலிக்கும் பெயராயிற்று; ‘கை வேம்’ என்னும் பொருளும்பட்டது. இவ்வாறு ஒரு சொல்லி னானே பிறிதுபொருள் உணரின், அதை உணர்த்தும் ஓசை எஞ்சிநின்றது என்க.

திசைநிலைக் கிளவியின் ஆகுந - செந்தமிழ்நாட்டு வழங்கும் சொல் திசைச்சொல் ஆகியவழிப் பொருள் வேறுபடுவது இது. கரை என்பது வரம்பிற்குப் பெயர். ஆயினும் கருநாடர் விளித்தற்கண் வழங்குவர்.

தொன்னெறி மொழிவயின் ஆகுந - செய்யுளகத்தும் பாவழக் கினும் வரும் தொடர்மொழி. ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று ஏறு ஆ மா எனவும், குன்றின்கண் ஏறாநின்ற ஆமா எனவும், குன்றின்கண் ஏறா மா எனவும் பொருள்படும். இதற்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறு உணர்த்தலின், அப்பொருண்மைகளை உணர்த்தலின், அப்பொருண்மை களை உணர்த்தும் இசை எஞ்சி நின்றது.

‘காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா

மாதர்க் கொடுங்குழை மாதவி’ (சிலப் 5 : 189, 190)

இது மாதவி என்ற பெண்ணுக்கும் குருக்கத்திக் கொடிக்கும் சிலேடை. இது தொடர்மொழியாதலின் பெயர்நிலைக் கிளவியின் வேறோதப்பட்டது.

மெய்ந்நிலை மயக்கின் ஆகுந - பொருள்நிலைமை மயக்கம் கூறுதல்.

எ-டு : ‘குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி ஓங்கிய திருமணிக்காஞ்சி’ (மணி . : 18 : 55, 56)

குருகு - மாதவிக் கொடி, மாதவி என்ற பெண்; காஞ்சி - மேகலை என்ற அணி, அப்பெயருடைய பெண். (மாதவி பெற்ற மணிமேகலை என்றவாறு). இவ்வாறு பொருள்மயங்க வருவன இசையெச்சமாம்.

மந்திரப் பொருள்வயின் ஆகுந : மந்திரம் என்பது பிறர் அறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறும் சொல். அதன்கண் ஆகுந - உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டு வரும் ‘குழுவின் வந்த குறிநிலை வழக்கு’. அது வெளிப்பட்ட சொல்லால் உணரும்பொருட்டு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிற பெயரிட்டு வழங்குதலும் என இருவகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசையெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன: வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் போல்வன. இனி, எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு :

‘மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன் தானும்

எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும்

திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே’

என்னும் பாட்டுள், மண்ணைச் சுமந்தவன் - ந, வரதராசன் மகன் - ம, வரகாலி மூன்று - சி, இரண்டு மரம் - வா, ஓர்யாறு - ய - எனக் கூற நம(ச்)சிவாய’ எனப் பொருளாயிற்று. (தொ. சொ. 439 தெய். உரை)

இவை ஐந்தும் தவிர, செய்யாய் என்னும் எதிர்மறை ‘செய்க’ என்ற உடன்பாட்டுப்பொருளைக் குறிப்பதும் இசையெச்ச மாம். (தொ. சொ. 440 தெய். உரை)

இடஉருபுகள் இரண்டிணையின் ஒன்று உருபு ஆதல் -

{Entry: C03__295}

தலை - இடை - கடை - மருங்கு - என்பன ஏழாம் வேற்றுமைப் பொருளான இடத்தைச் சுட்டும் உருபுகள். இவற்றின்மேல் வேறு ஏழாம் வேற்றுமை உருபுகள் வரின், முன்னுள்ளதைப் பெயராகப் கொள்ளல் வேண்டும்.

தலைக்கண் சென்றான் - தலை : பெயர் ; கண் : உருபு

‘இடைக்கண் முரிந்தார்’ (கு.423) - இடை : பெயர் ; கண் : உருபு

கடைக்கால் நின்றான் - கடை : பெயர் ; கால் : உருபு

மருங்கில் இருந்தான் - மருங்கு : பெயர் ; இல் : உருபு (இ. கொ. 18)

இட உருபுகளின் வேறுபட்ட நிலைகள் -

{Entry: C03__296}

இடவுருபுகள் உருபினை ஏலாதும் ஏற்றும் பெயராய் நிற்றலேயன்றி, உருபு தொக்க பெயராதலும் உண்டு.

எ-டு : கண் அகல் ஞாலம் - இடம் அகன்ற உலகம்
கண் அகன் பரப்பு - இடம் அகன்ற பரப்பு

இவற்றுள் கண் என்பது உருபு ஏலாத இடப்பெயராக நின்றது. கடையைக் காப்பான், இடையைக் காப்பான், தலையைக் காப்பான் என்பவற்றுள் கடை இடை தலை - என்பன உருபேற்றமை காண்க.

முன்பிறந்தான் - பின்பிறந்தான் - தலைமழை - கடை காப்பான் - போன்றவற்றில் இடவுருபுகள் ஏற்ற வுருபுகள் தொக்கு நின்றன.

உள்ளூர் மரம் - கீழ்நீர் ஆமை - மீகண் பாவை - என்பவற்றுள், ஊருள் - நீர்க்கீழ் - கண்மீ - என்பன உருபு முன்னும் சொல் பின்னுமாக முன்பின் மாறி நின்றன.

இடவுருபுகள் வேறுருபும் சொல்லுருபும் ஆதல் உள.

எ-டு : ஊரில் இருந்தான் - ‘இல்’ என்பது ‘கண்’ என்பதற்கு வேறு உருபாய் வந்தது.

ஊர்த்திசை இருந்தான் - ‘திசை’ இடப்பொருளில் வந்த சொல்லுருபு. (இ. கொ. 18)

இடக்கர் அடக்கல் -

{Entry: C03__297}

மூவகைத் தகுதிவழக்கினுள் இதுவும் ஒன்று. இடக்கர் என்பது மறைத்துக் கூற வேண்டிய சொல். இஃது ‘அவையல் கிளவி’ எனவும்படும். இடக்கர் தோன்றாது அதனை மறைத்து வேறொரு வாய்பாட்டால் கூறுதல் இடக்கரடக்காம்.

எ-டு : ஈகார பகரம், ‘புலிநின்று இறந்த நீரல் ஈரத்து’ (சிறுநீரின் ஈரத்தை நீர்அல் ஈரம் என்றார்) (நன். 267)

கண்கழீஇ வருதும், கால்மேல் நீர்பெய்து வருதும், வாய்பூசி வருதும், அந்தி தொழுது வருதும், கைகுறியராய் இருந்தார், பொறை உயிர்த்தாள் - என்னும் தொடக்கத்தன இடக்கர் அடக்கல். இவை செய்யுளகத்தும், ‘புலிநின்று இறந்த நீரல் ஈரத்து’ எனவும், ‘கருமுக மந்தி , ‘செம்பின் ஏற்றை’ எனவும் வரும்.

‘மருவிய இடக்கரடக்கல்’ காண்க. (நன். 266 மயிலை.)

இடக்கருத்தா -

{Entry: C03__298}

இடப்பெயர் கருத்தா ஆதல்.

எ-டு : குன்று குவட்டைத் தாங்கும், தூண் போதிகையைத் தொட்டது.

இவற்றுள் குன்றும் தூணும் இடம்; இடம் கருத்தாவாக நின்றது. (இ. கொ. 26)

இடத்திணை வழு -

{Entry: C03__299}

இடத்திணை வழுவாவது, பால்மயக்கமின்றி இடமும் திணையும் மயங்குவது. அது வந்தான் சேவலேன், வந்தாள் பேடையேன், வந்தார் மான்களேம் - எனவும், வந்தது பாணனேன், வந்தது விறலியேன், வந்தன வயவரேம் - எனவும் படர்க்கை இருதிணை வினைமேல் தன்மை இருதிணைப் பெயர்மயக்கம் ஆறும்;

வந்தான் கடுவனை, வந்தாள் பேடையை, வந்தார் மான்களீர் - எனவும், வந்தது தலைவனை, வந்தது தலைவியை, வந்தன மாந்தரீர் - எனவும் படர்க்கை இருதிணை வினைமேல் முன்னிலை இருதிணைப் பெயர்மயக்கம் ஆறும்;

சேவலேன் வந்தான், பேடையேன் வந்தாள், மான்களேம் வந்தார் - எனவும், பாணனேன் வந்தது, விறலியேன் வந்தது, மல்லரேம் வந்தன - எனவும் தன்மை இருதிணைப் பெயர்மேல் படர்க்கை இருதிணை வினைமயக்கம் ஆறும்;

கடுவனை வந்தான், பேடையை வந்தாள், மறிகளிர் வந்தார் - எனவும், தலைவனை வந்தது, தலைவியை வந்தது, மாந்தரீர் வந்தன எனவும் முன்னிலை இருதிணைப் பெயர்மேல் படர்க்கை இருதிணை வினைமயக்கம் ஆறும்;

ஆக, படர்க்கை வினையொடு தன்மை முன்னிலைப்பெயரும், அவற்றின்மேல் படர்க்கை வினையும் மயங்கின இடத்திணை வழு இருபத்து நான்காம். (நன். 374 மயிலை.)

இடத்தின் இலக்கணம் : அதன் வகைகள் -

{Entry: C03__300}

ஏழாம்வேற்றுமைப் பொருளான இடம், உரிமை - ஒற்றுமை யிடம் - கூட்ட இடம் - எங்கும் பரத்தல் - என நான்கு வகைப் படும்.

இடம், காலம் திக்கு ஆகாயம் வெயில் இருள் நிலம் அரு உரு - முதலியன நிலைக்களமாகும் இடங்களாம்.

இடமல்லா இடம், கூட்டிப் பிரித்தல் - பிரித்துக் கூட்டல் - இருவரின் முடியும் ஒருவினையின் தொழிற்பெயர் - என மூவகைப் படும்.

இடத்தில் நிகழும் பொருள் உருவுடையதாகவும் உருவற்ற தாகவும் இருக்கும்.

எ-டு : இடம் :

அ) நிலத்தின்கண் தேர் ஓடுகிறது - தேருக்கு நிலம் உரிமை.

காட்டின்கண் புலி வாழ்கிறது - புலிக்குக் காடு உரிமை.

ஆ) மதியின்கண் மறு, கையின்கண் ஒற்றுமையிடம்.

விரல் - (பிரிக்க முடியாத தொடர்பு)

இ) ஊர்க்கண் இருந்தான், தேர்க்கண்

இருந்தான் - இவை கூட்ட இடம்.

(பிரிக்கக் கூடிய தொடர்பு; அவ்விடத்து ஏகதேசமாய் இருத்தல்)

ஈ) மணியின்கண் ஒளி, பாலின்கண் - இவை எங்கும்

நெய் பரத்தல்.

(அவ்வப் பொருளில் யாண்டும் பரந்துள்ளமை)

இடமல்லா இடம்

அ) ‘அரசருள் ஏறு’ (கு.381).: ஒருவனை அரசரொடு கூட்டிப் பின் அவர்களுள் உயர்ந்தவன் (ஏறு) எனப் பிரித்தல் - கூட்டிப் பிரித்தல்.

ஆ) ‘தெய்வ த்துள் வைக்கப்படும்’ (கு. 50) மக்களிடமிருந்து ஒருவனைப் பிரித்துத் தெய்வத்தொடு சேர்த்தல் - பிரித்துக் கூட்டல்

கூட்டிப் பிரித்தல் ‘யோக விபாகம்’ எனவும், பிரித்துக் கூட்டல் ‘விபாக யோகம்’ எனவும் வடமொழியில் கூறப்படும். இவை ஆதாரம் என்னும் பொருளில் வாராத ஏழாவதன் பொருள்.

இது வடமொழியில் ‘நிர்த்தாரணே சப்தமீ’ எனப்படும்.

இ) ‘புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்’ (கு. 1324),

தட்டுப்புடைக்கண் வந்தான் -

புல்லுதலும் புலவியும், தட்டுப்புடையும் ஒருவரன்றி இருவர் தொழிற்படுவன. புல்லுதல் - தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முயங்குதல்; புலவி - ஊடுதல்; தட்டுப்புடை - இருவர் தம்முள் பொருதல்.

இவை இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்

ஆகாயத்தின்கண் பருந்து - ஈண்டு இடம் அரு.

காட்டின்கண் புலி - ஈண்டு இடம் உரு. (இ.கொ. 42,43)

இடத்தின் மயக்கம் -

{Entry: C03__301}

ஏழாம் வேற்றுமையான இடப்பொருளில் வேற்று வேற் றுமைகள் வந்து மயங்குதல்.

தூண் போதிகை தொட்டது - முதல் வேற்றுமை (தூணின்கண் என்றவாறு)

தூணைச் சார்ந்தான் - இரண்டாம் வேற்றுமை (தூணின்கண் என்றவாறு)

இன்றைக்கு, நாளைக்கு - நான்காம் வேற்றுமை (இற்றைக் கண், நாளைக்கண் என்றவாறு)

தூணின்கண் சார்ந்தான் - ஏழாவது

ஆகவே, ஏழாவதன் பொருட்கண் முதலாம் இரண்டாம் நான்காம் வேற்றுமைகள் வந்து மயங்கியவாறு. (இ.கொ. 50)

இடத்தொகை, பெயர்த்தொகை : வேறுபாடு -

{Entry: C03__302}

வல்லொற்று இடையே வரின் இடத்தின்கண் தொக்க தொகை; மெல்லொற்று இடையே வரின் பெயரின்கண் தொக்க தொகையாம்.

எ-டு : வடுகக் கண்ணன் - வடுகநாட்டிற் பிறந்த கண்ணன்.

வடுகங் கண்ணன் - வடுகனுக்குப் பிறந்த கண்ணன்.

வடுகநாதன், வடுகவாணிகன், வடுகஅரசன் - என இயல்பு கணம் வருமிடங்களில் சொல்லுவான் குறிப்பினாலேயே பொருள் செய்ய வேண்டும். (நன். 371)

‘இடப்பொருள் உணர்த்தும் வினாசுட்டு எண்பெற இடைச்சொல்லாகவே’ நிற்கும் பகுபதம் -

{Entry: C03__303}

இலக்கணக்கொத்து எடுத்துரைக்கும் பகுபத வகைகளில் இவையும் சில. இடப்பொருளை உணர்த்தும் வினாவும் சுட்டும் எண்ணும் என இவை பெற்றன பகுபதமாகியும் இடைச்சொல்லாகவே நிற்பன.

1. யாண்டு யாங்கு எங்கு எங்கண் எவண் யாவண் எங்ஙனம் யாங்ஙனம் - வினாவான இவை இடப்பொருளை யுணர்த்தும் பகுபதமாம் இடைச்சொற்கள்.

2. ஆன ஈன அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு அவண் இவண் உவண் அம்பர் இம்பர் உம்பர் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் - சுட்டான இவை இடப்பொருளை யுணர்த்தும் பகுபதமாம் இடைச்சொற்கள்.

3. ஒருவயின் இருவயின் மூவயின் எண்வயின் - இவை எண் பெற்று இடப்பொருளை உணர்த்தும் பகுபதமான இடைச் சொற்கள். (இ. கொ. 117)

இடமுன், காலமுன் -

{Entry: C03__304}

அரைமா என்புழி, முன்மொழியிலே பொருள் நின்றது; இஃது இடமுன். தேங்காய் என்புழி, பின்மொழியிலே (தெங்கு) பொருள் நின்றது; காலமுன். (நேமி. எச்ச. 4 உரை)

(‘தந்தது’ என்புழி, முதலிலுள்ள தகரம் முன்னரேயே உச்சரிக் கப்படுதலின் காலத்தால் முற்பட்டதாகிய ‘காலமுன்’; மூன்றாம் எழுத்தாகிய தகரம் பின்பாக உச்சரிக்கப்படுதலின் காலப்பின் எனப்படும். காலத்தால் பிற்பட்டது இடத்தால் முற்பட அமைதலின் ‘இடமுன்’ என்க. நிலைமொழி வரு மொழிப் புணர்ச்சியில் நிலைமொழி யீற்றெழுத்துக் காலமுன், வருமொழி முதலெழுத்து இடமுன் எனக் காண்க.)

இடுகுறி காரணம் ஆதல் -

{Entry: C03__305}

‘மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ (தொ. சொ. 394 சே.) என்ற நூற்பாவால், ஒவ்வொரு சொற்கும் வெளிப்படையாகப் புலப்பட்டோ புலப்படாமலோ காரண முண்மை விளக்கப்பட்டுள்ளமையால், சொற்கள் யாவுமே காரணம் பற்றி வந்தன என்பது இலக்கண நூலார் கருத்தாம்.

(இ. கொ. 116)

‘இடுகுறி காரண மரபோ டாக்கம்’ தொடர்தல் -

{Entry: C03__306}

ஆண் பெண் - முதலிய இடுகுறிப் பெயரும், அவன் இவன் - முதலிய காரணப் பெயரும் இடையே ஒருவரான் ஆக்கப் பட்டனவன்றி அவ்விலக்கணங்களொடு தோன்றிய பொருள் களுக்கெல்லாம் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலானும், ‘முட்டை’ என்றல் தொடக்கத்து இடுகுறிப்பெயரும், ‘பொன்- னன்’ என்றல் தொடக்கத்துக் காரணப்பெயரும் மரபு போலத் தொன்றுதொட்டன அன்றி அப்பொருள்களுக்கு இடையே ஒருவரான் ஆக்கப்பட்டு வருதலானும், இடுகுறி காரணம் இரண்டும் ‘மரபையும் ஆக்கத்தையும் தொடர்ந்து’ என்றார். இதற்கு இவ்வாறன்றி, இடுகுறிப் பெயர் காரணப் பெயர் இரண்டும் ஒழிய, மரபுப்பெயர் - தெங்கு கடு என்னும் ஆகு பெயர் - எனப் பொருள்கொள்வாரு முளர். எல்லாப் பொரு ளும் இடுகுறிப்பெயர் காரணப்பெயர் என்னும் இரண்டாய் அடங்குவதன்றி வேறின்மையானும், ‘இடுகுறி காரணப் பொதுபெயர் சிறப்பின’ பெயர் (62) என வரையறை கூறிப் போந்த மையானும் அது பொருந்தாது என்க. (நன். 275 சங்.)

இடுகுறி : மரபும் ஆக்கமும் -

{Entry: C03__307}

ஆண் பெண் மரம் தெங்கு கமுகு - என்றாற் போல்வன இடுகுறிமரபு தொடர்ந்து வந்தன.

‘மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்

கானவேல் முட்டைக்கும் காடு’

என்னும் இப்பொய்யாமொழிப் புலவர் பாட்டினுள், குமரன் பெயர் ‘முட்டை’ என்றாற் போல்வன இடுகுறி ஆக்கம் தொடர்ந்து வந்தன.

இடுகுறி மரபு, காரண மரபு - இரண்டும் ஒருவராலே ஆக்கப் பட்டனவன்றித் தொன்றுதொட்டு வருவனவாம்; இடுகுறி ஆக்கம், காரண ஆக்கம் - இரண்டும் ஒருவரால் இடையிலே ஆக்கப்பட்டு வருவனவாம். (நன். 275 இராமா.)

இடுகுறிவகை மூன்று -

{Entry: C03__308}

சாத்தன் கொற்றன் கூத்தன் கெத்தன் நாகன் தேவன் பூதன் தாழி கோதை முட்டை பொன்னன் - என்பன தனித்து வழங்கும் இடுகுறி.

தனம் படை சேனை நிரை தொறு உலகு நாடு ஊர் - என்பன தொகுத்து வழங்கும் இடுகுறி.

இடக்கரடக்கல் முதலான மூன்று வழக்கும் மறைத்து வழங்கும் இடுகுறி. (நன். 274 மயிலை.)

இடை அடியான வினை -

{Entry: C03__309}

வினைச்சொல்லுக்கு அடியான பகுதிகள், பெயர் வினை இடை உரி - என்னும் நால்வகைச் சொற்கள் அடியாகவும் பிறக்கும். அவ்வகையால், இடைச்சொல் பகுதியாகப் பிறந்த வினை வருமாறு:

சாத்தா புலி போல் - ஏவல்.

நெய்போலுதல் நீர்க்கு இல்லை - தொழிற்பெயர்.

புலி போன்றான் - முற்றும், முற்றுப் பெயரும்.

புலி போன்ற வீரன் - பெயரெச்சம்.

புலி போன்று பொருதான் - வினையெச்சம். (இ.கொ. 68)

இடைக்குறையும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் -

{Entry: C03__310}

தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பது முழுதுமாம்; இடைக் குறை என்பது ஒரு சொல்லில் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல். இது தம்முள் வேற்றுமை.

வந்தன்று என்பது ‘வந்து’ எனவும், என்பாரிலர் என்பது என்பிலர் எனவும், வினைக்கண்ணும் சிறுபான்மை வரும். இவை இடைக்குறை. (தொ. சொ. 453, 454 நச். உரை)

தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பது சந்தம் உளவாதற்கு ஒரு சொல்லைத் தொகுக்கவேண்டும்வழித் தொகுத்தல்.

இடைச்சொல் என்பது ‘இடை’ எனத் தொக்கது. (சொ. 251)

(தொ. சொ. 403 நச். உரை)

மழவரை ஓட்டிய எனற்பாலது ‘மழவ ரோட்டிய’ (அக.1) என வேற்றுமையுருபு தொக்கது.

‘குன்றி கோபம் கொடிவிடு பவளம்

ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’

- என்புழி, செவ்வெண்ணின் தொகை தொக்கு நின்றது. (தொ. சொ. 403 சேனா. உரை)

இவை ஒருசொல் முழுதும் தொக்கமை காண்க.

இடைச்சொல் அடையும் வேறுபாடுகள் -

{Entry: C03__311}

இடைச்சொற்கள் தாம் இடையே வருதலன்றித் தம்மால் சாரப்படும் சொற்களை முன்னும் பின்னும் தாம் அடைந்து வருதலும், தம் ஈற்றெழுத்து வேறுபட்டு வருதலும், ஓர் இடைச்சொல் நின்ற இடத்தே மற்றோர் இடைச்சொல் நிற்றலும் ஆகிய இலக்கணங்களை உடைய.

வருமாறு :

அது மன், கேண்மியா
இடைச்சொல் முன் அடுத்தன
கொன்னூர் (குறுந் 138), ஓஒ இனிதே (குறள் 1176)
இடைச்சொல் பின் அடுத்தன (முன். பின் : இடம்)
‘உடனுயிர் போகுக தில்ல’ (குறுந் 57)
இடைச்சொல் ஈறு திரிந்தது
‘வருகதில் அம்ம எம் சேரி சேர’ (அக. 276)
‘பண்டறி யாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ’ (கலி. 39)
இடைச்சொற்கள் பிறிது நின்றன (தொ. சொ. 253 நச். உரை)

மன்னைச் சொல், கொன்னைச்சொல், னகாரை முன்னர் - என மன் கொன் என்னும் இடைச்சொற்கள் தம்மை உணர நின்ற வழியும் ஈறு திரிந்தன; காரம் என்னும் எழுத்துச்சாரியை ‘காரை’ எனத் திரிந்து வந்தது. (தொ. சொ. 251 சேனா. உரை)

இடைச்சொல் இலக்கணம் -

{Entry: C03__312}

இடைச்சொற்கள் தமக்கென வேறொரு பொருளை யுணர்த் தும் இலக்கணமுடையன அல்ல; பெயரும் வினையும் உணர்த் தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றையே வெளிப்படுத்து நடக்கும் இயல்பின. மொழிக்கு முன்னும் பின்னும் நிற்கு மேனும் பெரும்பாலும் இடையே நிற்றலின் இடைச்சொல் எனப்பட்டன.

இடைச்சொற்கள் விசேடிக்கும் சொல்லாய் வருமேயன்றி விசேடிக்கப்படும் சொற்கள் ஆகா. பெயர்வினைகளின் பொருளை இவை விசேடிக்கும். தமக்கெனப் பொருளின் மையே இடைச்சொற்களின் சிறப்பு. சாரப்படும் சொல்லின் வேறாய் நிற்றலேயன்றி, உண்டான் என்றிசினோர் அருங் குரைத்து - என்பனவற்றிற்கு உறுப்பாய் வருதலும் கொள்க. (தொ. சொ. 251 நச். உரை.)

இடைச்சொல்லாவது பெயரும் வினையும் போலத் தனித் தனிப் பொருளுணர உச்சரிக்கப்படாது, பெயர்வினைகளைச் சார்ந்து புலப்படும்; பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல் ஆயிற்று. இது பொரு ளுணர்த்தும்வழிப் பெயர்ப்பொருண்மை உணர்த்தியும் வினைப் பொருண்மை உணர்த்தியும் வருவதல்லது வேறு பொருள் இலதாயிற்று. (தொ. சொ. 246 தெய். உரை)

பெயர்வினைகள் உணர்த்தும் பொருட்குத் தான் இடமாக நிற்றலான் இடைச்சொல் ஆயிற்று; பெயரொடும் வினை யொடும் அவ்விடைச்சொற்கள் வருவழிச் சொற்புறத்து வருதலும் அச்சொல்வழி வருதலும் என அவ்வருகை இருவகைத்து. (சொல்வழி - சொல்லகம்)

எ-டு : வருகதில், உண்டான் : இவை வினை . (‘தில்’ சொற் புறத்து வந்தது ; காலஎழுத்தும் ஆன் விகுதியும் சொல்லின் அகத்து நின்றன.)

அதுமன், மற்றையது : இவை பெயர். (‘மன்’ சொல் புறத்து வந்தது; அகரச்சாரியை முதலியன சொல் அகத்து நின்றன.) (தொ. சொ. 251 கல். உரை)

தனித்து நடத்தலின்றிப் பெயர் வினைகள் இடமாக நடத்தலின் இடைச்சொல் என்னும் காரணக்குறி போந்தது. இடச்சொல் என்றால் இடமுணர்த்தும் சொல்லைக் குறிக் கும் என்று கருதித் திரிசொல்லால் இடைச்சொல் என்று பெயரிடப்பட்டது. பெயர்வினைகளுக்கு அகத்துறுப்பாகவும் புறத்துறுப்பாகவும், அவற்றின் முன்னும் பின்னும் ஒன்றும் பலவுமாக இடைச் சொற்கள் வரும். பகுபதத்தில் பகுதி நீங்கிய ஏனை உறுப்புக்கள் இடைச்சொற்களே. பகுதியையும் இடைச்சொல் என்பர் சங்கரநமச்சிவாயர். (நன். 420)

‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ : பொருள் -

{Entry: C03__313}

முடிக்கும் சொல்லை விசேடித்து வரும் சொற்களெல்லாம், முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும். வேற்றுமைச்சொல்லாவது வேறுபாட்டினைச் செய்யும் சொல்.

எழுவாய்க்கும் அதனை முடிக்கும் பயனிலைக்கும், முற்றுக்கும் அதனை முடிக்கும் பெயருக்கும், வினையெச்சத்திற்கும் அதனை முடிக்கும் வினைக்கும், பெயரெச்சத்திற்கும் அதனை முடிக்கும் பெயருக்கும் இடையே வருதலின் இடைச்சொல் எனப்பட்டன.

எ-டு : ‘கண்ணி கார்நறுங் கொன்றை’ (புற. 1) - (முடிக்கப்படும் சொல்) பெயர்

‘ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்’ (புற. 180) - முற்று

‘ஈயப்பெற்று, நிலம்கல னாக இலங் குபலி மிசையும்’ (புற.363); ‘மடுப்பத் தேம்பாய் தேறல் நீ சிறிது உணினே - வினையெச்சம்

‘பொலிந்த கொய்சுவல் புரவி’ (அக.4) - பெயரெச்சம்

- என இடைநின்ற சொற்கள் முடிக்கும் சொற்களை விசேடித் தவாறு. (தொ.சொ.455 நச். உரை)

இடைச்சொல் சில பொருள்படுமாறு -

{Entry: C03__314}

அந்தில் - ஆங்கு என்ற பொருளிலும் அசைநிலையாவும் வரும்.

எ.டு : ‘வருமே சேயிழை அந்தில், கொழுந ற் காணிய’ (குறுந். 293)

‘அந்தில் கச்சினன் கழலினன்’ (அக. 76) (நன். 437)

அம்ம - ‘உரையசைப் பொருளிலும் கேண்மின் என்ற ஏவற் பொருளிலும் வரும்.’

எ-டு : ‘அதுமற்று அம்ம’, ‘அம்ம வாழி தோழி’ (நற். 158)
(கேள் என்ற ஏவல்) (நன். 438)

அரோ - எல்லா இடங்களிலும் வரும் அசைச்சொற்களில் ஒன்று.

எ-டு : ‘நோதக இருங் குயில் ஆலுமரோ’ கலி. 33 (நன். 441)

ஆங்கு - அசைநிலையாகவும் இடப்பொருளிலும் வரும்

எ-டு : ‘ஆங்கத் திறனல்ல யாம் கழற’, (கலி. 86)
‘ஆங்காங்கு ஆயினும் ஆக’ (முருகு. 250)

(நன். 437)

தில் - விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருளில் வரும்.

எ-டு : ‘சின்மொழி அரிவையைப்,

பெறுகதில் அம்ம யானே’ (குறுந் 14)

‘பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ்வூரே’ (குறுந்.14)
‘வருகதில் அம்மஎம் சேரி சேர’ (அக. 276) தெய்ய - இசை நிறைத்தற்கண் வரும் (நன். 431)

எ-டு : ‘சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்த்தே’

(நன்.436)

மற்று - வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும்

பொருளில் வரும். (நன்.433)

எ-டு : ‘மற்று அறிவாம் நல்வினை’ (நாலடி. 19) : விரைந்தறி வாம் என்பதனை ஒழித்து விரையாது அறிவாம் எனவருதலின் வினைமாற்று

‘மற் று அடிகள் கண்டருளிச் செய்ய மலரடிக்கீழ்’
(சீவக. 1873) : அசைநிலை

‘ஊழின்........ மற்றொன்று சூழினும்’ (குறள். 380) : மற்று ஊழின் பிறிது என்னும் பொருட்டு. (நன். 433)

மா - வியங்கோளை அடுத்து அசைநிலையாக வரும்.

எ-டு : உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே’ (நன். 439)

இடைச்சொல் திறம் ஏழு, எட்டன்று -

{Entry: C03__315}

இடைச்சொல் திறம் ஏழுடனே குறிப்பு என ஒன்று கூட்டி எட்டு என்பாரும் உளராலோ எனின், அது ‘தத்தம் பொருள’ (251) என்பதனுள் அடங்குதல், ‘வினை பெயர் குறிப்பு இசை’ (255) என்பதனால் பெறப்படுதலின், மிகைபடக்கூறல் என மறுத்து ஏழே என்க. (இ. வி. 251 உரை)

இடைச்சொல் தோன்று முறை -

{Entry: C03__316}

இடைச்சொற்கள் பெயர்வினைகளை அடைந்து தம் மருங்கி னான் தோன்றுதலும், பெயர்வினைகளுடைய மருங்கினான் தோன்றுதலும் என இருவகையவாம்.

எ-டு : அதுமன் : மன் என்னும் இடைச்சொல் பெயரின் புறத்தே தோன்றியது

அவன், உண்டான் : அகரமாகிய சுட்டிடைச் சொல்லும், கால எழுத்தும் ஆண்பால் விகுதியுமாகிய இடைச்சொற்க ளும் முறையே பெயர்வினைகளின் அகத்தே உறுப்பாய்த் தோன்றின. (தொ. சொ. 162 கல். உரை)

இடைச்சொல் நிலைபெறும் இடமும் வேறுபாடும் -

{Entry: C03__317}

இடைச்சொல் தனக்கென ஒரு பொருளின்றி, முன்னும் பின்னும் பெயரையோ வினையையோ அடுத்து வருவது; ஈறு திரிந்தும் வரப்பெறும்; மற்றோர் இடைச்சொல்லோடு இணைந்து வருதலுமாம்.

அதுமன், கேண்மியா -
இடைச்சொல் முன்மொழி அடுத்து வந்தது. (காலமுன்)
கொன்னூர், ஓஒ இனிதே -
இடைச்சொல் பின்மொழி அடுத்தது. (காலப்பின்)
மன்னைச்சொல்,
கொன்னைச் சொல்
‘உடனுயிர் போகுக தில்ல’
மன் - கொன் - தில் - என்ற இடைச்சொற்கள் ஈறு திரிந்தன.
‘வருகதில் அம்மஎம் சேரி சேர’ (அக. 276)
தில் - அம்ம - என்று இடைச்சொற்கள் இணைந்து வந்தன. (தொ. சொ. 251 சேனா. உரை)

‘பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ’ (கலி. 39) மன்னும் கொல்லும் இணைந்து வந்தன. (தொ. சொ. 253 நச். உரை)

இடைச்சொல் புறனடை -

{Entry: C03__318}

இடைச்சொற்குப் பொருள் பற்றிய புறனடை, சொல் பற்றிய புறனடை என்ற இரண்டும் தொல்காப்பியத்து உள்ளன.

பொருள் பற்றிய புறனடையான்,

‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அக. 46) - என ஓகாரம் ஈற்றசையாயும்,

‘கள்ளென்கோ..... சூடென்கோ’ - என எண்ணாயும்,

‘நீங்கின ளோஎன் பூங்க ணோளே’ (ஐங். 375) - என இரக்கக் குறிப் பாயும் வரும்.

‘ஊரெனப் படுவது உறையூர்’ என, எனஎன்பது, சிறப்பின்கண் வந்தது. அவர் நமக்குத் தஞ்சம் அல்லர் என, தஞ்சம் என்பது பற்று என்ற பொருளில் வந்தது.

மா - ‘ஓர்கமா தோழி’ - என முன்னிலைக்கண் அசையாகவும்

‘தட்குமா காலே’ (புற. 193) - எனப் படர்க்கைகண் அசை யாகவும் வரும்.

மன் - ‘அதுமன் கொண்கன் தேரே’ - என அசைநிலையாய் வரும்.

இன் - ‘காப்பின் ஒப்பின்’ (சொ. 73) - என அசைநிலையாய் வரும்.

ஐ - ‘முனையுண்டவர் உருகும் பசுந்தினைப் பி ண்டியும்’ என அசைநிலையாய் வரும்.

சின் - ‘தண்ணென் றிசினே பெருந்துறை ப் புனலே’ (ஐங். 73)

எனப் படர்க்கைக்கண் அசைநிலையாக வரும்.

(தொ. சொ. 297 நச். உரை)

மாள தெய்ய என ஓரும் அத்தை ஈ இசின் ஆம் ஆல் என்ப அன்று - என்பன அசைநிலையாக வரும்.

தொறு - இடப்பன்மைப் பொருளது. அது ‘தோறு’ என முதல் நீண்டும் நிற்கும்.

ஆ - வியப்புப் பொருளும் மறுப்புப் பொருளும் தரும்.

ஐ - இசையும் வருத்தமும் ஆகிய பொருளை உணர்த்தும்.

பொள்ளென, பொம்மென, கதுமென - இவை விரைவு உணர்த்தும். கொம்மென - பெருக்கம் உணர்த்தும்.

ஆனம், ஏனம், ஓனம் : எழுத்துச்சாரியை

எப்பொருள் : எகரம் வினா உணர்த்தும்.

அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு - இவை இடப் பொருளன.

இவையெல்லாம் இடையியலில் குறிக்கப்படா இடைச் சொற்கள். (தொ. சொ. 298 நச். உரை)

பின்வரும் இடைச்சொற்கள் குறித்தவாறு வெவ்வேறு பொருளில் வரும்.

மன் - அசைநிலை ; உம் - இசைநிறை, அசைநிலை, சிறப்பு;

போலும் - துணிவோடு ஐயம்; அன்றே - அசைநிலை; ஏ - ஈற்றசை ; குரை - ஒலிப்பொருண்மை; தொறு - பல என்னும் பொருண்மை; மாள, தெய்ய, என, ஆங்கு, ஓரும், அத்தை, ஆல், ஆன, யாழ - அசைநிலை. (தொ. சொ. 291, 292 தெய். உரை)

இடைச்சொல் : பெயர்க்காரணம் -

{Entry: C03__319}

மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடைவருதலின் இடைச்சொல் ஆயிற்று என்பர் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும். (தொ. சொ. 249, 251 சே.நச்.உரை)

பெயரும் வினையும் இடமாக நின்று பொருளை உணர்த்து தலின் இடைச்சொல் ஆயிற்று என்பர் தெய்வச்சிலையார். (தொ. சொ. 246)

பெயர்வினைகள் உணர்த்தும் பொருட்குத் தாம் இடமாக நிற்றலான் இடைச்சொல் எனப்பட்டன என்பர் கல்லாடர். (தொ. சொ. 251)

(சாரியைகளைத் தவிர ஏனைய இடைச்சொற்கள் பெரும்- பாலும் மொழியிடையே வருவதில்லை. வினைவிகுதிகளும் வேற்றுமையுருபுகளும் மொழியிறுதியிலேயே வருகின்றன. அசைநிலை பெரும்பாலும் இறுதியிலேயே வரும். இசைநிறை தனிமொழி போன்று மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும். உவம வுருபுகள் தனிமொழி போன்று மொழிக்கு இறுதி யில் வரும். மொழிக்கண் இடையில் வரும் இடைச்சொற் களை விட இறுதியில் வரும் இடைச்சொற்களே மிகுதியாம். ஆகவே, தெய். குறிப்பிடுவது போலப் பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடச்சொல் என்பது ‘இடைச் சொல்’ என மருவி வந்தது என்றலே பொருத்தம்.

இடைச்சொற்கள் பெயர்வினைகளுக்கு முன்னோ பின்னோ அடுத்து அவற்றின் பொருளை வேறுபடுப்பன என்றல் பொருந்தும்.)

இடைச்சொல் நீங்கலான ஏனைய பெயர் வினை உரிச் சொற்கள், வேறுபடுக்க வருவன (அடைமொழி) - வேறு படுக்கப்படுவன (அடைகொளி) - என இருநிலையவாம். (தொ. சொ. 455 சேனா. உரை)

நச்சினார்க்கினியர் இடைச்சொல் என்று இடைப்பிற வரலைக் கொண்டுள்ளார். (தொ. சொ. 455 நச். உரை)

முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும் சொற்கள், முடிக்கும் சொற்களை விசேடித்து நிற்கும் சொற்களாம். எழுவாயை முடிக்கும் பயனிலைக்கும், முற்றை முடிக்கும் பெயர்க்கும், வினையெச்சத்தை முடிக்கும் வினைக் கும், பெயரெச்சத்தை முடிக்கும் பெயர்க்கும் இடையே வருவன இடைச்சொல்.

எ-டு : ‘கண்ணி கார்நறுங் கொன்றை’ (புறநா.1) - ‘கார் நறும்’ என்ற இடையே வந்த சொற்கள் கண்ணி என்பதன் முடிக்கும் சொல்லாகிய கொன்றையை விசேடித்தன.

‘ஊர்தி வால்வெள் ஏறே’ (புறநா.1) - ‘வால்வெள்’ என்ற இடையே வந்த சொற்கள் ஊர்தி என்பதன் முடிக்கும் சொல்லாகிய ஏறு என்பதனை விசே டித்தன.

‘ஈர்ந்தை யோனே பாண்பசிப் பனகஞன்’ (புறநா. 180) ‘பாண்பசி’ என்ற இடையே வந்த சொற்கள் ‘ஈர்ந்தை யோன்’ என்பதன் முடிக்கும் சொல்லாகிய பகைஞன் என்ற சொல்லை விசேடித்தன.

இடைச்சொற்கள் எல்லாம் விசேடித்து நிற்கும் சொல் ஆகா; சிலவே விசேடித்து நிற்பன. (தொ. சொ. 455 நச். உரை)

இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினை களின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச் சொல் எனப்பட்டன. (தொ. சொ. 449 இள. உரை)

தனித்து நடத்தலின்றிப் பெயர்வினைகள் இடமாக நடத்தலின் ‘இடைச்சொல்’ எனக் காரணக்குறி போந்தது என்று, அதன் தன்மை கூறிய முகத்தான் கூறியவாறு. முதல்நூலின் வழியாக நடக்கும் நூலை அங்ஙனம் கூறாது வழிநூல், என்றாற்போல, பெயர்வினைகளின் இடமாக நடக்கும் சொல்லை அங்ஙனம் கூறாது இடைச்சொல் எனக் கூறினார். அங்ஙனமாயின் இடம் என இயற்சொல்லால் கூறாது ‘இடை’ எனத் திரிசொல்லால் கூறியது என்னையெனின், இயற்சொல்லால் கூறின் இடப் பொருளை உணர்த்தும் சொல் எனப்படுமாதலின், அதனோடு இதற்கு வேற்றுமை தோன்றற்கு என்க. (நன். 420 சங்.)

பெயர்ப்பொருளையும் வினைப்பொருளையும் வேறுபடுத் தும் இயல்பினதாய் அவற்றின்வழி மருங்கு தோன்றி அவற் றோடு ஒருங்கு நடைபெற்றியல்வது இடைச்சொல். இடைச் சொற்களுள் ஒருசாரன பெயரும் வினையுமாகிய சொற்களி னின்று சிதைந்தும் சுருங்கியும் இலக்கணக் குறியீடாக அமைந்து இடுங்கிய சொற்களாக வருதலானும், ஒருசாரன பெயரு மாகாமல் வினையுமாகாமல் அவற்றிற்கு இடைப்பட்டன வாக வருதலானும், ஒருசாரன திணை பால் இடம் காலம் முதலியவற்றைக் காட்டுதற்குரிய உறுப்பாக இடப்படுதலா னும், இடைச்சொல் என்னும் காரணக்குறி பெற்றன. ஆதலின் இடை என்னும் சொல், இடுங்குதல் - இடைநிகர்த்தது ஆதல் - இடப்படுதல் - என்பவற்றுக்குப் பொதுவாக நின்றது.

வேற்றுமையுருபுகள் பலவும் பெயர்வினைகளின் இடுங்கிய சொற்கள். கொன், தஞ்சம், அந்தில் - முதலியவை பெயர்ப் பொருளவாகவும் வினைப்பொருளவாகவும், உவமவுருபு இடைச்சொற்கள் வினைப்பொருளவாகவும், ஏ ஓ மன் தில் - முதலியவை பெயர்வினைகட்கு இடைப்பட்டனவாகவும் நிற்கும்.

அம் ஆம் அன் ஆன் - முதலிய ஈற்று இடைச்சொற்கள் திணைபால் இடம் காட்டற்கும், உம் க உ இன் - முதலிய ஈற்றிடைச் சொற்கள் காலம் இடம் காட்டற்கும், த் ட் ற் - முதலிய இடைநிற்கும் இடைச்சொற்கள் காலம் காட்டற்கும் இடப்பட்டன ஆகும். (தொ. சொ. பக். 274, 275 ச. பால.)

இடைச்சொல் : பொதுஇலக்கணம் -

{Entry: C03__320}

இடைச்சொல்லாவன சொற்புணருமிடத்துச் சாரியையாய் நின்றும், உருபாய் நின்றும், தத்தம் குறிப்பின் பொருள் செய்ய நின்றும், அசைச்சொல்லாய் நின்றும், வினைச் சொற்கு ஈறாய் நின்றும், இசைநிறையாய் நின்றும் நடைபெறுவதல்லது தனித்து நடைபெறுவன அல்ல என்றவாறு. (நேமி. இடை. 1)

இடைச்சொல் : பொருள் -

{Entry: C03__321}

தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம் என்னும் பதினான்கும் பிறவும் இடைச்சொற்குப் பொருளாம். ‘இன்னன’ என்றதனான் சில இடைச்சொற்கள் வருமாறு:

தொறு தோறு ஞெரேர் அந்தோ அன்னோ கொல்லோ ஆ ஆவா அஆ இனி என் ஏன் ஏதில் ந கல் ஒல் கொல் துடும் துண் பொள் கம் கொம் - என்பன.

இவற்றுள், தொறு தோறு - என்பன தாம் புணர்ந்த மொழிப் பொருண்மையினைப் பலவாக்கி ஆங்காங்கு என்பது பட நிற்கும்.

எ-டு : ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ (முருகு.217)

ஞெரேர் என்பது வெருவுதல் பொருளில் வரும்.

எ-டு : ‘ஞெரேரெனத், தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு’ (பொருந. 141)

அந்தோ, அன்னோ, கொல்லோ, ஆ, ஆவா, அஆ - என்பன இரக்கம் குறித்து வரும்.

எ-டு : ‘அந்தோ விசயை பட்டனள்’ சீவக. 312

‘அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற்கு அன்னோ

பரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி 396

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ புற. 235

‘ஆஅ அளிய அலவன்தான் பார்ப்பினோடு’

‘ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரா ர்

‘அஆ, இழந்தான்என் றெண்ணப் படும்’ நாலடி 9

இனி என்றது, காலத்தின்மேலும் இடத்தின்மேலும் முன் என்பது பட வரும்.

‘அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே’ (குறுந். 149)

என் என்பது சொல்லுதல் என்னும் தொழில் குறித்துப் பெயர் வினைகட்குரிய விகுதிகளுடனே வரும்.

எ-டு : ‘எண் என்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு’ (கு. 392)

‘மிடி என்னும் காரணத்தின் மேன் முறைக் கண்ணே

கடி என்றார் கற்றறிந் தார்’ (நாலடி 56)

ஏன் என்பது ஒழிதல்பொருள் குறித்து வரும்.

எ-டு : ஏனோன், ஏனோள், ஏனோர், ஏனது, ஏனவை, ஏனைய, ஏனுழி

ஏதில் என்பது அயல் என்னும் பொருள் குறித்து வரும்.

எ-டு : ஏதிலான், ஏதிலாள், ஏதிலார், ஏதிலது, ஏதில.

ந என்பது சிறப்புப் பொருட்டு; பெயர்முன் அடுத்து வரும்.

எ-டு : நக்கீரர், நச்செள்ளையார், நப்பாலத்தனார், நப்பிஞ்ஞை, நந்நாகனார், நக்கடகம்

கல் என்றது முதல் நான்கும் ஓசைப்பொருள்மேல் வரும்.

எ-டு : ‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தலின்’ (கலி. 5)

‘ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம். 28)

‘புள்ளும் கொல்லென ஒலிசெய்யும்’

‘நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’ (புற. 243)

துண் என்றது முதல் நான்கும் குறிப்புப்பொருள்மேல் வரும்.

எ-டு : ‘ துண்ணென்னும் நெஞ்சமொடு’

‘பொள்ளென ஆங்கே புறம்வேரார்’ (கு. 487)

‘எம்மொடு கழிந்தன ராயின் கம்மென’ (அக. 11)

‘கொட்புறு நெஞ்சின் கொம்மென உராஅய்’ நன். 420 மயிலை.

பிற பொருள்களாவன :

அக்கொற்றன், எக்கொற்றன் - என்பன சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் தந்தன.

நக்கீரர், நப்பாலத்தனார் - என்புழி நகர இடைச்சொல் சிறப்புப் பொருள் தந்தது.

‘அஆ, இழந்தான்என் றெண்ணப் படும்’ நாலடி. 9

‘ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோடு

‘அந்தோ விசையை பட்டனள்’ சீவக . 312

‘அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ

பரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி. 396

இவை இரங்குதல் பொருள் தந்தன.

‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ குறள் 1110

‘சேரி தோறு இது செல்வத் தியற்கையே’ சீவக. 129

தோறு, இடப்பன்மைப் பொருள் தந்தது. ‘தொறு’வும் அது.

இனிச் செய்வான், இனி எம் எல்லை - ‘இனி’ காலப்பொரு ளும் இடப்பொருளும் தந்தன. (தொ. சொ. 421 சங்.)

இடைச்சொல் வகை -

{Entry: C03__322}

இடைச்சொற்கள்தாம், இருமொழி தம்மில் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள்நிலைக்கு உதவி செய்து வருவனவும்,

முதனிலை நின்று காரியத்தினைத் தோற்றுவிக்குமிடத்துக் காலம் காட்டும் இடைச்சொற்களோடே, பாலும் இடமும் காட்டும் இடைச்சொற்களாய் வருவனவும்,

வேறுபடச் செய்யும் செயப்படுபொருள் முதலாயவற் றின்கண் உருபு என்னும் குறியவாய் வருவனவும்,

தமக்கு ஓர் பொருளின்றித் தாம் சார்ந்த பெயர்வினைகளை அசைப்பப் பண்ணும் நிலைமையவாய் வருவனவும்,

செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வருவனவும்,

கூறுவார் தாம் தாம் குறித்த குறிப்பினாலே அவர் குறித்த பொருளை விளக்கி நிற்பனவும்,

நாடகவழக்கினான் உய்த்துணரினன்றி, உலகியல் வழக்கி னான் காட்டப்படுவதோர் ஒப்பு இன்றி நின்ற ஒப்புமைப் பொருண் மையை உணர்த்திவரும் உவம உருபுகளும் - என்று சொல்லப் பட்ட அவ்வேழ் இயல்பினை உடையனவாம். (தொ. சொ. 252 நச். உரை)

ஐ முதலிய ஆறு வேற்றுமை உருபுகளும், அன் முதலிய சாரியை உருபுகளும், போல முதலிய உவமை உருபுகளும், செய்யுளிசை நிறைத்து வருவனவும், அசைத்தலே பொருளாக நிற்பனவும், அன் ஆன் முதலிய வினையுருபுகளும் - ஆகிய ஆறு திறத்தன வாம் இடைச்சொல்.

‘நம்பியை’ என்புழிப் பெயரின் புறத்துறுப்பாய் ஐயுருபும், ‘முடியினன்’ என்புழி அகத்துறுப்பாய் விகுதியும் இடை நிலையும், ‘உண்ணான்’ என்புழி வினையின் அகத்துறுப்பாய் விகுதியுருபும் வந்தன. (மு. வீ. ஒழி.2 உரை)

இடைச்சொல் வேற்றுமைச் சொல்லே ஆதல் -

{Entry: C03__323}

இடைச்சொற்கள் தாமாக நின்று பொருளுணர்த்தாமல் பெயரையும் தொழிலையும் அடைந்து நின்று அவற்றையே பொருள் வேற்றுமைப்படுக்கும் ஆகலின், இடைச்சொற்கள் வேறுபடுத்தும் சொற்களாம். (தொ. சொ. 449 இள. உரை)

சொற்கள் விசேடிக்கும் (வேறுபடுக்கும்) சொல், விசேடிக்கப் படும் (வேறுபடுக்கப்படும்) சொல் - என இருவகைய. பெயர் வினைகளிலும் உரிச்சொல்லிலும் இருநிலைய ஆகும் சொற் களும் உள. ஆயின், இடைச்சொற்கள் எல்லாம் விசேடிக்கும் சொல்லாக வருதலன்றி விசேடிக்கப்படும் சொல்லாக வாரா. வேற்றுமைச்சொல் - வேற்றுமையைச் செய்யும் சொல். வேற் றுமை, வேறுபாடு, வேறுபடுத்தல், விசேடித்தல் - என்பன ஒருபொருள. (தொ. சொ. 455. சேனா. உரை)

எ-டு : சாத்தனே கொற்றனே தேவனே வந்தனர் - என்புழி, ஏகார இடைச்சொல் பெயரோடு இணைந்து எண்ணுப்பொருள் தந்தவாறு.

பெயரும் வினையும் போலப் பொருளை நேர் காட்டாது, ஐ ஒடு கு இன் அது கண் - என்னும் வேற்றுமையுருபு போல, வேறுபட்ட பொருளைக் குறித்து நிற்றலின் இடைச்சொற்கள் பொருள் வேறுபடுக்கும் சொற்கள் எனப்பட்டன; பொருளு ணர்த்தும் சொற்கள் எனப்படா. மன் என்பது கழிவினும் ஆக்கத் திறனினும் ஒழியிசையினும் வந்தவழித் தான் இடைப்பட்டு நிலைமொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்ற தல்லது அப்பொருட்கு வாசகமின்றி நின்றமை கண்டு கொள்க. (தொ. சொ. 445 தெய். உரை)

முடிக்கும் சொல்லை விசேடித்து நிற்கும் சொற்கள் எல்லாம் முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும் சொல்லாய் நிற்கும். ‘வேற்றுமைச்சொல்’ வேறுபாட்டினைச் செய்யும் சொல் என விரியும். எழுவாயை முடிக்கும் வினைக் கும், முற்றை முடிக்கும் பெயர்க்கும் வினையெச்சத்தை முடிக்கும் வினைக்கும், பெயரெச்சத்தை முடிக்கும் பெயர்க்கும் இடையே வருதலின் ‘இடைச்சொல்’ என்றார்.

எ-டு : எழுவாய் : ‘ கண் ணி கார்நறுங் கொன்றை’ (புறநா. 1)
- ‘கொன்றை’யை விசேடித்தன.

வினையெச்சம் :

‘இழிபிறப்பினோன் ஈயப்பெற்று ,

நிலம்கல னாக இலங்குபலி மிசையும்’ (புற. 363)

பெற்று என்பதன் முடிபாகிய ‘மிசையும்’ என்ற வினையை விசேடித்தன.

பெயரெச்சம் : ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி’ (அக.4) ‘பொலிந்த’ என்பதன் முடிபாகிய ‘புரவி’ என்னும் பெயர்ச்சொல்லை விசேடித்தன. (தொ. சொ. 455 நச். உரை)

[ (இஃது ‘இடைப்பிறவரல்’ இலக்கணமாம். தொல்காப்பி யரும், இடைப்பிறவரலை ‘இடைநிலை’ என்பர். ‘தத்தம் எச்சமொடு.......... வரையார்’ (தொ. 237 சேனா.) ]

இடைச்சொற்களுள் புறனடையால் கொள்ளப்படுவன -

{Entry: C03__324}

ஓகாரம் எண்ணுப்பொருளில் வருதல், அஃது ஈற்றசையும் ஆதல், மா முன்னிலை அசைச்சொல் ஆதல், மன் அசைச் சொல் ஆதல், இடைச்சொல்லியலுள் கூறப்பட்டனவல்லாத காரம் - கரம் - கான் - ஆனம் - ஏனம் - ஓனம் - என்ற எழுத்துச் சாரியைகள், மாள - ஆம் - ஆல் - தெய்ய - என்னும் இடைச் சொற்கள் - இவையாவும் இவ்வியற் புறனடையால் கொள் ளப்படுவன. (தொ. சொ. 291, 292 இள. உரை)

இடைப்பிறவரல் -

{Entry: C03__325}

உருபு முற்று பெயரெச்சம் வினையெச்சம் - என்னும் இவற்றிற் கும் இவை கொண்டு முடியும் பெயரும் வினையுமாம் சொற்களுக்கும் இடையே பொருள் பொருத்தமுற வரும் சொற்கள் இடைப்பிறவரல் எனப்படும்.

எ-டு : அறத்தை அழகுபெறச் செய்தான்

வந்தான் அவ்வூர்க்குப் போன சாத்தன்

வந்த அவ்வூர்ச் சாத்தன்

வந்து சா த்தன் இற்றைநாள் அவனூர்க்குப் போயி னான் (நன். 356)

இடைப்பிறவரல், இடைநிலை, இடைக்கிடப்பு -

{Entry: C03__326}

இவை மூன்றும் ஒரு பொருள. நன்னூலார் இட்ட காரணக் குறி இடைப்பிறவரல் என்பது ; தொல்காப்பியனார் அதனை இடைநிலை என்பர்; கல்லாடனார் என்னும் உரையாசிரியர் இடைக்கிடப்பு என அதனைக் குறிப்பிடுவர்.

எ-டு : உழுது சாத்தன் வந்தான்.

உழுது ஏரொடு வந்தான்.

உழுது ஓடி வந்தான்.

கொல்லும் காட்டுள் யானை.

கொன்ற காட்டுள் யானை.

கவளம் கொள்ளாச் சுளித்த யானை

இவற்றுள், முறையே உழுது கொல்லும் கொன்ற கொள்ளா - என்பன முடிக்கப்படும் சொற்கள்; வந்தான் யானை - என்பன முடிக்கும் சொற்கள். சாத்தன் - ஏரொடு - ஓடி - காட்டுள் - சுளித்த - என்பன இடைப்பிறவரலாம். பெயரெச்ச வினை யெச்சங்களும் இடைநிலையாக வந்தவாறு காண்க.

அ) உண்டு விருந்தொடு வந்தான் - என்னும் தொடரில் ‘விருந்தொடு’ என்பது உண்டு என்னும் முடிக்கப்படும் சொல் லொடும் முடியும்; ‘வந்தான்’ என்னும் முடிக்கும் சொல் லொடும் முடியும்; பொருள் மயக்கம் உண்டாம்.

ஆ) ‘வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்ற தொடரில், ‘வல்லம் எறிந்த’ என்னும் தொடர் முடிக்கப்படுவது; ‘மல்லல் யானைப் பெருவழுதி’ என்பது முடிக்கும் தொடர். ‘நல்லிளங்கோசர் தந்தை’ என்பதனை இடைநிலையாகக் கொள்ளின், ‘வல்லம் எறிந்த’ என்ற தொடர்க்கு ‘நல்லிளங்கோசர்’ முடிபாகவும் அமையும்; ‘மல்லல்......... வழுதி’ என்ற தொடர்க்கு ‘நல்லிளங் .........தந்தை’ அடைமொழியாயின், பொருள் மயக்கம் நேரும்.

இன்னோரன்ன தொடர்களில் இடையே வருவன இடைப் பிறவரல் ஆகா. (தொ. சொ. 239 நச். உரை)

இடையியல் -

{Entry: C03__327}

இது தொல்காப்பியச் சொற்படல ஏழாம் இயல். இது 48 நூற் பாக்களை உடையது. இதன்கண், இடைச்சொல் இலக்கணம், இடைச்சொல்லின் ஏழ்வகை, இடைச்சொல் அடுத்து வருமுறை, மன் - தில் - கொன் - உம் - ஓ - ஏ - என - என்று -மற்று - மற்றை - எற்று - தஞ்சம் - அந்தில் - கொல் - எல் - ஆர் - ஏ - குரை - மா - மியா - இக - மோ - மதி - இகும் - சின் - அம்ம - ஆங்க - போலும் - யா - கா - பிற - பிறக்கு - அரோ - போ - மாது - ஆக - ஆகல் - என்பது - ஒள - நன்றே - அன்றே- அந்தோ -அன்னோ - என - என்றா - ஒடு - என்னும் இடைச் சொற்களும் அவற்றுள் சிலவற்றுக்குச் சிறப்பு விதிகளும், இடைச்சொல் லுக்குப் பொருள்பற்றிய புறனடையும், சொல் பற்றிய புறனடை யும் - என இவை கூறப்பட்டுள. (தொ. சொ. 251- 298 நச். உரை)

இடையில் உள்ளன கெடுதலாய் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: C03__328}

மொழி வருவித்துப் பொருள்முடிபு காண இலக்கணக் கொத்துக் கூறும் ஏதுக்களில் இதுவும் ஒன்று. இடையிலுள்ளவை மறைந்திருப்பதால் அவற்றையும் கொண்டு பொருள் முடிப் பது இது.

எ-டு : ‘பிருதிவி நாதம் பிறக்கும் மாயையின்’ - ஈண்டு, முதற்கண் பிருதிவி (மண்) என்ற பூதத்தைக் குறித்து இறுதியில் ஆகாயம் ஆக்கும் நாதத்தைக் குறித்தமை யால், இடையில் மறைந்த அப்பு - தேயு - வாயு - என்னும் மூன்றையும் கொள்ளுதல்.

‘அ ஒள உயிரே’ என்றால், இடையிலுள்ள ஆகாரம் முதல் ஓகாரம் ஈறான பத்து உயிர்களையும் கொள்ளுதல். ‘கன உடம் பாகும்’ என்றால், இடையிலுள்ள ஙகாரம் முதல் றகாரம் ஈறான பதினாறு மெய்களையும் கொள்ளுதல். எழுத்துக் களை இவ்வாறு கூறுதல் அமையும். வடமொழியில் அச்(சு) என்றும் அல் என்றும் கூறும் பிரத்தியாகார முறை போன்ற தாகும் இது. (இ.கொ. 89)

இதரேதரக் கிரியை -

{Entry: C03__329}

வினை தடுமாறுதல். “புலி கொல் யானை” என்பது, புலியால் கொல்லப்பட்ட யானை என்றும், புலியைக் கொன்ற யானை என்றும் பொருள்பட்டுப் புலியைக் கருத்தாவாகவும் யானை யைச் செயப்படுபொருளாகவும் - பின், புலியைச் செயப்படு பொருளாகவும் யானையைக் கருத்தாவாகவும் மாற்றுவது. (பி. வி. 15)

இதரேதரம் -

{Entry: C03__330}

அதனொடு மயங்கல்.

எ-டு : எண்ணொடு விராய அரிசி. எள்ளினின்று அரிசியைப் பிரித்தெடுக்குமாற்றான் ‘ஒடு’ இப்பொருளில் வந்தது.

(பி. வி. 16)

இதரேதரயோகத் துவந்துவன் -

{Entry: C03__331}

வடமொழியில் உம்மைத்தொகை துவந்துவன் எனப்படும். உம்மைத்தொகையில் ஒருமையீறாகும் அஃறிணை உம்மைத் தொகை ‘சமாகாரம்’ எனப்படும்; பன்மையீறாகும் உயர் திணை உம்மைத்தொகை ‘இதரேதரயோகம்’ எனப்படும்.

எ-டு : அறம்பொருள், சங்கபடகம் - சமாகாரத் துவந்துவன் கபிலபரணர், ராமலட்சுமணர் - இதரேதரயோகத் துவந்துவன். (பி. வி. 23)

‘இதனது இது இற்று என்னும் கிளவி’ -

{Entry: C03__332}

‘யானையது கோடு கூரிது’ என்ற ஆறாம் வேற்றுமைத் தொடரினை ‘யானைக்குக் கோடு கூரிது’ என நான்காம் வேற் றுமைத் தொடராகவும் கூறலாம். இது நான்காவது ஏனை வேற்றுமையுருபுகளின் பொருளொடு மயங்கும் என்பதன் கண், ஆறாவதனொடு மயங்கியதனைக் சுட்டியது. ‘இதனது இது இற்று’ என்பது ஆறாம் வேற்றுமைத் தொடர்.

(தொ. சொ. 111 நச். உரை)

இதனது உடைமை இது என்னும் பகுபதமும், இதனை உடையது இது என்னும் பகுபதமும் -

{Entry: C03__333}

இலக்கணக்கொத்துக் கூறும் பகுபத வகைகளுள் இவையும் சில.

1. பசு சாத்தனது, வயல் அவனது - என்புழி, சாத்தனது அவனது என்பன ‘இதனது உடைமை இது’ என்னும் வகை.

2. குழையை உடையவன் குழையன் - (குழையன் - குழையர் - முதலாகத் திணை பால் எண் இடம் அனைத்தினும் கொள்க) என்புழி, குழையன் என்பது ‘இதனை உடையது இது’ என்னும் வகை. (இ. கொ. 117)

‘இதனின் இற்று இது’ -

{Entry: C03__334}

‘இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள்’ என்பது ஐந்தாம் வேற்றுமையுருபாகிய ‘இன்’ என்பதன் பொருளாகும்.

ஐந்தாவது பொருவும் எல்லையும் நீக்கமும் ஏதுவும் என நான்கு பொருண்மையுடைத்து. உறழ்பொருவும் உவமப் பொருவும் எனப் பொருவு இரண்டாம். ஏதுவும், ஞாபக ஏதுவும், காரக ஏதுவும் என இரண்டாம். எல்லையும் பொரு வும் ‘இதனின் இற்று இது’ என்பதனான் கொள்ளப்படும். எல்லைப் பொருள் : கருவூரின் கிழக்கு, இதனின் ஊங்கு - என வரும். காக்கையின் கரிது களம்பழம் என்புழிக் காக்கையினும் கரிது எனப் பொருள்படின் உறழ்பொரு; காக்கை போலக் கரிது எனப் பொருள்படின் உவமப் பொருள்.

(தொ. சொ. 77 சேனா. உரை)

‘இது செயல் வேண்டும்’ : விளக்கம் -

{Entry: C03__335}

‘இக்காரியத்தைச் செய்தல் வேண்டும்’ என்னும் முற்றுச் சொல், அக்காரியத்தைச் செய்வான்தன்னிடத்தும் அவன் செயலை வேண்டியிருப்பான் பிறனொருவனிடத்தும் - என இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மையினை உடையது.

எ-டு : சாத்தன் ஓதல் வேண்டும் - என்ற தொடர், சாத்தன் ஓதுதலை வேண்டுகிறான் எனவும், சாத்தன் ஓதுதலை அவன் தந்தை வேண்டுகிறான், தாய் வேண்டுகிறாள் எனவும் இருவகையாகப் பொருள்படுதல் காண்க. (தொ. சொ. 245 நச்., 243 சேனா. உரை.)

இது பொருளன்று என்று அறிந்தும் இதுவே பொருள் எனல் -

{Entry: C03__336}

பொருள்களைத் துணியும் வகை மூன்றனுள் இஃது ஒன்று.

பிறனொருவனை மாதா பிதாவாகத் துணிந்து திதி கொடுத் தலும், மண் மரம் சிலை செம்பு - முதலானவற்றைத் தெய்வம் என்று துணிந்து பூசை செய்தலும், வீட்டினை அறிவிக்கும் மகனைக் கடவுள் என்று துணிந்து (அவ்வாசிரியனது) கருத்து வழியே நிற்றலும் போன்றன, ‘இது பொருளன்று என்றறிந்தும் இதுவே பொருளெனத் துணிதற்கு’ எடுத்துக்காட்டாவன. (இ. கொ. 122)

‘இப்பட்டுச் சீனம்’ -

{Entry: C03__337}

இப்பட்டுச் சீனத்துள்ளது என்பார், இசையெச்சமாக்கி ‘இப்பட்டுச் சீனம்’ எனக் குறைத்துக் கூறலான், இப்பட்டு என்னும் எழுவாய்க்கு உள்ளது என்பது பயனிலையன்றிச் சீனம் பயனிலை அன்றாதலானும், சுட்டிக் கூறாது சீனம் என வாளா கூறின், அது பலபொருளொருசொல் போல அவ் விடத்தினையும் பட்டினையும் உணர்த்தாமையானும், இத்தொடக் கத்தவாகிய இசையெச்சங்களை ஆகுபெயர் என்பார்க்கு,

திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லை

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கும்தெய்வ

மருவளர் மாலை’ (கோவை. 1)

என வரும் உருவகங்களையும் ஆகுபெயர் எனக் கூறல் வேண்டு மாகலானும், இவையெல்லாம் ஆகுபெயர் இலக்கணத்தான் வந்தனஅல்ல. (நன். 290 சங்.)

இயர், இய - ஈற்று வினையெச்சங்கள் -

{Entry: C03__338}

இயர் இய என்னும் ஈற்று வினையெச்சங்கள் உண்ணியர் தின்னியர் எனவும், உண்ணிய தின்னிய - எனவும் எதிர்காலம் பற்றி வரும். போகியர் போகிய - என ஏற்புழிக் குகரமும் பெறும். (தொ. சொ. 230 நச். உரை)

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் -

{Entry: C03__339}

இலக்கணமுடையது இலக்கணப்போலி மரூஉ - என்னும் மூன்றும் எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப் பொருளை அச்சொல்லால் வழங்குதலின் இயல்பு வழக்காம்.

இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி - என்னும் மூன்றும் இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் கூறுதல் தகுதியன்று, வேறொரு சொல்லால் கூறுதலே தகுதி எனக் கருதிக் கூறலின் தகுதி வழக்காம்.

‘ஆமுன் பகரஈ’, நன்காடு, பறி (பொற்கொல்லர் பொன்னைக் குறிக்க வழங்கும் சொல்) - என முறையே காண்க.(நன். 267 சங்.)

இலக்கண நெறியான் வருவதும், இலக்கணம் அன்றெனினும் இலக்கணமுடையது போல அடிப்பட்ட சான்றோரால் வழங்கப்பட்டு வருவதும், இலக்கணத்திற் சிதைந்து வருவதும் - என இம்மூன்றுவகையானும் வரும் இயல்புவழக்கு, இடக்கர் அடக்கிச் சொல்லுவதும், மங்கல மரபினாற் சொல்லுவதும், ஒவ்வொரு குழுவினுள்ளார் தத்தம் குறியாக இட்டுச் சொல்லு வதும் - என்னும் மூவகைத் தகுதிவழக்கினொடும் கூட அறு வகைப்படும். இவற்றுள் முதல் மூன்றும் ஒரு காரணமின்றியே இயல்பாய் வருதலின் இயல்பு வழக்காயின. ஏனைய மூன்றும் அவ்வாறன்றி உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் ‘இவ்வாறு மொழிவது தக்கது’ என்று கொண்டு வழங்குதலின் தகுதி யாயின. (நன். 266 மயிலை.)

இலக்கணநெறியான் வருவதனை இலக்கணமுடையது என்றும், இலக்கணமுடையதன்றிப் படைப்புக் காலத்து இலக்கண முடையதோடு ஒருங்கு படைக்கப்பட்டது போல வருவதனை இலக்கணப்போலி என்றும், தொன்றுதொட்ட தன்றி இடையே இலக்கணம் சிதைந்து மரீஇயதனை மரூஉ என்றும், இம்மூன்றும் தகுதிவழக்குப் போலாது எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லாற் கூறலின் இயல்பு வழக்கு என்றும், இடக்கர் என்பது மறைத்து மொழி கிளவி ஆதலின் இடக்கர் தோன்றாது அதனை மறைத்ததை இடக்கரடக்கல் என்றும், இடக்கர் போலக் கூறத் தகாதது அன்றேனும் மங்கலமில்லதை ஒழித்து மங்கலமாகக் கூறுவதை மங்கலம் என்றும், ஒவ்வொரு குழுவினுள்ளார் யாதானும் ஒரு காரணத்தான் ஒரு பொருளினது சொற் குறியை ஒழித்து வேறொரு சொற்குறியால் கூறுவதைக் குழூஉக் குறி என்றும், இம்மூன்றும் ‘இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் கூறுதல் தகுதியன்று, வேறொரு சொல்லாற் கூறுதலே தகுதி’ எனக் கருதிக் கூறுதலின் தகுதி வழக்கு என்றும் பெயர் பெற்றன. (நன். 267 சங்.)

இலக்கண நெறியான் வருவதும், இலக்கணமின்று எனினும் அஃதுடையது போல அடிப்பட்ட சான்றோரால் வழங்கப் பட்டு வருவதும், இலக்கணத்திற் சிதைந்து ஒரு காரணமின்றி வழங்கற்பாடே பற்றி மரூஉமுடிபிற்றாய் வருவதும் - என இயல்பு வழக்கு மூவகையாம்.

நிலம் நீர் தீ வளி விசும்பு - என்றாற் போல்வன இலக்கண முடையன.

இல்முன்: முன்றில், கோவில்: கோயில், பொதுவில்: பொதி யில், கண்மீ: மீகண் - என்றாற்போல வருவன இலக்கணப் போலி.

சோழனாடு - சோணாடு எனச் சிதைந்து வருவனவும், வெள்யாடு வெண்களமர் என்றாற்போலப் பண்பு குறியாது சாதிப்பெயராய் வருவனவும், குடத்துள் இருந்த நீரைச் சிறிது என்னாது சில என்றாற் போல்வனவும் மரூஉ.

‘(ஆன்முன் வரூஉம்) ஈகார பகரம்’, கண்கழீஇ வருதும், ‘நீரல் ஈரம்’ - என்றாற் போல்வன இடக்கரடக்கல். இடக்கர், அவையல்கிளவி என்பன ஒருபொருட்கிளவி. அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றான் அவை கிளந்தன அல்ல எனினும், அவையல் கிளவிப் பொருண் மையை உணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையும் அவையல் கிளவியைப் பிறிதோராற்றான் கூறிய வாய் பாடாகவே கொள்ளப்படும்.

செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் - இவை போல்வன எல்லாம் மங்கல மரபினான் வருவன.

வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றலும், பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றலும், ஆனைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் - இவை போல்வன எல்லாம் குழூஉக் குறி.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஒரு காரணமின்றி இயல்பாய் வருதலின் இயல்பு வழக்கு என்றும், பின்னைய மூன்றும் உயர்ந்தோரும் இழிந்தோரும் இவ்வாறு உரைப்பது தக்கதன்று என்று குறித்து வழங்கலின் தகுதி வழக்கு என்றும் ஆயின.

‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே’ (புற. 249) எனவும், ‘ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை எனவும், யானை யிலண்டம் - யாட்டுப் பிழுக்கை - எனவும் இடக்கர் வாய் பாட்டானும் வழங்கப்படுமாலோ எனின், ‘மறைக் குங் காலை மரீஇயது ஒராஅல்’ (சொ. 443 நச்.) என்ப ஆகலின், இந்நிகரன மேற் றொட்டு மருவி வழங்கலின் அமைவுடைய. (இ. வி. 168 உரை)

இயற்கை அளபெடை -

{Entry: C03__340}

‘இசைநூல் அளபெடை’ காண்க.

இயற்கை கிளத்தல் -

{Entry: C03__341}

இஃது இப்பெற்றித்து எனப் பெற்றியான் அறிந்திருந்த இயல்பான் கூறுதல்.

எ-டு : ‘இக்காட்டுள் போகின் கூறை கோட்படுவான்’ என எதிர்காலத்தான் சொல்லற்பாலது, கூறை கோட் பட்டான் - கூறை கோட்படுகிறான் - என மற்ற காலத் தால் சொல்லப்படுதல் இயற்கை பற்றி வந்த கால வழுவமைதி. (தொ. சொ. 245 சேனா. உரை)

இயற்கைப்பொருள் -

{Entry: C03__342}

செயற்கையால் தன்மை திரியாத பொருள் இயற்கையாம். இயற்கைப்பொருளை இத்தன்மைத்து என்று கூறுக.

மெய் உள்ளது, பொய் இல்லது, நிலம் வலிது, தீ வெய்து - என வரும்.

வளி உளரும் தன்மைத்து, உயிர் உணரும் தன்மைத்து - என உதாரணம் காட்டாது, வளி உளரும் - உயிர் உணரும் - என்று காட்டின், உளர்தலும் உணர்தலும் ஆகிய செயல்கள் நிகழ்ந்த துணையானே வளியும் உயிரும் செயற்கையாமன்றி இயற்கை யாகாமை உணரப்படும். ஆதலின் அவை உதாரணமாகா.

(நன். 404 சங்.)

இயற்கைப்பொருளைக் கிளக்கு முறை -

{Entry: C03__343}

பொருட்குப் பின் தோன்றாது உடன்நிகழும் தன்மைத்தான பொருளை அதன் இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கூறாது இத்தன்மைத்து என்று சொல்லுதல் வேண்டும்.

எ-டு : நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்யது

இயற்கைப்பொருட்கு ஆக்கமோ காரணமோ இணைத்துக் கூறல் பொருந்தாது. சேற்று நிலத்தில் நடந்து வந்தவன் வலிய நிலத்தை மிதித்தவுடன் ‘நிலம் வலிதாயிற்று’ என்று கூறுவது, முன்பு மென்மை யாயிருந்த நிலம் வலிதாய்விட்டது என்று ஆக்கம் வேறுபாட்டைக் குறித்தலின், ‘நிலம் வலிதாயிற்று’ என்ற தொடர் இயற்கைப்பொருள் ஆக்கமொடு வந்ததன்று. (தொ. சொ. 19 நச். உரை)

‘இயற்கைய ஆகும் செயற்கைய’ -

{Entry: C03__344}

இகர ஈற்று உயர்திணைப் பெயர் விளியேற்றற்கண் இகரம் ஈகாரமாகி விளியேற்கும். ஆயின் அளபெடையான் வந்த இகர ஈற்றுப்பெயர், இகரஈறு ஈகாரமாகாது, பிறிது ஒரு மாத்திரை யோ இரண்டு மாத்திரையோ நீண்டொலிக்கும். இந்நீட்சியைக் காட்ட மீண்டும் ஓர் இகரமோ இரண்டு இகரமோ வரிவடிவில் குறிக்கப்படும்.

எ-டு : (நம்பி - நம்பீ)

தொழீஇ : தொழீஇஇ, தொழீஇஇஇ

(தொழீஇ - தொழுத்தை - தொழிலைச் செய்பவள்)

இகரம் ஈகாரம் ஆகாமையின் ‘இயற்கைய ஆகும்’ என்றும், மாத்திரை நீளுதலின் ‘செயற்கைய’ என்றும் கூறப்பட்டன. (தொ. சொ. 125 சேனா., 127 நச். உரை)

தொழீஇ என்பது பெயர்; விளியும் அஃதே எனக் கொள்க. (தொ. சொ. 122 இள. உரை)

தொழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். ‘செயற்கைய’ என்றதனான் விளிக்கண் வரும் ஓசைவேறுபாடு அறிந்துகொள்க. (தொ. சொ. 121 தெய். உரை)

இகர ஈற்று உயர்திணைப் பெயர் விளியேற்குங்கால், இகரம் ஈகாரமாக நீளுதல் போலாது, அளபெடைக்கண் வரும் இகர ஈறு ஈகாரமாகத் திரியாது இகரமாகவே நின்று இயல்பாய் விளியேற்கும் என்பதே பொருத்தமான கருத்து. (தொ. சொ. 126 ச. பால.)

இயற்கையும் தெளிவும் -

{Entry: C03__345}

இயற்கை என்பது வழங்குங்கால் தான் ஒன்றனை ‘இஃது இப்பெற்றித்து ஆகும்’ என்று அறிந்திருந்த இயல்பு. தெளிவு என்பது ஒரு நூல்நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல்.

இவ்வியற்கையினையும் தெளிவினையும் சொல்லுமிடத்து, எதிர்காலத்துப் பிறக்கும் வினைச்சொற் பொருண்மை, இறப்பும் நிகழ்வுமாகிய காலச்சொல்லானும் மிகத் தோன்றும் என்றவாறு.

எ-டு : இக்காட்டுள் புகின் கூறை கோட்படுவன் என்னாது, கூறை கோட்பட்டான் - கூறை கோட்படுகிறான் - என்றல் இயற்கை; எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது, பெய்தது - பெய்கின்றது - என்றல் தெளிவு. (தொ. சொ. 247 கல். உரை.)

இயற்சொல் -

{Entry: C03__346}

தமிழ் வழங்கும் நாட்டு, விகாரமின்றித் தமிழியற்கை இலக்கணப்பாடு செவ்வனுடைய சொல் இயற்சொல்லாம். செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் இச்சொல் நடக்கும் என்றவாறு.

எ-டு : சோறு, கூழ், பால், பாளிதம் (தொ. சொ. 392, 393 இள. உரை)

இயற்சொல் - இயல்பான சொல். இவை செந்தமிழ் நிலத்தின்- கண்ணே வழங்குதலொடு பொருந்தி, அச்செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் கேட்போர்க்குத் தத்தம் பொருள் வழுவாமல் ஒலிக்கும் சொற்களாம்.

எ-டு : நிலம், வளி, தீ, சோறு, கூழ்

செந்தமிழ்நிலமாவது வையையாற்றின் வடக்கு, மருதயாற் றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு எனும் இவற்றிற்கு இடைப்பட்ட நிலம். (தொ. சொ. 398 நச். உரை)

திரிபற்ற இயல்பான சொல்லாகலின் இயற்சொல் ஆயிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற்சொல் எனினும் அமையும். (தொ. சொ. 398 சேனா. உரை)

செந்தமிழ்நாடு வேங்கடம் குமரி இவற்றிற்கு இடைப்பட்ட நிலமாம். அவ்வெல்லைக்குட்பட்ட எல்லா நாட்டிலும் ஒக்க இயலும் சொல் இயற்சொல் எனப்பட்டது. இயற்சொல்லைச் செஞ்சொல் எனினும் அமையும். ‘வையையாற்றின் வடக்கு....... மருவூரின் மேற்கு’ என்பதனைச் செந்தமிழ் நிலமாகக் கோடற்கு ஓரிலக்கணம் காணாமையானும், கொற்கை கொடுங்கோளூர் காஞ்சி - போல்வன இவ்வரையறைப்படி தமிழ் திரிநிலத் தின்கண்ண எனல் வேண்டுதலானும், செந்தமிழ் நாடு கிழக்கு மேற்கு ஆகியவற்றில் கடல்களையும் வடக்கில் வேங்கடத்தை யும் தெற்கில் குமரியையும் எல்லையாகவுடைய நிலப்பரப்பு என்றலே தக்கது. (தொ. சொ. 394 தெய். உரை)

செந்தமிழ் நிலத்து மொழியாகிக் கற்றார்க்கும் கல்லாதார்க் கும் ஒப்பப் பொருள் விளங்கும் தன்மையினையுடைய உலக வழக்குச் சொல் இயற்சொல்லாம்.

எ-டு : மண், பொன் - பெயரியற்சொல்

நடந்தான், வந்தான் - வினையியற்சொல்

அவனை, அவனால் - இவ்வேற்றுமையுருபு முதலியன இடையியற்சொல்.

உரிச்சொல் யாவும் திரிசொல்லே ஆதலின், உரியியற்சொல் இல்லை. (நன். 271 சங்.)

சொல்லானும் பொருளானும் மயக்கத்தைத் தாராது எளிமை யாக அச்சொல்லே எவர்க்கும் பொருளை விளக்கி நிற்பது இயற்சொல்லாம். அது பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்ற அறுவகை நிலையில் பொருளை விளக்கும். எடுத்துக்காட்டாக, மகன் மகள் பொன் - எனவும், நிலம் மலை கடல் - எனவும், யாண்டு திங்கள் நெருநல் - என வும், தலை முகம் கால் - எனவும், வெம்மை சிறுமை தண்மை - எனவும், வருதல் போதல் உண்டல் - எனவும் முறையே காண்க. பெயர் வினை இடை உரி என்னும் நால்வகை நிலையிலும் இயற் சொல் அமையும். மண் மரம் - எனவும், உண்டான் உறங்கி னான் - எனவும், மற்று பிற - எனவும் அதிர்ந்திருந்தான் (நோய்) தீர்ந்தது - எனவும் முறையே காண்க. பிறவும் அன்ன, (தொ. சொ. 270 மயிலை.)

இயற்சொல் திசைச்சொல் முதலிய பற்றி வழுவமைதி -

{Entry: C03__347}

ஓர் எருத்தை நம்பி எனவும், ஒரு பசுவை அன்னை எனவும் ஒரு திணைப்பெயர் மற்றொரு திணைக்கு ஆய் வருவனவும்,

புலியான் பூசையான் - என்பன போலத் திசைச்சொற்கள் வாய்பாடு திரிந்து வருவனவும்,

யாற்றுட் செத்த எருமையை ஈர்த்தல் இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடனே என்றாற்போல ஒருகாரணமின்றித் தொன்றுதொட்டுக் காரணமுடையன போல வருவனவும்,

பிசிச்செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து புத்தகத்தை ‘எழுதுவரிக் கோலத்தார்’ என உயர்திணை வாய்பாட்டாற் கூறுவன போல வருவனவும்,

மந்திரப் பொருட்கண் அப்பொருட்கு உரித்தல்லாத சொல் வருவனவும் - என்னும் இவை வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்துக்கு ஒத்தன அல்ல என நீக்கப்படா என்று வழுவமைதி கொள்ளப்படுகிறது. (தொ. சொ. 449 சேனா. உரை)

இயற்சொல்லும் திரிசொல்லும் -

{Entry: C03__348}

செந்தமிழ்நிலத்துப் பட்ட எல்லா நாட்டிலும் ஒக்க இயலு தலின் இயற்சொல் ஆயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும். பெயர் வினை இடை உரி என்ற நால்வகைச் சொல் லாகவும் இது தமிழில் வரும். (தொ. சொ. 394 தெய். உரை)

இயற்சொல்லால் உணர்த்தப்படும் பொருள்மேல் வேறு பட்ட வாய்பாட்டான் வருவன திரிசொல் ஆகும். உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும். திரிசொல் முழுச் சொல்லாகி வரும். இதனை இயற்சொல் போலச் செந்தமிழ்நாட்டுப்பட்ட தேயம்தோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட சொல் என்று கொள்ளல் வேண்டும். பெரும்பான்மை பெயரும், சிறுபான்மை வினையுமாக இது தமிழில் வரும். (தொ. சொ. 395 தெய். உரை)

இயற்சொல்லே திரிசொல் ஆதல் -

{Entry: C03__349}

மாலை என்னும் பெயர்ச்சொல் சிறுபொழுதினையும் அலங் கலினையும் குறித்து வருங்கால் இயற்சொல்லாம்; அதுவே மயக்கம் இயல்பு முதலான பொருள் குறித்து வருங்கால் திரிசொல்லாம். இவ்வாறு சொல்லினது பொருள் வரவிற் கேற்ப இயற்சொல் திரிசொல் என்பவை மயங்கும் என்க.

(தொ. சொ. 399 ச. பால.)

இயற்சொல் : வகை -

{Entry: C03__350}

பொருளியற்சொல் - அவன் அவள் மகன் மகள் மக்கள் மாந்தர் உடம்பு உறுப்பு பொன் மணி முத்து மாலை மணல் நீர் நெருப்பு காற்று பேறு புடைவை யானை குதிரை மயில் குயில் மா பலா தெங்கு;

இட வியற்சொல் - நிலம் மண் தரை மேடு பள்ளம் குளம் குழி யாறு கடல்;

கால வியற்சொல் - யாண்டு பருவம் திங்கள் இன்று நாளை இரா பகல்;

சினை யியற்சொல் - தலை முகம் கண் காது கை கால் கொம்பு கொழுந்து இலை பூ;

குண வியற்சொல் - உணர்வு ஒளி கறுப்பு சிவப்பு வட்டம் சதுரம் வெம்மை தண்மை கைப்பு புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு உறைப்பு இனிப்பு ஒப்பு பொலிவு;

தொழிலியற்சொல் - நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் ஓடல் பாடல் கொள்ளல் கொடுத்தல் -

இங்ஙனம் பொருளாதி ஆறு பொருளையும் பெயரியற்சொல் விளக்கியவாறு.

உண்டான் உறங்கினான் நின்றான் நினைந்தான் எழுதினான் ஓதினான் பார்த்தான் பழித்தான் வந்தான் போனான் - என வினையியற்சொல் வந்தவாறு.

மற்று மற்றை பிற - என இடையியற்சொல் வந்தவாறு.

குழ க்கன்று, உப்புக் கூர்த்தது, அலமந்து திரியாநின்றான்; அதிர்ந் திருந்தான் நோய் தீர்ந்தது - என உரியியற்சொல் வந்தவாறு. (நன். 270 மயிலை.)

இயற்பெயர் -

{Entry: C03__351}

இயற்பெயராவது ஒரு பொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர். தன்கண் சினையை நோக்குமிடத்து இது முதற்பெயர் எனவும்படும். (தொ. சொ. 170, 172 தெய்.உரை)

எ-டு : சாத்தி, சாத்தன், கோதை, யானை

இருதிணைக்கும் அஃறிணை இருபாற்கும் உரிய பெயரும் இயற்பெயர் எனப்படும்.

எ-டு : சாத்தன் (வந்தான், வந்தது); மரம் (வளர்ந்தது, வளர்ந்தன) (தொ. சொ. 270 சேனா. உரை)

இயற்பெயர் இனம் சுட்டாமை -

{Entry: C03__352}

குறுஞ்சூலி நெடுந்தடி குறுமூக்கி குறும்பூழ் - என்பன சில பொருள்களின் இயற்பெயரே ஆதலின், அவை இனம் சுட்டா. (தொ. சொ. 18 ப. உ.)

இயற்பெயர் உயர்திணை சுட்டா இடம் -

{Entry: C03__353}

கள்வன் அலவன் - என்பன னகர ஈற்றுச் சொற்களாயினும், அவை ஆண் பெண் வேறுபாடு காட்டாது நண்டு என்பதற்கு இயற்பெயராய் வருதலின், அவை விரவுப்பெயர் ஆகா; அஃறிணைப் பெயரே. இயற்பெயர் என்பதனை இருதிணைக் கும் பொது என்று ஓதினராயினும், செய்யுளகத்துக் கருப் பொருளாகி நிலத்துவழித் தோன்றும் மாவும் புள்ளும் முதலாயினவற்றின்மேல் இடுகுறியாய் வரும் இயற்பெயர் அஃறிணைப்பொருளைச் சுட்டுவதல்லது உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா.

‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’ என்னுமிடத்துக் கடுவன் - மூலன் - குமரி - என்பன உயர் திணைக்குரிய பால்ஈற்றவாயினும், மலை நிலத்துக் கருப் பொருளாதலின் அஃறிணையாகவே கொள்ளப்பட்டன.

(தொ. சொ. 198 நச். உரை)

இயற்பெயர் சுட்டுப்பெயர் முறை -

{Entry: C03__354}

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றை ஒன்று கொண்டு முடியும்வழி, இரண்டனுள் எதனையும் முன் கூறலாம். ஆயின் இரண்டும் பிறிதுவினை கொள்ளுமிடத்து, இயற் பெயரை முன்னரும் சுட்டுப்பெயரைப் பின்னரும் கூறல் வேண்டும். இவ் விதி எல்லா விரவுப்பெயர்க்கும் உயர் திணைப் பெயர்க்கும் அஃறிணைப்பெயர்க்கும் ஒக்கும். செய்யுளுள் சுட்டு முற்கூறவும் படும்.

எ-டு : சாத்தன் அவன், அவன் சாத்தன் - என ஒன்றனை ஒன்று கொண்டு முடியும்வழி, இயற்பெயர் சுட்டுப் பெயர் என்னும் இரண்டனுள் எதுவும் முற்கூறப் படலாம்.

இரண்டும் தனித்தனி வினை கொண்டவழி, சாத்தன் வந்தான், அவன் உணவுண்டான்; சாத்தி வந்தாள், அவள் மலர் தொடுத்தாள் - என இயற்பெயர் முன்னரும் சுட்டுப் பெயர் பின்னரும் கூறப்படும்.

அவன் உணவுண்டான், சாத்தன் வந்தான் - எனச் சுட்டினை முற்கூறின், அவனும் சாத்தனும் ஒருவராகாது வெவ்வேறு ஆகிவிடும்.

முடவன் வந்தான், அவனுக்குச் சோறிடுக.

முடக்கொற்றி வந்தாள், அவட்குக் கூறை ஈந்திடுக.

தாய் வந்தாள், அவளுக்கு உதவி செய்க -

என ஏனைய விரவுப்பெயர்க்கண்ணும்,

நம்பி வந்தான், அவனைப் போற்றுக,

எருது வந்தது, அதற்குப் புல்லிடுக -

என உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் இவற்றின் கண்ணும் இவ்விதி பற்றிச் சுட்டுப்பெயர் பின் கிளக்கப்படல் வேண்டும்.

‘அவன்அணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்

விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி’

எனச் செய்யுட்கண் சுட்டுப்பெயர் இயற்பெயராகிய சேந்தன் என்பதன் முன் கூறப்பட்டது.

செய்யுட்கண் சுட்டுப்பெயர் மொழிமாற்றியும் “சேந்தன் நோய் செய்தான், வேலன் அவன்பேர் வாழ்த்தி” என்று பொருள் கொள்ளப்படுதலின், செய்யுட்கண் சுட்டுப்பெயர் முற்கூறப் படுதல் அமையும் என நேரப்பட்டது. (தொ. சொ. 38, 39 நச். உரை)

‘இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி’ -

{Entry: C03__355}

விரவுப்பெயர்க்கும் அஃறிணை இயற்பெயர்க்கும் முன்வரும் ஆர் என்னும் இடைச்சொல் ரஃகான் ஒற்றினை ஈறாக வுடைய வினைச்சொல்லான் முடியும்.

எ-டு : பெருஞ்சேந்தனார் வந்தார்.

முடவனார் வந்தார்.

முடத்தாமக்கண்ணியார் வந்தார்.

தந்தையார் வந்தார் - இவை நான்கும் விரவுப்பெயர்.

கிளியார் வந்தார் - அஃறிணை இயற்பெயர்.

உயர்திணைப் பெயர்க்கும் நம்பியார் வந்தார், நங்கையார் வந்தார் - என வரும்.

இப்பெயர்கள் ஆர் அடுத்த ரகரஈற்ற ஆதலின், உயர்திணைப் பன்மை வினையைக் கொண்டன. (தொ. சொ. 272 நச். உரை)

இயற்பெயரின் முன்னர்க் கிளக்கப்படும் பெயர்கள் -

{Entry: C03__356}

இயற்பெயராவது ஒருவற்கு இருமுதுகுரவர் இட்ட பெயர். ஏனைய பெயர்கள், பின்னர்ச் சிறப்பு - தவம் - கல்வி - குடி - உறுப்பு - முதலியன பற்றி நிகழ்வன. சிறப்பு - மன்னர் முதலா யினரான் பெறும் வரிசை. இயற்பெயர்க்கு முன்னர் இப்பிற பெயர்கள் கூறப்படல் வேண்டும்.

எ-டு : ஏனாதி நல்லுதடன், காவிதி கண்ணந்தை - சிறப்பு.

முனிவன் அகத்தியன் - தவம்.

தெய்வப்புலவன் திருவள்ளுவன் - கல்வி.

சேரமான் சேரலாதன் - குடி.

குருடன் கொற்றன் - உறுப்பு.

திருவீரஆசிரியன், மாந்தக்கொங்கேனாதி எனப் பண்புத் தொகைக்கண் இப்பெயர்கள் மாறியும் வரும்.

(தொ. சொ. 41 சேனா. உரை)

இயற்றப்படுதல் -

{Entry: C03__357}

இஃது இரண்டாம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. இயற்றுதல் முன் இல்லதனை உண்டாக்குதல். எயிலை இழைத்தான்: இழைத்தல் என்பதும் அதன் பரியாயப் பெயர் களும் இயற்றப்படுதற்கண் அடங்கும். (தொ. சொ. 72 சேனா உரை)

இயற்றுதல் ஏவுதல் கருத்தாக்கள் -

{Entry: C03__358}

அரசனால் ஆகிய தேவகுலம், தச்சனால் ஆகிய தேவகுலம் என்புழி, முறையே ஏதுப்பொருளவாகிய ஏவுதற் கருத்தா வாகவும் இயற்றுதற் கருத்தாவாகவும் மூன்றனுருபு வேற் றுமை செய்தது. (நன். 297 சங்.)

இயற்றுதற் கருவி -

{Entry: C03__359}

கருவியாவது வினைமுதல் தொழிற்பயனைச் செயப்படு- பொருட்கண் உய்ப்பது. (சேனா.) அஃது இயற்றுதற் கருவியாகிய காரகக்கருவி, அறிதற் கருவியாகிய ஞாபகக் கருவி - என இருவகைப்படும்.

‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’ என்பது இயற்றுதற் கருவி. அஃது ஊசிகொண்டு சாத்தன் குயிலுதலைச் செய்யப் பட்ட தூசும் பட்டும் என்னும் பொருளது. சாத்தனுடைய தொழிற் பயனை ஊசி துகிலினும் பட்டினும் நிகழ்த்திற்று. இது துணைக்காரணம். மண்ணான் இயன்ற குடம் - இது முதற் காரணம்; இதுவும் இயற்றுதற் கருவி.

(தொ. சொ. 74 நச். உரை)

இயற்றும் வினைமுதல் -

{Entry: C03__360}

கருவி முதலான காரணங்களைத் தொழிற்படுப்பது வினை முதல். (சேனா.) இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுத லும் என வினைமுதல் இருவகைப்படும்.

கொடியொடு துவக்குண்டான் என்பது இயற்றும் வினை முதல். அது கொடி தன்னொடு துவக்குதலைச் செய்யப்பட் டான் சாத்தன் என்னும் பொருளது. கொடியினது நிகழ்ச்சி ஈண்டுக் கருவி. கொடி சாத்தனைத் தொழில் உறுவிக்குங்கால் தான் அவனை நீங்கா உடனிகழ்ச்சியை விளக்கிற்று ஒடு என்னும் உருபு. (தொ. சொ. 74 நச். உரை)

இயன்றது மொழிதல் -

{Entry: C03__361}

இஃது ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. இயன்றது என்பது செய்கை. அச்செய்கை சொல்ல, அச்செய்கை நிகழ்ச்சியினாய வேறுபாடும் அப்பெயர்த்தாய் விளங்கும்.

எ-டு : ஏறு, குத்து - என எறியவும் குத்தவும் ஆயின அத் தொடக்கத்தன விளக்கிநிற்கும் என்பது. (எறித லானும் குத்தலானும் ஏற்பட்ட வடுவைக் குறித்த வழி இவ்வாகு பெயராம்) (தொ. சொ. 110 இள. உரை) (116 கல்., 115 ப.உ.)

முதற்காரணப் பெயரான் அக்காரணத்தான் இயன்ற காரி யத்தைச் சொல்லுதல் இவ்வாகுபெயர் வகையாம்.

எ-டு : இக்குடம் பொன் என்றவழி, பொன்னாகிய காரணப் பெயர் அதன் காரியமாகிய குடத்தை உணர்த்திற்று. (தொ. சொ. 114 சேனா. 115 நச். உரை.)

காரியப்பொருளைக் காரணத்தான் கூறல் இது. பொன் பூண்டான் என்றவழிப் பொன்னினானாகிய அணிகலத்தைப் பொன் என்று வழங்குதலின், ஆகுபெயர். தன் மெய் காட்டி, இஃதோர் அம்பு, இஃது ஒருவேல் - என்றவழி, அவை பட்ட வடுவை அவற்றிற்குக் காரணமான கருவிப்பெயரான் வழங்கு தலும் அமையும். (தொ. சொ. 111 தெய். உரை)

இயைபு, இசைப்பு - என்ற உரிச்சொற்கள் -

{Entry: C03__362}

இயைபு என்ற உரிச்சொல் கூட்டம் என்னும் குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘ இயைந்த கேண்மை’ (புறம். 190)

இனி, இசைப்பு என்ற உரிச்சொல் இசைப்பொருண்மையை உணர்த்தும்.

எ-டு : ‘யாழ் இசையூப் புக்கு’

(தொ. சொ. 308, 309 சேனா. உரை., 309 நச். உரை)

இரட்டித்து நிற்கும் அசைநிலை இடைச்சொற்கள் -

{Entry: C03__363}

ஆக ஆகல் என்பது - என்னும் மூன்றும் ஆக ஆக - ஆகல் ஆகல் - என்பதென்பது - என இரட்டித்துப் பிரிவிலவாய் நின்று அசைநிலையாகும் இடைச்சொற்களாக வரும்.

ஒருவன் ‘யான் இன்னேன்’ என்றானும், ‘நீ இன்னை’ என்றா னும், ‘அவன் இன்னான்’ என்றானும் கூறியவழிக் கேட்டான் ‘ஆக ஆக’ ‘ஆகல் ஆகல்’ என்னும். இவை உடன்படாமைக்- கண்ணும் அன்பில்வழியும் வரும். ஒருவன் ஒன்று உரைப்பக் கேட்டான் ‘என்பது என்பது’ என்னும். அது நன்கு உரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும் வரும். (தொ. சொ. 280 சேனா. உரை)

‘என்பது என்பது’ என்னுதல் புகழ்ச்சியிடத்துப் பயிற்சி யுடையது. (தொ. சொ. 276 இள. உரை)

ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது - என்பன இரட்டித்து வருமிடத்து அசைநிலையாம். (தொ. சொ. 276 தெய். உரை)

‘பிரிவில் அசைநிலை’ என்பதற்கு, இரட்டித்து வரும் அசை நிலை என்று பொருள் கொள்ளாது, தாம் சார்ந்த சொற் களின் பொருள்களைப் பிரிதலின்றி உணர்த்தும் அசைநிலை யாம் - என்று பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். “இவை தாம் சேர்ந்த சொல்லை அசைத்தே நிற்கும் என்றலின் ‘பிரிவில் அசைநிலை’ என்றார். “வழக்கின்கண் ‘ஆகஆக’ என அடுக்கி வந்து உடன்படாமையும் ஆதரம்இன்மையும் ஆகிய பொருள் தந்து நிற்கும் என்றல் அசைநிலைக்கு ஏலாது” என்று சேனாவரையர் உரையை இவர் மறுப்பார். (தொ. சொ. 282 நச். உரை)

‘பிரிவில் அசைநிலை’ காண்க.

இரட்டைக்கிளவி -

{Entry: C03__364}

இரட்டித்து நின்றே பொருளுணர்த்தும் சொற்கள் இரட்டைக் கிளவியாம். அவை இசை குறிப்பு பண்பு - என்னு மிவை பற்றி வரும்.

எ-டு : சுருசுருத்தது, மொடுமொடுத்தது - இசை கொறுகொறுத்தார், மொறுமொறுத்தார் - குறிப்பு. குறுகுறுத்தது, கறுகறுத்தது - பண்பு.

இவை குறுத்தது குறுத்தது என்றாற்போல ஒருசொல்லே இருகால் வாராததனால் அடுக்கல்ல. குறுகுறுத்தது என்ப தனைக் குறு + குறுத்தது எனப் பிரித்துப் பொருள் செய்யின் மிகவும் குறுத்தது எனல் வேண்டும்; குறு என்பது ஓரிடத்தும் மிகுதிப்பொருள் உணர்த்தாது ஆதலின் குறுகுறுத்தது முதலாயின ஒரு சொல்லே. இவை இலையிரட்டை பூவிரட்டை காயிரட்டை - போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையன. அடுக்குத்தொடரோ மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமை யுடையன. (தொ. சொ. 48 நச்., சேனா. உரை)

(ஒரோவழி இரட்டைக்கிளவி முன்பகுதி நீங்கத் ‘தழுதழுத்து’ என்பது ‘தழுத்து’ என வருதலுமுண்டு. ‘உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்’ நா. திவ். 962)

இவை மக்களிரட்டையும் விலங்கிரட்டையும் போலன்றிப் பூவிரட்டையும் காயிரட்டையும் இலையிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையவாய் வரும்.

எ-டு : மொடுமொடுத்தது, கொறுகொறுத்தார், கறுகறுத் தது - என இசை குறிப்பு பண்பு பற்றி வந்தவாறு. (தொ. சொ. 48 ப. உ.)

அடுக்கு வகைகளில் இரட்டைக் கிளவியும் ஒன்று.

எ-டு : ‘சலசல மும்மதம் சொரிய, (சீவக. 82)’ துடி துடித்தது, ‘குறுகுறு நடந்து’ (புற. 168)

இவை இரட்டின் பிரிந்திசையா. இவை இலையிரட்டை பூ விரட்டை காயிரட்டை விரலிரட்டை போல ஒற்றுமைப்பட்டு நிற்பன. முட்டையிரட்டை கையிரட்டை காலிரட்டை போல வேறுபட்டு நிற்றற்கு உரியன அடுக்கு என்க. (இ.கொ. 120)

எ-டு : ‘குறுகுறு நடந்து’ , குறுகுறுத்தது - என இரட்டைக் கிளவி ஒற்றுமைப்படநின்றது.

இரட்டைச் சொற்கள் அவ்விரட்டின் பிரிந்து தனித்து ஒலியா. வலிந்து பிரித்துக்கூறின் பொருள்படாது என்பதால், இரட் டித்துக் கூறுதலே மரபு என்பது ஆயிற்று.

எ-டு : ‘சலசல மும்மதம் பொழிய’ (சீவக. 82)

‘கலகல, கூஉந் துணையல்லால்’ (நாலடி. 140)

‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ (புற. 188)

வற்றிய ஓலை கலகலக்கும்’ (நாலடி 256)

‘துடிதுடித்துத் துள்ளி வரும்’

‘துடிதுடித்து’ என்புழிப் பின்னையது பிரிந்திசைக்குமேனும் முன்னையது பிரிந்திசையாமையின் இரட்டைச் சொல்லே- யாம் என்க. (நன். 396 சங்.)

இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர்களிடையே வேறுபாடு -

{Entry: C03__365}

குறுகுறுத்தது, சலசல: இரட்டைக்கிளவி ; பாம்பு பாம்பு : அடுக்குத் தொடர்.

இரட்டைக் கிளவியில் ஒரு சொல் முழுதும் இருமுறை வாராது. முன்மொழி குறைந்தும் வரப்பெறும். அஃது இலை யிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்று மையும் உடையது; இருமுறையே சொல் நிகழ்வது; இசை குறிப்பு பண்பு - இவை பற்றியே வருவது.

அடுக்குத் தொடரில் ஒரு சொல் முழுதும் இரண்டு மூன்று நான்கு எல்லை வரை அடுக்கி வரும். அது விலங்கிரட்டை மக்களிரட்டை போலத் தனித்தனிச் சொற்களாய்ப் பிரிக்கத் தக்க நிலையில் வருவது. அசைநிலைக்கு இருமுறையும், பொருள்நிலைக்கு இரண்டு மூன்று முறையும், இசைநிறைக்கு இரண்டு மூன்று நான்கு முறையும் சொல் அடுக்கி வரப் பெறும். பொருள்நிலை, விரைவு - தெளிவு - அச்சம் - முதலாகப் பல வகைப்படும். (தொ. சொ. 48, 424 நச். உரை)

இரட்டைக்கிளவியைப் பிரித்தால் படும் இழுக்கு -

{Entry: C03__366}

‘இரட்டைக்கிளவி’ : முன் இருபத்திகள் காண்க.

இரண்டன் உருபு ஈரிடத்து வருதல் முதலியன -

{Entry: C03__367}

‘இனையவை பிறவும்’ என்றதனால், யானையைக் கோட்டைக் குறைத்தான் - என ஈரிடத்தும் இரண்டாவது வருதலும்; இவ் வாறே மணியை நிறத்தின்கண் கெடுத்தான் - மணியது நிறத்தைக் கெடுத்தான் - மணியை நிறத்தைக் கெடுத்தான் - எனப் பண்பு பற்றி வருதலும்; தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் - தலைமகனது செலவை அழுங்குவித்தல் - தலைமகனைச் செலவை அழுங்குவித்தல் - எனத் தொழில் பற்றி வருதலும்; சாத்தனை நூலை ஓதுவித்தான் - யாற்றை நீரை விலக்கினான் - எனப் பொருள் தொடர்ச்சி பற்றி வருத லும்; அரசனோடு இளையர் வந்தார் - ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் - என உயர்பொருளும் இழிபொருளும் பற்றி மயங்கி வந்துழி ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்து’ ஆகலும்; நம்பி மகன் - நங்கை கணவன் - என்னும் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன் நங்கைக்குக் கணவன் என வருவனவும் - கொள்க. (இ.வி. 221 உரை)

இரண்டன் பொருளோடு ஏழாவதன் பொருள் மயங்குதல் -

{Entry: C03__368}

மெய்யுறுதல் இன்றி மனத்தான் தொடர்பு கொள்ளும் ‘கருமம் அல்லாச் சார்பி’ன்கண், இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும். சாரப்படுவதே சார்தற்கு இடமும் ஆதலான் இரண்டன் பொருளில் ஏழன்பொருள் மயங்கும்.

எ-டு : அரசனைச் சார்ந்தான், அரசன்கண்(ட்) சார்ந்தான்.

(தொ. சொ. 84 சேனா. உரை)

கன்றலும் செல்லுதலும் முடிக்கும் சொற்களாய் வரும்வழி, அவற்றைக் கொண்டு முடியும் பெயர்களின்கண் இரண்டாவ தும் ஏழாவதும் மயங்கும்.

எ-டு : சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறியின்கண் சென்றான்

(தொ. சொ. 86 சேனா. உரை)

சினைமேல் நிற்கும் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும்.

எ-டு : கோட்டைக் குறைத்தான், கோட்டின்கண் குறைத் தான். (தொ. சொ. 85 சேனா. உரை)

இரண்டாம் வேற்றுமை -

{Entry: C03__369}

இவ்வேற்றுமை தன் பெயர்ப்பொருளை முதல்வேற்றுமை குறிப்பிடும் கருத்தனால் ஆகிய காரியம் ஆக்குதலின் ‘இரண் டாவது’ எனப்பட்டது. இதன் உருபு. ஐ. இது தன்னை ஏற்ற பெயர்ப்பொருளை ஆக்கப்படு பொருளாகவும் அழிக் கப்படு பொருளாகவும் அடையப்படு பொருளாகவும் துறக் கப்படு பொருளாகவும் ஒக்கப்படு பொருளாகவும் உடைமைப் பொரு ளாகவும் இவை போல்வன பிறவாகவும் வேற்றுமை செய்யும்.

எ-டு : குடத்தை வனைந்தான், உடைத்தான், அடைந்தான், துறந்தான், ஒத்தான், உடையான் - என வரும். குடத்தை ஒத்தான் என்புழிச் சுதந்திரம் இன்றி ஒழுகினான் என்பது பொருள்.

இவ்வாறு செயப்படுபொருளாக வேறுபடுத்தல் இவ் வேற் றுமையின் பொருள் என்றவாறு. ஒருவன் ஒருவினை செய்ய, அதனால் தோன்றிய பொருள் யாது, அது செயப்படு பொருள் என்பதாம். ஒருவன் ஒருவினை செய்ய, அத் தொழிற்படு பொருள் யாது, அது செயப்படுபொருள் எனினும் ஆம். (நன். 296 சங்.)

இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் புறனடை -

{Entry: C03__370}

முதல்சினைத் தொடர்பின்கண் இரண்டாம் உருபு வரின், முதல் சினை ஆகிய இரண்டன்பாலும் வாராது தடுமாறி வருதலே மரபு. முதலினை ஐயுருபு பொருந்தின் சினையினைக் கண்உருபு பொருந்தும்; அது உருபு முதலுக்கு வரின் சினைக்கு ஐயுருபு வரும். (இரட்டுற மொழிதலால்) கண்உருபு முதலுக்கு வரின் சினைக்கு ஐயுருபு வரும் எனவும் பொருள் கூறுக.

எ-டு : யானையைக் காலின்கண் வெட்டினான் யானையது காலை வெட்டினான் யானையின்கண் காலை வெட்டினான்

யானையைக் காலை வெட்டினான் என முதல்சினை இரண் டன்கண்ணும் ஐயுருபு வருதல் கூடாது; வரின் செயப்படு பொருள் இரண்டாய் முதல்சினைகள் ஒரு பொருட் பகுதி அல்லவாம் ஆதலின், இங்ஙனம் செய்யப்பட்டது ஒரு பொருளே, முதல்சினைகள் ஒரு பொருட் பகுதியவே என்பது தோன்றக் கண்ணுருபும் அதுவுருபும் வரும் என்பதாயிற்று. (நன். 315 சங்.)

‘யானையைக் காலை’ என்ற தொடரை ‘யானையது காலை’ என்றாவது ‘யானையைக் காலின்கண்’ என்றாவது திரித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் வேற்றுமைப்பாலன : ‘என்ன கிளவியும்’ -

{Entry: C03__371}

இசையைப் பாடும் - பகைவரைப் பணிக்கும் - என வருவனவும் குழையை யுடையன் - வலியையுடையன் - கல்வியை யுடையன் - காவலை யுடையன் - என ஆறாம் வேற்றுமைப்பொருள் மொழிமாற்றாகி வருவனவும் சூத்திரத்துள் ‘என்ன கிளவியும்’ என்பதனால் கொள்ளப்படும்.

மண்ணை வனைந்தான்; நூலை நெய்தான் - செயப்படு பொருளுக்குக் காரணமாகிய பொருள்.

விளிம்பை நெய்தான் - உறுப்பு.

சுவரை எழுதினான் - இடம்.

இவ்வாறு செயப்படுபொருளே யன்றி அதற்குக் காரணமாகிய பொருள்மேலும் பொருளது உறுப்பின்மேலும் இடத்தின் மேலும் இரண்டாவது வருமாறு காண்க. (தொ. சொ. 70 தெய். உரை)

இரண்டாம் வேற்றுமைப் பொருள்கள் -

{Entry: C03__372}

1. ஆக்கற்பொருளன : அறத்தை ஆக்கினான், நூலைக் கற்றான், தேரை ஊர்ந்தான், அணியை அணிந்தான், பொன்னை நிறுத்தான், நெல்லை அளந்தான், நீரைக் கட்டினான் - என்றல் தொடக்கத்தன.

2. அழித்தற் பொருளன : அறத்தை அழித்தான், மரத்தை அறுத்தான், காமனை வென்றான், பகையைக் கொன்றான், ஊரை எரித்தான், மரத்தைக் குறைத்தான் - என்றல் தொடக்கத்தன.

3. அடைதற் பொருளன : அறத்தை அடைந்தான், வீட்டை மேவினான், ஊரை ஒன்றினான், நாட்டை நண்ணினான், குன்றைக் குறுகினான் - என்றல் தொடக்கத்தன.

4. நீத்தல் பொருளன : அறத்தைத் துறந்தான், மறத்தை நீத் தான், வீட்டை விட்டான், பாட்டை ஒழிந்தான் - என்றல் தொடக்கத்தன.

5. ஒத்தல் பொருளன : மண்ணை ஒத்தான், பொன்னை ஒத்தான், சிங்கத்தைப் போன்றான் - என்றல் தொடக் கத்தன.

6. உடைமைப் பொருளன : அருளையுடையான், கொடையை யுடையான், முடியையுடையான் - என்றல் தொடக்கத்தன. (நன். 295 மயிலை.)

இரண்டாம் வேற்றுமைப் பொருளும் பாகுபாடும் -

{Entry: C03__373}

இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருளது. அஃது இயற்றப்படுதல், வேறுபடுக்கப்படுதல், எய்தப்படுதல் - என மூவகைப்படும். இயற்றுதலாவது முன் இல்லதனை உண்டாக் குதல்; வேறுபடுத்தலாவது முன் உள்ளதனைச் சிதைத்தல்; எய்தப்படுதலாவது இயற்றப்படுதலும் வேறுபடுக்கப்படுதலும் இன்றி, வினைமுதல் தொழிற்பயனை உறும் துணையாய் நிற்றல். (தொ. சொ. 71 சேனா. உரை)

இழைத்தல் - இயற்றப்படுதல்; ஓப்புதல் இழத்தல் அறுத்தல் குறைத்தல் தொகுத்தல் பிரித்தல் ஆக்குதல் சிதைத்தல் என்ற எட்டும் வேறுபடுக்கப்படுவன; ஓப்புதல் - ஒரு தொழில் உறுவிக்கப்பட்டுத் தானே போதல்; இழத்தல் - தொழிற்பயன் உற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டு போகப் போதல்; அறுத்தல் - சிறிது இழவாமல் வேறுபடுத்தல்; குறைத்தல் - சிறிது இழக்க வேறுபடுத்தல்; தொகுத்தல் - விரிந்தது தொகுத் தல்; பிரித்தல் - தொகுத்தது விரித்தல்; ஆக்குதல் - மிகுத்தல்; சிதைத்தல் - கெடுத்தல்; காத்தல் ஒத்தல் ஊர்தல் புகழ்தல் பழித்தல் பெறுதல் காதலித்தல் வெகுளல் செறுதல் உவத்தல் கற்றல் நிறுத்தல் அளத்தல் எண்ணுதல் சார்தல் செல்லுதல் கன்றுதல் நோக்குதல் அஞ்சுதல் - என்ற பத்தொன்பதும் எய்தப்படுவன.

கருத்து இல்வழி நிகழும் செயப்படுபொருளும் உண்டு.

எ-டு : சோற்றைக் குழைத்தான்.

செய்வானும் செயப்படுபொருளும் ஒன்றாதலும் உண்டு.

எ-டு : சாத்தன் தன்னைக் குத்தினான்.

இன்னும் இச்செயப்படுபொருள் தன்கண் தொழில் நிகழ்ந்தும் நிகழாதும் வரும்.

எ-டு : மரத்தை அறுத்தான்; ஊரைச் சார்ந்தான்.

இனி, பகைவரைப் பணித்தான், சோற்றை அட்டான், குழையை யுடையான், பொருளை இலன் - என்றாற் போல்வனவும் கொள்ளப்படும். (தொ. சொ. 73 நச். உரை)

இரத்தற்பொருட் சொற்களும், அவை பயன்படும் இடங்களும் -

{Entry: C03__374}

ஈ தா கொடு என்னும் மூன்றும் இரத்தல் பொருள் தரும் சொற்கள். ‘ஈ’ இழிந்தோன் உயர்ந்தோனை இரத்தற்கண் ணும், ‘தா’ ஒருவன் ஒப்போனை இரத்தற்கண்ணும், ‘கொடு’ உயர்ந்தோன் இழிந்தோனை வேண்டற்கண்ணும் பயன்படும்.

(அன்னாய் ஈ, நண்ப தா; மைந்த கொடு - எனவரும்)

(தொ. சொ. 444 - 447 சேனா.)

இராசபவித்திரப் பல்லவதரையன் பகரும் பத்துஎச்சம் -

{Entry: C03__375}

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் ...... எண்ணெ ன்ப ஏனை..........., யாதனின் யாதனின்........... (குறள். 308, 392, 341) என வரும் இவை முறையானே ‘ பிறர் இன்னா செயினும் தான் வெகுளாமை நன்று’ எனவும், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப உலகத்து வாழும் உயிர்க்கெல்லாம் கண்ணென்ப கற்றார் ’ எனவும், ‘யாதனின் யாதனின் நீங்கியான் ஒருவன் நோதல் அதனின் அதனின் இலன்’ எனவும் இவ்வாறு எஞ்சிய பெயர் கொண்டு முடிதலின் பெயரெச்சம் ஆயின.

காலம் கருதி.........., வேண்டின் உண்டாக........, நுண்மாண் நுழைபுலம்.......... (குறள். 485, 342, 407) என வரும் இவை முறையானே, ‘ கொள்ளு ம் காலம் குறித்துக் கலங்காதிருப்பர் ஞாலம் கருதுபவர்’ எனவும், ‘ உய்ய வேண்டின் காலம் உண்டாகத் துறக்க; துறந்தபின் இப்பிறப்பில் உய்யற்பாலன பல’ எனவும், ‘நுண்ணறிவில்லாதான் எழில் நலம் மண்மாண் புனைபாவை எழில்நலம் எற்று , அற்று’ எனவும், வினையும் வினையுள் அடங்கும் வினைக்குறிப்பும் கொண்டு முடிதலின் வினையெச்சமாயின.

‘இலங்குவாள் இரண்டினால் இருகை வீசிப் பெயர்ந்து ’, ‘இருதோள் தோழர் பற்ற’ - இவை ‘இருகை யும் வீசி’ எனவும் ‘இருதோ ளும் பற்ற’ எனவும் உம்மை கொண்டு முடிதலின் உம்மையெச்சம் ஆயின.

‘கடியென்றார் கற்றறிந் தா ர்’ (நாலடி. 56) , ‘இசையா ஒருபொருள் இல் என்றல்’ (நாலடி. 309) இவை ‘கடி என்று சொன்னார் ’ எனவும், ‘இல்லென்று சொல்லுதல் ’ எனவும் சொல் என்பது கொண்டு முடிதலின் சொல்லெச்சம் ஆயின.

‘அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம், பொறுமின் பிறர் கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம், வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ் ஞான் றும், பெறுமின் பெரியோர்வாய்ச்சொல்’ - (நாலடி. 172) - இதனுள் ஒருவழி நின்ற ‘ எஞ்ஞான்றும் , என்ற தனைப் பிரித்துப் பிறவழியும் கூட்டி முடிக்க வேண்டுதலின் பிரிநிலையெச்சம் ஆயிற்று. இதனை ‘விளக்கு’ என்றும் கூறுப.

‘எடுத்தலும் படுத்தலும் ஆயிரண்டல்லது, நலிதல் இல்லை என்மரும் உளரே’, ‘வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமால்......... இரும்புலி சேர்ந்த இடம் (பு. வெ. 3 : 19) எனவரும் இவை, ‘எடுத்தலும் படுத்தலும் என இவ்விரண்டல்லது’ எனவும், ‘இரும்புலி சேர்ந்த இடம் என வியப்பாமால்’ எனவும் ‘என’ என்பது கொண்டு முடிதலின் எனவென் எச்சம் ஆயின.

செறுநரைக் காணின்....... (குறள். 488) ‘கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட, விலங்கிற்கும் விள்ளல் அரிது’ (நாலடி. 76) - என வரும் இவை, ‘கிழக்காம் தலை’ என்பதன் துணிபு தோன்று தற்கு ஒழிக்கப்பட்ட ‘ அவர்கெடுவர் ’ என்பதையும், கலந் தாரைக் கைவிடுதல் அருமை தோன்றுதற்கு ஒழிக்கப்பட்ட ‘ மக்கட்கு எளிதோ ’ என்பதையும் கொண்டு முடிதலின் ஒழியிசை எச்சம் ஆயின.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்.........., ‘கூத்தாட் டவைக் குழாத் தற்றே............ (குறள். 10, 332) என வரும் இவை, ‘இறைவனடி சேர்ந்தார் நீந்துவர்’ எனவும், ‘கூத்தாட்டவைக் குழாத்து வரவு எற்று, அற்று அவர் பெற்ற செல்வத்து வரவு ’ எனவும் இவற்றது எதிர்மறை கொண்டு முடிதலின் எதிர்மறை எச்சம் ஆயின.

இனி இசையெச்சமாவது ஒன்று சொல்ல அச்சொல்லானே வேறொரு பொருள் இசைத்தல். அஃதாவது இரட்டுற மொழிதல் என்றவாறு.

எ-டு : ‘வந்தவரவு என்னையென’ (சீவக. 2020)

என வரும் இது, சொன்னபொருளொழிய வேறு இசைந்த பொருள் கொண் டு முடிதலின் இசையெச்சம்.

‘பீலிபெய் சாகாடும்............,’ ‘கடலோடா கால்வல்.............’ (குறள், 475, 496) எனும் இவை முறையே ‘மெலியாரும் பலர் தொகின் வலியார் ஆகுப’, ‘இவ்விடம் இவர்க்குச் செல்லும்; இவ்விடம் இவர்க்குச் செல்லாது என அவ்வவர்க்கேற்ற இடனறிந்து கருமம் கொள்க’ எனக் குறித்த பொருள் கொண்டு முடித லின் குறிப்பெச்சம் ஆயின. இதனை ‘ நுவலாநுவற்சி ’ என்றும் கூறுவர்.

இப்பத்து எச்சமும் ‘புவிபுகழ் புலமை அவிநயன் நூலுள், தண்டலங் கிழவ ன் தகைவரு நேமி, எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப், பல்லவ தரைய ன் பகர்ச்சி என்று அறிக.’ (நன். 359 மயிலை.)

‘இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றனை ஒழி’த்தல் -

{Entry: C03__376}

மக்கள் உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயர் ; பெற்றம் அஃறிணையில் ஆண் பெண் இருபாற்கும் பொதுப்பெயர்.

வருமாறு :

அ) ஆயிரம் மக்கள் தாவடி போயினார் என்புழி, மக்கள் என்னும் உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயரும், போயி னார் என்னும் உயர்திணை இருபாற்கும் பொது வினையும் ‘தாவடி’ என்னும் குறிப்பினால் பெண்பாலை ஒழித்தன. (தாவடிபோதல் - தாண்டிப் போதல்)

ஆ) பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர், என்புழி, மக்கள் என்னும் பொதுப்பெயரும், ‘உளர்’ என்னும் உயர்திணை ஆண்பெண் என்னும் இருபாற்கும் பொதுவினையும் ‘பொறையுயிர்த்தல்’ என்னும் குறிப்பினான் ஆண்பாலை ஒழித்தன.

இ) இப்பெற்றங்கள் உழவு ஒழிந்தன - என்புழிப் பெற்றங்கள் என்னும் அஃறிணை ஆண்பெண் இருபாற்கும் பொதுப் பெய ரும், ஒழிந்தன என்னும் அஃறிணை ஆண்பெண் இருபாற்கும் பொதுவினையும் ‘உழவு’ என்னும் குறிப்பினால் பெண் பாலை ஒழித்தன.

ஈ) இப்பெற்றங்கள் பால் சொரிந்தன - என்புழி, பெற்றங்கள் என்னும் பொதுப்பெயரும் சொரிந்தன என்னும் பொது வினையும் ‘பால்’ என்னும் குறிப்பினானே அஃறிணைக்கண் ஆண்பாலை ஒழித்தன. (நன். 352 சங்.)

இருதிணை ஆண்பெண்பாற்கண் மரபுவழுக் காத்தல் -

{Entry: C03__377}

தொடி அணிதல் இருபாற்கும் ஒக்குமேனும், ‘தொடியோர் கொய்குழை அரும்பிய’ என்புழித் தொடியோர் என்பது மகளிரையே உணர்த்தும். மக்கள் என்ற சொல் இருபாற்கும் பொதுவேனும், ‘வடுக அரசர் ஆயிரவர் மக்களை உடையர்’ என்புழி, மக்கள் என்பது ஆண்களையே சுட்டும். இவை உயர்திணைக்கண் பெயரால் பிரிந்தன.

வாழ்க்கைப்படுதல் ஆண்பெண் இருபாற்கும் ஒக்குமேனும், ‘வாழ்க்கைப்பட்டார்’ என்புழி, வாழ்க்கைப்படுதல் பெண் பாற்கே உரியதாகிறது. கட்டிலேறுதல் இருபாற்கும் ஒக்கு மேனும், ‘இவர் கட்டிலேறினார்’ என்புழிக் கட்டிலேறுதல் ஆண்பாற்கே உரித்தாகிறது. இவை உயர்திணைக்கண் தொழிலால் பிரிந்தன.

எருமைத்தன்மை ஆண்பெண் இருபாற்கும் ஒக்குமேனும், ‘நம்பி நூறு எருமையுடையன்’ என்புழி, எருமை என்பது பெண்ணெருமையையே குறிக்கிறது. யானைத்தன்மை ஆண்பெண் இருபாற்கும் ஒக்குமேனும், ‘நம்பி ஆயிரம் யானை உடையன்’ என்புழி, யானை ஆண்யானையையே உணர்த்து கிறது. இவை அஃறிணைக்கள் பெயரால் பிரிந்தன.

(தொ. சொ. 50 சேனா.)

யானை ஓடிற்று - என்புழி, யானை ஆண்பாலையே உணர்த் திற்று. யானை நடந்தது என்புழி, யானை பெண்பாலையே உணர்த்திற்று. இவை அஃறிணைக்கண் வினையால் பிரிந்தன.

(தொ. சொ. 50 நச். உரை)

பெயர் பற்றியும் தொழில் பற்றியும் பாற்பொதுமையை விலக்கி ஒருபாற்கே உரிமையாக்குதல் மரபு ஒன்றே காரண மாக - என மரபுவழுக் காத்தவாறு.

இருதிணை ஐம்பால் வினைமுற்று ஈறுகள் -

{Entry: C03__378}

அவை, ன் ள் ர் - ப மார் - து று டு - அ ஆ வ - என்னும் பதினொன்றுமாம். (தொ. சொ. 10 சேனா. உரை)

இருதிணைக்கும் குறிப்புவினை பதினெட்டு -

{Entry: C03__379}

இருதிணைக்கும் ஓதிய குறிப்பு வினைமுற்றுக்கள், அம் ஆம் எம் ஏம் என் ஏன், ஐ ஆய் இர் ஈர், அன் ஆன் அள் ஆள் அர் ஆர் து அ - என்னும் இறுதிநிலைகளை யுடையனவாம். இவை முறையே தன்மை முன்னிலை படர்க்கையிடங்களுக்கு உரியன.

எ-டு : கரியம் கரியாம் கரியெம் கரியேம் கரியென் கரியேன்; கரியை கரியாய் கரியிர் கரியீர்; கரியன் கரியான் கரியள் கரியாள் கரியர் கரியார் கரிது கரிய - என முறையே தன்மை முன்னிலை படர்க்கை யென இம்மூவிடத்தும் வருமாறு காண்க.

டுவ் விகுதி அஃறிணை ஒன்றன்பால் குறிப்பு முற்றுக்கே உரியது.

எ-டு : கட்டு (கண்ணையுடையது) (தொ. சொ. 427 நச். உரை)

‘இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய’வாம் பெயர்கள் -

{Entry: C03__380}

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் முறைப்பெயர் - என்ற நான்கு பகுப்புப் பெயர்களும், தான் தாம் - என்ற படர்க்கைப் பெயர்களும், எல்லாம் என்னும் பெயரும், நீயிர் நீ - என்னும் முன்னிலைப் பெயர்களும் இருதிணைக்கும் பொதுப்பெயர்களாம். மக, குழவி போல்வனவும் அன்ன.

(தொ. சொ. 174 சேனா.)

‘இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய’ வாம் வினைகள் -

{Entry: C03__381}

முன்னிலை, வியங்கோள், வினையெச்சம், செய்ம்மன என்னும் வாய்பாட்டு வினை, செய்யும் - செய்த - என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம், இன்மை செப்பல் - வேறு - என்னும் குறிப்பு வினை என்பன இருதிணைக்கும் பொது வினைகளாம். (தொ. சொ. 222 சேனா. )

இருதிணைப் பெயர்களும் விரவி வினைகோடல் -

{Entry: C03__382}

‘திணை விரவும் பெயர்க்கண் முடிவு கொள்ளுமாறு’ காண்க.

இருதிணைப் பொது -

{Entry: C03__383}

இருதிணைக்கும் பொதுவாயதொரு பொருளின்மையான் அதனால் நிகழும் விரவுத்தொழில் என்பதொன்று இன்றால் எனின், அவ்விரவுத்தொழிலைக் கூறுகின்றவன் அதனை நிகழ்த்திய வினைமுதல் உயர்திணை அஃறிணை என்பது உணர்ந்தே கூறுமாயினும், பால் காட்டும் ஈறின்மை காரணத் தான் கேட்டோன்உணர்வு இருதிணை வினைமுதல்மேலும் ஒருங்கு சேறலின் அவ்வினைமுதற் பொருண்மையான் நிகழும் விரவுத்தொழிலும் உளதாயிற்று என்க. (இ.வி. 236 உரை)

இருதிணைப் பொதுப்பெயர் : தொகை -

{Entry: C03__384}

முதற்பெயர் நான்கு, சினைப்பெயர் நான்கு, சினைமுதற் பெயர் நான்கு, முறைப்பெயர் இரண்டு, தன்மைப்பெயர் நான்கு, முன்னிலைப்பெயர் ஐந்து, எல்லாம் - தாம் - தான் - என்பனவும் இன்னனவும் இருதிணைக்குமுரிய பொதுப்பெய ராம்.

இன்னன என்றமையால், சூரியன் உதித்தான் - சூரியன் உதித்தது என ஒரு பொருளையே உயர்திணையாக்கியும் அஃறிணை யாக்கியும் கூறப்படும் பொதுப்பெயர் முதலி யனவும், ஊமை வந்தான் - ஊமை வந்தாள் - என உயர்திணை இருபாலையும் உணர்த்தும் பொதுப்பெயர் முதலியனவும், தன்மை முன்னிலை வினையாலணையும் பெயரும் (முயங்கி னேன், முயங்கினேம்; உண்டாய் உண்டீர்), பிறவும் கொள்க. (நன். 282 சங். உரை)

இருதிணைப் பொதுப்பெயர் வகை -

{Entry: C03__385}

அ) ஆண்மை இயற்பெயர், ஆ) ஆண்மைச் சினைப்பெயர்

பெண்மை இயற்பெயர் பெண்மைச் சினைப்பெயர்

ஒருமை இயற்பெயர்; ஒருமைச் சினைப்பெயர்;

பன்மை இயற்பெயர் பன்மைச் சினைப்பெயர்

இ) ஆண்மைச் சினைமுதற்பெயர்

பெண்மைச் சினைமுதற்பெயர்

ஒருமைச் சினைமுதற்பெயர்

பன்மைச் சினைமுதற்பெயர்

ஈ) ஆண்மை முறைப்பெயர், பெண்மை முறைப்பெயர்;

உ) தன்மைப் பெயர்கள் : யான் நான் யாம் நாம்;

ஊ) முன்னிலைப் பெயர்கள் : எல்லீர் நியிர் நீவிர் நீர் நீ;

எ) எல்லாம் தாம் தான் - என்பன இருதிணைப் பொதுப் பெயர்கள். (நன். 283, 285)

இருதிணைப் பொதுவினைகள் -

{Entry: C03__386}

முன்னிலை, வியங்கோள், பலவாய்பாட்டு வினையெச்சம், இன்மை செப்பும் கிளவிகளாகிய இல்லை இல் - என்பன, வேறு என்னும் குறிப்புவினை, செய்ம்மன, செய்யும் - செய்த - என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் - ஆகிய எட்டும் இருதிணைப் பொது வினைகளாம். இல்லை, இல், வேறு - என்பன தம்மைக் குறிப்பன. செய் என்னும் வாசகம் எல்லாத் தொழிலையும் அகப்படுத்து நிற்கும். முன்னிலை வினைச் சொல் எதிர்முகமாய் நின்றான் தொழிலுணர்த்துவது. வியங்கோள் ஏவல்பொருட்டாய் வருவது; வாழ்த்துதல் முதலிய பிற பொருளிலும் சிறுபான்மை வரும்.

வினையெஞ்சு கிளவி : வினையை ஒழிபாக உடைய வினைச் சொல். இது செய்து செய்யூ செய்பு முதலிய பல வாய்பாட் டான் வரும்.

இன்மை செப்பல், வேறு : மேல் கூறப்பட்டன கொள்க.

செய்ம்மன : மன ஈற்று முற்றாகவும், மன ஈற்றுப் பெயரெச்ச மாகவும் வரும் வாய்பாடுகள்.

செய்யும் : முற்றும் பெயரெச்சமுமாகி வரும் உம் ஈற்று வினைச் சொல்.

செய்த : அகர ஈற்றுப் பெயரெச்சம். (தொ. சொ. 224 நச். உரை)

அன்று அல்ல வேறு இல்லை உண்டு வியங்கோள் பெய ரெச்ச வினையெச்சங்கள் - என்று சொல்லப்பட்ட எட்டும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத் தும் இருதிணை ஐம்பாலொடும் நடைபெற்றுச் செல்லும் என்றவாறு (நேமி. வினை. 7)

இருதிணைப் பொதுவினை முறைவைப்பு -

{Entry: C03__387}

முன்னிலை என்பது முன் உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் தன்மையும் படர்க்கையும் கூறிய இடங்களுள் கூறாது நின்றது ஆகலானும், தான் பல ஈற்றான் பயின்று வருவதாகிய வழக்குப்பயிற்சி உடைமையானும், முற்றுச் சொல் ஆதலானும் முன் வைக்கப்பட்டது.

இனி அதன் பின்னர் வியங்கோள் முற்றுச்சொல்லுமாய்ப் பெரும்பான்மை வரவு படர்க்கையென ஓரிடமாய்ப் பல வழக்கிற்று ஆகலான் வைக்கப்பட்டது. அவையிரண்டும் அவற்றுப் பொருண்மையான் பல ஈற்றை ஒன்றாக அடக்கப் பட்டன. அவற்றின் பின்னர் அவை போல வழக்குப் பயிற்சி யுடைமையான் வினையெச்சம் வைக்கப்பட்டது. இஃது அச் சொல்லின் முடிபிலக்கணத்தான் ஒன்றாக அடக்கி ஓதப்பட் டது. இன்மை செப்பலும் வேறு என் கிளவியும் முன்னிலையும் வியங்கோளும் போல முற்றே எனினும் வினையெல்லாம் போலாது சிறுவரவின ஆகலானும், வினைக் குறிப்பின் ப(த)ன்மையானும் வினை யெச்சத்தின் பின் வைக்கப் பட்டன. அவற்றின் பின்னர்ச் செய்ம்மன என்பது தெரிநிலை முற்றே எனினும் பலவாய்பாட்டதாயினும் வழங்குவார் இன்மையின் வைக்கப்பட்டது. அதன் பின்னர்ச் செய்யும் என்பது ஒருவழி முற்றாம் நிலைமையும் உடைத்தாதலின் அதன்பின் வைக்கப் பட்டது. அதன்பின்னர் அதனோ டொத்த பெயரெச்சம் ஆகலின் செய்த என்பது வைக்கப்பட்டது. (தொ. சொ. 224 கல். உரை)

‘இருதிணை மருங்கின் ஐம்பால்’ -

{Entry: C03__388}

உயர்திணைப்பொருளுள் தேவரும் நரகரும் எனவும் உயர் திணைப்பாலுள் பேடியும் அலியும் எனவும் விரிந்து நின்றன வும், பொருள்கள் உண்மையின் இப்பொருட் பகுதி எல்லாம் சொற்பகுதி பிற இன்மையின் ஐந்தாய் அடங்கினவே எனினும், அப்பொருட் பாகுபாடு பற்றி நூலகத்து வேறு திணையும் பாலுமாக விளங்கவும் கூடுங்கொல்லோ என்று மாணாக்கன் ஐயுறுவானாம் என்று இவையல்லது இல்லை என்று வரை யறுத்து ‘இருதிணை ஐம்பால்’ எனப்பட்டது. (தொ. சொ. 10 கல். உரை)

இருபத்துமூன்று உயர்திணை வினைமுற்று ஈறுகள் -

{Entry: C03__389}

அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் றும் - கு டு து று என் ஏன் அல் - என்னும் தன்மைப் பன்மையீறு எட்டும் தன்மை ஒருமை யீறு ஏழும், அன் ஆன் - என்னும் படர்க்கை ஆண்பால் ஈறு இரண்டும், அள் ஆள் - என்னும் படர்க்கைப் பெண்பால் ஈறு இரண்டும், அர் ஆர் ப மார் - என்ற படர்க்கைப் பலர்பால் ஈறு நான்கும் - ஆக இருபத்து மூன்றும் உயர்திணை வினை முற்று ஈறுகள். (தொ. சொ. 208 சேனா. உரை)

இருபெயரொட்டாகுபெயர் -

{Entry: C03__390}

இருபெயரொட்டாய் வரும் ஆகுபெயரும் உள. அவை பொற் றொடி - வெள்ளாடை - கனங்குழை - என்பன. அன் மொழித் தொகையாய்க் காட்டப்பட்டன ஆயினும் ஆகு பெயர்த் தன்மைக்கும் ஈங்குப் பெறும். (நேமி. உருபு. 3 உரை)

இருபெயரொட்டாகுபெயர், அன்மொழித் தொகை : வேறுபாடு -

{Entry: C03__391}

மக்கட் சுட்டு - மக்களாகிய சுட்டு என இருபெயரொட்டுப் பண்புத்தொகை. சுட்டு - நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயராய் மக்கட் பொருளை உணர்த்தி நின்றது. ஆகுபெயராய் நின்ற நன்கு மதிக்கப்படும் பொருளும் மக்களையே உணர்த்தும். அன்மொழித் தொகை அவ்வாறன்றி, வெள்ளாடை என்றால் வெண்மையும் ஆடையும் அன்றி உடுத்தாளையே உணர்த்தி நிற்கும். இது தம்முள் வேற்றுமை. (தொ. சொ. 115, 418 நச். உரை)

இருபெயரொட்டு -

{Entry: C03__392}

ஆகிய என்ற சொல்லான் விரிக்கப்படும் வகையில், பெரும் பான்மையும் சிறப்பும் பொதுவும் ஆகிய இரண்டு பெயர்கள் ஒட்டி நின்று ஒருசொல்நீர்மைப்பட்டு, ஆகிய என்ற அச்சொல் லான் பண்புத்தொகை போல விரிக்கப்படுதலான் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை என்னும் காரணக்குறி எய்திற்று.

எ-டு : சாரைப்பாம்பு, கேழற்பன்றி, வேழக்கரும்பு, இடைச் சொற் கிளவி

இவை தம்பொருளை உணர்த்தும் பெயர்ப்பெயர்கள் இரண்டு கூடிநின்று விசேடித்தலை உணர்த்தும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையாம். இவற்றுள் சாரை முதலிய முன் மொழிகள் பின்மொழி இன்றியும் தம் பொருளுணர்த் துமாறு காண்க. பிற பண்புத்தொகைக்கும் இவ்விருபெய ரொட்டுப் பண்புத்தொகைக்கும் இடையே வேறுபாடு இது. ‘இன்னது இது’ என, முன்மொழி பின்மொழியை விசேடிப்ப தாகப் பண்புத்தொகை அமையும். (தொ. சொ. 416 நச். உரை)

இரண்டு பெயர் தொக்கு ஒருசொல்நீர்மைப்பட்டு மற்றொரு பொருள்தருபெயராகி வருவது இருபெயரொட்டாகுபெயர். அது துடியிடை என்பது. துடிநடுப் போன்ற இடையினை யுடை யாளைத் துடியிடை என்ப ஆகலின் ஆகுபெயர் ஆயிற்று.

துடியிடை உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ எனின், ஒட்டுப்பட்ட பொருளோடு ஒற்று மையுடையது ஆகுபெயர். ‘துடி’ இடைக்கு அடை மொழி. இடை, இடையுடையாளைக் குறிக்கும். அன்மொழித் தொகையாவது முன்மொழியும் பின்மொழியும் அல்லாத மொழியில் பொருள் சிறந்து ஒட்டுப்பட்ட தொகைச்சொல் பொருளின் வேறாகி வருவது. துடியிடை பெண்ணைக் குறிக்கும். துடி என்னும் முன்மொழி இடைக்கு அடையாத லன்றிப் பெண்ணுக்கு அடையாகாமையான் அன்மொழித் தொகை முன்மொழியில் அமையாது என்பது. (தாழ்குழல் என்றவழி அதனையுடையாட்குப் பெயராகிப் பொருள் ஒற்றுமைப்பட்டு வருதலான் ஆகுபெயராதல் அன்றி அன் மொழித்தொகை ஆகாது. முன்மொழி ‘தாழ்’ குழற்கு அடை யாதலன்றி அதனை யுடையாட்கு ஆகாமை காண்க. உவமத் தொகை வினைத்தொகை - இவற்றின் புறத்தே அன்மொழித் தொகை பிறவாது என்பது தொல்காப்பியனார் கருத்து என்பர் இவ்வுரையாளர்.) (தொ. சொ. 111 தெய். உரை)

இருபெயரொட்டு ஆகுபெயர் ஆதல் -

{Entry: C03__393}

எ-டு : வகரக்கிளவி (எ. 81), மக்கட்சுட்டு

கிளவி என்பது ஆகுபெயரான் எழுத்தைக் குறிக்கும்; சுட்டு என்பது ஆகுபெயரான் சுட்டப்படும் பொருளைக் குறிக்கும். வகரம் மக்கள் என்பன அவ்வாகுபெயர்ப் பொருளை விசே டிக்க, வகரமாகிய எழுத்து மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்று அமைவது இருபெயரொட்டு ஆகுபெயராம்.

இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்று என்பது இளம்பூரணர் சேனாவரையர் கல்லாடர் பழைய உரைகாரர் - இவர்கள் கருத்தாம். (114, சேனா உரை, 116 கல். உரை)

இருபெயரொட்டு ஆகுபெயர் பொற்றொடி. இதனைத் தொகையாகக் கருதியவழி அன்மொழித் தொகையாம்; பெயராகக் கருதியவழி ஆகுபெயராம்; (சேனா.)

படுத்தல் ஓசைப் பட்டவழி அன்மொழித்தொகை; எடுத்தல் ஓசைப்பட்டவழி ஆகுபெயர். (112 தெய். உரை)

குணியோடு குணத்துக்கு உண்டாகிய ஒற்றுமை நயத்தை விளக்குதற்கு வரும் ஆகிய என்னும் மொழியாகிய பண்புருபு தொக்கு நிற்பனவும், அப்பண்புருபு தொக்கு நிற்பப் பொதுப் பெயரும் சிறப்புப் பெயருமாய் ஒரு பொருட்கு இருபெயர் வந்தனவும் ஆகிய இவ்விரண்டும் பண்புத்தொகையாம். இவற்றுள், பின்னது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். குணத்தொகை என்றமையான், ஒருபொருட்கு இருபெயர் வந்தவற்றின்கண்ணும் பண்புருபு தொகும் என்பது பெற்றாம், ஆயன்சாத்தன் - வேழக் கரும்பு - என்புழி, ஆயன் என்னும் பொதுப்பெயர் சாத்தன் என்னும் சிறப்புப்பெயரை விசேடித்தும், வேழம் என்னும் சிறப்புப்பெயர் கரும்பு என்னும் பொதுப்பெயரை விசேடித்தும் வந்தன. (நன். 365 சங்.)

இருபொருள் ஒருசொல் -

{Entry: C03__394}

ஒருசொல் ஒருகால் கூறற்கண்ணே இரண்டு பொருளைப் புலப்படுத்தி நிற்பது.

எ-டு : ‘குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத’ (சிலப். 4; 15,16)

குழல் வளர் முல்லை - வேய்ங்குழலில் தோன்றும் முல்லைப் பண்ணையும், கூந்தலில் அணியும் முல்லைப்பூவையும் புலப் படுத்தும். (தொ. சொ. 460 நச். உரை)

இருமடி ஏவல் -

{Entry: C03__395}

நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி - என வருவன இருமடி ஏவல் என்பாருமுளர். நடத்து: ஏவல்: நடத்துவி: ஏவல்மேல் ஏவல்; நடத்துவிப்பி: ஏவல்மேல் ஏவல்மேல் ஏவல்; இது மும்மடி ஏவல். வருவிப்பி, நடப்பிப்பி: ஏவல்மேல் ஏவல்; இஃது இருமடி ஏவல். இங்ஙனம் இருகால் ஏவுதல் கூறியது கூறலாம் ஆதலின் இஃது இழிவழக்காம். (தொ. சொ. 226 நச். உரை)

இருமொழியின்கண்ணும் இலக்கணம் ஒன்றே -

{Entry: C03__396}

குணத்தையுடையது குணி, பண்பையுடையது பண்பி, மொழியால் வேறுபட்டதன்றி இலக்கணம் ஒன்றே. இவை போலவே, உடைமை (திரவியம்), உடையான் (திரவிய விசிட்டன்), பகுதி (பிரகிருதி), விகுதி (விகிருதி), பகுபதம் (கண்டபதம்), உருபு (பிரத்தியம்), பொருள் (பதார்த்தம்), திணை (சேதனா சேதனா பேதம்), பால் (லிங்கம் : சொற் பற்றிப் பால்), இடம் (பிரதம மத்திம உத்தம புருடத்திரயம்) - இப்பத்து முதலிய பல இலக்கணங்களும் இருமொழிக்கும் ஒன்றே. இதுவே பெரும்பான்மை; சிறுபான்மை வேறுபடுதலுமுண்டு. அஃது இருதிணைப் பகுப்பும், ஆண்பால் பெண்பால் வினையீறு களும் வடமொழிக்கு இல்லை. மூன்று லிங்கமும், முதல் விளி வேற்றுமைகட்கு உருபுகளும் தமிழுக்கு இல்லை. (இ. கொ. 7)

இருவகை எச்சத்திற்கும் பொதுவான தொடர்வினை -

{Entry: C03__397}

இலக்கணக் கொத்து வினையை நட வா முதலிய முதனிலைத் தனிவினை என்றும், விகுதி முதலிய கூடிய (நடந்த - நடந்து - நடந்தான் - முதலாகிய) தொடர்வினை என்றும் இருவகை யாகக் கொள்ளும். அவற்றுள் தொடர்வினையைப் பலவாறு பகுத்துக் கூறும் நூற்பா, ‘தொடர்வினை இருவகை எச்சத்திற் கும் பொதுவினை ஆகும்’ என்று குறிப்பிடுகிறது.

எ-டு : தேடிய பொருள் - (தேடப்பட்ட) செய்த என்னும் பெயரெச்சம்; தேடிய வந்தான் - (தேடும்பொருட்டு) செய்யிய என்னும் வினையெச்சம்; ஓடிய புரவி - பெயரெச்சம்; ஓடிய இழிந்தான் - (ஓடும்பொருட்டு) செய்யிய என்னும் வினையெச்சம்; பாங்கனொடு கூடிய தலைவன் - பெயரெச்சம்; தலைவியொடு கூடிய வந்தான் - (கூடும்பொருட்டு) செய்யிய என்னும் வினையெச்சம். (இ. கொ. 67)

ஆயின், பெயரெச்சம் அகர ஈற்றது என்றும், வினையெச்சம் ‘இய’ ஈற்றது என்றும் கொள்வர் நச்சினார்க்கினியர். (தொ. சொ. 230, 458)

இருவகை எச்சமும் முற்று ஆதல் -

{Entry: C03__398}

வெறுத்த ஞானி வீட்டை அடைந்தான் - வெறுத்தான் ஞானி எனவும், சாத்தன் உழுது வந்தான் - சாத்தன் உழுதான் எனவும் பொருள்பட்டு, முறையே பெயரெச்சமும் வினையெச்சமும் முற்றாயின. (இ. கொ. 82)

இருவகைச் செப்பு -

{Entry: C03__399}

செவ்வன் இறை, இறை பயப்பது - என்பன இருவகைச் செப்பாம். ‘சாத்தா, உண்டாயோ?’ என்றார்க்கு, ‘உண்டேன்’ ‘உண்டிலேன்’ என்பன நேரே விடையாக அமைதலின் இவை செவ்வன் இறையாம். ‘சாத்தா உண்டாயோ?’ என்றார்க்கு, ‘வயிறு குத்திற்று’ என்றாற் போன்ற விடை ‘உண்டிலேன்’, என்ற கருத்தை நேராகத் தாராது போந்த பொருளாகத் தருதலின் இறைபயப்பதாம்.

செவ்வனிறை : வழாநிலை; இறைபயப்பது: வழுவமைதி. (தொ. சொ. 13 சேனா. உரை)

இருவகைச் செயப்படுபொருள் கருத்தா -

{Entry: C03__400}

வினைமுதலாகிய கருத்தா தோன்றுமிடம் ஏழனைக் குறிப் பிடுகிறது இலக்கணக்கொத்து. அவற்றுள் முதல் இரண்டு வருமாறு:

1. தேற்றத்தொடு கூடிய செயப்படுபொருள் நிலைக்களனாகத் தோன்றும் கருத்தா.

2. தேற்றத்தொடு கூடாத செயப்படுபொருள் நிலைக் களனாகத் தோன்றும் கருத்தா.

எ-டு : ‘பிறர்க்கின்னா முற்பகல்........ வரும்’ (குறள் 193)

‘பெரியவர் கேண்மை....... தொடர்பு’ (நாலடி 125)

இப்பாடல்களில் ‘இன்னா தாமே வரும்’, ‘கேண்மை தானே நந்தும்’, ‘தொடர்பு தானே தேயும்’ - எனச் செயப்படு பொருள் களே தேற்றத்தொடு கூடிக் கருத்தாவாகிச் செயப்படு பொருள் குன்றிய வினையைக் கொண்டு முடிந்தன.

2. திண்ணை மெழுகிற்று, கூரை வேய்ந்தது - எனச் செயப் பொருள் தேற்றம் இன்றிச் செயப்படுபொருள் குன்றா வினைகொண்டு முடிந்தன. (இ. கொ. 26)

இருவகை நூல் பிறிதின்கிழமை -

{Entry: C03__401}

ஆறாம் வேற்றுமையின் வகைகளான ஒற்றுமைக்குறை வேற்றுமைக்குறை என்னும் இரண்டனுள், ஒற்றுமைக்குறை யில் உட்பகுப்பு இல்லை. வேற்றுமைக்குறை, ஒன்றாய்த் தோன்றல் - உரிமையாய்த் தோன்றல் - வேறாய்த் தோன்றல் - என மூன்று உட்பிரிவுகளை உடையது. (இவற்றைத் தனித் தனித் தலைப்பிற் காண்க.) இவற்றுள், உரிமையாய்த் தோன் றும் பிறிதின் கிழமையின் ஐந்து வகைகளுள் இரண்டாவதாக வரும் வகை இது. இவ்விரண்டுமாவன ஒருவர் இயற்றிய நூல் பற்றியதும், ஒருவரைப் பற்றி இயற்றிய நூல் பற்றியதும் ஆம்.

எ-டு : சம்பந்தனது தமிழ்: சம்பந்தன் இயற்றிய தமிழ்நூல். சம்பந்தனது பிள்ளைத்தமிழ் : சம்பந்தன்மீது மற்றொருவனால் இயற்றப்பட்ட நூல் (இ. கொ. 40)

இருவகை முற்றும் ஈரெச்சம் ஆதல் -

{Entry: C03__402}

தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் பெயரெச்ச மாகவும் வினையெச்சமாகவும் ஆகப் பெறும்.

எ-டு : உண்டான் சாத்தன் ஊருக்குப் போனான் - இஃது உண்ட சாத்தன் எனவே பொருள்படும். வினை முற்றுப் பெயரெச்சமாயிற்று.

‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5) - இது மோந்து எனப் பொருள்படும். வினைமுற்று வினையெச்சமாயிற்று. இவை யிரண்டும் தெரிநிலை வினைமுற்று ஈரெச்சம் ஆதல்.

‘பெருவேட்கையேன் எற்பிரிந்து’ - இது பெருவேட்கையை யுடைய என்னை எனப் பொருள்படும். குறிப்பு வினைமுற்றுப் பெயரெச்சமாயிற்று.

‘உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து’ (முருகு. 185) இது கையினராய் எனக் குறிப்பு வினைமுற்று வினையெச்ச மாயிற்று. இவையிரண்டும் குறிப்புமுற்று ஈரெச்சம் ஆதல்.

(இ. கொ. 82)

இருவகை வழக்கு -

{Entry: C03__403}

உலகவழக்கும் செய்யுள்வழக்கும் இருவகை வழக்காம். நன்னூலார் கூறும் இயல்புவழக்கும் தகுதிவழக்கும் ஆம். (இ. கொ. 129)

‘இருவயின் நிலையும் பொருட்டு’ -

{Entry: C03__404}

‘இது செயல் வேண்டும்’ காண்க.

‘இருவயின் நிலையும் வேற்றுமை’ -

{Entry: C03__405}

பிறிதொன்றன் பொருளும் தன்பொருளும் ஆகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமை.

எ-டு : நாகர்பலி

நாகர்க்குப் பலி என்று விரியும் இத்தொகை, நாகரது பலி என ஆறாம் வேற்றுமைப் பொருட்கும் உரித்தாயிற்று. கொடை நேர்ந்தவிடத்து, அப்பலி நாகர்க்கு உடைமையாதலின், ஆறன்பொருட்கும் உரித்தாயினவாறு. (தொ. சொ. 99 சேனா. உரை.)

இருவயின் நிலையும் வேற்றுமை திரியாமை -

{Entry: C03__406}

இன்ன பொருட்கு இன்னது உரித்து என வேற்றுமை யோத்துள் எடுத்தோதப்பட்ட வேற்றுமைகள் அவ்வப் பொருட்கு உரிய வாய் நில்லாது பிறபொருட்கண் சென்று மயங்குதல் உண்மை கண்டு, இவை வழுவோ என்று ஐயுறல் கூடாது; அவை பிறபொருள்மேலும் வழங்குதல் தொன்று தொட்டு நிகழ்வ தால் வழாநிலையே ஆம்.

எ-டு : முறைக்குத்தினான் - முறையாற் குத்தினான், முறையிற் குத்தினான் என மூன்றாவதும் ஐந்தாவ தும் ஏதுப்பொருட்கண் மயங்கி வந்தவாறு.

[ முறைக்குத்து - முறையாற் குத்தும் குத்து, முறையிற் குத்தும் குத்து. (சேனா.) ]

கடலொடு காடு ஒட்டாது - கடலைக் காடு ஒட் டாது; தந்தையொடு சூளுற்றான் - தந்தையைச் சூளுற்றான்-

எனத் தொகாநிலையில் வழங்கும் வழக்கின்கண் மூன்றாவத னோடு இரண்டாவது மயங்கிற்று. (தொ. சொ. 103 கல். உரை)

‘இருவரின் முடியும் ஒருவினை’

{Entry: C03__407}

இரு வினைமுதலால் நிகழும் ஒருவினை இது.

எ-டு : தாய் மகவுக்கு ஊட்டினாள், ஆரியன் மாணாக் கனுக்குக் கற்பித்தான்.

இவற்றுள் வினைநிகழ்ச்சிக்கு இரண்டு வினைமுதல் வேண்டப் படுவனவாம். ஊட்டுதற்குத் தாயொடு மகவும், கற்பித்தலுக்கு ஆசிரியனொடு மாணாக்கனும் இருத்தல் இன்றியமையாதது. ஆதலின் இவ்விலக்கணம் ‘இருவரின் முடியும் ஒருவினை’ என்றும் ‘இரு வினைமுதலால் ஒருவினை’ என்றும் விளக்கப் படுகிறது. (இ. கொ. 27)

‘இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்’ -

{Entry: C03__408}

‘இடத்தின் இலக்கணம்’ காண்க.

இருவன் இருத்தி வழுவாதல் -

{Entry: C03__409}

இருவன் இருத்தி என்றல் தொடக்கத்தனவாகி வரின், பன்மைப் பகுதியோடு ஒருமைவிகுதி புணர்ந்து பால் வழு ஆதலின், இரண்டு முதலிய எண்கள் பற்றி அவ்விகுதிகள் தொடரா என்பார் ‘எண்ணில’ என்றார். (நன். 288 சங்.)

‘இருவீற்றும் உரித்து’ : பொருள் -

{Entry: C03__410}

திணைஐயம், அஃறிணைப் பால்ஐயம் - என்ற வேறுபாடு இரண்டன்கண்ணும் ஐயப்புலப் பொதுச்சொல் ஆதலுரித்து. (தொ. சொ. 24 சேனா. உரை)

இலக்கணப் போலி -

{Entry: C03__411}

இலக்கணம் இல்லாமையும் புலவரால் வழங்கும் விகாரங் களும் உள. அவையே இலக்கணப்போலிமொழி என்றும், மரூஉ என்றும் இனிச் சொல்லும்படி வழங்கும். அவற்றுள் இலக்கணப் போலி, இல்முன் - முன்றில், வேட்கைநீர் - வேணீர், நகர்ப்புறம் - புறநகர், வேட்கை அவா - வேணவா, கண்மீ - மீகண், கோவில் - கோயில், பொதுவில் - பொதியில், பின் - பின்றை - என வரும். (தொ. வி. 39 உரை)

இலக்கணப் போலி, மரூஉ : வேறுபாடு -

{Entry: C03__412}

இலக்கணப் போலியையும் மரூஉவினையும் வேறுபாடு அறிந்து கொள்வதற்குச் சான்றோர் அவற்றை ஆண்டு வரு கின்ற ஆட்சியே காரணம் என்க. அல்லாவிட்டால், நிலைமொழி வருமொழிகள் முன்பின்னாக மாறி நிற்பன இலக்கணப் போலி, ஒழிந்த கெடுதியெல்லாம் மரூஉ என்று கொள்ளினும் அமையும். (நன். 267 இராமா.)

இலக்கணப் போலி அடிப்பாட்டில் திரிக்கப்படா; தாமேயாய் நிற்கும்; இல்முன் ‘முன்றில்’ எனவும், கோவில் ‘கோயில்’ எனவும் வரும். மரூஉமொழி இலக்கணத்தானும் சிதைவானும் சொல்லப்படுவன; அருமருந்தன்னான் ‘அருமந்தான்’ என வரும். இவையே தம்முள் வேற்றுமை, (நன். 266 மயிலை.)

இலக்கணம் இல்வழி மயங்கல் -

{Entry: C03__413}

அது என்னும் வாய்பாட்டையுடைய ஆறாம் வேற்றுமை உயர்திணைத் தொகையிடத்து அது என்னும் வாய்பாடு கெட, நான்காவதாய் வரும்.

எ-டு : நம்பிமகன் - நம்பிக்கு மகன் என விரியும், நம்பியது மகன் என்பது இன்மையின். நான்கனுருபிற்கு உடைமைப் பொருள் இன்மையான், நான்காவது விரிந்து ‘நம்பிக்கு மகன்’ என்பது இலக்கணம் இல்வழி மயங்கல். ஆறாவது விரியின் அஃறிணை ஒருமைப்பால் தோன்றி நிற்கும் ஆதலின் உயர் திணைப் பெயர் பின்மொழியாகத் தொகுமாறில்லை என்பது பெற்றாம். (தொ. சொ.96 கல். உரை) [ பின் : காலப்பின் ]

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி -

{Entry: C03__414}

இயல்பு வழக்கு மூன்றனுள், இலக்கண நெறியான் வருவது இலக்கணமுடையது எனப்படும். எ-டு : நிலம் நீர் தீ காற்று ஆகாசம் நன்னிலம் தண்ணீர் - என்றல் தொடக்கத்தன.

இலக்கணம் உடையதன்றிப் படைப்புக்காலம் தொட்டு இலக்கணமுடையதோடு ஒருங்கு படைக்கப்பட்டது போல வருவது இலக்கணப்போலி எனப்படும். இல்முன் என்பதனை முன்றில் என்றும், நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றும், புறவுலா என்பதனை உலாப்புறம் என்றும், கண்மீ என்பதனை மீகண் என்றும், கோவில் என்பதனைக் கோயில் என்றும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன. (நன். 267 சங்.)

இலக்கணமுடையதாவது இலக்கண நெறியான் வருவது. நிலம் நீர் தீ வளி ஆகாயம் சோறு கூழ் பால் பாளிதம் தெங்கு கமுகு மா பலா மாந்தர் மக்கள் மகன் மகள் - என்றல் தொடக் கத்தன இலக்கணமுடையன.

இலக்கணமன்று எனினும் இலக்கணமுடையது போல அடிப் பட்ட சான்றோரால் வழங்கப்பட்டு வருவது இலக்கணப் போலியாம். இல்முன் என்பதனை முன்றில் எனவும் கோவில் என்பதைக் கோயில் எனவும், பொதுவில் என்பதனைப் பொதியில் எனவும், கண்மீ என்பதனை மீகண் எனவும், யாவர் என்பதனை யார் எனவும், எவன் என்பதனை என் எனவும் - இப்பெற்றியான் வருவன இலக்கணப்போலி. இலக்கணப் போலி அடிப்பாட்டில் திரிக்கப்படா, தாமேயாய் நிற்கும். (நன். 266 மயிலை.)

‘இலக்கண மருங்கின் சொல்லாறு அல்லா’ உயர்சொல் -

{Entry: C03__415}

ஓர் எருத்தை ‘எந்தை வந்தான்’ எனவும், ஓர் ஆவை ‘எம் அன்னை வந்தாள்’ எனவும், ‘கொடுங்கோல் கோவலர் பின்னின் று உய்த்தர, இன்னே வருகுவர் தாயர்’ (முல்லைப். 15,16) எனவும் ஒப்புமைகருதாது காதல் பற்றி உயர்த்தி வழங்குதலும்,

கன்னி ஞாழல் - கன்னி எயில் - எனவும், ஓர் எருத்தை நம்பி எனவும், ஒரு கிளியை நங்கை எனவும் அஃறிணையை உயர் திணை வாய்பாட்டான் கூறுதலும், ‘பண்புகொள் பெயர்க் கொடை’ வழக்கினகத்துப் பெருங்கொற்றன் - பெருஞ்சாத் தன் - என இல்குணம் அடுத்து உயர்த்துக் கூறுதலும் - என் னுமிவை இலக்கண முறைமையான் சொல்லும் நெறியல் லாத உயர்த்திக் கூறும் சொற்களாம். (தொ. சொ. 27 நச். உரை.)

இலக்கணா மூலத்தொனி -

{Entry: C03__416}

இலக்கணை அடியாகப் பிறந்த குறிப்புப்பொருள் இது.

‘நல்ல படாஅ பறை’ (குறள் 1115) - இதனுள், நல்ல பறை படா - நற்செயலுக்குரிய பறைகள் ஒலிக்கப்பட மாட்டா - என்பது இலக்கணயால் ’இறப்பு நிகழும்’ என்ற குறிப்பை உணர்த் திற்று.

(‘நட்பிற் குறுப் புக் கெழுதகைமை மற்றதற்கு, உப்பாதல் சான்றோர் கடன்’ என்புழி, ‘உப்பு’ : இலக்கணை அடியாகப் பிறந்த குறிப்புச் சொல் என்றார் பரிமேலழகர். உப்பு ஆதல் - இனிய ராதல். உவர்ப்புச் சுவைக்குரிய உப்பு என்பதற்கு இனிமை என்பது குறிப்பால் பொருளாயிற்று [ ‘கடல் விளை அமுதம் கண்ட’ (சீவக. 805) என்ற பாடற்பொருளை நோக்கி ] (பி. வி. 50)

இலக்கணை -

{Entry: C03__417}

சொல் பொருள்படும் வகையை வடமொழியார் மூன்றாகக் கூறுவர் : 1) சொல் தனது நேரான பொருளை உணர்த்தி நிற்றல் அபிதாவிருத்தி (அபிதை); 2) நேரான பொருள் பொருந்தா விடத்துச் சொல் தன் ஆற்றலான் தனக்குத் தொடர்புடையதை உணர்த்தி நிற்றல் லக்ஷணாவிருத்தி (இலக்கணை); இஃது ஆற்றலான் உணர்த்தப்படும் தொடர்புடைப் பொருள். இதனைச் சக்கிய சம்பந்தம் என்பர். 3) சொல் குறிப்பால் ஒரு பொருளைத் தோற்றுவித்து உணர்த்தல் வியஞ்சனா விருத்தி. இது தாற்பரியம் எனப்படும். எதனைக் குறித்து நின்றதோ அதனை வெளிப்படுத்துதல் என்ற ‘போந்த பொருளும்’ இஃதே எனவும் கூறுப.

தமிழில், சொல்லளவில் பெயர்ச்சொல் தன்னை விட்டுத் தன்னொடு தொடர்புடைய பிறிதொன்றை உணர்த்தும் ஆகு பெயரைக் கொண்டனர். பொருளளவிலும் வருவனவற்றைத் தொல்காப்பியனார் பொருளதிகாரத்தில் ‘உறுப்புடையது போல்....... செய்யா மரபின் தொழிற்படுத்து’ என்று கூறுவர். (தொ. பொ. 196 நச். உரை.)

இலக்கணை போல்வன சொல்லிலக்கணம் ஆவன அல்ல; தருக்கநூற் பொருளாம்.

பிரயோகவிவேகம் இலக்கணைக்குக் கூறும் இலக்கணம் வருமாறு :

சில சொற்கள் பொருள் பொருத்தமுற இடம் பெயர்த்துக் கூட்டும் அந்நுவயத்தால் பொருளொடு தமக்குள்ள தொடர்பு என்னும் சம்பந்தமும், எது பற்றிய குறிப்புடன் நின்றதோ அதுவாகிய தாற்பரியம் என்னும் போந்த பொருளும் தரும் வகையில், தன் நேரான பொருளைத் தருவதில் பொருந்தாமை தோன்ற வருவது இலக்கணை. அஃதாவது, பெயராகவோ வினையாகவோ நிற்கும் சொற்கள் தத்தம் பொருளை உணர்த் தாது, தம் பொருளுக்குத் தொடர்புடைய வேறு பொருளை யும் போந்த பொருளையும் உணர்த்தி வருவது இலக்கணை யாம். (பி. வி. 47)

எ-டு : ‘சென்றது கொல்....... என் நெஞ்சு’

என்னும் இம்முத்தொள்ளாயிரப்பாட்டில், சென்றது - போந்தது - கையூன்றி நின்றது - என்ற வினைகளும் நெஞ்சு என்னும் எழுவாயும் அந்நுவயம் பெற்று (இணைந்து), நெஞ்சுக்கு இத்தகைய தொழில் ஏதும் இன்மையால், மாறன்பால் தான் கொண்ட காதலின் திறத்தை மாத்திரமே உணர்த்தி நின்றன. (இதனை ‘விட்ட இலக்கணை’ என்ப.)

‘குருகினங்காள் கைகூப்பிச் சொல்லீர்’ (திவ். பிர. 3227) என்பதும் அவ்வாறே கொள்ளப்படும்.

‘கங்கையுள் இடைச்சேரி’ என்பது, சேரிக்குக் கங்கையின் பெருமை சேரும் குறிப்பால் வந்தது. கங்கையுள் - நீர்ப் பெருக்கில் - சேரி இருத்தல் பொருந்தாமையால், ‘கங்கைக் கரையில்’ என்ற பொருள் பயந்தது. (இதுவும் ‘விட்ட இலக்கணை’ எனப்படும்)

புளி தின்றான் - முதலின் பெயர் தன் சினையான பழத்தைக் குறித்தது. (இதனை ‘விடாத இலக்கணை’ என்ப.)

இவ்விலக்கணை, விட்ட இலக்கணை - விடாத இலக்கணை - விட்டும் விடாத இலக்கணை - என்று மூவகைப்பட விளக்கப் படுதலுமுண்டு.

இனி, தாற்பரியம் கொள்வனவாகிய இலக்கணை வருமாறு :

‘அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்

பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பரிதி’ (பெரும்பாண். 1, 2)

இருளைப் பருகிப் பகலைக் கக்கி எழும் ஞாயிறு என்பது பொருள். இதன்கண், பருகுதலும் காலுதலும் முறையே அகற்றலும் வெளிப்படுத் தலும் - என்ற பொருள் தந்தன. (இதனை ‘விட்டும் விடாத இலக்கணை’ என்ப.)

பிரயோக விவேகம் கூறும் வகையில் ஆகுபெயரும் இலக் கணையும் வேறல்ல என்பது போதரும்.

இலம்பாடு -

{Entry: C03__418}

இல்லாமை உண்டாதல்; வறுமை. இஃது உரிச்சொல். இலம் என்னும் சொல் (இலமாயினோம் என்னும் தன்மைப்பன்மை பொருட்டன்று.) குறிப்புச்சொல் தன்மைப்பட்டு இன்மை என்னும் உரிச்சொல்லாய் நின்று வறுமை என்னும் உரிச் சொற் பெயரது குறிப்புணர்த்தும். ‘இலம்’ உரிச்சொல் தன்மைப்பட்டு நின்றது. (தொ. சொ. 360 நச். உரை.)

இலேசம் -

{Entry: C03__419}

நூற்பா முதலியவற்றுள் காணப்படும் மிகைச்சொல். இது லவம், வெகுளக் கிரகணம், அதிகம் - என்னும் சொற்களா னும் குறிக்கப்படும். இச்சொல்லால், நூற்பாவால் குறிக்கப் படாத நுண்செய்தியொன்றை வருவித்துரைத்தல் உரையாசி ரியர்தம் கொள்கை. (இலக்கியத்துள் இம்மிகை ‘வேண்டாது கூறிற்று, வேண்டியது முடித்தற்காக’ என்று நயம்பெற விளக் கப்படும். திருக்குறள் பரிமே. உரையுள் காண்க.) (பி. வி. 44)

இலையிரட்டை -

{Entry: C03__420}

இரண்டு இலைகள் பிரிக்க முடியாத வகையில் இணைந் திருப்பது இலையிரட்டை. நடுவில் பிரித்தால் இரண்டு இலைகளும் வடிவு சிதைந்துவிடும் இலையிரட்டைபோன் றது, பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் இரட்டைக் கிளவி. ‘மொறுமொறுத் தார்’ என்னும் இரட்டைக்கிளவியை மொறு எனவும் மொறுத்தார் எனவும் பிரித்தால் பொருள் சிதைந்து விடுவது காண்க. (தொ. சொ. 48 சேனா. உரை)

‘இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே’ -

{Entry: C03__421}

இவை எனத் தம் பெயர்ப்பொருளினை வேறு அறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடைய சொற்களைத் தமக்கு உடையன அல்ல. அவை பேடு, தெய்வம் என்பன. (தொ. சொ. 4 சேனா. உரை)

இழிவு உயர்வு சிறப்பும்மைகள் -

{Entry: C03__422}

‘குறவரும் மருளும் குன்று’, ‘இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது’ - என்பது உயர்வு சிறப்பு. ‘பார்ப்பானும் கள்ளுண் டான்,’ ‘புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை’ - என் பது இழிவுசிறப்பு. ‘பூசையும் புலால் தின்னாது’ என்பதனை இழிவு சிறப்பு என்பாருமுளர். அங்ஙனமாயின், ஒருபொருளி னது உயர்வைச் சிறப்பித்தல் - இழிவைச் சிறப்பித்தல் - எனப் பொருள்படாது, உயர்ந்த பொருளான், மற்றொன்றைச் சிறப்பித்தல் - இழிந்த பொருளான் மற்றொன்றைச் சிறப்பித் தல் எனப் பொருள்படும். அவ்வாறு பொருள்படின், ஓகாரப் பொருளவாய் வரும் உயர்வுசிறப்பிற்கும் இழிவுசிறப்பிற்கும் ஆகாமையின் அது பொருந்தாது. இனி, இவ்வும்மைப் பொருளைக் குறவர் முதலியவற்றில் கொண்டு பூசையும் என்பதனை இழிவு சிறப்பும்மை எனக் கோடலும் ஒன்று. இங்ஙனம் இழிவுசிறப்பு என்பதற்கு இழிவினுட் சிறந்த இழிவு எனப் பொருள் கொள்க. உயர்வுசிறப்பும் அது. பூசைக்குப் புலால் தின்னுதல் இழிபும் தின்னாமை சிறப்புமாகப் பொருள் கொள்ளின், குறவர்க்கு மருளுதல் சிறப்பாக வேண்டுமாதலின் அது பொருந்தாது. (நன். 425 சங்.)

இளமைப் பெயர்கள் -

{Entry: C03__423}

மக குழவி பிள்ளை பார்ப்பு பறழ் குருளை மறி கன்று குட்டி பொரி குழ களபம் - என்றல் தொடக்கத்தன இளமைப்பண்பு அறிசொல். இவற்றுள், மக என்பது மக்கள் - முசு - குரங்கு கட்கு உரித்து. குழவி என்பது மக்கள் - யானை - பசு - எருமை - மான் - மரை - கரடி - சீயம் - வருடை - பருவம் - மீன் - நீர் - கதிர் - மதிகட்கு உரித்து. பிள்ளை என்பது மக்கள் - பூசை - தத்துவன - ஒருசார் தவழ்வன - பறப்பன - கோடு வாழ் விலங்கு, ஓரறிவுயிர்கட்கு உரித்து. பார்ப்பு என்பது பறவைக் கும் தவழ்வனவற்றிற்கும் கோடுவாழ் விலங்கிற்கும் உரித்து. குருளை என்பது ஆளி - புலி - பன்றி - நாய் - மான் - முசு - பாம்புகளுக்கு உரித்து. பறழ் என்பது பன்றிக்கும் புலிக்கும் முயற்கும் நீர்நாய்க்கும் கோடு வாழ் விலங்கிற்கும் உரித்து. மறி என்பது ஆடு - மான் - குதிரை - கவரிமா - கழுதைகட்கு உரித்து. கன்று என்பது பசு - எருமை - ஆமா - மரைமா - மான் - குதிரை- கவரிமா - ஒட்டகம் - யானை - ஒருசார் ஓரறிவுயிர்கட்கு உரித்து. குட்டி என்பது சிங்கம் - புலி - கரடி - யானை - குதிரை - ஒட்டகம் - மான் - ஆடு - நாய் - பன்றி - முயல் - நரி - குரங்கு - முசு - கீரி - நாவி - வெருகு - பாம்பு - அணில் - என்பனவற் றிற்கு உரித்து. பொரி என்பது எருமைக்கு உரித்து. குழ என்பது ஆவிளங்கன்றுக்கும் எருமைக்கன்றுக்கும் உரித்து. களபம் என்பது யானைக்கு உரித்து. (நன். 387 மயிலை.)

இளமையை உணர்த்தும் உரிச்சொற்கள் -

{Entry: C03__424}

மழ - குழ - என்ற இரண்டு உரிச்சொற்களும் இளமைக் குறிப் புணர்த்தும். மழகளிறு (புற. 103) - குழக்கன்று - என வரும்.

(தொ. சொ. 311 சேனா. உரை)

இற்றெனக் கிளக்கும் முறை -

{Entry: C03__425}

மெய் உள்ளது, பொய் இல்லது, நிலம் வலிது, நீர்தண்ணிது, தீ வெய்து, மயிர் கரிது, பயிர் பசியது - என வரும்.

இயற்கைப் பொருளை ‘இற்று’ என வினைக்குறிப்பாகிய செயற்படுத்துக் கூறுதலின் இது வழுமைதியாயிற்று. இது கருதாது இவ்வாறு கூறுதல் மரபு என்பாருமுளர். வளி உளரும் தன்மைத்து, உயிர் உணரும் தன்மைத்து - என்னாது, வளி உளரும், உயிர் உணரும் - எனவும் உதாரணம் காட்டுவர். வளியின்கண்ணும் உயிரின்கண்ணும் உளர்தலும் உணர்தலும் ஆகிய செயல் நிகழ்ந்த துணையானே அவற்றிற்கு அவை செயற்கையாமன்றி இயற்கை ஆகாமையானும், அவ்வாறு கூறுதற்கு ஒரு விதி இன்மையானும் அவை பொருந்தா. (நன். 404 சங்.)

இறந்தகால இடைநிலை -

{Entry: C03__426}

க ட த ற - என்னும் நான்கும் இறந்தகால இடைநிலையாம்.

எ-டு : நக்கனம், உண்டனம், உரைத்தனம், தின்றனம் - (தொ. சொ. 204 நச். உரை)

(நன்னூல் தடற - ஒற்றுக்களோடு ‘இன்’ என்பதனையும் இறந்தகால இடைநிலையாகக் குறிக்கும்.)

இறந்தகாலம் எதிர்காலம் ஒன்றற்கு ஒன்று மயங்குதல் -

{Entry: C03__427}

பேச்சுவழக்கில், ‘இவர் இப்பொழிலகத்துப் பண்டு விளை யாடுவர்’, ‘நாளை அவன் வாளொடு வந்தானாயின் நீ என் செய்குவை?’ என இறந்தகாலம் வரவேண்டுமிடத்து எதிர் காலமும், எதிர்காலம் வரவேண்டுமிடத்து இறந்தகாலமும் முறையே மயங்கி வந்தன. (வேறு காரணமின்மையாகிய இயல்பானே நிகழ்ந்த காலமயக்கம் இது.)

பண்டு விளையாடினர், நாளை வருவான் - என்று கூற வேண்டுவனவற்றை வழக்கில் மயங்கக் கூறுதல் பற்றிக் காலவழு அமைத்தவாறு. (தொ. சொ. 247 சேனா. உரை)

இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் காலங்கள் -

{Entry: C03__428}

இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது (தொழில்) முற்றுப்பெறாத நிலை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழிலாவது பொருளின் புடைபெயர்ச்சி. இப்புடை பெயர்ச்சி ஒருகணம் நிற்பதல்லது இரண்டுகணம் காலத்தின் - கண் நில்லாமையான், நிகழ்ச்சி என்பதொன்று இன்றா யினும், ‘உண்ணாநின்றான்’ எனப் பலதொழில் தொகுதி பற்றி நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று. இதனானே நிகழ்காலம் இன்று என்பாரும், நிகழ்காலம் ஒன்றுமே உண்டு என்பாரும் எனப் பலபகுதியினர் ஆசிரியர். (தொ.சொ. 200 சேனா., 202 நச். உரை)

இறுதிக்கண் ஆறாவதும் ஏழாவதும் வருதற்கண் திரிபு -

{Entry: C03__429}

சாத்தனது ஆடை, குன்றத்துக்கண் கூகை - என்பன இறுதிக் கண் உருபு வருமிடத்து ஆடை சாத்தனது - கூகை குன்றத்துக் கண் - என்று அமையும். ‘ஆடை சாத்தனது’, என்புழி, சாத்த னது என்பது குறிப்பு வினைமுற்றாம். ‘கூகை குன்றத்துக் கண்’ என்ற தொடர், கூகை குன்றத்தின்கண் உள்ளது - என்றும் பொருள்படும். ஆதலின் ஆறாம் வேற்றுமையும் பெயர் கொண்டு முடியும் ஏழாவதும் இறுதிக்கண் நிற்றல் நீக்கப்பட்டது.

(தொ. சொ. 103 சேனா. உரை)

இறுதிக்கண் உருபு மறைந்து வரும் வேற்றுமைகள் -

{Entry: C03__430}

ஐகார வேற்றுமையும் வினைகொண்டு முடியும் கண் என்னும் வேற்றுமையுமே இறுதிக்கண் தொகும்; அல்லன தொகா.

எ-டு : நிலம் கடந்தான் - கடந்தான் நிலம்; குன்றத்திருந் தான் - இருந்தான் குன்றத்து.

குன்றத்துக் கூகை என்று பெயர் கொண்டு முடியும் ஏழன் தொகை ‘கூகை குன்றத்து’ எனத் தொகாது; ஆதலின் ஏழாவது வினைகொண்டு முடிந்தவழியே இறுதிக்கண் தொகும் என்பது.

அறம் கறக்கும் என்னும் நான்கன் தொகை ‘கறக்கும் அறம்’ எனத் தொகாது; பிற வேற்றுமைத் தொகைகளும் அன்ன. (தொ. சொ. 105 சேனா. உரை)

இறுதியும் இடையும் உருபு பொருள்வயின் நிலவல் -

{Entry: C03__431}

வேற்றுமைத் தொடரின் இறுதிக்கண்ணும் அதன் இடை நிலத் தும் ஐ முதலிய ஆறு உருபுகளும் தத்தமக்கு ஓதிய பொருட் கண் நிற்றல்.

எ-டு : கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத் தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், இருந்தான் குன்றத்துக்கண்; நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், குன்றத்துக்கண் இருந்தான்.

சாத்தனது ஆடை - என, அதுவுருபு இடையே வரும். ஆடை சாத்தனது - என அதுவுருபு இறுதிக்கண் வரின் சாத்தனது என்ற சொல் குறிப்பு வினைமுற்றாய் ஆடை என்னும் எழு வாய்க்குப் பயனிலை யாகும். ஆதலின் ஆறாம் வேற்றுமையில் அதுவுருபு இறுதிக்கண் தொகுத்தல் கூடாது. (தொ. சொ. 104 நச். உரை)

முதற்கண் நின்ற வேற்றுமையுருபு பொருளொடு முடிதலன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லா உருபும் விரவி வந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதலை நீக்கார். ‘நெறிபடு பொருள்’ என்பது முதலும் இடையும் இறுதியும் நின்ற பலவகை உருபிற்கும் ஏற்புடைய பொருள்.

எ-டு : குயவன் குடத்தைத் திரிகையால் அரங்கின்கண் வனைந்தான், சாத்தனது ஆடையை வலியினால் காட்டின்கண் பறித்தான் -

என இறுதியும் இடையும் முதலும் நின்று உருபுகளெல்லாம் ஒருவினையான் முடிந்தன என்பர் தெய்வச்சிலையார். (தொ. சொ. 100 உரை.)

உருபு தொடர்ந்து அடுக்கும்வழி, ‘அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்க்கும்’ என்றாற்போல இறுதியும் இடையும் உருபு நிற்றலை நீக்கார் வடநூலார் எனப் பிறர்மதம் கூறப் பட்டது. (சூ. வி. சிவஞா. பக். 50)

இறைச்சிப் பொருள் அஃறிணை சுட்டுதல் -

{Entry: C03__432}

செய்யுளகத்துக் கருப்பொருளாகி நிலத்துவழி மருங்கின் தோன்றும் மாவும் புள்ளும் மரமும் முதலாயினவற்றுமேல் இடுகுறியாக வரும் இயற்பெயர் அஃறிணைப் பொருளையே சுட்டும். உயர்திணையொடு பழகிப்போந்த பெயர்கள் இரு திணைக்கும் பொதுவாக வரும். அவை யானை, சிங்கம், அன்னம், மயில், மாலை - இவ்வாறு வருவன. (தொ. சொ. 190, 191, தெய். உரை)

இறை பயப்பதன் வகை -

{Entry: C03__433}

வினா எதிர் வினாதலும், உற்றதுரைத்தலும், ஏவுதலும், உறுவது கூறலும் - என நான்கும் உடன்படுதலும் மறுத்த லுமே ஆயினும், வினாவிற்கு இறைபட வருதலின் வழுவன்று. ‘சாத்தா, கருவூர்க்குச் செல்லாயோ?’ என்ற வினாவிற்கு, ‘செல்லேனோ’ என்றலும், ‘என்கால் முட் குத்திற்று’ என்றலும், ‘நீ செல்’ என்றலும், ‘பகைவர் எறிவர்’ என்றலும் முறையே அந்நான்குமாம். முதலாவது ‘செல்வேன்’ என்னும் பொருள்படுதலின் உடன்பாடு; பின்னைய மூன்றும் ‘செல்லேன்’ என்னும் பொருள்பட்டன ஆதலின் மறுத்தல். (நேமி. மொழி. 7 உரை)

இறை பயப்பது -

{Entry: C03__434}

இது விடைவகை இரண்டனுள் ஒன்று. வினாவிய வினாவிற்கு நேரே (செவ்வன்) இறை பயவாமல் போந்த பொருளால் விடை அமையுமாறு கூறுவது ‘இறைபயப்பது’ என்னும் வழு வமைதிச் செப்பாம்.

விடைதான் வினாஎதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்ற துரைத்தல், உறுவது கூறல், உடன்படுதல் - என ஆறுவகைப் படும் என்பர் இளம்பூரணர். அவற்றுடன் சொல் தொகுத்து இறுத்தல், சொல்லாது இறுத்தல் என்பனவற்றையும் கொள் வர் நச்சினார்க்கினியர். இவற்றுள், மறுத்தலை விடுத்து ஏனைய ஏழனையும் கொள்வர் கல்லாடர். உரையாசிரியர் கூறிய ஆறனையே கொள்வர் பழைய உரைகாரர். (தொ.சொ. 13)

ஏவலும் மறுத்தலும் வினாவப்பட்டார்கண்ண அன்றி ஏவப்பட்டார்கண்ண ஆகலான் செப்புவகை ஆகா என்பார் சேனாவரையர். உரையாசிரியர் செவ்வன் இறை என்ற நேர்விடையைச் சுட்டாமல் இறைபயப்பதன் வகைகளைச் சுட்டியுள்ளமை குன்றக் கூறலாகும் என்பதனைச் சேனாவரை யர் குறிப்பிடுவார்.

எ-டு : ‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘உண்ணேனோ’ என்னுதல் - வினா எதிர் வினாதல்

‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘நீஉண் என்னுதல் - ஏவல்

‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘உண்ணேன்’ என்னுதல் - மறுத்தல்

‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘வயிறு குத்திற்று’ என்னுதல் - உற்றது உரைத்தல்

‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘வயிறு குத்தும்’ என்னுதல் - உறுவது கூறல்

‘உண்ணாயோ’ என்று வினவியவழி ‘உண்பேன்’ என்னுதல் - உடன்படுதல் ; ‘பசித்தேன்’ - ‘பொழு தாயிற்று’ - எனலுமாம்.

உறுகின்றது கூறல் ‘உறுவது கூறற்கண்’ அடங்கும். ‘பயறு உளவோ?’ என்றாற்கு, ‘உழுந்தல்லது இல்லை’ என்றல் சொல்தொகுத்து இறுத்தல். பிறர் வினாவாமலே, ‘குமரி யாடிப் போந்தேன்; ஒருபிடி சோறு தம்மின்’ என்றல் சொல் லாது இறுத்தல்.

இவை நேரே வினாவிற்கு விடையாகாமல் ஒருவகையாக வினாவிய பொருளை அறிவுறுத்தலின் விடைபயப்பனவாய் வழுவமைதி ஆயின. (தொ.சொ. 13 இள., சேனா., நச்., கல். உரை)

தெய்வச்சிலையார் விடைவகைகளைத் துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் - எனப் பகுப்பர்.

இவற்றுள் துணிந்து கூறல் செவ்வனிறை; ஏனைய மூன்றும் இறை பயப்பன.

துணிந்து கூறலாவது, ‘தோன்றியது கெடுமோ?’ என்றவழிக் ‘கெடும்’ என்றல்.

கூறிட்டு மொழிதலாவது, ‘செத்தவன் பிறப்பானோ?’என்று வினாயவழி, ‘பற்றறத் துறந்தானோ? பிறனோ?’ என்றல்.

வினாவி விடுத்தலாவது, ‘முட்டை மூத்ததோ பனை மூத்ததோ?’ என்றவழி, ‘எம்முட்டைக்கு எப்பனை?’ என்றல்.

வாய் வாளாமையாவது, ‘ஆகாயப்பூ நன்றோ தீதோ?’ என்று வினாயவழி உரையாடாமை. (தெய். உரை)

இன் ஆன் ஏது’ -

{Entry: C03__435}

இன்உருபிற்கும் ஆன்உருபிற்கும் உரித்தாகிய காரணப் பொருண்மை. இது ஞாபக ஏது.

எ-டு : முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது - இன் ஆன் ஏதுப்பொருளில் வந்தன. (தொ. சொ. 74 சேனா. 75 நச். ப.உ.)

பாணினீயத்தில் மூன்றாம் வேற்றுமை பற்றிய பகுதியில் ‘யே நாங்க விகார:’ ‘இத்தம் பூத லக்ஷண’ ‘ஹே தௌ’ (2-3-20, 21, 22) என்ற சூத்திரங்கள் உள்ளன. ‘யே நாங்க விகார:’ என்ப தற்கு ‘அக்ஷணா காண:’ (கண்ணாற் குருடன்) என்பது எடுத்துக் காட்டு.

எனவே, இன்னான் என்பதும் ஏது என்பதும் வெவ்வேறாம். ஏது கருவியுள் அடங்காது. ஒரு தொழில் நிகழ்வதற்கு நேரே சாதகமாக இருப்பது கருவி; பிற காரணமெல்லாம் ஏது. ஏது, பொருள் குணம் தொழில் என்னும் மூன்றற்கும் காரண மாகும். இன்னான் என்பது இன்னவன் என்னும் பொருட்டு; நெடுமூக்கன், குறுங்கழுத்தன் - என உறுப்புப் பற்றி வருவது. இத்தன்மையான் என்று கல்லாடர் கூறுவது ஈண்டைக்கு அமையாது. (நுண். பக். 5-7)

இன்சாரியை முதலியன ‘புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவுதல்’ -

{Entry: C03__436}

புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவுதலாவது, சாரியைப் பேறு ஒன்றற்கு மேற்பட்ட பெயர்க்கு உரிமை யாவதை ஒன்றற்கே வரையறுத்து இயம்புதல். இன் வற்று நம் ஆன் இக்கு என்பனவும் பிறவும் அவ்வாறு உதவும் சாரியை கள். வருமாறு : சே என்பது ஒரு மரத்தையும் பெற்றத்தையும் குறிக்கும். அவற்றை முறையே மெல்லெழுத்துப் பேறும் இன்சாரியைப் பேறும் வன்கணத்தொடு புணருமிடத்துத் தாம் தோன்றிக் காட்டுவன. (எ. 278, 279 நச்.)

எ-டு : சேங்கோடு (சேமரக்கிளை), சேவின் கோடு (மாட்டினது கொம்பு)

எல்லாவற்றையும் என்புழி வற்றுச் சாரியை, ‘எல்லாம்’ என்னும் நிலைமொழிப் பொருள் அஃறிணை என்பதை விளக் கிற்று; எல்லாநம்மையும் என்புழி நம்முச்சாரியை ‘எல்லாம்’ என்னும் நிலைமொழிப் பொருள் உயர்திணை என்பதை விளக்கிற்று. (தொ. சொ. 250 சேனா.)

சித்திரை என்பது ஒரு திங்கட்கும் ஒரு நாண்மீனுக்கும் வழங்கும் பெயர். அச்சொல்முன் ஆன்சாரியை வரின் அது நாண்மீனையும், இக்குச்சாரியை வரின் அது திங்களையும் குறிக்கும்.

எ-டு : சித்திரையாற் கொண்டான் (சித்திரை நக்கத்திரத்தில்); சித்திரைக்குக் கொண்டான் (சித்திரைத் திங்களில்). (இக்குச் சாரியை நிலைமொழியொடு புணர்கையில் ‘கு’ மாத்திரமாய் நிற்கும்) இவை யிரண்டும் ஏழாம் வேற்றுமைப் பொருள. (எ. 286 நச்.)

இன்மை, பிறிது, மறை - பற்றிய உபசர்க்கங்கள் -

{Entry: C03__437}

சொல்லுக்கு முன் சேரும் இடையுரிச்சொற்கள் வடமொழி யில் உபசர்க்கம் எனப்படும். அ அந் ந நி கு வி - என்னும் ஆறும் வடமொழியில் தாம் சேர்ந்த மொழிப்பொருளை இன்மை முதலிய மூன்றனுள் ஒன்றாக்கும். (அம்மூன்றாவன: இன்மை, பிறிது, மறை - என்பன.)

அ : அரூபம் - உருவமில்லாதது. இஃது இன்மை

அப்பிராமணன் - பிராமணன்

அல்லாதவன். இது பிறிது

அதன்மம் - தருமத்திற்கு

மாறுபட்டது. இது மறை.

அந் : அநங்கன் - அங்கமில்லாதன் இன்மை

ந : நாத்தி - இல்லை இன்மை

நி : நிமலன் - மலமற்றவன் இன்மை

கு : குதர்க்கம் - மாறுபட்ட வாதம் மறை

வி : விதிக்கு - திக்கு அல்லாதது பிறிது

(இ.கொ. 100)

இன்மையின் ஐவகை -

{Entry: C03__438}

இன்மை, பிறிது, மறை - என்னும் மூன்றனுள், இன்மை ‘அபாவம்’ எனப்படும். இதனைத் தண்டியாசிரியர் ‘என்றும் அபாவம்’ முதலாக ஐவகையாகக் கூறுவர். (இது தருக்க நூற்பொருள்) (இ.கொ. 101)

என்றும் அபாவம்: இதனை வடநூலார் அத்யந்தாபாவம் என்பர்; இன்மையது அபாவம்: இதனை வடநூலார் அபாவா- பாவம் என்பர்; ஒன்றின் ஒன்று அபாவம்: இதனை வடநூலார் அந்நியோந்யாபாவம் என்பர்; உள்ளதன் அபாவம்: இதனை வடநூலார் பிராகபாவம் என்பர்; அழிவுபாட்டு அபாவம்: இதனை வடநூலார் பிரத்துவம்சா- பாவம் என்பர்.

இன்மை முதலிய மூன்றனையும் தத் அபாவம் - தத் அந்நியம் - தத் விருத்தம் - என்பர் வடநூலார். (பி. வி. 21 உரை)

இன்மையை அன்மையாகக் கூறல் -

{Entry: C03__439}

இன்மையாவது பொருள் இல்லாமை; அன்மையாவது மறுதலைப் பொருள். சாத்தன் இலன் என்பது சாத்தன் இல்லை என்னும் பொருளது; சாத்தன் அல்லன் என்பது பிறனொருவன் என்னும் மறுதலைப் பொருளது. ஆயின் கருமம் இல்லாத சார்பினைத் தொல்காப்பினார் ‘கருமம் அல்லாச் சார்பு’ என இன்மையை அன்மையாகக் கூறினும் இன்மைப் பொருளே கொள்ளப்படுகிறது. (பி. வி. 21, தொ. சொ. 84 சேனா. உரை)

‘இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்’ -

{Entry: C03__440}

இத்துணையர் எனத் தனது வரையறை உணர நின்ற எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருளுணர்த்தும் பெயர். (தொ. சொ. 167 நச். உரை)

இன்றிவர் - இத்துணையர் என்னும் பொருட்டுப்போலும். ஒருவர் இருவர் முப்பத்து மூவர் - என எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருளுணர்த்துதலான் ‘எண்ணியற் பெயர்’ என்றார். (தொ. சொ. 165 சேனா. உரை)

(ஒன்று இரண்டு முதலிய எண்ணுப் பெயர்கள் அஃறிணைச் சொற்களாம். ‘இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயர்’ எண்ணப்படும் பொருள்மேல் நிற்பன. அவையும் அஃறிணையாம்.)

எண்ணுப் பெயர் யாவும் அஃறிணையாதலின் எண்பற்றி வரும் உயர்திணைப் பெயர் அத்திணைப் பலர்பாலுக்குரிய அர்ஈறு பெற்றே வருதல் வேண்டும்.

இன்றிவர் : இத்துணையர் என்னும் பொருட்டுப்போலும். (தொ. 162 இள. உரை)

(இவ்விவர் என்பதன் திரிபு எனினும் ஆம்.)

இத்துணையர் என்னும் எண்ணினான் இயன்ற பெயர் - ஒருத்தி, ஒருவன், இருவர், மூவர் - என்பன. (தொ. சொ. 161 தெய். உரை)

இன்ன என்னும் குறிப்பின -

{Entry: C03__441}

சொல்லுக்கு நேரே பொருள் தாராமல் பொதுவாக இத் தன்மையன என்று குறிப்பான் பொருள் விளக்கும் சொற்கள். அவை வாரா இயல்பினவற்றை வருவனவாகக் கூறுதலும், என்றும் கூறாத இயல்பினவற்றை என்பனவாகக் கூறுதலும் முதலாயின.

எ-டு : அந்நெறி வந்து ஈண்டுக் கிடந்தது; ‘அவல்அவல்’ என்கின்றன நெல். (தொ. சொ. 422 சேனா. உரை)

‘இன்ன என்னும் குறிப்புரைப் பொருள் -

{Entry: C03__442}

இயங்காதவற்றை இயங்குவனவாகக் கூறுதலும், சொல் லாதனவற்றைச் சொல்லுவனவாகச் சொல்லுதலும் ஆகிய அத்தன்மையன எல்லாம் அவ்வப்பொருள்களின் இயல்பு காரணத்தான் இத்தன்மைய என்று சொல்லும் குறிப்பு மொழியாம்.

எ-டு : சேனாவரையர் காட்டியவையே.

‘கவவு அகத்திடுமே’ (சொ. 357) என்றாற் போல அச்சொல் லின் பொருள்தொழிலை அச்சொல்மேல் ஏற்றிக் கூறுவன வும், ‘ஆயிரம் காணம் வந்தது’ என்றாற்போல ஒருவனான் இயக்கப் பட்டதனைத் தான் இயங்கிற்றாகப் பொருள் கூறு வனவும், ‘நீலுண் துகிலிகை’ என்றவழி நீலம் பற்றியதனை நீலம் உண்டதாக்கிப் பொருள் கூறுவனவும், ‘இப்பொருளை இச்சொல் சொல்லும்’ என்றாற்போல வருவனவும் ஒன்றென முடித்தல் என்பதனான் கொள்ளப்படும். (தொ. சொ. 422 நச். உரை)

‘இன்ன என்னும் சொல்முறை’ -

{Entry: C03__443}

இன்ன என்று தன்மை வேறுபாடு சொல்லும் முறைமை. (தொ. சொ. 453 இள. உரை)

இப்பொருள் இத்தன்மைய என்று சொல்லுதல்.

(தொ. சொ. 459 சேனா. உரை)

இத்தன்மைய என்று சொல்லப்படும் வினைக்குறிப்புச் சொற்கள். (தொ. சொ. 459 நச். உரை)

இத்தன்மைய என்று சொல்லப்படும் சொல்லினது தொடர்ச்சி.

(தொ. சொ. 450 தெய். உரை)

இன்னதற்கு, இதுபயன் என்பன -

{Entry: C03__444}

ஒரு தொழிலைச் செய்வது அதனைக் கொள்வானும் அதனால் பயனும் உள்வழியல்லது நிகழாமையின், அவை எழுவாய் செயப்படுபொருள் கருவி போல அவ்வளவு சிறப்பின அல்ல வாயினும், தொழில் நிகழ்ச்சிக்கு அமையும் காரணங்களாம்.

எ-டு : அந்தணர்க்கு நெய்தான், கூலிக்கு நெய்தான் - என முறையே காண்க. (தொ. சொ. 110 தெய். உரை)

இன்னான் -

{Entry: C03__445}

‘இன்னான்’ என்புழியும் ஏதுவின்கண்ணும் மூன்றாம் வேற்றுமை வரும் என்பது. இன்னான் என்பது மூன்றாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்று.

எ-டு : கண்ணாற் கொத்தை, காலான் முடவன் - இன்னான்

இன்னான் என்பதனையும் ஏதுவையும் வேறாகக் கொண்டார் இளம்பூரணர். முயற்சியாற் பிறத்தலான் சொல்லு நிலையாது என்பது ஏதுவிற்கு அவர் காட்டும் எடுத்துக்காட்டு. (தொ. சொ. 73 இள. உரை)

மூன்றாம் வேற்றுமைக் குரிய பொருண்மைகளுள் இதுவும் ஒன்று. இன்னான் என்பது இத்தன்மையான் என ஒருவனது பெற்றி கூறல். அது கண்ணாற் கொத்தை, காலான் முடவன் என்பன. (தொ. சொ. 75 கல். உரை)

இன் ஆன் என்பன மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த் தும் உருபுகளாம் என்பர் தெய்வச்சிலையார். (இன் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும் உருபுகள்.) (தொ. சொ. 73 தெய். உரை)

‘இன்னான் ஏது’ -

{Entry: C03__446}

‘இன்னான் ஏது’ என்றது, இன்னும் ஆனும் ஆகிய துணை யுருபுகளை ஏற்று வரும் ஏதுப்பொருள். இதனான் ஒடுவுருபே யன்றி, மூன்றாம் வேற்றுமைக்கு இன் ஆன் என்பவை ஏதுப்பொருட்கண் மாற்றுருபுகளாக வரும் என்பது பெற் றாம். இதனை, ஆசிரியர் ‘ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும் ’ (வேற். மய. 14) என ஆளுதலானும், ‘அத னின் இயறல்’ என (வேற். 13) உடம்பொடு புணர்த்துக் கூறுதலானும் அறியலாம்.

எ-டு : கல்வியின் பெரியன் கம்பன், பனியின்மையின் குளிரில்லை;அறிவான் சிறந்தான் அகத்தியன், புகையுண்மையான் நெருப்புண்மை பெற்றாம். (தொ. சொ. 74 ச. பால.)

இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை -

{Entry: C03__447}

இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படுதல் இல்லாத, பண்பு அடுத்து வழங்கப்படும் பெயரை ஒரு பொருட்குக் கொடுத்தல்.

எ-டு : ‘செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்

வெண்திங்களுள் வெயில்வேண்டினும்’ (புறநா. 38)

என இவை கருஞாயிறும் கருந்திங்களும் ஆகிய இனம் இன்மையின், விசேடிக்கப்படா ஆயினும், செய்யுட்கு அணியாய் நிற்றலின் வழு அமைக்கப்பட்டன.

வடவேங்கடம் எனத் திசை பற்றியும், முட்டாழை என உறுப்புப் பற்றியும், கோட் சுறா எனத் தொழில் பற்றியும் (வடக்கு - முள் - கோள் - என்னும்) அடையடுத்து இனம் சுட் டாது வருவனவும் செய்யுட்கு அணியாய் நிற்றலின் அமைக் கப்பட்டன. (தொ. சொ. 18 நச். உரை)

இனம், சார்பு: இவற்றின் இலக்கணம் -

{Entry: C03__448}

ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமாம்; ஒருவாற்றான் இயைபுடையது சார்பு. (தொ. சொ. 53 சேனா. உரை)

இனம் செப்பாதன -

{Entry: C03__449}

‘ஆவாழ்க அந்தணர் வாழ்க’ என்பன இனம் செப்பாதன. இவையும் இனம் செப்பின என்னாமோ எனின், சொல்லு வான் கருத்து (ஒழிந்த விலங்குகளும் மக்களும் சாக என்பது) அஃது அன்மையானும், மறுதலை பல உள்ளவிடத்து இனம் செப்பாமையானும் இவை இனம் செப்பாவாயின. (ஆவிற்கு இனம் பிறவிலங்குகளாகிய பல உள; அந்தணர்க்கு இனமாம் மக்கள் பிறசாதியார் ஆகிய பலருளர் என்பது.) (தொ. சொ. 61 நச்., கல். உரை, நேமி.)

இனமான பொருள்களே எண்ணப்படுதல் -

{Entry: C03__450}

பொன்னும் துகிரும் முத்தும் மணியும் - என எண்ணுங்காலும் இனமான பொருளே எண்ணப்படல் வேண்டும். (தொ. சொ. 16 சேனா. உரை)

துகிரும் முத்தும் பொன்னும் - என இனம் ஒத்தன எண்ணுக; முத்தும் கருவிருந்தையும் கானங்கோழியும் பொன்னும் - என எண்ணற்க. (இருந்தை - கரி) (தொ. சொ. நச். உரை)

இனி எண் : முத்தும் மணியும் பவளமும் பொன்னும் - என எண்ணுக. இதற்கு அமைதியுண்டேனும் கொள்க. முத்தும் கருவிளம் பரலும் மணியும் கானங்கோழியும் - என எண்ணற்க. (தொ. சொ. 16 கல். உரை, ப. உ.)

இனமும் சார்பும் வினையான் வேறுபடுதல் -

{Entry: C03__451}

இனமும் சார்பும் பின்வரும் வினையொடு கூடியல்லது பொருள் முடியாமையின் அவையும் வினைவேறுபட்டனவே.

எ-டு : மாவும் மருதும் ஓங்கின - இனம்; கவசம் புக்குநின்று ‘மாக் கொணா’ என்பது சார்பு.

இவை வினைகொண்டு முடிந்தவாறு. (தொ. சொ. 53 நச். உரை.)

இனன் இல் பண்பு, தொழில், பெயர் - இவற்றை அடையாகக் கொள்ளும் பெயர் -

{Entry: C03__452}

செஞ் ஞாயிறு, வெண் திங்கள், வெண் கோட்டுயானை, (இடுகுகவுள்) மடப் பிடி - இவை இனன் இல் பண்பு கொள் பெயர்.

நால் வாய் வேழம் - இனன் இல் தொழில் கொள் பெயர்.

வட வேங்கடம் - இனன் இல் பெயர் கொள் பெயர். (தொ. சொ. 18 கல். உரை)

இனைத்து என்று அறிபொருள் -

{Entry: C03__453}

இத்துணைத்து என்று வரையறை உணரப்படும் பொருள். இதனை வினைப்படுத்துக் கூறுங்கால் முற்றும்மை வேண்டி நிற்கும். (பெயராக விருப்பினும் வினையாக விருப்பினும் முடிக்குஞ் சொல்லை ‘வினை’ என்றார்.) உம்மை இன்றேல் இத்துணை என்ற வயைறை புலப்படாது.

எ-டு : தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்; உலக மூன்றனை யும் ஒருங்குணர்ந்தான்; நின்கண் வைத்த பொருள் நூற்றினையும் அவ்விருவர்க்கும் கொடு; இறை வற்குக் கண்மூன்றும் முச்சுடர்; இறைவற்கு உடை போர்வை இரண்டும் தோல். (நன். 399 சங்.)

இவ்வளவு என்று வரையறை உணரப்படும் பொருள் இனைத் தென்று அறிபொருளாம். ‘இனைத்தென்று அறி பொருள்’ என்றது பொருளாதி ஆறையும் கொள்க.

வருமாறு :

தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்.

வேதம் நான்கும் உணர்ந்தான். - பொருள்

உலகம் மூன்றும் ஒருங்குணர்ந்தான்.

திசையொரு நான்கினும் சீர்திகழ் பெம்மான் - இடம்

காலம்மூன்றும் கண்டோன்

சிறுபொழுது ஆறும் சிறந்தது இம்மருதம். - காலம்

கண்ணிரண்டும் சிவந்தன.

தோளிரண்டும் பூரித்தன. - சினை

சுவை ஆறும் உடைத்து இவ்வடிசில்.

வண்ணம் ஐந்தும் உடையது இக்கிள்ளை. - குணம்

தொழில் மூன்றும் உடையோன் முதல்வன்.

கதி ஐந்தும் உடையது இக்குதிரை. - தொழில் (நன். 440 இராமா.)

‘இனைத்து என அறிந்த சினைமுதற் கிளவி’ -

{Entry: C03__454}

கேட்போரான் இத்துணை என்றறியப்பட்ட சினைக் கிளவி யும் முதற்கிளவியும் என இவை முடிக்கும் சொல்லொடு பொருந்துமிடத்து உம்மை கொடுத்துச் சொல்லப்படும்.

எ-டு : நம்பி கண்ணிரண்டும் நொந்தன; தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்.

இவை தாமே முடிக்கும் சொல்லொடு பொருந்தின.

‘பன்னிரு கையும் பாற்பட இயற்றி’ (முருகு. 118) - பன்னிரண்டு என்னும் தொகுதியும் கை என்னும் பெயரும் ‘இயற்றி’ என்னும் முடிக்கும் சொல்லுடன் பொருந்துதலின், கை என்பதன் முடிக்கும் சொல்லாகிய ‘இயற்றி’ என்ற சொல் தொகைப் பெயரொடும் இயைந்ததாம். ஆகவே இது பிறவினைப் படுத்தியது. (கைகள் தாமே வினைப்பட்டில)

கண் இரண்டும் குருடு, எருது இரண்டும் மூரி - எனப் பெயரும் முடிக்கும் சொல்லாக வரும்.

சுவை ஆறும் உடைத்து இவ்வடிசில், கதி ஐந்தும் உடையது இக்குதிரை - எனப் பண்பும் தொழிலும் உம்மை பெறுதலும் முறையே கொள்க.

செய்யுட்கண் உம்மை தொக்கும் வரப்பெறும்.

எ-டு : ‘இருதோள் தோழர் பற்ற’ (தொ. சொ. 33 நச். உரை)

‘இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயர்’ -

{Entry: C03__455}

இத்துணை என வரையறுத்து உணர்த்தும் எண்ணுக் குறிப் பெயர். அவை எண்ணப்படும் பொருள்மேல் வருவனவும் எண்ணுப் பெயராம்; எண்ணின் பெயரும் எண்ணுப் பெயராம். ‘நீ தந்த காணம் ஆயிரம் ’ என்றவழி, எண்ணப் பட்ட பொருள் மேல் வந்தது. ‘நாலிரண்டு எட்டு ’ என்றவழி எண்ணின்மேல் வந்தது. (தொ. சொ. 165 தெய். உரை.)

ஈ section: 14 entries

ஈங்கு, ஆங்கு என்னும் சொற்கள் -

{Entry: C03__456}

ஈங்கு என்பது தன்மைக்கண்ணும், ஆங்கு என்பது படர்க்கைக் - கண்ணும் வரும் சொற்களாம். ஈங்கு முதலாயின தன்மைக் கண்ணும் ஆங்கு முதலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப் பட்டன.

‘கண்ணு ளார்நும் காதலர் ஒழிக காமம் ஈங்கென

உண்ணி லாய வேட்கையால் ஊடி னாரை’ (சீவக. 72 நச்.)

என்புழி, ‘ஈங்கு’ தன்மையை உணர்த்திற்று.

‘பரகதி இழக்கும் பண்புஈங்கு இல்லை’ (சிலப். 15 : 85.)

என்புழியும், ‘ஈங்கு’ தன்மையைச் சுட்டிற்று.

(ஈங்கு வந்தான், ஆங்குச் சென்றான்). (தொ. சொ. 28 சேனா. நச். உரை)

ஈ தா கொடு - என்னும் சொற்கள் பற்றிய மரபு -

{Entry: C03__457}

‘ஈ’ இல்லென்று இரப்போர்க்கும், ‘தா’ இடனின்றி இரப் போர்க்கும், ‘கொடு’ தொலைவாகி இரப்போர்க்கும் உரிய இரத்தலை உணர்த்தும் சொற்கள். இல்லென்று இரப்போரா கிய இழிந்தோர்க்கும், இடனின்றி இரப்போராகிய ஒத் தோர்க்கும், தொலைவாகி இரப்போராகிய உயர்ந்தோர்க் கும் ஈ - தா - கொடு - என்னும் மூன்று சொற்களும் முறையே உரியவாம்.

எனக்கொரு பிடிசோறு ஈ, ‘மாணலம் தா என வகுத்தற் கண்ணும்.’ இவற்கு ஊண் கொடு - என வருமாறு காண்க. (தொ. பொ. 150 நச்.)

சிறுபான்மை வலியான் கொள்ளுமிடத்தும் தா என்பது வரும்.

எ-டு :

‘நின்னதுதாஎன நிலைதளரப்

பரந்தலைக்கும் பகைஒன்றென்கோ’ (புறநா. 136.)

இரக்கின்றார் தம்மைப் பிறர்போலக் கூறப்படும் கருத்தினான் கூறப்படும் ‘கொடு’ என்ற சொல் படர்க்கையிடத்தது ஆயினும் தன்மையாகக் கொள்ளப்படும்.

எ-டு : இரப்போன் ஒருவன் ‘எனக்குக் கொடு’ என்னாமல், ‘பெருஞ்சாத்தன்தந்தைக்குக் கொடு’ எனத் தன்னைப் பிறன் போலக் குறிப்பிடுதல்.

இரப்போர் பலரும் தம்மில் ஒருவனைக் காட்டி ‘இவற்குக் கொடு’ எனத் தாம் இரக்கவருவார் அல்லர் போலக் கூறி இரக்கும் கருத்தில் வரும் கொடு என்னும் சொல் தன்மைச் சொல் போலக் கொள்ளப்படும். இது ‘கொடு’ என்ற சொற்கு இடவழு அமைத்தது. (தொ. சொ. 444- 448 நச். உரை)

ஈ என்பது இழிந்தோன் உயர்ந்தோனிடத்து இரக்கும் சொல்; தா என்பது ஒப்போனிடத்து இரக்கும் சொல்; கொடு என்பது உயர்ந்தோன் இழிந்தோனிடத்து இரக்கும் சொல். தந்தை ஈ, தோழ தா, மைந்த கொடு - என வரும்.

வழங்கு - வீசு - நல்கு - என்றல் தொடக்கத்து இரப்புரைகள் போலாது, ஈவோர்க்கும் ஏற்போர்க்குமிடையே ஒப்புயர்வு தாழ்வுகளை ஈ - தா - கொடு - என்ற துணையானே உணர்த்தி நிற்றலின், இம்மூன்றையும் ‘இனைத்தென்று அறிபொரு ளாக’ முற்றும்மை கொடுத்தோதினார். (நன். 407 சங்.)

ஈரடி மொழிமாற்று -

{Entry: C03__458}

‘ஆலத்து மேல குவளை குளத்துள - வாலின் நெடிய குரங்கு’ - இதன்கண், ‘ஆலத்து மேல வாலின் நெடிய குரங்கு’, ‘குளத்துள குவளை’ என ஈரடியுள், பெயரையும் வினையையும் வேண்டுழிக் கூட்டிக் கொண்டமையின், இஃது ஈரடிக் கொண்டுகூட்டு. இதனை மொழிமாற்று என்பாரும் ஈரடிமொழி மாற்று என்பாருமுளர். (நன். 417 மயிலை.)

‘ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிர்’ -

{Entry: C03__459}

ஈரளபு இசைக்கும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ - என்னும் ஆறு நெடில் களும் மொழிக்கு இறுதியில் வரும். ஒளகாரமும் எகரமும் ஒகரமும் மொழிக்கு இறுதியில் வாரா. இவற்றுள் ஈரளபு இசைப்பதாய் மொழியிறுதியில் வாராததாய் உள்ள உயிர் ஒளகாரம் ஒன்றுமே. (தொ. சொ. 281 சேனா. உரை)

இரண்டு மாத்திரை ஒலிக்கும் ஒள, ‘உயிர்ஒள எஞ்சிய இறுதி யாகும்’ என்றதனான் உயிராம் நிலையில் மொழிக்கு ஈறா காது, ‘கவவோடு இயையின் ஒளவும் ஆகும்’ என்றதனான் உயிர் மெய்யாய்க் கௌ - வெள - என்ற நிலையில் மொழிக்கு இறுதியாகும். (தொ. எ. 69). (தொ. சொ. 283 நச். உரை)

ஒளகாரம் பிரிவில் அசைநிலை போல இரட்டித்து நிற்கு மிடத்தும், இரட்டியாது அளபெடையாய் நிற்குமிடத்தும் பொருள் வேறுபடுதல் உண்டு; அளபெடை யில்வழியும் பொருள் வேறுபடுதலுண்டு. வருமாறு :

ஒளஒள ஒருவன் தவம் செய்தவாறு ! - சிறப்புப் பற்றியது

ஒளஉ இனி வெகுளல் ! - மாறுபாடு பற்றியது

ஒள இனித் தட்டுபுடையல்! - மாறுபாடு பற்றியது

(தொ. சொ. 281 சேனா. உரை)

கௌ - நினக்குக் கருத்தாயின், கைக்கொள்

கௌஉ - கைக்கொண்டே விடு

வெள - நினக்குக் கருத்தாயின், பற்றிக்கொள்.

வெளஉ - பற்றிக்கொண்டேவிடு.

(சொற்கள் அளபெடுப்புழியும் அளபின்றி வரும்வழியும் பொருள் வேறுபடுதல் இதனால் பெற்றாம்.) (தொ. சொ. 283 நச். உரை)

‘இறுதியாகிய ஒளகாரம் அல்லாத ஏனைய நெட்டுயிர்கள்’ - என்று பொருள் கூறினார் தெய்வச்சிலையார். ஒருவன் தகுதியில்லாத செய்தவழியும் அரியன செய்தவழியும் ஆஆ என்ப. வியப்புள வழியும் துன்பமுள வழியும் ஆஆ என்ப. தமக்கு இயைபில்லாத ஒன்றை ஒருவன் சொன்னவழி அதனை மறுப்பார் ஆ என்ப. ஈ என்றவழி அருவருத்தலை உணர்த்தும். ஊஉ இசையை உணர்த்தும். ‘ஏஏ இஃதொத்தன்’ (கலி. 62) என்றவழி, இகழ்ச்சியை உணர்த்தும். ‘ஏஏயென இறைஞ்சி யோளே’ என்றவழி நாணம் குறித்தது. ‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ (களவழி. 36) என்றவழி மிகுதியை உணர்த்தும். ஓ இசைவையும் இரக் கத்தையும் உணர்த்தும். ஓஓ விலக்குதலை உணர்த்தும். ஏ இசைநிறை அசைநிலையாய்ப் பொருளுணர்த்தா நிலையு முண்டு. (தொ. சொ. 277 தெய். உரை)

ஈருருபு இணைந்து இருவகைப்படும் செயப்படுபொருள் -

{Entry: C03__460}

இது வடமொழியில் துவிகன்மகம் எனப்படும். ஒரேவினை இரண்டு செயப்படுபொருள்களைக் கொள்வது இது. அதனுள் இருவகை யுள. பசுவினைப் பாலைக் கறந்தான், யானையைக் கோட்டைக் குறைத்தான் - என்பன போல்வன ஒருவகை. இவற்றைப் பசுவினது பாலை, யானையது கோட்டை - என்பன போல ஆறன் பொருள்பட. உருபு கூட்டி யுரைக்க இடனுண்டு. மற்றொருவகை ஆரியனை ஐயுற்ற பொருளை வினவினான் (மாணாக்கன்) என்பது. இதனை ஆரியனது ஐயுற்ற பொருளை - என ஆறனுருபு இணைத்துரைத் தல் இயலாது. ஆரியனைத் தான் ஐயுற்ற பொருளை வினவினான் மாணாக்கன் - என்க. (இ. கொ. 31)

ஈரெழுத்தானும் வரும் வடசொல் -

{Entry: C03__461}

அமலம் இராகம் உபமம் ஏகம் ஓது (பூனை) கமலம் கீர்த்தி குங்குமம் கோபம் சரணம் சிக்கணம் சஞ்சு சௌளம் ஞானம் நேயம் ...... என்றல் தொடக்கத்தன ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவான எழுத்தான் வரும் வடசொற்கள்.

கந்தம் சேதம் சதம் இட்டம் திண்டிமம் தீர்க்கம் போதம் போகம் சத்தம் சட்டம் சுகம் சிங்கம் குதை - என்றல் தொடக்கத்தன ஆரியத்திற்கே உரிய எழுத்தான் வருவன.

அரன் அரி அரன் அருகன்; கடினம் குரகம் கீதம் கனம்; சண்டம் சலம் சாதி சர்ச்சரை ; துரங்கம் தூலம் தூரம் துரை; பாடம் பலம் பேரம் பூதம்; மோகம்; யாகம்; இராகம்; வந்தனை; சூலம்; நட்டம்; ஆரம்; சோமன்; தூளி; பக்கம் - என்றல் தொடக்கத்தன பொதுவும் சிறப்புமான ஈரெழுத் தானும் வருவன. (நன். 273 மயிலை.)

ஈவோன் ஏற்றல் -

{Entry: C03__462}

நான்காம் வேற்றுமைப் பொருளான கொள்வோன் என்பது. கொடுப்போன் கொள்வோன் இருவருமே ஒருவனாய் இருத்தலான் நிகழ்வது, ஈவோன் ஏற்றல் என்பது.

எ-டு : தனக்குச் சோறிட்டான், ‘அருமறை சோரும் அறிவி லான் செய்யும், பெருமிறை தானே தனக்கு’ (குறள் 847) என வருமாறு காண்க. ‘கொள்வோன் வகைகள்’ காண்க. (இ. கொ. 36)

‘ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரிபு’ -

{Entry: C03__463}

பொருள்முடிபினையுடைய அடியின் முடிக்கின்ற சீர்க்கு முதற் சீரிடத்துப் பொருளே தன் பொருளாய் இறுதிச்சீர் அமைதல்.

எ-டு : ‘கூறாய் தோழியான் வாழு மாறே

இதன்கண், ‘வாழும்’ என்பது எருத்துச்சீர்; மாறு என்னும் இடைச்சொல்லாகிய இறுதிச்சீர் தான் பிரிந்து நின்று உணர்த்துதற்குத் தனக்கு ஒரு பொருளின்றி ‘வாழும்படியை’ என எருத்துச் சீரின் பொருளையே உணர்த்தி உருபை ஏற்றுக் ‘கூறாய்’ என முன்நின்ற சொல்லொடு முடிந்தது. (தொ. சொ. 408 நச். உரை)

ஈற்றடியது இறுதிச்சீர் ஈற்றயலடியில் சென்று திரிதல், இலக்கியம் வந்தவழிக் காண்க. (தொ. சொ. 408 சேனா. ) (404 தெய். உரை)

ஈற்றுச்சீர் ஈற்றயல் சீர்வயின் சென்று திரிதல்; ‘வாரலை யெனினே யானஞ் சுவலே’ என்புழி ‘அஞ்சுவல் யான்’ என் மாற்றிப் பொருள் செய்தல். (தொ. சொ. 403 இள. உரை)

ஈற்றடிக்கண் உள்ள இருசீர்கள் ஈற்றயற்கண் செல்லுமாறும் தோற்றமும் வரையார் ஆசிரியர் என்றவாறு. ‘சூரல் பம்பிய’ என்னும் செய்யுளுள்

‘யானஞ் சுவலே’ என்னும் இரண்டு சீர்களும்

‘சூரல் பம்பிய சிறுகா ன் யாறு யான் அஞ்சுவல்

சூரர மகளிர் ஆரணங் கினரே யான் அஞ்சுவல்

சாரல் நாட நீ வரல் ஆறே யான் அஞ்சுவல்,

- என எருத்தடிகளின்கண் சென்று தோன்றிப் பொருள் பயக்குமாறு காண்க. இவர் பாடம் இறுசீர் அன்று; இருசீர் என்பதே. (தொ. சொ. 409 ச. பால.)

‘ஈற்றின் இயலும் தொகைவயின் பிரிந்து பல்லாறாகப் பொருள் புணர்ந்து இசைத்தல்’ -

{Entry: C03__464}

முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச்சொல்லின்கண், தொகையாம் தன்மையின் பிரிந்து பல நெறியாகப் பொருளைப் புணர்ந்திசைப்பன (இடையே விரிக்கப்படும் பல சொற்கள்).

தொகுத்தல் - செறிதல்; முதற்பெயரொடு செறிவது தொகை என்று பெயராயிற்று.

எ-டு : படைக்கை - படையைப் பிடித்த கை, படையை எடுத்த கை, படையை ஏந்தின கை - எனவும்,

குழைக்காது - குழையை யுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது - எனவும்,

தாய் மூவர் - தாயொடு கூடி மூவர், தாயொடு கூடிய மூவர் - எனவும்,

குதிரைத்தேர் - குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஓட்டப்பட்ட தேர் - எனவும்,

கரும்புவேலி - கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி - எனவும்,

வரையருவி - வரையினின்றும் வீழாநின்ற அருவி, ஒழுகாநின்ற அருவி - எனவும்,

பாண்டியனாடு - பாண்டியனது நாடு, பாண்டிய னுடைய நாடு, பாண்டியன் எறிந்த நாடு, பாண்டியன் கொண்ட நாடு - எனவும்,

குன்றக் கூகை - குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை, இராநின்ற கூகை - எனவும்,

பலவாறாகப் பொருள் புணர்ந்திசைக்கும் சொற்களொடு முடிந்தமை காண்க. இவ்வாறு வருவன இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பிலவாம் என்றவாறு.

ஆறாம் வேற்றுமையுருபு புலப்படாதவழிச் சிறுபான்மை வினைக்குறிப்பொடும் வினையொடும் முடிந்தும், ஏனைய வேற்றுமைகள் வினையொடும் வினைக்குறிப்பொடும் முடிந்தும் வரும். எனவே, பெயரும் வினையுமாகிய எல்லாச் சொற்களும் வேற்றுமைக்கு முடிபாம். (தொ. சொ. 81 தெய். உரை)

ஈற்று நின்று இசைக்கும் ஆறு எழுத்துப் பதினொன்று ஆயினமை -

{Entry: C03__465}

படர்க்கை வினைமுற்றுக்களின் ஈறுகள் னஃகான் ஒற்று, ளஃகான் ஒற்று, ரஃகான் ஒற்று, குற்றியலுகரம், அகரம், ஆகாரம் - என்னும் ஆறனுள் அடங்குமேனும், பதினொன்று என்றது, பளிங்கு செம்பஞ்சி அடுத்தால் செம்பளிங்கு எனவும், கரும்பஞ்சி அடுத்தால் கரும்பளிங்கு எனவும் கூறப்படுதல் போலச் சார்ந்து வந்தவற்றது வேற்றுமை பற்றி வேறு பெயர் கொள்ளப்பட்டு, ன் ள் ர் ப மார் து று டு அ ஆ வ - எனப் பதினொன்றாயின. (தொ. சொ. 10 இள. உரை)

ஈற்று நின்று இசைக்கும் ஏகாரம் -

{Entry: C03__466}

செய்யுளிறுதிக்கண் நின்றொலிக்கும் ஈற்றசை ஏகாரம் ஒரு மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும் இடனுமுண்டு.

எ-டு : ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரே’ (அக. 1)

என்பதன்கண் ‘காடிறந்தோரே’ என்பது ‘காடிறந்தோரெ’ என ஒலிக்கும். இங்ஙனம் குறுகி ஒலித்தல் சிறுபான்மை. செய்யுளீற்றிலே யன்றி இடையில் வரும் ஏகாரம் இவ்வாறு குறுகி ஒலித்தல் இல்லை. (தொ.சொ. 286 சேனா. உரை)

எ-டு : ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை

வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந். 216)

என்புழி, ஈற்று ஏகாரம் இரண்டு மாத்திரையே ஒலித்தது.

இனி, நச்சினார்க்கினியர் உரைக்குமாறு.

செய்யுளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசை ஏகாரம் அச்செய்யுளிடத்தில் பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்தே, தனக்குரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின்னும் ஒரு மாத்திரையுண்டாய் வருதலும் உரித்து; இரண்டு மாத்திரை பெற்று வருதலே பெரும்பான்மை.

எ-டு : ‘கடல்போல் தோன் றல காடிறந் தோரேஎ’ (அக. 1) ‘அகில்படு கள்ளியங் காடிறந் தோரேஎ’

இனிச் செய்யுளிடைக்கண் வரும் ஏகாரம் இரண்டு மாத்திரை பெற்றே பாஎன்னும் உறுப்பினை விளக்கிநிற்கும்.

எ-டு : ‘அவரே,

கேடில் விழுபொருள்..... காடிறந் தோரே’ (குறுந். 216) (தொ. சொ. 288 நச். உரை)

‘ஈற்றுநின்று இசைக்கும் பதினோ ரெழுத்து’ -

{Entry: C03__467}

சொல்லிறுதிக்கண் நின்று திணைபால் காட்டும் பதினோ ரெழுத்துக்களாவன ன் ள் ர் ப மார் து று டு அ ஆ வ - என்பன. ன் : ஆண்பால்; ள் : பெண்பால்; ர் ப மார்: பலர்பால் ; து று டு : ஒன்றன்பால்; அ ஆ வ : பலவின்பால் என்பனவற்றை உணர்த்தும். பெயரின்கண் இவை திணைபால் விளக்குதல் பெரும்பான்மையும் இல்லை. பதினோரிடைச் சொல்லையும் பதினோரெழுத்து என்றார். எனவே, ன் ள் ர் - என்பனவற்றை அன் ஆன், அள் ஆள், அர் ஆர் - எனக் கோடல் வேண்டும். (தொ. சொ. 10 நச். உரை)

‘ஈற்றுநின்று இயலும் தொகைவயின் பிரிந்து’ வேற்றுமைப்பொருள் பல்லாறாகப் புணர்ந்திசைத்தல் -

{Entry: C03__468}

அன்மொழித் தொகையாவது பண்புத்தொகை முதலாகிய தொகைகளின் இறுதிக்கண் நின்று இயறலின், அஃது ‘ஈற்று நின் றிசைக்கும் தொகை’ எனப்பட்டது.

தாழ்குழல் பொற்றொடி மட்காரணம் - என்ற அன்மொழித் தொகைகளை விரிப்புழி, தாழ்குழலை யுடையாள் - பொற் றொடியை அணிந்தாள் - மண்ணாகிய காரணத்தான் இயன் றது - என வரும் உடைமையும் அணிதலும் இயறலும், கருங் குழற் பேதை - பொற்றொடி அரிவை - மட்குடம் - என்னும் வேற்றுமைத் தொகைகளை விரிப்புழியும் கருங் குழலை யுடைய பேதை - பொற்றொடியை அணிந்த அரிவை - மண்ணாகிய காரணத்தான் இயன்ற குடம் - என வந்தவாறு. (இஃது உருபும் பொருளும் உடன்தொக்க தொகைக்கு விளக்கமாகும்.) (தொ. சொ. 83 சேனா. உரை, ப. உ)

பல்லாறாகப் பொருள்புணர்ந் திசைத்தல் என்பது உருபே யன்றிப் பிற சொற்களும் அவ்வுருபே போல வந்து ஒட்ட நிற்பன. அவையெல்லாம் அவ்வுருபே போல ஆண்டே தொகுதலும் விரிதலுமுடையன.

குதிரைத் தேர் என்பது குதிரையான் பூட்டப்பட்ட தேர்; ஆன் என்பது ஆண்டு உருபு; பூட்டப்பட்ட என்பது ஆண்டு உருபு அல்லது. இவை விரித்துக் காட்டப்பட்டன. பலவாற்றானும் பொருள் ஏற்ப வந்து ஒட்டுவன விரிக்கப்படும். (தொ. சொ. 78,79 இள. உரை) (84, 85 கல்., ப. உ)

முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச்சொல்லின்கண், தொகையாம் தன்மையின் பிரிந்து பல நெறியாகப் பொருளைப் புணர்ந்திசைப்பன (இடையே விரிக்கப்படும் பல சொற்கள்).

தொகுத்தல் - செறிதல்; முதற்பெயரொடு செறிவது தொகை என்று பெயராயிற்று.

எ-டு : படைக்கை - படையைப் பிடித்த கை, படையை எடுத்த கை, படையை ஏந்தின கை - எனவும்,

குழைக்காது - குழையை யுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது - எனவும்,

தாய் மூவர் - தாயொடு கூடி மூவர், தாயொடு கூடிய மூவர் - எனவும்,

குதிரைத்தேர் - குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஓட்டப்பட்ட தேர் - எனவும்,

கரும்புவேலி - கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி - எனவும்,

வரையருவி - வரையினின்றும் வீழாநின்ற அருவி, ஒழுகாநின்ற அருவி - எனவும்,

பாண்டியனாடு - பாண்டியனது நாடு, பாண்டிய னுடைய நாடு, பாண்டியன் எறிந்த நாடு, பாண்டி யன் கொண்ட நாடு - எனவும்,

குன்றக் கூகை - குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை, இராநின்ற கூகை - எனவும்,

பலவாறாகப் பொருள் புணர்ந்திசைக்கும் சொற்களொடு முடிந்தமை காண்க. இவ்வாறு வருவன இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பிலவாம் என்றவாறு.

ஆறாம் வேற்றுமையுருபு புலப்படாதவழிச் சிறுபான்மை வினைக்குறிப்பொடும் வினையொடும் முடிந்தும், ஏனைய வேற்றுமைகள் வினையொடும் வினைக்குறிப்பொடும் முடிந்தும் வரும். எனவே, பெயரும் வினையுமாகிய எல்லாச் சொற்களும் வேற்றுமைக்கு முடிபாம்.

(தொ. சொ. 81 தெய். உரை.)

ஆறாவதற்கு உருபேயன்றிப் பொருள் விரிதல் இல்லை.

(தொ. சொ. 85 கல். உரை)

வேற்றுமைப்பொருளை விரிக்குமிடத்து ஒருவகைப் பொரு- ளன்றிப் பலவகைப் பொருளும் (அச்சொல் பற்றி ஒட்டப்படும் எல்லாச் சொற்கும்) உரியவாகும்.

எ-டு : நீர்நீந்து உடும்பு - நீரை நீந்து உடும்பு, நீர்க்குள் நீந்து உடும்பு, நீரில் நீந்து உடும்பு, நீருள் உடும்பு - எனப் பலவகைப் பொருளும்பட நிற்கும் ஒருதொகை என்பது. (தொ. சொ. 84 ப. உ.)

‘ஈற்றுப் பெயர்முன் மெய்அறி பனுவல்’ -

{Entry: C03__469}

தடுமாறும் தொழிலொடு புணர்ந்த இருவகைப் பெயருள் இறுதிப்பெயர் முன்னர் வந்த பொருள் வேறுபாடு உணர்த் தும் சொல்.

எ-டு : புலி கொல் யானை ஓடாநின்றது - புலியைக் கொன்ற யானை. புலி கொல் யானைக்கோடு வந்தன - புலியால் கொல்லப்பட்ட யானை.

ஓடாநின்றது, கோடு வந்தன - என்ற சொற்களே தடுமாறு தொழிற்பெயரின் பொருள் தடுமாற்றத்தைப் போக்க உதவும் ‘மெய்யறி பனுவல்’ எனப்படும் பொருள்வேறுபாட்டை உணர்த்தும் தொடராம். (தொ. சொ. 97 நச். உரை)

உ section: 137 entries

உகப்பு, உவப்பு - என்னும் உரிச்சொற்கள் -

{Entry: C03__470}

உகப்பு என்பது உயர்வு என்னும் குறிப்பினை யுணர்த்தும் உரிச்சொல்லாம்; உவப்பு என்பது உவகை என்னும் குறிப் பினை யுணர்த்தும் உரிச்சொல்லாம்.

எ-டு : ‘விசும்பு உகந்து ஆடாது’, ‘உவந்து வந்து......ஆய்நலன் அளைஇ’ (அக. 35) (தொ. சொ. 305 சேனா. உரை)

உடம்பொடு புணர்த்தல் -

{Entry: C03__471}

இலக்கண விதியாலன்றி, ஆசிரியர் தம் நூலில் வழங்கியதே விதியாக அமைந்த சொற்கள் உடம்பொடு புணர்த்தலின்பாற் படும்.

எ-டு : அலமரல் தெருமரல் போன்ற உரிச்சொற்கள்

கிழவோன், கிழவோள் - (தொ. பொ. 135, 107) விதி யின்றி ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆனவை.

‘வகைதெரிவான் கட்டே உலகு’ (குறள் 31) - ‘தெரிவான்’ என்ற ஆண்பாற் பெயரால் தெரிகின்ற புருடனுண்மை பெறப்பட்டது. (பி. வி. 50)

உடல்உயிர்த் தொழிற்குணம் -

{Entry: C03__472}

துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் உய்த்தல் - இவ்வைந் தும் இவை போல்வன பிறவும் உடலொடு கூடிய உயிரின் தொழிற் குணம். உய்த்தலாவது, மடைத்தொழில் உழவு வாணிகம் கல்வி எழுத்து சிற்பம் - என்னும் ஆறு தொழில் களையும் முயலுதல் என்பர் மயிலைநாதர். (நன். 452 மயிலை.)

உடல் கொள் உயிர்க்குணம் -

{Entry: C03__473}

அறிவு அருள் ஆசை அச்சம் மானம், நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல், நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி, துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல், துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல், வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம், மறவி - என்பனவும் இவை போல்வன பிறவும் உடல்கொள் உயிர்க்குணமாம். உடலொடு கூடாவழி உயிர்க் குணங்கள் தோன்றா என்பார், ‘உடல்கொள் உயிர்க் குணம்’ என்றார். இம் முப்பத்திரண்டனுக்கும் உதாரணம் காட்டுவர் மயிலைநாதர். (நன். 451 மயிலை.)

உடன்நிலை அறிதல் -

{Entry: C03__474}

உடன் நிற்கற்பால அல்லவாகிய முரண்பட்ட சொற்கள் அடைமொழியும் அடைகொளியுமாய் இணைந்து வழங்கும் திறத்தை அறிந்து பொருள்செய்க.

எ-டு : இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது - ‘சிறிது’ பெரிது என்பதற்கு அடைமொழியாய் உடன் வந்தவாறு. மிகப் பெரிதன்று என்றவாறு. (தொ. சொ. 458 சேனா. உரை)

முற்று எச்சமாகி வருதலும், வினையெச்சம் ஈறு திரிதலும் தொடர்மொழிக்கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலையை அறிந்து கொள்க.

எ-டு : ‘மோயினள் உயிர்த்த காலை ’ (அக. 5) - முற்றெச்சம்.

‘உரற்கால் யானை ஒடித் துண்டு எஞ்சிய யா’ (குறுந். 232) - ’உண்ண’ என்னும் செயவென் எச்சம் செய்து என் எச்சமாய்த் திரிந்து நின்றது. (தொ. சொ. 448 தெய். உரை)

(ஒன்று போலத் தோன்றும்) எச்ச வாய்ப்பாடுகளைத் தொடர்மொழிக்கேற்ப வெவ்வேறாய்ப் பொருளுரைத்திடுக.

எ-டு : ஆடிய கூத்தன் வந்தான் : செய்யிய என்னும் வினை யெச்சம்;

அவனுடன் கூடிய கூத்தியும் வந்தாள் : செய்த என்னும் பெயரெச்சம். (தொ. சொ. 458 நச். உரை)

உடைத்து, உடைய : சொல்லிலக்கணம் -

{Entry: C03__475}

உடைத்து, உடைய - என்னும் ஒருமையும் பன்மையும் பெரும் பான்மை உறுப்பின் கிழமையும் பிறிதின்கிழமையும் பற்றி வரும்.

எ-டு : இவ்வெருது கோடு உடைத்து ; இவ்வெருத்துக்கள் கோடு உடைய: உறுப்பின் கிழமை.

‘குருதி படிந்துண்ட காகம் குக்கில் புறம் உடைத்து, (கள. 5) உடைய, (கள.5) : பிறிதின்கிழமை. (தொ. சொ. 222 நச். உரை)

உடைப்பெயர் -

{Entry: C03__476}

உயர்திணைப் பெயர்களில் ஒரு காரணம் பற்றி வரும் பெயர் களும் உள. ‘உடைப்பெயர்’ என்பது அத்தகைய பெயர்களுள் ஒன்று. உடைப்பெயர் - தன் உடைமையான் பெற்ற பெயர்.

எ-டு : அம்பர்கிழான் - அம்பர் என்னும் ஊருக்குத் தலைவன். பேரூர்கிழான் = பேரூர் என்னும் ஊருக்குத் தலைவன். வெற்பன் - மலைநாட்டுத் தலைவன். சேர்ப்பன் - நெய்தல்நிலத் தலைவன்

(தொ. சொ. 165 சேனா. உரை)

குட்டுவன் - குட்டநாட்டுத் தலைவன். பூழியன் - பூழிநாட்டுத் தலைவன். வில்லவன் - வில்லைக் கொடியாக உடைய தலைவன்

(தொ. சொ. 167 நச். உரை)

உடைப்பெயராவது, உடைமையான் பெற்ற பெயர். அவை நிலமும் பொருளும் கருவியும் பற்றி வரும். குட்டுவன், பூழியன் - என்பன குட்டநாட்டையும் பூழிநாட்டையும் உடையான் என்னும் பொருள்பட வந்தன. வேலான், வில்லி - என்பன கருவி பற்றி வந்தன.

மலையன் நாடன் - என ஒருமை குறித்து வருவன அவ்வந் நிலத்துத் தலைமகனைக் குறிப்பின் உடைப்பெயராம். அவ்வந் நிலத்து வாழும் மாந்தரைக் குறிக்குமிடத்து இருதிணைக்கும் பொதுவாம். வெட்சியார் கரந்தையார் என்பனவும் அவை. வெட்சியான் கரந்தையான் - என்பன அத்திரளில் உள்ளான் என்னும் பொருள்பட வரினல்லது, நிரைகோடல் மீட்டல் தடுத்துவிடுத்தல் - என்பன ஒருவனால் செய்யப்படாமை யானும், வெட்சியாள் கரந்தையாள் - எனப் பெண்பால் உணர வரும் வழக்கு இன்மையானும், திணையான் பெறும் பெயர் பன்மை குறித்து வருதல் பெரும்பான்மை எனக் கொள்க. (தொ. சொ. 161 தெய். உரை)

உடைப்பொருள்மேல் நிற்கும் சாமானிய தத்திதன் -

{Entry: C03__477}

1) கார்த்திகேயன் காங்கேயன் வைநதேயன் வைச்சிரணவன் - இவை முறையே கிருத்திகைப் பெண்கள் என்னும் அறுவர் மகனாகிய முருகன் - கங்கையின் மகனாகிய வீடுமன் - விநதையின் மகனாகிய கருடன் - விச்சிரவசுவின் மகனாகிய குபேரன் - எனப் பொருள்பட்டு, உடைமைப் பொருளான விசேடணத்தின்மேல் வந்தன.

2) பாகீரதி பார்ப்பதி பொருப்பரசி சாத்தி கொற்றி - இவை முறையே பகீரதன்மகள் பாகீரதி, பருவதராசன் மகள் பார்ப்பதி, பொருப்பரசன் மகள் பொருப்பரசி, சாத்தன்மகள், கொற்றன் மகள் - எனப் பொருள்பட்டு வந்தன.

3) ராகவன் காகுத்தன் கௌரவன் - இவை முறையே ரகு வமிசத்தில் வந்தவன், ககுத்தன் மரபில் தோன்றியவன், குருகுலத்தில் பிறந்தோன் - என வருக்கம் வமிசம் மரபு பற்றி வந்தன.

4) தமன் தமள் தமர் - தன்னை அல்லது தம்மைச் சேர்ந்தவன் - சேர்ந்தவள் - சேர்ந்தவர் - எனவும், நமன் நமள் நமர் - என்னை அல்லது எம்மைச் சேர்ந்தவன் - சேர்ந்தவள் - சேர்ந்தவர் எனவும், நுமன் நுமள் நுமர் - நின்னை அல்லது நும்மைச் சேர்ந்தவன் - சேர்ந்தவள் - சேர்ந்தவர் எனவும்,

வடமொழியில், மதீயர் - என்னைச் சார்ந்தோர், அஸ்மதீயர் - நம்மை (எங்களை)ச் சார்ந்தோர் எனவும், துவதீயர் - உன்னைச் சார்ந்தோர், யுஷ்மதீயர் - உங்களைச் சார்ந்தோர் எனவும் கிளைபற்றி வரும்.

தந்தை எந்தை நுந்தை தங்கை எங்கை நுங்கை தம்பி எம்பி உம்பி பிதாமகன் ( தந்தைக்குத் தந்தை) பௌத்திரன் (புத்திர னுக்குப் புத்திரனாகிய பேரன்) பித்ருவயன் (பிதாவுக்குத் தம்பி) மாதுலன் (தாய் மாமன்) - என முறைபற்றி வரும்.

நம்பி நங்கை - என்பன முறைப்பெயர்கள் அல்ல; சொல்லு வான் குறிப்பால், ஆடவருள் மிக்கான் - பெண்டிருள் உயர்ந்தாள் - என்ற பொருளில் வருவன. ஆதலின் ‘இதனுக்கு நாயகன்’ என உடையான்மேல் நின்ற தத்திதங்கள் ஆகும்.

5) சிவனுக்குப் பத்தன் - சைவன்; பகவானிடத்துப் பத்தி பூண்டவன் பாகவதன். இனி அஃறிணையிலும் தத்திதன் வரும்.

‘பரியது கூர்ங்கோட்டது’, (குறள் 599) ‘நல்லாள் உடையது’, (குறள் 746) ‘ஐந்திரம், தொல்காப்பியம், பாணினீயம், எனது, தம, தமது, தனது, நினது, ‘தன்கைத்து’ (குறள் 758), ‘பிடித்து (எருவும் வேண்டாது)’, (குறள் 1037) ‘தெரிவான் கட்டே’ (குறள் 27) - என்பன.

தமர் தந்தை - போல்வன ஒருமைக்கும் பன்மைக்கும் பொது வாக வருதலின் அவற்றைப் பிரித்தல் கூடாது.

விற்காமன் குழைச்சாத்தன் - என்பன போல் தொகை நிலை யான தொடர்களில், விசேடணமான வில் - குழை - என்பன வும் விசேடியமான காமன் - சாத்தன் - என்பனவும் தனித் தனியே நிற்பினும் பொருளுடையன ஆகும்.

வில்லி குழையன் - எனத் தத்திதமாய் வந்துழி, முன்மொழி பொருளுடையதாக, பின்மொழியான (விகுதி) இ அன் - என்பன பொருள்படா. இது சேனாவரையர் கருத்து. நச்சி னார்க்கினியர் விகுதியும் வினைமுதற் பெயரைத் தோற்று வித்து உடைமையை விரித்துக் காட்டுதலின் அதுவும் பொருள் படுவதேயாம் என்பர்.

விசேடணத்தைக்கொண்டு முடியும் இவ்வகைத் தத்திதம் இருவகையாய் நிற்கும். அவை 1) இப்பொருளை யுடையவன் இவன், 2) இவனுடையது இப்பொருள் என்பன.

குழவி மழவன் மற்றையான் - என்பவை குழ, மழ - மற்றை - என்னும் உரிச்சொல் இடைச்சொல்மேல் வந்தன. (பி. வி. 32)

உடைமை இரண்டாம் வேற்றுமைப் பொருள் ஆதல் -

{Entry: C03__478}

குழையை யுடையான் என்னும் வினைக்குறிப்பிற்கு, ‘உடையன்’ எனக் கருதுதல் வினை; அக்கருத்தை நிகழ்த்து கின்றான் வினைமுதல்; அக்குழை அவன்கருத்து நிகழ்த்தப் படும் பொருளாய்க் கிடக்கின்ற தன்மை செயப்படுபொருள். (தொ. சொ. 72 நச். உரை)

உடைமை என்பதன் விளக்கம் -

{Entry: C03__479}

உடைமை என்பது உடைமைத்தன்மையும் உடைமைப் பொருளும் என இருவகைப்படும். உடைமைத் தன்மையாவது தன் செல்வத்தை நுகராது நினைந்து இன்புறுதற்கு ஏதுவா கிய பற்றுள்ளம். அஃது ‘ஆங்கவை ஒருபா லாக’ என்னும் மெய்ப்பாட்டியல் சூத்திரத்து ‘உடைமை இன்புறல்’ (12) என்பதனான் உணரப்படும். உடைப்பொருளாவது ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது. அஃது ‘இப்பொருளி னுடையது இப்பொருள்’ (சாத்தனது ஆடை) என்றும், ‘இப்பொருள் இப்பொருளினுடையதாயிருந்தது’ (ஆடை சாத்தனது) என்றும், ‘இப்பொருளை உடையதாயிருந்தது இப்பொருள்’ (கச்சினன்) என்றும் முறையே ஆறன்உருபாயும் வினைக்குறிப்புக்களாயும் நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியன - சாத்தனது ஆடை என்றாற் போலப் - பின் நிற்குமாறும், குறிப்புணர்த்தும்வழி - ஆடை சாத்தனது என் றாற்போல - முன் நிற்குமாறும் உணரப்படும். குழையன் என்புழி, மேல் வந்து முடிக்கும் வினைப்பெயரைத் தோற்று- வித்து நிற்கும் ‘அன்’ என்னும் பால்சுட்டும் ஈறு நின்று உடை- மைப் பொருளைத் தனக்கு உரிமை செய்யும் உடைமையை விரித்து நிற்கும். (தொ. சொ. 215 நச். உரை)

உடையான், உடைப்பொருள் -

{Entry: C03__480}

கச்சினன் - கச்சினை யுடையான் (உடுத்தவன்); கழலினன் - கழலினை யுடையான் (அணிந்தவன்); கச்சினன், கழலினன் : உடையான்; கச்சு, கழல் : உடைப்பொருள் - திரவியம்; இவை அடை; கச்சினன், கழலினன் : அடைகொளியான திரவிய விசிட்டன் - விசேடியம்; கச்சு, கழல் : விசேடணம். உடைப் பொருள், விசிட்டத் திரவியம், விசேடணம், உடைமை, விசிட்டம் - என்பன ஒருபொருட் கிளவி. (பி. வி. 31, 32)

உடையான்மேல் நிற்கும் சாமானிய தத்திதன் -

{Entry: C03__481}

1. வலையன் - வலையால் உண்பவன் அதனால் உண்ணல் - (அதனையுடையோன்); 2. வைதிகன் - வேதத்தைச் சொல்லு பவன் - அதனை யுரைத்தல்;பௌராணிகன் - புராணம் உரைப்போன் - அதனை யுரைத்தல்; தத்திதம் ஆதலால், ஏ ஓ என்பன ஐ ஒள என விருத்தியாய்த் திரிந்தமை காண்க. 3. பொன்னன்னாள், மயில் அன்னாள் - அதனோடு ஒத்தல்; 4. சோதிடன் - நட்சத்திரம் கோள் முதலிய விண்ணகத்துச் சுடர் களைக் கணிப்போன் - அதனை எண்ணல்; 5. வைதர்ப்பன் - விதர்ப்ப நாட்டுத் தலைவன்; நைடதன் - நிடதநாட்டுத் தலைவன்; வைகைத் துறைவன், குமரிச் சேர்ப்பன், மலைய மான், புனல் நாடன், தமிழ்நாடன் - இதனுக்கு நாயகன்; 6. புலியூரன் - சோழ நாடன், பட்டினவன், நாகரிகன் - ஈங்கு இருத்தல்; 7. மருத்துவன் - மருந்து பண்ணுபவன் - இதனைப் பண்ணல்; 8. கூத்தன், நிருத்தன் - கூத்தைப் பயில்பவன், நிருத்தம் பயில்பவன் - இதனைப் பயிறல்

இவை தவிர, பல்வேறு பொருளை யுடையோராய் இருத்தல் பற்றி வருவனவும் கொள்க.

தண்டி - தண்டத்தை யுடையவன்; குண்டலி - குண்டலமுடை யவன்; வில்லி, வாளி - வில்லையுடையவன், வாளை யுடையவன்; கச்சினன், கழலினன் - கச்சினை யுடையவன், கழலினை யுடையவன்.

இனி, குணமுடைமை (பண்புடைமை) பற்றி வருவன :

கரியன், செய்யன் (இருதிணை ஐம்பால் மூவிடத்தும் கொள்க)

தீர்க்க ரத்த சுக்ல சியாமள (சாமள) பீத - என்னும் வட சொற் கள் ஆண் பெண் அலி என்னும் மூன்று லிங்கங்களிலும், ஒருமை இருமை பன்மை என்னும் இம்மூன்றிலும் தமிழிற்கேற்ப உதாரணங்கள் காட்டப்படுகின்றன.

எண் பற்றி வருவன : பஞ்சவர் (ஐவர்), அட்ட சகச்சிரர் (எண்- ணாயிரவர்), பஞ்சமம் (ஐந்தாவது), அட்டமம் (எட்டாவது), தசமம் (பத்தாவது), ஏகாதசி துவாதசி (பதினொன்றாவது பன்னிரண்டாவது), சதுட்டயம் (நான்கான குழு), ஒருவர் இருவர் எழுவர் - என வரும்.

சாதி குறித்து வருவன : பார்ப்பார் (பிராம்மணர்), அரசர் (க்ஷத்ரியர்), வணிகர் (வைச்யர்), வேளாளர் - என வரும்.

காலத்தால் வருவன : விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந் தவன்), பரணியான் (பரணிநாளில் பிறந்தவன்) - என வரும்.

அவயவம் (சினை) பற்றி வருவன : கண்ணன் செவியன் தந்தி கரி பணி - எனவரும். (கரத்தையுடையது கரி, பணத்தை யுடையது பணி; பணம் - படம்)

இவற்றுள், உண்பவன் உடையவன் - போன்ற சொற்கள் மறைந்து, சாரியை விகுதிகள் மூலச்சொல்லொடு புணர்ந்து முற்றுச்சொல் ஆகும்.

எ-டு : கச்சு - அதை யுடுத்தவன், கழல் - அதை அணிந்தவன் : இவை முறையே கச்சினன் எனவும் கழலினன் எனவும் முற்றாகும். (பி.வி. 31)

உண்டு, இன்று : சொல்லிலக்கணம் -

{Entry: C03__482}

உண்டு என்னும் சொல் உண்மையை உணர்த்துங்கால், இன்று என்னும் சொல்லும் அதற்கு மறையாய் ‘முயற்கோடு இன்று’ எனப் பொய்ம்மையை உணர்த்தியும், அவ் உண்டு என்னும் சொல் பண்பை உணர்த்துங்கால், அவ் இன்று என்னும் சொல்லும் அதற்கு மறையாய் ‘இக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று’ எனப் பண்புணர்த்தியும், அவ் உண்டு என்னும் சொல் குறிப்புணர்த்துங்கால், இன்று என்னும் சொல்லும் அதற்கு மறையாய் ‘இக்குதிரைக்கு ஈண்டு நடை இன்று’ எனக் குறிப்புணர்த்தியும் நிற்கும். ‘பொருண்மை சுட்டல்’ (சொ. 67), என்பதனான் உண்மை யுணர்த்தலும், ‘உண்டென் கிளவி உண்மை செப்பின்’ (எழுத். 430) என்பதனான் வினைக் குறிப்பும்பண்பும் உணர்த்தினமையும் பெற்றாம். (தொ. சொ. 222 நச். உரை)

உண்டு என்பதன் இலக்கணம் -

{Entry: C03__483}

வேறு இல்லை உண்டு யார் வேண்டும் தகும் படும் - என்பன வும், பெயரெச்ச வினையெச்சங்களும், வியங்கோள்முற்றும் ஆகிய பத்தும் திணைபால்இடம் யாவற்றினும் செல்லும் பொதுவினை என்னும் இலக்கணக்கொத்து.

இவற்றுள், உண்டு என்பது முறையிறந்து தன்மை முற்றாயும், எச்சமாயும், உள் என்னும் முதனிலையாயும், பகுபதமாயும், உண்மை என்றும் தொழிற்பெயராயும், பகாப்பதமாயும், உண் என்னும் முதனிலையாயும் திரிதல் நோக்கி ‘வேறில்லை யுண்டியார்’ என்னும் தொடருள் ‘உண்டு’ என்பது முதலி னும் ஈற்றினும் திரிபுபட்டுக் கிடக்குமாறு ஆசிரியர் சூத்திரம் செய்தார். (இ. கொ. 85)

உண்டுபார், உண்கிடு, உண்கிடாய், உண்கிட, உண்ணுங்கோள் - என்னும் சொற்கள் -

{Entry: C03__484}

உண்டுபார் என்பது ஒரு சொல்லாதலேயன்றி, அத் தொழிலைச் செய்து அதன் விளைவை மேல் பார் - என ஒருமை தோன்ற நிற்றலின் வேறுசொல் என்க. (உண்டுகாண் என்பதும் இவ்வாற் றான் வேறன்றோ எனின், அது சொல்லுவான் கருத்தன்று என்க.)

உண்கிடு உண்கிடாய் - என்பன சான்றோர் செய்யுட்கண் இன்மையின், ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ (442) என்பதனால் கொள்ளப்பட்ட பிற்காலச் சொற்கள். ‘உண்கிடு நீ’ என முற்றாய் நிற்கும். ‘உண்கிட’ என்பது ஒருவழி ‘உண் கிடாய் நீ’ என முன்னிலைப்பெயர் கொண்டு நிற்றலு முண்டு. உண்ணுங்கோள் என்பது உண்ணுங்கள் என்பதன் மரூஉ முடிபு. (தொ. சொ. 226 கல். உரை)

உண்ணா, தின்னா : சொல்லமைப்பு -

{Entry: C03__485}

உண்ணா, தின்னா - என்னுமிவை, உண்ணாத தின்னாத - என்பவற்றைக் குறைத்து வழங்குகின்றார் என்க. இதற்கு முக்காலத்திற்கும் ஒன்றே எதிர்மறை. (நேற்று உண்ணா, இன்று உண்ணா, நாளை உண்ணா) (நன். 353 மயிலை.)

‘உண்’ பொதுவினை ஆதல் -

{Entry: C03__486}

உண்ணும் நீர், (கலி. 51) ‘பாலும் உண்ணாள்’ (அக. 48), ‘கள் உண்ணாப் போழ்து’ (கு. 930), உண்ணாமை வேண்டும் புலாஅல்’ (கு. 257), ‘கழுகு குடைந்துண் டு’ (மணி. 6 : 112) - முதலியவற்றை நோக்க உண்ணுதல் பொதுவினையாம். (தொ. சொ. 45 தெய். உரை)

உண்மை, பண்பு, குறிப்பு ஆவன -

{Entry: C03__487}

உணமையாவது, பொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய் பலவகைப்பட்ட பொருள் தோறும் நிற்பது. எ-டு : ஆ உண்டு.

பண்பாவது, ஒரு பொருள் தோன்றும் காலத்து உடன் தோன்றி அது கெடுந்துணையும் நிற்பதாம்.

எ-டு : இறைவன் எப்பொருளும் அல்லன்.

குறிப்பாவது ஒரு பொருட்குப் பின் தோன்றிச் சிறிது பொழுது நிற்பது.

எ-டு : அவைதாம் இவை அல்ல. (இ. வி. 228 உரை)

உண்மையின் மூவகை -

{Entry: C03__488}

‘ஆ உண்டு’ எனப் பொருண்மையுணர்த்தியும், ‘எவ்வுயிர்க் - கண்ணும் இறைவன் உளன்’ எனப் பண்புணர்த்தியும், ‘மாற்றார் பாசறை மன்னன் உளன்’ எனக் குறிப்புணர்த்தியும் உண்மை மூவகைத்தாய் வருதல் காண்க. (தொ. சொ. 216 நச். உரை)

‘உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்து’ ஆதல் -

{Entry: C03__489}

உணர்ச்சி வாயில் - நால்வகைச் சொல்லையும் உணர்தற்கான இலக்கணம்; உணர்வோர் வலித்து - தன்னை யுணர்வோரது உணர்வினைத் தனக்கு வாயிலாக உடையது. எனவே, இலக் கணத்தை யுணரும் உணர்வில்லாதானுக்குச் சொல்வது பயன் படாது ஆதலின், இலக்கணம் உணர்த்தற்க - என்றவாறு.

(தொ. சொ. 393 நச். உரை)

யாதானும் ஓராற்றான் உணரும் தன்மையில்லாதான் உணர்த்தற்பாலன் அல்லன் என்பதாம். (தொ. சொ. 393 சேனா. உரை)

சொல்லால் விளக்கிக் காட்ட உணர்வார்க்கு அச்சொல் வாயிலே பற்றி உணர்த்துக. அதுவே அவர்க்கு உணர்ச்சி வாயிலாம். அல்லாக்கால், அவ்வுணர்வோரை உணர்த்துதற் குரிய வாயிலறிந்து உணர்த்துக.

‘பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ (377) என்று கூற, உணராத மடவோனை மற்றொரு வாய்பாட்டான் உணர்த்துக. அல்லாக்கால், மேல் நோக்கிச் சிலமலர் தூவிக் காட்ட உணரு மேல், அதுவே உணர்ச்சி வாயிலாக அறிக. (தொ. சொ. 388 இள. உரை)

உணரும் புலனான் உணரப்படுவது உணர்வோரது வலிமை யுடைத்து எனவே, பயின்ற சொற்களை அறியானுக்கு இன்னும் எளிய சொற்களைக்கொண்டு விளக்குக என்பது. பிறவாய் பாட்டானும் வழிகளானும் உணர்த்துக என்றவாறு. (தொ. சொ. 388 தெய். உரை)

உணர்வின்றி ஏற்றல் -

{Entry: C03__490}

நான்காம் வேற்றுமைப் பொருளான ஏற்றல் வகைகளில் ஒன்று ‘உணர்வின்றி ஏற்றல்’. சோற்றிற்கு நெய் விட்டான், நீர்க்கு வாசம் ஊட்டினான் - என்பன போல்வன எடுத்துக் காட்டாம். இவற்றுள் ஏற்கும் பொருள்கள் ‘எனக்கு இது வேண்டும்’ எனக் கேட்கும் உணர்வில்லாத அஃறிணைப் பொருளாய் இருத்த லானும், கொடைப்பொருளைத் தாம் ஏற்றுச் சிறப்புறுத லானும் ‘உணர்வின்றி ஏற்றல்’ ஆயின. ‘கொள்வோன் வகைகள்’ காண்க. (இ. கொ. 36)

உத்தரபதப் பிரதானம் -

{Entry: C03__491}

தொகைகளில் பின்மொழியில் பொருள் சிறத்தல், அவை வேற்றுமைத் தொகை, எண்தொகை, பண்புத்தொகை - இம்மூன்று மாம். பின் : காலப்பின்

எ-டு : நிலம் உழுதான், மூவேந்தர், நறுமலர் என முறையே காண்க. (பி. வி. 25)

உபச்சிலேடம் -

{Entry: C03__492}

ஒரோவழி மேவுதல். ஏழாவதன் இடப்பொருள், விடயம் - ஒரோவழி மேவுதல் - எங்கும் வியாபகம் - என மூன்று வகைத்தாம். குன்றின்கண் குவடு, ஆண்டின்கண் இருது - எனவும், பாயின்கண் இருந்தான், தேர்க்கண் இருந்தான் - எனவும் சமவாயமும் சையோகமுமாக வந்த உபச்சிலேடம். சையோகம் - கூட்டம் (பிறிதின் கிழமைப் பொருட்டு); சமவா யம் - தற்கிழமைப் பொருட்டு. பாயின்கண் இருத்தலும், தேர்க் கண் இருத்தலும் கூட்டம் மேவுதல் (ஒரோவழி யிருத்தல்).

(பி. வி. 13)

உபசர்க்கம் -

{Entry: C03__493}

பெயர்வினைகளுக்கு முன்சேரும் இடையுரிச் சொற்கள் உபசர்க்கமாம். பி.வி. நூலார் இதனை ‘முன் அடை’ என வழங்குகிறார்.

வடமொழியில் பரி - உப - வி - போன்ற 20 உபசர்க்கங்கள் உள. இவை சொற்களின் பொருளை வேறுபடுத்துவது முண்டு; வேறுபடுத்தாமையு முண்டு.

தமிழில் கை கால் தலை - முதலியவை அவ்வியமான (எந்நிலையிலும் விகாரப்படாத) உபசர்க்கம் எனப்படும்.

எ-டு : ‘கலந்தாரைக் கைவிடுதல் (நாலடி. 76)’ ‘கை தூவேன்’ (குறள் 1021) ‘நூல்கால் யாத்த மாலை வெண்குடை’ (நெடுநல். 184), ‘ உயிரின் தலைப்பிரிந்த ஊன்’ (குறள் 258), ‘கல்லாத மேற்கொண் டொழுகல்’ (குறள் 845), ‘மீ க்கூறும் மன்னன் நிலம்’ (குறள் 385), ‘ஒல்லை உணரப் படு ம்’ (குறள் 826), ‘வல்லைக் கெடும்’ (குறள் 480) (பி. வி. 45)

உபசாரம் -

{Entry: C03__494}

உபசார வழக்கு; இல்லதனை உள்ளது போலக் கூறல்.

எ-டு : ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்’ (சொ. 316), ‘அம்ம கேட்பிக்கும்’ (276) என்று சொல்லைக் கருத்தா போல வழங்குதல். (பி. வி. 18)

உபசார வழக்குப் பலவாக வருதல் -

{Entry: C03__495}

1. ‘பிறப்பு என்னும் - காரியம் காரணமாக பேதைமை’ (குறள் 358) வழங்கப்பட்டது.

2. ‘தீவினை என்னும் - காரணம் காரியமாக செருக்கு (கு. 201)’ வழங்கப்பட்டது.

3. ‘இல்லதென் இல்லவள் - குணம் குணியாக மாண்பு ஆனால்’ (கு. 58) வழங்கப்பட்டது.

4. ‘சிற்றினம் அஞ்சும் - பண்பிக்கு ஆகும் வினை பெருமை (கு. 451) ஈண்டுப் பண்புக்கு வழங்கப்பட்டது.

5. ‘முன்இன்று பின்நோக்காச் - சொல்வானுக்குரிய சொல்’ (கு. 184) பெயரெச்சவினை சொல்லுக்கு அடை - யாக்கப்பட்டது.

6. ‘குளவளாக் கோடின்று - இடத்து நிகழ் பொருளின் நீர்நிறைந்தற்று’ (கு. 528) தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.

‘இப்பானை நாழியரிசி பொங்கும்’ - இதுவும் அது.

7. ‘பீலிபெய் சாகாடும் - இறுதல் என்னும் சினை அச்சு இறும்’ ( கு. 475) வினை முதலாகிய
சகடத்தின்மேல் நின்றது.

8. அ) இன்சொல், வன்சொல், - இவற்றுள் சொல்பவன து
மதுரகவி இனிமை, வன்மை, மதுரம் என்பன சொல் மீதும் கவி மீதும், ஏற்றி யுரைக்கப்பட்டன.

ஆ) ‘செவிகைப்பச் சொற் - நாவினது கைப்புச்சுவை பொறுக்கும்’ (கு. 389) யாகிய புலம் செவி மேல் ஏற்றப்பட்டது.

இவை (அ, ஆ) பண்பு இடம் மாறி நின்றன. (பி. வி. 48)

உபபத சமாசன் -

{Entry: C03__496}

(வைத்த வினைப்பெயர்) - ஒருவன் செய்யும் வினையைக் கொண்டு ‘இதைச் செய்பவன்’ என்ற பொருளில் வரும் ‘காரன்’ என்னும் சொல்லைத் துணைச்சொல்லாகப் பின் மொழியாக்கி அமைத்த தொகைச்சொற்கள். அவை பொருட் பெயர்க்குப் பின்வைத்த வினையாலணையும் பெயர்ப் பொருளைக் காட்டும் விகுதியுடன் வரும் தொகை. பொருட் பெயர் உபபதமாவது துணைச் சொல்; அவை சூத்திரம், கும்பம் - போல்வன. அவற்றைச் செய்வோன் என்னும் பொரு ளில் வரும் விகுதி ‘கார:’ என்பது (காரன்).

எ-டு : சூத்திரகாரன் - நூற்பாக்களை இயற்றியவன், கயிற்றை இயக்குபவன்

கும்பகாரன் - குடம் செய்வோன் - குயவன்

கட்டியங்காரன் - கட்டியக் கூத்து நிகழ்த்துவோன் (கூத்தில் கட்டியம் கூறுவோன்)

இசைகாரன் - இசைபாடுவோன். (பி. வி. 27)

உபபத விபத்தி -

{Entry: C03__497}

முடிக்கும் சொல்லாக இரண்டு சொற்களை ஏற்கும் வேற்றுமை.

எ-டு : நூலைக் குற்றம்கூறினான், பாலைத் தயிராக்கினான். (பி. வி. 14)

உபமாபூர்வம் -

{Entry: C03__498}

தொகையில் முன்மொழி உவமையாக நிகழ்தல்.

எ-டு : சங்குவெள்ளை, முத்துவெள்ளை

இவை தமிழில் உவமைத்தொகையாம். (பி.வி. 22)

உபமோத்தரம் -

{Entry: C03__499}

உபம + உத்தரம். தொகையில் பின்மொழி உவமையாக நிகழ்தல்.

எ-டு : அடிமலர். இது தமிழில் உருவகமாகக் கொள்ளப் பட்டுப் பண்புத்தொகையாம். (பி. வி. 22)

உபயபதப் பிரதானம் -

{Entry: C03__500}

தொகையில் முன்மொழி பின்மொழி இரண்டிலும் பொருள் சிறத்தல். அவ்வாறு நிகழ்தல் இடைச்சொல் தொகை, உம்மைத் தொகை - இரண்டிலும் காணப்படும்.

எ-டு : மற்றை ஆடை; கைகால் (பி. வி. 25)

உபயபதி -

{Entry: C03__501}

இது வடமொழி வினை பற்றியது. ஒரே தாதுவுக்குக் குறில் நெடில் இரண்டும் ஈறாக ஈற்றயலாக வருவது. பரப்பை பதம் - ஆற்பனே பதம் - என்று விதந்து வினைமுற்றுக் கொடுக்கும் வழக்கு வடமொழியிலேயே அருகி வந்து இன்று வழக்கில் இல்லை. தமிழில் என்றுமே இத்தகைய பகுப்பு இல்லை. (பி. வி. 36)

உபலக்கணம் -

{Entry: C03__502}

இது தமிழில் ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தி யாம். ‘சாவ என் எச்சத்து இறுதி குன்றும்’ (தொ. எ. நச். 209) என்றதனால், சா என முதனிலைத் தொழிற்பெயரளவில் நின்று வினையெச்சப் பொருள் தரும் என்று எடுத்தோதி யதை உபலக்கணமாகக் கொண்டு, ‘பாலறி வந்த’ (தொ. சொ. 162) என்பதனை ‘அறிய’ என வினையெச்ச மாகவும், ‘புனை பாவை’ (கு. 407) என்பதனைப் புனைந்த பாவை - எனப் பெய ரெச்சமாகவும் கொள்ளுதல். (பி. வி. 46)

ஒன்றைச் சொல்லுவதால் அதற்கு இனமானதும் கொள்ளப் படுதல் உபலக்கணமாம்.

எ-டு : சோறு தின்றான் என்றால், கறியும் பிறவும் உண்டான் எனக் கோடல்.

விதிகளில் சில வெளிப்படையாகக் கூறாவிடினும், சொன்ன தற்கு இனமானதையும் விதியாகக் கொள்ளுதல் உபலக்கண விதியாம்.

‘அஇ உம்முதல் தனிவரின் சுட்டே’ (நன். 66) என்புழி, ‘முதல் தனிவரின் சுட்டே’ என்பதனுக்கு ‘முதல் கூடிவரின் சுட்டு’ என்றும் பொருள் கொள்ளுதல் இதற்கு எடுத்துக்காட்டு. எழுத்திற்குப் பெயரிடுமிடத்தும் சந்தி நோக்கியும் யாப்பு நோக்கியும் வரைந்த நூற்பாக்களில் (நன். 276, 163 முதலடி, 163 ஈற்றடி) நன்னூலார் சுட்டுத் தனித்து நிற்கும் என்றார்; ‘சுட்டுயா எகர வினாவழி’ முதலிய ஆறு நூற்பாக்களில் (106, 179, 235, 250, 251, 180) சுட்டுக் கூடியும் வரும் என்பதனையும் விளக்கினார். (இ. கொ. 8)

உம் ஈற்று முன்னிலைப்பன்மை முற்றுத் திரிதல் -

{Entry: C03__503}

செய்யும் என்னும் உம் ஈற்று முன்னிலைப் பன்மை ஏவல் முற்றும் செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுப் போல ஈற்றயல் உயிர் கெடுதலும் உயிரோடு அஃது ஏறிய மெய் கெடுதலும் கொள்க.

எ-டு : ‘மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ’ (மணி. 13:93)

‘முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ’ (மணி. 13 : 56)

என முறையே கேளுமோ, உரையுமோ - என்னும் உம் ஈற்று முன்னிலைப் பன்மை ஏவல் முற்று ஈற்றயல் உயிர் கெட்டும் ஈற்றயல் உயிர்மெய் கெட்டும் நின்றன. மோ : முன்னிலையசை) (இ. வி. 244 உரை)

உம் ‘உந்து’ ஆகல் -

{Entry: C03__504}

‘வினைசெயல் மருங்கின் காலமொடு வரு’வனவற்றுள், உம் ஈறு ‘உந்து’ எனத் திரிதலு முண்டு.

இத்திரிபு பெயரெச்சத்திற்கு ஈறாயவழிப் போலும். (தொ. சொ. 292 சேனா. உரை)

இத்திரிபு பெயரெச்சத்திற்கே கொள்க. (தொ. சொ. 294 நச். உரை)

எண்ணும்மைக்கண் உம் என்பது ‘உந்து’ என விரிந்து நிற்கவும் பெறும் இடனுடைத்து.

பாயுந்து, தூக்குந்து, தரூஉந்து, பாயும் மிழலை (புறநா. 24) - ஒரு பொருள்மேல் பல வினைச்சொல் வருதலின் அவை ஒரு -முகத்தான் எண்ணப்பட்டனவாம். (தொ. சொ. 288 தெய். உரை)

“இவ்வாற்றான் வினைசெயல் மருங்கின் காலமொடு வரும் உம்மையே எண்ணுப்பொருளில் வரும்வழி ‘உந்து’ என்றாதல் தெளிவாம்.

இருக்குமது என்பது இருக்கும் + து = இருக்குந்து என்று ஆம்; கூறுமது என்பது கூறும் + து = கூறுந்து என்று ஆம். செய்யும் என்னும் முற்றுச்சொல்லொடு துவ்விகுதி சேர்ந்து வந்த சொல்லே ‘செய்யுந்து’ என்றாயிற்று.” (நுண். பக். 107)

வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்துப்படி, உந்து ஈற்றுச் சொற்கள் ‘வினைசெயல் மருங்கின் காலமொடு வரும்’ உம் என்னும் சொல்லொடு து என்ற ஒன்றன்பால் விகுதி சேர்ந்து அமைந்த வினைப்பெயரே. அது செய்யும் என்னும் நிகழ்கால முற்று அன்று, பெயரெச்சமும் அன்று என்பார் ரெட்டியார். (நுண். பக்.111)

ஒருபொருள்மேல் பல வினைச்சொல் வந்து அவை ஒருமுகத் தான் எண்ணப்படுமிடத்து உம் என்னும் இடைச்சொல் ‘உந்து’ எனத் திரியும்.

எ-டு : ‘நெல்லரியும் இருந்தொழுவர்’ என்னும் புறப்பாட் டினுள் (24), தெண்கடல்திரை மிசைப்பாயும்....... தண் குரவைச் சீர்தூக்கும்...... எல்வளை மகளிர் தலைக்கை தரூஉம்..... என வரும் செய்யும் என்னும் பெயரெச்சம் முறையே பாயுந்து, தூக்குந்து, தரூஉந்து என்று உம் ‘உந்து’ எனத் திரிந்து, நல்லூர் என்னும் பெயர்கொண்டு முடிந்தன. செய்யும் ‘செய்யுந்து’ என்று ஆதல் பெய ரெச்சத்தின்கண்ணேயாம். (தொ. சொ. .288தெய். உரை)

உம்மை இடைச்சொல்

{Entry: C03__505}

எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவு (எண்) தெரிநிலை ஆக்கம் - என்னும் எண்பொருள்களில் உம்மை வரும். தொல்காப்பியமும் இதனையே கூறும்.

எ-டு :

கொற்றன் வருதற்கும் உரியன் - எதிர்மறை யும்மை. குறவரும் மருளும் குன்று, இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது - உயர்வுசிறப்பும்மை. புலையனும் விரும்பா இப் புன்புலால் யாக்கை - இழிவு சிறப்பும்மை. பத்தானும் எட்டானும் கொடு - ஐயவும்மை. சாத்தனும் வந்தான் - ‘கொற்றன் வந்ததன்றி’ எனப் பொருள் படின், இறந்தது தழீஇய எச்சவும்மை; ‘கொற்றனும் வருவான்’ எனப் பொருள்படின் எதிரது தழீஇய எச்சவும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் - முற்றும்மை. சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும் வந்தார் - எண் ணும்மை. ஆணும் அன்று, பெண்ணும் அன்று - அத்தன்மை யின்மை தெரிந்தவழி நிற்றலின் தெரிநிலை யும்மை. நெடிய னும் ஆயினான், பாலும் ஆயிற்று - என்புழி, அவனே வலிய னும் ஆயினான் எனவும், அதுவே மருந்தும் ஆயிற்று எனவும் பொருள்படின் ஆக்கவும்மை. (நன். 425 சங்.)

உம்மைஎச்ச இருவீற்றின் தன்வினை -

{Entry: C03__506}

இரு வீறு - முன்னிற் சொல்லும் பின்னிற் சொல்லும்; தன் வினை -இரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும் மறையாகியும் வரும், தொழிலும் காலமும் ஒத்த வினைச் சொல். அஃது உம்மைக்கேற்ற வினையாதலின் ‘தன்வினை’ என்றார்.

சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் - எனற்பாலன சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் - என வரின் ஆண்டு உம்மை எஞ்சிநின்றது என்க. சாத்தன் வாரான், கொற்றன் வாரான் - என்ற மறைவாய்பாடும் அது. (தொ. சொ. 429 தெய். உரை)

உம்மை எச்ச இருவீறு -

{Entry: C03__507}

முடிக்கும் சொற்றொடர், முடிக்கப்படும் சொற்றொடர் - என உம்மை ஏற்ற சொற்றொடர்களின் இருவகை வேறுபாடு.

எ-டு : சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான்; சாத்த னும் வந்தான்: முடிக்கப்படும் உம்மையேற்ற சொற் றொடர்; கொற்றனும் வந்தான் : முடிக்கும் உம்மை யேற்ற சொற்றொடர். இரண்டும் வருதலாகிய ஒருவினையே கொண்டன.

(தொ. சொ. 436 சேனா. உரை)

உம்மைஎச்சத்தின்கண் ஒன்றற்கு ஒன்று முடிவனவும் முடிப் பனவும் ஆகிய இரண்டு கூறுகள். (தொ. சொ. நச். உரை)

எஞ்சுபொருட்கிளவியும் அதனான் முடிவதும் ஆகிய உம்மை யெச்ச வேறுபாடு இரண்டு. (தொ. சொ. சேனா. உரை)

எ-டு : ‘சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான்.’ - இதன்கண்,

சாத்தனும் வந்தான் என்பது முடிக்கப்படும் தொடர்; எஞ்சுபொருட் கிளவியான் முடிவது. கொற்றனும் வந்தான் என்பது முடிக்கும் தொடர்; எஞ்சுபொருட் கிளவி. உம்மை யெச்சத்தை முடிக்கும் வினைச்சொற்கண் ஓர் உம்மைக்குப் பொருந்திய வினையே மற்ற உம்மைக்கும் முடிபாம்.

சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான்; சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் - என்பன வழாநிலை. சாத்தனும் வந்தான், கொற்றனும் உண்டான் - என வேற்றுவினை கூறுவது வழுவாம்.

‘வேங்கையும் விரிந்தன, திங்களும் ஊர்கொண்டன்று’ (அக. 2) என்ற தொடரில், இணர் விரிதலும் ஊர்கோடலும் ‘மணம் செய் காலம் இது’ எனக் குறித்தலின் அவை ஒருவினையே யாம். (தொ. சொ. 436 நச், சேனா. உரை)

உம்மை எச்சம் -

{Entry: C03__508}

உம் என்னும் இடைச்சொல்லொடு கூடி முடிக்கும் சொல்லை அவாவி நிற்கும் சொற்கள்.

எ-டு : சாத்தனும், கொற்றனும் - என்பன உம்மையெச் சங்கள்.

இவை சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் - என முடிக் கும் சொல்லொடு கூடியவாறு. (தொ. சொ. 436 நச். உரை)

உம்மை எச்சம் செஞ்சொல் வருங்காலை எய்தும் முடிபு -

{Entry: C03__509}

முதல் தொடர் உம்மை இல்லாத சொல்லைக் கொண்டும் அடுத்த தொடர் உம்மை அடுத்த சொல்லைக் கொண்டும் அமையுமிடத்து, வினைச்சொல் ஒரே சொல்லாக இருப்பி னும், இரண்டாம் தொடரின்வினை அக்காலமாகவே இருத் தல் வேண்டும் என்ற வரையறையின்றி எதிர்காலமாகவும் வரலாம்.

எ-டு : கூழ் உண்ணாநின்றான், சோறும் உண்பான் - நிகழ்வொடு எதிர்வு மயங்கிற்று. கூழ் உண்டான், சோறும் உண்பான் - இறப்பொடு எதிர்வு மயங்கிற்று.

சிறுபான்மை நிகழ்வும் இறந்த காலமும் மயங்கி, கூழ் உண்ணாநின்றான், சோறும் உண்டான் - என வருதலு முண்டு. (தொ. சொ. 437 நச். உரை)

கூழ் உண்பான், சோறும் உண்டான் - என எதிர்வுடன் இறப்பும் மயங்கும்; எதிர்காலத்துடன் ஏனைய காலம் மயங்குதலும், இறந்தகாலத்துடன் நிகழ்காலமும் நிகழ்காலத்துடன் இறந்த காலமும் மயங்குதலும் தவிர்க்கப்படல் வேண்டா என்பது உரைகளால் போதரும்.

உம்மை எச்சம் மயங்கி வரும் காலம் -

{Entry: C03__510}

முதல் சொற்றொடர் உம்மையில்லாது வர, அடுத்த சொற் றொடர் உம்மையுடைத்தாக வரின், நிகழ்காலமும் எதிர் காலமும், இறந்தகாலமும் எதிர்காலமும் பெரும்பாலும் மயங்கும். சிறுபான்மை நிகழ்காலத்தோடு இறந்தகால மும்மயங்கும். ஆனால் வினைச்சொல் ஒரு சொல்லாகவே இருத்தல் வேண்டும். (முதனிலை மாறுதல் கூடாது.)

எ-டு : கூழ் உண்ணாநின்றான், சோறும் உண்பான் - நிகழ்வொடு எதிர்வு. கூழ் உண்டான், சோறும் உண்பான் - இறப்பொடு எதிர்வு (தொ. சொ. 437 சேனா. உரை)

“உம்மை யடுத்த சொல் வருங்கால் வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒரு காலத்தான் வரும். சாத்தனும் வாராநின் றான், கொற்றனும் வருவன் - என உம்மை கொடுத்து வழக்கு நிகழுமாலெனின், உம்மை கொடுக்கின்றது பொருள் வேற் றுமை உணர்தற்கன்றே? அது கொடாக்காலும் பொருள் விளங்குமாயின் கொடுத்ததனால் பயனின்று என்க. இவ்வாறு செய்யுளகத்து வரின் இசை நிறைத்தற்பொருட்டு வந்தது என்க.” (தொ. சொ. 430 தெய். உரை)

உம்மைஎண், உம்மைத்தொகை, உம்மைஎச்சம் - என்பன -

{Entry: C03__511}

பல பொருள்களை எண்ணி ஒருவினையான் முடிக்கும்வழி சொல்தோறும் உம்மை கொடுத்து இடைநின்ற ஒன்றானும் இரண்டானும் சொல்லின்கண்ணே உம்மை கொடாவழியும் உம்மையெண் ஆகும். ‘அடகு புலால்பாகு பாளிதமும் உண்ணான்’ என்புழி உம்மை தொக்கது.

இரண்டானும் பலவானும் பெயரை அடுக்கி ஒரு சொல் போல ஒருவினையான் முடிக்கும்வழி உம்மைத்தொகையாம்.

எ-டு : கபிலபரணர் வந்தார், ஆடல்பாடல்கள் கழிந்தன.

தனித்தனி வினைகொண்டு உம்மை விரிந்து நின்றே பொருள் படும் சொற்கள் செய்யுளகத்து உம்மை எஞ்சிநிற்பன உம்மை யெச்சம்.

எ-டு : சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் - எனற்பாலன, சாத்தன் வந்தான் கொற்றன் வந்தான் - என இரண்டன்கண்ணும் உம்மை எஞ்சிநின்றதால் உம்மையெச்சமாம். (தொ. சொ. 429 தெய். உரை)

உம்மை எண்ணின் உருபு தொகுதல் -

{Entry: C03__512}

உம்மையெண்ணின்கண் உருபு மறைந்து வருதல் ஏற்கத் தக்கது. ஏ, எனா, என்றா - முதலியவற்றின்கண் உருபு விரிந்தே வருதல் தக்கது.

எ-டு : ‘பாட்டும் கோட்டியும் அ றியாப் பயமில்,

தேக்கு மரம் போல் நீடிய ஒருவன்’ - இரண்டனுருபு தொக்கது. ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ - ஏழனுருபு தொக்கது.

தொகுவன இரண்டனுருபும் ஏழனுருபுமே யாம்.

யானைதேர்குதிரைகாலாள் எறிந்தான் : இத்தொடரில் உம்மையும் உருபும் தொக்கன. இதனை உம்மைத் தொகை என்னாது ‘உருபுதொகை’ எனல் வேண்டும் என்பார் இளம் பூரணர். உருபுதொகை எல்லார்க்கும் புலனாம் ஆதலின், அதனை உம்மைத்தொகை என்றலே ஏற்றது என்பர் சேனாவரையர். (தொ. சொ. 291 சேனா. உரை.)

எண்ணும்மை தொக்குழியும் வந்துழியும் இரண்டாவதும் ஏழாவதும் தொக்குநிற்றலை நீக்கார் ஆசிரியர்.

எ-டு : புலிவிற்கெண்டை கிடந்தன - உம்மைத்தொகை
புலியும் வில்லும் கெண்டையும் கிடந்தன - எண்ணும்மை விரி. புலிவிற் கெண்டை வைத்தான் - (இரண்டன்) உருபுதொகை.

புலியும் வில்லும் கெண்டையும் வைத்தான் - என்புழி, உருபு தொக்கவழியும், உம்மை விரிந்துநின்றே புலியையும் வில்லை யும் கெண்டையையும் வைத்தான் - என்று பொருள் தந்த வாறு.

குன்றி கோபம் கொடிவிடு பவளம்

ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’

எனப் பலபெயர் உம்மைத்தொகைக்கும் உருபுவிரித்தே பொருள் உரைக்கப்படும். இவற்றைச் செவ்வெண்ணாக்கி ‘இவற்றை’ எனத் தொகை கொடுத்து உருபு விரித்துழியும், இவற்றை என்ற சுட்டு குன்றி முதலியவற்றைச் செயப்படு பொருளாகவே சுட்டும்.

உம்மையும் உருபும் தொக்குழி, உம்மையினும் உருபு சிறத்த லின் ‘உருபுதொகை’ என்றே கொள்ளல் வேண்டும். ‘பாட்டும் கோட்டியும் அறியா’ : ஈண்டு, உம்மையுருபு விரிந்து உருபு தொக்கது. (தொ. சொ. 293 நச். உரை)

சொல்தோறும் உம்மை கொடாக்காலும் உம்மையெண் ஆகும். (தொ. சொ. 287 தெய். உரை)

உம்மைஎண் தொகை பெறுதல்

{Entry: C03__513}

உம்மையான் வரும் எண்கள் தொகை பெறுதல் வேண்டும் - என்ற உறுதியான வரையறையின்றிப் பெற்றும் பெறாமலும் வரும்.

எ-டு : ‘உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மூ
உருபின தோன்ற லாறே’ (162) - தொகை பெற்றது.

‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (299) - தொகை பெறாதது. எண்ணுப்பெயர்களே யன்றி, அனைத்தும் - எல்லாம் - முதலியனவும் தொகைகளைக் குறிக்க வரும். (தொ. சொ. 289 நச். உரை)

உம்மைகள் மயங்குமாறு -

{Entry: C03__514}

எச்சப் பொருண்மையினை உணர்த்தும் உம்மையும், அதனை முடிக்க வரும் எதிர்மறைப் பொருண்மையினையுடைய உம்மையும் தொடராய் வந்து தம்முள் மயங்குங்கால் தன் வினை ஒன்றிய முடிபு கொள்ளா.

எ-டு : சாத்தனும் வந்தான், கொற்றனும் வரினும் வரும் - இவை ஒருவினை கொள்ளாது இறப்பும் எதிர்வும் ஆகிய வினை கொண்டவாறு. இவ்விரண்டும் எச்ச வும்மைகள் ஆதலின் இவற்றிற்கே மயக்கம் கூறப் பட்டது.

வடுக அரசரும் வந்தார், தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர் - என எச்சவும்மையும் முற்றும்மையும் தொடர்ந்து இறப்பும் எதிர்வும் ஆகிய வெவ்வேறு வினை கோடலும் கொள்ளப்படும். (தொ. சொ. 285 நச். உரை)

சாத்தனும் வந்தான், கொற்றனும் வரலும் உரியன் - என எச்ச வும்மையும் எதிர்மறையும்மையும் மயங்கா என்பர் சேனா வரையரும் இளம்பூரணரும். (தொ. சொ. 283 சேனா. 279 இள. உரை)

சாத்தனும் வந்தான் என்றவழி, கொற்றனும் வரும் என்றாவது, வந்தான் என்றாவது கூறவேண்டுமேயன்றி, ‘வாரான்’ என்று கூறக் கூடாது; ஒரு தொழிலையே கூறவேண்டும். (தொ. சொ. 279 தெய். உரை)

உம்மைச்சொல் எட்டுவகை -

{Entry: C03__515}

உம் என்னும் இடைச்சொல் எச்சத்தைக் குறிப்பதும், சிறப்பைக் குறிப்பதும், ஐயத்தைக் குறிப்பதும், எதிர்மறையைக் குறிப்பதும், முற்றைக் குறிப்பதும், எண்ணைக் குறிப்பதும், தெரிநிலையைக் குறிப்பதும், ஆக்கத்தைக் குறிப்பதும் என எட்டுவகைப்படும். எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இருவகைத்து.

எ-டு : சாத்தனும் வந்தான் - என்ற உம்மை கொற்றனும் வந்தான் - என எதிரது தழீஇயிற்று; பின்நின்ற கொற் றனும் வந்தான் என்பதும் முன்நின்ற சாத்தனும் வந்தான் என்பதனைத் தழுவுதலின் இறந்தது தழீஇயிற்று, இவ்விரண்டனையும் எதிர்காலம் தழீஇயின ஆக்கி, ‘இன்று சாத்தனும் வரும்; நாளைக் கொற்றனும் வரும்’ என்பன எதிரது தழீஇயன என்றுமாம்.

இவ்வெச்சவும்மை முழுதும் தழுவுவதும் ஒருபுடை தழுவுவதும் என இரு வகைப்படும்.

எ-டு : ‘யான் கருவூர்க்குச் செல்வல்’ என்றாற்கு, ‘யானும் அவ்வூர்க்குப் போதுவல்’ என்பது முழுதும் தழுவுதல். அவ்வினாவினாற்கு, ‘யானும் உறையூர்க்குப் போது வல்’ என்பது ஒருபுடை தழுவுதலாம்.

சிறப்பு, உயர்வுசிறப்பு எனவும் இழிவுசிறப்பு எனவும் இருவகைத்து.

எ-டு : ‘குறவரும் மருளும் குன்றம்’ (மலை. 275) ‘ஊர்க்கு ம் அணித்தே பொய்கை’ (குறுந். 113) - உயர்வு சிறப்பு ‘இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது’-இழிவு சிறப்பு.

“ஒ ன்றிரப்பான்போல் இளிவந்தும் சொல்லும், மதுகையும் உடையன், வன்மையும் உடைய ன், அன்னான் ஒருவன்” (கலி. 47) என்புழி, இன்னான் எனத் துணியாமைக்கண் வருதலின், ஐய உம்மை.

சாத்தன் வருதற்கும் உரியன் என்பது வாராமைக்கும் உரியன் - என்ற எதிர்மறையை ஒழிபாக உடைத்தாதலின் எதிர்மறை உம்மை.

‘அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே’ எனப் பண்புபற்றி யும் எதிர்மறை வரும். இது பிறிதொரு பொருளைத் தழுவாது, ஒரு பொருளின் வினையை மறுத்து நிற்றலின் எச்சத்தின் வேறாயிற்று. ‘எதிர் மறை எச்சம்’ (435) என வருதலின், இஃது எச்சத்தின் கூறாம்.

தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார், ‘யாதும் ஊரே’ (புற. 192) - இவை முற்றும்மை.

நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து - எண்ணும்மை.

‘இருநிலம் அடிதோய்தலின், இவள் திருமகளும் அல்லள்; அரமகளும் அல்லள்; இவள் யாராகும்?’ - என ஆய்தற்கண் வருதலின், தெரிநிலை உம்மை. திருமகளோ அரமகளோ - என்று ஐயுறாமையின் இஃது ஐயஉவமை அன்று.

நெடியனும் வலியனும் ஆயினான் - ஆக்க உம்மை. செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே’ (சொ. 15) என இலக்கணம் ஆக்கிக் கோடலின், ஆக்க உம்மை. (தொ. சொ. 257 நச். உரை)

எதிர்மறை எச்சம் பிறிதொரு பொருளைத் தழுவும். எச்ச வும்மை அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவும். இவ் விரண்டற்கு மிடையே இது வேறுபாடு. ஆக்கவும்மை ஒரு பொருளையே சொல்லுதலின் வேறுவேறு பொருளை எண்ணும் எண்ணும்மையின் வேறாயிற்று. (எதிர்மறை எச்சம், எச்சவும்மை - பற்றிய இவ்வுரையாளர் கருத்துப் புலப்பட வில்லை; எஞ்சு பொருட் கிளவி பற்றிய இவர் கருத்து ஆராய்ந் துணர, உரை கிட்டிற்றிலது.) (தொ. சொ. 257 கல். உரை)

உம்மைத் தொகை -

{Entry: C03__516}

எண்ணுப்பொருளில் வரும் உம்மை இருபெயர்களிடை யேயோ பலபெயர்களிடையேயோ தொக்கு உம்மைப் பொருளைப் புலப்படுத்தி வரும் தொகை உம்மைத்தொகை யாம். உம்மைத் தொகை, பொருட்பெயர் - எண்ணுப்பெயர் - நிறைப்பெயர் - அளவுப்பெயர் - இவை பற்றி வரும். உயர் திணைக்கண் வரும் எண்ணுப்பெயர் எண்ணியற்பெயர் எனப்படும்.

எ-டு : உவாஅப் பதினான்கு, புலிவிற்கெண்டை - பொருட் பெயர். தொடியரை, கழஞ்சரை - நிறைப்பெயர். தூணிப்பதக்கு, கலவரை - அளவுப்பெயர். முப்பத்து மூவர் - எண்ணியற்பெயர். பதினைந்து - எண்ணுப் பெயர். (தொ. சொ. 417 நச். உரை)

உம்மைத்தொகையை வடநூலார் துவந்துவன் என்ப.

இருபெயர் உம்மைத்தொகை - இருபெயராவது பொருட் பெயரும் தொழிற்பெயரும். அவையாவன : கபிலன், பரணன்; ஆடல், பாடல் - என்பன.

பலபெயர் உம்மைத்தொகை - பல பெயராவது பன்மை குறித்த பெயர். அவை பார்ப்பார், சான்றோர் என்பன. மேற் சொல்லப்பட்டன ஒருமை குறித்தலின் இது வேறோதப் பட்டது.

அளவின் பெயர் உம்மைத்தொகை - அளவின் பெயராவது அளக்கப்பட்ட பொருளைக் குறியாது அளவுதன்னையே குறித்து நிற்பது. அவை உழக்கு, நாழி, குறுணி, தூணி, கலம் - என்பன.

எண்ணியற்பெயர் உம்மைத்தொகை - எண்ணியற்பெயரா வது எண்ணினான் பொருள் குறித்து இயலும் பெயர். அவையாவன பதின்மர் ஐவர் - என்பன.

நிறைப்பெயர் உம்மைத்தொகை - நிறைப்பெயர்க்கிளவி என்பது நிறுக்கப்பட்ட பொருளைக் குறியாது நிறையின் பெயராகி வருவது. அவை குன்றி, கால், அரை, கழஞ்சு - என்பன.

எண்ணின்பெயர் உம்மைத்தொகை - எண்ணின் பெயராவது எண்ணப்பட்ட பொருளைக்குறியாது எண்ணின் பெயராகி வருவது. அவை ஒன்று, இரண்டு, பத்து, நூறு - என்பன.

இந்த அறுவகைப்பட்ட பெயரையும் குறித்த நிலைத்து உம்மைத் தொகை. வரையறை ஓதாமையான் இரண்டும் பலவுமாகிய சொற்கள் இத்தொகைக்கண் வரப்பெறும்.

எ-டு : கபிலபரணர் வந்தார், ஆடல்பாடல் தவிர்ந்தார்,
பார்ப்பார்சான்றார் வந்தார், தூணிப்பதக்குக்குறை,
பதினைவர் போயினார், கழஞ்சரைகுறை (கழஞ்சும் அரையும் குறையும்), பன்னிரண்டுகுறை - என முறையே காண்க. ஈண்டுத் தொகுவது எண்ணும்மையே. (தொ. சொ. 412 தெய். உரை)

எண்ணலளவை எடுத்தலளவை முகத்தலளவை நீட்டலளவை - என்னும் நால்வகை அளவைகளால் பொருள்களை அளக் குங்கால் தொடரும் அவ்வளவைப் பெயர்களுள் உம்மை யாகிய உருபு தொக்கு நிற்பன உம்மைத்தொகைகளாம்.

எ-டு : கபிலபரணர், இராப்பகல், புலிவிற்கெண்டை, அறுபத்துமூவர்,ஆயிரத்தைஞ்ஞூற்றைம்பத்தொருவர், காலேஅரைக்காலரை, மாகாணிமுந்திரிகை - என்றும்; கழஞ்சேகால், கழஞ்சரையே அரைமா அரைக்காணி முந்திரிகை - என்றும்; நாழியாழாக்கு, கலனேமுக்குறுணி, நாழியாழாக்கேமுச்செவிடு - என்றும்; சாணரை, சாணரையேஅரைக்கால் - என்றும் வரும்.

இவை விரிவுழிக் கபிலனும் பரணனும், இராவும் பகலும், புலி யும் வில்லும் கெண்டையும், அறுபதின்மரும் மூவரும், ஆயிரவரும் ஐஞ்ஞூற்றுவரும் ஐம்பத்தொருவரும் என விரியும். (ஐம்பதின்மரும் ஒருவரும் ஐம்பத்தொருவர்.) பிறவு மன்ன. (நன். 368 சங்.)

உம்மைத் தொகை, செவ்வெண்; வேறுபாடு -

{Entry: C03__517}

பலமொழிகளையும் திரட்டி ஒரு பிண்டமாகக் கூறுமிடத்து உம்மைத்தொகையாகவும், கபிலன் பரணன் இருவரும் வந்தார் - எனப் பிளவுபடக் கூறுமிடத்துப் பெயர்ச்செவ் வெண்ணாகவும் கொள்ளப்படும். (நன். 413 இராமா.)

பொதுப்பெயர்ஒருமை உம்மைத்தொகைகள் பன்மையீற்றன - வேயாம் என்னும் நியதியுடையன அல்ல. சாத்தன்சாத்தியர் - சாத்தன்சாத்திகள் - என வருதலேயன்றி, சாத்தன்சாத்தி - என வரினுமாம். ஆயின் உயர்திணை ஒருமை உம்மைத்தொகை பன்மையீற்றதேயாம். கபிலபரணர் எனவரும். இயல்பாகிய ஒருமையீற்றான் வந்ததேல், உம்மைத்தொகை யாகாது ‘கபிலன் பரணன் இருவரும் வந்தார்’ என்றாற் போலச் செவ் வெண் தொகை பெற்றே வரும். (தொ. சொ. 372 சங். உரை)

தொகை ஒருசொல் நீர்மைத்தாக வருதலின் இரண்டு பெயர்க்கும் ஒரு பன்மை விகுதி வேண்டிற்று. ஒருசொல் நீர்மைத்து அன்றாயின் ஒருமைச்சொல் ஒருமையீற்றான் நடத்தற்கண் இழுக்கு யாதும் இல்லை. (தொ. சொ. 421 சேனா. உரை)

உம்மைத்தொகை வேற்றுமைத்தொகை ஆதல் கூடாமை -

{Entry: C03__518}

உவாப்பதினான்கு என்பது உவாவையும் பதினான்கையும் என விரியுமேல், ஆண்டு வேற்றுமைத் தொகையாம் என்னில், ஆகாது; வேங்கைமலர் என்னும் வேற்றுமைத்தொகை வேங்கையது மலர் என விரியும்; உம்மை வேறில்லை. உவாப் பதினான்கு என்பது உவாவும் பதினான்கும் என விரியுமிடத்து உம்மை ஒருதலையாக வேண்டலின், சிறப்பினால் உம்மைத் தொகையாகவே படும். (நன். 367 மயிலை.)

உம்மை மயங்கி நிற்றல்

{Entry: C03__519}

எச்சவும்மை செவ்வெண்ணிலே வருமாயின் ஈற்றிலே வரும். செவ்வெண் என்பது எண்ணிடைச்சொல்லின்றி எண்ணி நிற்பது.

எ-டு : ‘கல்வி செல்வம் ஒழுக்கம் குடிப்பிறப்பும் பெறுவாரு முளர்.’

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும், எச்சவும்மையும் முற்றும்மையும் எதிர்மறையும்மையும் தம்முள் மயங்கிநிற்கும் எனவும் கொள்க. அவை வருமாறு :

சாத்தனும் வந்தான் ; இனிக் கொற்றனும் வரினும் வரும் - எனின், சாத்தனும் கொற்றனும் என்ற எச்சவும்மைகள் ‘வரினும்’ என்ற எதிர்மறையும்மையொடு மயங்கி நின்றன.

வடுகரசரும் வந்தார்; இனித் தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர் எனின், வடுகரசரும் என்ற எச்சவும்மையொடு மூவேந்தரும் என்ற முற்றும்மை தொடர்ந்து ‘வரினும்’ என்ற எதிர்மறையும்மை யொடு மயங்கி நின்றன. (நன். 359 இராமா.)

உய்த்துக்கொண்டுணர்தல் -

{Entry: C03__520}

ஒரு தொடருக்கு இருவேறுவகையாகப் பொருள் செய்வதை நச்சினார்க்கினியர் உய்த்துக்கொண்டுணர்தல் என்ற உத்திவகை என்பர். சேனாவரையர் ‘யோகவிபாகம்’ என்று கூறுவதனையே நச். ‘உய்த்துக் கொண்டுணர்தல்’ என்றார். (தொ. சொ. 11, 460 நச். உரை)

உயர்திணை -

{Entry: C03__521}

உயர்வாகிய திணை எனப் பண்புத்தொகை. (நல்வினை ஏது வாக) உயர்ந்த மக்கள் - உயராநின்ற மக்கள் - உயரும் மக்கள் - என மூன்று காலமும் கொள்ளின் வினைத்தொகை. உயர் பொருளை உயர்திணை என்பது ஆசிரியன் ஆளுதல் கருதி இட்ட குறியாம் பண்புத் தொகையாம். (தொ. சொ. 1 தெய். உரை)

உயர் என்பது மிகுதி; திணை என்பது பொருள்; உயர்ந்த திணை ‘உயர்திணை’ என வினைத்தொகை. (‘உயர்திணை இலக்கணம்’ - காண்க.) (நன். 260 மயிலை.)

உயர்திணை அஃறிணைப் பொருள்கள் -

{Entry: C03__522}

மக்கள் என்றும் நரகர் என்றும் தேவர் என்றும் சொல்லப் பட்டன உயர்திணைப் பொருளாம். இவர்கள் ஒழியக் கிடந்த உயிருள்ளவும் உயிரில்லவும் அஃறிணைப் பொருளாம். (நேமி. மொழி. 3)

உயர்திணை ஆண்ஒருமைப்பால் ஆகாதன -

{Entry: C03__523}

இப்படாம் பட்டணவன் - இக்குதிரை சோனகன் - இவ் யானை பப்பரவன் - என்பனவும், அருமணவன் சாத்தன் கொற்றன் வலியான் வயான் கலுழன் அலவன் கருடன் இகலன் - என்றல் தொடக்கத்தனவும் உயர்திணையாக ஓதாமையின் உயர்திணை ஆணொருமைப்பால் ஆகா.

(நன். 275 மயிலை.)

உயர்திணை இயற்பெயர் -

{Entry: C03__524}

சொற்பொருள் உரைக்கும் வகையில் ஏதுக்களைக் கூறிய இலக்கணக் கொத்து ‘பிரிவு’ என ஏழு கூறும். அவற்றுள் உயர்திணை இயற்பெயரும் ஒன்று. உயர்திணை இயற்பெயர் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நின்று, வருமொழி வந்த பின்னர் ஒருமை விகுதியோ பன்மை விகுதியோ பெற்று நிற்கும்.

எ-டு : இறை : இருதிணைப் பொதுப்பெயர்.

இறைவன் வந்தான், இறைவர் வந்தார் - என நிற்கும்.

கோ வேந்து அரசு அமைச்சு கவி பெண்டு வேசை உமை தையல் பேதை - இவை கோன் கோக்கள், வேந்தன் வேந்தர், அரசன் அரசர், அமைச்சன் அமைச்சர், கவிஞன் கவிஞர், பெண்டாட்டி பெண்டுகள், வேசையாள் வேசையார், உமையாள், உமையார், தையலாள் தையலார், பேதையாள் பேதையார் - என இங்ஙனம் விரியும் என்க. (இ. கொ. 130)

உயர்திணை இலக்கணம் -

{Entry: C03__525}

உயர்திணை என்பது இறந்தகால வினைத்தொகை; உயர்ந்த திணை என விரியும். நச்சினார்க்கினியர், இளம்பூரணர், மயிலை நாதர் ஆகியோர் ‘உயர்திணை’ வினைத்தொகை என்றே கூறுவர். சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர், இராமானுச நாவலர் - மூவரும் பண்புத்தொகை என்பர். இவர்களுடைய கூற்றில் பண்புத்தொகை என்பதே வலியுடைத் தென்பர் பின்னையோர்.

திணையாவது ஒழுக்கம். உயர்திணை என்பது ஆகுபெயரான் அவ்வொழுக்கத்தை நிகழ்த்தும் பொருள்மேல் நின்றது. (இ. வி. 162 உரை)

உயர்திணை : பண்புத்தொகை; உயர்வாகிய குலம் என விரியும். அடையடுத்த இச் சாதிப்பண்பு ஆகுபெயராய்ப் பண் பியை உணர்த்தியது. “திணை என்பது ஒழுக்கம்; அஃது ஆகு பெயராய் ஒழுக்கத்தையுடைய பொருள்களை உணர்த்தி நின்றது” எனவும், அது வினைத்தொகை எனவும் கூறுவாரு முளர். சாதிவேற்றுமை கருதி உலகப் பொருள்களையெல்லாம் உயர்திணை அஃறிணை என இரண்டு சாதியாக வகுத்து, அவ்வேற்றுமை கருதி அவற்றை ஐம்பாலாகப் பகுத்தலே எல்லா ஆசிரியர்க்கும் கருத்தாவதன்றி ஈண்டு ஒழுக்கம் கருத வேண்டுவது இன்மையானும், அவ்வொழுக்கமும் உயிரில் லன வற்றுக்குப் பொருந்தாமையானும் ஈண்டுத் திணை என்பதற்கு அது பொருளன்று எனவும், உயர்திணையை உயர்ந்த திணை - என இறந்தகால வினைத்தொகையாக விரிக்கின், மரம் நாள்தோறும் உயர்ந்தமை கருதி உயர்மரம் எனவும், கல்வியறிவு நாள்தோறும் உயர்ந்தமை கருதி அதனை யுடையார் மேலேற்றி உயர் மக்கள் எனவும் கூறும் வினைத் தொகை போல, உயர்திணை என்பதற்கு உயரும் புடைபெயர்ச்சி வினை காட்சி வகையானும் கருத்து வகையானும் இன்மை யின் அது வினைத்தொகை அன்று எனவும் கொள்க. (‘உயர் திணை : தொகையிலக்கணம்’ - காண்க.) (நன். 261 சங்.)

உயர்திணை உம்மைத்தொகை முடிபு -

{Entry: C03__526}

உயர்திணை உம்மைத்தொகை பலர்பால் விகுதி கொண்டு முடியும்.

எ-டு : மாமூலபெருந்தலைச்சாத்தர், கபிலபரணர்.

இதனானும் தொகை ஒருசொல்லாகவே கொள்ளப்படுதல் பெறப்படும். ஒருசொல் நீர்மைத்து அன்றாயின் மாமூலன் பெருந்தலைச்சாத்தன் - கபிலன்பரணன் - என ஒருமைச்சொல் ஒருமையீறாகவே முடிதல் வேண்டும். (உயர்திணை விரவுப் பெயரும் சாத்தகொற்றர் எனப் பலர்பால் ஈற்றதாயிற்று.) (தொ. சொ. 421 சேனா. உரை)

அஃறிணை உம்மைத்தொகையாயின், இராப்பகல் - இராப் பகல்கள் - என இரு முடிபும் கொள்ளும்.

உயர்திணை ஒருமைப்பாலின்கண் வரும் உம்மைத் தொகைகள் ரவ்வீறும் கள்ளீறும் ஆகிய பலர்ஈற்றனவேயாம்.

எ-டு : கபிலபரணர், கல்லாடமாமூலர், சோழபாண்டியர்; தேவன்தேவிகள், பார்ப்பான்பார்ப்பனிகள், வில்லிவாளிகள் - எனக் காண்க.

இவ்வொருமைகள் இத்துணையர் என்னும் பொருள்பட நிற்றலின் பலரீற்ற வாயின. அஃறிணை ஒருமையும்மைத் தொகைகளும் பொது வொருமையும்மைத்தொகைகளும் தத்தம் பன்மை ஈற்றனவேயாம் என்னும் நியதியுடையன அல்ல.

வருமாறு :

உயர்திணை ஒருமை தோன்றும் அன்ன மரபின் வினை -

{Entry: C03__527}

சாத்தன் யாழ் எழூஉம், சாத்தி சாந்தரைக்கும் - என்னுமிடத்து, யாழ்எழூஉதலும் சாந்தரைத்தலும் அஃறிணைக்குப் பொருந் தாமையின், பொதுவினையாகிய செய்யும்என் முற்றுச் சில இடங்களில் உயர்திணை ஒருமையைச் சுட்டுவதுமுண்டு என்பது பெறப்படும்.

சாத்தன் யாழ்எழூஉக, சாத்தி சாந்தரைக்க - எனப் பொது வினையான வியங்கோள்வினையானும் சில இடங்களில் உயர் திணைப்பால் தோன்றும். (தொ. சொ. 175 நச். உரை)

‘தோன்றலும் உரித்தே’ என்னும் உம்மை எச்சவும்மை ஆக லான், அஃறிணை ஒருமை தோன்றலும் உரித்து - என்று கொள்க.

எ-டு : சாத்தன் புல் மேயும், சாத்தி புல் மேயும் - என்றவழி, சாத்தன் சாத்தி என்பன அஃறிணைஒருமை என்பது பெறப்பட்டது. (தொ. சொ. 169 தெய். உரை)

உயர்திணைக்கண் ஆகுபெயராய் வருவன -

{Entry: C03__528}

குடிமை ஆண்மை இளமை மூப்பு அடிமை வன்மை பெண்மை உறுப்பின்கிளவி சிறப்புச்சொல் விறற்சொல் - என்பன உயர் திணைக்கண் ஆகுபெயராய் வரும். காதல் பற்றிச் சிறுவனை யானை என்றலும் ஆகுபெயரன்றோ எனின், இயைபு கருதாது காதல் முதலாயினவற்றான் சிறுவனை யானை என்றது, யாதானும் ஓரியைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகும் ஆகுபெயராகாது. சிறுவனை யானை என்றல் ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆதல் ஒப்புமையான் ஆகுபெயர் என்பாரு முளர். (தொ. சொ. 56 சேனா. உரை)

குடிமை ஆண்மை முதலியனவற்றை உயர்திணைக்கண் வருங்கால் ஆகுபெயர் என்பாருமுளர். குடிமை என்னும் குணப்பெயர் ஆகுபெயராய் உயர்திணையை உணர்த்திற் றேல் குடிமை நல்லன் - என உயர்திணையான் முடியும்; தனக் குரிய பண்பினை உணர்த்திற்றேல் குடிமை நன்று என அஃறிணை யில் தானே முடியும்; அதனை அஃறிணைப் பொருள் உணர்த்தி நின்றது போல அஃறிணைமுடிபு கொள்ளும் எனக் கூறல் வேண்டா. ஆதலின், குடிமை முதலியன பண்புணர்த்தி நிற்கும் என்றலும், ஆகுபெயர் என்றலும் பொருந்தா.

இவை உயர்திணைப் பொருள் உணர்த்தியவாறு என்னை யெனின், இக்குடிமை முதலிய யாவும் பெரும்பாலும் உயர் திணைக்குப் பண்பாய் நின்று அப்பண்பினை உணர்த்தி, அஃறிணையாய் நில்லாது, அப் பண்புச்சொல் தன்னையும் தன்னையுடைய பொருளையும் ஒருங்கு தோற்றுவித்துப் பிரியாது நிற்றலின் உயர்திணைப் பொருளையே உணர்த்தி நிற்கும். இங்ஙனம் நிற்கும் என்றுணர்தல் சொல்லுவான் குறிப்பினாலன்றி உயர்திணைப் பொருளில் திரிந்து இன்ன வாறு நிற்கும் என்று வேறோராற்றான் உணர்தலின்று. இவற் றுள் விரவுப்பெயராய் அஃறிணைப் பண்பை உணர்த்து வன உளவேனும், அவையும் சொல்லுவான் குறிப்பான் ஒருகால் உயர்திணைப் பண்பே உணர்த்தும். (தொ. சொ. 257 நச். உரை)

குடிமை ஆண்மை முதலியன ஒருவன் ஒருத்தி பலர் - என்னும் மூன்று பாற்கும் பொதுவாய்ப் பின் முடியுங்கால் அஃறிணை முடிபிற்றாம் என்பது. (தொ. சொ. 57 இள. உரை, ப. உ)

குடிமை முதலியன பண்பு குறித்தவழி அஃறிணையாம்; பொருளைக் குறித்தவழி உயர்திணையே என்பது. குடிமை யாவது குடியாகிய தன்மை; அஃது அக்குடிப்பிறந்தாரைக் குறித்து நின்றது. இவையெல்லாம் ஆகுபெயரன்றோ எனின், ஆகுபெயராயின் தன் பொருட்கு உரிய பாலான் முடியும்; இவை அன்ன அன்றி வேறுபட்டு முடிதலின் குறிப்புமொழி ஆயின. (தொ. சொ. 55 தெய். உரை)

இவையெல்லாம் அப்பண்பின்மேல எனவும், ‘பண்பு கொள வருதல்’ - என்னும் ஆகுபெயராய்ப் பொருள்மேல் நின்றன எனவும் கூறுவர். அதுவும் அறிந்துகொள்க. (தொ. சொ. 57 கல். உரை)

உயர்திணைக்கண் ‘ஒப்பொடு வரூஉம் கிளவி’ -

{Entry: C03__529}

பொன்னன்னான், புலிபோல்வான் - என உயர்திணையில் ‘ஒப்பொடு வரூஉம் கிளவி’ தோன்றும். (தொ. சொ. 165 நச். உரை)

உயர்திணைக் குறிப்புவினை ஈறு பன்னிரண்டு -

{Entry: C03__530}

அம் ஆம் எம் ஏம் என் ஏன் அன் ஆன் அள் ஆள் அர் ஆர் - என்பன பன்னிரண்டும் உயர்திணைக் குறிப்புவினையீறாம்.

எ-டு : கரியம் கரியாம் கரியெம் கரியேம் கரியென் கரியேன்; கரியன் கரியான் கரியள் கரியாள் கரியர் கரியார் - எனத் தன்மையீறு ஆறும் படர்க்கையீறு ஆறும் காண்க. (தொ. சொ. 217 நச். உரை)

உயர்திணைக் குறிப்புவினை நிலைக்களங்கள் -

{Entry: C03__531}

ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள்: கச்சினன், கழலி னன் - என்பன. அது பற்றிப் பிறக்கும் உயர்திணைக் குறிப்பு வினை.

ஏழாம் வேற்றுமை நிலப் பொருள் : இல்லத்தன், புறத்தன் - என்பன அது பற்றிப் பிறக்கும் உயர்திணைக் குறிப்புவினை.

ஒப்புப் பொருள் : பொன்னன்னான், புலிபோல்வான் - என்பன
அது பற்றிப் பிறக்கும் உயர்திணைக் குறிப்புவினை.

பண்புப் பொருள் : கரியன், செய்யன் - என்பன அது பற்றிப் பிறக்கும் உயர்திணைக் குறிப்புவினை.

உடைமைப் பொருள் முதலிய நான்கும் உயர்திணைக் குறிப்புவினைமுற்றின் நிலைக்களங்கள். உடைமை என்பது உடைமைத் தன்மையும் உடைமைப் பொருளும் என இரு வகைப்படும். உடைமைத் தன்மையாவது தன் செல்வத்தை நுகராது நினைந்து இன்புறுதற்கு ஏதுவாய பற்றுள்ளம். உடைமைப் பொருளாவது ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது. அஃது, ‘இப்பொருளினுடையது இப்பொருள்’ - எனவும், ‘இப்பொருள் இப்பொருளினுடையதாயிருந்தது’ - எனவும், ‘இப்பொருளை உடையதாயிருந்தது இப்பொருள்’ எனவும் மூன்று வகைப்படும். அவை முறையே சாத்தனது ஆடை என ஆறனுருபாயும், ஆடை சாத்தனது எனவும், குழையன் - கச்சினன் - எனவும் வினைக்குறிப்பாயும் நிற்கும்.

சிறுபான்மை, ஐயாட்டையான் - துணங்கையான் - எனக் காலம் பற்றியும், வினைசெய் இடம் பற்றியும் முறையே உயர்திணைக் குறிப்புமுற்று வரும். (தொ. சொ. 215 நச். உரை)

அன்மை இன்மை உண்மை வன்மை - என்ற பொருள்பற்றி வருவனவும், அவை போல்வன பிறவாகிய நல்லன் தீயன் உடையன் - போல்வனவும் உயர்திணைக் குறிப்புவினைமுற்று நிலைக்களங்கள். (தொ. சொ. 216 நச். உரை)

உயர்திணைக் குறிப்புவினைமுற்று விகுதிகள் -

{Entry: C03__532}

உயர்திணைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகள் அன் ஆன் அள் ஆள் ப மார் கு டு து று என் ஏன் அல் அம் ஆம் எம் ஏம் (ஓம்) கும் டும் தும் றும் - என்பன. இவற்றுள் ப மார் கு டு து று அல் கும் டும் தும் றும் - என்னும் விகுதிகளே காலம் காட்டுவனவாம். காலம் காட்டாத விகுதிகளாகிய அன் ஆன் அள் ஆள் அர் ஆர் - என் ஏன் அம் ஆம் எம் ஏம் - என்னும் படர்க்கையீறு ஆறும் தன்மையீறு ஆறும் உயர்திணைக் குறிப்புவினைமுற்று விகுதிகளாம்.

எ-டு : கரியன் கரியான் கரியள் கரியாள் கரியர் கரியார் - படர்க்கை; கரியென் கரியேன் கரியம் கரியாம் கரியெம் கரியேம் - தன்மை (தொ. சொ. 217 நச். உரை)

உயர்திணைச் சொல்லாயினும் அஃறிணைமுடிபு கொள்வன -

{Entry: C03__533}

காலம் உலகம் உயிர் உடம்பு தெய்வம் வினை பூதம் ஞாயிறு திங்கள் சொல் - என்னும் பத்தும், பொழுது யாக்கை விதி கனலி மதி வெள்ளி வியாழம் போல்வனவும் உயர்திணைச் சொல்லாயினும் அஃறிணைமுடிபு கொள்வன.

இச்சொற்கள் கூறுகின்றபோதே தத்தம் உயர்திணைப் பொருளே தோற்றுவித்து நிற்றலின், ஆகுபெயர்கள் அல்ல.

(தொ. சொ. 58 நச். உரை)

இவற்றுள், பூதம் ஞாயிறு திங்கள் - என்பன ஒழித்து அல்லன எல்லாம் ஆகுபெயரான் அஃறிணைப்பெயர் உயர்திணை மேல் நின்றன. (தொ. சொ. 58 கல். உரை)

இவை உயர்திணையான தேவரையும் மக்களையும் உள்ள டக்கி அஃறிணையான் முடிவு எய்தின. உலகமும் உயிரும் உடம்பும் மக்கட் பண்பு; அல்லன தெய்வம் எனக் கொள்க. (தொ. சொ. 58 ப. உ)

உயர்திணை : தொகையிலக்கணம் -

{Entry: C03__534}

உயர்திணை - உயர்ந்த ஒழுக்கம் என, இறந்தகால வினைத் தொகை. அஃது ஆகுபெயராய் (உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய) அப்பொருளை உணர்த்தி நின்றது. இதனைப் பண்புத் தொகை என்பாரு முளர். அது பொருந்தாது; என்னை? இது காலம் தோற்றி நிற்றலின். உயர்திணை என்பது வினைத் தொகையோ பண்புத் தொகையோ எனின், உயர் என்னும் முதனிலை நின்று ‘உயர்ந்த திணை’ என அகரஈற்றுப் பெய ரெச்சமாய் இறந்தகாலம் தொக்கு நிற்றலின் வினைத்தொகை யாம். இதற்கு ஏனைக் காலமும் தொகுமாறு அறிக. இதனைப் பண்புத்தொகையாக்கி விரிக்குங்கால், கரியதாகிய குதிரை என விரித்தாற்போல விரியாது உயர்ந்ததாகிய ஒழுக்கம் - என விரிக்க வேண்டும். அங்ஙனம் விரித்துழி, அஃது உயர் என்னும் முதனிலைப் பின் வந்த தகரஅகரம் இறந்தகாலம் உணர்த் தியே நிற்றலின், பண்புத்தொகை ஆகாமை உணரப்படும். பண்பும் வினைக்குறிப்பும் முக்காலமும் புலப்படாமை நிற்கும். காலம் புலப்பட நின்றதன்மேல் பண்புகொள் பெயர் விரியாமை உணரப்படும். (தொ. சொ. 416 நச். உரை)

‘உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்’ உயர்முடிபு கோடல் -

{Entry: C03__535}

உடைப்பொருளும் உடையானும், இடமும் இடத்து நிகழ் பொருளும், காலமும் காலத்தியலும் பொருளும், அவயவ மும் அவயவியும், குணமும் குணியும், வினையும் வினைமுதலு மாகிய இயைபு உடைமையான், அதுபற்றி உடைப்பொருள் முதலியவற்றின் இயைபை உடையான் முதலிய பொருள் மேலேற்றி அவற்றின் வினையான் முடிப்பினும் அமையும் எனத் திணைவழு அமைத்தவாறு.

எ-டு : நம்பி பொன் பெரியன், இல்லம் பெரியன், வாழ்நாள் பெரியன், நங்கை மூக்கு நல்லள், நிறம் கரியள், கவ்வுக் கடியள் (கவவுதல் விரைந்த குறிப்பினள்) (நன். 377)

உயர்திணைப் பகுப்பு -

{Entry: C03__536}

உயர்திணை, ஆண்ஒருமையாம் ஆண்பால், பெண் ஒருமை யாம் பெண்பால், ஆண்பன்மை - பெண்பன்மை - இருபால் பன்மை - இவற்றை உள்ளடக்கும் பலர்பால் என்ற மூன்று பகுப்புடையது. (நன். 262)

உயர்திணைப் பால் -

{Entry: C03__537}

உயர்திணைப்பால், ஆண்பால் - பெண்பால் - ஆண்அலி - பெண்அலி - பேடிப்பால் - ஆண்பால் பன்மை - பெண்பால் பன்மை - ஆண்அலிப் பன்மை - பெண்அலிப் பன்மை - பேடிப் பன்மை - ஆண்பாலொடு பெண்பால் கூடிய பன்மை - பெண் பாலோடு ஆண்பால் கூடிய பன்மை - ஆண்பால் சிலர் - பெண்பால் சிலர் - என விகற்பித்துச் சொல்லப்படும் பலவகை யும் சொல்வகை மூன்றல்லது இன்மையின் உயர்திணைப் பால் மூன்றே, ஆண் பெண் பலர் - என. தேவர் நரகர் என்பவற் றது பாகுபாடும் இதனுள் அடங்கும். (தொ. சொ. 4 கல். உரை)

உயர்திணைப்பெயர் ஆர் என்னும் இடைச்சொல் பெறுதல் -

{Entry: C03__538}

நம்பியார் வந்தார் - நங்கையார் வந்தார் - எனச் சிறுபான்மை உயர்திணைப்பெயர் ஆர் விகுதி ஏற்கும். ஒருமைப்பெயர் நின்று ஆர்விகுதி ஏற்றலின், இவை ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேறாயின. (தொ. சொ. 272 நச். உரை)

உயர்திணைப் பெயர்கள் (1) -

{Entry: C03__539}

அவன் இவன் உவன், அவள் இவள், உவள், அவர் இவர், உவர், யான் யாம் நாம், யாவன் யாவள் யார் - என்னும் பதினைந் தும் மிகவும் வழக்காற்றில் உள்ள உயர்திணைப் பெயர்கள்.

ஆண்மகன் பெண்மகள் பெண்டாட்டி நம்பி நங்கை முறைப் பொருள் கருதாத மகன் மகள் என்னும் சொற்கள், மாந்தர் மக்கள் என்னும் பன்மைச் சொற்கள், ஆடூ மகடூ - என்னும் சொற்கள், சுட்டினை முதலாகவுடைய அவ்வாளன் இவ்வாளன் உவ்வாளன் அன்னன் அனையன் - என்னும் அன் ஈற்றுச் சொற்கள், அம்மாட்டான் இம்மாட்டான் உம்மாட்டான் அன்னான் அனையான் - என்னும் ஆன் ஈற்றுச் சொற்கள், அப்பெண்டு இப்பெண்டு உப்பெண்டு அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி - என்னும் சொற்கள், ஒப்புப் பொருள் பற்றி வரும் பொன்னன்னான் பொன்னன்னாள் பொன்னன் னார் - என்னும் வாய்பாட்டான் வரும் சொற்கள் - ஆகிய பதினைந் தும் மிகுதியும் பயிலாத உயர்திணைப் பெயர்களாம்.

எல்லாரும் என்னும் படர்க்கைச் சொல், எல்லீரும் என்னும் முன்னிலைச் சொல், பெண்மகன் என்னும் சொல் - என்பன ஈறு திரிந்து வரும் பெயர்களாம்.

அருவாளன், சோழியன் - முதலியன நிலத்தான் பெற்ற பெயர்.

சேரமான் மலையமான் பார்ப்பார் அரசர் வணிகர் வேளா ளர் - முதலியன குடியினான் பெற்ற பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் - முதலியன தாம் திரண்டு ஒருதுறைக் கண்ணே உரிமைபூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழும் பெயர். வருவார் செல்வார் தச்சர் கொல்லர் தட்டார் வண்ணார் - முதலியன தாம் செய்யும் தொழிலான் பெற்ற பெயர். அம்பர்கிழான் பேரூர்கிழான் குட்டுவன் பூழியன் வில்லவன் வெற்பன் சேர்ப்பன் - முதலியன தம் உடைமை யான் பெற்ற பெயர். கரியான் கரியாள் செய்யான் செய்யாள் - முதலியன தமது ஒரு பண்பினான் பெற்ற பெயர். தந்தையர் தாயர் - முதலியன பல்லோரைக் கருதின தமது முறைமை யான் பெற்ற பெயர். பெருங்காலர் பெருந்தோளர் அலை காதர் - முதலியன பல்லோரைக் கருதின சினைநிலைமை யான் பெற்ற பெயர்.

குறவர் வேட்டுவர் - ஆயர் பொதுவர் - நுளையர் திமிலர் பரதவர் - களமர் உழவர் - எயினர் மறவர் - முதலியன பல்லோரைக் கருதின குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலைமை யால் பெற்ற பெயர். பட்டிபுத்திரர் கங்கைமாத்திரர் முதலியன இளந்துணை மகார் தம்மில் கூடி விளையாடத் தாமே படைத்திட்டுக் கொண்ட பெயர். ஒருவர் இருவர் முப்பத்து மூவர் - முதலியன இத்துணையர் எனத் தமது வரையறை யுணரநின்ற எண்ணாகிய இயல்புபற்றிப் பொருளுணர்த்தும் பெயர்.

அருவாட்டி சோழிச்சி மலையாட்டிச்சி பார்ப்பனி அரசி வாணிச்சி வெள்ளாட்டிச்சி கொல்லிச்சி தட்டாத்தி வண்ணாத்தி அம்பருடைச்சி பேரூர்கிழத்தி - முதலியன டகர ஒற்று இரட்டியும், இச்சுப் பெற்றும், தகர ஒற்று இரட்டியும், இரண்டு இடைநிலையெழுத்துக்கள் பெற்றும் பெறாதும் வரும் மகடூஉப் பெயர்கள்.

இவையே அன்றி அன்னள் அனையாள் அவ்வாட்டி ஏனாதி காவிதி எட்டி வாயிலான் பூயிலான் வண்ணத்தான் சுண்ணத்தான் பெண்டிர் பெண்டுகள் அடியான் அடியாள் அடியார் வேனிலான் பிறன் பிறள் பிறர் மற்றையான் மற்றை யாள் மற்றையார் எல்லேம் வல்லேம் இருவேம் - முதலியன வும் உயர்திணைப் பெயர்களாம். (தொ. சொ. 164 - 168 நச். உரை)

உயர்திணைப் பெயர்கள் (2) -

{Entry: C03__540}

சுட்டுப் பெயர்களும், வினாப் பெயர்களும், உவமைப் பெயர்களும், பண்பின் பெயர்களும் என்று சொல்லப்பட்ட ன ள ர ஈறாகிய பெயர்களும், எண்ணியற் பெயர்களும், நிலப்பெயர்களும், கூடியற் பெயர்களும், காலப்பெயர்களும், குலப்பெயர்களும், தொழிற்பெயர்களும், ஆடூஉ மகடூஉ என்னும் பெயர்களும் உயர்திணைப் பெயராம்.

பல்லோரைக் குறித்து வரும் முறைப்பெயரும், சினைப் பெயரும், ‘நம்’ ஊர்ந்து வரும் இகர ஐகார ஈற்றுப் பெயரும், இகரஈற்றுச் சாதிப் பெண்பெயரும், மாந்தர் மக்கள் என்னும் பெயரும், தன்மைப் பெயரும் உயர்திணைப் பெயராம். அவை வருமாறு :

அவன் அவள் அவர், இவன் இவள் இவர், உவன், உவள், உவர்; எவன் எவள் எவர் யாவன் யாவள் யாவர்; பொன்னன் னான் பொன்னன்னாள், பொன்னன்னார்; கரியான் கரியாள் கரியார், நெடியான் நெடியாள் நெடியார் - இவை, ன ள ர ஈறாகிய நால்வகைப் பெயருமாம்

ஒருவர், இருவர், மூவர், நால்வர் - எண்ணியற்பெயர்

அம்பர்கிழான், வல்லங்கிழான் - நிலப்பெயர்

அவையகத்தார், அத்திகோசத்தார்

மணிக்கிராமத்தார் - கூடியற் பெயர்

மகத்தான் மகத்தாள் மகத்தார்,

நாலாண்டையான், நாலாண்டை-

யாள், நாலாண்டையார் - காலப் பெயர்

செங்கோன், செவ்வண்ணன் - குலப்பெயர்

உண்டான், உண்டாள், உண்டார் - தொழிற்பெயர்

ஆடூஉ, மகடூஉ - உயர்திணைப் படர்க்கைப் பெயர்

(நேமி. பெயர். 2 உரை)

தந்தையர், தாயர் - முறைப்பெயர்

பெருங்காலர், பெருங்கையர் - சினைப்பெயர்

நம்பி, நங்கை - ‘நம்’ ஊர்ந்து வரூஉம்
இகர ஐகாரப் பெயர்

பார்ப்பனி, குறத்தி, மறத்தி - இகர ஈற்றுச் சாதிப்
பெண்பெயர்.

மாந்தர், மக்கள் - படர்க்கைப் பலர்பால் பெயர்

யான் யாம் நாம் - தன்மைப்பெயர்

இவை உயர்திணைப் பெயராம். (நேமி. பெயர். 3 உரை)

உயர்திணைப் பெயரில் சாதியொருமை -

{Entry: C03__541}

‘சிவிகை பொறுத்தான்’ (கு. 37), வறியவன் இரந்தான், ‘தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்’ (நாலடி. 276) - இவை வருமொழி நோக்காமலே தமக்குரிய ஒருமைப்பாலை விட்டுப் பன்மைப்பாலை விளக்குதலால் உயர்திணைச் சாதியொருமை ஆயின.

‘இல்வாழ்வான் என்பான்’ (கு. 41), ‘அவ்வித்து அழுக்கா றுடையானை’ (167), ‘உடையான் அரசருள் ஏறு’ (381) - என்பனவும் அது.

(‘சிவிகை பொறுத்தான்’ என்பது சிவிகையைப் பொறுத்தார் - எனப் பலர்பாலைக் காட்டியவாறு. பிறவும் அன்ன.) (இ. கொ. 130)

உயர்திணைப் பொருள் -

{Entry: C03__542}

உயர்திணைப் பொருள், பொருள்முகத்தான் மக்களும் தேவரும் நரகரும் என மூன்று கூறுபடும்; சொல்முகத்தான் மக்கள் என்றதன்மேற்பட்டு ஒன்றேயாம். (தொ. சொ. 4 கல். உரை)

உயர்திணைப் பெயருள் விளி ஏலாதன -

{Entry: C03__543}

நமன் நமள் நமர், எமன் எமள், எமர், நம்மான் நம்மாள் நம்மார், எம்மான் எம்மாள் எம்மார், தமன் தமள் தமர், தம்மான் தம்மாள் தம்மார், நுமன் நுமள் நுமர், நும்மான், நும்மாள், நும்மார், மற்றையான் மற்றையாள் மற்றையார், பிறன், பிறள் பிறர் - எனக் கிழமைப் பொருண்மை குறித்து வரும் சொற்களும் சிறுபான்மை பிற சொற்களும் உயர் திணையில் விளி ஏலாதன. (தொ. சொ. 156 நச். உரை)

‘உயர்திணை மருங்கின் நிலையின’ -

{Entry: C03__544}

குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அடிமை, வன்மை, விருந்து, குழு, பெண்மை, அரசு, மக, குழவி, தன்மை திரி பெயராகிய அலி, உறுப்பின் கிளவிகளாகிய குருடு - முடம் - முதலியன, காதல் பற்றி வரும் யானை - பாவை - முதலிய பெயர்கள், சிறப்புப் பற்றி வரும் (கண்போலச் சிறந்தாரைக் கண் என்றும், உயிர்போலச் சிறந்தாரை உயிர் என்றும் கூறும்) சொற்கள், செறுதலைப் புலப்படுத்தும் பொறியறை - கெழீஇயிலி போசீத்தை (கலி 94 : 22) முதலிய சொற்கள், ஆற்றலைப் புலப்படுத்தும் பெருவிறல் - அருந்திறல் முதலிய சொற்கள், அவை போல்வனவாகிய வேந்து - வேள் - குரிசில் - அமைச்சு - புரோசு - முதலியன உயர்திணைப் பண்புப் பெயராய் உயர்திணைப் பொருளையும் ஒருங்கு உணர்த்தின வேனும் அஃறிணைவினை கொண்டு முடியும்.

எ-டு : குடிமை நன்று, ஆண்மை அழகிது. (தொ. சொ. 57 நச். உரை)

உயர்திணை மருங்கின் பால் -

{Entry: C03__545}

ஆண்பால், பெண்பால், ஆண் பெண் என்ற இரண்டன் பன்மைக் கும் பொதுவாகிய பலர்பால் என்னும் மூன்றும் உயர்திணைக் குரிய பால்களாம். உயர்திணையில் ஆண் பன்மை, பெண் பன்மை இவற்றிற்குத் தனியே பால்காட்டும் வினைமுற்று விகுதி இல்லை; பொதுவான விகுதிகளே உள்ளன.

(தொ. சொ. 4 நச். உரை)

‘உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசை’ப்பன -

{Entry: C03__546}

உயர்திணை யிடத்திற்குரிய பாலாய் வேறுபட்டு இசைப்பன பேடு, தெய்வம் - என்பன. இவை பேடி பேடியர் பேடிமார் - எனவும், ஈறு திரிந்து உயர்திணைப்பால் காட்டும். (தொ. சொ. 4 சேனா. உரை)

பேடு என்னும் பொருளும், தெய்வம் என்னும் பொருளும், நரகர் என்னும் பொருளும் உயர்திணையிடத்து முப்பாலை யும் பொருந்திவரும்.

பேடு வந்தான், பேடி வந்தாள், பேடியர் வந்தார்; வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்துமூவரும் வந்தார், சந்திராதித்தர் வந்தார்; நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் - எனவரும். (தொ. சொ. 4 கல் உரை)

‘உயர்திணை மருங்கின் விளிகொள் பெயர்’ -

{Entry: C03__547}

இ உ ஐ ஓ - என்னும் நான்கு உயிரீற்றுப் பெயர்களும், ன ர ல ள - என்னும் நான்கு மெய்யீற்றுப் பெயர்களும் உயர் திணைக்கண் விளியேற்கும் பெயர்களாம். மக - மகவே, மகா எனவும், ஆடூ - ஆடூவே எனவும், சிறுபான்மை அகர ஊகார ஈறுகள் உயர்திணையில் விளியேற்றலும் கொள்க. ஆய் - ஆஅய் எனச் சிறுபான்மை யகர ஈறு உயர்திணையில் விளியேற்றது.

எ-டு : நம்பி - நம்பீ, வேந்து - வேந்தே, நங்கை - நங்காய், கோ -கோவே; பார்ப்பன மகன் - பார்ப்பன மகனே, அசுவன் மகள் - அகவன் மகளே, இறைவர் - இறைவரே, குரிசில் - குரிசிலே.

(தொ. சொ. 122, 126 130, 131 நச். உரை)

‘உயர்திணைய’ : சொல்முடிபு -

{Entry: C03__548}

உயர்திணைய - உயர்திணையிடத்தன. அ : ஆறாம் வேற் றுமைப் பன்மையுருபு. ஆறாம் வேற்றுமை ஏற்று நின்ற சொல் பெய ராயும் வினைக்குறிப்பாயும் நிற்கும். ஈண்டு ‘உயர் திணைய’ என்பது வினைக்குறிப்பு முற்றாம். ஆகவே, வேற்றுமை யில் அகரவுருபே அஃறிணைப் பன்மை விகுதி யாயிற்று. (தொ. சொ. 2 சேனா. உரை)

உயர்திணையில் அஃறிணையாய்ச் சொல்லும் நிலையின -

{Entry: C03__549}

குழு அடிமை வேந்து குழவி விருந்து வழுவுறுப்பு (குருடு செவிடு முதலாயின) திங்கள் மகவு பண்பு உயிர் உறுப்பு மெய் - எனப்பட்ட பன்னிரண்டும் உயர்திணைப் பெயராயினும் அஃறிணையாகச் சொல்லப்படும். (நேமி. மொழி. 9)

உயர்திணையில் ஆறாம் வேற்றுமை -

{Entry: C03__550}

அஃறிணை ஒருமைபன்மைகட்கு இயைந்த உருபு ஆறாம் வேற்றுமைக்கண் அது ஆது எனவும் அ எனவும் வரும். இவ்வாறு கூறவே, உயர்திணை ஒருமை பன்மையாகிய கிழமைப் பொருட்கு இவ்வுருபுகள் ஏலா என்பது பெற்றாம். அவை வருங்கால், அவனுடைய விறலி - அவனுடைய விறலியர் - என மூன்று சொல்லாய் இரண்டு சந்தியாய் முன் னது எழுவாய்ச் சந்தியும் பின்னது பெயரெச்சக் குறிப்புச் சந்தியும் ஆம். ‘அவன் விறலி’ என்புழி உடைய என்பது இசை யெச்சம். சாத்தனுடைய இயல்பு - சாத்தனுடைய கை - என்றல் தொடக்கத்தனவும் அன்ன. இவற்றை ஆறாம் வேற் றுமைச் சந்தி என்றும், உடைய என்பதனைச் சொல்லுருபு என்றும் கூறுவாருமுளர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் உயர்திணை ஒருமைபன்மைகட்கு இவ்வுருபுகள் ஏலா என்பது கருதி, ‘அதுவென் வே ற்றுமை....... குகரம் வருமே’ (சொ. 95 நச்.) என்றார். (நன். 300. சங்.)

உயர்திணையில் பால்காட்டும் வினைவிகுதிகள் -

{Entry: C03__551}

உயர்திணைக்கு அன் ஆன் - இறுதியாய் வருவன ஆடூஉ அறி சொல்; அள் ஆள் - இறுதியாய் வருவன மகடூஉ அறிசொல்; அர் ஆர் ப - இறுதியாய் வருவன பலரறிசொல். இவை உயர்திணை முப்பாற் படர்க்கை முற்று விகுதிகளாம். (நேமி. வினை. 3)

உயர்திணையில் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் -

{Entry: C03__552}

உயர்திணையில் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் -

{Entry: C03__553}

உயர்திணையில் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் -

{Entry: C03__554}

உயர்திணையில் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் -

{Entry: C03__555}

‘பெயரினும் தொழிலினும் பிரிபவை’ - காண்க.

உயர்திணை விரவுத்திணை விகுதிகளில் ஈற்றயல் ஆகாரம் ஓ ஆதல் -

{Entry: C03__556}

எ-டு : அ) வில்லான் - வில்லோன் (குறுந். 7), தொடியாள் - தொடியோள் (குறுந். 7), முன்னியார் - முன்னியோர் (குறுந். 7), செப்பாதாய் - செப்பாதோய் (நற். 70) : ஆண் பெண் பலர்பால் பெயர்களும் முன்னிலை ஒருமைப்பெயரும் - என்னும் இவற்று விகுதி ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று.

ஆ) நிற்றந்தான் - நிற்றந்தோன் (அக. 48), பெயர்ந் தாள் - பெயர்ந்தோள் (அக. 248) இறந்தார் - இறந் தோர் (குறுந். 216), வந்தாய் - வந்தோய் (அக. 80) : ஆண் பெண் பலர்பால் வினைகளும் முன்னிலை ஒருமை வினையும் ஆகிய இவற்று விகுதி ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று. (தொ. சொ. 195, 211, 212 சேனா. உரை)

உயர்திணை விரவுப்பெயர்களை உயர்திணைப் பெயர்க்கண் அடக்கி விளி கூறல் -

{Entry: C03__557}

உயர்திணைப் பெயர்கள் விளியேற்றலைக் கூறும் அதிகாரத் தில் உயர்திணை விரவுப்பெயர்களாகிய முறைப்பெயர் விளியேற்றதனைக் கூறியதனானும் (126, 136, 147), விரவுப் பெயர்களாகிய தான் நீயிர் என்பன விளியேலா என்று குறிப் பிட்டதனானும் (137, 143), அஃறிணை விரவுப்பெயர் விளியேற்கு மாற்றை யுணர்த்தி உயர்திணைப் பெயருடன் மாட்டெறிந்து கூறுதலானும் (150) உயர்திணை விரவுப் பெயரை உயர்திணைப் பெயர்க்கண் தொல்காப்பியனார் அடக்கினார் என்பது சேனா வரையர் கருத்தாம் (120). அவர் கருத்துப்படி, உயர்திணை விரவுப்பெயர் அஃறிணை விரவுப் பெயர்க்கு இனமானது; பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்.

இனி நச்சினார்க்கினியர் கருத்து வருமாறு : உயர்திணை விரவுப்பெயர் என ஒன்றில்லை; உயர்திணைக்குரிய ஈறே அஃறிணையையும் சுட்டுதலின் ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்பது விரவுப்பெயரின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறுவது. அஃது உயர்திணைப் பெயரொடு மாட்டெறிந்து விளியேற்குமாறு கூறுவதற்கு ஏற்ப, மாட்டேற்றான் செல்லாத விரவுப்பெயர் விளியேற்றல் சிலவற்றை உயர்திணை யதிகாரத்துக் கூறினார் ஆசிரியர் என்பது. கல்லாடரும் இக் கருத்தினரேயாவர். (தொ. சொ. 120 சேனா. உரை) (தொ. எழுத். 155 நச். உரை)

உயர்திணை வினைமுற்று விகுதிகள் இருபத்து மூன்று -

{Entry: C03__558}

தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் : கு டு து று என் ஏன் அல் - 7

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் : கும் டும் தும் றும் அம் ஆம் எம் ஏம் - 8

படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் : அன் ஆன் - 2

படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் : அன் ஆள் - 2

படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் : அர் ஆர் ப மார் - 4

ஆக, உயர்திணை வினைமுற்று விகுதிகள் 23 ஆ மாறு காண்க.

(தொ. சொ. 204, 205,207, 208, 209 நச். )

‘உயர்பின் வழித்து’: பொருள் -

{Entry: C03__559}

உயர்ந்த பொருளின் வழியாகிய இழிந்த பொருளையுடையது.

ஒடு வுருபு இழிந்த பொருளை அடுத்து வரும் என்றவாறு.

எ-டு : அமைச்சரோடு இருந்தான் அரசன் என்புழிச் சிறவாத அமைச்சர்மேல் ஒடு வந்தது. (இப்பொருள் வடமொழி இலக்கண ஆசிரியர் பாணினிக்கும் ஒக்கும்.) (தொ. சொ. 88 தெய். உரை)

உயர்வுதான் பல ஆதல் -

{Entry: C03__560}

உயர்வு, குலத்தான் உயர்தலும் தவத்தான் உயர்தலும் நிலை யான் உயர்தலும் உபகாரத்தான் உயர்தலும் எனப் பலவகைய. ‘நாயொடு நம்பி வந்தான்’ என்புழி, நாய் உபகாரத் தான் உயர்வுடைமை பற்றி ஒடு உருபு புணர்த்துக் கூறப்பட் டது என்பது உரையாசிரியர் கருத்துப் போலும். (தொ. சொ. 87 இள. உரை)

குலத்தான் உயர்தலும், தவத்தான் உயர்தலும், நிலையான் உயர்தலும், உபகாரத்தான் உயர்தலும் - என உயர்வு பல வகைப்படும். (தொ. சொ. 93 கல். உரை)

உயர்வு குலத்தானும் தவத்தானும் ஞானத்தானும் கல்வி யானும் வீரத்தானும் உபகாரத்தானும் ஆம். ‘நூற்றுவர் மக்க ளொடு நாடு காப்பான் வந்தான் அரசன்’ எனவும், ‘நாயொடு நம்பி வந்தான்’ எனவும் வருவன உபகார உணர்ச்சி என்க. (உப காரம் பற்றிய உயர்வு கருதி மக்கள் நாய் - என்பவற்றின்வழி ஒடு வந்தவாறு.) (தொ. சொ. 92 ப. உ)

உயா, உசா - என்னும் உரிச்சொற்கள் -

{Entry: C03__561}

உயா என்பது வருத்தமாகிய குறிப்புணர்த்தும். உசா என்பது சூழ்ச்சி (ஆலோசனை) யாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘உயாவிளி பயிற்றும் யா’ (அக. 19), ‘உசாத்துணை’ (தொ. பொ. 126, (தொ. சொ. 369, 370 சேனா. உரை)

உயிர் இல்லன, உள்ளன - இவற்றுக்குப் பொதுவான தொழிற் பண்புகள் -

{Entry: C03__562}

தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் ஈதல் - என்பனவும் இவை போல்வன பிறவும் உயிர்ப்பொருள் உயிர்இல்பொருள் - என்னும் இரண்டற்கும் பொதுவான தொழிற் குணங்களாம்.

எ-டு : உயிர் தோன்றி மறைந்தது, உடல் தோன்றி மறைந்தது, நெருப்புத் தோன்றி மறைந்தது. (நன். 455 சங்.)

உயிர் இல்லனவற்றின் குணப்பண்பு -

{Entry: C03__563}

வட்டம் இருகோணம் முக்கோணம் சதுரம் - முதலிய பல வகை வடிவும், நற்கந்தம் துர்க்கந்தம் - என்னும் இரு நாற்றமும், வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமை - என்னும் ஐந்து வண்ணமும், கைப்புப் புளிப்புத் துவர்ப்பு உவர்ப்புக் கார்ப்பு இனிப்பு - என்னும் ஆறு இரதமும், வெம்மை தண்மை மென்மை வன்மை நொய்மை சீர்மை இழுமெனல் சருச்சரை - என்னும் எட்டு ஊறும் உயிரில்லாத பொருள்களின் குணப் பண்புகளாம். (நன். 454 சங். )

உயிர், உடம்பு - இவற்றின் திணை -

{Entry: C03__564}

உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையும் ஆகி, வினையினான் கட்டப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதொரு நுண்ணிய உடம்பு; இதனை மூலப்பகுதி எனினும் ஆம். தனியே எந்த உயிரும் உடம்பும் அஃறிணையே. மக்கள் உடம்பும் உயிரும் கூடியவழியே உயர்திணை. எனினும், மக்கட்சுட்டுடைமை யின், ‘உயிர் நீத்து ஒருமகன் கிடந்தான்’, ‘உடலம் விடுத்து ஒரு மகன் துறக்கம் புக்கான்’ - என உயர்திணையாக மக்கள் உடம்பையும் மக்கள் உயிரையும் கொள்ளுதல் மரபு வழுவ மைதியாம். இதற்குக் காரணம், உயிரையும் உடம்பையும் தனியே பிரித்தவழியும் வேறன்றி அவராகவே உணரப்படுத லின், உயர்திணை முடிபு கொடுக்கவேண்டும் என்பது.

(தொ. சொ. 56 தெய்வ., ) (தொ. சொ. 57 சேனா. உரை)

உயிர்உள்ளவும் இல்லவும் -

{Entry: C03__565}

ஊர்வன தவழ்வன தத்துவன நடப்பன பறப்பன நிற்பனவான விலங்கு ஆதி உயிருள்ளனவும், நீர் வளி தீ - என்றல் தொடக்கத்து உயிரில்லனவுமான காட்சி முதற்பொருளும், அணு உயிர் ஆகாயம் என்றல் தொடக்கத்துக் கருத்து முதற் பொருளும், கோடு சினை தோல் பூ மெய் வாய் கண் மூக்குச் செவி ஓசை நாற்றம் ஒளி சுவை ஊற்றுத் தொடக்கத்துக் காட்சிச் சினைப்பொருளும், உணர்தல் காண்டல் செய்தல் துய்த்தல் தொடக்கத்துக் கருத்துச் சினைப் பொருளும் ஆகிய எல்லாப் பொருளும் அஃறிணையாம். (நன். 260 மயிலை.)

உயிர்த் தொழிற்பண்பு -

{Entry: C03__566}

மெய் வாய் மூக்குக் கண் செவி - என்னும் ஐம்பொறிகளானும் ஊறு சுவை நாற்றம் ஒளி ஒலி - என்னும் ஐம்புலன்களையும் நுகர்தலும் - உறங்குதலும் - பிறரைத் தொழுதலும் - வேண்டி யனவற்றை அளித்தலும் - மடைத்தொழில் உழவு வாணிகம் கல்வி எழுத்துச் சிற்பம் - என்னும் ஆறு தொழில்களையும் (திவாகரம்) முயலுதலும் - இவை போல்வன பிறவும் உடம் பொடு கூடிய உயிர்த் தொழிற்பண்பாம். (நன். 452 மயிலை.)

உயிர்ப் பண்பு -

{Entry: C03__567}

‘அறிவு அருள் ஆசை அச்சம் மானம், நிறை பொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல், நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி, துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல், துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல், வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம், மறவி, இனைய உடல் கொள் உயிர்க் குணம்.’ (நன். 451 மயிலை.)

உயிரொடு நின்றகாலத்தும் உடம்பு உயிர்இல் பொருளே -

{Entry: C03__568}

பசுவுடம்பு எடுத்துழித் தன்கன்றினுக்கு இரங்கி நன்கிழைத்த உயிர், அவ்வுடம்பு நீங்கிப் புலியுடம்பு எடுத்துழி இரங்காது அக்கன்றினுக்கே தீங்கிழைக்குமாதலின், எவ்வுயிர் எவ்வுடம்பு எடுத்ததோ அவ்வுடம்பின் மயமாய் நிற்கும் ஒற்றுமைநயம் கருதியவழி ஒன்று போல் தோன்றுமாயினும், உயிர் சித்தா யும் உடம்பு சடமாயும் நிற்கும் வேற்றுமைநயமாகிய உண்மை கருதியவழி அவ்விரண்டும் தம்முள் வேறாம் ஆதலின், உயிரொடு நின்ற காலத்தும் அவ்வுடம்பு உயிரில் பொருள் என்று ஆம். (நன். 451 சங்.)

உயிரைப் பிரித்து ஓதாது உடலொடு கூட்டியே வழங்கியமை -

{Entry: C03__569}

சித்துப்பொருள் சடப்பொருள் என்பார் ‘உயிர் உயிரில்லதாம் பொருள்’ எனக் கூறியவாறும், சித்தாகிய உயிரறிவு சடமா கிய உடலொடு கூடியவழியன்றி நிகழாமையானும் அந் நிகழ்ச்சி கண்டல்லது உயிருண்டு என்பதும் அதற்கோர் அறி வுண்டு என்பதும் தோன்றாமையானும் உயிரைப் பிரித்தோதாது உடலொடு கூட்டிப் ‘புல்மரன் முதல’ என முறையே கூறிய வாறும், அவ்வுயிரறிவு உடலொடு கூடியவழி ஐம்பொறி யானும் ஐம்புலம் நிகழ்தலின் ஐயறிவு எனக் கூறியவாறும், பொறியும் எல்லா உடற்கண்ணும் ஒருங்கு நில்லாது இங்ஙனம் கூறிய முறையே (நன். 445 - 449) நின்று அறிவை நிகழ்த்தலின் உயிர்கள் பலவாயினும் அறியும் வகையான் உயிர் ஐந்து எனக் கூறியவாறும் காண்க. (நன். 449 சங்.)

உரி அடியான வினை -

{Entry: C03__570}

நட வா போன்ற தெரிநிலை வினையடியாகப் பிறப்பதன்றி, பெயர் இடை உரிச்சொற்கள் அடியாகவும் வினை பிறக்கும்.

சிவப்பு என்பது நிறப்பண்பினைக் குறிக்கும் உரிச்சொல்.

கண்ணே! சிவ : ஏவல்; கண் சிவத்தல்: தொழிற்பெயர்; கண் சிவந்தது: வினைமுற்று; சிவந்த கண்: பெயரெச்சம் ; சிவந்து
வீங்கின : வினையெச்சம்.

இவை உரியடியாகப் பிறந்த வினைகள் ஐந்து. எல்லாப் பண்புரிச்சொல்லும் இம்முறையே வரும். (இ. கொ. 68)

உரிஇயற்சொல் இல்லையாதல் -

{Entry: C03__571}

உரி இயற்சொல் உண்டு என்பர் மயிலைநாதர். உரியியற் சொல் இன்றாகவும் உரித்திரிசொல் என்றது, இயற்சொல் திரிசொல் என்ற பொதுவிலக்கணம் நோக்கியே ஆம்.

(நன். 270 சங்.)

அன்பு அழகு - என்றாற் போல்வன உரியியற்சொல்லன்றோ எனின், அவை மரம் குறைந்தது - மலை வளர்ந்தது - என்றாற்போல, அழகு குறைந்தது - அன்பு வளர்ந்தது - எனப் பெயர்த் தன்மைப்பட்டுப் பெயருள் அடங்கும் என்க. இனி இவற்றை உரியியற்சொல் எனக் கூட்டிப் பத்து வகைப்படும் சொல் என்பாரு முளர். (பெயர் வினை இடை உரி என்பன வற்றை இயற்சொல் திரிசொல் என்னு மிவ்விரண்டோடு உறழ எட்டாம்; திசைச்சொல் வடசொல் இவற்றைக் கூட்டப் பத்தாம் என்க.) (நன். 270 இராமா.)

உரிச்சொல் ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றுதல்’ -

{Entry: C03__572}

உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் பண்பானும் புலப் படுதல். சொல்லால் புலப்பட்டது : உறு என்பது; இதனின் இஃது உறும் - என்றவழி, மிகும் என்னும் பொருள்பட்டது. குறிப்பால் புலப்பட்டது: கறுத்தான் - என்பது; இஃது ஒருவன் - மாட்டுக் கருமையாகிய நிறம் குறியாது அவனது வெகுட்- சியைக் குறித்தலின் குறிப்பாயிற்று. பண்பால் புலப்பட்டது: வெகுளிக்குக் கண் சிவக்கும் - என்பது. கண்ணின் சிவப்பு அது சிவத்தற்குக் காரணமாகிய வெகுட்சியின்மேல் வந்தது. (தொ. சொ. 293 தெய். உரை)

உரிச்சொல் இருநிலையும் பெறுதல் -

{Entry: C03__573}

உரிச்சொற்களுள் விசேடிக்கும் சொற்களும் உள; விசேடிக்கப் - படும் சொற்களும் உள.

எ-டு : உறு கால், தவப் பல, நனி சேய்த்து, ஏகல் அடுக்கம் (அக. 52) : இவை ஒன்றை விசேடித்தல்லது வாரா உரிச்சொற்கள்.

குரு விளங்கிற்று, விளங்கு குரு; கேழ் கிளர் அகலம், செங்கேழ்; செல்லல் நோய், அருஞ்செல்லல்; இன்னல் குறிப்பு, பேரின்னல் - குரு முதலிய நான்கு உரிச்சொற்களும் முறையே ஒன்றை விசேடித்தும், ஒன்றனான் விசேடிக்கப்பட் டும் வந்தன. (தொ. சொ. 456 நச். உரை)

உரிச்சொல் இலக்கணம் -

{Entry: C03__574}

தமக்கென வேறொரு பொருளை உணர்த்தும் ஆற்றல் இல்லா இடைச்சொல் போலாது, பெயரையும் வினையையும் சார்ந்து, இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே உரியவாய் வருவன உரிச்சொல்லாம்.

குணப்பண்பும் தொழிற்பண்புமாகிய பொருட்பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல்லாம். இசை குறிப்பு பண்பு - என்னும் இம்மூன்றும் இவ்விருவகைப் பண்பில் அடங்கும்.

எல்லாம் ‘பொருள்’ என்றற்கு ஒரோவழி உரிமையுடைமை யின், அது பற்றிப் பண்பும் தொழிலும் பொருள் எனவும்படும் ஆகலின், அவற்றை யுணர்த்தும் உரிச்சொல்லும் ஒரோவழிப் பெயர்ச்சொல் எனப்படும். பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அதனை யுணர்த்தும் சொல் உரிச்சொல் எனப் பட்டது.

பண்பு உணர்த்துவனவாகிய உரிச்சொற்கள் பல. நட, வா, முதலிய முதனிலைகளும் தொழிற்பண்பை உணர்த்தும் சொற்கள் ஆதலின் உரிச்சொல்லேயாம். (சூ.வி. பக். 34,35)

உரிச்சொற்கள் இசை குறிப்பு பண்பு என்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி, ஒரு சொல் ஒரு பொருட்கு உரித்தாதலே யன்றி ஒரு சொல் பல பொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரிய வாய் வருவன. அவை பெயரும் வினையும் போல ஈறு பற்றிப் பொருளுணர்த்தல் ஆகாமையின், வெளிப்படாத வற்றை வெளிப்பட்டவற்றொடு சார்த்தித் தம்மை எடுத் தோதியே அப்பொருள் உணர்த்தப்படும்.

தமக்கு இயல்பில்லா இடைச்சொல் போலாது, இசை குறிப்பு பண்பு என்னும் பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்றலாகிய குணப்பண்பும் தொழிற்பண்பும் தம் பொருள்களாகக் கொண்டிருத்தலே உரிச்சொல் இலக்கணம். குறிப்பு - மனத்தான் குறித்துணரப்படுவது; பண்பு - பொறியானுணரப் படும் குணம். (தொ. சொ. 297. சேனா. உரை)

உரிச்சொற்கள் பெயரொடும் வினையொடும் சேர்ந்து இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பல சொல் ஒரு பொருட் குரித்தாயும் ஒரு சொல் பலபொருட் குரித்தாயும் நடக்கும். (நேமி. உரி. 1)

குறிப்பும் பண்பும் இசையுமாகிய மூன்று பொருண்மையும் உணர்த்திப் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் போலத் தம்மைக் காட்டி, அவ்விரு கூற்றுமொழிக்கும் முதனிலையு மாய், அவற்றின்கண் முன்னாகப் பின்னாகத் தாம் நிற்றற்குரிய நிலைக்களங்களில் நின்று, பல சொல் ஒரு பொருட்கு உரியவாதலையும் ஒரு சொல் ஒரு பொருட்கு உரித்தாதலை யும் ஒரு சொல் ஒரு பொருட் குரித்தாதலேயன்றிப் பலபொருட்கு உரித்தாதலையும் உடையவாகி, பெயர் வினை போல ஈறுபற்றிப் பொருள் உணர்த்தலாகாமையால் பயிற்சி யின்மை யால் கேட்போனால் பொருளுணரப்படாத சொற் களைப் பயிற்சியுண்மையால் பொருளுணரப்பட்ட சொற் களொடு சார்த்தி உணரப்படுவன உரிச்சொற்களாம். அவை எச்சொல் லாயினும் வேறுவேறு பொருளுணர்த்தும்.

பொருட்கு உரியவாகிய குறிப்பு முதலியவற்றை உணர்த்தி நிற்றலின் உரிச்சொல்லாயிற்று. இவ்வாறன்றிப் பெரும்பாலும் செய்யுட்கு உரித்தாய் வருதலின் உரிச்சொல்லாயிற்று என்பாருமுளர். (இ. வி. 280 உரை)

உரிச்சொல் பண்புப்பெயராயினும் ஏனைப் பெயர் வினை களைவிட்டு நீங்காமையின் வேறு ஓதப்பட்டன என்பதும், செய்யுட்கு உரியனவாதலின் உரிச்சொல் எனக் காரணக்குறி போந்தது என்பதும் இவற்றின் இலக்கணம் கூறிய முகத்தான் உணர்த்தினார். (நன். 442 சங்.)

உரிச்சொல் பண்புப்பெயராயினும், மற்ற பெயர் வினை விட்டு நீங்காமையின் உரிச்சொல் என வேறோதப்பட்டன என்பதும், செய்யுளுக்கு உரியவாதலின் இவற்றிற்கு உரிச் சொல் எனக் காரணக்குறி ஆயிற்று என்பதும் பெறப்பட்டன. இனி நால்வகைச் சொற்களும் செய்யுட்கு உரியனவாய் வருதலின், இவர் ‘செய்யுட்கு உரியன உரிச்சொல்’ என்றல் பொருந்தாது என்பதும், இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய மூவகைப் பொருளுக்கும் உரியவாய் வருதலின் உரிச்சொல் என்றல் பொருந்தும் என்பதும் உணர்ந்துகொள்க.

(நன். 374 இராமா.)

உரிச்சொல் ஒரு வாய்பாட்டான் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. இது குறைச்சொற்கிளவியாத லின், வடநூலார் தாது எனக் குறிப்பிட்ட சொற்களே இவை, அவையும் குறைச்சொல் ஆகலான். வழக்கின்கண் பயிற்சி யில்லாத உரிச்சொற்களே உரியியலில் ஓதப்பட்டன; எல்லா உரிச்சொற்களும் ஓதப்பட்டில. (தொ. சொ. 293 தெய். உரை)

உரிச்சொல் எழுத்துத் திரிந்து இசைத்தல் -

{Entry: C03__575}

நனவு என்னும் உரிச்சொல் ‘நன’ எனவும், மத என்னும் உரிச்சொல் ‘மதவு’ எனவும் திரிந்து வந்தன.

எ-டு : ‘நனந்தலை யுலகம்’ (முல்லை. 1), ‘பதவு மேய்ந்த மதவு நடையான்’ (அக. 14) எனக் காண்க. (இ.வி. 289 உரை)

உரிச்சொல் குறித்த பொருளன்றிப் பிறபொருட்கண்ணும் வருதல் -

{Entry: C03__576}

‘புரைபட்டது’ என்புழிப் ‘புரை’ பிளவுப் பொருண்மையை உணர்த்திற்று. ‘கண் கதழ எழுதினார்’ என்புழிக் ‘கதழ்வு’ விரைவுப் பொருளை விடுத்துச் சிறப்புப் பொருள் உணர்த் திற்று. கதழ எழுதினார் - சிறப்ப எழுதினார். (தொ. சொ. 385 இள. உரை)

உரிச்சொல் தடுமாறுதல் -

{Entry: C03__577}

தடுமாறுதலாவது, தனித்து வாராமல் பெயர்பற்றியும் வினைபற்றியும் வருதல். அவ்வாறு வருங்கால், ஒரு சொல் பல பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும், பல சொல் ஒரு பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம். (தொ. சொ. 293 இள. உரை)

உரிச்சொல் தோன்றுமுறை -

{Entry: C03__578}

உரிச்சொற்கள் பெயர்வினைகளை அடைந்து தம் மருங்கி னான் தோன்றுதலும், பெயர்வினைகளுடைய மருங்கினான் தோன்று தலும் என இருவகைய.

எ-டு : உறுகால் : உறு என்னும் உரிச்சொல் பெயரினது புறத்தே தோன்றிற்று. தெவ்வர், வயவர் : தெவ் வய - என்னும் உரிச்சொற்கள் பெயரினது அகத்தே உறுப்பாய்த் தோன்றின. (தொ. சொ. 162 கல். உரை)

உரிச்சொல் பற்றிப் பிரயோகவிவேகநூலார்தம் கொள்கை -

{Entry: C03__579}

சொற்கள் யாவுமே உரிச்சொற்கள்தாம். அவையும் பதினெட்டுத் திசைச்சொற்களுள் ஒன்றான தமிழில் வழங்குவனவும் வடசொல்ஆனவையும் தாம். இயற்சொல் திரிசொல் எனத் தனியே இல்லை. திசைஇயற்சொல், திசைத்திரிசொல், வட இயற்சொல் வடதிரிசொல் - என நான்காகச் சொற்களனைத் தையும் பகுத்துக் கோடலே தக்கது. அச்சொற்களெல்லாம், பலபொருள் ஒருசொல், ஒருபொருட் பலசொல் - என இரண்டாகப் பகுக்கப்படும். அவற்றுள் உலகவழக்குள் இல்லாத சொற்களை உலகவழக்கிலுள்ள சொற்களைக் கொண்டு விளக்குதல் வேண்டும்.

உரிச்சொல்லாவது, பொருளும் தானும் வேறின்றி அபேதம் ஆதற்குரிய சொல். குடமறியாதவனுக்குக் குடத்தைக் காட்டி, ‘இது குடம்’ என்றால், இது என்னும் சுட்டுப்பெயரும் குடம் என்னும் பொருளும் பேதமின்றி - வேறின்றி - ஒன்றாய்ப் பொருள் தோன்றும் என்பது சத்தநூலார் கொள்கை. மேலும் அவர், ‘சொல் நித்தியம் - அழியாது’ என்றும், ‘எங்கும் பரந் துள்ள விபு’ என்றும், ‘சொல் என்பது ஒருபொருள்’ என்றும் கூறுவர்.

சொல்லும் பொருளும் அம்மையப்பன் போலும் என்றும் கருதுவோருளர். சொல்லும் பொருளும் வேறானவை அல்லாமலும், வேறானவை போன்றும் உள்ளனவாக அன்னோர் கருதுவர். காளிதாச மாகவி ‘பார்வதியும் பரமேசு வரனும் சொல்லும் பொருளும் போல ஒட்டியவர்கள்’ என்று பாடியுள்ளார். சொல்லும் பொருளும் வேறானவை அல்ல என்பதே தொல்காப்பியனார் கருத்துமாகும்.

தொல்காப்பியனார் பொருண்மையும் சொன்மையும் தெரித லுக்குச் சொல் காரணமாம் என்பர். எனவே, பொருளைக் காரணமாய் நின்று உணர்த்துவதற்கு உரியது உரிச்சொல் லாம் என்று கொள்வது தவறு. இஃது உபசாரமாகக் கூறியது. இதுபோலவே, தொல்காப்பியனார். ‘கொடைஎதிர் கிளவி’ (தொ. சொ. 99) எனச் சம்பிரதானமாகவும், ‘முன்மொழி நிலையல்’ (419) என அதிகரணமாகவும், ‘அதி ர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்’ (316) என்பது போலக் கருத்தாவாகவும், வேறுவகையாகவும் கூறுவன யாவும் உபசாரவழக்கேயாம்.

‘கமம் நிறைந்தியலு ம்’ (355) ‘எல்லே இலக்கம்’ (269) என்பன போலச் சொல்லும் பொருளும் வேறின்றி அபேதமாகக் கூறுதலால் தொல்காப்பியனார்க்கும் அதுவே கருத்து. (பி. வி. 18)

(உரி என்பது தன்னோடு இயைபின்மை மாத்திரம் நீக்கிய அடை; இது பிறிதின் இயைபு நீக்குவதன்று. அடையடுத்துக் கூறியது சொல்லின் உண்மைத் தன்மை தோன்றக் கூறியது, ‘அஃறிணை விரவுப்பெயர்’ போல.)

உரிச்சொல் பெயர்ச்சொல்லின் வேறாதல் -

{Entry: C03__580}

ஈறு பற்றிப் பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரை யும் வினையையும் சார்ந்து பொருட் குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறாம். (தொ. சொ. 299 நச். உரை)

உரிச்சொல்லில் விசேடிக்கப்படும் அடையுடையன விளங்கு குரு, செங்கேழ், அருஞ்செல்லல், பேரின்னல் - போல்வன. பெயரை விசேடித்து வரும் உரிச்சொற்கள் : குருமணி, கேழ் கிளர் அகலம், செல்லல் நோய், இன்னல் குறிப்பு - போல்வன. (தொ. சொ. 456 நச். உரை)

உரிச்சொல் பெயரினும் வினையிலும் மெய்தடுமாறுதல் -

{Entry: C03__581}

பெயர்வினைகள் போன்றும், அவற்றிற்கு முதனிலையாயும் உரிச்சொற்கள் தம் உருவம் வேறுபட்டு வரும்.

எ-டு : கறுப்பு : பெயர்ப்போலி; தவ : வினைப்போலி; துவைத்தல்: (துவை : உரிச்சொல்) பெயர்ப்பகுதி; தாவாத : (தா : உரிச்சொல்) வினைப்பகுதி. (தொ. சொ. 299 நச். உரை)

உரிச்சொற்கள் தடுமாறுங்கால், பெயர்வினைகளைச் சார்ந் தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும்.

எ-டு : ‘உறு’ என்பது உரிச்சொல்; ‘உறுவளி’ என்றவழிப் பெயரைச் சார்ந்து வந்தது; ‘உறக் கொண்டான்’ - என்றவழி வினையைச் சார்ந்து வந்தது; ‘உறுவன்’ என்றவழிப் பெயர்க்கு அங்கமாயிற்று; ‘உற்றான்’ என்றவழி வினைக்கு அங்கமாயிற்று. (தொ. சொ. 293 தெய். உரை)

உரிச்சொல் முப்பத்தெட்டு -

{Entry: C03__582}

உரிச்சொல்லே எல்லாச் சொல்லுமாதலின், பதினெண் தேசிகச் சொல்லும் வடசொல் ஒன்றும் ஆகச் சொல் பத்தொன்பது. பலபொருள் ஒருசொல்லான நானாபதார்த்த பதமும், ஒரு பொருட் பல சொல்லான பரியாயம் எனப்படும் சமானார்த்த பதமும் - என இருவகையாய் வருதலின் அவை முப்பத்தெட் டாம்.

நானாபதார்த்த பதங்களில் சில பிரசித்தமாகவும், சில அப் -பிரசித்தமாகவும் வருதலால், அப்பிரசித்தமாய் உலக வழக்கில் இல்லாதனவாய் வருவனவற்றைப் பிரசித்தமாய் உலக வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டு விளக்குதல் வேண்டும் என்ற கருத்துடனேயே தொல்காப்பியனார், ‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி’ என்றார். இது பி.வி. நூலுடையார் கொள்கை. (பி. வி. 18)

உரிச்சொல்லின் அடிப்படை நிலை -

{Entry: C03__583}

ஒருசொல் இருதிணைப் பொருளுள் ஒன்றை இடமாகக் கொண்டு தோன்றுங்கால், அப்பொருள் பற்றி உள்ளத் தின்கண் நிகழும் குறிப்பும் புலன்கள் இடமாக நிகழும் இசை யும் பண்பும் ஆகியவற்றின் அடிப்படையில், வடிவு நிரம்பா மல் உயிரீறாகவோ புள்ளியீறாகவோ முகிழ்த்து, ஒருநெறிப் பட வாராமல் குறையாக நிற்கும் நிலையே உரிச்சொல்லின் அடிப்படைநிலையாம். இதனை ஆசிரியர்,

உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்

குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி

நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி’ (எழுத். 482)

எனக் கூறுமாற்றான் அறியலாம். குறைச்சொல்லாவது நிரம்பா உரிச்சொல். குறைச்சொற் கிளவிகள் வேற்றுமை கோடற் கும் காலம் காட்டற்கும் இயலாமல் திரிபுற்றுப் பெயர்ப் போலியாகவும் வினைப்போலியாகவும் நிற்கும் நிலைமைக் கண் அவை உரிச்சொல் எனப்படும்.

எ-டு : உற் என்னும் குறைச்சொல் உறு - உற - என நிற்றல்.

நிரம்பிய நிலையாம் உறவு உறவை உறவொடு உறவுக்கு - முதலாக வரின் பெயராம். உற்ற உற்று எனவும், உறல் உறுதல் எனவும் வரின் வினைச்சொல்லும் வினைப்பெயருமாம். உறுபொருள், உறுகால் - என அடையாக வரின் உரிச் சொல்லாம்.

ஆ என்னும் ஓரெழுத்துச் சொல், குறிப்பு அடியாகத் தோன்றிப் பெற்றத்தை உணர்த்திப் பொருட்பெயராய் நின்றது. அதுவே மெய்தடுமாறி முதனிலையாக (ஆகு என) ஏவலாயும், தல் என்னும் இறுதியொடு கூடி வினைப்பெயரா யும், இன் என்னும் கால இடைநிலையும் ஆன் என்னும் இறுதிநிலையும் ஆகியவற்றொடு கூடி ஆயினான் என வினைச்சொல்லாயும், ‘ஆ! இனி என் செய்வேன்?’ என இரங்கற் குறிப்புணர்த்தி இடைச்சொல்லாயும் நின்றது.

(தொ. சொ. பக். 303, 305 ச. பால.)

உரிச்சொல்லின் பலவகைப் பண்பு -

{Entry: C03__584}

உரிய சொல் யாது, அஃது உரிச்சொல். ‘பலவகைப் பண்பு’ என்றது, தொழிற்பண்பும் தழுவுதற்கு என்பது. ஆயின் ‘இரு வகைப் பண்பும் பகர்பெயராகி’ என்று சூத்திரம் செய்யா துவைத்து ஞாபகமாகக் கூற வேண்டுவது என்னை யெனின், தொழிற்பெயர் எல்லாம் உரிச்சொல் எனப்படா ஆதலின் செய்யுட்கே ஏற்று வருவன சில கோடற்கும், தொழில் கருவி யால் பெறப்படுதலால் ஏனைப் பண்புகள் போல ஒரு தலை யான ஒற்றுமைச் சிறப்பின அல்ல என்பது அறிவித்த தற்கும் என்க. (நன். 441 மயிலை.)

உரிச்சொல்லின் பிறிது இலக்கணம் -

{Entry: C03__585}

உரிச்சொற்கள் தம் ஈறு திரிதலும், பிறிது அவண் நிலையலும் உடைய. கடி என்னும் உரிச்சொல் ‘கடும் புனல்’ (குறுந். 103) என ஈறு திரிந்து வந்தது. நம்பு என்னும் உரிச்சொல் ‘நன் மொழி நம்பி’ என ஈறு திரிந்து வந்தது. ‘உருகெழு தோற்றம்’ என்புழி, உரு கெழு என்னும் இரண்டு உரிச்சொற்கள் இணைந்து வந்தன. (தொ. சொ. 390 இள. உரை)

உரிச்சொல்லின் புறனடை -

{Entry: C03__586}

விதந்தோதிய பொருளேயன்றிப் பிறபொருளும் உணர்த்தும் சில உரிச்சொற்கள் : பேஎ - மிகுதி : புனிறு - புதுமை ; கலித்தல் - தழைத்தல்; அரி - நிறம். (தொ. சொ. 386 தெய். உரை)

விதந்தோதிய உரிச்சொற்களேயன்றி, வெளிப்படையல்லாப் பிற சில உரிச்சொற்களும் அவற்றின் பொருளும் வருமாறு:

கஞல் - நெருக்கம் ; ஒல் - செயற்படும்; இருமை - பெருமை; அம் - அழகு; உருப்பு - வெம்மை; கவ்வை - அலர்; இவறல் - உலோபம்; பீடு - பெருமை; நொறில் - நுடக்கம், விரைவு ; தெவிட்ட - அசையிட; அமலுதல் - நெருங்குதல்; நாற்றம் - தோற்றம் ; நாடுதல் - ஆராய்தல்; தணத்தல் - நீக்கம்; நரலை - குற்றம் ; இவர்தல் - பரத்தல்; ‘வாயாச்செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன்’ (கலி.37) என்றவழிச் செத்து என்பது குறிப்புணர்த்திற்று.

[ இருமை - கருமை, பெருமை; சேண் - சேய்மை; தொன்மை - பழமை; இவறல் - உலோபம்; நொறில் - நுடக்கம், விரைவு; தெவிட்டுதல் - அசையிடுதல்; மலிதல் - நெருங்குதல்; மாலை - குற்றம். ] (தொ. சொ 392 தெய். உரை, 396 நச். உரை)

உரிச்சொல்லின் பொதுவிலக்கணம் -

{Entry: C03__587}

குணப்பண்பும் தொழிற்பண்புமாகிய இரண்டனுள் அடங்கும் பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த் தும் பெயராகி, அங்ஙனம் உணர்த்துமிடத்து ஒருசொல் ஒரு குணத்தை உணர்த்துவனவும் ஒருசொல் பலகுணத்தை உணர்த்துவனவு மாய், ஏனைப் பெயர் வினைகளை விட்டு நீங்காதனவாய், செய்யுட் குரியனவாய், இசை குறிப்பு பண்பு - என்றும் பொருட்கு உரிமை பூண்டு வருவன உரிச் சொல்லாம். செய்யுட்கு உரியனவாதலின் இவற்றிற்கு உரிச் சொல் எனக் காரணக்குறி போந்தது. பிங்கலம் திவாகரம் சூடாமணி - முதலிய நூல்களுள் உரிச்சொல் தொகுதிகள் வகுக்கப்பட்டுள. உரிச்சொற்பரப்பு ஆண்டுக் காணப்படும்.

(நன. 442, 460 சங்.)

உரிச்சொல்லுள் வெளிப்படையாவனவும் அல்லனவும் -

{Entry: C03__588}

உண்டல் என்னும் வெளிப்படை (உரிச்சொல்லு)க்கு அயிறல் - மிசைதல் - என்பன வெளிப்படையல்லா உரிச்சொற்கள். உறங்குதல் என்னும் வெளிப்படை யுரிச்சொற்குத் துஞ்சல் என்பது வெளிப்படையல்லா உரிச்சொல். இணைவிழைச்சு என்னும் வெளிப்படைக்குப் புணர்தல் - கலத்தல் - கூடல் - என்பன வெளிப்படையல்லா உரிச்சொற்கள். அச்சம் என்னும் வெளிப்படைக்கு வெரூஉதல் என்பது வெளிப்படை யல்லா உரிச்சொல். (தொ. சொ. 294 தெய். உரை)

உரிச்சொல்லை உணரும் திறம் -

{Entry: C03__589}

தொழிற்பண்பும் குணப்பண்பும் பற்றி வரும் உரிச்சொற்கள் ஈறு பற்றி உணர்த்தற்கு அடங்காது பல்லாற்றானும் பரந்து வருவன. இசை - குறிப்பு - பண்பு - பற்றித் தாம் இயன்ற நிலத்து இத்துணை என வரையறுத்துணரும் எல்லை தமக்கு இன்மை யின் எஞ்சாமல் கிளத்தல் அரிது ஆகலின், அவற்றை அறி தற்கு ஓதிய வழிகளைச் சோராமல் மிகவும் கடைப் பிடித்துப் பாதுகாவலாகிய ஆணையின் கிளந்தவற்றினது இயல் பானே அவற்றைப் பகுதியுற உணர்தல் வேண்டும்.

பெயர்வினைகள் போன்றும், அவற்றிற்கு முதனிலையாயும் தம் வடிவு தடுமாறும் ஆதலின், உரிச்சொற்கு முன்னும் பின்னும் வருமொழிகளை ஆராய்ந்து அம்மொழிகளுள் உரிச்சொற்குப் பொருந்தும் மொழியொடு கூட்டிப் பொரு ளுணர்த்த வேண்டும். அப்பொருள் மரபுநெறியான் வருவது எனவும், பயிலாத உரிச்சொற்களைப் பயின்ற உரிச்சொற் களொடு கூட்டிப் பொருளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறிய செய்திகளையும் கொண்டு உரிச் சொற் பொருளை உணர்தல் வேண்டும்.

(தொ. சொ. 396, 299 நச். உரை)

உரிச்சொல் வேற்றுமைச்சொல் ஆதல் -

{Entry: C03__590}

உரிச்சொற்களிலும் வேற்றுமையுருபு போலப் பொருள் வேறு படுத்தற்கு உரியவை உரியவாம். அது நனி என்பது உறுவும் தவவும் போல மிகுதி குறித்து வரினும், அவை போல உறுவன - தவவன - எனப் பொருளுணர வாராது குறிப்பினான் மிகுதி உணர்த்துதலின், இதுவும் இடைச்சொல் போல வேறுபடுக் கும் சொல்லாயினல்லது பொருளுணர வாராமை உணரப் படும்.

எ-டு : நனிபேதை : நனி வேறுபடுக்கும் சொல்லாய்ப் பேதையை விசேடித்தது. (தொ. சொ. 446 தெய். உரை)

உரிச்சொற்களைப் பொருட்குறை கூட்டல் -

{Entry: C03__591}

பொருளைச் சொல் இன்றியமையாக் குறை தீரப் பொருளை அதனொடு கூட்டி உணர்த்த, உரிச்சொற்கள் இசை - குறிப்பு - பண்பு - பற்றித் தாம் இயன்ற நிலத்து இத்துணை என்று வரை யறுத்துணரும் எல்லை தமக்கு இன்மையின், எஞ்சாமல் கிளத்தல் அரிது என்பது. (தொ. சொ. 396 நச். உரை)

உரிமையாய் ஏற்றல் -

{Entry: C03__592}

‘கொள்வோன் வகைகள்’ காண்க.

உரிமையாய்த் தோன்றலின் ஐவகை -

{Entry: C03__593}

ஆறாம் வேற்றுமைப் பொருள் வகையில், வேற்றுமைக்குறை என்பதன் உட்பகுப்புக்களில் ‘உரிமையாய்த் தோன்றல்’ ஒன்று. இஃது ஐந்து வகைப்படும். அவையாவன பொருள் - இடம் - காலம் - (ஒருவர் இயற்றிய நூலும் ஒருவரைப் பற்றிய நூலும் ஆகிய) இருவகைநூல் - என்பன.

எ-டு :

முருகனது வேல்
பொருள் உரிமை;
முருகனது குறிஞ்சி
இட உரிமை
வெள்ளியது ஆட்சி
கால உரிமை
சம்பந்தனது தமிழ்
சம்பந்தனது பிள்ளைத்தமிழ்
(‘இருவகை நூல்’ காண்க) (இ. கொ. 40)

உரியியல் -

{Entry: C03__594}

இது தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் எட்டாம் இயலா கும். இதன்கண், உரிச்சொல் இலக்கணமும், பொருள் வெளிப் படாத உரிச்சொற்களே கிளந்து பொருள் கூறப்படும் என்னும் செய்தியும், பயிலாத பல உரிச்சொற்களின் பொருளும், ஓருரிச்சொல்லே பல பொருள் படுமாறும் பல உரிச்சொல் ஒருபொருளிலேயே வருமாறும், பிறவும் கூறப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட உரிச்சொற்களேயன்றி, வேறு உரிச்சொற்கள் உள்ளவற்றையும் கொள்க என்ற சொல் பற்றிய புறனடையும், உரிச்சொற்கள் கூறிய பொருள்களிலன்றி வேறு பொருள்களி லும் வருமாற்றையும் கொள்க என்ற பொருள் பற்றிய புற னடையும் கூறப்பட்டுள. பொருளுணர்த்து முறை, அதனைத் தெளிவாக உணரும் திறன், பொருளுணர்வோர்தம் ஆற் றலைப் பொறுத்தது என்பது, மொழிப்பொருட் காரணம் விளங்கத் தோன்றாமை, உரிச்சொற்களைப் பகுதி விகுதி முதலியவாகப் பகுத்தல் கூடாது என்பது, பலவகைப் பட்ட உரிச்சொற்களுக்கும் புறனடை ஆகியவை இவ்வியலுள் 98 நூற்பாக்களால் நுவலப்பட்டுள. (தொ. சொ. 299 - 396 நச்.)

உருபினும் பொருளினும் மெய்தடுமாறுவன சில -

{Entry: C03__595}

உருபானும் பொருளானும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று பிறிதொன்றன் பொருளும் தன்பொருளும் ஆகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமைகள்.

நோயின் நீங்கினான் - நோயை நீங்கினான்

சாத்தனை வெகுண்டான் - சாத்தனொடு வெகுண்டான்

முறையாற் குத்தும் குத்து - முறையிற் குத்தும் குத்து

கடலொடு காடு ஒட்டாது - கடலைக் காடு ஒட்டாது

தந்தையொடு சூளுற்றான் - தந்தையைச் சூளுற்றான்.

(தொ. சொ. 101 சேனா. உரை) (102 நச். உரை, 103 கல். உரை)

புலி போற்றிவா, புலியைப் போற்றிவா : இரண்டன் உருபும் (செயப்படு) பொருளும்; புலியான் (ஆய ஏதம்) போற்றிவா : மூன்றன் உருபும் அதன் ஏதுப்பொருளும். (தொ. சொ. 102 ப. உ)

நம்பிமகன், நம்பிக்கு மகன் - என்றவழி உருபே சென்றது, உடைப்பொருள் செல்லவில்லையெனின், உருபு சென்றவழி அதன் பொருளும் உடன் செல்லும் என்று கொள்க.

(தொ. சொ. 102 ப. உ)

உருபு அடுக்கு -

{Entry: C03__596}

அடுக்கு வகைகளில் ஒன்றான ‘வேறுபல அடுக்கல்’ என்ப தற்கு எடுத்துக்காட்டாக, ‘வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான்’ எனக் காட்டி, இத்தொடரில் ஆன் - ஐ - கண் - என்னும் வேற்றுமையுருபுகள் அடுக்கி வந்ததாக இலக்கணக் கொத்துக் கூறும். (இ. கொ. 120)

உருபு அல்லவை உருபு போன்று தோன்றுதல் -

{Entry: C03__597}

வேற்றுமையுருபு அல்லாத ஐ, கு - போல்வனவும் உருபு போலப் பெயரை அடுத்து வரும். அச்சொற்கள் வடிவினால் வேற்றுமை ஏற்பன போலத் தோன்றினும், அவை அன்ன அல்ல.

எ-டு :

பெண்ணை வளர்த்தான் :
பெண்ணை - பனை.
மாலை விரும்பினான் :
மாலை - பூமாலை.
எண்ணொடு நின்று பிரிந்தது :
எண்ணுப்பொருளில் வந்த ஒடு என்னும் இடைச்சொல்.
தலையோடு தகர்ந்தது
ஓடு - மண்டை ஓடு.
ஊரான் ஓர் தேவகுலம்
ஊரான் - ஊர்தோறும்.
உணற்கு வந்தான் :
செயற்கு என்னும் வாய்பாட்டுவினையெச்சம்.
ஆடிக்கு வந்தான்
ஆடிக்கண் ; இக்குச்சாரியை.
அவனது செய்தான்,
இவனது செய்தான்
அதனை என்பது பொருள்
நெற்றிக்கண் நெருப்பு
‘கண்’ இங்கே விழி
அவன்தலை ஐந்து
தலை - சிரம்
அவன்கடை வெல்லம்
கடை - அங்காடி
இவன்புடை கொடிது
புடை - புடைத்தல் (தொழிற்பெயர்) (இ.கொ. 19)

செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைப் பிரித்தல் கூடாது என்பதும், ‘செயல்’ தொழிற்பெயராயின் செயல் + கு எனப் பிரிக்கலாம் என்பதும் சேனாவரையர் கருத்து. (சொல். 40)

உருபு ஈறு பெயர்க்கு ஆதல் -

{Entry: C03__598}

உருபுகள் பெயர்ச்சொற்களொடு பிரிக்கப்படும் நிலையில் இணைந்து அவற்றின் பொருளை வேறுபடுக்க வருவன ஆதலின், பெயர் நிலைமொழியாயிருந்து முடிக்கும் சொல்லை அவாவி நிற்குமிடத்தும், பெயர் தொடரது இறுதியில் வருமிடத்தும் பெயருக்குப் பின்னரே உருபு வரும்.

எ-டு : நிலத்தைக் கடந்தான், கடந்தான் நிலத்தை

(தொ. சொ. 69 சேனா. )

உருபு என மொழிதல் -

{Entry: C03__599}

திணை துணிந்து பால் துணியப்பெறாத ஆண்பெண் ஐயத்துக்கண்ணும், அஃறிணையில் பன்மைஒருமைப் பால் ஐயத்துக்கண்ணும், ஒருமைப்பால் துணிந்து திணை துணியப் பெறாத ஐயத்துக்கண்ணும் உருபு என்ற பொதுச்சொல் வினாவுமிடத்து முடிக்கும் சொல்லாக வரும்.

எ-டு : ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டிகொல்லோ
தோன்றாநின்ற உருபு? ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்க உருபு? குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றாநின்ற உருபு? (தொ. சொ. 24 சேனா. உரை)

நச்சினார்க்கினியர் உருவு என்று இதனைத் திணை ஐயத் திற்கே கொள்வர்.

இளம்பூரணரும் கல்லாடரும் அவ்வாறே கொள்வர்.

உருபு ஏலாப் பெயர்கள் -

{Entry: C03__600}

நீயிர் நீவிர் நான் - என்னும் இம்முப்பெயரும் எழுவாய் வேற் றுமையினை அன்றி ஏனை ஏழுவேற்றுமையினையும் ஏலா.

நீர் என்னும் ஈரெழுத்தொருமொழி, அதுபோல ஈரெழுத் தொருமொழியாகிய நும் எனவும், யான் என்னும் யகர முதல் மொழி யகரத்தொடு பிறப்பு ஒத்த எகர முதல்மொழியாகிய என் எனவும் திரிந்து ஐ முதலிய ஆறுருபும் ஏற்றாற்போல, நீயிர் நீவிர் நான் - என்னும் மூன்றும் அங்ஙனம் வாராமையின், நும் - என் - எனத் திரிதலும் அவ்வுருபுகளை ஏற்றலும் அவற்றுக்கு இல என்றார். (நன். 294 சங்.)

உருபுகள் எதிர்மறுத்து வரினும் பொருள் மாறாமை -

{Entry: C03__601}

‘வேற்றுமைச் சொல்லை எதிர்மறுத்து மொழிதல்’ காண்க.

உருபுகள் செய்யுளுள் ஈறு திரிதல் -

{Entry: C03__602}

செய்யுளுள், கு ஐ ஆன் - என்னும் உருபுகளுள் குகரமும் ஐகாரமும் உயர்திணைக்கண் ககரமாகவும் அகரமாகவும் திரியும்; ‘ஆன்’ இரு திணைக்கண்ணும் அகரம் பெற்று ‘ஆன’ எனவும் திரியும்.

எ-டு : கு - ‘கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க’ (எ. 389)
ஐ -
‘காவ லோனக் களிறஞ் சும்மே’
ஆன் -
‘புரைதீர் கேள்விப் புலவ ரான’
‘புள்ளியல் கலிமா உடைமை யான’ (பொ. 194 நச்..)

(தொ. சொ. 104, 105 இள. உரை)

உருபுகள் சொற்றொடரின் இடையும் இறுதியும் வருதல் -

{Entry: C03__603}

உருபு ஏற்ற பெயர் நிலைமொழியாகி வருமொழியாகிய முடிக்கும் சொல்லொடு புணரும்வழி, உருபுகள் அச்சொற் றொடரின் இடையே வரும். உருபேற்ற பெயர் வருமொழி யாகி முடிக்கும் சொல் நிலைமொழியாகிவரின், உருபு அச்சொற்றொடரின் இறுதியில் அமையும்.

எ-டு : நிலத்தைக் கடந்தான், கடந்தான் நிலத்தை

ஆறாம் வேற்றுமையுருபும், பெயர் கொண்டு முடியும் ஏழாம் வேற்றுமையுருபும் இறுதிக்கண் நிலவா. சாத்தனது ஆடை, குன்றத்துக்கண் கூகை - என இடையே நிலவுதலன்றி, ஆடை சாத்தனது - கூகை குன்றத்துக்கண் - என இறுதி நிலவாமை காண்க. (தொ. சொ. 103 சேனா. உரை)

உருபுகள் தம் பொருளன்றி வேறு பொருளைத் தருதல் -

{Entry: C03__604}

வீட்டை விரும்பினான் என்புழி, ஐயுருபு செயப்படு- பொருளைச் சுட்டாது செயலற்ற ஒன்றைச் சுட்டியது. வீடு என்பது நல்வினை தீவினைகளாகிய தொழில்களினின்று விடுதலை பெறுதலாம். புடைபெயர்ச்சியாகிய தொழிலையும் நீங்கு தலே வீடு ஆதலின், வீட்டை விரும்பினான் என்னும் தொட ரில், ஐயுருபு (வினைமுதல் தொழிலது பயனை உறுவ தாகிய) செயப்படு பொருளைச் சுட்டாது வேறு ஒன்றைச் சுட்டிய வாறு. (இ. கொ. 53)

‘மலையொடு பொருத மால்யானை’ என்புழி, பொருதல் யானைக் கன்றி மலைக்கு இன்மையின், ஒடு உருபு வினை யின்மை பற்றி வந்தது.

‘தொடியொடு தொல்கவின் வாடின தோள்’ (கு. 1235) என்புழி, தொடிக்குத் தோள்போல வாடுதல் தொழிலின்றி நெகிழ்தல் தொழிலே உண்மையின் ஒடு வேறுவினை பற்றி வந்தது.

‘பாலொடு தேன்கலந் தற்றே’ (கு. 1121) என்புழி, பாலும் தேனும் பிரித்தல் இயலாதவாறு கலத்தலின், ஒடு மயக்கம் பற்றி வந்தது.

‘மதியொடு ஒக்கும் முகம்’ என்புழி, ஒடு ஒப்புப் பற்றி வந்தது.

‘விலங்கொடு மக்கள் அனையர்’ (கு. 410) என்புழி, ஒப்புமை கூறத்தகாத விலங்கையும் மக்களையும் ஒப்பிட்டமையால் ஒடு ஒப்புஅல் ஒப்புப் பற்றி வந்தது. (இ.கொ. 54)

சோற்றிற்கு அரிசி - ஆதிகாரண காரியம்

கூழிற்குக் குற்றேவல் - நிமித்தகாரண காரியம்

பூவிற்குப் போனான் - பொருட்பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று. (பூ வாங்குதற்கு என்பது பொருள்.)

உணற்கு வந்தான் - தொழிற்பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று. (செயற்கு என்பதே ஒரு வினையெச்ச வாய்பாடு)

பிணிக்கு மருந்து - பொருட்பெயரின் பின் பெயரெச்சப் பொருட்டு. (பிணிக்குக் கொடுக்கும் மருந்து)

உணற்குக் கருவி - தொழிற்பெயரின் பின் பெயரெச்சப் பொருட்டு. (உணற்கு உதவும் கருவி) (இ.கொ. 55)

‘பேதையின் பேதையார் இல்’ (கு. 834) - ஒப்புப் பொருட்டு

வேங்கடத்தின் தெற்கு, குமரியின் வடக்கு - எல்லைப் பொருட்டு

வாணிகத்தின் ஆயினான் - ஏதுப் பொருட்டு

காக்கையின் கரிது களம்பழம் - ஒப்பின்மையாகிய உறழ்ச்சிப் பொருட்டு. (காக்கையைவிட - என்பது பொருள்)

(ஐந்தாவதன் சிறப்புப் பொருள் நீக்கமே; ஒப்பு முதலாய பிற பொருளும் குறித்து அவ்வுருபு வரும் என்பது.)

வாளது வெட்டு - வாளால் வெட்டிய வெட்டு - எனக் கருவிப் பொருட்டு ஆயவாறு. (இ. கொ. 57)

அறிவின்கண் திரிபு - அறிவினது திரிவு - எனத் திரிபின் ஆக்கத் தற்கிழமைப் பொருட்டு ஆயவாறு. (இ. கொ. 58)

உருபுகள் நிற்கும் மூவகைநிலை

{Entry: C03__605}

வேற்றுமையுருபுகள் தொடர்களில் மூவகையாக நிற்கும்.

உருபு சிலவேற்றுமைகளில் இறுதிக்கண் தொகாமை -

{Entry: C03__606}

கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தானொடு, கொடுத்தான் சாத்தற்கு, உருண்டான் மலையின், இருந்தான் குன்றத்துக்கண் - என ஆறனுருபு நீங்கலாக ஏனைய உருபு ஏற்ற சொல் சொற்றொடரின் இறுதிக்கண் வரும். ஆயின் இவ்வுருபுகள் இறுதிக்கண் தொக்கு வருமாயின், கடந்தான் நிலம் - வந்தான் சாத்தன் - கொடுத்தான் சாத்தன் - உருண்டான் மலை - இருந்தான் குறைத்து - என வருதல் வேண்டும். அவ்வாறு வரும்வழி 3, 4, 5ஆம் வேற்றுமையுருபுகள் தொக்கவழிப் பொருள் சிதைந்து வருதலின், இரண்டனுருபும் ஏழனுருபும் மாத் திரமே இறுதிக்கண் தொகுவன எனப்படும். (தொ. சொ. 104, நச். உரை)