Section D04 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 14 alphabetical subsections

  1. உ (CONTINUED from C03) section: 48 entries
  2. ஊ section: 2 entries
  3. எ section: 119 entries
  4. ஏ section: 35 entries
  5. ஐ section: 33 entries
  6. ஒ section: 67 entries
  7. ஓ section: 15 entries
  8. க section: 72 entries
  9. கா section: 34 entries
  10. கி section: 10 entries
  11. கு section: 40 entries
  12. கூ, கே, கை section: 4 entries
  13. கொ section: 10 entries
  14. ச section: 145 entries

D04

[Version 2l (transitory): latest modification 2017/02/21, 10:49, Pondy time]

சொல்-2 (634 entries)

[TIPA file D04 (and pages 1-256 in volume printed in 2004)]

உ (CONTINUED from C03) section: 48 entries

உருபு திரிதல் -

{Entry: D04__001}

ஐ ஆன் கு - என்னும் மூன்றுருபும் செய்யுளகத்து ஒரோவழி அகரமாகத் திரிந்து வரவும் பெறும். அஃறிணைக்கண் ஆனுருபு ஒன்றுமே திரியும்; ஐயும் குவ்வும் திரியா.

காவலோனைக் களிறஞ் சும்மே என்பது ‘காவ லோனக் களிறஞ் சும்மே’ என்றும், புலவரான் என்பது ‘புலவரான’ என்றும், கடிநிலை யின்றே ஆசிரியர்க்கு என்பது ‘கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க’ என்றும் உயர்திணைக்கண் மூன்றுருபும் திரிந்து வந்தன.

புள்ளினான் என்பது ‘புள்ளி னான’ - என ஆனுருபு ஒன்றும் அஃறிணைக்கண் திரிந்தது.

‘அவ்வும்’ என்னும் இழிவுசிறப்பும்மையான் இங்ஙனம் திரிதல் ஒருதலையன்று என்பதாம். (நன். 318 சங்.)

உருபு தொக்கு வருதல் ஏற்கும் இடங்கள் -

{Entry: D04__002}

சொற்றொடரின் இடையே ஆறுருபும் தொக்கு வரும். ஈற்றில் ஐயுருபும் கண்ணுருபுமே தொக்கு வருவன. கண்ணுருபும் வினைகொண்டு முடியுமிடத்துத்தான் இறுதியில் தொகும்.

எ-டு : நிலம்கடந்தான், தாய்மூவர், கரும்புவேலி, மலை வீழருவி, சாத்தன் இல்லம், மனைவிளக்கு - என்று ஆறுருபும் இடையே தொக்கன.

கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து - என இரண்டாவதும் ஏழாவதும் இறுதிக்கண் தொகும். (அறம் கறக்கும் - என இடையே தொக்க நான்கனுருபு, கறக்கும் அறம் - என இறுதிக் கண் தொக்கு நில்லாமை கண்டுகொள்க. 106 நச்.) ஏழனுருபும், குன்றத்துக் கூகை - எனப் பெயர் வருமொழி யாகியவழி இடையே தொக்கது, கூகை குன்றத்து - என இறுதிக்கண் தொகலாகா மையும் அறிக. (தொ. சொ. 104 சேனா. உரை)

உருபு தொகல் வரையாமை -

{Entry: D04__003}

உம்மை யெண்ணின்கண் இரண்டாவதும் ஏழாவதும் தொக்கு நிற்றலை நீக்காது கொள்வர்.

எ-டு : ‘பாட்டும் கோட்டியும் அறியா..... ஒருவன்’ - இரண் டாம் வேற்றுமை யுருபு தொக்கது. ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (297 சேனா.) - ஏழாவது தொக்கது.

(தொ. சொ. 291 சேனா. உரை)

உருபு தொக வருதல் -

{Entry: D04__004}

வேற்றுமைப்பொருளை விளக்கும் உருபுகள் விரிந்து வந்தே தம் பொருளை உணர்த்துதல் இயல்பு எனினும், உருபு தொக்கவழியும் உருபின்பொருள் தெளிவாகப் புலப்படுத்து மிடத்து உருபு தொக்கும் வரலாம் என்பது வழுவமைதியாம்.

நிலம்கடந்தான், தாய்மூவர், கரும்புவேலி, மலைவீழருவி, சாத்தன்ஆடை, குன்றக்கூகை - என உருபுகள் இடைக்கண் தொக்கன.

கடந்தான் நிலம் - என ஐயுருபும், இருந்தான் குன்றத்து - எனக் கண்ணுருபும் இறுதிக்கண் தொக்கன. (தொ. சொ. 105, 106 நச். உரை)

உருபு தொகாது வருதலின் சிறப்பு -

{Entry: D04__005}

அறுவகைத் தொகைகளிலும் அவ்வவற்றின் உருபு முதலியன தொக்கு வந்து பொருத்தமுறப் பொருள் தருதல் வல்லுநர் தொகுப்பனவற்றுக்குப் பொருந்தும். வல்லுநர் அல்லாதார் தொகையெனப் பொருத்தமில்லாதனவற்றையும் தொகுத்துக் கூறின், வேறுபொருள் படுவதும் ஐயப்பாடும் நிகழும். ஆதலின் அவை நிகழாதிருக்கத் தொகாது வருதலே சிறப் புடைத்து எனக் கூறுகிறது இலக்கணக்கொத்து.

வேற்றுமைத் தொகை : மரத்தை வெட்டினான் என்பதனை மரம் வெட்டினான் எனத் தொகுப்பின், உரிய பொருள் தந்து பொருந்தும். சாத்தற்குக் கொடுத்தான் என்பதனைச் சாத்தன் கொடுத்தான் - என உருபு தொகுத்தால் வேறு பொருளே தோற்றும்.

வினைத்தொகை : விரிநீர் சுடுநீர் பெய்மழை - போல்வன பொருந்தும். பார்த்த நீர் என்பதனைப் ‘பார் நீர்’ எனத் தொகுப்பின், பாரும் நீரும் - நீரைப் பார் - எனப் பொருள் வேறுபட்டு நிற்கும்.

பண்புத்தொகை : ஆருயிர் ஆரணங்கு ஆரமிர்தம் - போல்வன பொருந்தும். ஆர்அடிசில், ஆர் நீர் - போல்வன பொருந்தா. வினைத்தொகையாகவும் யார் என்பதன் மரூஉ வழக்கான ஆர் எனவும் முறையே பொருள்பட்டுப் பொருள் மாறுபடும்.

உவமைத் தொகை : மதிமுகம் பவளவாய் - போல்வன பொருந்தும். கடல் போல முழங்கிற்று என்பதனைக் கடல் முழங்கிற்று எனவும், புலி போலப் பாய்ந்தது என்பதனைப் புலி பாய்ந்தது எனவும் தொகுப்பின் பொருந்தாது, எழுவாய்த் தொடராய்ப் பொருள் படுதலின்,

உம்மைத் தொகை : கபிலபரணர் உவாப்பதினான்கு - போல்வன பொருந்தும். எட்டும் நூறும் என்பதனை எட்டு நூறு என்றும், வருதற்கும் உரியன் என்பதனை வருதற்குரியன் என்றும் தொகுத்தல் உம்மைத்தொகைப் பொருள் தாராமை யின் பொருந்தாது.

அன்மொழித் தொகை : பொற்றாலி என்பது பொருந்தும்; பொற்குடம் (வேற்றுமைத் தொகையாயே நிற்றலின் அன் மொழித் தொகையாதற்குப்) பொருந்தாது. (இ.கொ. 92)

உருபுதொகை, வேற்றுமைத்தொகை -

{Entry: D04__006}

உருபுதொகை, அவ்வேற்றுமைகளுக்கு ஓதிய வாய்பாட்டான் தொழிலொடும் பெயரொடும் முடிவுழி உருபுமாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாக நிற்கும். வேற்றுமைத்தொகை ஒரு சொல்லாக வரும். ஆறாம் வேற்றுமையிலும் மரக்கோடு என ஒட்டுப்பட்டு வருவது பொருள்தொகை. மரத்தின் கோடு என இரு சொல்லாகி வருவது உருபின் தொகை. வேற் றுமைத்தொகை மொழி மாறியும் நின்று ஒரு சொல்லாய் வரும். மலையது இடை, மலையது அகம் என்பன இடை மலை, அகமலை என வரும். (தொ. சொ. 408 தெய். உரை)

‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக்கிளவி’ -

{Entry: D04__007}

ஓர் உருபும் பல வுருபும் தம்முள் தொடர்ந்து அடுக்கி வந்த, வேற்றுமையுருபை இறுதியாக வுடைய சொற்கள். இவை தனித்தனியே முடிக்கும் சொல் கொள்ளாது, முடிக்கும் சொல் ஒன்றனான் பொருள் செல்லும்போது, அவ்வொரு முடிக்கும் சொல்லையே எல்லாச் சொற்களும் கொண்டு முடியும்.

எ-டு : ‘என்னொடும் நி ன்னொடும் சூழாது’ அக. 128 ‘அந்தணர் நூற்கும் அறத்தி ற்கும் ஆதியாய்’ குறள் 543

இவை ஓருருபு தொடர்ந்து வந்து ஒரு முடிக்கும் சொல்லையே கொண்டுமுடிந்தன.

யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான்; தினையின் கிளியைக் கடியும் - இவை பலவுருபு தொடர்ந்துவந்து ஒரு முடிக்கும் சொல்லையே கொண்டு முடிந்தன.

இவற்றுள், நுனிக்கண் என்பது குறைத்தான் என்ற வினைச் சொற்கும், கிளியை என்பது கடியும் என்ற வினைச்சொற்கும் அடையாதலின், இவை உருபு அடுக்கி வந்தன அல்ல என்பர் சேனாவரையர்.

கோட்டை நுனிக்கண் குறைத்தான் என்புழி, முன்மொழிக் - கண் பொருள் நிற்றலானும், தினையின் கிளியைக் கடியும் என்புழிப் பின்மொழிக்கண் [ என்புழியும் அவ்வாறே ] பொருள் நிற்றலானும் இவற்றினை அடை என்று கூறுதல் பொருந் தாது என்பர். (தொ. சொ. 103 நச். உரை)

‘நீ தந்த சோற்றையும் கூறையையும் உண்டுடுத்து இருந்தோம்’ என்றவழி, சோற்றை யுண்டும் கூறையை யுடுத்தும் எனப் பொருள் செய்தவழித் தனித்தனி வினை கொண்டன. (தொ. சொ. 102 சேனா. உரை)

உருபு தோன்றும் இடம் -

{Entry: D04__008}

வேற்றுமையுருபுகள் எட்டும், பகுபதம் - பகாப்பதம் - இரு மொழித்தொடர் - பன்மொழித்தொடர் - தெரிநிலை வினை யாலணையும்பெயர் - குறிப்பு வினையாலணையும் பெயர் - தொழிற்பெயர் - என்பவற்றை அடுத்து வரும்.

இந்நூற்பாவுரையுள், நன்னூல் கூறிய வழியே தமிழில் வேற்றுமை எட்டு என்பது கூறப்படுகிறது. பெயர்ச்சொல்லை முதல் வேற்றுமையாக்க முதல் வேற்றுமையுருபு ஏறி நீங்கும் என வடமொழியார் கருத்தையும், பெயர்ச்சொல்தானே முதல் வேற்றுமை யாகும் எனத் தமிழ் நூலார் கருத்தையும் இவ்வாசிரியர் கூறுகிறார். பெயர்ச்சொல்லின் ஈற்றில் எழுத்து மிகுதலும், ஈறு திரிதலும், ஈறு கெடுதலும், ஈற்றயல் திரிதலும் முதலாயின தொல்காப்பியத்து விளிமரபுப்படி உருபுகளாகவே கொள்ளப்படுகின்றன. (இ. கொ. 24)

உருபுநிலை திரியாமை -

{Entry: D04__009}

வடமொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உரு பேற்கும். அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறு திரியாது எழுவாயாகிய பெயரின்மேலே உருபு நிற்கும் என்பது.

எ-டு : சாத்தன், சாத்தனை, சாத்தனொடு (தொ. சொ. 67 தெய். உரை)

உருபு நோக்கிய சொல் பற்றிய வரையறை -

{Entry: D04__010}

வேற்றுமையுருபைக் கொண்டு முடியும் சொல், ஒன்று வருவதும் - இரண்டு வருவதும் - ஒன்றும் இரண்டும் வருவதும் - என மூவகைத்து.

அ) பாலைக் குடித்தான் - ஒன்றே வந்தது

ஆ) பாலைத் தயிராக்கினான், குடும்பத்தைக் குற்றம் மறைத் தான், அரிசியால் சோறாக்கினான், மருகனுக்கு மகள் கொடுத்தான் - இவற்றுள் இரண்டு வந்தன.

இ) ஆகாயத்தின்கண் பருந்து, ஆகாயத்தின்கண் பறந்த பருந்து; குன்றின்கண் குவடு, குன்றின்கண் இருந்த குவடு; வழிக்கண் தூதன், வழிக்கண் நடந்த தூதன் - இவற்றுள் ஒன்றும் இரண்டும் வந்தன. (இ. கொ. 62)

உருபு பல அடுக்கல் -

{Entry: D04__011}

எ-டு : “கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்

உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி

இடனறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்.” (நாலடி. 384)

காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட

வேலார் வெருவந்த தோன்றத்தார் - காலன்

கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார் நிரைப்பெயர்வும் உண்டு.

(பு.வெ.மா. 2 : 2)

இவையிரண்டும் ஓர் உருபு அடுக்கித் தமக்கேற்ற ஒருபெயரும் ஒரு வினையும் முறையே இறுதி வர முடிந்தன.

யானையது கோட்டை நுனிக்கண் பொருட்கு வாளால் குறைத்தான் - என இஃது உருபு பலவும் மயங்கி அடுக்கி இறுதி ஒருவினை கொண்டு முடிந்தது. (நன். 354 மயிலை.)

உருபுபல அடுக்கல், வினை வேறு அடுக்கல் -

{Entry: D04__012}

சாத்தன் யானையது கோட்டை நுனிக்கண் பொருட்கு வாளாற் குறைத்தான் - என்புழி, உருபுகள் விரவிப் பல அடுக்கிக் குறைத் தான் என்னும் ஒருவினை கொண்டன. இவற்றுள் ஆறனுருபு அடுக்கன்று, வினை அதற்கு எச்சம் அன்று ஆதலானும் கோடு என்னும் பெயர் கொண்டமை யானும் என்க.

சாத்தனையும் கொற்றனையும் தேவனையும் பூதனையும் வாழ்த்தினான், சாத்தனுக்கும் கொற்றனுக்கும் தேவனுக்கும் பூதனுக்கும் தந்தை - என்புழி, இரண்டாமுருபும் நான்காவதும் வேறு பல அடுக்கி வாழ்த்தினான் என்னும் ஒருவினையையும் தந்தை என்னும் ஒரு பெயரையும் முறையே கொண்டன.

வாள் கைக் கொண்டான், அருளறம் உடையான் - என உருபு தொக்கு அவ்வாறு வந்தன.

உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்,

‘வருதி பெயர்தி வருந்துதி துஞ்சாய்

பொருதி புலம்புதி நீயும்’ - எனவும்,

‘இளையள் மெல்லியள் மடந்தை’ - எனவும்,

‘அரிய சேய பெருங்கான் யாறே’ - எனவும்

வினைமுற்றும் குறிப்புமுற்றும் பெயர் எச்சங்களொடு விரவாது வேறுபல அடுக்கி, சாத்தன் - நீ - மடந்தை - யாறு - என்னும் ஒரு பெயர் முறையே கொண்டன.

கற்ற கேட்ட பெரியோர் எனவும், ‘சிறிய பெரிய நிகர்மல ர்க் கோதை’ எனவும் தெரிநிலை குறிப்புப் பெயரெச்சவினைகள் அடுக்கிப் பெரியோர் - கோதை - என்னும் ஒரு பெயர் கொண்டன. (நன். 355 சங்.)

உருபு பற்றி வேற்றுமை என்பதன் மூவகைப் பொருள் -

{Entry: D04__013}

1. உருபேற்ற சொல் வேறுபடுதலான் வேற்றுமையாம்; 2. உருபு வேறுபடுத்தலான் வேற்றுமையாம்; 3. உருபு நோக்கிய சொல் வேற்றுமையை முடித்தலான் வேற்றுமையாம். (இ.கொ. 20)

‘உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி’ (சொ. 102) என உருபு ஏற்ற பெயரையும், ‘ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ (சொ. 71) என உருபையும், தொல்காப்பியனார் ‘வேற்றுமைக் கிளவி’ என்றல் காண்க.

உருபும் வினையும் அடுக்கி முடிதல் -

{Entry: D04__014}

‘உருபுபல அடுக்கல், வினை வேறு அடுக்கல்’ காண்க.

உருபு மயக்கம் (1) -

{Entry: D04__015}

ஒரு பொருள் இரண்டு உருபிற்கு உரித்தாகி வருதலின் உருபுமயக்கமாம்.

எ-டு : மனையைச் சார்ந்தான், மனைக்கண் சார்ந்தான்.

(தொ. சொ. 82 தெய். உரை)

உருபு மயக்கம் (2) -

{Entry: D04__016}

உருபு தன்பொருளின் தீர்ந்து பிறிதொரு வேற்றுமையது பொருள் கொள்வதே உருபு மயக்கமாம்.

எ-டு : கிளையரில் நாணற் கிழங்கு மணற் கு ஈன்ற

முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ (அக. 212)

‘மணலுள்’ என்னும் ஏழாம் வேற்றுமையது இடப் பொருளின் கண் நான்கனுருபு தனது கொடைப்பொருளின் தீர்ந்து வந்து மயங்குவது உருபு மயக்கமாம்; வேற்றுமை மயக்கம் எனினும் ஆம். (தொ. சொ. 107 நச். உரை)

உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயையாமை வேற்றுமை மயக்கமாம். (தொ. சொ. 106 சேனா. உரை)

ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமையுருபான் கூறப்பட்டதாயினும், அவ்வுருபு மயங்கி வந்தமையான், அவ்வுருபு சென்ற வழியே பொருள் சாராது, பொருள் சென்ற வழியே அவ்வுருபு சாரும்.

அங்ஙனம் மயங்கி வந்த உருபைப் பொருளுக்கு இயைந்த உருபாகத் திரித்துப் பொருள் கொள்வது உருபு மயக்கம் அல்லது வேற்றுமை மயக்கமாம்.

‘நாகு வேயொடு நக்கு வீ ங்குதோள்’ என்புழி, ‘நாகு வேய்’ ஒடு வேற்றுமைக்குரிய உடனிகழ்ச்சிப் பொருளாகாது செயப்படு- பொருளாய் நிற்றலின், ஒடு உருபை ஐயுருபாகத் திரித்துப் பொருள் கொள்க. செயப்படுபொருளில் ஒடு என்னும் மூன்றனுருபு மயங்கிற்று.

‘கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற , முளையோ ரன்ன முள் எயிறு’ (அக. 212) என்புழி, ‘மணல்’ குவ் வேற்றுமைக்குரிய ஏற்றுக்கோடல் பொருளாகாது இடப்பொருளாய் நிற்றலின், குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துப் பொருள் கொள்க. இடப்பொருளில் குவ்வென்னும் நான்கனுருபு மயங்கிற்று.

(நன். 317 சங்.)

உருபை ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் பொருத்தமுறக் கூடாமல் மாறுபட நிற்றல் உருபு மயக்கம் எனப்படும். இது பல வகையாக வரும். அவ்விடங்களில் பொருள்படு முறையை ஓர்ந்து உருபினை மாற்றிப் பொருள்கொள்ள வேண்டும்.

‘கிளைஅரில் நாணற் கிழங்குமணற்கு ஈன்ற

முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ (அக. 212)

‘காலத்தி னாற்செய்த நன்றி’ (குறள் 102)

இவற்றில் நான்கனுருபும் மூன்றனுருபும் தம் பொருளை விட்டு நீங்கி ஏழாம் வேற்றுமையது இடப்பொருளில் வந்த வாறு. மணலின்கண், காலத்தின்கண் - என்று பொருள் செய்யப்படும். (இ. கொ. 59)

உருபொடு பொருள் உடன் தொகுதல் -

{Entry: D04__017}

‘அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம்’ என்றல் தொடக் கத்தனவற்றுள், உருபு அல்லா பிற மொழிகள் வருமாறு என்னையெனின், அவை கனலொடு புகையும் குடையொடு நிழலும் போல, உருபு வர வந்து நீங்க நீங்கும், பொருளை விளக்க வேண்டுழி எனக் கொள்க. (நன். 296 மயிலை.)

உருவக உவமையில் திணை சினை முதல் மயக்கம் -

{Entry: D04__018}

உருவகத்தின்கண்ணும் உவமைக்கண்ணும் இருதிணை தம்முள் மயங்கலும், முதல் சினை தம்முள் மயங்கலும் வழு அமைத்துக் கொள்ளப்படும்.

‘மன்னர் மடங்கல் மறையவர் சொன்மாலை.......... எம்கோ’ (பு.வெ. மா. 189)

இதன் கண், உயர்திணை அஃறிணையொடு மயங்கிற்று. இஃது உருவகம்.

‘தாழிருந் தடக்கையும் மருப்பும் தம்பியர்’

‘(சீவக) ஏழுயர் போதகம் இனத்தொ டேற்றதே’ (சீவக. 775)

இதன்கண், உயர்திணை அஃறிணையொடும், முதல் சினை யொடும் மயங்கின.

முகமதி - சினை முதலொடு மயங்கிற்று.

‘அகழ்கிடங்கு அம்துகில்........

புகழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை

................... செல்விக்கு என்பவே’ (சீவக. 1444)

இதன்கண், அஃறிணை உயர்திணையொடு மயங்கிற்று. இவையெல்லாம் உருவகம்.

‘மல்லல் மலையனைய மாதவரை வைதுரைக்கும்’ (சீவக. 2789)

இதன்கண் உயர்திணையோடு அஃறிணை மயங்கிற்று.

‘கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’ (தொ. சொ. 53)

- இதன்கண் அஃறிணையோடு உயர்திணை மயங்கிற்று.

தளிர்மேனி - முதல் சினையொடு மயங்கிற்று. இவை உவமை. (நன். 410 சங்.)

உரு : வழுவமைதியாதல் -

{Entry: D04__019}

திணைஐயத்துக்கண் ‘குற்றிகொல்லோ மகன்கொல்லோ இதோ தோன்றாநின்ற உரு’ என்று கூறிய உரு என்னும் வழக்கு, உடல் உயிர் கூட்டப் பொருண்மையாகிய மகன் என்னும் நிலைமைக்கு ஏலாது, அவனுடலைப் பிரிய நின்று உணர்த்தியமையான், அதுவுமொரு திணை வழுவமைதி எனப்படும். (தொ. சொ. 24 கல். உரை)

உருவு என மொழிதல் -

{Entry: D04__020}

திணைஐயத்துக்கண் பொதுச்சொல்லாக ‘உருவு’ என்பது வரும். எ-டு : குற்றியோ மகனோ தோன்றும் உருவு?

உருபு என்பது வேற்றுமையுருபு உவமவுருபு முதலியவற்றுக்குப் பெயராய் வடிவை உணர்த்தாது. உருவு - உருவம். உரு - நிறம். ஆதலின் பொதுச்சொல் உருவு என்பதே.

உருவு என்பது உடல் உயிர் கூட்டப் பொதுமையாகிய மக்கள் என்னும் பொதுமைக்கு ஏலாது உடலையே உணர்த்துவது. (தொ. சொ. 24 நச். உரை)

உரையசை -

{Entry: D04__021}

‘அதுமற்று அம்ம’ என்புழி, ‘அம்ம’ உரையசை. பேச்சிடத்து வரும் அசை உரையசையாம். (நன். 370 இராமா.)

உரையசையும் அசைநிலையும் -

{Entry: D04__022}

சிறிது பொருளுணர்த்துவனவற்றை உரையசை எனவும், பொருளுணர்த்தாது சொற்களை அசைத்து நிற்பனவற்றை அசைநிலை எனவும் கூறுதல் தொல்காப்பியத்தால் அறியப் படுகிறது.

எ-டு : ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’

ஆங்க - அங்ஙனே எனக் கட்டுரைத்து நின்றது. கட்டுரை - புனைந்துரை. (தொ. சொ. 279 நச். உரை)

உரையிடத்து இயலும் உடனிலை -

{Entry: D04__023}

உலகத்து மாறுகொண்டு வேறுபட்டு இயலும் சொற்கள்.

(தொ. சொ.452 இள. உரை)

வழக்கிடத்து உடனிற்கற்பால அல்லவற்றது உடனிலை. உடன் நிற்கற்பால அல்லவாவன - தம்முள் மாறுபாடுடையன.

(தொ. சொ. 458 சேனா. உரை.)

எ-டு : இந்நாழிக்கு இந்நாழி சிறிதுபெரிது - சிறிது பெரிது என்பன முரண்பட்ட சொற்களாயினும், இத்தொடரில், சிறிது என்பது பெரிது என்பதற்கு அடையாய் மிகப் பெரிதன்று என்ற பொருள்பட வந்துள்ளது. (சேனா. உரை.)

ஓர் எச்ச வாய்பாடாகக் கூறுமிடத்து அதுதானே மற்றோர் எச்சவினை வாய்பாட்டிற்கும் ஏற்று நடக்கும் கூட்டம்.

எ-டு : ‘பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ - ‘பெண்மை சுட்டவேண்டி’ ஆண்மை திரிந்த -என வினையெச்ச வாய்பாடாகவும், ‘பெண்மையைச் சுட்டிய’ பெயர்நிலைக் கிளவி எனப் பெயரெச்ச வாய்பாடாகவும் நின்றது.

ஆடிய கூத்தனும் வந்தான்; அவனொடு கூடிய கூத்தியும் வந்தாள் - ஆடிய : செய்யிய என்னும் வினையெச்சம் ; கூடிய : செய்த என்னும் பெயரெச்சம்.

இனி ‘உடனிலை’ என்றதனானே, ஓடி வந்தான் - விரைந்து போயினான் - என முடிக்கும் வினையோடு உடனிகழ்வனவும் கொள்ளப்படும். ஓடுதலும் வருதலும் உடன் நிகழ்ந்தன; விரைதலும் போதலும் உடன் நிகழ்ந்தன.

‘இந் நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது சிறப்பின்கண் வரும் நான்காம் வேற்றுமைப் பொருளாய் அடங்குதலானும், ‘சிறிது’ பெருமையை விசேடித்து நிற்றலானும், வினையெச்சம் பற்றிய அதிகாரத்தில் எச்சமயக்கம் கூறுதலே ஏற்ற பொருளாகும். (தொ. சொ. நச். உரை)

முற்றுச்சொல் எச்சமாகி வருதலும், வினையெச்சம் ஈறு திரிதலும், தொடர்மொழிக்கண் முடிக்கும் சொல்லொடு கூடி நின்ற நிலைமையை ஆய்ந்து கொள்க.

எ-டு : ‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5) : மோயினள் என்னும் முற்று மோந்து எனச் செய்து என் எச்சமாகி உயிர்த்த என்னும் பெயரெச்சம் கொண்டு முடிந்தது.

ஞாயிறு பட்டு வந்தான் : ஞாயிறு பட வந்தான் என்று வினை யெச்சம் ஈறு திரிந்தது. வந்தான் என்னும் பிற வினைமுதல் வினையை ஞாயிற்றின் வினையாகிய பட்டு என்னும் செய்து என் எச்சம் கொண்டு முடியுமாறு இல்லை. (தொ. சொ. 448 தெய். உரை)

உரைவாசகங்களுக்குப் பொருள் கொள்ளுதல் அரிது -

{Entry: D04__024}

நூற்பாக்கள் ஐயம்திரிபுகட்கு இடமின்றி அமைந்திருக்கும். அவற்றின் பொருளுணர்தல் எளிது. ஆயின் உரைநடையில் அமையும் அவற்றின் உரையின்கண் ஐயவுணர்வை அடியோடு அகற்றும் வகையில் சொற்றொடர்களை அமைத்தல் அத்துணை எளிமைத்து அன்று. ஆதலின் உரைவாசங்களுக்குப் பொருள் கொள்ளல் அரிது என்கிறார் இலக்கணக்கொத்துடையார். எடுத்துக்காட்டாக, ‘இச்சூத்திரத்திற்கு இதுவே பொருள்’ என்னும் வாசகத்திற்கு, இது பொருள் என்றும், இது பொரு ளன்று என்றும், இது பொருளோ அன்றோ என்றும், இதுவோ அதுவோ பொருள் என்றும் பல பொருள்படுதலின், அவரவர் கருத்துக்கு அகப்பட்ட பொருளையே கூறுவர். இக்கருத்து எல்லா வாசகங்கட்கும் பொது. (இ. கொ.6)

[ “உரையின்றிச் சூத்திரம்தானே பொருள் புலப்பட்ட காலமும் உண்டு. அஃது இன்றி அமையாது, இக்காலத்தார்க்கு” என்று பேராசிரியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளதன் கருத்து சூத்திரம் உரையின்றிப் புலப்படும் வகையிலேயே தொடக்கத் தில் யாக்கப்பட்ட செய்தியை வலியுறுத்தும். ]

உலகம் பலபொருள் ஒருசொல்லாதல் -

{Entry: D04__025}

உலகம் என்பது நிலத்தைக் குறிக்கும் சொல். உலகம் என்ற மற்றொரு சொல் மக்கள்தொகுதியைக் குறிக்கும். இரண்டும் வெவ்வேறு சொற்கள் எனினும், உணர்த்தல் எளிமை கருதி உலகம் என்பது நிலம் - மக்கள்தொகுதி - என்னும் பொருள் களைத் தரும் பலபொருள் ஒருசொல் எனப்படுகிறது, எழுத் தொப்புமை பற்றி. (தொ. சொ. 57 சேனா. உரை.)

உலகின் நி(இ)லாப் பொருள் முற்றும்மை வழங்கப்படுதல் -

{Entry: D04__026}

எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருள் வினைப் படுத்துக் கூறுமிடத்து முற்றும்மை வேண்டி நிற்கும்.

எ-டு : பவளக்கோட்டு நீலயானை என்றும் இல்லை;
முயற்கோடு ஆகாயப்பூ என்றும் இல்லை; படத்தில் (நூலில்) கடம் என்றும் இல்லை; ஒளிமுன் இருள் என்றும் இல்லை - என வரும்.

எனவே, இவ்வில்பொருளைக் காலமும் இடமும் படுத்து ‘இல்லை’ என்று கூறுங்கால் முற்றும்மை கொடுத்துக் கூறுக. முற்றும்மையின்றி வருமிடத்து அஃது இசையெச்சமாக வருவித்து உரைக்கப்படும்.

எ-டு : ‘மண்ணில் படமில்லை’ என்புழி, மண்ணில் படம் என்றும் இல்லை எனக் காலப்பெயர்ச்சொல்லொடு முற்றும்மையை இசையெச்சமாக வருவித்துக் கூறுக. ‘ஒளிமுன் இருள் இல்லை’ என்புழி, எவ்விடத்தும் என்பது காலப்பெயர்ச்சொல்லோடு இயைந்த முற்றும்மை; அஃது இசையெச்சம். (நன். 399 சங்.)

உவம உருபுகள் -

{Entry: D04__027}

‘போல புரைய ஒப்ப உறழ, மான கடுப்ப இயைய ஏய்ப்ப, நேர நிகர அன்ன இன்ன’ : இவற்றுள் முதல் பத்தும் செயவென் எச்சம்; ஏனைய இரண்டும் பெயரெச்சக்குறிப்பு. இவையும் இவை போல்வன பிறவும் உவமஉருபுகளாம். ‘பிற’ என்றமை யால், போல் - புரை - என்றல் தொடக்கத்து வினையடியாகப் பிறத்தற்குரிய ஏனை வினையெச்ச விகற்பங்களும் பெயரெச்ச விகற்பங்களும், பொருவ - ஏற்ப - அனைய - என்றல் தொடக்கத்தனவும் கொள்க. (நன். 367 சங்.)

உவமத்தொகை -

{Entry: D04__028}

உவமவுருபு மறைந்த நிலையிலும் உவமப்பொருள் வெளிப் படும் சொற்றொடர் உவமத்தொகையாம்.

எ-டு : புலிப்பாய்த்துள் - வினை உவமத்தொகை; மழை வண்கை - பயன் உவமத்தொகை; துடிநடுவு - மெய் உவமத்தொகை; பொன்மேனி - உரு உவமத்தொகை (தொ. சொ. 414 நச். உரை)

இவை இரண்டனுருபு விரிதலின் (இரண்டாம்) வேற்றுமைத் தொகையன்றோ எனின், சொல்லுவார்க்குக் கருத்து அதுவாயின் வேற்றுமைத்தொகையுமாம். அக்கருத்தானன்றிப் புலியன்ன பாய்த்துள், பொன் மானும் மேனி - என வேற்றுமை யோடு இயைபில்லா உவமஉருபு தொடர்ப்பொருட்கண் தொக்க விடத்து உவமத்தொகையாவதல்லது வேற்றுமைத் தொகை ஆண்டு இல்லை என்பது. (சேனா. உரை)

உவமத்தொகை வேற்றுமைத்தொகை ஆகாமை -

{Entry: D04__029}

உவமத்தொகை இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆகாதோ எனின், மழையன்ன வண்கை என்புழி, இரண்டனுருபு விரியா மலும் தான் நின்று உவமப்பொருளைக் காட்டுதலின், இவ் வாறு வரும் சொற்களை நோக்கி உவமத்தொகை எனப்பட் டது. உவமமும் உவமிக்கப்படும் பொருளும் மாறி நின்று முகத் தாமரை கைம்மாரி - என வரினும் இவற்றை உருவகத் தொகை என்று ஓதாமையானும், இவை பண்புத்தொகையுள் அடங்கா மையானும் உவமத்தொகையுள் அடங்கும். (தொ. சொ. 409 தெய். உரை)

உவமப் பொரு -

{Entry: D04__030}

ஒன்றனை மற்றொன்று ஒக்கும் என்று இரண்டனையும் ஒரு நிகராகவே ஒப்பிடுதல். இதனின் வலிது அது - இதனைப் போல வலிது அது என்பது. உவமப்பொருளைக் காட்டும் ‘இன்’ ஐந்தாவதனுருபு. (தொ. சொ. 78 நச். உரை)

உவமம் பற்றிய வழுவமைதி -

{Entry: D04__031}

உவமம் பற்றிக் கூறுங்கால், முதலுக்குச் சினையும் - சினைக்கு முதலும் - ஆண்பாற்குப் பெண்பாலும் - பெண்பாற்கு ஆண் பாலும் - பன்மைக்கு ஒருமையும் - ஒருமைக்குப் பன்மையும் - உபமானமாக வருதல் ஏற்கத் தக்கது. திணை மயங்கியும் உவமம் வரும்.

எ-டு : ‘நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி’ (குறுந். 160)
- முதல் : உவமம், சினை : பொருள். இலை மறைத்த தாமரைப்பூப் போலக் குடைநிழலில் தோன்றும் சிறுவன் (கலி. 84) - சினை : உவமம், முதல்: பொருள்.
ஊமனைப் போல் தலைவி துன்புற்றாள், மாரி யானையைப் போல் தலைவன் வந்து நின்றனன் (குறுந். 161) - ஆண் : உவமம், பெண் : பொருள்.
அஃறிணை : உவமம், உயர்திணை : பொருள்.
பிறையை ஒத்த பற்கள் (அக. கட.) - ஒருமை : உவமம், பன்மை : பொருள்.

பிறவும் அன்ன. (தொ.பொ. 281 பேரா.)

உவமைத்தொகை -

{Entry: D04__032}

உவமையுருபு மறைந்திருந்தும் வெளிப்பட இருந்தாற்போல உவமப்பொருளை உணர்த்தி நிலைமொழி வருமொழிகள் தொக்கு வருவன உவமைத்தொகை.

புலிக்கொற்றன் - மழைக்கை - துடியிடை - பொற்சுணங்கு - என வினை பயன் மெய் உரு எனும் நான்கும் பற்றி வந்தவாறு காண்க.

புலியைப் போன்ற கொற்றன் முதலாக இவை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையும் ஆம். (நன். 366)

உவமை, சீமை, ஏது -

{Entry: D04__033}

ஒப்பு, எல்லை, காரணம். ஐந்தாம் வேற்றுமை, நீக்கப்பொரு ளில் வருதலேயன்றி இம்மூன்று பொருள்களிலும் வரும்.

எ-டு : காக்கையின் கரிது களம்பழம்- கருவூரின் வடக்கு - வாணிகத்தின் ஆக்கம் பெற்றான் - என முறையே காண்க. (பி. வி. 15)

உவமைத்தொகை இரண்டன்தொகையும் ஆதல் -

{Entry: D04__034}

புலிக்கொற்றன் முதலியவை இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்தொக்க தொகையன்றோ, உவமைத் தொகை என்றது என்னையெனின், செயப்படுபொருள் கருதிக் கூறிய- வழி இரண்டாம் வேற்றுமையுருபும் பொரு ளும் உடன்தொக்க தொகையாகவும், உவமைப்பொருள் கருதிக் கூறியவழி உவமைத் தொகையாகவும் கொள்ளப்படும்.

(நன். 366 சங்.)

உவமையுருபினை வினையெச்ச வாய்பாட்டாற் கூறுதல் -

{Entry: D04__035}

குருவி போலக் கூப்பிட்டான், குருவி புரையக் கூப்பிட்டான், புலி அன்ன கொற்றன் - எனப் பெயரொடு வினை புணருங்கால் வினையெச்ச உருபுகள் அனைத்தையும், பெயரொடு பெயர் புணருங்கால் பெயரெச்ச உருபுகள் அனைத்தையும் விரித்துக் கொள்க. பெயரொடு பெயர் புணருங்காலத்தும், புலியைப் போலப் பாயும் சாத்தன் - மழையைப் போல அளிக்கும் கை - துடியைப் போலச் சுருங்கிய இடை - பொன்னைப் போல விளங்கிய சுணங்கு - என வினையெச்ச உருபு விரிந்தல்லது நால்வகை உவமையும் விளங்காமையால், போல - புரைய - என அவ்வினையெச்ச உருபுகளை முன்னர் எடுத்துக் கூறினார். (நன். 408 இராமா.)

உள்பொருள் : முடிபு -

{Entry: D04__036}

உள்பொருள் என்பது பண்புத்தொகை முடிபன்றோ எனின், அஃது ஓசை ஒற்றுமைப்படச் சொல்லும்வழியது போலும். வினைமுற்றுத் தொடராவது ஓசை இடையறவுபடச் சொல்லும்வழியது போலும்.

உள்பொருள் - உள்ளது (உள்ளன) ஆகிய பொருள் : பண்புத் தொகை; உள் பொருள் - உள்ளது (உள்ளன) பொருள் : வினை முற்றுத் தொடர். (இ. வி. 158 உரை)

உள, இல : சொல்லிலக்கணம் -

{Entry: D04__037}

உள, இல - இவை யிரண்டும் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. உள என்ற பன்மைக்கு இல என்ற பன்மை மறையாம். இதற்கு ஒருமை ‘ உளது’.

மா உள எனப் பண்பு உணர்த்தியும், ஈண்டு நெல்லுள- எனக் குறிப்பு உணர்த்தியும் வரும். அறம் செய்வார்க்குத் துன்பங்கள் இல - எனப் பண்பு உணர்த்தியும், ஈண்டு உழுந்து இல - எனக் குறிப்பு உணர்த்தியும் வரும். (தொ. சொ. 222 நச். உரை)

உளப்பாட்டுத்தன்மை, தனித்தன்மை வினைமுற்றுக்கள் -

{Entry: D04__038}

அம் ஆம் எம் ஏம் - என்னும் இறுதி வினைச்சொல்லும், கடதறக் -களை ஊர்ந்து உம் இறுதியாகிய வினைச்சொல்லும், தன்னையும் பிறரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மைச் சொல்லாம். கு டு து று - என்னும் நான்கும் இறுதியாகிய குற்றியலுகர ஈற்று வினைச்சொல்லும், என் ஏன் அல் - என்பன இறுதியாய் வரும் வினைச்சொல்லும் தனித்தன்மையாம்.

வருமாறு : அம் : உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம்

ஆம் : உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம்

எம் : உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம்

ஏம் : உண்டேம், உண்ணாநின்றேம், உண்பேம்

உம்மொடு வரூஉம் கடதற - க்கள் உண்கும், உண்டும், வருதும், சேறும்; இவை தன்னையும் முன்னின்றாரையும் படர்க்கை யாரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மை என அறிக.

உண்கு யான் - உண்டு யான் - வருது யான் - சேறு யான் - எனவும், என் : உண்டனென் - உண்ணாநின்றனென் - உண்கு வென் எனவும், ஏன் : உண்டேன் - உண்ணாநின்றேன் - உண்பேன் - எனவும், அல் : உண்பல் - தின்பல் - எனவும் இவை தனித்தன்மை.

(நேமி. வினை. 2 உரை)

உளப்பாட்டுத் தன்மைப்பன்மை -

{Entry: D04__039}

தன்மைக்கண் ஒருமையன்றி நேர்ப்பன்மை இல்லையாம். ஆகவே, தன்மைக்கண் பன்மையை அமைக்க, முன்னிலை யையோ படர்க்கையையோ இரண்டனையுமோ சேர்த்தே உளப்பாட்டுத் தன்மை அமைத்தல் வேண்டும்.

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகளில், அம் ஆம் என்பன முன்னின்றாரையும், எம் ஏம் ஓம் - என்பன படர்க்கை யாரையும், கும் டும் தும் றும் - என்பன முன்னிலை படர்க்கை என்னும் இருபாலாரையும் உளப்படுத்தும்.

எ-டு : நானும் நீயும் உண்டனம், உண்டாம்; நானும் அவனும் உண்டனெம், உண்டேம், உண்டோம்; நானும் நீயும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும் (நன். 332)

இதன்கண் மயங்கிவருதலே இக்கால வழக்கு. தன்மை யொருமைக்கண் அன் விகுதியும் பன்மைக்கண் ஓம் விகுதியும் புதியன புகுதல் (நன். 332. சங்.)

உளப்பாட்டுப் பன்மை முன்னிலை -

{Entry: D04__040}

முன்னிலையொடு கூடிய படர்க்கையும் முன்னிலை வினையையே முடிபாகக் கொள்ளும்.

எ-டு : நீயும் அவனும் உண்டனிர், உண்டீர், உண்மின், ‘நாராய்! நின் சேவலும் நீயுமாய்....... பூங்கானல் வைகலும் சேறீர்’ (நன். 334 சங்.)

உளி என்ற சொல்

{Entry: D04__041}

‘இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்’ (குறள் 545) என்புழி, முறைமையிலே செங்கோல் நடத்தும் மன்னன் - என ஏழனுருபு விரிதலானும், ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ’ (முருகு. 95) என்புழி மந்திரமுறைமையின் வழுவாத என ஐந்தாவது விரிதலானும், உளி என்பது மூன்றனுருபின் பொருள்பட வந்ததன்று; பகுதிப்பொருள் விகுதியாய் நின்று தனக்கேற்ற உருபை ஏற்று நின்றது என்பதாம். (தொ. சொ. 252 நச். உரை)

உறழ் துணைப் பொருள் -

{Entry: D04__042}

உறழும் பொருளும் துணைப் பொருளும். அஃதாவது மாறுபடக் கூறும் பொருளும் ஒப்புமை கூறப்படும் பொருளும்.

(தொ. சொ. 16 சேனா. உரை)

உறழ் பொரு -

{Entry: D04__043}

உவமத்தைவிடப் பொருள் மிக்கது என்று குறிப்பிடும் ஒப்புமை. ‘இதனின் வலிது அது’ - இதனைவிட அது வலிமை யுடைத்து என உபமேயத்தை உபமானத்தைவிட உயர்ந்த தாகச் சுட்டுவது, உறழ்தல் - ஒன்றனின் ஒன்றை மிகுத்தல். (தொ. சொ. 78 நச். உரை)

உறழ்பொருள், துணைப்பொருள் -

{Entry: D04__044}

உறழ்பொருள் - ஒப்புமை கருதாது மாறுபடக் கூறும் பொருள். எ-டு : இவள் கண்ணின் அவள் கண் பெரிய.

துணைப் பொருள் - ஒப்புமை கருதிக் கூறும் பொருள்.

எ-டு : இவள் கண்ணை ஒக்கும் அவள் கண். (தொ. சொ. 16 நச். உரை)

உறழ்பொருளாவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறும் பொருள்; அஃதாவது உவமத் தன்மையில் விஞ்சி நிற்பது.

எ-டு : இவள் கண்ணின் அவள் கண் பெரிய.

உறழ்பொருளுக்கு மறுதலை துணைப்பொருள்; அஃதாவது உறழ்தலின்றி ஒப்புமை கூறப்படும் பொருள்.

எ-டு : இவள்கண் ஒக்கும் அவள்கண் (தொ. சொ. 16 சேனா. உரை.)

உறுப்பின்கிழமை -

{Entry: D04__045}

ஆறாம் வேற்றுமைத் தற்கிழமைப் பொருள்களில் உறுப்பின் கிழமை ஒன்று.

எ-டு : யானையது கோடு, புலியது உகிர் - இவை விரி.
யானைக்கோடு, புலியுகிர் - இவை தொகை. (தொ. சொ. 80 சேனா. உரை)

உறுப்புப் பெயர்கள் -

{Entry: D04__046}

கை விரல் முலை கண் நுதல் கூந்தல் ஏடு தோடு இதழ் ஓலை ஈர்க்கு மடல் பாளை குரும்பை குலை தாறு சுளை வீழ் நுகும்பு ஓலை அடை பொகுட்டு குரல் நெல் - என்றல் தொடக்கத்தன சினையறி சொற்களாம். இவற்றுள், கை என்பது மக்கள் யானை புலி கரடி கோடுவாழ்விலங்கு நாய் - இவற்றுக்கு உரித்து. விரல் என்பது மக்கள் கரடி கோடுவாழ்விலங்கு நாய் - இவற்றுக்கு உரித்து.

முலை என்பது மக்கள் ஆ எருமை ஆடு நாய் பன்றி - இவற்றுக்கு உரித்து.

கண் என்பது ஓரறிவுயிர்களுள் கமுகு கரும்பு மூங்கில் பீலி தோற்கருவி தேங்காய் - இவற்றுக்கு உரித்து (கண் - கணு)

நுதல் என்பது மக்கள் யானை ஒருசார் புள் - இவற்றுக்கு உரித்து.

கூந்தல் என்பது பெண்டிர் பிடி குதிரை பனை கமுகு - இவற்றுக்கு உரித்து.

ஏடு என்பது பனை பூவிதழ்கட்கு உரித்து.

தோடு என்பது பனை தெங்கு தாழை பூவிதழ்கட்கு உரித்து.

இதழ் என்பது கண்ணிமை உதடு பூவிதழ் பனை - இவற்றுக்கு உரித்து.

ஓலை என்பது பனை தெங்கு தாழை - இவற்றுக்கு உரித்து.

ஈர்க்கு என்பது தெங்கு பனை மா வேம்பு பறப்பன - இவற்றுக்கு உரித்து.

பாளை என்பது தெங்கு கமுகு மூங்கில் ஈந்து - இவற்றுக்கு உரித்து.

குரும்பை என்பது தெங்கு பனை - இவற்றுக்கு உரித்து.

தாறு என்பது கமுகு வாழை ஈந்து - இவற்றுக்கு உரித்து.

சுளை என்பது பலா பருத்தி பாகற்பழம் - இவற்றுக்கு உரித்து.

வீழ் என்பது ஆல் இறலி தாழை சீந்தில் - இவற்றுக்கு உரித்து.

நுகும்பு என்பது பனை வாழை மரல் புல் - இவற்றுக்கு உரித்து.

இலை என்பது பனை ஈந்து தெங்கு - இவற்றுக்கு உரித்து.

அடை என்பது தாமரை ஆம்பல் நெய்தல் - தொடக்கத்து ஓரறிவுயிர்கட்கும் தாம்பூலத்திற்கும் உரித்து,

பொகுட்டு என்பது தாமரைக்கும் கோங்கிற்கும் உரித்து.

குரல் என்பது பெண்டிர்மயிர்க்கும், ஐயறிவுயிரின் மிடற்றுக் கும், தினை வரகு பூளை நொச்சி பதவம் மற்ற புற்கள் - இவற்றுக்கும் உரித்து.

நெல் என்பது சாலி முதல் பைங்கூழிற்கும் மூங்கிற்கும் ஐவனத்திற்கும் உரித்து.

பிறவும் அன்ன. (நன். 387 மயிலை.)

உறைநிலைத்தான -

{Entry: D04__047}

தங்கியிருக்கும் நிலத்துப் பெயர் முன்மொழியாய் வருமிடத்து.

காட்டு யானை என்பது காட்டது யானை என விரிதலே யன்றி, காட்டின்கண் யானை எனவும் விரியும். ஆண்டு ஆறாவதும் ஏழாவதும் மயங்கி வந்தவாறு. ஈண்டு, காடு : உறைநிலம். (தொ. சொ. 98 சேனா. உரை)

உறைநிலத்தான மயக்கம் -

{Entry: D04__048}

உறைநிலப் பெயர் முன்மொழியாக வருவழிக் காட்டுயானை என்னும் தொகைநிலைத் தொடர் காட்டது யானை, காட்டின்கண் யானை - என முறையே ஆறாவதும் ஏழாவதும் விரியும். ‘உறைநிலத்துக்கண்’ என்றதனான், உறையா நிலம் ஆயவிடத்து, ஆறாவதன்கண் வந்ததாகாது ஏழாவது தானே ஆகும் என்றவாறு. (ஆண்டு வாழ்ச்சி யுள்வழியே ஆறாவதன் பொருட்டாம்.) அஃதாவது ஊருள் யானையாய்க் காட்டுள் மேயவிட்டதனைக் காட்டுயானை என்னுமிடத்து அத்தொகை காட்டின்கண் யானை - என ஏழாவது விரியுமன்றிக் காட்டது யானை என ஆறாவது விரியாது என்பதாம்.

(தொ. சொ. 100 கல். உரை)

ஊ section: 2 entries

ஊகார ஈற்று வினையெச்சம் -

{Entry: D04__049}

ஊகாரம், உண்ணூ வந்தான் - ‘படுமகன் கிடக்கை காணூஉ...... உவந்தனள்’ (புற. 278) ‘நிலம்புடையூ எழுதரு வலம்படு குஞ்சரம்’ (பதிற்.) எனப் பின்வரும் தொழிற்கு இடையின்றி விரை வுணர்த்தி முன்வரும் தொழில்மேல் இறந்த காலம் பற்றி வரும். இஃது உண்ணா (வந்தான்) - என ஆகார ஈறாகத் திரிந்தும் வரும். (தொ. சொ. 230 நச். உரை)

ஊரன் முதலியன இறைச்சிப்பொருளாய் வருமாறு -

{Entry: D04__050}

ஊரன் முதலிய பெயர்கள் செய்யுட்கண் இறைச்சிப் பொருளாய் வந்து உயர்திணையே சுட்டின. (தொ. சொ. 200 கல். உரை)

கடுவன் மூலன் முதலிய சொற்கள் நால்நில மக்கட் பெயராகச் சான்றோர் செய்யுளுள் வாராமையின், அவை விரவுப் பெயராயினும், அஃறிணையே உணர்த்தும் என்பது. (தொ. சொ. 199 கல். உரை)

எ section: 119 entries

எச்சங்கள் எதிர்மறுத்து வருதல் -

{Entry: D04__051}

பெயரெச்சமும் வினையெச்சமும் செய்தல்தொழிலினை எதிர்மறுத்துச் சொல்லினும் தத்தம் கொண்டுமுடியும் சொற்களாகிய பெயரையும் வினையையும் கொண்டு முடிதலி னின்று வேறுபடாவாம்.

எ-டு : உண்ணா இல்லம் (நிலப் பொருள்), உண்ணாச் சோறு (செயப்படு பொருள்), உண்ணாக் காலம் (காலப் பொருள்), வனையாக் கோல் (கருவிப் பொருள்), ஓதாப் பார்ப்பான் (வினைமுதற் பொருள்), உண்ணா ஊண் (வினைப் பொருள்)

உடன்பாடு எதிர்மறை

உண்ணும், உண்ட - உண்ணா;

உண்ட - உண்ணாத;

உண்டு, உண்ணூ, உண்ணா,

உண்குபு - உண்ணாது;

செய்தென, செய்து - செய்யாது, செய்யாமல்
செய்யாமை;

உண்ண, உண்ணிய, உண்ணியர்,
உணற்கு - உண்ணாமைக்கு;

உண்ணின் - உண்ணாவிடின்;

உண்டபின், உண்ணுமுன் - உண்ணாதபின்; - முதலியன உண்ணாமுன் -

கரிய சாத்தன், செய்ய சாத்தன்; இவை
நல்ல சாத்தன், பொல்லாச் சாத்தன்
} பெயரெச்சக் குறிப்பு

சோறு உண்டாய் இருந்தது - சோறு இன்றி யிருந்தது

சோறு ஆவதாய் இருந்தது - சோறு அன்றி யிருந்தது
(இவை வினையெச்சக் குறிப்பு) (தொ. சொ. 238 நச். உரை)

எச்சப் பெயர்வினையுள் முதற்கண் வாராதன -

{Entry: D04__052}

எச்சமாகிய பெயரும் வினையும் ஈற்றின்கண் வருதலே சிறப் புடையது. அவை முதற்கண் வருதலை எடுத்தோதாது ‘எய்தும் ஈற்றிலும்’ என உம்மையால் தழீஇக் கொண்டார் ஆசிரியர். ஆறன் உருபின் எச்சப்பெயரும், ஏழனுருபின் எச்சப் பெயரும், பெயரெச்சத்தின் எச்சமும் முதற்கண் வாராமையும்,

(எ-டு: சாத்தனது ஆடை, குன்றத்தின்கண் கூகை, ஓடிய குதிரை)

முதற்கண் வரினும் இறுதிக்கண் வருவன போலச் சிறப்புடை யன அல்ல என்பதும் தோன்றவேண்டி அவ்வாறு ஓதினார் என்க.

சாத்தனது ஆடை என்னும் ஆறன் விரி ‘ஆடை சாத்தனது’ என மாறி நிற்பின், ‘அது’ உருபாகாது துவ்விகுதியீற்று ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்றாம் எனக் கொள்க. (நன். 357 சங்.)

எச்சம் இரண்டு -

{Entry: D04__053}

எச்சம் எச்சங்களைக் கொண்டு முடியும் என்றது என்னெ னின், முடிவனவும் முடிப்பனவும் ஆகிய இரண்டனுள், முடிவன வாகிய எச்சங்களுக்கு முடிப்பனவும் எச்சமாகவே நிற்குமாதலால் அவ்வாறு கூறப்பட்ட தென்க. (நன். 401 இராமா.)

எச்சம் பற்றிய கருத்துக்கள் -

{Entry: D04__054}

எச்சத்தை ஓரொருவர் ஓரோர் இலக்கணமாகக் கொண்டதை இலக்கணக் கொத்து 13 கருத்துக்களாகவும்,மேலும் பலவாக வும், சிலர் கூறியனவாகவும், பலர் துணியாதனவாகவும் எடுத்துக் கூறுகிறது. அவை கீழ் வருமாறு :

1. ‘எச்சம் என்று ஒன்றில்லை’ - இது பெயர்க்கும் வினைக்கும் அடைமொழியாய் வருவதே. எ-டு : அட்ட சோறு, உண்டு பசிதீர்ந்தான்.

2. ‘விகாரப்பட்ட முற்றே எச்சமாதலன்றி வேறில்லை’ - உண் டான் சாத்தன் என்பது உண்ட சாத்தன் எனவும், உழுதான் வந்தான் என்பது விகாரப்பட்டு உழுது வந்தான் எனவும் நின்றன. அவ்வளவேயன்றி வேறில்லை.

3. ‘எச்சம் ஒன்றே’ - பெயரெச்சம் வினையெச்சம் என இரண்டு இல்லை. அது குறைவினை யாதலின், உண்ட உண்டு என்பன இரண்டும் ஒன்றே.

4. ‘எச்சம் இரண்டே’ - அது குறைவினையே எனினும், வரு மொழி பெயராயின் பெயரெச்சம் எனவும், வினையாயின் வினையெச்சம் எனவும் கூறப்படுதலால் இரண்டு உள.

5. ‘தன்வினை பிறவினை இவ்விரண்டு’ - பிறவினையின் வந்த ஈரெச்சங்களையும் சேர்த்து நான்காகக் கூறல் வேண்டும். செய்த, செய்வித்த; செய்து, செய்வித்து - என்பன அவை.

6. ‘முப்பொழுது அறிதலான் மூன்றே’ - எச்சங்கள் இரண்டும் முக்காலமும் காட்டுவதால், அதுகொண்டு அவற்றை வகைப்படுத்தல் வேண்டும். உண்ட, உண்டு - உண்கின்ற, உண்ண - உண்ணும், உண்ணிய - என்பன முறையே இறப்பு நிகழ்வு எதிர்காலங்களைக் காட்டும்.

7. ‘தலைமை இல்தலைமை என இரண்டு’ - (இல்தலைமை யாவது நேரிடையாக அமையாத தலைமை) அ) தச்சன் செய்த தேர் : தலைமை காட்டும் பெயரெச்சம்; உழுது பயன்கொண்டான் வறியான் : தலைமை காட்டும் வினை யெச்சம். ஆ) அரசன் செய்த தேர் : இல்தலைமை காட்டும் பெயரெச்சம்; உழுது பயன்கொண்டான் வேந்தன் : இல் தலைமை காட்டும் வினையெச்சம்.

8. ‘காரணம் காரியம் என இரண்டு’ - இவ்வாறு இருவகை கூறுதல் வேண்டும். அ) மழை பெய்த நீர், புல்லின இன்பம் : பெயரெச்சங்கள் காரணம் காட்டின. ஆ) சமைத்த அரிசி, உண்டசோறு : இவை காரியம் காட்டிய பெயரெச்சங்கள். இ) உழுது விளைந்த நெல் : காரணம் காட்டிய வினை யெச்சம். ஈ) பிணிதீரக் குடித்தான் மருந்து : காரியம் காட்டிய வினையெச்சம்.

9. ‘முதல்வினை சினைவினை என இரண்டு’ - அ) நொந்த சாத்தன் : முதல்வினையின் வந்த பெயரெச்சம். ஆ) கண் நொந்த சாத்தன் : சினைவினையின் வந்த பெயரெச்சம்.
இ) சாத்தன் நொந்து கிடந்தான் : முதல்வினையின் வந்த வினையெச்சம். ஈ) சாத்தன் கண்நொந்து கிடந்தான் : சினைவினையின் வந்த வினையெச்சம்.

10. ‘இயல்பு திரிபு இரண்டே’ - இந்த வகையின்கண்ணும் வகைப்படுத்தல் வேண்டும். அ) மருவின நாள், மரீஇய நாள்: பெயரெச்சம் இயல்பாகவும் திரிந்தும் வந்தது. ஆ) தழுவிக் கொண்டான், தழீஇக் கொண்டான் : வினையெச் சம் முறையே அவ்வாறு வந்தது.

11. ‘விரியே தொகையே என இரண்டு’ - அ) பொருத தகர், பொரு தகர் : பெயரெச்ச விரியும் தொகையும். ஆ) வரிந்து புனை பந்து, வரிப்புனை பந்து : வினையெச்ச விரியும் தொகையும்.

12. ‘வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றல்’ - செய்து, செய்பு என்பன முதலாகப் பலவாய்பாடுகளிலும் வரும் வினையெச்சங்கள் வெவ்வேறு. ஆதலால் இவையனைத் தையும் சேர்த்து வினையெச்சம் என ஒரு பெயரிடுதல் பொருந்தாது. வினையைக் கொண்டு முடியும் வேற்றுமை யுருபுகள் எட்டனையும் உவமஉருபு போன்ற பிறவற்றையும் வினையெச்சம் எனப் பெயரிட்டு வழங்காமையானும் இது புலப்படும். இது பெயரெச்சத்திற்கும் ஒக்கும்.

13. ‘ஈறு சொல் பற்றிய இரண்டே’ - செய்து செய்பு - என்பவை முதலான ஈறு பற்றியவற்றை ஒருவகையாகவும், வான் பான் பாக்கு பின் முன் - முதலான சொல் பற்றி வருவனவற்றை மற்றொரு வகையாகவும் பிரிக்கவே, வினையெச்சம் இரண்டாகும்.

14. ‘இன்னும் பலபல இலக்கணம் ஆதல்’ - செயற்கு என்பதனை வினையெச்சம் என்றும், குவ்வுருபேற்ற தொழிற்பெயர் என்றும், ‘நீர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார்?’ என்ற விடத்துக் ‘கூறினால்’ என ஒரு சொல்லாக்கி வினை யெச்சம் என்றும், இருசொல்லாக்கிப் பெயர் கொண்ட பெயரெச்சம் என்றும் கூறுதல் முதலாயின. (இ. கொ. 84)

எச்சமின்மை -

{Entry: D04__055}

மிகுதிபடாதும் குறைவுபடாதும் குறிப்பிட்ட இரண்டும் ஒத்திருத்தல். அச்சப் பொருளுக்கு ஐந்தாவதும் இரண்டா வதும் எச்சம் இல எனவே ஒத்த கிழமைய என்றவாறு.

எ-டு : புலியஞ்சும் என்னும் தொகைநிலைத்தொடர் புலியின் அஞ்சும் - புலியை அஞ்சும் - என விரியும்.

(தொ. சொ. 101 ப. உ)

எச்சவியல் -

{Entry: D04__056}

இது தொல்காப்பியச் சொல்லதிகாரத்து இறுதியாகிய ஒன்பதாம் இயல். கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்களில் கூறப்பட்ட தொடர்மொழி இலக்கணம், பெயரியல் முதலிய நான்கு இயல்களில் கூறப்பட்ட தனிமொழி இலக்கணம் - என்னும் இவற்றில் கூறப்படாது எஞ்சியுள்ள இலக்கணச் செய்திகள் பலவும் இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. செய்யுள் ஈட்டச் சொற்கள் நான்கு, அவற்றின் இலக்கணம், செய்யுள் விகாரம் ஆறு, பொருள்கோள் நான்கு, பிரிப்பப் பிரியாதன, ஒருசொல்லடுக்கு, அறுவகைத் தொகைகள், அவற்றின் இலக்கணம், தொகையில் பொருள் சிறந்து நிற்குமிடம், தொகை பற்றிய செய்திகள், குறிப்பு மொழிகள், அடுக்கு வரையறை, அசைநிலை யடுக்கு, வினைமுற்றுப் பற்றிய சில செய்திகள், பத்துவகை எச்சங்கள், அவற்றின் முடிபு, அவையல் கிளவி பற்றிய செய்தி, ஈ - தா - கொடு - என்னும் சொற்கள் பற்றிய செய்திகள், இலக்கணத்தான் யாப்புறவு இல்லன, ‘செய்யாய்’ என்பது பற்றிய செய்தி, ஈ - ஏ - என்னும் இடைச் சொற்கள் புணருமிடம், புதியன புகுதல், மூவகைக் குறை, விசேடிப்பனவும் விசேடிக்கப்படுவனவு மாகிய சொல் பற்றிய மரபு, எச்சங்கள் வேறு பெயர் பெறுதல், உரையிடத்து இயலும் உடனிலை, முன்னத்தின் உணரும் கிளவி, ஒரு பொருள் இருசொல், ஆற்றுப்படையில் பால்வழுவமைதி, அதிகாரப் புறனடை ஆகிய செய்திகள் 67 நூற்பாக்களில் கூறப்பட்டுள.

எச்சவும்மை -

{Entry: D04__057}

கொற்றனும் வந்தான் என்பது முன் சாத்தனும் வந்தான் என்பதனைத் தழுவுதலின், இறந்தது தழுவிய எச்சவும்மை. சாத்தனும் வந்தான் என்பது பின் கொற்றனும் வருவான் என்பதனைத் தழுவுதலின் எதிரது தழுவிய எச்சவும்மை. இனி இவ்விரண்டனையும் எதிர்காலம் தழீஇயின ஆக்கி, இன்று சாத்தனும் வரும், நாளை கொற்றனும் வரும் என எதிரது தழீஇயின என்றலுமாம். இன்னும் இவ்வெச்சம் ‘யான் கருவூர்க்குச் செல்வல்’ என்றாற்கு ‘யானும் அவ்வூர்க்குப் போதுவல்’ என முழுவதூஉம் தழுவுவதூஉம், அவ்வாறு கூறினாற்கு ‘யானும் உறையூர்க்குப் போதுவல்’ என ஒருபுடை தழுவுவதூஉம் என இருவகைத்தாம். (சொ. 256 நச். உரை)

எச்சவும்மை செவ்வெண்ணில் வருமாறு -

{Entry: D04__058}

எச்சவும்மை செவ்வெண்ணில் வருமாயின் ஈற்றின்கண்ணே வரும்.

எ-டு : ‘செய்பவன் கருவி நிலம்செயல் காலம்

செய்பொருளும் தரும் திறத்தது வினையே’

இவற்றுள் சிலவும் தரும் திறத்தது வினையே என உம்மை பொருள்பட்டது. ‘கல்வி செல்வம் ஒழுக்கம் குடிப்பிறப்பும் பெறுவாரு முளர்’ என்புழி, இவற்றுள் சில பெறுவாருமுளர் என எச்சவும்மை பொருள்பட்டவாறு. (நன். 427 சங்.)

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் உடன்நில்லாமை -

{Entry: D04__059}

ஒரு தொடரின்கண் எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தம்முள் ஒருங்கு மயங்குதல் இல. அஃதாவது பாணன் பாடுதற்கும் உரியன் என்புழி, எச்சப்பொருள் கருதியவிடத்து ‘வாயிலாதற்கும் உரியன்’ எனவும், எதிர்மறைப்பொருள் கருதிய விடத்துப் ‘பாடாமைக்கும் உரியன்’ எனவும் வரு மன்றே? ஆண்டு யாதேனும் ஒரு பொருள் பற்றியல்லது இரண்டு பொரு ளும் ஒருங்கு வாரா என்றவாறு. (தொ. சொ. 284 ச. பால)

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தொடர்தல் -

{Entry: D04__060}

எச்சவும்மை நின்றவழி அதனை முடிக்க வரும் தொடர் எதிர்மறையும்மைத் தொடராய் வந்து மயங்காது. எ-டு : சாத்த னும் வந்தான்; கொற்றனும் வரலுமுரியன் எனின் இயையாது.

(தொ. சொ. 283 சேனா. உரை)

எச்சப் பொருண்மையினையுடைய உம்மையும் அதனை முடிக்க வரும் எதிர்மறைப் பொருண்மையினையுடைய உம்மையும் தொடராய் வந்து தம்முள் மயங்கும். அங்ஙனம் மயங்கினும் தன்வினை ஒன்றிய முடிபு கொள்ளா.

எ-டு : சாத்தனும் வந்தான்; இனிக் கொற்றனும் வரினும் வரும் என்புழிச் சாத்தனும் கொற்றனும் என்னும் எச்ச வும்மைகள், வரினும் என்னும் எதிர்மறையும்மை யொடு தொடர்ந்து நின்று, ஒருவினை கொள்ளாது இறப்பும் எதிர்வும் பற்றி வரும் வேறுவினை கொண்ட வாறு. (தொ. சொ. 285 நச். உரை)

எச்சவும்மையும் முற்றும்மையும் தொடர்தல் -

{Entry: D04__061}

எச்சவும்மையொடு முற்றும்மை தொடரும்வழி வேறுவினை கொள்ளும்.

எ-டு : வடுகரசரும் வந்தார்; தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர்

என இறப்பும் எதிர்வும் பற்றி வேறுவினை கொண்டவாறு.

(தொ. சொ. 285 நச். உரை)

எச்சவும்மை வகை -

{Entry: D04__062}

இவ்வெச்சவும்மை முழுவதும் தழுவியதும், ஒருபுடை தழுவியதும் என இருவகைப்படும். ‘யான் கருவூர்க்குச் செல்வேன்’ என்றாற்கு ‘யானும் அவ்வூர்க்குச் செல்வேன்’ எனவும், அவ்வாறு கூறினாற்கு ‘யானும் உறையூர்க்குச் செல் வேன்’ எனவும் வரும். இவை முறையே முழுவதும் தழுவிய தும், ஒருபுடை தழுவியதும் ஆம். (நன். 357 இராமா.)

எஞ்சாப் பொருளவாய பெயர்கள் -

{Entry: D04__063}

எல்லாரும் வந்திலர் - எல்லாம் வந்தில - என்புழிச் சிலர் வந்தார் - சில வந்தன - எனச் சிறுபான்மை எச்சம் குறித்து நிற்றலின், உம்மையிடைச்சொல்லேயன்றி எஞ்சாப் பொருள வாகிய பொருட் பெயர்களும் ‘முற்றும்மை எச்சப்பொருள் படுதலுமாகும்’ என்ற விதியைப் பெறும். (இ.வி. 257 உரை)

எஞ்சுபொருட்கிளவி -

{Entry: D04__064}

சொல்லாதொழிந்த பொருளை இனிது விளக்கும் சொல். எஞ்சு பொருட்கிளவி நெறிப்படத் தோன்றுதலாவது, வாக்கியமாகிய தொடர்மொழிக்கண் முன்னும் பின்னும் நின்ற சொல்லை நெறிப்படுத்தற்கு ஆண்டுத் தோன்றுதல். அது புலப்பட நில்லாமையின் எச்சமாயிற்று. அது பத்துவகைப் படுமாறு :

பிரிநிலை எச்சமாவது, பல பொருள்களில் ஒன்று பிரிந்த வழிப் பிரிக்கப்பட்ட பொருண்மையும் தோன்றி நிற்பது.

வினையெச்சமாவது, ஒருவினைச்சொல் எஞ்சிநிற்பது.

பெயரெச்சமாவது, ஒருபெயர் எஞ்சி நிற்பது.

ஒழியிசைஎச்சமாவது, சொல்லப்பட்ட பொருளை ஒழியச் சொல்லாதொழிந்து நின்ற பொருளும் தோன்ற நிற்பது.

எதிர்மறைஎச்சமாவது, ஒரு பொருளைக் கூறியவழி அதனின் மாறுபட்ட பொருண்மையும் தோன்றி நிற்பது.

உம்மைஎச்சமாவது, உம்மை கொடுக்க வேண்டும்வழி அஃது எஞ்சி நிற்பது.

எனவென் எச்சமாவது, என என்று சொல்ல வேண்டும்வழி அஃது எஞ்சி நிற்பது.

சொல்லெச்சமாவது, ஒரு சொல்லினான் ஒரு பொருளை விதந்தோதியவழி அவவிதப்பினானே பிறிது பொருள் கொள்ளுமாறு நிற்பது.

குறிப்பெச்சமாவது, சொற்பொருளன்றிச் சொல்லுவான் குறித்த பொருள் எஞ்சி நிற்பது.

இசையெச்சமாவது ஒருசொல் ஒரு பொருளன்றிப் பிறிதும் ஒரு பொருளை இசைக்குமாறு வருவது. (தொ. சொ. 423 தெய். உரை)

எஞ்சுபொருட்கிளவி செஞ்சொல் ஆமிடத்து முடிவு -

{Entry: D04__065}

எச்சவும்மை எனவும், எச்சவும்மையான் தழுவுப்படும் எஞ்சுபொருட்கிளவி எனவும் சொல்லப்பட்ட இரண்டனுள், எஞ்சு பொருட்கிளவி உம்மையில்லாத சொல்லாக அமை யின், உம்மையில்லாத தொடரை உம்மைத்தொடர்க்குப் பின்னர்ச் சொல்லாமல் முன்னர்ச் சொல்லுதல் வேண்டும்.

எ-டு : சாத்தன் வந்தான் ; கொற்றனும் வந்தான் - எனக் காண்க. ‘அடகு புலால்பாகு பாளிதமும் உண்ணான்
கடல்போலும் கல்வி யவன்’
- என உம்மையில்லாத சொற்கள் முன்னரும் உம்மை சேர்ந்த சொல் பின்ன ரும் வந்தன. (தொ. சொ. 286 நச். உரை)

எட்டாம் வேற்றுமை -

{Entry: D04__066}

எட்டாம் வேற்றுமை படர்க்கையாரை முன்னிலையாக்கிப் பேசும். இதன் உருபுகள் தான் ஏற்ற பெயரீற்றின் திரிபும் கேடும் மிகுதலும் இயல்பும் ஈற்றயல் நின்றதன் திரிபும் ஆம்.

எ-டு : நல்லாள் - நல்லாய் : ஈறுதிரிதல்; தோழன் - தோழ : ஈறு கெடுதல்; நல்லார் - நல்லாரே : ஈறு மிகுதல்; சேரமான் - சேரமான் : இயல்பு; மக்கள் - மக்காள் : ஈற்றயல் திரிதல். (நன். 303)

எட்டாம் வேற்றுமை : பெயர்க்காரணம் -

{Entry: D04__067}

விளி எழுவாயினின்றும் ஒருவாற்றான் வேறுபட்டமையின் இறுதிக்கண் தந்து ‘எட்டாம் வேற்றுமை’ எனப்பட்டது.

(நன். 303 சங்.)

எடுத்த மொழி இனம் செப்பலும் செப்பாமையும் -

{Entry: D04__068}

மேலைச்சேரிக் கோழி அலைத்தது என்றவழிக் கீழைச்சேரிக் கோழி தோற்றது - என்பது இனம் செப்பல். அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றி, அந்தண ரையே குறித்தலின் இனம் செப்பாது வந்தது. சுமந்தான் விழுந்தான் என்றவழிச் சுமவாதான் விழுந்திலன் என்னும் பொருள்படுதலேயன்றிச் சுமக்கப்பட்டதும் விழுந்தது - என்று இனம் அல்லதும் செப்பியவாறு காண்க.

(தொ. சொ. 59 தெய். உரை)

எடுத்த மொழி இனம் செப்பா இடம் -

{Entry: D04__069}

அருத்தாபத்தி இனம் செப்புமாறு: தன்னொடு மறுதலைப்- பட்டுப் பல உள்வழி இனம் செப்பாது. ஆவிற்கு மறுதலை எருமை ஒட்டகம் - எனப் பலவுள. அந்தணர்க்கு மறுதலை அரசர் வணிகர் வேளாளர் - எனப் பலருளர். ஆதலின் ஆவாழ்க, அந்தணர் வாழ்க - என்பன இனம் செப்பி ‘மற்றைய சாக, மற்றையோர் சாக’ என்னும் பொருள் தாரா. (தொ. சொ. 61 நச். உரை)

எடுத்த மொழி இனம் செப்பாமை -

{Entry: D04__070}

மேலைச்சேரி வென்றது என்றால் கீழைச்சேரி தோற்றது என்பது சொல்லாமலே முடிந்தது. இஃது அருத்தாபத்தி.

‘முடித்தலும்’ என்னும் உம்மையால் முடியாதனவும் உள. அவை வருமாறு : ‘ஆ வாழ்க’ என்றால் ‘அந்தணர் கெடுக’ என்றாகாது. (நேமி. மொழி. 102 உரை)

எடுத்தல் படுத்தல் ஓசை -

{Entry: D04__071}

இருதிணைக்கும் பொதுவாகிய செய்யும் என்னும் சொல் எச்சமோ முற்றோ என ஐயத்தை விளைத்து ‘உண்ணும்’ என நின்றபோது, அவன் - அது - என்னும் வினைமுதல் வந்து திணையும் பாலும் விளங்கத் தொடர்மொழிப் பொருள் உணர்த்தி, எடுத்தலோசையான் மற்றொரு சொல்லை நோக் காது, செப்பின் புணர்ச்சி போல உண்ணுமவன் வருமது என முடிந்து, பின்னர் அவனுண்ணும் - அது வரும் - என மாறி நிற்பது மரபாதலால், இது முற்றிற்கு இலக்கணம் என்றும், உண்ணுமவன் - வாழுமில் - எனப் படுத்தலோசையான் கூறியபோது அவன், இல் - என்ற முடிக்கும் சொல்லான் அமையாது உண்ணுமவன் நல்லன் - வாழுமில் நன்று - என மற்றொரு சொல்லை நோக்கி நிற்பது எச்சத்திற்கு இலக்கணம் என்றும் தெளியப்படும். (நன். 348 இராமா.)

எடுத்துக்காட்டுப் பலவும் உலகவழக்கில் தந்தமை -

{Entry: D04__072}

நூல் பல கற்றார்க்கும் சிலவே கற்றார்க்கும் பொருந்த, அன்னார் உணரும்பொருட்டுப் பலவும் உலகவழக்கினின்று எடுத்துக் காட்டுத் தரப்பட்டன என்பர் இலக்கணக் கொத்துடையார்; அவற்றுள்ளும் கற்றார் வேறுபொருள் கொள்ளக்கூடிய உலக வழக்கினைக் கூறாமை விடுத்ததாகவும் கூறுகிறார்.

‘பிணிக்கண் வருந்தினான்’ என்பது உருபு தொக்குச் செய்யுளில் வருங்கால் இக்குச் சாரியை பெற்றுப் ‘பிணிக்கு வருந்தினான்’ என்றே வரும். இச்சொல்லை வேற்றுமைத் தொகைக்கு உதாரணம் காட்டின், அவ்வாறு கொள்ளாது குவ்வுருபு விரிந்தது என்றே துணிந்து உரையையும் உதா ரணத்தையும் பிழையென்றே கருதுவர்.

‘நாலுகை வெட்டினான்’ ‘அஞ்சுநாள் பயந்தான்’ என உலக வழக்கினை எண்ணுப்பெயர்க்கு உதாரணம் காட்டினால், இலக்கணம் பெரிதும் கற்றோர், நான்ற கையை வெட்டினான் - அஞ்சத்தக்க காலத்து அஞ்சினான் - என்று பொருள் கொள்வர், நான்கு ஐந்து என்பதே வழக்கமாகையால். ஆதலால் அவை போன்றவற்றை விலக்கியதாக ஆசிரியர் கூறுகிறார். (இ. கொ. 12)

எண்ணல் அளவைச் சிறப்பு -

{Entry: D04__073}

எடுத்தல் முதலிய அளவைகள் இருப்ப, எண்ணல் அளவையை முன் வைத்தது என்னெனின், தான் ஒன்று எனத் தனித்தும் எல்லா எழுத்தினும் கலந்தும் நிற்றலால் அத்தலைமை பற்றி அகரம் எழுத்துக்கட்கெல்லாம் முன் வைக்கப்பட்டது போல, எண்ணலளவை தனித்தும், எடுத்தல் முதலிய மூன்றிலும் ஒரு துலாம் - ஒரு கலம் - ஒரு சாண் - எனக் கலந்தும் நிற்றலால் முன் வைக்கப்பட்டது என்க. (நன். 409 இராமா.)

எண்ணிடைச் சொல் -

{Entry: D04__074}

எண்ணின் வகை எட்டுள எனக் கொள்க. அவையாவன உருபில்லாத செவ்வெண்ணும், ஏ - என்றா - எனா - என்று - என - ஒடு - உம்மை - என்ற இவ்வேழுருபு பெற்ற எண்ணுமாக எட்டு எனப்படும். (தொ.வி. 136)

எண்ணிடைச்சொற்கள் வினைச்சொற்களொடும் வருதல் -

{Entry: D04__075}

எ-டு : உண்டும் தின்றும் பாடியும் வந்தான் உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான்

எனச் செய்து என்னும் வினையெச்சமும் செயவென் வினை யெச்சமும் உம்மையெண்ணானும் எனவென் எண்ணானும் இணைக்கப்பட்டு வந்தன. (தொ. சொ. 293 சேனா. உரை)

எண்ணிடைச் சொற்கள் சிறுபான்மை வினைமுற்றொடும் வரும்.

எ-டு : யாம் கண்டபோது இம்மாடத்தின்கண் நின்றானும் இருந்தானும் கிடந்தானும் இவன் - என முற்றுச் சொற்கண்ணும் எண்ணும்மை வந்தவாறு,

பெயரெச்சத்தில் எண்ணிடைச் சொற்கள் வாரா.

(தொ. சொ. 295 நச். உரை)

பெயரொடு வரும் எண்ணிடைச் சொற்களாகிய உம்மை எண், என்று எண், என எண் - என்பனவும் செவ்வெண்ணும் வினைச் சொல்லொடும் வரும்.

எ-டு : கற்றும் கேட்டும் கற்பனை கடந்தான் - உம்மை. உண்ணவென்று உடுக்கவென்று பூசவென்று முடிக்க வென்று வந்தான் - என்று. உண்ணவென உடுக்க வெனப் பூசவென முடிக்கவென வந்தான் - என. உண்ண உடுக்கப் பூச முடிக்கவென்று வந்தான், உண்ண உடுக்கப் பூச முடிக்கவென வந்தான்-என்றும் எனவும், ஒரோவழி நின்று பிரிந்து சென்றியைந்தன.

‘மண்டலம் மழுங்க, மலைநிறம் கிளர,

வண்டினம் மலர்பரந்து ஊத,

மிசையே கண்டல் கானம் குருகினம் ஒலிப்ப’ (செவ்வெண்.)

‘சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், இருவரும் வந்தமை யான் கலியாணம் பொலிந்தது’ என வினைச்செவ்வெண் தொகை பெற்றது என்பாரு முளர். இருவர் என்னும் தொகை சாத்தன் கொற்றன் ஆகிய இருவர் எனப் பெயர்த்தொகை யாதலின் அவர் கூறுவது பொருந்தாது. (நன். 430 சங்.)

எண்ணிடைச் சொற்களுக்குச் சிறப்பு விதி -

{Entry: D04__076}

என்றும் எனவும் ஒடுவும் பொருள்தொறும் நிற்றலேயன்றி, ஓரிடத்து நின்றும் பிரிந்து எண்ணும் பொருள்தோறும் பொருந்தும்.

எ-டு : ‘வினைபகை என்றிரண்டின் எச்சம்’ கு.674

‘பகை பாவம் அச்சம் பழியென நான் கும்’ 146

‘பொருள் கருவி காலம் வினையிடனோ டைந்தும்’ 675

எண்ணும் பொருள்தோறும் தனித்தனி நிற்றலினும் ஒரோ வழி நின்று பிரிந்து எண்ணப்படும் பொருள்தோறும் சென் றியைதல் இம்மூன்று எண்ணிடைச்சொற்களுக்கும் அமைந்து கிடந்தன. ஏனைய எண்ணிடைச்சொற்களுக்கு எண்ணப்படும் பொருள் தோறும் நிற்கும் நிலையே சிறந்தது என்பதும், ஒரோவழி நின்று பிரிதல் வலிந்து கொள்ளப்படுவது என்ப தும், அவை ஈண்டு அமையாது தீபகம் என்னும் அணியிலக் கணத்தின் பாற்படும் என்பதும் பெற்றாம். (நன். 429 சங்.)

எண்ணிடைச் சொற்களுள் தொகைபெற்று வருவன, தொகை பெற்றும் பெறாதும் வருவன -

{Entry: D04__077}

பெயர்களிடையே எண்ணிடைச்சொல் தொக்கு நிற்ப வரும் செவ்வெண்ணும், பெயரொடு தொகாது வரும் ஏகார எண்ணும், என்றா என்னும் எண்ணும், எனா என்னும் எண்ணும் ஆகிய நான்கும் தொகை பெற்று நடக்கும். உம்மையெண்ணும், என்று எண்ணும், என எண்ணும், ஒடு எண்ணும் தொகை பெற்றும் பெறாமலும் நடக்கும்.

எ-டு : சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார் -செவ்வெண்; சாத்தனே கொற்றனே தேவனே பூதனே நால்வரும் வந்தார் - ஏகாரம்; சாத்தனென்றா கொற்ற னென்றா தேவனென்றா பூதனென்றா நால் வரும் வந்தார் - என்றா; சாத்தனெனா கொற்றனெனா தேவனெனா பூத னெனா நால்வரும் வந்தார் - எனா-

இவை நான்கும் வழக்கிடை ஒரோவழித் தொகை பெறாது வரின் இசையெச்சமாகக் கொள்ளப்படும்; செய்யுளிடைத் தொகை பெறாது வரின் விகாரத்தால் தொக்கதாகவோ இசையெச்ச மாகவோ கொள்ளப்படும்.

எ-டு : சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும் நால்வரும் வந்தார் - உம்மை; சாத்தனென்று கொற்றனென்று தேவனென்று பூதனென்று நால்வரும் வந்தார் - என்று; சாத்தனெனக் கொற்றனெனத் தேவனெனப் பூதனென நால்வரும் வந்தார் - என; சாத்தனொடு கொற்றனொடு தேவனொடு பூதனொடு நால்வரும் வந்தார் - ஒடு; சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும் வந்தார் - உம்மை; நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்று அளவறு காயமென்று ஆகிய உலகம் - என்று; நிலனென நீரெனத் தீயெனக் காற்றென அளவறு காயமென ஆகிய உலகம் - என; நிலனொடு நீரொடு தீயொடு காற்றொடு அளவறு காய மொடு ஆகிய உலகம் - ஒடு.

இந்நான்கு எண்களும் முறையே தொகைபெற்றும் பெறாம லும் வந்தன. (நன். 428 சங்)

எண்ணினுன் பிரிந்து ஒன்றும் இடைச்சொற்கள் -

{Entry: D04__078}

என்று என ஒடு என்னும் இடைச்சொற்கள் ஒருவழித் தோன் றினும் எண்ணுதற்கண் பிற வழியும் சென்று பொருந்தும்.

எ-டு : ‘வினைபகை என்றிரண்டின் எச்சம்’ (குறள் 674)

‘கண்ணிமை நொடியென’ (தொ. எ. 7)

‘பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்’ (குறள் 675 )

அவை ஒருவழி நின்று, வினையென்று - பகையென்று - எனவும், கண்ணிமையென - நொடியென - எனவும், பொரு ளொடு - கருவியொடு - காலமொடு - வினையொடு - இட னோடு - எனவும் நின்றவிடத்துப் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு கண்டுகொள்க. (‘ஒடு’ எனவே ‘ஓடு’ வும் அடங்கிற்று.) (தொ. சொ. 294 சேனா., 296 நச். உரை)

எண்ணுங்கால் பின்பற்றும் மரபு -

{Entry: D04__079}

எண்ணுமிடத்து, ‘துகிரும் முத்தும் பொன்னும்’ - என இனம் ஒத்தனவற்றையே எண்ணல் வேண்டும்; ‘முத்தும் கரு விருந்தையும் கானங்கோழியும் பொன்னும்’ என எண்ணல் கூடாது. (இருந்தை - கரி) (தொ. சொ. 16 நச். உரை)

எண்ணுநிலை வகை -

{Entry: D04__080}

தொடர்மொழி அமைதற்குரிய மூன்று வகைகளில் எண்ணு நிலைவகை ஒன்று.

எ-டு : நிலம் நீர் தீக் காற்று விசும்பு எனப் பூதம் ஐந்து. இது பல பொருள்களை எண்ணுதற்கண் அமைந்த தொடராதலின், இங்ஙனம் தொடர்மொழி அமைதல் எண்ணுநிலை வகையாம். (தொ. சொ. 1 நச். உரை)

எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாமை -

{Entry: D04__081}

ஒன்று என்னும் எண்ணுப்பெயரான் அவ்வெண்ணப்படும் பொருளைக் கூறுதற்கு முன்னும் அப்பொருள் ஒன்றாயே நிற்றலின், எண்ணுப்பெயரை ஆகுபெயரொடு தொல்காப் பியனார் கூறினாரல்லர். (தொ. சொ. 118. நச். 116 சேனா. உரை)

எண்ணுப்பெயர்களையும் பொருள்களைக் குறிக்கும் பெய ரொடு வைத்துத் தொல்காப்பியனார் பெயரியலில் எண்ணி யுள்ளார். எனவே, அவை இயல்பாகவே எண்ணப்படும் பொருட் கும் பெயராகும் ஆதலின் எண்ணுப்பெயர் ஆகுபெயராகாது.

அளவும் நிறையும் போலாது, எண்ணப்படும் பொருளை எண்ணுப்பெயர் பிரிந்து நில்லாமையின், அதுவும் அப் பொருட்கு ஒரு காரணத்தால் பெற்ற பெயரெனின்அல்லது ஆகுபெயர் எனப்படாது. அளவும் நிறையும் பிரிந்து நின்ற வாறு என்னையெனின், இப்பொன் கால் - இப்பொன் கழஞ்சு - என்றவழி அவை ஓர் உருவாகியும் பல உருவாகியும் வரி னல்லது, கால் - கழஞ்சு - என்ற நிறைப்பொருண்மை புலப் படாது நிற்றலின் பிரிந்து நின்றன. (தொ. சொ. 113 தெய். உரை)

எண்ணுப்பெயரான் அவ்வெண்ணப்படும் பொருளைக் கூறுவதற்கு முன்னும் அப்பொருள் ஒன்றேயாய் நிற்றலின், எண்ணுப்பெயர் ஆகுபெயராதற்கு ஏற்புடைத்தாகாமை உணரப்படும். (இ. வி. 192 உரை)

எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொற்கள் -

{Entry: D04__082}

உம்மை, ஏகாரம், என, என்று, எனா, என்றா, ஒடு - என்னும் ஏழும் எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொற்களாம்.

எ-டு : நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து: நிலனே நீரே தீயே வளியே ஆகாயமே எனப் பூதம் ஐந்து; நிலனென நீரெனத் தீயென வளியென ஆகாயமெனப் பூதம் ஐந்து; நிலனென்று நீரென்று தீயென்று வளியென்று ஆகாயமென்று பூதம் ஐந்து; நீலனெனா நீரெனாத் தீயெனா வளியெனா ஆகாய மெனாப் பூதம் ஐந்து; நிலனொடு நீரொடு தீயொடு வளியொடு ஆகாயமொடு பூதம் ஐந்து. (தொ. சொ. 289 நச். முதலியன )

எண்ணுவழுவும் முடிபு வழுவமைதியும் -

{Entry: D04__083}

திணைவிரவி எண்ணுதல் எண்ணுவழு. திணை வழுவினும் இனமான பொருளை எண்ணுதல் வழுவமைதி. திணைவழுவி எண்ணி ஒரு திணைக்குரிய முடிபு கொடுத்தல் முடிபுவழு. மிகுதி பற்றியோ சிறப்புப் பற்றியோ யாதாயினும் ஒருதிணை முடிபு கொடுப்பதும், பெரும்பான்மையும் அஃறிணைமுடிபு கொடுப்பதும் வழுவமைதி.

‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர்

சுடுகாடு பேய்எருமை என்றிவை ஆறும்

குறுகார் அறிவுடை யார்’

- திணை விரவி எண்ணி அஃறிணை முடிபு கொண்டது.

‘பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை’

உயர்திணையான் எண்ணி அஃறிணை முடிபு கொண்டது.

அஃறிணை முடிபிற்றாதற்குக் காரணம் என்னோ எனில், அவ் வாறெண்ணிய உயர்திணையும் பொருளென்னும் பொருண் மையான் அஃறிணையில் அடங்கும்; உயர்திணையுள் அஃறிணை அடங்காது என்பது. (தொ. சொ. 51 நச். கல். உரை)

எண்ணேகாரம் இடையிட்டுக் கொள்ளல் -

{Entry: D04__084}

எண்ணுப்பொருளில் வரும் ஏகாரம் இடைநின்று, ஒழிந்த எண்ணான் வந்தனவற்றையும் ஏகார எண்ணான் எண்ணின என்றே கொள்ளப்படும். (தொ. சொ. 284 இள. உரை)

சொல்தோறும் வாராது எண்ணேகாரம் இடையிட்டுவரினும் எண்ணுதற் பொருட்டேயாம்.

எ-டு : ‘மலைநிலம் பூவே துலாக்கோல்என் றின்னர்’

மலையே நிலமே பூவே துலாக்கோலே - என, எண்ணுக் குறித்து வரும் ஏகாரம் எண்ணப்படும் பெயர் எல்லாவற்றொடும் வருதல் மரபாயினும் இடையிட்டு வரினும் அமைத்துக் கொள்ளப்படும். (தொ. சொ. 288 சேனா. உரை)

உம்மையும் ஏகாரமும் எனவும் என்றும் எனாவும் என்றாவும் செவ்வெண்ணும் ஆகிய ஏழும் எண்ணுப்பொருளில் வருவன. இவ்வெழுவகை எண்களுள் ஒன்று முதல் நின்று ஏகார எண்ணினைத் தன்னிடத்தே அழைத்துக்கொண்டு நிற்பினும் பல எண் வந்தன என்று குற்றம் ஆகா, தான் உணர்த்தும் எண்ணுப்பொருளையே அப்பலவும் குறித்து நடக்கும்.

எ-டு : ‘மலைநிலம் பூவே துலாக்கோல்என் றின்னர்
உலைவில் உணர்வுடை யார்.’

இது செவ்வெண் நின்று ஏகார எண்ணை இடையிட்டது.

‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல். செய். 1) - இது செவ்வெண் நின்று எனாஎண்ணை இடையிட்டது.

‘யாத்த சீரே அடியாப்பு எனாஅ’ (தொ. சொ. 1) - இஃது ஏகார - எண் செவ்வெண்ணையும் எனாஎண்ணையும் இடையிட்டது.

(தொ. சொ. 290 நச். உரை)

எண்ணோகாரம் -

{Entry: D04__085}

ஐய ஓகாரம் காண்க.

எண் தொகைபெறுதல் -

{Entry: D04__086}

எண் தொகை பெறுதலாவது, ‘என’ என்றும் ‘என்று’ என்றும் ‘ஒடு’ என்றும் தொகையிடுதல்.

எ-டு : ‘ கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை’ (தொ. எ.7)

‘குன்று கூதிர் பண்பு தோழி,

வளியிசை முத்துறழ் என்றுஇவை எல்லாம்,

தெளிய வந்த செந்துறை செந்துறை’

‘நிலனே நீரே தீயே வளியே ஆகா யத்தொடு ஐந்தாம் பூதம்’

என முறையே,

எனவும் என்றும் ஒடுவும் தொகையிட வந்தவாறு. (நேமி. வினை. 11 உரை)

எண்வகை எண்கள் மயங்கல் -

{Entry: D04__087}

எட்டுவகை எண்களுள், ஏகாரஎண் மற்றை எண்களினிடை நிற்பினும், பிற எண் அவ்வாறு நிற்பினும், பல எண் வந்தன என்று குற்றம் எனல் கூடாவாம், அவைபலவும் எண்ணுப் பொருள் ஒன்றையே குறித்து நிற்றலின் எனக் கொள்க.

வருமாறு : ‘மலைநிலம் பூவே துலாக்கோல்என்றறின்னர்’ எனவும், ‘தோற் றம் இசையே நாற்றம் சுவையே, உறலோடு ஆங்கைம் புலனென மொழிப’ எனவும் இவை பெயர்ச்செவ்வெண் நின்று ஏகார எண்ணை இடையில் கொண்டன. ‘மாத்திரை எழுத்தியல் அசை வகை எனாஅ’ (தொ. செய். 1) - என்பது செவ்வெண் நின்று எனாஎண்ணை இடையிலே கொண்டது. ‘யாத்த சீரே அடியாப் பு எனாஅ’ - என்பது ஏகாரஎண் செவ்வெண்ணையும் எனா எண்ணையும் இடை யிலே கொண்டது. ஒழிந்த எண் களும் இவ்வாறு வருதல் காண்க. (தொ. சொ. 290 நச்.)

(நன். 360 இராமா.)

எண்வகைக் காரணப்பெயர்கள் -

{Entry: D04__088}

பொருளாதி ஆறும், கருத்தாவும், மிகவும் (மிகுதி ) - ஆகிய இவை எண்வகைக் காரணங்களாம்.

குழையன் கோலன் வில்லி வாளி பொன்னன் பூணன் - எனவும், வெற்பன் நாடன் ஊரன் சேர்ப்பன் வானன் நிலத்தன் அகத்தன் புறத்தன் - எனவும், காரான் கூதிரான் ஐயாட்டை யான் ஆறு திங்களான் ஆதிரையான்- எனவும், நெடுமூக்கன் தாழ்காதன் குழலன் தோளன் கூனன் குருடன் கொம்பன் வாலன் - எனவும், அறிவன் புலவன் சிறியன் பெரியன் செய் யான் கரியான் கடியான் இனியான் சேயனான் ஏறனான் - எனவும், உழவன் வாணிகன் ஒற்றன் தூதன் உண்டான் உறங் கினான் வருகின்- றான் போகின்றான் காப்பான் கடிவான் - எனவும், வள்ளுவப் பயன் குயக்கலம் தொல்காப்பியம் - எனவும், கமுகந்தோட்டம் காரைக்காடு - எனவும் முறையே எண்வகைக் காரணப்பெயரும் வந்தவாறு. (நன். 274 மயிலை.)

எண்வகை விடை -

{Entry: D04__089}

சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றதுரைத்தல் உறுவது கூறல் இனமொழி - என்பன எட்டும் விடைவகையாம். இவ் விறை எட்டனுள், முன்னைய மூன்றும் செவ்வன் இறையாம்; பின்னைய ஐந்தும் இறைப்பொருள் பயத்தலின் இறையாகத் தழீஇக்கொள்வர் புலவர் என்றவாறு. எனவே, இறையாவது செவ்வனிறையும் இறைபயப்பதும் என இரு கூற்றதாம் என்க.

எ-டு : ‘வஞ்சிக்கு வழி யாது?’ என்றவழி, ‘இது’ என்றும், ‘மாவீழ் நொச்சி’ என்பதற்குப் பொருள் யாது? என்றவழி, ‘வண்டு வீழ்ந்து தேனுண்ணும் நொச்சிப் பூ’ என்றும், கருதிக் கூறும் தொடக்கத்தன எல்லாம் சுட்டு.

‘சாத்தா! இது செய்வாயோ?’ என்றவழிச் ‘செய்யேன்’ என்பது மறை. ‘செய்வேன்’ என்பது நேர். ‘நீ செய்’ என்பது ஏவல். ‘செய்வேனோ?’ என்பது வினாதல் (இவ் ஓகார இடைச் சொற்கு வினாப்பொருளே கொள்க) ‘உடம்பு நொந்தது, நோவாநின்றது’ என்பது உற்றதுரைத்தல். ‘உடம்பு நோம்’ என்பது உறுவது கூறல். ‘மற்றது செய்வேன்’ என்பது இனமொழி.

இறைபயப்பன இவ்வைந்தனுள் ‘வினாஎதிர் வினாதல்’ ஒன்றும் நேர்தற் பொருளையும், ஏனைய நான்கும் மறைப் பொருளையும் பயந்தன. (நன். 386 சங்.)

எதிர்கால இடைநிலை -

{Entry: D04__090}

வினைமுற்றுக்கள் எதிர்காலம் பற்றி வருங்கால், பகரமும் வகரமும் பெற்று வரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் பெற்று வரும். ககரம் எதிர்காலம் காட்டுதலுமுண்டு.

எ-டு : உண்பம், வருவம்; உண்குவம், உரிஞுவம், வருகுவம்; நகுகம் (தொ. சொ. 204 நச். உரை)

எதிர்காலமுற்று விகுதிகள் -

{Entry: D04__091}

கும் டும் தும் றும் : உண்கும் உண்டும் வருதும் சேறும்
- தன்மைப்பன்மை முற்று.

கு டு து று அல் : உண்கு உண்டு வருது சேறு வருவல் - தன்மை ஒருமை முற்று.

ப மார் : உண்ப உண்மார் (வந்தார்) - படர்க்கைப் பலர்பால் முற்று.

இ : உண்ணுதி - முன்னிலை ஒருமை முற்று.

மின் : உண்மின் - முன்னிலைப் பன்மை

ஏவல் முற்று.

இப்பதின்மூன்றும் எதிர்காலம் காட்டும் முற்றுவிகுதிகளாம். செய்யும் என்பதன் உம் ஈறு பிற்காலத்து எதிர்காலம் காட்டும். இவற்றுள் சில சிறுபான்மை நிகழ்காலத்துக்கும் வரும். (தொ. சொ. 204, 205, 208, 209) (225, 226, நச்.)

எதிர்கால வினையெச்சம் -

{Entry: D04__092}

‘செயின் செய்யிய செய்யியர் - என்னும் வாய்பாட்டான் வருவனவும், வான் பான் பாக்கு - என்னும் மூன்று விகுதியான் வருவனவும் எதிர்காலம் காட்டும் வினையெச்சங்களாம்.

எ-டு :

‘தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்குமிவ் வூர்’ (கு. 1150)

காணிய வாவாழி தோழி’ (கலி. 42)

‘பசலை உண்ணிய ர் வேண்டும்’ (குறுந் . 27)

‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ (பு.வெ. 99)

‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ (நான்.28)

‘புணர்தரு செல்வம் தருபா க்குச் சென்றார்’ கார். 11 (நன். 343, 344 சங்.)

எதிர்மறுத்தவழியும் வேற்றுமையும் வினைவிகுதியும் உண்மை -

{Entry: D04__093}

ஒருவினை நிகழ்வழி அவ்வினைக்குக் கருத்தாவும் செயப்படு பொருளும் முதலியவாகப் பெயர்ப்பொருளை வேற்றுமை செய்து நின்ற உருபுகள், அவ்வினை நிகழாவழியும் அவ்வாறு நிற்றலானும், வினைவிகுதிகளும் அவ்வினை நிகழ்வுழி முற்றின் கண் கருத்தாவையும் எச்சங்களில் பெயரொழிவையும் வினை யொழிவையும் தந்து நின்றாற்போல வினை நிகழாவழியும் நிற்றலானும் இங்ஙனம் கூறப்பட்டது.

எ-டு : குடத்தை வனையான்; நடவான் - நடவாத - நடவாது.

(உடன்பாடு எதிர்மறை இரண்டன்கண்ணும் பகுதி உடன் பாடாகவே இருத்தல் நோக்குக.) (நன். 354 சங்.)

எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியாமை -

{Entry: D04__094}

விதிமுகத்தால் கூறாது எதிர்மறுத்துக் கூறினும், தத்தம் இலக் கணத்தான் வரும் பொருள்நிலையில் வேற்றுமை யுருபுகள் திரியா.

‘மரத்தைக் குறையான்’ என்புழி, வினை நிகழாமையின் மரம் செயப்படுபொருள் ஆகாதெனினும், எதிர்மறைவினையும் விதிவினையோடு ஒக்கும் என்று ஆசிரியர் ஆணை கூறலின் செயப்படுபொருள் நிலையை எய்தும் என்பது.

(தொ. சொ. 108 நச். உரை)

எதிர்மறைஎச்சச் சொற்களின் வாய்பாடு -

{Entry: D04__095}

செய்யா - செய்யும், செய்த என்பனவற்றின் மறை; செய்யாத -செய்த என்பதன் மறை; செய்யாது , செய்யாமல் - செய்து செய்யூ செய்பு செய்யா செய்தென என்பனவற்றின் மறை; செய்யாமை - செய்து, செய்தென என்பனவற்றின் மறை; செய்யாமைக்கு - செய்யிய செய்யியர் செயற்கு செய என்பன வற்றின் மறை; செய்யாவிடின் - செயின் என்பதன் மறை; அன்றி, இன்றி - என்ற குறிப்பு மறைவாய்பாடுகளும் உள.

(தொ. சொ. 238 நச். உரை)

எதிர்மறை எச்சம் (1)

{Entry: D04__096}

மாறுகோள் எச்சம் எனப்பட்ட ஏகார எதிர்மறையும் ஓகார எதிர்மறையும் உம்மை எதிர்மறையும் ஆகிய எதிர்மறை எச்சங்கள் மூன்றும் எதிர்மறைச் செய்தியான் முடியும்.

எ-டு : யானே கொள்வேன் என்பது கொள்ளேன் என்றும் யானோ கொள்வேன் என்பது கொள்ளேன் என்றும் சாத்தன் வரலும் உரியன் என்பது வாராமையும் உரியன் என்றும் வரும் எதிர்மறையான் முடிந்தவாறு-

இம்மூன்று இடைச்சொற்களின் பின்னர் நின்ற சொற்கள் அவற்றை முடித்தலான், கொள்ளேன் - கொள்ளேன் - வாரா மையும் உரியன் - என்னும் பொருண்மை முடிபு தோன்றிய வாறு. (தொ. சொ. 435 நச். உரை)

எதிர்மறை எச்சம் (2) -

{Entry: D04__097}

‘இம்மைப் பிறப்பின் பிரியலம் என்றேனா’ (கு. 1315) என்றவழி, ‘மறுபிறப்பிற் பிரிவேம்’ என நினைத்துக் ‘க ண்ணிறை நீர் கொண்டனள்’ எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை எஞ்சிநின்றதன் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு கண்டுகொள்க. (தொ. சொ. 428 தெய். உரை)

எதிர்மறைஎச்சம், எதிர்மறைஉம்மை : வேறுபாடு -

{Entry: D04__098}

‘கொற்றன் வருதற்கும் உரியன்’ என்புழி, உம்மை வாராமைக் கும் உரியன் என்று உணர்த்தலின் எதிர்மறையும்மை. இது பிறிதொரு பொருளினைத் தழுவாது ஒருபொருளின் வினையை மறுத்து நிற்றலின், எச்சத்தின் வேறாயிற்று. எச்சத்தோடு இதனிடை வேற்றுமை : எச்சம் பிறிதொரு பொருளைத் தழுவும்; இஃது அப்பொருட்டானும் ஒரு கூற்றினைத் தழுவும். (நச். உரையையே இவரும் உரைத்தார்.) (எதிர்மறை எச்சம் பற்றிய இவ்வுரையாசிரியரது எச்சவியல் உரைப்பகுதி காணப் பட்டிலது.) (தொ. சொ. 257 கல். உரை)

எதிர்மறை ஏவல் விகுதி -

{Entry: D04__099}

ஏல் அல் அன்மோ அற்க - என்னும் விகுதிகள் எதிர்மறை ஏவல் ஒருமையாம். செய்யேல் செய்யல் செய்யன்மோ செய்யற்க - என முறையே காண்க. இவை ஒருமையாக வரும். ஆமின் அன்மின் அற்பீர் - விகுதிகள் எதிர்மறை ஏவல் பன்மையாம். செய்யாமின் செய்யன்மின் செய்யற்பீர் - என வருமாறு காண்க. முனியாமின் முனியன்மின் முனியற்பீர் - எனவும் வரும். அற்க என்னும் விகுதி மூவிடத்து ஐம்பாற்கும் ஏற்பதே யன்றி வியங்கோளினும் ஆம். (தொ. வி. 115 உரை)

எதிர்மறையும் உடன்பாடும் -

{Entry: D04__100}

வடமொழியில் இவை முறையே பிரதியோகி எனவும் நியோகி எனவும் படும்.

எதிர்மறையால் சொல்லினும் அஃது உடன்பாட்டுப் பொருள் படத் தடையில்லை. உண்ணாது வந்தான் என்பதும், உண்டு வந்திலன் என்பதும் ஒருபொருளையே தந்தன. முன்னது எச்சம் எதிர்மறுத்தது; பின்னது வினைமுற்று எதிர்மறுத்தது.

‘அறவினை யாதெனில் கொல்லாமை’ (குறள் 321) : விலக்கியது ஒழிதலும் செய்தலோடு ஒக்கும் ஆதலின் கொல்லாமை அறவினை யாயிற்று என்பர் பரிமேலழகர்.

‘மருங்கோடித் தீவினை செய்யா னெனின்’ (குறள் 210) : மருங்கு ஓடி (நேரல்லா வழியிற் சென்று) ஒருவன் தீவினையைச் செய்தல் கூடுமன்றித் தீவினையைச் செய்யாமை கூடாதா தலின், ஓடி என்பது ‘செய்யான்’ என்பதன் முதனிலையாகிய ‘செய்’ என்பதனைக் கொண்டு முடிந்தது. (பரிமே. உரை)

திருக்கோவையாரில் ‘அன்னம் நடை கண்டு கற்றில’ (97) என்னு மடியுள்’ கண்டு என்பது ‘கற்றில’ என்னும் எதிர்மறை வினை யுள் முதனிலையாகிய ‘கல்’ என்பதனைக்கொண்டு முடிந் தது. (கண்டு கற்றல் கூடுமன்றிக் கண்டு கல்லாமை கூடாமை காண்க.)

‘பள்ளியும் ஈரம் புலராமை ஏறற் க’ (ஆசாரக். 19) - ‘ஈரம் புலர்ந்த- பின் ஏறுக’ எனப் பொருள்படும். இவ்வாற்றால் பிரதியோகி நியோகியோடே ஒக்கும் என்பர் பிரயோகவிவேக நூலார். இஃது ‘அபாவாபாவம்’ (இன்மையது இன்மை) என்பது உண்மை என்றல் போலக் கொள்க. (பி. வி. 39)

எதிர்மறைவினை அமைப்பு -

{Entry: D04__101}

நட வா முதலிய ஏவல்வினைப் பகாப்பதங்கள் பகுதியாக நிற்ப, இடைநிலை யின்றி ஏன் ஏம் ஓம் ஆய் ஈர் ஆன் ஆள் ஆர் ஆ து அ - என்பன பகுதியொடு சேரும்போது, மூவிடத்து ஐம்பால் எதிர்மறை வினைக்குறிப்புமுற்று உண்டாகும். நடவேன் யான், நடவேம் யாம், நடவோம் யாம், நடவாய் நீ, நடவீர் நீர், நடவான் அவன், நடவாள் அவள், நடவார் அவர், நடவா குதிரைகள், நடவாது யானை, நடவாவன அவை - என முறையே காண்க. (தொ. வி. 112 உரை)

எதிர்மறை வினையெச்ச விகுதி -

{Entry: D04__102}

ஆமல் ஆது ஆமை ஆ - என்பன எதிர்மறை வினையெச்ச விகுதிகள். இவற்றை முறையே செய்யாமல் - உண்ணாமல், செய்யாது - உண்ணாது , செய்யாமை - உண்ணாமை , செய்யா - உண்ணா எனக் காண்க.

‘வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா

நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் நின்றாள்’ (கம்ப. 1 : 9 : 20)

இதன்கண் ‘மாயாமல்’ என்பது ‘மாயா’ என நின்றது.

(தொ. வி. 121 உரை)

எந்தை என்னும் முறைப்பெயர் -

{Entry: D04__103}

எந்தை என்பது என்தந்தை எம்தந்தை என்று பொருள் பெற்றுத் தன்மையோடு ஒட்டுதலின் உயர்திணைப் பெய ராம். யாய் எங்கை (எவ்வை) என்பனவும் தன்மையோடு ஒட்டு தலின் உயர்திணைப் பெயர்களே. ஏனைய முறைப்பெயர்க ளெல்லாம் விரவுத் திணையாம். (தொ. சொ. 183, 182 நச். உரை)

எப்பகுதியானும் முற்றை உண்டாக்கலாம் என்பது -

{Entry: D04__104}

பெயர் வினை இடை உரி - என்னும் நான்கு அடியானும் வினைமுற்றை உண்டாக்கலாம்.

எ-டு :

கச்சு , கழல் - கச்சினன், கழலினன் - பெயர் அடி நட, வா - நடந்தான், வந்தான் - வினை அடி
போல , மறுப்ப
- போ ன்றான், மறுத்தான் - உவமவுருபு
இடைச்சொல் அடி
சால , கூர் - சா
ன்றான், கூர்ந்தான் - உரி அடி

பெயரடியாகப் பெரும்பான்மையும் வினைமுற்றே உண்டாக்
கப்படும். கச்சு, கழல் முதலிய பெயரடியாக எச்சங்கள் உண்டாக்கப்படமாட்டா. (தொ. சொ. 428 சேனா. உரை)

எப்பொருளாயினும் கொள்ளுதல் -

{Entry: D04__105}

நான்காம் வேற்றுமையுருபாகிய கு என்பது யாதானும் ஒரு பொருளாயினும் அதனை ஏற்று நிற்கும். அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் என்றால், கொடுப்பான் - அரசன், கொள்வோர் - அந்தணர் ; அரசனுடைய ஆ கொடுப்போ னாகிய அவனை விட்டுக் கொள்வோராகிய அந்தணர்பக்கல் சென்றுவிடும்.

ஆசிரியன் மாணாக்கர்க்கு அறிவு கொடுத்தான் என்றால், கொடுப்பானது பொருளாய் அவனை அறவே விடுத்துக் கொள்வான்கண்ணேயே அறிவு சென்றுவிடாது. கொள் வானிடத்து அறிவு செல்லினும் (தோன்றினும்), கொடுப் பானிடத்தும் குறையாது நிறைந்தே நிற்கும். இத்தகைய செய்தியை ‘எப்பொருளாயினும்’ என்ற தொடர் தெரிவிக்கிறது.

(தொ. சொ. 75 சேனா. உரை)

எய்தப்படுதல் -

{Entry: D04__106}

இரண்டாம் வேற்றுமை யுணர்த்தும் செயப்படுபொருள் மூன்றனுள், எய்தப்படுதல் என்பது ஒன்று. இது ‘பிராப்பியம்’ என வடநூல்களுள் கூறப்படும். எய்தப்படுதலாவது இயற்றப் படுதலும் வேறுபடுத்தப்படுதலும் போலாது, செயப்படு பொருள் எழுவாயின் தொழிலது பயனை உறும் துணையாய் நிற்பது.

இப்பொருள் தரும் முடிக்கும் சொற்கள் காப்பு - ஒப்பு - ஊர்தல் - புகழ் - பழி - பெறுதல் - காதலித்தல் - வெகுளல் - செறல் - உவத்தல் - கற்றல் - நிறுத்தல் - அளத்தல் - எண்ணல் - சார்தல் - செல்லுதல் - கன்றுதல் - நோக்குதல் - அஞ்சுதல் - என்னும் பத்தொன்பதும், அப்பொருள்களைத் தரும் பிற சொற்களும் ஆம். (தொ. சொ. 72 சேனா. உரை) (தொ. சொ. 73 நச். உரை)

எய்யாமை : மறைச்சொல் -

{Entry: D04__107}

எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை என்னும் குறிப்பை உணர்த்தும். அறிதல் பொருளுடையதாக எய்தல் என்றானும் எய்த்தல் என்றானும் சான்றோர் செய்யுளுள் வாராமையான், எய்யாமை மறைச்சொல்லன்று என்பர் சேனா. (342)

அறிதல் என்னும் உடன்பாட்டிற்கு மறையாகிய அறியாமை என்னும் உரிச்சொல்லான் எய்யாமையை உணர்த்தவே, அவ் எய்யாமை மறைச்சொல் என்பதும், அதற்கு எய்த்தல் என்னும் உடன்பாட்டுச்சொல் உண்டு என்பதும் பெற்றாம். அவ்வுடன் - பாட்டை ஓதாது மறையை ஒதினார், மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும் என்பதற்கு. ‘எய்த்து நீர்ச்சிலம் பின் குரை மேகலை’ (சீவக. 2481) என்புழி எய்த்து என்பது அறிந்து என்னும் பொருளுணர்த்திற்று. (தொ. சொ. 342 நச். உரை)

எயிலை இழைத்தான் : ‘இழை’ இரண்டாம்வேற்றுமைப் பொருளாதல் -

{Entry: D04__108}

எயிலை இழைத்தான் என்பது இயற்றப்படும் பொருள். எயிலை இழைத்தலைச் செய்தான் என்னும் பொருட்டு. இழை என்னும் வினைமாத்திரையை உணர்த்தும் முதனிலைப் பெயர் நின்று, இழைத்தல் என்னும் வினைப்பெயரை யும் தோற்றுவித்து, இழைத்தலை என்னும் உருபையும் தோற்று வித்துச் செய்தான் என வினையொழிந்த காரணங்கள் ஏழானும் நிகழும் காரியத்தைத் தோற்றுவித்து நிற்றலின், இழை என்னும் முதனிலைப் பெயரை வேற்றுமைப் பெயராக எடுத்தோதினார். இப் பொருட்கண் தோன்றிய செய்தான் என்னும் காரியத் துடனல்லது எயிலை என்னும் இரண்டா வது முடியாமை உணர்க. என்னை? செய்தற்கு இழைத்தல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரணமாய் நிற்றலானும், ஒழிந்த காரணங்கள் தன்கண் நிகழ்ந்து காரியமாம் தன்மை இழைத்ததற்கு இன்றாம் ஆகலானும் என்பது.

(தொ. சொ. 72 நச். உரை)

எல் -

{Entry: D04__109}

எல் என்பது இலங்குதல் என்று பொருள்படும் சொல். இஃது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இதனை இடைச் சொல்லாகவே ஓதியுள்ளார். ‘எல் வளை’ எனவரும். (தொ. சொ. 269 சேனா. உரை) (தொ. சொ. 271 நச். உரை)

எல் என்பது உரிச்சொல் அன்று. உரிச்சொல் குறைச்சொல் லாகியே நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று. (தொ. சொ. 266 தெய். உரை)

பண்புகுறியாது தொழிற்குறிப்பு உணர்த்தி நிற்றலின் இடைச் சொல் ஆயிற்று. (சொ. 270 பால)

‘எல்லும் விளக்கம் எனல்’ : எல்வளை என்பது விளக்கம்.

(நேமி. உரி. 5)

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தமை -

{Entry: D04__110}

எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளும் குறித்து நிற்கும். இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல. உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் நாம் அறிகுறியிட்டு ஆண்டதுணையல்லது, இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை யுணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இல்லை என்பது. (தொ. சொ. 151 தெய். உரை)

எல்லாச் சொல்லையும் வினைமுற்று, பெயர் இவற்றில் அடக்கல் -

{Entry: D04__111}

மூவிடங்களில் ஒன்றற்குரிய வினைமுற்றும் பெயரும் தம்மை யும் பொருளையும் உணர்த்துமாறு இவ்வாறு எனவே, இவ் விடங்கட்குப் பொதுவாகிய வினைமுற்றுக்களும் பெயர்- களும் பொதுமை நீங்கி ஓரிடத்திற்கு உரிமையாகி இவ்வாறு தம்மையும் பொருளையும் உணர்த்தும் என்பதும், பெயரெச்ச மும் வினையெச்சமும் வினைத்தொகையும் பண்புத்தொகை யும் குறைந்த சொல்லாதலின் பயனிலையாகிய வருமொழி யுடன் புணர்ந்து பொருள் முற்றி இம்மூவிட வினைமுற்றுள் ளும் பெயருள்ளும் அடங்குதலின் இவ்வாறு தம்மையும் பொருளையும் உணர்த்தும் என்பதும், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர்வினையுள் அடங்குதலின் அவ்வாறு தம்மையும் பொருளையும் உணர்த்தும் என்பதும், இவ்வாறே எல்லாச் சொல்லையும் வினைமுற்றுள்ளும் பெயருள்ளும் அடக்கினார். (நன். 265 சங்.)

எல்லா : தோழி முன்னிலைப் பெயர் -

{Entry: D04__112}

எல்லா என்பது தோழி முன்னிலைப் பெயரன்றோ? விளியே லாது என விலக்கப்பட்ட அம்முன்னிலைப் பெயரை ஈண்டுக் காட்டியது என்னையெனின், ‘முன்னிலை எல்லீர் நியிர் நீவிர் நீர் நீ; அல்லன படர்க்கை’ (285) என வரை யறுக்கப்பட்டமை யின், தோழன் என்னும் பொருட்டாகிய ஏடன் என்னும் படர்க்கைப் பெயர் விளியேற்றமையின் ஏடா என்பது தோழன் முன்னிலைப் பெயர் என்றும், தோழி என்னும் பொருளவாகிய எல்லாள் ஏடி என்னும் படர்க்கைப் பெயர்கள் விளியேற்றமை யின் ‘எல்லாவும் ஏடீயும் தோழி முன்னிலைப் பெயர்’ என்றும் கூறப்பட்டனவன்றி, அவை இயல்பாய் நின்ற முன்னிலைப் பெயர் அல்ல என்க. (நன். 308 சிவஞா.)

எல்லாம் -

{Entry: D04__113}

எல்லாம் என்னும் சொல் இருதிணைக்கண்ணும் பன்மை குறித்து வரும். அஃது உயர்திணைக்கு ஆங்கால் தன்மைப் பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது. (தொ. சொ. 184 இள. உரை)

எல்லாம் என்பது இருதிணைப் பொதுப்பெயர்களுள் ஒன்று. இது பன்மை குறித்து வருவது. ‘மேனியெல்லாம் பசலை யாயிற்று’ என்றாற்போல ஒருபொருளின் பலவிடங்களையும் இது குறித்து நிற்பது. இதனை எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல் என்பாருமுளர். (தொ. சொ. 186 சேனா. உரை)

எல்லாம் என்னும் சொல் உயர்திணைக்கண் வருங்கால் தன்மைப் பன்மைக்கல்லது பெரும்பான்மை வாராது; சிறு பான்மை முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் வரும்.

எ-டு : ‘கண்டவிர் எல்லா ம் கதுமென வந்தாங்கே’ (கலி. 140)
‘ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்னாணை

(சிலப். 8 இறுதி.)

என முன்னிலைக்கண்ணும், ‘நெ றிதாழ் இருங்கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்’ (கலி. 97) எனப் படர்க்கைக்கண்ணும் வந்தது.

(தொ. சொ. 189 நச். உரை)

எல்லாம் என்பது தன்மைப் பன்மைக்கே வரும். (உயர் திணைக்கே உரித்தாக முன்னிலைக்கண் எல்லீரும் எனவும், படர்க்கைக்கண் எல்லாரும் எனவும் வருதலின், எல்லாம் என்பது தன்மைப் பன்மைக்கே உரியது என்பதாம்.) (தொ. சொ. 190 கல். உரை)

எல்லாம் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மை யிடத்தைக் குறிக்கும். எ-டு : எல்லாம் வந்தேம், (வந்தீர், வந்தார்;) எல்லாம் வந்தன.

இஃது உயர்திணைக்கண் தன்மைப் பன்மையிலேயே பெரும் பான்மையும் வரும். ‘மேனியெல்லாம் பசலையாயிற்று’ என்றவிடத்து எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல் என்ப. (தொ. சொ. 188 நச். உரை)

‘எல்லாம்’ உயர்திணைக்கண் வருதல் -

{Entry: D04__114}

எல்லாம் என்பது உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைக்கண்அல்லது, முன்னிலையிலோ படர்க்கையிலோ வழாநிலையாக வாராது; வரின், எல்லீரும் எல்லாரும் என்பன வற்றின் மரூஉமுடிபாகக் கொள்ளப்படும்.

உயர்திணைக்கண் படர்க்கையில் எல்லாரும் என்பதும், முன்னிலைக்கண் எல்லீரும் என்பதும் வருதல் போலத் தன்மைக்கண் எல்லாம் என்பதே வருதலானும், உயர்திணைக் கண் உருபேற்கும்போது தன்மைக்குரிய நம்முச் சாரியையே பெறுதலானும், எல்லாம் என்பது தொல்காப்பியனார் காலத்தே உயர்திணைப் பன்மைக்கே உரியதாக இருந்த பெயராம். (தொ. சொ. 182 தெய். உரை)

எல்லாவற்றினும் சொல்லிலக்கணமே சிறந்தமை -

{Entry: D04__115}

இஃது இலக்கணக்கொத்துடையார் பாயிரத்துள் கூறும் செய்தி. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனையும் விளக்கும் நூல்களுக்கும் கருவியாவன எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்பனவே. அவற்றுள்ளும் எழுத்துப் பொருள் யாப்பு அணி என்னும் நான்கற்கும் கருவியாவது சொல்லே. அச்சொல்லிற்கும் கருவி சொல்லே. ஆதலின் சொல்லிலக்கணமே யாவற்றினும் சிறப்புடையது. (இ.கொ. 7)

‘எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையல்’ -

{Entry: D04__116}

முற்றுச்சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் மூன்று காலமும் மூன்றிடமும் உடையவாய், வினையும் வினைக்குறிப்பும் பற்றி வரும்.

எ-டு : வந்து போனான், வந்த சாத்தன்; வாராநின்று போவான், வாராநின்ற சாத்தன்; உண்ணிய வரும், உண்ணும் சாத்தன். இவ்வாறே தன்மையொடும் முன்னிலையொடும் ஒட்டுக.)

(தொ. சொ. 423 இள. உரை)

தொழிலும் காலமும் இடமும் பாலும் உணர்த்தும் வினைச் சொற்களன்றி, மூவிடத்தும் பொதுவாய் வரும் வினைச் சொற்களாகிய வியங்கோள் - இன்மை செப்பல் - வேறு -என்பனவும், செய்ம்மன - பெயரெச்சம் அல்லாத செய்யும் என் முற்று - என்பனவும் முற்றாம் நிலைமை பெறும். (தொ. சொ. 244 தெய். உரை)

எ-டு : அவன்வாழ்க, மழை இன்று, செயல் வேறு, சொற்கள் இசைக்குமன, அவன் உண்ணும் - என முறையே காண்க.

எவ்வயின் வினையும் முற்றாய் நிலைபெறுதல் -

{Entry: D04__117}

(முற்றுச் சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் மூன்று காலமும் மூன்றிடமும் உடையனவாய் வினையும் வினைக்குறிப்பும் பற்றி வரும். (தொ. சொ. 423 இள. உரை)

மூன்றிடத்தான் பொருள்தோறும் வினையும் குறிப்பும் என இவ்விரண்டாகும் என்று சொல்லப்பட்ட வரையறையுள் அடங்காது வேறு வரும் வினைகளும் முற்றியல்பாம். யார் எவன் இல்லை (இல்) வேறு - என்பன மூன்றிடங்கட்கும் பொதுவாவன. யார் - எவன் - என்பன பாலும், இல்லை - வேறு - என்பன திணையும் பாலும் உணர்த்தாத பொதுமுற்றுக்களாம்.

தெரிநிலைவினைக்கே உரிய விகுதிபெறும் முற்றுக்களும் உள. தெரிநிலைவினை விகுதிகள் கு டு து று அல் கும் டும் தும் றும் ப மார் - என்பன. குறிப்புவினை விகுதி டு. இவற்றை யுடைய வினைகளும் முற்றுக்களுள் அடங்கிவிடும்.

முற்றுச்சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்தும் என்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தல் கூடாது, அவை இடவேறுபாடு உணர்த் தாது மூவிடத்துக்கும் பொதுவாய் நிற்றலின். எல்லாப் பகுதி களைக் கொண்டும் முற்றுச்சொல்லை யுண்டாக்கலாம்.

எ-டு : கச்சினன், கழலினன். (ஆயின் இப்பகுதியைக் கொண்டு பெயரெச்ச வினையெச்சங்களை உண்டாக்க இயலாது.) (தொ. சொ. 428 சேனா. உரை)

மூன்றிடத்தும் வரும் வினையெச்சமும் பெயரெச்சமும் முற்று இயல்பிலேயே நிற்கும். என்றது, இறப்புப் பற்றி வருவனவும் - இறப்பும் நிகழ்வும் பற்றி வருவனவும் - எதிர்வு பற்றி வருவன வும் - முக்காலமும் பற்றி வருவனவும் - ஆம் என்ற வாறு.

வினையெச்சங்களுள் உகரமும் ஊகாரமும் எனவும் முன்னும் கடையும் இறந்தகாலமும், புகரமும் பின்னும் இறந்தகாலமும் நிகழ்வும், இயரும் இயவும் இன்னும் குகரமும் எதிர்வும், அகரமும் காலும் வழியும் இடமும் முக்காலமும் பற்றி வந்தவாறும், பெயரெச்சங்களுள் உம்ஈறு நிகழ்வும் எதிர்வும் அகர ஈறு இறந்த காலமும் பற்றி வந்தவாறும் - காண்க. (தொ. சொ. 428 நச். உரை)

இவ்வாறு தனித்தனி வினையெச்ச வாய்பாடுகள் காலம் காட்டியவாறு. செய்யும் என்னும் பெயரெச்சம் நிகழ்காலமும் எதிர்காலமும், செய்த என்னும் பெயரெச்சம் இறந்த காலமும் காட்டும்.

எவன் என்னும் பெயர் -

{Entry: D04__118}

படுத்தலோசையான் ‘எவன்’ பெயரும் ஆம். அஃது இக்காலத்து என் என்றும், என்னை என்றும் மருவிற்று. (இ. வி. 235 உரை)

எவன் என்னும் வினாவினைக்குறிப்புமுற்று -

{Entry: D04__119}

எவன் என்னும் வினாப்பொருளைத் தரும் குறிப்பு வினை முற்று அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும். அஃது இக்காலத்து என்னை என்றும் என் என்றும், மருவி வரும். எவன் என்பது பெரும்பாலும் அறியாப் பொருள்வயின் வினாவாகத் தோன்றும்.

எ-டு : இச்சொற்குப் பொருள் எவன்? அவை எவன்? (தொ. சொ. 31, 221, நச். உரை)

எவன் என்னும் வினாவினைக்குறிப்புமுற்று அஃறிணை இருபாற்கும் பொதுவானது. அஃது இக்காலத்து என் எனவும். என்னை எனவும் மருவி வழங்கும். பெயர்க்கும் வினைக் குறிப்பிற்கும் பொதுவாகிய எவன் என்னும் உயர் திணை ஆண்பாற்சொல் அன்று இஃது என்பது தோன்ற, இஃது ‘இழி இருபால்’ என்று விதந்தோதினார். அஃது எவன், அவை எவன் - என வரும். (நன். 350 சங்.)

எழுத்தாற்றல் முதலியன -

{Entry: D04__120}

எழுத்தாற்றல் சொல்லாற்றல் பொருளாற்றல் மொழிப் பொருட் காரணம் என்னும் நான்கு இலக்கணமும் எளிதின் அறிய முடியாதனவாகவும், அரிதின் அறியத்தக்கனவாகவும் உள. “இவற்றை அறிவுக்கு அகப்படுமளவு அறிக”என்பது இலக்கணக் கொத்தின் ஒழிபியல் செய்தி.

1. எழுத்தாற்றல் : அயன் அரி அரன் - என்னுமிடத்து அகர வுயிரானது, ஒற்று உயிர்மெய் முதலியவற்றை யுணர்த்தாது, தான் உயிரே தனக்கு ஒருமாத்திரையே என்றுணர்த்துதலே எழுத்தாற்றல் ஆவது.

எழுத்தாற்றல் கெட்டு நிற்பது முண்டு.

அ) இக்குளத்தைப் பெருக்கு - குற்றியலுகர விதிப்படி (தொ.எ. 152 நச்.) பெருக்கு என்பதில் குகர உயிர்மெய் ஒரு மாத்திரை யாய் நின்றது (முன்னிலைவினை முற்றுகர ஈற்றது); அலகு பெற்றது. (பெருக் கு : நிரை நேர்)

ஆ) இவ்வாற்றுப்பெருக்கு நேற்று வந்தது - இதன்கண் குகரம் குற்றியலுகரமாய் அரைமாத்திரையாய் அலகு பெறுதற்கும் பெறாமைக்கும் பொதுவாய் நின்றது. (வருமொழி முதலில் உயிர்வரின் குற்றுகரம் அவ்வுயிர் ஏறத்தான் இடமாய் நிற்கும்; ஆண்டு அலகு பெறாது) (பெருக்கு : நிரை நேர்)

இ) இவ்வாற்றுப் பெருக்குக் கடல் போன்றது - என்புழிக் குகரம் கால்மாத்திரையாய் அலகு பெறாதாயிற்று (தொ. எ. 37). குற்றியலுகரம் ஆண்டுக் கால்மாத்திரையாய்க் குறுகி ஒற்று ஈற்றதாக நின்றது.

இம்மூன்றிடத்தும் குகர உயிர்மெய்யானது ஆற்றல் கெட்டது.

2. சொல்லாற்றல்: விரல் என்னும் சொல், தனக்கு முதலாகிய கையையும் சினையாகிய நகத்தையும் உணர்த்தாது தான் அங்குலமே (விரலே) என்று பொருளுணர்த்தலே சொல் லாற்றல் என்பது. நகம் என்பது ஆற்றல் கெட்டு ஒருகால் மலையையும் ஒருகால் உகிரையும் உணர்த்தும், பலபொருள் பயத்தல் காரணத்தால். (இவ்வாறு ஒருசொல் பலபொருள் படுமிடத்துச் சொல்லாற்றல் கெட்டது என்பதாம்.)

3) பொருளாற்றல் : சிலை வளைத்து வென்றான் - என்பதன் கண் சிலை என்பது வில்லையும், சிலையால் ஆலயம் செய்தான் - என்பதன்கண், அச்சொல்லே கல்லையும் உணர்த் தல் பொருளாற்றலாம். இப்பணம் முழுவதும் கொடாதே - என்பதன்கண், சிறிதாயினும் கொடாதே என முற்றும்மைப் பொருளையும், சிறிது வைத்துப் பெரிது கொடு என்றும் பெரிது வைத்துச் சிறிது கொடு என்றும் எச்ச வும்மைப் பொருளையும் உணர்த்துவது பொருள்ஆற்றல் கெட்டது எனப்படும்.

‘சொல்லாற்றல் தனிச்சொல்லிலும் பொருளாற்றல் தொடர் மொழியிலும் கொள்ளப்படும். இவ்வேறுபாடுகள் எடுத்தல் படுத்தல் வேறுபாடுகளால் உணரப்படும்.

4) மொழிப் பொருட்காரணம் : மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ (தொ. சொ. 394 நச்.) என்னும் நூற்பாவால் அறிப்படும். ஒவ்வொரு சொல்லின் தோற்றத்திற்கும் ஒவ் வொரு காரணமுண்டு. மொழி தோன்றிய காலத்தினின்று சொல்லின் பழைய உருவத்தை உள்ளவாறு அறிந்து அதன் தோற்றத்திற்கான காரணம் காணுதல் அத்துணை எளிதன்று என்பது தொல்காப்பியனார் கருத்து. (இ. கொ. 102)

எழுத்திலக்கண விகாரம் -

{Entry: D04__121}

இது பொதுவாகப் புணர்ச்சி விகாரம், புணர்ச்சி இல் விகாரம் - என இரு வகைப்படும்.

1. புணர்ச்சி விகாரம் எழுத்திலக்கணத்தின் எழுந்தது எனவும், யாப்பிலக்கணத்தின் எழுந்தது எனவும் இருவகைப்படும். இவையிரண்டும் பலரானும் பலநூல்களிலும் எழுத்திலக் கணம் யாப்பிலக்கணம் கூறுமிடத்து விளக்கப்பட்டுள்ளன. இவை நாற்கணம் நோக்கியும், வேற்றுமை அல்வழிக் கண்ணும், யாப்புக் காரணமாகவும் வரும்.

2) புணர்ச்சிஇல் விகாரம் அ. தோன்றல், ஆ. திரிதல், இ. கெடுதல், ஈ. நிலைமாறுதல் என நான்காம். இவை யாதொரு காரணமின்றியும் வருவன.

அ) செல் - சென்றீ ; யாது - யாவது : இவை தோன்றல் விகாரம்

ஆ) ‘உயர்திணை மேன ,’ ‘கண்ண கன் பரப்பு’, ‘வாளா ன் வெட்டினான் : இவை லகரம் னகரமாய்த் திரிந்த விகாரம்.

‘கழி யோடு எறிபுனல்’ : குறில் நெடிலாய்த் திரிந்தது.

மாகி - மாசி (மாகம் > மாகி > மாசி) : ககரம் சகரமாய்த் திரிந்தது.

இ) யாவர் - யார், யானை - ஆனை, யாடு - ஆடு : முறையே வகர உயிர்மெய்யும், யகரமெய்களும் கெட்டன.

ஈ) தசை - சதை, வைசாகி - வைகாசி, நாளிகேரம் - நாரிகேளம்: இவை எழுத்து நிலைமாறி வந்தன. (எழுத்துக்கள் ஒன்றனிடத் தில் ஒன்று சென்று தம்முள் வேறின்றி நிலைமாறியுள்ளன.) (இ. கொ. 111-113)

எழுத்து அல்லா ஓசையை உணர்த்தும் சொற்கள் -

{Entry: D04__122}

ஓசை, அரவம், இசை - என்பன எழுத்தல்லா ஓசையை உணர்த்துவன. (தொ. சொ. 1 நச். உரை)

எழுத்து ஆகும் ஓசையை உணர்த்தும் சொற்கள் -

{Entry: D04__123}

கிளவி, மொழி, சொல் - என்பன எழுத்தினான் ஆகிய ஓசை யுணர்த்துவன. (தொ. சொ. 1 நச். உரை)

எழுத்துச் சாரியை ஈறு திரிதல் -

{Entry: D04__124}

காரம் என்ற எழுத்துச்சாரியை காரை என ஈறு திரிந்து வரும். ‘னகாரை முன்னர்’ (தொ. எ. 52 நச்.) எனக் காரச்சாரியை ஈறு திரிந்து நின்றது. (தொ. சொ. 253 நச். உரை)

எழுத்து : சொல்லாகுபெயரன்மை -

{Entry: D04__125}

எழுத்து சொல் பொருள் யாப்பு அணி - என ஐந்து அதிகாரங் களுக்கும் வரும் காரிய ஆகுபெயரைச் சொல்லாகுபெயர் என்பாருமுளர். சொல்லாகுபெயர்க்கு அவர் காட்டியவற்றுள் சொல்லினது பெயர் அவற்றிற்கு ஆனதின்மையின் சொல்லாகு பெயர் ஆகா. (நன். 290 சங்.)

எழுத்து, சொல் : வேறுபாடு -

{Entry: D04__126}

தன்னை உணரநின்ற ஓசை எழுத்து எனப்படும். சொல் என்பது எழுத்தினான் ஆக்கப்பட்டுத் திணை அறிவுறுக்கும் ஓசை. எழுத்தோசைதான் இடைநின்று பொருளுணர்த்திய வழிச் சொல் எனப்படும். (தொ. சொ. 1 நச்., 1 கல்., உரை)

எழுத்துத் திரிந்து இசைத்தல் -

{Entry: D04__127}

எழுத்துக்கள் திரிந்து பொருளுணர்த்துதல் உரிச்சொல்லி டத்துக் காணப்படும்.

எ-டு : மாது என்பது மாதர் எனவும், அலமா தெருமா - என்பன அலமரல் தெருமரல் - எனவும், கழி என்பது கழிவு எனவும், வார் போ ஒழுகு - என்பன வார்தல் போகல் ஒழுகல் - எனவும், ஓய் முதலியன ஓய்தல் முதலியனவாகவும், அழுங்கு என்பது அழுங்குதல் எனவும், துவை முதலியன துவைத்தல் முதலியன வாகவும், ஞெமிர் பாய் - என்பன ஞெமிர்தல் பாய்தல் - எனவும், கவர் ‘கவர்வு’ எனவும், நொசி நுழை - என்பன நொசிவு - நுழைவு எனவும் அமர் ‘அமர்தல்’ எனவும் உரிச்சொற்கள் திரிந்து பொருளுணர்த்தின. (தொ. சொ. 395 நச். உரை)

எழுத்துத்திரிபு, சொல்திரிபு, பொருள்திரிபு என்பன -

{Entry: D04__128}

இவை மூன்று திரிபுகளும் பொருந்துவனவே என்பது இ. கொ. ஒழிபியலில் காணும் செய்தி.

1) எழுத்துத்திரிபு : பொன் + குடம் = பொற்குடம் : னகரம் றகரமாகத் திரிந்தது. மாகி - மாசி : ககரம் சகரமாகத் திரிந்தது. தீயேன் - தியேன் : எனக் குறுக்கல்விகாரம். ஆறுமுகம் ‘அறுமுகம்’ என்பதும் அது. இவை எழுத்துத் திரிபு.

2) சொல்திரிபு : உடுத்து - உடீஇ, வெல்க - வென்றீக, எல்லாப் பொருளும் - எப்பொருளும், கழுவாத கால் - கழாஅக் கால், பரிய + அரை = பராரை, மராவத்து - மராத்து, தெரிவான் - தெரிகிற்பான், காண்பான் - காண்கிற்பான் : இவை சொல் திரிபு.

3) பொருள்திரிபு : ‘பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மை’ (கு. 907) என்புழி, ஒழுகுவான் என்னும் முற்றினது பொருள் தன்னிலை திரிந்து பெயரெச்சத்தின்கண்ணே சென்றது. ‘நெஞ்சத்தா ர் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக் கறிந்து’ (கு. 1128) - ஈண்டு ‘அஞ்சுவன்’ என்னும் தன்மை யொருமை முற்றினது பொருள் திரிந்து பன்மை முற்றின்கண் சென்றது. ‘தானும் தேரு ம் பாகனும் வந்தென் நலனுண்டான்’ - இதன்கண் பன்மை முற்றினது பொருள் ஒருமை முற்றில் சென்றது.

இந்நூற்பாவுரையில் திரிபு பற்றிய பிறர் மதங்கள் பலவும் மறுத்துரைக்கப்படுகின்றன. ‘சொல்திரிபேயன்றிப் பொருள் திரிபே இல்லை’; ‘சொல் திரியினும் பொருள் திரியா வினைக் குறை’ (நன். 346), ‘எழுத்துத் திரிபு என்பது சார் பெழுத்தே’; ‘சொல் திரிபாவது கிளி - கிள்ளை என்றும், மயில் - மஞ்ஞை என்றும் திரிதலே’; ‘பொருள் திரிபாவது மாவினது வெண்பூப் பசுங்காய் ஆயிற்று, களாவினது பசுங்காய் கருங் கனி ஆயிற்று என்பன போல்வனவே’ - என்னும் மதங்களே மறுக்கப்படுபவை. (இ. கொ. 125)

எழுத்து : நான்மடியாகுபெயர் ஆதல் -

{Entry: D04__129}

தன் பொருளை விட்டுத் தன்னுடன் தொடர்புடைய பொருளைச் சுட்டும் பெயரே ஆகுபெயர். ஒரு பெயர் முறையே விட்டு விட்டு நான்காவதாக ஒரு பொருளைச் சுட்டுதல் நான்மடியாகு பெயராம். எ-டு : எழுத்து - இது தொழிற்பெயர்; ஒலியை யுணர்த்துதலின் ஆகுபெயர் ஆகிறது. இது முதல்மடி. அடுத்து இதனையும் விட்டு, ஒலியினது இலக்கணம் என்றா வது இருமடி. இதனையும் விடுத்து, அவ்விலக்கணம் கூறும் நூலையுணர்த்துதல் மும்மடி. அதனையும் விடுத்து, இங்ஙனம் கூறிற்று எழுத்து - இங்ஙனம் அறிவித்தது எழுத்து - எனக் கருமகருத்தாப்பொருளையும் கருவிக்கருத்தாப் பொருளை யும் உணர்த்துவது நான்மடியாகுபெயராம். (கூறப் படும் எழுத்துஇலக்கணம் கருமம் ஆகிய செயப்படுபொருள் ஆதலும், எழுத்திலக்கணத்தால் செய்தி அறிவிக்கப்படுதலின் அது கருவியாதலும், எழுத்துக் கூறிற்று - எழுத்து அறிவித்தது - என்புழி முறையே ஆமாறு அறிந்து கொள்க.) (இ. கொ. 86)

எழுத்துப் பிரிந்து இசைத்தல் -

{Entry: D04__130}

எழுத்துக்கள் முதனிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து வேறுவேறு பொருளையுணர்த்தல் வினைச்சொற்கண்ணும் ஒட்டுப்பெயர்க்கண்ணும் காணப்படும்.

எ-டு : உண்டான், வெற்பன். (தொ. சொ. 395 சேனா. உரை)

சொற்களிலுள்ள எழுத்துக்கள் முதனிலையும் இறுதிநிலையு மாகப் பிரிந்து வேறுவேறு பொருளுணர்த்துதல். எழுத்துப் பிரித்திசைத்தல் தாமாகப் பொருளுணர்த்தாத இடைச்சொற் களுக்கு இல்லை. எழுத்துக்கள் பிரிந்திசைத்தன வினைச் சொல்லும் ஒட்டுப் பெயருமாம்.

எ-டு : நம்பி, நங்கை - நம் ஊர்ந்து வரூஉம் இகரமும் ஐகாரமும். செய்யும் செய்து செய்தான் - முதலிய வினைச்சொற்கள் பகுதி விகுதி முதலியனவாகப் பிரிக்கப்படுவன. வெற்பன், பொருப்பன் - முதலிய ஒட்டுப் பெயர்களும் வெற்பு + அன், பொருப்பு + அன் - எனப் பிரிக்கப்படுவன. (தொ. சொ. 395 நச். உரை)

எழுத்துப்பே றளபெடை -

{Entry: D04__131}

‘இசைநூல் அளபெடை’ காண்க.

(தொ. எ. 223, 226, 277, 292 நச். சொல். 127 நச். காண்க)

(பி.வி. 5 உரை காண்க.)

எழுத்தொற்றுமையும் பிற ஒற்றுமைகளும் -

{Entry: D04__132}

முன்னுள்ள நிலை, இன்றுள்ள நிலை, சொல் ஒற்றுமை - என்ற நிலைகளை ஓர்ந்து, முப்பது எழுத்துக்களும் முறையே தம்முள் ஒற்றுமையுடையன எனினும், க ச - ச ய - வ ய - ம ன - ல ள - வ ல - என்பன சிறப்பாக ஒற்றுமையுடைய எழுத்துக் களாம் எனக் கொள்ளப்படும். இவையே அன்றி வேறுபல ஒற்றுமைகளையும் கொள்ளல் வேண்டும்.

அறுமுகம் - ஆறுமுகம் : உயிரில் அ, ஆ ஒற்றுமை

மீற்கண் - மீன்கண் : மெய்யில் ற, ன ஒற்றுமை

பிக்கை - பிச்சை : மெய்யில் க, ச ஒற்றுமை

பங்கசம் - பங்கயம் : மெய்யில் ச, ய ஒற்றுமை

கோவில் - கோயில் : மெய்யில் வ, ய ஒற்றுமை

கலம் - கலன் : மெய்யில் ம, ன ஒற்றுமை

அலமரு - அளமரு : மெய்யில் ல, ள ஒற்றுமை

வில்வம் - வில்லம் : மெய்யில் வ, ல ஒற்றுமை

‘பல’ எனறதனால் கொண்டவை -

இயம்பினார் - விளம்பினார் : பகுதியில் பொருள் ஒற்றுமை உண்டனன் - உண்டான் : சாரியை வந்ததும் வாராததும் ஒற்றுமை

உண்ணாநின்றான் - : ஆநின்று, கின்று ஒற்றுமை

உண்கின்றான்

ஒன்றனை - ஒன்றினை : அன் இன் சாரியை ஒற்றுமை

முட்டீது - முஃடீது : டகர ஆய்தம் புணர்ச்சி ஒற்றுமை

கற்றீது - கஃறீது : றகர ஆய்தம் புணர்ச்சி ஒற்றுமை

பொற்பணி - ஆடகப்பணி : பொன், ஆடகம் - பெயர் ஒற்றுமை

தொட்டான் - தீண்டினான் : தொடு, தீண்டு - வினை ஒற்றுமை

அதுவோ - அதுகொல் : ஓ, கொல் - இடைச்சொல் ஒற்றுமை

சிவன் நஞ்சு தின்றான்
அரன் விடம் உண்டான் : தொடர் ஒற்றுமை(இ. கொ. 103)

(இது பிரயோக விவேகத்தில் சரூப சிலிட்டம் என விளக்கப் படும் 40 உரை)

எழுவகைப் பொருள்கோள் -

{Entry: D04__133}

நேமிநாத உரை கூறும் ஒன்பதுவகைப் பொருள்கோளுள், ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் தவிர்த்த ஏனைய ஏழும் இலக்கணக்கொத்துக் குறிப்பிடும் எழுவகைப் பொருள் கோளாம். அவையாவன அடிமொழிமாற்று, சுண்ண மொழி மாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறி பாப்பு, கொண்டுகூட்டு - என்பனவாம். ‘பொருத்தமில் புணர்ச்சி’ காண்க. (இ. கொ. 108)

எழுவகை வழுக்கள் -

{Entry: D04__134}

திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, விடைவழு, வினாவழு, மரபு வழு - என்பன எழுவகை வழுக்களாம்.

எ-டு : அவள் வந்தது - திணைவழு ; அவன் வந்தாள் - பால்வழு; யான் வந்தான் - இடவழு ; நாளை வந்தான் - காலவழு; ஒரு விரலைக் காட்டி ‘நெடிதோ குறிதோ’ என்பது வினாவழு. ‘கடம்பூர்க்கு வழி யாது?’ என்ற வனுக்கு ‘இடம்பூணி என் ஆவின் கன்று’ என்பது விடைவழு. யாட்டுப்பாகன், யானை இடையன் முதலியன மரபுவழு. (தொ. சொ. 11 சேனா. நச். உரை)

எழுவாய் -

{Entry: D04__135}

இச்சொல் முதல் என்னும் பொருளுடையது. முதல் வேற்றுமை வினைமுதற் பொருளதாக வருதலின், எழுவாய் என்பது வினைமுதற் பொருளைக் குறிக்கவும் பயன்பட்டது. (தொ. சொ. 65 சேனா.)

எழுவாய் ஆறுருபும் ஏற்கும் என்றல் பொருந்தாமை -

{Entry: D04__136}

எழுவாயுருபு இரண்டாவது முதலிய ஏழுருபினையும் ஏற்றது என்றால் என்னையெனின், ஆறனுருபு அவ்வுருபுகளை ஏற்றவழித் தன் இருகிழமைப் பொருளும் தோன்ற நின்றாற் போலச் சாத்தனை - சாத்தனால் - என வருவழி ஐ முதலிய உருபின் பொருளேயன்றி எழுவாயுருபின் பொருளின்மை யால், எழுவாயுருபு ஆகாமல் தன்னிலையில் நின்ற பெயரே எட்டுருபும் ஏற்றது என்க. (நன். 293 சங்.)

எழுவாய் உருபு -

{Entry: D04__137}

எழுவாய் வேற்றுமையின் உருபு பற்றி இலக்கணக்கொத்து எட்டுக் கருத்துக்களைக் கூறுகிறது. அவற்றுள் முதல் ஐந்தும் பலர்க்கும் ஒப்ப முடிந்தவை ; பின் மூன்றும் இந்நூலுள் விளக்கிக் கூறப்படுகின்றன.

1. எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை.

2. பெயர்ச்சொல்லே எழுவாய்; திரிபில்லாத பெயரே அது.

3. பயனிலை கொள்ளும் தன்மையே எழுவாய்.

4. பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே எழுவாய்.

5. வினைமுதல் (கருத்தா) ஆதலே எழுவாய்.

6. திரிந்து நிற்கும் பெயரே எழுவாய்; விகாரப்பட்ட பெயரே அது. தன் தம் நம் என் எம் நின் நும் - என்னும் திரிபில்லாத பெயர்கள் தன் மைந்தனை என உருபேற்ற பெயரினையும், தன் மைந்தன் - என உருபின்றி வருமொழியினையும் ஏற்று நிற்கும். எழுவாயாகுமிடத்து அவை தான் தாம் நாம் யான் யாம் நீ நீயிர் - எனத் திரிந்து வரும். இத்திரிபே எழுவாய் வேற்றுமை.

7. பெயருக்குப்பின் சேரும் விகுதிகளே எழுவாயுருபுகள். இறைவன் கடியன், இறைவன் காக்கும், தையலாள் வரும், கோன் வந்தான், கோக்கள் வந்தனர், மரமது வளர்ந்தது, மரங்கள் வளர்ந்தன - என்று விகுதிகள் (அன் ஆள் ன் கள் அது) பெயர்க்குப் பின் வருவதே எழுவாய்வேற்றுமை யுருபு.

8. ஆயவன் ஆனவன் ஆவான் ஆகின்றவன் - என்னும் சொற்கள் ஐம்பாலினும் இருபதாக வருவன அவ்வப் பெயர்க்குப் பின் சேர்தலே எழுவாயுருபு.

இவையெட்டும் எழுவாயுருபு பற்றிய கருத்துக்களாம். (இ. கொ. 25)

எழுவாய் உருபு வரும் இடம் -

{Entry: D04__138}

எழுவாயுருபு கருவி - நிலம் - செயல் - காலம் - செயப்படு பொருள் இவற்றிலும், வினைச்சொல் - இடைச்சொல் - உரிச்சொல் - இவற்றிலும் வரும்.

எ-டு : கண்காணும், செவி கேட்கும் - கருவி; செய் விளைந்தது, ஊர் நகைத்தது - நிலம்; கொல்லாமை நன்று, கொலை செயல் தீது - செயல்; பகல் நீங்கிற்று, இரவு வந்தது - காலம்; திண்ணை மெழுகிற்று, சோறு சமைத்தது - செயப்படுபொருள்; ‘எல்லார்க்கு ம் நன்றாம் பணிதல்’ (கு. 125), சொற்கோட்டம் இல்லது செப்பம் (கு. 119) - வினை; ‘உம் புல்லும்’ (நன். 246) குவ்வின் அவ்வரும்’ (நன். 247) - இடைச்சொல்; ‘ மற்றுஎ ன் கிளவி வினைமாற் றசைநிலை’ (தொ. சொ. 264 நச்.) - இடைச்சொல்; ‘சால உறு தவ நனி கூர் கழி மிகல்’ (நன். 388), ‘மன்ற என் கிளவி தேற்றம் செய்யும்’ (தொ. சொ.267நச்.), ‘கூர்ப்பும் கழி வும் உள்ளது சிறக்கும்’ (தொ. சொ. 314) - உரிச்சொல்). ‘மன்ற’ என்பது இடைச்சொல் என்பாரு முளர். (நன். 295 இராமா.)

எழுவாய் ஏனைய உருபுகளையும் ஏற்றல் -

{Entry: D04__139}

எழுவாயுருபு ஐ முதலிய ஆறு உருபுகளையும் கொண்டு நிற்கும். எனவே, விளியுருபு பெயரது விகாரமேயாதலால் அஃது எழுவாயுருபின் வேறன்று என்பது பற்றி அதனை நீக்கி ‘ஆறுருபும் ஏற்கும்’ என்றார். (நன். 293 இராமா.)

‘ஆற னுருபும் ஏற்கும்அவ் வுருபே’ என்னும் சூத்திரத்திற்கு
ஆறாம் வேற்றுமையுருபும் அவ்வுருபுகளை ஏற்கும் எனப் பொருள் கொண்டு, சாத்தனது - சாத்தனதை - சாத்தனதால் - சாத்தனதற்கு - சாத்தனதனின் - சாத்தனதனது - சாத்த னதன்கண் - சாத்தனதே - என உதாரணம் காட்டுவாருமுளர். உருபேற்றல் பெயர்க்கேயுரிய இலக்கணமன்றி ஏனை வினை முதலியவற்றிற்குரிய இலக்கணம் அன்றாம் ஆதலானும்,
‘பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே’ (241) என்றும், ‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ (291) என்றும் வரையறை கூறிப் போந்தமையானும், ஈண்டு இடைச்சொல் உருபேற்குமெனின் மாறுகொளக் கூறலாம் ஆதலானும், சாத்தனதை - சாத்தனதால் - என்புழிச் சாத்தனது என்பது குழையது கோட்டது என்றாற் போலத் துவ்விகுதியும் அகரச்சாரியையும் பெற்று உருபு ஏற்று நின்ற வினைக்குறிப்புப் பெயராம் ஆதலானும், அன்றியும் உருபேற்புழிப் பெயர் போலத் தனித்து நின்று உருபேற்றல் வேண்டும் ஆதலானும், அதனை அதனால் என உருபேற்கு மெனின், சுட்டுப்பெயர் உருபேற்றதாமன்றி உருபு உருபேற்ற தன்றாம் ஆதலானும் அது பொருந்தாது என்க. (நன். 293 சிவஞா.)

எழுவாய், செயப்படுபொருள் (கருத்தா, கருமம்) ஆகியவற்றின் பகுப்பு -

{Entry: D04__140}

அபிகிதகருத்தா என்னும் தெரிநிலைஎழுவாய் முதல் வேற்றுமையில் மாத்திரமே வரும்; மயங்கி வாராது.

அபிகிதகருமம் என்னும் தெரிநிலைச்செயப்படுபொருள் முதல்வேற்றுமையில் மாத்திரமே வரும்; மயங்கி வாராது.

இனி அநபிகித கருத்தா என்னும் தெரியாநிலை எழுவாய் மூன்றாம் வேற்றுமையுடனும் ஆறாம் வேற்றுமையுடனும் மயங்கும். அநபிகித கருமம் என்னும் தெரியாநிலைச் செயப்படுபொருள் இரண்டு மூன்று நான்கு ஆறு என்னும் நான்குடனும் மயங்கும்.

எ-டு : திண்ணை மெழுகிற்று, தேவதத்தன் சோற்றை அட்டான் - அபிகித கருத்தா முதல்வேற்றுமையில் வந்தது.

சோறு தேவதத்தனால் அடப்பட்டது - அபிகித கருமம் முதல்வேற்றுமையில் வந்தது.

அவரால் செய்யத்தகும் அக்காரியம், அவர்க்குச் செய்யத்தகும் அக்காரியம் - அநபிகித கருத்தா; மூன்றாம் ஆறாம் (ஈண்டுக் குகரம் ஆறன் உருபு) வேற்றுமைகளொடு மயங்கிற்று என்பது இவ்வாசி ரியர் கருத்து.

நூலை அறிந்தான், மரத்தைக் குறைத்தான் - அநபிகித கருமம் இரண்டாவதனொடு வந்தது. பாலை ஓமம் செய்தான், பாலால் ஓமம் செய்தான்; ‘ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன்’ (கோவை. 27); அவளைக் கொள்ளும் இவ்வணிகலம், அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம்; நூலைக் குற்றம் கூறினான், நூலது குற்றம் கூறினான். இவற்றுள் அநபிகித கருமம் மூன்று நான்கு ஆறு என்னும் வேற்றுமைகளுடனும் மயங்கிற்று. (பி. வி. 14)

எழுவாய்த்தொடரும் விளித்தொடரும் -

{Entry: D04__141}

இவ்விருதொடரும் எழுத்ததிகாரத்தில் அல்வழிக்கண்ணே முடிக்கப்பட்டன. அவற்றை வேற்றுமைத்தொடர் என்றது, அவை வேற்றுமை என்று குறி பெறுதலானும், எழுவாய் வேற்றுமை கிளவியாக்கத்தொடு மணந்துகிடப்ப வைத்தத னானும், விளிவேற்றுமை எழுவாய்வேற்றுமையது திரிபாத லானும் என்க. (தொ. சொ. 1 தெய். உரை)

எழுவாய் மறைந்திருத்தல் -

{Entry: D04__142}

பொதுவாக எழுவாய்வேற்றுமைப் பெயராம் வினைமுதல் வெளிப்படையாக நிற்பதே செவ்விது. ஆயின் சிலவிடத்தே மறைந்திருப்பினும் குறிப்பான் பெறப்படுமாயின் அதுவும் ஏற்புடைத்தே.

எ-டு : ‘கருவூர்க்குச் செல்வாயோ?’ என்றவழிச் ‘செல்வல்’ எனவும், ‘யான் யாது செய்வல்?’ என்றவழி ‘இது செய்’ எனவும், ‘அவன் யார்?’ என்றவழிப் ‘படைத் தலைவன்’ எனவும் செப்பியவழி, யான் - நீ - அவன் - என்றும் எழுவாய் வெளிப்படாது நின்றவழியும் வெளிப்பட்டாற் போலவே பொருள் தரும்.

(தொ. சொ. 68 சேனா. உரை.)

எழுவாய், விளி : இவற்றிடை வேற்றுமை -

{Entry: D04__143}

ஈறு திரியாது உருபேற்றல் எழுவாய்வேற்றுமையது இலக் கணம். எ-டு : சாத்தன் + ஐ = சாத்தனை. ஈறு திரிந்து உருபேற் றல் விளியேற்றுமையது இலக்கணம். எ-டு : அரசன் - அரச.

(தொ. சொ. 66 இள. உரை)

எழுவாய்வேற்றுமை -

{Entry: D04__144}

இது முதல்வேற்றுமை எனவும்படும்; ஒரு தொடரின் எழுவாய்ப் பொருளைக் குறிப்பிடும் வேற்றுமையாதலின் இப்பெயர் பெற்றது. அது பெயர்ப்பொருள் அறுவகைப்பட்ட பயனிலை யும் தன்கண் தோன்ற நிற்கும் நிலையாம். அஃது உரு பும் விளியும் ஏலாது நிற்கும் நிலையதாயிற்று. எ-டு : மக்கள்,ஆ.

(தொ. சொ. 66 நச். உரை)

பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது, உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொடராது நிற்கும் நிலைமையாம். ஆகவே, உருபும் விளியும் ஏற்றும் பிறிதொன்றனொடு தொடராகவும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை ஆகாது.

எ-டு : ஆ, அவன் - எனவரும். (தொ. சொ. 65 சேனா. உரை)

உருபும் விளியும் ஏலாது முடிக்கும் சொல்லும் நோக்காது ஆ என்றாற் போலத் தன்னிலையில் நிற்கும் திரிபில்லாத பெயரே எழுவாய் வேற்றுமையாம். (நன். 295 சிவஞா.)

எழுவாய்வேற்றுமை ‘திரிபில் பெயர்’ என்றமையான், ஐ முதலாக விளி ஈறாகக் கிடந்த ஏழுருபும் ஏற்குமிடத்துத் திரியும் சொல் எழுவாய்வேற்றுமையில் திரிபு இல்லன என்பதும், ‘பெயரே’ என்றமையால் இதற்கென வேறுருபு இன்று என்பதும் பெறப்படும். வினையும் வினைக்குறிப்புமாகிய எல்லா வினைவிகற்பங்களையும் பெயரையும் வினாவையும் கொள்ளுதல் அதன் பயனிலையாம்.

வருமாறு : சாத்தன் வந்தான், வந்த, வந்து, வாழ்க, இல்லை, இல்லா, இன்றி - வினை கொண்டது.

சாத்தன் அவன் - பெயர் கொண்டது.

சாத்தன் யாவன், யார் - வினாப்பெயரும் வினா வினைக்குறிப் பும் கொண்டது. (நன். 295 சங்.)

எழுவாய்வேற்றுமைக்குப் பயனிலைகள் -

{Entry: D04__145}

பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல், வினைநிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல், பண்புகொள வருதல், பெயர் கொள வருதல் - என்னும் ஆறும் எழுவாய்வேற்றுமையின் பயனிலைகளாம்.

எ-டு : ஆ உண்டு - பொருண்மை சுட்டல்; ஆ செல்க - வியங் கொள வருதல்; ஆ கிடந்தது - வினைநிலை உரைத் தல்; ஆ எவன் - வினாவிற்கு ஏற்றல்; ஆ கரிது - பண்பு கொள வருதல்; ஆ பல - பெயர் கொள வருதல்

ஆ உண்டு என்பது, ஆ என்னும் பொருள் கெட்டதேனும் அவ்வாவினது சாதித்தன்மை கெடாது நிற்கும் என்பதனை உணர்த்திற்று. வினைநிலை உரைத்தல் என்பது தன்தொழில். வியங்கொள வருதல் என்பது, மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவன் ஏவப்படுதல்.

வினைநிலை யுரைத்தலும், பண்புகொள வருதலும், பெயர் கொள வருதலும் முடிக்கும் சொல் ஆதலே யன்றி முடிக்கப் படும் சொல் ஆதலும் உடைய.

வருமாறு : கிடந்தது ஆ; கரிது ஆ; பல ஆ.

வியங்கோளும் வினாவும் முடிக்கும் சொல்லாயல்லது நில்லா; வினைக்குறிப்பும் முடிக்கும் சொல்லாயல்லது வாராது. செல்க ஆ, எவன் ஆ, அன்று ஆ - என்றல் பொருந்தாது.

(தொ. சொ. 66 சேனா. உரை)

எழுவாய்வேற்றுமை முதல்வேற்றுமை யாகிய காரணம் -

{Entry: D04__146}

சாத்தன் குடத்தைக் கையான் வனைந்து கொற்றற்குக் கொடுத் தான் - என வினைமுதல் நின்று ஏனையவற்றை நிகழ்த்துதல் வேண்டுதலின், அவ்வினைமுதல் ஆகிய எழுவாயை முற் கூறினார். (தொ. சொ. 66 நச். உரை)

எழுவாய்வேற்றுமையின் முடிபு -

{Entry: D04__147}

1. பொருண்மை சுட்டல் : முடிக்கும் சொல் எழுவாயாகிய பொருள்தன்னையே சுட்டி, அதன்தொழில் முதலாயின சுட்டாது நிற்கும் நிலை. எ-டு : சாத்தன் உளன்.

2. வியங்கொள வருதல் : தொழிலைப் பெயர்ப்பொருண்மை கொள்ளுமாறு வரும் ஏவற்சொல். எ-டு : சாத்தன் செல்க.

3. வினைநிலை உரைத்தல் : ஒரு பொருளின் தொழில் நிலையை உணர்த்த வரும் சொல். எ-டு : சாத்தன் சென்றான்.

4. வினாவிற்கு ஏற்றல் : பெயர்ப்பொருண்மையை வினாவு தற்கு ஏற்புடைய சொல். எ-டு : சாத்தன் யாவன்.?

5. பண்புகொள வருதல் : பெயர்ப்பொருண்மை பண்பு கொள்ளுமாறு வருகின்ற சொல். எ-டு : சாத்தன் கரியன்

6. பெயர்கொள வருதல் : பெயர்ப்பொருண்மை யுணரப் பிறிதொரு காரணத்தான் வந்து முற்பெயரோடு ஒட்டுப் படாது நிற்றல். எ-டு : சாத்தன் வாணிகன்.

இவை ஆறும் எழுவாய் வேற்றுமைக்குப் பயனிலையாம். பெயர் வாளா நிற்குமாயின் செப்பின்கண் பயனின்றாம் ஆதலின் அதனை முடிக்கும் சொல் பயனிலை ஆயிற்று. (தொ. சொ. 64 தெய் உரை)

எழுவாய்வேற்றுமை ‘வினை பெயர் வினாக் கொளல்’ -

{Entry: D04__148}

‘வினை பெயர்’ என்று பொதுப்பட வைத்தமையால், வினை முற்று குறிப்புமுற்று பெயரெச்ச வினையெச்சங்களிலும், இருதிணை ஐம்பால் மூவிடத்துப் பெயர்களிலும், இவற்றின் பொதுப்பெயர்களிலும் ஏற்பன எல்லாம் கொள்ளப்படும். (நன். 294 மயிலை.)

எழுவாய் வேறுபொருள் தருதல் -

{Entry: D04__149}

வினைமுதல் (கருத்தா) ஆதலேயன்றி, எழுவாய்வேற்றுமை ‘மாடம் செய்யப்பட்டது’ எனத் தெரிநிலைச் செயப்படு பொருள் என்னும் வேறு பொருளையும் தரும். (செயப்படு பொருள் முதலியவையும் வேறுபொருள் தருதலை ‘உருபுகள் தம் பொருளன்றி வேறுபொருளைத் தருதல்’ என்பதனுள் காண்க. (இ. கொ. 52)

எழுவாயாய் வரும் பெயர் -

{Entry: D04__150}

உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், விரவுப் பெயரும், வினைப்பெயரும், யானைக்கோடு - மதிமுகம் - கொல்யானை - கருங்குதிரை - உவாப்பதினான்கு - பொற் றொடி - என்றாற்போலப் பெயரொடு பெயர் தொக்கனவும், பெயர்த்தன்மை எய்திநின்ற இடைச்சொல்லும் உரிச்சொல் லும் ஆகிய எல்லாப் பெயரும் எழுவாயாக வரும். (இ. வி. 193 உரை)

எழுவாயின் பயனிலை -

{Entry: D04__151}

‘வினை’ எனப் பொதுப்படக் கூறியதனால், வினையும் வினைக் குறிப்பும் முதலிய வினைவிகற்பம் அடங்கலும் கொள்க.

எ-டு : சாத்தன் வந்தான், சாத்தன் கரியன், அவன் வாழ்க, ஆ உண்டு, அவன் உண்டு, அவன் இல்லை, அவள் வேறு - எனவும்.

புலி கடிக்கப்பட்டான், பேய் பிடிக்கப்பட்டான், அவனின்றி அமையாது, அவனன்றிக் கூடாது, சாத்தன் உண்ட சோறு, சாத்தன் பெரிய மனிதன் - எனவும் இவை வினை கொண்டன.

சாத்தன் இவன், பசு ஒன்று, பசு ஆயிரம் - என இவை பெயர் கொண்டன.

அவன் யாவன், ஆ யாது, அஃது எவன் - என இவை வினாக் கொண்டன. (நன். 295 இராமா.)

எழுவாயும் விளியும் அல்வழிப்புணர்ச்சி யாதல் -

{Entry: D04__152}

சொல்லோத்தினுள் வேற்றுமை எனப்படும் எழுவாயும் விளியும் எழுத்ததிகாரத்துள் அல்வழி என்றல் மலைவாம் பிற எனின், சொல்லோத்தினுள் ஐ முதலிய வேற்றுமை போலப் பொருள் வேறுபடுத்தல் ஒப்புமை பற்றி அவற்றோடு உடன் எண்ணப்பட்டு ‘வேற்றுமை’ எனப்படும். எழுத்தோத்தினுள் முற்றுச்சொற்கள் முதலியன போலப் புணர்ச்சிக்கண் செய்கை ஒப்புமை பற்றி அவற்றோடு உடன்எண்ணப்பட்டு ‘அல்வழி’ எனப்படும். ஆகலின் மலைவு ஆகாது என்க. (இ. வி. 54 உரை)

எழுவாயும் வேற்றுமை ஆதல் -

{Entry: D04__153}

பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையும் குறித்து அவற்றான் தான் வேறுபட நிற்றலானும், முடிக்கும் சொல்லை விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமை ஆயிற்று. (தொ. சொ. 63 நச். உரை)

எற்றம் என்னும் உரிச்சொல்

{Entry: D04__154}

எற்றம் என்னும் உரிச்சொல் நினைவும் துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தும். ‘கொடுமை எற்றி’ (குறுந். 145) ‘எற்றமிலாட்டி’ (கலி. 144) எனவரும். (தொ. சொ. 337 நச்.).

எற்று என்னும் இடைச்சொல் -

{Entry: D04__155}

எற்று என்னும் இடைச்சொல் ஒன்றனினின்று ஒன்று போயிற்று - என்னும் பொருண்மையை உணர்த்தும்.

எ-டு : எற்று என் உடம்பின் எழில்நலம்’ - இஃது என் நலம் இறந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘எற்றேற்றம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’ என்பதும் ‘இதுபொழுது துணிவு இல்லாருள் துணிவில்லா தேன் யான்’ என்று ‘துணிவு இறந்தது’ என்பதுபட நின்றது.

(தொ. சொ. 263 சேனா. உரை) (தொ. சொ. 265 நச். உரை)

எறுழ் என்னும் உரிச்சொல் -

{Entry: D04__156}

எறுழ் என்னும் உரிச்சொல் வலிமையாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘போ ர்எறுழ்த் திணிதோள்’ (தொ. சொ. 388 சேனா. உரை)

என்பது : பிரிவில் அசையாமாறு -

{Entry: D04__157}

ஒருவன் ஒன்றுரைப்பக் கேட்டான் தன் விடையாக ‘என்பது என்பது’ என இருமுறை அடுக்கிக் கூறும். அது நன்குரைத்தற் கண்ணும் இழித்தற்கண்ணும் வரும். ‘என்பது’ தனித்து நின்று அசையாகாமையின் ‘பிரிவிலசை’ எனப்பட்டது.

அது புகழ்ச்சியிடத்துப் பயிற்சியுடையது.

(தொ. சொ. 280 சேனா உரை) (தொ. சொ. 276 இள. உரை)

‘என்பது’ தான் சார்ந்த சொற்களின் பொருளைப் பிரிதலின்றி உணர்த்தும் அசைநிலையாம். நடுங்குநோய் தீரநின் குறிவாய்த் தாள் என்பதோ’ (கலி. 127) என்புழி, ‘என்பது’ என்றது ‘என்று சொல்லப்படுவது’ என்னும் பொருள்தந்து நில்லாமல், ‘வாய்த்தாள்’ என்ற சொல் உணர்த்திய செய்ந் நன்றியைத் தானும் உணர்த்தி நின்றது. இது தான் சேர்ந்த சொல்லை அசைத்தே நிற்கும் என்றலின் ‘பிரிவில் அசைநிலை’ என்றார். அசைச்சொற்கு நன்குரைத்தல், இழித்தல் என்ற பொருள்கள் இன்மை அறிக. (தொ. சொ. 282 நச். உரை)

என்மனார் -

{Entry: D04__158}

செய்யுள்முடிபு எய்தியதோர் ஆர்ஈற்று எதிர்கால முற்றுச் சொல். (தொ. சொ. 1 சேனா. உரை)

‘என்ப’ என்பது பகரம் கெட்டு மன்னும் ஆரும் கூடி என்மனார் ஆயிற்று. (இஃது எதிர்காலம் காட்டும்.) (தொ. சொ. 1. கல். உரை) (இறை. அக. 1. உரை)

என்மனார் என்பது ஓர் ஆரீற்று நிகழ்கால முற்று வினைத் திரிசொல். (தொ. 1 நச். உரை)

இஃது எதிர்காலச் சொல்லாயினும் இறந்தகாலம் குறித்து நின்றது. இறப்பும் எதிர்வும் மயங்கப்பெறும் ஆகலின், என்ப என்னும் முற்றுச்சொல் என்மனார் எனத் திரிந்து நின்றது.

முற்றுவினைத்திரிசொல் என்மனார் என்பது, ‘என்ப’ என்பதன் பகரம் குறைத்து மன்னும் ஆரும் கூட்டி ‘என்மனார்’ என்றாயிற்று எனின், ‘குறைக்கும்வழிக் குறைத்தல்’ என்பத னான் பகரத்தைக் குறைத்த பின்னர், மன்னும் ஆரும் விரிக்கும் வழி விரித்தல் என்பதனான் கொள்ளப்பட்ட எனில், குறைக்கும் வழிக் குறைத்த பின்னும் இரண்டு இடைச் சொற்கள் மிகு விக்கப்பட வேண்டுமாயின் குறைத்ததனான் பயனின்மையின் அங்ஙனம் கூறுதல் தவறு. இஃது எதிர்காலச் சொல்லா யினும் இறந்தகாலம் காட்டிற்று. (தொ. சொ. தெய்.உரை)

என + மன் + ஆர் > என் + மன் + ஆர் = என்மனார். என்றார் என்று சொல்லற்பாலதனை என்மனார் என்றார், கால மயக்கத் தான். இறந்தகாலச் சொல்லை எதிர்கால வாய்பாட் டான் கூறியமை காலமயக்கம். (தொ. கல். உரை, .ப. உ)

என்மனார் என்பது மரூஉமுடிபு கொண்டதொரு முற்று வினைச்சொல். அஃது என்னும் + அன்னார் - ஆகிய இரு சொற்களின் மரூஉவாம். செய்யும் என்னும் முற்றுச்சொல் பல்லோர் படர்க்கைக்கண் வாராமையின், ‘என்னும்’ என்பது திரிந்து ‘அன்னார்’ என்பதனொடு புணர்ந்து ஒரு சொல்நீர் மைத்தாக ஆக்கமுற்றது. என்ம் + அனார் = என்மனார். (தொ. சொ. .1 ச. பால.)

என்றா என்னும் இடைச்சொல் -

{Entry: D04__159}

என்றா என்னும் இடைச்சொல் எண்ணுப்பொருளில் தொகை பெற்று வரும். இதனைத் தொல்காப்பியனார் ‘ஆ ஈறாகிய என்று என் கிளவி’ என்பர்.

எ-டு : ‘நிலனென்றா நீரென்றா இரண்டும்.’

(தொ. சொ. 289, 290 சேனா. உரை)

‘ஒப் பும் உருவும் வெறுப்பும் என்றா’ (பொ. 247) எனத் தொகை விகாரத்தான் தொக்கு வருதலுமாம்.

இவ்விடைச்சொல் எண்ணுமிடத்துச் சிறந்து வரும்.

எ-டு : ‘ஒப்பும் உருவும் வெறுப் பும் என்றா’ , ‘நிலனென்றா நீரென்றா இரண்டும்’

என்றா என்னும் எண்ணிடைச்சொல் தொகைபெற்றே வருதல் வேண்டும். செய்யுட்கண் தொகுத்தல் விகாரமாகவும் வரும். (தொ. சொ. 291, 292 நச். உரை)

என்றிசினோர் -

{Entry: D04__160}

என்றார் என்ற இறந்தகால இயற்சொல். செய்யுளுக்காகத் திரித்துக் கொள்ளப்பட்ட இறந்தகால முற்றுவினைத் திரிசொல் இது. எழுத்ததிகாரத்துச் ‘செய்யுட்கு இவ்வாறு முடிக்க’ என்று முடிபு கூறியவற்றை யெல்லாம் செய்யுள் முடிபு என்று கூறலும், வழக்குச் சொல் இவ்வாறு திரிந்து வருவனவற்றை யெல்லாம் வினைத்திரிசொல் என்று கூறலும் நச்சினார்க்கினியர் கருத்தாம். (தொ. சொ. 388)

என்றிசினோர், கண்டிசினோர் - என்பன செய்யுள்முடிபு எய்தி நின்ற இறந்தகால முற்றுச்சொல். (தொ. 1 சேனா. உரை)

என்று என்னும் இடைச்சொல் -

{Entry: D04__161}

என்று என்னும் இடைச்சொல் வினை குறிப்பு இசை பண்பு எண் பெயர் - என்ற அவ்வாறு பொருண்மையும் தான் இடைநின்று கருதிப் பின் வரும் சொல்லோடு இயைவிக்கும் நிலைமை யுடையது.

எ-டு : ‘நரை வரும் என்று எண் ணி’ நாலடி 11, விண்ணென்று விணைத்தது, ஒல்லென்று ஒலித்தது, பச்சென்று பசுத்தது, நிலனென்று நீரென்று (உள), பாரி என்று ஒருவன் உளன்.

(தொ. சொ. 260,261 நச். உரை)

என்று, என - என்னும் இடைச்சொற்கள் -

{Entry: D04__162}

வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு - என்னும் ஆறு பொருளிலும் என்று என - என்னும் இடைச்சொற்கள் வரும்.

எ-டு : கொள்ளெனக் கொண்டான், கொள்ளென்று கொண்டான் - வினை. ‘அழுக்காறு என ஒரு பாவி’ , அழுக்காறு என்று ஒரு பாவி - பெயர். ‘பொள்ளென ஆங்கே புறம் வேரார்’ (கு. 168) பொள்ளென்று ஆங்கே புறம்வேரார் - குறிப்பு. ‘நிலையருங் குட்டத் துத் துடுமெனப் பாய்ந்து’ (புற. 243) துடுமென்று பாய்ந்து’ - இசை. நிலனென நீரெனத் தீயென வளி யென, நிலனென்று..... வளியென்று - எண். வெள்ளென விளர்த்தது, வெள்ளென்று விளர்த்தது- பண்பு. (நன். 424 சங்.)

சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் தமக்கென ஒரு பொரு ளின்றிப் பொருளாதி ஆறனையும் சுட்டியும் வினாவியும் நிற்றல் போல, என்று என - என்னும் இவ்விரண்டு இடைச் சொற்களும் தமக்கென ஒரு பொருளின்றி வினை - பெயர் - குறிப்பு - இசை - எண் - பண்பு - என இங்கே சொல்லப்பட்ட ஆறன் பொருளே தமக்குப் பொருளாக வரும். (நன். சங். 424)

என என் இடைச்சொல்

{Entry: D04__163}

வினை குறிப்பு இசை பண்பு எண் பெயர் - என்னும் ஆறு பொருட்கண்ணும் என என்னும் இடைச்சொல் வரும்.

எ-டு : கார் வரும் எனக் கருதி - வினை; துண்ணெனத் துடித்தது மனம் - குறிப்பு; ஒல்லென ஒலித்தது - இசை; வெள்ளென விளர்த்தது - பண்பு; நிலனென நீரெனத் தீயென வளியென (உள) - எண்; ‘அழுக்காறு என ஒரு பாவி’ (கு. 168) - பெயர். (தொ. சொ. 260 நச். உரை)

எனஎன் ஈற்று வினையெச்சம் -

{Entry: D04__164}

‘வினையெச்சம்’ காண்க.

எனஎன் எச்ச இயல்பு -

{Entry: D04__165}

என என் எச்சம் எழுத்ததிகாரத்துள் உயிர்மயங்கியல் இரண்டாம் நூற்பாவில் இடம்பெற்றுள்ளது. அகர ஈற்றுள் அடங்கும் சில நிலைமொழிச் சொற்கள் வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிவனவற்றுள் என என் எச்சமும் ஒன்று. (உண்டெனப் பசி தீர்ந்தது). என என்னும் இடைச் சொல் வினையெச்சப் பொருண்மை யுணரவும் பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்று கொள்க.

எ-டு : கொள்ளெனக் கொடுத்தான், ‘நாளென ஒன்றுபோல் காட்டி’ (கு. 334) (தொ. சொ. 255 தெய்.உரை)

என என் எச்சம் வினையொடும் முடியும், பெயரொடும் முடியும். முடிதல் - தொடர்தல். அஃதாவது அவற்றைச் சார்ந்து நின்று பொருளுணர்த்தல்.

எ-டு : ‘வீடுணர்ந் தோர்க்கும் விய ப்பாமால் இந்நின்ற,

வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்,

பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேராது,

இரும்புலி சேர்ந்த இடம்’ (பு. வெ . மா. 3 : 19)

‘இரும்புலி சேர்ந்த இடம் என வியப்பாமால்’ என ‘வியப்பாம்’ என்னும் வினையோடு ‘என’ தொடர்ந்தது.

‘பிரிநிலை வினையே........ இசையே ஆயீரைந்தும்’ (சொ. 422) என்புழி, ‘இசையே என ஆயீரைந்தும்’ என ‘என’ என்பது எஞ்சி நின்று ‘ஈரைந்தும்’ எனப் பெயரொடு முடிந்தது.

(தொ. சொ. 431 தெய். உரை)

செய்தென என்னும் வாய்பாட்டு வினையெச்சம் வினை கொண்டு முடியும். வினை குறிப்பு இசை பண்பு எண் பெயர் - என்னும் ஆறனுள், எண் பற்றியும் பெயர் பற்றியும் வரும் ‘என’ வினை கொள்ளாதிருப்ப, ஏனையவை வினைகொண்டு முடியும்.

எ-டு : கார் வருமெனக் கருதி நொந்தாள் - வினை; துண் ணெனத் துடித்தது - குறிப்பு; ஒல்லென ஒலித்தது - இசை; காரெனக் கறுத்தது - பண்பு.

இவையே யன்றி ‘உண்டெனப் பசி கெட்டது’ என, எனவென் எச்சம் வினையெச்ச வாய்பாடாகவும் வரும் (230). இவ்வகை யான் என என் எச்சம் ஏழாயிற்று. (தொ. சொ. 438 நச். உரை)

என என் எச்சம் -

{Entry: D04__166}

கடல் ஒல்லென ஒலித்தது, நரம்பு விண்ணென விசைத்தது, தலை இடியென இடித்தது - என்பன எனவென் எச்சம். இவை தம் எச்சமாகிய வினைகொண்டன. மிகவும் ஒலித்தது, மிகவும் விசைத்தது, மிகவும் இடித்தது - என்பன இவற்றிற்குப் பொருளாம் ஆதலின் இவ் எனவென்எச்சம் மிகுதிப்பொருள் தருவதோர் இடைச்சொல்லாம். (நன். 360 சங்.)

எனவும் என்றும் -

{Entry: D04__167}

இவையிரண்டும் உவமையும் எண்ணும் குணமும் வினையும் பெயரும் இசையும் குறிப்பும் - என ஏழிடத்தும் வரப்பெறும். பூங்கொடி வீழ்ந்தென வீழ்ந்தாள், கொடும்புலி பாய்ந்தெனப் பாய்ந்தான்: ‘என’ வினையோடு இயைந்து வந்த உவமை. ஒரோவிடத்து ‘என்று’ உவமையுருபாக வரும். (தொ. வி. 133 உரை)

எனா என்னும் இடைச்சொல் -

{Entry: D04__168}

எனா என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வரும்; பெரும்பாலும் தொகைபெற்று வரும். செய்யுளுள் தொகை இல்லையேல் அது தொகுத்தல் விகாரமாம்.

எ-டு : நிலன்எனா நீர்எனா இரண்டும். (தொ. சொ. 291, 292 நச். உரை)

எனாவும் என்றாவும்

{Entry: D04__169}

‘வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் இவுளியொடு

கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்

கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு

மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ’ (புறநா. 197)

என்பதனுள் எனவும் என்பது ‘எனா’ என்று வந்து, எண்ணுக் குறித்து நின்றது.

‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா’ (பொருளியல் 53)

என்பதனுள் என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்து நின்றது. (தொ. சொ. 285 தெய். உரை)

ஏ section: 35 entries

ஏஎன் இறுதி கூற்றுவயின் ஓரளபு ஆதல் -

{Entry: D04__170}

சொல்லிறுதிக்கண் நின்று அசையாக இசைக்கும் ஏ என்னும் ஈற்றசை, வழக்கின்கண் ஒருமாத்திரை அளவிற்றாதலும் உரித்தாம்; உம்மையான், ஈரளபு இசைத்தலே பெரும்பான்மை என்றார்.

வரலாறு : முன்னின்றானை நோக்கி ஒருவன் உரையாடுங் கால், கண்டேனே, பார்த்தேனே, உண்டேனே - என்னும். அவ்வழிக் கண்டேனெ, பார்த்தேனெ, உண்டேனெ - என இறுதி ஏகாரம் குன்றியிசைத்தல் வழக்காற்றில் கண்டுகொள்க.

இஃது உரைநடை வழக்கிற்கே எனக் கொள்க.

(தொ. சொ. 287 ச. பால)

‘ஏஏ’ இகழ்ச்சிக்குறிப்பு இடைச்சொல் -

{Entry: D04__171}

‘ஏயே இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக. 652) என்றது, ‘ஏஏ சீசீ யெல்லைந்தும் இகழ்ச்சி’ என்பது நிகண்டு ஆதலால், இசைநிறைத்தலன்றி, இகழ்ச்சிப்பொருள்பட நிற்றல் புதியன புகுதலாம். (நன். 354 இராமா.)

ஏ, ஓ - அளபெடுத்து நீடல் -

{Entry: D04__172}

தெளிவுப் பொருளில் வரும் ஏகாரமும், சிறப்புப் பொருளில் வரும் ஓகாரமும் அளபெடுத்து நீளும்.

எ-டு : அவனேஎ சான்றோன், உண்டேஎ மறுமை - ஏகாரம் தெளிவுப்பொருளில் வந்தது.

‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ (கள.36) - ஓகாரம் சிறப்புப் பொருளில் வந்தது. (தொ. சொ. 261 சேனா. உரை)

ஏ ஓரளபு பெறுதல் -

{Entry: D04__173}

செய்யுளில் ஈற்றில் நின்று இசைக்கும் ஏகார இடைச்சொல் ஓரளபாகக் குறைந்தொலித்தலு முண்டு. மேல்நின்ற செய்யுளுறுப்பொடு பொருந்தக் கூறுதற்கண் இம்மாத்திரைக் குறைவு ஏற்படும்.

எ-டு : ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரெ’ (அக.1) ஏகாரம் ஓரளபு பெற்றது. ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரெ சொல்தாம் மறந்தனர் கொல்லோ? தோழி !’ எனச் செய்யு ளுறுப்பொடு பொருந்தக் கூறுதற்கண் இம்மாத்திரைக் குறைவு காண்க. செய்யுட்கண் ஈற்றசை ஏகாரம் குறையாது நிற்றலே பெரும்பான்மை.

(தொ. சொ. 286 சேனா. உரை)

செய்யுளிறுதிக்கண் நின்று இசைக்கும் ஈற்றசை ஏகாரம் அச்செய்யுளிடத்துப் பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து, தனக்குரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின்னரும் ஒரு மாத்திரை உண்டாய் வருதலுமுடைத்து.

உம்மையான், மூன்று மாத்திரை பெறாது இரண்டு மாத்திரை பெற்று வருதலும் உரித்தாயிற்று. பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து மூன்று மாத்திரை பெறுவது செய்யுளிறுதிக்கண் நிற்கும் ஈற்றசையே.

எ-டு : கடல்போல் தோன்றல காடிறந் தோரேஎ’

இஃது ஈற்றசையாகலின் செய்யுளியலில் கூறும் மாத்திரை என்னும் உறுப்பின்கண் அடங்காது என்று சொல்லதி காரத்தில் கூறப்பட்டது, அது பெரும்பான்மை பொருள்தரும் சொற்கே விதியாகலின்.

செய்யுளிடைக்கண் வரும் ஈற்றசை ஏகாரம்,

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை

வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந். 216)

என இரண்டு மாத்திரையே பெற்று வந்தது.

(தொ. சொ. 288 நச். உரை)

ஏகசேட சமாசம் -

{Entry: D04__174}

துவந்துவ சமாசத்தில், இருமொழி பன்மொழி வகையில் உம்மையால் சேர்ந்து, பின் உம்மை தொக, ஒருமையீறாயும் பன்மை யீறாயும் தொடர்கள் நிற்கும். இதற்கு விலக்காக, இருமொழி பன்மொழிகளில், முன்மொழியான ஒரு பெயரோ பலபெயர்களோ தொகப் பின்மொழிப்பெயர் ஒன்று மாத்திரமே எஞ்சி நிற்கும் தொகை ‘ஏகசேட சமாசம்’ எனப்படும். தமிழில் இது போன்ற தொகைமொழி இல்லை.

உனப்பாட்டுத் தன்மை இத்தகைய ஏகசேடத் தொகையாய் வந்தது என்பர் பி. வி. நூலார்.

அன்னப்பேடும் அன்னச்சேவலும் (ஹம்ஸீச ஹம்ஸஸ்ச) என்ற தொடர், இருமை ஆண்பாலாக இரண்டு அன்னங்கள் (ஹம்ஸெள) என எஞ்சி நிற்கும். தந்தையும் தாயும் (பிதாச மாதாச) என்பது பிதரௌ (தந்தையர்; இருமை) என எஞ்சி நிற்கும். இதுபோல் பிறவுமுள. ஆயின் தமிழில் இவ்விதி இல்லை.

நீயும் யானும் - யாம்; நீயும் அவனும் யானும் - யாம்; இவை ஏகசேடம்

அவனும் நீயும் - நீயிர்; அவளும் நீயும் - நீயிர் இவையும் அது.

சிறப்பும் பெருமையும் தோன்ற, யான் என்பதனை யாம் என்றும், நீ என்பதனை நீயிர் என்றும் கூறுதல் உபசாரவழக்கு.

வடமொழியில் ஆவாம் - நாம் இருவேம், வயம் - யாம் (பன்மை) எனப் பொருள்படும். அகம் ச துவம் ச (நானும் நீயும்) ஆவாம் எனவும், அகம் ச துவம் ச ஸ : ச (நானும் நீயும் அவனும்) வயம் (யாம்) எனவும் ஆம் என்பர். (பி. வி. 23)

ஏக நாளா வலம்பி பலத் துவந்துவம் -

{Entry: D04__175}

ஒரேகாம்பில் தொங்கும் இரண்டு பழங்கள் போல், ஒரே சொல் பொருள் உணர்த்தும் செயலில் இரண்டு பொருள்களை உணர்த்துவது இது. பிரவிருத்தி நிமித்தத்தால் ஒருசொல் இவ்வாறு வேறு பொருளையும் உணர்த்தும். பிரவிருத்தி நிமித்தமாவது சொல்லில் (பொருளுணர்த்துவதில்) ஈடுபடும் காரணம்.

எ-டு : ‘சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட’ (சீவக. 2020)

புண்ணிய நீரையுடைய குமரித்துறையில் நீராட எனவும், அழகிய நீர்மையையுடைய இப்பெண்ணை நுகர எனவும் இருபொருள் காண்க. (பி. வி. 40)

தபு - படுத்துச் சொல்லத் தன்வினை : நீ சா; எடுத்துச் சொல்லப் பிறவினை : சாவப்பண்ணு. (தொ.எ. 76 நச்.)

இந்நயமும் ஈண்டுக் கொள்ளலாம்.

ஏகவற்பாவி -

{Entry: D04__176}

ஒருமைப் பொருளில் வரும் எண்தொகை. இருகண், முச்சுடர் - என்னுமிவை, ஒருமை போல் ஆன ஏகவற்பாவி எண்தொகை. (பஞ்சபாண்டவர், மூவேந்தர் : பன்மையாகவே ஆன அநேக வற்பாவி எண்தொகை.) ஏகவற்பாவியில் பின்மொழி ஒருமை யாக நிற்றலும், அநேகவற்பாவியில் அது பன்மையாக நிற்றலும் காண்க. (பி. வி. 21)

ஏகவற்பாவி, அநேகவற்பாவி - இவை தமிழில் ஒருமொழி - யொப்பு, பன்மொழியொப்பு எனப்படும். (வீ. சோ. 46 உரை)

ஏகவாக்கியமும் பின்னவாக்கியமும் -

{Entry: D04__177}

பல எச்சங்கள் தத்தம் எஞ்சிய சொற்களைக் கொண்டு தொடர்ந்து பொருளுணர்த்தி முற்றுவது ஏகவாக்கியமாம். ஒரே சொற்றொடர் தனித்தனியே முற்றுவது பின்ன வாக்கிய மாம்; பிளவுபடத் தனித்தனியே நிற்பது அது.

இலக்கியத்துள் ஏகவாக்கியம் வரவேண்டுமிடத்து முற்றுக் களை எச்சமாகத் திரித்தே பொருள் கொள்ளுதல் வேண்டும். இன்றேல், பின்ன வாக்கியங்களாக நிற்புழிப் பொருள் பொருத்தமுற அமையாதொழியும். பி. வி. காட்டும் சில இடங்கள் வருமாறு:

‘நறப் பாடலம் புனைவார் நினைவார்’ (கோவை. 205) - இதன்கண் பாடலம் (பாதிரிப்பூவைப்) புனைய நினைவார் - என முற்றுச் செயவென் எச்சமாகப் பொருள் கொள்ளப் பட்டது.

‘கலைத்தொழில் படஎழீஇப் பாடினான் கனிந்து

இலைப்பொழில் குரங்கின ஈன்ற தூண்தளிர்’ (சீவக. 657)

இவ்வடிகளில், பாட - பொழில் குரங்க - தூண்கள் தளிர் ஈன் றன - எனக்கொண்டு பொருளுரைக்கப்பட்டது. (பாடினான் - பாட, குரங்கின - குரங்க)

‘கானவர் இரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடும்

ஆனிரை பெயர்ந்தது; ஆயர் ஆர்த்தனர்; அணிந்த திண்தோள்

தானொன்று முடங்கிற்று; ஒன்று நிமிர்ந்தது; சரம்பெய் மாரி

போனின்ற என்ப, மற்றப் பொருவறு சிலையி னாற்கே’ (சீவக. 452)

இப்பாடலுள், ஆனிரை பெயர, ஆயர் ஆர்ப்ப, ஒன்று முடங்க, ஒன்று நிமிர்ந்தது - என முற்றுக்கள் செயவென் எச்சமாகக் கொள்ளப்பட்டன.

‘செய்யோன் செழும்பொற்சரம் சென்றது;சென்றது ஆவி’ (சீவ. 2322)

இதன்கண், ‘சரம் செல்ல ஆவி சென்றது’ என்று முற்று எச்சப் பெருள்பட்டது. இவை போன்றே தண்டியலங்காரத் துள்ளும், ‘அவிழ்ந்தன தோன்றி’ ‘சோலை பயிலும்’ என்னும் மேற்கோள் பாடல்களிலும் முற்றுக்களை எச்சமாகத் திரித்துப் பொருள் கொள்ளப்படும். (பி. வி. 39)

ஏகாக்கரம் -

{Entry: D04__178}

அ, இ, உ - என்பன மூன்றும் வடமொழியில் ஏகாக்கரம் எனப்படும். இவற்றின் கூட்டத்தால் விளையும் ஏ, ஓ, ஐ, ஓள என்பன நான்கும் சந்தியக்கரம் எனப்படும். அ + இ = ஏ, ஐ என்றும், அ + உ = ஓ, ஒள என்றும் கூட்டெழுத்தாம். (பி. வி. 5)

ஏகார இடைச்சொல் -

{Entry: D04__179}

இவ்விடைச்சொல், தேற்றம் வினா பிரிநிலை எண் ஈற்றசை இசைநிறை அசைநிலை மாறுகோள் - என்னும் எட்டுப் பொரு ளில் வரும்.

எ-டு : உண்டேஎ மறுமை - தேற்றம்; நீயே உண்டாய்? - வினா; அவருள் இவனே கள்வன் - பிரிநிலை; நிலனே நீரே தீயே வளியே - எண்.

‘கடல்போல் தோன் றல காடிறந் தோரே’ (அக. 1) - ஈற்றசை

‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக. 652) - இசைநிறை

‘ஏஎ எனச்சொல் லியது’ - அசைநிலை

அவனே கள்வன்? - மாறுகோள்

தேற்ற ஏகாரம் போலாது, சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டு இசையாது, தொடர்மொழி முதற்கண் பிரிந்திசைப்பன இசைநிறையாம் என்பது உணரப்படும். வினா ஏகாரம் சொல்லுவான் குறிப்பால் மாறுகோள் ஏகாரம் ஆம் (எ. 290)

(தொ. சொ. 259, 274 நச். உரை)

ஏகார இடைச்சொல் பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம் இசைநிறை என்னும் ஆறு பொருள்களில் வரும்.

எ-டு : அவனே கொண்டான் - ஒரு குழுவினின்றும் ஒருவனை பிரித்து நிற்றலின், பிரிநிலை ஏகாரம். அவனே கொண்டான்? - வினாவி நிற்பின் வினா.

நிலனே நீரே தீயே வளியே - நிலனும் நீரும் தீயும் வளியும் - என எண்ணி நிற்றலின், எண்.

‘கடல்போல் தோன்றல காடிறந் தோரே’ (அகநா.1) சொல்லிறுதிக்கண் அசைத்தல் பொருள்தருதலின், ஈற்றசை.

அவனே கொண்டான் - துணிதற்பொருள் தரின், தேற்றம்.

‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக. 652) இசைநிறைத்தற் பொருள் தருதலின் இசைநிறை.

தேற்றப் பொருள் பிரிநிலைக்கண்ணே உளதாதலின், இத் தேற்றப் பொருளை வேறெடுத்துக் கூறுதல் சிறப்புடைத் தன்று என்பார், பொருட்சிறப்பில்லா ஈற்றசைக்கும் இசை நிறைக்கும் இடையே கூறினார். (நன். 422 சங்.)

ஏகார வினா, யா வினா வரும் இடங்கள் -

{Entry: D04__180}

ஏகாரவினா இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஐந்தின்கண்ணும், யாவினா காலம் சினை குணம் தொழில் என்னும் நான்கின்கண்ணும் வாரா. எனவே அவை முறையே பொருட்பெயர் ஒன்றே பற்றியும், பொருட்பெயர் இடப் பெயர் என்னும் இரண்டே பற்றியும் வரும்.

ஏவன் ஏவள் ஏவர் ஏது ஏவை; யாவன் யாவள் யாவர் யாது யாவை - என வருமாறு காண்க. ஏவன் முதலியன எம்மனிதன் முதலாகப் பொருட்பெயர் பற்றி வருமாறும், யாவன் முதலியன எம்மனிதன், எவ்விடத்தவன் - எனப் பொருளும் இடமும் ஆகிய பெயர்கள் பற்றி வருமாறும் காண்க. (நன். 278 மயிலை.)

ஏதுக் கருத்தா -

{Entry: D04__181}

இது கருத்தாவகை நான்கனுள் ஒன்று. கருத்தா - ஏதுக்கருத்தா - கருவிக் கருத்தா - கருமக் கருத்தா - எனக் கருத்தா நால் வகைப் படும். ஏவினானைக் கருத்தாவாகக் கூறுவது ஏதுக் கருத்தா.

எ-டு : அரசன் எடுத்த ஆலயம் - என்புழி, அரசன் ஏதுக் கருத்தா. (தொ. சொ. 248 நச். உரை)

வினைமுதல் தோன்றும் நிலைக்களன் என இலக்கணக் கொத்துக் கூறும் ஏழனுள் ஒன்று; ஏதுப்பொருளில் எழுவாய் வருவது ஏதுக்கருத்தாவாம்.

எ-டு : ஆதித்தன் கல் தீப் பிறப்பித்தான்; காற்றுப் பழம் உதிர்த்தது.

ஆதித்தனும் காற்றும் முறையே கல்லில் தீப்பிறத்தற்கும் பழம் உதிர்தற்கும் ஏதுவாயினமை காண்க. இவை முறையே உயர் திணையிலும் அஃறிணையிலும் வந்த ஏதுக்கருத்தா.

(இ. கொ. 26)

(இறையனார் அகப்பொருளுரை கருத்தனுடைய வகை நான்கனுள் ஒன்றாக ஏதுக்கருத்தனைக் குறிப்பிடும். ஏனைய மூன்றும் ஆவன கருத்தன், கருவிக்கருத்தன், கருமக்கருத்தன் - என்பன.)

ஏதுப்பொருட்கண் மூன்றாம் வேற்றுமை -

{Entry: D04__182}

‘நாணால் உயிரை த் துறப்பர்’ (கு. 1017)

சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும் - உயிரைத் துறத்தற்கு நாணும், தந்தை உவத்தற்குச் சாத்தன் கையெழுதுமாறு வல்லனாயிருத்தலும் ஏதுவாயின.

ஏது என்பது காரகஏதுவும் ஞாபகஏதுவும் என இரு வகைப் படும். அ) செயலொடு தொடர்புடையது காரகஏது.

எ-டு : வாணிகத்தான் ஆயினான்: ஆக்கம் பெற்றமைக்கு வாணிகம் ஏது.

ஆ) அறிவொடு தொடர்புடையது ஞாபக ஏது.

எ-டு: முயற்சியால் பிறத்தலின் ஒலி நிலையாது: பிறப்பன யாவும் அழியும் என்பது அறிவான் அறியப்படுதலின் ஒலியது நிலையாமைக்கு ஏது அது பிறத்தல் ஆயிற்று. (பி. வி. 12)

ஏதுப்பொருட்கண் மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குதல் -

{Entry: D04__183}

மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக் கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல் அவ்வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒருதன்மைய. இது காரகஏதுப் பொருளுக்கு உரியது.

எ-டு: வாணிகத்தான் ஆயினான், வாணிகத்தின் ஆயினான்; வாணிகத்தான் ஆய பொருள், வாணிகத்தின் ஆய பொருள். (தொ. சொ. 92 சேனா. உரை)

ஏது, யாது, அது, இது : வினைக்குறிப்பு -

{Entry: D04__184}

‘குற்றியலுகர ஈற்ற’ என்றமையால், ‘எற்று’ என்றாற்போல, ஏது யாது என்பனவும் காரணப்பெயராம் அன்றி வினைக் குறிப்பு மாம் என்பதும், அங்ஙனமாகவே ‘ஒருமொழி ஒழிதன் இனம் கொளற்கு உரித்தே’ என்பதனான் அது இது என்றல் தொடக்கத்து முற்றுகர ஈற்றவும் வினைக்குறிப்பாம் என்பதும் பெறப்பட்டன. (நன். 328 சங்.)

ஏம் ஈற்றின் சிதைவு -

{Entry: D04__185}

வந்தோம், சென்றோம் - என்றாற்போன்ற ஓம் ஈறுகள் ஏம் ஈற்றின் சிதைவாம். இவை பிற்காலத்தே தனி ஈறுகளாக வழங்கப்பட்டன. (தொ. சொ. 211 சேனா. உரை)

ஏல், ஏன் -

{Entry: D04__186}

ஏல் ஏன் - என்பன கால் என்ற வினையெச்சக்குறிப்பு என்று கோடலும் ஒன்று; அன்றியும், கால் ஈற்று வினையெச்சப் பொருள்படும் இடைச்சொல் என்று கோடலுமாம். மழை பெய்தக்கால் என்னும் காலீற்று வினையெச்சம், மழை பெய்யுமேலும் - மழைபெய்யுமேனும் - (ஏல், ஏன்) எனவரும். (இவை மழை பெய்தால் என்னும் பொருளின.) (தொ. சொ. 230 கல். உரை)

ஏலாது ஏற்றல் -

{Entry: D04__187}

நான்காம் வேற்றுமைப் பொருள்களுள் ஒன்று. மாணாக் கனுக்கு அறிவைக் கொடுத்தான் என்புழி, ஏனைய கொடைப் பொருள் கொடுப்பானை விட்டுக் கொள்வானையே சென் றடைவது போல, அறிவு ஆசிரியனை விட்டு மாணாக்க னிடமே சென்றடைந்து விடாமையின், ‘ஏலாது ஏற்றல்’ எனப்பட்டது. ‘கொள்வோன் வகைகள்’ காண்க. (இ. கொ. 36)

ஏவல் கண்ணியே வரும் இகரவிகுதி -

{Entry: D04__188}

‘ஐய! சிறிதென்னை ஊக்கி’, (கலி. 37), ‘ஈதல்மாட்டு ஒத்தி பெரும’ (கலி. 86 : 22) எனக் ககரமும் தகரமும் பெற்று இகரம் ஏவல் கண்ணியே நிற்கும். இதற்குப் ‘பிரிந்து இறை சூழாதி’ (கலி. 18) என்பது மறை. (தொ. சொ. 225 நச். உரை)

ஏவல் கண்ணி வரும் பொருள்கள் -

{Entry: D04__189}

உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என்று விதித்தல் ஏவல் கண்ணியது; இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்தல் வேண்டும் என வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணி யது; இனி உயர்திணைப் பொருளாகிய முன் னிலைக் கண் வாழிய - வாழ்க - என வாழ்த்துப் பொருண் மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணியதே; ‘கடாவுக பாக! நின் கால்வல் நெடுந்தேர்’ என, உயர்ந்தோன் வேண்டிக்கோடற் பொருண்மைக் கண் வந்ததும் ஏவல் கண்ணியது; ‘யானும் நின்னோடு உடனுறைக’ என வேண்டிக் கோடற் பொருண் மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணியதே (ஏவியது உணர்ந்து செய்யமாட்டாத அஃ றிணைக்கண் வருவன ஏவல் கண்ணா தவையாம்.)

(தொ. சொ. 228 நச். உரை)

ஏவல்முற்று இடையெழுத்துக் கெடுதல் -

{Entry: D04__190}

‘மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ’ (மணி. 13 : 93) ‘முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ ’ (மணி. 13 : 56) எனக் கேளும் - உரையும் - என்னும் ஏவல்முற்றும் (செய்யும் என்னும் முற்றே யன்றி) இவ்வாறு இடையே உயிரும் உயிர் மெய்யும் கெட்டு வருதல் கொள்க. இவை இங்ஙனம் ஆதலின் ‘சொற்றொறும் இற்றிதன் பெற்றி’ என்னும் சூத்திரத்தானே (461), ‘ஆடுவாமோ’ என்னும் தன்மைப் பன்மை முற்றுப் ‘பொன்னூசல் ஆடாமோ’ என எதிர்கால இடைநிலை கெட்டு வருதலும் கொள்க.

(நன். 341 சங்.)

ஏவல்விகுதி ஒருமை -

{Entry: D04__191}

ஆய் தி மோ - என்னும் விகுதிகள் ஏவலொருமையை உணர்த் துவன. உரையாய் - உரைத்தி - உரைமோ - என்றும், நடவாய் கேளாய் - போதி அருள்தி - கேண்மோ சென்மோ - என்றும் வருமாறு காண்க. (தொ.வி. 113 உரை)

ஏவல்விகுதிப் பன்மை -

{Entry: D04__192}

ஈர் தீர் மின் மினீர் - என்னும் விகுதிகள் ஏவல்பன்மையை உணர்த்துவன. உரையீர் கேளீர் - போதீர் அருள்தீர் - உரைமின் கேண்மின் - உரைமினீர் கேண்மினீர் - என வரும். அன்றி, குவ்விகுதி ஒருமைக்கும் பன்மைக்கும் ஆகும். ‘அன்னையே அனையார்க்கு இவ்வாறு அடுத்தவாறு அருளுகு என்றான்’ (கம்ப. 1 : 9 : 16) ‘என்னுடன் நங்கைஈங்கு இருக்குஎனத் தொழுது’ (சிலப். 16 : 14) ‘ஏற்றியல் கா ண்கும்நாம் இவண்தருகு என்னவே’ (சீவக. 1837) இவற்றில், அருளுகு - இருக்கு - தருகு - என்பன ஒருமைக்கு ஏவலாம். மீளவும் சீவகசிந்தாமணி ‘எந்தை மார்கள் எழுகு என்றானென’’ என்பதனுள் ‘எழுகு’ பன்மைக்கு ஏவலாம். ஒரோவிடத்து இவ்விகுதி வியங்கோள் வினைக்கும் ஆம்.

‘ஆயிர மாதாக் குள்ள அறிகு றி உனக்குண்டாகு’ (கம்ப. 1 : 9 : 21), ‘பசியு ம் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்குஎன வாழ்த்தி’ (சிலப். 5 : 72, 73) என்பவற்றில், உண்டாகு சுரக்கு என்பன உண்டாக சுரக்க - என வியங்கோளாய் வந்தவாறு காண்க.

அன்றியும், வரல் தரல் - என்னும் சொற்கள் வாராய் தாராய், வருதி தருதி என்றும், வாரீர் தாரீர், வருதீர் தருதீர், வம்மின் தம்மின், வம்மினீர் தம்மினீர் என்றும் வருதலும் அறிக. (தொ.வி. 113 உரை)

(அருளுகு, இருக்கு, தருகு, எழுகு, உண்டாகு, முடிக்கு - என்ற சொல்லிலக்கணம் ஆராய்தற்குரியது)

ஏவுதல்கருத்தா -

{Entry: D04__193}

‘அரசன் ஆலயம் செய்தான்’ என்புழி, அரசன் என்பது ஏவுதல் கருத்தா. இஃது இயற்றினான் தொழிற்கு ஏவினானைக் கருத்தா ஆக்கிக் கூறுதலின் ஏவுதற்கருத்தா எனப்படும். அரசன் ஆலயம் செய்வித்தான் என்பது ஏவுதல்கருத்தா என்பாருமுளர். செய்தல் தொழில் தச்சன் இயற்றினாற்போலச் செய்வித்தல் தொழிலை அரசன் இயற்றுதலின், இத்தொழிற்கு அரசனும் இயற்றுதற் கருத்தாவேயாம் என்க. (நன். 320 சங்.)

ஏவும் வினைமுதல் -

{Entry: D04__194}

‘அரசனான் இயற்றப்பட்ட தேவகுலம்’ என்னுமிடத்து, அரசன் மூன்றனுருபு ஏற்று நின்ற ஏவும் வினைமுதல்.

(தொ. சொ. 74 நச். உரை)

ஏழன் உருபுகள் -

{Entry: D04__195}

கண் - கால் - புறம் - அகம் - உள் - உழை - கீழ் - மேல் - பின் - சார் - அயல் - புடை - தேவகையாகிய திசைக்கூறு - முன் - இடை- கடை - தலை - வலம் - இடம் - என்பனவும் பிறவும் ஏழனுருபு களாம். (தொ. சொ. 77 இள. உரை)

ஏழனுருபு ‘கண்’ ஒன்றுமே என்றும், பிறவெல்லாம் ஏழாம் வேற்றுமைப் பொருள் என்றும் கூறுவர் சேனாவரையர். (82)

ஏழாம் வேற்றுமை -

{Entry: D04__196}

ஏழாம் வேற்றுமை தன்னை ஏற்ற பெயர்ப் பொருளாகிய பொருட்பெயர் - இடப்பெயர் - காலப்பெயர் - சினைப்பெயர் - குணப்பெயர் - தொழிற்பெயர் - ஆகிய ஆறும் தற்கிழமைப் பொருளும் பிறிதின்கிழமைப் பொருளும் என்னும் இரு வகைக் கிழமைப் பொருட்கும் இடமாகி நிற்ப அவற்றினை வேற்றுமை செய்தலாம்.

எ-டு :

மணியின்கண் ஒளி - தற்கிழமை; பனையின்கண் அன்றில் - பிறிதின் கிழமை; பொருள் இடமாயிற்று.

ஊரின்கண் இல்லம் - தற்கிழமை; வானின்கண் பருந்து - பிறிதின் கிழமை; இடம் இடமாயிற்று.

நாளின்கண் நாழிகை - தற்கிழமை; வேனிற்கண் பாதிரி - பிறிதின் கிழமை; காலம் இடமாயிற்று.

கையின்கண் விரல் - தற்கிழமை; கையின்கண் கடகம் - பிறிதின் கிழமை; சினை இடமாயிற்று.

கறுப்பின்கண் அழகு - தற்கிழமை; இளமைக்கண் செல்வம் - பிறிதின் கிழமை; குணம் இடமாயிற்று.

ஆடற்கண் சதி - தற்கிழமை; ஆடற்கண் பாட்டு - பிறிதின் கிழமை; தொழில் இடமாயிற்று. (நன். 301 சங்.)

ஏழாம் வேற்றுமை உருபுகள் -

{Entry: D04__197}

கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்

முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்

பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி

உள் அகம் புறம் இல் - முதலியன ஏழனுருபுகள்.

எ-டு:

‘ஊர்க் கால் நிவந்த பொதும்பர்’ (கலி. 56 : 1)

‘வேலின், கடை மணி போலும் திண்ணியான்’ (திரி. 33)

‘நல்லா ரிடை ப்புக்கு’ (நாலடி 314)

‘வலைத் தலை மானன்ன நோக்கிய ர்’ (திருவா. நீத். 40)

‘குரைகடல் வாய் அமுதென்கோ’ (திருவா. உயி. 40)

தேர்த் திசை இருந்தான்’

‘அவர் வயின் செல்வாய்’

‘கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம்’ (நான். 8)

‘காட்டுச் சார் ஓடு ம் குறுமுயால்!’

‘காழ்வரை நில்லாக் களிறவன் கை வலத் து, யாழ்வரை நின்றது’

( பெருங்.)

‘இல் லிடப் பரத்தை’

‘தன்மேல், கடுவரல் நீரின் கடுத் து வரக்கண்டும்’ (பு.வெ. 11)

‘பிண்டிக் கண் ணார் நிழற் கீழ்’ (யா.கா.கட.)

‘கடைப் புடைக் கொள்ளிய நீர்’

‘சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை’ (நற். 3 : 6)

காதலி பின் சென்ற தம்ம’ (நாலடி. 395)

‘நம் பாடு அணையாத நாள்’

‘கல் லளைச் சுனைநீர் கையிலுண் டமையான்’

‘தோழிக் குரியவை கோடாய் தேஎத் து’ (இறை.அ.14)

‘அவ னுழை யிருந்த தண்டமிழ்ச் சா த்தன்’ (சிலப். பதி. 10)

‘நின்றதோர் நறுவேங்கை நிழல் வழி அசைந்தனள்’

‘உறைப் புழி ஓலை போல’ (புற. 290)

‘குயில்சேர் குளிர்கா வுளி சேர்பு உறையும்’

‘முலையங் குவட் டுள் வாழும்’ (சீவக. 1232)

‘ப ண்பில்சொல் பல்லா ரகத்து ’ (கு. 194)

‘செல்லுமென் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள்மாலை’ (கலி. 148 : 7)

இவை இடத்தை உணர்த்தும் உருபாகாது இடவிகற்பங்களை உணர்த்தும் இடப்பெயராகிக் கண்அகல் ஞாலம் - கடைநாள் - இடைச்சுரம் - தென்திசை - தலையாயார் - என்றும் வரும். மணியின்கண் ஒளி என்புழிக் ‘கண்’ பெயராயின் (மணியின் என்று பொருள்படாமல்) மணியின் இடத்து ஒளி என்பது பொருள். அத்தொடர் மூன்று சொல்லாய் இரண்டு சந்தியாம் என்க. (நன். 302 சங்.)

ஏழாம்வேற்றுமை உருபுகளின் தனி இயல்புகள் -

{Entry: D04__198}

ஏழாம்வேற்றுமையுருபுகளாகிய கண்கால் முதலியன ஓரிடத்தின் ஏகதேசத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை உணர்த்தியும், ஓரிடத்தினை வரையறுத்துணர்த் தாது கண் என்பது போல இடம் என முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதனையே உணர்த்தியும் நிற்கும் சிறப்பின்மை கருதி வேறாக எடுத்தோதினார். ஏழாவதற்கு வினைசெய் யிடம் - நிலம் - காலம் - என்னும் மூவகைப் பொருட் பாகு பாடன்றி வேறு பொருட் பாகுபாடு இன்மையின், பொருட் பகுப்பினை ஓதாது உருபுகளையே எடுத்தோதினார். (தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கண் இருந்தான், கூதிர்க்கண் வந்தான் : வினைசெய் இடம் முதலிய மூன்றும் பற்றிக் கண்ணுருபு வந்தவாறு.) (தொ. சொ. 83 நச். உரை)

ஏழாம் வேற்றுமை உருபுகளும் பொருளும் -

{Entry: D04__199}

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் பின் சார் அயல் புடை முன் இடை கடை தலை வலம் இடம் இல் தேஎம் மாடு முதலியன ஏழாம்வேற்றுமை யுருபுகளாம்.

இவ்வுருபுகள் ஓரிடத்தின் கூறுபாட்டை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை உணர்த்தியும், ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது கண் என்பது இடம் என முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதனையே உணர்த்தியும் வரும் சிறப்பின்மைக் கருதித் தனிநூற்பாவால் ஓதப்பட்டன. (தொ. சொ. 83 நச். உரை)

கண் கால் முதலியன எல்லாம் இடவிசேடத்தைக் காட்டி வந்த இடைச்சொற்கள் என்பர் சேனாவரையர். இவற்றை இடைச் சொற்கள் என்றாரேனும், இவை பெயர்த்தன்மை அடைந்து நின்ற இடைச்சொற்களே எனக் கொள்க என்பது அவர் கருத்து. (தொ. சொ. 82 சேனா. உரை)

ஏழாம் வேற்றுமை வினைசெய்யாநிற்றலாகிய இடத்தின் கண்ணும் (சந்தருப்பம்), வினை நிகழாது வரையறையுடைய தொரு நிலமாகிய இடத்தின்கண்ணும், வினை நிகழாது வரையறைப்பட்டு நிற்கும் காலமாகிய இடத்தின்கண்ணும் - என மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும். எனவே ஏழாவது இடப் பொருட்டாயிற்று.

எ-டு : தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கண் இருந் தான், கூதிர்க்கண் வந்தான் - என முறையே காண்க.

இவை இடமும் இடத்து நிகழ் பொருளும் வேறாய் வந்தன.

குன்றத்தின்கண் குவடு - இஃது இடமும் இடத்து நிகழ் பொருளும் ஒன்றாக வந்தது. (தொ. சொ. 82 நச். உரை)

ஏழாம் வேற்றுமை : பெயர்க்காரணம் -

{Entry: D04__200}

பெயர்ப்பொருளை மேற்போந்த ஆறாம் வேற்றுமையின் இருகிழமைப் பொருள்கட்கும் இடமாக வேற்றுமை செய்த லின் ஏழாம் வேற்றுமையாயிற்று.

‘ஏழாம் வேற்றுமை’ காண்க. (நன். 301 சங்.)

‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’; விளக்கம் -

{Entry: D04__201}

தம்மை ஏற்பனவான ஒருமொழிப் பெயர், தொடர்மொழிப் பெயர், பொதுமொழிப்பெயர், உயர்திணைப்பெயர், அஃறிணைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பலர்பாற் பெயர், ஒன்றன்பாற் பெயர், பலவின்பாற் பெயர், தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், படர்க்கைப்பெயர், பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர், எண்ணுப்பெயர், நிறைப் பெயர், அளவுப்பெயர், ஆகுபெயர், சுட்டுப்பெயர், வினாப் பெயர் - என்னும் எல்லாப் பெயர்களுக்கும் ஈற்றிலே நின்று பொருள்களை வேற்றுமை செய்வனவான வேற்றுமைகள் எட்டாம்.

‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ எனவே, ஏனை வினைச்சொற்களும் பெயர்ப்படா இடை உரிச்சொற்களும் வேற்றுமை ஏலா என்பது. (நன். 290 மயிலை.)

எல்லாப் பெயரும் எல்லா வேற்றுமையும் ஏலா என்பார் ‘ஏற்கும்’ என்றும், வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொற் களுள் பெயர்ப்பட்டு நின்றனவும் தழுவிக்கோடற்கு ‘எவ்வகை’ என்றும், வினை முதலிய மூன்றும் வேற்றுமை கொள்ளா என்பார் ‘பெயர்’ என்றும், ‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ என எய்தியதனை விலக்கி ‘எழுவா யுருபு திரிபில் பெயரே’ எனப் பிறிது விதி வகுத்தலின் பெயர் முழுவதுமாம் எழுவாயுருபினை ஒழித்து, விளியுருபிற்குப் பெயரிறுதியாகிய புறப்பாட்டு எல்லையும் தழுவிக்கோடற்குப் பொதுமையின் ‘ஈறாய்’ என்றும் ஓதினார். (நன். 291 சங்.)

ஏற்புழிக் கோடல் -

{Entry: D04__202}

ஒரு சூத்திரப் பொருள் இன்னதற்கு என்று வரையறுக்காது கூறப்படுமிடத்து, இன்ன நிலையில் இச்சூத்திரப்பொருள் ஏற்கும் என்று உரைகாரர் கொள்வது ஏற்புழிக் கோடலாம்.

இல்லாப் பொருளும் இன்மை கூறுதற்கண் உம்மை பெறும் என்று சூத்திரம் பொதுவாக அமைந்திருக்க, ‘இல்லாப் பொருளும், இடமும் காலமும் முதலியவற்றொடு படுத்துக் கூறுதற்கண் உம்மை பெறும் என்று இடம் நோக்கிச் செய்தி களைப் பொருத்திக் கூறுதல் ஏற்புழிக் கோடலாம்.

எ-டு : பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள் ளும் இல்லை; குருடு காண்டல் பகலும் இல்லை.

(தொ. சொ. 34 சேனா. உரை)

ஏற்றம் என்ற உரிச்சொல் -

{Entry: D04__203}

ஏற்றம் என்ற உரிச்சொல் நினைவும் துணிவுமாகிய குறிப் புணர்த்தும்.

எ-டு : ‘கானலஞ் சே ர்ப்பன் கொடுமை ஏற்றி’ (குறுந். 145) - நினைவு; ‘எற்று ஏற்ற ம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’ - துணிவு (தொ. சொ. 337 சேனா. உரை)

ஏனையெச்சம் -

{Entry: D04__204}

செய்து, செய்யூ (செய்யா), செய்பு - என்பன நீங்கலான ஏனை வினையெச்சங்கள் செய்தென - செய்யிய - செய்யியர் - செயின் - செய- செயற்கு - என்னும் வாய்பாடுகளும், பின் முன் கால் கடை வழி இடத்து பான் பாக்கு வான் - முதலிய ஈற்றனவும் ஆம். இவையாவும் தம் வினைமுதல் வினையானும் ஆண்டு வந்து பொருந்தும் பிற வினைமுதல் வினையானும் வரையறையின்றி முடியும்.

எ-டு : மழை பெய்தெனப் புகழ் பெற்றது - தன் வினைமுதல் வினை; மழை பெய்தென மரம் குழைத்தது - பிற வினைமுதல் வினை. பிறவும் அன்ன. (தொ. சொ. 234 நச். உரை)

ஐ section: 33 entries

ஐ ‘ஆய்’ ஆதல் -

{Entry: D04__205}

ஐகார ஈற்று உயர்திணைப் பெயர்களும் விரவுப்பெயர்களும் விளியேற்குமிடத்து ஐ ஆயாகத் திரிந்து விளியேற்கும்.

எ-டு : நங்கை - நங்காய் - உயர்திணைப் பெயர்;

தந்தை - தந்தாய் - விரவுப்பெயர்.

சிறுபான்மை நாரை ‘நாராய்’ என அஃறிணைக்கண்ணும் ஐ ஆயாய் விளியேற்கும். (தொ. சொ. 123 நச். உரை)

ஐ என்னும் உரிச்சொல் -

{Entry: D04__206}

ஐ என்னும் உரிச்சொல் வியப்பு என்னும் குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘ஐதே காமம்’ (குறுந். 217) (தொ. சொ. 385 நச். உரை)

ஐகார அசை -

{Entry: D04__207}

உருபுபொருண்மை நோக்கிய ஐகாரம் ‘நேரை நோக்கி நாரரி பருகி’ எனவும், ‘முனை உண்டவர் உருகும் பசுந்தினைப் பிண்டியு ம்’ எனவும் அசைநிலையாக வரும். (தொ. சொ. 297 நச். உரை)

ஐகாரஈற்று முறைப்பெயர் விளியேற்குமாறு -

{Entry: D04__208}

ஐகாரஈற்று முறைப்பெயர் ஏனைய ஐகாரஈற்றுப் பெயர் போல அன்னை - அன்னாய், அத்தை - அத்தாய் - என ஐ ‘ஆய்’ ஆகி விளியேற்கும். மேலும், அன்னை - அன்னா, அத்தை - அத்தா - என ஐ ‘ஆ’ ஆகி விளியேற்றலுமுண்டு. (தொ. சொ. 121, 126 சேனா. உரை)

ஐகாரஈறு விளியேற்றல் -

{Entry: D04__209}

ஐகாரஈற்றுப் பொதுப்பெயர்க்கு இயல்பும் ஏகாரம் மிகுதலு மன்றி ஐகாரம் ஆயும் ஆவுமாகத் திரிதலும், உயர்திணை அஃறிணைப் பெயர்க்கு அவ்வுருபுகள் அன்றி ஐகாரம் ஆய் எனத் திரிதலும் உருபாம்.

அன்னை - அன்னை, அன்னையே : இயல்பும் ஏகாரம் மிகுதலும்

அன்னை, தந்தை - அன்னாய், தந்தாய் - ஐ ‘ஆய்’ ஆதல்

அன்னை - ‘ஆ அன்னா அலந்தேன் எழுந்திராய்’ - ஐ ‘ஆ’ ஆதல். இவை பொதுப் பெயர். விடலை, மடந்தை - விடலாய், மடந்தாய் - ஐ ‘ஆய்’ ஆதல். இவை உயர்திணைப் பெயர். நாரை - ‘சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்’ (ஐந். எழு. 68) - ஐ ‘ஆய்’ ஆதல். கொன்றை - ‘கொன்றாய் குருந்தே கொடி முல்லாய்’ (திணைமா. 81) - ஐ ‘ஆய்’ ஆதல். இவை அஃறிணைப் பெயர். (நன். 306 சங்.)

ஐகாரஈறு விளியேற்றலின் வேறுபாடு -

{Entry: D04__210}

ஐகாரஈற்றுப் பெயர் ‘ஆய்’ ஆகி விளியேற்கும்; அணியாரைக் கூவுமிடத்து இயல்பாய் விளியேற்கும். வருமாறு : நங்கை - நங்காய்; நங்கை! வருக.

ஐகார ஈற்றுப் பெயர்களில் ஆண்டை என்னும் சொல் ஈறாம் பெயர்களும் முறைப்பெயர்களில் அத்தை அம்மை என்னும் பெயர்களும் ஏகாரம் பெற்றே விளியேற்கும் எனக் கொள்க. (ஐகாரம் கெட, ஆண்டு ஏகாரம் மிகும் என்க.)

வருமாறு: கூத்தாண்டை - கூத்தாண்டே; அத்தை - அத்தே; அம்மை - அம்மே. (நேமி. விளி. 2 உரை)

ஐந்தாம் வேற்றுமை -

{Entry: D04__211}

ஐந்தாம் வேற்றுமையின் உருபாவன இல்லும் இன்னும் ஆம். அவற்றின் பொருளாவன நீங்கற் பொருளாகவும் உவமைப் பொருளாகவும் எல்லைப் பொருளாகவும் ஏதுப் பொருளாக வும் தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலாம்.

எ-டு : தமரின் தீர்ந்தான் இவன், வரையின் வீழ் அருவி - நீங்கல். பாலின் வெளிது கொக்கு, காக்கையின் கரிது களம்பழம் - ஒப்பு; இவை ஒப்புமை கருதாது உயர்வு தாழ்வு கருதியவழி நீங்குதல் பொருளாம். ‘திறல்வேல் நுதியின் பூத் த கேணி’ (சிறு. 172) ‘பொன்னின் பிதிர்ந்த பொறி சுணங்கு இளமுலை’ - ஒப்பு. கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்குச் சோணாடு -எல்லை. ‘கோட்டின் செய்த கொடிஞ்சி நெடுந்தேர்’ (பொருந. 163) அறிவில் பெரியன் - ஏது

இங்ஙனம் கூறவே, ‘இதனின் இற்று இது’ என விகற்பித்து உணர்தற்கு வருவன இவ்வுருபு என்பதாயிற்று. ஆகவே, நான்காம் வேற்றுமைப் பொருளாகிய கொள் வோனையும் கொடைப் பொருளையும் இவ்வாறு விகற்பித்து உணர்ந் தல்லது கொடுத்தல் கூடாமையின், இஃது ஐந்தாம் வேற்றுமை எனப்பட்டது. (நன். 299 சங்.)

ஐந்தாம் வேற்றுமைப் பெயர்க்காரணம் -

{Entry: D04__212}

சென்ற தலைப்புக்குரிய விளக்கத்துள் இறுதிப்பத்தி காண்க.

ஐந்தாம் வேற்றுமைப் பொருள் -

{Entry: D04__213}

ஐந்தாம் வேற்றுமை ‘இதனின் இற்று இது’ என்னும் பொருண்மைத்து. இதனின் இற்று இது - இதனைப் போல இன்ன தன்மைத்து இது, இதனைவிட இன்ன தன்மைத்து இது - என முறையே ஒப்புப்பொருளிலும் உறழ்பொருளிலும், இதனினின்றும் இன்ன தன்மைத்து இது - என நீங்கற் பொருளி லும், இதனினின்று இன்ன எல்லைத்து இது - என எல்லைப் பொருளிலும், இதனான் இன்ன தன்மைத்து இது என ஏதுப்பொருளிலும் வரும்.

எ-டு : சாத்தனின் நல்லன் - சாத்தனைப் போல நல்லன்:
உவமப் பொருள்; சாத்தனைவிட நல்லன் : உறழ் பொருள்; ஊரின் நீங்கினான் - நீங்கற் பொருள்; கருவூரின் கிழக்கு - எல்லைப் பொருள்; கல்வியின் பெரியன் - ஏதுப்பொருள். (நன். 299)

ஐந்தாம் வேற்றுமையது நீக்கத்தின் வகைகள் -

{Entry: D04__214}

ஐந்தாவதன் நீக்கப்பொருண்மை, நிலைத்திணை - இயங்கு திணை - பண்பு - எல்லை - என்பனவற்றை நிலைக்களமாகக் கொண்டு தோன்றும்.

எ-டு : மலையின் இழிந்தான் - நிலைத்திணை; யானையின் இழிந்தான் - இயங்குதிணை; ‘சிறுமையின் நீங்கிய’ (கு. 98) - பண்பு; ‘குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி’ (கு. 502), ‘ஐயத்தின் நீங்கி’ (கு. 353) - எல்லை. (இ. கொ. 38)

ஐந்தாம் வேற்றுமையின் முடிக்கும் சொற்கள் -

{Entry: D04__215}

வண்ணம் வடிவு அளவு சுவை தண்மை வெம்மை அச்சம் நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் இன்மை உடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்றுவிடுதல் - முதலியன ஐந்தாம் வேற்றுமையின் முடிக்கும் சொற்கள். ஐந்தாவதன் பொருள் பொருவும் எல்லையும் நீக்கமும் ஏதுவும் என நான்கு.

பொரு, உறழ்பொருவும் உவமப்பொருவும் என இரு வகைப் படும். ஏதுவும், காரகம் ஞாபகம் என இருவகைப்படும். காரக ஏது, அச்சம் ஆக்கம் என்பவற்றான் பெறப்படும். நீக்கப் பொருண்மை, தீர்தல் பற்றுவிடுதல் என்பவற்றான் பெறப் படும். ஏனைய பொருவும் எல்லையும் ‘இதனின் இற்று இது’ என்பதனான் பெறப்படும்.

எ-டு : காக்கையின் கரிது களம்பழம் - காக்கையைவிடக் கரிது எனப் பொருள்செய்யின், உறழ்பொரு.

காக்கையைப் போலக் கரிது எனப் பொருள்செய் யின், ஒப்புப் பொரு.

கருவூரின் கிழக்கு இவ்வூர் - இதனின் ஊங்கு - எல்லை.

இவையும் ‘இற்று’ என்னும் பொருள. (தொ. சொ. 78, 79 நச். உரை)

ஐந்தாவதன் ஏதுப்பொருண்மை -

{Entry: D04__216}

கள்ளரின் அஞ்சினான், வாணிகத்தின் ஆயினான், இகழ்ச்சி யின் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான், ‘கோட்டின் செய்த கொடிஞ்சி நெடுந்தேர்’ (பொருந. 163) என்றாற் போல்வன காரக ஏது. அறிவின் ஆகிய காட்சி, கண்ணின் ஆகிய காட்சி - என வரின் ஞாபக ஏது. இவற்றுள் உருபு நோக்கிய சொல் காரியப்படு பொருளாய் நிற்றல் காண்க. எவ்வாறெனின், கள்ளரும் வாணிகமும் இகழ்ச்சியும் முதலியன ஏதுவாக அச்சமும் ஆக்கமும் கேடும் முதலிய காரியங்கள் தோன்ற அவற்றைக் கொண்டு நிற்றலால், உருபு நோக்கிய சொல் காரியப் பொருளாம் என்க. இவையெல்லாம் ஏது. (நன். 299 இராமா.)

ஐந்தாவதன் ஏதுப்பொருண்மைக்கு முடிக்கும் சொற்கள் -

{Entry: D04__217}

ஐந்தாம் வேற்றுமைக் காரக ஏதுப் பொருண்மைக்கு முடிக்கும் சொற்கள் அச்சம் ஆக்கம் - என்பன.

எ-டு கள்ளரின் அஞ்சும், வாணிகத்தின் ஆயினான்.

(தொ. சொ. 77 சேனா. உரை)

ஐந்தாவதன் நீக்கப்பொருண்மை தரும் வினைகள் -

{Entry: D04__218}

ஐந்தாவதன் நீக்கப் பொருண்மை, தீர்தல் - பற்றுவிடுதல் - என்ற வினைகளான் பெறப்படும்.

எ-டு : ஊரின் தீர்ந்தான், இல்வாழ்க்கையின் பற்றுவிட்டான்.

(தொ. சொ. 77 சேனா உரை)

ஐந்தாவதன் நீக்கமும் ஆறாவதும் காரகம் ஆகாமை -

{Entry: D04__219}

ஆடையை நெய்து முடித்தான், படமரத்தினின்றும் வாங்குதல் நீக்கம் ஆதலின் அத்தொழில் முடிந்தபின் நிகழினல்லது தொழிற் குறிப்பு அன்மையின் காரகம் அன்றாயிற்று. காரகமாவது தொழில் நிகழ்வதற்குரிய அடிப்படை. ஆறாவது அவ் வாடையைக் கிழமை செய்தான்மாட்டே நிகழ்தலின் அதுவும் காரகம் அன்றாயிற்று. (தொ. சொ. 109 தெய். உரை)

ஐந்தாவதன் பொருண்மை -

{Entry: D04__220}

ஐந்தாவதன் பொருண்மை, நீங்க நிற்பதும், பொருவும், ஏதுவும் ஆம். அவற்றுள் நீங்கநிற்பது, பொருள்நீங்கி நிற்பதும் இடம் நீங்கிநிற்பதும் - என இருவகைப்படும். பொருவும், மிகுதி குறைதல் ஒத்தல் - என மூவகைப்படும்.

‘இதனின் இற்று இது’ நீங்க நிற்பது குறித்தது. ஒன்றனைப் பொருவிக் கூறுமிடத்து, பண்பினான் ஆதல் தொழிலினான் ஆதல் பொருளினான் ஆதல் கூறல்வேண்டும். வண்ணம் வடிவு முதலியன ஒப்புக் குறித்தவழி உவமையாம் (எ-டு : காக்கையின் கரிது களம்பழம் : ‘காக்கைபோல’ என்பது பொருள்.) இவை ஏதுக் குறித்தவழிக் கரிதாயிற்று - வட்டமாயிற்று - என உதாரணம் காட்ட உருபேற்ற பொருளெல்லாம் ஏதுவாம். (மையின் கரிதாயிற்று, காய்ச்சி அடித்தலின் வட்டமாயிற்று : மையும் காய்ச்சியடித்தலும் ஏதுவாம்)

(தொ. சொ. 75, 76, தெய் உரை)

ஐந்தாவதன் பொருளைக் காண்டல் -

{Entry: D04__221}

உருபேற்ற சொல்லையும் உருபு நோக்கிய சொல்லையும் நீக்கப் பொருள் நீக்கப்படு பொருள், உவமப்பொருள் உவமிக்கப்படு பொருள், எல்லைப்பொருள் எல்லைப்படு பொருள், ஏதுப் பொருள் காரியப்படு பொருள் - எனப் பகுத்துக் காண்க. இவற்றுள், உவமப்பொருள் முதலிய மூன்றிலும் உருபு நோக்கிய சொல் செயப்பாட்டுப்பொருளில் வரும். நீக்கப் பொரு ளொன்றும் உருபேற்ற சொல்லே செயப்பாட்டுப் பொருளாக நிற்கும். நீக்கம், வீழ்தல் -இழிதல் - தீர்தல் - பற்றுவிடல் - முதலியவற்றிலும்; இருவகைப் பொருவும், பண்பு முதலியன பற்றி ‘இதனின் இற்று இது’ என்னும் வாய்பாட்டிலும்; ஏது, காரணகாரியத் தொடர்பிலும்; எல்லை, இடவரை யறையிலும் அளவுகுறித்தால் பொருளாதி ஆறிலும் வரும்.

மருவூரின் மேற்கு, கருவூரின் கிழக்குச் சோணாடு என்புழி, மருவூர் கருவூர் என்பன இடவரையறை எல்லை.

அம்மலையின் இம்மலை பெரிது - அவ்வூரின் இவ்வூர் சிறிது - அவன் வாழ்நாளின் இவன் வாழ்நாள் பெரிது - அவள் கண்ணின் இவள்கண் பெரிய - அவள்அழகின் இவள்அழகு பெரிது - அவன் தொழிலின் இவன்தொழில் சிறிது - எனப் பெருமை சிறுமை முதலிய அளவு குறித்தற்குப் பொருள் ஆதி ஆறும் எல்லைகளாக நின்றவாறு காண்க.

நான்காம் வேற்றுமைப் பொருளாகிய கொள்வோனையும் கொடைப்பொருளையும், ‘இவனின் (இவனைப் போல, இவனைவிட) இத்தன்மைத்து இக் கொடைப்பொருள்’ என விகற்பித்து உணர்ந்தாலல்லது கொடுத்தல் கூடாமையான், இஃது ஐந்தாம் வேற்றுமை எனப்பட்டது. (நன். 299 இராமா.)

ஐந்தாவதன் பொரூஉப்பொருள் -

{Entry: D04__222}

தொல்காப்பியனார் பொரூஉப்பொருளையே வண்ணம் வடிவு அளவு சுவை முதலிய பலசொற்களைக் கொண்டு விளக்கு கிறார். தீர்தல் பற்றுவிடுதல் - என்னும் சொற்களால் நீக்கப் பொருண்மையையும், ‘அன்ன பிறவும்’ என்பதனால் எல்லை ஏது என்பனவற்றையும் குறிப்பிட்டார்.

எ-டு : காக்கையிற் கரிது களம்பழம்-வண்ணம்

இதனின் வட்டம் இது - வடிவு; இதனின் நெடிது இது - அளவு; இதனின் தீவிது இது - சுவை; ஊரின் தீர்ந்தான், ஊரின் பற்றுவிட்டான் - நீக்கம்; கருவூரின் கிழக்கு மருவூர் - எல்லை; முயற்சியின் பிறத்தலின் ஒலி நிலையாது - ஏது.

(தொ. சொ. 75 இள. உரை)

பொரு - ஒன்றின் ஒன்றை மிகுத்துக் கூறுதலும் ஒப்பாகக் கூறுதலும், (இவை முறையே உறழ்பொருவும் உவமப் பொருவும்) ஆம், ஐந்தாவதன் ‘இதனின் இற்று இது’ என்னும் பொருளுக்குப் பொரூஉப் பொருளே மிகுதியும் வரும். ஏனைய நீக்கம் எல்லை ஏது என்பன சிறுபான்மைய.

எ-டு : காக்கையின் கரிது களம்பழம் : ‘இதனின்’ என்பது
காக்கையின் என்பது; ‘இற்று’ என்பது கரிது என்பது; ‘இது’ என்பது களம்பழம் என்பது.

என்றது, காக்கையினும் கரியது களம்பழம் என மிகுத்துக் கூறியவாறு. காக்கையைப் போலக் கரிது களம்பழம் - என உவமத்திற்கும் இதுவே எடுத்துக்காட்டாகும். (தொ. சொ. 78 கல். உரை)

ஐம்பால் -

{Entry: D04__223}

ஆண் பெண் பலர் - என்ற உயர்திணைப் பால்கள் மூன்றும், ஒன்று பல - என்ற அஃறிணைப் பால்கள் இரண்டும் இரு திணைக்கு முரிய பால்களாம். பலர்பால், ஆண்பலர் பெண் பலர் என்ற வேறுபாடின்றி இருபாலின் பன்மையையும் குறிக்கப் பொதுவாக அமைந்துள்ளது. அஃறிணைப் பெயர் களுள் ஆண் பெண் என்னும் வேறுபாடிருப்பினும், வினையில் அவ்வேறுபாடின்றி, ஒருமைப் பாலே அஃறிணை ஆண் பெண் - என்ற இருபால்களையும் சுட்டுவது. ஆதலின் ஐம்பால் என்ற பகுப்பு வினைமுற்றையுட்கொண்டே அமைந்தது. (தொ. சொ. 2,3)

ஐம்பால் அறியாத பண்புத்தொகை -

{Entry: D04__224}

வட்டம் சதுரம் கோணம் முதலியன வடிவின்பாற் படும். வட்டப்பலகை என்பது வட்டமாகிய பலகை என விரிந்து தனக்கேற்ற ஒருமை பன்மையை உணர்த்தும் ஈறுகளின்றி நிற்றலின், இஃது ஐம்பால் அறியாத பண்புத்தொகை ஆயிற்று. இங்ஙனம் ஐம்பால் அறியாத பண்புத்தொகையை ஆசிரியர் எழுத்ததிகாரத்துள் நிலைமொழி வருமொழி செய்து புணர்த்தார். அவை ‘அகங்கை’ முதலியனவாம். (தொ. சொ. 416 நச். உரை)

ஐம்பால் அறியும் சொற்கள் -

{Entry: D04__225}

அ) ஆடூஉ அறிசொல் : உண்டான், உண்ணாநின்றான், உண்பான் - வினை; கரியன், நெடியன் - வினைக்குறிப்பு; பாண்டியன், மாயவன் - பெயர்.

ஆ) மகடூஉ அறிசொல் : உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் - வினை; கரியள், நெடியள் - வினைக்குறிப்பு; அவள், திருவினாள் - பெயர்.

இ) பலர் அறிசொல் : உண்டனர், உண்ணாநின்றனர் உண்பர், உண்ப, கொண்மார் (வந்தார்) - வினை; கரியர், நெடியர் - வினைக்குறிப்பு ; அவர், இவர், நம்பியர், நங்கையர், தாய்மார், தந்தையர் - பெயர்.

ஈ) ஒன்று அறி கிளவி : உண்டது, கூயிற்று, உண்டு - வினை; கரிது, கோடின்று, குண்டுகட்டு - வினைக்குறிப்பு; அது, ஒன்று - பெயர்.

உ) பல அறிகிளவி : உண்டன, உண்ணா, உண்குவ - வினை; கரிய, நெடிய - வினைக்குறிப்பு; பல, சில, யா, வருவ - பெயர்.

(தொ. சொ. 5 - 9 தெய். உரை)

ஐம்பால் உணர்த்துவனவும், சில பாலே உணர்த்துவனவும் ஆகிய சொற்கள் -

{Entry: D04__226}

நஞ்சுண்டான் சாம் என்றவழி, சாதல் நஞ்சுண்டாள் - நஞ் சுண்டார் - நஞ்சுண்டது - நஞ்சுண்டன - என்ற ஏனைய நான்கு பால்களுக்கும் பொருந்தும். பார்ப்பான் கள்ளுண்ணான் என்றவழி, கள்ளுண்ணுதல் பார்ப்பனி பார்ப்பார் என்னும் உயர்திணையின் ஏனைய இருபால்களுக்கு மாத்திரம் பொருந்தும். (தொ. சொ.163 நச். உரை)

ஐம்பால் மூவிடத்து வரும் வினைகள் -

{Entry: D04__227}

வினையெச்சம், இன்மை செப்பல், வேறு என்ற சொல், செய்ம்மன என்ற வினைவாய்பாடு, செய்யும் செய்த - என்ற வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் ஆகியவை ஐம்பால் மூவிடப் பொது வினைகளாம். இன்மை செப்பல்: இல்லை, இல் என்பன. (தொ. சொ. 222 சேனா.)

ஐம்பாற்கண்ணும் வரும் பண்புகள் -

{Entry: D04__228}

வண்ணம் வடிவு அளவு சுவை - என்ற நான்கு பண்புகளுள் வடிவு நீங்கலான ஏனைய பண்புகள் ஐம்பாற்கண்ணும் வரும். வடிவு ஒன்று மாத்திரம் ஐம்பாலறியாத பண்பு. (உயர்திணை முப்பாலும் அஃறிணை இருபாலும் என்னும் இவற்றின்கண் வண்ணம் முதலியவை ஏற்ற பெற்றி வரும் எனக் கொள்க.) (தொ. சொ. 416 நச். உரை)

ஐய உம்மை -

{Entry: D04__229}

பத்தும் எட்டும் உள : இதன்கண் உம்மை ஐயவும்மை. ஐயுற்றுக் கூறுமிடத்து வருதலின் இவ்வும்மை ஐயமாம். பத்தோ எட்டோ உள என்றவாறு. (தொ. சொ. 257 கல். உரை)

ஐய ஓகாரம் -

{Entry: D04__230}

‘மொழியாததனையும் முட்டின்று முடித்தல்’ என்பதனான், பத்தோ பதினொன்றோ - என வரும் ஐய ஓகாரமும், ‘வெண்ணெயோ விதுர ன் இட்ட விருந்தையோ வேலை சூழ்ந்த, மண்ணையோ உண்டு மு ன்னாள் வருபசி தீர்ந்த மாயன்’ என எண்ணி நிற்கும் ஓகாரமும் கொள்க. (நன். 355 இராமா.)

ஐயத்தின் இருவகை -

{Entry: D04__231}

கண்டவிடத்து ஐயமும், காணாவிடத்து ஐயமும் என ஐயம் இருவகைத்து. ஒருவன்கொல்லோ ஒருத்திகொல்லோ இஃதோ தோன்றுவார்? - என்பது கண்டவிடத்து ஐயம்; ஒருவன் கொல்லோ பலர்கொல்லோ கறவை உய்த்த கள்வர்? - என்பது காணாவிடத்து ஐயம். (உயர்திணைக்கண் பாலையம் உற்றவழிப் பலர்பாற் சொல்லான் சொல்லுக என்பது விதி.) ஐயம் ஒருமைக்கண் ஆண்பால் பெண்பால் பற்றியோ, ஒருவன் பலர் என்னும் ஒருமை பன்மை பற்றியோ நிகழ்தல் கூடும் என்பது. (தொ. சொ. 23 கல். உரை)

ஐயப்புலப் பொதுச்சொல் -

{Entry: D04__232}

திணைபால் ஐயம் தோன்றுமிடத்து, உருபு - உருவு - என்ற சொற்களும் அவற்றின் பரியாயச் சொற்களாகிய பிழம்பு - பிண்டம் - போல்வனவும் பயன்படும். இவை ஐயப்புலப் பொதுச் சொல்லாம்.

எ-டு : குற்றியோ மகனோ தோன்றாநின்ற உருபு? - திணை ஐயம்; ஆணோ பெண்ணோ தோன்றநின்ற உருபு? - பால் ஐயம்; ஒன்றோ பலவோ செய்புக்க உருவு? - ஒருமை பன்மைப் பால் ஐயம்.

அஃறிணைப் பாலையத்திற்கு ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகிய அஃறிணைஇயற்பெயர் பயன்படும்.

எ-டு: ஒன்றோ பலவோ செய்புக்க பெற்றம்?

(தொ. சொ. 24 சேனா. உரை)

ஐயப்பொருள் -

{Entry: D04__233}

ஐயப்பொருளாவது சிறப்பியல்பான் தோன்றாது பொது இயல்பால் தோன்றிய பொருள்.

எ-டு : ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ தோன்றுகின்றவர்? என வரும். (தொ. சொ. 23 நச். உரை)

ஐயவினா -

{Entry: D04__234}

வினாவகை மூன்றனுள் ஐயவினா ஒன்று. ஒருபொருள்மேல் துணிவு பிறவாது இதுவோ அதுவோ என்ற ஐயம் நிகழ்ந்தவழி ஐயம் அறுத்தற்கு வினாவுவது இவ்வினா.

எ-டு : ‘தோன்றுகின்ற உருபு குற்றியோ மகனோ?’ என்று வினாதல். (தொ. சொ. 13 சேனா. உரை)

ஐயறிவுயிர் -

{Entry: D04__235}

வானவரும் மக்களும் நரகரும் விலங்கும் புள்ளும் முதலியன (முன்கூறிய) ஊறு சுவை நாற்றம் காட்சி என்னும் நாலறிவே யன்றிச் செவியால் சத்தத்தையும் அறியும் அறிவினோடு ஐயறிவுயிர்களாம். (நன். 449 சங்.)

ஆசிரியர் தொல்காப்பியனார் ‘மக்கள் தாமே ஆற்றி வுயிரே’ என்று கூறியிருக்க, மக்கள் முதலியோரை ஐயறிவுயிர் எனக் கூறல் மாறுகொளக் கூறலாம்பிறவெனின், மக்கள் முதலியோர் மனஅறிவோடு ஆறறிவுயிர் என்பது நோக்கியன்றே, முன்னர் ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ எனக் கூறிப் போந்ததும். ஆதலின் இங்ஙனம் ஐம்புலன் மாத்திரையே நுகரும் அறிவுடைய மக்கள் முதலியோரை விலங்கு முதலியவற் றோடு எண்ணி ஐயறிவுயிர் எனக் கூறினார் என உய்த்துணர்ந்து கொள்க. (நன். 449 சிவஞா.)

‘ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்’ உருபு ஈற்றில் தொகாமை -

{Entry: D04__236}

நிலம் கடந்தான் - கடந்தான் நிலம்; குன்றத் திருந்தான் - இருந்தான் குன்றத்து என ஐயும் கண்ணுமே தொடர்மொழி ஈற்றில் தொகும்.

தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழ்அருவி, சாத்தன்கை - என்பன மூவர்தாய் - வேலிக்கரும்பு - அருவிவரைவீழ் - கைசாத்தன் - என (முறையே ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும்) இறுதிக்கண் தொகா. பெயர்கொண்டு முடியும் ஏழாம்வேற்றுமைத்தொகை குன்றக்கூகை என வரும்; அதுவும் கூகைகுன்றத்து - என இறுதிக்கண் தொகாது.

(தொ. சொ. 106 நச். உரை)

ஐயுற்றுத் துணிந்தவழி துணியப்படும் பொருள்மேல் அன்மை கூறும் மரபு -

{Entry: D04__237}

மகன் என்று துணிந்தவழி, இவன் பெண்டாட்டி அல்லன், ஆண்மகன் எனவும், பெண்டாட்டி என்று துணிந்தவழி இவள் ஆண்மகன் அல்லள், பெண்டாட்டி எனவும், மகன் என்று துணிந்த- வழி இவன் குற்றி அல்லன், மகன் எனவும், குற்றி என்று துணிந்தவழி இவ்வுருவு மகன் அன்று, குற்றி எனவும், ஒன்று என்று துணிந்தவழி இப்பெற்றம் பல அன்று, ஒன்று எனவும், பல என்று துணிந்த- வழி ஒன்று அல்ல பல எனவும் துணியப்பட்ட பொருள்மேல் அன்மை கூறப்பெறும்.

(தொ. சொ. 25 நச். உரை)

ஒ section: 67 entries

ஒடு என்னும் இடைச்சொல் -

{Entry: D04__238}

இது மூன்றாம் வேற்றுமை யுருபுகளில் ஒன்று. வினைமுதற் - பொருளில் அருகியும், கருவிப்பொருளிலும் அருகியும், உடனிகழ்ச்சிப் பொருளில் பெரும்பான்மையும் இவ்வுருபு வரும்.

எ-டு : ‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ’ (புற.2) -வினைமுதற் பொருள்; ‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’ - கருவி; ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் - உடனிகழ்ச்சி.

ஒடு எண்ணுப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல். இஃது ஓரிடத்தில் நின்று தனித்தனியே பலவிடத்தும் சென்று பொருந்தி எண்ணுப்பொருளைத் தரும்.

எ-டு : ‘பொருள்கருவி கால ம் வினையிடனோ டைந்தும்’ (கு. 675) என்னுமிடத்து, ‘ஒடு’ பொருளொடு கருவி யொடு காலத்தொடு வினையொடு - என முன்னின்ற ஒவ்வொரு சொல்லொடும் கூடி எண்ணுப்பொருள் தந்தவாறு. (தொ. சொ. 296 நச். உரை)

ஒடு என்னும் இடைச்சொல் மூன்றனுருபாகவும் எண்ணிடைச் சொல்லாகவும் இசைநிறைச் சொல்லாகவும் வரும்.

வருமாறு :

ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் - ஒடு மூன்றனுருபு; உடனிகழ்ச்சிப் பொருட்டு. ‘பொருள்கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்’ (கு. 675) - ஒடு எண்ணுப்பொருட்டு; எண்ணப்படும் பிறபெயர்களோடும் இயைந்தது.

‘விதைக்குறு வட்டி போதொடு பொதுள’ (குறுந். 155) - ஒடு இசைநிறைப் பொருட்டு. (நன். 297, 429, 436 சங்.)

ஒடு உருபு வருமொழி முதலில் உயிர்வரின் ஓடு என்றாதலைத் தொல்காப்பிய நூற்பா பலவற்றுளும் காண்க.

ஒடு என்னும் மூன்றனுருபு : பொருள் வேறுபாடு -

{Entry: D04__239}

1. கிரியா அபாவம் - அஃதாவது வினையின்மை. ஒடு என்னும் மூன்றனுருபொடு கூடிய பெயர் (உடனிகழ்ச்சிக்குரிய ஒருவினை யின்றி) வினையின்மையைக் குறிக்கும்.

எ-டு : ‘மலையொடு பொருத மால்யானை’ - இதன்கண், பொருதல் யானைக்கேயன்றி மலைக்கு இல்லை.

கருப்பத்தொடு கழுதை பாரம் சுமந்தது - இதன்கண், பாரம் சுமத்தல் கழுதைக்கல்லது கருப்பத்திற்கு இல்லை.

இதனைத் தொல்காப்பியம் ‘அதனோ டியைந்த வேறு வினைக் கிளவி’ (சொ. நச். 75) என்னும்.

2) பின்னக்கிரியை - அஃதாவது வேறுவினை. ஒடு என்ற மூன்றனுருபுடன் வந்த பெயர் தனக்குரியதல்லாத வேறு வினையும் கொள்ளும்.

எ-டு : காவொடு அறக்குளம் தொட்டான் - இதன்கண், தொடப் படுதல் குளத்திற்கே உரிய வினை; கா வளர்க்கப் படுவதே ஆகும். இத்தொடரில் ‘காவொடு’ எனக் காவும் ‘தொட்டான்’ என வேறு வினை கொண்டது.

3) இதரேதரம் - அஃதாவது ‘அதனொடு மயங்கல்’; இரு பொருள்கள் தம்முள் கலத்தல். இஃது இருவகைப்படும். இதுவும் ஒடு என்னும் உருபின் பொருள்.

அ) பிரித்தெடுக்கலாம்படி கலத்தல் : எண்ணொடு விராய அரிசி - அரிசியும் எள்ளும் கலக்குமிடத்து இரண்டையும் தனித்தனியே பிரித்தல் கூடும்.

ஆ) பிரித்தல் ஒண்ணாவகை கலத்தல் : ‘பாலொடு தே ன்கலந் தற்றே’ (கு. 1121) தம்முள் கலந்த பாலையும் தேனையும் பிரித்தல் இயலாது.

4) ஒப்பு - ஒடு ஒப்பிடற் பொருளிலும் வரும்.

எ-டு : ‘கேள்வி யுடையார் அவியுணவின், ஆன்றாரோடு ஒ ப்பர் நிலத்து’ (கு. 413) கேள்வியுடையோர் தேவரோடு ஒப்பர் - என ஒடு ஒப்புப் பொருளில் வந்தது. ‘மதி யோடு ஒக்கும் முகம்’ என்பதும் அது.

5) வேற்றுமையின்மை - அபேதம் என்னும் வேற்றுமை யின்மைப் பொருளிலும் ஒடுவுருபு வரும்.

எ-டு : ‘எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’ (தொ. சொ. 401) - எழுத்தும் சொல்லும் வேறல்ல. எழுத்தினான் சொல் ஆக்கப்படுவது. எழுத்துச் சொல்லுக்கு உறுப்பே; எழுத்தின்றிச் சொல் அமையாது. ஆதலின் ‘எழுத் தொடு புணர்ந்த சொல்’ என்பது வேற்றுமையின்றி ஒற்றுமைக்கண் ஒடுவுருபு வந்தது என்க.

6) ஒப்பு அல் ஒப்புரை - அஃதாவது தம்முள் ஒப்புமை இல்லாதவற்றை ஒப்பிடுதல்.

எ-டு: ‘ பொன்னோ டிரும் பனையர் நின்னொடு பிறரே’ -பிறர் இரும்புபோல்வர்; நீ பொன் போல்வை என்பது பொருள். பொன்னோடு இரும்பு : ஒப்பல் ஒப்புரை.

‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல், கற் றாரோடு ஏனை யவர்’ (கு. 410) கல்லாதார் விலங்கு, கற்றார் மக்கள்; விலங்குக்கும் மக்களுக்கும் ஒப்பு இல்லை. ஆதலின், ‘விலங்கொடு மக்கள்’: ஒப்பல் ஒப்புரை.

7) ஒடு என்னும் உருபு ‘கொண்டு’ என்னும் எச்சப் பொருளிலும் வரும்.

எ-டு : ‘வேலொடு நின்றான்’ (கு. 552) - வேல்கொண்டு நின்றான் என்பது பொருள். (பி. வி. 16)

ஒடுவும் ஆனும் இரண்டுவேற்றுமை ஆகாமை -

{Entry: D04__240}

மூன்றாம் வேற்றுமைப் பொருள்கள் வினைமுதல், கருவி, உடனிகழ்வு என்பன. ஒடுவும் ஆனும் பெரும்பாலும் இப் பொருள்களில் ஒவ்வொன்றும் வழங்குவன. பிற்காலத்தில் வினைமுதல் - கருவி - ஆகிய பொருள்களில் ஆனும், உடனிகழ்ச்சிப் பொருளில் ஒடுவும் பயில வழங்குவன ஆயின. பொருள் வேறுபாடு பற்றி வேற்றுமைகளைப் பகுத்தல் முறையேயன்றி, உருபுகள் ஒன்றற்குமேல் இருப்பது பற்றிப் பலவேற்றுமைகளாகக் கொள்ளும் மரபு இன்மையான் ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமைகள் ஆகமாட்டா. (தொ. சொ. 74 சேனா. உரை)

எ-டு : ‘ஐவரொடு சினைஇ’ (புற.2) - ஐவரான் கோபிக்கப் பட்டு - வினைமுதற்பொருள்; ஊசியொடு குயின்ற - ஊசியான் தைக்கப்பட்ட - கருவிப்பொருள்; ஆசா னொடு மாணாக்கன் வந்தான் - உடனிகழ்ச்சிப் பொருள்; அரசனான் கோயில் கட்டப்பட்டது - வினைமுதற்பொருள்; வாளான் வெட்டினான் - கருவிப் பொருள்; ‘இன்சொலான்(ல்) ஈத்தளிக்க வல்லாற்கு’ (கு. 837) - உடனிகழ்ச்சிப் பொருள்

இவ்வாறு ஒடு ஆன் - என்னும் இரண்டும் மூன்றாம் வேற் றுமையில் மூன்று பொருள்களையும் குறித்தவாறு.

ஒப்பில் போலி -

{Entry: D04__241}

ஒப்பில் போலியாவது ஒப்பில்லாதவழி ஒப்பிட்ட வாசகம்பட வருவது.

எ-டு : ‘மங்கலம் எ ன்பதோர் ஊருண்டுபோலும் மழநாட்டுள்’

என ஒப்பு இல்லாதவழிப் போலும் என்னும் இடைச்சொல் உரையசைப் பொருட்டாக வந்தது. உரையசையாவது கட்டுரைத் தொடர்பினிடை அசைநிலைப் பொருள்பட வருவது. (தொ. சொ. 274 இள. உரை)

போலும் என்னும் சொல் தனக்குரிய ஒப்புப் பொருளைத் தாராது செய்யுளில் உரையசையாக வருவது ஒப்பில் போலி யாம்.

எ-டு : ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்’
‘நெருப்பழல்
சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய்
ஆக்கும்’ (நாலடி. 124)

இத்தொடர்களில் போலும் பேல்வது என்பன ஒப்புப் பொருள் தாராது தாம் சேர்ந்த சொற்களாகிய ஊரையும் நெய்யையும் புனைந்து நிற்றலின் ஒப்பில்போலியாம். (தொ. சொ. 280 நச். உரை)

அவர் வந்தார்போலும்; வந்தார் - எனத் துணிந்தவழி வருதலின் அசையாம். (தொ. சொ. 274 தெய். உரை)

ஒப்பில்வழியான் பிறிதுபொருள் சுட்டும் ஆகுபெயர் -

{Entry: D04__242}

முதற்பொருளொடு பொருத்தமில்லாக் கூற்றான் நின்று பிறிதுபொருள் உணர்த்தும் ஆகுபெயர்.

எ-டு : குழிப்பாடி நேரிது (தொ. சொ. 116 நச். உரை 116 ப. உ)

முதற்கு எவ்வியைபும் இல்லாத பொருள்மேல் நிற்கும் ஆகுபெயர். நீலம் என்றது நீலம் உண்ட ஆடை எனின், நீலத் திற்கு எவ்வியைபுமின்றி நின்றது ஆடை எனக் குறிக்கிறது. (இஃது ஆய்தற்குரியது) (தொ. சொ. 111 இள. உரை)

தம் பொருளுக்கு இயைபில்லாத பிறிது பொருளைச் சுட்டி நிற்கும் ஆகுபெயர்.

எ-டு : குழிப்பாடி நேரிது - குழிப்பாடி அவ்வூரில் நெய்யப் பட்ட ஆடையைக் குறிப்பது. (தொ. சொ. 115 சேனா. உரை)

பொருத்தமில்லா நெறிக்கண் சுட்டும் பிறிதின்கிழமைப் பொருளில் வரும் ஆகுபெயராம்.

எ-டு : சாலியன் (சாலியனால் நெய்யப்பட்ட ஆடையைக் குறிக்கும்.) (தொ. சொ. 112 தெய். உரை)

ஒப்பில் வழியான் பொருள் செய்குந -

{Entry: D04__243}

ஒப்பில் போலியே ஒப்பில் வழியான் பொருள் செய்வது.

எ-டு : மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் - என ஒப்பில்லாதவழிப் போலும் என்ற இடைச்சொல் வந்தவாறு. (தொ. சொ. 274 இள. உரை)

ஒப்புமை தோன்றாதவழி அவ்வொப்புமைப் பொருள் தருவன வாகிய உவமஉருபுகள். அவை ஒக்கும் என்பதொன்றும் நீங்கலான (உவமவியலிற் கூறப்பட்ட) உருபுகள். (தொ. சொ. 250 சேனா. உரை)

நாடக வழக்கினுள் உய்த்துணரினன்றி உலகியல்வழக்கினான் காட்டப்படுவதோர் ஒப்பு இன்றி நின்ற ஒப்புமைப் பொருள் உணர்த்தி வரும் உருபுகள். (தொ. சொ. 252 நச். உரை)

பொருத்தமில்லாத இடத்துப் பொருள் உணர்த்துவனவும், ஒரு சொல்லொடு பொருத்தமின்றித் தனி வருவனவுமாகிய இடைச் சொற்கள். ஒக்கும் என்ற சொல் வாராத உவமவுருபு கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஆகி வருதலின் அவையெல்லாம் வினைக்குறிப்பாம்.

(தொ. சொ. 247 தெய். உரை)

அவர் வந்தார் போலும் - என்றவழி, ‘வந்தார்’ எனத் துணிந்த விடத்துப் ‘போலும்’ வருதலின் அஃது உவமப்பொருட் டாகாது அசைநிலையாகிய இடைச்சொல்லாம். (தொ. சொ. 274 தெய். உரை)

ஒப்பின் ஆகிய பெயர்நிலை -

{Entry: D04__244}

ஒப்புப் பற்றி வரும் பொன்னன்னது, பொன்னனைய, யானைப் போலி என்பன. (தொ. சொ. 164 தெய். உரை)

‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ -

{Entry: D04__245}

ஒப்புப் பொருள் பற்றி வரும் பொன்னன்னான் - பொன்னன் னாள் - பொன்னன்னார் - என வரும் பெயர்கள். இவை உயர்திணைப் பெயர்களுள் அடங்கும். (தொ. சொ. 165 நச். உரை)

உவமிக்கப்படும் பெயரோடு ஒத்து வரும் பெயர்கள் : பொன்னனையான், கண்ணன்னான், கண்போல்வான்; குரங்கன், பேயன், குரங்கி - என்பனவும் அவை. (தொ. சொ. 159 தெய். உரை)

ஒப்போன் ஏற்றல் -

{Entry: D04__246}

நான்காம் வேற்றுமைப் பொருள் வகைகளில் ஒன்று. சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன் என்புழி, சேரன் : கொடுப்போன், சோழன்: ஏற்போன்; இருவரும் தம்முள் ஒத்தவர். ‘கொள் வோன் வகைகள்’ காண்க. (இ. கொ. 36)

‘ஒருசார் னவ்வீற்று உயர்திணைப் பெயர்’ விளியேற்றல் -

{Entry: D04__247}

னகரஈற்று உயர்திணைப் பெயர்களுள் சில பின்வருமாறு விளியேற்கும்.

அளபெழுதல் : அம்பர்கிழான் - அம்பர்கிழாஅன்; ஈறுகெடு தல்: எலுவன், நண்பன் - எலுவ, நண்ப; ஈற்றயல் நீடல் : நம்பன் - நம்பான்; ஈற்றயல் நீண்டு ஈறு கெடுதல் : இறைவன் - இறைவா; ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டு ஓகாரம் மிகுதல் : ஐயன் - ஐயாவோ; ஈறுகெட்டு ஓகாரம் மிகுதல் : திரையன் - திரையவோ; இறுதி னகரம் யகரஒற்றாய்த் திரிய, ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாக ஏகாரம் ஈற்றில் மிகுதல்: வாயிலான் - வாயிலோய், வாயிலோயே; இறுதி னகரம் கெட்டு அயலில் அகரம் ஏகாரம் ஆதல் : ஐயன் - ஐயே, முருகன் - முருகே; ஏடன் - தோழன்; எல்லாள், ஏடி - தோழி. ஏடா : தோழன் முன்னிலைப் பெயர்; எல்லா, ஏடீ : தோழி முன்னிலைப் பெயர். இவை இயல்பாய முன்னிலைப் பெயரல்ல; விளியேற்றமை யாலாகிய முன்னிலைப் பெயர். (நன். 307 சங்.)

ஒரு சூத்திரத்திற்கே பலர் பல மதமாய் உரைத்தல் -

{Entry: D04__248}

(இது பாயிரச் செய்தி) எழுத்ததிகாரத்துள் உயிர்மெய் என்பதனை உம்மைத்தொகை என்றும், அன்மொழித் தொகை என்றும், வேற்றுமைத்தொகை என்றும் உரைப்பர்.

சொல்லதிகாரத்துள் ‘மக்கட் சுட்டு’ என்பதனை அன்மொழித் தொகை என்றும், இருபெயரொட்டாகுபெயர் என்றும், பின்மொழி ஆகுபெயர்ப் பண்புத் தொகை என்றும் உரைப்பர்.

பொருளதிகாரத்துள் ‘வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது’ (188 நச்.) என்புழி, மூன்றினைப் பதிபசுபாசம் என்றும், ‘தத்துவமசி’ வாக்கியம் என்றும், அறம்பொரு ளின்பம் என்றும், எழுத்துச் சொற்பொருள் என்றும் பல மதமாய் உரைப்பர். (இ. கொ. 6)

ஒரு சூத்திரத்துள்ளேயே ஒருவிதியை ஒருவிதி ஒழித்தல் -

{Entry: D04__249}

இது பாயிரச் செய்தி.

‘ஞணநம லவளன ஒற்றிறு தொழிற்பெயர்

ஏவல் வினைநனி யவ்வல் மெய்வரின்

உவ்வுறும்; ஏவல் உறாசில சில்வழி’ (நன். 207)

இச்சூத்திரத்து, மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயர்க ளும் ஏவல்வினைகளும் உகரச் சாரியை பெறும் என்ற பொது விதியை, சில ஏவல்கள் உகரச் சாரியை பெறா - என அச் சூத்திரத்திலேயே விலக்கினார். (இ. கொ. 6)

ஒருசொல் அடுக்கின் வகைகள் -

{Entry: D04__250}

ஒருசொல் அடுக்கி வரும் அடுக்குத்தொடர் இசைநிறை, பொருளொடு புணர்தல், அசைநிலை - என மூவகைப்பட்டு வரும். அசைநிலையடுக்கில் சொல் இருமுறை அடுக்கும்; பொருள் நிலையடுக்கில் சொல் இரண்டு முறையும் மூன்று முறையும் அடுக்கும்; இனி இசைநிறைக்கண் சொல் இரண்டு முறையும் மூன்று முறையும் நான்குமுறையுமாக அடுக்கும்.

பொருள்நிலையடுக்கு விரைவு - துணிவு - உடன்பாடு - அச்சம் - ஒருதொழில் பலகால் நிகழ்தல் - முதலிய பொருள் பற்றி வரும்.

எ-டு : ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’, ‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’ - இசைநிறை; ‘மற்றோ மற்றோ’ - அசைநிலை; ‘வந்தது வந்தது கூற்று’ (நாலடி. 4) - விரைவு; அவன் அவன் - துணிவு; வைதேன் வைதேன் - உடன்பாடு - (411 நச். உரை;) பாம்பு பாம்பு - அச்சம்; போம் போம் - ஒருதொழில் பலகால் நிகழ்தல்; தீத்தீத்தீ : பொருள்நிலை அடுக்கு - மும்முறை; ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ : இசைநிறை அடுக்கு - நான்முறை (தொ. சொ. 424, 423 நச். உரை)

ஒருசொல் தனித்தனி உதவுதல் -

{Entry: D04__251}

மொழிமாற்று முதலான பொருள்கோளன்றித் தனியே பிரிவு ஏழு என இலக்கணக்கொத்துக் கூறும் பொருள் கொள்ளு முறைகளில் இதுவும் ஒன்று. (பி. வி. இதனைப் ‘பிரத்தியேக பந்தாந்நுவயம்’ என்று கூறும். காரிகை 50)

‘கடுமொழியும்..... அரம்’ (கு. 567) - இதிலுள்ள ‘அரம்’ என்ற சொல்லைக் கடுமொழியும் அடுமுரண் தேய்க்கும் அரம் எனவும், கையிகந்த தண்டமும் அடுமுரண் தேய்க்கும் அரம்’ எனவும் தனித்தனியே இணைத்துப் பொருள் கொள்ளுதல்.

‘பொருள் கருவி.......... எண்ணிச் செயல்’ (கு. 675) - இதிலுள்ள ‘ஓடு’ என்பதனைப் பொருளோடு கருவியோடு காலத்தோடு வினையோடு இடனோடு - என ஏனைய சொற்களோடும் இணைத்துப் பொருள்கொள்ளுதல்.

இது தீவகம் என்னும் அணியையும் உட்படுத்தும். (இ. கொ. 130)

ஒரு சொல் நடைய -

{Entry: D04__252}

பல உருபுகள் தொடர்ந்து அடுக்கி நின்று ஒருவினை கொண்டு முடியும் உருபுகள் யாவும் ஒருசொல் நீர்மையவாய் அவ்வினை யைக் கொண்டு முடியும்.

எ-டு : யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் - என இரண்டாவதும் ஏழாவதும் குறைத்தான் என ஒருவினை கொண்டன. தினையிற் கிளியைக் கடியும் என்பதும் அது.

அறுவகைத் தொகைச்சொல்லும் எழுவாய்வேற்றுமையது இயல்பாம். அவை ஒருசொல் விழுக்காடுபடத் திரண்டு கிடக்கும்.

எ-டு : ‘கற்சுனைக்குவளையிதழ்’ - இஃது ஒருசொல் நீர்மைத்து. (தொ. சொ. 98, 415 இள. உரை)

ஒருசொல் நடையவாய்த் தொகைகள் நிற்றல் -

{Entry: D04__253}

பெயரும் பெயரும் சேர்ந்த தொகைகள் ஒரு பெயர்ச்சொல் நடையவாகியும், பெயரும் வினையும் சேர்ந்த தொகைகள் ஒருவினைச்சொல் நடைவாகியும் நிற்கும்.

எ-டு : ‘யானைக்கோடு’ - எனப் பெயரொடு பெயர் தொக்க தொகை ஒரு பெயர்ச்சொல் நீரதாய், யானைக் கோட்டினை - யானைக் கோட்டான் - என உருபேற் றும், யானைக்கோடு வந்தது - எனப் பயனிலை கொண்டும் வரும். ‘நிலங்கடந்தான்’ எனப் பெய ரொடு வினை தொக்க தொகை ஒரு வினைச்சொல் நீரதாய், திருமால் நிலங்கடந்தான் - எனவும் நிலங் கடந்தான் திருமால் எனவும் முறையே எழுவா யினைப் பெற்று அதற்குத் தான் பயனிலையாக முடிதலும் தான் அப்பெயர் கொண்டு முடிதலும் காண்க.

கபிலன் பரணன் என்ற இருபெயர்கள் உம்மைத் தொகை யாய்த் தொக்கவழிக் கபிலபரணர் என ரகர ஈற்றவாய்க் கபிலபரணர் வந்தார் எனப் பலர்பால் வினைகொண்டு முடிவதனானும் தொகைச்சொல் ஒருசொல் நீர்மைத்து என்பது பெறப்படும். (தொ. சொ. 420, 421 சேனா. உரை)

ஒரு சொல் பலசொல் ஆதல் -

{Entry: D04__254}

இஃது இலக்கணக்கொத்தில் ‘ஒருசாரார் கருத்து’ எனக் கூறப்படுவனவற்றுள் ஒன்று. பொருப்பன் : இதனுள், பொருப்பு என்னும் உரிமைப்பொருளை உடையான் முருகன் என்றும், பொருப்பிற்கு இறைவனாகிய குறிஞ்சியான் என்றும் பல சொல்லாகவே கொள்வர். பொருப்பிற்குக் கடவுளாகிய வன் என்ற பொருளில் வரும்போதும், பொருப்பினை ஆள்ப வன் என்ற பொருளில் வரும்போதும் வேறுவேறு சொற்களாகி வேறுவேறு பொருள்படும் என்றவாறு. (இ. கொ. 116)

ஒரு தொடர்

{Entry: D04__255}

தொடர் என்னும் வாக்கியம், ஒரு தொடர் - பல தொடர் - என இருவகைப்படும் என்று கூறும், இலக்கணக்கொத்து.

1. ஒரே பொருட்கண் (ஒரு கருத்தை முடிக்க) வருவனவாகிய பல தொடர்களும் ஒருதொடராகவே கொள்ளப்படும்.

2. தனித்தனிப் பொருட்கண் (வெவ்வேறு கருத்தை முடிக்க) வருவன, பலதொடர்.

“இவற்றை வடநூலார் முறையே ஏகவாக்கியம் எனவும், பின்னவாக்கியம் எனவும் கூறுப. அதனால் யாம் மொழி பெயர்த்தனம்” என்பர் ஆசிரியர்.

எ-டு : சாத்தன் அரிசி நெல் பயறு - முதலானவை கொண்டு வந்தான்; கொற்றன் பூ இலை காய் பழம் - முதலானவை கொண்டு வந்தான்; தேவன் மிளகு புளி கடுகு - முதலானவை கொண்டு வந்தான்; பூதன் சீலை தாலி பூண் அணி - முதலானவை கொண்டு வந்தான்; அரசன் அக்காலத்து அமைச்சொடு வந்தான்; தலைவன் தலைவிக்குத் தாலி கட்டினான் - என்ற பல தொடர்களும் வரைவு என்ற ஒருபொருட் கண் வருதலின், ஒருதொடரே ஆம்.

சாத்தன் அரிசி முதலானவை கொண்டுவர, கொற்றன் பூ முதலானவை கொண்டுவர, தேவன் மிளகு முதலானவை கொண்டுவர, பூதன் சீலை முதலானவை கொண்டுவர, அரசன் அமைச்சொடு வர, தலைவன் தாலி கட்டினான் - என, முற்றுக்களை எச்சமாக்கி முடித்தால் ஒரு தொடராதல் காணப்படும்.

சாத்தனை வரைவிற்கு வடக்கே அனுப்பினான்; கொற்றனை இழவிற்குக் கிழக்கே போக்கினான்; தேவனை நெற்கொளத் தெற்கே ஏவினான்; பூதனைக் தேன்விற்க மேற்கே செலுத்தி னான் - இவையாவும் ஒருவன் வினையே ஆயினும் ஒன்றற் கொன்று மறையாய்ப் பொருத்தமும் இன்மையால் பல தொடரேயாம் என்க. (இ. கொ. 124)

ஒரு நூலுள் எழுத்து முதலியவற்றின் மாறுபாடு -

{Entry: D04__256}

(இது பாயிரச் செய்தி) எழுத்து சொல் பொருள் யாப்பு அணி - என்னும் ஐந்திலக்கணங்களுள் மாறுபட்ட இலக்கணங்கள் நேர்வதுமுண்டு.

1. நாகு காடு - போன்ற நெடில்தொடர்க்குற்றுகரச் சொற்கள் எழுத்ததிகாரத்தில் இரண்டெழுத்துக்களாகக் கணக்கிடப் படும். யாப்பிலக்கணத்தில் அவை ஓரலகே பெறும்; குற்றுகரம் அலகு பெறாதவிடத்து எழுத்தும் யாப்பும் தம்முள் மாறுபட்டன.

2. பால்மொழி : உவமத்தொகை. பால்போலும் மொழி: உவம விரி. இவ்வாறு சொல்லதிகார இலக்கணம் கூறும். ‘பால் போலும் இனிய மொழி: என இனிமை என்னும் பொதுத் தன்மை வெளிப்படக் கூறுதல் விரியுவமை என்றும், பால் போலும் மொழி என்பது தொகையுவமை என்றும் அணி யிலக்கணம் கூறும்.

3. தூதுவிடாமை நோக்கித் தோழியொடு புலந்துரைக்கும் தலைவி, “இன்பம் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்ப வரவினைச் செய்யவல்லவர், துன்பம் செய்தற்குரிய பகைமைக் கண் என் செய்வர்கொல்லோ!”என்று கூறியதாகப் பொருள் படும் துப்பின் எவனாவர்’ (கு. 1165) என்ற குறட்பாவில் சொற்கள் எவையும் மறைந்திலாமையால், சொல்லதிகார வகையால் இப்பாடல் வெளிப்படை. ஆயின் அகப்பொருளில் தலைவி கூற்றாகத் ‘தோழி துயரம் செய்வாளாயினாள்’ என்று வருவது குறிப்புப் பொருள். சொல்லும் அகப்பொருளும் தம்முள் மாறுபட்டன. (இ. கொ. 6)

ஒருபாற்சொல் ஏனைய பாற்சொல்லையும் தழுவி வருதல் -

{Entry: D04__257}

‘நஞ்சுண்டான் சாம்’ என நஞ்சுண்ணுதலின் பயனாகிய சாதலை, உயர்திணை ஆண்பால்மேல் வைத்துக் கூறினும், அது நஞ்சுண்டாள் - நஞ்சுண்டார் - நஞ்சுண்டது - நஞ்சுண்டன - என்ற ஏனைய நான்கு பால்களுக்கும் பொருந்தி வருதல் ஒருபாற்சொல் ஏனைய பாற்சொற்களையும் தழுவி வருதலாம். (தொ. சொ. 163 நச். உரை)

ஒருபெயர்ப் பொதுச்சொல் -

{Entry: D04__258}

உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஒரு பெயராய்ப் பலபொருட்கும் பொதுவாகிய சொல். எ-டு : சேரி - பல குடியும் சேர்ந்திருப்பது. தோட்டம் - பல மரமும் தொக்கு நின்ற இடம். இவற்றைப் பிற உள்பொருளொழியத் தெரிந்து கொண்டு தலைமை பற்றியும் பன்மை பற்றியும் பொதுமை யின் வேறாகச் சொல்லுதல் வேண்டும்.

எ-டு : பார்ப்பனச்சேரி - உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. எயினர்நாடு - உயர்திணைக்கண் பன்மை பற்றி வழக்கு. கமுகந்தோட்டம் - அஃறிணைக் கண் தலைமை பற்றிய வழக்கு. வாழைத்தோட்டம் - அஃறிணைக்கண் பன்மை பற்றிய வழக்கு.

அரசர் பெருந்தெரு, ஆ தீண்டு குற்றி, வயிரக்கடகம் - என்பன வும், தலைமை பற்றிய வழக்காம். ஈண்டுத் தெரு, குற்றி முதலியன பொதுச்சொல் அன்மை அறிக. (தொ. சொ. 49 நச். உரை)

ஒருபொருட்கே பல வாய்பாடு வருதல் -

{Entry: D04__259}

செய்து செய்பு செய்யா செய்யூ செய்தென செய செயின் செய்யிய செய்யியர் - என்பன வினையெச்ச வாய்பாடுகள். ஆநின்று கின்று கிறு - என்பன நிகழ்கால இடைநிலை வாய் பாடுகள். இவை போல்வன ஒருபொருட்கே பல வாய்பாடு வந்தன. (இ. கொ. 128)

ஒருபொருட் பலபெயர் -

{Entry: D04__260}

ஒரே பொருளைக் குறிக்கும் பலபெயர்கள்.

எ-டு : ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான்,
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் -

இவை பிரிவிலவாய்ப் பலபெயரும் ஒருபொருள்மேல் சென்று கேட்போர்க்குக் கூறுவான் கருதிய பொருளை விளக்கி நின்றன. (இவை ஒருபொருளையே குறித்து இறுதி யில் ஒருவினை கொடுக்க முடிவனவாம்.)

‘வையைக் கிழவன்’ (முத்.) என்னும் பாடலுள், ‘கூடலார் கோ’ என்பது சுட்டின் பொருளதாய் ‘வையைக் கிழவன்’ என்னும் பெயரையே குறித்து நின்றது. ‘கொய்தளி ர்த் தண்டலை’ (முத்.) என்னும் பாடலுள் ‘காலேக வண்ணன்’ என்பதும் சுட்டின் பொருளதாய்க் ‘கூத்தப் பெருஞ்சேந்தன்’ என்னும் பெயரையே குறித்து நின்றது. இவையும் ஒருபொருட் பல பெயர்களாய்ப் பிரிவில்லாதன.

இனிப் பிரிவுள்ளதாய் வழுவியது யாதெனின், ‘பகை இயல்பாயிலி படைக்கை மறவ ன்’ எனவரின், பகை இயல்பா யில்லாதவனைப் ‘படைக்கை மறவன்’ என்றல் கூடாமை யின் பிரிந்து வழுவாம். (நன். 397 சங்.)

ஒருபொருட் பலபெயர் பற்றிய மரபு -

{Entry: D04__261}

ஒரு பொருளை உணர்த்தும் பல பெயர்களுக்கும் சேர்த்து இறுதியில் ஒருவினை கொடுக்காமல் பெயர்தோறும் வேறு வேறு வினை கொடுப்பின், அவை அவ்வொரு பொருளைக் குறிக்காமல் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பன ஆகிவிடும்.

‘ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்துண்டு தங்கி மகிழ்ந்து சென்றான்’ - என ஒருவனை உணர்த்தும் பல பெயர்களையும் தொடர்ந்து கூறிப் பின் முடிக்கும் சொற்களாகிய வினைகளைக் கூறாமல், ஆசிரியன் வந்தான் - பேரூர்கிழான் உண்டான் - செயிற்றியன் தங்கினான் - இளங்கண்ணன் மகிழ்ந்தான் - சாத்தன் சென்றான் - எனப் பெயர்தோறும் வேறுவேறு வினை கொடுப்பின், அவ் வினைகள் ஒருவனுடைய செயலாக அமை யாமல், வந்தானும் உண்டானும் தங்கினானும் மகிழ்ந்தானும் சென்றானும் வேறுவேறாவர் என்று பொருள்படும்.

ஆயின் காதல் முதலியன பற்றி ஒருவனை விளிக்கும் பல பெயர்களுக்கும் ஒரே வினையைத் தனித்தனிக் கொடுப்பின், அப்பெயர்கள் யாவும் ஒருவனையே குறித்தலும் அமையும். ‘எந்தை வருக எம்பிரான் வருக, மைந்தன் வருக மணாள ன் வருக’ என நான்கு பெயர்களும் ஒருவனையே குறித்தவாறு, (தொ. சொ. 42 சேனா. உரை)

செக்கினுள் எள்பெய்து, ஆட்டுவார் இல்லா மோட்டு முது கிழவி, மன்றத்திருந்த வன்திறல் இளைஞரைச் சென்று கைப் பற்றி, (அவர்களைத் தனித்தனியே) ‘எந்தை வருக! எம்பிரான் வருக! மைந்தன் வருக! மணாளன் வருக!’ என்று அழைத்தால், அப்பெயர்கள் ஒருவனுக்கே ஆகாது தனித்தனியே பலரையும் குறிக்கும் என்பது, (நேமி. மொழி. 13 உரை)

ஒருபொருட் பன்மொழி -

{Entry: D04__262}

ஒரு பொருளைக் குறித்து வரும் பலசொற்கள் அவ்வாறு வருதற்கு ஒரு காரணம் இன்றேனும், செவிக்குச் சொல் லின்பம் தோன்ற நிற்றலால் அது வழுவென்று நீக்கப்படாது.

எ-டு : ‘மீமிசை ஞாயிறு கடற்பாய்ந் தாங்கு புனிற்றிளங் கன்று, நாகிளங் கமுகு ‘ஆடுபசி உழந்தநின் இரும் பேர் ஒக்கல்’ பொருந. 61 ‘உயர்ந்தோங்கு பெருவரை’ மலைபடு. 41 ‘குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி’ (நாலடி. 49) (நன். 398 சங்.)

அப் பலசொற்கள் தாம் சார்ந்த சொற்களைச் சிறப்பித்து நிற்கும் என்ற கருத்தும் உண்டு (மயிலை). மீமிசை - மிகவும் மேல்; உயர்ந்தோங்கு - மிகவும் உயர்ந்த.

ஒருபொருட் பன்மொழியின் பயன் -

{Entry: D04__263}

‘ஒருபொருட் பன்மொழி’ என்னும் சூத்திரத்துள், சிறப்பாவது சிறந்து நிற்றல். சிறந்து நிற்றலாவது செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல். இனிச் ‘சிறப்பின்’ என்பதற்கு அப்பொருளைச் சிறப்பித்தலின் எனப் பொருள் கூறுவாரு ளர். அச்சொற்கு அப்பொருள் இயையாமை அறிக. செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றலே ஒருபொருட்பன்மொழியின் பயன் என்பது. (நன். 398 சங்.)

ஒருபொருள் இருசொல் -

{Entry: D04__264}

ஒருபொருள்மேற் கிடந்த இருசொற்கள் பொருள் வேறு பாடின்றித் தொடர்ந்து வரின் அவற்றை நீக்காது கொள்ள வேண்டும்.

எ-டு : நிவந்தோங்கு பெருமலை, துறுகல் மீமிசை

இவை ஒரே பொருளுடையவாயினும் வேறொரு சொல்லான் இடையிடப்படாது பிரிவின்றி நிற்றலின் கொள்ளப்பட்டன.

ஒருபொருள்மேல் நின்ற இருசொல் பிரிவின்றி நின்றன வரையப்படா.

பாண்டியனை ஒரே பாடலில் ‘வையைக் கிழவன்’ எனவும், ‘கூடலார் கோ’ எனவும் குறிப்பிடும் இரு தொடர்களும் திரிபின்றி அவனையே உணர்த்தலின் கடியப்படா.

‘கூத்தப் பெருஞ்சேந்தன்’ என்று முதலில் கூறிப் பின்னர் ‘அவனை’ என்று சுட்டுப்பெயரான் குறிப்பிட வேண்டு மிடத்துச் சுட்டினான் குறிப்பிடாது ‘காலேக வண்ணனை’ என வேற்றுப்பெயரான் குறிப்பிடினும், திரிபின்றி அத் தொடர் சேந்தனையே உணர்த்தலின் கடியப்படாது கொள் ளப்படும். (தொ. சொ. 460 சேனா. உரை)

இனி நச்சினார்க்கினியர் உரைக்குமாறு : (மேலைப் பொரு ளும் அவர்க்கு உடன்பாடே)

ஒருசொல் ஒருகால் கூறுதற்கண்ணே இருபொருளைப் புலப்படுத்தி இரண்டற்கும் பிரிவிலதாய் நிற்றல் ‘ஒருசொல் இருபொருள்’ ஆகும்.

எ-டு : ‘குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு, மழலைத் தும்பி வாய்வைத் தூத’ (சிலப். 4 : 15,16) : ‘குழல் வளர்’ முல்லை என்ற தொடர் கூறியபோதே ஆயர் ஊதும் குழலிலே எழுந்த முல்லை என்னும் பண்ணையும், மயிரிலே கிடந்த முல்லை என்னும் பூவையும் ஒரு காலத்தே புலப்படுத்தி இருபொரு ளுக்கும் பிரிவிலதாய் நின்றவாறு.

‘பாடுதும் பாவை பொற்பே....’ (சீவக. 2046) என்றவழி, ஒருகால் ‘பொலிவே’ என ஏகார ஈறு, ஒருகால் ‘பொன்னால் செய்த பேய்’ என யகர ஈறாயும் விகாரமாயும் நிற்றலும் கொள் ளப்படும். இருபொருள் ஒரு சொற்கு இவ்வாறு விகாரப்பட்டு நிற்குமிடத்தும் கொள்க. (தொ. சொ. 460 நச். உரை)

ஒருபொருள் குறித்த இருசொல் கடியப்படாமை -

{Entry: D04__265}

பொருள் வேறுபாடின்றி ஒரே பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின்றித் தொடர்ந்து வரின் அவற்றை நீக்காது கொள்ள வேண்டும்.

எ-டு : ‘நிவந்தோங்கு பெருமலை’ - நிவந்து, ஓங்கு : ஒரு பொருளன. ‘துறுகல் மீமிசை’ - மீ, மிசை : ஒரு பொருளன.

(இங்ஙனம் வரும் சொற்களை மீமிசைச் சொல் என்பர்.) செய்யுட்கண் சுட்டு வர வேண்டும் இடத்தே வேறு பெயர்ச் சொல் வந்து முன் குறிப்பிட்ட பெயரையே சுட்டுதலுமுண்டு.

எ-டு : ‘வையைக் கிழவன்’ என்னும் முத்தொள்ளாயிரப் பாடலுள், ‘வையைக் கிழவனை’ மீண்டும் ‘அவன், என்று சுட்டாது, ‘கூடலார் கோ’ என்பதும், ‘கொய் தளிர்த் தண்டலை’ என்னும் அந்நூற்பாடலுள், சேந்தனை மீண்டும் அவன் என்று சுட்டாது காலேக வண்ணன்’ என்பதும் சொல்லுவான் குறிப்பான் சுட்டுப்பொருளாக வரும்.

(தொ. சொ. 460 சேனா. உரை)

ஒருபொருள் குறித்த பல திரிசொல் -

{Entry: D04__266}

வெற்பு விலங்கல் விண்டு அடுக்கல் பொற்றை பொருப்பு பொறை அறை நவிரம் குன்று குவடு வரை சிலம்பு ஓங்கல் - என இவை மலை என்ற பொருளைக் குறித்த பல திரிசொற்கள். இவை பொருட் பெயர்.

படி பார் புடவி பொழில் இடம் - என இவை உலகம் என்ற இடத்தைக் குறித்த பல பெயர்த் திரிசொற்கள்.

எல்லி கங்குல் அல்கல் அல் - என இவை இரவு என்ற காலத்தைக் குறித்த பல பெயர்த் திரிசொற்கள்.

கொங்கை குரூக்கண் குயம் வல்லு - என இவை முலை என்ற சினையைக் குறித்த பல பெயர்த் திரிசொற்கள்.

சுணங்கு துத்தி உத்தி திதலை தொய்யில் - என இவை மாமை பரத்தலாகிய தொழிற்பண்பைக் குறித்த பல பெயர்த் திரி சொற்கள்.

துய்த்தல் மிசைதல் நுகர்தல் அயிறல் - என இவை உண்டலாகிய தொழிலைக் குறித்த பல பெயர்த் திரிசொற்கள்.

இயங்கினான் ஏகினான் - என இவை சென்றான் என்ற ஒரு தொழில் குறித்த பல வினைத் திரிசொற்கள்.

சாத்தனே, வந்தாயே; கூத்தனோ, வந்தாயோ - எனவும்

‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ - எனவும்

குறவரும் மருளும் குன்றம் எனவும் வருமிவை வினாஒருமை யினும் உயர்வுசிறப்பு ஒருமையினும் வந்த பல இடைத்திரி சொற்கள்.

உறு தவ நனி கூர் கழி எனுமிவை மிகுதி ஒருமையைத் தழுவிய பல உரித்திரிசொற்கள். (நன். 271 மயிலை.)

ஒருபொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி -

{Entry: D04__267}

ஒரு பொருளை உணர்த்துதலைக் குறித்து வந்த பல பெயர்ச் சொற்கள்.

ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் - என்பன ஒருவனையே உணர்த்துதலைக் குறித்து வந்த பல பெயர்ச்சொற்கள். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து இருந்து உண்டு மகிழ்ந்து சென்றான் - என இறுதியில் ஒரே வினைமுற்றைக் கொடுத்து அச்சொல்லை முடித்தல் வேண்டும். அங்ஙனம் கூறாது, ஆசிரியன் வந்தான் - பேரூர் கிழான் இருந்தான் - செயிற்றியன் உண்டான் - இளங்கண்ணன் மகிழ்ந்தான் - சாத்தன் சென்றான் - எனப் பெயர்தோறும் தனித்தனி வினை கொடுத்து முடிப்பின், அவ்வினைகள் யாவும் ஒருவனையே குறிப்பிடாமல், வந்தா- னும் இருந்தானும் உண்டானும் மகிழ்ந்தானும் சென்றானும் வேறு வேறு மக்களைக் குறிப்ப தாக முடியு மாதலின், ஒருபொருள் குறித்த பல பெயர்க்கும் ஒரு தொழிலையே முடிபாகக் கூறல் வேண்டும். ‘எந்தை வருக எம்பெருமான் வருக, மைந்தன் வருக மணாளன் வருக’ என்றாற் போல்வன பெயர்தோறும் ஒரு வினையையே தனித்தனி யாகக் கொடுக்கப் பட்டன. இவை காதல் பற்றிப் பலகால் ஒரு தொழிலே வந்தனவாம். நான்கு பெயரும் ஒருவனையே குறித்தன என்க. (தொ. சொ. 42 நச். உரை)

ஒருபொருள் திரட்சி, பலபொருள் திரட்சி -

{Entry: D04__268}

இவையிரண்டும் ஆறாம் வேற்றுமைக்குரிய தற்கிழமைப் பொருள் ஐந்தனுள் சில. நெல்லது குப்பை, எள்ளது ஈட்டம், கொள்ளது குழாம், ஆனையது தொகை, மாந்தரது தொகுதி - என்பன ஒன்றன்கூட்டத் தற்கிழமை. படையது தொகை, விலங்கினது ஈட்டம், மரத்தது குழாம் - என்பன பலவின் ஈட்டத் தற்கிழமை. (நன். 299 மயிலை.)

‘ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்’ -

{Entry: D04__269}

ஒருமை யெண்ணினை உணர்த்தும், ஒருவர் என்னும் பொதுமையினின்றும் பிரிந்த, பாலுணர்த்தும் சொல்லாகிய ஒருவன் ஒருத்தி என்னும் சொற்கள். ‘பொதுப்பிரி பாற் சொல்’ என்றால், மகன் மகள் முதலிய ஆண்பால் பெண்பால் சொற்களையும் உணர்த்தும்; ‘ஒருமை எண்ணின் சொல்’ என்றால் ஒன்று என்ற ஒன்றன்பாற் சொல்லையும், ‘ஒருவர்’ என்னும் பாற் பொதுச்சொல்லையும் உணர்த்தும். இவற்றை விடுத்து ஒருவன் ஒருத்தி என்பவற்றையே குறிக்க ‘ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்’ எனப்பட்டது.

(தொ. சொ. 44 சேனா. உரை)

ஒருவன் ஒருத்தி ஒருவர் ஒன்று - என்பன ஒருமை எண்ணினை உணர்த்தும் சொற்கள். இவற்றுள் ஒருவர் என்பது உயர் திணை ஆண் பெண் இரண்டற்கும் பொது. அவ்வாறே ஒன்று என்பது அஃறிணை ஆண் பெண் இரண்டற்கும் பொது. இப்பொதுச் சொற்களை விடுத்தால், பால் உணர்த்தும் சொற்கள் ஒருவன் ஒருத்தி என்பனவாம். இவையே, ஒருமை யெண்ணைக் குறிக்கும் ஆண் பெண் இரண்டற்கும் பொது வாம் நிலை நீங்கி, ஆண்பால் பெண்பால் என்பனவற்றை வரையறுத்து உணர்த் தும் சொற்களாம். இவை ஒருவன் ஒருத்தி என்று வருவன போல, இருவன் இருத்தி - மூவன் மூத்தி - என்பன வாரா. (தொ. சொ. 44 நச். உரை)

ஆயின், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் தேவரும் தானாயிருக்கும் பரம்பொருள் ஒருமை யால் சுட்ட வேண்டிய நிலையில் ‘மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்’ (தே. 7100) எனப் பன்மைப்பகுதியோடு ஒருமை விகுதியை இணைத்து ‘மூவன்’ என்று அப்பர்பெருமான் குறிப்பிடுவது மனம் கொளத்தக்கது. முத்தேவரும் தான் ஒருவனே ஆகியவனை ‘மூவன்’ என்று குறிப்பிடுதலே பொருந்துதல் காண்க. இவ்வாட்சி பிறாண்டுக் காண்டல் அரிது.

ஒருமை சுட்டிய பெயர் -

{Entry: D04__270}

இது விரவுப்பெயர் வகைகளில் ஒன்று. இஃது அஃறிணை ஒருமை, உயர்திணை ஆண் ஒருமை, உயர்திணைப் பெண் ஒருமை - என்ற மூன்றற்கும் பொதுவாம்.

எ-டு : கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள்
- இயற்பெயர். செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் - சினைப்பெயர். கொடும்புற மருது வந்தது, கொடும்புறமருது வந்தான், கொடும்புற மருது வந்தாள் - சினைமுதற்பெயர். (தொ. சொ. 185 நச். உரை)

‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ பன்மைக்கு ஆதல் -

{Entry: D04__271}

ஒருமையைக் கருதிய பெயராகிய நிலையையுடைய சொல் பன்மைக்கும் பொருந்தி நிற்கும் இடனுமுண்டு.

எ-டு : ‘அஃதை தந்தை, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ (அக. 96) அஃதைக்குத் தந்தையாம் முறையில் நிற்கும் சோழனைச் ‘சோழர்’ என்று அவன் உறவி- னரைக் காட்டிப் பன்மையாகக் கூறித் தந்தை என்ற ஒருமைச்சொற்குச் சோழர் என்ற பன்மைப் பெயர் முடிபாகக் கூறப்பட்டுள்ளது, சோழர் எல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின், வழுவமைதியாக இது கொள்ளப்படும். (பகைவரை வெல்லுதற்கண் அஃதை தந்தையொடு சோழர் மரபிலுள்ளோர் பலரும் ஒருங்கு சேர்ந்தனர் - என்ற கருத்துப்படக் கூறுதலின், ஒருமைச் சொல்லாகிய தந்தை என்பது சோழர் என்ற பன்மைச் சொல்லைக் கொண்டு ஒரோவழி முடியின் வழுவமைதியாம் என்று குறிக்கப்படுகிறது.)

‘ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப என்புழித் தாய் என்னும் ஒருமை இளையர் என்னும் பன்மைச் சொற்கு முடிபாதல் பொருத்தமின்றேனும், தாய் என்ற சொல் இளையருள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பொருளான் இயைதலின் வழுவமைதி யாயிற்று. இவ்வழுவமைதி அருகியே வரும்.

‘தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால - குருகு முண்டுதான் மணந்த ஞான்றே (குறுந். 25) எனச் சிறுபான்மை பன்மைச் சொல் ஒருமைச் சொல்லொடு முடிதலுமுண்டு. (தொ. சொ. 461 நச் உரை)

‘இவ்விரண்டனுள் கூர்ங்கோட்ட காட்டுவல்’ : கூர்ங் கோட்டது என ஒருமையாற் கூறற்பாலது ‘கூர்ங் கோட்ட’ எனப் பன்மையாதலும், ‘எ ன்நீர் அறியாதீர் போல இவை கூறின், நின்நீர அல்ல நெடுந்தகாய் (கலி. 6 : 7,8) என ஒருவனைப் பன்மையாகக் கூறிப் பின்னர் அவனை ஒருமையான் கூறுவது போல்வனவும், ‘இறப்பத் துணிந்தனிர் கேண்மி ன்மற் றைஇய’ (கலி. 2) எனப் பன்மையொருமை மயக்கம் போல்வனவும் அருகி வருவன. இவை வழுவமைதி யாம். (தொ. சொ. 461 நச். உரை)

நம்பிமார் நங்கைமார் என்றாற்போல ஒருமைப் பெயரை அடுத்து நின்று மார்ஈறு பன்மையுணர்த்துதலும் கொள்ளப் படும். பன்மை சுட்டிய பெயர் ஒருமைக்குப் பொருந்தி நிற்ற லும் சிறுபான்மை உண்டு. (தொ. சொ. நச். 461 உரை)

ஒருமைப்பால் பன்மைப் பாலறிசொல்லான் வழங்கும் வழுவமைதி -

{Entry: D04__272}

உலகவழக்காலே ஒருவனையும் ஒருத்தியையும் பன்மைச் சொல்லான் கூறும் வழக்குள்ளது. ஆயின் அஃது இலக்கணம் அன்மையின் அது செய்யுள்நெறிக்கு ஒவ்வாது என்பது தொல்காப்பியனார் கருத்து.

ஒருவன் வந்தான் என்பதனை ஒருவர் வந்தார் என்பதும்

ஒருத்தி வந்தாள் என்பதனை ஒருவர் வந்தார் என்பதும்

யான் வந்தேன் என்பதனை யாம் வந்தேம் என்பதும்

நீ வந்தாய் என்பதனை நீயிர் வந்தீர் என்பதும்

அவன் வந்தான் என்பதனை அவர் வந்தார் என்பதும்

அவள் வந்தாள் என்பதனை அவர் வந்தார் என்பதும்

போல்வன வழக்கில் ஒருமைப்பால் பன்மைப் பாலறி சொல்லான் வழங்கும் வழுவமைதியே ஆகும். (தொ. சொ. 27 சேனா. உரை)

ஒருமை, பன்மை விரவுப்பெயர்கள் -

{Entry: D04__273}

ஒருமை விரவுப்பெயர் பன்மை விரவுப்பெயர் ஒவ்வொன்றும் மும்மூன்றாம், இயற்பெயர் - சினைப்பெயர் - சினைமுதற் பெயர் - என்னும் மூன்றும் பற்றி வருதலின்.

எ-டு : கோதை வந்தான், வந்தாள், வந்தது; கை இழந்தான், இழந்தாள், இழந்தது; (நெடுங்கை வந்தான், வந்தாள், வந்தது - எனவே கொள்க) செவியிலி வந்தான், வந்தாள், வந்தது - என ஒருமை விரவுப்பெயர் ஆண் பெண் ஒன்று - என்று இம்முப்பாலும் பற்றி வந்தது.

யானை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள்

தலை முடித்தது, முடித்தன, முடித்தான், முடித்தாள்

தூங்கல் வந்தது, வந்தன, வந்தான், வந்தாள்

பன்மை விரவுப்பெயர் ஒன்று பல ஆண் பெண் - இந்நான்கு பாலும் பற்றி வந்தது. (சினைப்பெயர் சினைமுதற் பெயர் பற்றிய எடுத்துக்காட்டுக்களை முறையே பெருந்தலை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள், எனவும், பெருங்கால் யானை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவும் கொள்க.) (தொ. சொ. 178, 179 தெய். .உரை)

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி : இருவகை விளக்கம் -

{Entry: D04__274}

ஒருமொழிகளாவன பகுப்பிலவாய் நின்று ஒருபொருளை உணர்த்துவனவாம். தொடர்மொழிகளாவன இரண்டும் பலவுமான மொழிகள் தொகைநிலை வகையானும் தொகா நிலை வகையானும் தொடர்ந்து நின்று பலபொருளை உணர்த்துவனவாம். பொதுமொழிகளாவன ஒன்றாய் நின்று ஒரு பொருள் உணர்த்தியும் அதுவே தொடர்மொழியுமாய்ப் பலபொருளை உணர்த்தியும் இவ்வாறு இருமைக்கும் பொதுவாய் நிற்பனவாம். சாத்தன் - உண்ட சாத்தன் - எட்டு (எட்டு எனும் எண்; எள் + து : எள்ளைத்து; து-உண்) என முறையே காண்க.

இச்சூத்திரத்துக்கு இவ்வாறன்றி, ஒருமொழியாக - தொடர் மொழியாக - ஒரு பொருளை உணர்த்துவன ஒருமொழி; பல பொருளைத் தருவன தொடர் மொழி; ஒரு பொருளதாகக் கொள்ளவும் பலபொருளதாகக் கொள்ளவும் வருவன பொதுமொழி என்றுமாம்.

எ-டு : அவன், சாத்தன், வந்தது; அவர்கள், சேனை, குழாம், வந்தன; அவர் அரசர் வந்தார் (இவை ஒருவரை உயர்த்துச் சொல்லியவழி ஒருமொழி என்றும், பலரைக் குறித்தவழித் தொடர்மொழி என்றும் கொள்ளப்படும்.) எனவும் வரும். சேரன் திருமணக் குட்டுவன், சோழன் கரிகால் பெருவளத்தான், பாண் டியன் நெடுஞ்செழியன் எனவும் உவாப்பதினான்கு பதினொன்று - எனவும், எட்டு கொட்டு வேங்கை - எனவும் முறையே காண்க. (நன். 259 மயிலை.)

ஒருமொழிபோல் நடத்தல் -

{Entry: D04__275}

நிலத்தைக் கடந்தான் நிலங்கடந்தான் - என உருபு இடைவிரி யின் பிளவுபட்டும் தொக்கதேல் பிளவுபடாதும் தொடரு மாதலின், ‘ஒருமொழிபோல்’ என்றார். ஒருமொழி போல் நடத்தலாவது கொல்யானை வந்தது, நிலங்கடந்தான் சாத்தன் - என இரண்டு முதலிய பலசொல் தொடர்ந்து ஒரு பெய ராயும் ஒரு வினையாயும் நின்று தம் முடிபு ஏற்றலாம். (நன். 361 சங்.)

ஒருமொழிபோல் நடப்பன -

{Entry: D04__276}

பெயர்ச்சொல்லொடு பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல் லொடு வினைச்சொல்லும் வேற்றுமை வினை பண்பு முதலான அறுவகைப் பொருட்புணர்ச்சிக்கண் அவற்றின் உருபுகள் இடையே தொக்கு நிற்ப இரண்டு முதலிய பல சொற்கள் தொடர்ந்து ஒருமொழிபோல் நடப்பன தொகை நிலைத் தொடர்ச்சொற்களாம். தொகையாவது ஈண்டு உருபு மறைதல்.

வினையொடு வினை தொகைநிலைத் தொடராகாமையின், அது நீக்கப்பட்டது. நிலத்தைக் கடந்தான் - என உருபு இடையே விரியின் பிளவுபட்டும், நிலங்கடந்தான் என உருபு இடையே தொக்கதேல் பிளவுபடாதும் தொடருமாதலின், ‘ஒருமொழி போல் தொகை நடக்கும்’ என்றார்.

சாத்தன்மகன் - நிலங்கடந்தான், அடுகளிறு, செந்தாமரை - ஆயன்சாத்தன், புலிக்கொற்றன் - துடியிடை, கபிலபரணர் - இராப்பகல் - என வரும். (நன். 361 சங்.)

ஒருவர் என்பதன்கண் இருவகை -

{Entry: D04__277}

ஒருவர் வந்தார், ஒருவர் அவர் - என வினையும் பெயரும் கொள வருவது உவப்பு முதலியவற்றான் வருவதாம். இங்ஙனம் தன் இயல்பாய் வரும் ஒருவர் என்பது வினையும் வினைக் குறிப்புமே கொள்ளும் என்பார், பெயரை ஒழித்து ‘வினை கொளும்’ என்றும், இச்சொல் ஒருமைப்பகுதியொடு பன்மை விகுதி மயங்கிப் பால் வழுவாய் நின்றதேனும் தன் இயல்பாய் மயங்கி நின்றமையின் வழாநிலை போலும் என்பதும், ‘பன்மை வினை’ என்றது சொல்மாத்திரையின் பன்மைவினையன்றிப் பொருள் மாத்திரையின் ஒருமை வினையாதலின், இப் பய னிலையை ஒருவர் என்னும் சொல் கொள்ளுதல் வழுவன்று என்பதும் தோன்றப் ‘பாங்கிற்று’ என்றும் கூறினார். (எ-டு : ஒருவர் வந்தார், ஒருவர் கரியர்) (நன். 289 சங்.)

ஒருவர் என்னும் சொல் -

{Entry: D04__278}

ஒருவர் என்னும் உயர்திணை சுட்டும் ஒருமைப்பெயர் ஆண் - பெண் - என்ற இருபாலாரையும் உயர்வு குறித்துச் சுட்டு மிடத்துப் பொதுவாக வழங்கப்பட்டு ரகரஈற்றுப் பெயராத லின் பன்மைவினை கொண்டு முடியும். அவ்வொருவர் ஆண்பாலாரா பெண்பாலாரா என்பதனைச் சொல்லுவான் குறிப்பினாலே உணர்தல் இயலும்.

எ-டு : (ஆடவருள்) ஒருவர் அறத்தின்வழி நிற்பர்; (பெண் டிருள்) ஒருவர் கொழுநன்வழி நிற்பர். ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுக லாற்றின்’ (நாலடி. 309) (ஈண்டுச் சொல்லுவான்குறிப்பால் ஆடூஉ ஒருமை என்பது கொள்ளப்படும்.) (தொ. சொ. 193 - 195 நச். உரை)

ஒருவர் என்னும் சொல் வினைகோடல் -

{Entry: D04__279}

ஒருவர் என்னும் சொல் பகுதிபற்றி ஆண்பால் வினையோ பெண்பால் வினையோ ஆகிய ஒருமைவினை கொள்ளாது, விகுதிபற்றிப் பலர்பால் வினை கொள்ளும். (தொ. சொ. 194 நச். உரை)

எ-டு : ஒருவர் வந்தார், ஒருவர் அவர், ஆடவருள் ஒருவர் அறத்தின்வழி நிற்பார், ஒருவர் நில்லார் - எனவும் பெண்டிருள் ஒருவர் கொழுநன்வழி நிற்பார், ஒருவர் நில்லார் - எனவும் ‘யாஅர் ஒருவர் உலகத்தோர் சொல்லில்லார்’ (நாலடி. 119) எனவும் வரும். (நன். 289 சங்.)

ஒருவர் : பாலுணருமாறு -

{Entry: D04__280}

ஒருவர் என்ற சொல் ஆண்பால் என்றோ பெண்பால் என்றோ, இடமும் காலமும் பற்றிச் சொல்லுவான் குறிப்பொடுபடுத் துணர வேண்டும். ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுக லாற்றின்’ (நாலடி. 309) என்றவழிச் சொல்லுவானொடு கேட்டான் ஆடூஉஒருமை குறித்தான் என்பது விளங்கும்.

(தொ. சொ. 195 நச். உரை)

ஒருவழி உறுப்பின் கிழமை -

{Entry: D04__281}

உறுப்பு என்று உறுப்பியின் ஒரு கூறு ஆதலின் உறுப்பு ‘ஒருவழி உறுப்பு’ எனப்பட்டது. இஃது ஆறாவதன் பொருளது.

எ-டு : யானையது கோடு, புலியது உகிர்.

கிழமைப் பொருட்கண் தோன்றும் ஆறாம் வேற்றுமைத் திறத்தனவற்றுள் ‘ஒருவழி யுறுப்பு’ என்பதும் ஒன்று. உறுப் பாவது முதற்பொருளின் ஏகதேசமாதலின் ‘ஒருவழி யுறுப்பு’ எனப்பட்டது. (தொ. சொ. 80 சேனா. உரை)

ஒருவன் ஒருத்தி என்னும் சொற்கள் -

{Entry: D04__282}

இவை ‘ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்’ எனப் படும். இந்த அன்ஈறும் இகரஈறும் ஒருமைப்பகுதியுடனேயே வரும். இருவன், இருத்தி போல்வன பகுதி பன்மையாய் விகுதி ஒருமையாதலின் வழுவாம். (தொ. சொ. 44 சேனா. உரை)

இறைவன் மூவராகவும் உள்ளான் என்னும் கருத்தில் ‘மூவன் காண்’ (தே. 7100) என்ற தொடர் வந்துள்ளது. இது வழுவமைதி யாம்.

(இவை ‘இன்றிவர்’ என்னும் ஒருமை எண்ணுப்பெயர்.) எண்ணான் உயர்திணை ஆண்பாற்பெயரும் பெண்பாற் பெயரும் வருங்காலத்து, ஒன்று என்னும் எண்ணானே ஒருவன் ஒருத்தி என வருவன அன்றி, இவற்றின்மேல் இரண்டு முதலிய எண்களான் இப்பெயர்கள் வருவன இலவாம். இருவன் இருத்தி - என்றல் தொடக்கத்தனவாகி வரின், பன்மைப் பகுதி யோடு ஒருமைவிகுதி புணர்ந்து பால்வழுவாம் என்றார். (நன். 288 சங், நன். 287 மயிலை.)

ஒருவினை ஒடுச்சொல் -

{Entry: D04__283}

ஒன்றோடு ஒன்று இயைந்த ஒருவினையாகல் என்னும் பொருண்மைக்கண், உயர்பொருள் இழிபொருள் இரண்டும் ஒருவினையைக் கொண்டு முடியும்நிலை வரும்போது ஒடு என்ற மூன்றனுருபு உயர்ந்த பொருளோடு இணைத்துச் சொற்றொடர் அமைக்கப்படும்.

எ-டு : அரசனோடு இளையர் வந்தார்.

உயர்வாவது குலம் தவம் கல்வி வினை உபகாரம் முதலிய வற்றான் ஏற்படும் உயர்வு. சாத்தனொடு கொற்றன் வந்தான் - என உயர்வு இல்வழி வரும் ஒடு எண்ணொடு ஆகும்; ஒரு வினை ஒடு ஆகாது. (தொ. சொ. 92 நச். உரை)

ஒரு வேற்றுமைக்கே ஒன்றாகவும் பலவாகவும் உருபு வருதல் -

{Entry: D04__284}

இரண்டாம் வேற்றுமைக்கு ஐயுருபு ஒன்றே வரும். நான்காம் வேற்றுமைக்கு குவ்வுருபு ஒன்றே வரும்; ஆக பொருட்டு நிமித்தம் - என்பன நான்காவதன் சொல்லுருபுகளாம். முதல் வேற்றுமைக்கு ஆயவன் - ஆனவன் - ஆவான் - ஆகின்றவன் - என்னுமிவற்றை ஐம்பாலினும் கூட்ட வரும் இருபது சொற்களும் சொல்லுருபாம். மூன்றாம் வேற்றுமைக்கு ஆல் ஆன் ஒடு ஓடு - என்பன உருபுகள்; உடன், கொண்டு - போல்வன சொல்லுருபுகள். ஆறாவதற்கு அது -ஆது - அ - என்பன உருபுகள்; ‘உடைய’ சொல்லுருபு. ஏழாவதற்குக் கண் - கால் - கடை - இடை - முதலிய பலவும் உருபுகளாம். (இ. கொ. 22)

ஒலித்தல் தொழிற்பண்பின்மேல் வரும் உரிச்சொற்கள் -

{Entry: D04__285}

‘முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை, இரங்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை, கனை சிலை சும்மை கவ்வை கம்பலை, அரவம் ஆர்ப்போடு இன்னன - ஓசை.

எ-டு : ‘முழங்கு முந்நீ ர் முழுவதும் வளைஇ’ (புறநா. 18)

‘குடிஞை இரட்டும் கோடுயர் நெடுவரை’

ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம். 28)

கலிகெழு மூதூர்’, (புற. 52)
‘பறையிசை அருவி’ (ஐந். 126)

‘தோல் துவை த்து (புற. 5)
‘பிளிறு வார் இடிமுரசம் (அக. 122)

‘இரைக்கு ம் அஞ்சிறைப் பறவைகள்’ (சூளா. கல். 51)

‘இரங்கும் முரசின்’ (புற. 137 )

‘இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்’ (அக. 122)

‘காலை முரச ம் கனைகுரல் இயம்பும்’ (சிலப். 17: 1: 6)

‘இமிழ்கடல் வளைஇய ஈண்டக ன் கிடக்கை’ (புற. 19)

‘குளிறு முரசம் குணில்பாய’ (பு.வெ. 48 )

‘களிறும் களித்து அதிரும் கார்’ (பு.வெ. 37)

‘குரைபுனல் க ன்னி’ (சீவக. 39)

‘கனைகடல் தண்சேர்ப்ப’ (நாலடி 138)

‘சிலை த்தார் முரசம் கறங்க’ (புற. 36)

‘தள்ளாத சும்மை மிகுத க்கண நாடு நண்ணி’ (சீவக. 20)

‘கவ்வைநீர் வேலி’, (பு .வெ. 83)

‘வினைக் கம்பலை மனைச்சிலம்பும்’

‘அறைகழல் அரவ த் தானை’ (சூளா. சீய. 108)

‘ஆர்த்த பல்லியக் குழாம்’ (சூளா. தூது . 45) (நன். 459 சங்.)

ஒலியெழுத்திற்கும் வரியெழுத்திற்கும் இலக்கணம் வேண்டுவதே -

{Entry: D04__286}

ஒலியெழுத்தாவது செவி கருவியாக உணரப்பட்டு மனத் தின்கண் நிலைபெறுவது. இஃது எழுத்தின் ஒலிவடிவம். இவ்வெழுத்துக்களைக் கண்கூடாக உணரும் வகை அடை யாளமாக எழுதப்படுவது எழுத்தின் வரிவடிவம்.

‘புள்ளி யில்லா.....................’ (தொ. எ. 17 நச்.)

‘மெய்யீ றெல்லாம்...................’ (தொ.எ. 104 நச்.)

தொல்காப்பியனார் ‘மெய்யினியக்கம்’ (46) ‘மெய்யின் வழியது’ (18) என ஒலியெழுத்திற்கும் இலக்கணம் கூறுவார். தமிழில் உயிர்களுள்ளும் எகரமும் ஒகரமும் புள்ளிபெறும் என்று குறிப்பிடுதல் இன்றியமையாதது ஆதலின், மெய்யின் வரிவடிவு இலக்கணம் கூறுவதும் பொருந்துவதேயாம்.

நன்னூலார் ‘புள்ளிவிட் டவ்வொடு’ என்னும் நூற்பாவில் (89), ஒலிவடிவம் வரிவடிவம் இரண்டையும் ஒருங்கு கூறினார்.

(இவை பலமொழிகட்கும் பொதுவாம்.) (பி. வி. 26)

ஒவ்வொரு வேற்றுமை தனியே ஆகும் பகுபதம் -

{Entry: D04__287}

பகுபதவகைகளுள் ஒன்று இது. முதற்சொல் ஏற்கும் வேற்றுமை யுருபு வேறுபடுவது போல முடிக்கும் சொல்லும் வேறாக அமையவும், அந்த உருபும் முடிக்கும் சொல்லும் ஆகியவற்றின் பொருளை உள்ளடக்கி, முதற்சொல்லொடு விகுதிஒன்று சேர்ந்து பகுபதமாகி அத்தொடர்ப்பொருளைக் குறிப்பதாம். இதுவே ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறா தலாம்.

எ-டு : குழையினை அணிந்தவன் - குழையன்; கணக்கால் முயன்று உண்பவன் - கணக்கன்; ஆரூர்க்கு இறை வன் - ஆரூரன்; சிவனது சமயம் - சைவம்; தம்முடைய உறவினன் - தமன்

உருபு வேறுபடும்தோறும் முடிக்கும் சொல்லும் வேறானமை காண்க. மேலும் வருமாறு :

மருந்தினைக் கூட்டுவான் மருத்துவன்; மூன்று என்னும் எண்ணினைப் பெற்றவர் மூவர்; தொல்காப்பியனால் செய்யப் பட்ட நூல் தொல்காப்பியம்; மானத்தால் கெட்டவன் மானி; பகவற்குப் பாடியாடினான் பாகவதன்; அரசற்கு மகள் அரசி; வடக்கினின்றும் வந்தவன் வடமன்; வாணிகத்தின் ஆயினான் வாணிகன்; மரத்தினது கொம்பு மரத்தினது; குழலினது ஓசை குழலது; விசாகநாளில் பிறந்தவன் விசாகன்; அம்பலத்தில் ஆடியவன் அம்பலவன். (இ. கொ. 117)

ஒழியிசை எச்சம் -

{Entry: D04__288}

மன்னை ஒழியிசை, தில்லை ஒழியிசை, ஓகார ஒழியிசை - என மூன்று ஒழியிசை யிடைச்சொற்கள் உள.

எ-டு : ‘பண்டு கூரியதோர் வாள்மன்’ என்புழி, ‘இதுபோது வாய் கோடிற்று, இற்றது’ என, ஒழியிசைப் பொருள் மேல் முடிபு சென்றது.

‘வருகதில் அம்ம எம் சேரி சேர’ (அக. 276) என்புழி, ‘வந்தக்கால் இன்னதொன்று செய்வல்’ என்னும் சொல் ஒழிந்து நின்றது.

‘கொளலோ கொண்டான்’ என்புழி, ‘கொண்டுய்யப் போயி னான் அல்லன்’ என ஒழிவுபட வந்தது.

(தொ. சொ. 429 (248 249, 252) இள. உரை)

பத்துவகை எச்சங்களுள் ஒழியிசை யெச்சமும் ஒன்று. மன் தில் ஓ - ஆகிய ஒழியிசையெச்சம் மூன்றும் அவ்வொழியிசைப் பொருள்மேல் வரும் சொல்லையே தமக்கு முடிபாக உடையன.

எ-டு : ‘கூரியதோர் வாள்மன்’ - என்பது (இதுபோது) திட்ப மின்று என்பதனொடும், ‘வருகதில் அம்ம’ என்பது ‘வந்தால் இன்னது செய்வேன்’ என்பத னொடும் முடியும். ‘கொளலோ கொண்டான்’ என்பது ஓகாரம் ‘கொண்டான்’ என்பதனொடு முடிய, அது ‘கொண்டுய்யப் போமாறு அறிந்திலன்’ என்பதனோடு முடிந்தது; ‘கொண்டான்’ என்பது வந்து முடியாவிட்டால், அப்பொருண்மை தோன்றா தாம். (தொ. சொ. 434 நச். உரை)

ஒழியிசையாவது சொல்லவேண்டுவது ஒழிந்து குறிப்பான் உணரப்படுவது,

‘இவர் கல்வியாற் குறைவிலர்’ என்றவழி, ஒழுக்கத்தான் குறை யுடையர் என்றாதல் பொருளான் குறையுடையர் என்றாதல் ஒருபொருள் குறித்தவழி ஒழியிசைப்பொருள் பட்டவாறும், அதனானே அச்சொல் முற்றுப் பெற்றவாறும் கண்டுகொள்க. (தொ. சொ. 427 தெய். உரை)

ஒற்றுமைக் குறை -

{Entry: D04__289}

குறை என்பது ஆறாம் வேற்றுமை. அதன்பொருள் கிழமை. இஃது ஒற்றுமைக்குறை எனவும் வேற்றுமைக்குறை எனவும் இரு பகுப்பிற்று. பின்னது பல உட்பகுப்புக்களைக் கொண் டது; முன்னதன்கண் பகுதி இல்லை.

என்னுயிர், இராகுத்தலை : இவை ஒற்றுமை. தானும் உயிரும் வேறில்லை; இராகுவும் தலையும் ஒரு பொருளையே குறிப்பன. இரு சொற்களும் ஒரு பொருளையே குறித்தலின் ஒற்றுமைக் கிழமை எனப்பட்டன. (இ. கொ. 40)

ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆம் வினைகள் -

{Entry: D04__290}

தன்மைவினை வினைக்குறிப்பு முற்றும், முன்னிலைவினை வினைக்குறிப்பு முற்றும், வியங்கோள் வினைமுற்றும், வேறு இல்லை உண்டு - என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும், பெயரெச்சவினை வினைக்குறிப்பும், வினையெச்சவினை வினைக்குறிப்பும் இருதிணைக்கும் பொதுவினையாம். ஏனைய ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் - பற்றிய முற்றுக்கள் திணைபால்இடங்களில் ஒன்றற்குரியன. தன்மை முன்னிலை ஒருமைகள் ஆண்பெண் ணுக்குப் பொது. (நன். 322, 330)

ஒன்றறி கிளவி -

{Entry: D04__291}

ஒன்றன்பாலை அறிதற்குக் காரணமான சொல். பெயர்ச் சொற்களில் அது இது உது அஃது இஃது உஃது என்னும் சுட்டுப்பெயர்களும், யாது என்ற வினாப்பெயரும் போல்வன ஒன்றறி கிளவிகளாம். (தொ. சொ. 169 நச். உரை)

ஒன்றன்பாலைத் தெரிவிக்கும் வினைமுற்றும் ஒன்றறி கிளவி யாம். இவ்வினைமுற்று, து று டு - என்னும் குற்றிய லுகரங் களுள் ஒன்றனை ஈற்றில் கொண்டு வரும்.

எ-டு : வந்தது, கரியது; கூயிற்று , குளம்பின்று; குண்டுகட்டு.

து, று இரண்டும் தெரிநிலைவினையாயும் குறிப்பு வினை யாயும் வரும்; ‘டு’ குறிப்புவினையாகவே வரும். (தொ. சொ. 8 நச் உரை)

ஒன்றறி கிளவியாம் வினைமுற்று ஒன்றன் படர்க்கை எனவும் கூறப்படும். இதனை ஒன்றறி சொல் எனவும் கூறுப.

(தொ. சொ. 219, 3 நச். உரை)

ஒன்றறி சொல் -

{Entry: D04__292}

ஒன்றன்பாலை அறிதற்குக் காரணமான சொல். இஃது ஒன்றறி கிளவி எனவும், ஒன்றன் படர்க்கை எனவும் கூறப்படும். ‘ஒன்றறி கிளவி’ காண்க. (தொ. சொ. 3 நச். உரை)

ஒன்றன் கிழக்கு மற்றதற்கு மேற்கு ஆதல் -

{Entry: D04__293}

கிழக்கு மேற்கு என்பன ஓரிடத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்குக் கிழக்கு அதற்கு மேற்கு என ஒன்றனொடு சார்த்திக் கொள்ளப்படுவனவே யன்றி, இதுதான் கிழக்கு. இதுதான் மேற்கு - என வரையறுத்துக் கூறும் ஓரிடத்தை யுடையன அல்ல ஆதலின், ஒன்றற்குக் கீழ்ப்பாலது மற்றொன் றற்கு மேற்பாலதாகலாம். ஆதலின் அவ்வழக்கு வழாநிலையே அன்றி வழுவமைதி யன்று. (தொ. சொ. 17 சேனா. உரை)

ஒன்றன் படர்க்கை விகுதிகள் -

{Entry: D04__294}

து று டு - என்பன ஒன்றன் படர்க்கை விகுதிகளாம். ‘ஒன்றறி கிளவி’ காண்க. தகர உகரம் இறந்தகாலத்து வருங்கால் கடதறக்கள் முன் அகரம் பெற்றும், ஏனை எழுத்தின் முன் இகரமும் யகரஉயிர்மெய்யும் பெற்றும், யகரஉயிர்மெய்யே பெற்றும் வரும்.

எ-டு : புக்கன்று : உடன்பாடு ; புக்கிலது : எதிர்மறை; உண்டது : உடன்பாடு ; உண்டிலது : எதிர்மறை;
வந்தது : உடன்பாடு ; வந்திலது ; எதிர்மறை; சென்றது : உடன்பாடு ; சென்றிலது : எதிர்மறை.

இவை அகரம் பெற்றவை; இல் : எதிர்மறை இடைநிலை.

எஞ்சியது , உரிஞியது - இகரமும் யகரவுயிர்மெய்யும் பெற்றவை.

போயது, கூயது - யகரம் ஒன்றுமே பெற்றவை.

இனி, ஆ நின்று கின்று - என்பனவற்றொடு நிகழ்காலத்தின் கண் அகரம் பெற்று வரும்.

எ-டு : நடவாநின்றது : உடன்பாடு; நடவாநின்றிலது : எதிர்மறை. நடக்கின்றது : உடன்பாடு; நடக்கின் றிலது : எதிர்மறை. உண்ணாநின்றது : உடன்பாடு; உண்ணாநின்றிலது : எதிர்மறை. உண்கின்றது : உடன்பாடு; உண்கின்றிலது ; எதிர்மறை.

இனி, எதிர்காலத்தின்கண் உயிர்மெய்யான பகரமும் வகரமும் பெற்று உண்பது செல்வது - என உடன்பாட்டில் வரும்.

றகர உகரம் கடதற என்பனவற்றின் முன் அன்னும் இன்னும் பெற்றும், ஏனை எழுத்தின் முன் இன்பெற்றும், அவ்வின்னின் னகரம் திரிந்தும் இறந்தகாலம் பற்றி வரும்.

எ-டு : புக்கன்று : உடன்பாடு; புக்கின்று : எதிர்மறை; உண்டன்று : உடன்பாடு; உண்டின்று எதிர்மறை; (வந்தன்று : உடன்பாடு ; வந்தின்று ; எதிர்மறை; சென்றன்று : உடன்பாடு ; சென்றின்று : எதிர்மறை;) கூயிற்று : உடன்பாடு; கூயின்று : எதிர்மறை போயிற்று : உடன்பாடு ; போயின்று : எதிர்மறை.

எதிர்மறைக்கண் ‘இல்’ லின் லகரம் னகரமாய்த் திரிந்து நின்றமை காண்க.

டகர உகரம் மூன்று காலத்துக்கும் உரிய வினைக்குறிப்பாய் வரும்.

எ-டு : குண்டுகட்டு, குறுந்தாட்டு (தொ. சொ. 219 நச். உரை)

ஒன்றன்பால் பெயர் -

{Entry: D04__295}

வினாவின்கண்ணும் சுட்டின்கண்ணும் கலந்து அவற்றினுட னாயும், வினாவவும் சுட்டவும் படாது வேறாயும் வரும் பொருளாதி ஆறனையும் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயரும், சுட்டொடு கூடிய ஆய்தத்தைப் பொருந்திய துவ்விகுதி ஈற்றுப் பெயரும், ஒன்று என்னும் எண்ணாகு பெயரும், இவைபோல்வன பிறவும் அஃறிணை ஒருமைப் பெயராம். வருமாறு :

எது யாது ஏது; அது இது உது; குழையது - நிலத்தது - மூலத்தது கோட்டது - குறியது - ஆடலது ; அஃது இஃது உஃது; ஒன்று; பிறிது மற்றையது (முதலியன) (நன். 279 சங்.)

ஒன்றன்பால் வினைமுற்று -

{Entry: D04__296}

து று டு என்னும் குற்றியலுகர ஈற்றன ஒன்றன்பால் வினை முற்று; டு குறிப்புவினைக்கே வரும். து று - தெரிநிலைக்கும் குறிப்பிற்கும் பொதுவாக வரும். துவ்விகுதியே இடம் நோக்கி றுவ்விகுதியாகத் திரிதல் கூடும்.

எ-டு : நடந்தது - நடக்கின்றது - நடப்பது; அணித்து, சேய்த்து : முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் - து; வந்தன்று கூயிற்று ; அற்று இற்று எற்று: இறந்தகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் - று;
குண்டுகட்டு ஆதிரைநாட்டு பொருட்டு : குறிப்புப் பற்றியே வருதல் - டு.

எற்று என்றாற் போல, ஏது யாது - என்ற குற்றியலுகர ஈற்றவும், அது இது - என்றல் தொடக்கத்து முற்றுகர ஈற்றவும் வினைக் -குறிப்பாம் என்பது பெற்றாம். (நன். 328 சங்.)

ஒன்றன்பால் வினையீற்றைத் தறட - எனக் கூறிய முறை -

{Entry: D04__297}

நெடுங்கணக்கு முறைப்படி ட த ற என்றே கூறவேண்டும் வினையீறுகளை; தகரம் முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலானும், றகரம் இறந்தகாலம் ஒன்றே பற்றி வருதலானும், அதுதானும் தகரத்தின் திரிபாதல் கூடும் ஆகலானும், டகரம் வினைக்குறிப்பு ஒன்று பற்றியே வருதலானும் இச்சிறப்பு முறையால் தறட எனக் கூறினார் ஆசிரியர். (தொ. சொ. 217 சேனா. உரை)

ஒன்றன்பால் வினையீறு -

{Entry: D04__298}

‘ஒன்றறி கிளவி’ காண்க.

ஒன்றாய்த் தோன்றல் வகை ஆறு -

{Entry: D04__299}

ஆறாம் வேற்றுமை, ஒற்றுமைக் குறையும் வேற்றுமைக் குறையும் என இரு பகுதித்து. அவற்றுள் வேற்றுமைக்குறை, ஒன்றாய்த் தோன்றல் - உரிமையாய்த் தோன்றல் - வேறாய்த் தோன்றல் - என மூன்று உட்பிரிவுகளை யுடையது. அவற்றுள் ஒன்றாய்த் தோன்றல் கீழ்க்காணுமாறு ஆறு பிரிவுகளை யுடையது.

ஒன்றன்கூட்டத் தற்கிழமை - எள்ளது குப்பை; பலவின்ஈட்டத் தற்கிழமை - படையினது குழாம்; திரிபின்ஆக்கத் தற்கிழமை - கோட்டது நூறு; சினைத் தற்கிழமை - சாத்தனது கண்; குணத் தற்கிழமை - நிலத்தினது அகலம்; தொழில் தற்கிழமை - சாத்தனது வரவு. (இ. கொ. 40)

ஒன்றியல் கிழமை -

{Entry: D04__300}

ஆறாம் வேற்றுமையது உடைமைப்பொருளின் ஒரு கூறாகிய தற்கிழமை வகைகளுள் பிரிக்க முடியாத பண்பு தொழில் - போல்வன பற்றிய ஒன்றியற்கிழமையும் ஒன்று. இஃது இயற்கை - நிலை - என்னும் முடிக்கும் சொற்களை யுடையது.

எ-டு : சாத்தனது இயற்கை, நிலத்தது அகலம் - இவை குணம் பற்றிய இயற்கைக்கிழமை. சாத்தனது நிலைமை, சாத்தனது இல்லாமை - இவை தொழிற் பண்பு பற்றிய நிலைக்கிழமை.

சாத்தனது இயற்கை, இல்லாமை - போல்வன சாத்தனிட மிருந்து எளிதில் பிரிக்க முடியாத தொடர்புடையன ஆதலின், இவை பண்புத் தற்கிழமையாக உள்ளன. (தொ. சொ. 80 சேனா. உரை)

ஒன்று, துலாம், நாழி முதலியன பற்றிய செய்தி -

{Entry: D04__301}

“ஒன்று துலாம் நாழி உழக்கு ஆழாக்கு கோல் - என்பன அவ் அளவுகருவிகளை உணர்த்தின் இயற்பெயராம். இம்மணி ஒன்று, இப்பொன் துலாம், இப்பால் நாழி, இந்நெய் உழக்கு, அவ்வெண்ணெய் ஆழாக்கு, இம்மனை ஒருகோல் என அவ்வக்கருவிகளான் அளக்கப்படும் பொருளை உணர்த்தின் ஆகுபெயராம்.” என்பாரும் உளராலோ எனின், அக்கருவி களும் இயற்பெயரானன்றி இவ்வரையறைக் குணப்பெயரான் உணர்த்தப்படுதலின் ஆகுபெயராய் இவற்றுள்ளே அடங்கு வதல்லது வேறெனப்படா என மறுக்க. (இ. வி. 192)

ஒன்று பத்து முதலாயின ஆகுபெயராதல் -

{Entry: D04__302}

ஒன்று பத்து நூறு ஆயிரம் - என்னும் எண்ணுப்பெயர்களும் வரையறைப்பண்பின் பேர் பெற்ற ஆகுபெயர் எனக் கொள்க. அவ்வெண்ணுப்பெயரின் அறிகுறியாகிய அலகுநிலைத் தானங்களும் அப்பெயர ஆயின எனக் கொள்க. [ ‘ஆறு அறி அந்தணர்’ (கலி. கட.) என்புழி, ஆறு என்னும் வரையறைப் பண்புப் பெயர் அப்பண்பினையுடைய அங்கத்தினை உணர்த்தி நின்றது. ‘நூற்றுலா மண்டபம்’ ( சீவக. 2734) என்புழி, நூறு என்னும் வரையறைப் பண்புப் பெயர் நூறடி உலாவுதலை யுடைய நிலப்பரப்பைக் குறித்தது. ] நச்சினார்க்கினியர் உரைத்தவாறே இவரும் உரைத்தார். (தொ. சொ. 120 கல். உரை)

‘ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்று’தல் -

{Entry: D04__303}

ஒரு சொல் வினையான் வேறுபட நில்லாது பொதுவினை கொண்டு பொதுப்பட நின்றுழியும், வினை வேறுபட்டாற் போல, ‘இன்னது இது’ என வேறுபட்டு நிற்றலும் வழக்கிடத் துண்டு.

எ-டு : மா வீழ்ந்தது : வீழ்தல்வினை வண்டு - மரம் - விலங்கு - என எல்லாவற்றுக்கும் பொதுவேனும், ‘இவ் விடத்து இக்காலத்து இவன் சொல்லுகின்றது இம்மாவினை’ என ஒன்றனை உணர்த்தி நின்றவாறு காண்க. என்றது, வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல் ஒருகால் வினை வேறுபடாத பலபொருள் ஒருசொல் போல நிற்கும் என்றவாறு.

(தொ. சொ. 54 நச். உரை)

வினையான் வேறுபடும் பலபொருள் ஒருசொல் பொதுவினை கொள்ளின், பிரிந்து ஒருசொல்லோடு ஒன்றிப் பொருள் தோன்றும்.

எ-டு : யானை முறித்தலான் மா வீழ்ந்தது : மா - மரம்.
அம்பு படுதலான் மா வீழ்ந்தது : மா - விலங்கு.

மா என்பது வினையான் வேறுபடும் பலபொருள் ஒருசொல். யானை முறித்தலும் அம்பு படுதலும் ஈண்டுப் பிறசொற்கள். இவை சார்பாக அடுத்தன. (தொ. சொ. 52 தெய் உரை)

ஒன்றொழி பொதுச்சொல் -

{Entry: D04__304}

‘இருதிணை ஆணுளும் பெண்ணுளும் ஒன்றினை ஒழிக்கும் பொதுச்சொல்’ காண்க.

ஓ section: 15 entries

‘ஓஒதல் வேண்டும்’ : செய்யும் என்னும் முற்று ஆகாமை -

{Entry: D04__305}

‘ஓஒதல் வேண்டும்’ (கு. 653) என்பது ஒரு சொல்லாய்த் ‘தவிர்வா ராக’ என்று வியங்கோள் பொருள் தருதலின், ‘வேண்டும்’ என்பதைத் தனியே பிரித்துச் செய்யும் என்னும் முற்றாகக் கோடல் தகாது. (தொ. சொ. 229 நச். உரை)

ஓகார இடைச்சொல் -

{Entry: D04__306}

பிரிநிலை வினா எண் எதிர்மறை ஒழியிசை தெரிநிலை சிறப்பு ஐயம் - என்னும் பொருள்களில் ஓகார இடைச்சொல் வரும்.

எ-டு : ‘கான ம் காரெனக் கூறினும், யானோ தேறேன்’ (குறுந். 21) - ஓகாரம் தேறுவார் பிறரின் பிரித்தலின் பிரிநிலை. சாத்தன் உண்டானோ? - வினா. யானோ கொள் வேன்? - எதிர்மறை. கொளலோ கொண் டான் - கொண்டுய்யப் போகலன் ஆயினான் என்றலின், ஒழியிசை. திருமகளோ அல்லள்; அரமகளோ அல்லள்; ‘இவள் யார்’ என்று ஆராய்தலின் தெரி நிலை. ‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே (கள. 36) - இது மிகுதியை உணர்த்தலின், சிறப்பு; இச் சிறப்போகாரம் அளபெடுத்தே வரும். பத்தோ பதினொன்றோ கொடு - ஐயம்.

(வினா ஓகாரமே ஓசைவேறுபாட்டான் சொல்லுவானது குறிப்பான் எதிர்மறைப்பொருள் தரும். சிறப்போகாரம் மொழி முதற்கண் வரும்.) (தொ. சொ. 258 நச். உரை)

‘சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ’ (அக. 46)

என ஈற்றசையாயும்,

‘கலக்கொண்டன கள்ளென்கோ

காழ்க்கொண்டன சூடென்கோ’

என எண்ணுப் பொருட்டாயும்,

‘நீங்கி னளோஎன் பூங்க ணோளே’ (ஐங். 375)

என இரக்கக் குறிப்பாயும் வரும். (தொ. சொ. 297 நச். உரை)

சிறப்பினும் வினாவினும் தெரிநிலையினும் எண்ணினும் எதிர் மறையினும் ஒழியிசையினும் ஈற்றசையினும் ஓகாரம் வரும்.

வருமாறு :

‘ஓஒ இனிது’ (கு. 1176) - சிறப்பு.

அவனோ, வல்லனோ - வினா.

நன்றோ அன்று, தீதோ அன்று - தெரிநிலை.

முத்தன் என்கோ அத்தன் என்கோ சித்தன் என்கோ நித்தன் என்கோ’ - எண்.

யானோ கொண்டேன் (நீ யன்றோ என்று பொருள் பட்டமை யான்) - எதிர்மறை.

கொளலோ கொண்டான் (கொண்டுய்யப் போகான் என்று பொருள்பட்டமையான்) - ஒழியிசை.

‘அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ’ - ஈற்றசை. (நேமி. இடை. 5 உரை)

கொளலோ கொண்டான் - கொண்டுய்யப்போயினான் அல்லன் - என்றல் தொடக்கத்து ஒழிந்த சொற்களைத் தகுதலின், ஒழியிசை.

குற்றியே மகனோ - வினா.

ஓஒ பெரியன் - உயர்வுசிறப்பு ; ஓஒ கொடியன் - இழிவுசிறப்பு.

அவனோ கொண்டான்? - கொண்டிலன் என்னும் பொருள் தந்தவழி, எதிர்மறை.

அலியை நோக்கி, ‘ஆணோ? அதுவு மன்று; பெண்ணோ? அதுவுமன்று’ என்பது அத்தன்மை யின்மை தெரிந்தவழி நிற்றலின், தெரிநிலை.

உறுதியுணராது கெட்டாரை, ‘ஓஒ தமக்கோர் உறுதி உணராரோ’ என்றவழி, கழிவிரக்கப் பொருளைத் தருதலின், கழிவு.

‘காணிய வம்மினோ கங்குலது நிலையே’ - அசைநிலை.

‘அவனோ கொண்டான்’ - பலருள்நின்றும் ஒருவனைப் பிரித்தமை கருதியவழிப் பிரிநிலை. (நன். 423 சங்.)

ஓகாரஈற்றுப் பெயர் விளியேற்குமாறு -

{Entry: D04__307}

ஓகாரஈற்று உயர்திணைப் பெயரும் ஏனைய பெயரும் ஏகாரம் பெற்று விளி ஏற்கும்.

எ-டு : கோ - கோவே (வேட்கோ - வேட்கோவே) (தொ. சொ. 124 நச். உரை)

(பல்கோட்டுக் கோ - பல்கோட்டுக் கோவே

பல கோடுகளையுடைய அரைசு - அரசமரம்)

ஓசையின் நான்குவகை -

{Entry: D04__308}

எழுத்து அல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருளை அறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி மிறிஞி - என்றாற்போல வரும் ஓசையும் என ஓசை நால்வகைப்படும். இந்நான்கனுள் பின் நின்ற இரண்டும் சொல்லதிகாரத்துள் ஆராயப்படுவன. (இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசைக்குமிடத்துப் பொருளை அறிவுறுத்தாது வரும் ஓசையாம்.)

(தொ. சொ. 1 கல். உரை)

ஓசை வகை -

{Entry: D04__309}

சொற்களை உச்சரிக்கும் முறை. உயிரெழுத்துக்களே ஓசை பெறுபவை; அண்ணம் முதலிய தானம் பற்றி வருவது இது. எடுத்தல் வடமொழியில் உதாத்தம் எனவும், படுத்தல் அநுதாத்தம் எனவும், நலிதல் சுவரிதம் எனவும், விலங்கல் பிரசயம் எனவும் கூறப்படும். எடுத்தல் வினைமுற்றுப் போலவே நிற்கும் வினையாலணையும் பெயரொடு வரும்; படுத்தல் வினைமுற்றுடன் வரும்; வடிவத்தில் ஒன்றேயாய்ப் பொருளில் வேறுபடும் ‘சரூபச் சிலிட்டம்’ என்ற சொல்லோடு உதாத்தம் அநுதாத்தம் எனும் இரண்டும் வரும். நலிதல் என்பது உதாத்தமும் அநுதாத்தமும் கூடி மேல் எழும் ஓசை யில் முன்பாதி உதாத்தமும் பின்பாதி அநுதாத்தமும் கூடி இரண்டும் அளவில் குறைவது. விலங்கல் என்பது சுவரிதத்தி னும் மேலெழுந்து ஒலிப்பது. இந்த ஓசை பற்றி இலக்கண நூலாரிடைக் கருத்து வேறுபாடு உண்டு.

‘நெறிநின்றார் நீடுவாழ் வார்’ (கு. 6)

‘மாணடி சேர்ந்தார்’ (கு. 3)

நெறிநின்றார், சேர்ந்தார் - என்னும் வினையாலணையும் பெயர்களை எடுத்தும், நீடு வாழ்வார் - என்னும் வினை முற்றைப் படுத்தும் உச்சரித்தல் வேண்டும். (பி. வி. 40)

ஓடாக் குதிரை -

{Entry: D04__310}

ஓடாக் குதிரை, பாடாப் பாணன் - என்றல் தொடக்கத்தனவும் ஓடாமலைச் செய்த, பாடாமலைச் செய்த - என்னும் வாய் பாடாகவே கொள்க; பெயரெச்சஎதிர்மறை வாய்பாடாம். (நன். 339. மயிலை)

ஓம்படைக் கிளவி -

{Entry: D04__311}

பாதுகாத்தலாகிய பொருளைத் தெரிவிக்கும் சொல்.

எ-டு : புலிபோற்றி வா - என்ற தொடரில், போற்றி என்பது ஓம்படைக்கிளவி. புலியைப் போற்றி வா, புலியாற் போற்றி வா - என இரண்டனுருபும் மூன்றனுருபும் இவ்வோம்படைச் சொல்லுக்கு ஒத்த உரிமையவாய் வந்தன. (தொ. சொ. 98 நச். உரை)

ஓம்படைக்கிளவியில் உருபு மயங்குதல் -

{Entry: D04__312}

ஓம்படைக்கிளவியாவது பாதுகாத்தலைத் தெரிவிக்கும் சொல். பாதுகாவலைத் தெரிவிக்கும் வினைச்சொல் தொகைச் சொல்லாகப் புணரின், ஓம்படைக்கிளவி இரண்டாம் வேற் றுமைக்கு முடிக்கும் சொல் ஆகலானும், மூன்றாம் வேற்றுமை ஏதுப்பொருளுக்கும் முடிக்கும் சொல் ஆகலானும் இருவழியாகவும் பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.

எ-டு : புலிபோற்றிவா : புலியைப் போற்றிவா, புலியான் போற்றிவா

இரண்டாம்வேற்றுமைப் பொருட்கண் புலி செயப்படு பொருள்; மூன்றாம்வேற்றுமைப் பொருட்கண் போற்றி வருதலுக்குப் புலி ஏது. புலியான் போற்றிவா என்பது புலியான் ஆகிய ஏதத்தைப் போற்றிவா - என விரியும். (தொ. சொ. 98 நச். உரை)

ஓப்புதல் - இழத்தல், அறுத்தல் குறைத்தல், தொகுத்தல் - பிரித்தல், ஆக்கல் - சிதைத்தல் : வேறுபாடு -

{Entry: D04__313}

ஓப்புதல் - ஒரு தொழில் உறுவிக்கப்பட்டுத் தானே போதல்;
இழத்தல் - தொழிற்பயன் உற்ற மாத்திரையான் ஒருவன் கொண்டு போகப் போதல். அறுத்தல் - சிறிதும் இழவாமல் வேறுபடுத்தல்; குறைத்தல் - சிறிது இழக்க வேறுபடுத்தலும் பெருமையைச் சுருக்குதலும். தொகுத்தல் - விரிந்தது தொகுத்தல்; பிரித்தல் - தொகுத்தது விரித்தல். ஆக்கல் - மிகுத்தல் ; சிதைத்தல் - கெடுத்தல். (தொ. சொ. 73 நச். உரை)

ஓரறிவு ஆதியா உயிர் ஐந்து -

{Entry: D04__314}

புல்லும் மரமும் முதலியன மெய்யால் பரிசித்து அறியும் ஓரறிவுயிர்களாம்.

இப்பியும் சங்கும் முதலியன, மெய்யறிவேயன்றி, இரசத்தை யும் அறியும் அறிவோடு ஈரறிவுயிர்களாம்.

கறையானும் எறும்பும் முதலியன, கீழ்ப்போன இரண்டறிவு களே அன்றி, மூக்கால் கந்தத்தையும் அறியும் அறிவொடு மூவறிவுயிர்களாம்.

தும்பியும் வண்டும் முதலியன, கீழ்ப்போன மூன்றறிவுகளே யன்றி, கண்ணால் உருவத்தையும் அறியும் அறிவொடு நாலறி வுயிர்களாம்.

வானவரும் மக்களும் நரகரும் விலங்கும் புள்ளும் கீழ்ப்போன நாலறிவேயன்றி, செவியால் சத்தத்தையும் அறியும் அறி வோடு ஐயறிவுயிர்களாம். (நன். 445 - 449 சங்.)

ஓரியலோடு ஓரியல் மாறுபாடு -

{Entry: D04__315}

‘இடையுரி, தழுவுதொடர் அடுக்கு என ஈரேழே’ (நன். 152) - இவ்விதி எழுத்ததிகாரத்தில் உயிரீற்றுப் புணரியலில் இடம் பெற்றுள்ளது. இதன்கண் இடைச்சொல்தொடர் அல்வழிப் புணர்ச்சி எனப்படுகிறது. ‘ஒற்றுயிர் முதலீற்று உருபுகள் புணர்ச்சியின், ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே’
(நன். 242) - இஃது எழுத்ததிகாரத்து உருபு புணரியலில் இடம் பெற்றுள்ள விதி. இதன்கண், இடைச்சொல்லாகிய வேற் றுமைஉருபு பெயரொடு கூடும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி எனப்படுகிறது. இவ்வாறு ஓரியலோடு ஓரியல் மாறுபடுகிறது. (இ. கொ.6)

ஓருருபு அடுக்கு -

{Entry: D04__316}

உழவை வாணிகத்தைச் செய்யும் (ஐ), சோற்றான் தண்ணீ ரான் வயிறு நிறைக்கும் (ஆன்), அந்தணர்க்கு சான்றோர்க்கு ஆதரவாளன் (கு), நிலத்தினும் வானினும் பெரிது (இன்), நல்லாற்றது தீயாற்றது என்னாது கொள்ளும் (அது), அரங்கிலே அறையிலே நடிக்கும் (இல்) - எனப் பல பெயர்க் கண் ஓருருபு வந்து ஒருசொல்லான் முற்றுப் பெற்றன.

(தொ. சொ. 99 தெய். உரை)

ஓருருபு ஏனை உருபொடு சிவணலும், உருபு தொகுதலும் -

{Entry: D04__317}

ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமையுருபொடு பொருந்தலும், தொக்குநின்று நடத்தலும் குற்றமில்லையாம்.

வருமாறு : சாத்தனதனை, சாத்தனதனோடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதுவது, சாத்தனதன்கண்; நிலங் கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை, குன்றக் கூகை - என முறையே காண்க. (மு.வீ. பெய. 84 உரை)

ஓரெழுத்திற்கு ஒரு சாரியையும் பல சாரியையும் -

{Entry: D04__318}

‘வல்லெழுத் தென்ப கசட தபற’ ‘மெல்லெழுத் தென்ப ஙஞண நமன’ ‘இடையெழுத் தென்ப யரல வழள’ (தொ. எ. 19,20,21) - என மெய்யெழுத்துக்கள் அகரச்சாரியை ஒன்றே பெற்றன. தொல்காப்பியனார் அகரத்தைச் சாரியை எனக் கருதவில்லை. மெய்கள் அகரம் பெற்றே குறிக்கப்படும். ஆகவே, காரம் கரம் கான் - என்பவற்றையே ஆசிரியர் சாரியை எனக் கருதினார். நன்னூலாரே ‘மெய்கள் அகரமும்’ (நன். 126) என அகரத்தைச் சாரியையாக்கிக் கூறியவர்.

இனி ஓரெழுத்திற்குப் பல சாரியைகள் வருமாறு : அகரம், அகாரம், அஃகான் என அகரவுயிர்க்கு இம்மூன்று சாரியை கள் வந்தன. (இ. கொ. 104)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணல் -

{Entry: D04__319}

உயர்திணைப்பெயர்களும் விரவுப்பெயர்களும் விளியேற்கு மிடத்து, ஓகாரஈற்றுப் பெயர்களும் பெரும்பான்மை குற்றுகர ஈற்றுப் பெயர்களும் சிறுபான்மை முற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்கும்.

எ-டு : கோ - கோவே; வேந்து - வேந்தே ; திரு - திருவே.

(தொ. சொ. 124, 125 நச். உரை)

க section: 72 entries

கட்டிய சொல் -

{Entry: D04__320}

இதனை இலக்கணக்கொத்து பொய்யுரை எனப் பெயரிட்டு, மலடிமகன் - முயற்கொம்பு - ஆகாயப்பூ - என்று உதாரணம் காட்டும். பிரயோகவிவேகம் எடுத்துக்காட்டுவனவும் அன்ன. அவை வருமாறு:

கூர்மரோமகம்பலம் - யாமைமயிர் கம்பளி, துன்னூசிக் குடர் - குத்தூசி போன்ற குடர் (உள்ளே பொந்து இல்லாத ஊசியை உள்ளே உள்ளீடுடையதாய்க் கொள்கலனாகவும் இருக்கும் குடருக்கு உவமை கூறியது.) ; பொய்ப்பொருள் என்பது கருத்து.

பலபொருள் ஒருசொல்லும் ஒருபொருட் பலசொல்லுமான நானார்த்தபதமும் சமானார்த்தபதமும் கட்டிய வழக்கென வடநூலார் சிலர் கருதுவர் (பி. வி. 19)

கட்புலன் ஆகா ‘ஒருவினை ஒடு’ -

{Entry: D04__321}

சூலொடு கழுதை பாரம் சுமந்தது என்பது கட்புலனாகா ‘ஒருவினை ஒடு’ (தொ. சொ. 75 ப. உ)

கடதற- க்கள் காலம் உணர்த்துமாறு -

{Entry: D04__322}

கடதற - க்கள் முதனிலையை அடுத்து வருங்கால் இறப்பும், ஈற்றுநிலையை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும்.

எ-டு : நக்கான், உண்டான், உரைத்தான், தின்றான் - இவை முதனிலையை அடுத்து இறந்தகாலம் காட்டின.

உண்கு, உண்டு, வருது, சேறு; உண்கும், உண்டும், வருதும், சேறும் - இவை இறுதிநிலையை அடுத்து எதிர்காலம் காட்டின.

‘யாம் அவணின்றும் வருதும்’ (சிறு. 143) என்றாற்போல இறுதிநிலை அடுத்துச் சிறுபான்மை நிகழ்காலம் காட்டுதலு முண்டு. (தொ. சொ. 204, 205 நச். உரை)

கடப்பாடு இல்லாதன -

{Entry: D04__323}

பெயர்நிலைக் கிளவியின் ஆகுந, திசைநிலைக் கிளவியின் ஆகுந, தொன்னெறி மொழிவயின் ஆகுந, மெய்ந்நிலை மயக்கின் ஆகுந, மந்திரப் பொருள்வயின் ஆகுந - இவை யெல்லாம் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத் தான் யாப்புறவுடையன அல்ல.

1. பெயர்நிலைக் கிளவியின் ஆகுந:

இஃது ஒருசார் வழுவமைக்கின்றது. தத்தம் பொருளுணர்த் தாது பெயர்ந்த நிலையை யுடைய சொல்லான் வரும் செய்யுள்.

‘ஒள்வாள், கறையடி யானைக் கல்லது, உறைகழிப் பறியா வேலோன் ஊரே’ (புறநா. 323 : 5 - 7)

வேலோன் : பொருள் பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மையாய்த் தலைவன் என்ற பொருளையே தந்தது.

‘செழுந்தா மரையன்ன வாட்கண்’ (சீவக. 8) வாட்கண் என்பது கண் என்ற பொருளே தந்தது. (தொ.சொ.449 நச். உரை)

உயர்திணைப்பெயர் உயர்திணைப் பொருள்மேல் வழங்கப் படுதலின்றியும் அமைதல்.

எ-டு : நம்பி என்னும் உயர்திணைப்பெயர் ஓர்யானை மேலானும், ஒருகோழிமேலானும், பிறவற்றின் மேலானும் நிற்கும். நங்கை என்பது ஒரு கிளியையும் குறிக்கும். (தொ. சொ. 444 இள. உரை)

ஒருதிணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவன : ஓர் எருத்தை நம்பி என்று வழங்குதலும், ஒரு கிளியை நங்கை என்று வழங்குதலும் ஆம், பிறவும் அன்ன. இவை வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவு உடையன அல்ல. (தொ. சொ. 449 சேனா. உரை)

தன் பொருளொழியப் பிறிது பொருள்படும் என்றவாறாம். ஒருசொல் இரண்டு பொருள்பட நின்றவழி, ஒரு பொருளை உணர்த்தும் இசை எஞ்சி நிற்குமன்றே? அஃது இசையெச்சம் என்று கொள்க. வேங்கை என்பது ஒரு மரத்துககுப் பெயர்; புலிக்கும் பெயராயிற்று; அதுவுமன்றிக் ‘கை வேம்’ என்ற பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிது பொருள் உணரின், அதை உணர்த்தும் ஓசை எஞ்சிநின்றது என அறிக. இது பலபொருள் ஒரு சொல்லன்றோ எனின், ஆம். பல பொருட்கண் ஒரு சொல் வருவதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்துகின்றது. என்னை உணர்த்திய வாறெனின், வேங்கை என்னும் சொல் புலிப்பொருண்மை உணர்த்திற்றா யின், மரப்பொருண்மை உணர்த்தும் சொல் யாது எனக் கடா வரும். அக்கடா, வேங்கை என்னும் சொல்லின்கண்ணே மரப் பொருண்மையினை உணர்த்துவதோர் ஓசை எஞ்சிநின்ற தெனினல்லது விடை பெறாதாம். அதனானே இலக்கணம் உணர்த்தியவாறு அறிந்து கொள்க. (தொ. சொ. 439 தெய். உரை)

தெய்வச்சிலையார்க்கு இஃது இசையெச்சம்.

2. திசைநிலைக் கிளவியின் ஆகுந :

இஃது ஒருசார் வழுவமைதி; திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவன. அவை புலியான், பூசையான் - என்னும் தொடக்கத்தன. புலி, பூசை என்பன திசைச்சொற்கள்; இவை ஆன் பெற்று வந்தன. (சேனா உரை)

திசையான் நிலைபெற்ற பெயரான் வரும் தென்னன், வடமன், குடக்கோ, தென்பாண்டி என இவை திசைநிலைக்கிளவி.

(சொ. 449 நச். உரை)

செந்தமிழ்நாட்டு வழங்கும் சொல் திசைச்சொல்லாகியவழிப் பொருள் வேறுபடுதல்.

எ-டு : கரை என்பது வரப்பிற்கும் பெயராயினும், கருநாடர்

விளித்தற்கண் வழங்குப. (தெய். 439 உரை)

3. சினைநிலைக் கிளவியின் ஆகுந :

ஏனையோர் ‘திசைநிலைக் கிளவி’ என்று பாடம் கொள்ப. இஃது ஒருசார் வழுவமைதி. வெண்கொற்றப் படைத்தலை வன், வெள்ளேறக் காவிதி: முன்னர்க் கிளவியாக்கத்துச் சிறப்புப் பெயர் நின்றவழி இயற்பெயர் வைத்துக் கூறுக என்றார். இனிச் சினைச்சொற்கணாயின் அது வேண்டுவ தன்று என்பது கருத்து. (இள. 443 உரை)

4. தொன்னெறி மொழிவயின் ஆகுந :

சொல்லிடத்துப் பழைய நெறியான் ஆய்வரும் சொல். முதுமொழி, பொருள் உடையனவும் பொருளில்லனவும் என இருவகைப்படும். ‘யாட்டுளான் இன்னுரை தாரான்’ என்றது, இடையன் எழுத்தொடு புணராது பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறான் என்று பொருள் தந்து நின்றது.

யாற்றுட் செத்த எருமை யீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் - என்பது. ‘குயவன் சுள்ளையின் எழுந்த புகையான் ஆய மேகம் தந்த நீரான் எருமை சாதலின், அதனை இழுத்தல் ஊர்க்குய வர்க்குக் கடனாயிற்று’ என ஒரு காரணம் உள்ளது போலக் கூறுகின்றது, உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின், பொரு ளுணர்த்தாதாயிற்று. (நச். உரை)

முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில் லன இயைந்தனவாய் வருவன.

எ-டு : ‘யாற்றுள் செத்த......... கடன்’ என்பது. (சேனா. உரை)

தொன்னெறி மொழிவயின் ஆகுந : ‘தொன்னெறி மொழி’ என்றதனான், முந்தும் வழக்காகித் தொடர்புபட்டுச் செய்யுளகத்தும் பாவழக்கினும் வரும் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறா மா’ என்றவழி, குன்று - ஏறு - ஆமா எனக் குன்றின்கண் ஏறாநின்ற ஆமா எனவும் (ஆக்களும் பிறமாக்களும் எனவும்) படும்; குன்றின்கண் ஏறா மா - எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர் மொழிதானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள்வேறு உணர்த்தலின் அப்பொருண்மைகளை உணர்த்தும் இசை எஞ்சி நின்றது. (தெய். 439 உரை)

5. மெய்ந்நிலை மயக்கின் ஆகுந -

இஃது ஒருசார் வழுக்காத்தலாகும். ‘தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்’ (17) என்புழி, மங்கல மரபினாலும் குழுவின் வந்த குறிநிலை வழக்கினாலும் கூறப்படுவன தத்தம் இலக்கணத்தானும் சொல்லப்படும்.

சுடுகாட்டை நன்காடு என்னாது சுடுகாடு என்றும், செத் தாரைத் துஞ்சினார் என்னாது செத்தார் என்றும் கூறவும் அமையும் என்றவாறு. பொற்கொல்லர் பொன்னைப் பறி என் னாது பொன் என்றே வழங்குதல் போல்வனவும் அமையும் என்றவாறு. (தெய். உரை)

பொருள்மயக்காகிய பிசிச்செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவன. அவை

‘எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார்

தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா

நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடொறும்

பேணற் ககமைந்தார் பெரிது’

என்பது புத்தகம் என்னும் பொருள்மேல் திணை திரிந்து வந்தவாறு. (சேனா. உரை)

ஒருமைப்பொருளான் கூறவே பன்மைப்பொருள் தோன்றி மயங்கும் மயக்கினான் ஆகும் செய்யுள்கள்.

எ-டு : ‘இல்வாழ்வான் என்பான்’ (கு. 41)

‘தினைத் துணையும், தேரான் பிறனில் புகல்’ (கு. 144)

‘நட்புஅரண் ஆறும் உடையான்’ ( கு. 381)

‘வறியவன் இளமைபோல்’ (பாலைக்கலி . 10 : 1)

என்றாற்போல்வன எல்லாம் ஒருமைப்பெயர் கூறிற்றேனும் பன்மைப்பொருள் உணர்த்துதலின் மெய்ந்நிலை மயக்க மாயின. மெய் - பொருள். (நச். உரை)

மெய்ந்நிலைமயக்கமாவது பொருள்நிலை மயக்கம் கூறுதல். ‘குருகு கருவுயிர்ப்ப ஒருதனி ஓங்கிய, திருமணிக் காஞ்சி’ (மணி. 18 : 55, 56) - குருகு என்பது மாதவி என்ற கொடிக்குப் பெயராத லின், அப்பெயருடையாளைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்கும் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்று ஒட்டி மணிமேகலை என்பாள்மேல் வந்தது. இவ்வாறு பொருள் நிலை மயங்க வருவனவும் இசையெச்சமாம். (தெய். உரை)

6. மந்திரப் பொருள்வயின் ஆகுந :

‘நிறைமொழி மாந்தர் ஆணையி ற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப’ (பொ. 490) என்பது மந்திரப்பொருட்கண் அப்பொருட் குரித்தல்லாச் சொல் வருவன. இதற்கு உதாரணம் மந்திரநூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க. இவை வழங்கிய வாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புற வுடைய அல்ல.

(சேனா, நச். உரை)

மந்திரம் என்பது பிறர் அறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறும் சொல். அதன்கண் ஆவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டு வரும் குழுவின் வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லான் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிற பெயரிட்டு வழங்குதலும் என இருவகைப் படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசையெச்சம் ஆயின. அவற்றுள் பொருட்கு வேறு பெய ரிட்டன: வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப் பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறுபெயரிட்டு வழங்குமாறு : ‘மண்ணைச் சுமந்தவன் தானும்’ என்னும் செய்யுளுள் ‘நமசிவாய’ என்னும் பதம் உணர்த்தப் பட்டது. ‘இசையெச்சம் ஐவகை’ காண்க. (தெய். உரை)

கடி என்னும் உரிச்சொல் -

{Entry: D04__324}

கடி என்னும் உரிச்சொல் வரைவு கூர்மை காப்பு புதுமை விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு அச்சம் முன்தேற்று (தெய்வம் முதலியவற்றின்முன் நின்று தெளிவித்தல்) ஐயம், கரிப்பு - எனப் பெரும்பான்மை குறிப்பும், சிறுபான்மை பண்பும் உணர்த்தும்.

எ-டு : ‘கடிந்த கடிந்துஒரார் செய்தா ர்க்கு’ (கு. 658) - வரைவு; ‘கடிநுனைப் பகழி’ - கூர்மை; ‘கடிமர ம் தடியும் ஓசை’ புற. 36 - காப்பு; ‘கடியுண் கடவுட்கு இட்ட ’ (குறுந். 105.) - புதுமை; ‘கடுந்தேர் குழித்த ஞெள்ளல்’ புற. 15 - விரைவு; ‘கடும்பகல் ஞாயிறு’ கலி. 145 : 26 - விளக்கம்; ‘கடுங்கால் ஒற்றலின்’ பதிற். 25 - மிகுதி; ‘அம்பு துஞ்சும் கடியரண்’ புற. 20 - சிறப்பு; ‘கடி உருமின்’, ‘கடிய மன்றநின் முரசம்’ - அச்சம்; ‘கடுஞ்சூள் தருகுவ ன் நினக்கே’ அக. 110 - முன்தேற்று; ‘கடுத்தனள் அல்லளோ அன்னை’ - ஐயம்; ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி - கரிப்பு; இவ்வுரிச்சொல் பெரும்பான்மை திரிந்து நிற்கும்.

வரைவு - நீக்குதல்; காப்பு - காவல். (தொ. சொ. 383, 384 நச். உரை)

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு வரைவு புதுமை கூர்மை கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தேற்றம் - என்னும் பன்னிரண்டன் மேலும் கடி என்னும் உரிச்சொல் நடக்கும்.

வருமாறு :

‘கடியார் கலுழி நீந்தி’ - விரைவு; ‘ கண்ணாடி அன்ன கடிமார்பன்’ (சீவக. 1574) - விளக்கம்; கடுந் தொழில் - மிகுதி; கடி மலர் - சிறப்பு; மனை கடிந்தான் - வரைவு; ‘கடிமலர்ப் பிண்டி’ (யா.கா.கட.) - புதுமை; வாள்வாய் கடிது - கூர்மை; ‘கடிமிளகு தின்ற’ - கரிப்பு; ‘கடுத்தபின் தேற்றுதல்’ (கு. 693) - ஐயம்; ‘கடிநகர்’ (சிலப். 15 : 96) - காப்பு; ‘கடுஞ்சூள் தருகுவன்’ அக. 110 - தெளிவு; ‘கடும் பாம்பு’ - அச்சம் (நேமி. உரி. 3); ‘ ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி’ (அக.7) - காப்பு; ‘கடிநுனைப் பகழி’ - கூர்மை; ‘கடிமாலை சூடி’ (சீவக. 1574) - நாற்றம்; ‘கண்ணாடி அன்ன கடிமார் பன்’ (சீவக. 2327) - விளக்கம்; ‘கடியர மகளிர்க்கே கைவிளக் காகி’ - அச்சம்; ‘கடிமலர் மிசைபூத்து’ - சிறப்பு; எம்அம்பு கடிவிடுதும்’ (புறநா. 9) - விரைவு; ‘கடிஉண் கடவுட் கு இட்ட செழுங்குரல்’ (கடி உண் - புதிது உண்ணும்) (குறுந். 105) - மிகுதி, புதுமை; ‘கடிமுரசு’ - ஆர்த்தல்; ‘கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி’ (நாலடி. 156) - வரைவு; (கடித்து : கடிந்து - சோலையினின்று நீக்கிக் கொணர்ந்து) ‘கடிவினை முடிகென’ - மன்றல்; ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ - கரிப்பு (நன். 457 சங்.)

‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ -

{Entry: D04__325}

வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின் ஈறு திரியினும் அமையும். ‘பாடினியும் இழைபெற்றிசி ன் பாண்மகனும் பூப் பெற்றிசின்’ (புறநா. 11) - எனப் படர்க்கைவினை ஈறு திரிந்து காலப்பொருண்மை வழுவாமையின் குற்றமின்றாயிற்று. ‘யான் இவளினும் பிரிக; மெலிகோல் செய்தேன் ஆகுக’ (புறநா. 71) எனத் தன்மைக்கண் எதிர்காலம் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டான் வந்தது. ‘பகலே....... வினவிச் சென்மோ’ (நற். 365) என்றவழிச் செல்லாமோ எனற்பாலது சென்மோ என வந்தது. (தொ. சொ. 442 தெய். உரை)

கடுவன், மூலன், என்பன -

{Entry: D04__326}

செய்யுளிடத்துக் கருப்பொருள் கூறும்வழிக் கிளக்கப்படும் இயற்பெயராகிய விரவுப்பெயர் உயர்திணையை உணர்த்தாது அஃறிணையையே உணர்த்துதற்கு எடுத்துக்காட்டான ‘கடுவன் முதுமகன் கல்லா மூல ற்கு, வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’ என்புழிப் பயின்ற கடுவன் மூலன் என்பன. இவை குரங்கினை உணர்த்தும் பெயர்கள். இவை அன்ஈற்றான் ஆண்பாற்பெயர் போலத் தோன்றினும், அவ்வந்நிலத்து மக்கட்பெயராகச் செய்யுட்கண் இன்மையின் இவை அஃறிணைக்கே உரிய. (தொ. சொ. 199 கல். உரை)

கண் கால் முதலியன உருபு ஆகாமை -

{Entry: D04__327}

கண் கால் முதலியவற்றை உருபு என்பாரும் உளராலோ எனின், உருபாயின் , ஊர்ப்புறத்து இருந்தான் - ஊர்அகத்து இருந்தான் - கைவலத்து உள்ளது கொடுக்கும் - எனப் புறம், அகம், வலம் - என்பவற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணம் காட்டல் பொருந்தாமையானும், அவை வேறு வேறுபட்ட இடப்பொருளாகிய பெயராய் நிற்றலல்லது பெயர்ப் பொருளை ஐ - ஓடு - கு - இன் - அது - போல வேறு படுத்தும் தன்மையவாய உருபுகளாய் நிற்றல் இன்மையானும் உருபு ஆகா என்க. இவற்றைப் பொருள் என்றலே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் கருத்து என்பது சேனாவரை யருரை யான் உணர்க. வாய் - வயின் - பாடு - அளை - முதலியன இடப்பொருளவாகிய பெயராய் நிற்றலல்லது பெயர்ப் பொருளை வேறுபடுத்தும் தன்மையவாய் நிற்றல் இன்மையின் அவையும் ஏழனுருபு ஆகாமையும், கண் கால் முதலியன போலத் தம்முள் பொருள் வேறுபாடுடைய அன்மையின் (வாய் முதலிய) இவ்விடப்பொருள் பற்றிக் கண் என் உருபு வாராமையும் உணர்க. (இ. வி. 204 உரை)

கண்டிசினோர் -

{Entry: D04__328}

கண்டோர் என்பதன் திரிபு இது; செய்யுள்முடிபு எய்தி நின்றதோர் ஆரீற்று இறந்தகால முற்றுச்சொல். வழக்குச் சொல்லாகிய கண்டோர் என்பது இவ்வாறு திரிந்தமையின் கண்டிசினோர் என்பது ஆரீற்று இறந்தகால வினைத்திரி சொல்லாம், என்றோர் ‘என்றிசினோர்’ ஆயினவாறு போல. (தொ. சொ. 1 சேனா., நச். உரை)

கண்டீர் முதலிய சொற்கள் -

{Entry: D04__329}

கண்டீர் கேட்டீர் சென்றது போயிற்று - முதலிய சொற்கள் வினாவொடு கூடியவழி, அப்பொருள்நிலை இசைக்கும் சொல்லாம். அச்சொற்களொடு கூடாதவழி அசைநிலை ஆகும். கண்டீரோ, கேட்டீரோ, சென்றதோ, போயிற்றோ - வினா. ‘படையிடுவான் மற்கண்டீர் காமன்’ (கலி. 109 : 19) : கண்டீர் அசை. பிறவுமன்ன. (தொ. சொ. 421 தெய். உரை)

கண் தோள் - முதலியன பன்மைமுடிபு கொள்ளா இடம் -

{Entry: D04__330}

கண்ணும் தோளும் முலையும் அத்தன்மைய பிறவுமாகிய பன்மை சுட்டிய சினை உணர வரும் சொல் பன்மையீற்றான் வாராக்கால் ஒருமையீற்றான் வரப்பெறும் ; அவ்வழி அவ்விரு பொருட் கண்ணும் கிடப்பதொரு பொதுமையைக் குறிக்கும் என்றவாறு. (இருபொருள் - இரட்டையாகிய கண் முதலியன.)

எ-டு : கண்நொந்தது, முலை எழுந்தது, தோள் தசைத்தது - என்றவழி, கண் முதலியன பன்மை உணர்த்திற்றில ஆயினும் அச்சாதியொருமையை அவை உணர்த்திய வாறு.

‘இருநோக்கு இவள் உண்கண் உள்ளது’ (கு. 1091) என்றவழி, நோக்காகிய ஒருமை குறித்து வந்தது.

கண் நல்லள் என்பது கண்ணினது நன்மையுடையள் எனவும், கண்நொந்தான் என்பது கண் நோவப்பட்டான் எனவும் பொருள்பட வந்தன. (தொ. சொ. 60 தெய். உரை)

கண் முதலாயின இடவேறுபாடு காட்டுமாறு -

{Entry: D04__331}

அரசன்கண் சென்றான் என்பது, நெறிக்கண் சென்றான் என்றாற்போல, அரசன் ஆதாரம் ஆதலின்றி அவனிடத்துச் சென்றான் என, உருபு புலப்படாமல் இடம் என்பதொரு பொருளுணர்த்தியவாறு.

‘ஊர்க் கால் நிவந்த பொதும்பர்’ (கலி. 56) : ஊரைச் சார்ந்ததாகிய பொதும்பர் எனச் சார்பாகிய பொருள்மேல் வந்தது.

சுவர்ப்புறத்துப் பாவை : பாவைக்கு ஆதாரம் ஆகின்றது சுவர் ஆயினும் அச்சுவரகத்துப் பாவை இன்மையின், புறம் என ஒரு பொருள் தோன்ற நின்றது.

எயிலகத்துப்புக்கான் : புறம் உண்டாகலின் அகம் என ஒரு பொருள் தோன்ற நின்றது.

சிலையுட்பொருள் : சிலைப்புறத்துப் பொருளின்மையின் ‘உள்’ என ஒரு பொருள் தோன்ற நின்றது.

அரசனுழை இருந்தான் : அரசன்அருகு என ஒரு பொருள் தோன்ற நின்றது.

மாடத்தின்கீழ் இருந்தான் : மேல்அன்மை காட்டியது.

மாடத்தின்மேல் இருந்தான் : கீழ்அன்மை காட்டியது.

அரசன்பின் இருந்தான் : முன்அன்மை காட்டியது.

‘காட் டுச்சார் ஓடும் குறுமுயால்’ : காட்டைச் சார்ந்த இடம் தோன்ற வந்தது.

எயிற்புடை நின்றான் : எயிலின்கண் ஒரு பக்கம் என்பது தோன்றியது.

மனை அயல் இருந்தான் : மனை அல்லாத பிறவிடம் தோன்ற வந்தது.

தேவகை : அரங்கின் வடக்கு இருந்தான், தெற்கு இருந்தான் - வடக்கு, தெற்கு - என ஒரு பொருள் தோன்றி நின்றது.

அரசன்முன் இருந்தான் : பின்அன்மை காட்டியது.

கலத்தின் இடைநின்றான், கடைநின்றான், தலை நின்றான் : மரக்கலத்தின் இடவேறுபாடு காட்டின.

அரசன் வலத்திருந்தான் அமைச்சன்; அரசன்இடத்திருந் தான் சேனாபதி : வலம் இடம் - எனச் சில பொருள் தோன்றி நின்றன.

அன்ன பிற உருபுகளாவன : இல் வயின் வழி மாட்டு தேம் மருங்கு பால் - முதலியன. (இவற்றுள் உருபு மாத்திரமாய் நிற்பனவும் இடவேறுபாடு உணர்த்துவனவும் பெயராகி நிற்பனவும் உள.) (தொ. சொ. 80 தெய். உரை)

கண் முதலாயின சொற்கள் -

{Entry: D04__332}

கண் முதலியன ஏழாம் வேற்றுமையுருபுகள். ஏழனுருபுகள் பல வாதலின் அவற்றை விரிக்கின்றார். ‘அன்ன பிறவும்’ என்பதனான் தேஎத்து என்னும் தொடக்கத்தனவும் கொள்க.

(தொ. சொ. 77 இள. உரை)

கண் முதலாயின பத்தொன்பதும், அவை போல்வன பிறவும் ஏழன் திறத்தன. கண் முதலாயின ஏழனுருபின் பொருள்பட வந்த சொற்கள். கால் புறம் அகம் இவற்றின் பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி உணர்க.

கண் முதலாயின உருபாயின், முதல் நூற்பாவில் கூறிய ‘கண்’ என்பதனை அடுத்த நூற்பாவிலும் எடுத்துக் கூறல் கூறியது கூறலாம். புறம் அகம் வலம் - என்பன அத்துச்சாரியை கொடுத்துக் கூறப்படுதலின், சாரியை பெறுவன பெயரே ஆதலின், புறம் அகம் வலம் - என்பன கண் என்ற ஏழனுருபின் பொருள்பட வரும் பெயர்களேயாம். உருபின் பொருள்பட வரும் சொற்க ளோடு இணையும்வழியும், தொடக்கம் குறுகும் யான் - யாம் - நீ - தான் - தாம் - முதலியன என் - எம் - நின் - தன் - தம் - முத லாகத் திரிந்தே தம்பொருட்டு - தம்முடைய - என்றாற் போல உருபேற்கும். ஆதலின், கண் கால் - முதலியன ஏழன் உருபின் பொருள்பட வந்த பெயர்ச் சொற்களே. (தொ. சொ. 82 சேனா உரை)

கண் என்பது ஏழனுருபுகளுள் சிறந்தது. கால் - புறம் - முதலியன சிறப்பில்லா உருபுகள். அவற்றொடு கண் என்ப தனையும் சேர்த்துக் கூறியது, ‘கண்ணகன் ஞாலம்’ என்புழி அக் ‘கண்’ ஞாலம் தன்னையே உணர்த்தி ஓரிடத்தினை வரை யறுத்து உணர்த்தாது நிற்பதோர் இடைச்சொல் என்பது உணர்த்துதற்கு. (தொ. சொ. 83 நச். உரை)

தேவகை (திசைக்கூறு) என்னும் பொருள் வரையறைப்படாது சொல்லுவான் குறிப்பிற்றாய் நிற்றலின் இடத்துள் அடக்கா ராயினார். இவ்விரண்டு பொருட்கும், (கண், தேவகை) வேறு சூத்திரம் செய்யாது ஏனையவற்றோடு ஓதினார், சூத்திரம் சுருங்குதற்கு. (நச். உரை)

இவை கண்உருபின் பொருள் என்றார் சேனாவரையர். ‘கண் அகல் ஞாலம்’ என்புழிக் கண் என்பதன் பொருள், இடத் துக்கண் என்புழி வரும் கண் என்னும் இடைச்சொல் பொருளினின்றும் வேறுபட்டது. ஆலின்கீழ்க் கிடந்த ஆ, மரத்தின்மேல் இருந்த குரங்கு - இவற்றை ஆலின்கண் கிடந்த ஆ, மரத்தின்கண் இருந்த குரங்கு - என்று கண்உருபு கொடுத்து மக்கள் வழங்குதல் இல்லை. பெயர்த்தன்மைப்பட நிற்கும் உருபின்பின் அத்துச் சாரியை வருமாதலின், கண் முதலியன ஏழனுருபுகளே. (நச். உரை)

கண் கால் முதலியன பெயரைச் சாராது தனித்தனி வரின் பெயராகி உருபு ஏற்கும்; பெயரைச் சார்ந்து இடமும் காலமும் ஆகிய பொதுமை உணர வரின், உருபு மாத்திரமாகி நிற்கும். (பிழைபட்டுள்ள பாடம் திருத்தப்பட்டது) இட வேறுபாடு உணரவரின், உருபு புலப்படாது பொருள் உணர வரும். அகத்தை, அகத்தொடு; புறத்தை, புறத்தொடு: இவை தனித்து உருபேற்றன. அரங்கினுள் அகழ்ந்தான், மரத்துழை இருந்தான்: இவை உருபாகி நின்றன. (போரின்கண் வந்தான்: இடத்திற்கும் காலத்திற்கும் பொதுப்பட நின்றது.) அரசன் கண் சென்றான் என்பது, நெறிக்கண் சென்றான் என்பது போலச் சேறல் தொழிற்கு அரசன் ஆதாரமாதல் இன்றி அவனிடத்துச் சென்றான் - என உருபு புலப்படாமல் இடம் என்பதொரு பொருள் உணர்த்தியவாறு. (தொ. சொ. 80 தெய். உரை)

‘அன்ன பிறவும்’ என்பதனால், இல் வயின் வழி மாட்டு தேம் மருங்கு பால் - முதலியனவும் கொள்க. (தெய். உரை)

கண் முதலிய உருபுகள் -

{Entry: D04__333}

கண் என்பது ‘கண் அகல் ஞாலம்’ என்னுமிடத்து, ஞாலம் தன்னையே உணர்த்தி ஓரிடத்தினை வரையறுத்து உணர்த் தாது நிற்கும் இடைச்சொல்லாம். கண் முதலிய உருபுகள் ஓரிடத்தின் ஏகதேசத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை உணர்த்தியும், ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது இடம் என முழுதுணர்வு செல நின்றுழி ஏழாவதனையே உணர்த்தியும் வரும் சிறப்பின்மை உடையன. அவன்கால், தலை, புறம் - முதலியன அவனது கால், அவனது தலை, அவனது புறம் - என ஆறாம் வேற்றுமை. ஊர்க்கால் - பொழில்தலை - ஊர்ப்புறம் - என இடத்தை உணர்த்தும்வழி ஏழாம் வேற்றுமை. (தொ. சொ. 83 ப. உ)

கதழ்வு என்னும் உரிச்சொல் -

{Entry: D04__334}

இது விரைவு என்னும் குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘அண்டர், கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்’ (குறுந். 117) (தொ. சொ. 315 நச். உரை)

கதி தாது -

{Entry: D04__335}

செல் என்னும் வினைப்பகுதி, செயப்படுபொருள் குன்றியதே யாயினும், நெறியில் சென்றான் - என ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் நெறியைச் சென்றான் எனவும் வரும். (பி. வி. 15)

கபிலபரணர் : தொகை விளக்கம் -

{Entry: D04__336}

கபிலபரணர்ப் பரவினான் என வருவழிக் கபிலனையும் பரண னையும் பரவினான் என வேற்றுமையுருபும் உடன் விரிதலின் உம்மைத்தொகை என்றது என்னையெனின், பரவினான் என்னும் வருமொழி நோக்கி வேற்றுமைத் தொகையாகவும், கபிலபரணர் என்னும் நிலைமொழி நோக்கி உம்மைத் தொகையாகவும் கொள்க. (நன். 409 இராமா. 368 சங்.)

கபிலரது பாட்டு : கிழமை -

{Entry: D04__337}

கபிலரது பாட்டு என்பது தொழிற்பண்புத் தற்கிழமை. (நன். 300 சங்.)

கம்பலை என்னும் உரிச்சொல் -

{Entry: D04__338}

இஃது அரவம் (ஓசை) ஆகிய இசைப்பொருண்மையினை உணர்த்தும்.

எ-டு : ‘களிறுகவர் கம்பலை போல’ அக. 96

(தொ. சொ. 349 நச். உரை)

கமம் என்னும் உரிச்சொல் -

{Entry: D04__339}

இது நிறைவாகிய குறிப்பினை உணர்த்தும்.

எ-டு : ‘கமஞ்சூல் மாமழை’ (முருகு. 7) (தொ. சொ. 355 நச்.)

கய என்னும் உரிச்சொல் -

{Entry: D04__340}

இவ்வுரிச்சொல் பெருமையாகிய பண்பினையும் மென்மை யாகிய பண்பினையும் குறிக்கும்.

எ-டு : ‘கயவாய்ப் பெரு ங்கை யானை’. (அக. 118), ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) - என முறையே காண்க. (தொ. சொ. 320, 322 நச். உரை)

கர்த்தரிப் பிரயோகம் -

{Entry: D04__341}

எழுவாய்த் தொடர். வினைமுற்றான பயனிலை செய்பவனைச் சுட்டி நிற்க, நிகழும் எழுவாய்த்தொடர் இருவகைப்படும். அவை வருமாறு:

1) செயப்படுபொருள் குன்றா வினைகொண்டு முடியும் தொடர் - சகன்ம கர்த்தரிப் பிரயோகம் (சகன்மம் - கன்மம் என்னும் செயப்படுபொருளொடு கூடிய வினை)

எ-டு : சாத்தன் ஆடையைத் தரும்.

2) செயப்படுபொருள் குன்றிய வினைகொண்டு முடியும் தொடர் - அகன்ம கர்த்தரிப் பிரயோகம். (அகன்மம் - கன்மத் தொடு கூடாதது)

எ-டு : சாத்தன் வரும்.

சாத்தன் வாழ்க, சாத்தன் வருக - இவை வியங்கோள் பெற்று முடிந்தன. இனி இவையன்றி,

1. தேவதத்தன் உண்டவன் - எனக் கிருத்து என்ற வினை யாலணையும்பெயர் பெற்றும்,

2. தேவதத்தன் கச்சினன் - என, விகுதி பெற்ற பெயரான தத்திதன் என்னும் குறிப்பு வினையாலணையும்பெயர் பெற்றும்,

3. தேவதத்தன் யாவன் (யார்) - என, பிரச்சினபதம் என்னும் வினாவினைப் பெற்றும்,

4. தேவதத்தன் அவன் - எனத் தற்சப்தத்தை - சுட்டுப் பெயரைப் பெற்றும்,

5. தேவத்தன் உண்டு - எனப் ‘பொருண்மை சுட்டல்’ என்ற சற்பாவபதத்தை - உளனாயிருத்தல் என்னும் ஒன்றையே காட்டும் குறிப்புவினையைப் - பெற்றும் எழுவாய்த் தொடர் என்னும் கர்த்தரிப் பிரயோகம் நிகழும். (பி. வி. 36)

கர்த்திரு காரகபேதம் -

{Entry: D04__342}

எழுவாய் வகை. இஃது 1. அபிகித கருத்தா 2. அநபிகித கருத்தா - என இரு வகைப்படும். அபிகித கருத்தா 1. கரும கருத்தா 2. சுதந்திர கருத்தா 3. ஏது கருத்தா - என மூவகைப்படும். அநபிகித கருத்தா ஒருவகையேயாம். அபிகித கருத்தா - தெரிநிலை எழுவாய்; அநபிகித கருத்தா - தெரியாநிலை எழுவாய்.

1. கருத்திருவத் பாவம் எனப்படும் இக்கரும முறுகருத்தா செயப்படுபொருள் எழுவாய்த்தன்மை பெற்று வருவது.

எ-டு : திண்ணை மெழுகிற்று

2. சுதந்திர கருத்தா என்பது தன் வசமாகிய கருத்தா. எ-டு : தேவதத்தன் சோற்றை அட்டான். சோற்றை அடும் தொழில் தேவதத்தனது செயலுக்குள் அமைவது ஆதலின், சுதந்திர கருத்தா ஆயிற்று.

3. ஏது கருத்தா - ஏதுவான எழுவாய். எ-டு : தேவதத்தன் எச்சதத்தனை அஞ்வித்தான். எச்சதத்தன் அஞ்சுதற்குத் தேவ தத்தன் ஏதுவாதல் காண்க.

இவை மூன்றும் தெரிநிலை எழுவாய்; இம் மூன்றிலும் கருத்தா வெளிப்படை. தெரியாநிலை எழுவாய் - எ-டு : தச்ச னால் எடுக்கப்பட்டது மாடம்; இதன்கண் மாடம் செயப்படு பொருள். அஃது எழுவாய் போல்நின்று செயப்பாட்டுவினை கொண்டது ஆதலின், தெரியாநிலை எழுவாயாம். (பி. வி. 11)

கர்த்திரு விசேடணம் -

{Entry: D04__343}

எழுவாய்க்குச் சேரும் அடைமொழிகள். பல பெயர் வந்து ஒருவினை கொள்வதும், இடைப்பிறவரலாய் நின்ற பெய ரெச்சமும் கர்த்திரு விசேடணமாம்.

எ-டு : ‘அகல் விசும்புளார் கோமான் இந்திரன்’ (கு. 25) எழுவாயாகிய இந்திரன் என்ற பெயர்க்குப் பல மொழிகள் அடையாக வந்தன. ‘காலார் கழலார் கடுஞ் சிலையார் கைக்கொண்ட வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன் கிளர்ந்தாலும் போல்வார்’ (பு. வெ. மா. 2 : 2)

- கழலார், சிலையார், வேலார் - முதலிய பல பெயர்கள் வந்து ‘உளர்ந்தார்’ என்னும் ஒருவினை கொண்டன. கைக்கொண்ட, வெருவந்த - என வந்த பெயரெச்சங்கள் எழுவாய்க்கு அடை யாகவே அமைந்தன. (பி. வி. 39)

கரண காரக பேதம் -

{Entry: D04__344}

மூன்றாம் வேற்றுமை வகை; அவை கருவி (கரணம்), காரணம் முதலியன.

கரணம், அகக்கரணம் புறக்கரணம் - என இருவகைப்படும். இவற்றை வடமொழியார் அப்பியந்தரம் பாகியம் என்று முறையே கூறுவர்.

எ-டு : ‘மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி’ கு. 453 அகக் கரணம் ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே’ கு. 282 என்பதும் அது. ‘நெய்யால் எரிநுதுப்பேம்’ கு. 1148 புறக்கரணம். கண்ணால் கண்டான், ஊசியால் குயின்ற தூசும் பட்டும் என்பனவும் அவை. (வெளிப்படையாகத் தூசும் பட்டும் தெரிபவை) (பி. வி. 12)

கரியன், கருமையன் : வேறுபாடு -

{Entry: D04__345}

கரியன் என்பது பண்பு பற்றி வரும் குறிப்பு வினைமுற்று. இவ்வண்ணமாய் இருப்பன் (இன்னன்) என்னும் பொருளு ணர்த்தி முதனிலையாய் நிற்றலின் பண்பாம். கருமையன் என்பது பண்புப் பெயர் உடைமைப்பொருளாய் நின்று கருமையை யுடையன் - என உருபேற்று நிற்றலின் உடைமைப் பொருளாம். (தொ. சொ. 215 நச். உரை)

கருத்தன் வகைகள் (1) -

{Entry: D04__346}

1. கருவிக் கருத்தா - கண்காணும், வணங்காத் தலை - போல்வன கருவிக் கருத்தாவாம். கண்ணும் தலையும் முறையே காண்ப தற்கும் வணங்குதற்கும் கருவியானவை. இவை தாமே தொழிலைச் செய்வனவாக வருதலின் கருவிக் கருத்தா ஆயின. இது பிரயோக விவேக நூலார்க்கு உடன்பாடன்று.

2. சம்பிரதான கருத்தா - கொள்வோராகிய இரப்போரை நான்காம்வேற்றுமைக்குரிய கொடைப்பொருளை விட்டு ஏற்போராகச் சொல்லுதல்.

எ-டு : ‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’ (தனிப்.) இதுவும்
பி. வி. நூலார்க்கு உடன்பாடன்று.

3. அதிகரண கருத்தா - இடப்பொருளை எழுவாயாக்கிக் கூறுதல்.

எ-டு : ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ (கு. 151) - அகழ்வார் இருத்தற்கு இடமான நிலத்தை அவர் களைத் தாங்கும் நிலமாகச் சொன்னது இக்கருத்தா வாம் இதுவும் பி. வி. நூலார்க்கு உடன்பாடன்று.

4. ஏது கருத்தா - சாத்தன் கொற்றனை அஞ்சுவித்தான் என்புழி, கொற்றன் அஞ்சுதற்குச் சாத்தன் காரணமாயினமை யின், சாத்தன் ஏது கருத்தா ஆயினன். ஏதுகருத்தா பிறவினை ஏற்கும். ஆதலின் இது ஏவுதல் கருத்தாவுமாம்.

காரணகாரியத் தொடரின்கண் அஃறிணைக்கண்ணும் ஏது கருத்தா பிறவினையாக வரும்.

எ-டு : ‘அல்லல் உழப்பிக்கும் சூது’ (கு. 938)

‘அம்ம கே ட்பிக்கும்’ (தொ. சொ. 276 சே.)

அம்ம என்னும் இடைச்சொல் ஒருவனைக் கேட்பிக்கும்; அவன் கேட்டலுக்கு அஃது ஏதுவாகும் என்றவாறு. பிறவும் அன்ன

ஆசிரியன் மாணாக்கனை அறிவித்தான் - இது பிறவினை. ஆசிரியன்: ஏவுதல் கருத்தா; மாணாக்கன்: இயற்றுதல் கருத்தா.

5. பாவ கருத்தா - வடமொழியில் பாவம் என்பது பண்பு தொழில் இரண்டையும் குறிக்கும்.

எ-டு : ‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா
இடும்பை தரும்’ (கு. 510)

தெளிவு ஐயுறவு - என்னும் தொழிற்பெயர்கள் எழுவாய் ஆயின.

‘கோறல் பிறவினை எல்லாம் தரும்’ (கு. 321) - இதுவுமது.

‘தூஉய்மை....... வாய்மை வேண்ட வரும்’ (கு. 364) - பண்புப் பெயர் எழுவாய் ஆயிற்று.

6. கருமமும் கருத்தாவும் தடுமாறி நிற்றல்.

எ-டு : ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ (தொ. பொ. 93 நச்.) கிழவன் கிழத்தியைக் காண்பான்; கிழத்தி கிழவனைக் காண்பாள். ஆதலின் ஒருகால், கிழவன்: கருத்தா, கிழத்தி : கருமம்; மற்றொருகால், கிழத்தி: கருத்தா, கிழவன் : கருமம் - என நிற்றல். (பி. வி. 11)

கருத்தன் வகைகள் (2) -

{Entry: D04__347}

கருத்தன் வகைகளை இறையனார் அகப்பொருளுரை நான்கு விகற்பங்களாகக் கூறும்.

1) கருத்தன் - எ-டு : தச்சன் எடுத்த மாடம், கொல்லன் வடித்த வாள்.

2) ஏது கருத்தா - ஏவினானைக் கருத்தா ஆக்குதல்.

எ-டு : அரசர் தொட்ட குளம், அரசர் எடுத்த தேவகுலம்.

3) கருவி கருத்தன் - கருவியைக் கருத்தா ஆக்குதல்

எ-டு : வாள் எறியும், சுரிகை குத்தும், இம்மிடா நாற்குருணி அரிசிச் சோறு அடும்.

4) கரும கருத்தன் - கருமமாகிய செயப்படுபொருளைக் கருத்தா ஆக்குதல்

எ-டு : திண்ணை மெழுகிற்று, கலம் கழுவிற்று. (பி. வி. 11) (இறை.கள. 18 உரை)

கருத்தா ஆகும் செயப்படு பொருள் -

{Entry: D04__348}

தன்னைப் புகழ்ந்தான், தன்னைக் குத்தினான், தன்னைக் காதலித் தான் - புகழ்ந்தானும் புகழப்படுவானும், குத்தினானும் குத்தப் படுவானும், காதலித்தானும் காதலிக்கப்படுவானும் ஒருவனே யாதல் காண்க. ‘செயப்படுபொருளின் ஏழ்வகை’ - காண்க. (இ. கொ. 31)

கருத்தா காரணம் -

{Entry: D04__349}

இது கர்த்திரு காரணம் எனப்படும். வினைமுதல் காரணம் ஆதல்.

எ-டு : இறைவனால் உலகம் உள்ளது - என்னுமிடத்து, உலகம் உளதாதற்கு இறைவனாகிய வினைமுதல் காரணம் ஆயிற்று. ‘மூன்றாம்வேற்றுமைக் கருவிக் கண் அடங்குவன’ - காண்க. (இ. கொ. 34)

கருத்தா நால்வகை -

{Entry: D04__350}

எ-டு : சாத்தன் சோறு அட்டான் - கருத்தாக் கருத்தா; அரசன் ஆலயம் எடுத்தான் - ஏதுக் கருத்தா; இவ்வாள் வெட்டும் - கருவிக் கருத்தா; சோறு தானே அட்டது - கருமக் கருத்தா. (தொ. சொ. 248 கல். உரை)

தானே வினைமுதலாவானைக் கருத்தாவாகச் சொல்லுவதும், ஏவினானைக் கருத்தாவாகச் சொல்லுவதும், செய்தற்கு உடனாய கருவியைத் தான் செய்ததாகச் சொல்லுவதும், செயப்படு பொருளைக் கருத்தாவாகச் சொல்வதும் இவை முறையே ஆம்.

கருத்தாவின் குணம் -

{Entry: D04__351}

அறிவாலாக்கிய காட்சி, அறிவாலாகிய காட்சி - எனவும்,

கண்ணாலாக்கிய காட்சி, கண்ணாலாகிய காட்சி - எனவும்,

மண்ணாலாக்கிய குடம், மண்ணலாகிய குடம் - எனவும் வரும் இவற்றிடை, ஆக்குதற்கு வினைமுதல் அறிவனும் குலாலனும்; ஆதற்கு வினைமுதல் காட்சியுணர்வும் குடமும் ஆம். இந்தக் காட்சியுணர்வும் குடமும் வினைமுதலான காலத்தில், அறிவு, கண் - மண், திரிகை - என்ற கருவிகள் ஏதுப்பொருளவாய் நின்றன. கருத்தா எனினும், வினைமுதல் எனினும் ஒன்று. மூன்றாம் வேற்றுமையில் வரும் ஏவுதல்கருத்தா இயற்றுதல் கருத்தா - என்னும் இருவகை வினைமுதலும் கருவி முதலாகிய காரணங்களைத் தொழிற்படுத்துவது எனக் காண்க.

தச்சனால் ஆகிய தேவகுலம், தச்சனாற் செய்யப்பட்ட தேர், அகத்தியனால் உரைக்கப்பட்ட தமிழ் - என்பன இயற்றுதல் கருத்தா. அரசனாலாகிய தேவகுலம், அரசனாற் செய்யப்பட்ட தேவகுலம், தேவரால் தரப்பட்ட திரு - என்றாற் போல்வன ஏவுதல் கருத்தா. ‘ஆக்கிய தேவகுலம்’ என வரின் மூன்றாம் வேற்றுமையின் உருபு கொள்ளாமல், அரசனும் தச்சனும் எழுவாயாக நிற்கும் எனக் கொள்க. அரசன் ஆக்கிய தேவ குலம் என வரின், மூன்றாம் வேற்றுமையுருபு கொள்ளாது என்றது என்னெனின், தன் புடைபெயர்ச்சியாகிய செய் வினை என்னும் தம் தொழில் தோன்றாது கருவியைத் தொழிற்படுத்தித் தான் ஏதுவாக நிற்பதும், செயப்பாட்டு வினையாகிய ‘தம்மின் ஆகிய தொழில்’ (தொ. எ. 156) வெளிப்பட்டுத் தான் ஏதுவாக நிற்பதும் மூன்றாம் வேற்றுமையிலே வரும் கருத்தாவின் குணம். தான் ஏதுவாகா மல் புடைபெயர்ச்சியாகிய செய்வினை என்னும் தம் தொழில் தோன்ற நிற்பது எழுவாயில் வரும் கருத்தாவின் குணம். ஆதலால், ஆக்கல் போக்கல் - என்றாற் போல்வன எழுவா யிலே வரும் வினைமுதற்குத் தம் தொழில்; ஆக்கப்படுதல் போக்கப்படுதல் - என்றாற் போல்வன மூன்றாம் வேற்றுமை யிலே வரும் வினைமுதற்குரிய தம்மினாகிய தொழில். இவை தம்முள் வேற்றுமை என்க.

அகத்தியனால் உரைக்கப்பட்டது தமிழ் - என்றவிடத்தே, உரைத்தல் தன் புடைபெயர்ச்சியாகிய தம் தொழில் தோன்றிய தன்றோ எனின், ‘உரைத்தல்’ செய்வினையாகிய தம் தொழில் என்றது போலவே, உரைக்கப்படுதல் செயப்பாட்டுவினை யென்னும் ‘தம்மினாகிய தொழில்’ ஆவதே யன்றி வேறு பகுக்கப்படாது என்க. இது பற்றியே ‘புள்ளியும் உயிரும் ஆயிறு சொல்முன்’ (எ. 256) என்னும் சூத்திரத்தில் ‘தம் தொழில்’ வேறு, ‘தம்மினாகிய தொழிலும் வேறு; எழு வாய்க்கண் வரும் வினைமுதல் வேறு, மூன்றாம் வேற்றுமை யில் வரும் வினை முதலும் வேறு - என்றுரைக்கப்பட்டது. அகத்தியன் தமிழ் உரைத்தான் - என்றவிடத்துத் தான் ஏதுவாகாமல் புடைபெயர்ச்சியாகிய உரைத்தல் என்னும் தொழில் தோன்றி நிற்றலும், அகத்தியனால் தமிழ் உரைக்கப் பட்டது என்றவிடத்துத் தான் ஏதுவாகித் தம்மினாகிய தொழிலும் வேறு, மூன்றாம் வேற்றுமையில் வரும் வினைமுத லும் வேறு - என்றுரைக்கப்பட்டது. அகத்தியன் தமிழ் உரைத் தான் - என்றவிடத்துத் தான் ஏதுவாகாமல் புடைபெயர்ச் சியாகிய உரைத்தல் என்னும் தொழில் தோன்றி நிற்றலும், அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது என்ற விடத்துத் தான் ஏதுவாகித் தம்மினாகிய தொழிலாகிய உரைக்கப்படுதல் என்னும் செயப்பாட்டு வினை வெளிப்பட்டு நிற்றலும் காண்க. இங்ஙனம் செயப்பாட்டுவினை வெளிப் பட்டு வினை முதல் ஏதுவாக நின்றபோது, செயப்பாட்டு வினைக்குரிய செயப்படுபொருள் எழுவாயாக நிற்றலும் காண்க.

(நன். 297 இராமா.)

கருத்தாவின் மூவகை -

{Entry: D04__352}

ஏவுதற்கருத்தா, இயற்றுதற் கருத்தா, இவற்றின் வேறாதற் கருத்தா எனக் கருத்தா மூவகைப்படும்.

எ-டு : அரசன் கோயிலைக் கட்டினான், தச்சன் கோயிலைக் கட்டினான், சாத்தன் உறங்கினான் - என முறையே காண்க. (நன். 295 இராமா.)

கருத்திரு கருமம் -

{Entry: D04__353}

எழுவாய் நிலையதாகும் செயப்படுபொருள்.

எ-டு : மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான் ஆசிரியன் - என்புழி, மாணாக்கன் தனித்தனியே போவானும், போக்கப்படுவானும் ஆவான். (பி. வி. 12)

கருத்திரு வற்பாவம் -

{Entry: D04__354}

எழுவாய் ஆகும் தன்மை. எ-டு : திண்ணை மெழுகிற்று. மெழுகப்பட்டது திண்ணை; திண்ணை - கருமம். இது கருத்தா போலக் கூறப்பட்டமையின் எழுவாய் ஆயிற்று. கரும கருத்தா என்பதும் இதுவே. (பி. வி. 11)

கருத்து இன்றாதல், கருத்து உண்டாதல், இருமையும் ஆதல் - என்னும் செயப்படுபொருள்கள் -

{Entry: D04__355}

சோற்றைக் குழைத்தான் - என்னுமிடத்து, அடுவானுக்குச் சோற்றைக் குழைக்கும் கருத்து இன்றாதலின், கருத்தின்றாதல்.

சோற்றை உண்பான் - என்னுமிடத்து, உண்பான் கருத்துடன் உண்டலின், கருத்துண்டாதல்.

எறும்பு மிதித்து வழியைச் சென்றான் - என்னுமிடத்து, எறும்பை மிதித்தல் கருத்து இன்மையும் வழியைச் செல்லுதல் கருத்துண்மையும் ஆகிய இருதிறமும் ஆதல்

‘செயப்படுபொருளின் ஏழ்வகை’ - காண்க. (இ. கொ. 31)

‘கருதலர்ச் சீறிய கடுங்கொல் யானை’ : தொடரிலக்கணம் -

{Entry: D04__356}

இத்தொடரில், சீறிய என்னும் பெயரெச்சத்திற்கும் அது கொண்ட யானை என்னும் பெயர்க்கும் இடையே ‘கொல்’ என்னும் வினைத்தொகைச் சொல் இடைப்பிற வரலாய் வந்ததன்று; வினைத்தொகை காலம் கரந்த பெயரெச்ச மாதலால், பெயரெச்ச வினை இரண்டு அடுக்கி யானை என்னும் ஒரு பெயர் கொண்டனவாம். (நன். 356 சங்.)

கருப்பொருள்களில் உயர்திணையை உணர்த்தா விரவுப்பெயர்கள் -

{Entry: D04__357}

திணைதோறும் உரிமைபூண்டு வழங்குகின்ற காளை மீளி முதலிய மக்கட்பெயர்களைத் தவிர ஏனையவாய்க் கருப்பொருள் கூறும்வழிக் கிளக்கப்படும் இருதிணைக்கும் உரிய பெயர், நால்வகை ஒழுக்கங்களின் (புணர்தல் இருத்தல் இரங்கல் ஊடல்) இடமாகிய இடத்தே அவற்றிற்கு உறுப்பாய்த் தோன்றுதலின் உயர்திணையை உணர்த்தாது அஃறிணையை உணர்த்தும்.

எ-டு : ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’ என்புழிக் கடுவன் மூலன் - என்பன உயர்திணை ஆண்பால் உணர்த்தும் அன்ஈற்றுப் பெயர்; அவை அஃறிணை ஆண்பாலையும் உணர்த்தி நிற்றலின் விரவுப்பெயராயினும், ஈண்டுப் பொருட்கு உபகாரப்படும் கருப்பொருளாய் நிற்றலின் அஃறிணைப் பெயராம். குமரி என்பதும் இங்கு விரவுப்பெயர் அஃறிணையாயிற்று. (தொ. சொ. 198 நச். உரை)

செய்யுளகத்துக் கருப்பொருளாகி நிலத்துவழித் தோன்றும் மாவும் புள்ளும் மரமும் முதலாயவற்றின்மேல் இடுகுறியாக வரும் இயற்பெயர், அஃறிணைப்பொருளைச் சுட்டுமே யல்லது உயர்திணைப்பொருண்மை சுட்டா. (தொ. சொ. 190 தெய். உரை)

இவ்விரவுப் பெயர்கள் அவ்வந்நிலத்து மக்கட்பெயராய் உயர்திணைமேல் வரின் என்னை குற்றம் என்றார்க்கு, அவ்வம் மக்களை இவ்விரவுப் பெயர்களால் கூறுதல் சான்றோர் செய்யுட் கண் காணாமையின் அது மரபன்று. (தொ. சொ. 199 கல். உரை)

அலவன் கள்வன் - என்பன நண்டுக்குப் பொதுவாக வழங்கப் படும் சாதிப்பெயர்அல்லது இயற்பெயருள் ஆண்மைப் பெயர் எனப்படா. குமரி என்பது வடமொழிச்சிதைவாய் வட மொழிப் பெயரே உணர்த்துதலின் விரவுப்பெயரேயாம். (தொ. சொ. 196 சேனா. உரை)

கருப்பொருள்களில் உயர்திணையை உணர்த்தும் விரவுப்பெயர்கள் -

{Entry: D04__358}

கருப்பொருள்களில் அவ்வந்நிலத்துத் திணைப்பெயராக வரும் காளை, விடலை முதலிய பெயர்கள் இருதிணையையும் உணர்த்தும் விரவுப்பெயராம். அவ்வந் நிலத்து மக்கட்கு வரையறுத்த பெயர்கள் ஏனை நிலத்து மக்களுக்கு ஏலா. ஆதலின் இப்பெயர்கள் அவ்வந்நிலத்துக்கு உரிமைபூண்ட திணைநிலைப் பெயர்களாம். (தொ. சொ. 197 சேனா. உரை.)

உயர்திணைப் பெயர்களும் அஃறிணையைச் சுட்டுமோ என்ற ஐயம் கடிந்து அவ்வந்நில மக்களாகிய ஊரன் மகிழ்நன் போல்வன உயர்திணையே சுட்டும் என வரையறுத்தவாறு.

(தொ. சொ. 200 கல். உரை)

ஓர் எருத்தையும் காளை - விடலை - என்றலின், திணைநிலைப் பெயர்களும் விரவுப்பெயர்கள் ஆயின.

உயர்திணையொடு பழகிப் போந்த பெயர்கள் இருதிணைக்கும் பொதுவாகி நிற்கும். அவை யானை சிங்கம் அன்னம் மயில் காளை - என இவ்வாறு வருவன. (தொ. சொ. 190 தெய். உரை)

கருமக் கருத்தா -

{Entry: D04__359}

செயப்படுபொருளை வினைமுதல் போல வினைமுதலின் தொழிலை அதன்மேலிட்டுக் கூறுதலும், செயப்படுபொருளை வினைமுதலாகவே கூறுதலும் கருமக்கருத்தா ஆம்.

எ-டு : இல்லம் மெழுகிற்று; அரிசி தானே அட்டது.

இங்கு மெழுகப்பட்டது அடப்பட்டது - எனற்பாலவற்றை, எழுவாயின் தொழிலையுடையது போல மெழுகிற்று எனவும், எழுவாயாகவே கருதி(த்தானே) அட்டது எனவும் கூறுதல் உலகவழக்கு மரபாம். (தொ. சொ. 248 நச். உரை)

கரும காரக பேதம் -

{Entry: D04__360}

செயப்படுபொருள் காட்டும் இரண்டாம்வேற்றுமை
வகை ; கருமம் என்னும் செயப்படுபொருள் 1) அபிகிதம் (தெரி நிலை) 2) அநபிகிதம் (தெரியாநிலை) என இருவகைப்படும்.

1) மாடம் தச்சனால் இயற்றப்பட்டது. இதன்கண் மாடம் வினைமுதலாகி முதல்வேற்றுமைக்கண் வந்தும், செயப்படு பொருள் ஆராய்ச்சியான் தெரிகின்றமை காண்க. இது தெரிநிலை.

2)அநபிகித கன்மம் ஆகிய தெரியாநிலைச் செயப்படு பொருள் (இதுவே செயப்படுபொருள் என வேறு எவ்வாற் றானோ புலப்படுவது தெரிநிலை. அங்ஙனமின்றி, வினைச் சொல் கொள்ளும் ஆற்றலாலேயே ஆராய்ச்சியின்றி இயல் பாகப் புலப்படுவது தெரியாநிலை.) இஃது ஐந்து வகைப்படும்.
1. ஈச்சிதம் (கருத்துள்வழி) 2. அநீச்சிதம் (கருத்து இல்வழி)
3. அவ்விரு வழியும் 4. கருத்தா கருமம் ஆதல் 5. அகதிதம் - என்பன. (கருத்துள்வழி, கருத்தில்வழி - என்னும் இரண்டும் நச்சினார்க் கினியரும் கல்லாடரும் தம் உரையில் கொண்டவை)

1. ஈச்சிதம் : பாயை நெய்தான், துவரப் பசித்தவன் சோற்றை யுண்டான் - பாயும் சோறும் கருத்துள்வழிப் பெற விரும்பிய செயப்படுபொருள்கள்.

2. அநீச்சிதம் : சோற்றைக் குழைத்தான், தீக்கனாவைக் கண்டான் - குழைத்தலும் தீக்கனவும் கருத்தில்வழிப் பெற விரும்பாமலேயே வந்த கருமங்கள். சோறும் உறக்கமும் தாம் விரும்பப்பட்டவை.

3. ஊரைச் செல்வான் பசும்புல்லை மிதித்தான் ; பாற்சோறு உண்கின்ற சிறுவன் அதன்கண் கிடந்த தூளி (தூசி) யையும் தின்றான் - இவற்றுள் ஊரைச் சேறலும் பாற் சோறுண்டலும் ஈச்சிதம்; புல்லை மிதித்தலும் தூசியைத் தின்றலும் அநீச்சிதம். ஆகவே இஃது ஈச்சிதாநீச்சிதம்.

(ஈச்சிதம் அநீச்சிதம் என்பன ஈப்ஸிதம் அநீப்ஸிதம் - என்னும் வடசொற்களின் திரிவுகள்)

4. மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான் ஆசிரியன், மகட்போக்கிய தாய் : இவற்றுள் மாணாக்கன் மகள் என்னும் இருவரும் தனித்தனியே போவாரும் போக்கப்படுவாரும் ஆகலின் கருத்தாவும் கருமமும் ஆயினர்.

5. அகதிதம் : வினை ஒன்று இரண்டு செயப்படுபொருள் கொள்ளுதல். ஒரு சில வினைகட்கே இத்தன்மை யுண்டு. அகதிதம் - வேறு வகையில் கூறப்படாதது; வேறு வேற்றுமைப் படுத்திக் கூறும் நோக்கமில்லாதது. அங்ஙனம் கூறின் பொருள் பொருந்தாமல் போம். ஆகவே அகதிதம் இருவகையாம்.

அ) பசுவினைப் பாலைக் கறந்தான், யானையைக் கோட்டைக் குறைத்தான் - இவை கதிதம் அல்லாத அகதிதம். பசுவினது பாலை, யானையது கோட்டை - என ‘அது’ உருபு விரித்தற்கு ஏற்குமாறு காண்க.

ஆ) ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினாவினான் - இதனை முன்னவே போல ஆசிரியனது என விரிப்பின் பொருள் படாதொழியும்.

துணைநிலை, ஈருருபு இணைதல் - என்னும் இதனைக். வடநூலார் துவிகர்மம் என்பர். அகதிதம் : தனித்தலைப்புள் காண்க. (பி. வி. 12)

கருமச் சார்ச்சி -

{Entry: D04__361}

மெய்யுற்றுக் கொள்ளும் தொடர்பு. தூணைச் சார்ந்தான் என்புழி, சார்ந்தவனொடு (தூண்) மெய்யுறுதலாகிய தொடர்பு கொண்டது. (தொ. சொ. 85 நச். உரை)

கருமச் சார்பு -

{Entry: D04__362}

இரண்டாம் வேற்றுமையின் சார்ச்சிப் பொருள்களின் சார்பின்கண் மெய்யுறுதல் அமையுமாயின் அது கருமச் சார்பு எனப்படும்.

எ-டு : தூணைச் சார்ந்தான் - ஈண்டுச் சார்ச்சி மெய்யுறுத லாம்.

தூணைச் சார்ந்தான் என்பதனைத் தூணின்கண் சார்ந்தான் - எனத் தூணைச் சார்தற்கு இடமாக்கி ஏழன் பொருளதாகக் கூறும் மரபு பண்டு இல்லை. (தொ. சொ. 85 நச். உரை)

கருமணி சட்டி -

{Entry: D04__363}

செயப்படுபொருள்மீது செல்லும் ஆறாம் வேற்றுமை.
எ-டு : கம்பரது இராமாயணம். இதன்கண், கம்பரால் இயற்றப் பட்ட செயப்படுபொருளாகிய இராமாயணம் என்னும் பொருளில் ‘கம்பரது’ என ஆறாம் வேற்றுமை வந்தது. ‘பொருள் மயக்கம்’ காண்க. (பி. வி. 14)

கருமணிப் பிரயோகம் -

{Entry: D04__364}

வினைச்சொல் செயப்படுபொருளைத் தழுவும் வகையில் படு - பெறு - எனும் துணைவினைப்பகுதிகளைச் சேர்த்து, எழுவாயை மூன்றாம் வேற்றுமையிலும் செயப்படுபொருளை முதல் வேற்றுமையிலும் வைத்து வினைமுடிவு தந்து வழங்கு தல் வட மொழியில் கருமணிப் பிரயோகம் எனப்படும். அம்மொழியில் ய (யக்) என்பது இணைக்கப்படும். தமிழில் படு - பெறு - சேர்க்கப்பட்டுச் செயப்பாட்டுவினை அமையும்.

சாத்தன் ஆடையைத் தரும் - என்ற தொடரைச் சாத்தனால் ஆடை தரப்படும் என்றும், குயவன் பானையை வனைந்தான் - என்ற தொடரைக் குயவனால் பானை வனையப்பெற்றது என்றும் கூறுவதே இது. இருவகையினும் பொருள் மாறுபடுதல் இல்லை. தமிழில் செயப்பாட்டுவினை செய்யுள் வழக்கில் மிகச் சிறுபான்மையே உண்டு.

எ-டு : ‘அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்’ (கு. 298)
‘மனத்தால்....... இனத்தால் இகழப்படுவர்’ (நாலடி. 180)

எனத் தமிழில் கருமணிப் பிரயோகம் வந்தவாறு. (பி. வி. 36)

கருமதாரயன் -

{Entry: D04__365}

பண்புத்தொகை வடமொழியில் கருமதாரயன் எனப்படும். இஃது ஏழ்வகைப்படும்.

1. விசேடண பூர்வபதம் - முன்மொழிப் பண்புப்பெயர்;
2. விசேடண உபயபதம் - முன்மொழி பின்மொழி இரண்டும் பண்புப்பெயர்; 3. விசேடிய பூர்வபதம் - முன்மொழி சிறப்புப் பெயர்; 4. உபமா பூர்வபதம் - முன்மொழி உவமை; 5. உபமா உத்தரபதம் - பின்மொழி உவமை; 6. சம்பாவனா பூர்வபதம் - முன்மொழி எண்ணம்; 7. அவதாரணா பூர்வபதம் - முன்மொழி தேற்றம்

எ-டு : 1) கருங்குவளை - கருமை : விசேடணம்; குவளை: விசேடியம் - நீலோற்பலம். (வடமொழித் தொடர்)
2) பெருவெள்ளை, ‘இன்ப துன்பம்’ இருமொழியும் பண்பு - சீதோட்டணம். (வடமொழித் தொடர்).
3) தெய்வப்புலவன் திருவள்ளுவன் - முன்மொழி சிறப்புப் பெயர். ஆசாரிய தண்டி (வடமொழி).

4) முத்து வெள்ளை - முன்மொழி உவமை (முத்துப் போன்ற வெள்ளை) சங்கபாண்டு (வடமொழி).

5) அடிமலர் - பின்மொழி ஒப்பு (மலர் போன்ற அடி). புருஷவியாக்கிரன் (வடமொழித் தொடர்).

6) அறச்சுற்றம், அருட்செல்வம் - முன்மொழி எண்ணம்; இவையும் தமிழில் இருபெயரொட்டே. விநயதனம் சுகிர்தபந்து (வடமொழித் தொடர்).
7) அறச்சுற்றம் போன்றவற்றை மேலே கூறியவாறு எண்ணுவதொடு, தேற்றமாகக் கொள்ளுங்கால், முன்மொழி தேற்றம் (அறமே சுற்றம், அருளே செல்வம்).

4. சங்க பாண்டு - சங்கு போல் வெள்ளை.

5. புருஷ வியாக்கிரன் - புலி போன்ற ஆண்மகன்; தமிழில் உவமைத்தொகை.

6. விநயதனம் - அடக்கமாகிய செல்வம்; சுகிர்தபந்து - நல்வினைச் சுற்றம்

இனி, இயற்பெயரை (அடைகொளியை) முன்னே வைத்துப் பின்மொழியாகச் சிறப்புப்பெயரை - அடைமொழியை-க் கூறுவது முண்டு. அது விசேடிய உத்தரபதம் ஆம். எ-டு : திருவீர ஆசிரியன், சங்கராச்சாரியன்.

இனமின்றி வரும் பண்புத்தொகை: செஞ்ஞாயிறு, வெண் திங்கள்.

பண்பு பற்றி வாராமல் சாதி (குழூஉப்) பற்றி வந்தனவும் சில.

எ-டு : வெள்ளாடு, வெண்களமர்; வடமொழி : கிருஷ்ண சர்ப்பம் (இது நிறத்தால் வந்ததன்று.)

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னுமாக வந்த தொகைகள்: செந்நிறம், மாசித்திங்கள், மாமரம், மகநட்சத் திரம், வாளைமீன், சாரைப்பாம்பு. இவை சிறப்பும் பொதுவு மாக வந்த இருபெயரொட்டு.

குணப்பெயரே குணிக்கும் ஆதல் -

சிறுவெள்ளை, பெருவெள்ளை - இவை நெல்லின் பெயர்கள் எனின், வெள்ளைச் சிறுநெல், வெள்ளைப் பெருநெல் - எனப் பொருள்பட்டுப் பண்புத்தொகையாம். சிறிய மந்தமான வெள்ளை, பெரிய அழுத்தமான வெள்ளை என்று பொருள் செய்க.

ஒருபொருட்கு இருபெயர் வந்தனவும் பண்புத் தொகை யாகவே கொள்ளப்படும்.

எ-டு : கந்நியாகுமரி - கன்னியாகிய குமரி; கும்பகடம் - கும்பமாகிய கடம்; (மருதன்வம்) மரு தன்வா - பாலைநிலம்; மரு, தன்வா - இரண்டும் பாலை நிலத்தின் பெயர்கள். இவை வடமொழி.

தமிழிலும் பொருளைச் சிறப்பிக்கும் வகையில் இவை வரும்.

எ-டு : புட்டகப் புடவை, பெருமலைச் சிலம்பு, அரா அப்பாம்பு - இவை உலகவழக்கு. ‘உவகை மகிழ்ச்சி யிற் சோ ர்வு’ கு. 531 ‘ஆடகச் செம்பொற் கிண்ணத்து’ சீவக. 512 ‘அலறு முந்நீர்த் தடங்கடல்’ சீவக. 2851

இவை செய்யுளில் ‘ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார்’ (சொ. 460) என்பதனால் அமையும்.

ஆண்தகை - ஆணாகிய தகைமையை உடையான்.

பெண்தகை - பெண்ணாகிய தகைமையை உடையாள்.

மக்கட்சுட்டு - மக்களாகிய சுட்டப்படும் பொருள்.

(இவற்றைப் பி. வி. நூலார் ஆகுபெயராய் நின்ற இருபெய ரொட்டுப் பண்புத்தொகை என்பர். இவை அன்மொழித் தொகை எனவும் ஆகுபெயர் எனவும் கூறுவதை மறுப்பர்.) கருஷ பாஷாணம், கருஷோபலம் (உரைகல்) இவ்விரண்டு சொற்களையும் வினைத்தொகை என்பர் பி. வி. நூலுடையார். வடமொழியில் வினைத்தொகை இல்லை; ஆகவே இட முணர்த்தும் வினைப்பெயர் ஆகும். (பி. வி. 22)

கருமம் அல்லாச் சார்பு -

{Entry: D04__366}

இது கருமம் இல்லாச் சார்பு ஆகும். அஃதாவது மெய்யுறுத லின்றி மனத்தான் தொடர்புகோடல். அரசனைச் சார்ந்தான் என்பது, அரசனொடு மனத்தான் தொடர்புகொண்டு ஒழுகினான் என, மெய்யுறுதலின்றி அமைந்த சார்பாகும். இப்பொருட்கண், அரசனைச் சார்ந்தான் என இரண்ட னுருபும் அரசன்கண் சார்ந்தான் என ஏழனுருபும் மயங்கும். சாரப்படும் அரசனே சார்தலுக்கும் இடமாக அமைதலின் இரண்டுருபும் மயங்கின. (தொ. சொ. 85 நச்.)

கருமம் அல்லாச் சார்பின்கண் இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும்.

எ-டு : அரசனைச் சார்ந்தார், அரசன்கண் சார்ந்தார்.

(கருமச் சார்பாவது மெய்யுறுதலையுடைய சார்பு; கருமம் அல்லாச் சார்பாவது மெய்யுறுதலின்றி யுள்ள பிறவகைச் சார்பு) கருமச்சார்ச்சிக்கண் அரசனைச் சார்ந்தான் எனின், அரசன் இடமாகச் சாரப்பட்டது பிறிதாவான் செல்லும். ஆதலின் ‘கருமம் அல்லாச் சார்பு’ என்றோதப்பட்டது. அச்சார்பின் கண்ணேயே இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும் என்க. (தொ. சொ. 86 கல். உரை)

கருமம் இல்லாச் சார்பு -

{Entry: D04__367}

இரண்டாம் வேற்றுமையது சார்ச்சிப்பொருட்கண் மெய்யுறு தலின்றிப் பிறிதொரு வகையான் தொடர்புகோடல் கருமம் இல்லாச் சார்பு ஆகும். அஃது அரசனைச் சார்ந்தான் என வரும். அச்சாரப்படும் பொருளே சார்ச்சிக்கு இடமாதலின், இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது மயங்கி அரசன்கட் சார்ந்தான் எனவும் வரும்.

எனவே, கருமம் இல்லாச் சார்ச்சிப்பொருண்மைக்கண் இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும். (தொ. சொ. 84 சேனா. உரை)

‘கருமம் இல்லாச் சார்பு’ தொல்காப்பியனாரால் ‘கருமம் அல்லாச் சார்பு’ என, இன்மைக்கு அன்மை வழுவமைதியாக ஆளப்பட்டது.

கரும வற்பாவம் -

{Entry: D04__368}

செயப்படுபொருளாகும் தன்மை; கருத்திரு கருமம் என்பதும் இதுவே. எழுவாயே செயப்படுபொருளாகவும் நிகழ்வது.

எ-டு : ‘தன்னைத் தான் காதலனாயின்’ (கு. 209) -காதலிப்பானும் காதலிக்கப்படுவானும் தானே ஆதல்

‘நன் னிலைக்கண் தன்னை நிறுப்பானும்’ (நாலடி 248) - நிறுப்பானும் நிறுக்கப்படுவானும் தானே ஆதல். (பி. வி. 12)

கரும விசேடணம் -

{Entry: D04__369}

செயப்படுபொருளுக்குச் சேரும் அடைமொழி. ‘அரியானை அந்தணர்தம் சிந்தை யானை’ என்னும் அப்பர் தேவாரப் பாடலில், அரியானை - சிந்தையானை - முதலியன ‘பெரும் பற்றப் புலியூரானை’ எனப் பின்னர் வரும் செயப்படு பொரு ளுக்கு அடைமொழிகள் ஆகின்றன. அரியானும் சிந்தை யானும் அருமறையகத்தானும்......... ஆகிய பெரும்பற்றப் புலி யூரானை - என்று பொருள் செய்தல் வேண்டும். (பி. வி. 39)

கருவி -

{Entry: D04__370}

மூன்றாம்வேற்றுமைப் பொருள்களில் ஒன்று. இஃது எழுவாய் செய்யும் செயலது பயனைச் செயப்படு பொருட்கண் செலுத்துவதாம்.

வாளான் மரத்தை வெட்டினான் சாத்தன் - என்புழி, சாத்தன்: எழுவாய்; அவன் செய்யும் செயல் வெட்டுதல்; அதன்பயன் வெட்டப்படுதல்; அவ்வெட்டப்படுதல் பயனைச் செயப்படு- பொருளாகிய மரத்தின்கண் செலுத்துவது வாள் என்னும் கருவி.

கருவி, காரணம், ஏது, நிமித்தம் - என்பன தம்முள் வேறு பாடுடையவேனும், ஒத்த பொருளனவே. கருவி இயற்றுதல் கருவியாகிய காரகக்கருவியும், அறிதற்கருவியாகிய ஞாபகக் கருவியும் என இருவகைப்படும். ‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’ - ஊசி : காரகக்கருவி. அஃது ‘ஊசிகொண்டு சாத்தனான் குயிலுதல் செய்யப்பட்ட தூசும் பட்டும் என்னும் பொருளது. சாத்தன் செய்த தொழிலாகிய குயிலுதல்பயனை ஊசி செயப் படுபொருளாகிய தூசிலும் பட்டிலும் நிகழ்த்திற்று. இது துணைக்காரணம்.

மண்ணான் இயன்ற குடம் - மண் : முதற்காரணம்.

உணர்வினான் உணர்ந்தான், புகையினான் எரியுள்ளது உணர்ந்தான் - ஞாபகக் கருவி; இவற்றிற்கு உணர்வு முதற் காரணம். (தொ. சொ. 74 நச். உரை)

காரகமாவது தொழிலை இயற்றுவிப்பது; ஞாபகமாவது அறிவிப்பது. (நச்.)

கருவி என்னும் உரிச்சொல் -

{Entry: D04__371}

கருவி என்னும் உரிச்சொல் தொகுதியாகிய குறிப்புணர்த்தும். அவ்வாறு உணர்த்துங்கால் பலவற்றது கூட்டத்தைச் சுட்டும்.

எ-டு : கருவி வானம் கதழுறை சிதறி’ (அக. 4) - கருவியாவது மின்னும் முழக்கும் காற்றும் என்பனவாகிய தொகுதி.

(தொ. சொ. 354 நச். உரை)

கருவிக்கருத்தா -

{Entry: D04__372}

பொருளுணர்தற்குக் கருவியாகிய சொல்லை ‘சொல் பொருள் குறிக்கும்’ என்று கூறுவது கருவியையே கருத்தாவாகக் கூறுதலின் கருவிக்கருத்தாவாம். (தொ. சொ. 157 நச். உரை)

கருவிக் கிழமை -

{Entry: D04__373}

ஆறாம்வேற்றுமை உடைமைப்பொருளில் வரும் ‘கருவிக் கிழமை’ பொருட் பிறிதின்கிழமைகளில் ஒன்று.

எ-டு : இசையது கருவி, வனைகலத்தது திகிரி.

(தொ. சொ. 80 சேனா. உரை)

கருவி மயக்கம் -

{Entry: D04__374}

மூன்றாம்வேற்றுமையாகிய கருவிப்பொருளில் வேறுருபு களும் வருதல்.

1. கண் காணும் - கருவிப் பொருளில் முதல் வேற்றுமை;
2. கண்ணாற் காண்பான் - கருவிப்பொருளில் மூன்றாம் வேற்றுமை; 3. கண்ணிற்குக் காணலாம் - கருவிப்பொருளில் நாலாம் வேற்றுமை; 4. கண்ணின் காணலாம் - கருவிப்பொரு ளில் ஐந்தாம் வேற்றுமை; 5. கண்ணது காட்சி - கருவிப்பொரு ளில் ஆறாம் வேற்றுமை. (இ. கொ. 46)

கருவி முதலியன கருத்தா ஆதல் -

{Entry: D04__375}

‘எழுவாயுருபு வருமிடம்’ காண்க.

செயப்படுபொருளைக் கருத்தாவே போல வைத்து அதன் மேல் வினைமுதல் வினையை ஏற்றிக் கூறலும் வழக்கின்கண் உரித்து. வருமாறு : இம்மாடு நான் கொண்டது, இச்சோறு நான் கொடுத்தது, இவ்வெழுத்து நான் எழுதியது.

இவ்வெழுத்தாணி நான் எழுதியது - கருவி; இவ்வில்லம்
நான் இருந்தது - நிலம்; இத்தொழில் நான் செய்தது - செயல்; இந்நாள் நான் பிறந்தது - காலம்; அரசன் எடுத்த ஆலயம் - ஏவும் வினைமுதல். பிறவும் அன்ன. (நன். 441 இராமா. )

கருவி வகைகள் -

{Entry: D04__376}

கருவி, காரகக்கருவி எனவும் ஞாபகக்கருவி எனவும் இரு வகைத்து. இவற்றை முறையே இயற்றுவிக்கும் கருவி எனவும் அறிவிக்கும் கருவி எனவும் கூறலாம்.

எ-டு : வாளான் எறிந்தான் - வாள் : காரகக்கருவி; அறிவான் உணர்ந்தான் - அறிவு : ஞாபகக்கருவி.

(தொ. சொ. 74 நச். உரை)

கருவி : வேறு பெயர்கள் -

{Entry: D04__377}

கருவி காரணம் ஏது நிமித்தம் - என்பன வேறு பொருட் -கிளவியாயும் ஒருபொருட்கிளவியாயும் வருதலின், காரணம் மூன்றனுள், முதற்காரணம் துணைக்காரணம் என்னும் இரண் டனையும் கருவி என்றும், ஏவற்கருத்தாவும் இயற்றுதற் கருத்தாவும் ஆகிய நிமித்தகாரணம் இரண்டனையும் கருத்தா என்றும் கூறினார். (நன் . 297 சங்.)

கருவி காரணம் ஏது நிமித்தம் - என்பன தம்முட் சிறிது வேறு பாடுடையவேனும் ஒத்த பொருளன. (தொ. சொ. 74 நச். உரை)

கலக்கிழமை -

{Entry: D04__378}

ஆறாம்வேற்றுமை உடைமைப்பொருளில் வரும் கலக்கிழமை பொருட்பிறிதின்கிழமைகளில் ஒன்று. கலமாவது ஓலை.

எ-டு : நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு.

இஃது இருபொருட்கு உரிமையுடைமையின், உடைமையின் வேறாயிற்று. (தொ. சொ. 81 நச்., கல். உரை)

கலி என்னும் உரிச்சொல் -

{Entry: D04__379}

இஃது ஓசையாகிய இசைப்பொருண்மையினை உணர்த்தும்.

எ-டு : ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த’ (அக. 11)

(தொ. சொ. 349 சேனா. உரை)

கவர்வு என்னும் உரிச்சொல் -

{Entry: D04__380}

இது விருப்பமாகிய குறிப்புணர்த்தும்; ‘கைக்கொள்ளுதல்’ என்ற பொருளிலும் வரும்.

எ-டு : ‘கவர்நடைப் புரவி’ (அக. 130) - விருப்பம்; ‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ (அக. 3) கைக்கொள்ளு தல். (தொ. சொ. 362. நச். உரை)

கவவு என்னும் உரிச்சொல் -

{Entry: D04__381}

இஃது அகத்தீடு (தழுவிக்கோடல், அணிந்து கோடல்) என்னும் குறிப்பினை உணர்த்தும்.

எ-டு : ‘கவவு க் கடுங்குரையள் காமர் வனப்பினள்’ (குறுந். 132)
‘கழூஉவிள ங்கு ஆரம் கவைஇய மார்பே’ (புற.19
(எச்சமாங்கால் திரிந்து வந்தது.) (தொ. சொ. 357 நச். உரை)

கழிவு என்னும் உரிச்சொல் -

{Entry: D04__382}

இது முன் சிறவாதுள்ளது ஒன்று இதுபோது சிறத்தலாகிய குறிப்பினை உணர்த்தும்.

எ-டு : ‘சினனே காம ம் கழிகண் ணோட்டம்’ (பதிற். 22)

(தொ. சொ. 314 சேனா. உரை)

கழும் என்னும் உரிச்சொல் -

{Entry: D04__383}

இஃது ஒன்றோடொன்று சேர்ந்து கலந்து மயங்குதலாகிய குறிப்புணர்த்தும்; திரட்சிப் பொருளையும் தரும்.

எ-டு : ‘கழுமிய ஞாட்பினுள்’ (கள. 11) - மயக்கம்; ‘......... ஞாழல் முதிரிணர் கொண்டு, கழும முடி த்துக் கண்கூடு கூழை’ (கலி. 56) (தொ. சொ. 351 நச். உரை)

கழும்(மு) என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம் ‘கழுமிய’ என்பது.

‘கள்’ ஈற்றின் இயல்பு -

{Entry: D04__384}

கள்ஈறு பகுதிப்பொருள்விகுதியாயும் விகுதிமேல் விகுதியா யும் வரும். கோக்கள், மனுக்கள் - என்றல் தொடக்கத்தன பகுதிப்பொருள் விகுதியீற்றுப் பெயர்கள். தமர்கள் - நமர்கள் - அரசர்கள் - மறவர்கள் - மறத்தியர்கள் - என்றல் தொடக் கத்தன விகுதிமேல் விகுதியீற்றுப் பெயர்கள். (நன். 278 சங்.)

கள்ஈறு -

{Entry: D04__385}

‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்’ எனவும், ‘பிறந்தவர்கள் எல்லாம்’ (சீவக. 2622) எனவும் வருவன எல்லாவற்றிற் கும் ரகர ஒற்றும் கள் என் விகுதியும் ஒருங்கு நிற்பினும், ரகரஒற்றே பால் விளக்கலின், ஏனைக் கள்ஈறு இசை நிறைத்து நின்றதேயாம். (சொ. 171 நச்.) (இ. வி. 179 உரை)

கள்ஈறு இருதிணைப் பன்மை -

{Entry: D04__386}

அடிகள் முனிகள் மனுக்கள் கோக்கள் விடலைகள் மடந்தை கள் - என்பனவும் பிறவும் கள்ஈற்றுப் பலர்பால் பெயர்கள். அஃறிணைப்பெயருள் கள் பன்மைக்கு உருபாம்.

எ-டு : நிலங்கள் நீர்கள் நரிகள் நாய்கள். பிறவும் அன்ன.

(நன். 279 உரை)

அஃறிணைப்பெயர் கள்ளொடு வந்தால் பன்மைப்பால் தோன்றும். உயர்திணை ஒருமைப் பெயரும் ஒரோவழிக் கள்ளொடு வந்தால் பன்மைப்பால் தோன்றுவனவுமுள.

வருமாறு : பசுக்கள் மரங்கள் கற்கள் - அஃறிணைப் பன்மை.

ஆண்கள் பெண்கள் - உயர்திணைப் பன்மை.

(அடிகள் முனிகள் - என உயர்திணைப்பெயர் கள்ளொடும் வந்து பன்மை சுட்டாது உயர்திணை ஒருமையாயிற்று.)

(நேமி. பெயர். 8 உரை)

கள்ஈறு உயர்திணைப் பன்மைக்கண் வருதல் -

{Entry: D04__387}

எ-டு : ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட்கு ஆயினும்’
‘பிறந்தவ
ர்கள் எல்லாம் அவாப்பெரிய ராகி’ (சீவக. 2622)
‘கற்றன ங்கள் யாமுமுடன் கற்பனகள் எல்லாம்’ (சீவக. 1795)
‘எ ங்கள் வினையால் இறைவன் வீடியஅஞ் ஞான்றே’

(சீவக. 1793)

இவற்றுள் பன்மை உணர்த்துதற்கு ஓதிய ஈறுகளே பன்மை உணர்த்தி நின்றன; கள் என்பது இசைநிறைத்து நின்றது எனப்படும், அவ்வீறுகளை ஒழிந்துநின்று ‘கள்’ பன்மைப் பாலை உணர்த்தாமையின். பலர்பால் ஈறுகளை விடுத்துக் கள்ஈறு பலர்பாலை உணர்த்துதல் பிற்கால வழக்கு. எ-டு : பெண்டுகள். (தொ. சொ. 171 நச். உரை)

‘கள்ளொடு சிவணும் அஃறிணை இயற்பெயர்’ -

{Entry: D04__388}

அஃறிணை இயற்பெயர் ஒருமைக்கும் பன்மைக்கும் பொது வாய், கொண்டுமுடியும் வினைச்சொல்லாலேயே ஒருமையும் பன்மையும் உணரநிற்கும். (எ-டு : ஆ வந்தது; ஆ வந்தன) ஆயின் கள்ளீற்றொடு புணருமிடத்துப் பலவின் பாலையே உணர்த்திப் பன்மைவினையையே கொண்டு முடியும். (வினைமுற்றும் பெயருமாகிய பயனிலை ஈண்டு வினை யெனப்பட்டது.)

எ-டு : ஆக்கள் வந்தன; ஆக்கள் அவை (தொ. சொ. 169 சேனா. உரை)

உயர்திணைக்குப் பன்மையீறு கள் எனக் கூறினாரல்லர்.

எ-டு : ‘புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு’ (கு. 919)

‘மறந்தார்கொல், மற் றை யவர்கள் தவம்’ (கு. 263)

என்றாற் போல உயர்திணைக்கண் வரும் கள்ளீறு விகுதிமேல் விகுதியாக வருதல் புதியது புகுதலாம்.

‘களைந்தன்றும் (இலனே)’ என்னும் முடிபு -

{Entry: D04__389}

‘தாலி களைந்தன்று மிலனே’, ‘வியந்தன்று மிலனே’ ‘இழிந்தன்று மிலனே’ (புற. 77) - என உயர்திணைக்கண்ணும் றுகரவிகுதி வந்ததால் எனின், அவை களைந்தான் - வியந்தான் - இழிந்தான் - என்பனவற்றிற்கு மறையாய்க் களைந்திலன் - வியந்திலன் - இழிந்திலன் - என நிற்கின்றவை, ‘களைந்தன்று மிலன்’, ‘வியந்தன்று மிலன்’, ‘இழிந்தன்று மிலன்’ - என முற்றுவினைத் திரிசொல்லாய் நின்றன. (இ. வி. 234 உரை)

கறுப்பு என்னும் உரிச்சொல் -

{Entry: D04__390}

இது வெகுளியாகிய குறிப்புப் பொருண்மையை விளக்கும்; நிறவேறுபாடு ஆகிய பண்பையும் உணர்த்தும். இது தொழிற் பட்டுழியும் அவ்விரண்டனையும் உணர்த்தும்.

எ-டு : ‘நிற்கறுத் தோர்அருங் கடிமுனை அரணம்போல்’
கறுத்த காயா’ (தொ. சொ. 372, 373 நச். உரை)

கன்றல் என்ற வினைக்கண் பொருள்மயக்கம் -

{Entry: D04__391}

எ-டு : சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; சூதினை இவறினான், சூதின்கண் இவறினான் - எனக் கன்றல் வினையும் அதன் பரியாயச்சொற்களாகிய இவறுதல் - போன்ற வினைகளும் இரண்டாம் வேற் றுமைப் பொருளிலும் ஏழாம்வேற்றுமைப் பொருளி லும் வரும்.

(நெறியைச் சென்றான் - நெறிக்கண் சென்றான், நெறியை அடைந்தான் - நெறிக்கண் அடைந்தான் - எனச் செலவு வினையும் அதன் பரியாயச்சொற்களும் அவ்விரண்டு வேற் றுமைப் பொருளிலும் வரும்.) (தொ. சொ. 87 நச். உரை)

கா section: 34 entries

காக்கையிற் கரிது களம்பழம் : வழுவன்மை -

{Entry: D04__392}

காக்கை கரிது, அதனின் கரிது களம்பழம் - எனக் காக்கையின் கரிய நிறத்தொடு களம்பழத்தின் கரிய நிறத்தை ஒப்பிட்டுக் கூறுதலின், இத்தொடர் வழாநிலையே; காக்கை கரிதன்று, வெளிது - என்று கூறாமை காண்க. (தொ. சொ. 17 சேனா. உரை)

காகு -

{Entry: D04__393}

இசையெச்சம்; இருசொல் எஞ்சி நிற்பது. ‘நுமருள்ளல் , எம்மை மறைத்திரோ?’ (கு. 1318) என்புழி, எம்மை யென்பது, ‘நும்மொடு தொடர்பில்லாத எம்மை’ எனப் பொருள் தரும். இவ் இசை யெச்சப் பொருளைக் கூறுவாருடைய மெய்ப்பாடு கொண்டோ, சொல்லை அவர் ஒலிக்கும் திறன்கொண்டோ உணர்தல் வேண்டும். (பி. வி. 50)

காதற் சொல் -

{Entry: D04__394}

காதல் பற்றி, ஒப்பீடு எதுவும் கருதாது, மகனையோ மகளையோ யானை வந்தது - பாவை வந்தது - என்று கூறுவது.

எ-டு : ‘போர்யானை வந்தீக ஈங்கு’ கலி. 86 : 10 ‘தேமலர் அங்கண் திருவே புகுதக’ சீவக. 2121 - என உவப்புப் பற்றிக் கூறுவதும் கொள்ளப்படும்.

இக்காதல் சொல், பண்பாய் அப்பண்பினை யுணர்த்தி அஃறிணையாய் நில்லாது; அப்பண்புச்சொல் தன் பண்பையும் தன்னுடைய பொருளையும் ஒருங்கு தோற்றுவித்துப் பிரியாது நிற்றலின் உயர்திணைப்பொருளையே உணர்த்தி நிற்கும். இங்ஙனம் நிற்கும் என உணர்தல் சொல்லுவான் குறிப்பினா னேயாம்; பிறிதொன்றனானன்று. (தொ. சொ. 57 நச். உரை)

சிறுவனைக் காதல் பற்றி ‘யானை’ என்பது ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆதல் ஒப்புமையான் ஆகுபெயர் என்றலுமாம்.

(தொ. சொ. 56 சேனா. உரை)

‘என் காதல் பொலிவாயிற்று’ - எனக் கிளியைக் காதல் என்று கூறுதல். (தொ. சொ. 57 இள. உரை)

‘என் யானை வந்தது போயிற்று, என் பாவை வந்தது போயிற்று: காதல் சொல். இவை ‘பண்பு கொள வருதல்’ என்னும் ஆகுபெயரான் பொருள்மேல் நின்றன. பண்பு நிமித்தமாகப் பொருள் நிகழும் சொற்கள் பலவும் தம்பொருட்கு ஏற்ப உயர்திணையாய் முடியாது, சொற்கு ஏற்றவாற்றான் அஃறிணையாய் முடிந்தன.

(தொ. சொ. 57 கல். உரை)

‘ஈங்கு இதுவோ ர் நல்கூர்ந்தார் செல்வ மகள்’ (கலி. 56) : மகளை ‘இது’ என்றது காதல் பற்றி வந்தது. என் யானை வந்தது, என்பாவை வந்தது: காதல்சொல்; இவை ஆகுபெயரன்றோ வெனின், ஆகுபெயராயின் தன் பொருட்குரிய பாலான் முடியும்; இவை அன்ன அன்றி வேறுபட்டு முடிதலின் குறிப்பு மொழியாயின. (தொ. சொ. 55 தெய். உரை)

காப்பு என்பதன் பொருள் -

{Entry: D04__395}

காப்பு என்பது காக்கப்படும் பொருளையும் காவல்தொழி லையும் குறிக்கும்.

எ-டு : ஊரைக் காக்கும், காவலைக் காக்கும் - என முறையே காண்க. (தொ. சொ. 70 தெய் உரை)

காப்பு முதலியன இரண்டன் பொருண்மை ஆதல் -

{Entry: D04__396}

‘கா’ என வினைமாத்திரை உணர்த்தும் பெயர்நிலை, முன்னர்க் காப்பு என்னும் பெயரைத் தோற்றுவித்து, காப்பினை என உருபையும் ஏற்பித்துச் செய்தான் எனக் காரியத்தைத் தோற்று வித்தலின், காப்பு முதலியன இரண்டன் பொருளாக எடுத்தோதப்பட்டன. (தொ. சொ. 72 ப.உ)

காரகஏது -

{Entry: D04__397}

மூன்றாம்வேற்றுமைப் பொருளான கருவியுள் காரணமும் ஏதுவும் அடங்கும் எனக் கூறும் இலக்கணக்கொத்து, ஏதுவை இருவகைப்படுத்தும். அவை ஞாபகஏதுவும் காரகஏதுவும் ஆம். அறிவாலாகிய காட்சி என்புழி, ‘அறிவு’ ஞாபகஏது; மண்ணாலாகிய குடம் என்புழி, ‘மண்’ காரகஏது. (இ. கொ. 34)

மூன்றாம் வேற்றுமைப் பொருளான ஏது என்பது 1. காரகஏது - செயலொடு தொடர்புடையது 2. ஞாபகஏது - அறிவொடு தொடர்புடையது - என இருவகைப்படும்.

வாணிகத்தான் ஆயினான் (ஆக்கம் பெற்றான்) - காரக ஏது; வாணிகம் என்பது செயல். முயற்சியான் பிறத்தலான் ஒலி நிலையாது - (பிறப்பன யாவும் அழியும் என்பது அறியப்படு வதால்) ஞாபகஏது. (பி. வி. 12)

செயலொடு தொடர்புற்ற காரணம் காரகஏது எனப்படும். ‘முயற்சியின் (முயற்சியான்) பிறத்தலான் ஒலி நிலையாது’ என்புழி, முயற்சி என்பது காரகஏது, ஒலி பிறத்தற்கு ஒலியுறுப்புக்களின் செயற்பாடு காரணம் ஆதலின். (தொ. சொ. 75 நச். உரை)

காரகஏது பற்றிய ஐந்தாம்வேற்றுமைப் பொருள் -

{Entry: D04__398}

அச்சம் ஆக்கம் - என்பன காரகஏது பற்றிய ஐந்தாம் வேற்றுமைப் பொருளாம்.

எ-டு : கள்ளரின் அஞ்சும் , வாணிகத்தின் ஆயினான் என்பன வேற்றுமையுருபினை முடிக்க வரும் சொல் பொருளாம். (தொ. சொ. 79 நச். உரை)

காரகஏதுவின்கண் மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்கல் -

{Entry: D04__399}

காரக ஏது மூன்றாம்வேற்றுமைக் கருவிப்பொருளினும் ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளினும் ஒருசேர மயங்கி வரும்.

எ-டு : வாணிகத்தான் ஆயினான், வாணிகத்தின் ஆயினான் - எனத் தொழிலை இயற்றுவிக்கும் காரகப் பொருண்மை மூன்றாம் வேற்றுமையினும் ஐந்தாம் வேற்றுமையினும் மயங்கும். (தொ. சொ. 92 சேனா. உரை)

காரகக் கருவி -

{Entry: D04__400}

தொழிற்படும் கருவி காரகக் கருவியாம்; இயற்றுதற் கருவி எனினும் ஆம். வாளான் எறிந்தான் என்புழி, வாள் காரகக் கருவி. (தொ. சொ. 74 நச். உரை)

காரகக்கருவியும் ஞாபகக்கருவியும் -

{Entry: D04__401}

வனைந்தான் என்புழி, குடமாகிய காரியத்திற்கு அதுவது வாகிய மண் முதற்காரணம்; குலாலனுடைய அறிவும் அந்தக் கரணமும் முதலிய ஞாபகக்கருவியும், தண்டசக்கரம் முதலிய காரகக் கருவியும் துணைக்காரணம்; குலாலன் நிமித்த காரணம். ஞாபகக் கருவி என்பது அறிதற் கருவி; காரகக் கருவி என்பது செய்தற் கருவி. காரகக்கருவி அம்முதற்காரணத்திற்குத் துணையாய் நின்று காரியத்தைத் தருதலின் துணைக்காரணம்.

(நன். 297 சங்.)

இயற்றுதற்குரிய கருவியே காரகக்கருவியாம். குழை செய்தான் என்றால், அதற்குப் பொன்: முதற்காரணம்; கம்மக் கருவியும் தீயும் முதலானவை துணைக்கருவி. இவை காரகக் கருவியாம்.

அறிதற்குக் கருவியே ஞாபகக்கருவியாகும். கடல் கண்டான் என்றால், அக்காட்சிக்கு உணர்வு முதற்காரணம்; கண்ணும் ஒளியும் முதலானவை துணைக்காரணம். இவை ஞாபகக் கருவியாம். (நன். 296 மயிலை.)

காரகங்களுக்கு எடுத்துக்காட்டு -

{Entry: D04__402}

ஒன்று இரண்டு முதல், ஆறாவது தவிர ஏழு வரையுள்ள வேற்றுமைகள் ஆறும் காரகங்கள் எனப்படும். வினையைச் செய்வன என்பது இதன் பொருள். (ஆறாம் வேற்றுமையும் ஒரோவழி வினையைக் கொள்ளின் காரகம் ஆதலுமுண்டு)

‘நாரா யணன்பூ ஓரா யிரத்தைக்

கரத்தால் கொய்தோர் அரற்கே கொடுத்துச்

சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்

பாற்கடற் கண்ணே பள்ளிகொண் டானெனக்

காரகம் முழுதும் வந்தன காண்க

இவற்றினுள் ஒன்றே இயம்பினும் காரகம்.’ (இ. கொ. 15)

காரகம் -

{Entry: D04__403}

விளிவேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் நீங்கலான ஏனைய வேற்றுமைகள் வினையைக்கொண்டு முடிந்து பொருள் முற்றுமாயின் அவை காரகம் என்ற பெயரைப் பெறும். பெரும்பாலும் பெயரையே கொண்டு முடியும் ஆறாம் வேற்றுமை சிறுபான்மை வினைகொண்டு முடிந்து காரகமாதலும் உண்டு. (இ. கொ. 14)

(எழுத்ததிகாரம் : அதிகாரம் - அதிகரித்தல்; எழுத்தினது அதிகரித்தலையுடையது என்புழி, ஆறாவது - வினைமுதற் பொருண்மைக்கண் வந்த காரகம் என்பது சூத்திர விருத்தி.)

காரணம் எனினும் காரகம் எனினும் ஒக்கும்.

ஒரு தொழில் நிகழ்தற்குக் காரணங்களாகிய உண் தின் செல் கொள் வனை முதலாகிய வினை - எழுவாய் - செயப்படு பொருள் - வினை நிகழுமிடம் - வினை நிகழும் காலம் - எழுவாய்க்குத் துணையாகிய கருவி - இன்னதற்கு - இதுபயன் - என்ற எட்டும் காரணமாம். (தொ. சொ. 112 சேனா. உரை)

உருபேற்ற சொற்கள் வினைகொண்டு முடிதல் காரகம் எனப்படும். இவ்வடசொற்குத் தொழிலைத் தோற்றுவிப்பது -. தொழிலுக்குத் துணையாவது - என்றாற்போலப் பொருள் கொள்க. ஏதோ ஒருவகையால் வினைக்குத் துணையாய்க் காரணமாய் அமைவது என்பது போந்த கருத்தாகக் கொள்க.

வேற்றுமையுருபு ஏற்ற சொற்கள் வினைகொண்டு முடிதல் என்றதால், தெரிநிலைவினைகளையே அன்றிக் குறிப்பு - வினைகளையும்கொண்டு முடிதலும் கொள்ளப்படும்.

எ-டு : தேவதத்தன் வந்தான் - முதல் வேற்றுமை வினை முற்றுடன் முடிந்தது (இருதிணை ஐம்பால் மூவிட முற்றுக்கள் எல்லாம் கொள்க)தேவதத்தன் செல்க - வியங்கோள் வினையுடன் முடிந்தது. தேவதத்தன் இது செய்தல் வேண்டும், தேவதத்தன் இது செய்தல் தகும், தேவதத்தனால் இது செய்யப்படும் - விதிப் பொருளில் வந்த வினைகள். தேவதத்தன் உண்டு, தேவதத்தன் இல்லை, தேவதத்தன் வேறு, தேவ தத்தன் யார் - குறிப்பு வினைமுற்றுக்கள். (பி. வி. 16)

காரகம் எதிர்மறைவினையொடும் முடிதல் -

{Entry: D04__404}

காரகம் வினைக்குத் துணை, வினை நிகழ்தற்குக் காரணம் என்பதால், மரத்தைக் குறையான் - வேலான் எறியான் - என்பன போல வருமிடத்து, வினைநிகழ்வு இன்மையின், இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் செயப்படு பொருளாகவும் கருவியாகவும் காரகமாகி வினைகொண்டு முடிதல் இயையுமோ என வினவி, எதிர்மறைவினையும் விதிவினை யோடு ஒக்கும் என்பது நூல் முடிபு ஆதலின் இயையும் என்பர் சேனாவரையர். அதற்கு உதாரணமும் காட்டுவர். அது ‘செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணா ர்’ (கு. 258) என்பது. இதன்கண் உண்பர் என்பது போலவே உண்ணார் என்ற எதிர்மறைவினையும் காரகமாகும். (பி. வி. 16)

காரக முதற்கருவி, காரகத் துணைக்கருவி -

{Entry: D04__405}

மண்ணால் ஆக்கிய, ஆகிய குடம் எனின், காரக முதற்கருவி. திரிகையால் ஆக்கிய, ஆகிய குடம் எனின், காரகத் துணைக் கருவி.

குடத்தை வனைந்தான் எனின், குடமாகிய காரியத்திற்கு ‘அது அதுவாகிய’ மண் முதற்காரணம்; குயவனின் அறிவும் அந்தக் கரணமும் ஆகிய ஞாபகக்கருவியும், தண்டசக்கரம் முதலிய காரகக்கருவியும் முதற்காரணத்திற்குத் துணையாக நின்று காரியத்தைத் தருதலால் துணைக்காரணம்; குயவன்நிமித்தம் குடம் தோன்றலால் அவன் நிமித்தகாரணம். (நன். 297 இராமா.)

காரணங்கள் சில தொழிற்கண் குறைந்து வருதல் -

{Entry: D04__406}

ஆடையைத் தனக்கு நெய்தான் என்றவழிக் கொள்வான் பிறனொருவன் இன்மையின் கோடற் பொருண்மை குறைந்து நின்றது. ‘உலகினைப் படைத்தான்’ என்றவழிக் கொள்வானும் பயனும் இன்றி வந்தது. கொடி ஆடிற்று என்றவழிச் செயப்படு பொருளும் கொள்வானும் பயனும் இன்றி வந்தது. (உரையுள் கருத்தாவும் என்றிருந்தமை பிழை.) (தொ. சொ. 110 தெய். உரை)

காரணப்பெயர் இடுகுறி ஆதல் -

{Entry: D04__407}

சங்கரன் அருகன் நான்முகன் நாராயணன் தேவன் தேவி - என்னும் இத்தொடக்கத்தனவாகிய காரணப்பெயர் மக்கட் காயினும் விலங்குகட்காயினும் வரின் இடுகுறிப்பெயராம். (நன். 274 மயிலை.)

கரிகரம் : கரமுடைய காரணத்தால் கரியெனப் பெயர் பெறுவது யானை; இத்தொடரின்கண், கரி என்பது யானை எனப் பொருள்பட்டு இடுகுறியாம்.

பணிபணம் என்புழிப் பணி என்பது பணத்தையுடைய பாம்பு எனக் காரணப்பெயர் ஆகாது இடுகுறியாய்ப் பாம்பையே குறிக்கும்.

வேலன்வேல் என்புழி வேலன் என்பதும் இடுகுறியாய் முருகனையே குறிக்கும்.

பிறைசூடி, சக்கரபாணி, கணபதி, சிவகாமி, உலகமாதா, தெய்வயானை - இக் காரணப்பெயர்களையே ஒரு மகனுக்கும் ஒரு மகளுக்கும் ஓர் எருத்திற்கும் ஒரு பசுவிற்கும் வழங்கு மிடத்து இடுகுறியாகவே கொள்ளப்படும்.

‘வாள்போலும் வே ற்கண்

‘கோடாத செங்கோல் சீவக. 7

‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் கு. 563

அடியளந்தான் தாஅய தெல்லாம்’ கு. 610

இவற்றுள், கண் - கோல் - கோலன் - அரி - என ஒரு சொல்லாகவே கொள்வர். (இ. கொ. 116)

காரணம் இன்னதென்பது -

{Entry: D04__408}

காரியத்தை நிகழ்த்துவிப்பது காரணமாம். (தொ. சொ. 72 நச். உரை)

காரணம் காரியம் முதலியன மாறி வருதல் -

{Entry: D04__409}

1. ‘பிறப்பு என்னும் பேதைமை’ கு. 358 - பிறப்பிற்குக் காரண மாகிய பேதைமை : காரியம் காரணம் ஆனது.

2. ‘தீவினை என்னும் செருக்கு’ கு. 201 - தீவினையால் வரும் செருக்கு; காரணம் காரியம் ஆனது.

3. ‘குணி’ குணமாவது, ‘குணம்’ குணியாவது: ‘குணமும் குணியும்’ காண்க.

4. முன் இன்று பின்நோக்காச் சொல்’ கு. 184 - சொல்வானது வினை சொல்மேல் ஏற்றப்பட்டது.

5. ‘குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று’ கு. 523.

இந்தப் பானை நாழியரிசி பொங்கும் - உலக வழக்கு

‘குளவளா’ குளத்தின் உள்ளிடத்தையும், பானை அதன் உள்ளிடத்தையும் குறித்தன; இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றன.

6. ‘பீலிபெய் சாகாடும் அச் சு இறும்’ கு. 475 - இறுதல் : சினை யாகிய அச்சின் தொழில்; அது முதலாகிய சாகாட்டிற்கு ஆயிற்று.

இன்சொல், வன்சொல், மதுரகவி - என்பவற்றுள், சொல்ப வனது இனிமை வன்மை மதுரம் என்பன சொல்மேல் ஏற்றப்பட்டன.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும்’ கு. 389 - வாயினது சுவை யான கைப்பு செவிமேல் ஏற்றப்பட்டது.

இவையாவும் உபசார வழக்கு ஆகும். (பி. வி. 48)

காரண வகைகள் -

{Entry: D04__410}

காரணம், முதற்காரணம் துணைக்காரணம் என இரு வகைப்படும். முதற்காரணமாவது காரியத்தோடு ஒற்றுமை யுடையது. துணைக்காரணமாவது அம்முதற்காரணத்திற்குத் துணையாகிய வினை- செய்வது - செயப்படுபொருள் - நிலம் - காலம் - கருவி - இன்னதற்கு - இதுபயன் - என்னும் எட்டுமாம். (தொ. சொ. 74 நச். உரை)

காரிய வாசகம் -

{Entry: D04__411}

செயலைக் குறிக்கும் சொல்; செய்தல் என்னும் பொருட்டாய், உம்மை யடுத்த தொழிற்பெயரை அடுத்து வரப்பெறும்.

‘அணியலும் அணிந்தன்று’ (புற.1) காரிய வாசகம் -அணிதலையும் செய்தது உடன்பாட்டில் வந்தது.

‘உள்ளலும் உள்ளேன்’ (கலி. 23) - உள்ளுதலையும் செய்யேன்; வாழ்தலும் வாழேன் (கலி. 23) - வாழ்தலையும் செய்யேன் என எதிர்மறையில் வந்த காரிய வாசகம். (தொ. சொ. 113 நச். உரை)

காலக் கிளவி -

{Entry: D04__412}

காலக்கிளவி என்பது காலத்தைக் காட்ட வல்லதாகிய வினைச்சொல். (தொ. சொ. 204 இள. உரை )

காலகாரணம் -

{Entry: D04__413}

மூன்றாம்வேற்றுமைப் பொருள்களில் ஒன்று. ‘இப்பருவம், காரத்தின் வெய்யஎம் தோள்’ (ஐந்.ஐம். 24) என்பது, முன்பு சந்தனச் சாந்து போல் குளிர்ச்சி தந்த என்தோள்கள் இப்பொழுது காரமருந்து போல எரிச்சலைத் தருகின்றன - எனப் பொருள் படும். தோள்கள் வெம்மையுடையனவாகக் காரணம் இப்பருவம் - எனக் காலகாரணமாம். (இ. கொ. 34)

காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி -

{Entry: D04__414}

காலத்தின் அறியும் ஏழாம்வேற்றுமைப் பொருண்மை ‘காலைக் கண் வரும்’ என்பது. இது ‘காலைக்கு வரும்’ என நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராக வரும். (அஃதாவது நான்கன்உருபு ஏழாவதன் பொருட்கண் வந்து மயங்கும் என்றவாறு.) (தொ. சொ. 111 நச். உரை)

காலத்தின் வகை -

{Entry: D04__415}

இறப்பும் நிகழ்வும் எதிர்வும் எனக் காலம் மூன்று. இறப்பு - தொழிலது கழிவு; நிகழ்வு - தொழில் தொடங்கி முற்றுப் பெறாத நிலை; எதிர்வு - தொழில் பிறவாமை. (தொ. சொ. 197 இள. உரை)

காலத்துப் படினே கடிசொல் இல்லாமை -

{Entry: D04__416}

இறந்தகாலப் பழஞ்சொற்கள் வழக்கிழந்து போயினமை போலவே, பிற்காலத்துப் புதிய சொற்கள் வழக்கில் வழங்குதலு முண்டு. அவை பண்டு இல்லாத சொற்கள் என்று கடியத்தக்கன அல்ல.

எ-டு : சட்டி, சள்ளை, சமழ்ப்பு. (தொ. சொ. 452 சேனா. உரை)

அவ்வக் காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வரும் சொற்களை ‘இவை தொன்றுதொட்டு வந்தன அல்ல’ என்று நீக்குதல் கூடாது, தொல்காப்பியனார் மொழிக்கு முதலில் வாராது என்று குறிப்பிட்ட சகரம் பிற்காலத்துச் சட்டி சக்கரம் சள்ளை சமை - என வழக்கில் வந்துளது. (தொ. சொ. 452 நச். உரை)

வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின் தத்தமக்குக் குறிப்பிட்ட இலக்கணத்தான் வந்தில என்று கடியப்படா; எனவே காலப்பொருண்மை மயங்காமல் வரின் ஈறு திரியினும் அமைக என்றவாறு.

எ-டு : ‘பேரமர் உண்கண் இவளினும் பிரிக’, ‘மெலிகோல் செய்தேன் ஆகுக’ (புற. 71)

எதிர்காலம் குறித்த வஞ்சினம் தன்மைக்கண் வியங்கோள் வாய்பாட்டான் வந்தது. (வியங்கோள் தன்மை முன்னிலை இடங்களில் மன்னாது - என்பது சூத்திரம்.)

‘சென் மோ வாழி தோழி’ (நற். 365) செல்வேமோ எனற்பாலது ‘சென்மோ’ எனத் திரிந்து வந்தது. (தொ. சொ. 442 தெய். உரை)

அழான் புழான் - என்ற பண்டைய சொற்கள் பிற்காலத்தில் வழக்கு வீழ்ந்தனவற்றை விடுத்துப் புதியவாக வந்த சொற் களை ஏற்றல் கடியப்படாது. (தொ. சொ. 447 இள. உரை)

காலம், உலகம் : இவை அஃறிணைமுடிபு கோடலின் காரணம் -

{Entry: D04__417}

காலம் உலகம் முதலாக எண்ணப்பட்டவற்றுள் பெரும் பாலன தெய்வம் என்னும் உயர்திணைப்பொருளை உணர்த் தின வேனும், தெய்வம் என்னும் சொல் அஃறிணைவாசகம் ஆதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளும் எனப் பட்டது.

எ-டு : காலம் ஆயிற்று, உலகம் பசித்தது. (தொ. சொ. 58 நச். உரை)

காலம், உலகம் என்பன வடசொல் அல்ல, ஆசிரியர் வட - சொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராதலின். (இஃது இடைச்செருகல்) (நச். உரை)

காலம், உலகம் - முதலாயின உயர்திணைமுடிவு கொள்ளும் இடம் -

{Entry: D04__418}

காலம் உலகம் - முதலாயின காலன் உலகர் - என்றாற்போல ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி உயர்திணை முடிபு கொள்ளும்.

எ-டு : காலம் ஆயிற்று, காலன் கொண்டான்; உலகு மகிழ்ந் தது, உலகர் மகிழ்ந்தார். (தொ. சொ. 59 சேனா. உரை)

காலம் உலகம் உயிர் உடம்பு தெய்வம் வினை பூதம் ஞாயிறு திங்கள் சொல் வியாழம் வெள்ளி மதி கனலி - முதலிய சொற்கள் உயர்திணைப்பொருள்களைக் குறிப்பினும் சொல் லளவில் அஃறிணையாதலின் அஃறிணைவினையே கொள்ளும். இவை ஈறு திரிந்து வாய்பாடு உயர்திணையாயவழி உயர் திணை வினைகொள்ளும்.

எ-டு : காலன் கொண்டான், உலகர் பசித்தார், [ தேவன் வந்தான், பரிதியஞ்செல்வன் எழுந்தான், ‘திங்களஞ் செல்வன் யாண்டுளன்’ (சிலப் . 4 : 4) ] (தொ. சொ. 58, 60 நச். உரை)

காலம் உலகம் உயிர் உடம்பு முதலாயின பொருளான் உயர்திணையைக் குறிப்பினும் சொல்லமைப்பால் அஃறிணை யாதலின் அஃறிணை முடிபு கொண்டன. காலம் - கூற்றுவன்; உலகு - உலகமுடையான்; உயிர் என்பதனையும் தெய்வம் என்ப; ஞாயிறு, திங்கள் என்பனவும் அவை; சொல் - சொல்லின் கிழத்தி. ஆதலின், காலம் உலகம் முதலிய யாவும் தெய்வத்தைக் குறிக்கும் பெயர் என்ப. உலகமும் உடம்பும் உயிரும் மக்கட்பண்பு ; அல்லன தெய்வம் என்று கொள்க. (தொ. சொ. 58 ப. உ)

காலம் ஒட்டும் தொழிற்பெயரும், காலம் ஒட்டாதனவும் -

{Entry: D04__419}

காலம் ஒட்டும் தொழிற்பெயராவன உண்டான் தின்றான் - என்பன; இவை தொழில்செய்வான்மேல் நின்றன. காலம் தோன்றாத தொழிற்பெயராவன உண்டல் தின்றல் - என்பன; இவை அத்தொழில்மேல் நின்ற பெயர். (தொ. சொ. 71 இள. உரை)

காலம் கண்ணிய -

{Entry: D04__420}

பின் முன் கால் கடை வழி இடத்து - முதலிய ஈற்று வினை யெச்சங்கள் காலம் விளக்கிநில்லாது குறிப்பாதலின் போலும், ‘காலம் கண்ணிய’ எனப்பட்டன. இவை ஏனைய குறிப்புப் போலாது ஓரொரு காலத்தைக் குறித்து நிற்கும்.

எ-டு : ‘விடுத்தக்கால்’ என்பது ‘விடுத்து’ என இறந்த காலக் குறிப்பாயிற்று.

‘வாரி வளங்குன்றி(ய)க் கால்’ கு. 17 என்பது ‘குன்றின்’ என எதிர்காலக் குறிப்பாயிற்று. (தொ. சொ. 231 கல். உரை)

காலம் கரத்தல் -

{Entry: D04__421}

காலம் என்றது ஆகுபெயர். முதனிலை வினையுருபு தொகாது நிற்பப் புடைபெயர்ச்சி வினையுருபு தொக்கன வினைத் தொகை எனப்படும் என்பார், ‘காலம் கரந்த’ என ஆகுபெய ரால் கூறினார். புடைபெயர்ச்சி வினைகளை முதனிலை ஒழிந்த இறுதிகள் காட்டி நிற்றலின் அவ்வினைகளுக்கு அவை உருபாயின. (நன். 364 சங்.)

காலம் தோன்றும் பெயரும், தோன்றாப் பெயரும் -

{Entry: D04__422}

திணையும் பாலும் காலமும் இடனும் தோன்றும் தொழிற் சொல் (தெரிநிலை முற்று) படுத்தலோசைப்பட்டு நின்றால், தொழிற்பெயராய் (வினையாலணையும்பெயராய்) நின்று பயனிலை கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்று வித்தலும், பெயர்ப்பெயரும் பெயரது நிலையிலே நிற்றலை யுடைய சொல்லும் காலத்தை யாண்டும் தோற்றுவியாமை யும் உணரப்படும். (தொ. சொ. 71 நச். உரை)

பெயர்ப் பெயர் - இடுகுறியாய்ச் சாத்தன் கொற்றன் - என்றாற் போல வருவன. வினைப்பெயர் - புடைபெயர்ச்சி மாத்திரம் உணர்த்தி, உண்டல் தின்றல் - என்றாற்போல வருவன. பூசல் - வேட்டை - என்றாற் போலப் புடை பெயர்ச்சியை விளக்காது நிற்பனவு முள.

தொழிற்பெயர் - 1. உண்டான் தின்றான் - என்றாற் போலக் காலம் காட்டி வினைமுதல்மேல் நின்ற, படுத்தலோசை யானாம் தொழிற்பெயர்,

2. ஓசைவேறுபாட்டானன்றி, உண்டவன் உண்ணுமது என்றாற் போலத் தானே பெயராய்க் காலம் தோன்றி வினை முதல்மேல் நிற்கும் தொழிற்பெயர்,

3. ‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார் ’, (கலி. 12) அவன் ஏறிற் றுக் குதிரை, என்றாற் போலச் செயப்படுபொருட்கண் காலம் சுட்டி நின்ற தொழிற்பெயர்,

4. யான் சொன்னவன், உண்பது நாழி - என்பன போலச் செயப்படுபொருள்மேல் பெயராய்க் காலம் தோற்றி நிற்கும் தொழிற்பெயர் என்னும் இவையும் பிறவாற்றான் வரும் பெயர் வேற்றுமையும் என இவை. (நச். உரை)

காலம் பற்றிய கருத்து -

{Entry: D04__423}

காலம் மூன்று என்பாரும், தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சி ஆகலின் அஃது ஒருகணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லையாதலின் இறப்பு எதிர்வு எனக் காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் - எனப் பலமதம் உள. (ஆசிரியர் தொல்காப்பியனார் காலம் மூன்றே என்றார்.) (தொ. சொ. 202 நச். உரை)

இறப்பு நிகழ்வு எதிர்வு - எனக் காலம் மூன்றாம். முதற்கணத்து நிகழ்ச்சி இறந்தகாலத்ததாக, மறுகணத்து நிகழ்ச்சி எதிர் காலத்ததாக, நிகழ்காலம் ஒருகணநேரமே அளவின தொன்றா யினும், உண்டல் தின்றல் எனப் பல்தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், அந்நிகழ்வையும் சேர்த்துக் காலம் மூன்று என்றே இலக்கணநூலார் கொண்டனர். (தொ. சொ. 199, 200 சேனா. உரை)

இறப்பு நிகழ்வு எதிர்வு என முறையின் கூறாராயது, காலம் என ஒருபொருள் இல்லை என்பாரும், நிகழ்காலம் ஒன்றே என்பாரும், இறந்ததும் எதிர்வதும் என இரண்டு என்பாரும், இறப்பு நிகழ்வு எதிர்வு - என மூன்று என்பாரும் ஆன இப்பகுதியார் ஆசிரியர். அவருள் காலம் இல்லை யென்பார், ஒரு பொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப்பேறுஅல்லது காலம் என்று வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லை என்ப. இனிக் காலம் ஒன்று என்பார், யாறு ஒழுகும், மலைநிற்கும் - என உள்பொருள் ஒரு காலத்தானே சொல்லப்படும், பிறி தில்லை என்ப. இறப்பும் எதிர்வும் என இரண்டு என்பார், கோலோடும் கால் சென்றதூஉம் செல்வதூஉம் அன்றே? அதனால் நிகழ்வு இல்லை என்ப. மூன்று என்பார், நெருநல் - இன்று - நாளை எனவும், வந்தான். வாராநின்றான் - வருவான் எனவும் இவ்வாறு சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்று என்ப. இவ்விகற்பம் எல்லாம் அறிவித்தற்கு இவ்வாறு சூத்திரம் செய்தார் எனக் கொள்க. (நன். 381 மயிலை.)

இறப்பு எதிர்வு நிகழ்வு - எனக் காலம் மூன்று. யாதொரு பொருளும் தோன்றுமளவில் தோன்றி, வளருமளவில் வளர்ந்து, முதிருமளவில் முதிர்ந்து, அழியுமளவில் அழியுமன்றி, உயிர்கள் வேண்டியவாறு ஆகாமையின், அவற்றை அவ்வள வில் அவ்வாறு இயற்றுவது காலம் எனவும், அதனால் இயலும் பொருள்களின் தொழில் இறந்ததும் எதிர்வதும் நிகழ்வதும் ஆதலின், அவ்வாறு இயற்றும் காலமும் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணரப்படும். இங்ஙனம் உணராது காலமின்று எனவும், நிகழ்காலம் ஒன்றுமே எனவும், இறந்தகாலம் எதிர்காலம் இரண்டுமே எனவும் கூறுவார் கூற்றை விலக்கிக் ‘காலம் மூன்றே’ என்றார். நிகழ்காலம் போல வெள்ளிடைப் பொருளன்றி இறந்தகாலம் எதிர்காலம் இரண்டும் மறை பொருளாய் நிற்கும். (தொ. சொ. 382 சங்.)

காலவழு -

{Entry: D04__424}

காலவழுவாவது, பண்டு அன்று நெருநல் - எனவும், இன்று இப்பொழுது - எனவும், நாளை இனிமேல் எதிர் - எனவும் வரும் இத்தொடக்கத்து இறப்பு - நிகழ்வு - எதிர்வு - என்னும் முக்காலப் பெயரொடும் முக்கால வினையும் மயங்குவது. அது வந்தான் நாளை - வாராநின்றான் நெருநல் - வாரா நின்றான் நாளை - வரும் நெருநல் - எனவும், நாளை வந்தான் - நெருநல் வாராநின்றான் - நாளை வாராநின்றான் - நெருநல் வரும் - எனவும் வினைமேல் பெயரும் பெயர்மேல் வினையும் வந்து மயங்கின காலவழு எட்டு எனக் கொள்க.

(நன். 374 மயிலை.)

காலவழுவமைதிகள் -

{Entry: D04__425}

செய்து என்னும் எச்சத்தினது இறந்தகாலம், தன் இறந்த காலத்தின் நீங்காதுநின்றே முடிக்கும் சொல்லின் எதிர் காலத்தைப் பொருந்தும் இடத்தையுடைத்து.

எ-டு : நீ உண்டு வருவாய் - என்புழி, வருதல் தொழிலுக்கு உண்டல் தொழில் முன் நிகழ்ந்து ஆண்டும் தன் இறந்தகாலமே உணர்த்திற்று.

கொடி ஆடித் தோன்றும் - என்பதன்கண், தோற்றமும் ஆட்ட மும் உடன்நிகழ்தலின், செய்து என்பது நிகழ்காலத்தின் கண்ணும் வந்தது. ‘வாராக் காலம்’ எனவே இஃது அடங்கும்.

செய்யூ, செய்பு - என்பனவற்றிற்கும் ஒழிந்த எச்சங்களுக்கும் இம்மயக்கம் கொள்ளப்படும். (தொ. சொ. 241 நச். உரை)

முக்காலத்திற்கும் உளதாம் இயல்புடைய எவ்வகைப் பொருளையும், நிகழ்காலத்துக்குரியதாய் நின்றும் ஏனைக் காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் நிலைமையினையுடைய செய்யும் என்னும் சொல்லான் சொல்லுதல் வேண்டும். முக்காலத்துக்கும் பொதுவாய் முற்றும் எச்சமுமாய் நிற்பது செய்யும் என்னும் சொல்லாம்.

எ-டு : மலைநிற்கும், தீச்சுடும்

ஏனைய நிகழ்காலச் சொற்கள் முக்காலத்துக்குப் பொருந்தா.

(தொ. சொ. 242 நச். உரை)

எதிர்காலச் சொல்லினை விரைவு பற்றி இறந்தகாலத்தான் கூறலாம்.

எ-டு : சோறுண்ணக் காத்திருப்பானைப் புறத்தே போதல் வேண்டும் குறையுடையான் ஒருவன், ‘இன்னும் உண்டிலையோ?’ என்று வினாவியவழி, அவன் ‘உண்டேன் போந்தேன்’ என்னும்; உண்டுகொண் டிருப்பானும் ‘உண்டேன் போந்தேன்’ என்னும். இஃது எதிர்காலச் சொல்லும் நிகழ்காலச் சொல்லும் விரைவு பற்றி இறந்தகாலத்தான் கூறப்படும் காலவழு வமைதி. ( ‘மலர்மிசை ஏகினான்’ கு. 3 என்பதும் அது.)

(தொ. சொ. 243 நச். உரை)

இருவினைகள் பலவற்றுள்ளும் சிறந்த இருவினைக்கண்ணே நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம்மிக்கதனது பண்பைக் குறித்து வரும் வினைமுதற்சொல் சுட்டிச் சொல்லப்படுவதொரு வினைமுதல் இல்லாத இடத்து நிகழ்காலத்தான் சொல்லப்படும்.

எ-டு : சாத்தன் தவம் செய்தான் சுவர்க்கம் புக்கான், புகுவான்; சாத்தன் தாயைக் கொன்றான் நரகம் புக்கான், புகுவான் - என இறந்தகாலத்தாலும் எதிர் காலத்தாலும் கூறவேண்டுவது, எழுவாய் குறிப் பிட்டுச் சொல்லப்படாவிடத்து, தவம் செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என நிகழ்காலத்தான் கூறப்படும்.

இயற்கை பற்றியும் தெளிவு பற்றியும் கூறுமிடத்து, எதிர்காலச் சொல்லை இறந்தகாலச் சொல்லான் கூறலாம்.

எ-டு : இக்காட்டுள் போயின் கூறை கோட்படுவான் - என எதிர்காலத்தான் கூறப்படுவதனை, ‘இக்காட்டுள் போயின் கூறை கோட்பட்டான்’ என இறந்த காலத்தான் கூறுதல் காட்டின் இயற்கை பற்றிக் கூறியது.

‘எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறின் மழை பெய்யும்’ என எதிர்காலத்தான் கூறவேண்டுவது ‘மழை பெய்தது’ என இறந்த காலத்தான் கூறுவது, ‘இது நிகழின் இது நிகழும்’ என நூல்நெறியான் தெளிந்த செய்தியினைக் கூறும் தெளிவு ஆகும். (இது காட்சி பற்றிய தெளிவு என்பர் சங்.) (தொ. சொ. 247 நச். உரை)

இனி இறந்தகாலமும் எதிர்காலமும் தம்முள் மயங்கும்.

எ-டு : இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்.

நாளை அவன் வாளொடு வந்தான், பின் நீ என் செய்குவை? - என முறையே காண்க. (தொ. சொ. 249 நச். உரை)

இனி நிகழ்காலமும் இறந்தகாலத்தோடும் எதிர்காலத் தோடும் அருகி மயங்கும்.

எ-டு : இவள் பண்டு இப்பொழிலில் விளையாடும்; இவள் நாளை வரும் - என முறையே காண்க.

(தொ. சொ. 250 நச். உரை)

இவ்வாறு ஒரோஒரு காரணம் பற்றி முக்காலமும் தம்பொருள் சிதையாமல் மயங்கி வரப்பெறும்.

பிற உரையாசிரியன்மாரும் இவ்வுதாரணங்களே எடுத் தோதுவர்.

தம் தொழில் இடையறாது முக்காலத்தினும் ஒருதன்மைய வாய் இயலும் பொருளை நிகழ்காலத்தான் கூறுவது ஒரு காலவழுவமைதியாம்.

எ-டு : நிலம் கிடக்கிறது, மலைநிற்கிறது, யாறு ஒழுகுகிறது.

செய்யும் என்னும் முற்று ‘பல்லோர் படர்க்கை முன்னிலை த ன்மை’ யவாக வரும் ‘முக்காலத்தினும் ஒத்தியல் பொருட்கு’ இயையாமையானும், அவ்வழக்கு இன்மையானும் பொருந்- தாது.

யாறு ஒழுகும், தீச்சுடும் - என வரும் செய்யுமென் முற்று, யாறு ஒழுகும் தன்மைத்து, தீச்சுடும் தன்மைத்து - எனப் பொருள்படுதலின், ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ (404) என்னும் சூத்திரத்தின்பாற்படும். (நன். 383 சங்.)

விரைவு மிகுதி தெளிவு ஆகிய காரணங்கள் பற்றியும், அக் காரணங்களின்றியும் (பழக்கத்தாலும்) முக்காலங்களுள் ஒன்று மற்றொன்றாக ஏற்குமிடத்துக் கூறப்படும்.

எ-டு : உண்ண அமர்ந்தவனைப் புறத்து நின்றானொருவன் ‘இன்னும் உண்டிலையோ?’ என்றால், அவன் விரைவுபற்றி ‘உண்டேன் போந்தேன்’ என்னும்; உண்ணுகின்றவனும் அவ்வாறேகூறும் . ஈண்டு எதிர்காலமும் நிகழ்காலமும் விரைவு பற்றி இறந்த காலம் ஆயின.

‘கள்வான் நினையின் கையறுப்புண்டான்’ என மிகுதி பற்றி எதிர்வு இறப்பு ஆயிற்று. (கையறுப்புண்ணுதல் ஒரோவழித் தவறுதலுமுண்டாதலின், பெரும்பான்மை பற்றி எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று.)

‘அறம் செயின் சுவர்க்கம் புக்கான்’ ‘எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறின் மழை பெய்தது’ - நூல்தெளிவும் காட்சித்தெளிவும் பற்றி எதிர்காலம் இறப்பு ஆயிற்று.

‘யாம் பண்டு விளையாடுவது இக்கா’ - காரணமின்றி (பேசும் இயல்பினால்) இறப்பு எதிர்வாயிற்று. (நன். 384 சங்.)

கி section: 10 entries

கிரியாஅபாவம் -

{Entry: D04__426}

வினையின்மை. மூன்றாவதன் உருபான ஒடுவுடன் கூடிய பெயர்ச்சொல்லுக்கு ‘வினையின்மை’ யும் பொருளாம். எ-டு : மலையொடு பொருத மால்யானை என்புழி, பொருதல் யானைக்கே அன்றி மலைக்கு இல்லை. (பி. வி. 16)

கிரியா சட்டி -

{Entry: D04__427}

வினையைக் கொண்டு முடியும் ஆறாம்வேற்றுமை. இஃது ஆறாவதற்குரிய அது, அ - என்னும் உருபுகளை ஏலாது, கு என்னும் நான்கனுருபை ஏற்கும். இது வடமொழிமரபு பற்றிய செய்தி. ‘உற்றார்க்கு உரியர் பொற் றொடி மகளிர்’ என்பது போல்வன எடுத்துக்காட்டு. [ ‘குறையும் வினைகொளின் ஒரோவழி கூடும்’ என்பது இலக்கணக்கொத்து. ] (பி. வி. 16)

கிரியா விசேடணம் -

{Entry: D04__428}

வினைச்சொல்லின் அடைமொழி.

‘கருநாய் கவர்ந்த காலினர் சிதகிய பானையர்

பெருநாடு காண இம்மையிலே பிச்சைதானும் கொள்வர்’

(திவ். பிர. 3007)

இப்பாடலில் முதலடியிலுள்ள அடைகளைக் காலினராய்ப் பானையராய்ப் பிச்சை கொள்வர் - என ஆய் என்னும் எச்சம் தந்து பொருள்செய்து வினைமுற்றுடன் முடிப்பர். இது கிரியா விசேடணம் எனப்படும். (பி. வி. 39)

கிருத்தியப் பிரத்தியயம் -

{Entry: D04__429}

வடமொழியில் விதித்தல் பொருளில் தாதுவின்மேல் வரும் பிரத்தியயங்களாகத் தவ்யத் - தவ்ய - அநீய - என்ற மூன்றுள. தொழிலை அல்லது செயப்படுபொருளைச் சார்ந்து அவை வருவனவாம். த்வயா ஏதி தவ்யம் - உன்னால் பெருகப்படல் வேண்டும் (நீ பெருகுதல் வேண்டும்); த்வயா ஏ தனீயம் - (முன்னதன் பொருளே) : இவை பாவப் பிரயோகம். த்வயா தர்ம: சேதவ்ய : சயனீய! உன்னால் அறம் ஈட்டப்பட வேண்டும் (அறத்தை ஈட்டுக.)

இவ்வாறே தமிழில் வரும் வேண்டும் - படும் - தகும் - என்ற மூன்றும் இருதிணை ஐம்பால் மூன்றிடத்தும் ஒன்றற் கொன்று பரியாயமாய் விதிப்பொருளில் வரும்; அநவ்வியய கிருத்தான பிரத்தியயம் போலுதலின், இவை விகுதிகளாம் என்பது பிரயோகவிவேகம் கூறும் இலக்கணமாம்.

எ-டு : ‘ஓஒதல் வேண்டு ம்’ கு. 653

‘நீயே நின்குறை, சொல்லல் வேண்டுமால் அலவ அகநா. 170

‘வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டு ம்’ சொ. 33 சே.
‘நலம்வேண்டின் நாணுடைமை வேண் டும்’ கு. 960

(‘இங்குப் பரிமேலழகர் ‘வேண்டும்’ என்பதனை விதிப்பொருட்டு என்றார்)

என்பன பாவப் பிரயோகமாக - விதிப்பொருளில் - வந்தன என்பது விளக்கப்படுகிறது.

‘வஞ்சரை அஞ்ச ப் படும்’ (கு. 824) என்பது அஞ்சல்வேண்டும் - அஞ்சல் தகும் - என்றும் பொருள்படும். படவே, வேண்டும் தகும் படும் - என்பன விதிப்பொருளில் வந்த கிருத்தியப் பிரத்தியயம் போல்வனவேயாம் என்பது பிரயோகவிவேகம் காட்டும் முடிபு.

வேண்டும் தகும் படும் - என்னும் மூன்றும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அல்லாத வினைவழி விகுதிகள். (வடமொழி யில் அநவ்வியய கிருத் பிரத்தியயங்கள் எனப்படும்.) (பி. வி. 41)

கிருதந்தம் -

{Entry: D04__430}

வினையாலணையும் பெயர் ; வினைமுற்றுப் பெயர் என்பதும் இதுவே. இது 1) கருத்தா ஆதல் 2) செயப்படுபொருள் ஆதல் 3) தொழிற்பெயர் ஆதல் 4) கருவி யாதல் 5) இடம் ஆதல் 6) இகரம் பெறல் 7) முதல்வேற்றுமையுருபு பெற்று நீங்கல் 8) ஏனைய உருபுகளை ஏற்றல் 9) ஈற்றயல் எழுத்துத் திரிதல் - எனும் ஒன்பது இலக்கணங்களைப் பெறும்.

1. ‘தார் தாங்கிச் செல்வது தானை’ (கு. 767), ‘வினையே செய்வது’ (சொ. 112 சே.) செல்வது தானை, செய்வது தொழில் முதனிலை - என வினையாலணையும்பெயர்கள் எழுவாய் ஆயின.

2. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ கு. 166 - செயப்படுபொருள் ஆதல் (கருமமான கிருதந்தம்)

3. உறங்குவது விழிப்பது கு. 339 - தொழிற்பெயர் ஆதல் (பாவமான கிருதந்தம்)

4. ‘வேலன்று வென்றி தருவது’ கு.546 - கருவிப்பொருளில் வந்தது (கரணமான கிருதந்தம்)

5. ‘பற்றியார் வெல்வது அரண்’ கு. 748, ‘ஆ ற்ற விளைவது நாடு’ கு. 732, யாமிருப்பது உறையூர் - இடப்பொருளில் வந்தன (அதிகரணமான கிருதந்தம்)

6. மண்ணுணி - மண்ணை யுண்பது - கருத்தா; ஊருணி - ஊராரால் உண்ணப்படுவது - கருமம்; மானேந்தி, பிறைசூடி, வேடதாரி என்பன இகரம் பெற்றவை.

7. எழுவாயாய் நிற்றல் - முதல்வேற்றுமை உருபு ஏறி நீங்கிற்று என்பது பி. வி. நூலார் துணிபு.

8. வந்தானை, இருப்பதனால், உண்டானுக்கு - ஏனை உருபேற்றல்;

9. வந்தவன் தின்பவர் - ஈற்றயல் எழுத்து (வந்தான் - தின்பார் என்பவற்றுள் தா, பா) திரிந்தன.

செய்வினை வாய்பாட்டில் வருவன செயப்பாட்டு வினைப் பொருள் தருமிடங்களும் உள.

எ-டு : ‘தாம் வீழ்வார்’ (கு. 1103), ‘அரம் பொருத பொன்’ (கு. 888) - இவைமுறையே தம்மால் வீழப்படுவார் - எனவும், அரத்தால் பொரப்பட்ட பொன் - எனவும் பொருள்படும்.

செயப்பாட்டுவினை வாய்பாட்டில் வருவன சில ஒரோவழி எழுவாய் மூன்றனுருபு பெறதலும் பெறாமையும் உள.

‘கேள்வியால் தோட்கப் படாத செவி’ (கு. 418), முகடியால் மூடப்பட்டார்’ (936) : இவை உருபு பெற்றன.

வேந்து செறப்பட்டவர்’ (கு. 895) : உருபு பெறாமல் வந்தது. (பி. வி. 37)

கிழவோன் : சொல்லமைப்பு -

{Entry: D04__431}

கிழவோன் என்பது ‘கிழவான்’ என ஆகாரமாக வழக்கின்மை யின் ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாகத் திரிந்து வந்த செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஓன்ஈறு எனக் கொள்க. ‘கிழவோள்’ என்பதும் அது. (தொ. சொ. 198 நச். உரை)

கிளவி என்பதன் பொருள் -

{Entry: D04__432}

கிளவி என்பது சொல்லைக் குறிக்கும்; ‘வகரக்கிளவி’ (எ. 81 நச்.) என்றவழி, ‘கிளவி’ ஆகுபெயரான் எழுத்தைக் குறித்தது; ‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ (சொ. 4 நச்.) என்றவழி ஆகுபெயரான் பொருளைக் குறித்தது. ஆகவே, கிளவி என்பது இயற்பெயராக நின்று சொல்லையும் (எ-டு : ‘தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே’ தொ. சொ. 266 சேனா.) ஆகுபெய ரால் எழுத்தையும் பொருளையும் குறிக்கிறது. ‘இடைச்சொற் கிளவி’, ‘உரிச்சொற்கிளவி’ - (தொ. சொ. 159) என்றாற் போலப் பொருள் தாராது இசைநிறைக்கும் சொல்லாகவும் அது வரப்பெறும்.

இது செயல் வேண்டும் என்னும் கிளவி என்புழிக் கிளவி தொடரைக் குறிக்கிறது. ‘கிழவி சொல்லின் அவளறி கிளவி’ எனக் கருத்தையே குறிக்கிறது.

கிளவியாக்கத்தை அடுத்து வேற்றுமையியலை அமைத்தமை -

{Entry: D04__433}

கிளவியாக்கத்துள் நால்வகைப்பட்ட சொற்களும் பொருள் கள் மேல் ஆமாறு கூறப்பட்டது. அவற்றுள் முதலாவது பெயர்ச் சொல். பெயர் இலக்கணமாகிய பயனிலை செப்பல், உருபேற்றல், காலம் தோன்றாமை - ஆகியவற்றை யுணர்த்தி னார் இயைபுபட்டமையான் வேற்றுமைப் பொருள்கள் உணர்த்தும் வேற்றுமையியலை கிளவியாக்கத்தை அடுத்து வைத்தார். (தொ. சொ. 63 இள. உரை)

கிளவியாக்கத்தில் நான்கு சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்தி அவற்றின் சிறப்பிலக்கணம் உணர்த்துதற்கு இடையே, வேற்றுமையிலக்கணம் உணர்த்த வேறிடம் இன்மையானும், வேற்றுமையிலக்கணமும் பொதுவிலக்கண மாதல் ஒப்புமை யானும், உருபேற்றல் பெயர்க்கு இலக்கணம் ஆதலின் வேற்றுமை யுணர்த்திப் பெயருணர்த்தல் முறையாக லானும், கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்கும் இடையே வேற்றுமையிலக்கணம் உணர்த்தப்பட்டது. (தொ. சொ. 62 சேனா. உரை)

கிளவியாக்கத்துள் நான்கு சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்தினார். அத்தொடர்பில் வேற்றுமையாகிய பொது விலக்கணமும் உடன்கூறப்பட்டது. வேற்றுமைதானும் பெயரும், ஒருசார் வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமாகிய பொதுவிலக்கணம் உடையது.

(தொ. சொ. 63 நச். உரை)

பொதுவிலக்கணத்துள் அல்வழியைக் கிளவியாக்கத்துள் கூறி, அடுத்து வேற்றுமையை அடுத்த மூன்று இயல்களிலும் குறிப்பிட்டார் ஆசிரியர். (தொ. சொ. 61 தெய். உரை)

கிளவியாக்கம் -

{Entry: D04__434}

கிளவியாக்கம் என்பது தொல்காப்பியச் சொற்படலத்தின் முதலியல். இது தொடர்மொழியின் அல்வழிப்புணர்ச்சிக்கண் காணப்படும் வழு - வழாநிலை - வழுவமைதி - என்பவற்றைக் குறிப்பிடும் 62 நூற்பாக்களையுடையது. வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையால் கிளவியாக்கம் என்பது பெயராயிற்று. சொற்கள் பொருள்கள்மேல் ஆமாறு உணர்த்தினமையின் இவ்வியல் கிளவியாக்கம் ஆயிற்று எனினுமாம்.

இருதிணை ஐம்பால்கள், ஆண் - பெண் - பலர் - ஒன்று - பல -ஆகிய பால்காட்டும் வினைகளின் ஈறுகள், அலி என்ற சொல், எழுவகை வழு, செப்பு வினா வழாநிலை, செப்புவழுவமைதி, மரபுவழு, இயற்கைப்பொருள் செயற்கைப்பொருள்களைக் கிளக்கு மரபு, ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்தல், வண்ணச் சினைச்சொல் மரபு, திணை பால் வழுவமைதி, மூவகை இடம் பற்றிய சில சொற்கள், உம்மை பெறும் இடங்கள், சுட்டுப் பெயர்மரபு, திணைவழுவமைதி, பாற்பொதுப்பெயர் மரபு, பல பொருள் ஒருசொற்கள், அஃறிணை முடிபு கொள்ளும் உயர்திணைப்பெயர்கள் பற்றிய செய்திகள், திணைவழுக் காத்தல் - முதலான செய்திகள் இவ்வியலுள் இடம் பெற்றுள.

கிளவியாக்கம் - சொல்லினது தொடர்ச்சி; சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமை கிளவியாக்கம் ஆயிற்று. (தொ. சொ. 1 தெய். உரை)

சொற்கள் பொருள்கள்மேல் ஆமாறு உணர்த்தியமையான் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று, சொல்லதிகார முதலோத்து. ஒருவன்மேலாமாறு இது, ஒருத்திமேலாமாறு இது, பலவற்றின்மேலாமாறு இது, வழுவமையுமாறு இது - எனப் பொருள்கள்மேல் ஆமாறு உணர்த்தியமை இதனுள் காண்க. மற்று, ஏனையோத்துக்களுள்ளும் பொருள்கள் மேலாமாறே யன்றோ உணர்த்தியது? மாறுணர்த்தியது இல்லையெனின், ஏனையோத்துக்களுள் பொருள்கள் மேலாய் நின்றவற்று இலக்கணம் உணர்த்தினார்; ஈண்டு அவைதம்மை ஆமாறு உணர்த்தினார் என்பது.

(தொ. சொ. 1 கல். உரை)

கிளவியாக்கம் : சொல்லாய்வு -

{Entry: D04__435}

கிளவி என்பதற்கு நாவினின்றும் கிளைத்தலையுடையது என்பது பொருள். ‘கிள்’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஏவற்பொருளுணர்த்தும் அகரத்தொடு கூடக் ‘கிள’ என்றாகிப் பின்னர் உடைமைப்பொருள் தரும் இகரஇறுதி இடைச்சொல் பெற்றுக் கிளவி என நின்றது. இச்சொல், ககரக்கிளவி - வகரக்கிளவி - என எழுத்தையும், உரையசைக் கிளவி - மாரைக்கிளவி - என அசையையும், பெயர்நிலைக் கிளவி - வினையெஞ்சுகிளவி - எனச் சொல்லையும், ‘இரு நான்கு கிளவி’ (பொ. 102 நச்.) ‘தொல்லோர் கிளவி’ (தொ. சொ. 133 நச்.) எனச் சொற்றொடரையும் குறித்து வரும். ஆதலின் கிளவி என்பது, தனிமொழி - தொகைமொழி - தொடர் மொழிக்குப் பொதுவாக நின்றது.

ஆக்கம் என்னும் சொல், ஆ (ஆதல்) என்னும் முதனிலை அடியாகப் பிறந்த ‘ஆகு’ என்னும் ஏவல்வினை ‘ஆக்கு’ என்னும் பிறவினையாகிப் பின்னர்ப் பண்புப்பொருள் தரும் அம் என்னும் இறுதிநிலை யிடைச்சொல் பெற்று முடிந்தது.

யாதானும் ஒருசொல்லை (வேர்ச்சொல்லை) இருதிணை ஐம்பாலுள் ஒன்றற்கு உரியதாக ஆக்கிக் கொள்ளலும், செப்பும் வினாவுமாக வரும் தொடர்மொழிகளை வழுவின்றி ஆக்கிக் கொள்ளலும் ஈண்டு ஆக்கமாம். இலக்கண வரை யறையிற் சிறிது பிறழ்ந்து வரினும், சான்றோர் வழக்காய்ப் பொருளுணர்ச்சி திரியாமல் மரபாக வருவனவற்றை வழாநிலையாக மேற் கொள்ளுதலும் ஆக்கம் எனவே படும்.

(தொ. சொ. பக். 24 ச. பால.)

கு section: 40 entries

கு ஐ ஆன் செய்யுட்கண் ஈறு திரிதல் -

{Entry: D04__436}

கு ஐ ஆன் - என்னும் வேற்றுமை யுருபுகள் செய்யுளோசை நயம் கருதி ஈறு திரிதலுமுண்டு.

எ-டு : ஆசிரியர்க்கு என்பது ‘ஆசிரியர்க்க’ (எ. 389 நச்.) எனவும், காவலோனை என்பது ‘காவலோன’ எனவும், புலவரான் என்பது ‘புலவரான’ எனவும் குகரம் ககரமாகவும், ஐகாரம் அகரமாகவும், ஆன் என்பது ‘ஆன’ என அகரம் மிக்கும் உயர் திணைக் கண் திரிதல் சிறுபான்மை உரித்து.

ஆன் என்பது ‘புள்ளிய ற் கலிமா உடைமை யான’ (தொ.பொ. நச். 194) எனச் செய்யுட்கண் (அஃறிணைக்கண்ணும்) அகரம் பெற்றுத் திரியும். (தொ. சொ. 109, 110 நச். உரை)

குகரஈற்று வினையெச்சம் -

{Entry: D04__437}

குகரஈற்று வினையெச்சம் உணற்கு வந்தான் - என்றாற் போல எதிர்காலத்து வரும். உண்டான் - உண்டவன் - என்னும் தொழிற் பெயர்கள் உண்டாற்கு - உண்டவற்கு - என நான்கனுருபு ஏற்குமிடத்துச் செயற்கு என்னும் எச்சப்பொருள் தரும் மயக்கமின்மையும், உணல் என்னும் வினைப்பெயர் குகரம் அடுக்குமிடத்து உண்டலைச் செய்தற்கு என்னும் பொருள் தந்து எச்சப்பொருட்டாயே நிற்றலின், வினைப் பெயர் நான்கனுருபு பெற்று நின்றது என்னும் மயக்கம் இதற்கு இன்மையும் உணரப்படும். எற்றுக்கு வந்தான் என்பது எக்காரியம் செய்தற்கு வந்தான் என்னும் பொருட்டாய் இவ்வெச்சக்குறிப்பாய் நிற்கும். ‘எவற்றுக்கு’ என்பதும் அது.

(தொ. சொ. 230 நச். உரை)

குடிப்பெயர் -

{Entry: D04__438}

இஃது உயர்திணைப்பெயர் வகைகளுள் ஒன்று, ‘குடி ப்பெய ராவன கூறுங்காலை, சேரன் சோழன் பாண்டியன் என்றிவை , போல்வன பிறவும் பொருத்தம் கொளலே’ என்ப ஆகலான், சேரமான் மலையமான் முதலிய அரசரினப் பெயர்களும், பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் - என்றாற் போன்ற சாதிப் பெயர் களும் குடிப்பெயர்களாம். (தொ. சொ. 167 நச். உரை)

குடிப்பெயர் - மலையமான், சேரமான் என்பன.

(162 இள. 165 சேனா. உரை)

குடியினான் ஆயபெயர் சேரன் சோழன் பாண்டியன் என்பன. குடிப்பெயர் - குலத்தினான் ஆகிய பெயரும் ஆம். அந்தணன் அந்தணி அந்தணர் என்பன. அஃதேல், பாம்பு நாய் மணி - என்பனவும் அந்தணன் என வருமால் எனின், அவ்வாறு வருவன நூலகத்து ஆளுதல்வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறி என்று கொள்ளி னல்லது, பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்றவழிப் பொருள் புலப்படாமையின் அது வழக்கன்று என மறுக்க. (தொ. சொ. 161 தெய். உரை)

குடிமை ஆண்மை உலகம் காலம் - முதலியன ஆகுபெயர் ஆகாமை -

{Entry: D04__439}

குடிமை ஆண்மை முதலியன எல்லாம் பெரும்பான்மையும் உயர்திணைக்குப் பண்பேயாய் நின்று அப்பண்பினை உணர்த்தி, அஃறிணையாய் நில்லாது, அப்பண்புச்சொல் தன்னையும் தன்னையுடைய பொருளையும் ஒருங்கு தோற்று வித்து பிரியாது நிற்றலின், உணர்திணைப்பொருளை உணர்த்தினவாம். குடிமை ஆண்மை முதலியன ஆகுபெய ராயின், குடிமை நல்லன் - ஆண்மை நல்லன் - முதலாக உணர் திணையாய் முடிதல் வேண்டும். அங்ஙனம் முடியாமை யின் அவை ஆகுபெயர் அல்ல.

உலகம் என்பது மக்கள்தொகுதியை உணர்த்தியவழி உயர் திணையாயும், இடத்தை உணர்த்தியவழி அஃறிணையாயும் வருதலின், ஒருசொல் இருபொருட்கண்ணும் சென்றது எனப்படாது, இருசொல் எனவே படும். அங்ஙனமாக, மக்கள் தொகுதியை உணர்த்துங்கால் உரிய பெயராலேயே உணர்த் திற்று; ஆகுபெயர் அன்று. (தொ. சொ. 57, 58 நச். உரை)

குடிமை, ஆண்மை முதலியன - இருதிணை முடிபின ஆதல் -

{Entry: D04__440}

குடிமை ஆண்மை முதலியன ஒருவன் ஒருத்தி பலர் - என்னும் உயர்திணை முப்பாற்கும் பொதுவாய்ப் பின்னர் முடியுங்கால் அஃறிணைமுடிபினவாகவும் உயர்திணைமுடிபினவாகவும் வரும்.

எ-டு : குடிமை நன்று, நல்லன், நல்லள், நல்லர்; வேந்து நன்று, செங்கோலன்; ஆண்மை நன்று, நல்லன், நல்லள், நல்லர் (ஆண்மை, ஆளும் தன்மை நச். ) (தொ. சொ. 57,59 இள. உரை)

குடிமை ஆண்மை முதலியன உயர்திணைக்கே உரியவாதல் -

{Entry: D04__441}

குடிமை - குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்.

ஆண்மை - ஆளும் தன்மையும் ஆள்வினையும்.

இவை உயர்திணைக்கே உரியன; இளமை, மூப்பு என்பனவும் அன்ன.

அடிமை - அடிமைத்தன்மை; உயர்திணை இருபாற்கு முண்டு.

வன்மை - ஒருதொழிலை வல்லுதல்; உயர்திணை இருபாற்கு முண்டு.

விருந்து - புதியராக வந்தவர்; உயர்திணை இருபாற்கு முண்டு.

குழு - ஐம்பெருங்குழுப் போல்வது; உயர்திணை இருபாற்கு முண்டு.

தன்மை திரிபெயர் - அலி. உறுப்பின் கிளவி - குருடு, முடம்; உயர்திணை இருபாற்கும் உரித்து.

காதல், சிறப்பு, செறல்சொல், விறல்சொல் - என்பனவும் உயர்திணை இருபாற்கும் வருவன. ஆதலின் இவையெல்லாம் உயர்திணைக்கே உரியனவாம்.

ஆண்மை - ஆண்பாலாகிய தன்மையைச் சுட்டும்போதும், பெண்மை - பெண்பாலாகிய தன்மையைச் சுட்டும்போதும், அரசு - விலங்குஅரசையும் சுட்டும்போதும், மகவும் குழவியும் விலங்குகளுக்கும் வரும்போதும் இருதிணைக்கும் பொதுவாய் வரும். (தொ. சொ. 57 நச். உரை)

குடிமை முதலியன ‘உயர்திணை மருங்கின் நிலையின’ ஆதல் -

{Entry: D04__442}

குடிமை முதலியவற்றுள் விரவுப்பெயராய் அஃறிணைப் பண்பையும் உணர்த்துவனவாக ஆண்மை பெண்மை இளமை அரசு மக குழவி - என்பன உளவேனும், சொல்லு வான் குறிப்பான் குடிமை முதலியன ஒருகால் உயர்திணைப் பண்பே உணர்த்தும் என்று கருதி ‘உயர்திணை மருங்கின் நிலையின’ என்று கூறப்பட்டது. (தொ. சொ. 57 நச். உரை)

கு டு து று - ஈறுகள் -

{Entry: D04__443}

உண்கு (உண்பேன்), உண்டு (உண்டேன்), வந்து (வந்தேன்), வருது (வருவேன்), சென்று (சென்றேன்). சேறு (செல்வேன்), உரிஞுகு (உருஞுவேன்), திருமுகு (திருமுவேன்) - எனக் குடுதுறுக்கள் எதிர்காலமும் இறந்தகாலமும் பற்றி வந்தன. இனித் துவ்விகுதி

‘கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்

தொல்லது விளைந்தென நிலன்வளம் கரப்பினும்‘ (புற. 203)

எனச் செய்யுளகத்துப் பொழிந்து விளைந்து என்பன பொழிந் தேன் - விளைந்தேன் - என இறந்தகாலம் பற்றி வருதலும் காண்க. (நன். 331 இராமா.)

கு டு து று - காலம் உணர்த்துமாறு -

{Entry: D04__444}

குற்றியலுகரம் இந்நான்கும் பெரும்பாலும் எதிர்காலத்தும், சிறுபான்மை ஏனைக் காலத்தும் வரும்.

எ-டு : உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு - என உம் ஈறு போல எதிர்காலம் காட்டின. ‘கழிந்தது பொழிந்தென வான்கண் மாறி னும், தொல்லது விளைந்தென நிலன்வளம் கரப்பினும்’ (புற. 203)

என்புழிப் பொழிந்து எனவும் விளைந்து எனவும் இறந்த காலம் உணர்த்தின.

அழாஅற்கோ இனியே’ (குறுந். 192) - ‘அழுகு’ என்னும் உடன் பாட்டிற்கு அழாஅற்கு’ என எதிர்மறை வந்தது.
தாங் கு நின் அவலம் என்றீர்’, ‘யார்மேல் விளியுமோ கூறு (கலி. 88)

என இவை வியங்கோளாயும் வரும். (தொசொ. 205 நச். உரை)

குணசந்தி -

{Entry: D04__445}

வடமொழியில் ஆ ஏ ஓ - என்னும் எழுத்துக்களுக்குக் குணம் என்பது பெயர். சொற்கள் புணர்கையில் ஏற்படும் குண விகாரங்களைக் கொண்ட சந்தி குணசந்தி எனப்படும்.

1. அஆ - ஈறாகிய நிலைமொழிக்கு முன் இஈ என்ற எழுத்துக் களை முதலாகக் கொண்ட வருமொழி வருங்கால், நிலை மொழியீறும் வருமொழிமுதலும் கெட, ஏகாரம் இடையே வந்து புணரும்.

எ-டு : நர + இந்திரன் = நரேந்திரன்; உமா + ஈசன் = உமேசன்.

2. அ ஆ - ஈறாகிய நிலைமொழிக்குமுன், உகர ஊகாரங்களை முதலிற்கொண்ட வருமொழி வரின், நிலைமொழியீறும் வருமொழிமுதலும் கெட, ஓகாரம் இடையே வந்து புணரும்.

எ-டு : தாம + உதரன் = தாமோதரன் ; சமுத்திர + ஊர்மி = சமுத்திரோர்மி (கடலலை)

3. அ ஆ - ஈற்றின் முன் ஏ ஐ - வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஐகாரம் இடையே வந்து புணரும்.

எ-டு : லோக + ஏகநாதன் = லோகைக நாதன் ; மந்திர + ஐசுவரியம் = மந்திரைசுவரியம்

4. அ ஆ - ஈற்றின்முன் ஓ ஒள - வரின், நிலைமொழியீறும் வருமொழிமுதலும் கெட, ஒளகாரம் இடையே வந்து புணரும்.

எ-டு : கலச + ஓதனம் = கலசௌதனம்; மந்திர + ஒளடதம் = மந்திரௌடதம் (பி. வி. 28)

குணமும் குணியும் -

{Entry: D04__446}

குணமாவது ஒருபொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் கெடாது நிற்பது. குணியாவது பண்பை யுடைய பொருளாகிய பண்பி. ‘இல்லது என் இல்லவள் மாண்பானால்’ (கு. 53) என்புழி, ‘மாண்பு’ மாண்புடையாள் எனப் பொருள்பட்டுக் குணம் குணியானது. சிற்றினம் அஞ்சும் பெருமை’ (கு. 451) என்புழி, அஞ்சும் வினை பெருமையுடை யோரைக் குறித்தது; இது குணவினை குணிவினை ஆயிற்று.

(பி. வி. 48)

‘குயவன் குடத்தை வனைந்தான்’ : சொல் முடிபு -

{Entry: D04__447}

‘குடத்தை வனைந்தான்’ என்பது ஒருசொல்நீர்மைப்பட்டுச் குயவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாம். குயவன் வனைந்தான் என்புழி, வனையப்பட்டதும், அதற்காம் கருவி யும், அதனால் பயனும், பிறவும் தோன்றுமாதலின், அப் பொருளே வேற்றுமையாகி இடைக் கிடக்கின்றன என்க. இவையெல்லாம் இடைக்கிடப்பன ஆதலின் செய்கின்றான் முன்வைக்கப்பட்டான். (தொ. சொ. 66 தெய். உரை)

குரை என்னும் இடைச்சொல் -

{Entry: D04__448}

‘இசைநிறைக் கிளவி ஆகி வருந’ என்பது இடைச்சொல் வகை ஏழனுள் ஒன்று. தமக்கெனத் தனிப்பட்ட வகையான் ஒரு பொருளின்றித் தாம் சார்ந்த பெயர்வினைகளின் தொடர் பாலேயே பொருள்படும் இடைச்சொற்களுள், இசைநிறை என்னும் வகை வேறுபொருள் உணர்த்தாது செய்யுளுள் இசைநிறைத்தலையே பொருளாக உடையதாம்.

எ-டு : ‘அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே’ (புற. 5) - ‘குரை’ இசைநிறை ஆயினவாறு. (தொ. சொ. 250, 272 சேனா. உரை) (தொ. சொ. 252, 274 நச். உரை)

அசைநிலைக்கிளவி போலப் பிரிந்துநில்லாது ஒரு சொல்லோடு ஒற்றுமைப்பட்டு இசைநிறைத்தற் பொருளவாய் வருவன இசைநிறைக்கிளவி. (தொ. சொ. 247 தெய். உரை)

எ-டு : ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (கு. 1045) - குரை : அசைநிலை. இசைநிறையாவது இசைநிறைத் தற்பொருட்டு ஒருசொல்லோடு ஒட்டிவரும்; அசை நிலை தனித்து வரும்.

குழுவின் பெயர் -

{Entry: D04__449}

இஃது உயர்திணைப்பெயர் வகைகளுள் ஒன்று. தாம் கூட்ட மாகச் சேர்ந்து ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர் மேல் எக்காலத்தும் நிகழும் பெயர்கள் குழுவின் பெயராம்.

எ-டு : அவையத்தார், அத்திகோசத்தார், வணிக கிராமத் தார், மாகத்தார். (அவையத்தார் - நீதி வழங்கும் அவைக்கண் வைகும் உறுப்பினர்; அத்திகோசத்தார் - யானைமேல் சுமக்கத்தக்க செல்வமுடையவராம் வணிகக் குழுவினர்.) (தொ. சொ. 167 நச். உரை)

(தொ. சொ. 168 கல். உரை)

குழூஉக்குறி -

{Entry: D04__450}

பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும், வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றும், வேடியர் கள்ளைச் ‘சொல்விளம்பி’ என்றும், இழிசினர் சோற்றைச் ‘சொன்றி’ என்றும், பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் குழூஉக்குறியாம். (நன். 266 மயிலை.)

ஒரு கூட்டத்தார் தத்தமுள்ளே புலனாகுமாற்றான் அடை யாள மாகச் சிலபொருள்களைக் குறிக்கத் தாமே வகுத்துக் கொண்ட சொல்லும் சொற்றொடரும்.

எ-டு : பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்பர்; யானைப்பாகர் ஆடையைக் ‘காரை’ என்பர்; வேடர் கள்ளைச் ‘சொல்விளம்பி’ என்பர்; வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்பர்.

ஒவ்வொரு குழுவினுள்ளார் யாதானும் ஒரு காரணத்தால் ஒருபொருளினது சொற்குறியை ஒழித்து வேறொருசொற் குறியால் கூறுவது குழூஉக்குறி. இது தகுதிவழக்குச் சொற்களுள் ஒன்று. “இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச் சொல்லால் சொல்லுதல் தகுதியன்று; வேறொரு சொல்லாற் கூறுதல் தகுதி” எனக் கருதிக் கூறுதலின் இது தகுதி வழக்காம். (நன். 267 சங்.)

குழையன் முதலியன வினைக்குறிப்பு ஆதல் -

{Entry: D04__451}

‘சாத்தன் குழையன்’ என்புழி, குழையாகிய பொருளும் உருபும் உடைமையென்னும் சொல்லும் ஒற்றுமைப்பட்டுக் குழையன் என ஒரு சொல்லாகி வருதலின், அதுவும் வினைக் குறிப்பாம். இது வேற்றுமைத்தொகை ஆகாதோ எனின், அஃது உருபு தொக வருதலும் பொருள்தொக வருதலும் என இருவகைத்து. அவற்றுள் உருபுதொக வரின் ‘குழையுடை யன்’ எனல் வேண்டும்; பொருள் தொக வரின் ‘குழைச்சாத் தன்’ எனல் வேண்டும்; இவ்விருவாற்றானும் அன்றிக் ‘குழையன்’ என வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின் அது வேற்றுமைத் தொகை ஆகாது என்பது. (தொ. சொ. 208 தெய். உரை)

குற்றி அல்லன்: தொடர் இலக்கணம் -

{Entry: D04__452}

ஐயத்திற்கு வேறாய்த் துணியப்பட்ட பொருளிடத்து அன்மைத் தன்மையைச் சொல்லுதலும் உரித்து.

எ-டு : திணையையம் தோன்றியவழி, ‘குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றாநின்ற உருவு’ என வினாவப்படும். இனி ‘மகன்’ என்று துணிந்தவழி அன்மைத்தன்மையை மகன் என்ற உயர்திணை யாண்பாற்சொல்லில் வைத்து (‘அல்லன்’ என்னும் வாய்பாட்டான்) ‘குற்றி அல்லன், மகன்’ என்று கூறுக. ‘குற்றி அல்லன்’, என்புழிக் ‘குற்றியின் அல்லன்’ என ஐந்தனுருபு விரித்துரைக்க. (குற்றியின் நீங்கிய அன்மைத்தன்மையன் அல்லன் என்று பொருள் கொள்க.) (தொ. சொ. 24, 25 இள. உரை)

குற்றெழுத்தளபெடை -

{Entry: D04__453}

‘பழூஉப்பல் லன்ன’ (குறுந். 180)

விராஅய் , ‘நெய்போல் வதூஉம்’ (நாலடி. 124)

‘துப்பாய தூஉம்’ கு. 12, ‘நீங்கின் தெறூஉம்’ (கு. 1104)

எனக் குற்றெழுத்து நின்றஇடத்தும் சிறுபான்மை அசை நிலையாக அளபெடுத்தல். குரீஇ, உடீஇ, என வரும் இறுதி நிலை (திரிந்து வரும்) அளபெடையும் அது. ‘கழாஅக்கால்’ கு. 840 - என்னும் அளபெடையும் அது. ‘அளபெடை வகைகள்’ காண்க. (இ. கொ..90)

‘குறித்துப் போதரும் வினைமுதல்’ இல்லாவிடத்து வினைமுடிபு -

{Entry: D04__454}

குறித்து வரும் வினைமுதல் இல்லாதவிடத்து நிகழ்காலத்தில் வினைமுடிபு கொள்ளப்படும்.

வருமாறு :
யாவன் தவம் செய்தான் அவன் சுவர்க்கம் புகும்.
யாவன் தாயைக் கொன்றான் அவன் நிரயம் புகும்.

(மு.வீ. வினை. 42 உரை)

குறித்தோன் கூற்றம் -

{Entry: D04__455}

ஒரு பொருளைச் சொல்லக் கருதுவோன் அதனை இது காரணத்தான் இவ்வாறு உற்றது என உரைத்தல் வேண்டும். தலைமயிரை உலர்த்தியறியாத சான்றோன் அதனை உலர்த் தியது கண்டு “தலைமயிரை உலர்த்தி நின்றீரால்”என்று ஒருவன் கூறியக்கால், இது காரணத்தால் உலர்த்தினேன் என்று கூறுதல் வேண்டும். இது தனக்கு உற்றது உரைத்தது. (தொ. சொ. 56 இள. உரை)

குறித்தோன் கூற்றம் - சொல்லுவான் குறிப்பு -

{Entry: D04__456}

எ-டு : ‘நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலோய்’ (பரி. 3 : 18) என்றவழிச் சொல்லுவான்குறிப்பு மாயவனை நோக்கலின், கருடனாயிற்று. சேவலங் கொடியோன் காப்ப’ என்றவழிச் சொல்லுவான்குறிப்பு முருக வேளை நோக்குதலின் கோழியாயிற்று. (தொ. சொ. 53 தெய். உரை)

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழிதல் -

{Entry: D04__457}

தான் ஒரு பொருளைச் சொல்லக் கருதுமேல், அதனை இற்று எனத் தெரித்து மொழிதல் வேண்டும். உலகினுள் ஒப்பமுடிந்த கருத்தை ஒருவன் மாற்றிச்சொல்லுமேயெனின், இன்ன காரணத்தான் மாற்றிச் சொல்லப்பட்டது என விளக்கிச் சொல்லுதல் வேண்டும்.

எ-டு : மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன் அது குறித்து வினாவியவழி, வாளாதே ‘உலறினேன்’ என்னற்க; இது காரணத்தான் உலறினேன் என்க. இது செப்பு வழுவற்க என்று காத்தவாறு.

தலைவன் பூண்ட மாலை பரத்தையர் பலரையும் தோய்ந்து வருதலால் புலால் நாறுகிறது - என்ற தலைவி கூற்று.

(தொ. சொ. 56 இள. உரை)

ஒருபொருள்வேறுபாடு குறித்தோன் அஃது ஆற்றல் முதலிய வற்றான் விளங்காதாயின் அதனைத் தெளிவாக விளக்கிச் சொல்லுதல் வேண்டும்.

எ-டு : சோலைமலர்கள் தன்மீது வீழப்பெற்றமையால் அருவிநீர் மணம் கமழ்கிறது. (தொ. சொ. 56 சேனா. நச். உரை)

தெரிந்து வேறுபடுக்க வரும் சொல்லைக் கிளந்துரைத்தலே யன்றிச் சொல்லுவான் குறிப்பினால் கொள்ளவைத்தலும் அமையும்.

எ-டு : ‘நிவந்தோங்கு உயர்கொடி ச் சேவலோய்’ (பரி. 3 : 18) சொல்லுவான்குறிப்பால் சேவல் கருடச்சேவலைக் குறித்தது.

‘சேவலங் கொடியோன் காப்ப........... உலகே’ (குறுந். கட) ஈண்டுச் சேவல் கோழிச் சேவலைக் குறித்தது. (தொ. சொ. 54 தெய். உரை)

குறிப்பான் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் -

{Entry: D04__458}

‘ஈரளபு இசைக்கும் இறுதிஇல் உயிர்’ ஆகிய ஒளகாரம், ஒளஒள - என இரட்டித்து நிற்குமிடத்தும், ஒளஉ - என அளபெடுத்து நிற்குமிடத்தும், ஒள - என அளபெடாது நிற்குமிடத்தும் சொல்லுவான்குறிப்பிற்குத் தகும் ஓசைவேறு பாட்டான் பல வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் - என்பர் இளம்பூரணரும் சேனாவரையரும்.

(தொ. சொ. 277 இள. உரை) (தொ. சொ. 281 சேனா. உரை)

ஒளகாரம் நீங்கலான ஏனைய உயிர்கள் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் வருங்காலைச் சொல்லுவான் குறிப்பினால் பொருள்வேறுபாடு தரும் என்பர் தெய்வச் சிலையார். (தொ. சொ. 277 தெய். உரை)

கௌஉ, வெளஉ - கைக்கொண்டேவிடு.

கௌ, வெள - கைக்கொள். இவ்வாறு அளபெடுத்தவழியும் அளபெடாவழியும் பொருள் வேறுபடும். ஒளஉ - என அளபெடுத்த ஒளகாரம் வியப்புணர்த்தும். (தொ. சொ. 283 நச். உரை)

நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ, ஏஏ, அஆ, ஐயா, அம்மா - என்பனவும் குறிப்பான் பொருளுணர்த்தும் இடைச் சொற்கள். (தொ. சொ. 284 நச். உரை)

எ-டு : கொலையை விரும்புதல் நன்றே - என மேவாமைக் குறிப்பு, ‘நின்றே எறிப பறையினை - ந ன்றேகாண்’ (நாலடி.24) எனத் தீது என்னும் குறிப்பு, ‘இஃது ஊழன்றே’ என்புழி, ‘அஃது இங்ஙன் நுகர்வியா தொழியுமோ? என்னும் குறிப்பு, அந்தோ, அன்னோ - என்பன இரக்கக்குறிப்பு - ஆகியவற்றை உணர்த்தும். ‘அன்னா அலமரும் ஆருயிரும்’ என்புழி அன்னா : இரக்கக் - குறிப்பு. ‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக. 652) என்புழி ஏஏ : இழிவுக்குறிப்பு. ‘அஆ இழந்தானெ ன்று எண்ணப்படும்’ (நாலடி. 9) என்புழி, அஆ : இரக்கக்குறிப்பு. ‘ஐயாஎன் ஐயாஎன் ஐயா அகன்றனையே’ (சீவக. 1802) என்புழி, ஐயா : இரக்கக் குறிப்பு. ‘ஆஅ ம்மா அம்மாஎன் அம்மா அகன்றனையே’ (சீவக. 1804) என்புழி, அம்மா : இரக்கக்குறிப்பு.

இவையெல்லாம் குறிப்பான் பொருளுணர்த்தும் இடைச் சொற்களாம். (நச். உரை)

அன்றே என்பது தேற்றப்பொருளில் வரும்.

அன்னோ என்பது இரங்கல் குறித்து வரும்.

அந்தோ என்பது கேடு குறித்து வரும்.

நன்றே என்பது மேவாமைக்குறிப்புத் தரும்.

அதோஅதோ, சோசோ, ஒக்கும்ஒக்கும் - என்பனவும் சொல்லுவான் குறிப்பிற்கேற்ற பொருள் தரும். (தொ. சொ. 282 சேனா. உரை)

குறிப்பின் தருமொழி -

{Entry: D04__459}

ஒன்றொழி பொதுச்சொல், விகாரம், தகுதி, ஆகுபெயர், அன்மொழி, வினைக்குறிப்பு, முதற்குறிப்பு, தொகைக்குறிப்பு, பிற குறிப்பு - என்பன குறிப்பினான் இருதிணை ஐம்பாற் பொருளைத் தரும் சொற்களாம்.

எ-டு : ஆயிரம் மக்கள் பொருதார் - ‘மக்கள்’ பெண்பாலை விலக்கிற்று; ஒன்றொழி பொதுச்சொல். மரைமலர் - ‘மரை’ தாமரையை உணர்த்திற்று: (முதற்குறை) விகாரம். நன்காடு - இத்தகுதிச்சொல் சுடுகாட்டை உணர்த்திற்று: தகுதி. கடுத்தின்றான் - ‘கடு’ கடுக்காயைக் குறித்தது: ஆகுபெயர். ‘பொற்றொடி தந்த புனைமடல்’ - பொற்றொடி தலைவியைக் குறித்தது: அன்மொழி. ‘சொலல்வல்லன் சோர் விலன்’ கு. 647 - இவை பெயர்ப்பொருளை ஒழித்து வினைக்குறிப்புப் பொருளை உணர்த்தின: வினைக் குறிப்பு. ‘அறத்தாறு இதுவென வெள்ளைக் கிழிபு’ (யா.கா.15) - இச்சொற்கள் இத்தொடக்கத்துக் குறள் வெண்பாவைக் குறித்தன: முதற்குறிப்பு. ‘அலங் குளைப் புரவி ஐவரொடு சினைஇ’ - ‘ஐவர்’ பாண்ட வரைக் குறித்தது: தொகைக்குறிப்பு. கற்கறித்து ‘நன்கு அட்டாய்’ என்றவழித் ‘தீங்கு அட்டாய்’ என்பது உணரப்படும். ‘பறவாக் குளவி’ காட்டுமல்லிகையைக் குறிக்கும். இவை பிற குறிப்பு.

எழுத்துப்பெருக்கம் எழுத்துச்சுருக்கம் வினாஉத்தரம் - என்பன எல்லாம் குறிப்பினான் தம் பொருளை உணர்த்தின. தெரிநிலை குறிப்பு வினையாலணையும் பெயர்களும் முற்றெச்சமும் செய்யுமென்முற்றும் அன்று இன்று என்னும் வினைக் குறிப்பும் ‘கே ட்குந போலவும் கிளக்குந போலவும், இயங்குந போலவும் இயற்றுந போலவும், அஃறிணை மருங்கின் அறையப் படு’ தல் (நன். 409) முதலிய இலக்கணமும் குறிப்பால் பொருள் தருவனவே யாம். (நன். 269 சங்.)

குறிப்பின் தோன்றும் பொருண்மை -

{Entry: D04__460}

நேரிடையாகச் சொல்லே குறித்த பொருளை விளக்காது சொல்லுவானது உள்ளக்குறிப்பை நோக்கிப் பொருள் அறியுமாறு அமையும் நிலை.

எ-டு : ஒருவர் வந்தார் - என்புழி, அவ்வொருவர் ஆண் பாலோ பெண்பாலோ - என்பது சொல்லுவான் குறிப்பினாலே உணரப்படுமாறு அமைதல்; ஒருவன் சோறுண்ணுமிடத்து இடையே கல்லைக் கறித்து ‘நன்கு அட்டாய்’ என்றவழித் ‘தீங்கு அட்டாய்’ என்ற குறிப்புப்பொருள் புலப்பட்டது.

(தொ. சொ. 154 இள. உரை)

கடுத்தின்றான், தெங்குதின்றான் - என்றவழிக் கடு என்பது கடுக்காயையும் தெங்கு என்பது தேங்காயையும் குறிக்கும் குறிப்பின் தோன்றலாம். பிறிதுமொழிதலணி குறிப்பிடும் செய்தியும் குறிப்பின் தோன்றலாம். ஒருவர் வந்தார் என்பது போல்வனவும், கற்கறித்து நன்கு அட்டாய் - என்றல் போல்வனவும் அது. (தொ. சொ. 157 சேனா. உரை)

குறிப்பின் தோன்றின : ‘இவன் நெருப்பு’, ‘இவன் பசு’ - என்றவழி, முறையே குணம் பற்றாமைத் தீமை செய்தான் - நன்றி செய்தான் - எனப் பொருள்பயப்பவும், கொடுமை செய்தானை ‘வாழ்வாயாக’ என்றவழி அப்பொருள் பயவாது பிறபொருள் பயப்பவும் கூறுவன. (தொ. சொ. 153 தெய். உரை)

குறிப்பினால் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: D04__461}

அதிகாரம் முதலான ஏழினால் மொழி வருவித்துப் பொருளை முடித்தலைக் கூறும் இலக்கணக்கொத்து, அந்நூற்பாவில் இன்னும் பலபல ஏதுவினால் மொழி வருவித்துரைத்தலைக் கூறும். அவற்றுள் ஒன்று குறிப்பினால் மொழி வருவித்து முடித்தல். அகச்செய்யுள்களுக்கும் புறச்செய்யுள்களுக்கும் கரும நிகழ்ச்சி கூறுமிடத்தும், கூற்றெச்சம் குறிப்பெச்சங்களை விரித்துக் கொள்ள வேண்டுமிடத்தும் பெரும்பாலும் மொழி வருவித்தல் நிகழும்.

எ-டு : ‘பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே’ (குறுந். 17): ஈண்டு, “இத்தலைவியைத் தவறாமல் கோடற் பொருட்டு நான் மட லேறுவேன்” என்று தலைவன் கருதியதாகப் பொருள் கொள்ளுதல் குறிப்பு.

‘நல்லார் புனைவரே’ (சி.போ. வாழ்த்து) - “ஆதலின் என் செயலும் முட்டின்றி முடிய விநாயகப்பெருமான் திருவடி களை வணங்குவேன்” என்பது ஈண்டுக் குறிப்பால் பொருள் கொள்ளப்படுதல். (இ. கொ. 89)

குறிப்பு -

{Entry: D04__462}

சொற்பொருளுரைக்க ஏதுக்களாகப் பதினைந்து காரணங் களைக் கூறும் இலக்கணக்கொத்து. இவற்றால் இடனறிந்து பொருளுணர்த்தல் வேண்டும் என்பது விதி. இவற்றுள் ஒன்று, குறிப்பினால் - வெளிப்படையல்லாத குறிப்பைக் கொண்டு - பொருளுணர்த்தல். இஃது ‘ஒன்றொழி பொதுச் சொல்’ (நன். 269) எனக் கூறுமவற்றான் காண்க. (இ. கொ. 129)

குறிப்புச் சொல்லெச்சம் என்னாமை -

{Entry: D04__463}

குறிப்புச் சொல்லெச்சம் என்னாது குறிப்பெச்சம் என்றார், சொல்லேயன்றிப் பொருள்மாத்திரமும் எழுத்தும் எஞ்ச வருவனவும் உளவாதல் நோக்கி என்க.

(எ-டு: பிறிதுமொழிதல் அணியும் முதற்குறை விகாரமும் கொள்க.) (நன். 360 சங்.)

குறிப்புவினை -

{Entry: D04__464}

காலத்தைக் குறிப்பால் காட்டும் வினை குறிப்புவினையாம். வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் என்னும் மூன்றன் கண்ணும் குறிப்புவினை நிகழும். அஃது உயர்திணைக் குறிப்பு வினை, அஃறிணைக் குறிப்புவினை என இரண்டு திறத்ததாம்.

பெயர்ச்சொல் முதனிலைகொண்டு குறிப்பு வினைமுற்றும் குறிப்புப் பெயரெச்சமும் தோன்றும்.

எ-டு : கச்சினன், பெயரிய - என முறையே காண்க.

பண்பு அடிப்படையாகக் கொண்டு குறிப்புவினைமுற்று, குறிப்பு வினையெச்சம், குறிப்புப் பெயரெச்சம் - இவை மூன்றும் தோன்றும்.

எ-டு : நல்லன், நன்கு, நல்ல - என முறையே காண்க.

குறிப்புவினைமுற்று ஆக்கம்பற்றி நல்லனாயினான் என வரும்.

(தொ. சொ. 432 நச். உரை)

குறிப்புவினைப்பெயர் காலம் முதலியன தோற்றல் -

{Entry: D04__465}

தெரிநிலைவினைத் தொழிற்பெயர் காலம் தோன்றி நின்றாற் போலக் கச்சினன் - இல்லத்தான் - என்றாற் போன்ற குறிப்புப் பெயரும் காலம் தோன்றி நிற்கும்; ஐயாட்டையன் எனக் காலமும், துணங்கையன் என வினைசெய்யிடமும் தோன்ற நிற்றலுமுண்டு. (தொ. சொ. 215 நச். உரை)

குறிப்புவினைமுற்றின் பொதுவிலக்கணம் -

{Entry: D04__466}

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்ற ஆறும் அடியாக அவற்றின்கண் தோன்றிச் செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் - என்னும் ஆறனுள் செய்பவனை மாத்திரம் வெளிப்படையாக விளக்குதல் குறிப்புவினை முற்றின் இலக்கண மாம்.

எ-டு : குழையினன், குழையினள், குழையினர், குழையின, குழையிற்று; குழையினேன், குழையினேம்; குழை யினை, குழையினீர்

இவை பொருள் அடியாகப் பிறந்த குறிப்புவினைமுற்றுக்கள்.

அகத்தினன் புறத்தினன், ஆதிரையான் ஓணத்தான், குறுந்தாளன் செங்கண்ணன், கரியன் நெடியன் நல்லன் உளன் உடையன், கடுநடையன் இன்சொல்லன் - என்பன முறையே இடம் காலம் சினை குணம் தொழில் அடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்றுக்கள். (நன். 321 சங்.)

குறிப்புவினையின் வகையும் விரியும் -

{Entry: D04__467}

குறிப்புவினை, உயர்திணைக்குறிப்புவினை - அஃறிணைக் குறிப்புவினை - விரவுத்திணைக்குறிப்புவினை - என மூவகைப் படும்.

உயர்திணைக் குறிப்புவினை, ஆறாம்வேற்றுமை உடைமைப் பொருள் - ஏழாம்வேற்றுமை நிலப்பொருள் - ஒப்புப்பொருள் - பண்புப்பொருள் - ஆகியவை பற்றி வரும். அன்மை - இன்மை - உண்மை - வன்மை என்னும் சொற்கள் அடியாகத் தோன்றும் குறிப்புவினைகளும் உள.

எ-டு : கச்சினன், நிலத்தன், புலியன்னான், கரியன்; இவன் அவன் அல்லன், ‘பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன்’, இறைவன் உளன், மெய் வலியன் என முறையே காண்க. (தொ. சொ. 215, 216 நச். உரை)

அஃறிணைக்குறிப்புவினை, பண்புகொள்கிளவி - பண்பினா கிய சினைமுதற் கிளவி - ஒப்பொடு வரூஉம் கிளவி - எனப் பொருள் பற்றி மூன்றாகவும், இன்று இல உடைய அன்று உடைத்து அல்ல உள - எனச் சொல் பற்றி ஏழாகவும் இவ்வாறு பத்து வகைப்படும்.

எ-டு : ஆகரிது, வெண்கோட்டது, பொன்னன்னது (இவற் றுக்குப் பன்மை கரிய - கோட்ட - அன்ன - என்பன.); கோடு இன்று, கோடுகள் இல, கோடு டைத்து, கோடுடைய, கோடு உடைத்தன்று, கோடு உடைய அல்ல, கோடு உள - என முறையே காண்க. (தொ. சொ. 222 நச். உரை)

முன்னிலையாகிய விரவுத்திணையின் குறிப்புவினை, உயர் திணை வினைக்குறிப்புக்குக் கூறப்பட்ட நான்கு வாய்பாடு களையும் ஏற்று அமையும்.

எ-டு : கழலினை, நாட்டை, பொன்னன்னை, கரியை - என முறையே காண்க. (தொ. சொ. 226 நச். உரை)

குறிப்புவினையெச்சம் சில -

{Entry: D04__468}

அன்றி இன்றி - என்பன இரண்டும் செய்து என்னும் தெரிநிலை எச்சத்திற்குரிய குறிப்பெச்சம்; இவை, அல்லாது இல்லாது- அல்லாமல் இல்லாமல் - அல்லாமை இல்லாமை - என விரிந்தும் நிற்கும்; இவற்றிற்கு றி து மல் மை - என்பன விகுதிகள். ‘பெரிய ஓதினும் சிறிய உணரா’ (புற. 375) வெய்ய சிறி மிழற்றும் செவ்வாய்’ எனவும், செவ்வன் தெரிகிற்பான்’ இனிது உணர்ந்தான்’ ‘ புதுவதின் இயன்ற அணி’ ‘ புதிது ஈன எனவும் அகர ஈறு பற்றியும் பிற ஈறுகள் பற்றியும் வந்தன. இவை செய என்னும் தெரிநிலை வாய்பாட்டிற்குரிய குறிப்பெச்சம். செவ்வனாக - இனிதாக - புதுவதாக - புதிதாக - என அகர ஈறாய் நிற்றல் காண்க. அல்லது - அல்லால் என்பன நானல்லது இல்லை ’ ‘நுணங்கிய கேள்விய ரல்லால் , (கு. 419) - என வருதலின் இவையும், இன்னும் ஒல்லை க் கொண்டான் - சிறிது தந்தான் - வறிது சென்றான் - எனக் குறிப்பாக முடிக்கும் சொல்லை விசேடித்து வருவனவும் குறிப்புவினையெச்சமாம்.

(நன். 342 இராமா.)

குறிப்பெச்சம் -

{Entry: D04__469}

தன் குறிப்பினையே கொண்டு முடியும் எச்சம் குறிப் பெச்சமாம்.

எ-டு : விண்ணென விசைத்தது: குறிப்பெச்சம். அது தன் குறிப்பினையே கொண்டு முடிந்தது, விண்ணென் றதே விசைத்தது - என்று பொருள்படுதலின். இஃது எனவென் எச்சத்தின் குறிப்புப்பொருளை உட் கொண்டது. (தொ. சொ. 435 இள. உரை)

ஒரு தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுப்பதே குறிப்பெச்சம். ‘தீயாரைக் காலத்தால் களைக’ என வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப் பொருளை வெளிப்படுத்தலின் (கு. 879) குறிப்பெச்சமாம். (தொ. சொ. 440 சேனா. உரை)

கற்கறித்து, ‘நன்கு அட்டாய்’ என்றால், ‘தீங்கு அட்டாய்’ என்னும் குறிப்புத் தோன்றி எஞ்சுபொருளைத் தானே கூறிநின்றது. ‘விண்ணென விசைத்தது’ என்பது எனவென் எச்சத்தின் கூறுபாடு. இளைதாக முள்மரம் கொல்க’ (கு. 879) என்பது செய்யுளியல் கூறும் குறிப்பெச்சமாம். (தொ. சொ. 440 நச். உரை)

செய்யுளுறுப்புக்கள் முப்பத்துநான்கனுள் எச்சம் என்பதும் ஒன்று. எச்சம் என்னும் உறுப்பு செய்யுளிலுள்ள சொற்களில் காணப்படும் பொருளை விடுத்து பின் கொணர்ந்து முடிக்கப் படுவது. சற்று வெளிப்படையாக இருப்பதனைக் கூற்றெச்சம் என்றும், உள்ளாழ்ந்து இருப்பதனைக் குறிப்பெச்சம் என்றும் கூறுப.

எ-டு : ‘செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

கழல்தொடி சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே’ (குறுந். 1)

இப்பாடலில் தலைவியைக் குறியிடத்து உய்த்து அவளை நோக்கிக் ‘காண்பாயாகில் காண்’ என்று தோழி கூறினாள் என்பது குறிப்பெச்சம், அவனைக் கூடுக என்று தோழி தான் (வெளிப்படையாகக்) கூறாள் ஆதலின். (தொ.பொ. 206 நச். உரை)

அவையல் கிளவியை மறைத்துப் பிறிதொரு வாய்பாட்டான் மொழிதல் குறிப்பெச்சமாம். மறைத்துச் சொல்லுதல் மங்கல மரபினான் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும் என இருவகைப்படும். அவை முறையே செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும் கூறுதலும், கண்கழீஇ வருதும், கால்மேல் நீர் பெய்தும் - என்று கூறுதலும் ஆம். இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலின் குறிப்பெச்ச மாயின.

ஈ தா கொடு - என்னும் சொற்கள் இரப்போன் கூற்றாதலும் உரிய. இச்சொற்கள்தம்மானே இழிந்தான் - ஒப்பான் - மிக்கான் - என்னும் பொருண்மை எஞ்சி நிற்றலின், குறிப்பெச்ச மாயிற்று.

கொடு என்னும் சொல் படர்கையாயினும் தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பினான் தன்மையிடத்து இயலும் என்பர் புலவர். எனவே, கொடு என்பதும் தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பெச்சமாயிற்று. (தொ. சொ. 435, 437, 438 தெய். உரை)

குறிப்பெச்சங்களாவன ஒன்றொழி பொதுச்சொல் முதலிய குறிப்புச்சொற்களாம். குறிப்பான் உணரப்படுவன அவற்றில் முறையே எஞ்சி நின்றன. அவை அவ்வெச்சம் கொள்ளுமாறு:

‘பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர்மக்கள் உளர்’ என்புழி, மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண் மக்கள் எனப் பெண் என்னும் சிறப்புப்பெயர் கொண்டது. ‘குறுத்தாட் பூதம்’ என்புழித் தகரவல்லொற்று அதற்கு இனமான மெல்லெழுத்தையும் என்புழி மரை என்பது ‘தா’ என்னும் முதலெழுத்தையும் கொண்டன. ‘வாய்பூசி வருதும்’ என்புழி ‘எச்சில் கழித்து வருதும்’ என்பது கொண்டது. ‘புளித் தின்றான்’ என்பது பழமாகிய புளி எனப் ‘பழம்’ கொண்டது. பொற்றொடி என்பது பொற்றொடியை உடையாள் என இரண்டாம்உருபும் அதன் பயனிலையும் கொண்டது. ‘நல்லன் இவன்’ என்பது பெயர்ப்பொருளைக் கொள்ளாது வினைக் குறிப்புப் பொருளொடு ‘நல்லனா யினான் இவன்’ என ஆக்கம் கொண்டது. ‘அறத்தாறு இது என வெள்ளைக் கிழிபு’ என்பது ‘அறத்தாறு......... ஊர்ந்தா னிடை’, (கு. 37) என்பது கொண்டது. ‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ’ (புறநா. 2) என்பது ‘தருமன் - வீமன் - அருச்சுனன் - நகுலன் - சகாதேவன்’ என்பன கொண்டது. ‘பீலிபெய்.......... பெயின்’ (கு. 475) என்பதும், உண்ணாநின்றான் கற்கறித்துழி அட்டோன் முகம் நோக்கி ‘நன்கு அட்டாய்’ என்பதும், ‘மெலியராயினும் பலர் தொகில் வலியரையும் வெல்வர்’ என்பதனையும், ‘நன்கு அட்டாயல்லை’ என்பதனையும் முறையே கொண்டன.

(நன். 360 சங்.)

குறிப்பெச்சம் இருவகை -

{Entry: D04__470}

குறிப்பெச்சம், சொல்லியற் குறிப்பெச்சமும் செய்யுளியற் குறிப்பெச்சமும் என இருவகைப்படும் என்பதும், சொல்லியற் குறிப்பெச்சத்திற்கு உதாரணம் கற்கறித்து ‘நன்கு அட்டாய்’ எனின் ‘தீங்கு அட்டாய்’ எனக் குறிப்பின் தோன்றிய எச்சப்பொருளை அதுவே விளக்கிற்று என்பதும், செய்யுளியற் குறிப்பெச்சத்திற்கு உதாரணம் ‘இளைதாக முள்மரம்............. காழ்த்த விடத்து’ என வரும் குறள் (879) என்பதும் (இசையெச்சத்திற்கு உதாரணம் ‘வயிறு மொடு மொடுத்தது’ என்றால் இசையின் (ஒலியின்) குறிப்பாகிய ‘உண்ண வேண்டா’ என்னும் எச்சப் பொருளை அந்த இசையே விளக்கி நின்றது என்பதும்) விளங்கும்.

(நன். 401 இராமா.)

குறிப்பொடு கொள்ளும் இடைச்சொற்கள் -

{Entry: D04__471}

‘சென்றே எறிப ஒருகால்’ என்னும் நாலடியார் (24) செய்யுட்கண், ‘நன்றேகாண்’ என்பது ‘தீதேகாண்’ என்னும் குறிப்புணர்த் திற்று. ‘பொன்னே கொடுத்தும்’ (நாலடி 162) என்னும் செய்யுட் கண் ‘அன்னோ’ என்பது, அருள் குறித்து நின்றது. ‘வெந்திறல் கூற்றம் பெரும்பே துற ப்ப, அந்தோ அளியென் வந்தனென் மன்ற’ (புறநா. 238) என்றவழி ‘அந்தோ’ என்பது கேடு குறித்து நின்றது. (தொ.சொல். 278 தெய். உரை)

குறுஞ்சூலி, நெடுந்தடி : பிரிக்கப்படாமை -

{Entry: D04__472}

குறுஞ்சூலி நெடுந்தடி - என்பனவும், பெருவண்ணான் என்ப தும் இனமின்றிப் பண்புகொண்டு வழக்கிடத்து வந்தன எனின், அறியாது கூறினாய்; குறுஞ்சூலியும் நெடுந்தடியும் பண்புகொள் பெயரல்ல, குறுமையைப் பிரித்தால் ‘சூலி’ என்றும், நெடுமையைப் பிரித்தால் ‘தடி’ என்றும் பெயராகா மையின். சிறப்பினான் பெருவண்ணான் ஆயிற்று. இவை இனம் சுட்டி வந்தனஅல்ல என்றறிக. (நேமி. மொழி. 15 உரை)

குறை என்பதன் வகைகள் -

{Entry: D04__473}

ஆறாவதாகிய குறை, ஒற்றுமைக்குறை வேற்றுமைக்குறை - என இரு பெரும்பிரிவுகளை உடையது. ஒற்றுமைக்குறையுட் பகுப்பு இல்லை. வேற்றுமைக்குறை, ஒன்றாய்த் தோன்றல் - உரிமையாய்த் தோன்றல் - வேறாய்த் தோன்றல் - என முப்பிரிவுகளை உடையது. அவற்றுள் ஒன்றாய்த் தோன்றல், ஒன்றன்கூட்டத் தற்கிழமை - பலவின்ஈட்டத் தற்கிழமை - திரிபின்ஆக்கத் தற்கிழமை - சினைத் தற்கிழமை - குணத்தற் கிழமை - தொழில்தற்கிழமை - என அறுவகைப்படும். உரிமை யாய்த் தோன்றும் பிறிதின்கிழமை, பொருட் பிறிதின்கிழமை - இடப் பிறிதின்கிழமை - காலப் பிறிதின்கிழமை - ஒருவர் இயற்றிய நூல் பற்றிய பிறிதின்கிழமை - ஒருவரைப் பற்றி இயற்றிய நூல்பற்றிய பிறிதின்கிழமை - என ஐவகைப்படும். வேறாய்த் தோன்றும் பிறிதின்கிழமை, கைமாறும் பொருள்கள் பலவும் பற்றிப் பலவகைப்படும்.

‘ஒற்றுமைக் குறை’ : முன்னர்க் காண்க.

எள்ளது குப்பை - ஒன்றன் கூட்டம்; படையது குழாம் - பலவின் ஈட்டம்; கோட்டது நூறு - திரிபின் ஆக்கம்; சாத்தனது கண் - உறுப்பு; நிலத்தது அகலம் - பண்பு; சாத்தனது வரவு - தொழில்.

இவை ஆறும் ஒன்றாய்த்தோன்றல் தற்கிழமை.

முருகனது வேல் - பொருள்; முருகனது குறிஞ்சி - இடம்;

வெள்ளியது ஆட்சி - காலம்; சம்பந்தனது தமிழ் - இயற்றிய நூல்; சம்பந்தனது பிள்ளைத்தமிழ் - சம்பந்தன் பெயரால் இயற்றப்பட்ட நூல்.

இவை ஐந்தும் உரிமையாய்த் தோன்றிய பிறிதின்கிழமை.

சாத்தனது பசு, சாத்தனது செறு, சாத்தனது பொன் - என வேறாய்த் தோன்றல் வந்தது. இப்பசு முதலியன முன் ஒருவர்க்கு உடைமையாயும் பின்னொருவர்க்கு உடைமையாயும் வருதலின் ‘நிலைமை இல் உடைமை’ ஆயின. (இ. கொ. 40)

குறைச்சொல் : குறைக்கப்படுமாறு -

{Entry: D04__474}

ஒரு சொற்குத் தலை இடை கடை - என இடம் மூன்றன்றே. அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் என்றறிந்து குறைத்தல் வேண்டும்.

எ-டு : ‘மரைஇதழ்’ என்பது ‘தாமரை’ - என முதற்கண்ணும்
‘ஓதி முது போத்து’ என்பது ‘ஓந்தி’ - என இடைக் கண்ணும், ‘நீலுண் துகிலிகை’ என்பது ‘நீலம்’- எனக் கடைக்கண்ணும் குறைக்கப்பட்டவாறு. பிறவாறு குறைத்தல் தவறு. இஃது ஒரு சொற்கண் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல் ஆதலின் முழுதும் கெடுத்தலாகிய ‘தொகுக்கும்வழித் தொகுத்தலின்’ வேறாம். (தொ. சொ. 453 சேனா. நச். உரை)

சிறுபான்மை ‘வந்தன்று’ என்பது ‘வந்து’ எனவும், ‘என்பா ரிலர்’ என்பது ‘என்பிலர்’ எனவும், வினைக்கண்ணும் குறைத் தல் கொள்ளப்படும். (தொ. சொ. 454 நச். உரை)

குறையின் மயக்கம் -

{Entry: D04__475}

ஆறாம்வேற்றுமைப் பொருளில் பிறவுருபுகளும் வருதல். நான்கனுருபும் ஐந்தனுருபும் ஏழனுருபும் இவ்வாறு மயங்கும்.

எ-டு : சாத்தனுக்கு மகன் (சாத்தனுடைய); மரத்தின் நீங்கின கொம்பு (மரத்தினது); சாத்தனது கை என ஆறனுருபே வந்தது. உயிரின்கண் உணர்வு (உயிரினது)

இவ்வாறு ஆறாவது உருபு விரித்து நோக்கி அறியப்படும். (இ. கொ. 49)

கூ, கே, கை section: 4 entries

‘கூடி வரு வழக்கின் ஆடியற் பெயர்’ -

{Entry: D04__476}

கூடி இயலும் வழக்கின்கண் வழங்கும் இயற்பெயர். இயற் பெயராவது ஒரு பொருட்கு வழங்கும் இடுகுறியாகிய பெயர். அஃது இருதிணைக்கும் பொதுவாயவழி விரவுப்பெயர் எனப்படும். அப்பெயருடையார் பலரை ஒருவினையான் சொல்லுங்காலத்துச் சொல் தொகுத்துச் சாத்தன்மார் வந்தார்- சாத்திமார் வந்தார் - என உயர்திணை யான் கூறப்பெறும். (தொ. சொ. 161 தெய். உரை)

இஃது உயர்திணைப்பெயர் வகைகளுள் ஒன்று. இளந்துணை மகாஅர் தம்மில் கூடி விளையாடல் குறித்த போழ்தில் தாமே படைத்திட்டுக் கொண்ட பெயர். அவை பட்டிபுத்திரர், கங்கை மாத்திரர் போல்வன. இவை ஆடல் குறித்து இளையர் பகுதிப்படக் கூடிய வழியல்லது வழங்கப்படாமையின் குழு வின் பெயரின் வேறாயின. குழுவின் பெயர் ஒருதுறைக்கண் உரிமைபூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழ்வன. (தொ. சொ. 165 சேனா., 167 நச். உரை)

‘கூற்றுவயின் ஓரளபு ஆகல் உரித்து’ -

{Entry: D04__477}

செய்யுள் ஈற்றசை ஏகாரம், செய்யுளிடத்துப் பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்துத் தனக்குரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின் ஒரு மாத்திரையுண்டாய் வருதலும் உரித்து.

எ-டு : ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரேஎ

(அகநா. 1: 19) (தொ. சொ. 288 நச். உரை)

ஈற்றசை ஏகாரம் அருகி ஓரளபிற்றாய்க் குறுகி வருதல் சிறுபான்மை உரித்து.

எ-டு : ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரெ’

(தொ. சொ. 282 இள., 286 சேனா.) (282 தெய். உரை)

கூற்று - பேச்சு வழக்கு. ‘வந்தாயோ’ என்றாற்கு ‘வந்தேனே’ என மொழிவது. (ச.பால.)

கேவல பத மாத்திரை -

{Entry: D04__478}

சொல்லளவிலே மாத்திரம் நின்று பொருள் பயவாதொழிதல் மிகை.

எ-டு : கரிகளபம் - யானைக்குட்டி; களபம் என்ற சொல் லுக்கே யானைக்குட்டி என்பது பொருளாக, முன் மொழியான கரி என்பது மிகை.

‘கோடாத செங்கோல்’ (சீவக. 7) ‘கோடாத கோல்’ எனினே அமையும்; செங்கோல் என்று கூறினும் அமையும். கோடாத அல்லது செம்மை - என இரண்டிலொன்று மிகையாம். (பிவி. 26)

கையிற்று வீழ்ந்தான், கையிற வீழ்ந்தான் : வேறுபாடு -

{Entry: D04__479}

இறுதலும் வீழ்தலும் கையது வினையாயின், கையிற்று வீழ்ந்தான் - எனச் சினைவினையாகிய இற்று என்பது முதல் வினையாகிய வீழ்ந்தான் என்பதனைக் கொள்ளும். சினைக் கும் முதற்கும் வேற்றுமையின்மையின், சினைவினையாகிய செய்தென் எச்சம் தன்வினை கொண்டு முடிந்ததாகவே கொள்ளப்படும். இனி, இறுதல் கையும் வீழ்தல் கையுடை யானு மாகில், கையிற வீழ்ந்தான் எனப்படும். (ஆண்டுச் செய என் எச்சம் பிற வினைமுதல் வினைகொண்டு முடிகிறது.) கையிற்று வீழ்ந்தான் - என்பதன் பொருள் கையிற்று வீழ்ந்ததாகக் கொள்க. (தொ. சொ. 233 கல். உரை)

கொ section: 10 entries

கொடு என் கிளவி -

{Entry: D04__480}

கொடு என்பது உயர்ந்தோன் இழிந்தோனிடம் இரக்கும் சொல்லாம். இது பகுதி பற்றிப் படர்க்கைக்கு உரியது. இரப்போர் பலரும் தம்மில் ஒருவனைக் காட்டி ‘இவற்குக் கொடு’ எனத் தம்மைப் பிறர் போலாயினும் கூறி இரக்கும் கருத்தினான் கூறப்படும் ‘கொடு’ என்னும் சொல்லும், கூறுகின்றார் பலரும் தம்மைப் பிறர்போலாயினும் கூறும் கருத்தினான் கூறப்படும் படர்க்கைச் சொற்களும் வழக்கி னுள் தன்மை யிடத்தில் காணப்படும்.

எ-டு : ‘இவற்கு ஊண் கொடு’ - ‘பெருஞ்சாத்தன் தந்தைக்கு ஊண் கொடு’ (ஈண்டுச் சொல்லுவான் பெருஞ் சாத்தன் தந்தை.)

‘எம்மில் ஒருவனாகிய இவற்கு’ என்று தன்மையில் அமைவ தனைப் படர்க்கை போல ‘இவற்கு ஊண் கொடு’ என்று கூறுதலும், ‘எனக்கு ஊண் கொடு’ என்பதற்குத் தான் பெருஞ் சாத்தன் தந்தை என்பதனை யுட்கொண்டு, ‘பெருஞ்சாத்தன் தந்தைக்கு ஊண் கொடு’ என்று கூறுதலும் சொல்லளவில் படர்க்கையாயினும் பொருளளவில் தன்மையாக முடிதலின், இங்ஙனம் கூறுதல் வழுவமைதி ஆயிற்று. (தொ. சொ. 447, 448 நச். உரை)

கொடுந்தமிழ்நாட்டுத் திசைச்சொற்கள் -

{Entry: D04__481}

செந்தமிழ் நாட்டைச் சேர்ந்தன பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள். அவ்வந்நாட்டுச் சொற்களாய்த் தம்பொருளில் செந்தமிழ் நாட்டில் வந்து வழங்குவன திசைச்சொற்களாம். அவை வருமாறு :

தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும், சோற்றைச் சொன்றி என்றும், குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும், பூமி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும், பன்றிஅருவா நாட்டார் செறுவைச் செய் என்றும், சிறுகுளத்தைக் கேணி என்றும், அருவாவடதலை நாட்டார் புளியை எகின் என்றும், சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும் வழங்குவர்.

இவை கொடுந்தமிழ்நாட்டுத் திசைச்சொற்கள். இவை முதலியனவும் தமிழ் ஒழிந்த பதினாறு நிலத்து மொழிகளுள் ஏற்பனவும் செந்தமிழொடு விரவி வருவன திசைச்சொல்லாம்.

(நன். 273 சங்.)

கொடை எதிர் கிளவி -

{Entry: D04__482}

கொடைத்தொழிலை விரும்பி மேற்கோடலை உணர்த்தும் தொகைச்சொல். கொடையெதிர் கிளவிக்கண் நான்கும் ஆறும் மயங்கும்.

எ-டு : நாகர்பலி, இது நாகர்க்குப் பலி, நாகரது பலி - என விரியும். (தொ. சொ. 100 நச். உரை)

கொடை எதிர் கிளவி ஆறாவதும் ஏற்றல் -

{Entry: D04__483}

தேவர்களுக்கு நேர்ந்த பலி பிறர்க்கு ஆகாது அவருடைமை ஆயிற்றாதலின், நாகர்பலி என்பது நாகர்க்குப் பலி எனவும் நாகரது பலி எனவும் விரியும். சாத்தற்கு நேர்ந்த சோறு பிறர்க்கும் ஆகும் ஆதலின் ஆண்டு ஆறனுருபு ஏலாது. தெய்வம் அல்லாச் சிறந்தார்க்கு நேர்ந்ததேல், ஆணடு ஆறாவது வரினும் வரும். (தொ. சொ. 100 ப. உ.)

கொடை எதிர் கிளவிக்கண் உருபு மயங்கல் -

{Entry: D04__484}

கொடை எதிர் கிளவிக்கு உரியது நான்கனுருபாகிய கு ஆகும். விருப்பின் மேற்கொள்ளும் கொடுத்தல்தொழில் தவறாது அமையும்போது நான்கனுருபு வருமிடத்தே ஆறனுருபு வரும்.

எ-டு : நாகர்பலி.

இத்தொகை, நாகர்க்குப் பலி - என நான்கனுருபு விரிதலே யன்றி, அப்பலி தவறாது அவரை அடைய வேண்டுதலின், நாகரது பலி எனஆறாவதன் உடைமைப்பொருள் பற்றிய உருபு விரித்தலும் பொருந்தும்.

நாகர்க்கும் தெய்வமல்லாதார் ஆகிலும் சிறந்தார்க்கும் நேரப்படுவது தவறாது அவரை அடைதலின், அவ்விடங் களில் நாகர்க்குப் பலி - நாகரது பலி - என்றாற் போல நான்காவதும் ஆறாவதும் விரித்தல் அமையும்.

‘சாத்தற்கு நேர்ந்த சோறு’ என்புழி, அது பிறர்க்கும் (பொருந்தும்) ஆதலின் ஆண்டு ஆறாவது ஏலாது.

(தொ. சொ. 100 நச். உரை.)

கொடை எதிர்தல் -

{Entry: D04__485}

விழுப்பமுடையாரைக் கூவியவிடத்து (உரியவற்றை)க் கொண்டு வந்து வைத்து விரும்பிக் கொடுத்தல். நான்காம் வேற்றுமை தொக்குக் கொடையெதிர்ந்து நின்றவிடத்து ஆறாவது சொல்லவும் அமையும்.

எ-டு : ‘நாகர்பலி’ என்பது ஆண்டு நான்கனுருபு தொக்கு நின்றது. அது நாகர்க்குப் பலி - என விரிதலேயன்றி நாகரது பலி - என ஆறனுருபு விரியவும் பெறும். (தொ. சொ. 95 இள. உரை)

கொடைக்கிளவி வேறு; கொடை எதிர் கிளவி வேறு. கொடை எதிர்தலாவது விழுப்பமுடையாரை நுதலியக்கால் கொண்டு வைத்து விரும்பிக் கொடுப்பது. குவ்வுருபு மறைய வரும் இத்தொகையை விரிப்புழி நான்காவதும் ஆறாவதும் விரித்தற்கு உரியன.

எ-டு : நாகர்பலி என்னும் தொகை நாகர்க்குப் பலி, நாகரதுபலி என விரியும்.

கொடைக்கிளவி பொதுவாக எல்லார்க்கும் கொடுப்பது. இதன்கண் நான்காவதே வரும். (கொடையெதிர் கிளவி நேர்ந்து கொண்டவழி அத்தேவர்க்கு அது திரிபின்றி உடைமையாகி விடுதலின் ஆறாவதற்கு அஃது உரியது என்றார்.)

(தொ. சொ. 101 கல். உரை)

கொல்

{Entry: D04__486}

தத்தம் குறிப்பின் பொருள்செய்யும் இடைச்சொற்களில் கொல் என்பதும் ஒன்று. அது பெயரையும் வினையையும் அடுத்து ஐயப்பொருளில் வரும்.

எ-டு : ‘யாதுகொல் மற் றவர் நிலையே’ (அக.139) - பெயரை அடுத்து வந்தது. ‘இதனள வுண்டுகொல் மதிவல் லோர்க்கே’ (அக. 48) - வினையை அடுத்து வந்தது. (தொ. சொ. 270 நச். உரை)

(துணிவின்கண் ஐயம் ‘சிறிது நினைத்தல்’ என்னும் பொருட் கண் இவ்விரண்டாம் எடுத்துக்காட்டில் வந்தது.)

‘கொள்வழி உடைய பலஅறி சொற்கே’ -

{Entry: D04__487}

பலவற்றை அறியும் சொல்லாதற்குக் கொள்ளும் இடம் உடையன (கள்ஈற்றொடு சேர்ந்த அஃறிணை இயற்பெயர்).

எ-டு : ஆக்கள், குதிரைகள் (தொ. சொ. 171 நச். உரை)

கொள்வோன் வகைகள் -

{Entry: D04__488}

நான்காம்வேற்றுமைப் பொருளான கொள்வோன் வகைகள் வருமாறு :

ஆவிற்கு நீர் விட்டான் - கேளாது ஏற்றல். வறியார்க்கு ஈந்தான் - கேட்டே ஏற்றல். மாணாக்கனுக்கு அறிவைக் கொடுத்தான் - ஏலாது ஏற்றல். தனக்குச் சோறிட்டான, தனக்கு அரிசி கொடுத்தான், ‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு’ கு. 847 - ஈவோன் ஏற்றல். அரனுக்குக் கண்அலர் கொடுத்தான் அரி - உயர்ந்தோன் ஏற்றல். அரிக்குச் சக்கரம் கொடுத்தான் அரன் - இழிந்தோன் ஏற்றல். சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன் - ஒப்போன் ஏற்றல். சோற்றிற்கு நெய் விட்டான், தண்டிற்குத் தங்கம் கட்டினான், சுவர்க்குச் சித்திரம் எழுதினான் இவை மூன்றும் உணர்வின்றி ஏற்றல். மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆரியன் - விருப்பாய் ஏற்றல். கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன் - வெறுப்பாய் ஏற்றல்.

‘ஆதி’ என்றதனால் பெறப்படுவன :

மருகனுக்கு மகட் கொடுத்தான் - வழக்கு; மகனுக்கு அரசு கொடுத்தான் - உரிமை; அரசனுக்குத் திறை கொடுத்தான் - அச்சம்; தந்தைதாயர்க்குத் திதி கொடுத்தான் - பாவனை. (இ. கொ. 36)

கொன்னைச் சொல் -

{Entry: D04__489}

தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச்சொற்களில் கொன் என்பதும் ஒன்று. ‘கொன்’ ஐகாரச்சாரியை பெற்றுக் ‘கொன்னை’ ஆயிற்று. இவ்விடைச்சொல் அச்சம் - பயமிலி - காலம் - பெருமை - என்னும் நான்கு பொருள்களிலும் வரும்.

எ-டு : ‘கொன்முனை இரவுஊர் போல’ (குறுந். 91) கொன் முனை - அச்சம் தரும் போர்முனை. ‘ கொன்னே கழிந்தன்று இளமையும்’ (நாலடி. 55) கொன் - பயனின்மை. ‘கொன்வரல் வாடை’ : (கொன்- காலம்) காதலர் நீங்கிய காலமறிந்து வருதலையுடைய வாடை. ‘கொன்னூர்’ (குறுந். 138) : கொன் - பெருமை.

இவ்விடைச்சொல் பெயருக்கு முன்னரே வரும். (தொ. சொ. 256 நச். உரை)

ச section: 145 entries

சக்கிய சம்பந்தம் -

{Entry: D04__490}

ஆகுபெயரிலும் இலக்கணையிலும் ஒருசொல் தன்னாற்ற லால் தன்னுடன் தொடர்புடைய பிறிதொரு பொருளைச் சுட்டும். இதுவே தொடர்பு; இது சொல்லின் ஆற்றலால் தோன்று வதாதலின் சக்கிய சம்பந்தம் எனப்பட்டது. (பி. வி. 24)

சக்தி - சத்தி - சொல்லுக்குள்ள பொருளுணர்த்தும் ஆற்றல். இந்த ஆற்றல் சங்கேதம் என்றும் போடம் என்றும் கூறப்படும். (பி. வி. 18)

சகச ணிசந்தம் -

{Entry: D04__491}

தன்வினைப்பகுதியொடு வி பி என்பன சேர்த்துப் பிறவினைப் பகுதி ஆக்கப்படும். அங்ஙனமின்றிப் பல பகுதிகள் திரிந்தும் ஒற்றெழுத்துப் பெற்றும் பிறவினைப்பகுதிகள் ஆகும். அவையே ‘சகச ணிசந்தம்’ எனப்படுவன.

எ-டு : உண் - ஊட்டு, தின் - தீற்று ; ஆடு - ஆட்டு, காண் - காட்டு.

(பி. வி. 35)

சகசம் -

{Entry: D04__492}

அளபெடை வகையில் இசை விளி பண்டமாற்று - ஆகிய வற்றில் வரும் அளபெடையை இயற்கையளபெடை என்பர். இது சகசம் எனப்படும். (பி. வி. 5)

சக பூர்வபதம் -

{Entry: D04__493}

வெகுவிரீகி என்னும் அன்மொழித்தொகையுள் முன்மொழி சக (-கூடிய) என்னும் சொல்லாக அமைந்து வருதல்.

எ-டு : சகநிதி (செல்வத்தொடு கூடியிருப்பவன்), சமூலம் (வேருடன் கூடியது) (பி. வி. 24)

சகார்த்த திருதியை -

{Entry: D04__494}

உடனிகழ்ச்சிப் பொருளில் வந்த மூன்றாம்வேற்றுமை.

வடமொழியில் மூன்றாம்வேற்றுமையுருபு ஒன்றுதான் உண்டு; தமிழில் உள்ளமைபோல, ஆன் ஆல் ஓடு உடன் - என்பன தனியே இல்லை. ஆகவே அம்மொழியில், கூட - உடன் - எனப் பொருள்படும் ‘சக’ (ஸஹ) என்னும் சொல்லையும் (அதே பொருளில் வரும் வேறு சொல்லையும்) மூன்றாவதுடன் சேர்த்து உடனிகழ்ச்சி கூறுவர்.

புத்ரேண ஸஹ ஆகத : பிதா - மகனொடு தந்தை வந்தான் - இங்குத் தலைமைப்பொருளான தந்தை என்னும் சொல் லோடன்றித் தலைமையில்லாத மகன் என்னும் சொல் லொடு ‘ஸஹ’ சேர்க்கப்பட்டது. (பிரதானம் - தலைமைப் பொருள் : அப்பிரதானம் - தலைமை இல் பொருள்.) ஒடுச்சொல் அப்பிரதானத்துடன் வரும் என்பது வடமொழி மரபு.

தமிழமரபு அதற்கு மாறுபட்டுத் தந்தையொடு மகன் வந்தான். என வரும்; ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் என்பதும் அது.

‘சிறப்பொடு பூசனை செல்லாது’ (கு. 18) - கருவி கருத்தா என்பவற் றின் பொருளில் வாராது ‘கூட’ என்னும் உட னிகழ்ச்சிப் பொருளில் ‘ஒடு’ வந்தது.

ஆன் என்னும் உருபும் ‘சக’ என்னும் கூட - உடன் - என்னும் பொருளில் வரும்.

எ-டு : ‘அறத்தான் வருவதே இ ன்பம்’ (கு. 39) - அறத்தொடு கூடி வருவதே ‘தூங்குகையான் ஓங்குநடைய’ (புறநா. 22) தொங்கும் கையுடன்.

ஆன்உருபு வீப்பிசை எனப்படும் ‘தொறு’ என்னும் பொருளி லும் வரும்.

எ-டு : ‘ஊரான்ஓர் தேவகுலம்’ (ஊர்தொறும் ஒரு கோயில்)

(பி. வி. 6, 16)

சங்கியோத்தர பதம் -

{Entry: D04__495}

பின்மொழி எண். கார்நாற்பது, புறநானூறு - போல்வன அவ்வந்நூலை அன்மொழிப்பொருளால் உணர்த்தின. இது வெகுவிரீகி வகை. இவை இரண்டாம்வேற்றுமை உருபும் பொருளும் உடன்தொக்க தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்பது தமிழ்மரபு. ஆயிரம் கதிர்களையுடையவன் ஆகிய சூரியன் - என்று, பண்புத் தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகவே ‘கதிராயிரம்’ என்பதைக் கொள்வது தமிழ்மரபு. (பி. வி. 24)

சங்கியோபய பதம் -

{Entry: D04__496}

இருமொழியும் எண்ணாக நிற்கும் அன்மொழித்தொகை. ‘பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்’, ‘ஏழெட்டு’ என்பன போன்றவை எண்ணைக் குறியாமல் பொருளின் மிகுதிகுறைகளைக் குறிப்பதால் அன்மொழித்தொகையாயின. இது சங்கியோபயபத வெகுவிரீகி. (பி. வி. 24)

சங்கேதம் -

{Entry: D04__497}

பொருளை உணர்த்தும் ஆற்றல் சொல்லுக்கு இயற்கை யானது என்ற கருத்தினை ஏற்காமல், பொருள் சங்கேதத்தால் உணர்த்தப் படுகிறது என்ப. சங்கேதம் என்பது இச்சொல்லுக்கு இதுவே பொருள் என்னும் குறியீட்டு முறை. இஃது இறைவன் நியமித்தது என்றும், பலர்க்கும் ஒப்ப முடிந்த சமயசங்கேதம் என்றும் சில வடமொழிநூலார் கூறுவர். அது பொருந்தாது. வடமொழியில் வழங்கும் உலகவழக்கான லௌகிகப் பிரக்கிரியைச் சொற்களும் எவர்ஒருவராலும் சொல்லப் படாமல் சுயம்புவாய்த் தானே உண்டான வழக்காய், செய்யா மொழியாய் நிகழ்கின்ற வேதத்திலும் வழங்குதலால், ஆற்றல் சொல்லுக்கு இயற்கையேயாம். சமயசங்கேதம் - கட்டிய வழக்கு (பின்னர்ச் சான்றோர் உண்டாக்கியது) (பி. வி. 18)

சட்டி என்னும் ஆறாம்வேற்றுமை -

{Entry: D04__498}

கிழமைப்பொருளில் வரும் ஆறாம்வேற்றுமை வினை கொண்டு முடியாமையின் அது காரகம் ஆகாது. சம்பந்த சட்டி எனப்படும் அது 1) அபேத சட்டி 2) பேத சட்டி என இரு வகைப்படும். ‘கிரியாசட்டி’ வினைகொண்டு முடிவது.

1. அபேத சட்டி : தற்கிழமையும் பிறிதின்கிழமையுமான பொருள்வேறுபாடுகாட்டாது, ஒருபொருளே உடையானும் உடைப்பொருளுமாய் இருத்தல்.

எ-டு : இராகுத் தலை - இராகுவினது தலை: இராகுவும் தலையும் ஒன்றே. ‘தன்னுயிர்’ கு. 268 தனது உயிர் : தானும் உயிரும் ஒன்றே. ‘என்னுயிர்’ கு. 1213 எனது உயிர் : யானும் உயிரும் ஒன்றே.

2. பேத சட்டி : அ) தற்கிழமை எனப்படும் சமவாய சம்பந்தம் ஆ) பிறிதின்கிழமை எனப்படும் சையோக சம்பந்தம் இ) ஏதேனும் ஒருவகைத் தொடர்புமாத்திரமே காட்டும் சொரூப சம்பந்தம் - எனப் பேத சட்டி மூவகைப்படும்.

அ) சமவாயம் என்னும் தற்கிழமை, சினை - குணம் - தொழில் - சாதி - விகாரம் - என்னும் ஐந்தும் பற்றி வரும்.

எ-டு : சாத்தனது கண் - சினை; நிலத்தது அகலம் - குணம்; சாத்தனது வரவு - தொழில்; எள்ளது குப்பை - சாதி (குழூஉ); எள்ளது சாந்து - விகாரம்

ஆ) சையோகம் என்னும் பிறிதின்கிழமை, பொருள் இடம் காலம் - பற்றி வரும்.

எ-டு : முருகனது வேல் - பொருள்; முருகனது குறிஞ்சிநிலம் - இடம்; வெள்ளியது ஆட்சி - காலம்

இ) சொரூப சம்பந்தம் என்னும் ஏதேனும் ஒருவகையால் கொள்ளும் தொடர்பு.

எ-டு : சாத்தனது செய். [ இதனை இலக்கணக்கொத்து ‘வேறாய்த் தோன்றல்’ எனக் கூறி விளக்கும். ]

கிரியாசட்டி : வேற்றுமைமயக்கத்தால் கருத்தாவும் கரணமு மான முதல்வேற்றுமையும் மூன்றாம்வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையால் வருங்கால், அது வினைகொண்டு முடியும்; ஆகவே அது காரகமாகும்.

எ-டு : அவர்க்குச் செய்யத்தகும் அக்காரியம் (அதைச் செய்யத் தக்கவர் அவர்) குவ்வுருபு ஆறனது என்பது பிரயோகவிவேக நூலார் கொள்கை - கருத்தா. கண்ணிற்குக் காணலாம் (கண்ணால் காணலாம்) - கரணம். இனி, நூலைக் குற்றம் கூறினான் என்பது நூலினது குற்றம் கூறினான் - என வருவது கருமமாம்.

சமவாயம், சையோகம்: தனித்தலைப்பிற் காண்க. (பி. வி. 17)

சதிசத்தமி -

{Entry: D04__499}

வினைசெய்யிடம்; வினைநிகழ்ச்சி பற்றி வரும் ஏழாம் வேற்றுமை.

‘புலவியுள் தோன்றும்’ (கு. 1324) என்புழி, புலவி : இடம் ; தட்டுப் புடைக்கண் வந்தான் என்புழி, தட்டுப்புடை : வினைநிகழ்ச்சி

(பி. வி. 16)

சதிர்ப் பிரத்தியயம் -

{Entry: D04__500}

வடமொழியில் கருத்தாவைக்கொண்டு முடியும் நிகழ்காலப் பெயரெச்சப் பொருளில் வரும் சொல்.

எ-டு : குர்வன் - செய்கின்ற, கச்சன் - செல்கின்ற

குர்வன் தேவதத்த : - செய்கின்ற தேவதத்தன். இத்தொடர் ‘குரவத் தேவதத்த: என்ற முதல்வேற்றுமை குன்றிச் சமத்தபதமாக வரும். இது தொகைநிலைத் தொடர். முன்னது தொகாநிலை.

(பி. வி. 38)

சந்தியக்கரம் -

{Entry: D04__501}

இரண்டு உயிர்எழுத்துக்களின் சேர்க்கையால் தோன்றிய எழுத்துக்கள். அவை ஐ ஒள என்னும் இரண்டு. அ இ = ஐ ; அ உ = ஒள.

(அஇ = ஏ; அஉ = ஓ - என்பனவும் சந்தியக்கரமே. ஓரெழுத் தாகவே கொள்ளப்படும்)

ஐ, ஒள - என்பன ஈரெழுத்தாகிய சந்தியக்கரம்; அவை அய், அவ் - என ஒலிக்கும். யாப்பினது எதுகை சந்தியக்கரங்களை அய் - அவ் - எனக் கொள்வதாலேயே நிறைவுறும். ஓரெழுத்து ஐ ஒள என்பனவும் உள.

நுந்தை ‘உந்தை’ எனத் திரிந்து வழங்குகிறது. ‘மியா’ என்பது வழக்கிலேயே இல்லை. அதுபோல, அஇ - அஉ - எனவே ஒரு காலத்தில் இவை பயன்பட்டிருக்க வேண்டும்; இக்காலத்து இல்லை.

இயற்கையான ஆயிரம் இருக்கவும், தொள்ளாயிரம் - என நூறு திரிந்த ஆயிரம் கொள்ளப்பட்டது போலவும், தாமரை என்பது ஒரு சொல்லாகவும் தாம் - மரை என இரு சொல்லாக வும் கொள்ளப்பட்டது போலவும், உயிர்மெய் ஓரெழுத்தாக வும் ஈரெழுத்தாகவும் கொள்ளப்படுதல் போலவும், ஐகார ஒளகாரங்கள் ஓரெழுத்தாகவும் ஈரெழுத்தாகவும் கொள்ளப் பட்டன. (பி. வி. 5)

சம்பிரதான காரகபேதம் -

{Entry: D04__502}

கொள்வோன் என்னும் பொருள்காட்டும் நான்காம் வேற்றுமை வகை. நான்காம்வேற்றுமையின் தலைமையான பொருள் கொடை. அதற்குக் கொள்வோனும் கொடுப்பா னும் - என இரு கூறு வேண்டும். ஆதலின் ‘கொடை யெதிர் கூற்றாகிய கொள்பவன்’ என்ற நிருத்தி கூறப்படுகிறது. ஏற்பது போன்ற பிற பொருள்வகைக்கும் இது பொருந்தும்.

கொள்பவன் எனப்படும் சம்பிரதான காரகம் மூவகைப்படும். அவை 1. அநிராகர்த்திரு (மறுக்காமல் ஏற்றல்), 2. பிரேரகம் (கேட்டு ஏற்றல்), 3. அநுமந்திரு [ விரும்பி (-அனுமதித்து) ஏற்றல் ] என்பன.

1. முக்கண் மூர்த்திக்குப் பூ இடுதல், (பூவையும் துழாயையும் கண்டக்கால்) ஏனமாய்ப் புக்கு இடந்தாற்குக் கொடுத்தல் - இவை அநிராகர்த்திரு சம்பிரதானம் ஆகும் கேளாது
ஏற்றல். இது கிடப்புக்கோளி எனவும்படும்.

2. ‘வறியார்க்கு ஒன்று ஈதலே ஈகை’ (கு. 221) இரப்பார்க்கு ஒன்று ஈதல் - வறியாரும் இரப்பாரும் ‘வேண்டும்’ என இரந்தும் கேட்டும் பெறுதலின், இது பிரேரக (சம்பிரதானம் ஆகிய) கேட்டே ஏற்றல்; இரப்புக் கோளி எனவும் படும். (பி. வி. 13)

அநுமந்திரு சம்பிரதானம், அபேத சம்பிரதானம் - தனித் தலைப்புள் காண்க;

சமய ஆற்றல் -

{Entry: D04__503}

சமய ஆற்றலாவது சங்கேத ஆற்றல். அஃதாவது இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் இறைவனுடைய நியமனத் தால் உண்டான சக்தி. ஒவ்வொரு சொல்லும் இத்தகைய சமய ஆற்றலாலேயே பொருளைக் குறித்து வருகிறது. (‘சமௌ சமய சங்கேதௌ’ என்பது அமரம்.) (தொ. சொ. 1 சேனா. உரை)

சமய சங்கேதம் -

{Entry: D04__504}

இச்சொல் இப்பொருளை உணர்த்தும் என இறைவனுடைய உடன்பாட்டால் உண்டான சக்தி. (பி. வி. 18)

சமவாய சம்பந்தம் -

{Entry: D04__505}

தற்கிழமையாகிய ஒற்றுமைத்தொடர்பு. கிழமைப் பொருளில் வரும் ஆறாம்வேற்றுமை, பேதசட்டி அபேதசட்டி - என இருவகைப்படும். அவற்றுள் பேதசட்டி, சினை குணம் தொழில் சாதி விகாரம் - என ஐவகைப்படும்.

எ-டு : சாத்தனது கண், நிலத்தது அகலம். சாத்தனது வரவு, எள்ளது குப்பை, எள்ளது சாந்து - என முறையே காண்க.

அபேதசட்டி ஒருவகைத்தேயாம்; ஒருபொருள் தானே உடை யானும் உடைப்பொருளுமாக இருப்பது.

எ-டு : இராகுத்தலை, என்னுயிர், (இராகுவினது தலை, எனது உயிர்) (பி. வி. 17)

சமாகாரத் துவந்துவன் -

{Entry: D04__506}

ஒருமை ஈறாகும் அஃறிணை உம்மைத்தொகை.

எ-டு : அறம்பொருள், புலிவிற்கெண்டை (பி. வி. 33)

சமாசம் -

{Entry: D04__507}

தொலைநிலைத்தொடர். அது தன்னுள் நிகழும் புணர்ச்சி யினது விகற்பத்தால் (தொகுதல் தொகாமை என்னும் இருவகையானும் பிறவாற்றானும் வரும் விகாரங்களால்) வெவ்வேறு பெயர்கள் பெறும். அவை வருமாறு :

1. நித்தம் - நித்திய சமாசம் (தொக்கன்றி வாராமை)

2. அநித்தம் - அநித்தியம் (தொக்கும் தொகாமலும் வருதல்)

3. அலுக்கு - கெடாமை - வேற்றுமையுருபு கெடாமல் தொகுதல்; அஃதாவது ஒருசொல் நீர்மைப்படுதல்.

4. லுக்கு - கெடுதல் - உருபு முதலியன மறைதல்

5. பாத்தம் - பாக்தம் - சினைக்குள் சினையாகக் கூறும் உபசார வழக்குப் போல்வன

6. விபரியம் - சொற்கள் முன்பின்னாகத் தடுமாறுதல், விகுதி மாறுபட்டுப் புணர்தல் முதலியன.

7. உபபத சமாசம் - செய்வோன் போன்ற வினையாலணை யும் பெயர்ப் பொருளைக் காட்டும் விகுதித் துணைச் சொல் லுடன் வரும் தொகை.

தனித்தனித் தலைப்புக்களில் இவற்றின் விளக்கம் காண்க. (பி. வி. 27)

சமான கருத்தா

{Entry: D04__508}

ஒன்றேயாகிய வினைமுதல். வினையெச்சங்களில், செய்து செய்யா செய்யூ செய்பு - என்னும் நான்கும் தம் வினைமுதல் வினையையே கொண்டு முடியும்.

எ-டு : சாத்தன் உண்டு (உண்ணா, உண்ணூ, உண்ணுபு) வந்தான். (ஈண்டு உண்டவனும் சாத்தன்; வந்தவனும் அவனே ஆதலின் சமானகருத்தா ஆயிற்று.) (பி. வி. 39)

சமானகருத்தாவும் பின்னகருத்தாவும் -

{Entry: D04__509}

வினையெச்சங்கள் தம் வினைமுற்றிற்குரிய எழுவாயையே பெறுதலும், வேறு எழுவாயைப் பெறுதலும் முறையே சமான கருத்தா - பின்னகருத்தா - என்பவற்றால் உணர்த்தப் பட்டன. செய்து - செய்யூ - செய்பு (துவாதி மூன்றும்) தம் வினை முதல் வினையே கொள்ளும்; ஏனைய செய முதலியன தம் வினை முதல்வினை வேறு வினைமுதல்வினை என்னும் இரண்டும் கொள்ளும். சமானகருத்தாவை யுடையது சமான கர்த்திருகம்; பின்னகருத்தாவையுடையது பின்னகருத்திருகம்.

(பி. வி. 39)

எ-டு : சாத்தன் உண்டு வந்தான், உண்ணூ வந்தான், உண்ணுபு வந்தான்; சாத்தன் உண்ணத் தாய் மகிழும், உண்ணின் பசி நீங்கும், உண்ணிய வந்தான்.

பிறவும் அன்ன

சமானாக்கரமான இணையெழுத்து -

{Entry: D04__510}

ஐ ஒள அஇ அய் அஉ அவ் - இவற்றை (இரண்டெழுத்துக் கூடிப் பிறந்தமையால்) சந்திஅக்கரம் என்றும், (ஒத்த எழுத்துக் கள் ஆதலின்) சமானாக்கரம் என்றும் கூறுவர். இவற்றைப் போலியெழுத்தெனக் கொண்டு இவை தள்ளத் தக்கனவே யன்றிக் கொள்ளத்தக்கன அல்ல என்று கூறும் உரையாசி ரியர் கருத்தை மறுத்துப் ‘போலியெழுத்தைப் போற் றுதல் கடனே’ என இ. கொ. உடையார் விதந்து தனியே ஒரு நூற்பா யாத்தார்; மேலும் அதன் உரையில், “வடநூலார் இவ்விலக் கணத்தைத் தள்ளாது சமாநாக்கரம் எனப் பெய ரிட்டு இரண்டனையும் தழுவினார். அதுபற்றித் தமிழ்நூலார் ‘இணையெழுத்து’ என்று மொழிபெயர்க்க மறந்து ‘போலி யெழுத்து’ என மொழி பெயர்த்ததனால், போலிச்சரக்கு - போலியிலக்கணம் - போலியுரை - என்னும் சொற்களைப் போலவே இதனையும் கருதி முன்னும் பின்னும் பாராது தள்ளினார். அது பற்றியே சூத்திரம் செய்தனம்”என்கின்றார்.

இவற்றைக் கொள்ளாக்கால், எதுகை மோனை மாறுபட்டுப் பல செய்யுட்கள் வழுவுடையனவாம். ‘அவ்விய நெஞ்சத் தான்’ என்னும் குறட்பாவில் (169) செவ்வியான் என்பது சீர்எதுகை. ‘கய்யறு நெஞ்சம் கடிதல் வேண்டும், பொய்தீர் காட் சிப் புரையோய் போற்றி’ (சிலப். 13 : 91, 92) இவ்வடிகளில் அடி யெதுகை வந்தது. இவை போல்வன மேலும் பல உள. (இ. கொ. 91)

சமானார்த்தமான சொற்களின் தொகை -

{Entry: D04__511}

முன்மொழி பின்மொழி இரண்டும் ஒரேபொருளுடையன வாக அமைந்த தொகைநிலைத்தொடர்கள்.

பணிபணம் - பணமாவது பாம்பினது படம்; அதனை யுடையது பணி. பணம் எனப் பின்வருதலின், முன்மொழி பாம்பு என்னும் மாத்திரமே நின்றது.

வம்சகரீரம் - வம்சம், கரீரம் : இரண்டும் மூங்கில் என்னும் ஒரு பொருளையுடைய சொற்கள்.

கரிகளபம் - கரி - யானை; களபம் - யானைக்குட்டி இத் தொடரில் கரி என்பது வேறு வேண்டாதது.

இம்மூன்றன்கண்ணும் முறையே முன்மொழியும் பின் மொழியும் முன்மொழியும் மிகையாதலின் இவை சொல் மாத்திரையாய் - கேவல பதமாத்திரையாய் - வேறுபொருள் பயவாது - நிற்கும் என்பர் பி. வி. நூலார்.

‘வெருவந்த செய்தொழுகும் வெங் கோலன்’ (கு. 563) என்புழிக் ‘கோலன்’ என்பதே அமையும். அடியளந்தான் தாஅய தெல்லாம்’ (கு. 610) என்புழித் தாவியது என்றல் மிகை; ‘கொண்டது’ என்றாலே அமையும். ‘கோடாத செங்கோல்’ (சீவக. 7) என்புழிக் ‘கோல்’ என்றலே அமையும். (பி. வி. 26)

சரூப சிலிட்டம் -

{Entry: D04__512}

சமான ரூபமான - வடிவு ஒற்றுமையில் வரும் - செம்மொழிச் சிலேடை; ஒலி வடிவில் முற்றிலும் ஒத்த சொல். சிலேடையை யுடையது சிலிட்டம். இது நானார்த்த பதம் எனவும் வழங்கும். இது மூன்று வகைகளில் வரும். 1) சொல் வேறுபடாது பொருள் வேறுபடுவது 2) பொருள் வேறுபடாது சொல் வேறுபடுவது 3) சொல்லும் பொருளும் வேறுபடுவது - என்பன அவை.

எ-டு : அ) ‘குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத’
(சிலப். 4 : 15, 16)

குழல் வளர் முல்லை - வேய்ங்குழலிலிருந்து வெளிப்படும் முல்லைப்பண் என்றும், கூந்தலில் காணப்படும் முல்லைமலர் என்றும் ஒரே சொற்றொடர் இருபொருள் தந்தது.

ஆ) ‘சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி ஆட’ (சீவக. 2020) புண்ணிய நீரையுடைய குமரித்துறையில் நீராட எனவும், அழகிய இயல்பை யுடைய இப்பெண்ணை நுகர எனவும் இருபொருள் பட்டது.

இவை சொல் வேறுபடாது பொருள் வேறுபட்ட சரூப சிலிட்டம்.

2. அஃது இஃது உஃது, அது இது உது - என்பன வேறு சொல்லுடன் புணர்கையில் அஃதழகிது இஃதழகிது உஃதழகிது - எனவும், அதுவழகிது இதுவழகிது உதுவழகிது - எனவும், உருபு புணருங்கால் சுட்டுப்பெயர் ஆய்தம் கெட அதனை இதனை உதனை - எனவும் வரும்.

இவை சொல் வேறுபட்டும் பொருள் வேறுபடாதன,

3. செம்பொன்பதின்பலம் : செம்பொன் பதின்பலம், செம்பு ஒன்பதின்பலம்; குன்றேறாமா : குன்று ஏறா மா, குன்று ஏறு ஆமா; குறும் பரம்பு : குறும்பரம்பு, குறும்பர் அம்பு; எட்டு : எட்டு (என்னும் எண்), எள் து (எள்ளைத் தின்னு); தாமரை : தாமரை (மலர்), தாம் மரை (தாவும் மான்); இவை சொல்லும் பொருளும் வேறுபட்டன; இரட்டுற மொழிதல் என்னும் உத்தியும் அது.

வடிவொற்றுமையால் சமானமாகத் தோன்றும் இச்சொற் கள் இயற்கையில் வெவ்வேறானவை. ‘பய:’ என்னும் சொல் லுக்குப் பால் எனவும் நீர் எனவும் இருபொருள் கூறும் வடமொழியில் நிகண்டு (அமரகோசம்) செய்த அமரசிங்கர் “பய: க்ஷீரம், பய அம்பு ச”என இரண்டையும் தனித்தனியே கூறுவர். அவ்வாறு கூறுதலே தக்கது. (பி. வி. 40)

சன் -

{Entry: D04__513}

ஆக்கச்சொல். ‘தேவதத்தன் நெடியன்’ என்பதனை வட மொழியில் ஆக்கச்சொல் தந்து ‘நெடியன் ஆயினான் ’ எனக் காரகம் ஆக்குவர். ஆசிரியர் தொல்காப்பியனார் வினை யெச்சம் கொண்டு முடியும் வினைக்குறிப்பிற்கு ஆக்கச்சொல் தருதல் வேண்டும் என்றே கூறுவர். (சொ. 20, 432 நச்.)

எ-டு : மருந்துண்டு வலியனாயினான் (பி. வி. 16)

சாத்தன் வந்தான் : தொடர்இலக்கணம் -

{Entry: D04__514}

எழுவாயுருபு வினைமுற்றுப் பயனிலையை இறுதிக்கண் கொண்டதும், வினைமுற்றுப் பெயர்ப்பயனிலையை முதற்கண் கொண்டதும் ‘சாத்தன் வந்தான்’ என வரும். தம்முள் வேற்றுமை யாதோ எனின், கேட்போர்க்குச் சாத்தன் ‘இதுசெய்தான்’ என வினையை உணர்த்துவதும், இது செய்தான் ‘சாத்தன்’ என வினைமுதலை உணர்த்துவதுமாம் என்க. (நன். 357 சங்.)

சாத்தனது இயல்பு, பாட்டு : இவற்றின் கிழமை -

{Entry: D04__515}

சாத்தனது இயல்பு - இது குணம் பற்றிய பண்புத்தற்கிழமை

சாத்தனது பாட்டு - இது தொழில் பற்றிய பண்புத்தற்கிழமை

ஏனைய பொருள் இடம் காலம் - பற்றி வருவன எல்லாம் பிறிதின் கிழமையாம். இவற்றுள் சாத்தனது பாட்டு என்னும் வினைத் தற்கிழமையானது வரிவடிவை நோக்கிய காலத்துச் செய்யுட் பிறிதின்கிழமையாம் என்க. (நன். 300 இராமா.)

சாத்தனது நன்று : தொடர்பு முடிபு -

{Entry: D04__516}

சாத்தனது நன்று - என ஆறாவது வினைகொள்ளும் எனப் பொருள் கூறுவாருமுளர். ‘ஆறன் உருபும் ஏற்கும் அவ் வுருபே’ என்பதனானே, ஆறாம்உருபு எழுவாயாய் நின்று வினைப் பயனிலை கொண்டதாம்; அன்றி, ஆறனுருபு வினையால ணையும்பெயர்ப் பயனிலை கொண்டதாம். (நன். 319 சங்.)

சாத்தனது வந்தது - சாத்தனது நன்று - என ஆறாவது வினையும் வினைக்குறிப்பும் கொள்ளும் என்பாரும் உளராலோ எனின், அஃது ஆறனுருபு ஏற்ற பெயரன்று; குறிப்பு வினைமுற்றுப் பெயராம் என மறுக்க. (சாத்தனது என்னும் குறிப்பு வினைமுற்று, படுத்தலோசையால் வினையாலணையும் பெயராகி வினை முற்றையும் குறிப்புமுற்றையும் கொண்டு முடிந்தது.) (இ. வி. 224 உரை)

சாதனசாத்திய முறை -

{Entry: D04__517}

மக்களாகப் பிறந்து புண்ணியபாவம் இயற்றி அப்புண்ணிய மிகுதியான் தேவராயும் அப்பாவமிகுதியான் நரகராயும் பிறத்தலான் ‘மக்கள் தேவர் நரகர்’ எனச் சாதனசாத்திய முறையே வைத்தார். (நன். 261 சங்.)

சாதிஏகவசனம், சாதிபகுவசனம் -

{Entry: D04__518}

சாதிஏகவசனமாவது சாதிஒருமை. அஃதாவது ஒருசொல் ஒருமையீறு தோன்ற நின்றும் தோன்றாது நின்றும் பின் ஒருமை பன்மை வினைஈறாக மேல்வந்து முடிக்கும் சொற்களும் இன்றித் தானே பன்மைப்பொருள் உணர்த்துவது.

கவியொடும் புதனொடும் கலந்து’ என்ற தொடரில், கவி - புதன் - என்ற சொற்கள் கவிஞர்களையும் அறிவாளிகளையும் சுட்டுவது சாதிஒருமை. இவை சொல்லால் ஒருமையாகிப் பன்மைவினையொடும் முடியாமல் தம் ஆற்றலால் பன்மை காட்டலின் சாதி ஒருமை ஆயின.

‘சிவிகை பொறுத்தானோடு ஊர் ந்தான் இடை’ (கு. 37) - இஃது இல்லார் உடையார் என்ற இருதிற மக்களை உணர்த்தி நின்றமையால், உயர்திணைச் சாதியொருமை ஆயிற்று. (சிவிகையைக் காவுவார் பலராதல் வேண்டுதலின், ‘பொறுத் தான்’ சாதியொருமையால் ‘பொறுத்தார்’ எனப் பலரைக் குறித்தது என்றலும் ஆம்.)

சாதிபகுவசனமாவது சாதிப்பன்மை, ‘எண் என்ப ஏனை எழுத்து என்ப’ (கு. 392) - எண், எழுத்து என்னுமிவை ‘என்ப’ என்னும் பன்மைச் சொல்லை ஏற்றுச் சாதிப்பன்மை ஆயின. கண் என்ப : என்ப - என்பர் - உயர்திணைப் பன்மை வினைமுற்று.

(பி. வி. 50)

‘கற் பவை கற்க’ : அஃறிணை சாதிப்பன்மை

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ (கு. 428) என்புழி, ‘அஞ்சுவது’ அஞ்சுவன எனவும், நூல் எனப்படுவது’ (தொ.பொ. 478) என்புழி நூல், நூல்கள் எனவும் அஃறிணை ஒருமையீறு பன்மை உணர்த்திற்று. (பி. வி. 50)

சாமானிய தத்திதன் -

{Entry: D04__519}

பெயர்ச்சொற்கள் ஏற்கும் விகுதிகள் தத்திதன் ஆம். சாமானிய தத்திதன் ஆவன: ன - ள - ர - ஒற்றுக்களும், து - று - டு என்பன வும், மகர ஒற்றும், அ இ உ ஐ என்பனவும் ஆம். இவை வினை முற்று வினையாலணையும்பெயர் தொழிற்பெயர் ஆகியவற் றுக்கும் பொதுவானவை. ‘ஒன்றையுடையான்’ என்னும் பொருளில் உடையான்மேல் நிற்கும் தத்திதத்தின் பொருள்க ளாவன :

1. அதனால் உண்ணல் - வலையன்; 2. இதனை உரைத்தல் - வைதிகன் (வேதம்), பௌராணிகன் (புராணம்) 3. அதனோடு ஒத்தல் - மயில்அன்னாள்; 4. அதனை எண்ணல் - சோதிடன்;
5. இதனுக்கு நாயகன் - வைதர்ப்பன் (விதர்ப்பம்), கௌரவன் (குரு); 6. ஈங்கு இருத்தல் - சோழநாடன்; 7. அதனைப் பண்ணல் - மருத்துவன்; 8. இதனைப் பயிறல் - கூத்தன் - என்பன முதலாயின.

உடைப்பொருள்மேல் நிற்கும் சாமானிய தத்திதன் :

1. இவற்கு மகன், மகள் - கார்த்திகேயன், வாசுதேவன் - பார்ப்பதி; 2. வர்க்கம் (வம்சம்) - காகுத்தன், கௌரவன்; 3. கிளை - தமர், நமர்; துவதீயர், யுஷ்மதீயர், ததீயர்; 4. முறை - தந்தை, எந்தை; பிதாமஹன், பௌத்திரன் (பி. வி. 30,31, 32)

சாமானிய தத்திதனாக வரும் விகுதிகள் -

{Entry: D04__520}

சாமானிய தத்திதன் ன் (அன், ஆன்) ள் (அள், ஆள்) ர் (அர்,ஆர்) டு து று ம் (அம்) அ இ உ ஐ என்னும் பிரத்தியயமாக வரப்பெறும் (பிரத்தியயம் - விகுதி). இப்பிரத்தியயங்கள், வினைமுற்றுக்கும் வினையாலணையும் பெயர்க்கும் தொழிற்பெயர்க்கும் விரவி வருவனவாம்.

எ-டு : குழையன் - அன், குழையள் - அள், குழையர் - அர், முக்கட்டு - டு, குழையது - து, காதற்று - று, காபிலம் - அம், குழையன - அ, வில்லி - இ, தெலுங்கு - உ, நங்கை - ஐ. (தெலுங்கன் சொல் தெலுங்கு.)

சூலி - சூலத்தையுடையவள், தந்தி - தந்தத்தையுடையது, காபாலி - கபாலத்தை (மண்டையோட்டை) யுடையவன் - இவை இகர ஈறாகிய வடசொற்கள்.

வந்தான் (ஆன்), கண்டனன் (அன்) - என வினைமுற்றில் இவ்விகுதிகள் வந்தன. சென்றான் (ஆன்), உண்டவன் (அன்), என வினையாலணையும்பெயரிலும் இவ்விகுதிகள் வந்தன.

தீன் (ன்), பாய்த்துள் (ள்), புணர் (ர்), சாக்காடு (டு), பேறு (று), அறிவது (து), ஈட்டம் (அம்), தாழ்ச்சி (இ), போக்கு (கு). உடுக்கை (ஐ) எனத் தொழிற்பெயரில் இவ்விகுதிகள் வந்தன.

சாமானிய தத்திதன் 1. உடையான்மேல் நிற்பது 2. உடைமைப் பொருள்மேல் நிற்பது என இருவகையால் வரும்.

உடையான் - ஓர் அடையையுடைய (அடைகொளியான) விசேடியம். உடைப்பொருள் - ஒரு பொருளை அடுத்து நிற்கும் (உடைமையான) விசேடணம் (என்னும் அடை).

விசேடியமின்றி விசேடணத்திற்குப் பொருள் முற்றாது.

உடைமைப்பொருள்மேல் வரும் தத்திதப் பிரத்தியயம் உடைய வன் என விசேடியத்தையே பொருளாக உடையதாம். (பி. வி. 30)

சாயல் என்னும் உரிச்சொல் -

{Entry: D04__521}

சாயல் என்னும் உரிச்சொல் ஐம்பொறிகளானும் நுகரப்படு கின்ற மென்மையாகிய பண்பினை உணர்த்தும்.

எ-டு : மயிற்சாயல் மகள்வேண்டிய’ பு.வெ. 68 : 29 கொளு
சாயல் மார்பு நனிஅலைத் தன்றே’ (பதிற். 16)

என இவை ஒளியானும் ஊற்றானும் பிறந்த மென்மையை உணர்த்தும்.

‘அமிர் தன்ன சாயல்’ (சீவக. 8) என்பது, தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையை உணர்த்தவே, பல மென்மையும் அடங்கின. (தொ. சொ. 325 நச். உரை)

சார்த்தியும் ஆர்த்தியும் -

{Entry: D04__522}

வேற்றுமையுருபுகளைப் போலவே சொல்லுருபுகளும் வேற்றுமைப்பொருளை விளக்குவனவே. இதை விளக்கப் பி. வி. நூலார், உவமஉருபுகளைத் தண்டியாசிரியர் சார்த்தி - ஆர்த்தி - என இருவகையாகக் கூறுவதைக் குறிப்பிடுகிறார்.

1. ஸார்த்தி - நேரிடையாக ஒப்புமைப்பொருளை உணர்த்தும் போல - ஒப்ப - என்னும் சொற்கள்.

2. ஆர்த்தி - ஒப்பு இல் வழியான் உவமப்பொருளைக் குறிக்கும் அன்ன - ஆங்க - மான - விறப்ப - என்ன - உறழ - முதலிய சொற்கள். (பி. வி. 6)

சிதைந்ததனால் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: D04__523}

அதிகாரம் முதலியவற்றான் மொழி வருவித்து முடித்த லுக்குக் கூறுமிடம் ஏழனுள் இதுவும் ஒன்று. சிதைந்தது என்பதற்கு இழிவுபட்டது எனப் பொருள்கொண்டு, ‘கழாஅக்கால்’ (கு. 840) என்பதற்கு ‘மலம் போன்ற இழிந்த பொருளை மிதித்துப் பின் கழுவாத கால்’ எனச் சொற்களை வருவித்துப் பொருள முடித்தல். (இ. கொ. 89)

சிதைந்தன வருதல் -

{Entry: D04__524}

வடமொழியின் சிறப்பெழுத்தான் இயன்ற வடசொல் தமிழ் ஒலிக்கு ஏற்பத் திரித்துக் கொள்ளப்பட்டு வருதல்.

எ-டு : பக்ஷம் - பக்கம்.

வடமொழிச் சிதைவாகிய பாகதத்தினின்று தமிழில் நேரே வருதல்.

எ-டு : ஆணை - வட்டம் - நட்டம் - கண்ணன் - என்பன ஆக்ஞா விருத்தம் நடனம் கிருஷ்ணன் - என்ற ஆரியச்சொற்கள் திரிந்த பாகதச்சொற்களாய்த் தமிழில் வழங்குவன. (தொ. சொ. 402 நச். உரை)

சில உருபுகள் செய்யுளில் திரிதல் -

{Entry: D04__525}

கு ஐ ஆன் - என்ற உருபுகள் செய்யுளில் திரிந்து வரும். குகரம் ககர அகரமாகவும், ஐகாரம் அகரமாகவும், ஆன் ‘ஆன’ என்று அகரம் பெற்றும் திரிந்து வரும்.

எ-டு : ‘(கடிநிலை யின்றே) ஆசிரியர்க்கு’ - ஆசிரியர்க்க (எ. 389 நச்..)

‘காவலோனைக் களிறஞ் சும்மே’ - காவலோன ‘புலவரான்’ - புலவரான (தொ. சொ. 108 சேனா. உரை)

சில பெயர்ச்சொற்களில் வழக்காற்றுத் திரிபு -

{Entry: D04__526}

பெயர் என்னும் சொல் பேர் என்றும், பெயர்த்து என்னும் சொல் பேர்த்து என்றும், ஒடு என்னும் சொல் ஓடு என்றும், நீயிர் என்னும் சொல் நீர் என்றும், எவன் என்னும் சொல் என் என்றும் என்னை என்றும், பொழுது என்னும் சொல் போது என்றும் திரிந்தன.

யாமுதற் பெயர் ஆமுதலாயும் வரும். அவை வருமாறு : யானை யாறு யாமை யாடு யார் யாத்தல் - என்பன யாமுதல் திரிந்து, ஆனை ஆறு ஆமை ஆடு ஆர் ஆத்தல் - என ஆம். இவை வழுவல்ல என்க. (நேமி. பெயர். 7 உரை)

சிவணாக் குறிப்பின இடைப்பிறவரல் -

{Entry: D04__527}

உருபு முற்று பெயரெச்சம் வினையெச்சம் - இவற்றிற்கும் இவை கொண்டுமுடியும் சொற்களுக்கும் இடையே பொருள் பொருத்தமுற வரும் சொற்களும் சொற்றொடர்களும் இடைப்பிறவரல் எனப்படும். இடையே வரும் சில சொற்களும் சொற்றொடர்களும் முடிக்கும் சொல்லொடு முடியாது முடிக்கப்படும் சொல்லொடுகூட முடிவனவாயின், அவை இடைப்பிறவரல் ஆதற்குச் சிவணாக் குறிப்பினவாம்.

எ-டு : ‘மல்லல் யானைப் பெருவழுதி’ என்பார் வல்லத்தை எறிந்தவர்; அவர் ‘நல்லிளங்கோசர்’ என்பார்க்குத் தந்தையாவார். இச்செய்தியை ‘நல்லிளங்கோசர் தந்தை யாகிய வல்லம் எறிந்த மல்லல் யானைப் பெருவழுதி’ என்னல் வேண்டும். நல்லிளங்கோசர் தந்தை என்பதை இடைப் பிறவரலாக்கி, ‘வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்று குறிப்பிடின், வல்லம் எறிதல் பெருவழுதிக்கு மாத்திரம் அடையாகாது நல்லிளங் கோசர்க்கும் அடையாக முடிதலின் பொருள் கவர்த்தல் ஆம். இன்னோரன்ன சிவணாக் குறிப்பின வாகிய இடைப்பிறவரலாம். (தொ. சொ. 237 சேனா. உரை)

‘காமனை எரித்த கணபதி தந்தை, வாம தேவன் மலரடி பணிவாம்’ என்பது, காமனை எரித்தல் வாமதேவனுக்கே எய்தாமல், கணபதிக்கும் எய்துதலின், சிவணாக் குறிப்பின் இடைப்பிற வரலாம். (பி. வி. 19)

சிவணி : சொல்லிலக்கணம் -

{Entry: D04__528}

சிவணி என்பது வினையெச்சம் அன்று; ஒடுவின் பொருண்மை தோன்றவே வந்தது. ‘பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி’ - பல்லோ ரறியும் சொல்லோடே. (தொ. சொ. 2 தெய். உரை)

சிற்றறிவோர் வினையும் பேரறிவோர் வினையும் -

{Entry: D04__529}

வினையின் வகைகளான தனக்குப் பயன் முதலான நான்கும் சிற்றறிவோருடையனவாக நிகழும்போது இப்பெயர் பெறுவனவாம்.

1. உண்டான், உடுத்தான், உறங்கினான் - தனக்குப் பயன்;
2. பாங்கன் தூது நடந்தான், பாங்கி ஊடல் தீர்த்தாள் - பிறர்க்குப் பயன்; 3. தலைவி தலைவற்குச் சோறட்டாள், தலைவன் தலைவியைப் புணர்ந்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன்; 4. பயனில் சொல் பாராட்டினான், கையை வீசினான், கண்ணை இமைத்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன் இன்மை.

இவைநான்கும் பேரறிவோர் வினையாக வருமாறு :

1. யான் எனது என்னும் செருக்கறுத்தான், அவாவை விட்டான், பிறவியை ஒழித்தான், வீட்டை அடைந்தான். 2. நூலைப் பாடி னான், உரையை எழுதினான், மாணாக்கனை அறிவித்தான். 3. வேதாகமவழி விரும்பி ஒழுகினான், சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான். 4. அறம்பொருளின்பம் அள வின்றித் தேடி னான், அட்டமா சித்தியை அருமையாய்த் தேடினான்.

‘வினையின் எட்டுவகை’ யாக இவை பேசப்படும். (இ. கொ. 80)

சிறத்தல் குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் -

{Entry: D04__530}

முன்பு சிறவாதுள்ளது சிறத்தலாகிய குறிப்பைக் கூர்ப்பு - கழிவு - என்ற உரிச்சொற்கள் குறிப்பிடும்.

எ-டு : ‘துனி கூர் எவ்வமொடு’ (சிறு. 39)

‘சினனே காம ம் கழி கண் ணோட்டம்’ (பதிற். 22) (தொ. சொ. 314 சேனா. உரை)

‘சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவி’ -

{Entry: D04__531}

சிறப்பாவது மன்னர் முதலாயினாரான் பெறும் வரிசை. மன்னர் தரும் வரிசையும் தவம் கல்வி குடி உறுப்பு - முதலியனவும் பற்றி வருவன ஆகிய பெயர்கள் இயற்பெயருக்கு முன்னர்க் கிளக்கப்படும்.

எ-டு : ஏனாதி நல்லுதடன், முனிவன் அகத்தியன், தெய்வப் புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன், குருடன் கொற்றன் - என முறையே காண்க. (தொ. சொ. 41 சேனா.உரை)

சிறப்பு : மன்னர் முதலாயினாரால் பெறும் வரிசை. சிறப்புப் பெயரும் இயற்பெயரும் ஒருசேரக் கூறுங்கால், சிறப்புப் பெயரை முன்னரும் இயற்பெயரைப் பின்னருமாக இட்டுக் கூறுதலே முறை. இந்நிலை சிறப்புப்பெயருக்கு மாத்திரமன்றித் தவம் கல்வி குடி உறுப்புப் பற்றிய பெயர்களுக்கும் ஒக்கும்.

எ-டு : ஏனாதி நல்லுதடன், முனிவன் அகத்தியன், தெய்வப் புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் - சோழன் நலங்கிள்ளி - பாண்டியன் மாறன், குருடன் கொற்றன் - என முறையே காண்க.

ஆசிரியன் திருவீரன் என்பதனைத் திருவீரஆசிரியன் என்றாற் போல, இயற்பெயர் முற்படக் கிளத்தல் பிற்கால வழக்கு.

(தொ. சொ. 41 நச். உரை)

சிறப்பினான் வந்தன : ஏனாதி, வாயிலான், படைத்தலைவன். இக்காலத்துத் தேவர், உடையார் முதலாயின. ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத்தலைவன் கீரன் - எனவரும்.

இனி நிலப்பெயர் முதலிய சொற்களும் இயற்பெயருக்கு முன்னரே வருவன.

எ-டு : அருவாளன் சாத்தன் (நிலம்) , பாண்டியன் மாறன் (குடி), முனிவன் அகத்தியன் (தவம்), ஆசிரியன் சாத்தன் (கல்வி) (தொ. சொ. 39 தெய். உரை)

சிறப்பினாகிய பெயர் போல்வன -

{Entry: D04__532}

சிறப்பு - சிறப்புடைய மன்னரால் பெறும் வரிசை. அதனான் ஆகிய பெயர் : ஏனாதி முதலியன. அப்பெயர் போல்வன பிறப்பினான் ஆகிய பெயரும், தொழிலின் ஆகிய பெயரும், கல்வியின் ஆகிய பெயரும், பிறவுமாம். இன்ன பெயரினை முற்கூறி இயற்பெயரினைப் பின்னர்க் கூறல் வேண்டும்.

எ-டு : ஏனாதி நல்லுதடன் - சிறப்பு, பார்ப்பான் கண்ணன் - பிறப்பு, வண்ணான் சாத்தன் - தொழில், தெய்வப் புலவன் திருவள்ளுவன் - கல்வி. (தொ. சொ. 41 இள. உரை)

‘சிறப்பினின் வழா’ - என்னும் தொடர் -

{Entry: D04__533}

ஆசிரியர் தொல்காப்பியனார் இன் உருபிற்கு இன்சாரியை ஒரோவழி அக்காலத்தும் வரும் என்பது கருதியே, ‘இன்னென் சாரியை இல்லை யாண்டும்’ என நியதி கூறாமல் ‘இன்மை வேண்டும்’ என வேண்டிக்கோடலாயும் பாராமுக மாயும் கூறினார். அதனையும் ‘பாம்பினிற் கடிது தேள்’ என்னும் வழக்கையும், ‘யாதினின் யாதினின் நீங்கியான் நோதல்’ (கு. 341) என்னும் செய்யுளையும் நோக்கிச் ‘சிறப்பினின் வழா’ எனச் சூத்திரம் செய்தார். இதற்குச் ‘சிறப்பின் - சிறக்குமாயின்’ எனச் செயின் என் வாய்பாட்டு வினையெச்சமாகப் பொருள் கூறின், ‘சிறக்காமல் வழங்கினவற்றிற்கு அன்று’ என்பதாயிற்று. அதுவுமன்றி, இன் என்பது வாளா நின்றது. இனிச் ‘சிறப்பி னால்’ என ஏதுப்பொருள் கொள்ளினும், ‘பொன்னிற் செய்த குடம்’ ‘வாணிகத்தின் ஆயினான்’ - என்பன போலக் காரண காரியத் தொடராய் நில்லாமையுமன்றி, ஆங்கும் ‘இன்’ வீணா நின்றது. ஆதலால் சிறப்பினில் நின்றும் தவறி வழா - என எல்லைப் பொருளாக உரைப்பதே சிறந்து காட்டிற்று. நீக்கம் எனினும், குற்றியலுகரப் புணர்ச்சியாயின் இன்னுரு பிற்கு இன்சாரியை வருதல் புதியனபுகுதல் எனினும் அமையும். இனி ‘எல்லா ஈற்றும் சொல்லுங் காலை, வேற்றுமையுரு பிற்கு இன்னே சாரியை’ (இ. வி. 149) என்றதை மறந்து, ‘பாட்டின் பொருள்’ என்பதனைப் ‘பாட்டன் பொருள்’ என்றாற் போல, மேற்சொல்லிய (குறளடியை) ‘யாதனின் யாதனின்’ எனத் திருத்திச் சொல்லின்பம் கெடச் செய்தாருமுளர். (நன். 439 இராமா.)

சிறப்பு ஓகாரம் -

{Entry: D04__534}

ஓகார இடைச்சொல் தரும் பலபொருளுள் சிறப்புப் பொருளும் ஒன்று. இப்பொருளில் வரும் ஓகாரம் அளபெடுக்கும்.

எ-டு : ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே (கள. 36)

(தொ. சொ. 263 நச். உரை)

சிறப்புச் சொல் -

{Entry: D04__535}

கண்போலச் சிறந்தாரைக் ‘கண்’ என்றலும், உயிர்போலச் சிறந்தாரை ‘உயிர்’ என்றலும் போல்வன சிறப்புச்சொல். இச்சொற்கள் உயர்திணைப்பொருளை உணர்த்தினவேனும் சொல்லான் அஃறிணை யாதலின் அஃறிணைமுடிபு கொள்ளும். கண் வந்தாள் - உயிர் வந்தாள் - என்று கூறாது, கண் வருகிறது - உயிர் வருகிறது - என அஃறிணை வாய்பாட்டான் வினை கோடலின் இவை ஆகுபெயர் ஆகா. அப்பண்புச்சொல் தன் பண்பையும் தன்னையுடைய உயர்திணைப்பொருளையும் ஒருங்கு தோற்றுவித்துப் பிரியாது நின்றது. (தொ. சொ. 57 நச். உரை)

‘சிறப்புடைப் பொருளைத் தான் இனிது கிளத்தல்’ -

{Entry: D04__536}

சிறப்பான பொருள்களை வெளிப்படையாக எடுத்தோதிச் சிறவாத பொருள்களை அவற்றின் மூலம் பெறவைக்கும் உத்தி வகை.

‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னான், ஐம்பால் உணர்த்துதற் சிறப்புடைய படர்க்கைவினை பற்றி ஓதினாரேனும், பாலுணர்த்தும் சிறப்பின அல்லவாகிய தன்மை முன்னிலைப் பாலறிகிளவியும் மயங்குதல் கூடாது என்பது போந்த பொருளாகக் கொள்ளப்படும். (தொ. சொ. 11 சேனா. உரை.)

சிறப்புப் பெயர், இயற்பெயர் : தொடரும் முறை -

{Entry: D04__537}

திணை நிலம் சாதி குடி உடைமை குணம் தொழில் கல்வி - என்பன பற்றி வரும் பெயர் சிறப்புப்பெயராம். சிறப்புப் பெயருடன் இயற்பெயரை ஒருபொருள் ஏற்குமாயின், அவ் வியற்பெயர் பின்வருதல் மரபாம்; அது முன்வரின் வழுவமைதியாம்.

எ-டு : குன்றவன் கொற்றன், அருவாளன் அழகன், பார்ப்பான் பாராயணன், ஊர்கிழான் ஓணன், பொன்னன் பொறையன், கரியன் கம்பன், நாடகி நம்பி, ஆசிரியன் அமிழ்தன் - என முறையே காண்க.

கொற்றன் குன்றவன், அழகன் அருவாளன் - என இயற்பெயர் முன் வந்தன.

இயற்பெயர் முன் வருங்கால், வெண்கொற்றப் படைத் தலைவன் - வெள்ளேறக் காவிதி - என இறுதி விகாரமாய் வருதலும் கொள்க. (கொற்றன், வெள்ளேறன் - என்னும் இறுதி னகரம் திரிந்தவாறு.) (நன். 393 சங்.)

சிறப்புப் பெயர்கள் கூடிப் பொதுவினை கோடல் -

{Entry: D04__538}

தனித்தனி வினைகளைக்கொண்டு முடியும் பெயர்களை ஒருங்கு எண்ணுமிடத்துச் சிறப்புவினையான் முடிக்காமல் பொது வினைச்சொல்லையே முடிக்கும் சொல்லாகக் கூறுக.

எ-டு : சோறும் கறியும் நன்றென்று உண்டார்; யாழும் குழலும் பறையும் இயம்பினார்.

உண்ணுதல், இயம்புதல் - என்பன பொதுவினை.

வேறுபட்ட வினைகளையுடைய பலபொருட் குப் பொதுவாகிய சொல்லை யாதானும் ஒரு பொருளின் வினையான் கூறாமல் அப்பொருள்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாகிய வினை யானேயே கூறுதல் வேண்டும்.

எ-டு : அடிசில் உண்டார், கைதொட்டார்; இயம் இயம்பினார், படுத்தார்.

அடிசில் என்பது, உண்பன - தின்பன - பருகுவன - நக்குவன - என்பவற்றிற் கெல்லாம் பொதுப்பெயர். இயம் என்பது, கொட்டுவன - முழக்குவன - ஊதுவன - எழுப்புவன - என்பவற்றிற்கெல்லாம் பொதுப்பெயர். இவற்றைப் பருகு, நக்கு, ஊது - கொட்டு முதலிய சிறப்புவினையான் கூறாது, உண் - இயம்பு - முதலிய பொதுவினைகளானேயே முடிக்க வேண்டும். (தொ. சொ. 47, 46 நச். உரை)

சிறப்பும்மை -

{Entry: D04__539}

சிறப்பு, உயர்வுசிறப்பும், இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். ‘குறவரும் மருளும் குன்றத்து ப் படினே’ (மலைபடு. 275), ‘இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது என்பன குன்றின் உயர்வையும் புலால் தின்னாத அவ்வூரின் உயர்வையும் சிறப்பித்தலால் உயர்வு சிறப்பும்மை. ‘புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை’ என்பது உடம்பினது இழிவைச் சிறப்பித்த லால் இழிவு சிறப்பும்மை; ‘பார்ப்பானும் கள்ளுண்டான்’ என்பதும் அது. இது கள்ளுண்டலாகிய இழிவு பார்ப்பான் உண்ணப்படுதலால் இழிவு சிறப்பாயிற்று. இவ்வூர் என்பதனை நீக்கிப் ‘பூசையும் புலால் தின்னாது’ எனின், புலால் தின்னும் இழிபிலே பூசை தின்னாது சிறத்தலின் இழிவுசிறப்பும்மை எனினும் அமையும். (இழிவுள் சிறப்பு என்க.) (நன். 357 இராமா.)

சிறிது திரிவதும், முழுதும் திரிவதும் -

{Entry: D04__540}

ஆறாவது சிறிது திரிவதும் முழுதும் திரிவதும் என இருவகைப்படும். அவற்றுள் சிறிது திரிவதுதான், சாத்தனது செயற்கை - சாத்தனது கற்றறிவு - என்பன போல வரும் செயற்கைக்கிழமையும், அரசனது முதுமை - அரசனது முதிர்வு - என்பன போல வரும் முதுமைக்கிழமையும், சாத்தனது தொழில் - சாத்தனது செலவு - என்பன போல வரும் வினைக் கிழமை யும் என மூவகைப்படும். முதுமை காரணம்பற்றாது காலம் பற்றி ஒருதலையாக அப்பொருட்கண் தோன்றும் பருவம் ஆதலின் செயற்கையுள் அடங்காது என்க. சாத்தனது ஒப்பு - தொகையது விரி - பொருளது கேடு - சொல்லது பொருள் - சிறிது திரிந்தன. முழுவதூஉம் திரிவது எள்ளதுசாந்து - கோட்டது நூறு போல்வன. (இ. வி. 203 உரை)

சிறுவெள்வாய், கருவாடு என்பன வழுவன்மை -

{Entry: D04__541}

கரிய தலைமயிர்க்குச் ‘சிறுவெள்வாய்’ என்பது இடுகுறிப் பெயர். மீன் உணங்கலுக்குக் ‘கருவாடு’ என்பது இடுகுறிப் பெயர். (தொ. சொ. 17 கல். சேனா. உரை)

இவற்றிலுள்ள தனிச்சொற்களைப் பிரித்து அவற்றிற்குப் பொருள்காண முற்படுதல் பொருத்தமன்று. இடுகுறிப் பெயர்களைப் பிரித்துப் பொருள்காண்டல் கூடாது. அவை இடுகுறியாய்த் தம் பொருளுணர்த்தற்கண் வழு இன்றாம்.

சினைக்கண் ஐயும் கண்ணும் வருதல் -

{Entry: D04__542}

இடப்பொருட்கண் வரும் ஏழாவது, மற்றொரு வேற்றுமை யொடு தொடர்ந்து கூறும்வழிச் செயப்படுபொருட்கண் வருதலும் கண்டு, சினைக்கண் ஐயும் கண்ணும் வருதல் கூறப் பட்டது.

எ-டு : கண்ணைக் குத்தினான், கண்ணின்கண் குத்தினான்

(தொ. சொ. 87 கல். உரை)

சினைக்கும் முதற்கும் உருபு நியமித்தல் -

{Entry: D04__543}

முதற்பொருளின்கண் ஐயுருபு வரின் சினைப்பொருளின்கண் கண்ணுருபு வரும். முதற்கண் அதுவுருபு வரின் சினைக்கண் ஐயுருபு வரும். சிறுபான்மை இரண்டன்கண்ணும் ஐயுருபு வரும்.

எ-டு : யானையைக் கோட்டின்கண் குறைத்தான் யானையது கோட்டைக் குறைத்தான் யானையைக் கோட்டைக் குறைத்தான்

(தொ. சொ. 88, 87 சேனா. உரை)

‘சினைநிலைக்கிளவிக்கு ஐயும் கண்ணும் வினைநிலை’ ஒத்தல் -

{Entry: D04__544}

சினைச்சொல் ஐகாரவேற்றுமை ஏற்றும் கண்வேற்றுமை ஏற்றும் வரும். முதற்பெயர் ஆறாவது கொண்டவழிச் சினைப் பெயர் ஐவேற்றுமை கொள்ளும்; முதல் இரண்டாவது கொண்டவழிச் சினை கண்வேற்றுமை கொள்ளும். முதல் சினை இரண்டும் சிறுபான்மை ஐவேற்றுமை கோடலுமாம்.

எ-டு : யானையது கோட்டைக் குறைத்தான் யானையைக் கோட்டின்கண் குறைத்தான் யானையைக் கோட்டைக் குறைத்தான்

(தொ. சொ. 86,88,89 நச். உரை)

சினைப்பெயர் நான்காவன -

{Entry: D04__545}

சினைப்பெயராவது உறுப்பின் பெயர் அது பெண்மை ஆண்மை ஒருமை பன்மை - என நால்வகைப் படும்.

எ-டு : முலை - பெண்மை குறித்தது; மோவாய் - ஆண்மை குறித்தது; தலை - ஒருமை குறித்தது; கை - பன்மை குறித்தது. (தொ. சொ. 173 தெய். உரை)

சினைமுதற்பெயர் நான்காவன -

{Entry: D04__546}

சினைமுதற்பெயராவது சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர். இது பெண்மை ஆண்மை ஒருமை பன்மை - என நால்வகைப்படும்.

எ-டு : முடத்தி - பெண்மை குறித்தது; முடவன் - ஆண்மை குறித்தது; செவியிலி - ஒருமை குறித்தது; தூங்கல் - பன்மை குறித்தது. (தொ. சொ. 174 தெய். உரை)

(முடக்கொற்றி, முடக்கொற்றன், நெடுங்கழுத்தல் என்பனவற்றை எடுத்துக்காட்டுவர் சேனா.)

சினைமேல் நிற்கும் சொற்கு முடிக்கும் சொல்லொடு கூடும்வழிப் பயன்படும் உருபுகள் -

{Entry: D04__547}

சினைச்சொற்கு ஐயுருபும் கண்ணுருபும் வினைநிலைக்கண் ஒக்கும்.

எ-டு : கோட்டைக் குறைத்தான், கோட்டின்கண் குறைத் தான். (தொ. சொ. 85 சேனா. உரை)

சினையிற் கூறும் முதல்அறி கிளவி -

{Entry: D04__548}

சினைச்சொல் வாய்பாட்டான் கூறப்படும் முதற்பொருளை அறிவிக்கும் சொல் என்னும் ஆகுபெயர்வகையாம்.

எ-டு : இலை நட்டு வாழும். ஈண்டுச் சினையாகிய இலை முதலாகிய வெற்றிலைக்கொடியை ஆகுபெயரான் உணர்த்திற்று. (தொ. சொ. 115 நச். உரை)

சினைவினையின் முடிபு -

{Entry: D04__549}

சினைச்சொல்லைச் சார்ந்த வினையெச்சம் சினையின் வினையையேயன்றி அச்சினைக்குரிய முதல்வினையையும் கொண்டு முடியும். சினையொடு முதலுக்கு ஒற்றுமை இருத்தலின், சினைவினை முதல்வினையைக் கொண்டு முடிதலும் ஏற்கப்படுவதே. சினைபன்மையாய் அஃறிணை யாய், முதல் ஒருமையாய் உயர்திணையாய் இருப்பினும், சினையொடு முதலுக்குற்ற தொடர்பு பற்றி அங்குத் திணைவழுவும் பால்வழுவும் கருதப்படா.

எ-டு : சாத்தன் கை இற்று விழுந்தது - சினைவினை ‘இற்று’ என்னும் வினையெச்சம் சினைவினையாகிய ‘விழுந்தது’ என்னும் முற்றினைக் கொண்டு முடிந்தது. இது வழாநிலை.

சாத்தன் கையிற்று விழுந்தான் - சினைவினை, ‘இற்று’ என்னும் வினையெச்சம் முதலின் வினைமுற்றாகிய ‘விழுந் தான்’ என்பதனைக் கொண்டு முடிந்தது.

கைகளாகிய அஃறிணைப்பன்மையின் வினையைச் சுட்டும் இற்று என்னும் வினையெச்சம் ‘விழுந்தான்’ என உயர்திணை ஒருமையாகிய முதலின் வினைமுற்றினைக் கொண்டு முடிந்தது.

‘இற்று’ கைகளின் வினை; ‘விழுந்தான்’ சாத்தன்வினை. இற்று எனும் செய்து என் எச்சம் ‘விழுந்தான்’ என முதல் வினை கொண்டு முடிந்தவழிச் செய்தென்எச்சம் பிற வினையைக் கொண்டு முடிந்ததாகக் கருதப்படாது; சினை யொடு முதற்கு இடையேயுள்ள ஒற்றுமைபற்றித் தன் வினை முதல் வினையையே கொண்டு முடிந்ததாகக் கருதப்படும். (தொ. சொ. 231 சேனா உரை)

சீர்த்தி என்னும் உரிச்சொல் -

{Entry: D04__550}

சீர்த்தி என்னும் உரிச்சொல் மிகுபுகழாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘வய க்கம்சால் சீர்த்தி’ (தொ. சொ. 312 சேனா. உரை)

சீர்நிலை திரியாது தடுமாறுதல் -

{Entry: D04__551}

அடிமறிமாற்றுப் பொருள்கோளின்கண், ஒவ்வோரடியினும் நான்கு சீர்கள் பாடலில் பயிலும். அச்சீர்களை முன்பின் மாற்றிப் பொருள் கொள்ளாமல், முழுமையாக அவ்வடி களையே முதல் இடை கடை என்னும் நிலைகளை மாற்றிப் பொருள் கொள்ளுதல்.

எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாக் கண்பனி வரலா னாவே

வேறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே’ (தொ. சொ. 407 நச். உரை)

சுட்டு இயற்பெயர்முன் வருதல் -

{Entry: D04__552}

செய்யுட்கண் சுட்டுப்பெயர் இயற்பெயர்முன் வரினும், மொழி மாற்றிப் பொருள்கொள்ளும் நயத்தால் பின் கொணர்ந்து பொருள் செய்யப்படும்.

எ-டு : ‘அவன்அணங்கு நோய் செய்தான் ஆயிழாய் வேலன்

விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி.......’

இவ்வெண்பாவில் சுட்டுப்பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வந்தன. ஆயின், மொழிமாற்றிச் ‘சேந்தன் அணங்கு நோய் செய்தான்’ எனவும், ‘வேலன் அவன்பேர் வாழ்த்தி’ எனவும், இயற்பெயர் முன்னும் சுட்டுப்பெயர் பின்னுமாகப் பொருள் கொள்ளப்படும். (கொள்ளாக்கால், அவன் வேறாய்ச் சேந்தனும் வேறாய் முடியும்.) (தொ. சொ. 39 கல். உரை)

சுட்டுப்பெயர் இயற்கை -

{Entry: D04__553}

சுட்டுப்பெயரினது இயல்பு. அஃதாவது சுட்டுப்பெயர் இயற்பெயரின் பின்னரேயே உலகவழக்கினுள் கிளக்கப்படுத லும், செய்யுளுள் இயற்பெயரின் முன்னர்க் கிளக்கப்படுதலு மாகிய பெற்றி.

எ-டு : சாத்தன் அவன் வந்தான்; சாத்தன் வந்தான், அவன் போயினான் - வழக்கினுள் சுட்டுப்பெயர் இயற் பெயரின் பின்னர் வந்தது.

‘அவன்அணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்

விறல்மிகுதார்ச் சேர்ந்தன்பேர் வாழ்த்தி............’

எனச் செய்யுளில் சேந்தன் என்ற இயற்பெயர்க்கு முன்னர் அவன் என்ற சுட்டுப்பெயர் வந்தது. (தொ. சொ. 39, 40 நச். உரை)

சுட்டுப்பெயர் பெயர்வினைகளொடு தொடர்தல் -

{Entry: D04__554}

நம்பி வந்தான்; அவற்குச் சோறிடுக

எருது வந்தது; அதற்குப் புல்லிடுக

சாத்தன் தெய்வம்; அவற்குப் பலியிடுக

சாத்தன் வந்தது; அதற்குப் புல்லிடுக -

என வினை நிகழுமிடத்துச் சுட்டுப்பெயர் இயற்பெயர்க்குப் பின் வந்தது.

நம்பி அவன், அவன் நம்பி - எனப் பெயர்க்கு முன்னும் பின்னும் சுட்டுப்பெயர் வந்தது. ‘அவன்அணங்கு நோய்செய்தான் ஆயிழாய் சேந்தன்’ எனச் செய்யுட்கண் சுட்டுப்பெயர் முன் வந்தது. சுட்டுப்பெயர் இயற்பெயரின் பின்வருதல் வழுவற்க எனக் காத்தலும், செய்யுட்கண் முன்வருதல் வழுவமைதியும் ஆம் என்க. (நன். 394 சங்.)

சுட்டுப் பொருளொடு புணராமை -

{Entry: D04__555}

சுட்டுப்பெயர் தான் குறிப்பிடும் அஃறிணைப்பொருளை உணர்த்தாது உயர்திணைப்பொருளை உணர்த்தி நிற்றல்.

எ-டு : இஃது ஒத்தன் (கலி. 84 : 18) : இஃது என்னும் அஃறிணைச் சுட்டுப் பெயர் அஃறிணைப்பொருளை உணர்த்தாது உயர்திணைப் பொருளைச் சுட்டி உணர்த்தியவாறு. இவன் ஒருத்தன் என்பது பொருள்.

‘இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம்’ (அகநா. 26) என்பதும் அது.

(தொ. சொ. 37 நச். உரை)

‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும்’ -

{Entry: D04__556}

சுட்டினை முதலாக வுடைய அன்ஆன் ஈற்று ஆண்பாற் பெயர்கள். அவை அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்பன. மூன்று சூத்திரங்களான் ஓதப்படும் உயர்திணைப் பெயர்களுள் இவை சில ஆண்பாற்பெயர்கள். (தொ. சொ. 166 கல். உரை)

உயர்திணைப்பெயர்களுள் இவையிரண்டு திறமும் குறிப் பிடப்பட்டுள. சுட்டிடைச்சொல்லை முதலாகவுடைய அன் ஈற்றுச் சொற்கள்: அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அன்னன், அனையன் என்பன. சுட்டிடைச்சொல்லை முத லாகவுடைய ஆன் ஈற்றுச் சொற்கள்: அம்மாட்டான், இம்மாட் டான், உம்மாட்டான், அன்னான், அனையான் - என்பன. (தொ. சொ. 165 நச். உரை)

அவை அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அம்மாட் டான் இம்மாட்டான், உம்மாட்டான் - என்பன.

(தொ. சொ. 160 இள. 163 சேனா. உரை)

கட்டு முதலாகிய அன், ஆன் அத்தன்மையன், அத் தன்மை யான், அன்னன், அன்னான், அனையன், அனையான் - என்பன. ஏனைய சுட்டொடும் ஒட்டிக் கொள்க.

(தொ. சொ. 159 தெய். உரை)

இவை உவமை குறியாது முன்னம் சில குணத்தை அடுத்த தன்மையான் - எனப் பண்பு குறித்து நிற்கும். (தெய். உரை)

சுட்டிடைச்சொற்களை முதலாகக் கொண்டு பாலுணர்த்தும் ஈற்றொடு தொடர்ந்து அவன் இவன் என்னும் சுட்டுப் பெயர்களைப் போலப் பொருளுணர்த்தி நிற்கும் அன்ஈற்று ஆன் ஈற்றுப் பெயர்கள்.

வருமாறு : அன்னன் இன்னன் எனவும், அன்னான் இன்னான் எனவும் வரும். உகரச்சுட்டிடைச்சொல் முதலாக வரும் உன்னன் உன்னான் - என்னும் பெயர்கள் சிங்கள ஈழத்துப் பயின்று வருகின்றன. தமிழகத்து அவற்றின் வழக்கு இல. அன்னன் அன்னான் - என்பவை ஒப்பொடு வரும் கிளவி ஆகா. ஒப்பொடு வரின் அன்னவன் இன்னவன் - என்றே வருதல் வேண்டும். ‘அன்ன’ என்பதே உவமக்கிளவியாதலின், அன்னவன் அனையவன் - என்பவை வழக்கினுள் அன்னன் அனையன் என விகாரமாய்க் குறைந்தும் வருமாதலின், அன்னன் என்னும் சுட்டுப்பெயர் வேறு, அவ்வுவமப்பெயர் வேறு என்றுணரப்படும். (தொ. சொ. 164 ச. பால.)

‘சுட்டு முதலாகிய காரணக்கிளவி’ -

{Entry: D04__557}

சுட்டுப்பெயரினை முதலாகவுடைய காரணக்கிளவி ‘அதனால்’ என்பது. இது பொருளினது குணத்துவழி வருவது. இதனையும் இயற்பெயர்க்குப் பின்னரே வைத்துச் சொல்லுக.

எ-டு : சாத்தன் கையெழுதுமாறு வல்லன். அதனால் தன் ஆசிரியன் உவக்கும், தந்தை உவக்கும்.

கையெழுதுமாறு வன்மை சாத்தனாகிய இயற்பெய ரினது குணம். அதன் பின்னரே ‘அதனால்’ வந்தவாறு. (தொ. சொ. 40 இள. உரை)

சுட்டிடைச்சொல்லை முதலாகவுடைய காரணப்பொருண் மையை உணர்த்தும் ‘அதனால்’ என்னும் இடைச்சொல்; இஃது உருபும் சாரியையும் ஏற்ற அது என்னும் சுட்டுப்பெயர் போல்வது; இதனைப் பிரித்துக் காண்டல் கூடாது.

‘அதனால்’ என்னும் இணைப்புஇடைச்சொல் முதலில் சொல்லப்பட்ட சொற்றொடரை அடுத்து, அடுத்த தொடரை இணைக்க இடையே வரும்.

எ-டு : சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும். சாத்தி சாந்து அரைக்குமாறு வல்லள்; அதனால் கொண்டவன் உவக்கும். (தொ. சொ. 40 நச். உரை)

‘அதனால்’ என்பது பொருளது குணத்தைச் சுட்டும்வழி வந்த சுட்டு முதலாகிய காரணப்பெயர். (தொ. சொ. இள. உரை)

‘அதனால்’ என்பது பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், காரணக்கிளவி கருவியாதலானும் வேறு ஓதப்பட்டது.

எ-டு : மழைபெய்தது; அதனால் யாறு பெருகும். (தொ. சொ. 38 தெய். உரை)

சுட்டு முதலாகிய காரணக்கிளவியானது ‘அதனால்’ என்பது; அது பொருளது குணத்தின்வழி (அதனை அடுத்து) வருவது.

எ-டு : சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும். (தொ. சொ. 40. கல். உரை)

(ஈண்டுக் கையெழுதுமாறு வன்மை பொருளது குணம். அதன்வழி ‘அதனால்’ வந்தது.)

சுட்டு முதலாகிய காரணக்கிளவி உருபன்று; உருபேற்ற சுட்டுப் பெயரொடு ஒருதன்மைத்தாகிய இடைச்சொல்; என்னை? அது பிளவுபடாது ஒன்றுபட்டு இசைத்தலின்(இ. வி. 316 உரை)

உருபேற்ற சுட்டுப்பெயர் அது + அன் + ஆல் - எனப் பிரிக்கப் படும். இவ்விடைச்சொல் பிரிக்கப்படாது ஒருசொல்லாகவே கொள்ளப்படும்.

அதனால் செயற்படற்கு ஒத்த கிளவி’ (110 சேனா.) - உருபேற்ற சுட்டுப் பெயர்.

‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

.................

அதனால், யானுயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே’ (புறநா. 186)

அதனால் : இடைச்சொல்

‘சுட்டு முதலாகிய காரணக்கிளவி’ என்றது, அதனான் - இதனான் - எனவரும் இடைச்சொற்களை. அதனால் என்னும் சொல்லை உரையாளர் எல்லாம் குறித்தனர். காரணப் பொருட்டாக வரும் வேற்றுமையை உணர்த்தும்வழி ‘இன் ஆன் ஏது’ (74) என னகர ஈற்றுச் சொல்லையே ஆசிரியர் கூறினமையானும், லகர ஈறு ‘வழாஅல் ஓம்பல்’ (13) என எதிர்மறை எச்சத்தின்கண்ணும் வியங்கோளின்கண்ணும், உண்பல் காண்பல் - எனப் பாலுணர வருதற்கண்ணும், தரல் வரல் - எனத் தொழிற்பெயர்க்கண்ணும் வருதலன்றிக் காரணப்பொருட்டாய சொல்லின்கண் வாராமையானும், ‘அதனால்’ எனக் கொள்ளுதல் பொருந்தாது. அதனான் இதனான் - என னகரஈறு கோடலே நேரிது என்க. ‘இதனான்’ என்பது பயின்று வாராது.

நால்வகைப் படையும் ஆற்றலுடையன, ஒற்றரும் நிலையறிந்து கூறினர், குறுநிலமன்னரும் துணைநின்றனர், அதனான் வேந்தன் எளிதின் வென்றான் - என ஒன்றும் பலவுமாகிய தொடர்மொழிக் கருத்துக்களைச் சுட்டி வருதலின், ‘அதனான்’ என்பது மூன்றனுருபு ஏற்ற சுட்டுப்பெயரன்று என்பது விளங்கச் ‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ என்றார். ‘அதனான்’ என்பது உருபேற்ற சுட்டுப்பெயராயின், அஃது ஒருமையையே சுட்டுதலன்றி இங்ஙனம் பலவற்றைச் சுட்டுதற்கு ஏலாது என்க. (தொ. சொ. 40 ச.பால.)

‘சுட்டு முதலாகிய பெண்டென் கிளவி’ -

{Entry: D04__558}

சுட்டினை முதலாகவுடைய பெண்டாட்டி என்னும் பொருண் மையினையுடைய பெயர்ச்சொற்கள். அவை அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பன. (தொ. சொ. 166 கல். உரை)

சுட்டிடைச்சொல்லை முதலாக வுடையவாகிப் பெண்மை உணர வரும் சொற்கள். அவை அத்தன்மையள் அத்தன்மை யாள் அன்னாள் அனையாள் - என்பன. இவை சில உயர்திணைப் பெயர்கள். (தொ. சொ. 159 தெய். உரை)

அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு - தொ.சொ.165 நச். உரை.

‘சுட்டு வினாப் பிற மற்றோடு உற்ற னவ்வீறு’ -

{Entry: D04__559}

அவன் இவன் உவன் - எவன் யாவன் ஏவன் - பிறன் - மற்றை யான் - என்பன முறையே சுட்டு முதலிய நான்கானும் வரும் ஆண்பாற் பெயர். ‘இவை அடை சுட்டு வினாப் பிற மற்றோடு உற்ற னவ்வீறு’ என்பவற்றிற்கு அப்பொருளன்...... மற்றப் பொருளன் என உதாரணம் காட்டுவாருமுளர். சுட்டு முதலிய நான்கனோடு னகரஈறு உறுதலின்மையான் அவற் றிற்கு அவை காட்டு ஆகா என்க. (நன். 276 சங்.)

சுண்ணமும் மொழிமாற்றும் -

{Entry: D04__560}

சுண்ணம் என்பது இரண்டடியான் எட்டுச்சீரான் பொருந்து மாறு அறிந்து துணித்து இயற்ற வரும்; நாற்சீரடி இரண்டாய் அமைந்த ஈரடி எண்சீருள் சொற்களைப் பொருள் தொடர்-புக்கு ஏற்ப மாற்றி இது பொருள் கொள்வது. மொழிமாற் றுக்கு அன்னதொரு வரையறை இன்று; நின்ற சொல்லை மொழி -மாற்றி முன்னும் பின்னும் கொள்ளுமிடம் அறிந்து கொள்ளக் கிடப்பது அதன் இயற்கை.

எ-டு : ‘சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய

யானைக்கு நீத்து முய ற்கு நிலைஎன்ப’

இது சுண்ணம். சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து - என மொழிகளைத் துணித்துப் பொருள்செய்க.

‘குன்றத்து மேல குவளை குளத்துள

செங்கொடு வேரி மலர்’

இது மொழிமாற்று. இதனைக் ‘குவளை குளத்துள’ எனவும், ‘செங்கொடுவேரிமலர் குன்றத்து மேல’ எனவும் மொழி மாற்றுக. (தொ. சொ. 401, 403 இள. உரை)

சுதந்திர கருத்தா -

{Entry: D04__561}

தன்வசமாகிய (பிறரைச் சாராத) எழுவாய்.

எ-டு : தேவதத்தன் சோற்றை அட்டான் - இதில் சோற்றை அடும் தொழில் தேவதத்தனது செய்கைக்குள் அமைவது ஆதலின், இவ்வாறு பெயர் பெற்றது. (பி. வி. 11)

(மற்றும் சிலரால் இயற்றப்படும் தன்மையின்றித் தானே கருத்தாவாம் தன்மை எய்தி நிற்றலின் இதனைத் தலைமைக்கருத்தா என்று வீரசோழியம் கூறும்.)

சுப்புத் தாது -

{Entry: D04__562}

‘சுப்’ என்ற தாது, பெயரடியாகப் பிறந்த வினைப்பகுதிகள்.

எ-டு : அமர்த்தன : அமர் என்பது பெயர்அடி. நல்கூர்ந் தான்: நல்குரவு என்பது பெயர்அடி. (நாவலொடு) பெயரிய: பெயர் என்பது பெயர்அடி. அழகிய, சொக்கர்: அழகு, சொக்கு என்பன பெயர்அடி. பை த்த பாம்பணை யான்: பை என்பது பெயர்அடி.அழுக் கறுப்பான்: அழுக்காறு என்பது பெயர் அடி. ‘முதலா ஏன தம் பெயர் முதலும்’ (எ.66): முதல் என்பது பெயர்அடி. ‘அவ்வித்து அழுக்கா றுடையானை’ (கு. 167): அவ்வியம் என்பது பெயர்அடி. ‘கடுத்தது காட்டும் முகம்’ கடி என்பது பெயர்அடி. ‘ஞகாரை ஒற்றிய’: (எ.296) ஒற்று என்பது பெயர்அடி. ஒத்தான் : ஒப்பு என்பது பெயர்அடி. (பி. வி. 35)

கடம் கரோதி, கடயதி (குடத்தை வனைகிறான்) துலயதி (நிறுக்கிறான்) - என வடமொழியிலும் வினைப்பகுதிகள் பெயரடியாகப் பிறந்தன.

சுபந்தம் -

{Entry: D04__563}

‘சுப்’ என்பது வடமொழியில் ஏழு வேற்றுமையுருபுகளுக்கும் பிரத்தியாகாரத்தால் வந்த பெயர். வேற்றுமையுருபுகளாகிய அவற்றை ஏற்ற (- ஈற்றில் கொண்ட) சொற்கள். சுப்அந்தமாம், சுப்சுந்தமாம். (பி. வி. 7)

சுயம்பு -

{Entry: D04__564}

தானே தோன்றியது. சொல் ஒருவரால் செய்யப்பட்டதோ சொல்லப்பட்டதோ அன்று. வேதத்திலும் வழங்குவது சொல்லே. அதனால்தான் வேதத்தைச் ‘செய்யா மொழி’ என்பர். (பி. வி. 18)

சுய மேவ பதம் -

{Entry: D04__565}

ஸ்வய மேவ பதம்; தாமே தானே - எனப் பொருள்படும் தேற்றத்தொடு வந்த சொற்கள்.

எ-டு : ‘பிறர்க்கின்னா........ தாமே வரு ம்’ கு. 319 ‘பெரியவர் கேண்மை..... தானே நந்தும்’ நாலடி 125 ‘சிறியார் தொடர்பு தானே தேயும்’ நாலடி 125

செயப்படுபொருளாகிய இன்னா - கேண்மை - தொடர்பு - என்பவை தாமே - தானே - என்ற தேற்றத்துடன் வந்தன. நந்தும் - தேயும் என்ற செயப்படுபொருள் குன்றிய வினைக ளொடு முடிவதனையும் ‘கருமகருத்தா’ என்பர் சிலர். அது பொருந்தாது; என்னையெனின், திண்ணை மெழுகிற்று - என்பது போன்ற தொடர்களில் மெழுகப்படுதற்குரிய திண்ணை முதலியன செயப்படுபொருள் குன்றா வினை கொண்டு முடிந்துள்ளன. ஆதலின் கருமகருத்தா கொண்டு முடியும் வினை செயப்படுபொருள் குன்றா வினையாகவே இருத்தல் வேண்டும். (பி. வி. 11)

சுரூப சம்பந்தம் -

{Entry: D04__566}

ஸ்வரூப சம்பந்தம். யாதானும் ஒரு காரணம் பற்றிய தொடர்பு.

எ-டு : சாத்தனது செய். (இதனை இ. கொ. ‘நிலைமை இல் உடைமை’ என்னும்.) (பி. வி. 17)

சுரூயமாணம் -

{Entry: D04__567}

சுரூயமாணம் - காலம் காட்டுவதாகிய தெரிநிலைவினை. (பி. வி. 16)

சுவார்த்தத்தின் மேல் வந்த காரிதம் -

{Entry: D04__568}

பகுதிப்பொருளையே காட்டும் பிறவினை (விகுதி). ‘தேற்றா ஒழு க்கம்’ (நாலடி. 75) ‘நட்பாடல் தேற்றா தவர்’ (கு. 188) என்பன தேறா (ஒழுக்கம்) தேறாதவர் - எனப் பொருள்படும். இவை தன்வினைப் பொருளில் வந்த வினைகளாம். (பி. வி. 35)

சுவார்த்தப் பிரத்தியயம் -

{Entry: D04__569}

பகுதிப்பொருள்விகுதி. அரசர்கள் என்பதில் கள் : பகுதிப் பொருள்விகுதி. ‘வல்லது அரசு’ (கு. 385) என்பது வல்லன் அரசன் எனவும், ‘வல்லது அமைச்சு’ (கு. 633) என்பது வல்லன் அமைச்சன் எனவும், உகரஈற்றுப் பண்புப்பெயர் பண்புடைப் பொருளை உணர்த்தியதும் பகுதிப்பொருள்விகுதியே ஆகும். (பி. வி. 34)

சுழற்சிக் குறிப்பு உணர்த்தும் உரிச்சொல் -

{Entry: D04__570}

அலமரல் தெருமரல் என்னும் இரண்டு உரிச்சொற்களும் சுழற்சிக் குறிப்பினை உணர்த்துவன.

எ-டு : ‘அலமரல் ஆயமொடு’ (ஐங். 64), ‘தெருமரல் உள்ளமோடு அன்னை துஞ்சாள்’ (தொ. சொ. 310 சேனா. உரை)

செந்தமிழ் சேர் பன்னிரு நிலம் -

{Entry: D04__571}

அவையாவன தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, (மலையமான் நாடு), அருவாநாடு, அருவாவடதலை நாடு, பொங்கர்நாடு, ஒளி- நாடு - என்பன. பொங்கர்நாடு ஒளிநாடு - இவற்றை விடுத்து வேணாடு புனல்நாடு - கொள்வதுமுண்டு. (தொ. சொ. 400 சேனா. நச். உரை)

செந்தமிழ்நாடு -

{Entry: D04__572}

வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் செந்தமிழ்நாடு என்ப. வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரிநிலம் ஆதல் வேண்டுதலான் செந்தமிழ் நிலம் வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்கும் ஆகிய நிலம் என்ப. (தொ. சொ. 394 தெய். உரை)

செந்தமிழ்நிலமாவது வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் ஆம். (இ. வி. 172 உரை)

செந்தமிழ் நிலமாவது,

‘சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்

சவுந்தர பாண்டியன் எனும்தமிழ் நாடனும்

சங்கப் புலவரும் தழைத்தினிது இருந்த

மங்கலப் பாண்டி வளநாடு என்ப’

என்னும் இதனான் அறிக. இவ்வாறன்றிச் செந்தமிழ்நிலம் வையை யாற்றின் வடக்கு எனக் கூறுவாருமுளர். அப்படி யாயின் கொடுந்தமிழ்நிலத்துள்ளே புனல்நாடு என்பது சோணாடு ஆதலானும், ‘மருவுமுத் தமிழை முன்னாள் வளர்த்த பாண்டியனைப் போல’ எனப் பாண்டியனையே தமிழ் வளர்த்த வன் என்றும் தமிழ்நாடன் என்றும் சான்றோர் கூறுதலா னும், செந்தமிழ்முனிதன் மாணாக்கர் பன்னிருவருள்ளே பாண்டியன் ஒருவன் ஆதலானும், ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு, முந்துநூல் கண்டு’ இயற்றப் பட்ட தொல்காப்பியம் என்னும் செந்தமிழ் இலக்கணநூல் அவன் அவைக்களத்து அரங்கேற்றப்படுதலானும், அஃது உரையன்று என்க.

(நன். 271 இராமா.)

செப்பின் இலக்கணம் -

{Entry: D04__573}

வினாவிய பொருளை அறிவுறுப்பது செப்பாம். அது செவ்வன் இறை, இறை பயப்பது - என இருவகைப்படும். நேர்விடை செவ்வனிறையாகும்; போந்த பொருளாக விடை அமைவது இறைபயப்பது ஆம்.

வினா இன்றியும் செப்பு நிகழும். அது ‘கங்கையாடிப் போந்தேன்; ஒருபிடி சோறு தம்மின்’ என்றாற் போல்வது.

(தொ. சொ. 13 சேனா. உரை)

செப்பின்கண் உறழ்துணைப் பொருள்கள் -

{Entry: D04__574}

செப்பின்கண் மாறுபடக் கூறப்படும் பொருள்கள் இணை யான அப்பொருள்களேயாகும். அவை ஒரு பொருட் கண்ணும் பிற பொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும்.

எ-டு : வலமுலையின் இடமுலை பெரிது என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இவள் முலையின் அவள்முலை பெரிய என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இவை சினை.

இந்நிறத்தின் அந்நிறம் நல்லது என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இந்நடையின் அந்நடை நல்லது என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இன்று நாளையினும் வாழ்வுண்டு என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இந்நிலம் அந்நிலத்தின் விளைவது என்றானும், இரண்டும் ஒக்கும் என்றானும் வரும்.

இவளின் அவள் மிகுவனப்பினள் என்றானும், இருவரும் தம்முள் வனப்பு ஒப்பர் என்றானும் வரும்.

இவை முறையே பண்பும் தொழிலும் காலமும் இடமும் பொருளும் பற்றி வந்த முதலாம். (தொ. சொ. 16 தெய். உரை)

‘செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவி’ -

{Entry: D04__575}

செப்புப்பொருளிலும் வினாப்பொருளிலும் சினைக்கிளவிக் குச் சினைச்சொல்லும் முதற்கிளவிக்கு முதற்சொல்லுமே ஒப்புப் பொருளாகவும் உறழ்பொருளாகவும் வரும்.

எ-டு : இவள்கண்ணின் இவள்கண் பெரிய : சினை - செப்பு - உறழ்பொருள். இவள்கண்ணின் இவள்கண் பெரியவோ?: சினை - வினா - உறழ்பொருள். எம் அரசனின் நும்அரசன் முறை செய்யும் : முதல் - செப்பு - உறழ்பொருள். எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ? முதல் - வினா - உறழ்பொருள். இவள் கண்ணை அவள்கண் ஒக்கும் : சினை - செப்பு - ஒப்புப் பொருள். இவள்கண்ணை அவள்கண் ஒக்குமோ? சினை-வினா ஒப்புப்பொருள். எம்அரசனை நும் அரசன் ஒக்கும்: முதல் - செப்பு - ஒப்புப்பொருள். எம் அரசனை நும்அரசன் ஒக்குமோ? முதல் - வினா - ஒப்புப்பொருள். (தொ.சொ.16 நச். உரை)

செப்பு -

{Entry: D04__576}

வினாய பொருளை அறிவுறுப்பது. வினா இன்றியும் நிகழ்வது செப்பு. அச்செப்பு இறை எனவும் கூறப்படும். அவ்விறை செவ்வன் இறை எனவும், இறை பயப்பது எனவும் இருவகைப் படும். செப்பு, வினாஎதிர் வினாதல் - ஏவல் - மறுத்தல் - உற்றதுரைத்தல் - உறுவது கூறல் - உடம்படுதல் - சொல் தொகுத்து இறுத்தல் - சொல்லாது இறுத்தல் - என எண் வகைப்படும். முதல் ஆறனையுமே இளம்பூரணர் குறிப் பிட்டார். மறுத்தலும் உடன்படுதலும் வினாவப்பட்டார் கண்ண அல்ல; ஏவப்பட்டார் கண்ணே நிகழ்வன. ஆதலின், அவற்றைச் சேனாவரையர் உடன்பட்டிலர்.

தெய்வச்சிலையார் விடைவகைகளைத் துணிந்து கூறல் - கூறிட்டு மொழிதல் - வினாவி விடுத்தல் - வாய் வாளாதிருத் தல் - என நான்காக மணிமேகலைக் காப்பியத்தைப் பின் பற்றிக் குறிப்பிட் டுள்ளார். ‘செப்பு வகை’ காண்க.

கல்லாடனார் செப்புவகையுள் ‘பிறிதொன்று கூறல்’ என்ற அமையா வழுவினையும் அடக்கினார்.

எ-டு : சாத்தா உண்டாயோ? - என்றவழி, ‘உண்டேன்’ என்றல் செவ்வன்இறை.

அவ்வினாவிற்கு ‘உண்ணேனோ’ என்றல் வினாஎதிர் வினாதல்.

அவ்வினாவிற்கு ‘நீ உண்’ என்றல் ஏவல்.

அவ்வினாவிற்கு ‘உண்ணேன்’ என்றல் மறுத்தல்.

அவ்வினாவிற்கு ‘வயிறு குத்திற்று’ என்றல் உற்றதுரைத்தல்.

அவ்வினாவிற்கு ‘வயிறு குத்தும்’ என்றல் உறுவது கூறல்.

அவ்வினாவிற்கு ‘உண்பேன்’ என்றல் உடன்படுதல்.

‘பயறு உளவோ, வணிகீர்?’ என வினாயவழி, ‘உழுந்தல்லது இல்லை’ என்றல் சொல் தொகுத்து இறுத்தல்.

‘கங்கையாடிப் போந்தேன்; சோறு தம்மின்’ என்றல் சொல்லாது இறுத்தல்.

‘கருவூர்க்கு வழி யாது?’ என்று வினாயவழி, ‘பருநூல் பன்னிரு தொடி’ என்றல் பிறிதொன்று கூறுதல்.

(தொ. சொ. 13 நச். உரை) (தொ. சொ. கல். உரை) (நன். 336 உரை)

செப்பும் வினாவும் -

{Entry: D04__577}

செப்பாவது யாதானும் ஒரு பயன்விளைவைக் கருதிக் கருத்தை வெளிப்படுத்தலும், வினாவியவழி அதற்கு விடை கூறுதலும் ஆம். செப்பு, விடை, இறை, மாற்றம் - என்பன ஒருபொருட் கிளவிகள். ‘மனத்துக்கண் மாசில ன் ஆதல் அனைத் தறன்’ (கு. 34), ‘பசிநலிகின்றது; சோறிடுக’ என்றாற் போல்வன, வினாவை உள்ளடக்கி வெளிப்படுத்த செப்பாம். ‘வாய்மை யாவது யாதொன்றும் தீமை இலாத சொலல்’ (கு. 291) என்றாற் போல வருவன வினாவிற்கு விடையாக வரும் செப்பாம்.

வினாவாவது யாதானும் ஒன்றை அறிந்துகொள்ளும் விருப் பினைப் புலப்படுத்துவது. வினா எனினும் கடா எனினும் ஒக்கும். ‘வெண்மை எனப்படுவது யாது?’ (கு. 844) என்றாற் போல வருவன வினாவாம். (தொ. சொ. 13 ச. பால.)

‘செப்பும் வினாவும்’ எனச் செப்பு முற்கூறப்பட்டமை -

{Entry: D04__578}

செப்பு ஆசிரியன்கண்ணது ஆகலானும், வினாவினை அறி விப்பது அது ஆகலானும், வினாவின்றியும் அது நிகழும் ஆகலானும், வழுப் பலவாக வருதல் செப்பின்கண்ணது ஆகலானும் செப்பினை வினாவிற்கு முன் கூறினார். ஒன்றனை அறியாது கூறல் வினா; ஒன்றனை அறிவித்தற்குக் கூறல் செப்பு. (தொ. சொ. 13 கல். உரை)

(ஆசிரியன் விதிப்பன எல்லாம் செப்பின்பாற்படும். வினா விற்கு விடை கூறி உணர்விப்பது அது. செப்பின்கண்ணேயே திணைபால் இடம் - முதலாய வழுக்கள் நிகழ்வன. ‘கங்கை யாடிப் போந்தேன்; ஒருபிடி சோறு தம்மின்’ என்றல் முதலாக வினா இல்லாதவிடத்தும் செப்பு நிகழ்வது உலகியலில் காணப்படும்.)

செப்பு வகை -

{Entry: D04__579}

துணிந்து கூறல்: கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் - என்பன செப்பு வகையாம்.

துணிந்து கூறல்: ‘தோன்றியது கெடுமோ?’ என்றவழித் துணிந்து ‘கெடும்’ எனக் கூறல்.

கூறிட்டு மொழிதல்: ‘செத்தவன் பிறப்பானோ?’ என்றவழிப், ‘பற்றறத் துறந்தானோ, பிறனோ’ என்றல்.

வினாவி விடுத்தல் : ‘முட்டை மூத்ததோ, பனை மூத்ததோ?’ என்றவழி, ‘எம்முட்டைக்கு எப்பனை?’ என்றல்.

வாய் வாளாமை : ‘ஆகாயப்பூ நன்றோ தீதோ?’ என்றார்க்கு உரையாடாமை. (தொ. சொ. 13 தெய். உரை)

செப்புவழு -

{Entry: D04__580}

துணிந்து கூறும்வழித் ‘தோன்றியது கெடுமோ?’ என்றாற்குக் ‘கெடாது’ என்றலும், ‘ஒலி செவிக்குப் புலன்அன்று’ என்றலும், ‘என்தாய் மலடி’ என்றலும், பிறவும் செப்பு வழுவாம் நீரன. (தொ. சொ. 13 தெய். உரை)

செப்பு வழுவமைதி -

{Entry: D04__581}

செப்பு, செவ்வன்இறையும் இறைபயப்பதும் என இரு வகைப்படும்.

செவ்வனிறை ஒன்றுமாத்திரம் வழாநிலை. செப்பு வகைகள் எட்டும் (‘செப்பு’ காண்க.) செவ்வனிறையில் அடங்காமை யின், அவற்றுள் ஐந்து பொருள் ஒருவகையால் பயக்கும் ‘இறை பயப்பது’ என்பதன்கண் அடங்குதலின், செப்பு வழுவமைதி யாம்.

எ-டு : ‘சாத்தா உண்டாயோ?’ என்று வினாயவழி, ‘நீ உண்’ என்றாற் போல்வன நேரே விடை தாராவிடினும் ‘உண்ணும் விருப்பமில்லை’ என்ற கருத்தைத் தெளிவித்தலின் செப்பு வழுவமைதியாம். (தொ. சொ. 15 நச். உரை)

‘செய்கு’ அவ்வியல் திரியாமை -

{Entry: D04__582}

செய்கு என்னும் தன்மைஒருமை எதிர்காலமுற்றுச்சொல் ஏனைய முற்றுச்சொல் போலப் பெயரொடு முடியாது, வினையெச்சம் போல வினையொடு முடியினும், தான் முற்றுச் சொல்லாம் தன்மையின் திரியாது.

எ-டு : காண்கு வந்திசின் பெரும’ (புற. 17) (தொ. சொ. 206 நச். உரை)

‘செய்கு’ எச்சம் ஆகாமை -

{Entry: D04__583}

செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும் எச்சங் களைப் போலாது வினைமுதலைத் தரும் விகுதியுறுப்பொடு கூடி முற்றி நிற்றலின் முற்றெனப்பட்டன. அன்றிப் பயனிலை கொண்டு முற்றலின் முற்றெனப்பட்டனஅல்ல என்பார், பெயரே அன்றி ‘வினையொடு முடியினும் விளம்பிய முற்றே’ என்றார். வருமாறு : உண்கு வந்தேன், உண்கும் வந்தேம். (நன். 333. சங்.)

செய்கு என் கிளவி திரியாமை -

{Entry: D04__584}

செய்கு என்னும் தன்மைஒருமைவினை பிறிதொரு வினை யொடு முடியினும் தான் முற்றுவினை என்னும் இலக்கணத் தின் மாறுபடாது.

எ-டு : காண்கு வந்தேன்.

செய்கு எதிர்காலச் சொல்லாதலின், செய்து என்னும் எச்ச மாகத் திரித்தற்கு ஏலாது; செய என் எச்சமாகத் திரிப்பின் ‘தன் வினையான் முடியும்’ என்பதனொடு மாறுகொள்ளும், செயவென் எச்சம் தன்வினையும் பிறிதின்வினையும் ஆகிய இரண்டனையும் ஏற்கவல்லது ஆதலின். (தொ. சொ. 205 ச. பால.)

செய்கு என்னும் முற்றின் இயல்பு -

{Entry: D04__585}

செய்கு என்னும் வாய்பாட்டு முற்று ஏனைய முற்றுக்கள் பெயர்கொண்டு முடிவதனைப் போலாது, தான் வினையையே கொண்டு முடியும்.

‘பெயர்த்தனென் முய ங்க’ (குறுந். 84) என்ற தன்மைவினை முற்றும்,

‘தங்கினை சென்மோ’ என்ற முன்னிலை வினைமுற்றும்,

‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5) என்ற படர்க்கை வினைமுற்றும் எச்சங்களாகிப் பெயர்த்து - தங்கி - மோந்து - எனச் செய்து என் வினையெச்சம் போல அமைந்தன. அதுபோலச் செய்கு என்னும் முற்றினை முற்றெச்சம் ஆக்க வேண்டின் செய்து என்னும் இறந்தகால வினையெச்சம் ஆக்குதல் இயலாது. அதனைச் செய என்னும் வாய்பாட்டு நிகழ்கால எச்சம் போலக் கொள்ளலாம் எனின், செயவென் எச்சம் தன் வினைமுதல் வினையையும் பிற வினைமுதல் வினையையும் கொண்டுமுடியும்; செய்கு என் முற்று தன் வினைமுதல் வினையையே கொண்டுமுடியும். ஆதலின் அதனை எவ்வெச்சமாகவும் திரித்துக்கொள்ள இயலாது. பிறிது ஆறு இன்மையின் அது முற்றாகவே நின்று வேறொரு வினையைக் கொண்டு முடிந்ததாகவே கொள்ளப்படும். (தொ. சொ. 205 சேனா.)

செய்கு என்னும் வினைமுற்று தன்மைஒருமை எதிர்கால முற்றாம். அது வினா ஏற்று உண்கா என்றாற்போல ஆகும்வழி, ‘உண்கா கொற்றா’ (யான் உண்பேனோ கொற்றா) என வரும். ஓகாரவினாப் பெற்று ‘உண்கோ’ என வருதலுமுண்டு. இவ்வாறு வருமிடத்து வினைகொண்டு முடியும் நிலையின்றித் தானே யான் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக அமையும்.

நோகோ யானே’ எனப் பெயர்கோடல் சிறுபான்மை.

(தொ. சொ. 206 நச். உரை)(தொ. சொ. 207 கல். உரை)

‘காண் கு யான்’ எனப் பெயரொடும் முடிதல் இலக்கணம் என்க. (தொ. சொ. 198 தெய். உரை)

செய்கும் என்பதும் வினைகொண்டு முடியும்.

எ-டு : உண்கும் வந்தேம் (தொ. சொ. 207 கல். உரை)

செய்கு என்பது தன்மைஒருமை எதிர்காலமுற்று. இது தன் வினைமுதல் வினையையேகொண்டு முடியும். ஆதலின், இறந்தகால வினையெச்சமான செய்து என் எச்சமாகவோ, தன் வினைமுதல் வினையும் பிற வினைமுதல் வினையும் கொண்டு முடியும் செயஎன் எச்சமாகவோ, இம்முற்றினைத் திரித்து வினைகொண்டு முடியச் செய்தல் இயலாது. ஆகவே செய்கு என்னும் ஒரு முற்று மாத்திரம் எச்சமாகத் திரியாது வினைமுற்றாகவே யிருந்து வினைகொண்டு முடிவதாம். (இ. வி. 237)

செய்கு, செய்கும் - முற்றுக்கள் -

{Entry: D04__586}

செய்கு என்னும் தன்மைஒருமை வினைமுற்றும், செய்கும் என்னும் தன்மைப்பன்மை வினைமுற்றும் பெயருடனேயன்றி வினையுடனேயும் முடியும்; அங்ஙனம் முடியுமாயினும் இவை முற்றேயாம். இவை எச்சங்களைப் போலன்றி வினைமுதலைத் தரும் விகுதியுறுப்பொடு கூடி முற்றி நிற்றலின் முற்று எனப் பட்டனஅன்றிப் பயனிலைகொண்டு முற்றலின் முற்றெனப் பட்டன அல்ல என்றவாறு. ஆதலின் இவை முற்றெச்சங் களாய் நின்று வினைமுற்றுக்கொண்டு முடிந்தன ஆகா.

எ-டு : உண்கு வந்தேன், உண்கும் வந்தேம். (நன். 333 சங்.)

‘செய்கு’ வினையெச்சமுற்று ஆகாமை -

{Entry: D04__587}

‘செய்கு’ ஏனை வினைமுற்றுப் போல முன் முற்றாய்ப் பெயர் கொண்டு நில்லாது. பெயர்கொண்டு முடியவல்ல முற்றுக் களே வினையெச்சமுற்று ஆயின என்றல் பொருந்தும். (எ-டு : உண்டனன் நான்; உண்டனன் வந்தேன் - என முன்னர்த் தன்மையொருமை இறந்தகாலமுற்றாக நின்று பெயர் கொண்டு முடிந்தமையின், அதுவே ‘வந்தேன்’ என முற்றுக் கொண்டு முடிந்த வழி வினையெச்சமுற்று ஆயிற்று என்றல் பொருந்தும்.) ‘செய்கு’ பெயர்கொண்டு முடியாமையின் அது வினையெச்சமுற்றாய் வினைகொண்டு முடிந்தது என்றல் பொருந்தாது. ஆதலின் ‘செய்கு’ வினைமுற்றாயே நின்று வினைகொண்டு முடிந்தது என்றலே முறை.

(தொ. சொ. 207 கல். உரை)

செய்த என்னும் பெயரெஞ்சுகிளவி -

{Entry: D04__588}

செய்த என்பது இறந்தகாலப் பெயரெச்சம். அது நிலன் பொருள் காலம் கருவி வினைமுதல் தொழில் - என்னும் அறுவகைப் பெயர்களைக் கொண்டு முடியும்.

எ-டு : புக்க இல், உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு.

‘நிலம் பூத்த மரம்’ (கலி. 27) நிலம் பொலிவு பெறு தற்குக் காரணமான மரம் - எனக் காரணத்தின் கண்ணும், ‘ஆறு சென்ற வியர்’ - ஆறு சேறலான் வந்த வியர் - எனக் காரியத்தின்கண்ணும் வரும். எள் ஆட்டின (எண்ணெய்) என்பது காரியத்தின்கண் அடங்கும்.

‘பூத்த..... கண்ணி’ (முருகு. 199), ‘நூலாக் கலிங்கம்’ (பதிற். 12), பூத்த பூ, நூலா நூல் - எனற்பாலன ஒற்றுமைநயத்தால் கண்ணி (பூமாலை) மேலும் கலிங்கத்தின் (ஆடை) மேலும் நின்றன.

‘பொச்சாவாக் கருவி’ (கு. 537) என்பது கருவிக்கண் அடங்கும்.

அரசன் ஆ கொடுத்த பார்ப்பான் - ‘இன்னதற்கு’ என்பதன்கண் அடங்கும்.

ஆடை ஒலித்த கூலி - ‘இது பயன்’ என்பதன்கண் அடங்கும். பழம் உதிர்ந்த கோடு - தீர்தல் பொருண் மைக்கண் வரும்.

‘இன்ன தன்மை’ (சீவக. 2754), ‘அன்ன தன்மையும்’ (புற. 136), ‘என்ன கிளவியும்’ (சொ. 416) ‘கரிய மலர்நெடுங்கண்’, ‘செய்ய கோல்’ - இவை செய்த என் எச்சக்குறிப்பு. (தொ. சொ. 236 நச். உரை)

பழம் உதிர்ந்த கோடு - எல்லைப் பொருள்

‘ஆர்களிறு மிதித்த நீர்’ (குறுந். 52), ‘நூலாக் கலிங்கம்’, எள் ஆட்டின எண்ணெய், உண்ட எச்சில் - என வருவன செயப் படுபொருளின் விகற்பமாம். (தொ. சொ. 236 கல். உரை)

செய்து என்னும் எச்சத்திரிபுகள் -

{Entry: D04__589}

செய்து என்னும் வாய்பாட்டு எச்சங்கள் இடைநிலையன்றி, ஆடிக் கொண்டான் - தழீஇக் கொண்டான் - என இறுதி நிலை தன் இயல்பினின்றும் விகாரமாயும், புக்கு நின்றான் (தொட்டு நின்றான் - பெற்று நின்றான்) என முதனிலை விகாரமாயும் காலம் காட்டுவன உள. (நன். 343 சங்.)

செய்து என்னும் எச்சம் எதிர்காலத்து வருதல் -

{Entry: D04__590}

செய்து என்னும் எச்சம் இறந்தகாலம் காட்டும் என்பது, தான் கொண்டுமுடியும் வினைக்கு முன் தன்வினை நிகழ்தல் வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிப்பதாம். ஆகவே, செய்து என் எச்சம் எதிர்கால வினையைக் கொண்டுமுடியின், எதிர் காலத்து அம்முடிக்கும் சொல்லின் வினைக்கு முன் செய்து என் எச்சம் காட்டும் வினை நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதே கருத்து. அந்நிலையில் செய்து என் எச்சம் எதிர் காலத்தும் வரும்.

எ-டு : (நாளை) நீ உண்டு வருவாய், உழுது வருவாய்.

இவற்றுள் உண்ணுதல் உழுதல் என்பன, இனி எதிர்காலத்து நிகழக்கூடிய செயல்கள் எனினும், அவை வருதல் தொழி லுக்கு முன் நிகழ்வன ஆதலின், இறந்தகாலம் சிதையாமல் எதிர்காலத்து வந்தவாறு. (தொ. சொ. 239 சேனா. உரை)

செய்து என்னும் எச்சம் பெறும் ஏழிலக்கணங்கள் -

{Entry: D04__591}

1) முற்றோடு ஒரேகாலத்து நிகழும் துணைவினை ஆதல் :

எ-டு : கண்மூடிச் சிரித்தான் - கண்மூடுதலும் சிரித்தலும்
ஒரே காலத்து நிகழ்ந்தன.

உண்ணாது வந்தான் : எச்சம் எதிர்மறுத்தது. உண்டு வாரான் : முற்று எதிர்மறுத்தது. ‘மருங்கோடித் தீவினை செய்யான் எனின்’ கு. 210 ‘கற்றில கண்டு அன்னம்’ கோவை. 97

இவற்றுள் ‘ஓடி’ என்பது ‘செய்யான்’ என்பதிலுள்ள செய்தல் வினையொடும், ‘கண்டு’ என்பது ‘கற்றில’ என்பதி லுள்ள கற்றல் வினையொடும் முடிந்தன. மறைவினை விதி வினையோடு ஒக்கும் என்பது மரபு. இது நேர்ந்த நிலை மறுத்தல்.

3) பல அடுக்குதல் : ‘அடுக்குதல்’ காண்க.

4) உண்டு வந்தான் - உண்டு வருகிறான் - உண்டு வருவான் - என முக்காலமும் கொள்ளுதல்.

5) ‘நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்’ நாலடி. 64
‘கொழுநற் றொழுதெழுவாள்’ கு. 55
‘தொழுதெழுவார் வினைவளம் நீறெழ’ கோவை. 118

இவற்றுள் முறையே வெகுண்டு வேரார் - எழுந்து தொழுவாள் - எழுந்து தொழுவார் - என முன் பின்னாகப் பிறந்தது.

6) உண்டு சென்றான் : உண்டவனும் சென்றவனும் ஒருவனே. இது தன் எழுவாயையே கொண்டுமுடிதல்.

7) ‘மோயினள் உயிர்த்த காலை’ (அகநா.5) - மோந்து உயிர்த்த காலை - எனப் பொருள்பட்டு, செய்து என் எச்சம் முற்றாய்த் திரிந்தது.

செய்து என்னும் எச்சம் தன் வினைமுதல் வினையே கொள் ளுதல் விதி; ஆயினும் சிறுபான்மை வேறு வினைமுதலினது வினை கொள்ளுதலும் உண்டு.

எ-டு : கோழி கூவிப் போது புலர்ந்தது, ‘யானை ஒடித் துண் டு எஞ்சிய யா’

இவற்றுள், கூவியது - கோழி, புலர்ந்தது - போது; ஒடித் துண்டது - யானை, எஞ்சியது - யாமரம்.

இனி இவற்றைப் பிறவினையாக்கிக் கூவுவித்து - எஞ்சுவித்த - என்று கொண்டு, இவை அந்தர்ப்பாவிதணிச் என்பர் வட மொழியார். ‘குடிபொன்றிக் குற்றமும் ஆங் கே தரும்’ (கு. 171) என்னுமிடத்துப் பரிமேலழகர் பொன்றச்செய்து எனப் பிறவினையாக்கிப் பொருள்செய்தார் - என்பர். (பி. வி. 39)

செய்து என்னும் வாய்பாட்டு ஈறு ஆறு -

{Entry: D04__592}

செய்து என்ற வினையெச்சத்தின் ஈறு, செய்தல் என்னும் தொழிற்கண்ணே செய்து எனத் தகரவுகர ஈறாயும், உண்டல் என்னும் தொழிற்கண்ணே உண்டு என டகரவுகர ஈறாயும், தின்றல் என்னும் தொழிற்கண்ணே தின்று என றகரவுகர ஈறாயும், புகுதல் என்னும் தொழிற்கண்ணே புக்கு எனக் ககரவுகர ஈறாயும், ஓடல் என்னும் தொழிற்கண்ணே ஓடி என இகரஈறாயும், தூவுதல் என்னும் தொழிற்கண்ணே தூய் என யகர ஈறாயும் இவ்வாறு ஒரு தொழிற்கண்ணே ஆறுவகையாக வேறுபட வந்தவாறு. ‘அன்றி’ என்ற செய்து என் எச்சக்குறிப் பிற்கு ‘அல்லால்’ என்பதும் ஒரு வாய்பாடாம். (தொ. சொ. 230 கல். உரை)

‘செய்து’ திரிந்து வருதல் -

{Entry: D04__593}

உகரம் கடதறக்களை ஊர்ந்து நக்கு - உண்டு - வந்து - சென்று - என இயல்பாய் நிற்றலேயன்றி, எஞ்சி - உரிஞி - ஓடி - எனவும் ஆய் - போய் - எனவும் ஏனையெழுத்துக்களை ஊர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெட்டெழுத்தீற்றின் முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும் இறந்தகாலம் பற்றி வரும் எனவும் கொள்க. சினைஇ உரைஇ இரீஇ உடீஇ, பாஅய் தாஅய் ஆஅய் - என்பனவோ எனின், அவை செய்யுள்முடிபு என்க. ஆகி - போகி - ஓடி - மலர்த்தி - ஆற்றி - என்புழி முதனிலை குற்றுகர ஈறாதலின் ஏனையெழுத்தாதல் அறிக. (இ. வி. 246 உரை)

‘செய்து’ பிறவினை கோடல் -

{Entry: D04__594}

‘தலைவன் பிரிந்து வருந்தினாள்’ எனவும், ‘மாஅல் யானை யொடு மறவர் மயங்கித், தூறதர்ப் பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம்’ (கலி. 5) எனவும், ‘வானின் றுலகம் வழங்கி வருதலான்’ (கு.11) எனவும், செய்து என் எச்சம் பிறவினை கொண்டு முடிந்தனவோ எனின், அவை காரணகாரியப் பொருட்டாய் எதிர்காலம் உணர்த்தும் செயஎன் எச்சம் திரிந்து நின்றுழியே பிறவினை கொண்டன. (இ. வி. 246 உரை)

பிரிய என்னும் செயஎன் எச்சம் ‘பிரிந்து’ என்னும் செய்துஎன் எச்சமாயும், மயங்க என்னும் செயஎன் எச்சம் ‘மயங்கி’ என்னும் செய்துஎன் எச்சமாயும், நிற்க என்னும் செயஎன் எச்சம் ‘நின்று’ என்னும் செய்து என் எச்சமாயும், திரிந்து நின்றன - எனக் கொள்க.

செய்பவன் முதலிய ஆறும் வினைக்கண் தோன்றல் -

{Entry: D04__595}

வனைந்தான் என்புழி, குலாலன் ஆகிய இயற்றுதல் கருத்தா வும், மண்ணாகிய முதற்காரணமும், தண்ட சக்கரம் முதலிய துணைக் காரணங்களும், வனையும் இடமும், வனைதற் செயலும், இறந்தகாலமும், குடம் முதலிய செயப்படு பொருளும் தோன்றின. (நன். 320 சங்.)

செய்பவன் முதலியன குறிப்புவினைக்கண் தோன்றல் -

{Entry: D04__596}

குழையினன் என்புழி, குழையை உடையான் வினைமுதல்; இது விகுதியான் விளங்கிற்று. குடத்தின்கண் மண்போல இவ் வினையாகிய காரியத்தின்கண் முதற்காரணமாகிய செய லுண்டு எனவும், காலம் இன்றேல் இது வினையன்றாம் ஆதலானும் முக்காலங்களுள் ஒன்றன்பால் சார்த்துதற்குரிய இடைநிலை இதற்கு வேண்டாமையானும் முக்காலமும் உண்டு எனவும், வினைமுதற்கு ஓர் ஆதாரம் வேண்டுதலின் இடன் உண்டு எனவும், ஒன்றை வனைந்தான் - ஒன்றால் வனைந்தான் - என்றாற்போல இரண்டாவதற்கும் மூன்றா வதற்கும் இது பயனிலையாக ஒன்றைக் குழையினன் - ஒன்றால் குழையினன் - என இயையாமையின் இதன்கண் செயப்படு பொருளும் கருவியும் இல எனவும் உய்த்துணர்க. ஒன்றாற் குழையினன் என ஒரோவழி இயையின் அங்ஙனம் கருவி உளது என்று கொள்க. உடையன் என்னும் குறிப்பு வினை ஒன்றை யுடையன் - ஒன்றினால் உடையன் - என வருதலின் இதன்கண் ஆறும் உண்டு என்க. (நன். 321 சங்.)

செய்ம்மன என்னும் வாய்பாடு -

{Entry: D04__597}

செய்ம்மன என்பது எதிர்கால வினைமுற்று என்பர் சேனா வரையர் (சொ. 222). அது தெரிநிலைமுற்று என்பார் கல்லாடர் (224). “செய்ம்மன என்பது இக்காலத்துச் செய்வது - செய்பவை - செய்யுமவை - என வழங்கும் போலும்”என்று குறிப்பிடும் தெய்வச்சிலையாருக்குச் ‘செய்ம்மன’ எதிர் காலமுற்றுப் பெயராக வருதலே உடன்பாடு போலும். (218), இதனை மன ஈற்று நிகழ்காலப் பெயரெச்சம் என்பார் நச். (227)

சொல். நச். பதிப்பில், ‘யான் உண்மன’ என்றாற்போன்ற எடுத்துக்காட்டுக்களில் ஊண் என்னும் முடிக்கும் சொல் விடுக்கப்பட்டுள்ளது.

உண்மன குதிரை, செந்நாய், தகர், பன்றி - என முடித்துப் பெயரெச்சப்பொருட்டாகப் பொருள் கூறுக. யான் உண்மன, நீ உண்மன, அவன் உண்மன - என நிறுத்திப் பெயரெச்சத்தை முடிக்கச் சோறு - கூழ் - பால் - தேன் - என வருவித்து முடிக்க.

செய்ம்மன என்னும் எதிர்கால வினைமுற்று இருதிணை ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவானது. யான் செய்ம்மன, யானும் நீயும் செய்ம்மன, யானும் அவனும் செய்ம்மன, யானும் நீயும் அவனும் செய்ம்மன, நாம் செய்ம்மன; நீ செய்ம்மன, நீயிர் செய்ம்மன; அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, அது செய்ம்மன, அவை செய்ம்மன - என வருமாறு காண்க.

செய்ம்மன என அகர ஈற்றதேயாயினும், யான் செய்ம்மன என்புழி யான் செய்வேன் எனவும், நீ செய்ம்மன என்புழி நீ செய்வை எனவும், அவன் செய்ம்மன என்புழி அவன் செய்வன் எனவும் முற்றுச்சொல் நீர்மைத்தாய்ப் பால்காட்டும் என்பது. இஃது இக்காலத்து வழக்கு இறந்தது. (தொ. சொ. 227 கல். உரை)

செய்யா இருவினை செய்வினையே ஆதல் -

{Entry: D04__598}

இலக்கணக்கொத்து விளக்கும் வினைவகைகளில் இதுவும் ஒன்று. 1) செய்யாத வினையே - அஃதாவது விலக்கியவற்றைச் செய்யாமையே நல்வினை ஆவதும், 2) விதித்தவற்றைச் செய்யாமையே தீவினை ஆவதும் ஆன இரண்டு.

‘அறவினை யாதெனின் கொல்லாமை’ கு. 321

‘நோன்புஎன் பதுவே கொன்று தின்னாமை’

அழுக்காறாமை, வெகுளாமை - என்பன போல விலக்கின வற்றைச் செய்யாமையே நல்வினை ஆகும். (இ. கொ. 81)

செய்யாய் என்னும் முன்னிலைச்சொல் -

{Entry: D04__599}

செய்யாய் என்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை வினை- முற்று ஆய்ஈறு கெடச் செய் என்னும் சொல்லாய் நிற்றலு முண்டு. (தொ. சொ. 450 சேனா. உரை)

‘ஒரு தொழிலை மேற்செய்யாய்’ என்னும் மறையாகிய முன்னிலை வினைச்சொல் ‘அத்தொழிலினைச் செய்’ என்னும் உடன்பாட்டு வினைச்சொல்லாம் இடத்தினை உடையது. மறையாய் வரலே பெரும்பான்மை. சிறுபான்மை உடன் பாட்டின்கண் வருங்கால் வேண்டிக்கோடல் பொருண் மைக்கண் வரும்.

உண், தின் - என்பன முன்னிலைஏவல்; உயர்ந்தான் இழிந் தானை ஏவுதற்கண் வரும். செய்யாய் என்னும் மறைச்சொல், உடன்பாட்டுப்பொருளைப் படுத்தலோசையான் உணர்த்தி நிற்கும். உண்பாய் என்னும் சொல் ஓசைவேற்றுமையான் முற்றும் தொழிற்பெயரும் (வினையாலணையும் பெயரும்) வினையெச்சமும் வியங்கோளுமாய் நின்றாற்போலவும், தபு என்பது ஓசை வேற்றுமையான் ஒன்றனைக் கொல் எனவும் நீ சா எனவும் நின்றாற்போலவும், மறைச்சொல் ஓசைவேற் றுமை யான் உடன்பாட்டை உணர்த்திற்று. அங்ஙனம் உணர்த்திற் றேனும் மறை உணர்த்தும் ஆகாரம் உடன்பாடு உணர்த்துமோ எனின், அதனை ஏகாரம் உண்பேனே - உண்ணேனே - என விதிக்கும் மறைக்கும் வந்தாற்போலக் கொள்க. உண்ணாய் என்பதும் உண் என்பதும் தம்மின் சிறிது வேறுபாடுடையன.

(தெய்வச்சிலையார் இருவர் கருத்தையும் குறித்துள்ளார்.)

(தொ. சொ. 450 நச். உரை) (தொ. 440 தெய். உரை)

‘செய்யாய்’ : ஓசை வேற்றுமையான் பலநிலைப்படுதல் -

{Entry: D04__600}

உண்பாய் என்னும் சொல் ஓசைவேற்றுமையான் முற்றும் தொழிற்பெயரும் வினையெச்சமும் வியங்கோளுமாய் நின்றாற்போலவும், தபு என்பது ஓசைவேற்றுமையான் ‘ஒன்றனைக் கொல்’ என்றும் ‘நீ சா’ என்றும் நின்றாற் போல வும், செய்யாய் என்னும் மறைச்சொல் ஓசைவேற்றுமையான் உடன்பாட்டின்கண் வேண்டிக்கோடற்பொருண்மைத்தாக வரும். அது வேண்டிக்கோடல் பொருள் தந்து முன்னிலை ஏவல் உடன்பாடாய் நின்றது. மறை உணர்த்தும் ஆகாரம் உடன் பாடு உணர்த்துமோ எனின், அதனை ஏகாரம் உண்பேனே - உண்ணேனே என விதிக்கும் மறைக்கும் வந்தாற்போலக் கொள்ளல் வேண்டும். (தொ. சொ. 450 நச். உரை)

செய்யுட்கண் முற்றும்மை வாரா இடம் -

{Entry: D04__601}

இத்துணை என்ற அறியப்பட்ட சினைநிலைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் முற்றும்மை கொடுக்க வேண்டும். ஆயின், உம்மையை இணைத்துக் கூறும்வழி, செய்யுள்யாப்பமைதிக்கு இடையூறு வருமாயின் உம்மையைத் தொகுத்துக் கூறலும் உண்டு.

எ-டு : ‘இருதோள் தோழர் பற்ற’, ‘ஒண்குழை ஒன்று ஒல்கி எருத்தலைப்ப’ (இருதோளும், குழை ஒன்றும் - என்னும் முற்றும்மைகள் தொக்கன.) (தொ. சொ. 33 சேனா. உரை)

செய்யுட்கண் வரும் சொற்கள் -

{Entry: D04__602}

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் - என்னும் நால்வகைச் சொற்களும் செய்யுட்கண் முதலிரண்டும் பெரும் பான்மையாகவும், வடசொல் அருகியும், திசைச்சொல் மிக அருகியும் வரும். (தொ. சொ. 397 சேனா. உரை)

செய்யும் என் எச்சம் முற்றுக்களை ஒலிக்கும் முறை -

{Entry: D04__603}

‘எடுத்தல் படுத்தல் ஓசை’ காண்க.

செய்யும் என் எச்சமே முற்று ஆதல் -

{Entry: D04__604}

‘முற்றேல்’ எனவே, செய்யும் என் எச்சம் முற்றும் ஆம் என்பது பெறப்படும். முற்றுவிகுதியின்றி எச்சவிகுதியே முற்றுவிகுதிப் பொருளாகிய பால் காட்டி ஒரோவழி நிற்றலின், எச்சம் ‘முற்றாம்’ எனப்பட்டது.

எ-டு : ‘ஆம் பொருள்கள் ஆகும்,’ ‘போம் பொருள்கள் போகும்’ (சீவக. 848), வாம் புரவி) (நன். 341 சங்.)

‘செய்யும் என் எச்ச ஈற்றுஉயிர் மெய் சேறலும்’ என்னும் சூத்திரத்து ‘முற்றேல்’ எனவே, செய்யும் என்னும் பெயரெச்சம் முற்று வினையு மாம் என்பது பெறப்படும். எச்சம் முற்றாம் எனவே, இச்சூத்திரம் எய்தாதது எய்துவித்தல் ஆயிற்று.

(நன். 341 இராமா.)

செய்யும் என்பதன் சிறப்புவிதி -

{Entry: D04__605}

செய்யும் என் எச்சத்தின் ஈற்றயல் உயிர்மெய் கெடுதலும், செய்யும் என்பது செய்யுளில் செய்யுந்து என ஈற்று ‘உம்’ உந்து ஆகலும், செய்யும் என்னும் முற்றின் ஈற்றயல் உயிரேனும் உயிர்மெய்யேனும் கெடுதலும் ஒரோவழி உளவாம்.

எ-டு : வாவும் புரவி - வாம் புரவி; போகும் புழை - போம் புழை: ஈற்றயல் உயிர்மெய் கெட்டது. பாயும் - ‘பாயுந்து’; கூப்பெயர்க்கும் - ‘கூப்பெயர்க்குந்து’ (புறநா. 24, 395): இவை உம் ‘உந்து’ ஆயின.

கலுழுமே - கலுழ்மே - ஈற்றயல் உகரவுயிர் கெட்டது.

மொழியுமே - மொழிமே (குறுந். 51) - ஈற்றயல் உயிர்மெய் கெட்டது.

விதவாது பொதுப்பட ‘முற்றேல்’ என்றமையான், கேளும் - கேண்மோ, உரையும் - உரைமோ - என முன்னிலைப் பன்மை ஏவல்முற்றுக்கள் முறையே ஈற்றயல் உயிரும் உயிர்மெய்யும் கெடுதலும் கொள்ளப்படும். புறநடைவிதியான், ‘ஆடுவாமோ’ என்னும் தன்மைப்பன்மைமுற்று, எதிர்கால வகரஇடைநிலை கெட்டு ‘ஆடாமோ’ என வந்தமையும் கொள்க. (திருவா. திருப்பொன் 1-9) (நன். 341 சங்.)

செய்யும் என்பது திரியுமாறு -

{Entry: D04__606}

செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும் உண்டு; வினைமுற்றும் உண்டு. செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றயல் எழுத்தாகிய உகரம் ஏறிய மெய்கெட்டு முடிதலுமுண்டு.

எ-டு : வாவும் புரவி - வாம் புரவி; போகும் புழை - போம் புழை

செய்யும் என்னும் முற்றின் ஈற்றயல் எழுத்தாகிய உகரம் தான் ஏறிய மெய்யொடும் கெடுதலுமுண்டு; தான் மாத்திரம் கெடுதலு முண்டு.

எ-டு : மொழியுமே - மொழிமே; (குறுந்.51) கலுழுமே - கலுழ்மே என, முறையே காண்க. (தொ. சொ. 240 நச். உரை)

முடிமே, பொலிமே என்ற சொற்கள் தொல்காப்பிய நூற்பாக்களில் வந்துள்ளன.

செய்யும் என்னும் பெயரெச்சம் -

{Entry: D04__607}

பெயரெச்ச வாய்பாடுகள் இரண்டனுள் இஃது ஒன்று. ஏனைய செய்த என்னும் பெயரெச்சம் இறந்தகாலம் உணர்த் தவும், இச்செய்யும் என்னும் பெயரெச்சம் நிகழ்காலம் எதிர்காலம் என்ற இரண்டன்கண்ணும் வருவது. செய்யும் என்பதும் செய்த என்பது போல, நிலம் பொருள் காலம் கருவி வினைமுதல் தொழில் - என்னும் அறுவகைப் பெயரொடும் முடியும்.

எ-டு : வாழும் இல் , கற்கும் நூல், துயிலும் காலம், வனையும் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணும் ஊண் - என ஆறு பொருட்கும் உரித்தாய் வந்தவாறு.

நோய் தீரும் மருந்து - நோய் தீர்தற்குக் காரணமாய மருந்து - என வரும் காரணம் கருவிக்கண் அடங்கும்.

நின்முகம் காணும் மருந்து - நின்முகத்தைக் காண்டல் காரண மாக அதன் காரியமாகப் பிறந்த அருள் மருந்தாதல் தன்மையது ஆதலின் காரியத்தின்கண் அடங்கும்.

அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான் - ‘இன்னதற்கு’ என்ற பொருளில் வந்தது.

ஆடை ஒலிக்கும் கூலி - ‘இதுபயன்’ என்பதன்கண் அடங்கும்.

பழம் உதிரும் கோடு - நீங்கற்பொருண்மை (இதனைச் சேனா வரையர் எல்லைப்பொருண்மையில் அடக்குவர்) (தொ. சொ. 236 நச். உரை)

செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கும் ஈற்றுமிசை உகரம் கெடுதல் -

{Entry: D04__608}

செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கும், உம்மையால் செய்யும் என்னும் முற்றுச்சொற்கும் ஈற்றயல் உகரம் தான் ஏறிய மெய்யொடும் கெடும்; (உம்மையால்) மெய்யொழித்துத் தான் மாத்திரமே கெடும்.

எ-டு : ‘வாஅம் புரவி வழுதி’ : வாவும் ‘வாம்’ என நின்றது - செய்யும் என் பெயரெச்சம். ‘அம்பல் ஊரும் அவனொடு மொழிமே’ (குறுந். 51) மொழியுமே ‘மொழிமே’ என நின்றது - செய்யும் என்முற்று.

‘சாரல் நாடஎன் தோழியும் கலுழ்மே’ : செய்யும் என் முற்றின் ஈற்றயல் உகரஉயிர் மாத்திரம் கெட்டது.

மெய்யொழித்து உகரம் மாத்திரம் கெடுதல் செய்யும் என்னும் முற்றுச்சொற்கே எனக் கொள்க. (தொ. சொ. 232 தெய். உரை)

செய்யும் என்னும் முற்று -

{Entry: D04__609}

இது நிகழ்காலமுற்றுச்சொற்களில் ஒன்று. இஃது இருதிணைப் பொதுவினை. படர்க்கையில் பலர்பால், தன்மை முன்னிலை இவற்றைச் சார்ந்த பெயர்களுக்கு இது முடிக்கும் சொல்லாக வாராது; படர்க்கை ஆண் பெண் ஒன்று பல - என்னும் நாற்பாலிலேயே வரும்.

எ-டு : அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும்.

(தொ. சொ. 229 நச். உரை)

முக்காலத்தினும் நிகழும் பொருள்களையும் செய்யும் என்னும் வாய்பாட்டான் கிளத்தலே முறை, நிகழ்காலத்தில் முக்காலமும் அடங்குதலின்.

எ-டு : மலை நிற்கும், தீச் சுடும், ஞாயிறு இயங்கும், திங்கள் இயங்கும். (தொ. சொ. 242 நச். உரை)

உயர்திணைப்பன்மைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் தன்மையிலும் செல்லாது, செய்யும் என் எச்சத்தான் ஆகும் செய்யு மென்னும் முற்று. ஆதலின் படர்க்கை ஆண் பெண் ஒன்று பல என்னும் நான்கு பால்களிலேயே இவ்வாய்பாட்டு வினைமுற்று நிகழும்.

எ-டு : அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.

ஏனை முற்றுக்கள் போல இம்முற்றுத் தன் இயல்பில் நில்லாது, எச்சத்தான் ஆகியது என்றார். (நன். 348 சங்.)

உண்ணும் தின்னும் என்றல் தொடக்கத்து முன்னிலைப் பன்மைக்கண் வரும் உம் ஈற்று (ஏவல்) முற்றுக்கள் முன் னிலைக்கண் புதுவது புகுதலாம். இம் முற்றுக்களும் செய்யும் என் முற்றுப் போல ஈற்றயல்எழுத்துக் கெட்டு வருதலுமுண்டு.

எ-டு : ‘தேவி ர்காள் எம்முறு நோய் தீர்ம்’ (சிலப். 9 : 14) - ஈற்றயல் உயிர் கெட்டது. ‘சிலம்புள கொண்ம்’ (சிலப். 9:73) - ஈற்றயல் உயிர்மெய் (ளு) கெட்டது. ‘மந்திர நாமம் வந்துநீர் கன்ம்’ (பெருங் 2: 11 : 94) - ஈற்றயல் உயிர்மெய் (லு) கெட்டது

செய்யும் என்னும் முற்று அஃறிணைஒருமை சுட்டுதல் -

{Entry: D04__610}

சாத்தன் குரைக்கும், சாத்தி புல் மேயும் - என்றாற் போன்ற சிறப்பு வினைகளால் சாத்தன் சாத்தி - என்ற பொதுப் பெயர்கள் அஃறிணை ஒருமைச்சொற்கள் ஆயவாறு. (தொ. சொ. 169 தெய். உரை)

செய்யும் என்னும் முற்று உயர்திணை ஒருமை சுட்டுதல் -

{Entry: D04__611}

சாத்தன் யாழ் எழூஉம், சாத்தி சாந்தரைக்கும் - என்றாற் போன்ற சிறப்புவினைகளால் சாத்தன் சாத்தி என்ற பொதுப் பெயர்கள் உயர்திணை ஒருமைச்சொற்கள் ஆயவாறு. (தொ. சொ. 173 சேனா. உரை)

செய்யும் என்னும் முற்றும் செய்யும் என்னும் எச்சமும் -

{Entry: D04__612}

செய்யும் என்பது முற்றாம் நிலைமைக்கண் பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை ஒழித்து ஒழிந்த நான்கு பாலையும் தன் ஈற்றகத்தே ஒருவாற்றான் கொண்ட அப்பெய ரானே அமைந்து முடியும். அஃது எச்சமாய நிலைமைக்கண் முடிபாக வரும் பெயர் பயனிலை செப்பலும் உருபேற்றலும் உடையவாம். (தொ. சொ. 230 இள. உரை)

செய்யும் என்னும் முற்று, படர்க்கை ஆண் பெண் ஒன்று பல - என்னும் நான்கு பாற்கே வரும்; பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையில் வாராது. செய்யும் என்னும் எச்சம் இருதிணை ஐம்பால் மூவிடத்தும் வரும். முற்றாய்ப் பெயர் கொண்டவழி மற்றொரு சொல் நோக்காது, செப்பு மூடியக் கால் போல, அமைந்துமாறும். எச்சமாய்ப் பெயர் கொண்டக் கால் அமையாது மற்றுமொரு சொல் நோக்கிற்றுப் போல நிற்கும். இனி முற்றாயவழி ‘உண்ணும்’ என ஊன்றினாற் போல நலிந்து சொல்லப்படும் என்றும், எச்சமாயவழி ஊன்றாது நெகிழ முடிபு சொல்லப்படும் என்றும் கொள்க. (தொ. சொ. 236 கல். உரை)

செய்யும் என்னும் வினை விளக்கம் -

{Entry: D04__613}

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொல் பல நிலை களில் நிற்கும்

1. அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் -பொதுமுற்று. 2. செய்யும் சாத்தன் - பெயரெச்சம். 3. அவன் இன்று செய்யும் - நிகழ்கால வினைமுற்று. 4. அவன் நாளைச் செய்யும் - எதிர்கால வினைமுற்று. 5. நீயிர் உண்ணும் - முன்னிலை உயர்திணைப்பன்மைச் சிறப்புமுற்று. 6. தோழியும் கலுழ்ம் - கலுழும் என்னும் முற்றின் ஈற்றயல் உகரம் கெட்டது. 7. ‘மிசைப் பாயுந்து மிழலை’ - பாயும் என்னும் உம்ஈறு. ‘உந்து’ ஆயிற்று.

5. முன்னிலைப்பன்மையில் உம் ஈற்றுச்சொல் செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று அன்று என்பதே நச்சினார்க் கினியர் கருத்து (தொ. சொ. 226). (இலக்கணக் கொத்தில் 65, 66, 67 ஆம் நூற்பாக்கள் பிறன்கோள் கூறும் பொதுச்செய்தி; இவ்வாசிரியரது கருத்து எனக்கோடல் கூடாது.) (இ. கொ. 67)

செய்யும் வினைமுதல் -

{Entry: D04__614}

தச்சனால் இயற்றப்பட்ட வையம், கடவுளால் ஆக்கப்பட்ட விமானம், புலியால் விழுங்கப்பட்டான், சுறவால் ஏறுண்டான் (ஆலுருபு ஏற்ற தச்சன் முதலிய) இவை செய்யும் வினைமுதல். (நன். 296 மயிலை.)

செய்யுள் ஆவது -

{Entry: D04__615}

பல் வகைப்பட்ட தாதுக்களினான் உயிர்க்கு இடனாக இயற் றப்பட்ட உடம்பு போல, பலவகைச் சொற்களானும் பொரு ளுக்கு இடனாகத் தங்கள் அறிவினான் கற்றுவல்லோர் அலங்காரம் தோன்றச் செய்வன செய்யுளாம். (நன். 267 மயிலை.)

செய்யுள் ஈட்டச்சொல் -

{Entry: D04__616}

செந்தமிழ் நாட்டில் பேச்சுவழக்கில் பயிலும் இயற்சொல், பெரும்பான்மையும் செய்யுளுக்கு வழங்கப்படும் திரிசொல், செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரு கொடுந்தமிழ் நிலத்திலும் பயின்று செந்தமிழில் வழங்கும் திசைச்சொல், ஆரியச்சொல் தமிழொலிக்கு ஏற்பத் திரித்துக் கொள்ளப் படும் வடசொல் - என்னும் நால்வகைச் சொல்லும் சொற்கள் ஒன்றோடொன்று சேர்தலான் அமையும் செய்யுளை அமைத்தற்கு உதவும் சொற்களாம். (தொ. சொ. 397 சேனா. உரை)

செய்யுள்முடிபும் வினைத்திரிசொல்லும் -

{Entry: D04__617}

எழுத்ததிகாரத்தே தொல்காப்பியனார் ‘செய்யுட்கு இவ் வாறு முடிக்க’ என்று முடிபு கூறியவற்றை யெல்லாம் செய்யுள்முடிபு என்று கூறலும் (எழுத். 288, 356), கேட்டீ வாயாயின் - செப்பீமன் - ஈங்கு வந்தீத்தாய் - புகழ்ந்திகும் அல்லரோ - என் மனார் - என்றிசினோர் - பெறலருங்குரைத்து ( கேட்பாயாயின், செப்பு, ஈங்கு வந்தாய், புகழ்ந்தாரல்லரோ, என்ப, என்றனர், பெறலரிது - என முறையே பொருள்படும்.) என்பன முதலாக இவ்வாறு திரிந்து வந்தனவற்றை வினைத் திரிசொல் என்று கூறலும் தொல்காப்பியனார் கருத்தாம். (தொ. சொ. 399 நச். உரை)

செய்யுள்விகாரத்தான் மொழி வருவித்து முடித்தல் -

{Entry: D04__618}

மொழி வருவித்து முடித்தல் பல ஏதுக்களான் நிகழும். அவற்றுள் செய்யுள்விகாரமும் ஒன்று.

‘ஆகார இறுதி அகர இயற்றே’ (தொ.எ. 221)

‘செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில்’ (நன். 340)

‘கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்’ (22)

‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை’ (கு. 44)

‘துணைவலியும் தூக்கிச் செயல்’ (கு. 471)

இவற்றுள் ‘ அகரஇறுதி இயற்றே’, ‘செய்யும்என் வாய்பாட் டில், ’ ‘ எடுத்துக்காட்டு ’, ‘ இல்வாழ்க்கை ’, ‘ சீர்தூ க்கிச் செயல்’ - என விகாரத்தால் தொக்கவற்றை வருவித்து முடித்த வாறு. (இ. கொ. 89.)

செய்யுள்விகாரம் ஆறு -

{Entry: D04__619}

‘வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல் - என்று ஆறும் செய்யுள்விகாரமாம். மெல்லெழுத்தை வல்லெழுத் தாக்கலும், வல்லெழுத்தை மெல்லெழுத்தாக்க லும், குற்றெழுத்தை நீட்டலும், நெட்டெழுத்தைக் குறுக்க லும், ஓரெழுத்தை விரித்தலும், ஓரெழுத்தைத் தொகுத்தலும் என்பன முறையே அவ்விகாரங்கள். (தொ. சொ. 403 சேனா. உரை)

செய்யுளில் எடுத்துக்காட்டுச் சிலவே தந்தமை -

{Entry: D04__620}

“ஆதன் தந்தை என்பது செய்யுளில் ஆந்தை என்றே வரும். இதனை வேற்றுமைத்தொகைக்கு உதாரணம் காட்டினால், தொல்காப்பியம் கல்லாதவரும் சிறுநூல்களே கற்றவரும் இதனை அறிந்துகொள்ள இயலாமல் (நிலைமொழி ‘தன்’ ஈறும், வருமொழியுள் தகர உயிர்மெய்யும் கெட்டு முடிந்தமை தெரியாமல்) பறவைப் பெயரோ பிழையோ எனக் கலங்குவர். ‘பிணிக்கண் வருந்தினான்’ என்பது உருபு தொக்குச் செய்யுளில் வரின் இக்குச்சாரியை பெற்றுப் ‘பிணிக்கு வருந்தினான்’ எனவே வரும். இதனை வேற்றுமைத் தொகைக்கு உதாரண மாகக் கொடுத்தால் உதாரணமும் பிழை என்பர். ஆகவே செய்யுள்வழக்குச் சிலவும் உலக வழக்குப் பலவும் தந்தோம்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியர் விளக்குகிறார். (இ. கொ. 12)

செய்யுளுக்குரிய பல சொல் -

{Entry: D04__621}

பொருளாதி அறுவகைப் பெயர்களுள் ஒருபொருள் குறித்த பலசொல்லாகியும், பலபொருள் குறித்த ஒருசொல்லாகியும் வரும் பெயர்த்திரிசொற்களும், பவ்வீறும் மாரீறுமான படர்க்கை முற்றும், அல் அன் என் ஏன் கு டு து று அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் றும் என்னும் ஈற்றுத் தன்மைஒருமையும் பன்மையுமான முற்றும், ஐயும் இய்யும் மின்னும் ஈற்று முன்னிலை முற்றும், ககார யகார ரகார ஈற்று வியங்கோள் முற்றும், செய்து செய்பு செய்யா செய்யூ செய்தென செய செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு என்னும் வினையெச்சமும், ஒழிந்த ஈறுகளான் வரும் வினைத்திரிசொற் களும், இடைத் திரிசொற்களும், உரித்திரி சொற்களும், ஆனும் - ஒடுவும் - இன்னும் - ஆதுவும் - அவ்வும் - பின் முன் இல் என்னும் மூன்றும் ஒழித்து ஒழிந்த கண் முதலான எல்லா ஏழனுருபும் - ஆன இவ்வுருபு ஏற்ற மொழிகளும், வலித்தல் முதலான விகார மொழிகளும், தொகைநிலை மொழிகளும், ‘ஆடா அடகு’ (திணைமா.4) ‘தீத்தீண்டு கையார்’ (திணமா.5) - என்பன முதலான குறிப்புமொழிகளும், பறவாக் குளவி - பாயா வேங்கை - முதலான வெளிப்படை மொழி களும், மூன்று இறந்த அடுக்குமொழிகளும், எழுத்ததிகாரத் துள் செய்யுட்கு என்று விதந்தோதியனவும் முதலான செய்யுட் சொற்களும், திசைச்சொற்களும், வடசொற்களும் ஆம். (ஆடாஅடகு - மகளிர் விளையாட்டு) (நன். 267 மயிலை.)

செய்வது இல்வழி நிகழ்காலம் காட்டல் -

{Entry: D04__622}

மிக்கது என்று நன்கு மதிக்கப்படும் பொருட்கண் நிகழும் வினையின் பயனாகிய குணத்தைக் குறித்த எழுவாய், செய்கை முடியாத நிலைக்கண் நிகழ்காலத்தால் சொல்லப்படும்.

எ-டு : அறம் செய்தான் சுவர்க்கம் புகும்.

அறம் என்பது மிக்கது. அதனை ஆக்கினான் சுவர்க்கம் புகுதல் ஒருதலையாதலின் புகுகின்றாரைக் கண்டான் போலப் ‘புகும்’ என்று நிகழ்காலத்தான் சொல்ல அமையும் என்பது. செய்வது என்பது செய்கை; இல்வழி - முடியாத நிலைமை. (தொ. சொ. 238 இள. உரை)

செய்வி என் வினையும் செய்வினை -

{Entry: D04__623}

பிறவினையும் ஒரோவிடத்துத் தன்வினைப்பொருளே தரும்.

எ-டு : ‘நட்பாடல் தேற்றா தவ ர்’ கு. 187 ‘தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உ ண்டாயின்’ நாலடி. 75

இவற்றுள், தேறாதவர் - தேறா ஒழுக்கம் - எனத் தன்வினை பிறவினை போல நின்றன. ‘போக்கும் அதுவிளிந் தற்று’ (கு. 332) - போதலும் என்று தன்வினையாகவே பொருள்பட்டவாறு காண்க. ‘கைவேல் களிற்றொடு போக்கி’ (கு.774) - மகட் போக்கிய தாய் - என வருதலின், ‘போக்கு’ பிறவினையேயாம். (இ. கொ. 72)

[ இவற்றைப் பகுதிப்பொருள் விகுதி எனவும், சுவார்த்தத்தில் வந்த காரிதம் என்றும் பி. வி. கூறும். (காரிகை 35) ]

செய்வினை செயப்பாட்டுவினை : இவற்றின் பொதுவாகும் தொடர்வினை -

{Entry: D04__624}

உண்ட சாத்தன் : செய்வினைப் பெயரெச்சம்; இது செயப் பாட்டு வினைப் பொருள்படாது. உண்ட சோறு - உண்ணப் பட்ட சோறு; இது செயப்பாட்டுவினைப் பெயரெச்சம்.

புலிகொன்ற யானை என்புழி, புலியைக் கொன்ற யானை எனின் செய்வினையாகவும், புலியால் கொல்லப்பட்ட யானை எனின் செயப்பாட்டுவினையாகவும் பெயரெச்சம் பொருள் படும்.

மீன் விழுங்கினவன், அவன் விரும்பினவன், ஒன்னார் வணங்கி னான், அறிந்து வந்தான் : இவை, மீனை விழுங் கினவன் - மீனால் விழுங்கப்பட்டவன் - எனவும், அவனை விரும்பின வன் - அவனால் விரும்பப்பட்டவன் - எனவும், ஒன்னாரை வணங்கினவன் - ஒன்னாரால் வணங்கப்பட்டவன் - எனவும், தான் அறிந்து வந்தவன் - அறியப்பட்டு வந்தவன் - எனவும் முதல் மூன்று முற்றுப்பெயர்களும் (வினையால ணையும் பெயர்களும்) செய்வினை செயப்பாட்டுவினை எனும் இரண் டற்கும் பொதுவாயினவாறும், இறுதியதாகிய வினையெச்ச மும் அவ்வாறே பொதுவாயினவாறும் கண்டு கொள்க. (இ. கொ. 67)

செய என் எச்சம் -

{Entry: D04__625}

செய என் எச்சம், மழை பெய்ய எழுந்தது என எதிர்காலத்தும், மழை பெய்யக் குளம் நிறைந்தது - என இறந்தகாலத்தும் வரும். மழை பெய்யக் குளம் நிறைந்தது - எனக் காரணப் பொருட் டாயும், குளம் நிறைய மழை பெய்தது - எனக் காரியப் பொருட்டாயும், மழை பெய்ய எழுந்தது என ‘அதற் பொருட்டு’ என்னும் பொருட்டாயும், மழை பெய்யச் சாத்தன் வந்தான் - என உடனிகழ்ச்சியாய் நிகழ்த்தற்கண் இடப் பொருட்டாயும் பிறவாறாயும் வரும். (தொ. சொ. 230 கல். உரை)

செயப்படுபொருள் -

{Entry: D04__626}

எழுவாயான் செய்யப்படும் தொழிலின் பயனை உறுவது செயப்படுபொருளாம். இஃது இரண்டாம் வேற்றுமைப் பொருளாக வரும். இப்பொருள், இயற்றப்படுதல் - வேறு படுக்கப்படுதல் - எய்தப்படுதல் - என மூவகைப்படும்.

இயற்றப்படுதல் - முன் இல்லதனை உண்டாக்குதல் : எயிலை இழைத்தான் ; வேறுபடுக்கப்படுதல் - முன் உள்ளதனைத் திரித்தல் : மரத்தை அறுத்தான்; எய்தப்படுதல் - இயற்றலும் வேறுபடுத்தலுமின்றிச் செயப்படுபொருள் தொழிலின் பயனை உறும் அளவாய் நிற்றல். எ-டு: ஊரைக் காக்கும்

(தொ. சொ. 71 சேனா. உரை)

(இயற்றப்படுதல் முதலிய மூன்றையும் வடநூலார் முறையே நிர்வர்த்தியம், விகாரியம், பிராப்பியம் - என்ப.)

இரண்டனுருபு ஏற்ற சொல் தெரிநிலைவினை குறிப்புவினை இரண்டனையும் அவ்வத் தொழிற்பெயர்களையும் கொண்டு முடியும்.

எ-டு : மரத்தைக் குறைக்கும், பொருளை யுடையன்;
மரத்தைக் குறைத்தல், பொருளை யுடைமை.

செயப்படுபொருள், இல்லதொன்று உண்டாக்கல் (எயிலை இழைத்தான்) - உள்ளதொன்றனை உடல் வேறாக்கல் (மரத்தைக் குறைத்தான்) - உள்ளதொன்று ஒரு தொழில் உறுவித்தல் (கிளியை ஓப்பும்) - உள்ளதொன்றனை ஒன்று உறுதல் (நூல் நூற்றல்) - தன்கண்ணும் ஒருதொழில் நிகழாது செயப்படுபொருள் ஆதல் (வாய்க்காலைச் சாரும்) - முதலாகப் பலவகைப்படும்.

தெரிநிலைச் செயப்படுபொருள் - மரத்தைக் குறைத்தான்; தெரியாநிலைச் செயப்படுபொருள் - சாத்தனால் மரம் குறைக்கப்பட்டது; கருத்துள்வழிச் செயப்படுபொருள் - சோற்றை அட்டான்; கருத்து இல்வழிச் செயப்படுபொருள் - சோற்றைக் குழைத்தான்; செய்வானும் செயப்படுபொருளும் ஒன்றாதல் - சாத்தன் தன்னைக் குத்தினான்; செயப்படுபொரு ளுக்கு ஏதுவாகியது செயப்படுபொருள் ஆதல் - கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர். (தொ. சொ. 73 கல். உரை)

ஒருவன் ஒருவினை செய்ய அதனான் தோன்றிய பொருள் யாது, அது செயப்படுபொருள் என்பதாம். ஒருவன் ஒருவினை செய்ய அத்தொழிற்படு பொருள் யாது, அது செயப்படு பொருளாம். செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் - என்பன ஒரு பொருட்கிளவி. (நன். 296 சங்.)

ஒரு வினைமுதல் செய்யும் தொழிலினை ஏற்கும் பொருள் யாது, அது செயப்படுபொருளாம். வினைமுதல் செய்யும் தொழிற்பயன் உறுவது செயப்படுபொருள் என்றால் என்னையெனின், ‘சாத்தன் பகைஞரை வென்றான்’ எனின், போர்செய்தல் வினைமுதலின் தொழில்; வெற்றியுண்டாதல் அதனால் வருபயன்; அப்பயனை அடைந்தவர் பகைஞர் என வேண்டுதலின், அது பொருந்தாமை உணர்க. (நன். 296 இராமா.)

செயப்படுபொருள் இருவகை -

{Entry: D04__627}

தன்கண் தொழில் நிகழ்வதும் நிகழாததும் எனச் செயப்படு பொருள் இருவகைத்தாம். மரத்தை அறுத்தான் - முதலியன தம் - கண் தொழில் நிகழ்வன; ஊரைக் காத்தல் - முதலியன தம்கண் தொழில் நிகழாதன. (தொ. சொ. 73 நச். உரை)

செயப்படுபொருள் காரணகாரியம் தோன்ற நிற்பனவும், தோன்றாது நிற்பனவும் - என இருவகைப்படும்.

எ-டு : ஆடையை நெய்தான், குடத்தை வனைந்தான் - காரணகாரியம் தோன்ற நிற்பன; ஊரைக் காத்தான் - காரணகாரியம் தோன்றாது நிற்பது.

(தொ. சொ. 70 தெய். உரை)

செயப்படுபொருள் மயக்கம் -

{Entry: D04__628}

இரண்டாம்வேற்றுமைப்பொருள் தோன்ற அவ்விடத்து ஏனை வேற்றுமையுருபுகளும் வந்து மயங்குவனவாம்.

சோறு அடப்பட்டது - முதல் வேற்றுமை; சோற்றை அட்டான் - இரண்டாவது; அரிசியால் சோறாக்கினான் (அரிசியை) - மூன்றாவது; அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் (அவளை) - நான்காவது; பழியின் அஞ்சும் (பழியை) - ஐந்தாவது; நூலது குற்றம் கூறினான் (நூலை) - ஆறாவது; தூணின்கண் சார்ந்தான் (துணை) - ஏழாவது. இவ்வாறு செயப்படுபொருள் எல்லா வேற்றுமையுருபுகளொடும் வந்தது. (இ. கொ. 45)

செயப்படுபொருள் வகை பலவாதல் -

{Entry: D04__629}

செயப்படுபொருள்தான், இல்லதொன்றாய் உண்டாக்கப்படு தலும், உள்ளதொன்றாய் உடல் வேறாக்குதலும், உள்ள தொன்றாய் ஒருதொழில் உறுவிக்கப்படுதலும், உள்ள தொன்றாய் ஒன்றனான் உறப்படுதலும் - எனப் பலவகைத்து. இவற்றுக்கு எடுத்துக்காட்டு முறையே எயிலை இழைத்தான் - மரத்தைக் குறைத்தான் - கிளியை ஓப்பும் - நூல் நூற்றான் - என வரும். (தொ. சொ. 73 கல். உரை)

செயப்படுபொருள் வகையாக வடநூலார் கூறுவன -

{Entry: D04__630}

நிருவர்த்தியம் (நிர்வர்த்யம்), விகாரியம் (விகார்யம்), பிராப் பியம் (பிராப்யம்) என்னும் இவை மூன்றும் வடநூலார்சிலர் கூறும் செயப்படுபொருள் வகைகளாம். இயற்றப்படுவது - வேறுபடுக்கப்படுவது - எய்தப்படுவது - என்று சேனாவரை யர் போன்றார் கூறுவனவும் இவையே. இயற்றுதலாவது முன் இல்லதனை உண்டாக்குதல்; வேறுபடுத்தலாவது முன் உள்ளதனைப் பிரித்தல்; எய்தப்படுதலாவது இவ்விரண்டு மின்றித் தொழிற்பயனை உறுந்துணையாய் நிற்றல் - என விரித்துரைத்து, முறையே, எயிலை இழைக்கும் - மரத்தைக் குறைக்கும் - புதல்வரைப் பெறும் - என உதாரணமும் காட்டுவர் சேனாவரையர். இ. கொ. நூலுடையாரும் செயப்படு பொருள் வகை அனைத்தையும் இம்மூன்றனுள் ளும் அடக்குவர். நன்னூலாரும் ஆக்கல் அழித்தல் அடைதல் - எனத் தொடங்கியே கூறுவர். (பி. வி. 12)

செயப்படுபொருள் வேறுபொருள்படுதல் -

{Entry: D04__631}

சாத்தன் வீட்டை விரும்பினான்

செயப்படுபொருள் என்பது கருத்தா செய்யும் வினையின் பயனை உறுவது. இங்குப் பயன் வீடு. இச்சொல்லின் பொருள் நல்வினை தீவினைகளாகிய தொழில்களினின்று விடுதலை பெறுதல் என்பது. எனவே, வீடு செயலற்றநிலை என்பது போதரும். புடைபெயர்ச்சியாகிய தொழிலை நீக்குவது வீடு. ஆதலின் இத்தொடரின் செயப்படுபொருள் (வீடு) செயலற்ற நிலையாகிய வேறுபொருள்பட்டது.

‘உருபுகள் தம் பொருளன்றி வேறு பொருளைத் தருதல்’ காண்க. (இ. கொ. 53)

செயப்படுபொருளின் ஏழ்வகை -

{Entry: D04__632}

செயப்படுபொருளை ஏழ்வகையாகக் கூறும் இலக்கணக் கொத்துடையார் சேனாவரையர் முதலானோர் கூறும் இயற்றப்படுதல் - வேறுபடுக்கப்படுதல் - எய்தப்படுதல் - என்னும் மூன்று பகுப்பும் தாம் கூறும் எழுவகையுள் அடங்கும் என்று குறிப்பிடுகிறார். அம்மூவகையாவன :

இயற்றப்படுதல் - முன் இல்லதனை உண்டாக்குதல்: எ-டு : எயிலை இழைத்தான்; வேறுபடுத்தப்படுதல் - வேறாக்கப் படுதல் : எ-டு : கயிற்றை அறுத்தான்; எய்தப்படுதல் - மேற் கூறிய இரண்டுமன்றித் தொழிற் பயனை உறும்துணையாய் நிற்றல்: எ-டு : பொருளைப் பெற்றான்.

இனிச் செயப்படுபொருளின் எழு வகைகளாவன :

கருத்துண்டாதல் : சோற்றை யுண்டான்

கருத்து இன்றாதல் : சோற்றைக் குழைத்தான்

இருமையும் ஆதல் : எறும்பை மிதித்து வழியைச் சென்றான்; பதரையும் நெல்லையும் பணத்திற்குக் கொண்டான். (இவற்றுள் எறும்பை மிதித்தலும் பதரைக் கோடலும் கருத்தின்றாதல்; வழியைநடத்தலும் நெல்லைக்கோடலும் கருத்துண்டாதல்.)

ஈருருபு இணைதல் - பசுவினைப் பாலைக்கறந்தான்; ஆரியனை ஐயுற்ற பொருளை வினாவினான்.

கருத்தாஆதல் - தன்னைப் புகழ்ந்தான், தன்னைக் காதலித் தான்.

அகநிலைஆதல் - வருதலைச் செய்தான்.

தெரிநிலை - மாடம் செய்யப்பட்டது - மாடம் எழுவாயாக நின்றும் செயப்படுபொருளே என உய்த்துணரப்பட்டது. (தெரிதல் ஆராய்தல்) (இகொ. 31)

செயப்படுபொருளைச் செய்தது போலக் கிளத்தல் -

{Entry: D04__633}

செயப்படுபொருளைக் கருத்தாவே போல வைத்து அதன்மேல் வினைமுதல்வினையை ஏற்றிக் கூறுதலும் வழக்கின்கண் உண்டு.

எ-டு : இம்மாடு யான் கொண்டது, இச்சோறு யான் கொடுத்தது, இவ்வெழுத்து யான் எழுதியது.

இனி இல்லம் மெழுகிற்று, எழுத்தாணி எழுதிற்று - என உதாரணம் காட்டுவாருமுளர். இல்லம் மெழுகிற்று என்னும் வழக்கு இன்மையானும், நடத்த நடந்த தேரினைப் போல ஒருவன் எழுத எழுதியது எழுத்தாணியாதலின் அது தன் தொழிலே அன்றி ஒருவன் தொழிலன்று ஆதலானும் அவை காட்டு ஆகா. (நன். 400 சங்.)

செயப்பாட்டுவினை வகைகள் -

{Entry: D04__634}

I செயப்பாட்டுவினை, வினைமுதலுக்கும் செயப்படு பொருளுக்கும் தொழிற்பெயர்க்கும் பயனிலையாக நிகழும். அரசன் அருச்சிக்கப்பட்டான் - ஆடை தரப்பட்டது - ஒழுக்கம் செயப்படும் - என முறையே காண்க.

‘அகடாரார்........... முகடியான் மூடப்பட்டார்’ கு. 936

‘இகழப் படுவாரைக் காணினும் இழுக்கே’

‘இன்னாது இரக்கப் படுதல்’ கு. 224

என்பனவும் அவை.

II முதனிலை, தொழிற்பெயர், முற்று, ஈரெச்சம், வினைமுதல், செயப்படுபொருள் - என்பவற்றுள் படுசொல் இன்றியும் அவை படுபொருள் தரும்.

எ-டு : செய்குன்று (செய்யப்பட்ட குன்று); முதனிலை படுசொல் இன்றியும் அப்பொருள் தந்தது. ‘ஆண்ட வன் என்றல் அரற்கே தகும்’ (என்றல் - எனப்படுதல்): தொழிற்பெயர் படுசொல் இன்றியும் அப்பொருள் தந்தது.

மரம் வெட்டிற்று (வெட்டப்பட்டது) முற்றுப் படுசொல் இன்றியும் அப்பொருள் தந்தது.

‘அரம்பொருத பொன்’ கு. 888 (பொரப்பட்ட): பெய ரெச்சம் படுசொல் இன்றியும் அப்பொருள் தந்தது.

எழுதி வந்த ஓலை (எழுதப்பட்டு)

யாழும் எழுதி, முத்து எழுதி (கோவை. 79 எழுதப்- பட்டு) வினையெச்சம் படுசொல் இன்றியும் அப் பொருள் பட்டது.

‘இல்வாழ்வான் என்பான்’ கு. 41 (எனப்படுவான்):

‘ஊருணி நிர்நிறைந் தற்றே’ கு. 215 (ஊரார் நீர் உண்ணப்படுவது): செயப்படுபொருள் படுசொல் இன்றியும் அப்பொருள் தந்தது.

‘ஆதி’ என்றதனால், எழுத்தாணி எழுதிற்று (எழுத் தாணியால் எழுதப்பட்டது) : கருவியின் பயனிலை படுசொல் பெறாது படுபொருள் பயந்தது.

III . முற்கூறியவற்றுள் பல படுசொல்லுடனும் வரும். மேல் விரித்துக் காட்டப்பட்ட தொடர்களே எடுத்துக்காட் டாவன.

IV . முற்றுப்பெயர் (வினையாலணையும் பெயர்), தொழிற் பெயர், ஈரெச்சம் ஆகியவற்றுள் படுசொல் பெற்றும் அப் பொருள் பெறாது வரும்.

‘உட்க ப்படார் ஒளியிழப்பர்........... ஒழுகுவார்’ கு. 921 ‘உட்கார்’ எனவே பொருள்பட்டது.

‘பெயர் எழுவாய்.......... ஏற்கப் படுதல்’ நேமி. சொல். 17- ஏற்றல் என்பதே பொருளாயிற்று.

உண்ணப்பட்ட சாத்தன் - உண்ட சாத்தன் என்பதே பொருள்.

உண்ணப்பட்டு வந்த சாத்தன் - உண்டு வந்த சாத்தன் என்பதே பொருள்.

இவை முறையே முற்றுப்பெயர், தொழிற்பெயர், பெயரெச்ச வினையெச்சங்களாம்.

V . பெயருக்குப் பின்னும் வினையெச்சத்திற்குப் பின்னும் வந்த படுசொல் செயப்பாட்டுவினைப் பொருள்படாது வேறு பொருள் படுதலுமுண்டு.

‘மறைஇறந்து மன்று படும்’ கு. 1138

‘போற்றினும் பொத்துப் படும்’ கு. 468

பெயர்ப்பின் வந்த ‘படு’ உண்டாம் என்று வேறுபொருளைத் தந்தமை காண்க.

‘துன்பங்கள் சென்று படும்’ கு. 1045

வினையெச்சத்தின் பின் வந்த ‘படு’உண்டாம் எனவே வேறுபொருள்பட்டது.

‘இனைத்தென அறிந்த பொருட்கு உம்மை படும்’
இன்என் உருபிற்கு இன்என் சாரியை இன்மை படும்.

பெயர்ச்சொல்லின்பின் வந்த ‘படு’ வேண்டுவது - தக்கது - என்னும் வேறுபொருள் தந்தன.

‘வஞ்சரை அஞ்சப் படும்’ கு. 824

‘ஒளியோடு ஒழுகப் படும்’ கு. 698

‘மெய் சொல்லப்படும்’

வினையெச்சத்தின் பின் வந்த ‘படு’ சொல் மேலன போலவே வேண் டுவது - தக்கது - என்னும் வேறுபொருள் தந்தன.

VI . தன்பொருள் பிறபொருள் இரண்டற்கும் பொதுவாகவும் பொருந்தப் படுசொல் வரும். தன்பொருள் என்பது படு சொல்லொடு கூடிய பொருள்; பிறபொருள் என்பது போந்த பொருளாம்.

‘உதவி செயப்பட்டார்’ (கு. 105), இன்மை தழுவப்பட்டார், அல்லல் அடையப்பட்டார் - இவற்றுள் முதலாம் தொடர், உதவி செய்தவர் - உதவி பெற்றவர் - என்னும் இருவரையும் குறிக் கலாம்; ஏனைய தொடர்கள் முறையே இன்மை தழுவினோரையும், அல்லல் அடைந்தோரையுமே குறிக்கும்.

vii . படுசொல்லை வருத்தினும் வரப்படாமல் தடைப்ப ட்டுக் கிடப்பினும் படுபொருள் குறிப்பது. மரம் வெட்டினான், சோ ற்றை உண்டான் - இவற்றுள் மரம் வெட்டப்பட்டது - சோறு உண்ணப்பட்டது - எனப் படுபொருள் வந்தது.

viii . படுசொல்லை த் தடுப்பினும் தடைப்படாதே வந்து படுபொருள் தருவது.

(தொகுக்க முய ன்றாலும் தொகாது வெளிப்பட்டே வருதல்)

நாய் கோட்பட்டா ன், புலி கவ்வப்பட்டான் - போன்றவற்றில் தடுப்பினு ம் தடைபடாதே படுபொருள் வந்தது.

ix இன்னும் ‘பல’ என்பதனால்,

ம்மால் வீழப்பட்ட திருநுதற்கு இல்லை இடம், தம்மால் வீழப்பட்ட தலைவியுடைய மென்தோள் - என்னுமிவற்றை யாம் வீழும் திருநுதல்’ கு. 1123, ‘தாம் வீழ்வார் மென்தோள்’ கு . 1103- எனத் தொகுக்க வேண்டின் தொகுக்கலாம், வேறுபொருள் படா தாதலின்.

‘கேள்வியால் தோட்கப்படாத செவி’ கு. 418, ‘முகடியான் மூ டப்பட்டார்’ கு. 936 இவற்றைக் கேள்வி தோளாத செவி எனவும் முகடி மூடினார் எனவும் தொகுக்க வேண்டின் தொகுக்கப் படாது, இரண்டன்தொகையாக வேறுபொருள் படுதலின். (இ. கொ. 78)