Section F06 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 6 alphabetical subsections

  1. ப (CONTINUED from E05) section: 57 entries
  2. ம section: 147 entries
  3. ய section: 23 entries
  4. ர, ல section: 9 entries
  5. வ section: 259 entries
  6. ள, ன section: 6 entries

F06

[Version 2l (transitory): latest modification 2017/02/21, 14:30, Pondy time]

சொல்-4 (501 entries)

[TIPA file F06 (and pages 1-253 in volume printed in 2005)]

ப (CONTINUED from E05) section: 57 entries

பெயரெச்ச வினைக்குறிப்புமுற்று -

{Entry: F06__001}

அ) ‘அவர் தம்முளான் தரும தத்தன் என்பான்’ (சீவக. 242)

கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் ........ பொருநன் - ஆண்பால் (அக. 76)

‘குவளையே அளவுள்ள கொழுங்கணாள் அவளையே’ - பெண்பால் (சீவக. 243

‘புரி மாலையர் பாடினியரும்’ - பலர்பால்

இவை உயர்திணை முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்புமுற்று.

ஆ) ‘பெருவரை மிசையது நெடுவெள் ளருவி’ (குறு. 78)

‘தெரி நடைய மாகளிறு’

இவை அஃறிணை இருபாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்புமுற்று.

இ) ‘கண்புரை காதலேம் எம்மும் உள்ளாள்’

இது பெயரெச்சத் தன்மை யுளப்பாட்டுப்பன்மை வினைக் குறிப்புமுற்று.

ஈ) ‘உலங்கொள் தோளினை ஒருநின்னால்’

இது பெயரெச்ச முன்னிலைஒருமை வினைக்குறிப்புமுற்று.

உ) ‘வினை வேட்கையிர் வீரர் வம்மின்’

இது பெயரெச்ச முன்னிலைப்பன்மை வினைக்குறிப்புமுற்று.

பெயரெச்ச வினைக்குறிப்புமுற்று என்று ஈண்டுப் பெயரெச்சத் திற்குக் குறியிட்டு ஆளுதலே பொருந்துவதாம் என்க.

(தொ. சொ. 457 நச். உரை)

பெயரெச்ச வினையெச்சக்குறிப்பு மறை -

{Entry: F06__002}

கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் என்பதும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் என்பதும் பெயரெச்சக்குறிப்பு மறை யாதலும், சோறு(உ)ண்டாய் இருந்தது, சோறு ஆவதாய் இருந்தது - என்பனவற்றுக்குச் சோறு இன்றி - சோறு அன்றி - என்பன வினையெச்சக்குறிப்பு மறையாதலும் கொள்ளப் படும். (தொ. சொ. 238 நச். உரை)

பெயரொடு பெயர் தொக்க தொகை, வினை தொக்க தொகை -

{Entry: F06__003}

வினைத்தொகை பண்புத்தொகை உவமத்தொகை உம்மைத் தொகை அன்மொழித்தொகை என்பன ஐந்தும் பெயரொடு பெயர் தொக்க தொகைகளாம். வேற்றுமைத்தொகை பெய ரொடு பெயர்தொக்கு எழுவாயாயும் பெயரொடு வினை தொக்குப் பயனிலையாயும் வரும். சிறுபான்மை அன்மொழித் தொகை பெயரெச்சத்தொடர் முதலியவற்று அடிப்படை யிலும் தோன்றும்.

எ-டு :

யானைக்கோடு கிடந்தது - வேற்றுமைத்தொகை; மதிமுகம் வியர்த்தது - உவமத்தொகை; கொல்யானை நின்றது - வினைத் தொகை; கருங்குதிரை ஓடிற்று - பண்புத்தொகை; உவாஅப் பதினான்கு கழிந்தன - உம்மைத்தொகை; பொற்றொடி வந்தாள் - அன்மொழித்தொகை (தொ. சொ. 67 சேனா. உரை)

மாயோன் நிலங்கடந்தா ன் - பெயரொடு வினைதொக்குப் பயனிலை ஆயிற்று.

பாயின மேகலை பண்டையள் அல்லள்’ (கோவை. 234) : பெயரெச்சத்தொடர் அன்மொழித்தொகை ஆயிற்று.

வினையொடு பெயர் தொகுவது தொகையாகாது என்க.

‘பெயரொடும் வினையொடும் நடைபெற்று இயலு’தல் -

{Entry: F06__004}

பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றையே வெளிப்படுத்தி நடத்தல். இஃது இடைச்சொல் இலக்கணம்.

எ-டு : ‘ அதுகொல் தோழி’ (குறு.5), ‘ வருகதில் அம்ம’ (அக. 276) - என முறையே காண்க.

(கொல்லும் தில்லும் இடைச்சொற்கள்) (தொ. சொ. 251 நச். உரை)

பெயரொடு வரும் எண்ணிடைச்சொல் வினையொடு வருதல் -

{Entry: F06__005}

‘ம ண்டிலம் மழுங்க, மலைநிறம் கிளர,

வண்டினம் மலர்பரந்து ஊத , மிசையே

கண்டல் கானம் குருகினம் மொய்ப்ப’ - என்பது செவ்வெண்.

கற்றும் கேட்டும் கற்பனை கடந்தான் - என்பது உம்மைஎண்;. உண்ணவென்று உடுக்கவென்று பூசவென்று முடிக்கவென்று வந்தான் - என்பது ‘என்று’எண்;

உண்ணவென உடுக்கவெனப் பூசவென முடிக்கவென வந்தான் - என்பது ‘என’எண்.

உண்ண உடுக்கப் பூச முடிக்க என்று வந்தான், உண்ண உடுக்கப் பூச முடிக்க என வந்தான், ‘நன்னிதி பெருக நாடொறும் வாழ்க வென்று, உன்னுமிவ் வேட்கை ஒழிந்தனர் இலரே’ -

என்று, என என்னும் எண்ணிடைச் சொற்கள் ஒரோவழி நின்றும் பிரிந்தன.

பிறவற்றுள்ளும் ‘ஒரோவழி பிரிந்து நின்று கூடுதல்’ ஏற்பன கொள்க.

‘சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், இருவரும் வந்தமை யால் கலியாணம் பொலிந்தது’ - என வினைச்செவ்வெண் தொகை பெற்றது என்பாருமுளர். தொகைச்சொல் பெயராத லின் அறுவகைப் பெயர்களொடு பொருந்தி இருபெய ரொட்டா மன்றி வினையொடு பொருந்தாமையானும், இங்ஙனம் இருவர் என்னும் தொகை சாத்தன் கொற்றன் ஆகிய இருவர் - எனப் பெயர்த்தொகை ஆதலானும் அது பொருந்தாது. (நன். 430 சங். உரை)

பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் போல்வன -

{Entry: F06__006}

கொற்றன் - சாத்தன் - போல்வார்க்குப் பெருமைப்பண்பே இல்லை. அப்பண்பினை ஏற்றியுரைப்பது முகமனாம். ஆகவே, வழக்கின்கண் புகழுமிடத்துப் பெருங்கொற்றன் பெருஞ் சாத்தன் - என்பன இல்குணம் அடுத்து உயர்த்துக் கூறுதலான் வரும் வழுவமைதி. (தொ. சொ. 27 சேனா. உரை)

பெருமைப்பண்பு உணர்த்தும் உரிச்சொற்கள் -

{Entry: F06__007}

தட கய நளி - என்னும் மூன்றும் பெருமைப் பண்புணர்த்தும் உரிச்சொற்களாம்.

எ-டு : ‘வலிதுஞ்சு தடக்கை’ (புற. 394) ‘கயவாய்ப் பெருங்கை’ (அக. 118) ‘நளிமலை நாடன்’ (புற. 150) (தொ. சொ. 320 சேனா.உரை)

பெருவண்ணான், பெருங்கொல்லன் -

{Entry: F06__008}

பெருவண்ணான் பெருங்கொல்லன் - என வழக்கின்கண் இனம் சுட்டாது வந்தவால் எனின், பண்பாவது தமக்குள்ள தோர் இயல்பு; ஈண்டு அப்பெருமை இயல்புஅன்மையான் அஃது உயர்த்துச்சொல்லுதற்கண் வந்தது. (தொ. சொ. 18 தெய். உரை)

பேடி, அலி : விளக்கம் -

{Entry: F06__009}

ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சத்தின் ஆண்மை யின் திரிந்தாரைப் பேடி என்ப ஆகலின். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி என்றுணர்க. அலி மூவகைப்படும், ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்தன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்தன்மை இழந்ததூஉம், பெண்பிறப்பில் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண் போலத் திரிவதூஉம் என. அவற்றுள் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது இப் பேடி என்னும் சொல்லொடு தொடரும் வினைச்சொல் உயர்திணை ஆண்பால் அறிசொல்லானும் பலர் அறி சொல்லானும் ஒலிக்கும். (பேடிவந்தான், பேடியர் வந்தார்) (தொ. சொ. 4 தெய். உரை)

பேடியும் தெய்வமும் வினைகொள்ளுமாறு -

{Entry: F06__010}

பேடியும் தெய்வமும், இவையெனத் தம் பெயர்ப்பொருளை வேறுஅறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடைய சொற்களைத் தமக்கு உரிய அல்ல; உயர்திணை இடத்திற்குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும். அஃதாவது தாம் உயர்திணைப் பொரு ளாய் அவற்றின் ஈற்றினான் இசைக்கும். அவை வருமாறு:

பேடி வந்தாள் - பேடியர் வந்தார் - பேடிமார் வந்தார்

தேவன் வந்தான் - தேவி வந்தாள் - தேவர் வந்தார்

நரகன் வந்தான் - நரகி வந்தாள் - நரகர் வந்தார்

அலி வந்தான் - அலியர் வந்தார் - மகண்மா வந்தாள்.

(தொ. சொ. 4 நச். உரை)

பேடுகளில் சிறந்த இலக்கணமும் சிறவாத இலக்கணமும் -

{Entry: F06__011}

ஆண்இலக்கணமும் பெண்இலக்கணமும் விரவி ஒருவகை யேனும் நிரம்பாது நிற்கும் பேட்டினைப் பால் பொதுமையின் நீக்கி உயர்திணை ஆண்பாலொடும் பெண்பாலொடும் சேர்த்தார். அதனான், அவ்விலக்கணங்களுள் விட்ட இலக் கணமும் அவாவும் இலக்கணமும் சிறந்தன என்பதும், விடாத இலக்கணமும் அவாவாத இலக்கணமும் உள, அவை அத்துணைச் சிறப்பின அல்ல என்பதும் பெற்றாம். விடுதலும் அவாவுதலும் இலக்கணை. (அவை முறையே குறைதலையும் மிக்கிருத்தலையும் குறிக்கும்.) (நன். 264 சங்.)

பேடு பற்றிய செய்தி -

{Entry: F06__012}

பெண் தன்மையைவிட்டு ஆண்தன்மையை அவாவுவன வாகிய பேடுகள் ஆண்பாலாம்; ஆண்தன்மையைவிட்டுப் பெண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் பெண் பாலாம். இவை உயர்திணைமுடிபே யன்றி அஃறிணை முடிபும் கொள்ளும். வருமாறு : பேடு வந்தான், பேடுஇவன்; பேடு வந்தாள், பேடு இவள்; பேடு வந்தது, பேடு இது.

பேடு அழிதூஉ அலி மகண்மா - என்பன ஒருபொருட் கிளவி. அலி மகண்மா என்பனவற்றை வேறு கூறுவாருமுளர். (நன். 264 சங்.)

பேத சட்டி -

{Entry: F06__013}

சட்டி - ஆறாம் வேற்றுமை. இதன் பொருளானது, தற்கிழமை - பிறிதின் கிழமை - யாதானும் ஒரு நிமித்தம் பற்றிய கிழமை - என மூவகைப்படும். இவற்றை வட நூலார் முறையே 1. சமவாய சம்பந்தம்; 2. சையோக (ஸம்யோக) சம்பந்தம், 3. சொரூப சம்பந்தம் என்பர். இவற்றுக்கு எடுத்துக்காட்டு வருமாறு :

1. சாத்தனது கண் (சினை), நிலத்தது அகலம் (குணம்), சாத்தனது வரவு (தொழில்), எள்ளது குப்பை (சாதி - குழூஉ), எள்ளது சாந்து (விகாரம்) இவை தற்கிழமை

2. முருகனது வேல் (பொருள்), முருகனது குறிஞ்சி (இடம்), வெள்ளியது ஆட்சி. (காலம்) - இவை பிறிதின்கிழமை.

3. சாத்தனது செய். (செய் முதலியன ஒருவர்க்கு முன் உரிiமையாய்ப் பின் வேறொருவர்க்கு உரிமையாய் வருதலின் ‘நிலைமை இல் உடைமை’ யாம் என்னும் இலக்கணக் கொத்து.) (பி. வி. 17)

பொது அசைகள் -

{Entry: F06__014}

யா கா பிற பிறக்கு அரோ போ மாது - என்னும் இடைச் சொற்கள் ஏழும் மூவிடத்துக்கும் உரியவாய் வருதலின் பொதுஅசைநிலைகளாம் இடைச்சொற்கள்.

எ-டு:

யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியற்கு’, ‘புற நிழற் பட்டாளோ இவளிவட் காண்டி கா (கலி. 99), ‘தான் பிற வரிசை அறிதலின்’ (புறநா. 140) ‘நசை பிறக்கு ஒழிய’ (புறநா. 15) ‘நோதக இருங்குயில் ஆலு மரோ (கலி. 33), ‘பிரியின் வாழாது என் போ தெய்ய’ ‘விளிந்தன்று மாத வர்த் தெளிந்தஎன் நெஞ்சே’ (நற்.178) எனவரும்.

‘சிறிது தவிர்ந்தீக மாள ’, ‘ சொல்லேன் தெய்ய ’, ‘அறிவார் யாரஃ திறுவுழி இறு கென ’, ‘அஞ்சுவ தோரும் அறனே’ (கு. 366), ‘செலீஇயர் அத்தை நின் வெகுளி’ (புறநா. 6) ‘செழுந்தே ரோட்டியும் வென் றீ ’, ‘காதல் நன்மா நீம ற் றிசினே , ‘பணியு மாம் என்றும் பெருமை’ (கு. 978) ‘ஈங் கா யின வால் என்றிசின் யானே’ (நற்.55) ‘குரைபுனல் க ன்னிகொண் டிழிந்த தென்ப வே’ (சீவக. 39), ‘சேவடி சேர் து மன்றே (சீவக. 1) - என வரும் மாள - தெய்ய - என - ஓரும் - அத்தை - ஈ - இசின் - ஆம் - ஆல் - என்ப- அன்றே - என்பனவும் பொது அசைச்சொற்கள் என்பார் நச்சினார்க்கினியர். (தொ. சொ. 281, 298 நச். உரை)

‘அத்து அந்தில் அன்று அம்ம ஆங்க அரோ ஆம் இல்

இட்டு இடும் குரை கா இருந்து இன்று ஓரும்

இன் தம் தான் நின்று தில் பிற பிறக்கு

மன் மா மன்னோ மாது யா மாதோ

போலும் போம்’

எனப் பொது அசை முப்பதாம். (தொ.வி. 137 உரை)

பொது இடைச்சொற்கள் -

{Entry: F06__015}

இரக்கப் பொருளையும் இகழ்ச்சிப் பொருளையும் அச்சப் பொருளையும் அதிசயப் பொருளையும் தருகிற இடைச் சொற்கள் உள.

‘அம்மருங்கிற்கு அன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ’, ‘ஓஒ உழக்கு ம் துயர்’, ‘ஐயோ என்செய்வேன்’ என வரும். அன்னோ, கொல்லோ, ஓஒ, ஐயோ : இவை இரக்கப் பொருள.

‘ஏஏ, சீசீ : இவை இகழ்ச்சிப் பொருள.

கூகூ கொன்றான், ஐயையோ திருடன் வந்தான் - என வரும்

- கூகூ, ஐயையோ : இவை அச்சப் பொருள

ஆஅ இதனை எப்படி அறிந்தான்! ஓஒ நன்றாய்ச் சொன்னான்! அம்மம்மா எப்படிப்பட்ட கூத்து! என வரும்.

ஆஅ, ஓஒ, அம்மம்மா : இவை அதிசயம்.

அன்றியும் இத்தொடக்கத்தன பலவுள ஆயினும் அவற்றை நிகண்டு திவாகரம் முதலியவற்றின்கண்ணே காண்க. (தொ.வி. 137 உரை)

பொதுஇயல்பு ஆறனையும் முற்று ஏற்றல் -

{Entry: F06__016}

வினைக்கெல்லாம் பொதுவாகச் சொன்ன கருத்தன் - கருவி - நிலம் - செயல் - காலம் - செய்பொருள் - என்னும் இவ்வாறு பொருளையும் காட்டிப் பொருட்பெயர் முதலான ஆறு பெயரையும் ஏற்றுப் பின்னர் வேறொன்றையும் வேண்டாது நிற்பன முற்றுவினைச்சொல்லாம்.

வனைந்தனன் என்புழிக் குயவன், மண்ணும் தண்டசக்கரமும் முதலாயின, வனையுமிடம், வனைதல்தொழில், இறந்தகாலம், குடம் முதலியன - எனப் பொதுவியல்பு ஆறும் தோற்றின.

செய்தனன் அவன், செய்தனள் அவள், செய்தனர் அவர், செய்தது அது, செய்தன அவை; செய்தனன் யான், செய்தனம் யாம்; செய்தனை நீ, செய்தனிர் நீயிர். இவ்வாறே செய்கின்றனன் அவன் - செய்குவன் அவன் - முதலாக ஏனைக் காலங்களொடும் ஒட்டுக. குழையினன் அவன் - முதலாகக் குறிப்புவினைமுற்றும் கொள்க.

பொருட்பெயரேயன்றி, குளிர்ந்தது நிலம் - வந்தது கார் - இற்றது கை - பரந்தது பசப்பு- வந்தது போக்கு - என இடம் காலம் சினை குணம் தொழிற்பெயர்களொடும் ஒட்டுக. (நன். 322 மயிலை.)

பொதுஎழுத்தான் வரும் வடசொல் -

{Entry: F06__017}

ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவான எழுத்துக்களான் வரும் வட சொற்கள் அமலம் இராகம் உபமம் ஏகம் ஓது (பூனை) கமலம் கீர்த்தி குங்குமம் கோபம் சரணம் சிக்கணம் சஞ்சு (பறவை மூக்கு) சௌளம் ஞானம் ஞேயம் (இ)டங்கணம் தமாலம் தாரம் திலகம் தீரம் நாமம் நீலம் நூனம் பானம் பீனம் புராணம் மனம் மானம் மீனம் மூலம் மௌனம் யானம் யூபம் யோகினி யௌவனம் (இ)ராவணன் (உ)ரூபம் (உ)ரோமம் (இ)லிபி (உ)லூகம் (இ)லேபம் (உ)லோபம் வாரம் வீரம் வேணு வைரம் என்றல் தொடக்கத்தன. (நன். 273 மயிலை.)

பொதுச்சொல் அல்லன பொதுச்சொல் போலப் பெயரிடுதல் -

{Entry: F06__018}

பொதுச்சொல் அல்லனவும் சேரி தோட்டம் - முதலிய பெயர்ச் சொற்கள் போலத் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் அரசர் பெருந் தெரு - ஆதீண்டு குற்றி - வயிரக் கடகம் - எனப் பெயரிடப் பெறுதலுமுண்டு. (தொ. சொ. 49 நச். உரை)

பொதுச்சொல் பொதுவினையே பெறுதல் -

{Entry: F06__019}

அடிசில் என்பது, உண்பன தின்பன பருகுவன நக்குவன - என்பவற்றிற்கெல்லாம் பொதுவான பெயர். இயம் என்பது, கொட்டுவன எழுப்புவன ஊதுவன - என்பனவற்றிற் கெல்லாம் பொதுவான பெயர். படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவன - என்பவற்றிற்கெல்லாம் பொதுவான பெயர். இவை பொதுவினைகளையே கொண்டு முடிதல் வேண்டும். அவை வருமாறு :

அடிசில் அயின்றார் - மிசைந்தார் - எனவும், அணி அணிந்தார் - மெய்ப்படுத்தார் - எனவும், இயம் இயம்பினார் - படுத்தார் - எனவும், படை வழங்கினார் - தொட்டார் - எனவும் பொது வினையாற் கூறுக. இவற்றை ஒன்றன் சிறப்பு வினையான் முறையே பருகினார் - கவித்தார் - ஊதினார் - எறிந்தார் - என்றாற் போலக் கூறின் வழுவாம்.

(தொ. சொ. 46 சேனா. உரை)

பொதுப்பெயர்கள் : ‘இன்னன’ -

{Entry: F06__020}

‘இன்னன’ என்றதனால், சூரியன் உதித்தான் - சூரியன் உதித்தது, சந்திரன் உதித்தான் - சந்திரன் உதித்தது - என ஒன்றையே உயர்திணையாக்கியும் அஃறிணையாக்கியும் கூறும் பொதுப் பெயர் முதலியனவும், ஊமை வந்தான் - ஊமை வந்தாள் - என உயர்திணை இருபாலையும் உணர்த்தும் பொதுப்பெயர் முதலியனவும், தன்மை முன்னிலை வினையாலணையும் பெயரும் பிறவும் கொள்க. (நன். 282 சங்.)

பொதுப்பெயர் பொதுவினைகள் வழக்குப் பற்றி ஒரு பாலையே காட்டுதல் -

{Entry: F06__021}

‘பெயரினும் தொழிலினும் பிரிபவை வழக்குவழிப் பட்டன ஆதல்’ காண்க.

பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கல் -

{Entry: F06__022}

திணைபால்இடம்காலங்கட்குப் பொதுவான பெயர் வினை களின் பொதுமையை மேலே வரும் சிறப்புப்பெயர்களும் சிறப்பு வினைகளும் நீக்கி ஒன்றற்கு உரிமை உடையதாக்கும்.

சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது; சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது - பெயர் திணைப்பொதுமையைச் சிறப்புப் பெயரும் வினையும் வந்து நீக்கின.

ஒருவர் என் ஐயர், ஒருவர் என் தாயர் உயர்திணைப் பெயரினது (ஆண்பெண்) பாற்பொதுமையைச் சிறப்புப்பெயர் வந்து நீக்கிற்று.

மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன; மரம் இது, மரம் இவை: அஃறிணைப் பெயரினது (ஒன்று பல என்னும்) பாற் பொதுமையைச் சிறப்புவினையும் பெயரும் வந்து நீக்கின.

அவரெல்லாம் இருந்தார், நாமெல்லாம் வருவம், நீவிரெல் லாம் போமின்: பெயரிடப்பொதுமையைச் சிறப்புப் பெயரும் வினையும் வந்து நீக்கின.

வாழ்க அவன் - அவள்-அவர்-அது- அவை, யான் - யாம், நீ -
நீயிர் : வினைமுற்றுத் திணைபால் இடப் பொதுமையைச் சிறப்புப் பெயர் வந்து நீக்கின.

உண்டு வந்தான் - வந்தாள் - வந்தார்- வந்தது - வந்தன, வந்தேன் - வந்தேம், வந்தாய் - வந்தீர், வருகிறான்- வருவான் : வினை யெச்சத் திணைபால் இட காலப் பொதுமையைச் சிறப்பு வினை வந்து நீக்கின. (நன். 359 சங்.)

பொதுப்பெயர் வினையால் பால் தெரிதல் -

{Entry: F06__023}

செய்யும் என்னும் வாய்பாட்டுப் பொதுவினையான் அமைவன சில வினைகள், உயர்திணைஒருமை தோற்றுதலு முண்டு; சிறுபான்மை அஃறிணை ஒருமை தோற்றுதலுமுண்டு. (தொ. சொ. 169 தெய். உரை)

எ-டு : சாத்தன் யாழ்எழூஉம், குழல் ஊதும், பாடும்;

சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும்;

சாத்தி சாந்தரைக்க, சாத்தன் யாழ் எழூஉக.

யாழ்எழூஉதல், குழல்ஊதுதல், சாந்தரைத்தல், பூத்தொடுத்தல் - முதலியன உயர்திணை செய்தற்குரிய வினையாதலின், இவ் வினைகள், இருதிணைக்கும் பொதுவான செய்யும் என்னும் முற்றும் வியங்கோள்முற்றும் ஆகிய இவற்றான் அமையினும், உயர்திணை ஒருமையையே சுட்டும். (தொ. சொ. 175 நச். உரை)

சாத்தன் புல்மேயும்; சாத்தி புல்மேயும் - என்புழி, புல்மேய்தல் பசு எருமை ஆடு - முதலியவற்றின் தொழிலாம். ஆகவே செய்யும் என்னும் முற்றுச் சிறுபான்மை அஃறிணையையும் சுட்டும். (தொ. சொ. 169 தெய். உரை)

பொதுமொழி -

{Entry: F06__024}

‘ஒரு பெயர் தனக்கே பலவிதி வருமே’ என்ற பாயிரப் பகுதியில், தனிமொழி - தொடர்மொழி - பொதுமொழி - என்ற மூவகை இலக்கணங்களை இலக்கணக் கொத்து விளக்கும். பொது மொழியாவது 1. ஒருகால் தனிமொழியாகவும் ஒருகால் தொடர்மொழியாகவும் அமைவது; 2. ஒருபொருளுக்கும் அப்பொருள் செய்வானுக்கும் பொதுவாக அமைவது;
3. உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுவாக அமைவது - எனச் சில திறப்படும்.

1. எட்டு - ஓர்எண்; எள் + து - எள்ளைத் தின்னு : முன்னது தனிமொழி; பின்னது தொடர்மொழி.

2. கவி - பாடல்; பாடல் இயற்றுபவன்

3. சாத்தன் வந்தான் - உயர்திணை ஆண்பால்

சாத்தன் வந்தது - அஃறிணை ஆண்பால்

இனி வாழ்க என்னும் வியங்கோள் வினைமுற்றுச்சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாயிற்று. (இ. கொ. 6)

எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாராநின்றான், உரைத்திட்டான் - என்றாற்போல்வன பொது மொழிகள். இவை ஒரு மொழிகளாய் நின்று ஒரு பொருளைத் தந்தது மன்றி, முறையே, எள்ளைத் து - கொள்ளைத் து - தாவுகின்ற மரை - வேகின்ற கை - எழுந்து பின் இருந்தான் - வந்து நின்றான் - உரைத்துப் பின் இட்டான் - எனத் தொடர் மொழிகளாய்ப் பலபொருள் தருதலும் காண்க.

(நன். 260 இராமா.)

பொதுவழிச் சந்தியும் அடங்காவழிச் சந்தியும் -

{Entry: F06__025}

இது தொடர்இலக்கணம். இலக்கணக்கொத்து நான்கு வகையாகச் சந்தியைக் கொள்ளும். அவை 1. வேற்றுமைச் சந்தி 2. அல்வழிச் சந்தி 3. அவையிரண்டும் அடங்கும் பொது வழிச் சந்தி 4. இம் மூன்றுள்ளும் அடங்காவழிச் சந்தி என்பன.

இங்கே பொதுவழிக் கொண்டதை விளக்குமுகத்தான் பொதுவாகும் பலவற்றை எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர்.

1. பொதுத்திணை : சொல்லமைப்பில் இருதிணைக்கும் பொதுவாயுள்ளது.

எ-டு : சாத்தன் வந்தான் (ஆடவன்), சாத்தன் வந்தது (காளை)

2. பொதுப்பால் : ஆண் பெண் இரண்டனையும் சுட்டும்
தெய்வம் முதலிய சொற்கள்.

3. பொதுப்பெயர் : ஒரு சாதிக்குப் பொதுவாக அமைந்த
மரம் முதலிய பெயர்கள். தென்னை, மா முதலியன சிறப்புப்பெயர்கள்

4. பொதுவினை : இருதிணை ஐம்பால் மூவிடங்களுக் கும் பொதுவாகும் வேறு, இல்லை, உண்டு - முதலிய வினைகள் பத்தும்.

5. பொதுக்காலம் : பொதுவினைகள் முக்காலங்களுக்கும் பொதுவாய்க் காலத்தைக் காட்டுதலின், இவை காட்டும் காலம் பொதுக்கால மாம்.

6. பொதுஎச்சம் : ஓடிய சாத்தன்; ஓடிய வந்தான் என்பன. முன்னது செய்த என்னும் பெயரெச்சம்; பின்னது செய்யிய என்னும் வினை யெச்சம்; இரண்டும் ஒரே வடிவின ஆதலின் பொது எச்ச மாயின.

7. பொதுமுற்று : செய்யும் என்னும் வாய்பாட்டு வினை முற்று

8. பொதுஇடம் : ‘இவன் சொன்ன சொல்’ என்ற படர்க்கை, தன்னைப் பிறன் போலக் கூறுமிடத்தும் முன் நின்றானை வெறுப்புக் காரணத்தால் பிறன்போலக் கூறுமிடத்தும். (வழுவமைதி) முறையே தன்மை முன்னிலைகளில் நிற்பது
பொதுவிடம். (உளப்பாட்டுத் தன்மை முன்னிலைகளையும் கொள்ளலாம்.)

1,2 வேற்றுமை அல்வழி - இரண்டும் வெளிப்படை; விளக்க வேண்டா.

3. அவையிரண்டும் அடங்கும் பொதுவழி; அது வருமாறு :

அல்வழி வேற்றுமை

அஞ்செவி அகமாகிய செவி செவியது அகம்

அங்கை அகமாகிய கை கையது அகம்

கரும்புவேலி கரும்பாகிய வேலி கரும்புக்கு வேலி

உரைநூல் உரையாகிய நூல் உரையையுடைய

உரைக்கும் நூல் நூல்

மதிமுகம் மதிபோன்ற முகம் மதியைப் போன்ற
மதிக்கும் முகம் முகம்

புலி கொன்றது : எழுவாய்த் தொடர் - அல்வழி

புலியைக் கொன்றது } வேற்றுமை

புலியால் கொல்லப்பட்டது.

முகமதி - முகமாகிய மதி முகத்தை ஒக்கும் மதி.

இவை இருவழியிலும் வருதலின் பொதுச்சந்தி.

4. அடங்காவழிச் சந்தி : அலி பேடு உலகம் தெய்வம் - முதலியன சொல்லால் அஃறிணை. அது பற்றி அலி வந்தது - என்பது போல அஃறிணை வினைகொண்டு முடியும். இவை பொருளால் உயர்திணை யாதலின் அலி வந்தான் - என்பது போல உயர்திணைவினைகொண்டும் (ஆண்பாலாக) முடியும். உலகம் - தெய்வம் - போன்றன ஈறு திரிந்து வாய்பாடும் வேறுபட்டு உலகர் பசித்தார் - தேவர் வந்தார் - எனவும் வரும். இவ்வாறு நேரிய முடிபு இன்மையின் இவை ‘அடங்காவழி’ எனப்பட்டன. இனி அடங்காவழிச் சந்திக்கு எடுத்துக் காட்டுக்கள் :

பொருபடை - பொருவதாகிய படை; கருங்குதிரை - கரியது குதிரை - இவையிரண்டும் பொருகின்ற படை - கரியதாகிய குதிரை - என விரிந்து வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஆம் என்பது தமிழ்மரபு.

படைபடை : நிலைமொழி வருமொழிச் சந்திக்குத் தனிப்பட்ட பொருளியைபு இன்மையின் அடங்கா வழி. இதனை அடுக்குத் தொடர் என்பது தமிழ்மரபு.

பஃபத்து : தனித்தனியே ‘பத்து பத்து’ என்ற பொருளன்றிப் ‘பத்தும் பத்தும் உறழ்ந்த’ அல்லது ‘பத்தாகிய பத்து’ என்ற பொருள்படாது.

‘வயிறு மொடுமொடு என்றது’ - என்ற ஒலிக்குறிப்புச் சொற்களுக்குத் தனிப்பொருள் இல்லை.

முன்றில் : ‘இல்முன்’ என்பது நிலைமாறி முன்இல் என்றாகிப் பொருள்நோக்கம் இல்லாமல் சந்தியால் விகாரம் உற்றது.

முயற்கோடு : முயலுக்குக் கோடு என்பது பொய்ப்பொருளா தலின், பொருட்பொருத்தம் இன்றியே சந்தி வந்தது.

சாத்தன் சோற்றைப் பகற்கண் பசித்து விருந்தோடு உண்டான்: நிலைமொழி வருமொழிகளிடைப் பொருட்பொருத்த மில்லை.

இவையாவும் அல்வழிக்கண் அடங்கும் என்ப. (இ. கொ. 118)

பொது விளிஉருபு -

{Entry: F06__026}

உயர்திணை - அஃறிணை - பொது - என்னும் மூவகைப் பெயர்க்கண்ணும் இயல்பாதலும் ஏகாரம் மிகுதலும் இகரஈறு ஈகார ஈறாய்த் திரிதலும் பெரும்பாலும் விளியுருபாம்.

எ-டு : முனி கூறாய், வேந்து கூறாய்; முனியே கூறாய், வேந்தே கூறாய்; நம்பீ கூறாய் - உயர்திணை; விள கொடியை, புறா கொடியை; விளவே கொடியை, புறாவே கொடியை; மந்தீ கொடியை - அஃறிணை; ஆண் கூறாய், பெண் கூறாய்; ஆணே கூறாய், பெண்ணே கூறாய்; சாத்தீ கூறாய் - பொது. (நன். 305)

பொதுவினைகள் -

{Entry: F06__027}

திணைபால்இடம்காலங்களில் ஒன்றற்கு உரியவும் பொதுவு மாய் நிற்பன அன்றிப் பிறவழியால் ஒன்றற்கு உரியவும் பொதுவுமாய் வருவனவும் சில உள.

பிரிவர், ஆடுவர்: தன்வினைக்கே உரியன.

பிரிப்பர், ஆட்டுவர்: பிறவினைக்கே உரியன.

‘தேற்றா ஒழுக்கம்’ (நாலடி 74) - ‘நட்பாடல் தேற்றாதவர்’ கு.187)

அவனைத் தேற்றிக் கொடுத்தான் - அவளைத் தேற்றிப் பிரிந்தான் - எனவரும் ‘தேற்று’ என்பதும், ‘தொல்காப்பிய னெனத் த ன்பெயர் தோற்றி’ (தொ.சி.பா.) இவன் வெளுத்தான் - என்பனவும் தன்வினை பிறவினை இரண்டற்கும் பொதுவாம்.

உண்பான், உறங்குவான் - என்பன விதிவினை (உடன்பாடு); உண்ணான், உறங்கான் - என்பன மறைவினை (எதிர்மறை). செய்யாய், செய்யீர், ‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ (கு. 196), அருச்சிக்க வல்லார், வல்லார் திறை கொள்வர் - வல்லார் திறை கொடுப்பர் - விசும்பிலார், காவலார், அருளார் - என்றாற் போல்வன விதி மறை இரண்டிற்கும் பொதுவாயின.

புலி கொன்ற யானை, மீன் விழுங்கினவர், ஒன்னார் வணங்கி னான் அவன், அவன் விரும்பினவன் இவன், அறிந்து வந்தான், ‘தவரடி புனைந்த தலைமையோன்’ - என்றாற் போல்வன செய் வினை செயப்பாட்டுவினை இரண்டிற்கும் பொதுவாயின.

தேடிய பொருள் - தேடிய வந்தான், ஓடிய புரவி - ஓடிய விழைந்தான், கூடிய தலைவன் - கூடிய வந்தான் - என்றாற் போல்வன சொல்லொன்றே பெயரெச்சமும் வினையெச்சமும் ஆயின. (இ. கொ. 85)

யானுண்டு, யானுண்டு வந்தேன்; யான் வந்து, யான் வந்து போனேன்; யான் சென்று, யான் சென்று மீண்டேன் - என்பன சொல் ஒன்றே முற்றுவினையும் வினையெச்சமும் ஆயின. யான் உண்டு, வந்து, சென்று என்பன யானுண்டேன் - வந்தேன் - சென்றேன் - என்பது பட நின்ற தன்மைஒருமை இறந்தகால வினைமுற்றுக்கள். (நன். 322 இராமா.)

வேறு இல்லை உண்டு யார் வேண்டும் தகும் படும் வினை யெச்சம் பெயரெச்சம் வியங்கோள் - ஆகிய பத்தும் பொது வினைகளாம். ‘திணைபால்இடம் எல்லாம் செல்லும் வினைகள்’ காண்க.

அ) ‘வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன.’ நன். 339

ஆ) யார் - தொல்காப்பியர்காலத்து உயர்திணைப் பொதுக் குறிப்புவினை; பிற்காலத்துத் திணைபால்இடப் பொது ஆயிற்று.

இ) பெயரெச்சமும் வினையெச்சமும் பொதுவாயினமை அனைவர்க்கும் உடன்பாடு

ஈ) ‘உண்டு’ என்னும் வினையின் இலக்கணம் தனித்தலைப் பிற் காண்க.

உ) வேண்டும் தகும் படும் - என்பன முற்றிற்கும் எச்சத்திற்கும் பொதுவான செய்யும் என்னும் வாய்பாடன்று. ‘ஓஒதல் வேண்டும்’ (கு. 653) எனப் பல்லோர்படர்க்கையிலும் வருவது காண்க. இம்மூன்றும் ஒருபொருட் சொற்கள்; தொழிற் பெயர்கள்; தேற்றப்பொருள் தருவன. அஃதாவது இக்காரியம் செய்தலே தக்கது, தகுதி, பொருத்தம், துணிவு, தெளிவு, நன்மை, அமைதி, முடிபு, வேண்டுவது; இது செய்யாமை வழுவே, இழிவே, தீமையே, சிறுமையே, குற்றமே எனப் பொருள்படுதல். (இ. கொ. 85)

பொதுவினையின் பொதுமை நீக்கல் -

{Entry: F06__028}

சாத்தன் இவன் - சாத்தன் இது - எனவும், சாத்தன் வந்தான் - சாத்தன் வந்தது - எனவும் பெயர்த்திணைப்பொதுமையைச் சிறப்புப்பெயரும் வினையும் வந்து நீக்கின. ஒருவர் என் ஐயர் - ஒருவர் என் தாயர் - எனவும், மரம் வளர்ந்தது - மரம் வளர்ந்தன - எனவும் பெயருள் பாற்பொதுமையைச் சிறப்புப்பெயரும் வினையும் வந்து நீக்கின. அவரெல்லாம் இருந்தார் - யாமெல்லாம் வருவோம் - நீயிரெல்லாம் போமின் எனப் பெயரின் இடப் பொதுமையைச் சிறப்புப்பெயரும் வினையும் வந்து நீக்கின. வாழ்க அவன் - அவள் - அவர் - அது - அவை - யான் - யாம் - நீ - நீர் - எனவும், உண்டு வந்தான் - வந்தாள் - வந்தார் - வந்தது - வந்தன- வந்தேன் - வந்தேம் - வந்தாய் - வந்தீர் - எனவும், உண்டு வருகின்றான் - வருகின்றாள் - வருகின்றார் - வருகின்றது - வருகின்றன - வருகின்றேன் - வருகின்றேம் - வருகின்றாய் - வருகின்றீர் - எனவும், உண்டு வருவான் - வருவாள் - வருவார் - வருவது - வருவன - வருவேன் - வருவேம் - வருவாய் - வருவீர் - எனவும்,

வினையின் திணைபால்இடம்காலப் பொதுமையைச் சிறப்புப் பெயரும் வினையும் வந்து நீக்கின. (நன். 400 இராமா.)

பொதுவினையே சிறப்புவினையுமாய் இருத்தல் -

{Entry: F06__029}

சோறும் கறியும் ஊனும் துவையும் நீரும் உண்டான் என்ற விடத்து உண்டான் என்பது பொதுவினை; சோறு உண்டான் என்புழி அது சிறப்புவினை. (தொ. சொ. 47 நச். உரை)

பொருட்குப் பொருள் தெரிதல் -

{Entry: F06__030}

உறு என்பதற்கு மிகுதி என்று பொருள் கூறின், மிகுதி என்ப தற்குப் பொருள் யாது என்று வினவுதல். இவுளி என்பதற்குக் குதிரை என்று பொருள் கூறின், குதிரை என்பதற்குப் பொருள் யாது என்று வினவுதல்.

இப்படி ஒரு சொல்லை ஒரு சொல்லானும் பல சொல்லானும் பொருளுணர்த்தியவழிப் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருள் தெரியுமாயின், அங்ஙனம் தெரிதல் வரம்பின்றி ஓடும். அதனால் பொருட்குப் பொருள் தெரியற்க. (தொ. சொ. 391 நச். உரை)

பொருட்குறை கூட்டல் -

{Entry: F06__031}

பொருளைச் சொல் இன்றியமையாத குறைபாடு தீரப் பொருளை அதனொடு கூட்டியுரைத்தல். (தொ. சொ. 396 நச். உரை)

பொருண்மை சுட்டல் -

{Entry: F06__032}

பொருண்மை - பொருள் தன்மை. அஃதாவது அப்பொருளின் சாதித் தன்மை. ஆ என்னும் பொருள் கெட்டதேனும் அவ்வாவினது சாதித்தன்மை எக்காலத்தும் கெடாது நிற்கும் என்பதற்கு ‘ஆ உண்டு’ என்றார். கட்புலனாகிய ஆவானது கெடவும் அச்சாதித்தன்மை கெடாது என்பது தோன்றப் ‘பொருண்மை சுட்டல்’ என்றார்.

எ-டு : ஆ வுண்டு. (தொ. சொ. 67 நச். உரை)

பொருண்மை தெரிதல் -

{Entry: F06__033}

சொற்களைக் கொண்டு சொல்லின் வேறாகிய பொருளின் தன்மை அறியப்படுதல். சாத்தன் என்ற சொல் ஆண்மகனையும் ஆண்விலங்கினையும், சாத்தி என்ற சொல் பெண்ஒருத்தியை யும் பெண்விலங்கினையும் அறியச் செய்தல் போல்வன.

(தொ. சொ. 158 நச். உரை)

பொருள் தெரிதல் என்பதே மை விகுதி அடுத்துப் பண்புப் பெயராகியவழியும் பண்பை உணர்த்தாது பண்புடைய பொருளை உணர்த்திற்று.

சொல்லின் வேறாகிய பொருள்தன்மை அறியப்படுதல் பொருண்மை தெரிதலாம். பெயர் வினை இடை உரி - என நால்வகைச் சொல்லின்கண்ணும் பொருண்மை தெரியலாம்.

எ-டு : சாத்தன் - வந்தான் - பண்டு காடு மன் - உறு கால்.

(தொ. சொ. 156 சேனா. உரை)

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் -

{Entry: F06__034}

சொல்லினின்றும் வேறான பொருள் அறிப்படுதலும், பொருள் அறியப்படாது அச்சொல்தானே அறியப்படுதலும் என்னும் இவ்விரண்டும் சொல்லினான் ஆகும்.

எ-டு : சாத்தன் - வந்தான். ( பண்டு காடு) மன் - உறு (கால்) : இவை பொருள் உணரப்பட்டன.

‘தஞ்சக் கிளவி’(266), ‘கடியென் கிளவி’ (383), - பொருள் உணரப்படாமல் தஞ்சம், கடி - என்னும் அச்சொற்கள்தாமே உணரப்பட்டன. (தொ. சொ. 156 சேனா. உரை)

நிலம் என்பது பொருளின்தன்மை ஆராய்வாருக்கு மண்ணி னான் இயன்றதொரு பூதம்; சொல்லின்தன்மை ஆராய் வாருக்குப் பெயர்ச்சொல்லாயிற்று. (தொ. சொ. 152 தெய். உரை)

பொருண்மை நிலை -

{Entry: F06__035}

பொருளின் தன்மையைத் தெரிதல் (நச்). பொருள்நிலை என்பது மைவிகுதி அடுத்துப் பொருண்மைநிலை என்றா யிற்று. இது சொல் மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றலும், சொல்லொடு கூடிய குறிப்பான் தோன்றலும் என இரண்டு கூற்றை யுடையது.

எ-டு : அவன், வந்தான்: வெளிப்படை. ‘ஒருவர் வந்தார்’ என்புழி ஆண் பெண் என்பது குறிப்பான் தோன்றும்.

(தொ. சொ. 156, 157 சேனா. உரை)

பொருத்தப் புணர்ச்சி முதலிய நான்கு -

{Entry: F06__036}

தொடர்மொழியில் புணர்நிலை வகை கூறும் இலக்கணக் கொத்துநூலுடையார், தகுதி முதலிய மூன்றும் (பொருந்தப்) புணர்வது புணர்ப்பு என்றார். அத் தொடரில் வரும் புணர்ச்சி பற்றிய விளக்கம் இது. புணர்ச்சி நான்காமாறு :

1. பொருத்தப் புணர்ச்சி: தொல்காப்பியம் வீரசோழியம் நன்னூல் நேமிநாதம் இலக்கணவிளக்கம் ஆதிய நூல்களில் விரித்துக் கூறப்பட்டுள்ளது.

2. பொருத்தமில் புணர்ச்சி ; அ) பொருள்கோள் ஒன்பதனுள், ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் பொருத்தப் புணர்ச்சி யாவன. மற்ற ஏழும் பொருத்தமில் புணர்ச்சியாம்.

ஆ) மரூஉ மொழி : நுனிக்கொம்பர் கடைக்கண் அரைக்காசு முன்றில் - என மொழிகள் முன் பின்னாக நிற்றல்.

இ) பொய்யுரை : மலடிமகன் முயற்கொம்பு ஆகாயப்பூப் போன்றன.

ஈ) சில இடைப்பிறவரல் : பொருந்தாது வரும் சில இடைப் பிறவரலான தொடர்கள் : ‘வல்லம் எறிந்த மல்லல் யானைப் பெருவழுதி’ என்றலே முறை; இடையில் ‘நல்லிளங் கோசர் தந்தை’ என வரல் (வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி) பொருந்தாத இடைப்பிற வரலாம்.

உ) ‘இனிய உளவாக ........... தற்று’ (கு. 100) : இதன்கண் இனிய கனி - இன்னாத காய் எனப் பின்னும் பிரித்துப் பொருத்தல் பண்புப் பொருத்தம். (குறட்பாவில் இப்பொருத்த மில்லை.)

ஊ) அதிகாரம் முதலியவற்றால் மொழி வருவித்து முடிக்கும் அனைத்தும் பொருத்தமில் புணர்ச்சியேயாம்.

இதுகாறும் பதத்தொடு பதம் புணர்ந்த பொருத்தமில் புணர்ச்சி. இனிப் பதத்தொடு விகுதிமுதலியன பொருந்தும் பொருத்தமில் புணர்ச்சி வருமாறு:

எ) கொடிச் சேவலான், செய்த வேள்வியர் (திவ். பிர. 3187), கொண்ட பகைவன், உடை மரவுரியன் - என்பன. சேவற் கொடியான் - வேள்வி செய்தவர் - பகை கொண்டவன் - மரவுரி யுடையன் - என்று விகுதி பொருந்தலே முறை; மாறி வருவன பொருத்தமில் புணர்ச்சியாம்.

ஏ) ‘செல்வத்துள் எல்லாம் தலை’ (கு. 411), ‘நடுவூருள் நச்சு மரம்’
(கு. 1008) என்பன செல்வம் எல்லாவற்றுள்ளும் - ஊர் நடுவுள் - என உருபு பொருந்தலே முறை; மாறி வருவன பொருத்தமில் புணர்ச்சியாம்.

ஐ) ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரி த்தே’ (தொ.எ. 35) என்பதில், உம்மை ‘நிலையிடையும்’ என்று புணராமல் ‘குறுகலும்’ எனப் புணர்ந்தது பொருத்தமில் புணர்ச்சியாம்.

சாத்தன் வருதற்கு உரியனும் ஆவன்; இதில் உம்மைப் பொருள் விளங்க ‘வருதற்கும் உரியன் ஆவன்’ எனப் புணர்வதே பொருத்தம்; அங்ஙனம் புணராதது பொருத்தமில் புணர்ச்சியாம்.

ஓ) ஒன்றினை யுணர்ந்தான், இரண்டினை இழந்தான் - என வரும் எண்ணுப்பெயர்கள், ‘எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்’ (தொ.எ. 198) என்னும் நூற்பா விதிப்படி ஒன்றனை இரண்டனை - என்றிருத்தலே பொருத்தம்; மாறியிருப்பது பொருத்தமில் புணர்ச்சியாம்.

3. ஒருங்கியல் புணர்ச்சி - பொருத்தப் புணர்ச்சியும் பொருத்த மில் புணர்ச்சியும் ஆகிய இருவகையும் ஒருங்கியல் புணர்ச்சி. வருமாறு:

வாளான் மருவாரை மாய வெட்டினான், அறத்தை அழகுபெறச் செய்தான், ‘நீலமயில் ஏறிவரும் ஈசனருள் ஞானமதலை’

இவை போல்வன ஒருகால் பொருந்தும்; ஒருகால் பொருந்தா. முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்குமிடையே அண்மை நிலை கெடாது ஒரு சொல்லும் இரு சொல்லுமாக (ப்பொருளுணர்ச்சிக்கு இடர்ப்பாடின்றி) இடைப்பிறவரல் நிகழின் அது பொருந்தும். அவ்வகையால் முதல் இரண்டு எடுத்துக்காட்டும் பொருந்தும்; ஐயுருபு ஒருதலையாக வினையைக் கொண்டு முடிதற்கண் இடைப்பிறவரலால் இடர்ப்பாடு இல்லை. மூன்றாம் எடுத்துக்காட்டுள், ‘ஏறிவரும்’ என்னும் பெயரெச்சம் ஒருதலை யாக ‘ஞானமதலை’ என்னும் பெயரொடு முடியாது இடைப்பிற வரலாகப் புகுந்த ‘ஈசன்’ என்னும் பெயரொடு முடிந்து பொருள் கவர்த்தலின் அவ் வெடுத்துக்காட்டுப் பொருந்தாது.

4. வழுவுடைப் புணர்ச்சி : எழுத்தினுள் விலக்கியனவும், திணை வழு முதலியனவும்; இவற்றைத் தொல்காப்பியம் நன்னூல் முதலான நூல்கள் விரித்துக் கூறியுள்ளன. (இ. கொ. 106-110)

பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் -

{Entry: F06__037}

உலகும் உயிரும் பரமும் அநாதி; பதியும் பசுவும் பாசமும் அநாதி. உலகும் உயிரும் பசுவும் : பொருந்தும் பொருள்; பாச மும் பதியும் : பொருந்தாப் பொருள். மன்னுதல் - பொருத்தம்; மன்னாமை - பொருந்தாமை.

நிலையாப் பொருள் : சக்கரவர்த்தி இளமையும் நில்லாது.

மன்னாப் பொருளாவது இல்லாப் பொருள் என்னில், இல்பொருள் வழக்கின்று ஆதலின், மன்னாமைக்கு ஈண்டு இல்லாமை என்பது பொருளன்று. (தொ. சொ. 32 தெய். உரை)

பொருந்தும் விகுதிகள் பொருந்தல் -

{Entry: F06__038}

சில பகுபதங்களில் சில விகுதிகள் பொருந்தா; சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகளும் வரும். வருமாறு :

குழையன் - இஃது இகர விகுதி பெறாது.

செட்டி - இஃது அன் விகுதி பெறாது.

காதறை - இஃது இ, அன் - என்ற இரு விகுதியும் பெறாது.

வில்லினன், வில்லி - என அன் இ - என்ற விகுதி இரண்டு பெறும்.

(இ. கொ. 117)

பொருள் அல்லதனைப் பொருள் எனல் -

{Entry: F06__039}

மூவகைத் துணிவுகளுள் இஃது ஒன்று. அம்மூவகையும் வருமாறு:

1. பொருளைப் பொருள் எனல் : நிலம் நீர் நெருப்பு முதலிய பொருள்களை அது அதுவாகவே துணிதல்.

2. பொருள் அல்லதனைப் பொருள் எனல் : பித்தளையைப் பொன் என்றும், பழுதையை பாம்பு என்றும், சிப்பியை வெள்ளி என்றும், குற்றியை மகன் என்றும் துணிதல். இது பிரமை - மயக்கம் - அறியாமை - ஆம்.

3. இது பொருளன்று என்றறிந்தும் இதுவே பொருள் எனத் துணிதல். பிறன்ஒருவனை மாதாபிதாவாகத் துணிந்து திதி கொடுத்தலும், மண் மரம் செம்பு சிலை முதலானவற்றைத் தெய்வம் எனத் துணிந்து பூசை செய்தலும், வீட்டை அறிவிக்கும் மகனைக் கடவுள் எனத் துணிந்து அவன் கருத்தின்வழி நிற்றலும் போல்வன.

சொற்களும் பொருளாதலின் அவற்றிற்கும் இம் மூவகைத் துணிவும் கொள்க. இரண்டற்குமுள்ள ஒற்றுமையால் இது கூறப்பட்டது.

1. பெயர் முதலிய நால்வகைச் சொற்களையும் அது அதுவாகவே துணிதல், பொருளைப் பொருள் எனலாம்.

2. சொக்கலிங்கம் என்பது அழகிய லிங்கம் என்னும் காரணப் பெயராய் மதுரைச் சொக்கநாதப்பெருமானுக்கு இடுகுறிக் காரணப் பெயராயிற்று. இதனைச் சிவந்த ஆடை என்னும் பொருள்படச் ‘சேக் கலிங்கம்’ என்று துணிந்துகோடல். பொருளல்லதனைப் பொருள் எனலாம்

அடிஞானம் என்பது சிவபெருமானுடைய சீர்பாத ஞானம் எனவும், ஆன்மாவினுடைய அநாதி ஞானம் எனவும் பொருள் படுவது. இதனை மூலஞானம் எனத் துணிவதும் இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டு.

அத்துவிதம் என்பது சொற்பொருள் அளவில் இரண்டு அல்லாதது என்பது; ஆனால் ஒன்றன்று, தனித்துப் பிரித்துக் காண இயலாத இரண்டன் சேர்க்கையே அத்துவிதம் என்பது. இதனை ‘இரண்டிலை, ஒன்று’ எனத் துணிவதும் இவ்விரண்டாம் வகையே.

3. ‘மாணடி சேர்ந்தார்’ (கு. 3) என்ற முற்றைப் படுத்தலோசை யால் வினையாலணையும் பெயராய்க் கொள்வதும், ‘வேலொடு நின்றான்’ (கு. 552) என்ற உருபிடைச் சொல்லை, ‘ வேல்கொண்டு நின்றான்’ என வினைச்சொல்லாக (சொல் லுருபாக)க் கொள்வதும், ‘உழுது வாரான்’ என்பது வினை யின்மையாயினும் அதனை ‘உழுது வருதலைச் செய்யான்’ என (அகநிலைச் செயப்படுபொருளாக) வினையுண்மையாகவே கொள்வதும் - என்னும் இவை, இது பொருளன்று என்று அறிந்தும் இதுவே பொருள் எனலாம். ‘அறவினை யாதெனின் கொல்லாமை (கு. 321) என்பதில் எதிர்மறையை விதியாகவே கொள்வதும் அது.

எல்லாப் பொருள்களும் அவற்றை அறிவிக்கும் எல்லாச் சொற்களும் இம்மூன்றனுள் அடங்கும்.

பொருளைப் பொருள் எனலும், பொருளன்று என்று அறிந்தும் ஒரு காரணம் பற்றி இதுவே பொருள் எனலும் வழாநிலை. பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் வழு. இங்ஙனம் பிறழக்கோடற்குக் காரணம் அநாதியாகத் தொடர்ந்து வரும் புல்லறிவாண்மையே என்று குறள் வாயிலாக (331, 351 ஆம் குறள்கள்) ஆசிரியர் விளக்குகிறார். (இ. கொ. 122)

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் தொடர்ந்த பெயர் -

{Entry: F06__040}

தமன் நமன் நுமன் எமன் - என்றும், ஒருவன் என்றும், அவையத்தான் அத்திகோசத்தான் சங்கத்தான் - என்றும், பொருளன் பொன்னன் முடியன் - என்றும் வருமிவை பொருள் தொடர்ந்தன.

வெற்பன் பொருப்பன் சிலம்பன் நாடன் கானவன் குறவன் - என்றும், எயினன் மறவன் வேடன் - என்றும், புறவன் பொது வன் அண்டன் ஆயன் - என்றும், மகிழ்நன் ஊரன் வினைஞன் களமன் - என்றும், கொண்கன் சேர்ப்பன் துறைவன் படவன் பரவன் பரதவன் நுளையன் - என்றும், அருவாளன் சோழியன் கொங்கன் கன்னடன் கலிங்கன் தெலிங்கன் - என்றும், கருவூரான் மதுரையான் கச்சியான் கோழியான் மருவூரான் - என்றும், வானான் அகத்தான் புறத்தான் - என்றும், நிலத்தான் பிலத்தான் - என்றும் வரும் இவை இடம் தொடர்ந்தன.

ஈராட்டையான் மூவாட்டையான் - என்றும், காரான் கூதிரான் - என்றும், தையான் மாசியான் - என்றும், மூலத்தான் பூசத்தான் ஓணத்தான் - என்றும், நெருநலான் இன்றையான் முற் காலத்தான் இக்காலத்தான் - என்றும் வருமிவை காலம் தொடர்ந்தன.

திணிதோளன் சுரிகுழலன் வரைமார்பன் செங்கண்ணன் அலைகாதன் - என்றும், குருடன் என்றும் வருமிவை சினை தொடர்ந்தன.

பெரியான் சிறியான் என்றும், அறிவன் புலவன் என்றும், பொன்னொப்பான் மணியொப்பான் என்றும், கூனன் குறளன் என்றும், கரியான் செய்யான் என்றும், மகன் மானிடவன் தேவன் நரகன் என்றும், அரசன் அந்தணன் வணிகன் வீரணுக்கன் கைக்கோளன் கணவாளன் என்றும், சேரன் சோழன் பாண்டியன் கங்கன் கட்டிமான் காடவன் கோனூர்- கிழான் தேனூர்கிழான் அம்பர்கிழான் வல்லங்கிழான் அரசூருடையான் பழையனூருடையான் என்றும், ஆசிரியன் படைத்தலைவன் சேனாவரையன் என்றும் வருமிவை பண்பு தொடர்ந்தன.

ஓதுவான் ஈவான் என்றும், உண்பான் உறங்குவான் கணக்கன் பிணக்கன் திருடன் - என்றும் வருமிவை தொழில் தொடர்ந் தன. (நன். 275 மயிலை.)

பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தல் -

{Entry: F06__041}

இது ‘சொற் பொருளுரைக்க ஏதுக்களாவன’ என இலக்கணக் கொத்துத் தரும் பதினைந்தனுள் ஒன்று. முன்பே தனக்கு வேண்டிய சொற்பொருளைக் கருதிக்கொண்டு பின்பு அப் பொருளுக்கேற்பச் சொற்பிரித்துச் சந்தி கூட்டுதல்.

‘தவரடி புனைந்த தலைமையோன்’ (சி. போ. பாயிரம் 11) : இத்தொடருக்குத் ‘தவருடைய அடியைப் புனைந்த அன்பிற் பெரியோன்’ என்றும், ‘தவத்தோராலே தன்னுடைய அடியைப் புனையப்பட்ட அறிவிற் பெரியோன்’ என்றும் உரைத்தல். (இ. கொ. 129)

பொருள்கோள் அடிமறி முதலிய நான்கனுள் அடங்குதல் -

{Entry: F06__042}

யாற்றொழுக்கும் அளைமறிபாப்பும் திரிவின்றிப் பொருள் படுதலின் இயல்பாம். கொண்டுகூட்டுச் சுண்ணமொழி மாற்றுள் அடங்கும். தாப்பிசையானது ‘பிரிநிலை வினையே’ (422) என்னும் சூத்திரத்துள் (ஓதப்பட்ட எஞ்சுபொருட் கிளவியாக) அடங்கும். (தொ. சொ. 405 தெய் உரை)

பொருள்கோள் எண்ணிக்கை -

{Entry: F06__043}

நன்னூலார், யாற்றுநீர் - மொழிமாற்று - நிரல்நிறை - விற்பூட்டு - தாப்பிசை - அளைமறிபாப்பு - கொண்டுகூட்டு - அடிமறி மாற்று - எனப் பொருள்கோள் எட்டு என்பர். (நன். 411 உரை)

பொருள்கோள் ஒன்பது என்பார் நேமிநாத நூலார். அவர் மேற்கூறியவற்றோடு அடிமொழிமாற்றையும் கொள்வர்.

(நேமி.எச்ச. 8)

பொருள்கோள் நான்கெனத் தொல்காப்பியர் நிரல்நிறை - சுண்ணம் - அடிமறி - மொழிமாற்று - என்பனவற்றையே குறிப்பர். (சொ. 404 சேனா.)

இறையனார் களவியல் உரைகாரர் விற்பூட்டு - விதலையாப்பு - கொண்டுகூட்டு - ஒரு சிறைநிலை - பாசி நீக்கம் - என ஐந்து என்பர். (56 உரை)

பொருள் செல் மருங்கு -

{Entry: F06__044}

ஒரே முடிக்கும்சொல்லான் (ஒன்றும் பலவுமாகத் தம்முள் தொடர்ந்து அடுக்கி வந்த வேற்றுமையுருபை இறுதியாக உடைய சொற்கள்) பொருள் செல்லும் பக்கம்.

எ-டு : ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் ’ (கு. 543) - முடிக்கும் சொல் (ஓருருபு அடுக்கியது)

யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் - முடிக்கும் சொல் (ஐ, கண் - எனப் பலவுருபு அடுக்கி யது) (தொ. சொ. 103 நச். உரை)

பொருள் சொல் இரண்டுமே ஒருங்கு வேறுபடுதல் -

{Entry: F06__045}

தொடர்மொழி இயல்பு ஓசைவேறுபாட்டால் வேறு படுதலைக் கூறும் இலக்கணக் கொத்து அதனை மூன்றுவகை யாகக் கூறும். இது பலபொருளுடைய சொற்களும் தொடர் களும் ஒரே வடிவில் இருப்பின் அவற்றை ஓசை வேறு பாட்டால் பொருள் வேறுபாடு தோன்றக் கூற வேண்டும் - என்பது விதி. தனிமொழியாக வருவன வினைச்சொற்களில் மாத்திரமே வரும்; தொடர் மொழியாக வருவன பெயர்வினை இரண்டினும் வரும். இவை

1. சொல் வேறுபடாது பொருள் வேறுபடுதல் (தனித் தலைப்புள் காண்க), 2. பொருள் வேறுபடாது சொல் வேறு படுதல், 3. பொருள் சொல் இரண்டுமே ஒருங்கு வேறுபடுதல் - என மூவகைப்படும். மூன்றாம் வகை வருமாறு:

செம்பொன்பதின்பலம் : இத்தொடர் ஓசை வேறுபாட்டால் செம்பொன் பதின்பலம் என்றும், செம்பு ஒன்பதின்பலம் என்றும் கூறப்படுதல் வேண்டும். இதில் சொல்லும் பொருளும் வேறுபட்டன. (செம்பருத்தி - குன்றேறாமா - புத்தியிலாதவன் - முதலாயினவும் அன்ன.) (இ. கொ. 126)

பொருள் தன்மை -

{Entry: F06__046}

எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள் தன்மையும் ஒருவன் உணர்வதற்குக் கருவியாம் ஓசையே சொல்லாம். ஈண்டுப் பொருள்தன்மையாவது, ஒருபொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்கும் என்றுணர்க. (நன். சொல். பாயிரம். சிவ.)

பொருள்மயக்கம் -

{Entry: F06__047}

ஒருவேற்றுமை தன்பொருளின் தீராது தான் பிறிதொரு வேற்றுமையது பொருளினும் வருவது பொருள் மயக்கமாம்.

எ-டு : அரசனைச் சார்ந்தான், அரசர்கண் சார்ந்தான் : சாரப்படும் பொருளே சாரப்படும் இடமாகவும் அமைதலின், ஒன்றன் பொருளின் தீராது பிறிதொரு வேற்றுமைப் பொருளின்கண்ணும் வந்து பொருள் மயக்கம் அமைந்தவாறு. (தொ. சொ. 84 சேனா. உரை)

பெயர் முதலாகக் கூறிய ஏழுருபுகளும் தமக்குரிய பொருளல்ல வற்றையும் உணர்த்தும் எனக் கொள்வர். அவையாவன : மாடம் செய்யப்பட்டது என்புழி, வினைமுதலன்றிச் செயப்படுபொருள் உணர்த்திற்று. வீட்டை விரும்பினான் என்புழிச் செயப்படுபொருளையன்றி வேறு பொருளை விளக்கிற்று.

‘மலையொடு பொருத மால்யானை’, ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்’ (கு. 1235), ‘பாலொடு தேன்கலந் தற்றே’ (கு. 1121), ‘மதியொ டொக்கும் முகம்’, ‘விலங்கொடு மக்கள் அனையர்’ (கு. 410), ‘எழுத்தொடு புணர்ந்த சொல்’ (தொ. சொ. 401 சே. ) - என்புழிக் கருவி - கருத்தா - உடன்நிகழ் வது - அன்றி, வினையின்மை - வேறுவினை - மயக்கம் - ஒப்பு - ஒப்பலொப்பு - ஒற்றுமை - எனப் பலபொருளும் உணர்த்தின.

சோற்றிற்கு அரிசி, கூழிற்குக் குற்றேவல், பூவிற்குப் போனான், உணற்கு வந்தான், பிணிக்கு மருந்து, உணற்குக் கருவி கை - என்புழிக் கொள்வோனை விட்டு, ஆதிகாரண காரியம் - நிமித்தகாரண காரியம் - இருவகைப் பெயர்ப்பின் வினை யெச்சம் - இருவகைப் பெயர்ப்பின் பெயரெச்சம் - எனப் பல பொருளும் உணர்த்தின.

‘பித்தரின் பேதையார் இல்’ நாலடி. 52 - வேங்கடத்தின் தெற்கு, குமரியின் வடக்கு - வாணிகத்தின் ஆயினான் - காக்கையிற் கரிது களம்பழம் - என்புழி, ஒப்பு - எல்லை - ஏது - ஒப்பின்மை - எனப் பலபொருளும் உணர்த்தின.

வாளது வெட்டு என்புழிக் குறையே அன்றி (குறை - ஆறாம் வேற்றுமை) வேறுபொருளும் உணர்த்திற்று.

அறிவின்கண் திரிபு என்புழி இடமேயன்றி வேறுபொருளும் உணர்த்திற்று என்பர். (நன். 302 சிவ.)

ஒரு காரகபதம் பல வேற்றுமையுருபுகளொடு வருதல்; அஃதாவது ஒரு வேற்றுமையுருபு தன்பொருளின் தீராது பிறி தொரு வேற்றுமையது பொருட்கண் சேறல் பொருள் மயக்கமாம்.

I . அபிகித கருத்தா முதல்வேற்றுமையில் வரும்.

1. திண்ணை மெழுகிற்று: ‘செயப்படுபொருள்’ எழுவாய்த் தன்மைப்பட்டது.

2. தேவதத்தன் சோற்றை அட்டான்

3. விழுமியோர் நன்மையினைச் செய்வர்

இம்மூன்றும் அபிகிதம் என்னும் தெரிநிலைக் கருத்தா முதல் வேற்றுமையில் வந்தன.

II . அநபிகிதம் என்னும் தெரியாநிலைக் கருத்தா, ஆறாம் வேற்றுமைகொண்டும் மூன்றாம்வேற்றுமைகொண்டும் வரும்.

1. அவர்க்குச் செய்யத்தகும் இக்காரியம் (அவர்க்கு என்னும் குவ்வுருபு ஆறாம்வேற்றுமை என்பது இவ்வாசிரியர் கொள்கை.)

2. அவரால் செய்யத்தகும் இக்காரியம்

III . அபிகித கன்மம்

தெரிநிலைச் செயப்படுபொருள் முதல்வேற்றுமை மாத்திரமே பெறும்.

எ-டு : சோறு தேவதத்தனால் அடப்பட்டது.

IV . அநபிகித கன்மம் - தெரியாநிலைச் செயப்படுபொருள்.

இஃது அ) இரண்டாம்வேற்றுமை ஆ) மூன்றாம் வேற்றுமை இ) நான்காம்வேற்றுமை ஈ) ஆறாம் வேற்றுமை ஆகிய வற்றைப் பெறும்.

எ-டு:

அ) நூலை அறிந்தான், மரத்தைக் குறைத்தான் - இரண்டாம் வேற்றுமை

ஆ) பாலை ஓமம் செய்தான், பாலால் ஓமம் செய்தான் - இரண்டும் மூன்றும்

இ) அவளைக் கொள்ளும் இவ்வணிகலம், அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் - இரண்டும் நான்கும்

ஈ) நூலைக் குற்றம் கூறினான், நூலினது குற்றம் கூறினான் - இரண்டும் ஆறும்

அபிகித கன்மம் ஏழாம்உருபை ஏற்று வருதலுமுண்டு.

எ-டு : துணைச் சார்ந்தான் - தூணின்கண் சார்ந்தான்; கோட்டைக் குறைத்தான் - கோட்டின்கண் குறைத்தான்.

இவை செயப்படுபொருள்; ஏழாம்வேற்றுமையுருபும் கொண்டன.

தெரிநிலைச் செயப்படுபொருள் ஆறாம்வேற்றுமை ஏற்று வருதல் கருமணிச் சட்டி எனப்படும். எடுத்துக்காட்டு வருமாறு :

நூலைக் குற்றம் கூறினான் - நூலது குற்றத்தைக் கூறினான் ; தாயைக் குடர் விளக்கம் செய்தான் - தாயது குடரை விளக்கம் செய்தான்.

இவை உபபத விபத்திகள் (உபபத விபத்தியாவது, பிறிதொரு சொல்லொடு சேர்ந்து முடிக்கும்சொல்லொடு வரும் வேற்றுமைப் பொருள்).

‘அவனை இகல் வெல்லல்’ (கு. 647) - அவனது இகலை வெல்லல்; ‘குடும்பத்தைக் குற்றம் மறைப்பான்’ (கு. 1029) - குடும்பத்தினது குற்றத்தை மறைப்பான்.

வடமொழியில் ‘கருமணி சட்டி’ என்பது இன்னும் பல வகைகளிலும் வரும்.

எ-டு : தாயை நினைத்தல் - தாயது நினைவு - தாயின் தொடர்பான நினைவு; உலகத்தினுடைய கருத்தா - உலகத்தைச் செய்தவன். (பி. வி. 14)

அ) கரணம் என்னும் மூன்றாம் வேற்றுமை, ஆறு ஐந்து - என்னும் இரண்டு வேற்றுமையுடனும் மயங்கும்.

ஆ) சம்பிரதானம் என்னும் நான்காம் வேற்றுமை, ஆறு மூன்று என்னும் இரண்டு வேற்றுமையுடனும் மயங்கும்.

இ) விடும் - நீங்கும் - எல்லையான அவதி - என்னும் பொருளை யுடைய அபாதானம் ஐந்தாம்வேற்றுமையுடனே மாத்திரம் வரும். தமிழில் நியமம் தப்பிப் பிறபொருளுடனும் வரும்.

ஈ) அதிகரணம் என்னும் இடத்திற்கு உரியது ஏழாம் வேற்றுமை ஒன்று மாத்திரமே; நியமம் கெட்டு இரண்டாவதும் வரும்.

அ) செவிக்குக் கேட்கலாம் - செவியால் கேட்கலாம்.
கண்ணிற்குக் காணலாம் - கண்ணால் காணலாம்
கோடாலியது வெட்டு - கோடாலியால் வெட்டும்

வெட்டு.

(செவிக்கு, கண்ணிற்கு - என்பன ஆறனுருபு என்பதும், அவை ‘ஏது’ என்னும் காரணப்பொருள் என்பதும் இந்நூலாசிரியர் கருத்து.)

யாம் கண்ணின் காண - கண்ணால் காண : ஐந்தாம் வேற்றுமையுடன் வந்த கரணம்.

ஆ) நாகர்க்குப் பலி என்பது நாகரது பலி என்றும், வரைவில் மகளிர்க்கு மாலை வழங்கியோன் என்பது வரைவில் மகளிரால் மாலை வழங்கியோன் என்றும்,

சம்பிரதானம், ஆறு மூன்று எனும் இரண்டு வேற்றுமை யுடனும் வந்தது.

‘அவளைக் காட்டு’ (கலி. 78 : 18) - அவளுக்குக் காட்டு

‘தவ்வையைக் காட்டி விடும்’ (கு. 167) - தவ்வைக்குக் காட்டி விடும் - என நான்காம்வேற்றுமை இரண்டாம் வேற்றுமை யுடன் வந்தது.

இ) ‘குற்றத்தின் நீங்கி’ (கு. 502) என்பது போல, நீக்கப் பொருளில் மாத்திரமே வரும் ஐந்தாவது. இது வடமொழி நியமம். நியமம் மீறி.

நினைப்பானை நீங்கும் திரு’ (கு. 519) - நினைப்பானி னின்றும்; ஊர்க்குத் தீர்ந்தான் - ஊரினின்றும் - என ஐந்தாம் வேற்றுமைப் பொருள் இரண்டாம் வேற்றுமை யுடனும் நான்காம் வேற்றுமையுடனும் வந்தது.

மேலும் தமிழ்மொழியில், எல்லை - ஏது - ஒப்பு - என்ற பொருளிலும் ஐந்தாம்வேற்றுமை வரும்.

சாத்தற்கு நெடியன் - சாத்தனினின்றும் என எல்லைப் பொருளில் வரும். ஐந்தனிடத்து நான்கு வந்தது.

கருவூர்க்குக் கிழக்கு - இதுவுமது.

மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் - மனைவாழ்க்கை யினின்றும் என நீக்கப்பொருளில் வரும் ஐந்தனிடத்து நான்கு வந்தது.

ஈ) நெறியிற் சென்றான் - நெறியைச் சென்றான் : இரண்டாம் வேற்றுமை இடப்பொருளில் வந்தது. (இது அதிகரணத் துதியை ஆம்)

காலைக்கு வரும், மாலைக்கு வரும் - காலையில், மாலையில் - எனப் பொருள்படுவன. இவை ஏழனிடத்து நான்காவது வந்தது. (பி. வி. 15)

பொருள் வகை -

{Entry: F06__048}

உலகத்து உயிர்ப்பொருள் - உயிர் இல் பொருள் - இயங்கியற் பொருள் - நிலையியற்பொருள் - காட்சிப்பொருள் - கருத்துப் பொருள் - முதற்பொருள் - சினைப் பொருள் - இயற்கைப் பொருள் - செயற்கைப்பொருள் - வழக்குப்பொருள் - செய்யுட் பொருள் - என்று பகுத்துரைக்கப்படும் இவையெல்லாம் இருதிணை ஐம்பாலாய் அடங்கும். (நன். 258 மயிலை.)

‘பொருள்வயினான’ -

{Entry: F06__049}

வேற்றுமையுருபுகள் தொக்கு அவற்றின் பொருள் நிற்குமிடம்.

எ-டு : புலிகொல் யானை

இத்தொடர் விரிந்தால் புலியைக் கொன்ற யானை எனவும், புலியால் கொல்லப்பட்ட யானை எனவும் இரண்டனுருபும் மூன்றனுருபும் இடம் நோக்கி விரிக்கப்படும். (முறையே ஓடுகிறது எனவும் கோடு எனவும் வினையும் பெயரும் ஆகிய முடிக்கும் சொற்களைக் கொடுக்க.) (தொ. சொ. 96 நச். உரை)

பொருள் விளக்குதற்கு விரித்துக் கூறும் மரபு -

{Entry: F06__050}

ஒரு பொருள்வேறுபாடு குறித்தோன் அஃது ஆற்றல் முதலிய வற்றான் விளங்காதாயின், அது பொருள் புலப்படுமாறு தெரித்தே கூற வேண்டும். ‘உருகெழத் தோன்றி வருமே முருகுறழும், அன்பன் மலைப்பெய்த நீர்’ என வாளா கூறாது, அரிதாரச் சாந்தம் கலந்தது போல, உருகெழத் தோன்றி வருமே........ நீர்’ எனத் தெரித்துச் சொல்லுவது மரபு. ஆயின் சந்தருப்பம் நோக்கிப் பொருள் புலப்பாடு இருப்பின் விரித்துக் கூற வேண்டா.

‘ஒல்லேம் குவளைப் புலாஅல் மகன்மார்பின், புல்லெருக்கங் கண்ணி நறிது’ , என்பதன்கண், குவளை புலால் நாறுதற்கும் எருக்கங் கண்ணி நறிதாதற்கும் காரணம் கூறாவிடினும், தலைவன் பரத்தைமையாகிய தவறும் - புதல்வன்பால் அன்பும் - காரணம் என்பது இடம் நோக்கி உணரப்படுதலின், இன்னோ ரன்ன இடங்கள் விளக்கிக் கூற வேண்டாவாம். (தொ. சொ. 55 சேனா. உரை)

பொருள் வேறுபடாது சொல் வேறுபடுதல் -

{Entry: F06__051}

‘சொல் வேறுபடாது பொருள் வேறுபடுதல்’ காண்க.

பொருளாதி ஆறும் எல்லை ஆதல் -

{Entry: F06__052}

அம்மலையின் இம்மலை பெரிது, இவ்வூரின் இவ்வூர் சிறிது, அவன் வாழ்நாளின் இவன் வாழ்நாள் பெரிது, அவள் கண்ணின் இவள்கண் பெரிது, அவனழகின் இவனழகு பெரிது, அவன் தொழிலின் இவன் தொழில் பெரிது - எனப் பெருமை சிறுமை முதலிய அளவு குறித்தற்குப் பொருளாதி ஆறும் எல்லைகளாய் நின்றமை காண்க. அவை அளவு குறியாது, அம்மலையைப் போல - அம்மலையைக் காட்டிலும் - என வரின், இருவகைப் பொருவுள் (உவமைப் பொரு, உறழ் பொரு) அடங்கும். இவையெல்லாம் எல்லைப் பொருள். (நன். 299 இராமா.)

‘பொருளொடு புணராச் சுட்டுப் பெயர் -

{Entry: F06__053}

பொருளை வரையறுத்து உணர்த்தாத சுட்டுப்பெயர். ‘இப் பயறுஅல்லது இல்லை’ எனப் பொருளை வரையறுக்காது, பொதுவாக ‘இவையல்லது இல்லை’ என (முன்னே கிடந்த பயற்றைச் சுட்டி)க் குறிப்பிடுதல். (தொ. சொ. 37 சேனா. கல். 35 தெய். உரை)

சுட்டு, தான் உணர்த்துதற்குரிய அஃறிணைப்பொருளை உணர்த்தாது உயர்திணைப்பொருளை உணர்த்தி நிற்றல், ‘இஃது ஒருத்தன்’ என்றவழி, இஃது என்னும் அஃறிணைப் பொருளை உணர்த்திய சுட்டு ‘இவன் ஒருத்தன்’ என உயர் திணைப்பொருளை உணர்த்தி நின்றவாறு அறியலாம். (தொ. சொ. 37 நச்., ப. உ)

சுட்டுப்பெயர் நேரிடையாகக் குறித்த பொருளை விளக்கா தாயினும், சொல்லுவான் குறிப்பான் விளக்கும். “பயறுளவோ வணிகீரே” என்றாற்கு. எதிரேயுள்ள பயற்றினைக் காட்டி “இவை யல்லது இல்லை” என்று கூறின், இவை என்னும் சுட்டுப் பெயர் உழுந்து முதலியவற்றைக் குறிக்காது பயறுவகையையே சுட்டும் என்பது. (சேனா. உரை)

பொற்பு என்னும் உரிச்சொல் -

{Entry: F06__054}

இவ்வுரிச்சொல் பொலிவு என்னும் குறிப்பினை உணர்த்தும்.

எ-டு : ‘பெருவரை அடுக்கம் பொற்ப’ (நற். 34)

(தொ. சொ. 335 சேனா. உரை)

பொற்றொடி, மக்கட் சுட்டு : இலக்கணம் -

{Entry: F06__055}

மக்கட்சுட்டு என்றவழி, மக்களாகிய சுட்டு மக்கட்சுட்டு; சுட்டு - நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயரான் மக்கட் பொருளை உணர்த்தும். உணர்த்தவே, மக்கட்சுட்டு என்பது பிறிது பொருளுணர்த்தாது அம்மக்களையே உணர்த்தி நிற்றலானும், பொற்றொடி என்பது பொன்னும் தொடியுமன்றி ‘அணிந் தாள்’ எனப் பிறிதொரு பொருள் உணர்த்தி நிற்றலானும், இருபெயரொட்டு ஆகுபெயரும் வேறே, அன்மொழித் தொகையும் வேறே எனக் கொண்டு, ஈண்டு ‘மக்கட் சுட்டு’ என்பதனை இருபெயரொட்டாகுபெயர்க்கு எடுத்துக்காட்டி, ஆண்டுப் ‘பொற்றொடி’ என்பதனை அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு ஆக்கின் படும் இழுக்கு என்னை யெனின், மக்கட்சுட்டே இருபெயரொட்டாகுபெயராய் அச்சுட்டு மக்களை உணர்த்திற்றேல், ‘மக்களாகிய மக்கள்’ என்று வருவதல்லது ஒன்றை ஒன்று சிறப்பித்து ‘இன்னது இது’ என வாராமையின், மக்கட் சுட்டே இருபெயரொட்டு ஆகாமை யின், இருபெயரொட்டாகுபெயர் ஆமாறு யாண்டையது என்பது. (இ.வி. 192 உரை)

போடம் -

{Entry: F06__056}

ஸ்போடம் அஃதாவது வெடித்தல்; சொல் தன் பொருளைக் குறிக்கும் ஆற்றல்; சக்தி எனவும்படும். எழுத்தும் சொல்லும் வாக்கியமும் தொடர்ந்து பொருளுணர்த்தும் ஆற்றலை வடமொழி இலக்கண நூலாரான வையாகரணர் ‘வர்ணஸ்போடம்’ ‘பதஸ்போடம்’ ‘வாக்கிய ஸ்போடம்’ எனக் குறிப்பிடுவர். (பி.வி. 18)

போலி எழுத்து -

{Entry: F06__057}

‘சமாநாக்கரமான இணையெழுத்து’க் காண்க.

ஐ ஒள என்னும் சந்தியக்கரங்களைத் தொல்காப்பிய உரை யாசிரியரும் நன்னூலாரும், போலியெழுத்து எனக் கொண் டனர். அங்ஙனம் கொண்டது தவறு என்றும், ‘எதுகையிலக் கணம் நிரம்புதற்பொருட்டு இவற்றை ஈரெழுத்துக்களாகக் கொள்ள வேண்டுவது இன்றியமையாதது என்றும் பிரயோக விவேக உரை கூறுகிறது. ‘ஒளவிய நெஞ்சத்தான்........... நினைக்கப் படும்’ (கு.169) : ‘அவ்விய நெஞ்சத்தான்.......... செவ்வியான்’ எனச் சீர் எதுகை அமைவது காண்க.

அஇ - அய், அஉ - அவ் - என இரண்டெழுத்தாகக் கொள்ளப் படல் வேண்டும். (பி.வி. 5.)

ம section: 147 entries

மக்கட் சுட்டு -

{Entry: F06__058}

மக்கள் என்று வரைந்து சுட்டுதற்குக் காரணமாகிய தன்மை. மக்கள் எனினும் சுட்டு எனினும் அவரையே சொல்லியவாறு என்பர் ஒருசாரார். சுட்டு என்பது கருத்து. அக்கருதற் பாடுடைமையின் சுட்டு எனவும் படும் மக்கள் என்பது. (தொ. சொ. 1 இள. உரை)

மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது மக்கட் சுட்டு எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மக்கள் என்றது, மக்கள் என்னும் உணர்வை. மக்களேயாயினும் மக்கள் என்ற சுட்டாது பொருள் என்று சுட்டியவழி உயர்திணை எனப்படாது என்பது. (தொ. சொ. 1 சேனா. உரை)

மக்கட்சுட்டு என்பது மக்களாகிய சுட்டு என இரு பெய ரொட்டுப் பண்புத்தொகை. சுட்டு - நன்கு மதிப்பு. அஃது ஆகு பெயராய் மக்கட் பொருளை உணர்த்தி நின்றது. சேனாவரை யர் இருபெயரொட்டு ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடுணராமல் ‘மக்கட் சுட்டு’ அன் மொழித்தொகை என்றமை பொருந்தாது. ஆகுபெயராய் நின்ற நன்கு மதிக்கப்படும் பொருளும் மக்களையே உணர்த்தி யமையின், அன்மொழிப் பொருளைத் தாராத இதனை அன்மொழித்தொகை என்றல் பொருந்தாது. மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது மக்கட்சுட்டு என்று சேனா வரையர் பொருள் கூறினார். மக்கள் என்று கருதப்படும் பொருளை உயர்திணை என்ப - என்று அவர் கண்ணழிவு கூறியது, ஒரு பொருளிடத்து நின்ற மக்கள் தன்மையானே அப்பொருள் மக்கள் என்று கருதப்பட்டது என்று பொருள் தந்து நின்றது. பின்னர் மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும் என்று நோக்குகின்றவர்க்கு, ‘மக்களாகிய கருத்து யாதொரு பொருளிடத்துத் தோன்றும்’ என்று பொருள் தந்தால், ‘வெள்ளாடை’ என்னும் பண்புத்தொகை போல, அக்கருத்து மக்களாகாமையின் பண்புத்தொகை அன்றாம். அது ‘மக்கட் சுட்டு’ என்பதற்கு ‘அப்பொருள் மக்கட் சுட்டு ’ என்று அவர் கூறிய பொருளானும் மக்களையே தோற்றுவித்து நிற்றலின், அன்மொழித்தொகை அன்றாம். அன்றியும், ஆசிரியர் ஈண்டு ஒரு பொருள் நின்று தன்னை ஒருவர்க்கு உணர்த்துமாறும் ஒருவர் அதனை உணருமாறும் ஆராய்கின்றார் அல்லர்; உயர்ந்த ஒழுக்கம் (உயர்திணை) என்று முதனூலாசிரியர் கூறிய குறி உலகத்தார்க்கு விளங்கப் பொருள் கூறக் கருதி, அதன் பயன் எய்துவிப்பத் தாமும் ‘மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள்’ என்று அச்சொற்குப் பொருள் கூறினர். (தொ. சொ. 1 நச்., கல். உரை)

மக்கள் என்பது மக்கள் என்னும் பொதுப்பொருண்மை; சுட்டு என்பது குறிப்பு. அது சுட்டப்படும் பொருள்மேல் ஆகுபெய ராய் நின்றது. மக்கள் என்னாது சுட்டு என்றது என்னை யெனின், மக்களாவார் ஒரு நீர்மையரன்றி ஆணும் பெண்ணும் அலியுமாகிய வடிவு வேற்றுமையுடையர் ஆகலின், அவர் எல்லார்மாட்டும் பொதுவாய்க்கிடக்கும் மக்கள்தன்மையைக் குறித்து ‘மக்கள் இவர்’ என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாவது என்பது அறிவித்தற்குச் ‘சுட்டு’ என்றார். (தொ. சொ. 1 தெய். உரை)

மக்கள் என்று சுட்டப்படும் பொருள் மக்கட் சுட்டு; பின்மொழி ஆகுபெயர். மக்கட்சுட்டு: இருபெயரொட்டாகு பெயர். மக்கள் என்ற அடைமொழி சுட்டு என்னும் இயற் பெயர்ப் பொருளை விசேடித்து நில்லாது, பொருளாகிய ஆகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்ப, சுட்டு என்பது ஆகுபெயராய் அப் பொருளை உணர்த்த, இருபெயரும் ஒட்டிநின்றன. அன்மொழித்தொகையாயின், பொற்றொடி என்பது போல்வனவற்றுள் பொன் போல்வன தொடி போல்வனவற்றையே விசேடிக்குமன்றித் தொடி போல்வன வற்றின் ஆகுபெயர்ப் பொருளை விசேடித்து நில்லா. இக்கருத்தே பற்றி மக்கட்சுட்டு பின்மொழி ஆகுபெயர் என்பாருமுளர். (இ. கொ. 98)

மக்கள் என்பது ஆகுபெயரான் மக்கட்கருத்தை உணர்த் திற்றேல், ‘அவரல பிறவே’ என்னாது ‘அஃதல பிறவே’ எனல் வேண்டும். ‘மக்கட் பொருள்’ எனவே அமையுமாயினும், அப்பொருட்கு உயர்திணை எனக் குறியிட்டதற்குக் காரணம் தோன்ற, ‘மனத்தொடு ஆறு அறிவினரே மக்கள்’ என மரபிய லில் கூறும் உயர்ச்சி பற்றி மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள் என்பார் ‘மக்கட் சுட்டு’ என்றார். மக்கள் என்பது பொதுமையின் நீக்கிப் பொருளை விசேடித்து நிற்ப. ‘சுட்டு’ என்பது விடாத ஆகுபெயராய் அப்பொருளின் உயர்ச்சி உணர நிற்ப, இரு பெயரும் ஒன்றனை ஒன்று விசேடித்து ‘இன்னது இது’ என வருமாறு காண்க. (சூ.வி. பக். 44)

‘மக்கட்சுட்டு’ என்றமைக்குக் காரணம் -

{Entry: F06__059}

மக்கட்சுட்டு என்பது மக்களாகிய கருத்து நிலைபெறும் பொருள்மேல் நின்றமையால், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை அடியாகப் பிறந்த அன்மொழித்தொகை. மக்கள் என்றது மக்கள்தன்மையாகிய ஒழுக்கத்தை. சுட்டு என்றது கருதி உணரப்படும் உணர்வை. மக்கள்உடம்பு பெற்றிருப்பினும் மக்கள் என்று கருதப்படாவழி அஃறிணை மருங்காகும். பண் பாடில்லாதான் மரம் என்றும் விலங்கு என்றும், கொடி யாரைப் பேய் என்றும் கூறும் வழக்கினை நோக்குக. மக்க ளுடம்பினர் அல்லாதவழியும் மக்கட்சுட்டு உடையாராகக் கருதின் உயர்திணையாம். அனுமன் வந்தான், சாம்பவன் வந்தான், அசுவத்தாமன் வந்தான் என்னும் வழக்கினை நோக்குக. இந்நுண்மையினை ஓர்ந்துணரல் வேண்டித் தொல்லாசிரியர் ‘மக்கள் உயர்திணை’ என்னாது ‘மக்கட் சுட்டு’ எனத் தெரித்து ஓதினர். (தொ. சொ. 1 ச. பால. உரை)

மக்கள் இரட்டை -

{Entry: F06__060}

மக்களிரட்டை என்பது ஒரே கருவினின்று முதலில் ஒரு குழந்தை வெளிப்பட்ட சிறிது நேரத்தே மறு குழந்தை வெளிப்பட, அங்ஙனம் தோன்றும் இருவர்க்கும் இடும் பெயராகும். மக்களிரட்டை எனினும் தனித்தனி நேரத்தில் தோன்றித் தனித்தனித் தன்மையுடன் வாழும் இருவர் ஆவார் ஆதலின், அவ்வுவமம் அடுக்குத்தொடர்க்குக் கூறப்படுகிறது. ‘பாம்பு பாம்பு’ ‘ஓடு ஓடு ஓடு’ என்பவற்றைத் தனித்தனிப் பிரித்துக் கூறினும் பொருள்தரும் பாங்கு நோக்கி அடுக்குத் தொடர்க்கு மக்களிரட்டை உவமமாகிறது. (தொ. சொ. 48 சேனா. உரை)

‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ என்றல் பொருந்தாமை -

{Entry: F06__061}

நன்னூலாசிரியர் திணையிலக்கணம் கூறுங்கால், ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ என்றார். அஃது உண்மை போல நின்று மயக்கும் கூற்று. அது பொருந்தாது.

உரியியலுள் பவணந்தி முனிவர் அறிவைப் பற்றிக் கூறுங்கால், ‘வானவர் மக்கள் நரகர் விலங்குபுள், ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே’ எனப் புறப்பொறிக்குரிய புலன்களின் அடிப்படையில் மக்களை ‘ஐயறி வுயிரே’ என்றார்; அவரொடு வானவரையும் கூட்டிக் கூறினார். அதனால், அகக்கரணங் களால் தோன்றும் ஆறாவது அறிவையும் உடையவர் மக்கள் என்பதும், அது காரணமாகவே தமிழ்நூலார் மக்களை உயர்திணையாகக் கொண்டனர் என்பதும் நன்னூலார்க்கு உடன்பாடில்லை என்பது தேற்றம். ஆதலின் அவர் ‘உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே,’ ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்னும் தொல்காப்பிய மரபினைப் புறக்கணித் துள்ளமை புலனாம். (தொ. சொ. 1 ச. பால)

மக்களை ஐயறிவுயிர் எனல் -

{Entry: F06__062}

பொறிகள் ஐந்து புலன்கள் ஐந்து ஆதலால், அறியும் வகையால் உடலறிவு முதல் செவியறிவு முடிவாக உயிர் ஐவகையாயின என்பது மனஅறிவினை நீக்கியன்றோ? அதனைக் கூட்டுங்கால் ஆறறிவுயிர் மக்கள் முதலோர் என்பது இவர்க்கும் உடன் பாடாதல் காண்க. இங்கு மக்கள் முதலியோரை விலங்கு முதலியவற்றுடன் கூட்டி எண்ணி ஐயறிவுயிர் என்றது மரபுவழுவாம் ஆயினும், புலன்கள் ஐந்தையும் நுகரும் வகையால் எனக் காரணம் கூறலின் அமையும் என்பது. (நன். 381 இராமா.)

மகடூஉ அறிசொல் -

{Entry: F06__063}

பெண்பாலை அறிதற்குக் கருவியாகிய சொல். இதன்கண் பெண் ஒருமையே கொள்ளப்படும். இஃது உயர்திணைக்குரிய முப்பால்களுள் ஒன்று. மகடூஉப் பன்மை ‘மகடூஉ அறி சொல்’லில் அடங்காது ‘பல்லோர் அறியும் சொல்’லிலேயே அடங்கும். மகடூஉ அறிசொல்லாகிய பெண்ஒருமைக்குத் தனிவினைமுற்று விகுதி இருப்பது போல, மகடூஉப்பன்மைக் கெனத் தனி வினைமுற்றுவிகுதி தமிழில் இல்லையாதலின், மகடூஉப்பன்மை ஆடூஉப்பன்மை என அவ்விரண்டன் பன்மை எல்லாவற்றிற்கும் பொதுவாகிய பலர்பால் விகுதியே மகடூஉப்பன்மைக்கும் கொள்ளப்பட்டுச் சொல்லுவான் குறிப்பினாலேயே மகடூஉப் பன்மை உணரப்படும். ஆதலின் மகடூஉ அறிசொல் என்பது மகடூஉஒருமைப் பெயரையும் வினையையுமே குறிக்கும். (தொ. சொ. 2)

‘மகடூஉ இயற்கை தொழில்வயி னான’ -

{Entry: F06__064}

தொழில் கொள்ளுமிடத்துச் சொல் பற்றியன்றிப் பொருள் பற்றி மகடூஉவிற்குரிய தொழில் கொள்ளும்; அஃது யாது எனின், பெண்மகன் என்னும் சொல். (புறத்துப் போந்து விளையாடும் பேதைப்பருவத்துச் சிறுமி பெண்மகன் எனப்படுவாள்.) இச் சொல் ‘மகன்’ என முடிவதால் ஆண்பால் போலத் தோன்றினும் பொருள் பற்றிப் பெண்பாலாகவே கொள்ளப்படும். பெண்மகன் வந்தாள், பெண்மகன் இவள் - என வரும். (தொ. சொ. 196 நச். உரை)

‘மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி’ -

{Entry: F06__065}

பெண்பாலைக் குறிப்பதாய், முற்சொல் பெண் என்பதால் அடுத்த சொல் ஆண்பாலாகிய மகன் என்பதனோடு இணைந்து வரும் ‘பெண்மகன்’ என்ற சொல். இஃது ஈறுபற்றி ஆண்பால்வினை கொள்ளாது, பொருள்பற்றிப் பெண்பால் வினையே கொள்ளும். வினை - முடிக்கும் சொல். வருமாறு : பெண்மகன் வந்தாள், பெண்மகன் இவள். (தொ. சொ. 196 நச். உரை)

மகடூஉ வினை ஈறு -

{Entry: F06__066}

அள் ஆள் - என்னும் இரண்டு ஈறுகளும் படர்க்கைப் பெண்பால் வினைமுற்றுக்களாய் முக்காலங்களும் காட்டும் தெரிநிலை முற்றுக்களாகவும், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் குறிப்புமுற்றாகவும் வரும். அவை வருமாறு : உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள் - எனவும்; உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் - எனவும்; கரியள், கரியாள் - எனவும் காண்க. (தொ. சொ. 6, 205 சேனா. உரை)

மங்கலம் -

{Entry: F06__067}

தகுதிவழக்கு மூன்றனுள் மங்கலம் ஒன்று. செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும், காராட்டை வெள்ளாடு என்றும், இடுகாட்டை நன்காடு என்றும் பிறவும் இவ்வாற்றான் வருவன மங்கல மரபினான் வருவன. (நன். 266 மயிலை.) (தொ. எச்ச. 46, 47)

இடக்கர் என்பது ‘மறைத்துமொழி கிளவி’ என்ப ஆதலின், அதுபோல மறைத்துக் கூறத்தக்கது அன்றேனும், மங்கல மில்லதை ஒழித்து மங்கலமாகக் கூறுவது மங்கலம் என்னும் தகுதிவழக்காம்.

செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும், காராட்டை வெள்ளாடு என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும் வழக்கும் இத்தொடக்கத்தன மங்கலமாம். இவற்றைச் செத்தார் - ஓலை - முதலாகச் சொல்லுதல் தவறன்றேனும், துஞ்சினார் திருமுகம் முதலாகக் கூறுதல் அழகுபடச் சிறக்கும் என்பதாம். (நன். 267 சங்.)

மத்திமபத லோப சமாசம் -

{Entry: F06__068}

இடையே பதம் தொக்க தொகை. உருபும் பொருளும் உடன் தொக்க தொகையை வடநூலார் இப்பெயரிட்டு வழங்குவர்.

சாகப்ரிய : பார்த்திவ (- மரக்கறியில் விருப்பமுடைய மன்னன் என்பது) சாக பார்த்திவ : (மரக்கறி மன்னன்) என வரும். தமிழில் வளைக்கை (வளைகளை அணிந்த கை), கடல்ஞாலம் (-கடலால் சூழப்பட்ட ஞாலம்) என்பன போன்றது.

இதனை விளக்கப் பிரயோகவிவேக நூலார், “கனலைப் புகை நீங்காதிருப்பது போலவும், குடையை நிழல் நீங்காதிருப்பது போலவும், இவை விரிக்குங்கால் உருபும் உருபு கொண்டு முடியும் சொல்லாகிய பொருளும் ஆக விரியும்“ என உவமையும் கூறுவர். (நன். 296 மயிலை. உரை நோக்குக) இனித் தொல்காப்பியம் கூறும் உதாரணமாகிய ‘சாத்தங்கொற்றன்’ - சாத்தனுக்கு மகனாகிய கொற்றன் என்பது போல், பெருவாயில் முள்ளி போல்வனவும் இடைப் பதங்கள் தொக்க தொகை என்பதும் கூறினார்.

வடமொழியில், பரசுராமன் - கோடாலியை ஏந்திய ராமன், தசரதராமன் - தசரதனுக்கு மகனாகிய ராமன் - என வரும். (பி.வி. 26)

‘மந்திரப் பொருள்வயின் ஆகுந’ -

{Entry: F06__069}

‘திரிக திரிக சுவாகா’, ‘கன்றுகொண்டு கறவையும் வர்த்திக்க சுவாகா’ எனவரும். (தொ. சொ. 444 இள. உரை)

மந்திரங்களையுடைய தெய்வங்களிடத்தே அம்மந்திரமாய் வரும் சொற்கள் வழங்கிவாறே கொள்வதல்லது இலக்கணத் தான் யாப்புறவு உடையன அல்ல. மந்திரச்சொல் மந்திரநூல் களில் அவை வல்லார்வாய்க் கேட்டுணர்தல் வேண்டும். (தொ. சொ. 449 நச்.)

மந்திரம் என்பது பிறர் தெரியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறும் சொல். அதன்கண் ஆகுவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டு வரும் குழுவின் வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லான் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிற பெயரிட்டு வழங்குதலும் என இரண்டு வகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசையெச்சமாயின. அவற்றுள் பொருட்கு வேறு பெய ரிட்டன : வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப் பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்துக்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு :

‘மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும்

எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர் யாறும்,

திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே.’

இதனுள், மண்ணைச் சுமந்தவன்; ந, வரதராசன் மகன்: ம, வரகாலிமூன்றும் : சி, இரண்டு மரம் : வா, ஆறு : ய- எனக்கூற, ‘நமசிவாய’ எனப் பொருளாயிற்று.

(தொ. சொ. 439 தெய். உரை)

மயக்கம் -

{Entry: F06__070}

மயக்கம் எனினும் வழு எனினும் ஒக்கும். இம்மயக்கம் திணை - பால் - இடம் - காலம் - மரபு - செப்பு - வினா - என்னும் ஏழும் பற்றித் திணைமயக்கம், பால்மயக்கம் முதலாக ஏழு வகைப்படும். (தொ. சொ. 11 இள. உரை)

‘மயங்குதல் வரையார் முறைநிலை யான’ -

{Entry: F06__071}

உம்மை இல் சொற்றொடர் நிலைமொழியாகவும், உம்மை ஏற்ற சொற்றொடர் வருமொழித் தொடராகவும் வருதல். இவ்வாறு மயங்கும் நிலையினை நீக்காது கொள்வர் என்றவாறு. இதன்கண் முறையே நிகழ்காலத்தோடு எதிர் காலமும், இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்கும்.

எ-டு : கூழ் உண்ணாநின்றான் சோறும் உண்பான்; கூழ் உ ண்டான் சோறும் உண்பான் - என முறையே காண்க. (கூழுண்ணா நின்றான் சோறும் உண்டான் - என நிகழ்வு இறப்புக் காலமயக்கமும் கொள்க.) (தொ. சொ. 437 நச். உரை)

மயங்கும் உடனிலை, எச்சவும்மைக்கும் எதிர்மறையும்மைக்கும் இன்மை -

{Entry: F06__072}

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தம்முள் மயங்கி உடன் நிற்கும் தன்மை இல.

எ-டு : ‘சாத்தனும் வந்தான்; கொற்றனும் வரும்’ என்பது
எச்சவும்மை. அதனைச் ‘சாத்தனும் வந்தான் கொற்ற னும் வரலும் உரியன்’ என எதிர்மறையும்மையொடு கூட்டிச் சொல்லல் கூடாது. (தொ. சொ. 279 இள. உரை)

எச்சவும்மை நின்றவழி, எஞ்சுபொருட்கிளவியாம் எதிர்மறை யும்மைத்தொடர் வந்து தம்முள் மயங்குதல் இல. ‘சாத்தனும் வந்தான்; கொற்றனும் வரலுமுரியன்’ எனின் இயையாமை கண்டு கொள்க. (தொ. சொ. 283 சேனா. உரை.)

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் வந்து தம்முள் மயங்கும். அங்ஙனம் மயங்கினவேனும் தன்வினை ஒன்றிய முடிபு கொள்ளா. ‘சாத்தனும் வந்தான்; இனிக் கொற்றனும் வரினும் வரும்’ என்புழிச் சாத்தனும் கொற்றனும் என்னும் எச்ச வும்மைகள் ‘வரினும்’ என்னும் எதிர்மறையும்மையொடு தொடர்ந்து நின்று ஒருவினை கொள்ளாது இறப்பும் எதிர்வு பற்றி வரும் வேறு வினை கொண்டவாறு. (தொ. சொ. 285 நச். உரை)

எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தத்தமுள் மயங்கும் உடன்நிலை இல. ‘சாத்தனும் வந்தான்’ என்றவழிக் ‘கொற்றனும் வரும்’ என்றாதல் ‘கொற்றனும் வந்தான்’ என்றாதல் கூறுதலன்றி ‘வாரான்’ என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும் என்றவாறு. (தொ. சொ. 279 தெய். உரை)

மரபு -

{Entry: F06__073}

யாதொரு பொருளை யாதொரு சொல்லான் யாதொருநெறி யான் அறிவுடையோர் சொன்னார்களோ, அப்பொருளை அச்சொல்லான் அந்நெறியான் சொல்லுதல் மரபாம். குதிரைக் குட்டி - யானைக் குட்டி - எனவும், யானைக்கன்று - பசுவின் கன்று - மான் கன்று - எனவும் வரும். (இஃது இளமை பற்றிய மரபு; பிற மரபுகளும் உள.) (நன். 388 சங்.)

மரபு வழாநிலை -

{Entry: F06__074}

மரபு வழுப்படாது சொல்லுதல். அச்சொல்லுமாறு :

1) அ. வெவ்வேறு சிறப்புவினைகட்குரிய பலபொருள்களை யும் ஒருங்கு தழுவிநிற்கும் பொதுச்சொல், ஒன்றற்குரிய சிறப்பு வினையால் சொல்லப்படாமல் எல்லாவற்றிற்கு முரிய பொதுவினையால் சொல்லப்படும்.

ஆ. அப்பொதுப்பொருளின் சிறப்புச் சொற்களால் எண்ணி நிற்கும் பலசொற்களையும் எல்லாவற்றிற்குமுரிய பொது வினையால் முடித்தல் வேண்டும்.

இ. குறித்த பொருளை விளக்கும் வினையினையும் சார்பு - இனம் - இடம் - முதலிய பெயர்களையும் பலபொருள் ஒருசொல் பொருந்தாமையால் விளங்காது கிடக்கு மாயின், அச்சிறப்பு வினை அல்லது பெயர் கூட்டிக் கூறுவர். முறையே எடுத்துக்காட்டு வருமாறு:

அ) அடிசில் என்பது உண்பன - தின்பன - பருகுவன - நக்குவன - என்பனவற்றுக் கெல்லாம் பொதுவாத லின், அதனை அடிசில் அயின்றார் - மிசைந்தார் எனப் பொதுவினையால் முடிக்க.

ஆ) கறியும் சோறும் உண்டான், யாழும் குழலும் முழவும் இயம்பினார் - எனப் பொதுவினையால் முடிக்க.

இ) மா என்பது மாமரத்திற்கும் வண்டிற்கும் ஒருசார் விலங்கிற்கும் திருமகட்கும் பொதுவான பெயர். மாப் பூத்தது (மரம்), ‘மாவீழ் நொச்சி’ (வண்டு), சேனை யானை தேர்மாச் சதுரங்கம் (குதிரை), ‘மா மறுத்த மலர்மார்பின்’ (புறநா. 7) (திருமகள்) - இவை முறையே வினை சார்பு இனம் இடம் - இவற்றால் தம் பொருள் குறித்தன. (நன். 389, 390 சங்.)

2) எழுத்துக்களைப் பார்த்துப் பொருள் இன்னது என்று அறுதியிட முடியாத தொடர்மொழிகளை அவை குறித்துக் கூறும் சொற்களின் இறுதியும் முதலும் தோன்ற இசையறுத்துக் கூறும் வேறுபாட் டால் பொருள் தெளியலாம்.

எ-டு : ‘செம்பொன்பதின்தொடி’ என்ற தொடர்- மொழியைச் செம்பு ஆராய்ச்சி உள்ளவழிச் செம்பு ஒன்பதின்தொடி - எனவும், பொன் ஆராய்ச்சி உள்ளவழிச் செம்பொன் பதின்தொடி - எனவும் இசையறுத்துப் பொருள் செய்க. (நன். 391)

ஒருபொருளைக் குறிக்கப் பலபெயர் வரின், அப்பெயர்கள் எல்லாவற்றையும் சேர்த்து இயைத்து இறுதிக்கண் ஒருவினை கொடுத்துக் கூறுக. சொல்தோறும் வினைகொடுப்பின் அவை வெவ்வேறு பெயராய்ப் பொருள் புலப்படாது.

எ-டு : ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங் கண்ணன் சாத்தன் வந்தான் என்று கூறுக.

அவ்வாறு கூறாது சொல்தோறும் வந்தான் என வினையைக் கூட்டின், ஆசிரியனும் பேரூர்கிழானும் செயிற்றியனும் இளங் கண்ணனும் சாத்தனும் வெவ்வேறு மக்கள் என்றாகி விடுதலின், இறுதியில் வினை கொடுப்பதே வழாநிலையாம்.

காதல் முதலியன பற்றி ஒன்றன் பலபெயர்களை எண்ணித் தனித்தனி வினை கொடுப்பின், அது வழுவமைதியாம்.

எ-டு : வேலோன் புகுதக, இயக்கன் புகுதக, வென்றோன் புகுதக , விறலோன் புகுதக (சீவக. 2122) (நன். 392 சங்.)

சிறப்புப்பெயரை முன்னும் இயற்பெயரைப் பின்னும் கூறுதலே மரபு வழாநிலை. திணை - நிலம் - சாதி - குடி - உடைமை - குணம் - தொழில் - கல்வி - முதலான இவை பற்றி வருவன சிறப்புப்பெயராம்.

எ-டு : ஆசிரியன் நச்சினார்க்கினியன் (கல்வி), நாடகி நம்பி (தொழில்), முனிவன் அகத்தியன் (தவம்) (நன். 393)

சுட்டு, படர்க்கை முப்பெயரோடு அணையுமிடத்துப் பெயர்க்குப் பின்னரே கிளக்கப்படல் வேண்டும். செய்யுளில் அருகிப் பெயர்க்கு முன்னரும் வரலாம். ‘ஆக்கமும் கேடும் அதனா ன் வருதலால்’ (கு. 642) எனச் செய்யுளில் முதற்கண் வந்தவாறு. ‘சாத்தன் வந்தான்; அவற்குச் சோறிடுக’ என்பது வழாநிலை. (நன். 394)

அடுக்குத்தொடர், அசைநிலைக்கு இரண்டும் பொருள் நிலைக்கு இரண்டும் மூன்றும், இசை நிறைக்கு இரண்டும் மூன்றும், நான்கும் ஆகிய முறை சொல் அடுக்கி வரும்.

அன்றே அன்றே எனவும், ஓடு ஓடு - பாம்புபாம்புபாம்பு - எனவும்,

‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’ (சீவக. 652)

‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’

‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’

எனவும் முறையே காண்க. (நன். 395 உரை)

இரட்டைக்கிளவியை இரட்டையாக ஒலித்தலினின்று பிரித்துப் பொருள்செய்தல் கூடாது; பிரிப்பின் பொருள் சிதையும்.

எ-டு : ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ (புறநா. 188) (நன். 396 உரை)

ஒருபொருளுக்குப் பலபெயர் சிறப்புக் குறித்து வருதலின், அவற்றை நீக்காது கொள்வர்.

ஆசிரியன் பேரூர்கிழான்...... சாத்தன் வந்தான் - எனவரும்.

(நன். 397 உரை)

ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் செவியின்பம் கருதி இணைந்து வருதலும் ஏற்புடைத்து.

எ-டு :

நிவந்தோங்குயர் மலை,

நாகிளங் கமுகு’

குழிந்தாழ்ந்த கண்’, (நாலடி. 49),

புனிற்றிளங் குழவி, ‘உயர் ந்தோங்கு பெருவரை’ (மலை. 41).

(நன். 298 உரை)

இவ்வளவு என்று வரையறுக்கப்பட்ட பொருள்களுக்கும் எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாப் பொருள்களுக்கும் முடிக்கும் சொற்களோடு இணைத்தற்கண் முற்றும்மை கொடுத்துக் கூறல் வேண்டும்.

எ-டு : கண்ணிரண் டும் குருடு, பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள் ளும் இல்லை - என முறையே காண்க. (நன். 399 உரை)

அடைமொழி இனத்தைச் சுட்டுதலே வழாநிலை. செங்குவளை என்றால், கருங்குவளை என்ற இனத்தைச் சுட்டி விலக்கும். பொருட்பெயர் முதலான ஆறுபெயரும் அடையாக வரு தலுடையன. (நன். 401 உரை)

அடைமொழி இனம் சுட்டுதலேயன்றி இனம் அல்லாத பொருளையும் குறித்தல் உண்டு. பாவம் செய்தான் நரகம் புகும் - என்றவழி, புண்ணியம் செய்தான் சுவர்க்கம் புகும் - என இனத்தைச் சுட்டுதலேயன்றி, ‘அவன் இன்னது செயின் இன்னது விளையும்’ என்பதனை அறியாத மடவோன் என இனமல்லாத செய்தியும் சுட்டப்படும். (நன். 402 உரை)

அடை சினை முதல் - என்பன முறையே வருதலும், இரண்டு அடை முதற்கு வருதலும் வழக்கிற்கு உரியன; இரண்டு அடை சினைக்கு வருதலும், ‘அடைசினை முதல்’ என்னும் முறை மயங்கி வருதலும் செய்யுட்கு உரியன.

எ-டு : செங்கால் நாரை, பெருந்தலைச்சாத்தன் - அடை சினைமுதல்; சிறுகருங் காக்கை, மனைச்சிறு கிணறு - ஈரடை முதற்கு வருதல்; இவையிரண்டும் வழக் கியல். கருநெடுங்கண் - ஈரடைகள் சினைக்கு வருதல்; செவி செஞ்சேவல் - முறை மயங்கி வருதல்; இவை யிரண்டும் செய்யுள்வழக்கு. (நன். 403 உரை)

இயற்கைப்பொருள் இத்தன்மைத்து எனக் கூறுக.

எ-டு : நிலம் வலிது, தீ வெய்து

செயற்கைப்பொருளை ஆக்கமும் காரணமும் கொடுத்துக் கூறுக.

எ-டு : கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின. (நன். 404, 405 உரை)

தன்னிடம் இல்லாத பொருளை இல்லையென்று கூறு மிடத்து, அப்பொருட்கு இனமான பொருளை உண்டென்று கூறுதலே (வாணிக) மரபு. இருக்கும் பொருளாயின் இத்துணை உண்டு என்றலும் மரபு வழாநிலை.

எ-டு : ‘பயறுளவோ வணிகீர்’ என்று வினாவினாற்கு,

உழுந்துள்ளது -என்றலும், பயறு இரண்டு நாழி உள்ளது - என்றலும் மரபு வழாநிலை. (நன். 406 உரை)

இவையெல்லாம் நன்னூல் சுட்டும் மரபு வழாநிலைகள்.

மரபு வழு -

{Entry: F06__075}

திணை மரபு - பால் மரபு - இடமரபு - காலமரபு - செப்பு மரபு - வினாமரபு - என்று பகுத்தோதிய ஒன்றனையும் பற்றாது வருவதனை மரபு என ஒன்றாக்கி, அவ்விலக்கணத்தின் பிறழ்ந்து வருவன மரபுவழு என்று கூறுக.

ஒருபொருட்குரிய மரபினை வேறொரு பொருட்கு உரித்தாகச் சொல்லுதல் மரபுவழுவாம். யானை மேய்ப்பானை இடையன் என்றும், யாடு மேய்ப்பானைப் பாகன் என்றும், யானையுட் பெண்ணை ஆ என்றும், ஆவினுட் பெண்ணைப் பிடி என்றும் கூறினாற் போல்வன. (தொ. சொ. 11 கல். உரை)

மரபு வழுவமைதிகள் -

{Entry: F06__076}

‘தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும், பகுதிக் கிளவியும்’ (தொ. சொ. 17), செய்யுளுள் காணப்படும் இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க் கொடையும் (18), ஆக்கக் கிளவி காரணமின்றியும் வழக்கினுள் வருதலு ம் (22) போல்வன மரபுவழு வமைதிகளாம்.

எ-டு : பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றல், ‘வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்’ (புறநா. 38), பயிர் நல்லவாயின - என முறையே காண்க.

‘மரீஇயது ஒராஅல்’ -

{Entry: F06__077}

அவையல்கிளவியாகிய இடக்கரை மறைத்துக் கூற வேண்டும் என்பது மரபு. மேலைநாள்தொட்டுப் பழக்கத்தில் வழங்கி வந்த அவையல்கிளவிகளை மறைத்துக் கூறும் மரபினை நீக்கி வெளிப்படையாகவே கூறுக. மரீஇயது - உலகவழக்கில் பெரிதும் பழகிவருவது; ஒரால் - ஒருவுக - நீக்குக.

எ-டு : ஆப்பி (புற. 249) யானையிலண்டம், யாட்டுப் பிழுக்கை. (தொ. சொ. 443 நச். உரை)

மருவிய இடக்கரடக்கல் -

{Entry: F06__078}

‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே’ (புறநா. 249)

‘ஆப்பி நீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை’

யானை யிலண்டம், யாட்டுப் பிழுக்கை - என இடக்கர் வாய்பாட்டானும் வழங்கப்படுமாலோ எனின், ‘மறைக்குங் காலை மரீஇயது ஒராஅல்’ (தொ. சொ. 443 நச்.) என்ப ஆதலின், இந்நிகரன மேல்தொட்டு மருவி வழங்கலின் அமைவுடைய என்க. (இ.வி. 168 உரை)

மரூஉ -

{Entry: F06__079}

அருமருந்தன்னான் என்பதனை அருமந்தான் என்றும், நட்டு வியந்தான் என்பதனை நட்டுயந்தான் என்றும், மலையமா னாடு என்பதனை மலாடு என்றும், சோழனாடு என்பதனைச் சோணாடு என்றும், பாண்டியனாடு என்பதனைப் பாண்டிநாடு என்றும், கிழங்கன்ன பழஞ்சோறு என்பதனைக் கிழங்கம் பழஞ்சோறு என்றும், மட்கட்டி என்பதனை மண்ணாங் கட்டி என்றும், பொற்கட்டி என்பதனைப் பொன்னாங்கட்டி என்றும் வருவன மரூஉ மொழி. (நன். 266 மயிலை.)

இயல்புவழக்கு மூன்றனுள் ஒன்று. தொன்றுதொட்டு வந்ததன்றி இடையே இலக்கணம் சிதைந்து மரீஇயதனை மரூஉ என்பர்.

எ-டு : அருமருந்தன்ன - அருமந்த; மலைமான்நாடு - மலாடு; சோழன்நாடு - சோணாடு; இந்நாடு - இந்த நாடு; ஆதன்தந்தை - ஆந்தை; பூதன்தந்தை - பூந்தை; மரஅடி - மராடி; குளவாம்பல் - குளாம்பல்; யாவர் - யார்; எவன் - என், என்ன; ஆற்றூர் - ஆறை.

(நன். 267 சங்.)

தொன்றுதொட்டு வருதலின்றி இடையிலே எழுத்துக்கள் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து தாமே மரீஇ வருவதை மரூஉ என்றார். மருவி நிற்றலாவது எழுத்துக்கள் திரியினும் கெடினும் மேலே நின்ற எழுத்துக்களொடு தொடர்ந்து நிற்றல். மருவுதல் - தழுவுதல்; வழுவுதல் ‘வழூஉ’ என விகாரப்பட்டு அளபெடுத்து நின்றது போல, மருவுதல் ‘மரூஉ’ என நின்றது. இஃது இயல்பு வழக்கு மூன்றனுள் ஒன்று. (நன். 267 இராமா.)

மரூஉ மொழி வருமாறு : அருமருந்தன்ன பிள்ளை - அருமந்த பிள்ளை; கிழங்கன்ன பழஞ்சோறு கிழங்கம்பழஞ்சோறு ; சோழன்நாடு - சோணாடு ; எவன் - என், என்ன; பெயர் - பேர்; யாடு - ஆடு; சாத்தன்றந்தை - சாத்தந்தை; சென்னைபுரி - சென்னை; புதுவைபுரி - புதுவை; மலையமான்நாடு - மலாடு; பாண்டியன்நாடு - பாண்டிநாடு; தஞ்சாவூர் - தஞ்சை; பனையூர் - பனசை; சேந்தமங்கலம் - சேந்தை; வடுகன்தந்தை - வடுகந்தை; என்தந்தை - எந்தை ; உன்தந்தை - உந்தை; முன்தந்தை; முந்தை; யார் - ஆர்; யானை - ஆனை ; யாறு - ஆறு; மரஅடி - மராடி; குளஆம்பல் - குளாம்பல், அகர இகரச்சுட்டு - அந்த இந்த - எனவரும். இத்தொடக்கத்து ஏற்கும் செய்கை அறிந்து முடிக்க. மரூஉமொழி ஒருமொழியினும் தொடர்மொழியினும் விகாரப்பட்டு வருவன. (தொ.வி. 39 உரை)

மரூஉத்தொகை -

{Entry: F06__080}

இலக்கணப்போலி போலச் சொற்கள் முன் பின்னாக மாறித் தொக்கன. பின்மாலை - மாலையின் பின்; அரைக்காசு - காசினது அரை(ப்பாகம்) என வரும். நுனிக்கொம்பர் - கடைக்கண் - முன்றில் - என்பனவும் மரூஉத்தொகைகளே. நன்னூலார் இவற்றை ‘இலக்கணப் போலி’ எனப் பிரித்து வழங்குவர். (பி.வி. 19)

மரூஉ வகை -

{Entry: F06__081}

‘தகுதியும் வழக்கும்’ காண்க. வழக்கினுள் ஒன்றாக மரூஉ முடிபு கூறப்படும்.

மழைக்கை : விளக்கம் -

{Entry: F06__082}

பண்பியும் பண்பும் தொழிலும் பயனுமாகிய இந்நான் கினுள்ளே, பண்பியொடு பண்பியும் - பண்பொடு பண்பும் - தொழிலொடு தொழிலும் - பயனொடு பயனும் - ஒப்புமை தோன்றப் பொருளொடு பொருள் புணர்த்துச் சொல்லுதல் உவமையணி ஆதலால், மழைக்கை என்பது மழை போலும் கை - என விரிந்துழிப் பண்பியொடு பண்பி ஒப்புமை தோன் றாத தினாலே மெய்யுவமை அன்று எனவும், மழையினது தொழிலும் கையினது தொழிலும் சிறிது ஒத்துப் பெரும் பாலும் ஒவ்வாததினாலே தொழிலுவமை அன்று எனவும், அவ் விரண்டின் தொழிலால் வரும் பயனொடு பயன் ஒத்திருத்த லால் பயனுவமை ஆயிற்று எனவும் கொள்க. (நன். 407 இராமா.)

மற்று -

{Entry: F06__083}

மற்று என்னும் இடைச்சொல் தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச்சொற்களுள் ஒன்று. மற்று என்பது முன் சொல்லப்பட்ட தொழில் - காலம் - இடம் - இவையொழிய இனி வேறொன்று என்ற வினைமாற்றுப் பொருண்மையும் அசைநிலையும் ஆகும்.

எ-டு : இனி மற்றொன்று உரை - தொழில்;

‘மற்றறிவாம் நல்வினை யாம்இளையம்’ (நாலடி19) - காலம்;

‘மற்றும் கூடும் மனைமடி துயிலே’ (நற். 360) - இடம்;

‘அதுமற்று அவலம் கொள்ளாது’ (குறுந். 12) - அசை;

உரையாடாநின்றுழிப் பொருள் குறியாது ‘மற்றோ’ எனவும் அசைநிலை வரும். (தொ. சொ. 264 நச். உரை)

மற்று என்னும் இடைச்சொல் ‘முன் சொல்கின்ற தொழிய இனி அது வேறு’ என்னும் பொருண்மை குறித்தலும், அசை- நிலையாதலும் உடைத்து,

எ-டு : மேல் நச்சினார்க்கினியர் காட்டியனவே.

‘ஊழின் பெருவலி........ மற்றொன்று, சூழினும் தான்முந் துறும்’ (கு. 380) என்புழி ‘மற்று’ பிறிது என்னும் பொருள்படல் வினை- மாற்றின்கண் அடங்கும். (இ.வி. 266 உரை)

மற்றை -

{Entry: F06__084}

இவ்விடைச்சொல் கருதிய பொருட்கு இனமாகிய பொருளைச் சுட்டும். ஓர்ஆடை கொணர, அது வேண்டாதான் ‘மற்றையது கொணா’ என்றவழி, மற்றை என்பது முன் கொணரப்பட்ட தற்கு இனமாகிய ஆடையைச் சுட்டியது.

‘மற்று’ குறிப்புவினையெச்சம் போன்றது; ‘மற்றை’ குறிப்புப் பெயரெச்சம் போல்வது. (தொ. சொ. 265 ச. பால)

மற்றையது -

{Entry: F06__085}

மற்றை என்னும் இடைச்சொல் தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச்சொற்களுள் ஒன்று. இஃது ஒருவன் முன்னர்க் கருதிய பொருளொழிய அதன் இனப்பொருளைக் கருதி நிற்கும். ஆடை கொணர்ந்தவழி, அவ்வாடை வேண்டா தான் ‘மற்றையது கொணா’ என்றால், அதற்கு இனமாகிய பிற ஆடையைக் குறித்து நிற்கும். இனிச் சிறுபான்மை ‘மற்றை யாடை’ எனத் தானேயும் வரும். அஃது - அவன் - என்னும் தொடக்கத்தனவற்றிற்கு மற்றையஃது - மற்றையவன் - என அவ்விடைச்சொல் முதனிலையாய் வருதலின், ‘மற்றை’ எனப் பிரித்தோதாது ‘மற்றையது’ என ஒன்றாக ஓதினார். (தொ. சொ. 266 நச். உரை)

‘மற்று’ வினைமாற்று என்னும் பொருளில் வருமாற்றைக் கூறினார்; இது ‘பொருண்மை மாற்று’ என்பதற்கு, அது என்பதனைக் கூட்டி ‘மற்றையது’ என்றார். அது பெயராதலின் ஐந்துபாற்கண்ணும் கொள்க. அவ்வாறு கொள்ளவே, மற்றை என்பது ஐகார ஈற்று இடைச்சொல்லாகி, மற்றையான் - மற்றையாள் - மற்றையார் - மற்றையது - மற்றைய - என ஐம்பாற் பொருளும் உணர்த்தியவாறு. மற்றை என்பது சுட்டப்பட்ட பொருளுக்கு இனமாகிய பிற பொருளையே குறிக்கும். ஒருவினை செய்வார் இருவர் உள்வழி, ஒருவனைக் கண்டவன் ‘மற்றையவனோ?’ என்றவழி, அதுவும் இனம் குறித்தது. (தொ. சொ. 261 தெய். உரை)

இரண்டு மணியுளவிடத்து ஒன்று கண்டவன் ‘மற்றையதும் காணவேண்டும்’ எனின், முன்கண்டதொழிய அதற்கு இன மாகிய மணியையே குறித்து நிற்பதல்லது வேறு பிற பொருள் குறித்து நில்லாது எனக் காண்க. வேறு பிறபொருள் குறித்து நில்லாமையாவது: ஆடை கொணர்ந்தவழி அது வேண்டா தான் ‘மற்றையது கொண்டுவா’ என்றால் அதற்கு இனமாகிய ஆடையையே கொண்டுவா என்னும் கருத்தினன் ஆதலன்றி, வேறு பிற பொன்னையும் மணியையும் கொண்டுவா என்னும் கருத்தினன் அல்லன் ஆதல்.

இனி இவ்விடைச்சொல் பெயர்க்கு முதனிலையாய் வருத லன்றி மற்றை ஆடை மற்றைப் பொருள் - எனவும் வரும். மற்றையது - மற்றையஃது - மற்றையவன் - ‘ம ற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ (கு. 214) - ‘களவல்ல மற்றைய தேற்றாதவர்’ (கு. 289) - ‘மற்றைய நோ க்காது அடிதொறும் வான்பொருள்’ (நன்.) - எனப் பெயர்க்கும் வினைக்குறிப்பிற்கும் முதனிலையாய் வருதலே பெரும்பான்மை யாதலால் ‘மற்றை’ எனப் பிரித்தோதாது ‘மற்றையது’ என ஒன்றாகக் கூறினார்;

இனி இச்சூத்திரத்திற்கு இவ்வாறன்றி மேலைச்சூத்திரத்துள் வினைமாற்று எனவும் பிறிது எனவும் பொதுப்படக் கூறியதினாலே, இன வினைமாற்றும் (இனப்) பிறிதும் என இச்சூத்திரத்தால் புறநடை கொடுத்துக் காத்தார் - எனக் கூறுவாரு முளர். அஃது இந்நூலுடையார் கருத்தெனின், ‘இனம்’ என்னும் ஓர் சொல்லுக்காக ஒரு சூத்திரம் புறநடை கொடுப்பின் ‘சிலவகை எழுத்தின்....... சிறந்தன சூத்திரம்’ (18) எனக் கூறிய சூத்திர இலக்கணத்து அருமையையும் இவ்வுரைகாரர் கல்வியின் பெருமையையும் இச்சூத்திரம் நனி தவ நன்கு விளக்கிற்று! (இது குறிப்புமொழி என்க.) (நன். 366 இராமா.)

மறைச்சொல் முதனிலை விதிப்பொருள் தருதல்

{Entry: F06__086}

இது ‘மறை பற்றிய ஒரு சாரார் கருத்து’ என எண்ணப்படும் நான்கனுள் ஒன்று. அந்நான்கும் வருமாறு :

1. ‘விதிச்சொல் மறைப்பொருள் ஆகி வருந’ -அழுக்காறு - பொறாமை ; உடன்படல் - மறாமை.

2. ‘மறைச்சொல் விதி ப்பொருள் ஆகி வருந’ - அழுக்காறாமை - பொறுத்தல்; ‘அறவினை யாதெனின் கொல்லாமை’

(கு. 321)

3. ‘விதிச்சொல்லின் முதனிலை மறைப்பொருள் பெறுந -உள்ளங்கையில் உரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான்: முதனிலை பிரிந்து, முளையாமையே துணிவு: அடங்காமையே துணிவு என்று பொருள்படுதல் காண்க.

4. ‘மறைச்சொல்லின் முதனிலை விதிப்பொருள் பெறுந’

‘உண்டு நடவான்’ எனல் பொருந்தாது; உண்டு நடந்தான் என்பதே பொருந்தும். ஆயின் முன்னதை எங்ஙனம் பொருத்துதல் இயலும் எனின், மறைச்சொல்லின் முதனிலையைப் பிரித்து நடத்தல் என்னும் தொழிற்பெய ராக்கி, வினையெச்சத்தொடு முடித்துப் பின் மறையைச் சேர்த்து ‘உண்டு நடத்தலைச் செய்யான்’ என்று முடித்தால் பொருந்தும்.

இங்ஙனம் முதனிலையைப் பிரித்து முடிக்கக் காரணம் யாதெனில் வருமாறு:

வினை என்பது ஒரு பொருளின் புடைபெயர்ச்சி. நடவான் என்பது வினையின்மை. வினையெச்சம் வினையின்மையைக் கொள்ளாது. ஆதலால் புடைபெயர்ச்சியான நடத்தல் என்பதை ‘உண்டு நடத்தல்’ என்று ஆக்கிப் பின் ‘அதனைச் செய்யான்’ எனப் பொருள் செய்யப்பட்டது.

‘மருங்கோடித் தீவினை செய்யா னெனின்’ (கு. 210) என்பதில், “ஓடி என்னும் வினையெச்சம் செய்யான் என்னும் எதிர்மறை வினையுள் செய்தலொடு முடிந்தது” என்பர் பரிமேலழகர். ஆதலின் அவருக்கும் இது கருத்தென்க. ‘கற்றில கண்டு அன்னம் மென்னடை’ (கோவை 97) என்பதில் பேராசிரியரும் “கண்டு (மென்னடை) ‘கற்றல்’ என்பதனொடு முடியும்” என்பர். (இ. கொ. 77)

மறையாய் அடுக்கல் -

{Entry: F06__087}

அடுக்கின் வகைகளில் ஒன்று. ‘அடுக்கின் வகைகள்’ காண்க.

எ-டு : ‘புரை தீரா மன்னா இளமை’ (நாலடி. 11) ‘இடிப் பாரை இல்லாத ஏமரா மன்னன்’ (கு. 448)

இவை எதிர்மறைப் பெயரெச்ச அடுக்கு.

‘ஏவவும் செய்கலான் தான் தேறான் ’ (848)

எதிர்மறைமுற்று அடுக்கு (இ. கொ. 120)

மறையின் மூவகைகள் -

{Entry: F06__088}

வாழ்வான் என்பதன் மறை - வாழான், வாழ்வானல்லன், கெடுவான் : முற்று

கொடுப்பான் என்பதன் மறை - கொடான், கொடுப்பா- னல்லன், வாங்குவான்.

புகழ்வான் என்பதன் மறை - புகழான், புகழ்வானல்லன்,
இகழ்வான்.

உண்ட (சாத்தன்) என்பதன்மறை - உண்ணாத, உணலற்ற, பசித்த : பெயரெச்சம்

நடந்து (வந்தான்) என்பதன் மறை - நடவாது, நடையின்றி, வாகனம்ஏறி: வினையெச்சம்.

உண்டல் என்பதன் மறை - உண்ணாமை, உணலறல், பட்டினி: தொழிற்பெயர்.

இவ்வாறு வினைச்சொல் மூவகையும், தொழிற்பெயரும் இம் முத்திறமாக எதிர்மறுத்து நிகழும். (இ. கொ. 74)

மறைவினையும் வினையாதல் -

{Entry: F06__089}

எதிர்மறைக்கண் வினையில்லையாம். அங்ஙனமாகவும் இவற்றை வினை என்பதும், இவை செய்பவன் முதலிய ஆறும் தரும் என்பதும் என்னையெனின், இவற்றை வினை என்பது, முயற்கோடு ஆகாயப்பூ என்றாற்போல, இன்மையை உண்மை போல வைத்துக் கூறுவதோர் இலக்கணை. இவை செய்பவன் முதலிய ஆறும் தரும் என்பது, சீதமின்மை பனி யின்மையைக் காட்டல் போல, வினையின்மை செய்பவன் முதலியவற்றின் இன்மைகளைக் காட்டி நிற்றலையாம். (நன். 321 சங்.)

மன் இடைச்சொல் -

{Entry: F06__090}

இவ்விடைச் சொல் அசைநிலை - ஒழியிசை - ஆக்கம் - கழிவு - மிகுதி - நிலைபேறு - என்னும் ஆறு பொருள்களில் வரும்.

எ-டு : ‘அதுமன் கொண்கன் தேரே’ - அசைநிலை.

(பண்டு) கூரியதோர் வாள்மன் - ‘இதுபோது கோடிற்று’ என்றமையால், ஒழியிசை.

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மனனே’ (புறநா. 235)

‘இதுபோது அஃது இல்லையாயிற்று’ என்றமை யால், கழிவு.

நெடியன் மன் - அவனே வலியனும் ஆயினான் என்னும் பொருள் தருதலின் ஆக்கம்.

எந்தை எமக்கு அருளும் மன் - மிகுதி

‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்’ (புறநா. 165)

மன் ; நிலைபேறு (நன். 432 சங்.)

கழிவு குறித்து நிற்பதும், ஆக்கம் குறித்து நிற்பதும், ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதும், அசைநிலையாய் நிற்பதும் - என நான்கு வகையினை உடைத்தென்று மன் என்னும் இடைச் சொல்லைச் சொல்லுவர்.

‘மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி (சிலப். 7 : 3)

என மிகுதி குறித்தும்,

‘மன்னா உலகத்து மன்னியது புரிமே’ (கலி. 54)

என நிலைபேறு குறித்தும் வரும் என்பாரும் உளராலோ எனின், அவை வினைச்சொல்லாய் நிற்றலின் ஈண்டைக்கு எய்தா என்க. (இ.வி. 263 உரை)

மன்ற -

{Entry: F06__091}

மன்ற என்பது தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச் - சொற்களுள் ஒன்று. இவ்விடைச்சொல் தெளிவு என்ற பொருளில் வரும்.

எ-டு :

‘கடவுள் ஆயினும் ஆக

மடவை மன்ற வாழிய முருகே’ (நற். 34)

என ‘மன்ற’ இடைச்சொல் அறியாமையைத் தெளிவித்தது. (தொ. சொ. 267 நச். உரை)

மன்னாப் பொருள் -

{Entry: F06__092}

இல்லாத பொருள். அதனைக் கூறுமிடத்து உம்மை கொடுத்துக் கூறுக.

எ-டு : பவளக் கோட்டு நீலயானை சாதவாகனன் கோயி லுள்ளும் இல்லை. (ஈண்டு இடத்தொடு படுத்துக் கூறுமிடத்து உம்மை கொடுக்கப்பட்டமை காண்க.) (தொ. சொ. 34 இள. உரை)

மன்னாப் பொருள் - இல்லாப் பொருள்

(தொ. சொ. 34 இள. சேனா., கல்., ப.உ)

மன்னாப் பொருள் - உலகத்து நிலையில்லாத பொருள்.

(தொ. சொ. 34 நச். உரை)

மன்னாப் பொருள் - பொருந்தாப் பொருள்.

(தொ. சொ. 32 தெய். உரை)

உலகத்து இல்லாப் பொருள்கள், இடமும் காலமும் பொருளும் முதலியவற்றொடு படுத்து இன்மை கூறுங்கால், உம்மை பெறும்.

எ-டு : பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயி லுள்ளும் இல்லை - இடம்; குருடு காண்டல் பகலும் இல்லை - காலம்; ‘உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ (நாலடி. 104) - பொருள்; இடம் காலம் முதலியவற் றொடு கூட்டிக் கூறுமிடத்துத்தான் உம்மை பெறும். (சேனா. உரை)

‘முயற்கோடும் யாமைமயிர்க்கம்பலமும் அம்மிப்பித்தும் துன்னூசிக்குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை’, ‘முயற்கோடும் யாமைமயிர்க்கம்பலமும் யாண்டும் இல்லை’ என்னாது, ‘இல்லை’ எனவும் வழக்கு அமையும். ஓரிடத்தொடு படுத்து ‘இல்லை’ என்புழி எச்சவும்மை கொடாதுவிடின் ‘பிறவிடத்து உண்டு’ என்று பொருளாவான் செல்லும்; ஆதலின் உம்மை கொடுத்தல் வேண்டும். (கல். உரை)

‘என் அங்கையுள்ளும் மயிரில்லை’ எனவும் ‘இக்கழுதைக்கும் கோடு இல்லை’, எனவும் உம்மை கொடுத்துச் சொல்லுக. உம்மை கொடாது சொல்லின், ‘பிறாண்டு உண்டு’ எனச் செல்லும். (ப. உ)

மன்னாப் பொருள் - உலகத்து நிலையில்லாத பொருள். ‘யாக்கையும் நிலையாது’ எனவே, ‘இளமையும் செல்வமும் நிலையா’ என்னும் பொருளும் உணர்த்தி எச்சவும்மையாய் நிற்கும். மன்னாமை நிலையாமை உணர்த்துதலன்றி இல்லா மையை யாண்டும் உணர்த்தாது.

நச்சினார்க்கினியர் ‘மன்னாப் பொருளும்’ என்ற உம்மையான், இல்லாப் பொருள்களைக் கொண்டுள்ளார். இல்லாப் பொருள்களும் இடம் முதலியவற்றொடு வாராவழி உம்மை பெறா. (நச்.)

மன்னாப் பொருள் உம்மை பெற உடன்இணைந்து வருவன -

{Entry: F06__093}

மன்னாப் பொருள்களுக்கு உம்மை கொடுக்குங்கால், இடம் பொருள் காலம் - இவற்றொடு படுத்துச் சொல்லப்படல் வேண்டும்.

எ-டு : பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயி லுள்ளும் இல்லை - இடம்; ‘உறற்பால நீக்கல் உறுவ ர்க்கும் ஆகா’ (நாலடி. 104) - பொருள்; குருடு காண்டல் பகலும் இல்லை. - காலம்.

ஈண்டு, உம்மை : எச்சவும்மை. (தொ. சொ. 34 சேனா . உரை)

மன்னாப் பொருள் உம்மை பெற வேண்டுதல் -

{Entry: F06__094}

உம்மை கொடாக்கால், ‘சக்கரவர்த்தி இளமை நிலையாது’ எனின், ‘பிறர் இளமை முதலாயின நிலைக்கும்’ என்றாகி விடும் ஆதலின், மன்னாப் பொருட்கு உம்மை கொடுக்க. (தொ. சொ. 32 தெய். உரை)

மன்னைச் சொல் -

{Entry: F06__095}

மன் என்பது தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச் சொற்களுள் ஒன்று. அது கழிவுப் பொருண்மையும் ஆக்கப் பொருண்மையும் எச்சமாய் ஒழிந்து நின்ற சொற்பொருண் மையும் என்னும் மூன்று பொருட்கண் வரும்.

எ-டு :

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறநா. 235) - கழிவு;

‘புதுமலர் கஞல இன்று பெயரின்,

அதுமன்எம் பரிசில் ஆவியர் கோவே’ (புறநா. 147) - ஆக்கம்;

‘கூரியதோர் வாள்மன்’ - ஒழியிசை (சொ. 254 நச்.)

‘கூரியதோர் வாள்மன்’ என்றவழித் ‘திடமின்று’ என்றானும் ‘வெட்டவல்லார் உளராயின்’ என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது. (தொ. சொ. 248 தெய். உரை)

மனம் மொழி மெய் அறிவு - ஆகிய நான்கின் அசைந்த வினையும் அசையா வினையும் -

{Entry: F06__096}

மனம் முதலிய நான்கன் அசைவாம் வினையும், அசைவு இல்லா வினையும் என வினை ஐந்து.

1. நினைத்தான் - மனத்தின் அசைவாம் புடைபெயர்ச்சி

2. உரைத்தான் - மொழியின் - வாயின் - புடைபெயர்ச்சி

3. நடந்தான் - கால்களின் புடைபெயர்ச்சி

4. அறிந்தான் - அறிவின் புடைபெயர்ச்சி

5. ‘அறிவு இறந்து அங்கு அறி ந்திடீர், செறிந்த துகள் அகற்றிடீரே’

இவை போல்வன அறிவு முதலியவற்றைக் கடத்தலின் அசைவற்ற வினை. இதனை வடநூலார் பரவசம் என்பர்.

அசைவற்ற வினை இல்லை, ஏனை நான்கே வினை என்பாரும் - ஏனை நான்கனுள் அறிவு அசைந்த வினை என்பது இல்லை, ஏனை மூன்றே வினை என்பாரும் - மூன்று என்ற வரையறை இல்லை, உலகத்துப் பலபொருள்களின் அசைவு ஒன்றே வினை என்பாரும் - தீக்குச் சூடு போலப் பொருட்குணமே யன்றி வினையென்பது ஒன்று இல்லை என்பாரும் - இன்னும் பலவாறு உரைப்பாரு முளர். (இ. கொ. 81)

மா என்னும் இடைச்சொல் -

{Entry: F06__097}

மா என்னும் இடைச்சொல் வியங்கோள்வினையை ஒட்டி அசைநிலையாக வரும்.

எ-டு : ‘உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே’

(தொ. சொ. 273 சேனா. உரை.)

மா என்னும் இடைச்சொல், இடைச்சொல் வகைகளுள் ‘அசைநிலைக் கிளவி ஆகி வருந என்பதனைச் சார்ந்தது. இது வியங்கோள்வினையை அடுத்து வரும்.

எ-டு : சேனாவரையர் காட்டியதே (தொ. சொ. 275 நச். உரை)

‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே’ என ‘மா’ முன்னிலையன்றி அசைச்சொல்லாயும் வரும். ‘அவ்வச் சொல்லிற்கு’ என்னும் பொருட் புறனடையான் (278) கொள்க. (இ.வி. 275 உரை)

மாட்டு என்னும் உறுப்பினுள் அடங்குவன -

{Entry: F06__098}

மொழிமாற்றுப் பொருள்கோளாவது கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக்கண்ணே வருவது. மாட்டு என்னும் உறுப்பாவது இரண்டிறந்த பலவடிக்கண்ணும் பல செய்யுள் தொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வரும் மொழி மாற்றுக்களாம்.

அகன்று வந்த மொழிமாற்று முருகாற்றுப்படை முதலிய வற்றுள் காண்க. (தொ. சொ. 409 நச். உரை)

மாண் என்னும் இடைச்சொல் -

{Entry: F06__099}

‘சொல்லும்சொல் கேட்டி சுடரிழாய் பன்மாணும்’ (கலி. 47)

மாண் என்னும் இடைச்சொல் பலபடியும் என்னும் பொருட்- டாய் நின்றது. (தொ. சொ. 463 நச். உரை)

மார்ஈற்று வினை வினையெச்சம் அன்மை -

{Entry: F06__100}

மாரீற்று வினைமுற்றை வினையெச்சமாயிற்று என்றால் என்னையெனின், வினைமுற்றின்வழி அதற்கியைந்த பெயர்ப் பயனிலை வாராது இயையாத வினை வந்ததேல் அதற்கியைய வினைமுற்று வினையெச்சமாயிற்று எனப்படும். இம்மாரீற்று வினைமுற்றிற்குப் பெயர்போல வினையும் இயைந்து வருதலின் முற்று எச்சமாயிற்றன்று, முற்றேயாம் என்க. (நன். 327 சங்.)

மார்ஈறு ஆர் ஈற்றுள் அடங்காமை -

{Entry: F06__101}

மாரீறு ஆரீற்றுள் அடங்கும் எனின், மகர ஒற்றுக் காலம் காட்டும் எழுத்தாய் முதனிலைக்கு ஏற்றவாறு, உண்பார் - வருவார் - என்றாற்போல வேறுபட்டு வரல்வேண்டும். அங்ஙனம் அது வேறுபடாமல், உண்மார் - வருமார் - என எல்லா முதனிலையொடும் கூடி வருதலானும், ஆரீற்று முற்றுப் பெயரைக் கொண்டு முடியவும் மாரீற்று முற்று வினையையே கொண்டு முடிதலானும், மாரீறு ஆரீற்றில் அடங்காதாயிற்று. (தொ. சொ. 7 சேனா. உரை)

இனி, பெயரின்கண்ணும் ஆரீறு சிறப்புணர்த்துமிடத்து மாரீறு வந்தே பன்மையுணர்த்த வேண்டியுள்ளது. எ-டு : நாயனார் - நாயன்மார், தாயார் - தாய்மார். ஆதலின் பெயர்க்கண்ணும் பன்மை விகுதியாம் மார் ஆரீற்றுள் அடங்காதாயிற்று.

இனித் தெய்வச்சிலையார் உரைக்குமாறு : மாரீறு ஏனைய வற்றைப் போல முற்றி நில்லாது வினையெச்சம் போல வருதலானும் (எ-டு : ஆக் கொண்மார் வந்தார்). பெயர்க்கண் ஈறாகி வருமிடத்துப் பன்மையுணர்த்தாத சொற்கள் மார் ஈறாகி வரவேண்டுமாதலானும், அதனை ஆரீற்றுள் அடக்காது வேறுபடுத்து ஓதினார் ஆசிரியர். தாய் என்னும் ஒருமை ஆர் விகுதிபெற்றுத் தாயார் என வருவுழி, உயர்த்துதற்பொருட் டாய் வருதலன்றிப் பன்மை குறிக்காமையான், தாய் என்பதன் பன்மையைக் குறிக்கத் ‘தாய்மார்’ என மாரீறு வந்தவாறு. (தொ. சொ. 7 தெய். உரை)

மார்ஈறு வினைகொண்டு முடிதல் -

{Entry: F06__102}

வினைமுற்றுக்கள் பெயரைக்கொண்டே முடிதல்வேண்டும் என்னும் வரையறைக்கு மாறாக, மார் வினையைக்கொண்டு முடிந்தும் பலர்பால் வினைமுற்றுக்களுள் ஒன்றாக உள்ளது. ‘எள்ளுமார் வந்தாரே ஈங்கு’ (கலி. 81), ‘ஆர்த்தாக் கொண்மார் வந்தார்.’

மார் எதிர்காலம் காட்டும்.

‘நிலவன்மாரே புலவர்’ (புற. 375),

‘பாடன்மார் எமரே’ (புற. 375)

‘காணன்மார் எமரே’ (நற். 64)

- என்பன நிலவுக - பாடுக - காண்க - என்னும் வியங்கோட்கு எதிர்மறையாம். இவை நிலவுவார் - பாடுவார் - காண்பார் - என்பன சில வியங்கோள்முற்று என்று கூறி, அவற்றுக்கு எதிர்மறையாக நிலவாதொழிவார் - பாடாதொழிவார் - காணாதொழிவார் - என ஏவற்பொருண்மை உணர்த்தி நின்றன என்றலும் ஒன்று. (தொ. சொ. 209 நச். உரை)

மார் என்னும் இடைச்சொல் -

{Entry: F06__103}

மார் என்ற இடைச்சொல் பெயரொடு வருவழி, ஆரீறு பன்மையை உணர்த்தாது உயர்த்துதல்பொருட்டாக (மரியாதைக்காக) அமையும் இடங்களில் தான் வந்து பலர்பால் போல நின்றும் உணர்த்தும்.

எ-டு : தாயார் : ஒருமை (மரியாதைப் பொருட்டு); தாய்மார் : பன்மை

பெயர்க்கண் ஆர்ஈறாகி வருமிடத்துப் பன்மை யுணர்த்தாத சொற்கள் மார்ஈறாய் வரல்வேண்டும். மாரீறு பலர்பால் வினைமுற்று விகுதி. மாரீறு ஆரீற்றுள் அடங்காது. வினைக் கண் ஆரீற்றுமுற்றுப் போல முற்றிநில்லாது, எச்சம்போல வினைகொண்டு முடிதல் மாரீற்றின் இயல்பு.

எ-டு : ஆக் கொண்மார் வந்தார் (தொ. சொ. 7 தெய். உரை)

மார் என்னும் விகுதி -

{Entry: F06__104}

இவ்விகுதி, வினைமுற்றின்கண் பலர்பாலில் எதிர்காலம் மாத்திரம் காட்டி வினைகொண்டு முடியும்; பெயர்ச் சொல்லின்கண் ஆர்ஈறு பன்மை காட்டமுடியாத இடத்தில் மார்ஈறு பன்மை காட்டும்.

எ-டு : ஆக்கொண்மார் வந்தார் (மாரீறு எதிர்காலம் காட்டிற்று, முடிக்கும் சொல்லாகிய ‘வருதல்’ என்ப தன் பின்னரே நிகழ்வதாகலின்.) தாயார் - பன்மை காட்டாது உயர்வுச் சொல்லாகிய ஒருமையையே உணர்த்துதலின், ‘தாய்மார்’ பன்மை சுட்டியது. (தொ. சொ. 7 தெய். உரை)

மார் பெயர் கொண்டு முடிதல் -

{Entry: F06__105}

‘மார்’ வினையொடும் முடிமே என்ற உம்மையால்,

‘பெரிய ஓதினும் சிறிய உணராப்

பீடின்று பெருகிய திருவின்

பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புறநா. 375)

என மாரீற்று முற்று எமர் என்ற பெயர்கொண்டு முடிதலும் கொள்க. (நன். 326 மயிலை.)

மாரைக்கிளவி காலக்கிளவியொடு முடிதல் -

{Entry: F06__106}

மார்ஈற்றுப் படர்க்கைப் பலர்பால்முற்று ஏனைய முற்றுக்கள் போலப் பெயரொடு முடியாது, வினையெச்சம் போல வினையைக் கொண்டு முடியும். காலக் கிளவி - வினைச் சொல்; காலம் காட்டுதலே வினையின் தனிச்சிறப்பாதல் தோன்ற வினைச் சொல்லைக் ‘காலக் கிளவி’ என்றார்.

எ-டு : எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார். (தொ. சொ. 207 சேனா. உரை)

மாறு, உளி - முதலியன -

{Entry: F06__107}

‘அனையை ஆகன் மாறே’ (புற.4),

‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40)

‘இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்’ (கு. 545)

என மூன்றாவதன் பொருளவாய் மாறு உளி - என்பன வருவன.

‘மந்திர விதியின் மரபுளி வழாஅ, அந்தணர் வேள்வி’ (முருகு. 95, 96)

என உளி ஐந்தன் பொருட்டாயும் வரும். (இ.வி. 251 உரை)

வேற்றுமையுருபே யன்றி வேற்றுமைப் பொருள்பட வருவன வும் இடைச்சொல் வகையுள் அடங்கும்.

மாறு என்னும் இடைச்சொல் -

{Entry: F06__108}

‘அனையை ஆகன் மாறே’ (புறநா. 4) ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40) என மாறு என்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின் மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த்தியது அன்று. அது மூன்றா வதன் பொருள் உணர்த்திற்றேல், ‘கூறாய் தோழியான் வாழு மாறே’ என்புழி ‘வாழு மாற்றை’ என இரண்டாவது விரியா தாம். (தொ. சொ. 252 நச். உரை)

‘மிக்கதன் மருங்கின்’ : சூத்திரப் பொருள் -

{Entry: F06__109}

ஒன்றின் ஒன்று மிக்கது என்னும் பொருண்மை வினையாகி நிற்றற்கண், அப்பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது, அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வரும் சொல், கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல்லாத விடத்து, நிகழும் காலத்து உருபு பெறப் புலப்படும் பொருளை யுடையது. (நிகழும் காலத்து உருபாவது செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றினது வடிவு)

மிக்கது என்பது ஒரு காலம் குறித்து வரின் தொழில் குறித்த தாம்; இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம். ஆற்றில் நீர் மிக்கது - என்றவழி, மிகுதல் இயல்பு அன்மையின் தொழில். சுவர்க்கம் மிக்கது - என்றவழி அஃது எக்காலத்தும் ஒக்கும் ஆதலின் பண்பு குறித்ததாம்.

பூமியின் சுவர்க்கம் மிகும் எனவும், யாற்றில் நீர்மிக்கது எனவும் கூறுக.

யாற்றில் நீர் மிகும் என்று கூறின் இறந்தகாலம் தோன்றாது. தாழ்வு, குறைவு - முதலியனவும் அன்ன. ஒரு சார் வினைச் சொற்கள் தொழிலிற்கும் பண்பிற்கும் பொதுவாக நிற்கும் - என்பது உணர்த்துதல் இச் சூத்திரத்துப் பயன். (தொ. சொ. 236 தெய். உரை)

‘தொழிற்பண்பு உணர்த்தும் சொற்களும் செய்யும் என்னும் முற்றினை ஏற்று வருதல்’ காண்க.

‘மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி, அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி’ -

{Entry: F06__110}

இருவினைக்கண் நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம்மிக்கதனது பண்பைக் குறித்துவரும் வினைமுதற் சொல், எழுவாய் பெயர்சுட்டிச் சொல்லப்படா விடத்து வினைநிகழ்ச்சி நிகழ்காலச் சொல்லாலேயே குறிப் பிடப்படும்.

தவம் செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் - என நிகழ்காலத்தால் சுட்டியவாறு. (தொ. சொ. 242 சேனா. உரை)

(வினைமுதல் சுட்டிச் சொல்லப்படின், நன்னன் பெண் கொலை புரிந்து நிரயம் புக்கான் - என இறந்த காலத்தானும், சாத்தன் பெண்கொலை புரியின் நரகம் புகுவான் - சாத்தன் நலம் செய்யின் சுவர்க்கம் புகுவான் - என எதிர்காலத்தானும் வரும்.)

உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவம் செய்தல் - தாய்க்கொலை - என்பன மிக்க தொழி லிடத்து வரும். தவம் செய்வான் - தாயைக் கொல்வான் - என்னும் வினைப்பெயர்ச்சொல்லான் ஒருவன் தன்னை வேறு கூறுதலைக் குறித்த வினைப்பெயர்க்கு முடிபாக அம் மிக்க வினையின் பயனாகிய சுவர்க்கம் புகுதலும் நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல் வரும் சுவர்க்கம் புகுவன் - நிரயம் புகுவன் - என்னும் சொற்களான் தன்னைச் சொல்லுதலைக் குறித்த அவ்வினைமுதலாகிய பொருள்தான், மிக, அத் தொழிலைச் செய்யாதிருந்த நிலைமைக்கண்ணே, அத் தொழிலைச் செய்ததன் பயனை உறுகின்றானை ஒருவன் கண்டான் போலத் “தவம் செய்தான் சுவர்க்கம் புகும்; தாயைக் கொன்றான் நிரயம் புகும்“ எனச் சொல்ல, நிகழ்காலத்தின் கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருண்மை யுடைத்து. இதனால் சொல்லியது இவ்வினைசெய்வான்மேல் இவ்வினை எய்தும் என்னும் பொருண்மை. (தொ. சொ. 244 கல். உரை)

மிக்கது என்பது ஒன்றின் ஒன்று மிக்கது என்னும் பொருண்மை. அதன் மருங்கின் வினைச்சொல் சுட்டலாவது, அதன் பெய ராகி நிற்கும் நிலைமையைச் சுட்டாது வினையாகி நிற்கும் நிலைமையைக் காட்டி நிற்றல். அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவியாவது அப்பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வரும் சொல். ‘செய்வது இல்வழி’ என்பது அப்பாலுணர்த்தும் சொல்லின்கண் கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல் வழி என்பது. ‘நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும்’ என்பது நிகழ்காலத்தான் கூறப்படும் என்பது.

ஒருபொருளின் ஒரு பொருள் மிக்கது என்னும் பொருட்கண் வரும் மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிகுந்த பண்பு உணரவரும் பால் உணர்த்தாத சொல், செய்யும் என்னும் சொல்லினான் வரின் அஃது அப்பொருளை இனிது விளக்கும். ‘மிக்கது’ என்பது ஒருகாலம் குறித்து வரின் தொழில் குறித்த தாம்; இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம்.

‘ஆற்றில் நீர் மிக்கது’ என்றவழி, மிகுதல் பண்பு அன்மையின் தொழில் குறித்ததாம். ‘சுவர்க்கம் மிக்கது’ என்றவழி, எக் காலத்தும் ஒக்கும் ஆதலின் பண்பு குறித்ததாம். ‘பூமியின் சுவர்க்கம் மிகும்’ - எனவரும். ‘ஆற்றில் நீர் மிகும்’ என்று கூறின், இறந்தகாலம் தோன்றாதாம். உயர்வு தாழ்வு குறைவு - என்பனவும் இந்நிலைய. ஒருசார் வினைச்சொற்கள் தொழி லிற்கும் பண்பிற்கும் பொதுவாகி நிற்கும். (தொ. சொ. 236 தெய். உரை)

மிகவில் காலம் திரிதல் -

{Entry: F06__111}

இருவினைகள் பலவற்றுள்ளும் சிறந்த இருவினைக் கண்ண வாகிய தவம் செய்தல் - தாயைக் கோறல் - முதலிய வினைச் சொல்லை நோக்கி, அம்மிக்கதனது திரிபின்றிப் பயக்கும் பண்பைக் குறித்து வரும் சுவர்க்கம் புகுதல் - நிரயம் புகுதல் - முதலிய வினைமுதல் வினைச்சொற்கண் மூன்று காலமும் பொருந்துமிடத்து மயங்கும்.

எ-டு : யாவன் தவம் செய்தான் அவன் சுவர்க்கம் புகும்
யாவன் தாயைக் கொன்றான் அவன் நிரயம் புகும் - எனவும்,

ஒருவன் தவம் செய்யின் சுவர்க்கம் புகும் - தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும், சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாது இங்ஙனம் பொதுவகையான் கூறியவழி, மிகுதி பற்றி இறப்பும் எதிர்வும் நிகழ்வொடு மயங்கும் என்பது. (இ.வி. 304 உரை)

மிகுதிப்பண்பு உணர்த்தும் உரிச்சொற்கள் -

{Entry: F06__112}

உறு தவ நனி - என்ற மூன்றும் மிகுதிக் குறிப்புணர்த்தும் உரிச்சொற்களாம்.

எ-டு : ‘உறுபுனல் தந்து’ (நாலடி. 185),

‘உயிர்தவப் பலவே’ (புறநா. 235),

‘வந்து நனி வருந்தினை’ (அக. 19)

(தொ. சொ. 299 சேனா. உரை)

‘பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி’ (வளை.) ‘ உறு வளி தூக்கும் உயர்சினை மாவின்’ (கலி. 84) ‘ தவச் சேய் நாட்ட ராயினும்’ (நற். 115) ‘ நனி பே தையே நயனில் கூற்ற ம்’ (புற. 227) ‘பொறைநில்லா நோய் கூரப் புல்லென்ற நுதலிவள்’ (கலி. 3) ‘சினனே காமம் கழி கண் ணோட்டம்’ (பதிற். 22) (நன். 456 சங்.)

மிசைந்தார், அயின்றார் : வேறுவினைப் பொதுச்சொல் ஆகாமை -

{Entry: F06__113}

‘மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும்பிடி’ (கலி. 50)

என்புழி, மிசைதல் என்பது தின்னுதலையும்,

‘அறுவர் மற்றையோர் அந்நிலை அயின்றனர்’ (பரி. 5 : 45)

என்புழி, அயிலுதல் விழுங்குதலையும் குறித்தலின், உண்டல் தொழிலைக் குறிக்கும் பொதுவினைகளாக மிசைதல் - அயிலுதல் - என்பன கொள்ளத்தக்கன அல்ல. (தொ. சொ. 46 நச். உரை)

முக்காலத்தும் ஒத்து இயல் பொருளை எடுத்துக் கூறும் மரபு

{Entry: F06__114}

அவனியைத் தாங்கி அரசர் இருக்கிறார், நினக்குத் துணை யான் இருக்கிறேன், எனக்குத் துணை நீ இருக்கிறாய், தெய்வம் இருக்கிறது, நிலம் கிடக்கிறது, மலை நிற்கிறது, யாறு ஒழுகுகிறது - எனவரும்.

இதற்குச் செய்யும் என்முற்றை உதாரணம் காட்டுவாரும் உளர். அது பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையாக வரும் முக்காலத்தினும் ஒத்தியல் பொருட்கு இயையாமை யானும், அவ்வழக்கு இன்மையானும் அது பொருந்தாது என்க. யாறு ஒழுகும் - தீச்சுடும் - என வழங்குமாலோ எனின், அஃது ஒழுகும் தன்மை யுடையது - சுடும் தன்மையுடையது - என்னும் பொருட்டாய் நிற்றலின், ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ (404) என்னும் சூத்திரத்தின்பாற்படுவ தாம் என்க. யாறு ஒழுகுவது - தீச்சுடுவது - என்பதும் அது.

(நன். 383 சங்.)

முக்காலத்தையும் நிகழ்காலத்தால் கூறல் -

{Entry: F06__115}

நிகழ்காலச் சொல்லுள், இறந்தகாலத்தையும் எதிர் காலத்தை யும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யும் என்னும் சொல்லான் குறிப்பிடுதல்.

எ-டு : மலை நிற்கும், ஞாயிறு இயங்கும். (தொ. சொ. 240 சேனா. உரை)

முக்காலமும் உணர்த்தும் நிகழ்காலச் சொல் -

{Entry: F06__116}

நிகழ்காலச்சொல் என்றாரேனும் இறந்தகாலத்தையும் எதிர் காலத்தையும் அகப்படுத்தி முக்காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யும் என்னும் முற்றும் எச்சமுமே கொள்ளப்படும்.

எ-டு : மலை நிற்கும், தீச் சுடும். (இ.வி. 303 உரை)

முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை -

{Entry: F06__117}

மூன்று காலமும் வினைக்குறிப்பொடும் தோன்றும் உண்மை நிலையை யுடையன. வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்பு வினையாம். (கரியன் என்னுமிடத்துக் கரியனாய் இருந்தான் - இராநின்றான் - இருப்பான் - என்னும் மூன்று காலங்களுள் ஏற்றதொன்று கொள்ளப்படுதலின் வினைக்குறிப்புமுற்றுக் குறிப்பாற் காலம் காட்டும் என்றவாறு.) (தொ. சொ. 197 இள. உரை)

முக்கால விளக்கம் -

{Entry: F06__118}

இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாதலின், அஃது ஒருகணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று அதற்கு இல்லையாயினும், உண்டல் தின்றல் எனப் பல்தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், உண்ணாநின்றான் வாராநின்றான் - என நிகழ்ச்சி உடைத்தாயிற்று என்பது. (தொ. சொ. 200 சேனா. உரை)

முக்கால வினைத்தொகைகள் -

{Entry: F06__119}

நெடுநல் அடுகளிறு - இன்று அடு களிறு - நாளை அடுகளிறு - வேல், களம், தொழில், பொழுது கந்து - எனவரும். இவை விரியுமிடத்து, நெடுநல் அட்ட களிறு - இன்று அடாநின்ற களிறு - நாளை அடும் களிறு என விரியும் . இவை முறையே இறந்தகால வினைத்தொகை, நிகழ்கால வினைத் தொகை, எதிர்கால வினைத்தொகை எனப்படும். இஃது ஒவ்வொரு காலத்தையே பற்றாது முக்காலமும் பற்றி நெருநலும் அட்ட களிறு - இன்றும் அடாநின்ற களிறு - நாளையும் அடும் களிறு - என விரியவரின் முக்கால வினைத் தொகையாம். (நன். 364 சங்.)

முக்கால வினையெச்ச வாய்பாடுகள் -

{Entry: F06__120}

செய்து செய்பு செய்யா செய்யூ செய்தென - என்னும் இவ் வைந்து வினையெச்ச வாய்பாடுகளும் இறந்தகாலம் காட்டும்; செய என்னும் வாய்பாடு நிகழ்காலம் காட்டும்; எஞ்சிய செயின் - செய்யிய - செய்யியர் - என்னும் வாய்பாடுகளும் வான் - பான் - பாக்கு - என்னும் விகுதிகளையுடைய வினை யெச்சங்களும் எதிர்காலம் காட்டும்.

அற்றால் அளவறிந் துண்க’ (கு. 943),

ஒலித்தக்கால் என்னாம் உவரி’ (கு. 763)

காண்டலும் இதுவே சொல்லும்’

- எனச் செயின் என்னும் வாய்பாடு போல எதிர்காலம் காட்டுவனவும்,

கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி’ (கலி. கடவுள்),

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (கு. 701),

‘ஈதல் இயையாக் கடை ’ (கு. 230)

என எதிர்மறை விகற்பங்களாய் வருவனவும் கொள்ளப்படும். (நன். 343 சங்.)

முத்துவீரியச் சொல்லதிகாரம் -

{Entry: F06__121}

முத்துவீரிய நூலின் சொல்லதிகாரம் தற்சிறப்புப் பாயிரத் தொடு தொடங்குகிறது. சொல்லதிகாரம், பெயரியல் வினை யியல் ஒழிபியல் - என்ற மூன்று பகுப்பினதாய், அவற்றுள் முறையே (தற்சிறப்புப் பாயிரம் நீங்கலாக) 135, 49, 126, ஆக 310 நூற்பாக்களை உடையது. இதன்கண் பெரும்பான்மை தொல்காப்பியமும் சிறுபான்மை நன்னூலும் இணைந் துள்ளன. தொல்காப்பிய வேற்றுமையியல் - வேற்றுமைமயங் கியல் - விளிமரபு - பெயரியல் - என்ற நான்கு இயற்செய்திகள் பெயரியலிலும், வினையியற் செய்தி வினையியலிலும், இடையியல் - உரியியல் - கிளவியாக்கம் - எச்சவியல் - ஆகிய வற்றின் செய்திகள் ஒழிபியலிலும் இடம் பெற்றுள.

உயர்திணைப் பலர்பாலுக்கு ஈறு ரகரமும் மாரும் என்பனவே இந்நூலாசிரியரால் குறிக்கப்பட்டுள (பெய. 23). எண்ணுப் பெயரை இவர் ‘கணக்கு’ எனக் குறிப்பிடுகிறார் (25); தன்மையை நன்னூலை யொட்டி விரவுத்திணையாகக் கூறி யுள்ளார் (27); அஃறிணை ஒருமை-பன்மை, உயர்திணை ஆண்பால் - பெண்பால் - இவற்றிற்கே பன்மை விரவுப்பெயர் வரும் என்று தொல்காப்பியத்தை ஒட்டிக் கூறியுள்ளார். (36); மூன்றனுருபாக ஒடுவைச் சிறப்பித்துக் கூறியுள்ளார் (50); எழுவாய்வேற்றுமைக்கு முடிக்கும் சொல்லாகப் பொருண்மை சுட்டல் நீங்கலான ஐந்தனையும் குறிப்பிடுகிறார் (54); பெய ரியலில் தொல்காப்பியம் நன்னூல் என்னும் இரண்டனையும் தம் விருப்பம்போல் கலந்து நூற்பா அமைத்துள்ளார். வினை யியலில் தன்மையொருமைக்கு அன் ஈறு கூறப்பெறவில்லை (9); தொல்காப்பியம் குறிப்பிடும் வினைக்குறிப்புப் பொருண் மையும், விரவுவினைக்கண் ஒன்றாகும் இன்மை செப்பலும் இந்நூலில் இடம் பெறவில்லை (வினை. 23), இடைச்சொல் வகை ஆறாகவே இந்நூலுள் கூறப்படுகிறது . (ஒழி. 2).

முத்துவீரியத்தில் காணப்படும் பிற நூலின் வேறுபட்ட சொல்லதிகாரச் செய்திகள் -

{Entry: F06__122}

உயர்திணைக்கண் நான்காம் வேற்றுமையுருபேயன்றி ஆறாம் வேற்றுமையுருபும் வரும்.

எ-டு : நம்பியது மகன் (பெய. 76)

ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமையுருபொடு பொருந்துதல் உரித்து.

எ-டு : சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதுவது,
சாத்தன்தன்கண் (84)

முறைப்பெயர் ஆறாவதன் பொருண்மையொடும் வரும்.

எ-டு : சாத்தனது மைந்தன் (சாத்தனுக்கு மைந்தன் எனவே
வரற்பாலது) (93)

குறித்து வரும் வினைச்சொல் இல்லாதவிடத்து நிகழ்காலத்தில் வினை செல்லும்.

எ-டு : அவன் சுவர்க்கம் புகும், நிரயம் புகும். (வினை. 43)

வன்மை (கடின)ப் பொருட்கண் வரும் வினாவையுடைய வினைச்சொல்லை எதிர்மறுத்துரைப்பினும் குற்றமில்லை.

எ-டு : ‘வைதேனோ?’ என வினாவொடு வந்த வினைச் சொல், ‘வைதிலேன்’ என்னும் எதிர்மறைப்பொருள் பட வந்தது. (45).

இடைச்சொல், ஐ முதலிய ஆறு வேற்றுமையுருபுகளும், அன் முதலிய சாரியையுருபுகளும், போல முதலிய உவமையுருபு களும், செய்யுளிசை நிறைத்து வருவனவும், அசைத்தலே பொருளாக நிற்பனவும், அன் ஆன் முதலிய வினையுருபுகளும் ஆகிய ஆறு திறத்தனவாம். (ஒழி. 2)

‘முதல்இவை சினைஇவை என வேறுள இல’ -

{Entry: F06__123}

யானையைக் குறித்தவழி யானை உண்டாய்க் கால் கை கோடு - முதலியன வேறு இல்லையாய், கால் கை கோடு - முதலியவற்றைக் குறித்தவழி அவை உண்டாய் யானை வேறு இல்லையாய், நிற்கும் ஒரு பொருட்பகுதிய ஆதலின் ‘முதல் இவை சினை இவை என வேறுளவாகக் கூறப்படுவன அல்ல’ என்று கூறப்பட்டன. (நன். 316 சங்.)

முதல் என்பது -

{Entry: F06__124}

காரியத்தின் முன் நிற்றலின் காரணம் ‘முதல்’ எனப்பட்டது.

(தொ. சொ. 112 சேனா. உரை)

முதல்குறிப்பு -

{Entry: F06__125}

குறிப்பினால் பொருள் உணர்த்துவனவற்றுள் முதற்குறிப்பு என்பதும் ஒன்று.

‘குன்றா விளையுள் உயர்நிலம் துன்புற்றுத், தா என்று இரப்பாள்தன் கை’

என்னும் இப்பாடலுள், குன்றா என்புழிக் குரல் நரம்பும், விளையுள் என்புழி விளரி நரம்பும், உயர்நிலம் என்புழி உழை நரம்பும், துன்புற்று என்புழித் துத்த நரம்பும், தாவென்று என்புழித் தார நரம்பும், இரப்பாள்தன் என்புழி இளி நரம்பும், கை என்புழிக் கைக்கிளை நரம்பும் - என்னும் இவை குறிப்பால் முதல் நின்ற எழுத்தால் அறிய வந்தன.

‘இல்லென்பான் கையில் குடாஅ விரகிலுக்கு, உள்ளதென் துய்ப்பதென் தான்’

என்பதும் அது.

‘ஓங்கெழில் முதலாக்,

குன்று கூதிர் பண்பு தோழி,

விளியிசை முத்துறழ் என்றிவை எல்லாம்,

தெளிய வந்த செந்துறை செந்துறை’

என்னும் இதனுள்,

‘ஓங்கெழில்’ என்புழி ‘ஓங்கெழில் அகல்கதிர் பிதிர்துணி’ என்னும் பாட்டும்,‘குன்று’ என்புழி ‘குன்று குடையாக் குளிர் மழை தாங்கினான்’ என்னும் பாட்டும், ‘கூதிர்’ என்புழிக் ‘கூதிர்கொண்டு இருள்தூங்கும்’ என்னும் பாட்டும், ‘பண்பு’ என்புழிப் ‘பண்புகொள் செயல் மாலை’ என்னும் பாட்டும், ‘தோழி’ என்புழித் ‘தோழி வாழி தோழி வாழி’ என்னும் பாட்டும், ‘விளியிசை’ என்புழி ‘விளிஇசைப்ப விண்ணகம் நடுங்க’ என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி ‘முத்துறழ் அகலம் தேங்கி’ என்னும் பாட்டும், குறிப்பினான் முதனின்ற மொழியான் அறிய வந்தன. (நன். 268 மயிலை.)

முதல்குறிப்புச் சொல் -

{Entry: F06__126}

ஒரு செய்யுளின் முதற்சொல்லையோ சீரையோ சொல்ல, அது அம்முழுச்செய்யுளைக் குறிப்பது.

எ-டு : ‘அறத்தா றிதுஎன வெள்ளைக் கிழிபு’ (யா.கா. 15) என்றவழி, ‘அற த்தாறு இதுவென வேண்டா சிவிகை, பொறுத் தானோ டூர்ந்தான் இடை’ (கு . 37) என்னும் குறட்பாவை அம்முதற்சீர்கள் குறித்தன. ‘வாக்குண் டாம்’ எனத் தொடங்கும் விநாயக வாழ்த்துப்பாடல் முதற்சீர், ஒளவையார் பாடிய நாற்பது வெண்பாக்களை யுடைய அந்நூல் முழுதையும் குறித்தது. (நன்.269)

முதல்சினை இரண்டன்கண்ணும் ஐஉருபு வாராமை -

{Entry: F06__127}

யானையைக் காலை வெட்டினான் - என முதல் சினை இரண்டன்பாலும் ஐயுருபு வாராது என்றாராயிற்று. வரின் செயப்படுபொருள் இரண்டாய், முதல்சினைகள் ஒருபொருட் பகுதிய அல்லவாம் ஆதலின், இங்ஙனம் செய்யப்பட்டது ஒருபொருளே, முதல்சினைகள் ஒரு பொருட்பகுதியவே என்பது தோன்றக் கண்ணும் அதுவுருபும் வரும் என்பதாயிற்று. (எ-டு : யானையின்கண் காலை வெட்டினான், யானையது காலை வெட்டினான்). (நன். 315 சங்.)

முதல் சினை இரண்டும் இணைந்து ஐயுருபு ஏற்றல் -

{Entry: F06__128}

‘முதலிவை சினையிவை எனவேறு உளஇல’ என்றே இச்சூத்திரத்தை முடிப்பின், அம்முடிபு, முதலும் சினையும் ஒரு பொருள் ஆதலால் அந்த ஒருபொருளில் இரண்டு உருபு வாராமைக்குக் காரணம் எனப்படும். மீட்டும் ‘உரைப்போர் குறிப்பின’ என்றமையால், உரைப்போர் குறிப்பின்வழி அதுதானே பிறபொருள் என்பதாயிற்று. ஆகவே ஒரு பொருளில் இரண்டுருபு வாரா என்பது கருத்தன்று; வாரா என்பது கருத்தாயின், ‘யானையைக் கோட்டைக் குறைத்தான்’, ‘மணியை நிறத்தைக் கெடுத்தான்’ ‘பசுவைப் பாலைக் கறந்தான்’ - எனவரும் செய்யுள்வழக்கிற்கும், அவனைக் கண்ணைக் குத்திக் காட்டில் விட்டான், அவனைக் கையைப் பற்றி இழுத்துவிட்டான், அவனைப் பல்லை உடைத்து விட்டான், அவனை இடுப்பை ஒடித்துப் போட்டான் - என வரும் உலகவழக்கிற்கும் இலக்கணம் இன்றாய் முடிவது மன்றி, முன்னோர் நூலொடு முரணும் ஆதலால் மாறுகொளக் கூறல் என்னும் குற்றமுமாம். ஆதலால் அது கருத்தன்று. இன்னும், அவனைக் குத்தினான் - இழுத்தான் - உடைத்தான் - ஒடித்தான் - எனின் குறித்த பொருளை விளக்காததினாலே கண்ணை - கையை - பல்லை - இடுப்பை - என்பன இடைப் பிறவரலாய் வரவேண்டியே நிற்றலானும், இரண்டாம் வேற்றுமைப் பொருளில் ஈருருபு இணைதல் இருவகைப்படும் என்று கூறுதலானும், வடநூலாரும் இவ்வாறு வருதலை ஓர் பிரயோகம் எனப் பெயரிட்டு வழங்குதலானும், முதல்சினை களை இரு பொருளாகக் குறித்தபோது இரண்டிடத்தும் ஐயுருபு வரும் என்பதே தொல்காப்பியனார் கருத்து என்பதை,

‘முதலும் சினையும் பொருள்வேறு படாஅ

நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ சொ. 90 நச்.

‘பிண்டப் பெயரும் ஆயியல் திரியா

பண்டியல் மருங்கின் மரீஇய மரபே’ தொ. சொ. 91 நச்.

என்று கூறியதனாலும், முதல் சினையாயும், சினை முதலாயும் மாறி வருங்கால் முதல்சினை ஒருபொருளாயினும் சொல்லு வான் குறிப்பின்வழி இருபொருள் ஆதலானும், அவ்விரு பொருளில் ஐயுருபு இணைந்து வர உதாரணம் காட்டலானும், ஒரு பொருளையே இரு பொருளாக வைத்துச் சொல்லுதல் இலக்கணம் அன்றாயினும் தொன்று தொட்ட நெறியான் வரும் என்பது. (நன். 316 இராமா.)

முதல் சினை இவை என்பது -

{Entry: F06__129}

ஒன்றற்குச் சினை மற்றொன்றற்கு முதலாயும், ஒன்றற்கு முதல் மற்றொன்றற்குச் சினையாயும் நியதியின்றி வருதலின், இவையே முதல் இவையே சினை - என வேறு அறியக் கிடப்பன இல்லை. அவை சொல்லுவோர் குறிப்பினான் ஆங்காங்கு முதல் சினை என உணரப்படுவனவாம்.

மனிதன் : முதல், கை : சினை; கை : முதல், விரல் : சினை.

சேரி : முதல், மனை : சினை : ஊர் : முதல், சேரி : சினை.

முதல் என்பது கிளைகளைவிட்டு வேறன்று; சினைகளும் முதலை விடுத்துத் தனியே வேறல்ல என்பது உணரத்தக்கது. (நன். 315 மயிலை.)

முதல்சினைக்கண் உருபு மயங்குதல் -

{Entry: F06__130}

முதல்முன் ஐ வரின் சினைமுன் கண் வரும்; முதல்முன் அது வரின் சினைமுன் முறையே ஐ வரும்; சிறுபான்மை இரண்டன் கண்ணும் ஐ வரும். முறையே வருமாறு :

யானையைக் கோட்டின்கண் குறைத்தான்,

யானையது கோட்டைக் குறைத்தான்,

யானையைக் கோட்டைக் குறைத்தான். (தொ. சொ. 87, 88 சேனா. உரை)

முதல்சினை பற்றித் தொல்காப்பியனார் கருத்து -

{Entry: F06__131}

‘முதல்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை

முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே’ (தொ. சொ. 87 சே.)

எனக் கூறி, இதை உருபுமயக்கம் எனவும்,

முதல்முன் ஐவரின் கண்என் வேற்றுமை

சினைமுன் வருதல் தெள்ளிது என்ப

எனக்கூறி, இதைப் பொருள்மயக்கம் எனவும், முதல் சினை இரண்டிடத்தும் ஐயுருபு வரும் எனவும் கொண்டது தொல் காப்பியனார் கருத்து என்பது நச்சினார்க்கினியர் உரையால் உணரலாம். (வேற்றுமையுருபுகளும் வேற்றுமைப் பொருள் களும் கலந்து வருதல் என்றே பொருள் கொள்க.) (நன். 315 இராமா.)

முதல், சினை : விளக்கம் -

{Entry: F06__132}

முதல்சினைக்கண் முதலாவது என்றும் முதலாகவும், சினை யாவது என்றும் சினையாகவும் இருத்தல் வேண்டும் என்ற வரையறை இன்று. முதல் பிறிதொன்றன் உறுப்பாயவழி அப்பிறிதொன்றற்குக் சினையாம். சினை தனது உறுப்பினைக் குறிப்பிடும்வழி முதல் ஆகும்.

எ-டு : சாத்தன் கையினது விரலின் உகிரை நுனிக்கண் குறைத்தான் - என்புழி சாத்தன் : முதல், கை : சினை; கை : முதல், விரல்: சினை; விரல்: முதல், உகிர்: சினை; உகிர்: முதல், நுனி : சினை. இவ்வாறு சொல்லுவான் உள்ளக்கருத்தைக்கொண்டே இன்னது முதல் இன்னது சினை எனக் கொள்ளலாமே யன்றி, நிலையாக இன்னது முதல் இன்னது சினை என்று வரையறுத்துக் கொள்ளுதல் இல்லை.

யானை என்பது முதற்பொருள்; படையது யானை - என்புழிப் படை முதற்பொருள் ஆதலின் யானை அதன் சினை யாயிற்று. (தொ. சொ. 90 நச். உரை)

முதல் துணை நிமித்த காரணம்

{Entry: F06__133}

‘காரக முதற்கருவியும் காரகத் துணைக்கருவியும்’ காண்க.

முதல்நிலைத் தனிவினைப் பாகுபாடுகள் -

{Entry: F06__134}

நட வா முதலிய முதல்நிலைகளை இந்நூல் தனிவினை எனப் பெயரிட்டு வழங்கும்; இதனைப் பல்வேறு பாகுபடுத்தியும் விளக்கும். அப்பாகுபாடுகள் வருமாறு :

1. முதனிலைத்தொழிற்பெயர் ஆதல் : ‘அறிகொன்று’ (கு. 638) ‘கெடுவாக (கு.117) இவற்றுள் அறி கெடு என்பன முதனிலைத் தொழிற்பெயர். ‘அங்கா முயற்சி’ (நன். 87) என்புழி அங்கா (அங்காத்தல்) முதனிலைத்தொழிற்பெயர். (அறி - அறிவு; கெடு - கெடுதல்)

2. முதனிலை ஏவல்ஒருமைமுற்று ஆதல்; ‘செல்லாமை உ ண்டேல் எனக்கு உரை (கு. 1101), ‘என்னைக்கு மாறற்கு இயம்பு

3. வேறு வினைமுற்று ஆதல் : ‘ உறுவது சீர்தூக்கும்......... நேர்’
(கு. 813) நேர் - நேர்வர் என வேறு வினைமுற்றாயிற்று.

4. பெயரெச்சம் ஆதல் : பொருபடை, கொல்களிறு - பொரு
கின்ற, கொல்கின்ற

5. வினையெச்சம் ஆதல் : வரிப் புனை பந்து (முருகு . 68) வரி - வரிந்து; ‘அறு வேறு வகையின்’ (முருகு. 58) அறு - அற்று;
‘பால்அறி வந்த’ (தொ. சொ. 162 சே.) அறி - அறிய;
சாக் குத்தினான் - சா - சாவ;
‘செய்தக்க..... கெடும்’ (கு. 466) செய்தக்க - செய்யத்தக்க

6. பெயரெச்ச வினையெச்சங்களில் நின்ற முதனிலை பிரிந்து தொழிற்பெயர் முதலாயின ஆகி வினைமுதல் ஆதல்:

‘கால காலனைக் காண்கின்ற போது

காலனைத் துரத்தும்அக் காட்சி தானே’

இதனுள் காண்கின்ற என்ற பெயரெச்சத்தின் பகுதி பிரிந்து ‘காட்சி’ என எழுவாய் ஆயிற்று.

‘கால காலனைக் காண்கின்றார் தமக்கோர்

வீடு அளிக்கும் அக்காட்சி ஈது உண்மை’

இதனுள் ‘காண்கின்றார்’ என்னும் முற்றின் (வினையாலணை யும் பெயரின்) பகுதி பிரிந்து எழுவாய் ஆயிற்று.

மேற்கூறியவற்றின் தொழிற்பெயரான காட்சி என்பது, அக்காட்சியால் பயனுண்டு; அக்காட்சிக்கு இணை இல்லை - என உருபேற்றலுண்டு. வினைமுதல் இன்றியே தொழிற் பெயர் பிரிந்து எழுவாய் ஆதலுண்டு. அதற்கு எடுத்துக்காட்டு:

‘இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு’ கு. 352

மாசறு காட்சியவர்க்கு அக்காட்சி இன்பம் பயக்கும் என்பது.

(இ. கொ. 66)

7. முதனிலை எட்டு வேற்றுமையுருபுகளையும் ஏற்று, எழுவாய் முதல் விளி யீறான எட்டுப் பொருளாகவும் ஆதல் :

இவ்வுரை பெருகிற்று - உரை : எழுவாய்

சொல்லைச் சேர்த்தான் - சொல்: செயப்படுபொருள்

ஆயிரம் முடியை அவிழ்த்து நட்டான் - முடி: செயப்படுபொருள்

உரையால் அறிவித்தான் - உரை : கருவி

இவ்வுரைக் குச் சொல் இது - உரை : ஏற்றல்

இச்சொல்லின் அறியலாம் - சொல்லின்

இப்பொருள் (சொல்லினின்றும்)

இவ்வுரையது பெருமைக்கு

ஒப்பிலை - உரை : கிழமை

இச்சொற்கண் இருக்கும்

இப்பொருள் - சொல் : இடம்

களி ! வாராய், மடி! போவாய் - களி, மடி : விளி

8. செயப்படுபொருள் குன்றாமையும் குன்றுதலும் பொதுவும் ஆதல்.

அ) விடு ஏ வை வெள உண் தின் - செயப்படுபொருள் குன்றா வினைகள்.

ஆ) நட வா போ வாழ் - செயப்படுபொருள் குன்றிய வினைகள்.

இ) முடி மடி கெடு தேய் தபு பிரி - இவை நீ என்னும் முன்னிலை பெற்றுச் செயப்படுபொருள் குன்றி வருவதுடன், செயலை முடி - துணியை மடி - பொருளைக் கெடு - பொன்னைத் தேய் - பகைவரைத் தபு - நண்பனைப் பிரி- எனச் செயப்படு பொருள் குன்றாமலும் வருதலால் இருவகைக்கும் பொது.

9. இடம் குன்றாமல் (வெளிப்பட) வருதல்: உரிஞ், செல்-போல் வன ஒருமை ஏவல் ஆதலின் முன்னிலையாவது வெளிப்படை

10. பல பொருட்கும் ஒன்று ஆதல் : ஒருவனை வைதான், சுமையை வைத்தான் - வை முதனிலை; படையின் மடிந்தான், சீலையை மடித்தான் - மடி முதனிலை; இத்தொழிற்கு மடிந்தான் (மடி சோம்பு) - மடி முதனிலை; படையில் முடிந்தான், பணத்தை முடிந்தான் - முடி முதனிலை

11. ஒரு பொருட்கே பல ஆதல் : சொல், உரை, அறை, கூறு, விளம்பு, பகர் - போல்வன; ஈ-தா கொடு - என்பனவும் ஆம்.

12. பகாப்பதம் ஆதல் : முதனிலை யாவும் பகாப்பதங்களே

13. பகுதி இயல்பாய் வருவனவும், திரிந்து வருவனவும்: நடந்தான் பொருதான் வாழ்ந்தான் - பகுதிகள் இயல்பாகவே நின்றன. வந்தான் வருகின்றான் தந்தான் தருகின்றான் கண்டான் செத்தான் - இவற்றுள், வா - தா - காண் - சா - என்னும் பகுதிகள் திரிந்து நின்றன.

நடு என்பது ஏவல் ஆவதுடன், ‘நம் வழக்கறுத்தலுக்கு இவனே நடு’ (நடுவன்) எனப் பெயராயும், ‘திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்கும் மதுரை நடு’ என இடை என்னும் பெயராயும் வந்தது. நட என்பது ஏவல் ஆவதுடன், ‘நாற்று நட வந்தான்’ எனச் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சமா யும் வந்தது.

நட முதலிய முதனிலைகளை முன்னிலை ஏவல் ஒருமை எதிர்கால வினைமு ற்று எனக் கொள்ளுதல் பொருந்தாது என்பதைப் பலவாறு மறுத்து, முன்னிலை முதலிய ஆறும் மாறுதலின் இவற்றை எல்லா வினைச்சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொது முதனிலைத் தனிவினைப்பெயர் (தொழிற் பெயர்) என்றே கொள்க என்பார் ஆசிரியர். (இ. கொ. 66)

முதல்நிலை பிரிக்கப்படாத தொழிற்பெயர்கள் -

{Entry: F06__135}

விகுதி பெற்றும் முதனிலை திரிந்தும் வரும் தொழிற் பெயர்களில், முதனிலை என்னும் பகுதியைப் பிரித்துக் காணல் இயலும்; அங்ஙனம் பிரித்துக் காணல் இயலாத தொழிற்பெயர் களும் உள. அவை பூசல் - வேட்டை - சண்டை - கூத்து - தொழில் - வினை - ஆசை - வேட்கை - அவா - சூது - வாது - தச்சு - கொல்லு - நெட்டி - என வரும். பட்டினி என்பதும் அத்தகையது. (இ. கொ. 70)

முதல்நிலை வினை பலவாறாக வருதல் -

{Entry: F06__136}

முதனிலைவினை - வினைப்பகுதி. இது முன்னிலை ஏவ லொருமைவினை மாத்திரையாய் நில்லாது, 1. வினையெச்சப் பொருளுடைய தாகவும், 2. பெயரெச்சப் பொருளுடைய தாகவும், 3. தொழிற்பெயராகவும், 4. வினையாலணையும் பெயரிலுள்ள பகுதி பிரிந்து தொழிற்பெயராகவும், 5. பகுதியாய் நின்றே வினைமுற்றுப் பொருள் பயந்தும் வரும். எடுத்துக்காட்டு முறையே வருமாறு :

1. வரிப் புனை பந்து - வரிந்து புனைந்த : வினையெச்சம்

2. பொருதகர் - பொருத தகர் : பெயரெச்சம்

3. அறி கொன்று - அறிவினைக் கொன்று : முதனிலைத்
தொழிற்பெயர்

4. ‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண்..... தரு ம்’ (கு. 508) இதில்
தெளிந்தான் என்னும் வினையாலணையும்பெயரின் முதனிலையான ‘தெளி’ என்பது பிரிந்து ‘தெளிதல் இடும்பை தரும்’ என்று தொழிற்பெயர் தோன்றா எழுவாயாய் நின்றது.

5. ‘உறுவது ....... நே ர்’ (கு. 813) - இக்குறட்பாவில் நேர் என்பது பகுதியாய் நின்றே நேர்வர் என வினைமுற்றாய்ப் பொருள் பயந்தது.

6. ‘இருள் நீங்கி.............. காட்சியவர்க்கு’ (கு. 352) - காட்சி யுடையோர் காட்சியவர். இது சாமானிய தத்திதம். இதிலுள்ள காட்சி என்ற சொல் பிரிந்து ‘பயக்கும்’ என்ற வினை ஏற்று முடிந்தது. இது செய்யுள் வழக்கு. (பி.வி. 35)

7. ‘சாவ என் எச்சத்து இறுதி குன்றும்’ (தொ.எ. 209 நச்.) என்ற விதிப்படி, ‘சாக்குத்தினான்’ என, ‘சா’ என முதனிலை யளவில் நின்று சாவ என்னும் வினையெச்சப்பொருள்பட் டது, ‘மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று முடிக்கும்’ உபலட்சணத்தால் பின் வருவன அமையும் :

‘பால் அறி வந்த’ (தொ. சொ. 162 சேனா.) அறிய வந்த : வினையெச்சம்; ‘ செய் தக்க’ (கு. 466) செய்யத் தக்கன : வினையெச்சம்; ‘ புனை பாவை’ (கு.407) - புனைந்த பாவை : பெயரெச்சம்; ‘நுண் மாண் நுழை புலம்’ மாண்டு நுழைந்த புலம் : ஈரெச்சமும்; ‘ வரி ப் புனை பந்து’ (முருகு 68) - வரிந்து புனைந்த பந்து : ஈரெச்சமும். இவையாவும் சொல்லுவான் குறிப்பினை யொட்டிப் பொருளறியக் கிடந்தன. (பி. வி. 35)

முதல்வினை சினைவினையைக் கொண்டமை -

{Entry: F06__137}

‘பூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பு’ (பதிற். 65)

அணிந்து - முதல்வினை ; விளங்குதல்’ - சினையாகிய மார்பின் வினை. முதல்வினை சினைவினை கொண்டது. (தொ. சொ. 233 நச். உரை)

‘முதலில் தோன்றும் சினைஅறி கிளவி’ -

{Entry: F06__138}

இஃது ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. முதற்சொல் வாய்- பாட்டான் கூறும் சினைப்பொருளை அறிவிக்கும் சொல்.

எ-டு : கடுத் தின்றான், தெங்கு தின்றான்.

‘கடு’ கடுமரத்தையும் ‘தெங்கு’ தென்னையையும் உணர்த்தும் சொற்கள். அவை கடுக்காயையும் தேங்காயையும் ‘தின்றான்’ என்னும் முடிக்கும் சொல்லது ஆற்றலான் குறிப்பிடுவன. முதற்பொருள் தன் உறுப்பாகிய பொருளைக் குறிப்பிடுவது ‘முதலில் தோன்றும் சினையறி கிளவி’ என்னும் ஆகுபெயராம்.

(தொ. சொ. 115 நச். உரை)

முதலும் சினையும் சொற்குறிப்பின -

{Entry: F06__139}

முதலும் சினையும் சொல்லுவானது சொற்குறிப்பினான் முதற்பொருள் என்றும் சினைப்பொருள் என்றும் வழங்கப் படும். எதுவும் தனிப்பட முதல் என்றோ, சினை என்றோ வரையறுத்து உணர்த்தப்படுவதன்று.

எ-டு : படை - முதல், யானை - சினை; யானை - முதல், கோடு சினை; கோடு - முதல், நுனி - சினை.

இவ்வாறு சினையான தொன்றே தன்கண் ஏகதேசத்தைக் குறிக்கத்தான் முதலாம். (தொ. சொ. 90 நச். உரை)

முதற்காரணம் -

{Entry: F06__140}

மட்குடம் என்பதன்கண், மண் ஆகிய காரணம் குடமாகிய காரியத்தோடு ஒற்றுமையுடையது. காரியத்தோடு ஒற்றுமையு டைய காரணம் முதற்காரணம். பொற்பூண் என்புழிப் பொன் முதற்காரணமாம். (தொ. சொ. 74 நச். உரை)

நடந்தான் என்புழிக் குடம் போல்வதொரு காரியமின்றேனும் நடத்தலைச் செய்தான் என்பது பொருளாதலின் நடத்தல் காரியம் ; அவயவத்தால் பல்வேறு வகைப்பட்ட குடம் முதலிய கலன்களில் பொதுமையில் நிற்கும் மண்போல, பல்வேறு வகைப்பட்ட வினைகளில் பொதுமையில் நிற்கும் தொழில், நடத்தற்கு முதற்காரணமாம். (நன். 297 சங்.)

முதற்பெயர், சினைப்பெயர் -

{Entry: F06__141}

மலர் முகம்: ‘தாமரை மலர் முகம்’ என்பதன்கண் முன்மொழி கெட்டது என்றும் ‘தாமரைமுகம்’ என்பதில் பின்மொழி (மலர்) கெட்டது என்றும், முன்னது பூர்வபதலோபம் - பின்னது உத்தரபதலோபம் - என்றும் கூறினால் ஆகாதோ எனத் தாமே வினா எழுப்பிப் பிரயோகவிவேகநூலார் அதற்கு விடையும் கூறுவர்:

மலர் என்ற சொல்லுக்குமுன் அதற்கு முதலாகிய தாமரை என்ற சொல் வந்து கெட்டது; அதுவே போல, தாமரை என்பதற்குப் பின் அதன்சினையாகிய பூவைக் குறிக்கும் விகுதி வந்து கெட்டது என்பது காத்தியாயனர் கருத்து. தாமரை என்பது முதல் சினை இரண்டனையும் குறிக்கும் என்பது பாடியம் செய்த பதஞ்சலியார் கொள்கை. தொல்காப்பிய னார்க்கும் ஆகுபெயராக முதல் சினையையும் சினை முதலை யும் குறிப்பது உடன்பாடு. ‘முதலிற் கூறும்........’ (சொ. 110) காண்க.

தொல்காப்பியத்துக்கு முதல்நூலான ஐந்திரவியாகரணத் திற்கும் ஆகுபெயர் இலக்கணை என்பனஎல்லாம் உடன்- பாடாதல் வேண்டும். (பி.வி. 26)

முதுமை -

{Entry: F06__142}

இஃது ஆறாம்வேற்றுமையுருபினை ஏற்கும் பெயர் கொண்டு முடியும் சொற்களுள் ஒன்று. எ-டு : சாத்தனது முதுமை (முதுமை - முதிர்வு)

இது மூப்பினைக் குறிக்காமல் அறிவின் முதிர்ச்சியைக் குறிப்பிடுவது என்பது உணர்த்துதற்கு முதுமையை அடுத்து இளமை கூறப்பட்டிலது. ‘குடிமை ஆண்மை இளமை மூப்பே’ (57 நச்.) என்ற தொடர் அமைப்பால், மூப்பு என்பதற்கு மறு தலைச் சொல் இளமை ஆதலின், இரு மறுதலைச் சொற்களும் ‘இளமை மூப்பே’ என்று இணைத்தே கூறப்படு கின்றன. ‘மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய’ (மணி. 3 : 57) என்புழி, மூப்பு முதுமை என்ற இருசொற்களும் சேர வந்துள. (தொ. சொ. 81, 57 நச். உரை)

முதுமை என்பது பிறிதொரு காரணம் பற்றாது காலம் பற்றி ஒருதலையாகப் பொருட்கண் தோன்றும் பருவம் ஆதலின், செயற்கையுள் அடக்காது வேறு கூறினார்.

முதுமை என்பது பரிணாமம் குறித்து நிற்கும் : ‘சாத்தனது முதுமை; ‘வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனால் இளமையும் கொள்க. (தொ. சொ. 78 தெய். உரை)

முயற்கோடு -

{Entry: F06__143}

முயல் என்பதற்கும் கோடு என்பதற்கும் தனியே பொருளுண்டு. இவை இரண்டு பொருளும் தனித்தனி உளவாதலின் இவை தனிமொழிக்கண் பொருள் குறித்து நின்றன. முயற்கோடு எனத் தொடர்மொழி ஆயவழி, உள்ள பொருளோடு அதன்கண் இல்லாத பொருளை அடுத்தமையால் ஆண்டு இன்றாயிற் றல்லது இல்பொருள்மேல் வழக்கு இன்றெனக் கொள்க. (தொ. சொ. 150 தெய். உரை)

முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் -

{Entry: F06__144}

முயற்கோடு - யாமைமயிர்க்கம்பலம் - என்பவை பொய்ப் பொருள்களாம். பொய்ப்பொருளும் பொருளுணர்த்து வனவே. (இவற்றை ‘இல்லை’ யென்னும் வருமொழிகொண்டு முடிக்கலாம்) இல்லோன் தலைவனாக வரும் பொருள் தொடர் நிலைச் செய்யுள் புலவரான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. (தொ. சொ. 155 சேனா. உரை)

முரஞ்சல் என்னும் உரிச்சொல் -

{Entry: F06__145}

இவ்வுரிச்சொல் முதிர்வு என்னும் குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘சூல் முரஞ்சு எழிலி’. (தொ. சொ. 333 சேனா. உரை)

முழுது என்னும் உரிச்சொல் -

{Entry: F06__146}

இவ்வுரிச்சொல் எஞ்சாமையாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘மண் முழுது ஆண்டநின் முன்னோர் போல’

(தொ. சொ. 326 சேனா. உரை)

முற்றியல் மொழி இயல்பு -

{Entry: F06__147}

முற்று முக்காலமும் காட்டும்; தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடத்தும் வரும்; தெரிநிலையாகவும் குறிப்பாக வும் வரும்; உயர்திணை அஃறிணை விரவுத்திணை என்ற மூவகைப் பொருளிலும் வரும். எப்பகுதியைக் கொண்டும் வினைமுற்றை உண்டாக்கலாம். அஃது எழுவாயோடு இணைந்து செப்பு மூயினாற்போல அமைந்து பொருள் முற்றி நிற்கும். ஆதலின், வினைமுற்றாவது திணை பால் எண் இடம் காலம் காட்டி எழு வாயோடு இணைந்து பொருள் முற்றி நிற்கும் வினைவகை யாம். சிறுபான்மை பொதுவினைகளும் குறிப்புவினைகளும் உள. வியங்கோள், தன்மை முன்னிலை ஆகிய இரண்டிடத்தும் வாராது. இன்மை செப்பல் - வேறு - என்பன, இருதிணை ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான குறிப்புவினை ஒன்றற்கே வரும். கு டு து று அல் கும் டும் தும் றும் ப மார் இ மின் - என்னும் விகுதி பெற்ற முற்றுக்கள் எதிர்காலம் ஒன்றுமே காட்டும். று என்ற விகுதி பெற்ற முற்று இறந்தகாலம் ஒன்றுமே காட்டும். ‘டு’ குறிப்பு ஒன்றற்கே வரும். ஏனைய விகுதிகள் பெற்ற முற்று முக்காலமும் காட்டும். (தொ. சொ. 427 முதலியன சேனா. உரை)

உண்டான் என்புழித் தானே தன் தொடர்ப்பொருள் உணர்த்த லாற்றாது நின்று தன்னைச் சாத்தன் போல்வதொரு வினை முதல் வந்து விளக்கத் தான் தொடர்ப்பொருள் உணர்த்தி, எடுத்தலோசையான் மற்றுச்சொல் நோக்காது செப்பு மூயினாற்போல அமைந்துமாறி நிற்றல் முற்றிற்கு இலக்கண மாம். (முற்றுச் சொல்லின் இறுதிநிலை திணைபால்களை விளக்கின. தொடர்ப்பொருளை உணர்த்த வேண்டின் வினை முதல் வந்து விளக்க வேண்டும் என்பது) (தொ. சொ. 237 நச். உரை)

முற்றின் இலக்கணம் -

{Entry: F06__148}

வினைக்கெல்லாம் பொதுவாகச் சொன்ன கருத்தன் முதல் ஆறுபொருளையும் காட்டிப் பொருட்பெயர் முதலான ஆறு பெயரையும் ஏற்றுப் பின்னர் வேறொன்றையும் வேண்டாது நிற்பன முற்றுவினைச்சொல்.

எ-டு : செய்தனன் அவன். ‘மற்றுச் சொல் நோக்கா மரபின் அனை த்தும், முற்றி நிற்பது முற்றியல் மொழியே’ என்றார் அகத்தியனார். ‘பொது இயல்பு ஆறனையும் முற்று ஏற்றல்’ காண்க. (நன். 322 மயிலை.)

முற்று -

{Entry: F06__149}

ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொல்லாகிய எச்சங்களைப் போலாது, அவ்வுறுப் பொடு கூடி நிறைந்து நிற்றலின் ‘முற்று’ எனப்படும். பெயரன்றி வினைச்சொல் முதலியவற்றுள் ஒன்றையும் ஏலாதன முற்று எனவும், பெயரன்றிப் பெயர்ப்பின் வேறொன்றையும் ஏலாதன முற்று எனவும் கொள்ளுமாறு சூத்திரம் செய்தார். (நன். 323 சங்.)

முற்று இடைக் கிடப்பு -

{Entry: F06__150}

உண்டான் பசித்த சாத்தன் - என்ற தொடரில், பசித்த என்பது உண்டான் என்னும் முற்றிற்கும் அது கொண்டு முடியும் சாத்தன் என்னும் சொற்கும் இடையே இடைக்கிடப்பாய் வந்தது. இது முற்று இடைக்கிடப்பாம். ‘அடுஞ் செந்நெற் சோறு’ என்புழியும், ‘உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே’ என்புழியும் செந்நெல்லும் புற்கையும் முறையே பெயரெச்ச இடைக்கிடப்பும் வினையெச்ச இடைக்கிடப்பும் ஆம். இடைப்பிறவரலை இவ்வுரையாளர் இப்பெயரால் வழங்கினார். (தொ. சொ. 239 கல். உரை)

முற்று எச்சமாய்த் திரியாமை -

{Entry: F06__151}

பின்னூல் செய்தோர் வினையெச்சமுற்று எனப் பெயர் கூறாமல் ‘முற்றுவினையெச்சம்’ என்று பெயர் கூறினா ரேனும், ‘பெயரெச்ச வினைக்குறிப்புமுற்று’ எனப் பெய ரெச்சத்திற்குக் குறியிட்டு ஆள வேண்டுதலின் அதற்கும் அப்பெயரே கொள்ள வேண்டும். விரவு வினையாகிய வினையெச்சமும் பெயரெச்ச மும் பாலும் இடமும் காட்டி நிற்றலின், முற்று எச்சமாய்த் திரிந்தது என்னாமோ எனின், ‘அளிநிலை பொறாது’ என்ற அகப்பாட்டினுள் (5), குறுக வந்து- முகத்தள் - கேளாள் - தமியள் - முறுவலள் - காட்டி - உரையா - ஏற்றி - மோயினள் - உயிர்த்தகாலை - என வினை யெச்ச அடுக்காகச் செய்யுள் செய்கின்றவர், தம் பேரறி வுடைமை தோன்ற எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்கள் சிலவற்றைத் திரித்துப் பாலும் இடமும் காட்டி நிற்பச் செய்யுள் செய்தா ராதலின் வினையெச்சமே முற்றாய்த் திரியும் என்க. (தொ. சொ. 457 நச். உரை)

முற்றுச்சொல் -

{Entry: F06__152}

செய்கையும் பாலும் காலமும் செயப்படுபொருளும் தோன்ற நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும், மற்றோர்சொல் நோக்காது முற்றி நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும், எக்கால் அவை தம் எச்சம் பெற்று நின்றன அக்கால் பின் யாதும் நோக்காவாய்ச் செப்பு மூயினாற்போல அமைந்து மாறுதலின் முற்றுச்சொல் என்பாரும் என இப்பகுதியர் ஆசிரியர். எனவே மூவகையான காரணங்கள் சொல்லப்படும் என்பது. (எக்கால், அக்கால் - எப்போது, அப்போது) (தொ. சொ. 422 இள. உரை)

இறப்பு நிகழ்வு எதிர்வு என முக்காலமும் பற்றி, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்தோறும், வினை யானும் குறிப்பானும் பொருளானும் இயலும் முற்றுச்சொல் 24 ஆம். (ஈண்டுப் பொருள் என்றது ஒருமையும் பன்மையும்) முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி முற்றுச் சொல் வருமாறு:

தன்மையொருமை வினைமுற்று: உண்டேன், உண்ணா நின்றேன், உண்பேன்; கரியேன் - 4; தன்மைப்பன்மை வினை முற்று: உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம்; கரியம்-4; முன்னிலையொருமை வினைமுற்று : உண்டனை, உண்ணா நின்றனை, உண்குவை; கரியை - 4; முன்னிலைப் பன்மை வினைமுற்று : உண்டனீர், உண்ணாநின்றனீர், உண்குவீர்; கரியீர் - 4; படர்க்கை ஆண்பால் வினைமுற்று : உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன்; கரியன்; படர்க்கைப் பெண் பால் வினைமுற்று : உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள்; கரியள்; படர்க்கைப் பலர்பால் வினைமுற்று : உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர், கரியர்; படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று : உண்டது , உண்ணாநின்றது, உண்பது; கரியது; படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று: உண்ட, உண்ணாநின்ற, உண்ப; கரிய. படர்க்கை ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் - என்னும் இவை பன்னிரண்டும் பொருள்முகத்தான் ஒருமையாதலின் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி நான்காய் அடங்கின. ஏனைய பலர்பால் பலவின்பால் - என்னும் இவை எட்டும் பொருள் முகத்தால் பன்மையாதலின் மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றி நான்காய் அடங்கின. ஆக, படர்க்கை வினை முற்று எட்டாம். ஆதலின் வினைமுற்று 24 ஆயினவாறு. (தொ. சொ. 243 தெய். உரை)

முற்றுச்சொல் முடிவு -

{Entry: F06__153}

முற்றுச்சொல் அடுக்கி வந்தாலும் பெயரையே கொண்டு முடியும். இதற்கு விதிவிலக்கு செய்கு என்னும் தன்மை யொருமை வினைமுற்றும், செய்கும் என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றும், மார் என்னும் பலர்பால் வினை முற்றும் ஆம். இவை மூன்றும் வினைகொண்டு முடியினும் முற்றேயாம்.

எ-டு : உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்;
நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன்.

(யான் உண்கு வந்தேன், யாம் உண்கும் வந்தேம், ‘எள்ளுமா ர் வந்தாரே ஈங்கு’ ) (தொ. சொ. 429 சேனா. உரை)

முற்றும்மை எச்சப்பொருள் தருதல் -

{Entry: F06__154}

முற்றும்மையை ஏற்ற சொல் எதிர்மறைவினையைக் கொண்டு முடியும்வழி எச்சப்பொருள் உணர்த்தி நிற்றலுமுரித்து.

எ-டு : ‘பத்தும் கொடால்’, ‘அனைத்தும் கொடால்’ என்றால் ‘சில கிடக்கக் கொடு’ என்று பொருள் தருதலுமுண்டு. ‘எல்லாரும் வாரார்’ என்றால் ‘சிலர் வருவர்’ எனப் பொருள்படுதலுமுண்டு. (தொ. சொ. 287 நச். உரை)

பத்தும் கொடேல் - அனைத்தும் கொடேல் - எல்லாரும் இது செய்யார் - என்னும் முற்றும்மைகள், சில குறையக் கொடு எனவும், சிலர் இது செய்வார் எனவும் எச்சப்பொருள்பட நின்றவாறு காண்க. ‘ஆறும் தருவது வினையே (நன். 320) என்பது ஐந்தும் தருவது வினை எனச் சிறுபான்மை உடன் பாட்டிலும் வந்தது. இதுவும் எதிர்மறைக்கண் வந்ததேயாம், ஆறும் தாராது ஐந்தும் தருவது எனப் பொருள்படுதலால் என்க. (நன். 358 இராமா.)

முற்றும்மைக்குச் சிறப்பு விதி -

{Entry: F06__155}

முற்றும்மை சிலவிடங்களில் எச்சவும்மையாகப் பொருள் படுதலுமுண்டு. ‘ஆறு ம் தருவது வினையே’ (நன். 320) என்றவழி , ஐந்தும் தருவது வினையே என்று கொள்வது எச்சவும்மை. எச்சவும்மைப் பொருளில் முற்றும்மை வருதற்கு முடிக்கும் சொல் எதிர்மறையாய் இருத்தல் சிறப்பு. எல்லாரும் இது செய்யார் என்றவழி, முற்றும்மை ‘சிலர் இது செய்வர்’ என எச்சவும்மைப் பொருள் தந்தது. (நன். 426 சங்.)

முற்றும்மை பயன்படும் இடம் -

{Entry: F06__156}

இத்தனைதான் என்று வரையறுக்கப்பட்ட முதற்கிளவிக்கும் சினைக்கிளவிக்கும் அவை முடிக்கும் சொல்லொடு தொடரு மிடத்து முற்றும்மை கொடுக்கப்படும். முடிக்கும் சொல் எதிர்மறைச் சொல்லாயவழி முற்றும்மை எச்சப்பொருள் தருவதுமுண்டு.

எ-டு : தமிழ்நாட்டு மூவேந் தரும் வந்தார்; நம்பி கண் இரண்டும் நொந்தன. ‘பத் தும் கொடால்’ என்ற வழிச் சில எஞ்சக் கொடு என்ற எச்சப்பொருளும் தந்தவாறு. (தொ. சொ. 33 நச். உரை) ( 285. சேனா. உரை)

முற்று முதலியன எச்சப்பொருள் படுதல் -

{Entry: F06__157}

‘தேரான் பிறனில் புகல்’ (கு. 144) - இதன்கண், ‘தேரான் பிறன்’ என்பதற்குத் தன்னை ஐயுறாத பிறன் - என வினைமுற்றைப் பெயரெச்சமாக்கிப் பொருள் கொள்வர். அவ்வாறே வட மொழியில் முற்றுப்பெறாத சொல்லாக இருப்பனவற்றை எச்சமாக்கிப் பொருள் கொள்ளல் தக்கது (வடமொழியில் பெயரெச்சம் இல்லாமையால்) என்று கூறும் பி.வி. நூலார் வினைமுற்றை முன்வைத்துக் ‘கிருதவான் தேவதத்த :’ என்று உதாரணம் காட்டுதலே பொருந்தும். ‘குர்வந்’ என்றிருப்பது பொருந்தவில்லை. (கிருதவான்-செய்தான்) இதை எச்சப் பொருள்பட, ‘கிருதவத் தேவதத்த: ’ எனத் தொகையாக்கிச் செய்த தேவதத்தன் - என்று பொருள்செய்தல் தகும்.

இங்ஙனம் முற்றும் எச்சமும் மாறிவரும் சில இடங்களையும் பி.வி. உரை சுட்டும். மறுத்தற்கண்,

‘ஒருமகள் நோக்கி னாரை உயிரொடும் போகொ டாத, திருமகள்’ (சீவக. 2177)

‘கனவினும் காண்கொடா கண்ணும் கலந்த

நனவினும் முன்நீங்கும் நாணும்’ (புறத்திரட்டு 1524)

‘போகொடாளாகி’ என எச்சமாயும், ‘கண்ணும் காண் கொடா’ என முற்றாயும் பொருள் பயந்தன. திருவாய்மொழி யில் ‘தான் ஒட்டி வந்து’ (1- 7 - 7) என்பது ‘தான் வந்து ஒட்ட’ என்று பொருள்கொள்ளும் வகையில் அமைந்தது.

தொல்காப்பிய நூற்பாக்களில் ‘தோன்றலாறே’ (சொ. 160 சே.) ‘உயிர்த்தலாறே’ (எ. 17 நச்.) என வருவனவற்றுள்ளும், பொருள் செயல் வகை - வினைசெயல் வகை - என்னும் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்களுள்ளும் முறையே தோன்றல் - உயிர்த்தல் - செயல் - என்பன பெயரெச்சமாம். தோன்றும் நெறி - உயிர்க்கும் நெறி - செய்யும் வகை - என விரிதலால் பெயரெச்சம் ஆயின.

இவ்வாறே வடமொழியில் சென்மபூமி - சென்ம நக்கத்திரம் - என்பனவற்றையும் பிறந்த இடம் - பிறந்த நாள் - என்று தமிழில் பெயரெச்சமாக்கி விரித்துரைக்க வேண்டும்.

வடமொழியில் ‘யட்டும் யாதி’ (வேட்கப் போகிறான்) என்னும் (துமுன் என்ற) செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் நான்காம் வேற்றுமையாக - ‘யாகாய யாதி’ - வேள்விக்குப் போகிறான் என வருதலுமுண்டு.

ஸந் பிராம்மண : - சற்பிராமணன் என்ற தொடரில் முன்மொழி ‘நல்ல பிராம்மணன்’ என்ற பொருளில் குறிப்புப் பெயரெச்சமாய் நின்றது. (பி. வி. 38)

முற்று வாய்பாட்டான் வருவன எச்சப் பொருண்மைய ஆதல் -

{Entry: F06__158}

‘மோயினள் உயிர்த்த காலை’ (அகநா. 5) எனவும்,

‘ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி’ (அகநா. 48) எனவும்,

‘கண்ணியன் வில்லன் வரும்’ எனவும்

வினையெச்சம் முற்றாகி வந்தன. இவற்றுள் மோந்து என்பது மோயினள் எனவும், கொய்ய என்பது கொய்குவம் எனவும், கண்ணியணிந்து - வில்லேந்தி - என்பன கண்ணியன் - வில்லன் - எனவும் முற்றுவாய்பாட்டான் வரினும் அவை எச்சப் பொருண்மைய ஆதலின் வினையெச்சம் எனப்பட்டன. வினையெச்சச் சொல்லின் வேறுவேறாகிய பல இலக்கணங் களுள் இதுவும் ஒன்று. (தொ. சொ. 447 தெய். உரை)

முற்றுவினை -

{Entry: F06__159}

செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் - என்னும் வினைக்குரிய பொதுச்செய்திகள் ஆறனையும் தோற்றுவித்து, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்னும் அறுவகைப் பெயர்களுள் ஒன்றனை முடிக்கும் சொல்லாகக் கொண்டு ஆறு பொதுச்செய்திகளை யுட்கொண்டும், பெயரன்றி வினை முதலியவற்றுள் ஒன்றை யும் ஏலாது, பெயரன்றிப் பெயர்ப்பின் வேறொன்றனையும் ஏலாது வரும் வினைச்சொல் வகை முற்றாம்.

எ-டு : செய்தான் அவன், நல்லன் அவன் - குளிர்ந்தது நிலம் - வந்தது கார் - குவிந்தது கை - பரந்தது பசப்பு - ஒழிந்தது பிறப்பு - என முறையே காண்க.

முற்றுவினை, வினைமுதலைக் குறிப்பிடும் விகுதியுறுப்புக் குறையாது வந்தவாறும், பெயரைக் கொண்டு முடிந்தவாறும், பெயரன்றிப் பெயருக்குப் பின் பிறிதொன்றனையும் ஏலாத வாறும் உணரப்படும். இம்முற்றுவினை ஐம்பால் மூவிடத்தும் முக்காலத்துமாக இருபத்தேழு வகைப்படும். (நன். 323 சங்.)

முற்றுவினைத் திரிசொல் -

{Entry: F06__160}

வழக்குச்சொல்லாய் வரும் முற்றுக்கள் செய்யுட்கண் திரிந்து வருவன முற்றுவினைத் திரிசொல்லாம். எடுத்துக்காட்டுச் சில:

என்மனார் - ஆர்ஈற்று நிகழ்கால முற்றுவினைத்திரிசொல். என்றிசினோர் - ஆரீறு திரிந்த ஓரீற்று இறந்தகால முற்று வினைத் திரிசொல். கேட்டீவாயாயின், செப்பீமன், ஈங்கு வந்தீத்தாய், புகழ்ந்திகும் அல்லரோ, பெறலருங்குரைத்து - முதலாயினவும் முற்றுவினைத் திரிசொற்களே.

களைந்திலன், வியந்திலன், இழிந்திலன் - என நின்றவை, களைந்தன்றுமிலன் வியந்தன்றுமிலன் - இழிந்தன்றுமிலன்
(புறநா. 77) என முற்றுவினைத் திரிசொல்லாய் நிற்கும்.

(தொ. சொ. 219, 220 நச். உரை)

‘முற்றே எச்சமாதல்’ என்பதன் விளக்கம் -

{Entry: F06__161}

முற்றே எச்சமாம் என்றது என்னை? எச்சம் தானே பாலும் திணையும் இடமும் விளக்கிற்று என்ன அமையாதோ எனின், எச்சமாக ஓதிய வாய்பாட்டுமொழிகள் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் பாலும் திணையும் இடமும் விளக்காது பொதுவாய் நிற்றலானும், இவற்றுள் சில வினையெச்சத்தை ஏற்று நிற்பனவும் உள ஆகலானும் அமையாது என்க. வருமாறு:

‘முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்’ (புற.33)

- முகந்து கொடுப்ப;

‘எருவின் நுண்தாது குடைவன ஆடி’ (குறு. 46)

குடைந்து ஆடி;

முகந்தனர் என்னும் முற்றெச்சம் கொடுப்ப என்ற வினை யெச்சம் கொண்டது. குடைவன என்னும் முற்றெச்சம் ஆடி என்ற வினையெச்சம் கொண்டது. (நன். 350 மயிலை.)

‘முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவி’ -

{Entry: F06__162}

முறைப்பொருண்மை கொண்டு நின்ற பெயர்ச்சொல்லினது ஆறாம்வேற்றுமைப் பொருண்மை. இது நான்கனுருபொடு மயங்கும்.

எ-டு : ஆவினது கன்று என்பது ஆவிற்குக் கன்று என நான்கனுருபொடு மயங்கும். (தொ. சொ. 111 நச். உரை)

முறைப்பெயர் -

{Entry: F06__163}

தந்தை தாய் - எனப் பிறவியான் ஒருவரோடு ஒருவர்க்கு வரும் இயைபு பற்றி வரும் பெயராய் முறையுடைப் பொருள்மேல் வரும் பெயர் முறைப்பெயராம். முறைப்பெயர் பொதுத் திணையன.

எ-டு : தாய், தந்தை

ஆயின், தன்மை பற்றி வரும் எந்தை - எங்கை - எவ்வை - யாய் - என்னும் பெயர்கள் உயர்திணையேயாம்.

(தொ. சொ. 176, 182, 183 நச். உரை)

‘முறைப்பெயர் மருங்கின் ஐஎன் இறுதி’ -

{Entry: F06__164}

உறவுமுறையைக் குறிப்பிட்டு வரும் பெயர்களுள் ஐகாரத்தை இறுதியாகவுடைய அன்னை - அத்தை - போன்ற சொற்களின் அவ்வீற்று ஐகாரம் விளிக்குமிடத்து ஆய் ஆதலேயன்றி ஆ ஆதலும் உரித்து.

எ-டு : அன்னை - (அன்னாய்) அன்னா; அத்தை - (அத்தாய்) அத்தா (தொ. சொ. 126 சேனா. உரை)

முறைப்பெயர் விளியேற்றல் -

{Entry: F06__165}

முறைப்பெயர் ஐகார ஈறு, னகர ஈறு, ளகர ஈறு - என மூன்று ஈற்றுப் பெயர்களாம். ஐகார ஈறு ஆவாகவும் ‘ஆய்’ ஆகவும் திரிந்து விளியேற்கும்.

எ-டு : அன்னை - அன்னா., அன்னாய்; அத்தை - அத்தா, அத்தாய் (தொ. சொ. 128 நச். உரை)

னகர ஈறும் ளகர ஈறும் ஏகாரம் பெற்று விளியேற்கும்.

எ-டு : மகன் - மகனே; மருமகன் - மருமகனே; மகள் - மகளே; மருமகள் - மருமகளே. (138, 149 நச். உரை)

முறைப்பெயருள் உயர்திணையாவன -

{Entry: F06__166}

பெண்மை முறைப்பெயருள் யாய் - எவ்வை - எங்கை - என்பன தன்மையோடு அடுத்தமையான் உயர்திணையாம்.

ஆண்மை முறைப்பெயருள் எந்தை - எம்பி - எம்முன் - என்பன தன்மையோடு அடுத்தமையான் உயர்திணையாம்.

முறைப்பெயர் இருதிணைக்கும் பொதுவாகிய விரவுப் பெயராம் எனினும் தன்மை உயர்திணைக் குரியதாதலின் யான் யாம் என்னும் தன்மைப்பெயர்களோடு யகரஆகாரமும் ‘எம்’ மும் எழுத்து வகையான் இயைபுடைமை பற்றி மேலை முறைப்பெயர்கள் ஆறும் உயர்திணையவாம். (யாய், எந்தை என்பனவே உரையுள் காணப்படினும், இயைபு பற்றிப் பிறவும் கொள்ளப் பட்டன.) (தொ. சொ. 183, 184 கல். உரை)

முறைமை சுட்டா மகன், மகள் -

{Entry: F06__167}

முறைமை சுட்டும் மகன், மகள் என்பன விரவுத்திணை. அங்ஙனம் உறவுமுறையைச் சுட்டாமல் ஆண் பெண் என்ற பொருளில் வரும் மகன் - மகள் - என்பன இரண்டும் உயர் திணையாம். (தொ. சொ. 165 நச். உரை)

‘முன்னத்தின் உணரும் கிளவி’ -

{Entry: F06__168}

சொல்லினவிடத்துச் சொல் கிடந்தவாறே குறிப்பினான் கொண்டுணரப்படும் பொருள்களும் உள.

(தொ. சொ. 453 இள. உரை)

சொல்லினானன்றிச் சொல்லுவான் குறிப்பினான் பொருள் உணரப்படும் சொற்களும் உள. (தொ. சொ. 459 சேனா. உரை)

சொல்லினானன்றி இத்தன்மைய என்னும் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினான் பொருளுணரப்படும் சொல்லும் உள. (தொ. சொ. 449 தெய். உரை)

இம்மூவர் கூற்றும் ஒன்றே.

எ-டு : செஞ்செவி - பொன் அணியும் செவி; வெள்ளொக் கலர் - வெளியது உடுத்த சுற்றத்தார்; குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையர் - அன்ன பெருஞ்செல் வத்தர்- எனக் குறிப்பான் பொருள்தரும் இச் சொற்கள் முன்னத்தின் உணரும் கிளவியாம். (தொ. சொ. சேனா. உரை)

‘தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது’ (கு. 1279)

என்றவழி, இருப்போமாயின் வளை கழன்று தோள் மெலியும் எனக்கருதி, நடக்க வல்லீராகல் வேண்டும் என அடியை நோக்கினாள் ஆதலின், உடன்போதற்குக் கருதினாள் என, இப்பொருளெல்லாம் அவள்குறிப்பினான் உணர நின்றவாறு கண்டுகொள்க. (தொ. சொ. தெய். உரை)

இத்தன்மைய என்று சொல்லப்படும் வினைக்குறிப்புச் சொற்கள், பொருள்தரும் முறைமையிடத்து, அவற்றுள் சில நுண்ணுணர்வினோர்க்குக் குறிப்பினான் தெரிநிலைப் பொருள் உணரப்படும் சொற்களுமுள. (தொ. சொ. 459 நச். உரை)

எ-டு :

‘கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்

கொடியன் நெடியன் தொடியணி தோளன்’ (முருகு. 208 - 211)

என்புழி வந்த வினையெச்சக் குறிப்புமுற்றுக்கள் ஆக்கம் பெற்றுப் பொருளுணர்த்துங்கால், கச்சினைக் கட்டி, கழலை யணிந்து, கண்ணியைச் சூடி, குழலை ஊதி, கோட்டைக் குறித்து, பல்லியங்களை எழுப்பி, தகரைப் பின்னிட்டு, மயிலை ஏறி, கொடியை உயர்த்து, வளர்ந்து, தோளிலே தொடியை அணிந்து - எனச் செய்து என் எச்சப்பொருளை உணர்த்தி நின்றவாறு. செஞ்செவி - வெள்ளொக்கலர் - என்பன குறிப்பின் தோன்றலின் வேறுபாடாம். (நச். உரை)

ஒன்றொழி பொதுச்சொல் (269) முதலாகச் சொல்லுவான் குறிப்பு ஈறாக விதந்தன எல்லாம் முன்னத்தின் உணரும் கிளவிகளாம். செவியெல்லாம் சாலச் செம்பொன் அணியும் செல்வத்தினர் என்பார் ‘செஞ்செவியர்’ என்றும், குற்றமற்ற மரபினர் என்பார் ‘வெள்ளொக்கலர்’ என்றும், பெரு வாழ்க்கையர் என்பார் ‘குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையர்’ என்றும் கூறும் சொல்லுவான் குறிப்பு ஒன்றுமே உதாரணம் காட்டுவாருமுளர். அங்ஙனமாயின். ஏனையவை குறிப்பின் பொருள் தரும் மொழி அல்லவாம் என்க. (நன். 408 சங்.)

முன்னம்- குறிப்பு. அவை ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என்னும் சூத்திரத்தால் சொல்லப்பட்டவை. இச் சூத்திரத் திற்கு வினைக்குறிப்புமுற்றுச் சொற்களுள்ளே செய்துஎன் எச்சத் தெரிநிலைப்பொருள் உணர்த்துவனவும் உள எனப் பொருள் கூறிக் ‘கச்சின ன் கழலினன் செச்சைக் கண்ணியன், குழலன் கோட்டன்’ என்றாற் போல்வன உதாரணம் காட்டிக் ‘கச்சைக் கட்டிக் கழலை அணிந்து கண்ணியைச் சூடிக் குழலை ஊதிக் கோட்டைக் குறித்து, எனத் தெரிநிலை வினையெச்ச வாசகமாக விரித்துக் காட்டுவாருமுளர். (நன். 449 இராமா.)

‘முன்னது முடிய முடியுமன் பொருளே’ -

{Entry: F06__169}

வினையெச்சங்கள் சொல்தோறும் முடிக்கும் சொல்லைப் பெறாமல் ஒரு வாய்பாட்டானும் பல வாய்பாட்டானும் அடுக்கினவாக வரினும், முன் நின்றது பின் நிற்றதனொடு முடியத் தொடர்ந்து சென்று பொருள் முடிவெய்தும்.

அடுக்கி வருதலாவது ‘உண்டு சென்று கண்டு’ என அடுக்குதல்.

சொல்தோறும் முடிக்கும் சொல்லைப் பெறாமல் வருதலாவது, சாத்தன் உண்டு வந்தான் - சென்று வந்தான் - கண்டு வந்தான் - என முடியாமல், ‘சாத்தன் உண்டு சென்று கண்டு வந்தான்’ என ஒரு வாய்பாட்டான் வருதலும், ‘சாத்தன் உண்ணுபு சென்று காணூ வந்தான்’ எனப் பல வாய் பாட்டான் வருதலும் ஆம்.

‘முன்னது முடிய முடியுமன் பொருளே’ என்றது, மேலைத் தொடரின்கண், சாத்தன் உண்டான் என்பது எச்சமாய் உண்டு சென்றான் எனவும், சென்றான் என்பது எச்சமாய் உண்டு சென்று கண்டான் எனவும், கண்டான் என்பது எச்சமாய்க் கண்டு வந்தான் எனவும், ஒன்று ஒன்றினொடு முடிந்து இறுதி யாக வந்தான் என்பதனொடு பொருள் முற்றி நிற்றலாம்.

‘பறந்து வந்து பாடிய கிள்ளை’ - என இறுதிக்கண் பெயர் நிற்பினும் முன்னின்ற வினையெச்சம் முறையே முடிய முடிந்து நின்றவாறு கண்டுகொள்க. (தொ. சொ. 234 ச. பால)

முன்னிலை அசைச்சொற்கள் -

{Entry: F06__170}

மியா இக மோ மதி இகும் சின் - என்னும் ஆறும் முன்னிலை அசைச்சொற்களாம். இவற்றுள் இகுமும் சின்னும் சிறு பான்மை ஏனையிடங்களொடும் வரும். வருமாறு :

கேண்மியா -

‘கண்பனி ஆன்றிக என்றி தோழி’

‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2)

‘உரைமதி வாழியோ வலவ’

‘மெல்லம் புலம்ப கண்டிகும்’

‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை’ (அக. 7)

இவை முன் னிலை

‘கண்டிகும் அல்லமோ’ (ஐங் 121),

‘கண்ணும் படுமே என்றிசின் யானே’ (நற். 61)

- இவை தன்மை.

‘புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே’

‘யாரஃ தறிந்திசி னோரே’ (குறு. 18)

இவை படர்க்கை. (தொ. சொ. 276, 277 நச். உரை)

‘பெறலரும் பரிசில் நல்கு மதி ’ (முருகு. 295)

- எனச் சிறுபான்மை படர்க்கைக்கண்ணும் அசைநிலையாம்.

‘சென்மோ பெரும எம் விழைவுடை நாட்டென’ (புற. 381)

என ‘மோ’ என்பது சிறுபான்மை தன்மைக்கண் அசை நிலையாம். (நச். உரை)

கேண்மியா - காண்டிக - மொழிமோ - சென்மதி - கண்டிகும் - பூண்டிசின் - என இவ்வாறும் முன்னிலை அசைச்சொற்க ளாம். இவை முறையே கேள் - காண் - மொழி - செல் - காண் - பூண் - என்னும் பொருட்கண் ‘ஆய்’ என்பது திரிந்து வந்தன.

(தொ. சொ. 270 தெய். உரை)

‘சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று,

மலையகலான் வாடி வரும்’ - மியா.

‘தண்டுறை ஊர காணிக எனவே’ - இக.

‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந்.2) - மோ.

‘சென்மதி பெரும - மதி. ‘செலீஇயர் அத்தைநின் வெகுளி’ புற. 6 - அத்தை.

‘வேய்நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை’ (கலி. 40) - இத்தை.

‘காணிய வா வாழிய மலைச்சாரல்’ - வாழிய.

‘சிறிது, தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ - மாள.

‘சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ’ (அக. 46) - ஈ.

‘நீயே, செய்வினை மருங்கின் செலவயர்ந்து யாழ’ (கலி.7) - யாழ.

(நன். 440 சங்.)

முன்னிலை அசை பத்து -

{Entry: F06__171}

இத்தை அத்தை யாழ இக மதி மான் ஆர் மோ மியா வாழிய - என்பன பத்தும் முன்னிலை ஒன்றற்குரிய அசைச்சொற்களாம். (தொ.வி. 137)

முன்னிலை அல்வழி வரும் அசைக்கும் கிளவி -

{Entry: F06__172}

கேட்டை - நின்றை - காத்தை - கண்டை - என வரும் முன்னிலை வினைச்சொல் நான்கும் தமக்குரிய முன்னிலைப் பொருள் உணர்த்தி நில்லாக்கால், கட்டுரைக்கண் அடுக்கியும் சிறு பான்மை அடுக்காதும் வந்து, ஏற்றவழி அசைநிலையாய் நிற்கும். இவை இக்காலத்து அரிய. இவை சிறுபான்மை வினா வொடு வருதலும் கொள்க. (தொ. சொ. 426 நச். உரை)

முன்னிலை ஈற்று வகை -

{Entry: F06__173}

‘பொதுவினைமுற்றின் வகை’ காண்க. முன்னிலை ஈற்று வகையெல்லாம் தொகுத்து நோக்க, எழுத்து வகையான் 24 ஈறும், சொல்வகையான் யகரஈற்றுள் ஆய் என்பதும், ரகரஈற்றுள் இர் ஈர் என்பனவும், னகரஈற்று மின் என்பதும், ணகரஈற்றுள் காண் என்பதும் மகரஈற்று உம் என்பதும் லகரஈற்றுள் அல் ஆல் ஏல் - என்பனவும் ஆக 33 ஆயின.

எ-டு : நட வா விரி ஈ கொடு கூ மே கை நொ போ வெள - என இவை முன்னிலை ஏவல்ஒருமை முறையே பதினோருயிர் ஈற்றன; உரிஞ் - உண் - பொருந் - திரும் - தின் - தேய் - பார் - செல் - தெவ் - தாழ் - கொள் - என்பன முறையே பதினொரு புள்ளியீற்று ஏவல்ஒருமை; ஊட்டு என்பது குற்றுகர ஈற்று ஏவல் ஒருமை. (எழுத்துவகையான் ஈறாவன இவ்வாறு இருபத்து மூன்றே; 24 ஆமாறு இல்லை.)

இனிச் சொல்வகையான் ஒன்பதாவன (எ-டு ) உண்டாய், உண்டிர், உண்டீர், உண்மின், சொல்லிக்காண், உண்ணும், ‘மகன் எனல்’, ‘(மரீஇயது) ஒரால்’, அழேல் - என்பன - (ஆல் ஏல் - என்பன எதிர்மறைக்கண்ணேயே வரும்.) (தொ. சொ. 226 கல். உரை)

முன்னிலை ஏவல் ஒருமை முற்றுக்கள் -

{Entry: F06__174}

நட வா விரி ஈ கொடு கூ மே கை நொ போ வெள - என்னும் உயிரீறு பதினொன்றும், உரிஞ் மண் பொருந் திரும் தின் தேய் பார் செல் தெவ் தாழ் கொள் - என்னும் புள்ளியீறு பதினொன் றும், போக்கு பாய்ச்சு ஊட்டு நடத்து எழுப்பு தீற்று வெஃகு - என எழுவகையாகிய குற்றுகரஈறு ஒன்றும் - ஆக எழுத்து வகை இருபத்துமூன்றும் எடுத்தலோசையான் முன்னிலை ஏவல் ஒருமை முற்றாய் நிற்கும். ‘இவை தாமே படுத்தலோசை யான் அச்செய்கை மேல் பெயர்த்தன்மைப்பட முதனிலை யாயும் நிற்கும்.’ (தொ. சொ. 226 நச். உரை)

முன்னிலை ஏவல்ஒருமை முற்றுக்கள் 28 ஆமாறு -

{Entry: F06__175}

உயிரீறு 11. மெய்யீறு 11, குற்றுகர ஈறு 1, உண்ணும் தின்னும் - எனப் பன்மைக்கண் வரும் உம் ஈறு, ‘உண்ணல்’ எனவரும் அல்லீற்று மறை, ‘மறால்’ என வரும் ஆல் ஈறு, ‘அகையேல் அமர்தோழி அழேல்’ எனவரும் ஏல் ஈறு, உண்டுகாண் சொல்லிக்காண் - என வரும் காண் ஈறு ஆகிய சொல்வகை 5- ஆக இருபத்தெட்டும் முன்னிலை ஏவலொருமை முற்றாம். (உம்மீறு ஈண்டு ஒருமைக்கண் வரும் மரியாதைப் பன்மை.) (தொ. சொ. 226 நச். உரை)

முன்னிலை ஏவற்பகுதியை அடுத்துவரும் இடைச்சொற்கள் -

{Entry: F06__176}

முன்னிலை ஏவற்பகுதிகளாவன செல் - நில் - புகு - உண் - தின் - உரை - என்றாற் போல வருவனவாம். ஈ ஏ என்ற இரண்டு இடைச்சொற்களும் முன்னிலை ஏவற்பகுதியை அடுத்துத் தாம்தாம் நிற்றற்குரிய முறைமையையுடைய மெய்களை ஊர்ந்து வரும்.

வருமாறு :

‘சென்றீ பெரும’ (அக. 46),

‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’ (நற். 300)

இவற்றுள் ஈகாரம் புக்கீ - உண்டீ - உரைத்தீ - சென்றீ - எனக் கடதறக்களை ஊர்ந்து வரும். ஏகாரம் மகரம் ஊர்ந்து வரும். இவை நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமை யின் புணர்ச்சிவிகாரமன்றி முன்னிலைச்சொல் விகாரம் ஆயின. (தொ. சொ. 451 நச். உரை)

ஈ ஏ - என்ற இடைச்சொல் புணர்ந்த வினைகள் பெரும்பாலும் புறத்துஉறவுப்பொருள் குறிப்பிடும் இடத்தேயே வருவன.

(தொ. சொ. 451 சேனா. உரை)

‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அக. 46)

‘இன்னா துறைவி அரும்படர் களைமே’ (புறநா. 145)

- முன்னிலை ஒருமைக்கு இ ஐ ஆய் - என்பன அன்றி ஈ ஏ - என்பனவும் சிறுபான்மை வருமெனக் கொள்க. (தொ. சொ. 441 தெய். உரை)

முன்னிலைஒருமைவினைமுற்று -

{Entry: F06__177}

இ ஐ ஆய் - என்ற விகுதிகளைப் பெற்றியலும் முன்னிலை ஒருமை வினைமுற்று இருதிணைக்கும் பொதுவாய் உயர் திணை ஒருமையையும் அஃறிணை ஒன்றன்பாலையும் குறித்து வரும்.

இகரம் டதற ஊர்ந்து எதிர்காலம் பற்றி வரும். எ-டு : உண்டி, உரைத்தி, தின்றி. இவற்றை உண்பை, உரைப்பை, தின்பை - என விரிக்க.

இனி, இகரஈறு உரைக்கிற்றி,

‘நன்றுமன் என்இது நாடாய் கூறி’

என நிகழ்வு பற்றி வரும். இவைதாம் முன்னின்றான் தொழிலை உணர்த்துவன.

இவை எடுத்தலோசையான் கூறும்வழி, உண்பாய் - உரைப்பாய் - நிற்பாய் - என முன்னின்றானைத் தொழிற்படுக்கும் ஏவற் பொருண்மையை உணர்த்தும்.

இனி,

‘ஐய சிறிதென்னை ஊக்கி’ (கலி. 37) எனவும்,

‘ஈதல்மாட்டு ஒத்தி பெரும’ (கலி. 86)

எனவும் ககரமும் தகரமும் பெற்ற இகரம் ஏவல்கண்ணியே நிற்கும். இதற்குப் ‘பிரிந்து இறை சூழாதி ’, (கலி. 18) ‘எல்லா கொடுமை நுவலாதி ’ (கலி. 42) முதலியன எதிர்மறை.

ஐ ஆய் என்பன முக்காலத்திற்கும் எதிர்மறைக்கும் குறிப்பு வினை முற்றிற்கும் பொதுவான விகுதிகள். ஐகாரம் க ட த ற என்னும் காலஎழுத்தின் முன் ‘அன்’ பெற்றும், ஆய் ‘அன்’ பெறாதும் வரும்.

எ-டு : நக்கனை, உண்டனை, உரைத்தனை, தின்றனை - இவை உடன்பாடு.

நக்கிலை, உண்டிலை, உரைத்திலை, தின்றிலை; நக்கனை அல்லை, உண்டனை.அல்லை, உரைத்தனைஅல்லை, தின்றனைஅல்லை - இவை எதிர்மறை.

நக்காய், உண்பாய், உரைத்தாய் , தின்றாய் - உடன்பாடு.

நக்கிலாய், உண்டிலாய், உரைத்திலாய், தின்றிலாய்; நக் காயல்லை, உண்டாயல்லை, உரைத்தாயல்லை, தின்றாயல்லை - எதிர்மறை.

ஐ ஆய் - என்பன ஏனை எழுத்தின் முன் ஙகாரமும் ழகாரமும் ஒழித்து ‘இன்’ பெற்று வரும்.

எ-டு : உரிஞினை எண்ணினை பொருநினை திருமினை பன்னினை போயினை வாரினை சொல்லினை மேவினை எள்ளினை; உரிஞினாய் எண்ணினாய் பொருநினாய் திருமினாய் பன்னினாய் போயினாய் வாரினாய் சொல்லினாய் மேவினாய் எள்ளினாய்; இவை உடன்பாடு.

உரிஞிலை எண்ணிலை பொருநிலை திருமிலை பன்னிலை போயிலை வாரிலை சொல்லிலை மேவிலை எள்ளிலை; உரிஞிலாய் எண்ணிலாய் பொருநிலாய் திருமிலாய் பன்னிலாய் போயிலாய் வாரிலாய் சொல்லிலாய் மேவிலாய் என்ளிலாய்; உரிஞினைஅல்லை - எண்ணினைஅல்லை........ எள்ளினைஅல்லை; உரிஞினாய்அல்லாய் - எண்ணி னாய்அல்லாய் ..... எள்ளினாய்அல்லாய்; இவை எதிர்மறை.

கலக்கினை - தெருட்டினை - அருத்தினை - அரற்றினை - எனவும், கலக்கினாய் - தெருட்டினாய் - அருத்தினாய் - அரற்றினாய் - எனவும் (இவை உடன்பாடு),

கலக்கிலை - தெருட்டிலை - அருத்திலை - அரற்றிலை - எனவும், கலக்கிலாய் - தெருட்டிலாய் - அருத்திலாய் - அரற்றிலாய் - எனவும் (இவை எதிர்மறை) - இவை இரண்டன் கண்ணும் முறையே இன் - இல்-என்ற இடைநிலைகளைப் பெற்று ஐயும் ஆயும் ஆகிய விகுதிகள் வந்தன.

ஐ ஆய் என்பன நிகழ்காலம் பற்றி வருங்கால், நில் - நின்று - கிறு - கிட - இரு - என்ற இடைநிலைகளைப் பெற்று வரும்.

உண்ணாநிற்பை, உண்கிற்பை, உண்ணாகிடப்பை, உண்ணா- விருப்பை; உண்ணாநிற்பாய், உண்கிற்பாய், உண்ணாகிடப் பாய், உண்ணாவிருப்பாய்; உண்ணாநிற்பையல்லை, உண் கிற்பையல்லை, உண்ணாவிருப்பையல்லை - என முறையே உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் நிகழ்காலத்தில் வரும்.

எதிர்காலம் பற்றி வருங்கால், ஐ ஆய் இரண்டும் பகர வகரங்களாகிய காலஎழுத்துக்களையும் ஒரோவழிக் குகரச் சாரியையும் ஏற்ற பெற்றி பெற்று, உண்பை - உண்பாய், வருவை - வருவாய் - உண்குவை - உண்குவாய், உரிஞுவை - உரிஞுவாய் - என உடன்பாட்டின்கண்ணும், உண்பையல்லை - உண்பாயல்லை, வருவையல்லை - வருவாயல்லை, உண்குவை-யல்லை - உண்குவாயல்லை, உரிஞுவையல்லை - உரிஞுவா-யல்லை - என எதிர்மறைக்கண்ணும் வரும்.

(தொ. சொ. 225, 226, 204 நச். உரை)

உண்ணாநிற்றி என்பது எதிர்காலத்துப் பிறந்த நிகழ்காலம்.

உண்ணாநின்றிலாய் உண்கின்றிலாய் உண்ணாகிடக்கிலாய் உண்ணாவிருப்பிலாய் - என்றாற் போன்ற நிகழ்காலமறை களையும், உண்ணலாய், என்றாற் போன்ற எதிர்கால மறைகளையும் கொள்க. (நச். உரை)

ஐ ஆய் இ - என்ற விகுதிகளை யுடையனவும், ஏவலின் வரும் (முதனிலைத் தொழிற்பெயர் அளவினவாகிய) இருபத்து மூன்று ஈற்று மொழிகளும், ஒருவன் ஒருத்தி - ஒன்று - என்னும் மூன்று கூற்றினையுடைய முன்னிலை ஒருமை வினைமுற்றும் குறிப்பு முற்றும் ஆம்.

ஏவல்முற்று தெரிநிலை ஒன்றற்கே உரியது.

உண்டனை உண்ணாநின்றனை உண்பை; உண்டாய் உண்ணா நின்றாய் உண்பாய்; உண்டி உண்ணாநிற்றி சேறி; நடவாய் வாராய் கேளாய் அஃகாய்; நட வா கேள் அஃகு - எனவும், வில்லினை வில்லாய் வில்லி - எனவும் வரும்.

ஐ - முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; ஆய் - முக்காலமும் வினைக்குறிப்பும் எதிர்மறையும் பற்றி வரும்; இ - எதிர்காலம் பற்றிவரும்; ஏவல்வினைகளும் எதிர்காலம் பற்றி வரும். (நன். 335 சங்.)

முன்னிலைக் குறிப்புமுற்று நிலைக்களன் -

{Entry: F06__178}

உயர்திணைக்கு ஓதிய பொருள்பற்றி முன்னிலைக்கண் வரும் குறிப்புவினைமுற்று ஆறாம்வேற்றுமையது உடைமைப் பொருட்கண்ணும், ஏழாம்வேற்றுமையது நிலப்பொருட் கண்ணும், ஒப்புப்பொருட்கண்ணும், பண்புப்பொருட் கண்ணும் தோன்றும்.

எ-டு: கச்சினை, கச்சினாய்; கச்சினிர், கச்சினீர் - ஆறாவதன் உடைமைப்பொருள். நாட்டினை நாட்டினாய்; நாட்டினிர், நாட்டினீர் - ஏழாவதன் நிலப்பொருள். பொன்னன்னை, பொன்னன்னாய், பொன்னன்னிர், பொன்னன்னீர் - ஒப்புப்பொருள். கரியை, கரியாய், கரியிர், கரியீர் - பண்புப் பொருள். (தொ. சொ. 213 சேனா. உரை)

முன்னிலைப் படர்க்கை -

{Entry: F06__179}

‘இவன் யார் என்குவை’ என்னும் புறப்பாட்டில் (13) சேரனை முன்னிலையாக்கி முடமோசியார் கூறுகின்ற காலத்து ‘இவன்’ என்பது முன்னிலைப் படர்க்கையாய் நின்றது; என்னை? தம் கண் காண யானைமேற் செல்லும் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியைச் சுட்டி ‘இவன்’ என்றார் ஆகலின். (தொ. சொ. 446 நச். உரை)

முன்னிலைப்பன்மை படர்க்கையை உளப்படுத்தல் -

{Entry: F06__180}

தன்மையொடு கூடிய முன்னிலை படர்க்கைகள் தன்மையா னாற்போல, முன்னிலையொடு கூடிய படர்க்கையும் முன்னிலையாம். ஆகவே, முன்னிலைப்பன்மை விகுதிகள் எல்லாம் படர்க்கையை உளப்படுத்தும் என்பதும், தன்மையை உளப்படுத்தா என்பதும் பெற்றாம்.

எ-டு : உண்டனிர், உண்டீர், உண்மின் நீயும் அவனும்;

‘ஒண்தூவி நாராய்!நின் சேவலும் நீயுமாய் - வைகலும் சேறீரால்’ (நன். 334 சங்.)

முன்னிலைப்பன்மைமுற்று விகுதி -

{Entry: F06__181}

இர் ஈர் மின் - என்ற மூன்றுவிகுதிகளும் இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப்பன்மைவினைமுற்று விகுதிகளாம்.

இர் ஈர் என்பன முக்காலமும் வினைக்குறிப்பும் எதிர்மறையும் பற்றி முன் நின்றான் தொழில் உணர்த்துவனவாய் வரும்.

மின் எதிர்காலம் பற்றி முன்நின்றானைத் தொழிற்படுப்பதாய் வரும் ஏவல்வினைமுற்று விகுதியாம். இர் என்பது இறந்த காலம் பற்றி வருங்கால், கடதற - என்னும் காலவெழுத் தின்முன் அன்பெற்றும், ஈர் என்பது அவ்வாறு வருங்கால் அன்பெறாதும் வரும். முறையே வருமாறு :

நக்கனிர் உண்டனிர் உரைத்தனிர் தின்றனிர் - உடன்பாடு

நக்கிலிர் உண்டிலிர் உரைத்திலிர் தின்றிலிர்; நக்கனிர்அல்லிர் உண்டனிர்அல்லிர் உரைத்தனிர்அல்லிர் தின்றனிர்அல்லிர் - இவை எதிர்மறை.

நக்கீர் உண்டீர் உரைத்தீர் தின்றீர் - உடன்பாடு.

நக்கிலீர் உண்டிலீர் உரைத்திலீர் தின்றிலீர்; நக்கீரல்லீர் உண்டீரல்லீர் உரைத்தீரல்லீர் தின்றீரல்லீர் - இவை எதிர்மறை.

இர் ஈர் என்பன கடதற நீங்கலான ஏனையெழுத்தின் முன் ஙகரமும் ழகரமும் ஒழித்து இன் பெற்றும், ‘ஈர்’ இன் பெறாதும் வரும். ககரஈறும் டகரஈறும் தகரஈறும் றகரஈறும் முதனிலைச் சொல்லாய் நின்று இன் பெறும்.

எ-டு : உரிஞினிர் எண்ணினிர் பொருநினிர் திருமினிர் பன்னினிர் போயினிர் வாரினிர் சொல்லினிர் மேவினிர் எள்ளினிர் - எனவும் உரிஞினீர் எண்ணி னீர்...... பன்னினீர் போயினீர் வாரினீர்............... எள்ளினீர் - எனவும் உடன்பாடாகவும்; உரிஞிலிர் எண்ணிலிர்....... எள்ளிலிர் - எனவும் உரிஞிலீர் - எண்ணிலீர்.............. எள்ளிலீர் - எனவும் உரிஞினிர்அல்லிர் - எண்ணினிர் அல்லிர்..........எள்ளினிர்அல்லிர் - எனவும் உரிஞினீர் அல்லீர் - எண்ணினீர்அல்லீர்......... எள்ளினீர் அல்லீர் எனவும் எதிர்மறையாகவும் வந்தவாறு கண்டு கொள்க.

கலக்கினிர் கலக்கினீர், தெருட்டினிர் தெருட்டினீர், அருத்தி னிர் அருத்தினீர், அரற்றினிர் அரற்றினீர் - என இறந்த காலத்து வரும்.

இவை நிகழ்காலம் பற்றி வருங்கால் நில் - நின்று - கின்று - கிறு - கிட - இரு என்பனவற்றொடு வரும்.

எ-டு : உண்ணாநின்றனிர் உண்ணாநின்றீர், உண்கின்றனிர் உண்கின்றீர், உண்கிறீர், உண்ணாகிடந்திர் உண்ணா கிடந்தீர், உண்ணாவிருந்திர் உண்ணாவிருந்தீர்- இவை உடன்பாடு.

உண்ணாநின்றிலிர் உண்ணாநின்றிலீர், உண்கின்றிலிர் உண்கின்றிலீர், உண்கிறிலிர், உண்கிறிலீர், உண்ணா கிடந்திலிர் உண்ணாகிடந்திலீர், உண்ணாவிருந்திலிர் - உண்ணா விருந்திலீர் - என இவை எதிர்மறை விகற்பம் பெறும்.

உண்ணாநின்றனிர்அல்லிர் உண்ணாநின்றீர்அல்லீர் - முதலிய எதிர்மறை விகற்பமும் கொள்க.

இர் ஈர் என்பன எதிர்காலம் பற்றி வருங்கால், உண்பிர் உண்பீர் - வருவிர் - வருவீர் - எனப் பகரமோ வகரமோ பெற்றும், உண்பிரல்லிர் உண்பீரல்லீர் - என்றாற்போல எதிர்மறை விகற்பம் பெற்றும் வரும். எதிர்காலத்து, உரிஞுவிர் திருமுவிர் - உரிஞுவீர் திருமுவீர் - என வகரத்தோடு ஏற்ற பெற்றி உகரம் பெறுதலும் கொள்க. (தொ. சொ. 226 நச். உரை)

கரியிர் கரியீர் - செய்யிர் செய்யீர் - முதலாக வரும் முன்னிலைக் குறிப்புவினைமுற்றுக்களும் கொள்க. (நச். உரை)

நீஇர் உண்ணும் - நீஇர் தின்னும் - எனப் பன்மைக்கண் வரும் உம்மீறு பிற்காலத்துக் கொள்ளப்பட்டுக் கலித்தொகை முதலியவற்றுள்ளும் இடம் பெற்றுளது.

எ-டு : ‘போதாரக் கொள்ளும் கமழ்குழற்கு’ (கலி. 32 : 17) (நச். உரை)

இர் ஈர் என்னும் இருவிகுதிகளையும் ஈறாகவுடைய சொற்கள் இருதிணைப் பன்மை முன்னிலைவினைமுற்றும் குறிப்பு முற்றுமாம். இவை முக்காலமும் பற்றி வரும். ஈர் எதிர்மறைக்கும் உரித்து. மின்விகுதி முன்னிலைப்பன்மை ஏவற்பொருளதாய் எதிர்காலம் பற்றி வரும். அவை வருமாறு:

உண்டனிர் உண்ணாநின்றனிர் உண்குவிர்

உண்டீர் உண்ணாநின்றீர் உண்பீர்; உண்ணீர்: எதிர்மறை.

உண்மின் தின்மின் - ஏவல்

குழையினிர் குழையீர் : குறிப்புமுற்று

உம்ஈற்றவாய் உண்ணும் தின்னும் என்றாற் போல வரும் பன்மை ஏவல் புதியன புகுதலாம். (நன். 337 சங்.)

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் -

{Entry: F06__182}

முன்னிலைஒருமைக்கண், வினை பகுதியளவிற்றாய் நின்று ஏவற்பொருண்மை உணர்த்துமிடத்து ஈகாரமும் ஏகாரமும் அவ்வினையை அடுத்து ஏற்ற பெற்றி வரும். வருமாறு:

செல் - ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அக. 46)

நில் - ‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’ (நற். 300)

(தொ. சொ. 451 சேனா. உரை)

முன்னிலைச் சொல்லாவன செல் - நில் - என்றாற்போலப் பகுதியளவினவாய் வரும் ஒருமையேவல்முற்றாம். சென்றீ பெருமநி ற் றகைக்குநர் யாரோ?’ ‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே : இவை நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப் படாமையின் புணர்ச்சி விகாரமன்றி முன்னிலைச்சொல் விகாரம் ஆயின.

நில் - என்ற முன்னிலைச்சொல் நின்மே எனவும், செல் - என்ற முன்னிலைச்சொல் சென்றீ எனவும் திரிந்தன. ஆண்டு ஏ - ஈ - என்ற இடைச்சொற்கள் மகரமும் றகரமும் ஆகிய எழுத்துப் பேறு ஊர்ந்து முடிந்தன. (தொ. சொ. 451 நச். உரை)

முன்னிலை ஒருமை ஏவல்வினைமுற்றின் முன்னர் ஈகாரம் ஏகாரம் ஆகிய இடைச்சொற்கள் தத்தமக்குரிய மெய்களை ஊர்ந்து வரும். வருமாறு:

‘சென்றீ பெருநிற் றகைக்குநர் யாரோ’ - றகரம் ஊர்ந்து ஈகாரம் வந்தது.

‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’ - மகரம் ஊர்ந்து ஏகாரம் வந்தது.

ஈகாரமும் ஏகாரமும் விகுதியுருபல்ல; இவை ஏவற்கண் வரும் எழுத்துப்பேறுகள். விகுதியுருபின் பொருளின்மையால் இவை யிரண்டும் முன்னிலை அசைகளாம் என்றவாறு.

(நன். 336 சங்.)

முன்னிலையில் திணைபால் உணருமாறு -

{Entry: F06__183}

நீஇர் - நீ - என்பன இன்ன திணை இன்ன பால் உணர்த்துவன என்பதை இடமும் காலமும் பற்றிச் சொல்லுவான் குறிப்பொடு காட்டி உணரவேண்டும்.

விலங்கு வாராததோர் இடத்திருந்து ‘நீஇர் வந்தீர், நீ வந்தாய்’ என்றால் உயர்திணை எனவும், மக்கள் வாராததோர் இடத்திருந்து அங்ஙனம் கூறினால் அஃறிணை எனவும் உணரப்படும். வருமாறு :

‘நீயும் தவறிலை.... தவ றிலர்’ (கலி. 56) என்புழி ‘நீ’ பெண்பால் எனவும், ‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை’ (புறநா. 57) என்புழி ‘நீ’ ஆண்பால் எனவும், ‘இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ’ (கலி. 129) என்புழி நீ அஃறிணை எனவும் உணரப்படும். (தொ. சொ. 195 நச். உரை)

மூவகைக் குறைகள் -

{Entry: F06__184}

குறிப்பினான் பொருளை உணர்த்துவனவற்றுள் மூவகைக் குறையும் ஒன்று.

‘மரைமலர் குலிகமோடு இகலிய அங்கை’,

‘ஆடிப் பாவை போல,

மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே’ (குறுந். 8),

‘வறிது நிலைஇய காயமும்’ (புறநா. 30)

- என இவை முதற் குறைந்தும், தாமரைமலர் - இங்குலிகம் - கண்ணாடி - ஆகாயம்- எனக் குறிப்பினான் அறிய வந்தன.

‘வேனில் ஓதிப் பாடுநடை’ (நற். 92),

‘எல்லா இஃது ஒத்தன்’ (கலி. 61)

- என இவை இடைக்குறைந்தும், ஓந்தி - ஒருத்தன் - என்று குறிப்பினான் அறிய வந்தன.

‘நீனிறப் பெருங்கடல்’ (அகநா. 40),

‘தாமரை, முளைநிவந் தவைபோலும் முத்துக்கோல் அவிர்தொடி’ (கலி. 59)

- என இவை கடைக்குறைந்தும், நீலம் - கோலம் எனக் குறிப்பினான் அறிய வந்தன. (நன். 268 மயிலை.)

ஒரு சொற்குத் தலை இடை கடை என இடம் மூன்றே. அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் என்று அறிந்து குறைக்க. முதற்குறை இடைக்குறை கடைக்குறை - எனக்குறை மூவகைப்படும்.

எ-டு : ‘மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’ : மரை - தாமரை - முதற்குறை. ‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ : ஓதி - ஓந்தி - இடைக்குறை. ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ : நீல் - நீலம் - கடைக்குறை.

இது சொல்லின்கண், சிறிது நிற்பச் சிறிது கெடுப்பது.

‘இடைச்சொல் எனப்படுப’ என்பது ‘இடையெனப் படுப’ (251) என வருவது ஒரு சொல் முழுதும் கெடுப்பதாகிய தொகுக்கும் வழித் தொகுத்தல். குறைத்தல்விகாரத்திற்கும் தொகுக்கும் வழித் தொகுத்தல் விகாரத்திற்கும் இடையே நிகழும் வேற்றுமை இது. (தொ. சொ. 453 நச். உரை)

மூவகைக் குறைகளும் செய்யுட்கண்ணேயே நிகழும். இவை மரபு தவறாது செயற்படுத்தப்பட வேண்டும். இச்சொற்கள் முதல் இடைகடைக்கண் குறைக்கப்படினும் அவை பொரு ளுணர்த்தும்வழி நிறைந்து நிறைபெயரின் இயல்பின.

‘கண் திரள் முத்தம் கொண்டு வந்தன்று’ என்பது ‘கொடுவந்து’ எனவும், ‘சான்றோர் என்பாரிலர்’ என்பது ‘என்பிலர்’ எனவும் வருவன மூவகைக் குறைகளுள் தன்னினம் முடித்தல் என்பத னான் கொள்ளப்படுவன. (தொ. சொ. 454 நச். உரை)

மூவகை மொழிகள் -

{Entry: F06__185}

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி - என்பன மூவகை மொழிகளாம். ஒருமொழிகளாவன பகாப்பதமேனும் பகுபத மேனும் ஒன்று நின்று தத்தம் பொருளைத் தருவனவாம்; தொடர்மொழிகளாவன அவ்விருவகைப் பதங்களும் தன்னொடும் பிறிதோடும் அல்வழி வேற்றுமைப்பொருள் நோக்கத்தான் இரண்டு முதலிய பொருளைத் தருவனவாம்; பொதுமொழிகளாவன ஒருமொழியாய் நின்று ஒருபொருள் தந்தும், அதுவே தொடர்ந்து நின்று பலபொருள் தந்தும் இவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்பனவாம்.

எ-டு : நிலம், நிலத்தன்; நட, நடந்தான்; தில் ; நனி - ஒருமொழி. நிலம் வலிது, அதுகொல், சாலப்பகை, நிலங்கடந்தான் - தொடர்மொழி. எட்டு கொட்டு தாமரை வேங்கை - இவை ஒருமொழியாய் நின்று ஒருபொருள் தருவதன்றி, எள்ளைத் து - கொள்ளைத் து - தாவுகின்ற மரை - வேகின்ற கை - எனத் தொடர் மொழியாய்ப் பலபொருள் தந்தமையால் (ஒரு சொற்கு ஒரு பொருளாகப் பலசொற்குப் பல பொருள்) - பொதுமொழி (து-உண்), (நன். 260 சங்.)

மூவகை வினைமுதல் -

{Entry: F06__186}

வினைமுதல் ஆகிய கருத்தா, ஏவுதல் கருத்தா - இயற்றுதல் கருத்தா - இவை யிரண்டின் வேறான கருத்தா - என மூவகை யாக வரும்.

எ-டு : அரசன் தேர் செய்தான் : ஏவுதல் கருத்தா. தச்சன் தேர் செய்தான் : இயற்றுதல் கருத்தா. சாத்தன் உறங்கி னான் : இவற்றின் வேறான கருத்தா.

உறங்குதல் என்ற வினை ஒருவன் மற்றவனை ஏவுதலாலோ தானே முயன்று இயற்றுவதாலோ நிகழாமல், இயற்கையின் நிகழும் ஒரு வினையாதலின், அக்கருத்தாவும் அவ்விரண்டின் வேறாயிற்று. (இ. கொ. 28)

மூவர் பன்மை ஒன்றாகக் கொள்ளப்படுதல் -

{Entry: F06__187}

ஆண்ஒருமையும் பெண்ஒருமையும் ஆண்பன்மையும் பெண் பன்மையும் இவ்விருவரது பன்மையும் - எனப் பால் ஐந்தாகற் பாற்று எனின், அம் மூவர்பன்மையும் வந்தார் - சென்றார் - என்னும் ஓரீற்று வாய்பாடே கொண்டு முடிதலின் பன்மை என ஒன்றாய் அடங்கும். (நன். 261 மயிலை.)

மூவிடத்தும் வரும் அசைச்சொற்கள் -

{Entry: F06__188}

யா - யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனார்க்கு.

கா - ‘புறநிழற் பட்டாளோ இவள்இவட் காண்டிகா’ (கலி.99)

பிற - ‘ஆயனை அல்லை பிற’ (கலி. 108)

பிறக்கு - ‘பிறக்கதனுள் செல்லான் பெருந்தவம் பட்டான்’

அரோ - ‘நோதக இருங்குயில் ஆலுமரோ’ (கலி. 33)

போ - ‘பிரியின் வாழாது என்போ’

மாது - ‘விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே’ (நற். 178)

இகும் - ‘கண்டிகும் அல்லமோ கொண்க’ (ஐங். 121)

சின் - ‘ஈங்கா கியவால் என்றிசின்’ (நற். 55)

குரை - ‘அது பெறலருங் குரைத்தே’ (புற. 5)

ஓரும் - ‘அஞ்சுவ தோரும் அறனே’ (கு. 366)

போலும் - ‘வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும்’

இருந்து - ‘கனவென்று எழுந்திருந்தேன்’ (முத்.)

இட்டு - ‘நெஞ்சம் பிளந்திட்டு’ (கலி. 101)

அன்று - ‘தேவாதி தேவன் அவன்சேவடி சேர்து மன்றே’ (சீவக.1)

ஆம் - ‘பணியுமாம் என்றும் பெருமை’ (கு. 978)

தாம் - நீர்தாம்

தான் - நீதான்

கின்று - ‘வாழ்வான் ஆசைப்பட் டிருக்கின் றேனே’ (சீவக. 1487)

நின்று - ‘அழலடைந்த மன்றத்து அரந்தையராய் நின்றார்’ (பு.வெ. 42) (நன். 441 சங்.)

‘அறிவார் யாரஃது இறுவுழி இறுகென’ - என

‘ஈங்கா யினவால் என்றிசின் யானே’ நற். 55 - ஆல்

‘குரைபுனற் கன்னிகொண் டிழிந்தது என்பவே’ (சீவக. 39)- என்ப

‘தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே’ (ஐங். 73) - இசின்

‘தேனை மாரி அன்னான்’ (சீவக. 161) - ஐ

‘நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்’ (நாலடி. 124)- போல்வது

யா கா பிற பிறக்கு - முதலாகத் தாம் தான் - ஈறாக நன்னூல் குறித்த பதினெட்டோடு ‘என’ முதலான இவ்வாறும் இலக்கண விளக்கத்துள் சுட்டப்பட்டுள. (இ. வி. 277 உரை)

மூவிடம் -

{Entry: F06__189}

தன்மை முன்னிலை படர்க்கை - என்பன மூவிடங்களாம். தன்னைச் சுட்டுவது தன்மை; யான் யாம் நான் நாம் - என்பன தன்மைப் பெயர்கள். முன்னின்றானைச் சுட்டுவது முன்னிலை; நீ நீர் நீயிர் நீவிர் எல்லீர் - என்பன முன்னிலைப் பெயர்கள்.

சொல்வானும் கேட்பானுமாகிய இருவர் கூட்டத்துப் பிறந்த சொல் அவ்விருவரிடத்தும் நில்லாது அயலானிடத்துப் படர் தலின் படர்க்கை எனப்பட்டது. தன்மையும் முன்னிலையும் அல்லாத எல்லாம் படர்க்கையாம். அவன் அவள் அவர் அது அவை என்னும் ஐம்பாலும் பற்றி வருவன படர்க்கைப் பெயர் களாம்.

வந்தேன் வந்தோம், வந்தாய் வந்தீர், வந்தான் வந்தாள் வந்தார் வந்தது வந்தன - என்பன முறையே மூவிடத்து வினை முற்றுக் களாம். (நன். 266 சங்.)

மூன்றாம் வேற்றுமை -

{Entry: F06__190}

மூன்றாம் வேற்றுமையின் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு - என்பன வாம். அவற்றின் பொருள்களாவன தம்மை யேற்ற பெயர்ப் பொருளைக் கருவியாகவும், ஏதுப்பொருட்டாகிய கருத்தா வாகவும், உடன்நிகழ்வதாகவும் வேற்றுமை செய்தலாம்.

கருவி காரணம் ஏது நிமித்தம் - என்பன வேறு பொருளன வாயும் ஒருபொருட்கிளவியாயும் வருதலின், காரணம் மூன்ற னுள் முதற்காரணம் துணைக்காரணம் என்னும் இரண்டனை யும் கருவி என்றும், ஏவுதல் கருத்தா இயற்றுதல் கருத்தா ஆகிய நிமித்தகாரணம் இரண்டனையும் கருத்தா என்றும் கூறினார்.

வனைந்தான் என்புழிக் குடமாகிய காரியத்திற்கு மண் முதற்காரணம்; குலாலனது அறிவு அந்தக்கரணம் முதலிய ஞாபகக்கருவியும், தண்டசக்கரம் முதலிய காரகக்கருவியும் அம் முதற்காரணத்திற்குத் துணையாக நின்று காரியத்தைத் தருதலின் துணைக்காரணமாம். குலாலன்: நிமித்தகாரணம். காரகக்கருவி - செய்தற்கருவி; ஞாபகக்கருவி - அறிதற்கருவி.

அரசனாலாகிய தேவகுலம் என்புழி, ஆல்உருபு ஏவுதல்- கருத்தாவாகவும், தச்சனாலாகிய தேவகுலம் என்புழி, இயற்றுதல்கருத்தாவாகவும் பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தது.

‘தூங்குகையான் ஓங்குநடைய, உறழ்மணியான் உயர்மருப்பின’ (புற. 22)

என்புழி, ஆனுருபு பெயர்ப்பொருளை உடன்நிகழ்வதாக வேற்றுமை செய்தது.

‘நாவீற் றிருந்த கலைமாமக ளோடு நன்பொன்

பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும்’ (சீவக. 30)

என்றும்,

‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு,

தானம்செய் வாரின் தலை’ (கு. 295)

என்றும் ஓடுவும் ஒடுவும் பெயர்ப்பொருளை உடன் நிகழ்வது ஆக்கின. ஓடு ஒடு - இரண்டுருபிற்கும் உடனிகழ்ச்சிப் பொருள் ஒன்றுமே கொள்ளப்படும்.

இரண்டாம்வேற்றுமைப் பொருளாகிய காரியத்திற்கு வேண்டும் கருவிப்பொருளைத் தருதலின் இது மூன்றாம் வேற்றுமை எனப்பட்டது. (நன். 297 சங்.)

மூன்றாம்வேற்றுமைக் கருவிக்கண் அடங்குவன -

{Entry: F06__191}

முதற்காரணம் துணைக்காரணம் ஞாபகஏது காரகஏது வினைக்காரணம் நிமித்தகாரணம் வேற்றுமைக்காரணம் வினைமுதற்காரணம் காலக்காரணம் - முதலியன மூன்றாம் வேற்றுமைக் கருவிக்கண் அடங்கும்.

எ-டு : மண்ணான் இயன்ற குடம் - மண் : முதற்காரணம்.
திரிகையான் இயன்ற குடம் - திரிகை : துணைக் காரணம்.

முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது - ‘பிறந்த பொருள் எதுவும் நிலைபெறாது’ என அறிவான் அறிதலின், பிறத்தல் என்பது ஞாபகஏது.

வாணிகத்தான் ஆயினான் - வாணிகம் : காரகஏது : வாணிகம் என்ற தொழில் செல்வத்திற்குக் காரணம் ஆயிற்று.

‘ஆகூழால் தோன்றும் அசைவின்மை’ (கு. 371) - ஆகுஊழ் : வினை ஏது, அசைவின்மைக்கு நல்வினை காரணமாதலின்.

‘நாணால் உயிரைத் துற ப்பர்’ (கு. 1017) - உயிர்துறத்தல் நாணைக் காத்தல்பொருட்டாதலின் உயிர் துறத்தற்கு நாண் நிமித்தகாரணம்.

குயவனால் குடம் செய்யப்பட்டது என்னுமிடத்து, குயவன் நிமித்தகாரணம் .

நெய்யால் எரியை அவித்தல் - எரியை வளர்க்கும் நெய்; அதனை அவித்தற்குக் கருவியாகக் கொள்ளுதல் வேற்றுமைக்காரணம்.

இறைவனால் உலகம் உள்ளது - உலகம் உளதாதற்கு இறைவனாகிய வினைமுதல் காரணம்.

‘இப்பருவம் காரத்தி ன் வெய்யஎம் தோள்’ (ஐந். ஐம். 24) - முன்பு சந்தனச்சாந்து போலக் குளிர்ச்சி தந்த என்தோள்கள் இப்பொழுது காரமருந்தைப் போல எரிச்சலைத் தருகின்றன என்பதனால், தோள் வெய்ய ஆதற்குக் காரணம் இப்பருவமே எனக் காலக்காரணம். (இ. கொ. 34)

மூன்றாம்வேற்றுமைப் பொருள் -

{Entry: F06__192}

மூன்றாம்வேற்றுமை வினைமுதல் - கருவி - ஆகிய அவ்விரண்டு காரணத்தையும் பொருளாக உடையது. வினைமுதல் எனவே, ஏவும் வினைமுதலும் இயற்றும் வினைமுதலும் அடங்கும்.

எ-டு : அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம் - ஏவும் வினைமுதல். தச்சனால் இயற்றப்பட்ட தேவகுலம் - இயற்றும் வினைமுதல்.

கருவி காரணம் ஏது நிமித்தம் - என்பன தம்முள் சிறிது வேறுபாடுடையவேனும் பெரும்பாலும் ஒத்த பொருளன.

கருவி, இயற்றுதல் கருவியாகிய காரகக்கருவியும் அறிதல் கருவியும் என இருவகைத்து.

எ-டு : ‘ஊசி யொடு குயின்ற தூசும் பட்டும்’ - காரக்கருவி
‘புகையி
னால் எரியுண்மை உணர்ந்தான்’ - அறிதற் கருவி

காரணம், முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என மூவகைப்படும்.

எ-டு : மண்ணான் இயன்ற குடம் - மண் : முதற்காரணம்;
திகிரியான் இயன்ற குடம் - திகிரி : துணைக் காரணம்; குயவனான் இயன்ற குடம் - குயவன் : நிமித்தகாரணம்.

ஒடு (ஓடு) வுருபு உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும்.

எ-டு : ‘உலகத்தோ டொட்ட ஒழுகல்’ கு. 140 ‘காவோடு அறக்குளம் தொட்டானும்’ திரி. 70 ‘புலமா மகளோடு திருமாமகள் புல்ல நாளும்’ சீவக. 30 (தொ. சொ. 74 நச். உரை)

மூன்றாம்வேற்றுமைப் பொருள் உணர்த்தும் சொற்கள் -

{Entry: F06__193}

அவையாவன ஏது காரணம் நிமித்தம் துணை மாறு - என்பன. உருபுகள் இன் ஆன் ஓடு ஆல் - என்பன.

எ-டு : புகை யுண்மையின் நெருப்புண்மை அறிக;

புகை யுண்மையான் நெருப்புண்மை அறிக;

புகை ஏதுவாக நெருப்புண்மை அறிக;

புகை காரணமாக நெருப்புண்மை அறிக;

புகை நிமித்தமாக நெருப்புண்மை அறிக;

சுக்கிரீவன் துணையாக இலங்கை கொண்டான் (இராமன்);

‘அனையை யாகன் மாறே,

மன்னுயிர் எல்லாம் நின்னஞ் சும்மே’ (புறநா. 20).

இனி ஓடு ஆல் - என்ற உருபுகளும் கொள்ளப்படும்.

எ-டு :

‘என்னோடு இருப்பினும் இருக்க இளங்கொடி’ (மணி. 23 : 35)

‘நறவேங்கை யோடும் கமழ்கின்ற காந்தள் இதழால்’ சூளா. அர. 197 (தொ. சொ. 72 தெய். உரை)

மூன்றாம்வேற்றுமை : பெயர்க்காரணம் -

{Entry: F06__194}

இரண்டாம்வேற்றுமைப் பொருளாகிய காரியத்திற்கு வேண்டும் கருவிப்பொருளைத் தருதலின், இது மூன்றாம் வேற்றுமை எனப்படும். (குடத்தை வனைதற்கு வேண்டும் முதற்காரணம் மண். குலாலன் குடத்தை மண்ணால் வனைந்தான் என்க.) (நன். 297 சங்.)

மூன்றாவதன் உருபு ஒடு பிற பொருளும் தருதல் -

{Entry: F06__195}

1. மலையொடு பொருத மால்யானை :

வினையின்மை - பொருதல் மலைக்கு இல்லை, யானைக்கே.

2. தொடியொடு தொல்கவின் வாடின தோள் : (கு. 1235) :

வேறுவினை - வாடுதல் தொடிக்கில்லை, தோளுக்கே.

3. ‘பாலொடு தேன்கலந் தற்றே’ (கு. 1121) :

மயக்கம் - இரண்டும் பிரித்தல் இயலாதவாறு கலந்தன.

4. மதியொடு ஒக்கும் முகம் : ஒப்பு

5. ‘விலங்கொடு மக்கள் அனையர்’ (கு. 410) :

ஒப்பு அல் ஒப்பு - ஒப்புமை கூறத்தகாத விலங்கையும் மக்களை யும் ஒப்பிடுதல்.

6. ‘எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’ (தொ. சொ. 401) :

ஒற்றுமை - சொல் எனத் தனித்த ஒன்று இன்றி, எழுத்தொடு கூடியே சொல் அமையும். (இ. கொ. 54)

மூன்றாவதன் பொருண்மைப் பாகுபாடு -

{Entry: F06__196}

அதனின் இயறல், அதன்வினைப்படுதல் - வினைமுதல் பாகுபாடு.

அதனிற் கோடல் - கருவிப் பாகுபாடு.

அதற்றகு கிளவி, அதனின் ஆதல் - ஏதுப்பாகுபாடு.

அதனொடு மயங்கல், அதனோடியைந்த ஒருவினைக்கிளவி,

அதனோடியைந்த வேறுவினைக்கிளவி, அதனோடியைந்த ஒப்பல் ஒப்புரை - என்னும் இந்நான்கும் ஒடுவுருபு கொடுத்து ஓதினமையின், பெரும்பான்மையும் ஒடுவுருபிற்கே உரிய; சிறுபான்மை ஆன் உருபிற்கும் வருமேல் கொள்க. (ஒடு - ஓடு)

இன்னான், ஏது : இவை ஓருருபின் எடுத்தோதாமையின் வழக்கிற்கு ஏற்றவாறு கொள்ளப்படும். (தொ. சொ. 75 கல். உரை)

மூன்றாவதன் பொருள் பற்றிய வாய்பாடுகள் -

{Entry: F06__197}

அதனின் இயறல் : ஒன்றனான் ஒன்று பண்ணப்படுதல் என்னும் பொருண்மை. எ-டு : மண்ணான் இயன்ற குடம்

அதற்றகு கிளவி : ஒன்றனான் ஒன்று தகுதல் என்னும் பொருண்மை. எ-டு : வாயான் தக்கது வாய்ச்சி, அறிவான் அமைந்த சான்றோர். இவை கருவி.

அதன் வினைப்படுதல் : ஒன்றனான் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை. எ-டு : நாயான் கோட்படுதல், சாத்தனான் முடியும் இக்கருமம். இவை வினைமுதல்.

அதனின் ஆதல் : ஒன்றனான் ஒன்று ஆதல் என்னும் பொருண்மை. எ-டு : வாணிகத்தான் ஆயினான்.

அதனின் கோடல் : ஒன்றனான் ஒன்றைக் கோடல். எ-டு : காணத்தான் கொண்ட அரிசி. இவை கருவி. இவ்வைந்தும் ஆன்உருபான் வந்தன.

அதனொடு மயங்கல் : ஒன்றனோடு ஒன்று மயங்குதல் என்னும் பொருண்மை. எ-டு : எண்ணொடு விராய அரிசி.

அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி : ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒருவினையாகல் என்னும் பொருண்மை. எ-டு : ஆசிரியனொடு வந்த மாணாக்கன்.

அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி : ஒன்றனோடு ஒன்று இயைந்த வேறு வினையாதல் என்னும் பொருண்மை. எ-டு : மலையொடு பொருத மால்யானை (மலைக்குப் பொருதல் இன்மையின் வேறுவினையாயிற்று.)

அதனோடு இயைந்த ஒப்புஅல் ஒப்புரை : ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒப்பு அல்லாத ஒப்பினை உரைத்தல் என்னும் பொருண்மை. எ-டு : ‘பொன்னோடு இரும்பு அனையர் நி ன்னொடு பிறரே’

இவை வினைமுதல்; ஒடு (ஓடு) வுருபான் வந்தன.

இன்ஆன் ஏது : இன்னும் ஆனும் ஆகிய ஏதுப்பொருண்மை.
எ-டு : முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது. (முயற்சியின் பிறத்தல் : காரக ஏது; பிறத்தலான் ஒலி நிலையாது; ஞாபக ஏது)

ஐந்தாவதற்குரிய ஏதுவை ஈண்டுக் கூறியது, ஏது இவ்விரு வேற்றுமைக்கண்ணதே என்று வரையறுத்தற்கு.

‘அன்ன பிறவும்’ என்றதனான்,

கண்ணான் கொத்தை - சினைவினை முதற்கு ஏறியது.

‘உறழ்மணியான் உயர்மருப்பின’ (புற. 22)

‘பெண்டகையான் பேரமர்க்கட்டு’ (கு. 1083)

- இவையிரண்டும் ஆன் ‘ஒடு’ ஆயின.

‘மனத்தொடு வாய்மை மொழியின்’ (கு. 295) - ஒடு ‘ஆன் ஆயிற்று.

மதியொடு ஒக்கும் முகம் - இஃது ஒப்பு.

சூலொடு கழுதை பாரம் சுமந்தது - இது கட்புலன் ஆகா ‘ஒருவினை ஒடு.’ (தொ. சொ. 75 நச். உரை)

அதனின் இயறல் - ‘தச்சன் செய்த சிறுமா வையம்’ (தொ. சொ. 73 இள., 75 கல். உரை)

அதனோடியைந்த ஒப்புஅல் ஒப்புரை - ஒவ்வாததனை ஒப்பிடுதல் எ-டு : ‘முத்தொடு பவளம் கோத்தது போலும்.’

இன்னான் - இத்தன்மையான் என ஒருவன் பெற்றி கூறுதல்
எ-டு : கண்ணான் கொத்தை அவன், காலான் முடவன் அவன்.

ஏது - முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது.

(தொ. சொ. 75 கல். உரை, ப.உ)

இன்னான் - கண்ணாற் கொத்தை, காலான் முடவன்;

ஏது - முயற்சியாற் பிறத்தலான் சொல்லு நிலையாது.

(தொ. சொ. 73 இள. உரை)

அதனோடு இயைந்த வேறுவினைக்கிளவி - வேறுவினை யுடையன இருசொல் ஒருவினையுடன் தொடர்வது.

எ-டு : காவோடு அறக்குளம் தொட்டான்

அதனோடு இயைந்த ஒப்புஅல் ஒப்புரை - உவமையின்றிப் பிறவும் அதுவும் ஒக்கும் என அளவினானும் நிறையினானும் எண்ணினானும் வருவன.

எ-டு : இதனோடு ஒக்கும் இது, இக்கூற்றோடு ஒக்கும் இக்கூறு.

அன்ன பிறவாவன : காரணம் நிமித்தம் துணை மாறு - என்பன. இவையும் மூன்றாம்வேற்றுமைப் பொருளுணர்த்தும் உருபுகளும், பொருளுணர்த்தும் சொற்களும் ஆம். அவை வருமாறு:

புகையுண்மை யின் நெருப்புண்மை அறிக.

புகை ஏதுவாக நெருப்புண்மை அறிக.

புகை நிமித்தமாக நெருப்புண்மை அறிக.

சுக்கிரீவன் துணையாக இலங்கை கொண்டான் இராமன்.

‘அனையை ஆகன் மாறே,

மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே’ (புறநா. 20)

அன்ன பிறவும் என்றதனான் ஓடு - ஆல் - உருபுகளும் கொள்க. (தொ. சொ. 72 தெய். உரை)

மூன்றாவதன் வினைமுதலும் கருவியும் -

{Entry: F06__198}

கொடி யொடு துவக்குண்டான் - கொடியான் கட்டப்
பட்டான். கொடி இவனைக் கட்டும் கருத்தா, ஆதலின், மூன்றாவது வினைமுதற்பொருட்கண் வந்தது.

ஊசி யொடு குயின்ற தூசும் பட்டு ம் - ஊசியான் நெய்யப்பட்ட தூசும் பட்டும். இங்கு ஊசி கருவியாயிற்று. (தொ. சொ. 71 தெய். உரை)

‘மெய்அறி பனுவல்’ -

{Entry: F06__199}

சொற்றொடரின் பொருளைத் தெளிவாக அறிதற்குப் பயன்படும் சொல். ‘புலிகொல் யானை’ என்னும் தொடர், புலியைக் கொன்ற யானை - புலியான் கொல்லப்பட்ட யானை - என இருவகையாகத் தொகைப்பொருள் விரிக்கப் பெறும்.

‘புலிகொல் யானைக் கோடு வந்தது’ எனின், புலியான் கொல்லப்பட்டது யானை என விளங்கும். ‘புலிகொல் யானை ஓடுகிறது ’ எனின், புலியைக் கொன்றது யானை என விளங்கும். இவ்விரண்டும் மெய்யறி பனுவலாம். (தொ. சொ. 92 இள. உரை)

பொருள் வேறுபாடு உணர்த்தும் சொல்; ‘புலிகொல்யானை’ என்பது போன்ற தடுமாறு தொழில்தொகையை இன்ன பொருளில்தான் வழங்கப்பட்டது என்று தெளிவாக உறுதி செய்ய அடுத்து வரும் சொல்.

எ-டு : புலிகொல்யானை ஓடாநின்றது : இரண்டன் தொகை புலிகொல்யானை க்கோடு வந்தன : மூன்றன் தொகை

ஓடாநின்றது என்பதும், வந்தன என்பதும் மெய்யறிபனுவல்.

(தொ. சொ. 96 சேனா.)

மெய்திரிந்தாய தற்கிழமை -

{Entry: F06__200}

இது தற்கிழமை வகை ஐந்தனுள் ஒன்று. செயற்கை - முதுமை - வினை - என்பன மூன்றும் இதன்கண் அடங்கும்.

எ-டு : சாத்தனது கற்றறிவு, அரசனது முதிர்வு, சாத்தனது செலவு - என முறையே காண்க.

எட்சாந்து, கோட்டு நூறு - இவை முழுதும் திரிந்தன.

(தொ. சொ. 79 சேனா. உரை)

மெய்தெரி பொருள்மேல் அன்மை விளம்பல் -

{Entry: F06__201}

உயர்திணைப் பால்ஐயத்தின்கண் பெண்மகளாதல் துணிந் தானேல், ‘ஆண்மகன் அல்லள், பெண்மகள்’ என்க; ஆண் மகனாதல் துணிந்தானேல் ‘பெண்மகள் அல்லன், ஆண் மகன்’ என்க.

அஃறிணைக்கண் ஒன்றாதல் துணிந்தானேன், ‘பல அன்று, ஒன்று’ என்க; பலவாதல் துணிந்தானேல், ‘ஒன்று அல்ல, பல’ என்க.

அற்றேல், ‘குற்றி அல்லன், மகன்’ என்றவழி, அல்லன் என்னும் உயர்திணை வினைக்குறிப்பு முற்று மகன் என்னும் பெயர் கொண்டு முடியக் குற்றி என்னும் பெயர்க்கு ஒரு பயனிலை இன்மையின் அது நின்று வற்றும் எனின், நீக்கப் பொருண்மைக் கண் வரும் ஐந்தனுருபு குற்றியின் அல்லன் என விரிய, நின்று வற்றாதாம் என்க. அல்லவற்றிற்கும் இவ்வாறே கொள்க. (குற்றியினின்று நீங்கிய அதன் அன்மையுடையன்) (நன். 375 மயிலை.)

‘மெய்ந்நிலை மயக்கின் ஆகுந’ -

{Entry: F06__202}

‘தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்’ என்புழி மங்கல மரபினானும் குழுவின் வந்த குறிநிலை வழக்கினானும் கூறப் படும் எனப்பட்டது. இனி அவ்வாறன்றித் தத்தம் இலக்கணத் தானும் சொல்லப்படும் என்றவாறு.

எ-டு : சுடுகாட்டை நன்காடு என்னாது சுடுகாடு என்றலும், செத்தாரைத் துஞ்சினார் என்னாது செத்தார் என்றலும் அமையும் என்றவாறு.

‘ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில்’ (சீவக. 309),

‘செத்தாரைச் சாவார் சுமந்து’ (நாலடி. 24)

எனச் செய்யுட்கண்ணும் காண்க.) (தொ. சொ. 444 இள. உரை)

பொருள்நிலை மயக்கமாகிய பிசிச்செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவன.

எ-டு :

‘எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார்

தொழுதிமைக் கண்அணைந்த தோட்டார் - முழுதகலா

நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும்

பேணற் குரியார் பெரிது’

என்பது புத்தகம் என்னும் பொருள்மேல் திணை திரிந்து வந்தவாறு கண்டுகொள்க. (தொ. சொ. 449 சேனா. உரை)

ஒருமைப்பொருளான் கூறவே, பன்மைப்பொருள் தோன்றி மயங்கும் மயக்கினான் ஆகிய செய்யுள் என்பது.

எ-டு :

‘இல்வாழ்வான் என்பான்’ கு. 41

‘தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்’ கு. 144

‘படைகுடி...... உடை யான் அரசருள் ஏறு’ கு. 381

‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ கலி. 10

என ஒருமைப்பெயர்கள் ஒருமையளவோடு நில்லாது பன்மைப் பெயரையும் சுட்டுதல், மெய்ந்நிலை மயக்கின் ஆகுதலாம். மெய் - பொருள். (தொ. சொ. 449 நச். உரை)

மெய்ந்நிலை மயக்கமாவது பொருள்நிலை மயக்கம் கூறுதல்.

எ-டு :

‘குருகுகரு வுயிர்ப்ப ஒருதனி ஓங்கிய,

திருமணிக் காஞ்சி’ (மணிமே. 18 : 55, 56.)

என்றவழி, குருகு என்பது மாதவி என்னும் கொடிக்கும் பெயராதலின், அப்பெயருடையதனைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக் காஞ்சி என ஒட்டி மணிமேகலை என்பாள்மேல் வந்தது. இவ்வாறு ‘பொருள் நிலை’ மயங்க வருவனவும் இசையெச்ச மாம் என்றவாறு. (தொ. சொ. 439 தெய். உரை)

மொழிப்பொருட் காரணம் -

{Entry: F06__203}

ஒருசொல் ஒருபொருளைக் குறித்தற்குரிய காரணம்.
உறு, தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொரு ளாதல் வரலாற்று முறையாற் கொள்வதல்லது, அவை அப் பொருள வாதற்குக் காரணம் விளங்கத் தோன்றா.

பொருளொடு சொற்கு இயைபு இயற்கையாகலான், அவ் வியற்கையாகிய இயைபான் சொல் பொருளுணர்த்தும் என்ப ஒரு சாரார். பிறிதொரு சாரார் பிறகாரணத்தான் உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்கே புலனாவது. (தொ. சொ. 394 சேனா. உரை)

நால்வகைச் சொல்லுக்கும் பொருளை அறிவித்து நிற்கின்ற தொரு காரணம் உண்டாம் தன்மை நுண்ணுணர்வு இல்லா தோர்க்கு மரபு என்று கொள்வதல்லது விளங்கத் தோன்றா என்றவாறு. எனவே நுண்ணுணர்வுடையோர்க்குக் காரணம் உண்டாம் தன்மை விளங்கத் தோன்றும். (தொ. சொ. 394 நச். உரை)

ஒருசொல் ஒருபொருளை உணர்த்துதற்குக் காரணம் உளது என்பதும் அது புலனாகாது என்பதும் கூறியவாறு.

(தொ. சொ. 390 தெய். உரை)

மொழிமாற்றுப் பொருள்கோள் -

{Entry: F06__204}

இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையு மாய் வரக் கூறும் ஆசிரியர் அந்நான்கனுள் ஏற்ற பயனிலை கட்கு இயையும் மொழிகளைத் தனித்தனியே கூட்டிக் கூறாது. ஏலாத பயனிலைகட்கு இயையாத மொழி களைத் தனித்தனியே கூட்டி ஓரடியுள்ளே கூறுவது மொழி மாற்றுப் பொருள்கோளாம். தொல்காப்பியனார் இதனைச் சுண்ண மொழிமாற்று என்பர்.

எ-டு :

‘சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப

கானக நாடன் சுனை’

ஆழ என்னும் பயனிலைக்கு இயைந்த அம்மி என்னும் மொழி யினை மிதப்ப என்னும் பயனிலைக்கும், மிதப்ப என்னும் பயனிலைக்கு இயைந்த சுரை என்னும் மொழியினை ஆழ என்னும் பயனிலைக்குமாக முதலடியுள் மாற்றிக் கூறி யுள்ளமை காண்க. அவ்வாறே நீத்து என்னும் பயனிலைக்கு இயைந்த முயல் என்னும் மொழியினை நிலை என்னும் பயனிலைக்கும், நிலை என்னும் பயனிலைக்கு இயைந்த யானை என்னும் மொழியினை நீத்து என்னும் பயனிலைக்கு மாக மாற்றிக் கூறியுள்ளமையும் காண்க. (நன். 413 சங்.)

ய section: 23 entries

யக்கு -

{Entry: F06__205}

செயப்பாட்டு வினையில் சேரும் வடமொழிப் பிரத்தியயம் ‘யக்’ எனப்படும். மேலும் பெயர்களை அடுத்து வரும் ‘காமம் .......... மன்று படும்’ (கு. 1138), ‘சொற்பொருள் சோர்வு படும்’ (கு. 1046) என்பவற்றில் வரும் படு ‘யக்கு’ எனப்படும். (பி.வி. 45)

யங் -

{Entry: F06__206}

சில வினைச்சொற்களும் சில பெயர்ச்சொற்களும் இரட்டித் தல், இரட்டைச் சொற்கள் போல. எடுத்துக்காட்டுச் சில வருமாறு :

‘சென்றது சென்றது வாழ்நாள்’ (நாலடி. 4),

‘வந்தது வந்தது கூற்று’ (நாலடி. 4),

‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’ (கு. 144),

யார்யார்வாய்க் கேட்பினும் (423),

‘துடிதுடித்துத் துள்ளி வரும்’,

‘குறுகுறு நடந்து’ (புறநா. 88),

‘கலகல கூஉம் துணை’

‘பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்’ (நாலடி. 251),

செக்கச்சிவந்தது, கன்னங்கரிய.

புநப்புந, ரக்ஷரக்ஷ, சிவசிவ, திநேதிநே - என வடமொழிக் கண்ணும் வரும். (பி.வி. 39)

யங்லுக் -

{Entry: F06__207}

யங் வரும் சில வினைச்சொற்களில் ஒரு கூறு கெடுதல்

எ-டு : ‘தீவ்யதே தீவ்யதே இதி’ என்றது ‘தேதீவ்யமான’ என்றாதல். (பி.வி. 39)

யண்சந்தி -

{Entry: F06__208}

வடமொழியில் இ உ ஈற்றின் முன் பிற உயிர்வரின் ய வ என்பன வரும்.

எ-டு : ததி + அத்ர = தத்யத்ர - யகரம் வந்தது

மது + ஆஜ்யம் = மத்வாஜ்யம் - வகரம் வந்தது.

இவை தமிழில் வரும் உடம்படுமெய்யோடு ஓரளவு ஒத்திருத்தல் காண்க. (எ. ஆ. பக். 109)

யாண் என்னும் உரிச்சொல் -

{Entry: F06__209}

இவ்வுரிச்சொல் கவின் (அழகு) ஆகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : யாணது பசலை’ நற். 50

யாணர் என்னும் உரிச்சொல் -

{Entry: F06__210}

இவ்வுரிச்சொல் வருவாய் புதிதாய்த் தோன்றுதலாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘யாணர் ஊர’ நற். 50 (தொ. சொ. 379 சேனா. உரை)

யாதன் உருபு -

{Entry: F06__211}

வேற்றுமையல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். ‘அம்மூ உருபின தோன்ற லாறே’ (சொ. 155) என வடிவிற்குப் பெயராகி வந்தவாறு. பிறவிடத்தும் காணப்படும்.

‘வானின் றுலகம் வழங்கி வருதலால், தானமிழ்தம் என்றுணரற் பாற்று’ கு. 11 ‘மருந்துண்டு நோய் தீர்ந்தது’

என்னுமிடத்து, உலகம் வழங்கிவருதற்கு மழை ஏதுவாக லானும் நோய் தீர்தற்கு மருந்து ஏதுவாகலானும், இவற்றிற்குப் பொருளுரைக்குங்கால், மழை நிலைநிற்றலான் உலகநடை தப்பாது வருதலான் - எனவும், மருந்துண்டலான் நோய் தீர்ந்தது - எனவும் உரைக்க வேண்டுதலின், இவை வேற்றுமை யுருபான் வந்திலவாயினும் பொருள்முகத்தான் வேற்றுமை யாதலின் இவை இவ்வாறு வரப்பெறும் என வழு அமைத்த வாறு. (தொ. சொ. 102 தெய். உரை)

யாது, எவன் - என்னும் வினாக்கள் -

{Entry: F06__212}

யாது எவன் - என்னும் இவ்விரு வினாச்சொல்லும் பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்புவகையான் அறியாப் பொருளிடத்து ஒருவன் வினாவும் வினாவாய்த் தோன்றும்.

எ-டு : இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருள் எவன்?

இக்காலத்து எவன் என்பது என் எனவும் என்னை எனவும் மருவிற்று. இவற்றுள் யாது என்பது அறியாப் பொருளை வினவுதலேயன்றி, அறிந்த பொருட்கண் ஐயம் தீர்தற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து.

எ-டு : நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?

இஃது அறிந்த பொருட்கண் ஐயம் தீர்த்தலின் வழுவமைதி அன்று. (தொ. சொ. 31, 32 நச். உரை)

இஃது ஐயம் அறுத்தலுக்கும் அறிவு ஒப்புக் காண்டலுக்கும் வரும். அறிந்த பொருளை வினாவுதல் வழுவாயினும் அமைக என்றவாறு. (தொ. சொ. 30 தெய். உரை)

யாது வினாஆவது -

{Entry: F06__213}

யாது அறியாப் பொருட்கண்ணும், அறிந்த பொருட்கண் ஐயம் தீர்த்தற்கண்ணும் வினாவாக வரும்; ஐயம் அறுத்தலே யன்றி, அறிவு ஒப்புக் காண்டற்கண்ணும் வினாவாக வரும். ஐயம் அறுத்தலாவது இச்சொற்குப் பொருள் இதுவென உணர்ந் தான் ஒருதலையாகத் துணிதல் ஆற்றாது, அஃது அறிவா னொருவனை வினாவுதல். அறிவுஒப்புக் காண்டலாவது. சொல்லிலக்கணம் அறிவானொருவன் அஃது அறிவானொரு வனை இதற்குப் பொருள் யாது என வினவுதல். இவ்வாறு அறிந்த பொருளை வினாவுதல் வழுவாயினும் அமைக என்பது. (தொ. சொ. 30 தெய். உரை)

யாய் என்னும் முறைப்பெயர் -

{Entry: F06__214}

யாய் என்னும் முறைப்பெயர் தன்மை சுட்டலின் உயர் திணையாம். ஆய் என்பதும் அது. (தொ. சொ. 182 நச். உரை)

யார் -

{Entry: F06__215}

யார் என்னும் உயர்திணை முப்பாற்கும் பொதுவான குறிப்பு வினை பிற்காலத்து அஃறிணைக்கண்ணும் சிறுபான்மை வந்தது.

எ-டு : அவன் யார், அவள் யார், அவர் யார்;

‘உண்ணிய வண்டுதான் யார்’ (தொ. சொ. 212 நச். உரை)

(‘என்னுள்ளம் ஆர் ஞானங்கள் ஆர்’ (திருவா. கோத். 2) யார் என்பதன் மரூஉ ‘ஆர் என்பது)

யார் என்ற வினைக்குறிப்பு முற்று ‘ஆர்’ என மருவிப் பிற்காலத்து வழங்கும்; அது வினைக்குறிப்புப்பெயருமாம்.

யார், எவன் : இலக்கணம் -

{Entry: F06__216}

‘உயர் முப்பால்’ என்றும் ‘இழி இருபால்’ என்றும் விதந் தமையின், யார் என்றும் எவன் என்றும் ஈண்டுப் போந்த சொற்கள், பெயர்க்கும் வினைக்குறிப்பிற்கும் பொதுவாகிய யாவர் என்னும் சொல் யார் - ஆர் - என மரீஇய உயர்திணைப் பன்மைச் சொல்லும், இவ்வாறு பெயர்க்கும் வினைக்குறிப் பிற்கும் பொதுவாகிய எவன் என்னும் உயர்திணை ஆண்பாற் சொல்லும் அல்ல என்பது பெற்றாம். வருமாறு :

அவன் யார், அவள் யார், அவர் யார் - என்றும் அஃது எவன், அவை எவன் - என்றும் வரும். (நன். 349 350 சங்.)

யார், எவன் என்னும் வினாவினைக் குறிப்புக்கள் -

{Entry: F06__217}

யார் என்னும் வினாவினைக்குறிப்பு உயர்திணைமுப்பாற்கும், எவன் என்னும் வினாவினைக்குறிப்பு அஃறிணை இருபாற்கும் பொதுவாம். வருமாறு : யார் அவன் - யார் அவள் - யார் அவர்; எவன் அது - எவன் அவை

யார் என்றது எத்தன்மையுடையார் என வினைக்குறிப் பானதும், எவன் என்றது எத்தமையுடையது என வினைக் குறிப்பானதும் காண்க. (நன். 348, 349 மயிலை.)

யார் என்னும் பலர்பால்பெயர் -

{Entry: F06__218}

யாவர் என்னும் பலர்பால்பெயர் இடையே வகரம் கெட்டு யார் என்றாகி உயர்திணைப் பலர்பாலுக்கு மாத்திரம் வரும். இப்பெயர் மரூஉ முடிபு. எ-டு : யார் போயினார். (தொ.எ. 172 நச். உரை)

யார் என்னும் வினைக்குறிப்புமுற்று -

{Entry: F06__219}

யார் என்னும் வினைக்குறிப்புமுற்று காலம் காட்டாமையின் வினைச்சொல்லாகாது எனின், வேற்றுமை ஏலாமையின் பெயரன்று, வினையெனவே படும். யாவர் என்னும் வினாப் பெயர் இடையே வகரம் கெட்டு வரும் ‘யார்’ மரூஉ முடிபாகிய பெயர். இஃது அன்னதன்றி உயர்திணைமுப்பாற்கும் பொது வாகிய வினாவினைக்குறிப்பு என்க. (தொ. சொ. 204 தெய். உரை)

யார் என்னும் குறிப்புவினைமுற்று ரகார ஈற்றதாயினும் பலர்பாலுக்கு மாத்திரம் உரிமை பாராட்டாது, உயர்திணை முப்பாலுக்கும் உரித்தாக வரும். ‘ஊதைகூட் டு ண்ணும்’ என்னும் பாடலுள், ‘உண்ணிய வண்டுதான் யா ர்’ என அஃறிணைக்கண் ‘யார்’ சிறுபான்மை வருதல் கொள்க. இது திணைவழுவமைதி எனினுமாம். (தொ. சொ. 212 நச். உரை)

யாற்றுநீர்ப் பொருள்கோள் -

{Entry: F06__220}

மொழிமாற்று முதலிய பொருள்கோள் போலப் பிறழ்ந்து செல்ல வேண்டாது, யாற்றுநீர்ஒழுக்குப் போல நெறிப்பட்டு அடிதோறும் பொருள் அற்றுஅற்று ஒழுகும் அப் பொருள் கோள் யாற்றுநீர்ப் பொருள்கோளாம்.

எ-டு : ‘சொல்அருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்’ (சீவக. 53)

இப்பாடலுள், ‘சொல்’ என்னும் எழுவாயினை முதலில் எடுத்து, அதன் தொழிலாகிய வினையெச்சங்கள் ஈன்று - தலை நிறுவி - இறைஞ்சி - என்பன ஒன்றனை ஒன்று கொள்ளு மாறு இடையில் நிறுவி, இறுதியில் ‘காய்த்த’ என்னும் பயனிலை தந்து முடித்தவாறு காண்க. (நன். 412 சங்.)

யான் உணல், எனது உணல் : வேறுபாடு -

{Entry: F06__221}

யான் உண்டேன் - நீ உண்டாய் - அவன் உண்டான் - என இடத்தான் ஒன்றுபட நின்ற நிலைமொழி வருமொழி போல, அம்மூவிடமுற்றின்கண் தொழில் பயனிலையாகி யானுணல் - நீயுணல் - அவனுணல் - என ஒன்றுபட நிற்பனவற்றிற்கு அன்றி, எனதுணல் - நினதுணல் - அவனதுணல் - என்றும், உணல் என்றும் வேறுபட நிற்கும் வினையின் பெயர்கட்கு எய்திய இடம் இகந்துபடுதல் இன்று என உணர்க. (நன். 286 சங்.)

(என்றது, யானுணல் - நீயுணல் - அவனுணல் - என்னுமிடத்து உணல் என்னும் தொழிற்பெயர் முறையே தன்மை முன்னிலை படர்க்கை - என்னும் மூவிடத்திற்கும் உரியது; எனதுணல் - நினதுணல் - அவனதுணல் - என்னுமிடத்து உணல் என்னும் தொழிற்பெயர் படர்க்கைக்கே உரித்தாம் என்றவாறு.

‘யான் நீ அல்லன்’ என்னும் தொடர் -

{Entry: F06__222}

‘மகன் அன்று (குற்றி)’ என்பதை ஐந்தாம் வேற்றுமைப் புணர்ச்சியென்று, மகனின் அன்று (குற்றி) என விரிப்பாரு முளர். (மகனின் நீங்கிய அன்மைத்தன்மை யுடையதன்று) அது போலவே வரும் ‘(யான்) நீ அல்லன்’ என்பதை அவ்வாறு விரித்தல் கூடாமையால், இஃது அல்வழிப் புணர்ச்சி பதினான்கின் அடங்காது வெளிப்பட்டு அதன் புறத்ததாய் அடங்கும் என்க. (நன். 376 சங்., 417 இராமா.)

‘யானையைக் காலை வெட்டினான்’: வழுவாதல் -

{Entry: F06__223}

முதல் சினை என இரண்டனிடத்தும் ஐ உருபு வாராது என்றார்; வரின், செயப்படுபொருள் இரண்டாய் முதல் சினைகள் ஒரு பொருட்பகுதிய அல்லவாம் ஆதலின், ‘இங்ஙனம் செய்யப்பட்டது ஒரு பொருளே; முதல்சினைகள் ஒருபொருட் பகுதியவே’ என்பது தோன்றக் கண்ணுருபும் அதுவுருபும் வரும் என்பதாயிற்று. (யானையைக் காலின்கண் வெட்டினான், யானையது காலை வெட்டினான் - எனவே வரும்.) (நன். 315 சங்.)

‘யானை வந்தான்’ முதலிய எடுத்துக்காட்டு -

{Entry: F06__224}

பன்மைப் பொதுப்பெயர்க்கு யானைவந்தது - யானை வந்தன - யானை வந்தான் - யானை வந்தாள் - என உதாரணம் காட்டி னாரும் உளர் எனின், யானை என்னும் பால்பகா அஃறிணைப் பெயர்க்குக் கள்விகுதி இன்மையின் அஃறிணை ஒருமைக்கே அது சிறந்ததாய் அதன் பன்மையிலும் விரவி, உவமையாகு பெயராய் ஆண்ஒருமை பெண்ஒருமைகளிலும் வருதலின், ‘முதற்பெயர் நான்கும்’ என்னும் சூத்திரத்தில் ‘இன்னன’ என்றமையால் அமைந்ததன்றிப் பன்மைப் பொதுப் பெயராகா என்பது. (நன். 284 சங். இராமா.)

யோக்யதை -

{Entry: F06__225}

தகுதி. ‘நீரால் நனை’ என்றும் ‘தீயால் எரி’ என்றும் இந்நிலை மொழிக்கு இவ்வருமொழியே தகுதி என்ற பொருளில் சேர்ப்பது. (பி.வி. 19)

தொடர்மொழி, சொற்கள் தம்முள் இயைந்து பொருள் விளக்குதற்குரிய காரணம் மூன்றனுள் இதுவும் ஒன்று. (சொ. 1 சேனா. உரை)

யோக விபாகம் -

{Entry: F06__226}

இஃது ஒரு நூற்புணர்ப்பாகிய உத்திவகை ; சூத்திரத்தைக் கூட்டிப் பிரித்தல் என்னும் பொருளது. ‘வினையின் தோன்றும்.... மயங்கல் கூடா தம்மரபினவே’ எனக் காட்டி, வினைப் பாலறி சொல்லும் பெயர்ப் பாலறிசொல்லும் மயங்குதல் கூடாது; அவை தத்தம் மரபுபற்றியே மொழியுள் பயன்படுத்தப்படும் - என்று பொருள்செய்து, ‘வினையின் தோன்றும்.....மயங்கல் கூடா’ என்பதனை ஒரு தொடராக்கி அவை வழுவற்க என்று கூறிப் பின் ‘தம் மரபினவே’ என்பதனை ஒரு தொடராக்கி அவை மரபு வழுவுதல் கூடாது எனப் பொருள் செய்வது இதற்கு எடுத்துக் காட்டு.

‘வேற்றுமை உருபா குநவும்’ என்பதனைத் தனித் தொடராக்கி, வேற்றுமையுருபுகளாகிய ஐ ஒடு கு இன் அது கண்- என்பன வற்றைக் குறித்து, பின்னர் ‘வேற்றுமைப் பொருள்வயின் ஆகுநவும்’ என்பதனைத் தனித்தொடராக்கி, மாறு - உளி - போன்ற சொல்லுருபுகளைக் குறிப்பனவாகக் கொள்ளுத லும் இதற்கு மற்றோர் எடுத்துக்காட்டு. (தொ. சொ. 11, 250 சேனா. உரை)

யோகாங்குலி நியாயம் -

{Entry: F06__227}

விரலும் விரலும் சேர்ந்தது போல என்னும் முறை. இது நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் புணரும்போது கயிற்றொடு கயிறு பிணைந்தது போல ஒற்றுமைப் பட்டுப் புணரும் எனவும், விரலும் விரலும் சேர்ந்து நின்றாற் போல ஒற்றுமையொடு வேற்றுமையும் பட்டு நில்லா எனவும் விளக்குமிடத்தே, பி.வி. நூலாசிரியர் பயன்படுத்தும் உரைவிளக்கத் தொடர். (பி. வி. 26)

ர, ல section: 9 entries

ரகார ஈறு விளியேற்றல் -

{Entry: F06__228}

ரகாரஈறு அர்ஈறாயினும் ஆர்ஈறாயினும் ஈர்ஈறாகி விளியேற் கும்.

எ-டு : கூத்தர், கூத்தீர்; பார்ப்பார் - பார்ப்பீ ர்

(தொ. சொ. 140 நச். உரை)

தொழிற்பெயராயின் ஈரீற்றோடு ஏகாரம் பெறுதலுமுண்டு. இஃது ஆரீற்றிற்கே பொருந்தும். எ-டு : வந்தார் - வந்தீரே, சென்றார்- சென்றீரே. (தொ. சொ. 141 நச். உரை)

சிறுபான்மை தொழிற்பெயர் அல்லா ஆரீறுகளும் ஈரீறாகி ஏகாரம் பெறும்.

எ-டு : நம்பியார் - நம்பியீரே, கணியார் - கணியீரே

அர் ஈறு ஈர்ஆகாமல் ஏ மாத்திரம் பெறும்.

எ-டு : வந்தவர் - வந்தவரே.

பண்புப்பெயர்களும் ஈரீறாதலும் ஏகாரம் பெறுதலுமுண்டு.

எ-டு : கரியர் - கரியீர், கரியீரே; இளையர் - இளையீர், இளையீரே; கரியவர் - கரியவரே, இளையவர் - இளையவரே

இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகிய சீவகசாமியார் ‘சீவகசாமியீர்’ ஆகி, ‘சீவகசாமியீரே’ (சீவக. 1913) என ஈரீற்றோடு ஏகாரம் பெறுதலுமுண்டு. (தொ. சொ. 142 நச். உரை)

அளபெடைப்பெயர் மாத்திரை மிக்கு இயல்பாய் விளி யேற்கும்.

எ-டு : சிறாஅர் - சிறாஅஅர்; மகாஅர் - மகாஅஅர்

(தொ. சொ. 143 நச். உரை)

சுட்டுப்பெயர், நீயிர் என்னும் பெயர்கள், வினாப்பெயர் - என்பன விளியேலா. (தொ. சொ. 144, 145 நச். உரை)

ரூபபேதம் -

{Entry: F06__229}

(சொல்லினது) வடிவு வேறுபாடு. பெயர்ச்சொல்லே பயனிலை தோன்ற நின்றபோது எழுவாய்வேற்றுமை யாகுதலன்றி, அதற்கு ஏனைய வேற்றுமைகள் போல வடிவுவேறுபாடு காட்டும் உருபு தமிழில் இல்லை. (பி.வி. 8)

லகரஈற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர் விளியேற்றல் -

{Entry: F06__230}

லகரஈற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர்கள் பொது விதியான் இயல்பாயும் ஏகாரம் பெற்றும் விளியேற்றலே யன்றி, ஈற்றயல் நீண்டும் விளியேற்கும்.

எ-டு : முயல் - முயல், முயலே, முயால்; தூங்கல் - தூங்கல், தூங்கலே, தூங்கால். (நன். 312 சங்.)

லகரஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்றல் -

{Entry: F06__231}

லகரஈற்று உயர்திணைப்பெயர் அளபெழுந்தும் ஈற்றயல் நீடியும் விளியேற்கும்.

எ-டு : தோன்றல் - தோன்றால், மால் - மாஅல்; மடவரல் - மடவரால், தாழ்குழல் - தாழ்குழால். (நன். 310 சங்.)

லகாரம் -

{Entry: F06__232}

காலம் காட்டும் இடைநிலையொடு கூடிய விகுதி லகாரம் எனப்படும். வடமொழியில் இவை பத்தாம். 1) லட் : நிகழ்காலம்; 2) லேட் : இது வேதத்தில் மாத்திரமே வருவது (முக்காலமும் காட்டும் என்பர்), 3, 4, 5) லங் லுங், லிட் : இறந்தகாலம்; 6, 7, 8) ல்ருட், ல்ருங், லுட் : எதிர்காலம்; 9) லோட் : விதித்தல் ; 10) லிங்: விதித்தல், வாழ்த்தல். (பி.வி. 44)

லகார ளகார ஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்றல் -

{Entry: F06__233}

லகார ளகார ஈற்றுப்பெயர் ஈற்றயல் நீண்டு விளியேற்கும். ஈற்றயல் நெடிலாயின் இயல்பாக விளியேற்கும்.

எ-டு : குரிசில், ஏந்தல், தோன்றல் - குரிசீல், ஏந்தால், தோன் றால்; குழையள், அணியள், மக்கள் - குழையாள், அணியாள், மக்காள்; ஆண்பால் - ஆண்பால்; கோமாள் - கோமாள் : இயல்பு.

வினையாலணையும்பெயரும் பண்புப்பெயரும் ஆகியவற்று ஆள்ஈறு ஆய் எனத் திரிந்து விளியேற்கும்.

எ-டு : உண்டாள் - உண்டாய்; கரியாள் - கரியாய்

முறைப்பெயர் ளகாரஈறு ஏகாரம் பெற்று விளியேற்கும்.

எ-டு : மகள் - மகளே, மருமகள் - மருமகளே

அளபெடைப்பெயர் மாத்திரை மிக்கு இயல்பாய் விளியேற்கும்.

எ-டு : மாஅல் - மாஅஅல், கோஒள் - கோஒஒள்

(தொ. சொ. 146, 151 நச். உரை)

ளகாரஈற்றுச் சுட்டுப்பெயரும், வினாப்பெயரும் விளியேலா.

லவம், லேசம் -

{Entry: F06__234}

மிகை ; நூற்பாக்களில் காணும் மிகையான சிறுசொற்கள். இவற்றால் நூற்பாவுள் வாராத வேறுசில செய்திகளையும் பொருத்தமுறக் கூறுதல் உரையாசிரியர்தம் மரபு. (பி. வி. 44)

லாதேசம் -

{Entry: F06__235}

வடமொழியில் காலம் காட்டும் வினைமுற்றுக்களை லகரத்தில் தொடங்கும் பத்துக்குறிகளால் குறிப்பர். அவை வருமாறு :

1. லட் - நிகழ்காலத்தைக் குறிப்பது; 2. லேட் - இது வேதத்தில் மாத்திரமே வருவது; முக்காலமும் குறிக்கும்; 3, 4, 5 லங், லுங், லிட் - இவை இறந்தகாலம் காட்டுவன; 6, 7, 8 ல்ருட், ல்ருங், லுட் - இவை எதிர்காலம் காட்டுவன; 9. லோட் - விதித் தலைக் குறிக்கும்; லிங் - ஆசீர்வாதம் என்னும் வாழ்த்துப் பொருளில் வருவது.

காலமும் விதியும் வாழ்த்தும் (வியங்கோள்) காட்டும் இடைநிலையும் விகுதியும் போன்ற இவற்றை லகாரம் என்பர். இந்த லகாரங்களினிடத்து வந்து புணரும் பிரத்தியயங்கள் லாதேசம் எனப்படும். ஆதேசம் - கெட்டு மிகும் புணர்ச்சி விகாரம்.

லாதேசங்கள் பதினெட்டு. அவற்றைப் பிரத்தியாகார முறையில் ‘திங்’ எனக் குறியிடுவர். இவை வினைமுற்றுச் சொற்கே உரிய இலக்கணம். ஆதலின் வடமொழி இலக்கண நூலில் வினை யியல் ‘திங் பிரகரணம்’ எனப்படும். பிரயோக விவேகமும் திங்ஙுப்படலம் எனப் பெயரிட்டுள்ளது. (பி.வி. 36)

லௌகிக லிங்கம் -

{Entry: F06__236}

உலகவழக்கை ஒட்டிய பொருள் பற்றிய பால். பால், புல்லிங்கம் (ஆண்) ஸ்திரீலிங்கம் (பெண்) நபுஞ்சகலிங்கம் (அலி) என மூன்றாம். வடமொழியில் சத்துவம் முதலிய முக்குணம் பற்றி லிங்கம் (குறி) நிகழும் எனக் கூறுவர். அது சாத்திரலிங்கம் - லௌகிகலிங்கம் - என்று கொள்ளுதற் கில்லை. ஒரே பொருளில் வரும் பத்தினி: பெண்பால்; தாரா : (தாரம்) ஆண்பால் (பன்மை); களத்திரம் : அலிப்பால். இம்மூன்று சொற்களும் கோபம் - சாந்தம் - மந்தம் - என்னும் பண்புகளின் மிகுதிபற்றி மனைவி என்பதன் பரியாயச் சொற்களாய் முப்பாலும் பெற்றமை காண்க. (பி.வி. 43)

வ section: 259 entries

வகர ஈறு -

{Entry: F06__237}

அ ஆ வ - என்னும் ஈறுகளையுடைய மூன்று சொல்லும் பலவறிமுற்றாம். வகரம் அகரஈற்றுள் அடங்கும் எனினும், அகரஈறு மூன்றுகாலத்தும் வினைக்குறிப்பின்கண்ணும் (உண்டன - உண்ணாநின்றன - உண்பன; கரிய - என) வருமாறு போல, வகர ஈறு வாராமல் உண்டல் தின்றல் முதலாகிய தொழில்தோறும் உண்குவ - தின்குவ - என எதிர்காலம் பற்றி வேறொரு வாய்பாட்டான் வருதலின், சிறப்புடைய அகரத்தை முன் கூறி, அத்துணைச் சிறப்பில்லாத வகரஈற்றைப் பின் வைத்தார். (தொ. சொ. 9 கல். உரை)

அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் அ ஆ வ - என்பன. அகரம் முக்காலமும் வினைக்குறிப்பும்பற்றி வரும்.
எ-டு : உண்ட, உண்ணாநின்ற, உண்ப; கரிய. ஆகாரம் எதிர் மறையில் மாத்திரம் வரும். எ-டு : உண்ணா.

வகரம் எதிர்காலத்தில் மாத்திரம் வரும்; குகரச்சாரியை பெற்றவழி வகரஈறாகவே வரும். ஆதலின் வகரம் அகரத்தின் வேறுபட்டது. எ-டு : உண்குவ, தின்குவ. (தொ. சொ. 9 சேனா. உரை)

உண் என்னும் தொழிற்சொல் இறந்தகாலம் குறித்துழி உண்டு எனவும், நிகழ்காலம் குறித்துழி உண்கின்று எனவும், எதிர்காலம் குறித்துழி உண்பு எனவும் நின்று அன் - அள் - அர் - அது - அ - என இப்பாலுணர்த்தும் எழுத்தொடு புணருழி, அன்சாரியை மிக்கும் இயல்பாகியும்,

இறந்தகாலத்து உண்டனன், உண்டனள் - உண்டனர் - உண்டது - உண்ட - எனவும், எதிர்காலத்து உண்பன்- உண்பள் - உண்பர் - உண்பது - உண்ப - எனவும், நிகழ்காலத்து உண்கின்-றனன் - உண்கின்றனள் - உண்கின்றனர் - உண்கின்றது - உண்கின்றன - எனவும் வரும். உண்கு என நின்ற எதிர்காலச் சொல் பன்மை யுணர்த்தும் அகரம் ஏறியவழி உண்க என வியங்கோட்பொருள் படும். ஆதலின் ‘உண்குவ’ என வகர உடம்படுமெய் கொடுக்க வேண்டுதலின் வகரஈறாகவே ஓதல் வேண்டும் என்க. (தொ. சொ. 9 தெய். உரை)

வடசொல் -

{Entry: F06__238}

வடசொல்லாவது ஆரியச் சொல் போலும் சொல், அஃதாவது ஆரியம் தமிழ் என்னும் இரண்டற்கும் உரிய பொதுவெழுத்தான் தமிழில் எழுதப்பட்டு இருமொழிக் கண்ணும் ஒரே பொருளைத் தரும் சொற்கள். எ-டு : மேரு, குங்குமம்

(தற்சமம் ஆகியவற்றையே ஈண்டு வடசொல்லாகக் குறித்தார் உரையாசிரியர்; அடுத்த நூற்பாவால் தற்பவம் ஆகியவற்றைக் கொள்வார்) (தொ. சொ. 392, 396 இள. உரை)

எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டில் பயில வழங்குதலின் வடசொல்லாயிற்று. வடசொல் பெயராயல்லது தமிழில் வாராது. வடசொல் என்றதனான் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்ளப்படும்.

வடமொழியாவன வாரி - மணி - குங்குமம் - என்னும் தொடக்கத்தன. வட்டம் - சட்டம் - பட்டினம் - என்பன பாகதம். வடசொல் பெயராயல்லது தமிழில் வாராது. (தொ. சொ. 397 தெய். உரை)

தமிழில் வழங்கும் ஆரியச் சொல்லின் திரிபாகிய வடசொல், உரப்பியும் எடுத்தும் கனைத்தும் கூறும் வடவெழுத்துக் களின் நீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம். அவை : வாரி - மேரு - குங்குமம் - மணி - மானம் - மீனம் - வீரம் - வேணு - காரணம் - காரியம் - நிமித்தம் - காரகம் - போல்வன.

பொதுவெழுத்தான் இயன்றனவேயன்றி, வடவெழுத்தான் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன கொள்ளப்படும்.

எ-டு : அரமியம் (அக. 124), தசநான்கு(நெடு.115), வாதிகை (மலை.112), இராமன், சீதை(புற. 378), மேதை, சருமம்

பாகதச் சிதைவாகிய ஆணை - வட்டம் - நட்டம் - கண்ணன் (முறையே ஆக்ஞா - விருத்தம் - நடனம் - கிருஷ்ணன் - என்ப வற்றின் சிதைவுகள்) - என்பனவும் கொள்க. (தொ. சொ. 401, 402 நச். உரை)

வடசொல்லாவது ஆரியச் சொல்லோடு ஒக்கும் தமிழ்ச் சொல் என்பாரும் உளர். ஒலியெழுத்தானும் பொருளானும் வேறு பாடில்லனவற்றை ‘ஒன்றை ஒக்கும் மற்றது’ என்று கூறுவது பொருந்தாது; தமிழில் வழங்கும் ஆரியச்சொல் எனவே கொள்ளவேண்டும். ஆரிய மொழியின் எழுத்துக் களை விடுத்துத் தமிழ்மொழி எழுத்தொடு பொருந்தி வருவன வடசொல். ஆதலின் தமிழில் வழங்கப்படும் ஆரியச் சொற்களே வடசொல் என வழங்குகிறோம். (தொ. சொ. 401 சேனா. உரை)

செய்யுட்குரிய சொற்களில் இதுவும் ஒன்று. தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தானும், ஆரியத்திற்கே உரிய எழுத்தானும், இவ்விருதிறத்து எழுத்தானும் நடப்பன வாம் வடசொல். எ-டு : அமலம், சுகம், பூதம்.

(நன். 273 மயிலை.)

‘ஈரெழுத்தானும் வரும் வடசொல்’ காண்க.

செய்யுட் சொற்கள் நான்கனுள் வடசொல்லும் ஒன்று. ஆரியச்சொல் சிறப்பெழுத்துத் திரிந்து தமிழ்ச்சொல்லாவன வடசொல்லாம். இவை தமிழ்எழுத்தாலேயே எழுதப்பெறும். ஆரியம் தமிழ் இரண்டற்கும் பொதுவான எழுத்துக்களான் இயன்ற ஆரியச்சொல் தமிழில் வந்து வழங்குவது தற்சமம் எனப்படும். ஆரியத்திற்கே சிறப்பான எழுத்துக்களான் இயன்ற ஆரியச் சொற்களும், பொதுவும் சிறப்புமான எழுத் துக்களான் இயன்ற ஆரியச் சொற்களும் சிறப்பெழுத்துப் பொதுவெழுத் தாகத் திரியப் பெற்றுத் தமிழில் வந்து வழங்குவன தற்பவம் எனப்படும்.

எ-டு : வாரி மேரு குங்குமம் - தற்சமம்; துக்கம் சுகி போகி - தற்பவம் (நன். 274)

வடசொல் சிதைந்தன வருதல் -

{Entry: F06__239}

‘வடசொல்’ நச். உரைப்பகுதி காண்க.

வடசொல், திசைச்சொல் -

{Entry: F06__240}

வடக்கும் ஒரு திசையாயிருக்கத் திசைசொல்லன்றி வடசொல் என வேறு பிரித்துச் சொன்னது என்னெனின், தமிழ்நாட்டிற்கு வடக்குத் திக்கில் பதினெட்டுப் பாடைகளுள் ஆரியம் முதலிய பலமொழிகளும் உளவாயினும், தென்தமிழ்க்கு எதிரியது கடவுள்மொழியாகிய ஆரியம் ஒன்றுமே என்பது தோன்ற, அவ்வாரியத்துள் தமிழ்நடை பெற்றதை வடசொல் என்றும் ஏனையவற்றுள் தமிழ்நடைபெற்றதைத் திசைச் சொல் என்றும் சான்றோரால் நியமிக்கப்பட்டது என்க. (நன். 270 சங்., இராமா.)

வடசொற்களையும் தழுவிக்கொண்ட காரணம் -

{Entry: F06__241}

வடசொற்கள் செய்யுள் ஈட்டச் சொல்லாகச் கொள்ளப்பட்ட மைக்குக் காரணம், அவற்றின் மூலப்பகுதி தமிழாக இருத்த லும், வானியல் கலையையும் சமய மெய்ப்பொருள் கல்வியை யும் இருமொழியாளரும் பொதுவாகக் கொண்டமையும் ஆம். அதனால் தொல்காப்பியத்துள்ளும், சூத்திரம் - அதிகாரம் - காண்டிகை - உத்தி - ஆதி - அந்தம் - முதலான சொற்களை ஆசிரியர் வழங்குவாராயினர். நாட்பெயர் திங்கட்பெயர் முதலியனவும் அம்முறையான் அமைந்தனவாம். (தொ. சொ. பக். 16 ச. பால.)

வடநடைப் பகுபதம் -

{Entry: F06__242}

பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும் உயிர்மெய்யாயினும் வரின், நிலைமொழிமுதல் இகரம் ஐகாரமாகவும் ஒளகாரமாகவும் திரியும். வருமாறு : மிதிலையுள் பிறந்தாள் மைதிலி; கிரியில் பிறந்தாள் கௌரி. நிலைமொழி முதல் ஏகாரம் ஐகாரமாகவும், ஊகாரஓகாரங் கள் ஒளகாரமாகவும், ஒளகாரம் ‘அவு’ எனவும், ஐகாரம் ‘அயி’ எனவும் திரியும். வருமாறு : வேதவழி நிற்பார் வைதிகர்; சூரன்மகனாம் சனி சௌரி; கோசலையில் பிறந்தாள் கௌசலை. கௌரி - கவுரி ; சைலம் - சயிலம்.

மகன் என்னும் பொருளில் வரும்போது, ஐகாரம் ஈறுபோய் ‘ஏயன்’ என்றாகும். வருமாறு : கார்த்திகையின் மகன் கார்த்தி கேயன்.

இப்பெயர்கள் தத்திதாந்த நாமம் எனப்படும். இவை யாவும் பகுபதமாம். (தொ.வி. 86 உரை)

வடமொழி, தமிழ் இவற்றிடை வேறுபாடுகள் சில -

{Entry: F06__243}

இருமொழிகளுக்குமிடையே வேறுபாடு சிறிதுமில்லை என்னும் உறுதியான கொள்கையுடையார் பிரயோகவிவேக நூலாசிரியர். ஆயினும் சிறுபான்மை உள்ளன போலத் தோன்றும் வேற்றுமை சில அவர் கூறுவார்.

1. வடமொழியில் திணைபால் உணர்த்தும் வினை விகுதி இல்லை. தமிழில் அவை உள.

2. பிரதமா விபத்தி என்னும் முதல் வேற்றுமை தமிழுக்கு இல்லை. திரிபு ஏதும் இல்லாத பெயர்ச்சொல்லே தமிழில் முதல் வேற்றுமை.

3. லிங்கத்திரயம் என்ற ஆண் - பெண் - அலி - ப் பாகுபாடு தமிழில் இல்லை. (உயர்திணையை உணர்வுடையது என்ற பொருளில் சேதனம் என்றும், உணர்வின்மை பற்றி அஃ றிணையை அசேதனம் என்றும் கொள்கிறார் இவ்வாசிரியர். தமிழிலும் அஃறிணையில் பால் விதந்துகாட்டும் விகுதிகள் இல்லை.)

4. வடமொழியில் எழுவாயின் பாலை வினைமுற்றுக் காட்டுமிடத்து, எழுவாய்க்கேற்பப் பொருள் கொள்வர். ‘ஜயதி’ என்பது செயிப்பன் - செயிக்கும் (செயிப்பது) - என ஓரீறே அவ்வப்பாலை வடமொழியில் உணர்த்தும்.

5. சொல் பற்றிய லிங்கம் (பால்) தமிழில் இல்லை; எனினும் சிறுபான்மை அதுவும் கொள்ளப்படுகிறது - என்பர் இவ் வாசிரியர். இன்ன சொற்கள் தம்மைத் தாமே விசேடித்து நிற்பனவாம்; அஃதாவது தமக்குத் தாமே அடையாகும்.

எ-டு : ‘நாண் என்னும் நல்லாள்’ கு. 924. (பி. வி. 49)

வடமொழி நியாயம் வந்தன சில -

{Entry: F06__244}

தொல்காப்பியம் திருக்குறள் முதலிய நூல்களில் சில வடமொழியமைப்பு முறைகளும் வந்துள. அவற்றை அறிதலும் தமது நூலைப் பார்த்தற்குரிய கருவி எனக்கூறும் இ. கொ. நூலார் தரும் பத்து வியங்கோள்களில் இதுவும் ஒன்று.

ஒன்று - பல - என்பது தமிழ் முறை; ஒன்று - இரண்டு - பல - எனக் கொள்ளுதல் வடமொழிமுறை. தொல். எழுத்ததிகாரம் 45 ஆம் நூற்பா ‘ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொரு மொழி, இரண்டிறந் திசைக்கு ம் தொடர்மொழி’ எனக் கூறுவது வடமொழி முறை.

‘மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்து’ (தொ.எ. 103) : முப்பத்து மூன்று என்று கூறுவது தமிழ் மரபு. ‘மூன்று தலை யிட்ட முப்பது’ என்பது வடமொழி மரபு - காத்தியாயனர் மதம்.

‘மதி நுட்பம் ............ நிற்பவை’ (கு. 936) : மிகுதிப்பொருள் தரும் ‘அதி’ என்னும் உரிச்சொல்லாகிய முன்மொழியுடன் வந்த அதிநுட்பம் என்னும் இத்தொடர் வடமொழி வழக்கு - அவ்வியயீ சமாசன்.

‘ஆதி பகவன்’ என்ற முதற்குறளின் தொடர் முன்மொழியும் பின்மொழியும் வடமொழியான பண்புத்தொகை.

‘நாண் என்னும் நல்லாள்’ (கு. 924) : நாண் என்ற பொரு ளுடைய ‘லஜ்ஜா’ என்ற வடமொழிச்சொல் சொல்பற்றிப் பெண்பால். அம்முறையே பற்றித் திருவள்ளுவரும் சொற் பால் தோன்ற நாண் என்பதனைப் பெண்பாலாக்கினார்.

இவைபோல்வன வடமொழி நியாயம் வந்தனவாம். (இ. கொ. 7)

வடமொழியில் தொகைகளின் வகை -

{Entry: F06__245}

வடமொழியில், 1. தற்புருடன், 2. துவிகு, 3. வெகுவெரீகி,
4. கருமதாரயன், 5. அவ்வியயீபாவம், 6. துவந்துவன் - எனச் சமாசம் எனப்படும் தொகை ஆறுவகைப்படும். இவை தமிழில் முறையே 1. வேற்றுமைத் தொகை, 2. எண்ணொடு புணர்ந்த எண்ணுத்தொகை, 3. அன்மொழித் தொகை, 4. பண்புத் தொகை 5. முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை, 6. உம்மைத் தொகை - என்பனவாம்.

இவற்றுள், துவிகுசமாசன் தமிழில் பண்புத் தொகையுள் அடங்கும்; அவ்வியயீபாவம் என்பது தமிழில் இடைச்சொல் தொகாநிலை ஆகும். துவிகு, அவ்வியயீபாவம் - தனித் தலைப்புள் காண்க.

தமிழில் வினைத்தொகையும் உவமத்தொகையும் சேரத் தொகை ஆறாகும். தமிழிலுள்ள உவமத்தொகை வட மொழியில் உபமித சமாசன் என வேற்றுமைத்தொகையான தற்புருடனின் முதல்வேற்றுமைத்தொகையுள் சேரும்.

மற்ற வேற்றுமைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்தொகை என்ற நான்கும் இருமொழி கட்கும் பொது.

தமிழிலுள்ளது போல் திணைபால்எண்இடங்கட்குப் பொது வான பெயரெச்சக் கிளவி வடமொழியில் இல்லை யாதலின் வினைத்தொகையும் இல்லை. (பி.வி. 20)

வடமொழியில் பண்புத்தொகை -

{Entry: F06__246}

தமிழில் கொள்ளப்பட்ட வினைத்தொகையும் உவமத் தொகையும் வடமொழியில் இல்லை; வண்ணமும் சினையும் பண்புத்தொகையாகிப் பின் முதலொடு வேற்றுமைத் தொகைப் படப் புணரும் முறையும் வடமொழியில் இல்லை. இவற்றைப் பண்புத்தொகை என வடமொழி கூறும்.

வடமொழியில் பெயரெச்சம், தமிழில் வருவது போல், திணைபால் இடங்களுக்குப் பொதுவாக வருவதுமின்று.

எ-டு : எண்ணும் பொருள் - எண்ணப்படுவதாகிய பொருள்; துணியும் பொருளும் அதுவே. இவ்விரண்டனையும் வேறு இலக்கணம் என்பர்.

1. சில வினைத்தொகையும் பெயரெச்சமும் :

உரைகல், செய்குன்று - இவற்றை உரைக்கப்படுவதாகிய கல், செய்யப்பட்டதாகிய குன்று என்பர். தமிழில் பெயரெச்சத் தொடரும், அது தொகின் வினைத்தொகையும் ஆதல் இலக்கணம்.

2. இருவகை உவமை :

உவமைச்சொல் முன்மொழியாகவும் பின்மொழியாகவும் வரும் இருவகையாக அமையும் உவமைத்தொகை. மதிமுகம் - மதிபோலும் முகம்; முகமதி - முகம் மதிபோலும்; உவமை யுருபு இடையிலும் ஈற்றிலும் தொக்கது. (முன் - காலமுன்)

3. வண்ணச் சினைச்சொல் :

செங்கால் நாரை, வெண்பூத் தாமரை - என்ற எடுத்துக் -காட்டுக்களைத் தமிழில், செங்கால் - வெண்பூ - என முன்னர்ப் பண்புத்தொகையாக்கிப் பின்னர்ச் சினையும் முதலுமாகக் காலையுடைய - பூவையுடைய - என வேற்றுமைத் தொகை யாக்குதல் மரபு. (இ. கொ. 99)

வடமொழி வினைமுற்றுக்கள் -

{Entry: F06__247}

1. வடமொழியில் வினைமுற்றுக்கள், பரப்பை பதம் - ஆற்பனே பதம் - உபயபதி - ஏகபதி - என நான்கு வகைகளில் அமையும்.

2. அவை காலம் காட்டும் இடைநிலையும் எண்காட்டும் விகுதியும் போன்ற ‘லட்’ முதலிய லாதேசங்களைப் பெறும்.

3. திங் என்ற லாதேசம் பெற்ற பரப்பைபதமான வினை முற்றுக்கள் கர்த்தரிப் பிரயோகத்திலன்றி வாரா.

4. லாதேசமான ‘தங்’ பெற்றவையான ஆற்பனே வினை முற்றுக்கள் கர்த்தரிப் பிரயோகம் - கர்மணிப் பிரயோகம் - பாவ பிரயோகம் - என்ற மூன்றிலும் வரும்.

5. திங், தங் என்பன பிரத்தியாகாரங்கள்.

பரப்பை பதம் - பரஸ்மை பதம்; ஆற்பனே பதம் - ஆத்மநேபதம். அவை முறையே பிறனுக்குப் பதம் - தனக்குப்பதம் - எனப் பொருள்படும். வினையினது பயன் செய்பவனை இன்றி மற்றொருவனைச் சென்றடைவது பரப்பை பதம்; செய் பவனையே அப்பயன் சென்றடைவது ஆற்பனேபதம். ஏகபதி - குறில் நெடில் இரண்டனுள் ஒன்றனையே ஈறாக அல்லது ஈற்றயலாகக் கொள்வன. உபயபதி - ஒரே தாதுவுக்குக் குறில் நெடில் இரண்டும் ஈறாக அல்லது ஈற்றயலாக வருவது. தமிழில் இத்தகைய பகுப்பு என்றுமே இல்லை. (பி.வி. 36)

வடவெழுத்து ஒருவுதல் -

{Entry: F06__248}

உரப்பியும் எடுத்தும் கனைத்தும் கூறும் வடவெழுத்துக்களை நீக்கி, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான ஒலி யெழுத்துக்களைக் கொள்ளுதல். எ-டு : மேரு, அமலம், குங்குமம். (தொ. சொ. 401 நச். உரை)

வடுகக் கண்ணன், வடுகங் கண்ணன் : வேறுபாடு -

{Entry: F06__249}

வடுகக்கண்ணன் - என வல்லெழுத்து அடுத்தால் வடுகநாட்டிற் பிறந்த கண்ணன் என்றும், வடுகங்கண்ணன் - என மெல் லெழுத்து அடுத்தால் வடுகனுக்கு மகனாகிய கண்ணன் என்றும் கொள்க. (தொ. சொ. 463 நச். உரை) (நன். 370 மயிலை.)

வண்ணச் சினைச்சொல் -

{Entry: F06__250}

முதலில் அடைமொழியும் அடுத்துச் சினைச்சொல்லும் அடுத்து முதற்சொல்லுமாக அமைந்த தொகை.

எ-டு : பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை

இம்முறையே வழக்கிற்குச் சிறந்தது. முதற்சொல்லுக்குப் பண்பு இரண்டு அடுக்கி வருதல் உலகியலிலும், சினைச் சொற்குப் பண்பு இரண்டு அடுக்கி வருதல் செய்யுளிலும் ஏற்றனவாம் என்பாரு முளர். (நன். 403)

எ-டு : இளம் பெருங்கூத்தன்; சிறுபைந்தூவி, கருநெடுங் கூந்தல் காரிகை.

செய்யுளில் வண்ணச்சினைச்சொல் என்ற முறை பிறழ்ந்து ‘செவிசெஞ்சேவல்’ ‘வாய்வன் காக்கை’ (புற. 238) என வரினும், முதலொடு சினைக்கிடையேயுள்ள ஒற்றுமை பற்றி அங்ஙனம் கூறப்பட்டமையின், செஞ்செவிச்சேவல் - வல்வாய்க் காக்கை - என்றே மாற்றிப் பொருள் செய்யப்படும்.

(தொ. சொ. 403 சங்.)

‘பெருந்தோள் சிறுநுசுப்பின் பேரமர்க்கட்பேதை’ என்பது செய்யுளில் மயங்கி வந்தது என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் - என்னுமிவர்கள்தம் கருத்து. சேனா வரையர் ஆண்டு மயக்க மின்று என்பர். பெருந்தோள்பேதை- சிறுநுசுப்பின் பேதை - பேரமர்க்கண் பேதை - எனத் தனித்தனியே கூட்டிப் பொருள் கொள்ளலாம். பெருந்தோள் - சிறுநுசுப்பு - பேரமர்க்கண் - என இம்மூன்றும் உம்மைத் தொகையாகவும் கொள்ளலாம். அன்றியும், ‘பேதை’ பேரமர்க்கண்ணோடு இயைந்து ‘பேரமர்க்கட்பேதை’ என ஒரு சொல்லாய், அது ‘சிறுநுசுப்பு’ என்பதனோடு இயைந்து ‘சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை’ என ஒரு சொல்லாய், ‘பெருந்தோள்’ என்பதனோடும் ஒருசொல் நீர்மைப்படச் ‘பெருந்தோட் சிறுநுசுப்பின் பேரமர்க்கட் பேதை’ என இயைந்து நிற்றலின், பொருள் தருதற்கண்ணும் மயக்கம் இன்று என்பது சேனா வரையர் உரை. (தொ. சொ. 26 சேனா. உரை)

செம்பூத் தாமரை - வெண்பூ அலரி - என்பன செந்தாமரை - வெள்ளலரி - என வருங்கால், இடைப்பதம் தொக்கனவே; பூ அன்றித் தாமரையும் அலரியும் ஆகிய முதற்பொருள்கள் பண்பி அல்ல ஆதலின்.

இனிச் ‘செங்கமலத்து அலர் போலும் கண் - கை - கால்’ எனவும், ‘செங்காந்தட்போது’ எனவும் வருவன, சினையின் அடை முதலோடு ஒட்டி வந்தன. இது சொல்லுவோன் குறிப்பின் படி அமையும். (பி.வி. 26)

வண்ணச்சினைச்சொல் பற்றிய வழுக்காத்தல் -

{Entry: F06__251}

வண்ணம் பற்றிய சினையையுடைய பெயர்ச்சொல், முற்பட அடையும் - அடுத்துச் சினையும் - அடுத்து முதலும் - ஆகி அம்முறை மயங்காமை வழக்குப் பெற்றியலும். வண்ண முதற்சொல் மயங்கியல்லது நடவாது. பொருட்கு உளதாகிய பண்பும் சினையும் பொருளோடு அடுத்துக் கூறக் கருது வானாயின், (பண்பு) பொருள்மேல் செல்லாது சினைமேல் செல்லும்.

செங்கால்நாரை - வண்ணம் சினைமேலேறி முதலொடு முடிந்தது. கருங்கோட்டியானை - எனப் பண்பினை முதலோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், (பண்பு) ‘கருமை’ யானையின்மேல் செல்லாது கோட்டின் மேல் செல்லுதலின் இம்முறை நடைபெறாதாயிற்று.

(தொ. சொ. 26 தெய். உரை)

வண்ணச்சினைச்சொல் வழக்கிலும் செய்யுளிலும் வழங்குமாறு -

{Entry: F06__252}

வழக்கில் ‘இளம்பெருஞ்சாத்தன்’ என்றாற்போல முதலொடு பண்பிரண்டு அடுக்கி வருதலும், செய்யுளில் ‘சிறுபைந்தூவி’ என்றாற்போலச் சினையொடு பண்பிரண்டு வருதலும் வழக்கமாம். (தொ. சொ. 26 சேனா. உரை) (நன். 402 மயிலை.)

வண்ணமும் வடிவும் அளவும் சுவையும் -

{Entry: F06__253}

வண்ணம், கருமை முதலாக ஐவகைப்படும். வடிவு, வட்டம் - சதுரம் - கோணம் - முதலாக முப்பத்திரு வகைப்படும். அளவு, நெடுமை - குறுமை - நீளம் - எனப் பலவாம். சுவை, கைப்பு முதலாக அறுவகைப்படும். (தொ. சொ. 79 கல். உரை)

வத்திரு விவட்சை -

{Entry: F06__254}

கூறுபவன் குறிப்பு - கூற விரும்புவது. செம்மை பூவினுக்கு அடையாகவும், அதனை விடுத்துச் செங்கமலத்து அலர் - செங்காந்தட் போது - என முதலுக்கு அடையாக வழங்குவது முண்டு. அங்கு முதலொடு சினைக்கு ஒற்றுமையுண்மையின் சினையின் அடை முதல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இதற்கு அடிப்படை கூறுபவனது உள்ளக்குறிப்பேயாம். (பி.வி. 26)

வந்தோய் : விரவுவினை ஆகாமை -

{Entry: F06__255}

இது முன்னிலை ஒருமைவினையாயினும், விரவுவினை ஆகாது. ‘ஆய்’ ஓய் எனத் திரிவது, முன்னிலைஇடம் உயர் திணையைக் காட்டியவழியேயாம். ‘வந்தோய் மன்ற தெண்கடற் சேர்ப்ப (அக. 80) என வந்தவாறு. (தொ. சொ. 215 கல். உரை)

வழக்கிடத்துச் சில ஒழிபு -

{Entry: F06__256}

இத்தன்மையர் என்று சொற்குறிப்பால் அறிய வருவனவும், என்னாதவற்றை என்றன என்றும் - செல்லாதவற்றைச் சென்றன என்றும் - சொல்லுதலும், சிலரால் செய்யப்பட்ட பொருளைத் தான் செய்தது போலச் சொல்லுதலும் வழக்கிற்கு உரிய. வருமாறு :

செஞ்செவியர் (பொன் பூண்ட செவியர்), செங்கை (உபகரித்த கை), கருங்கை (கொன்று வாழும் கை) - இவை சொற் குறிப்பால் அறிய வருவன. கூழ் புள்ளென்றது, வெயில் சுள்ளென்றது - என்னாதனவற்றை என்றன எனல். வழி வந்து கிடக்கும், மலை வந்து கிடக்கும் - செல்லாதவற்றைச் சென்றன எனல். திண்ணை மெழுகிற்று, சோறு அட்டது - செய்யப்படும் பொருளைச் செய்தது போற் சொல்லுதல். (நேமி. எச்ச. 6 உரை)

வழக்கியல் மரபு -

{Entry: F06__257}

வழக்கின்கண்ணே நடக்கும் முறை. ஆதலின் இஃது இலக்கண முறை அன்று; வழக்கையே அடிப்படையாகக் கொண்டு இச்செய்தி தோன்றுகிறது என்றவாறு. அஃதாவது செயப்படு பொருளை எழுவாயாகக் கூறுதலும், செயப்படுபொருளுக்கு எழுவாயின் செயலை ஏற்றியுரைத்தலும் உலகவழக்கினுள் காணப்படும் செய்தி என்றவாறு.

எ-டு : அரிசி தானே அட்டது, இல்லம் மெழுகிற்று - என முறையே காண்க.

(இவை வடமொழியில் முறையே பாவஸ்த க்ரியா, கர்மஸ்த க்ரியா - என வழங்கும்.) செயப்படுபொருள் எழுவாயாக வருவது கருமக் கருத்தா எனப்படும். (தொ. சொ. 248 நச். உரை)

‘வழக்கி னாகிய உயர்சொற் கிளவி’ -

{Entry: F06__258}

ஆண்ஒருவனையும் பெண்ஒருத்தியையும் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றை உயர்திணைப் பன்மையாகச் சொல்லும் பன்மைச் சொல்லும் வழக்கின்கண் உயர்த்துச் சொல்லும் சொல்லாம்; இலக்கணமுறையான் சொல்லும் நெறிகள் அல்ல.

எ-டு : ஒருவனைத் ‘தாம் வந்தார்’ என்பதும், ஒருத்தியைத் ‘தாம் வந்தார்’ என்பதும், ஒன்றனைத் ‘தாம் வந்தார்’ என்பதும், ஒருவன் தன்னை ‘யாம் வந்தேம்’ என்பதும், முன்னின்றானை ‘நீர் வந்தீர்’ என்பதும், படர்க்கையானை ‘அவர் வந்தார்’ என்பதும் வழக்காறு.

‘தாம் வந்தார் தொண்டனார்’ என்பது உயர்சொல் குறிப்பு -நிலையான் இழிபு விளக்கிற்று.

ஓர் எருத்தை ‘எந்தை வந்தான்’ எனவும், ஓர் ஆவை ‘எம் அன்னை வந்தாள்’ எனவும், ‘ கொடுங்கோற் கோவலர் பி ன்னின்று உய்த்தர, இன்னே வருகுவர் தாயர்’ (முல்லை. 15, 16) எனவும் ஒப்புமை கருதாது காதல் பற்றி உயர்த்து வழங்கலும், ‘கன்னி நறு ஞாழல்’, ‘கன்னி எயில்’ - என உயர்திணைக் கன்னி என்னும் சொல்லை அஃறிணைப் பொருள்களான ஞாழல் எயில் - என்பவற்றிற்கு ஏற்றலும், ஓர் எருத்தை நம்பி எனவும், ஒருகிளியை நங்கை எனவும் அஃறிணையை உயர்திணை வாய்பாட்டான் கூறலும், பண்புகொள் பெயர்க்கொடை வழக்கினகத்தும் பெருங் கொற்றன் - பெருஞ்சாத்தன் - என இல்குணம் அடுத்து உயர்த்துக் கூறலும் வழுவமைதிகளாகக் கொள்ளப்படும். (தொ. சொ. 27 நச். உரை)

வழக்கு -

{Entry: F06__259}

வழக்கு, இயல்புவழக்கு எனவும் தகுதிவழக்கு எனவும் இரு வகைப்படும். அவற்றைத் தனித்தலைப்பிற் காண்க. (நன். 267)

வழக்கு, செய்யுள் - இவற்றில் சுட்டுப்பெயர் வழங்குமாறு -

{Entry: F06__260}

வழக்கில் சுட்டுப்பெயர் இயற்பெயர்க்குப் பின்னர் வரும்; செய்யுட்கண் சுட்டுப்பெயர் முன்னரும் வரலாம்.

எ-டு : சாத்தன் வந்தான்; அவன் போயினான் - வழக்கு;
’அவன்அணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்
விறன்மிகுதா
ர்ச் சேந்தன்பேர் வாழ்த்தி’ - செய்யுள்

(இதன்கண், சேந்தன் என்னும் இயற்பெயர்க்கு முன் சுட்டுப் பெயர் வந்தது.) (தொ. சொ. 38, 39 சேனா. உரை)

வழக்குத் தழீஇ ஒழுகும் பகுதிக்கிளவி -

{Entry: F06__261}

வழக்காற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கிவரும் இலக்கணமரபு போலும் இலக்கணத்தின் பக்கச்சொற்கள். வழக்காறு இரு வகைப்படும், இலக்கண வழக்கும் இலக்கணத் தொடு பொருந்திய மரூஉவழக்கும் என.

இல்முன் என்பதனை முன்றில் என்று தலைதடுமாறச் சொல்லு- தல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கு; சோழன் நாட்டைச் சோணாடு என்றல் போல்வன இலக்கணத்தொடு பொருந்தாத மரூஉவழக்கு.

வழக்காறு இத்துணை என்பதில்லை; சிதைந்தும் சிதையாதும் பொருந்தி நடப்பன எல்லாம் வழக்காறு எனப்படும். (தொ. சொ. 17 இள. உரை)

வழக்குத் தழீஇ ஒழுகும் பகுதிச்சொல். பண்பு குறியாது சாதிப் பெயராய் வெள்யாடு - வெண்களமர் - கருங்களமர் - என வருவனவும், குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் உள்ள நீரைச் ‘சிறிது’ என்னாது ‘சில’ என்றலும், அடுப்பின் கீழ்ப்புடை யடுப்பை ‘மீயடுப்பு’ என்றலும் பிறவும் ஆம். (தொ. சொ. 17 நச். உரை)

வழக்குப் பற்றி வினா வருமாறு : கரிதோ வெளிதோ - இருப் பேனோ போவேனோ - ஊரோ காடோ - பகலோ இரவோ - எனவும், ‘தேவராய் வாழ்தல் நன்றோ நரகத்துள் உறைதல் நன்றோ’ (சீவக. 1235) எனவும், பிறவும் இவ்வாறு ஒன்றி னொன்று பொருத்தமின்றி உலகவழக்கின்கண் வருமாறு.

செப்பு வருமாறு : கரிதன்று வெளிது என்றானும், வெளிதன்று கரிது என்றானும் - இவ்வாறே பிறவாற்றானும் உரைப்பன.

இவை முன் சொல்லப்பட்ட இலக்கணத்தின் வழுவுதலின் அமைதியாயின. (தொ. சொ. 17 தெய். உரை)

வழக்கு நான்கு வகை -

{Entry: F06__262}

இலக்கண வழக்கும், இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கும், மரூஉவழக்கும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் - என வழக்கு நால்வகைத்தாம்.

எ-டு : நிலம் நீர் தீ வளி ஆகாயம் சோறு கூழ் பாளிதம் மக்கள் மரம் தெங்கு கமுகு - இத்தொடக்கத்தன இலக்கண வழக்கு.

இல்முன் என்பதனை முன்றில் என்றும், கண்மீ என்பதனை மீகண் என்றும், யாவர் என்பதனை யார் என்றும் கூறுதல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ.

அருமருந்தன்னான் என்பதனை அருமந்தான் என்றும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றும், மலையமா னாடு என்பதனை மலாடு என்றும், சோழனாடு என்பதனைச் சோணாடு என்றும் சொல்லுதல் மரூஉவழக்கு.

பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் கூறை (காரை) என்றலும், இழிசினர் சோற்றைச் சொன்றி என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்கு.

இனி, ஒருசாரார் குழுவின் வந்த குறிநிலை வழக்கும் இடக்கரடக்கலும் மங்கலமரபினான் கூறுதலும் இம்மூன்றை யும் தக்கவாறு சொல்லுதலான் தகுதி என்றாக்கி, ஒழிந்த வற்றை யெல்லாம் வழக்கன்று என்ப.

கரிது வெளிது - என்கையும், கிழக்கு மேற்கு - என்கையும், சிறிது பெரிது - என்கையும், கருமை செம்மையாகிய பண்பினாலன்றி வெள்ளாளரை வெண்களமர் என்றும் புலையரைக் கருங் களமர் என்றும் சாதிபற்றி வெள்ளாடு என்றும் சொல்லுகை யும் வழுவன்று; சொல்வழக்காம். (தொ. சொ. 17 ப. உ)

வழக்குப் பற்றிய பகுதிக்கிளவி -

{Entry: F06__263}

பகுதிக்கிளவி - பக்கச்சொல்; நேரிடையாக இலக்கண மன்றா யினும் இலக்கணம் போல வழக்கில் வருவது. செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் போன்ற மங்கலம் பற்றிய வழக்கு. (தொ. சொ. 17 நச். உரை)

‘வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும்’ -

{Entry: F06__264}

வழக்கின்கண் ஒருதொழிற்குக் காரணங்கள் என்று கூறப்படும் வினை - செய்வது - செயப்படுபொருள் - நிலன் - காலம் - கருவி - இன்னதற்கு - இது பயன் - என்ற எட்டனுள், குன்றத் தகுவன வாகிய செயப்படுபொருளும் - இன்னதற்கு - இதுபயன் - என்பனவும் குன்ற, ஏனைய ஐந்து காரணங்களும் ஒவ்வொரு தொழிற்கும் தவறாது நிகழ்வனவாம்.

எ-டு : கொடி ஆடிற்று என்புழி, ஆடுதல் - வினை; கொடி - செய்வது; கொடி கட்டப்பட்ட இடம் - நிலன்; இறப்பு - காலம்; காற்றின் அசைவு - கருவி; செயப்படு பொருள் முதலிய மூன்றும் குன்றி நின்றன. (தொ. சொ. 113 சேனா. உரை)

‘வழாஅல் ஓம்பல்’ -

{Entry: F06__265}

(செப்பும் வினாவும்) வழுவாது ஓம்புக - பிழையுறாமல் பாதுகாத்திடுக என்பது பொருள். (தொ. சொ. 13 சேனா. உரை)

வழுவாது பாதுகாக்க என்பது. வழால் என்பது ‘வழாமல்’ என்பதன் திரிபு. (அது ‘வழுவாது’ என்ற எதிர்மறைவாய்பாடு போல்வது) (தெய். உரை)

ஓம்பல் என்பது அல்ஈற்று வியங்கோள். அஃது ஓம்புக - பாதுகாத்திடுக - என ஓம்படைப் பொருளில் வருவது.

இதனால் வழாநிலையே சிறந்தது என்பதும், மரபு பற்றிக் கொள்ளப்படும் வழுவமைதி அத்துணைச் சிறப்பிற்றன்று என்பதும், வழுவமைதியும் உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் கொள்ளப்படும் என்பதும், அமைதி பெறாத வழுக்கள் களையத்தக்கன என்பதும் பெறப்படும்.

‘வழாஅல்’ : சொல்லிலக்கணம் -

{Entry: F06__266}

‘வழாஅல்’ என்பது வழுவி என்னும் செய்து என எச்சத்து எதிர்மறையாகிய ‘வழாமல்’ என்னும் சொல் ‘குறைக்கும்வழிக் குறைத்தல்’ என்பதனான் இடையே நின்ற மகரம் குறைந்து நின்றது. வழாஅல் ஓம்பல் - வழுவாமல் காக்க. (தொ. சொ. 13 கல். உரை)

வழாநிலைக்கு எடுத்துக்காட்டு -

{Entry: F06__267}

‘அவன் நெருநல் உண்டான்’ : அவன் என்னும் உயர்திணைப் பெயர் உண்டான் என்னும் உயர்திணைவினை பெறுதலின் திணை வழாநிலை; ஆண்பாற்பெயர் ஆண்பால்வினை கோட லின் பால் வழாநிலை; படர்க்கைப்பெயர் படர்க்கைவினை கோடலின் இடவழாநிலை; நெருநல் என்னும் இறந்தகாலப் பெயர் இறந்தகாலவினை கோடலின் காலவழாநிலை; உண்டல் தொழிலுடையானை உண்டான் என்றமையின் மரபுவழாநிலை. (தொ. சொ. 11 தெய். உரை)

வழாநிலை, வழு, வழுவமைதி, வழுவற்க எனல் : விளக்கம் -

{Entry: F06__268}

இங்ஙனம் கூறுதல் வழுவற்ற இலக்கணநெறி எனக் குறிப் பிடுதல் வழாநிலை. திணை பால் இடம் காலம் வினா விடை மரபு - என்னும் இவைபற்றி வழு நிகழும். அவை திணைவழு, பால்வழு - முதலாகப் பெயர் பெறும். ஒருதிணையை இன்னொரு திணையாற் சொல்லுதல் திணைவழுவாம். ஒருபாற் சொல்லை இன்னொரு பாலால் சொல்லுதல் பால்வழுவாம். ஓரிடச் சொல்லை மற்றோரிடத்தாற் சொல்லு தலும், ஒரு காலத்துக்குரிய சொல்லை மற்றொரு காலத்தாற் சொல்லுதலும், மரபு பிழைபடச் சொல்லுதலும் முறையே இடவழுவும் காலவழுவும் மரபுவழுவுமாம்.

கறக்கின்ற பசுவைக் குறித்து இது பாலோ சினையோ என்று வினாவுதல் போல்வன வினாவழுவாம். வினாவிற்கு ஏலாத கூறுதல் விடைவழுவாம். அது கருவூர்க்கு வழி யாதெனில் பருநூல் பன்னிரு தொடி என்றாற் போல்வன. அன்னப் பார்ப்பு என்னாது அன்னக் கன்று என்றல் போல்வன மரபுவழுவாம்.

இங்ஙனம் கூறுதல் வழுவாயினும் ஒருகாரணத்தால் ஏற்றுக் கொள்ளத்தகும் என அமைத்துக்கொள்வது வழுவமைதி.

இவ்வாறு கூறுதலே வழாநிலை; இஃது எக்காரணம் பற்றியும் தவறுதல் ஆகாது என்றல் வழுவற்க என்பது. (நன். 375 முதலியன)

வழி (ஆறு) போயினார் கூறை கோட்பாடுதல் -

{Entry: F06__269}

‘வழி போயினார் எல்லாரும் கூறை கோட்படுவர்’ என்பது பழமொழி. அஃதாவது வழிச்செல்வோர் ஆறலைகள்வரால் ஆடை கவரப்படுவர் என்பது கருத்து. தேவர்களுடைய கால்கள் பூமியில் படியாமையால், வழிக்கண் நடந்துசெல்வது அவர்கட்கு இன்மையால், கள்வர் அவர்களைத் துன்புறுத்தல் இயலாது. ஆதலின் ‘வழி போயினாரெல்லாம் கூறைகோட் படுவார்’ என்றவழி, கூறை கோட்படுதல் தேவர் ஒழிந்த ஏனையோருக்கே நிகழும். இச்செய்தி சேனாவரையர் உரையில் உவமமுகத்தான் மூன்றிடங்களிலும், காலமயக்கம் காட்ட ஓரிடத்திலும் எடுத்தாளப்பட்டுள்ளது.

பொருள்மயக்கத்துக்குப் புறனடை கூறுமிடத்து, ‘உருபினும் பொருளினும் மெய்தடுமாறி, ஈரிடத்து மயங்கும் வேற்றுமை’ பலவுள என்று தெரிவிக்குமிடத்து, ஏதுப்பொருட்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஒருபொருளே பற்றி நிற்றலின், ‘ஈரிடத்து மயங்குதல்’ என்றது அவற்றை ஒழிந்த ஏனை யவற்றுக்கே கொள்ளப்படும் - என்பதனை விளக்க, ‘ஆறு போயினாரெல்லாம் கூறை கோட்பட்டார்’ என்றவழிக் கூறைகோட்படுதல் தேவ ரொழிந்த ஏனையோர்க்கே ஆயின வாறு போல - என்ற விதிவிலக்கு எடுத்துக்காட்டு ஆகிறது.

விரவுப்பெயர் தத்தம் மரபின் வினையொடு வருவழித் திணை உணர்த்தும் என்பதற்கு நீவிர் நீ என்பன விதிவிலக்கு என்பதனை உணர்த்த இவ்வுவமம் எடுத்தாளப்பட்டுள்ளது.

உரிச்சொற்களில், முதனிலை இறுதிநிலை யடுத்துப் பொரு ளுணர்த்தல் இயலாதாம். ஆகவே, பிரித்துப் பொருளுணர்த் தல் வினைச்சொற்கண்ணும் ஒட்டுப்பெயர்க்கண்ணும் நிகழும் என்பது. பிரிதலும் பிரியாமையும் பொருளுணர்த்துவன வற்றிற்கே ஆதலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாத வாறு போல, தனக்கெனப் பொருளொன்றில்லா இடைச் சொற்கு இவ்வாராய்ச்சி எய்தாது என்பது.

அவ்வழியே சென்றவர் யாவராயினும் கூறை கோட்படுவர் என்பது இயற்கையாதலின், அவ்வுறுதியைத் தெரிவிக்க, ‘இக்காட்டுள் புகின் கூறை கோட்படுவான் -’ என எதிர்காலத் தான் கூறாது ‘இக்காட்டுள் புகின் கூறை கோட்பட்டான், கூறை கோட்படும்’ - என இறந்தகாலத்தாலும் நிகழ்காலத் தாலும் கூறுக என்றவாறு. (தொ. சொ. 101, 172, 395 : 245 சேனா. உரை)

வழீஇ அமையும் செப்பு -

{Entry: F06__270}

உற்றது உரைத்தல், உறுவது கூறல், ஏவல் - என்ற மூவகைச் செப்பும் வழீஇ அமைவன. உற்றதுரைத்தல் என்பது, “சாத்தா, துறையூர்க்குச் செல்லாயோ?” எனின், “கால் முள் குத்திற்று”, “தலை நோகின்றது” என்பது. உறுவது கூறல் என்பது, அவ் வினாவிற்கு, “கடமுடையார் வளைப்பர்”, “பகைவர்
எறிவர்” என்பது. ஏவல் என்பது அவ்வினாவிற்கு, “நீ செல்” என்பது.

இவை மூன்றும் வழூஉவே எனினும், செப்பின் பொருள்பட (இறை பயப்பனவாய்) வந்தமையின் அமைக என்பது.

(தொ. சொ. 15 இள. உரை)

வழுக்களின் எண்ணிக்கை -

{Entry: F06__271}

திணை வழு 12, பால் வழு 8, இடவழு 6, காலவழு 6, மரபுவழு வரம்பில. திணைவழு 12 ஆமாறு : ஆண்பாலோடு அஃறிணை இருபால், பெண்பாலோடு அஃறிணை இருபால், பலர் பாலோடு அஃறிணை இருபால், ஒன்றன்பாலோடு உயர்திணை முப்பால், பலவின்பாலோடு உயர்திணை முப்பால் - ஆக 2 + 2 + 2 + 3 + 3 = 12. பால்வழு 8 ஆமாறு : ஆண்பாலொடு பெண் பால் பலர்பால், பெண்பாலோடு ஆண்பால் பலர்பால், பலர் பாலோடு ஆண்பால் பெண்பால், ஒன்றன்பாலொடு பலவின் பால், பலவின்பாலோடு ஒன்றன்பால் - ஆக, 2 + 2 + 2 + 1 + 1 =8

இடவழு 6 ஆமாறு : தன்மை முன்னிலை படர்க்கை - இவை ஒவ்வொன்றோடும் ஏனைய இரண்டிடமும் மயங்கவே 6 ஆம்.

காலவழு 6 ஆமாறு : இறப்பு நிகழ்வு எதிர்வு என்னுமிவற்றுள் ஒருகாலத்தோடு ஏனைய இரண்டு காலமும் மயங்கவே 6 ஆம்.

(தொ. சொ. 11 தெய்., கல். உரை)

வழுவமைதி இரண்டு -

{Entry: F06__272}

வழுவமைதி, இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதியும், இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதியும் என இரண்டாம். (தொ. சொ. 12 கல். உரை)

இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதி : அ) செப்பு என்று சொல்லப்பட்டது வழுவி வரினும், வினாப்பொருண்மை யொடு பொருந்திய (வினாப்பொருட்கு இயைபுபட்ட) சொல்லிடத்து நீக்கப்படாது வழுவமைதியாம்.

எ-டு : அ) ‘சாத்தா, சோறு உண்ணாயோ?’ என்றாற்கு, ‘உண்ணேனோ?’என்பது. ஆ) ‘உறையூர்க்குச் செல் வாயோ, சாத்தா?’ என வினாவு மிடத்து, நீ செல் என்றல். இ) அவ்வினாவிற்கு ‘கால் முட்குத்திற்று’ என்றல்; ‘கடன் கொடுத்தார் வளைப்பர்’ என்றல்.

இவை முறையே வினாஎதிர் வினாதலும் ஏவுதலும் உற்ற துரைத்தலும் உறுவது கூறலும் ஆகிய ‘இறை பயப்பன’ ஆதலின் வழுவமைத்தவாறு. (தொ. சொ. 15 கல். உரை)

இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதி:

எ-டு : பேடி வந்தாள் (பெண்ணும் ஆணும் அல்லாததனை ஒருபாலான் சொன்னமையின் வழுவமைதியாயிற்று.)

(தொ. சொ. 12 கல். உரை)

வழூஉக் காத்தல் -

{Entry: F06__273}

வழுவற்க என்று காத்தலும், வழீஇ அமைக என்று காத்தலும் என வழுக்காத்தல் இருவகைத்து. (‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ ‘செப்பே வழீஇயினும்............. கிளவி யான’ என முறையே காண்க) (தொ. சொ. 11 இள. உரை)

வழூஉச்சொற்கள் -

{Entry: F06__274}

பால்மயக்கம் - திணைமயக்கம் - வினாமயக்கம் - மரபுமயக்கம் - காலமயக்கம் - செப்புமயக்கம் - இடமயக்கம் - என்று சொல்லப்பட்ட ஏழு மயக்கமும் படாமல் சொல்லுக. மயங்கின் வழுவாம். சினைச்சொல்லும் முதற்சொல்லும் தம்மில் ஒத்த பொருளை உவமியாதொழியினும் வழுவாம். (நேமி. மொழி. 6 உரை)

வற்புறுத்தற்கண் வரும் வினாவுடை வினைச்சொல் -

{Entry: F06__275}

வற்புறுத்தற்கண் வரும் வினாவுடை வினைச்சொல் எதிர் மறைப் பொருளை உணர்த்தலுமுண்டு. ஒருவன் கோபத் தாலோ கள்ளுண்ட மயக்கத்தாலோ மயங்கித் தீயசொற்கள் சொல்லிப் பின் தெளிவு ஏற்பட, வையப்பட்டவன் ‘நீ என்னை வைதாய்’ என்றபோது, ‘யான் வைதேனே(h)?’ என்று தான் வையாமையை வலியுறுத்தற்குக் கூறுவான். அக்கூற்று ‘அப் பொழுது வைதேன்; நோகாதே’ என்று நேர்ந்தமை படவும் நிற்கும். இனி, தான் வையாமையை வலியுறுத்தற்கு வரும் ‘வைதேனே’ என்ற சொல் ‘வைதிலேன்’ என்னும் எதிர் மறையை உணர்த்தி நிற்கும் என்றலுமாம். (தொ. சொ. 246 நச். உரை)

‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’ -

{Entry: F06__276}

வற்புறுத்திக் கூறுதற்கண் வரும் ஆகாரத்தோடும் ஏகாரத் தோடும் ஓகாரத்தோடும் கூடிவரும் வினாப்பொருண்மையை உணர்த்தும் வினைச்சொல் எதிர்மறைப்பொருளும் தருத லுண்டு.

ஒருவன் இன்னாங்கு உரைத்தான் என்று ஒருவன் மனம் கொண்டிருந்தவழி, தான் அவ்வின்னாங்கு உரையாமையை அவன் மனத்து வலியுறுத்தற்கு வரும் வினாவுடை வினைச் சொல் என்று நச்சினார்க்கினியர் விளக்கம் கூறுவர். ‘வற்புறுத் தற்கண் வரும்........’ என்ற மேலைத் தலைப்பிற் காண்க. (தொ. சொ. 246 நச். உரை)

வன்மைப் பொருள் வினாவுடை வினைச்சொல் -

{Entry: F06__277}

கடினப் பொருட்கண் வரும் வினாவுடை வினைச்சொல்லை எதிர்மறுத்து உரைப்பினும் குற்றமிலவாம்.

“நீ என்னை (க் குடிமயக்கத்தில்) வைதாய்” என்றவழி, வைதமை உணராதவன் “வைதேனோ?” என வினாவுவான். வினாவொடு வந்த அவ்வினைச்சொல் ‘வைதிலேன்’ என்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தமை காண்க. (மு.வீ. வினை. 45 உரை)

வன்ன நாசம் -

{Entry: F06__278}

எழுத்துக் கெடுதல் என்னும் விகாரம். எ-டு : யாவர் என்னும் பலர்பாற்சொல் இடையே வகரம் கெட்டு யார் என வரும். (பி. வி. 26)

வன்ன வற்பாவம் -

{Entry: F06__279}

எழுத்தொற்றுமை. வன்னம் - வர்ணம், எழுத்து. எழுத்தொப் புமையுடன் வரும் பலபொருள் ஒருசொல் ஒரே சொல்லன்று; பலசொல்லேயாம். பாலைக் குறிக்கும் பய : என்ற சொல் நீரையும் குறிக்கும். இச்சொல் இவ்விருபொருளையும் தனித் தனியே தருகிறது எனல்வேண்டும். ‘தெ(வ்)வுக் கொளற் பொருட்டே’, ‘தெவ்வுப் பகையாகும்’ எனத் தொல்காப்பியம் இரண்டு நூற்பாக்களால் இவ்வுரிச்சொல்லுக்குப் பொருள் கூறுகிறது. (சொ. 345, 346 சேனா.) (பி. வி. 40)

வன்ன விகாரம் -

{Entry: F06__280}

எழுத்துத் திரிதல். எ-டு : மாகி - மாசி (மாகம் - மாசி மாதம்) (பி. வி. 26)

வன்ன விபரியயம் -

{Entry: F06__281}

எழுத்து மாறுவது. இது ‘நாரிகேளி’ என்பது ‘நாளிகேர’ என்பதன் எழுத்து மாறாட்டம். ஹிம்ஸ - ஸிம்ஹ; சிங்கம் என்பது அது. (பி. வி. 26)

வாக்கியாலங்காரம் -

{Entry: F06__282}

பொருளின்றிச் சொற்றொடரை நிறைவுசெய்யும் பொருட் டாக வரும் சொற்கள்.

எ-டு : மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் : ‘போலும்’ ஒப்பில் போலியாய் வந்தது.

வடமொழியில் ‘அயம்கலு ராஜா ஆசீத்’ (இவன் போலும் அரசனாயிருந்தான்!) என இது வரும்.

வடநூலார் இரண்டு எழுத்துக்களுக்கு ஒரு காரப் பிரத்தியயம் சேர்த்துத் ‘தலகாரம்’ என்று சிலவிடத்துக் கூறுவதுண்டு. அஃதொப்பவே, தொல்காப்பியனாரும் ‘ணனஃகான்’, ‘லளஃகான்’ (எழுத். 26, 24) என்று கூறியமை காண்க. (பி.வி. 50)

வாச்சியம், வெங்கியம், இலக்கணை என்பன -

{Entry: F06__283}

வடநூலார் சொற்பொருளை வாச்சியம் - வியங்கியம் - இலக்கணை - என மூன்றெனவும், இலக்கணையை வியங் கியத்துள் அடக்கி இரண்டெனவும் கூறுப. வாச்சியம் என்பது வெளிப்படை; வியங்கியம் என்பது குறிப்பு ; இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருட்குத் தந்துரைப்பது. அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடா இலக்கணை - என மூவகைப் படும்.

‘சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்

நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி - முன்றில்.

.................... என் நெஞ்சு’

என்னும் பாட்டினுள், மருங்கும் கையும் ஊன்றுதலும் முதலிய இலக்கணங்கள் நெஞ்சிற்கு இன்மையின் விட்ட இலக்கணை. கங்கையின்கண் இடைச்சேரி, புளித் தின்றான் - என்புழி, இடைச்சேரி கங்கைக்கரைக்கண் இருத்தலும், புளி யினது பழத்தைத் தின்றலும் உண்மையின் விடாத இலக்கணை. ‘ அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி’ (பெரும். 1, 2) என்புழி இருளைப் பருகுதலும் பகலைக் காலுதலும் பரிதிக்கு இன்மையானும், இருளைப் போக்குத லும் பகலைத் தருதலும் அதற்கு உண்மையானும் விட்டும் விடாத இலக்கணை. இவ்விலக்கணையும் வியங்கியமும் ‘ஒன்றொழி பொதுச்சொல்’ முதலான குறிப்புமொழியில் அடங்கிவிடும். (நன். 269 சங்.)

வாசகாவ்வியயம் -

{Entry: F06__284}

‘உறாஅஅர்க்கு உறுநோய் ........... வாழிய நெஞ்சு’ என்னும் குறட்பாவில் (1200) வந்த ‘வாழிய’ என்பது சொல்லாகவே நின்று வெளிப் படையாகப் பொருளுணர்த்தும் இடைச் சொல். இது வாசக அவ்வியயம் எனப்பட்டது. (பி. வி. 42)

வாழ்ச்சிக்கிழமைக்கண் உருபு மயங்குதல் -

{Entry: F06__285}

ஆறாவதற்கு ஓதிய வாழ்ச்சிக்கிழமைக்கண் உறைநிலத்துப் பெயர் நிலைமொழியாயவழி ஏழாவதும் மயங்கும்.

காட்டது யானை - காட்டின்கண் யானை.

காட்டின்கண் வாழும் யானை ‘காட்டது’ எனப்படும், காடே பற்றுக்கோடாக யானை வாழ்வதால் அக்காடு இன்றாயின் தான் வாழ்தல் இல்லாமையின்.

உறைநிலப்பெயர் வருமொழியாயவழி, யானைக்காடு என்பது யானையது காடு என விரியுமேயன்றி யானைக்கண் காடு என விரியாமையின், ஏழாவதனோடு ஆறாவது மயங்குதல் உறை நிலைப் பெயர் நிலைமொழியாக வருமிடத்திலேயாம். (தொ. சொ. 99 நச். உரை)

வாள் என்னும் உரிச்சொல் -

{Entry: F06__286}

இவ்வுரிச்சொல் ஒளியாகிய பண்புணர்த்தும்.

எ-டு : வாண்முகம் (புற. 6) (தொ. சொ. 367 சேனா. உரை)

விகரணி -

{Entry: F06__287}

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் பகுபத உறுப்பு விகரணி (சூ.வி.)

வடமொழியில் தாதுவுக்கும் அப்பால் வரும் லாதேசத்திற் கும் இடையே சில எழுத்துக்கள் சேர்வதைக் கூறி, அவற்றைப் பற்றிய வகையில் பத்து விகரணி கூறுவர். அவை. 1. ப் வாதி - பவதி, 2. அதாதி - அத்தி, 3. ஜுஹோத் யாதி - ஜுஹோதி, 4. திவாதி - தீவ்யதி, 5. ஸ்வாதி - ஸுநோதி, 6. துதாதி - துத்தி, 7. ருதாதி - ருணத்தி, 8. தநாதி - தநோதி, 9. கிரியாதி - கிரீணாதி, 10. தராதி - சோரயதி - என்று வரும். வடமொழியிலுள்ள அத்தி - கிரீணாதி - சோரயதி - என்னும் மூன்றும் தமிழில் இல்லை.

பகுதிக்குப் பின்னரும் இடைநிலைக்கு முன்னருமாகப் பெரும்பாலும் தமிழ்வினைகளில் வரும் எழுத்துக்களைப் பிரயோக விவேகம் ‘விகரணி’ எனக் கொள்கிறது. அவை அ, ஆ, ஈ, உ, த, தை, கு - என்ற ஏழுமாம் வருமாறு :

உண்ணப்படும் - அ ; உண்ணாநின்றான் - ஆ; வென்றீக - ஈ;
சொல்லுக-உ ; புகுதக-த; இருந்தைக்க-தை; அறைகுவன்,
பெறுகுவம் - கு.

அறைகுவன் என்பது அறைவன் என்றும், ஆகினான் என்பது ஆனான் என்றும் விகரணி எழுத்துக் கெட்டு வருதலுமுண்டு. தமிழ்நூலார் இவற்றை எழுத்துப்பேறு, வினைமுடிபு, சாரியை - எனக் கொள்வர். (பி. வி. 41)

விகற்பம் -

{Entry: F06__288}

உறழ்ச்சி எனப்படுவதும் இதுவே. திரிதல் - மிகுதல் - போன்ற விகாரங்கள் ஒருகால் வருவதுமாய் ஒருகால் வாராததுமாய் இருப்பது.

எ-டு : குளக்கரை, குளங்கரை; கிளிகடிந்தார், கிளிக்கடிந் தார்; இல்லை பொருள். இல்லைப்பொருள், இல்லாப் பொருள். (பி. வி. 26)

விகற்பம் இல்லா வினைப்பகுதியொடு கூடி விகற்பித்தல் -

{Entry: F06__289}

விகற்பம் - வேறுபடித்தாகவும் வருதல்; விகற்பம் இல்லாமை - ஒருபடித்தாகவே இருத்தல். வினையிலுக்குப் புறனடை கூறும் இலக்கணக்கொத்து நூலார், பலவகையிலும் இலக் கியங்களிற் காணப்படும் வினைச்சொற்கள் விதந்து தம்மால் இலக்கணம் கூறப்பட்டிலவேனும், தாம் கொண்ட 1. முதனிலை 2. தொழிற் பெயர் 3. முற்று 4. பெயரெச்சம் 5. வினையெச்சம் - என்னும் ஐவகையுள் அடங்கும் எனக் கூறுகிறார். அவர் அதற்குக் காட்டும் உதாரணங்களுள் இதுவும் ஒன்று.

1. கல் - வில் - நில் - என்பனவும், 2. ஒல் - கொல் - செல் - சொல் - புல் - வெல் - என்பனவும் விகற்பமின்றி ஒருபடித்தான குற் றொற்று முதனிலைத் தனிவினைகள். இவற்றுள், வியங்கோள் விகுதி கூடுங்கால், முன்னவை கற்க - விற்க - நிற்க - என்றமைய, பின்னவை ஒல்க - கொல்க - செல்க - சொல்க - புல்க - வெல்க - என லகர ஒற்றுத் திரியாமலே நின்றன. இது விகற்பம்.

இம்முதனிலைகள் செய என்னும் எச்சமாகுங்கால், கற்க - விற்க நிற்க- என்னும் வியங்கோளே எச்சமாகும். அவ்வாறன்றி வேறுபட்டு, ஒல் என்பது ஒல்ல எனவும், கொல் என்பது கொல்ல எனவும், செல் என்பது செல்ல எனவும் இம்முறையே ஆம். (இ. கொ. 86)

விகார சட்டி -

{Entry: F06__290}

ஒரு பொருளின் வடிவம் முதலியவற்றைக் காட்டும் ஆறாம் வேற்றுமைப்பொருள். எ-டு : எள்ளது சாந்து. அஃது எள்ளின் விகாரமே. (பி. வி. 17)

விகாரத்தால் பொருள் வேறுபடுதலும் வேறுபடாமையும் -

{Entry: F06__291}

ஆரம் ‘அரம்’ எனக் குறுக்கல் விகாரம் பெறினும், அன்பன் ‘அற்பன்’ எனத் திரிதல் விகார பெறினும், மாலை பெற்றான் ‘மால்பெற்றான்’ என உருபு தொகினும் பொருள் வேறுபடும்.

புளியங்காய், காமத்துப்பால் போல்வன அம்மும் அத்தும் ஆகிய சாரியைப் பேற்றால் பொருள் வேறுபடுதல் இல்லை. ‘திருத் தார்நன் றென்றேன் தியேன்’: குறுக்கல் விகாரத்தால் பொருள் வேறுபடவில்லை. பாலை விரும்பினான், பால் விரும்பினான்: உருபு தொகினும் பொருள் வேறுபடுதல் இல்லை. (இ. கொ. 115)

விகார விகாரம் -

{Entry: F06__292}

புணர்ச்சியால் வந்த விகாரம் மீண்டும் திரிந்து விகாரம் அடைதல். கஃறீது : கல் + தீது = கஃறீது - (தொ.எ. 369 நச்.) ஆய்தத்திற்குத் தகரம் நட்பெழுத்தே ஆயினும், நிலைமொழி யீறான லகரம் றகரமாய்த்திரிய, வருமொழித் தகரமும் றகரமாய்த் திரிந்து கற்றீது என நிற்க, நிலைமொழி யீறு திரிந்த றகரம் மீண்டும் ஆய்தமாகத் திரிய, கஃறீது என ஆயிற்று. அஃது அவ்வாறே ஏற்றுக் கொள்ளவும் பட்டது. (கல் + தீது > கற்றீது > கஃறீது) பி.வி. 26

விகுதிமேல் விகுதி பால் உணர்த்தாமை -

{Entry: F06__293}

கள் ஈற்றுப் பெயர்கள் : அடிகள் முனிகள் மனுக்கள் கோக்கள் வேள்கள் விடலைகள் வில்லிகள் வாளிகள் பள்ளிகள் கணிகள் மயரிகள் மடந்தைகள் பரத்தைகள் உழத்திகள் மறத்திகள் குறத்திகள் வலைச்சிகள் புலைச்சிகள் - என்றல் தொடக் கத்தன.

ரகார ஒற்றும் கள் என்னும் விகுதியும் கூடி வந்தாலும் (எ-டு : அவர்கள், பூரியர்கள்) முதல் நின்ற ரகரஒற்றே பலர்பாலை விளக்கும்; ஏனைய கள்விகுதி வாய்பாடு நிரம்பல் மாத்திரையே ஆவதல்லது பால் உணர்த்தாது என்க. (நன். 277 மயிலை.)

மேல் கள்ளீற்றுப் பெயர்களுள் ‘அடிகள்’ என்னும் ஒன்று நீங்கலாகப் பிறவெல்லாம் ஆண்பால் அல்லது பெண்பால் ஆகிய ஒருமைப்பெயரொடு கள்விகுதி கூடிப் பலர்பால் காட்டியவாறு. அடிகள் : துறவியாகிய ஒருவரை உயர்வுப் பொருட்டாகக் கூறும் சொல்; ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி’, இச்சொல்லைப் பகுதி விகுதி செய்தலாகாது.

விசிட்டத் திரவியம் -

{Entry: F06__294}

உடையவனது உடைப்பொருள். உடைப்பொருள்மேல் நிற்கும் விகுதி ஏற்ற பெயர்களின் - தத்திதங்களின் - வகைகள் பல. அவை இவற்கு மகன் - மகள் - வருக்கம் - வமிசம் - கிளை - முதலிய பலவாகும். வருமாறு :

கார்த்திகையின் மகன் கார்த்திகேயன் (முருகன்)

விச்சிரவசுவின் மகன் வைச்சிரவணன் (குபேரன்)

பருவதராசன் மகள் பார்வதி

ரகுவின் வமிசத்தவன் ராகவன் (பி. வி. 32)

விசிட்டம் - அடைகொளி; அஃதாவது அடையைக் கொண்ட பொருள். (பி. வி. 31)

விசிட்டம் கொளல் -

{Entry: F06__295}

அடை ஏற்றல். குழையன் - குழையை உடையவன். அ) இப்பொருளையுடையன் இவன், ஆ) இவனுடையது இப் பொருள் - என்னும் இருவகையின்கண்ணும் வந்த உடைப் பொருள்மேல் வரும் சாமானிய தத்திதன். (பி. வி. 32)

விசேடண பூர்வம் -

{Entry: F06__296}

பண்புத்தொகையுள் முன்மொழி அடை ஆதல்.

எ-டு : கருங்குவளை, நீலோற்பலம். (முன் - காலமுன்) (பி. வி. 22)

விசேடணவகை இரண்டு -

{Entry: F06__297}

செஞ்ஞாயிறு என்பது தன்னோடு இயைபின்மை நீக்கிய விசேடணம்; ஞாயிறு செம்மையாகிய விசேடணத்தினின்று இயைபு நீங்காமலிருப்பதைக் குறிப்பது. செந்தாமரை என்பது பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்; செம்மை என்னும் விசேடணம் ‘வெண்தாமரை அன்று இஃது, என அதன் இயைபினை நீக்கி நிற்பது. (நன். 284 சங்.)

விசேடணோபயம் -

{Entry: F06__298}

விசேடண உபயம். கருமதாரயன் என்னும் பண்புத் தொகையில், முன்மொழி பின்மொழி இரண்டுமே பண்பாக வந்த தொகை இது. வடமொழியில் சுக துக்கம், சீதோஷ்ணம் - எனவரும். இவை தமிழில் இன்பதுன்பம், தட்பவெப்பம் - என உம்மைத் தொகையாகக் கொள்ளப்படும்.

பெருவெள்ளை, சிறுவெள்ளை - என்பன அழுத்தமான வெளுப்பு, மங்கலான வெளுப்பு - என்று பொருள்படுவன. அந்த வகை நெற்களின் பெயரல்ல இவை. இரண்டு சொற்களும் இவற்றில் பண்பைக் குறிப்பன. (பி. வி. 22)

விசேடிய பூர்வம் -

{Entry: F06__299}

பண்புத்தொகையில் முன்மொழி அடைகொளியாயிருத்தல். வடமொழியில் ‘வையாகரண கசூசி’ என உதாரணம் காட்டுவர். சொல்லைக் கேட்ட அளவில் அதன் இலக் கண அமைதி பற்றிச் சிந்தித்து விண்ணை நோக்கும் இலக்கணப் புலவன் - என்பது பொருள். இதனுள் இலக்கணப்புலவன் என்ற விசேடியம் முன்மொழியாய் நின்றது. தமிழில் ‘அகத்திய முனிவன்’ என இயற்பெயர் முன்னும் சிறப்புப்பெயர் பின்னு மாக வந்ததனை ஒருவாறு இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். (முன் - காலமுன்) (பி. வி. 22)

விடற்பொருட்டு உரிச்சொல் -

{Entry: F06__300}

தீர்தலும் தீர்த்தலும் ஆகிய உரிச்சொற்கள் விடல் என்ற உரிச்சொல்லது குறிப்புப்பொருண்மையை உடையனவாம்.

எ-டு : ‘ துணையின் தீர்ந்த கடுங்கண் யானை’ நற். 108

‘நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மின்’ சீவக. 1275

இதனானே, விடல் என்ற உரிச்சொல் அடியாகப் பிறக்கும் பெயரும் வினையும் தன்வினையும் பிறவினையும் பற்றிப் பிறக்கும் என்பது உணர்த்தற்கு ‘விடற் பொருளது’ எனப் பட்டது. இப்பிறவினை தீர்வித்தல் தீர்ப்பித்தல் - என வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்கும்.

(தொ. சொ. 318 நச். உரை)

விடைமரபு வழாமல் காத்தல் -

{Entry: F06__301}

ஒருவன் வினவுவது தம் பக்கல் இல்லையாயின் அதனை இல்லை என்று கூறலுற்றால், அவன் வினாயதற்கு இனமாய்த் தம் பக்கல் உள்ளதனைக் கூறி அக்கூற்றால் அதனை இல்லையென்றும், அப்பொருள் உள்ளதாயின் இத்துணை உண்டு என்று வரையறுத்தும், வினாவுதலும் செப்புதலு மாகிய சொற்கள் சுருங்குதற் பொருட்டுக் கூறுவர் புலவர். வருமாறு :

‘பயறுண்டோ வணிகீரே’ என்று வினாவினார்க்கு, அஃது இன்று என்பார், ‘உழுந்துண்டு’, ‘உழுந்தும் துவரையும் உண்டு’ என்க; அஃது உண்டு என்பார், ‘முக்குறுணி உள்ளது’ என்று சுட்டியுரைக்க. (நன். 406 சங்.)

விடைவகை எட்டு -

{Entry: F06__302}

செப்பு நோக்குக.

விதி ஒன்றற்கே பலபெயர் வருதல் -

{Entry: F06__303}

மெய் பிறிதாதல் மிகுதல் குன்றல் - என்னும் இம்மூன்றனையும் தொல்காப்பியனார் திரிபு என்பர். திரிதல் தோன்றல் கெடுதல் - என்னும் இம்மூன்றனையும் நன்னூல் விகாரம் எனவே பெயரிட்டு வழங்கும்.

மரம் வளர்ந்தது, வளர்ந்தன - என்புழி, மரம் என்பதனைத் தொல்காப்பியம் அஃறிணை இயற்பெயர் என்று குறியீடு செய்கிறது. நன்னூல் அதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்னும். (இ. கொ. 6)

விதி - மறை - எனப்படா வினைகளும் பெயர்களும் -

{Entry: F06__304}

போ - வா, தொடு - விடு, வாழ் - கெடு, உலாவு - நில், உறங்கு - விழி, விரும்பு - வெறு, கொடு - வாங்கு, சா - பிழை, போனான் - வந்தான், உறங்கினான் - விழித்தான் - இவை போன்றவற்றைத் தனித்தனியே நோக்குங்கால் ஒவ்வொன்றும் விதியே; இணைத்துக் காணுமிடத்தான் விதியும் மறையும் புலப்படும். இவை வினைகள்.

கிழக்கு - மேற்கு, தெற்கு - வடக்கு, உறவு - பகை, இன்பம் - துன்பம், பகல் - இரவு, ஒளி - இருள் - இவை பெயர்கள். தனித்தனியே யாவும் விதியே; இணைத்துக் காணின் விதியும் மறையுமாம்.

ஆதலின் ஒன்றை நோக்க மற்றது மறுதலையாகுமேயன்றி, தன்னளவில் யாவும் விதிச்சொற்களே. ஆதலின் ‘இது விதி இதுமறை என்னப் படா சில’. (இ. கொ. 75)

விபத்தி அர்த்தம் -

{Entry: F06__305}

வேற்றுமைப்பொருளில் வரும் சொல்லுருபுகள். உளி - மாறு - கொண்டு என்பன மூன்றாம்வேற்றுமையின் சொல்லுருபு கள். நின்று - மேல்நின்று - என்பன ஐந்தாம்வேற்றுமையின் சொல்லுருபுகள். உடைய என்பது ஆறாவதன் சொல்லுருபு. இக்காலத்து இன் என்பது ஆறாம்வேற்றுமைச் சொல் லுருபாக (எ-டு : சாத்தனின் பசு) வழங்கப்படுகிறது. நம்பிக்கு மகன் : ஆறாம் வேற்றுமை முறைப்பொருளில் வந்தது.

சில உபசருக்கங்கள் பெயருக்கு முன் வந்து, பரிமௌலி (-தலையைச் சுற்றி) அநுகரி (-யானைக்கு அருகே) - என வடமொழியில் நிகழ்வது போலவே, தமிழிலும், உள்ளூர் - கீழ்நீர் - மீகண் - என மாறி நிற்கும். இடை - கடை - தலை - மருங்கு - கண் - அகம் - புறம் - என்பனவும் ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபுகள். (பி. வி. 6)

விபரியயம் -

{Entry: F06__306}

சொற்கள் முன்பின்னாக மாறிக் கிடத்தல், விகுதி மாறுபட்டுப் புணர்தல் போல்வன.

எ-டு : நுனிக் கொம்பர் (கு. 476) - கொம்பரது நுனி; கடைக் கண் - கண்ணினது கடை; அரைக்காசு - காசினது அரை; முன்றில் - இல்லினது முன்; மீகண் - கண்ணி னது மீ (மேலிடம்)

இவை சொல் முன்பின் ஆனவை.

செய்த வேள்வியர் - வேள்வி செய்தவர் என்பதே தமிழ்நடை. எய்திய செல்வத்தர் - செல்வம் எய்தியவர் என்பதே தமிழ் நடை. வீழ்ந்த பாசத்தர் - பாசம் வீழ்ந்தவர் என்பதே தமிழ் நடை

இவை மூன்றும் விகுதி பெற்ற பெயர் - தத்திதம்.

‘அறம் சொல்லும் நெஞ்சத்தான்’ (கு. 185) - நெஞ்சோடு அறம் சொல்லுவோன் - தத்திதம்

‘கழிந்த உண்டிய ர்’ (முருகு. 131) - உண்டி கழிந்தவர் - தத்திதம்.

‘வேண்டா உயிரார்’ (கு. 777) - உயிர் வேண்டாதார் - தத்திதம்.

‘அரு ங்கேடன்’ (கு. 210) = கேடரியன் - தத்திதம்

‘கொண்ட கூழ் த்தாகி’ (கு. 745) கூழ் கொண்டதாகி; கூழ்த்து - தத்திதம்.

‘உச்சிக் கூப்பிய கையினர்’ (முருகு. 185) - உச்சியில் கைகளைக் கூப்பினர் - தத்திதம்.

வீதராகி - நீங்கிய பற்றையுடையவன் (பகுவிரீகி) - பற்று நீங்கியவன்.

இனி, வடமொழியில் பிரதமா தற்புருடன் என்னும் முதல் வேற்றுமைத் தொடராய் விரியும் உபமித சமாசம் என்னும் தொகை பின் முன்னாக மாறி நிற்பன. உபமித சமாசமாவது உவமைத்தொகை.

எ-டு : பெண்ணணங்கு - அணங்கு போன்ற பெண். வாய்ப் பவளம் - பவளம் போன்ற வாய். முகமதி - மதி போன்ற முகம்

(இதனை முகமாகிய மதி என உருவகமாக விரிப்பினும் தமிழில் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம்.) (பி. வி. 27)

வியங்கோள் -

{Entry: F06__307}

வியங்கோள், செய்க என்னும் பொருட்கண்ணும், தவிர்க என்னும் பொருட்கண்ணும், வேண்டிக்கோடல் என்னும் பொருட்கண்ணும் வருவது. அஃதாவது வாழ் - உண் - தவிர் - என்னும் ஏவல் குறித்த சொற்கள், தன்மைப்பெயர்க்கண்ணும் படர்க்கைப் பெயர்க்கண்ணும் ஏலாது, முன்னிலை ஒருமைப் பெயர்க்கண் நீவாழ் - நீ உண் - நீ தவிர் - என ஏற்றலின், ஆண்டுப் பாலுணர்த்தும் சொல்லோடு ஒரு நிகரனவாகி முன்னிலையுள் அடங்கின. அப்பொருட்கண் தன்மை கூறும்வழி யான் வாழ்வல் - உண்பல் - தவிர்வல் - எனக் கூறவேண்டுதலின், அவை தன்மைவினையுள் அடங்கின. இனி, படர்க்கைக்கண் வருங்கால், அவன் வாழ்க - உண்க - தவிர்க - எனக் ககரம் கடை ஆர்த்துக் கூற வேண்டுதலின், அவ்வாறு வரும் சொல் பால் உணர்த்தாமையின், வியங்கோள் என வேறு குறி பெற்றது. அவன் வாழ்க - அவள் வாழ்க - அவர் வாழ்க - அது வாழ்க - அவை வாழ்க - என ஐந்து பாற்கும் உரித்தாக வந்தவாறு.

நீ வாழ்க, உண்க எனவும் வருமாலெனின், அவை அக்ககரம் பெறாக்காலும் பொருள் இனிது விளக்குதலின் அவ்வாறு வருவன மரூஉ வழக்கு என்க.

கடாவுக பாக! நின் காவல் நெடுந்தேர்’ எனச் செய்யுளகத்து வந்ததால் எனின், நீ கடாவுக என வாராது, ‘பாக கடாவுக’ என வருதலின், அது படர்க்கைப் பெயர் விளியேற்றவழி வந்தது என்க. ‘என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்’ (சிலப். 20 : 77) எனத் தன்மைக்கண் வந்ததால் எனின், ஆண்டும் கெடுக எனப்பட்டது ஆயுள் ஆதலின் அதன்மேல் வந்தது என்க. அவ்வியங்கோட்கிளவி ஈறுதிரிந்து வந்து அப்பொருள் படுதலும் கொள்க. வாழ்க என்பது வாழி - வாழிய - வாழியர் - எனவும், ‘செப்பும் வினாவும் வழாஅல் ஓ ம்பல்’ (சொ. 13) என்றமையான் ஓம்புக என்பது அல் ஈறாகி வருதலும், ‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ (கு. 206) என அல்ஈறு உடன்பாட்டி லும் எதிர்மறையிலும் வருதலும் கொள்க.

‘ஓஒதல் வேண்டும்........... என்னு மவர்’ (கு. 653) என்பது பல்லோர் படர்க்கை ஆதலின் வேண்டும் என்னும் முற்றுச்சொல் கொண்டு முடியாமையின், ஆக்கம் கருதுவார் இவ்வாறு செய்தல்வேண்டும் - என வேண்டிக்கோடற் பொருட்கண் வியங்கோள் ஈறு திரிந்தது. ‘வசைதீர்ந்த என்நலம் வாடுவது அருளுவார்....... ஏதில்நாட்டு உறைபவர்’ (கலி. 26) என்றவழி, ஏதில் நாட்டு உறைபவர் அருளுவாராக - என வேண்டிக் கோடற் பொருட்கண் ஈறு திரிந்தது. (தொ. சொ. 220 தெய். உரை)

வியங்கோள் வினையாவது ஒன்றின்பால் ஒருவர் தாம் கருதும் தொழிற்றன்மையை வெளிப்படுத்தலாம். வியம் - வெளிப் படுத்தல்; கோள் - கொள்கை.

வியம் என்பதற்கு உரையாசிரியன்மார் ஏவுதல் என்றே பொருள் கொண்டனர். வி - அம் (வியம்) என்னும் உரியடிகள் அங்ஙனம் பொருள்கோடற்கு இயையுமாறு இல்லை. இதனை ‘ஏவல் வியம்கொண்டு இளையரோடு எழுதரும்’ (பதிற்று. 34) எனவும், ‘செல்கம் செலவியம் கொண்மோ’ (குறுந். 14) எனவும், ‘வினைகடைக் கூட்ட வியம்கொண்டான்’ (சிலப். 9 : 78) எனவும் வரும் நல்லிசைப் புலவர்சொல் வழக்கால் அறிக.

வியங்கோள், விழைதல் - வெறுத்தல் - விதித்தல் - என்னும் பொருண்மைத்தாய் வரும். எ-டு : ஆ வாழ்க, மழை பெய்க, நாடு செழிக்க; பகை நலிக, அல்லவை கெடுக, களவு ஒழிக; சான்றோன் வருக, சாத்தன் உண்க - என முப்பொருண் மையும் முறையே காண்க. (தொ. சொ. 223 ச. பால.)

க ய - என்னும் இரண்டு உயிர்மெய்யினையும் ரகர ஒற்றினையும் இறுதியாக உடையன வியங்கோள் முற்றாம். அவை மூவிடத் திலும் ஐம்பாலிலும் செல்லும். வியங்கோள், இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினைகளுள் ஒன்று. வருமாறு :

வாழ்க, வாழிய, வாழியர், நிலீயர் - யான் யாம்; நீ, நீர்; அவன், அவள், அவர், அது அவை.

‘பெறுகதில் அம்ம யானே’ (குறு. 14)

‘வெல்க வாழிநின் வென்றி வார்கழல்

செல்க தீயன சிறக்கநின் புகழே’ (சூளா. சீய. 5)

‘மன்னிய பெருமநீ நிலமிசை யானே’ (புற. 6)

இவை வாழ்த்துப்பொருண்மைக்கண் வந்தன.

நடக்க, வருக. உண்க, செல்க - என உயர்ந்தோன் இழிந்தோனை ‘இன்னது செய்க’ என்னும் விதித்தல் பொருண்மைக்கண் வந்தன.

‘கடாவுக பாகநின் காவல் நெடுந்தேர்’

- வேண்டிக்கோடல் பொருண்மை

‘சாக எனவாழான் சான்றோரால்’

- வைதல்பொருள்

இனி அல்ஈற்று வியங்கோள் உடன்பாடு எதிர்மறை என இரண்டன்கண்ணும் வருவதும் கொள்ளப்படும்.

எ-டு : ‘பயனில்சொல் ...... மகன்எனல், மக்கட் பதடி எனல்’ (கு. 196) (நன். 338 சங். உரை)

ஏவல், வியங்கோள் என்பன ஒருபொருட்கிளவியாயினும் இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் செல்லும் ஏவலை வியங்கோள் என்பது தொன்னெறி மரபாம். (சங். உரை)

வியங்கோள் ஏனைய பொருள்களிலும் வருமேனும் அதற்கு ஏவலே சிறப்புடைத்து. ஆயின் வியங்கோள் ஏவலை முற்ற முடிக்கும் என்னும் உறுதியில்லை என்பது ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்து.

வியங்கோள் ஈறுகள் -

{Entry: F06__308}

வாழ்க - உண்க - என்றாற் போன்ற அகர ஈறாகவும்,

‘வழாஅல் ஓம்பல்’ (சொ. 13) - ‘இற்றெனக் கி ளத்தல்’ (சொ. 19) - ‘ஆக்கமொடு கூறல்’ (சொ. 20) - என அல் ஈறாகவும்,

‘மரீஇயது ஒராஅல்’ (சொ. 444) - என ஆல் ஈறாகவும்,

மறைக்கண், ‘ காணன்மார் எமரே ’ (நற். 64) என மார் ஈறாகவும்,

‘வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்’ (புற. 367)

என உம் ஈறாகவும்,

‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’ (நான். 25)

என ஐகார ஈறாகவும் வியங்கோள் வரும்;

‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ (கு. 196)

என உடன்பாடும் எதிர்மறையுமாய் வரும்.

‘நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ’ (புறநா. 187)

என்பனவற்றையும் நாடே ஆக காடே ஆக - என ஏவல் கண்ணாத வியங்கோளாகக் கொள்ள வேண்டும்.

வியங்கோள் ஈறு எதிர்காலம் காட்டும். (தொ. சொ. 228 நச். உரை, நன். 145)

அகரவுயிரொடு கூடிய ககரயகரங்களும் ரகரவொற்றும் அல்லும் ஆலும் உம்மும் மாரும் ஐயும் ஆகிய எண்வகை விகுதியையும் ஈறாகவுடைய சொற்கள் வியங்கோள் தெரி நிலை வினைமுற்றுச் சொற்களாம். அம்முற்றுச் சொற்கள் ஐம்பால் மூவிடங்களிலும் செல்லும் என்க. அவை வருமாறு:

க - ‘அமுதம் உண்கநம் அயல்இல் லாட்டி’ (நற். 65)

ய - ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’ (புற. 173)

‘மன்னிய பெருமநீ நிலைமிசை யானே’ (புற. 6)

ர் - ‘நடுக்கின்றி நிலீஇயரோ அத்தை’ (புற. 2)

அல் - ‘வழாஅல் ஓம்பல்’ ‘இற்றெனக் கிளத்தல்’

ஆல் - ‘மரீஇயது ஒராஅல்’

உம் - ‘வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்’

மார் - ‘பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புற. 375)

ஐ - ‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’

வியங்கோள், வாழ்த்தல் - வேண்டிக்கோடல் - விதித்தல் - முதலான பொருட்கண் வரும். (இ.வி. 239 உரை)

‘மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்றி முடித்தல்’ என்னும் உத்தியால் அல் - ஆல் - உம் - மார் - ஐ - என்னும் விகுதிகளையுடையனவும் வியங்கோள் முற்றுக்கள் எனக் கொள்க. இவற்றுள் அல் ஈறு

‘மகன்எனல் மக்கட் பதடி எனல்’ (கு. 196)

என முறையே எதிர்மறையிலும் உடன்பாட்டிலும்; ஆல் ஈறு

‘மரீஇயது ஒராஅல்’

(மருவியதை நீக்காதொழிக) என விதித்தற்கண் எதிர்மறையி லும்;

உம்ஈறு ‘வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்’

என வாழ்த்துதற்கண்ணும்; வரல் வேண்டும் என வேண்டிக் கோடற்கண்ணும்;

மார் ஈறு ‘பாடன்மார் எமரே’

(எமர் பாடாதொழிவாராக) என வாழ்த்துதற்கு எதிர்மறையி லும்;

ஐஈறு ‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’

என விதித்தற்கண் எதிர்மறையிலும் வருமெனக் காண்க.

‘நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ’ (புறநா. 187)

என்பன நாடாக - காடாக - என வருதலால் இவையும் வியங்கோள் என்க. இவற்றுள் ‘ஒன்றோ’ எண்ணிடைச் சொல் என்க. இது போலவே,

‘சீயகங்கன் ...... தருகென மொழிந்தனன் ஆக’

என்பதில் ‘தருக’ என வியங்கோளாய் வேண்டிக்கோடற் பொருளில் வருதலும்; செய்க என்னும் வாய்பாட்டு வியங் கோள் முற்றிற்குச் ‘செய்யாதொழிக’ என வினையெச்சமும் முடிக்கும் சொல்லுமாய் விரிந்து எதிர்மறையாதலும், செய்யல் என்னும் எதிர்மறைவியங்கோள் விகுதிமேல் விகுதி பெற்றுச் செய்யற்க என நின்று எதிர்மறையாதலும்; செய் என்னும் வாய்பாட்டு ஒருமை ஏவற்குச் செய்யல் - செய்யால் - செய்யேல்- செய்யாதே - என நின்று எதிர்மறையாதலும்; செய்யும் என்னும் வாய்பாட்டையுடைய பன்மைஏவல் ‘போம்’ என ஈற்றயல் உயிர்மெய் மெய் கெட்டுத் துணிவு தோன்ற நிற்றலும்; போய்விடும் - போய்த்தொலையும் - போயொழியும் - என வினையெச்சமும் முடிக்கும் சொல்லு மாய் விரிந்து விரைவும் வெகுளியும் தோன்ற நிற்றலும்; போ என்னும் ஒருமைஏவலும் போய்விடு - போய்த்தொலை- போய்விடு - போயொழி - என அவ்வாறு நிற்றலும்; ‘செய்தல் வேண்டும்’ என்னும் வியங் கோள் ‘செய்ய வேண்டும்’ என வினையெச்சமும் முடிக்கும் சொல்லும் போல நிற்றலு மன்றிச் ‘செய்யட்டும்’ என இடைக் குறைந்து மரீஇ நிற்றலும், பிறவும் காண்க. ஏவல் - வியங்கோள் - என்னும் இரண்டும் ஒரு பொருளிலேயே வருமாயினும், ஐம்பால் மூவிடங்களிலும் செல்வதை வியங்கோள் என்பதும், முன்னிலை ஒன்றிற்கே உரியதை ஏவல் என்பதும் தொன்னெறி மரபு எனக் காண்க. (நன். 338 இராமா.)

வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவி வருதல் -

{Entry: F06__309}

வியங்கோள்வினை கொண்டு, உம்மையெண் எனவென்னும் எண் இவற்றால் இணையும் பெயர்ச்சொற்கள் முடியும். இருதிணைப் பெயரையும் எண்ணினால் தொகைகொடுத்தல் இயலாதாதலின், தொகைபெற்றே வரவேண்டும் என்ற வரையறை இல்லாத இவ்விரண்டு (உம், என) எண்ணிடைச் சொற்களே கொள்ளப் படும்.

எ-டு : ஆவும் ஆயனும் செல்க. (ஆ : அஃறிணைப் பெயர்; ஆயன் : உயர்திணைப் பெயர். இவையிரண்டும் உம்மை யெண்ணான் எண்ணப்பட்டுச் ‘செல்க’ என்னும் வியங்கோள்முற்றைக் கொண்டு முடிந்தன.) (தொ. சொ. 45 இள. உரை)

வியங்கோள் இருதிணைக்கும் பொதுவான வினை. பொது வான வினை இருதிணைகளையும் குறிக்கும் ஆற்றலுடைய தேனும், ஒருகாலத்து ஒருதிணைப்பெயரையே சுட்டுதல் இயலும். உயர்திணைப்பெயரும் அஃறிணைப்பெயரும் விரவி வந்து வியங்கோள் வினைமுற்றை முடிக்கும் சொல்லாகக் கொள்ளுதலை, அப்பொருள்களுடைய இயைபு கருதி நீக்காமல் சான்றோர் கொள்க.

எ-டு : யானையும் தேரும் மறவரும் செல்க, ஆவும் ஆயனும் செல்க- ‘யானை தேர் மறவர்’ - படைக்கூறு என்ற இயைபு பற்றி இணைந்து வியங்கோள்வினை கொண்டன. ‘ஆவும் ஆயனும் செல்க’ - மேய்க்கப் படுவதும் மேய்ப்பானும் ஆகிய இயைபு கருதி ஆவும் ஆயனும் உடன்எண்ணப்பட்டு வியங்கோள் வினை கொண்டு முடிந்தவாறு. (தொ. சொ. 45 சேனா. உரை)

ஆவும் ஆயனும் செல்க - என்றது எண்ணும்மையாதலின், சேறல் தொழில் இரண்டற்கும் ஒத்தலின் வழுவின்றேனும் அஃறிணை ஏவல்தொழிலை முற்ற முடியாமை கருதி வழுவமைத்தார். (தொ. சொ. 45 நச். உரை)

வியங்கோள் இருதிணைக்கும் பொதுவினையாதலின் எண்ணுங்கால் தனித்தனி எண்ணல் வேண்டுமோ, விரவி எண்ணல் வேண்டுமோ - எனவரும் ஐயம் நீக்குதலின் இது திணைவழுவமைதியும் ஆம். (தொ. சொ. 43 தெய். உரை)

வியங்கோள் முன்னிலையிலும் தன்மையிலும் அஃறிணையொடு வாராமை -

{Entry: F06__310}

‘சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கல்’ (பொ. 196),

‘ஞாயிறு திங்கள் அறிவே நாணே..... நெஞ்சே, சொல்லுந போலவும்

கேட்குந போலவும், சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்’ (செய். 201)

எனவும் அஃறிணை ஏவற்பொருண்மையை முற்ற முடியா மையைக் கூறும் தொல்காப்பியனார், அவற்றிற்கு ஏற்ப முன்னிலைக்கண் வரும் அஃறிணை, ஏவற்பொருண்மையை முற்ற முடியாது என்றற்கு ‘முன்னிலையில் வியங்கோட்கிளவி மன்னாதாகும்’ என்றார். எனவே, அஃறிணைக்கண் வரும் முன்னிலை, வியங்கோட்கு ஒத்த உரிமையின்று என்றா ராயிற்று. தன்மை அஃறிணைக்கு இன்மை கூற வேண்டா ஆயினும், உயர்திணைக்கண் சிறுபான்மை வழங்குதல் பற்றி உடன் கூறினார்.

உயர்ந்தான் இழிந்தானை ‘இன்னது செய்க’ என விதித்தல் ஏவல் கண்ணியது. இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்தல் வேண்டும்’ என்று வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணிற்று. இனி உயர்திணைப் பொருளாகிய முன்னிலைக் கண் வாழ்க வாழிய - என வாழ்த்துப்பொருண்மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணிற்று.

கடாவுக பாகநின் காவல் நெடுந்தேர்’ - என வேண்டிக் கோடல் ஏவல் கண்ணிற்று.

‘யானும் நின்னோடு உடன்உறைக’ என வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணியது. தன்மையில் வியங்கோள் சிறுபான்மை யாதலின் முன்னிலை முற் கூறப்பட்டது. (தொ. சொ. 228 நச். உரை)

வியங்கோள்வினை இருவகைத்து ஆதல் -

{Entry: F06__311}

ஏவல் கண்ணியதும் ஏவல் கண்ணாததும் என வியங்கோள் இருவகைத்தாம். உயர்ந்தான் இழிந்தானை ‘இன்னது செய்க’ எனல் ஏவல் கண்ணியது.

எ-டு : ‘கடாவுக பாகநின் காவல் நெடுந்தேர்’

இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்க’ என்று வேண்டிக் கோடல் ஏவல் கண்ணாதது.

எ-டு : ‘இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்’ (சிலப். 28 : 128 ) (தொ. சொ. 228 கல். உரை)

வியங்கோளான் உயர்திணை ஒருமை தோன்றல் -

{Entry: F06__312}

சாத்தன் யாழ்எழூஉக, சாத்தி சாந்துஅரைக்க - என யாழ் எழூஉதல் சாந்தரைத்தல் ஆகிய வினைபற்றிய வியங்கோளான் சாத்தி சாத்தன் - எனும் விரவுப்பெயர்கள் பொதுமையின் பிரிந்து உயர்திணை உணர்த்தின. (தொ. சொ. 175 நச். உரை)

வியங்கோளிடத்துத் திணை விரவுதல் வழுவமைதியாதல் -

{Entry: F06__313}

‘ஆவும் ஆயனும் செல்க’ என்றது எண்ணும்மையாதலின், சேறல்தொழில் இரண்டற்கும் எய்துதலின் வழுவின்றேனும், அஃறிணை ஏவல்தொழிலை முற்றமுடியாமை கருதி வழு வமைத்தார். (தொ. சொ. 45 நச். உரை)

வியஞ்சனா விருத்தி -

{Entry: F06__314}

சொல் குறிப்பால் பொருளுணர்த்துதல். வடமொழியில் சொல் தன் பொருளை உணர்த்தும் ஆற்றலை மூன்றாகக் கூறுவர். 1. அபிதை - நேரான பொருளைத் தருதல், 2. இலக்கணை - தன் தொடர்புகொண்ட வேறொரு பொருளைக் குறித்தல். 3. வியஞ்சனை - குறிப்பால் பொருளுணர்த்தல் - என்பன அவை.

‘சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்’, (கு. 711)

என்புழி, பரிமேலழகர் சொல்லின்தொகையாகச் செஞ்சொல் இலக்கணைச் சொல் குறிப்புச்சொல் - இம்மூன்றனையும் குறிப் பிட்டார். இது வடமொழி அலங்காரநூலார் மதம்.

(பி. வி. 50)

வியல் என்னும் உரிச்சொல் -

{Entry: F06__315}

இவ்வுரிச்சொல் அகலம் ஆகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘இருங்கல் வியலறை’ (தொ. சொ. 364 நச். உரை)

விரவுப்பெயர் -

{Entry: F06__316}

உயர்திணைக்குச் சிறந்த பெயர் அஃறிணைக்கண்ணும் வந்து விரவுதலையுடைய இருதிணைப் பொதுப்பெயர் விரவுப் பெயராம். அவை வருமாறு :

இயற்பெயர் 4, சினைப்பெயர் 4, சினைமுதற்பெயர் 4, முறைப்பெயர்2 - ஆகப் பொருள் பற்றி வரும் விரவுப்பெயர் 14; தான் - தாம் - எல்லாம் - நீஇர் - நீ - எனச் சொல் பற்றி வருவன 5 ; ஆகக் கூடுதல் 19 ஆம்.

‘அன்ன பிறவும்’ என்றதனான் கொள்ளப்பட்ட மக - குழவி - போல்வனவும், காடன் காடி - நாடன் நாடி - தரையன் - திரையன் - மலையன் - முதலாக (இடம் பற்றி) வருவனவும், முதியான் எனப் பிராயம் பற்றியும் சுமையன் எனத் தொழில் பற்றியும் வருவனவும், பிறவுமாம். (தொ. சொ. 176 நச். உரை)

பெண்மை இயற்பெயர் - பெண்மைச் சினைப்பெயர் - பெண்மை சுட்டிய சினைமுதற்பெயர் - எனவும், ஆண்மை இயற்பெயர் - ஆண்மைச் சினைப்பெயர் - ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயர் - எனவும், பன்மை இயற்பெயர் - பன்மைச் சினைப்பெயர் - பன்மை சுட்டிய சினை முதற்பெயர் எனவும், ஒருமை இயற்பெயர் - ஒருமைச் சினைப்பெயர் - ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் - எனவும் இவை பன்னிரண்டும் விரவுப்பெயராம் என்றவாறு.

தந்தை தாய் என்பனவும், முறைமைக்கண் வந்த மகன் மகள் என்பனவும் தான் தாம் எல்லாம் என்பனவும், நீ நீயிர் என்பனவும் விரவுப் பெயராம். (நேமி. பெயர். 5, 6)

விரவுப்பெயர் அஃறிணை சுட்டு மிடம் -

{Entry: F06__317}

செய்யுளுள் கருப்பொருள்மேல் கிளக்கப்படும் இருதிணைக்கும் உரிய பெயர் உயர்திணை உணர்த்தாது அஃறிணைப் பொருள வாய் வழங்கப்பட்டு வரும்.

‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு,

வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’

- என்புழிக் கடுவன் மூலன் என்பன ஈண்டு அஃறிணையையே சுட்டுவன. (தொ. சொ. 196 சேனா. உரை)

இயற்பெயர் என்பன இருதிணைக்கும் பொது என்று ஓதினா ரேனும், செய்யுளகத்துக் கருப்பொருளாகி நிலத்துவழித் தோன்றும் மாவும் புள்ளும் மரனும் முதலாயினவற்றின்மேல் இடுகுறியாய் வரும் இயற்பெயர் அஃறிணைப்பொருளைச் சுட்டுவதல்லது உயர்திணைப்பொருண்மையைச் சுட்டா. அஃறிணைப்பொருட்கண் சாத்தன் கொற்றன் - எனவரும் இயற்பெயர்கள் வழக்கின்கண் அஃறிணைப்பெயராகவே கொள்ளப் படும். (தொ. சொ. 190 தெய். உரை)

விரவுப்பெயர் : காரணக்குறி -

{Entry: F06__318}

உயர்திணைக்குச் சிறந்த பெயர் அஃறிணைக்கண் விரவியும், அஃறிணைக்குச் சிறந்த பெயர் உயர்திணைக்கண் விரவியும் வருதலின், இப்பொதுப்பெயர்களை விரவுப்பெயர் என்றும் கூறுப. [ ஓராடவனைச் சாத்தன் வந்தான் எனவும், ஓரெருத் தினைச் சாத்தன் வந்தது எனவும் கூறுவர். ஆண்டுச் சாத்தன் (இயற்பெயராக நின்ற) விரவுப்பெயராம் ] (நன். 282 சங்.)

விரவுப்பெயர் செய்யுளுள் வருமுறைமை -

{Entry: F06__319}

ஐந்திணைக் கருப்பொருள்களில் திணைதொறும் மருவிய பெயர்களாகிய மக்கட்பெயர்கள் விரவுப்பெயர்களாக வரும். ஏனைய கருப்பொருள்களின் பெயர்கள் விரவுத்திணை போலத் தோன்றினும் அஃறிணையேயாம்.

எ-டு :

‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு,

வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’

கடுவன், மூலன் என்பன உயர்திணை ஆண்பால் ஈறுகளாய் அஃறிணை ஆண்பாற்கும் பெயராகி விரவுப்பெயராயினும், ஈண்டு அகப்பொருட்கு உபகாரப்படும் இறைச்சிப்பொருளாய் நிற்றலின் அஃறிணைப் பெயரேயாம். குமரி என்னும் விரவுப் பெயர் ஈண்டு அஃறிணைப்பெயராயிற்று. (தொ. சொ. 198 நச். உரை)

விரவுப்பெயர்ப் பாகுபாடு -

{Entry: F06__320}

இயற்பெயர் 4, சினைப்பெயர் 4, சினைமுதற்பெயர் 4, முறைப் பெயர் 2 எனப் பொருள்வகையாலும், தான் - தாம் - எல்லாம் - நீஇர் - நீ - என்னும் சொல்வகையாலும் விரவுப்பெயர் 19 வகையினதாம். (மக, குழவி - முதலாகப் பிறவும் உள.) ஆண்மை - பெண்மை - ஒருமை - பன்மை - என்னும் நான்கனையும் இயற் பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் என்னும் மூன்ற னொடும், ஆண்மை பெண்மை என்னும் இரண்டனையும் முறைப்பெயரொடும் ஒட்டுக. (தொ. சொ. 174-179 சேனா.)

விரவுவினைகள் காலம் காட்டல் -

{Entry: F06__321}

பொருளுணர்த்தாது இடமுணர்த்தும் முன்னிலையும் - வியங்கோளும் - ஆகிய விரவுவினைமுற்றுக்களும், இடமும் பொருளும் உணர்த்தா விரவுவினை முற்றாகிய இல்லை - இல் - வேறு - என்பனவும், வினையெச்சமும், செய்ம்மன - செய்யும் - செய்த - என்னும் விரவுவினைச்சொற்களும் பிரிவு வேறுபடூஉம் செய்தியவாய் நிற்றலின், இடமும் பொருளும் உணர்த்திக் காலம் கொண்டே நிற்கும்.

இவை, ஐயும் ஆயும் இருவும் ஈரும் முக்காலத்தால் சிறந்தன;

இகரமும் மின்னும் வியங்கோளும் செய்ம்மனவும் எதிர்காலத் தால் சிறந்தன;

செய்யும் என்பது நிகழ்காலத்தால் சிறந்தது;

செய்த இறந்தகாலம் காட்டும்;

இல்லை - இல் - என்பனவும், வேறு என் கிளவியும் வினைக்- குறிப்பு ஆதலின் முக்காலத்தால் சிறந்தன. (தொ. சொ. 427 நச். உரை)

விரிக்கும்வழி விரித்தல் -

{Entry: F06__322}

செய்யுளுள் சந்தி நிரம்புவதற்கு ஒரு சொல்லை விரிக்க வேண்டும்வழி விரித்தல். ‘தண்துறைவன்’ என்பதனைத் ‘தண்ணந்துறைவன்’ என விரிக்க வேண்டும்வழி இசை நிறைத்தற்கு ‘அம்’சாரியை விரித்தவாறு.

(தொ. சொ. 403 நச். உரை)

விரித்துத் தொகுத்தல் -

{Entry: F06__323}

உயர்திணை வினைமுற்று விகுதிகளைத் தன்மைஒருமைவிகுதி - தன்மைப்பன்மைவிகுதி - படர்க்கை ஆண்பால்விகுதி - பெண்பால் விகுதி - பலர்பால்விகுதி - எனத் தொல்காப்பினார் வகுத்துள்ளார். பன்மையும் ஒருமையுமாகிய 23 விகுதிகளும் உயர்திணை மூன்று பாற்கும் உரிய எனத் தொகுத்தது ‘விரிந்தது தொகுத்தல்’ என்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தது. அவ்விகுதிகளாவன : அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் றும்; கு டு து று என் ஏன் அல்; அன் ஆன் - அள் ஆள் - அர் ஆர் ப மார் - என்பன. (தொ. சொ. 205 இள. உரை)

விருத்த லக்கணை -

{Entry: F06__324}

மாறுபட்டுப் பொருளைக் குறிக்கும் இலக்கணை. ‘உடம் போ டுயிரிடை நட்பு’ (கு. 338) என்புழி, நட்பின்றிப் போதலை ‘நட்பு’ என்றார் திருவள்ளுவர். பாவமே புரிய வல்ல அரக்கரை வட மொழியில் ‘புண்ணிய சனம்’ என்று பெயர் கூறுவது இது.

(பி. வி. 30)

விருத்தி சந்தி -

{Entry: F06__325}

வடமொழியில் ஆ ஐ ஒள - என்னும் எழுத்துக்களுக்கு விருத்தி என்பது பெயர். இந்த எழுத்துக்கள் பற்றிய புணர்ச்சி விருத்தி சந்தியாம்.

பெரும்பாலும் தத்தித பதத்தில் இ ஈ எ உ ஊ ஓ அ - என்பன முறையே ஐ -ஒள- ஆ - எனத் திரிதல் விருத்திசந்தியாம். ‘இரு’ ஆர் எனத் திரியும். தத்திதச் சொற்களுக்கு எடுத்துக்காட்டு:

தசரதன்மகன் தாசரதி, சனகன்மகள் சானகி, இருடிகள்நூல் ஆரிடம்; இந்திரன்நூல் ஐந்திரம், திதியின்மக்கள் தைத்திரியர், வேதசம்பந்தம் வைதிகம்; கோசலத்துப் பிறந்தாள் கௌசலை - போல்வன தத்திதபத முடிபு.

பிரம + ஏவ + சத்தியம் = பிரமைவ சத்தியம்

ஏக + ஏகம் = ஏகைகம்

பிரம + ஓதனம் = பிரமோதனம்

குள + ஓதனம் = குளோதனம்

விம்ப + ஓட்டம் = விம்போட்டம்

இவை விருத்தி சந்தியாம். (பி. வி. 28)

விரைவுப்பொருள் அடுக்கிற்கு வரையறை -

{Entry: F06__326}

விரைவுப்பொருள் பற்றி வரும் அடுக்கிற்குச் சொல் இரண்டு முறையும் மூன்று முறையும் அடுக்கும். எ-டு : ஓடுஓடு, தீத்தீத்தீ.

(தொ. சொ. 424 சேனா. உரை)

விரைவுப்பொருளில் காலம் மயங்குதல் -

{Entry: F06__327}

எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் வரக்கூடிய வினைச்சொற்கள் விரைவு பற்றி இறந்தகாலத்தால் கூறப்படும்.

எ-டு : புறத்தேநின்று ஒருவன் அழைத்தவிடத்தே, சோறுண்- ணப் புகுவான் ‘உண்டேன் போந்தேன்’ என்பான்; சோறுண்கின்றவனும் ‘உண்டேன் போந்தேன்’ என்பான். ஆண்டு முறையே எதிர்காலமும் நிகழ்கால மும் இறந்தகாலத்தான் சொல்லப் பட்டன, விரைவு பற்றி. (தொ. சொ. 241 சேனா. உரை)

‘மலர்மிசை ஏகினான்’ (கு. 3) என்புழி இறந்தகாலத்தான் கூறியதும் அது. (பரிமே.)

விரைவுப்பொருளில் வரும் உரிச்சொற்கள் -

{Entry: F06__328}

கதழ்வு, துனை - என்பன விரைவுக்குறிப்புணர்த்தும் உரிச் சொற்களாம்.

எ-டு : ‘கதழ்பரி நெடுந்தேர்’, (நற். 203)

‘துனைபறை நிவக்கும் புள்ளினம் மான’ (மலைபடு. 55)

(தொ. சொ. 315 சேனா. உரை)

விவட்சிதார்த்தம் -

{Entry: F06__329}

அவை எவ்வயின் - அவ்வயின் - இவ்வயின் - எங்கு - அங்கு - இங்கு - என்பன. இவை வடமொழியில் யத்ர - தத்ர - அத்ர - யத : தத : அத : - எனவரும். சுட்டெழுத்துக்களையும் சுட்டுப் பெயரையும் வடமொழியார் விவட்சிதார்த்தம் என்ப. (பி. வி. 33)

விழுமம் என்ற உரிச்சொல் -

{Entry: F06__330}

இவ்வுரிச்சொல் சிறப்பு - சீர்மை - இடும்பை - என்னும் குறிப்புக் களை உணர்த்தும்.

எ-டு :

‘விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159)

‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து’ (புற. 27)

‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ (அக. 170)

என முறையே காண்க. (தொ. சொ. 353 சேனா. உரை)

விழைவுப் பொருளில் வரும் தில் -

{Entry: F06__331}

விழைவுப்பொருளில் வரும் தில் எனும் இடைச்சொல் தன்மைக்கண்ணேயே வரும்.

எ-டு :

‘வார்ந்திலங்கு வைவெயிற்றுச் சின்மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம யானே’ (குறு. 14)

இதன்கண், ‘யான் பெறுகதில்’ எனத் தன்மைக்கண் தில் வந்தவாறு. (தொ. சொ. 260 சேனா. உரை)

விளி எனப்படுவன -

{Entry: F06__332}

விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும் இயல்பினை உடையன. ஈறு திரிதலும், குன்றுதலும், ஈற்றயல் நீடலும், பிறிது அவண் அடைதலும், என்னும் வேறுபாடுகளோடு இயல்புஆதலும் விளியின்கண் தோன்றுவனவாம். (தொ. சொ. 120 நச். உரை)

எ-டு : நல்லாள் - நல்லாய் - ஈறு திரிதல்
நண்பன் - நண்ப - ஈறு குன்றல்
மக்கள் - மக்காள் - ஈற்றயல் நீடல்
வந்தவர் - வந்தவரே - பிறிதவண் அடைதல்
திருமால் - திருமால் - இயல்பு ஆதல்

விளி ஏலாத உயர்திணைப்பெயர்கள் -

{Entry: F06__333}

யான் யாம் நாம் எல்லாரும் எல்லீரும் எல்லாம் தாம் தான் என்னும் புள்ளியீறும், ஆடூ மகடூ நீ - என்னும் உயிரீறும் ஆகிய உயர்திணைப்பெயர்கள் விளியேலா.

‘உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய

விளிகொள்பெயர்’

என்றமையான், உயர்திணைப்பெயர் என வகுத்தோதப்பட் டனவும் விரவுப்பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும். (தொ. சொ. 120, 125 தெய். உரை)

விளி ஏலாத பெயர்கள் -

{Entry: F06__334}

தான், யான், யாவன், அவன் இவன் உவன், அவள் இவள் உவள் யாவள், அவர் இவர் உவர், (தொ. சொ. 139, 144, 150 நச்.), நீயிர் யாவர் (145), தமன் தமள் தமர்- நமன் நமள் நமர் - நுமன் நுமள் நுமர் - தம்மான் தம்மாள் தம்மார் - நம்மான் நம்மாள் நம்மார் - நும்மான் நும்மாள் நும்மார் - எமன் எமள் எமர் - எம்மான் எம்மாள் எம்மார் - மற்றையான் மற்றையாள் மற்றையார் - பிறன் பிறள் பிறர் - போல்வனவும் இவற்றிற்குரிய அஃறிணைப் பன்மை ஒருமைப் பெயர்களும் (156) விளி ஏலா.

தான் அவன் இவன் உவன் யான் எவன் யாவன் எனவும், அவர் இவர் உவர் எவர் யாவர் - எனவும், அவள் இவள் உவள் எவள் யாவள் - எனவும், நீ நீர் - எனவும் இவை விளியேலாத பெயரென்று அறிக. (நேமி. விளி. 4 உரை)

விளி ஏலாத பெயர்களும் ஏற்கும் பெயர்களும் -

{Entry: F06__335}

‘நுவ் வொடு வினா சுட்டு உற்ற ன ள ர வை து - ஆகிய நுமன் நுமள் நுமர் - எவன் எவள் எவர் எவை எது - யாவன் யாவள் யாவர் யாவை யாது - ஏவன் ஏவள் ஏவர் ஏவை ஏது - அவன் அவள் அவர் அவை அது - இவன் இவள் இவர் இவை இது - உவன் உவள் உவர் உவை உது - என்பனவும், பிறன் மற்றையான் என்றல் தொடக்கத்தனவும் விளி ஏலா. (நன். 314)

அன்றியும் த ந எ - என்பன உற்ற ன ள ர - ஈற்றவாகிய கிளைப் பெயரும் விளிக்கப்படா. அவை தமன் தமள் தமர் - நமன் நமள் நமர் - எமன் எமள் எமர் - என வரும்.

இனி, இ உ ஊ ஐ ஓ - ன ள ர ல ய - என்னும் உயிரும் மெய்யும் ஆகிய பத்து ஈற்று உயர்திணைப் பெயர்களும், ஆ இ உ ஊ ஐ - ண ன ள ல ய - என்னும் உயிரும் மெய்யும் ஆகிய பத்து ஈற்றுப் பொதுப்பெயர்களும், இருபத்துநான்கு ஈற்றுள் எ ஞ ந - என்பன ஒழிந்த 21 ஈறுகளாகிய - எகரம் நீங்கலான உயிர்கள், ணமன - யரலவழள - குற்றுகரம் - என்னும் இவற்றை ஈறாக வுடைய அஃறிணைப்பெயர்களும் விளிக்கப்படுவனவாம்.

(நன். 304)

விளிகொள்வதன்கண் விளி -

{Entry: F06__336}

பிறிதோர் இடைச்சொல்லைத் தான் ஏலாது தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி விளி என்றவாறு. விளி யேற்கும் பெயர்க்கண்ணதாகிய விளி என்பது பொருள்.

(தொ. சொ. 64 நச். உரை)

விளிப்பெயர் அளபெடுத்தல் -

{Entry: F06__337}

உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் விளியேற் பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயர்களும் விளிக்கு மிடத்து, சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கத்தின்கண், தத்தம் மாத்திரையின் மிக்கொலிப்பனவாம்.

எ-டு : நம்பீஇ, சாத்தாஅ; சேய்மைக்குத் தக்கவாறு,
நம்பீஇஇ - சாத்தாஅஅ - என்பன முதலாக நீண் டிசைத்தல் கொள்க. (தொ. சொ. 152 சேனா. உரை)

விளிமரபு -

{Entry: F06__338}

இது தொல்காப்பியச் சொற்படலத்தின் நான்காம் இயலாய்ப் பெயர் விளியேற்குமிடத்து நிகழும் வேறுபாடுகளைத் தொகுத்துக் கூறுகிறது. விளியின் இயல்பு (120), உயர்திணை யிடத்து விளியேற்கும் உயிரீறுகள் இ உ ஐ ஓ - என்பன விளியேற்குமாறு (121 - 129), ன ர ல ள - என்ற புள்ளியீறுகள் விளியேற்குமாறு (130 - 151), இடையிடையே விரவுப்பெயராகிய முறைப்பெயர்கள் விளியேற்குமாறு (128, 138, 149), தான் நீயிர் என்ற விரவுப்பெயர்கள் விளியேலாமை (139, 145), அஃறிணை விரவுப்பெயர் உயர்திணைப்பெயர்கள் போல விளியேற்கு மாறு (152), அஃறிணைப்பெயர்கள் விளியேற்குமாறு (153), சேய்மைவிளி இயல்பு (154), அம்ம என்னும் இடைச்சொல் விளிக்கண் வருமாறு (155), உயர்திணைக் கிழமைப் பெயர்கள் விளியேலாமை (156) முறையே இவ்வியலுள் இடம் பெறுகின்றன. (தொ. சொ. 120 - 156 நச். உரை)

விளியுருபுக்குப் புறனடை -

{Entry: F06__339}

பொதுவாக அண்மைவிளி இயல்பாகும்; இறுதி எழுத்து அழிதலுமுண்டு. சேய்மைவிளி அளபெடுக்கும். புலம்பலின் கண் ஓகாரம் விளியுருபாம்.

தந்தை கூறுக, தோழி கூறுக; வேந்த வாழ்க; சேரமாஅன் வருக, மலையமாஅன் வருக; அண்ணாவோ, மருகாவோ - என முறையே வருமாறு (நன். 313 உரை)

விளி வேற்றுமை ஆதல் -

{Entry: F06__340}

விளியைப் பெயரது விகாரம் என்று அப்பெயருள் அடக்கி வேற்றுமை ஏழ் என்பாரு முளர். அது பெயரின் விகாரமேயா யினும், படர்க்கையை முன்னிலையாக வேறுபடுத்தல் உடைமையின் வேற்றுமை எட்டு என்பார்தம் மதம் கோடற்கு ‘எட்டே’ என்னும் தேற்றஏகாரம் வந்தது. (நன். 290 மயிலை.)

விளிவேற்றுமை இயல்பு -

{Entry: F06__341}

விளியேற்றுமை படர்க்கையிடத்தானை முன்னிலையாக்கும். அங்ஙனம் ஆக்குமிடத்து, அப்பெயர்கள் ஈறு திரிதலும் - ஈறு கெடுதலும் - ஈற்றில் ஏகாரம் மிகுதலும் - ஈற்றயல் நீளுதலும் - அளபெடுத்தலும் - இயல்பாதலும் - ஆகிய நிலைகள் உள்ளனவாம்.

வருமாறு : நல்லாள் - நல்லாய், தோழன் - தோழ, மகன் - மகனே, மக்கள் - மக்காள், சாத்தன் - சாத்தாஅ, குரிசில் - குரிசில் - என முறையே காண்க.

அணியாரை விளிக்குமிடத்து இயல்பும் ஈற்றினது அழிவும், சேயாரை விளிக்குமிடத்து அளபெழலும், புலம்பின்கண் ஓகாரமும் ஆம்.

எ-டு : மன்னன், மன்ன, சேஎய், அண்ணாவோ - என முறையே காண்க. (நன். 303, 313)

விளிவேற்றுமையைத் தொல்காப்பியனார் தனித்துக் கூறியமை -

{Entry: F06__342}

விளிவேற்றுமை பெயருமன்று, பெயரின் வேறுமன்று. திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி என்பதனானும், இயல்பு விளிக்கண் திரியாது நின்ற பெயரீறே விளியெனப் படும் ஆதலானும், விளிகொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் உள ஆகலானும், ஈறு திரிதல் - ஈற்றயல் நீடல் - பிறிது வந்தடைதல் - இயல்பாதல் - முதலாகிய பல வேறுபாடு உள்ளமையானும், விளிவேற்றுமையின் விரிவும் சிறப்பும் நோக்கி வேறு கூறினார். (தொ. சொ. 63, 118 சேனா. உரை)

விளையாட்டுப் பொருளவாம் உரிச்சொற்கள் -

{Entry: F06__343}

கெடவரல் பண்ணை என்னும் இரண்டு உரிச்சொற்களும் விளையாட்டு என்னும் குறிப்பினை உணர்த்துவன.

எ-டு : ‘கெடவரல் ஆயமொடு’ ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்.’ (மெய்ப். 1) (தொ. சொ. 319 சேனா உரை)

விறற்சொல் -

{Entry: F06__344}

ஆற்றலை உணர்த்தும் பெருவிறல், அருந்திறல் என்பன போல்வன. இவை சொல்லால் அஃறிணையாயினும் ஆகு பெயரான் உயர்திணைப்பொருள் உணர்த்தலின் உயர்திணை வினைகொண்டு முடிவன.

எ-டு : அருந்திறல் வந்தான். (தொ. சொ. 56 சேனா. உரை)

வினா -

{Entry: F06__345}

ஒருபொருளை அறியலுறவினை வெளிப்படுப்பது வினா வாகும். அஃது அறியான் வினா - ஐயவினா - அறிபொருள் வினா - என மூவகைத்து. அறிபொருள் வினாவும், அறிவு ஒப்புக்காண்டல் - அவனறிவு தான் காண்டல் - மெய் அவற்குக் காட்டல் - என மூவகைப்படும்.

ஒருவாற்றானும் அறியப்படாதபொருள் வினாவப்படாமை யின் பொதுவகையான் உணர்ந்து சிறப்புவகையான் அறிய விரும்பி வினாவுவதே அறியான் வினா.

‘உயிர் எத்தன்மைத்து?’ - அறியான் வினா

‘குற்றியோ மகனோ தோன்றாநின்ற உரு?’ - ஐய வினா

ஆசிரியன் மாணாக்கனை வினாவுதல் அறிபொருள் வினாவும், மெய் அவற்குக் காட்டல் வினாவும் ஆகும். மாணாக்க னொருவன் மற்றொருவனை வினாவுதல் பெரும்பான்மையும் அறிவொப்புக் காண்டலும், சிறுபான்மை அறியான் வினாவும் ஐயவினாவும் ஆகும். (தொ. சொ. 13 நச். உரை)

வினா எதிர் வினாதல் -

{Entry: F06__346}

வினாவை எதிர்த்துச் செப்பும் வினாவாகி வருதல். ‘சாத்தா, உண்டாயோ?’ என்றாற்கு, ‘உண்ணேனோ?’ என வினா வாகவே விடையிறுத்தல். (தொ. சொ. 14 தெய். உரை)

வினாப்பெயர்வினைகள் பெயர்வினையுள் அடங்காமை -

{Entry: F06__347}

முதல்வேற்றுமையின் முடிக்கும் சொற்கள் வினை பெயர் வினா - என்பன. முதல்வேற்றுமை வினையைக் கொண்டு முடிந்தால் மற்றைச் சொல்லை அவாவுதல் வேண்டிய தில்லை; யாவன் - யார் - என வினாவைக் கொண்டு முடிந்தால் மற்றை வினாஅளவில் அத்தொடர் முற்றிநிற்குமேயன்றி, அவ் வினாவுக்கு விடையை அத்தொடர் அவாவி நிற்குமாதலின், வினாப்பெயர் வினாவினைகள், ஏனைய பெயர் வினைகள் போலப் பயனிலை ஆகா; மேல் விடையை வேண்டி நிற்பினும் ஒருவாற்றான் பயனிலையாம். ஆதலின் வினாப் பெயரும் வினையும் ஏனைய பெயர்வினையுள் அடங்காவாம். (நன். 295 சங்.)

வினா, பெயர்வினையுள் அடங்காமை -

{Entry: F06__348}

யாவன் யார் என்றல் தொடக்கத்தன பெயர்வினையுள் அடங்காவோ, வினா எனப் பயனிலை எழுவாய்வேற்றுமைக்கு வேறோதியது என்னையெனின், பயனிலையாவது மேலொன்றனையும் வேண்டாது பொருள் முற்றிநிற்கும் நிலையன்றே? சாத்தன் யாவன்? - சாத்தன் யார்? என வினா வந்தவழி, அவன் அனையன் - என விடை வந்தல்லது பொருள் முற்றாமையின், வினாப்பெயர் வினாவினைகள் ஏனைப் பெயர்வினைகள் போல் பயனிலை ஆகா என்பதும், மேல் விடைவேண்டி நிற்பினும், வினாப் பொருள் முற்றி நிற்றலின் ஒருவாற்றான் பயனிலையாம் என்பதும் கருதி ‘வினா’ என வேறு விதந்தும், அவ்விழிவு தோன்ற

‘வினை பெயர் வினாக் கொளல் அதன் பயனிலையே’

என இறுதிக்கண் தந்தும் கூறினார். (நன். 295 சங்.)

வினா வகை -

{Entry: F06__349}

வினா ஐந்து வகைப்படும், அறியான் வினாதல் - அறிவொப்புக் காண்டல் - ஐயம் அறுத்தல் - அவனறிவு தான் கோடல் - மெய் அவற்குக் காட்டல் - என. (நேமி. மொழி. 6 உரை)

வினாவழு -

{Entry: F06__350}

தான் வினாவுகின்றதனைக் கேட்டான் விடை கூறற்கு இடம் படாதவாறு வினாதல் என ஒன்றேயாம்.

எ-டு : ஒருவிரல் காட்டி ‘இது நெடிதோ, குறிதோ?’ என்றல்.

வினாவிற்கு அமையா வழுஅல்லது அமையும் வழு என்ப தொன்றில்லை. அஃதாவது வினா வழுவியவிடத்து அமைக்கப் படாது என்றவாறு. (தொ. சொ. 13 கல். உரை)

வினாவிடை வழுவாமல் காத்தல் -

{Entry: F06__351}

திணைஐயத்தினை அவற்றின் பொதுச்சொல்லானும், பால் ஐயத்தினை அவற்றின் பொதுச்சொல்லானும் வினவுதல் வேண்டும். ஐயம் நீங்கித் துணிந்து விடைகூறுமிடத்துத் துணிந்த பொருள்மேல் ‘அல்லாத தன்மை’ யை வைத்து விடைகூறல் வேண்டும். அவை வருமாறு :

குற்றியோ மகனோ அங்ஙனம் தோன்றாநின்ற உருவு ? - உருவு : பொதுச்சொல்.

ஆண்மகனோ பெண்மகளோ அங்ஙனம் தோன்றாநின்றார்? - தோன்றாநின்றார் : பொதுச்சொல்.

இங்ஙனம் வினாவுக என, வினா வழுவாமல் காத்தவாறு.

‘குற்றியோ மகனோ?’ என்று வினாயவழித் துணிந்த பொருள் குற்றியெனின் ‘மகன் அன்று’ எனவும், துணிந்த பொருள் மகன் எனின், ‘குற்றி அல்லன்’ எனவும் விடை கூறல் வேண்டும். ‘ஆண்மகனோ பெண்மகளோ?’ என்று வினாய வழித் துணிந்த பொருள் ஆண்மகன் எனின் ‘பெண்மகள் அல்லன்’ எனவும், துணிந்த பொருள் பெண்மகள் எனின் ‘ஆண்மகன் அல்லள்’ எனவும் விடை கூறல் வேண்டும்.

இங்ஙனம் விடைகூறுக என விடை வழுவாமல் காத்தவாறு.

(நன். 376 சங்.)

வினாவிடைகளில் முதல் சினை வழுவாமல் போற்றல் வேண்டும். ‘கண் பிறழ்ந்ததோ கயல் பிறழ்ந்ததோ?’ ‘சாத்தன் நல்லனோ கொற்றன் நல்லனோ?’ என வினாவினாற்குக் ‘கண் பிறழ்ந்தது’ என்றோ ‘கயல் பிறழ்ந்தது’ என்றோ, ‘சாத்தன் நல்லன்’ என்றோ ‘கொற்றன் நல்லன்’ என்றோ விடை கூறுக. (நன். 387 சங்.)

வினாவின்கண் உறழ் துணைப்பொருள்கள் -

{Entry: F06__352}

வினாவின்கண்ணும் செப்பின்கண்ணும் மாறுபடக் கூறப்படும் பொருள்கள் இணையான அப்பொருள்களே ஆகும். அவை ஒருபொருட்கண்ணும் பிறபொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும்.

எ-டு : வலமுலையோ இடமுலையோ பெரிது ? - தன் பொருட்கண் வந்த சினை.

இவள்முலையோ அவள் முலையோ பெரிய? - பிற பொருட்கண் வந்த சினை.

இந்நிறமோ அந்நிறமோ நல்லது? - இது பண்பு. இந்நடையோ அந்நடையோ நல்லது? - இது தொழில்.

இன்றோ நாளையோ வாழ்வு? - இது காலம்.

இந்நிலமோ அந்நிலமோ விளைவது? - இஃது இடம்.

இவளோ அவளோ கற்புடையாள்? - இது பொருள்.

இவையாவும் வினா; பண்பும் தொழிலும் காலமும் இடமும் பொருளும் முதலாம். (தொ. சொ. 16 தெய். உரை)

வினா வினைக்குறிப்பு -

{Entry: F06__353}

யார் - எவன் - என் - என்னை - இவை வினா வினைக்குறிப்புச் சொற்கள். இவற்றுள் யார் என்பதும் எவன் என்பதும் பொதுச் சொற்கள். யார் என்பது உயர்திணை முப்பாற்கும், எவன் என்பது அஃறிணை இருபாற்கும் பொது. இவை வினாப்பெய ராயின், யார் என்பது யாவர் என்பதன் இடை வகரம் கெட்டு வந்தது எனக் கொள்ளின், பலர்பாற்குச் சிறப்புப் பெயர்; யாவன் என்பதன் திரிபான எவன் என்பது ஆண்பாற்குச் சிறப்புப்பெயர். பொதுவினையானவையும் சிறப்புப் பெயரான வையும் வடிவால் ஒன்றாமேனும் வேறு வேறு சொற்களே.

எவன் என்பது என் - என்ன - என்னை - என இக்காலத்து மருவிற்று. (இ. கொ. 67)

வினாவும் செப்பாதல் -

{Entry: F06__354}

வினாய பொருளுக்கு விடையிறுப்பவன் தன் விடையை வினா வாய்பாட்டாற் கூறின், அவ்வினாவும் செப்பின்பாற் பட்டு இறை பயக்கும் வழுவமைதியாகும் விடையாம்.

எ-டு : ‘உண்டியோ, சாத்தா?’ என வினாவினாற்கு ‘உண்ணேனோ?’ என எதிர்வினாவுதல்’, உண்பேன் என்னும் பொருள்பட வருதலின் செப்பின்பாற்படும். இஃது இறைபயப்பதாம். (தொ. சொ. 14 நச். உரை)

வினாவொடு சிவணி நின்றவழி அசைக்கும் கிளவிகள் -

{Entry: F06__355}

கண்டீரே - கேட்டீரே - (கொண்டீரே-) சென்றதே - போயிற்றே - என அடுக்காதும், கண்டீரே கண்டீரே என்றல் முதலாக அடுக்கியும் அசைநிலை இடைச்சொற்களாக வரும். கண்டீர் கேட்டீர் (கொண்டீர்) சென்றது போயிற்று என்று வரும் வினைச்சொல் நான்கும் வினாவுடன் பொருந்தி நின்றவழி அசைநிலை அடுக்காம். ஆகவே, வினாவுடன் பொருந்தி நில்லாவழி வினைச்சொல்லேயாம்.

(தொ. சொ. 425 நச். உரை)

வினை -

{Entry: F06__356}

வினையாவது சங்கற்பம்; அஃதாவது மனத்தது எண்ணம். ஒருதொழில் நிகழ்வதற்குச் சங்கற்பம் இன்றியமையாத காரணமாதலின், தொழிலது காரணமாகிய எட்டனுள் அது முதற்கண் கூறப்பட்டது.

எ-டு : வனைந்தான் (வனைதலைச் செய்தான்) என்புழி, வனைதல் : வினை. (தொ. சொ. 112 சேனா. உரை)

வினை என்னும் தொழில் முதல்நிலை -

{Entry: F06__357}

வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் என்பது. செய்தான் என்பது தொழில். அது நிகழ்தற்குரிய காரணங் களில் வனைதல் என்பது வினை. வனை என்னும் வினை காலம் காட்டாமல் நிற்பது; வனைதல் என விரிந்துழியும், புடைபெயர்ச்சி மாத்திரம் தோன்றுதலன்றிக் காலம் காட்டாமல் நிற்பது. (தொ. சொ. 113 நச். உரை)

‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம்’ -

{Entry: F06__358}

இயற்பெயர் சுட்டுப்பெயர் என்னும் இரண்டும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிதுவினை கோடற்கு ஒருங்கு நிகழும் காலம். ‘ஒருங்கு இயலும்’ என்றதனான் ஒருபொருளை உணர்த்துதல் கொள்ளப்படும்.

எ-டு : சாத்தன் வந்தான், அவற்குச் சோறிடுக; சாத்தி வந்தாள், அவட்குப் பூக்கொடுக்க.

அவன் வந்தான் சாத்தன் போயினான், அவனும் சாத்தனும் வந்தனர் - எனச் சுட்டுப்பெயர் முன்தோன்றின் இருவரும் வேறுவேறாவர்.

‘வினைக்கு ஒருங்கு இயலும்’ எனவே, இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளும்வழி எதனை முற்கூறினும் அமையும்.

எ-டு : சாத்தன் அவன், அவன் சாத்தன்

வினைக்கு என்புழி, அவ்விரண்டும் ஒருவினை கோடலும் தனித்தனி வினை கோடலும் பெற்றாம். (தொ. சொ. 38 சேனா. உரை)

வினைகோடற்கு ஒருங்கு இயலும் காலமாவது ஒரு பெயர் வினையொடு முற்றி நில்லாது பல சொல்லொடு தொடரும் காலம். அதுபோது இயற்பெயர்ச்சொல்லை அடுத்தே சுட்டுப் பெயர்ச்சொல்லைக் கூற வேண்டும்.

எ-டு : சாத்தன் வந்தான், அவற்குச் சோறிடுக; சாத்தி வந்தாள், அவட்குப் பூக் கொடுக்க

சுட்டுப்பெயரை முற்கூறின் ஒரு பொருளாதல் தோன்றாது இரண்டும் வேறுவேறாம். (தொ. சொ. 36 தெய். உரை)

வினைக்கு வரும் எண்கள் -

{Entry: F06__359}

பெயரெச்சங்கள் எண்ணிடைச்சொற்களை ஏலா என்பதும், வினையொடு பொருந்தாத எண்ணிடைச்சொல் வருதலும் தொகை பெறுதலும் இல்லை என்பதும் பெறப்படும்.

‘மண்டலம் மழுங்க மலைநிறம் கிளர

வண்டினம் மலர்பரந் தூத மிசையே

கண்டலங் கானல் குருகினம் ஒலிப்ப’

என்பது வினையொடு வந்த செவ்வெண். மழுங்கவும் கிளரவும் ஊதவும் ஒலிப்பவும் - என்ற உம் என்னும் இடைச் சொல் தொக்கு நின்றது. ‘கற்றும் கேட்டும் கற்பனை கடந்தான்’ என்பது உம்மை எண்; உண்ணவென்று உடுக்க வென்று பூசவென்று முடிக்கவென்று வந்தாள் என்பது என்று எண்; உண்ணவென உடுக்கவெனப் பூசவென முடிக்க வென என்பது எனஎண்; உண்ண உடுக்கப் பூச முடிக்க என்று வந்தாள், உண்ண உடுக்கப் பூச முடிக்கவென வந்தாள் - என்பன, என்றும் எனவும் ஒரோவழி நின்று பிரிந்து எண் பொருள்தொறும் பொருந்தின.

ஆடல்பாடலொடு வந்தான், ஆதரித்தவன் பயம்தீர்த்தவன் உதவிசெய்தவனொடு பகைத்தான் - எனவும் தொழிற்பெயர் வினையாலணையும்பெயர் இவற்றோடு ஒடுஎண் பிரிந்து ஒன்றுதலும் கொள்க. (நன். 362 இராமா.)

வினைக்குறிப்பில் ஆக்கச்சொல் நிலை -

{Entry: F06__360}

வினைக்குறிப்பு ஆக்கவினைக்குறிப்பு என்றும் இயற்கை வினைக்குறிப்பு என்றும் இருவகைப்படும் எனவும், அவை முறையே ஆக்கம்பெற்றும் பெறாதும் நடக்கும் எனவும் கூறினார். வினையாயினும் ஆக்கத்தை நோக்கி ‘இயற்கை’ என்றார். இதற்கு, வினையெச்சம்கொண்டு முடியும் ஆக்க வினைக்குறிப்பிற்கு ஆக்கச்சொல் விரிந்தேவரும் என்றும், தொக்கு வருவன செய்யுள் விகாரம் என்றும் சிலர் பொருள் கூறுவர். ‘வினையெச்சம் கொண்டு முடியும் ஆக்க வினைக் குறிப்பு’ என விதவாமையானும், ‘ஆக்கவினைக் குறிப்பு’ என்ற துணையானே வினையெச்சம் கொண்டு முடியும் வினைக் குறிப்பு என்பது தானே போதரும் எனின், ‘கல்வியாற் பெரியன்’ எனப் பிறவழியும் ஆக்கவினைக் குறிப்பு வருத லானும், அஃது யாண்டு வரினும் ஆக்கச்சொல் விரிந்தேனும் தொக்கேனும் வேண்டியே நிற்றலானும், ‘இவர் கற்றுவல்லார்’ என வழக்கின்கண்ணும் ஆக்கச்சொல் தொக்கு வருதலானும், ‘காரண முதலா ஆக் கம் பெற்றும்’ (நன். 405) என்னும் சூத்திரம் மாறுகொளக் கூறலாக முடியும் ஆதலானும் அவர்கூற்றுப் பொருந்தாது என்க. (நன். 347 சங்.)

வினைக்குறிப்பு -

{Entry: F06__361}

ஒரு பொருட்கு உடைமையாகிய உடைமைப் பெயரும், ஒரு பொருள் நிகழ்தற்கு இடமாகிய இடப்பெயரும், ஒருபொருளது குணமாகிய ஒப்புமைப்பண்பும், நிறப்பண்பும் குணப்பண்பும் ஆகிய பண்புப்பெயரும், இன்னும் ஒருபொருள் நிகழ்தற்கு இடமாகிய காலப்பெயரும், ஒரு பொருளது புடைபெயர்ச்சி யாகிய தொழிற்பெயரும், ஒரு பொருளது உறுப்பாகிய சினைப் பெயரும் - என இவ்வறுவகைப் பெயரும் அடியாக, இவற்றொடு பால் இடங்களை (விகுதியான்) காட்டிக் காலம் காட்டும் சொற்களைக் கூட்டக் காலம் குறித்துக் கொள்ளும் நீர்மையாய் வரும் வினைகள் எல்லாம் வினைக்குறிப்பாம்.

எ-டு : பொருளன் - நிலத்தன் - பொன்னன்னன் - கரியன் - நல்லன்- ஓராட்டையன் - வரவினன் - முடவன் - என முறையே காண்க. (இவை ஆண்பால் வினைக்குறிப்பு முற்றாம்..) (தொ. சொ. 216 கல். உரை)

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்ற ஆறனடியாகப் பிறந்து கருத்தா ஒன்றையுமே விளக்குதல் வினைக்குறிப்புச் சொல்லினது இலக்கணம். அது காலத்தை வெளிப்படையாக விளக்காது.

குழையினன் குழையினள் குழையினர் குழையிற்று குழையின- குழையினேன் குழையினேம் - குழையினை குழையினீர் - என்றும், அகத்தினன் புறத்தினன் - என்றும், ஆதிரையான் ஓணத்தான் - என்றும், குறுந்தாளன் செங்கண்ணன் - என்றும், கரியன் நெடியன் நல்லன் உளன் உடையன் - என்றும், கடுநடையன் இன்சொல்லன் - என்றும், சடைமுடித்து பைம் பூட்டு குறுந்தாட்டு இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்து - என்றும் வரும்.

குழையினன் என்புழி, குழையையுடையான் வினைமுதல்; இது விகுதியான் விளங்கிற்று. தெரிநிலைவினை போலக் குறிப்பு வினையின்கண் செய்வது முதலிய ஆறும் வருதலும் சில குன்றி வருதலும் கொள்க. (நன். 321 சங்.)

வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் குறிப்புவினை உண்டு.

எ-டு : நன்கு உண்டான், அற மன்றி , அற மல்லால் ; ‘வேலாள் முகத்த களிறு ’ (கு. 500) ‘ மூவிலைய வேல்’, இல்லாத பொருள் - எனவும் முறையே குறிப்பு வினையெச்சம் பெயரெச்சங்களைக் காண்க.

வினைக்குறிப்புக் குறிப்பாகப் பொருள்தரும் சொற்களுள் ஒன்று. ‘சொலல் வல்லன் சோர்விலன்’ (கு. 647) என்ற சொற்கள் பெயர்ப்பொருளை ஒழித்து வினைக்குறிப்புப் பொருளை உணர்த்தின. (நன். 342, 340, 269 சங்.)

வினைக்குறிப்பு வினைபோன்று விகுதி பெற்று இடம்பால் உணர்த்தும். அதன் பகுபதப் பகுதி பெயராக அமையும். எ-டு: பூணினேன், பூணினேம்; பூணினை பூணினீர்; பூணினான், பூணினாள், பூணினார், பூணிற்று, பூணின. (தொ.வி. 123 உரை)

ஒன்றன்பால் வினைமுற்றுக்குத் துகரமும், பலவின்பாற்கு அகரமும் விகுதியாம். எ-டு : பெரிது, பெரிய.

ஒன்றன்பால் விகுதியான ‘து’ வலி மிக்கு று - டு - ஆதலுண்டு.

எ-டு : தீமைத்து, கடற்று, நாட்டு (கடல் +து ; நாள் + து)

ஐ - ய் - ர் ஈற்ற பெயர்கள் வினைக்குறிப்பு ஆகுமிடத்துத் துகரத்தின் முன் மெய் இரட்டும்.

எ-டு : உடை - உடைத்து; மெய் - மெய்த்து; பெயர் - பெயர்த்து.

ல் - ன் - ள் - இவற்றின்கீழ்த் துகரம் வரும்போது ல் ன் றகரமாகவும், ள் டகரமாகவும் திரிதலுண்டு.

எ-டு : கடல் - கடற்று; வில்லினன் - வில்லிற்று; நாள் - நாட்டு. (தொ.வி. 124)

வினைக்குறிப்புச் சொற்களின் பல விகற்பம் -

{Entry: F06__362}

குழையினன் குழையினள் குழையினர் குழையிற்று குழையின, குழையினென் குழையினெம், குழையினை குழையினீர்- எனவும்; அகத்தினன் புறத்தினன் - எனவும்; ஆதிரையான் ஓணத்தான் - எனவும்; குறுந்தாளன் செங்கண்ணன் - எனவும்; கரியன் நெடியன் நல்லன் உண்மையன் உடையன் - எனவும்; கடுநடையன் இன்சொல்லன் - எனவும்; சடைமுடித்து பைம் பூட்டு குறுந்தாட்டு இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்து எனவும் வினைக்குறிப்பு முற்று வரும்.

இவை பொருளாதி ஆறான் ஒரு பொருளை வழங்குதற்கு வரும் பெயராய் நில்லாது, இவன் குழையை உடையனாயினான் - என ஆறாம்வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும்; அகத்தின்கண் இருந்தனன் - புறத்தின்கண் இருந்தனன் - என ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும்; ஆதிரை நாளில் பிறந்தான் - ஓணநாளில் உதித்தான் - என அவ்வேழாம் வேற்றுமையது காலப்பொருட்கண்ணும்; குறுந்தாளையுடை யான் - செங்கண்ணை யுடையான் - என அவ்வாறாம் வேற்றுமையது சினைப்பொருட்கண்ணும்; கருவண்ணமாய் இருப்பன் - நெடுவடிவாய் இருப்பன் - நற்குணமாய் இருப்பன் - உண்மைத் தன்மையன் - உடைப் பொருள் சிறந்தான் - எனக் குணப்பண்பின்கண்ணும்; கடுநடையாக நடப்பன் - இன்சொல் லாகச் சொல்லுவன் - எனத் தொழிற்பண்பின்கண்ணும் வருதலின் வினைக்குறிப்புச் சொல்லாயின. இவை முன்பு வினைக்குறிப்பாய்ப் பின்பு பொருள்களை வழங்குதற்கு வரும் பெயராய் வரின் அவை குறிப்பு வினையாலணையும் பெயராம்.

இவற்றுள் குணம் அடியாகத் தோன்றிய வினைக்குறிப்புச் சொற்கள் குணவிகற்பம் பலவாதலின் பல விகற்பப்பட்டு வரும். அவை பொன்னன்னன் - புலிபோல்வன் - என ஒப்புணர்த்தியும்; எப்பொருளும் அல்லன் இறைவன் - பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன் - எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் - மெய் வலியன் - எனப் பண்புணர்த்தியும்; ஆ உண்டு - என உண்மையுணர்த்தியும்; ‘அவைதாம் இவை அல்ல’ - ‘மாற்றருந் துபபின் மாற்றோர் பாசறை இலன்’ - ‘சொலல் வல்லன்’ - எனக் குறிப்புணர்த்தியும்; குழையிலன் - கச்சிலன் - என உடைமைக்கு மறையாயும் வருவனவாம். ஒப்பாவது வினை - பயன் - மெய் - உரு - என்பனவற்றான் ஒன்றை ஒன்று ஒத்தல். பண்பாவது ஒரு பொருள் தோன்றும் காலத்து உடன்தோன்றி அது கெடுந்துணையும் நிற்பது. உண்மையாவது ஒரு பொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பல வகைப்பட்ட பொருள் தோறும் நிற்பது. குறிப்பாவது பொருட்குப் பின் தோன்றிச் சிறிதுபொழுது நிகழ்வது. இவையெல்லாம் தொல்காப்பியக் கடலுள் தோன்ற விளங்கும். (நன். 321 சிவ.)

வினைக்குறிப்பெச்ச விகுதி -

{Entry: F06__363}

பலவின்பால் வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் அகரவிகுதி - யான் முடியும்; பாலே தோன்றாது எவ்வகைப் பெயர்க்கும் ஏற்ற வினைக்குறிப்பு எச்சமாகையால் அகர விகுதியான் முடியப் பெறும்.

எ-டு : பெரிய. (தொ. வி. 125 உரை)

வினைக்குறிப்புப் பொருளாதி ஆறும் பற்றித் தோன்றல் -

{Entry: F06__364}

குழையினன் குழையினள் குழையினர் குழையிற்று குழையின; குழையினேன் குழையினேம்; குழையினை குழையினீர் - எனவும்,

அகத்தினன் அகத்தினள் அகத்தினர் அகத்தது அகத்தன; அகத்தினேன் அகத்தினேம்; அகத்தினை அகத்தினீர் - எனவும்,

நாளினன் நாளினள் நாளினர் நாளிற்று நாளின; நாளினேன் நாளினேம்; நாளினை நாளினீர் - எனவும்,

கண்ணினன் கண்ணினள் கண்ணினர் கண்ணிற்று கண்ணின; கண்ணினேன் கண்ணினேம்; கண்ணினை கண்ணினீர் - எனவும்,

கரியன் கரியள் கரியர் கரியது கரியன; கரியேன் கரியேம்; கரியை கரியீர் - எனவும்,

செலவினன் செலவினள் செலவினர் செலவிற்று செலவின; செலவினேன் செலவினேம்; செலவினை செலவினீர் - எனவும்,

ஐம்பால் மூவிடத்திலும் வினைக்குறிப்புமுற்றினை முறையே காண்க. (நன். 320 மயிலை.)

வினைக்குறிப்புமுற்று ஈறு திரிந்த பெயர் -

{Entry: F06__365}

வில்லி - வாளி - என்பன வினைக்குறிப்புமுற்று ஈறு திரிந்த பெயர்கள். வில்லினன் - வாளினன் - என்னும் வினைக்குறிப்பு முற்றுக்கள் முறையே வில்லி வாளி - என நின்றன. (தொ. சொ. 463 நச். உரை)

வினைக்குறை சொல்திரியினும் தாம் பொருள் திரியாமை -

{Entry: F06__366}

ஒருவாய்பாட்டு வினையெச்சம் பிறிதொரு வாய்பாடாகத் திரிந்து நிற்பினும் தன் இயல்பாய பொருள் திரியாது. ‘முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும், வினைமுதல் வினைகொளும்’ (நன். 344) என்ற வினையெச்ச வாய்பாடுகளாகப் பிற வினையெச்ச வாய்பாடுகள் திரியினும் அவற்றின் பொருள்கள் திரியா.

வருமாறு :

ஞாயிறு பட்டு வந்தான் - பட

கோழி கூவிப் பொழுது புலர்ந்தது - கூவ

உரற் கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய - உண்ண

யாவிரி நீழல் ’ (குறுந். 232)

இவை செய என் எச்சம் செய்து எனத் திரிந்து நின்றும், அச்செய என் எச்சமுடிபாகிய பிற வினைமுதல் வினையை ஏற்று வந்தன. (நன். 346 சங்.)

வினைக்குறை : பொருள் -

{Entry: F06__367}

ஒரு வினைச்சொல்லைத் தனது பொருள் முற்றுப்பெற இன்றியமையாது வேண்டி நிற்பதாகிய வினையெச்சம் ‘வினைக்குறை’ எனப்பட்டது. குறை - இன்றியமையாப் பொருள். (நன். 346)

வினைகளை எண்ண வரும் உம்மையெண் -

{Entry: F06__368}

‘அறுத்தும் குறைத்தும் சுகிர்ந்தும் வகிர்ந்தும் இட்டான்’ என்புழி, உம்மையெண் வினையெச்சங்களொடு கூட்டி எண்ணப்பட்டவாறு. வினையொடு பெரும்பான்மையும் உம்மையும் எனவும் ஆகிய எண்ணிடைச்சொற்களே வரும். (தொ. சொ. 289 இள.உரை)

வினைச்சொல் இலக்கணம் -

{Entry: F06__369}

வினைச்சொல் என்பது வினைப்பகுதியை (நச்).

வினைச்சொல் வேற்றுமையுருபு ஏலாது காலத்தைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ காட்டித் திணை பால்இடங்களுக்குத் தனித்தனியே சிறப்பாகவும் பொதுவாக வும் வந்து ஒரு சாரன பெயர் கொண்டு முடிய, ஏனைய வினைகொண்டு முடிய அமைவதாம்.

இடையும் உரியும் வேற்றுமை கொள்ளா; வினையால- ணையும்பெயர் காலம் காட்டும். இவ்விரண்டனையும் நீக்க, வினைச்சொல் வேற்றுமை ஏலாது காலம் காட்டும் எனப்பட்டது. (தொ. சொ. 198 சேனா. உரை)

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் - என்னும் காலங்களை ஏற்றுவரும் வினைச்சொல்லாகியும், காலம் விளங்காது நிற்கும் வினைக்குறிப்புச் சொல்லாகியும், உருபேலாத தன்மைய ஆகியும், வினைமுற்றுச் சொல்லும் வினையெச்சச் சொல்லும் (பெயரெச்சச் சொல்லும்) என்று சொல்லப்பட்ட உயர்திணை வினையும் அஃறிணைவினையும் விரவுவினையு மாகி, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும் நடக்கும் வினைச்சொல் என்றவாறு. (நேமி. வினை. 1 உரை)

வினைச்சொல் விகற்பங்கள் -

{Entry: F06__370}

1. கருத்தன் 2. ஏது கருத்தன் 3. கருவிக் கருத்தன் 4. கருமக் கருத்தன் என்பன வினைச்சொல் விகற்பங்களாம். (இக்கருத் தாக்களால் தொடரப்படும் வினை என்றவாறு.)

எ-டு : தச்சன் எடுத்த மாடம் - கருத்தன் (இயற்றுதல் கருத்தா) வினை. அரசர் தொட்ட குளம் - ஏது கருத்தன் (ஏவுதல் கருத்தா) வினை. வாள் எறியும் -கருவிக் கருத்தன் வினை. திண்ணை மெழுகிற்று - கரும கருத்தன் வினை (இறை. அகப். 18 உரை)

வினைச்சொற்கள் வாயிலாகவே ஐம்பாற் பொருள்களை வேறுபடுத்துணர்தல் -

{Entry: F06__371}

இருதிணையுள்ளும் திரிபின்றிப் பாலுணர்த்தும் பெயர்ச் சொற்கள் மிகச் சிறுபான்மையவாகவே உள. அவை சுட்டுப் பெயர் வினாப்பெயர் கிளைப்பெயர் முதலாயின. ஆதலின் பெயர்ச் சொற்களின் அடிப்படையில் திணைபால்களை வரையறை செய்தல் முற்ற முடியாமை கருதி, வினைச் சொற்கள் வாயிலாக அவற்றுள்ளும் படர்க்கை வினைச்சொற் களின் வாயிலாக ஐம்பாற் பொருள்களையும் வேறுபடுத் துணரும் வகையில் சொல்லாக்க மரபிற்கு இலக்கணம் வகுத்துச் சென்றனர் தமிழ் நூலார். இதனையே தொல்காப்பியம் ‘இருதிணை மருங்கின்............... வினையொடு வருமே’ (சொ. 10) என்கிறது. எனினும் பெயருள்ளும் பால் வரைந்து உணர்த்து வனவும் உள. (சொ. 11) (தொ. சொ. பக். 4. ச. பால.)

வினைச்சொற் குணம் வாளா போதல் -

{Entry: F06__372}

வேண்டும் படும் தகும் - என்ற பொதுவினைச் சொற்களின் இயல்பை நோக்காது நச்சினார்க்கினியர் சேனாவரையர் பரி மேலழகர் முதலாயினோர் முற்றாயும் எச்சமாயும் பொரு ளுரைக்கின் வழுவாம் என்று கருதி, வியங்கோட் பொருளில் வந்தது - விதிப்பொருளில் வந்தது - தகுதிப்பொருளில் வந்தது - என்றெல்லாம் தமக்கு வேண்டியவாறே பொருள் எழுதிச் சென்றனர் என்பது இலக்கணக்கொத்து நூலார் கருத்து. (சொற்குணம் வாளா போதலாவது - சொல்லினது பெற்றியை உள்ளவாறு பேசாது போதல்.) (இ. கொ. 85)

வினை சார்பு இனம் இடம் -

{Entry: F06__373}

சொற்பொருளுணர்த்தும் ஏது வகைகளில் ‘ஆதி’ என்றத னால் கொள்ளப்பட்டவற்றுள் இவை சில. இவை பலபொருள் ஒரு சொல் சிறப்பாக ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய நிலைக் களன்கள். எடுத்துக்காட்டாக, மா என்னும் பலபொருள் ஒரு சொல், ‘மாமொய்க்கும் தேமா’ என்புழி வினையால் வண்டு என்பது விளங்கிற்று. கவசம் புக்குநின்று ‘மாக்கொணா’ என்றவழி, குதிரை என்பது சார்பால் விளங்கிற்று. ‘மாவும் மருதும் ஓங்கின’ என்புழி இனத்தால் மரம் என்பது விளங்கிற்று. ‘மா மறுத்த மலர் மார்பு’ (புறநா. 7) என்புழி இடத்தால் திருமகள் என்பது விளங்கிற்று. ‘சொற்பொருள் உணர்த்தும் ஏது வகைகள்’ காண்க. (இ. கொ. 129)

வினைசெய்யிடம் -

{Entry: F06__374}

ஒரு செயல் நிகழும் சந்தருப்பம் வினைசெயல் இடமாம். வினை செய்கின்றமையாகிய இடம் - நிலமாகிய இடம் - காலமாகிய இடம் - என்னும் இவ்விடப்பொருண்மையில் ஏழன்உருபாகிய கண் நிகழும்.

எ-டு : தட்டுப்புடைக்கண் வந்தான் (தட்டுப்புடையாவது இருவர் செய்யும் போர்.) (தொ. சொ. 81 சேனா. உரை)

‘வினைசெயல் மருங்கின் காலமொடு வருந’ -

{Entry: F06__375}

இவை இடைச்சொல் வகைகளுள் ஒன்று. வினைமுதனிலை நின்று காரியத்தினைத் தோற்றுவிக்குமிடத்துக் காலம் காட்டும் இடைச்சொற்களொடு பாலும் இடமும் காட்டும் இடைச்சொற்களாய் வருவன.

எ-டு : உண்டான் என்புழி, உண் என்னும் முதனிலை, காலம் காட்டும் டகரத்தையும் பாலும் இடமும் காட்டும் ஆனினையும் விரித்து நின்றவாறு.

உண்டு என்னும் எச்சம் முதலியனவும் பாலும் இடமும் உணர்த்தும் என்பது உண்டு வந்தான் - உண்டு வந்தது - முதலாக முடிக்கும் சொல்லொடு கூட்டி உணரப்படும். (தொ. சொ. 252 நச், கல். உரை)

வினைச்சொல் ஒரு சொல்லாயினும், முதனிலையும் இறுதி நிலையும் இடைச்சொல்லுமாகப் பிரித்துச் செய்கை செய்து சுட்டப்படுதலின், ‘வினைசெயல் மருங்கின்’ என்றார். அவற்றுள் ஒரு சாரன பாலுணர்த்தாமையானும் எல்லாம் காலமுணர்த்தலானும் ‘காலமொடு வருந’ என்றார். (தொ. சொ. 250 சேனா. உரை)

வினைசெயல் மருங்கின் காலமொடு வருந : அன் ஆன் அம் ஆம் என்னும் தொடக்கத்தன.

வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலம் காட்டும் சொல்லொடு பால் காட்டும் சொல்லும் (பெற்று வருவன). அவையாவன : உண்டனம் உண்டாம் - உண்ணாநின்றனம் உண்கின்றனம் - உண்பம் உண்குவம் - என்புழி, இறந்தகாலம் குறித்த டகரமும், நிகழ்காலம் குறித்த ஆநின்று - கின்று என்பனவும், எதிர்காலம் குறித்த பு - கு - என்பனவும், அம் - ஆம் - எனப் பால் காட்டுவனவும், இவ்வாறு வருவன பிறவுமாம். (தொ. சொ. 247 தெய். உரை)

உண்டான் என்புழி, உண் என்னும் முதனிலை காலம் காட்டுகின்ற டகரத்தையும், பாலும் இடனும் காட்டுகின்ற ஆனினையும் விரித்து நின்றவாறு. (தொ. சொ. 252 நச். உரை)

வினைப்பெயர் வினைச்சொல்லாகி இயக்கமுணர்த்து மிடத்துக் காலம் காட்டுதலொடு வரும் இடைச்சொற்கள். இவ்விடைச்சொற்கள் திணையும் பாலும் இடமும் காட்டும் இறுதியிடைச் சொற்களும், காலம் காட்டும் இடைச்சொற் களுமாம்.

‘வினைசெயல் மருங்கின் வருந’, ‘காலமொடு வருந’ - என்று பிரித்துக் கூட்டிப் பொருள் செய்யப்படும்.

எ-டு : உண்டனன், உண்டான்; உண்ணாநின்றனன், உண்ணா நின்றான்; உண்பன், உண்பான் - எனவரும்.

இவற்றுள் அன் ஆன் என்பவை பால்காட்டும் இறுதியிடைச் சொற்கள் (அவையே உயர்திணையும் படர்க்கையும் எனத் திணை இடங்களையும் சுட்டின.) ட் ஆநின்று ப் - என்பன முறையே முக்காலத்தையும் காட்டும் காலக்குறிப்பு இடைச் சொற்கள். (தொ. சொ. 251 ச.பால.)

வினைத்தொகை -

{Entry: F06__376}

வினைச்சொல்லாவது தொழிலும் காலமும் பாலும் உணர்த் தலின் பால் உணர்த்தும் சொல் முற்றுச்சொல்லாகி நின்று தொகைநிலை ஆகாமையானும், பால் காட்டாத வினை யெச்சம் பெயரெச்சம் என்னும் இரண்டனுள்ளும் வினை யெச்சம் முற்றுவினைச்சொல்லோடல்லது முடியாமையானும், வினைத்தொகையில் தொகுவதும் விரிவதும் பெயரெச்சமே. அது தொகுங் காலத்துக் காலப்பொருளை உணர்த்தும் சொல்லே தொகுவதும் விரிவதும் கொள்க. தொழிலும் பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை என்றார்.

எ-டு : கொல்யானை, அரிவாள். (தொ. சொ. 410 தெய். உரை)

காலம் பற்றிப் புடைபெயர் வினையுருபாகிய தம் இறுதிகள் தொக்குநிற்பச் செய்வது ஆதி அறுபொருட்பெயராகிய தம் எச்சம் கொண்ட பெயரெச்சங்கள் வினைத்தொகையாம். புடைபெயர்ச்சி வினைகளை முதனிலை ஒழிந்த இறுதிகள் காட்டி நிற்றலின் அவ்வினைக்கு அவை உருபாயின.

நெடுநல் அடுகளிறு, இன்று அடுகளிறு, நாளை அடுகளிறு - வேல் - களம் - தொழில் - பொழுது - கந்து - என வரும்.

அடுகளிறு : முக்கால வினைத்தொகை. இங்ஙனம் கால விகற்பம் பற்றிப் புடைபெயர் வினையைக் கருதாது ‘இத் தொழிற்கு உரியது இஃது’ என்னும் பொருள்பட வருவன வினைத்தொகைக் குறிப்பு எனப்படும். எ-டு : அரிவாள், ஆவுரிஞ்சுதறி. (நன். 364 சங்.)

வினைத்தொகை அமைப்பும் குறிப்பும் -

{Entry: F06__377}

காலம் பற்றிப் புடைபெயர் வினையுருபாகிய தம் இறுதிகள் தொக்குநிற்பச் செய்வது முதலான அறுபொருட் பெயராகிய தம் எச்சம் கொண்ட பெயரெச்சங்கள் வினைத்தொகை களாம். கால விகற்பம் பற்றிப் புடைபெயர்வினை கருதாது அரிவாள் - ஆவுரிஞ்சுதறி = என்றாற்போல, அடுகளிறு என்பது ‘இத் தொழிற்கு உரியது இஃது’ என்னும் பொருள்பட வருமாயின் வினைத்தொகைக் குறிப்பு எனப்படும் என்க.

(நன். 364 சங்.)

வினைத்தொகை : இலக்கணமும், வகையும் -

{Entry: F06__378}

அட்டது களிறு - அடாநின்றது களிறு - அடுவது களிறு - என வரும் வினைமுற்றுக்கள் இறுதி தொகுதலால் அடுகளிறு என வினைத்தொகை ஆயிற்று எனின், அடுகளிறு இது - அடுகளிறு வந்தது - எனப் பின்னும் ஒரு பெயர் வினைகளைக் கொள்ளுத லால் அவை அன்று எனவும்; அடு என்னும் முதனிலை வினையாகிய காரணத்தின்கண் முக்காலவினை யாகிய காரியங்கள் தொக்குநிற்றலான் அடுகளிறு என வினைத் தொகை ஆயிற்று எனின், காரணத்தில் காரியம் தொக்கு நிற்பதற்குக் களிறு என முடிக்கும் சொல் வேண் டாமையால், அஃது ஒரு மொழியிலக்கணமே அன்றி இங்கே எடுத்துக் கொண்ட தொடர்மொழி இலக்கணம் அன்று எனவும் விலக்கிப் பெயரெச்சத்து இறுதி தொக்கதே வினைத்தொகை என்றார்.

அடைகடல் - தோய்தயிர் - விரிமலர் - குவிபூ - செய்ந்நன்றி - என்பன, அடைந்த கடல் - தோய்ந்த தயிர் - விரிந்த மலர் - குவிந்த பூ - செய்த நன்றி - என ஒருகாலத்தையே அடக்கி நிற்றலால் இவை போல்வன இறந்தகால வினைத்தொகைகள் எனப்படும். ஓடுநீர் - பெய்மழை - ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு’ (குறு. 25) ஆடுபாம்பு எனப் புடையகன்ற அல்குலாள்’ என்பன, ஓடாநின்ற நீர் - பெய்யாநின்ற மழை - ஒழுகாநின்ற நீர் - ஆடாநின்ற பாம்பு - என வரும் ஒரு காலத்தையே தம்முள் அடக்கி நிற்றலால், இவை போல்வன நிகழ்கால வினைத் தொகைகள் எனப்படும். உண்பண்டம் - தின்பண்டம் - கொள்பொருள் - அழிபொருள் - என்பன, உண்ணும் பண்டம் - தின்னும் பண்டம் - கொள்ளும் பொருள் - அழியும் பொருள் என வருதலால் இவை போல்வன எதிர்கால வினைத் தொகைகள். உழுபடை - இறை கூடை - மிதிமரம் - கொல்புலி - அரிவாள் - என்பன, பண்டும் உழுத படை இன்றும் உழா நின்ற படை - நாளையும் உழும் படை - என வருதலான், இவை போல்வன முக்கால வினைத்தொகைகள் எனப்படும். (நன். 405 இராமா.)

வினைத்தொகை காலம் கரந்த பெயரெச்சம் ஆகாமை -

{Entry: F06__379}

‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ எனக் கூறுவாரும் உளராலோ எனின், அற்றன்று. கொன்ற யானை என்னும் பெயரெச்சம் காலம் கரந்து கொல்யானை என நின்றதேல், அங்ஙனம் தொக்கு நின்றவழியும் தனக்குரிய இறந்தகாலம் ஒன்றுமே உணர்த்தி நிற்றல் வேண்டும்; அங்ஙனம் நில்லாது முக்காலமும் ஒருங்குணர்த்தி நிற்றலானும், கொன்ற யானை என விரிந்தவழித் தொகைப் பொருளாய முக்காலமும் ஒருங்குணர்த்தும் தன்மை சிதைந்து இறந்த காலம் ஒன்றுமே உணர்த்தி நிற்றலானும், கொல் என்னும் முதனிலைவினை யானை என்னும் பெயரொடு தொக்க தொகையாற்றலால் அது முக்காலமும் ஒருங்குணர்த்தி நிற்பதே வினைத்தொகை என்பது பொருத்த முடைத்து என்க. கொல் கின்ற யானை, கொல்லும் யானை - என்பனவும் அன்ன. (இ.வி. 338 உரை)

வினைத்தொகை, பண்புத்தொகை : அமைப்பு -

{Entry: F06__380}

கொல்யானை என்புழி, கொல்லும் என்னும் வினைச்சொல் ஒரு கூறு நிற்ப ஒரு கூறு தொக்கமையின் (கொல்யானை என்பது) வினைத்தொகை ஆயிற்று.

கருங்குதிரை என்புழி, கரியது என்னும் பண்புப்பெயர் ஒரு கூறு நிற்ப ஒரு கூறு தொக்கமையின் (கருங்குதிரை என்பது) பண்புத் தொகை ஆயிற்று. (தொ. சொ. 412 நச். உரை)

வினைத்தொகை பெயரெச்சத்துள் அடங்குதல் -

{Entry: F06__381}

‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ எனக் கூறுதலின், வினைத்தொகையினைப் பெயரெச்ச வினையுள் அடக்கி இதுவே விதியாகக் கொள்க. அடுகளிறு - கோடு - களம் - போர் - நாள் - கந்து - எனவரும்.

‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது

பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே’

என்றார் ஆசிரியர் அகத்தியனார். (நன். 340 சங்.)

வினைத்தொகை பெயரெச்சம் நின்று தொக்கது ஆகாமை -

{Entry: F06__382}

பெயரெச்சத்தினது ஈறு தொக்கு வினைத்தொகை ஆயிற் றெனில், பெயரெச்சம் மூன்றுகாலமும் உணர்த்தும் ஈறு தொக்கதனை விரிக்குமிடத்து ஏதேனும் ஒருகாலம் உணர்த்தும் ஈற்றானன்றி விரித்தல் இயலாது. மூன்று காலமும் உணர்த்த வல்லதனை ஒருகாலம் மாத்திரமே உணர்த்துவதாக விரிப்பின் தொகைப்பொருள் சிதையுமாகலின் வினைத் தொகையைப் பிரித்தலாகாது என்றார் தொல்காப்பியனார். (தொ.எ. 482 நச். உரை)

வினை நிகழ்காலம் -

{Entry: F06__383}

வினை நிகழ்ச்சிக்குரிய காலம். அவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன (தொ. சொ. 200 சேனா. உரை)

வினைநிலை உரைத்தல், வியங்கொள வருதல் : வேறுபாடு -

{Entry: F06__384}

வினைநிலை உரைத்தல் என்பது தன் தொழில். எ-டு : சாத்தன் வந்தான். வியங்கொள வருதல் என்பது மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவன் ஏவப்படுதல். எ-டு : சாத்தா வா, சாத்தன் செல்க. (தொ. சொ. 67 நச். உரை)

வினைநிலை ஒத்தல் -

{Entry: F06__385}

முடிக்கும் சொல்லைக் கூறும் நிலைக்கண் சினைக்கிளவிக்கு இரண்டாவதும் ஏழாவதும் ஒரு தன்மைய.

எ-டு : கோட் டை க் குறைத்தான் : இரண்டாவது. கோட்டின் கண் குறைத்தான் : ஏழாவது. (தொ. சொ. 85 சேனா. உரை)

வினைப்பகுதி -

{Entry: F06__386}

முன்னிலை ஏவலொருமைச் சொல் போல, நட - வா - விடு - முதலாக நிற்கும் வினைமுதனிலைகளாகிய வினைப்பகுதிகள் வடமொழியில் தாது எனப்படும். (பகுதி - பிரகிருதி - மூலம் - அடி - முதனிலை - என்பன ஒருபொருளன.)

முதனிலைத்தொழிற்பெயர் எனப் பகுதிகளைப் பிரயோக விவேக நூலார் உரையில் குறிப்பிடுவார். இவ்வினை முதனிலைகள், செயப்படுபொருள் குன்றாத சகன்மக தாதுக்கள் என்றும், செயப்படுபொருள் குன்றிய அகன்மக தாதுக்கள் என்றும் கூறப்படும். பி-வி- என்னும் விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாகிய காரிதம் என்றும் வரும். தன் வினைப்பகுதி கேவலதாது எனப்படும்.

பிறவினை வடமொழியில் ணிசந்தம் எனவும்படும்; காரிதம் என்பதும் வடசொல்லே. காரிதம் - செய்விக்கப்படுவது. வினைப்பகுதியைப் பிறவினையாக்க வடமொழியில் சேர்க்கப் படும் பிரத்தியயம் பற்றி வந்த பெயர் ணிசந்தம் (ணிச் அந்தம்) என்பது. அது தாதுவுடன் இ என்னும் எழுத்துச் சேர்தல்.

தாது என்பதனைச் சேனாவரையரும் கூறுவர்.

வினைப்பகுதிகள் முன்னிலை ஏவலொருமைச் சொல் போல உருவத்தால் தோன்றினும், உண்மையில் அவை வேறே. நட - வா - முதலியன நடத்தல் - வருதல் - எனப் பொருள்பட்டு ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவான தொழிற்பெயராய் நின்று, காலம் காட்டும் இடைநிலையும் பால் இடம் காட்டும் விகுதிகளும் பெற்று, நடந்தான் - நடந்தேன் - நடந்தாய் - என்பன முதலாக முக்காலத்தும் வருவன. நடவாய் - வருவாய் - என்பன ஈறு (ஆய்விகுதி) குன்றி நட வா என்று நிற்பனவே முன்னிலை ஏவலொருமைச் சொற்கள். இவை முன்னிலை விகுதிகளைத் தவிர்த்துத் தன்மை படர்க்கை விகுதிகளைப் பெற்று வருங்கால் இடவழுவாம். ஆதலின் இவை தொல் காப்பியம் கூறும் ‘ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர்’ (எ. 296) என்பதற்கேற்பத் தொழிற்பெயரே ஆம்.

செயப்படுபொருள் கொள்ளும் வினை சகன்மகம் - கன்மத் துடன் கூடியது - ஆகும். செயப்படுபொருள் கொள்ளா வினை அகன்மகம் - கன்மத்துடன் கூடாதது - ஆகும். ‘வழங்கியன் மருங்கின்’ (சொ. 113) என்பதன் உரையில் சேனாவரையரும் இவ்வாறுரைப்பர்.

ணிச் அந்தம் - பிறவினை விகுதி பெற்ற வினை. இஃது இயற்று- வான் வினையும், ஏவுவான் வினையும் உடனே தோன்றும் ஏவல்கருத்தா வினை. எவ்வாறெனின், வருவித்தான் என்ற சொல்லில் வருவித்தலாகிய ஏவுவான் தொழிலும் வருத லாகிய இயற்றுவான் தொழிலும் உடனமைந்தன.

வி - பி - விகுதிகள் பெறாது சிறிதே திரிந்து பிறவினையாதலு முண்டு. அது ‘சகச ணிசந்தம்’ - இயல்பாகவே பிறவினை யானவை - எனப்படும். பின்வருவன காண்க.

தன்வினை பிறவினை திரிபு

ஒழுகி ஒழுக்கி ஒற்று மிக்கது

பிரிவர் பிரிப்பர் ஒற்று மிக்கது

தோன்றி தோற்றி ஒற்று வலித்தது

உண் ஊட்டு முதல் நீண்டு ணகரம்
திரிந்து டகரம் மிக்கது

தின் தீற்று முதல் நீண்டு னகரம்

திரிந்து றகரம் மிக்கது.

ஆடு ஆட்டு

கூடு கூட்டு ஒற்று மிக்கது

தேறு தேற்று

தேற்றா ஒழுக்கம் (நாலடி. 75), தேற்றாதவர் (கு. 188) - இவை தேறா ஒழுக்கம், தேறாதவர் என்றே பொருள்படுவதால் சுவார்த்தத்தில் வந்த காரிதம் - பகுதிப்பொருளிலேயே வந்த பிறவினை - என்று கூறுவர்.

தெளித்த சொல் தேறியார்க்கு ’ (கு. 1154) என்பது தெளிவித்த சொல் என்றும், ‘காடு கொன்று நா டாக்கிக் , குளம் தொட்டு வளம்பெருக்கி’ (பட். 283, 84) என்பன காடு கொல்வித்து - நாடு ஆக்குவித்து - குளம் தொடுவித்து - என்றும், உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ (கு. 1032) என்பது உழுவிப்பார் என்றும் பொருள் செய்யத் தக்கன. என்னையெனில், இவற்றைத் தன்வினையாகக் கோடல் பொருந்தாது. இவற்றை அந்தர்ப் பாவித ணிச் உள்ளடங்கி மறைந்த பிறவினை என்பர். (பி. வி. 35 உரை)

‘உப்ப காரம் ஒன்றென மொழிப’ (தொ.எ. 76) என்ற நூற்பா உணர்த்தும் சொல்லான ‘தபு’ என்பதும் அந்தர்ப்பாவித ணிச் என்பது பிரயோகவிவேக உரை. (தபு : ‘தபுவி’ என ஒருகால் பிறவினைப் பொருள்படுமாறு காண்க.) (பி. வி. 40 உரை)

நட - வா - முதலியன ஏவல்வினையாயின் எடுத்தும், முதனிலைத் தொழிற்பெயராயின் படுத்தும் கூறல் வேண்டும். முதனிலை வினைகளான இவ்வினைப்பகுதிகள் ஏவலாக மாத்திரமன்றி வேறு பலவகையாகவும் வரும்.

‘முதனிலைவினை பலவாறாக வருதல்’ காண்க.

வினைப்பகுதி தொழிற்பெயரும் ஏவலொருமை வினையும் ஆமாறு -

{Entry: F06__387}

நட - வா - முதலிய வினைப்பகுதிகள் படுத்தலோசையான் அவ்வச்செய்கைகளின்மேல் பெயர்த்தன்மைப்பட(த் தொழிற் பெயராய்) முதனிலையாயும் நிற்கும். இவை எடுத்தலோசை யான் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றாயும் நிற்கும் . (தொ. சொ. 226 நச். உரை)

வினைப்படு தொகுதி -

{Entry: F06__388}

முடிக்கும் சொல்லொடு கூடும் நிலை. முடிக்கும் சொல் பெயராகவோ, வினையாகவோ இருத்தல் கூடும். எ-டு : மூவேந்தரும் வந்தார், கண்ணிரண்டும் குருடு.

முதலும் சினையுமாகிய இவ்விரண்டு பெயரையும் அடுத்து வரும் முற்றும்மைக்கு முறையே வினைமுற்றும் பெயரும் வினைப்படு தொகுதியாக வந்தன. (தொ. சொ. 33 சேனா. உரை)

வினைப்பெயர் -

{Entry: F06__389}

வினைமுற்றுப் படுத்தலோசையான் பெயராய் அமைவது வினைப்பெயர். வினைமுற்றே பெயராக அமைதலின் வினைப் பெயர்கள் மாத்திரம் காலம் காட்டும். இவ்வினைப்பெயர்கள் ஆர் ஈறாய் வருமுற்றுக்கள் அர் ஈறாக அமைவதுமுண்டு. வந்தவர் சென்றவர் - எனவரும்; வந்தார் - சென்றார் - என வருதலே பெரும்பான்மை.

தொழிலடியாகப் பிறந்த தச்சர் கொல்லர் தட்டார் வண்ணார் போல்வனவும் வினைப்பெயர் எனப்படுமாயினும், அவை பெயர்ப்பகுதியாக வருதலின் காலம் காட்டா. (தொ. சொ. 167 நச். உரை)

புடைபெயர்ச்சி மாத்திரம் உணர்த்தும் உண்டல் - தின்றல் - முதலாக வரும் வினைப்பெயரும், பூசல் - வேட்டை - என்றாற் போலப் புடைபெயர்ச்சி விளக்காது நிற்கும் வினைப்பெயரும், உண்டான் - தின்றான் - என்றாற்போலக் காலம் தோன்றி வினைமுதல்மேல் படுத்தலோசையான் ஆம் தொழிற்பெயரும், ஓசைவேறுபட்டான் அன்றி உண்டவன் - உண்ணுமது - என்றாற் போலத் தானே பெயராய்க் காலம் தோன்றி வினைமுதல்மேல் நிற்கும் தொழிற்பெயரும், ‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார் (கலி. 12) அவன் ஏறிற்று க் குதிரை என்றாற்போலச் செயப்படுபொருட்கண் காலம் காட்டி நின்ற தொழிற்பெயரும், யான் சொன்னவ ன் - உண்பது நாழி - என்றாற் போலச் செயப்படுபொருள்மேல் பெயராய்க் காலம் தோன்றி நிற்கும் செயப்படுபொருளும் வினைப்பெயர் என்பதன்கண் அடங்கும். (தொ. சொ. 71 நச்., கல். உரை)

தொழிற்பெயர், தொழிலின்மேல் நின்ற தொழிற்பெயரும் (இது காலம் தோன்றாது) பொருளின்மேல் நின்ற தொழிற் பெயரும் (இது காலம் தோற்றும்) என இருவகைப்படும். உண்டல் எனவும், உண்டவன் - உண்ணுமது - எனவும் முறையே காண்க. (தொ. சொ. 71 கல். உரை)

வினைப்பெயர், வினையாலணையும் பெயர் : வேறுபாடு -

{Entry: F06__390}

வினைப்பெயர் படர்க்கையிலேயே வரும். வினையாலணை யும் பெயர் முக்காலம் பற்றியும் இருதிணை ஐம்பால் மூவிடத்தும் வரும். (வினைப்பெயர் - தொழிற்பெயர்)

எ-டு : உண்டல், தின்றல்: வினைப்பெயர் படர்க்கையில் வந்தன. உண்டவனை, உண்டவளை, உண்டவரை, உண்டதனை, உண்டவற்றை; உண்டேனை, உண் டேமை; உண்டாயை, உண்டீரை- என வினையா லணையும் பெயர் இருதிணை ஐம்பால் மூவிடத்தும் வந்தன. இவை இறந்தகாலம் காட்டின. ஏனைய காலங்களொடும் ஒட்டிக் காண்க. (நன். 286)

வினைமாற்று வகை -

{Entry: F06__391}

அன்றி என்னும் வினையெச்சம் ‘அறனன்றிச் செய்யான்’ என்புழி அறன் அல்லாததைச் செய்யான் - என எதிர்மறை யிலும், ‘அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரையான இயற்கையானும்’ என்புழி அகரத்திற்குத் தலைமை விகாரத்தால் உண்டானதும்அன்றி நாதமாத்திரை யான இயற்கையானும் உண்டு - என உடன்பாட்டிலும் வருதல் போல, வினைமாற்று, எதிர்மறை - உடன்பாடு - என இரண்டிலும் வருதலால், வினையொழிவு தோன்ற மாற்றலும் - ஒழிவு தோன்றாது மாற்றலும் - என இருவகைப்படும்.

‘இனி மற்று ஒன்று உரை’ என்பது ‘முன் சொன்னது ஒழிய வேறொன்று உரை’ எனப் பொருள்பட நிற்றலால் ஒழிவு தோன்ற நின்ற வினைமாற்று. ‘மற்றறிவாம் நல்வினை’ என்பது ‘இப்பொழுது விரைந்து அறிவோம்’ என்பதை மாற்றி, ‘இனிமேல் விரையாது அறிவோம்’ என் நிற்றலால், காலம் குறித்து ஒழிவு தோன்றி நின்ற வினைமாற்று.

‘மற்றும் கூடும் மனைமடி துயிலே’ (நற். 360)

என்பது ‘இப்பொழுது கூடுகின்றதுமன்றி இனிமேலும் கூடும் துயில் மனைமடியிடத்து’ என நிற்றலால், காலத்துடன் இடமும் குறித்து ஒழிவு தோன்றாது நின்ற வினைமாற்று.

‘அது மற்றம்ம’ என்பதில் மற்று அசைநிலை.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்’ (கு. 380)

என்பதில் மற்று ‘ஊழல்லது ஒன்று’ என நிற்றலால் பிறிது என வரும். (நன். 365 இராமா.)

வினைமுதல் -

{Entry: F06__392}

வினைமுதலாவது கருத்தா. கருத்தா நின்று தன்னை யொழிந்த கருவி முதலிய காரணங்கள் ஏழனையும் காரியத்தின்கண் நிகழ்த்தலின் அதனை ‘வினைமுதல்’ என்றார். முதல் - காரணம். (தொ. சொ. 74 நச். உரை)

குயவன் குடத்தை வனைந்தான் : குயவன் வனைதல் என்ற வினையைக் குடம் என்ற செயப்படுபொருளை அமைக்க ஓரிடத்தில் ஒருகாலத்தில் திகிரிமுதலிய கருவிகளைக் கொண்டு (விற்றுப் பொருள் பெறச்) செய்தலின், குயவன் என்ற வினைமுதல், தன்தொழிலாகிய குயத்தொழிற்கண் வனைதல் என்ற வினை, குடம் என்ற செயப்படுபொருள், குடம் செய்தற்குரிய இடம், குடம் செய்தற்குரிய காலம், குடம் செய்தற்குரிய கருவி, குடம் செய்வதன் காரணம், குடம் செய்வதன் பயன் (பொருள்) - என்பனவற்றை நிகழ்த்தியமை காண்க.

வினைமுதல், இயற்றும் வினைமுதலும், ஏவும் வினைமுதலும் என இருவகைப்படும்.

எ-டு : ‘தச்சன் செய்த சிறுமா வையம்’, அரசன் செய்த தேவ குலம் - என முறையே காண்க. (74 நச். உரை)

ஏவும் வினைமுதலாவது இயற்றும் வினைமுதலை ஏவுவது.

வினைமுதல் இருவகைப்படும், பெயர் வினைமுதலும் வினை வினைமுதலும் என. சாத்தன் உண்டு வந்தான் - என்புழி, சாத்தன் : பெயர் வினைமுதல், உண்டு வந்தவன் என்புழி, வந்தவன் : வினை வினைமுதல். (வினையாலணையும்பெயர் கருத்தாவாக வருவதனை ‘வினை வினைமுதல்’ என்றார். உண்டு என்னும் வினையெச்சம் ‘வந்தவன்’ என்புழிப் பகுதி வினையொடு முடிந்தது எனக் கொள்க.) (தொ. சொ. 427 இள. உரை)

‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ -

{Entry: F06__393}

இஃது ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. வினைசெய்தான் பெயர் சொல்ல, அவன் செய்பொருள் அறியநிற்றல் இவ்வாகு பெயராம். அது கபிலம் தொல்காப்பியம் - என்பன. ஆகுபெயர் ஈறு திரிதலுமுண்டு. (தொ. சொ. 110, 112 இள. உரை)

வினைமுதல் அதன் செயலைக் குறிக்குமாறு நிகழும் ஆகுபெயர் இது.

எ-டு : இவ்வாடை கோலிகன் - என்புழி, கோலிகன் என்ற வினைமுதல் அவனால் நெய்யப்பட்ட ஆடையைக் குறித்தது. (தொ. சொ. 115 நச். உரை)

வினையும் முதலும் உரைக்கும் கிளவி; வினைமுதல் : உம்மைத் தொகை. வினையான் உரைக்கும் கிளவியும் வினை முதலான் உரைக்கும் கிளவியும் ஆகுபெயராம்.

வினையான் உரைக்கப்படுவன : எழுத்து, சொல் என்பன. எழுதப்பட்டதனையும் சொல்லப்பட்டதனையும் அப்பெய ரான் வழங்குதலின் ஆகுபெயராயின. என் காவலிலே கட்டான் என்பதும் அது. (காவல் : காக்கப்பட்டதனைக் குறிக்கும். கட்டான் - களவு செய்தான்)

வினைமுதலான் உரைக்கப்படுவன : செய்தானான் செயப்படு பொருட்குப் பெயராகி வருவன. சாலியனான் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது. (தொ. சொ. 111 தெய். உரை)

எழுவாய் தன்பொருளைத் தாராது தன்னான் இயற்றப்பட்ட பொருளைத் தெரிவிப்பது இவ்வாகுபெயராம்.

திருவள்ளுவர் கற்றான் என்புழி, திருவள்ளுவர் என்ற எழுவாய் தன் பொருளைத் தாராது அவ்வெழுவாயான் இயற்றப்பட்ட திருக்குறளைக் குறிப்பது வினைமுதல் உரைக்கும் கிளவி என்ற ஆகுபெயராம். (தொ. சொ. 114 ச. பால.)

வினைமுதலுரைக்கும் கிளவி ஆகுபெயர் தொல்காப்பியம், கபிலம் என்பன. (தொ. சொ. 110 இள. ) (தொ. சொ. 116 கல். உரை)

இவ்வாடை கோலிகன் எனச் செய்தான் பெயர் செயப் பட்டதன்மேல் நின்றது ‘வினைமுத லுரைக்கும் கிளவி’ என்னும் ஆகுபெயர். தொல்காப்பியம் கபிலம் என்பன நூலுக்கு இயற்பெயரே; அவ்வந்நூல் இயற்றிய ஆசிரியரைக் குறிக்கும் சொல் அன்மையின் அவை ஆகுபெயராகா. (‘தொல் காப்பியம்’ ஈறு திரிந்து நின்றவதனால் தொல்காப்பியனாற் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகு பெயர் ஆகாது, காரணப் பெயராம்.) (தொ. சொ. 113 சேனா. உரை)

வினைமுதல் உரைக்கும் கிளவி: தொல்காப்பியம், கபிலம், இவ்வாடை சேணிகன் - கோலிகன் - என்பன. (தொ. சொ. 115 ப. உ)

‘வினைமுதல் கொள்ளும்’ : விளக்கம் -

{Entry: F06__394}

‘வினைமுதல் கொள்ளும் பிறவும் ஏற்கும்’ என்பதற்கு, ‘முதலில் நான்கும் ஈற்றில் இரண்டும்’ ஆகிய வினையெச்சங் கள் வினைமுதல்வினை கொள்ளும், பிறவினை கொள்ளும் எனப் பொருளுரைத்தால் என்னையெனின், அதுபொருளா யின் ‘வினைமுதல் வினைகொளும் பிறவினை கொள்ளும்’ எனக் கூறினும் யாப்பு அமையும் ஆதலின் அங்ஙனம் கூற வேண்டும்; அங்ஙனம் கூறினாரல்லர். வினைகொண்டு முடியும் - என வினையெச்சமாகிய இதற்குக் கூறினாரெனின், முன்னர்ப் பெயரெச்சத்திற்குப் பெயர்கொண்டு முடியும் என்று கூற வேண்டும்; அங்ஙனம் கூறினார் அல்லர். ஆதலின் வினையெச்சம் வினைமுதற் பொருண்மையினையும் அஃதொழிந்த பிற பொருண்மையினையும்கொள்ளும் என்று கூறலே நூலாசிரியர் கருத்தெனக் கொள்க. அங்ஙனமாயின் இவ்விரு வகை எச்சங்களும் பெயரினையும் வினையினையும் கொண்டு முடிந்து நிற்க உதாரணம் காட்டியது என்னையெனின், பெயரெச்சம் பெயர் எஞ்சநிற்றலும் வினையெச்சம் வினை எஞ்ச நிற்றலும், வினைமுதல் கோடலும் பிற கோடலும் தோன்றுதற் பொருட்டன்றிப் பெயரினையும் வினையினை யும் கொண்டு முடிதல் தோன்றுதற்பொருட்டன்று என்க. (நன். 344 சங்.)

வினைமுதல் செயப்படுபொருள் ஆதல் -

{Entry: F06__395}

ஆகிடந்து செறு விளைந்தது என்புழி, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றிச் செறுவின் வினை யொடு முடிந்தது. இதற்கு வினைமுதல் தானே செயப்படு பொருள் ஆயிற்று. (செறுவின்கண் பயிர் விளைந்தது - என்று கூறல் வேண்டும். ‘பயிர்’ விளைக்கப்படுவதாயின், செயப்படு பொருளாம் என்க. செறுவாகிய இடத்து நிகழ்பொருளாவது பயிர்; அதன் தொழில் விளைதல். அத்தொழில் இடத்திற்கு ஏற்றப்படவே விளைந்தது என்பது செறுவின் வினையாயிற்று. ‘கிடந்து’ என்ற ஆவின் வினை செறுவின் வினையொடு முடிந்தது. செறு என்ற வினைமுதல் தன்கண் விளைக்கப் பட்ட பயிராகிய செயப்படுபொருளது வினை கொண்டது.) (தொ. சொ. 233 நச். உரை)

வினைமுதல் தோன்றும் இடங்கள் -

{Entry: F06__396}

தேற்றத்தோடு கூடிய செயப்படுபொருள், தேற்றத்தோடு கூடாச் செயப்படுபொருள், ஏது, தன்வசம், தெரியாநிலை, தடுமாற்றம், தொழிற்பெயர் - என்ற ஏழனையும் நிலைக் களனாக் கொண்டு வினைமுதல் என்னும் கருத்தா தோன்றும். கருவி - இடம் - கொள்வான் - ஆகியவற்றை நிலைக்களனாக் கொண்டு கருத்தா தோன்றும் என்று கருதுவாரும் உளரா யினும் அங்ஙனம் கூறுதல் இலக்கணமன்று.

எ-டு :

‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்’ (கு. 193)

‘வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு’ (நாலடி 125)

- செயப்படுபொருள் தேற்றத்தொடு கூடி வினைமுதலாய்ச் செயப்படுபொருள் குன்றிய வினை கொண்டது.

திண்ணை மெழுகிற்று - செயப்படுபொருள் தேற்றமின்றி வினைமுதலாய்ச் செயப்படுபொருள் குன்றாத வினை கொண்டது.

ஆதித்தன் கல் தீப் பிறப்பித்தான் - உயர்திணையில் ஏதுக்கருத்தா

காற்றுப் பழம் உதிர்த்தது - அஃறிணையில் ஏதுக்கருத்தா

சாத்தன் உண்டான் - தன்வசக் கருத்தா (சுதந்திரக் கருத்தா - பி.வி.)

மாடம் செய்யப்பட்டது - தெரியாநிலைக் கருத்தா

கொற்றனால் கொள்ளப்பட்டது வீடு - தான் தெரி கருத்தா

‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ (தொ.பொ. 93) - தடுமாற் றம் (ஒரு பொருளே ஒருகால் வினைமுதலாயும் ஒருகால் செயப்படுபொருளாயும் நிற்றல்)

‘கொல்லாமை அறவினை எல்லா ம் தரும்; கோறல் பிறவினை எல்லாம் தரும்’ (கு.321) - தொழிற்பெயர்க் கருத்தா

கண் காணும் - கருவி; குன்று குவட்டைத் தாங்கும் -
இடம்;
‘இரப்பவர் என் பெறினும் கொள்வர்’ - கொள்வோன் - எனக் கருவி, இடம், கொள்வோர் இம்மூன்றும் நிலைக்கள னாகக் கருத்தாத் தோன்றுதல் (இலக்கணம் அன்று என்பது.) (இ. கொ. 26)

வினைமுதல் மயக்கம் -

{Entry: F06__397}

வினைமுதல் (கருத்தா) என்னும் பொருளில் முதல் வேற்றுமை யும் மூன்றாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் மயங்கும்.

அவர் செய்தார் - முதல்வேற்றுமை

அவரால் செய்யத்தகும் அக்காரியம் - மூன்றாவது

அவர்க்குச் செய்யத்தகும் அக்காரியம் - நான்காவது

அவரது வரவு - ஆறாவது

உருபேற்ற சொற்கள் மூன்றாம் நான்காம் ஆறாம் உருபுகளைச் சுட்டி நிற்பினும், போந்த பொருளால் வினைமுதலானமை காண்க. (அவர் அக்காரியம் செய்யத் தக்கார் எனவும், அவர் வந்தார் எனவும் உருபேற்ற சொல் வினைமுதலாதற்குத் தக்கிருத்தல் அறிக.) (இ. கொ. 44)

வினைமுதல் முடிபினவாம் வினையெச்சம் -

{Entry: F06__398}

செய்து - செய்யூ - செய்பு - என்ற மூன்று வினையெச்சமும் தம் வினைமுதல்வினைகளையே கொண்டு முடியும்.

எ-டு : சாத்தன் உண்டு வந்தான், சாத்தன் உண்ணூ வந்தான், சாத்தன் உண்குபு வந்தான்.

உண்பானும் வந்தானும் சாத்தனே ஆதலின், இவ்வாய்பாட்டு வினையெச்சங்கள் தம் வினைமுதல்வினையையே கொண்டு முடிந்தன. செய்யா என்பதும், சாத்தன் உண்ணா வந்தான் - என இம்முடிபு கொள்ளும். இன்றி - அன்றி - என்னும் குறிப்பு வினையெச்சங்களும் தம் வினைமுதல்வினை கொள்ளும்.

(தொ. சொ. 230 சேனா. உரை)

செய்து செய்யூ செய்பு - என்னும் மூன்று வாய்பாட்டு வினையெச்சங்களும் தம் வினைமுதல்வினையான் முடிவன. ஒன்றென முடித்தலான் செய்யா என்ற வாய்பாடும் கொள்க.

எ-டு : கற்று வல்லன்ஆயினான், கல்லூ வல்லன்ஆயினான், கற்குபு வல்லன்ஆயினான், உண்ணா வந்தான்.

செய்து என் எச்சக்குறிப்பாகிய இன்றி அன்றி என்பனவும்,

‘தம் மின்ற மையா நந்நயந் தருளி’ (நற். 1),

‘தொல்லெழில் வரைத் தன்றி வயவுநோய் நலிதலின்’ (கலி. 29)

என வினைமுதல் வினையான் முடியும்.(தொ. சொ. 232 நச்.)

வினைமுதல் வகை -

{Entry: F06__399}

வினைமுதல் இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுதலும் என இருவகைப்படும். கொடியொடு துவக்குண்டான் என்புழிக் கொடி : இயற்றும் வினைமுதல்; அரசனான் இயற்றப்பட்ட தேவகுலம் என்புழி அரசன் : ஏவும் வினைமுதல். (இவை மூன்றாம் வேற்றுமைக் கருத்தா.) (தொ. சொ. 74 நச். உரை)

வினைமுதல் வினையும் பிறவினையும் கொள்ளும் வினையெச்சங்கள் -

{Entry: F06__400}

செய்தென - செய்யிய - செய்யியர் - செயின் - செய - செயற்கு - என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களும், பின் - முன் - கால் - கடை- வழி - இடத்து - என்னும் ஈற்று வினையெச்சங் களும், பான் - பாக்கு - வான் - ஈற்று வினையெச்சங்களும் தம் வினைமுதல் வினையானும் ஆண்டு வந்து பொருந்தும் பிற வினையானும் வரையறையின்றித் தாம் இயலுமாற்றான் முடியும். முறையே அவை வருமாறு :

மழை பெய்தெனப் புகழ் பெற்றது; மழை பெய்தென மரம் குழைத்தது.

மழை பெய்யியர் எழுந்தது; மழை பெய்யியர் பலி கொடுத் தனர்.

மழை பெய்யிய முழங்கும்; மழை பெய்யிய வான் பழிச்சுதும்.

மழை பெய்யின் புகழ்பெறும்; மழை பெய்யின் குளம் நிறையும்.

மழை பெய்யப் புகழ்பெற்றது; மழை பெய்ய மரம் குழைத்தது.

மழை பெய்தற்கு முழங்கும்; மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்.

இறந்தபின் இளமை வாராது; கணவன் இனிதுண்டபின் காதலி முகம் மலர்ந்தது.

கடுத் தின்னாமுன் துவர்த்தது; மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது.

உரைத்தக்கால் உரை பல்கும்; ‘நாம் விடுத்தக்கால்..... அவர் வருதும்என்று உரைத்ததை’ (கலி. 35)

நல்வினைதான் உற்றக்கடை உதவும்; நல்வினைதான் உற்றக் கடை தீவினை வாரா.

நல்வினைதான் உற்றவழி உதவும்; நல்வினைதான் உற்றவழித் தீவினை வாரா.

நல்வினைதான் உற்றவிடத்து உதவும்; நல்வினைதான் உற்ற விடத்துத் தீவினை வாரா.

(தொ. சொ. 234 நச். உரை)

‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’

(பிறர்) கற்பான் நூல் செய்தான்.

‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ (கார். 11)

செல்வம் தருபாக்கு நாம் விரும்புதும்.

‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ (பு.வெ. 99)

(கேள்வர்) நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்.

(தொ. சொ. 231, 234 நச். உரை)

வினைமுதற் கருவி -

{Entry: F06__401}

வினை நிகழ்தற்கு அடிப்படையாகிய கருவி. மூன்றாம் வேற்றுமையுருபாகிய ஒடு என்னும் பெயரிய சொல் யாதொரு பெயரிடத்து வரினும், கருவியாகிய அத்தகைய காரணத்தை யுடையதாய் வரும்.

எ-டு : கொடியொடு துவக்குண்டான் ‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’ ‘மனத்தொடு வாய்மை மொழியின்’ (கு. 295)

இவை முறையே முதற்கருவி, துணைக்கருவி, அகக்கருவியாம்.

கோயில் கற்களால் கட்டப்பட்டது - முதற்கருவி

கோயில் தச்சனால் கட்டப்பட்டது - துணைக்கருவி

கோயில் அரசனால் கட்டப்பட்டது - நிமித்த கருவி

கண்ணாற் கண்டான் - ஒற்றுமைக்கருவி

வாளான் வெட்டினான் - வேற்றுமைக் கருவி

(தொ. சொ. 73 ச. பால.)

வினைமுற்று அடுக்கி வந்து முடிபு கோடல் -

{Entry: F06__402}

வினைமுற்றுப் பெயரைக்கொண்டு முடிந்து பொருளை முற்றுவிக்கும். அவை பலவாக ஒன்றன்வினையாக அடுக்கி இறுதியில் ஒரு பெயரைக் கொண்டு பொருளை முற்றுவித்தலு முண்டு.

எ-டு : ஆடினான் பாடினான் ஓடினான் சாத்தன் - தெரிநிலை வினைமுற்று; நல்லன். அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் - குறிப்புமுற்று.

இவ்விருதிற முற்றும் அடுக்கி வந்து பெயர்கொண்டு முடிந்தன. (தொ. சொ. 429 சேனா., நச். உரை)

வினைமுற்று எச்சம் அடுக்கி வினைகோடல் -

{Entry: F06__403}

‘கட்கினியாள் காதலள் காதல் வகைபுனைவாள்

உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி

இடனறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்’ (நாலடி 394)

எனவும்,

‘காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட

வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்

கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார் நிரைப்பெயர்வும் உண்டு’ (பு.வெ. 23)

எனவும் வருமிவற்றை ஓர் எழுவாய்உருபு அடுக்கித் தமக்கேற்ற ஒரு பெயர்ப்பயனிலையும் வினைப்பயனிலையும் இறுதியில் வர முடிந்தன என்பாருமுளர். அவை முறையே வினைமுற்று - வினையெச்சங்கள் அடுக்கி ‘உணரும் மடமொழி மாதராள்’ எனவும், ‘உளர்ந்தார்’ எனவும் வரும் முடிக்கும்சொல்லுக்கு அடையாய் நிற்றலால் எழுவாயுருபு அடுக்கிய அல்ல என்றவாறு. (நன். 396 இராமா.)

(இனியாளாய் காதலளாய்ப் புனைவாளாய் உடையாளாய் இயல்பினாளாயுள்ள மடமொழி மாதராள் - எனவும், கழலாராய்ச் சிலையாராய் வேலாராய்த் தோற்றத்தாராய் போல்வாராய்க் கேட்டு உளர்ந்தார் - எனவும் உரைக்க.)

வினைமுற்றுச் சொல் திரியினும் பொருள் திரியா வினையெச்சமாய் வருமாறு -

{Entry: F06__404}

‘விண்ணில் தூவியிட்டான் வந்து வீழ்ந்தன’ (சீவக. 894) - தூவியிட

‘பாயு மாரிபோல் பகழி சிந்தினார் ’ (சீவக. 421) - சிந்த

‘செய்யோன் செழும்பொற் சரம் சென்றன சென்ற தாவி’ -செல்ல (சீவக. 2322) (நன். 351 சங்.)

வினைமுற்றுப் பெயர் வகைகள் -

{Entry: F06__405}

வினைமுற்றுப் பெயராவது வினையாலணையும்பெயர். அதன் பலவகைகள் வருமாறு :

1. வினைமுதல் ஆதல் : ‘தார்தாங்கிச் செல்வது தானை’

கு. 767

உலகத்தா ர் உண்டு என்பது’ கு. 850

2. செயப்படுபொருள் : உடுப்பது (உடுக்கப்படுவது), உண்பது
ஆதல் (உண்ணப்படுவது) கு. 166
‘இல்வாழ்வான் என்பான்’ கு. 41 எனப்படுவான்)

3. கருவி ஆதல் : ‘வேல் அன்று வென்றி தருவது (546) வெல்வது அரண் (கு. 748)

4. இடம் ஆதல் : விளைவது நாடு’ (கு. 732), ‘யாம் இருப்பது உறையூர்

5. உறங்குவது போலு ம் சாக்காடு உறங்கி,

விழிப்பது போலும் பிறப்பு’ (கு. 339) தொழிற்பெயர்

6. வினையாலணையும் பெயர் எட்டு வேற்றுமைகளையும் ஏற்று எண்பொருளாதல்

அ) ‘மாணடி சேர்ந்தார் .... நீடு வாழ்வார் கு. 3 : எழுவாய்

ஆ) ஒறுத்தாரை ஒன்றாக வையாரே’ கு. 155 : செயப்படு பொருள்

இ) கொண்டானால் வாழ்ந்தாள் குலமகள்’ : காரணம்

ஈ) ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்’ கு. 156 : கொள்வோன்

உ) ஈன்றாளின் நீங்கினாள் இவன் நிமித்தம் : நீக்கம்

ஊ) கொண்டானது நாடு : கிழமை

எ) கொண்டான்கண் இருந்தாள் குலமகள் : இடம்

ஏ) இரப்பான்! இச்சோற்றை ஏல் : விளி

(இ. கொ. 83)

7. ஈற்றயல் திரிதல் :

ஊன் தின்பார் - தின்பவர் (கு. 252) ; பெண்மை நயவாதான் நயவாதவன் (கு. 147);

செய்வான் - செய்பவன்; (நன். 320) வேந்து செறப்பட்டார் - செறப்பட்டவர் (கு. 895)

8. ஈரெச்சம் ஆதல் :

அ) நடந்த குதிரைகள், பிறந்த பிள்ளைகள்; அன் பெறாத அஃறிணைப்பன்மை அகர ஈற்று முற்றுக்கள் (நடந்தன, பிறந்தன) பெயரெச்சமாயின.

ஆ) உண்பான் வந்தான், ஓதுவான் போயினான் : எதிர்கால வினைமுற்றுக்கள் வான் - பான் - ஈற்று வினையெச்சங்கள் ஆயின.

9. ஈறு இகரம் ஆதல் : இவன் மானேந்தி, இவன் பிறைசூடி, இவன் கங்கையாடி

10. ஈறு இகரமாய்த் திரிந்த வினைமுற்றுப் பெயர்கள், முற்கூறிய வினைமுதல் - செயப்படுபொருள் - கருவி - இடம் - தொழிற்பெயர் - ஆகியவை ஆதல்

அ) மண்ணுணி வெண்ணெய் உண்டான் - எழுவாய்

ஆ) ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீர்நிலை - செயப்படுபொருள்

இ) இவ்விளக்குக் கண்காட்டி, இத்தகடு பேயோட்டி - விளக்கும் தகடும் முறையே கண்காட்டவும் பேயோட்டவும் கருவி ஆயின.

ஈ) இப்பானை நாழிபொங்கி, இம்மரக்கால் குறுணிகொள்ளி - பானையும் மரக்காலும் பொங்கவும் கொள்ளவும் இடமாயின.

உ) அம்பலத் தாடி வந்தான், மயிலேறி நீங்கினான் - வினை யெச்சமாயின. வினையாலணையும் பெயர் வினையெச்சம் போல நின்றன.

11. ‘இன்னும் பலவாம்’ என்றதனால்,

‘தா ம் வீழ்வார்’ (கு. 1103) - தம்மால் வீழப்படுவார்,

‘இல்வாழ்வான் எ ன்பான்’ (கு. 41) எனப்படுவான் -

என உருபும் படுசொல்லும் தொக்கு வருவனவும் கொள்ளப் படும். (இ. கொ. 83)

வினைமுற்று வகை -

{Entry: F06__406}

தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடத்தும் முக்காலமும் பற்றித் தெரிநிலையாகவும் குறிப்பாகவும் வரும் வினைமுற்றுக்களை உயர்திணைத் தெரிநிலைவினைமுற்று உயர்திணைக் குறிப்புவினைமுற்று, அஃறிணைத் தெரிநிலை வினைமுற்று, அஃறிணைக் குறிப்புவினைமுற்று, விரவுத் திணை தெரிநிலை வினைமுற்று, விரவுத்திணைக் குறிப்பு வினைமுற்று என ஆறாகப் பகுப்பர்.

எ-டு : சென்றனன், கரியன்; சென்றது, கரிது; சென்றனை, கரியை - என முறையே காண்க. (தொ. சொ. 247 சேனா., நச். உரை)

வினைமுற்றுத் தெரிநிலையும் குறிப்பும் என இருவகைத்து. தெரிநிலைதானும், தன்மை முன்னிலை படர்க்கை என மூவிடத்தும் வருதலின் மூவகைத்து. அவற்றுள் தன்மைமுற்று உளப்பாட்டுத் தன்மையும் தனித்தன்மையும் என இரு வகைத்து. முன்னிலை முற்று ஒருமையும் பன்மையும் என இருவகைத்து. குறிப்பு வினையும் இவ்வாறே மூவிடத்தும் வருதலும், தன்மைக்கண் ஒருமையேயன்றி உளப்பாட்டுப் பன்மையும் தனித்தன்மைப்பன்மையும் என வருதலும், முன்னிலை ஒருமை - பன்மை - என வருதலும், படர்க்கை ஆண்பால் பெண்பால் என்னும் இருமையொடு அவற்றின் பன்மை - அஃறிணை ஒருமை பன்மை - என ஐம்பாலும் தோன்ற வருதலும் - எனப் பலவகைப்படும் என்க. (தொ. சொ. 195 தெய். உரை)

வினைமுற்று வினையெச்சமாதலும் குறிப்புமுற்று ஈரெச்சமாதலும் -

{Entry: F06__407}

வினைமுற்று வினைச்சொல்லைக்கொண்டு முடிந்து வினை யெச்சமாகி வருதலும், வினைக்குறிப்புமுற்று வினையையும் பெயரையும்கொண்டு முடிந்து வினையெச்சமாகியும் பெய ரெச்சமாகியும் வருதலும் உள.

எ-டு :

‘காணான் கழிந்த வைகலு முண்டு’ (கலி. 37) - காணாது கழிந்த;

‘மோயினள் உயிர்த்த காலை’ அக. 5 - மோந்து உயிர்த்த காலை

‘முகந்தனர் கொடுப்ப’ புற. 33 - முகந்து கொடுப்ப;

‘பெயர்த்தனென் முயங்க’ குறுந். 84 - பெயர்த்து முயங்க;

‘சேர்ந்தனை சென்மோ’- சேர்ந்து சென்மோ.

இவை வினைமுற்று வினையெச்சமாயின.

‘வரிபுனை வில்ல ன் ஒருகணை வில்லனாய். . . . தெரிந்து
தெரிந்துகொண்டு’ (அக. 48) } கொண்டு

‘அமரிய முகத்தள் விளிநிலை முகத்தளாய் ........ கேளாள்
கேளாள்’ (அக. 5) }

‘கையினர் தற்புகழ்ந்து’

(முருகு. 185) } கையினராய்ப் புகழ்ந்து

‘நீர்வார் கண்ணேம் தொழுது’

(புற. 113) } கண்ணேமாய்த் தொழுது

‘நீர்வார் கண்ணை நீயிவண் கண்ணையுடையை-
ஒழிய’ குறுந். 22 } யாய் ஒழிய

இவை வினைக்குறிப்புமுற்று வினையெச்சக் குறிப்பாயின.

‘வெந்திறலினன் விறல்வழுதி’ - திறலினனாகிய வழுதி

‘அஞ்சாயலள் ஆயிழைமுன்’ - சாயலளாகிய ஆயிழை

‘கடல்தானையர் கழல்வேந்தரை’ - தானையராகிய வேந்தரை

‘பெருவேட்கையேன் எற்பிரிந்து’ - வேட்கையேனாகிய என்னை

‘வினைவேட்கையீர் வீரர் வேட்கையீராகிய

வம்மின்’ } வீரர்காள்

இவை வினைக்குறிப்புமுற்றுப் பெயரெச்சக் குறிப்பாயின.

(நன். 351 சங்.)

வினையாலணையும்பெயர் -

{Entry: F06__408}

வினையால் பிறிதொன்றற்கு எய்திய பெயர். வந்தான் - வந்தாள் - வந்தார் - வந்தேன் - வந்தேம் - வந்தாய் - வந்தீர் - என்றாற் போல்வன வினையாலணையும்பெயராய்ப் பிறிது பொருள் உணர்த்தி மூன்றிடத்திற்கும் உரியவாய் நின்றன. இவை பெயராயினபோது உருபேற்றலும், வினையானபோது பெயர் கொண்டு முடிதலும் தம்முள் வேறுபாடு என்க. இருவழியும் காலம் காட்டுதல் கொள்க. வந்தவன் - சென்றவன் - என்றாற் போல்வனவும் வினையாலணையும் பெயரே.

(இ.வி. 188 உரை)

இது செயப்பாட்டுவினையாகப் பொருள்கொள்ள வேண்டிய வகையில், சொல்லளவில் செய்வினையாக வருங்கால், அதன் முன் வரும் எழுவாயான பெயர்ச்சொல் மூன்றாம் வேற்றுமை யுருபுடன் வாராது.

எ-டு : ‘தாம் வீழ்வா ர்’ (கு. 1108) - தம்மால் வீழப்படுவார்; ‘அரம் பொருத பொ ன்’ (கு. 888) - அரத்தால் பொரப்பட்ட பொன்.

செயப்பாட்டுவினையிலேயே வரும் வினையாலணையும் பெயர் ஒரோவழி மூன்றனுருபு பெற்றும் ஒரோவழிப் பெறாதும் வரும்.

‘கேள்வியால் தோட்கப் படாத செவி’ (கு. 418), ‘முகடியால் மூடப்பட்டார்’ (கு. 936) : இவை உருபுபெற்று வந்தன.

‘வேந்து செறப்பட் டவர்’ (கு. 895) : உருபு பெறாது வந்தது.

(பி. வி. 37)

வினையிடத்து விகுதி ஆகாரம் ஓஆதல் -

{Entry: F06__409}

ஆன் - ஆள் - ஆர் என்னும் படர்க்கை ஆண்பால் - பெண்பால் - பலர்பால் - விகுதிகளும், ஆய் என்னும் முனனிலை ஒருமை விகுதியும் செய்யுளில் ஆகாரம் ஓ ஆகும்.

எ-டு :

‘வினவி நிற்றந்தோனே’ (அக. 48),

‘நகூஉப் பெயர்ந்தோளே’ (அக. 248),

‘காடு இறந்தோரே’ (குறு. 216),

‘வந்தோய் மன்ற தெண்கடல் சேர்ப்ப’ (அக. 80)

வந்தோம் சென்றோம் - என வழக்கினுள் வருவன ஏம் ஈற்றின் திரிபு. ஆய் என்பது ஆகாரம் ஓகாரம் ஆவது பெரும்பாலும் உயர்திணைக்கண்ணேயாம். (தொ. சொ. 213, 214 நச்.)

(211, 212 சேனா. உரை)

வினையியல் -

{Entry: F06__410}

வினையியல் தொல்காப்பியத்துச் சொற்படலத்து ஆறாவது இயல். இதன்கண் 57 நூற்பாக்கள் உள. வினையின் இலக்கணம் (200 நச்.), முக்காலம் (201), குறிப்புமுற்று (202), வினைச்சொல் லின் மூவகைப் பாகுபாடு (203), தன்மை வினைமுற்றுக்கள் (204 - 217), அஃறிணை வினைமுற்றுக்கள் (218 - 223), முன்னிலை முதலிய விரவு வினைகள் (224 - 227), முன்னிலை வினைமுற் றுக்கள் (225, 226), வியங்கோள் (228), செய்யுமென்முற்று (229), வினையெச்சப் பாகுபாடும் முடிபும் (230 - 235), பெய ரெச்சங்கள் (236, 237), இருவகை எச்சத்திற்கும் எதிர்மறை முடிபு (238), இடைப்பிறவரல் (239), செய்யுமென்னும் பெய ரெச்சம் ஈற்று உயிர்மெய் கெடுமாறு (240), காலவழுவமைதி (241- 244), ‘இது செயல் வேண்டும்’ என்னும் தொடர்ப் பொருள் (245) வினாவொடு சிவணிய வினை எதிர்மறைப் பொருள் தருதல் (246), காலமயக்கம் (247), செயப்படு பொருள் வினைமுதல் போல வருதல் (248), இறப்பும் எதிர்வும் மயங்குதல் (249), நிகழ்வு ஏனைய காலங்களொடு மயங்குதல் (250) - என்ற செய்திகள் இடம் பெறுவன.

வினையியற்குப் புறனடை -

{Entry: F06__411}

வினைச்சொல் இலக்கணம் அளவில்லாதது, ஆயினும் சொற் குணம் அறிந்து, முதனிலை - தொழிற் பெயர் - முற்று - பெய ரெச்சம் - வினையெச்சம் - என்ற ஐந்தனுள் அடக்கிக் கொள்ளல் வேண்டும். (புறத்தே அடுத்தல் புறன்அடை; புறத்தே நடத்தல் புறநடையாம். ஆகவே புறனடை - புறநடை - என்னும் இரண்டு வரிவடிவமும் வழங்குவன.)

‘பேய் கண் டனைய தொன் றாகி நின்றான்’ (கோவை. 84)

‘புறங்குன்றி கண்டனைய ரேனும்’ (கு. 227)

‘தூண்டில் பொன் மீன் விழுங்கி யற்று ’ (கு. 932)

இவை முற்றுக்கள்.

‘மயில் கண் டன்ன மடநடை மகளிரொடு’ (முருகு. 205)

‘சேய் கண் ட னையன்’ (கோவை. 84)

இவை பெயரெச்சம்.

‘பலர்புகழ் ஞாயிறு கடற் கண் டாஅங்கு ’ (முருகு. 2)

அறிதோ றறியாமை கண்டற்றால்’ (கு. 1110)

இவை வினையெச்சம்

இவற்றிற்கெல்லாம் உரையாசிரியர் பலரும் தத்தமக் கேற்றபடி பொருள் விளங்குதற் கேற்பச் சொல்லெல்லாம் விரித்தெழுதிச் சொற்குணம் வாளா போயினர் - என்கிறார் இலக்கணக்கொத்து நூலாசிரியர்.

‘வெகுளி கண மேனு ம் காத்தல் அரிது’ (கு. 29)

‘புறங்குன்றி கண்டனைய ரேனும் ’ (கு. 227)

இவற்றிற்குப் பரிமேலழகர் ஆனாலும் ஆயினும் எனப்பொரு ளெழுதி வாளா போயினார்.

நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலாயினார் இயற்கை முத னிலை ஆ - போ - என்றே கருதினர். (தொ. சொ. 230 நச். நன். 237) திருவள்ளுவர்க்கும் பரிமேலழகர்க்கும் இவை ஆகு - போகு - என்றலே கருத்து (கு. 371)

குற்றொற்று முதனிலைகளில் சில வினையாகாது, கல்லை உருட்டினான் - வில்லை வளைத்தான் - கொல் செய்த கூர்வாள் - செல் அரித்த ஓலை - சொல் அருஞ்சூல் (சீவக. 53) - புல் தலை காண்பு அரிது (கு. 16) - எனப் பெயராய் நின்றன. (கொல் - கொல் லன்; செல் - கறையான்; சொல் - நெல்)

இவை தொழிற்பெயர் ஆகும் போது, கற்றல் - கற்குதல் - கற்பு - கல்வி - என விகற்பித்து வந்தன. கோறல் - கொல்லுதல் - கொலை - என்பனவும் அன்ன.

இவை பிறவினையாகும் போது, கற்பி - நிற்பி - நிறுத்து - நிறுவு - நிறு - எனவும், செல்வி - செலுத்து - எனவும் வேறுபட்டன.

‘எழுத்து நான்மடியாகுபெயர்’ காண்க.

‘அளவிலை’ என்றதனால், அநவத்தை (யாகிய முடிவின்மை) என்னும் குற்றம் நேராது ‘ஐந்தனுள் அடக்குக’ என்றார். வினை நான்கு, மூன்று என்பாருமுளர். (இ. கொ. 86 உரை)

‘வினையின் ஆகிய வினைத்தொகை’ என்றல் பொருந்தாமை -

{Entry: F06__412}

‘பெயரின் ஆகிய பெயர்த்தொகையும் உள’ என்றதனால், வினையினாகிய வினைத்தொகையும் கொள்ளப்படும் என்று கூறுதல் பொருந்தாது. வினைத்தொகையின் முன்மொழி யாகிய வினைப்பகுதியைத் தொல்காப்பியனார் தொழிற் பெயர் என்றார் ஆதலின், அம்முன்மொழியும் பெயராய்ப் பெயரினாகிய தொகையாய்விடும். கொல்யானை என்ற வினைத் தொகையில் முன்மொழி : தொழிற்பெயர் ; பின்மொழி: பொருட்பெயர். ஆகவே வினைத்தொகையும் ‘மதிமுகம்’ போலப் பெயரினாகிய தொகையே ஆம். (தொ. சொ. 67 சேனா. உரை)

வினையின் திணை பற்றிய மூவகை -

{Entry: F06__413}

உயர்திணைவினை - தன்மை, படர்க்கை ஆண்-பெண்- பலர்பால் வினைகள்

அஃறிணைவினை - படர்க்கை ஒன்றன்பால்-பலவின்பால்
வினைகள்.

விரவுவினை - முன்னிலை - வியங்கோள் - வினையெச்சம் - பெயரெச்சம் - இன்மைசெப்பல் -வேறு - செய்ம்மன- என்பன.

எ-டு : உண்டான்-கரியன், சென்றது-செய்யது, வந்தனை - வெளியை - என முறையே காண்க. (தொ. சொ. 203 நச். உரை)

வினையின் தொகுதி -

{Entry: F06__414}

அறுவகைத் தொகைகளுள் வினைத்தொகையினைத் தொல் காப்பியம் ‘வினையின் தொகுதி’ என்ற பெயரான் வழங்கி யுள்ளது. வினையின் தொகுதியாவது வினைப்பகுதி தன்னை அடுத்து வரும் பெயருடன் சேர்ந்திருத்தலாம்.

வினைச்சொல் தொகும்போது காலம் தோன்றவே தொகும். காலம் தோன்றத் தொகுதல் என்பது எக்காலும் காலமுடைய வாய் இயலுதல். கொல்யானை என்பது கொன்ற யானை - கொல்லாநின்ற யானை - கொல்லும் யானை - என முக்காலத் திற்கும் அதுவே வாய்பாடு; பிறிதில்லை. கொல்யானை என்றால் நிகழ்காலமும் அறியலாம்; கொல்லிய ஓடுவதனைக் கண்டு கொல்யானை என்றால் எதிர்காலமும் என்பது அறியலாம். (தொ. சொ. 410 இள. உரை)

வினைத்தொகை காலத்தின்கண் தொகும் என்றவாறு. ‘காலத்தியலும்’ எனப் பொதுவகையால் கூறிய அதனான் மூன்று காலமும் கொள்க. ‘தொகுதி காலம் காட்டும்’ எனவே, அவ்வினை பிரிந்து நின்றவழித் தோன்றாது; தொக்கவழித் தொகையாற்றலான் காலம் தோற்றும் என்பதாம். வினை என்பது வினைமுதனிலையாய் உண் - தின் - கொல் - செல் - என்பன. வடநூலார் இவற்றைத் தாது என்ப.

பெயரெச்சம் நின்று தொக்கது வினைத்தொகை என்றார் உரையாசிரியர் எனின், தொல்காப்பியனார் வினைத்தொகை யைப் பிரித்துப் புணர்க்கப்படாது, வழங்கியவாறே கொள்ளல் வேண்டும் என்றது, பிரித்தவழித் தொகைப்பொருள் சிதைத லானன்றே? ‘கொன்ற யானை’ என விரித்தவழியும் அப் பொருள் சிதைவின்றேல், அதனைப் ‘பிரித்துப் புணர்க்கப் படா’ என்று கூறல் வேண்டா. ஆகுபெயர் உணர்த்தியவழி, வினைத்தொகை யுளப்பட ’இருபெயரொட்டு’ என்றார் ஆகலானும் வினை நின்று தொகுதல் தொல்காப்பியனார்க்குக் கருத்தன்று. (வினைத்தொகையின் முதனிலை, கொல் - செல் - என்றாற் போல்வனவாகிய தொழிற்பெயர்களாம்.) (தொ. சொ. 415 சேனா. உரை)

வினைச்சொல்லின் ஈறாய்த் தொக்கு நிற்கும் எழுத்துக்கள் காலத்தின்கண்ணே தொக்கு நிற்கும். வினை என்றது, உண் -தின்- முதலிய முதனிலைகளை. அவை ஈண்டு ஆகுபெயராய்த் தம்மால் பிறந்த பெயரெச்சத்தை உணர்த்தின. வினையின் தொகுதியாவன : அகரமும், நில்-நின்று - என்பனவும், உம்மும் ஆம். அவை காலத்து இயலுதலாவது கொல்யானை எனத் தொகுத்துக் கொன்ற யானை என விரித்தால் செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டுத் தகரஈறு இறந்தகாலம் உணர்த்து தலும், கொல்லாநின்ற யானை - கொல்கின்ற யானை - என விரித்தால் ஆநின்ற - கின்ற - என்னும் பெயரெச்சம் நிகழ்காலம் உணர்த்துதலும், கொல்லும் யானை - என விரித்தால் செய்யும் என்னும் பெயரெச்சத்து உம்ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்துதலும் ஆம்.

கொல்யானை என்பது, அக்காலத்து அஃது உதிரக் கோட்- டொடு வந்ததேல் இறப்பும், அதன் தொழிலைக் கண்டு நின்றுழி நிகழ்வும், அது கொல்ல ஓடுவதனைக் கண்டுழி எதிர்வும் விரியும்.

’கொல்யானை’ என்பதன்கண் இரண்டு ஈறும் ஒருங்கே தொக்கு நிற்றலின் ‘தொழில் தொகுமொழி’ எனப்பட்டது; அஃதாவது செய்யும் - செய்த - என்னும் பெயரெச்சச்சொற் களுடைய காலம்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற் கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்குநின்ற சொற்கள் என்றவாறு. இங்ஙனம் இரண்டு பெயரெச்ச வாசகமும் சேரத் தொக்கு நிற்றலால், தொல்காப்பியனார் வினைத்தொகையை இரு சொல்லாக்கிப் புணர்க்கலாகாது என்றார். பெயரெச்சம் நின்று தொக்கது என்னாது, பெயரெச்சப் பொருளவாய் நின்று இரண்டு சொல் தொகும் என்று சேனாவரையர் கூறியது பொருந்தாது. வினைத் தொகை தொகுங்கால், பெயரெச்சம் போலத் தனக்குரிய ஆறு பொருட்கண்ணும் தொகும்.

எ-டு : ஆடரங்கு - நிலன்; செய்குன்று - பொருள்; புணர் பொழுது - காலம்; அரிவாள் - கருவி; கொல்யானை - வினைமுதல்; செல்செலவு - வினை. (தொ. சொ. 415 நச். உரை)

வினையின் தொகுதி காலச்சொல்லுடன் நடக்கும். வினைச் சொல்லாவது தொழிலும் காலமும் பாலும் உணர்த்தலின், பாலுணர்த்தும் சொல் முற்றுச்சொல்லாகி நின்று தொகை நிலை ஆகாது. வினையெச்சம் முற்றுவினைச்சொல்லோ டல்லது முடியாது. ஆகவே, தொகுவதும் விரிவதும் பெய ரெச்சமே. அது தொகுங்காலத்துக் காலப் பொருளை உணர்த்தும் சொல்லே தொகுவதும் விரிவதுமாம். தொழிலும் பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப் பட்டதனை (எ-டு: கொல்யானை) வினைத்தொகை என்றார். கொல்லும் யானை, கொன்ற யானை - என்றாற் போல விரிக்க. (தொ. சொ. 410 தெய். உரை)

வினைத்தொகையைக் காலத்தொகை என்னாது ‘வினையின் தொகுதி’ என்றது, கால எழுத்தொடு பெயரெச்சவிகுதி தொகு தலான் என்க. (சொல். 415. குறிப்பு)

வடமொழியில் தேவார்த்தம் - கும்பகார : என்பனவற்றைப் பிரிவில் ஒட்டாகிய நித்திய சமாசனாகக் கொண்டமை போலவே, வினைமுதனிலை அடுத்த பெயரினாகும் வினைத் தொகையையும் சேனாவரையர் நித்திய சமாசனாகக் கொண்டார். (சொல். குறிப்பு)

வினையின் தொகுதி காலத்து இயலுதல்’ -

{Entry: F06__415}

‘வினையின் தொகுதி’ நச். உரைப்பகுதி காண்க.

‘வினையின் தோன்றும் பாலறி கிளவி’ -

{Entry: F06__416}

னகரம் ஆண்பால், ளகரம் பெண்பால், ரகரம் - ப - மார் - என்பன பலர்பால், து-று-டு - ஒன்றன்பால், அ-ஆ- வ- பலவின் பால், கு-டு-து-று-என்-ஏன்-அல் - என்பன தன்மையொருமை, அம்-ஆம்-எம்-ஏம்-கும்-டும்-தும்-றும்- தன்மைப்பன்மை, ஐ-ஆய்-இ- முன்னிலையொருமை., இர்-ஈர்-மின் - முன்னிலைப் பன்மை - என இவற்றை உணர்த்த வல்லவனவாம்.

எ-டு : அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார் - உண்ப - உண்மார், அது உண்டது - போயிற்று - குண்டுகட்டு, அவை உண்டன - உண்ணா - உண்குவ, யான் வருகு - உண்டு - வருது - சேறு - வருவென் - வருவேன் - வருவல், யாம் உண்பம் - உண்பாம் - உண்பெம் - உண்பேம் - உண்கும்- உண்டும் - வருதும்- சேறும், நீ உண்டனை - உண்டாய் - உண்ணுதி, நீயிர் உண்டனிர் - உண்டீர் - உண்மின். (தொ. சொ. 11 நச். உரை)

வினையின் பகுப்பு -

{Entry: F06__417}

இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்கால முற்றுவினையும், ஏவல் முற்றுவினையும், வியங்கோள் முற்றுவினையும் என வினைமுற்று மூன்றும்; பெயரெச்சம், வினையெச்சம் என எச்சங்கள் இரண்டும்; வினைச்சொல் அல்லவாயினும் வினையைப் போல நடந்து குறிப்பினால் வினையியல் தொழிலைக் காட்டும் வினைக்குறிப்பு ஒன்றும்; ஆகத் தெரிநிலை வினை - குறிப்புவினை - எனப் பொதுவகையால் இருவகைப்பட்டும், சிறப்புவகையால் அறுவகைப்பட்டும் வினையின் பகுப்பு அமைந்துள்ளது.

எ-டு : வந்தான் - வருகின்றான் - வருவான் - வா - வருக; வந்த - வந்து; நல்லன், நன்று, நல்ல. (தொ. வி. 103 உரை)

‘வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள் என் இறுதி’ -

{Entry: F06__418}

வினைச்சொல்லின்கண்ணும் பண்புச்சொல்லின்கண்ணும் ஆராயத் தோன்றும் ஆள்ஈற்றுப் பெயர். இது பெண்பால் வினையாலணையும் பெயர். இப்பெயர் விளிக்குமிடத்து ‘ஆள்’ ஆய் எனத் திரியும்.

எ-டு : நின்றாள் : வினைப்பெயர்; கரியாள்; பண்புப்பெயர். (இவற்றின் விளி முறையே நின்றாய், கரியாய் - என்பன.) (தொ. சொ. 146 சேனா. உரை)

வினையெச்ச இயல்பு -

{Entry: F06__419}

செய்து செய்பு செய்யா செய்யூ செய்தென செய செயின் செய்யிய செய்யியர் என்னும் வாய்பாடுகளானும், வான் பான் பாக்கு - முதலிய ஈறுகளானும், தொழிலும் இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்காலங்களும் முறையே தோற்றி, வினைமுற்றுதற்கு வேண்டும் பால்ஒன்றும் தோற்றாது, அப்பாலுடனே வினை ஒழிய நிற்பன தெரிநிலை குறிப்பு வினையெச்சங்களாம். ஆகவே வினையெச்சம் காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது வினைகொண்டு முடிவது. ‘வினை’ எனப் பொதுப்படக் கூறின மையின் வினை வினைக்குறிப்பின் விகற்பங்களும் வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் கொள்க.

எ-டு : உண்டு - உண்குபு - உண்ணா - உண்ணூ- வந்தான், வாரான், வந்த, வந்து, வந்தவன், வருதல்; அறமன்றி - அறமல்லால் - அருளின்றிச் - செய்தான், செய்யான், செய்த, செய்து, செய்தவன், செய்தல்; இலன், இல்லாத, இல்லாது, இல்லாதவன், இன்மை, இல்லாமை.

செய்து செய்பு செய்யா செய்யூ என்னும் வாய்பாடுகளும், வான் பான் பாக்கு - ஈற்று வினையெச்சங்களும் தம் வினைமுதல் வினையைக் கொண்டு முடியும். ஏனைய ஐந்து வாய்பாடு களும் பிற வினைமுதல் வினையையும் கொண்டு முடியும்.

வருமாறு : சாத்தன் உண்டு வந்தான், உண்ணுபு வந்தான், உண்ணா வந்தான், உண்ணூ வந்தான், பாடுவான் வந்தான், உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான், எனவும்; சாத்தன் உண்டெனப் பசி தீர்ந்தான், சாத்தன் உண்டெனத் தந்தை மகிழ்ந்தான் முதலாகவும் முறையே காண்க.

செய்து செய்பு செய்யா செய்யூ செய்தென - என்னும் ஐந்து வாய்பாடுகளும் இறந்த காலமும், செய என்னும் வாய்பாடு ஒன்றும் நிகழ்காலமும், ஏனைய ஆறு வினையெச்சங்களும் எதிர்காலமும் காட்டும்.

கோழி கூவப் பொழுது புலர்ந்தது : கோழி கூவுதலும் பொழுது புலர்தலும் இடையீடின்றி ஒரேகாலத்தில் நிகழ்தலின், செய என்னும் இவ்வாய்பாடு நிகழ்காலம் காட்டிற்று என்க. (நன். 342, 344)

வினையெச்ச எதிர்மறை விகற்பங்கள் -

{Entry: F06__420}

கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி’ (கலி.கடவுள்)

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் (கு. 701)

ஈதல் இயையாக்கடை ’ (கு. 230)

என இவ்வாறு எதிர்மறை விகற்பங்களாய் வருவனவும், இத் தொடக்கத்துக் குறைச்சொல்லாய் வினையெஞ்ச நிற்பனவும் எல்லாம் வினையெச்ச எதிர்மறையாம். (நன். 343 சங்)

வினையெச்சங்களுக்கு எச்சவினை -

{Entry: F06__421}

வினையெச்சங்களுக்கு எஞ்சி நிற்கும் வினைகள் ஆறுவகைப் படும். அவை தெரிநிலைமுற்றும் குறிப்புமுற்றும் பெயரெச்ச மும் பெயரெச்சக்குறிப்பும் வினையெச்சமும் வினையெச்சக் குறிப்பும் ஆம்.

எ-டு : ஓதி வந்தான் , ஓதி நல்லன் , ஓதிப் பெற்ற பொருள், ஓதி நல்ல சாத்தன், உழுது பயன்கொண்டு , உழுதன்றி உண்ணார் - என முடிக்கும் வினைகள் தெரிநிலைமுற்று முதலாக முறையே வந்தவாறு காண்க. (கொ. சொ. 230 நச். உரை)

வினையெச்சப் புறனடை

{Entry: F06__422}

தம் வினைமுதல்வினை கொள்ளும் வினையெச்சங்கள் சினை வினையாயின் தம் முதல்வினையைக் கொண்டு முடிதலும் தம்வினைகொள்ளுதலேயாம். வருமாறு :

சாத்தன் கால் இற்று வீழ்ந்தான் - என்புழி, இறுதல் - காலினது தொழில், வீழ்தல் - சாத்தனது தொழில்; இற்று என்னும் செய் தென் எச்சம், முதலாகிய பிற வினைமுதலது வினையைக் கொண்டது. சினையொடு முதற்கு ஒற்றுமையுண்டாதலின் அதுவும் தன் வினைகொண்டு முடிந்ததாகவே கருதப்படும். (நன். 345 )

‘வினைக்குறை சொல் திரியினும் தாம் பொருள் திரியாமை’ காண்க. (நன். 346)

வினையெச்சம் -

{Entry: F06__423}

பத்துவகை எச்சங்களுள் வினையெச்சமும் ஒன்று. இஃது ஒரு வினைமுற்றினையோ வினையெச்சத்தையோ பெயரெச்சத்தை யோ தொழிற்பெயரையோ வினையாலணையும் பெயரையோ கொண்டு முடிந்தே தன் பொருள் முற்றும். இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாய்த் தெரிநிலையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டுவனவாய்ச் சிறுபான்மை வினையெதிர் மறுத்தும் வருவன வினையெச்சங்களாம். வினையெச்சம் குறிப்புவினையைக் கொண்டு முடியுங்கால் முடிக்கும்வினை ஆக்கம் பெறும்.

எ-டு : உண்டு வந்தான், உண்டு மகிழ்ந்து வந்தான், உண்டு வந்த பகல், உண்டு வருதல், உண்டு வந்தவன், மருந்து உண்டு நல்லன் ஆயினான், உண்ணாது வந்தான் - என முறையே காண்க. (தொ. சொ. 432 நச். உரை)

வினையெச்சம் அடுக்கி வந்து வினைகோடல் -

{Entry: F06__424}

வினையெச்சம் ஒருவாய்பாட்டானும் பலவாய்பாட்டானும் அடுக்கி வந்து வினைகொண்டு முடியும்.

எ-டு : உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் - ஒரு வாய்பாடு
உண்டு பருகூஉத் தின்னுபு வந்தான் - பல வாய்பாடு

(தொ. சொ.233 சேனா. உரை)

வினையெச்சம் ஈறு திரிதல் -

{Entry: F06__425}

‘உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய, யாவிரி நீழல்’ (குறு. 232)

‘ஒடித்து உண்ண’ என்னும் செய என் எச்சம் செய்து என் எச்சமாக ‘ஒடித்து உண்டு’ எனத் திரிந்தது. ‘பெயர்த்தனென் முயங்க’ (குறு. 84) - ‘பெயர்த்து முயங்க’ என்னும் செய்து என் எச்சம் ‘பெயர்த்தனென் முயங்க’ என முற்றாகத் திரிந்தது என்றார் உரையாசிரியர். (தொ. சொ. 457 சேனா. உரை)

வினையெச்சம் காலம் காட்டல் -

{Entry: F06__426}

வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். வினையெச்சம் பாலுணர்த்தாது காலம் காட்டி நிற்கும். செய்து இறந்தகாலமும், செய்யூ இறந்தகாலமும் நிகழ்காலமும், செய்யா இறந்தகாலமும் நிகழ்காலமும், செய்பு மூன்று காலமும் காட்டும். செய்தென இறந்தகாலப் பொருட்டாயினும் விரைவு குறித்தலானும் திரிந்து முடிதலானும் பொருள் வேறுபாடுடையது. செய்யியர் எதிர்காலம் காட்டும். செய்யிய வாய்பாடு வேற்றுமையுடைத் தாதலான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப் பட்டது. செயின் எதிர்காலம் பற்றி வரினும் பொருள் வேறுபாடுடைத் தாதலின் வேறு ஓதப்பட்டது. செய என்பது மூன்று காலத்திற்கும் பொதுவாகிப் பொருள் வேறுபாடுடைத்து. செயற்கு எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது. (தொ. சொ. 222 தெய். உரை)

எ-டு :

‘படுமகன் கிடக்கை காணூஉ...... உவந்தனளே’ (புறநா. 278); செய்யூ : இறப்பு ‘நிலம்புடையூஉ எழுதரும் குஞ்சரம்’ (பதிற்.); செய்யூ : நிகழ்வு

‘பச்சிலை இடையிடுபு தொடுத்த’ (புற. 33); செய்பு : இறப்பு

‘வாடுபு வனப்போடி வணங்கிறை வளையோட’ (கலி.16); செய்பு : நிகழ்வு.

‘உண்ணுபு வந்தான்’ செய்பு : எதிர்பு. (தொ. சொ. 224 தெய். உரை)

வினையெச்சம் சொல்லானும் பொருளானும் வேறுபடுதல் -

{Entry: F06__427}

சொல்லான் வேறுபடுதல் : செய்து செய்யூ - என்பன உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப் பிற ஈற்றானும் வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச்சொல்லாகி வருதலும் - என இரண்டாம்.

பொருளான் வேறுபடுதல் : ஒருவாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும், எல்லா வினையெச்சமும் பிரித்து நோக்குவார்க்குப் பெரும்பான்மை யும் வேற்றுமைப்பொருளாகித் தோன்றலும் - என இரண்டாம்.

செய்து என் எச்சம் ஓடி, போய் - என ஈறு திரிந்தது.

செய்யூ என் எச்சம் செய்யா - என ஈறு திரிந்தது.

மோந்து : ‘மோயினள் உயிர்த்த காலை’ - என ஈறு திரிந்தது.

கொய்ய : கொய்குவம் சென்றுழி’ - என ஈறு திரிந்தது.

(ஒடித்து) உண்ண எஞ்சிய யா : ‘(ஒடித்து) உண்டு எஞ்சிய யா’ - என ஈறு திரிந்தது.

மருந்துண்டு நோய் தீர்ந்தான் : உண்டலான் - என வேற்றுமைப் பொருள் பட்டது.

மழை பெய்ய மரம் குழைத்தது : பெய்தலான் என வேற்றுமைப் பொருள் பட்டது. (தொ. சொ. 446 தெய். உரை)

முற்றுச்சொல் எச்சமாகி வருதலும் ஈறு திரிதலும் தொடர் மொழிக்கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலைமை நோக்கி அறிந்து கொள்ளப்படும். வருமாறு :

‘மோயினள் உயிர்த்த காலை’ - மோந்து

ஞாயிறு பட்டு வந்தான் - பட (449 தெய். உரை)

செய்து - செய்யூ (செய்யா) - செய்பு - செய்தென - என்னும் நான்கும் இறந்த காலத்தன. செய்யிய செய்யியர் - செயின் - செய - செயற்கு - என்னும் ஐந்தும் எதிர்காலத்தன. செய என்பது எதிர்காலத்ததே அன்றிப் பிற காலத்தும் சிறுபான்மை வரும். செயற்கு அத்துணை வழக்குப் பயிற்சி யுடையதன்று.

செய்து என்பதன் ஈறு, செய்தல் என்னும் தொழிற்கண்ணே செய்து எனத் துகர ஈறாகவும், உண்டல் என்னும் தொழிற்- கண்ணே உண்டு என டுகர ஈறாகவும், தின்னல் என்னும் தொழிற்கண்ணே தின்று என றுகர ஈறாகவும், புகுதல் என்னும் தொழிற்கண்ணே புக்கு எனக் குகர ஈறாகவும், ஓடல் என்றும் தொழிற்கண்ணே ஓடி என இகர ஈறாகவும், தூவுதல் என்னும் தொழிற்கண்ணே தூய் என யகர ஈறாகவும் இவ்வாறு வேறுபட வரும்.

செய்யூ - செய்பு - செய்தென - என்ற மூன்றும்,

உண்ணூ உண்குபு உண்டென, உழூஉ உழுபு உழுதென,

தின்னூ தின்குபு தின்றென, புகூஉ புகுபு புக்கென,

ஓடூஉ ஓடுபு ஓட்டென, தூஉ தூபு தூயென - என வேறுபடாது வரும்.

செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பது ஒரு நிகழ்கால வாய்பாடு. செய்யா என்பது இறந்தகால விரைவுப்பொருட்டு. செயின் என்பதற்குச் செய்தால் என்பதும் ஒரு வாய்பாடு.

மழை பெய்தக்கால் : (செய்தக்)கால் என்ற வாய்பாட்டு வினையெச்சம்.

‘நுணங்கிய கேள்வியர் அல்லால்’ (கு. 419) : அன்றி என்பது போல ‘அல்லால்’ என்பதும் செய்து என் எச்சத்திரிபு வாய்பாடு.

செய என் வினையெச்சம் வருமாறு:

மழை பெயக் குளம் நிறைந்தது - காரணப்பொருட்டு

குளம் நிறைய மழை பெய்தது - காரியப்பொருட்டு

மழை பெய எழுந்தது - அதற்பொருட்டு

மழை பெய்யச் சாத்தன் வந்தான் - உடனிகழ்ச்சிக்கண்
இடப்பொருட்டு.

(தொ. சொ. 230 கல். உரை)

கையிற்று வீழ்ந்தான் : இதனைக் கையிற வீழ்ந்தான் - எனச் செய என் எச்சத்திரிபாகக் கொள்ளல் கூடாது. திரிபாயின் இறுதல் தொழில் கையதும், வீழ்தல் தொழில் முதலதும் ஆம். இறுதலும் வீழ்தலும் கையினுடையவாகக் கூறுகின்ற தாயின், அதனுள் அடங்காது. அதன் பொருள் கையிற்று வீழ்ந்த வாறாகக் கொள்க. கால் அழுகி வீழ்ந்தான் என்பதும் அது.

சாத்தனது கை யிற்று வீழ்ந்தது என வினைமுடிபுள்வழி, சாத்தனது கை யிற்று வீழ்ந்தான் என்று கூறுதல் வழு, அம்முதல் தானும் எழுவாயாகிய வழியதே இம்முடிபு என்க. (தொ. சொ. 233 கல். உரை)

வினையெச்சம், வினைமுற்று: ஒன்று மற்றதாய்த் திரிதல் -

{Entry: F06__428}

அன்றி - இன்றி - என்ற வினையெச்சம் உகர ஈறாகி வினை முற்றாய்த் திரியும் என உயிரீற்றுப் புணரியலில் நன்னூலார் குறிப்பிட்டதனால், வினையெச்சம் வினைமுற்றாய்த் திரிதல் வேண்டும் என்பதும் வினைமுற்று வினையெச்சமாய்த் திரிதல் ஏற்றதன்று என்பதும் போதரவும், பின் வினையியலுள் ‘வினை முற்றே வினையெச்சமாகத் திரியும்’ என்று குறிப்பிட்ட செய்தி, இடையில் நேர்ந்த தமோகுணத்தால் கூற வேண்டிய முறையை மறந்து கூறியதாகும் என்பது இலக்கணக்கொத்து நூலார் கருத்து. (நன். 173, 351) இக்குறை மேற்கூறிய நூலாசிரியருக்கு உள்ளது போல ஏனை உரை யாசிரியர் போதகாசிரியர் ஆகியோர்க்கும் உண்டு என்பதும் இவர் கருத்து. (இ. கொ. 6)

(வினைமுற்றே வினையெச்சமாகத் திரியும் என்பது சேனா வரையர் முதலியோர் கருத்து. வினையெச்சமே வினைமுற் றாய்த் திரியும் என்பது நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்து.)

வினையெச்சம் வேறு பல் குறியது ஆதல் -

{Entry: F06__429}

செய்து செய்யூ - என்பன உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப் பிற ஈற்றான் வருதலும் (ஓடி, போய்; உண்ணா) உள. எச்சச் சொல்லாக வரற்பாலது முற்றுச்சொல்லாக வருதலும் (மோந்து : ‘மோயினள் உயிர்த்த காலை’ அக. 5) உண்டு.

இவை சொல்லான் வேறுபடுதல்.

ஒரு வாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய் பாட்டாற் கூறுதலும், எல்லா வினையெச்சமும் பிரித்து நோக்குவார்க்குப் பெரும்பான்மையும் வேற்றுமைப்பொரு ளாகத் தோன்றுதலும் பொருளான் வேறுபடுதலாம்.

எ-டு : ‘உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய யா’ என்புழி, (ஒடித்து) உண்ண என்னும் செய என்னும் வாய்பாடு ‘உண்டு’ என ஈறு திரிந்தது.

மருந்துண்டு நோய் தீர்ந்தது - ‘உண்டலான்’ என வேற்றுமைப் பொருள் பட்டவாறு. (தொ. சொ. 447 தெய். உரை)

வினையெச்ச முடிபு (1) -

{Entry: F06__430}

‘அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார், வழுக்கியும் கேடீன் பது’ (கு. 165) கேடு பயத்தற்கு அழுக்காறு தானே அமையும்; பகைவர் கேடு தருதல் தப்பியும் (கேடு பயத்தற்கு) அது தானே அழுக்காறுடையார்பால் வரும் என்று பொரு ளுரைக்க வேண்டுதலின் ‘வரும்’ என்பது எஞ்சி நின்றது. ஈண்டு வினைமுற்று எஞ்சி நின்றவாறு.

‘அற் றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன், பெற்றான் பொருள் வைப் புழி’ (கு. 226) ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆம் என்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது. (தொ. சொ. 425 தெய். உரை)

வினையெச்ச முடிபு (2) -

{Entry: F06__431}

சிறப்புவகையான் செய்து என்னும் பொருளவாய் வரும் வாய்பாட்டு வினையெச்சங்களுக்கு எஞ்சி நிற்கும் வினைகள் அறுவகைப்படும்.

எ-டு : ஓதி வந்தான் - தெரிநிலை வினைமுற்று

ஓதி நல்லன் - குறிப்பு வினைமுற்று

ஓதிப் பெற்ற பொருள் - பெயரெச்சம்

ஓதி நல்ல சாத்தன் - பெயரெச்சக் குறிப்பு

‘உழுது பயன்கொண்டு’ - வினையெச்சம்

உழு தன்றி உண்ணான் - வினையெச்சக் குறிப்பு

இவ்வெஞ்சி நிற்கும் வினைகளை, செய்து - செய்யூ - செய்பு - செயின் - செய - என்பனவற்றிற்கும் - பிறவற்றிற்கும் ஏற்ற பெற்றி கொள்க. (தொ. சொ. 230 நச். உரை)

வினையெச்சமுற்று -

{Entry: F06__432}

‘மோயினள் உயிர்த்த காலை’ (அக.5) என்பது மோந்து உயிர்த்தகாலை எனப் பொருள்படும். இது போல்வனவற்றை முற்றெச்சம் என்பது சேனாவரையர் கருத்து. நன்னூலும் இலக்கண விளக்கமும் இதே கருத்தின. வினையெச்சமுற்று என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்னுமிவர்களது கருத்து. தெய்வச்சிலையார் இலக்கணக்கொத்து பிரயோக விவேக ஆசிரியர், புறநானூற்று உரையாசிரியர், பதிற்றுப் பத்தின் பழைய உரையாசிரியர் முதலியோரும் இக்கருத்தினரே.

விரவுவினையாகிய வினையெச்சமும் பெயரெச்சமும் பாலும் இடமும் காட்டி நிற்றலின் முற்று எச்சமாய்த் திரிந்தது என்னாமோ எனின், என்னாம். ‘அளிநிலை பொறாஅது’ என்னும் அகப்பாட்டில் (5), ‘ஒண்ணுதல் குறுக வந்து, முகம் மாறிக் கொள்ளாது, தனித்து, வடுக்கொளுத்தி, நக்கு, முகத்தினுரைத்து, ஒற்றி, மோந்து உயிர்த்த காலை’ என வினை யெச்ச அடுக்காச் செய்யுள் செய்கின்றவர், தம் பேரறிவுடைமை தோன்ற, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்களுள் சிலவற்றைத் திரித்துப் பாலும் இடமும் காட்டி நிற்பச் செய்யுள் செய்தாராகலின். இனிப் பெயரெச்ச வினைக் குறிப்புமுற்றிற்கும், ‘அவர் தம்முளான் தருமதத்தன் என்பான்’ (சீவக. 242) - அவர் தம்மிடத்தே நின்ற தருமதத்தன், ‘புரிமாலையர் பாடினியரும்’ புரிமாலை அணிந்த பாடினியர் எனப் பெயரெச்சம் விரிந்தவாறு காண்க.

“விரவுவினை பிரிபு வேறுபடூஉம் செய்தியவாய்ப் பிரிந்து நிற்குங்கால், பாலும் இடமும் காட்டும் தன்மையும் தம்முள்ளே உடைய ஆயினமையின், அவ்வெச்சமும் முற்றாய்த் திரிந்தது என்பது உணர்த்துதற்கன்றே இடையிடையே வினையெச்ச வாய்பாடும் உடனோதி எல்லாவற்றிற்கும் ஒருவினையே முடிவு கூறினர். அன்றியும் முற்று எச்சமாய்த் திரிந்து அடுக்கியும் தனித்தும் வினைகோடல் ஆசிரியர் கருத்தாயின், சிறுபான்மையாய் வினைகொள்ளும் முற்றிற்கும் சூத்திரம் செய்தாற்போல, முற்று வினையெச்சமாதற்கும் சூத்திரம் செய்திருத்தல் வேண்டும்; அங்ஙனம் செய்யாமையின் வினை யெச்சமே முற்றாய்த் திரிந்தது எனலே பொருத்த முடைத்து. இன்றி என்னும் குறிப்புவினையெச்சம் இன்று எனத் திரிந்து பின்னும் அதன் பொருளையே உணர்த்தி நிற்றலின் (எ. 237), இதனானும் எச்சமே முற்றாய்த் திரிந்தது என்பது பெறப்படும்”. (தொ. சொ. 457 நச். உரை)

எ-டு : ‘பெயர்த்தனென் முயங்க’ (குறு. 84) - வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று. ‘ சேந்தனை சென்மோ’ - வினையெச்ச முன்னிலைத் தெரிநிலைமுற்று. ‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5)- வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று. ‘கொய்குவம் சென்- றுழி’ (அக. 48) - வினையெச்ச உளப்பாட்டுத்தன்மைத் தெரிநிலைமுற்று. ‘வறுவியேன் பெயர்கேன்’ (புற. 209) - வினையெச்சத் தன்மைக் குறிப்புமுற்று. ‘வெள்வேல் வலத்திர்........’ (கலி. 4) - வினையெச்ச முன்னிலைக் குறிப்புமுற்று. ‘சுற்றமை வில்லர் சுரிவள ர் பித்தையர் அற்றம்பார்த் தல்கும் - வினையெச்சப் படர்க்கைக் குறிப்புமுற்று. ( நச். உரை)

வினையெச்ச வாய்பாடல்லாத பிற ஈறுகள் -

{Entry: F06__433}

‘அற்றால் அளவறிந் துண்க’ (கு. 943) - ஆல்

‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ (நான்.26)- பான்

‘நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ (கலி. 39) - உம்

‘கூறாமல் குறித்ததன்மேல் செல்லும்’ (கலி. கட.) - மல்

‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (கு. 701) - மை

‘விருந்தின்றி உண்ட பகல்’ (திரி. 44) - இன்றி

‘நாளன்று போகி’ (புறநா. 124) - அன்று

‘இனிக்கொண்டான், அணிக்கொண்டான்’ - இனி, அணி

(தொ. சொ. 226 தெய். உரை)

வினையெச்ச வாய்பாடுகள் (1) -

{Entry: F06__434}

செய்து செய்யூ செய்பு செய்தென செய்யிய செய்யியர் செயின் செய செயற்கு - என்பனவும், செய்யூ என்பதன் திரிபாகிய செய்யா என்பதும், பின் - முன் - கால் - கடை - வழி - இடத்து - என்பனவும், ‘அன்ன மரபின்’ என்றதனான் கொண்ட பான் - பாக்கு - வான் - வாக்கு - என்பனவும், வினையெச்ச உடன்- பாட்டு வாய்பாடுகளாம். இனி, இவற்று எதிர்மறையாவன வருமாறு:

செய்யாது என்பது, செய்து - செய்யூ - செய்யா - செய்பு - என்பவற்றின் மறை.

செய்யாது - செய்யாமை - என்பன, செய்தென என்பதன் மறை.

செய்யாமைக்கு என்பது, செய்யியர் - செய்யிய - செயற்கு - செய - என்பவற்றின் மறை.

செய்யாவிடின் என்பது, செயின் என்பதன் மறை.

செய்யா செய்யாத என்னும் வாய்பாடு முன்வரப் பெறின் பின் - முன் - என்பவற்றிற்கும், கால் - கடை - வழி - இடத்து - என்பவற்றிற்கும் மறையாம்.

எ-டு : உண்ணாதபின் - உண்ணாதமுன்; உண்ணாக்கால் - உண்ணாக்கடை - உண்ணாவழி - உண்ணாவிடத்து (தொ. சொ. 230, 231, 238 நச். உரை)

செய் என்னும் வாய்பாடு உகரமும் ஊகாரமும் ஆகாரமும் புகரமும் - எனவும் இயரும் இன்னும் குகரமும்-எனவும் இறுதியிடைச் சொற்களான் வேறுபடுத்தப்பட்டது.

செய்து : உகரம் - செய்து என்பது இறந்தகாலம் பற்றி வருங்கால், குற்றுகரத்தான் ஊரப்பட்ட க ட த ற - என்னும் நான்கும், இகர ஈறும், யகர ஈறும் - என அறுவகைத்து. ஆயினும் இகர யகர ஈறுகள் செய்து என்ற வாசகத்தைத் தந்தே நிற்றலின் பொருண்மையான் ஒன்றாக அடக்கப்பட்டன.

எ-டு : நக்கு உண்டு வந்து சென்று: க ட த ற - மெய்களை ஊர்ந்துவந்த குற்றுகர ஈறு. எஞ்சி ஓடி செலுத்தி வரன்றி: க ட த ற மெய்கள் இகரம் பெற்றன. உரிஞி : இகர ஈறு ; ஆய் போய் : யகர ஈறு.

ஆய் போய் - என்பனவற்றில் ஆ போ - என்பன பகுதி; ஆகு போகு- என்பன பகுதியாயின் ஆகி - போகி - என்ற இகர ஈற்றதாக வினையெச்சம் வரும்.

‘விருந்தின்றி உண்ட பகல்’ (திரி.44)

‘நாளன்று போகி’ (புறம். 124)

இன்றி அன்று - என்பன செய்து என் எச்சக் குறிப்பு.

செய்து என்னும் எச்சத்திற்கு ஓடாநின்று போயினான்,

‘பகல் கான்று எழுதரு’ (பெரு. 2)

‘அரும்பு ஈன்று பொதுளிய’ (கலி. 101)

என நிகழ்கால வாய்பாடும் சிறுபான்மை உண்டு.

(தொ. சொ. 230 நச். உரை)

செய்து என் வாய்பாட்டு வினையெச்சத்து ஈற்று உகரம் க ட த ற - ஊர்ந்து இயல்பாயும், ஏனை எழுத்து ஊர்ந்து இகர மாய்த் திரிந்தும், நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்தகாலம் பற்றி வரும். இவ்வுகரஈறு இகர மாதலும் யகரம் வரக் கெடுதலும் ஆம்.

எ-டு : நக்கு உண்டு வந்து சென்று; எஞ்சி உரிஞி ஓடி ; ஆய் போய்; சினைஇ உரைஇ இரீஇ உடீஇ; பராஅய் தூஉய் தாஅய்;

ஆகி போகி ஓடி மலர்த்தி ஆற்றி - என்பவற்றின் முதனிலை குற்றுகரஈறாகிய ஆகு போகு ஓடு மலர்த்து ஆற்று - என்பன வாம்.

உண்பான் வருவான் - என்பன ஆன்ஈற்று வினையெச்சம் என்பதே சேனாவரையர் கருத்து. (தொ. சொ. 228, 229 சேனா.உரை)

ஓடி வந்தான், விரைந்து போயினான் - என்புழி, முடிக்கும் சொல்லாம் வினைமுற்றைத் தொழிலான் வினையெச்சங்கள் விசேடித்தன. ’செவ்வ ன் தெரிகிற்பான்’, ’புதுவதின் இயன்ற அணியன்’ (அக. 66) என்புழி, முடிக்கும் வினையை வினை யெச்சங்கள் குறிப்பான் விசேடித்தன. ’வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய்’ எ ன்புழி, முடிக்கும் வினையை வினையெச்சங்கள் (வெய்யவாய், சிறியவாய் - எனப்) பண்பால் விசேடித்தன. (தொ. சொ. 457 சேனா. உரை)

செய்யூ: ஊகாரம்

உண்ணூஉ வந்தான் - காணூஉ வந்தான் - ’நிலம் புடையூஉ எழுதரும்’ (பதிற்.) என்றாற்போலப் பின்வரும் தொழிற்கு இடையின்றி விரைவுணர்த்தி முன்வரும் தொழில்மேல் இறந்தகாலம் பற்றி வரும். இஃது ‘உண்ணா’ என ஆகார ஈறாகவும் திரிந்து

‘கல்லாக் கழிப்பர்’ (நாலடி. 366)

‘நிலம் கிளையா நாணி நின்றோள்’ (அக. 16)

எனப் பின்வரும் தொழிற்கு இடையின்றி விரைவுணர்த்தி முன்வரும் தொழில் மேல் இறந்தகாலம் பற்றி வரும். (தொ.சொல். 230 நச். உரை)

செய்பு : பகரஉகரம்

‘வாக்குபு தரத்தர வருத்தம் வீட ................. உண்டு’ (பொருந. 87,88)

‘புலராப் பச்சை இடையிடுபு தொடுத்த மாலை’ (புற. 33)

எனப் பெரும்பான்மையும் இவ்வாய்பாடு இறந்தகாலம் பற்றி வரும். அப்புகரம் ‘நகுபு வந்தாள்’ என்புழி, நகாநின்று வந்தாள் - என முடிக்கும் சொல்லான் உணரப்படும் தொழிலோடு உடன் நிகழ்ந்து நிகழ்காலத்தும் வரும். அது

‘வாடுபு வனப்பு ஓடி’ (கலி. 16)

என வரும்; உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் ஏற்புழிப் பெற்று வரும். (தொ. சொ. 230 நச். உரை)

செய்தென : என

என என்பது கடதற - ஒற்று ஊர்ந்து இறந்தகாலம் பற்றி, முடிக்கும் சொல்லான் உணரப்படும் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணமாய் விரைவுப்பொருள் உணர்த்தும்.

எ-டு : சோலை புக்கென வெப்பு நீங்கிற்று, உண்டெனப் பசி கெட்டது, உரைத்தென உணர்ந்தான், மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று.

எஞ்சியென, உரிஞியென - முதலாக ஏனையெழுத்துக் களொடும் ஒட்டுக. (தொ. சொ. 230 நச். உரை)

செய்யியர், செய்யிய : இயர், இய

உண்ணியர் தின்னியர்; உண்ணிய தின்னிய - என இவ்வாய் பாடுகள் எதிர்காலம் பற்றி வரும். போகியர் போகிய - என ஏற்புழிக் குகரமும் பெற்று வரும். (தொ. சொ. 230 நச். உரை)

செயின் : இன்

மழை பெய்யின் குளம் நிரம்பும், மெய்யுணரின் வீடு எளிதாம் - என ‘இன்’ எதிர்காலம் பற்றிக் காரணப்பொருட்டாய் வரும்.

நடப்பின், உரைப்பின் - என்புழி ‘இன்’ பகரம் பெறும். இது

‘நனவின் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ (கலி. 39)

என உம்ஈறு ஆதலும்,

‘அற்றால் அளவறிந் துண்க’ (கு. 943)

என ஆல்ஈறு ஆதலுமுண்டு.

‘அவாஉண்டேல் உண்டாம்’ (கு. 1075)

என்புழி வரும் ஏலும்,

‘அவன் எள்ளுமேனும் வரும்’

என்புழி வரும் ஏனும் - என்பன இதன் குறிப்பு.

‘ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்’ (கு. 128)

என்புழி, ‘ஆயினும்’ என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. (தொ. சொ. 230 நச். உரை)

செய : அ

மழை பெய்யக் குளம் நிறைந்தது - எனக் காரணப் பொருட் டாயும், குளம் நிறைய மழை பெய்தது - எனக் காரியப் பொருட்டாயும் இவ்வாய்பாடு வரும். இனி, நிகழ்காலத்துக் கண் ‘ஞாயிறு பட வந்தான்’ என்பது ‘படாநிற்க வந்தான்’ என்னும் பொருட்டாய் வரும். ‘ வாழச் செய்த நல்வினை’ என்பதும் அது. இனி, எதிர்காலத்துக்கண் உண்ண வந்தான் - என அதற்பொருட்டாய் வரும். உரைப்ப வந்தான் - உரைக்க வந்தான் - என ஏற்புழிப் பகரமும் ககரமும் வரும். இனி, பெரிய ஓதினும் சிறிய உணரா’ (புற. 375) என அகரம் வினைக்குறிப்புப் பற்றி வருவனவும் செவ்வன் தெரிகிற்பான்’ - ‘ புதுவதின் இயன் ற அணியன்’ (அக. 66) புதுவது புனைந்த வெண்கை யாப் பு’ (மலை. 28) சிறு நனி நீதுஞ்சி ஏற்பினும் (கலி. 12) ஒல்லைக் கொண்டான் என அகர ஈறு அன்றிப் பிற ஈறுகளான் முடிக்கும் சொல்லை விசேடித்து வருவனவும் பலவாக உள.

‘கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி’ (கலி. கடவுள்)

என மல் ஈறாயும்,

‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (கு. 701)

என மகர ஐகார ஈறாயும் இஃது எதிர்மறைக்கண் வரும். (தொ. சொ. 230 நச். உரை)

செயற்கு : கு

செயற்கு என்பதன் குகரம் எதிர்காலத்து வரும்.

எ-டு : உணற்கு வந்தான்.

உண்டான் - உண்டவன் - என்னும் தொழிற்பெயர்கள் (வினையாலணையும் பெயர்கள்) உண்டாற்கு - உண்டவற்கு - என நான்கனுருபை ஏற்றவிடத்து செயற்கு என்னும் எச்சப்பொருள் தரும் என்று மயங்குதல் இல்லை. இனி உணல் என்னும் வினைப்பெயர் குகரம் அடுத்துழி உண்டலைச் செய்தற்கு என்னும் பொருள் தந்து எச்சப்பொருட்டாயே நிற்றலின், வினைப்பெயர் நான்கனுருபு பெற்று நின்றது என்னும் மயக்கம் இதன்கண் இல்லை.

எற்றுக்கு வந்தான் என்பது எக்காரியம் செய்தற்கு வந்தான் - என்னும் பொருட்டாய் இவ்வெச்சக் குறிப்பாய் நிற்கும். எவற்றுக்கு என்பதும் செயற்கு என்பதன் குறிப்பேயாம். (தொ. சொ. 230 நச். உரை)

உணல் + கு - எனத் தொழிற்பெயர் நான்கனுருபு ஏற்று வந்தது பிரிக்கப்படும் எனவும், உணற்கு என்னும் செயற்கு என வந்த வாய்பாடு அவ்வாறு பிரிக்கப்படாது ஒருசொல்நீர்மைத்து எனவும் இரண்டற்குமிடையே வேறுபாடு கூறுவர் சேனா வரையர். (தொ. சொ. 40 சேனா. உரை)

(இவ்வாய்பாடு பெயர்ப்பொருண்மை நோக்கியவழி நான்க னுருபு ஏற்ற தொழிற்பெயர்; காலம் நோக்கியவழி வினை யெச்சம் எனக் கொள்க.)

பின் : ‘நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார்’,

‘இளமையும் தருவதோ இறந்த பின்னே’ (கலி. 15)

- எனப் பின் விகுதி இறந்தகாலமும், ‘நீ இவ்வாறு கூறுகின்ற பின் உரைப்ப துண்டோ’ என நிகழ்காலமும் பற்றி வரும்.

முன் : ‘வருமுன்னர்க் காவாதான்’ (கு . 435)

என முன்விகுதி இறப்புப் பற்றி வரும்.

பின் - முன் - என்பன பின்னர் - முன்னர் - பின்னை -முன்னை - எனத் திரிந்தும் வரும்.

கால் : ‘வலனாக வினையென்று வணங்கிநா ம் விடுத்தக்கால்’ (கலி. 35) என இறப்பும், ‘அக ன்றவர் திறத்தினி நாடுங்கால்’ (கலி. 16) என நிகழ்வும் எதிர்வும் பற்றிக் கால்விகுதி வரும்.

கடை : ‘தொடர்கூரத் துவ்வாமை வந்தக்கடை’ (கலி. 22) என இறப்புப் பற்றிக் கடைவிகுதி வரும்.

வழி : ‘விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்

தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே’ (கலி. 130)

என இறப்பும்,

‘அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே’ (அக. 49)

என நிகழ்வும் எதிர்வும் பற்றி வழிவிகுதி வரும்.

இடத்து ‘களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து’ (கு. 879) என இடத்து என்னும் விகுதி இறப்பும், ‘உரைக்கு மிடத்து’ என நிகழ்வும் எதிர்வும் பற்றி வரும்.

‘அன்ன பிறவும்’ என்றதனான், பான்-பாக்கு - வான்- வாக்கு - என்னும் விகுதிகள் கொள்ளப்படும்.

‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ (நான். 28)

‘திருவில்தான் மாரி கற்பான் துவலைநாள் செய்ததே போல’ (சீவக. 2070)

‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ (கார். 11)

‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ (பு.வெ. 99)

‘கொள்வாக்கு வந்தான்’

இந்நான்கு விகுதிகளும் எதிர்காலம் பற்றி வந்தன.

பின்-முன்- முதலியன பெயரெச்சத்தொடு வந்துழிக் கூதிர் போயபின் வந்தான் - நின்றவிடத்து நின்றான் - என்றாற் போலப் பெயர்த்தன்மைப் பட்டுக் காலம் காட்டமாட்டா.

இவ்வினையெச்சங்களுள் செய்து - செய்யூ - (செய்யா) - செய்பு - என்பன தம் வினைமுதல்வினையையே கொண்டு முடியும். அவ்வாறு முடிவுழி முதலொடு சினைக்கு ஒற்றுமை யுண்டாதலின் சினைச்சொல் முதல்வினையையும் கொண்டு முடியலாம்.

எ-டு : சாத்தன் உண்டு வந்தான், உண்ணூ வந்தான், உண்ணா வந்தான், உண்ணுபு வந்தான் : கால் இற்று வீழ்ந்தான்.

சினைப்பொருட்கண் வந்த வினையெச்சம் காரணகாரியப் பொருட்டாய் வினைமுதல்வினை கொண்டு முடியும். கால் இற்று வீழ்ந்தான் - என்ற தொடரில் கால் இறுதல் : காரணம், வீழ்தல் : காரியம்.

சில இடங்களில் காரணகாரியம் இன்றியும் சினைவினை முதல்வினையைக் கொண்டு முடியும். காமன் கணையொடு கண்சிவந்து புலந்தான் - என்ற தொடரில், புலத்தலுக்குக் கண் சிவத்தல் காரணம் அன்று; கண்சிவத்தலுக்குப் புலத்தல் காரியமும்அன்று. மேலும், முகனமர்ந்து நல் விருந்தோம்பி னான் (கு. 84) என்ற தொடரில், நல்விருந்தோம்புதற்கு முகனமர்தல் காரணம் அன்று; முகனமர்தலுக்கும் விருந் தோம்புதல் காரியமுமன்று.

‘மாஅல் யானையொடு மறவர் மயங்கி த்

தூறதர்ப் பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம்’ (கலி. 5)

‘உடம்பு உயங்கு யானை

கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு

வெறிநிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி

நெறிமயக் குற்ற சுரம்’ (கலி. 12)

எனக் காரண காரியப் பொருட்டாய்த் தமக்குரிய வினைமுதல் வினை கொள்ளாது பிற வினைமுதல்வினை கொண்டன.

ஞாயிறு பட்டு வந்தான் - ஞாயிறு படூஉ வந்தான் - ஞாயிறு படுபு வந்தான் - என்பன காரணகாரிய மின்றி அங்ஙனம் வந்தன. ‘உரற்கால் யானை ஒடித் துண் டு எஞ்சிய யா’ (குறு. 232) என்பதும் அது.

‘ஆ கிடந்து செறு விளைந்தது’ என்புழி, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றிச் செறுவின் வினை யொடு முடிந்தது. இதற்கு வினைமுதலே செயப்படுபொருள் ஆயிற்று.

‘பூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பு’ (பதிற் 65) : அணிந்து என்னும் முதல்வினை விளங்கிய என்னும் சினை வினை கொண்டது. ‘உண்டு பசி கெட்டது’ என்பதும் அது.

செய்து - செய்யூ - செய்பு - என்பன காரண காரியப் பொருட் டாகாது வேறு வரும். சினைவினை முதல்வினையொடு முடியுங்கால் பெரும்பாலும் காரணகாரியப் பொருட் டாகவே வரும். முதல்வினைதான் பிற வினைமுதல் வினை யான் முடியும் வழிப் பெரும்பான்மை காரண காரியப் பொருட்டாயே வரும்.

செய்தென -செய்யிய - செயின் - செய - செயற்கு - பின் - முன் - கால் - கடை - வழி - இடத்து - என்பன தம் வினைமுதல்வினை யினானும் பிற வினைமுதல்வினையினாலும் முடியும்.

எ-டு:

மழைபெய்தெனப் புகழ் பெற்றது - தன் வினைமுதல் வினை

மழை பெய்தென மரம் குழைத்தது - பிற வினைமுதல் வினை

மழை பெய்யியர் எழுந்தது - தன் வினைமுதல்வினை

மழை பெய்யியர் பலி கொடுத்தார் - பிற வினைமுதல் வினை

மழை பெய்யிய முழங்கும் - தன் வினைமுதல் வினை

மழை பெய்யிய வான் பழிச்சுதும் - பிற வினைமுதல் வினை

மழை பெய்யின் புகழ் பெறும் - தன் வினைமுதல் வினை

மழை பெய்யின் குளம் நிறையும் - பிற வினைமுதல் வினை

மழை பெய்யப் புகழ் பெற்றது - தன் வினைமுதல் வினை

மழை பெய்ய மரம் குழைத்தது - பிற வினைமுதல் வினை

மழை பெய்தற்கு முழங்கும் - தன் வினைமுதல் வினை.

மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் பிறவினைமுதல் வினை

இறந்த பின் இளமை வாராது - தன் வினைமுதல் வினை. கணவன் உண்டபின் காதலி முகம் மலர்ந்தது -

பிற வினைமுதல் வினை.

கடுத்தின்னாமுன் துவர்த்தது - தன் வினைமுதல் வினை.

மருந்து தின்னாமுன் நோய்தீர்ந்தது - பிற வினைமுதல் வினை

உரைத்தக்கால் உரை பல்கும் - தன்வினைமுதல் வினை

‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால் ஒளியிழாய் நமக்கவர் வருதுமென்றுஉரைத்ததை’ (கலி. 35) - பிறவினைமுதல் வினை.

நல்வினை தான் உற்றக்கடை உதவும் - தன் வினைமுதல்வினை.

நல்வினைதான் உற்றக்கடை தீவினை வாரா - பிற வினைமுதல் வினை

நல்வினைதான் உற்றவழி உதவும் - தன் வினைமுதல் வினை

நல்வினைதான் உற்றவழித் தீவினை வாரா - பிற வினைமுதல் வினை.

நல்வினைதான் உற்றவிடத்துஉதவும் - தன் வினைமுதல் வினை.

நல்வினை தான் உற்றவிடத்துத் தீவினை வாரா - பிற வினைமுதல் வினை.

அவன் கற்பான் வந்தான் - தன் வினைமுதல் வினை

கற்பான் நூல் செய்தான் - பிற வினைமுதல் வினை

செல்வம் தருபாக்குத் தலைவர் சென்றார் - தன் வினைமுதல் வினை.

செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும் - பிற வினைமுதல் வினை.

அவன் உண்ணுவான் சென்றான்- தன் வினைமுதல் வினை

தலைவன் நம்நலன் நுகர்வான் யாம் விரும்புதும் -

பிற வினைமுதல் வினை.

இவ்வினையெச்சங்கள் ஒன்றற்கொன்று முடிக்கும் வினை யாக வந்து முடியாது, ஒரு வாய்பாட்டானும் அன்றிப் பலவாய் பட்டானும் அடுக்கி முடியும்.

எ-டு: உண்டு நின்று ஓடிப் பாடி வந்தான் - ஒரு வாய் பாட்டான் அடுக்கியது. உண்டு பருகூத் தின்னுபு வந்தான் - பல வாய்பாட்டான் அடுக்கியது.

வினையெச்சங்கள் வினையெச்சமுற்றுக்களோடு அடுக்கி முடிதலுமாம்.

எ-டு :

‘படரட வருந்தி வாடிய முலையள் பெரிதழிந்து கொய்து கொண்டு நீருலையாக ஏற்றிக் குறைந்த உடுக்கையள் அறம் பழியாத் துவ்வாளாகிய என் வெய்யோள்’ (புறநா. 159) வினையெச்சப் படர்க்கைப் பெண்பால் தெரிநிலைமுற்று.

பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84) - வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று : ஒருமை.

வந்தனை சென்மோ’ - வினையெச்ச முன்னிலைத் தெரிநிலை முற்று : ஒருமை.

முகந்தனர் கொடுப்ப’ (புறநா. 33) - வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று : பன்மை.

மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5) - வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று : பெண்பால்.

கொய்குவம் சென்றுழி’ (அக. 48) - வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று : உளப்பாட்டுப் பன்மை.

வலத்திர் உள்ளினிர்’ (கலி. 4) - வினையெச்ச முன்னிலைத் தெரிநிலைமுற்று : பன்மை. ‘ சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய ர் ’ (கலி.5) - வினையெச்சப் படர்க்கை முற்று : பலர்பால்.

‘அல்லல் உறீஇயர் ,’ (நற். 56)

படீஇயர் என் கண்ணே’ (குறு. 243)

இவை வினையெச்ச வினைத்திரிசொல்’.

‘கேட்டீவாயாயின்’ (கலி. 93) : இதுவும் அது.

முற்றெச்சம் என்று கூறுவது பொருந்தாது; வினையெச்ச முற்று என்பதே பொருந்தும்.

‘குவளை யேஅளவுள்ள கொழு ங்கணாள் , அவளையே’ (சீவக. 243),

புரிமாலையர் பாடினியரும்’ - இவற்றை முற்றுப்பெயரெச்சம் என்னாது பெயரெச்ச வினைக்குறிப்பு முற்று என்றே பெய ரிடுவர். இதனை வினையெச்சத்திற்கும் கொண்டு ‘வினை யெச்ச முற்று’ என்றலே பொருந்தும். (231-235, 457 நச். உரை)

வினையெச்ச வாய்பாடுகள் (2) -

{Entry: F06__435}

வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்கும்; பாலுணர்த்தாது காலம் காட்டி நிற்கும். செய்து இறந்தகாலமும், செய்யூ - செய்யா - என்பன இறந்தகாலமும் நிகழ்காலமும், செய்பு மூன்று காலமும் காட்டும். செய்தென இறந்தகாலப் பொருட்டாயினும் விரைவு குறித்தலானும் திரிந்து முடிதலானும் பொருள் வேறு பாடுடைத் தாகலான் வேறோதப்பட்டது. செய என்பது மூன்று காலத்துக்கும் பொதுவாகிப் பொருள் வேறுபா டுடையது. செயற்கு என்பது எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது.

எ-டு :

‘படுமகள் கிடக்கை காணூஉ ......... உவந்தனளே’ (புற.278 - இறப்பு

‘நிலம் புடையூ எழுதரும் குஞ்சரம்’ (புறநா. 278) - நிகழ்வு

‘புலராப் பச்சை இடையிடுபு தொடுத்த’ (புற. 33) - இறப்பு

வாடுபு வனப்போடி’ (கலி. 16) - நிகழ்வு

உண்பு வந்தான் - எதிர்வு

மழை பெய்யக் குளம் நிறைந்தது, மழை பெய்யச் சாத்தன் வந்தான், மழை பெய்யப் பலி கொடுத்தும் - முறையே இறப்பும் நிகழ்வும் எதிர்வும். (தொ. சொ. 222, 224 தெய். உரை)

செய்து என்றும், செய என்றும், செய்யா என்றும், செய்யிய என்றும், செய்தென என்றும், செய்பு என்றும், செயின் என்றும், செயற்கு என்றும், பின் - முன் - பான்- பாக்கு - என்றும் வருவனவும் பிறவும் இருதிணைக்கும் வினையெச்சங் களாம். (நேமி. வினை. 6 உரை)

வினையெச்ச வாய்பாடுகள் : ‘பிற’, ‘இன்ன’ என்றவற்றால் கொண்டவை -

{Entry: F06__436}

‘பிற’ என்ற மிகையானே செய என்பது நிகழ்காலமே யன்றி எதிர்காலமும் காட்டும் எனக் கொள்க. ‘இன்ன’ என்றதனால்

கூறாமல் குறித்ததன்மேற் செல்லும் கடுங்கூளி’ (கலி.கட.) எனவும்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (கு. 701) எனவும்

வருவனவும், இவற்றிற்கு எதிர்மறையாய் வருவனவும்,

‘அற் றால் அளவறிந் துண்க’ (கு. 943)

‘பெற்றா லும் செல்வம் பிறர்க்கீயார்’

‘நனவிற் புணர்ச்சி நடக்க லும் ஆங்கே’ (கலி. 39)

‘காண்ட லும் இதுவே சொல்லும்’

செவ்வன் தெரிகிற்பான்’

‘அவா வுண்டேல் உண்டாம் சிறிது’ (கு. 1075)

என்றல் தொடக்கத்தனவும் இவ்வாய்பாடுகளிலே அடக்கிக் கொள்க.

செய்தற்கு என்பதுவும், பின் - முன் - கால் - கடை - என்பன முதலானவும் வினையெச்சம் என்பாருமுளர். அவற்றுள் செய்தற்கு என்பது தொழிற்பெயர்வழி வந்த நான்கனுருபாயும், ஏனைய செய்த என்னும் காலம் பற்றிய இடப்பொருள் உருபாயும் அடங்கும் எனக் கொள்க. (நன். 342 மயிலை.)

வினையெச்ச விகுதி -

{Entry: F06__437}

இ உ என ஊ பு ஆ - என்னும் விகுதிகள் இறந்தகாலத் தெரிநிலை வினையெச்சங்களில் வரும். எ-டு : ஆறி ஆடி, செய்து வந்து, உண்டென பட்டென, செய்யூ காணூ, செய்குபு காண்குபு, உண்ணா காணா - என முறையே காண்க. ஆய் போய் - என யகர விகுதி வருதலும் அறிக.

இவ்வெச்சம் பகுதி விகுதி விகாரப்பட்டு வரும். புக்கு வந்தான் - விட்டு வந்தான் - என்பவற்றில் புகு விடு : பகுதி விகாரம்; தழீஇக் கொண்டான் - உடீஇ வந்தான் - என்பவற்றில் தழுவி - உடுத்து - என்னும் உகரவிகுதி விகாரம்.

அகர விகுதி, நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினை யெச்சத்தில் உண்ண - காண - என வரும். ‘ஒருவன் மோப்பக் குழையும் அனிச்சம்’ (கு. 90) என்பது இரு கருத்தாவைப் பற்றி முடிதலின் நிகழ்கால வினையெச்சமாயிற்று. ‘யானே மலரை மோப்ப எடுத்தேன்’ என்பது ஒரு கருத்தாவைப் பற்றி முடிதலின் எதிர்கால வினையெச்ச மாயிற்று. ‘பொன் சுடர ச் சுடும் தீ’ என்பது எதிர்கால வினையெச்சமாயிற்று. ‘தீச் சுட ச் சுடரும் பொன்’ என்பது நிகழ்கால வினையெச்சமாயிற்று. செய என் எச்சம் இரு காலத்தில் வந்தது.

‘விண்டு பெய்ய விரிந்தன முல்லைமேல்

வண்டு பாட வந் தாடின மஞ்ஞையைக்

கண்டு வாழ மணிக்கழ லார்குழுக்

கொண்டு போகவெங் கொய்யுளை ஏறினார்’ (தேம்பாவணி)

இதனுள் முதல் ஈரடிக்கண் இருகருத்தா வந்தமையான் நிகழ்கால வினையெச்சம் ஆயிற்று.

அன்றியும் இல் இன் இய இயர் வான் பான் பாக்கு - என்பன எதிர்காலம் காட்டும் தெரிநிலை வினையெச்ச விகுதிகளாம். செய்யில் செயில், படின் வரின், நடத்திய உண்ணிய, காணியர் வாழியர், செய்வான் உறங்குவான், உண்பான் உரைப்பான், உண்பாக்கு உரைப்பாக்கு - என வரும்.

ஆல் கால் கு என்னும் விகுதிகள் நடந்தால் நடப்பித்தால், நடந்தக்கால் ஒலித்தக்கால், நடத்தற்கு நடப்பித்தற்கு - என வருதலும் அறிக.

‘பிற’ என்ற மிகையால், தொழிற்பெயர்கட்கு உம்மை கூட்டின் நிகழ்கால வினையெச்சத்திற்கும் ஆம். கேட்டலும் - வளர்தலும் - வருதலும் - முதலியவை கேட்க - வளர - வர - முதலாகப் பொருள் கொள்ளலும் ஆம்.

குவ்விகுதி செய என்னும் வாய்பாடு பற்றி வரும். எ-டு : உணற்கு வந்தான். என்னா மேனும் வரும், காண்ட லும் இதுவே கூறும் - இவற்றுள் ஏனும் உம்மும் ஒரோவிடத்தில் விகுதியாம்.

இறந்தகால வினையெச்சத்திற்கு ஏவல்பகுதிமேல் விகுதியாக அளபெடுத்த விகாரம் கூட்டுவாருமுளர். கொளீஇ - செரீஇ - இரீஇ - விழீஇ - ‘நீர்பெய்து இரீஇயற் று’ (கு. 660) - எனவரும். இதன்மேல் அகரம் ஏற்ற, இறந்தகாலப் பெயரெச்சம் ஆம்.
எ-டு : இரீஇய, கழீஇய, இரீஇயன; இரீஇயின, தழீஇயின - என வரும்.

‘தழீஇயின கலன்பொறாத் தளர்நு சுப்பெனக்

குழீஇயின மலர்பொறாக் கொடிகள் ஊசல்கொண்டு

எழீஇயின களிபொரு வளையி பங்கள்மேல்

விழீஇயின விலைபொறா விளங்க முல்லையே’ (தேம்பாவணி)

என வருவன காண்க.

ஐயீற்று ஏவல்பகுதிக்கு அளபெடை கூட்ட இறந்தகால வினையெச்சமாம். வளைஇ - என வரும். இதற்கு அகரம் கூட்டின் அக்காலப் பெயரெச்சமாம். வளைஇய (வளைத்த) என வரும்.

கடை - வழி - இடத்து - என்பன இறந்தகால வினையெச்ச விகுதிகள்.

எ-டு : ‘துவ்வாமை வந்தக்கடை’ (கலி. 22)

நல்வினைதான் உற்றவழி உதவும் - நல்வினைதான் உற்றவிடத்து உதவும்’. (தொ.வி. 119, 120)

வினையெஞ்சு கிளவிகள் வேறு பல் குறிய ஆதல் -

{Entry: F06__438}

வினையெச்சங்கள் வாய்பாடு திரிந்தும் பொருள் செய்யும்.

எ-டு : ஞாயிறு பட்டு வந்தான் : பட என்னும் செய என் எச்சம் ‘ஞாயிறுபட்டு வந்தான்’ எனச் செய்து என் எச்சமாகத் திரிந்து பொருள் செய்தது. கோழி கூவிப் பொழுது புலர்ந்தது (கூவி ‘கூவ’ எனப் பொருள் படுதலின்): இதுவும் அது.

‘மோயினள் உயிர்த்த காலை’ :

மோந்து என்னும் வினையெச்சம் வினைமுற்றாகத் திரிந்து வினையெச்சமாகப் பொருள் தந்தது.

‘வாரி வளம் குன்றிக்கால்’ (கு. 14):

குன்றியக்கால் என்னும் வினையெச்சம் ‘குன்றிக்கால்’ எனத் தொகுத்து நின்றது. (தொ. சொ. 451 இள. உரை)

‘உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய யா’ (குறு. 232)

எனவும், ஞாயிறு பட்டு வந்தான் எனவும், செய்து என் எச்சம் வினைமுதல்வினை கொள்ளாது பிறிதின் வினை கோடலும், அஃது ஈறு திரிதலும்,

‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5)

எனவும் ‘கண்ணியன் வில்லன் வரும்’ (கலி. 37) எனவும் முற்றுச் சொல்லது திரிபாய் வருதலும், ஓடிவந்தான் - விரைந்து போயினான் - எனத் தொழிலானும்

‘வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய்’

எனப் பண்பானும்,

‘செவ்வன் தெரிகிற்பான்’ -

‘புதுவதின் இயன்ற அணியன்’ (அக. 66)

எனத் தம்மை முடிக்கும் வினைக்கண் கிடந்த குறிப்பானும் உணர்த்தித் தெரிநிலைவினையும் குறிப்புவினையுமாய் முடிக்கும் சொல்லை விசேடித்தலும் பிறவும் ஆம்.

‘பெருங் கையற்ற என் புலம்பு’ (புற. 210)

என்புழிப் ‘பெரும்’ என்பது வினையெச்ச வாய்பாடு எனவும், வினைபற்றி நின்ற உரிச்சொல் எனவும் கூறப்படும். வினை யெச்சம் திரிதலும் வேறுபொருள் உணர்த்தலும் விசேடித்த லும் ஆகிய வேற்றுமையுடைய ஆகலின் ‘வேறு பல் குறிய’ எனப்பன்மையான் கூறப்பட்டது. வினைமுற்றே வினையெச்ச மாகத் திரிந்தது என்பது சேனாவரையர் கருத்து. (தொ. சொ. 457 சேனா. உரை)

வினையெச்சமாகிய சொற்களும், உம்மையான் பெயரெச்ச மாகிய சொற்களும் முற்கூறிய பெயர்களொடு வேறு வேறாகப் பல பெயர்களையும் உடையவாம்.

எ-டு:

‘பெயர்த்தனென் முயங்கயான்’ (குறு. 84)

- வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று : ஒருமை.

‘வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப’

- வினையெச்ச முன்னிலைத் தெரிநிலைமுற்று : ஒருமை.

‘முகந்தனர் கொடுப்ப’ (புற. 33)

- வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று : பலர்பால்.

‘மோயினள் உயிர்த்த காலை’ (அக. 5)

- வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று: பெண்பால்.

‘வேங்கை கொய்குவம் சென்றுழி’ (அக. 48)

- வினையெச்ச உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்று.

‘வறுவியேன் பெயர்கோ’ (புற. 209)

- வினையெச்சத் தன்மைக் குறிப்புமுற்று.

‘நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி’ (கலி. 21)

வினையெச்ச முன்னிலை ஒருமைத் தெரிநிலை முற்று.

‘வெள்வேல் வலத்திர்.........’ (கலி. 4)

- வினையெச்ச முன்னிலைப் பன்மைக் குறிப்புமுற்று.

‘சுற்றமை வில்லர்........ பித்தையர் - அற்றம் பார்த்து அல்கும்’

வில்லர், பித்தையர் - வினையெச்சப் படர்க்கைப் பன்மைக் குறிப்பு முற்று.

‘எல்வளை நெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇயர் ’ (நற். 56)

‘உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே’ (குறுந். 243)

‘கேட்டீவா யாயின்’ (கலி. 93)

- வினையெச்ச வினைத் திரிசொல்.

இனிப் பெயரெச்சம் வேறு பெயர் பெறுமாறு :

‘அவர்தம் முளான் தருமதத்தன் என்பா ன்’ சீவக. 242 எனவும்,

கச்சினன் கழலினன் தேந்தார் மா ர்பினன்

வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல்

சுரியலம் பொருநனைக் காணீரோ’ அக. 76 - எனவும்,

‘குவளை யேஅள வுள்ள கொழுங்கணாள் அவளையே’ சீவக. 243 எனவும்,

புரிமாலையர் பாடினியரும்’ - எனவும் வந்தன, உயர்திணை

முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக் குறிப்பு முற்று.

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி’ (குறுந். 78)

‘தெரி நடைய மாகளிறு

தன்தாள் பாடுநர்க்கு நன்கருளியும்’

இவை அஃறிணை இருபாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்புமுற்று.

பெருவேட்கையேன் எற்பிரிந்து - பெயரெச்சத் தன்மை வினைக்குறிப்புமுற்று: ஒருமை.

‘கண்புரை காதலேம் எம்மும் உள்ளாள்’ - பெயரெச்சத் தன்மை உளப்பாட்டுப் பன்மை வினைக்குறிப்பு முற்று.

‘உலங்கொள் தோளினை ஒருநின்னால்’ - பெயரெச்ச முன்னிலை ஒருமை வினைக்குறிப்புமுற்று.

‘வினைவேட்கையிர் வீரர் வ ம்மின்’ - பெயரெச்ச முன்னிலைப் பன்மை வினைக்குறிப்பு முற்று.

பின்னர் நூல்செய்தோர் வினையெச்சமுற்று என்று பெயர் கூறாமல் முற்று வினையெச்சம் என்று பெயர் கூறினரேனும், பெயரெச்ச வினைக்குறிப்பு முற்று என்று பெயரெச்சத்திற்குக் குறியிட்டு ஆளவேண்டுதலின், அதற்கு அப்பெயரே கொள்ளல் வேண்டும்.

பாயுந்து - தூங்குந்து - எனவும், சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த’ எனவும், கடைஇய நின் மார்பு’ (கலி. 77) எனவும் வருவன பெயரெச்ச வினைத்திரிசொல்.

‘கண்ணும் படுமோ என்றிசின் யானே ’ (நற். 61) என்பது தன்மை யொருமைமுற்று வினைத்திரிசொல்.

‘ஈங் கு வந் தீத்தந்தாய் ’ (கலி. 96) என்பது முன்னிலை யொருமை முற்று வினைத்திரிசொல்.

புகழ்ந்திகும் அல்லரோ ’ என்பது படர்க்கை (ப் பலர்பால்) முற்று வினைத்திரிசொல். (தொ. சொ. 457 நச். உரை)

வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலின் தோன்றுதல் -

{Entry: F06__439}

வினை, வினைக்குறிப்பு - என்பன ஆகுபெயராய் அம் முதனிலைகளான் பிறந்த அச்சொற்களை உணர்த்தின. முதல் - காரணம். காரியத்தின் முன் நிற்றலான் காரணம் ‘முதல்’ எனப்பட்டது. வினை தோன்றுதற்கு எட்டுக் காரணம் உளவேனும் ஈண்டுச் செயப்படுபொருளே கொள்ளப்படும். ஓர் எழுவாய் செய்யும் தொழிலினை உறுவது செயப்படு பொருளாம்.

எ-டு : குடத்தை வனைந்தான்: தெரிநிலைவினை; குழையை உடையன் : குறிப்புவினை (தொ. சொ. 72 நச். உரை)

புகழை நிறுத்தல், புகழை உடைமை - என வினைப்பெயரின் புடைபெயர்ச்சி பற்றியும் செயப்படுபொருள் வரும். ‘வினையே வினைக்குறிப்பு’ என்றாராயினும் ஈண்டு அவற்றின் செயப்படு பொருளே கொள்ளப்படும், முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையே ஆகலான். (தொ. சொ. 71 சேனா உரை) (தொ. சொ. 72 ப. உ)

வினை என்பது செயல்; வினைக்குறிப்பு என்பது அவ்வினை யினான் குறிக்கப்பட்ட பொருள். இது செயப்படுபொருள் மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான் என்பது செயப்படுபொருள்மேல் வந்தது; வனைதலைச் செய்தான் என்பது செயல்மேல் வந்தது. (தொ. சொ. 69 தெய். உரை)

இரண்டாம்வேற்றுமை வினையும் வினைக்குறிப்பும் நிமித்த மாகத் தோன்றும். மரத்தைக் குறைத்தான் என்பது வினை பற்றி வந்தது. குழையை உடையான் என்பது வினைக்குறிப்புப் பற்றி வந்தது. (தொ. சொ. 72 இள. உரை)

வினை வினைக்குறிப்பின் மேலிட்டு அது படும் செயப்படு பொருளை உணர்த்திற்றாக உரைக்கப்படும். (72 கல். உரை)

வினை என்பது செயல். வினைக் குறிப்பு என்பது அவ்வினையி னால் குறிக்கப்படும் பொருள். அஃதாவது செயப்படு பொருள். வினை என்பது காரகம். அது தொழிலை உண்டாக்குவது. காரகமாவது செய்வானும் செயலும் செயப்படுபொருளும் கருவியும் கொள்வானும் பயனும் காலமும் இடமும் - எனப் பல வகைத்து. அவற்றுள், இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருள்மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான், வனைதலைச் செய்தான் - என முறையே காண்க. காரகப் பொருள்மேல் வரும் வேற்றுமை எல்லாம் வினையான் முடியும். (தொ. சொ. 69 தெய். உரை)

வினையோ டல்லது பால் தெரிபு இல -

{Entry: F06__440}

வினைச்சொல்லோடு இயைந்தல்லது (விரவுப் பெயர்கள்) திணை விளங்க நில்லா. ‘பால்’ ஈண்டுத் திணையைக் குறித்தது. வினைச்சொல்லாவது வினை அல்லது பெயர் ஆகிய முடிக்கும் சொல்.

எ-டு : சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது - வினை முடிக்கும் சொல். சாத்தன் இவன், சாத்தன் இது - பெயர் முடிக்கும்சொல். (தொ. சொ. 172 சேனா. உரை)

வினை, வினைப்பெயர், வினைச்சொல் என்பன -

{Entry: F06__441}

வினை : உண் - தின் - கரு - செய் - முதலியன. வினைப்பெயர் : உண்டல் தின்றல் - கருமை - செம்மை - முதலியன. வினைச் சொல் : உண்டான் - தின்றான் - கரியன் - செய்யன் - முதலியன. இவை அம்முதனிலையான் பிறந்த வினைச்சொல்லாம். ஆகவே, வினை பண்பு - இவற்றின் முதனிலையை வினை என்றும், அம்முதனிலை விகுதி பெற்றுப் பெயராயவழி வினைப்பெயர் என்றும், அவை விகுதி இடைநிலை முதலியன பெற்றுக் காலம் காட்டும்வழி வினைச்சொல் என்றும் பெயர்பெறும். (தொ. சொ. 200 நச். உரை)

‘வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்’ -

{Entry: F06__442}

வினை வேறுபடாப் பலபொருள் ஒரு சொல் - வேறுபடாத வினையாகிய பொதுவினை கொண்டவழி வேறுபடாது தோன்றும் பலபொருள் ஒரு சொற்கள். அவை சேவல், பெடை என்பன. வினையான் அவை வேறுபடாமையான், அன்னச்சேவல் - குயிற்சேவல் - அன்னப்பெடை - குயிற்பெடை - என எடுத்துக் கூறப் பொருள் விளங்கினவாறு காண்க. (தொ. சொ. 53 தெய். உரை)

‘வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல்’ இயல்பு -

{Entry: F06__443}

பலபொருள் ஒருசொல்லின் இருவகையுள் வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் ஒன்று. வினை- சார்பு - இனம்- இடம் - இவற்றான் வேறு பிரித்து அறியப்படாத பலபொருள் ஒரு சொல் கிளந்தே கூறப்படும்.

கன்று நீரூட்டுக - எனப் பொதுவுறக் கூறின், ஆன்கன்று என்பதோ பூங்கன்று என்பதோ புலப்படாமையின், ஆன் கன்று நீரூட்டுக - பூங்கன்று நீரூட்டுக - என்று கிளந்தே கூற வேண்டும். மாவீழ்ந்தது - எனப் பொதுவுறக் கூறின், மாமரம் என்றோ விலங்குமா என்றோ பொருள் தெளிவுறாமையின் மாமரம் வீழ்ந்தது - விலங்குமா வீழ்ந்தது - என்று கிளந்தே கூற வேண்டும். (தொ. சொ. 54 சேனா. உரை)

வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் என்பதொன்று இன்று. வினை வேறுபடும் பல பொருள் பல சொல்லே பொது வினை கொண்டவழி வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்லாம் என்பது சேனாவரையர் கருத்து.

வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல் கருமச் சிதைவு உள்வழிக் கிளந்தே கூறப்படும். கன்று நீரூட்டுக எனின், சொல்லுவோன் ஆன்கன்றை நினைத்தானாக, செயற்படு வோன் பூங்கன்றைக் கருதின் கருமச்சிதைவு உண்டாம்.

‘கன்றுஆற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர்’ (குறுந். 241) என்றவழிக் கருமச்சிதைவு இன்மையின் (‘கன்று’ ஆன்கன் றாதல் தெளிவுறுதலின்) கிளவாது சொல்லவும் அமைந்தது. (தொ. சொ. 55 கல். உரை, ப. உ.)

சேவல் - பெடை - என்பன வினையான் வேறுபடாமையின், அன்னச்சேவல், குயிற்சேவல் - அன்னப்பெடை, குயிற்பெடை - என எடுத்துக் கூறவே பொருள் விளங்கினவாறு கண்டு கொள்க. (தொ. சொ. 52 தெய். உரை)

வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் இயல்பு -

{Entry: F06__444}

வினை முதலியவற்றான் பொருள் வேறுபாட்டைத் தெளி வாகத் தெரிவிக்கும் பலபொருள் ஒருசொல் சிறப்பு வினை யானும் இனத்தானும் சார்பானும் பொருள் தெளிவாக அறிவிக்கப்படும்.

எ-டு : மா தளிர்த்தது - மா மரம் என வினையான் தெளிவிக்கப்பட்டது. மாவும் மருதும் ஓங்கின - இனத்தான் மரமெனத் தெளிவிக்கப்பட்டது. மாவும் மரையும் புலம் படர்ந்தன - இனத்தான் விலங்கெனத் தெளிவிக்கப்பட்டது.

வில் பற்றிக் ‘கோல் தா’ எனில் ‘கோல்’ அம்பு எனவும் குதிரைமேல் ஏறியிருந்து ‘கோல் தா’ எனின் ‘கோல்’ மத்திகைக் கோல் எனவும், சார்பான் பொருள் தெளிவிக்கப் பட்டன. (தொ. சொ. 53 இள. உரை)

இம்மா வயிரம், இம்மா வெளிறு - என வேறுபடுக்கும் பெயரும் முடிக்கும் சொல்லாய் வினையுள் அடங்கும். ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனம்; அணைந்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பு. (தொ. சொ. சேனா. 53 உரை) (நச். உரை)

இனமும் சார்பும் பின்வரும் வினையொடு கூடியல்லது பொருள் முடியாமையின் அவையும் வினை வேறுபட்டனவே யாம்.

மா காய்த்தது, வேங்கை பூத்தது - என்றவழி மரம் என்பது அறியப்பட்டது.

மா ஓடிற்று, வேங்கை பாய்ந்தது - என்றவழி விலங்கு என்பது அறியப்பட்டது.

இவை தனித்தனிப் பொருள் உணர்த்தின.

மக்கள் போருக்குப் போயினர் : ஆண்பால் பன்மை

மக்கள் தைந்நீராடினர் : பெண்பால் பன்மை

பெற்றம் அறம் கறக்கும் : அஃறிணைப் பெண்பால்
(பன்மை)

பெற்றம் உழவொழிந்தன : அஃறிணை ஆண்பால்
(பன்மை)

இவை பொதுப்பொருள். இவையாவும் வினையினான் பொருள் விளங்கின. ‘மாவும் மருதும் அவை’ என்றவழி, மா : மாமரம்; ‘மாவும் புள்ளும்’ என்றவழி மா : விலங்கு - இவை இனம்.

இப்பொழிலகத்து நூறு மா உள : மா என்பது மரம்

இப்போர்க்களத்து நூறு மா உள : மா என்பது விலங்கு

(தொ. சொ. 55 தெய். உரை)

வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்லே தன் பொருள் எல்லாவற்றிற்கும் பொதுவினைகொண்டு முடிந்தவழிப் பிறிதொரு சொல்லோடு ஒன்றியே பொருள் தோன்றும்.

மா வீழ்ந்தது என்றவழி இன்னது என்பது உணர்தலாகாது; அப்பொழுது, யானை முறித்தலான் மா வீழ்ந்தது - அம்பு படுதலான் மா வீழ்ந்தது - எனப் பிறிது சொல் கொணர்ந்தே பொருள் தெளிவிக்கப்படும். (தொ. சொ. 51 தெய். உரை)

வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல் பொதுவினை கொண்டவழியும் ‘இன்னது இது’ என வேறுபட நிற்றலும் வழக்கிடத் துண்டு.

மா வீழ்ந்தது என்பது வீழ்தல்வினை எல்லாவற்றிற்கும் பொதுவேனும், இவ்விடத்து இக்காலத்து இவன் சொல்லு கின்றது இந்த மாவினை என ஒன்றனை உணர்த்தி நின்றவாறு. அஃதாவது வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்போல நிற்கும் என்றவாறு. (தொ. சொ. 54 நச்., ப. உ)

பொதுவினை கொண்டவழி வினை வேறுபடும் பல பொருள் ஒருசொல் பகுதி உணராமல் தோன்றும். எ-டு : மா வீழ்ந்தது.

(தொ. சொ. 54 இள. உரை)

வினை வேறு படூஉம் பலபொருள் ஒரு சொல், வேறுபடுக்கும் வினையானும் வினையொடு வரும் இனத்தானும், வினை யொடு வரும் சார்பானும் பொருள் தெளிவுறும். எ-டு : மா பூத்தது : வினை; மாவும் மருதும் ஓங்கின: இனம்; கவசம்புக்கு நின்று ‘மாக் கொணா’ என்றவழிச் சார்பு.

இனமும் சார்பும் அவ்வினைச்சொல்லை வேறுபடுக்கும்வழி அதனொடு கூடி நின்று வேறுபடுப்பினல்லது தாமாக நில்லாமை நோக்கி அவையிற்றையும் ‘வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்’ என்ப. (தொ. சொ. 53 சேனா. உரை) (கல். உரை)

வீப்பிசை -

{Entry: F06__445}

வீப்ஸை; தொறும் என்பது. ஆன் என்னும் மூன்றனுருபு தொறு என்னும் இடைச்சொல்லின் பொருளாகிய தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தும்.

எ-டு : ‘ஊரான் ஒரு தேவகுலம்’ (ஊர்தொறும் ஒரு தேவகுலம் என்பது பொருள்) (பி. வி. 16)

வெகிச்சீமை -

{Entry: F06__446}

(பஹி : ஸீமா) புறப்பாட்டு எல்லை; வெளி எல்லை என்னும் ஐந்தாம்வேற்றுமையின் நீக்கப் பொருள்.

எ-டு : ‘குடிப்பிறந்து குற்றத் தின் நீங்கி’ (கு. 502). ‘சிறுமையின் நீங்கிய இன்சொல்’ (கு. 98) என வரும். குற்றத்தின் எல்லையிலிருந்து நீங்கி, சிறுமையின் எல்லையி லிருந்து நீங்கிய - என்பன பொருள். (பி. வி. 11)

வெகுவிரீகி (பஹுவிரீஹி) என்னும் அன்மொழித்தொகை -

{Entry: F06__447}

வடமொழி அன்மொழித்தொகை எழுவகைப்படும். அவை யாவன : 1. துவிபத வெகுவிரீகி - இரு சொற்களில் வருவது; 2. வெகுபத வெகுவிரீகி - பலசொற்களில் வருவது; 3. சங்கி யோத்தரபத வெகுவிரீகி - பின்மொழி எண்ணுப் பெயரானது; 4. சங்கியோபய பத வெகுவிரீகி - இருசொல்லும் எண்ணாய் வருவது; 5. திகந்தராள லக்ஷண வெகுவிரீகி - திசைகளுக்கு இடையே எனப் பொருள் படுவது; 6. சகபூர்வபத வெகு விரீகி - ‘உடனாய்’ (-கூடிய) என்னும் பொருள் குறிக்கும் சொல்லை முன்மொழியாகக் கொண்டது; 7. வியதிகார லக்ஷண வெகுவிரீகி - ஒன்றுடன் மற்றொன்று மோதிச் செயல் தடுமாறு தலைக் கூறும் இரட்டைச் சொல்லாய் வருவது.

1. துவிபத பகுவிரீகி :

உண்ணாமுலை - பாலுண்ணப்படாத முலையினையுடையாள்

முற்றாமுலை - முதிராத முலையினையுடையாள்

பாயின மேகலை - பரவிய மேகலையை அணிந்தவள் (கோவை. 282)

பரசுபாணி - கோடாலியைக் கையிலே கொண்டவன்
(பரசுராமன்)

ஆரூட வானரம் - குரங்கின்மீது ஊர்ந்த பெருமான்
(வானரம் ஏறிய மரம் என்றுமாம்)

நிட்கிராந்த சனம் - சனங்கள் வெளியேறிய நாடு

2. வெகுபத பகுவிரீகி :

மட்டு வார் குழல் - மணம் நிறைந்த கூந்தலுடையாள்

திருமயிலாடுதுறை, குடங்கையின் அகன்ற விழி - இவை முறையே ஊரையும் விழியுடையாளையும் குறிக்கும்.

பராக்கிரமோபார்ச்சித சம்பத்து - தன் வலிமையால் ஈட்டிய செல்வமுடையான்

இவை போன்றவற்றை அடையடுத்த இருமொழியாகத் தொக்கன என்றல் தமிழ்மரபு. வடமொழியில் பன்மொழி யிலும் பகுவெரீகு கொள்ளல் மரபாம். (துவந்துவம் என்னும் உம்மைத் தொகையில் தமிழில் பன்மொழித்தொகை வரும்.)

3. சங்கியோத்தரபத பகுவிரீகி :

கார் நாற்பது, இனியவை நாற்பது - இவை நூற்பெயர்கள்.

கதிராயிரம் - ஆயிரம் கதிர்களையுடைய சூரியன்.

4. சங்கியோபயபத பகுவிரீகி :

பத்தெட்டு (உடைமை), அஞ்சாறு, ஏழெட்டு - இவை எண்ணைக் குறிக்கவில்லை; பொருளின் மிகுதி குறைகளைக் குறிக்கும்.

5. திகந்தராளம் :

வடகிழக்கு - வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடைப்பட்ட கோணத் திசை. வடமேற்கு முதலியனவும் இன்ன. இவை தமிழில் உம்மைத்தொகையில் அடங்கும். (உம்மைத்தொகை அன்மொழி)

6. சக பூர்வபதம் :

கெழுதகைமை - தகைமையுடன் கூடியவன்.

சக நிதி - செல்வத்தொடு கூடியவன்.

சமூலம் - வேருடன் கூடியது.

7. வியதிகார லட்சணம் :

கேசா கேசி - முடியிலும் முடியிலும் பற்றிப் பிடித்து நிகழும் சண்டை.

தண்டாதண்டி - தண்டு (கம்பு) களால் ஒருவரை ஒருவர் தாக்கும் சண்டை

முஷ்டீ முஷ்டீ - முட்டியால் குத்திக்கொண்டு இடும் சண்டை முதலாயின

இங்ஙனம் தமிழில் தொகை வருவதில்லை

அன்மொழி தோன்ற நிலைக்களனான வேற்றுமைத் தொகை முதலிய ஐந்தனையும் எடுத்துச்சொல்ல வேண்டும்; அன்மொழி யாயின் படுத்துச்சொல்ல வேண்டும்.

இனி, ஏற்ற பெற்றி தமிழிலுள்ள அன்மொழித்தொகை யமைப்பை வடமொழி வெகுவிரீகித் தொகையுடன் ஒப்பிட்டு உதாரணம் காட்டிய பிரயோகவிவேக உரை, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை வடமொழி யில் இன்றாகலின், ‘ஆனகதுந்துபி’ என்ற தொடரைக் காட்டி விளக்கம் தரும்.

‘ஆனக துந்துபி’ : இத்தொடர், ஆனகம் - துந்துபி - என்னும் தெய்வவாத்தியங்கள் முழங்க உலகில் அவதரித்த கண்ணன் தந்தையான வசுதேவனைக் குறிக்கும். இதனை வடநூலாருள் சிலர் மத்திம பதலோப சமாசத்தின்மேல் வந்த வெகுவிரீகி என்பர். மற்றும் சிலர் துவந்துவசமாசத்தின்மேல் வந்தது என்பர். இது பயின்று வருவதொன்றும் அன்று. தமிழிலும் ‘தகரமும் ஞாழலும் கூட்டிச் சமைத்த சாந்து என்னும் பொருளில் அன்மொழியாகிப் பின் அதனைப் பூசியவள் என விரிதலின் இஃது ‘அன்மொழித் தொகைக்கு அன்மொழி’ யாம். இதுபோன்ற மற்றொன்று ‘துவிரேபம்’ என்பது. ரேபம் - ரகரம். வண்டின் வடமொழிப் பெயரான ‘பிரமரம்’ என்ற சொல்லில் இரு ரகரங்கள் உள ஆதலின், இரண்டு ரகரங் களைக் கொண்ட சொல்லை ‘இரண்டு ரகரங்கள்’ என்பது குறிக்க, அது வண்டினைக் குறித்தது. இதுவும் ‘அன்மொழிக்கு அன்மொழி’ யாம். (பி. வி. 24)

வெகுவிரீகி பொருள் சிறத்தல் -

{Entry: F06__448}

‘வெகுவிரீகியாகிய அன்மொழித்தொகையின் பொருள் சிறத்தல் பிற மொழியிலேயே; ஆதலின் அது சக்கிய சம்பந்தம் என்னும் சொற்பொருள் ஆற்றலின் ஆகிய தொடர்பால் இலக்கணையாகித் தன்பொருள் உணர்த்துதல் வேண்டா’ என்று கூறி, ‘இரதநூபுரசக்கிரவாளம்’ என்ற தொடர் தன் சொற்களின் பொருளை விடுத்துத் தொடர்பே இல்லாத ஓர் ஊரினை உணர்த்தும் என்பதனையும் எடுத்துக்காட்டுவர் பிரயோகவிவேக நூலாசிரியர். (பி. வி. 24)

வெகுவிரீகியும் ஆகுபெயரும் ஒன்றே -

{Entry: F06__449}

தூங்கு செவியன் உண்கின்றான் (லம்ப கர்ணோ புங்க்தே) - உண்கின்றவனது தூங்கு செவியுடைமை - அவனுடன் தற்கிழமைத் தொடர்பால் - எப்பொழுதுமுண்டு. இது தத்குண சம்விக்ஞானம் - தொல்காப்பினார் கூறும் ‘தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல்’ என்னும் ஆகுபெயர்.

அவன் உண்ணும் தொழிலில் ‘தூங்கு செவியன்’ என்ற அடைக்குத் தொடர்பு இல்லை எனினும், உடையவனுக்குத் தொடர்புண்டு. (வடமொழியில், அன்மொழி பாலுணர்த்தும் அன் ஈறு பெறும்.)

இரண்டு ஆடையுடையோன் உண்கின்றான் - இது முன் சொன்ன இலக்கணமே பெறும் பிறிதின்கிழமை.

இவை தொடர்பினை விடாத ‘தத்குண விக்ஞானம்’.

பல வண்ணங்களையுடைய பசுக்களையுடையவனை அழைத்து வருகிறான் (சித்திரகும் ஆநயதி) - அழைத்துவரப் படுபவன் உடைமைகளான பசுக்கள் அவனுடன் வருவ தில்லை. இஃது ‘அதத்குணசம்விக்ஞானம்’ (இயல்பைத் தெரிவியாதது).

இவற்றை முறையே விடாத ஆகுபெயர், விட்ட ஆகுபெயர் எனவும் கொள்ளல் பொருந்தும். ஆகவே வடமொழியார் அன்மொழித் தொகையை ஆகுபெயராகவே கொண்டனர் என்பது தேற்றம். (பி. வி. 24)

வெகுளிப் பொருளவாம் உரிச்சொல் -

{Entry: F06__450}

கறுப்பு, சிவப்பு என்னும் உரிச்சொற்கள் வெகுளியாகிய குறிப்புணர்த்தும்.

எ-டு : ‘நிற் கறுப்பதோர் அருங்கடி முனையன்’, ‘நீசிவந்து இறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) (தொ. சொ. 372 சேனா. உரை)

வெளிப்படையும் குறிப்பும் ஆகிய சொற்கள் -

{Entry: F06__451}

இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் பொதுச் சொல்லும், விரித்தல் முதலிய ஒன்பது விகாரச்சொல்லும், மூவகைத் தகுதிவழக்குச்சொல்லும், ஆகுபெயர்ச் சொல்லும், அன்மொழித்தொகைச்சொல்லும், வினைக்குறிப்புச் சொல்லும், முதற்குறிப்புச் சொல்லும், தொகைக்குறிப்புச் சொல்லும், இம் முதல் தொகை அல்லாத பலவாற்றானும் வரும் குறிப்புச் சொல்லும், இவை போல்வன பிறவும் குறிப்பான் இருதிணை ஐம்பாற் பொருளைத் தரும் சொற் களாம். இவை அல்லாதன எல்லாம் வெளிப்படையான் அப்பொருளைத் தரும் சொற்களாம். வருமாறு :

ஆயிரம் மக்கள் பொருதார் - உயர்திணையுள் பெண்பாலை ஒழித்த ஒன்றொழி பொதுச்சொல்

இப் பெற் றம் உழவொழிந்தன - அஃறிணையுள் பெண்பாலை ஒழித்த ஒன்றொழி பொதுச்சொல்.

மரை மலர் - தாமரை என்பதன் முதற்குறை விகாரம்.

கால் கழீஇ வருதும், நன்காடு, பறி - தகுதி வழக்கு.

புளி தின்றான் - பழத்தைக் குறித்தலின் ஆகுபெயர்.

பொற்றொடி தந்த புனைமடல்’ - அன்மொழித்தொகை.

‘சொலல் வல்லன் சோர்வு இல ன் ’ (கு. 647) - வினைக்குறிப்பு

‘அறத்தா றிதுஎன வெள்ளைக் கிழிபு’ (யா.கா. 15) - முதற்குறிப்பு

‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ’ (புற.2) - தொகைக் குறிப்பு.

கற்கறித்து, ‘ நன்கு அட்டாய் ’ என்றல், பறவாக் குளவி (காட்டுமல்லிகை) - பிற குறிப்பு.

அவன் வந்தான், மற்று, நனி : வெளிப்படைச் சொற்கள்.

(நன். 269 சங். உரை)

வேண்டா கூறி வேண்டியது முடித்தல் -

{Entry: F06__452}

உயர்திணையில் இ உ ஐ ஓ - என்ற நான்கு ஈறுகளே விளி பெறும் எனக் கூறிப் பின்னும் ஏனைய உயிர்கள் விளிபெறா என்று நூற்பா யாத்தல். இதனால் பயன், முற்கூறிய நான்கு ஈறுகளும் கூறியவாற்றானன்றிப் பிறவாற்றான் விளியேற்றலு முண்டு என்பது. (எ-டு : கணி - கணியே; கரி - கரியே)

அது போன்றே ன ர ல ள - என்ற நான்கு புள்ளியீறுகள் விளியேற்கும் எனக் கூறிப் பின்னும் ஏனைய புள்ளிகள் விளியேலா என்று ஒரு நூற்பாயாத்தல். இதனால் பயன், முற்கூறிய நான்கு புள்ளியீறுகளும் குறித்தவாற்றானன்றிப் பிறவாற்றான் விளியேற்பனவு முள என்பது. (எ-டு : பார்ப்பன மகனே (குறு. 156), தென்னவனே, நம்பன் (சீவக. 1975), நம்பான், வாயிலோயே (புற. 206), மாந்தர், இறைவரே, கானல், குரிசில், திருமாலே, கடவுள், அடிகேள் - என விளியேற்றவாறு.)

எடுத்தோதாத உயிர்ஈறுகளிலும் விளியேற்பன உள என்றுணர்த்தலும் ஒரு பயன். எ-டு : எல்லா (கலி. 35), ஏடா (இருபாற்கும் பொதுவான விளி); இனி, தம்முனே, நம்முனா, பெண்டிரோ, கேளீர் (சீவக. 1594), கேளிர் (குறு. 280), ஆ(அ)ய்
(புற. 130), ஆயே - என முன்ஈறு ஏகாரம் பெற்றும் ஆகாரம் பெற்றும், இர்ஈறு ஓகாரம் பெற்றும், ஈர் எனத் திரிந்தும் இயல்பாயும், யகரஈறு இயல்பாயும், ஏகாரம் பெற்றும் வருதல் கொள்க. (தொ. சொ. 126, 131 நச். உரை)

வேண்டும், தகும், படும் -

{Entry: F06__453}

மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று முடித்தல் என்பதனான், (வேறு இல்லை உண்டு என்பனவே யன்றி) வேண்டும் தகும் படும் - என்னும் சொற்களும் ஐம்பால் மூவிடத்தனவாம்.

வேண்டும் :

‘ஓதல் வேண்டும்......... என்னுமவர்’ (கு. 653)

யான் போகல் வேண்டும், நீ உரைத்தல் வேண்டும்,

‘இனைத்தென அறிந்த........ உம்மை வேண்டும்’ (தொ.சொ. 33)

‘இன்னென வரூஉம் ......... இன்மை வேண்டும்’ (தொ. புண. 29)

‘நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்’ (கு. 960)

தகும் : இவரால் இக்காரியம் செய்யத்தகும், இச்சோறு உண்ணத்தகும்.

படும் :

‘முகத்தின் இனிய........ வஞ்சரை அஞ்சப் படும்’ (கு. 824)

‘இளையர் இனமுறையர்........... ஒழுகப்படும்’ (கு. 698)

‘கீழ்களைச் செய்தொழிலால் காணப்படும்’ (நாலடி. 347)

என இவ்வாறு இவை மூன்றும் வரும். (நன். 339 சிவ.)

வேந்து, அமைச்சு, புரோசு - அஃறிணைமுடிபு கோடல் -

{Entry: F06__454}

இவை மூன்று பெயரும் பொருளான் உயர்திணையாயினும் சொல்லான் அஃறிணையாக அமைதலின் அஃறிணை முடிபு கொண்டன. இவை உயர்திணைப் பண்புப்பெயராய் அப் பொருளை ஒருங்கு உணர்த்தினவேனும், அஃறிணைச்சொற் கொண்டு முடியும் என வழுவமைத்தார். அவை அன்ஈறு பெற்று வேந்தன் - அமைச்சன் - புரோகிதன் - என்றாயவழி உயர்திணை ஆண்பால் கொள்ளும். இவை பண்பானது பண்பியை உணர்த்தும் ஆகுபெயர் ஆயவழியும் உயர்திணை ஆண்பால் முடிபு கொள்ளும். (தொ. சொ. 57 நச். உரை)

வேற்றுமை -

{Entry: F06__455}

பொருள்களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்பது பெயராயிற்று. யாதோ வேற்றுமை செய்தவாறெனின்; ஒரு பொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினைமுதலாகியும், ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏதுவாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படு பொருளாகியும், ஒருவழி ஒன்று கொடுப்பதனை ஏற்பதாகியும் ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடமாகியும், ஒருவழி ஒன்றற்கு எல்லையாகியும், ஒருவழி ஒன்றற்கு உடைமை யாகியும், ஒருவழி ஒன்று செய்தற்கு இடமாகியும், ஒருவழி முன்னிலை ஆதற் பொருட்டு விளிக்கப்படுவதாயும், இன்னோரன்ன பிறவும் ஆகிய பொதுப்பட நிற்றல் உடைத்து.

அவ்வாறு நின்றதனைப் பெயர் முதலியன ஒரோஒன்றாகச் சென்று அப்பொதுமையின் வேற்றுமைப்படுத்தி ஒரு பொருட்கு உரிமை செய்து நிற்றலின் வேற்றுமை எனப் பட்டது. இவ்வாறு எட்டற்கும் பொதுப்பட நின்றதோர் பொருள்நிலையல்லது பொதுப்பட நின்றதொரு சொல்நிலை வழக்கிடைக் காணவில்லையால் எனின், அவ்வாறு வழக்கு இல்லை எனினும், சாத்தன் - சாத்தனை - சாத்தனொடு - சாத்தற்கு - சாத்தனின் - சாத்தனது - சாத்தன்கண் - சாத்தா - என ஒன்றன் வடிவொடு ஒன்றன் வடிவு ஒவ்வாது. இவ் வேற்றுமைகள் வருவழிச் சாத்தன் என்னும் வாய்பாடு எங்கும் நின்றமையின் பொதுநிலை என்பது உய்த்துணரப்படும். எழுவாய் அதனொடு வேற்றுமைப் பட்டதோ எனின், சாத்தனை என்றது போல்வதோர் வாய்பாடு இல்லெனினும், அவ்வேழனொடும் ஒவ்வா நிலைமையுடைமையின் இதுவும் ஒரு வாய்பாடாயிற்று என உணர்க. அன்றியும் செயப்படு பொருள் முதலியவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்தலின் எழுவாய் வேற்றுமை யாயிற்று என்பாருமுளர். அல்லதூஉம் வேற்றுமை என்பது பன்மை பற்றிய வழக்கு எனினும் அமையும். (தொ. சொ. 63 கல். உரை)

வேற்றுமை இலக்கணம் கூறும் இயல்கள் -

{Entry: F06__456}

பொதுவாக வேற்றுமையின் பெயர் - பொருள் - முடிக்கும் சொற்கள் - என்னுமிவற்றை வேற்றுமையியலிலும், இன்ன வேற்றுமை இன்னபொருட்கண் இன்னவாறாகும் என்பது போன்ற மயக்கநிலைகளை வேற்றுமைமயங்கியலிலும், சிறப் பில்லா விளிவேற்றுமையை விளிமரபிலும் தொல்காப்பிய னார் விளக்கியுள்ளார்.

வேற்றுமை உருபின் மூவகை -

{Entry: F06__457}

வேற்றுமையுருபின் மூவகையாவன உருபு, வேறுருபு, சொல் லுருபு - என்பன. இரண்டாம் வேற்றுமை ஐ என்ற ஓருருபையே ஏற்கும். அதுவே போல, நான்காவதற்கும் கு என்ற ஓருருபே உண்டு. இவற்றிற்கு வேறுருபு இல்லை. இரண்டாவதற்குச் சொல்லுருபுகள் இல்லை.

முதல் வேற்றுமைக்கு ஆயவன் ஆவான் ஆனவன் ஆகின்றவன் (ஐம்பாலிலும் கொள்க.) முதலியன உருபாம். மூன்றாம் வேற்றுமைக்கு ஆல் - ஆன் - ஒடு - ஓடு - என்பனவும், ஐந்தாவதற்கு இல் - இன் - என்பனவும், ஆறாவதற்கு அது - ஆது - அ - என்பனவும், ஏழாவதற்குக் கண் - கால் - கடை - இடை - முதலிய பலவும் உருபுகளாம்.

மூன்றாம் வேற்றுமைக்கு உடன் - கொண்டு - முதலியனவும், நான்காவதற்கு ஆக - பொருட்டு - முதலியனவும், ஐந்தா வதற்கு நின்று - இருந்து - விட்டு - முதலியனவும், ஆறாவதற்கு உடைய என்பதும் சொல்லுருபுகளாம். (இ. கொ. 16)

வேற்றுமை எட்டற்கும் அமைந்த பெயர்கள் -

{Entry: F06__458}

முதல்வேற்றுமை என்பது எண்ணான் அமைந்த பெயர்; பெயர் வேற்றுமை என்பது உருபான் அமைந்த பெயர்; எழுவாய் வேற்றுமை என்பது பொருளான் எய்திய பெயர். இது வினையையும் பெயரையும் பயனிலையாகக் கொண்டு முடியும். இது தனிச்சொல்லாயும் தொகைமொழியாயும் வரும். இப்பெயர்வேற்றுமையே ஏனைய வேற்றுமைகளை எய்தும்; எய்துமிடத்து அவ்வுருபுகளை ஏற்கும்.

இரண்டாம்வேற்றுமை என்பது எண்ணான் அமைந்த பெயர்; ஐகார வேற்றுமை என்பது உருபான் அமைந்த பெயர்; செயப்படுபொருள் வேற்றுமை என்பது பொருளான் அமைந்த பெயர். இவ்வேற்றுமை வினையும் வினைக்குறிப்பு மாகிய அவ்விரண்டனது அடிப்படைப் பொருளின்கண் தோன்றி வரும்.

மூன்றாம்வேற்றுமை என்பது எண்ணான் அமைந்த பெயர்; ஒடுவேற்றுமை என்பது உருபான் அமைந்த பெயர்; கருவி வேற்றுமை என்பது பொருளான் வரு பெயர். கருவி - காரணம் - ஏது - என்பன ஒருபொருட்கிளவிகள். ஆயினும் அவை தம்முள் சிறிது வேறுபாடுடையன. அதனால் ஏதுபற்றி வரும் மூன்றாம் வேற்றுமை இன் - ஆன் - என்னும் சொல்லுருபுகளை மாற்றுருபாகப் பெற்று வரும் என்கிறது தொல்காப்பியம். பிற்கால இலக்கணநூலாரும் தொல்காப்பிய உரையாசிரியன் -மாரும் வடமொழித் தாக்கத்தான் வினைமுதல் - உடனிகழ்ச்சி - என இரண்டு பொருள்களையும் உடன்கொண்டனர்.

நான்காம்வேற்றுமை என்பது எண் பற்றிய பெயர்; குவ்வேற்றுமை என்பது உருபு பற்றிய பெயர்; கோடற் பொருள் வேற்றுமை என்பது பொருள் பற்றிய பெயர். இது பெரும்பான்மையும் வினையையும் சிறுபான்மை பெயரையும் கொண்டு முடியும்.

ஐந்தாம்வேற்றுமை என்பது எண் பற்றிய பெயர்; இன்வேற்றுமை என்பது உருபு பற்றிய பெயர்; ‘இதனின் இற்று இது’ என வரும் உறழ்ச்சியாகிய அளவை இதன் பொருள். இது வினைகொண்டு முடியும் இயல்பிற்று; எல்லை பற்றி உறழுங்கால் பெயர் கொண்டு முடியும்.

ஆறாம்வேற்றுமை என்பது எண்ணான் எய்திய பெயர்; அது வேற்றுமை என்பது உருபான் எய்திய பெயர்; கிழமைப் பொருள் வேற்றுமை என்பது பொருளான் எய்திய பெயர். இது பெயர் கொண்டு முடியும். ஆறாம்வேற்றுமைத் தொடரை விரிக்குங்கால், அதன் வினைத்தன்மை வெளிப்படுத லன்றி வினைகொண்டு அது முடியாது. ஆறாம் வேற்றுமைக்கு வடமொழியுணர்வு காரணமாக, அகரம் பன்மையுருபு என உரையாசிரியன்மார் வலிந்து கூறுவர். பால்காட்டும் இறுதி யிடைச்சொற்கள் அல்லாத ஏனைய இடைச்சொற்களும் உருபிடைச் சொற்களும் ஒருமைபன்மை காட்டுதல் தமிழிலக் கண நெறி அன்று.

ஏழாம்வேற்றுமை என்பது எண் பற்றிய பெயர்; கண் வேற்றுமை என்பது உருபு பற்றிய பெயர். இடக்குறிப்பு வேற்றுமை என்பது பொருள் பற்றிய பெயர். இது பெரும்- பான்மையும் வினைகொண்டு முடியும்; சிறுபான்மையே பெயர் முடிபாவது.

எட்டாம் வேற்றுமை என்பது எண் பற்றிய பெயர். இதற்குத் தனியுருபு இல்லை; பெயர்நிலைகளே உருபின் தன்மையைக் காட்டி நிற்கும். விளிவேற்றுமை என்பது பொருள் பற்றிய பெயர். இது பெரும்பான்மையும் வியங்கோள்வினையும், ஏவல் கண்ணிய வியங்கோள்வினையும் கொண்டு முடியும்.

எட்டு வேற்றுமைகளுள் தமக்கென உருபுடையன ஆறே ஆதலின், முதல்வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையும் புணர்ச்சியிலக்கணம் கருதிய தொடர்மொழியமைப்பின்கண் அல்வழியுள் அடங்கும். (தொ. சொ. பக். 9-11 ச. பால.)

வேற்றுமை எட்டாதல் -

{Entry: F06__459}

பெயர்ப்பொருள் தான்கொள்ளும் வினைநிலை காரணமாக எய்தும் வேறுபாடுகளே வேற்றுமையாம். அவ்வேறுபாடு களை எட்டு வகையாகத் தமிழ்நூலார் கொண்டனர். இரு திணைகளுள் ஒருபொருள் வினைநிலை எய்திக் கருத்துக் களைத் தோற்றுவிக்கச் சமைவுற நிற்கும் நிலையே பெயர்ப் பொருள் எய்தும் வினைகளுக்கு ஏற்பப் பிற வேறுபாடுகளை அடையும். அதனால் ஒரு பெயர் எழுவாயாகத் தோன்றும் நிலையே முதல் வேற்றுமையாம். அங்ஙனம் எழுவாயாய் நிற்கும் பொருள் விகாரமின்றி நிற்றலின் அதனை முதல் வேற்றுமை என்பர் நூலோர். இதற்குரிய குறியீடு பெயர் என்பது.

எழுவாயாய்த் தோன்றிய பெயர்வேற்றுமை காத்தல் - ஒத்தல் - ஊர்தல் - முதலிய ஒருசார் வினைகளுக்கு உரியதாகும் நிலை இரண்டாம் வேற்றுமையாம். இதற்குரிய குறியீடு ஐகார வேற்றுமை; பொருளான் அதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்ப.

செயப்படுபொருள் ஆதற்குக் கருவியாக வரும் நிலை மூன்றாம் வேற்றுமையாம்.

அது பிறிது பொருளைத் தன்பால் கொள்ளும் நிலை நான்காம் வேற்றுமையாம்.

தன்னையும் அளவையாக வைத்து பிறிது பொருளை உறழ்ந்து கூறுதற்கு உரித்தாய் நிற்கும் அந்நிலை ஐந்தாம் வேற்றுமையாம்.

அஃது ஒருபொருளுக்கு உரிமையாக நிற்கும் நிலை ஆறாம் வேற்றுமையாம்.

அப்பெயர் ஒன்றன் செயல் நிகழ்தற்கு இடமாகக் குறிக்கப் படும் நிலை ஏழாம்வேற்றுமையாம்.

படர்க்கைப் பொருள் முன்னிலைப் பொருளாக மாறும் நிலை எட்டாம் வேற்றுமையாம். (தொ. சொ. பக். 8 ச. பால)

வேற்றுமை எதிர்மறைக்கண்ணும் தம்பொருள் உணர்த்தல் -

{Entry: F06__460}

மரத்தைக் குறையான், வேலான் எறியான் - என்புழி வினைநிகழாமையின் மரமும் வேலும் முறையே செயப்படு பொருளும் கருவியும் எனப்படாவாயினும், எதிர்மறைவினை விதிவினையோடு ஒக்கும் என்பது நூல்முடிபு ஆகலான், ஆண்டு வந்த உருபும் செயப்படுபொருள் முதலானவற்றின் மேல் வந்தன எனப்படும். (தொ.சொ. 107 சேனா., 108 நச். உரை)

(மறைவினையின் பகுதி உடன்பாடு ஆதலின், வேற்றுமைக்கு மறைவினையும் முடிபாகலாம்.)

வேற்றுமை என்ற பெயர் -

{Entry: F06__461}

வேற்றுமை என்னும் காரியத்தைச் செய்யும் கருத்தாவாகிய எட்டு வேற்றுமையுருபிற்கும் வேற்றுமை எனப் பெயர் போந்தது காரிய ஆகுபெயராகிய காரணக்குறி என்பார், ‘பொருள் வேற்றுமை செய்வன வேற்றுமை’ என்றார். இங்ஙனம் வருவனவாகிய எட்டுருபும் வேற்றுமை. அவை யன்றி ஒரு சாரார் கூறும் உருபு அடைந்த பெயரும் உருபின் பயனிலையும் வேற்றுமை அல்ல என்பதும் ஆசிரியர் கருத்து. (நன். 291 சங்.)

வேற்றுமைக் காரணம் -

{Entry: F06__462}

நெய்யால் எரியை அவித்தல் - கௌவையால் காமத்தை அவித்தல் - (கு. 1148) என்னும் தொடர்களில், எரியை வளர்க்கும் நெய்யையும் காமத்தை வளர்க்கும் அலரையும் அவற்றை அவித்தற்குக் கருவியாகக் கூறியது, வேற்றுமைக் காரணமாம். ‘மூன்றனுள் கருதப்படுவன’ காண்க. (இ. கொ. 34)

வேற்றுமைக்குறை ஆகும் பிறிதின்கிழமை -

{Entry: F06__463}

குறை எனப்படும் ஆறாம் வேற்றுமை வகைகளில் இஃது ஒன்று; மற்றது ஒற்றுமைக்குறை. இதில் பகுப்பு இல்லை. வேற்றுமைக் குறை, ஒன்றாய்த் தோன்றல் - உரிமையாய்த் தோன்றல் - வேறாய்த் தோன்றல் - என மூவகைப்படும். அவற்றைத் தனித்தனித் தலைப்புக்களில் காண்க. வேறாய்த் தோன்றற்கு ‘நிலைமையில் உடைமை’ காண்க. (இ. கொ. 40)

வேற்றுமைச் சொல்லை எதிர்மறுத்து மொழிதல் -

{Entry: F06__464}

‘வேற்றுமை எதிர்மறைக்கண்ணும் தம் பொருளுணர்த்தல்’ காண்க.

வேற்றுமை செய்தல் என்பது -

{Entry: F06__465}

வேற்றுமை செய்தலாவது : முதலாவது சாத்தன் என அப் பெயர்தான் தன் பொருண்மையின் திரிபின்றி ஏனையவற்றின் வேறுபடுத்தது. இரண்டாவது சாத்தனை - என அப் பொருளைக் காரியம் ஆக்கிற்று. மூன்றாவது சாத்தனான் என அப்பெயர்ப் பொருண்மையினை கருத்தா ஆக்கிற்று. (வாளான் என்னு மிடத்தே கருவி ஆக்கிற்று.) நான்காவது சாத்தற்கு என ஏற்றுக்கொள்வதாக ஆக்கிற்று. ஐந்தாவது சாத்தனின் என நீக்குவதாயிற்று. ஆறாவது சாத்தனது எனக் கிழமைத்து ஆக்கிற்று. ஏழாவது சாத்தன்கண் என இட மாக்கிற்று. எட்டாவது சாத்தா - என முன்னிலை ஆக்கிற்று. இத்தகைய ஆதல் தத்தம் இலக்கணச் சூத்திரங்களுள் காண்க. (நன். 290 மயிலை.)

வேற்றுமைத் தொகை -

{Entry: F06__466}

வேற்றுமையுருபு மறைந்த நிலையிலும் வேற்றுமையுருபு விரிந்தாற்போலத் தெளிவாகப் பொருள் தரும் ஒட்டிய இரு சொற்கள் வேற்றுமைத்தொகையாம். இவ்வேற்றுமைத் தொகை இரண்டனுருபு முதலாக ஏழனுருபு ஈறாக ஆறுருபுகளும் தொக அமையும்.

நிலைமொழி உருபேற்கும் சொல்லாயின் ஆறுருபும் மறைய வாய்ப்புண்டு. உருபு ஈற்றில் வருவதாயின், இரண்டனுருபும் ஏழனுருபுமே தொக்கு நிற்கும் ஆற்றலுடையன. இவ் வேற்றுமைத் தொகை உருபுதொகை எனவும் உருபும் பொருளும் உடன்தொக்க தொகை எனவும் இருவகைப்படும். வருமாறு :

நிலங்கடந்தான், கடந்தான் நிலம்; தாய்மூவர் ; கரும்பு வேலி; மலை வீழருவி; என்மனை; மனைவிளக்கு, இருந்தான் குற்றத்து - என இவை உருபுதொகைகளாம்; இரண்டாவது முதலிய உருபுகள் தொக்கன.

கருங்குழற் பேதை - கருங்குழலை யுடைய பேதை

மட்குடம் - மண்ணான் இயன்ற குடம்

கூலிவேலை - கூலிக்குச் செய்யும் வேலை

மலய மாருதம் - மலையத்தினின்றும் வீசும் மாருதம்

யானைக்காடு - யானையது உறைவிடமாம் காடு

கீழ்வயிற்றுக்கழலை - கீழ்வயிற்றின்கண் தோன்றிய கட்டி - என இவை இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன் தொக்க தொகை முதலாக வந்தவாறு காண்க. (தொ. சொ. 84, 104, 105 நச். உரை)

வேற்றுமைகட்கு ஓதிய செயப்படுபொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக்கண் தொகும் சொல் வேற்றுமைத் தொகையாம். முதல்வேற்றுமை பெயர்ப்பயனிலை கொள்ளும் வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்தே நிற்றலானும் இவற்றை ஒழித்து இரண்டுமுதல் ஏழ் ஈறாகிய வேற்றுமையே தொகும் என்பது.

எ-டு : நிலங்கடந்தான், வாள்வெட்டினான், கொலையுடம் பட்டான், வரைபாய்ந்தான், யானைக்கோடு, குன்றத்திருந்தான் - என முறையே காண்க. (தொ. சொ. 408 தெய். உரை)

இரண்டன்உருபு முதலாக ஏழனுருபு ஈறாகிய ஆறு வேற்றுமையுருபும் தொக்க தொடர்ச்சொற்கள் வேற்றுமைத் தொகைகளாம். (உருபு மறைந்திருந்தும் தம்பொருளைச் சிதையாமல் அவை உணர்த்த வல்லன.)

எ-டு : நிலங்கடந்தான், தலைவணங்கினான், சாத்தன்மகன், ஊர்நீங்கினான், சாத்தன்கை, குன்றக்கூகை - என ஆறுருபுகளும் முறையே இடையே தொக்கவாறு.

(பொற்குடம் என ஒரோவழி உருபும் பொருளும் உடன் தொக்கதும் வேற்றுமைத்தொகையாம். பொன்னாற் செய்த குடம் - என விரியும். பிற வேற்றுமைத் தொகையும் கொள்க. நூலைப்பற்றிய செய்தி, கரும்புக்கு இட்ட வேலி, மலையின் வீழருவி, எனது பிறந்த மரபு, குன்றத்தின்கண் வாழும் குறவர் என்பன முறையே நூற் செய்தி - கரும்புவேலி - மலையருவி - என்மரபு - குன்றக்குறவர் எனத் தொகையாமாறு காண்க.) (நன். 363 சங்.)

வேற்றுமைத்தொகைகளுள் இயைந்து வருவன -

{Entry: F06__467}

ஐம்முதல் ஆறுருபு தொக்கு நிற்பத் தொடர்ந்து வரு மொழிகள், இயல்பும் திரிபும் குறைதலும் மிகுதலுமாக வரும். மணி கொடுத்தான் : இயல்பு; கற்கடாவினான் : திரிபு; திண் கொண்ட தோள் : குறை; பலாக் குறைத்தான் : மிகுதல். (தொ.வி. 91 உரை)

வேற்றுமைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளுமுறை -

{Entry: F06__468}

வேற்றுமைத்தொகையிடத்துத் தொக்கு நிற்கும் உருபையும் பொருளையும் விரிக்குங்காலத்துப் பல்லாறாகப் பிரிந்து ஒன்றாதற்கு ஏற்பப் பொருந்தி இசைக்கும் எல்லாச் சொற்களும் விரித்தற்கு உரியன.

குழைச்செவி என்னும் இரண்டாவதன் தொகையை விரிக்கு மிடத்துக் குழையையுடைய செவி - அணிந்த செவி - பூண்ட செவி - ஏற்ற செவி - என வரும்.

மட்குடம் என்னும் மூன்றாவதன் தொகையை விரிக்குமிடத்து, மண்ணான் இயன்ற குடம் - ஆகிய குடம் - பண்ணிய குடம் - என வரும்.

கரும்புவேலி என்னும் நான்காவதன் தொகையை விரிக்கு மிடத்துக் கரும்பிற்கு இட்ட வேலி - அமைந்த வேலி - நாட்டிய வேலி - கட்டிய வேலி - கோலிய வேலி - சூழ்ந்த வேலி - என வரும்.

மலையருவி என்னும் ஐந்தாவதன் தொகையை விரிக்கு மிடத்து, மலையின் வீழருவி - மலையினின்று வீழும் அருவி - வழியும் அருவி - என வரும்.

மரக்கிளை என்னும் ஆறாவதன் தொகையை விரிக்குமிடத்து, மரத்தது கிளை மரத்தினுடைய கிளை - என உருபும் சொல்லுருபுமே விரியும், அது பெயர் கொண்டு முடியும் இயல்பிற்று ஆதலின்.

சாத்தனது பேச்சு - சாத்தனது நடை - என விரியுமிடத்து, சாத்தன் பேசிய பேச்சு - சாத்தன் நடந்த நடை - என முடிக்கும் சொல்லை விளக்கி நிற்கும் சொற்கள் விரியும். எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் - என வினைக்குறிப்புப்பட வருங்கால், எழுத்தினது இலக்கணம் அதிகரித்து நிற்றலையுடையது - சொல்லினது இலக்கணம் அதிகரித்து நிற்றலையுடையது - எனப் பொருள் புணர்த்தற்குரிய பல சொற்களும் விரியும்.

இனி, குன்றக்கூகை என்னும் ஏழாவதன் தொகையை விரிக்குமிடத்து, குன்றத்தின்கண் இருக்கும் கூகை - வாழும் கூகை - உறையும் கூகை - எனவரும்.

இவ்வேற்றுமைத்தொகைமொழிகள் வளைக்கை - மட்குடம் - என்றாற் போல ஒன்றற்கே உரித்தாய் நில்லாது, மரவேலி - சொற்பொருள் - என்றாற்போலப் பல வேற்றுமைக்கும் பொதுவாயும் நிற்றலின், அவ்வவ்வேற்றுமையைக் கருது மிடத்து அவ்வவற்றிற்குப் பொருந்தும் சொற்களான் விரித்தல் வேண்டும் என்பது புலப்படப் பொருள் ‘புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும்’ என்றார்.

எ-டு : மரவேலி என்பது மரத்தானாகிய வேலி, மரத்திற்கு இட்ட வேலி, மரத்தினுடைய வேலி எனவும், சொற் பொருள் என்பது சொல்லான் ஆகிய பொருள், சொல்லுக்கு ஏற்கும் பொருள், சொல்லினது பொருள், சொல்லின்கண் நிற்கும் பொருள் எனவும் விரியுமாறு காண்க. (தொ. சொ. 83 ச. பால.)

வேற்றுமைத் தொகையில் உருபு மாத்திரம் மறைந்திருப்பின் அவ்வுருபினை விரித்தலும், அது கொண்டு முடியும் சொல் மறைந்திருப்பின் அவ்வுருபினையும் அதனை முடிக்கும் சொல் லினையும் உடன் விரித்தலும் ஆகிய இருநிலையும் உள.

எ-டு : மண் கொணர்ந்தான் - மண்ணைக் கொணர்ந்தான்; மட்குடம் - மண்ணான் இயன்ற குடம். (தொ. சொ. 83 சேனா. உரை)

வேற்றுமைப் பொருள்கள் தொழில் முதல்நிலை ஆதல் -

{Entry: F06__469}

தொழில் - பொருளின் புடைபெயர்ச்சி; முதனிலை ஆதல் - புடைபெயர்ச்சி நிகழ்தற்கு அடிப்படையான காரணங்களாக நிலைபெறுதல்.

எ-டு : வனைந்தான் என்றவழி, வனை என்னும் வினையும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கு இடமாகிய நிலமும், அத்தொழில் நிகழும் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலாயினவும், அதனைக் கொள்வானும், அதனைக் கொள்வதனான் பெறும் பயனும் ஆகிய எட்டுக் காரணத் தானும் தொழில் நிகழ்ந்தவாறு. வனைந்தவன்: எழுவாய்; வினையும் செயப்படு பொருளும் : இரண் டாவது; வினைமுதலும் கருவியும் : மூன்றாவது; ஒருவன் ஏற்றுக் கொண்ட வழி இன்னதற்கு இது பயன் : நான்காவது; வனைந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்று நீங்குதல் : ஐந்தாவது; அதனை ஒருவன் ஏற்றுக் கொண்டவழி அஃது அவன் உடைமை யாதல் : ஆறாவது ; நிலமும் காலமும்: ஏழாவது. கருவிக்கண் அடங்கும் ஏதுவும் ஐந்தாவதற்கு வரும்.

இவ்வாறு வேற்றுமைப்பொருள்கள் ஒரு தொழில் நிகழக் காரணங்கள் ஆகின்றன. (தொ. சொ. 113 நச். உரை)

‘வேற்றுமைப்பொருள்வயின் உருபுஆகுந’

{Entry: F06__470}

இவை இடைச்சொல்வகை ஏழனுள் ஒன்று. ஐ ஒடு கு இன் அது கண் என்ற வேற்றுமையுருபுகள், தாம் ஏற்கும் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை’ என்று தனிப் பெயர் பெற்ற இடைச்சொற்கள்.

உளி மாறு - போல்வன உருபின் பொருள்பட வந்த இடைச் சொற்களாம். ‘வேற்றுமை யுருபு ஆகுந’ ‘வேற்றுமைப் பொருள்வயின் ஆகுந’ - எனப் பிரித்துக்கொள்க. உளி - மாறு - என்பன மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண் வருவன. (தொ. சொ. 250 சேனா. உரை)

‘கண்ணகன் ஞாலம்’ என்புழிக் ‘கண்’ இடப்பொரு ளுணர்த்தும். ‘ஊர்க்கால் நிவந்த’ என்புழிக் ‘கால்’ ஏழனுருபு. ‘அனையை ஆகன் மாறே’ (புற. 4) ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40) என்புழி, மாறு என்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின் மூன்றாம் வேற்றுமைப் பொருள் உணர்த்தி நின்றது அன்மை உணர்க. அது மூன்றாம் வேற்றுமைப் பொருளை உணர்த் திற்றேல், ‘கூறாய் தோழியான் வாழு மாறே’ என்புழி வாழு மாற்றை என இரண்டாவது விரியாதாம். ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ’ (முருகு. 95) என்புழி ‘முறைமையினின்றும் வழுவாத’ என ஐந்தாவது விரிதலானும், ‘இயல்புளிக் கோலோச்சும்’ (கு. 545) என்புழி, ‘முறைமையிலே செங்கோல் நடாத்தும்’ என ஏழாவது விரிதலானும், உளி என்பது மூன்ற னுருபின் பொருள்பட வந்ததன்று; பகுதிப் பொருள்விகுதி யாய் நின்று தனக்கேற்ற உருபை ஏற்று நின்றது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாம். (தொ. சொ. 252 நச். உரை)

வேற்றுமைப்பொருளைத் தொகுத்துக் கூறல் -

{Entry: F06__471}

தொழிலின் முதனிலை எட்டு எனவே, ஏவல் வினைமுதலை யும் இயற்றும் வினைமுதலையும் செய்வது என்றும்,

செயப்படு பொருள் நீர்மைத்தாகிய வனையப்படுவது முதலிய இயற்றப் படுவதனையும் வேறுபடுக்கப்படுவதனையும் எய்தப் படுவதனையும் முறையே வினை என்றும் செயப் படுபொருள் என்றும்,

முதற்காரணமும் துணைக்காரணமும் நிமித்த காரணமும் பற்றிப் பல்வேறு வகைப்பட்டு வரும் மூன்றாவதன் பொருளை யும் ஐந்தாவதன் பொருளையும் கருவி என்றும்,

பொருள் முதலிய அறுவகையிடத்தினையும் நிலன் என்றும் காலம் என்றும்,

நான்காவதன் பொருள் எல்லாவற்றையும் இன்னதற்காக - இது பயனாக - என்றும்,

ஈண்டு மேற்போந்த வேற்றுமைப்பொருளை யெல்லாம் தொகுத்துக் கூறினார். (இ. வி. 226 உரை)

வேற்றுமைப் பொருளை விரித்தல் -

{Entry: F06__472}

வேற்றுமை தொக்கது விரிக்குமிடத்து, ஒருவகைப் பொரு ளன்றிப் பலவகைப் பொருளும் அச்சொல் பற்றி ஒட்டப்படும் எல்லாச் சொல்லும் உரியவாகும்.

எ-டு : நீர்நீந்து உடும்பு - நீரை நீந்து உடும்பு, நீர்க்குள் நீந்து உடும்பு, நீரில் நீந்து உடும்பு, நீருள் நீந்து உடும்பு - என்றாற் போல்வன. (தொ. சொ. 84 ப. உ)

குரங்கெறி விளங்காய், இலைமறைகாய் - என்பனவும் பல பொருள்பட விரித்துக் காண்க.

வேற்றுமை : பொது இலக்கணம் -

{Entry: F06__473}

வேற்றுமை தாமும் பெயரும், ஒருசார் வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் - ஆகிய பொதுவிலக்கண மாதல் உடைமையானும், சிறப்புடைய பெயரிலக்கணம் ஓதிப் பெயர் ஏற்கும் வேற்றுமை இலக்கணம் (அதன்முன்னர்) உணர்த்தும் இயல் பிற்றாய் இவ்வியல் அமைந்துள்ளமை யானும், வேற்றுமையியலாம் இவ் வோத்துப் பொதுவிலக் கணமே நுவலுவதாகும். (தொ. சொ. 63 நச். உரை)

வேற்றுமை மயக்கம் -

{Entry: F06__474}

வேற்றுமை மயக்கம், பொருள் மயக்கம் - உருபு மயக்கம் - உருபும் பொருளும் உடன் மயக்கம் - என மூவகைப்படும்.

1. பொருள்மயக்கமாவது, தன்பொருளின் தீராது பிறிதொரு வேற்றுமையின் பொருளிற் சென்று உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் சிறுபான்மை தம்முள் இயைபுடைய ஆதல்.

எ-டு :

‘அவனை இகல் வெல்லல்’ (கு. 647)

- அவனது இகல் வெல்லல். ஈண்டு உருபு நோக்கிய சொல் : இகல் (வெல்லல்) என்பது; உருபேற்ற சொல் : அவனை, அவனது என்பன. இரண்டும் இயைபுடையனவே ஆதல் நோக்குக.

2. உருபு மயக்கமாவது, தன்பொருளின் தீர்ந்து பிறிதோர் உருபின் பொருளுடையதாதல். உருபேற்ற சொற்கும் உருபு நோக்கிய சொற்கும் இடையே சிறிதும் இயைபு இராது.

எ-டு : ‘நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற’ (அக. 212)

- மணற்கண் என்பது பொருள்.

காலத்தினாற் செய்த நன்றி’ (கு. 102)

- தக்க காலத்தின்கண் என்பது பொருள்.

3. உருபும் பொருளும் உடன்மயங்குதலாவது, ‘பழி அஞ்சினான்’ என்னும் தொகையை விரிப்புழி, பழியை அஞ்சினான் - பழியின் அஞ்சினான் - என விரியும். முன்னது செயப்படு பொருள், பின்னது ஏதுப்பொருள். (பி. வி. 14,15)

வேற்றுமை மயங்கியல் கூறுவன -

{Entry: F06__475}

தொல்காப்பியம் சொற்படலம் மூன்றாம் இயல் இது. இதன்கண், தன் பொருளின் தீராது பிறிதொன்றன் பொருட் கண் செல்லும் பொருள்மயக்கம் (84-105 சேனா.), தன் பொருளின் தீர்ந்து பிறிதொன்றன் பொருட்கண் செல்லும் உருபுமயக்கம் (106), வேற்றுமையுருபு ஏற்ற சொற்கு எதிர்மறை வினையும் முடிக்கும் சொல் ஆதல் (107), சில வேற்றுமை யுருபுகள் ஈறு திரிதல் (108,109), நான்கனுருபு பிற உருபுக ளோடும் மயங்குதல் (110), ஏனையுருபுகளும் அன்ன ஆதல் (111) தொழில் முதனிலை எட்டு (112, 113) ஆகுபெயர் பற்றிய செய்திகள் (114 - 117) என்பன 34 நூற்பாக்களில் விளக்கப்பட் டுள்ளன.

உருபும் பொருளும் உடன்மயங்குதலும், ஒருவழி உருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒருபொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றொடு மயங்குதலும், ஒன்றனது ஒரு பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்கு உரிமைபூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள் வழி மயங்குதலும், ஒன்று தன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழக்கு உள்வழி மயங்குதலும், இலக்கணம் இல்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையாய் மயங்கு தலும், உருபும் உருபும் மயங்குதலும் - என்றின்னோரன்ன வேற்றுமை மயக்கம் பல கூறலின் இவ்வோத்து வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று.

(வேற்.மய. பாயி.கல். உரை)

‘வேற்றுமை மருங்கின் போற்றல்’ -

{Entry: F06__476}

ஆகுபெயர் வேற்றுமையொடு தொடர்ந்த மருங்கினைப் போற்றி அறிக என்பது. தெங்கினது காய் தெங்கு என ஆறாவது தொடர்ந்தது. நீலத்தையுடைய ஆடை நீலம் என இரண் டாவது தொடர்ந்தது. பிறவும் இவ்வாறே தொடர்ந்த வாறு போற்றி அறிதல் என்றவாறு. (தொ. சொ. 112 இள. உரை)

ஆகுபெயர்கள்தாம் தத்தம் பொருளின் நீங்காது நின்று தம்பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்தலும், தம் பொருட்கு இயைபு இல்லாத பிறிது பொருளைச் சுட்டி நிற்றலும் என இரண்டு இயல்புடைய வேறுபாடு போற்றி உணரப்படும் என்றவாறு. (தொ. சொ. 115 சேனா உரை)

ஆகுபெயர்கள் ஐ முதலிய அறுவகைப் பொருண்மையிடத் தும் இயைபுடைமையைப் பாதுகாத்து அறிதல் வேண்டும். இஃது ஆகுபெயரும் வேற்றுமை ஏற்கும் என்கிறது. வருமாறு :

மக்கட்சுட்டை (மக்கட் பொருளைச் சுட்டுவதனை) உயர்- திணை என்மனார் - மக்கட் சுட்டு

தொல்காப்பியனால் செய்யப்பட்டது - தொல்காப்பியம்

தண்டூண் ஆதற்குக் கிடந்தது - தண்டூண்

பாவையினும் அழகியாள் - பாவை

கடுவினது காய் - கடு

குழிப்பாடியுள் தோன்றியது - குழிப்பாடி

(சொ. 117 நச். உரை)

வேற்றுமை முறை -

{Entry: F06__477}

“ஒருவன் ஒன்றனை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனதாக்கி ஓரிடத்து வைத்தான், கொற்றா!” என்றவழி, இவ்வேற்றுமைகள் முறையே கிடத்தலின் இம்முறை வேற்றுமையது முறை ஆயிற்று.

“யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை இயற்று தலுக்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன்“ என்றவழி, வேற்றுமைகள் முறைமாறி வந்தன எனினும், யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன்வைக்கப்பட்டான். அவன் ஒருபொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இது எனக் குறிக்க வேண்டு தலின், செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்காம் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத் தான் பயன்கோடலேயன்றிப் பிறர்க்கும் கொடுக்குமாதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவதாயிற்று. அவ்வாறு கொடுப்புழி அப்பொருள் அவன் கையினின்றும் நீங்கி நிற்றலின் ஐந்தாவதாயிற்று. அவ்வாறு நீங்கின பொருளைத் தனதெனக் கிழமை செய்தலின், அக்கிழமை ஆறாவதாயிற்று. ஈண்டுக் கூறிய எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின. இவற்றோடு ஒத்த இயல்பிற்றன்றி எதிர்முகம் ஆக்குதற் பொருட்டாதலின் விளி எல்லாவற் றினும் பின்னர்க் கூறப்பட்டது. ஆறாவதன் கிழமைப் பொருள் ஒரு பொருளைச் செய்தான்கண் சொல்லாமலே விளங்குதலின், கொண்டானுக்கே கிழமை கூறப்பட்டது.

(தொ. சொ. 63 தெய். உரை)

வேற்றுமையியல் கூறுவன -

{Entry: F06__478}

வேற்றுமையியல் தொல்காப்பியச் சொற்படலத்தின் இரண்டாம் இயல். இதன்கண் 22 நூற்பாக்கள் உள. வேற்றுமை ஏழே (63), விளியோடு எட்டாம் (64), வேற்றுமை களின் பெயரும் முறையும் (65), எழுவாய் வேற்றுமை - அதன் பயனிலை - தொகைப்பெயரும் எழுவாய் வேற்றுமையாய் நிற்றல் - எழுவாய் புலப்பட்டும் புலப்படாதும் நிற்கும் எனல் (66 - 69), உருபு நிற்கும் இடம் (70), பெயர் காலம் தோற்றாது எனல் (71), இரண்டாம் வேற்றுமை முதல் ஆறாம் வேற்றுமை முடிய உருபுகளும் பொருள்களும் கொண்டு முடியும் சொற்களும் (72 - 81), ஏழாம்வேற்றுமை யுருபும் பொருளும் (82), ஏழாம் வேற்றுமையுருபின் பொருள்பட வரும் இடைச்சொற்கள் (83), வேற்றுமைப் பொருளை விரித்தல் (84) - என்பன இவ்வியலில் இடம் பெற்றுள.

வேற்றுமையியலான் அறியப்படும் பெயர் இலக்கணம் -

{Entry: F06__479}

பெயர் எழுவாயாகிப் பயனிலை கொண்டு முடியும்; வேற்றுமை யுருபுகளை ஏற்கும். வினையாலணையும் பெயரல்லாத பெயர்கள் காலம் காட்டா. இவை பெயரிலக்கணமாம். (தொ. சொ. 66,69,70 சேனா. உரை)

வேற்றுமையியலுக்குப் புறனடை -

{Entry: F06__480}

வேற்றுமைகள் பலபலவாகத் தோன்றுவன. வினைமுதல் முதலாகக் கூறப்படும் எட்டு வேற்றுமைப் பொருளும் ஒவ்வொரு பொருளே வெவ்வேறு ஆதலும், ஒவ்வொரு பொருளிலும் பல உருபுகள் வருதலும், உருபுகள் தமக்குரிய பொருளைத் தருவதொடு வேறு பொருளைத் தருதலும் என்ற இம்மூன்றனுள் அவையாவும் மடங்கி அடங்கும். இந்த மூன்றும் இந்நூலில் பல நூற்பாக்களில் விரித்துரைக்கப் பட்டன.

தொல்காப்பியனார் வேற்றுமைக்குப் பலபல விதிவிலக்குகள் வருதல் நோக்கி ஓரியலுள் கூறாமல் வேற்றுமையியல் - வேற்றுமை மயங்கியல் - விளிமரபு - என மூவியல் கூறியும் முற்றும் உரைத்திலர். வடநூல்வழி வரம்பின்றி விரியும். ‘பலபல எல்லாம் மடங்கும், எல்லாம் அடங்கும்’ என இரட்டுறமொழிதலாக நூற்பா அமைந்துள்ளது. (இ. கொ. 64 உரை)

வேற்றுமையியலுள் எடுத்தோதாத உருபுகள் -

{Entry: F06__481}

மூன்றாவதன்கண் ஆன் ஆல் ஓடு, ஆறாவதன்கண் அ, ஏழாவதன்கண் இடப்பொருண்மை உணர்த்தும் சொற்கள் என்னுமிவை வேற்றுமையியலுள் எடுத்தோதப்படாதன. (சொ. 62 தெய்.)

வேற்றுமையின் இரு கூறு (பொருள் பற்றி) -

{Entry: F06__482}

உருபினை ஏற்ற சொல் பலபொருள்படுதலும், உருபை நோக்கிய சொல் பலபொருள்படுதலும் வேற்றுமையின் இரு கூறுகளாம்.

‘வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்’ (தொ. சொ. 81 சேனா.) - அஃதாவது ஏழாம் வேற்றுமையுருபினை ஏற்ற சொற்கள் வினைசெய்யிடமாகிய சந்தருப்பம் - நிலம் - காலம் - என்ற பொருள்களில் வரும்.

‘பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்’ (தொ. சொ. 66 சேனா.) என்ற நூற்பாவின்படி, எழுவாய் முடிபு ஆகிய உருபு நோக்கிய சொல் பொருண்மை சுட்டல் - வியங்கோள் பெறுதல் - வினை பெறுதல் - வினாவை ஏற்றல் - பண்பு கொள்ளுதல் - பெயர் கொள்ளுதல் - என்னும் ஆறு பொருள் களில் வரும். (இ. கொ. 21)

வேற்றுமையின் பெயரும் முறையும் -

{Entry: F06__483}

முதல் வேற்றுமை எழுவாய், எழுவாயான் செய்யப்படும் செயப்படுபொருள், அச்செயப்படுபொருள் செய்தற்கு உதவும் கருவி, அச்செயப்படுபொருளைக் கொள்வோன், அச்செயப்படு பொருள் எழுவாயினின்றும் நீங்குதல், அச்செயப்படுபொருள் ஒருவற்கு உடைமையாதல், அச்செயப்படுபொருள் செய்யப்படும் வினைசெய் இடம் - நிலம் - காலம் - ஆகிய மூவகை இடங்கள், படர்க்கையானை முன்னிலையாக்கி அழைத்தல் என்பன- முறையே எட்டு வேற்றுமையாம். பெயர் - ஐ - ஒடு - கு - இன் - அது - கண்- விளி என அவை அமைந்தன. (தொ. சொ. 64 சேனா.)

வேற்றுமையுருபிற்கு முடிக்கும் சொல் -

{Entry: F06__484}

எழுவாய் முதல் எல்லா வேற்றுமைகளுக்கும் அவற்றின் பொருள் நிரம்ப முடிக்கும்சொல் அடுத்து வரும்.

எல்லைப் பொருளில் வரும் ஐந்தனுருபும், அது முதலிய ஆறனுருபும் பெயர்கொண்டு முடியும். நான்காவதும் ஏழாவதும், வினையும் வினைகொண்டு முடியும் பெயரும் ஆகிய இரண்டையும் கொண்டு முடியும். எழுவாய் வினையும் பெயரும் வினாவும் ஆகியவற்றைக் கொண்டு முடியும். ஏனைய வேற்றுமைகள் வினைகொண்டு முடியும். கருவூரின் கிழக்கு, அவனது மனை - ஐந்தாவதும் ஆறாவதும் பெயர்கொண்டன.

பிணிக்கு மருந்து, மணியின்கண் ஒளி - நான்காவதும் ஏழாவதும் வினைகொண்டு முடியும் பெயர்கொண்டன. பிணிக்குக் கொடுக்கு மருந்து - மணியின்கண் இருக்கும் ஒளி - என வினைபற்றி நிற்றலின் வினையொடு பொருந்தும் பெயர்களாயின.

சாத்தற்குக் கொடுத்தான், மனையின்கண் இருந்தான் - இவ்விரண்டுருபுகளும் வினைகொண்டு முடிந்தன.

ஊரை அடைந்தான், வாளான் எறிந்தான், சாத்தனொடு வந்தான் - ஏனைய வேற்றுமைகள் வினை கொண்டு முடிந்தன.

சாத்தன் வந்தான், சாத்தன் கடவுள், சாத்தன் யாவன் - முதல் வேற்றுமை வினை பெயர் வினாக்களைக் கொண்டது. (நன். 319, 357)

வினா வினையுள் அடங்காதோ எனின், பயனிலையாவது வேறொன்றையும் வேண்டாது பொருள் முற்றிநிற்கும் நிலையாம். சாத்தன் யாவன் - சாத்தன் யார் - என்று வினாயவழி, அவன் அனையன் - என்று விடை வந்தல்லது பொருள் முற்றாமையின், வினாப்பெயர் - வினாவினை - என்பன ஏனைய பெயர் வினைகள் போலப் பயனிலை ஆகா. மேல் விடை வேண்டி நிற்பினும் வினாப்பொருள் முற்றிநிற்ற லின் ஒருவாற்றான் பயனிலையும் ஆம். இப்பயனிலைகளொடு சேர்ந்தே இவ்வேற்றுமை ஏற்ற பெயர்கள் பொருள்முற்று தலின் முடிக்கும் சொற்கள் இவற்றிற்குப் பயனிலை எனப்பட்டன. (நன். 295 சங்.)

வேற்றுமையுருபுகளும் சொல்லுருபுகளும் -

{Entry: F06__485}

வடமொழியில் வேற்றுமையுருபு விபத்தி எனவும், சொல்லுருபு விபத்திஅர்த்தம் எனவும் கூறப்படும். சொல்லுருபுகள் அவ்வவ் வேற்றுமைப் பொருளை உணர்த்தும். வடமொழியி லுள்ள விபத்திகள் துவிதீயை - திருதீயை - சதுர்த்தி - பஞ்சமி - சஷ்டீ - சப்தமீ - எனப்படுவனவற்றைத் தொல்காப்பியனார் மொழி பெயர்த்து இரண்டாகுவதே - மூன்றாகுவதே - நான்காகுவதே - ஐந்தாகுவதே - ஆறாகுவதே - ஏழாகுவதே - எனக் கூறுவர்.

இரண்டனுருபு : ஐ - மூன்றனுருபு : ஆன், ஓடு; நான்கனுருபு : கு, பொருட்டு (பொருட்டு என்பது விபத்திஅர்த்தம் என்னும் சொல்லுருபு); ஐந்தனுருபு : இன்; மேனின்று, நின்று என்பன சொல்லுருபுகள். ஆறன் ஒருமை பன்மையுருபுகள் முறையே அது, அ; கு, உடைய - என்பன சொல்லுருபுகள். (நம்பிக்கு மகன் - என முறைப்பொருளில் வரும் கு இவ்வாசிரியர்க்கு ஆறனுருபு.) ஏழனுருபு : இல். வடமொழியில் ஏழாம் வேற்றுமைப் பொருளில் பரிமௌலி - தலையைச் சுற்றி; அதிகரகம் - இடத்தில்; அநுகரி - யானைக்கு அருகில் - என்று வருவது போலத் தமிழிலும் உள்ளூர் - கீழ்நீர் - எனச் சொல்லுருபு பெயர்க்கு முன் வந்தன.

ஏழனுருபும் சொல்லுருபும் ஆகும் கண்; ஏழாம் வேற்றுமைக்குச் சொல்லுருபுகளான கால் - புறம் - அகம் - முதலியன அவ் வேற்றுமை ஏற்ற சொல்லின் ஏகதேசம் ஆகும். தலைக்கண், கடைக்கால் - என்பன போல்வனவற்றில் முதலதனைப் பெயராகவும் இரண்டாவதனை உருபாகவும் கொள்ளல் வேண்டும்.

உளி - மாறு - என்னும் இடைச்சொற்களும் கொண்டு என்னும் எச்சமும் மூன்றாம்வேற்றுமையின் சொல்லுருபுகள்.

எ-டு :

‘இயல்புளிக் கோலோச்சும்’ (கு. 545),

‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40),

‘விழித்தகண் வேல்கொண்டு எறிய’ (கு.775) (பி. வி. 6)

வேற்றுமையுருபு முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு -

{Entry: F06__486}

‘நாரா யணன்பூ ஓரா யிரத்தைக்

கரத்தாற் கொய்தோர் அரற்கே கொடுத்துச்

சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்

பாற்கடற் கண்ணே பள்ளி கொண்டான்’ - என்பது.

(இ. கொ. 15) (நன். 292 சிவ.)

வேற்றுமையை முடிக்கும் சொல் -

{Entry: F06__487}

நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையொடு பொருந்தும் பெயரையும் கொண்டு முடியும் (எ-டு : பிணிக்குக் கொடுக்கும் மருந்து, குன்றத்தின்கண் வாழும் கூகை). வினை கொள்ளுதற்கு உரியன சிறுபான்மை தொழிற்பெயரையும் வினையாலணையும் பெயரையும் கொண்டு முடிதலும் (மரத்தை வெட்டினான், மரத்தை வெட்டுதல், மரத்தை வெட்டியவன்), எழுவாய் வேற்றுமை வினைகொண்டு முடிதலேயன்றிச் சிறுபான்மை பெயரையும் வினாவையும் கொண்டு முடிதலும் (அவன் சாத்தன், அவன் யாவன்) கொள்க. (நன். 319 சங்.)

நான்கனுருபு கொண்டு முடியும் பெயர்கள், இன்உருபும் அதுவுருபும் கொண்ட பெயர்களைப் போலாகாமல் (கருவூரின் கிழக்கு - சாத்தனது ஆடை), பிணிக்குக் கொடுக்கும் மருந்து - மணியின்கண் இருக்கும் ஒளி - என வினைவேண்டி நிற்றலால், ‘வினையொடு பொருந்தும் பெயர்கள்’ எனப்பட் டன. இங்ஙனம் ஆதலால், இவற்றிற்கும் வினைப்பயனிலை ஒன்றுமே சிறந்தது என்பதாயிற்று. (நன். 319 இராமா.)

வேற்றுமை வழி -

{Entry: F06__488}

வேற்றுமைவழிச் சந்தி. இது பதினாறாம். அஃதாமாறு : எழுவாயும் விளியும் உருபும் திரிபும் பெற்று வருவன இரண்டு, பெறாமல் இயல்பாய் நிற்பன இரண்டு. ஆக நான்கும், இரண்டு முதல் ஏழாம் வேற்றுமைகாறும் வரும் ஆறு தொகைகளும் விரியுமாகப் பன்னிரண்டுமாம் அவை வருமாறு :

சாத்தன் வந்தான், சாத்தனானவன் வந்தான்: எழுவாய், உருபு பெறாமலும் பெற்றும் வந்த இரண்டு; குயில்! வாராய், குயிலே! வாராய்: விளி, இயல்பாயும் திரிந்தும் வந்த இரண்டு. ஏனைய தொகைகளும் விரிகளும் வெளிப்படை. சாத்தனை - எனப் பெயரோடு உருபு புணர்தலையும் கொண்டால் அவையும் சேர இருபத்து நான்காம். ஆயின் இஃது இவ்வாசிரியர் கருத்தன்றாம். (இ. கொ. 119)

உருபுகளை நிலைமொழியின் ஒரு கூறாகவே கொண்டு அந்நிலைமொழி வருமொழியொடு கூடும் பொருள் தொடர்பு பற்றிய வேற்றுமை - அல்வழி - என்ற பொருள் களைக் கோடல் இலக்கணஆசிரியர்கள்பால் பெரும்பான்மை யும் அமைந்துள்ளது.

வேறிடத்தான் இசைத்தல் -

{Entry: F06__489}

காலம் உலகம் முதலிய சொற்களும் ஈறு திரிதற்கு ஏற்பன ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி உயர்திணையாய் இசைத்தல்.

எ-டு : காலம் : காலன் கொண்டான். உலகம் : உலகர் பசித்தார். (தொ. சொ. 59 சேனா. உரை)

காலம் உலகம் உயிர் உடம்பு தெய்வம் வினை பூதம் ஞாயிறு திங்கள் சொல் முதலியன பொருளான் உயர்திணைச் சொல் லாயினும் சொல்லான் அஃறிணையாதலின், ‘காலம் ஆயிற்று’ என்றாற் போல அஃறிணை முடிபே கொள்ளும்; ஆயின் ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி உயர் திணையைச் சுட்டும்.

எ-டு : காலன் கொண்டான், உலகர் பசித்தார்.

(தொ. சொ. 60 நச். உரை)

பரிதியஞ் செல்வன், திங்களஞ் செல்வன் - என ஞாயிறு திங்கள் என்பன இவ்வாறு உயர்திணை வாய்பாட்டான் செல்வன் எனப்பட்டன; உதித்தான் மறைந்தான் - என வினைகொடுத்து இவற்றை உயர்திணையாக முடிக்க.

வேறுபடுக்கப்படுதலுக்குரிய வாய்பாடுகள் -

{Entry: F06__490}

ஓப்புதல் இழத்தல் அறுத்தல் குறைத்தல் தொகுத்தல் பிரித்தல் ஆக்கல் சிதைத்தல் - என்ற எட்டும் இரண்டாம் வேற்றுமையின் வேறுபடுக்கப்படுதல் என்னும் பொருள்பற்றி வரும் வாய்பாடுகள்.

எ-டு : கிளியை ஓப்பும், பொருளை இழக்கும், நாணை அறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும். (தொ. சொ. 73 நச். உரை)

வேறுபடுத்தல் -

{Entry: F06__491}

இயற்றப்படுதலும் வேறுபடுக்கப்படுதலும் எய்தப்படுதலும் - என இரண்டாம் வேற்றுமைப்பொருள் ஆகிய செயப்படு பொருள் மூன்றாம். இவற்றுள் வேறுபடுத்தலாவது முன் னுள்ளது ஒன்றனைத் திரித்தல். அது குறைத்தலும் அறுத் தலும் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது. அவற்றுள், ஒன்றனைச் சுருக்குதலும் சிறிதிழக்கச் சிதைத்தலும் குறைத்த லாம்; சிறிதும் இழவாது சினையையாயினும் முதலையாயி னும் இரு கூறு செய்தல் அறுத்தலாம். (தொ. சொ. 71,72 சேனா. உரை)

வேறுபல குழீஇய தற்கிழமை -

{Entry: F06__492}

இஃது ஆறாம்வேற்றுமையின் குழூஉக்கிழமைப் பொருள் களுள் ஒன்று.

எ-டு : படையது குழாம் (படைக்கருவிகள் வில்லும் வாளும் முதலாகப் பலதிறத்த ஆகலின்) ‘படைக்குழாம்’ வேறுபல குழீஇய குழூஉக்கிழமையாம். (தொ. சொ. 79, 80 சேனா. உரை)

வேறுவினைப் பொதுச்சொல் -

{Entry: F06__493}

வேறுபட்ட வினையினையுடைய பலபொருட்குப் பொது வாகிய சொல். அச்சொல்லை அவற்றுள் யாதானும் ஒரு வினையான் கூறார்; அவற்றையெல்லாம் அடக்கி நிற்கும் பொதுவினையான் கூறுக.

எ-டு : அடிசில் என்பது உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கும், அணி என்பது கட்டுவன கவிப்பன செறிப்பன பூண்பனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன ஊதுவன குறிப்பன எழுப்பு- வனவற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவனவற்றிற்கும் பொதுவாதலின், அடிசில் உண்டார், கைதொட்டார் - எனவும், அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் - எனவும், இயம் இயம்பினார், படுத்தார் - எனவும், படை வழங்கினார், தொட்டார் - எனவும்,

பொதுவினையான் கூறவேண்டும்; ஒன்றற்குரிய சிறப்பு வினையான் கூறின் வழுவாம்.

‘அறுசுவை அடிசில் அணியிழை தருதலின்,

உறுவயிறார ஓம்பாது தின்றலின்’

என இழித்தற்கண் வருவது வழுவன்று. மிசைந்தார் அயின்றார் - என்பன சிறப்பு வினையாய் வருதலின், அவை பொதுவினை ஆதற்கு ஏலா. (தொ. சொ. 46 நச். உரை)

வை என்னும் உரிச்சொல் -

{Entry: F06__494}

இவ்வுரிச்சொல் கூர்மை என்னும் குறிப்புணர்த்தும்.

எ-டு : வைந்நுனை ப் பகழி (முல். 73). (தொ. சொ. 387 சேனா. உரை)

வைதிகப் பிரக்கிரியை -

{Entry: F06__495}

வடமொழியில் வேதத்திற்கெனத் தனி இலக்கணமும் வழக்காறும் உள. அது வைதிகப் பிரக்கிரியை எனப்படும். தமிழில் செய்யுள்வழக்கு என்பது இதற்கு ஒருவாறு பொருந்தும். மற்றொன்று லௌகிகப்பிரக்கிரியை என்பது. தமிழில் இது பேச்சுவழக்காம். (பி. வி. 18)

ள, ன section: 6 entries

ளகாரஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்றல் -

{Entry: F06__496}

ளகாரஈற்று உயர்திணைப்பெயர்க்குப் பொதுவிதியன்றி, அளபெழுதலும் - அயல் நீடுதலும் - இறுதி ளகரஒற்று யகரம் ஆதலும், ஈற்றயல் அகரம் ஏகாரம் ஆதலும் விளியுருபாம். அவை வருமாறு :

செவ்வேள், செவ்வேளே - பொதுவிதியான் இயல்பாயும் ஏகாரம் மிக்கும் விளியேற்றன.

‘மேவார்த் தொலைத்த விறல்மிகு வேஎள் - அளபெடை

‘துனிகொள்ளல் எல்லா நீ’ கலி. 35 - ஈறு கெட்டது

நமர்காள், மக்காள் - ஈற்றயல் அகரம்
நீண்டன.

குழையாய், வாயிலாய் - இறுதி ளகரஒற்று
யவ்வொற்றாயின.

அடிகள் - அடிகேள் - ஈற்றயல் அகரம்
ஏகாரமாயிற்று.

ஏடன் - தோழன்; எல்லாள், ஏடி - தோழி; ஏடா : தோழன் முன்னிலைப்பெயர்; எல்லா, ஏடீ : தோழி முன்னிலைப் பெயர்; இவை இயல்பாய முன்னிலை அல்ல; படர்க்கைப் பெயர் விளியேற்றமையால் வந்த முன்னிலைப் பெயராம். (நன். 308 சங்.)

ளவ்வொற்று இகரம் இரண்டும் ஏற்கும் பெண்பாற்பெயர்களும் ளவ்வொற்று ஏற்கும் பெண்பாற்பெயர்களும் இகரம் ஏற்பனவும் -

{Entry: F06__497}

திணிதோளாள், திணிதோளி; சுரிகுழலாள், சுரிகுழலி; செங்கண்ணாள், செங்கண்ணி; அலைகாதாள், அலைகாதி; கூனாள், கூனி - என்பன இரண்டு ஈறும் ஒருங்கு வந்தன. (நன். 276 மயிலை.)

தமள் நமள் நுமள் எமள் அவையத்தாள் அத்திகோசத்தாள் சங்கத்தாள் பொருளாள் பொன்னாள் முடியாள் - என இவ்வாறே ளகர ஈற்றிற்கு ஏற்பன அறிந்து ஒட்டுக.

ஒருத்தி குறத்தி எயிற்றி மறத்தி உழத்தி ஆய்ச்சி பரத்தி கிழத்தி அருவாட்டி சோழிச்சி கொங்கச்சி கன்னடச்சி கலிங்கிச்சி தெலுங்கிச்சி மானிடத்தி தேவி நரகி அரசி வீரணுக்கிச்சி கைக்கோளிச்சி கணவாட்டி கோனூர்கிழத்தி அம்பர்கிழத்தி வல்லங்கிழத்தி அரசூருடைச்சி பழையனூருடைச்சி படைத் தலைவி சேனாவரசி கணக்கிச்சி வெள்ளாட்டிச்சி பிணக்கிச்சி திருடி - என்பன இகரம் ஏற்றன.

னகரஈற்றுஅயல் ளகர யகர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதல் -

{Entry: F06__498}

வினையாலணையும் பெயர்க்கண் அன்றி (எ-டு : வில்லோன் காலன கழலே தொடியோள் , மெல்லடி மேலவும் சிலம்பே’ குறுந். 7), வினைக்கண்ணும் (எ-டு : வந்தோய் மன்ற தெண்கடல் சேர்ப்ப ’ அக. 80) ஒரோவழி ஆகாரம் ஓஆதலின், அதனையும் உடன் கூறினார்.

‘ஆ ஓ ஆதலும் செய்யுளுள் உரித்தே’ என்ற உம்மையை எதிர்மறையாக்கி வில்லோன் - வில்லான் - என ஒன்றே ஆதலும் ஆகாமையும், செக்கான் - வண்ணான் - என மற்றொன்று ஆகாமையும், அதனை ஆக்கவும்மையாக்கிப் ‘பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ (முருகு. 317) என ஆகாரமேயன்றி அகரமும் (கிழவன்) ஓகாரம் ஆதலும் கொள்க. (நன். 353 சங்.)

னகர ஈற்று உயர்திணைப் பெயர்கள், ஏனைய பெயர்கள் விளியேற்றல் -

{Entry: F06__499}

‘ஒரு சார் னவ்வீற்று உயர்திணைப்பெயர் விளியேற்றல்’ காண்க.

னகர ஈற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க் கண்ணும், பொதுவிதியான் இயல்பாய் நிற்றலும் இறுதி கெடுதலும் அதனோடு ஈற்றயல் நீடலும் விளியுருபாம்.

வருமாறு :

அலவன் - அலவன் , அலவ, அலவா;

சாத்தன் - சாத்தன், சாத்த, சாத்தா (நன். 311 சங்)

னகரஈற்றுப் பெயர் விளிக்கப்படுமாறு -

{Entry: F06__500}

எடுத்துக்காட்டு:

அன் என்னும் னகரஈறு கெட்டு அகரம் ஆ ஆகி விளியேற்கும். சோழன் - சோழா.

அண்மை விளிக்கண் அன்ஈறு அகரமாகும். துறைவன்- துறைவ.

ஆன் என்னும் னகரஈறு இயல்பாய் சேரமான்,
விளியேற்கும். மலையமான்.

ஆன்ஈற்று வினையாலணையும் பெயர்,
ஆன் ‘ஆய்’ எனத் திரிந்து விளியேற்கும். வந்தான்-வந்தாய்.

ஆன்ஈற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வாறே
ஆன் ‘ஆய்’ ஆகி விளியேற்கும். கரியான்-கரியாய்.

ஆன் ஈற்று அளபெடைப்பெயர் மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளியேற்கும். உழாஅன் உழாஅஅன்; கிழாஅன் - கிழாஅஅன்.

னகரஈற்று முறைப்பெயர் ஏகாரம் ஏற்று மகன்-மகனே என விளியேற்கும். (சொ. 130 136 சேனா. உரை)

அன் ஈறு ஆ ஆகும் : துறைவன் - துறைவா; ஊரன் - ஊரா; சோழன் - சோழா; சேர்ப்ப ன் - சேர்ப்பா. (சொ. 132 நச். உரை)

அன்ஈற்று அண்மை ச்சொல் அகரம் ஆகும் : துறைவன் - துறைவ; ஊரன் - ஊர; சோழன் - சோழ; சே ர்ப்பன் - சேர்ப்ப.

(தொ. சொ. 133 நச். உரை)

ஆன் ஈறு இயற்கையாக விளியேற்கும் : சேரமான், மலைமான்

(தொ. சொ. 134 ந ச். உரை)

ஆன்ஈற்று தொழிற்பெயர் ‘ஆய்’ ஆகும் : வந்தான் - வந்தாய், செ ன்றான் - சென்றாய்.

கழலான் - கழலாய்; இடையான் - இடையாய் - என ஏனைப் பெய ர்க்கண்ணும் வரும். (தொ. சொ. 135 நச். உரை)

பண்பு ப்பெயரும் ஆன் ‘ஆய்’ ஆகும் : கரியன் - கரியாய்; தீயான் - தீயாய். (தொ. சொ . 136 நச். உரை)

அளபெடைப் பெயர் மூன்று மாத்திரையின் நீண்டு இயல் பாய் அளபெடுக்கும் : உழாஅன் - உழாஅஅன், கிழாஅன் - கிழாஅஅன். (தொ. சொ . 137 நச். உரை)

முறைப்பெயர் ஏகாரம் பெற்று அளபெடுக்கு ம் : மகன் - மகனே, மருமகன் - மருமகனே. (சொ. 138 நச். உரை)

னகரஈற்றுள் விளியேலாப் பெயர்கள் -

{Entry: F06__501}

தான் என்னும் பெயரும், அவன் - இவன் - உவன் - என்னும் சுட்டுமுதற் பெயரும், யான் என்னும் பெயரும், யாவன் என்னும் வினாவின் பெயரும் ஆகியவை னகர ஈறே ஆயினும் விளிக்கப்படா. (தொ. சொ. 137 சேனா. உரை)