Section G07 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 12 alphabetical subsections

  1. அ section: 180 entries
  2. ஆ section: 58 entries
  3. இ section: 155 entries
  4. ஈ section: 1 entries
  5. உ section: 113 entries
  6. ஊ section: 12 entries
  7. எ section: 20 entries
  8. ஏ section: 31 entries
  9. ஐ section: 25 entries
  10. ஒ section: 45 entries
  11. ஓ section: 6 entries
  12. க section: 236 entries

G07

[Version 2l (transitory): latest modification at 09:51 on 23/04/2017, train Hamburg-Paris]

அகம்-1 (882 entries)

[TIPA file G07 (and pages 3-264 in volume printed in 2005)]

அ section: 180 entries

அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல் -

{Entry: G07__001}

தலைவன் தான் தலைவியைக் கண்டு மகிழ்ந்த இடத்தையும், அவளுடைய உறுப்புக்களின் அமைப்பையும், வனப்பையும் தோழனுக்குக் கூறுதல்.

இது களவியலில் பாங்கற் கூட்டம் எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 137)

அகணி -

{Entry: G07__002}

மருத நிலத்திற்கு ஒரு பெயர் - ‘சொன்னநீர் வளமைத்தாய சுரமை நாட்டு அகணி சார்ந்து’ என வருமாறு காண்க.

(சூளா. நகரச். 1)

அகத்தமிழ் -

{Entry: G07__003}

பொருளின் இருகூறுகளாகிய அகம், புறம் என்பவற்றில் தலைவனும் தலைவியும் நுகரும் காமஇன்பமாகிய அகம் பற்றிய தமிழ்ப்பாடல்கள். (கோவை. 70 உரை)

அகத்திணை -

{Entry: G07__004}

1. அகமாகிய ஒழுக்கம். புறத்தார்க்கு இத்தன்மைத்தென்று வெளிப்படையாகக் கூற இயலாது, மனத்தாலேயே நுகர்ந்து இன்புறுவதாகிய காமஇன்பம் பற்றிய செய்திகள் அகத் திணை எனப்பட்டன.

2. அகம் பற்றிய திணை ஏழு. அவையாவன முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணையும், அவற்றின் புறமாய் அமைந்துள்ள கைக்கிளையும் பெருந்திணையும் ஆம். (தொ. பொ. 1 நச்.)

அகத்திணை உறுப்புக்கள் -

{Entry: G07__005}

அகத்திணை இயல்பு, வகை, பொது, சிறப்பு, உவமை, புறநிலை, எதிர்நிலை, கருவி, காரியம், காரகம், முன்னவை, பின்னவை என்பன பன்னிரண்டும் ஆம். (தொ.வி. 151) (தொகை. பக். 2)

அகத்திணைப் பாடலில் இயற்பெயர் வருதலாகாமை -

{Entry: G07__006}

அகத்திணைப் பாடலில் தலைவன் தலைவியர்தம் இயற் பெயர் வருதல் கூடாது. ஆயின், நாட்டு வருணனை செய்யும் போது, ‘ஐயை தந்தை........... தித்தன் உறந்தை........ காவிரி’ (அகநா. 6.) என்றாற் போலவும், உவமத்தால் விளக்கும்போது, ‘வெள்ளி வீதியைப் போல நன்றும், செலவயர்ந் திசினால் யானே’ (அகநா. 147), ‘எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்.... போல..... இனைமதி நெஞ்சே’ (குறுந். 19) என்றாற் போலவும் அகத் திணைக்கண் சார்த்து வகையான் இயற்பெயர் வரலாம். இவ்விதி அகனைந்திணைக்கே உரித்து. கைக்கிளை பெருந் திணை இவற்றில் “இராமன், மிதிலை மூதூர் எய்திய ஞான்று, மதியுடம் பட்ட மாக்கட்சீதை”எனவும், ‘விசயன் நெஞ்சத்(து) ஆரழல் ஆற்றாது’ எனவும் முறையே சுட்டி ஒருவர் பெயர் கொள்ளுதலும் அமையும். (தொ.பொ. 54 நச். உரை)

அகத்திணைக்கண் கூற்றிற்குரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரானன்றி இயற்பெய ராற் சுட்டார். (தொ. பொ. 54 நச். உரை)

கிளவித்தலைவன் அல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித்தலைவனாக ‘வையைதன், நீர் முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார், போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்’ (கலி. 67) எனக் குறிப்பினாற் கூறுதலுமுண்டு. (தொ. பொ. 83 நச். உரை)

அகத்திணைப்புறம் -

{Entry: G07__007}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை எனும் அகனைந் திணைகளுக்குப் புறமாக அகப்பொருளைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைகளே அகத்திணைப் புறம் எனப்படு வன. இவற்றிற்கு, அடியோரும் ஏவலருமே பெரும்பான்மை யும் உரிமையுடையர். (தொ. பொ. 23 நச். உரை)

அகத்திணைமரபு -

{Entry: G07__008}

அகத்திணை முறைமைக்கு மாறாகாமல் புதிய கருத்துக்கள் வந்து கலத்தலும் அகத்திணை மரபாம். அவை:

1. பாசறைக்கண் தலைவியின் தூது கண்டு தலைவன் கூறல்,

2. தலைவியின் ஆற்றாமை கண்டவிடத்துப் “பிரிந்து சென்ற தலைவன் வந்தான்”என்று தோழி கூறல்,

3. வரைவு இடைவைத்துப் பிரிந்த தலைவன் தலைவியை நினைத்து வருந்திக் கூறல்,

4. உடன்போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டு வந்துழித் தலைவன் தோழிக்குக் கூறல்,

5 “யான் நினைத்துச் சென்ற காலமளவும் பொருள் தேடாமல் உன்னையே விரும்பி வந்தேன்”என்று தலைவன் தலைவிக்குக் கூறல்,

6. பொருள்வயின் பிரிந்தோன் தலைவியை நினைத்து வருந்துதல்,

7. இடைச்சுரத்துத் தலைவன்செலவு கண்டோர் கூறல்,

8. அவன்மீட்சி கண்டோர் கூறல்,

9. ஊரின்கண் கண்டோர் கூறல்,

10. தலைவி தன்னையும் உடன்கொண்டு செல்லுமாறு தலைவனை வேண்டல்,

11. தலைவன் தலைவிக்கு உடன்போக்கு மறுத்துக் கூறல் - என்னும் இவை முதலியன. இவை தொல்காப்பியத் துக்குப் பின்னர் வந்த செய்திகளாம்.(தொ. பொ. 41. குழ.)

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் -

{Entry: G07__009}

அகத்திணையிடத்துக் குற்றம் தீர உணர்தல். மக்கள் வாழ்வில் தூய கற்புறு காதல் கண்ணிய மனையறம் பற்றிய ஒழுக்கம் அகம் ஆகும். பிறர்தொடர்பு இன்றியமையா இற்புற வாழ் வொடு இயைபுடையன எல்லாம் புறம் எனப்படும்.

அகத்திணைக்கண் முதல் கரு உரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு முறையே வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை ஒப்புமை பற்றிச் சார்புடையனவாதலும், நிலமில் லாப் பாலை பெருந்திணை கைக்கிளை என்பன மூன்றும் முறையே வாகையும் காஞ்சியும் பாடாண்திணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை ஒப்புமை பற்றிச் சார்புடையன வாதலும் கூறற்கு ‘அரில்தப உணர்தல்’ எனப்பட்டது. (தொ. பொ. 56. நச். உரை)

இன்ன அகத்திணைக்கு இன்ன புறத்திணை இவ்வாறு புறனாகும் என்பதைக் ‘குற்றமற அறிந்தோர்’ என்றவாறு.

(தொ. பொ. 269.குழ.)

அகத்திணைகளின் இயல்பை ஐயம் திரிபு கெட அறிந்தார்க் கன்றி மற்றவருக்கு அத்திணைகளொடு தனித்தனி இயை புடைய புறத்திணைகளின் இயல் புலனாகாது என்பது ‘அகத் திணை மருங்கின் அரில் தப உணர்தல்’ என்பதன் கருத்தாம். (புறத். 1. பாரதி)

அகத்திணையியல் -

{Entry: G07__010}

இது தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் முதல்இயல் ஆகும். எழுவகை அகத்திணையுள் உரிமைவகையான் நிலம் பெறுவன இவையெனவும், அந்நிலத்திடைப் பொதுவகை யான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலையெனவும் கூறுதலானும், அவற்றுள் பாலைத்திணை நிலவகையால் ‘நடுவணது’ எனப்பட்டுப் புணர்தல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் நால்வகை ஒழுக்கம் நிகழும்போதும் அந் நான்கனுள்ளும் பிரிதல் பொருட்டாய்த் தான் பொதுவாய் நிற்கும் எனக்கூறுதலானும், முதல்கருஉரிப்பொருளும் உவமங்களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுதலானும், இவ்வாறு அகத்திணைக்கெல்லாம் பொதுஇலக்கணம் உணர்த்துதலின் அகத்திணையியல் எனப்பட்டது. இதன்கண் 55 சூத்திரங்கள் (நச்.) உள்ளன.

இலக்கணவிளக்க அகத்திணையியல் அகப்பொருட் செய்திகள் அனைத்தையும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியற் செய்தி யொடு விரிவாகக் கூறுகிறது. இதன்கண் 226 சூத்திரங்கள் உள்ளன.

நம்பியகப்பொருள் விளக்கத்தின் முதலியலாகிய அகத்திணை யியல் அகம்பற்றிய பொதுச்செய்திகளை 112 சூத்திரங்களாற் புலப்படுத்துகிறது. மாறன் அகப்பொருளின் அகத்திணை யியலில் 128 சூத்திரங்கள் உள.

முத்துவீரிய அகத்திணைப்பகுதி திருக்கோவையாரை முழு தும் அடியொற்றி அமைந்துள்ளது.

அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -

{Entry: G07__011}

பாட்டுடைத் தலைவனுடைய அ) நிலம், ஆ) கருப்பொருள்கள் இவற்றைச் சுட்டுமிடத்தும், இ) கருப்பொருள் உவமமாய் வருமிடத்தும் ஒருவர் பெயர் சுட்டி உணரப்படும்.

எ-டு :

அ) ‘முருகனைப் போலப் போரிடும் ஆவியென்ற

வேளுக்குரிய பொதினியின்கண்’ (அகநா. 1)

ஆ) ‘ஐயை தந்தையாகிய தித்தனுக்குரிய உறையூரில்

ஓடும் காவிரி வெள்ளத்தின்கண்’ (அகநா. 6)

இ) “எவ்வி என்ற வள்ளலை இழந்தமையால்

வறுமையுற்றுப் பூச்சூடாது வறுந்தலையை முடித்து

வருந்தும் யாழில் வல்ல பாணர்களைப் போல்

மனமே! நீ வருந்துவாயாக” (குறுந். 19)

‘அகத்திணைப் பாடலில்... ஆகாமை’ காண்க. (தொ. பொ. 55 நச்.)

அகப்பாட்டினுள் பாடப்படுவோர் -

{Entry: G07__012}

அகப்பாட்டினுள் பாட்டுடைத்தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவரும் பாடப்படுவர். பாட்டுடைத்தலைவனது இயற்பெயர் குறிப்பிடப்படும். ஆனால், கிளவித் தலைவன், தலைவி, அவள் உறவினர் முதலிய எவரது இயற்பெயரும் அகப்பாட்டினுள் இடம் பெறுதல் கூடாது. கிளவித்தலை வனைவிடப் பாட்டுடைத் தலைவனே மேம்பட்டவன். அவ்விருவரையும் நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப் பெயர், குலப்பெயர் இவற்றால் குறிப்பிடுவர். சிலவிடங்களில் பாட்டுடைத் தலைவனையே கிளவித்தலைவனாகக் கூறுத லும் உண்டு.

`வையை தன், நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்,

போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூர’ (கலி. 67)

எனப் பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியனே கிளவித் தலைவன் ஆயவாறு. (ந. அ. 245 - 248)

அகப்பாட்டு -

{Entry: G07__013}

நாடக வழக்கும் உலகியல் வழக்குமாக அமைந்த புலனெறி வழக்கிற்குச் சிறந்த ஒத்த காம இல்லற அகவாழ்வு பற்றிய பாடல்கள் யாவும் அகப்பாடல்களேயாம். (இப்பாடல்களில் கிளவித் தலைவன் இயற்பெயர் கூறப்படின், இவை அகப் பாட்டாதல் தவிர்ந்து புறப்பாட்டாகிவிடும் 54 நச்.) இவ்வகப் பாடலுக்குச் சிறந்தவை கலிப்பாவும் பரிபாடலும் ஆம். (தொ. பொ. 53 நச். உரை)

அகப்புறக் கைக்கிளை -

{Entry: G07__014}

ஐந்திணை ஒழுக்கத்துக்குப் புறமானதாய், நன்மக்களிடத்துப் பெரும்பான்மையும் நிகழ்வதன்றாய், அடியோர் ஏவலர் இவர்களிடத்தே நிகழும் ஒருதலைக்காமமாகிய கைக்கிளை. கைக்கிளை அகத்தைச் சாராது அகப்புறமாகக் கொள்ளப் படும் எனக் கைக்கிளையின் இயல்பினை அகப்புறம் என்ற அடை சுட்டுகிறது. இக்கைக்கிளை நிகழ்த்துதற்குரியார் பிறருக்குக் குற்றேவல் செய்யும் அடியவர், பிறர் ஏவிய தொழிலைச் செய்தலில் வல்லோராகிய வினைவலர் என்ற இருதிறத்தவரும் தமக்கு உரியர் அன்மையின் அறம் பொருள் இன்பம் வழாமை நிகழ்த்துதல் அவர்க்கு அரிது என்பது பற்றி, இவற்றை அகப்புறம் என்றார். (தொ. பொ. 23. நச். உரை)

அகப்புறத் தலைவன் -

{Entry: G07__015}

ஐந்திணை ஒழுக்கமாகிய அகத்திற்குப் புறம்பானவாய் உள்ள ஒருதலைக்காமம், பொருந்தாக் காமம் ஆகிய கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டற்கும் வரும் தலைவன் அடியவனாகவோ ஏவலனாகவோ இருப்பான். மேம்பட்ட தலைவன் அகப்புறத்திணைகளுக்கு வாரான். ஆகவே அகப் புறத் தலைவன் கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்களுள் ஒன்றற்குத் தலைவனாக வரும் அடியவனோ ஏவலனோ ஆவான் என்பது. (தொ. பொ. 23. நச்.)

அகப்புறத்திணை -

{Entry: G07__016}

அகன்ஐந்திணைகளுக்குச் சற்றுப் புறமானவையான கைக் கிளை பெருந்திணை எனப்படும் ஒருதலைக்காமம், ஒவ்வாக் காமம் பற்றிய திணைகள். (தொ. பொ. 23. நச்.)

அகப்புறப்பாட்டு -

{Entry: G07__017}

அகன்ஐந்திணைக்குப் புறத்தனவாகிய கைக்கிளை பெருந் திணை பற்றிய பாடல்கள். “உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”என்பதனான், கைக்கிளை பெருந்திணை பற்றிய பாடல்கள் அகன்ஐந்திணைப் பாடல்களொடு விரவிவரும். கைக்கிளை பற்றிய பாடல்கள் முல்லைக்கலியிலும், கைக் கிளை பெருந்திணைபற்றிய பாடல்கள் குறிஞ்சி நெய்தற்கலி களிலும் காணப்படுகின்றன. வருமாறு :

கைக்கிளை : கலி. 56, 57, 58

பெருந்திணை : கலி. 62, 94, 99, 100, 142 - 147 (தொ.பொ. 13. நச்.)

அகப்புறப் பெருந்திணை-

{Entry: G07__018}

அகப்பொருளாகிய ஐந்திணை ஒழுக்கத்திடையே நிகழும் பொருந்தாத காமச் செய்திகள் ஆகிய மடலேறுதல், விடை தழுவுதல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபத நிலை, தபுதாரநிலை என்பன. தலைவன்தலைவியர் இயற் பெயர் சுட்டப்படாமல் அமைந்திருப்பின் அகப்புறப் பெருந் திணையாம். இயற்பெயர் சுட்டப்படின் புறத்திணையாகி விடும். (ந. அ. 244)

அகப்புறப் பொருள் -

{Entry: G07__019}

அறன், வாழ்க்கை, ஒருதலைக்காமம், பொதுவியல், பாடாண், நயனிலைப்படலம் (-கூத்தமார்க்கம்) என அகப்புறப் பொருள் அறுவகைப்படும். (வீ. சோ. 106 உரை)

அகப்புறம் (1) -

{Entry: G07__020}

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந் திணைகளும் அகம்; இவற்றையடுத்துப் புறத்தே அமைந் துள்ள கைக்கிளையும் பெருந்திணையும் அகப்புறமாம். (ந.அ. 250)

அகப்புறம் (2) -

{Entry: G07__021}

கைக்கிளைபெருந்திணைகளைத் தொல்காப்பியனார் அகப்புறம் என்று கூறியிருப்பவும், வீரசோழிய ஆசிரியர் முதுபாலை, பாசறை முல்லை, வள்ளி, சுரநடை, இல்லவள் முல்லை, காந்தள், குறுங்கலி, தாபதம், குற்றிசை, தபுதாரம் என்னும் பத்தும் (கைக்கிளை பெருந்திணைகளாகிய) அகப்புறம் ஆகும் என்பர். (வீ.சோ. 97)

அகப்பொருட் பெருந்திணை -

{Entry: G07__022}

அகன்ஐந்திணைக்குரிய செய்திகளின் இடையிடையே அள விறந்த காமத்தால் அவ்வைந்திணை ஒழுக்கத்துக்குப் பொருந் தாதன போல்வனவாக வரும் செய்திகளாகிய அகன்றுழிக் கலங்கல், மடற்கூற்று, குறியிடையீடு, தெளிவிடை விலங்கல், வெறிகோள், உடன்போக்கு, பூப்பியல் உரைத்தல், பொய்ச் சூளுரை, தீர்ப்பில் ஊடல், போக்கு அழுங்கு இயல்பு, பாசறைப் புலம்பல், பருவம் மாறுபடுதல், வன்புறை எதிர்ந்து மொழிதல், அன்புறு மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் என்பன அகப்பொருட் பெருந்திணைச் செய்தி களாம். (ந. அ. 243)

அகப்பொருள் (1) -

{Entry: G07__023}

ஒத்த தலைவனும் தலைவியும் களவிலும் கற்பிலும் தம்முள் கூடியும் ஊடியும் உணர்ந்தும் இன்பம் நுகர்ந்து மனத்தான் எய்தும் மகிழ்வைப் பிறர்க்கு எடுத்து விளக்கமுடியாத அளவு அமைந்துள்ள இன்பப்பொருள் அகப்பொருளாம்.

இஃது ஒத்த காமமாகிய ஐந்திணை, ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, பொருந்தாக் காமமாகிய பெருந்திணை என மூவகைத்தாய் வரும். (தொ. பொ. 1 நச். )

அகப்பொருள் (2) -

{Entry: G07__024}

உள்ளத்தான் மாத்திரம் உணரப்படுகின்ற காமப்பொருள். ஒருகாலத்து ஒருபொருளான் ஐம்பொறியும் நுகர்தற் சிறப் புடைய காம இன்பம் (காமத்துப்பால் தோற். பரிமே), ஒத்த அன்பான் இயைந்த தலைவனும் தலைவியும் தம்முள் கூடுகின்ற காலத்து நிகழும் பேரின்பமாய், அக்கூட்டத்தின் பின் இத்தன்மைத்து என்று இருவராலும் விளக்கிக் கூற இயலாததாய், எக்காலத்தும் உள்ளத்தானேயே நுகரப்படுவ தோர் இன்பம் ஆதலின் அஃது அகப் பொருள் எனப்பட்டது. (தொ. பொ. 1 நச். உரை)

அகப்பொருள் (3) -

{Entry: G07__025}

அகப்பொருள், களவு கற்பு என்னும் இருவகை ஒழுக்கத்ததாய், அளவற்ற அன்பான் சிறப்பது. (வீ. சோ. 106 உரை.மேற்.)

அகப்பொருள் வகை -

{Entry: G07__026}

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன அகப்பொருள் வகைகள். (ந. அ. 1)

அகப்பொருளுரை -

{Entry: G07__027}

அகப்பொருள் உரை 27 ஆவன. அவை வருமாறு 1. சட்டகம், 2. திணை, 3. கைகோள், 4. நடை, 5. சுட்டு, 6. இடன், 7. கிளவி, 8. கேள்வி, 9. மொழி, 10, கோள், 11. உட்பெறு பொருள், 12. சொற்பொருள், 13. எச்சம், 14. இறைச்சி, 15. பயன், 16, குறிப்பு, 17. மெய்ப்பாடு, 18. காரணம், 19. காலம், 20. கருத்து, 21. இயல்பு, 22. விளைவு, 23. உவமம், 24. இலக்கணம், 25. புடையுரை, 26. மொழிசேர் தன்மை, 27. பொருளடைவு என்பனவாம். (வீ. சோ. 90, 91)

அகம் -

{Entry: G07__028}

ஒத்த அன்பான் இயைந்த தலைவனும் தலைவியும் கூடிய கூட்டத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் இத்தன்மைத்து என்று இருவராலும் கூற இயலாததாய் யாண்டும் உள்ளத்தாலேயே நுகரப்படும் தன்மையுடைய தாகிய காம இன்பம் அகம் எனப்படும். அகம் - மனம்; ஆகு பெயரான் மனத்தில் நிகழும் காம இன்பத்தைக் குறிக்கிறது. (தொ. பொ. 1. நச்.)

‘அகம்‘ என்பதன் இலக்கணம் -

{Entry: G07__029}

அகமாவது இல்லற வாழ்விற்குரியராக, உயர்ந்த பாலது ஆணையான் இணையும் தலைவனும் தலைவியும் என்னும் இருவருள் ஒருவரான் ஒருவரது உள்ளத்தெழும் இன்பமும் துன்பமுமாகிய உணர்வுகளாம். அகம் என்பது உள்ளத்தை யும் இல்லத்தையும் ஒருங்குணர்த்தி நின்றது. அங்ஙனம் அகத்தே நிகழும் நிகழ்வுகளை அகம் என்றது, பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயராம். ஈண்டுத் துன்பம் என்றது காம ஒழுக்கத்திற்கு இடையூறாகக் கொள்ளும் உணர்வை.

நச்சினார்க்கினியர் கூறும் உரை இவ்வதிகாரத்துள் கூறும் புணர்வும் பிரிவும் கூடலும் ஊடலுமாகிய கைகோட் பொருளையெல்லாம் அகப்படுத்தாமை காண்க.

(தொ. அகத். பாயிரம் ச. பால.)

அகம் புகல் மரபின் வாயில்கள் -

{Entry: G07__030}

தலைவியிருக்கும் இருப்பிடத்துக்குத் தனித்துச் சென்று அவளுடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றவராகிய அறிவர், பார்ப்பார், தோழி, விறலி, பாணன் முதலியோர்.

தலைவன் தாம் கூறும் சொற்களை முகம் கொடுத்துக் கேட்பான் ஆதலின், இவர்கள், தலைவியின் மாண்புகள் பலவற்றையும் தலைவனுக்கு எடுத்துக் கூறுவர். (தொ. பொ. 152 நச்.)

தலைவி தலைவனிடம் புலந்தபோது தலைவனுடைய கொடுந்தொழில்களைத் தலைவியிடத்து எடுத்துக்கூறி அவள் புலவியை மிகுவிக்கும் செய்திகளை வாயிலவர் செய்யார். (165 நச்.)

தலைவியின் புலவி எல்லை மீறியவழித் ‘தலைவன் காம மிகுதியான் தலைவியைப் பணிதலை விடுத்து எல்லை மீறிப் பரத்தையர் தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டான்’ என்று கூறித் தலைவியின் புலவியை விரைவில் தணித்துத் தலைவனொடு கூடச் செய்வதற்கு வாயில்கள் முயல்வதும் உண்டு. (166 நச்.)

பொதுவாக எல்லா வாயிலோரும் தலைவன் தலைவியரது மனமகிழ்ச்சிக்குரியனவே செய்வர். (178 நச்.)

தலைவன்தலைவியரிடம் அன்னோர் கடுஞ்சொல் கூற வேண்டுமாயின் நேரே கூறாது, மறைவில் உள்ளவர் கேட்கு மாறு ஒன்றன்மேல் வைத்துக் கூறுவர். (179 நச்.)

அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -

{Entry: G07__031}

கணவன் முதலியோர் கற்பித்த நெறியில் திரியாத நல் லொழுக்கமாகிய கற்பு, அன்பு, தன் குலத்திற்கேற்றவாறு எவ்வகையானும் ஒழுகும் ஒழுக்கம், மெல்லென்று பொறுக் கும் பொறுமை, மறை புலப்படாமல் நிறுத்தும் நெஞ் சுடைமை, வல்லவாறு விருந்தினரைப் பேணுதல், கொண்ட வன் காப்பாற்றும் பலவகைச் சுற்றங்களையும் பாதுகாத்து அவை உண்டபின்னரே உண்ணுதல், அவை போல்வன பிற ஆகிய தலைவிமாண்புகளைத் தலைவற்கு கூறும் மொழிகள். அவைபோல்வன பிறவாவன: சமைத்தல் தொழில், கணவன் வரைந்து கொண்ட பின்முறை வதுவைக்கிழத்தியையும் மன மகிழ்வுறுத்தல், காமக்கிழத்தியராலும் நன்கு மதிக்கப்படுதல், போல்வன. (தொ. பொ. 152 நச்.)

அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -

{Entry: G07__032}

“கட்டித்தயிரைப் பிசைந்த விரல்களைக் கழுவாது, அக்கை யாலே தோய்த்த ஆடையை உடுத்துக் கண்ணில் தாளிப்புப் புகை மணக்கத் துழாவிக் காய்ச்சிய புளிக்குழம்பை ‘இன்சுவை யுடையது’ என்று கூறிக் கணவன் உண்ணுதலால் ஒள்ளிய நுதலினையுடைய மகளது முகம் நுட்பமாய் மகிழ்ந்தது” (குறுந். 167) என்று சமைத்தல் தொழிலின்கண் மகிழ்ச்சி பற்றிச் செவிலி கூறியமை.

“கானங்கோழிச் சேவலின் கழுத்தில் திவலைகள் உறைக்கும் படி புதலிடத்துத் தேன்நீர் ஒழுகும் பூக்கள் தோன்றும் முல்லை நிலத்துச் சிற்றூரிலுள்ளாள் நம்மகள்; வேற்றூரைக் கருதி வேந்தன் ஏவிவிட்ட வினையொடு சென்றாலும், அத் தலைவனது தேர் இரவில் தங்கி வருதலை அறியாததாகும்” (குறுந். 242) என்று தலைவியை இல்லத்து இரவில் தனித் திருப்பவிடாத தலைமகனது அன்புநிலை பற்றிக் கூறியமை.

தலைவியது கடிமனைக்கண் சென்ற செவிலித்தாய் கூறுவது மேலை எடுத்துக்காட்டாம். கடிமனை - புதுக்குடித்தனம் நிகழ்த்தும் இல்லம். (தொ. பொ. 152, 153 நச்.)

அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -

{Entry: G07__033}

“தேன் கலந்த தீம்பாலைப் பொற்கலத்தேயிட்டு ஏந்திக் கொண்டு வந்து ‘இதனையுண்க’ என்று பூந்தலைச்சிறு கோலால் அடிக்க ஓங்கும் செம்முது செவிலியர் தமது செலவு மெலிந்து நிற்குமாறு, பொற்சிலம்பு முத்தரிகள் ஒலிப்பப் பந்தரில் தாவி ஓடி அவர்தம் ஏவலை மறுக்கும் சிறுவிளை யாட்டியாகப் பண்டு இருந்த இவள், இதுபோது கொழுநன் குடி வறுமையுற்றதாக, அது பொறாது கொடுத்த தந்தையின் வளவிய உண்டியை நினையாமல், ஒரு பொழுது பட்டினி விட்டு மறுபொழுதே யுண்ணும் சிறுவன்மையளாகி யுள்ளாள்! இத்தகு கற்புக்காலத்துக்குரிய அறிவும் ஒழுக்கமும் இவள் எவ்வாறு உணர்ந்துகொண்டாள்? என்னேயொரு கற்பியல் கடப்பாடு!” (நற். 110) என்று தலைவியது கடி மனைக்கண் சென்றிருந்த செவிலித்தாய் அவள்வாழ்க்கையை வியந்து நற்றாய்க்குக் கூறுவது.

“பாணர் முல்லைப்பண் இசையாநிற்ப, தலைவி கற்பின் மலராகிய முல்லைமாலையை அணியாநிற்ப, நெடுந்தகைத் தலைவன் வருத்தம் தீர்தற்குக் காரணமான மகிழ்வோடே தன் புதல்வனொடு பொலிந்து இனிது வீற்றிருக்கிறான்”(ஐங். 408) எனச் செவிலிகூற்றுப்பத்தில், தலைவன்தலைவியர் புதல்வ னொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு வியந்து கூறுமாறும் இதற்கு எடுத்துக்காட்டாம். (தொ. பொ. 153. நச். உரை)

அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -

{Entry: G07__034}

அகம் புறம் அகப்புறம் புறப்புறம் என்ற நான்கனுள்ளும், முல்லை குறிஞ்சி மருதம் பாலை நெய்தல் என்னும் ஐந்திணை யும், கைக்கிளை பெருந்திணை என்னும் அகப்புறத்திணை களும், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், சுரநடை, முது பாலை, தபுதாரம், தாபதம், வள்ளி, காந்தள், குறுங்கலி, குற்றிசை, இல்லாண்முல்லை, பாசறைமுல்லை என்பனவும் அடக்கிக் கொள்ளப்படும். (வீ. சோ. 87,88)

அகற்சியது அருமை ஒன்றாமை -

{Entry: G07__035}

சிறந்தாரைப் பிரிந்தவழி இனிதே நாள்களைத் தனித்துக் கழித்தல் இயலாது என உணரும் உணர்ச்சியைப் பொருந் தாமை. (தொ. பொ. 44. இள.)

பிரிவாற்றாமை இடைநின்று தடுத்து ஒன்றாமை (41. நச்.)

இது தலைவன் தலைவியைப் பொருள்தேடல் காரணத்தான் பிரிந்து செல்வதனைத் தடுக்கும் எண்ணங்களுள் ஒன்று.

அகன்று அணைவு கூறல் -

{Entry: G07__036}

தலைவனுக்கு ஊரில் அவனையும் தலைவியையும் பற்றிய பழிச்சொற்கள் பரவிய செய்தியைக் கூறிய தோழி, சிலநாள் தலைவன் தலைவியை விடுத்துத் தம்பக்கம் வாராதிருப்பின், ஊரார் கூறும் பழிச்சொற்கள் அடங்க, தலைவிக்கும் நலனாகும் என்று சிலநாள் அவன் தலைவியைப் பிரிந்திருந்து பின்னரே வருமாறு கூறுதல்.

இது திருக்கோவையாருள் ‘ஒருவழித்தணத்தல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று (181)

அகன்றுழிக் கலங்கல் -

{Entry: G07__037}

தலைவியை நீங்கியவிடத்துத் தலைவன் மனம் கலங்குதல். இது நம்பி அகப்பொருள் விளக்கம் கூறும் அகப்பொருட் பெருந்திணை.

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தபின் தலைவியைப் புகழ்ந்து அவளிடைத் தனக்குள்ள நட்பின் உறுதியை எடுத்துக்கூறி, அவளைத் தோழியர்கூட்டத்திடைச் செல்ல விடுத்த பின்னர், மறைந்து நின்று அவளைக் கண்ட தலைவன், அவள் தன் தோழியரிடைத் தாரகை நடுவண் தண்மதிபோல இருத் தலைக் கண்டு, “இவளை இனி அடைவது அரிது போலும்” என்று உள்ளத்தே கலங்குதல்.

தலைவியைப் பெற்றது குறித்து மகிழ்ந்து, இனியும் அவளைப் பெறுதற்கு ஆவனவற்றின்கண் முயலாது அவளது அருமை யறிந்து கவலையுறுதல் பொருந்தாக் காமச் செயலாதலின், இதனை அகப்பொருட் பெருந்திணைச் செய்தியாகக் கூறும் நம்பி அகப்பொருள்.

இஃது இயற்கைப்புணர்ச்சியின் கூறாகி ஐந்திணைக் காமத்துக் குரிய ‘பிரிவுழிக் கலங்கல்’ என்பதனின் வேறாயது. (ந. அ. 243.)

அங்கியற் பொருள் -

{Entry: G07__038}

இறைச்சிப்பொருள்வகை (வீ. சோ. 90) ஆறனுள் ஒன்றாகக் காட்டப்பெறும், குறிஞ்சி முதலிய ஐவகை நிலத்துக்கும் அங்கமாம் பொருள் அங்கியற் பொருளாம். அவையாவன:

குறிஞ்சி நிலத்துக்குச் சந்தனம், பொன், வெள்ளி முதலியன.

முல்லை நிலத்துக்குப் பூவை, பூனை, தும்பி, கார்போகி, காவளை முதலியன.

மருத நிலத்துக்குக் கரும்பு, வாழை, தெங்கு முதலியன.

நெய்தல் நிலத்துக்கு உப்பு, இப்பி, நந்து, அலவன், வலை முதலியன.

பாலைநிலத்துக்குக் கழுகு, செந்நாய், குருவி, சிள்வீடு, அறுபுள்ளி, கோம்பி முதலியன.

(கார்போகி - வித்துக்களையுடைய ஒருவகைப் பூடு;

அலவன் - நண்டு;

சிள்வீடு - ஒருவகையான வண்டு;

கோம்பி - பச்சோந்தி.) (வீ. சோ. 96. உரை. மேற்)

`அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்’ -

{Entry: G07__039}

தலைவியது உடன்போக்கை அறிந்த பின்னர், நற்றாய், “அவள் மிகுந்த அச்சமுடையவள் ஆதலின், காட்டுவழியில் கொடிய விலங்குகளையும் பிறவற்றையும் கண்டு அஞ்சு வாளே!” (‘தஞ்சை. கோ. 338) என நினைத்துத் துயர் உறுதல்.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வைக்’கண், ‘கவர் மனை மருட்சி’ என்னும் வகையில் ஒரு கூற்று. (ந. அ. 183)

(தொ. பொ. 91. நச்.)

அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -

{Entry: G07__040}

தலைவியின் இம்மனநிலை, நாடக வழக்கன்றிப் பெரும் பான்மையும் உலகியல் வழக்கே கூறலின், இக்கந்தருவம் புலனெறி வழக்காக அமையும் களவிற்குச் சிறந்ததன்று. (தொ. பொ. 99 நச்.)

‘தீம்பால் கறந்த’ என்ற முல்லைக்கலிப் பாடலுள் (கலி.111), தலைவி தன் தோழியிடம், தன்னிடம் புணர்ச்சி வேட்கை யொடு வந்து உரையாடிய தலைவன் கூற்றுக்கெல்லாம் மறுமொழியாக அவன் தன்னை வரைந்துகொண்டு இல்லறம் நடத்துதற்கு முயலும் வகையில் தான் விடை கூறியவற்றை உரைத்து, தலைவனிடம் ஆயர்மகளை வரைந்துகொள்ளும் முறையை உணர்த்தித் தந்தைதாயரிடம் அறத்தொடு நின்று வரைவுக்கு முயலுமாறு அவளை வேண்டிய செய்தி காணப்படுகிறது. (தொ. பொ. 96. இள.)

அச்சிரம் -

{Entry: G07__041}

அற்சிரம் - முன்பனிக்காலம் (சிலப். 14 : 105)

‘அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்’ (குறுந். 277-4) மார்கழி தை என்ற இருதிங்களை அளவாகக் கொண்ட பெரும்பொழுது இது. ‘பனி எதிர் பருவம்’ (தொ. பொ. 7 நச்.) எனப்பட்டுக் குறிஞ்சி ஒழுக்கத்துக்கு உரிய காலமாகக் கூறப்படுகிறது.

அசுரம் -

{Entry: G07__042}

‘அசுரமணம்’ காண்க. இஃது ஆசுரம் எனவும் வழங்கும்.

(தொ. பொ. 92. நச்.)

அசுரமணம் -

{Entry: G07__043}

எண்வகையான மணங்களுள் ஒன்று. அசுரம் என்னும் மணமாவது, ‘கொல்லேறு கொண்டான் இவளை எய்தும்; வில்லேற்றினான் இவளை எய்தும்; திரிபன்றி எய்தான் இவளை எய்தும்; மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும்; இன்னதொரு பொருள் தந்தான் இவளை எய்தும்’ என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது. இஃது ‘அரும்பொருள் வினைநிலை’ என்பது. (இறை. அ . உரை)

வில்லேற்றுதல், வேழத்தை அடுதல், தன்னுடல் மிகுவலிமை யால் கொல்லேறு கொள்ளுதல், பொன் முதலிய அரிய வற்றை ஈதல் - என அருஞ்செயலாற்றி மகள் கொள்ளுவது அசுரமணம். (வீ. சோ. 181. உரை. மேற்.)

ஆசுரமாவது தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் (ந. அ. 117 உரை)

ஆசுரமாவது கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல் முதலிய செய்து மகட்கோடல்.

(தொ. பொ. 92. நச்.)

அசை திரிந்து இயலா இசைத்தல் -

{Entry: G07__044}

அகவொழுக்கம் பற்றிக் கூறிய பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்து அமைந்த புலனெறி வழக்கிற்கு மாறாக இயன்று நடத்தல்.

செய்தியை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துக் குறிப்பிடும் இறைச்சிப்பொருள் முதலியனவும், தலைவியது உடம்பைத் தோழி தன்னுடைய உடம்பாகக் கூறுதல் போல்வனவும் அகவொழுக்கத்திற்குச் சிறந்தன. ஆனால் அவை நாடக வழக்கிற்கும் உலகியலுக்கும் மாறுபட்டன. (தொ. பொ. 195. நச்.)

`அஞ்ச வந்த ஆங்கிருநிலை’ -

{Entry: G07__045}

அஃதாவது ‘ஆங்கு அஞ்சவந்த இருநிலை’. களவொழுக்கத் திடத்தே அயலார் கூறும் அம்பலும் அலரும் தம் களவைப் புலப்படுக்கும் என்று அஞ்சும்படித் தோன்றிய அம்பல் பற்றிய குறிப்பும், அலர் பற்றிய குறிப்பும். இக்குறிப்புக்களான் தலைவி உடன்போக்கையாவது, விரைவில் தலைவன் தன்னை வரைந்துகோடலையாவது விரும்புவாள். (தொ. பொ. 225. நச்.)

அஞ்சியல் நோக்கம் -

{Entry: G07__046}

இடந்தலைப்பாட்டின்கண் தன் குறிப்பு அறியாது சார்தல் இயலாத தலைவனுடைய துயர்கண்டு தலைவி அவன் துயரத்துக்கு அஞ்சித் தன் நாணத்தை விடுத்து அவனைப் புணர்ச்சி விருப்பத்தைத் தெரிவிக்கும் அன்புப் பார்வையால் பார்த்தல். (குறிஞ்சி நடையியல் உரைமேற்.) (வீ. சோ. 92)

இது ‘மறுத்தெதிர் கோடல்’ எனவும் பெறும். (ந. அ. 127)

அடலெடுத்துரைத்தல் -

{Entry: G07__047}

தலைவியைத் தலைவன் உடன்போக்கின்கண் அழைத்துச் சென்றபோது தொலைவில் சிலர் பின் தொடர்ந்துவரக் கண்டு அஞ்சிய தலைவியிடம் தலைவன், “நங்காய்! அஞ்சற்க. நின் உறவினர் வரின் போரிடாது மறைவேன். வேறு யார் வரினும் என்கைவேலுக்கு அவரை இரையாக்கும் ஆற்ற லுடையேன். இதனை இவ்விடத்து நீ காணலாம்” (கோவை. 216) என்றாற்போலத் தான் போரிடும் ஆண்மையை எடுத்துக் கூறுதல்.

இத்துறை திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கிளவி.

இதனை ‘உடன்போக்கு இடையீட்டு’ விரியின்கண், ‘தலைவன் தலைவியை விடுத்து அகறல்’ என்னும் கிளவிக் கண் அடக்குவர். (இ. வி. 547)

இதனை ‘அடல் எடுத்து உரைத்தல்’ என்றே மாறன் அலங்கார உரையாசிரியர் குறிப்பிட்டு, தறுகண்மை பற்றிய பெருமிதம் என்ற சுவையணிக்கு இத்துறைக்கண் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலியினை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளார். (பாடல் 456)

அடிசில் அமைத்த மடவரல் இரங்கல் -

{Entry: G07__048}

சமைத்து வைத்த தலைவி, உணவு உண்ணத் தலைவன் வாராமை குறித்து வருந்துதல்.

“தோழி! இப்பியை அடுப்பாக அடுக்கித் தேனை உலை நீராகப் பெய்து சங்காகிய பாத்திரத்தில் முத்தாகிய அரிசியை இட்டுப் பவளமாகிய விறகினை வைத்து நாம் அட்ட சோற்றை இடத் தன் தாமரை போன்ற கைகளையே இலை யாகக் கொண்டு அன்று ஏற்ற காலத்துத் தலைவனுக்கு நம்மிடம் இருந்த விருப்பமும் பசியும் இன்று இல்லை போலும்!” (அம்பிகா. 449) என்றாற்போலத் தோழியிடம் தலைவி கூறுதல்.

இது ‘பரத்தையிற்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கிளவி; ஒன்றென முடித்தலால் உரையிற் கொள்ளப்பட்டது. இஃது உணர்த்த உணரும் ஊடல். (இ. வி. 554 உரை)

அடிநினைந்திரங்கல் -

{Entry: G07__049}

தோழி அறத்தொடு நிற்றலின், தலைவியின் உடன்போக் கினை அறிந்த செவிலி, “அனிச்சமலரை மிதிக்கவும் அஞ்சும் என் மகளுடைய அடிகள் பருக்கைக்கற்களது வெப்பத்தால் சூடேறிய காட்டில் எவ்வாறு பூமியில் நடப்பதற்குப் பொருந் துமோ?”என்றாற் போலத் தலைவியின் அடிகளுடைய மென்மையை நினைத்து வருந்துதல்.

இதனை ‘தன்மகள் மென்மைத் தன்மைக்கு நற்றாய் இரங்கல்’ எனக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’யின் விரியாக வரும் கூற்றுக்களுள் ஒன்றாகக் கூறுப. (ந. அ. 186)

இஃது உடன்போக்கு எனும் தொகுதிக்கண்ணதொரு
கிளவி. (கோவை. 228)

அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -

{Entry: G07__050}

தோழி உடன்போக்கிற்குத் தலைவியை அழைத்துச் செல்லக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துநின்ற தலைவன், தான் போகக் கருதிய பாலையின் வெப்பத்தையும் தலைவியின் அடிகளின் மென்மையையும் நினைத்த அளவில் தன் உள்ளம் கிளர்ச்சி யிழந்து வாடி நிற்றல்.

“அனிச்சப்பூப் போன்ற இவளுடைய அழகிய சீறடிகள், தீப்படுத்தாற் போன்ற செந்திரட் கற்களையுடைய அரு வழியை என்னுடனே கடக்குமென்றால், இவளுக்கு என் காரணமாக வந்தெய்தும் துன்பம் வேறு யாது?” என்றாற் போலத் தலைவன் வருந்துதல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கிளவி. (கோவை. 211.)

அடியோர் -

{Entry: G07__051}

அடியோராவார் பிறர் இல்லத்தில் நிலையாக இருந்து அவர் இல்லத்துக்குரிய குற்றேவல் செய்யும் ஆடவரும் பெண்டிரும்; இவருள் பரத்தையரும் அடங்குவர். (தொ. பொ. 23, நச்.)

இவர்கள் அகனைந்திணைக்கண் தலைமக்களாதற்கு உரிமை யுடையரல்லர். அகனைந்திணை அறம்பொருளின்பங்களில் தவறாமல் நிகழ்தல் வேண்டும். அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவர் ஆகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவலராகத் தொழிற்பட்டு அவர்களது ஆணையை நிறைவேற்றும் நிலையினர் அல்லராக இருத்தல் வேண்டும் ஆகலானும் அடியோர் அகனைந் திணைக்கண் தலைமக்களாகக் கொள்ளப்படார். (தொ. பொ. 25 இள.)

எனினும், அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணை இவற்றின் கண் அவர்கள் தலைமக்களாதற்குரியவர். (கலி. 62, 94)

அடியோர்களும் ஐந்திணை ஒழுக்கத் தலைமக்களாதற்கண் தடையில்லை. (தொ. பொ. 23 பாரதி)

அடியோர் - தமக்கு நிலையான பொருளோ தொழிலோ இன்றிச் செல்வரிடம் இருந்து அங்கேயே உண்டுடுத்தோ, நாட்கூலி பெற்றோ, அச்செல்வர்தம் தொழிலுக்கு அடிப் படையாக இருப்போர்; கிளைகளைத் தாங்கும் அடிமரம் போலச் செல்வர்களுக்கு அமைந்து தொடர்ச்சியின்றி அவ்வப்பொழுது அவர் ஏவிய குற்றேவலைச் செய்பவர். (தொ. பொ. 23 குழ.)

அடைநேர்தல் -

{Entry: G07__052}

மகட்கொடைக்குப் பெண்வீட்டார் உடன்படுதல்; ‘தலை வர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும்’(குறிஞ்சிப். 23 உரை) (L)

அண்ணல் -

{Entry: G07__053}

முல்லைநிலத் தலைவன். (தொ. பொ. 20 நச்.)

அணங்காட்டச்சம் -

{Entry: G07__054}

முருகனுக்கு வெறியாட்டு நிகழ்வதால் ஏற்படும் அச்சம். (இறை. அ. 14 உரை.)

களவொழுக்கத்தால் தலைவிக்கு ஏற்பட்ட உடல் வேறு- பாடும் மனவேறுபாடும் கண்டு, தாய் வேலனை அழைத்து அவ்வேறுபாட்டின் காரணம் வினவ, அவன் வழக்கம் போல அவ்வேறுபாடு தெய்வத்தினான் ஆயிற்று எனவும் அதனைப் போக்க முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்த வேண்டும் எனவும் கூறுவான். வேலன் சொற்களைக் கேட்டுத் தாய் தெய்வத்திற்கு வழிபாடு செய்வித்துத் தலைவியை வணங்கச் சொல்வாள். பத்தினிப் பெண்டிர் தம் கணவரை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை வணங்கார் ஆதலின், தான் பிற தெய்வத்தை வணங்கின் தனது கற்பு அழியுமே என்று தலைவி ஆற்றாள்ஆவாள்.

இதுவரை வெறியாட்டு எதுவும் நிகழ்த்தப்படாத தன் இல்லத்தே தன்னால் இத்தகைய அணங்காட்டு நிகழ்த்தப் படும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தத்தானும், அணங்காட்டுத் தெய்வத்தை வழிபட்டு வேண்டுவதால் தன் தலைவனை அவ்வெறிக்களத்தே அது கொண்டு வருமோ என்ற அச்சத்தானும், தலைவனை வெறிக்களத்துக் கொண்டு வாராமல் தன் வேறுபாட்டைப் புறத்தார்க்குப் புலப்படாத படி அணங்காட்டு மறைக்க வல்லதோ என்ற எண்ணத்தா னும், அங்ஙனம் மறைக்கப்படின் தலைவன் தன்னால் ஏற்பட்ட வேறுபாடு பிறிதொன்றானும் நீங்கும்போலும் என்று கருதுவானோ என்ற அச்சத்தானும் தலைவி ஆற்றா ளாவாள் என்று தோழி ஆற்றாளாம். (மேலை உரை)

அணங்கு - தெய்வம்; ஆட்டு - ஆவேசமுற்று ஆடச் செய்தல். அணங்காட்டாகிய வெறியாட்டு, தலைவிக்கு மேற்குறித்த பலவகை எண்ணங்களையும் உண்டாக்கவல்ல அச்சத்தைப் பயக்கும்.

அணங்காட்டு -

{Entry: G07__055}

தலைமகளுக்குத் தலைவன் களவிடைப் பிரிதலால் வந்த நோயைத் தெய்வத்தால் வந்ததாகக் கருதிய செவிலித்தாய், அந்நோய் முருகனால் வந்ததாக முடிவு செய்து, வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துதல். (இறை. அ. 14)

‘யான் தோன்றி இவ்வகை அணங்காட்டு அறியாது, அணங் காட்டு எடுத்துக்கொள்ளப்பட்டது’ (மேலை உரை)

அணங்குகொண்டு அகைத்தல் -

{Entry: G07__056}

தலைவி இயற்கைவனப்பொடு செயற்கை யழகும் செய்து கொண்டு தலைவனிருக்கும் இடத்திற்கு அடிக்கடிச் செல்லு தல். இது காமநுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப்பான செயல்களுள் ஒன்று.

இஃது அகத்தினை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்றதன் பாற்படும். (வீ.சோ. 90) (வீ. சோ. 96, உரை மேற்.)

அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் -

{Entry: G07__057}

கலவியால் (-முயக்கத்தால்) சீர்குலைந்த தலைவியின் ஆடை யணிகளைத் தலைவன் செவ்வனே சீர் திருத்தியபின், அவை முன்போலவே அமைந்தவோ அமைந்திலவோ என ஐயுற்று அவள் நாணியபோது, “இவை பண்டு போலவே செவ்வனே உள” என்று அவன் கூறித் தேற்றுதல்.

இது களவியலின்கண் ‘வன்புறை’ என்னும் தொகுதிக்குரிய கூற்றுக்களுள் ஒன்று. (ந. அ. 129)

அணியிழை மறுத்தல் -

{Entry: G07__058}

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயிலாக வந்த பாங்கன் தோழி பாணன் முதலியோர் வேண்டுகோளைத் தலைவி மறுத்தல். இது ‘வாயில் மறுத்தல்’ எனவும் படும். (மருத நடையியல்) (வீ.சோ. 95 உரை மேற்.)

அணைதலுறலின் ஆற்றான் கிளத்தல் -

{Entry: G07__059}

தலைவியைத் தழுவும் விருப்பினால் தலைவன் மனம் தாங்காமல் கூறுதல்.

இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவனது தளர்வு கண்டு பாங்கன் வினவி உற்றதுணர்ந்து அவன் வேண்டியவாறே தலைவியது இருப்பிடம் கண்டு வந்து சொல்ல, இரண்டாம் நாள் முன்னைய இடத்தேயே தலைவியைக் கண்ட தலைவன் அவளது இசைவு பெறாமல் அவளைத் தழுவுதல் கூடாமை யின், “உன்னை என்னுள்ளம் தெய்வமோ என ஐயுறுகிறது. உண்மையில் நீ மானுடமகளாயின் வாய்திறந்து பேசுவாய். என் ஆற்றாமையால் என் இன்உயிர் போய்க்கொண்டி கிறது” (க.கா. 28 மேற்.) என்றாற் போலத் தலைவியிடம் கூறுதல். (த. நெ. வி. 16 : 12)

பொழிலகத்து எதிர்ப்பட்ட தலைவன் தலைவியைத் ‘திரு என்று அயிர்த்தல், என்ற கிளவியாகக் கூறும் களவியற் காரிகை (28) . அக்காரிகைக்கண் ‘ஆற்றான் கிளத்தல்’ என்பது மேலைக் கூற்று. ‘மொழி பெற வருந்தல்’ என்னும் கிளவி (கோவை 41) காண்க.

இஃது இரண்டாம் நாள் நிகழ்ச்சியாகிய ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி)

அணைந்தவழி ஊடல் -

{Entry: G07__060}

பரத்தையிற் பிரிந்து வந்தானாதலின் விருந்து முதலியவற் றால் ஊடல் தணிவிக்கப்பெற்றுப் பள்ளியிடத்தாளாகிய தலைவி தலைவனிடம் “நீ என்னிடம் செய்யும் கருணையை அறியின், நின் காதலிமார் நின்னை வெகுள்வர். அதுவன்றி, மகனுக்குப் பால் அருத்துவதால் எம்மேனி பால் நாற்றம் வீசுத லின் நினக்கு உவப்புத் தாராது. மேலும் நீ என் கைகால்களைத் தொடும் செயல்களை யானும் விரும்பவில்லை” என்று கூறித் தலைவன் தன்னைத் தழுவ வந்தவிடத்து ஊடல் கொள் ளுதல்.

இதனை ‘விருந்து கண்டு ஒளித்த ஊடல் பள்ளியிடத்து வெளிப்படல்’ என்ப. (இ. வி. 555 - 8)

‘உணர்த்த உணரா ஊடல்’ (ந. அ. 206), ‘உணர்ப்புவயின் வாரா ஊடல்’ (இறை. அ. 50) என்பன காண்க.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 390)

அதற்பட நாடுதல் -

{Entry: G07__061}

தலைவனை அஞ்சியச்சுறுத்தலும் சேட்படுத்தலும் முதலாகத் தோழி அவனது காதலைப் பெருக்கி அவன் தலைவியை வரைதலை மேற்கொள்ள ஆவன செய்தலும் அன்ன பிறவுமாம். (தொ. கள. 39 ச. பால)

அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -

{Entry: G07__062}

தலைவியது உடன்போக்கினைத் தன்னிடம் கூறவில்லையே என்று நற்றாய் தோழியை வினவித் துயருற்றபோது, தோழி அழத்தொடங்க, அதற்கு நற்றாய் கூறுதல்.

“பெண்ணே! உன்மீது குற்றம் கூறேன். நீ வருந்தி அழுதல் வேண்டா. என்மகள் நடந்து கடந்த சுரத்தின் வெம்மை என்னை வருத்துவதை விட மிகுதியாக உன் கண்ணீர் என்னை வருத்துகிறது” (தஞ்சை கோ. 330) என்றாற் போன்ற நற்றாய் கூற்று.

இது வரைவியற்கண், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதியுள் ஒரு கூற்று. (ந. அ. 185 உரை)

`அந்தரத்து எழுதிய எழுத்து’ -

{Entry: G07__063}

ஆகாயத்தில் எழுதிய எழுத்து; அவ்வெழுத்து எழுதுந் தோறும் அழிந்துபடுவதுபோலக் களவுக்காலத்தில் தீய இராசி தீய நட்சத்திரம் என இவற்றில் கூட்டம் நிகழ்த்திய பாவம் கெடும்படி தலைவன் கழுவாய் கருதுதல். (இத்தொட ரால் தொல்காப்பியர் எழுத்து என்ற சொல்லால் வரிவடிவத் தையும் குறிக்கும் செய்தி போதரும்.) (தொ. பொ. 146 நச்.)

அந்நகை பொறாஅது அவன் புலம்பல் -

{Entry: G07__064}

தனக்குத் தெரியாமல் தலைவியுடன் கூடி மகிழ்வது எளிது என்று கூறித் தோழி நகைத்தபோது, தலைவன் அந்த நகையை யும் அதனான் நேரும் காலப்பாணிப்பையும் பொறுக்க மாட்டாமல் வருந்திக் கூறல்.

“தோழீ! இவ்வாறெல்லாம் பேசி நகைத்து என்னை அகற்ற முயலாதே. நான் உயிர்வாழ, இன்று உனது இன்னருளே எனக்கு உற்றதுணை” (கோவை. 106) என்றாற் போன்ற தலைவன் கூற்று எடுத்துக்காட்டாம்.

‘நகைகண்டு மகிழ்தல்’ எனவும் கூறுப. (கோவை. 106) இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்றாம். (ந. அ. 146)

`அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்’ -

{Entry: G07__065}

பரத்தை இல்லத்திருந்த தலைவற்குத் தலைவி பூப்பெய்திய செய்தியை அறிவித்தற்குச் செவ்வணி அணிந்த சேடி ஒருத் தியைத் தோழி தூதாக அனுப்ப, அச்செந்நிறம் கண்டதும் தலைவன் ஒப்பனையோடு தன் இல்லத்திற்கு வந்து தங்குதல். (மருதநடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

அம்பல் -

{Entry: G07__066}

ஊர் மக்கள் சிலர் மற்றவரைப் பற்றித் தவறான செய்திகளைத் தம்முள் உரையாடுதல் உண்டு. அவ்வாறு உரையாடும்போது மற்றவர்க்குப் புலப்படாவகை மென்குரலில் முணுமுணுத்த வாறு இரகசியமாகப் பேசிக் கொள்வது அம்பல் எனப்படும். தாம் குறிப்பிடும் செய்தியை உறுதியொடு பேசப் போதிய சான்று கிட்டாத நிலையில் நிகழ்த்தும் இரகசியப் பேச்சே அம்பல் ஆவது. அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவ தாயிற்று; இன்னதின்கண்ணது என்று அயல் அறியலாகாதது என்பது. (இறை. அ. 22 உரை)

அமுதர் -

{Entry: G07__067}

முல்லை நில மாக்கள் (பிங். 545) (L )

அமைந்தோர் திருத்தல் -

{Entry: G07__068}

இடைச்சுரத்துச் சான்றோர், தலைவனொடு தலைவி உடன் போதலைத் தடுத்துத் தலைவியை மீட்க முற்பட்ட அவ ளுடைய உறவினர்கட்கு உலகியல்பு கூறி அவர்களது சினத்தைத் தணித்து இருவருக்கும் மணமுடித்துவைக்குமாறு அறிவுரை கூறுதல் (பாலைநடையியல்)(வீ. சோ. 93 உரைமேற்.)

அயர்வகற்றல் -

{Entry: G07__069}

களவு வெளிப்படுதற்கு அஞ்சியும், தமர் வரைவு மறுப்பர் என உட்கொண்டும், உடன்போக்கில் தலைவியைத் தன்னூர் அழைத்துச் செல்லும் தலைவன், வழியிடை நிழலில் தங்கி மணலில் விளையாடி மகிழ்வுடன் வருமாறு உடன்கொண்டு, தன்பதி அண்மையில் உள்ளது எனவும் இனி அவளுக்கு வழிநடைத்துன்பம் இன்று எனவும் கூறி, அவளுக்கு ஏற்பட்ட அயர்வினை நீக்குதல். இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 217)

அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -

{Entry: G07__070}

கற்புக் காலத்தே தலைவன் பரத்தையிற் பிரிந்து பரத்தை ஒருத்தியது இல்லத்தில் தங்கியிருந்தஞான்று, தலைவி பூப்பெய்த, அதனை அறிந்து தோழி சேடி ஒருத்திக்குச் செவ்வணி அணிவித்துத் தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவற்குத் தெரிவித்தற்கு ஏற்பாடு செய்யவே, அதனைக் கண்ட தலைவி “இச் செவ்வணி அணிந்த சேடிவாயிலாக நாம் நம் நிலையைத் தலைவற்கு அறிவிக்க, அதனை அயலார் காண, பின் நம் தலைவனை நமக்கு ஒருத்தி தர நாம் அடையும் படியான நிலை நம் பெண்மைக்கு நேரிட்டுவிட்டதே என நாம் வருந்த வேண்டிவரும்” எனத் தன் இல்லத்துச் செய்திகள் புறத்தார் அறியும்வகை வெளிப்பட வேண்டிய நிலை கருதி மனம் வருந்துதல். இது பரத்தையிற் பிரிவு என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 36 : 67)

அயல்மனைப் பிரிவு -

{Entry: G07__071}

தலைவன் தான் விரும்பிக் கொண்ட காமக்கிழத்தியைக் கூடுதற்கு அவளைத் தான் தங்கச் செய்திருக்கும் அயல்மனைக் குப் பிரிந்து செல்லுதல். (ந. அ. 64)

அயலார் மணமுரசு ஆயிடை விலக்கல் -

{Entry: G07__072}

தோழி அறத்தொடு நிற்றல் பற்றிக் கூறுமிடத்து, செவிலி தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் வினவியஇடத்தும், தோழி தான் வெறியாட்டினை விலக்கியவிடத்தும், பூத்தரு புணர்ச்சி - புனல்தருபுணர்ச்சி - களிறுதருபுணர்ச்சி - முதலிய வாகக் கூறி அறத்தொடு நிற்றலொடு, அயலவர் தலைவியை மகட்கேட்டு முரசுடன் வந்தவழி அதனை விலக்கி அறத் தொடு நிற்றலும் தோழிக்குரிய செயல் என்று மாறன் அகப்பொருள் கூறுகிறது. (மா. அக. 74)

அயலுரை -

{Entry: G07__073}

அயலார் தலைவியை மகட்கொடை குறித்து அவள்தந்தை முதலியோரிடம் வேண்டும் செய்தி. (கோவை. 137)

அயலுரை உரைத்து வரைவு கடாதல் -

{Entry: G07__074}

பகற்குறி இறுதிக்கண் தலைவனைத் தனித்துக்கண்டு வரைவு கடாய தோழி, “நாளை வேற்றவர் தலைவியை மகட்பேச வரப்போகின்றார்; இதற்கு நான் யாது சொல்வது?” என்றாற் போல அவனிடம் கூறி அவனை விரைவில் தலைவியை மணக்குமாறு வேண்டியது.

‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று இது. (கோவை. 137)

`அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -

{Entry: G07__075}

தலைமகள் தலைவனோடு உடன்போயது குறித்து வருந்திய நற்றாய்க்கு அயலிலுள்ளோர், தலைவி கற்பு மேம்பாட்டால் செய்த அச்செயல் தக்கதே என்று எடுத்துக் கூறி ஆறுதல் அளித்தல் (பாலை நடையியல்) (வீ.சோ. 93 உரை மேற்.)

`அயலோராயினும் அகற்சி’ -

{Entry: G07__076}

தலைவி தலைவனோடு உடன்போய பின்னர்த் தலைவியைக் காணாது நற்றாய் தன் சேரி முழுமையும் தேடுவாள். செவிலி ஊரெல்லையைக் கடந்து பாலைப்பகுதிக்கும் தேடச் செல்வாள். தலைவி தலைவனொடு தன்மனை எல்லையைக் கடந்து அப்பால் சென்றாலும் அதுவும் பிரிவின்பாற்படும். தலைவன் அடுத்த இல்லத்தில் இருக்கும் தன் காமக்கிழத் தியை நாடித் தன் இல்லத்தின் எல்லை கடந்தாலும், அதுவும் ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் பிரிவின்பாற்படும். (தொ. பொ. 37, 38 நச்.)

அயற்சேரியின் அகற்சி -

{Entry: G07__077}

தலைவன் தலைவியை மணந்த சில்லாண்டு பின்னர் மீண்டும் மணந்த பெதும்பைப் பருவத்தாளாகிய இரண்டாம் மனைவி யைக் காணவும், பரத்தையர் தொடர்பு கொள்ளவும், விழாக் களை நிகழ்த்தி வைத்துக் கண்டு மகிழவும், அடுத்துள்ள தொரு தெருவுக்குப் பிரிந்து செல்லுதல். (ந. அ. 65)

அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

{Entry: G07__078}

“அரசே! நின் அழகிய குடையை நிழல்செய்து அறத்தைச் செய்வதற்காக உயர்த்தியுள்ளாய். நின் தலைவி அக்குடை நிழலின் புறத்தே தங்கவில்லையே!

“நின் செங்கோலின் நலன் நுகர்தற்கு இயலாமல் நின்தலைவி அப்பாற்படவில்லையே!

“பாதுகாவல் செய்யும் நின்முரசின் காவலினின்றும் நின் தலைவி நீங்கவில்லையே!

“இவள் பிறைநுதல் பசப்பூர, தோள் நலன் இழப்ப, இவள் காமநோயால் பெருந்துயருறுமாறு நீ இவளைப் புறக்கணித் திருத்தல் தக்கதன்று” என்றாற் போலச் சான்றோர் தலைவ னிடம் தலைவிநிலையை விளக்கிக் கூறுதல். (கலி. 99)

அரசு -

{Entry: G07__079}

பண்டை வேளாளர்தம் பட்டப்பெயர். ‘வேள் எனவும் அரசு எனவும் உரிமை எய்தினோரும்’ (தொ. பொ. 30. நச்.)

அரட்டம் -

{Entry: G07__080}

பாலைநிலம் (சிந்.நி.272) (L )

`அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றல்’ -

{Entry: G07__081}

“தலைவி நம்மைப் போலத் துன்பத்துத் துவளும் மானிட மக ளாதலை இன்றே அறிந்தேன்” என்று தோழி தலைவனிடம் கூறுதல். தோழியிற் கூட்டத்துப் பகற்குறி இரவுக்குறிகள், அல்லகுறி - வரும் தொழிற்கு அருமை - முதலியவற்றால் முட்டுப்பாடுற்றபோது, தலைவி வேட்கை மிகுதலின், களவினைத் தவிர்ந்து தலைவன் தலைவியை மணந்து என்றும் பிரியாக் கற்பின் அறநெறியில் வாழ்தலைக் கருதிய தோழி, “இதற்கு முன்னெல்லாம் யான் தலைவியை மலைவாழ் கடவுளாகஅல்லது மானுடமகளாகக் கருதவில்லை; இப்பொழுது நின்பிரிவால் அவள் பெரிதும் துயருறுவது கொண்டே அவளை மானுடமகளாகத் தெளிந்தேன்” என்றாற் போலத் தலைவியின் பிரிவாற்றாமையைக் கூறித் தலைவனை வரைவு கடாயது.

‘ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்’ (ந. அ. 166) என்னும் கூற்றின்கண் இஃது அடங்கும்.

இது தோழி வரைவு கடாதல் என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி பக். 34)

அருட்குணம் உரைத்தல் -

{Entry: G07__082}

இயற்கைப் புணர்ச்சியிறுதியில் தலைவன் தனது பிரிவு குறித்து வருந்திய தலைவியை அமைதியுறச் செய்யும் முகத்தான், “யாம் உடம்பால் அவ்வப்போது பிரிந்து சென்று பின் காண்போமாயினும் நம் உள்ளம் என்றும் பிரியாமல் ஒன்றாகவே இருக்கும்” (தஞ்சை. கோ. 22) என்று தம்மைக் கூட்டிவைத்த தெய்வத்தின் அருட் பண்பைக் கூறுதல் .

இது ‘தெய்வத்திறம் பேசல்’ எனவும் கூறப்படும்.

(ந. அ. 129, இ. வி. 497)

இது திருக்கோவையாரில் ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை 14.)

அருநிலம் -

{Entry: G07__083}

அஃதாவது பாலை போலும் வறண்ட நிலம். ‘நனிமிகு சுரத் திடை’ (தொ. பொ. 79) என்னும் தொடர்க்கு மிகுதிமிக்க அரு நிலத்தே என நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. அருமை - வளம் இன்மை.

அரும்பொருள் வினை -

{Entry: G07__084}

இஃது எட்டுவகை மன்றல்களில் ஆறாவது: ஆசுரம் எனப் படுவது. ஏறு தழுவுதல், குறி தப்பாது அம்பு எய்தல், நாணேற்றல், குறிப்பிட்ட பெரும்பொருள் தருதல் ஆகிய அரிய செயல் புரிந்தோனுக்கே தன் மகளைக் கொடுப்பதாகக் கூறும். தந்தையின் குறிக்கோளை நிறைவேற்றிப் பெண்ணை மணந்து கொள்ளல். பொருள், வினை இவைகளின் அருமை பெருமைகள் நோக்கி இப்பெயர் அமைந்தது. இராசதகுண மேலீடான அசுரத்தன்மை வாய்ந்த செயலால் நிகழ்கின்றமை யின் இஃது ஆசுரமணம் எனப்பட்டது. (தொ. பொ. 92 நச்.)

இது வன்மண மாதலின் பொருந்தாக் காமமாயிற்று. (த. நெ. வி. 14 உரை)

அரும்பொருள் வினைநிலை -

{Entry: G07__085}

அசுரமணம். (இறை. அ., உரை. பக். 29)

`அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

{Entry: G07__086}

தருப்பைப் புல்லைப் பார்த்துத் தலைவன் புன்முறுவல் செய்தல்.

அக்கினி சாட்சியாகத் தலைவன் தலைவியைக் கைப்பிடித்துத் தீவலம் செய்து, வசிட்டனையும் அருந்ததியையும் இருவரும் கண்டபின்னர், மணவறைக்கண் பள்ளியிடத்திருந்து, களவுக் காலத்தில் பூப்பு நிகழும் காலத்தும் தீயராசியிலும் தீய நாளிலும் தீய பொழுதிலும் தலைவியைக் கூடியதற்குக் கழுவாயாகிய மந்திரங்களைக் கூறவேண்டிய நேரத்தே அருமறைச் சடங்கிற்கு இடப்பட்ட தருப்பைப்புல்லை நோக்கி, “இத்தலைவியின் கொங்கைகளாகிய யானைகள் என்னைத் தாக்க வரும் இந்நேரத்தில் இந்த எளிய தருப்பைப் புல் அதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறதே!” என்று முறுவலித்துக்கொண்டு தன்னுள் கூறுதல் (திருப்பதிக். 399.)

இது ‘வரைந்து கோடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (மா. அக. 82)

அருமை கேட்டழிதல் -

{Entry: G07__087}

தலைவிக்கு அளவுக்கு மீறிப் பரிசப் பொருள் எதிர்பார்ப்பதை அறிந்த தலைமகன் தன் மனத்திடம் “மனமே! நீ தலைவியது மதிப்பினை அறியாது அவள்அழகினை மாத்திரம் விரும்பு கிறாய். உனது நிலை ‘வானத்திருக்கும் மதியத்தினைப் பற்றிக் கொடு’ என்று அழுகின்ற குழந்தைநிலை போன்றுள்ளது காண்” என்று உள்ளம் அழிந்து கூறுதல்.

‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இது. (கோவை. 197)

`அருமை சான்ற நாலிரண்டு வகை’ -

{Entry: G07__088}

இயற்கைப் புணர்ச்சியை அடுத்த நாளில், தலைவி முன்பு அருமை அமைந்து நின்ற நிலையால், தலைவன் தலைவிகண் நிகழ்த்திய மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்து இரங்கல், கூடுதலுறுதல், நுகர்ச்சி பெறுதல், தீராத்தேற்றம் என்ற குறையாச் சிறப்பினையுடைய எட்டும். (தொ. பொ. 111 நச்.)

தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி, செய்தற்கு அருமை வாய்ந்த முட்டுவயிற் கழறல், முனிவுமெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம் மிகல், கட்டுரை யின்மை என்ற எட்டனையும் பின்பற்றல். (109 இள.)

அருமை செய்து அயர்த்தல் -

{Entry: G07__089}

தலைவன் வருதலுக்குக் காவலாகிய அருமை (-இடையூறு) ஏற்பட்டதனால் அவன் வருதலைத் தவிர்தல். இது களவுக் காலத்து நிகழ்வது. (தொ. பொ. 109, இள.)

களவுக்காலத்தில் தலைவன் தன்னை அரியானாக (-வருதற்கு நேரம் இல்லாதவகை)ச் செய்துகொண்டு தலைவியையும் தோழியையும் மறத்தல். (111 நச்.)

இரண்டொருநாள் தலைவன் தலைவியை மறந்தவன் போலக் குறியிடத்து வாராதிருத்தல். (161 குழ.)

பிற்காலத்தார் அருமை செய்தயர்த்தலைத் ‘ஒருவழித் தணத்தல்’ என்ற பகுதியில் அடக்குவர். (கலி. 53. நச்.)

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள் இஃது ஒன்று.

புறம்போந்து விளையாடற்கு இடையூறாக ஆயக்கூட்டம் சூழ்ந்து கிடத்தலால், தலைவி தலைவற்கு அரியளாகி இடந் தலைப்படுதலைத் தவிர்ந்திருத்தல். (தொ. கள. 21 ச.பால.)

அருமையறிதல் (1) -

{Entry: G07__090}

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைமகளை ஆற்றுவித்துப் பிரிந்த தலைவன் அவளுடைய பெருஞ்சிறப்பினை அறிதல்.

தலைவன், அவள் தன்னைக் காணாமல் தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண், மழைக் கொண்டலில் மின்னல் புக்கு ஒளித்தாற்போல, ஒரு தழைப்பொதும்பரிடை மறைந்துநின்றான். தலைவி தோழியர்கூட்டத்தைச் சென்று சார்ந்து தாரகைநடுவண் தண்மதி போல விளங்கினாள். அவள் தோழியர் பலரும், குறுங்கண்ணியும் நெடுங்கோதை யும் விரவுத்தழையும் சூட்டுக்கத்திகையும் மோட்டு வலயமும் பிறவுமாகப் புனைந்து அடியுறையேந்தி அவள்முன் பல் லாண்டு கூறி நின்றனர். அவளை அந்நிலையிற் கண்ட தலைவன், “இவளை யான் எய்தினேன் என்று கருதினேன். எய்திய துண்டேல் கனாப்போலும்! கனவே ஆயினும், இவள் எனக்கு எய்தற்கு அரியளாம்!” என்று அச்செல்வமகளைத் தனித்துக் காண்டற்கண் உள்ள அருமையினை அறிதல். (இறை.அ.2 உரை)

அருமையறிதல் (2) -

{Entry: G07__091}

இயற்கைப்புணர்ச்சி இறுதியில் பிரிவு பற்றிய கலக்கம் தீரத் தலைவியை அமைதியுறுத்தித் தலைவன் அவளை ஆயத்தா ரிடம் செல்லுமாறு விடுத்து, அவளைச் சுற்றியிருக்கும் தோழியரை மறைந்துநின்று பார்த்து, இனித் தனித்து எய்துதல் அருமை எனவும், அவளைக் கூடியது கனவு போல உள்ளது எனவும் உணர்தல் (கோவை. 17)

இஃது ‘ஆய வெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல்’ என்றும் கூறப்பெறும். (ந. அ. 133.)

இஃது இயற்கைப் புணர்ச்சி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை 17.)

அருமையுரைத்தல் -

{Entry: G07__092}

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவன் “தலைவி மெல்லியல்; யான் போகக் கருதிய பாலை கொடிது; எம் ஊரும் சேய்த்து; ஆதலின் அவளை உடன்கொண்டு சேறல் எளிய செயலன்று” என்று உடன்போதல் நடக்க இயலாத செயல் என்பதாகக் கூறுதல். இதனைத் ‘தலைவன் உடன் போக்கு மறுத்தல்’ என்றும் கூறுவர். (ந. அ. 182)

‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இது. (கோவை. 201.)

அருவி -

{Entry: G07__093}

அஃதாவது பெயர் கூறப்படாத கிளவித்தலைவன். ‘உருவி யாகிய ஒரு பெருங்கிழவனை, அருவி கூறுதல் ஆனந் தம்மே’. உருவி என்பதற்கு மறுதலைச்சொல் அருவி என்பது. (யா. வி. பக். 665)

அருவிலை உரைத்தல் -

{Entry: G07__094}

தோழி, தலைவன் தலைவியை விரைவில் மணந்துகோடல் வேண்டும் என்ற கருத்தால், பலரும் தலைவியை மணம் பேச முலைவிலை கொண்டு வந்து தலைவியின் பெற்றோரைக் காணும் செய்தியைப் படைத்துக் கூற, அது கேட்ட தலைவன் தலைவியை மணப்பதற்குரிய பரிசப்பொருளின் அளவினை வினவ, தோழி, “என் தலைவியின் சிறிய இடைக்கே எல்லா உலகங்களையும் கொடுப்பினும் எமர் விலையாக ஏலார். அங்ஙனமாக, அவள் பெரிய நகில்களுக்கு விலை கூறு என்று என்னைக் கேட்பது வியப்பாக உள்ளது” எனத் தலைவியின் விலையருமை கூறுதல்.

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 197)

அருள் கொண்டாடுதல் -

{Entry: G07__095}

பாங்கி அருளியல் கிளத்தல் (சாமி. 94)

`அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி’ -

{Entry: G07__096}

தலைவி ஊடல் கொண்டவழிக் காமம் மீதூர்ந்த தலைவன் அவளிடம் பணிந்த மொழியால் பேசுவான். அப்போது அவள் ஊடல் தீர்ந்துவிடும். ஆனால் அவள் அதனை வெளிப் படையாகக் கூறாமல், தலைவனுக்குத் தான் பணிந்த கருத்தினை வெளியிடாமல், தன் நெஞ்சு தன்னையும் கடந்து தலைவனிடம் சென்றுவிட்டது என்றாற் போலத் தன் மனக்கருத்தை மறைத்துப் பேசுவாள்.

அருளாவது பிறர்துன்பம் கண்டு தாமும் வருந்தும் நேயம்; அன்பாவது அருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் மனத்தில் அமைந்த நெகிழ்ச்சி.

தலைவனிடத்துத் தலைவிக்கு அருளைத் தோன்றச் செய்த அன்பினை மறைத்து வேறொரு பொருள் பயப்பச் சொல்லு வதே அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவியாம். (தொ. பொ. 161 நச்.)

அல் இடையீடு -

{Entry: G07__097}

இரவுக்குறி இடையீடு. (சாமி. 86)

அல்லகுறி -

{Entry: G07__098}

தலைமகனாலன்றிப் பிறிதொன்றால் நிகழும் குறி. (ந. அ. 159.)

அல்லகுறி அறிவித்தல் -

{Entry: G07__099}

தலைவி, தலைவன் குறிப்பன இயற்கையான் நிகழ்ந்தவழி, அவன் வந்து குறிசெய்ததாகக் கருதிப் பொழிலிடம் சென்று சிறிது நேரம் தங்கி அவன் வாராமையின் மீண்டபின்னர், தலைவன் வந்து குறி செய்யவே, தலைவி வாராமையால் அவன் மீண்டுபோக, மறுநாள் தோழி, தாம் குறியல்லாத தனைக் குறியாக மயங்கி முன்னர்ச் சென்று திரும்பியமை யால், மீண்டும் இடம்விட்டுப் பெயர்ந்து போதல் அத்துணை எளிய செயலன்று என்பதைத் தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்குமாற்றால் கூறுவது. இதனை ‘இறைவிக்கு இகுளை இறைவரவுணர்த்தல்’ என்ற கிளவியில் அடக்கிக் கொள்வர். (ந. அ. 160)

இஃது இரவுக்குறி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 172)

அல்லகுறிப்பட்டதைத் தன்பிழைப்பாகத் தழீஇத் தேறிய தலைவியது நிலைமையைத் தோழி தலைவற்குக் கூறி, “இவ் விடையீடு நின் தோழியினான் ஆயிற்று என அவளிடம் கூறு” என, அவளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

“தலைவ! உன்னைக் கூடும் வேட்கையினாலே நீ இரவுக்குறி நிகழ்த்தும் ஒலியைச் செவிசாய்த்துக் கேட்டும், நீ விரைவில் தன்னை மணக்கவேண்டும் என்பதற்குத் தெய்வம் அருள வேண்டும் என்று பலவாறு வேண்டி, நீ குறி பிழைத்ததனால் நினக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தத்தை நினைத்து மனம் நொந்தும், மழைநீரிடத்துள்ள வேட்கையால் வானத்தையே பார்த்திருக்கும் வானம்பாடி போல நின்னிடத்து வேட்கை யான் நின்னையே நினைத்தும் இருக்கும் தலைவியிடம் ‘அல்லகுறிப்பட்டமை நின் குற்றமன்று; நின்தோழி செய்த தவறே’ என்று என்மேல் பிழையை ஏற்றி, அவளை அமைதி யாக இருக்குமாறு செய்க. நீ கூறுவதே அவளுக்கு ஆறுதல் தரும்” (கலி. 46) என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறுதல்.

அல்லகுறிப்படுதல் -

{Entry: G07__100}

தலைவன் இரவுக்குறியிடத்துத் தான் வந்துள்ள செய்தியைப் புனல் ஒலிப்படுத்தல், புள் எழுப்புதல் முதலியவற்றான் தெரிவிப்பான். புனலையொட்டியுள்ள மரங்களின் காய்கள் மூக்கு ஊழ்த்து இயற்கையாக நீரில் வீழ்ந்து புனல் ஒலிப்படு தலும் உண்டு.

பறவைகள் இரவில் திடீரென்று பறந்து ஒலித்துக்கொண்டு புறப்படுதலும் உண்டு. இவ்வாறு தலைவன் நிகழ்த்தும் செயல்கள் இயற்கையான் நிகழ்ந்தவழித் தலைவன் வந்து விட்டதாகக் கருதித் தோழியும் தலைவியும் இரவுக்குறி யிடத்து வந்து சிறிது நேரம் தாமதித்துப் பின் அவன் வாராமையால் மீண்டும் இல்லம் அடைவர். தலைவன் பின்னர்க் குறியிடத்து வரினும், மறுபடியும் இல்லத்தின் எல்லை கடந்து வருதல் அரிய செயல் ஆதலின், மீண்டும் தலைவியும் தோழியும் இரவுக்குறியிடத்து வாரார். அன்று குறி பயனற்றுவிடும். இதுவே அல்லகுறிப்படுதலாம். (தொ. பொ. 133 நச்., இறை. 17 உரை)

அலர் -

{Entry: G07__101}

ஊர் மக்கள் சிலர் மற்றவர் செய்தியாகத் தாம் தக்க சான்று களுடன் உறுதி செய்துகொண்ட பிறகு இன்னானோடு இன்னாளிடை இது போன்ற செய்தி நிகழ்ந்தது என்று பிற ரும் கேட்குமாறு உரத்த குரலில் தமக்குள் பேசிக் கொள்வது. (இறை. அ. 22)

களவொழுக்கம் வெளிப்பட்டது காரணமாகக் களவுக் காலத்தும், தலைவனுடைய புறத்தொழுக்கம் காரணமாகக் கற்புக் காலத்தும் அலர் எழும். இச்செய்தியைத் தோழியும் தலைவியும் தலைவனுக்கு கூறுவர்.

களவுக்காலத்து அலரைப்பற்றிக் கூறுதல் பகற்குறி இரவுக்குறி இவற்றை விலக்குதற்காகவும், கற்புக்காலத்து அலரைப்பற்றிக் கூறுதல் தலைவனது புறத்தொழுக்கத்தை நீக்குதற்காகவும் எனக் கொள்ளப்படும். களவு அலராயவழிப் புணர்ச்சி இடையீடுபடுமே என்ற அச்சத்தால், இருவர்க்கும் காமம் மிகும். கற்புக் காலத்தில் தலைவனது பரத்தைமையால் அலர் தோன்றியவழித் தலைவி வருந்துவாளே என்று தலைவற்குக் காமம் சிறத்தலும், தலைவன் பிரிவினால் தலைவிக்குக் காமம் சிறத்தலும் நிகழும். மேலும் “தலைவன், காமகிழத்தியர் அல்லாத பரத்தையரோடு ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும், அவருடன் ஆறு முதலியன ஆடியும் இன்பம் நுகர்ந்தான்” என்று கேட்குந்தோறும் தலைவிக்குப் புலத்த லும் ஊடலும் பிறந்து காமம் சிறக்கும்.

இவற்றால் மற்றவர் புறத்தே கூறும் பழியொடு பட்டனவாகிய செய்திகள் தலைவன் தலைவியரிடைக் காமத்தை மிகுவித்தற் குப் பயன்படும் என்றவாறு. (தொ. பொ. 162, 163, 164 நச்.)

அலர் அறிவுறுத்தல் (1) -

{Entry: G07__102}

தலைவனுக்குத் தோழி ஊரார் பேசும் அலர்உரைகளைக் கூறுதல்.

“ஐய! எங்கள் தலைவியைப் பற்றி ஊரில் அவர் பரவுகிறது. அதை மேலும் வளரவிடாது அவளை நீ வரைந்து கோடற் கான முயற்சியினை மேற்கொள்ளுக” என்பது போன்ற தோழியின் கூற்று எடுத்துக்காட்டாம்.

இதனைத் திருக்கோவையார் ‘பழிவரவுரைத்துப் பகல் வரவு விலக்கல்’ என்னும் (254).

இது களவியலில் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

அலர் அறிவுறுத்தல் (2) -

{Entry: G07__103}

தலைவி தலைவன் பிரிவால் ஏற்பட்ட தன் துயரைக் கடலிடம் கூறி வருந்தியதைக் கேட்ட தலைவன் குறியிடைச் சென்று நிற்பத் தோழி அவனை எதிர்ப்பட்டு “நின் அருள் ஊர் முழுதும் பரவி அவராகிவிட்டது. (இனி இங்ஙனம் வருதலை விடுத்துத் தலைவியை மணந்து இன்பம் நுகர்தற்கு ஆவன செய்க)” என்று அறிவுறுத்துவது.

இதனை ‘அலர் பார்த்துற்ற அச்சக்கிளவி’ என்றும் கூறுவர். (ந. அ. 164) இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (கோவை. 180)

அலர் அறிவுறுத்தல் (3) -

{Entry: G07__104}

களவொழுக்கத்தைத் தொடர்ந்து நிகழ்த்த விரும்பும் தலைவன் பிறர் தன்னையும் தலைவியையும் இணைத்துக் கூறும் பழிமொழிகள் தம்முடைய தொடர்பினை மாண்புறச் செய்வதால் அவ்வலரினால் தான் மகிழ்வதைத் தோழிக்குக் கூறுதலும், தோழியும் தலைவியும் ஊரவர் கூறும் பழிமொழி களைத் தலைவனுக்கு எடுத்துக்கூறி மணத்தலையோ உடன் போக்கினையோ அறிவுறுத்தலுமாம். (குறள் அதி. 115 பரிமே.)

அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி -

{Entry: G07__105}

தலைவி தன்னைப்பற்றி ஊரார் கூறும் அலர்மொழி கேட்டு, அதனால் தான் அடையும் அச்சத்தைத் தோழியிடம் கூறுதல்.

“தலைவனிடம், ‘நீ எங்கட்குச் செய்த அருள் அம்பலாய் முகிழ்முகிழ்க்கப்பட்டிருந்த நிலையைக் கடந்து அலராக ஊரெங்கும் பரவிவிட்டது’ என்று தோழி கூறுதல் வேண்டும்” (அம்பிகா. 250) எனத் தலைவி கருதுதல்.

இது களவியலில் ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக் - கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

`அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்’ -

{Entry: G07__106}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தலைவியைப் பிரிந்திருக்க மனம் பொறாதவனாகி இல்லத்துப் புகுதல் (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

`அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தல்’ -

{Entry: G07__107}

தலைவன் பிரிவினால் இரங்கும் தலைவி கடற்கரையாகிய நெய்தல் நிலத்தை அடைந்து ஆண்டுள்ள பொருள்களிடம் தன் துயரம் தாங்காது பலவாறு கூறுதல். (நெய்தல் நடை யியல்) (வீ. சோ. 96 உரை மேற்.).

அவ்வழிப் பெருகிய சிறப்பு -

{Entry: G07__108}

தலைவனுக்குரிய முப்பத்து மூன்று கூற்றுக்களுள் ஒன்று.

ஓதல் முதலிய பிரிவின்கண் ஆற்றிய அருஞ்செயல்களிட மாகப் பெருக்கமுற்றெய்திய சிறப்பினிடமாகத் தலைவன் கூற்று நிகழும். அவ்வருஞ்செயல்களாவன : வேற்று நாட்டகல் வயின் சென்று ஓதியும் உணர்த்தியும் புலமைகாட்டல், பகையை வென்று தணித்தல், பணிந்தாரிடம் திறைபெறுதல், தூதுரைத்தல், பொருள் முற்றி ஈட்டுதல், காவல்வினை, இன்ன பிற. (தொ. கற். 5 ச. பால.)

அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -

{Entry: G07__109}

தனது காதல் வேட்கையறிந்து தலைவி இயல் இடம் இவற்றை வினாவிச் சென்ற பாங்கன் அவளை அவ்விடத்துக் காண் பானோ காணமாட்டானோ என்று தலைவன் ஐயப்பட்டுக் கொண்டு கவலையோடிருத்தல்.

இக்கூற்று ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண் உரையிற் கொண்ட தொன்று. (இ. வி. 505 உரை)

`அவ்வியல் ஒட்டாள் மொழிதல்’ -

{Entry: G07__110}

தோழி தலைவியது களவொழுக்கச் செய்தியைச் செவிலிக்கு மாறுகோள் இல்லா மொழியால் அறத்தொடு நிற்றல். (குறிஞ்சி நடையியல்) இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் (ந. அ. 177) எனவும் படும். (வீ. சோ. 92 உரை)

அவத்தை -

{Entry: G07__111}

காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு - என்று காதலர்க்கு ஏற்படும் பத்துவகை நிலைகளும் அவத்தை எனப்படும். (இ. வி. 405)

இவற்றைத் தலைவனுக்கே யுரிய எனக் கொள்வாரும் உளர்.

(ந. அ. 36 உரை)

அவயவம் கூறல் (1) -

{Entry: G07__112}

தலைவியின் உறுப்பு அழகைத் தலைவன் தோழிக்கு அடை யாளமாகக் கூறுதல்.

பாங்கி மதியுடம்பாட்டின்கண், தலைவனோடு உரையாடிய தோழி, தான் தலைவன் விரும்பும் பெண் யார் என்பதை அறியாதவளைப் போல நடிக்க, தலைவன் தான் குறிப்பிடும் பெண் இன்னாள் என்பதை அவளது வடிவழகை வருணிக்கு முகத்தான் தொடங்கி, “நான் குறிப்பிடும் அவள் அழகால் இரதி போல்வாள்; அவளுடைய கண்கள் மன்மதனுடைய ஐந்து அம்புகளில் உயிரை வாங்கும் அம்பாகிய கருங்- குவளைப் பூப் போல்வன” என்றாற் போல அவள் உறுப்பு நலனை வருணனை செய்தல். இது ‘சேட்படை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (மா. அ. பா. 585)

அவயவம் கூறல் (2) -

{Entry: G07__113}

தோழி, தலைவனால் விரும்பப்பட்டவள் தன் கூட்டத்தைச் சார்ந்த பலருள் யாவள் என வினவ, தலைவன் தான் தலைவியை இன்னாளென்று குறிப்பிட்டால் தோழி தவறாது தனக்கு உதவுவாள் என்னும் கருத்தால், தான் விரும்பும் தலைவியின் உறுப்பு நலன்களை உரைத்துத் தோழி அத்தகைய நலனுடையவள் இன்னாள் என்று அறியுமாறு செய்யத் தலைவியின் உறுப்படையாளம் கூறல்.

இதனை ‘இறையோன் இறைவிதன்மை இயம்பல்’ என்றும் கூறுப. (ந. அ. 144)

இது ‘சேட்படை’ என்னும்தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 108.)

அவயவம் தேறுதல் -

{Entry: G07__114}

பாங்கன் கூறிய உறுப்பழகு கேட்டுத் தலைவன் தெளிதல். தலைவியிருந்த இருப்பிடம் நோக்கிச் சென்று அவளை அப்பொழிற்கண், தனித்துத் தலைவன்வருகையை நாடி எண்டிசையும் அலமரும் கண்ணினளாய் இருத்தலைக் கண்ணுற்று மீண்ட பாங்கன், வண்டேறிய குழலும் காதளவு நீண்ட கண்களும் தோடணிந்த வள்ளைக்கொடி போன்ற காதுகளும் வேய்போன்ற தோள்களும் உடைய ஏந்திழையைப் பற்றிக் கூற, அவன் கூறிய உறுப்பழகு கொண்டு அவன் தலைவியைக் கண்டு வந்திருப்பதாகத் தலைவன் தெளிதல். (கோவை. 36).

இக்கூற்று ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணது. (க. கா. பக். 34, 35.)

அவயவம் தோற்றல் -

{Entry: G07__115}

தலைவன் தலைவியினுடைய உடல் உறுப்புக்களை உருவெளித் தோற்றமாகக் காணுதல். அந்தக் காட்சியைத் தலைவன் தானே கூறுவதாக வருவது இத்துறை. “இந்த ஒளிவீசும் வெயிலே அவளுடைய குழைகள்; வேலே அவள் விழிகள்; இவள் நடையும் அன்னமே; இவள் இன்சொல் குயிலே; இவள் அழகே இவள் நிறம்; சாமரமே இவள்குழல்; மயிலே இவள்சாயல்; மின்னலே இவள் இடை; மதியே இவள்முகம். இத்தகைய உறுப்புநலம் கெழுமிய இவளைத் தான் எங்கும் காண்கிறேன்” என்று தலைவன் கூறுதல். இஃது அம்பிகாபதிக் கோவையில் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 64)

அவர் சென்று இரத்தல் -

{Entry: G07__116}

பாங்கன் தோழி பாணன் முதலியோர் பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனை ஏற்குமாறு தலைவியை வேண்டல். வாயில் வேண்டுதல் எனவும் கூறப்படும். (மருதநடையியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

அவர்வயின் விதும்பல் -

{Entry: G07__117}

கற்புக் காலத்தில் சேயிடைப் பிரிவாகிய நாடும் காடும் இடை யிட்டுச் சில திங்கள் காலவரையறை சொல்லித் தலைவன் தலைவியை விட்டு நீங்கிச் செல்லும் பிரிவில், தலைவனும் தலைவியும் வேட்கை மிகுதியால் ஒருவரை ஒருவர் காண்ப தற்கு விரைதல் (பரிமே. 2) தலைவனை நினைந்து தலைவி விதுப்புறல் (-அன்பால் நடுங்குதல்) (மணக்.) (குறள் அதி. 127)

அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -

{Entry: G07__118}

“தலைவி! நாரைகள் வானத்தே உயரப் பறக்கின்றன. புதர்களி லுள்ள பூக்களும் வண்டுகள் ஊதுவதால் மலர்ந்துள்ளன. நின் சங்குவளையல்களும் நெகிழ்ச்சி நீங்கி முன்கைகளில் செறிந்துள்ளன. இந்நிமித்தங்கள் கூதிர்க்கால வரவினை அறிவிக்கின்றன. நின்னை நீத்துப் பாலைநிலத்துச் சென்ற தலைவர் விரைவில் வருவார். நீ கவலற்க” என்று தோழி தலைவன் வரவிற்கு நிமித்தமாயின கண்டு தலைவியை ஆற்றுவித்தது. (குறுந். 260)

`அவரவர் உறுபிணி தமவாகச் சேர்த்தல்’ -

{Entry: G07__119}

தலைவன்பால் மிக்க காதல் கொண்ட தலைவி மெலிந்தும் மேனிபசந்தும் இரவு துயில் கொள்ளாதும் தான் படும் துன்பங்களைப் பறவை போன்ற பிறபொருள்மேல் ஏற்றி, அவற்றுக்கு இயல்பாக அமைந்தவற்றை அவை தன்னைப் போலத் திருமாலிடம் காதல் கொண்டனமயால் விளைந்தன வாகக் கூறுதல்.

“உப்பங்கழியே! இரவெல்லாம் துஞ்சாமல் நீயும் துயர் உறுகிறாயே. நீயும் என்னைப் போலத் திருமாலிடம் நின் நெஞ்சினைப் பறி கொடுத்தாயோ” என்றாற் போலக் கூறுதல்

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 2- 1- 8)

அவள் உடன்படுத்தல் -

{Entry: G07__120}

தன்னூர் அணித்தன்று எனவும், தலைவி தனியே சுரவழியில் தன்னுடன் வருதல் இயலாது எனவும் கூறி, உடன்போக்கினை மறுத்த தலைவனிடம், தோழி வற்புறுத்திக் கூறி, அவனை உடன்படுவித்தல்.

“தலைவ! நின்துணை இருக்கையில், தலைவிக்குப் பிற துணையும் வேண்டுமோ? பாலைவழி இவட்குச் சுடாதவாறு நின் அருள் குளிர்விக்கும். எவ்வாறேனும் இவளை நீ உடன் கொண்டு போதலே தக்கது” (தஞ்சை. கோ. 307) என்றாற் போன்ற தோழியின் கூற்று எடுத்துக்காட்டு. திருக்கோவை யார் இதனை ‘ஆதரம் கூறல்’ என்னும் (202).

இது வரைவியற்கண் களவு வெளிப்பாட்டில் உடன்போக் கின்கண்ணது ஒரு கூற்று. (ந. அ. 182)

அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -

{Entry: G07__121}

வேட்கை மீதூர்ந்த நிலையில் தலைவியைக் காணத் துடிக்கும் தலைவன் அவளொடு கூடித் தான் இன்புற்ற இடத்தை அவளாகவே காணும் மனநிலையுடன் பேசுதல்.

“பொழிலில் உள்ள மூங்கில் அவள் தோளை நினைவூட்ட, ஆடும் மயில் அவள்சாயலைக் காட்ட, அவள்இடையை ஒத்துக் கொடிகள் துவள, இந்த இடமே என் உயிரனைய தலைவி போல என் உள்ளத்திற்கு ஏற்பத் தோன்றுகிறது” என்ற தலைவன் கூற்று (கோவை. 38) எடுத்துக்காட்டாம்.

இதனைத் திருக்கோவையார் ‘பொழில்கண்டு மகிழ்தல்’ என்னும். பாங்கற் கூட்டம் என்னும் தொகுதிக்கண்ணது இக்கூற்று.

இது களவியற்கண் ‘இடம் தலைப்பாடு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்றாம். (இ. வி. 503 உரை)

அவள் குறிப்பறிதல் -

{Entry: G07__122}

தலைவன் விருப்பம் தலைவிகண்ணதே என்பதை உறுதியாக அறிந்த தோழி, தலைவன் தலைவியை விரும்புமாறு போலத் தலைவியும் அவனை விரும்புகின்றாளா என்று அவளைக் குறிக்கொண்டு நோக்கி, அவளுக்கும் அவன்பால் மிகுந்த வேட்கை உளதாய செய்தியை அவளுடைய குறிப்புக்களான் அறிதல். இது ‘குறையுற உணர்தல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 65)

அவள் பயம் உரைத்தல் -

{Entry: G07__123}

கற்புக்காலத்தில் ஓதல் தூது பொருள் முதலியன கருதிப் பிரிந்து சென்ற தலைவன் தனது நினைப்பால் எடுத்துக் கொண்ட செயலை முட்டின்று முடிக்காது திரும்பிவிடு வானோ என்று தான் அஞ்சிய அச்சத்தைத் தலைவி தோழி யிடம் கூறல் (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

அவள் பழித்துரைத்தல் -

{Entry: G07__124}

தலைவன் பொருள்வயிற் பிரிந்து மீண்டும் வரக் காலம் தாழ்க்கவே, அவன்பிரிவு குறித்துத் தலைவி வருந்த, தோழி அவளை நோக்கி “மின்னே! தலைவனது மனம் இரும்பாக உள்ளது. அவனை விரும்பி உன் உடல் பசலை பாய்ந்து பொன்வடிவமாகியது. தன்னைச் சேர்ந்தவர்க்கே இவ்வளவு துயரம் விளைக்கும் தலைவன் தன் பகைவர்களை எத்தகைய இடர்கட்கு அகப்படுப்பானோ? அறியேன்” என்றாற் போலக் கூறுவது.

இது திருவாரூர்க் கோவையில் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக்கண்ணதொருகூற்று. (346)

அவன் அவண் புலம்பல் -

{Entry: G07__125}

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன், தான் முன்பு சொன்னவாறே கார்காலத் தொடக் கத்திற்குள் தலைவியைக் காணச் செல்ல இயலாது போனமை எண்ணித் தான் சென்ற இடத்தே துயருறுதல்.

“கண் குழிய என்தேர் வரும் வழியை நோக்கிய வண்ணம், கூந்தல் சோர, உள்ளங்கையில் கண்ணீர் வெள்ளம் போல் பாய, வருந்தாநிற்கும் தலைவியை, ‘முன் சென்று தலைவனை வரவேற்க வருவாயாக’ என்று கூறுதற்குப் போன என்மனம், ‘அவர் எங்கே’ என்று அவள் தன்னைக் கேட்பின், யாது விடை கூறுமோ?” (அம்பிகா. 319) என்றாற் போலத் தலைவன் வரைவிடைவைத்துப் பொருள் தேடச் சென்ற இடத்தே தலைவியை நினைந்து வருந்தல்.

இது களவியலில் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ என்றும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

அவன் குறிப்பறிதல் -

{Entry: G07__126}

தலைவன் தன்னை இரந்து குறையுற்றுக் கையுறை ஏந்தி நின்றவழி, அவன் தன்னுடன் நின்ற தலைமகளை அடிக்கடி நோக்குதலை யுணர்ந்த தோழி, தலைவனது குறிப்புத் தலைவியிடத்தது எனவும் அவன் தலைவியது கூட்டம் விழைகின்றான் எனவும் தன் ஆராய்ச்சியான் அறிதல்.

இது ‘குறையுற உணர்தல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 64)

அவன்வயின் பரத்தை(மை) -

{Entry: G07__127}

கற்புக்காலத்துத் தலைவி தலைவன் தன்னை மறந்து அயலான் போல் ஒழுகுவதாகத் தன் ஒவ்வொரு பேச்சிலும் வெளி யிடுதல். (தொ. பொ. 109 இள.)

களவிலும் கற்புக்கடம்பூண்டு ஒழுகும் தலைவி தன்காதல் மிகுதியால் தலைவன் தன்னை மறந்து அயலவன் போல ஒழுகுகிறான் என்று கருதி உரையாடும் பெண்மைக்குரிய செய்தி. (111 நச்.)

தலைவி, தலைவன் தன்னைவிட்டு வேறுமகளிரையும் காதலிக்கின்றான் போலும் என்று எண்ணுதல்; தலைவனிடம் அத்தகைய அயலவனாம் தன்மை இல்லாதிருப்பினும், காதல் மிகுதியால் அங்ஙனம் கருதுதல் பெண்தன்மையாகும். (161 குழ.)

அவன்வயின் வேட்டல் -

{Entry: G07__128}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தலைவியிடம் தனக்குப் புறத்தொழுக்கம் எதுவுமின்று என்று மறைத்துப் பொய் கூற வும், அங்ஙனம் பொய் கூறிய தலைவனிடம் தலைவி விரும்பல்.

(தொ. பொ. 205 நச்.)

அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -

{Entry: G07__129}

1) தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழியும் தோழி செவிலிக்கு அறத்தொடு நிலையாற் கூறுவாள்.

“அன்னையே! மழை பெய்து அருவிநீராக, மூங்கில் வளர்ந் துள்ள மலைச்சரிவு வழியே இறங்கும் தலைவனுடைய மலையை ஒத்த மேம்பட்ட மார்பினைத் தழுவாத நாளெல் லாம் இத்தலைவியின் குளிர்ந்த கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கும்.” (ஐங். 220)

“இத்தலைவியைப் பெரிய மலைநாடனாகிய தலைவன் வரைவு வேண்டி வரின், மறுக்காமல் கொடுத்தால்தான், இவளுக்கு நன்மையைச் செய்ததாகும். தலைவன் வரைவு வேண்டித் தமரை விடுத்ததைக் கண்டபின்னும், இவள் துயரம் இன்னும் குறைய வில்லை”.

இவை போலத் தோழி அறத்தொடு நிற்பாள். (ஐங். 258)

2) தமர் வரைவு மறுப்பரோ எனக் கவலையுற்ற தலைவிக்குத் தோழி கூறியது.

“தலைவி! நம் சுற்றத்தார், கையில் தண்டூன்றித் தலையில் தலைப்பாகை யணிந்து ‘நன்று நன்று’ என்று வந்த தலைவன் தமரொடு முகமன் கூறி அளவளாவுகின்றனர். ஆதலின் நம் மூரில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பவர்களும் இருக்கி றார்கள் என்று கொள்” என்ற தோழி கூற்று. (குறுந். 146)

3) தமர் வரைவுமறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி தீய குறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக் கண்டு “கடிதின் வரைவர்” என்று கூறியது.

“தலைவி! என் இடக்கண் துடிக்கின்றது; என் முன்கை களிலுள்ள வளைகளும் நெகிழாமல் செறிகின்றன; களிற்றின் தாக்குதலினின்று தப்பிய சினம் சிறந்த புலி இடி போல உறுமும். தலைவன் விரைவில் வரைய வருவான் என்று நன்னிமித்தம் கண்டு கூறுகிறேன்” என்ற தோழி கூற்று. (ஐங். 218) (தொ. பொ. 114 நச்.)

“அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -

{Entry: G07__130}

“காதலர் என்னைப் பிரிந்து சென்றபோதே என் சாயலையும் நாணத்தையும் தாம் கொண்டு, மாறாக, பசலையையும் காம நோயையும் தந்து சென்றுவிட்டார்” என்ற தலைவி கூற்று.

(குறள் 1183)

அழிஞ்சுக்காடு -

{Entry: G07__131}

பாலை நிலம் - ‘பெருவிடாயனானவன் அழிஞ்சுக் காடு ஏறப்போக’ ஈடு 6 - 2 பிரவேசம் (L)

அழுங்கு தாய்க்குரைத்தல் -

{Entry: G07__132}

வழியிடைக் கண்டோர் உலக இயல்பினைக்கூறி, “மகளிர் பருவம் வந்தவுடன் தம்மைப் பெற்றவர்க்குப் பயன்படாது, தம்மை விரும்பும் காதலர்க்கே பயன்படுவர்” என்று கூறியதையும் மனங்கொள்ளாது வருந்தும் செவிலி கேட்ப, “இந்த அம்மைதான் அப்பெண்ணை வளர்த்தவள் போலும். அவளும் அவள் காதலனும் அவன்ஊரை இந்நேரத்துள் அடைந்திருப்பார்களே! இத்தாய் போய்ச் செய்யக்கடவ காரியம் ஒன்றுமில்லை” என்றாற் போலக் கூறி, அவர்களைப் பின்தொடர்தலை விடுத்து மீண்டு போமாறு அறிவுறுத்தல்.

இது திருக்கோவையாரில் ‘உடன் போக்கு’ என்னும் கிளவிக் - கண்ணதொரு கிளவி. (கோவை. 249.)

அழுங்குற்று உணர்த்தல் -

{Entry: G07__133}

தலைவன் கற்புக்காலத்துப் பிரியும் குறிப்பினன் ஆதலைத் தலைவி அறிந்து அப்பிரிவிற்கு வருந்திப் பிரிதல்துன்பம் தனக்குத் தாங்கொணாத் துயரம் தரும் என்பதைத் தலைவ னிடம் கூறல்.

இது காம நுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று. வீ.சோ. (‘குறிப்பு’ என்பது பற்றிய) உரை விளக்கம்.

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்பதன் பாற்படும். (வீ. சோ. 90)

அளத்தி -

{Entry: G07__134}

நெய்தல் நிலத்துப் பெண்பாற்பெயர். (சூடா. II 72.)

அளம் -

{Entry: G07__135}

நெய்தல் நிலம் (அக.நி. 159) (L)

அற்சிரம் -

{Entry: G07__136}

முன்பனிக்காலம்; `அற்சிர மறக்குந ரல்லர்’ (ஐங். 464) குறிஞ்சி யாகிய உரிப்பொருளுக்குச் சிறந்த பெரும்பொழுது இது.

அற்சிரை -

{Entry: G07__137}

அற்சிரம்; `அற்சிரை வெய்ய வெப்பத் தண்ணீர்’ (குறுந். 277)

அறக்கழிவு -

{Entry: G07__138}

அறத்திற்கு அழிவுதரும் செயல். அறத்திற்கு அழிவு தரும் அகப்பொருளாவது பிறன்மனைக் கூட்டம். (தொ. பொ. 214 இள.)

அறக்கழிவாவது உலக வழக்கிற்குப் பொருத்தமின்மை. அது தோழி, “என்னைத் தலைவன் நயந்தான்” எனவும், ” அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன்” எனவும் கூறுவனவும், தலைவனுடைய இருப்பிடம் நோக்கித் தான் செல்வதாகத் தலைவி கூறுவனவும் போல்வன. (218 நச்.)

அறக்கழிவுடையன பொருட்பயம் படவரல் -

{Entry: G07__139}

அறக்கழிவுடையன - அறத்திற்கு மாறுபட்ட செயல்கள்; பொருட்பயன்படுதலாவது இன்பமும் பொருளும் தருதல். பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும்.

அகப்பொருளில், பிறன்மனைக் கூட்டத்தால் இன்பமும் பொருளும் கிட்டுவனஆயினும், அவற்றை ஏலாது விலக்க வேண்டும்; புறப்பொருளில் பகைவருடைய நிரை கோடலும் அழித்தலும் போல, நட்டோருடைய நிரைகோடலும் அழித்தலும் போல்வன பொருள்தருமேனும் அவற்றை விலக்க வேண்டும். (தொ. பொ. 214 இள.)

உலகவழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப் பொருளுக்கும் பயன்பட வருவனவாயின், அவற்றையும் வழக்கமாகக் கொண்டு செய்யுள் செய்தல்.

தலைவன் தன்னிடம் குறை நயத்தலைத் தோழி தலைவிக்குக் கூறும்போது அவன் தன்னை நயந்தான் போலத் தலைவி யிடம் கூறுதல், தலைவி தோழிக்குத் தன் களவொழுக் கத்தைப் புலப்படுத்த முடியாமல் வருந்துங்காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித் தற்பொருட்டு அறக்கழிவுடையன கூறுவதாதலின், அஃது அகப்பொருளுக்கு ஏற்றது. தலைவி தலைவனது ஊர்க்குப் புறப்பட்டுப் போகலாம் என்று கூறுவது உலகவழக்கிற்கு மாறுபட்டதேனும், அதனைத் தலைவன் சிறைப்புறத்தா னாகக் கேட்குமாறு கூறுதலின், தலைவியின் பிரிவாற்றாமை யைத் தலைவன் உணர்வதற்குக் கூறும் அக்கூற்றால் அவன் விரைவில் வரைய முயல்வான் என்பது அமைதலின், அறக் கழிவு உடையதாயினும் அகப்பொருளுக்கு ஏற்றது. (218 நச்.)

எ-டு : `நெருநல் எல்லை ஏனல் தோன்றி’ (அகநா. 32)

“நெருநல் யான் காக்கின்ற புனத்து வந்து ஒரு தலைவன் தன் பெருமைக் கேலாச் சிறுசொற் சொல்லித் தன்னை யான் வருத்தினேனாகக் கூறி என்னை முயங்கினான்; யான் அதற்கு முன் நெகிழ்ந்த மனநெகிழ்ச்சி அவன் அறியாமல் மறைத்து வன்சொற் சொல்லி நீங்கினேன்; அவ்வழி என் வன்கண்மை யாற் பிறிதொன்று கூறவல்லன் ஆயிற்றிலன். அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத்தன்மையின்மையி னின்று இளிவந்தொழுவன்; தனக்கே நம்தோள் உரிய ஆகலும் அறியானாய், என்னைப் புறநிலை முயலும் கண்ணோட்டம் உடையவனை நின்ஆயமும் யானும் நீயும் கண்டு நகுவோமாக; நீ அவன் வருமிடத்தே செல்வாயாக” எனக் கூறியவழி, “எம் பெருமானை இவள் புறத்தாற்றிற் கொண்டாள்கொல்லோ?” எனவும், “அவன் தனக்கு இனிய செய்தனவெல்லாம் என் பொருட்டென்று கொள்ளாது, பிறழக்கொண்டாள் கொல்லோ?” எனவும் தலைவி கருதுமாற்றானே கூறினாள் எனினும், அதனுள்ளே, “இவள் எனக்குச் சிறந்தாள்” என்பது (அவன்) உணர்தலின், “என் வருத்தம் தீர்க்கின்றிலை” என்றான் எனவும், அதற்கு முகமனாக இவளைத் தழீஇக் கொண்டதன்றி இவள் பிறழக் கொண்ட தன்மை இவள்கண் உளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லான் எனவும், இவ்வொழுகலாறு சிறிதுணர்தலின் இக்குறை முடித்தற்கு மனஞெகிழ்ந்தாள் எனவும், அவனை என்னொடு கூட்டுதற்கு என்னை வேறுநிறுத்தித் தானும் ஆயமும் வேறுநின்று நகுவேமெனக் கூறினாள் எனவும், தலைவி நாண் நீங்கா மைக்குக் காரணமாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க. (தொ. பொ. 218 நச்.)

அறத்தொடு நிலை -

{Entry: G07__140}

அறத்தொடு மாறுகொள்ளாத நிலை; தக்கதனைச் சொல்லி நிற்றல்; கற்பின் தலைநிற்றல். அஃதாவது தலைவி தனக்கும் தலைவனுக்கும் விதிவயத்தால் ஏற்பட்ட தொடர்பினைச் செவ்வியறிந்து தோழிக்குத் தெரிவித்து, அவள் வாயிலாகச் செவிலிக்கும், செவிலி வாயிலாக நற்றாய்க்கும், நற்றாய் வாயிலாகத் தந்தை தன்னையர்க்கும் தெரிவித்துத் தனது திருமணம் தலைவனுடனேயே நடைபெறுவதற்கு ஏற்பன செய்தல்.

அறம் என்பது தக்கது. அறத்தொடு நிலை என்பது தக்கதனைச் சொல்லி நிற்றல் என்றவாறு. அல்லதூஉம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு; கற்பின் தலைநிற்றல் என்பதுமாம்.

(இறை. அ. 29 உரை; ந.அ. 48)

அறத்தொடு நிலையின் எழுவகை (1) -

{Entry: G07__141}

1) எளித்தல் - ‘தலைவன் நம்மாட்டு எளியன்’ என்று கூறுதல். மகளுடைய தாய் மருமகன் தம் விருப்பப்படி நடப்பவனாக இருத்தல் வேண்டும் என்று கருதுதலின், தலைவனை எளியன் என்று தோழி கூறி அறத்தொடு நிற்றல்.

2) ஏத்தல் : மகளுடைய தாய் தலைவன் உயர்ந்தவன் என்று கூறியவழி மனம் மகிழ்வாள் ஆதலின், தோழி தலைவனை உயர்த்திக் கூறல்.

3) வேட்கையுரை த்தல் : தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும், தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல்.

4) கூறுதல் : தலைவியைத் தலைவற்குக் கொடுத்தல் வேண்டும் என்பதுபடக் கூறல்.

5) உசாவுதல் : வெறியாட்டும் கழங்கும் இட்டுரைத்துழி, வேலனோடாவது பிறரோடாவது தோழி உரையாடுதல்.

6) ஏதீடு தலைப்பாடு : புனலிடை உதவினான், களிற்றிடை உதவினான், தழை தந்தான், கண்ணி தந்தான் என யாதானும் ஒரு காரணத்தை முன்னிட்டு இருவரும் சந்தித்தனர் என்பது.

7) உண் மை செப்பும் கிளவி : நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி கூறுதல். (தொ. பொ. 112 இள. உரை)

அறத்தொடு நிலையின் எழுவகை (2) -

{Entry: G07__142}

1) தலைவனை எளியனாகக் கூறுதல், 2) தலைவனை உயர்த்துக் கூறல், 3) தலைவன் தலைவியிடம் கொண்ட வேட்கையை மிகுத்துக் கூறுதல், 4) தலைவியும் தோழியும் வெறியாட்டிடத் தும் பிறவிடத்தும் சில கூறுதற்கண்ணே பிறருடனேயும் உரையாடுதல் (கூறுதல் உசாதல்), 5) ஒருவன் களிறும் புலியும் நாயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டான் எனவும், பூத்தந்தான், தழைதந்தான் எனவும் இவை முதலாய காரணம் இட்டு உணர்த்தல் (ஏதீடு), 6) இருவரும் தாமே எதிர்ப்பட்டனர்; யான் அறிந்திலேன் என்றல், 7) படைத்து மொழியாது நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுதல் என்பன. (தொ. பொ. 207 நச்.)

அறத்தொடு நிற்கும் நெறி -

{Entry: G07__143}

தலைவி தனது களவியற் கற்பொழுக்கத்திற்கு ஏதம் வருமோ என்று அஞ்சியவழிக் கற்பறம் அழியாமைக்காக நிகழ்ந்த களவொழுக்கச் செய்தியை ஒருவாற்றான் தோழிக்குணர்த்த, தோழி செவிலிக்கு முன்னிலைப்புறமொழியாகவும், முன் னிலை மொழியாகவும் உணர்த்த, செவிலி நற்றாய்க்கு வெளிப்படையாக உணர்த்த, நற்றாய் தந்தை தன்னையர்க்குக் குறிப்பாக உணர்த்தல் (ந. அ. 48, 50-52)

அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -

{Entry: G07__144}

தலைவியை உற்று நோக்கி அவளுடல் வேறுபாடும் உள்ள வேறுபாடும் கண்டவழி, பாங்கி தலைவியை வினவுவாள்; செவிலி பாங்கியை வினவுவாள்; நற்றாயும் அவளை வினவு வாள். தலைவி தலைவனோடு உடன்போயவழிப் பாங்கி செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தந்தை தன்னையரிடமும் அறத்தொடு நிற்பர். (ந. அ. 53, 54)

அறத்தொடு நிற்றல் -

{Entry: G07__145}

அறத்தொடு நிற்றலாவது களவொழுக்கத்தை முறையாக வெளிப்படுத்திநிற்றல். அஃதாவது களவொழுக்கத்தைப் பொருந்திய தலைவி, பின்னர் வரைந்துகொண்டு இல்ல- றத்தை மேவுதல் குறிக்கோள் ஆதலின், அதற்கு இடையூறாக வெறியாட்டெடுத்தல் பிறன்வரைவு ஆய்தல் முதலியவை நிகழுமாயின் தனதுகற்பிற்கு ஊறு நேருங்கொல் என அஞ்சித் தான் களவின் மணந்த தலைவனையே வரைந்தெய்துதல் பொருட்டுத் தோழிவாயிலாகத் தன் மனநிலையைத் தமர்க் குக் குறிப்பான் அறிவிக்கச் செய்தல். அது கற்பொழுக்கமாகிய மனையறத்தொடுபடுதலை விரும்பி நிற்கும் நிலையாம். அங்ஙனம் தலைவியது கருத்தினை உணர்ந்த தோழி செவி லிக்குக் குறிப்பான் உணர்த்தலும், செவிலி நற்றாய்க்கு வெளிப் படையான் உணர்த்தலும், நற்றாய் தன் தமர்க்கு உரைத்தலும் ஆம். (தொ. பொ. 11 ச.பால.)

அறத்தொடு நிற்றல் (தலைவி) (1) -

{Entry: G07__146}

கற்பு அழியாதவாறு தலைவி தலைவனொடு தான் ஒழுகி வந்த களவொழுக்கத்தைத் தமர்க்கு முறையே அறிவுறுத்தி வெளிப்படுத்தலே அறத்தொடு நிற்றலாம். அங்ஙனம் வெளிப்படுத்தும்போது கடற்கரையில் வண்டலாடிக் கொண்டிருந்தகாலை, தோழி வேற்றிடத்திற்குச் சென்ற அந்நேரத்தே, கடலின் பேரலையொன்று தன்னை அடித்துச் செல்ல, எதிர்பாராவகையில் அங்கு வந்த தலைவன் தன்னைக் கடலினின்றும் எடுத்துக் காத்ததாகவும், அவனே தன்னால் மணக்கத் தக்கவன் என்றும், தலைவி தாயறிவினொடும் தோழிகாவலொடும் உலகியலொடும் கற்பினொடும் மாறு கொள்ளாதவாறு கூறுவாள். இது ‘வரைபொருட் பிரிதல்’ என்னும் கிளவிக்கண்ணதொருகூற்று. (கோவை. 290)

அறத்தொடு நிற்றல் (தோழி) (2) -

{Entry: G07__147}

தலைவியைப்பற்றி வினவிய செவிலிக்குத் தோழி “அன்னையே!’ தலைவி பேதைப்பருவத்தளாக இருந்த காலத்துத் தன் பாவைக்கு அணிய மலர் கொடுத்த அத் தலைவனையே மணத்தல் வேண்டும் என்ற உறுதி பருவமடைந்த இக் காலத்து அவளுக்கு விளைந்தமையால், அவனைப் பின் தொடர்ந்து போயினாள் போலும்” (கோவை. 225) என்றாற் போலச் செவிலிக்கு அறத்தொடு நிற்றல்.

இதனைப் ‘பாங்கி செவிலிக்கு உணர்த்தல்’ என்றும் கூறுப. கிளவி : கற்பொடு புணர்ந்த கவ்வை. (இ. வி. 538 உரை)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் கிளவிக்கண்ணதொரு கூற்றாம். (கோவை. 225)

அறத்தொடு நிற்றல் வகை -

{Entry: G07__148}

முன்னிலைமொழி (முன்னிற்பார்க்கு நேரே கூறுதல்), முன்னிலைப் புறமொழி என்பன. முன்னிலைப் புறமொழி - தாம் உரையாட வேண்டுவார் நேரில் இருந்தும் அவரை அழைத்துப் பேசாது அவர் செவிமடுக்குமாறு செய்தியினை அறிவுறுத்தல். (ந. அ. 175)

அறத்தொடு நிற்றலை யுரைத்தல் -

{Entry: G07__149}

களவுக்காலத்தே தலைவனைத் தலைவி காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலான், பிரிவாற்றாமையால் உடலும் மனமும் மெலிய, தலைவியின் மெலிவு கண்ட தாயர் அது தெய்வத்தான் ஆயிற்று என்று தெய்வத்துக்கு மகிழ்ச்சி யூட்ட வெறியாட்டு நிகழ்த்தக் கருதி வேலனை அழைக்க, அதனைக் கேட்ட தலைவி வெறியாட்டை விலக்கக் கருதித் தோழியை நோக்கி, “தோழி! தாய் என்னை முனிந்தாலும் முனிக; ஊரவர் ஏசினும் ஏசுக; நீயே வெகுளினும் வெகுளுக; யான் ஒழுக்கந் தவறாத தூயேன் என்று உனக்கு உறுதியாகக் கூறி ஒரு நிகழ்ச்சியைச் சொல்லப் போகிறேன்” என்று அறத்தொடு நிற்க ஆயத்தம் ஆதல்.

இது ‘வரைபொருட்பிரிதல்’ என்னும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 289)

அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -

{Entry: G07__150}

“அறிவற்றவர்கள் என்னைப் போலக் காமநோய்க்கு ஆளா காத காரணத்தால் யான் கண்ணாற் காணவும் காதாற் கேட்பவும் என்னை நகைத்து எள்ளுகின்றனர்!” என்று தலைவி தோழி கேட்பக் கூறுதல். (குறள் 1140)

‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

{Entry: G07__151}

தோழி தலைவனிடம் “நீர்கூறிய செய்தியை யான் மறந்தேன்” எனக் கூறுமிடத்து, தலைவி தன்னொடு கூடாமையின் அவளிடம் பிறந்த துயரத்தையும் அவள் அதனைப் பொறுத்துக் கொண்டிருந்த பெருமையையும் தலைவன் கூறுதல்.

எ-டு : “மகளிரோடு ஓரையும் ஆடாமல் நெய்தல்மாலையும் தொடுக்காமல் பூங்கானலில் ஒருபக்கல் நின்ற நீயார்? நின்னைத் தொழுது வினவுவோம். பேரழகினை யுடையாய்! நீ கடற்பரப்பில் மேவும் அணங்கோ? கருங்கழிப் பக்கலில் நிலைநின்ற தெய்வமோ? சொல்லுக” என்றேனாக, அதனெதிர் அவளுடைய புன்முறுவலும் பூத்தது; கண்களும் பனித்தன” (நற். 155) எனவும்,

“தலைவி தானுற்ற வருத்தத்தைத் தண்ணிய தழையாடை உடுத்தும் பெருமூச்செறிந்தும் கண்ணீர் உகுத்தும் மாற்றிக் கொள்கிறாள் என்பதைக் கேள்வியுற்று வருந்துகிறேன். இத்தலைவி தங்கியிருக்கும் இந்நல்ல ஊரில் என்னையும் அவளையும் பிரித்துத் துன்புறுத்தும் கொடிய மக்களும் உள்ளாரே!” எனவும்,

“தோழி! நீ என்னை விரும்பி எனக்கு அருளாவிடின், தலைவி யின் தோள்களையும் கூந்தலையும் பலவாகப் பாராட்டி அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்தல் இயலாது; என் பிரிவி னால் அவள் நலன் இழத்தல் உறுதி” (ஐங். 178) எனவும் தோழியிடம் தலைவன் கூறுதல். (தொ. பொ. 102 நச்.)

அறநிலை -

{Entry: G07__152}

இது மன்றல் எட்டனுள் முதலாவது. இதுவே பிரமம் எனவும் பிரம மணம் என்றும் கூறப்படுவது. தருமசாத்திரம் கூறும் அறநிலை சான்ற மணம் ஆதலின், ‘அறநிலை’ எனப்பட்டது.

பெண்ணின் தந்தை, தன் கோத்திரத்திற்குப் பொருத்தமான தக்க கோத்திரத்தைச் சேர்ந்தவனும் நாற்பத்துஎட்டுயாண்டு பிரமசரியம் காத்தவனும் ஆகிய மணமகனுக்குத் தன் மகளைப் பூப்பெய்திய பிறகு மறுபூப்பு எய்துமுன், பொன்னும் மணியும் அணிவித்து நீர்த்தாரை வார்த்துத் தானமாகக் கொடுத்துச் செய்யும் திருமணம். (தொ. பொ. 92 நச்.)

இஃது ஒப்பில் கூட்டமாதலின் பொருந்தாக் காமத்தின் - பாற்படும் (த. நெ. வி. 14). பெண் பூப்பெய்திய பிறகு ஓர் இருதுக் காட்சி ஒருவனைச் சாராது கழியுமாயின் ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது. (இறை. அ. 1 உரை)

அறநிலை இன்பம் -

{Entry: G07__153}

குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த கன்னியை அங்கியங்கடவுள் அறிகரியாக மணந்து இல்லறத்து வாழ்தல்.

(பிங். 765)

அறப்புறங்காவல் -

{Entry: G07__154}

தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுகாக்கை. ‘அறப் புறங்காவல் நாடு காவலென்று’ (ந. அ. 72) (L)

அறப்பொருட் படுத்தல் -

{Entry: G07__155}

தலைவன் தலைவியை அறமாகிய பொருளில் பொருத்துதல். பரத்தையிற் பிரிந்த தலைவன், தலைவி பூப்பெய்தியதைச் செவ்வணி அணிந்துவரும் சேடிவாயிலாக உணர்ந்து இல்லம் வந்து, அவள் பூப்புற்ற மூன்று நாள்களும் தன் சொற்களை அவள் செவிமடுக்கும் அண்மையில் இருத்தலே அறம்; அங்ஙனம் செய்யாது போயினும், பூப்பு நிகழ்ந்த நான்காம் நாள் அவள் நீராடியவழிப் பரத்தையினின்றும் மீண்டுவந்து அவளை அறமாகிய பொருளில் பொருத்துதலும் குற்ற மின்று. எனவே, தலைமகளை வாயில்களால் கோபம் தணிவித்து அவளைக் கூடுதலும் அறப்பொருட் படுத்தலாம். அஃது அத்துணைச் சிறப்பின்று ஆயினும் குற்றம் எனப் படாது என்பது. (இறை. 44 உரை)

அறிமடச்சிறப்பு -

{Entry: G07__156}

தலைவனிடம், அவனுடைய தீயகுணங்கள் பற்றிச் சிறிதும் நினையாது அவனைச் சான்றோன் எனவே உறுதியாகத் துணிந்த தங்களது அறிவினது குறைபாட்டை எடுத்துக் கூறித் தம் காதற் சிறப்பினைத் தோழி விளக்குதல்.

எ-டு : “யாம் நும்மொடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள் பாலைநிலத்தில் செல்லும் யானையினது மலையைக் குத்திய கொம்பு போல விரைவாக முறிவன வாகுக! எம்முயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்குப் பெரிய வெறுப்பைத் தருவதாகி, உம்மையும் யாம் பெற இயலாத நிலையில் இருப்பதைவிட அழிக!” (குறுந். 169) என்றாற் போல, தொடக்கத்தில் அவனை உள்ளவாறு உணராத தம் அறியாமைக்கு வருந்திக் கூறுமிடத்தே, அவனொடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றியமையாமை கூறித் தம் காதற் சிறப்புரைத்தல். (தொ. பொ. 114 நச்.)

அறிவில் குறைபாடு உற்ற காதற் சிறப்பாவது தலைவன் குறி செய்யாதனவற்றை அவன் குறி செய்தனவாகத் திரிபுபடக் கொண்டு அல்ல குறிப்படுதல் என்பர் இளம்பூரணர். (112)

அறியாள் போறல் -

{Entry: G07__157}

தலைவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவன் நிலையைத் தலைவியிடம் கூற, அவள் நாணத்தால் அதனை அறியாதவள் போல வேறொரு செய்தியைக் கூறித் தன் மனக்கருத்தைக் குறிப்பால் வெளிப்படுத்தல்.

“சங்கம் தரும் முத்தை நாம் பெறக் கடல் பெரிய உப்பங்கழியை வந்து பொருந்தியது” என்றாற் போலத் தலைவி கூறுதல் எடுத்துக்காட்டாம். இதன்கண், “தலைவன் கூட்டத்தால் ஏற்படும் முத்தத்தை யான் பெற அவன் தன் இருப்பிடத்தி னின்று பெயர்ந்து இப்புனத்துக்கு வந்துள்ளான்” என்னும் குறிப்புப்பொருள் தோன்றுமாறு காண்க.

இதனை ‘இறைவி அறியாள் போன்று குறியாள் கூறல்’ என்றும் கூறுப. (ந. அ. 147).

இது ‘குறைநயப்புக் கூறல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 85)

அறிவர் -

{Entry: G07__158}

காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றமும் கடந்து முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்ல ஞானியர். இவர்கள் கூறும் கூற்றுக்களைச் செவிமடுத்துத் தலைவனும் தலைவியும் பணிந்து நடப்பர். ஆதலின் இவர்களும் தலைவிக்கு, நல்ல வற்றைச் செய்ய வேண்டும் எனவும், அல்லவற்றை விலக்க வேண்டும் எனவும், முக்காலச் சான்றோர்களின் செய்யுள் களை எடுத்துக்காட்டி விளக்கங்கூறி நல்வழிப்படுத்துவர். தலைவனோ தலைவியோ உணர்ப்புவயின் வாரா ஊடல் கொள்ளின் அவர்கட்குத் தம்வாழ்க்கையின் எதிர்காலம் பற்றி இடித்துக் கூறி அவர்களது ஊடலைப் போக்குவர்.
(தொ. பொ. 154 நச்.)

“அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

{Entry: G07__159}

“கடல் போலக் கரையற்ற காமத்தால் துயருற்றாலும் மடலேறாது பொறுமையோடிருக்கும் பெண்பிறப்பினைப் போல மிக்க தகுதியுடைய பிறப்பு உலகில் இல்லை” என்று, ஆடவர்க்குக் காமத்தைப் பொறுக்கும் ஆற்றல் இன்மையைத் தலைவன் தோழிக்குக் கூறுதல். (குறள் 1137)

அறிவு அறிவுறுத்தல் (1)

{Entry: G07__160}

தலைவியினது பேரறிவைத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! எம் தலைவி, தன்னையும் தன் வாடிய தோள்களை யும் கழலும் வளைகளையும் நின்னை இவ்வூரார் தூற்றும் பழியையும் கண்டு நாணித் தன்னுள்ளத்துள்ள வருத்தத்தை எம் அன்னையும் சேரியும் ஆயத்தாரும் சிறந்தேனாகிய யானும் உட்பட அறியாது மறைத்தனள்” என்ற தோழி கூற்று. (கலி. 44).

இது ‘வரைதல் வேட்கை என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.’ (அம்பிகா. 266)

அறிவு அறிவுறுத்தல் (2) -

{Entry: G07__161}

தலைவியது மூதறிவைத் தோழி தலைவற்கு எடுத்துரைத்தல்.

“தலைவ! தலைவி தன்னுடைய தாய், சேரியோர், அயலோர், ஆயத்தவர் இவரையே அன்றி என்னையும் கூட ‘உன்னைப் பழிதூற்றுவோமோ’ என்பதற்கு நாணித் தன் மனநிலையை யும் தோள்மெலிவையும் அறியாதபடி மறைத்துவிட்டாள்” (தஞ்சை. கோ. 235) என்று தோழி தலைவியது மூதறிவினைத் தலைவனிடம் கூறல்.

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

அறிவு நாடல் -

{Entry: G07__162}

தலைவி தோழி என்னும் இருவரும் இருந்த இடத்திற்குத் தலைவன் வந்து, முதற்கண் ஊர் பெயர் முதலியன வினவிப் பின்னர்த் தான் கொணர்ந்த தழையுடையை அவர்கட்குக் கையுறையாகக் கொடுத்தலை விரும்ப, தோழி அவன் சொற்களுட் பொதிந்த கருத்தினை ஆராய்ந்து, அவன் நினைவு இன்னது என்பதனை அறிதல்.

இதனை ‘யாரே இவர்மனத் தெண்ணம் யாதெனத் தெளிதல்’ என்ப. (ந. அ. 140.)

இஃது ‘இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்’ என்னும் கிளவிக்கண் அமைந்த இருகூற்றுக்களுள் இரண்டாவது. (கோவை. 61)

`அறிவும் நிறையும் அண்ணலை எய்தல்’ -

{Entry: G07__163}

பாங்கற் கூட்டத்தில் தலைவியைக் கூடியபின், தலைவன் தன் பண்டையுணர்ச்சி எய்தப்பெறவே, முன் மடங்கியிருந்த அவன் அறிவும் நிறையும் மீண்டும் அவன்பால் வெளிப்படு தல். இதனாற் பயன், களவொழுக்கத்தை நீட்டியாது அவன் விரைவில் தலைவியை மணந்துகொள்வான் என்பது. (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

அறுபருவம் -

{Entry: G07__164}

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும்பொழுது ஆறும் அறுபருவமாம். இவை ஆவணித்திங்கள் தொடங்கி ஒவ்வொன்றும் இவ்விரண்டு திங்கள் எல்லையன. இவை முதற்பொருளின் ஒரு கூறா கிய பொழுதின் ஒருபகுதியாகிய பெரும்பொழுது எனப்படுவன. (இ.வி. 384)

அறுபொழுது -

{Entry: G07__165}

‘அறு பருவம்’ காண்க. பெரும்பொழுது ஆறும், சிறு பொழுது ஆறும் ஆகிய முதற்பொருளின் ஒரு கூறு.

அன்பரிற் கூட்டு -

{Entry: G07__166}

பாங்கற் கூட்டம். (சாமி. பொ. 80, 86)

`அன்பிலை கொடியை என்றல்’ -

{Entry: G07__167}

தோழி தலைவன் தம்மிடம் அன்பற்ற செயலான் கொடிய னாக உள்ளமை கூறல்.

“ஐய! முன்பெல்லாம் தலைவி வேப்பங்காயைக் கொடுத் தாலும் ‘வெல்லக்கட்டிபோல உள்ளது’ என்றீர்; தை மாதத்தே பறம்புமலைச் சுனைநீரைக் கொடுத்தாலும் அந்நீர் வெப்பமாக உள்ளது என்றும், உவர்க்கின்றது என்றும் இப்பொழுது கூறுகிறீர்! நுமது அன்பிடத்து ஏற்பட்ட திரிபின் பயனே இது” (குறுந். 196) என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறுதல்.

தலைவனது புறத்தொழுக்கத்தைப் போக்குதல் காரணத் தானும், தலைவி அவனது பரத்தைமை அறிந்தும் அறியா தாள் போல மடன் என்னும் குணத்திற்கு ஏற்றன கொண்டு ஒழுகும் எளியளாய் இருததலானும், தோழி தலைவனை “நீ அன்பில்லாய் கொடியாய்” என்று சொல்லத்தகாத கிளவி யும் ஒரோவழிச் சொல்லுதலும் உரியாள்.(தொ. பொ. 158 நச்.)

இது ‘பரத்தையிற்பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல் (ந. அ. 206; இ.வி. 555)

அன்பினது அகலம் ஒன்றாமை -

{Entry: G07__168}

தலைவன் கற்புக் காலத்தில் தலைவியை ஓதல் காவல் பொருள் முதலிய பற்றிப் பிரிந்துழி நிகழும் அன்பினது அகலம் காரணமாகப் பிரிவு குறித்தவழி, தலைவியது பிரிவாற்றாமை இடைநின்று தடுத்துப் பிரிதற்கண் மனம் பொருந்தாதவாறு செய்தல். (தொ. பொ. 41 நச்.)

தன்னையே எல்லாமாகக் கருதி அன்பு செய்யும் சிறந்த வரிடத்துத் தானும் குறைவற்ற அன்பு செலுத்த வேண்டும் என்று உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. (தொ. பொ. 44 இள.)

அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -

{Entry: G07__169}

தலைவியிடத்துள்ள அன்பின் மிகுதியால் அவள் செல்வச் செழிப்பொடு வாழ வேண்டும் எனவும், சிலநாள் தலைவி யைப் பிரிந்திருந்து மீண்டும் கூடினால் அன்பு மிகுதிப்படும் எனவும் கொண்ட எண்ணத்தை, தலைவியைப் பிரிந்தால் அவள் பிரிவாற்றாது இறந்துபடவும் கூடுமாதலின் அவள் இறந்தபின் தேடிவரும் பொருளால் பயன் எதுவுமில்லை என்ற எண்ணம் தடுத்தற்கண் தலைவன் கூறுதல்.

“நெஞ்சே! மாரிக்காலத்து மலர்கிற நீர் ஒழுகும் பிச்சி அரும்புகளைப் பெரிய பசிய பனங்குடையில் வைத்து மூடி விடியலில் அதனை விரித்துவிட்டாற் போன்ற நறுமணமும் தண்மையும் உடையள் என் தலைவி. புனலில் விடும் தெப்பம் போன்ற அவளுடைய பணைத்தோள்களை மணத்தலும் இலம்; பிரிதலும் இலம்; பிரியின் உயிர்வாழ்தல் அதனினும் இலம்” (குறுந். 168) எனவும்,

“நெஞ்சே! சுனை வற்றிப்போன பாலைவழியிடத்தே இளைய வாகைமரக்கிளையில் பூத்த நறுமலர் கரிய மயிலினது உச்சிக் கொண்டைபோலத் தோன்றும் நெடிய காட்டுவழியில், இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத் தினைத் தருவாளாயின், பொருள்தேட விரும்பிய நினது துணிவு நன்றே!” (குறுந். 347) எனவும் வரும்.(தொ. பொ. 41 நச்.)

அன்புடைக்காமம் -

{Entry: G07__170}

ஒத்த அன்பான் இயைந்த தலைவனும் தலைவியும் தம்முள் கூடிக் காமஇன்பம் நுகர்தற்குரிய குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்திணைக்குரிய காமம். (ந. அ. 4)

`அன்பு தலையெடுத்த வன்புறை’ -

{Entry: G07__171}

தலைவன் தலைவிமாட்டு அன்புடைமையின் அவளுக்குக் கருணை செய்வான் என்று தோழி அவளை வற்புறுத்தி ஆற்றுவித்தல். இதன்கண், பகற்குறி வந்து போகின்ற தலைவன் செல்லுவதனைப் பின்புறமாக நோக்கி ஆற்றாத தலைவியது குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தி யது (நற். 58), “வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” என்று கூறி வற்புறுத்தியது (நற். 68), பிரிவிடை ஆற்றாத தலைவியைத் தோழி நன்னிமித்தம் கூறி வற்புறுத்தியது முதலியன கொள்ளப்படும்.(தொ. பொ. 114 நச்.)

`அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (1) -

{Entry: G07__172}

தலைவன் கற்புக்காலத்துத் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டில் தங்கியபோது தலைவி தலைவனுடைய பிரிவினைப் பொறுத்தல் இயலாது வருந்துவாள். அப்பொழுது தோழி “தலைவர் இயல்பாகவே நெஞ்சத்தில் அன்புடையவர். அதன் மேலும் அவர் நின்னைப் பிரிந்து செல்வழியில் களிறு தன் பிடியின் பெரும்பசியைப் போக்குதற்கு மெல்லிய தோலினை யுடைய ஆச்சாமரத்தைப் பிளந்தூட்டும் செயலையும் பார்த் துக்கொண்டே சென்றிருப்பார் ஆதலின், நின் நினைப்புக் குறையாது விரைவில் எடுத்த செயலை முடித்து மீள்வர்” என்றாற் போலக் கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறுதலுமுடையள். (குறுந். 37) இறைச்சி - கருப்பொருள். (தொ. பொ. 231 நச்.)

`அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (2) -

{Entry: G07__173}

இஃது இறைச்சி அணி வகைகளுள் ஒன்று. தலைவனுடைய கற்புக்காலப் பிரிவின்கண் ஆற்றாள் ஆகிய தலைவியை ஆற்றவித்தற் பொருட்டுத் தோழி, தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்றபோது இடைவழியில் அவன் தலைவி யிடத்துத் தான் கொண்ட அன்பினை மிகுத்துணரும் வகை யில் கருப்பொருள்களின் செயல்கள் காணப்படும் ஆதலின், காலத்தாழ்ப்பின்றி மீள்வான் என்று அவளை வற்புறுத்தி ஆற்றுவிக்கப் பயன்படும் செய்தி கூறுவது இறைச்சியணியின் இவ்வகை.

`நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழிஅவர் சென்ற ஆறே’ (குறுந். 37)

இயற்கையாகவே தலைவியிடத்துப் பேரன்புடையராய் அவட்கு அருள் செய்யும் தலைவர் தாம் பிரிந்து சென்ற வழியில், பெண்யானையது பசியைப் போக்க ஆண்யானை ஆச்சாமரத்தைப் பொளித்து ஊட்டும் செயலையும் காண்பார் ஆதலின், அன்பு மீதூர்ந்து விரைவில் செயல்முற்றி மீள்வர் என்ற கருத்தை உட்கிடையாகக் கொண்டது இவ் விறைச்சியணிவகை. (மா. அ. 176)

அன்னத்தொலி யுரைத்தல் -

{Entry: G07__174}

அன்னம் இரவு முழுதும் ஒலித்த செய்தி கூறல். தோழியிற் கூட்டத்து இரவுக்குறியிடத்து அல்ல குறிப்பட்ட செய்தியைத் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலை மகட்கு உரைப்பாளாய், ‘புன்னைமரத்தில் கூட்டில் அன்னங்கள் இரவு முழுதும் உறங்காது வருந்தி ஒலித்துக் கொண்டிருந்தன’ (கோவை. 172) என்று கூறுதல் வாயிலாகத் தாம் இரவு முழுதும் தலைவன் நினைப்பால் உறங்காதிருந்த செய்தியை அவன் கேட்பக் கூறல்.

இது தோழியிற் கூட்டத்து ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (க. கா. பக். 95)

அன்னமோடாய்தல் -

{Entry: G07__175}

களவுக் காலத்தில் தலைவன் ஒரு நிமித்தம் குறித்துத் தலைவியைப் பிரிந்து சென்று ஒருநாள் அவளைச் சந்திக்க வாராத நிலையில், அவள் மாலையில் கடற்கரையை அடைந்து கடலுடனே வருந்தி, புன்னை மரத்தொடு புலந்து, தன்னைப் பிரிந்து சென்ற தலைவனிடம் அம்மரம் தன் வருத்தத்தைக் கூறாமையால் அவன் இனி வாரானோ என அன்னத்தை நோக்கி வினாதல்.

இஃது ‘ஒருவழித் தணத்தல், என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 184)

அன்னை, என்னை என்பன -

{Entry: G07__176}

அகப்பொருளில் அன்னை, என்னை என்பன உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் ஆதலே யன்றி, அன்பினை வெளிப்படுக் கும் சொற்களாகவும் வரும். அதனால் தோழி தலைவியை ‘அன்னை’ என்றலும், தலைவி தோழியை ‘அன்னை’ என்ற லும், இருவரும் தலைவனை ‘என்னை’ என்றலும் சிறு பான்மை தலைவன் தலைவியை ‘அன்னை’ என்றலும் உள. (தொ. பொ. 246 நச்.)

இச்சொற்களைப் பிரித்துச் சொற்பொருள் காணாது மரபு பற்றி இவ்வாறு வழங்குவனவாகக் கோடல் வேண்டும். (242 இள.)

எ-டு :

`அன்னாய் இவன்ஓர் இளமாணாக்கன்‘ (குறுந். 33)

`புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்’ (குறுந். 150)

இவை தோழியைத் தலைவி ‘அன்னாய்’ என்றன.

`அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்’ (ஐங். 202)

`அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்’ (ஐங். 206)

இவை தோழி தலைவியை ‘அன்னாய்’ என்றன.

`எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது’ (குறுந். 27)

`’ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்

`பரியலன் மன்யான் பண்டொரு காலே.’ (குறுந். 203)

இவை தலைவி, தலைவனை ‘என்னை’ என்றன.

`அனம் புலம்பு அகற்றல்’ -

{Entry: G07__177}

பாங்கற் கூட்டத்தின்கண் பாங்கன் தலைவி இருந்த இடம் கண்டு வந்து தலைவனிடம் இயம்ப, தலைவன் அவள் இருப் பிடம் சேர்ந்து, அவள் குறிப்பறியாது அவளை அணுகுதல் கூடாதாகலின், அவள் காணுமாறு வருந்தி நிற்ப, அவள் ஆர்வநோக்கத்தோடு அவனை நோக்கி அவன் தனிமைத் துயரைத் தீர்த்த செய்தி வீரசோழியம் குறிஞ்சி நடையியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அன்னம் - ஆகுபெயரால், அன்ன நடையினளாகிய தலைவி) (வீ. சோ. 92 உரை மேற்.)

அனனிலம் -

{Entry: G07__178}

அனல் நிலம் - வெப்ப மிக்க பாலை நிலம். (L)

அனுராகம் -

{Entry: G07__179}

விருப்பம்; பெரும்பாலும் இது காமவிழைவினைக் குறிக்கும். ‘இருவருடைய அனுராகமும் கூறியவாறு’ (கோவை. 33 உரை) (L)

அஷ்ட விவாகம் -

{Entry: G07__180}

‘மன்றல் எட்டு’க் காண்க. (L)

ஆ section: 58 entries

ஆக்கம் செப்பல் -

{Entry: G07__181}

மெய்யுறு புணர்ச்சி நிகழுமுன் தலைவனுக்கும் தலைவிக்கும் ஏற்படும் பத்து வகை நிலைகளுள் ஐந்தாவது.

ஆக்கம் செப்பலாவது உறங்காமை கூறுதலும், தன் நிலையை உற்றாரிடம் கூறுதலும் முதலாயின. (தொ. பொ. 97 இள.)

மெய்யுறு புணர்ச்சி நிகழுமுன் தலைவனுக்கு ஏற்படும் பத்து அவத்தைகளுள் ஐந்தாவது ஆக்கம் செப்பல். அஃதாவது வாடியபின் தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைத் தலைவன் பிறர்க்கு உரைத்தல். (இ. வி. 405)

இயற்கைப் புணர்ச்சி முதல் களவு வெளிப்படுந்துணையும் தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் இது நான்காவது.

அஃதாவது யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனைத் தம் நன்மைக்கு நிகழ்ந்ததாக நெஞ்சிற்குக் கூறிக்கோடல்.

தோழி, தலைவியின் புணர்ச்சி வேண்டி இரந்து குறையுற்ற தலைவனை அகற்றியவழி, அதனை அவன் அன்பு என்று கொள்ளுதலும், தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பு என்று கொள்ளுதலும் போல்வன. (தொ. பொ. 100 நச்.)

ஆக்கம் செப்பல் : பொருள் -

{Entry: G07__182}

களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இஃது ஒன்று. ஆக்கம் செப்பலாவது : ஒருவரை ஒருவர் எய்துதற்கும் பிரிவின்றி இன்புறுதற்கும் ஆவன இவை எனத் தமக்குத் தாமே கூறிக்கோடல். (தொ. கள. 9 ச.பால.)

`ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -

{Entry: G07__183}

தனக்கு நண்பராயினார்க்கு இடர் வந்தஇடத்தே அவர்க ளுக்கு உதவுதற்காகப் பிரியுமிடத்துத் தலைவன் கூறுதல்.

தன் நண்பர்க்கு உதவிடப் பிரிந்து மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்துள்ள “இருபெருவேந்தர் தம்முள் மாறுபடும் போர்க்களத்தே ஒருபடைகொண்டு எதிர்த்து வரும் படையைப் புறங்காணும் வெற்றிச்செல்வமே பெருமை நிலைநின்றது எனக்கருதி, பூக்கோளினையும் ஏலாது தவிர்த்துச் செல்லும் நமது நிலை அறியாதவளாய்த் தலைவி, காலையில் மேகம் கடுங்குரலால் முழங்கும்தோறும், நம்மை வெறுத்துக் கையற்று ஒடுங்கித் துன்பமுற்ற பசலை பாய்ந்த மேனியோடு எந்நிலையில் உள்ளாளோ?” (அகநா. 174) என்ற கூற்று. (தொ. பொ. 41 நச்.)

`ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -

{Entry: G07__184}

தோழி தலைவனை வரைவு கடாயவழி, தலைவன் வரைந்து கோடல் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்தும் கூற்று; இப்பொழுது மெய்யான வற்புறுத்தல். (முன்பு பொய்யான வற்புறுத்தலுமுண்டு.)

“தலைவி! தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற் கொண்டானாக, அவனுடைய ஏவல்மகனை நோக்கி, யான் ’நலமா?’ என்று வினவ, அவன் ‘நலமே!’ என்றான். அவன் நெய் மிக ஊறிய குறும்பூழ் சமைத்த கறியோடு உணவு பெறுவானாக!” என்று, தோழி தலைவனுடைய குற்றேவல் மகனால் தான் அறிந்த செய்தியைத் தலைவிக்குக் கூறுதல். (குறுந். 389)

இவ்வாறு தலைவனுடைய குற்றேவல்மகனால் வரைவு மலிந்த தோழி தலைவிக்குக் கூறுதலேயன்றி, வரைவுமலிவு கூறுதலும் (குறுந். 51 நற். 22), “தலைவன் வரைவொடு வருகின் றமை காண வம்மோ!” (நற். 235) என்றலும், பிறவும் இக் கூற்றுள் அடங்கும். (தொ. பொ. 114 நச்.)

`ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -

{Entry: G07__185}

தலைவன் வரைவு வேண்டி உறவினரை விடுத்தவழித் தலைவி யின் உறவினர் திருமணத்துக்கு மறுத்துப் பிறன் ஒருவனுக்குத் தலைவியை மணம் செய்து கொடுக்க முயலும்போது தலைவி தோழிக்குக் கூறுதல்.

தலைவன் வரைவு வேண்டியவழித் தமர் மறுத்துப் பிறர் வரைவுக்கு முயல, தலைவி தன் குடிப்பிறப்பும் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப, “அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறுவாயாக” என்று தோழியிடம் சொல்லுமிடத்தே,

“தோழி! தலைவனிடம், நொதுமலர் வரைய முந்துகின்ற தனைக் கூறி அதற்கு முன் அவன் வரைவிற்கு முயலாதிருக்கும் பேதையனாயிருத்தலைச் சுட்டிக் காட்டு. விரைவில் அவனைத் தன் இருமுதுகுரவரிடம் இத்திருணத்திற்கு ஏற்பாடு செய்ய முடுக்காவிடின், பிறர் வரைந்துகொள்ள முந்திவிடுவர் ஆதலின், விரைய வரைவொடு வருமாறு கூறு.” என்று சொல்லிப் பின்னும், “தோழி! நான் தலைவனோடு ஒன்றியதை என் நெஞ்சு அறியும். இப்பொழுதோ வேற்றுவர் வந்து வரைவிற்கு முந்துகின்றனர். ஆயர் குலமகளிர் ஒரு மணப்படுவரேயன்றி, இருமணம் படார். இருமணம்படுதல் நம்கற்பிற்கும் குடிக்கும் ஏதம் ஆதலின் விரைவில் ஆவன செய்வாயாக!” என்று வற்புறுத்திக் கூறுதல். (கலி. 114)

அயலார் தன்னை மணக்க முயன்றபோது தலைவி, “நானும் ஆடுகளமகள்; என்னொடு நட்புச் செய்து அகன்ற என் தலைவனும் ஓர் ஆடுகளமகன். அவன் என் துணங்கைக் கூத் துக்குத் தலைக்கை தந்தவன். இப்போது அவன் எங்குள் ளானோ? பலவிடத்துத் தேடியும் அவனைக் கண்டேன் அல்லேன்” என்று தோழிக்கு உண்மையைப் புலப்படுத்தி அயல்வரவு நீக்குதலும் ஆம். (குறுந். 31) (தொ. பொ. 107 நச்.)

`ஆங்கதை இறைவிக்கு அவன் தெளித்துரைத்தல்’ -

{Entry: G07__186}

திருமணமான பின் மூன்றுநாள் கூட்டமின்மைக்குரிய காரணத்தைத் தலைவன் தலைவிக்குக் கூறல்.

திருமணம் முடிந்த பின் மூன்றுநாள் கூட்டமின்றியிருந்து நான்காம் நாள் தலைவியைக் கூடும் தலைவன் அவளிடம், “உன்னை முதல்நாள் சந்திரன், இரண்டாம் நாள் கந்தருவர், மூன்றாம் நாள் அக்கினி இவர்கட்கு அளித்து, அவர்கள் கொடுப்ப, யான் கோடல் வேண்டும் என்ற வேதமுறைப்படி அமைந்த மூன்று நாள்களும் எனக்கு மூன்று யுகங்களாய்க் கழிந்தன” (திருப்பதிக். 400) என்று கூறுதல்.

இது ‘வரைந்துகோடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

ஆங்கவள் வலித்தல் -

{Entry: G07__187}

தலைவனோடு உடன்போய், தலைவி தலைவனை விடுத்துப் பின் தொடர்ந்துவந்து உடன்போக்கினைத் தடுத்த தன் உறவினருடன் சேராது, தலைவன் வயத்தளாகவே இருத்தல் (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

`ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

{Entry: G07__188}

1. பயின்றதன்மேலல்லது செல்லாத தாது ஊதும் வண்டு,
2. ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள், 3. முலையிலும் தோளிலும் எழுதும் தொய்யிற்கொடி, 4. கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ, 5. இமைக்கும் கண்கள், 6. கண்டறியாத வடிவு கண்டவழி அச்சத்தால் பிறந்த தடுமாற் றம், 7. ஆண்மகனைக் கண்டுழி மனத்தில் பிறக்கும் அச்சம், 8. கால் நிலம் தோய்தல், 9. நிழல் உண்டாதல், 10. வியர்த்தல் இவை முதலியன தலைவன் தலைவியை முதற்கண் எதிர்ப் பட்டவிடத்து, “இவள் மானுடமகளோ, தேவருலக மகளோ?” என்று ஐயுற்ற ஐயத்தைக் களைந்து, ‘இவள் மானுட மகளே’ என்று உறுதிசெய்யும் கருவியாம். (தொ. பொ. 95 நச்.)

கூறை மாசுஉண்ணுதலையும் இலக்கணவிளக்கம் குறிப்பிடும் . (இ. வி. 490 உரை)

`ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கம்‘ -

{Entry: G07__189}

களவுக் காலத்தே அல்ல குறிப்பட்டு இரவில் தலைவியும் தோழியும் வருந்தும் செயல். இது தலைவற்கும் உண்டு. தொலைவினின்று இடையூறுகளையும் பொருட்படுத்தாது இரவுக்குறிக்கண் வந்து பயனின்றாகப் போகும் தலைவனும் வருந்துதற்கு வாய்ப்புண்டு என்பது. (தொ. பொ. 134 நச்.)

மனம் மொழி மெய் என்னும் மூன்றானும் கற்புடை மகளிர் ஒழுகும் ஒழுக்கத்தில், தலைவி மனத்தான் தலைவனது நலனையே நாடி ஒழுகும் ஒழுக்கம். (132 இள.)

ஆசுரம் -

{Entry: G07__190}

‘அசுரம்’ காண்க.

ஆசை மிகல் சொலல் -

{Entry: G07__191}

காமம் மிகவும் உரைத்தல்; களவியலுள் ஒருவழித்தணத்தல் எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (சாமி. 105)

ஆடிடத்து உய்த்தல் -

{Entry: G07__192}

இயற்கைப்புணர்ச்சி முடிவில் தன்பிரிவு பற்றித் தலைவி கவலையுறாதவாறு அவளை அமைதிப்படுத்தி அவளைத் தோழியர் கூட்டத்தில் விடுத்துத் தலைவன் தான் பிரிந்து போதல்.

இது ‘பிரிந்து வருகு என்றல்’ எனவும் கூறப்படும். (ந. அ. 129 )

இது திருக்கோவையாருள் ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கிளவி. (கோவை. 16)

ஆடிடம் படர்தல் -

{Entry: G07__193}

தலைவற்குக் குறியிடம் கூறிய தோழி, தலைவியைப் புனத்திற் குச் சென்று ஊசலாடி அருவி நீரிற் குளித்து விளையாடற்கு வருமாறு அழைத்துத் தோழியருடன் விளையாடும் இடம் நோக்கி வருதல்.

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கிளவி.

(கோவை. 117)

ஆடூஉக் குணம் -

{Entry: G07__194}

பெருமையும் உரனும். அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன நான்கும் ஆம். ஆடூஉ-ஆண்பால்; ஈண்டுத் தலைமகன். (பிங். 357)

அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும், கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின்பகுதியும் தலைவன் குணங்கள். இவை உள்ளப்புணர்ச்சியொடு, மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தாது, தலைவியை மணந்து கற்பறம் நடத்தத் தலைவனுக்கு உதவும் ஆடூஉக் குணங்களாம். (தொ.பொ. 98 நச்.)

ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்பன ஆடூஉக் குணங்கள் என நெய்தற்கலி குறிப்பிடும். (கலி. 133)

ஆடூஉமேன இயல்பு -

{Entry: G07__195}

பெருமையும் உரனும் ஆண்மகன் இயல்புகளாம். பெருமை யாவது பழியும் பாவமும் அஞ்சுதல்; உரன் - அறிவு.

இவ்வியல்புகளால் தலைவன் தலைவியை உள்ளப் புணர்ச்சி யொடு, களவில் கூடக் கருதாது வரைந்து எய்தவே முயலும் என்பது. (தொ. பொ. 95 இள.)

அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலிய பெருமைப் பகுதியும், கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் ஆண்மகன் இயல்பு. இதனால் உள்ளப் புணர்ச்சியை உட்கொண்டு தலைவன் விரைவில் தலைவியை மணந்துகோடலும், மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்த வழியும் களவு நீட்டியாது வரைந்துகோடலும், உள்ளம் சென்ற வழியெல்லாம் நெகிழ்ந்து ஓடாது எதனையும் ஆராய்ந்து செய்தலும், தன்னுள்ளத்து மெலிவை வெளித்தோன்றாது மறைத்தலும், தீவினைச் செயல்களில் விரும்பும் உள்ளத்தை மீட்டு நல்வழிப் படுத்தலும் தலைவற்கு உரிய என்பது கொள்ளப்படும். (தொ. பொ. 98 நச்.)

அவை பெருமையும் உரனும். அவை அவற்றுக்குரிய பண்பு களையும் ஆற்றல்களையும் குறித்து நின்றன. பெருமைக் குரியன: கல்வி, தறுகண், இசைமை, கொடை, ஆராய்ச்சி, ஒப்புரவு, நடுவுநிலை, கண்ணோட்டம் முதலியன. உரனுக் குரியன: அஞ்சாமை, அறிவு, திண்மை, நிறை, கடைப்பிடி, துணிவு, ஊராண்மை முதலியன. (தொ. கள. 7 ச.பால)

ஆண்பாற் கிளவி -

{Entry: G07__196}

தலைவன் வேட்கை மிகும் ஆசை எல்லை கடப்ப ஏக்க முற்றுப் புலம்புதல்; காமம் மிகப்பெற்றுத் தலைவிபற்றிய நினைவால் புலம்பும் தலைவன் மதியும் மலரும் போன்ற அழகிய பொருள்களைப் பார்த்தாலன்றித் தான் உய்யலாகாமையைக் கூறுதல்.

இத்துறை புறப்பொருள் வெண்பாமாலைக்கண் இருபாற் பெருந்திணையுள் நிகழ்வது. (பு. வெ. மா. 17-7)

ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -

{Entry: G07__197}

காட்சி, ஐயம், துணிவு, உட்கோள், பயந்தோர்ப் பழிச்சல், நலம் பாராட்டல், நயப்புற்று இரங்கல், புணரா இரக்கம், வெளிப்பட இரத்தல் என இவ்வொன்பதும் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை என்னும் புறப்பொருட் கிளவியாம். (பு. வெ. மா. 14)

இது தலைவியது விருப்பம் உணராமலேயே தலைவன் தன் விருப்பத்தையே அடிப்படையாகக் கொண்டு செய்யும் செயல் பற்றியது ஆதலின், அகத்திணை ஒழிபாகப் புறப் பொருளிறுதியில் கூறப்படும் ஆண்பாற்கூற்றுக் கைக்கிளை எனப்பட்டது.

ஆதரம் கூறல் -

{Entry: G07__198}

தலைவியது உடல்மென்மை பற்றிக் கூறி உடன்போக்கை மறுத்த தலைவற்குத் தோழி, “நின்னொடு செல்கையில் தலைவிக்குக் கொடிய பாலையும் குளிர்சோலையாகும்; நீ பாலையின் கடுமை நினைத்துக் கலங்காது இவளை உடன் கொண்டு போவாயாக” என்று தலைவியது அன்புநிலையைக் கூறுதல். (கோவை. 202)

இதனைப் ‘பாங்கி தலைவனை உடன்படுத்தல்’ என்னும் துறையாகக் கூறுப. (ந. அ. 182)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக் கண்ணதொரு கூற்று.

`ஆய்பெருஞ்சிறப்பின் தாய்’ -

{Entry: G07__199}

பரம்பரை பரம்பரையாகத் தலைவிகுடும்பத்தில் செவிலித் தாயாக வருகின்றாள் ஆதலின், தலைவியின் எந்த இரகசி யத்தையும் அவளிடம் வெளிப்படையாகக் கூறலாம் என்று ஆய்ந்து துணியப்பட்ட பெருஞ்சிறப்பினையுடைய செவிலி யாகிய தாய். (தொ. பொ. 124 நச்.)

ஆயத்தார் -

{Entry: G07__200}

அஃதாவது தோழியர் கூட்டத்தார். ‘ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்’ (கலி. 142 - 6) (L)

தலைவியின் தோழியராம் ஆயத்தார் உடன்பிறந்து உடன் வளர்ந்து, நீர் உடனாடி, சீர் உடன்பெருகி, ஒரு சேரத் தாலாட்டப்பட்டு, பால் உடனுண்டு, ஒரே காலத்துப் பல் முளைக்கப்பெற்று ஒரே காலத்துப் பேச்சுப் பேசக் கற்றுப் பழமையும் முறைகளும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையவராய்க் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிராய்ப் பற்பன்னூறாயிரவராய்த் தலைவியோடு உடன் விளையாடுபவர். (இறை. அ. 2 உரை)

ஆயத்தார் தலைவி உடன்போயவழிக் கூறியது -

{Entry: G07__201}

“மான் செல்லும் வழிகள் தலைமயங்கிய மலையடிவாரத்துச் சிறுபாதைக்கண், தன்னுடைய பஞ்சின் மெல்லடிகள் பரல் குத்துதலால் வடுக் கொள்ளுமாறு அஃது ஆற்றாது அஞ்சி அஞ்சி ஒதுங்கி எம் தலைவி நடந்து செல்வாள்” என்று ஆயத்தார் தலைவி உடன்போயகாலத்துக் கூறுமாறு காண்க. (தொ. பொ.42 நச்.)

ஆயத்து உய்த்தல் -

{Entry: G07__202}

தலைவன் தலைவியை அவளுடைய தோழியருடன் சேரு மாறு தான் அழைத்துக்கொடுபோய் (த் தன்னை அவர்கள் காணாதவாறு) விடுப்பது.

இஃது அகப்பொருள் விளக்கத்துள் ‘இடந்தலைப்பாடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கிளவி. (ந. அ. 135)

ஆயம் -

{Entry: G07__203}

தலைவியின் தோழியர் கூட்டம், ‘ஆயத்தார்’ காண்க. ‘ஆயமும் மறைத்தாள் என் தோழி’ (கலி. 44-15)

“ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -

{Entry: G07__204}

“தோழி! என்னால் விரும்பப்பட்ட குறுமகள், கொற்கைத் துறை முத்தினை ஒத்த வெண்பற்கள் நிரலாக அமைந்த செவ் வாயினையும், அரத்தால் பிளக்கப்பட்ட அழகிய வளையல் களையும், இசை நரம்பினது ஒலிபோன்ற இனிய குரலினையு முடையவள்” என்று தலைவன் தோழியிடம் கூறுதல். (ஐங். 185)

`ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -

{Entry: G07__205}

தான் கண்டு காதலித்துப் புணர்ந்து இன்புற்ற நங்கையைச் சூழ நூற்றுக்கணக்கான தோழியர்தம் கூட்டம் நெருங்கிக் குற்றேவல் செய்து உசாத்துணையாக இருந்து வழிபடுதலைக் கண்ட தலைவன், “இத்துணையோரது காவலது நடுவ ணுள்ள இவளை நான் கூடி இன்புற்றது கனவோ, நனவோ?” (தஞ்சை. கோ. 29) என வியப்பொடு நினைத்தல்.

இதனை ‘அருமை அறிதல்’ என்னும் திருக்கோவையார் (17)

இது களவியலுள், இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தபின், ‘பிரிவுழிக் கலங்கல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(ந. அ. 133)

ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -

{Entry: G07__206}

ஏறு தழுவினவனுக்கே பெண்கொடுக்கும் ஆயர் மரபினை ஒட்டித் தலைவன் தொழுவத்தில் விடப்பட்ட காளையைத் தழுவி அதனை அடக்கினான். அவ்வூர் மன்றத்தில் ஆடும் குரவைக் கூத்தினுள்ளே, கரியனும் செந்நிற ஆடை உடுத்தவ னுமாகிய அவ்வாயர்குலத் தலைவனையும், அவன் மணக்க இருக்கும் தலைவியையும் பாராட்டிப் பாடினர்; “விரைவில் இருவருக்கும் திருமணம் நிகழ்வதாகுக” என்று உறவினர் கூறினர். (கலி. 102)

`ஆயிடை அவர்கள் அமர்ந்து எதிர்கோடல்’ -

{Entry: G07__207}

தம் இல்லத்துத் தலைவி வந்தவழித் தலைவனுடைய இரண் டாம் மனைவியும் காமக்கிழத்தியும் மனம் விரும்பித் தலைவியை எதிர்கொண்டழைத்து உபசரித்தல். (மருதநடை யியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

ஆயிடைப்பிரிவும், சேயிடைப்பிரிவும் -

{Entry: G07__208}

ஆயிடை - அவ்விடம்; சேயிடை - சேய்மைத்தாகிய இடம்.

களவுக் காலத்தில் தலைவன் இட்டுப்பிரிவு, அருமை செய்து அயர்த்தல் என்று கூறப்படும் ஒருவழித் தணத்தலும் (கலி. 44 நச்.) கற்புக்காலத்து ஓரூரில் வேற்றுத்தெருவிலிருக்கும் பரத் தையரைக் கருதிப் பிரியும் பிரிவும் ‘ஆயிடைப் பிரிவு’ எனப்படும்.

களவுக் காலத்தில் தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்-வயின் பிரிதலும், கற்புக் காலத்து ஓதல் காவல் தூது பகை பொருள் என்னும் இவைபற்றிப் பிரிதலும், நாடிடையிட்டும் காடிடை யிட்டும் பிரியும் பிரிவாதலின், ‘சேயிடைப் பிரிவு’ எனப்படும். (த. நெ. வி. 25,24 க. கா. 43 உரை)

ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -

{Entry: G07__209}

புதல்வனை எடுத்துக்கொண்டு ஆற்றாமையுடன் வந்த தலைவனைத் தலைவி புலவி தணிந்து ஏற்றுக்கொள்ளுதல்.

பரத்தையரை நாடித் தன்தேரிற் புறப்பட்ட தலைவன், தேர் போம் வழியில் தெருவில் நின்ற அழகிய தன்புதல்வனைத் தழீஇ எடுத்துக்கொண்டு தலைவியின்பால் வர, அவள் புலவி தீர்ந்து தலைவனை ஏற்கும் செய்தியே இக்கூற்று. (அகநா. 66)

“ஊர! புல்லியகாமம் விரும்பத்தக்கதன்று. வெள்ளம் பரவினாற் போன்ற வேட்கை தோன்றினும் சான்றோருள்ளம் சிறியவர்களிடத்தே படர்ந்து செல்லலாமா?” (தஞ்சை கோ. 404) என்றாற் போலத் தலைவனிடம் தலைவி கூறி ஊடல் தீர்தல்.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடலின் ஒழிபு. (ந. அ. 207)

ஆர்வ நோக்கம் -

{Entry: G07__210}

இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது குறிப்பு அறியாது அவளைச் சார்தல் கூடாமையின், தலைவன் தன் உள்ளத் துள்ள விருப்பினைத் தனது பார்வையால் வெளியிட்டு அவள் குறிப்பினை எதிர்நோக்கியிருத்தல் (குறிஞ்சி நடையியல்). (வீ. சோ. 92 உரை)

இஃது ‘உயிரென வியத்தல்’ (கோவை. 39) என்பதன்கண் அடங்கும்.

ஆரணங்கு -

{Entry: G07__211}

அவ்வந் நிலத்துக்குரிய அரிய தெய்வம். இது நிலக்கருப் பொருள்களுள் முதலாவதாகக் கூறப்படும். குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயோனும், மருதத்துக்கு இந்திர னும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் ஆரணங்குகளாம். பாலைக்குச் சூரியனைத் தெய்வமாகக் கூறுவர் சிலர். சூரியன் எல்லா நிலத்துக்கும் பொதுக்கடவுள் என்னும் வேதச்செய்தி பற்றி, அக்கருத்தை விடுத்துக் கொற் றவையே பாலைக்கு ஆரணங்காகக் கொள்வர் பலர். (தொ. பொ. 5 நச்.)

ஆரணங்கு ஒவ்வொரு நிலக் கருப்பொருள்களிலும் முதலாவ தாம். கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைக் கும் உள்ளுறைஉவமத்தில் ஆரணங்கை விடுத்து எனைய கருப்பொருள்களையே கொள்ள வேண்டும். (தொ. பொ. 18, 47)

ஆரா அன்பின் அவன்நிலை கூறல்

{Entry: G07__212}

தலைவனது பெருங்காதலைக் கண்ட தோழி, “முன்பெல் லாம் நீ எவ்வாறு ஆற்றி யிருந்தாய்?” என்று அவனை வினவுதல்.

“தலைவ! தலைவியுடன் நீ எத்தனை முறை முயங்கி இன்புற் றாலும் அலுப்புச் சலிப்பின்றிக் கணங்கூடப் பிரியாமல் இருக்கிறாயே! இவள் அரியளாய் இருந்த களவுக் காலத்தே எவ்வாறு ஆற்றி யிருந்தனையோ?” என வினவுதல்.

இஃது அம்பிகாபதிக் கோவையுள் ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 438)

‘அயிரை பரந்த’ குறுந். 178 என்னும் செய்யுளும் அது.

ஆரிடம் -

{Entry: G07__213}

ஆவையும் ஆனேற்றையும் பொற்கோட்டுப் பொற்குளம்-பினவாக அலங்கரித்து அவற்றிடை நங்கையை நிறுத்திப் பொன் அணிந்து தக்கான் ஒருவற்கு அவளை “இவை போல நீரும் பொலிந்து வாழ்க!” என்று நீர்வார்த்துக் கொடுப்பது; எண்வகை மணங்களுள் இதுவும் ஒன்று. இருடிகள் மரபில் வந்த முறையாதலின், இப்பெயர்த்தாயிற்று.(தொ.பொ. 92 நச்.)

ஆழி -

{Entry: G07__214}

கணவனைப் பிரிந்த மனைவி இழைக்கும் கூடற்சுழி; ‘ஆழி யாற் காணாமோ யாம்’ (ஐந்.ஐம். 43) ‘ஆழி இழைத்தல்’ காண்க.

ஆழி இழைத்தல் -

{Entry: G07__215}

தலைவனுடைய பிரிவினால் ஆற்றாளாய தலைவி அவன் விரைவில் தன்பால் வந்தணைவானா என்பதை அறிதற்கு ஆழியிழைத்துப் பார்த்தல் என்ற பண்டை வழக்கம் இருந்து வந்தது. அஃதாவது அவள் தன் கண்களை மூடியவாறு மணலில் ஒரு வட்டம் இழைப்பாள்; அதன் இருமுனைகளும் கூடிவிட்டால் தலைவன் தவறாது விரைவில் வருவான் என்ற நம்பிக்கையில் செயற்படுவாள். இவ்வாறு ஆழி இழைத்தல் ‘கூடலிழைத்தல்’ (சீவக. 1037) எனவும் படும். ‘கூடலுக்கு வட்டத்தை இழைத்தாள்’ என்பது நச். உரை.

ஆழி இழைத்தலாவது வட்டமாகக் கோடு கீறி, அதனுள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது, இரட்டைக்கணக்காக முடிவு பெற்றால் கூடுகை, ஒற்றைக்கணக்காக முடிவு பெற்றால் கூடாதுஒழிகை என்ற ஒரு குறிப்பை மனத்துக்கொண்டு குறிபார்த்தலும் ஆம். ‘ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி’ (கோவை. 186)

`ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்’ -

{Entry: G07__216}

தலைவியின் பிரிவாற்றாமையைத் தோழி தலைவனிடம் மிகவும் வலியுறுத்திக் கூறல்.

“எங்கள் தலைவி நின் பிரிவாற்றாமையால் பெரிதும் வருந்தி மெலிந்துவிட்டாள்; இனியும் நீ முறையாகத் திருமணம் செய்து கொள்ளாவிடில், அவள் உயிர் வாழ்வதே அரிதாகி விடும்” (தஞ்சை. கோ. 243) என்பது போன்ற தோழி கூற்று.

‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண் இதனைத் திருக்கோவையார் அடக்கும் (131)

இது களவியலில் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

ஆற்றாது உரைத்தல் (1) -

{Entry: G07__217}

தலைவன், தோழியும் தலைவியும் சேர்ந்து நின்றுகொண் டிருந்த இடத்தை அணுகி, “நீங்கள் எனக்கு அருளாமையால் என்னுயிர் அழிகின்றது. இதனை அறியுங்கள்” என்று தன் தாங்க முடியாத வேட்கையை அவர்களுக்கு உரைத்தல். (கோவை. 73)

இதனைத் ‘தலைவன் இன்றியமையாமை இயம்பல்’ என்ப. (ந. அ. 144) இது ‘மடற்றிறம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

ஆற்றாது உரைத்தல் (2) -

{Entry: G07__218}

இரவுக்குறி இறுதிக்கண் தலைவனை எய்தித் தோழி இரவுக் குறியை மறுத்து வரைந்துகொள்ளுமாறு வேண்ட, “இத்தகைய இன்பம் நுகர்தலை விடுத்து விரைவில் மற்றவ ரைப் போன்று மணந்து இல்லறம் நிகழ்த்தும் வகையில் தலைவியை எளியவளாகக் கொண்டு நீ கூறுவது ஏன்?” என்று தலைவன் தோழியிடம் வினவல்.

இதனை ‘பெருமகன் மயங்கல்’ என்பதும் உண்டு. (ந. அ. 158)

இது திருக்கோவையாருள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்-கண்ணதொரு கூற்று. (கோவை. 169)

ஆற்றாது புலம்பல் -

{Entry: G07__219}

கற்புக்காலத்தில் தலைவன், தான் பொருள்வயின் பிரியப் போவதைத் தலைவிக்கு உணர்த்தின் அவள் ஆற்றாளாகித் தன் செலவைத் தடுப்பாளே என்றஞ்சித் தோழிக்கு உரைத்துப் பொருள்வயின் பிரிய, தலைவி தலைவன்பிரிவு பற்றி அறிந்து, “இத்தோழியாகிய கொடியவள் என் பிரிவாற் றாமையை அறிந்திருந்தும், தலைவரது பிரிவு பற்றிக் கூறுத லின், யான் யாது கூறவல்லேன்?” என்று ஆற்றாமையால் புலம்புதல். (கோவை. 334)

இது ‘பொருள்வயின் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று.

ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் -

{Entry: G07__220}

தோழி கையுறை ஏற்க மறுத்ததைக் கண்ட தலைவன் அதைப் பொறுக்காமல் துயருற்றுக் கூறுதல்.

“நெஞ்சே! பாங்கி என் குறையையும் கையுறையையும் ஏற்காது மறுத்தமையால், நான் வருந்தி வாடுவது மாத்திரமன்றி, இந்தப் பசுந்தழையும் கண்ணியும் கூட இவ்வாறு வாடவே தவம் செய்திருக்கின்றனபோலும்” (தஞ்சை. கோ. 99) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலில் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதி கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

ஆற்றாமை கூறல் -

{Entry: G07__221}

கற்புக் காலத்துத் தலைவன் பொருள்வயின் பிரிதலைக் கருதித் தோழியிடம் கூற, தோழி, “தலைவன் பாலையைக் கடந்து பொருள் தேட நினைந்துள்ளான் என்று கூறிய அளவிலேயே தலைவியின் மார்பு பொன் பூத்தது. கண்கள் முத்துக்களைச் சொரிந்தன. இனி அவளைப் பிரிந்து தேடும் பொருள் யாதோ?” எனத் தலைவனிடம் தலைவியது பிரிவாற்றா மையைக் கூறல்.

இது ‘பொருள்வயின் பிரிவு’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 335)

ஆற்றாமை வாயில் -

{Entry: G07__222}

தலைவன் தன் ஆற்றாமையே வாயிலாக, ஊடல் கொண்ட தலைவியிடம் சென்றுரைத்தல்.

“உன் புருவவில் வளைய, உன் பிறைநுதல் வியர்க்க, உன் கரிய கண்கள் நீர் சுரக்க, என்னுடன் கலந்து ஒரு வார்த்தைகூடப் பேசாத உன் உதடுகள் துடிக்க நிற்கும் என் நாயகியே! உனக்கு இவ்வளவு சினம் தோன்ற நான் செய்த குற்றம்தான் யாதோ?” என்று கூறுதல்.

இஃது அம்பிகாபதி கோவையில் ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (பாடல். 510.)

ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -

{Entry: G07__223}

புதுப்புனலாடி வந்ததாகக் கூறிய தலைவனிடம் தலைவி, “ஓஒ! நீர் புதுப்புனல் ஆடினீரோ! அப்புனலுக்குக் கருமணல், நெரித்த கூந்தலே. புனலில் ஓடும் கயல்மீன்கள், கண்களே; சூடிய பூக்களே, புனலில் அடித்துவரப்பட்ட பூக்கள். நாண மாகிய கரையை அழித்த புனல் அது. பாணனைத் தெப்ப மாகக் கொண்டு அப்புதுப்புனலாடியதனையும் அப்புதுப் புனல் நுங்களைத் தன்னிருப்பிடத்திற்கு இழுத்துச் சென்ற தனையும் கண்டவருளர். நுமது உள்ளம் அப்புதுப் புனலில் தோய்ந்துவிட்டபடியால் அப்புதுப்புனலினின்றும் நீவிர் கரைகாணாது தவிக்கிறீர். அப்புனல் ஆடும்போது விழிப்பாக இருமின்; இன்றேல், இளமணலுள் கால் நிலை தளர்ந்து அகப்பட்டுவிடும்” என்று கூறியது. (கலி. 98.)

ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

{Entry: G07__224}

“அறத்தையும் பொருளையும் தாராவிடினும், ஊடலால் பிரிதலும், அப்பொழுதே ஊடல் தீர்ந்து புணர்தலுமாகிய இன்பத்தைத் தருவதனைக் கனவு விலக்குவதில்லை. யான் கண்ட கனவு கூறுவேன், கேள்.

“இமயமலையின் ஒரு பக்கத்தில், விண்ணில் பறக்கும் அன்னத்திரள் அந்திக் காலத்தில் வந்து தங்கினாற்போல, மணற் குன்றில் நல்லார் சிலர் (மகளிர்) தம்முடைய ஆயத்தா ருடனே மேவி நிறைந்திருந்தனர். அழகிய அந்நங்கையர் அச்சோலையில் நின்ற பூங்கொடியை வளைத்துப் பூங்கொத் துக்களைப் பறிக்கலுறவே, அவற்றில் படிந்திருந்த வண்டின் கூட்டம் உடையலாயிற்று. அவையெல்லாம் அம் மகளிரைச் சூழ்ந்து மொய்க்கவே, அந்நல்லார் அவை தம்மீது படியாத வாறாகப் பலவாறு பேணிக் கொள்வாராயினர். புலவி நீங்கி, பணிந்த தன் கணவனுடைய மாலைமார்பினை முயங்கலுற் றாள் ஒருத்தி. ஒருத்தி பூவேய்ந்த குளத்திற் பாய்ந்தாள்; ஒருத்தி ஓடத்தே பாய்ந்தாள்; ஒருத்தி வண்டுகளை ஓட்டுமிடம் அறியாது கை சோர்ந்தாள். இவ்வாறு வண்டு மொய்த்தற்கு ஆற்றாமல், விளையாட்டினை யுடைய அம்மகளிர், கொடிகள் காற்றடிக்க ஆற்றாமல் வளைந்து தம்மில் பிணங்கியவை போல, தம்மில் மயங்கி இங்கு மங்குமாகக் கெட்டோடினர்”.

இவ்வாறு தான் கனவு கண்டமை கூறி, “இளவேனிற் பருவம் வந்துற்றது; காமனுக்கு விருந்திடுதல் வேண்டிக் கூடல் மகளிரும் ஆடவரும் காவில் விளையாட்டயரும் நீங்கா விருப் போடு அணிகளைப் பூண்பர்.” என்று சுட்டித் தலைவியது ஊடலைத் தீர்க்கலானான் தலைவன். (கலி. 92.)

ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -

{Entry: G07__225}

“நனவில் வந்து என்னுடன் கூடி இன்பம் நல்காத என் காதலர், கனவில் வந்து எனக்கு இன்பம் நல்குகிறார்; அந்தக் கனவுக் காட்சியாலே என் உயிர் தரித்து நிற்கிறது” என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

“நனவென்று சொல்லப்படும் அந்தக் கொடிய பாவி இல்லை யெனில், கனவில் வந்து கூடிய என் காதலர் என்னை விட்டுப் பிரியமாட்டார்” என்று தலைவி தான் தலைவனைக் கனவில் காண்பதால் ஆற்றியிருக்கும் செய்தியைத் தோழிக்குக் கூறல்.

(குறள் 1213, 1216)

ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -

{Entry: G07__226}

“தலைவி! நீர் நிறைந்த கண்களையுடையையாய் நீ இல்லத்துத் தங்கியிருப்பத் தனித்துத் தலைவன் செல்வானல்லன். வெண் கடம்பம்பூவின் மணம் கமழும் நெற்றியை யுடைய உன்னை யும் அழைத்துக்கொண்டே தலைவன் செல்வான்” என்று தோழி தலைமகட்குக் கூறியது. (குறுந். 22.)

`ஆற்றான் ஆகி அவளெதிர் ஊடல்’ -

{Entry: G07__227}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ஊடிய தலைவியைப் பலவாறு தெளிவித்து வேண்டவும், அவள் புலவி தணியா ளாக, தலைவன் அவளிடத்தே சினம் கொண்டு வருந்தி யுரைத்தல் (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

ஆற்றான் மொழிதல் -

{Entry: G07__228}

இடந்தலைப்பாட்டின்கண் தலைவன் புகழுரை கேட்டுத் தலைவி நாணிக் கண்புதைத்தவழி, அவள் குறிப்பறியாது சென்று சார்தல் ஆகாமையின், அவளது உள்ளக்கருத்தினை அறிதற்குத் தன் வேட்கை மிகுதியால் தலைவன் சில கூறுதல். (குறிஞ்சிநடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

இது ‘மொழிபெற வருந்தல்’ எனவும்படும். (கோவை. 41)

`ஆற்றிடை உறும்வழித் தலைவன் கூறல்’ -

{Entry: G07__229}

தலைவன் இரவுக்குறியிடைத் திரும்பிச் செல்லும் வழியில் தோன்றும் இடையூறு பற்றித் தலைவியும் தோழியும் கவலையுற்ற வழித் தலைவன் கூறல்.

“அரிவை! கொல்லிப்பாவை இளவெயிலில் தோன்றினாற் போன்ற நின் மாண்நலம் நுகரக் கருதி யான் வரின், ‘வயப்புலி மழகளிற்றிரையை வேட்டையாடத் திரியும் மரச்சோலை நிறைய ஆடுகள் போல மேய்தலையுடைய கரடிக்கூட்டம் மலிந்த மலைச்சுர நெடுவெளியில் நீ என்னை நயந்து வருதல் எற்றுக்கு?’ என்று பல புலந்து அழும் நினது துயர் நீங்க, அம்மலைமுதல்நெறி உன் உருவெளித் தோற்றத்து ஒளி யினால் எனக்குப் பாதுகாப்பாகும்” (நற். 192) என்றிவ்வாறு, தலைவி தலைவன் வரும் ஆற்றினது அருமை கூறியதற்கு அவன் கூறுதல். (தொ. பொ. 103 நச்.)

ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -

{Entry: G07__230}

தலைவன் : “நங்காய்! நின்கையிலுள்ளது யாது?”

தலைவி : “யானோ இடைக்குலப்பெண். என் கையிலிருப் பது புலைத்தி முடைந்து கொடுத்த பனங்குருத் தின் வகிரால் செய்யப்பட்ட புட்டில்.”

தலைவன் : “இப்புட்டிலில் என்ன பண்டங்கள் உள? காட்டு.”

தலைவி : “இதன்கண் உள்ளன முல்லைப் பூக்களே.”

தலைவன் : “இம்முல்லைப் பூக்களைத் தொடுத்து நினக்கு அணிவித்து நின்னைக் கூடுதலை விழைகின்றேன். உனக்கு விரைவில் இல்லம் செல்ல வேண்டும் என்பது கருத்தாயின், விரைவில் உன்னை விடுத் திடுவேன். இப்பொழுது கூட்டத்திற்கு உடன் பட்டு நில்.”

இவ்வாறாகத் தலைவன் தலைவியை வழியில் தலைப்பெய்து கையிலுள்ள பண்டத்தை வினவுவானைப் போல அவளைத் தன் வயப்படுத்தியது. இழிந்தோர் காமப்பகுதியாகிய பெருந்திணையைச் சார்ந்தது இது. (கலி. 117)

ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் -

{Entry: G07__231}

உடன்போக்கில் சென்றுவிட்ட தலைவியை மீட்டு அழைத்து வருதற்காகச் சுரத்திடை வந்த செவிலி, அங்கு எதிர்ப்பட்ட அந்தணத்துறவியரிடம் வினவுதல்.

“முக்கோல் கொண்ட முனிவரே! இவ்வழியில் என் பேதைப் பெண் ஒருத்தி சுடரிலை வேலை ஏந்திய காளையுடன் செல்ல நீவிர் கண்டதுண்டோ?” (தஞ்சை. கோ. 341) என்றாற் போன்ற செவிலி கூற்று.

இதனை ‘வேதியரை வினாவல்’ என்னும் திருக்கோவை
யார். (243)

இது வரைவியலில் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

ஆற்றினது அருமை -

{Entry: G07__232}

தலைவன் இரவுக்குறிக்கண் தலைவியை நாடி இருளில் வரும் வழியில் நிகழக் கூடும் இடர்கள் பற்றிய நினைப்பு : தான் வரும்வழி கடுமையாக உளது என்று கூறி இரவுக்குறியை விலக்கும் மனநிலை தலைவற்கு நிகழாது. அவன் வரும் வழி யினது கடுமை முதலியன கூறி இரவுக்குறியை விலக்கும் மனநிலை தலைவியும் தோழியுமாகிய இவர்களிடத்தேயே நிகழ்வது. (தொ. பொ. 136 நச்.)

ஆற்றுக் காலாட்டியர் -

{Entry: G07__233}

மருதநிலப் பெண்டிர். (திவா. பக். 41)

ஆற்றுவித்திருந்தமை சாற்றல் -

{Entry: G07__234}

பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவனிடம் தோழி, அவனைப் பிரிந்து மிகவும் ஆற்றாமையுற்ற தலைவியை மிகவும் அரிதின் முயன்று தான் ஆறுதல் பெறுவித்தமையைச் சாற்றுதல்.

“வருந்திய தலைவியை நின் ஊரையும், மலையையும், மலை யின் வரும் அருவியையும், நின்தேர் சென்ற புதுச்சுவட்டை யும், நின் காடுகளையும் காட்டித் துயரினை ஆற்றுவித்துக் கொண்டிருந்தேன்.” (அம்பிகா. 328) என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறல்.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170.)

ஆறு இன்னாமை -

{Entry: G07__235}

இரவுக்குறியிடைத் தலைவன் வரும் வழியிடை நிகழற்பால பொல்லாங்குகள் குறித்துத் தலைவன் ஒருபோதும் கவலைப் பட மாட்டான் என்பது அவன் இலக்கணம். (இறை. அ. 31.)

ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி -

{Entry: G07__236}

இரவுக்குறிக் காலத்துக் கடந்துவரும் வழியிடையுள்ள துன்பங்களை நினைத்துப் பார்த்து அதனால் தான் உறும் அச்சத்தைத் தலைவி தோழிக்குக் கூறுதல்.

“இடி ஓசைக்கு அஞ்சாது, காட்டாறுகளையும் கடந்து வரும் நம் தலைவனுக்கு இச்சோலைக்கண் உள்ள தீண்டி வருத்தும் தெய்வங்கள் இரவு வருகையில் துன்பம் செய்யுமோ என அஞ்சுகிறேன்” என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

இது களவியலுள் ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164.)

ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல் -

{Entry: G07__237}

வரைந்து கொள்ளாமல் களவொழுக்கத்தை நீட்டித்து இரவில் கொடுந்துன்பம் விளையக் கூடிய காட்டுவழியில் தலைவன் வருவதை நினைந்து நினைந்து அஞ்சி நடுங்கும் தலைவியின் நிலையைக் கூறித் தோழி தலைவனை விரைவில் வரைந்து கொள்ளுமாறு கூறுதல்.

வழியிடை நிகழும் ஊறு பற்றித் தாம் அஞ்சுவதனைத் தலைவனிடம் தோழி கூறல் என்பது கிளவிப்பொருள்.

இதனை ‘நிலைகண்டுரைத்தல்’ என்ப. (கோவை. 178)

இது களவியலில் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்-கண்ணதொரு கூற்று. (ந. அ. 166.)

ஆறு வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -

{Entry: G07__238}

தலைவன் இரவுக்குறியில் வரும் வழியிடை ஏற்படும் ஏதங்களை எடுத்துக் கூறித் தலைவியும் தோழியும் அவனை இரவுக்குறி வருதலை விலக்குதல்.

இங்ஙனம் கூறுதல் ‘வரைதல் வேட்கையை’ உட்கொண்டு கூறியதாம். (தொ. பொ. 210 நச்.)

இ section: 155 entries

“இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”

{Entry: G07__239}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் கார்காலத்தே வாராதது கண்டு துயருறும் தலைவிக்குத் தோழி,“அவர் விரைவில் வருவார் என்று நமக்கு அறிவுறுக்கும் தூதாகவே இக்கார்காலம் வந்தது” என்று கூறுதல்.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 170)

“இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”

{Entry: G07__240}

தலைவியது ஊடலைத் தணிவிக்கத் தலைவன் அவள் சீறடி தொழப் புக்கபோது, தலைவி அதைத் தடுத்து “உங்களது இச்செயலை என் தங்கையரான பரத்தையர் காண நேரின் அது நல்லதாகாது; வேண்டா; இதனைச் செய்யற்க” என்று கூறுதல். எங்கையர் காணின் நன்று என்று எள்ளி உரைத்த லும் உண்டு.

“நீ என்னடிக்கண் பணிதலைப் பரத்தையர் கண்டால், உனக்குத் தீங்கு விளைவிப்பர்” என்று தலைவி கூறல்.

“தலைவ! நீ வணங்குவதற்கு உன்முடிமேல் குவித்த கைகளை யும் என் மார்பைத் தழுவ வந்து என் அடிமேல் வணங்கிய உன் கைகளையும் பரத்தையர் காணின் நினக்குத் தீங்கு நேரிடும்” என்று தலைவி கூறுதல். (அம்பிகா. 495)

இத்துறை கற்பியலின்கண் ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

இகழ்ச்சி நினைந்து அழிதல் -

{Entry: G07__241}

கற்புக் காலத்துத் தலைவன் பொருள்வயின் பிரிய அதனை அறிந்த தலைவி, “நம் தலைவர் முன்னெல்லாம் பொருட் பிரிவு பற்றிக் குறித்தபோது விளையாட்டிற்காகக் கூறுகிறார்” என்று, அவர் உறுதியாகப் பிரியமாட்டார் என்ற எண்ணத் தோடு இருந்தேன்: ஆனால் என் மனநிலை அறிந்த தலைவர் உண்மையில் பிரிதலை நேரிடையாக இவளிடம் கூறின் இவள் பெரிதும் ஆற்றாள் ஆவாள் என்று கருதி என்னிடம் கூறாமலேயே பிரிந்தார்” என்று தலைவனுடைய கூற்றை இகழ்ந்து இருந்ததன் அறியாமையினை நினைந்து வருந்துதல்.

இது கற்பியலுள் ‘பொருள்வயின் பிரிவு’ எனும் கிளவிக் கண்ணதொருகூற்று (கோவை. 340.)

இகழ்ந்ததற்கு இரங்கல் -

{Entry: G07__242}

தோழன் தான் தலைவனை இகழ்ந்து பேசியதை நினைத்து வருந்துதல்.

“இத் தலைவியின் எழிலில் தன்னைப் பறிகொடுத்து என் தலைவன் வாடி வருந்துதல் முற்றிலும் இயல்பானதே (தலைவியைக் கண்டு மீண்ட நான் அவனை இகழ்ந்து பேசியது பெருந்தவறே?”) (தஞ்சை. கோ. 53) என்பது தலைவியைக் கண்டு மீண்ட தோழன் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ என்னும் கிளவிக்-கண்ணதொருகூற்று. (ந. அ. 137)

இகுளைக் கூட்டு -

{Entry: G07__243}

பாங்கியிற் கூட்டம். (சாமி. 80)

இசை திரிந்து இசைத்தல் -

{Entry: G07__244}

சொல்லொடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டான் தொடராது பிறிதொரு வாய்பாட்டான் தொடருதல்.

“தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய்” என்று தொடர்பு படும் வாய்பாட்டான் தொடராது, ‘தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்’ (அகநா. கடவுள்) என்று வருதல் போல்வன. (தொ. பொ. 193 இள.)

சொற்கள் தமக்கு இயற்கையாக உள்ள பொருளுக்கு மாறாக அகப்பொருள்மரபில் வேறுபொருள் உணர்த்தல்.

‘பசலை பாய்ந்ததால் பழைய அழகு கெட்டுவிட்டது’ என்ப தனைப் ‘பசலையான் உணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக் கால்’ (கலி. 15) என்றாற் போல, உண்ணும் ஆற்றலில்லாத பசலை என்ற நிறவேறுபாட்டினை அவ்வாற்றல் உடையது போலக் கூறுதல் போல்வன. (தொ. பொ. 195 நச்.)

இசையாமை கூறி மறுத்தல் -

{Entry: G07__245}

தோழி, சேட்படைக்கண், தழையாடையை விடுத்துக் கழுநீர் மலரைக் கண்ணியாகக் கொண்டுவந்த தலைவனைக் கண்டு தலைவியது நாண்பற்றிக் கூறி, “யாங்கள் வேங்கை மலரைத் தவிரத் தெய்வத்துக்குரிய, நறுமலர்களைச் சூட அஞ்சுதும்; இக்கண்ணி எம் குலத்துக்குப் பொருந்தாது” என மறுத்துக் கூறுதல்.

இது சேட்படை என்னும் கிளவிக்கண்ணதொருகூற்று.

(கோவை. 96)

இட்டுப்பிரிவு -

{Entry: G07__246}

களவுக்காலத்தில் தொலைவான இடம் நோக்கிப் பிரியாமல் அணிமையாகப் பிரிதல். கற்பினுள், சொல்லாது அணிமை யாகப் பிரிதலையும் இட்டுப்பிரிவு என்ப. (தொ. பொ.111 நச்.)

தலைவன் தலைவியைத் தனியே தங்கவைத்துத் தான்மட்டும் பிரிந்து போதல் (தொ. பொ. 109 இள.)

களவொழுக்கம் நிகழும்போது தலைவன் சிறிது காலம் தன் ஊருக்குப் பிரிந்து போதல். இட்டு - அணிமை. அஃதாவது இது குறுகிய காலப் பிரிவு. (161. குழ)

பிற்காலத்தார் இதனை ‘ஒருவழித் தணத்தல்’ என்ப. (கலி. 53 நச்.) அணிமையிற் றலைவன் பிரிதலை இட்டுப்பிரிதல் என்பர்.

(கலி. 121 உரை)

இட்டுப்பிரிவு இரங்குதல் : பொருள் -

{Entry: G07__247}

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள்
இஃது ஒன்று.

‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்ற’ பின்னர், தலைவன் பெருநயப்பு உரைத்து ‘இடம் அணித்து’ என்றலும் பிறவும் கூறித் தெளிவுறச் செய்து, ஒருவழித் தணத்தலாகப் பிரியு மிடத்தே தலைவி உளம் மெலிந்து இரங்குதல். (தொ. கள. 21 ச. பால.)

இடத்துய்த்து நீங்கல் -

{Entry: G07__248}

தலைவனைக் குறியிடத்து நிறுத்தி வந்த தோழி, தலைவியைத் தனித்து அவ்விடத்துக்கு அருகில் நிறுத்தித் தான் தனியே சென்று அவளுக்கு விருப்பமான பூக்களைக் கொய்து வருவதாகக் கூறி அவ்விடத்து நீங்கல்.

இதனைக் ‘குறியிடத்துய்த்து நீங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 149)

இது பகற்குறி என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 119.)

இடந்தலை -

{Entry: G07__249}

இடந்தலை என்பது தலைஇடம். அஃதாவது எதிர்பாராத வகையில் நண்பர்களைப் பிரிந்து தனித்து ஒருபொழிலுக்கு வந்த தலைவன், எதிர்பாராவண்ணம் தோழியரைப் பிரிந்து ஓரிடத்தே தனித்து நின்றுகொண்டிருந்த தலைவியை விதி வசத்தால் சந்தித்து அன்பு கொண்டு கூடிய அம்முதல்நாள் கூட்டம் நிகழ்ந்த இடம். (தொ.பொ. 498. பே)

இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

{Entry: G07__250}

“எண்ணியவாறே நுகர்ச்சி பெறுக என வெற்பின்கண் என்னை அருளி, ‘நின்னிற் பிரியேன் பிரியின் உயிர் வாழேன்’ எனவும் அவலத்தொடு மனம் அழிந்துரைத்து, ‘எமதிடம் மிகவும் அணித்தேயுளது’ எனவும் கூறிய தலைவனின் மொழி யைத் தேறி, அதனால் பிரிந்து வாழ்தலைப் பொருந்திய எனது தனிமையை நோக்கித் தலைவன் கவலையுறுவானோ எனவும், வருவானோ எனவும் என்னுள்ளத்தே தளர்ச்சியுறுகின்றேன். யான் எண்ணிய நுகர்ச்சி எய்தாத தாகுமோ” என்றாற் போலத் தலைவி கூறுதல்.

(‘எண்ணியது இயையா தாங்கொல்’ எனத் தொடங்கும் பழம்பாடல் இக்கூற்றுப்பட நிகழ்கிறது.) (தொ. பொ. 102 நச்.)

இடந்தலைப்பாடு -

{Entry: G07__251}

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் தலைவியை மறுநாள் அவ்விடத்திலேயே சந்தித்தல்.

இவ்விடந்தலைப்பாடு இருவகைப்படும். பாங்கன் வாயிலாகத் தலைவியிருக்கும் இடம் தெரிந்து வந்து அவ்விடத்தில் சந்தித்தல்; பாங்கனிடம் கூறாமலே, முதல் நாள் கூட்டுவித்த விதி மறுநாளும் கூட்டுவிக்கும் என்ற நம்பிக்கையில் தலைவன் தானே வந்து தலைவியைச் சந்தித்தல் - என்பன. இடந்தலைப்பாட்டின்கண் இவ்விரண்டனுள் ஒன்றே நிகழும் என்பர் சிலர். தலைவன் தானே இரண்டாம்நாள் சந்திப்பதனையே இடந்தலைப்பாடு எனக் கொண்டு, பாங்கன் வாயிலாகச் சந்திப்பதனையே மூன்றாம் நாள் சந்திப்பாகிய பாங்கற் கூட்டம் என்பர். இடம் தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து சென்ற தலைவன் அடுத்த நாள் அவ்விடத்திலேயே வந்து தலைவியைக் கூடுதல். தலைப்பாடு - கூடுதல். (இறை. அ. 3; ந.அ. 124)

இடந்தலைப்பாடு - மூன்றுவகை -

{Entry: G07__252}

இது களவியலுள் ஆறாம் தொகுதி. இதன் மூவகையாவன : (1) தெய்வம் தெளிதல் - முன்னே தனக்குத் தலைவியைக் கூட்டுவித்த நல்வினை மறுபடியும் கூட்டுவிக்கும் என்ற தெளிவுடன் தலைவன் தலைவியை முதல்நாள் கண்ட இடத்திற்கே சேறல்.

2) கூடல் - தலைவன் தலைவியைக் கூடுதல்.

3) விடுத்தல் - தலைவன் தலைவியைத் தோழியர் கூட்டத் திடையே செல்லுமாறு அனுப்புதல் என்பன. (ந. அ. 134)

இடப்புறத்து அகற்றல் -

{Entry: G07__253}

இரவுக்குறிக்கண் தோழி தலைவியை இரவுக்குறியிடத்து அருகில் தனியே விடுத்துச் சேறல். (இஃது ‘அவட் கொண்டு சேறலும் குறி உய்த்து அகறலும்’ (ந. அ. 158) எனவும் கூறப் படும்.) (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

இடம் அணித்து என்றல் -

{Entry: G07__254}

‘எனது இருப்பிடம் இவ்விடத்திற்கு மிக அருகிலேயே உள்ளது’ என்று தலைவன் இயற்கைப்புணர்ச்சியின் இறுதி யில் தலைவிக்குக் கூறுதல்.

“நான் பிரிந்து நெடுந்தொலைவு செல்வேன் என நீ கவலல் வேண்டா; இதோ, மிக அருகில் தான் உள்ளது எனதூர்” என்று வலியுறுத்தும் தலைவன், “எங்கள் ஊரின் வெண் மாளிகைகளது ஒளி படிவதால் நுங்கள் ஊர்க் கருங்குன்றம் வெண்ணிறச் சட்டை அணிவது போலக் காட்சியளிக்கும் அத்துணை அணிமையில் எம்மூர் உளது!” (கோவை. 15) என்று கூறுதல் போல்வன.

இதனை ‘இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்’ என்றும் கூறுவர். (கோவை. 15)

இஃது ‘இயற்கைப்புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்றாம். (ந. அ. 129)

இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் -

{Entry: G07__255}

இயற்கைப் புணர்ச்சி இறுதியில் தலைவன் தன் பிரிவு குறித்து வருந்திய தலைவியைத் தெளிவித்துத் தங்கள் இருவருடைய இருப்பிடமும் அணிமையில் உள்ளனவேயாதலின், தவறா மல் சந்தித்தல் வாய்க்கும் என்று கூறித் தன் பிரிவிற்கு உடன் படுமாறு வற்புறுத்தல்.

இஃது இடமணித் தென்றல் எனவும் கூறப்படும். (ந. அ. 129) அது காண்க.

இஃது இயற்கைப்புணர்ச்சிக்கண்ணது ஒரு கூற்றாம். (கோவை. 15)

இடம் பெற்று அணைதல் -

{Entry: G07__256}

இடம் பெற்றுத் தழாஅல். (சாமி. 87)

இடம் பெற்றுத் தழாஅல் -

{Entry: G07__257}

சந்தருப்பம் கண்டு தலைவியைத் தலைவன் தழுவல்.

“இவள் கண்கள் தந்த அருட்குறிப்புண்டு; ஒருவருமில்லாத தனியிடமான இக்குளிர்பூஞ்சோலை யுண்டு; இவளை இங்கே நான் தழுவுவேன்” என நினைக்கும் தலைவனது கூற்று. (மதுரைக்கல. 39)

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப்புணர்ச்சி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

இடன் -

{Entry: G07__258}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று.
(வீ.சோ. 96) இடனாவது அகஇடனும் புறஇடனும் என இருவகைப்படும். அக இடனாவது மனையும் வளாகமும் பற்றி வருவது; புறஇடனாவது மலையும் பழனமும் சோலையும் கடலும் நெறியும் ஆறும் பற்றி வருவது. ‘இடம்’ காண்க. இடன் - சந்தருப்பம் (தொ. பொ. 513 பே.) (வீ. சோ. 96 உரை)

இடித்து வரை நிறுத்தல் -

{Entry: G07__259}

மனத்துப் படுமாறு கடுஞ்சொற்களால் கழறியுரைத்து நேரிய வாழ்க்கைநெறி என்னும் எல்லைக்கண் நிறுத்துதல். இச் செயலைத் தலைவன் தலைவி என்னும் இருவரிடையேயும் அறிவர் என்ற வாயிலோர் செய்வர்.

தலைவ! இன்று உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செருகியும் மகளிர் பலரைக் கூட்டமாகக் கொண்டு விழாச் செய்யும் அளவிற்கு நீ பெற்றுடைய பெருஞ்செல்வம், ஒரே பசுவைக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திய நின் இல்லத்திற்கு, இத்தலைவி வந்தபின்னரே விளைந்தது என்பதை நினைத்துப் பார்த்து அதற்கு ஏற்ப நடந்துகொள்க” (குறுந். 295) என்றாற் போல, அறிவர் தலைவற்குக் கூறி அவனை நெறிப்படுத்தல். (தொல். பொ. 155 நச்.)

இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -

{Entry: G07__260}

“நெஞ்சே! வண்டுகள் செறிந்த கூந்தலையும் பருத்த மென் தோள்களையும் உடைய என் தலைவி வைகும், தெருக்கள் பலவுடைய குன்றம், காவிரிப்பூம்பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டின்கண் உள்ளது. செல்லுதற்கரிய காட்டினைக் கடந்து சென்று எடுத்த செயலை வெற்றியொடு முற்றுவிக் கும் ஆற்றலின்றிப் பின்னே நின்று மீண்டு செல்லக் கருது வாயாயின், என்னுடைய இந்நிலையினை என் தலைவியிடம் சென்று உரைப்பாயாக!” (அகநா. 181) என்றாற் போலத் தலைவன் இடைச்சுரத்தின்கண் நெஞ்சிற்குக் கூறுதல்.

இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -

{Entry: G07__261}

“மூங்கில் பிளக்குமாறு முதுவேனிலின் வெப்பம் மிக ஞாயிறு மலைகளும் பிளக்குமாறு காய்தலால் முன்பு வெப்பமாக இருந்த பகுதிகள், இப்பொழுது தலைவியின் குணங்களை யான் நினைக்குந்தோறும் மிகக் குளிர்ச்சியுடையவாகத் தோற்றம் அளிக்கின்றன” என்று தலைவன் கூறல். (ஐங். 322)

இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -

{Entry: G07__262}

“உயர்ந்த கரைகளையுடைய காட்டாற்றின் மணல் மிக்க அகன்ற துறையிலே வேனிற்காலத்திற் பூக்கும் பாதிரிமலர் களைக் குவித்து மாலை தொடுத்துக்கொண்டிருக்கும், மடம் என்னும் பண்பு சான்ற மகளே! நீ நாணிக் கண்களைப் பொத்திக் கொண்டிருக்கிறாய். நின் கண்களைவிட நின் நகில்கள் என்னை வருத்துகின்றன! அவற்றினும் நின்பருத்த மென்தோள்கள் என்னைத் துன்புறுத்துகின்றன!” என்று தலைவன் கூறுதல். (ஐங். 361)

`இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

{Entry: G07__263}

தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லும்போது பாலைநிலத்து நடுவழியில் தலைவியினுடைய தந்தையும் தன்னையரும் பின் சென்று பொருந்தித் தலைவியை அழைத்துச் செல்ல முயலும்போது, தலைவி மிகவும் வருந்தித் தன் உறவினர்பக்கம் சேர்ந்து உரையாடாது தலைவன் பக்கத்திலேயே நிற்றலின், தலைவி கற்பொடு கூடியிருப்பதை அவளுடைய சுற்றத்தாரும் அப்பாலை நிலைத்திற் கண்டவ ரும் உணர்ந்த கற்பு வெளிப்பாடு உளப்படத் தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லும் பகுதிக்கண் கூற்று நிகழ்த்துதல். (தொ. பொ. 41 நச்.)

‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ என, தமர் மீட்டுச் செல்லும் அளவில் தலைவி தலைவனைப் பிரிதலை எண்ணிக் கவலையுற்று அரற்றுதலை, ‘உடன்போக் கிடையீடு’ என்னும் வரைவிற்குரிய தொகுதிக்- கண் அமைந்ததொரு கூற்றாக அகப்பொருள் விளக்கம் சுட்டும். (ந. அ. 198)

“இயந்திரப்பாவை போல நடந்து நும்மனை எல்லை கடந்து வந்துள்ளாய். இக்கானத்தே பரந்து தோன்றும் செவ்விய இந்திரகோபப் பூச்சிகளைக் கண்டுகொண்டு சற்றே விளையாடி மகிழ்ந்துகொண்டிரு; யான் ஆண்டுத் தோன் றும் பருத்த அடியினையுடைய வேங்கைமரம் நிற்கும் மணல் எக்கரில் அவ்வடிமரப் புறத்தே மறைந்து நிற்பேன்; போர் வருமாயின் அஞ்சாது எதிர்த்து மாற்றாரைப் புறங்காட்டி யோடச் செய்வேன்; ஆண்டு நுமர் வருவரேல் போரிடாது மறைவேன்” என்று தலைவன் கூறுவன. ( நற். 362 )

“இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

{Entry: G07__264}

“வரைந்துகொண்டு இடையறாத இன்பத்தை எய்தியவர், ஊடலும் அதனை அளவறிந்து நீங்கலும் பின்னர்க் கூடுதலும் ஆகிய இவற்றையே பெற்றனர்; இருதலைப்புள்ளுப் போல, ஈருடலும் ஓருயிரும் ஆகிய இருவேமுக்கும் அத்தகைய இன்பம் வேண்டா; யாங்கள் எப்பொழுதுமே கூடிப் பிரியா மல் இன்புறுவோம்” என்று தலைவன் தோழியிடம் கூறுதல். (குறள் 1109)

“இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: G07__265}

“தோழீ! என்காதலரை இன்று யான் மறந்தால் மேலும் என் அழகு கெட்டு என்வளைகளும் கழன்றுவிடும். அந்நிலை நேராமல் காப்பது அவரது நினைப்பே. அவரை யாம் யாங்கனம் மறத்தல் கூடும்?” என்று தலைவி தோழிக்குக் கூறியது. (குறள் 1262)

இடையூறு கிளத்தல் -

{Entry: G07__266}

தனக்கு நேரும் துயரத்தைத் தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

‘நாணத்தால் நீ கண்களை மாத்திரமே புதைத்து மறைத்துக் கொள்கிறாய்; ஆயின் நின் மற்ற உறுப்புக்கள் என்னை வருத்துவதை யாங்கனம் தடுத்தல் இயையும்?’ என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

‘கண்புதைக்க வருந்தல்’ என்பது திருக்கோவையாருள் நிகழும் கிளவி (43). இதனைச் சாமிநாதம் ‘இடையூறு சொல்லல்’ என்று சொல்லும். (சாமி. 87) (ந. அ. 127)

இடை வினாதல் -

{Entry: G07__267}

இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் இவற்றால் தலைவியைக் கூடிய தலைவன், இனித் தலைவி யைப் பாங்கி வாயிலாகக் கூடுதலே தக்கது என்ற எண்ணத் துடன் அவள் அறிவைத் தன்பக்கல் ஈர்ப்பதற்குத் தழையும் கண்ணியும் கையுறையாக ஏந்தி வந்து, அவளுடைய ஊர் பெயர் முதலியவற்றை வினவிய பிறகு, “உனக்கு இடை இருக் கிறதா, இல்லையா என்ற என் ஐயத்தைப் போக்குவாயாக” என்றாற் போல வினவுதல்.

இது பாங்கிமதி உடன்பாடு என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. ‘ஒழிந்தவும் வினாவுழி’ என்பதன்கண் அடங்கும். (ந. அ. 140 உரை, இ. வி. 507 உரை)

இந்திரன் -

{Entry: G07__268}

இந்திரன் ஆவான் தேவர்களுக்கு அரசன்; மருத நிலக் கடவுள். இந்திரனைத் தொல்காப்பியர் ‘வேந்தன்’ என்பார்.

வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருதநிலத்து வாழும் உழவர் முதலியோர் ஊடலும் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருதநிலத்துக்குத் தெய்வமாக ‘ஆடலும் பாடலும் ஊடலும் உணர்த்தலும்’ உள்ளிட்ட இன்பவிளையாட்டு இனிது நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை நோக்கி விழாச்செய்து அழைத்த லின் மருதநில மக்களுக்கு அவன்அருள் வெளிப்படும்.

இந்திரன் மழைவளனும் ஆற்றுவளனும் தரும்.

(தொ. பொ. 5 ந ச்.)

இயல்புரை -

{Entry: G07__269}

இன்ன இடத்து இன்ன செயல் நிகழ்ந்தது என ஒருசெயலை அது நிகழ்ந்த சந்தர்ப்பத்தையும் கூட்டியுரைப்பது இயல் புரையாம். 27 அகப்பொருள் உரைகளுள் இயல்புரை ஒன்று.

(வீ. சோ. 90 உரை)

இயல்வளி முற்றுதல் -

{Entry: G07__270}

கற்புக்காலத்தே தலைவியைப் பிரிந்து ஓதல் முதலிய கருதிச் சென்ற தலைவன் மனம் தளருமாறு வாடைக்காற்றுக் கடுமையாக வீசுதல் (முல்லை நடையியல்)

(வீ. சோ. 94 உரை மேற்.)

இயற்கை அன்பு -

{Entry: G07__271}

காரணமின்றித் தோன்றும் அன்பாம். தலைவன் தலைவியைக் கண்ணுற்றபோதே, “இவளை மனைக்கிழத்தியாகக் கோடல் வேண்டும்” என்று கருதுதற்குக் காரணமாக விதிவயத்தால் தோன்றும் அன்பு. (இறை. அ. 2 உரை)

இயற்கையன்பு வடிவுபற்றியல்லது தோன்றாது.

(தொ. பொ. 273 பேரா. )

இயற்கை இன்பம் -

{Entry: G07__272}

இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பம் (சீவக. 2063)

இயற்கை நிலம் -

{Entry: G07__273}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் ஆகிய காடு மலை வயல் கடற்கரை என்னும் நால்வகை நிலன்கள். (தொ. பொ. 4 நச்.)

இயற்கைப்புணர்ச்சி -

{Entry: G07__274}

ஊழ் வயத்தால் தலைவன் தலைவியை எதிர்ப்பட அவ்விருவ ரும் மனம் இயைந்து தாமே கூடுதல் இயற்கைப் புணர்ச்சி. இது களவியலுள் முதற் கிளவி. (ந. அ. 123)

இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -

{Entry: G07__275}

(1) வேட்கையுணர்த்தல் - தலைவன் தன் வேட்கையைத் தலைவிக்கு உணர்த்தல்.

(2) மறுத்தல் - தலைவி நாணத்தால் மறுத்தல்.

(3) உடன்படல் - தலைவி கூட்டத்திற்கு இசைதல்

(4) கூடல் - தலைவியைத் தலைவன் கூடுதல் - என்பன.

(ந.அ. 126)

இயற்கைப்புணர்ச்சியின் எழுவகை -

{Entry: G07__276}

நயப்பு, பிரிவுணர்த்தல், இடம் அணித்தென்றல், எய்தற் கருமை, உயிரென வியத்தல், பாங்கியை உணர்தல், பாங்கனை நினைதல்- என இயற்கைப்புணர்ச்சி எழுவகைப்படும். இதனையே தமிழ்நெறிவிளக்கம் நயப்பு, தெருட்டல், பிரிவச் சம், வன்பொறை, எய்துதல் அருமை, உயிரெனக் கூறல், ஆற்றினன் பெயர்தல் - என ஏழுவகைத்தாகக் கூறும். (க.கா. 25, த.நெ. வி. 15)

இயற்கைப்புணர்ச்சியின் கிளவிகள் -

{Entry: G07__277}

காட்சி, ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், புணர்ச்சி துணிதல், கலவி உரைத்தல், இருவயின் ஒத்தல், கிளவி வேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவு உணர்த்தல், பருவரல் அறிதல், அருட்குணம் உரைத்தல், இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல், ஆடிடத்து உய்த்தல், அருமையறிதல், பாங்கியை அறிதல் - என்ற பதினெட்டும் திருக்கோவையாருள் இயற்கைப்புணர்ச்சி என்னும் கிள விக்கண் அமையும் கூற்றுக்கள். இவற்றுள் கைக்கிளையைச் சார்ந்த முதல் ஏழ்கூற்றுக்களும் கூட, இயற்கைப்புணர்ச்சிக்கு உபகாரப்படுதலான் இயற்கைப்புணர்ச்சிக்கண்ணேயே கொள்ளப்பட்டன. (கோவை. சூ. 1)

இயற்கைப்புணர்ச்சி வகை -

{Entry: G07__278}

முயற்சியின்றி முடியும் தெய்வத்தானியன்ற இயற்கைப் புணர்ச்சி எனவும், தலைவனது முயற்சியான் முடியும் இயற்கைப் புணர்ச்சி எனவும் இயற்கைப்புணர்ச்சி இரு வகைத்து. (ந. அ. 32)

இயற்கைப்பொழுது -

{Entry: G07__279}

முல்லைக்கு வகுக்கப்பட்ட காரும் மாலையும், குறிஞ்சிக்கு வகுக்கப்பட்ட கூதிரும் முன்பனியும் இடையாமமும், மருதத் திற்கு வகுக்கப்பட்ட ஆண்டு முழுமையும் வைகறையும் விடியலும், நெய்தலுக்கு வகுக்கப்பட்ட ஆண்டு முழுமையும் எற்பாடாகிய பிற்பகலும், பாலைக்கு வகுக்கப்பட்ட வேனி லும் பின்பனியும் நண்பகலும் என இவை இயற்கைப் பொழுதுகளாம். (தொ. பொ. 4, 6 - 10 நச்.)

இயற்பட மொழிதல் -

{Entry: G07__280}

பரத்தையரிடம் பிரிந்த தலைவனைத் தோழி முதலிய வாயிலோர் இயற்பழித்தலைப் பொறாத தலைவி, “யான் உறங்கும்போது கனவில் என் மார்பினைத் தழுவி மகிழும் எம்பெருமானை நீங்கள் குறை கூறுவது தகாது” என்றாற் போலத் தலைவனை இயற்படத் கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 378.)

இயற்பழித்தல் -

{Entry: G07__281}

தலைவன் தலைவியை வரைந்து கொள்ளாமல் காலம் கடத்தும் கொடுமையைச் சுட்டித் தோழி அவனுடைய இயல்பினைப் பழித்துக் கூறுதல். ‘பாங்கி இறைவனைப் பழித்தல்’ என்பது கூற்று. (அவள் அவ்வாறு அவனைப் பழித்தவழி, அது பொறாது தலைவி இயற்பட மொழிவாள்.)

“ஒளிமிக்க வெண்ணகையாய்! இறாமீன்களை ஒருசேர உண்ணும் நாரைகள் தங்கும் பசிய கடற்கரைச் சோலையில் தேமலர்களையுடைய புன்னைமர நிழலில் நம்மை விரும்பி வந்தவர் தலைவர். அவர் வந்த அச் செவ்வியை அந்நாரைகள் மறக்கமாட்டா. நம்மை மறந்த அவர் போல வன்னெஞ்சுடை யார் ஒருவரும் இரார்!” (அம்பிகா. 243)

இது களவியலுள் ‘வரைதல்வேட்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 164; இ. வி. அகத். 149)

இயைபு எடுத்துரைத்தல் -

{Entry: G07__282}

தலைவி தலைவனோடு உடன்போயவழித் தலைவியைச் செவிலி தேடிச் செல்லுகையில் அவ்வழிச் செல்வோரை “பேரழகியுடன் காளை ஒருவன் சென்றதைக் கண்டீரோ?” என்று வினாவ, எதிர்வருவோர் தலைவியது இயல்பினையும் தலைவனுடைய ஆண்மையினையும் எடுத்துக்கூறி, அவர்கள் ஒரு துன்பமும் இன்றி இயைந்து சென்றதை எடுத்துக் கூறிச் செவிலியை ஆற்றுவித்தல். இஃது ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 246)

இரக்கத்தொடு மறுத்தல் -

{Entry: G07__283}

தலைவன் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் தழையாடையும் ஏந்தி நிற்றலைக் கண்ட தோழி அவனைப் பார்த்து, உடல் நடுங்கக் கையில் தழையாடையொடு வில்லையும் ஏந்திப் பித்தேறியவனைப் போலக் காணப்படும் அவனது நிலை இரக்கப்படுதற்கு உரியது என்று சொல்லளவொடு, கருணை காட்டிக் கையுறை பெறாது விடுத்தல்.

இதனைத் ‘தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்’ எனவும் கொள்வர். (ந. அ. 148)

இது சேட்படை என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 102)

இரக்கம் -

{Entry: G07__284}

பிறர் துன்பம் கண்டு வருந்தும் அவலம் என்னும் மெய்ப்பாடு. கருணை எனினும் ஒக்கும். இஃது அகப்பொருள் நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளும் ஆகும். குறித்த பருவத்துத் தலைவன் மீண்டு தலைவியை அணையாக்கால், அவள் உள்ளம் எய்தும் மிக்க வருத்தநிலை இது. ‘இரங்கல்’ காண்க.

(தொ. பொ. 226 நச்.)

இரக்கம் கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__285}

களவு விரும்பி வரைவு உடன்படாது இரவுக்குறியை நீட்டிக் கக் கருதிய தலைவனுக்குத் தோழி, “நீ செல்லும் நெறிக்கண் இரவிடை நினக்கு இடையூறு உண்டாகும் என்னும் அச்சத் தால் தலைவி அழுது வருந்துகின்றாள். அவள் ஆறுதல் பெற நீ நின்னூர் அடைந்ததும் சங்கினை ஊதி நின்குறி காட்டுவாய்” என்று தலைவியது இரக்கம் பற்றிக் கூறி வரைவு கடாவுதல். (கோவை. 170)

இஃது இரவுக்குறி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இரக்கமுற்று வரைவு கடாதல் -

{Entry: G07__286}

பகற்குறியில் வேங்கை பூத்துத் தினைமுதிர்வுரைத்துத் தினையை அறுக்கச்செய்து தினைக்காவலைப் போக்கிய தனை உரைத்து வரைவு கடாவ முற்பட்ட தோழி தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியிடம் உரைப்போள் போன்று, “யாம் அவனை எதிர்ப்படலாம் என்று மகிழ்வொடு வளர்த்த தினைத்திரள் கொய்யப்பட்டுவிட்டன” என்று தலைவன் பால் இரக்கம் காட்டுபவளைப் போல வரைவு கடாதல். இது பகற்குறிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 142)

இரங்கல் -

{Entry: G07__287}

தலைவன் களவிலோ கற்பிலோ குறித்த காலத்துத் தன்னைக் காண வாராதவிடத்து ஏற்பட்ட வருத்தத்தான் தலைவி கடலும் கானலும் கழியும் காண்டொறும் இரங்கலும், பொழுதும் புணர்துணைப்புள்ளும் கண்டு இரங்கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும் போல்வன இரங்கலாம். இது நெய்தல் என்னும் திணைக்கு உரிப்பொருள் ஆகிய ஒழுக்கமாம். இது களவிற்குச் சிறந்தது.

(தொ. பொ. 14 நச்.)

இரங்கல் நிமித்தம் -

{Entry: G07__288}

தலைவி வருந்தும் கடற்கரையும், தலைவன் தலைவியை நீங்கலும் போல்வன தலைவியின் இரங்கற்குச் சூழ்நிலையும் காரணமும் ஆம். (தொ. பொ. 14 நச்)

இரங்கி மொழிதல் -

{Entry: G07__289}

பாங்கியிற் கூட்டத்தில் தலைவனுக்குக் குறை முடிப்பதாக ஏற்றுக் கொண்ட தோழி, தலைவனுடைய துயரநிலையைத் தலைவிக்கு எடுத்துக்கூறி, அவளைக் குறைநயக்குமாறு வேண்டுதல். (இது ‘தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்’ ந. அ. 148 எனவும்படும்.) (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

இரத்தலும் தெளித்தலும் -

{Entry: G07__290}

பரத்தையரிடத்துப் பிரிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியை எய்தி அவள்கூட்டத்தை வேண்டி நிற்கையில், அவள் அவனுடைய தவறான ஒழுக்கம் கருதி அவனிடம் கோபம் கொண்டு விலகி நின்றவிடத்தே, தன்னிடம் கோபம் கொள்ளாமல் தனக்கு அவள் அருள்செய்து இன்முகம் காட்டித் தன்னொடு கூடுதல் வேண்டுமெனத் தலைவன் தலைவியைப் பணிவொடு வேண்டுதலும், தலைவி கருதுவது போன்று தன்னிடத்தே தவறு எதுவுமின்று என்பதைத் தன் பேச்சினாலும் உறுதிமொழியாலும் அவள் மனத்தே பதியுமாறு செய்தலும். (கலி. 88) (தொ. பொ. 41 நச்.)

`இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -

{Entry: G07__291}

பாங்கியை இரந்தும் குறை நிறைவுறாமல் வருந்திய தலைவன் மடலேறுவதே இனித் தன்குறை நிறைவேறற்கு வழியெனத் துணிதல்.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 145)

இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

{Entry: G07__292}

“தலைவியே! நின் கூந்தல் அழகைக் கண்ட அளவில் என் பண்புகளாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன என்னைவிட்டுப் போம்படி செய்து என்னை நீங்கிச் செல் கிறாய். என் நோய் பற்றி நீ கவலையுறாமற் சென்றால் நீ தைந்நீராடிய நல்வினையும், நோன்பாகிய விளையாட்டை மேற்கொண்டு பிறர்மனைக்கண் ஐயமேற்றுப் பாடி ஆண்டுப் பெற்றவற்றைப் பிறர்க்குக் கொடுத்த நல்வினைப்பயனும், குழமகனுக்குத் திருமணம் செய்து நோற்ற நோன்பின் பயனும், நினக்குக் கிட்டாமல் போய்விடும். ஆதலின் என்மாட்டு அருள்செய்க” (கலித். 59) என்றாற் போலத் தலைவன் கூறுதல்.

இரந்து குறையுறுதல் -

{Entry: G07__293}

இரத்தல் - குறையுடையார் செய்யும் செய்கை செய்து ஒழுகுவது.

குறையுறுதல் - ‘இவன் இக்குறையை இன்றியமையாதவன்’ என்பது பட உரையாடுவது.

தலைவன் பாங்கனாலாவது தனியே எதிர்ப்பட்டாவது தலைவியை இரண்டாம்நாள் கூடியபின், இனி இக்கூட்டம் தோழியின் உதவியின்றி நிகழாது என்னும் கருத்தான், இழிந்தார்க்கே யுரிய “இக்கண்ணி நல்ல, இத்தழை நல்ல” என்றாற் போலக் கையுறையைப் பாராட்டி நிற்கும் சொற்க ளோடு, தலைவியிடம் இரத்தலும் குறையுறுதலும் செய்து நிற்றல். (இறை. அ. 5)

இரந்து பின்நிலை நிற்றல் -

{Entry: G07__294}

தலைவன் தலைவியிடம் தன்குறையினைக் கூறித் தாழ்ந்து
நிற்பது .

”பெண்ணே! உன் கண்ணால் என்னை நோயுறச் செய்து என் உயிருக்கே ஊறு விளைவித்து விட்டு நீ வாளா இருப்பது தகுமா? ” (தஞ்சை. கோ. 6 ) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

இரந்து பின் நிற்றற்கு எண்ணல் -

{Entry: G07__295}

தலைவியிடம் தன்குறையைக் கூறி இரக்கலாம் என்று தலைவன் நினைதல்.

“மனமே!அவளால் நாம் உற்று வருந்தும் இக்காமநோய்க்கு அவளே மருந்தாவதன்றி வேறு வழியில்லை; ஆகவே, தாழ்மை கருதாமல் அவளையே சென்று இரப்போம்” (குணநாற்பது) எனத் தலைவன் எண்ணுதல். (ந. அ. 127)

இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -

{Entry: G07__296}

தலைவிக்குரிய கிளவிகளுள் இதுவும் ஒன்று.

“எமது கோதையை அறுத்துப் பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி போன்றிருந்த தலைவன் யானும் அன்னையும் இருந்த இல்லத்தே புக்கு உண்ணும் நீர் கேட்பவே, என்னைப் பொற்கரகத்தால் உண்ணு நீ ஊட்டி வருமாறு அன்னை பணிப்ப, யானும் சென்று கொடுக்கலுற்ற அளவில், எனது வளை முன்கையைப் பற்றி நலிந்தானாக, யான் தெருமந்து அன்னையை விளித்து ‘இவன் செய்தது காண்!’ என்றேனாக, அன்னையும் அவ்விடம் அலறிப் படர்தரவே, யான் அதனை மறைத்து ‘இவன் உண்ணும் நீர் விக்கினான்’ என்று பொய்க்கவே, அன்னையும் அவனது முதுகில் பலகால் தடவிக் கொடுப்ப, அன்றே என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல நோக்கி மகிழ்தற்குக் காரணமான கூட்டத்திற்கு வித்திட்டான் அக்கள்வன் மகன்”
(கலி. 51)

இஃது உணவுக் காலத்துத் தம்மனைக்கண் புக்க தலைவனை அன்னை விருந்தேற்றுக் கொண்ட செய்தியைப் பின்னொரு காலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு.

(தொ. பொ. 107 நச்.)

இரவின் நீட்டம் -

{Entry: G07__297}

தலைவன் தொடக்கத்தே தலைவியிடம், “நின்னிற் பிரியேன்” என்று உறுதிமொழி கூறிப் பின் அதனை மறந்து பிரிந்தது குறித்துத் தலைவி வருந்துகிறாள். அவளுக்கு இராப்பொழுது மிக நீண்டு தோன்றுகிறது. அவள் “தலைவன் என்னைப் பிரிந்து சென்ற நாள் முதல், சூரியனுடைய பச்சைக் குதிரை களும் பாகனும் இரதமும் காலம் தாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுவிட்டன” (திருவாரூர்க். 345) என்றாற் போல, இராப்பொழுது நீளிதாய்த் தனக்குத் துன்பம் தருதலைத் தோழியிடம் கூறுதல்.

‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று இது.

இரவினும் எய்தா உரவோற்கு இரங்கல் -

{Entry: G07__298}

இரவுப்பொழுதிலும் இல்லம் எய்தாத தலைவனை எண்ணித் தலைவி வருந்தல்.

“தலைவனது தேர் இரவிலும் வரவில்லையே; தலைவனைப் பற்றி ஊரார் கூறும் புகழ் மிக நன்று; (நன்றன்று என்பது குறிப்பு)” (அம்பிகா. 450) என்றாற் போலக் கூறி வருந்தல்.

இஃது அம்பிகாபதி கோவையில் ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இரவுக்குறி -

{Entry: G07__299}

தலைவன் தலைவியை இரவுக்குறியிடத்தே கூடுதல். களவுக் காலத்தே தலைவன் விருப்பத்தை ஈடேற்றுதலைத் தன் அறமாகக் கருதும் தலைவி, அவன் விரும்பியவாறே இரவில் வந்து தன்னைச் சந்திப்பதற்கு வரையறுத்துரைக்கும் இடம் இரவுக்குறியாம். அவ்விடம் தொடக்கத்தில் இல்லத்தின் கட்டடமான உள் மனைக்குள் இருத்தல் கூடாது; ஆயின் இல்லத்து மதில் எல்லைக்குள் இல்லத்தவர் பேசும் பேச் சினை வெளியிலிருந்து கேட்கும் அணிமைக்கண் அமைந் திருத்தல் வேண்டும். தோழியும் தலைவியும் மனையினுள் ளிருந்து ஒருவாற்றான் பேசுவதனைக் குறியிடத்து வந்த தலைவன் கேட்டு ஆற்றும்படியாக இரவுக்குறியிடமானது அகமனைக்கும் புறமனைக்கும் நடுவே அமைந்திருக்கும். சிலநாள் பழகியபின் அச்சமின்றி உள்மனையிற் சென்று கூடுதலும் நிகழும். (தொ. பொ. 131 நச்.)

இரவுக்குறி மனை எல்லைக்குள் இருத்தல் வேண்டும்; ஆயின் மனைக் கட்டடங்களுள் இருத்தல் கூடாது. அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளி அம்பலம், உரிமை இடம், கூத்தப்பள்ளி என இவற்றுள் நீங்கிச் செய்குன் றும் இளமரக்காவும் பூம்பந்தரும் விளையாடுமிடமும் இவற்றைச் சார்ந்தவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆகவேண் டும் என்பது. கட்டடங்கள் குரவர் உறையும் இடமாகலின் தெய்வத்தானம் என்று கருதப்படும். மேலும் தலைவன் வரு தற்கும் மீண்டு செல்லுதற்கும் கட்டடப்பகுதி ஏதமுடைத்து ஆதலின் இரவுக்குறி மனைக்கட்டட எல்லையைக் கடந்தே அமைதல் வேண்டும். (இறை. 21 உரை)

இரவுக்குறி இடையீடு -

{Entry: G07__300}

இது களவியலுள் பதின்மூன்றாம் கிளவி. (எட்டாம்நாள்) இரவுக்குறிக்கண் வந்த தலைவன் அல்லகுறிப்படுதலால் இடையீடுபட்டுப் போதல். (ந. அ. 123)

இரவுக்குறி இடையீடும் அதன் வகைகளும் -

{Entry: G07__301}

இது களவியலுள் பதின்மூன்றாவதாக நிகழும் தொகுதி. இதன் இரண்டு வகையும் வருமாறு :

1. அல்லகுறி - இரவுக்குறியில் குறிகள் அல்லாதன குறிகள் போல நிகழ்தல். தலைவன், தலைவி தோழி ஆகியோர் தாம் மாத்திரம் அறியும் வகையால், குறியீடு வகையில் ஏற்படுத்திக் கொண்ட புள் எழுப்புதல், நீரில் கல்லெறிதல் போன்ற நிகழ்ச்சிகள் வேறு ஏதோ காரணத்தால் நிகழ்ந்துவிட, அப்போது குறியிடத்திற்கு வந்த தலைவி தலைவனைக் காணாது மீண்டுவிட, அதுபோலவே தலைவனும் அக் குறிகளைச் செய்தபோது தலைவி வாராமையால் தானும் துயரமுற்றுச் செல்லுதல் அல்ல குறிப்படுதலாம்.

2. வருந்தொழிற் கருமை - தலைவன் இரவுக்குறி வருதற்கு இடையூறு நேர்தல். (ந. அ. 159)

இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -

{Entry: G07__302}

“விண்ணகத்தை விளக்குதல் விரும்பி இப்பெருந்தோள் கொடிச்சி நம்மினின்று பிரிவாளோ? பிரியமாட்டாள். வானம் சூடியுள்ள திலகம் போல, இவள்நுதல் போன்ற பிறையை ஆண்டும் காண்போம்; ஈண்டும் இவளது சிறு நுதலைக் காண்போம்” என்றாற் போல, இரவுக்குறியில் தலைவியைக் கூடிய தலைவன் மகிழ்ந்து கூறல்.

இச்சூத்திரத்துள் ‘அவட்பெற்று மலிதல்’ என்றதற்கு இரட்டுற மொழிதலால் கொள்ளப்பட்ட கூற்று இது.

(தொ. பொ. 103 நச்.)

இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -

{Entry: G07__303}

“அந்தோ, பாவம்! இந்த விண்மீன்கள் என்தலைவியின் முகத்தையும் வானத்துச் சந்திரனையும் பிரித்து அறிய மாட் டாமல் நிலை கலங்கித் திரிகின்றன” என்று தலைவன் தலைவி வனப்பைப் புகழ்தல். (குறள் 1116)

இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -

{Entry: G07__304}

தலைவியின் பேரழகு தெய்வமகளிர் அழகினை நிகர்ப்பது ஆதலின், தான் அவளைத் தெய்வமகளோ என்று ஐயுற்ற செய்தியைப் பாங்கனிடம் தலைவன் கூறுதல்.

(திணைமொழி. 49)

இஃது இச்சூத்திரத்துப் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதால் கொள்ளப்பட்ட கிளவிகளுள் ஒன்று. (தொ. பொ. 103 நச்.)

இரவுக்குறிக் கூற்றுகள் -

{Entry: G07__305}

1. இரவுக்குறி வேண்டல், 2. வழியருமை கூறி மறுத்தல், 3. நின்று நெஞ்சுடைதல், 4. இரவுக்குறி நேர்தல். 5. உட்கோள் வினாதல், 6. உட்கொண்டு வினாதல், 7. குறியிடம் கூறல், 8. இரவுக்குறி ஏற்பித்தல், 9. இர வரவுரைத்தல், 10. ஏதம் கூறி மறுத்தல், 11. குறை நேர்தல், 12. குறை நேர்ந்தமை கூறல், 13. வரவுணர்ந்துரைத்தல், 14. தாய் துயிலறிதல், 15. துயிலெடுத்துச் சேறல், 16. இடத்துய்த்து நீங்கல், 17. தளர்வகன்றுரைத்தல், 18. மருங்கணைதல், 19. முகங் கண்டு மகிழ்தல், 20. பள்ளியிடத்து உய்த்தல், 21. வரவு விலக்கல், 22. ஆற்றாதுரைத்தல், 23. இரக்கம் கூறி வரைவு கடாதல், 24. நிலவு வெளிப்பட வருந்தல், 25. அல்லகுறி அறிவித்தல், 26. கடலிடை வைத்துத் துயர் அறிவித் தல். 27. காம மிக்க கழிபடர்கிளவி, 28. காப்புச் சிறைமிக்க கழிபடர்கிளவி, 29. ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி, 30. தன்னுட் கையாறு எய்திடு கிளவி, 31. நிலை கண்டுரைத்தல், 32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல், 33. அலர் அறிவுறுத் தல் - என்பன முப்பத்து மூன்றும் திருக்கோவையார் சுட்டும் இரவுக்குறிக் கூற்றுக்கள். (கோவை. 148 - 180 சூ. 14)

இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

{Entry: G07__306}

“மலையனது முள்ளூர்க் கானத்தின்கண் நள்ளென் யாமத்தே நம்மை நண்ணுற வந்து நம்மவளாயுள்ளாள்; இரவின்கண் யாம் வேய்ந்த மலர்களை யுதிர்த்துக் கூந்தலை எண்ணெய்பூசி நீவி வைகறைக்கண் நம்மொடு மேவாத முகத்தளாய்த் தன்னைச் சார்ந்தவரிடையேயும் உள்ளாள். ஆதலின் நம் காதலவள் இரண்டு திறமும் ஒருங்கே அறிந்த கள்வி!” (குறுந். 312) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இச்சூத்திரத்துள், ‘சொல்லவட் சார்த்திப் புல்லிய வகையி னும்’ என்புழி, ‘வகை’ என்றதனான் இக்கூற்றுத் தழுவிக் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 102 நச்.)

இரவுக்குறிவகை -

{Entry: G07__307}

களவியலுள் பன்னிரண்டாவதாக நிகழும் இரவுக்குறி என்னும் தொகுதி ஒன்பது வகைத்தாம். இரவுக்குறியாவது தலைவன் தலைவியை இரவின்கண் கண்டு மருவலுறும் இடம். இது தலைவி இல்லத்திற்கு அணிமையானது.

வேண்டல் : தலைவன் தோழியிடம் இரவுக்குறி வேண்ட, அவள் தலைவியிடம் கேட்டல்.

மறுத்தல் : தலைவன் வேண்டியதைத் தோழியும் தலைவி யும் மறுத்தல்.

உடன்படல் : தோழி தலைவன் கூறியதையும், தலைவி தோழி கூறியதையும் ஏற்று உடன்படுதல்.

கூட்டல் : பாங்கி தலைவியை அழைத்துச் சென்று குறியிடத்து விடுத்தல்.

கூடல் : தலைவன் தலைவியை இரவுக்குறியில் கூடுதல்.

பாராட்டல் : தலைவன் தலைவியைப் புகழ்தலும், தோழி தலைவன் தந்த கையுறையைப் புகழ்தலும்.

பாங்கியிற்

கூட்டல் : தலைவன் தலைவியைப் பாங்கியுடன் சேர்ப்பித் தல்.

உயங் கல் : இரவுக்குறிக்கண் தலைவன் வரும் வழியிடை யுள்ள துன்பங்களை நினைந்து தலைவி வருந்துதல்.

நீங்கல் : தோழி தலைவியைக் குறியிடத்துய்த்து நீங்குதலும், தலைவன் தலைவியைக் கூடிநீங்குதலும் என இவை. (ந. அ. 157)

இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -

{Entry: G07__308}

“நள்ளிரவில் பெய்த மழையால் மறுநாளிலும் அருவி மலைக் குகைகளில் ஒலிக்கும் மலைநாடனே! காமம் நீங்குவதாக இருப்பினும் நின்னிடத்து எமக்குள்ள நட்பு நீங்காது” (குறுந். 42) என்று தோழி தலைவனிடம் கூறிய கூற்றில், ‘காமம் நீங்குவதாயினும்’ என்றதனால் மெய்யுறு புணர்ச்சிக்கு வாய்ப்பான இரவுக்குறி கிட்டாது என்பதனையும், முதல் நாள் பெய்த மழை நின்ற பின்னும் மறுநாளும் அருவி ஓடிவருவது போலப் புணர்ச்சி நீங்கினும் அன்பு அறாது என்பதனையும் சுட்டியவாறு. (குறுந். 42)

இரவுத்தலைச் சேறல் -

{Entry: G07__309}

பெருந்திணைத் தலைவி தலைவனைக் காண விழைந்து இருள் நெறியே செல்லுதல்.

“காமமே துணையாக என்னைத் தூண்டவும் செய்தலால், எனது உள்ளத்து வெம்மை அகல, என்காதலனைத் தழுவ விரும்பி இருளில் செல்லலுற்றேன்; வானம் மின்னிமின்னி எனக்கு வழி காட்டுக” என்ற தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலைக்கண் பெருந்திணையில் ஒரு பகுதியான பெண்பாற் கூற்றில் ஒரு கிளவி. (பு. வெ. மா. 16-6)

இரவு நிலை உணர்த்தல் -

{Entry: G07__310}

ஒருவழித் தணந்த தலைவனை அன்றிரவு கழிந்த மறுநாள் காலை தவறாது மீண்டு வருமாறு தோழி கூறல்.

“தலைவ! ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச்சக்கரத் தேரை இருகாலும் இல்லாப் பாகன் இயக்க ஏழு கடல்களையும் எட்டுக் குன்றங்களையும் சுற்றிப் பின் மீண்டும் கிழக்கில் உதித்துக் கதிரவன் தோன்றும் நேரத்தே நீ மீண்டு வந்து விடுக!” (அம்பிகா. 283) என்று தோழி தலைவனிடம் கூறல்.

இஃது ஒருவழித்தணத்தல் என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையில் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

இரவு நீடு பருவரல் -

{Entry: G07__311}

இராப்பொழுது நீளுதலால் கைக்கிளைத் தலைவி உற்ற துன்பம். “இரவே! ஒரு பெண்ணை இவ்வாறு கொடுமைப் படுத்தல் நினக்குத் தகுமோ? இம்முழுமதியையும் வேறு விளங்கச் செய்து என்னைக் கொல்லுதி” என்பது போன்ற தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பெண்பாற் கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கிளவி. (பு. வெ. மா. 15-8)

இரவும் பகலும் வரவு விலக்கல் -

{Entry: G07__312}

வரையாது வந்தொழுகும் தலைமகனிடம் இரவு உடன் பட்டாள் போலப் பகல்வரல் விலக்கிய தோழி, “நீ பகலில் வரின் அலர்மிகுதியால் எங்கட்குப் பழி வரும்; இரவு வரின் காவல் மிகுதியால் யாங்கள் நின்னை எதிர்ப்படல் இயலாது” என்று கூறித் தலைவியை மணக்குமாறு குறிப்பாக வற்புறுத் தல்.

இதனை ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண் ‘பகலி லும் இரவினும் அகலிவண் என்றல்’ என்று கூறுவர்.

இது ‘வரைவு முடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 261)

இரவு வரவு உரைத்தல் -

{Entry: G07__313}

தலைவற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவியிடம், “வேட்கை மிகுதியான் தலைவன் யானைகள் அஞ்சுமாறு சிங்கங்கள் திரியும் மலைச்சாரல்களைக் கடந்து நின்னைக் காண வருதலை விழைகிறான். யாம் யாது செய்வோம்?” என்றாற் போலத் தலைவன் இரவுக்குறியிடத்து வருவதைத் தெரிவித்தல். (கோவை. 156)

இதனைப் ‘பாங்கி இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்
தல்’ என்பர்.

இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -

{Entry: G07__314}

அயலார் ஐயுறாதவாறு மறை காக்கவே, இவ்வாறு பகல் இரவுக்குறிகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

“தலைவ! காடுகளில் வேங்கை யானையைத் தாக்கித் திரியும் இரவில் நீ தனித்து வருவது கண்டு எம்மனம் பெரிதும் வருந்துகின்றது. நாளை யானும் தலைவியும் தினைப்புனம் காவலில் இருக்கின்றோம். காந்தள் மலர்ந்துள்ள அருவியின் பக்கத்தே இவளை நீ பெற்று மகிழ்க” (அகநா. 92) என்று தோழி கூறியது.

இதனை ‘ஏதம் கூறி இர(வு) வரவு விலக்கல்’ என்பதன்கண் அடக்குவர் (கோவை. 253). இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 166)

இரவு வலியுறுத்தல் -

{Entry: G07__315}

“உயிர்த்தோழியிடம் சென்று குறை இரந்து வற்புறுத்து வேன்” என்று தலைவன் துணிதல்.

இதனைக் ‘குறையுறத் துணிதல்’ என்னும் திருக்கோவை
யார் (51). இது களவியலுள் ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (ந. அ. 140)

இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் -

{Entry: G07__316}

கற்புக் காலத்தில் தலைவன் தலைவியிடம் கூறாது பொருள் வயின் பிரிய, தலைவனுடைய பிரிவு கேட்ட தலைவி ஆற்றாது வருந்தி மெலிதலைக் கண்ட தோழி, “கதிரவன் தோன்றப் பகல் வருவது எப்பொழுது? அதுவரையில் தலைவியை ஆற்றுவித்தல் யாங்கனம்?” எனத் தலைவி இரவெல்லாம் தலைவன்பிரிவால் அடைந்த துயரத்திற்குத் தான் இரக்க முற்றுப் பகல் வரும்வரை இரவில் அவளை ஆற்றுவித்தலின் அருமை பற்றித் தன்னுள் அழிந்து கூறுதல்.

இது ‘பொருள்வயின் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 339)

இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் -

{Entry: G07__317}

இரவுக்குறிக்கண் தலைவனை எதிர்ப்பட மாட்டாது வருந்தி நின்ற தலைவி, “இன்றை இரவெல்லாம் என்னைப் போன்று நீயும் துயரமுற்றுக் கலங்கித் தெளிந்தாயல்லை; என்னைப் போல நின்னையும் பிரிந்து சென்றார் உளரோ?” என்று தானுற்ற துன்பத்தைக் கடலொடு சேர்த்துக் கூறுதல்.

இஃது இரவுக்குறி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 179)

இராக்கதம் -

{Entry: G07__318}

வலிநிலை; அது காண்க.

இருத்தல்

{Entry: G07__319}

தலைவியிடம் தலைவன் தன்பிரிவு பற்றி உணர்த்தியவழியும் தோழி தலைவன்பிரிவுபற்றி உணர்த்தியவழியும் தலைவன் பிரியான் என்று இருத்தலும், தலைவன் பிரிந்துழி அவன் மீண்டு வாராதபோது அவன் குறித்த பருவம் வந்தவழியும் அது தலைவன் குறித்த பருவம் அன்று என்று தானே கூறலும், பருவம் வருமளவும் தான் ஆற்றியிருந்த செய்தியைத் தலைவி மீண்டு வந்த தலைவனிடம் கூறலும் போல்வன இருத்தலாம். இது முல்லை என்னும் ஒழுக்கமாம். தலைவன் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் வருவதற்குமுன் தலைவி வருந்திக் கூறுவன முல்லை சான்ற கற்பு அன்மையின் பாலையாம். இது கற்புக் காலத்திற்கே உரியது. (தொ. பொ. 14 நச்.)

இருத்தல் நிமித்தம் -

{Entry: G07__320}

பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவம் தொடங்கியும் தலைவன் வாராதது குறித்துத் தோழி ஆற்றாது கூறுவனவும், பருவம் அன்று என்று தலைவியை வற்புறுத்துவனவும், தலைவன் விரைவில் வருவான் என்று வற்புறுத்துவனவும், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைப்பனவும், அவை போல்வனவும் இருத்தல் என்னும் உரிப்பொருள் நிகழ்தற்குரிய காரணமும் சூழ்நிலையும் ஆம். (தொ. பொ. 14 நச்.)

இருது -

{Entry: G07__321}

இரண்டு திங்கட் காலமாகிய பெரும்பொழுது ‘இருது இளவேனில் எறிகதிர் இடபத்து’ (மணி. 11 : 40)

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என இருது ஆறாம். (வீ. சோ. 181 உரை)

இருது நுகர்வு -

{Entry: G07__322}

கார் முதலிய பெரும் பொழுதிற்குரிய நுகர்ச்சி. (சீவக. 2677)

இருப்பு -

{Entry: G07__323}

இருத்தல் என்னும் உரிப்பொருள் (சாமி. 80)

இருபண்பு கூறல் -

{Entry: G07__324}

பண்பு பாராட்டல் (சாமி. 89.)

இருபதமும் வேண்டல் -

{Entry: G07__325}

தலைவன் இறைவன் இருதிருவடிகளையும் வழிபடல். இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியைக் கூடி அவளைத் தெளிவுடன் விடுத்த தலைவன், தலைவியை மீண்டும் தான் கூடுதற்கு வாய்ப்புத் தருமாறு அவளைக் கூட்டிவைத்த தெய்வத்தின் திருவடியிரண்டனையும் வேண்டுதல்.

இஃது இயற்கைப்புணர்ச்சி என்னும் தொகுதிக்கண் அமைந்த இறுதிக் கூற்று. (மா. அகப். 21)

இருபால் குடிப்பொருள் -

{Entry: G07__326}

தலைவனும் தலைவியும் தோன்றிய இருவகைக் குடியும், பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவா- யில், நிறை, அருள், உணர்வு, திரு - என்னும் பத்தும் பொருத்த மாக வருதல். இதனைச் செவிலி உளங்கொண்டு அறத்தொடு நிற்பாள். (தொ. பொ. 115 நச்.)

இருபாற் பெருந்திணைக் கூற்றுக்கள் -

{Entry: G07__327}

1. சீர் செலவு அழுங்கல், 2) செழுமடலூர்தல், (3) தூது இடையாடல், (4) துயர் அவற்கு உரைத்தல், (5) கண்டு கை சோர்தல், (6) பருவம் மயங்கல், (7) ஆண்பாற் கிளவி,
(8) பெண்பாற் கிளவி, (9) தேங்கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு, 10) அரிவைக்கு அவள் துணை பாண் வரவு உரைத்தல், 11) பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல், 12) விறலி கேட்பத் தோழி கூறல், 13) வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல், 14) பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல்,
15) பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல், 16) குற்றிசை,
17) குறுங்கலி என்பன.

இக்கூற்றுப் பதினேழும் தலைவன் தலைவி என்னும் இருவரிடையேயும் நிகழ்ந்த பொருந்தாக் காமச்செயல் பற்றியன ஆதலின், அன்பின் ஐந்திணைப் புறத்தவாய்ப் புறத்திணை ஆயின. (பு. வெ. மா. 17)

`இருபெயர் மூன்றும் உரிய’ வாதல் -

{Entry: G07__328}

இருபெயர் - உவமைப் பெயரும் உவமிக்கும் பெயரும்; மூன்றும் உரிய ஆதல் - தொழிலும் பண்பும் பயனும் ஆகிய மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாமாறு உவமத்தை அமைத்தல். அஃதாவது உவமைப் பொருள் உபமேயமாக மயங்கிக் கொள்ளுதல்.

எ-டு :

கொடியைத் தலைவியின் இடையெனவும், காந்தளைக் கை

எனவும் கருவிளையைக் கண் எனவும் மயங்கிக் கொள்ளல்.

(தொ. பொ. 194 இள.)

அஃறிணைக்குரிய ஒன்றன்பால் பலவின்பால் என்னும் இரண்டன்கண்ணும் உயர்திணைக்குரிய ஆண் பெண் பலர் என்னும் முப்பாற் செய்திகளை ஏற்றி, நெஞ்சம் முதலியவற்றை உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் கூறுதல் போல்வன. (196 நச்.)

இருவகைக் கற்பினும் தலைவன் புணர்ச்சி -

{Entry: G07__329}

களவின்வழி வந்த கற்பு, களவின்வழி வாராக் கற்பு என்னும் இருவகைக் கற்பின்கண்ணும் தலைவனுக்குக் காதற்பரத்தை யொடு களவுப் புணர்ச்சியும், காமக்கிழத்தியும் பின்னர் மணந்த தலைவியும் என்ற இவர்களொடு வதுவைப் புணர்ச்சியும் நிகழும். (ந. அ. 58)

இருவகைக் குறி பிழைத்தல் -

{Entry: G07__330}

பகற்குறியும் இரவுக்குறியும் தவறுதல். குறி பிழைத்தலாவது புனல் ஒலிப்படுதலும், புள் எழுப்புதலும் முதலியன. குறியெனக் குறித்த நிகழ்ச்சி தலைவனான் அன்றி வேறொரு காரணத்தான் நிகழ்ந்துழி, அதனைக் குறி என நினைந்து சென்று அஃது அவன் செய்த குறி அன்மையின் தலைவியும் தோழியும் அகன்றொழிதல். (தொ. பொ. 107 நச்.)

இருவகைப் பாங்கர் -

{Entry: G07__331}

தலைவனுக்குப் பார்ப்பனப்பாங்கன் வேளாளப்பாங்கன் என இருவகைப் பாங்கர் உளர். (ந. அ. 100, 101)

இருவகைப் பிரிவு -

{Entry: G07__332}

தலைவன் தலைவியைப் பிரிதலும், தலைவியை உடன் கொண்டு அவள்உறவினராகிய தோழி முதலியோரைப் பிரிதலும் பாலைத்திணைக்குரிய பொருளாகும். (தொ. பொ. 13 இள)

நால்வகை வருணத்தார்க்கும் நடந்தும் வண்டி வாயிலாகவும் பிரிந்து செல்லுதற்கும், அந்தணர் அல்லாதார்க்கு மரக்கலத் தில் பிரிந்து செல்லுதற்கும் பனிக்காலம் சிறந்தது. (11 நச்.)

காலிற் பிரிவு - நிலத்து வழியாகத் தேர் முதலியவற்றிற் பிரிந்து செல்லுதல்.

கலத்திற் பிரிவு - கடல் வழியாகக் கப்பலில் பிரிந்து செல்லுதல். (11 குழ.)

இருவகைப்பிரிவு வேனிற்பிரிவும் பின்பனிப் பிரிவும் என்பர் (பாரதி 11).

காலினால் நடந்து செல்லுதல், மரக்கலத்தில் செல்லுதல், வண்டி முதலிய ஊர்திகளிற் செல்லுதல் எனப் பிரிவினை மூன்றாக்குவர் பின்னூலோர் (ந.அ. 83, இ.வி. 451) . அந்தணர் கலத்திற் செல்லுதல் கூடாது என்பர் (ந.அ. 84, இ.வி. 452)

இருவயின் ஒத்தல் (1) -

{Entry: G07__333}

தலைவன் தலைவியைக் கண்ணுற்று அவள் குறிப்பறிந்து, அவளைப் புணர விரும்பிப் புணராதமுன் நின்ற வேட்கை புணர்ந்த பின்னும் அங்ஙனமே குறைவற நிறைந்து நிற்றல் கண்டு, தலைமகளை மகிழ்ந்து கூறல்.

இதனை ‘நலம் பாராட்டல்’ என்றும் கூறுப (ந. அ. 125 இ. வி. 493) இஃது இயற்கைப் புணர்ச்சி என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 9.)

இருவயின் ஒத்தல் (2) -

{Entry: G07__334}

தலைவன்தலைவியரிடைப் புணராத முன் நின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்றல்.

உண்ணாதமுன் நின்ற வேட்கை உண்ட பின்னரும் அப்பெற் றியே நிற்குமாயின் உண்டதனாற் பயன் இல்லாதவாறு போலப் புணராதமுன் நின்ற வேட்கை புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்குமாயின் புணர்ச்சியால் பயன் இல்லை எனின், புணராத முன் நின்ற வேட்கை புணர்ச்சியுள் குறை படும்; அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கண் தம்முள் பெற்ற செய்குணங்களான் ஆய அன்பு நிறைவிக்கும்; பின்னும் முன் னின்ற அன்பு கூட்டத்தில் குறைபடும்; அதற்கு இடையின் றியே குணத்தினானாய அன்பு நிறைவிக்கும்; நிறைவித்த பின்னர் முன்னின்ற அன்பு கூட்டத்தில் குறையாது எஞ்ஞான் றும் ஒருபெற்றியேயாய் நிற்றலே இருவயின் ஒத்தலாம். (இறை. அ.உ.)

இருவர்காதலையும் அறிவித்தல் -

{Entry: G07__335}

மணமனை சென்று மீண்ட செவிலி நற்றாயிடம் தலைவன் தலைவியர் ஒருவர்பால் மற்றவர் தீராக் காதலும் தெவிட்டா இன்பமும் பெற்று மகிழ்கின்றவாற்றைக் கூறல்.

“தலைவன் அரசன் பணியாக வெளியே ஏகினும் அவன்தான் தன் இல்லத்தில் வந்து தங்குமேயன்றி வேற்றிடத்தே தங்குத லில்லை. தலைவியும் தலைவனைத் தவிர வேற்றுத் தெய்வம் எதனையும் தெய்வமாகக் கருதுவதில்லை”. (கோவை. 306) என்று செவிலி நற்றாயிடம் கூறல்.

இதனைத் திருக்கோவையார் ‘மருவுதல் உரைத்தல்’ என்னும். (306). கற்பியலுள் இஃது ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 203)

இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -

{Entry: G07__336}

இயற்கைப்புணர்ச்சியின் பின்னர்த் தலைவிக்கு ஏற்பட்ட இவ்வேறுபாடு தெய்வத்தான் ஆயிற்றா அன்றி மற்றொரு வாற்றான் ஆயிற்றா என்று முன்னுற உணர்ந்தும், தலைவன் தழையும் கண்ணியும் கொண்டு பின்நிற்றலைக் குறைவாகக் கருதாமல் இரந்து பின்நின்றவழி, “இவன் இரந்து பின்னிற் பது எதற்காக?” எனக் குறையுற உணர்ந்தும் ஐய உணர்வுடன் இருந்த தோழி, தானும் தலைவியும் இருந்த இடத்துத் தலைவன் வந்து பதியும் பெயரும் பிறவும் வினாயவழி, முன்னுறத் தலைவியைப் பற்றியும் குறையுறத் தலைவனைப் பற்றியும் கொண்ட ஐயவுணர்வு நீங்கி, “இவள் வேறுபட்டது இவனாற்போலும்; இவன் குறையிரப்பது இவளைப் போலும்” என்று, தானும் தலைவியும் உடன் இருந்தபோது வந்த தலைவன் வருகையால் துணிவாக உணர்தல். (இறை. அ. 7)

இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -

{Entry: G07__337}

ஐயுறுதல், அறிவுநாடல் என்னும் இரண்டு கூற்றுக்களையே இத்தொகுதி உடையது. (கோவை. 60, 61)

இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -

{Entry: G07__338}

“இவள் தந்தையது மலைப்பக்கத்தே பைஞ்சுனைக்கண் பூத்த பெரிய குவளையும் இவள் கண்போல மலர்தல் அரிது; இவள் போலும் சாயலை உடைத்தாதல் மயிலுக்கும் அரிது” (ஐங். 299) எனவும்,

“முள் போன்ற பற்களையும், அமுதம் ஊறும் செவ்வாயினை யும், அகிலும் சந்தனமும் கமழும் கூந்தலையும், பெரிய அமர்த்த மழைக்கண்களையுமுடைய கொடிச்சியது முறுவ லொடு மயங்கிய அந்நோக்கினை எண்ணி உள்ளத்தே காண்பேன்” (குறுந். 286) எனவும் வரும் தலைவன் கூற்றுப் போல்வன. (தொ. பொ. 102 நச்.)

இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -

{Entry: G07__339}

“கடல்அலைகள் கொழித்த மணல்மேட்டிலே கழிமுள்ளிச் செடி மலர் மணம் கமழும் தொண்டி என்ற ஊரினைப் போன்ற இயற்கை வனப்புடைய தலைவி தோளை விரும்பு பவர்கள் தம்மாட்டுத் தவறொன்றில்லையாயினும் ஒருதலை யாக நடுங்குவார்கள்” என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறல். (ஐங். 177)

இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -

{Entry: G07__340}

இராப்பொழுதில் தன்னுடைய பிரிவாற்றாமை மிகுந்து செய்யும் துன்பத்திற்கு அஞ்சிய தலைவி தோழியரிடம் தன்னைத் தலைவனுக்கு விரைவில் மணம் செய்து கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டல்.

“பகல் (-ஞாயிறு) என்னும் ஒரேயோர் யானை மலையிற் சென்று மறைந்தவுடனேயே, அரிய இரவு என்னும் யானைகள் பலவும் கூட்டமாக எழுந்து வந்து என்னை வருத்த நெருங்கிவிட்டன; என் மணாளனுடைய நறிய துழாய் மாலையை நான் எனது குழலிற் சூடி உயிர் தரித்திருக்கும் வகை செய்து என் அன்னைமார் என்னைக் காப்பது எப்போதோ?“

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 40)

இல்லது உணர்த்தல் -

{Entry: G07__341}

அஃதாவது இல்லாததைக் கூறுதல். வரையாது இரவுக்குறிக்கு வந்துகொண்டிருக்கும் தலைவனிடம் தோழி, “தலைவி நேற்றுப் பொழிலில், ஆண்குரங்கு தனது பெண்குரங்கின் வாயில் மாங்கனியைத் தேனில் தோய்த்து உண்ணக் கொடுக்கும் காட்சியைக் கண் வாங்காது பார்த்துக்கொண்டு இருந்தாள்“(கோவை. 257) என்றாற் போலப் படைத்து மொழிந்து தலைவியின் இல்லற வேட்கையை வெளிப்படுத் தித் தலைவனை வரைவு கடாயது.

இது ‘வரைவு கடாவுதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (க. கா. பக். 111)

இல்லவை நகுதல் -

{Entry: G07__342}

பெருந்திணைத் தலைவி தலைவனுடன் கூடி மகிழ்ந்தபோது இல்லாத ஒன்றைத் தானே சொல்லி நகைத்தல்.

“நீ பரத்தையரைப் புணர்ந்து தழுவியதால் உன் மலர் மாலைகள் வாடிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்த்தால் எனக்குள் சிரிப்பு வருகிறது. ஆயின் அதுபற்றி நான் நின்பால் ஊடல் செய்யேன்; என் காமநோய் பொறுத்தல் அரிது.” என்பது போன்ற கூற்று. (பு.வெ.மா. 312)

‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -

{Entry: G07__343}

கற்புக்காலத்துப் பிரிந்து மீண்டு வரும் தலைவன் தன்னைப் பிரிந்து வாடியிருக்கும் தலைவியது நிலையைத் தன் உள்ளத் தோடு உசாவி அறிதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

இல்வயிற் செறித்தமை சொல்லல் -

{Entry: G07__344}

தலைவி தோழியிடம் தாயர் தன்னை இல்லத்துள்ளேயே இருக்குமாறு செய்துவிட்டமையைச் சொல்லுதல்.

“தோழி! என் மெய்வேறுபாடு, யான் உள்ளத்தே அழுங்கி யுள்ளமை போன்றவை கண்டும், ஊரார் பேசும் அலரைக் கேட்டும் என்தாய் உள்ளம் வேறுபட்டு என்னை மனை யகத்தே காவல் செய்தனள்” (அம்பிகா. 344) என்றாற் போன்ற தலைவி கூற்று. இஃது அறத்தொடு நிற்றல் என்னும் தொகுதிக் கண்ணது. (இ.வி.பொ. 161)

இல்வாழ்க்கை வகை நான்கு -

{Entry: G07__345}

கற்பியல் தொகுதிகளுள் முதலாவதாகிய இல்வாழ்க்கை நான்கு கூற்றினதாம்.

1. கிழவோன் மகிழ்ச்சி

தலைவன் தனது இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்ளுதல். இது அவன் தலைவி முன்னிலையில் தோழியைப் புகழ்வதால் புலப்படும்.

2. கிழத்தி மகிழ்ச்சி

இல்லறம் தொடங்கி வாழும் தலைவியது மகிழ்ச்சி. இது வரையும் நாள்காறும் தான் வருந்தாமல் இருந்ததை அவள் காரணம் காட்டித் தோழிக்கு உரைத்தலால் புலப்படும்.

3. பாங்கி மகிழ்ச்சி

தோழியது மகிழ்ச்சி. இஃது இவள் தலைவனையும் தலைவியையும் வரையும் நாள்வரை ஆற்றியிருந்தமை பற்றிக் கேட்டறிதலாலும், மணமனைக்கு வந்த செவிலியிடத்தே தலைவன் தலைவியரின் அன்பின் ஆழத்தைச் சொல்லி அவர்களது இல்லறத்தைப் புகழ்தலாலும் புலப்படும்.

4. செவிலி மகிழ்ச்சி

மணமனை வந்து தன்மகள் வாழும் உயரிய செல்வ நிலையைச் செவிலி கண்டு தான் மகிழ்ந்து, அதனை நற்றாயிடம் கூறும் திறத்தினால் இது புலப்படும். (ந. அ. 202)

இலக்கணம் -

{Entry: G07__346}

அகப்பொருள் உரை 27 இல் ஒன்று. (வீ.சோ. 91) சட்டகம் முதலிய அகப்பொருள் உரைகளுக்கெல்லாம் இலக்கணம் சொல்லிக் காட்டுதல். (96 உரை)

இலங்கிழை உணர்தல் -

{Entry: G07__347}

பாங்கற் கூட்டத்து இறுதியில், அறிவும் நிறையும் மேலோங் கப்பட்ட நிலையில் தலைவன் களவு ஒழுக்கத்தை அதனொடு தவிர்த்து இனித் தன்னை முறையின் மணந்த பின்னரே கூடுவதாகக் கூறிய அவனது பெருந்தன்மையைத் தலைவி உணர்தல். (குறிஞ்சிநடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

{Entry: G07__348}

“இச்சிறிய நல்ல ஊர், உப்பங்கழிகளிலுள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியுமாறு அலைத்துளியொடு பொருந்தி, பிரிந்திருப்போர் செயலற்று வருந்துமாறு வாடைக் காற்றி னால் துன்பத்தைத் தரும் சிலநாள்களை யுடையது (அஃதாவது தலைவி துன்பத்தைத் தாங்கி வாடைக்கு வருந்திச் சிலநாள் களே உயிர் வாழ்தல் கூடும்.)” என்று கூறி, களவு தவிர்த்து விரைவின் தலைவன் வரைந்து கொள்ளல் வேண்டும் என்று தோழி தலைவன் சிறப்புறத்தானாகக் குறிப்பில் பெறப்படு வித்தவாறு. (குறுந். 55)

“இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -

{Entry: G07__349}

“கண்ணாகிய குவளைமலர், பாதமாகிய தண்ணெனும் தடமலர்த் தாமரை, நகில்களாகிய கோங்கரும்பு, இடை யாகிய நுடங்கும் மின்னல் இவற்றையுடைய பல்லுருவின் காண்டகு கமழ் கொடியாகிய இவ்வணங்குபோலும், என் ஆண்டகையாம் தலைவனது அறிவைத் தொலைத்தது!” என்று பாங்கன் வியந்து ஐயுற்றவாறு போல்வன.

இச்சூத்திரத்துள் ‘குற்றம் காட்டிய’ என்றதனால், பாங்கற் கூட்டத்திற்குரிய கூற்றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் தழுவப்பட்டன. அவற்றுள் ஒரு கூற்றே இது. (தொ. பொ. 102 நச்.)

“இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

{Entry: G07__350}

“இவ்வழகியை நான் தழுவிக்கொள்ளும் இன்பம், தமது இல்லில் இருந்து இல்லறம் நடத்தித் தாம் தேடிய பொரு ளால் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் ஆகியோர்க் குப் பகுத்து அளித்துத் தமது பங்கினைத் தாமுண்ணும் இன்பத்தை ஒக்கும்” என்று தலைவன் கூறுவது. (குறள் 1107)

‘இழிந்துழி இழிவே சுட்டல்’ -

{Entry: G07__351}

தலைவியது வடிவமும் அவளை எதிர்ப்பட்ட இடமும் தக்கன அல்லவாயின் அவள் தாழ்வையே கருதி உணரப்படும்.

(தொ. பொ. 91 இள.)

தலைவனின் இழிந்தவளாகிய தலைவிக்குத் தலைவனைப் பற்றி முருகனோ இயக்கனோ மகனோ என்று ஐயம் நிகழு மாயின் அவ்வையத்தை நீக்கியுணரக் கருவியிலள் ஆதலின் அவளுக்கு ஏற்படும் ஐயம் இன்பத்திற்கு இழிவையே தரும். (94 நச்.)

இழிந்தோர்க்குரிய பிரிவுகள் -

{Entry: G07__352}

நான்கு குலத்தவர்க்கும், இழிந்தவர் எனப்படும் நிலமக்களுள் தலைமக்களாவார்க்கும், அறப்புறங்காவல் பிரிவு - பொருள் வயின்பிரிவு - துணைவயின் பிரிவு - பரத்தையிற் பிரிவு - என்ற பிரிவுகள் உரிமையுடையன. (ந. அ. 79)

இளநாள் -

{Entry: G07__353}

இளவேனில்; ‘இகழுநர் இகழா இளநாள் அமையம்’

(அகநா. 25-12)

‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -

{Entry: G07__354}

நற்றாய் தன்மகள் தலைவனுடன் சென்றுவிட்டதை அறிந்த பின் ‘இவள் இன்னும் பேதைமை மாறாத குழந்தையாய் உள்ளாளே; எங்ஙனம் இதற்குத் துணிந்தாள்?’ என்று கூறித் துயர் உறுதல்.

“நீ விளையாட வைத்துக்கொண்டிருக்கும் பதுமையினை ‘அழாதே’ என்று சொல்லி அரும்பாத உன் நகிலை அதற்கு ஊட்டும் என்பேதைக் குழந்தாய்! என்னை விட்டுப் போக எவ்வாறு துணிந்தாய்?” (தஞ்சை கோ. 337) என்பது போன்ற நற்றாய் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘பருவம் நினைந்து கவறல்’ (233) என்னும்.

இதுவரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 186)

இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -

{Entry: G07__355}

தலைவனோ தலைவியோ இருவருமோ இளமைப்பருவம் நீங்கிய பின்னும் காம நுகர்ச்சியில் ஈடுபட்டிருப்பது பற்றிக் கண்டோர் கூறுவது.

‘அதிரும் புனலூரற்கு ஆரமிர்தம் அன்றோ,

முதிரும் முலையார் முயக்கு’ (பு. வெ. மா. 17-13)

இளமையது அருமை ஒன்றாமை -

{Entry: G07__356}

இளமைப்பருவம் சில ஆண்டுகளே நிலைத்திருக்கும் என்ற உணர்ச்சி தலைவனை இன்பத்தின்கண்ணே ஈர்த்தது, வாழ்நாள் சிலவாதலின் அவற்றிற்குள் தலைவியைப் பிரிந்து பொருள் தேடிவரல் வேண்டும் என்ற எண்ணத்தொடு பொருந்தாதிருத்தல். (தொ. பொ. 41 நச்.)

இளைய கலாம் -

{Entry: G07__357}

இஃது உணர்த்த உணரும் ஊடலாம். (ந. அ. 205)

இளையர் -

{Entry: G07__358}

‘இளையோர்’ காண்க. (தொ. பொ. 193 நச்.)

இளையோர் -

{Entry: G07__359}

தலைவனை இரவும் பகலும் நீங்காது அவனுக்குக் கவசம் போன்று இருக்கும் குற்றேவல் நிலையினராகிய சிலர். இவர்களும் வாயில் ஆதற்கு உரியராவர். (ந. அ. 108)

இளையோர் ஆவார் தலைமக்களின் நலம் பேணி மெய்புகு கருவிபோல அவரைக் காத்து அவர் ஏவல்வழி வினைபுரி வோர். பெரும்பான்மையும் இவர் தலைமக்களின் தந்தைக்குக் காமக்கிழத்தி வழிவந்த மக்களாவார்; சிறுபான்மை பிறரு மாவார். (தெ. தற். 29 ச. பால.)

இளையோர்க்கு உரியன -

{Entry: G07__360}

1. தலைவன் தலைவியுடனாயினும் தனித்தாயினும் போக்கு ஒருப்பட்டஇடத்தே அவனுடன் செல்ல வேண்டிய இளையோர் “செல்லும்வழி தண்ணிது, வெய்யது, சேய்த்து, அணித்து” என்றாற் போல ஆற்றது நிலைமை கூறல்.

2. துணிந்து சென்று எடுத்த கருமம் முடிக்குமாறு கூறுதல்,

3. ‘இன்னுழி இன்னது செய்க’ என்று ஏவியக்கால், அதனை முடித்து வந்து கூறுதல்,

4. தலைவன் ஏவலைத் தாம் கேட்டல்,

5. தலைவன் வினவாதவழியும், தலைவிக்காகவாவது சொல்லத் தக்க அறிவுரைகளைத் தலைவனிடம் கூறல்,

6. போகும் பாலைவழிக்கண் கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவற்கும் தலைவிக்கும் உறுதி பயக்குமாறு கூறுதல்.

7. போகும் வழியுள் மாவும் புள்ளும் புணர்ந்து விளை யாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினும் தலைவற்கே யாயினும் காட்டுதலும், ஊறு செய்யும் கொடிய விலங்கு களை அகற்றிக் கூறுதலும்,

8. தலைவன் வருவன் எனத் தலைவிமாட்டுத் தூதாய் வருதல்,

9. தலைவற்குத் தலைவி நிலையை அறிந்து சென்று கூறல்,

10. மீளுங்கால் “விருந்து பெறுவள்கொல்!” எனத் தலைவி நிலை கூறல்,

11. குற்றேவல் செய்து தலைவன்தலைவியரைப் பாதுகாத்தல் - இவையாவும் இளையோர் தொழிலாக உரியன.

(தொ. பொ. 170, 171 நச்.)

இளையோர் கூற்று -

{Entry: G07__361}

தலைவன் போகலுற்ற வழியது நிலையினை ஆய்ந்து அது தண்ணிது வெய்து சேய்த்து அணித்து என்று கூறுதல். துணிவாகச் சென்று வந்து செய்பொருள் முடிக்குமாறு அறிந்து கூறுதல், இன்னவிடத்து இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்து வந்தமை கூறுதல், தலைவன் ஏவலைத் தாம் கேட்டல், தலைவன் வினவாதவிடத்தும் தலைவிக்காகவாயினும் செப்பத்தகுவன தலைவற்குக் கூறுதல், செல்சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய பொருள் களைத் தலைவன்தலைவியர்க்கு உறுதி பயக்குமாறு கூறுதல், ஆண்டு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினும் தலைவற்கேயாயினும் காட்டியும் ஊறு செய்யும் கோண்மாக்களை அகற்றியும் கூறுதல் என் னும் இவையும் இவைபோல்வன பிறவும் (தலைவன் வருவன் எனத் தலைவியிடம் தூதாய் வருதல், அறிந்து சென்று தலைவிக்குத் தலைவன்நிலை உணர்த்தல், மீளுங்கால் விருந்து பெறுகுவள்கொல் எனத் தலைவிநிலை உரைத்தல்) இளையோர்க்குரிய கூற்று ஆம். (தொ. பொ. 170 நச்)

தலைவியைத் தலைவன் வருகைக்கு வாயில் வேண்டுதல், அவளை அவன் வரவு உடன்படுவித்தல், அவள் ஊடலைத் தீர்த்தல், அவள் ஊடல் தீர்ந்தவாற்றைத் தலைவற்கு உணர்த் தல், தலைவன் தலைவியர்க்குக் குற்றேவல் புரிதல், வினை வயிற் பிரிந்தோன் வினையின் மீண்டு வருதலை முன்சென்று தலைவிக்கு உரைத்தல், அவன் வினைத்திறங் களைப் பொருந்த அவட்கு உரைத்தல், வினை வெற்றியுற முடிந்த திறத்தை உரைத்தல், அவன் வரும் வழியியல்பினைக் கூறல், வழியிடைத் தாம் கண்ட காட்சிகளை உரைத்தல் இவை எல்லாம் இளையோர்க்கு உரியன. (ந. அ. 98)

இற்கொண்டேகல் -

{Entry: G07__362}

இரவுக்குறி நிகழ்ந்த புறமனையினின்றும் துயில் கோடற்குரிய அகமனைக்குத் தலைவியைத் தோழி அழைத்துச் செல்லுதல்.

“தலைவி! நாம் குவளைப் பூக்களும் முல்லைப்பூக்களும் கொய்துவிட்டோம். அன்னையின் தீக்கண்கள் உறக்கம் நீங்காமுன் பெண்கள் காவல்புரியும் நம் கடிமனையைச் சென்றடைவோம்” (அம்பிகா. 212) என்று தோழி தலைவி யிடம் கூறி அவளை அழைத்துச் செல்லுதல்.

இது களவியலுள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

இற்செறித்தல் -

{Entry: G07__363}

தலைவியது தோற்றப் பொலிவு கண்டும், அவளைப்பற்றி ஊரவர் குறிப்பாகப் பேசிக்கொள்வதைக் கேட்டும் தலைவி தன் இல்லத்தைவிட்டு விளையாடல் முதலியவற்றிற்குப் புறம் செல்ல இயலாதவாறு செவிலி அவளை இல்லத்திற்குள் ளேயே தங்கச் செய்தல்.

“காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை

பேதை அல்லை; மேதைஅங் குறுமகள்” (அகநா. 7)

என்றாற் போலச் செவிலி கூறி இற்செறிப்பாள்.

இற்செறிப்பு, இற் செறிவு என்பனவும் ஒருபொருள. (ந.அ. 154)

இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல் -

{Entry: G07__364}

பகற்குறிக்கண் தலைவனிடம் தாயச்சம் கூறி வரைவு கடாய தோழி, “எம் அன்னை தலைவியை உற்று நோக்கிப் ‘புறத்தே போய் விளையாடல் வேண்டா’ எனக் கூறினாள்; இனி இல்லத்தேயே தலைவியைச் செறித்து விடுவாள்போலும்” எனத் தலைவியை இற்செறித்தலை அறிவித்து விரைவில் அவளை மணம் செய்து கொள்ளுமாறு தலைவனை வேண்டல்.

இது ‘பகற்குறி’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 133)

இற்பரத்தை -

{Entry: G07__365}

கடனறியும் வாழ்க்கையை உடையளாகித் தலைவனை மணந்து காமக்கிழமை பூண்டு இல்லறம் நடத்தும் காமக் கிழத்தி இற்பரத்தை எனப்படுவாள். (இவள் காதற்பரத்தை யின் மேம்பட்டவள்; தலைவியின் தாழ்ந்தவள்.) (தொ. பொ. 151 நச்.)

சேரிப்பரத்தையர் மகளிராய்த் தலைவனால் வரைந்து கொள்ளப்பட்டு அவனுடன் காதலில் புணரும் காதற் பரத்தை இற்பரத்தையாவாள். (ந. அ. 114, 115)

இறந்ததன் பயன் -

{Entry: G07__366}

தலைவனும் தலைவியும் விதி கூட்டக் கண்டு இயற்கைப் புணர்ச்சியான் ஒன்றுபட்டுக் களவொழுக்கம் பூண்டு, பின் கரணமொடு புணரத் திருமணம் செய்துகொண்டு கற் பொழுக்கம் பூண்டு, இல்லறத்தை நல்லறமாக நடத்திக் காமத்தை மனம் வெறுக்குமளவும் துய்த்தல், வாழ்க்கையில் இதுவரை வாழ்ந்த இல்லறத்தின் பயன். அப்பயனாவது, அறம் பொருள் இன்பம் என்னும் இவற்றினும் சிறந்த வீட் டின்பம் பெறுதற்கு ஏமம் சான்றவற்றை அடிப்படுத்தலாம். அஃதாவது வீட்டின்பத்துள்ள வேட்கையான் முன் பற்றி நின்றவற்றை யெல்லாம் பற்றறத் துறந்து, மெய்யுணர்ந்து வீடுபெற முயறலாம். (தொ. பொ. 192 நச்.)

இறந்த போலக் கிளக்கும் கிளவி -

{Entry: G07__367}

கழிந்துவிட்டது போலக் கூறுதல்.

தலைவன் பிரியும்வழி மீண்டு வருவதாக அவன் குறிப்பிட்ட பருவம் இருதிங்களை எல்லையாக உடையது ஆயினும், அப்பருவம் தொடங்கிய அளவிலேயே அது கழிந்துவிட்டது போலத் தலைவி கூறுதல். இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவள் அறியாமையும் வருத்தமும் மயக்கமும் அக்காலத்திற் குரிய கருப்பொருள் மிகத் தோன்றுதலுமாம். (தொ. பொ. 232 இள.)

தலைவி தலைவன் களவிடைத் தனக்குத் தெரிவியாமல் வாளான் எதிரும் பிரிவின்கண் பிரிந்து மீடற்குக் காலம் தாழ்த்திய விடத்து, மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் தன்வனப்பு மிகுதியும் தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்று. எ-டு : (கலி. 142) (தொ. பொ. 236 நச்.)

இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -

{Entry: G07__368}

தலைவனது பிரிவாற்றாமையால் தலைவி செயலற்றுத் துயர் கூர்ந்து, வினைவயிற் பிரிந்த தலைவன் தான் மீண்டும் வருவதாகக் குறித்த பருவம் கழிந்தன போலக் கலங்கிக் கூறும் கூற்றுக்கள், மடனும் வருத்தமும் மருட்கையும் மிகுதியு மாகிய அந்நான்கு பொருட்கண்ணும் நிகழும் என்ப. மடன் : ஆராய்தலின்றி நிகழும் அறியாமை. வருத்தம் : பிரிவாற்றாமை யால் வரும் துயரம். மருட்கை : ஒன்றை மற்றொன்றாக் கரு தும் மயக்கம். மிகுதி: அப்பருவ காலத்திற்குரிய பொருள்கள் மிக்கனவாகத் தோன்றுதல். (தொ. பொரு. 41 ச. பால)

இறந்துபாடுரைத்தல் -

{Entry: G07__369}

உடன்போக்கிற்குத் தலைவனைத் தோழி ஒருப்படுத்த, தலைவன் தான் செல்ல வேண்டிய வழியது அருமை கூறி மெல்லியலாகிய தலைவியை உடன்கொண்டு போதல் அரிது என்று கூறியவழி, தலைவி அவன்பால் கொண்டுள்ள அன்பு மிகுதியைத் தோழி எடுத்துக் கூறி, “நீ தலைவியை உடன் கொண்டு போகாது விடுப்பின் ஊரவர் தூற்றும் அலரானும் காவல் மிகுதியானும் நின்னைத் தலைவி காண்பது அரிதாக லின் அவள் இறந்துபடும்” எனத் தலைவியது இறந்துபாடு கூறுதல்.

இஃது உடன்போக்கு என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (கோவை. 203)

இறப்ப நுவறல் -

{Entry: G07__370}

தலைவனுடைய பிரிவினைத் தலைவி ஆற்றாள் என்பதுபடத் தோழி தலைவற்கு மிகுதியும் எடுத்துக் கூறுதல்.

இரவுக்குறிக்கண் தலைவன் கேட்குமாறு தோழி வேங்கை மரத்தை நினைந்து கூறுவாளாய், “வேங்கையே! என்தலைவி தினையிற் கிளி கடிதலை விலக்குமாறு தினை முற்றிய செய்தியைத் தெரிவித்து நின் உடல் முழுதும் பூக்கள் மலரப் பொலிவாக உள்ளாய்; என் தலைவி அவ்வாறு பூ அணியும் காலம் என்றோ?” என்று கூறிப் பின் தலைவனிடம், “நாட! பலவின் சிறுகிளையில் பெரும்பழம் தொங்குவது போல இவள் சிறிய உயிர் பெரிய காமத்தைச் சுமந்து வருந்தும் நிலையில் உள்ளது. இவள் கவலை தீர விரைவில் நீ இவளை வரைக” (குறுந். 18) என்றாற் போலக் கூறியது.

இது தோழியிற் கூட்டத்து ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 18)

இறுக்கர் -

{Entry: G07__371}

பாலை நில மக்கள் (சூடா. பக். 47) (L)

“இறைஊர்படர்தும்” என்றல் -

{Entry: G07__372}

தலைவி தலைமகனது ஊர்க்குச் செலவு ஒருப்படுதல்; ‘வரைதல் வேட்கை’க்கண்ணதொரு கூற்று. (சாமி. 102)

இறைச்சி -

{Entry: G07__373}

இஃது அகப்பொருளுரை 27-இல் ஒன்று. (வீ. சோ. 90)

இறைச்சியாவது ஒவ்வொரு நிலத்திற்குமுரிய கருப்பொருள்கள். அக்கருப்பொருள்களை அங்கியற்பொருள், திணை நிலைப் பொருள், வன்புலப் பொதுப்பொருள், மென்புலப் பொதுப் பொருள், பெருமைப் பொதுப்பொருள், விருந்துப் பொதுப் பொருள் என்று அறுவகையாகப் பிரித்துக் கொள்வர். (வீ. சோ. 96 உரை மேற்.)

இறைச்சி : அதற்கோர் எடுத்துக்காட்டு -

{Entry: G07__374}

இறைச்சியாவது, மக்களும் தெய்வமும் அல்லாத ஏனைய கருப்பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கை பற்றி வரும். நாடகவழக்கத்தானும் உலகியல் வழக்கத்தானும் ஓதப்பெற்ற ஒழுகலாறுகள் எல்லாம் உயர்திணையாகிய மக்கட்கே உரிய பொருளாகும் என்பது நன்கு விளங்க ‘உரி’ என்று நூலோர் குறியீடு செய்து கொண்டாற்போல, அஃறிணைக் கருப்பொருள்களின் பண்பும் செயல்களுமாகிய நடக்கைகளை ‘இறைச்சி’ எனக் குறியீடு செய்தனர். இறைச்சி யிடத்தாகத் தோன்றும் உள்ளுறை ‘உடனிலை’ எனப்பட்டது.

எ-டு : வேங்கை தொலை த்த...... தையலாய் பாடுவாம் நாம்’(குறிஞ்சிக். 7)

இதன்கண், ‘வேங்கை தொலைத்த வாரணம்’ என்றதனான் தலைவன் தலைவியை வரைந்துகொண்டு ஊரார் தூற்றும் அலரைத் தொலைப்பான் என்பது பெறப்பட்டது. ‘இன வண்டு இமிர்பு ஊதும் சாந்தமரம்’ என்றதனான் தலைவன் தமர் மணம் பேச வருவர் என்பது பெறப்பட்டது. இவ்வாறு தோழி கருதியனவாக இறைச்சியிற் பொருள் பிறந்தவாறு.

யானை வேங்கையைத் தொலைத்தல், வண்டு இமிர்பு ஊதல் ஆகிய கருப்பொருள்களின் செயல்களாகிய நடக்கை பற்றி இவ்விறைச்சிப் பொருள் பிறந்து நிற்றல் காண்க.

எ-டு : ‘க ன்றுதன் பயமுலை மாந்த’ (குறுந். 225)

இதன்கண், ‘கட்டில் வீறு பெற்ற மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாமல் நன்றியுடையாயாயின், இவளது ஒலி மென் கூந்தலும் உனக்கு உரியவாம்’ என ஏனையுவமத்தான் திணைப்பொருள் விளங்கிக் கிடத்தலான், “மலை நாட்டுத் தலைவ!” என்னும் (முதலிரண்டடி) விளியுள், கருப்பொருள் களின் செயல்களாகிய இறைச்சி, வண்ணனை மாத்திரையாய் நாட்டைச் சிறப்பித்து நின்றவாறு காண்க. (தொ. பொரு. 35 ச. பால.)

இறைச்சி என்ற உள்ளுறை (1) -

{Entry: G07__375}

இறைச்சி என்பது கருப்பொருள். இறைச்சிப் பொருளானது உரிப்பொருளின் புறத்ததாகிக் கருப்பொருளாகிய நாட்டிற் கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாவது

எ-டு :

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள(வு) இன்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ (குறுந். 3)

என்ற பாடலில் நாட்டுக்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவும் தேனும் இறைச்சிப்பொருள். (தொ. பொ. 225 இள.)

“சிறிய குறிஞ்சிப் பூக்களிலுள்ள தேனைத் தேனீக்கள் பலவும் பலநாளும் உறிஞ்சி வந்து பலநாள் முயற்சியால் பெரிய தேன்கூடு கட்டும் நாடனாக இருந்துவைத்தும், அவனோடு யான் செய்த நட்பு நிலத்தினது அகலம் போலவும், வானினது உயர்ச்சி போலவும், நீரினது ஆழம் போலவும் கண்டவுட னேயே கணக்கிடமுடியாத அளவிற்றாகப் பெருகிவிட்டதே என்பது வியப்பைத் தருகிறது” எனக் கருப்பொருள்களாகிய குறிஞ்சிப்பூவையும் தேனையும் கொண்டு இப்பாடலில் இறைச்சிப் பொருள் அமைந்துளது. (225. இள.)

இறைச்சி என்ற உள்ளுறை (2) -

{Entry: G07__376}

ஒருவர் தாம் குறிப்பிடக் கருதும் செய்திகளை நேரிடையாகக் கூறுதற்கு இயலாதவழி ஓர் உட்கருத்தை அடக்கிப் பேசுதலு முண்டு. அங்ஙனம் ஓர் உட்கருத்தை உள்ளடக்கிப் பேசு முறையில் ஒன்று இறைச்சி என்பது. இறைச்சியாவது ஒரு நிலத்தின் கருப்பொருளைக் கொண்டு தாம் வெளிப்படை யாக ஒரு செய்தியைக் கூறியபின், அதனை ஒட்டியே வேறு ஒரு செய்தியையும் அறியவைத்தல்.

தலைவன் “நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்; பிரியின் அறனல்லது செய்தேனாகுவேன்” என்று தலைவியிடம் தெய் வத்தை முன்னிட்டு உறுதிமொழி கூறியோன். அத்தகையவன் களவுக் காலத்தே ஓரிரு நாள்கள் தலைவியைக் காண வாராமலிருக்கிறான். அவன் சூள் பொய்த்த கொடியன் என்று தோழி அவனைப் பற்றிக் குறைவாகப் பேசுகிறாள். அவ்வாறு பேசுகையில் அவனது மலைவளத்தையும் குறிப் பிடுகிறாள்.

‘இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே

வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற

சூள்பேணான் பொய்த்த மலை’ (கலி. 41)

“தலைவனோ தான்சொன்ன உறுதிமொழியைத் தவற விட்டவன். அத்தகைய அறனற்றவனது நாட்டில் இயற்கைக்கு மாறான செய்திகள் நிகழ்தல் வேண்டும்; மழைவளம் குறைதல் வேண்டும்; ஆயின் பருவமழை தவறாது பெய்தலான் அவன் மலையருவியினின்று நீர் இடையறாது இழிந்துகொண்டிருக் கிறது. தலைவன் உண்மையில் அறன் தவறியவனாயிருப்பின் அவன் மலையில் மழைவளம் இராதன்றோ? மழைவளம் தவறாதிருத்தலின் அவன் உண்மையில் அறம் தவறியவன் அல்லன். சூழ்நிலையை ஒட்டி உடலான் அவன் நம்மிற் பிரிந் திருப்பினும் உள்ளத்தான் நம்மை ஒரு போதும் பிரியாதவன் போலும் என்றாற்போல, சொல்லப்பட்ட செய்தியைக் கொண்டு அதன் உள்ளார்ந்த கருத்தாக வேறு செய்திகளை யும் உய்த்துணர்ந்து கொள்வது இறைச்சி என்ற உள்ளுறை யாம்“. (தொ. பொ. 229 நச்.)

இறைச்சிப் பொருள் -

{Entry: G07__377}

கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள்.

(தொ. பொ. 229 நச் .)

இறைச்சியிற் பிறக்கும் பொருள் (1) -

{Entry: G07__378}

கருப்பொருளினின்று பெறப்படும் தொனிப்பொருளும் உண்டு. அஃது உள்ளுறை உவமம் போல்வதே அன்றி உள்ளுறை உவமம் அன்று. “இஃது உள்ளுறை அன்று, இறைச்சி” என்றுணரும் தெளிவுடையார்க்கே இது நன்கு புலப்படும். ஆதலின், இறைச்சிப் பொருளினின்று தோன்றும் இரண்டாம் இறைச்சிப் பொருளும் உண்டு என்பது.

(1) ‘கன்றுதன் பயமுலை மாந்த’ என்ற குறுந்தொகைப் பாடலில் (225) இறைச்சியிற் பிறக்கும் பொருளினை விளக்கு வார் நச்சினார்க்கினியர். (தொ. பொ. 230 நச்.)

(1) தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரச உரிமை எய்திய மன்னன் மறந்தாற் போல, நீ இரந்து துயருற்ற காலத்து யான் தலைவியை நின்னொடு கூட்டிய செய்நன்றியை மறவாது இன்று நீ வரைந்து கொள்வாயாயின் இவள் கூந்தல் நினக்கு உரிய” என்ற விடத்தே உவமையும் பொருளும் ஒத்து முடிந்தமையின், முன்நின்ற ‘நாட’ என்பது உள்ளுறை உவமம் அன்றாய் இறைச்சிப் பொருளாம். “தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக் கொடுக்கின்ற தினையைப் பிடி தான் உண்டு அழிவு செய்கின்றாற் போல, நீ நின் காரியம் சிதையாதவாறு பார்த்துக்கொண்டு எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மையும் இறந்துபடுவித்தல் ஆகாது” என்று உவமை எய்திற்றாயினும், பின்னர் நின்ற உபமேயத்தோடு இயையாது இவ்வுவமம் உள்ளுறையாகப் பொருள் தாராது, இறைச்சியாகிய ‘நாடன்’ என்பதனுள்ளே வேறோர் பொருளைத் தோற்றுவித்து நின்றது ஆதலின் இஃது இறைச்சியேயாம். (தொ. பொ. 230 நச்.)

(2) ‘ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்

பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை

குறவர் மகளிர் கூந்தல் பெய்மார்

நின்றகொய மலரும் நாடனொடு

ஒன்றேன் தோழி ஒன்ற னானே! (குறுந். 208)

2) இப்பாடல் வரைவு எதிர்கொள்ளாது தமர் மறுத்த விடத்தே, “தலைவனோடு இவள் ஒன்றும் வழி யாது?” எனக் கவலையுற்ற தோழிக்கு உடன்போதல் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியது. இதனுள் ‘பொரு களிறு’ என்றமையான், தலைமகள்தமர் தலைமகன் வரைவிற்கு உடன்பாடுவாரும் மறுப்பாரும் ஆகி மாறுபட்டமை தோன்றுகிறது. ‘பொரு களிறு மிதித்த வேங்கை’ என்றதனான் பொருகின்ற இரண்டு களிற்றானும் மிதிக்கப்படுவது ஒன்றாகலின் வரைவுடன்படா தார் தலைமகனை அவமதித்தவாறு தோன்றிற்று. வேங்கை நின்று கொய்ய மலரும்’ என்றதனான், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாம்படி எளிது. ஆயிற்று என்பது பொருளாயிற்று; இதனால் பண்டு நமக்கு அரியனாகிய தலைமகன் இப்பொழுது தன்னை அவமதிக்க வும் நமக்கு எளியனாகி அருள் செய்கின்றான் எனப் பொருள் கொள்ளக் கிடந்தவாறு. (226) (தொ. பொ. 230 நச்.)

இறைச்சியிற் பிறக்கும் பொருள் (2) -

{Entry: G07__379}

வெளிப்படையான கூற்றினான் தொனிப்பொருள் ஒன்று தோன்றுதல் கூடும். அத்தொனிப்பொருளினின்று பிறிதொரு தொனிப்பொருளும் தோன்றுவது இறைச்சியிற் பிறக்கும் பொருள் ஆகும்.

சொற்றொடர் தெரிவிக்கும் மூவகைப்பொருள் வெளிப் படைப் பொருள், இலக்கணைப் பொருள், குறிப்புப் பொருள் என்பன. இவற்றுள் குறிப்புப் பொருளே இறைச்சி. அக்குறிப் பினின்று பிறிதொரு குறிப்பும் தோன்றலாம் என்பது.

களவொழுக்கத்தை நீட்டித்துவரும் தலைவன் விரைவில் தலைவியை மணத்தல் வேண்டும் என்ற எண்ணத்தான் தோழி அவனிடம் “வேங்கையும் பூக்கத் தொடங்கிவிட்டது; சந்திரனையும் பரிவேடம் சுற்றத் தொடங்கியது” என்னும் பொருள்பட,

‘பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன

நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே’ (அகநா. 2)

என்கிறாள். இதன்கண்,

‘வேங்கை பூத்துவிட்டது; சந்திரனை ஊர்கோள் சுற்றி விட்டது’ என்பது வெளிப்படைப் பொருள்.

‘வேங்கை பூக்கும் காலத்தில் தினை முற்றிவிடும் ஆதலின் தினையை அரிந்துவிடுவார்கள்; சந்திரனை ஊர்கோள் சுற்றுவது வளர்பிறையின்கண் ஆதலின், இரவில் மதியின் ஒளி பகல்போல மிகுந்த வெளிச்சம் தருகிறது’ என்பது இறைச்சிப் பொருளாகிய குறிப்புப் பொருள்.

தினையை அரிந்து விடுவதால் தினைக்காவலுக்கு இனி வாய்ப்பில்லை யாதலின் தலைவி தினைப்புனத்துப் பக்கத்து வருவது இயலாது எனவே பகற்குறி நிகழ வாய்ப்பில்லை என்பதும், சந்திரன் ஒளி பகல்போல வீசுதலின் தலைவன் ஊர்க்காவலரை மறைத்து இரவுக்குறிக்கண் வருதற்கு வாய்ப்பில்லை என்பதும், நிறை மதிநாள் திருமணத்திற்கு மிக ஏற்றது ஆதலின் அதற்குச் சில நாள்களே இருத்தலின், விரைவில் தலைவன் தலைவியை மணத்தற் பொருட்டாகப் பெண்கேட்டல் முதலிய ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதும், குறிப்பினின்று தோன்றும் பிறிதொரு குறிப்பாகிய இறைச்சியிற் பிறக்கும் பொருள். (பொ. 230. நச்)

இறையோன் இறைவி தன்மை இயம்பல் -

{Entry: G07__380}

தலைவன் காதலுக்குரிய தலைவியின் அழகினைச் சிறப்பித் துக் கூறல்.

“யான் விரும்பும் பெண்ணின் அடையாளங்களைக் கூறுகி றேன், கேட்பாயாக: கொங்கை குரும்பை; குழல் கொன்றை; செவ்வாய் கொவ்வை; பற்கள் முத்து; கண்கள் கழுநீர், முகம் நிறைமதி என்னும் வனப்பினை உடையவள் அவள்” என்றாற் போலத் தலைவன் தோழியிடம் கூறுதல். (கோவை. 108)

இதனைத் திருக்கோவையார் அவயவங்கூறல் (108), கண் நயந்துரைத்தல் (109) என்று கூறும்.

களவியலில் இது ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -

{Entry: G07__381}

கற்புக் காலத்தில் தலைவன் ஓதல் காவல் முதலியன குறித்துப் பிரிய, அவன் மீண்டு வருவதாகக் கூறிய பருவம் வரும் அளவும் தலைவி இல்லத்திருந்து நல்லறம் காத்து அவன் நினை வாகவே அவன் மேற்கொண்ட செயலை முட்டின்று முடித்து மீள வேண்டும் என்று நினைத்து இருத்தல் (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -

{Entry: G07__382}

தலைவியைக் காணச்செய்த கடவுளைப் பாங்கன் வணங்கு தல்.

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு இவற்றின் பின்னர்ப் பாங்கனைக் கண்ணுற்ற தலைவன் அவனுக்குத் தன்நிலைமை கூறித் தலைவி பழைய இடத்தில் இருப்பதை அறிந்து வருமாறு அனுப்ப, அவள் தலைவன் குறிப்பிட்ட இடத்திற் குச் சென்று தனித்து நின்று கொண்டிருந்த தலைவியைக் கண்டு, “என்னைத் தலைவற்கு நண்பனாகக் கூட்டி வைத்த தெய்வமே முயற்சியின்றி இத்தலைவியைக் கண்டு செல்லு மாறு எனக்கு எளிதின் அருள்பாலித்துள்ளது. அதற்கு நான் என்றும் அடிமை” (திருப்பதிக். 67) என்று தன் குலதெய் வத்தை வணங்குதல்.

இது பாங்கற் கூட்டம் என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (மா. அக. 28)

இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -

{Entry: G07__383}

தலைவற்காகத் தலைவியைக் காணச் சென்ற தோழன், ஆய வெள்ளத்திடை அவளை நாடித் தனிமையில் காணமுடியா மல் வருந்தும் நிலை நேராது, எளிதின் அவளைத் தான் காணுமாறு அவளைத் தனியே நிற்கச் செய்த தெய்வத்தை வணங்கிக் கூறுதல்.

களவியலுள் இது பாங்கற் கூட்டம் என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையில் கொள்ளப்பட்டது.

(இ. வி. 505 உரை)

இன்சொல் இரக்கம் -

{Entry: G07__384}

தோழியிற் கூட்டத்தில் தலைவற்குக் குறை நேர்ந்த தோழி, தலைவியிடம் இன்சொற்களால் உரையாடி அவளைக் குறை நயப்பிக்க அச்சொற்களைப் பயன்படுத்துதல். [ இது ‘மென் மொழியாற் கூறல்’ (கோவை. 83) எனவும் கூறப்படும். ] (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

இன்பம் -

{Entry: G07__385}

ஒருதலைக் காமமாகிய கைக்கிளையும் அன்புடைக்காமம் ஆகிய ஐந்திணையும், பொருந்தாக் காமமாகிய பெருந்திணை யும், இன்பத்தின் பகுதி. உளத்துடன் உளம் பொருந்தி ஒன்றுபட்டு நிற்கும் காதல் ஐந்திணைப்பாற்படும். (நாடக. 24, 25)

இன்பம் மேவற்றாதல் -

{Entry: G07__386}

அறனும் பொருளும் ஒழிய எஞ்சி நின்ற இன்பம் எனப்படுவது ஆணும் பெண்ணும் என அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழ்வது. (தொ. பொ. 223 நச்.)

இன்பமும் இன்பக் காரணமும் -

{Entry: G07__387}

இன்பமும் இன்பக்காரணமும் அகத்திணையைச் சார்ந்தன.

(வீ. சோ. 106 உரை)

இன்மையது இளிவு ஒன்றாமை -

{Entry: G07__388}

‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின், இன்மையே இன்னாதது’ (கு. 1041) ஆதலின், பொருளில்லார் இவ்வுலகில் பிறரான் இகழப்பட்டு எளியராவர் என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தான் இன்பம் நுகரும் தலைவி யின் சிறப்பினை நோக்க, அவளைப் பிரிந்து சென்று இன்மை யின் இளிவு தீரப் பொருள் தேடி வருதல் என்னும் எண்ணம் செயற்படாமல் ஒழிதல். (தொ. பொ. 41 நச்.)

இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

{Entry: G07__389}

தன்னிடம் செல்வம் இல்லாவிடில் நிகழக் கூடிய இழிவு கருதிப் பொருள் தேட நினைக்கும் உள்ளத்தைச் செல்வத்தி னும் மிக்க தலைவியது உண்மைக் காதலுக்குத் தன் பிரிவு ஊறுதரும் என்ற எண்ணம் இடையூறாகத் தடுத்தவழித் தலைவன் கூறுதல்.

எ-டு :

“நெஞ்சே ‘இரவலர்க்கு ஈதலும் தாம் இன்பங்களை நுகர்தலும்

பொருள் இல்லாதார்க்கு இல்லை’ என்று கருதிப் பொருள் செய்

தற்குரிய வினைகளை மிக எண்ணுகிறாய். அவ்வினைக்குத்

துணையாக அழகிய மாமை சிறத்தவளாகிய தலைவியும் உடன்

வருவாளோ? எம்மை மாத்திரம் செலுத்துகின்றாயோ? சொல்”

என்ற தலைவன் கூற்று. (குறுந். 63) (தொ. பொ. 41 நச்.)

இன்றியமையாமை கூறல் -

{Entry: G07__390}

தலைவியினது இன்றியமையாமையைத் தலைவன் கூறுதல். இவளைப் பிரிந்து இவள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் உயிர்வாழ்தல் இயலாது என்ற தலைவன் இயற்கைப் புணர்ச்சி இறுதியில் தன்னுள் கூறிக் கொள்வது. இது களவியலுள் ‘வன்புறை’ என்னும் தொகுதிக்கண்ணதொருகூற்று. இதனைத் திருக்கோவையார் பாங்கற் கூட்டத்துப் புணர்ச்சி இறுதிக் கண் தலைவன் தன்னுள் கூறிய கூற்றாகக் கூறிக் கொள்ளும். (கோவை. 46)

இதனை இலக்கண விளக்கம் உரையிற் கொள்ளும். (497 உரை)

“இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__391}

முன்பெல்லாம் (காதலருடன் கூடி இன்புற்றகாலை) எனக்கு நட்பாகி இன்ப மூட்டிய மாலைப்பொழுது இன்று எனக்குப் பகையாகி இவ்வாறு நோய்செய்து வருத்தும் என்று என் தலைவர் பிரியாதிருந்த காலத்தில் நான் தெரிந்துகொள்ள வில்லையே! அதனாலேயே அவர் பிரிவிற்கு உடன்பட்டேன்” என் தலைவி தோழிக்குக் கூறுதல். (குறள் 1226)

இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -

{Entry: G07__392}

தமக்கோர் இடையூறும் செய்யாத மலைவாழ் வருடை மானைத் தினையை மேயும் கிளிகள் அஞ்சுமாறு போல, நின்வரைவிற்கு இடையூறு செய்யாத எம் உறவினரை அஞ்சுகிறாய். நீ பொய்யுரைத்தலில் வன்மையுடையாய். உண்மை பேசுவதன்கண் வன்மையுடையை அல்லை” ஐங். 287 என்றாற் போலத் தோழி கூறுதல்.

இன்னல் எய்தல் -

{Entry: G07__393}

தலைவன் களவுக்காலத்தே வரைபொருட்குப் பிரிந்தானாக, அவன் பிரிவாற்றாமையால் மெலிந்த தலைவியது நிலை கண்டு அம் மெலிவு தெய்வத்தானாயிற்று என்று கருதித் தாய் தெய்வத்திற்கு உவப்பான செய்ய வெறியாடற்கு வேலனை அழைப்ப, அது கேட்ட தலைவி “நம் இல்லத்தில் என் பொருட்டாக வெறியாட்டு நிகழுமாயின் இனி யான் உயிர் வாழும் நெறி இல்லை” எனத் தன்னுள் கூறி வருந்தல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 287)

ஈ section: 1 entries

“ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -

{Entry: G07__394}

தலைவன் பரத்தையிற் பிரிந்த மறுநாட்காலை தலைவியைக் காணும் தோழி, “இஃதென்ன? நாளும் நின்கணவன் புதிய இன்பம் தந்து நின்னை மகிழ்விக்கும் நாள்களில் இவ்வாறு நீ அழுது கண் கலங்கியது என்?” (தஞ்சை. கோ. 379) என்று வினாவுதல்.

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

உ section: 113 entries

உசாத்துணை நிலைமையின் சூழ்தல் -

{Entry: G07__395}

தலைவனும் தலைவியும் தன்னிடம் உரையாடும் அளவு அவர்களொடு பழகும் வாய்ப்புப் பெற்ற நிலையாலே, தலைவற்கும் தலைவிக்கும் புணர்ச்சி நிகழ்ந்த செய்தியைத் தோழி, நாற்றம் தோற்றம் ஒழுக்கம் உண்டி செய்வினை மறைப்பு செலவு பயில்வு என்ற எழுவகையும் தலைவியிடம் வேறுபட்ட நிலைகொண்டு ஆராய்தல். (தொ. பொ. 126 நச்.)

உசாவுதல் -

{Entry: G07__396}

இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் எழுவகைகளுள் ஒன்று. (204 இள.) வெறியாட்டும் கழங்கும் இட்டு உரைத்துழி வேலனொடும் பிறரொடும் தோழி உரையாடித் தலைவன் தலைவியரின் கூட்டம் பற்றிய செய்தியை அறியச் செய்தல். இக் கூற்றைக் கேட்ட செவிலி உண்மையை உணர்வாள். (தொ. பொ. 112 இள. உரை)

உட்கொண்டு வினாதல் -

{Entry: G07__397}

இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவன் நாட்டு அணியியலை வினவ, அவள் வினவியதன் கருத்தை உட்கொண்டு, அவன் தன் ஊர் மக்கள் அணியியல் கூறியதொடு, தான் அவள் ஊர்க்கு வருதற்காக அவளிடம், “நின் ஊரிடத்து மக்கள் இரவில் எம்மலர் சூடி எச்சாந்து அணிந்து எம்மரநிழலில் விளையாடுப?” என்று வினவுவது.

இதனைக் ‘கிழவோன் அவள்நாட்டு அணியியல் வினாதல்’ என்ப. (ந. அ. 158)

இது திருக்கோவையாருள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக் கண் அமைந்ததொரு கூற்று. (கோவை. 153)

உட்கொள வினாதல்

{Entry: G07__398}

தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தன்னாட்டு மக்களைப் போல அவன் வரல் வேண்டும் என்பதனை அவன் அறிவதற்காக, “தலைவ! நின் ஊரிடத்து மக்கள் எம்மலர்சூடி எந்நிறச் சாந்து அணிந்து எம்மரத்தின்கீழ் விளையாடுப?” என்று தலைவனை வினவுதல்.

இதனைப் ‘பாங்கி அவன் நாட்டு அணியியல் வினாதல்’ என்ப. (இ. வி. 517)

இது திருக்கோவையாருள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 158; )

உட்கோள் (1) -

{Entry: G07__399}

கைக்கிளைத் தலைவி தன்மனத்து எண்ணுதல்.

“இவனைக் கண்டது முதல் என்னுள்ளம் உருகி உடலும் இளைத்துவிட்டது. ஆயின் இவனை இன்னும் கூடப்பெற்றி லேன். இனி என்னுயிர் தரியாது” என்பது போன்ற தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெண்பாற் கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 15 - 3)

உட்கோள் (2) -

{Entry: G07__400}

கைக்கிளையின் தலைவன் தலைவியைக் கண்டு ஐயுற்றுத் துணிந்த பின்னர்த் தன்னுள்ளத்தில் நினைத்தல்.

“இவளை நான் கண்டு ஆசை கொண்டு தவிக்கின்ற நிலையில் இவள் என்னைப் பார்க்கவுமாட்டாது வேறெங்கோ சிந்தை யாளாய் இருக்கின்றாளே!” என்பது போன்ற தலைவன் கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 14-4)

உட்கோள் (3) -

{Entry: G07__401}

தலைவியைக் கண்ட தலைவன் அவள் மானுட மகளே என்று துணிந்த பின்னர்த் தன்னிடத்து அவளுக்கு உண்டாய காதலை அவள் கண்ணில் கண்டு தன் மனத்து அதனைக் கொள்ளுதல்.

இதனைக் ‘குறிப்பறிதல்’ எனவும் கூறுப. (ந. அ. 122.)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி, என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 5)

உடம்பட்டு விலக்கல் -

{Entry: G07__402}

தோழியிடம் தலைவன் தான் தலைவியை அடைதற்கு மடலேற முடிவு செய்த செய்தியைக் கூற, தோழி தலைவ னிடம் தலைவிக்கும் தனக்குமிடையேயுள்ள நட்புரிமையை எடுத்துக் கூறித் தான் அவன்குறையை முடித்துத் தருவதாகக் கூறி அவன் மடலேறுவதை நீக்குதல்.

இது திருக்கோவையாருள் ‘மடற்றிறம்’ என்னும் தொகுதிக் கண் அமைந்த இறுதிக் கூற்றாகும். (கோவை. 81)

உடம்படாது விலக்கல் -

{Entry: G07__403}

தலைவன் தோழியிடம் தான் தலைவியைப் பெறுதற்கு மடலேற ஏற்பாடு செய்திருப்பதாகக் கூற, தோழி, “யான் சென்று அவளது நினைவை அறிந்து வருகின்றேன்; அவள் விருப்பத்தை யான் அறிந்து வந்த பிறகு நுமக்கு வேண்டிய வாறு செய்க” என்று கூறல்.

இது திருக்கோவையாருள் ‘மடற்றிறம்’ என்ற தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 80)

உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -

{Entry: G07__404}

தலைவி உடன்போயவழிச் செவிலி அவளைப் பின் தொடர்ந்து சென்ற பாலைவழியில் கானவர்மகளொருத்தியைக் கண்டு, ‘கொங்கைகள் தோற்றப் பொலிவு பெற்று விட்டன; பற்கள் விழுந்தெழுந்துவிட்டன; தலைமுடி பின்னும் அளவிற்குக் கூடிவிட்டது; தழையாடை உடுக்கும் அளவிற்கு வயது வந்துவிட்டது. இனி நீ பேதை அல்லை; பெதும்பைப் பருவத்து ஆயத்தாரொடு புறம் போந்து விளையாடுதல் வேண்டா’ என்று கூறிய என் ஆணையை மறுத்து வலையினின்று தப்பிச் செல்லும் பெண்மான் போல, வேலேந்திய விடலையொருவனுடன் இச்சுரத்தின் வழியே என்மகள் வந்துவிட்டாள். அவள் உடன்போக்கினை அறிந்து பின் தொடர்ந்து வந்த என்னால் அவர்களைக் காண இயல வில்லை. நீ அவர்கள் இவ்வழிச் சென்றதைக் கண்டனையா?” என்று வினவுதல் (அகநா. 7) போல்வன. (தொ. பொ. 42 நச். உரை)

கானவர் மகள் - எயிற்றி. ‘செவிலி எயிற்றியொடு புலம்பல்’ என்னும் நம்பி அகப்பொருள் (188).

உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -

{Entry: G07__405}

கடம் - காடு. “என் கால்கள் நடை தளர்ந்துவிட்டன; கண்கள் பலகால் கூர்ந்து நோக்குதலின் ஒளியிழந்துவிட்டன. இவ் வுலகத்தே இவ்வழியிடை என்மகள் காணப்பட்டிலள்; காணப்பட்டவரோ, விண்ணில் தோன்றும் மீன்களினும் பலர்!” (குறுந். 44) என்பது போன்ற செவிலி கூற்று. (தொ. பொ. 42 நச். உரை)

உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -

{Entry: G07__406}

குரா - பாலை நிலத்து மரங்களில் ஒன்று. “பெரிய குரவே! தான் தாயாக இருந்து கோங்கு தளர்ந்து தன் அரும்பாகிய முலைகொடுப்பவே நீ பாவை ஈன்றாய். ஈன்றாளுக்குரிய மொழி காட்ட மாட்டாயாயினும், என் மகள் சென்ற வழியை யாவது வந்து காட்டுவாய்” (திணைமாலை. 65) என்றாற் போன்ற செவிலி கூற்று. (தொ. பொ. 42 நச். உரை)

‘செவிலி குரவொடு புலம்பல்’ என்னும் நம்பியகப்
பொருள் (188)

உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -

{Entry: G07__407}

“இடிதுடிக் கம்பலை முதலிய இன்னாத ஓசையையுடைய கடுவினையாளர் திரியும் இச்சுர நெடு வழியில், குரவே! நீ கவலையுற்று நின்றாய். முற்பிறப்பில் பாவஞ்செய்த எம்மைப் போல, நீயும் நின் பாவையைச் சினையினின்று பறித்துக் கொள்ளப்பட்டாயோ? கூறுவாய்” என்றாற் போன்ற செவிலி கூற்று. (தொ. பொ. 42 நச். உரை)

‘செவிலி குரவொடு புலம்பல்’ என்னும் ந.அ. (188)

உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -

{Entry: G07__408}

“குடத்தால் நீர் முகக்கப்படாமையால் குடம் புகாத கிணற்றுச் சின்னீரைப் பருக வாய்க்காமையால் விலங்குகள் அடையாத நெடிய சுரத்தின்கண், உடனாகக் கூடிச்செல்லும் காதலால் மகிழ்ச்சியொடு கடந்து சென்ற தடம்பெருங்கண்ணியாம் அழகிய மகட்கு யான் தாயாவேன்” என்றாற் போன்ற செவிலி கூற்று. (தொ. பொ. 42 நச். உரை)

உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -

{Entry: G07__409}

“சிலரும் பலரும் கடைக்கண்ணால் நோக்கி மூக்கின்மீது சுட்டு விரலை வைத்து வீதியிற் பெண்டிர் பழிகளைத் தூற்ற, வலக்கையில் சிறுகோலைச் சுழற்றி அன்னை என்னை அலைப்ப, யான் இதுகாறும் வருந்தினேன். இனி, தோழி! தனது நெடுந்தேரைச் செலுத்தி நள்ளிரவில் ஈண்டு வரும் தலைவனோடு உடன்போக்கிற்குத் துணிந்துவிட்டேன். இக்கொடிய ஊர் அலர் சுமந்தொழிக!” என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச். உரை)

உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -

{Entry: G07__410}

தலைவனும் தலைவியும் உடன்போயவழிக் கண்டோர் அவ்விருவரும் வழியிடைத் தங்கப் பக்கத்தே ஊர் உண்டு எனவும், அவர்கள் போக வேண்டிய இடம் நெடுந்தொலைவி லுள்ளது எனவும் அன்பு நிறைந்த உள்ளத்தோடு அவர்களது நன்மை கருதிக் கூறி, அன்று அண்மையிலுள்ள தம்மூரில் தங்கி மறுநாட்காலை புறப்படலாம் எனக் கூறுதல்.

“மணித்தார் மார்ப! இப்பெண் தன் மெல்லடிகளால் இனி நடத்தலும் இயலாது; கதிரவனும் மறையலுற்றான்; எம்மூர் அண்மையிற்றான் உள்ளது; ஆதலின் எம்மூரில் இரவுதங்கி நாளை செல்க” (பொருளியல்) என்ற கூற்று. (தொ. பொ. 40 நச். உரை)

‘கண்டோர் காதலின் விலக்கல்’ என்னும் கூற்றாக இதனை நம்பியகப் பொருள் சொல்லும். (182)

உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -

{Entry: G07__411}

தலைவனும் தலைவியும் உடன்போயவழிச் சுiத்திடைக் கண்டோர் தலைவனும் தலைவியும் தொலைதூரம் சென்று விட்டனர் என்று கூறிச் செவிலியை மீண்டுபோமாறு சொல் லுதல். (தொ. பொ. 40 நச்.)

உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -

{Entry: G07__412}

தலைவன் தலைவியோடு உடன்போயவழி அவர்களை வழியிற் கண்டு பேசி விடுத்தவர்கள், பிறகு அவர்களைத் தேடிக் கொண்டுவந்த செவிலித்தாயின் மனநிலை கண்டு, அவர்கள் சென்ற வழியைக் காட்டி அவ்வழியே சென்று அவர்களைக் காணுமாறு விடுக்கும்போது கூறுதல். (தொ. பொ. 40 நச்.)

உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -

{Entry: G07__413}

தலைவன் தலைவியோடு உடன்போயவழிச் சுரத்திடைக் கண்டோர் “மாலைக்காலமும் கடத்தற்கரிய வழியும் அஞ்சத் தக்கன” என்று கூறி, அவற்றது தீங்கினான் உடன்போகும் இருவர்க்கும் ஏற்படக்கூடிய இடையூற்றினை எடுத்துக் கூறுதல். (தொ. பொ. 40 நச்.)

‘கண்டோர் காதலின் விலக்கல்’ என்பது நம்பியகப் பொருள் சுட்டும் கூற்று. (182)

உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -

{Entry: G07__414}

தலைவி உடன்போயது உணர்ந்த செவிலி, அவள் தாய் சேரி முழுதும் சென்று தேடியும் அவளைக் காணாது வருந்தி மீண்டமையின், தான் அவள் தலைவனுடன் சென்ற பாலை வழியில் பின்தொடர்ந்து சென்று அவளைத் தேடி அழைத்து வர உறுதி கொள்ளுதல். (தொ. பொ. 37 நச்.)

உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -

{Entry: G07__415}

தலைவி தலைவனோடு உடன்போக்குச் செல்ல, அவர்களைத் தேடிக்கொண்டு அவ்வழியே வந்த செவிலி அப்பக்கமாக மீண்டு வந்துகொண்டிருந்த முக்கோலையுடைய துறவிகளை வினவ, அவர்கள், “சந்தனம், பூசிக்கொள்பவர்க் கன்றித் தன்னைத் தோற்றுவித்த மலைக்கு யாது பயனைச் செய்யும்? வெண்முத்தம், அணிந்து கொள்பவர்க்கன்றித் தன்னைப் பிறப்பித்த கடலுக்கு யாது பயன்படும்? இன்னிசை, பாடு பவர்க்கன்றித் தன்னை யுண்டாக்கிய யாழ்க்கு யாது பயன்படும்? ஆராயுங்கால், நும்மகள் நுமக்கும் அத்தன்மை யளே” என்றாற்போல உபதேசித்து, “அவள் தனக்குச் சிறந் தானைத் தொடர்ந்து போயினள்; அதுவே அவட்குத் தலை யாய அறம்; மறுமையினும் அவனைப் பிரியாத நெறியும் அது” (கலி. 9) என அறிவுறுத்தல். (தொ. பொ. 40 நச்.)

‘மிக்கோர் ஏதுக் காட்டல்’ என்னும் நம்பி அகப்பொருள். (188)

உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -

{Entry: G07__416}

தலைவன் தலைவியோடு உடன்போயவழி, அவர்களைச் சுரத்திடைக் கண்டோர் அவர்களோடு உரையாடிய செய் தியைத் தாம் அவ்வழியே வந்தபோது செவிப்படுத்தவர்கள், தாம் கேட்ட செய்தியைச் செவிலியிடம் கூறல்.

“ஒளி படைத்த நிலாமுகத்து ஆயிழை மடந்தையும் வெஞ் சுடர் உமிழும் நீள் வேலேந்திய தோன்றலும் உடனிணைந்து வரவே, “விண்ணுலகம் ஒரு சுடரு மின்றாகப் பாழ்படுமாறு ஞாயிறு திங்கள் என்னும் இருசுடரும் நிலவுலகத்து வந்து விட்டனவோ!” என்று அஞ்சிக் கூறினர், அவர்களை இடைச் சுரத்துக் கண்டோர்” (திணைமாலை 71) என்றாற் போன்ற கூற்று. (தொ. பொ. 40 நச்.)

உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -

{Entry: G07__417}

“பற்றித் துயருறுத்துமாறு என் சுற்றத்தார் தொடர்ந்துவர, என் தலைவனை மறைத்த அருவிக்குன்றம் நல்வினை நிறைவ தாகுக! உலகம் வற்கடமுற்ற காலத்தும் எல்லா நல்வினையும் நிறைக!” (ஐங். 312) என்றாற்போலத் தலைவி மலையை வாழ்த் தும் கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -

{Entry: G07__418}

“நாண் பெரிதும் இரங்கத்தக்கது; நம்மோடு நெடுங்காலம் உடனிருந்து நீங்கமாட்டாது வருந்தியது; கரும்புகள் ஓங்கி வளரும் ஆற்றங்கரையிடத்தே நின்ற ஈந்தின் காய்கள் நீர்ப்பெருக்கு நெருங்கி வந்து மோதும்தோறும் கீழே உக்காற் போல, நாணம் தடுக்கும் அளவாகத் தன்னைத் தாங்கி நிறுத்திக்கொண்டு காமம் மிகுந்துவந்து அலைக்குங்காலத்து என் எல்லையில் நில்லாது போய்விடுகின்றது.” (குறுந். 149) என்றாற் போல உடன்போய காலத்தே தனது நாண் நீங்க லுற்றமை பற்றிய தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச்.)

இதனை நம்பி அகப்பொருள் ‘நாண் அழிபு இரங்கல்’ என்னும் (182)

உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -

{Entry: G07__419}

“நெடுந்தொலைவாகிய இடம் செல்லக் கருதிய அந்தணீர்! நும்மை ஒன்று வேண்டினேன் : எம்மூரில் நேரிறை முன்கை யுடைய என் ஆயத்தோர்பால், ‘தாய் விரும்பி அணிவித்த நுணுகிய அழகு மேலும் கவினுமாறு நும் தலைவி கடத்தற் கரிய வழிக்கண் நடந்து செல்லலுற்றாள்’ என்று கூறுமின்” (ஐங். 384) என்றாற் போன்ற தலைவி கூற்று.(தொ. பொ. 42 நச்.)

உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -

{Entry: G07__420}

“ஆறு செல் மக்காள்! ‘கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக் கொடிய மலைபல பிற்பட வேறாகிய பல சுரங்களைக் கடந்தனள் நின்மகள்’ என்று என்னை இழந்து மனைக்கண் வாடியிருக்கும் என் அறனில்லா யாய்க்குச் சென்று உரைமின்” (ஐங். 385) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -

{Entry: G07__421}

தலைவி உடன்போனவிடத்து அவளைப் பயந்த தாய், தலைவி செல்லும் காட்டகத்துப் பறவைகள் விலங்குகள் ஆறலைகள்வர் முதலிய கண்டு அவள் அஞ்சும் அச்சம், தந்தை தன்னையர் பின் தொடர்ந்து சென்று தீங்கு செய் வாரோ என்றஞ்சும் அச்சம் ஆகிய இருவகையச்சம் - தலைவி சென்று சாரும் இடம் மீண்டு வந்து சாரும் இடம் என்ற இருவகைச் சார்தல் - என்பவற்றையும், அவைபோல்வன பிறவற்றையும் பல்லி முதலிய சொல், நற்சொல் நிமித்தம், தெய்வம் கட்டினும் கழங்கினும் இட்டுரைக்கும் அத்தெய்வப் பகுதி என்பவற்றொடு கூட்டி வருந்திக் கூறுதல். (தொ. பொ. 36 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -

{Entry: G07__422}

தலைவி உடன்போயவழி அவளைப் பெற்ற தாய் தன்னைக் காண வந்த அயலாருடன் தன் மகளுடைய உடன்போக்குக் குறித்து வருந்திக் கூறல்.

“இஃது என் பாவை போன்றவளுக்கு விளையாடற்கினிய பாவை; இஃது என் கிளி போன்றவள் எடுத்த பைங்கிளி; இஃது என் பூவை போன்றவள் உரையாடற்கு இனிய சொற் பேசும் பூவை என்று யான் இவற்றைக் காணுந்தோறும் காணுந்தோறும் கலங்குமாறு, என் மகள் நீங்கினளே” (ஐங். 375) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச்.)

‘நற்றாய், அச்சத் தன்மைக்கு அச்சமுற் றிரங்கல்’ என்னும் நம்பி அகப்பொருள். (185)

உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -

{Entry: G07__423}

உடன்போய தலைவியின் நற்றாய் தன்மகளது கழிந்தகால இளமைச் செய்தியையும், நிகழ்கால அறிவு ஒழுக்கச் செய்தியையும், எதிர்காலத்து மனையற மாட்சியையும் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்திக் கூறல். (தொ. பொ. 39 இள.)

உடன்போக்கின்கண் நற்றாய் சேரி சென்றுரைத்தல் -

{Entry: G07__424}

தலைவி உடன்போயவழி அவளைத் தேடிக் கொண்டு தன் தெரு முழுதும் நற்றாய், அவள் விளையாடிய இடங்களை யெல்லாம் சேரியோர்க்குக் காட்டி வருந்திக் கூறல்.

“வெம்மலை அருஞ்சுரத்தின்கண், நாம் இவண் தனித்திருப்ப, கொடிய கானம் நேற்றுப் போகிய பெருமட முடையாளாகிய என்மகள், தன் இடைக்குத் தழையணி புனைவித்துக் கொள்ள உதவும் நொச்சிக்கு அயலதாய்த் தன் சிறு விரல்களால் வரித்த மணல் விளையாட்டினை, கண்ணுடை மக்காள்! நீர் கண்டீரோ?” (அகநா. 275) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 37 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -

{Entry: G07__425}

தலைவி உடன்போயவழி அவளைப் பெற்ற தாய், தலைவ னைப் பெற்ற தாய் தன்னைப் போல மனத்துயரம் அடைதல் வேண்டுமென வருத்திக் கூறல்.

“புலியிடமிருந்து உயிர்தப்பிய ஆண்மான் தன் பெண் மானைக் குரலிட்டு அழைக்கும் தீமை நிறைந்த பாலைவழி யில், என் மகளை அழைத்துச் சென்ற விடலையைப் பெற்ற தாய், நினைக்குந்தோறும் கண்ணீரைப் பெருக்கும்படியான துன்பத்தை யடைவாளாக!” (ஐங். 373) என்பது போன்ற நற்றாய் கூற்று.

இஃது இச் சூத்திரத்துள் ‘அன்ன பிறவும்’ என்பதனால் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 36 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -

{Entry: G07__426}

தலைவி உடன்போனவிடத்துத் தலைவியைப் பெற்ற தாய் தன்னையும் தலைவனையும் தன் மகளையும் குறித்து, இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களிலும் நிலைபெற்று வரும் நல்வினை தீவினைக்குரிய செயல்களைத் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்திக் கூறல்.

“என் குறுமகள் போகிய சுரம், மயில்கள் ஆடும் உயர் நெடுங்குன்றங்களில் தாழ்ந்த மேகங்கள் மழை பொழிய வழி இனியது ஆகுக!” (ஐங். 371) “தனது நெஞ்சம் கொள்ளத் தெருட்டிய காளையோடே பல குன்றம் இறந்து உடன்போய என் மகள் என்னையும் நினைத்துப் பார்த்தாளோ?” (ஐங். 372) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -

{Entry: G07__427}

தலைவி உடன்போயவழி, நற்றாய் மகளைப் பயந்த தன்னை யும் தலைவனையும் அவனுடன் சென்ற தன் மகளையும் நினைத்து நினைத்து வருந்திக் கூறல். (தொ.பொ. 36 நச்.)

“எருமைகள் நிறைந்த பால் வளம் மிக்க தன் இல்லத்தையும் தாயர் தோழியரையும் விடுத்துத் தன்னை அழைத்துச் சென்ற காளை போல்வானுடைய பொய்ச்சொற்களில் மனம் கலங்கி உடன்போகித் தொலைவிலுள்ள, அவன் அழைத்துச் செல்லும் ஊருக்கு வழியில் விழுந்து கிடக்கும் நெல்லிக்காய் களைத் தின்று சுனையிலுள்ள சிறிது நீரைப் பருகிச் செல்லத் தொடங்கிவிட்டாளே என் மகள்!” (நற். 271) என்பது போன்ற, தன் மகளைப் பிரிந்த தனிமையால் வருந்திக் கூறும் நற்றாய் கூற்று.

உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -

{Entry: G07__428}

தலைவி உடன்போயவழி, அவளைப் பெற்ற தாய் அவள் வழியிடை நுகரக் கூடிய துன்பத்தை நினைத்து வருந்திக் கூறல். (தொ. பொ. 36 நச்.)

“செம்பொற் கலத்தின்கண் அழகிய பொரி கலக்கப்பட்ட பாலையும் மிகை என்று பருகியறியாத என் தளிர் அன்ன மகள், நீரில்லாத நெடிய சுரவழியில், கழலோன் துணையாக உடன்வர, அவனொடு விரைந்து நடந்து நீர் அற்ற சுனைக்கண் மறுகி வெப்ப முற்றுக் குறைந்துபோன கலங்கல்நீரைத் தாகம் தணியக் குடிப்பதற்கு எவ்வாறு வல்லுநள் ஆவாளோ?” என்றாற் போன்ற நற்றாய் கூற்று.

‘நற்றாய் தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல்’ என்னும் நம்பியகப் பொருள். (186)

உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -

{Entry: G07__429}

தலைவி தலைவனோடு உடன்போயவழி, அவளைப் பெற்ற தாய் தெய்வத்தை வேண்டிப் புலம்புதல்.

“அரிய சுரத்தைக் கடந்து தன் மகனோடு என் குறுமகள் வருவாளென அவன்தாய் தன் பெருமனை மதிலில் செம்மண் பூசி மனையிடத்து முற்றத்தே புதுமணற் பரப்பிப் பலவிடத் தும் பூமாலைகளைத் தொங்கவிட்டு மகிழ்ச்சி மிக விழா அயர்வாள் என்ப. யான் இம்மகளைப் பெற்ற அவ்வுரிமைக்கு அருளாவிடினும், அவளைப் பலநாள் காத்தோம்பி நலம் புனைவித்த உதவியை அம்மகன் அறியவல்லானோ? முதுவாய் வேல! இரவெல்லாம் இடையறாது கண்ணீர் வாரும் என் கண்கள் இனிது துயில் கொள்ளுமாறு அவன் அவளை எம்மனைக்கண் முந்துறக் கொணர்வனோ? தன் மனைக்கண் அழைத்தேகுவனோ? அவன் குறிப்பு யாதெனக் கழங்கினது திட்பம் கூறுக.” (அகநா. 195) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச். )

இதனை ‘நற்றாய் சுரம் தணிவித்தல்’ என்னும் துறையாகக் கூறும் நம்பியகப்பொருள் (186), அக்கூற்று ஒருவகையான் தெய்வத்தை வேண்டிப் புலம்புதற்கண் அடங்கும் ஆதலின்.

உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -

{Entry: G07__430}

தலைவி உடன்போயவழி, அவளைப் பெற்ற தாய் தோழி யிடம் சினந்து உரையாடல்.

“என் மகளே! நின்தோழி - (தலைவி) விளையாடிய வரிப்புனை பந்தும், விளையாடு மிடத்துள்ளனவாகிய வயலைக்கொடி யும் நொச்சியும் யானே தனியளாய்க் காண்கிறேன். அதன் மேலும், பாலைவழியில் வெப்பம் விளங்கும் அமையத்தே அவள் அமர்செய்யும் கண்ணளாய் நோக்கி, வென்வேல் விடலையாகிய தன் தலைவனை, நடத்தற்கரிய அம்மலை வழிக்கண் துன்பம் செய்வளோ என நினையும்தோறும் மனத்தே வருத்தமுறத் துன்பம் மிகுகின்றது. (இந்நிலைக்கு நின் தோழி உடன்போக்கு நேருமாறு செய்துவிட்டனை!)” (நற். 305) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச்.)

‘நற்றாய் பாங்கி தன்னொடு சாற்றல்’ என்னும் நம்பியகப் பொருள் (185) (தொ. பொ. 36 நச்.)

உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -

{Entry: G07__431}

தலைவி உடன்போயவழி, அவளைப் பெற்ற தாய் பல்லி முதலியவற்றின் சொல் ஆகிய நல்ல சகுனங்களொடு, தன் குடும்பநிலையைப் பொருத்திப் புலம்புதல்.

“சிறு கருங்காக்கை! விடலையோடு உடன்போய என் அஞ்சிலோதியை வரக் கரைவாயாக. நினக்குப் பசிய இறைச் சிக் கறி விரவிய பைந்தினைச் சோற்றைப் பொற்கலத்தி லிட்டுத் தருவேன்” (ஐங். 391) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச்.)

‘நற்றாய் நிமித்தம் போற்றல்’ என்பது நம்பியகப் பொருள் கிளவி. (186)

உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -

{Entry: G07__432}

தலைவி உடன்போயவழி, வருந்திய அருளுடைய தாயின் நிலையையும் தோழியர் நிலையையும் அயலிலிருந்து கண்டோர் வருந்திக் கூறியது.

“வளம்படைத்த மருதநில வைப்பினைக் கடந்து சென்ற மகள் பொருட்டாகத் தோழியர் கூட்டமும் கவின் இழந்து வருத்த முற்றது; அவள் தாயும், நொச்சி நிழலில் குவளையது வாடுமலரைச் சூடி மணலிற் பாவையைக் கையிலெடுத்துக் கண்ணும் நெற்றியும் நீவி, ‘என் மருமகளே!’ என்று தழுவி, ‘நின்னை ஈன்ற என் மகளைத் தருக; அவளைக் காணமாட் டாத என்னுயிர் அழிக!’ என்று அழுகிறாள்” (அகநா. 164) என்றாற் போன்ற கண்டோர் கூற்று. (தொ. பொ. 36 நச்.)

தலைவியினுடைய ஆயமும் தாயும் அழுங்கக் கண்டு காதலின் இரங்கும் ‘கண்டோர் இரக்கம்’ என்னும் நம்பியகப் பொருள் (187)

உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -

{Entry: G07__433}

தலைவி உடன்போயவழி, அவளைப் பெற்ற தாய் அவள் விடுத்துச் சென்ற விளையாட்டுப் பொருள்களாகிய பந்து பொம்மை ஆகியவற்றைக் கண்டு தன்மகள் நினைப்பு மேலிட வருந்திக் கூறல்.

“நீர்வேட்கையால் முயன்ற வருத்தமிக்க யானை தூம்பு போலப் பெருமூச்செறியும் சுரநெடுவழிக்கண்ணே என் மகள் சென்றனள்; தான் விளையாடிய பந்தும் பாவையும் கழங்கும் ஈண்டுக் கிடப்பத் தான் அவற்றை விடுத்துச் சென்று விட்டாளே!” (ஐங். 377) என்றாற் போன்ற நற்றாய் கூற்று. (தொ. பொ. 36 நச்)

‘நற்றாய் தலைவி பயிலிடம் தம்மொடு புலம்பல்’ என்பது நம்பியகப்பொருள் செய்தி. (185)

உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -

{Entry: G07__434}

தலைவி உடன்போயவழி, அவளைப் பயந்த தாய் தன் குடும்ப நிலையைச் சகுனச் சொற்களொடு பொருத்திப் பார்த்துப் புலம்புதல். (தொ. பொ. 36 நச்.)

தன் மகள் உடன்போயின அன்று ஊர்எல்லையை எய்தி நெல்லையும் முல்லை மலரையும் தூவித் தெய்வத்தை வழிபட்டு நின்ற நேரத்தில், அவளோடு இயைபில்லாதா ரொருவர், ” விரைவில் மீண்டும் வருவர், கவலை வேண்டா” என்றாற்போல (முல்லைப். 7 : 17) மற்றொருவரிடம் உரையா டும் நற்சொல்லைக் கேட்டு ஆறுதலடைதல்.

உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்

{Entry: G07__435}

1. புணர்ந்து உடன்வரும் தலைவன் தலைவி என்ற இருவ ரிடமும் வழியிடைக் கண்டவர்கள் அன்பு கொண்ட நெஞ்சத்தோடு அவர்கள் அக்கொடிய வழியில் வருதல் கண்டு ஆற்றாமை கொண்டு, ” இனி உடன்போதல் எளிய தன்று; நும் ஊர்க்கே மீண்டு செல்லுமின் என்று கூறி அவர்களை மீண்டு போகச் சொல்லுதல். (எ-டு : குறுந். 390)

2. உடன் போவாராய் வந்த தலைவன் தலைவி என்ற இருவரிடமும் அன்புற்ற உள்ளத்தொடு வழியிடைக் கண்டோர் அவர்களது நிலைமைக்கு வருந்தித் தம் மனக் கருத்தை அவ்விருவரிடமும் கூறி அவர்களை விடுக்கு மிடத்துக் கூறுதல். (எ-டு : ‘இதுநும் மூரே’ என்ற பாடல்.) (தொ. பொ. 40 நச்.)

உடன்போக்கு -

{Entry: G07__436}

தலைவி தலைவனுடன் தனித்துப் புறப்பட்டு வேற்றூர் சேர்தல்.

தானும் தலைவியும் ஒழுகிய களவொழுக்கம் பலரானும் அறியப்படுவதன் முன், தான் தலைவியை மணக்காமல் களவொழுக்கத்தைப் பலநாள் நிகழ்த்தித் தலைவியைப் பிரிவாற்றாமையானும் நொதுமலர் வரைவுப் பேச்சானும் இற்செறிப்பானும் வருந்தச்செய்து, அவள் தன்னைப் பிரிந்து தொடர்ந்து வாழ முடியாது என்ற நிலை வந்தபோது, இரவிடை அவள்உறவினர் அறியாமல் அவளை அழைத்துக் கொண்டு வேற்றூருக்குப் புறப்பட்டுத் தம் களவொழுக் கத்தை ஊர் அறியப் பரவுமாறு செய்த தலைவனது இப் பொருந்தாக் காமப் பொருட் செய்தி, ஆசிரியர் சிலரால் ஐந்திணை யின்பத்துக்கு ஏலாத அகப்பொருட் பெருந் திணைக் கிளவிகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. (ந.அ. 243)

உடன்போக்கு இடையீடு : நால்வகை -

{Entry: G07__437}

1. போக்கு அறிவுறுத்தல் - (ஐம்பத்தாறாம் நாள்) தான் தலைவனுடன் போவதைத் தோழியர்க்கும் தாய்க்கும் சொல்வதற்காகத் தலைவி எதிரே வந்தவர்களை அனுப்பு தலும், அந்தணர் நற்றாயிடம் தலைவி உடன்போன செய்தியை அறிவித்தலும்;

2. வரவு அறிவுறுத்தல் - தன் சுற்றத்தார் பின் தொடர்ந்து வருவதைத் தலைவி தலைவற்கு இடைச்சுரத்தில் அறிவித்தல்;

3. நீக்கம் - தலைவன் தலைவியை அவளுடைய சுற்றத் தாரொடு சேருமாறு இடைச்சுரத்தில் விட்டு நீங்குதல்;

4. இரக்கமொடு மீட்சி - தலைவன் தன்னை விட்டகன்ற பின்னர், தன்னை வந்தடைந்த சுற்றத்தாருடன் தலைவி மிகுந்த துயரத்தோடு இல்லத்திற்கு மீண்டு வருதல் என்பன. (ந. அ. 197)

உடன்போக்குக் கிளவிகள் (திருக்கோவையார்) -

{Entry: G07__438}

பருவங்கூறல் முதலாக அமுங்கு தாய்க்கு உரைத்தல் ஈருக உள்ள கிளவிகள் ஐம்பத்தாறும் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்குரிய. (கோவை. சூ. 16 (194 - 249)

1. பருவங்கூறல் 2. மகட்பேச்சு உரைத்தல். 3. பொன் அணிவு உரைத்தல். 4. அருவிலை உரைத்தல். 5. அருமைகேட்டு அழிதல். 6. தளர்வு அறிந்து உரைத்தல். 7. குறிப்பு உரைத்தல். 8. அருமை உரைத்தல். 9. ஆதரம் கூறல். 10. இறந்துபாடு உரைத்தல். 11. கற்புநலன் உரைத்தல். 12. துணிந்தமை கூறல்.
13. துணிவொடு வினாதல். 14. போக்கு அறிவித்தல். 15. நாண் இழந்து வருந்தல். 16. துணிவு எடுத்து உரைத்தல். 17. குறியிடம் கூறல். 18. அடியொடு வழிநினைந்து அவன் உளம்வாடல்.
19. கொண்டுசென்று உய்த்தல். 20. ஓம்படுத்து உரைத்தல்.
21. வழிப்படுத்து உரைத்தல். 22. மெல்லக் கொண்டு ஏகல். 23. அடல் எடுத்து உரைத்தல். 24. அயர்வு அகற்றல். 25. நெறிவிலக்கிக் கூறல். 26. கண்டவர் மகிழ்தல். 27. வழி விளையாடல். 28. நகர் அணிமை கூறல். 29. நகர் காட்டல். 30. பதிபரிசு உரைத்தல். 31. செவிலி தேடல். 32. அறத்தொடு நிற்றல். 33. கற்பு நிலைக்கு இரங்கல். 34. கவன்று உரைத்தல். 35. அடிநினைந்து இரங்கல். 36. நற்றாய்க்கு உரைத்தல். 37. நற்றாய் வருந்தல். 38. கிளிமொழிக்கு இரங்கல். 39. சுடரோடு இரத்தல். 40. பருவம் நினைந்து கவறல். 41. நாடத் துணிதல். 42. கொடிக் குறி பார்த்தல். 43. சோதிடம் கேட்டல். 44. சுவடுகண்டு அறிதல். 45. சுவடுகண்டு இரங்கல். 46. வேட்டமாதரைக் கேட்டல். 47. புறவொடு புலத்தல். 48. குரவொடு வருந்தல். 49. விரதியரை வினாவல். 50. வேதியரை வினாவல். 51. புணர்ந்து உடன் வருவோரைப் பொருந்தி வினாவல். 52. வியந்து உரைத்தல். 53. இயைபு எடுத்து உரைத்தல். 54. மீள உரைத்தல். 55. உலக இயல்பு உரைத்தல். 56. அழுங்கு தாய்க்கு உரைத்தல் - என்னும் திருக்கோவையாரின் உடன்போக்குக் கிளவிகளாம்.

கோவை-194-

உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -

{Entry: G07__439}

தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு உடன் போக் கினை நிகழ்த்தக் கருதிய தன் எண்ணத்தைத் தோழியிடம் கூற, தோழி தலைவனிடம் தன்தலைவியை உடன்போக்கிற்கு இணங்கச் செய்வதாகக் கூறல். (தொ.பொ. 39 நச். இந்நூற் பாவில், ‘போக்கற்கண்’ தோழி கூறுவனவற்றுள் அடங்குவ தொரு கூற்று இது.)

‘வென் வேல் விடலை! எயினர் தங்கையாம் இளமா எயிற்றி (தலைவி)க்கு நின் மனநிலையை அறியச் சொல்லி நான் குறையிரப்பேன்; அதுகாறும் நீ விரையற்க.’ (ஐங். 364) என்றாற் போன்ற தோழி கூற்று.

‘பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்’ என்பது நம்பியகப் பொருள் கூற்று. (182)

உடன்போக்கு முதலியவற்றில் எஞ்சியோர் கூற்று -

{Entry: G07__440}

எஞ்சியோர் - எடுத்து விதந்து கூறிய நற்றாய் கண்டோர் தோழி தலைவன் நீங்கலாக எஞ்சியுள்ள செவிலி, தலைவி, ஆயத்தோர், அயலோர் என்பார்.

அவை, செவிலி தலைவியை நினைந்து மனையின்கண் மயங்கு தல், தெருட்டுவார்க்குக் கூறுதல், சுரத்திடைப் பின்சென்று நவ்விப்பிணாக் கண்டு சொல்லுதல், கானவர் மகளைக் கண்டு சொல்லுதல், தன் நெஞ்சிற்குச் சொல்லுதல், குரவொடு புலம்பி அதனை வழிகாட்ட வேண்டல் போல்வன.

போக்குடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தல், நாண் நீங்கி னமை கூறல், அலரச்சம் நீங்கினமை கூறல், வழிவருவோரிடம் ஆயத்தாருக்குத் தன் உடன்போக்குச் செய்தி சொல்லி அனுப்புதல், தான் வருத்தமின்றித் தேரேறிச் செல்வதை நற்றாய்க்கு உரைமின் என்றல், மீள்கின்றாள் தன் வரவு ஆயத்தார்க்குக் கூறி விடுத்தல், மீண்ட தலைவி வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறல், ஐயன்மார் பின் தொடர்ந்தவழி. நிகழ்ந்ததைத் தோழிக்குக் கூறல் போல்வன.

ஆயத்தார் தலைவிபிரிவுக்கு வருந்துதலும் அயலோர் தலைவி மீண்டு வந்துழிக் கூறுவனவும் போல்வன. (தொ. பொ. 42 நச்.)

உடன்போக்கு வகை -

{Entry: G07__441}

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்றனுள் முதலாவ தாகிய உடன்போக்கு எட்டுவகைப்படும். அவையாவன

1. போக்கு அறிவுறுத்தல் - தோழி தலைவனிடம் தலைவியை உடன்கொண்டு போமாறு அறிவுறுத்தல்;

2. போக்கு உடன்படாமை - தலைவனும் தலைவியும் அதனை மறுத்தல்.

3. போக்கு உடன்படுத்தல் - உடன்கொண்டு செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்று தலைவனுக்கும், கற்பின் மேன்மையைத் தலைவிக்கும் எடுத்துக் கூறி, தோழி இருவரையும் உடன்போக்குக்கு ஒருப்படுவித்தல்,

4. போக்கு உடன்படுதல் - இருவரும் உடன்போக்கிற்கு ஒருப்படுதல்;

5. போக்கல் - தலைவனுடன் தலைவியைத் தோழி வழி யனுப்புதல்,

6. விலக்கல் - உடன்போக்கில் தலைவனையும் தலைவியை யும் கண்டோர், அவர்களது களைப்பினைக் கண்ணுற்று அவர்களது செலவைத் தடுத்துத் தம் இல்லத்தில் தங்கிப் போமாறு வேண்டல்;

7. புகழ்தல் - தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறுதல்;

8. தேற்றல் - கண்டோர், தலைவனதூர் அருகிலிருப்பதைக் கூறியும், தலைவன் தனதூர் வந்துவிட்டமை கூறியும் தலைவியைத் தேற்றுதல் என்பன. (ந. அ. 181)

உடன்போகாநின்ற தலைமகட்குத் தலைவன் சொல்லியது -

{Entry: G07__442}

“பாதிரிப்பூக்கள் விழுந்து மணம் வீசும் வேனிற்காலத்துப் பகற்போதில், யாமரத்தின் பட்டைகளைக் களிறு சுவைத்துப் போகட்ட சக்கை காய்ந்து அவ்வழியே செல்லும் உப்புவணி கருக்குத் தீமூட்டும் துரும்பாக உதவும் புதர்கள் அடர்ந்த பகுதியில் பாம்புகள் நெளியும்படி குட்டிக்கரடிகள் புற்றாஞ் சோற்றைக் கிளறும் மலைப்பகுதியில், கடத்தற்கரிய வழி யிலே சீறடி சிவப்ப என்னொடு நடந்து வந்து உன் கூந்தலை நன்கு வாரி வெண்கடம்ப மலர்களைத் தொடுத்துச் சூடி உன் கூந்தலில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டுதலை அறியாது கைகளை வளையொலிப்ப வீசிக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வரும் நின் அன்பு மேதக்கது” (அகநா. 257) என்பது போன்ற கூற்று. (தொ. பொ. 41 நச்.) ‘அப்பாற்பட்ட ஒருதிறத் தானும்’ என்பதனால் தழுவப்படும் ஒரு கூற்று இது.

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -

{Entry: G07__443}

” குறுமகளே! புலிநகம் போலச் சிவந்த முகை விரிந்த முள் முருங்கைப் பூக்கள் கீழே பரவிக் கிடக்கின்றன. மகளிர் நகில் போன்ற கோங்கமொட்டுக்கள் அலர்ந்த பூக்களும் புனலிப் பூக்களும் பலவாகக் காணப்படுகின்றன. பாதிரிப்பூக்களும் வெண்கடப்பம்பூக்களும் விரவித் தோற்றம் அளிக்கின்றன. தெய்வத்தின் முன்னிலையில் கலந்து கிடக்கும் பூக்களைப் போல இக்காடு பலவகைப் பூக்களைக் கொண்டு காண்டற்கு இனிதாக உள்ளது. இந்த வனப்பினைக் காண்பாயாக. மேலும் நின் தந்தை போரிடற்குப் பயன்படுத்தும் களிறுகளொடு பிடிகளும் கன்றுகளும் சூழ இருப்பது போன்று சிறியவும் பெரியவுமான குன்றுகள் சூழ்ந்திருப்பதனையும் காண்பா யாக!” என்று தலைவியை இன்புறுத்தித் தலைவன் உடன் போக்கில் அழைத்துச் சென்றது. (அகநா. 99)

‘அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்’ (தொ. பொ. 41 நச்.) என்பதனால் கொள்ளப்படுவது இது.

உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -

{Entry: G07__444}

“மகளைத் துறந்தமையால் துயரம் வருத்தத் தளர்ந்து அறக்கடவுளை வெறுத்துப் பழிக்கும் அங்கணாட்டி! துயரம் மிக்க நின் மனத்திற்குப் பாதுகாப்பாக, வெள்வேல்விடலை (- தலைமகன்) முன் வர, நின்மடமகள் இல்லத்திற்கு வந்த னளோ!” (ஐங். 398) என்றாற் போன்ற கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

{Entry: G07__445}

“அன்னை! கேள். அவர் நாட்டில் தழைகள் வீழ்ந்த கிணற்றின் கீழதாய் மானுண்டு எஞ்சிய கலங்கல் நீர், நம்தோட்டத்தி லெடுத்த தேன் கலந்த பாலினும் உண்ணுதற்குச் சுவை மிக்கது!” (ஐங். 203) என்றாற்போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -

{Entry: G07__446}

” தோழி! நல்வரைநாடனொடு நான் இதுபோது வந்துவிட்ட காரணத்தால் இனி வருந்தற்க; மூங்கில் தன் வனப்பினை இழத்தற்குக் காரணமான என் தோள்களையும், வெயில் தெறுதலால் நுண்ணிய அழகு கெட்ட என் நுதலையும் நோக்கி நீ வருந்தற்க. வாழி!” (ஐங் 392) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -

{Entry: G07__447}

உடன்போய் மீள்கின்ற தலைவி, முன் செல்வோரிடம் தம் வருகையைப் பாங்கியர்க்கு உணர்த்துமாறு சொல்லி விடுப்பது.

“முன்னுற விரைந்து செல்லும் மக்காள்! செந்நாய் ஏற்றை யானது பன்றிக்குட்டியைக் கவ்வாது நீங்கும் அருஞ்சுர வழியிடை இவள் வருகின்றாள் என்னும் செய்தியை எம் தோழியர்கூட்டத்திற்கு முற்பட விரையச் சென்று சொல்லு மின்” (ஐங். 397) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 42 நச்.)

உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -

{Entry: G07__448}

தலைவியை அழைத்துக்கொண்டு சென்று வெளியூர்க்கண் மணந்த தலைவன் மீண்டும் தலைவியூர் வருதலைக் கூறல். இது கவி கூற்று.

தன்னூரில் தன் பொன் மாளிகையில் சான்றவர் முன் தலைவியை மணந்து இன்புற்று வாழும்போது, தலைவிக்குத் தன்னூர் நினைவு வரவே, தலைவன் அவளை அழைத்துக் கொண்டு அவளூர்க்கு வருகின்றான் என்பது. (அம்பிகா. 409)

இது வரைவியலுள் மீட்சி என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையில் ‘ஒன்றென முடித்தலால்’ தழுவிக் கொள் ளப்பட்டது. (இ. வி. 540 உரை)

உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -

{Entry: G07__449}

“கிளியும் பந்தும் கழங்கும் விரும்பிய என்மகள் தன் அளியும் அன்பும் சாயலும் பிற இயல்பும் முன்பிருந்தன போல இல்லாத வளாயினாள். நான் ஒருமுறை மெல்லச்சென்று அவளது நுதலை நீவித் தழுவிக்கொண்டேனாக, அவள் ஆகம் வியர்ப்ப என்னைப் பன்மாண் முயங்கினாள். அதன் பொருள் அறியாதுபோனேனே! இதுபோது விறல் மிகு நெடுந்தகை தன்னைப் பலவாகப் பாராட்ட, மடமான் கூட்டம் பெயல் நீர் பெறாமல் மரலைச் சுவைக்கும் கான் வழியை அவள் நடத்தலை யான் பண்டே அறிந்திருப்பின், தந்தையது காவல் மிக்க இல்லத்தே அவள் செல்லுமிட மெல்லாம் உடல்நிழல் போலத் தொடர்ந்து, அவள் விளையாடுமிடமெல்லாம் அகலாதிருப்பேன்மன்!” (அகநா. 49) என்றாற் போன்ற செவிலி கூற்று.

‘செவிலி இனையல் என்போர்க்கு எதிரழிந்து மொழிதல்’ என்னும் நம்பியகப்பொருள். (184) (தொ. பொ. 42 நச்.)

உடனுறை -

{Entry: G07__450}

ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சி (தொ. பொ. 242 நச்.) ‘இறைச்சி’ காண்க.

உடைமையது உயர்ச்சி ஒன்றாமை -

{Entry: G07__451}

பொருள் நிரம்ப உடையவர்களுக்கு அது போதும் என்ற மனநிறைவு வேண்டும்; அத்தகு மனநிறைவைப் பொருந் தாமை. அஃதாவது பெரும்பொருளுடையார் மீண்டும் பொருளீட்ட விரும்புதல். இது தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் காரணமாகக் கொள்வனவற்றுள் ஒன்று. (தொ. பொ. 41 நச்.)

உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -

{Entry: G07__452}

எருமை தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடியலிலே வயலில் மேயும் ஊரன் (ஆதலின், விலக்கு வார்க்கு அடங்காது புறத்தொழுக்கத்தில் திளைத்து நிற்கும் நம் தலைவன்) பகலிலும் உணவுண்ண நம் இல்லத்துக்கு வாராது எனக்குப் பெருந்துயரம் செய்துள்ளான்” என்று தலைவி குறிப்பாற் புலப்படுமாறு கூறுதல். (ஐங். 95)

உண்டியால் ஐயமுற்று ஓர்தல் -

{Entry: G07__453}

தலைவனையே நினைந்து ஏங்கும் தலைவி உணவில் மிகுந்த நாட்டம் கொள்ளாமல் முன்னினும் குறைந்த அளவே உண்டலைக் கண்டு ஐயுற்றுப் புணர்ச்சியுண்டென்று பாங்கி துணிதல்.

இது களவியலுள் ‘பாங்கி மதி யுடன்பாடு’ என்னும் தொகு திக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 139 இ. வி. 507)

உண்டியின் உவத்தல் -

{Entry: G07__454}

தலைவி சமைத்த உணவினை உண்ட தலைவன் அதனை உவந்து கூறுதல். “என்னுயிர் அனையாய்! முகத்தில் அழகிய வியர்த்துளி அரும்ப, அருங்கயற்கண்ணில் சிவப்புப் பரவ, தாளிப்புப்புகை கமழ நீ அட்ட பொரிக் கறியும் இனிய பாற் சோறும் தேவர் உண்ணும் அமுதமே போன்றன” என்ற தலைவன் கூற்று.

இஃது அம்பிகாபதி கோவையுள் இல்வாழ்க்கைப் பகுதியில் ஒருகூற்று. (அம்பிகா. 442)

உண்மை கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__455}

பகற்குறி நிகழ்த்தி வந்த தலைவனைத் தோழி விரைவில் தலைவியை வரையுமாறு வேண்ட, அதற்கு உடன்படாது, தலைவியை மிக உயர்த்திக் கூறிய தலைவனிடம் அவள், “மலைநாட! எங்கள் பெற்றோர் கானவர்; எளிய மக்கள். நீ வரைவு விரும்பாமையின் எங்களைப் புனைந்து கூறுதல் வேண்டா” எனத் தங்கள் குடும்பத்து உண்மைநிலையை எடுத்துக் கூறித் தலைவியை விரைவில் மணக்குமாறு தலைவனை வேண்டுதல்.

இது ‘பகற் குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 130.)

உண்மை செப்பும் கிளவி -

{Entry: G07__456}

இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் வகை ஏழனுள் ஒன்று.

உண்மை செப்புதலாவது நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி கூறுதல். (112 இள. உரை)

படைத்து மொழியாமல், நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே கூறுதல். எளித்தல் ஏத்தல் முதலியவற்றைச் சிறிது கலந்து உண்மை செப்புதலு முண்டு. (தொ. பொ. 207 நச்.)

உணர்த்த உணர்தல் -

{Entry: G07__457}

களவொழுக்கத்தைத் தோழி உணர்ந்ததைத் தலைவன் உணர்த்தத் தலைவி அதனை அறிதல்.

தலைவன் புணர்ச்சியிறுதிக்கண் தலைமகளைக் கோலம் செய்ய அவள் மிகவும் நாணத் தலைவன், “நின்தோழி செய்யுமாறே கோலம் செய்துள்ளேன்” என்று கூறத் தலைவி, தலைவன் தோழியைச் சந்தித்திருக்கும் செயலை உணர்வாள். இதனால் பயன், தலைவி தன் களவொழுக்கத்தினைத் தோழி யிடம் அறிவித்தற்குத் தலைவன் வழிசெய்துகொடுத்தமை. (இறை. அ. 4)

உணர்த்த உணரா ஊடல் -

{Entry: G07__458}

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன், தன்மேல் தவறு ஏது மின்று எனப் பல காரணம் காட்டியும், செய்த தவற்றினைப் பொறுத்துக் கொள்வாயென வேண்டியும், தலைவியைத் தெளிவித்த இடத்தும், அவள் தன் வெகுளி நீங்காளாய்த் தலைவனிடம் ஊடல் நீடித்தல்; இங்ஙனம் தலைவியிடத்தே உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றுமாயின், தலைவனும் அவளது பண்பின்மை கருதி வெறுத்து அவளிடம் ஊடல் கொள்ளுதலு முண்டு. இவ் ‘வுணர்த்த உணரா ஊடல்’ என்ற கற்புக்காலக் கிளவித்தொகைக்கண்ணே ‘வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைவன் வாயில் வேண்டல்’ முதலாகத் ‘பாங்கி தலைவனை அன்பிலை கொடியை என்று இகழ்தல்’ ஈறாகப் பதினான்கு கூற்றுக்கள் உள. இது ‘முதிய கலாம்’ எனவும் கூறப்படும். (ந. அ. 206; இறை. அ. 50)

உணர்த்த உணரும் ஊடல் -

{Entry: G07__459}

தலைவன் பரத்தையிற் பிரிந்துவந்து வாயில் வேண்டியவழித் தலைவி வாயில் மறுக்கவே, தலைவன் தன்மீது குற்றமின்று என்று தலைவி மனம் கொள்ளும் வகை தெளிவித்தும், தன் குற்றத்தைப் பொறுக்குமாறு அவளை வேண்டியும் அவளது ஊடலைப் போக்குவித்தல்.

இஃது ‘இளைய கலாம்’ எனவும் கூறப்படும்.

இது ‘காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்விறைவிக்கு என்றல்’ முதலாகப் ‘புணர்ச்சியின் மகிழ்வு’ ஈறாகக் கூறப்பட்ட பதினொரு கிளவிகளை யுடையது. (ந. அ. 205)

உணர்ப்பு -

{Entry: G07__460}

உணர்த்துதல்; தலைவனிடம் பரத்தைமை கருதி அவனோடு ஊடுதல் கொண்ட தலைவிக்குத் தன்மாட்டு அத்தகைய தவறு எதுவுமின்று என்று தலைவன் தன் சொற்களாலும் செயல்களாலும் தெளிவித்தலும், தன் பரத்தைமை மறைக்க முடியாத அளவு வெளிப்பட்டதாயின் “தப்பினேன்” என வணக்கத்துடன் கூறி அவளை அமைதியுறுத்தலும் (கலி. 89)
ஆம். (தொ. பொ. 499 பேரா.)

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -

{Entry: G07__461}

“யான் உணர்த்தியும் தணியப்பெறாத இவள் ஊடலால் யான் துன்புறும்போது எனக்குரிமை வாய்ந்த என் நெஞ்சமே துணையாகவில்லையெனின், வேறு யார்தாம் எனக்குத் துணையாவார்? ஆதலால் இத்துன்பத்தை யான் உற்றே தீரல் வேண்டும்” என்று உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தனக்குள் கூறிக் கொள்ளுதல். (குறள் 1299)

உணர்வு (1) -

{Entry: G07__462}

தலைவன் தலைவியது ஊடலை நீக்கச் செய்யும் செயல்கள்.

ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய காரியமின்மையைத் தலைவன் உணர்வித்தல் ‘உணர்வு’ எனப்படும். இல்லது கடுத்த (ஐயுற்ற) மயக்கம் தீர உணர்வித்தலான், உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலான் ‘உணர்வு’ எனவும்படும். (தொ. செய். 187 பேரா.)

உணா -

{Entry: G07__463}

ஐவகை நிலத்து உணவுகளாகிய கருப்பொருள் வகை.

குறிஞ்சி - மூங்கில்நெல், மலைநெல், துவரை, தினை; தேன், மிளகு, இஞ்சி, மஞ்சள்.

முல்லை - வரகு, சாமை, முதிரை

பாலை - வழிப்பறி, ஊர்களுட் சென்று கொள்ளை யடித்தல் முதலியவற்றாற் கொணர்ந்தன.

மருதம் - செந்நெல், வெண்ணெல்; கன்னல், கனி வருக்கம், சேம்பு, கருணை, சேனை, மஞ்சள்.

நெய்தல் - மீன், உப்பு, வெண்சங்கு முத்துப் பவளம் இவற்றை விற்றுப் பெற்றன. (ந.அ. 20-24; சாமி. 74-79)

‘உய்த்துணர்வோரை உரைமின் என்றல்’ -

{Entry: G07__464}

உடன்போன தலைவியைத் தேடிப் பாலைநிலத்தில் சென்ற செவிலி எதிர்காலத்தை உணர்ந்து கூறும் சான்றோர்களை வழியிடைக் கண்டு தன்மகள் எதிர்காலம் பற்றி வினவுதல்.

“நான்மறை அந்தணீர்! இறைவன் அருளால் எம்மனைக் கண்ணேயே எம்மகளது திருமணத்தை நடத்தும் வாய்ப்பு எமக்கு நிகழுமோ என்று ஆராய்ந்து தீதின்றிக் கூறுமின்” (கோவை. 236) என்று செவிலி தக்கோரை வினவுதல்.

இதனை ‘சோதிடம் கேட்டல்’ என்னும் திருக்கோவை
யார். (236)

இதுவரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ.வி. 538 உரை.)

உயர்ந்தோன் -

{Entry: G07__465}

பொதுமக்களைவிட உயர்ந்த கிளவித்தலைவன். (ந. அ. 19) கிளவித்தலைவனைவிட உயர்ந்த பாட்டுடைத்தலைவன்.

(ந. அ. 246)

உயர்மொழி -

{Entry: G07__466}

தலைவனையும் தலைவியையும் உயர்த்துக் கூறும் கூற்று. இது தோழிக் குரித்து. ‘உயர்மொழிக் கிளவி’யும் அது.

(தொ. பொ. 240 நச்.)

உயர்மொழிக் கிளவி -

{Entry: G07__467}

‘உயர்மொழி’ நோக்குக

உயர்மொழியும் உறழ்கிளவியும் -

{Entry: G07__468}

களவிலும் கற்பிலும் இன்பம் உயர்தற்குக் காரணமாகக் கூற்று நிகழ்த்துமிடத்துத் தோழி உயர்மொழி கூறுமிடத்தே தலைவி மாறுபடக் கூறுவாள். தலைவன் உயர்மொழி கூறியவிடத்துத் தலைவி மாறுபடக் கூறுவாள். தலைவி உயர்மொழி கூறிய விடத்துத் தோழி மாறுபடக் கூறுவாள்.

உயர்மொழி - ஒருவரைப் புகழ்ந்து கூறும் சொல்; இன்பம் உயர்தற்குக் காரணமாகிய கூற்று.

உறழ் கிளவி - எதிர்மொழியாக மாறுபடக் கூறும் கூற்று.

(தொ. பொ. 238 நச்.)

உயிரெனக் கூறல் -

{Entry: G07__469}

தலைவியைத் தலைவன் தன்னுயிராகக் குறிப்பிடுதல்.

தெய்வத் திருவருளால், வேட்டை மேற் சென்று உடனிருந் தோரைப் பிரிந்து, தனியளாக நிற்கும் தலைவியை எதிர்ப் பட்டு அவளைக் கூடி அவள் தனக்கு வாழ்நாள் முழுதும் இன்றியமையாதவள் என்பதை யுணர்ந்து, ” உயிர் புலனா காதது என்று கூறுகிறார்களே! மார்பில் வளர்கின்ற கொங்கைகளோடு ஒளி வீசும் நிறைமதியம் போல அது காட்சி வழங்குகிறதே!” என்றாற் போலத் தனக்குள் தலைவியைத் தன்னுயிராகவே தலைவன் கூறி மதித்தல்.

தலைவியிடத்துள்ள ஆதரவின் மிகுதியாலே அவளைத் தலைவன் தன் ‘உயிரென வியத்தல்’ என்று கூறும் களவியற் காரிகை. [ (25) பக். 18 ]

இஃது இயற்கைப் புணர்ச்சி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 15)

உயிரென வியத்தல் (1) -

{Entry: G07__470}

இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைவியிடத்துக் கொண்ட ஆதரவின் மிகுதியாலே தலைவன் அவளைத் தனது உயிர் என்று வியந்து கூறல்.

இதனைத் தமிழ்நெறிவிளக்கம் ‘உயிரெனக் கூறல்’ என்னும். அது காண்க.

இத்துறை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்ற கிளவிக்கண்ண தொன்று. [ க.கா. (25) பக். 18 ]

உயிரென வியத்தல் (2) -

{Entry: G07__471}

பாங்கற் கூட்டத்துக்கண் பொழில் கண்டு மகிழ்ந்து பொழி லிடைச்சென்று புக்குத் தலைவன் தலைவியைக் கண்ட அளவில் அவளைத் தன் உயிராகக் கூறி அவள் செயல்களைத் தன்னுயிர் செய்வனவாகக் கூறுதல்.

இதனை இலக்கணவிளக்கம் ‘இடந்தலைப்பாடு’ என்னும் தொகுதியிடை ‘முந்துறக் காண்டல்’ என்பதன்கண் கொள்ளும். (503)

இது திருக்கோவையாருள் பாங்கற் கூட்டத்துக் கண்ண தொரு கிளவி. (கோவை. 390)

‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -

{Entry: G07__472}

தோழி தலைவனிடம் அவனுடைய நாடு, ஊர், குடிமை, மரபு, புகழ், வாய்மை காக்கும் இயல்பு ஆகிய பெருமைகளைக் கூறி, அத்தகைய மேம்பாடுடையவன் தலைவியை மணந்து கொள் ளாது களவினை நீட்டிப்பது முறைமையன்று என்று கூறுதல்.

‘முலைவிலை கூறல்’ (கோவை. 266) என்பதனுள் இஃது அடங்கும்.

“குறையிற்கும், கல்விக்கும், செல்விற்கும், நின்குலத்திற்கும் மகட்கேட்டுவருவோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்ப எமர் மகட்கொடை நேர்வர் அன்றித் தலைவிக்கு ஏழுலகும் முலைவிலையாகமாட்டா” என்ற தோழி கூற்றாக இம் ‘முலைவிலை கூறல்’ திருக்கோவையாருள் அமைந்துள்ளது. ‘உரவோன்.................. கூறல்’ இதன்கண் அடக்கப்பட்டது.

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

உரிப்பொருட்டலைவன் -

{Entry: G07__473}

கிளவித்தலைவன்; ‘உரிப்பொருட்டலைவன் ஒருவனே ஆனவாறும்’ (தொ.பொ. 55 நச். உரை) இவனுக்கு இயற் பெயர் கூறுவதில்லை. (L)

உரிப்பொருள் -

{Entry: G07__474}

ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக உரிமையுடைய ஒழுக்கம். குறிஞ்சிக்குப் புணர்தலும், பாலைக்குப் பிரிதலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்துக்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும் உரிப்பொருள்களாம். புணர்தல் முதலிய ஐந்தன் நிமித்தங் களும் உரிப்பொருளாய் அடங்கும். ஒரு பாடலுள்ளேயே உரிப்பொருள் இரண்டு மயங்கி வரலாம். (ந. அ. 25)

இவ்வுரிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டே குறிஞ்சி முதலிய திணைப்பெயர்கள் அமைந்தன என்பது நச்சினார்க்கினியர் கருத்து. (தொ. பொ.5)

உரிப்பொருள் அல்லன -

{Entry: G07__475}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணை களுக்கும் உரிய உரிப்பொருள்களாகிய இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்பன அல்லாதனவாகிய கைக்கிளை பெருந்திணைச் செய்திகள் (தொ. பொ. 3 நச்.)

முல்லை முதலிய திணைகளின் உரிப்பொருள்களாகிய இருத்தல் முதலியன அல்லாத முதற்பொருள் கருப் பொருள்கள். (15 இள.)

தலைவன் தலைவியை உடன்கொண்டு சேறல், இடையே தலைவியின் உறவினர் அவர்களைத் தடுத்துத் தலைவியைப் பிரித்துக்கொண்டு செல்லுதலால் பிரிவு பற்றி வருந்தல், தலைவன் தலைவி இருவரும் முதலில் சந்தித்தல், தம் உள்ள நிலையைக் கண்களால் தெரிவித்துக் கொள்ளுதல் முதலியன முல்லை முதலிய திணைகளுள் ஒன்றற்கும் நேரான உரிப் பொருள் ஆகாதன. இவை எல்லா நிலத்தும் வந்து மயங்கும். (அகத். 13 பாரதி)

உருவி -

{Entry: G07__476}

பாட்டுடைத்தலைவன்; ‘உருவி யாகிய ஒருபெருங் கிழவனை’ (யா. வி. பக். 565)

உருவெளித்தோற்றம் -

{Entry: G07__477}

இடைவிடா நினைப்பினால் எதிரிலுள்ளது போல் தோன் றும் போலித்தோற்றம். (L)

உருவு வெளிப்பட்டு நிற்றல் -

{Entry: G07__478}

கற்புக் காலத்தில் தலைவியிடம் நேரில் உணர்த்தாது பொருள் தேடப் பிரிந்த தலைவன் காணுமிடந்தோறும் தலைவியின் வடிவம் தனக்கு உருவெளியாகக் காட்சியளித்தலின், குறித்த இடம் நோக்கிச் செல்ல இயலாது மீண்டு வர முடிவுசெய்து பாலைநிலத்தே தடுமாறி நிற்றல்.

இதனைத் ‘தலைவன் சுரத்திடைத் தலைவியை நினைத்தல்’ என்ப. (இ. வி. 558 உரை)

இது ‘பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 341)

உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -

{Entry: G07__479}

தலைவனிடத்தே இடையறாது தன் மனத்தைச் செலுத்திய தலைவிக்கு அந்த நினைவின் மிகுதியால் அவனே தன் கண்ணெதிரே நிற்பது போன்ற உருவெளிப்பாடு தோன்ற, அந்த அழகனது கண்ணழகில் ஈடுபட்ட அவளது கூற்றாக வருவது இது .

“இதோ தெரியும் எம்பெருமானுடைய கண்கள் இரண்டும் உதயகிரிமீது அனல் வீச எழுந்த இரு ஞாயிறுகள் போலச் செங்கதிர்களைப் பரப்புகின்றன. ஞாயிற்று நெருப்பில் வீழ்ந்து இறக்கும் ‘மந்தேஹர்’ என்னும் அசுரர்களைப் போலவே எம்பெருமான்மீது காதல் கொண்ட என் போன்றவர்களும் அதன்கண் வீழ்ந்து உயிர்விடத்தானோ இந்தக் கண்கள் என்பார்வைக்கு எங்கும் தெரிகின்றன!”

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவி. 82)

‘உரை எனத் தோழிக்கு உரைத்தல்’ -

{Entry: G07__480}

1. தலைவன் தம் களவொழுக்கத்தைப் பற்றித் தோழியிடம் உரைக்குமாறு கூறும்போது தலைவி அதனைத் தோழிக்குக் கூறல்.

“தோழி! பொன்போன்ற பூங்கொத்துக்களையுடைய வேங்கை மரங்களால் அழகு பெற்ற பூம்பொழிற்கண் மலைநாடன் எனது நலம் புனையக் களவினால் இந்நாள் போயிற்று.” (ஐந்.ஐம்.11) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 110 இள. உரை)

2. விரைவில் களவொழுக்கம் தவிர்த்துத் தன்னை மணந்து கொள்ளுமாறு தலைவற்குக் கூறுமாறு தலைவி தோழியிடம் கூறல்.

“தோழி! யாதாமோ? அவரிடத்தும் நன்மையில்லை; தாய் முகத்தும் நன்மை தோன்றிற்றிலது. பூங்கானற் சேர்ப்பராம் அவரை இவ்வாறு என்னை வரையாது களவில் நீட்டித்தல் தக்கதோ என்று உரை. நின்னையன்றி இதன்கண் எனக்குத் துணையில்லை” (ஐந்.எழு. 58) என்றாற் போன்ற தலைவி கூற்று. (112 நச். உரை)

உரைகளின் வகை -

{Entry: G07__481}

சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடன், கிளவி, கேள்வி, மொழி, கோள், உட்பெறு பொருள், சொற்பொருள், எச்சம், இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு, காரணம், காலம், கருத்து, இயல்பு, விளைவு, உவமம், இலக்கணம், புடையுரை, மொழி சேர் தன்மை, பொருளடைவு என்னும் இருபத்தேழும் அகப்பொருளினுக்கு உரையாம். அகப்புறப் பொருளுக்கும், புறப்பொருளுக்கும், புறப்புறப்பொருளுக்கும் இவற்றுள் ஏற்பன கொள்ளப்படும். (வீ. சோ. 90, 91)

உரைகேட்டு நயத்தல் -

{Entry: G07__482}

காமத்தால் துன்புற்ற பெருந்திணைத் தலைவி காதலன் சொல்லைக் கேட்டு மகிழ்தல்.

“என் உயிரே அனைய காதலன் கூறும் அன்புமொழிகளைக் கேட்கும்போது நான் துய்க்கும் இன்பம் பெரிது, ஊரார் கூறும் அலரும் பழியும் பற்றி எனக்குக் கவலை இல்லை” என்பது போன்ற தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெருந்திணையின் ஒரு பகுதியாகிய பெண்பாற் கூற்றுக்களுள் ஒன்று.

(பு. வெ. மா. 16 : 16)

உரைத்தது மறுத்தல் -

{Entry: G07__483}

தலைவனிடத்தேயே உள்ளத்தைச் செலுத்திய தலைவி, தோழி போல்வார் வினாயவற்றிற்குத் தன்மனம் ஈடுபடாமல், உரைத்திருக்கும் மறுமாற்றத்தை மறந்தனளாயிருப்பவே, பின்னர்த் தோழி தலைவி கூறிய சொற்கள் பற்றி வினவிய காலைத் தான் அச் சொற்களைக் கூறவில்லை என்று மறுத்துக் கூறல்.

இந்நிலைக்குக் காரணம் தலைவியின் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தவர்க்கே புலனாம் ஆதலின் இஃது அகமெய்ப்பாடு
(வீ. சோ. 90) முப்பத்திரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை)

உலகியல் -

{Entry: G07__484}

உலகத்தே பொதுவாக நன்மக்களிடை நிகழும் நிகழ்ச்சி. புலனெறி வழக்கமாகிய செய்யுள்வழக்கத்திற்கு உலகியல் பற்றிய செய்திகளை இணைத்துக் கொள்வதும் இன்றியமை யாதது. (ந. அ. 2)

‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ (தொ.பொ. 53 நச்.)

உலகியல் உரைத்தல் -

{Entry: G07__485}

உடன்போய தலைவியைத் தேடிச் சென்ற செவிலிக்கு வழியிடைச் சான்றோர் உலகநடப்பைக் கூறுதல்.

தலைவனோடு உடன்போன தலைவியைத் தேடிக்கொண்டு செவிலி பாலைப்பகுதிச் செல்ல வழியிடைக் கண்ட சான்றோரைத் தம்மகள் பற்றி வினவ, அவர்கள், ” சந்தனமும் முத்தும் இசையும் பிறந்த இடத்துப் பயன்படாது மற்றவர்க் குப் பயன்படுமாறு போல, ஒருவர் பெற்ற பெண்ணும் அவ ருக்குப் பயன்படாது மற்றவருக்கே பயன்படுவாள் ஆதலின், அவளைப்பற்றிக் கவலையுறாமல் அவள் செய்தது உலகியற்கு ஏற்றதே என்று உட்கொண்டு ஊருக்கு மீண்டு செல்க” என்று அவளுக்குக் கூறல்.

இஃது ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. இதனை ‘மிக்கோர் ஏதுக் காட்டல்’ (ந. அ. 188) எனவும் கூறுப.

உலகியல் கூறி நீயுரை என்றல் -

{Entry: G07__486}

திருமணம் செய்துகொள்ளும் உலகமரபை எடுத்துக்கூறி, தலைவிதமரை எய்திப் பரிசப் பொருள் பற்றி அறியுமாறு தோழி தலைவற்கு அறிவுறுத்தல். களவு நீட்டித்தவழி அஃது அலராகிய தன்மையைத் தோழி தலைவற்குக் கூறி உலகத்து வழக்கப்படித் தலைவியை மணந்துகொண்டு இல்லறம் நிகழ்த்த ஆவன செய்யுமாறு வேண்ட, தலைவன் ” தலைவிக் குப் பரிசப் பொருள் எவ்வளவு வேண்டுவர்?” என அவளை வினவ, அவள், ” அண்ணலே! “அது பற்றி எனக்கு யாது தெரி யும்? இவ்வுலகையே பரிசப்பொருளாகத் தரினும், தலைவி தமர் மனநிறைவு அடையமாட்டார்! நீயே மகட் கேட்பதற்கு ஆவன செய்து பரிசம் முதலிய பற்றி அறிந்து விரைவில் தலைவியை மணத்தற்கு முயல்க” (க.கா.மேற்.) என்றது.

இது களவியற் காரிகையுள் ‘பரிசங் கிளத்தல்’ என்ற கூற்று.

(பக். 115)

இஃது ‘உடன்போக்கு வலித்தல்’ என்ற தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. 20)

உலகியல்பு உரைத்தல் -

{Entry: G07__487}

செவிலி உடன்போன தன் மகளையும் அவள் ஆடவனையும் பற்றி வழியிடை மீண்டு வருபவரை வினவ, சந்தனமும் முத்தும் இசையும் தாம் பிறந்த இடத்தன்றி வேறிடங்களி லேயே பயன்படுவன; அதுபோல, நின்மகளும் அவளை விரும்பிய ஆடவனுக்கே பயன்படுதற்கு உரியள்; நீ கவலற்க” என்று உலக இயற்கையை உரைத்து அவளுக்கு ஆறுதல் கூறல்.

இதனைக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்- கண் ‘மிக்கோர் ஏதுக் காட்டல்’ என்றும் கூறுப. (ந. அ. 188)

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 248)

உலகியல் வழக்கம் -

{Entry: G07__488}

உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது. (அகத். 56 இள.)

உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்கு உள்ள வற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி அந் நல்லோர்க்கு உள்ளவற்றைக் கூறுதல். (அகத். 53 நச்.)

மக்கள் வாழ்க்கையின் மெல்லியல்புகள் (அகத். 52 பாரதி.)

மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் ஒழுக்கம். (தொ. பொ. 42 குழந்தை.)

உலகியல் வழக்கு எனப்படுவது -

{Entry: G07__489}

எல்லா உயிர்க்கும் இயற்கையான இன்பநாட்டமும் விருப்பும் வெறுப்பும் குலனும் குடியும் நாற்பாற் பகுதியும் ஏற்றத் தாழ்வும் உடையோராய், ஆள்வோரும் ஆளப்படுவோரு மாய், இன்பமும் துன்பமுமாகிய இடையூறுகளும் பரத்தை மையும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஆகிய பண்பும் செயலும் மேற்கொண்டு நிகழும் மக்களின் ஒழுக லாற்றினை உள்ளவாறே அமைத்துக் கூறுதல் உலகவழக்காம். (தொ. அகத். 55 ச.பால.)

`உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்’ -

{Entry: G07__490}

உடன்போக்கில் தலைவியை இளைப்பாற இருக்கச் சொல் லித் தானும் இளைப்பாறிய தலைவன், கானத்துப் பூக்களைப் பறித்து வந்து அவளுக்குச் சூட்டி உளம் நிறைந்த மகிழ்ச்சி யொடு தன் மனத்தே கூறுதல்.

“இச்சுரத்தில், எனது முன்னைய நல்வினை, இவளுடைய அடித்தாமரைகளைப் போற்றவும், புகழ்ந்து இவள்முடிக்கு ஆய்ந்த மணமலர்களைச் சூட்டவும் எனக்கு அருளியது!” (தஞ்சை. கோ. 318) என்பது போன்ற தலைவன் கூற்று.

இஃது ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(ந. அ. 182)

உவந்துடன் சேறல் -

{Entry: G07__491}

உடன்போய தலைவியிடமிருந்து, மகப்பேறு வாய்த்த பிறகு செய்தி வந்ததாகத் தலைவிதமர் தலைவியைத் தம்மூர்க்கு அழைத்துவரச் செல்லுதல். (பாலை நடையியல்) (‘சென்றல்’ என்ற பாடம் ‘சேறல்’ எனக் கொள்ளப்பட்டுள்ளது.) (வீ. சோ. 93 உரைமேற். )

உவந்துரைத்தல் -

{Entry: G07__492}

குறியிடை நின்ற தலைவன் தோழியால் தன் அருகே தனிய ளாய் நிறுத்தப்பட்ட தலைவியை எதிர்ப்பட்டுத் தன்னிடம் அன்புகொண்டு அங்கு அவள் வந்த செயல் குறித்து மகிழ்ந்து கூறல்.

இதனைக் ‘கிழவோன் (குறி) இடத்து எதிர்ப்படுதல்’ என்றும் கூறுப. (ந. அ. 149, இ. வி. 509)

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 120)

உழையர் இயற்பழித்தல் -

{Entry: G07__493}

தலைவனது பரத்தைமை குறித்துத் தோழி அவனைப் பழித்துக் கூற, அது கேட்டு அருகில் இருக்கும் ஏனைய வாயிலவர், “தன்னையே நினைந்து தலைவி வருந்தத் தலைவி யின் அன்பினை உணராது புறத்தொழுக்கத்தில் ஈடுபட் டிருக்கும் தலைவன் நெறியில் நிற்பவன் அல்லன்” என்று அவன் பண்பினைப் பழித்துக் கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 377)

உழையர் தலைவிநிலைமை உரைத்தல் -

{Entry: G07__494}

தலைவனோடு ஊடிய தலைவியைப் பற்றிப் பக்கலில் உள்ளவர் தம்முள் பேசிக்கொள்ளுதல்.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தலைவியொடு பள்ளி யிடத்தானாக, அவன்மார்பம் தன்னைத் தவிர ஏனைய பெண்டிராலும் பார்க்கப்பட்டதாயினமை குறித்துத் தலைவி ஊடினாள். இதனை அறிந்த பக்கலில் உள்ளோர் பலரும், “நம் தலைவன்மார்பில் வேறொரு பெண்ணுடைய கண்க ளாகிய வேல் பாய்ச்சப்பட, அதனால் நம் தலைவி நெஞ்சம் புண்பட்டதை நோக்க, இவள் அவனுடைய உயிராவாள் என்பது புலப்படுகின்றதன்றே!” என்று தம்முள் பேசிக்கொள் ளுதல்.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல். 487)

உள் மகிழ்ந்துரைத்தல் (1) -

{Entry: G07__495}

மனம் மகிழ்ந்து கூறுதல்.

பொருள்வயின் பிரிந்த தலைவன் கார்காலம் வருதற்கு முன்னரே தான் எதிர்பார்த்த அளவு செல்வத்தை ஈட்டி மனைக்கு மீண்டான்; தன் தலைவியை எய்தி அவளொடு மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துகையில், “யான் பொருள் தேடப் பிரிந்த காலத்து என் நாவு வறண்டு போன துயரத்தை இவள் அதரபானத்தாலும், என் உடல்வெப்பத்தை இவளது பரிசத்தாலும், என் உள்ள வெப்பத்தை இவளால் பெறும் இன்பத்தாலும் போக்கிக் கொண்டேன்” என்று மனம் மகிழ்ந்து தன்னுள் கூறிக்கோடல்.

இது ‘பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அ. பாடல். 437)

உள்மகிழ்ந்துரைத்தல் (2) -

{Entry: G07__496}

கற்பினுள் பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன் தலைவி யுடன் பள்ளியிடத்தனாயிருந்து, “இவளைப் பிரிந்து பொருள் தேடப் பாலைநிலத்தில் யான் பட்ட துன்பமெல்லாம் இவளைத் தழுவுதலால் நீங்கிவிடும்” என்ற மனத்தில் மகிழ்வொடு கூறுதல்.

இது ‘பொருள்வயின் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 351)

உள்மகிழ்ந்துரைத்தல் (3) -

{Entry: G07__497}

பகற்குறிக்கண் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியது முகத்தில் தனிமலர்ச்சி கண்டு அவளைக் கழுநீர்மலராகவும் தன்னை அதனகத்துத் தேனைப் பருகும் வண்டாகவும் நினைத்துத் தன்னுள் மகிழ்ந்து கூறுதல்.

இதனை ‘இயைதல்’, என்றும் கூறுப. ந.அ. 149; இ.வி. 509-54. ஆம் அடி.

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 123)

உள்ளத்துணர்ச்சி -

{Entry: G07__498}

தோழியின் உள்ளத்திலுள்ள உணர்ச்சி.

தோழி தலைவன் தலைவி என்னும் இருவரது கூட்டமும் நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்த உணர்ச்சி.

தலைவன் தலைவியைத் தன்மாட்டுச் சேர்த்து வைக்கும் குறையினை இன்றியமையாதவன் என உணரும் உணர்ச்சி.

“யான் குறை வேண்டின் தலைவி அதனை நிறைவேற்று வாளோ” என்று எண்ணும் எண்ணம்.

“என்னாலாகக் கூடிய இக்கூட்டம் நிகழாது போயின் தலைவன் இறந்துபடும் ஆகலின், தலைவியைக் குறை நயப்பித்துக் கொண்டு முடிக்கலாம்கொல்லோ?” என்று உணர்ந்த உணர்ச்சி.

இவ்வாறு ‘உள்ளத்துணர்ச்சி’ என்பது பலவாறு பொருள் படும். (இறை. அ. 10)

உள்ளது கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__499}

தலைவன் தலைவியைப் பற்றி உயர்வாகக் கூறி அவளை விரைவில் மணப்பதன்கண் காலம் தாழ்க்க, தோழி அவனை நோக்கி, “தலைவ! நீ எங்களை மிகைப்படுத்திக் கூறுதல் வேண்டா. யாங்கள் மலைநாட்டுக் குறவர்களே. எம்மைப் பெற்றவளும் கொடிச்சியே. எங்கள் தொழில் தினைப்புனம் காத்தல் முதலியனவே. நீ வரைய நினையாது எங்களை அளவிற்கு மீறிப் புகழ்தல் வேண்டா” என்று கூறி விரைவில் தலைவியை வரையுமாறு வற்புறுத்தியது.

இது ‘வரைவுமுடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 252)

உள்ளப்புணர்ச்சி -

{Entry: G07__500}

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் உள்ளத்தான் விரும்பிப் பின் இருமுதுகுரவர் மணம் செய்துமுடிக்கும் வரை மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளக் களித்தும் கண்டு மகிழ்ந்து மிருத்தல். தலைவனுக்குப் பெருமையும் உரனும் தலைவிக்கு நாணும் மடனும் அச்சமும் நிலைபெற்ற குணங்கள் ஆதலின், மெய்யுறு புணர்ச்சி வேண்டாது, திருமணம் வரை உள்ளப் புணர்ச்சியாலேயே இருவரும் நிறைவு பெற்றிருத்தலுமுண்டு. (ந. அ. 351)

உள்ளுறை ஐந்து -

{Entry: G07__501}

உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்று, நேரான பொருளை விடுத்து உள்ளார்ந்த பொருளை விளக்கும் பகுதி ஐவகைப்படும்.

1. உடனுறை - நான்கு நிலத்துக் கருப்பொருள்களாலும் பிறிதொரு பொருள் பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சி.

2. உவமம் - கருப்பொருள்களைக் கொண்டு நேருக்கு நேர் உணரும் உள்ளுறைஉவமம்.

3. சுட்டு - மனத்துள் ஒன்றை நினைத்துப் பிறிதொன்றைச் சுட்டுதலும், ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டுதலும்.’

4. நகை - நகையாடி ஒன்றை நினைத்து ஒன்று கூறுதல்.

5. சிறப்பு - ஏனைஉவமம் நின்று உள்ளுறைஉவமம் தரும் கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்றல்.

நினைந்ததனை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறுதலின் இவை ஐந்தும் உள்ளுறை ஆயின.

(தொ. பொ. 242 நச்.)

உற்றவள் ஒழுக்கம் -

{Entry: G07__502}

தலைவன் இருக்கும் இடம் நோக்கித் தலைவி சேறல்.

இது காமநுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று. (வீ. சோ. 96 உரைமேற்.)

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் ‘குறிப்பு’ என்பதன்பாற்படும். (வீ. சோ. கா. 98)

உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -

{Entry: G07__503}

அஃதாவது தலைவி தலைவனுடைய ஊருக்குப் போகத் துணிதல்; ‘வெள்ளைச்சுரி’ (திருவாய்மொழி 7 - 3 - 1)

திருப்பேரெயில் மகரநெடுங்குழைக்காதன் என்ற பெரு மானிடம் காதல்கொண்டு வருந்தும் தலைவி, அவன் நெஞ் சுள்ளே யிருந்து வருத்த, தன்தோழியரும் தாயும் அது பழிக்குக் காரணம் ஆகுமே என்று தடுத்தும் கேளாமல், வேதவொலியும் விழா வொலியும் நீங்காத திருப்பேரைக்குத் தான் போவதற்குத் துணிந்து விட்டதைக் கூறுதல்.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 7 - 3 - 1)

உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -

{Entry: G07__504}

தலைவன் நண்பனுக்குத் துன்பம் உற்றவிடத்தே அதனைப் போக்குதற்கு அவனுக்கு உதவியாகச் சென்றானாக, அப்பொ ழுது தலைவியிடம் மீண்டு வருவதாகக் கூறிய பருவம் வந்தவழிப் பாசறையில் தான் படும் தனிமைத்துன்பம் தோன்றக் கூறுதல்.

“ஒண்ணுதலாள் ஆகிய தலைவி காட்டு நிலப்பகுதி அடைந் திருந்த அரிய முனைகளையுடைய வழியினுள் சீறூரிலுள் ளாள்; யாமே, திறை கொடுப்பவும் கொள்ளாமல் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனையை யுடைய வாகைத் தார் வேந்தனது பாசறைக்கண் உள்ளேம். அவள்நிலை என்னையோ?” (அகநா. 84) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இதனைத் ‘தலைவன் பாசறைப் புலம்பல்’ எனவும் கூறுப.

(அம்பிகா. 533)

உறங்காது இரவு அழுங்கல் -

{Entry: G07__505}

கண்படை பெறாது கங்குல் நோதல்; அது காண்க. (சாமி. 89)

உறழும் கிளவியும், ஐயக்கிளவியும் -

{Entry: G07__506}

காம இன்பம் சிறத்தற்குத் தோழி தலைவனை உயர்த்திக் கூறுமிடத்துத் தலைவி தாழ்த்திக் கூறுதலும், தலைவன் உயர்மொழி கூறியவழித் தோழி தாழ்த்துக் கூறுதலும், தலைவன் உயர்மொழி கூறியவழித் தலைவி தாழ்த்துக் கூறுதலும், தலைவி உயர்மொழி கூறியவழித் தோழி தாழ்த் துக் கூறுதலும் உள. இவை உள்ளக் கருத்தை மாற்றிக் கூறலின் வழுவாமேனும், காமத்தை மிகுவிக்க உதவுதலின் அமைந்தன.

தலைவியோ தோழியோ தனக்கு உதவுவாளோ மாட் டாளோ என்று ஐயப்படுதல் தலைவற்கு உரித்து.

‘சொல்லின், மறாதுஈவாள் மன்னோ இவள்’ கலி. 61 முதலாகத் தலைவன் ஐயப்பட்டுத் தனக்குள் உரைத்தவாறு.

(தொ. பொ. 238 நச்.)

உறாச் சிறுநோக்கம் -

{Entry: G07__507}

நேரிடையாகப் பொதுநோக்கான் நோக்காது கண்களைச் சுருக்கிக்கொண்டு அன்பு தோன்றக் கடைக்கண்ணால் பார்த்தல்.

இது காமநுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்பதன் பாற்படும். (வீ. சோ. 90)

ஊ section: 12 entries

ஊடல் தணிவித்தல் -

{Entry: G07__508}

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் விறலி முதலியவர்களை வாயிலாக விட, அவர்கட்கு வாயில் நேராது ஊடலை நீட்டித்த தலைவியிடம் தோழி, “நம்புதல்வனைத் தமக்குத் துணையாகக் கருதித் தலைவர் அவனுடன் வந்து தோன்று தலால் நின் ஊடலை நீக்கித் தலைவற்குப் பண்டு போல மகிழ்வுடன் குற்றேவல் செய்தலே நினக்குத் தக்கது” என்று கூறித் தலைவியின் ஊடலைத் தணிவித்தது.

இது ‘பரத்தையிற்பிரிவு’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 389)

ஊடல் நிமித்தம் -

{Entry: G07__509}

பரத்தையும் பாணனும் போல்வார் ஊடல் தோன்றற்குரிய காரணமும் சூழ்நிலையும் தருவோராவர். (தொ. பொ. 14 நச்.)

ஊடல் நீட வாடி உரைத்தல் -

{Entry: G07__510}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தணிக்கவும் தணியாது தலைவி ஊடல் மிகுத்தவழித் தலைவன் களவுக்கால நிகழ்ச்சி களைக் குறிப்பிட்டு, “மனமே! முன்பு சோலையில் என்னை அன்பொடு பார்த்துத் தன் வசப்படுத்திய பெண்ணமுதம் அல்லள் இவள்; இவள் அவள்வடிவில் மாயமாக வந்துள்ள வேறொருத்தி!” எனத் தன் நெஞ்சிற்கு வருத்தத்தொடு சொல்லுதல்.

இதனைத் ‘தலைமகள் தணியாளாகத் தலைவன் ஊடல்’ என்ப. இஃது உணர்த்த உணரா ஊடலாம். (ந. அ. 206, இ. வி. 555)

இது ‘பரத்தையிற் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 394)

ஊடலுவகை -

{Entry: G07__511}

கற்புக்காலத்தில் இல்லறம் நிகழ்த்தும் தலைவனும் தலைவி யும் நுணுகிய காரணத்தைக் கற்பித்துக்கொண்டு ஊடுதலால் தமக்குக் கூடல் இன்பம் சிறத்தலின், அக்கூடல் இன்பத்தைச் சிறக்கச் செய்யும் ஊடலைத் தலைவனும் தலைவியும் விரும்பிப் புகழ்தல். (குறள் அதி. 133 பரிமே.)

ஊடலுள் நெகிழ்தல் -

{Entry: G07__512}

பெருந்திணைத் தலைவி ஊடல்கொண்டு வருந்துதல்; இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெருந்திணையின் ஒரு பகுதியாகிய பெண்பாற்கூற்றின்கண் நிகழும் ஒரு கூற்று.

“காரணம் இன்றியே நான் ஊடினேன்; தலைவன் நயந்து தெளிவித்தான். அப்பொழுதும் ஊடல் தனியாமல் இருந்து விட்டேனே! துன்பமூட்டும் இருள் செறிந்த மாலைப் போதும் வந்துற்றது. இரவின்கண்ணாயினும் அவனைக் கூடி இன்புறுவேனோ?” (பு.வெ.மா. 16-15) என்பது போன்ற கூற்று.

ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் -

{Entry: G07__513}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி ஊடல் கொண்டு வாயில் நேராதிருத்தலைக் கண்ட தோழி, “தலைவன் எல்லோருக்கும் பொதுவான ஊதியமாக இருப்பதனால், அவன் பரத்தையர்க்கும் அருள்செய்தல் வேண்டுமன்றோ? மற்ற பெண்டிரைப் போல நாம் அவ னொடு புலத்தல் தகாது. தலைவனை வரும்போது எதிர் கொண்டு முன்தொழுதும், போம்போது பின்தொழுதும், புதல்வனைப் பயந்து இல்லிலிருந்து விருந்தோம்பி நல்லறம் செய்தலன்றோ நம் கடமை?” எனத் தலைவனது ஊதியம் எடுத்துரைத்து அவளது ஊடலை நீக்கி அவனோடு இசை வித்தது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்ற தொகுதிக்கண் அமைந்த இறுதிக் கூற்று. (கோவை. 400)

ஊதியம் பயத்தல் -

{Entry: G07__514}

ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்; அது காண்க.

ஊர் துஞ்சாமை -

{Entry: G07__515}

விழா அயர்ந்து மகிழும் ஊரார் விழாநாள்களில் உறங்காது விழித்திருப்பதால், தலைவன் குறியிடம் வந்து சேர இடையூறு நேர்தல்.

இது களவியலுள் ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘வருந்தொழிற்கு அருமை’ என்னும் வகையின்பாற்படும். (ந. அ. 161)

இது தலைவிகூற்றாகவும், தோழிகூற்றாகவும் வரும்.

ஊர் வினாதல் -

{Entry: G07__516}

பாங்கி வைகும் பொழிலிடம் புனம் போன்ற இடத்தே சென்ற தலைவன் அவளிடம் அவளது ஊர் யாது என்று வினவுதல்.

இது களவியலுள் ‘பாங்கி மதிஉடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

‘குறையுற உணர்தல்’ என்னும் வகையின் திறம் இது. (ந. அ. 140.)

ஊரது நிலைமை தோழி உரைத்தல் -

{Entry: G07__517}

ஊரார் தலைவியைப்பற்றிக் கொண்டுள்ள கருத்தைத் தோழி தலைவிக்கு உரைத்தல்.

“தலைவி! நீங்கள் உடன்போக்குச் செல்லுமுன் பழி தூற்றிய ஊர், நீ கற்பொழுக்கம் சிறக்கத் தலைவனுடன் சென்றதைக் கேட்டு யாவினும் சாலப் புலம்பியது” என்பது போன்ற கூற்று.

இஃது ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 428)

“ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: G07__518}

“இந்தக் காமநோய் என்னும் பயிர், ஊர்ப்பெண்டிர் பேசும் அலர் எருவாக, நம் அன்னை சினந்து கூறும் கடுஞ்சொல் நீராக நாளுக்கு நாள் வளர்கிறது. ஆதலின் இவை எனது காமம் வளர்ப்பனவே; அழிப்பன அல்ல” என்ற தலைவி கூற்று.

“மற்றவர் தூற்றும் அலரால் நமது காமவேதனையை அவித்துத் தணிப்போம் என நினைப்பது, தீயை நெய் ஊற்றி அவிப்போம் என்று நினைப்பதைப் போன்ற தாகும்” என்ற தலைவி கூற்று. (குறள் 1147, 1148)

ஊழ்வினை வலித்தல் -

{Entry: G07__519}

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தனக்குத் தலைவியைக் கூட்டுவித்த தெய்வத்தை மகிழ்ந்து கூறுதல் (குறிஞ்சி நடையியல்) வீ.சோ. 92 உரை. இது ‘தெய்வத்தை மகிழ்ந் துரைத்தல்’ என்றும் கூறப்படும். (கோவை. 6) ‘தெய்வத்திறம் பேசல்’ என்னும் நம்பி அகப்பொருள். (129)

எ section: 20 entries

எங்கையர் -

{Entry: G07__520}

தலைவி பரத்தையரைக் குறிக்கப் பயன்படுத்தும் இகழ்ச்சிச் சொல். எங்கையர் - என் தங்கையர். தலைமகனொடு கூடு தற்கண் உரிமைகொண்டவராய்த் தனக்குப்பின் அவனொடு தொடர்பு கொண்டவராகிய பரத்தையரைத் தலைவி ‘எங்கையர்’ என்கிறாள். (தொ. பொ. 147 நச்.)

`எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவி’ -

{Entry: G07__521}

தோழி, நாற்றம் தோற்றம் முதலியவற்றான் தலைவிக்குத் தலைவனொடு கூட்டம் உண்டு என்பதனை முன்னர் உணர்ந்து, பின் தலைவன் தன்னைக் குறைநயந்தவழி, அவன் உள்ளக்கருத்தை நன்றாக அறிந்து முடிவு செய்வதற்காக அவன் கூறுவனவற்றையெல்லாம் செவிமடுத்து (1) பெருமை யின் பெயர்த்தல், 2) உலகு உரைத்து ஒழித்தல், 3) அருமையின் அகற்சி, 4) அவள் அறிவுறுத்துப் பின் வா என்றல், 5) பேதைமை ஊட்டல், 6) முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல், 7) அஞ்சி அச்சுறுத்தல், 8) உரைத்துழிக் கூட்டம் - என்ற எட்டுவகையாகத் தலைவனோடு உரையாடித் தனக்கு அவனிடம் பாசமும் பரிவும் உண்மையை வெளிப்படுத்தல்.

(தொ. பொ. 112 இள.)

தலைவன் மனத்தில் தலைவியைத் தான் இன்றியமையாதவன் என்று தோழியிடம் தன்குறை உணர்த்தல் நிகழவும், அந்நேரத் திலேயே தலைவன் தலைவி இவர்களைப் பற்றிய நினைப்புத் தோழி மனத்து நிகழவும், இவ்விருவகைப்பட்ட நிகழ்ச்சிகளை யும் தோழி கூறும் இவ்வெட்டுக் கூற்றும் தழுவி நிற்பனவாம்.

(தொ. பொ. 114. நச்.)

எண்ணம் தெளிதல் -

{Entry: G07__522}

தலைவன் வந்து ஏதேதோ கேட்டபோது, தலைவனுடைய உள்ளக்குறிப்பினை ஆராய்ந்து அவனது மனக்கருத்தை பாங்கி தெளிந்து கொள்ளுதல். (இ.வி. அகத். 135)

எதிர்கோள் கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__523}

பகற்குறி இறுதிக்கண் தலைவனைத் தனித்துக் காணலுற்ற தோழி, “நீ வரைவொடு வரின் எம் அன்னை மகிழ்வாள்; எமர் நின்னை வரவேற்று எதிர்கொள்வர். ஆதலின் விரைவில் தலைவியை வரைதற்குரிய செயற்கண் ஈடுபட்டு வருவாயாக” என்று கூறி வரைவு கடாதல்.

இதனை ‘வரைவு எதிர்வு உணர்த்தல்’ என்றும் கூறுவர்.

(ந. அ. 166, இ. வி. 523)

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 135)

எதிர்ந்தோர் மொழிதல் -

{Entry: G07__524}

இடைச்சுரத்துக்கண் உடன்போய தலைவன் தலைவி இருவரையும் கண்டோர் தம்மூரில் அவ்விரவு தங்கிச் செல்லு மாறு, இரவிடை அவ்வழியே செல்லும் ஏதம் கூறி அவர் செலவினை விலக்கி மொழிதல் (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை. மேற்.)

எதிர்மறை -

{Entry: G07__525}

“தலைமகனது ஊர்க்குச் செல்வோம்” என்ற தலைவி பின் அதனை எதிர்மறுத்து மொழிதல்.

“அச்சம் தரும் பாம்புகளும் புலிகளும் யானைகளும் திரியும் வழியில் இருளில், கொடிய எம் உறவினர்தம் காவலையும் கடந்து இங்கிருந்து புறப்பட்டுத் தலைவனது ஊர் சென்றடைவது அரிதோ? ஆயின் அந்த அருமைப்பாட்டினை அறிந்து அருள் செய்வார் இல்லாத காரணத்தால்தான் யாம் செல்வது தடைப்படுகிறது” என்ற கூற்று.

இது ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 242)

“எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -

{Entry: G07__526}

“எம் பெருமானாகிய திருமால் உகந்து ஏற்றுக்கொள்ளாத என் நிறமும் நிறையும் எழிலும் இனிய உறுப்புக்களும் வளையும் மேகலையும் எனக்கு வேண்டியன அல்ல” என்ற தலைவியது மனநிலை. இது நெஞ்சொடு கூறுவது.

‘மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே’ (1)

‘மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே’ (2)

‘நெடுமாயன் கவராத நிறைவினால் குறைவிலமே’ (3)

‘சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே’ (4)

‘அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே’ (5)

‘கிறிஅம்மான் கவராத கிளர்ஒளியால் குறைவிலமே’ (6)

‘வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே’ (7)

‘விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே’ (8)

‘யோகணைவான் கவராத உடம்பினால் குறைவிலமே’ (9)

‘உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே’ (10)

என வருமாறு கொள்க. இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளைப்பாற்படும்.

(திருவாய். 4 : 8)

`எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்‘ -

{Entry: G07__527}

ஒவ்வொருவரும் தமக்கே உரிமையுடையன என்று உறுதி யாகக் கூறக்கூடியனவும் மற்றவரும் கண்ணாற் கண்டு ஒப்புக் கொள்ளக் கூடியனவும் ஆகிய ஒருவருடைய உறுப்புக்கள்.

மற்ற பொருட்செல்வம் போன்றவற்றைத் தமக்கே உரிமை யுடையன என்று உறுதியாகக் கூறுதல் இயலாது. பெற்றோர் தம் பொருள்கள் மக்களை வந்தடையும். கொடுப்பான் பொருள் கொள்வான் கையை வந்தடையும். மைந்தரில்லா தார்க்கு மைந்தர் செய்யும் கடமைகளைச் செய்தால் அவரது செல்வம் அக்கடமை செய்தவரை வந்தடையும். பொருட் செல்வம் பகைவர் கள்வர் முதலியோராலும் கவர்ந்து கொள்ளப்படுதலாம். ஆகவே இவற்றில் முழு உரிமை பாராட்டுதல் இயலாது.

ஆயின் தன் உறுப்புக்களைத் தன்னுடைமை என்று உரிமை பாராட்டுதல் அமையும். அங்ஙனம் தலைவிக்கே உரிமை யுடைய அவள் உறுப்புக்களையும் நட்பின் முதிர்வினால் தோழி தன் உறுப்புக்கள் என்று கூறுதலும் கூடும் என்பது.

(தொ. பொ. 221 நச்.)

எய்தல் எடுத்துரைத்தல் -

{Entry: G07__528}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்து இன்புறச் செய்து அவளை அடைந்து மகிழ்ந்த செய் தியை ‘அகம்புகல் மரபின் வாயிலோர்’ தம்முள் எடுத்துக் கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 365)

எல் இடையீடு -

{Entry: G07__529}

பகற்குறி இடையீடு. அது காண்க. (சாமி. 86)

`எவ்வகைப் பொருளும் இரந்து குறையுறுதல்’ -

{Entry: G07__530}

தலைவன்பிரிவால் இரங்கும் தலைவி கடற்கரையாகிய நெய்தல் நிலத்தை யடுத்து ஆண்டுள்ள கடல் - கழி - கைதை - கானல் - பெண்ணை - புன்கு - இருள் - மதி - பொழுது - காற்று - முதலியவை தன் சொற்களைக் கேட்பன போலக் கற்பனை செய்து, அவற்றைத் தனக்கு உதவுமாறு வேண்டல். (நெய்தல் நடையியல்) (வீ. சோ. 96 உரை மேற்.)

எழுதி இரங்கல் -

{Entry: G07__531}

தலைவன் தலைவியின் உருவினைக் கிழியில் எழுதிப் பின் வருந்துதல். தோழியை இரந்து பின்னின்ற தலைவன், அவள் தனக்குத் தலைவியைக் கூட்டிவைக்கக் காலம் தாழ்த்தலின் ஆற்றாது மடலேறத் துணிந்து, சித்திரம் எழுதும் தனது ஆற்றலால் தலைவி உருவினை ஒரு கிழியில் எழுதிவைத்துக் கொண்டு அதனை நோக்கி, “தலைவி! உனக்கு என்பால் கோபம் சிறிதும் இல்லையே. நம் பழந்தொடர்பினை நீ தோழிக்குக் கூறி அவள்வாயிலாக என்னைக் கூடுதற்கு ஆவன செய்யாதது என் ஊழ்வினையே. அவ்வூழ் வினையால் இன்று உன் வடிவினைக் கிழியில் எழுதி வைத்துக் கொண்டு மடலேறும் நிலையில் உள்ளேன்” (திருப்பதிக். 133) என்று வருந்திக் கூறல்.

இது ‘தோழியிற் கூட்டம்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அகப். 37)

எழுதும் முன் இரங்கல் -

{Entry: G07__532}

தலைவியது உருவினைக் கிழியில் எழுதுமுன் தலைவன் வருந் தல். தலைவன் தோழியிற்கூட்டத்தில் தோழி தலைவியைக் கூட்டுவித்தற்கண் காலதாமதம் செய்தபோது ஆற்றாமை மீதூர்ந்து மடலேறத் துணிந்து, அச்செய்தியைத் தோழியிடம் கூறிச் சித்திரம் வரையும் தனது வல்லமை தோன்றத் தலைவி யது உருவை ஒருகிழியில் வரையுமுன், “ஒரு பெண்ணுக்காக இப்படி மயங்கிப் பித்தனாகி அவளது உருவினை எழுதி மடலேறும் நிலைக்கு வந்துவிட்டேனே!” (திருப்பதிக். 132) என்று தன்னுள் வருத்தமுறுதல்.

இது தோழியிற் கூட்டம் என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அகப். 37)

எள்ளருந் தோழி ஏற்பக் கூறல் -

{Entry: G07__533}

தலைவி, பின்னர் மணக்கப்பட்ட இரண்டாம் மனைவி காமக் கிழத்தியர் ஆகியோரிடம் அன்பாகப் பழகுதலைக் கண்ட தலைவியின் தோழி, அவள் செயல் நல்ல இல்லறக் கிழத்திக்கு ஏற்ற செயலே என்று புகழ்ந்து கூறல் (மருத நடையியல்)

(வீ. சோ. 95 உரை. மேற்)

எளித்தல் -

{Entry: G07__534}

இது தோழி அறத்தொடு நிற்கும் வகை ஏழனுள் ஒன்று. எளித்தலாவது தலைவனை எளியனாகக் கூறுதல்; அஃதாவது செல்வச் செருக்கின்றித் தம்மொடு சமமாகப் பழகும் பெருந் தன்மையுடையனாகக் கூறுதல். (தொ. பொ. 207 நச்.)

தலைவன் தம்மாட்டு எளியன் என்று கூறுதல்.

அதனது பயன், மகளுடைய தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவராதலின் எளியன் என்று கூறி தோழி அறத்தொடுநிற்றல். (112 இள.)

எற்குறி -

{Entry: G07__535}

பகற்குறி. அது காண்க. (சாமி. 86)

எற்பாடு நெய்தற் குரிமை -

{Entry: G07__536}

நெய்தல் என்பது இரங்கல் என்ற உரிப்பொருளாம். அது தலைவன் குறித்த நேரத்தோ பருவத்தோ தலைவியைக் காண வாராதவழி அவள்கண் நிகழ்வது. அதற்குப் பெரும்பொழுது இன்று. சிறுபொழுதினுள் எற்பாடு அதற்குரியது.

வெஞ்சுடர் வெப்பம் தீரத் தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நிழல் செய்யவும். தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து புள்ளெலாம் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும், காதல் கைம்மிக்குக் கடலிடத்தோ கடற்கரைச் சோலையிடத்தோ நிறை கடந்து வேட்கை புலப்படத் தலைவி உரைத்தலின் ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்தது. (தொ. பொ. 8 நச்.)

எற்பாடு என்பதனை நாள் வெயிற்காலை என்று பொருள் செய்து புணர்ச்சியின்றி இரவு கொன்னே கழிந்ததே என்று தலைவி வருந்துதற்குரிய காலம் அஃது என்று கூறுவாரும் உளர். (சூ.வி. பக். 38)

`என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -

{Entry: G07__537}

கற்புக்காலத்தில் தலைவன் பொருள்கருதிப் பிரிய நினைத்த - வழித் தலைவி தன்னையும் உடன்கொண்டு செல்லுமாறு தலைவனிடம் தன் விருப்பத்தைப் பணிவுடன் அறிவித்தல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

`என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -

{Entry: G07__538}

“யான் இரவுக் குறியிடத்துச் சென்று அவரைக் காணாது திரும்பி மிகவும் துயருற்றேன்; அல்ல குறிப்பட்டது என்பிழை யன்று” என்ற தலைவியது கூற்று.

“நொச்சியின் பூக்கள் விழும் ஓசையினைக் கேட்டவாறே ஊரவர் உறங்கிய பின்னும் யான் இவ்வோசை தலைவன் செய்த குறியோ என்று ஐயுற்றவாறே இரவு முழுதும் உறங்கா திருந்தேன்” (தஞ்சை கோ. 201) என்று தலைவி தோழியிடம் கூறல்.

களவியலுள் இஃது ‘இரவுக்குறி இடையீடு’ என்னும் தொகு திக்கண்ணது ஒரு கூற்று. (ந. அ. 160)

`என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -

{Entry: G07__539}

தலைவன் வரைவதற்கு முன்பு, தன் முயற்சியால் பொருள் ஈட்டித் தலைவிக்குப் பொன்னும் மணியும் பூட்டுதல் விரும்பிப் பிரிந்து செல்ல வேண்டியிருப்பதைத் தோழியிடம் கூறி, அதனைத் தலைவிக்கு எடுத்தியம்புமாறு சொல்லுதல்.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 170)

ஏ section: 31 entries

ஏகு அவண் என்றல் -

{Entry: G07__540}

தலைவி இருக்கும் இடத்திற்குச் செல்க எனல். இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு இவற்றான் தலைவியைக் கூடிய தலைவன், தன் உயிர்ப்பாங்கனை அடைந்து, தன் நிலை யினைக் கூறி, அவன் வினவியவற்றிற்கெல்லாம் மறுமொழி பகர்ந்து, தன் ஆற்றா நிலையினைக் கூறித் தலைவியைத் தான் முன்பு கண்ணுற்ற சூழலைத் தெரிவித்து அவள் அச்சோலை யில் இருக்கும் செய்தியைத் தெரிந்து வருதற்குச் செல்லுமாறு அவனை வேண்டுதல். (மா. அகப். 28)

இது பாங்கற் கூட்டம் என்ற தொகுதிக்கண் ஒரு கூற்று.

ஏத்தல் (1) -

{Entry: G07__541}

ஊர்மக்கள் தலைவியின் பெருங்கற்பினைப் புகழ்ந்து கூறல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை. மேற்.)

ஏத்தல் (2)

{Entry: G07__542}

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் எழுவகைகளுள் ஒன்று. ஏத்தல் என்பது தலைவனை உயர்த்துக் கூறுதல். அது மகளுடைத் தாயர் “தலைவன் உயர்ந்தான்” என்றவழி மனம் மகிழ்வராதலின் அவ்வாறு கூறப்பட்டது. (தொ. பொ. 112. இள. உரை)

தலைவனைக் ‘கானகநாடன் மகன்’ (கலி. 39) என்றாற் போல உயர்த்துக் கூறுவது. (207 நச்.)

ஏத்தி மொழிதல் -

{Entry: G07__543}

பாங்கியிற் கூட்டத்தில் தலைவனுக்குக் குறை நேர்ந்த பாங்கி தலைவியிடம் தலைவனுடைய பண்புநலன்களை எடுத்துக் கூறி அவனுடைய குறையினைத் தலைவி நயக்குமாறு வேண்டல் (குறிஞ்சி நடையியல்). [ ‘பாங்கி இறைவிக்கு அவன்குறை உணர்த்தல்’ (ந. அ. 149) என்பதன்கண் அடங்கும். ] (வீ. சோ. 92 உரை மேற்.)

ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -

{Entry: G07__544}

தலைவியை வரையக் கருதாது இரவுக்குறியை நீட்டிக்க விரும்பிய தலைவனிடம், “நீ வரைதலை விடுத்துக் கொடிய விலங்குகள் திரியும் காட்டுவழியே இருளிடைத் தலைவியை நாடி வருதல் எங்களுக்குப் பெருந்துயரம் தருகிறது. இனி இரு ளிடை வாராதே” என்று இரவிடை நிகழ்க்கூடிய துன்பங் களை எடுத்துக் கூறித் தலைவியை மணக்குமாறு தோழி தலைவனை வற்புறுத்தல். (கோவை. 253)

இதனை ‘இரவு வருவானைப் பகல் வருக என்றல்’ என்றும் கூறுவர். (ந. அ. 166)

‘வரைவு முடுக்கம்’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று இது.

ஏதம் கூறி மறுத்தல் -

{Entry: G07__545}

தலைவற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவியிடம் தன் கருத்தைக் கூறினாளாகத் தலைவி தனக்குத் தலைவன் செய்துள்ள கருணையை உட்கொண்ட உள்ளத்தளாய், ‘சிங்கங்கள் யானைகளை வேட்டையாடத் திரியும் கொடிய வழியில் இருளில் தலைவனை வருமாறு நாம் வேண்டுவது தகுதியா?’ என்றாற் போலக் கூறித் தனக்கு இரவுக்குறி உடன்பாடின்மையினைக் குறிப்பிடுதல். (ந. அ. 158)

இதனை ‘நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்’ என்ப. (இ. வி. 517) இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 157)

ஏதீடு -

{Entry: G07__546}

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும்வகை ஏழனுள் ஒன்று. ஏதீடாவது, ஒருவன் களிறும் புலியும் நாயும் போல்வன வற்றினின்று காத்து எம்மைக் கைக்கொண்டான் எனவும், தழை தந்தான் எனவும் இவை முதலிய காரணம் இட்டு உணர்த்தல்.

ஏது ஈடு - காரணமிட்டுணர்த்தல். (தொ. பொ. 207 நச்.)

ஏதீடு தலைப்பாடு -

{Entry: G07__547}

இதுவும் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் வகை ஏழனுள் ஒன்று. யாதானும் ஒரு காரணம்பற்றித் தலைவி தலைவன் ஆகிய இருவரும் சந்தித்தமை கூறுதல். அது புனலிடை உதவினான், களிற்றிடை உதவினான், தழையும் கண்ணியும் தந்தான் என்றாற் போலக் காரணம் காட்டுதல்.

(ஏதீடு, தலைப்பாடு என இரண்டாக நச்சினார்க்கினியர் கொள்வர்.) (தொ. பொ. 112 இள. உரை)

ஏந்திழை எடுப்பல் -

{Entry: G07__548}

இரவுக்குறிக்கண் தோழி தலைவியைத் துயில் எழுப்புதல் (குறிஞ்சி நடையியல்) ( இஃது இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தல் (ந. அ. 158) எனவும் குறிக்கப்படும். (வீ. சோ. 92 உரை மேற்.)

ஏந்துதார் விரும்பல் -

{Entry: G07__549}

இது கைக்கிளை என்னும் பாடாண்துறை (சாமி. 146)

‘ஏமம் சான்ற உவகை’ : பொருள் -

{Entry: G07__550}

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள் இஃது ஒன்று.

களவின் பயனாகிய கற்பொழுக்கத்திற்கு விளக்கமாகிய வரைதலைத் தலைவன் முயலுமிடத்து, அஃது இருவர்க்கும் ஏமம் ஆதலின் அவ் ஏமத்தான் தலைவி மிக மகிழ்தல். (தொ. கள. 21 ச.பால.)

ஏமஞ் சாலா இடும்பை -

{Entry: G07__551}

மருந்து முதலிய பரிகாரத்தான் போக்கமுடியாத பெருந்துயர். இது காமஞ்சாலா இளமையோளைக் காமுற்ற ஆண்டில் மூத்த தலைவற்கு ஏற்படுவதாம். (தொ. பொ.50 நச்.)

ஏமந்த ருது -

{Entry: G07__552}

முன்பனிக் காலமாகிய பெரும்பொழுது. அது மார்கழியும் தையுமாகிய இரண்டு திங்கள்.

`ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

{Entry: G07__553}

காம வேட்கை நீங்கிய தலைவன் துறவிற் சேறல். தலைவன் 48 ஆண்டு ஆயினபோது காமத்தில் பற்றற்றுத் தலைவியிடம், “நாம் அறத்தாற் பெற்ற நம்புதல்வன் இல்லறத்தில் இனிது வாழ்க! இனி, நாம் மாறனைத் துதித்துப் பிறவிப்பிணியை அறுக்கும் சான்றோரோடு ஒன்றும் பெருவாழ்வு எய்துதற்கு இல்லறத்தை விடுத்து வானப்பிரத்த ஆசிரமத்தை மேற் கொள்வோமாக” என்று கூறுதல்.

இது மாறனகப்பொருளில் காணப்படும் இறுதித்துறை. திருப்பதிக் கோவையில் காணப்படும் இறுதிச் செய்தி. (பாடல் 527) (மா. அகப். 106)

ஏர் அழிவு உரைத்தல் -

{Entry: G07__554}

கவின் அழிவு உரைத்தல்; (சாமி. 104)

ஏவல் மரபின் ஏனோர் -

{Entry: G07__555}

பிறரை ஏவிக் கொள்ளும் மரபினையுடைய மற்றவர். இவர்கள் ஐந்திணைத் தலைவராதலே யன்றி, தம் ஏவலர்களைப் போலக் கைக்கிளை பெருந்திணை இரண்டற்கும் உரியராவர். (தொ. பொ. 26 இள.)

ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-

{Entry: G07__556}

ஏவல் மரபின் ஏனோர் : பிறரை ஏவிப் பணிகொள்ளும் மரபினரான குறுநிலமன்னர், வேளிர், தண்டத்தலைவர் முதலானோர். முடியுடை வேந்தரின்கீழ் அவர் ஆணைக்குட் பட்டுத் திறை செலுத்தி ஆட்சி புரியும் இவர்கள் தலைமைப் பாடும் தன்னுரிமையும் இலராயினும், வேந்தன்சார்பாக நின்று பிறரை ஏவிப் பணிகொள்ளுதலான் தலைமையும் உரிமையும் பெற்று ஒழுகுதலின், அகத்திணைத் தலைமக்களா தற்கு உரியர்.

ஆகிய நிலைமையவர் - வேந்தரான் ஆட்சியுரிமை அளிக்கப் பெற்று ஆளும் உரிமை எய்திய பிறர். இவர்களும் அகத் திணைக் கிழவராதற்கு உரியர். (தொ.அகத். 26 ச.பால.)

பிறரை ஏவிக்கொள்ளும் மரபினையுடைய அரசர் அந்தணர் வணிகர் என்ற மூவரும், குறுநில மன்னரும், வேளாளரும் அகன் ஐந்திணைக்கண் தலைமக்கள் ஆதற்கு உரியர்.

(தொ. பொ. 24, நச். 24 குழ.)

அடியவரையும் வினைவலரையும் ஏவிக்கொள்ளும் நிலைமை யுடைய நன்மக்களும் கைக்கிளை பெருந்திணை என்ற அகப்புறத்துக்கு உரிமை உடையவர். (26 இள.)

அடியோர் வினைவலர், தனிக்குடி வினைவலர், ஏனைய ஏவல் மரபினர் ஆகியோரும் ஐந்திணைக்கண் நிகழும் ஒழுக்கத் துக்கு உரிமை உடையராவர் (24 பாரதி.)

ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

{Entry: G07__557}

“பேரழகுடையாய்! நீ மோர்விற்று மீளும்போது என்னைச் சந்திப்பதாகக் கூறினாயே! நின்னை யான் சந்தியாமை போன தெவ்வாறு?“

“மோர்விற்பது எம் குலத்தொழில். நீயும் ஓர் இடையன் தானே! அன்றேல், சூரியன் மகனாம் கர்ணனோ.?”

“நீ என்னை இகழ்ந்து கூறுவதால் நின்னுடன் ஒன்றும் கூறேன். பேரழகியான நின்னுடன் மறுமாற்றம் பேச யாருக்குத் துணிவுளது?”

“அப்படியாயின் ஒன்றும் சொல்ல வேண்டா.”

“யான் நின்னைப் போகவிடேன்.”

“நான் என்ன உன்னிடம் கடன் வாங்கியுள்ளேனா? என் கூடையைப் பிடித்து நிறுத்தாமல் போய்விடு.”

“நீ என்னிடம் வாங்கிக் கொண்ட பொருளைப் பற்றிக் கூறுகிறேன் கேள். உன் கண்ணாலே என் நெஞ்சம் கவர்ந்த
கள்வி நீ.”

“அவ்வாறாயின், உன் நெஞ்சு என் தமையனுக்குச் சோறு கொடுப்பவும், எந்தைக்குக் கலம் கொண்டு செல்லவும், யாய் சொன்ன கன்றுகளை மேய்க்கவுமே பயன்படும்.”

“நன்று. இனி நீ ஏவிய தொழில்களைச் செய்கிறேன். ஊர் அணிமையில் உள்ளது எனினும் உச்சிப் பொழுதாகிவிட்டது. இப்பொழுது நடப்பது அரிது. இச்சோலையில் தங்கிச் சுனையில் குளித்து முல்லைமொட்டுக்களைச் சூடி இப் பொழிலில் என்னொடு தங்கி மாலையில் தரை குளிர்ந்த வுடன் ஊர்க்குச் செல்லலாம்.”

“நான் ஊருக்கு இப்போதே செல்ல வேண்டும். நீ சிறுமியரை மயக்கி அவர்களிடம் இவ்வாறு கூறு. பலபசுக்களையும் தெவிட்டாமல் கூடும் ஏறு போல நாடோறும் மகளிர் பலரைத் துய்க்கும் கள்வன் நீ!”

“என்னால் விரும்பப்படுவார் இம்மண்ணுலகில் நின்னை யன்றி இல்லை. திருமாலடியை வணங்கி உறுதி கூறுகிறேன்.“

“உன் வார்த்தையை உண்மையென நம்புபவர்களே உன் னொடு கூடுதற்கு உடன்படுவர். உன் வருத்தம் கண்டு உடன் படுகின்றேன். எம் புழைக்கடைப் பக்கம் காஞ்சிமர நிழலில் வருக. வரும்போது ஆம்பற் பண்ணாலே குறிசெய்து வருக.”

இது முல்லை நிலத்து அகப்புறத் தலைவன்தலைவியர் களிடையே முறையே நிகழ்ந்த உரையாடல். (கலி. 108)

ஏழையை வினவல் -

{Entry: G07__558}

இடந்தலைப்பாட்டிற்குத் தலைவியைச் சந்திக்கச் செல்லும் தலைவன் அவள் தனது வரவினை எதிர்நோக்கி நிற்கும் நிலை பற்றித் தன் மனத்தை வினவியவாறு சேறல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரைமேற்.)

ஏற்புற அணிதல் -

{Entry: G07__559}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் கலவியால் நிலைகுலைந்து கிடந்த தலைவியின் ஆடையணிகளைத் தலைவன் திருத்தமுற அணிவித்தல். அவற்றின் நிலைகுலைவினால் பாங்கி முதலி யோர் ஐயுற இடனின்றி இது செய்வது.

இஃது இயற்கைப் புணர்ச்சியின் ஒருவகையாகிய தெய்வப் புணர்ச்சி யென்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. [ தலைவியின் (எய்தும்) இயற்கைப் புணர்ச்சிக்கண்ணும் வரும் கூற்றாம். ]

( ந.அ.125.)

`ஏற்ற உவகையோடு இனியவள் முறுவல்’ -

{Entry: G07__560}

தலைவன் உள்ளக்கருத்தைத் தான் உடன்பட்ட மகிழ்ச் சியைத் தெரிவிக்கும் வாயிலாகத் தலைவி புன்முறுவல் செய்தல். இஃது இயற்கைப் புணர்ச்சிக்கண்ணோ இடந் தலைப்பாட்டின் கண்ணோ நிகழ்வது. (இது ‘வறிதுநகை தோற்றல்’ எனவும் வழங்கப்படும். (ந. அ. 127) (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

ஏற்று மகள் மொழிதல் -

{Entry: G07__561}

தலைவன் வரைவு வேண்டித் தமரை விடுத்தவழித் தன்தமர் வரைவு மறுக்காதவாறு தோழியை அறத்தொடு நிற்குமாறு தலைவி வேண்டவே, தோழி அவ்வேண்டுகோளை உட் கொண்டு செவிலிக்கு அறத்தொடு நிற்றல் (குறிஞ்சி நடை யியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

ஏறுகோடல் -

{Entry: G07__562}

கைக்கிளையில் ஆசுரமாகிய ஏறு கோடல். தலைவியின் இல்லத்தார் அடக்க வேண்டும் என்று விடுத்த காளையைப் பற்றி அடக்கித் தலைவன் தலைவியைப் பெறுதல். (தொ. பொ. 92, 105 நச். கலி. 105)

ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -

{Entry: G07__563}

தலைவன் தலைவியை வரைதற்குக் கொடிய காளையைத் தழுவி அடக்கி வரையும் உரிமை பெறும் திருமணம் ஆகிய ஒருவகைக் கைக்கிளையிடத்துத் தலைவனுக்கு அவன் கடமையினை நினைப்பூட்டவும், அவனுக்கு அருள் செய்யத் தம் நிலத்தெய்வ மாகிய திருமாலை வேண்டவும், குரவைக் கூத்தாடத் தோழி தலைவியை அழைத்தல். (தொ. பொ. 45 நச்., கலி. 103)

ஏறுகோள் -

{Entry: G07__564}

ஆயர்குல வழக்கப்படி ஒருபெண்ணை வரைந்து கொள்வதற் காக ஏறுதழுவல் (கோவை. 136 உரை)

ஏறுகோட்பறை. (பிங். 544)

முல்லைநிலத் தலைவன் தான் குறித்த தலைவியை மணந்து கோடற்கு அவள்உறவினர் விடுத்த காளையை அடக்கி அவ் வெற்றிக்குப் பரிசாக அத்தலைவியைக் கொள்ளுதல். இஃது ஆசுரம் என்றும், அரும்பொருள்வினை என்றும் கூறப்படும் மன்றலுள் அடங்கும். (தொ. பொ. 92 நச்.)

ஏறுகோள் கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__565}

தலைவன் பகற்குறிக்கண் தொடர்ந்துவர, தோழி அவனிடம், “எம் ஐயன்மார் தலைமகளின் உடல்வனப்பினைக் கண்டு அவள் மணப்பருவம் எய்திவிட்டதனை யுணர்ந்து தாம் தொழுவத்தில் செலுத்தும் விடையினை அடர்ப்பவனுக்கே அவளை மணம்செய்து கொடுப்பதாக முடிவுசெய்து, சிறந்த விடையின் மருப்பினையும் சீவி எம் ஊரில் அதனைத் தொழு வத்தில் புகுத்த ஏற்பாடும் செய்துவிட்டனர்” என ஏறுகோள் கூறி வரைவு கடாயது. (கோவை. 136)

‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணது இக்கூற்று.

ஏறுகோள் வென்றி -

{Entry: G07__566}

அச்சம் தரும் காளையை அடக்கி அதன்மேல் ஏறி வரும் ஆயர்குலத் தலைவன், மலையைக் குடையாகப் பிடித்த கண்ணன் நப்பின்னையை மணக்க ஏறுகள் ஏழனைத் தழுவியதுபோல, தலைவியை அடைவதற்குத் தழுவவேண் டிய ஏற்றினை அடக்கித் தழுவிவந்த செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல் போல்வதொரு வெற்றிப் பெருந் திணைத் துறை. (பு. வெ. மா. 18-5)

ஏறுதழுவுதல் -

{Entry: G07__567}

வலிய காளையினை அடக்கி வயப்படுத்துதல். ஏறுகோள் காண்க. (இது பெரும்பாலும் தலைவி ஒருத்தியை மணப்ப தற்கு அவள் பெற்றோரால் கன்யா சுல்கமாக வைக்கப்படு வது.) (தொ.பொ. 92 நச்.)

ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -

{Entry: G07__568}

கற்புக் காலத்தே தலைவியை நீத்துப் பொருள்வயின் பிரிந்து விரும்பியவாறு பொருள் தேடி முடித்து ஊர்க்கு மீளலுற்ற தலைவன், சிறந்த ஏறு நல்ல பசுவுடன் ஊரிடத்தே வருதலைக் கண்டு, “இக்கார் காலத்துச் செவ்வானையுடைய மாலைக் காலம் தலைவி என் பிரிவைப் பொறுத்திருக்கச் செய்யும் அளவின தன்றே!” என்று இரங்கிக் கூறுதல்.

இது ‘பொருள்வயின் பிரிவு’ என்றும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 346)

`ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -

{Entry: G07__569}

ஏனோர் என்றது, நிரைமேய்த்தல் பேணல் முதலிய நிலத் திற்குரிய தொழிலை மேற்கொள்ளாமல், ஓதல் - ஓதுவித்தல் - ஆளுதல் - முதலிய வினைகளை மேற்கொண்டொழுகு வாரை. அவர்கள் புறத்திணை ஒழுகலாற்றின்கண் வேறுவேறு பெயர் பெறுதலான், ஆயர் வேட்டுவர் என்பாரை நோக்க, அவர்கள் ‘ஏனோர்’ ஆயினர். அம்முறையான் அவர்களை ‘உயர்ந்தோர்’ எனச் சுட்டிக் கூறுதல் நூல் வழக்காயிற்று. (தொல். அகத். 24 ச. பால)

ஏனோர் பாங்கினும் காமப்பகுதி -

{Entry: G07__570}

மக்கட் பெண்டிர் கடவுளரைப் புணர்ச்சி விருப்பான் நயத்தல்.

(தொ. பொ. 83 நச்.)

ஐ section: 25 entries

ஐந்திணை -

{Entry: G07__571}

1) ஐவகைப்பட்ட நிலம் 2) ஐவகைப்பட்ட ஒழுக்கம்.

மலைப்பகுதியாகிய குறிஞ்சி, காட்டுப்பகுதியாகிய முல்லை. வயற்பகுதியாகிய மருதம், கடற்கரைப் பகுதியாகிய நெய்தல், முல்லையும் குறிஞ்சியும் தொடர்ந்து சில ஆண்டு மழை பெறாமையால் வெங்கதிர் வெப்பத்தால் வறண்ட நிலமாக மாறும் வன்பாலை, மருதமும் நெய்தலும் தொடர்ந்து சில ஆண்டு மழை பெறாமையால் அவ்வாறே மாறும் மென் பாலை ஆகிய இருவகைத்தாகிய பாலை - என நிலவகை ஐந்தாம்.

தலைவனும் தலைவியும் கூடும் புணர்ச்சியாகிய குறிஞ்சியும், தலைவன் தலைவியைப் பிரிந்துசெல்லும் பிரிதலாகிய பாலையும், பிரிந்தபின் தலைவன் மீண்டு வருவதாகக் கூறிய பருவம் வருந்துணையும் இல்லத்தில் தலைவி ஆற்றியிருக்கும் இருத்தலாகிய முல்லையும், குறித்த பருவத்தே தலைவன் வாராமையால் தலைவி வருந்தும் இரக்கமாகிய நெய்தலும், தலைவன்தலைவியர் இடையே காமஇன்பத்தினை மிகுவிக் கும் ஊடலாகிய மருதமும் - என ஒழுக்கவகை ஐந்தாகும். (தொ.பொ. 14 நச்.)

ஐந்திணைக்கும் உரிப்பொருள்

{Entry: G07__572}

முல்லை-

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்; தலைவன் பிரிவு உணர்த்தியவழித் தலைவி அவர் பிரியார் என்றிருத்தலும், பிரிந்துழிக் குறித்த பருவம் அன்று என்று தானே கூறலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன வும் போல்வன இருத்தல். (தலைவன் குறித்த பருவம் வருதற்கு முன்னர்த் தலைவி ஆற்றாது கூறுவன பாலையாம்.) பருவங் கண்டு ஆற்றாது தோழி கூறுவனவும், பருவம் அன்று என்று வற்புறுத்தியனவும், வருவர் என்று வற்புறுத்தினவும், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும், அவை போல்வனவும் இருத்தல் நிமித்தமாம்.

குறிஞ்சி -

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்; நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும், ஐந்திணையுள் சிறப்பிக்கப்படும் களவுப் புணர்ச்சிக்கண் இயற்கைப் புணர்ச்சியும், இடந்தலைப் பாடும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டமும், அதன் பகுதியாகிய பகற்குறி இரவுக்குறி பற்றியனவும் புணர்தல். தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், ஆண்டுத் தோழி கூறுவனவும், குறை நேர்தலும், மறுத்தலும் முதலியன புணர்ச்சி நிமித்தமாம்.

மருதம் -

ஊடலும் ஊடல் நிமித்தமும்; புலவி முதலியன ஊடலாம். பரத்தையும் பாணனும் முதலியோர் ஊடல் நிமித்தமாம்.

நெய்தல் -

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்; தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவி அவன் குறித்த பருவத்தே மீண்டு வாராமையால் கடலும் கடற்கரைச் சோலையும் உப்பங்கழி யும் காணுந்தோறும் இரங்கலும், மாலைப்பொழுதினையும் துணையாகக் கூடிச் செல்லும் பறவைகளையும் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவும், தலைவன் குறித்த பருவத்து வாராதிருத்தலும் போல்வன இரங்கல் நிமித்தமாம். (தொ.பொ. 14 நச்)

பாலை -

பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஓதல் பகை தூது அவற்றின் பகுதியான பொருள் என்பன பற்றிப் பிரிதலும், உடன்போக் கும் பிரிவாம். உடன்போக்கிற்கு முன் தோழியொடு கூறுதல் முதலியன பிரிதல்நிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவன வும், தோழி ஆற்றுவிப்பனவும் பாலையாதலின் பின் ஒருகால் பிரிதற்கு நிமித்தமாம். (தொ. பொ. 14 நச்.)

ஐந்திணைத் தலைமக்களாதற்குரியார் -

{Entry: G07__573}

அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்ற மருதநிலத்து நாற்குலமக்களும், குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்ற ஐந்நிலத்துத் தலைமக்களும், ஐந்திணைத் தலைமக்கள் ஆதற்குரியர். (தொ. பொ. 24 நச்.; ந.அ. 30,31)

ஐந்திணைப் பெயர்க்காரணம் -

{Entry: G07__574}

காட்டிற்கு முல்லைப்பூவும், மலைக்குக் குறிஞ்சிப்பூவும், வயற்பகுதிக்கு மருதமரமும், கடற்கரைப் பகுதிக்கு நெய்தற் பூவும், பாலை நிலத்திற்குப் பாலைமரமும் சிறத்தலின், ஐந்திணைகட்கும் பூ மரம் ஆகிய கருப்பொருள் பற்றிப் பெயரிடப்பட்டது என்பார் இளம்பூரணர். (தொ. பொ. 5)

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற பெயர்கள் முறையே இருத்தல் புணர்தல் ஊடல் இரங்கல் பிரிதல் என்ற உரிப்பொருள் பற்றியே அமைந்தன என்பார் நச்சினார்க் கினியர். (தொ. பொ. 5 )

இப்பெயர்கள் கருப்பொருள் உரிப்பொருள் என இரண்டும் பற்றி வந்தன என்று இருவர்கருத்தும் கொள்வர் இலக்கண விளக்க நூலார். (இ. வி. பொ. 379)

காடும் மலையும் ஊரும் கடலுமான நானிலப்பகுதிகளும் அவ்வந் நிலத்திற் சிறந்த முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற அடையாளப் பூக்களால் அழைக்கப்பட்டன. சுரமும் பாலைப் பூவின் பெயரால் பாலை என வழங்கப்பட்டது.

(தொ. பொ.உரை.பாரதி)

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்பன ஒழுக்கத் தின் பெயர்கள். ஒழுக்கத்தின் பெயர் அது நிகழும் நிலத் திற்குப் பெயராயிற்று. (தொ. பொ. 5 குழ.)

ஐந்திணையுள்ளும் களவு நிகழ்தல் -

{Entry: G07__575}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என ஐவகைப்பட்ட நிலங்களுக்கும் உரிய முதலும் கருவும் வந்து உரிப்பொருள் மயங்குதலும் உண்டு என்ற மரபினான் அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது (இறை.அ.1) என ஐந்திணைகளுக்கும் உரிய நிலத்தின்கண் களவு ஒழுக்கம் நிகழலாம் என்பது. எனவே, களவு குறிஞ்சி நிலத்திற்கே உரியது என்று கொள்ளுதல் வேண்டா என்பது. (தொ. பொ. 14, 93 நச்.)

ஐந்நில உணவு -

{Entry: G07__576}

குறிஞ்சி - தினை, வெதிர்நெல், கிழங்கு; பாலை - தருப்பணம் (அவல்), ஆறு அலைத்துப் பெற்றன; முல்லை - வரகு; மருதம் - நெல்; நெய்தல் - உப்பு, விலையிற் பெற்றன.(த. நெ. வி. 10 உரை)

ஐந்நிலச் செயல்கள் -

{Entry: G07__577}

குறிஞ்சி - நிறைதேன் அழித்தல், தினை அரிதல், கிழங்கு அகழ்தல்; பாலை - நெறி சென்று அலைத்தல், ஊர் எறிதல், நிரை கோடல்; முல்லை - ஆடு பசு எருமை என மூவினம் ஓம்பல், வரகு அரிதல், ஏறு கோடல்; மருதம் - உழவொடு பயிலுதல், விழவு அயர்தல், புனலாடல்; நெய்தல் - திரைக்கட லில் மீன் பிடிக்கச் சேறல், உப்பாக்குதல், முத்துக் குளித்தல். (த. நெ. வி. 9 உரை)

ஐந்நில நீர் -

{Entry: G07__578}

குறிஞ்சி - அருவி நீரும், சுனை நீரும்; பாலை - வறுஞ்சுனை நீரும், உவர் நீரும்; முல்லை - காட்டாற்று நீர்; மருதம் - கிணற்று நீரும், பொய்கை நீரும்; நெய்தல் - மணற்கூவல் நீர். (த. நெ. வி. 10 உரை)

ஐந்நிலப் பண்கள் -

{Entry: G07__579}

குறிஞ்சி - குறிஞ்சிப்பண்; பாலை - பஞ்சுரப் பண்; முல்லை - தாரப் பண் (சாதாரி) ; மருதம் - மருதப்பண் - நெய்தல் - செவ்வழிப்பண். (த. நெ. வி. 11)

ஐந்நிலப் பறவைகள் -

{Entry: G07__580}

குறிஞ்சி - மயில், கிளி; பாலை- பருந்து; முல்லை - புறா, கானங் கோழி; மருதம் - அன்னம், தாரா; நெய்தல் - கம்புள், அன்னம், மகன்றில். (த. நெ. வி. 12)

ஐந்நிலப் பறைகள் -

{Entry: G07__581}

குறிஞ்சி - வெறிப்பறை, தொண்டகப் பறை; பாலை - துடிப்பறை, பூசற்பறை; முல்லை - ஏறங்கோட்பறை; மருதம் - நெல்லரி கிணை முதலியன; நெய்தல் - நெய்தற் பறை, நாவாய்ப் பறை. (த. நெ. வி. 11)

ஐந்நிலப் பூக்கள் -

{Entry: G07__582}

குறிஞ்சி - காந்தள், வேங்கை, சுனைக்குவளை; பாலை - மராம்பூ, குராம்பூ, பாதிரம்பூ, முருக்கம்பூ; முல்லை - முல்லை, தோன்றிப்பூ; மருதம் - கழுநீர், தாமரைப்பூ; நெய்தல் - கழிமுள்ளி, நெய்தற்பூ. (த. நெ. வி. 12)

ஐந்நில மக்கள் -

{Entry: G07__583}

குறிஞ்சி - வெற்பன், குறவர்; முல்லை - குறும்பொறை நாடன், குடவர்; பாலை- விடலை, எயினர்; மருதம் - மகிழ்நன், உழவர்; நெய்தல் - சேர்ப்பன், பரதவர் - ஆகியோரும் ஆவர்.

(ஆண்பால் உயர்ந்தோரையும், பலர்பால் ஏனையோரையும் குறிக்கும்.) மேலும் குறிஞ்சிக்குப் பொருப்பன் மலையன் சிலம்பன் கொடிச்சி குறத்தி குறவர் இறவுளர் - ஆகியோரும், முல்லைக்கு அண்ணல் மீளி இடைச்சியர் ஆய்ச்சியர் கோவலர் இடையர் - ஆகியோரும், பாலைக்குக் காளை எயினர் எயிற்றி மறவர் - ஆகியோரும் மருதத்துக்கு ஊரன் கிழத்தி மனைவி கடையர் கடைசியர் ஆகியோரும், நெய்த லுக்குக் கொண்கன் துறைவன் துறைவி பரத்தி நுளையர் நுளைச்சியர் - ஆகியோரும் மக்களாவர். (த. நெ. வி. 8 உரை)

ஐந்நில மரங்கள் -

{Entry: G07__584}

குறிஞ்சி - வேங்கை, அகில், சந்தனம்; பாலை - ஓமை; முல்லை - குருந்தம், கொன்றை; மருதம் - காஞ்சி, மருதம், வஞ்சி; நெய்தல் - தாழை, புன்னை, ஞாழல். (த. நெ. வி. 12)

ஐந்நில மாக்கள் (விலங்குகள்) -

{Entry: G07__585}

குறிஞ்சி - சிங்கம், புலி, யானை ; பாலை - செந்நாய் ; முல்லை - முயல், இரலை; மருதம் - எருமை, நீர்நாய்; நெய்தல் - முதலைமா. (த. நெ. வி. 12 உரை)

ஐயக்கிளவி -

{Entry: G07__586}

களவுக்காலத்தில் ஒன்றைக் கூறுவோமா, கூறல் வேண்டாவா என்று ஐயமுற்றுக் கூறும் சொல். இது தலைவனுக்கே உரியது.

“சொல்லின், மறாதுஈவாள் மன்னோ இவள்” (கலி. 61) என்பது தலைவன் கூற்று. (தொ. பொ. 238 நச்.)

ஐயம் தீரக் கூறல் -

{Entry: G07__587}

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலை, தலைவி மெலிவு கண்டு அவளிசைவு பெற்று அறத் தொடு நிற்றற்கு முற்பட்ட தோழி, தலைவிமனத்து நிகழ்ந்த தோர் ஐயத்தைக் குறிப்பான் உணர்ந்து, “தலைவி! நம் குடிக்குப் பழி வரினும் தலைவற்குப் பழிபடக் கூறேன்” என்று அவளது ஐயம் நீங்கக் கூறித் தான் அறத்தொடு நிற்றற்கு அவளை உடன்படுவித்தல்.

இது களவுக்காலத்து ‘வரைபொருட் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 219)

ஐயம் (1) -

{Entry: G07__588}

ஐயம் என்பது ஒரு பொருளைக் கண்டவழி இதுவெனத் துணிய இயலாத நிலைமை.

`அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல்’ (குறள். 1081)

என்று தலைவியைக் கண்ட அளவில் தலைவன்உள்ளத்தில் ஐயம் நிகழ்ந்தவாறு. (தொ. பொ. 94 நச்.)

ஐயம் என்பது ஒருபொருள்மேல் இருபொருள் தன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம். (தொ. பொ. 260 பேரா.)

இதனை வடநூலார் விதர்க்கம் என்பர்.

முதன்முதல் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளை நிலவுலக மகளோ, தேவருலகமகளோ என்று ஐயுறும்; தலைவியும் தலைவனை ‘இவன் கடம்பு அமர் காளை கொல்லோ, இயக்கன் கொல்லோ’ என்றும் ஐயுறும். (இறை.அ. 2 உரை)

கந்தருவத்தின் வழீஇய உலகியலில் தலைவிக்கு இத்தகைய ஐயம் தோன்றுவதுண்டு என்பார் நச்சினார்க்கினியர். (சீவக. 713)

ஐயம் (2) -

{Entry: G07__589}

இயற்கைப் புணர்ச்சியன்று முதன்முதல் தலைவியைக் கண்ட தலைவன் ஐயுறுதல். இவள் தெய்வமகளோ மானுட மகள்தானோ என்று ஐயுறுதல். இது கைக்கிளைப் பகுதியின் கிளவி. (ந.அ. 120)

இத்துறை புறப்பொருள் வெண்பாமாலையில் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையிலும் காணப்படுகிறது. (14-2)

ஐயம் தீர்தல் -

{Entry: G07__590}

தலைவன் தான் கொண்ட ஐயத்தை அகற்றிக் கொளல். தலைவியின் ஆடை அணிகளையும் ஆடவனைக் கண்டதால் அவளிடம் தோன்றிய மெய்ப்பாடுகளையும் உற்றறிந்த தலைவன் அவள் தெய்வமகள் அல்லள் மானிடமகளே என்று தெளிதல். அவள் சூடியிருந்த மலர்கள் வாடுதலும், கண்கள் இமைத்தலும், கால்கள் நிலத்தில் தோய்தலும் பிறவும் ஐயம் அகலத் துணையாம்.

இது கைக்கிளைப் பகுதித்துறை. இத்துறை புறப்பொருள் வெண்பாமாலையுள் ‘துணிவு’ என ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையிலும் காணப்படுகிறது. (14-3). நம்பி அகப்பொரு ளில் ‘ஐயம் கடிதல்’ எனப்படும். (ந. அ. 121.)

இது தெளிதல் (கோவை. 3) எனவும் கூறப்படும்.

ஐயம் தீர்தற்கு ஏதுவாவன -

{Entry: G07__591}

தலைவி தோளிலும் முலையிலும் எழுதப்பட்ட வல்லியும், அவள் அணிந்துள்ள ஆபரணங்களும், வாடிப்போகலுறும் மலர்களும், அவற்றில் படிந்துள்ள வண்டுகளும், நிலம் தோய நடக்கும் அடிகளும், பிறழ்ந்து இமைக்கும் கண்களும், அவளுக்கு எழலுற்ற அச்சவுணர்வும், பிறவும் தலைவ னிடத்தே, “இவள் தேவர்மகளோ, மானுட மகளோ?” என நிகழாநின்ற ஐயத்தை நீக்கி இவள் மானுடமகளே என்று துணிதற்கு ஏதுவாவன. (ந. அ. 121)

பயின்றதன் மேல் அல்லது செல்லாத தாது ஊதும் வண்டு, ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள், முலையினும் தோளினும் எழுதப்பட்ட தொய்யிற் கொடி, கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ, வான்கண் அல்லாத ஊனக்கண், கண்டறியாத வடிவு கண்ட அச்சத்தால் பிறந்த தடுமாற்றம், அக்கண்ணின் இதழ் இமைத்தல், ஆண்மகனைக் கண்ட விடத்துப் பிறக்கும் அச்சம் என்னும் அவ்வெண் வகைப் பொருளும் அவை போல்வன பிறவும் ஐயத்தை நீக்கும் கருவியாம். (தொ. பொ. 95 நச்.)

பிற என்றதனால், கால் நிலம் தோய்தலும், நிழலிடுதலும், வியர்த்தலும் முதலியன கொள்ளப்படும்.

(தொ. பொ. 95 நச். உரை)

ஐயுற்றுக் கலங்கல் -

{Entry: G07__592}

களவுக் காலத்தில் தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயின் பிரிந்திருந்த நாளில் ஒருநாள், மகட்பேச வருவா ருடைய மணமுரசு தன் மனைவயின் ஒலிக்கக் கேட்ட தலைவி தோழியிடம், “நம் இல்லத்தில் இன்று ஒலிக்கப்படும் இம் மண முரசு என்னை யாருக்கு மகட்பேசி முடிக்கக் கருதியோ என்பது புலனாகவில்லையே” என்று உறுதியாக அறிய இயலாது கலங்கிக் கூறுதல்.

இது ‘வரைபொருட்பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (கோவை. 297)

ஐயுறுதல் -

{Entry: G07__593}

தலைவியும் தோழியுமாகிய இருவரும் உள்ள இடத்திற்குத் தலைவன் வந்து ஊர் பெயர் முதலியவற்றை முதலில் வினவி, பின்னர்த் தழையுடையினை அவர்களுக்குக் கையுறையாகத் தருவதாகக் கூறித் தன் கருத்தைக் குறிப்பான் அறிவித்தவழி, “இவன் யாவனோ? இவன் எண்ணம் யாதோ” என்று தோழி ஐயுற்றுக் கூறுதல்.

இஃது ‘யாரே இவர்மனத் தெண்ணம் யாதெனத், தேர்தல்’ என்ற பகுதிக்கண் அமைந்த முதலாம் கூற்று.(கோவை. 60) (ந.அ. 140)

உள்ளுறைகட்கும் இடையே வேற்றுமைகள் -

{Entry: G07__594}

உள்ளுறை ஐந்தும் அகத்திணை மாந்தர்க்குரிய கூற்றாகச் செய்யுட்கண் வருமேனும், இவற்றிடையே வேற்றுமைகள் வருமாறு :

1) உடனுறை : கருப்பொருள்களின் பண்பு செயல்களை அடிப்படையாகக் கொண்டு, உவமமும் பொருளுமாக இயைத்துக் கூறுதற்கு ஏலாமல், ‘திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கே’ புலப்பட்டு வரும்.

2) உள்ளுறை உவமம் : உவமமும் பொருளுமாக ஒப்பிட்டுக் கூறுதற்கு ஏற்புடைத்தாய், தெய்வம் ஒழிந்த கருப்பொருள் களின் அடிப்படையில், வினை பயன் மெய் உரு பிறப்பு என்னும் வகைப்பாடு தோன்றத் தெற்றெனப் புலப்பட்டு வரும்.

3) சுட்டு : இறைச்சிப் பொருள் போலச் சொற்றொடரோடு உடனுறைவு ஆகாமல், வரையறையின்றி யாதானும் ஒரு பொருள் பற்றிக் கூறும் கூற்றினுள், கூறுவோர் தம் கருத்தாகக் கொள்ளுமாறு நுண்ணிதாக அமைந்து வரும்.

4) நகை : முதற்பொருள் கருப்பொருள் என்னும் அடிப்படை யைக் கருதாமல் எள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு நகையாட்டாக நிகழும் கூற்றினுள் குறிப்பாக அமைந்து வரும்.

5) சிறப்பு : கருப்பொருளை அடிப்படையாகக் கருதாமல் ஒருவரைச் செயற்கையாகச் சிறப்பித்துப் பாராட்டிக் கூறும் கூற்றினுள் நுட்பமாக அமைந்து வரும்.

(தொ. பொரு. 47 ச. பால.)

ஐவகைத் தாயர் -

{Entry: G07__595}

ஈன்ற தாய், ஊட்டுந் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் (பிங். 396) என்னுமிவர். ஆட்டுவாள், ஊட்டு வாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய், என்னுமிவர். (சீவக. 363 நச்.)

ஒ section: 45 entries

ஒத்த கிழத்தி -

{Entry: G07__596}

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காம வாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்ற பத்தானும் தலைவனுக்கு ஒத்தவளாய் அவன் மணந்து இல்லறம் நிகழ்த் துதற்குப் பொருத்தமான தலைவி. (தொ. பொ. 93 நச்.)

ஒத்த கிழவன் -

{Entry: G07__597}

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காம வாயில், நிறை அருள் உணர்வு திரு என்ற பத்தானும் தலைவியை ஒத்து அவளை மணந்து இல்லறம் நிகழ்த்தப் பொருத்தமான தலைவன். (தொ. பொ. 93 நச்.)

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -

{Entry: G07__598}

“கருந்தடங்கண் வண்டாக, செவ்வாய் தளிராக, அரும்பு போன்ற மென்முலை தொத்தாக, பெருமூங்கில் போன்ற தோளானும் பெண்தன்மையானும் அழகு பெற்றதொரு பூங்கொடி அனையாளை நோக்கினேம்; நோக்கினேமாக எம் விழிகள் மகிழ்ந்தன” என்றாற் போன்ற கூற்று.

(பு.வெ.மா. 14-1, தொ. பொ. 93 நச். )

ஒப்பு (1) -

{Entry: G07__599}

இது மன்றல் எட்டனுள் ஒன்று. இதுவே பிராசாபத்தியம் எனவும்படும். பெண்ணின் தந்தை, உரிய உறவும் கோத்திரமும் உடைய ஒருவனுக்கு, அவன் தரும் பரிசப் பொருளின் இருமடங்கு தான் கொடுத்து உறவினர் சூழ முறைப்படி கடிமணம் செய்து கொடுப்பது.

பிரசாபதி - புரோகிதன். அவனை முன்னிடலால் இஃது இப் பெயர்த்தாயிற்று.

மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது. (இறை.அ. 1 உரை) இது கற்பின் பாற்படும் (த. நெ. வி.14)

இது பெருந்திணைப் பாற்படும் நால்வகை மணங்களுள் ஒன்று. இதுவும் கந்தருவத்தின்பாற்படும் என்பது பெரும் பொருள் என்ற பண்டை இலக்கணநூல் குறிப்பிடும் செய்தி என்பர் நச்சினார்க்கினியர். (சீவக. 187 உரை)

ஒப்பு (2) -

{Entry: G07__600}

1. உவமை யளவை (சி.சி. அளவை 1)

2. பிராசாபத்தியம் (இறை.அ.1 உரை) (L)

ஒருகாற் பிரிவு -

{Entry: G07__601}

ஒருவழித் தணத்தல் (சாமி. 82)

ஒருங்க வருந்தல் -

{Entry: G07__602}

தம் மகள் உடன்போயபின் பல ஆண்டுகள் அவளுடன் தொடர்பு கொண்டிருந்த தம் நிலை குறித்துத் தாயர் மனம் அழியுமாறு வருந்துதல். (பாலை நடையியல்) (வீ. சோ. 93. உரை மேற்)

ஒருசார் பகற்குறி -

{Entry: G07__603}

ஒரு கூற்றுப் பகற்குறி. அஃதாவது தலைவன் தன் வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்து வந்து நிற்கப் பாங்கி குறியிடத் துத் தலைவியைச் செல்லவிடாமல் மறுத்துக் கூறத் தலைவன் வருத்தத்துடன் செல்லுதல். இது களவுக்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று; பகற்குறியுள் அடங்குவது. (ந. அ. 123)

ஒருசார் பகற்குறி வகை -

{Entry: G07__604}

1. இரங்கல் - தலைவன் பிரிந்தபோது தலைவி வருந்துதலும், அது கண்டு தோழி புலம்புதலும், பிரிந்து சென்றுள்ள இடத்தே தலைவன் வருந்துதலும் ஆகியன.

2. வன்புறை - தோழி தலைவியை வற்புறுத்தல் - இடித் துரைத்தல்.

3. இற்செறிப்புணர்த்தல் - புறத்துச் செல்ல இயலாத வகை தலைவியை இல்லத்துள் செறித்து வைத்திருக்கும் செய்தியைத் தோழி தலைவற்கு உரைத்தல். (ந. அ. 153)

ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

{Entry: G07__605}

“தோழி! நம் தலைவன் விருப்பம் தரும் என் நகில்களை முற்றக் கலந்து பின் தன் பிரிவால் என் தோள் நெகிழப் பிரிந்து தலைவியிடம் சென்றுள்ளான் ஆயினும், புறத்தால் பிரிந்த அவன் உள்ளத்தால் என்னை என்றும் பிரியான்; இதனை அவள் அறிந்திலள்“என்ற பரத்தையின் கூற்று. (ஐங். 39)

`ஒருதலை உரிமை வேண்டல்’ -

{Entry: G07__606}

களவின்பம் துய்க்கும் தலைவி இடைவிடாது இன்பம் நுகர்தலோடு இல்லறம் நிகழ்த்தும் உரிமையினை உறுதி யாகப் பெறுதலை விரும்பல். (தொ. பொ. 225 நச்.)

ஒருதலை உள்ளுதல் -

{Entry: G07__607}

இடைவிடாது தலைவன் தலைவியை நினைத்தல் (தொ. பொ. 100 நச். ந. அ. 36 உரை. இ. வி. 405)

ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -

{Entry: G07__608}

“தலைவியினுடைய முள்போன்ற பற்களையும், அமிழ்தம் ஊறும் செவ்வாயையும், அகிலும் சந்தனமும் கமழும் அறல் போன்ற கூந்தலையும், பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களையு முடைய அவளது முறுவலொடு மதர்த்துத் தோன்றும் பார்வையினையும் நினைத்துக் காண்பேன்” (குறுந். 286) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

ஒருதலைக்காமம் -

{Entry: G07__609}

ஒருதலை - ஒரு பக்கம்; ஒருதலைக்காமம் - ஒரு பக்கத்து விருப்பம். தலைவன் தலைவி ஆகிய இருவரும் ஒத்த அன் பினராயிருத்தல் இன்றித் தலைவன் மாத்திரம் தலைவியிட மோ, தலைவிமாத்திரம் தலைவனிடமோ அன்பு கொள்ளு தல். இது கைக்கிளை என்னும் அகப்புறத் திணையாகக் கொள்ளப்படும். (ந.அ. 3)

ஒருதலை வேட்கை -

{Entry: G07__610}

இயற்கைப் புணர்ச்சி முதல் களவு வெளிப்படும் துணையும் இருவருக்கும் உளவாம் இலக்கணத்துள் முதற்கண்ணது ஒருதலை வேட்கையாம்.

அஃதாவது புணராத முன்னும் புணர்ந்த பின்னும் தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை.

இதனை ‘இருவயின் ஒத்தல்’ என்பர். (தொ. பொ. 100 நச்.)

`ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்‘ வருதல் -

{Entry: G07__611}

உலகினுள் கிழவரும் கிழத்தியரும் பலராகவும், செய்யுளுள் கிழவன் எனவும் கிழத்தி எனவும் வரும் ஒருமைச் சொற்களே தம் ஆற்றலால் உலகிலுள்ள கிழவர் பலரையும் கிழத்தியர் பலரையும் சுட்டிப் பன்மைப்பாற் பொருளவாய் வருதல். (தொ. பொ. 222 நச்.)

ஒருபால்மேல் வைத்துக் கூறிய செய்தி ஏனைய நாற்பால்களை யும் தழுவிவருதல். “நஞ்சுண்டான் சாம்” என ஆண்பால்மேல் வைத்துக் கூறிய செய்தி ஏனைய பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என்ற ஏனைய நாற்பாற்கண்ணும் வருதல். (தொ. சொ. 161 சேனா.)

`ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

{Entry: G07__612}

தான் என்றும் தோழி என்றும் வேறுபாடில்லாத ஒன்றிய நட்பினாலேயே தலைவன் தன்னிடம் குறை நயப்பதனை எடுத்துக் கூறி அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தோழி தன்னிடம் வேண்டிய செய்தியை, முன்பே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததனை உட்கொண்டு தான் நிறைவேற்றுவ தாகத் தெளிந்த எண்ணம் கொண்ட தலைவி, தான் தலைவ னுக்குப் புதியவளாய்ச் சந்தித்தபோது அவன் தன்கண் நிகழ்த்திய மெய்தொட்டுப் பயிறல் முதலிய எட்டினாலே தான் நாணும் மடனும் நீங்கவில்லை என்று தோழிக்குக் கூறுதல்.

வருமாறு :

`அனையன பலபா ராட்டிப் பையென

வலையர் போலச் சோர்பதன் ஒற்றிஎன்

நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப்

புலையர் போலப் புன்கண் நோக்கித்

தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;

காழ்வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன்

தொழூஉம் தொழூஉம்அவன் தன்மை

ஏழைத் தன்மையோ இல்லை தோழீ!’ (கலி. 55)

இதன்கண், ‘பாராட்டி’ என்பது பொய்பாராட்டல், ‘சோர் பதன் ஒற்றி என் நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி’ கூறினமையின் கூடுதல் உறுதல்; ‘புலையர் போல நோக்கி’ என்பது நீடு நினைந்து இரங்கல்; ‘தொழலும் தொழுதான்’ என்பது இடம் பெற்றுத் தழாஅல்; ‘தொடலும் தொட்டான்’ என்பது மெய் தொட்டுப் பயிறல்; ‘களிறு போல அறிவின் எல்லையில் நில்லாதவன்’ என்பது தீராத் தேற்றம். இவை ஒருவாற்றான் கொள்ளப்படும். (தொ. பொ. 111 நச்.)

ஒருவழித் தணத்தல் -

{Entry: G07__613}

வரைவு கடாவிய தோழியிடம் வரைவுக்கு உடன்பட்ட தலைவன் தன்னூருக்கு ஒருமுறை போய் வருவதாகக் கூறிச் செல்லுதல். இதனை ‘இட்டுப்பிரிதலும் அருமை செய்தயர்த் தலும்’ (தொ. பொ. 111, கலி. 53 நச்.)என்ப. இது களவியலுள் 16 ஆவது கிளவி. (ந. அ. 123)

ஒருவழித் தணத்தல் கூற்றுக்கள் -

{Entry: G07__614}

1. அகன்றணைவு கூறல், 2. கடலொடு வரவு கேட்டல், 3. கடலொடு புலத்தல், 4) அன்னமொடு ஆய்தல், 5) தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல், 6) கூடல் இழைத்தல், 7) சுடரொடு புலம்பல், 8) பொழுது கண்டு மயங்கல், 9) பறவையொடு வருந்தல், 10) பங்கயத்தொடு பரிவுற்றுரைத்தல், 11) அன்ன மோடழிதல், 12) வரவுணர்ந்துரைத்தல், 13) வருத்த மிகுதி கூறல் என்ற பதின்மூன்று கிளவிகளையுடையது ஒருவழித் தணத்தல் என்னும் களவியல் தொகுதி. (கோவை. 181- 193)

ஒருவழித் தணத்தல் வகைகள் -

{Entry: G07__615}

1) செலவு அறிவுறுத்தல் - தலைவன் தான் ஒருவழித் தணந்து செல்லுதலைத் தோழிக்கு அறிவிப்பான். அவள் அதனைத் தலைவிக்கு அறிவிப்பாள். அவ்விருவகை அறிவுறுத்தல்.

2) செலவு உடன்படாமை - தோழி, தலைவன் செல்வதை ஏற்றுக் கொள்ளாது மறுத்தல்.

3) செலவு உடன்படுத்தல் - தலைவன், தோழியிடம் தான் செல்லும் செலவினை அதன் இன்றியமையாமை கூறி ஏற்கச் செய்தல்.

4) செலவு உடன்படுதல் - தோழி தலைவன்செலவினை ஏற்றுக் கொள்ளுதல்.

5) சென்றுழிக் கலங்கல் - தலைவன் ஒருவழித் தணந்த காலத்தே தலைவி துயருறுதல்.

6) தேற்றி ஆற்றுவித்தல் - தோழி தலைவியைத் தெளிவுறுத்தி ஆறுதல் அடைவித்தல்.

7) வந்துழி நொந்துரை - தலைவன் மீண்டபின்னர் அவனிடம் தோழி தமது துயரத்தினைக் கூறுதலும், அதற்கவன் வருந்தி யுரைத்தலும். இவ்வாறு ஒருவழித் தணத்தல் ஏழு வகைப்படும். (ந. அ. 167)

ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -

{Entry: G07__616}

“(என் காதலர் எங்கோ போய்விட்டதாக நினைப்பவர் கிடக்க.) என் காதலர் என் கண்ணினின்று அப்பால் அகன்றி லர்; நான் இமைத்தாலும் அதனால் அவருக்குத் துன்பம் இல்லை; அவர் அத்துணை நுண்ணியர் (மற்றவர் அவர் சேய்மைக்கண் சென்றுவிட்டதாகக் கருதுகின்றனர்.)” என்று தோழி இயற் பழிக்காத வகையால் தலைவன் சிறப்பினைத் தலைவி கூறுதல். (குறள் 1126)

ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -

{Entry: G07__617}

“தலைவியின் பெண்மை நலன்களை நான் எப்போதாவது மறந்திருந்தாற்றானே நினைக்க முடியும்! ஒருபோதும் அவற்றை மறந்தறியேன் ஆதலின் நினைத்தும் அறியேன்!” என்று தலைவன் கூறுதல். (குறள் 1125)

ஒழிந்தது வினாதல் -

{Entry: G07__618}

இது ‘மொழியாமை வினாதல்’ (இ.வி. 507 உரை) எனவும் படும். திருக்கோவையாரில் ‘மொழி பெறாது கூறல்’ (57) என்னும் கூற்றும் அது.

“கருங்குழலீர்! நும் தட்டைப் புடைப்பு ஒலியால் கிளிகள் எல்லாம் போயின; மீண்டும் தம் இனத்தின் குரலாம் என்று கருதி இத்தினைப்பயிரைக் கவரும் என்று கருதியோ நீவிர் பேசா தொழிந்தது?” (தஞ்சை. கோ. 73) என்பது போன்று தலைவன் தோழியை வினவுவது.

இது களவியலுள் ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 140)

ஒழிபனி -

{Entry: G07__619}

இத்தொடர் பனி நீங்கும்படியான பின்பனிக் காலத்தைச் சுட்டுகிறது. பின்பனித் திங்கள் மாசி பங்குனி இரண்டும். இவ்விரு திங்களும் பாலைக்குரிய பெரும்பொழுதினைச் சாரும். (த. நெ. வி.4)

ஒளித்த ஊடல் வெளிப்படல் -

{Entry: G07__620}

விருந்தினரைக் கண்டதும் மறைந்திருந்த ஊடல், தலைவிக்குப் பள்ளியிடத்தே வெளிப்படுதல்.

தலைவிக்கு ஒப்பனை செய்து அவளைப் பாராட்டித் தலைவன் அவளைத் துய்க்கும் நேரத்தில், அவள் உள்ளத்தே மறைந்திருந்த கோபம் வெளிப்படும். ‘இதுவரை உனக்குக் காதலி நான் ஒருத்தியே என்றிருந்தேன். அந்நிலை மாறியமை யால் இப்படுக்கைக்கண் நீயே இருப்பாயாக’ (அம்பிகா. 493) என்று கூறித் தலைவி படுக்கையினின்று இழியும் செய்தி இது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (இ. வி. 555)

ஒன்றாச் சுரம் -

{Entry: G07__621}

அரிய சேய பெரிய கருங்கல் செறிந்த வழி ஆதலின், மெல்லி யல் ஆகிய தலைவியை உடன்கொண்டு தலைவன் செல்லு தற்குப் பொருந்தாத அரிய பாலைவழி. (தொ. பொ. 41 நச்.)

ஒன்றாத் தமர் -

{Entry: G07__622}

உடன்போக்கிற்குப் பொருந்தாத தலைவியின்தாயர் முதலிய உறவினர். (தொ. பொ.41 நச்.)

`ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -

{Entry: G07__623}

ஒன்றாத் தமர் - உடன்போக்கிற்கு மனம் பொருந்தாத தாயர் முதலிய சுற்றத்தார்.

ஒன்றாப் பருவம் - தலைவியை இற்செறித்தமையால் வெளியே புனம்காவல் முதலியவற் றிற்குச் செல்லமுடியாத காலம்; தலை வனைக் காண முடியாமையால் ஆற்றி யிருப்பதற்கு வாய்ப்பு இல்லாத காலம்.

ஒன்றாச் சுரம் - நடத்தற்கு அரிதாதலும் தொலைவி லுள்ளதும் கற்கள் நிறைந்ததும் ஆதலின் தலைவனுடன் தலைவி நடந்து போதற் குப் பொருத்தமில்லாத பாலைநிலம்.

ஒன்றிய தோழி - தலைவியின் விருப்பமே தன்விருப்ப மாதலின், தலைவி பிரிந்து போனபின் உறவினர் (தோழியாகிய) தன்னைக் கடிந்து பேசும் சொற்களைப் பொறுத் துக் கொள்ளுதற்கு மனம் இசைந்து, தலைவியை அயலவன் மணத்தற்கு வாய்ப்புத் தரலாகாது என்ற நோக்கத் தொடு, நடத்தற்கு அரிய கடுங்கோடை யிலும் பாலையில் தலைவி தலைவனு டன் தனித்துப் புறப்பட்டுப் போதற்கு மனம் பொருந்திய தோழி.

தலைவன், ஆராய்ந்து தோழியிடம், தான் தலைவியை மணத்தற்கு உடன்படாத பொருத்தமில்லாத உறவினரை நீக்கி, பொருத்தமில்லாத அக்காலத்தில், பொருத்தமில்லாத பாலை வழியே தலைவியை அழைத்துச் செல்லத் துணிந்து கூறுதல். (தொ. பொ. 41 நச்.)

‘தலைவன் போக்கு உடன்படுதல்’ என்பது நம்பியகப் பொருள் கூறும் துறை. (182)

`ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -

{Entry: G07__624}

வரைவு உடன்படாத தமரையும், இற்செறிப்பு முதலிய வற்றான் தலைவி படும் துயரையும், உடன்போகக் கருதிய பாலைநிலத்தின் கடுமையையும் நினைத்துப்பார்த்து, தலைவன் தன் தலைவி ஆற்றியிருப்பாள் என்று கருதி, உடன்போகாது விடுத்தற்கண் பொருந்திய தோழியிடம் கூறுதல். (தொ. பொ. 41 நச்.)

ஒன்றாப்பருவம் -

{Entry: G07__625}

இற்செறிப்பினால் புறம்போதற்குப் பொருந்தாத பருவம் (2) தலைவனுடன் கூட்டம் பெறாமையால் ஆற்றியிருப்பதற்குப் பொருந்தாத பருவம். (தொ. பொ. 41 நச்.)

`ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பால்’ -

{Entry: G07__626}

வாழ்நாள் சிலவே ஆதலின் விரைவில் பொருள் தேட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மாறாக, “இளமைப் பருவம் வாழ்நாளில் சில ஆண்டுகளே; அப்பருவம் கழிந்தால் மீளாது ஆதலின் இளமைப் பருவத்தில் தலைவியைப் பிரிந்து செய்யும் காரியம் எதுவும் வேண்டா” என்ற எண்ணம் தோன்றும்.

உழைத்துப் பொருள் தேடாது வீட்டில் சோம்பி இருத்தல் கூடாது என்ற எண்ணத்தொடு பொருள்தேட நினைத்தால், “அவரவர் தத்தம் தகுதிக்கேற்பச் செயற்படல் வேண்டுமே யன்றித் தகுதிக்குக் குறைவான செயல் எதன்கண்ணும் ஈடு படல் கூடாது” என்ற எண்ணம் அதற்கு மாறாகத் தோன்றும்:

செல்வம் இல்லாவிடில் வரும் இழிவை நினைத்துப் பொருள் தேட நினைத்தால், “செல்வங்களுள் சிறந்த இளமையும் காமமும் ஆகியவற்றை விடுத்துப் பொருள்வயின் பிரிதல் கூடாது” என்ற எண்ணம் அதற்கு மாறாகத் தோன்றும்.

பிரிந்து சென்று மீண்டுவந்தால் அன்பு பெருகும் என்று கருதிப் பொருள் தேடப் பிரிய நினைத்தால், அதற்கு மாறாகத் “தலைவி பிரிவுத்துயரைத் தாங்கமாட்டாள்” என்ற எண்ணம் தோன்றி அப்பிரிவினைத் தடுத்துவிடும்.

இவ்வாறு நாளது சின்மைக்கு இளமையது அருமையும், தாளாண் பக்கத்திற்குத் தகுதியது அமைதியும், இன்மையது இளிவிற்கு உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலத் திற்கு அகற்சியது அருமையும் மாறாக அமைந்து பிரியக் கருதும் எண்ணத்தை மாற்றுவனவாகவுள்ளன.

ஒன்றோடொன்று பொருந்தாத செய்திகளிடத்தே தலைவன் உள்ளம் கொண்ட பகுதி என்பது மேலைத் தொடர்க்குப் பொருளாகும்.

எ-டு : ‘அரும்பொருள் வேட்கையின்’ என்னும் கலிப்பாடல் (18) (தொ. பொ. 41, 44 நச்.,)

வாழும் நாள் சிலவாக உளவாதலையும், தனது தாளாண்மை யாகிய பகுதியையும், பொருளின்மையால் எய்தும் இழிவை யும், தலைவியைப் பலவாறு இன்புறுத்தற்கு எண்ணும் தனது அன்பினது பெருக்கத்தையும் கருதிப் பொருளீட்டலை வலியுறுத்துகிறது தலைவனது நெஞ்சம்.

இன்ப நுகர்ச்சிக்குரிய இளமையது அருமைப்பாட்டினையும், தலைவியைப் பேணும் கடமையாகிய தகவினையும், காத லுடைமையாகிய சிறப்பினையும், தலைவியைப் பிரிந்து உறைதல் ஆற்றாத தன் நிலையையும் கருதிப் பொருள்வயின் பிரிதலை அவன் உணர்வு மெலிவிக்கிறது.

இவ்வாறு தம்முள் ஒன்றாத நிலைமைக்குரிய பொருள்வயின் பிரிதலை ஊக்குவிக்கும் பகுதிக்கண் தலைவன் கூற்று நிகழும்.

(தொ. அகத். 42 ச. பால.)

ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -

{Entry: G07__627}

ஒன்று ஒன்றனோடு பொருந்தாது வரும் பொருளின் கூறுபாடுகளைக் கருதிப் பிரிதற்குத் தலைவன் மனம் கொண்டபோது கூறுதல்; பொருள்வயின் பிரிவில் ஒருபுறம் பொருள் தேடும் ஆசையால் தலைவியைப் பிரிய விரும்பலும், மறுபுறம் தலைவியிடத்துக் காதலால் பிரிவினை விரும்பா திருத்தலும் ஆகிய தம்முள் மாறுபட்ட இருவேறு உணர்ச் சிகள் தலைவனிடம் நிகழும்போது யாதானும் ஒன்றனைப் பற்றித் தலைவன் கூற்று நிகழ்த்துதல்.

‘பொருள்வயின் பிரிவு தலைவன் அறிவுறுத்தல்’ என்று இதனை நம்பி அகப்பொருள குறிக்கும். (169)(தொ. பொ. 41 நச்.)

ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -

{Entry: G07__628}

ஒன்றற் கொன்று பொருந்தாதனவாகிய நாளது சின்மை முதலியவற்றை நினைத்துப் பார்த்து இறுதியில் பொருள் தேட வேண்டியதன் இன்றியமையாமையினைக் கருதித் தலைவன் பிரியும்போது கூறுவது.

நாளது சின்மைக்கு இளமையது அருமை பொருந்தாமை, தாளாண் பக்கத்திற்குத் தகுதியது அருமை பொருந்தாமை, இன்மையது இளிவிற்கு உடைமையது உயர்ச்சி பொருந் தாமை, அன்பினது அகலத்திற்கு அகற்சியது அருமை பொருந்தாமை - ஆகியவற்றைப் பற்றி நன்கு எண்ணிய தலைவன், புகழும் இன்பமும் வறியவர்க்கு ஈதலும் மனை யகத்து முயற்சியின்றித் தங்கியிருப்பவர்க்குக் கிட்டா என்ற நினைவால், “தம்மை அருள் பண்ணி வந்த அந்தணர் தாபதர் முதலியோர்க்கு அறம்செய்து வேண்டுவன கொடுத்தல், பெரிய பகைவர்களை வென்று பெருமிதத்துடன் தன்னை வழிபடாதாரை அழித்தல், மனைவியுடன் குறைவற இல்லறம் நடத்துதல் என்பன பொருளாலேயே நிகழும்” என்ற கருத்துட்கொண்டு பொருள் தேடப் பிரிதல். (கலி. 11, நச். )

(தொ. பொ. 41 நச்.)

`ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ -

{Entry: G07__629}

மூவகைப்பட்ட காலங்களுள் எல்லாப் பிறப்பினும் தவறாது உயிர் ஒன்றாகி உடல் இரண்டாகி ஒருகாலைக்கு ஒருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத் தின் ஆணை. (தொ. பொ. 93 நச்.)

தலைவன் தலைவி என்ற இருவர் உள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழின் ஆணை.(90 இள.)

இருவரையும் ஒன்றுவித்து உயர்தற்கு ஏதுவாகிய ஊழ். (இ. வி. 487 உரை)

குறைவின்றி உயர்ந்த அன்பு தோன்றுதற்குரிய ஆண்பால் பெண்பால் என்னும் இரு கூற்றினது கட்டளை. (தொ. பொ. 121 குழ.)

ஒன்றித் தோன்றும் தோழி -

{Entry: G07__630}

தான் என்றும் தலைவி என்றும் வேற்றுமையின்றித் தலைவியி னுடைய உறுப்புக்கள் முதலியவற்றையும் தன்னுடைய வாகக் கூறும் உரிமையுடைய தோழி. (தொ. பொ. 39 நச்.)

ஒன்றித் தோன்றும் தோழி `நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -

{Entry: G07__631}

தான் அவள் என்னும் வேற்றுமையின்றித் தலைவியுடன் பழகிய தோழி, 1) உறவினரையும் தோழியரையும் விடுத்துப் பிரிந்து செல்வதால் தலைவிக்கு ஏற்படக்கூடிய துயரம் பற்றியும், 2) தலைவி தம்மைப் பிரிவதால் தமக்கு ஏற்படக் கூடிய துயரம் பற்றியும் கூறுதல். தலைவி பந்தும் கழங்கும் போல்வனவற்றை நீக்குதலால் உண்டாகிய தமது வருத் தத்தைத் தலைவியிடம் உரைத்தல்- (நற். 12) (தொ. பொ. 39 நச்.)

ஒன்றித் தோன்றும் தோழி `நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

{Entry: G07__632}

1) தோழி, தலைவியின் உடன்போக்கினை நினைத்து மிகவும் மனம் புண்பட்டுத் தடுமாறும் அவள்தாயை அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, எழுமையும் தொடர்ந்த அன்பினால் அவர்கள் இல்லத்தை விடுத்துச் சென்றனர் என்பதை அவள்மனம் கொள்ளுமாறு கூறி, அவளை வற்புறுத்திக் கவலையற்றிருக்குமாறு கூறுதல்.

2) தலைவன் விடுத்து அகன்றதால் மிக நொந்து மனம் கலங் கிய தலைவியை ‘வருந்துதலை நீக்குவாயாக’ என்று அவன் கூறிச் சென்ற செய்தியை எடுத்துக் கூறி வற்புறுத்தி அவளை அமைதியுறுமாறு தோழி கூறுதல். (தொ.பொ. 39 நச்., 42 இள.)

ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -

{Entry: G07__633}

தான் வேறு தலைவி வேறு என்ற வேற்றுமையின்றி இரண்டு தலையுடைய பறவை போன்ற நட்புமுறையுடைய தோழி, உடன்போக்கின் தேவையைத் தலைவன் தலைவி என்ற இருவர்க்கும் எடுத்துக் கூறி, இருவரும் உடன்போக்கிற்கு இசைந்தவழித் தலைவியைத் தலைவனோடு உடன்போக விடுக்குமிடத்துக் கூறுதல்.

இதனை நம்பியகப் பொருள் ‘பாங்கி கையடை கொடுத்தல்’ என்னும் (182). (தொ. பொ. 39 நச்.)

ஒன்றித் தோன்றும் தோழி `வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

{Entry: G07__634}

1. ‘மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவர்களின் தருமநூல் துணிவு இது’ என எடுத்துக் கூறி, பின் தொடர்ந்து சென்று தலைவியையும் தலைவனையும் மீட்டு வருதற்கு நினைத்த தாயின் மனநிலையை அறிந்து, அவள் அவர்களைப் பின் தொடராதபடி செய்யுமிடத்துத் தோழி கூறல். (தொ. பொ. 39 நச்.)

2. மெய்யையும் பொய்யையும் கற்பனை செய்து கூறியும் அநுபவப்பட்டவர்களது வரலாற்றை எடுத்துக் கூறியும், தலைவியைப் பெற்ற தாயின் துயரம் கருதி, தலைவனும் தலைவியும் உடன்போய் மீண்டவழி, அவர்களை வரவேற்று மகிழுமாறு தோழி கூறல். (தொ. பொ. 39. பாரதி)

வழியில், தலைவனும் தலைவியும் கொண்டுள்ள காதலின் உண்மை இன்மையை ஆராய்ந்து கண்டோரைத் தாய்க்குக் குறிப்பிட்டு, அதனால் தன் கருத்திற்கு இணங்கி மனம் மாறி வருதலை நோக்கித் தலைவியை மீட்டற்குச் செல்லாமல் தாயை மீட்டுக் கொள்ளும்போதும், அல்லது தலைவியை மீண்டும் அழைப்பிக்க ஏற்பாடு செய்யும்போதும் தோழி கூறல். (தொ. பொ. 179 குழ.)

ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -

{Entry: G07__635}

தான் என்றும் தலைவி என்றும் வேற்றுமையில்லாது நட்புடன் பழகிய தோழி, தலைவனையும் தலைவியையும் உடன்போக்கிற்கு இணங்கச்செய்து, தலைவியைத் தலைவ னுடன் கூட்டி உடன்போக்கிற்கு விடுத்துழித் தலைவனுக்குத் தலைவியைப் பாதுகாக்கும் கடமையைக் கூறி விடுத்தற்கண் கூறல்.

தலைவன் தலைவியை உடன்அழைத்துச் செல்லாது தலைவி யை விடுத்துச் செல்லுமிடத்துத் தோழி கூறல். (நற். 12)

(தொ. பொ. 39 நச்.)

‘பாங்கி வைகிருள் விடுத்தல்’ என்பது ந. அ. கிளவி. (182)

`ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -

{Entry: G07__636}

உடன்போய் தலைவனையும் தலைவியையும் தேடிச் சென்ற செவிலியை வழியிடைக் கண்ட சான்றோர் தெளிவுறுத்தவே, அவள் தலைவியது செய்கை ஏற்றதே என்ற உள்ளத்தொடு மகிழ்ந்து இல்லம் மீளுதல். (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

`ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: G07__637}

அ) “தோழி! என்னால் இந்நோயினை இங்குள்ளார் அறியாவகை மறைக்கவும் முடியவில்லை; நாணத்தினால் தலைவனுக்குத் தூது வாயிலாகக் கூறவும் முடியவில்லை. என் செய்வேன்?” என்ற தலைவி கூற்று.

ஆ) “தோழி! என்னுள்ளத்தில் காமநோயும், அதனை வெளிப் படுத்தித் தூது விடுத்தலைத் தடுக்கும் நாணமும், ஒத்த ஆற்றலையுடைய இரண்டு எதிரிகளாக இருந்து என்னைத் துன்புறுத்துகின்றன” என்ற தலைவி கூற்று. (குறள் 1162,63)

`ஒன்றே வேறே என்றிருபால்’ -

{Entry: G07__638}

ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறம் செய்துழி அவ்விருவரை யும் மறுபிறப்பிலும் ஒன்றுவித்தலும் அதின் வேறாக்கலும் ஆகிய இருவகை ஊழ். (தொ. பொ. 90 இள.)

தலைவன் தலைவி என்ற இருவருக்கும் ஓரிடம் வேற்றிடம் என்று கூறப்பட்ட இருவகை நிலம். எனவே, தலைவனும் தலைவியும் ஓரிடத்தவராதலும் வெவ்வேறிடத்தவராதலும் கூடும் என்பது. (93 நச்.)

உம்மைப் பிறப்பில் காமம் நுகர்ந்தார் இருவரையும் மறு பிறப்பிலும் ஒன்றுவித்தலும் வேறாக்கலும் ஆகிய இருவகை ஊழ். (இ. வி. 487 உரை)

`ஓத்தினான’ எனப்படுபவை -

{Entry: G07__639}

அவையாவன மறைகளை அடிப்படையாகக்கொண் டெழுந்த சமய நூல், ஏரண நூல், வானியல் நூல், கோளியல் நூல், எண்ணியல் நூல், மருத்துவ நூல், பொருளியல் நூல், அரசியல் நூல், படைக்கலப் பயிற்சிக்குரிய நூல்கள், சிற்பம் ஓவியம் முதலிய கலை நூல்கள், இலக்கணநூல்கள் முதலியன. (தொ. அகத். 33 ச. பால.)

ஒதற்பிரிவின் துறைகள் -

{Entry: G07__640}

1) கல்விநலம் கூறல் 2) பிரிவுநினைவு உரைத்தல் (3) கலக்கம் கண்டுரைத்தல் (4) வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என்னும் நான்குமாம். (கோவை. 308-311)

ஓ section: 6 entries

ஓதற் பிரிவு -

{Entry: G07__641}

ஓதற்பிரிவு கற்புக்காலத்துத் தலைவற்கு நிகழும் பிரிவுகளில் ஒன்று. இப்பிரிவிற்குரிய காலவரையறை மூன்றாண்டின் மிகுதல் கூடாது. (தொ. பொ. 186 இள.)

இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்தும் கருத்தினராக வேண்டுதலின், துறவறத்தைக் கூறும் வேதாந்தம் முதலிய கல்வி, அதற்கு வரையறுக்கப்பட்ட ஆண்டுகளையுடையது. அக்கல்வியெல்லாம் அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் உள்ள மூன்று பதத்தைக் கடவாது.

ஓதற்பிரிவு அந்தணர் அரசர் வணிகர் உழுவித்துண்ணும் வேளாளர் என்ற நால்வருக்கும் உரித்து. (26 குழ.)

ஓதற்குப் பிரியும் என்பது கற்பதற்குப் பிரியும் என்பதன்று. பண்டே குரவர்களால் கற்பிக்கப்பட்டுத் தலைவன் அறம் பொருள் இன்பம் வீடுபேறு பற்றிய நூல்களைக் கற்றவன். இனி வேற்று நாடுகளிலும் அவைவல்லார் உளர் எனின் காண்பல் என்றும், வல்லார்க்கு முன்னிலையில் தன் அறிவைக் காட்டி மேம்படுத்துவல் என்றும் கூறி ஓதற்குப் பிரிவான். இப்பிரிவு நாள்களையும் திங்களையும் இருதுவை யும் எல்லையாக உடையது. (இறை. அ. 35,41)

ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

{Entry: G07__642}

1. பிரிவு அறிவுறுத்தல்

தலைவன் பிரிய இருத்தலைத் தோழி தலைவிக்கு அறிவுறுத்தல்.

2. பிரிவு உடன்படாமை

தலைவன் பிரிந்து செல்வதற்குத் தலைவி உடன்படாமை;

3. பிரிவு உடன்படுத்தல்

தலைவனது பிரிவின் இன்றியமையாமையினைக் கூறித் தோழி தலைவியை உடன்படச் செய்தல்;

4. உடன்படுதல்

பிரிவிற்குத் தலைவி இசைதல்;

5. பிரிவுழிக் கலங்கல்

தலைவன் பிரிந்தவிடத்தே தலைவி வருந்தல்;

6. வன்புறை

தோழி தலைவியை வற்புறுத்தி இடித்துச் சொல்லிப் பிரிவினைப் பொறுக்குமாறு செய்தல்;

7. வன்பொறை

மனவுறுதியுடன் தலைவி பிரிவினைத் தாங்கல்;

8. வருவழிக் கலங்கல்

தலைவன் திரும்பி வரும் வழியில் தலைவியை நினைந்து வருந்துதல்;

9. வந்துழி மகிழ்ச்சி

தலைவன் வந்ததும், தலைவியும் தோழியும் மகிழ்தல் - என்பன. (ந. அ. 209)

ஓதிமப் பெடையோடு ஊடி உரைத்தல் -

{Entry: G07__643}

களவு ஒழுக்கம் நிகழும்போது தலைவன் ஒருவழித் தணந் தானாக, அவன் பிரிவினை ஆற்றாது வருந்தும் தலைவி, அன்னப் பேடையைக் கண்டு அது தனக்குப் பரிந்துரை செய்யாத செயலை உட்கொண்டு, அதனொடு கோபித்துக் கூறுவது.

எ-டு : “சடகோபனுடைய திருக்குருகூரின் பொருநைநதித் துறையிலே தன் சேவல் தன்னைத் தழுவும் சிறகுகள் சிறிது பிரிந்தாலும் துயருறும் பெடை அன்னம், தேன் நிரம்பிய குவளைப் பூக்களைப் போல நடுஇர விலும் கண்ணீர் நிரம்பி என்கண்கள் துயிலாத செய்தியைத் தம் துறைவழியே சென்ற என் தலைவ னுக்கு உரைத்து அவன் போக்கினைத் தடுக்க வில்லையே?” என்ற கூற்று. (மா. அ.பாடல் 198)

ஓம்படுத்துரைத்தல் -

{Entry: G07__644}

உடன்போக்கிற்குத் தலைவன் தலைவி இருவரையும் ஒருப்படுத்திய தோழி, தலைவியை நள்ளிருளில் தலைவனிடம் ஒப்படைத்து, “வேதநெறி திரியினும், கடல் வற்றினும், இத் தலைவியிடம் நீ அன்பு மாறாமல் இவளைப் பாதுகாப்பா யாக” என்று தலைவியைப் பாதுகாக்குமாறு தலைவனை வேண்டுதல்.

இதனைப் “பாங்கி (தலைமகளைத் தலைமகற்குக்) கையடை கொடுத்தல்” என்றும் கூறுப. (ந. அ. 182; இ. வி. 536).

இஃது ‘உடன் போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 213)

ஓரை -

{Entry: G07__645}

இராசி; ‘ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்’ (தொ. பொ. 135 நச்.) (L)

ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் -

{Entry: G07__646}

களவுக் காலத்தில் தலைவனும் தலைவியும் தீய இராசியின் கண்ணும் தீய நட்சத்திரத்தின்கண்ணும் தாம் நடத்தும் களவொழுக்கத்தைத் துறந்து தனித்திருத்தல்.

(தொ. பொ. 135 நச்.)

க section: 236 entries

கட்டு -

{Entry: G07__647}

குறி சொல்லும் கட்டுவிச்சி, சுளகில் சிறிதளவு நெல்லினை வாங்கிக்கொண்டு அந்நெல்லின் ஒரு பிடியை எடுத்துத் தூவி அவ்வாறு தூவப்பட்ட நெல்லினைக் கணக்குப் பார்த்து அதன் அடிப்படையில் தெய்வ ஆவேசமுற்றுக் கூறும் சொற்கள். இவள் வேலனைப் போன்று தெய்வ அருள் பெற்றவளாதலால் முக்காலமும் உணர்ந்து சொல்லும் ஆற்றலுடையவளென்று இவளை மக்கள் கருதினர். களவுக் காலத்துத் தலைவன் அடிக்கடிப் பிரிந்து போதலால் தலைவிக்கு உடல் மெலிய, அது தெய்வத்தான் ஏற்பட்ட வேறுபாடோ என்று அறிவதற்குச் செவிலி கட்டுவிச்சியை அழைத்து அவள் வாயிலாகக் கட்டுக் கண்டு அவள் கூறிய படி தலைவி நலன் கருதித் தெய்வ வழிபாடு நிகழ்த்துவது வழக்கம். (தொ. பொ. 115 நச்.)

‘காரார் குழற்கொண்டை கட்டுவிச்சி கட்டேறிச்

சீரார் சுளகின் சிலநெல் பிடித்தெறியா

வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப்

பேரா யிரமுடையான் என்றாள்; பெயர்த்தேயும்

காரார் திருமேனி காட்டினாள்; கையதுவும்

சீரார் வலம்புரியே என்றாள்; திருத்துழாய்த்

தாரார் நறுமாலை கட்டுரைத்தாள்’ (சிறிய. 20-26)

கட்டுச் சொல்லுதல் -

{Entry: G07__648}

குறிசொல்லுதல்.

கட்டுரை கேட்டல் -

{Entry: G07__649}

களவு இடையீட்டால் தலைவிக்கு வந்த உடல்மெலிவின் உண்மைக்காரணத்தை அறியாத செவிலியும் நற்றாயும் ஊரிலுள்ள முதிய பெண்டிரை அழைத்துத் தலைவி உடல் நலம் பெறற்குச் செய்ய வேண்டுவன பற்றி அவர்கள் கருத்தை வினவுதல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரைமேற்.)

கட்டுவித்தி -

{Entry: G07__650}

கட்டுவிச்சி (குறிசொல்பவள்) (கோவை. 285 கொளு)

கட்டுவித்தி கூறல் -

{Entry: G07__651}

களவுக் காலத்தில் தலைவன் வரைவுஇடைவைத்துப் பொருள்வயின் பிரிய, அவன் பிரிவால் தலைவி உடலும் உள்ளமும் மெலிய, அதன் உண்மைக் காரணம் அறியாத தாய் கட்டுவித்தியை (குறிசொல்பவள்) அழைத்துத் தலைவி யது உடல் நலிவின் காரணத்தை வினவ, குறி சொல்பவள் உண்மையைக் கண்டு சொல்லிவிடுவாளோ என்று தோழி கலக்கமுற்று நிற்ப, தலைவன் தலைவியரைக் கூட்டுவித்த தெய்வம் மற்றவர்க்கு இக்களவொழுக்கம் புலனாகாதபடி, அவள் பரப்பிய நெல்லின்கண் முருகனுடைய வடிவத்தைக் காட்ட, அதனைக் கண்ட கட்டுவித்தி “இதனை எல்லீரும் காணுங்கள். இத்தலைவிக்கு முருகனால் வந்த நோய் தவிரப் பிறிதொரு தீங்கு இன்று” என நெற்குறி காட்டிக் கூறுதல்.

இது ‘வரைபொருட்பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 285).

கட்டுவித்தி தலைவிக்கு நோய் பேராயிர முடைய திருமாலால் ஏற்பட்டது என்று உண்மையைக் கூறும் திறமும் உண்டு. அதனைத் திருமங்கையாழ்வார் அருளிய சிறியதிருமடலில் காண்க. (கண்ணி : 20-26)

கட்டு வைப்பித்தல் -

{Entry: G07__652}

களவுக் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து திருமணத் திற்குரிய பொருள் தேடிவரச் சென்றானாக, அவன்பிரிவு குறித்துத் தலைவி வருந்தியதனால் அவள் மனமும் உடலும் மெலிய, நோயது காரணத்தினை உள்ளவாறு அறியாத செவிலித்தாய் தலைவியது உடல் மெலிவின் காரணத்தை நன்றாக அறிந்துகொள்ளக் கட்டுவித்தி என்னும் குறி சொல்பவளை அழைத்து அவள் வாயிலாகக் கட்டுக் காண முற்பட்டது.

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 283)

கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் -

{Entry: G07__653}

இரவுக்குறியில் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி, தலைவி இரவில் படும் துன்பத்தைக் “கடலே! தலைவனுடைய பிரிவைத் தாங்க மாட்டாத தலைவி வாட்டமடைய நீ இடைவிடாது ஒலித்துக் கொண்டிருத்தல் தக்கதோ?” என்று கடலொடு வினவுவாள் போலத் தலைவனுக்கு அறிவித்தல்.

இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 173)

கடலொடு புலத்தல் -

{Entry: G07__654}

தலைவன் தன் செயல் குறித்துத் தலைவியை ஒரு நாளே பிரிந்து ஒருவழித் தணந்தானாக, அவ்வொருநாட்பிரிவினை யும் ஆற்றாத தலைவி, கடற்கரையை அடைந்து கடலைப் பார்த்துத் தன் நாயகன் வரும் நேரம் பற்றி வினவ, அது தனக்கு வாய் திறந்து மறுமாற்றம் ஒன்றும் கூறாததனை நோக்கி, “என் வளையல்களைக் கழலச் செய்த என் தலைவன் திறம்பற்றி யான் வினவ, நீ வாய் திறவாதிருப்பது ஏன்?” எனப் பின்னும் அக்கடலொடு புலந்து கூறுதல்.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 183)

கடலொடு வரவு கேட்டல் -

{Entry: G07__655}

தலைவன் மீண்டு வருதல் பற்றித் தலைவி கடலை வினவுதல். “கடல்மல்லையில் கரையிடத்து மோதும் கடலே! என்னைத் தன் உடலாகவும், தாம் அவ்வுடம்பினை விட்டுப் பிரியாத உயிராகவும் கூறி அன்பு பாராட்டிய என் தலைவர் பொருள் தேடப் பிரிந்தார்; இன்னும் மீண்டு வந்திலர். அவர் பிரிந்து சென்றபோது மீண்டு வரும் நாள் பற்றி நின்னிடம் ஏதேனும் கூறிச்சென்ற துண்டாயின், அதனை எனக்குத் தெரிவிப்பா யாக” என்று தலைவி கடலை வேண்டுதல்.

இது “பொருள்வயின் பிரிதல்” என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அ. பாடல். 759)

கடற்றெய்வம் -

{Entry: G07__656}

வருணன் (சிலப்.7 : 5 பாடல்) (L)

“கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -

{Entry: G07__657}

“விரைவில் திரும்பி விட்டீர்களே!” என்று மகிழ்ந்துரைத்த செவிலிக்கு தலைவன் கூறுதல்.

“மலைகளும் ஆறுகளும் கொடிய காடும் சேய்மையிலன்றி மிக்க அண்மையில் உள்ளன என்று கூறும் வகையில் என்னை இத்துணைக் கடிதின் இங்குக் கொண்டுவந்தவை, தலைவியின் இடைக்கண் உள்ள குழவியும் இவளது நெட்டுயிர்ப்பும் கையால் துடைத்தும் நில்லாமல் பெருகிய இவளது கண்ணீருமே!” என்ற தலைவன் கூற்று, “இவற்றின் நினைவால் பிரிவினை ஆற்றாது விரைவில் மீண்டு வந்தேன்” என்பது கருத்து.

இது ‘பொருள்வயின் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 557)

கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -

{Entry: G07__658}

தலைவி தலைவனோடு இல்லறம் நிகழ்த்தி வரும் மாட்சிமை காண அவ்வில்லத்துச் சென்று கண்டு மீண்ட செவிலி நற்றாய்க்கு அவ்வில்லறச் சிறப்பினை வியந்து கூறுதல்.

“நின்மகள் பிரையிட்ட செறிந்த தயிரைத் தன் காந்தள் மெல் விரலாலே பிசைந்து நெகிழ்வுடையதாக்கி, அவ்விரல்களா லேயே நழுவலுற்ற தன் புடைவையை இறுக உடுத்திக் கொண்டு, சமையல் செய்யும்போது தாளிதப் புகை தன் குவளையுண்கண்களில் வந்து சூழவும் அதனைப் பொருட் படுத்தாது தான் துழாவிப் புளிக்குழம்பு அட்டாள். அவள் அட்ட அடிசிலைக் கணவன் இனிது என்று கூறி உண்ணா நிற்பவே, அவளது ஒளிபடைத்த முகம் நுண்ணிதின் முறுவல் கொண்டு மகிழ்ந்தது. இதுகாண் அம்மனைமாட்சி!” (குறுந். 167) என்றாற் போன்ற செவிலி கூற்று. (தொ. பொ. 53 நச்.)

கடைநாட்கங்குல் -

{Entry: G07__659}

நாள் கடைக்கங்குல்; ஒருநாள் முடிவதற்குரிய இறுதிப் பகுதியாகிய இரவு இருள். இது வைகறையின் இறுதிப் பகுதி யாகும். (சிலப். 10 : 3) (L)

கடைப்பிடி -

{Entry: G07__660}

ஆண்மகனுக்குரிய நாற்பண்புகளுள் ஒன்று; கொண்ட பொருள் மறவாமை. காமம் மிகும்போது ஏனைய மூன்றுடன் இப்பண்பும் புனலோடும்வழிப் புல் சாய்ந்தாற் போலச் சாய்ந்து பின் வெளிப்படும். (இறை. கள. 1 உரை)

கடையர் -

{Entry: G07__661}

உழவராகிய மருதநிலமக்கள். (ந. அ.) (L)

கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__662}

“தோழி! என் உள்ளம் என் தலைவன் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டது. அப்படித் தாமும் போக இயலவில்லையே என்று என் கண்கள் அழுகின்றன. அவற்றை அமைதியுறச் செய்தல் எங்ஙனம் இயலும்?” என்ற தலைவி கூற்று. (குறள் 1170)

கண்டவர் கூறல் -

{Entry: G07__663}

தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரிக்கண் செல்ல, அப்பரத்தையர் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டு ஆரவாரித்த செய்தியைத் தெருவிலே கண்டவர்கள், “இக் காட்சியைத் தலைவி காணின் என்னாகுமோ?” என்று தம்முள் கூறல்.

இது ‘பரத்தையிற்பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 352)

கண்டவர் மகிழ்தல் -

{Entry: G07__664}

உடன்போக்கின்கண் தலைவனும் தலைவியும் வழிவருத்தம் தீர்ந்து காட்டிடை இன்புற்றுச் செல்வதை அவ்வழியே வந்தவர்கள் கண்டு மகிழ்ந்து கூறுதல்.

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 219)

கண்டு கண் சிவத்தல் -

{Entry: G07__665}

பெருந்திணைத் தலைவி தன் தலைவன் பரத்தையர்பால் நின்றும் வந்தமை அறிந்து சினந்து ஊடுதல்.

தலைவன் தலைவியை நெருங்கித் தழுவ வந்தபோது, அவன் மார்பிலும் முகத்திலும் அவன் பரத்தையொடு கூடிவந்தமை காட்டும் அடையாளங்கள் இருத்தலைக் கண்ட தலைவி சினம் கொள்ளுதல். (பு. வெ. மா. 16-11)

கண்டு கை சோர்தல் -

{Entry: G07__666}

தலைவி காமம் மிகுந்து துயருறுதலைக் கண்ட தோழி கையறுதல்.

“தலைவியின் வளைகள் கழன்றன; கண்கள் உறக்கம் நீத்தன. இனி அவள்நிலை யாதாகுமோ?” என்பது போலத் தோழி வருந்துதல்.

இஃது இருபாற் பெருந்திணைக்கண் நிகழ்வதொரு கூற்று. (பு. வெ. மா. 17-5)

கண்டோர் அயிர்த்தல் -

{Entry: G07__667}

உடன்போக்கில் தலைவனும் தலைவியும் இணைந்து செல்வதைக் கண்டவர்கள், இருவரிடையே இருந்த காதற் சிறப்பினைக் கண்டு வியந்து, “இவர்கள் வானுலகத்துக் காதலர்களோ!” என்று ஐயுறுதல்.

“இவர் யாரோ? திருமகள் என்று இவளைத் துணிதற்கு இவள் கையில் செந்தாமரை இல்லை. இவனைத் திருமால் என்று துணிவோமாயின், இவன் மார்பில் மறு இல்லையே” (அம்பிகா.377) என்றாற் போலத் தலைவன்தலைவியரைச் சுரத்திடைக் கண்டோர் ஐயுற்றுக் கூறுதல்.

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டிற்குரிய ‘உடன் போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182; இ. வி. 536 - 15)

கண்டோர் இரக்கம் -

{Entry: G07__668}

தலைவியின் பிரிவால் மிக்க துயருற்றுப் புலம்பும் நற்றாய் செவிலி பாங்கியர் ஆகியோரைக் கண்ட அயலார் தாமும் துயருற்றுக் கூறுதல்.

“தலைவி எங்களை அன்பொடு பார்த்து இன்சொற்கூறி மறைவாக இங்குள்ள பொருள்களையெல்லாம் விடுத்துத் தலைவன் துணையே பெரிது எனச் சென்றுவிட்டாளே’ என்று தோழியர் நொந்தும் கண்ணீர் உகுத்தும் வருந்து கின்றனர். அவள் விடுத்துச் சென்ற பந்தினையும் கழங்கினை யும் கண்டு நற்றாய் வாடுகிறாள்” (தஞ்சை.கோ.339) என்றாற் போலக் கண்டோர் இரங்கிக் கூறுவது.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 187)

கண்டோர் இரங்கல் -

{Entry: G07__669}

பாலையில் தலைவனுடன் வந்த தலைவியைக் கண்டவர்கள் அவளது மென்மைக்கு இரங்கிக் கூறல்.

“இப்பெண் மிக இளையளாக உள்ளாள். தன் காதற்கணவ னது நட்பைக் காதலித்து நடத்தற்கரிய இக்கொடிய பாலையில் நடந்து வரும் இப்பெண்ணைப் பெற்ற தாய் எவ்வாறு இவளைப் பிரிந்து இன்னும் உயிரோடு இருக்கி றாளோ?” (அம்பிகா. 380) என்றாற்போலக் கண்டோர் இரங்கிக் கூறுதல்.

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 536. உரை)

கண்டோர் காதலின் விலக்கல் -

{Entry: G07__670}

இடைச்சுரத்தே உடன்போக்கின்கண் இணைந்து சென்ற தலைவன் தலைவியரைக் கண்டவர்கள், அவ்விருவரிடமும் அன்பு கொண்டு, இரவு வரும் நேரமாதலின் மேலும் வழி நடக்க வேண்டா என்றும், அருகேயுள்ள தம்பாடியில் தங்கித் தாம் அளிக்கும் மான்தசையும் பாலும் சுவைத்து இரவு தங்கியிருந்து விடியற்காலை செல்லலாம் என்றும் இன்னோ ரன்ன கூறித் தடுத்தல். (தஞ்சை. கோ. 320)

இது வரைவியலுள் களவெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

கண்டோர் தமரைத் தெருட்டுதல் -

{Entry: G07__671}

உடன்போக்குச் சென்ற தலைவன் தலைவியரைப் பின் தொடர்ந்து சினத்துடன் சென்ற தலைவியின் சுற்றத்தாரை வழியில் கண்டோர் சினம் தணித்துத் தெளிவுறுத்தல்.

“இத்தலைவன் குலப்பெருமையும் அழகும் நற்குணங்களும் கொண்டவன்; நும் பெண்ணான தலைவியும் சிறந்த கற்பொழுக்கத்தில் தவறாது தலைநின்று ஒழுகுகின்றவள். நீங்களும் வெற்றியும் வில்லாண்மையும் உடையவர்தாம். இவ்வாறிருப்ப, யாம் யாது புகல்வோம்? (ஆதலின், போர் செய்து தலைவியை மீட்கக் கருதுதல் தகாது)” என்ற கூற்று.

இஃது ‘உடன்போக்கு இடையீடு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 424)

கண்டோர் தெருட்டல் -

{Entry: G07__672}

உடன்போகிய தலைவனையும் தலைவியையும் பின் தேடிச் சென்ற செவிலிக்கு இடைச்சுரத்துக் கண்டோர் உரைத்து உள்ளத்தைத் தெளிவித்து மீண்டு செல்லுமாறு கூறுதல். (பாலைநடையியல்) (வீ. சோ. 93 உரைமேற்.)

கண்டோர் பதி அணிமை சாற்றல் -

{Entry: G07__673}

உடன்போக்கில் செல்லும் தலைவனையும் தலைவியையும் கண்டமக்கள், தலைவனது ஊர் மிக்க அண்மையிலேயே உள்ளது என்றும். கவலையின்றிப் போகலாம் என்றும் கூறுதல்.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டில், ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

‘நகர் அணிமை கூறல்’ என்றும் கூறுப. (கோவை. 221)

கண்டோர் மகிழ்தல் -

{Entry: G07__674}

தலைவன் தலைவி இருவரையும் சுரத்திடைக் கண்டோர் அக்காட்சி குறித்து மகிழ்தல்.

“தலைவற்கு முன்னே நடந்து செல்ல இப்பெண் நாணுகிறாள். இவளது நடையழகைத் தான் கண்டு மகிழ, இச்செல்வன் இவள் பின்னே நடத்தலையே விரும்புகிறான். இறுகப் பொதிந்த அன்புடன் இப்பாலை நிலத்தே இருவரும் நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளனர்” (அம்பிகா.378) என்றாற்போலக் கண்டோர் மகிழ்ந்து கூறல்.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 536 உரை)

கண்டோர் மொழிதல் கண்டது -

{Entry: G07__675}

இடைச்சுரத்தில் கண்டோர் தலைவி உடன்போக்கின்கண் நடைமெலிந்து அசைந்ததனைக் கண்டபோதும், அவளிடைச் ‘சேர்ந்தனை செல்’ என்னாது, தலைவனொடு கூடி இருவராக இருக்கும்வழியே தலைவனிடம் கூற்று நிகழ்த்துவார் என்பது ‘கண்டது’ என்பதனால் கொள்ளப்படும். (தொ. செய். 193 நச்.)

கண்ணயந்துரைத்தல் -

{Entry: G07__676}

தான் விரும்பும் தலைவி இன்னாள் என்பதனைத் தோழிக்கு அறிவுறுத்த விழைந்த தலைவன், அத்தலைவியின் உறுப்பு நலன்களை எல்லாம் கூறியதோடு அமையாது, தனக்கு அன்று தோழியைக் காட்டிய தலைவியின் கண்ணழகினைப் பின்னும் நயந்து (விரும்பிப்) புகழ்ந்துரைத்தல்.

இதனைப் பிறர் ‘இறையோன் இறைவிதன்மை .இயம்பல்’ என்ப. (ந. அ. 144; இ. வி. 509-5)

இது சேட்படை என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 109)

கண்ணே அலமரல் -

{Entry: G07__677}

தலைவன் தலைவியை முதற்கண் எதிர்ப்படும்போது இதற்கு முன் கண்டறியாத ஆடவன் வடிவினைத் தான் தனித்து நின்ற நிலையில் தன் அருகே கண்ட அச்சத்தால், அவள் கண்க ளிடையே பிறந்த தடுமாற்றம்.

இக்கண்கள் தடுமாறும் செயல், “இவள் தேவருலகத்தவள் அல்லள், மானுடமகளே” என்று தலைவன் துணிதற்கு உதவும் கருவிகளுள் ஒன்று. (தொ. பொ. 95 நச்.)

கண்படை பெறாது கங்குல் நோதல் -

{Entry: G07__678}

தலைவன் தலைவியைப் பிரிந்து உறக்கம் கொள்ளாமல் இரவில் துயருறுதல். இது களவியலுள், இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர், ‘பிரிவுழிக் கலங்கல்’ என்னும் தொகுதிக் கண்ணது ஒரு கூற்று. (ந. அ. 133)

கண் புதைக்க வருந்தல் -

{Entry: G07__679}

பாங்கற்கூட்டத்துக்கண் தலைவன் தலைவியைப் பலவாறு புகழ, அவள் அப்புகழ்ச்சிக்கு நாணித் தன் கண்களைப் பொத்திக்கொண்டு ஒரு கொடியைச் சார்ந்து நிற்க, அவன் அவளிடம், “என்னை வருத்துவன நின்கண்கள் மாத்திரமே அல்ல; நின்மேனி முழுதுமே என்னை வருத்துகின்றது!” என்றாற்போலக் கூறல்.

இதனை இயற்கைப் புணர்ச்சிக்கண் ‘இடையூறுகிளத்தல்’ என்னும் கிளவியாகவும் கொள்ப. (ந. அ. 127; இ.வி. 495)

இது ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 43)

கண்புதை நாணம் மீதூரல் -

{Entry: G07__680}

உடன்போக்கில் தலைவன் தன்னைப் புகழ்தலைக் கேட்ட தலைவி நாணம் மிகுந்து தன் கைகளால் கண்களைப் பொத்திக் கொள்ளுதல்.

“இடைச்சுரத்தே குராமலரும் மராவும் சேர்த்து யானே தொடுத்து நின் கூந்தலில் சூட்டி அணி செய்கிறேன். என் உயிர் அனையாய்! இத்தவப்பேறு வேறு யாருக்கு உண்டு?” என்று தலைவன் கூறியதைக் கேட்டு நாண் மிகுந்த தலைவி தன்கண்களைப் புதைத்துக் கொண்டாள். (இது கவிக்கூற்று)

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 376)

கண் விதுப்பழிதல் -

{Entry: G07__681}

தலைவன் பிரிந்துசென்றவழித் தலைவியினுடைய கண்கள் தலைவனைக் காண்பதற்கு விரைவதனால் வருத்துதல்.

விதுப்பு - விரைவு (குறள். அதி. 118 தோற்று. பரிமே.)

கணியென உரைத்தல் -

{Entry: G07__682}

வேங்கை பூத்தமை கூறுதல்.

களவுக் காலத்துப் பகற்குறிக்கண் தலைவனைக் கூடி மகிழ்ந்த தலைமகளிடம், “கணி என்ற பெயரையுடைய வேங்கை, தான் பூக்கும் காலம் தினைமுற்றும் காலமாகவே, தான் பூத்தலைச் செய்து தினை முற்றியதைத் தெரிவித்துத் தினைக்கதிர்களைக் கொய்யச்செய்து நம்தினைக்காவலைக் கெடுக்கச் சோதிடம் பார்த்து நாள்கூறுவாரைப் போலச் செய்துவிட்டது!” என்று இனிப்பகற்குறிக்கு வாய்ப்பில்லாச் செய்தியைத் தோழி கூறுதல். (கோவை. 138)

இது ’தோழியிற்கூட்டப் பகற்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (க. கா. பக். 86.)

கந்தருவ மணம் -

{Entry: G07__683}

தலைவனும் தலைவியும் தாமே எதிர்பட்டுக் கூடும் கூட்டம். (L)

கந்தருவ மார்க்கம் ஐந்து -

{Entry: G07__684}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணை களையும் தமக்கு அடிப்படையாகக் கொண்டு அவற்றொடு பொருந்தி வரும் யாழோர் கூட்டத்தை ஒத்துக் களவில் தொடங்கிக் கரணமொடு புணர்ந்து கற்பொழுக்கம் நடத்து தற்குரிய ஐவகை நிலத்துத் திருமணங்கள்; புலனெறி வழக்கில் பாலைக்குத் தனிநிலம் இன்றேனும், உலகியலில் பாலை நிலமும் அங்கு வாழ்வார்க்குத் திருமணமும் உள ஆகலின், பாலை கொள்ளப்பட்டது. படவே, ஐவகை நிலத்து வாழ்வார் திருமணமும் பற்றிச் செய்யுள் இயற்றப்படும். (தொ. பொ. 106 நச்)

நிலம் என்பது இடம். ஒத்த காமமாகிக் கருப்பொருளொடும் புணர்ந்த கந்தருவநெறி இடவகையால் ஐந்துவகைப்படும். அவையாவன களவும் உடன்போக்கும் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் காதற்பரத்தையும் எனச்சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம். (104 இள.)

கம்பை மின்னாள் வாழ்த்தல் -

{Entry: G07__685}

வலம்புரி கிழத்தி வாழ்த்தல் (ந. அ. 170; சாமி. 107)

‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

{Entry: G07__686}

யானைக்கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பம் தரும் நெய்யணியைக் காணவிரும்பிய தலைவனை நெஞ்சு புண்படப் பேசித் தன்னைக் கூடாது நீக்கிய இளிவந்த நிலைக்கண் தலைவி கூறுதல்.

இது தலைவி புதல்வற் பயந்த காலத்துத் தலைவன்பிரிவு பற்றிக் கூறியது. (கயந்தலை - மெல்லிய தலையையுடைய புதல்வன்)

“கரும்பினை நட்ட பாத்தியில் தாமே - தோன்றித் தழைத்த ஆம்பற்பூக்கள் வண்டுகளது பசியினைப் போக்கும் பெரும் புனல் ஊர! புதல்வனை ஈன்ற எம்மேனியைத் தழுவற்க. தழுவின், அது பால்படுதல் முதலியவற்றால் நின்மார்பின் எழிலைச் சிதைப்பது ஆகும்.” (ஐங். 65) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -

{Entry: G07__687}

ஆசானைக் கொண்டு திருமணச்சடங்கினை முடித்தபின், இயற்கைப் புணர்ச்சி முதலியவற்றின்பின் களவொழுக்கம் இடையீடுபட்டதால் வேட்கை தணியாது திருமணம் முடியும் வரை இருவரிடமும் கட்டுண்ட நெஞ்சு கட்டு விடப்படுதல்.

(தொ. பொ. 144. இள.)

திருமணச்சடங்கினை முடித்து முதல் மூன்று இரவு கூட்டமின்றி நான்காம் நாள் பகலெல்லை முடிந்த காலத்து, மூன்று நாள் கூட்டம் இன்மையால் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்துக்கண் தலைவன் கூறுதல். (146 நச்.)

“இந்நிலவுலகமும் பெறுதற்கரிய தேவருலகமும் ஆகிய இரண்டும், குவளைப் பூப்போன்ற மையுண்ட கண்களையும் பொன்போன்ற மேனியையும் மாண்வரி அல்குலையுமுடைய இக்குறுமகளுடைய கூட்டத்தை மேவும் இந்நாளோடு சீர் ஒவ்வா!” (குறுந். 101) என நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்- கண் தலைவன் கூற்று நிகழ்ந்தவாறு.

கரணம் (1) -

{Entry: G07__688}

கரணம் என்பது திருமணத்தின்போது நிகழும் வேள்விச் சடங்காம். இப்பெயர், தீயை முன்னிட்டுச் செய்யப்படுவதால் வடமொழிப் பெயராய் அமைந்த ‘அக்நௌ கரணம்’ என்பதன் தொகுத்தலாகும். இக்கரணத்தின்போது தலைவி யின் பெற்றோராவது உறவினராவது தலைவியைத் தலைவற் குக் கொடுப்ப அவன் ஏற்றுக்கொள்வான். தலைவியின் உறவினர் தலைவன் அவளை மணத்தற்கு இசையாதவழித் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று வேற்றூரில் கரணத்தை முடித்து அவளை மணப்பான். கரணம் நால்வகை வருணத்தார்க்கும் உண்டு. இது நெடுங்காலமாக நிகழ்ந்து வருவது. தொடக்கத்தில் களவு நிகழ்ந்த பின் தலைவனும் தலைவியும் தாமாகவே கற்பு வாழ்க்கையைத் தொடங்கி நடத்தி வந்தனர் எனவும், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்க் கரணம் வற்புறுத்தப்பட்டது எனவும் கூறுப.

பொய் - ஒருவன் ஒருத்தியொடு களவொழுக்கம் நிகழ்த்திப் பின் இல்லை என்பது; வழு - ஒருத்தியொடு களவின்கண் ஒழுகிக் களவு வெளிப்பட்டபின் சிலகாலம் இல்லறம் நடத்திய ஒருவன் அவளைக் கைவிட்டு விடுதல் போல்வன. (தொ. பொ. 143 - 145 நச்.)

கரணமாவது -

{Entry: G07__689}

கரணமாவது ஒத்த கிழவனும் கிழத்தியும் இல்லறக் கிழமை பூண்டொழுகும் தகவும் உரிமையும் பெற, மந்திரங்களொடு முதுமொழிகளையும் கூறியும் கூறுவித்தும், பிற மங்கலவினை களைச் செய்தும் செய்வித்தும் தலைமக்களைக் கூட்டுவிக்கும் விதியாம். அவை நூல்நெறியோடு உலகியல் வழக்கினையும் தேர்ந்துணர்ந்த ஐயர்களான் வகுத்தமைக்கப் பெற்றவை. வதுவைச் சடங்கு என்பார் இளம்பூரணர். வேள்விச்சடங்கு என்பர் நச்சினார்க்கினியர். (தொ. கற். 1 ச. பால)

கரந்துறை கிளவி -

{Entry: G07__690}

உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி.

கரந்து உறை கிளவியால் தலைவன் தோழியை இரந்து குறையுறுவான். (கோவை. கொளு. 50)

கரவு நாட்டம் -

{Entry: G07__691}

மறைந்திருந்த செய்தியை ஆய்ந்து அறிதல்

தோழியை மதியுடம்படுக்க நினைந்த தலைவன் அவள் தனித் திருந்தபோது ஊர் முதலிய வினவியதோடு, அவள் தலைவி யொடு சேர்ந்திருந்த பொழுது தழையும் கண்ணியும் ஏந்தி வந்து ஊர் பெயர் கெடுதியோடு ஒழிந்தனவும் வினவியவழி, தலைவி அவன்மீது பார்வை செலுத்துதலையும் தலைவன் தன்னொடு பேசியவாறே தலைவியை அடிக்கடி நோக்குதலை யும் கண்ட தோழி, “இத்தலைவனுக்கும் நம் தலைவிக்கும் இன்பமும் துன்பமும் ஒன்றாகத் தோன்றுமாறு, காக்கையின் இரு கண்ணுக்கும் ஒரு கண்மணியே அமைந்திருப்பது போல, இருவர் உடலின்கண்ணும் ஓருயிரே உள்ளது” (கோவை. 71) என்று அவர்கண் மறைந்திருந்த செய்தியை நாடி உணர்தல்.

இது ‘தோழியிற் கூட்டப் பகற்குறி’ என்ற தொகுதியைச் சார்ந்த கூற்றுக்களுள் ஒன்று. (க. கா. பக். 54)

கருத்தறிந் தழுத கண்ணீர் துடைத்தல் -

{Entry: G07__692}

தலைவன் கற்புக்காலத்தில் பொருள் தேடப் பிரியலாம் என்று எண்ணங்கொண்ட தன் புறப்பாட்டிற்குச் சின்னாள் முதற்கொண்டு தலைவியிடம் தண்ணளியை மிகுதியாகச் செய்துவர, அத்தண்ணளியை உட்கொண்டு தலைவன் தன்னைப் பிரியப்போகின்றமையைத் தலைவி உணர்ந்து கண்ணீர் விடத் தொடங்கத் தலைவன் அக்கண்ணீரைத் துடைத்து அவளுக்கு ஆறுதல் அளித்தது.

எ-டு. “திருமாலது திருவரங்கம் போன்ற அழகிய முகத்தாய்! நின் கண் ஆகிய வேல் இமையாகிய உறையை நீக்கி வெளிப்பட்டுத் துன்பத்தைச் செய்யும் பூசலின் மேலும் யான் மிக வருந்தும்படி கலுழ்வதற்குக் காரணம் என்?” என்னும் தலைவன் கூற்று. (மா. அ. பாடல். 248)

கருத்தறிவித்தல் -

{Entry: G07__693}

மதியுடம்படுத்தற்கண் தலைவன் தலைவியும் தோழியும் கூடியிருந்த இடத்தை அடுத்து வேழம் கடமான் பதி வழி இடை முதலிய வினவியவழி, அவர்கள் மறுமொழி ஏதும் கொடாது இருந்தது கண்டு , அங்ஙனம் வினவுதலை விடுத் துத் தான் கையில் வைத்திருந்த தழையாடையை அவர்கள் விரும்பினால் தான் மகிழ்வொடு கொடுப்பதாகக் கூறித் தன் கருத்தினை அறிவித்தல்.

இதனை ‘உரைத்தது உரையாது கருத்தறிவித்தல்’ என்ப. (இ. வி. 507)

இது திருக்கோவையாருள்’ மதியுடம் படுத்தல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 58)

கருத்துப்பொருள் -

{Entry: G07__694}

காட்சிப்பொருளாகாது, மனத்தாற் கருதப்பட்ட பொருள்.

(தொ. பொ. 1 நச். உரை) (L)

கருத்துரை -

{Entry: G07__695}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று (வீ. சோ. 90)

கருத்து என்பது அறிதல், அறியாமை, ஐயுறல் என மூவகைப் படும். அவைதாம் மீண்டும், அறிந்து அறியாமை, அறிந்தவை ஐயுறல், அறியாது அறிதல், ஐயுற்றிலாமை என நான்காகப் பகுத்துக் கொள்ளப்படும். (வீ. சோ. 96 உரைமேற்.)

கருப்பொருள் -

{Entry: G07__696}

முதற்பொருளாகிய நிலத்தையும் காலத்தையும் ஒட்டி முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் ஐவகை நிலத்தும் தோன்றும் பொருள்கள்.

பரம்பொருளை இன்ன பெயரால் இன்ன வடிவில் இவ்வாறு வழிபடல் வேண்டும் என்ற எண்ணம் அவ்வந் நிலத்தையும் காலத்தையும் ஒட்டி அவ்வந் நிலத்து வாழ்வார் உள்ளத்தே தோன்றுதலின், தெய்வமும் கருப்பொருள்களுள் ஒன்றா யிற்று. அவ்வந் நிலத்துக் கருப்பொருள் பிறநிலத்தும் மயங்கி வருதல் கூடும்; ஆயின் தெய்வம் அவ்வந் நிலத்திற்கே உரியது. எடுத்துக்காட்டாக, முல்லை நிலத்துத் தெய்வமாகிய மாயோன் குறிஞ்சி முதலிய பிறநிலத்துத் தெய்வமாகச் செய்யுள் செய்தல் கூடாது. உள்ளுறை உவமம் கூறும்போதும் தெய்வம் நீங்க லான ஏனைய கருப்பொருள்களைக் கொண்டே செய்தல் வேண்டும். (தொ. பொ. 5, 47 நச்.)

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பூ, நீர், ஊர், திணைதொறும் மரீஇய பெயர், திணை நிலைப்பெயர் என்பனவும் கருப்பொருள்களாம். (18, 19, 20. நச்)

அடியார்க்கு நல்லாரும் நம்பியகப்பொருள் ஆசிரியரும் முறையே கொடியையும் பண்ணையும் கருப்பொருளாகக் கொண்டனர். (சிலப்.. பதிக உரை. ந. அ. 19)

கருப்பொருள் (2) -

{Entry: G07__697}

குறிஞ்சி முதலிய ஐந்திணைகளின் முதற்பொருளாகிய நிலம் பொழுது என்ற இவற்றைச் சார்ந்து அந்நிலத்துத் தோன்றும் தெய்வம், உயர் மக்கள், இழிமக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பதினான்கும் அவ்வந் நிலக் கருப்பொருள் எனப்படும். (ந. அ. 19)

கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -

{Entry: G07__698}

அஃறிணைப் பொருள்களுள் நிலமும் பொழுதும் அல்லாதன எல்லாம் கருப்பொருளாக வகுக்கப்பெற்றமையால் தெய்வம் கருப்பொருளாக அமைவதாயிற்று. தத்துவங்களின் உருவக மாக அமைத்துக்கொண்ட தெய்வங்கள் இருவகைத் திணை களுள் அடங்காமையின் ஆசிரியர் அவற்றை ‘உயர் திணைக் கண் சார்த்திக் கூறினார். அம்முறையான் தெய்வத்திற்கு மக்களின் ஒழுகலாறுகளை ஏற்றிக் கூறலின் தெய்வம் உள்ளுறை கோடற்கு நிலம் ஆகாதாயிற்று.

தெய்வம் சுட்டிய பெயர்கள் “உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசையாத விடத்தே, அஃறிணையாய் அஃறிணை முடிபே கொள்ளும்” என்றார் ஆதலின், அவ்வழி அவை அஃறிணைப் பொருளாய்க் கருப்பொருளுள் அடங்கும்; உள்ளுறை கூறற்கு நிலனாக அமையும். ஆதலின் அதனை விலக்க வேண்டிற்று. (தொ. அகத். 49 ச. பால)

கருப்பொருள் மயங்குதல் -

{Entry: G07__699}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலத்துக் கருப்பொருள்களாகிய தெய்வம் நீங்கலான ஏனையவை தத்தமக்கு உரியவாகக் கூறப்பட்ட நிலத்தொடும் காலத்தொடும் நடவாமல் பிறநிலத்தொடும் காலத்தொடும் மயங்கிவந்தால் அவை வந்த நிலத்திற்கு உரிய கருப்பொருள்க ளாகவே கொள்ளப்படும்.

மருதத்துப்பூக் குறிஞ்சிக்கண் வந்தால், குறிஞ்சி நிலப்பூவேயாம். (கலி.52)

மருதத்துப்பூப் பாலைக்கண் வந்தால், பாலைநிலப் பூவேயாம். (கலி.3)

குறிஞ்சிக்குரிய மயில் பாலைக்கண் வந்தால், பாலைநிலப் பறவையேயாம். (கலி.27) (தொ. பொ.19 நச்)

கரும்பணி -

{Entry: G07__700}

பெண்பாலர்தம் தோள்மார்புகளில் சந்தனக்குழம்பு முதலிய வற்றால் கரும்பின் வடிவாக எழுதப்படும் கோலம்;

அன்றுதான் ஈர்த்தகரும்(பு) அணிவாட’ (கலி, 131-29)

பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ (கலி. 143-32)

பெண்பாலார் தோள்மார்புகளில் தோழியரே அன்றி, அவரவர்க்குரிய ஆடவர் இவ்வொப்பனை செய்தலே சிறப்பு.

கரைந்ததற்கு இரங்கல் -

{Entry: G07__701}

தலைவன் வரைவு வேண்டி விடத் தலைவிதமர் வரைவு மறுத்தவழி, அக்கூற்றினை அறிந்து தலைவி வருத்துதல்

(குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92. உரைமேற்.)

கல்வி நலம் கூறல் -

{Entry: G07__702}

கற்புக்காலத்தில் தலைவன் ஓதற்குப் பிரியக் கருதிப் பாங்கி தலைவி இவர்களிடம், கற்றவர்களின் கல்விச்சிறப்பினை எடுத்துக் கூறுதல்.

இதனைக் ‘கல்விப் பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்’ என்றும் கூறுப. (இ. வி. 558)

இஃது ஓதற்பிரிவு என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 308)

கலக்கங் கண்டுரைத்தல் -

{Entry: G07__703}

கற்புக்காலத்தில் தலைவன் ஓதற்குப் பிரியத் திட்டமிட்டு அச்செய்தியைத் தலைவிக்குக் கூற, அது கேட்ட தலைவி உற்ற கலக்கத்தைக் கண்ட தோழி, “தலைவர் கல்வி கற்றலை விரும்பினார் என்ற சொல்லே இவள்செவியில் காய்ச்சிய வேல் போலச் சென்றடைந்து துயரம் உறுவிக்கின்றதே! இனி மற்ற பிரிவுகளை இவள் எங்ஙனம் ஆற்றுவாள்?” என்று தன்னுள்ளே கூறியது.

இஃது ‘ஓதற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 310)

கலக்க முற்று நிற்றல் -

{Entry: G07__704}

தலைவன் களவுக்காலத்தே வரைவிடை வைத்துப் பொருள். வயின் பிரிந்தானாக, அப்பிரிவால் தலைவியின் உள்ளமும் உடலும் மெலியத் தலைவியது மெலிவின் உண்மைக் காரணத்தை உள்ளவாறு அறியாத செவிலி அதனை அறியக் குறிசொல்லும் கட்டுவித்தியை அழைத்துக் கட்டு வைப்பிக் கவே, ” இக்கட்டுவித்தி நம் களவொழுக்கம் முழுதையும் வெளிப்படுத்தி நம்மை வருந்தச்செய்து அயலார் அன்று சொல்லாத பழியையும் வெளிப்படச் சொல்லி எம் குடிக்கு மாசு கற்பிப்பாளேல், யான் யாது செய்வல்?” என்று தலைவி மனம் கலங்கி நிற்றல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 284)

கலங்கி மொழிதல் (2) -

{Entry: G07__705}

பாங்கியிற் கூட்டத்தில் தலைவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியிடம் தலைவன் படும் துயரநிலைக்குத் தான் கலங்கிய தன்மையை விளக்கிக் குறை நயக்குமாறு வேண்டல். [ இது ‘தோழி மறுத்தற்கு அருமை மாட்டல்’ எனவும் (ந.அ. 148) கூறப்படும் ] (குறிஞ்சி - நடையியல்.)(வீ.சோ. 92 உரை மேற்.)

கலந்த பொழுதும் காட்சியும் -

{Entry: G07__706}

கலந்த பொழுது - தலைவன் தலைவியைக் கண்ணுற்றவழி அவள் குறிப்பினை அறியும் வரை தலைவன் உள்ளத்தில் அவளைப் பற்றிய எண்ணம் இருக்கும் காலம்.

காட்சி - தலைவியைக் காண்டல்.

இவை கைக்கிளைக்கண் நிகழும் உரிப்பொருள்.

(தொ. பொ. 18 இள.)

கலந்த பொழுது - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலம்; காட்சி தலைவி தன்னை விரும்புகின்றாளோ என்று அவள் குறிப்பினை அவள்கண்களால் அறிதல். இவையிரண்டும் வேனிற்காலத்து நிகழ்வன. வேனிலை அடுத்த கார்காலத்து மழை தொடங்குதலான் தலைவி பொழிலில் விளையாட வருதற்கு வாய்ப்பு இல்லை; ஆதலின் அவளை எதிர்ப்பட்டுக் கூடுதற்கு வாய்ப்பு இல்லையாம். ஆகவே, இயற்கைப் புணர்ச்சி வேனிற் காலத்து நிகழும் என்றார். (16. நச்.)

கலந்த பொழுது - தலைவன் தலைவி இருவரின் முதல் சந்திப்பு. காட்சி - இருவரும் கண்களால் உள்ளக்குறிப்பை அறிவித்துக் கொள்ளுதல். இவ்விரண்டும் எந்த ஒரு நிலத்திற்கும் உரிமை யாகாது எல்லா நிலங்களுக்கும் பொதுவான உரிப்பொருள் களாம். (அகத். 16 பாரதி.)

கலந்துடன் வருவோர்க் கண்டு வினாதல் -

{Entry: G07__707}

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு சுரத்திடைச் சென்ற செவிலி, அன்புடன் ஒன்றியிணைந்து வரும் கன்னியையும் காளையையும் கண்டு வினவுதல்.

“காதலர்காள்! நும்மைப் போலவே அன்பினால் ஒன்றிய பேதை ஒருத்தியும் காளையொருவனும் இவ்வழியே செல் வதைக் கண்டீரோ?” (தஞ்சை. கோ. 346) என்றாற்போன்ற செவிலி வினா.

‘புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்’ என்னும் திருக்கோவையார் (244)

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -

{Entry: G07__708}

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு சுரத்திடைச் சென்ற செவிலி, அங்கு ஒன்றிய அன்புடன் நடந்து வரும் காதலன் காதலி ஆகிய இருவரையும் வினவிய போது, அன்னார் செவிலிக்கு ஆறுதல் கூறுதல்.

அவர் இருவரும் கூறுவது ஒரு சிறப்புடையது. ஆடவன் தான் தலைவனைக் கண்டதனையும், அவள் தான் தலைவியைக் கண்டதனையும் தனித்தனியே கூறுவர்; அதன் பின்னர் “நின் மகளும் அவள் காதலனும் இப்பாலையை நீந்தி நலமே தம் ஊர் எல்லையை எய்தியிருப்பர். இனிச் சென்று அவர்களைக் காண்டல் இயலாது” (கோவை. 247) என்றாற்போன்று ஆறுதலும் கூறுவர். (ந. அ. 188)

கலந்துழி மகிழ்தல் -

{Entry: G07__709}

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அந்நாள் தலைவியொடு கூடி இன்புற்ற பின் தலைவன் தன் மனத்துள் மகிழ்ந்து கூறிக் கொள்ளுதல்.

‘கலவி உரைத்தல்’ என்னும் திருக்கோவையார். (8)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதியது ஒரு பகுதி யாகிய தெய்வப் புணர்ச்சிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 125)

கலப்பு -

{Entry: G07__710}

காமம் சான்ற தலைவன்தலைவியரின் மெய்யுறு புணர்ச்சி.

‘கந்திருவர் கண்ட கலப்பு’ தொ.பொ. 92 நச். உரை. மேற்.

என்புழிக் ‘கலப்பு’ இப்பொருட்டாயிற்று.

கலவி இன்பம் கூறல் -

{Entry: G07__711}

திருமணம் நிகழ்ந்தபின் தலைவி இல்லறம் நிகழ்த்தும் தலைவன்மனைக்குச் சென்று மீண்ட செவிலி நற்றாயிடம், “தலைவன் தலைவி என்னும் இருவர்காதலும் இன்ப வெள்ளத்திடை அழுந்தப் புகுகின்றதோர் உயிர் ஓர் உடம்பால் துய்த்தல் ஆராமையால் இரண்டு உடம்பு கொண்டு அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோடு ஒக்கும்; அவ்வின்பவெள்ளம் ஒரு காலத்தும் வற்றுவதும் முற்றுவதும் செய்யாது” என்று கூறுதல்.

இது ‘மணம் சிறப்புரைத்தல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 307)

கலவி உரைத்தல் -

{Entry: G07__712}

இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியைக் கூடி இன்புற்ற செய்தியைக் கூறல்.

இது ‘கலந்துழி மகிழ்தல்’ எனவும்படும் (ந. அ. 125)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூ ற்று. (கோவை. 8)

கலவி கருதிப் புலத்தல் (1) -

{Entry: G07__713}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் புலவி தீர்ந்து இன்புறக் கூடி முயங்கிய தலைவி, தலைவன் தனக்குச் செய்த தண்ணளியை நினைத்து, “இவ்வாறு தலைவன் பரத்தையருக் கும் அருளுவானே!” என்று கருதிப் பொருமி அழுது பின்னும் அவனொடு புலவி கொள்ளுதல்.

இது திருக்கோவையாருள் ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; கவிக் கூற்றாக நிகழ்வது. (கோவை. 366)

கலவி கருதிப் புலத்தல் (2) -

{Entry: G07__714}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தன் செயலால் ஊடி நின்ற தலைவியின் ஊடலைத் தீர்க்க அவள் நுதலையும் தோளையும் வருடிக் கருணை செய்து நிற்பத் தலைவி, ‘ஐய! இத்தகைய நினது பாராட்டுதலை யாங்கள் அக்காலத்து வேண்டி நின்றது உண்மையே. இன்று நீ எம் இல்லிற்குக் கருணை கூர்ந்து வந்த இச்செயலொன்றே அமையும்; வேறு கருணை ஒன்றும் எமக்குச் செய்தல் வேண்டா” என்று தலைவனது கலவி தனக்கு மாத்திரமன்றிப் பிறர்க்கும் கிட்டிய செய்தி கண்டு வெகுண்டு கூறியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை . 392)

கலவியிடத்து ஊடல் -

{Entry: G07__715}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், வாயில் பலவும் மறுக்கப்பட, இறுதியில் புதல்வனையே வாயிலாகப் பெற்றுத் தலைவியின் புலவியைப் போக்கி அவளொடு பள்ளியிடத் தானாக, தன்னைக் கூடுதலை விரும்பிய அவனைத் தலைவி வெகுள, அது கண்ட அவன் அவள் சீறடிகளைத் தன்முடிமேல் சூட, அவனுடைய வஞ்சகக் செயல்களைக் கண்டு அவள் கண்ணீர் உகுத்தாள். இச்செயலைக் கண்ட அகம்புகு வாயிலர் தமக்குள் இது பற்றி உரையாடிக்கொண்ட துறை இது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 397)

கலவியின் மகிழ்தல் -

{Entry: G07__716}

தலைவன் தலைவியொடு கூடி இன்புறல்.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண் நிகழும் கூற்று. களவிற் புணர்ச்சி யாவற்றினும் இச்செய்தி இடம் பெறும். (ந. அ. 137)

கலன் கண்டு களித்தல் -

{Entry: G07__717}

தம்மால் பிரியப்பட்டார் நினைவாகவே வருந்தியிருக்கும் போது அவர் அணிந்த அணிகலன்களுள் யாதானும் ஒன்று தமக்கு வழங்கப்படவே, அணிகலனைக் கண்ட அளவிலேயே தம்மால் பிரியப்பட்டவரை மீண்டும் கண்டு மகிழ்வது போல்வதொரு மகிழ்ச்சியை எய்துதல் என்னும் பாடாணைச் சார்ந்த பொதுவியல் துறை.

எ-டு : இராகவன் கொடுத்த கணையாழியைச் சுமந்து அனுமன் கடலைக்கடந்து சீதையை இலங்கையில் கண்டு அக்கணையாழியை அவளிடம் சேர்ப்பித்த அளவில் அவளுக்குத் தன் நெஞ்சினைப் போல் உயிரும் தளிர்த்தது என்றல் போல்வன. (மா. அ.பாடல். 429)

கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தல்

{Entry: G07__718}

தோழி வருந்திய தலைவியின் கண்ணீரைத் துடைத்தல்.

களவுக் காலத்தில் பகற்குறி இரவுக்குறி இவற்றின் இடையீடு களால் தலைவனைக் காணும் பொழுதினும் காணாப் பொழுது மிகுதலால், தலைவி ஆற்றாமை மிக்கு வருந்திய வழித் தோழி,

“பைந்தொடி! நின் கத்தூரி மணத்திற்கு ஆசைப்பட்டு மலைத் தெய்வ மொன்று நின்னைத் தீண்டிவிட்டதா? தாய் நீ தினைக் காவலுக்குப் போதல் வேண்டா என்று கூறிவிட்டாளா? நீ கண்ணீர் வடிப்பதன் காரணம் என்ன?” (திருப்பதிக். 345) என்று தலைவியை வினவுதல்.

இஃது ‘அறத்தொடு நிலை’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அகப். 72)

கவர்பொருள் நாட்டம் -

{Entry: G07__719}

தலைவிக்குத் தலைவனொடு கூட்டமுண்மையைத் தோழி தான் பேசும் பேச்சிடைப் பல கருத்துக்களைப் புதைபொரு ளாக வைத்துப் பேசி ஆராய்தல். அவையாவன :

“பிறைதொழுக” என்றலும், “அம்பு பட்டதனால் புண் ணொடு வந்த யானையைக் கண்டேன்” என்றலும், “தலைவன் ஒருவன் தன் பெருமைக்கு ஏலாத சிறு சொற்களை என்னிடம் கூறி ஏதோ குறை வேண்டி நிற்கிறான்; அவனை நீயும் காண்டல் வேண்டும்” என்றலும், “அத்தலைவன் என்னை எதிர்பாரா வகையில் தழுவிக்கொண்டு தன் விருப்பத்தை வெளியிடவும், யான் மறுத்து நின்றேன்” என்றலும், இவை போல்வன பிறவும் ஆகிய செய்திகளை மெய்யும் பொய்யும் கலந்து கூறுவன ‘பல்வேறு கவர்பொருள்’ ஆம்.

தலைவிக்குக் குற்றேவல் செய்யும் நிலையளாகிய தோழி தலைவியிடம் நேராக வினவி அவள் தலைவனொடு கொண் டுள்ள தொடர்பினைப் பற்றி அறிதல் இயலாமையின், தன் அறிவைப் பயன்படுத்தி இங்ஙனம் வினவி அறிவாள். (தொ. பொ. 114 நச். உரை)

கவலையிலேன் எனக் கழறிய முல்லை -

{Entry: G07__720}

முல்லைப் பொதுவியற்பால துறைகளுள் ‘முல்லை’ காண்க. (பு. வெ. மா. 13 - 1) (இ. வி. 619 - 34)

கவன்றுரைத்தல் (1) -

{Entry: G07__721}

இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தன்னைச் சார்ந்த தலைவன் உள்ளத்தை நன்குணர்ந்து உரையாடிய பாங்கன், “இத்தலை வனுள்ளம் இதற்கு முன் இல்லாதவாறு கலங்குகின்றதே” என்று கவலையுற்றுக் கூறல்.

இதனைக் ‘கிழவோற் பழித்தல்’ என்றும் கூறுப.

(ந. அ. 137, இ.வி. 505)

இது ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 24)

கவன்றுரைத்தல் (2) -

{Entry: G07__722}

தலைவி தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்த, உடன் போக்கினை அறிந்த செவிலி, “நேற்று என்னொடு சிரித்துப் பேசி என்னைத் தழுவியவள் சிறிய உபாயங்கள் செய்தன எல்லாம், இன்று இக்கொடிய காட்டினைக் கடக்க வேண்டிப் போலும்! இதனை அப்பொழுதே அறிந்திலேனே!” என்று தலைவியது நிலையை எண்ணிக் கவலையடைந்து சொல்லு தல்.

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 227)

கவி -

{Entry: G07__723}

‘கவியானவன் இலக்கணம்’ காண்க.

கவின் அழிவு உரைத்தல் (1) -

{Entry: G07__724}

இரவுக்குறியில் கூடிப் பிரிந்த தலைவன் மீண்டும் வாராததால் வாடிமெலிந்த தலைவி, துயரத்தால் தன் மேனியழகு குலைந்ததைத் தோழியிடம் கூறல்.

“தோழி! என் பண்டைத் தீவினையால் என் அழகு, எனக்கும் அவருக்கும் பயன்படாது போமாறு பசலை பாய்தலால், இவ்வாறு நாளும் குறைந்து வருகிறது. அவர் தந்த காம இன்பத்தை மீட்டும் நீக்கிக்கொள்ளும் உபாயத்தை அறிய முற்பிறப்பில் தவம் செய்யாதுபோய்விட்டோமே!” (அம்பிகா. 245) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

கவின் அழிவு உரைத்தல் (2) -

{Entry: G07__725}

தோழி தலைவனிடம் தலைவியது அழகு பிரிவுத்துயரால் குலைந்துவிட்டதை எடுத்துக் கூறல்.

“தலைவ! இவள் மேனியின் மாந்தளிர் வண்ணம் மழை பொழியும் இரவின்கண் பூத்த பீர்மலர் போன்றுள்ளது; குவளை போன்ற கண்களோ, நீர் ஏற்ற செங்கழுநீர்மலர் போல உள; இவை யெல்லாம் நின்னால் விளைந்தனவே” (தஞ்சை. கோ. 247) என்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ. 166)

கவினுற இருவரும் கடவுட் பராவல் -

{Entry: G07__726}

உடன்போய தலைவன் தலைவி ஆகிய இருவரும் மீண்டு தம் இல்லத்திற்கு வருமாறு செவிலி தெய்வத்தை வேண்டல்.

தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றகாலை அவளைத் தேடிப் பாலையில் நெடுந்தூரம் சென்று மீண்டு வந்த செவிலி, அவர்கள் தலைவன் உறவினர்தம் ஊரினை அடைந்த செய்தியை நற்றாயிடம் கூறி, அவர்கள் விரைவின் மீண்டு வருவதற்கு அருள்புரியுமாறு தம் குலதெய்வத்தை வேண்டுதல்.

இது ‘செவிலி பின் தேடிச் சென்று மீடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 88)

கழங்கிட்டுரைத்தல் -

{Entry: G07__727}

கழற்சிக்காயாற் குறியறிந்து சொல்லுதல்.

(தொ. பொ. 1 14 நச். உரை.) (L)

கழங்கு -

{Entry: G07__728}

களவுக் காலத்துத் தலைவன் அடிக்கடிப் பிரிந்து செல்வதால், தலைவிக்கு மனத்தில் ஏற்படும் வேதனைபற்றி உடல் மெலிய அம்மெலிவின் உண்மைக் காரணத்தை அறியாத செவிலி, “உண்மைக் காரணம் தெய்வஅருள் பெற்ற கட்டுவிச்சிக்கே புலப்படக்கூடும்” என்று அவளை அழைத்து அவளுக்குச் சிறப்புச்செய்ய, அவள் கழற்சிக் காய்களை எடுத்துத் தரையில் பரப்பிக் கணக்குப் பார்த்துத் தன் தெய்வ ஆவேசத்தால், தலைவிக்குத் தெய்வத்தால் உடல் மெலிவு ஏற்பட்டுள்ள தாகக் கூறி, அம் மெலிவினைப் போக்கத் தெய்வ வழிபாடு செய்யுமாறு கூறல். (தொ. பொ. 115 நச்.)

கழற்றெதிர் மறுத்தல் -

{Entry: G07__729}

பாங்கனுடைய உறுதிமொழியைத் தலைவன் கேளாது மறுத்தல் என்னும் கிளவி. (கோவை. 23)

கழற்றெதிர் மறை -

{Entry: G07__730}

தலைவன் பாங்கனுடைய உறுதிமொழியைக் கேளாது மறுத்துச் சொல்லுஞ் சொல். (இறை. அ. 3)

கழறிமொழிதல் -

{Entry: G07__731}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியை குறை நயப்பிக்க முயன்றவழித் தலைவி அவள் கூற்றில் ஈடுபடாமல் அறியாள் போன்று குறியாள் குறித்தபோது, தோழி அவளை வெகுண்டு கூறுதல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

கழறுதல் -

{Entry: G07__732}

இடித்துரைத்தல்; அஃதாவது அன்புடையார்மாட்டுத் தீயன கண்டால், அன்பு குறையாத சொற்களால், அத்தீயவற்றைக் கடியுமாறு வற்புறுத்தியுரைத்தல். (இறை. அ. 3 உரை.)

கழிக்கரைப் புலம்பல் -

{Entry: G07__733}

பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையிலிருந்து கொண்டு தனியே இரங்குகை.

எ-டு : சமுத்திர விலாசம் என்னும் பிரபந்தம். (L)

கழிந்தது நிகழ்த்தல் -

{Entry: G07__734}

தலைவி தன் ஊடல் தணியாமல் நீட்டித்தவழித் தலைவன் அவளது பழைய அன்பினை எண்ணி வருந்துதல்.

“உன் பெற்றோர் வருந்த என்னுடன் நீ உடன்போக்கிற்கு ஒருப்பட்டு வந்ததையும், பாலைநிலத்து மக்கள்இல்லத்தே மான்தோல் பள்ளியில் உறங்கியதையும், இடைச்சுரத்தில் நின் சுற்றத்தார் வந்தபோது நான் ஒளிந்துகொண்டதையும் நான் எக்காலத்தும் மறக்கலாற்றேன். ஆயின் நினக்கு இவை யெல்லாம் மறந்துவிட்டாற் போல நின் இயல்பே வேறுபடு கின்றது” என்ற தலைவன் கூற்று.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 507)

கழிபடர் -

{Entry: G07__735}

மிக்க நினைப்பு; தலைவனைத் தலைவி காணும் பொழுதினும் காணாப் பொழுது நெடியதாகும் களவுக் காலத்தே எற்பாட்டு நேரத்தில் அவள் அவன்பிரிவுக்கு மிகவும் வருந்தி அவன் நினைப்பாகவே இருத்தல். (இறை. அ. 30 உரை)

கழையொடு புலம்பல் -

{Entry: G07__736}

தலைவி உடன்போனது அறிந்து சுரத்திடை அவளைத் தேடிச் சென்ற செவிலி, அக்காட்டிடை மூங்கில்கள் வெடித்து முத்துதிர்ந்திருப்பதைக் கண்டு அக்கழைகளை நோக்கி, “என் துயரம் நோக்கி நீங்கள் கண்தோறும் முத்தம் உகுக்கின்றீர் களே!”

(கண் - கணு; முத்தம் - கண்ணீர்த்துளி போன்ற முத்து) என்று வினவுதல்.

இது ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (திருவாரூர்க். 406)

கள்ளப்புணர்ச்சி -

{Entry: G07__737}

பெற்றோரறியாமல் தலைமக்கள் தாமே கூடுங் கூட்டம். (ந. அ. 34.)

கள்ளியம் புறவுடன் உள்ளி உசாவல் -

{Entry: G07__738}

பாலையிலுள்ள புறாவொடு செவிலி பேசுதல்.

தலைவனோடு உடன்சென்ற தலைவியைத் தேடிப் பாலை நிலத்தில் சென்ற செவிலி அங்கு ஒரு புறாவினைக் கண்டு, “புறாவே! எங்கள் மலைநாட்டு ஊரை விடுத்துப் பாலையின் வெப்பத்தைப் பொருட்படுத்தாது அயலான் ஒருவன்பின் இருளில் புறப்பட்டு வந்த கள்ளத்தனமுடைய என்மகள்பால் நீ அன்பு வைத்து அவளைத் தடுக்காமல் இருந்துவிட்டாயே!” (திருப்பதிக். 429) என்று புலம்புதல்.

இது ‘செவிலி பின் தேடிச் சென்று மீடல்’ என்னும் தொகு திக்கண் அமைந்ததொரு கூற்று. (மா. அக. 88)

களம் -

{Entry: G07__739}

களமாவது கட்டும் கழங்கும் இட்டு உரைக்கும் இடமும் வெறியாட்டு இடமுமாம். (தொ.பொ. 144. நச். உரை)

களம் சுட்டுக் கிளவி -

{Entry: G07__740}

தலைவனைப் பகற்குறிக்கண்ணும் இரவுக்குறிக்கண்ணும் இன்ன இடத்திற்கு வருக என்று கருதிக் கூறும் சொல்.

தலைவி தான் சென்று தலைவனைக் கூடுதற்குரிய இடத்தைத் தானே உணர்வாள் ஆதலின், தலைவன் கூறிய சொற்களைக் கடந்து தலைவி செயற்படுவது அறம் அன்மையின், அவன் விரும்பியவாறு பகற்குறி இரவுக்குறிக்குரிய இடங்களைக் குறிப்பிட்டுக் கூறும் பொறுப்புத் தலைவியுடையதேயாம்.

தலைவனுக்குப் பகற்குறி இரவுக்குறி இடங்களைத் தலைவி வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகவோ, தலைவன் சிறைப்புறத்தானாகவோ, தோழியின் வாயிலாகவோ குறிப்பிடுவாள். தலைவன் களம் சுட்டுமாயின் அக்கள வொழுக்கம் விரைவின் புறத்தார்க்குப் புலனாகிக் குடிப் பிறப்பு முதலியவற்றிற்குக் கேடு விளைக்கும் ஆதலின் குறியிடம் கூறும் பொறுப்புத் தலைவியினுடையதேயாகும். (தொ. பொ. 120 நச்.)

களம் பெறக் காட்டல் -

{Entry: G07__741}

காப்பு மிகுதியானும் காதல் மிகுதியானும் தமர் வரைவு மறுத்தலானும் தலைவி ஆற்றாளாயவழி, “இஃது எற்றினான் ஆயிற்று?” என்று செவிலி அறிவரை வினவ, அவர் களத்தைப் பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டு மிடத்துத் தோழி கூற்று நிகழும்.

களமர் -

{Entry: G07__742}

1) மருத நிலமக்கள்; கருங்கை வினைஞரும் களமருங் கூடி’ (சிலப். 10 : 125)

அடிமைகள்; களமர் கதிர்மணி சாலேகம் செம்பொன்’ (பு.வெ.மா. 3 : 15)

களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

{Entry: G07__743}

“கடற்கரை மணலிலே முத்துக்கள் இருள் நீங்குமாறு ஒளிவீசும் துறையையுடைய நெய்தல்நிலத் தலைவனாதலின், இவட்கு வருகின்ற தீங்கைக் கடிதின் நீக்கி வரைந்து கொள்ள வேண்டிய நீ இப்பொழுது தலைவிக்குக் கொடுத்திருக்கும் சங்கு வளையல்கள் நல்லவையாக எப்பொழுதும் நெகிழா திருக்குமா? அன்றி, தலைவி, உடல் மெலியின் தாமும் கழன்று விடுமா?” என்ற தோழி கூற்று. (ஐங். 193)

களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -

{Entry: G07__744}

“வெற்ப! நின் பிரிவினால் தன் நோய் மிகுந்தவழியும், நின்னைப் பிறர் முன்னர் ‘நிலைத்த மனமுடைய பண்பு சான்றவன் அல்லன்’ என்று யானும் சேரியினுள்ளாரும் ஆயத்தாரும் பழி கூறுவோம் என்று அஞ்சித் தன் நோயினை எங்கள் எல்லார்க்கும் குறிப்பானும் கூறாமல் தலைவி மறைத்துவிட்டாள்” என்றாற் போலத் தோழி தலைவியது கற்புமிகுதி கூறி வரைவு கடாதல். (கலி : 44)

களவிடைப் பிரியும் நாள்

{Entry: G07__745}

களவுக்காலத்தில் தலைவி மாதந்தோறும் எய்தற்பால பூப்பு எய்தியவழி மூன்று நாள்களும் கூட்டமின்றிக்கழியும். பூப்பு நிகழாத நிலையிலும், தலைவன் தன் தொழில் கருதி வேற்றுப் புலத்துத் தங்குதல் நிகழக் கூடுமாயின், அப்பொழுது ஒரு நாளோ இரண்டு நாளோ கூட்டமின்றிக் கழிதலும் கூடும். மேலும் அல்ல குறிப்பட்டு, ஒரு நாளும் இரு நாளும் இடையீ டாதலும் உண்டு. (தொ. பொ. 122 நச்.)

பூப்பு நிகழ்வது கற்புக் காலத்தில்தான் என்ற கருத்துடையது இறையனார் அகப்பொருள். எனவே, அந்நூலுக்குத் தீண்டா நாளாகிய முந்நாட் பிரிவு களவுக் காலத்து இன்று; ஏனைய பிரிவுகளே உள. (இறை. அ.44 உரை)

களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -

{Entry: G07__746}

களவிடை அரசனுக்குப் போரிடை உதவற்குப் பிரிந்த தலைவன் விரைவில் மீண்டு தலைவியை மணத்தற்குரிய செயல்களை மேற்கொண்டானாக, அவை கண்ட தோழி, “கொடியிடையாய்! பொலம்பூணாய்! தலைவன் அரசனுக்கு உதவி மீண்டு வந்து விட்டான். இனி நீ நின் காந்தள் போன்ற மெல்விரற்கைகளால் அவனைத் தழுவி மகிழ்தற்கண் இழுக்கின்று” என்றாற்போலக் கூறுதல். (தொ. பொ. 141 நச்.)

களவியல் கிளவித்தொகை பதினேழாவன -

{Entry: G07__747}

1. இயற்கைப் புணர்ச்சி, 2. வன்புறை, 3. தெளிவு, 4. பிரிவுழி மகிழ்ச்சி, 5. பிரிவுக்கலங்கல், 6. இடந்தலைப்பாடு, 7. பாங்கற் கூட்டம், 8. பாங்கி மதிஉடன்பாடு, 9. பாங்கியிற்கூட்டம், 10. அ) பகற்குறி ஆ) ஒரு சார் பகற்குறி, 11. பகற்குறி இடையீடு, 12. இரவுக்குறி, 13. இரவுக்குறி இடையீடு, 14. வரைதல் வேட்கை, 15. வரைவு கடாதல், 16. ஒருவழித்தணத்தல், 17. வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்பனவாம். (ந. அ. 123)

களவில் தலைவன் கருதாதன -

{Entry: G07__748}

களவுக்காலத்தில் தலைவன் நிலவும் இருளும் பகைவரும் பற்றித் தலைவியைக் குறிக்கண் எதிர்ப்பட வாராது தங்குதல், வரும் வழியின் அருமை நினைந்து வருகையைத் தவிர்தல், தலைவியைக் காணமுடியாது போம்போது மனம் சலித்துக் கொள்ளுதல், தான் தலைவியைக் காணவரும் வழியில் பாம்பும் விலங்கும் போல்வன நலியும் என்று அஞ்சுதல், தான் தலைவியைக் காண வருதற்கண் இடையூறுகள் உளவாமோ என்று கருதித் தன்னிடத்தேயே தங்குதல் - என்னுமிவை. களவில் தலைவன் கருதாதனவாம்.

‘ஆறு இன்னாமையும் ஊறும் அச்சமும், தன்னை அழிதலும் கிழவோற்கு இல்லை’ (இறை. அ. 31, தொ. பொ. 136 நச்.)

களவில் நிகழும் பிரிவின் வகை -

{Entry: G07__749}

இட்டுப்பிரிவும் அருமைசெய்து அயர்த்தலுமாகிய 1. ஒருவழித்தணத்தல், 2. வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனக் களவுக்காலத்துக்குரிய பிரிவு இருவகைப்படும்.

(ந. அ. 39)

களவிலும் கற்பிலும் அலர் -

{Entry: G07__750}

களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் தலைவன் செயல்கள் ஊராரால் எடுத்துக் கூறிப் பழிக்கப்படுகின்றன என்று தலைவியும் தோழியும் கூறல்.

களவில் அலர் பற்றித் தலைவியும் தோழியும் கூறுதலால் களவிற் கூட்டம் நிகழாதுபோம்.

கற்பில் அலர் பற்றித் தலைவியும் தோழியும் கூறுதலால் தலைவனுக்குப் பிரிவின்மை பிறக்கும்.

எ-டு : “தலைவனைக் கண்டு இன்புற்றதோ ஒருநாள்தான்; ஆயின், சந்திரனைப் பாம்பு மறைக்கும் கிரகணம் ஊரவர் பலராலும் எடுத்துக் கூறப்படுவது போல, யான் தலைவனிடம் கொண்டுள்ள தொடர்பு ஊரவர் பலராலும் பழி தூற்றப்படுகிறது” (குறள் 1146) என்ற தலைவிகூற்று களவுக் காலத்து அலர் பற்றியது.

“தலைவன் பொருள் முதலிய கருதிப் பிரிந்து சென்றதால் யான்படும் துயரினை இவ்வூரவர் யாங்ஙனம் அறிந்தனர்?” என்ற தலைவி கூற்று கற்புக் காலத்து அலர் பற்றியது. (குறுந். 140.) (தொ. பொ. 162. நச்.)

அலர் பிறத்தலான், தலைவற்கும் தலைவிக்கும் காமம் சிறக்கும். களவு அலர் ஆகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச் சத்தான் தலைவன் தலைவி இருவருக்கும் காமம் சிறத்த லும், கற்பினுள் பரத்தைமையான் அலர் தோன்றியவழிக் காமம் சிறத்தலும், அவள் வருந்தும் என்று தலைவற்குக் காமம் சிறத்தலும், தலைவன்பிரிவின்கண் தலைவிக்குக் காமம் சிறத்தலும் நிகழும்.

“ஊரிலுள்ளார் கூறும் அலர் எருவாக, அன்னை சொல் நீராகக் காமநோய் வளர்கிறது” (குறள் 1147) “அலர் கூறிக் காமத்தை ஒழிப்போம் என்று கருதுதல் நெய்யை ஊற்றி எரியும் நெருப்பை அவிக்க முயல்வதனோடு ஒக்கும்” (குறள் 1148) என்றாற் போல்வன தலைவி கூற்று. (தொ. பொ. 163. நச்.)

களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழுமிடம் -

{Entry: G07__751}

தலைமக்கள் ஒருவர்க்கொருவர் தம் நாட்டங்களான் உரைத்த குறிப்புரை தாம் கருதிய காமக் கூட்டத்தினைத் திரிபின்றிக் கொள்ளுமாயின், அவ்விடம் களவிறகுரிய ஒழுகலாறுகள் நிகழும் என்று கூறுவர் புலவர். (இடம் - சந்திப்பில்) (தொ. கள. 6 ச.பால.)

களவிற்புணர்ச்சி நான்கு -

{Entry: G07__752}

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் (பாங்கொடு தழாஅல்), பாங்கியிற்கூட்டம் (-தோழியிற் புணர்ப்பு) எனக் களவிற் புணர்ச்சி நான்கு வகைப்படும்.

(தொ. பொ. 498 பேரா., ந. அ. 27)

களவின் அறுவகை -

{Entry: G07__753}

இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம்; தோழியிற் கூட்டத்துப் பகற்குறி, இரவுக்குறி, வரைவு கடாதல், உடன்போக்கு வலித்தல் என்பன. (த. நெ. வி. 14 உரை; க.கா. 23)

களவின்வழி வந்த மணம் ஐந்து -

{Entry: G07__754}

1. களவு வெளிப்படாமுன், அஃதாவது தலைவி அறத்தொடு நிற்பதன்முன் தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணந்துகொள்ளுதல்.

2. களவொழுக்கம் ஊரார் அறிய அலராயவழித் தலைவன் தலைவியை உடன்கொண்டு போய் வரைந்து கொள் ளுதல்;

3. அவ்வாறு தலைவன் உடன்கொண்டு போயவழிச் செவிலியோ தலைவியின் சுற்றத்தாரோ பின்சென்று இருவரையும் அழைத்து வந்து மணம் செய்வித்தல்;

4. உடன்போன தலைவியின் பெற்றோர் தலைவன் ஊர்க்குச் சென்று மணம் செய்வித்தல்;

5. களவு வெளிப்பட்டபின் தலைவியின் பெற்றோர் உடன்பட்டுத் தலைவிக்கு மணம் முடித்தல் - என்பன. (தொ. பொ. 191 குழ.)

களவினில் கூற்றுக்குரியார் -

{Entry: G07__755}

பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்னும் அறுவரும். கூற்றுஎன்பது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (தொ. பொ. 501 பேரா.)

களவினுள் கிழவோற்கு இல்லன -

{Entry: G07__756}

களவுக் காலத்துத் தலைவன் தான் வரும் வழி ஏற்று உடைத்து இழிவு உடைத்து, இழுக்கு உடைத்து, கல் உடைத்து, முள் உடைத்து என்றோ, தான் வரும் வழியில் புலியானும் யானை யானும் சூர்அரமகளிரானும் கள்வரானும் கரடியானும் இடையூறுடைத்து என்றோ அஞ்சுதலும், இங்ஙனம் வருதலான் தனக்குத் துன்பம் அடுத்தவழி, “எனக்கு ஆகாத தோர் ஒழுக்கத்தை மேற்கொண்டேனே!” எனத் தன்னை நெஞ்சினான் நோதலும் என்னும் இவை கொள்ளான். இவ்வச்சங்கள் தலைவிக்கும் தோழிக்குமே நிகழும். (இறை. அ. 31)

களவினுள் தவிர்ச்சி -

{Entry: G07__757}

1. களவுக் காலத்துள் தலைவன் தலைமகட் புணராது இடையிடும் இடையீடு.

2. களவுக் காலத்தே தலைவன் தமியனாகல் தன்மை நீங்குதல்.

1. அ) தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுகல், நிலவு வெளிப்படுதல், கூகை குழ றல், கோழி குரல் காட்டல் இவை பெருகியவழியும் களவுப் புணர்ச்சி இடை யீடுபடும். குறியல்லதனைக் குறியாக மயங்குதலானும் சிலநாள் இடையீடு படும். தலைவன் வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தும் தலைவியின் களவுக்கூட்டம் பலநாள் இடையீடுபடும். (இறை.அ.சூ. 16)

ஆ) களவினுள் தலைவன் தன் உணர்வினன் அல்லனாய் இருத்தலின், வழியினது அருமை அச்சம் என்பனவும், காவல் மிகுதி முதலியனவும் அவனைப் புணர்ச்சியை இடையீடு செய்யும் வகை தடுப்பன இல்லை. (33)

3. களவொழுக்கத்தில் தங்குதல்; அஃதாவது தலைவனும் தலைவியும் களவொழுக்கம் நிகழ்த்தும் காலம். அஃது இரண்டு திங்கள் எல்லைக்கு அகப்பட்டது. (32)

களவினுள் துறவு -

{Entry: G07__758}

களவு நிகழ்த்தும் காலத்தில் தலைவன் தலைவியை நீங்கி யிருத்தல். அஃது ஒன்றிரண்டு நாள்கள் தலைவியைப் பிரிந்து தலைவன் வேற்றுச் செயல்களில் ஈடுபடும் ஒருவழித்தணத் தலும், இரண்டு திங்கள் எல்லைக்குட்பட்டுப் பல நாள்கள் தலைவியைப் பிரிந்து அவளை மணத்தற்கு வேண்டும் பொருள் தேடுவதற்காக வேற்றூர் செல்லும் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதலும் ஆம். இட்டுப்பிரிவு எனவும், அருமைசெய்து அயர்த்தல் எனவும் கூறப்படும். களவு வெளிப்பட்ட பின் தலைவன் இப்பிரிவுகளை நிகழ்த்தின், அவை கற்புக் காலத்தின் பிரிவுகளாகக் கருதப்படும்.

களவிற்கு இருதிங்கள் அளவு என்ற கால வரையறை கூறப் பட்டது. (இறை. அ. 25)

களவு -

{Entry: G07__759}

களவாவது பிறர்க்குரிய பொருளை அவர் அறியாவகையால் கைப்பற்றுதல். அகப்பொருளிற் களவாகிய இஃது அன்ன தன்று. ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னி யரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலான் அறம் என்று போற்றப்படும். அகத்திணையின் ஒழுகலாறு இரண்டனுள் முதலாவதாகக் கொள்ளப்படும் ஒழுக்கம் இதுவாம் (தொ. பொ. 89 தோற்று. இள.)

களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

{Entry: G07__760}

“என் கேளிர்! வாழி! எனது நெஞ்சினைச் சிறைக்கொண்ட பெருந்தோள் குறுமகளது சிறு மென்மேனியை ஒருநாள் நான் முயங்கப்பெறுவேனாயின், அதன் பின்னர் அரைநாள் உயிர்வாழ்தலும் யான் வேண்டேன்மன்!” (குறுந். 280) என்றாற் போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 100 நச். உரை)

களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

{Entry: G07__761}

“மாநீர்ச் சேர்ப்ப! எனக்கு இம்மை நீங்கி மறுபிறப்பு நேரினும், நீயே என் கணவன் ஆதற்கடவை; நின் மனத்திற் கிசைந்த காதலி யான் ஆகுக!” (குறுந். 49) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 100 நச். உரை.)

களவுப்புணர்ச்சி நிகழும் இடம் -

{Entry: G07__762}

இல்லத்தின் எல்லையைக் கடந்த சோலைகளில் ஒன்றற்கு மேற்பட்ட இடங்களைத் தம் கூட்டத்திற்கு ஏற்ற இடமாக அமைத்துக்கொண்டு தலைவனும் தலைவியும் 1) பகற் போதிற் கூடும் பகற்குறியும், 2) இல்லத்தின் எல்லைக்குள் கட்டடங் களின் புறத்தே ஓரிடத்தையே தேர்ந்து புணர்ச்சிக்கு ஏற்ற இடமாகக் கொண்டு இருவரும் கூடும் இரவுக் குறியும் என, களவுப் புணர்ச்சி நிகழுமிடம் இரு வகைத்தாம். தலைவனும் தலைவியும் பிறரறியாது தனியிடத்தே எதிர்ப்பட்டுக் கூடுதல் களவுப்புணர்ச்சியாம். (ந. அ. 37, 38)

களவு வீடு பயத்தல் -

{Entry: G07__763}

மக்களுள் தலையாயினார், பெண்ணின்பத்தால் சுற்றத் தொடர்ச்சி உண்டாகக் கொலை களவு வெகுளி செருக்கு மானம் முதலிய குற்றம் நிகழும் என்று காமத்தின் நீங்குவர்; இடையாயினார் வெளிவனப்புடைய உடலின் உட்புற இழிவை உணர்ந்து காமத்தின் நீங்குவர்; கடையாயினார் எத்திறத்தாலும் காமத்தின் நீங்கார். அவர்கட்கு இத்தகைய தலைவன் தலைவியரின் காதல் அறவாழ்க்கையை எடுத்துக் கூற, அந்நிலையை அவர்கள் தாமும் எய்த விரும்புவர்; அதற்குத் தவம் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அத்தவத்தின்கண் முயல்வர். அங்ஙனம் முயல்வோரிடம் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடுடைய இம்மனித இன்பத்தி னும் பன்மடங்கு மேம்பட்ட வீட்டின்பத்தை விரித்துரைப் பின், இம்மனித இன்பத்தில் பற்றினை விடுத்து வீடுபேறு எய்த முயல்வர். ஆதலின், அவர்களை வஞ்சித்துக் கொண்டு சென்று நன்னெறிக்கண் நிறுத்தும் இக்களவின்பம் வீடு பேறடைய வழி செய்யும் என்பது. (இறை. அ. 1. உரை)

களவு வெளிப்பட்டபின் வரைதல் -

{Entry: G07__764}

1. தலைவியுடன் உடன்போக்குச்சென்று போன இடத்தில் கொடுப்போர் இன்றித் தலைவியை மணத்தல், 2. தலைவி யொடு மீண்டு தம்மூருக்கு வந்து தன் மனையின்கண் அவளை வரைதல், 3. அவள்மனையின்கண் அவளை வரைதல், 4. தலைவியோடு உடன்போனபோது இடையே உடன்போக் குத் தலைவி தமரால் தடைப்படுத்தப்பட, அவர்களை வழிபட்டுத் தலைவியை மணத்தல் எனக் களவு வெளிப்பட்ட பின் தலைவன் தலைவியை வரைதல் நான்கு வகைப்படும். (ந. அ. 44)

களவு வெளிப்படாமுன் வரைதல் -

{Entry: G07__765}

1) இயற்கைப் புணர்ச்சி நிகழ்த்திய பின்னரோ, இடந்தலைப் பாடு நிகழ்த்திய பின்னரோ, பாங்கற்கூட்டம் நிகழ்த்திய பின்னரோ, தோழியிற் கூட்டம் சிலநாள் நிகழ்த்திய பின்ன ரோ, இக்களவொழுக்கத்தை நீட்டிப்பது தனக்கும் தலைவிக் கும் மனத்துயரம் விளைப்பதாகும் என்று தலைவன் தெளிவு எய்தித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தலும், 2) இக்கள வொழுக்கத்தை விரைவில் விடுத்துத் தலைவியை மணந்து கற்பு இல்லறம் நிகழ்த்துதலே தக்கது என்று பாங்கனாலோ தோழியாலோ வற்புறுத்தித் தெரிவிக்கப்பட்டுத் தலைவன் தலைவியை மணத்தலும் எனக் களவு வெளிப்படா முன்னர் வரைதல் இருவகைப்படும். (ந. அ. 43)

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்று

{Entry: G07__766}

1. உடன்போக்கு - தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு உடன் அழைத்துச் சேறல்;

2. கற்பொடு புணர்ந்த கவ்வை - தலைவி தலைவனுடைய உரிமையாய்க் கற்பொடு கூடியிருத்தலை, அயலார் விரவிய சேரியினர் பலரும் அறிதல். (கவ்வை - அலர்வெளிப்பாடு);

3. மீட்சி - புதல்வியைத் தேடிச் சென்ற செவிலி மீண்டு வருதல்; உடன்போன தலைவன்தலைவியர் மீண்டு வருதலும் ஆம்.

களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -

{Entry: G07__767}

“நம் குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறிவுடை யவள் இவள்” என்று நற்றாயும் செவிலியும் ஐயமுற்று, அதனை அந்தணர் முதலிய உயர்ந்தோரிடத்தே உசாவி, அதுவும் முறைமையே என்று அவர்கள் கூறத் தாம் தெளிவர்; தலைவன் குலத்தினது உயர்ச்சியை அறிந்த விடத்தே இங்ஙனம் இவள் கூடுதல் முறையென்று அவ் வுயர்ந்தோரைக் கேட்டு ஐயுறவு நீங்கித் தெளிவர் என்றவாறு. (தொ. பொ. 117. நச்.)

களவுறை கிளவி -

{Entry: G07__768}

1. களவுக் காலத்தில் கூறிய உறுதிமொழி; அஃதாவது “நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேனாவேன்” என்பது.

2. களவு உறைந்த காலத்துக்குரிய சொல்; அஃதாவது அறத்தொடுநிலை. (இறை. அ. 51)

களவெனப்படுவது -

{Entry: G07__769}

உலகத்து களவாயின எல்லாம் கை குறைப்பவும் கண் சூலவும் கழுவேற்றவும் பட்டுப் பழியும் பாவமும் ஆக்கி நரகம் முதலிய தீக்கதிகளில் உய்க்கும். ஆயின், ஒத்த தலைவனும் தலைவியும் ஒரு பொழிலகத்துத் தாமே கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி எதிர்ப்பட்டுக் கூடிப் பின் கரணமொடு புணர்ந்து வாழும் கற்பொழுக்க இல்லறத்துக்கு வழிவகுக்கும் களவொ ழுக்கம், மேன்மக்களால் புகழப்பட்டு ஞான ஒழுக்கத்தோடு ஒத்த இயல்பிற்று ஆகலானும், பழிபாவம் இன்மையானும் ‘எனப்படுவது’ என விசேடிக்கப்பட்டது. (இறை. அ. 1 உரை)

களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -

{Entry: G07__770}

மெய்தொட்டுப்பயிறல், பொய்பாராட்டல் மறைந்து அவற் காண்டல், தற்காட்டுறுதல் போல்வன ‘வேட்கை’ பற்றியன.

நீடு நினைந்திரங்கல், பெட்ட வாயில் பெற்ற இரவு வலியுறுத்தல், காணாவகையிற் பொழுது நனி இகத்தல் போல்வன ‘ஒருதலை உள்ளுதல்’ பற்றியன.

தண்டாதிரத்தல், பிரிந்தவழிக்கலங்கல், கையறு தோழி கண்ணீர் துடைத்தல் போல்வன ‘மெலிதல்’ பற்றியன.

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைத்தல், இட்டுப் பிரிவு இரங்கல் போல்வன ‘ஆக்கம் செப்பல்’ பற்றியன.

நீடு நினைந் திரங்கல், பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல், காணாவகையிற் பொழுது நனி இகத்தல் போல்வன ‘ஒருதலை உள்ளுதல்’ பற்றியன.

பிரிந்த வழிக்கலங்கல், தண்டாதிரத்தல், கையறு தோழி கண்ணீர் துடைத்தல் போல்வன ‘மெலிதல்’ பற்றியன.

தண்டாதிரத்தல், கேடும் பீடும் கூறல், மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமை உயிர்த்தல் போல்வன ‘நாணுவரை இறத்தல்’ பற்றியன.

பண்பிற் பெயர்த்தல், அன்புற்று நகுதல், வரைவுதலை வருதல், களவறிவுறுதல் போல்வன ‘மறத்தல்’ பற்றியன.

சொல் அவட்சார்த்திப் புல்லியவகை, வேட்கையின் மயங்கிக் கையறுதல், நொந்து தெளிவொழித்தல் போல்வன ‘மயக்கம்’ பற்றியன.

மடல்மாக் கூறல், அழிவு தலைவந்த சிந்தை போல்வன ‘சாக்காடு’ பற்றியன. (தொ. கள. 9 ச. பால.)

களவொழுக்கம் -

{Entry: G07__771}

பிறப்பு, திரு முதலியவற்றால் மேம்பட்ட தலைவன் தனக்கு ஒத்தவளோ சற்றுத் தாழ்ந்தவளோ ஆகிய தலைவியை விதி வயத்தால் தனித்து ஒரு பொழிலில் கண்டு அவளொடு பிறர் அறியாவகையில் சில நாள்கள் பகலிலும் சில நாள்கள் இரவிலுமாகக் கூடி ஒழுகும் ஒழுக்கம்.

தலைவன் தலைவியை அவள்பெற்றோர் மணம் செய்து கொடுப்ப முறையாக மணந்து கூடாது, தலைவனும் தலைவி யுமாக மறைந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுக் கூடுதலின் களவு எனப்பட்டது. பிறரால் அறியப்படாத பொருளையுடைய வேதத்தை ‘மறைநூல்’ என்பது போலப் பிறரால் அறியப் படாது நிகழ்ந்த புணர்ச்சி களவெனப்பட்டது; பிறர் அறியாத வாறு மறைத்துக் கூடலின் ‘மாயப்புணர்ச்சி’ எனவும்படும். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தலைவனும் தலைவி யும் தாமே எதிர்ப்பட்டுப் புணர்தலின் இது கந்தருவ மணத் தோடு ஒத்த மணமாகும். கந்தருவருக்குக் கற்பு இன்றி அமை யவும் பெறும்; ஆயின் கற்பு இன்றிக் களவே அமையாது. களவொழுக்கம் சிலநாள் கழித்துக் கரணமொடு புணரும் கற்பொழுக்க மாகும். (தொ. பொ. 92 நச்.)

களவொழுக்கமாவது ஒத்த கிழவனும் கிழத்தியுமாகிய தலை மக்கள், தத்தமக்குரியோர் கரணமொடு புணர்த்துக் கொடுப்பக் கொண்டு இணையாமல், உயர்ந்த பாலது ஆணையால் தாமே ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுத் தம்முள் கூடி அக் கூட்டத்தைத் தமர் அறியாதவாறு மறைத்தொழுகும் ஒழுக்கமாம். இதனை மறை என்றும் அருமறை என்றும் வழங்குவர்.

ஈண்டுக் களவென்றது, தம் ஒழுகலாற்றினைத் தாயரும் தம் ஐயரும் அறியாதவாறு மறைத்தலாகிய அவ்வளவேயாம். ஆகவே, பிறர்க்குரிய பொருளை அவரறியாது வஞ்சித்துக் கோடலாகிய களவு வேறு, இது வேறு என்பது போதரும். ‘உற்றார்க்குரியர் பொற்றொடிமகளிர்’ ஆதலானும் பின்னர்க் கற்பொடு நிறைவுறுதலானும் இஃது அறநெறியாதல் பெறப்படும். (தொ. கள. பாயிரம் ச. பால)

கற்பாவது உயிரினும் சிறந்ததாகக் கொண்டொழுகும் குலமக ளிரது மனத்திண்மை. கற்பு என்னும் தொழிற்பெயர் ஈண்டு ஓர் ஒழுகலாற்றினை உணர்த்தும் பண்புப்பெயராய் மனையற ஒழுக்கமாகப் பெற்றோரால் வகுத்தோதப்பட்ட நெறியினைக் குறிக்கோளாக ஏற்று அதனினின்றும் வழுவாதொழுகும் மனத் திண்மையைக் குறித்து நின்றது. அது கொண் டானையே தெய்வமாகக் கொண்டு அவற்கு ஆக்கமும் புகழும் எய்தத் தன் உயிர் முதலியவற்றையும் தந்தொழுகும் செயலார்ந்த தலைவியது பண்பாகும். அத்தகு கற்புடைய மனைவியைப் பேணி அவள்வழி ஒழுகும் ஒழுக்கம் தலைவற்கு அறனாகும். (தொ. கற். பாயிரம். ச. பால)

கற்பியல் கிளவி ஏழு -

{Entry: G07__772}

இல்வாழ்க்கை, பரத்தையர் பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு என்பன. (ந. அ. 201)

கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -

{Entry: G07__773}

“நம் தலைவரோ அரசனுக்கு உதவப் பிரிந்துள்ளார். அவருக்குக் கார்காலத் தொடக்கத்திலாவது நம் இல்லத்திற்கு மீடல் வேண்டும் என்னும் ஆசை இருக்கும். ஆயினும், அரசனோ பகைவர் படையை அடியொடு வேறலைக் கருதிக் கார்காலத்தும் தன் பாசறையில் தங்கியுள்ளான். இந்நிலை யில் இக்கார்காலத்தில் நான் செயலற்று வருந்தத் தலைவர் என்மாட்டு வந்து தங்குவதற்கு வாய்ப்பு இலதாயிற்றே!” (ஐங். 451) என்று தலைவி பாசறைச் செய்தியைக் கேட்டு வருந்திய வாறு. (இது முல்லையுட் பாலை; பிரிவு முல்லையுள் முடிவுடையதாயிற்று). (தொ. பொ. 9 நச்.)

கற்பிற்புணர்ச்சி வகை -

{Entry: G07__774}

கற்பு என்ற ஒழுக்கத்திற் புணரும் புணர்ச்சி, குரவரிற் புணர்ச்சி எனவும் வாயிலிற் கூட்டம் எனவும் இருவகைப்படும்.

குரவரிற் புணர்ச்சி - குரவர்கள் தலைவியைத் தலைவனுக்கு மணம் செய்து வைக்க இருவரும் கூடும் கூட்டம்.

வாயிலிற் புணர்ச்சி - தலைவன் தலைவியரிடை நிகழும் ஊடலை வாயிலாவார் தீர்த்து வைக்க இருவரும் கூடும் கூட்டம். (ந. அ. 56)

கற்பின் ஆக்கத்து நிற்றல் -

{Entry: G07__775}

உடன்போக்கு அறிந்த பின்னர்ச் செவிலி, தோழியொடு மதியுடம்பட்டுத் தலைவியது கற்பு மிகுதியே கருதி உவந்த உவகையோடு அவளைப் பின் தொடராது, அவள் செயல் ஏற்றதே என்று கருதியிருத்தல். (தொ. பொ. 115 நச்.)

கற்பின் இரு வகை -

{Entry: G07__776}

களவின்வழி வந்த கற்பு எனவும், களவின்வழி வாராக் கற்பு எனவும் கற்பு இருவகைப்படும். (ந. அ. 55)

கற்பினில் கூற்றுக்குரியார் -

{Entry: G07__777}

பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்ற பன்னிருவரும் கற்பின்கண் கூற்றுக்குரியார். கூற்று என்பது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (தொ. பொ. 502 பேரா.)

கற்பினுள் துறவு -

{Entry: G07__778}

இல்லறம் நிகழ்த்தும் கற்புக் காலத்தில் தலைவன் தலைவி யைச் சில கருமம் நோக்கிப் பிரிந்து செல்லும் பிரிவுகள் விலக்கப்பட மாட்டா; இத்துணைக் காலம் என்று காலவரை யறையும் செய்யப்படமாட்டா.

கற்பொழுக்கத்திற்குக் காலவரையறை இன்மையின், அதன்கண் நிகழும் பிரிவுகளுக்கு எண்ணிக்கை வரையறையும் கால வரையும் கூறுதல் வேண்டா என்பது இறையனார் அகப்பொருள் கருத்து. (சூ. 34)

ஆயினும் ஓராண்டுக்கு உட்பட்டு நாளும் திங்களும் இரு துவும் வரையறுத்துப் பிரியும் என்பது கொள்ளப்படும். (41)

ஓதற்பிரிவுக்கு மூன்று யாண்டு எல்லையும், ஏனைய பிரிவு களுக்கு ஓர்யாண்டு எல்லையும் தொல்காப்பியம் (பொ. 188, 189, 190) முதலிய பிற நூல்கள் கூறும்.

கற்பு -

{Entry: G07__779}

தலைவிக்குத் தலைவனை விடச் சிறந்த தெய்வம் இல்லை எனவும், அவள் அவனிடம் இன்னவாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தலைவியின் பெற்றோர்கள் அவட்குக் கற்பிக்கின்றனர். அந்தணர் சான்றோர் முனிவர் தேவர் ஆகியோர் திறத்து இன்னவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தலைவன் தலைவிக்குக் கற்பிக்கிறான்.

பெற்றோரும் கணவனும் கற்பித்த செய்திகளை உட்கொண்டு அவற்றை வழுவாது பின்பற்றி வாழும் தலைவியின் ஒழுக்கம் கற்பு எனப்படும்.

தலைவனும் களவுக்காலத்தில் நாள் முதலியவற்றைப் பற்றி நினையாமல் தலைவியொடு கூடியது போலாது, வேதங் களிலும் சடங்குகளிலும் கூறப்பட்ட சிறப்பிலக்கணங்களைக் கடைப்பிடித்துப் பின் துறவுநிலை எய்தும் வரை இல்லறத்திற் குரிய கடமைகளை மனத்திற் கற்பித்துக்கொண்டு தவறாது செயற்படுதலின் தலைவனுக்கும் கற்பு உரியதாயிற்று.

கற்பாவது தலைவியை அவள் பெற்றோர் வேள்விச் சடங் கோடு மணம் செய்து கொடுப்பத் தலைவன் அவளை மணம் செய்துகொண்டு வாழ்தலாம். வேள்விச் சடங்கில் தலைவ னிடம், “இவளை இன்னவாறு பாதுகாப்பாயாக” எனவும், தலைவியிடம், “இவனுக்கு நீ இன்னவாறு குற்றேவல் செய்து ஒழுகுக” எனவும் அங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர வகையான் கற்பிக்கப்படுதலின் வேள்விச் சடங்குக்கும் கற்பு என்பது பெயராயிற்று. (தொ. பொ. 142 நச்.)

கற்பு என்பது பூப்பு. அது கற்புக் காலத்தன்றிக் களவுக் காலத்து நிகழாமையின் பூப்பினையும் கற்பு என்று சொல்லினார் என்பது. (இறை. அ. 44 உரை.)

கற்பாவது உயிரினும் சிறந்ததாகக் கொண்டொழுகும் குலமகளிரது மனத்திண்மை. கற்பு என்னும் தொழிற்பெயர் ஈண்டு ஓர் ஒழுகலாற்றினை உணர்த்தும் பண்புப் பெயராய் மனையற ஒழுக்கமாகப் பெற்றோரான் வகுக்கப்பட்ட நெறியினைக் குறிக்கோளாக ஏற்று அதனின்றும் வழுவா தொழுகும் மனத்திண்மையைக் குறித்து நின்றது. அது கொண்டானையே தெய்வமாகக் கொண்டு அவற்கு ஆக்கமும் புகழும் எய்தத் தன் உயிர் முதலியவற்றையும் தந்தொழுகும் செயலார்ந்த தலைவியது பண்பாகும். அத்தகு கற்புடைய மனைவியைப் பேணி அவள்வழி ஒழுகும் ஒழுக்கம் தலைவற்கு அறனாகும். (தொ. கற். பாயிரம் ச. பால.)

கற்பு அறிவித்தல் -

{Entry: G07__780}

தலைவி தலைவனோடு இல்லறம் நிகழ்த்தும் மனைக்கண் சென்று மீண்ட செவிலி நற்றாயிடம், “நின் மகள் தன் கணவனையன்றி வேறொரு தெய்வத்தை வணங்காள். அவள் கணவன், பகைவரிடம் திறை கொள்ளச் சென்றாலும் திறை கொண்டு வந்து தன் இல்லத்தில் இவளொடு வைகுவானன்றி வேறெவ்விடத்தும் தங்கான். அவர்கள் இயல்பு ஈது” என்று தலைவியின் கற்பு மாட்சியை எடுத்துரைத்தல்.

இது திருக்கோவையாரில் ‘மணஞ்சிறப்புரைத்தல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கிளவி. (கோவை. 304)

கற்புக்காலத்துத் தலைவியின் செயல்கள் -

{Entry: G07__781}

கற்புக்காலத்தில் தலைவி பூப்பெய்தியவழி, அச்செய்தியை அவள் செவ்வணி அணிந்த சேடி வாயிலாகக் காமக்கிழத்தி யது இல்லத்தில் இருக்கும் தலைவனுக்குத் தெரிவிப்பாள்.

தலைவன் தலைவியைக் குறித்துக் காமக்கிழத்தியை நீங்கி வரவே, அது பொறாது பழிதூற்றும் அவளைத் தலைவி ஏசுவாள்; தலைவனது புறத்தொழுக்கம் குறித்து அவனையும் இடித்துரைப்பாள்; தலைவன் மணந்த இரண்டாம் மனை வியை அவனோடு எதிர்கொண்டழைத்து உபசரிப்பாள்; அவளையும் ஏனைய துணைவரையும் தன் பக்கல் கொண்டு பரத்தையை ஏசுவாள்; கணவனோடு ஊர்ப்புறத்தே புறப்பட் டுச் சோலையும் வயலும் அருவியும் மலையும் காடும் கண்டு மகிழ்ந்து விளையாடுவாள்; ஆற்றிலும் ஓடையிலும் குளத்தி லும் அவனொடு கூடி விளையாடுவாள். (ந. அ. 94)

கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -

{Entry: G07__782}

‘மரைஆ மரற்செடியைச் சுவைக்குமாறு மாரி வறங்கூரவே, மலைகள் ஓங்கிய அருஞ்சுர நெடுவழிக்கண் செல்வோர் ஆறலை கள்வரால் அம்பு எய்யப்படவே அவர்கள் தம்முடல் சுருங்கி உள்ளேயுள்ள நீர் வற்றிப்போக, புலர்ந்து வாடும் அவர் நாவிற்குத் தண்ணீர் பெறாத தடுமாற்றருந்துயரத்தை அவர்தம் கண்ணீர் நனைத்துப் போக்கும்படியான கடுமையை யுடையன காடுகள்’ என்று கூறுவீரேல், என்னை அறியா மல் யான் இறந்துபடுவேன் என்னும் உண்மையை அறியமாட் டாமல் நீவிர் கூறுவன இனிய நீர்மையுடையன அல்ல; துன்பத்திற்குத் துணையாக எம்மையும் அழைத்துப் போக நீவிர் கருதுவீராயின் அதுவன்றி எமக்கு இன்பம் தரவல்லது வேறுண்டோ?” (கலி. 6) என்னும் தலைவி கூற்று. (தொ. பொ. 45 நச்.)

‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -

{Entry: G07__783}

தலைவியைக் காமக்கிழத்தியர் பண்பற்றவள் என்று இழித்துக் கூறல்.

காமக்கிழத்தியர் தலைவியைப் பற்றி, “நம் தலைவனிடம் பல்லாண்டு இன்பம் துய்த்து அவனைப் போன்ற அருமை யான மாணிக்கத்தை மகனாகப் பெற்ற பின்னும் அமைதி யுறாமல், தலைவன் எமது தொடர்பு கொண்டுள்ளமையை நினைத்து நினைத்து ‘என் தங்கை’ என்று எங்கள் பெயரைச் சொல்லும் போதே அழத் தொடங்குகின்றாளே! இவள் கற்பும் இல்லறம் நடத்து முறையும் நன்றாக உள்ளன!” (திருப்பதிக் : 506) என்று குறை கூறுதல்.

இஃது ‘உணர்வதோடு உணரா ஊடற்கு’ரிய தொகுதிக் கண்ணதொரு கூற்று. (மா. அக. 140)

கற்பு நலனுரைத்தல் -

{Entry: G07__784}

தலைவனை உடன்போக்கிற்கு உடன்படுத்திய தோழி தலைவியிடம் வந்து, “மகளிர்க்கு நாணம் உயிரினும் சிறந்தது; அந்நாணத்தினும் கற்பே சிறந்தது” (தஞ்சை. கோ. 311) என்று, அவள் உடன்போக்கினைத் துணியுமாறு நாணத்தைக் கீழ்ப்படுத்திக் கற்பின் சிறப்பை மேம்படுத்திக் கூறுதல்.

இதனைக் ‘கற்பு மேம்பாடு பாங்கி புகறல்’ என்ப. (ந. அ. 182)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 204)

கற்பு நிலைக்கு இரங்கல் -

{Entry: G07__785}

தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட செவிலி, உடன்போக்கு நிகழ்த்திய தலைவியை நினைத்து, “இவள் செய்வது அற மாயினும் இவள் பருவத்துக்கு இது தகாது; இனி இவளுக்கு அறமாவது அவனை வழிபடுவதல்லது பிறிதில்லை” என்று சான்றவர் வகுத்த கற்பு மகளிரிடம் நிகழ்த்தும் செயல் குறித்து மனம் நோதல்.

இதனைக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் கிளவிக்கண், ‘செவிலி இனையல் என்போர்க்கு எதிரழிந்து மொழிதல்’ என்பதன்கண் அடக்குப. (ந. அ. 184, இ. வி. 538)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 226)

கற்புப் பயந்த அற்புதம் உரைத்தல் -

{Entry: G07__786}

செவிலி நற்றாய்க்குக் கற்பின் பேராற்றலைக் கூறல்.

“நம் தலைவியின் கற்பு அருந்ததியின் கற்பினையும் விஞ்சி யுள்ளது. நாட்டை விட்டுப் பிரிந்து போயினும், தலைவன் ஊரும் களிறு மாலையில் தன் மனைக் கட்டுத்தறியிலன்றி வேற்றிடத்தில் நின்று தங்காது” (கோவை 305) என்றாற் போன்ற செவிலி கூற்று.

இஃது ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘கற்புப் பயப்பு உரைத்தல்’ என்னும் (305) (இ. வி. 552 உரை)

கற்புப் பயப்பு உரைத்தல் -

{Entry: G07__787}

தலைவி தலைவனோடு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்று மீண்டசெவிலி, “தலைவி தலைவனையொழிய வேற்றுத் தெய்வத்தை வணங்காததால், அவன் செலுத்தும் யானையும் வேற்று வினை கருதி வெளியே செல்லினும், தலைவனில்லத்தே மீண்டு தன் கட்டுத்தறிக்கு வந்தே ஓய்வு கொள்ளும். தலைவியின் கற்பு அருந்ததியின் கற்பினை நிகர்ப்பது” என்று தலைவியது கற்புச் செய்யும் நலன்களை எடுத்துக் கூறுதல்.

இதனை ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக்கண் ‘கற்புப் பயந்த அற்புதம் கூறல்’ என்றும் கூறுப. (இ.வி. 552 உரை)

இது திருக்கோவையாருள் ‘மணம் சிறப்புரைத்தல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 305)

கற்புமேம்பாடு பாங்கி புகறல் -

{Entry: G07__788}

உடன்போக்குக்கு ஒருப்பட்ட தலைவி தான் நாணத்தை இழக்க நேர்ந்தமை பற்றி வருந்தியபோது, தோழி கற்பின் உயர்வை அவளுக்கு எடுத்துச் சொல்லுதல்.

“என் அருமைத்தலைவி! உயிரினும் நாணம் சிறப்புடையதே. ஆயின் அந்நாணமும் கற்பைக் காக்க வேண்டுமிடத்தே அத்துணைச் சிறப்புடையது ஆகாது”. (தஞ்சை. கோ. 311) என்றாற் போன்ற தோழி கூற்று.

‘கற்பு நலன் உரைத்தல்’ என்னும் திருக்கோவையார்.(ந. அ. 182)

கற்புவழிப்பட்டவள் பரத்தையை ஏத்தல் -

{Entry: G07__789}

இல்லறம் நடத்தும் தலைவி தலைவனுடைய முன்னிலையில் பரத்தையைப் புகழ்வது அவள் உள்ளத்து ஊடலை வெளிப் படுத்துவதாம். பரத்தையைப் புகழவே தலைவனிடம் காத லின்மை காட்டி வழுவாயினும், தலைவி உள்ளத்தில் ஊட லொடு கூறுதலான் அமையும் என்பது. (தொ. பொ. 233 நச்.)

கற்பொடு புணர்ந்த கவ்வை -

{Entry: G07__790}

அஃதாவது தலைவி குடிமைப் பண்பான் கற்பின் ஆக்கத் துக்கண் ஊன்றி நிற்பதனைக் கண்டோர் தம்முளும், தலைவி தமரொடும் கூறும் உரைகளால் எழும் ஆரவாரம். (தொ. அகத். 43 ச. பால)

கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -

{Entry: G07__791}

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்றனுள் இரண்டா வது ‘கற்பொடு புணர்ந்த கவ்வை.’ அதன் வகைகள் ஐந்தாவன:

1. செவிலி புலம்பல் - தன் மகள் அவள் காதலனுடன் போய்விட்டதை அறிந்து செவிலி புலம்புதல்.

2. நற்றாய் புலம்பல் - அவ்வாறே நற்றாயும் புலம்புதல்.

3. (கவல்) மனை மருட்சி - நற்றாய் மனைக்கண் இருந்தவாறே மிக வருந்துதல்.

4. கண்டோர் இரக்கம் - தலைவியின் தோழியரும் தாயரும் வருந்துதலைக் கண்ட அயலார் இரங்கிக் கூறுதல்.

5. செவிலி பின் தேடிச் சேறல் - செவிலி தலைவியைத் தேடிக் கொண்டு சுரத்தில் போதல். (ந. அ. 183)

கனவில் கண்டு இரங்கல் -

{Entry: G07__792}

தலைவனைக் கனவில் கண்டு பின் கண் விழித்த தலைவி தனது வருத்தத்தைத் தோழிக்குக் கூறல்.

பரத்தை யிடத்தானாகிய தலைவனைத் தலைவி கனவில் தன்னிடம் வரக்கண்டு அவனைப் புலவியால் தழுவாது விடுத்துக் கண்விழித்துக் கனவிலும் அவனைத் தழுவும் வாய்ப் பினை இழந்த தன் அவல நிலைக்கு வருந்தி அதனைத் தோழியிடம் கூறல்.

இதனைத் திருக்கோவையார் ‘கனவிழந்து உரைத்தல்’ என்னும் (355)

இது ‘பரத்தையர் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதாகிய கூற்று. இஃது உணர்த்த உணரும் ஊடல். (இ. வி. 554 உரை)

கனவின் அரற்றல் (1) -

{Entry: G07__793}

கற்புக்காலத்து ஓதல் முதலிய செயல் கருதிப் பிரிந்த தலைவன் தான் மீண்டுவருவதாகக் கூறிய பருவம் வந்தும் தன்செயல் முற்றுப் பெறாதபோது, தலைவிநினைவோடு உறங்கி அவளைக் கனவில் கண்டு கண்விழித்து அவனைக் காணாமை யால் பெரிதும் வருந்திக் கூறுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

கனவின் அரற்றல் (2) -

{Entry: G07__794}

கனவில் தோன்றிய காதலன் மறைந்துவிட்டமையால் தலைவி புலம்புதல்.

உறக்கமின்றி வருந்திய தலைவி அயர்ச்சியால் சிறிதே கண்மூடிய சிறுபோதில் கனவுகண்டு, அதில் காளையுடன் கூடி மகிழ்ந்தாள்; விழிப்புற்றதும் தான் தனியே கிடப்பதை அறிந்ததும் அவள் துயரம் இரு மடங்காகியது; ஆகவே சினந்து, “கயவனே! நனவில் வந்து இன்பம் தாராத நீ கனவில் வந்து கூடி என்னை ஏன் துன்புறுத்துகின்றாய்?” என்பது போன்ற கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெண்பாற்கூற்றுக் கைக்கிளையில் ஒரு கிளவி. (பு. வெ. மா. 15-9)

கனவின் அரற்றலின் பக்கம் -

{Entry: G07__795}

கனவிலாவது காதலனைக் காணவேண்டுமென்று தலைவி விரும்புதலும் இத்துறையேயாம்.

“என் காதலன் வேற்றுமாதரொடு கூடினான் என்று கூறி அவனைச் சினந்து ஊட, அவன் என் ஊடல் தணிக்க விரும்பி என் காலிற் பணிய, இத்தகைய கனவு வருகவென வேண்டு கின்றேன்” என்பது போன்ற தலைவி கூற்று. (பு. வெ. மா. 15-10)

கனவு அவள் உரைத்தல் -

{Entry: G07__796}

தலைவனைக் காணும் பொழுதின் காணாப் பொழுது களவுக் காலத்து மிகுதியும் இருத்தலான் தலைவி வருந்தி அரிதின் துயிலெய்தியவழி அவனைக் கனவில் கண்டு விழித்து அவன் அன்மையின் வருந்தும் வருத்தத்தைத் தோழி தலைவனிடம் கூறுதல். (நெய்தல் நடையியல்) (வீ.சோ. 96 உரைமேற்.)

இது “கனவு நலிபுரைத்தல்’ என்றும் கூறப்படும்.

(ந. அ. 164, 166; இ. வி. 521, 523)

கனவு அழிவு -

{Entry: G07__797}

கனவு நலிவு உரைத்தல். (சாமி. 102)

கனவு இழந்துரைத்தல் -

{Entry: G07__798}

பரத்தையிற் பிரிந்த தலைவனுடைய கொடுமையை நினைத்து வாடிய தலைவி கனவில் அவனைக்கண்டு தழுவிக்கொள்ள நினைத்துக் கைகளை உயர்த்திய அளவில் கண் விழித்துக் கனவிலும் அவளைக் கூடும் வாய்ப்பு இழந்த துயரத்தைத் தோழியிடம் கூறுதல்.

இதனைக் ‘கனவில் கண்டு இரங்கல்’ என்று கூறுப.

(இ. வி. 554 உரை)

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 355)

கனவு நலிபு உரைத்தல் (1) -

{Entry: G07__799}

இரவுக்குறி வந்து போனபின் வாராத தலைவனைக் கனவில் கண்டு தான் துயருற்றதைத் தலைவி தோழிக்குக் கூறல். கனவு நலிவு - கனவினால் நலிந்தமை.

“தோழி! நேற்றிரவு தலைவனுடன் கூடி இன்புறுவதாகக் கனாக்கண்டு மகிழ்ந்தேன்; ஆயின் விழித்ததும் அது பொய் யானதால் பெரிதும் துன்பமுற்றேன்” (தஞ்சை. கோ. 215) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது களவியலில் ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இலக்கணவிளக்கத்தும் இக்கிளவி நிகழ்கிறது. (521) (ந. அ. 164)

கனவு நலிபு உரைத்தல் (2) -

{Entry: G07__800}

தலைவி கனவில் தலைவனுடன் கூடியதாகக் கண்டு பின் அவனைக் காணாது வருந்துதலைக் கூறுதல் (கனவு தலைவி யைத் துன்புறுத்தலைத் தோழி தலைவற்குக் கூறுதல்)

இது களவியலுள் வரைவுகடாதல் என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166, இ. வி. 523)

காட்டலாகாப் பொருள் -

{Entry: G07__801}

ஒப்பு உரு வெறுப்பு கற்பு ஏர் எழில் சாயல் நாண் மடன் நோய் வேட்கை நுகர்வு என்பனவும், ஒளி அளி காய்தல் அன்பு அழுக்காறு பொறை நிறை அறிவு முதலியனவும் நெஞ்சால் உணர்ந்து கொள்ளக்கூடிய பொருள்களே அன்றி, உலகியல் வழக்கால் ஒருவர்க்கொருவர் கட்புலனாகக் காட்டுதல் இயலாதவை. (தொ. பொ. 247 நச்.)

ஒப்பு - ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ என்றவழி, அவ்வொப் புமை மனஉணர்வான் உணர்வதன்றி மெய் வேறுபாடு பற்றிப் பொறியான் உணரலாகாது. ‘தந்தையை ஒப்பர் மக்கள்’ என்பதும் அது. ஒப்பு என்பது வடிவு ஒப்புமையொடு பண்பு ஒப்புமையும் இயைந்தது ஆதலின், அது காட்டலாகாப் பொருளாயிற்று. (நச்.)

உரு - அச்சம். அது நுதல் வியர்த்தல் போல்வனவற்றான் அன்றிப் பிழம்பு பற்றி உணரலாகாது. (நச்.)

வெறுப்பு - செறிவு. அஃது அடக்கம் குறித்து நின்றது. ‘அவர் அடக்கமுடையர்’ என்றவழி, அது மனத்தினான் உணரக் கிடந்தது. (243 இள.)

அது மக்கட்குணமாய் இசையாததொரு மன நிகழ்ச்சி யாதலின் பொறியான் உணரலாகாது (நச்.)

கற்பு - மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.(நச்.)

ஏர் - தளிரின்கண் தோன்றுவதொரு பொலிவு போல, எல்லா உறுப்பினும் ஒப்பக்கிடந்து கண்டார்க்கு இன்பம் தருவதொரு நிற வேறுபாடு. அஃது எல்லா வண்ணத்துக்கும் பொதுவாத லின் வண்ணம் அன்றாயிற்று. (இள.)

ஏர் - எழுச்சி; அஃது எழுகின்ற நிலைமையென எதிர்காலமே குறித்து நிற்கும். (நச்.)

எழில் - அழகு. அது மிக்கும் குறைந்தும் நீடியும் குறுகியும் நேராகியும் உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவ தோர் அழகு. ‘இவள் அழகியள்’ என்றவழி, அழகினைப் பிரித்துக் காட்டலாகாது மனத்தாலேயே உணரப்படும். (இள.)

எழிலாவது அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து முடிந்தது என்பதன்றி இன்னும் வளரும் என்பது போன்று காட்டுதல். (நச்.)

சாயல் - மென்மை. அது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை. (இள.)

ஐம்பொறியான் நுகரும் மென்மை. (நச்.)

‘மயில் சாயல் மகள் வேண்டிய’(பு. வெ. மா. 6-29), ‘சாயல் மார்பு நனியலைத் தன்றே’ (பதிற். 16 : 20) இவை ஒளியானும் ஊற்றானும் பிறந்த மென்மை உணர்த்தின. ‘அமிர்து அன்ன சாயல்’ (சீவக. 8) என்பது கட்கு இனிதாகிய மென்மை உணர்த்தவே, பல மென்மையும் அடங்கினவாம். ஆகவே, சாயல் என்பது மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம் பொறியான் நுகரும் மென்மையை அடக்கினது. (தொ. சொ. 325 நச்.)

நாண் - பெரியோர் ஒழுக்கத்துக்கு மாறாயின செய்யாமைக் குரிய மனப்பண்பு. (இள.)

செய்யத்தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். (நச்.)

மடன் - பெண்டிர்க்கு உள்ளதோர் இயல்பு. அஃது உற்று ணர்ந்து நோக்காது கேட்டவற்றால் உணரும் உணர்ச்சி. (இள.)

கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. (நச்.)

நோய் - துன்பம், “இவள் துன்பமுற்றாள்” என்றவழி, அஃது எத்தன்மையது என்றார்க்குக் காட்டலாகாது. (இள.)

நோய் - நோதல் (நச்.)

வேட்கை - யாதானும் ஒன்றைப் பெறல் வேண்டும் என்னும் மன நிகழ்ச்சி. “இவள் வேட்கையுடையாள்” என்றவழி, அஃது எத்தன்மைத்து என்றார்க்குக் காட்டலாகாது. (இள.)

பொருள்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அதனைப் பெறல் வேண்டும் என்றுமேன்மேல் நிகழும் ஆசை ‘அவா’ ஆகும்.

(தொ. எ. 288 நச்.)

நுகர்வு - இன்பத்துன்பங்களை நுகரும் நுகர்ச்சி (நச்.)

ஒளி - வெள்ளைமை (-அறிவு முதிராமை) யின்மை.

அளி - அன்புகாரணத்தால் தோன்றும் அருள்.

காய்தல் - வெகுளி

அன்பு - மனைவியர்கண்ணும், தாய்தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின்கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்.

அழுக்காறு - பிறர்செல்வம் முதலியவற்றைக் காண மனம் பொறாதிருத்தல்.

பொறை - பிறர் செய்த தீமையைப் பொறுத்தல் : ‘பொறை யெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’ (கலி. 133)

நிறை - மறை பிறர் அறியாமல் ஒழுகுதல்; ‘நிறையெனப்படு வது மறைபிறர் அறியாமை’ (கலி. 133)

அறிவு - நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவா றுணர்தல். (நச்.) ((247. நச்.)

காட்டலாகாப் பொருண்மையுடையவை -

{Entry: G07__802}

மனத்தாற் கொண்டுணர்வதன்றிக் கண்ணாற் காணுமாறு காட்டமுடியாத பொருண்மையுடையவை: ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர் (எழுச்சி), எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு - என்பன.

உரு என்றது, அரிமா முதலியவற்றைக் கண்டு அஞ்சும் அச்சம் போலாமல், அன்பு காரணமாக உள்ளத்தே தோன்றும் உட்கு என்னும் உணர்வு ஆம்.

வெறுப்பு என்றது, மறை பிறர் அறியாமல் அடக்கும் உள்ளத்தின் செறிவாம்.

கற்பு என்றது, ‘கொண்டானிற் சிறந்ததொரு தெய்வம் இல்லை’ என்னும் பூட்கையாம்.

எழில் என்றது, அவ்வப்பருவத்தே பருவ வனப்பினைச் சிறப்பித்து நிற்கும் பொலிவாம்.

நாண் என்றது, செய்யவும் பேசவும் எண்ணவும் தகாதன வற்றின்கண் சாராமல் தன்னைப் பேணிக் கொள்ளும் பண்பாம்.

நோய் என்றது, பிறர்க்குப் புலப்பட நில்லாத நெஞ்ச நலிவினை.

நுகர்ச்சி என்றது, உவத்தலும் முனிதலுமின்றிப் பருப்பொரு ளும் நுண்பொருளும் ஆகியவற்றைப் பொறிகளானும் மனத்தானும் துய்க்கும் உயிர்க்குணம் ஆம். (தொ. பொருளியல் 52 ச. பால.)

காட்சி -

{Entry: G07__803}

தலைவன் தலைவியைக் காண்பது. இஃது அகப்பொருட் கைக்கிளைப் பகுதிக்கண் முதற் செய்தி; கோவைகளின் முதலாவது கூற்று.

தோற்றம் நடை முதலியவற்றால் காண்போர் யாவரையும் கவரும் வனப்பு மிக்க தலைவியைத் தலைவன் கண்டு வியந்து நிற்றல். (ந. அ. 119)

இக்கிளவி புறப்பொருள் வெண்பாமாலையுள் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையின்கண்ணும் நிகழ்கிறது. 14-1.

காடுறை உலகம் -

{Entry: G07__804}

மரம் செடி கொடிகளும் புல் செறிந்த பகுதியும் மிக்க காட்டுப் பகுதி; மாயோனால் காக்கப்படுதற்குரிய முல்லை நிலம். உலகம் என்பது, இந்நிலவுலகம் முழுதையும் குறியாமல் அதன் ஒரு பகுதி நிலத்தையும் குறிக்கும். (தொ. பொ. 5 நச்; சீவக. 2606 நச்.)

காண்டல் -

{Entry: G07__805}

தலைவியொருத்தி தன்பால் காதல் கொள்ளாத தலைவன் ஒருவனைக் காமத்தொடு பார்த்தல்.

“நான் இவ்வழகனைக் கண்டு காதல் மிகக்கொண்டு, ஊரார்தம் ஏசுதலையும் பொருட்படுத்தாது இவன் அருகே சென்று நின்றகாலையும், இவன் என்னை ஏறிட்டும் பார்த்திலனே!” எனத் துயருடன் மொழியும் தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெண்பாற்கூற்றுக் கைக்கிளையில் ஒருகிளவி. (பு. வெ. மா. 15-1)

காண்டல் வலித்தல் -

{Entry: G07__806}

கைக்கிளைத் தலைவி காமம் மிக்குத் தலைவனைக் கண்டே ஆதல் வேண்டும் என்று உறுதி பூணுதல்.

“இரவில் உறங்காமல் என்னை வருத்தும் கண்கள் எவ்வாறே னும் என் காதலனைக் காணத்தான் வேண்டும் என என்னைத் தூண்டுகின்றன” என்பது போன்ற தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெண்பாற்கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கிளவி. (பு. வெ. மா. 15-6)

காணாநிலை உரைத்தல் -

{Entry: G07__807}

பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன் தலைவியிடம் பிரிவின்கண் தான் அவளை முகக்கண்ணால் காணாத துயரநிலையைக் கூறுதல்.

“என் உயிரனையாய்! நீ வருந்துமாறு நின்னை யான் அக்கொடுஞ்சுரத்தின்கண்ணும் என் மனத்தகத்தே பொதிந்து கொள்ளாத நேரமே இல்லை; ஆயினும் என் உள்ளத்துள் ளேயே இருந்த நீ மறந்து விட்டாயோ? என் ஊனுடம்பிற் குள்ளே நின்னை ஒளித்துக் கொண்டாயோ? நான் என் முகக்கண்களால் அப்போதெல்லாம் நின்னைக் காணமுடிந் திலதே! இப்பொழுது எங்கோ வானத்துநின்று வந்தாற்போல என் கண்முன் வந்து தோன்றுகிறாய்!” என்ற தலைவன் கூற்று.

இது ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 559)

காதல் கட்டுரைத்தல் -

{Entry: G07__808}

தலைவி தலைவனை மணந்து அவனது இல்லத்தில் குடும்பம் நடத்தி வருதலைக் கண்டுவந்த செவிலி நற்றாயிடம், “தலை வன் நம் மகளது இடையின் நொய்மையை உணர்ந்து அவள்மாட்டுக் காதலால் அவள் கூந்தலில் விடுமலர்களை அணிதலேயன்றி நெற்றியில் பொட்டிட்டாலும் அவளிடைக் குப் பாரம் மிகும் என்று திலகம் அணிதலையும் செய்யான். இஃது அவனது காதல் நிலை” என்று அவனது காதல் மிகுதியைக் குறித்தல்.

இது ‘மணம் சிறப்புரைத்தல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 303)

காதல் பரத்தை -

{Entry: G07__809}

தலைமகனால் காதலிக்கப்பட்ட பரத்தை.

தலைமகன் பெருஞ்செல்வன் ஆதலின் அவன் குரவர்கள் அவனுக்கு மெய்ப்போகம் ஒழிய ஏனைய இன்பங்கட்கு உரியராக வரையறுத்து வைத்த பரத்தையர்கள். பகற்பொழு தின் முதற்பத்து நாழிகைகளை அறத்தினும், அடுத்துப் பத்து நாழிகைகளையும் பொருளினும் கழித்து, கடையன பத்து நாழிகையும் தன் இருப்பிடம் வந்து அவன் தலைவியோ டிருக்கக் கருதும்போது, பரத்தையர் அவன் முன் வந்து தம் ஆடல் பாடல் முதலியவற்றால் அவனை மகிழ்வுறுத்த, அப்பரத்தையர் பயின்ற கலைகளின் நுட்பம் நோக்கித் தலைவன் அவர்கள்பால் அன்பு செலுத்துவான் ஆதலின், பரத்தையும் தலைமகனால் காதலிக்கப்பட்டாள் ஆதல் உண்டு என்பது. (இறை. அ. 40 உரை)

‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -

{Entry: G07__810}

கற்புக் காலத்துத் தலைவன் பிரிந்து சென்றவழி அவன் மீள்வதாகக் குறித்துச் சென்ற கார்காலம் தொடங்கிற்றாக, அவனது உண்மைப் பண்பிடத்துக் கொண்ட விருப்பத்தான், தான் முன்பு கார்காலம் வந்துவிட்டதாகக் கருதிய கருத்து நீங்க, “இப்பருவம் கார்காலம் அன்று” என்று தலைவி தானே தனக்குள் கூறிக்கொள்ளுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரைமேற்.)

“காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__811}

“எப்பொழுதும் நிகழ்வது இப்படித்தான்; அவர் அங்கே பிரிந்து செல்வார், உடனே என்மேனி இங்கே பசப்பு ஊர்ந்து விடும். இதனைத் தவிர்ப்பது யாங்கனம்?” என்ற தலைவி கூற்று.

“விளக்கினது சோர்ந்த தன்மை பார்த்து நெருங்கிவரும் இருளே போல, கொண்கனது முயக்கத்தினது மெலிவு பார்த்து இப்பசப்பு நெருங்கி வரும்” என்பதும் அது.

“காதலரைத் தழுவிக் கிடந்த நான் என்னையும் அறியாது சிறிது அசைந்து நகர்ந்தேன்; அதற்குள் பசலை என்னை அள்ளிக் கொள்வது போல வந்து பரவிவிட்டது! அங்ஙன மாக இப்பிரிவை யான் ஆற்றுமாறு என்னை?” என்பதும் அது. (குறள் 1185, 1186, 1187)

“காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__812}

“நம் மனத்துள்ள காமநோயை நம் கண்களே பறையறைந்து அறிவிக்கும்போது, ஊரார் அறியாதவாறு அதனை மறைத் தல் எவ்வாறு இயலும்?” என்ற தலைவி கூற்று. (குறள் 1180)

காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -

{Entry: G07__813}

தலைவன் பரத்தையிற் பிரிந்தொழுகும் நிலையைக் கண்டவர் இவனது இவ்வொழுக்கம் தலைவி ஊடுதலுக்குக் காரண மாகும் என்று கூறுதல்.

“தலைவன் உலா வந்தபோது பரத்தையர் அவனைக் கண்டு கைகுவித்து வணங்கத் தலைவன் அங்கு அவர்மாட்டு அருள் செய்து செய்த காரியங்கள் தலைவிக்குப் புலவியை உண்டாக் கும்” (அம்பிகா. 447) என்பது போன்ற கண்டோர் கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

இஃது ‘உணர்த்த உணரும் ஊடல்’ (ந. அ. 205)

காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -

{Entry: G07__814}

தலைவியை மணந்து கொள்ளும் விருப்புடன் தலைவன் பரிசப் பொருளாகப் பொன்னும் மணியும் தந்துள்ள செய் தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

‘நிதிவரவு கூறாநிற்றல்’ என்னும் திருக்கோவையார் (298)

இது வரைவியலுள் ‘வரைவு மலிதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174)

காதலி நற்றாய் உளமகிழ்ச்சி உள்ளல் -

{Entry: G07__815}

தலைவன் பரிசப் பொருளாகப் பொன்னும் மணியும் கொடுத் துள்ள செய்தியைக் கேட்டு மகிழ்ந்த தலைவி, தனக்கு வதுவை புணரும் நிலை வந்ததை அறிந்து தன்னுடைய நற்றாய் அடையவிருக்கும் மகிழ்ச்சியை நினைத்துப் பார்த்தல்.

இது வரைவியலுள் ‘வரைவு மலிதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174)

காதலின் களித்தல் -

{Entry: G07__816}

பெருந்திணைத் தலைவி மிகுந்த காமத்தொடு தலைவனைத் தழுவி மகிழ்தல்.

ஊடல் தீர்ந்து இருவரும் முயங்கி இன்புறும் வண்ணம் இரவைக் கழித்த தலைவி விரைவில் வைகறை வந்துற்றமை கண்டு இராப்பொழுதை முனிந்து கூறும் அளவிற்குக் காதலின் களித்தமை.

இது புறப்பொருள் வெண்பா மாலையுள், பெருந்திணைக் கண் பெண்பாற் கூற்றில் ஒருகிளவி. (பு. வெ. மா. 16-12)

காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -

{Entry: G07__817}

“வாளைமீனது கருக்கொண்ட பெண்மீன் உதிர்ந்த மாம்பழத் தைக் கவ்வித் தின்னும் குன்றூருக்குக் கிழக்கிலுள்ள தண்ணிய பெரிய கடல், தலைவி தன் அறியாமையால் புலக்கும் படியாகத் தலைவன்திறத்து யாங்கள் நடந்துகொள்வோமா யின், எம்மை வருத்துக!” என்று காதற்பரத்தை கூறல். (குறுந். 164)

காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -

{Entry: G07__818}

“வையையின் ஒருசார், கெண்டை போன்ற கண் மது நுகர்ச்சியாலும் புனலாடலாலும் புலவியாலும் நிறம் சிவப்ப வும், கூந்தலின் வீழும் பூக்களினின்று தேன் துளிப்பவும், நீர் விளையாடும் காதற்பரத்தையை நீ தழுவினாய். அதனால் நின் மார்பிற் பூசிய கத்தூரிக் குழம்பு அழிந்ததும் அழியாதது மாயிற்று. தலைவ! அத்தோற்றம் தேன் சோர்ந்து வீழும் மலை போன்றது” என்று கூறித் தோழி வாயில் மறுத்தல். (பரி. 16)

காதற்பாங்கன் -

{Entry: G07__819}

தலைவனுக்கு உற்ற நண்பன். ‘மன்னவன் றனக்கு, நீங்காக் காதற் பாங்க னாதலின்’ (மணி. 28 : 125) (L)

காதற்றோழி -

{Entry: G07__820}

தலைவியின் அன்புக்குரிய பாங்கி. (கோவை. 50 அவ.) (L)

காந்தருவம் -

{Entry: G07__821}

காந்தருவமணம். ‘யாழோர் கூட்டம்’ காண்க. கந்தருவர் தம்முள் நேர்ந்தவழிக் கூடித் தீர்ந்தவழி மறக்கும் மணம் ஆகிய இது, “பிரியாது உடன் வாழ்தல், இன்றேல் தரியாது உயிர் நீத்தல்’ என்னும் ஐந்திணைக் களவின் வேறுபட்டது. (பொ. 92. ந)

காப்பினுள் வேண்டும் ஒழுக்கம் -

{Entry: G07__822}

அன்பு அறம் இன்பம் இவற்றை நினைத்து வருந்தாமல், நாணத்தைக் கைவிட்டுத் தமருக்குப் பரிசப்பொருள் கொடுக்க ஏற்பாடு செய்யத் தலைவன் பொருள்வயின் பிரிதலைத் தலைவியும் தோழியும் கருதி மேற்கொள்ளும் ஒழுக்கம் தலைவியை இற்செறித்தலால் காவல் மிகுதிப்பட்டவழி நிகழ்தல். (தொ.பொ. 211 இள)

தலைவன்கண் நிகழும் அன்பும் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனும் தமக்கு இன்றியமையாத இன்பமும் நாணமும் அகன்ற ஒழுகலாறு காவல்மிகுதியான் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து உளதாம் ஆதலின், தோழி பரிசப் பொருள் பற்றித் தலைவனிடம் குறிப்பிடுதலைத் தலைவியும் உடன் படுவாள். (215 நச்.)

காப்புச் சிறைமிக்க கையறு கிளவி (1) -

{Entry: G07__823}

தலைவி தனது இல்லின் புறத்தே போக முடியாது காவல் மிக்க விடத்தே செயலற்றுப் பறவைகளிடமும் விலங்கு முதலியவற்றிடமும் புலம்பிக் கூறுதல்.

“சிறு வெள்ளாங்குருகே! கழனி நல்லூர் மகிழ்நராம் என் தலைவர்க்கு எனது இழை நெகிழும் துன்பத்தை இதுகாறும் சொல்லாதோய்! எம்மூர்க்கண் ஒண்துறை நீரைத் துழாவிச் சினைக்கெளிற்று மீன்களை ஆர்ந்து அவரூர்க்குப் பெயர்கி றாய். என்பால் அத்தகைய அன்புடையாய் ஆவாயோ? அன்றிப் பெருமறதிகொண்டு அகன்று விடுவாயோ?” (நற். 70) என்றாற்போன்ற தலைவி கூற்று.

‘மனைப்பட்டுக் கலங்கி’ என்றதனான், இக்கூற்றுத் தழுவிக் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 111 நச். உரை)

காப்புச் சிறை மிக்க கையறுகிளவி (2) -

{Entry: G07__824}

களவொழுக்கத்தில் தலைவன் இரவுக்குறியிடைத் தலைவி யைக் கூடிவந்த நாள்களில் சிலநாள், இரவுக்குறியிடைக் காமம் மிக்குத் தலைவனை எதிர்ப்பட விரும்பி நின்ற தலைவி, “தாய் துஞ்சாமை, காவலர் கடுகுதல் முதலான இடையீடு களை எல்லாம் நீந்தித் தலைவர் ஒருவாறு வந்தாராயினும் இந்நாய் இரவெல்லாம் தூங்காது குரைக்கின்றமையின், நாம் அவரை எதிர்ப்படுதல் அரிதாயிற்று” என்று காப்புச் சிறை மிக்கு வருந்துதல்.

இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 175)

காப்புடைத்தென்று மறுத்தல் -

{Entry: G07__825}

தலைவியின் இசைவைத் தோழி வாயிலாகப் பெறலாம் என்று தலைவன் கருதிக் கையுறையொடு கதிரவன் மறையும் வரை புனத்திடை நிற்பத் தோழி தலைவனிடம், “இத்தினைக் கொல்லை காவலுடையது; எம் தமையன்மார் இங்கு வரின் நினக்கு இடையூறு நேரும்; யாம் காலம் தாழ்த்தாது இல்லம் மீள்வோம்; நீ நாளை வருக” என்றாற்போலக் கூறிக் கையுறை ஏற்க மறுத்தல்.

இதனைப் ‘பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்’ என்றும் கூறுப.

(ந. அ. 144, இ. வி. 509-16)

இது திருக்கோவையாருள் ‘சேட்படை’ என்ற தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 98)

காப்பு வழுவுதலினாலாகிய குற்றம் காட்டல் -

{Entry: G07__826}

இரவுக்குறியில் காவல் மிகுதியைக் கடந்து தலைவன் வருதலால் நிகழும் குற்றங்களை எடுத்துக்காட்டித் தலைவி யும் தோழியும் அவனை இரவுக்குறி விலக்குதல்.

“தலைவ! நீ பகலில் தீர்த்த மாடுதற்கேற்ப ஈரத்தால் தண்ணி தாகிய ஆடையை உடையையாய், இரவில் களவொழுக்கத் திற்கேற்ற இயல்பினை உடையையாய், வரைந்து கோடலைத் தவிர்ந்து, தலைவியினுடைய குறியிடம் நோக்கி வருங்கால், ஒளிதிகழும் கொள்ளிக்கட்டை, கவண்கல், வில் இவற்றொடு தினை காப்போர் களிறு வந்ததாகக் கூறி ஆரவாரம் செய்வர்” (கலி. 52) என்றாற்போல்வன. (தொ. பொ. 210 நச்.)

காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

{Entry: G07__827}

தலைவனும் தலைவியும் பிரிவின்கண் காமநுகர்ச்சிக்கு இடையூறு வந்தவழி, மனஅறிவையும் பொறிஅறிவையும் வேறுபட நிறுத்தி, அஃறிணை இருபாற்கண்ணும் உயர் திணை முப்பாலும் உரியனவாக உவமம் செய்தற்குப் பொருந்தும்வழி அவ்வுவமத்தின்வழியே சார்த்திக் கூறுதல்.

எ-டு : ‘கடலே! அன்றிலே! வேய்ங்குழலே! நீங்கள் தனித்து வருந்தும் என்னைப் போன்றவர்களின் துயரம் கண்டு வருந்துகின்றீரோ! அல்லால், எம்மைப் போலக் காதல் செய்து அகன்றவரை நினைத்து வருந்துகின்றீரோ!” (கலி. 129) என்ற தலைவி கூற்றில், மனஅறிவையும் பொறிஅறிவையும் வேறுபட நிறுத்திக் கடல் முதலிய அஃறிணைப் பொருள் களிடம் உயர்திணைப் பொருள்களிடம் உரையாடு மாறு போல உரையாடி அவற்றைத் தமக்கு உவம மாகக் கொண்டுரைத்தமை உணரப்படும். (தொ. பொ. 196 நச்.)

உவமப்பெயரும் உவமிக்கப்படும் பெயரும் தொழில் பண்பு பயன் என்ற பொருள் பற்றி உவமம் பொருந்துமாறு கூறுதல்.

(194 இள)

எ-டு :

கொடிகளைத் தலைவியது இடைஎன்றும்

காந்தட் பூக்களைத் தலைவியினுடைய கைகள் என்றும்,

மாந்தளிரைத் தலைவிநிறம் என்றும்,

கருவிளம்பூக்களை அவள்கண்க ளென்றும்,

ஆண்மயிலை அவள்சாயல் என்றும்

தலைவன் கோடற்கண், உவமவாயில்படுத்தி அறியும் அறிவை யும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி, உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு. (தொ.பொ. 196 நச்.)

காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -

{Entry: G07__828}

தலைவனும் தலைவியும் பிரிவுக் காலத்தில் காமநுகர்ச்சிக்கு இடையூறு வந்தவழி, வார்த்தை சொல்லா இயல்பினை யுடைய புள்ளும் மாவும் துயரமுற்றனவாகக் கருதிக்கொண்டு அத்துயரத்தைத் தம்மைப் போலக் காமம் பற்றிய துயரமாகக் கற்பனைசெய்து கூறுதல்.

எ-டு :

“பாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்!...

... எம்போலக், காதல்செய்(து) அகன்றாரை உடையையோ நீ!”

“மன்றுஇரும் பெண்ணை மடல்சேர் அன்றில்!...

எம்போல, இன்துணைப் பிரிந்தாரை உடையையோநீ?”

“பனி இருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்!...

எம்போல, இனியசெய்து அகன்றாரை உடையையோ நீ’ (கலி. 129)

(தொ. பொ. 196 நச்.)

காம இடையீட்டில் கனவு உரித்தாதல் -

{Entry: G07__829}

தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவுத்துன்பத்தால் காமத்திற்கு இடையூறு வந்தவழி, அவர்கள் கனவு காண்டலும் உரித்து.

இங்ஙனமே உடன்போக்கில் தலைவி பிரிந்தவழித் தாய் கனவு காண்டலும் உரித்து.

தலைவி கனவு காண்டல் கலி. 128 ஆம் பாடலிலும்,

தலைவன் கனவு காண்டல் அகநா. 39 ஆம் பாடலிலும்,

செவிலி கனவு காண்டல் அகநா. 55 ஆம் பாடலிலும் காண்க.

(தொ.பொ. 197, 198 நச்.)

காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

{Entry: G07__830}

தலைவனும் தலைவியும் பிரிவினால் காமநுகர்ச்சிக்கு இடையூறு வந்தவழி, வார்த்தை சொல்லும் இயல்பின அல்லாத புள்ளும் மாவும் முதலியவற்றொடு கூடி அவை செய்ய இயலாத தொழில்களை அவற்றின்மேல் ஏற்றிக் கூறல். அவை நெஞ்சம், நாரை, வண்டு முதலியவற்றைத் தூது விடுதல் போல்வன. (தொ. பொ. 196 நச்.)

காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்

{Entry: G07__831}

தலைவனும் தலைவியும் பகற்குறி இரவுக்குறி என்பன பிழைக்கும்போதும், ஏனைய பிரிவுகளின்போதும் அவர்கள் தத்தம் நெஞ்சங்கள் தங்களைப் போல உணர்வுடையனவாகக் கற்பனை செய்து அவற்றுடன் கூறல்.

“நெஞ்சமே! நீ தலைவனை அணுகும்போது இக்கண்களை யும் உடன்கொண்டு செல்வாயாக. இவை தலைவனைக் காண்டல் விருப்பத்தால் என்னைத் துன்புறுத்துகின்றன” (குறள். 1244) என்றாற் போன்ற தலைவி கூற்றும்,

“பின்னே நின்று என்னைச் செலுத்தும் நெஞ்சமே! யான் போகக் கூடிய பாலைவழியில் தலைவியின் உருவெளித் தோற்றம் என்னை வருத்தும்போது உன் சொற்கள் என் துயரைப் போக்குமோ?” (அகநா. 3) என்றாற்போன்ற தலைவன் கூற்றும் கொள்க. (தொ. பொ. 196 நச்.)

காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -

{Entry: G07__832}

தலைவனுக்கும் தலைவிக்கும் பகற்குறி இரவுக்குறி பிழைக்கும் போதும், ஏனைய பிரிவுகளின்போதும் அவர்கள் தத்தம் நெஞ்சங்களுக்கு வடிவம் கற்பித்து அவை உறுப்புக்களை யுடையன போலக் கூறுதல்.

எ-டு : “தலைவியின் மென்தோள்களைப் பெறும் நசை யால் சென்ற என் நெஞ்சு தலைவியின் கூந்தலைத் தீண்டி அவளைத் தோய்ந்ததுவோ?” (அகநா. 9) என்றாற் போன்ற தலைவன் கூற்றும்,

“தோழி! என் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் கலந்து ஆராயாமல் தலைவன் இரவுக்குறிக்கு வந்து திரும்பும்போது இரவில் குழிகளில் அவன்கால்கள் தடுமாறாதபடி தாங்கு தற்கு அவனைப் பின்தொடர்ந்ததோ?” (அகநா. 128) என்றாற் போன்ற தலைவி கூற்றும் ஆம். (தொ. பொ. 196 நச்.)

காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -

{Entry: G07__833}

களவிலும் கற்பிலும் பிரிவினான் காமம் இடையீடுபட்ட காலத்துத் தலைவனும் தலைவியும் தத்தம் நெஞ்சங்களைத் தம் விருப்பத்தை மறுத்துரைப்பன போலக் கற்பனை செய்து கூறல்.

எ-டு : “என்னைப் பொருள் தேடச் செலுத்தும் நெஞ்சமே! பாலையில் இடைநிலத்தில் தலைவியின் உரு வெளித் தோற்றம் கண்டு வருந்தும் என்னை உன்சொற்கள் வருத்தம் தீரச் செய்யுமா?” (அகநா. 3) என்றாற் போன்ற தலைவன் கூற்றும்,

“தோழி! பரத்தையரைத் தோய்ந்துவந்த தலைவனிடம் ஊடுதல் வேண்டும் என்ற எண்ணமுடையேன் நான். ஆனால் கொள்கையில்லாத என் நெஞ்சு அவனைக் கூடுவேன் என்று கூறுகின்றது” (கலி. 67) என்றாற்போன்ற தலைவி கூற்றும் முறையே நெஞ்சினை மறுத்துரைப்பதற்கும், நெஞ்சு தம்மை மறுத்து உரைப்பதற்கும் ஆம். (தொ.பொ. 196 நச்.)

காம இடையீட்டில் பால்கெழு கிளவிக்குரியார் -

{Entry: G07__834}

காமநுகர்ச்சியின்கண் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையூறு வந்தவழி, அத்தாக்குதலான் வேறுபடுதல் தோழி செவிலி நற்றாய் பாங்கன் என்ற நால்வருக்கும் உரித்து. தலைவி தலைவன் இவரொடு முறையே பிரிவின்றி இயைந்த தோழி, பாங்கன் என்பவரை அவ்விடையூறு மிகுதியும் தாக்காது; அவர்கள் இடையூற்றைப் போக்கும் வழி நாடுபவர் ஆவர்.

பால்கெழு கிளவி - இலக்கணத்தின் பக்கச் சொல்; இலக் கணம் அன்று ஆயினும் இலக்கணம் போல அமைத்துக் கொள்ளுதல். (தொ. பொ. 199, 200. நச்.)

‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி’ -

{Entry: G07__835}

தலைவற்குக் காமம் மிகுகின்ற காலத்தே, தன்னையடுத்து வாழும் இயல்பினளாகிய தலைவியின் ஊடலைத் தணித்து விரைவில் தான் அவளைக் கூடுதல் வேண்டித் தனது பணி வினைப் புலப்படுத்தும் சொற்களை அவன் அவளிடம் கூறுதல்.

தலைவன் தன் தவறு சிறிதாயின இடத்துத் தலைவியெதிர் புலப்பான்; தன் தவறு பெரியதான விடத்து அவளெதிர் தாழ்ந்து கூறுவான்.

எ-டு :

“தலைவியே! நின் அருள் பெற்றாலன்றி உயிர்வாழ்தல் இல்லாத என்கண்

தவறு யாது உள்ளது?” (கலி. 88)

“கல் நெஞ்சினார்க்கு யாவர் சமாதானம் கூற இயலும்?” (கலி. 88)

“தலைவி! உன் ஆணையைக் கடப்பவர் யாவர்?” (கலி. 81)

என்றாற் போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 160)

“காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__836}

“தோழி! என் நிறையைத் தெப்பமாகக் கொண்டு காமமாகிய கடலை எவ்வளவு நீந்தியும் கரைகண்டு அமைதியுற முடியா மல் இரவு முழுதும் துன்புறுகின்றேன்” என்ற தலைவி கூற்று. (குறள் 1167)

காமக் கிழத்தி -

{Entry: G07__837}

தலைவன் இன்பம் துய்ப்பதற்கென்றே கொண்ட பரத்தை யரிற் சிறிது சிறப்புற்றவள்; தனக்கு முன்னவளாகவும் உயர்வுடையவளாகவும் திகழும் தலைவியைப் போற்றும் இயல்பினள்.

சேரிப்பரத்தையர் போலப் பலர்க்கும் உரியராதலின்றி ஒருவ னுக்கே உரிமை பூண்டு வரும் குலப்பரத்தையர் மகளிராய்க் காமம் காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப் பட்டவர் காமக் கிழத்தியர். (ந. அ. 113)

பிற செய்திகள் ‘காமக் கிழத்தியர்’ என்பதன்கண் காண்க.

காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -

{Entry: G07__838}

மனையகத்தோராகிய தலைவனும் தலைவியும் ஊடியும் உணர்த்தியும் செய்த வினையைக் காமக்கிழத்தி இகழ்ந்து கூறுதல்.

“கழனிக்கண் நின்ற மாமரத்து முற்றிப்பழுத்து உக்க தீம் பழத்தை வயலகத்து வாளைமீன் கவ்விக்கொண்டு நுகரும் ஊரன், எம்மில்லத்துப் பெருமிதமான சொற்களைச் சொல்லி, தனது இல்லத்தே கையும் காலும் ஒருவன் தூக்க அச்சாயையைத் தன்பால் கொண்டு நிற்கும் கண்ணாடிக்கண் உருவச்சாயை போலத் தன் புதல்வன்தாயாகிய தலைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான்!” (குறுந். 8) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 151 நச்.)

காமக்கிழத்தி எண்ணிய பண்ணைக்கண் கூறல் -

{Entry: G07__839}

தலைவற்கே தகும் என்று ஆராய்ந்த யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வன போல்வனவற்றுக்கண் தானும் விளையாடிக் காமக்கிழத்தி கூறுதல்.

“எமது கூந்தலில் ஆம்பல் முழுப்பூவைச் செருகி வெள்ளநீர் பெருகி வந்த யாற்றுத்துறைநீர்ஆடுதலை விரும்பி யாம் அது செய்யச் செல்லுவோம். தான் அதனை அஞ்சுவளாயின், பல்வேல் எழினி மாற்றாரைக் கடந்து நிரையைக் காத்தவாறு போலத் தலைவி தன் சுற்றத்தொடு தன் கொழுநன் மார் பினைக் காத்தலை முயன்று பார்ப்பாளாக!”(குறுந். 80) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 151 நச்.)

காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

{Entry: G07__840}

தன் காதல் சோர்வினானும் ஒப்புரவுடைமையானும் தாய் போலக் கழறிப் பொருத்தப்பட்ட மனைவியைத் தான் வெறுக் காது தலைவனொடு பொருத்தற்கண் காமக்கிழத்தி கூற்று. (தொ.பொ. 149 இள.)

தலைவன் புறத்தொழுக்கங்கண்டு தானும் அவனைக் கோபிக்க வேண்டிய காமக்கிழத்தி, தலைவன் தன்மேற் காதலை மறந்ததனான் அவன்பால் இல்லறத்தானுக்கு இருத்தல் வேண்டும் ஒப்புரவு இல்லாமையை நோக்கித் தலைவியைச் செவிலிபோல உடன்படுத்திக்கொண்டு, தலைவனைக் கழறித் தலைவி கோபத்தைத் தணித்து அவளை அவனொடு சேர்த்தற் கண் கூறுதல். (151 நச்.)

“முள்ளெயிற்றுத் தலைவி! வயலிற் பூத்த ஆம்பற் புதுப் பூவினைப் புனிற்றா தின்ற மிச்சிலை முதுபகடு உண்ணும் ஊரனாம் தலைவனொடு நெடுந்தொடர்பினை நீ விரும் பினையேல், கூறுவேன் : நீ பெருந்தகையுடையாய்; அவன் தான், ‘ஆழ்நீர்ப் பொய்கையை நள்ளிரவில் எய்தித் தண்கமழ் புதுமலரினை ஊதும் வண்டு போல்வான்; மகன் அல்லன்’ என்பர்” (நற். 290) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (151. நச்.)

காமக்கிழத்தி கூற்று

{Entry: G07__841}

“இனிப் பரத்தையரொடு நட்புக் கொள்ளல் ஆகாது” என்று காமக்கிழத்தி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! இன்னமும் நீ பரத்தையர்பால் நினக்கு இன்று வந்த புதிய காதலை வளர்த்துக் கொள்வையேல், ‘எனக்கு நீ தந்த காதல்நோயை மீளக்கொண்டு, நீ கவர்ந்து சென்ற என் அழகையும் நலத்தையும் எனக்கு மீளக்கொடு!’ என்று உன்னை வழிமறித்துத் தடுப்பேன்” என்ற கூற்று.

‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(அம்பிகா. 490)

காமக்கிழத்தி சேரிப்பரத்தையரொடு புலந்து கூறல் -

{Entry: G07__842}

“இரை விரும்பி எழுந்த வாளைப்போத்தினை உண்ணும்படி நாரை தான் அடிபெயர்த்து வைக்கும் ஒலியைக் கேட்கின் அஃது ஓடிவிடும் என்று அஞ்சி, மெல்ல மெல்லத் தளர்ந்து ஒதுங்கும் துறை கெழுமிய ஊரன் எமது சேரிக்கண் வருக; வந்தால், அவனை அவன்பெண்டிர் காணுமாறு தாரும் தானையும் பற்றி, என் தோளே கந்தாகக் கூந்தலிற் பிணித்து அவன் மார்பினைச் சிறைசெய்வேன்; செய்யேனாயின், தன்பால் வந்து இரந்தோர்க்கு ஈயாமல் ஈட்டியவனது பொருள் போல, யான் பாதுகாத்தோம்பிய நலன் பரந்து வெளிப்படாதாகி வருந்தக் கடவேனாக!”

(அகநா. 276) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றதான் கொள்ளப் பட்டதொரு கூற்று. (தொ. பொ. 151 நச்.)

காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -

{Entry: G07__843}

“நிறைவு பெறாத முயக்கத்தினையுடைய சேரிப்பரத்தை யொருத்தி வந்து தன் சிலம்பொலிப்பச் சினந்து நின்வாயிற் கதவத்தினை உதைத்தது பொருந்துமோ? அவ்வொலி கேட்டுக் காலம் தாழ்க்காமல் நீ எழுந்து சென்றதுதான் பொருந்துமோ? சினம் மாறாளாய் அவள் அப்பொழுதே நின் மார்பின் மாலையைப் பற்றி அறுத்ததும் பொருந் துமோ? ‘நான் தீயேன் அல்லேன்’ என்று கூறி நீ அவளுடைய சீறடிகளில் தாழ்ந்தமையும் பொருந்துமோதான்? கண்டேன் நின் மாயம்!” (கலி. 90) என்றாற்போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 151 நச்.)

இஃது இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றதால் கொள்ளப் பட்டதொரு கூற்று.

காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -

{Entry: G07__844}

“மகிழ்ந! ஆய்எயினன் மிஞிலியொடு பொருது தாக்கித் தான் சொல்லிய சொல் இகவாமைப் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்தான். நீயோ, தெறலருங்கடவுள் ஆகிய அங்கி அறிகரியாக என்னுடைய மெல்லிறைமுன்கை பற்றிச் சொல்லிய சொல்லினைக் கடந்து, பிறர்பால் நின் ஆர்வ நெஞ்சம் இடம்தோறும் சிறப்ப, நின் மார்பினை எனக்குத் தரமாட்டாமல் பிறன் ஆயினாய்! இனி யான் நின்னை விடுக்குவேன் அல்லன்; நின் மனையோள் நின்னைக் கவர்த லையும் அஞ்சுவேன். பலபடப் பேசிப் பயன் என்? வஞ்சி அன்ன எனது மாண் நலம் தந்து செல்” (அகநா. 396) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 151 நச்.)

இஃது இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றதாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று.

காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -

{Entry: G07__845}

“தோழி! நினக்கு ஒரு வியப்பான செய்தி கூறுவேன். கேள் : நம் தலைவன் தெய்வம் போன்ற தன் தலைவியின் பின்னே பணிவுடன் நின்று அவள் ஏவுவன எல்லாம் செய்து தன் மார்பில் அணிந்த அணியும் ஆரமும் முன்னே தொங்குமாறு தாழ்ந்து நடக்கிறான். இம்மண்ணிலும் அவ்விண்ணிலும் இன்னதொரு செய்தி நிகழ முடியும் என்று நான் கண்டது மில்லை கேட்டதுமில்லை” என்ற காமக்கிழத்தி கூற்று. (தினைமாலை. 135)

‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -

{Entry: G07__846}

காமக்கிழத்தியின் சிறப்பினைத் தலைவி பாராட்டுவாள் போலத் தலைவனைப் பழிக்கும் தீமையின் முடிந்த பொருளில் தலைவி கூறுதல். (தொ. பொ. 145 இள)

“நலம் பாராட்டிய காமக் கிழத்தியர் தன்னை (தலைவியை) விடச் சிறந்தாராகத் தலைவனால் நலம் பாராட்டப்பட்ட இற்பரத்தையர்மேல் கோபம் கொள்வர்” என்று தலைவி தலைவனிடம் கூறுதல். (நச். 147)

“நின்னால் தம்முடைய ஒண்ணுதல் பசப்பிக்கப்பட்டோர் தாது உண்ணும் வண்டினும் மிகப் பலர்! நீ இப்பொழுது விரும்பிக் கொண்டவள் இதனை அறியாளாதலின் மிக அறியாமை யுடையாள். தன்னொடு நிகராகமாட்டாத என்னோடு ஒப்பித்துக்கொண்டு அவள் பெரு நலம் செருக்குற்றுத் திகழ்கிறாள்!” (ஐங். 67) என்றாற் போன்ற தலைவி கூற்று. (நச்.)

காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -

{Entry: G07__847}

“தோழி! தண்துறை ஊரன் எம் கூந்தலைப் பற்றிக் கையி லணிந்த வெள்ளிய ஒளிவளையைக் கழற்றலுறவே, அதனால் விளைந்த கலாத்தாலே சினவிய முகத்தேமாய், ‘சினவாது மெல்லச் சென்று நின்மனைவிக்கு உரைப்பேன்’ என்று கூறிய அளவில், வயிரியர்தம் நலம் புரி முழவின் மார்ச்சனை அமைந்த கண்போல அவன் நடுங்கிய துன்புறு நிலையை நினைக்கும்தோறும் எனக்கு நகை வருகிறது!” (நற். 100) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 1.1 நச்.)

இஃது இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப் பட்டதொரு கூற்று. (தொ. பொ. 151. நச்.)

காமக்கிழத்தி பரத்தையைப் பழித்தல் -

{Entry: G07__848}

தலைவன் தன்னையும் பரத்தையையும் சமமாகக் கருது கின்றமையைக் காமக்கிழத்தி அறிந்து, மற்றவள் தனக்கு எவ்வகையானும் ஒப்பாகமாட்டாள் என்று பழித்துக் கூறுதல்.

“முண்டகம் என்ற பெயர் தாமரையையும் முள்ளிப்பூண்டை யும் குறிப்பதால், அவையிரண்டும் ஒன்றே எனக் கருதுவரோ, எம் தலைவர்? அதுபோலவே, இரும்பும் கனகமும் பொன் என்றே கூறப்படுவதால் அவையிரண்டனையும் நிகரொப்பன வாகக் கருதுவரோ? மீன் என்ற பெயரின் ஒற்றுமை கொண்டு கயலும் விண்மீனும் ஒன்றுதாம் எனக் கொள்வரோ? இவ்வாறு தலைவர் எண்ணுவராயின், அவருக்குப் பரத்தை யும் ஒரு பெண், யானும் ஒரு பெண் என்றுதான் தெரி கிறதோ!”

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 481)

காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -

{Entry: G07__849}

பலவகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறுதல். முறையாற் கொண்ட மனைவியர் பலரும் தலைவற்கு உளராதலின், அவர்மாட்டுப் பிறந்த புதல்வரும் பலராயினர் என்பது.

“தலைவன் வேண்டியவாறொழுகும் காலத்து விரும்பிய பரத்தமையது தொடக்கக்காலத்துள்ளாள் ஆகிய தாயி டத்தே நின் மகன் செல்ல, அவளும் இடப இலச்சினையை காணிக்கையாக அணிவித்து, ‘பெருமானே! நினது சிரிப் பினையுடைய முகத்தை யான் முத்தம் கோடற்குக் காட்டு’ என்று கூறினாள். அவளது கண்ணீர் முத்துவடம் அற்றுச் சோர்ந்த முத்துக்கள் போல இருந்தது.

“மற்றும், அவளுக்குப் பின் வந்த தாயிடம் நின் மகன் புகவே, அவளும் காம மயக்கமாகிய நோயினைத் தாங்கியவாறு அவனெதிர் வந்து அவனை முயங்கிக்கொண்டாள்; முத்தி னாள்; தலைவன் தன்னைக் கைவிட்டமையை நினைந்து, ‘மைந்த! நினக்கு யாம் எம்முறையேம் ஆவேம்?’ என்று ஆற்றாது கூறி, மகன் வனப்பு மேலும் மிகுமாறு தாங்கத் தகும் பிள்ளைப்பணிகளை ஆய்ந்து அணிந்தாள்.

“பின்னை நம்மோடு ஒப்பாளாகத் தலைமைப்பாடு கொண்டு நம்மைக் காய்ந்திருக்கும் புலக்கும் தகைமையுடையாளாகிய புதியவள் இல்லத்தே சிறுவன் புக்கான்”.

தோழி தலைவிக்குக் கூறுவதாக நிகழும் இம் மருதக்கலி (17) அடிகளில் முறையே ஆண்டு முதிர்ந்தாள் உள் நயந்து கூறியதும், இடைநிலைப்பருவத்தாள் கூறியதும், இளை யோள் கூறியதுமான செய்திகள் வந்தவாறு. (பொ. 151 நச்.)

காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -

{Entry: G07__850}

புல்லுதலைக் கலக்கும் கலவிக்கண் காமக்கிழத்தி கூறல்; முதிராத புலவியாதலான் புணர்ச்சிக்கு உடன்பட்டுப் பின்னும் தலைவன் புறத்தொழுக்கம் பற்றி இழித்துக் கூறல். (தொ. பொ. 149 இள.)

தலைவன் காமக்கிழத்தியரிடத்தும் தலைவியிடத்தும் இடையிட்டுத் தொடர்பு கொண்டிருப்பதால், தலைவி புலவி கொண்டவிடத்துக் காமக்கிழத்தி கூறுதல்; (இனி இரட்டுற மொழிதலான்) தலைவன் பரத்தையரிடத்து வெளிப்படை யாகத் தொடர்பு கொள்ளாது அவர்களைக் கூடுதலை மறைத்து ஒழுகுதலான் காமக்கிழத்தியர் புலந்து கூறுதல். (151 நச்.)

“தண்துறை ஊரன் எம்சேரி ஒரு நாள் வந்தானாக, அகுதை களிற்றொடு நன்கலன் பல ஈயும் நாளோலக்கத்தில் புகுதரும் பொருநர்தம் பறைபோல, இடைவிடாது அவன் பெண்டிர் எம்மைக் கழறி உரைப்பர் என்ப; ஆதிமந்தி பேதுற்று வருந்து மாறு ஆட்டனத்தியைக் காவிரி கொண்டாற்போல, யானும் வஞ்சினம் கூறி அவனைக் கையாற் பற்றிக் கோடலை இனிக் கருதியுள்ளேன்; இயன்றால் அவன்மனைவி அதனைத் தடுத்துப்பார்ப்பாளாக!” (அகநா. 78) (பெருமிதம் கூறலின், இஃது இளம்பருவத்தாள் கூற்றாயிற்று.) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று.

‘கண்டேன் நின்மாயம்!’ (கலி. 90) என்பது காமக்கிழத்தி புலந்து கூறுவது.

காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -

{Entry: G07__851}

தலைவற்கு வேறொரு தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டால் தனக்குப் புலப்படவந்த, அம் மனைவியாதற்குரியவள் தைந்நீராடலும் ஆறாடலும் முதலிய தொழில்களைச் செய்யுமிடத்தே, “இவளது தோற்றப்பொலிவால் தலைவன் இவளைக் கடிதின் வரைவான்” எனக் கருதிப் பொறுத்தலின்றி வருத்தம் பெரு கிய நிலைக்கண் காமக்கிழத்தி கூறுதல்.

“தோழி! கிள்ளியினது வெண்ணியாறு சூழ்ந்த வயலிடைத் தோன்றும் அழகிய ஆம்பல்தழையைத் தனது அழகிய இடைக்கண் அணிபெற உடுத்து இவள் விழாவிற்குச் செல்ல விரும்புவள். இவ்வழகியாளை நம் யாணர்ஊரன் காணுவா னாயின், இவளை அவன் வரைந்துகொள்ளாமை என்பது இயலாது. அவ்வாறு அவன் அவளை வரைந்து கொள்ளின் அவனுடைய இல்லுறை மகளிர் பலரும் தம் மூங்கில் அன்ன தோள்கள் மெலியப்பெறுவர்” (நற். 390) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (தொ. பொ. 151 நச்.)

காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

{Entry: G07__852}

தான் தன்னை மனைவிக்குச் சமமாகக் கருதுதலின், தன்னை ஒத்த ஏனைய மகளிரைவிடத் தான் சிறப்பினளாகக் காமக் கிழத்தி குறிப்பிடுதல். (தொ. பொ. 151 நச்.)

தான் மனைவியை ஒத்தலால் தன்போல்வார் தலைவனுக்கு மிகையென்று கைவிடப்பட்டவராகக் காமக்கிழத்தி குறித்துப் பேசுதல். (149 இள.)

“தீம்பெரும் பொய்கைத் துறைகேழூரனுடைய தேர் கொண்டு வர வந்த பரத்தையர் எனது அழகினை ஏசுகின்றனர் என்ப. அச்செயல், பாகன் நெடிது உயிர் வாழ்தல் கொல்களிற்றி யானை அவனைக் கொல்லாமல் அருள் செய்தலால் ஆவது போலும். அப்பெண்டிரும் பிறரும் சிறப்புடையார் போலச் செல்லுதல், துணங்கைக் கூத்தாடும் விழாக் காலத்தே யான் அவ்விடத்து வாராமையால் ஆயதே. யான் அவண் வரின், ஞாயிற்றின் செலவை நோக்கிச் சுழலும் நெருஞ்சிப்பூப் போல, அவர்களை யான் செல்வுழிச் செல்லும் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக்கொள்வேன். அங்ஙனம் செய் யேனாயின், என் முன்கையில் திரண்ட வளைகள் உடைவன வாகுக!” (அகநா. 336) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (நச்.)

“நீ தண்டுறை ஊரன் பெண்டு ஆவாயாயின், நின் நெஞ் சத்துக்கண் அவனை நினைந்து தனித்து வருந்தும் வருத்தம் பலவாகுக! நெடுந்தேர் வள்ளல் அஞ்சி யென்பான் பாடிவிட் டிருந்த அஞ்சத் தக்க முனையிடத்தே அமைந்த ஊர்மக்கள் இரவில் துஞ்சாமை போல, நீயும் அவன் நினைவால் துயிலாத நாள் பலவாகுக!” (குறுந். 91) என்றாற் போன்ற காமக்கிழத்தியது கூற்று. (இள.)

காமக்கிழத்தியர் -

{Entry: G07__853}

காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர்கள் தாம் ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும், வரையப்பட்டாரும் என மூவகைப்படுவர்.

ஒத்த கிழத்தியர், முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொரு ளாகப் பின்னும் தலைவன் தன் குலத்தில் வரையப்பட்டவர்.

இழிந்த கிழத்தியர், அந்தணர்க்கு அரசகுலத்திலும், வணிக குலத்திலும் வேளாண் குலத்திலும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனை இரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டா ரும் வணிகர்க்கு வேளாண் குலத்தில் கொடுக்கப்பட்டாரும் ஆகி வரையப்பட்டவர்.

செல்வர் கணிகைக் குலத்தில் உள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்துகொள்வர். கன்னியில் வரையப்பட்டா ரும் அதன்பின் வரையப்பட்டாரும் என அம்மகளிர் இரு வகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையான் காமக் கிழத்தியர்பாற் பட்டனர்.

ஆடலும் பாடலும் வல்லராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர்மாட்டும் தங்காத பரத்தையர், இத்தகு காமக்கிழத்தியரின் வேறாவார்.

(தொ. பொ. 149 இள.)

இனி, தொ. பொ. 151 நச்சினார்க்கினியரது உரைக்கருத்து வருமாறு:

காமக்கிழத்தியராவார் இல்லறம் நடத்தும் முறையான வாழ்க்கை உடையவராகிக் காமக்கிழமை பூண்டு தலைவ னோடு இல்லறம் நடத்தும் பரத்தையர். இவர்கள்தாம் தலைமகனது இளமைப் பருவத்தில் கூடி முதிர்ந்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், அவனொடு கூட்டம் நிகழ்த் தும் இளமைப் பருவத்தோரும், காமம் சாலா இளமை யோரும் எனப் பலராவர். இவர்கள் இல்லறம் கண்ணிய காமக்கிழத்தியர். இவரையன்றி, இல்லறம் கண்ணாத காமக் கிழத்தியரும் உளர். அவ ர்கள் கூத்தும் பாட்டும் உடையராகி வரும் சேரிப்பரத்தையரும், குலத்தின்கண் இழிந்தோரும், அடியரும், வினைவல பாங்கினரும், பிறரும் ஆவர்.

இனிக் காமக்கிழத்தியரை, பார்ப்பாருக்குப் பார்ப்பனியை ஒழிந்த ஏனைய முக்குலத்தினும் வரையப்பட்ட மகளிரும், ஏனையோர்க்குத் தம் குலத்தவர் அல்லாத மனைவியரும், பரத்தையரும் என்று கூறுதல் சாலாது. சிறப்புடைய மனைவியரொடு பரத்தையரைச் சேர்த்துக் கூறுதல் மயங்கக் கூறலாம். சான்றோர் பலரும் காமக்கிழத்தியரைப் பரத்தை யராகவே கொண்டு செய்யுள் இயற்றியுள்ளனர். ஆதலின், பரத்தையருள் தலைவனான் மணக்கப்பட்டவரே காமக்கிழத் தியர் எனவும், வேற்றுக் குலங்களில் மணக்கப்பட்டவர் மனைவியர் எனவும் கோடலே தக்கது.

காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் -

{Entry: G07__854}

பரத்தையிற் பிரிவுக்குப் பின் வந்த தலைவன் தனக்குப் பரத்தையர் யாரையும் தெரியாது என்றுரைப்பவே, அவ னுடைய காமக்கிழத்தியைத் தான் கண்டதாகத் தலைவி கூறுதல்.

“நுங்கட்கு யாரையும் தெரியாது. ஆயின், தெருவில் விளையாடிய நம்புதல்வனை ஒருத்தி கண்டாள்; அவன் சாயல் நும்மை ஒத்திருந்தபடி கண்டு அவள் வியந்து அவனை எடுத்துத் தழுவுங்காலை, நான் அவ்விடத்துச் சென்று நின்றேன். அவள் நாணத்தொடு காற்பெருவிரலால் நிலம் கிளைத்தவாறு தயங்கி நிற்பவே, அவள்நிலை கண்டு இரங்கி, ‘நீயும் இவற்குத் தாயே. நாணுதல் எற்றுக்கு?’ என வினவி, நம் புதல்வனைத் தழுவியெடுத்து மனை மீண்டேன்” (அகநா. 16) என்பது போன்ற தலைவி கூற்று.

‘பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்’ என்னும் திருக்கோவையார் (399)

இது கற்பியலுள் ‘பரத்தையிற்பிரிவு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

காமக்கிழத்தி வாயில் வேண்டல் -

{Entry: G07__855}

தலைவன்மாட்டுப் புலந்திருந்த தலைவியின் ஊடல் தணியு மாறு காமக்கிழத்தி தூதாக வந்து வேண்டுதல்.

“தலைவி! தலைவன் வெறுக்கத்தக்க செயல்கள் புரியினும் நீ பொறுக்கும் இயல்பினையாதல் வேண்டும். நீ எம்போன்ற காமக்கிழத்தி அல்லை. புதல்வற் பயந்த குலமகளாகிய நீ கண்கள் சிவப்ப வெகுளுதல் தக்கதன்று காண்!” (அம்பிகா. 489) என்று காமக்கிழத்தி வாயிலாக வந்து தலைவற்குப் பரிந்து வேண்டல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. உரையிற் கொள்ளப்பட்டது. இஃது ‘உணர்த்த உணரா ஊடல்’ பகுதியது. (இ. வி. 555 உரை)

காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -

{Entry: G07__856}

தலைவன் தன்னைப் பிரிந்து பல நாள்கள் திரும்பி வாராத நிலையில், தலைவி அவன் தங்கியிருக்கக் கூடிய இடங்களை நோக்கிச் சென்று கூறுதல்.

“வீரர் குழுமியுள்ள சேரிவிழாவிலும், மகளிர் தழுவியாடு கின்ற துணங்கைக் கூத்தாட்டுக் களத்திலும், மாண்தக்க என் தலைவனை யாண்டும் காணேன். யான் ஓர் ஆடுகளமகளே; என் சங்கவளைகளை நெகிழ்வித்த அத்தோன்றலும் ஓர் ஆடுகளமகனே” (குறுந். 31) என்றாற்போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 113 நச்.)

காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -

{Entry: G07__857}

தலைவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்லப் போவதாகத் தலைவி தோழியிடம் கூறுதல்.

“தோழி! வான்தோய் மாமலை நாடனாம் தலைவனை நோக்கி, ‘நீ சான்றோய் அல்லை’ என்று சொல்லிவரற்கு, நம் அன்னையது காவலை நீங்கி மனையின் பெருங்கடையினைக் கடந்து பொதுவிடம் எய்திப் பகற்போதில் பலரும் காணு மாறு நம் நாணினைத் துறந்து அகன்ற வயற்படப்பையினை யுடைய அவனது ஊர் உள்வழி வினவி ஆண்டுப் புறப்பட எழுவாயாக!” (நற். 365) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 113)

காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -

{Entry: G07__858}

தலைவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்லப் போவதாகத் தலைவி தன் நெஞ்சிடம் கூறுதல்.

“நெஞ்சே! வாழி! சங்க வளைகள் நெகிழவும் நாளும் பெருமையிலவாய்க் கலங்கியழும் கண்களொடு தனித்திருப்ப வும் இம்மனைக்கண் உறைதலை யாம் தவிர்வோம். எழுக! பல்வேற்கட்டி நன்னாட்டினது அப்பால் வேற்றுமொழி வழங்கும் தேயத்தின்கண் வைகுவராயினும், அவருடைய நட்பினை வழிபடுதலை எண்ணி எழுவாயாக!” (குறுந். 11) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 113 நச்.)

காமக்கூட்டம் -

{Entry: G07__859}

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய காமப்புணர்ச்சி.

காமத்தால் புணரும் புணர்ச்சியாதலின் ‘காமக்கூட்டம்’ எனப்பட்டது. புலவரால் கூறப்பட்ட இயல்பினால் புணர்ந்தார் ஆகலானும் கந்தருவ வழக்கத்தோடு ஒத்த இயல்பினான் புணர்ந்தார் ஆகலானும் இதனை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்றும் கூறுப.

தலைவனும் தலைவியும் சூழ்தலும் முயற்சியும் இன்றி விதியாகிய தெய்வத்தின் செயலால் கூடினார் ஆகலின் இதனைத் ‘தெய்வப் புணர்ச்சி’ என்றும் கூறுப. தலைவன் நலம் தலைவியாலும் தலைவிநலன் தலைவனாலும் முதன் முதல் நுகரப்பட்ட கூட்டம் இதுவாதலின் இதனை ‘முன்னுறு புணர்ச்சி’ என்றும் கூறுப. இக் கூட்டத்திற்கு இயற்கையும் தெய்வமும் முன் உறவும் பொதுக் காரணம்; காமம் சிறப்புக் காரணம்; ஆதலின் தலைவனும் தலைவியும் முதன்முதல் தனித்துக் கண்ணுற்றுக் கூடும் கூட்டம் காமக்கூட்டம் எனப்பட்டது. (இறை. அ. 2 உரை)

முன்னுறு புணர்ச்சி - காதல் பெருக்கால் கூடுதல்; முன்னுதல் - பெருகல். (தொ. பொ. 120 குழ.)

“காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: G07__860}

“நானோ இந்நோயைப் பிறர் அறிவரே என நாணி மறைக் கின்றேன்; இதுவோ, தண்ணீர் இறைப்பார்க்கு ஊற்று நீர் மிகுவதைப் போலப் பெருகுகின்றதே!” என்று தலைவி தனது ஆற்ற இயலாத நிலையைத் தோழிக்குக் கூறுதல். (குறள் 1161)

காமப்புணர்ச்சி -

{Entry: G07__861}

‘காமக்கூட்டம்’ காண்க.

காமம் -

{Entry: G07__862}

விருப்பம்; அஃதாவது ஒருகாலத்து ஒருபொருளான் ஐம்பொறியும் நுகர்தற் சிறப்புடையதாகிய இன்பமே காமம் எனப்படும். (காமத்துப்பால். பரிமே. உரை.)

காமம் சாலா இளமையோள்

{Entry: G07__863}

1. பெண்மைப் பருவக் குறிகளாகிய தோளும் மார்பும் பணைத்தல், கண்பிறழ்தல் முதலியன தோன்றியும் பூத்தற் குரிய ஆண்டுகள் நிரம்பியும் பூப்பு எய்தாமல் இருப்பவள்,

2. பூப்பு எய்திய பின்னரும் காம உணர்வு தோன்றாமல் இருப்பவள்,

3. பூப்பு எய்துதற்குரிய ஆண்டுகள் நிரம்பாத நிலையிலும் பூப்பு எய்தியவளைப் போல உடல் வனப்புக் கொண் டிருப்பவள் ஆகியோர். (தொ. பொ. 36 குழ.)

“காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

{Entry: G07__864}

தீயானது தன்னைத் தொட்டால் சுடுமாயின் சுடுமல்லது, காமநோய் போல விட்டகன்றால் சுடல் வல்லதோ? அங்ஙனம் தீயினும் கொடிய இக்காமத்தினை நான் எங்ஙனம் ஆற்றுவேன்?” என்ற தலைவி கூற்று. (குறள் 1159)

காமம் நன்றாதல் -

{Entry: G07__865}

காமம் என்பது விருப்பம். அவற்றுள் ஒருகாலத்து ஒரு பொருளான் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடைத்தாய மகளிர் இன்பம் சிறப்பாகக் காமம் எனப்பட்டது.

சுவர்க்கத்தின்கண் சென்று போகம் துய்ப்பல் எனவும், உத்தர குருவின்கண் சென்று போகம் துய்ப்பல் எனவும், நன்ஞானம் கற்று வீடு பெறுவல் என்றும் எழும் காமம் போல, மேன் மக்களானும் புகழப்பட்டு மறுமைக்கு உறுதி பயக்கு மாதலின் காதற்காமம் நன்றாயிற்று. (இறை. அ. 2 உரை)

காமம் மிக்க கழிபடர் கிளவி (1) -

{Entry: G07__866}

வேட்கை மிகுந்து தலைவனைக் கூட விரும்பும் தலைவி, பெரிதும் துயருற்றுத் தலைவனை நினைந்துநினைந்து உருகிக் கடல் கானல் பொழில் விலங்கு பறவை முதலியவற்றைப் பார்த்துக் கூறும் கூற்றுக்கள்.

தனக்குத் தலைவனிடம் காமம் மிகுதலால் விளைந்த நினைவால் உண்டான துன்பத்தைத் தலைவி கூறுதல்.

இது களவியலுள் ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

காமம் மிக்க கழிபடர் கிளவி (2) -

{Entry: G07__867}

“சிறிய பெட்டைப் புறாவே! நீ நின் சேவலோடு ஊடல் கொள்ளல் வேண்டா என்னையெனில், என் நிலைமையைப் பார் : என் காதலர் என்பால் மிக்க அன்பினராகவே யிருந்தார்; ஆயின் இன்று வன்னெஞ்சினர் ஆயினர். யானோ, அவர் தேரொடு வந்து பிரிந்து சென்ற வழியையே பார்த்து ஏங்கி மெய் முழுதும் பசலை பாய வருந்துகின்றேன் ஆதலின் நீயும் ஊடி நின் சேவலைப் பிரிந்து என்போலத் துயர் உற வேண்டா”.

இப்பொருளமைந்த பாடல் நிலத்தால் பாலை; ஒழுக்கத்தால் நெய்தல். புறா, பாலைநிலக் கருப்பொருள்; பிரிதல், பாலையது உரிப்பொருள். இவ்வகையால் இது பாலை. பிரிவு நீட்டிக்கவே, தலைவி காமம் மிக்கு இரங்கல் செய்தியான மையால், நெய்தல் உரிப்பொருள் பாலைக்கண் வந்து மயங்கியவாறு. (திணைமாலை. 74)

காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -

{Entry: G07__868}

“என் தலைவன் நாட்டினின்றும் வரும் கரையை மீறிய வெள்ளத்தையுடைய கான்யாறே! அணிகள் கழலத் தோள்கள் மெலிய, நினைவு மிக மேனி பசலை பாய, யாம் தடுமாற எமக்குத் தலைவன் அருளவில்லை. உங்கள் தலைவன் எனக்குச் செய்த கொடுமையை நினைத்துக் கண்ணீர் (கள்நீர்) பெருகப் பல மலர்களையும் போர்த்துக் கொண்டு நாணத்தால் மிகவும் ஒடுங்கி மறைந்து செல்கிறாய். வேங்கைமர நிழலில் நின்செலவினை நிறுத்தி, என் தந்தையது பல பூக்களையுடைய காட்டில் அமர்ந்து இன்று இங்குத் தங்கி, நாளை மீண்டும் நின் செலவினைத் தொடர்வதால், நின்காரியம் ஏதேனும் கெடுவதுண்டோ?” என்று தலைவி காட்டாற்றோடு புலந்து கூறுதல். (அகநா. 398)

காமம் மிகவு உரைத்தல் -

{Entry: G07__869}

தலைவியது வேட்கைநோய் மிகுந்து அவளை வருத்துதலைத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! பலாமரத்தின் சிறு கிளையில் பெரும்பழம் தொங்கு வது போல, இவளது சிறிய உயிரைப் பெரிய காமம் பற்றிக் கொண்டிருக்கிறது. இவளுக்கு யாது நிகழுமோ? யார் அறிவார்?” (குறுந். 18) என்றாற்போலத் தோழி கூறித் தலை வனை வரைவு கடாதல்.

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

“காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

{Entry: G07__870}

“என்னுடைய நாணும் நல்லாண்மையும் ஆகின்ற சிறந்த ஏமப்புனைகளைக் காமமாகிய கடுகி வரலுடைய வெள்ளம் அடித்துக்கொண்டு போகாநின்றது!” என்று தான் நாணும் ஆண்மையும் நீக்கியதைத் தலைவன் தோழிக்குக் கூறல். (குறள்.1134)

கார்கண்டு உரைத்தல் -

{Entry: G07__871}

கற்புக்காலத்தில் ஓதல் முதலிய செயல்கருதித் தன்னைப் பிரிந்து சென்ற தலைவன் தான் மீண்டு வருவதாகக் கூறிய கார்காலம் வந்த அளவில், தலைவி கார்காலத்து மேகங்களை நோக்கிக் கூறுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரைமேற்.)

கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

{Entry: G07__872}

“மகளிரும் மைந்தரும் வையைநீர் விளையாட்டயர, துகிலின் கண் சேர்ந்த பூத்தொழில் போல அவர்களுடைய அணிக ளினின்று உதிர்ந்த மணிகள் நீரில் நிறைந்தன. அவர்கள் புனலாடிய வார்த்தை மூதூர்க்கண் நிறைந்தது. அவர்களது கவின் அவ்வார்த்தையினும் மிக்கது; அக்கவின் மிக்குப் பிற கவினொடு மாறுகொண்டது. அம்மாந்தர்தம் மார்பினின்று அழிந்து வீழ்ந்த தகரச்சாந்தால் மணல் சேறுபட்டது; அவர்தம் துகில் வார்ந்த புனலால் கரை கார்காலத்தன்மை பெற்றது. இப்புனல் விழாவால் வானுலகம் சிறப்பொழிந்தது வையை! நின்னால் இம்மூதூர் மக்கட்கு இன்பமும் கவினும் நன்பல உளவாயின. அதனால் இம்மலர்தலையுலகம் நின் புகழை அடக்கமாட்டாது. இவ்வகைப்பட்ட இன்பச் சிறப்புக் களுடைய நின்னையும் நினைத்திலரே தலைவர்!” என்ற கூற்று. (பரிபா. 12)

“காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: G07__873}

“என் காதலர்பால் ஒரு தவறும் இல்லை; ஆயினும் யான் அவரிடம் ஊடல் கொள்வது, அவர்தரும் இன்பத்திற்காகவே தான். அவ்வளவற்ற இன்பத்தை மற்றவரும் எய்திவிடுவரோ என்ற பொறாமையே யான் ஊடுதற்குக் காரணம்!” என்று தலைவி கூறுதல். (குறள் 1321)

காரிகை கடத்தல் -

{Entry: G07__874}

பெண்ணுக்குரிய நாணம் மடம் அச்சம் இவற்றை நீக்கித் தலை வனது இருப்பிடத்துக்குத் தலைவி செல்லுதலைத் துணித லும், தலைவற்குத் தூதுவிடத் துணிதலும் போல்வன.

இத்தலைவி நிலையின் காரணம் அவளுள்ளத்தை உள்ள வாறு உணர்ந்தார்க்கன்றி ஏனையார்க்குப் புலனாகாத நிலையிற்றாதலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண் டனுள் ஒன்று. (வீரசோ. 96 உரைமேற்.)

காரும் மாலையும் முல்லைக்கு உரிமை -

{Entry: G07__875}

பெரும்பொழுதினுள் கார்காலமும், சிறுபொழுதினுள் மாலை நேரமும் ‘இருத்தல்’ என்னும் உரிப்பொருளையுடைய முல்லைத் திணைக்கு உரியவாதல்.

பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறலே முல்லையாகும். வினையின் பிரிந்து மீள்வோன் விரை பரித்தேர் ஊர்ந்து பாசறையினின்றும் மாலைக்காலத்து ஊர்வயின் வரூஉம் காலம் ஆவணியும் புரட்டாசியும் ஆதலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடைநிகரன ஆகி, ஏவல் செய்து வரும் இளையருக்கு நீரும் நிழலும் பயப்பன; உணவு மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களிசிறந்து மாவும் புள்ளும் துணையோடு இன்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகும்; புல்லைமேய்ந்து கொல்லேற்றோடேபுனிற்றா கன்றை நினைந்து மன்றில் புகும்; தீங்குழல் இசைக்கும்; பந்தரில் படர்ந்த முல்லை வந்து மணம் பரவும். இவற்றால், வருகின்ற தலைவற்கும் இருக்கின்ற தலைவிக்கும் காமக்குறிப்பு அம்மாலைக்காலத்தில் சிறக்கும். ஆதலின், முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாயின. (தொ.பொ.6. நச்.)

காலநிகழ்வு உரைத்தல் -

{Entry: G07__876}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது ஆற்றாமையைத் தலைவி போக்காது ஊடல் நீட்டித்து வாயில் நேராதிருப்ப, அப்பொழுது அகம்புகல் மரபின் வாயிலவர் “நம்தலைவர் வண்டுகள் குடைந்து ஒலிக்கும் மல்லிகைப் பூக்களானும், அந்தியில் தோன்றும் பிறையானும், இவ்விரவுப் பொழுதானும் நின்பிரிவு தாங்காது ஆற்றாது வந்திருக்கும் இந் நேரத்தே நீ புலத்தல் தகாது” எனத் தலைமகளிடம் குறிப் பிட்டு அவள் ஊடலைத் தீர்த்தல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 364.)

காலம் (1) -

{Entry: G07__877}

பொருள் நிகழ்வு உரைப்பது. (தொ. பொ. 514 பே.)

காலம் (2) -

{Entry: G07__878}

அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று (வீ. சோ. 90); அஃதாவது எடுத்துக்கொண்ட செயல் நிகழுங்காலம். அஃது இறப்பு எதிர்வு நிகழ்வு என மூன்று. அதுவன்றி, ஆண்டு, அயனம் (ஆறுமாதம்), இருது (இரண்டு மாதம்), திங்கள் (ஒருமாதம்), பக்கம் (பதினைந்து நாள்), நாள் (நட்சத்திரம்) கிழமை, நாழிகை, அம்சம், கலை, காட்டை முதலியவற்றில் இன்னசெயல் இன்ன நேரத்தில் நிகழ்ந்தது என்று நுட்ப மாகக் கணக்கிட்டுக் கூறுதல். (வீ. சோ. 96 உரைமேற்)

காலம் கூறி வரைவு கடாதல் -

{Entry: G07__879}

வரையாது வந்தொழுகும் தலைவனை அலர்மிகுதியும் காவல் மிகுதியும் கூறி இரவும் பகலும் வரவு விலக்கிய தோழி, “சந்திரன் வளர்பிறையில் நிறைமதியம் ஆகப்போகிறது; வேங்கைகள் பூக்கத்தொடங்கிவிட்டன. ஆதலின், நீ இரவுக் குறியோ பகற் குறியோ எதிர்பார்ப்பதற்கில்லை. நீ தலைவியை மணப்பதற்கு நிறைமதிநாளே நன்னாளாம்” என்றாற்போலத் தலைவியை மணத்தற்குரிய காலத்தைக் குறிப்பிட்டு அவளை அவன் மணக்குமாறு முடுக்குதல்.

இதனை “வரைவு கடாதல்” என்னும் கிளவிக்கண் ‘வரையும் நாள் உணர்த்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 166; இ. வி. 523)

இது திருக்கோவையாருள் ‘வரைவு முடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

காலம் மறைத்துரைத்தல் -

{Entry: G07__880}

வரைபொருட்குப் பிரிந்த தலைவன் மீண்டு வருவதாகக் குறித்த காலம் வந்த அளவில் தலைவி ஆற்றாளாகத் தோழி அவளை நோக்கி, “இப்பொழுது பெய்துள்ள மழை கார் காலப் பருவமழை அன்று. நம் உறவினருடைய வேண்டு கோட்கு இணங்கித் தெய்வம் காலமல்லாக் காலத்துத் தினைக்கதிர் செழிப்பதற்குப் பெய்வித்த மழை இது. இதனை உணராது காந்தள் மலர்ந்தன” என்று காலத்தை மறைத்துக் கூறுதல்.

இதனை ‘இகுளை வம்பு என்றல்’ என்றும் கூறுப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 279)

காலமயக்கு (1) -

{Entry: G07__881}

காலத்தை மாற்றிக் கூறுதல். அஃதாவது கார்காலம் கண்டு கலங்கும் தலைவிக்குத் தோழி அது கார்காலம் அன்று என மறைத்துக் கூறுதல்.

“உன் மணாளனான பெருமான் திருமகளுடன் கூடிக் களிக் கும் நிலை கண் ட மண்மகள், நின்போலவே அவனிடம் காதல் கொண்டவளாகிய காரணத்தால், பெருமான் கொடியவன் என்று கடலலைகளாம் தன் கைகளை விரித் து வானாகிய தன் வாயினால் இரைந்து அழுது மழையாகிய கண் ணீர் விடுகிறாள். அது மலையாகிய அவளுடைய நகில்களில் இழிந்து வழிவது போல ஆறாகப் பெருகுகிறது. இது மழைக் காலம் அன்று” என்னும் தோழி கூற்று.

இஃது அகத்திணையுள் களவின் கண் ‘வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதியகத்து ‘ இகுளை வம்பு என்றல்’ என்னும் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கி ளையின்பாற்படும். (திருவி. 52.)

காலமயக்கு (2) -

{Entry: G07__882}

கார்காலத்து வருவதாகப் பிரிந்துசென்ற தலைவன் வாரா தொழியவே, தலைவி துயருற்றபோது, தோழி “இது கார்காலம் அன்று” எனக் கூறித் தேற்றுதல்.

“தலைவி! இது கார்காலம் அன்றே. வானத்தில் கறுத்துச் செல்வது மேகம் அன்று; திருமால் ஊர்ந்து செல்லும் மதக் களிறு. வானினின்று நீர் சொரிவதும் மழையன்று; அஃது அம்மதக்களிற்றின் மதநீர்ப்பெருக்கேயாம். பேரிடி போல முழங்குவதும் அதன் பிளிற்றொலியேயாம்.” (திருவரங்கக். 86)

இது திருக்கோவையாருள் ‘காலம் மறைத்துரைத்தல்’ (279) எனவும், நம்பி அகப்பொருளுள் ‘இகுளை வம்பு என்றல்’ (170) எனவும் கூறப்படும்; ‘பருவமன்று என்று கூறல்’ எனவும் பெறும். (கோவை. 324)