Section H08 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 4 alphabetical subsections

  1. க (CONTINUED from G07) section: 154 entries
  2. ச section: 139 entries
  3. ஞ section: 1 entries
  4. த section: 432 entries

H08

[Version 2l (transitory): latest modification at 10:10 on 23/04/2017, train Hamburg-Paris]

அகம்-2 (726 entries)

[TIPA file H08 (and pages 3-262 in volume printed in 2005)]

க (CONTINUED from G07) section: 154 entries

காவல் மிகவு உரைத்தல் -

{Entry: H08__001}

தங்கள் இல்லத்தே பாதுகாப்பு மிகுந்திருப்பதைத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“ஐயா! எம் தலைவி தன் ஆற்றாமை தீரக் குறியிடம் வந்து நின்னைக் கூடிமகிழ இயலாதவாறு நிலவு பகல்போல நின்றெறிக்கும்; துடியைக் கொட்டும் காவலரும் உறங்கார்” (அம்பிகா.274) என்றாற் போன்ற தோழி கூற்று.

இதனைக் ‘காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல்’ என்னும் திருக்கோவையார் (258).

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

{Entry: H08__002}

தலைவனைப் போல இக்கிளிகள் மிக்க சிறப்புடையன. இக்கிளிகள் தலைவியால் தலைவனைப் போல நோக்கவும் படுகின்றன; வெருட்டவும்படுகின்றன” என்றாற் போன்ற தோழி கூற்று. (ஐங். 290)

காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் -

{Entry: H08__003}

வரையாது வந்தொழுகும் தலைவனிடம் தோழி ஒரு கடுவன் தன் மந்தியிடம் அன்பு காட்டும் திறத்தை எடுத்துக்கூற, அது கேட்ட தலைவன் ஆற்றானாய்த் தலைவியைக் காண இரவுக் குறிக்கண் வந்து நிற்ப, அவன் சிறைப்புறமாகத் தோழி, ஊர்க் காவலர் பறையோசை கேட்டு இல்லத்துள்ளார் இன்னும் உறங்காத செய்தியைத் தலைவியிடம் கூறுவாள் போலத் தலைவன் கேட்பக் கூறிக் குறிப்பாக வரைந்துகோடலை வற்புறுத்தியது.

இதனை வரைவுகடாதல் தொகுதிக்கண் ‘காவல் மிகவு உரைத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 166; இ. வி. 523.)

இது ‘வரைவு முடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 258)

காவலர் கடுகுதல் -

{Entry: H08__004}

தலைவன் இரவில் குறியிடம் வருதற்கு இடையூறாக ஊர்க் காவலர் பறையறைந்து ஊர் முழுவதும் திரிதல்.

இது தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் நிகழும்.

இது களவியலுள் இரவுக்குறி இடையீடு எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘வருந்தொழிற்கு அருமை’ என்பதன்பாற்படும். (ந. அ. 161)

‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -

{Entry: H08__005}

தான் காக்க வேண்டிய யானை குதிரை முதலியவற்றைக் காத்தலும் அரசர்க்கு அறமாதலின், வேட்டை மேற்சென்று கொடிய விலங்குகளை அழித்து எளிய விலங்குகளைப் பாதுகாத்தல் போன்றவற்றின்கண் பிரியுமிடத்தே தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

“முத்துப் போன்ற முறுவலாய்! நம் வலையிலே அகப்பட்ட தொரு புதுமையுடைய யானை வந்தது. அதனை ஏறிக் காண்பதாக யான் புறத்தே தங்கினேன்” (கலி. 97; 6, 7) என்றாற் போன்ற கூற்று, யானை முதலியவற்றைக் காத்தற்குத் தலைவன் பிரிதலை உணர்த்தும்.

‘காவற்பாங்கின் ஆங்கோர்க் காத்தற்குத் தலைவன் பிரிதலை உணர்த்தும் துறை இது. (தொ. பொ. 41 நச்.)

‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கம்’ -

{Entry: H08__006}

அவை தன்னால் காக்கப்படுவனவற்றையும் காக்கப்படு வோரையும் காத்தற்குப் பிரியும் பிரிவும், காவற்கடமைக்கு ஒத்த பிறிதொரு பக்கத்தால் பிரியும் பிரிவும். காக்கப்படுவன ஆவன அறப்புறங்களும் தேவகோட்டங்களும் கலை நிலை யங்களும் அவை போல்வனவும் ஆம். காக்கப்படுவோராவார் அந்தணரும், அருந்தவரும், ஆதுலரும், அவர்போல்வாரும். காவற் கடமைக்கு ஒத்தவை விழா அயர்தலும், அவ்வழி ஆடலும் பாடலும் வல்லாரைப் பேணி அளித்தலும், தண்ணளி செய்தலுமாம். இத்தகு காவற்பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழும். (தொ. அகத். 43 ச. பால.)

காவற்பாங்கின் தலைவன் கூறல் -

{Entry: H08__007}

தன் நாடு காத்தற்குப் பிரியும்போது தலைவன் தலைவியிடம் கூறல்.

“மென்தோளாய்! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாயின் கேள். யாமிருவரும் போய் ஒரு சேரத் துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன்’ (கலி. 93 : 5-7) என்ற கூற்று, தாபதரைக் காத்தற்குத் தலைவன் பிரிந்ததனைக் குறிக்கும். (தொ. பொ. 41. நச்.)

“நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! குதிரை வழங்கி வருவேன்” (கலி 96:5,6) என்ற கூற்று, நாடு காத்தற்குக் குதிரையிவர்ந்து சென்று மீண்ட பிரிவினைக் குறிப்பினாற் சுட்டியவாறு.

காவற்பாங்கு -

{Entry: H08__008}

தலைவன்தன்னான் காக்கப்படுவனவாகிய பகுதிகளின் கூறு. அவை யானை குதிரை முதலிய தன் படைக் கூறுகளைக் காத்தலும், தனக்கு அறம் எனப்பட்ட வேட்டைமேல் சென்று தீய விலங்குகளை அழித்து எளிய விலங்குகளைக் காத்தலும் போல்வன. (தொ. பொ. 41 நச்)

காவற்பிரிவின் துறைகள் -

{Entry: H08__009}

பிரிவு அறிவித்தல், பிரிவு கேட்டு இரங்கல் என்பன இரண்டு மாம். (கோவை. 312, 313)

காவற்பிரிவின் வகை -

{Entry: H08__010}

கற்புக் காலத்துத் தலைவன் மேற்கொள்ளுதற்குரிய அறு வகைப் பிரிவினுள் ஒன்றாகிய காவற்பிரிவு, அறப்புறங் காவல் எனவும் நாடுகாவல் எனவும் இருவகைத்து. அறப்புறங் காவலிற் பிரிவு எல்லாத் தலைமக்களுக்கும் உண்டு; நாடு காத்தற்குப் பிரியும் பிரிவு அரசனுக்கே சிறப்பாக உரியது. அரசனான் சிறப்புப்பெயர் பெற்ற நாட்டாட்சித் தலைவ ராயின், வணிகர் வேளாளர் என்பாரும் இப்பிரிவை மேற் கொள்வர். (ந. அ. 72, 76.)

காவற்பிரிவு -

{Entry: H08__011}

காவற்பிரிவு கற்புக் காலத்துத் தலைவற்கு நிகழும் பிரிவுகளுள் ஒன்று. கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் குடிமக்கள் படும் துன்பங்களைக் கண்டு, அம்மன்னனை நீக்கி அந்நாட்டைத் துன்பத்தினின்று விடுவித்துக் காப்பதற்கும், தம் நாட்டு மக்கள் குறைகண்டு நீக்குவதற்கும் இப்பிரிவு மேற்கொள்ளப்படும். (தொ.பொ.28). இதன் காலவரையறை ஓராண்டிற்கு உட் பட்டது.

இதற்கு அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்ற நால்வரும் உரிமையுடையர். (பொ. 28, 29, 30 நச்)

நாடு காத்தல் என்பது, தன் நாட்டு மக்களைப் பிறர் துன் புறுத்தியதால் அவர்கள் பிடியினின்று விலக்கிக் காக்கத் தலைவன் பிரிவான் என்பதன்று; தன் ஆளுகைக்குட்பட்ட நாட்டில் இருந்து தன்னிடம் வந்து தமக்குற்ற குறைகளை எடுத்துக் கூறமாட்டாத மூத்தார் பெண்டிர் முடவர் கூனர் குருடர் பிணியுடையார் முதலியோருடைய குறைகளைக் கேட்டு அவற்றைப் போக்குதற்கும், காட்டகத்து வாழும் உயிர்ச்சாதிகள் ஒன்றனை ஒன்று நலிவன உள்ளவழித் தீதென்றவற்றை முறை செய்யவும், வழிகளில் படர்ந்து பின்னிக் கிடக்கும் கொடிகளை வெட்டி வழிகளைத் தூய்மை செய்ய ஆணையிடுவதற்கும், கோயில் அறச்சாலை ஊர்ப் பொதுமன்றம் ஆகியவை செவ்வனே நடத்தப் பெறுகின் றனவா என்பதனை அறிவதற்கும், பிரியும் பிரிவு. மேலும் தாயைக் கண்டு இன்புறும் சேயைப் போலத் தன்னால் காக்கப்படும் உயிர்கள் தன்னைக் கண்டு இன்புறுதலின் தான் அவற்றுக்குத் தன் உருக்காட்டவும், மாற்றரசர்தம் ஒற்று வந்த விடத்து அவர்முன் தன் ஊக்கம் காட்டவும், நாடுகாத்தற்குப் பிரியும். (இறை.அ.35 உரை) இப்பிரிவு நாள்களையும் திங்களையும் இருதுவையும் எல்லையாக உடையது. (இறை. 41 உரை)

காவற்பிரிவும் பொருட்பிரிவும் -

{Entry: H08__012}

வேற்றுமன்னரால் சீர்குலை கொடுங்கோல் செலுத்தப்பட்ட நாட்டைத் திருத்தி நல்வழிப்படுத்திக் காத்தற்கும், தனக்குச் செலுத்தப்பட்ட வரிப்பொருளைத் திரட்டுவதற்கும், அரசன் மேற்பார்வை செய்யுமுகத்தான் பிரிவான். இவ்வரசனுக்குக் கூறிய காவற்பிரிவும் பொருள்வயின் பிரிவும் அரசனைச் சார்ந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்ற நால்வருக்கும் உரித்து. (தொ. பொ. 28, 29குழ.)

கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -

{Entry: H08__013}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் விடுக்கப்பட்ட தூதுவரை நோக்கி, “ஞாழற்பூ மருதப்பூவோடு பரவி நம் தலைவனது ஊர்த்துறையை அழகு செய்துள்ளது. ஆயின் அவனால் தழுவப்பெற்ற என் தோள்கள் வளையல்கள் நெகிழுமாறு மெலிந்து தனிமையையே அழகாகப் பெற் றுள்ளன” என்ற நொந்து கூறியது. (குறுந்.50)

கிழவன் -

{Entry: H08__014}

கிழவன் கிழவோன் தலைவன் தலைமகன் என்னும் பெயர்கள் அகப்பொருளில் இயற்பெயர் சுட்டி உணர்த்தப்படாத தலைவனைக் குறிக்கும் சொற்களாம். இவன் ஆடவருள் மிக்கான் எனப்படுவான்.

கிழவன் தற்புகழ்தல் -

{Entry: H08__015}

தலைவன் கல்வியும், கொடையும், பொருள்செயலும், முற்றுவிக்கப்பட்டவனை முற்றுகையினின்று விடுவித்தலும் ஆகிய காரியங்களை நிகழ்த்துவதற்குப் பிரியுங்கால் தலைவி முன்னர்த் தன்னைப் புகழ்ந்து கொள்வான். இச்சிறந்த செயல்களுக்குக் கடமை யுணர்ச்சியொடு தலைவன் தான் பிரிவதைக் கூறுவதன் பயன், தலைவி ஆற்றியிருத்தல் வேண்டும் என்பதே.

எ-டு :

‘இல்லென இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎன,

இடனின்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎன’ (கலி. 2)

என்றாற்போன்ற தலைவன் கூற்றுக்கள். (தொ. பொ. 181.நச்.)

‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -

{Entry: H08__016}

தலைவன் அறமும் பொருளும் செய்தலான் வெளியிடத்துத் தங்க வேண்டுதலின், கற்புக்காலத்துத் தலைவனைத் தலைவி நீங்கும் காலம் பெரிதாகலான் அதற்குச் சுழற்சி மிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்தவிடத்துத் தலைவி கூறல்.

“காமம் நலிவதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத் துவோர் தாம் அதனை அறியாரோ? அன்றி, அவ்வாறு பொறுத்துக்கொள்ளும் அத்துணை வலிமையுடையாரோ? யாம் எம் காதலரைக் காணப்பெறேமாயின், வருத்தமிக்க நெஞ்சினமாய், கல்லின்மேல் வந்து மோதும் சிறுநுரை மெல்ல மெல்லத் தேய்ந்து மறையுமாறு போல, மெல்ல மெல்ல இல்லையாகி விடுவேம்” (குறுந். 290) என, தெருட்டும் தோழிக்குத் தலைவி கூறுவது போல்வன. (தொ. பொ. 147.நச்.)

கிழவி -

{Entry: H08__017}

கிழவி, கிழத்தி, கிழவோள், தலைவி, தலைமகள் என்பன அகப்பொருள் தலைவியைச் சுட்டும் பெயர்களாம்.

இத்தலைவியை இயற்பெயர் சுட்டி விளித்தல் கூடாது. (பொ. 54 ந.)

கிழவி தற்புகழ்தல் -

{Entry: H08__018}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தலைவி ஊடல் கண்டு அவளை இரத்தலும், தெளிவித்தலும் ஆகிய இடத்துத் தலைவி தலைவன்முன் தன்னைப் புகழ்ந்து கொள்வாள்.

(தொ. பொ. 180 நச்.)

பொதுவாகத் தலைவன்முன் பரத்தை தன்னைப் புகழ்ந்து கொள்வாளே யன்றித் தலைவி தன்னைப் புகழ்ந்து கொள்ளாள். தலைவி தன் நாடும் ஊரும் இல்லும் சுட்டித் தன்னைப் புகழ்ந்து கொள்வாளாயின், அவள் உள்ளத்தில் ஊடல் உண்டு என்பதனைத் தலைவன் அறிவான். ஆதலின் தலைவிக்குத் தற்புகழ்கிளவி ஊடற்காலத்திற்றான் உண்டு. (இறை. அ. 47,48)

கிழவி நிலை உரைத்தல் -

{Entry: H08__019}

கற்புக் காலத்தில் தலைவியைப் பிரிந்து ஓதல் பகை தூது பொருள் முதலிய கருதி வேற்றிடம் சென்ற தலைவன், தான் அவ்வக் காரியங்களில் முழுமனத்தோடு ஈடுபட்டுக்கொண் டிருக்கையில், இல்லத்தில் பிரிவாற்றாது தனித்திருக்கும் தலைவிநிலையை நினைத்துக் கூறுதல் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறியவிடத்தும், தான் குறித்த பருவம் வந்தவிடத்தும், தலைவியிடமிருந்து தூது கண்டவிடத்தும், வருத்தம் மிக்குத் தலைவியைப் பற்றி எண்ணிப் பேசுவான். (தொ. பொ. 189. நச்.)

கிழவி பாராட்டு (1) -

{Entry: H08__020}

தலைவன் தலைவியைப் பாராட்டும் பாராட்டு.

தலைவன் கற்புக் காலத்தில் தான் பிரிந்து செய்யக் கருதும் ஓதல் காவல் தூது பொருள் முதலிய செயல்களுக்குத் தலைவி இடையூறாக இருத்தல் கூடாது என்ற கருத்தான், தான் தலைவியிடம் கொண்டுள்ள எல்லையற்ற அன்பை வெளியிடுபவன் போல, கூட்டத்தால் குலைந்த அவள் மயிர் முடியைக் கோலம் செய்தலும், புணர்ச்சியால் நிலைகுலைந்த அணிகளைப் பழையபடி அணிவித்தலும், தலைவியின் நெற்றியில் புணர்ச்சியால் அரும்பிய வியர்வையைத் துடைத் தலும் (கலி. 4) போல்வன செய்தல். (தொ. பொ. 232. நச்.)

கிழவி பாராட்டு (2) -

{Entry: H08__021}

தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்குத் தலைவியைப் பிரிந்து செல்ல முடியாதவாறு அவள் இடையூறாக இருப் பாளோ எனத் தலைவன் அஞ்சியதனையும், தான் ஒரு தலையாகப் பிரிந்து செயற்பட வேண்டியதனையும், தன் பிரிவைத் தான் கூறாமலேயே அவள் உய்த்துணர வேண்டிய தனையும், தலைவன் தலைவியை அளவுக்கு மீறி ஒருநாள் சிறப்பாகப் பாராட்டும் பாராட்டு வெளிப்படுத்தும். (தொ. பொ. 233. குழ.)

கிழவோள் கிழவோன் குறிப்பினை உணர்தல் -

{Entry: H08__022}

தலைவி, வேறு தலைவியொருத்தியின் பண்புகள் இத் தன்மையன என்று எடுத்துக் கூறி அவளிடத்துத் தலைவன் எங்ஙனம் உள்ளான் என்று அவன் குறிப்பினை அறிதல்; தலைவன் உணர்த்த உணராது தலைவி தானே வேறொன்று கூறி அவன் கருத்தை உய்த்துணர முயலுதல்.

எ-டு. :

“கண்டிகும் அல்லமோ கொண்க! நின்கேளே

ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென

வெள்ளாங் குருகை வினைவு வோளே’ (ஐங்குறு.122)

இது தலைவி கூற்று. தலைவன் வரையக் கருதிய தலைவி ஒருத்தியை இளையள் எனக் கூறி அவள்மாட்டு இவன் எத்தன்மையன் என்று விதுப்புற்றுக் கூறியது. (தொ. பொ.234. நச்)

கிழவோள் மாண்புகள் -

{Entry: H08__023}

தலைவியின் மாண்புகளாக அகம்புகல் மரபின் வாயிலோர் தலைவற்குக் கூறுவன பின்வருமாறு :-

1. தலைவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம்,

2. மாசற்ற அன்பு,

3. எவ்வாற்றானும் தன் குலத்திற்கு ஒத்தவாறு ஒழுகும் ஒழுக்கம்,

4. கடிய மனத்தொடு பிறரைத் தண்டிக்கும் தலைவன் போலாது, மெல்லென்ற மனத்தொடு பிறர் தவறுகளைப் பொறுக்கும் பொறுமை,

5. மறை புலப்படாமல் மனத்துள் அடக்கியிருக்கும் நிறை,

6. வறுமையும் செல்வமும் குறியாது தன்னான் இயன்றவரை விருந்தினரைப் பாதுகாத்து அவரை மனம் மகிழ்வித்தல்,

7. கணவன் பாதுகாக்கும் நண்புடை மாந்தர், சுற்றத்தார், யானை முதலிய செல்வங்கள், பலவகை ஏவலர் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் தான் உண்ணுதல்,

8. அடிசில் தொழிலில் வல்லவளாயிருத்தல்,

9. குடிநீர்மைக்கு ஏற்ற வகையான் தான் ஒழிந்த ஏனைத் தலைவியரையும் மகிழ்வுறுத்தல்,

10. காமக்கிழத்தியரை நண்பு செய்து நன்கு மதிக்கப்படுதல் போல்வனவாம். (தொ. பொ. 152. நச். உரை)

கிழவோன் செய்வினைக்கு அச்சம் -

{Entry: H08__024}

தலைவன் பிரிந்துபோய்ச் செய்யக்கருதும் வினையை முற்ற முடிக்காது மீள்வானோ என்று தலைவி அஞ்சுதல்.

“புலம்புதரு குரலில் ஆண்புறாவைப் பேடை அழைக்கும் வருத்தம் கண்டு வினை முடியாமல் வருவாரோ” என்று தலைவி அஞ்சியவாறு. (குறுந். 79)

களவுக் காலத்துத் தலைவனோடு உடன்போக்குச் சென்று அவனால் கொடுப்போரின்றி மணந்து கொள்ளப்பட்ட தலைவி, கற்புக்காலத்துத் தன் இல்லத்திலிருந்து தான் உடன்போகிய காலத்துக் காட்டின்கண் கண்ட கருப்பொருள் களின் தொழில்களையும் கருதிக் கூறுதல், தலைவன் எடுத்துக் கொண்ட காரியத்தை முற்ற முடிக்காது மீள்வானோ என்று அவள் அஞ்சும் அச்சத்தை வெளிப்படுப்பதாம். (தொ. பொ. 148. நச்.)

கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகாதன -

{Entry: H08__025}

தலைவன் தன்னைப் பிரிந்து போய்ச் செய்யத் தொடங்கும் வினையை முற்ற முடியாது மீள்வானோ என்று தலைவி அஞ்சாதிருத்தற்கு உரியன.

என்றது, களவுக் காலத்துத் தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தாது தலைவனான் மணக்கப்பட்ட தலைவி, கற்புக் காலத்துத் தன் இல்லின்கண் இருந்து தலைவன் கூறக்கேட்டு அவன் பிரிந்து செல்லக் கருதிய காட்டுவழியின் கருப்பொருள் களின் அன்புறத்தக்க செயல்களைக் கூறுதல், தலைவன் எடுத்த வினையை முடிக்காது மீள்வானோ என்ற அச்ச மாகாது, முடித்தே வருவான் என்று துணிந்து கூறுதலாகும்.

‘அரிதாய அறனெய்தி’ என்ற பாலைக் கலியுள் (கலி.1)

‘இனைநலம் உடைய கானகம் சென்றோர்

புனைநலம் வாட்டுநர் அல்லர்’

எனத் தலைவன் வரவு கருதித் தலைவி கூறியவாறு. (தொ. பொ. 148. நச்.)

கிழவோன் புலத்தலும் ஊடலும் -

{Entry: H08__026}

தலைவனுக்குக் கற்புக்காலத்தும் களவுக்காலத்தும் புலத்தலும் ஊடலும் நிகழும்.

கற்புக்காலத்துத் தலைவி ஊடியவழி அவளைப் பலவாற்றா னும் தெளிவிக்கவும் அவள் மனம் மாறாமல் மீண்டும் புலந்த வழித் தலைவனுக்குப் புலவியும் ஊடலும் நிகழும்.

களவுக்காலத்தே தலைவி செய்த குறியைத் தானே தலைவன் தப்பியவழியும் தவற்றை அவள்மேல் ஏற்றிப் புலத்தலும் ஊடலும் அவன்பால் நிகழும்.

ஆயின், கற்புக்காலத்துப் புலவியும் ஊடலும் பெரும்பான்மை. புலவி சற்று நீட்டிக்குமாயின், அஃது ஊடலாம். (தொ. பொ. 156.நச்)

கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -

{Entry: H08__027}

கிழவோன், எத்துணை அறிவு கூறித் தெருட்டினும் தான் கொண்ட காம வேட்கையைத் தன்னான் தாங்க இயலாமை யைப் பாங்கற்குக் கூறுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘வலியழிவுரைத்தல்’ என்னும். இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

கிள்ளை வாழ்த்தல் -

{Entry: H08__028}

“கிளிகள் வந்து தினைக்கதிரைக் கவராமல் காக்கவே தலைவி புனத்திற்கு வந்தாள். அதனால்தான் நானும் அவளைக் கண்டு கூடி மகிழ்ந்தேன். இவ்வாய்ப்பினைத் தந்த கிள்ளைகள் நீடூழி வாழ்க!” (ஐங்.281) எனத் தலைவன் அவற்றை வாழ்த்துதல்.

இது களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ என்னும் தொகு திக்கண் ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’ என்புழிச் ‘சொல்லிய’ என்ற மிகையான் தழுவிக் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 102. நச்.உரை)

கிளவி -

{Entry: H08__029}

கிளவி என்பது ஒருவர் மற்றவருக்கு உரைக்கும் செய்தி. அவ்வாறு உரைத்தல், நெஞ்சுக்கு உரைத்தல், தம்மை வினவினவர்களுக்கு உரைத்தல், ஒருவரும் கேட்பாரில்லாத நிலையில் வானத்தை நோக்கிக் கூறல் என மூவகைப்படும். தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலி, பாங்கன், சீறியாழ்ப்பாணன், கண்டோர், கட்டுவிச்சி, வேலன், விறலி, ஊர்மக்கள், சேரிமாந்தர், அயலோர் என்பவர்கள் கிளவி கூறற்குரியோராவர். (வீ. சோ. 96 உரைமேற்.)

கிளவித்தொகை -

{Entry: H08__030}

ஒருவழிப்பட்டுப் பலவும் ஓரிடத்துச் சென்று தொகும் பல கூற்றுக்களின் தொகுப்பாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந் தலைப்பாடு போல்வனவாகிய அதிகாரங்கள்.

(கோவை. பாயிரம்.)

கிளவித்தலைவன் -

{Entry: H08__031}

அகப்பொருட்டலைவன் (ந.அ. 245, 247, 248)

கிளவி, துறை என்னும் குறியீடுகள் -

{Entry: H08__032}

அகத்திணை ஒழுகலாறுகள் கூற்றுக்களாகக் கிளக்கப் படுதலின் ‘கிளவி’ என்றும், புறத்திணை ஒழுகலாறுகள் செயல்களாகக் கூறப்படுதலின் ‘துறை’ என்றும் குறியீடு பெற்றன. (தொ. புறத். 1 ச. பால.)

கிளவி வேட்டல் -

{Entry: H08__033}

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியைக் கூடிய தலைவன், கண்டு உற்று மோந்து சுவைத்துச் செவிச்சுவை ஒன்று மாத்திரம் பெறாத குறைதீரத் தலைவியின் குரலைக் கேட்க விரும்புதல்.

இது ‘சொற்கேட்க விரும்புதல்’ எனவும்படும். (இ.வி.493 உரை)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை.10)

கிளிமொழிக்கு இரங்கல் -

{Entry: H08__034}

செவிலி வாயிலாகத் தலைவியின் உடன்போக்கினை அறிந்து மனம் நொந்த நற்றாய், “என்னைக் காக்கும் தலைவி போய் விட்டாளே! என்னை யார் காப்பார்? என்னைப் பருந்து கொன்றுவிடுமோ?” என்று வருந்திக் கூவும் கிளியின் சொற்களைக் கேட்டு மிக வருந்துதல்.

‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண், இக்கிளவி ‘தத்தையொடு புலம்பல்’ எனவும்படும். (இ. வி. 538 உரை)

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 231)

கிளைஞன் கழறல் -

{Entry: H08__035}

பாங்கன் தலைவனை அவன் தன்னுள்ளத்தைப் பிறர்மகள் ஒருத்திபால் செலவிட்டது பற்றி இடித்துரைத்தல்; ‘கற்றறி பாங்கன் கழறல்’ (ந. அ. 137, இ. வி. 505) எனவும் கூறுப. (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரைமேற்.)

கீழோர்க்காகிய காலமும் உண்டே : பொருள் -

{Entry: H08__036}

ஒருகால எல்லையளவும் திருமணக்கரணம் நாற்பாலர்க்கும் ஒத்ததொரு முறையாக நிகழ்ந்து வந்தது. பின்னர் வேளாண் மாந்தர்க்கு அவர் மேற்கொண்டு புரிந்த பல்வேறு தொழிற் கூறுபாடு காரணமாகக் கரணமுறை சிறப்பாக யாத்து அமைக்கப்பெற்றது. வேளாண்மாந்தரின் குலவழக்காகிய உழுதுண்ணலும் உழுவித்துண்ணலும் பற்றி மரபியலுள் 81, 82, 84ஆம் சூத்திரங்களாற் கூறப்பட்டன. அவர்கள் வேந்தரால் சிறப்புப் பெயர் பெற்ற மறவராகவும், தானைத் தலைவராக வும், தண்டத் தலைவராகவும், அமைச்சராகவும், குறுநில மன்னராகவும் வினைகளை மேற்கொள்ளுமிடத்து, அச்செய் தொழில் வேற்றுமையான் விளங்கும் சிறப்புநிலைகட்கு ஏற்ப, வேளாண்மாந்தர்க்குச் சிறப்பாகக் கரணம் யாத்தமைக்கப் பட்டது. (தொ. கற். 3. ச. பால.)

குடித்திறம் கூறல் -

{Entry: H08__037}

தோழி தலைவனை வரைவுகடாவுதற்கண், இருவர் குடிச் சிறப்பும் எடுத்துக்கூறி, விரைவில் தலைவியை வரையுமாறு தலைவனை வற்புறுத்துதல்.

இக்கூற்று ‘வரைவு கடாதல்’ தொகுதிக்கண்ணது. (த. நெ. வி. 19)

குரவரின் புணர்ச்சி -

{Entry: H08__038}

தலைவியை அவளுடைய இருமுதுகுரவர் முறைப்படி தலைவற்கு மணம் செய்து வைத்தபின், தலைவன் தலைவி யொடு கூடும் கூட்டம். (ந. அ. 561)

குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் -

{Entry: H08__039}

மணம் பேச வரும் தலைவன்தமரை தம் உறவினர் எதிர் கொள்ளச் செய்யுமாறு தலைவி தோழியை வேண்டல்.

இது களவியலில் ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கிளவி. (ந. அ. 164)

குலன் எதிர்கோடல் -

{Entry: H08__040}

தலைவன்உறவினர்கள் தலைவியைத் திருமணத்துக்கு எதிர்கொண்டழைத்தல்.

தலைவியொடு களவொழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவியைச் சான்றோரை அனுப்பி மகட்பேசித் திருமணம் செய்து கொள்ளும் நன்னாள் அன்று, தலைவனுடைய உறவினர்கள் தலைவியை “திருவே, வருக! திருமாலொடு கூட வரும் திருமகள் போல்வாய்! எம்மில்லம் தழைத்தோங்க வருக!” (திருப்பதிக். 393) என்று கூறி எதிர்கொண்டழைத்தல்.

இது ‘வரைந்துகோடல்’ என்றும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

குற்றம் காட்டிய வாயில் -

{Entry: H08__041}

தலைவனிடத்தே சோர்வானும் காதல்மிகுதியானும் ஏற்பட்ட பழிபாவங்களை எடுத்துக்காட்டும் வாயிலாகிய பாங்கன்.

(தொ. பொ. 99 இள)

தலைவற்கு நிகழும் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன். (102 நச்.)

குற்றம் காட்டிய வாயில் பெட்புற்றுரைத்தல் -

{Entry: H08__042}

பிறர்மகளை அவர் இசைவின்றி விரும்புவதான் நிகழும் குற்றங்களை வெளிப்பட எடுத்துக் கூறிய பாங்கன், தலைவ னுடைய ஆற்றாமை கண்டு அதனை நீக்குதற்கு மனம் இசைந்து கூறுதல். (தொ. பொ. 102 நச்.)

குற்றிசை (1) -

{Entry: H08__043}

தலைவன் தலைவியுடன் இறுதிவரை வாழாது இடையிற் சிலகாலம் கைவிட்டது. இது புறப்பொருள் வெண்பா மாலையுள் இருபாற் பெருந்திணைப் பாலவாகிய துறை களுள் ஒன்று.

“தலைவ! நின்னையே உயிராக நினைத்திருந்து நின்னைப் பிரிந்து வாடி மெலிந்து கிடக்கும் தலைவியைப் பிரிந்து, துறவிற் புக இருப்பவன் போல நீ ஒழுகுதல் பெருந்தவறு அன்றோ?” என்பது போன்றவற்றைச் சான்றோர் கூறுதல் இத்துறைப்பாற்படும். (பு. வெ. மா. 17-17)

குற்றிசை (2) -

{Entry: H08__044}

இஃது அகப்புறப் பெருந்திணை; ஐந்திணை இன்பத்திற்குப் புறமாவதாய்த் தலைவன் துறப்பினும் தலைவி அவனை மறவாமல் தன் நினைப்பில் இருத்துதலின், அகப்புறப் பெருந் திணையாயிற்று. (ந. அ. 244; வீ. சோ. 97 உரைமேற்.)

குறி -

{Entry: H08__045}

களவுக்காலத்தில் தலைவன் தன்னைப் பகற்கண்ணும் இரவுக் கண்ணும் வந்து கூடுதற்கு, அவன் விருப்பிற்கு மாறாகச் செயற் படுவது அறனன்றாகும் என்று கருதும் தலைவி உரிய இடங் களைத் தானே தன் வாய்ப்பிற்கேற்ப வரையறுத்துக் கூறுவாள். இங்ஙனம் கூடும் இடங்கள் ‘குறி’ எனப்படும். இவை மக்கள் நடமாட்டம் பெரும்பான்மையும் இல்லாத இடங்களில் அமையும். (தொ. பொ. 130 நச்.)

குறி என்பது வண்டும் தும்பியும் யாழ்போல ஒலி செய்ய, ஐம்பொறிகளானும் நுகரப்படும் நுகர்பொருள்களைத் தன்னிடத்துடைத்தாய், பலவகைப்பட்ட மரங்களானும் பொலிவுடைத்தாய்ப் புறத்தார் அகத்தாரைக் காண்பது அரிதாய், அகத்தார் புறத்தாரைக் காண்பது எளிதாய் விழைவு விடுத்த விழுமியோரும் விரும்பும் இயல்பிற்றாகிய சோலை யின் ஓருட்பகுதி. (இறை. அ. 18 உரை)

குறிக்கண் செப்பல் -

{Entry: H08__046}

தோழி தலைவனுக்குக் குறியிடம் கூறுதல் (சாமி. 96)

குறிஇடையீடு -

{Entry: H08__047}

இது நம்பியகப்பொருள் கூறும் அகப்பொருட் பெருந் திணையின் வகை.

குறிஞ்சி -

{Entry: H08__048}

மலையும் மலைசார்ந்த இடமும்.

பன்னீராண்டுக்கு ஒருமுறை பூத்துத் தான் பூத்த பெருநிலப் பரப்பு அடங்கலும் நறுமணம் வீசும் குறிஞ்சிப்பூ இந்நிலத்து மலர்தல் சிறப்புப்பற்றி இந்நிலப்பரப்பு இப்பெயர் பெற்றது எனவும், புணர்தல் எனப்படும் குறிஞ்சி ஒழுக்கத்திற்கு இந் நிலம் சிறத்தல் பற்றி இப்பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது. (தொ. பொ. 5 இள., நச்.)

குறிஞ்சிக் கருப்பொருள் (1) -

{Entry: H08__049}

1. தெய்வம் - சேயோன் (-முருகவேள், விறற்சேய்)

2. உயர்மக்கள் - சிலம்பன், பொருப்பன், மலையன், வெற்பன், குறத்தி, கொடிச்சி

3. பொதுமக்கள் - இறவுளர், குறவர், குன்றவர், கானவர், வேட்டுவர், குறத்தியர், குன்றுவித்தியர், வேட்டுவித்தியர்.

4. புள் - கிளி, மயில்

5. விலங்கு - புலி, கரடி, யானை, சிங்கம், பன்றி

6. ஊர் - சிறுகுடி, குறிச்சி

7. நீர் - அருவிநீர், சுனைநீர்

8. பூ - வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை

9. மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, கோங்கு, நாகம், மூங்கில், திமிசு.

10. உணவு - மலைநெல், மூங்கிலரிசி, தினை

11. பறை - தொண்டகப்பறை, முருகியம் என்ற வெறியாட்டுப் பறை.

12. யாழ் - குறிஞ்சியாழ்.

13. பண் - குறிஞ்சிப்பண்.

14. தொழில் - வெறியாடுதல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், அருவி நீராடல், சுனைநீராடல் முதலியன.

15. கொடி - ஏலம், மிளகு. (தொ.பொ. 20 இள., 18 நச்.,

சிலப். பதிகம் அடியார்க்., த.நெ.வி. 6-12; ந.அ. 20.)

குறிஞ்சிக் கருப்பொருள் (2) -

{Entry: H08__050}

அணங்கு - குகன்

உயர்ந்தோர் - சிலம்பன், கொடிச்சி

தாழ்ந்தோர் - குறவர், குறத்தியர்

புள் - சிகண்டி (-மயில்)

விலங்கு - சிங்கம், புலி, கரடி, யானை (பன்றி, மலையாடு, மான், அசுணம், கவரி, நாவி, உடும்பு, முயல்)

ஊர் - குறிச்சி

நீர் - சுனை, அருவி

பூ - காந்தள், வேங்கை (கோங்கு, மாதவி)

மரம் - தேக்கு, அகில், சாந்தம் (கடம்பு, புன்னை, மூங்கில்)

உணா - (தேன்) தினை, தோரை (மிளகு, இஞ்சி, மஞ்சள்)

பறை - (வெறிகொள் துடி)

யாழ் - குறிஞ்சியாழ்

பண் - குறிஞ்சி

தொழில் - சுனை அருவி இவற்றில் ஆடல், தினைகாத்தல் முதலியன. (சாமி. 74)

குறிஞ்சிக்குரிய பொழுது -

{Entry: H08__051}

குறிஞ்சிக்குரிய பெரும்பொழுது கூதிர்க்காலமாகிய ஐப்பசி கார்த்திகை மாதங்களும், முன்பனிக்காலமாகிய மார்கழி தை மாதங்களும் ஆம்; சிறுபொழுது இரவுப்போதின் முப்பது நாழிகைக்கண் நடுவில் அமைந்த பத்து நாழிகை. (இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை).

குறிஞ்சிக்குக் கூதிரும் முன்பனியும் உரியவாகும் காரணத்தை நச்சினார்க்கினியர், “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின் களவு நீட்டிப்பக் கருதும் தலைவனுக்கு அக்களவினைச் சிறப்பிக்குங்கால் தலைவி அரிதாகப் பெறற்குரியவள் ஆதல் வேண்டும்; ஆகவே, அவ்வருமையை ஆக்குவன ஐப்பசியும் கார்த்தியையும் ஆகிய கூதிர்க்காலமும், சூரியன் மறைந்த அந்தியில் பனி பெய்யும் மார்கழி தை ஆகிய முன்பனிக் காலமும், அவற்றின் இடையாமமும் ஆம் என்பது. இருள் செறிந்து மழைபெய்வதானும் பனியாலும் தலைவன் அரிதின் முயன்று இரவுக் குறியிடத்துத் தலைவியைக் காண வரல் வேண்டியதனானும், நள்ளிரவில் எங்கும் வெளிச்செல்லாமல் விலங்குகளும் பறவைகளும் துணையோடு இன்புற்றுத் தங்கியிருத்தலைக் காண்பதனான் காமக்குறிப்பு மிகுதியும் பெருகுவதனானும், காவல் மிகுதியை நோக்காது வரும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டு புணருங்கால் தலைவிக் கும் இன்பம் பெருகுதலானும் இவை குறிஞ்சிக்கு உரியவா யின” என்று கூறுகிறார். (தொ. பொ. 6, 7 நச்.)

யாமம் இராப்பொழுதின் நடுக்கூறு. (7 இள.)

குறிஞ்சி நடையியல் -

{Entry: H08__052}

வீரசோழியத்தில் குறிஞ்சியென்ற புணர்தல் தொடர்பான செய்திகளாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கிமதி உடன்பாடு, பாங்கியிற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல் ஆகியவை பற்றிய துறைகள் பலவும் தொகுத்துக் கூறப்பட்ட உரைப்பகுதி ‘குறிஞ்சி நடையியல்’ என்று கூறப்பட்டுள்ளது.

நடை - ஒழுக்கம்; இயல் - வரிசைப்படக் கூறும் இலக்கணம். (வீ. சோ. 92 உரை மேற்.)

குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -

{Entry: H08__053}

நிலம் : புறணி, துருக்கம், புறவம், வன்பால், குறும்பொறை, புறம்பணை. (பிங். 494)

ஊர் : குறும்பொறை, சீறூர், சிறுகுடி. (பிங். 521)

பறை : தொண்டகம், முருகியம், துடி. (பிங். 522)

மக்கள் : கானவர், குறவர்; பொருநன், சிலம்பன், வெற்பன்; குறத்தியர், கொடிச்சியர், மறத்தியர் (பிங். 523, 525, 524)

மக்கள் : குறவர், கானவர், குன்றவர், புனவர், இறவுளர்; கானக நாடன், பொருப்பன், பொருநன், மலையன், வெற்பன், சிலம்பன், நண்பன். (திவா. பக். 39)

குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

{Entry: H08__054}

“வானம்பாடி மகிழுமாறு மேகம் மழைத்துளியைச் சிதறிய காட்டுவழியிலே, நீ தெய்வப்பெண் போல யான் காணவந்து என்னை ஆரத் தழுவிக்கொண்டாய்!” என்ற தலைவன் கூற்று.

(ஐங். 418)

குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -

{Entry: H08__055}

“வறண்ட கோடை நீங்க வானம் மழை பெய்யத் தொடங்கி விட்டது; ஆயின் தலைவன் மீண்டும் பகைமேற் செல்லும் முயற்சி, என்தோள் அழகு கெடப் பீர்க்கம்பூப்போலப் பசலை பரவச் செய்துவிட்டது” என்ற தலைவி கூற்று. (ஐங். 452)

குறிப்பறிதல் (1) -

{Entry: H08__056}

தலைவனது குறையை நிறைவேற்றுவதாகக் கூறி அவனை விடுத்து வந்த தோழி தலைவியை அணுகி, “நம்புனத்திற்கு அழகிய தலைவனொருவன் வேலையேந்திப் பலகாலும் வருகிறான்; ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான். அவனிடத்து யாம் செய்யத் தக்கது யாது?” என்று, தான் ஒன்றும் அறியாத வள் போல அவளோடு உரையாடி அவள் நினைவினை அறிதல்.

இதனை

‘இறைவன் தனக்குக் குறைநேர் பாங்கி,

இறைவிக்கு அவன் குறை உணர்த்தல்’ என்ப. (ந.அ. 147, இ.வி. 509.)

இது திருக்கோவையாருள் ‘குறை நயப்புக் கூறல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 82)

குறிப்பறிதல் - (2) -

{Entry: H08__057}

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியை அணுகி, “இதுவரை தலைவன் கொண்டுவந்த தழையாடையை ஏலாமைக்கு எனக்குத் தெரிந்த காரணங்களை யெல்லாம் கூறி அலுத்துவிட்டேன். இனிப் படைத்துக் கூற என் அறிவில் எக்காரணமும் புலப்பட்டிலது. இன்று தலைவன் வரின் அவனிடம் யான் யாது கூறுவேன்?’ என்றாற்போலக் கூறித் தலைவி தலைவனிடம் எங்ஙனம் ஈடுபட்டுள்ளாள் என்று அவளது உள்ளக் குறிப்பினை அறிதல்.

இது திருக்கோவையாருள் ‘சேட்படை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 111)

குறிப்பறிதல் (3) -

{Entry: H08__058}

இயற்கைப்புணர்ச்சியன்று, தலைவியின் உள்ளக்குறிப் பினைத் தலைவன் தெரிந்து கொள்ளுதல்; கைக்கிளையின் வகை நான்கனுள் இறுதியாவது.

தன்னைக் கண்டதால் தலைவியுள்ளத்தில் எழுந்துள்ள வேட்கையை அவளுடைய கண்களைக் கொண்டே தலைவன் தெரிந்துகொள்ளுதல்.

இதனைக் திருக்கோவையார் ‘உட்கோள்’ என்னும். (5) (ந. அ. 118)

குறிப்பறிதல் (4) -

{Entry: H08__059}

களவுக்காலத்தில் தலைவன் தலைவியது குறிப்பை அறிதலும், தோழிகுறிப்பை அறிதலும், தலைவன் தலைவி என்னும் இருவரது குறிப்பையும் தோழி அறிதலும் ஆம். (குறள் அதி. 110 பரிமே.)

குறிப்பறிந்து கூறல் -

{Entry: H08__060}

சேட்படைக்கண் தோழி, தழை கொண்டுவந்த தலைவ னுடைய குறிப்பறிந்து அவன்குறையை முடிக்க ஒருவாறு இசைந்து, பின் தலைவியிடம் வந்து, “யானை நமக்கு ஊறு செய்யாத வகையில் அதனைக் கடிந்து நம்முயிரைக் காத்து நமக்குப் பேருதவி செய்த தலைவன் கையில் தழைகொண்டு வந்துள்ளான். அத்தழை வாடாத வகையில் நாம் அவனது குறையை முடித்தல் வேண்டாவா?” எனத் தலைவி குறை நயப்பக் கூறியது.

இது ‘சேட்படை’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 112.)

குறிப்பறிந்து புலந்தமை கூறல் -

{Entry: H08__061}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வரத் தலைவி ஊடல் கொள்ள, வாயில்கள் தலைவனுக்காகப் பரிந்து தலைவியை வேண்டத் தலைவி புலவி தீர, இருவரும் பள்ளியிடத்திருப்பவே, தலைவி தலைவனுடைய முகக்குறிப்பால் பின்னும் ஒரு வேறுபாடு கண்டு, அவனுள்ளத்தில் பலரும் இருப்பதாகக் கொண்டு, “இப்பள்ளி பலரைத் தாங்காது!” என்று கூறிக் கட்டிலி னின்றும் இறங்கவே, தலைவி புலந்ததை அங்குள்ளார் தம்முள் கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 367)

குறிப்பறிவு -

{Entry: H08__062}

‘அவள் கண்ணால் அறிதல் குறிப்பறிவே’. ‘குறிப்பறிதல்’ (3) காண்க. (சாமி. 85)

குறிப்பினால் வரைவு கடாதல் -

{Entry: H08__063}

வெளிப்படையாகக் கூறாமல் களவொழுக்கம் தடைப்படு வதைத் தோழி குறிப்பால் சுட்டித் தலைவனை மணக்குமாறு தூண்டுதல்.

பகற்குறிக்கண் தலைவியைக் கூடிவரும் தலைவனை நோக்கித் தோழி, “தாய் எங்களை நன்கு நோக்கி யாங்கள் பருவம் எய்தி விட்டமை உணர்ந்துவிட்டாள். இனி எங்களைப் புறத்தே விளையாட விடுக்காமல், இல்லத்துள்ளேயே செறித்துவிடு வாள்” (பாண்டிக். 149) என்று கூறிப் பகற்குறிக்கண் தலைவன் தலைவியை எதிர்ப்படுதலுக்கு உரிய வாய்ப்பு இழக்கப்படு மாற்றைச் சுட்டி, அவளை மணம்செய்துகொள்ளக் குறிப்பால் தூண்டுதல். (இறை. அ. 18 உரை)

குறிப்பு -

{Entry: H08__064}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று (வீ.சோ. 90) ஆடவரோ பெண்டிரோ தம் உள்ளத் தெழுந்த வேட் கையை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுவது குறிப்பாகும்.

உற்றவன் ஒழுக்கம், உறாச் சிறுநோக்கம், பற்றியுரையாடல், பாங்கிற்கேட்டல், ஊடல், உணர்தல், உவத்தல், பரிதல், பாடல், பரவல், பணிதல், பணித்தல், அணங்குகொண் டகைத்தல், அழுங்குற்று உணர்த்தல், குணம்புகழ்ந்துரைத் தல், குற்றம் கூறல், செய்தது பொறுத்தல், செய்வாய் திருத்தல், வைத்து மகிழ்தல், வாட்டம் காண்டல், அணிந்தன களைஇ ஆடை பெயர்த் துடுத்தல், நாணல், நகுதல், நயத்தல், பார்த்தல், கானல் கழி கடல் காற்று பானல் பற்றை பனிமதி பருவம் மலை புனம் மழை முதலியவற்றொடு நின்றுரை யாடுதல் போல்வன குறிப்பின்பாற் படும். (பற்றை - சிறுதூறு, செங்காந்தள்) (வீ. சோ. 96 உரைமேற்.)

குறிப்பு உரை -

{Entry: H08__065}

தாய் குறித்து நோக்கியதைத் தோழி உரைத்தல்.

இரவுக்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவியிடம், “தாய் ‘நம் கடற்கரைச் சோலையிலே நள்ளிர வில் சிறந்த தேரொன்று வந்து சென்றதாக அறிகிறேன்’ என்று கூறிக் கோபத்தால் கண் சிவந்து என்னைக் கடுமை யாகப் பார்த்தாள்” (பாண்டிக். 237) என்றாற் போலப் படைத்து மொழிந்து, “இனிக் காவல் மிகுதியாயிருக்கு மாதலின் விரைவில் வரைதல் வேண்டும்” எனத் தலைவி வாயிலாகத் தலைவனை வரைவு கடாயது.

இது ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (க. கா. பக். 111)

குறிப்பு உரைத்தல் -

{Entry: H08__066}

தலைமகள்வருத்தம் கூறிய தோழி தலைவனிடம், “தலைவி இன்று என்னைத் தழுவிக்கொண்டு தன் பூவை பந்து பாவை கிளி முதலியவற்றை என் கைத் தந்தாள். அவள் எண்ணம் நின்னோடு உடன்போதலாகவே இருக்கும் என நினைக்கி றேன்” என்று தலைவியின் மனக்குறிப்பைக் கூறுதல்.

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 200)

குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -

{Entry: H08__067}

தலைவன் தன் கண்களால் குறிப்பிட்ட வேட்கையைத் தலைவியும் உணர்ந்து தானும் தன் வேட்கையைத் தன் கண்பார்வையான் குறிப்பிடுவாளாயின், தலைவன் நோக்கிய நோக்கிற்குத் தலைவி தான் எதிர்நோக்கியதனை முதலாவ தாகக் கொண்டு, நுதல் வியர்ப்பொறித்தல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் மூன்று நூற்பாக்களான் கூறப்படும் ஏனைய பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிகண் நிகழும். (தொ. பொ. 97 நச்., 261 - 263 பேரா.)

குறிபெயர்த்திடுதல் -

{Entry: H08__068}

பகற்குறியிடத்தை மாற்றிப் புதிய இடமொன்றைத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! தலைவியை நீ புல்லுதல் விரும்பினால் மகளிர் போக்குவரத்து இல்லாத அரிய தூரிய வழியிலே வேறொரு குறியிடத்தைக் கருதிச் செல்வாயாக. இப்பொழுது அமைந் துள்ள குறியிடம் ஏற்றதன்று” (அம்பிகா. 267) என்றாற் போலத் தலைவனிடம் தோழி குறியை மாற்றி அமைக்குமாறு கூறல்.

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

குறியா கூறல் -

{Entry: H08__069}

தோழியிற் கூட்டத்துப் பகற்குறிக்கண், தோழி தலைவனோடு உரையாடும்போது அவன் வினவியதற்கு மறுமொழி கூறாமல், அவன் கருதாததொன்றைத் தானே எடுத்துப் பேசுதலாகிய துறை. (த. நெ. வி. பக். 19)

“தூய்மை மிக்க பழங்குடியில் தோன்றிய, வாய்மையே பேசும் நாவினை உடைய மதிதரன் போல, இப்பெருமலையில் உயர்தவ முனிவர் பலர் சார்தலான், இம்மலை நிலைபே றுடையது”.

என்றாற்போன்ற தோழி கூற்று.

குறியிடத்து உய்த்து நீங்கல் -

{Entry: H08__070}

பாங்கி தலைவியைச் சார்ந்து அவளைக் குறியிடத்தே கொண்டுபோய் உய்த்த பின்னர், ஒரு காரணம் காட்டி அவ்விடத்தே விட்டு நீங்குதல்.

“தலைவி! உன் மெல்லடி நோவ நீ என்னுடன் நடந்து வரல் வேண்டா; நான் சற்றே அப்பால் சென்று உன் கூந்தலில் சூட்ட நல்ல நறுமலர்கள் பறித்து வருவேன்” (கோவை. 119) என்பது போலப் பேசித் தலைவியைக் குறியிடத்தில் நிறுத்தித் தோழி நீங்குதல்.

இதனைத் திருக்கோவையார் ‘இடத்து உய்த்து நீங்கல்’ என்னும் (119, 163). இது களவியிலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கும் உரித்து. (ந. அ. 149)

குறியிடம் -

{Entry: H08__071}

தலைவனுந் தலைவியுந் கூடுதற்குக் குறித்த இடம்.

‘குறி’ காண்க.

குறியிடம் கூறல் (1) -

{Entry: H08__072}

இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவனிடம்,”யாங்கள் சந்தனச் சாந்தணிந்து சுனைக் குவளைமலர் சூடி மயில்கள் உறங்கும் வேங்கைப் பொழிலில் விளையாடுவோம். அவ்விடத்து நின் வரவினை யாங்கள் குறித்துணர மயில்களை எழுப்புவாயாக” என்று தன் நாட்டு அணியியலொடு குறியிடம் கூறல்.

இதனை ‘அவற்குத் தன்னாட்டு அணியியல் பாங்கி சாற்றல்’ என்ப. (ந. அ. 158; இ. வி. 517)

இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 154).

குறியிடம் கூறல் (2) -

{Entry: H08__073}

உடன்போக்கிற்குத் தலைவன்தலைவியிருவரையும் ஒருப் படுத்தத் தோழி தலைவனிடம், “காலம் தாழ்க்காமல் இன்று இரவு தலைவியைக் கொண்டு உடன் செல்க. யான் அவளை நீ முன்பு வந்து எதிர்ப்படும் குறியிடத்துக்கு அழைத்து வருகிறேன். அங்கு நீ முன்னமேயே வந்து நிற்பாயாக” என்று குறியிடம் கூறுதல்.

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 210)

குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -

{Entry: H08__074}

தோழி தலைவனைக் குறியிடத்தே நிற்கச் சொல்லிவிட்டு, தலைவியை இறுகத் தழுவிக்கொண்டு கிடந்துறங்கும் தாய் நன்கு ஆழ்ந்து உறங்குகின்றாளா என்பதனைத் தெரிந்து கொள்ளுதல்.

“தலைவி! யானை ஒன்று நம் ஊசலை அழித்து நம் சோலை யில் பூக்கள் மிக்க நாகமரத்தை ஒடிக்கிறது” (கோவை. 161) என்பது போன்று சிலவற்றைத் தோழி தலைவியிடம் கூறி, அதற்குத் தாயிடமிருந்து மறுமொழி எதிர்பார்த்து அம் மறுமொழி யில்லாமையால் தாய் உறங்கிவிட்டாள் என்பதை உணர்தல்.

இது களவியலுள் ‘இரவுக் குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

குறியிடையீடாவது -

{Entry: H08__075}

குறிகள் தவறிப் போதல்.

இயற்கைப் புணர்ச்சி - இடந்தலைப் பாடு - பாங்கற்கூட்டம் - இவை நிகழ்த்தியபின், களவொழுக்கத்தை நீட்டியாது தலைவன் தலைவியை மணந்துகோடலை விடுத்துப் பாங்கியின் உதவி பெற்றுச் சிலநாள் தலைவியைப் பகற்குறி யிலும் பின்னும் சிலநாள் இரவுக்குறியிலும் கண்டு கூடுதலை விரும்புகிறான். பகற்குறியிடங்கள் பூப்பறிப்பவராலும் தேன் அழிப்பவராலும் கிழங்கு அகழ்பவராலும் பலகாலும் போக்குவரத்து நிகழ்த்தப்படும் இடங்களாகவே, பகற் குறிக்கண் இடையீடு நேர்கிறது. அல்ல குறிப்படுதலானும், வருந்தொழிற்கு அருமையாகிய தாய் துஞ்சாமை முதலிய வற்றானும் இரவுக்குறி இடையீடுபடுகிறது. இவ்வாறு பலவகையானும் இடையீட்டுக் குரியவாய்க் காமத்தினும் மிக்க அலர் அச்சம் தருவனவாயுள்ள பொருந்தாக் காமச் செய்தி பற்றி இருவரும் மனம் வருந்தும் நிலை தரும் குறியிடை யீடுகளை அகப்பொருட் பெருந்திணையாகக் கோடல் ஒரு சாரார் கருத்து. (ந. அ. 243)

குறிஉய்த்து அகறல் -

{Entry: H08__076}

தோழி தலைவியைக் குறியிடத்தே கொண்டு விடுத்த பின் நீங்குதல்.

“தலைவி! நின் கண்ணழகுக்கு ஒப்பான நீலமலர்களையும், சந்தனத் தழையையும், ஏனைய நறுமண மலர்களையும் யானே சென்று பறித்துக் கொணர்வேன்; நீ ஈண்டே இருத்தி” (தஞ்சை. 176) என்று தலைவியை இரவுக்குறியிடத்து விடுத்துத் தோழி அகலுதல்.

இது களவியலுள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. இச்செய்தி ‘பகற்குறி’யிலும் நிகழும். (ந. அ. 158)

குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -

{Entry: H08__077}

நச்சினார்க்கினியர் உரையிற் கொள்ளும் கூற்று, இடந் தலைப்பாட்டின்கண் நிகழ்வது.

“என் தலைவன் உள்ளத்தை மயக்கி அகன்ற, கிளியை ஒத்த மழலைமொழி கூறும் நல்ல நிறமுடைய மேனியளாகிய தலைவியை ஆயத்தின் நீக்கித் தனித்து நிற்கும் நிலையில் எனக்குக் காட்டிய வானோர்தெய்வத்தின் திருவருளை நினைத்து யான் வணங்குகின்றேன்” என்ற பாங்கன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

குறிவழிச்சேறல் -

{Entry: H08__078}

தோழன், தலைவியைக் காணத் தலைவன் கூறிய குறியிடத் திற்குச் செல்லுதல்.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண் அமைந்ததொரு கூற்று. (ந. அ. 137)

குறி விலக்குவித்தல் -

{Entry: H08__079}

இரவுக்குறி வேண்டா என்று தலைவி காரணம் காட்டி அதனை நீக்குமாறு தோழியிடம் கூறுதல்.

“தோழி! கொடிய வழியிலே தலைவன் என்னை நயந்து இரவுக்குறிக்கண் வருதல் வேண்டா. தாய் சேய்மையிலுள்ள ஒரு தினைப்புனக் காவலுக்கு நம்மை அனுப்ப இருக்கிறாள்; ஆதலின் பகற்குறி வாய்க்கும் என்று தலைவனிடம் கூறி அவன். இரவுக்குறி வருகையை நீக்குவாயாக” (தஞ்சை. கோ. 224) என்று தலைவி தோழியிடம் கூறுவது. (ந. அ. 164)

குறுங்கலி (1) -

{Entry: H08__080}

தலைவன் தலைவியை அறவே கைவிட்டுப் பிற மகளிரை விரும்புதற்கு அவன் நெஞ்சத்தே மாறுபட்டெழுந்த காம வேட்கை அழிந்துபோம் வண்ணம் கூறுதல்; இஃது ‘இருபாற் பெருந்திணைப்பால’ கிளவிகளுள் ஒன்று.

“ஒரு காலத்தே இவளுடைய அழகையும் பிற நலத்தையும் உண்டு மகிழ்ந்த நீ இன்று இவளைப் பிரிந்து துன்புறச் செய்தலும் இவளை விரும்பாதிருத்தலும் ஏற்ற செயல் அல்ல” எனச் சான்றோர் தலைவற்கு அறிவுறுத்துதல். (பு. வெ. மா. 17 : 18)

பேகன் தன் மனைவி கண்ணகியை விடுத்து நல்லூர்ப் பரத்தை ஒருத்தியின் நலன் நயந்து காலம் கழித்தானாக, அவனை அவன் மனைவியொடு மீண்டும் இணைப்பிக்கக் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய சங்கச் சான்றோர் பாடிய பாடல்கள் குறுங்கலி என்ற துறைப்பாற் படுவனவாகப் புறநானூற்றில் காணப்பெறுகின்றன. (புறநா. 143-147)

தொல்காப்பியனார் கூறாமையின் குறுங்கலி நச்சினார்க் கினியருக்கு உடன்பாடன்று (கலி. 99 உரை.)

குறுங்கலி (2) -

{Entry: H08__081}

தன்னை முற்றத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி அவன் முன் நின்று பழி தூற்றுதல். இது ந.அ. கூறும் அகப்புறப் பெருந்திணை (244).

இது பழி தூற்றி அவனை யெய்துதல் இயலாது என்று அறிந்துவைத்தும் தலைவி செய்யும் பொருந்தாச் செயல் ஆதலின், அகப்புறப் பெருந்திணை ஆயிற்று. (வீ. சோ. 97 உரை மேற்)

புறப்பொருள் வெண்பாமாலை கூறும் ‘குறுங்கலி’ வேறு.

குறும்பொறை நாடன் -

{Entry: H08__082}

முல்லை நிலத் தலைவன் (இறை. 1 உரை) (L)

குறைநயப்புறுதலின் துறைகள் -

{Entry: H08__083}

குறிப்பறிதல், மென்மொழியாற் கூறல், விரவிக் கூறல், அறியாள் போறல், வஞ்சித்துரைத்தல், புலந்து கூறல், வன்மொழியாற்கூறல், மனத்தொடு நேர்தல் என்பன எட்டும் ஆம். (கோவை. 82-89)

குறைநேர்தல் -

{Entry: H08__084}

வரும் வழியின் துன்பங்களை நினைத்து இரவுக்குறி வேண்டா என முதற்கண் மறுத்த தலைவி, தலைவனது ஆற்றாமையைத் தோழி கூறக் கேட்டதும், “என்னைத் தண்ணீர் ஆழத்தி னின்று எடுத்துக் காத்த தலைவற்கு நான் ஒன்றும் சொல் லுவது அறியேன்” என்றல் போலக் கூறி, இரவுக்குறிக்கு உடன்படுதல்.

இதனை ‘நேரிழை, பாங்கியொடு நேர்ந்துரைத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 158, இ. வி. 517)

இஃது ‘இரவுக் குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 158)

குறையுற உணர்தல் -

{Entry: H08__085}

தலைவன் பாங்கியிற் கூட்டத்தின் தொடக்கத்தில் தோழியை இரந்து குறையுற்றவழித் தோழி அவனைப் பற்றி உணர்வது. இது மதியுடம்படுத்தலின் மூவகையுள் ஒன்றாகும். (தொ. பொ. 127 நச்.)

தலைவன் தோழியிடம் தழையும் கண்ணியும் கொண்டு இரந்து பின்னிற்றலைக் குறைவான செயலென்று கருதாது நிற்பத் தோழி, “இவன் இரந்து பின் நிற்கின்றது எற்றுக்கு?” என்று ஐயவுணர்வோடு ஆராய்ந்தது. (இறை. அ. 7 உரை)

குறையுற உணர்தலின் கூற்றுக்கள் -

{Entry: H08__086}

குறையுற்று நிற்றல், அவன் குறிப்பு அறிதல், அவள் குறிப்பு அறிதல், இருவர் நினைவும் ஒருவழி உணர்தல் - என்ற நான்கும் தோழி குறையுற உணர்தல் என்னும் தொகுதிக்கண் அமைந்த கூற்றுக்களாம். (கோவை. 63-66)

குறையுறத் துணிதல் -

{Entry: H08__087}

இயற்கைப் புணர்ச்சி பாங்கற்கூட்டம் இவற்றின் பின், தோழி வாயிலாகவே தலைவியை எய்துதல் கூடும் என்ற முடிவுக்கு வந்த தலைவன், தோழியை அணுகி அவளை வேண்டித் தன் குறையைக் குறிப்பிடத் தீர்மானித்தல். குறை - இன்றியமை யாமை, தேவை. பெரும்பான்மையும் தலைவியும் தோழியும் ஒருங்கிருக்கும்வழியே தலைவன் முதற்கண் தோழியைக் காண்பான்.

இஃது ‘இரவு வலியுறுத்தல்’ எனவும் படும். (ந. அ. 140, இ. வி. 507)

இது திருக்கோவையாருள் ‘மதியுடம்படுத்தல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 51)

குறையுறு புணர்ச்சி -

{Entry: H08__088}

தோழியின் விருப்பத்திற்காகத் தலைவி தலைவனைக் கூடும் கூட்டம்.

தோழி தலைவியை நோக்கி, “ஈங்கு நாடோறும் தலைவ னொருவன் வருகின்றான். அவன் என்னைக் கொண்டு தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கருதுகிறான். அவன் விருப்பத்தை நீ நிறைவேற்றாயாயின் எனது குற்றேவலை இழப்பாய்” என்று கூற, அத்தோழியை இழப்பதற்கு அஞ்சி அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத் தலைவி தலைவனைக் கூடும் கூட்டம் என்பது.

தோழி பக்கம் நின்ற குறையுறவினால் தலைவி தலைவனைக் கூடுதல் என்றும் இல்லை. (இறை. அ. 13)

கூகை குழறுதல் -

{Entry: H08__089}

தலைவி இரவில் குறியிடம் வருவதற்கு இடையூறாக, மனை யினின்று புறப்படும் அவள் அஞ்சும் வண்ணம் கோட்டான் இரட்டுதல்.

இது தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் வரும்.

இது களவியலுள் ‘இரவுக்குறி இடையீடு’ என்னும் தொகுதிக் கண் ‘வருந்தொழிற்கருமை’ யின்பாற்படும் ஒரு கூற்று. (ந.அ. 161)

கூகையை நோக்கிக் கூறல் -

{Entry: H08__090}

இரவுக்குறியில் நள்ளிரவில் தலைவன் வரவு எதிர்பார்த் திருந்த தலைவி, அவன் வாராமையால் வருந்துங்கால், ஆள் வரவினை அறிவிக்கும் வகையில் கூகை கூவுதல் வேண்டு மெனக் கேட்டுக் கொள்ளுதல்.

“ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவில் என் தலைவர் வருகையை அறிவிக்கும் வகை இடி போல் ஒலிக்கும் கூகையும் கூவாது ஓய்ந்துவிட்டதே! அவ்வாறின்றி அஃது இரட்டி அவர் வருதலை அறிவிப்பின், அதற்குச் சுடச்சுட எலியுணவு அளிப்பேன்” என்ற தலைவி கூற்று.

இக்கூற்று ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ணது.

(அம்பிகா. 215)

கூட்டக் கூடல் -

{Entry: H08__091}

ஒருவர் இடைநின்று புணர்ப்பார் உளராகத் தலைவனும் தலைவியும் கூடுதல்.

களவுக் காலத்தே கூட்டக் கூடல் இல்லை எனவே, கற்புக் காலத்தே தலைவியின் ஊடலை வாயில்கள் நீக்கிக் கூட்டக் கூடலுண்டு என்பது. (இறை. அ. 4)

கூட்டத்துக் குழைதல் -

{Entry: H08__092}

தலைவனுடன் கூடியிருந்த பெருந்திணைத் தலைவி, தலைவன் தன்னைப் பிரிந்து செல்வானோ என்று நினைத்துப் பார்க்கவும் பொறுக்காத மனநிலையில் மிக நெகிழ்ந்து தன்னைப் பிரிந்து செல்லலாகாது எனத் தலைவனிடம் வற்புறுத்திக் கூறுதல்.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெண்பாற் கூற்றுப் பெருந்திணைக்கிளவிகளுள் ஒன்று. (பு.வெ.மா. 16-14)

கூட்டம் (1) -

{Entry: H08__093}

காமக்கூட்டம் பற்றிய ஐந்திணை கைக்கிளை பெருந்திணைச் செய்திகள். (வீ. சோ. 181 உரை)

கூடல் (1) -

{Entry: H08__094}

தலைவன் தலைவியைக் களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் கூடி ஒழுகும் ஒழுக்கம். இஃது அருமையிற் கூடல், பிரிந்து கூடல், ஊடிக் கூடல் என்ற மூவகைத்து.

அருமையிற் கூடல் - கூடுதற்கு எளிதன்மையின், ஒருவர் ஒருவரைக் கண்ட காலம் தொட்டு ஒத்த நினைவினராய் நின்று கூடுதல்.

பிரிந்து கூடல் - ஒத்த நினைவினராய்க் கூடியவர் பின் ஒரு காரணத்தாற் பிரிந்து அதன் பின்னர்க் கூடுதல்.

ஊடிக் கூடல் - தலைவன், தன்மாட்டுத் தவறுகண்டு புலந்த தலைவியைப் புலவி நீக்கிக் கூடுதல்.

இவை திருக்குறள் காமத்துப் பாலில் முறையே 1-3 அதிகாரங் களிலும், 4-21 அதிகாரங்களிலும், 22-25 அதிகாரங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. (பரிப். உரை).

கூடல் (2) -

{Entry: H08__095}

கூடல் சுழி இழைத்தல். ‘ஆழி இழைத்தல்’ காண்க.

கூடற்சுழி இழைத்தலைப் பற்றி, ஒரே வட்டம் இழைத்து அதன் இருதலையும் கூடியவழி நன்னிமித்தம் என்று கொள்வர் என்ற கருத்தோடு, ஒருபெரு வட்டத்துள் பல சிறு வட்டங்கள் சுழித்துப் பின் அச்சுழித்தவற்றை எண்ணி அவை இரட்டைப்படையாயின் எடுத்த செயல் நிறைவுறும் என்று முடிவு செய்வர் என்ற கருத்தும் நிலவுகிறது. கண்ணை மூடிக் கொண்டு மணலில் இழைப்பது இது.

எ-டு :

1. ‘வள்ளல் மாலிருஞ் சோலைம ணாளனார்

பள்ளி கொள்ளும் இடத்துஅடி கொட்டிடக்

கூடு மாகில்நீ கூடிடு கூடலே’ (நாச்சி. திரு. 4-1)

‘பாகவரை வாங்கிப் பழுதாகில் பாவியேற்கு

ஏகுமால் ஆவி எனநினைப்ப’ (சீவக. 1038)

2. ‘ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி’ (கோவை. 186)

கூடல் குறிப்பு (3.) -

{Entry: H08__096}

தெள்ளியார் எனத் தொடங்கும் நாச்சியார் திருமொழியில் அமைந்த செய்தி; தலைவி கூடல் இழைத்துத் தலைவன் தன்னை வந்தடைவானா எனக் குறி பார்ப்பதும், அது நல்ல முடிவையே தருதல் வேண்டுமென வேண்டுதலும் இது.

“கூடல் தெய்வமே! வேங்கடம், கண்ணபுரம் இவற்றிலுள்ள பெருமான் ஓடிவந்து என் கரத்தினைப் பற்றி யான் மகிழும் வண்ணம் கூடுவானாயின் நீ கூடுவாயாக” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (நாச். திரு. 4-1)

கூடல் இழைத்தல் -

{Entry: H08__097}

களவுக் காலத்தில் தலைவன் ஒருவழித் தணந்தானாக, அவனது வரவினை நோக்கிக் கலங்கி எதிர்பார்த்திருந்த தலைவி அவன் வரும் நிமித்தத்தை அறிய, “நீத்து அகன்ற தலைவனை இவ்விடத்தே தரவல்லையோ?” எனக் கூடல் தெய்வத்தை வாழ்த்தித் தரையில் விரலால் சுழித்து இரு முனையும் இணைகின்றனவா என்று பார்த்தல்.

இஃது ‘ஒருவழித்தணத்தல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 186)

கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்

{Entry: H08__098}

“பெருமானே! நின் வரவினை எதிர்பார்த்துக் கூடலிழைக்கும் தலைவி, தான் இழைக்கும் கூடலைக் கடல் வந்து தன் அலைக்கையால் அழிக்கின்றது என்று சினங்கொண்டு, தன் அழகிய காலால் கடலை உதைக்கும் பெருமிதச் செருக்கொடு நினது திருத்துழாய்மாலையைப் பெறத்துடிக்கின்றாள். யான் என்ன செய்வேன்?” என்னும் பாங்கி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவி. 34)

கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -

{Entry: H08__099}

தலைவியைக் கண்டும் அவளுடன் கூடி இன்புறத்தக்க வகையில் அவள் யாதும் கூறாதிருந்தபோது, அவள் தன் இசைவினைக் குறிப்பாகவேனும் கூறுதல் வேண்டும் என்று தலைவன் வேண்டுவது.

இதனை ‘மொழிபெற வருந்தல்’ என்றும் கூறுப. (கோவை. 41)

இது களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 503 உரை)

கூடற்சுழி -

{Entry: H08__100}

கூடல் (2) காண்க

கூடற்றெய்வம் -

{Entry: H08__101}

கூடல் தெய்வம்; கூடற் சுழிக்குரிய தேவதை. (கோவை. 186 உரை)

கூத்தர் -

{Entry: H08__102}

கூத்தர் - நாடகசாலையார், பண்டைக்காலம்தொட்டு வருகின்ற நன்றும் தீதும் பற்றித் தாம் கற்றறிந்தவற்றை நாடகங்காண அவைக்கு வந்தோர்க்கெல்லாம் நடித்துக் காட்டும் தொழிலை யுடையவர். இவர்கள்தம் கூற்றுக்கள் பின்வருமாறு :

1. முன்னே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இது வெனக் கூறல்;

2. “நுமது நுகர்ச்சி அவரினும் சிறந்தது” எனக் கூறல்;

3. தலைவி ஊடல் கொண்டவழி, அஃது இல்லறத்துக்கு ஏற்றதன்று என்றோ, அன்பின்மையைக் காட்டும் என்றோ கூறித் தலைவி ஊடலைத் தீர்த்தல்;

4. இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பம் நுகர்தலே தலைவிக்குப் பொருள் என்றல்;

5. தலைவனைப் புறத்தொழுக்கத்தினின்று அறிவு கொளுத்தி மீட்டல்;

6. கழிகாமத்தால் இழிநிலை ஏற்படும் என்று தலைவற்குக் கூறல்;

7. கழிகாமத்தால் கெட்டாரைத் தலைவற்கு எடுத்துக் காட்டுதல்;

8. தலைவியின் முலையினும் தோளினும் முகத்தினும், தலைவன் எழுதுங்கால், புணர்ச்சிதோறும் அழித்து எழுதுமாறு இதுவெனக் கூறல்.

இவ்வாறு தலைவிக்குக் கூறுவன நான்கு; தலைவற்கு கூறுவன நான்கு. (தொ. பொ. 168 நச்.)

பிரிந்த தலைவன் வினைமுடித்து மீளும் நிலையைத் தலைவிக்கு உணர்த்தலும் கூத்தர் தொழிலாம். (169 நச்.)

கூத்தராவார் பார்ப்பனருக்கு வேளாண்கன்னியிடம் பிறந்தவரும், வேளாளரும் பிறரும் அவ்வாடல் தொழிலுக்கு உரியோரும், பாரதிவிருத்தியும் விலக்கியற் கூத்தும் கானகக் கூத்தும் கழாய்க் கூத்தும் ஆடுபவரும் ஆகிய கூட்டத்தார். இக்கூத்தர் எண்வகைச் சுவையும் மனத்தின்கண்பட்ட குறிப் புக்களும் புறத்துப் போந்து புலப்பட ஆடும் ஆற்றலுடையார். (பொ. 91. நச்.)

கூத்தர்க்கு உரியன -

{Entry: H08__103}

‘கூத்தர்’ காண்க.

கூத்தர் வாயில் மறை -

{Entry: H08__104}

தலைவனுக்கு வாயிலாக வந்த கூத்தர்களைத் தலைவி வாயில் மறுத்தல்.

“ஆரியக் கூத்தனே! நகர் முழுதும் பாடியாடும் பரத்தையர் குழாத்தொடு நீ இங்கு வந்து என்னை வந்தனை செய்வதாகிய இந்நடிப்பு உன் பழைய நடிப்புக்களில் ஒன்றுபோலும்” (அம்பிகா. 488) என்றாற்போலக் கூத்தனிடம் கூறி, அவன் வேண்டுகோளாகிய தலைவனை ஏற்றுக்கோடலைத் தலைவி மறுத்தல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; இஃது உணர்த்த உணரா ஊடல். (இ. வி. 555 உரை)

கூதிர் கண்டு கவறல் -

{Entry: H08__105}

கற்புக் காலத்தில் தலைவன் வேந்தர்க்கு உற்றுழிப் பிரிந்தவழிக் கூதிர்க்காலம் வரக் கண்டு தலைவி, “மலையிடத்து ஏறித் துணையோடு இல்லாதாரைத் துன்புறுத்தத் தேடும் மேகக் கூட்டங்கள் நம்மை வருத்துதலே யன்றித் துணைவற்கு உதவி செய்யச் சென்றுள்ள நம் தலைவரையும் வருத்துமோ? அங்ங னம் வருத்தத் தொடங்கின், நம் தலைவர் நம்மை நினைத்து ஆற்றாராகித் தாம் சென்று செயற்பட்ட வினையைச் செவ்வனே முடிக்கமாட்டாரே!” என்று கவலைப்படுதல்.

இது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ என்ற தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 319)

கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -

{Entry: H08__106}

குறிஞ்சியாவது புணர்தல் என்னும் பொருளுடையது. அஃது இயற்கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தபின் களவு நீட்டிப்பக் கருதும் தலைவனுக்கு அக்களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி கிட்டுதற்கு அரியளாயிருத்தல் வேண்டும். அவ்வருமையை உண்டாக்கும் காலம் வாடைக் காற்று வீசும் கூதிர்க்காலமும், முன்பனி துன்புறுத்தும் முன்பனிக்காலமும் ஆகிய ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என்னும் மாதங்களும், சிறுபொழுதில் இடையாமமும் ஆம். இருள் செறிந்து முன்பனி துன்புறுத் தும். முன்பனி மிகுதலால் தலைவற்குத் தலைவியை நோக்கி வருதல் அரிதாக இருக்கும். நள்ளிரவில் மாவும் புள்ளும் இடம் பெயராது துணையுடன் இன்புற்று வதிதலைக் காணுங்கால் தலைவற்குக் காமக்குறிப்புப் பெருகும். காவல் மிகுதி நோக்காது காவலர்பார்வையின் நீங்கிப் பதுங்கி வந்து இரவுக்குறி எய்தும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் தலைவிக்கும் இன்பம் மிகும். ஆதலின், கூதிரும் முன்பனியும் ஆகிய பெரும்பொழுதும், இடையாமமாகிய சிறுபொழுதும் குறிஞ்சிக்குச் சிறந்தன ஆயின. (தொ. பொ. 6, 7 நச்.)

கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தல் -

{Entry: H08__107}

தான் பொருள் முதலிய பற்றிக் கற்புக் காலத்துப் பிரியக் கருதிய தன் கருத்தைத் தலைவி ஏற்குமாறு, தலைவன் உலகில் புகழும் செல்வமும் எய்துதற்குத் தலைமக்கள் தத்தம் மனைவியரைப் பிரிந்து செயற்படும் வழக்கத்தை எடுத்துக் கூறல். கூற்றம் - கூற்று, சொல்; (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

கூற்றுக்கு உரியர் அல்லாதார் -

{Entry: H08__108}

களவிலும் கற்பிலும் ஊரவரும் அயலோரும் சேரியிலுள்ளா ரும் ஆகிய பெண்பாலாரும், தலைவிக்கு உற்ற நோயின் பகுதியைக் குறிப்பாலறியும் இருபாலரும், தலைவியின் தந்தையும் அவள் தமையனும் என்னும் இவர்கள் கூறிய கூற் றாகப் பிறர் சொல்லுவாரேயன்றி, இவர்கள் தாம் நேராகக் கூறுவதாகப் புலனெறிவழக்கம் இல்லை. தலைவனொடும் தலைவியொடும் நற்றாய் நேராகக் கூற்று நிகழ்த்துதல் அகத்திணைக்கு இல்லை. (தொ. பொ. 503, 504 பேரா.)

கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -

{Entry: H08__109}

நற்றாய், தந்தை தன்னையருக்கு அறத்தொடு நிற்பதற்குத் தன்மகள் நிலையை அவர்களுக்குக் குறிப்பினால் தெரிவித் தல். இது ‘நற்றாய் தந்தை தன்னையருக்குக் குறிப்பால் கூறல்’ எனவும் (ந.அ.48, 52) கூறப்படும். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92. உரைமேற்.)

கூறுதல் -

{Entry: H08__110}

இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் எழுவகைகளுள் ஒன்று. தலைவியைத் தலைவனுக்குக் கொடுத்தலே எவ்வாற் றானும் பொருத்தமானது என்று கூறுதல். (தொ. பொ. இள. 112, உரை, தொ. பொ. 204. இள.)

கூறுதல் உசாதல் -

{Entry: H08__111}

இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் வகை ஏழனுள் ஒன்று; கூறுதற்கண் உசாவுதல் என விரியும்.

தலைவியும் தோழியும் வெறியாட்டிடத்தும் பிறவிடத்தும் சில கூறுதற்கண்ணே தானும் பிறருடனேயும் உரையாடுதல்; வேலன், கட்டுவிச்சி முதலியவரிடம் பேசுவாள் போன்று செவிலிக்குத் தலைவன் தலைவியர் கூட்டச் செய்தியைப் புலப்படச் செய்தல். (தொ. பொ. 207. நச்)

கூறுதல், உசாவுதல் என இரண்டாகக் கொண்டார் இளம்பூரணர்.

கூறுவிக்குற்றல் -

{Entry: H08__112}

வரையாது வந்தொழுகும் தலைவனைத் தோழி பலவாறு கூறித் தலைவியை மணந்துகொள்ளுமாறு வற்புறுத்தவும் மணத்திற்கு உடன்படாத தலைவனிடம், பகற்குறியான் வரும் பழியினையும், இரவுக்குறி வருதல் இயலாதவாறு செய்யும் காவல் மிகுதியினையும் தலைவியே நேரிற்கூறி அவன் விரைவில் மணம்முடிக்க ஆவன செய்யுமாறு வற்புறுத்தல் வேண்டும் என்று தோழி கூறுதல். தலைவியைத் தலைவ னிடம் நேராகக் கூறச்செய்தல் கூறுவிக்குற்றலாம்.

இதனைப் ‘பாங்கி, நின்குறை நீயே சென்றுரை என்றல்’ என்றும் கூறுப. (ந. அ. 144; இ. வி. 509).

இது ‘வரைவு முடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 263)

கூறுவிக்குறுதல் -

{Entry: H08__113}

பிறரைக்கொண்டு சொல்வித்தல் ‘ கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.’ (கோவை.263 கொளு.) (L)

கெடுதிவினாதல் -

{Entry: H08__114}

தலைவன் புனத்தினிடத்தில் வந்து பாங்கியிடம் தன்னால் வேட்டையாடப்பட்டுத் தப்பிவிட்ட யானையோ மானோ பன்றியோ அந்த வழி வந்ததை அவர்கள் கண்டதுண்டோ என வினவுதல்.

இது களவியலுள் ‘பாங்கி மதிஉடன்பாடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 140)

கேட்டவள் கூற்று -

{Entry: H08__115}

தலைவியின் களவுக்கால உடல்மெலிவுக்குக் காரணம் தெய்வக்குற்றம் ஆகலாம் ஆதலின் தெய்வம் மகிழ வழிபாடு செய்தல் வேண்டும் என்ற முதுவாய்ப் பெண்டிர் கூற்றினைக் கேட்ட செவிலி கூறுதல் (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ.92. உரைமேற்)

கேட்போர் -

{Entry: H08__116}

தலைவன் கூற்றையும் தலைவி கூற்றையும் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்ற பதின்மரும் கேட்பர்.

இது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று.(தொ. பொ .508 பேரா.)

கேடு எனக் கூறல் -

{Entry: H08__117}

பாங்கன், நங்கையொருத்திபால் தன்மனம் செலவிட்ட தலைவனை இடித்தும், அவன் தன் சொற்களைக் கேளாத நிலையில், அவன்திறத்துத் தன் சொற்கள் பயன்பட வில்லையே என்று தன்னுள் கூறிக்கொள்ளுதல். (இது பாங்கன் தன்மனத்து அழுங்கல் எனவும்படும். ந.அ.137) (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ .92. உரைமேற்.)

கேள்வி -

{Entry: H08__118}

இஃது அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று(வீ.சோ.90)

தலைவன் தலைவி முதலியோர் கூற்றினை உயர்திணைப் பொருள்களில் இன்னார் கேட்டார் எனவும், அ ஃறிணைப் பொருள்களில் இன்னது கேட்டது எனவும் சொல்லும் செய்யுளுரை. (வீ. சோ. 96. உரை.மேற்.)

கைஅன்று என்றல் -

{Entry: H08__119}

தலைவி அறத்தொடு நிலையினை மறுத்தவழித் தோழி அவளை அதனை நயப்பிக்கக் கூறியது.

களவில் தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்ட உடல் மெலிவு தெய்வத்தானாயிற்றென்று செவிலி வெறியாட் டெடுக்கத் துணிந்தவழித் தோழி அறத்தொடு நிற்றலைத் தலைவி மறுத்து உயிர்விடத் துணிந்தவிடத்தே, தோழி, “நமக்கு வரும் துன்பங்களை நாம் பொறுத்து வாழ்க்கை நடத்துவதே தக்கது; அவ்வாறன்றி நீ கூறிய செயல் அன்போ அறமோ நல்லொழுக்கமோ அன்று” என்றாற் போலக் கூறித் தலைவி தான் அறத்தொடு நிற்றலை ஏற்குமாறு செய்தல்.

இது கற்பினுள் ‘அறத்தொடு நிலை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 22)

கைக்கிளை (1) -

{Entry: H08__120}

தலைவி ஒருத்தி தலைவன் ஒருவனுடைய மணம் கமழும் மாலையை விரும்பி, “முகில்கள் நெஞ்சினை வருத்தும் மயக்கம் தரும் மாலைக்காலத்தில் தனியே நிற்கும் என்பார் என் தலைவனாகிய சோழமன்னன் இராப்பொழுது வந்து என்னைத் தழுவி எனக்கு இன்பம் செய்து தன்மார்பில அணிந்த மாலையைத் தருவானோ?” என்றாற் போலக் கூறும் பாடாண்துறைச் செய்தி. (பு. வெ. மா. 9:45)

கைக்கிளை (2) -

{Entry: H08__121}

கை - சிறுமை; கிளை - உறவு; ஆதலின் கைக்கிளையாவது பெருமையில்லாத தலைமக்கள் உறவு. ஒத்த அன்பு முதலியன உடைய தலைவன்தலைவியரிருவரும் கொள்ளும் உறவே பெருங்கிளையாதலின், தலைவி தன்னை விரும்பா நிலையில் தலைவன் மாத்திரம் தலைவியை விரும்பும் உறவு கைக்கிளை யாயிற்று. (தொ. பொ. 1 இள.)

கை - பக்கம்; கிளை - கேண்மை; ஒருமருங்கு பற்றிய கேண்மை யாகிய ஒருதலைக் காமமே கைக்கிளையாவது, (1 நச்.)

இது,

1. காமஞ்சாலா இளமையோள்வயின் தலைவன் விரும்பும் கைக்கிளை (50. நச்.)

2. பொதுவாகத் தலைவி யொருத்தியைத் தலைவனொருவன் காணும்போது அவனிடம் நிகழும் காட்சி ஐயம் தெரிதல் தேறல் என்னும் நாற்குறிப்பும் பற்றி வரும் கைக்கிளை.(52 நச்.)

3. ஐந்திணை ஒழுக்கத்திற்கு அடிப்படையாகக் களவியலில் காணப்படும் கைக்கிளை (93-96 நச்.)

4. அசுரம். இராக்கதம் பைசாசம் என்ற மும்மணம் நிகழ்த்துதற்குரிய கைக்கிளை (106 நச்.)

5. மானுடராய் மிக்காரையும் தெய்வங்களையும் மகளிர் நயக்கும் ஒருதலைக் காமமாகிய புறத்திணைக் கைக்கிளை (83 நச்.)

6. இத்தகைய கைக்கிளைகள் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி, இடைநின்ற சான்றோரா யினும் பிறராயினும் கூறுதற்குரித்தாய், முற்காலத்து ஒத்த அன்பினராகிப் பிற்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்த தனால் துறக்கப்பட்ட பெண்ணின் ஆசைபற்றிய ஒரு வகைக் கைக்கிளை (90 நச்; புறநா.143-147, கலி. 99, 100) எனக் கைக்கிளை நச்சினார்க்கினியர் கருத்தான் அறுவகைப் படும்.

காமஞ்சாலா இளமையோள்வயின் நிகழும் கைக்கிளை ஒன்றே தொல்காப்பிய மரபிற்கு உரியது எனவும், ஐந்திணை ஒழுக்கத்தில் புணர்ச்சிக்கு முன் நிகழும் காட்சி ஐயம் முதலிய வற்றைத் தொல்காப்பியனார் கைக்கிளையென்று பெயரி டாமல் ‘காமக்குறிப்பு’ என்றே பெயரிட்டார் எனவும், பெண் பாற் கைக்கிளை முதலாகப் பிற்காலத்தார் பெயரிட்டு வழங்குவன பெருந்திணைப் பாற்படும் எனவும் கருதுவார் பாரதி. (49 உரை.)

கை - பக்கம்; கிளை -கிளைத்தல், தோன்றுதல்; அஃதாவது ஆண்பால் பெண்பால் என்னும் இருவருள் ஒருவர் பக்கத்தே தோன்றும் அன்பாம். ஆகவே, கைக்கிளை ஒருதலைக்காமம். (பொ. 1 குழ)

எண்வகை மணத்தினும் எதிர்சென்று கூடுவதனானும், காமஞ்சாலா இளமைப்பருவம் இதன்கண்ணது ஆகலானும் இக்கைக்கிளை முதல் திணையாகக் கூறப்பட்டது. (நச்.)

கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். (வீ. சோ. 97)

இஃது அகப்புறத்திணை இரண்டனுள் ஒன்று. (இ. வி. 377)

கைக்கிளை இலக்கணம் -

{Entry: H08__122}

கைக்கிளையாவது ஒருமருங்கு கிளர்ந்த கேண்மை. கை என்பது ஈண்டுச் சிறுமையாகிய ஒரு கூற்றினை உணர்த்தி நின்றது. அஃதாவது தலைமக்களுள் ஒருவரிடம் கிளர்ந்த முற்றுப்பெறாத காதல்வேட்கை. (தொ. அகத். 1 ச. பால)

கைக்கிளைக்கு உரிய தலைவர்கள் -

{Entry: H08__123}

பிறரிடம் அடியவராய்ப் பணிசெய்வோரும், ஏவலராகப் பணியாற்றுபவருமே கைக்கிளைக்குரிய தலைமக்கள். இவர்கள் தலைமையற்றுப் பிறர்க்குக் கீழ்ப்படிந்து நடப்பவ ரும் இழிகுலத்தவரும் ஆவர். ஈண்டுக் கைக்கிளை யாவது ஒருதலைக் காமம். (தொ. பொ.23 நச்; ந. அ. 242)

கைக்கிளைக் குறிப்பு -

{Entry: H08__124}

தொ. பொ. 52இல் சொல்லப்பட்ட செய்திகள் கைக்கிளைத் திணையை உணர்தற்குரிய பொருளாம். முதல் கரு உரிப் பொருள் மூன்றும் முல்லை முதலாய திணைகளை உணர்தற் குப் பொருளாமாறு போல, கைக்கிளை தலைவிகண் நிக ழாது; தலைவன்கண்ணேயே நிகழும். (தொ. அகத். 52 ச. பால).

கைக்கிளை பெருந்திணைகட்கு உரிப்பொருள் -

{Entry: H08__125}

கைக்கிளையும் பெருந்திணையும் ஐந்திணைகளின் மருங்காக நிகழும். அவை ஐந்திணைக்குரிய நிலங்களில் அவற்றொடு கூடி நிகழும்; அவ்வாறு நிகழுங்கால், கைக்கிளைக்குப் புணர் தலும் புணர்தல் நிமித்தமும், பெருந்திணைக்கு இரங்கலும் ஊடலும் அவற்றின் நிமித்தங்களும் உரிப்பொருளாக அமையும். (தொ. அகத். 16 ச.பால).

கைக்கிளையும் பெருந்திணையும் புறன் எனல் -

{Entry: H08__126}

பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை போல்வன கைக்கிளையையும் பெருந்திணையையும் புறம் என்று கொள்ளும். அங்ஙனம் கொள்ளின், அகத்திணையானது கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாதலின்றி ஐந்தேயாகிவிடும். மேலும் கைக்கிளைமணங்கள் ஆகிய அசுரம் முதலிய மூன்றும் பெருந்திணை மணங்களாகிய பிரமம் முதலிய நான்கும் அகப்பொருளாகாமல் புறப் பொருள் ஆகிவிடவே, யாழோர் கூட்டம் ஒன்றே அகத் திணையாக முடியும். அகத்தைச் சேர்ந்த கைக்கிளை பெருந் திணைப் பாடல்களைப் புறம் என்று கோடல் முன்னோர் கருத்தொடு முரணுவதாகும். (தொ.பொ.58. இள)

கைகோள் (1) -

{Entry: H08__127}

அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று (வீ. சோ. 90)

கைகோளாவது களவும் கற்பும். கற்பாவது கரணமொடு இயைந்து வருவது. களவாவது கரணமின்றி வருவது. இப் பாடல் களவினைச்சார்ந்ததா அன்றிக் கற்பினைச் சார்ந்தததா என்று கண்டுகொள்வது கைகோளாம். (வீ. சோ. 92 உரை)

கைகோள் (2) -

{Entry: H08__128}

கை - ஒழுக்கம்; கோள் - கொள்ளுதல்.

ஒழுக்கத்தைக் கொள்ளும் வகையில், அகப்பொருள் களவு எனவும், கற்பு எனவும் இருநிலைப்பட்ட ஒழுக்கங்களை யுடையது. (ந. அ. 26)

கைப்பட்டுக் கலங்கல் -

{Entry: H08__129}

தலைவன் பொய் பாராட்டுதலைப் புரிந்து இடம்பெற்றுத் தழுவுமிடத்து, அதுகாறும் அறியாததோர் ஊற்றுணர்ச்சி யானே தலைவி உள்ளக் கலக்கம் உறுதல்.

இவ்வொழுகலாற்றிலும் தலைவியது கூற்று நிகழும். (தொ. கள. 2 ச.பால)

கையறல் -

{Entry: H08__130}

இது பெண்பால் கூற்றுக் கைக்கிளைத்துறைகளுள் ஒன்று; தான் விரும்பிய தலைவனை அடையப் பெறாத தலைவி செயலற்று இருக்கும் நிலையினைக் கூறுவது.

“எம்பெருமான் தன்மாலையை எனக்குத் தாராது விடுத்தான். வானத்தில் ஒளிவீசி அனலைக் கக்கும் சந்திரனின் கிரணங் களின் வெப்பத்தினின்றும் என்னைக் காத்துக்கொள்ள எனக்கு வழி ஒன்றும் புலப்படவில்லையே!” என்று கைக் கிளைத் தலைவி செயலற்றுக் கூறுதல் போல்வன. (மா. பா. பா. 74)

கையறு கிளவி -

{Entry: H08__131}

தாய்துஞ்சாமை, நாய்துஞ்சாமை முதலாய காப்பு மிகுதி சொல்லி வரவு விலக்குதலைக் கூறும் அகத்துறை. (க. கா. பக். 99)

கையறு தோழி கண்ணீர் துடைத்தல் -

{Entry: H08__132}

தலைவன் ஒருவழித்தணந்தபோதும், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தபோதும், தலைவியின் துயரம் கண்டு செயலற்ற தோழி அவள் கலுழ்தற் காரணம் வினாவிக் கண்ணீரைத் துடைத்தல்.

“தலைவி! உன் அழகு குறைகின்றது. இதற்கொரு காரணமும் எனக்குப் புலப்பட்டிலது. வண்டலம் பாவையை அலைகள் அழித்தனவா? அன்றி, அன்னை நின்னை வெகுண்டாளா? தெருக்களில் உள்ளார் பலரும் உன்னைப் பழிதூற்றுமாறு நீ கண்ணீர் விடுவதற்குக் காரணம் யாது? நின் செயல் என் உள்ளத்தை வருத்துகிறது” (தஞ்சை. கோ. 288) என்றாற் போல, தலைவி வருந்தும் காரணம் தோழி வினவுதல்.

இது வரைவியலுள் ‘அறத்தொடுநிற்றல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 176)

கைஅன்று எனல் -

{Entry: H08__133}

தலைவி அறத்தொடு நிலையினை மறுத்தவழித் தோழி அவளை அதனை நயப்பிக்கக் கூறியது.

களவில் தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்ட உடல் மெலிவு தெய்வத்தானாயிற்றென்று செவிலி வெறியாட் டெடுக்கத் துணிந்தவழித் தோழி அறத்தொடு நிற்றலைத் தலைவி மறுத்து உயிர்விடத் துணிந்தவிடத்தே, தோழி, “நமக்கு வரும் துன்பங்களை நாம் பொறுத்து வாழ்க்கை நடத்துவதே தக்கது; அவ்வாறன்றி நீ கூறிய செயல் அன்போ அறமோ நல்லொழுக்கமோ அன்று” என்றாற்போலக் கூறித் தலைவி தான் அறத்தொடு நிற்றலை ஏற்குமாறு செய்தல்.

இது கற்பினுள் ‘அறத்தொடுநிலை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 22)

கைவாய்க்கால் -

{Entry: H08__134}

சிறுகால்வாய் (தொ. பொ. 1 இள.)

கொடிக்குறி பார்த்தல் -

{Entry: H08__135}

செவிலி, உடன்போன தலைவியைத் தேடிக் கண்டுபிடித்து வரப் புறப்பட, நற்றாய், “காக்கையே! என் மகளும் அவள் தலைவனும் விரைவில் மீண்டு வருமாறு நீ கரைந்தால் உனக்கு நல்லுணவு தருவேன்” என்றாற்போலக் காக்கையிடம் கூறும் வாயிலாக நன்னிமித்தத்தை எதிர்நோக்குதல். (கொடி - காக்கை)

இதனைக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக் கண் ‘நிமித்தம் போற்றல்’ என்றும் கூறுப. (ந. அ. 186; இ. வி. 538)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 235)

கொடியிடம் புகுதல் -

{Entry: H08__136}

தன்னைப் பாராட்டி இடம் பெற்றுத் தழுவ விரும்பிய தலைமகனது பேச்சினைக் கேட்டு நாணிய தலைவி, ஒரு பூங்கொடியை அடைந்து தன்னை மறைத்துக் கொள்ளுதல்.

“பூங்கொடியே! இன்று வந்த இப்புதியவரொருவர் கூறும் காதல் மொழிகளைக் கேட்ட என் நாணமும் நெஞ்சமும் என்னுயிரே போய்விடுமோ எனத்தக்க அளவில் மிகுந்துள் ளன. அவை அழியாமல் நீ காத்துத் தரல் வேண்டுமென அவற்றை யான் நின்பால் அடைக்கலமாக ஒப்படைக்கிறேன்” என்ற தலைவி கூற்று.

இஃது ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. தலைவி கூற்றாக வந்தது. (அம்பிகா. 34)

`கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

{Entry: H08__137}

தலைவி கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்குக் கூறுதற் குரியவை, குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது, தலைவனைக் காய்தலும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக் கொள்ளுதலும் அவ்விடத்துப் பலவாய் வேறுபட்டு வரும் நிலையிலும் தலைவி கூற்று நிகழும். (தொ. பொ. 145 இள.)

பரத்தையிற் பிரிவும் ஏனைப்பிரிவுகளுமாகித் தலைவன்கண் நிகழும் கொடுமைஒழுக்கத்தின்கண் தோழி கூறுதற்கு உரியள் என மேற் கூறுகின்றவற்றைக் கேட்டவழி, எஞ்ஞான்றும் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்தும் கற்பிடத்தும் திரிவுபடாதபடி தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலும் ஆகிய நிலையின்கண்ணும், அத் தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித் தலும் பெட்டலுமாகி வரும் நிலையின்கண்ணும், இக்கூறிய வாறன்றிப் பிறவாறாய்ப் பல வேறுபட்டு வரும் நிலையின் கண்ணும், தலைவி கூற்று நிகழும். (147 நச்.)

எ-டு : குறுந். - 181, 21, 154, 93. நற்றிணை - 24; ஐங்குறு. 14, 17, 155; கலி - 75;

இனிப்பல்வேறு நிலை ஆவன :

1. தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவு அழுங்கக் கூறிய வற்றின் வேறுபாடுகள். (குறுந். 20, 39.)

2. வழிஅருமை பிறர் கூறக் கேட்டுக் கூறுவன. (குறுந். 12)

3. தலைவனது செலவுக் குறிப்பறிந்து தலைவி தானே கூறுவன. (கலி. 4)

4. தூது விடக் கருதிக் கூறுவன. (ஐங். 473)

5. நெஞ்சினையும் பாணனையும் தூது விட்டுக் கூறுவன. (ஐங். 317, 474)

6. பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் எனக் கூறுவன. (குறுந். 41)

7. அவன்வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவன. (குறுந். 75)

8. கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடி யிருந்து முன்னர்த் தன்னை வருத்திய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுவன. (திணை. நூற். 123.)

9. தலைவன் தவறிலன் எனக் கூறுவன. (குறுந். 313)

10. “காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந் தமை அறிந்தேன்” எனக் கூறுவன. (ஐங். 69)

11. தூது கண்டு கூறியது. (குறுந். 106)

12. தலைவன் சென்ற நாட்டு இவை இவகொல் என்றது. (குறுந். 46)

13. பருவங்கண்டு அழிந்து கூறியது. (குறுந். 110)

14. தலைவனைக் காய்ந்து கூறியது. (குறுந். 191)

15. பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது. (குறுந். 155)

16. வன்புறை எதிரழிந்து கூறியது. (ஐங். 334)

17. புள்ளினை நொந்து கூறியது. (ஐங். 333)

18. புதல்வனை நீங்கியவழிக் கூறியது. (ஐங். 66) (147. நச்)

கொடைக்குரி மரபினோர் -

{Entry: H08__138}

தலைவியைத் தலைவனுக்கு மணம் செய்து கொடுத்தற்கு உரிமையுடையோர் தலைவியின் பெற்றோரும் தமையன்மா ரும் தலைவியின் தாயொடு பிறந்தாரும் தந்தையின் தாயத் தாரும் ஆசானும் முதலியோராவர். (தொ. பொ. 142 நச்.)

கொண்டு அகம் புகுதல் (1) -

{Entry: H08__139}

தலைவியைத் தலைவனொடு மணமனைக்கு அழைத்துச் சேறல்.

களவொழுக்கம் நிகழ்த்தித் தலைவியை மகட்கேட்டு வரைவதற்கு முடிவுசெய்து தலைவன் தலைவியை மணந்து கொள்ளும் நன்னாளன்று, வில்போன்ற புருவமும் அம்பு போன்ற கண்ணுமுடைய இல்லற மகளிர், தலைவனையும் தலைவியையும் திருமண இல்லத்திற்கு அழைத்து வருதல் (திருப்பதிக். 394)

இது ‘வரைந்து கோடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

கொண்டு அகம் புகுதல் (2) -

{Entry: H08__140}

மனைவாயிலில் தலைவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண் டிருந்த தலைவி, அவன் வந்ததும் அவனைத் தன் மாலையால் கட்டி உள்ளே இழுத்துக்கொண்டு போதல். இது பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகளுள் ஒன்று.

தலைவனைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் உகுத்து அவனை மாலையாற் பிணித்துக்கொண்டு தன் இல்லத்துட் சென்றாள் என்னும் செய்தி. (பு. வெ. மா. 16-13)

கொண்டு கூற்று -

{Entry: H08__141}

அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி. ‘இன்னவகை’ என்றார், தன் கூற்றும் கொண்டுகூற்றுமாய் நிகழும் என்றற்கு”. (தொ. பொ. 15 நச்.)

இது ‘கொண்டெடுத்து மொழியப்படுதல்’ எனவும் கூறப் படும். (தொ. பொ. 503 பேரா.)

கொண்டு சென்று உய்த்தல் -

{Entry: H08__142}

தலைவியை உடன்போக்கிற்கு அழைத்துச் செல்ல ஒருப் பட்ட தலைவன் குறியிடத்து வந்து நின்று தான் செல்ல வேண்டிய வழியை நினைத்து வாடிநிற்ப, “நின் மனத்தில் கருதியதனை இப்பொழுது நினக்குத் தெய்வம் தந்தது; தலைவியைக் கொண்டு வந்துள்ளேன். நீ இவளைக் கைக்கொள்” எனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று அவனொடு கூட்டி நிற்றல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 212)

கொண்டுதலைக்கழிதல் -

{Entry: H08__143}

தலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் உறவினரிட மிருந்து பிரிதல்.

தலைவியின் பெற்றோர் அவளைத் தலைவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்கு மறுத்தவழித் தலைவியின் உடன்- பாட்டொடு தலைவன் தலைவியின் உறவினர் அறியாதபடி அவளை அழைத்துக்கொண்டு வேற்றூர்க்குச் செல்லுதல். இது பாலை என்ற ஒழுக்கத்தின்பாற்படும்.

தலைவனும் தலைவியும் ஒருங்கிணைந்து சென்றனராயினும், எந்நேரத்திலும் தலைவியினுடைய உறவினர் தம்மை எதிர்ப் பட்டுப் பிரித்துச் செல்ல முயல்வர் என்ற எண்ணமே இருவர் உள்ளத்தும் ஊன்றியிருக்குமாதலின், உடலால் ஒன்றியிருந்த போதும், மனத்தால் பிரிவையே நினைத்திருத்தலின் இது பாலைக்கண் குறிஞ்சி நிகழ்ந்ததாம். (தொ. பொ. 15 நச்.)

கொண்டுதலைக்கழிதலாவது உடன்கொண்டு பெயர்தல். இருவரும் குறிஞ்சி நிலத்தைக் கடந்து செல்வதனால் குறிஞ்சியில் அடங்காது; பாலை நிலத்துச் சென்றாலும், இருவரும் சேர்ந்து போதலின் பிரிவில் அடங்காது. ஆயினும் ‘கொண்டுதலைக் கழிதல்’ ஒருவாற்றான் பாலையாகக் கொள்ளப்படும். (17 இள.)

‘கொண்டுதலைக்கழிதல்’ எல்லா நிலத்திலும் வந்து மயங்கும். (15 பாரதி).

கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

{Entry: H08__144}

கரணம் என்பது தலைவன் தலைவியை வேள்விச்சடங்கொடு வதுவை செய்து கொள்ளுதல். தலைவியை அவளுடைய இருமுதுகுரவர் முதலாயினோர் கொடுப்பத் தலைவன் பெறும் வாய்ப்பு, அவளை அவன் உடன்போக்கில் அழைத்துச் சென்று வேற்றூரில் வதுவை செய்துகொள்ளுங்கால் நிகழ்வ தன்று. ஆதலின் உடன்போயவழித் தலைவியை அவளுடைய பெற்றோர் கொடாமலேயே தலைவனே வேள்விஆசான் காட்டிய சடங்கின்வழி மணம்செய்து கொள்வதும் முறையே என்பது.

“வேல! விடலை என்மகளை முற்பட என் மனைக்கண் கொண்டுவருவானோ? அத்தலைவனது உட்கோள்யாது? நின் கழங்கினது பிழையாத குறியினை அறிந்து கூறுக” (அகநா. 195) என்று மகட்போக்கிய தாய் சொல்லிய கூற்றின் கண், கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தமை பெறப்படும். (தொ.பொ. 140 நச்.)

கொண்டுநிலை -

{Entry: H08__145}

குரவைக் கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப் பாடும் பாட்டு. ‘என்று யாம், கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை’ (சிலப். 24 - இறுதிப்பாட்டுமடை) (L)

கொண்டுநிலை கூற்று -

{Entry: H08__146}

இறந்துபடும் நிலையினனாய தலைமகனைத் தாங்கிக் கொண்டு தோழி அவனை நிலைபெறச் செய்யக் கூறும் சொற்கள்.

தோழி தலைமகனோடு அவன் மனம் வருந்துமாறு பலபடி யாக உரையாடி, அவன் மடலேறும் கருத்தை மொழிந்த வுடன், தான் அவனுக்கு உதவுவதாக முன்னுறக் கூறிப் பின்னும் அவன் மடல்ஏற இயலாமைக்கு உரிய காரணங் களைக் கூறத் தொடங்க, அவன் படும் துயர் எல்லையைக் கடந்ததாக, “நீர் வருந்தாதீர்; யான் நும்குறையை முடித்துத் தருவல்; நும்மால் கருதப்படுமவள் என்பால் பெரிதும் அருளுடையாள்” என்று, தனது உயிரைப் போக்கிக்கொள்ள இருந்தானைத் தாங்கிக்கொண்டு கூறும் கூற்றுக் ‘கொண்டு நிலை கூற்று’ எனப்படும். (இறை. அ. 9 உரை)

கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -

{Entry: H08__147}

தலைவியை அக்கினி சாட்சியாகத் தலைவற்குக் கொடுக்கவே, அவன் அவளை ஏற்றுக்கோடல்.

வரையும் நாளன்று தலைவியின் தந்தை அவள் வலக்கையைத் தலைவனது வலக்கைமேல் வைத்து நீர் பெய்து அக்கினி சாட்சியாக அவளை அவனுக்குக் கொடுப்பவே, வேள்வித் தீயில் செய்யும் சடங்குகளைச் செய்து அவன் அவளை மணந்தான் என்பது. (திருப்பதிக். 396) இது கவிகூற்றாக வரும்.

இது ‘வரைந்து கோடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

கொய்தமை கூறி வரைவு கடாதல் -

{Entry: H08__148}

பகற்குறி யிறுதியில் தோழி தலைவனை நோக்கி, “இப்புனத் திலுள்ள தினைகளெல்லாம் இன்றொடு கொய்யப்பட்டு விட்டன. எமக்கு இனிப் புனங்காவல் இல்லை. நாங்கள் இவ்விடம் வருவதற்கு இனி வாய்ப்பு இன்று. யாங்கள் நுமக்கு அறிவுரை கூறுவோமல்லோம். நீரே அறிவீர்” எனத் தினை கொய்தமை கூறி வரைவு கடாயது.

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 143)

கோ ஒரூஉ மொழிதல் -

{Entry: H08__149}

கற்புக்காலப் பகைவயின் பிரிவில் தலைவியிடமிருந்து தூதுவரக் கண்ட தலைவன், அத்தூதுவனிடம் தன் அரசன் போர்ச்செயலை நிறுத்திவிட்ட செய்தியைக் கூறித் தான் விரைவில் மீளும் செய்தியைச் சொல்லி விடுத்தல். (முல்லை நடையியல்) (வீ.சோ. 94 உரை மேற்.)

கோதை வருத்தியல் உரைத்தல் -

{Entry: H08__150}

தலைவன் தலைவி வருத்தியவண்ணம் உரைத்தல். (சாமி. 95)

இது ‘பாங்கியிற் கூட்டத்’துள் வருவதொரு கூற்று.

கோலம் காண்டல் -

{Entry: H08__151}

அழகு செய்தல்.

வரைவு மாட்சிமைப்பட்ட பிறகு வரையும் நாளன்று தலை வனையும் தலைவியையும் அணி செய்வதில் பழகியவர்கள் பலவாறாக அலங்காரம் செய்தனர். (திருப்பதிக். 395)

இது ‘வரைந்து கோடல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இது கவி கூற்று. (மா. அக. 82)

கோலம் செய்து உரைத்தல் -

{Entry: H08__152}

பழையபடி அழகு செய்து கூறுதல்.

தோழியின் உதவியால் தலைவியைப் பகற்குறிக்கண் கூடிய தலைவன் தலைவியின் சிதைந்த குழலும் கோதையும் ஆடை யும் முதலியவற்றைத் திருத்தி அழகு செய்ய, அது கண்டு வெள்கிய தலைவியிடம், அவள்தோழி புனையுமாறே தான் புனைந்தானாக அவள் கவலையைப் போக்கி உரைத்தல்.

இது தோழியிற் கூட்டத்துப் ‘பகற்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (க. கா. பக். 74, 75)

இக்கூற்றுப் ‘புனைந்து நிலையல்’ என்று தமிழ்நெறி விளக்கத்தில் கூறப்படும். (த. நெ. வி. 17)

கோழி குரல் காட்டுதல் -

{Entry: H08__153}

இரவில் குறியிடம் நோக்கித் தலைவனோ தலைவியோ வர இயலாமல் கோழி கூவி அனைவரையும் துயில் கலையச் செய்தல். இத்துறை தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் வரும்.

இது களவியலுள் ‘இரவுக்குறி இடையீடு’ என்னும் தொகு திக்கண்ணதொரு கூற்று; ‘வருந்தொழிற்கு அருமை’ என்னும் பகுதியது. (ந. அ. 161)

கோள் -

{Entry: H08__154}

அகத்திணைச் செய்யுள் இலக்கணம் பத்தனுள் ஒன்று ‘கோள்’ ஆம். அஃதாவது செய்யுட்குப் பொருள்கொள்ளும் முறைமை.

அஃது ஐந்து வகைப்படும்.

1. விற்பூட்டு - செய்யுள் முதலும் கடையும் பொருள்கொண்டு நிற்பது.

2. விதலையாப்பு - தலையும் நடுவும் கடையும் பொருள் கொண்டு நிற்பது.

3. பாசிநீக்கு - சொல்தோறும் அடிதோறும் பொருள் முடிந்து நிற்பது.

4. கொண்டு கூட்டு - எவ்வடிச் சொற்களையும் ஏற்புழிச் சேர்த்துப் பொருள் செய்ய நிற்பது.

5. ஒருசிறைநிலை - பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழி நிற்பது; இன்றியமையாத கருத்து ஈற்றடியில் நிற்பது.

எ-டு :

‘வருவர் வயங்கிழாய்! வாட்டாற் றெதிர்நின்று வாள்மலைந்த

உருவ மணிநெடுந் தேர்மன்னர் வீய ஒளிதருமேல்

புருவம் முரிவித்த தென்னவன் பொன்னங் கழலிறைஞ்சாச்

செருவெம் படைமன்னர் போல, வெங் கானகம் சென்றவரே’

இது விற்பூட்டுப் பொருள்கோள். ‘சென்றவரே வருவர்’ என இறுதியும் முதலும் எழுவாய்த் தொடராய்ப் பொருள்தந்த வாறு.

பண்தான் அனையசொல் லாய்! பரி விட்டுப் பறந்தலைவாய்

விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த

வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன

கண்டால், கடக்கிற்ப ரோ? கட வார்அன்பர் கானகமே.’

இது விதலையாப்புப் பொருள்கோள். சொல்லாய்! கொல்லிப் பாங்கர், கொடி நின் இடைபோல வணங்குவன கண்டால், அன்பர் கானகம் கடவார்’ எனத் தலை இடைகடை என எல்லா இடத்தும் பாடலில் பொருள் அமைந்தவாறு.

‘சென்றார் வருவது நன்கறிந் தேன்;செருச் செந்நிலத்தை

வென்றான் பகைபோல் மெலியல் மடந்தை! உம் வெற்பெடுத்து

நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது; நீள் புயலால்

பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே’

இது பாசிநீக்குப் பொருள்கோள். (1) ‘நன்கு அறிந்தேன்; (2) மடந்தை! மெலியல்; (3) நிலமும் குளிர்ந்தது; (4) பொலங் கொன்றை தாமும் பொலிந்தன - என அடிதோறும் சொற்கள் பொருள் தொடர்பு பட இயைந்து (கொண்டு கூட்ட வேண்டாமல்) முடிந்தமை காணப்படும்.

‘கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன்முந்நீர்

தூவைச் சுடர்வே லவர்சென்ற நாட்டினும் துன்னும்கொலாம்

பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப்

பாவைக் கிணைஅனை யாய்! கொண்டு பண்டித்த பன்முகிலே!’

இது கொண்டு கூட்டுப் பொருள்கோள். ‘பாவைக்கு இணை அனையாய்! முந்நீர்க் கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன் நெடுமாறன் திரைபொரு நீர்க்குமரி கொண்டு பண்டித்த, பூவைப் புதுமலர் வண்ணன் (போன்ற) பன்முகில், தூவைச் சுடர் வேலவர் சென்ற நாட்டினும் துன்னும்கொல்?’ என, பல அடிகளிலும் கிடந்த சொற்களை ஏற்றவாறு இயைத்துப் பொருள் கொள்ளப்பட்டவாறு. (பாவை - கொல்லிப்பாவை; முந்நீர் - கடல்; கடலிற் பிறந்த முத்துக்கள்; மாறனுடைய குமரித்துறை; குமரித்துறையிற் படிந்துண்ட பல மேகங்கள்; கண்ணன் போன்ற நிறத்தவாகிய மேகங்கள். பிரிந்து சென்றவர் நாட்டின்கண்ணும் அவை சென்றடை யுமோ?)

‘கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின; கொன்றைசெம்பொன்

பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்ற

ஆடல் நெடுங்கொடித் தேர்அரி கேசரி அம்தண்பொன்னி

நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய? நன்னுதலே!’

இஃது ஒரு சிறைநிலைப் பொருள்கோள். கோடல் மலர்தல், குருக்கத்தி தளிர் ஈனுதல் (1), கொன்றை செம்பொன் போன்று பூக்களைப் பாரித்தல் (2) என்னு மிவற்றால் தலைவி கார்கால வரவுணர்ந்து தலைவன் இன்னும் மீண்டிலாமை கருதி மெலியலுற்றாள் என, பாடற்பொருளாம் தலைவியது மெலிவு ஈற்றடியாகிய ஓரிடத்தே நின்றவாறு. (இறை. அ. 56 உரை)

ச section: 139 entries

சட்டகம் (2) -

{Entry: H08__155}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று. அஃதாவது வெளிப் பொதுஅமைப்பு; யாப்பதிகாரத்திற் கிடந்த முதல் வரி மொழி வகை கோள் உட்பெறுபொருள் என்றபடியே செய்யுளைத் தெரிந்து இன்ன சட்டகம் என்று சொல்வது. (வீ. சோ. 90 உரை)

“சந்தனத்தழை தகாது” என்று மறுத்தல் -

{Entry: H08__156}

தலைவன் தோழியிடம் சந்தனத்தழைஆடையினைக் கையுறை யாகக் கொண்டுவர, தாங்கள் வழக்கமாக அணியாத சந்தனத் தழையாடையை அணிந்தால் அவ்வாடை தமக்கு யாங்கனம் கிட்டியது எனத் தமர் ஆராய்தல் கூடும் என்று கூறித் தோழி தலைவன் கொணர்ந்த கையுறையினைப் பெற மறுத்தல். இதனைத் ‘தையல் மறுத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 144; இ.வி. 509)

இது ‘பாங்கியிற் கூட்ட’த்துள், சேட்படை என்னும் பகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 91)

சாக்காடு -

{Entry: H08__157}

மெய்யுறு புணர்ச்சி நிகழும் முன் தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் நிகழும் பத்துவகை நிலைகளுள் இறுதியாவது.

சாக்காடு - மெய்யுறு புணர்ச்சி நிகழாது உயிர் வாழ்தல் சுமையாகத் தோன்றுதலின் தம் மனத்துன்பத்தைச் சாவின் வாயிலாகப் போக்கிக்கொள்ள நினைத்தல்.

இதனைத் தலைவற்கே கொள்வர் இலக்கண விளக்கத்தார்.

(பொ. 405)

இயற்கைப் புணர்ச்சி முதல் களவு வெளிப்படுத்துணையும் தலைவன் தலைவி என்ற இருவர்க்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் இதுவே இறுதியாகும்.

சாக்காடாவது மடலேறத் துணிதலும், மலை உச்சியில் ஏறி அங்குநின்று கீழே பாய்ந்து உயிர்விடத் துணிதலும் போல்வன தலைவற்குரிய சாக்காடாகும்.

தலைவனைப் பற்றிய நினைப்பால் உண்டியிற் குறைந்து உடம்பு நனி சுருங்கி உறக்கம் நீத்து மாலையில் பிரிதல் துன்பம் பொறுத்தல் இயலாது, சிறிது சிறிதாக உயிர்போய்க் கொண்டிருக்கும் நிலை தலைவியது.

“தோழி, வாழி! துன்பம் தரும் மாலைக்காலமானது, காதலரைப் பிரிந்த தனிமையால் வருந்தியிருக்கவும், மிக்க துன்பம் உற்றவரது மார்பினைக் குறித்து கூரிய வேலை வீசுவார் போல வருத்துகின்றது. உருவம் காணும் ஆடி மண்டிலத்தே ஊதிய ஆவி படிப்படியாகச் சுருங்கினாற் போல எனது வலிமையும் மாய்தல் வேண்டியுள்ளது. சூறைக் காற்றில் அசையும் மரத்துள்ள பறவைகள் போலப் பெரிதும் அழிந்து என்னுயிர் உடலை விட்டு நீங்கும் காலம் இதுவே போலும்” (அகம். 71) என்ற தலைவி கூற்று சாக்காடு பற்றியது. (தொ. பொ. 100 நச்.)

சார்தல் பயனாகப் புகழ்தல் -

{Entry: H08__158}

தலைவன் தலைவியைக் குறியிடத்து எதிர்ப்பட்டதும் அவளொடு புணர்ச்சி நிகழுமுன் அவளை இரவுக்குறிக்கண் காணும் வாய்ப்பினை அவள் நல்கியதற்கு அவளைப் புகழ்தல்.

இது தலைவியைக் கூடுதலைப் பயனாகத் தரும் புகழ்ச்சியுரை.

‘மருங்கணைதல்’ என்னும் திருக்கோவையார் (165)

இஃது இரவுக்குறி என்னும் கிளவிக்கண்ணதொருகூற்று; உரையில் தழுவிக்கொள்ளப்பட்டது. (இ. வி. 517 உரை)

சார்தலின் இருவகை -

{Entry: H08__159}

உடன்போக்கின்கண் தலைவி சென்று சாரும் இடமும், மீண்டு வந்து சாருமிடமும். (தொ. பொ. 36 நச்.)

சான்றோர் விலக்கு -

{Entry: H08__160}

உடன்போக்குச் சென்ற தலைவன்தலைவியரைப் பின் தொடர்ந்து சினத்துடன் சென்ற தலைவியின் சுற்றத்தாரை வழியிற்கண்ட சான்றோர் தடுத்து நிறுத்தி மீண்டு செல்லு மாறு கூறுதல். இது கவிகூற்று.

தலைவியின் தமரான வீரஇளைஞர் சான்றோர் கூறியது கேட்டு மாறுபாடு கொள்ளாத அறிவுடையார் போல மீண்டு தம் ஊர் எய்துவர். தலைவி சுரத்திடை உடன்போக்கினைத் தொடர்வாள். ஊரிலுள்ள சுற்றத்தார் தலைவி மீளாமை கண்டு வருந்துவர்.

இஃது ‘உடன்போக்கிடையீடு’ என்னும் தொகுதிக்கண் அமைந்த கூற்று. (அம்பிகா. 425)

சிலம்புகழி நோன்பு -

{Entry: H08__161}

மணவினைக்கு முன்பு பெண்ணிற்கு நடத்தும் சிலம்பு கழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399 - உரை) (L)

சிறந்தது பயிற்றல் -

{Entry: H08__162}

அறத்தின்மேல் மனம் நிகழ்தல். (தொ. பொ. 190 இள.)

அறம்பொருள்இன்பங்களிற் சிறந்த வீட்டின்பத்திற்குப் பாது காவலான செயல்களில் தலைமக்கள் ஈடுபடுதல். (192 நச்.)

சிறந்த பொதுநலத் தொண்டில் ஈடுபடுதல். (244 குழ.)

சிறந்துழி, இழிந்துழி -

{Entry: H08__163}

தலைவியினுடைய வடிவும் அவளைக் கண்ணுற்ற பொழிலும் சிறந்த இடத்து,

தலைவியினுடைய வடிவும் அவளைக் கண்ட சூழலும் மனத்தைக் கவராதவகையில் தாழ்ந்தனவாக உள்ள இடத்து. (தொ. பொ. 91 இள.)

ஆண் பெண் என்ற இருவருள் சிறந்தவனாகிய ஆண் மகனிடத்து, ஆண் பெண் என்ற இருபாலருள் தாழ்ந்தவளா கிய தலைவியிடத்து. (94 நச்.)

சிறந்துழி ஐயம் சிறத்தல் -

{Entry: H08__164}

தலைமகளுடைய வடிவும் அவளைக் கண்ட இடமும் சிறந்த விடத்தே தலைவனுக்கு அவள் தேவமகளோ மானுட மகளோ என ஐயம் மிகுதிப்படல். ஐயம் மிகுதலாவது “இத் தலைவி மக்களுள் ஒருத்தி அல்லள்; தேவரினத்தில் எவ் வினத்தைச் சேர்ந்தவளோ?” என்று தலைவன் அவளை மேலாயினோருடன் ஐயுறல். (தொ. பொ. 91 இள.)

தலைவன் தலைவி என்ற இருவரும் எதிர்ப்பட்டவழி இருவருள்ளும் தலைவன்கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்தது.

தலைவன் தனக்குத் தலைவி மானுடமகளோ தேவமகளோ என்று ஏற்படும் ஐயத்தை நூலறிவு முதலியவற்றான் நீக்கித் தெளிவு எய்துவான். தலைவிக்குத் தலைவன் மானுடனோ தேவனோ என ஐயம் நிகழின், அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள். ஆதலின், தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமே யன்றிக் காமக்குறிப்பு நிகழாமையின் தலைவன் ஐயுறுதலே சிறந்தது. (94. நச்.)

இது புலனெறி வழக்கிற்கேயுரியது. உலகியலில் தலைவி ஐயப்படுதலும் பின்னர்த் தெளிதலும் உண்டு. (சீவக. 713 நச்.)

பெரியபுராணம் தடுத்தாட். 144 என்பதும் உலகியல் சுட்டிற்று.

சிறந்துழி ஐயம் சிறத்தற்கண் கூறல் -

{Entry: H08__165}

1. தலைவன் தலைவி என்ற இருவருள் கல்வி முதலியவற்றான் சிறந்தவனாகிய தலைவனுக்குத் தலைவி நிலவுலகமகளோ வானுலக மகளோ என்று ஐயம் தோன்றுதற்கண் அவன் கூறல். (தொ. பொ. 94 நச்.)

2. தலைவியைக் கண்ட இடமும் அவள் வடிவமும் சிறந்திருக் கும் இடத்துத் தலைவன் ஐயுற்றுக் கூறல். (91 இள.)

எ-டு : குறள் 1081

சிறப்பின்மை கூறி மறுத்தல் -

{Entry: H08__166}

தோழியிற் கூட்டத்துக்கண், தழையாடையினைக் கையுறை யாகக் கொண்டு வந்த தலைவனை நோக்கித் தோழி, “எங்கள் தலைவி பிறந்த நாள் தொடங்கி இவள் மேனிஒளிக்கும் கண் அழகுக்கும் அஞ்சி இம்மலையிலே மாமரங்களும் சுனைகளும் குளிர்ந்த தளிரும் அழகிய பூக்களும் தளிர்த்துக் காணப்படுவ தில்லை! ஆதலின் இந்நிலத்தில்லாதபடி குவளைப்பூக்கள் இடைமிடைந்த மாந்தளிர் ஆடையினை நாங்கள் ஏற்றால் இவ்வூரார் கண்டு ஐயுறுவர்; ஆதலின் இத்தழை ஏலேம்” என மறுத்துக் கூறுவது.

இது ‘சேட்படை’ என்ற தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 103)

சிறப்பு என்ற உள்ளுறை -

{Entry: H08__167}

ஏனையுவமம், உள்ளுறைஉவமத்திடையே வந்து அதற்குச் சிறப்புக் கொடுத்து நிற்றல். இஃது உடனுறை, உவமம், சுட்டு, நகை சிறப்பு என்று தொல்காப்பியம் கூறும் ஐவகை உள்ளுறைகளில் ஒன்று.

எ-டு :

‘முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று

மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்

குறங்கறுத் திடுவான்போல், கூர்நுதி மடுத்துஅதன்

நிறம்சாடி முரண்தீர்த்த நீள்மருப்பு எழில்யானை

மல்லரை மறஞ்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண்

கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் நாட! கேள்’. (கலி. 52)

தன்னை எதிர்த்த புலியைத் தன் தந்தத்தால் தாக்கிக் கொன்று அதன் மாறுபாட்டைப் போக்கிய யானை தன் இனத்தைக் கூடி மகிழ்ந்தது என்பது உள்ளுறை உவமம்; களவொழுக்கத் தில் அலர் கூறிய அயலாரைக் கோபித்துத் தலைவன் தலைவியை வரைந்து கொண்டதால் அயலாரை அவர் பழிதூற்ற முடியாதவாறு வென்று, தன் சுற்றத்தொடு கலந்து தலைவியோடு இல்லறம் நடத்துகிறான் என்பது உள்ளுறை உவமப் பொருள்.

‘மறந்தலை.....அறுத்திடுவான் போல்’, ‘மல்லரை... மால்போல்’ என்னும் இவ்வேனை உவமங்கள் இரண்டும் உள்ளுறைக்குச் சிறப்புத் தருவதால் ‘சிறப்பு’ எனப்பட்டன.

(தொ. பொ. 242. நச். கலி. 52 நச்.)

சிறுபொழுதின் வகை -

{Entry: H08__168}

மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் எற்பாடு என்னும் ஆறும் சிறுபொழுதாம். ஒரு நாளின் 60 நாழிகைகளுள் ஒவ்வொரு சிறுபொழுதும் 10 நாழிகையளவு பெறும். இச்சிறு பொழுதுகள் ஞாயிறு மறையத் தொடங்கிய நேரம் தொட்டு மறுநாள் ஞாயிறு தோன்றி மறையும் மாலை நேரம் வரை கணக்கிட்டுக் கொள்ளப்படும்.

மாலை - அந்திமாலை 6 மணி முதல் 10 மணிவரை

யாமம் - இரவு 10 மணி முதல் 2 மணி வரை

வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

விடியல் - காலை 6 மணி முதல் 10 மணி வரை

நண்பகல் - முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை

எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் அந்திமாலை 6 மணிவரை (இ. வி. 385)

இனி எற்பாடு என்பதை ஞாயிறு தோன்றும் காலை என்று கூறி, மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல் என்று சிறுபொழுது ஐவகையாம் என்பாரும் உளர். (ந. அ. 12)

சிறுபொழுது ஆறற்கும் திணை உரிமை -

{Entry: H08__169}

[ மாலை, யாமம், வைகறை, காலை (-விடியல்), நண்பகல், எற்பாடு (-பிற்பகல்) எனச் சிறுபொழுது அறுவகைத்தாய்க் கதிரவன் மறையும் நேரம் தொடங்கி மறுநாள் கதிரவன் மறையும் நேரம் வரையில் ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகை அளவிற்றாய் அமையும், இவற்றுள் ] மாலை முல்லைக்கும், யாமம் குறிஞ்சிக்கும், வைகறையும் விடியலும் மருதத்திற்கும், நண்பகல் பாலைக்கும், எற்பாடு நெய்தற்கும் உரியன. (இ. வி. 385, 386)

சிறுபொழுது ஆறு என்னும் சாமிநாதம் (72)

சிறுபொழுது ஐந்து -

{Entry: H08__170}

மாலை, யாமம், வைகறை, எற்பாடு (காலை), நண்பகல் எனச் சிறுபொழுது ஐந்து எனக் கொள்வோர், பகற்போதின் இறுதிப் பத்து நாழிகைகளை விடுத்து, ஏனைய 50 நாழிகைகளை மாத்திரம் கொண்டு, எற்பாடு (காலை) நண்பகல், மாலை, யாமம், வைகறை என முறையே காண்ப. (ந. அ. 12)

எற்பாடாகிய காலை நெய்தலுக்கும், நண்பகல் பாலைக்கும், மாலை முல்லைக்கும், யாமம் குறிஞ்சிக்கும், வைகறை மருதத்திற்கும் இவர்தம் கருத்துப்படி உரியவாம்.

தொல்காப்பியம் முதற் சூத்திர விருத்தியுள் சிவஞான முனிவர் சிறுபொழுது ஐந்தே என்று பின்வருமாறு காரணம் காட்டுவார்:

சிறுபொழுது காமத்திற்குச் சிறந்த இராக் காலத்தின் முற்கூறாகிய மாலையை முதலில் வைத்து எண்ணியது முறையே ஆயினும், எற்பாடாகிய பிற்பகலை இறுதிக்கண் வையாது நடுவுநிலைத் திணைக்குரிய நண்பகலை வைத்தமை யான் அது முறைபற்றிக் கூறியதன்று. தலைவன் பிரிந்துழித் தலைவி ஆற்றியிருத்தல் கற்பாதலின் இல்லறத்திற்குக் கற்புச் சிறந்தமைபற்றி முல்லை முதலில் வைத்து எண்ணினார் எனில், ஏனைய குறிஞ்சி முதலிய திணைகள் அவ்வாறு முறை பெறவில்லை; கந்தருவ வழக்கின தாகிய கற்பினைவிடக் களவு சிறந்தது; ஆகவே அக்காரணம் பொருந்தாது. நிலம் பற்றியும் பெரும்பொழுது பற்றியும் முல்லை குறிஞ்சி முதலாக முறை கோடல் பொருந்தாதாயினும் சிறுபொழுது பற்றி அம்முறை கோடல் பொருந்தும். தொல்காப்பியனாரால் ஆண்டு ஓதிய எற்பாடு நாள் வெயிற் காலையேயாம். படுதல் - உண்டாதல். ‘இலம் என் கிளவிக்குப் படு வரு காலை’, ‘இலம்பாடு ஒற்கம்’ என்னும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இவற்றுள் வரும் சூத்திரங்களில் படுதலை இப்பொருளதாகவே நச்சினார்க் கினியரும் உரைத்தார். எற்பாடாவது ஞாயிற்றினது உதயம் என்றவாறு. தலைவன் பிரிந்தவிடத்தே தனித்திருந்த தலைவி இராக்கால முழுதும் வீணே கழிந்தமை பற்றி இரங்குதற்குரிய காலம் ஞாயிற்றினது உதயகாலமே ஆதல்பற்றி, ‘எற்பாடு, நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்’ என்றார்.

இனி வைகுறுவும் விடியலும் என ‘வைகுறு விடியல்’ என்னும் தொடரை உம்மைத் தொகை ஆக்கி, வைகறையை ‘வைகுறு’ எனவும், நாள் வெயிற் காலையை ‘விடியல்’ எனவும் கொண்டு இவ்விரண்டும் மருதத்திற்கு உரியன எனவும், பிற்பகலை எற்பாடு எனக் கொண்டு அது நெய்தற்கு உரியது எனவும், இங்ஙனம் சிறுபொழுது ஆறு வகைப்படும் என்றுரைப் பாரும் உளர். அது பொருந்தாது.

(1) ‘காலையும் பகலும் கையறு மாலையும்,

ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றிப்

பொழுதிடை தெரியின் பொய்யே காமம்’ (குறுந். 32)

எனக் குறுந்தொகைப் பாடல் சிறுபொழுது ஐந்தே என்று குறிக்கின்றது.

(2) ‘பகல்’ எனவே பிற்பகல் அடங்கும் என்றல் பொருந்தாது. முற்பகலும் அடங்காது என்று காலையை வேறாகக் கூறியுள்ளார். ஆதலின் ‘பகல்’ நண்பகல் ஆதல் வேண்டும்.

(3) வைகறையினையே விடியல் என்றமையால் காலையை விடியல் என்று இப்பாட்டிற் கூறினார் என்றல் பொருந்தாது.

4) விடிதல் - இருள் புலர்தல் என்னும் பொருளினையுடை யதாதலின், விடியல் - புலரி - வைகறை - என்பன ஒருபொருட் கிளவியாவன. (5) ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்’ (குறள். 1330) என்றார் ஆதலின் ஊடுதலின் இறுதிக்கண் கூடுதல் ஒருதலை என்பது பெறப் படுகிறது. கற்புக் காலத்தில் நாள்வெயிற்காலையில் (ஊடல் நீங்கிய பின்னர்ப்) புணர்தல் முறையாகாது. ஆதலின் அக் காலத்தே ஊடுதலும் முறையன்று.

6) உண்ட பின்னர்ப் பயனின்றிக் கழியும் பிற்பகல் புராணங் களைக் கேட்டல் முதலியவற்றாலாவது விளையாட்டு முதலியவற்றாலாவது பொழுது போக்கப்பட வேண்டும். விதிக்கப்படும் காரியம் ஒன்றற்கு அப்பொழுது உரியதாகாது. ஆதலின் அப் பொழுதினை (-பிற்பகல்) சிறு பொழுதுகளுள் ஒன்றாக வைத்து எண்ணிச் சிறுபொழுது ஆறு என்றல் பொருந்தாது.

(7) ஆசிரியர் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என முறை செய்தற்குக் காரணம் சிறு பொழுதும் மாலை யாமம் வைகறை காலை நண்பகல் என அமைந்த கிடக்கை முறையே என்பது தெளிவு.

(8) ஏனைத் திணைகட்குச் சிறுபொழுது ஒரோவொன்றே யாதலின் மருதத்திற்கு மாத்திரம் இரண்டு என்று கொள் ளுதல் பொருந்தாது.

(9) வைகுறு விடியல் - இராப் பொழுது தன்னொடு கழிவுறு தற்குக் காரணமாகிய விடியல். ‘விளம்பழம் கமழும்’ (நற். 12) என்னும் பாடலுள் ‘வைகுறு புலர் விடியல்’ என்னும் தொடர்க்கும் இதுவே பொருளாம். அற்றை நாட் பொழுது தன் எல்லையோடு அறுதல் பற்றி அது ‘வைகறை’ எனவும் படும். வைகுதல் - கழிதல். ‘வைகல்நாளும் வைகின்றே’ (சீவக. 156) என்னும் தொடர்க்கு, நாள்தோறும் கழியாநின்றது என்று நச்சினார்க்கினியரும் உரைத்தார்.

இவ்வாறு சிவஞான முனிவர் உரைத்து, நச்சினார்க்கினியர் உரையாசிரியர் சொன்னவற்றை மேலும் மறுப்பார். (சூ. வி. பக். 37, 38)

சிறைகாவல் -

{Entry: H08__171}

(தலைவியை இல்லத்துச் செறித்து வெளியே தினைப்புனம் முதலியவற்றுக்குச் செல்லாதவாறு காவல் செய்து வைத்த காலத்து) தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகை குழறுதல், கோழி குரல் காட்டல் என இவை, இரவுக்குறிக்கண் தலைவனை இற்புறம் போந்து காண்பதை தடைசெய்தலின் ‘சிறைகாவல்’ எனப்பட்டன. (இறை. அ. 29 உரை)

சிறைப்புறம் -

{Entry: H08__172}

ஒருவரை ஒருவர் கண்ணால் பார்க்க வாய்ப்பு இல்லாமல் ஒருவர் கூறியதை மற்றவர் காதால் கேட்கலாம் அணிமைக்கண் உள்ள பகுதி.

தோழிதலைவியர்களிடையே நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்திருந்து அறிதற்கு உதவியாய்க் காவல் மனைப் புறமாய் உள்ள இடம். (தொ. பொ. 114 நச். உரை)

சிறைப்புறம் குறித்தல் -

{Entry: H08__173}

1. நேராகக் கண்முன் சொல்லாமல் மறைந்திருந்து செவிப் படுமாறு சொல்லுதல்.

2. கற்பெனப்பட்ட சிறையின்மேல் வைத்து ஆற்றுவித்தல்.

கற்புக்காலத்துத் தலைவன் தான் ஓதல் காவல் முதலிய வற்றுள் ஒன்றன்பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல் வதை வாயில்களுக்குணர்த்த, அவ்வாயில்களும் தலைமகள் தாம் கூறும் சொற்களைக் கேட்கும் அணிய இடத்தில் இருக்கும்போது அவன் பிரியப்போகும் செய்தியைத் தெரிவித்தலும், அவன் பிரிந்து சென்ற பின்னர் அச் செய்தி யைத் தலைவியிடம் நேரில் சொல்லாது அவள் செவிப்படு மாறு பின்னிருந்து மறைவாகச் சொல்லுதலும் போல்வன.

2. தலைமகன் பிரிவின்கண் தலைவி ஆற்றாளாயவழி வாயில்கள், “நம் பெருமான் ஆடவர்க்குரிய கடமையினைச் செய்துவர ஆண்மையொடு பிரிந்து சென்றிருக்கிறான்; நீயும் அவன் வருந்துணையும் கற்பினால் பொறுத்திருத்தல் வேண்டும். தாம் வருந்துணையும் ஆற்றி இருக்குமாறு தலைவர் கூறிய சொற்களின்வழி நடத்தலன்றோ கற்பாவது? இக்குலத்தவர் உயிரினும் மேலாகக் காத்த கற்பு என்னும் அணையை நீ உடைத்தல் தகாது.” என்றாற் போலக் கற்பு என்னும் அணைமேல் வைத்துத் தலைவியைத் தலைவன் பிரிவின்கண் ஆற்றுவித்தல். (இறை. அ. 54 உரை)

சீறூர் -

{Entry: H08__174}

குறிஞ்சி நிலத்து ஊர் (பிங். 521)

‘தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இது’ (கோவை. 127)

சுட்டு -

{Entry: H08__175}

அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று (வீ. சோ. 90); இப்பாட்டுத் தன்மையைச் சுட்டிற்று, முன்னிலையைச் சுட்டிற்று, படர்க்கையைச் சுட்டிற்று என்று அறிவது. (வீ. சோ. 96 உரை)

சுடரொடு புலம்பல் -

{Entry: H08__176}

களவுக் காலத்தில் தலைவன் ஒருவழித் தணந்தமையால் அவன் பிரிவு குறித்து வருந்திக் கூடலிழைத்து நிமித்தம் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ‘தலைவன் போக்கும் அவன் சூளுறவும் என்னை வருத்துகின்றன; கதிரவனாகிய நீயும் மறையப்போகிறாய். இனி யான் வருந்தாமல் இருத்தல் இயலுமோ?’ என்று கதிரவனிடம் கூறிப் புலம்பியது.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 187)

சுடரோடு இரத்தல் -

{Entry: H08__177}

செவிலி வாயிலாகத் தலைவி தலைவனொடு சென்ற செய்தியை அறிந்த நற்றாய், அவள் செல்லும் கொடிய பாலை வழியில் அவன் வெப்பக் கதிர்களால் தாக்காது குளிர்ந்த கிரணங்களை வீசி அவளது தாமரைமுகம் வாடாதவாறு செய்யவேண்டும் என்று கதிரவனிடம் வேண்டுதல்.

இதனை ‘நற்றாய் சுரம் தணிவித்தல்’ என்னும் கூற்றாகவும் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண் கூறுப.

(ந. அ. 186; இ. வி. 538)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (கோவை. 232)

சுடரோடு இரந்து கொண்டு ஏத்தல் -

{Entry: H08__178}

நற்றாய் சூரியனை வழிபட்டு வேண்டுதல்

தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றவழி அவள் சென்ற மழையறியாத பாலை நிலத்தின் வெப்பத்தை நினைத்து நற்றாய் வருந்திப் பாலைநிலத் தெய்வமான சூரியனை நோக்கி, “தாமரையினை மலரச்செய்யும் நீ என் மகளது முகமாகிய தாமரை வாடாமல் மலர்ந்திருக்குமாறு நின் வெப்பக்கதிர்களைக் குளிர்ந்த கிரணங்களாக அருள் செய்வாயாக!” (திருப்பதிக். 416) என்று வேண்டுவது.

இது ‘நற்றாய் மருட்சி’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று.

(மா. அ. 86)

சுப்பிரயோகம் -

{Entry: H08__179}

தலைவன் தலைவியை எய்துதற்கு முன் மன்மதனுடைய ஐந்து அம்புகளால் இருவரிடையும் நிகழும் ஐவகை நிலைகளுள் முதலாவதாகிய சொல்லும் நினைப்பும் ஆகும். (வீ. சோ. 96, உரை மேற்.)

சுரத்தை ஆற்றுவித்தல் -

{Entry: H08__180}

சுரம் தணிவித்தல் - காண்க.

சுரம் -

{Entry: H08__181}

பாலை நிலம்; ‘சுரமென மொழிதலும்’ (தொ.பொ. 216 நச்.) (குறிஞ்சி நிலமோ முல்லை நிலமோ பருவமழை இன்றி வெங்கதிர் வெப்பத்தால் தெறப்பட்டு மக்கள் இருந்து வாழ் தற்கு அரிதாய நிலம்.) (L)

சுரம் செல்லும் தாய் -

{Entry: H08__182}

தலைவி உடன்போயது அறிந்த இல்லத்தாருள் நற்றாய் தன் சேரியளவில் தேடி அமையவும், தலைவனும் தலைவியும் உடன் போய சுரம் நோக்கி அவரை மீட்டுவரும் நோக்குடன் செவிலித்தாய் புறப்பட்டுச் செல்வாள் என்பது. (தொ. பொ. 37. நச்.)

சுரம் தணிவித்தல் -

{Entry: H08__183}

நற்றாய் தலைவியது உடன்போக்கை அறிந்தபின் அவள் நடந்து செல்லும் பாலைவழி அவளுக்குக் குளிர்சோலை வழியாய் வெம்மை தாராதிருக்க எனத் தெய்வத்தை வேண்டிக் கொள்ளுதல்.

“சூரியனே! யானும் அவளுடன் தங்கியவர்களும் வாடுமாறு என் மகள் தலைவனொடு பாலைவழியைக் கடத்தற்குச் சென்றுவிட்டாள். அவள் முகம் மலரும் வகையில் வெப்பம் குறைந்த கதிர்களை வீசுமாறு உன்னை வேண்டுகிறேன்”. (கோவை. 232) என்பது போன்ற கூற்று. (ந. அ. 186)

‘சுடரோடு இரத்தல்’ என்பது திருக்கோவையாருள் கூற்று. (232)

சுரம் போக்கு -

{Entry: H08__184}

தலைவியை அவள்தமர் தலைவனுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தவழித் தலைவி தன் கற்புக்கு ஏதம் வாராத வகையில் தலைவனோடு உடன்போக்குத் துணிந்து கொடிய பாலைநிலத்து வழியே சென்று வேற்றூரில் மணத்தற்குப் பாலைவழியைக் கடந்து போதல். (ந.அ. 132)

சுரமென மொழிதல் -

{Entry: H08__185}

காப்பு மிகுதிக்கண் உடன்போக்கு விரும்பிய தலைவிக்குத் தலைவன் தான் போகின்ற இடம் கல்லும் முள்ளுமாகிய பாலைநிலம் என்று உடன்போக்கினை விலக்க நெறிஅருமை கூறல். (தொ. பொ. 212 இள.)

கற்புக் காலத்தில் தலைவன் பொருள் முதலியன குறித்துப் பிரியக் கருதியவழித் தோழியும் தலைவியும் அவன் போகக் கருதும் இடம் எல்லாவற்றானும் போதற்கு அரிய சுரம் என்று கூறுதலும், தலைவி கற்பின் பிரிவின்கண் தலைவனுடன் போதலைக் கருதியவழித் தலைவன் தான்போகக் கருதும் இடம் எல்லாவற்றானும் போதற்கரிய சுரம் என்று அவள் உடன்வருதலை விலக்கக் கூறுதலும் ஆம்.(தொ. பொ. 216. நச்.)

தலைவி தலைவனது பிரிவுக்குறிப்பு உணர்ந்தவிடத்துத் தானும் அவனொடு சுரத்தின்கண் செல்லப் போவதாகக் கூறு தல். இக்கூற்றும் புலனெறி வழக்கின்கண் நீக்கும் நிலைமைத்து இல்லை. (தொ. பொ. 21 ச. பால.)

சுவடு கண்டறிதல் -

{Entry: H08__186}

தலைவனோடு உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைச் சில காற்சுவடுகளைக் கண்டு, “இக் கொடிய பாலையில் காணப்படும் இச்சீறடிச் சுவடுகள் கொடுவினையேன் வளர்த்தெடுத்த மாண்புடையா ளுடைய சுவடுகள்; உவை அவளை உடன்கொண்டு சென்ற அக்கள்வன் அடிச்சுவடுகள்” எனத் திகைத்து நிற்பது.

‘உடன் போக்கு’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று இது.

(கோவை. 237)

சுவடு கண்டிரங்கல் (1) -

{Entry: H08__187}

தலைவி தலைவனோடு உடன்போயவழி அவரைத் தேடித் தொடர்ந்து பின்சென்ற செலிவி பாலைநிலத்திடைத் தலைவி யின் காற்சுவடுகளை அடையாளம் கண்டறிந்து அவ் விடத்தே நின்று, “மலர் போன்ற தடுக்கினை மிதித்தாலும் கொப்புளம் கொள்ளும் என் மகளுடைய கால்மலர்கள், வேலொத்த வெம்பரல் கிடக்கும் காட்டிடத்தே இன்னொ ருவன் பின்னே போதற்கு எவ்வாறு ஒத்தனவோ?” என வருந்திக் கூறுவது.

‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. இது.

(கோவை. 238)

சுவடு கண்டிரங்கல் (2) -

{Entry: H08__188}

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிச் சுரத்திடைச் சென்ற செவிலி, வழியில் தன் மகளுடைய அடிச்சுவடுகளைக் கண்டு துயருறுதல்.

சுரத்திடைப் பல அடிச்சுவடுகள் பதிந்துள்ளன. அவற்றுள் கானவர் நடந்த அடிச்சுவட்டையும், தன் மகளுடைய காதல னது அடிச்சுவட்டையும், அதன் அருகே தன் மகளது அடிச் சுவட்டையும் கண்டு அடையாளமும் தெரிந்து, “இத்தகைய வெம்மையும் குத்தும் கற்களும் வருத்தும் பாதையில் என் பேதை நடந்து சென்றிருக்கின்றாளே!” (தஞ்சை. கோவை. 345) என்று வருந்துவது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலில் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (ந. அ. 188)

சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -

{Entry: H08__189}

களவியலுள் தோழி கூற்றாக வருவது. ‘நாற்றமும் தோற்றமும்’ என்னும் சூத்திரத்துள் ‘பாங்குற வந்த நாலெட்டு வகையும்’ என்புழி ‘வகை’யான் கொள்ளப்படுவது.

“தலைவி! நம் சுற்றத்தார், தலைவன்வரைவு குறித்துத் தமரை விடுத்துழி அவர் தருவதாகக் கூறிய பொருளினும் மிக்க பொருளை வேண்டுகின்றனர். நமர் பொருள் கருதி வரை வினை ஏற்றுக்கொள்ளாததால் இருவரிடையே அமர் ஏற்படுமோ என்று அஞ்சினேன். ஆயின் அவர்கள் அமைதி யாக மீண்டு சென்றனர். நமர் கேட்ட பொருளுடன் விரைவில் மீண்டும் வருவரெனக் கருதுகிறேன்” என்று சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்ததைத் தலைவிக்குத் தோழி கூறுதல். (தொ.பொ. 114 நச்.)

சுறவுக்கோடு -

{Entry: H08__190}

நெய்தல் நில மக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு. (பட். - 86, 87 உரை) (L)

சுனை நயந்து உரைத்தல் -

{Entry: H08__191}

தலைவனுடன் புணர்ந்து வந்ததால் அழகு மிக்குத் தோன்றும் தலைவியைத் தோழி, சுனையை வியப்பது போலப் பேசித் தனக்குத் தலைவியது புணர்ச்சி தெரியும் என்பதுணர்த்தல்.

“அருமைத் தலைவீ! உன்னைப் போலவே எனக்கும் இந்நெற்றி வியர்வும் அழகுப்பொலிவும் எய்தும் என்றால், நானும் அச்சுனையில் நீராடிப் பார்ப்பேன்” (தஞ்சை. கோ. 66) என்பது போன்ற தோழி கூற்று.

இது ‘பாங்கிமதியுடன்பாடு’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (ந. அ. 139 உரை)

இதனைத் திருக்கோவையார் ‘நாணநாட்டம்’ என்னும் தொகுதிக்கண் ‘புணர்ச்சியுரைத்தல்’ என்னும் கூற்றாகக் கூறும். (70)

சுனை வியந்துரைத்தல் -

{Entry: H08__192}

தலைவியின் உறுப்புக்களில் வேறுபாடுகண்டு அவளுக்குப் புணர்ச்சியுண்டென்று துணிந்த தோழி, பலவாறு அவளைக் கேட்கத் தன்கண் சிவந்திருப்பதன் காரணம் சுனையாடி யமையே என்று தலைவிகூற, அதற்குத் தோழி சுனையை வியந்து கூறுவது போல இருபொருள்படச் சொல்வது.

“என்னே சுனையின் அருமை! அஃது உன் உதடுகளின் சிவப்பையும் கண்களின் கருமையையும் வாங்கிக் கொண்டு உன்னை அழகிய முல்லை மாலையைச் சூட்டி விடுத்தது போலும்” (தஞ்சை. கோ. 65) என்பது தோழியின் கவர் பொருளமைந்த கூற்று.

இது களவியலுள் பாங்கிமதியுடன்பாடு என்னும் தொகு திக்கண் ஒரு கூற்று. (ந. அ. 139)

சூள் என நினைதல் -

{Entry: H08__193}

தலைவன் கூற்று வாய்மை என்று தான் நினைத்ததைத் தோழி கூறுதல். தோழியிற் கூட்டத்து, இரவுக்குறிக்கண் தலைவி இற்செறிக்கப்பட்ட செய்தியைத் தலைவற்கு உரைத்த தோழி, “நீ தலைவியிடம், ‘நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ என்று கூறிய சொல்வழி நடப்பாயென நினைக்கின்றேன். அவளிடத்து நீ கூறிய உரையைப் பொய்த்து ஒழுகுவையேல், இவ்வுலகில் உண்மைகூறுவார் ஒருவருமே இரார் என்று யான் கருத நேரிடும்!” என்றாற் போலக் கூறித் தலைவன் தலைவியை விரைவில் வரையுமாறு வேண்டுதல்.

இது தோழியிற் கூட்டத்து ‘இரவுக்குறி’ என்னும் கிளவிக் கண்ணதொரு துறை. (த. நெ. வி. பக். 27)

சூறை கோட்பறை -

{Entry: H08__194}

வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப்பறை. (தொ. பொ. 18 நச்.) (L)

செங்கடுமொழி -

{Entry: H08__195}

‘தோழி செவ்வனம் கூறும் கடுஞ்சொற்கள்.

அவையாவன தலைவனைக் கொடியன் எனவும் சூள் பிழைத்தவன் எனவும் இயற்பழித்தலும், நீ இங்ஙனம் தினைக் காவலை மறந்து தலைவனது நினைவிலேயே இருப்பின் அன்னை தினைக்காவலுக்கு வேறு ஒருவரை அமர்த்திவிட் டால் தலைவன்மார்பு நினக்குக் கிட்டுதற்கு அரிதாகிவிடும் ஆதலின், தினைக்காவலை நன்கு செய்க (அகநா. 28) என்றாற் போலத் தலைவியைக் கழறலும், போல்வன. (தொ. பொ. 114 நச்.)

செஞ்சுடர்க்கு உரைத்தல் -

{Entry: H08__196}

தலைவி விளக்கினிடம் கூறுதல். “இருள் போக்கும் விளக்கே! ‘தம்மைக் கூடிய தலைவியர்க்குத் தம் முகத்தைக் கனவிலே காட்டி நனவிலே மறைதல் பொருத்தமன்று’ என்பதை நீ தலைவர்க்குத் கூறவில்லையே!” (கோவை. 356) என்றாற் போலத் தன் அவல நிலையினைக் கூறுதல்.

திருக்கோவையார் ‘விளக்கொடு வெறுத்தல்’ (356) என்னும்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. உணர்த்த உணரும் ஊடல் இஃது. (இ. வி. 554 உரை)

செய்ந்நன்றி அறியாமை கூறல் -

{Entry: H08__197}

தலைவி செய்த நன்றியை அறிந்து அதற்கேற்பத் தலைவன் நடந்து கொள்ளாமையைத் தோழி அவனுக்கு எடுத்துக் கூறல்.

“ஐய! எம் தலைவி பேயும் உறங்கும் பேரிருட்காலத்தே தைத் திங்கட் பனியில் உப்பங்கழிச் சோலையில் நினது அருந் துயரினைப் போக்கிய நன்றியின்பொருட்டோ, நீ இன்று பிரிந்து சென்றது? அவள் செய்த நன்றியைப் போற்றி நீ வரைந்து கோடலே தக்கது” என்னும் கூற்று.

இஃது அம்பிகாபதிக் கோவையில் ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (அம்பிகா. 256)

செய்பொருளச்சம் -

{Entry: H08__198}

கற்புக் காலத்தில் தான் தலைவியைப் பிரிந்து செய்யக் கருதுவனவான ஓதல், காவல், தூது, பகைவரை அழித்தல் முதலிய செயல்களுக்குப் பிரியமுடியாதவாறு தலைவி தன் வருத்த மிகுதியைக் கூறித் தன்னைத் தடுத்து விடுவாளோ என்று தலைவன் எய்தும் அச்சம். (தொ. பொ. 232 நச்.)

செய்யுள் வழக்கம் -

{Entry: H08__199}

மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் ஒழுக்கம் ‘உலக வழக்கம்’ எனப்படும். இவ்வுலக வழக்கங்களில் சிறந்தன வாயுள்ளனவற்றை அறிஞர்கள் ஒன்றாகத் தொகுத்துப் பிற்கால உலக வழக்கம் திருத்தமாக நடைபெறப் பாடிவைப் பர். அப்பாடல்களாகிய நூல்வழக்கம் நாடகவழக்கம் எனப் படும். உலக வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்து அமைவது புலனெறி வழக்கம் அல்லது செய்யுள்வழக்கம் எனப்படும். (தொ. பொ. 42 குழ.)

செய்வாய் திருத்தல் -

{Entry: H08__200}

செயல்களால் குறிப்பாகத் தெரிவித்தல்; தலைவி தன் மார்பில் அணைத்த புதல்வன் தலைமாலையில் உள்ள பூக்களில், தான் தலைவன்பிரிவு குறித்து வருந்தும் வருத்தத்தான் விடும் பெருமூச்சுக் காற்றின் வெப்பம்பட, அதனால் அப்பூக்கள் கருகும் நிலையினைக் காட்டுதல் முதலிய செயல்களால் அவள் தலைவன் பிரிந்துபோக நினைத்த உள்ளத்தைத் திருத்தித் தன்னிடமே கோடல்.

இது காம நுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று; அகத்திணை உரை இருபத்தேழ னுள் குறிப்பு (வீ. சோ. 90) என்பதன்பாற்படுவது. (வீ. சோ. 96 உரைமேற்)

செய்வினை மறைத்தலால் ஐயமுற்று ஓர்தல் -

{Entry: H08__201}

தலைவி, தலைவன்பால் தான் சென்றுவிட்ட நினைவுடன் செயற்படுதலால் தடுமாற்றம் பெற அதனை அவள் பிறர்க்கு மறைப்பதாலும், முன்போல் பாங்கியருடன் பயிலாது குறியிடம் செல்ல வேண்டித் தனித்து நிற்பதாலும் பாங்கி அவள் செய்கையில் ஐயமுற்றுப் ‘புணர்ச்சி உண்டு’ என இறுதியில் துணிதல்.

களவியலுள் இது ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகு திக்கண் ஒரு கூற்று. (ந. அ. 139; இ. வி. 507)

செயற்கை அன்பு -

{Entry: H08__202}

தலைவியினுடைய குணங்களானும் செயல்களாலும் அவ ளிடத்துத் தலைவன் கொள்ளும் அன்பு. (இறை. அ. 2 உரை)

செயற்கை நிலம் -

{Entry: H08__203}

முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வன்பாலையாதலும், மருத மும் நெய்தலும் திரிந்து சிறுபான்மை மென்பாலையாதலும் செயற்கை நிலமாம்.

அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைகள் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் இவற்றிடையே நிகழும்போது, அவற்றிற்கு அவ்வந் நிலங்கள் செயற்கை நிலங்களாம். (தொ. பொ. 9, 13 நச்.)

தமக்கென நிலமும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையும், நிலமில்லாத பாலையும், பிற முதலொடு மயங்கினவேனும் அவை மயங்கிய நிலம் அவ்வத் திணைக் குரிய நிலம் என்று கொள்ளப்படும். (தொ. பொ. 17 நச்.)

செயற்கைப் பொழுது -

{Entry: H08__204}

அவ்வந் நிலத்திற்கு அவையவை பெரும்பொழுது சிறு பொழுது என்று வரையறுக்கப்பட்ட வரையறையைக் கடந்து, முல்லை நிலத்துள் அதற்குரிய கார்காலம் வாராது கூதிர்க்காலமும் (அகநா. 264) முன்பனிக்காலமும் (அகநா. 294) வருதலும், குறிஞ்சி நிலத்துள் அதற்குரிய கூதிரும் முன்பனி யும் வாராது வேனில் (குறுந். 47) வருதலும், பாலைக்கண் அதற்குரிய பின்பனி வேனில் நண்பகல் என்பன வாராது முன்பனியும் வைகறையும் (அகநா. 139) வருதலும், வாடையும் கங்குலும் மாலையும் (கலி. 29) வருதலும், மாலை (ஐங். 339) வருதலும், நெய்தற்கண் அதற்குரிய எற்பாடாகிய பிற்பகல் வாராது கங்குலும் மாலையும் முன்பனியும் (கலி. 129) வருத லும் போல்வன செயற்கைப் பொழுதுகளாம்.) (தொ. பொ. 12 நச்.)

‘செயிர்தீர் சிறப்பின் நால்வர்’ -

{Entry: H08__205}

குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகள், தோழி, நற்றாய், செவிலி என்பார் ஆவர் இந்நால்வரும். இவர்கள் ஒரே நீர்மையர்; உடலால் நால்வர் அன்றி உயிரால் ஒருவரே. ஆதலின் நாணமும் மடமும் வருத்தமும் நால்வருக்கும். ஒக்கும் இந்நால்வருள் ஒருத்திக்கு ஆக்கமோ கேடோ வந்தவிடத்து ஏனையோரும் அது தமக்கு உற்றதாகவே நினைப்பர். (தொ. பொ. 198 இள.)

குற்றம் தீர்ந்த தலைமையினையுடைய நற்றாய் செவிலி தோழி தலைவன் என்பார் இந்நால்வர். இவருள் முதல் மூவரும் அறத்தொடு நிலையான் தலைவியின் உயிர் நாண் மடன் இவற்றைக் காப்பர். தலைவன் இவற்றைக் களவிலும் கற்பிலும் காத்தலும் உண்டு; களவுக் காலத்தே வரைவிடை வைத்துப் பிரிந்தும், கற்புக் காலத்தே பரத்தையிற் பிரிந்தும் காவாமை யும் உண்டு. (தொ. பொ. 210 நச்.)

செல்கென விடுத்தல் -

{Entry: H08__206}

பெருந்திணைத் தலைவி, இரவுப்போதில் மற்றொரு தலைவிபால் செல்ல விரும்பிய தலைவனைக் கண்டு, செல்க எனக்கூறி அனுப்புதல். இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பெருந் திணைப் பெண்பாற்கூற்றாக அமைவதொருதுறை.

“நின் புதிய தலைவி இரவுக்குறியில் நின்று வருந்தாதபடி நீ சோலை வழியே செல்ல, நிலா ஒளி செய்வதாகுக! நின்னைத் தடுத்து நிறுத்துவார் இவ்வில்லத்தில் ஒருவரும் இலர்” என்பது போன்ற கூற்று. (பு. வெ. மா. 16 : 19)

செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -

{Entry: H08__207}

புணர்ச்சிக்குப் பிறகு தலைவனை விட்டுத் தன் ஆயத்தாருடன் சேர்ந்துகொள்ளச் செல்லும் தலைவியது செலவினைக் கண்டு தலைவன் தன்னுள் கூறிக்கொள்ளுதல்.

தலைவி தன்னை நீங்கிச் செல்கையில் மறைவில் நின்று அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் தலைவன், “உயிரைக் கண்ணால் காண்டல் இயலாது என்பது பொருந்தாது. இதோ எனது உயிர், என்னைப் பார்த்தும் பேசியும் மகிழ்வூட்டியும் நடந்து செல்கிறதே!” என்றாற் போலத் தன் மனத்தில் கூறிக் கொள்ளுதல்.

இது களவியலுள் பிரிவுழி மகிழ்ச்சி என்னும் தொகுதிக்கண் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் வருவதொரு கூற்று.

(ந. அ. 131)

செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -

{Entry: H08__208}

செல்லும் தலைவியை வியந்து தலைவன் தன் தேர்ப்பாக னிடம் கூறுவது.

“பாக! ஒரு பெண்தெய்வம் தன்னைப் பின்தொடர்ந்து செல்லும் என் நெஞ்சத்தைப் பார்த்துக் கொண்டே போவதைப் பார்” (தஞ்சை கோ. 28) என்பது போன்ற கூற்று.

இது களவியலுள் ‘பிரிவுழி மகிழ்ச்சி’ என்னும் தொகுதிக் கண் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் வருவதொரு கூற்று. (ந. அ. 131)

செலவினால் ஐயுற்று ஓர்தல் -

{Entry: H08__209}

தலைவி முன்போலப் பெருமகிழ்வுடன் ஓடியாடித் திரிதல் இன்றித் தலைவனை நினைந்தேங்கும் உள்ளத்தொடு மெல்ல நடந்து செல்வதைக் கண்ட தோழி, ஐயுற்றுப் பின்னர் “இவ ளுக்குத் தலைவனொடு புணர்ச்சியுண்டு” என்று ஆராய்ந்து துணிதல்.

இதுகளவியலுள் ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகு திக்கண் ஒரு கூற்று. (ந. அ. 139, இ.வி. 507).

செலவு அழுங்கல் (1) -

{Entry: H08__210}

வினை கருதிச் செல்ல நினைத்த தலைவன் காமநுகர்ச்சி கருதியும், தன் தலைவி தன்னைப் பிரிந்து இருத்தல் ஆற்றாளே என்பது கருதியும் தன் புறப்பாட்டினை நிறுத்திவிடக் கருதுதல்.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் இருபாற் பெருந் திணைக்கண்ணதொரு துறை. (பு.வெ.மா. 17-1)

செலவு அழுங்கல் (2) -

{Entry: H08__211}

பிரிந்து போதலைத் தலைவன் இரங்கித் தவிர்தல்.

கற்புக்காலத்தே ஓதல் காவல் தூது பகை பொருள் இவை காரணமாகப் பிரியும் தலைவன், தன் பிரிவு எண்ணித் தலைவி வருந்துதலை நினைந்து அவளது நிலைக்கு இரங்கிச் சிறிது காலம் தன் பயணத்தைத் தவிர்ந்திருத்தல்.

செலவிடை அழுங்கல் என்பது ஒரு பொழுதும் பிரிந்து போகக் கருதாமையன்று; தலைவியை வற்புறுத்தி அமைதி யுறச் செய்து பின் பிரிதற்காகவே அப்பொழுது தன்பிரிவினை நிறுத்திப் பின்னர் அதனைக் கொள்ளக் கருதுவதாகும்.

(ந. அ. 86, 88; தொ.பொ. 185 நச்.)

செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -

{Entry: H08__212}

தலைவனது பொருட்பிரிவு எண்ணி வருந்திய தலைவியிடம் தோழி, “மாந்தளிரை ஒத்த நின் மேனி பசப்ப, நம்மினும் தமக்கு மேம்பட்டதாகத் தோன்றும் பொருளைத் தேடிக் கொணர, மூங்கில் உயர்ந்த நீரற்ற கொடிய இடத்தே மறவர் கொள்ளையடித்துண்ணும் காட்டைக் கடந்து பொருள் செய்ய நினையார், தலைவர்” என்று கூறுதல். (குறுந். 331)

செலவு நினைந்து உரைத்தல் -

{Entry: H08__213}

வரைவு முடுக்கத்தில் களவொழுக்கம் நிகழ்த்தும் தலைவன் விரைவில் தலைவியை மணம்செய்துகொள்ளுதலை உடன் படாமையின், தோழி தலைவனொடு புலந்து கூறக் கேட்ட தலைவி, அவன் சிறைப்புறத்தானாக, “‘இவ்வரிய வழியில் இக்கொடிய இருளில் மகளிராகிய நீங்கள் தனித்து வந்த காரணம் யாது?’ என்று வழியிடை வினவுவார் சிலராவது தோன்றுவராயின், இம்மிக்க இருளில் யாம் தலைவனது இருப்பிடம் நோக்கிச் சேறலும் அரிதன்று; யாம் புறப்பட்டுச் சென்றேமாயினும், வழியிடைத் தொடர வேண்டிய வழியைப் பிறரை உசாவி அறிந்து செல்ல வினவுவார் ஒருவரும் இராரே!” என்று தலைவனது ஊர்க்குச் செல்லுதலை நினைத்து கூறியது. (கோவை. 264; அகநா. 8)

இது ‘வரைவுமுடுக்கம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இதனைத் தொல்காப்பியம் ‘காமக் கிழவன் உள்வழிப் படினும், தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்’ என்று கூறும். (தொல். பொ. 113) நச்.

செவ்வணி -

{Entry: H08__214}

தலைவன் பரத்தை இடத்தானாக, பூப்பெய்திய தலைவி அச்செய்தியைப் பரத்தை இல்லத்திருக்கும் தலைவனுக்குத் தெரிவித்தல் வேண்டித் தன் சேடியைச் செவ்வணி அணிந்து செஞ்சாந்து பூசிச் செம்மலர் சூடிச் சென்று அவனைக் கண்டு குறிப்பினால் தெரிவித்தற்கு விடுப்பாள்; அதுபற்றி ஏற்படுத் திக் கொண்டு அணிசெயல் மரபு இது. (ந.அ. 205)

செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல் -

{Entry: H08__215}

தலைவியது விருப்பப்படி தோழி தலைவனிடம் சேடி ஒருத்தியைச் செவ்வணி அணிவித்து அனுப்புதல்.

சேடி ஒருத்திக்குச் செந்நிற ஆடை உடுத்திச் செஞ்சாந்து பூசிச் செங்கழுநீர்ப்பூவைச் சூட்டி, “பரத்தை உன்னை நோக்கி ஏதேனும் இகழ்ந்து கூறினும், நீ தலைவனைக் காணாது வாராதே” (திணைமாலை. 144) என்று தலைவன் தங்கியிருந்த பரத்தைமனையை நோக்கித் தோழி அவளை அனுப்புதல்.

இது பரத்தையிற் பிரிவு என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரும் ஊடல்.(ந.அ. 205; இ.வி. 554)

‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -

{Entry: H08__216}

தலைவி பூப்புற்ற நாள் தோழி சேடிஒருத்திக்குச் சிவப்பு ஆடை அணிகள் அணிவித்துப் பரத்தையர்சேரிக்கு அவளை அனுப்பிய போது, அதுகண்ட அயலார் தலைவிபால் இரக்கங்காட்டிக் கூறுதல்.

“சங்கினின்று தோன்றிய துளையிடாத முத்துப் போன்ற மேதக்க குலமாகிய ஓடையில் தோன்றிய பூ வீணாக அலர் தொடுப்பவர்க்கு எவ்வாறு வந்து எய்தியதோ?’ (தஞ்சை. கோ. 382) என்பது போன்ற கூற்று.

இது கற்பியலுள் பரத்தையிற் பிரிவு என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

“செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -

{Entry: H08__217}

பூப்பெய்திய தலைவி தோழியிடம் செவ்வணி செவ்வாடை செம்பூ இவற்றால் ஒப்பனை செய்து சேடியொருத்தியைத் தலைவனிடம் அனுப்புமாறு கூறுதல்.

தலைவி பூப்பெய்திய பின் அச்செய்தியைப் பரத்தை இல்லத்திருக்கும் தலைவற்கு அறிவிக்கக் கைக்கொள்ளப் பட்ட முறை செவ்வணி அணிவித்துச் சேடியை அனுப்புவது ஆதலின், அதனைச் செய்யுமாறு தலைவி தோழியிடம் கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரும் ஊடல். (இ. வி. 554 உரை)

செவ்வணி கண்ட வாயிலார் கூறல் -

{Entry: H08__218}

கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரிந்த தலைவன் பரத்தை யொருத்தியின் இல்லத்து இருந்தானாக, தலைவி தன் இல்லத்தில் பூப்பெய்திய செய்தியைத் தெரிவித்து வருமாறு தோழி விடுத்த செவ்வணி அணிந்த சேடியொருத்தி தலைவனது இருப்பிடம் நோக்கிச் செல்வதனைக் கண்டு. “நம் தலைவனுக்கு உலகியலை. எடுத்துக் கூறவேண்டிச் செம்மல ரும் செஞ்சாந்தும் செம்பட்டும் நம் இல்லின்கண் வந்து தோன்றின” எனப் பரத்தையின் வாயிலவர் தம்மிடையே கூறிக் கொள்ளுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (கோவை. 361)

செவ்வணி விடுக்க இல்லோர் கூறல் -

{Entry: H08__219}

தலைவன் பரத்தையிற் பிரிவில் தலைவியைப் பிரிந்து பரத்தைஇல்லின்கண் இருந்தானாக, “அவனிடம் தலைவி பூப்பெய்திய செய்தியை அறிவிப்பதற்காகச் செங்கோலம் பூண்ட சேடியை விடுக்கும் நிலை ஏற்பட்டமை நமக்கு இளி- வரவைத் தருகிறது” என்று அகம்புகு மரபின் வாயிலர் தம்முள் பேசிக் கொள்வது.

இது பரத்தையிற் பிரிவு என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 359)

செவ்வி செப்பல் (1) -

{Entry: H08__220}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தன்னைச் சந்தித்த தலைவனது மனநிலையை அறிந்து தலைவியிருக்குமிடம் சென்று கண்டு மீண்ட பாங்கன் தலைவன் அமைதியுறுமாறு தலைவியின் உறுப்பு நலன்களை எடுத்துக் கூறல்.

இது ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று.

(கோவை. 35)

செவ்வி செப்பல் (2) -

{Entry: H08__221}

தலைவி காண்டற்கு எளியளாயிருப்பதைத் தலைவனுக்குப் பாங்கன் கூறல். முதல் இருநாள் கூட்டத்தின்பின் தலைவன் தன் நிலையைப் பாங்கற்குக் கூறித் தலைவியிருப்பிடம் கண்டு வருமாறு அவனை விடுப்பவே, சென்று கண்டு மீண்ட அவன், முத்துவளையல் அணிந்த தலைவி, ஒரு கொடி மேல் இரு மேருமலை இருப்பது போல மெல்லிடைமேல் பருத்த நகில்கள் இருக்க நடந்து வரலுற்றதைத் தான் நோக்கியிருந்த செய்தியைத் தலைவனுக்குக் கூறுதல். (திருப்பதிக். 74)

இது ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ம h. அக. 28)

செவ்வியிலள் என்று மறுத்தல் -

{Entry: H08__222}

தலைவன் கையுறையொடு தோழியை அடைந்து நிற்கத் தோழி, “தலைவியின் இசைவு பெறாது யான் இதனைப் பெறு தல் கூடாது. இன்று தலைவி மனநிலை ஏற்ப இலது. அவளிடம் எப்படிச் சென்று உன் செய்தியைக் கூறுவது?” என்று கூறி, அவன் கொணர்ந்த கையுறையை ஏற்க மறுத்தல்.

இதனைப் ‘பாங்கி செவ்வி அருமை செப்பல்’ என்றும் கூறுப.

(ந. அ. 146, இ. வி. 509).

இது திருக்கோவையாருள் ‘சேட்படை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 97)

செவிலி -

{Entry: H08__223}

தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி பற்றிய செய்திகள் காண்க.

செவிலி, அறிவர் உபதேசமொழி -

{Entry: H08__224}

நல்லவை உணர்த்தலும் அல்லவை கடிதலும் ஆகிய மொழிகள்.

“கொழுநனை அன்றிப் பிறதெய்வம் தொழாளாய் அவனைத் தொழுதுகொண்டே துயிலெழும் கற்புடை நங்கை ‘பெய்’ என்று ஆணையிடின் மேகம் பெயல் பொழியும்” (குறள். 55) போல்வன நல்லவை யுணர்த்தல்.

“தன் கணவனிடத்துநின்று நீங்கி ஒழுகுதல், தான் பிறர் மனைக்கண் வைகுதல், பெண்மை அழிந்த தீய பெண்டிரைச் சார்தல், அணிகலன்களை அணிந்துகொண்டு தனித்து வேற்றூரில் புகுதல், அங்கு விழாக்களைக் காண்டல், கொண் டான் இசைவு பெறாது நோன்பு மேற்கோடல் என்னும் இவை பெண்ணினது கற்பு அழிதற்குக் காரணமாவன” (அறநெறி. 94) என்றல் போல்வன அல்லவை கடிதலாம். (தொ. பொ. 154 நச்.)

செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -

{Entry: H08__225}

வேலன் கூறியவாறே வெறியாட்டு நிகழ்த்திய பின்னும் தலைவிக்கு வருத்தம் மிகுதலின், தலைவியின் உடல்நிலை கண்டஞ்சிய செவிலி, தோழி முதலியவரை வினவுதல் (தொ. பொ. 115 நச்.)

“என்மகள் வேங்கைமரங்கள் நிற்கும் தினைப்புனத்தே கிளி யோட்டிக் காவல் செய்தலையும் நீக்கினாள்; தன் காந்தள் முகை போன்ற விரல்களால் கண்ணி தொடுத்தலையும் விடுத்தான். இடையில் தழையானவையைப் புனைதலையும் நீக்கினான். அவன் துயரம்தான் யாதோ?’ என்ற செவிலி கூற்று.

செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றுதல் -

{Entry: H08__226}

தலைவியது உடன்போக்கினை அறிந்து துயருற்று ஆற்றாமல் புலம்பிய நற்றாயைச் செவிலி ஆற்றுவித்தல்.

“நான் இன்றே சென்று நம் பேதைமகளை மீள அழைத்து வருவேன், வருந்தற்க” (தஞ்சை. கோ. 340) என்பது போன்ற செலிவி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘நாடத் துணிதல்’ (234) என்னும்.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -

{Entry: H08__227}

தலைவனும் தலைவியும் தோன்றிய இருவகைக் குடியும் எல்லாப் பொருத்தங்களும் உடையன என்பது அறிந்து செவிலி கூறுதல்.

“அத்தலைமகன்தானும், தினைப்புனம் காக்கும் பரணிடத்து எழும் அகிற்புகையை உண்டு இயங்கும் மதியம் மலையிடத்து அணையுமாயின், அதனைத் தேனின் இறால் எனக் கருதிக் கண்ஏணியைக் குறவர் உண்டாக்கியிருக்கும் கானக நாடன் மகன் ஆவான்” என வரும் (‘காமர் கடும்புனல்’ (கலி.39) பாடற் பகுதி, செவிலி இருபால் குடிப்பொருளைக் கூறி அறத்தொடு நின்றமையைத் தோழி கொண்டெடுத்து மொழிந்தது.

(தொ.பொ . 115. நச்.)

செவிலி எயிற்றியொடு வினாதல் -

{Entry: H08__228}

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு சுரத்திடை வந்த செவிலி, பாலைநிலத்துப் பெண்ணொருத் தியை வினவல்.

“எயிற்றியே! கொடி போன்ற மெல்லிய என்மகள் பெதும் பைப் பருவத்தினள்; பழக்கம் அறியாத இப்பாலைவழியில் அயலான் ஒருவனுடன் வந்துவிட்டாள்; நீ அவளைக் கண்டாயோ?” (கோவை. 239) என்பது போன்ற செவிலி வினா.

இதனை ‘வேட்டமாதரைக் கேட்டல்’ என்னும் திருக் கோவையார்.

வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

செவிலிக்கு உரிய கூற்று -

{Entry: H08__229}

மூன்று காலத்தும் தத்தம் குலத்திற்கு ஏற்கும்படியாகக் கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும், காம இன்பத்துள் கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும் செவிலிக்கு உரியன. (தொ. பொ. 153.)

செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

{Entry: H08__230}

கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினாலும் கழங்கினாலும் தெய்வத்திற்கு வெறியாட்டு நடத்தச் சொல்ல, அவ்விடத்துச் செவிலி கூறுதல்.

“நிகழ்ந்தமை அறியாமையானே, ‘இது முருகனான் விளைந் தது’ என்று வெறியாட்டு அயர்வித்து மயங்கி நம் அன்னை யும் நீங்காத் துயர் உழந்தாள். ஆதலின், மலைநாடனாம் தலைவன் பிரிந்தமையான் வந்துற்ற இந்நோயை அன்னை அறியாதுவிடுதல் கொடிது” (ஐங். 242) என்ற தோழி கூற்றில், வெறி என அன்னை மயங்கினமை கூறப்பட்டது.

“வேலன், வெறியாடலை மேற்கொண்டு ‘இவள் உற்ற நோயைக் கழங்கினான் அறிந்து கூறுவேன்’ என்றான்”. (ஐங். 248) என்ற தோழி கூற்றில், வேலன் கழங்கு பார்த்தமை கூறப்பட்டது. (தொ.பொ. 115 நச்.)

செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -

{Entry: H08__231}

செவிலி, தலைவனொடு தலைவி இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்று அக்காட்சி கண்டு மகிழ்ந்து மீண்டவள், நற்றாயிடம் களிகூரக் கூறுதல்.

“கானங்கோழிச் சேவலது புள்ளிபட்ட கழுத்தில் மழைநீர் துளிப்ப, புதல்களில் நீர் பெருகும் பூக்கள் மணம் கமழும் முல்லைநிலத்துச் சிற்றூரில் நின்மகள் உள்ளாள்; அவள் தலைவன் வேந்தன் பணிமேற்கொண்டு வேற்றூர் செல்வா னாயினும், அவன்தேர் இரவில் அவ்வூரில் தங்கி வருதல் அறியாது” (குறுந். 242)

“குட்டி நடுவே கிடக்க இருபக்கத்தும் படுக்கும் மானும் பிணையும் போல, புதல்வன் நடுவே படுப்ப, அவன் இருமருங்கும் தாயும் தந்தையுமாகிய அவர்கள் கிடக்கும் படுக்கைக் காட்சி இப்புவியிலும் விண்ணிலும் பெறுதற் கரியது” (ஐங். 401) போன்ற கூற்றுக்கள். (தொ. பொ. 153 நச்.)

செவிலி, களவு அலராதற்கண் கூறுதல் -

{Entry: H08__232}

ஊரவர், தலைவி களவில் தலைவனொடு தொடர்புடையவள் என்று கூறும் பழிச்சொற்களைக் கேட்டுச் செவிலி கூறுதல்; செவிலி கூறியதாகத் தலைவி கூறுதலும் அடங்கும்.

“கொல்லிப்பாவை போன்ற என் மெல்லியல் குறுமகள் தலைமகனது பெயரினைப் புகழ்ந்து பாடி உலக்கைகொண்டு ஓச்சிக் குறுவாளாயின், அவ்வள்ளைப் பாட்டுக் கேட்டு அயலாராம் ஏதில் மாக்கள் பழி கூறுதலும் செய்வர். இவ்வூர் மக்கள் சொற்கு இப்பேதை மனம் அழிதல் எற்றுக்கு?”
(குறுந். 89)

“தோழி! வாழி! இது கேள். நேற்று, ஊரார் ஆகிய ஏதில் மாக்கள் என்னைத் துறைவனுக்குப் பெண்டு என மொழிய, அதுகேட்டுத் தாய் (-செவிலி) என்னை ‘அன்னாய்’! (இவ் வூரார் சொல் கேட்டாயோ?)’ என்று வினவ, யானும் மெல்ல மெல்ல ‘அஃது எனக்கு வெம்மை (விருப்பம் என்பது பிறிதொருபொருள்)’ என்றேன்” (தொ. பொ. 115 நச்.)

செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -

{Entry: H08__233}

தலைவி தோழியிடம், “செவிலித்தாய் இரவில் தலைவன் வந்ததைக் கண்டுவிட்டாள்போலும்” எனக் கூறுதல்.

“தோழி! நேற்றிரவு மாதவிக்கொடி அருகில் தலைவன். இரவுக் குறிக்கண் வந்து நின்றானாக, அவனைக் கண்டு பேய் என்று தான் அஞ்சியதாகச் செவிலி இன்று காலை நம் இல்லத்து முகப்பில் என்னிடம் கூறினாள்” (அம்பிகா. 345) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 176)

செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -

{Entry: H08__234}

காதல் மிகுதியால் தலைவி உறக்கத்தில் கனவு கண்டு தலைவனைக் குறித்து வாய்விட்டு உரைத்தற்கண் செவிலி தோழியை வினவுதல். (தொ. பொ. 113 இள.)

தலைவி தோழிக்கு உரைப்பதாக வரும் (குறுந்தொகை 161 ஆம்) பாடற்கண், “தாய் புதல்வனைப் புல்லியவாறே, என்னை ‘அன்னையே!’ என்று விளித்தாள்” என்னும் பகுதியில், தலைவி கனவின்கண் அரற்றியமையான் தாய் அவளை விளித்தமை புலனாம்.

செவிலிக்குத் தலைவியிடத்து அன்பு மிகுதலான் தான் உறங்கும்போதும் நடுத்துயிலில் யாதானும் கூறி அரற்றுதல். (115 நச்.)

குறுந் 161 ஆம் பாடலில் ‘புதல்வற் புல்லி அன்னாய்’ என்னும் தொடருள், செவிலி துயிலிடையே அவளை “அன்னையே!” என்று விளித்தமை போதரும். (நச்.)

செவிலி, காமம் மெய்ப்பட்டவழிக் கூறல் -

{Entry: H08__235}

தலைவி கரந்தொழுகும் காமத்தான், அக்களவினை நன்றாயும் தீதாயும் உடம்பின்கண் வெளிப்படுத்தவிடத்துச் செவிலி கூறுதல்.

“பளிங்கு மணிகள் கோக்கப்பட்டவற்றின் ஊடே திகழும் நூல்போல இம்மடந்தையது புணர்ச்சியால் உண்டான அழகின்கண் விளங்குவதொரு குறிப்புண்டு. (குறள் 1273)” என்ற செவிலி கூற்று.

இது தலைவி மறைத்து வைத்துள்ள காமம், தானே, அக்களவு ஒழுக்கத்தை அவளது உடல்அமைப்பின் மூலம் வெளிப் படுத்துகின்றமையை அறிந்து செவிலி கூறியவாறு. (தொ. பொ. 115 நச்.)

செவிலி குராவொடு புலம்பல் -

{Entry: H08__236}

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு சுரத்திடை வந்த செவிலி, குராமரத்தொடு பேசுவது போல் தலைவியை நினைந்து புலம்பல்.

“உயர்ந்த குராமரமே! என் மகள் நின்கண் முன்னே இக் கொடிய பாலை நிலத்தில் தடுமாறிச் செல்லவும் அதனைப் பார்த்திருந்துவைத்தும் நீ வாய் திறவாமல் இருந்துவிட்டாய். நீயும் நின் பாவை போன்ற மலர்களும் வாழ்க!” (கோவை. 241) என்பது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

செவிலி கூற்று -

{Entry: H08__237}

மூன்று காலத்துக்கும் தத்தம் குலத்துக்குத் தகும்படியாகக் கற்பு, காமம், நற்பால் ஒழுக்கம், பொறை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்புதல் முதலிய நல்லவற்றைத் தலைவிக் குக் கற்பித்தலும், காமம் நுகர்ந்த இன்பமாகிய கற்பிற்கு ஏலாத தீயவற்றை நீக்குதலும் செவிலித்தாய்க்கு உரிய கூற்றுக்களாக நிகழும். (தொ. பொ. 153 நச்.)

“செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -

{Entry: H08__238}

“தோழி! கள்ளினை யுண்ணும் இளைஞரையுடைய இம்மூதூர் விழாக்காலம் இதுபோது இல்லையாயினும் துயிலாதாகும். வளவிய ஆவண வீதிகள் உட்பட எல்லாம் துயிலுமாயினும்; கொடிய சொற்களால் நம்மைக் கடியப் பேசும் அன்னை துயிலாள்; நம்மைப் பிணித்துக் கொள்ளும் அருஞ்சிறை யாகிய இவ்விற்செறிப்புச் செய்துள்ள அன்னை துயிலினும் துயிலாத கண்ணராய் ஊர்க்காவலர் கடுகுவர்; அவ்விளைஞர் துயிலினும் துயிலாத நாய் குரையாநிற்கும்; அது குரையா விடினும் நிலவு ஒளி வீச எழும்; பேய் வழங்குயாமத்தே கோட்டான் உள்ளம் அஞ்சக் குழறும்; அதன் குரல் மடியும் நேரத்தே கோழி குரலியம்பும். இவையெல்லாம் இன்றியிருந்த ஒருநாள் வாய்க்குமாயினும் அன்று இரவுக்குறிக்கண் தலைவர் எதிர்ப்படார். ஆதலின் தோழி நம் களவு பல முட்டுப்பாடுகளையுடையது (அகநா. 122) என்ற தலைவி கூற்றில் தாய் துஞ்சாமை வந்துள்ளது.

செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -

{Entry: H08__239}

செவிலி தலைமகளுடைய செயலிலும் உடம்பிலும் கண்ட புதிய வேறுபாடுகளைக் கொண்டு, தோழியைக் காரணம் வினவுதல்.

“என் பேதையின் கொங்கை பசலை பூத்தன. ஏதோ நினைந்து அவள் கலங்குகிறாள்; பாலையும் வெறுக்கிறாள். யாது காரணமோ அறியேன். நினக்கு ஏதேனும் தெரியுமோ?” என்பது போன்ற செவிலி வினா (தஞ்சை. கோ. 297)

இது வரைவியலுள் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொ குதிக்கண் ‘பாங்கி அறத்தொடு நிற்றல்’ என்னும் பகுதியில் நிகழ்வதொரு கூற்று. (ந. அ. 177)

செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -

{Entry: H08__240}

நெடிய சுரவழியில் அவனோடு உடன்போக்கிற் சென்ற முத்துப் போன்ற வெண்பற்களையும் முகிழ்க்கும் நகையையும் உடைய மடவரலுக்குத் தாய் என்னுமாறு வல்லவாறு எடுத்து வளர்த்தேன். அவள் தோழியர்கூட்டத்தார் அவளை அவ னுக்குக் கொடுத்துவிட்டனர்!” (ஐங். 380) என்பது போன்ற கூற்று. (தொ. பொ. 42 நச்.)

இதனை நம்பி அகப்பொருள் ‘இனையல் என்பார்க்கு எதிரது மொழிதல்’ என்னும் கூற்றுப்பாற் படுத்தும். (184)

செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -

{Entry: H08__241}

களவுக் காலத்தில் தலைவன் சின்னாள் தலைவியைப் பகற்குறி இரவுக்குறிகளில் சந்தியாமல் விடுத்ததால் தலைவி உள்ளத்து நோய் மிக்கு உணவு உண்பதில் வெறுப்புக் காட்டியவழி, அவள் உசாத்துணையாகி அசாத் தணித்தற்குரிய காதல் மருவிய துணையாகிய தோழியைச் செவிலி தலைவியின் உடல் நலக்குறைக்குரிய காரணம் பற்றி வினவியது.

இது ‘வினவிய செவிலிக்குத் தோழி மறைத்தமை விளம்பல்’ என்ற, ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண்ணுள்ள கூற்றுள் அடங்கும். (ந. அ. 166)

செவிலி தலைவிக்கு அறிவுறுத்தல் -

{Entry: H08__242}

தலைவற்குக் காமம் தோன்றுமாறு கண்ணுக்கு இனிய வகையில் தூய்மையாக இருத்தலையும், கற்புக்கு ஏற்பத் தலைவி தலைவன் விரும்பிய வகையில் செயற்படுதலையும், ஒழுக்கத்திற்கு ஏற்பத் தவறுகளுக்கு அஞ்சி ஒழுகுதலையும், இல்லறத்திற்கு ஏற்பச் சுற்றம் தழுவுதலையும், அல்லவை கடிதலுக்கு ஏற்ப ஊடலை விரைவில் போக்கிக் கொள் ளுதலையும் கடப்பாடாகக் கொள்ளுமாறு செவிலி தலை விக்கு அறிவுறுத்தல் (நாலடி. 384) (தொ. பொ. 153 நச்.)

செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -

{Entry: H08__243}

“தலைவிக்கு இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று?” என்றாற் போலச் செவிலி தோழியை வினவுதல்.

“மகளே! இன்று இரவில், ‘நீண்ட வேலை ஏந்தியவனே! உனக்கும் எமக்கும் என்ன உறவுண்டு? என்னைத் தீண்டாதே’ எனவும், ‘வேங்கையும் காந்தளும் சேர்த்துத் தொடுத்த இக்குறுங்கண்ணியை யாம் அணியமாட்டோம்’ எனவும் இவள் அரற்றுகிறாள். இவள் உடலோ குவளையின் மணமும் தேன்மணமும் கமழ்கிறது. இவள் இன்று பகலில் நின்னுடன் எவ்விடத்தே விளையாடினாள் என்பதைச் சொல்” என்று செவிலி தோழியை வினவுதல். (தொ. பொ. 115 நச்.)

செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -

{Entry: H08__244}

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரத்திடைச் சென்ற செவிலி, மீண்டு வந்து நற்றாயிடம் தலைவி மிகுந்த தொலைவு சென்றுவிட்ட செய்தியைக் கூறல்.

“அன்னையே! நான் தலைவியைத் தேடாத இடம் இல்லை. தலைவன் அவளைத் தன் ஊரிலுள்ள செல்வமனைக்கு இன்றே கொண்டு சென்றுவிட்டான்” (அம்பிகா. 409) என்பது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலுள் ‘மீட்சி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 191)

செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -

{Entry: H08__245}

“தலைவ! நீ வரும் வழியின் ஏதத்தைச் சிறிதும் எண்ணாது இரவில் வந்து இவள் மார்பினைப் புல்லிச் செல்ல, நின்மணம் இவள் உடலிலும் பொருந்தியதால் இவள் தோளைச் சேர்ந்து வண்டுகள் பலவாக மொய்க்க, அதனை நோக்கிய அன்னை ‘மகளே! முன்பு இவ்வாறோ இருந்தனை!’ என்று வினவவே, தலைவி அதற்கு விடை கூற இயலாது என்முகம் நோக்க, யான் அன்னைக்கு உண்மை கூற முடியாத நிலையில், அடுத்து எரிந்துகொண்டிருந்த சந்தனக்கட்டையைக் காட்டி இதனிடத்திருந்த வண்டுகள் இதனை விடுத்துப் புறப்பட்டு வழியிடை இவளைக் கண்ட அளவில் இவள்மீது மொய்க்கத் தொடங்கின’ என்று ஒருவாறு சமாதானம் கூறிவிட்டேன்” என்ற தோழி கூற்றில் (நற். 55) செவிலி வினவியதை அவள் கொண்டுகூறியமை காணப்படும். (தொ. பொ. 115 நச்.)

செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -

{Entry: H08__246}

களவுக் காலத்துச் சின்னாள் தலைவனைக் காணாத துயரத் தால் தலைவியின் உடல் வாட்டம் கண்ட செவிலி அவள் வேறுபாடு குறித்துத் தோழியை வினாவியது.

இது வரைவு கடாவுதல்’ என்ற களவிற்கு உரிய தொகுதியின் கண்ணதாகிய ‘வினவிய செவிலிக்குத் தோழி மறைத்தமை விளம்பல்’ என்ற கூற்றின்கண் அடங்கும். (ந. அ. 166)

செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -

{Entry: H08__247}

களவுக் காலத்துத் தலைவன் ஒருவழித் தணத்தலின், சின்னாள் அவனைக் காணாக் கடுந்துயரால் தலைவி உளம் மெலிந்து துயிலின்றி இருத்தலைக் கண்ட செவிலி அவளுக்கு ஏற்பட்ட வேறுபாடு குறித்துத் தோழியை வினாயது.

இது ‘வினவிய செவிலிக்குத் தோழி மறைத்தமை விளம்பல்’ என்ற, ‘வரைவு கடாவுதல்’ தொகுதிக்கண்ணதாகிய கூற்றின் கண் அடங்கும். (ந. அ. 166)

செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -

{Entry: H08__248}

மணமனை சென்றுவந்த செவிலி நற்றாயிடம் தலைவியின் இல்லற வாழ்க்கையைப் புகழ்ந்துரைத்தல்

“நம் தலைவி இல்லம் நம் இல்லம் போன்றுள்ளது; அவள் நின்னை ஒக்கும்; தலைவன் நின் கணவனை ஒக்கும்; தோழி என்னை ஒத்துக் காணப்படுகிறாள்; தலைவியது அயல்மனை யவர் நம் அயல்மனையாரை ஒத்தே இனியராயுளர்” (கோவை. 302) என்றாற்போன்ற செவிலி கூற்று.

இதனை, ‘வாழ்க்கை நலம் கூறல்’ என்னும் திருக்கோவையார். இது கற்பியலுள் ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 203)

செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் -

{Entry: H08__249}

தலைவி தலைவனுடன் போய்விட்ட செய்தியை அறிந்த செவிலி தன் அறியாமையை நினைந்து நொந்து புலம்புதல்.

“என் கண்மணி போன்றவள் என்னைத் தழுவிக்கொண்டு முத்தம் கொடுத்தது, தான் தன் காதலனுடன் செல்லப் போவதைக் குறிப்பால் காட்டிய செய்கையென அறிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே!” (கோவை. 227) என்பது போன்ற செவிலியின் கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 184)

செவிலி தெய்வம் வாழ்த்தல் -

{Entry: H08__250}

தலைவனுடன் தலைவி சென்றுவிட்டமை அறிந்து புலம்பிய செவிலி தெய்வத்தை வாழ்த்துதல்.

“அருள்மிக்க தெய்வமே! என் அருமை மகள் பாலை வழியில் நடந்து வெம்மையால் துயருறாமல், என்னிடமே மீண்டும் அவளை வரச்செய்க” (தஞ்சை. 327) என்பது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 184)

செவிலி தெய்வம் வாழ்த்தியவழிக் கூறல் -

{Entry: H08__251}

தோழி அறத்தொடு நின்றவழி, அதனை நற்றாய்க்குக் கூற அஞ்சிய செவிலி, “இச்செயல் நன்றாக வேண்டும்” என்று தெய்வத்தை வேண்டல்.

அகநா. 282-இல் “செவிலி தெய்வம் பராயினாள்” எனத் தோழி பொதுப்படக் குறிப்பாற் கூறி, “யாம் அத்தெய்வத் திற்குப் பலி கொடுப்போம்” என்று வெளிப்பட மொழிந்த வாறு. தலைவனுடைய தோள்களைப் பாராட்டி, “அவனே (என் மகட்கு வாய்க்க வேண்டும்)” என்னும் செவிலிகூற்றாகத் தோழி கொண்டுகூறியதன்கண் செவிலி தெய்வத்தைப் பரவியமை குறிப்பாற் போந்தது. (தொ. பொ.115 நச்.)

செவிலி தேடல் -

{Entry: H08__252}

தலைவனையும் தலைவியையும் உடன்போக்கிற்கு அனுப்பி விட்டுப் பிரிவாற்றாமல் கலங்கி நிற்கும் தோழியைச் செவிலி, “தலைவி யாண்டு உள்ளாள்? நீ ஏன் மனம் மயங்குற்றுக் காணப்படுகிறாய்?” (கோவை. 224) என்றாற்போல வினவுதல்.

இதனைச் ‘செவிலி பாங்கியை வினாதல்’ என்றும் கூறுவர். ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’க்கண்ணது இக்கூற்று.

(இ. வி. 538 உரை)

இஃது ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (கோவை. 224)

செவிலி, தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் -

{Entry: H08__253}

தலைவி தலைவனுடன் போய்விட்டாள் என்ற செய்தியைத் தோழி வாயிலாக அறிந்த செவிலி துயருற்றபோது தனக்கு ஆறுதல் கூறியவர்களிடம் தான் துயருற்றுக் கூறுதல்.

‘என் கண்ணிற்குள் பொத்தி வைத்துக் காப்பாற்றிய என் அருமை மகள் என்னைவிட்டுப் பிரிந்து செல்லவோ அவளை நான் அத்துணை அன்புடன் வளர்த்தேன்?” (தஞ்சை. 324) என்றாற் போன்ற செவிலியது கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 184)

செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் -

{Entry: H08__254}

உடன்போக்கு நிகழ்ந்தபின் செவிலி நற்றாயிடம் நடந்ததை நடந்தவாறே கூறுதல்.

“பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த நம் அனை வரையும் விடத் தன் நலமுண்டு களித்த நாயகனே பெரியவன் எனக்கொண்டு நம் மகள் அவனுடன் சென்றனள்” (தஞ்சை. 325)

“நம் குடும்பத்துக்குப் பழிச்சொல் வரல் வேண்டும் என்று விதித்த விதியை மாற்றுவார் உலகில் எங்கும் இல்லை. தன்னை நீரினின்று காத்த தலைவனை விடுத்துத் தன்னை நாம் பிறர்க்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்வது கண்டு நம் குலக்கொடி தன் தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிட் டாள்” (அம்பிகா. 390) என்பது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 185)

செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -

{Entry: H08__255}

செவிலி நற்றாயிடம் வெளிப்படையாகவே தலைவிக்குத் தலைவன் ஒருவனுடன் புணர்ச்சி நேர்ந்ததைக் கூறுதல்.

“மாதரசி! நம் மகளை அவள் புனம் காக்கும்போது, தான் எய்த அம்புடன் ஒரு கலைமான் அவ்வழியே வந்ததுண்டோ என வினவி வந்த தலைமகன் ஒருவன் தழுவினான்” (தஞ்சை. 304) என்பது போன்ற செவிலியின் கூற்று.

இது வரைவியலுள் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக் கண்ணது ஒரு கூற்று. (ந. அ. 178)

செவிலி பழிக்கு இரங்கியது -

{Entry: H08__256}

இது தலைவனுடைய பிரிவினை ஆற்றாது வருந்தும் தலைவி பற்றி ஊராரால் தூற்றப்படும் பழிக்கு அஞ்சிச் செவிலி துயர் உறுதல் என்னும் கிளவி.

தலைவனுடைய பிரிவாற்றாது துடிக்கும் என் பேதைப் பெண்ணினது துயர்தீரப் ‘பெண்கள் தம் நிறையைப் பாதுகாத்துக் கொள்ளல் இயலுமா?’ என்று அறைகூவுதல் போலக் கார்மேகங்கள் இடித்து முழங்கும் இம்மாரிக் காலத்திலும், பெருமான் தம் தண்துழாய் மாலை தாராது இருப்பதனால் ஊரார் என்மகளைப் பற்றிப் பழிதூற்றும் நிலை ஏற்பட்டு விடுமே? என்று தன் மகள்நிலை கருதித் தாய் இரங்குகிறாள்.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. பாடல். 19)

செவிலி பாங்கியை வினாதல் -

{Entry: H08__257}

உடன்போக்கு நிகழ்ந்தபின் தலைவியைக் காணாத செவிலி தோழியை வினவுதல்.

“மகளே! நீயும் மற்ற ஆயமும், நானும் நற்றாயும், மனையும் மலர்ச் சோலையும், கிளி போன்ற பறவைகளும் தேம்பி அழச் செய்துவிட்டு, நின் தலைவி தனியே எங்குச் சென்றாள்? அதனை என்னிடம் ஒளிக்காமல் உரை” (தஞ்சை. கோ. 323) என்பது போன்ற செவிலியது கூற்று.

திருக்கோவையார் இதனைச் ‘செவிலி தேடல்’ என்னும் (224). இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 184)

செவிலி, பிரிவின் எச்சத்துக் கூறல் -

{Entry: H08__258}

தலைவி உடன்போயவழிச் செவிலி தான் பின்தொடர்ந்து செல்லாது மனைக்கண் தங்கியிருந்து கூறுதல்.

“நம் காதலள் ஆகிய பேதை, மிக்க அவலத்தோடே உயிர் போமாறு நம் தளர்ந்து பாழ்படு நெஞ்சம் தன்னையே நினைத்தலால் கலங்கி வருந்த, நாடிடையிட்ட மலையிடைக் கிடக்கும் காடுகளைக் கடந்து தலைவனோடு உடன்போயி னாள்; நின் மகள் விருப்பு என்னை மிகவருத்துவது”. (ஐங். 313) எனச் செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது செவிலி மேலதாயிற்று.

‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84)

என்ற பாடல் செவிலி தன் அறியாமைக்கு வருந்திக் கூறிய தாகும். (தொ.பொ. 115 நச்.)

செவிலி புகழ்தல் -

{Entry: H08__259}

செவிலி ஒருநாள் தலைவிக்கு அலங்காரம் செய்து அவள் வனப்பினைக் கண்ணுற்று மகிழ்ந்து, அவளை மணக்கும் நல்வாய்ப்புப் பெறும் தலைவன் பெரும்பேறு வாய்த்தவன் என்றாற்போலப் புகழ்ந்து கூறுதல்.

இஃது ‘அறத்தொடு நிலை’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. 22)

செவிலி புகழத் தோழி உணர்த்தல் -

{Entry: H08__260}

செவிலி தலைவியின் அழகைப் புகழ்ந்தபோது தோழி உணர்த்துவது.

களவுப் புணர்ச்சியில் தலைவனோடு இன்புற்று வரும் தலைவிக்குச் செவிலி ஒருநாள் அலங்காரம் செய்து அவள ழகு கண்டு பெருமிதம் கொண்டு, “என் மகளை மணந்து கொள்ளும் பேறுடைய ஆடவன் யாரோ?” என்று கூறியவழித் தோழி, “தலைவி தன்மயிர் முடியப்படாத பேதைப் பருவத்தே ‘நின்னை வயது வந்தவுடன் யானே மணப்பல்’ என்று கூறி அவள் நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென் றான் தலைமகனொருவன் உள்ளான்” என்றல் போலக் கூறிச் செவிலிக்கு அறத்தொரு நிற்றல்.

இது கற்பினைச் சார்ந்த ‘அறத்தொடு நிலை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 22)

செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -

{Entry: H08__261}

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரத்திடை வந்துள்ள செவிலி தன்மகளைக் காணாமல் கவலைப்பட்டு வருந்துதல்.

“சேய்மையில் வருவார் இருவரை என்மகளும் அவள் துணை வனும் என்று நினைத்தேன். அண்மையில் வந்தபின்னரே அவர்கள் வேறானவர் என உணரலுற்றேன். இனி, மனமும் கால்களும் ஓரடியும் மேற்செல்ல மறுக்கின்றன. கவலையால் யான் எதுவும் செயற்பட முடியாதிருக்கின்றேன்” (அம்பிகா. 407) என்பது போன்ற செவிலி கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 188)

செவிலி புறவொடு புலம்பல் -

{Entry: H08__262}

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி பாலையில் புறா ஒன்றனைக் கண்டு அதனொடு வருந்திக் கூறல்.

“புறவே! என்மகள் அயலான்ஒருவன் சொற்களையே துணை யாக் கொண்டு கொடிய காட்டிடைச் செல்பவளை நோக்கி, இஃதுனக்கு ஏற்புடைத்தன்று என்று நீ கூறினா யல்லை. நீ வாழி!” (கோவை. 246) என்றாற்போல வரும் செவிலியது கூற்று.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று. (இ. வி. 538 உரை)

செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -

{Entry: H08__263}

தலைவி உடன்போனது அறிந்தவழிச் செவிலி தானும் தோழியொடு கூடித் தலைவியது கற்பு மிகுதியே கருதி உவந்த மகிழ்வொடு கூறுதல்.

“வெள்வேல் விடலையாம் தலைமகனொடு தொகுவளை முன்கையுடையளாகிய என் மடந்தை கொண்ட நட்பு, பறைகள் முழங்க, சங்குகள் ஆர்ப்ப, நாலூர்க் கோசரது ஒன்று பட்ட வாய்மொழி போல நிலைபெற்ற உண்மையாயிற்று” (குறுந். 15) என்ற செவிலியது கூற்று.

“உடன்போய் எம் பெருந்தோட் குறுமகளை வரைந்து கொண்ட விடலை அவளை முற்பட எம் இல்லத்துக்கு அழைத்து வருவானோ? அன்றி, தன் இல்லத்திற்கு இட்டுச் செல்வானோ? அவன் கருத்து யாதோ, அறிகிலேன்” (அகநா. 195) எனத் தலைவியது கற்பின் ஆக்கத்தின்கண் செவிலி கருத்து நிகழ்ந்தவாறு. (தொ. பொ. 115 நச்.)

செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -

{Entry: H08__264}

உடன்போக்கிற்குத் தலைவி மனம் துணிந்து சென்றமையால் தலைவிக்குத் தன்மேல் அன்பு நீங்கியது என அறிந்து செவிலி கூறல்.

‘செவிலி பிரிவின் எச்சத்து.... கூறுதல்’ காண்க.

‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84)

என்ற பாடலாகிய வெடுத்துக்காட்டே ஈண்டும் அமையும்.

(தொ. பொ. 115 நச்.)

செவிலியது சேறல் -

{Entry: H08__265}

இரவுக் குறிக்கண் செவிலி எதிர்பாரா வகையால் குறியிடத்து வந்து தலைவன்தலைவியாகிய இருவர்தமது களவொழுக்கம் பற்றி அறிந்தாளாகத் தோழி கூறுதல். இது ‘தாய் அறி வுணர்த்தல்’ (ந. அ. 166) என்ற வரைவு கடாய கூற்றாகவும் கொள்ளப்படும். (குறிஞ்சி நடையியல்) (வீ.சோ. 92. உரைமேற்.)

செவிலி வரவின்கண் கண்டோர் கூறியமை -

{Entry: H08__266}

உடன்போக்கில் சென்ற தலைவன் தலைவி இருவரையும் தேடிக்கொண்டு செவிலி பாலைநிலத்துக்கு வந்தபோது, அவளை வழியிடைக் கண்டோர் கூறுதல்.

“பகற்பொழுதின் வெப்பத்தால் சூடேறிய பாறையிடைக் கிடந்த கலக்கமுற்ற சிலவாகிய நீரைத் தலைவன் தன் கையால் முகந்து கொடுப்ப, அதனைக் தன் கைகளைக் குவித்து வாங்கி அமுதம் போலப் பருகிக் களைப்பு நீங்கிச் சென்ற அத் தடங்கண் வஞ்சிக் கொம்பனையாளைப் பெற்ற தாய்போலும் இவள்!” என்று கண்டோர் தம்முள் கூறுதல்.

செவிலியைக் கண்ட ஆடவன், அவள் தலைவன்தலைவி யரைக் குறித்து வினவிய இடத்து, “அம்மையே! அவர்கள் நும் உறவினரோ? என் மனைவி அத்தூண்டா விளக்குப் போன்ற நங்கை நல்லாளைக் கண்டாள். நான் களங்கனி அன்ன நிறத்தினன் ஆகிய அக்காளையைக் கண்டேன்” என்றல். (கோவை. 244)

செவிலியால் வழியிடை வினவப்பட்ட அந்தணர், “தன் தலைவன் இனிது பாராட்ட, குன்றுகள் உயர்ந்த இம்மலை வழியைக் கடந்து சென்ற இளையாளைக் கண்டோம்” (ஐங். 387) என்றல். (தொ. பொ. 40 நச். )

செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -

{Entry: H08__267}

வெறி விலக்கிய தோழியைச் செவிலி, “இவளுக்கு நேர்ந்தது யாதோ?” என வினவுதல்.

“பெண்ணே! நீ முருகப் பெருமானால் தலைவியின் நோய் தீராது என்றதன் காரணம் யாது?” (தஞ்சை. 299) என்பது போன்ற செவிலியது வினா.

இது வரைவியலுள் ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 177) (தொ.பொ. 40 நச்.)

செறிப்பட அவணுற்று இரங்கல் -

{Entry: H08__268}

தலைவி இற்செறிக்கப்பட்ட காலை தலைவனை நினைத்து வருந்தி அவனது உருவெளிப்பாடு கண்டு கூறல்.

“தினை கொய்யப் பெற்றதனால் அழிந்த புனத்தையும், யான் இழைத்த கூடலையும், புனத்தில் நாங்கள் இருந்த பரணையும், இல்லத்துள் சிறையிருந்தவாறே பார்த்து ஏங்கிக் கண்ணீர் சொரியும் எனது துயரத்தை அறிந்து, என் காதலர் நான் வைகும் இல்லத்தினை வழி வினவிக் கேட்டறிந்து இங்கு வந்தாரா? இதோ என் எதிரில் தோன்றுகிறாரே!” என்று தலைவி கூற்று.

இது ‘பகற்குறி இடையீடு’ என்னும் தொகுதிக்கண்ணது ஒரு கூற்று. (அம்பிகா. 186)

செறிப்பு -

{Entry: H08__269}

‘இற்செறிப்பு’ நோக்குக.

சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -

{Entry: H08__270}

நிலைநிற்கப் பிரியும் பிரிவின்கண் அஞ்சிய அத்திறத்தினைக் கையிகந்து முன்னொருகால் சென்று மீட்டும் அந்நெறி யினைப் போக நினைந்தவழித் தலைவன் கூற்று நிகழும்; கற்பியல் கூற்று இது.

“மனமே! நிறைய செல்வங்களைப் பெறலாம் என்று கூறி என்னை அழைத்துச் சென்று புல்லிய இலைகளையுடைய மராஅ மரங்களையுடைய அகன்ற நெடிய வழியிலே பின்தங்கி என்னைத் தனித்து அனுப்புதற்கு முன் ஒருகால் முயன்றாயே. அதனை மறந்து இதுபோது மீண்டும் பொருள் தேடலாம் என்று என்னைத் தூண்டுகிறாயே! தலைவியின் உருவெளித்தோற்றம் யான் செல்லும் வழியிடைத் தோன்றிக் குறுக்கிடும்போது எனக்கு ஏற்படக்கூடிய துயரினை உன் உண்மை போன்ற பொய்மொழி போக்க இயலுமா? ஆதலின் இம்முறை தலைவியைப் பிரிந்து பொருளீட்ட யான் வாரேன்” (அகநா. 3) என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறியது. (தொ. பொ. 144 இள.)

தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்குத் தலைவியை அணுகச் செல்ல, அவன் மெய்க்கண் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே, அவன் ஒருவாற் றான் அவள் ஆற்றாமையைச் சிறிது மீட்கையினாலே அவள் கூடக் கருதிய இடத்து அவன் கூற்று நிகழும். (தொ.பொ. 146 நச்.)

இதுவும் துனி தீர்ப்பதொரு முறை கூறினார்.

“எம்மை வஞ்சனையால் வருத்தி, உண்மையின் என் மகன் மேல் பாசமின்றி, நீ கூடிய பரத்தையின் முடியினின்றும் உதிர்ந்த பூந்தூது உன் ஆடையில் ஒட்டியிருப்பது புலப்படு மாறு காற்றின் எதிரே நிற்கிறாயே. இங்ஙனம் நில்லாது போ!” என்று தலைவி கூறியவழி, தலைவன். “ஏடி! யான் தவறு செய்யவில்லை என்று உறுதி கூறவும், என் சொல்லை நம்பாமல் உன் கோபம் குறையாமலிருக்கிறாய். விருப்பொடு கன்று கட்டப்பட்ட இடம் நோக்கிச் செல்லும் பசுப்போல என் பிள்ளையையாவது யான் தூக்கிக்கொண்டு மகிழ்கின் றேன்” என்று கூறிப் புதல்வனைத் தூக்கிக் கொள்ளத் தலைவி ஊடல் நீங்கியது. (கலி. 81, நச்.)

சென்றுஎதிர் கோடல் -

{Entry: H08__271}

இரவுக்குறிக்கண் செவிலி எதிர்பாராவகையால் புழைக் கடைப் புறம் வந்தாளாகத் தலைவன்தலைவியரது களவுக் கால நிகழ்ச்சியை அவள் கண்டுவிட்டதாகத் தோழி கூறிக் களவொழுக்கம் தவிர்ந்து வரைந்து கொள்ளுமாறு தலைவனை வேண்டல். (குறிஞ்சி நடையியல்)

இது ‘தாய் அறிவுணர்த்தல்’ (ந.அ. 166) எனவும் படும். ‘சென் றெதிர் காண்டல்’ என்றிருப்பின் சிறக்கும். (வீ. சோ. 92 உரைமேற்.)

சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -

{Entry: H08__272}

களவு ஒழுக்கத்தினிடையே பிரிந்து அன்று மாலை வருவ தாகக் கூறிச் சென்ற தலைவன் வாராமையால் வேட்கை மீதூர்ந்து மிக்க துயரத்தொடு தலைவி கூறும் சொற்கள். கடல், அன்னம் முதலியவற்றுடன் உரையாடுவது போல அவள் தன் துயரத்தை வெளிப்படுத்தி ஆறுதல் தேடுவதே இக்கூற்று.

“கடலே! துறைவர் எம்மை விட்டுச் சென்றபோது மீண்டு வரும் நேரத்தை நினக்குக் கூறினாரோ? சொல்” (கோவை. 181) என்றாற் போன்ற தலைவியது கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

சேட்படுத்தல் -

{Entry: H08__273}

‘சேட்படை’ காண்க.

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -

{Entry: H08__274}

“குன்றநாட! நீ பலகாலும் வாராதுவிடுத்தலின் நின்னை நினைந்து நினைந்து ஏங்கி, வாடைக்காற்றில், பலரும் உறங்கும் இரவில் நின் வருகையை எதிர்பார்த்துப் புறத்தே நின்று கொண்டிருக்கும் எம்நிலை, உன்னை ஆரத். தழுவுதலின் ஏற்படும் இன்பத்தினும் சிறப்பாக வுள்ளது!” (அக.நா. 58) என்று தலைவி குறிப்பால் தன் வருத்தத்தினை வெளிப்படுத் தியது.

சேட்படை -

{Entry: H08__275}

தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னின் ஆகிய கூட்டம் கூட்டலுறும் தோழி, தலைமகளது பெருமையையும் தனது முயற்சியின் அருமையையும் தலைவன் உணர்தற்காகவும், அரியவளாகிய தலைவியைக் களவில் எளிதில் பெற்று நுகர்தல் இயலாது என்பதனை உட்கொண்டு தலைவன் கள வொழுக்கத்தை விரைவின் நீத்து மணம் செய்துகொள் ளுதலை உணர்தற்காகவும், தலைமகனை நெருக்கமாகப் பழகவிடாது சிறிது அகற்றி வைத்தல். ஆகவே, முதலில் சிறிது அகற்றிவைத்துப் பின்னர்க் குறைமுடிப்பாள் என்பது. (ந.அ. 143)

இது களவியலுள் பாங்கியிற் கூட்டத்து வகை பன்னிரண் டனுள் ஒன்று.

சேட்படையில் துறைகள் -

{Entry: H08__276}

‘தழை கொண்டு சேறல்; 2. சந்தனத்தழை தகாதுஎன மறுத்தல், 3. நிலத்து இன்மை கூறி மறுத்தல், 4. நினைவறிவு கூறி மறுத்தல், 5. படைத்து மொழியான் மறுத்தல், 6. நாணுரைத்து மறுத்தல், 7. இசையாமை கூறி மறுத்தல், 8. செவ்வியிலள் என்று மறுத்தல், 9. காப்புடைத்தென்று மறுத்தல், 10. நீயே கூறு என மறுத்தல். 11. குலமுறை கூறி மறுத்தல், 12. நகையாடி மறுத்தல், 13. இரக்கத்தொடு மறுத்தல், 14. சிறப்பின்மை கூறி மறுத்தல், 15. இளமை கூறி மறுத்தல், 16. மறைத்தமை கூறி நகைத் துரைத்தல், 17. நகை கண்டு மகிழ்தல், 18. அறியாள் போன்று நினைவு கேட்டல், 19. அவயவம் கூறல்,
20. கண்ணயந்து உயர்த்தல், 21. தழை எதிர்தல், 22. குறிப்பறிதல், 23. குறிப்பறிந்து கூறல், 24. வகுத்துரைத்தல், 25. தழை ஏற்பித்தல், 26. தழை விருப்புரைத்தல் என்பன இருபத்தாறும் ‘சேட்படை’ என்னும் கிளவிக்கண் நிகழும் துறைகள். (கோவை. 90-115)

சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -

{Entry: H08__277}

தலைவன் தலைவியோடு உடன்போக்கு நிகழ்த்திப் பாலை வழியே சென்றபோது அங்கிருந்த ஆறலைக்கள்வராம் பாலை நில மாக்கள் அவர்கட்குத் தீங்கு செய்ய நினைத்த போது, அவர்களுடைய மனைவியர் தலைவிக்குத் தீங்கு வாராமல் தடுத்துத் தலைவனோடு அவளை அனுப்பிவிட வேண்டும் எனத் தம்முள் கூறிச் செயற்பட முனைதல்.

“மடக்கண்ணளாய், தகரச் சாந்து பூசிய கூந்தலளாய், பணைத் தோளியாய், சேர்ந்து செறிதொடையளாய், தழையுடை யுடுத்து, வார்ந்து இலங்கு வெண்பற்கள் முறுவலால் சிறிது தோன்ற, வேறு சுற்றத் துணையின்றி, நம் விழவுக்களம் பொற் புறுமாறு இவள் இங்கு வந்து நின்றாள். இங்கு நன்மையே நிகழுமாறு, இவளைக் கவர்ந்து கொள்ளுதலை நினைக்கும் நம் கொழுநரை நாம் அது செய்யாதவாறு தடுப்போம். (நற். 170)” என இடைச்சுரத்துக் குறும்பினில் உள்ள மறவர் பெண்டிர்தம் கூற்றுப் போல்வன. (தொ. பொ. 40 நச்.)

சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -

{Entry: H08__278}

தலைவன் தலைவியோடு உடன்போக்கு நிகழ்த்திப் பாலை வழியே நெடுந்தூரம் சென்றபோது, அவ்விருவரையும் கண்ட அங்கிருந்த மக்கள், “மூங்கில் நிறைந்த இக்காட்டகத்துச் செல்லும் இவ்வில்லேந்திய இளைஞன் கால்களில் கழல்கள் அணியப்பட்டுள; தொடி அணிந்த நங்கை இவளுடைய மெல்லிய அடிகளில் சிலம்புகள் அணியப்பட்டுள. இத்தகைய செல்வர்கள் இக்கொடிய பாலை வழியே உடன்போக்குத் துணிந்த செயல் இரங்கத்தக்கது. இவர்கள் யாவரோ?”(குறு. 7) என்றாற் போலத் தம்முள் கூறிக் கொள்ளுதல். (தொ. பொ. 40 நச்.)

சேயோன் -

{Entry: H08__279}

செந்நிறமுடைய கடவுளாகிய முருகன்; குறிஞ்சிநிலக்கடவுள் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநில மக்க ளாகிய குறவர் முதலியோர் கூடி வெறியாட்டு நிகழ்த்தற்கு வேண்டும் பொருள்களைக் கொண்டு வெறியாட்டு எடுப்பவே, ஆண்டு அவர்கட்கு முருகன் அருள் வெளிப்படும். அவனரு ளால் மழைவளம் தவறாது எய்தும்.

குறிஞ்சிநில மக்கட்குச் சூரரமகளிரும் வழிபடுதற்குரியர்.

(தொ. பொ. 5 நச்.)

சேயோனுக்கு மலை உரிமையாதல் -

{Entry: H08__280}

மலைப்பகுதியாகிய குறிஞ்சி நிலத்துக்குரிய குறவர் முதலியோர் குழீஇ வெறியாடல் நிகழ்த்தற்கு வேண்டும் பொருள்களை முறையாகத் தொகுத்துக்கொண்டு வெறி யாட்டு நிகழ்த்தவே, ஆண்டு அது கண்டு மகிழ்ந்து முருகன் அவர்கட்கு அருள் செய்வான். ஆதலின் மலை அவனுக்கு உரிமை எய்திற்று. (தொ. பொ. 5 நச்.)

சேரி செல்லும் தாய் -

{Entry: H08__281}

தலைவி தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்தியதை மறுநாள் விடியற்காலையில் உணர்ந்த நற்றாய் தன் மகளைத் தான்வாழும் சேரிமுழுதும் இல்லம்தோறும் சென்று தேடி வருவாள். (தொ. பொ. 37 நச்.)

சேரிப்பரத்தை -

{Entry: H08__282}

பொருளிடத்து விருப்பத்தான் ஒருவனுக்கே உரிமை பூணாது பலரையும் கூடித் திரியும் இயல்புடைய பரத்தையினத்தைச் சேர்ந்தவள். (ந. அ. 60)

‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -

{Entry: H08__283}

தலைவன் தான் இரந்து கூறுவனவற்றைத் தோழி தலைவி யைச் சார்த்தி மொழிதலின், புற்கென்ற நெஞ்சத்தனாகிய வகையில் அவன் கூற்று நிகழ்த்துவான்.

“நீயே தலைவியிடத்துச் சென்று நின்குறை முடித்துக் கொள்க” என்று தோழி கூறியவிடத்து, தலைவன் ஆதரவற்ற வனாய்ப் புற்கென்ற நெஞ்சத்தனாய்க் கலங்கிக் கூற்று நிகழ்த்தும். (தொ. கள. 11 ச.பால.)

‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

{Entry: H08__284}

காமத்திற்குரிய பருவம் நிரம்பாத சிறுமிபால் காமம் கொண்ட ஆண்டு மூத்த தலைவன் தன் வினாவிற்கு அவள் விடை கூறாத நிலையின்கண்ணும் தான் அவளைப் பற்றிப் பேசுதலிலேயே இன்புறுவது. இது கைக்கிளையுள் சிறந்தது.

(காமக்குறிப்பிற்கு அமையாமை என்பது : பெண்மைப் பருவக் குறிகள் ஆகிய தோளும் நகிலும் பெருத்தல், கண்பிறழ்தல் - முதலியன தோன்றியும், பூப்பெய்துதற்குரிய ஆண்டுகள் நிரம்பியும் அஃது எய்தாமல் இருத்தல்; பூப்பெய்திய பின்னரும் காம உணர்ச்சி தோன்றாமலிருத்தல்; பூப்பெய்து தற்குரிய ஆண்டு நிரம்பாத நிலையிலும் பூப்பெய்தியவளைப் போல உடல் வனப்புக் கொண்டிருத்தல் என இவை.)

இத்தகைய காமக்குறிப்பிற்கு அமைதியில்லாத பெண்களுள் ஒருத்திபால் காதல் கொண்ட ஒருவன் தன் குறிப்பிற்கு எதிர்க்குறிப்பு அவள் நிகழ்த்தாமல் செல்வாளாயின், அதன் காரணம் அறியாது, “இவள் இவ்வாறு செல்வது ஏன்? என் குறிப்பினை அறியாளோ?” என்று நினைந்து தன் காதலை அடக்க இயலாத நிலையில் பெருந்துன்பம் உறுவான். அத்துன்பத்திற்குப் பரிகாரம் எதுவும் கிட்டாதாதலின் அஃது ‘ஏமம் சாலா இடும்பை’ ஆகிய மருந்து பிறிதில்லாப் பெருந்துயராகும். அத்தகைய துன்புறும் நிலையில்,

“அன்னத்தைப் போலவும், பெண் தன்மையுடைய ஆண் மயிலைப் போலவும், புறாவைப் போலவும் அமைந்த நின் பேரழகு நின்னைக் கண்டவர்களை மயக்கும் என்பதனை நீ அறிதியோ? அறியாயோ?

“மூங்கில் போலவும் தலையணை போலவும் காமக்கடலை நீந்தப் பயன்படும் தெப்பம் போலவும் அமைந்த நின் பருத்த மெல்லிய தோள்கள் உன்னைக் காண்பவர்களை வருத்தும் என்பதை அறிதியோ? அறியாயோ?

“கோங்க மொட்டுப் போலவும், முற்றிய குரும்பை போலவும் நீர் மொக்குள் போலவும் அமைந்து பெருத்த நின் இளங் கொங்கைகள் நின்னைக் காண்பார் உயிரை வாங்கும் என்பதனை நீ அறிதியோ? அறியாயோ?

“உன்மேல் தவறில்லை; உன்னை வெளியே புறப்படவிட்ட உன் உறவினர் மேலும் தவறில்லை; மதயானையை நீராட்ட அழைத்துச் செல்லும்போது, ‘எல்லோரும் கதவுகளை அடைத்துக் கொண்டு மனைக்கண்ணேயே இருத்தல் வேண் டும்’ என்று ஊர் முழுதும் பறையறைந்து சாற்றச் செய்யும் அரசன், நீ புறப்பட்டு வெளியே வருகையில் பறையறைந்து எம் போல்வார் இல்லத்தினுள் அடைத்திருத்தல் வேண்டும் என்று பறை சாற்றுவித்திருக்க வேண்டும்; அங்ஙனம் செய்யாத அரசனே தவறுடையான்” (கலித். 56) என்றாற் போல, நன்மை யும் தீமையும் முறையே தன்னிடத்தும் அவளிடத்தும் பொருத்திச் சொல்லும் கூற்று.

இத்தகைய கூற்றுக்குத் தலைவி ஏதும் மறுமாற்றம் கொடாத நிலையிலும் கைக்கிளைத் தலைவன் இங்ஙனம் அவளைப் பற்றிப் பேசுவதையே இன்பமாகக் கொண்டு அமைதியுறும்.

(தொ. பொ. 50 நச்.)

சொல் கேட்க விரும்புதல் -

{Entry: H08__285}

இயற்கைப் புணர்ச்சியன்று, நாணத்தால் யாதும் கூறாமல் நின்ற தலைவியின் அழகிய வாயைப் புகழ்ந்து கூறிய தலை வன், அவளது சொல்லினிமையையும் துய்க்க விரும்புதல்.

இதனைக் ‘கிளவி வேட்டல்’ என்னும் திருக்கோவையார் (10). இஃது ‘இயற்கை புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண் அமைந்த ஒருவகையாகிய தெய்வப்புணர்ச்சியுள் நிகழும் ஒரு கூற்று. (இ. வி. 493 உரை)

சொல் கேளாத அயர்வு நீங்கியது -

{Entry: H08__286}

இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண், தலைவியின் சொல்லைக் கேளாமையால் தான் உற்ற சோர்வினைத் தலைவன் நீங்குதல். இதனை நலம்புனைந்துரைத்தல் (11) என்னும் திருக்கோ வையார்.

இஃது ‘இயற்கைப்புணர்ச்சி’ என்னும் கிளவிக்கண் அமைந்த ஒருவகையாகிய தெய்வப் புணர்ச்சியுள் நிகழும் ஒருகூற்று.

(இ. வி. 493 உரை)

சொல் பல உரைத்தல் -

{Entry: H08__287}

பகற்குறிக்கண் தோழி தலைவனிடம் அப்பகற் குறியால் விளையும் ஏதங்களைப் பலவாக எடுத்துக் கூறுதல். இது ‘முன்னின்றுணர்த்தல்’ (ந.அ. 154) எனவும்படும். (குறிஞ்சிநடை யியல்) (வீ. சோ. 92 உரைமேற்.)

சொல்லாதேகல் -

{Entry: H08__288}

களவுக் காலத்தில் வரைபொருட்குப் பிரிந்த தலைவன் “யான் நேரில் கூறின் தலைவி என் பிரிவுக்கு உடன்படாது வருந்து வாள் ஆதலின், என் பிரிவினை அவட்கு நீயே கூறு. யான் விரைவில் வரைவிற்குரிய பொருள்தேடி மீண்டு வருவேன்” என்று தோழியிடம் கூறித் தலைவியிடம் கூறாது பிரிதல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்னும் கிளவிக்கண்ணதொரு செய்தியாம். (கோவை. 270)

‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -

{Entry: H08__289}

தெய்வப் புணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சியைப் பாலது ஆணையால் தலைமக்கள் விரைந்து பெற்றவிடத்து, தலைவி “இது மாயமோ, மருட்கையோ, கனவோ, நனவோ!” எனத் திகைத்து இனி எவ்வாறாங்கொலோ?” எனக் கலங்குவாள். அதனை ஓர்ந்துணர்ந்த தலைவன் தனது தீராக் காதன்மையை நயமுறக் கூறி, “எஞ்ஞான்றும் பிரியேன்” எனச் சூளுரை கூறித் தலைவியைத் தேற்றித் தெளிவித்தல் என்னும் கிளவி.

(தொ. கள. 11 ச. பால.)

சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -

{Entry: H08__290}

ஞாயிறு, திங்கள், அறிவு, நாணம், கடல், கானல், விலங்கு, மரம், பொழுது, பறவை, நெஞ்சு முதலியன கேட்குந போல வும் கிளக்குந போலவும் புலனெறி வழக்கம் கொள்ளப்படும்.

(தொ.பொ. 512 பேரா.)

சொல்வழிப்படுத்தல் -

{Entry: H08__291}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன், தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும் தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்குக் கண்ணால் கூறியதை விடுத்து மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் இஃது இரண்டாவது.

சொல்வழிப்படுத்தலாவது, தான் சொல்லுகின்ற சொல்லின் வழி அவள் நிற்குமாறு படுத்துக்கூறுதல். (தொ. பொ. 98 இள.)

“யான் ஒன்று சொல்லின் அதனைக் கேட்கும் செவ்வி கொள்ளாயாய் நின் திருமுகம் குனிந்து நாணம் உறுகின்றாய். விரைவில் காமம் எல்லை கடப்பின் அதனைத் தாங்குதல் எளிதோ? கடைமணி சிவந்த நின் கண்களே அன்றி, கரும்பு எழுதப் பெற்ற நின்தோள்களும் என்னைத் துயர் செய்கின் றன” (நற். 39) என்ற தலைவன் கூற்று. (இள.)

இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிதலும் பிரிதல் நிமித்தமு மாய்த் தலைவனுக்கு உரிய எனப்பட்ட செய்திகள் ஏழனுள் முதல் மூன்று நயப்பின் கூறு. அவற்றுள் இரண்டாவது சொல்வழிப்படுத்தல். அஃதாவது வார்த்தை சொல்லும் இயல்பு இல்லாத வண்டு நெஞ்சு முதலியன மறுமொழி சொல்லுவன போல அவற்றிடம் கூறல். (101 நச்.)

‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் (குறுந். 2) பாடலுள், அஞ்சிறைத் தும்பி என்று விளித்து, “நீ மெய்யென்று கண்ட தனை மொழிவாயாக” என்றது நன்னயம் உரைத்தல். (நச்.)

சொற்பொருள் -

{Entry: H08__292}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று. (வீ. சோ. 90).

தனிச்சொல் பொருளை விளக்குதலும், ஒரு தொடர் மொழியிலுள்ள இரண்டு முதலிய சொற்கள் ஒன்று சேர்ந்து தம் பொருளை விளக்குதலும், ஒரு தொடர்மொழியுள் முன்மொழி பொருள் சிறந்து விளக்குதலும், பின்மொழி பொருள் சிறந்து விளக்குதலும் என மொழிப்பொருளை விளக்குதல் நால்வகைத்தாகும். (வீ. சோ. 96; உரைமேற்.)

சோதிடம் கேட்டல் -

{Entry: H08__293}

செவிலி உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடி மீட்டு வரப் புறப்பட, நற்றாய் சோதிடர்களை அணுகி விரைவில் தலைவனும் தலைவியும் மீண்டுவந்து தம்வீட்டில் திருமணம் செய்து கொள்வார்களா என்ற செய்தியை அவர்களை வினவுதல்.

இதனை ‘உய்த்து உணர்வோரை உரைமின் என்றல்’ (இ.வி. 538 உரை) என்றும் கூறுவர்; ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண் அடக்கும்.

இக்கூற்று ‘உடன்போக்கு’ என்னும் கிளவிக்கண்ணது.

(கோவை. 236)

ஞ section: 1 entries

‘ஞாங்கர்க் கிளந்த மூன்று’ -

{Entry: H08__294}

முற்படக் கூறப்பட்ட ஓதல், பகை, தூது என்னும் மூன்று பொருளும் பற்றிய பிரிவுகள். கரணமொடு புணரத் தலைவன் தலைவியை வரைந்து இல்லறக்கிழமை பூண்டல்லது மேற்கூறிய மூன்றும் பற்றிப் பிரிந்து செல்லுதல் அவனுக்கு இல்லை. ஆதலின் இம்மூன்றுபொருள் பற்றிய பிரிவுகள் தலைவற்குக் களவுக் காலத்தில் இல்லை (தொ.கள. 51 ச.பால.)

த section: 432 entries

தகுதியது அமைதி ஒன்றாமை -

{Entry: H08__295}

பொருட் செல்வம் நிலைத்து நிற்பதொன்று அன்று என்று உணர்ந்தோர்க்குப் பொருள்மேல் காதல் தகாது என்று உணரும் உணர்ச்சி பொருந்தாமை. (கலி. 8, 12.)

தகை பாடுதல் -

{Entry: H08__296}

இயற்கைப் புணர்ச்சிஇறுதி முதலிய களவு ஒழுக்கக் காலத்தும் கற்புக் காலத்தும் தலைவன் தலைவியின் அழகு பண்பு முதலியவற்றைப் பாராட்டிக் கூறுதல். (சீவக. 1379)

தகையணங்குறுத்தல் (1) -

{Entry: H08__297}

தோழி தலைவியின்பால் தலைவனது கூட்டத்தால் காணப் பட்ட புதிய அழகுகளைக் கொண்டு அவளை ஒரு தெய்வ மகளாகச் சொல்லி நாண வைத்தல்.

தன்னை வந்தடைந்த தலைவியிடம் தோழி, “மலையில் உறையும் தெய்வமே! எங்கள் தலைவியும் உன்னைப் போலவே இருப்பாள். ஆனால் அவள் உதடுகள் சிவந்திருக்கும்; கண்கள் கருமையவாயிருக்கும்; நீயோ உதடு வெளுத்துக் கண் சிவந்து காணப்படுகிறாய்” (தஞ்சை. கோ : 67) என்று கூறுதல். (ந. அ. 139 உரை)

இது களவியலுள் பாங்கி மதியுடன்பாட்டில் ‘முன்னுற வுணர்தல்’ என்னும் தொகுதிக்கண் உள்ளதொரு கூற்று.

தகையணங்குறுத்தல் (2) -

{Entry: H08__298}

தலைமகள்அழகு தன்னை வருத்தும் செய்தியைத் தலைவன் கூறல். இது களவொழுக்கத்தில் தலைவன் தலைவியை முதன்முதல் சந்திக்கும்போது நிகழ்வது. (குறள். அதி. 109 தோற்று. பரிமே.)

தண்கடற் சேர்ப்பன் -

{Entry: H08__299}

நெய்தல் நிலத் தலைவன். (பிங். 602)

‘தண்தளிர் மாது தனக்குரை மாற்றம்’ -

{Entry: H08__300}

உடன்போக்கின்கண் இடைச்சுரத்துத் தலைவன் தலைவி யிடம் பகைவர்கள் எதிர்த்தால் அவர்களைத் தான் அழித்து விடுவதாகவும், அவள்தமர் பின் தொடர்ந்து வந்து எதிர்த் தால் அவர்களுக்கு ஊறு செய்யாமல் தான் மறைந்திருப்ப தாகவும் கூறுதல். (பாலை நடையியல்) (வீ.சோ. 93 உரை மேற்.)

தணப்பிடர் ஒழித்தல் -

{Entry: H08__301}

பிரிந்தவழித் துன்பத்தை நீக்குதல். தலைவன் களவு வெளிப் பட்டபின் ஒருவழித் தணந்தவிடத்தே அக்கற்புக் காலத்துத் தலைவி தலைவனது பிரிவு குறித்து வருந்தவே, தோழி, “மிகும் அன்பினராகிய தலைவர் நீ பிரிந்து வாட நெடுநாள் தம்மிடத்துத் தங்கார்; ஆதலின் நீ வருந்தற்க” (கோவை. 274) என்பது போன்ற சொற்களால் வாட்டம் தணித்தல். தணப்பு - பிரிவு.

இது ‘வரைபொருட்கு ஏகல்’ என்றும் தொகுதிக்கண் உள்ள மூன்று கூற்றினுள் இறுதியாவது. (க. கா.பக். 133)

தத்தையொடு புலம்பல் -

{Entry: H08__302}

தலைவி உடன்போயினமை அறிந்த நற்றாய் அவள் வளர்த்த கிளியிடம் வருந்திக் கூறல்.

“கிளியே! என் மகள் கொடிய பாலை வழியை எவ்வாறு கடந்து செல்வாள்? ‘தலைவி என்னை விடுத்துச் சென்று விட்டதனால் என்னைப் பேணுவார் இரார்; அதனால் பருந்து என்னைக் கொன்றுவிடும்’ என்று நீ கூவும் சொற்கள் வேறு என்னை மிகவும் வருத்துகின்றன.” (கோவை. 231) என்றாற் போல வரும் நற்றாய் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘கிளிமொழிக்கு இரங்கல்’ என்னும்.

வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று இது. (இ. வி. 538 உரை)

‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -

{Entry: H08__303}

“முன்னர் இயற்கைப் புணர்ச்சியில் அவளை என்னொடு கூட்டுவித்த தெய்வம் இன்னும் அவ்வாறே செய்யும்” என்ற உறுதியுடன் தலைவன் முன்பு தலைப்பெய்த அதே இடத் திற்குத் தலைவியைக் காணச் செல்லுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘பொழிலிடைச் சேறல்’ என்னும் (49).

இது களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 135)

தந்நிலை உரைத்தல் -

{Entry: H08__304}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன் தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்குக் கண்ணால் கூறியதை விடுத்து மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் இஃது ஆறாவது. (தொ. பொ. 101 நச்.)

தன்னிலை உரைத்தலாவது தன்னுடைய புறத்து உறுப்புக் களின் பொலிவு அழிவினைக் கண்ட தலைவியிடத்துத் தலைவன் தன்னுள்ளத்தில் வேட்கை மிக்கிருத்தலை வலி யுறுத்திச் கூறுதல். (98 இள.)

எ-டு : தலைவன் தலைவியது பெருவனப்பினைப் புகழ்ந்து கூறிய அளவில் அவள் நாணத்தால் தன் கண்களைப் பொத்திக் கொள்ள, அவளை நோக்கி, “காமம் மிகுவ தாயின் அதனை என்னால் தடுத்துக் கொள்ளல் இயலாது. கடைசிவந்த நின் கண்களே என்னைக் கோபிக்கின்றன என்று அவற்றைப் புதைத்துக் கொண் டாய்; கரும்பு வடிவில் தொய்யிற் கொடி எழுதப் பெற்ற உன் தோள்களும் எனக்குத் துன்பம் தருகின்றன” என்று தலைவன் கூறுதல். (நற். 39)

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவன் தலைவியை நோக்கி, “உனக்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பு எழுபிறப்பும் தொடர்ந்து வருகிறது. இதுவரை இருவராகித் தனித்து வாழ்ந்த நாம் இக்கூட்டத்தின்பின் தனித்தனிப் பிரிந்து வாழும் துயரம் நீங்கப் பிரிவு அரிதாகிய காமத் துடனேயே இருவர்க்கும் உயிர் போவதாகுக!” என்று விரும்புகிறேன் எனக் கூறுதல். (குறுந். 57)

இவை முறையே நச்சினார்க்கினியர் இளம்பூரணர் என இருவராலும் காட்டப்பெற்ற கூற்றுக்கள்.

தம் நிலை உரைத்தலாவது “நின்னொடு பொருந்திய தொடர்ச்சி தொடர்ந்து எழுமையும் வருகின்றது” எனத் தலைவன் தமது அன்பு நிலையினைக் கூறுதல். (நச்)

இயற்கைப் புணர்ச்சியின்பின் பிரிதலும் பிரிதல் நிமித்தமு மாகப் பொருந்துவனவாகிய தலைவற்குரிய ஏழனுள் இஃது ஆறாவது (நச்.)

தம்முள் நேர் என்றல் -

{Entry: H08__305}

உடன்போக்கின்கண் இடைச்சுரத்துத் தலைவனையும் தலைவியையும் கண்டவர்கள் “இவர்களுக்கு நிகர் இவரே” என்று அவர்களுடைய வடிவழகினையும் காதன்மையினை யும் வியந்து கூறுதல். (பாலை நடையியல்). (வீ. சோ. 93 உரை மேற்.)

தம்மொடு தாமே சாற்றல் -

{Entry: H08__306}

தலைவன் தலைவி முதலியோர் பிறரிடம் உரையாடித் தம் கருத்தைக் கூறுதலேயன்றி, தம்முள் தாமே கூறிச் கொள்ளு தலும் உண்டு. இதன் பயன் மூடிநின்ற வேகின்ற கொள்கலம் மூடியைத் திறந்தவழி ஆவி வெளிப்படுதலால் வெப்பம் சிறிது குறைவது போலப் பிறர் கேட்பார் இல்லாதவழியும் தம்மொடு தாமே கூறிக் கொள்வதனால் மனத்திலுள்ள சுமை சிறிது குறையும். இஃது அகப்பாட்டுறுப் பாகிய கூற்றினுள் அடங்குவது. (ந. அ. 224)

தமர் நினைவுரைத்து வரைவு கடாதல் -

{Entry: H08__307}

பகற்குறி இறுதிக்கண் தோழி தலைவனைத் தனியே கண்டு இற்செறிவு அறிவுறுத்தி வரைவு கடாவியதொடு, தலைவியது பருவவனப்புக் கண்டு உறவினர் அவளை இற்செறித்ததனை அறிந்து ஏனையார் அவளை மகட்பேச நினைக்கும் செய்தியை யும் அறிவித்து, அவளை விரைவில் வரையுமாறு வேண்டுதல்.

இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 166, இ. வி. 523) இது பகற்குறி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 134)

தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -

{Entry: H08__308}

உடன்போய தலைவியை மீட்டுவரத் தலைவிதமர் அவரிரு வரையும் பின்தொடர்தலைக் கண்டவர் இரங்கிக் கூறுதல்.

“தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் நல்ல வீரன் தான். ஆயின் அவனை எதிர்க்கப் பலர் வருகிறார்களே! இருவ ருக்கும் அருகே போய் நின்று, போர் நிகழாமல் தடுக்கக் கூடியவர் யாவர் இருத்தல் கூடும்?” (அம்பிகா. 423) என வழியிடைக் கண்டோர் கூறல்.

இது வரைவியலில், ‘உடன்போக்கு இடையீடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 547)

தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -

{Entry: H08__309}

உடன்போக்குத் தடைப்படவே, தன் சுற்றத்தாரின் பின்னே செல்லுகின்ற தலைவி, தலைவன் செயலை எண்ணி வருந்திக் கூறுதல்.

“இடைச்சுரத்தில் என் காதலன் மறைந்து நின்ற குன்று, மிகக் கொடிய போர் செய்பவர்களான என் தந்தை முதலியோர்க் குச் சான்று கூறுவதுபோல, என் உயிர்க்காதலனைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று என்னுயிர் மிகவும் ஏங்குகிறது” என்ற தலைவி கூற்று.

இது வரைவியலில், ‘உடன்போக்கு இடையீடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 427)

தமரிற் பெறுதல் -

{Entry: H08__310}

தலைவியின் உறவினரால் அவளை அடைதல்.

தலைவனும் தலைவியும் நிகழ்த்தும் களவொழுக்கம் அறத்தொடு நிலையால் வெளிப்பட்ட பின், தலைவன் தலை வியை அவளுடைய பெற்றோர் மகிழ்வுடன் மணம் செய்து கொடுப்பத்தான் அவளைக் கரணத்தொடு மணத்தலே தமரிற் பெறுதலாம். (தொல். பொ.499 பேரா.)

திருமணம் கற்பொழுக்கத்தைச் சார்ந்தது.

‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

{Entry: H08__311}

உடன்போக்கில் தலைவியை மீட்கும் நோக்குடன் அவள் சுற்றத்தார் வருவதைக்கண்ட தலைமகன், அவர்களொடு போரிட்டு அவர்களைக் கொல்லவோ புண்படுத்தவோ கூடாதென்று கருதித் தலைவியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அகன்று செல்லவே, சுற்றத்தார் அவளை மீட்டு அழைத்துப் போம்போது, தனக்காகத் தலைவன் புறங்காட்டியமை உணர்ந்து உருகும் தலைவி அவன் தேர்ப்பக்கம் பார்த்துக் கவலையொடு கூறுதல்.

“நான் தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தியபோது என் தமையன்மார் பின் தொடர்ந்துவர, அவர்களுக்கு ஊறு செய்தல் ஆகாது என்று எனக்காகப் புறங்கொடுத்துப் போன என் தலைவனுடைய தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் என் துயரினைப் போக்கியமையால், சூரியன் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் போல நீடுவாழ்க!” (தஞ்சை. 365) என்று தலைவி வாழ்த்துவது.

இது வரைவியலில் ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 198)

தமியர் காண்டல் -

{Entry: H08__312}

தலைவனும் தலைவியும் தம் உணர்வினர் அல்லராக ஒருவரை ஒருவர் காணுதல். (இறை. அ. 2.)

தமியர் ஆதல் -

{Entry: H08__313}

தம் உணர்வினர் அல்லராதல். தலைவற்கு அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன பண்புகள்; தலைவிக்கு நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன பண்புகள்.

அறிவாவது எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை அறிதல். நிறையாவது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். ஓர்ப்பாவது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். கடைப்பிடியாவது கொண்ட பொருள் மறவாமை.

நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை. மடமாவது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. அச்சமாவது புதுப்பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பாவது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை.

தலைவன் தலைவி இவருடைய பண்புகளும் புனல் ஓடும் வழியில் புல் சாய்ந்தாற் போல, வேட்கையால் மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடத்தலே தமியராதலாம். (இறை. அ. 2)

தமிழியல் வழக்கு -

{Entry: H08__314}

பண்டைய தமிழ்நூல்களிற் காணப்படும் ஐந்திணையாகிய காமக் கூட்டம்; ‘தமிழியல் வழக்கினன் தணப்புமிகப் பெருக்கி’ (பெருங். வத்தவ. 17 : 67)

தலைத்தாள் கழறல் -

{Entry: H08__315}

தலைவன் முன் நின்று அவனைத் தலைவி இடித்துரைத்தல். தலைவனால் தமக்கு ஏற்பட்ட துயரத்தைப் பரத்தையர் தலைவியிடம் வந்து கூறிக்கொள்வதுண்டு. அவர்களது கூற்றில் உண்மையும் இருக்கலாம்; புனைந்துரையும் இருக்க லாம். பரத்தையர் தலைவனைப் பற்றிக் கூறும் கொடுமை களைத் தலைவி உண்மையாகவே நம்புவாள்; தன்னைப் போலவே தலைவன் பரத்தையரையும் வருத்தியதற்கு மகிழ்ச்சி கொள்வாள்; தன்னைப் போலவே உரிமை பாராட் டிப் பரத்தையரும் தலைவன்தொடர்பு பற்றிப் பேசுகிறார் களே என்று ஊடலும் கொள்வாள். ஊடலில்லையேல், தலைவன் புறத்தொழுக்கம் கருதி மனம் வெறுத்திருப்பாள்; பரத்தையர் இருக்கும்போது தலைவனை இடித்து உரை யாள்; அவர்கள் தம் குறை கூறிச் சென்ற பின்னர்த் தனிமை யில் தலைவனை யடைந்து அவன் புறத்தொழுக்கம் பற்றி இடித்துக் கூறுவாள். (தொ. பொ. 235 நச்.)

தலைத்தாள் - திருமுன் என்றாற் போன்ற மரியாதைச் சொல். தலைவி பரத்தையர் கூறியதைத் தலைவனிடம் புலவியிலும், கலவி இறுதியிலும் கூறுவாள். (231 இள.)

தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -

{Entry: H08__316}

தலைமை கொண்டு சிறந்து வாழும் பரத்தைஒருத்தியைத் தலைவன் கலந்து பின் அவளைக் கைவிட்டு வேறொரு பரத்தைபாற் சென்றான். அவனை அம் முதற்பரத்தை இடித் துப் பேச, அவளது வெகுளியைத் தணிக்கும்படி அவன் பாணனை விடுத்தான். அப்பரத்தை அப்பாணனை நோக்கி, “பாணனே! நும் தலைவன் எம் சேரியில் வந்து பரிசப்பொருள் தந்து எனது நெஞ்சத்தை வசப்படுத்திப் பின் என்னைக் கைவிட்ட தீவினை அவனை விடாது. எம் அன்னை சினம் உடையவள். அவள் சிறிதும் இரங்காள் ஆதலின், அவளால் தலைவன் ஒறுக்கப்படுதலும் கூடும். இனித் தலைவன் யாவ ராலும் நகைத்தற்கு உரியனாவான்” என்று கூறியமை.(நற். 150)

தலைப்பாடு -

{Entry: H08__317}

இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் வகை ஏழனுள் ஒன்று. “தலைவன் தலைவி ஆகிய இருவரும் தாமே எதிர்ப் பட்டார்; யான் அறிந்திலேன்” என்று தோழி கூறுதல். (தொ. பொ. 207 நச்.)

தலைப்பெயல் மரபு இரண்டு -

{Entry: H08__318}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியைத் தனித்துக் காண்டற்குரிய வாய்ப்பு இரண்டு. தெய்வம் இடைநிற்பப் பான்மையால் உய்க்கப்பட்டு யாரும் இல்லாத ஓரிடத்தில் தலைமகளைக் கண்ணுற்ற தலைவன், மறுநாள் தன் பாங்கன் உதவியால் குறியிடத்து அவளைக் காண்டலும், பாங்கனை இன்றித் தானே தலைவியைத் தனித்து நிற்கும் இடத்தில் காண்டலும் என இருவகைச் சந்திப்பில், ஏதேனும் ஒன்றே நிகழும். பெரும்பாலும் பாங்கனால் ஆகும் என்று சிந்திப்பான்; சிறுபான்மை விதியினால் ஆகும் என்று சிந்திப்பான். ஆதலின் பாங்கற்கூட்டம் நிகழின் இடந்தலைப் பாடு நிகழாது; இடந்தலைப்பாடு நிகழின் பாங்கற்கூட்டம் நிகழாது. தலைவியைக் காண்டல் எளிதன்று ஆதலின், இவ்விரண்டனுள் ஒன்றே நிகழும் என்பது. (இறை. அ. 3)

தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -

{Entry: H08__319}

தாம் உரைக்கப் புகுவனவற்றைக் கேட்டற்குரிய இருதிணைப் பொருள்களையும் விளித்து முன்னிலையாக்கிக் கொள்ளு தல்,

முன்னிலையாக்கிக் கொண்ட மாந்தரையும் நெஞ்சு முதலாய வற்றையும் தம் கருத்தின்வழியே ஒழுக வேண்டுதல்,

தமது ஆராத காதல் புலப்பட இதனைச் செய்தல் அறத்தாறு ஆகும் எனத் தம் விருப்பினை இனிதெடுத்து இயம்புதல்,

கூட்டத்திற்கு ஏதுவாகும் முறுவற்குறிப்பு மிக்குத் தோன் றாமல் அடக்கி நிற்கும் தலைவியது பெண்மையுணர்வைத் தலைவன் அறிந்துகோடல்,

தணத்தலும், வரைவு நீட்டித்தலும், அலரெழுதலும், தமர் வரைவு மறுத்தலும் பிறவும் ஆகியவற்றான் நேர்ந்த வருத்தத் தைக் கேட்போர் உளங்கொளக் கூறல்,

களவொழுக்கத்தின்கண் நிகழும் நிகழ்ச்சிகட்கு ஏற்பத் தலைவன், தலைவி, தோழி முதலானோர் தம் நிலையினை எடுத்துக் கூறல்,

ஒருவர் கொண்ட ஐயமும் அச்சமும் வருத்தமும் நீங்கத் தம் பேரன்பினையும் பிரியின் ஆற்றாத கேண்மையினையும் சூளுறவொடு கூறித் தெளிவிக்கத் தெளிதல் - இவை ஏழும், ‘மெய் தொட்டுப் பயிறல்’ (கள.11) முதல் ‘களம் சுட்டுக்கிளவி’ (30) ஈறாகக் கூறப்பெறும் தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்றுவகையான் அமையும் பொருள்கள். (தொ.கள. 10 ச.பால.)

தலைமக்களாவார் -

{Entry: H08__320}

பிறரை ஏவிக் கொள்ளும் தொழில் தமக்கு உரியராகிய அரசர் அந்தணர் வணிகர் ஆகிய மக்களும்; அவர்களைப் போலப் பிறரை ஏவிக்கொள்ளும் நிலையினராகிய குறுநில மன்னர் களும், ஐவகை நிலத்திற்கும் உரிய தலைமக்களும் உரிப் பொருள் தலைவராதற்குரியர். (தொ. பொ. 21, 22, 24 நச்.)

முல்லை முதலிய ஐவகை நிலத்திற்கும் உரிய தலைமக்கள் போலப் பிறர்க்கு அடிமையாயுள்ளவரும், அடிமையர் அல்லாக் கம்மியர் போன்ற தொழிலாளர்களும், தனிக்குடி ஏவலர்களும், ஏனைய ஏவல் மரபினரும் ஆகிய கீழோர் நால்வரும் அகத்திணைக்கு உரிமையுடை யவர்கள். (தொ. பொ. 21-24 பாரதி; குழ.)

தலைமகள் -

{Entry: H08__321}

‘தலைவி’ காண்க.

தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -

{Entry: H08__322}

“உடல் துடித்து ஆடி ஆடி மனமுருகி உன் பெயரை ‘நரசிங்கா! வள்ளலே! கண்ணனே! என்றாற் போலச் சொல்லிச்சொல்லி அழைத்து, இவள் பெரிதும் துன்பமுற்று வாடுகின்றாள். இவளை அருளாது விட்டிருக்கும் நீ இவளை என்னதான் செய்யப்போகிறாய்?” என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 2 - 4 - 1)

தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -

{Entry: H08__323}

“நம் தலைவனுடைய மனைவி அவனை நம்மொடு கூட்டி வெறுத்துப் பேசுகிறாள். நாம் அதற்குக் காரணமான செயல் ஒன்றும் செய்திலம். ஆனால் அவள் கூறும் பழியை எல் லோரும் நம்பிவிடுவர். ஆதலால் பாணன் மத்தளத்தை அடிப்பது போலத் தலைவி தன்வயிற்றில் அடித்துக் கொண்டு வருந்தும்படி சிறிது நேரம் அவள் தெருவின் பக்கம் சென்று உலாவி வருவோம்” என்று பரத்தை தன் தோழி யிடம் கூறுதல். (அகநா. 106)

தலைமகள் தூதுவிடுதல் -

{Entry: H08__324}

நாயகி என்னும் நிலையடைந்த நம்மாழ்வார் நாரையைத் தம் நாயகனான திருமாலிடம் தூது போகும்படி கேட்டுக் கொள்வதாக அமைந்த கிளவி.

“அழகிய சிறகுகளைப் பெற்றுள்ள நாரையே! நீயும் உன் சேவலுமாகக் கூடித் திருமாலிடம் சென்று அவர்மீது கொண்ட காதலால் நான் படும் பாட்டைச் சொல்லுக. அவர் அதற்காக உங்களைப் புறக்கணித்தால் கூட ஒன்றும் பழுதில்லை” என்ற கூற்று.

இங்ஙனமே குயில் அன்னம் மகன்றில் கிளி பூவை வாடை நெஞ்சம் என்பனவற்றையும் பராங்குச நாயகி தூது விடு கிறாள்.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 1 - 4 - 1)

தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் -

{Entry: H08__325}

தலைவி காதலால் மயங்கிச் செயலறும் நிலையைக் கூறித் தாய் வருந்துதல்.

“திருமாலே! உன்பால் தீராத காதல் கொண்டு உன் பெருமைகளையே நினைந்து நினைந்து மயல்உறும் என் மகள், நினைவை இழந்து, உன் திருத்துழாய் மாலை வேண் டும் என்று வாய் பிதற்றுகிறாளே. இவள் இப்படித் தவிக்கும் வகை நான் செய்த பாவந்தான் என்னவோ?” என்ற தாய் கூற்று. (திருவாய். 4 - 2 - 1)

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும்.

(தலைமகள்) நிலைமை கூறல் -

{Entry: H08__326}

தலைவி உள்ளத்து நிலைமையைத் தலைவன் தன்னுள் சொல்லிக் கொண்டது.

தோழியிற் கூட்டத்தே, பகற்குறியில் தலைவியைக் கூடி அவளுடைய குலைந்த ஆடைஅணிகளை அவள் கவலை யுறாதபடி தோழி அணிவிக்குமாறே அணிவித்து அவளது பெருவனப்பினைக் கண்டு அவளைப் புகழும் தலைவன், “யான் விரும்பிப் புகழும் புகழுரை கேட்டு இவள் பெருவனப் பினளாகக் காட்சியளிப்பதை நோக்க, இவள் பொய்கையில் தோன்றிய தாமரைப் பூவாகவும் யான் அதனை மலர்விக்கும் கதிரவனாகவும் இருப்பதாக நினைக்கிறேன்” என்றாற் போலத் தன்னுள் கூறிக்கொள்ளுதல்.(த.நெ.வி. பக். 24; பா. 55)

இது தோழியிற் கூட்டம் (பகற்குறி) எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. இதனை ‘உள் மகிழ்ந்துரைத்தல்’ என்றும் கூறுப. (க. கா. பக். 76)

தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (1) -

{Entry: H08__327}

(1) தலைவியொடு சுரத்திடை உடன்போய்த் தான் தலைவி யொடு கொண்ட தொடர்பு ஊரில் உறுதி செய்யப்பட்ட பின் மீண்ட தலைவன் தலைவியொடு தன்மனை வந்தானாக, அவனை ஈன்ற தாய் அவனிடம், “மகனே! மனம் இடிந்து துயர்க்கடலில் மூழ்கும் உன் மனைவியின் தாய்க்கு உன் மனைவியைக் காட்டிப் பிறகு இங்கு வருக!” என்று கூறுதல்.

இது கற்பினுள் ‘உடன் செலவு’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. பக். 46; பா. 134)

தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (2) -

{Entry: H08__328}

உடன்போக்கு நிகழ்த்தித் தலைவியைத் தன்னூரில் வரைந்து கொண்டான் தலைவன். அவனுடைய நற்றாய், அவர்க ளுடைய திருமணக் கோலத்தைத் தலைவியின் நற்றாய்க்கும் சென்று காட்டுமாறு அவனிடம் கூறுதல்.

“நன் மைந்த! நீயும் இவளும் கூடிப் பின் சேய்மைக்கண் வெஞ்சுரம் கடந்து வந்த நாள்முதல், தன் மகளைக் காணாது வருந்திக் கவலைப்படும் இவள் நற்றாய்க்கும் அறம் வழுவாத இவளது மங்கல நாணையும் இத்திருமணக் கோலத்தையும் சென்று காட்டுவாயாக!”

இஃது ‘உடன்போக்கு இடையீடு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 429)

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

{Entry: H08__329}

“தலைவி! தலைவன் நாம் பார்த்தால் நம்மை நோக்கித் தொழுகிறான்; சற்று விலகிச் சென்றால் வருந்தி நிற்கிறான். அவனை இனி அடியொடு விலக்க முடியவில்லை. என்ன செய்யலாம்?

“தலைவி! உன்னைத் தலைவனிடம் நான் நேராக அழைத்துச் செல்லவில்லை. அவனிடம், ‘என் தோள்மேல் கரும்பு எழுதித் தருக’ என்று வேண்டுவது போல யான் சொல்கிறேன் நீ என்னைத் தேடி வந்தவளைப் போல அவனை அடைதற் குரிய குறியிடம் செல். அவன் உன்னடிமீது விழுந்து உன்னை வேண்டுவான்!”

“தோழி! இனிமேல் இதுபோலப் பேசுவதில்லை என்று என்னைத் தொட்டுச் சூளுரைப்பாயாக!”

“தலைவி! இதில் என்ன தவறு? உனது களவொழுக்கை நான் பேசும்போது நீ நாணி நிலம் கிளைத்து என்பக்கல் நிற்பது போலத் தலைவன்பக்கல் நின்று நாணி நிலம் கிளைப்பது தானே நீ செய்ய வேண்டுவது?” (கலி. 63)

என்றாற் போலத் தோழி தலைவியிடம் உரையாடல்.

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

{Entry: H08__330}

“தலைவ! நீ ஏதோ எதிர்பார்த்து வந்திருப்பவனைப் போல எம்மை நிழல்போலத் தொடர்ந்து வருகிறாய்! நீ வேண்டுவது யாது!”

“நங்காய்! கேட்டது கிட்டாவிட்டால் யான் உயிர் விடுதலும் கூடும்.”

“ஐய! இவள் தந்தை பெருவள்ளல்; யாவருக்கும் வேண்டியது வழங்குவான். நீ வேண்டுவது யாது?”

“பேதாய்! பொருட்குறை இல்லை. உன் தலைவி எனக்கு அருள் செய்ய வேண்டும்.”

“அன்னையோ! பெருமகனுக்கு ஒரு பெண் அருளுவது யாதுளது?”

“தலைவி! இத்தலைவன் சிறிதும் நாணம் இல்லாதவன். நாம் எள்ளி நகையாடினும் வருகிறான். கள்வர் போல் நம்மை நோக்குகிறான். தன் விருப்பினை ஈடேற்றியே செல்வான் போலும்! நாம் அவனுக்கு உதவி செய்யவில்லையெனின் மடலேறுவான்போலும்!” (கலி. 61) என்றாற் போல அமைந்த உரையாடல்.

தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -

{Entry: H08__331}

இருவரும் மணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தும் போது, தோழி, அவன் தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தானும் தலைவியும் கடவுளை வேண்டிக் கொண்ட களவுக்காலச் செய்தியைக் கூறுதல்.

“தலைவ! எம் சுற்றத்தார் இந்தத் திருமணத்திற்கு இசைந்து இவளை உனக்கே தருக என்றும், நீயும் தலைவியின்பால் கொண்ட நிலையான காதலை மறவாமல் இவளையே வரைந்து கொள்வாயாக என்றும் யானும் இவளும். இறைவனை இறைஞ்சினோம்” என்ற தோழி கூற்று. (அம்பிகா. 437)

இஃது இல்வாழ்க்கை எனும் தொகுதிக்கண்ணதொருகூற்று.

தலைமகன் -

{Entry: H08__332}

‘தலைவன்’ காண்க.

தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது -

{Entry: H08__333}

“நெஞ்சே! வானத்தில் இருள்பரக்கும். இக்கொடிய மாலை நேரத்தே ஆறலை கள்வர் கொள்ளையிடுதற்கு வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் வெப்பமிக்க கொடிய பாலைவழியில் என்னை அழைத்து வந்து நிறுத்தி நம் தலைவியின் குணத்தை ஈண்டு நினைத்து மீண்டுபோகக் கருதுகிறாயே! இஃது அழகிதா?” என்று தலைவன் நெஞ்சினைக் கழறுதல். (அகநா. 365)

தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -

{Entry: H08__334}

“என் பெருமானுடைய கண்ணும் கையும் காலும் செந்தாமரை போல் எழில் மிக்கன. அவன் திருமேனி நீலமலை போல்வது. அவனுடைய அழகுப் பொலிவு எவ்வுலகத்தவராலும் நினைக் கவும் இயலாத பெருமையுடையது”.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 43)

தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

{Entry: H08__335}

மேகம் கடலை முகந்து மழை பொழியவே மலைச்சிகரங் களினின்று அருவிநீர் பெருகி, மற்றைய புனலொடும் கலந்து கலவைமணம் பல உட்கொண்டு, வையையில் புதுப்புன லாகப் பெருகியது. கடல் ஊரைச் சூழ்ந்தது எனப் பலரும் அரற்ற, வெள்ளநீர் வயற் பரப்புள் புகுந்தது. மலைபோன்ற கரைகளிடையே விரையும் வையைப் புதுப்புனல், மைந்தர் கண்ணி, மகளிர் வளை முதலியவற்றைக் கவர்ந்து பூவும் நுரை யும் போர்ப்ப வருவதன்கண், புனலாட்டு அயர்வாராயினர், மகளிரும் மைந்தரும். புனலாட்டுத் தீர்ந்து உடம்பினில் குளிர் நீக்கி வெப்பமுண்டாக்கத் தலைவி மது ஏந்தினாள். முன்பு நெய்தல்மலர் போன்றிருந்த அவள்கண்கள் மது மாந்தியமை யால் நறவம்பூப் போலச் சிவந்தன. அவளைப் பாராட்டிய வாறே தலைவன் அவளைச் சார்ந்தான்; ஊடலுற்ற அவளைப் பணிந்தான். பணிந்த பின்னரும் ஊடல் தணிந் திலள் அவள்!” என்ற கூற்று. (பரிபா. 7)

தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -

{Entry: H08__336}

“குற்றமற்ற தெருவிலே நாயே இல்லாத மனைமுகப்பிலே, செந்நெல் சோற்றுருண்டை வெள்ளிய நெய் ஆகியவற்றால் ஓரில்லத்தில் இடும் பிச்சையைப் பெற்றுத் திருப்தியோடு உண்டு, பனிக்காலத்துக்குப் பருகுதற்கேற்ற வெந்நீரை உம் கமண்டலத்தில் பெற்றுக்கொண்டு, அறிவ! வாடைக்காலம் எப்பொழுது தொடங்கும் என்பதைக் கூறுக. ஏனெனில் அக்காலத்து எம் தலைவர் வினை முடித்து மீள்வர்” என்று தோழி அறிவரை வினவுதல். (குறுந். 277)

தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது -

{Entry: H08__337}

“கனவே! பாதிரிமலரின் துய்யைப் போன்ற மெல்லிய மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும் நுண்ணிய அணிகலன்களையும் உடைய என் தலைவியைக் கொணர்ந்து கொடுத்தாயைப் போல இனிய உறக்கத்தினின்றும் எழுப்பு கிறாய். தம் துணைவியரைப் பிரிந்தவர்கள் நின்னை இகழார். சிறிது நேரம் தலைவியைக் காணும் வாய்ப்புத் தந்த நீ வாழ்க!” என்றாற் போன்ற தலைவன் கூற்று. (குறுந். 147)

தலைமகன் மறுத்தல் -

{Entry: H08__338}

“மணந்து கோடலே உலக இயல்” என்றுரைத்த தோழிக்குத் தலைவன் மறுத்துரைத்தல்.

“நீ கூறும் உலகியலை யானும் அறிவேன். இவளை நான் வரைந்துகொள்ளப் போவதும் உறுதி. ஆயின், இதுபோது நின் உதவி பெற்றுத் தலைவியுடன் கூடப்பெற்றிலேன் எனில், நான் உயிர் வாழ்தலே இயலாது. ஆதலின் இப்பொழுது அருள் செய்க!” (தஞ்சை. 95) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

{Entry: H08__339}

“தோழி! நம் தலைவன் தன் சொல்லை நம்பி வாழ்பவர்கள் மனநிலையைப் பற்றிக் கவலைப்படுபவன் அல்லன். தளிரை ஒத்த மேனியையும், தொடியை அணிந்த முன்கைகளையும் உடைய நம்மைத் தன் பிரிவினால் அழச்செய்து பிரிதல் அவனுக்கு இயல்பே” (ஐங். 38) என்றாற் போலக் கூறுதல்.

தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -

{Entry: H08__340}

“பாண! நீ பண்பற்றவன். நீ அன்பற்ற சொற்களையும் கடுமை யான சொற்களையும் பேசக் கற்றுள்ளாயே அன்றித் தலை வனைப் பரத்தையரிடமிருந்து மீட்டு எனக்குத் தரும் ஆற்றல் உடையை அல்லை” என்ற தலைவி கூற்று. (ஐங். 138)

தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

{Entry: H08__341}

“பாண! நும் தலைவனைக் கூடி அழகிழந்த மகளிர் என்றா வது தம் பழைய அழகினை மீண்டும் பெற்றுச் சிறந்திருப்ப தனைக் கண்டிருக்கின்றாயா?” என்ற தலைவி கூற்று. (ஐங். 137)

தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -

{Entry: H08__342}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை எதிரேற்று உபசரித்த தோழி தலைவியிடம் சென்று அவன் வருகை பற்றிக் கூறுதலும், அவள் சினம் மிகுந்து உடன்படாமையின், “தலைவன் இனிப்பரத்தையரிடமே விருப்பமுடையவனாய் மனைவழியே வரமாட்டான்; அப்படி வரினும் நம் தலைவி தான் புலவி நீங்கமாட்டாள். இவ்விருவருடைய மன மாறுபாடும். யான் இறந்தால்தான் தீரும்போலும்!” என்று தோழி நொந்து கூறுதல். (நற். 180)

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது -

{Entry: H08__343}

பரத்தையின் பிரிந்த தலைவன் மீண்டு தலைவிபால் வருத லும், அவள் சினக்கவே, தலைவன் தடுமாற, அவனுடைய இளமை முதிர்ந்த காமக்கிழத்தி தலைவி வெகுளாதபடி கூறி உடன்படுத்தத் தொடங்கி, “துறைவனே! பருவம் சென்றபின் அன்றோ, நீ தலைவியை எம்மைப் போலக் கைவிடத் துணியலாம்? நீ ஒழுங்காக ஆராய்ந்து குற்றம் வாராது நடவாயெனின், நின்னை விரும்பியவர்கள் தீயிடைப்பட்ட மலர்போல் வாடிவதங்கிவிடுவர்” என்று கடிந்து கூறி ஊடல் தீர்த்து இருவரையும் கூட்டியது. (நற். 315)

தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -

{Entry: H08__344}

புணர்ச்சிக்கண்ணும் தலைவி ஊடல் கொள்ளுதல்.

தலைவனுடைய புறத்தொழுக்கம் பற்றி மனத்திற் புழுக்கம் கொண்ட தலைவி படுக்கைக்கண் தலைவனொடு வைகி இருவருமாக அதரபானம் பருகியபின்னர், இருவரும் ஒன் றாகக் கலக்கும் கலவி முடியும் நிலையில். இத்தகைய இன்பத்தைத் தனக்கு மாத்திரமே நல்காது பரத்தையர்க்கும் தலைவன் நல்குவதனை நினைந்து அவன்பால் புலவி கொண் டமை.

இஃது ‘உணர்வதோடு உணரா ஊடல்’ என்னும் தொகுதியில் உள்ள கூற்றுக்களுள் ஒன்று; ‘பிறவும்’ என்பதனாற் கொள்ளப்பட்டது. (மா. அகப். 104 உரை)

தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -

{Entry: H08__345}

‘தலைவன் தனக்கு வாயில்நேராத தலைவியது........... சொல் லியது’ - காண்க.

தலைவன் -

{Entry: H08__346}

‘தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன்’ காண்க.

தலைவன் அஞ்சவந்த உரிமைக்கண் கூறியது -

{Entry: H08__347}

தலைவன், தானும் பிறரும் அஞ்சும்படியாகத் தலைவிமாட் டுளதாகிய கற்பாகிய உரிமையிடத்துக் கூறியது. (தொ. பொ. 144 இள, 146 நச்.)

அஃது இல்லறம் நிகழ்த்துமாறு தன்மனத்தால் பலவாறு காணலும், பிறர்க்குத் தான் கொடுத்தலும், கற்புச் சிறத்தலு மாம். (நச்.)

தலைவி இல்லறப்பகுதியை நிகழ்த்துமாறு பலவகையாகக் காணும் தன்மை, உணர்வுடையோன் ஓதிய நூல் விரியுமாறு போல விரியாநின்றது எனவும், இவள் கொடைநலம் வள்ளன்மை பூண்டான் பொருளை ஒத்தது எனவும், இவள் கற்புச்சிறப்புப் பிறர்க்கு அச்சம் செய்தலின் வாளினை ஒத்தது எனவும் தலைவன் அவள் உரிமைகளை வியந்து கூறியது. (நாலடி. 386)

தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

{Entry: H08__348}

வேட்பித்த ஆசிரியனும் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார் கண்ணும், முற்று உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவிலாச் சிறப்பினையுடைய தேவர்கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைத் தான் தொழுது காட்டிய குறிப்பின் கண்ணும் தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

‘பிறர்பிறர்’ என்றார், தேவர் மூவர் என்பது பற்றி. தன்னை யன்றித் தெய்வம் தொழாதாளை இத்தன்மையோரைத் தொழ வேண்டும் என்று தொழுது காட்டினான். (தொ. பொ. 146 நச்.)

துறவிகளாகிய அந்தணர்களிடத்திலும், பெரியோர்களிடத்தி லும் மிக்க சிறப்பினையுடைய பெற்றோர் சுற்றம் முதலி யோரிடத்திலும் நடந்துகொள்ள வேண்டிய முறைமையைக் கூறுமிடத்தும்.

சான்றோர் - ஊர்ப் பெரியோர்கள், துறவாதோர்.

பிறர்பிறர் - மாமன் மாமி பாட்டன் முதலியோர். (பொ. 194 குழ.)

தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

{Entry: H08__349}

களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத்தெழுத்துப் போல வழிகெட ஒழுகு தற்கண் கூறுதல்.

களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்திலெழுதிய எழுத்து வழி கெடுமாறு போல வழிகெடும்படி பிராயச் சித்தம் செய்து ஒழுகுதற்கண் கூறுதல். அது முன்பு போலக் குற்றம் சான்ற பொருளை வழுவமைத்துக் கொள்ளாது, குற்றமென்றே கருதிக் கடிதலாம்.

“மெய்ப்பொருள் உணர்ந்தோரை நினைந்து அவரைச் சார்ந்து அவரிடத்துக் கற்ற பொய்யற்ற நூற்கேள்விகளாலே மனத்தில் மாசற்ற விரதங்களைத் தங்கச் செய்தல்” என்று தலைவன் தோழியிடம் கூறியது. (கலி. 15) (தொ. பொ. 146 நச்.)

தலைவன், களவுக்காலத்துப் பகலினும் மறைவினும் கூடி ஒழுகிய துன்பம் வானத்தெழுதிய எழுத்துப்போல நீங்கத் தகுந்த நேரத்தில், கூடி வாழ்தலைக் கூறுவன்; முன் பகலினும் அச்சத்தொடும் விரைவொடும் கூடியது போலன்றித் தக்க நேரத்தில் அமைதியாகக் கூடுதலைக் கூறுவன். (தொ. பொ. 194 குழந்தை)

தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -

{Entry: H08__350}

அரிய வினை முடித்த தலைமைக் காலத்து விருந்தினரொடு கூட நல்லனவற்றைக் கூறி விருப்பமுறுதற்கண் தலைவன் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

செயற்கரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்திய காலத்தே, தலைவி விருந்தெதிர் கோடலோடே நீராடிக் கோலம் செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும் தலைவன் கூற்று நிகழும்.

‘பரல் நிறைந்த வழியில், உப்புவணிகர் மிக்க களர்நிலத்தில் குடையொடு செல்லும் புதிய மாந்தர்காள்! இதுவரை என் பிரிவால் வருந்திக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த என் காதலி இப்பொழுது நீண்ட கூந்தலை வாரிப் பின்னி அணி கலன்கள் அணிந்து தானே சமையலறைக்குச் சென்று உணவு அடும் நிலை இதற்குமுன் எனக்குக் காணும் வாய்ப்பில்லை. இன்று அஃது எய்தியுள்ளது” என்று தலைவன் மகிழ்ந்து கூறுதல். (நற். 374) (தொ. பொ. 146 நச்.)

தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -

{Entry: H08__351}

தலைவன் தன் மிக்க தலைமைப்பாட்டினான் பொழுதறிந்து வாராமையின் அவன் செய்யக்கூடிய குறிகள் அவனானன்றி இயற்கையாக நிகழ்ந்தவிடத்தே, தலைவியும் தோழியும் இரவுக்குறியிடத்து வந்து அவனைக் காணாது மீண்டு போன பின், அவன் வந்து குறியிடத்தே தலைவியைக் காணாது மீளும்போது,

“நெஞ்சே! அழகியாளாகிய தலைவியை விரும்பி இக் கொடிய வழிகளைக் கடக்கச் செய்து என்னை அல்லற்படுத்து கிறாய். கிட்டுதற்கு எளியள் அல்லாத தலைவியைக் கருதி எனக்குத் தீராத துன்பம் தரும் நீ உன்மார்பகத்து வேல் எய்யப்பட வலியிழந்து வருந்துவாயாக!” (அகநா. 212) என்றாற் போலத் தன் நெஞ்சிற்குக் கூறுதல். (தொ. பொ. 134 நச்.)

தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

{Entry: H08__352}

தலைவி தன் களவுக்காலத் துன்பம் தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக்கண் தலைவன் கூறல். (தொ. பொ. 144 இள.)

திருமணத்தின் பின்னர் மூன்றுநாள் கூட்டமின்மைக்குக் காரணம் என்ன என்று தலைவி மனத்திலிருந்த வருத்தம் தீருமாறு தலைவன் வேதவிதியைத் தலைவிக்கு வகுத்துக் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

“என் தாயும் நின்தாயும் இதற்கு முன் ஒருவரை ஒருவர் அறிந்தவரல்லர்; என் தந்தையும் நின்தந்தையும் இதற்குமுன் உறவினரும் அல்லர்; யானும் நீயும் இதற்குமுன் ஒருவரை ஒருவர் அறிந்தோமல்லோம். செம்மண்நிலத்தில் வீழ்ந்த மழைநீர் மண்ணின் செந்நிறமும் அதன் சுவையும் பிரிக்க இயலாத வகையிற் பெற்றாற்போல, அன்பான் பிணைக்கப் பட்ட நம் இரு நெஞ்சங்களும் பிணைந்தன” (குறுந். 40) என்ற தலைவன் கூற்றில் அவன் காதல் மிகுதி தோன்றக் கூறுதல் பெறப்பட்டது. (இள.)

“வரைந்த காலத்து மூன்றுநாள் கூட்டம் இன்மைக்குக் காரணம் என்?” என்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தம் தீரும்படி, மிக்க வேட்கையொடு கூடியிருந்து வேதம் சொல்லுதலுற்ற பொருளின்கண் தலைவன் விரித்து விளங்கக் கூறல். அது “முதல் நாள் தண்கதிர்ச் செல்வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின்னாள் அங்கியங் கடவுட்கும் அளித்து நான்காம் நாள் அங்கியங்கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண்டிற்று” என்று தலைவன் தலைவிக்கு விளங்கக் கூறல். (நச்.)

வரைந்த பின்னரும் தலைவிவனப்புக் குன்றிக் காட்ட அது பற்றித் தலைவன் தோழியை வினாயவழித் தோழி, “பக்கலேயே இருந்து கருணை செய்யினும், சிறிதளவு முயக்கம் கைநெகிழினும் கண்பசக்கும் தலைவிக்கு ஓரமளிக்கண்ணே துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையின் பிறந்த வேறுபாடன்றோ இது! இதனை நீயே முயங்கி அறிவிக்குமாறன்றி யான் செயற்பாலது யாது?” என்ற கருத்துப்படக் கூற, அது கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறுதல். (நற். 35)

தலைவன் அவ்வகை வினாதல் -

{Entry: H08__353}

தலைவியும் தோழியும் சேர்ந்து இருக்கும் செவ்வி யறிந்து வந்த தலைவன், முன் போலவே, ஊரும் பேரும் கெடுதியும் போன்றவற்றை வினவுதல்.

இது களவியலுள் ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 141)

தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -

{Entry: H08__354}

பிரிந்த தலைவன் தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப் பின்கண் கூற்று நிகழ்த்துதல். (தொ. பொ. 146 நச்.)

“காந்தள் மொட்டு, முல்லைப்பூ, குவளைப்பூ, இவற்றைத் தொடுத்து அழகாகக் கட்டிய பூமாலை போல நறுமணம் கமழும் தலைவியின் உடல் தளிரினும் மெல்லிது; தழுவற்கும் இனிது” என்று தலைவன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பின்கண் கூறுதல். (குறுந். 62) (144 இள.)

“கேளிர் துயரைப் போக்கவும், உறவினர் மகிழ்வாக நுகரவும், பகைவர்களும் நம்மொடு நட்புச் செய்யவும், பொருள் உதவும் என்று கருதி ஈட்டிவந்த பெரும்பொருளான் மகிழ்வோடு உள்ளேன்” (அகநா. 93) எனவும்,

“வானமே! எடுத்த வினையை நன்கு முடித்த தலைமையினை யுடைய சிறப்போடு யான் மீண்டுவந்து தலைவியின் கூந்த லணையில் உறங்கும் வாய்ப்புப் பெற்றுவிட்டேனாதலின், இனி நீ நன்கு மின்னி இடித்து மழை பொழிக!” (குறுந். 270) எனவும்,

“மனமே! தலைவியைப் பிரியும்பொழுது வினைமுடித்த அன்றே மீண்டுவருவதாகக் கூறியுள்ளோம்; அவள் படும் துன்பம் எல்லாம் தீர, இடையன் சூடிய முல்லைப்பூ மணங் கமழும் இக்கார்கால மாலையில், நம் வரவினை நம் இல்லத் திருக்கும் தலைவிக்குப் பல்லி ஒலித்துத் தெரிவிக்குங் கொல்லோ?” (நற். 169) எனவும் மீண்டுவருவோன் மகிழ் வொடு கூறுதல். (நச்.)

தலைவன் அவட்பெற்று மலிந்து கூறல் -

{Entry: H08__355}

அவட்பெற்று மலிதலாவது தலைவன் பகற்குறி இரவுக்குறி இவற்றுக்குத் தோழியின் உடன்பாடு பெற்று மகிழ்ந்து கூறுதல் எனவும், தலைவியைத் தலைவன் இரவுக்குறி பகற்குறி இரண்டன்கண்ணும் பெற்று மகிழ்ந்து கூறுதல் எனவும் இருவகைப் பொருள்படும்.

பகற்குறி இரவுக்குறிகளுக்குத் தோழியின் இசைவு பெற்ற தலைவன், “மடந்தை! உன் நற்பண்பு பலவும் எனக்குப் பயன்படும் வகையில் எனக்கு விரும்பிக் கருணை செய்த நீ, மூங்கில் போன்ற தோள்களையும் நறிய நெற்றியினையும் உடைய தலைவியொடு மெல்ல நடந்து நீ குறித்த இடத்திற்கு வருக!” (ஐங். 175) என்று தோழியிடம் மகிழ்ந்து கூறுதல். (தொ. பொ. 103 நச்.)

தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -

{Entry: H08__356}

தன்னைத் தன் நாட்டின் பூ முதலியவற்றை வினவிய தோழி யிடம், தலைவிநாட்டின் பூ முதலானவை யாவையென வினவுதல். குறிப்பறிந்த தலைவன், தலைவியின் நாட்டைச் சார்ந்தவன் போலவே இரவுக்குறியிடம் வந்து சேரும் நோக்குடன் இவற்றைக் கேட்டறிய விரும்புவான்.

இதனை ‘உட்கொண்டு வினாதல்’ என்னும் திருக்கோவையார். (153)

இது களவியலுள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-

{Entry: H08__357}

“வந்த குற்றம் நினக்கு உள்ளது என்று அழியற்க” எனவும், “எனக்கு உள்ளது என்று அஞ்சற்க” எனவும் சொல்லப்படும் இவ்விருபொருண்மைக்கண்ணும் தலைவன் கூறுதல்.

“செம்மண்நிலத்தில் பெய்த நீர் பிரிக்க இயலாதவகை செந்நிறமும் சுவையும் பெற்றாற் போல, அன்புடை நெஞ்சம் இரண்டும் பிரிப்பு அறப் பிணைந்ததால் ஏற்பட்ட கலப்பு ஆதலின் இது தெய்வத்தான் ஆயிற்று” எனத் தெருட்டுதல். (குறுந். 40) (தொ. பொ. 146 நச்.)

தலைவன் தலைவியை நோக்கி, “வருந்தற்க, அஞ்சற்க” என்று தான் அவளை என்றும் பிரியுமாறு இல்லை என்று கூறிய இரு கருத்தினையும் தவறிப் புறப்பெண்டிர்மாட்டுப் பிரிந்தவன் கூற்று நிகழ்த்துதல். (144 இள.)

“பாண! நடைவண்டி உருட்டும் என் சிறுவனைத் தூக்கிக் கொண்டேன். அவன் வாயினின்று ஒழுகிய எச்சில் யான் பூசி யிருந்த சந்தனத்தைச் சிதைத்தது. அதனோடு என் காதலியைத் தழுவச் சென்றேனாக. அவள் அதனைத் தவறாக உணர்ந்து அஞ்சிய மான்பிணை போல ஒதுங்கி நின்றாள்; யான் புறத்தொழுக்கமுடையேன் என்று தனக்கு இடர் வந்தபோது தலைவி வருந்தாமலும் அஞ்சாமலும் இருத்தல் வேண்டும்” என்று தலைவன் கூறுதல். (194 குழ.)

தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -

{Entry: H08__358}

“உயிர் கட்புலனாகாதது என்று இதுவரை கூறிவந்த மக்கள் பொய்யுரைத்துவிட்டனர். இங்ஙனம் பொய் பேசற்கு அவர்கள் சிறிதும் நாணம் கொள்ளவில்லையே! என் ஆருயிர் காட்சிக்குப் புலனாக இருத்தலை நான் காண்கிறேனே! அஃது அழகாகப் பேசுகிறது; மென்மையாக நடக்கிறது; திரண்ட முன்கால்களையும் மெல்லிய இடையையும் குளிர்ச்சி தரும் கண்களையும் விரும்பத்தக்க மூங்கில் போன்ற பெரிய தோள்களையும் உடையது” என்றாற் போலத் தலைவன் தலைவியை வடிவுஎடுத்துச் செல்லும் தன் உயிராகவே கூறுதல். (இஃது இச்சூத்திரத்துள் ‘பயின்று’ என்றதனாற் கொள்ளப்பட்ட கூற்று. (தொ. பொ. 101. நச்.)

தலைவன் (கிழவோன்) ஆற்றல் -

{Entry: H08__359}

பாங்கி, தான் கொடுத்த கையுறையை ஏற்றுக் கூறிய சொற்கள் பொதுப்பட - தனக்குச் சார்பாகவோ சார்பின்றியோ - இருப்பினும், குறிப்பால் அவை தனக்குக் குறை நேர்வித்தது மகிழ்ச்சியைத் தரும் என்று தலைவன் ஆறுதல் கொள்ளுதல்.

“என் தலைவிக்கு எனது உள்ளக் கிடக்கையைத் தெரிவித்து எங்கள் காதல் சிறக்கச் செய்ய என் கையுறையைத் தலைவிக்குப் பெற்றுச் சென்ற இத்தோழிக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்!’ (அம்பிகா. 133) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதல் -

{Entry: H08__360}

தன் பிரிவுக்காலத்தில் தோழி தலைவியை வருந்தாமல் காத்த திறத்தைத் தலைவன் வினவுதல்.

“பெரும்பாலான நேரம் என்னுடனேயே இருந்து சிறிது பிரிந்தாலும் அப்பிரிவைத் தாங்காது தவிக்கும் தலைவியை யான் பொருள்வயிற் பிரிந்திருந்த பல நாள்களும் யாங்கனம் அமைதியுறுமாறு செய்துவைத்திருந்தாய்?” (அம்பிகா. 327) என்று தலைவன் தோழியை வினாதல்.

இது ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 527 உரை)

தலைவன் இடம்பெற்றுத் தழுவுதற்கண் கூறல் -

{Entry: H08__361}

இஃது இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்வது எனவும், இடந்தலைப் பாட்டின்கண் நிகழ்வது எனவும் இருதிறத்த வாகிய கருத்துக்கள் உள.

பொய் பாராட்டல் காரணமாகத் தலைவியிடம் நெருக்கம் பெற்று அவளைத் தான் தழுவக் கருதிய செய்தியைக் கூறல் (தொ. பொ. 99 இள.) எனவும், மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல் இவ்விரண்டினானும் தலைவியை வசீகரித்த தலைவன் அவள் பார்த்த பார்வையின் உட்கருத்தைத் தன்னிடத்துச் சேர்த்துக்கொண்டு கூறல் (102 நச்.) எனவும் பொருள் கூறுப.

இடம்பெற்றுத் தழுவற்கண் தலைவன், “பெண்ணே! யானை யின் வெள்ளிய தந்தங்களையும் புலித்தோலையும் திறை யாகப் பெறும் வலிமை சான்ற நின் தமையன்மார் பகைவர் களை அம்பு ஒன்றனாலேயே எய்து உயிரைப் போக்குவர். ஆயின், நீயோ யான் இவ்விடத்தைவிட்டுப் போகாதிருக்கு மாறு இரண்டு அம்பினான் எய்து என்னைத் தடுத்துள்ளாய்” (திணைமாலை. 22) என்றாற் போலக் கூறுதல். (நச்.)

தலைவன் இடையூறு கிளத்தற்கண் கூறல் -

{Entry: H08__362}

தலைவன் தலைவியை இடம் பெற்றுத் தழுவியவழி, நாண மும் மடனும் உடைய தலைவி அறிவுநலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள். இதுவரை இல்லாத வகையில் புதிதாக ஆடவன்ஒருவன் மேனி தன் மேனியில் பட்டவழி அவள் அறிவிழத்தலும் பெருமூச்செறிதலும் கூடும். அந்நிலை யில் புலையன் தொட்ட தீம்பால் விருப்பும் வெறுப்பும் ஒரே காலத்தில் பயப்பது போலத் தலைவி காதலும் நாணமும் ஒருசேர அமையக் கண்களைக் கைகளான் பொத்திக்கொள் ளுதல், ஒரு கொம்பையோ கொடியையோ பற்றுக்கோடாகச் சார்தல் முதலியன செய்தாளாகத் தலைவன், தலைவி நிகழ்த்துவன தான் கருதும் ஊற்றின்பத்திற்கு இடையூறு ஆகுமாற்றைக் கூறுதல்.

இஃது இயற்கைப்புணர்ச்சிக்கு முன் நிகழும் எனவும் இடந் தலைப்பாட்டுக்கு முன் நிகழும் எனவும் இருதிறக் கருத்துக்கள் உள.

இந்நிலையில் தலைவன் தலைவியை நோக்கி, “யான் நின்னைத் தழுவிக்கொண்டு சில சொற்கள் பேசவும், அவற்றிற்கு மறு மொழி தாராமல் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு நாணத்தான் நின் கண்கள் இரண்டனையும் நின் கைகளால் பொத்திக் கொண்டுள்ளாய். எனக்குக் காமம் எல்லை கடந்து போயின். அதனைத் தடுத்து நிறுத்துதல் அத்துணை எளிய செயலாகாது. கடை சிவந்த நின் கண்மாத்திரமா என்னைத் துன்புறுத்து கின்றன? தொய்யிலாகக் கரும்பு எழுதப்பட்ட நின் தோள் களும் எனக்குத் துன்பம் தருகின்றன. கண்களைப் புதைத்தது போலவே. தோள்களையும் புதைத்துக்கொள்” (நற். 39) என்றல் போலத் தான் கருதும் புணர்ச்சிக்கு இடையூறான வற்றைக் கூறுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் இரவுக்குறிக்கண் பரிவுற்றுக் கூறல் -

{Entry: H08__363}

தலைவன் இரவுக்குறி தாமதமாயினவழி வருந்திக் கூறுதல்.

“கடலும் ஒலி அடங்கிவிட்டது. சாரற் காற்று வீசும் கடற்கரைச் சோலையும் பொலிவிழந்து விட்டது. கூகை தன் குராலோடு (பேடையோடு) ஊரில் உள்ள நாற்சந்திகளில் அச்சம் உண்டாக ஒலிக்கிறது. பேய்களும் வெளிப்பட்டு உலவிநிற்கும். ஒருவரை ஒருவர் அறிதற்கு இயலாத வகையில் இருள் செறிந் துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தலைவியைத் தழுவக் கருதி, மீன்களும் உறங்கும் நேரத்திலும் யான் உறங்காது தடு மாறுகின்றேன். ஆதலின், எனது நிலை யாதாய் முடியுமோ?” (நற். 319) எனவும்,

“மழையின் வருகையை அறிந்து மயில்கள் ஆடும் பக்கமலை களை அடுத்த நல்லூரிலுள்ள தலைவி எனக்குக் கருணை செய்ய விரும்பாவிடினும், யான் அவளையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டு இருப்பதால் உறக்கம் என்பதனையே மறந்துவிட்டேன்” (ஐங். 298) எனவும் பலவாறு இரவுக்குறி இடையீட்டில் தலைவன் புலம்பிக் கூறுதல். (தொ. பொ. 103 நச்.)

தலைவன் (இறையோன்) இருட்குறி வேண்டல் -

{Entry: H08__364}

தலைவன் தோழியிடம் மனைப்புறத்தில் தலைவியுடன் இரவில் கூடும் குறியிடம் கூறுமாறு வேண்டல்.

“உங்கள் சீறூர்க்கு இன்றிரவு யான் விருந்தினனாக வர லாமா?” (தஞ்சை. கோ. 163) என்றாற் போல வினவித் தலைவன் இரவுக்குறி வேண்டல்.

களவியலுள் இஃது ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -

{Entry: H08__365}

பகற்குறியிலோ இரவுக்குறியிலோ தலைவி வருதற்குத் தவறியவழித் தலைவன் தோழியை நோக்கிக் கூறுதல்.

“மழையின் வருகையை அறிந்து மயில்கள் ஆடும் மலையிடை அமைந்த நல்லூரிலுள்ள தலைவி என் வருகையை அறிந்த அளவில் கூடுதற்கு மகிழ்ந்து வரவேண்டியவள். அவளுக்கு என்பால் அருளில்லாது போயிற்று எனினும், யான் ஒரு போதும் மறவாது அவள் நினைப்பாகவே உள்ளேன்” (ஐங். 298) என்பது போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 105 இள., 103 நச்.)

தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -

{Entry: H08__366}

பகற்குறியிலோ இரவுக்குறியிலோ தலைவியைத் தான் சந்திக்க வாய்ப்பில்லாதவழித் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுதல்.

“நெஞ்சே! நம் காதலி மிக நல்லள் என்பதனையே நீ நினைந் திருக்கிறாயன்றி, அவள் நமக்குக் கிட்டுதற்கு அரியள் என்பதனை அறிந்தாயல்லை. கையில் செல்வமில்லாதவன் இன்பநுகர்ச்சியை விரும்புதல் நிறைவேறாதது போல, நின் நினைப்பும் நிறைவேறுவதாக இல்லை” (குறுந். 120) என்றாற் போன்ற கூற்று. (தொ. பொ. 105 இள.)

தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -

{Entry: H08__367}

பகற்குறியிலோ இரவுக்குறியிலோ தலைவன் தலைவியைக் காணப்பெறாமல் நேரம் வீணேகழியும்போது கூறுதல்.

“முள் போன்ற விழுந்தெழுந்த கூரிய பற்களையும், அமுதம் ஊறும் செவ்வாயினையும், சந்தனப் புகையின் மணம் கமழும் கருமணல் போன்ற கூந்தலையும், பெரிய முகத்திற்குப் பொருந்திய குளிர்ந்த கண்களையும் உடைய தலைவியின் புன்முறுவலையும் செருக்கிய பார்வையையும் நினைத்து மனக்காட்சிக்குக் கொண்டுவந்து மகிழ்வதுதான் இன்று நிகழும்போலும்!” (குறுந். 286) என்று தன்னுள் கூறிக்கொள் ளும் கூற்று. (தொ. பொ. 105 இள.)

(இப்பாடல், இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே, “இவள்கண்ணது இவன் வேட்கை” என்று தோழி குறிப்பான் உணர அவன் கூறிய கூற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்து.) (தொ. பொ. 102)

பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடு சென்று இரங்கியது என்ற துறைக்கு எடுத்துக்காட்டாக இக்குறுந்தொகை 286ஆம் பாடலை நம்பி அகப்பொருள் உரை கொள்ளும். (சூ. 156)

தலைவன் இல்லத்து அழுங்கல் -

{Entry: H08__368}

தலைவியின் வருத்த மிகுதியைக் கண்ட தலைவன் தான் செல்வதைத் தவிர்த்து மனைக்கண்ணேயே தங்கிவிடுதல்.

“இவளை அன்புடன் வழிபட்டு மாலை சூட்டித் தொய்யில் எழுதித் தழுவி மகிழ்ந்திருக்கும்வேளையில் இவள் என் பிரிவைக் குறிப்பால் அறிந்து அழுது கண்சிவந்தாள்; பசலை யும் பரவிற்று. இவளை விட்டுப் பிரியின் இவள் உயிருக்கே ஊறு நேரும். ஆகவே, யான் பிரிந்து செல்லேன்” என்று தலைவன் தன் மனத்துள் எண்ணிச் செல்லாது அழுங்குதல். (அம்பிகா. 548)

இது ‘பொருள்வயிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -

{Entry: H08__369}

“கண்ணன்மீது காதல் கொண்டதன் விளைவான நோயால் சோர்ந்து கிடக்கும் என்னிடம் பலபடப் பேசி ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர்? தோழிமீர்! பெண்ணின் வருத்தமறியாத அவனை அழைத்து வந்து என்னுடன் கூட்ட இயலாது போனால், அவன் உடுத்துக் களைந்த பீதாம்பரத்தையாவது கொணர்ந்து என்மீது அதன் காற்றுப்பட விசிறி என் தாபத்தைத் தணியுங்கள்” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (நாச்சி. திரு. 13 - 1)

தலைவன் உட்கோள் சாற்றல் -

{Entry: H08__370}

தலைவியும் தோழியும் உடன்இருக்கையில் தலைவன் வந்து தன்குறையைக் கூறுதல்.

“தண்மை மிக்கவர்களே! உங்களுக்காக நான் எதையும் செய்வேன்; குற்றேவலும் புரிவேன்; வானத்துப் பொருளைக் கேட்பினும் கொணர்ந்து அளிப்பேன். நீங்கள் இருவீரும் என்பால் அருள்கூர்தல் வேண்டும்.” (தஞ்சை. கோ. 81) என்றல் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் பாங்கியிற் கூட்டம் என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

{Entry: H08__371}

தலைவி உடன்போக வேண்டும் என்று நினைத்தவழியும் மேற்சொல்லப்பட்டனவற்றிலும் மடமைப்பட வந்த தோழி மாட்டுத் தலைவன் கூற்று நிகழ்த்துதல்.

“தலைவி என்னொடு வரின், மெல்லிய பொருள்களிலேயே நடந்து பழகிய தாமரை போன்ற அவளுடைய அடிகள் பாலைவனப் பருக்கைக் கற்களில் படும்போது தாமரையின் அகவிதழ்கள் சாதிலிங்கம் தோய்த்தாற் போலக் கறுத்து விடுமே” (கலி. 13) என்றும்,

“நம்மிடம் இரப்பவர்க்கு ஈயாமலிருப்பது இழிவாகும் என்று கருதித் தலைவியைப் பிரிந்து நீர் தேடக் கருதும் பொருள் உண்மையிற் சிறந்த பொருளா?” (கலி. 21) என்று தோழி வினவியவழி, “இன்பத்தை விரும்பாமல் திறம்படச் செயற் படுதலை விரும்புவோனே தன் உறவினர்துயர்களைத் துடைத்து அவரைத் தாங்கும் தூண்” (குறள் 615) என்று தலைவன் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

“நீ களவில் தேற்றிய தெளிவகப்படுத்தலும் தீராத் தேற்றமும் பொய்யாம். அவை பொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க” என்று தன் அறியாமை தோன்றத் தோழி கூறுமிடத்துத் தலைவன்கூற்று நிகழும்.

உடன்கொண்டு போதல் முறைமையன்று என்று அறியாமல் கூறலின் ‘மடம்பட’ என்றார். செய்கைகளாவன: பிரியக் கருதிய தலைவன் தான் கொண்டுபோகும் வில்நாணினைத் தெறித்துப் பார்த்தவழி அவன்பிரிவு கருதித் தலைவியின் ஒளி பொருந்திய முகத்தில் பசலை படர்தலும், அவன் அம்பு களைப் பொறுக்கிச் சேர்த்தவழி அவன்பிரிவு கருதி வருந்திய தால் அவள்கண்களில் நீர் நில்லாமல் சொரிதலும் பிறவுமாம். (கலி. 7)

“தாமரைப் பொய்கையுள் நீர் நீத்தவழித் தாமரை வாடி வதங்குவது போல இவள்வருந்தியிருப்பாள்அல்லள்; நீ பிரிந்த அன்றே இவள் உயிர் போம்” (கலி. 5) என்று கூறிய தோழி “தலைவியையும் உடன்கொண்டு சேர்மின்” என்று கூறியது கேட்டுத் தலைவன், “இவளை உடன்கொண்டு போதல் எவ்வாற்றானும் முறைமையன்று” என்று, “என் நெஞ்சத்தில் இடம்பெற்ற தலைவியை நினைத்தால் எனக்கு வருத்தமாகவுள்ளது. அவள் யான் பொருள்வயின் பிரியும் போது தானும் உடன்வருவதாகக் கூறினாள். பாலைநிலத்தில் செந்நாய் நீர்வேட்கையால் தோண்டி உண்டு மீதியிருக்கும் நீரில் காட்டுமல்லிகைப்பூ விழுந்து அழுகிக் கலந்து கிடக்கும். அந்நீரை நீர்வேட்கையால் குடிக்க நேரிடும். அத்தகைய துன்ப நிலைக்கு இவள் என்னுடன் வருகிறேன் என்கிறாளே!” (குறுந். 56) எனத் தோழி கேட்குமாறும்,

“நம்மொடு, கடுங்காற்றடிப்பதும் முசுக்கூட்டங்கள் மிக்கிருப் பதும் ஆகிய காட்டுவழியே கொடிய வேனிற்காலத்தில் மராமரத்து நிழலில் தங்கி வழிநடந்து வருவதாகத் தலைவி கூறுவது எனக்கு அவளது மடம் காரணமாக நகையையே பயக்கிறது” (அகநா. 121) என்று நெஞ்சிடமும் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -

{Entry: H08__372}

பாங்கி தன்குறையை நிறைவேற்றாததால் வருந்தி மடலேறுத லே வழியெனத் துணிந்த தலைவன் அதனை உலகின்மேல் வைத்துக் கூறுதல்.

“தான் கொண்ட காதல் நிறைவேறாவிட்டால், காதல் கொண்டவன் மடலேறுவதும், எருக்கம்பூ அணிந்து தெரு வில் நின்று தான் காதலித்தவளைப் படத்தில் எழுதிக் கையில் கொள்வதும், பெயர் சொல்வதும் போன்ற செயல்களைச் செய்யவும் துணிவான்!” (கோவை. 74) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 145)

தலைவன் உள்ளது உரைத்தல் -

{Entry: H08__373}

தலைவன் தனக்கு நேர்ந்த காமநோயைத் தோழனுக்குக் கூறுதல்.

“என்னுயிர்த் தோழ! ஒரு பெண்ணணங்கு தந்த காமநோயால் வருந்துகின்றேன். இந்நோயைத் தந்து என்னை வருத்தும் அவளே இந்நோய்க்கு மருந்தும் ஆவாள். இது தவிர வேறு மருந்தும் இல்லை” என்ற தலைவன் கூற்று. (குறள். 1102)

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

{Entry: H08__374}

தலைவற்குச் சாந்து அழிவேரும் குறி பெற்றார் கூந்தல் துகளும் உள்ளமையால், அவனைக் கூடுதல் அருமை யினானே, ஊடல் மிகுத்த தலைவியை, பிறபிற பெண்டிர் ஏதுவாகத் தலைவன் ஊடல் உணர்த்துமிடத்துக் கூறுதல்; என்றது, உலகத்துத் தலைவரொடு கூடிய தலைவியர் மனையறத்து இவ்வாறு ஒழுகுவர் என அவரொழுக்கம் காட்டி அறத்துறைப்படுத்தலாம்.

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் வாயில் பெறாது ஆற்றாமை வாயிலாகப் புக்குத் தலைவியை நயப்பித்தல் காரணமாக, “தெய்வ மகளிர் பொய்தல் அயர்வதாக ஒரு கனாக் கண்டேன். அஃது உண்மையாகும்படி வேனிற்பருவம் வந்துவிட்டது. குயில்கள் கூவுகின்றன. அவை ‘கூடியவர் பிரியாதீர்! பிரிந்தவர் விரைந்துவந்து கூடுமின்!’ என்று இசைக்கின்றன. இளவேனிலில் காமனுக்கு விழாக் கொண் டாட மதுரை நகரத்து மகளிரும் மைந்தரும் சோலையில் கூடி விளையாடப்போகின்றனர்” (கலி. 92) என்று கூறித் தலைவி யது ஊடலைப் போக்குதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -

{Entry: H08__375}

“நம்மிடம் தவறு இல்லையாயினும், தவறு நம்பால் உளதாக எண்ணி நம் காதலி ஊடி அகன்றாலும், அதன் முடிவில் மிகப் பெரியதோர் இன்பம் உண்டு” என்று தலைவன் எண்ணியது. (குறள் 1325)

தலைவன் ஊடலை விரும்பிக் கூறுதல் -

{Entry: H08__376}

“இனிப் புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருத லால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின், கண்ணேயும் ஒரு துன்பம் உண்டு” எனவும், (ஊடுதல் கூடற்கண் விரை விக்கும் என்பது குறிப்பு) (குறள். 1307)

“இவள் நம்மோடு ஊடுவாளாக! அங்ஙனம் அவள் ஊடி நிற்றற்கும் அதனை உணர்த்துதற்பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டும்” எனவும் (குறள். 1329) நிகழும் தலைவன் கூற்று.

இது, சூத்திரத்துள் ‘பண்ணமை பகுதி’யுள் அடங்குவதொரு கூற்று. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் ஊர் வினாதல் -

{Entry: H08__377}

தோழியை இரந்து பின்னிற்றற்கு முடிவு செய்த தலைவன், தலைவியும் தோழியும் உடனிருந்த இடத்தோ தோழி தனித்து நின்ற இடத்தோ வந்து, “இவன் வினவுவது வேறோர் உட்கருத்துடையது போலும்!” என்று தோழி கருதுமாறு, “வில்போன்ற புருவத்தை அடுத்த கண்களால் கருணையொடு பார்க்கும் மகளிரே! இக்கல் செறிந்த வழியில் வந்தமையால் கால்கள் நோகின்றன. கதிரவன் வெப்பம் வாட்டுகிறது. இதுவோ நுமது ஊர்?” என்றாற்போல வினவுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன், ஊரும் பிறவும் வினாதல் -

{Entry: H08__378}

“நீண்ட தோள்களையுடைய மகளிரே! அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பகுதியில், கன்றுகள் கட்டப்பட்ட பலாமரத்து அடியின்கண் வேரில் தொங்கும் பலாப்பழத்தினைக் கன்றி னையுடைய செந்நிறப்பசு உண்டு குறுங்காட்டில் நீர் பருகும் இயற்கை வளம் மிக்க உங்கள் சிறுகுடியின் பெயர் யாது என்று வினவவும், விடை கூற மறுக்கின்றீர். இத்தினைப் புனங்காவல் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா என்பதையாவது கூறுமின்” (நற். 213) என்றாற் போல, தோழியை இரந்து பின்னிற்றற்கு முடிவு செய்த தலைவன், தோழியும் தலைவியும் சேர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து, “இவன் வினவுவது வேறோர் உட்கருத்தையுடையது போலும்” என்று தோழி கருதுமாறு அவர்களிடம் ஊரும் பிறவும் வினவுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -

{Entry: H08__379}

திருமணத்தின்பின் ஒழியாத மகிழ்ச்சி பல்வேறு வகையான நுகர்ச்சிக்கண் புதிதாக வந்த காலத்துத் தலைவன் கூறுதல்.

“எருக்கம்பூவையும் ஆவிரம்பூவையும் சூடி மடலூரும் இந்த மடவோன் இறந்துவிடுவானோ’ என்று மற்ற பெண்டிர் இரங்கினும், தான் இரங்காள் இவள். ஊர்ப் பொதுவிடத்து மடலேறி இவள் நலத்தை யான் பாடினும் இவள் அறியாள். இனி, ‘வரைபாய்ந்து இவளைப் பெறுவல்’ என்று இடியின் வெப்பத்தினும் மிக்க காமக்காய்ச்சலால் யான் பட்ட துயரை நோக்கி இத்தலைவியை எனக்கு வரைந்துகோடற்குத் தந்த நல்வினையை யான் பலபடியாகப் பாராட்டுகிறேன்” என்ற தலைவன் கூற்று (குணநாற்பது), அவனுக்குத் திருமணத்தால் மகிழ்ச்சி மிக்க செய்தியை அறிவுறுத்துகிறது.

(தொ. பொ. 144 இள.)

திருமணத்தின் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பல்வேறு வகைய வாகிய நுகர்ச்சிக்கண் புதிதாக வந்த காலத்தே தலைவன் கூறுதல்.

“பொருள்களை உண்மையாக உணர்ந்த இன்பத்தை அறியுந் தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க உணராத அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற்போலும், இச் சேயிழைமாட்டுச் செறியுந்தோறும் தலைத்தலைச் சிறப்பப் பெறுகின்ற காமத்தை முன்னர் அறியப்பெற்றிலேம்” (குறள் 1110) என்று தலைவன் கூறுதல். (146 நச்.)

தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -

{Entry: H08__380}

பெண்டிரும் மக்களும் அல்லாத வாயில்களாயினார் எதிர் கூறும் கூற்றும் தலைவன்மாட்டு நிகழும்.

இவையெல்லாம் காமப்பொருளாகத் தோன்றா; அவர் செயல் பொருளாகத் தோன்றும். (தொ. பொ. 144 இள.)

சிறந்த மொழியை ஒழிந்துநின்ற வாயில்கட்கு எதிரே தலைவன் கூறல். அவர்கள் தோழி நீங்கலான பாணன் முதலாயினார்.

“பாண! தெருவில் விளையாடிய சிறுவனை யான் தூக்கிக் கொள்ள, அவன் வாயினின்று ஒழுகிய எச்சில் யான் பூசிய சந்தனத்தை அழிக்க, அதனொடு நான் தலைவிபால் சென்றே னாக, அதனை அவள் ஏதோ என் புறத்தொழுக்கத்தால் சந்தனம் அழிந்ததாகக் கருதி அஞ்சி நிற்கும் பெண்மான் போல மருண்டு, ‘இனி நீவிர் எனக்கு என்ன உறவு?” என விலகி நின்ற செய்தியை இப்பொழுது நினைப்பினும் நகை வரு கின்றது!’ (நற். 250) என்றாற் போல (ஏனை வாயில்களிடம்) தலைவன் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

{Entry: H08__381}

களவொழுக்கத்தில் கூட்டத்திற்கேற்பட்ட இடையூறுகளை எண்ணித் தன் சுழலுதலையுடைய உள்ளத்தொடு வினவிய போது தலைவன் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

கற்பு ஒழுக்கத்திலும், களவுக் காலத்து நிகழ்ந்த அருமையைத் தனித்துச் சுழன்ற உள்ளத்தோடு உசாவிய இடத்துத் தலைவன் கூறுதல். (144 இள.)

“தலைவி, தாய்ப்பசுவைக் காண வேண்டும் என்ற விருப்பம் கொண்ட கன்றை ஒத்தவள்; தழுவுவதில் விரைவுடையவள்; விருப்பம் தரும் வனப்பினள்; குவிந்த மெல்லிய கொங்கையள்; நீண்ட கூந்தலள்.” (குறுந். 132) என்று தலைவியின் களவுக் கால நிலையைத் தலைவன் பாங்கனிடம் கூறியதைக் கற்புக் காலத்து நினைத்தல். (நச்.)

களவொழுக்கத்தில் கூட்டத்திற்கேற்பட்ட இடையூறுகளை எண்ணித் தலைவி மனச்சுழற்சியொடு வினவியபோது - அஃதாவது ‘நும்மைப் பார்க்கவும் தொடவும்கூடப் பெரு நாண் அடைந்தேனே, அதன் காரணம் யாது?” என்று தலைவி வினவியபோது - தலைவன் “பனிநீர் இரவில் தொட உடல் நடுக்குறும்; தொடத்தொடத் குளிர் அகன்று இன்பம் தருவது போல, முதலில் அவ்வாறிருந்து பழகப்பழக நாண் அகன்றது” என்றல். (பொ. 194 குழ.)

தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -

{Entry: H08__382}

“என்னொடு பின்னிய நட்பினையுடைய தலைவ! நீ முன் பெல்லாம் இவ்வாறு பொலிவிழந்து காணப்படுவாய் அல்லை. நின் மனத்தை வருத்தும் துயரம் ஒன்று இருப்பதாக அறிகிறேன். புதையிருள் இரியல் போகப் பொன்தாழ் அருவி உதயம் என்னும் மணிவரை உச்சியில்நின்று உலகு துயில் பெயர்த்த முளை இளஞாயிற்றின் எழில் வனப்பு அழித்த நின் திருமுகத்தில் இன்று வாட்டம் காணப்படுவதன் காரணம் யாது?” என்று பாங்கன் தலைவனுடைய கலக்கம் பற்றி வினவுதல்.

இச்சூத்திரத்துள் ‘கலங்கலும்’ என்றதனால் அக்கலக்கத்தால் நிகழ்வன வெல்லாம் கொள்ளப்படும். அவற்றுள் ஒன்று இக் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் (கிழவோன்) கழற்று எதிர்மறுத்தல் -

{Entry: H08__383}

தலைவன் தன்பாங்கன் இடித்துரைத்ததை எதிர்மறுத் துரைத்தல்.

“தோழ! இவையாவும் வெறுமையான வாய்வீரமே! என் உயிரையே போல்வாளாம் அவள் பேரழகை நீ பார்த்திலை; பார்த்திருப்பின், இவ்வாறு கூறமாட்டாய்” (கோவை. 23) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

தலைவன் களவிலும் ஊர்தியில் வருதல் -

{Entry: H08__384}

தலைவன் தலைவியிருக்கும் இடத்தினின்று தொலைவிலிருப் பதால் அவளைக் காண வருவதற்குத் தேர் யானை சிவிகை அத்திரி இவற்றை ஊர்தியாகப் பயன்படுத்தி வருவான். (தொ. பொ. 159 குழ.)

தலைவன், கற்பில் ஊடியது -

{Entry: H08__385}

“‘எம்பால் தீங்கு இல்லை’ என்று யாம் தெளிவுறுத்தவும், அவ்வுரையைக் கைகடந்து, சிறிதும் எம்மிடத்துத் துனித்த நிலையினின்று மீட்சியில்லை யாயின்.....................” (கலி. 81) என்ற தலைவன் கூற்று, அவன் கற்புக்காலத்தில் ஊடுதல். (தொ. பொ. 156 நச்.)

தலைவன், கற்பிற் புலந்தது -

{Entry: H08__386}

“எவ்வி என்ற வள்ளலை இழந்தமையான் வறுமையுற்ற யாழ்ப்பாணர்கள்தம் பூச்சூடப்பெறாத பொலிவிழந்த வறுந்தலையைப் போல, நெஞ்சே, நீ பொலிவிழந்து வருந்துக! வருந்திப் பயன் பெறுவது யாது? காட்டுமல்லிகை மணம் கமழும் கூந்தலை யுடையாளாகிய அவள் (-தலைவி) நமக்கு எவ்வுறவினள்?” (குறுந். 19) என்ற தலைவன் கூற்று, அவன் கற்பிற் புலந்தமை. (தொ. பொ. 156 நச்.)

தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -

{Entry: H08__387}

காமக்கிழத்தியும் மனையாளும் என்று சொல்லும் இருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றின் எதிர் தலைவன் கூற்று நிகழும்.

இவ்விருவரும் இல்லுறை மகளிர் ஆதலின் தலைவன்மாட்டு நிகழுமவை இருவருக்கும் ஒக்கும். அஃதாவது, “வழிவந்தவாறு என்னை?” எனவும், “வருத்தமுற்றீர்!” எனவும் இந்நிகரன பல கூறல்.

“நெருப்பு எரிவதுபோன்ற வெப்பமுடைய வழி நீண்டு அரிதாக இருப்பினும், மான் நோக்கியாகிய உன்னை நினைந்தவாறே, உன்னைத் தழுவ விரும்பிய நெஞ்சத்தொடு, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரினை இயக்கி வந்தமையான், வழியை எளிதாகக் கடந்து வந்துவிட்டேன்!” (ஐங். 360) என்று தலைவன் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

இற்பரத்தை, தலைவி என்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும் தலைவன் கூற்று நிகழ்த்தும். அவை “அருஞ்சுரத்து வருத்த முற்றீரே” எனவும், “எம்மை மறந்தீரே” எனவும் கூறுவனவும், பிறவும் ஆம்.

“‘உற்சாகம் செலுத்த எடுத்த காரியத்தை முடிக்கும் ஆர்வத் துடன் புறப்பட்டு, ‘நின்னை நினையாது கழியும் நாள் எனக்கு வீழ்நாள்’ என்று கூறிச் சென்றதை மறந்துவிட்டீர்போலும்!’ என்று வருத்தத்தொடு வினவும் தலைவியே! கொடிய காட்டுவழியிலே, பிறர் ‘திரும்பி வந்துவிட்டான்’ என்று இகழாதவாறு பொருள் தேடி வரவேண்டும் என்ற விருப்பத் தான் சென்று தங்கியபோது உடம்புதான் வேற்று நாட்டில் இருந்ததே ஒழிய, என் நெஞ்சம் நின்னிடத்தில் தான் இருந்தது” (அகநா. 29) என்று, “மறந்தீர்போலும்” என்றதற்குத் தலைவன் மறுமொழி கூறுதல்.

“மராமரத்தினது கிளையைத் தொட்டுப் பெருகிய வெள்ளம் கையான் இறைத்து உண்ணும் அளவிற்குக் குறைந்தது போல், என் காமம் இங்கு வந்த அளவில் குறையும்படி நின்னையே நினைத்து, நின்னையே பெரிதும் கருதி இவ்வுலகத்தின் தலைவன்தலைவியரிடம் உள்ள பாசம் இப்படி இருக்கிறதே என்று வியந்தே, வேற்றிடத்தில் காலம் கழித்தேன்” (குறுந். 99) எனத் தலைவியைப் பிரிவிடை நினைத்தவாற்றைத் தலைவன் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -

{Entry: H08__388}

பொருளினும் காமம் வலியுடைத்து என்று உட்கொண்ட வழி, “இத்தலைவியை ஒருநாள் பிரிந்து செயற்படுதற்கு ஊதியமாக இவ்வுலகும் தேவருலகுமே கிட்டுவ ஆயினும், அவை தலைவிமாட்டு ஒருநாள் நுகரும் இன்பத்திற்கு ஒப்பு ஆகா” (குறுந். 101) என்று தலைவன் பொருளினும் காமம் வலியுடைத்தாமாற்றைக் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

காமம் சிறத்தலின், ஆற்றாமை வாயிலாகச் சென்று தலைவன் வலிந்து புக்குத் தலைவியை நெருங்கிக் கூடுமிடத்து, “என் கூந்தலைத் தொட இவனுக்கு என்ன உரிமை உளது? மனைவியை உண்மையில் விரும்பாமல் ஊரார் தன்னை நல்லவன் என்று நம்புதற்குச் செய்யும் பொய்ச்செயல் இது!” என்று தலைவி கூற, “உடலும் உயிரும் ஒன்றாய்த் தலை இரண்டாகிய பறவையின் தலைகள் இரண்டனுள் ஒன்று மற்றொன்றொடு போரிடுவது போல, நீ இக்கொடுமைகளைக் கூறிப் புலந்தால் பயன் என்? என் அரிய உயிர் நிலைநிற்கும் வழியைச் சொல்” (கலி. 89) என்று தலைவன் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன் கிள்ளையை வாழ்த்தியது -

{Entry: H08__389}

புனங்காவலுக்குத் தலைவி வாராவிடின், தலைவன் அவளைக் கண்டு காமுற்றுக் கூடுதல் நிகழ்ந்திராது ஆதலின், தலைவியைப் புனங்காவல் செய்யுமாறு தினைக்கதிர்களைக் கொய்து சென்ற கிளிகளை அவன் வாழ்த்தியமை.

“ஐம்பாலாகப் பகுத்த கூந்தலையுடைய இக்குறிஞ்சிநிலப் பெண் இத்தினைப்புனத்தைக் காவல் செய்யுமாறு, தினைக் கதிர்களைக் கொய்து செல்லும் கிளிகள் வாய்ப்பினை யுண்டாக்கிவிட்டமையான், இக்கிளிகள் எல்லாம் வெள்ளம் என்னும் பேரெண் அளவிற்றாகிய ஊழிக்காலத்தைக் கடந்து அதன்பின்னரும் வாழ்வனவாகுக!” (ஐங். 281) என்று தலைவன் வாழ்த்தியமை.

இஃது இச்சூத்திரத்துள் ‘சொல்லிய’ என்றதனாற் கொள்ளப் பட்ட ஒரு கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் குறி பிழைத்தவழி ஊடியது -

{Entry: H08__390}

“நெஞ்சே! முதுமையான் சிறகுகள் உதிரப்பெற்ற கீழைக் கடற்கரை நாரை மேலைக் கடலின் அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறுதல்பொருட்டுத் தலையை மேலே எடுத்தாற்போல, சேய்மையிலுள்ளவளும் பெறற்கு அரியவளுமாகிய தலைவியை நீ பெறுதற்கு நினைந்தாய். ஆதலின், நீ வருத்தத்தையுடையாய்; துன்பமுறும் தீவினை யுடையாய்!” (குறுந். 128) என்று அல்ல குறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சோடு ஊடியவாறு. (தொ. பொ. 156 நச்.)

தலைவன் குறி பிழைத்துழிப் புலந்தது -

{Entry: H08__391}

“தலைவ! நீ இவளைக் கலந்தமையான் விளைந்த காமநோய் இவளது ஒழுக்கத்தை மிகுதிப்படுத்துவதால் அது கண்டு யானும் கண் துயிலேன் ஆயினேன்; என்னிடத்தே நீயும் வெறுத்தாயும் ஆயினை. நின் மலை எதிர்ஒலிப்பது போல, நீ கூறுவனவற்றையே கூறுமவள் இவள். இவளது நோயினை, இவள் ஆற்றும்படியாக ஒரு பொய்ம்மொழி கூறியாயினும் வெல்வாய். நீ உரைத்ததே இவட்கு உரையாம்” (கலி. 46) என்று தோழி தலைவனிடத்துத் தலைவியது ஆற்றாமை கூறி வரைவு கடாய இக்கூற்றின் கண், குறி தவறிப் போன விடத்துத் தலைவன் புலந்தமை புலப்படும். (தொ. பொ. 156 நச்.)

தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -

{Entry: H08__392}

தலைவன் தலைவியின் இயல் இடம் கூறித் தன் பாங்கனை அவளிருக்கும் இடம் நாடி வருவதற்கு விடுத்தபின், “என் னுடைய மிக்க துயரினைத் தீர்த்தற்குத் தன் சொந்தக் காரியம் செய்பவனைப் போலப் பொறுப்புடன் செல்லும் என் பாங்கன், தன் பாங்கியர் கூட்டத்தினின்றும் பிரிந்து தனியே என் வரவு நோக்கி நிற்கும் தலைவியைக் காண்கிறானோ அல்லனோ” (பாரதம்) என்று ஐயுற்றுத் தன்னுள் கூறிக் கொள்ளுதல்.

இச்சூத்திரத்துள் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதனான் கொள்ளப்பட்ட ஒரு கூற்று இது. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் கூறுதலுறுதற்கண் கூறல் -

{Entry: H08__393}

இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னரோ, இடந்தலைப் பாட்டுக்கு முன்னரோ தன் நாணம் கண்டு நீடு நினைந்து இரங்கிய தலைவனது வருத்தம் தீரத் தலைவி தன் நாணம் விரைவில் நீங்கப் பெறுதலின் தலைவன் அவளை நுகரத் தொடங் குதற்கண்,

“தன் வளையல்கள் ஒலிக்குமாறு நண்டுகளை அலைத்து விளையாடிக்கொண்டிருக்கும் தலைவி தன் முகத்தை மறைத்த கூந்தலொடு தலை குனிந்து என் கருத்துக்கு உடன்பட்டுத் தனிமைத் துன்பம் உறுகின்ற எனது காம மயக்கம் தீருமாறு தன் அழகிய மார்பினை எனக்குத் தருவாள்” (ஐங். 197) என்றாற் போலக் கூறுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் கூறும் உள்ளுறை உவமம் -

{Entry: H08__394}

தலைவன் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் எல்லா நிலக் கருப்பொருள்களையும் கொண்டு தன் அறி வுடைமை தோன்ற உள்ளுறை உவமம் கூறுவான். (தொ. பொ. 305 பேரா.)

தலைவன் கெடுதி வினாதல் -

{Entry: H08__395}

தோழியை இரந்து குறையுறுதற்கு முடிவு செய்த தலைவன், தலைவியும் தோழியும் தனித்து நிற்கும் சூழலை எய்தி, “இவன் வினவுவது வேறோர் உட்கருத்தையுடையதுபோலும்” என்று தோழி கருதுமாறு, “நறுமணம் கமழும் சந்தன மரங்களை வெட்டி நிலத்தைச் சமன் செய்து மழை பெய்த அளவில் விதைத்த தினை முற்றியதாக, அக்கொல்லையைக் காவல் செய்துவரும், பிறையை அணிந்த தாமரை போன்ற முகத்தை யும் தாழ்ந்த கூந்தலையுமுடைய மகளிரே! என் அம்புபட்ட மான்கள் இப்பக்கம் வந்தனவா?” (திணைமாலை - 1) எனவும்,

“தத்தம் காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவரும், தம்மிடம் வந்து வினவுவாரிடத்தில் விடை கூறாது தம் காரியத்திலேயே ஈடுபட்டிருக்க மாட்டார்கள். ஆதலின், மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிரே! என்னால் துரத்தப்பட்ட பன்றி இவ்வழியே சென்றதா என்று கூறுங்கள்” எனவும்,

“தினையின் கிளிகளைக் கடியும் இளையீர்! தன் இனத்தின் நீங்கித் தன் உடலைத் துளைத்த அம்பொடு வாடியவாறு புள்ளிமான் ஒன்று போனவழி நுமக்குத் தெரியுமாயின் கூறுங்கள்” எனவும் பலவாறு அவர்கள் மறுமொழி கூறு தலை எதிர்பாராது வினவுதல்.

கெடுதியாவன : “யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன்; அவை கண்டீரோ?” என வினவுவன பலவுமாம். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் கையுறை ஏந்திவருதல் -

{Entry: H08__396}

தலைவியும் பாங்கியும் உடனிருக்கையில், அச் செவ்வி அறிந்து தலைவன், தன் காதலுக்கு அடையாளமாகத் தழையும் மாலையும் போன்ற கையுறைப் பொருள்களுடன் வருதல்.

இதனைக் ‘கருத்தறிவித்தல்’ என்னும் திருக்கோவையார்(58).

இது களவியலுள் ‘பாங்கிமதி உடன்பாடு’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 141)

தலைவன் கையுறை கொண்டுவந்து கூறல் -

{Entry: H08__397}

தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த செவ்விக்கண் தலைவன் கையுறையாகிய பவழக்கொடியொடும் முத்தொடும் சென்று அவர்களை அணுகி, “மதம் பொருந்திய யானை சிங்கக் குட்டிமுன் நிற்கமாட்டாது நடுங்குவது போல, என் கையில் உங்களுக்குப் பரிசாக வைத்திருக்கும் பவழக்கொடியும் முத்தும் இத்தலைவியின் வாயிதழையும் பற்களையும் கண்ட அளவில் என்கையில் நில்லாது கீழே பதுங்குகின்றன’ (திணைமாலை. 42) என்றாற் போலக் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘தண்டாது இரப்பினும்’ என்றதனாற் கொள்ளப்பட்ட கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் கையுறை புகழ்தல் -

{Entry: H08__398}

தலைவன், தலைவிக்காகத் தான் கொண்டு வந்திருந்த கையுறையை, “உமையாள் இறைவன் பயிலும் கயிலாயத்தி லும், தேவர் உறையும் இமையாசலத்தும் இத்தழைக்கு நிகரான தழை இல்லை” (தஞ்சை கோ. 97) என்றாற் போல உயர்த்துச் சொல்லுதல்.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -

{Entry: H08__399}

தலைவியைக் கைவிட்டவழி அவளது உயிர்ப்பொருட்டாகத் தான் அஞ்சுதற்கண் தலைவன் கூறுதல். “ஒருநாள் நான் தலைவியை மிகுதியாக நலம் பாராட்ட அதனை அவள் நான் பிரிவதற்குச் சூழ்ந்த சூழ்ச்சியென உட்கொண்டு, தன் புதல் வனை மார்பில் அணைத்து வந்து. கண்ணின் பாவையைக் கண்ணீர் மறைக்க, ‘நீங்கள் என்னைப் பிரிந்து போவதாயின், ‘நின்னின் பிரியேன், பிரியின் ஆற்றேன்’ என்று சொன்ன உறுதிமொழி யாதாவது?’ என்று குறிப்பால் முகத்தின் மூலம் காட்டிப் பெருமூச்செறிய, அம் மூச்சின் வெப்பத்தால் புதல்வன் சூடிய மலர் கருகிவிட்டது. நான் பக்கலில் இருக்கும் போதே இப்படி வருந்தும் தலைவி நான் பிரியின் உயிர் வாழாள்” (அகநா. 5) என்று தலைவன் தன்னுள் கூறிக் கொண்டவாறு. (தொ. பொ. 144 இள.)

தலைவி, தான் உணர்த்தவும் உணராமல், தன்னைக் கை விட்டுப் பிரியில் தான் அவளை நீங்குதற்குத் தலைவன் அஞ்சிய அச்சத்தின்கண்ணும் தலைவன் கூற்று நிகழும். அஃது உணர்ப்புவயின் வாரா ஊடலாம்.

“நெஞ்சே! முல்லை சூடிய தலைவி இப்பொழுது பண்டு போல்வாள் அல்லள்; நம்மை அயலவராக நினைக்கிறாள். அவளை நினைக்கும் நீ எவ்வி என்ற வள்ளலை இழந்த பாணர்களுடைய பூவில்லாத வறிய தலையைப் போலப் பொலிவிழந்து வருந்துவாயாக!” (குறுந். 19) என்று தலைவன் தன்னுள் கூறிக்கொண்டவாறு. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் செல்லும் திறன் -

{Entry: H08__400}

தலைவன் தலைவியைப் பிரிந்து கற்புக் காலத்து நாடு இடையிட்டும் காடு இடையிட்டும் செல்லுங்கால் காலால் நடந்து செல்லுதலும், வண்டி முதலிய ஊர்திகளில் செல்லு தலும் வழக்கம். ஆயின் அந்தணர்களாகிய தலை. மக்கள் கலத்தில் செல்லும் மரபு இன்று. தலைவியை அழைத்துக் கொண்டு செல்லும்போதும், அத்தலைமகன் கடல் கடந்து செல்லக்கடவ இடங்கட்கு அவளை உடன்கொண்டு சேறல் பொருந்தாது. பகைவயிற் செல்லும்போது தலை மக்கள் தம் குலமகளிருடன் பாசறையில் தங்குதல் கூடாது. (ந. அ. 83 - 85)

தலைவன் செலவு அழுங்கல் -

{Entry: H08__401}

பொருள்வயின் பிரிந்து செல்லும் தலைவன் சிறிது தொலைவு சென்று பின் யாதோ காரணம் கூறிக்கொண்டு தன் செலவைத் தவிர்த்து விடுதல்.

“பாக! நாம் செல்லும்வழி இஃது அன்றுபோல் தோன்று கிறது. பதி மாறி வந்துவிட்டோம்; தேரைத் திருப்பு; நம்மூர்க்கே செல்வோம்” என்று கூறித் தலைவன் செல வழுங்குதல்.

இது ‘பொருள்வயிற் பிரிவு’ என்னும் தொகுதியில் நிகழும் கூற்று. (அம்பிகா. 549)

தலைவன் செலவு அழுங்குதல் -

{Entry: H08__402}

கற்புக் காலத்தில் தலைவியைப் பிரிந்து ஓதல் காவல் தூது முதலியவற்றிற்குப் பிரியக் கருதும் தலைவன், தலைவியைப் பிரிவுகுறித்துத் தேற்றுவதற்கு இல்லத்திலும், தன்மனத்தைப் பிரிவு குறித்துத் தேற்றுதற்கு நடுவழியிலும் சற்றுத் தயங்கு வானேயன்றி, மனத்துக் கொண்ட செயலை முடித்தற்குப் பிரியும் பிரிவைத் தவறாது மேற்கொள்வான். ஓதற்குப் பிரியும் தலைவன் தன் செயல் பாதி முடிந்த நிலையில் ஊர் திரும்பு வதற்கோ, தலைவியை நினைந்து வருந்துவதற்கோ இடம் கொடான். தூதிற்பிரிவு, துணைவயிற் பிரிவு இவை குறித்துப் பிரிந்தோன், அச்செயல் தான் குறிப்பிட்ட காலவரை யறையைக் கடந்து தொடருமாயின், தலைவியை நினைத்து வருந்துதலும் உண்டு. (ந. அ. 86, 87)

தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -

{Entry: H08__403}

தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிக விளக்கித் தலைவியை விடுத்துச் சென்ற தன் நிலையைக் கிளக்குமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்தல். (தொ. பொ. 144 இள.)

தலைவி காமக்கிழத்தி ஆகிய இருவர்க்கும் தான் சென்ற தேயத்தின் வருத்தத்தை மிகவும் விளங்கக் கூறி, நனவினான் சேறலின்றிக் கனவினான் கடத்திடைச் சென்ற தம்முடைய நிலையைக் கூறுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்தல். (146 நச்.)

“நல்லாய்! ‘பெண்டிரை வருந்தவிடலாகாது என்ற அறநூற் பொதுவிதியை விடுத்துப் பிரிந்து சென்ற நீர் எம்மை எப்பொழுதாவது நினைந்ததுண்டா?’ என்று வருந்தி வினவற்க. நின் அழகினை யான் மறக்க இயலுமோ? நான் சென்ற காட்டில் காட்டுத்தீப் பரவ வழிகெட்டு விலங்குகளும் வணிகர்களும் ஓட, அப்பொழுது கதிரவன் மறைய, ‘இனி நடத்தல் இயலாது’ என்று யான் ஓரிடத்தில் படுக்க, அங்கு நீ வந்து நிற்க, ‘உன்னிடம் இவ்வளவு அன்போடு யானிருப்பவும், என்னிடம் நீ கோபிப்பது என்பற்றி?’ என்று நின் வளைந்த புருவத்தையும் நெற்றியையும் தடவித் தலைமயிரையும் நான் கோதிய நேரத்தில், யான் கண்விழித்து அது நனவல்லாக் கனவு என்பதை உணர்ந்தஅளவில் யான்பட்ட வருத்தத்தை நீ அறியாயாதலின், இங்ஙனம் என்னிடம் புலந்து பேசு கிறாய்!” (அகநா. 39) என்று தலைவன் கூறுதல்.

(தொ. பொ. 146 நச்.)

தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -

{Entry: H08__404}

செலவு அழுங்கியதை விடுத்து முன்னொருகால் தலைவி யைப் பிரிந்து சென்று பொருள் முற்றிய தலைவன், மீட்டும் அந்நெறியினைப் போக நினைந்தவழிக் கூறுதல்.

“மனமே! நிறையச் செல்வங்களைப் பெறலாம் என்று கூறி என்னை அழைத்துச் சென்று புல்லிய இலைகளையுடைய மராமரங்களை யுடைய அகன்ற நெடிய வழியிலே பின்தங்கி என்னைத் தனித்து அனுப்புவதற்கு முன்னொருகால் முயன் றாயே! அதனை மறந்து இப்பொழுது மீண்டும் பொருள் தேடலாம் என்று என்னைத் தூண்டுகிறாயே! தலைவியின் உருவெளித்தோற்றம் யான் செல்லும் வழியிடைத் தோன்றிக் குறுக்கிடும்போது எனக்கு ஏற்படக்கூடிய துயரினை உன் உண்மையைப் போன்ற பொய்ம்மொழி போக்க இயலுமோ? ஆதலின் இம்முறை இவளைப் பிரிந்து பொருளீட்ட யான் வாரேன்” (அகநா. 3) என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறியது. (தொ. பொ. 144 இள.)

தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்குத் தலைவியை அணுகச்சென்று, அவன் மெய்க்கண் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கிநிறுத்தலானே, அவன் ஒருவாற் றான் அவள் ஆற்றாமையைச் சிறிது மீட்கையினாலே, அவள் கூடக் கருதிய இடத்தும் தலைவன் கூற்று நிகழும்.

“எம்மை வஞ்சனையான் வருத்தி உண்மையில் என்மகன்மேல் பாசமின்றி, நீ கூடிய பரத்தையின் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாது நின் ஆடையில் ஒட்டியிருப்பது புலப்படுமாறு காற்றில் எதிரே நிற்கிறாயே! இங்ஙனம் நில்லாது போ” என்று தலைவி கூறியவழி, தலைவன்” ஏடீ! யான் தவறுசெய்ய வில்லை என்று உறுதி கூறவும், என் சொல்லை நம்பாமல் நின் கோபம் குறையாமலிருக்கிறாய். விருப்பொடு கன்று கட்டப் பட்ட இடம் நோக்கிச் செல்லும் பசுப்போல, என் பிள்ளையை யாவது நான் தூக்கிக்கொண்டு மகிழ்கின்றேன்” (கலி. 81) என்று கூறிப் புதல்வனைத் தூக்கிக்கொள்ளத் தலைவி ஊடல் நீங்கியது. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் சேறல் -

{Entry: H08__405}

தலைவன் வேண்டியவாறே பாங்கன் தலைவியைச் சென்று கண்டு வியந்து மீண்டு அவற்கு அவள்நிலை அறிவிக்கவே அவனும் அவளைக் காண்டற்பொருட்டுக் குறிவழியே செல்லுதல்.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -

{Entry: H08__406}

தலைவன் ஆற்றாமையொடு தலைவியைச் சார்த்திக் கூறிய கூற்றை உட்கொண்டு, அவன் ஆற்றாமையைக் கருதி, தோழி உணராமல் தலைவி தானே கூடிய பகுதிக்கண், தலைவன் தோழியை இரந்து கூறுதல்.

“சேரனுடைய கொல்லிப்பாவையைப் போன்ற தலைவி யோடு யான் நுகர்ந்துவந்த களவுப்புணர்ச்சி காவல்மிகுதி யான் இடையீடு பட்டதாக, என் ஆற்றாமை கண்டு, தலைவி ஒருநாள் தானே வந்து காவிரியில் நீராடுபவளைப் போன்ற மகிழ்வுடன் பிரிவுத்துன்பத்தில் ஏற்பட்ட என் துயர் தீரத் தழுவி என் மார்பினைச் சார்ந்தாள்” (அகநா. 62) எனவும்,

“செவ்வரி பரந்த மையுண்ட கண்களையும் அழகொழுகும் மேனியையும் உடைய தலைவி, குறிகள் தவறியமையான் ஆற்றாமை மீதூர்ந்து வருந்திய என்பொருட்டு, மணம் வீசும் சோலையில் தானே குறியமைத்து என்னைக் கூடி இன்புறுத் தினாள்” (ஐங். 174) எனவும் தலைவி தனக்குச் செய்த கருணை யைத் தலைவன் தோழியிடம் கூறித் தம் களவொழுக்கம் நீட்டிக்க அவள் உதவியை நாடுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -

{Entry: H08__407}

இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னரோ, இடந்தலைப்பாட்டுக்கு முன்னரோ தலைவன் தலைவியை மெய்தொட்டுப் பயின்று, பொய்பாராட்டி இடம் பெற்றுத் தழுவி, இடையூறு கிளந்து, நீடு நினைந்து இரங்கிக் கூறுதலுற்றுத் தான்விரும்பிய நுகர்ச்சியை அவள்மாட்டுப் பெற்றவிடத்துக் கூறுதல்.

இத்தலைவியின் தோள்கள், ஒருவர் விரும்பியபோது அவ் விரும்பிய பொருள்கள் எய்தினால் விளையக் கூடிய மகிழ்ச் சியைத் தாமே எனக்கு நல்கி வருகின்றன” (குறள். 1105) என்றாற் போலத் தன் புணர்ச்சியின்பத்தைப் புகழ்ந்து கூறும் தலைவன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

{Entry: H08__408}

“யாதானும் ஒன்றை நுகரினும், நீ கையால் தொட்டது வானோர் அமுதம் ஒக்கும்; இதற்குக் காரணம் சொல்லுக” என்று அடிசில் தொடுதற்கண்ணும் பூத்தொடுத்தற்கண்ணும் தலைவன் கூறுதல்.

“தலைவி, அக்காலத்தில் வேப்பங்காயை உண்ணக் கொடுப்பி னும் அதனை இனிய தேன்கட்டி என்று உண்டீர்” (குறுந். 196) என்ற தோழி கூற்றில் மேற்கூறிய செய்தி உணரப்படும். (தொ. பொ. 144 இள.)

“அமுதிற்கு மாறான நஞ்சினை நுகரினும் நீ கையால் தீண்டின பொருள் எமக்கு உறுதியைத் தருதலின் தேவர்களுடைய அமுதத்தை ஒக்கும், எமக்கு” எனப் புனைந்துரைத்துழி, “இதற்குக் காரணம் கூறு” என்று அடிசிலும் பூவும் தலைவி தொடுதற்கண் தலைவனது அக்கூற்று நிகழும். (146 நச்.)

தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -

{Entry: H08__409}

பாங்கி இற்செறிப்பு உரைத்து ஓம்படை கூறிச் செல்லுமாறு விடையும் தந்துவிட்டதைக் கேட்ட தலைவன், தனக்கு இனிப் புகல் இல்லையே எனத் தன் மனத்திற்குள் கூறிக் கொள்ளுதல்.

இது களவியலுள் ‘ஒருசார் பகற்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தலைவன் தண்டாது இரத்தல் -

{Entry: H08__410}

இடந்தலைப்பாடு முதலிய களவுக்காலத்து கூட்டத்தான் மனம் நிறைவுறாது பின்னும் தோழியைத் தலைவன் பகற்குறி இரவுக்குறி நேர்விக்குமாறு வேண்டுதல்.

தலைவன் தோழிபால் குறைகூறுதலை அவள் மறுத்தாளாக, அது பற்றி வருந்திய தன் மனத்திற்குத் தலைவன், “ஆயத்தா ரொடு பந்து விளையாடச் செல்லும் தலைவி நமக்கு அருள் செய்யினும் செய்யாவிடினும், நீ வருந்தித் தோழியை இரந்து வேண்டுதலை தவிரற்க. யான் உற்ற இப்பெருந்துன்பமாகிய நோயைப் போக்க அவளன்றி மருந்து பிறிதில்லை. அவள் தோழியரிடையே செல்லுதலான் நம்பால் அருள் இல்லாத வள் போல நடித்தாளே யன்றி உண்மையில் நம்மை அருள்வாள்” (நற். 140) என்று கூறி, தோழியை மீண்டும் பகற்குறி வேண்டி இரத்தல்.

“மனமே! இத்தோழியின் பின்னேயே சென்று, இவளுக்கு அடும்பமலர் தாழைமலர் நெய்தல்மலர் இவற்றைப் பறித்துக் கொடுத்துக் குற்றேவல் செய்தே நாம் இவளிடத்தில் காலம் போக்குவது பற்றித் தலைவி என்ன நினைக்கின்றாளோ? அவள் யாது நினைப்பினும் அவளை, அடையும் வாயில் இவளாதலான் இவளைத் தொடர்ந்து இரப்போம்” (நற். 349) என்று தன் நெஞ்சிடம் கூறித் தலைவன் செயற்படுதல்.

“பூங் கொடிகள் படர்ந்த மலைநெல் விளையும் விளைபுலத் தைக் காவல் செய்யும் இத்தலைவியின் கண்கள் என் நெஞ்சைப் பிளந்து என் உயிரைக் குடித்தலைக் காணவேண்டியோ தோழியாகிய நீ எனக்கு இவளை அடையும் வாய்ப்பினைத் தருதற்குக் காலம் தாழ்க்கின்றாய்?” (திணமாலை. 18) என்று தலைவன் தோழியிடம் வேண்டுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -

{Entry: H08__411}

உடன்போக்கினின்று மீண்ட தலைவன் தலைவியிடம் தாம் தமது ஊர் (அஃதாவது தலைவியது ஊர்) வந்துசேர்ந்து விட்டமையைக் கூறுதல்.

“தலைவி! நின் ஊர்வந்துவிட்டது. நீ எப்போதும் தங்கும் இள மரச் சோலையும் குளிக்கும் குளமும் இதோ காட்சி அளிக்கின்றன” (அம்பிகா. 410) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது வரைவியலுள் ‘மீட்சி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 191)

தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -

{Entry: H08__412}

“நின்தாயும் என்தாயும், நின் தந்தையும் என்தந்தையும் இச் சந்திப்பிற்கு முன்னர் உறவினர் அல்லர்; யானும் நீயும் ஒருவரையொருவர் அறியாதவராகவே இதற்கு முன்னர் இருந்துள்ளோம். செம்மண் நிலத்திற் பெய்த மழைநீர் நிலத்தின் செம்மையும் நீரின் தன்மையும் பிரிக்கமுடியாத அளவில் இயைந்தாற் போல, பிரிக்கமுடியாத நிலையில் இருவேம் நெஞ்சமும் கலந்து ஒன்றான பின்னர், யான் நின்னைப் பிரிந்து மறந்துவிடுவேன் என்ற கவலையே நினக்கு வேண்டா” (குறுந். 40) என்று தலைவன் தலைவியது குறிப் புணர்ந்து வற்புறுத்திக் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘தெளிவகப்படுத்தல்’ என்பதன்கண் சார்வதொரு கூற்று. (தொ. பொ. 101 நச்.)

தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -

{Entry: H08__413}

தலைவி பற்றிய நினைவிலேயே இருக்கும் தலைவன், வேட்கை மிகுதியான் தலைவியை நேரிற் காண்பது போல உணர்கிறான் (இஃது உருவுவெளிப்பாடு). அந்நிலையில் தன்பொருட்டாகக் குறியிடம் சென்றுள்ள தோழன் அவளைக் காண்பானோ மாட்டானோ என்று ஐயமும் கவலையும் கொண்டு கூறுதல்.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையில் கொள்ளப்பட்டது. (இ. வி. 505 உரை)

தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -

{Entry: H08__414}

“காதல் மிகுதியான், இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக, அதனால், ஏனை மறுமை யாகிய பிறப்பின்கண் பிரிவேன் என்னும் குறிப்பினையுடை யேனாகக் கருதி, அவள் தன் கண் நிறைய நீரினைக் கொண்டாள்” (குறள் 1315)

“தன்னை யான் பணிந்து ஊடல் உணர்த்தினேனாயினும், பிறமகளிர்க்கும் நீர் அவர்கள் ஊடியபோது இவ்வாறே பணிந்து உணர்த்தும் நீர்மையை உடையீர் ஆகுதிர் என்று வெகுள்கின்றாள்” (குறள் 1319) என்றாற்போல வரும் தலைவன் கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பண்ணமை பகுதி’ என்றதனான் கொள்ளப்படும் கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் தலைவிக்குத் தன்நகர் காட்டல் -

{Entry: H08__415}

உடன்போக்கில் வந்த தலைவிக்குத் தலைவன் தன் ஊரைக் காட்டுதல்.

“நங்காய்! கொடிகள் அசைய, மதில்கள் உயரமாகக் காட்சி வழங்க, வானளாவிய மாளிகைகளில் உன் நடையை ஒத்த அன்னங்கள் விளையாடும் சூழலையுடைய நம் நகர் அதோ தோன்றுகிறது, பார்!” (கோவை. 222) என்று தலைவிக்குத் தலைவன் தன் ஊரைச் சுட்டிக் காட்டுதல்.

இது வரைவியலுள் களவுவெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கோடல். (இ. வி. 536 உரை)

தலைவன் தலைவிக்குப் பணியுமிடங்கள் -

{Entry: H08__416}

தலைவனை எப்பொழுதும் வழிபட்டொழுகுவது தலைவிக்கு இல்லறத்தொடு கூடிய பண்பு. தலைவன் தவறு கண்டு தலைவி புலப்பது உண்டு. தன் தவறு சிறிதாயவழித் தலைவ னும் தலைவியைப் புலப்பான். தலைவன் தன் தவறு பெரி தாகியஇடத்துத் தலைவியிடம் பணிந்து பேசுவான். பொது வாகக் காமம் எல்லை மீறியவழித் தலைவியைத் தன்வசப் படுத்துவதற்குத் தலைவன் பணிந்த மொழிகள் பேசுவது வழக்கம். இதனைப் புலவி ஊடல் என்னும் இரண்டன் கண்ணும் காணலாம். (தொ. பொ. 160, 227 நச்.)

தலைவன் தலைவிதன்னை உயர்த்தல் -

{Entry: H08__417}

தலைவன் தலைவியின் பெருமையை உயர்த்திக் கூறுதல்.

“தேவர் உலகத்தாரும் தனக்கு நிகரில்லை என்னுமாறு அயனால் படைக்கப்பட்ட இத்தலைவியை, அவள் இருக்கும் சூழலை மனம் கொண்டு குறிஞ்சி நிலப்பெண் என்று கூறுவது தகாது” (அம்பிகா. 99) என்றாற்போலத் தலைவன் தோழி யிடம் கூறுவது.

‘வரைவுடம்படாது மிகுத்துக் கூறல்’ (கோவை. 129) என்பது போல்வது இக்கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -

{Entry: H08__418}

இளமைத் தன்மையுடையவள், காதலையும் அதன்விளை வான துன்பத்தையும் அறிய இயலாதவள் என்று கூறிய தோழிக்குத் தலைவன், அதனை மறுத்து தலைவியின் கண்களால் தான் புண்பட்டமையைச் சொல்லுதல்.

“தோழி! பாம்பும் சிங்கமும் தீயும் அரசும் இளைய நிலை யிலும் கூடப் பிறரைக் கொல்லும் ஆற்றலுடையன. நின்தலைவி பெண்ணரசு. அவள் என்னை வருத்திய தன்மை சொல்லுக்கடங்காதது” (அம்பிகா. 126) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -

{Entry: H08__419}

“இளமானின் கண்களைப் போன்று காதளவு நீண்டு பாய்ந்து ஓடும் இவளுடைய கண்கள், பொதுநோக்காக அல்லாமல் குறிப்புடை நோக்காக அமைந்து என்னைக் கொல்வனவே போல் உள்ளன” என்ற தலைவன் கூற்று; பாங்கனொடு கூறிற்று.

இது பாங்கற் கூட்டம். (திருவி. 65)

தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

{Entry: H08__420}

தலைவன், முன்னொருகால் பிரிந்து சென்றவழி நடுப்பாலை வழியில் தலைவியது நினைப்பு மேலிட்டுத் தான் வருந்தியதை நினைவிற் கொண்டு, மீண்டும் அவளைப் பிரிந்து செல்லுதல் அத்துணை எளிய செயல் அன்று என்று நினைத்தல்.

முன்னொருகால் பொருள்வயிற் பிரிந்து மீண்ட தலைவன், மீண்டும் பொருள்தேட எண்ணும் நெஞ்சத்தை நோக்கி, “பொருள் தேடுதலின் இன்றியமையாமையைக் குறிப்பிட்டுக் கொடிய பாலைவழியில் என்னை முன்னொருகால் அழைத்துச் சென்றாயே. அப்பொழுது போகும் வழியில் முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற செவ்வாயினையும், இனிய சொற்களையும், அழகிய அணிகளையும் உடைய என் தலைவியின் உருவெளித் தோற்றம் என் கண்முன்னே தோன்றி அப்பாலைவழியில் என் செலவைத் தடுத்த அப்பொழுது உன்னால் என்துன்பத்தைப் போக்க முடிந்திலது. ஆதலின் என் தலைவியைப் பிரிந்து நான் ஒருபோதும் புறப்பட மாட்டேன்” (அகநா. 3) என்று கூறுதல். (தொ. பொ. 43. நச்.)

தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

{Entry: H08__421}

தலைவியிடம் நிகழ்ந்த வேறுபாடுகளைக் கண்டு அவள் தன் பிரிவுத் துயரைத் தாங்காது இறந்துபடுதலும் கூடுமெனத் தலைவன் கருதுதல்.

தலைவனுடைய அளவுகடந்த அன்புச் செயல்களைப் பொறாது மாறுபட்ட முகத்தொடு, தலைவி அவன் பிரிதற்குக் கருதி யிருப்பதனை நீக்கும் எண்ணத்தோடு, அவனிருக்கும் இடத் திற்குத் தன்புதல்வனைத் தாங்கியவாறே மெல்ல நடந்துவந்து பொய்ப்புன்னகையுடன், “நீவிர் என்னைப் பிரிந்து பாலை நிலத்தைக் கடந்து செல்லக் கருதுவீராயின் முன்பு ‘நின்னிற்பிரியேன், பிரியின் ஆற்றேன்’ என்று கூறிய நும் உறுதிமொழி யாதாம்?” என்று கூறி உயிர்த்த பெருமூச்சி னால் புதல்வன் அணிந்திருந்த மலர் கருகியதைக் கண்ட தலைவன், தான் பக்கலில் இருக்கும்போதே தலைவிக்கு இத்தகைய வருத்தம் நிகழுமாயின், தான் பிரிந்தால் அவள் ஒருதலையாக உயிர்வாழாள் என்று முடிவு செய்து, தன் பிரிவினை நீக்க வேண்டும் என்று நினைத்தல் (அகநா. 5) போல்வது. (தொ. பொ. 43. நச்.)

தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -

{Entry: H08__422}

தலைவன் தானே பணிந்தும், தோழி தணிவித்தும் தலைவி ஊடல் தணியாதவளாய் இருந்தகாலை, அது பொறாத தலைவனும் சிறுசினம் கொள்ளுதல்.

“வரவர, உனக்கு என்பால் அன்பு குறைகின்றது. முன்பு நம் இருவரிடையேயும் இருந்த அந்தப் பிணைப்புக்குக் குறை நேர்வதை என்னால் பொறுக்க இயலாது; நானும் இதோ வேறு எங்கேனும் சென்று விடுவேன்!”“மனமே! களவுக் காலத்தில் நமக்காகப் பல இடையூறுகளையும் தாங்கிப் பகற்குறியிலும் இரவுக் குறியிலும் நமக்கு இன்பம் நல்கு வதையே தனது பெரும்பேறாக் கருதிய பெண்ணமிர்தம் இவள் அல்லள்- இஃது இவள் வடிவில் வந்திருக்கும் பிறிதொரு வடிவம்!” (கோவை 394) என்பன போல வரும் தலைவன் கூற்று.

இது திருக்கோவையாரில் ‘ஊடல் நீட வாடி உரைத்தல்’ என்னும் கூற்று (394).

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனபதன்கண் ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 206)

தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -

{Entry: H08__423}

தலைவி தன் திருமணம் தலைவனோடு இனிது நடைபெற அருள் செய்யுமாறு தெய்வத்தை வழிபடுவதைக் கண்ட தலைவன் தன் நெஞ்சை நோக்கி, “நெஞ்சே! தலைவி தெய்வத் திற்கு மலர் தூவித் தன் திருமணம் இனிதின் ஈடேறுவதற்காக வழிபடும் அன்பைக் கண்டு, அவள் என்னோடு கொண்டுள்ள நட்பு வஞ்சனையான தன்று என்பதைத் தெளிந்து அறிவா யாக!” (அம்பிகா. 335) என்று கூறி மகிழ்தல்.

இது வரைவியலுள் ‘வரைவு மலிதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174)

தலைவன், தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் -

{Entry: H08__424}

திருமணம் முடியப்பெறவே இல்வாழ்க்கை தொடங்கிய தலைவன், தலைவியின் முன்னிலையில், களவுக் காலத்தும் பின்னரும் தனக்குப் பெரிதும் துணைநின்ற தோழியைப் பாராட்டுதல்.

‘தோழி!’ களவொழுக்கங்களால் விளைந்த துன்பம் தீர யாங்கள் பிணைந்துவிட்டோம். பகைவர்கள் தந்த கொடிய நோய்களுக் கெல்லாம் இனிய மருந்தாமாறு தலைவிக்கும் எனக்கும் இடையே நின்று இதுவரை நீ முயன்ற முயற்சி இத்தகைய நற்பயன் தந்துள்ளது” (அம்பிகா. 435) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது கற்பியலுள் இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 203)

தலைவன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் -

{Entry: H08__425}

“தலைவி பேதை அல்லள்;அன்பும் அருளும் காட்டும் மூதறிவு படைத்தவளே” என்று தோழிக்குத் தலைவன் கூறுதல்.

“நங்காய்! நின் தலைவி நீ கூறுவது போன்று பேதைமை யுடையள் அல்லள்; என் வருத்தம் அறிந்து, தன் கடைக்கண் ணால் என்னைக் குளிரப் பார்த்துக் கலவியின்பமும் தந்து எனக்கு ஆறுதல் நல்கிய அவள் நல்ல முதிர்ந்த அறிவுடைய வளே” (தஞ்சை. கோ.91) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -

{Entry: H08__426}

குறியிடத்திற்கு வாராமல் தன்னை வருத்திய பிழை தலைவி யுடையதே என்று தலைவன் கூறுதல்.

“மழை வரவினை அறிந்து மயில்கள் ஆடும் பக்கமலைகட்கு இடைப்பட்ட நல்ல ஊரிலுள்ள மெல்லியல் வாய்ந்த தலைவி தான் என்னை மறந்தாளாயினும், யான் அவளையே இடை விடாது நினைத்துக்கொண்டிருத்தலின், ஒருபோதும் மறந்தறியேன்” (ஐங். 298) என்றல் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ என்னும் தொகு திக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -

{Entry: H08__427}

“அழகிய மெல்லிய மயிர்முடியினை யுடையாய்! யான் நின்னைப் பிரிந்து போகின்றேனே என்று வருந்தி அழேற்க. எம்மலையில் தினையை விதைப்பதற்கு, வளர்ந்துள்ள மரங்களை அழித்து நிலத்தைச் சமன் செய்வது உண்டு. அப்பொழுது அழிக்கப்படும் சந்தன மரத்தின் தழைகளையே நும் ஊரவர் தழையுடையாகப் புனைந்து பயன்படுத்துவர். அத்தகைய அண்மையிலுள்ளது எம்மூர். நாள்தோறும் பலமுறை வந்து என் துயரும் நின்துயரும் தீர நின்னுடன் அளவளாவுவேன்” என்றாற் போலத் தலைவியை ஆற்று விக்கு முகத்தான் தலைவன் தனது ஊர் அணிமைக்கண் உள்ளமையைக் கூறுதல்.

இஃது இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் நிகழ்வது. ‘தெளி வகப்படுத்தல்’ என்னும் பகுதிப்பட நிகழ்வது இக்கூற்று.

(தொ. பொ. 101 நச்.)

தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -

{Entry: H08__428}

தலைவன் தலைவியிடம் தான் அவளை விரும்புதலையும், பிரிந்து போதற்கண் அவளுக்கு ஏற்படும் துன்பம் பற்றித் தான் அஞ்சுதலையும் கூறித்தன் நட்பின் நிலைபேறு பற்றி ஐயுறல் வேண்டா என்று வற்புறுத்தல்.

“குவளைப்பூ மணக்கும் கூந்தலையும், ஆம்பற்பூப் போல மணம் வீசும் வாயினையும், தாமரைத்தாது போன்ற பசலை யையும் உடைய மாஅயோயே! நீ ‘நான் அஞ்சேல்’ என்று கூறிய என் சொல்லைக் கொண்டே உன்னைப் பிரிந்து மறந்து விடுவேனோ என்று அஞ்சாதிரு. நின்னைப் பிரிவதனால் எனக்கு இந்த உலகமே பரிசாகக் கிடைப்பதா யிருப்பினும் உன்னுடைய நட்பைக் கைவிடமாட்டேன்” (குறுந். 300) என்றாற்போல, அவள் அழகை நயந்து பாராட்டி, அவளது அச்சத்தைச் சுட்டி, அவளைத் தான் ஒருகாலும் பிரியா மையை வற்புறுத்திக் கூறுதல். இஃது இயற்கைப் புணர்ச்சி யின் பின்னர்த் ‘தெளிவகப்படுத்தல்’ என்னும் பகுதிக்கண் நிகழ்வது. (தொ. பொ. 101. நச்.)

தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -

{Entry: H08__429}

உடன்போக்கின்கண், நடந்துவரும் களைப்பால் தலைவி அயர்வுற்றமை கண்ட தலைவன், அவளைச் சிறுபோது அமரச் செய்து தானும் இருந்து இளைப்பாறுதல்.

“நங்காய்! இக்கொடிய பாலையின் அரம் போன்ற கூரிய கற்களை உன் அடிமலர்கள் தாங்கும் ஆற்றலுடையன அல்ல. ஆதலின், பாலையின் வெப்பம் நீங்குமளவும் இச்சோலையில் தங்கி இளைப்பாறுவாயாக” (தஞ்சை கோ. 317) என்ற தலைவன் கூற்று.

இதுவரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொருகூற்று. (ந. அ. 182)

தலைவன் தலைவியின் இன்றியமையாமை இயம்பல் -

{Entry: H08__430}

தான் உயிர்வாழத் தலைவியைத் தான் அடைதல் இன்றி யமையாதது எனத் தலைவன் தோழியிடம் கூறுதல்.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் கிளவிக் கண்ணதொரு துறை. இதனை ‘ஆற்றாது உரைத்தல்’ என்னும் திருக்கோவையார். (73) (ந. அ. 144)

தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -

{Entry: H08__431}

“செவ்வி அரிது” என்று கூறிய தோழிக்குத் தலைவன் “தலைவி செவ்வி எளிதே” எனக் கூறுதல்.

“தோழி!நின் தலைவியிடம் சென்று நான் வந்திருப்பதைச் சொல். அதுபோது உடனே அவள் உன்னைத் தழுவி மகிழ் வாள். அவள் மனநிலை அத்தகையதாகத்தான் இருக்கும்!” (தஞ்சை. கோ.111) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

தலைவன் தலைவியின் நன்னயம் உரைத்தல்-

{Entry: H08__432}

தலைவன் வண்டு, மனம் முதலியவற்றைத் தன்னுடன் உரை யாடுவனவாகக் கொண்டு அவற்றிற்குத் தான் தலைவியிடம் கொண்டுள்ள பேரன்பினைக் கூறுபவனாய்த் தன் விருப் பினை எடுத்துக்கூறல். (தொ. பொ. 101 நச்.)

அஃறிணைப் பொருளை முன்னிலையாக்கிச் சொல்வழிப் படுத்திய தலைவன், அவள் அழகினைப் புனைந்துரைப்பா னாக, அன்னப் பறவையை நோக்கி, “அன்னமே! இந்நெய்தற் பகுதியில் நடந்து செல்லும் இப்பெண்ணின் பின்னே செல் லற்க. இவள் நடையழகு உனக்கு ஒருபோதும் வாராது. இவளைத் தொடர்ந்து சென்றால் இவள் நடையழகின்முன் நீ நடையழகு தோற்று நாணுவாய்!” (சிலப். கானல். 23) என்றாற் போலக் கூறுதல். (98 இள.)

தலைவன் தலைவியின் பெற்றோரை வாழ்த்தல் -

{Entry: H08__433}

“குளிர்ந்த கண்களையும் தழையாடை உடுத்த செயற்கை வனப்பையும் உடைய இவ்அழகியாள் என்னுள்ளத்தைக் கவர்ந்தவள். இவள் தந்தை வாழ்க! நெல்வளம் பொருந்திய தொண்டி என்ற ஊரினை ஒத்த செல்வத்தை, இந்நங்கைநல் லாளை எனக்கு ஈன்று அளித்த தாய் பெறுவாளாக!” (நற். 8) என்பது போல, இடந்தலைப்பாட்டின் இறுதிக்கண்ணோ இயற்கைப் புணர்ச்சியின் இறுதிக்கண்ணோ தலைமகளை ஆயத்து உய்த்த தலைமகன் அவள் பெற்றோரைத் தன் னுள்ளே வாழ்த்திக் கூறல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘சொல்லியநுகர்ச்சி’ என்புழிச் ‘சொல்லிய’ என்றதனாற் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -

{Entry: H08__434}

தலைவன் தலைவியின் வனப்பைப் புகழ்ந்து கூறும் நிலையில் வண்டினை நோக்கி, “பூமணத்தினை ஆராய்தலையே வாழ்க்கைத் தொழிலாக வுடைய அழகிய சிறகுகளையுடைய தும்பீ! நீ என் நிலத்து வண்டு ஆகையால் எனக்காகக் கூறாது உண்மையைக் கூறு. மயில் போன்ற சாயலையும், பயின்றது எழுமையும் பொருந்திய நட்பினையும், செறிந்த பற்களையும் உடைய இத்தலைவியது கூந்தலின் மணத்தைவிட உன்னால் அறியப்படும் பூக்களில் மணம்உடையவும் உளவோ?” (குறுந்.2) என்று கூறுதற்கண், தலைவியும் தன்மலையைச் சார்ந்தவள் என்பதனைக் குறிப்பான் வெளியிட்டவாறு. இங்ஙனம் கூறுதல் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் எனவும், பின்னர் எனவும் இருவகைக் கருத்துக்கள் நிலவுவன. (தொ. பொ. 93. நச்.)

தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -

{Entry: H08__435}

தலைவன் தான் தலைவியைப் பெறுதற்காகத் தன்னுயிரை விடவும் துணிந்துவிட்ட செய்தியைத் தோழிக்குக் கூறுதல்.

தோழியான் சேட்படுக்கப்பட்ட தலைவன் தோழியை நோக்கி, ”காமம் எல்லை கடக்குமாயின் குதிரையை இவர்தல் போலப் பனைமடலான் அமைக்கப்பட்ட குதிரை ஏறவும் துணிவர்; நறும்பூக்களை முடிப்பது போல எருக்கம்பூவைச் சூடவும் முற்படுவர்; ஊரிலுள்ளவர் பேசும் ஏளனச் சொற் களையும் நாணாது ஏற்றுக் கொள்வர்; வரையினின்று கீழே பாய்ந்து உயிர்விடவும் துணிவர் ”(குறுந். 17) என்று தலைவன் தான் வரைபாய்தற்கும் ஒருப்பட்ட செய்தியைத் தோழிக்குக் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘மடல்மாக் கூறும் இடனுமார் உண்டே’ என்புழி உம்மையாற் கொள்ளப்பட்ட கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -

{Entry: H08__436}

தலைவன் பெதும்பைப் பருவத்து ஒருத்தியை மணந்து கொண்டு இல்லிற்கு அழைத்துவருகையில், அந்தப் பெண்ணை எதிர்கொண்டு வரவேற்ற தலைவியின் உயர்குணத்தை அவன் புகழ்ந்துரைத்தல்.

“நான் பெதும்பைப்பெண் ஒருத்தியை மிகவிரும்பி மணந்து மங்கலக் கோலத்துடன் வந்தபோது இவள் அவளை எதிர் கொண்டு அழைத்து உபசரித்தாளே! இதற்குக் காரணம், இவளுக்கு என்மேல் உள்ள காதலா? அன்றி, இவளது அருந்ததிக் கற்பின் உயர்வா? என் என்று இவளைப் புகழ்வேன்” என்னும் தலைவன் கூற்று.

இது பொருள்வயின்பிரிவு எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 561)

தலைவன் (இறையோன்) தலைவியை இடத்தெதிர்ப்படுதல் -

{Entry: H08__437}

தலைவி நிற்கும் குறியிடத்திற்குத் தலைவன் வந்து, அவளைக் காணுதல்.

“திருமகளே! இம்மலைப் பகுதியை ஆதிசேடனாகிய படுக்கை என்றும் என்னைத் திருமால் என்றும் கருதியோ, என் மன மாகிய தாமரையில் தங்கலாம் என்று விருப்பம் கொண்டோ, இப்பொழிற்கு நீ வந்துள்ளாய்?” (கோவை. 120) என்றாற் போலத் தலைவன் கூறி எய்துதல்.

இதனைத் திருக்கோவையார் ‘உவந்துரைத்தல்’ என்னும் (120)

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 149)

தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -

{Entry: H08__438}

இரவுக்குறிப் புணர்ச்சிக்குப் பின்னர், தலைவன் தலைவியை அவளது மனைக்கட்டட எல்லைக்கண் கொண்டு விடுதல்.

இதனைப் ‘பள்ளியிடத்து உய்த்தல்’ என்னும் திருக்கோவை யார் (167).

இது களவியலுள்‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -

{Entry: H08__439}

‘திருமகட் புணர்ந்தவன் சேறல்’ என்னும் துறை. “தலைவி எனக்கு உருவெளியாக எப்பொழுதும் காட்சி வழங்குவதால் அவள் காதுகளில் அணிந்துள்ள குழைகள் தரும் ஒளியி லேயே யான் எளிதில் ஊர் போய்ச் சேர்ந்துவிடுவேன்” (தஞ்சை கோ.189) என்று தலைவன் இரவுக்குறி நிகழ்ந்தபின் தோழியிடம் கூறிச் சேறல்.

இது களவியலுள் ’இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன் தலைவியைச் சுரத்து உய்த்தல் -

{Entry: H08__440}

தலைவன் தலைவியைப் பாலைவழியில் வழிநடக்கும் களைப்புத் தெரியாமல் இனிய சொற்களைப் பேசி மெல்ல மெல்ல அழைத்துச் செல்லுதல்.

“என்னுயிர் அனையாய்! கான்யாறும் வெண்மணலும் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே மெல்ல நடந்துவா” (தஞ்சை. கோ. 316) என்பது போன்ற தலைவன் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘மெல்லக் கொண்டேகல்’ என்னும் (215).

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன் போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்துக் கூறல் -

{Entry: H08__441}

தலைவன் தலைவிமுன் உரையாட இயலாத வண்டு, நெஞ்சு முதலியவற்றைத் தன்னிடம் உரையாடுவன போலப் பேசுதல்.

(தொ. பொ. 101 நச்.)

தலைவன் தான் சொல்கின்ற சொல்லின்வழி அவள் நிற்கு மாறு அமைத்துக் கூறுதல். (98 இள.)

இஃது இயற்கைப் புணர்ச்சியின் முன் நிகழ்வது எனவும், இரண்டாம் கூட்டத்து நிகழ்வது எனவும் இரு திறமாகக் கூறப்படுகிறது.

தலைவன், நாணத்தாலும் அச்சத்தாலும் வேட்கையை மறைத்து நின்ற தலைவியை முன்னிலையாக்கிச் சில கூற, அவள் தன் வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் முறுவல் செய்து உவகைக்கண்ணீர் துளித்தபின் நாணத்தான் தன் கண்களைப் பொத்திக் கொள்ளத் தலைவன் அவளை நோக்கி, “நான் கூறுவதனை நீ எதிர்ஏற்றுக் கொள்ளாது தலையைக் கவிழ்த்துக்கொண்டு நாணுகிறாய். காமம் எல்லையைக் கடக்குமாயின் அஃது என்னான் தாங்குதற்கு அரியது. உன் கண்கள் என்னை வருத்துகின்றன என்று கருதிக் கடை சிவந்த உன் கண்களைப் பொத்திக்கொண்டாய். கரும்பின் வடிவம் தொய்யிலாக எழுதப்பட்ட உன் தோள் களும் எனக்கு வருத்தம் தருகின்றன” (நற். 39) என்பது போல்வன கூறித் தலைவியை மெய்யுறு புணர்ச்சிக்கு உடன் படச் செய்தல். (98. இள.)

தலைவன் (புரவலன்) தலைவியைத் தேற்றல் -

{Entry: H08__442}

வரும் வழியில் தனக்கு எத்தகைய துன்பமும் நேராது என்று தலைவன் தலைவிக்கு ஆறுதல் கூறுதல். “என்கையில் உன் கண் போன்ற கொடிய வேல் உண்டு. அதன் ஒளி இருளைப் பருக, நான் யாதோர் அச்சமும் இன்றி வந்தேன்; இனியும் வருவேன். நீ கவலற்க” என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 1581)

தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -

{Entry: H08__443}

“என் நெஞ்சத்துள்ள காமச்காய்ச்சலுக்கு மருந்தாகிய தன் கொங்கைகளால், பூசிய சந்தனம் அழியுமாறு என்னைத் தழுவும் சிறுகுடியி லுள்ள கானவன்மகள் எனக்கு என்றும் இனிமை செய்பவளாயினும், பிரிந்து போகுங்கால் எனக்கு என்றும் கொடியவளாக இருக்கிறாள்” என்று தலைவன் தலைவியது பிரிவு ஆற்றாது கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதால் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -

{Entry: H08__444}

இடந்தலைப்பாட்டிலும், பாங்கற் கூட்டத்திலும் தலைவி யைப் புணர்ந்து நீங்கும் தலைவன், “நெய்ப்பினையுடைய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையுமுடைய இக் குறுமகள் மணத்தையும் தண்மையையும் உடையவள். ஆயினும், பிரிந்த காலத்துப் பொறுத்தற்கு அரிய வருத்தத் தைத் தருபவள். அவள் தன்மைகளை என் சொல்லால் புகழ்ந்து கூறும் ஆற்றல் எனக்கு இல்லை. சில சொற்களையே பேசுகிறாள். அவையும் மிகமென்மையாகவுள்ளன. யான் அவளைத் தழுவும்போது பஞ்சணையைப் போன்று மென் மையை யுடையவளாய் இருக்கிறாள்” (குறுந். 70) எனவும்,

“காந்தள், முல்லை, குவளைஇவற்றைத் தொடுத்துக் கட்டப் பட்ட பூமாலை போன்று நறுமணம் கமழும் இத்தலைவியின் மேனி தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தித் தழுவுதற்கு இனிதாயுள்ளது”. (குறுந் 62) எனவும்

தலைவியிடம் தான் பெற்ற ஐம்பொறி இன்பத்தைத் தலைவன் மகிழ்ந்து தன்னுள் கூறியது. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் தலைவியை முன்னிலையாக்கிக் கூறல் -

{Entry: H08__445}

தலைவியின் வேட்கைக் குறிப்பினை அவள்கண்களான் உணர்ந்தவழியும், குலத்தின் வழிவந்த இயற்கை வன்மை யான் நாணமும் அச்சமும் மீதூரக் காமக்குறிப்பு இல்லா தாளைப் போல அவள் நின்றவிடத்துத் தலைவன் அவளை முன்னிலைப்படுத்தி,

“‘மடந்தாய்! தோழியரொடு கூடிவினையாடாமலும் நெய் தல் பூக்களை மாலையாகத் தொடுக்காமலும் இக்கடற்கரைச் சோலையின் ஒரு பக்கத்தே நிற்கும் பேரழகியாகிய நீ, இக்கடற் பரப்பில் விரும்பித் தங்கியிருக்கும் நீர் அரமகளோ? அல்லது இந்த உப்பங்கழி அருகே தங்கி வாழும் மானுடப் பெண்ணோ? சொல்லுக’ என்று பணிவான சொற்களில் யான் வினவியதைக் கேட்டு, அவள் உவகைக் கண்ணீர் துளித்துப் புன்முறுவல் செய்த குறிப்பினான் அவளைத் தழுவுதற்கு எனக்கு இசைவு கிட்டிவிட்டது” (நற். 155) என்று தன்னுள் கூறிக் கொண்டது. (தொ. பொ. 98. இள.)

இஃது இயற்கைப் புணர்ச்சியின் முன் நிகழ்வது எனவும், இரண்டாம் கூட்டத்து நிகழ்வது எனவும் இரு திறமாகக் கூறப்படுகிறது.

தலைவன் தலைவிமுன் தனக்கு முன்னர் வந்து உரையாடாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன்னிலைக்கண், கற்பனை யில் கொண்டுவந்து கூறல் 101 நச்.

தலைவன் தலைவியை விடுத்தல் -

{Entry: H08__446}

தலைவன் தலைவியைக் கூடி மகிழ்ந்தபின் ஆயத்துடன் சேர அனுப்புதல்.

“வானமாகிய நீர்நிலையில் விண்மீன்களாகிய மொட்டுக் களுக்கும், மேகங்களாகிய இலைகளுக்கும் இடையே சந்திரனாகிய தாமரை அழகுற விளங்குவது போலச் சோலை யில் உன் தோழியர்கூட்டம் பொலிவு பெறுமாறு நீ அவர் களைச் சென்று அடைவாயாக” (கோவை. 124) என்று தலைவன் தலைவியை ஆயத்து உய்த்தல்.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது இடந்தலைப்பாட்டிலும் ‘ஆயத்து உய்த்தல்’ என்னும் கிளவியாக வரும். இக்கூற்று ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கும் உரியது. (ந. அ. 149)

தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -

{Entry: H08__447}

உடன்போக்கு நிகழும்காலை தலைவியை மீட்கும் நோக் குடன் அவள் சுற்றத்தார் பின் தொடர்ந்து வருவதைத் தலைவி தலைவற்குக் கூற, உடனே அவன் அவளை விட்டு அப்பாற் செல்லுதல்.

தலைவியின் உறவினர் படைக்கருவிகளுடன் வருவதைக் கண்ணுற்ற தலைவன், “என் உயிரே அனையாய்! நம்பின்னே வருவோர் ஆயுதம் தாங்கிய ஆறலைகள்வர் எனின், அம் பொன்றினாலேயே அனைவரையும் கொன்று குவிப்பேன்; ஆயின், வருவோர் நின் உறவினர் ஆதலின், அவர்களைப் புண்படுத்துதல் தக்கதன்று என விடுத்தேன். நீ என்னுடன் வருதல் வேண்டா; இங்கேயே நில்; இவர்கள் நின்னை மீட்டுக் கொண்டு செல்க. விரைவில் நான் வந்து வரைந்து கொள் வேன்” (தஞ்சை. 364) என்ற தலைவன் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘அடலெடுத்துரைத்தல்’ என்னும் (216). இது வரைவியலுள் ‘உடன்போக்கு இடையீடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 198)

தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -

{Entry: H08__448}

உடன்போன தலைவன் தலைவியுடன் தன்னூரைச் சென் றடைதல். நகர் - இல்லமும் ஆம்.

“சங்குகள் முழங்க, முரசங்கள் ஆர்ப்பத் தலைவனுடைய உறவினர்கள் எதிர்கொள்ளப் பொலிவு பெறும் மாளிகை யைத் தலைவனும் தலைவியும் திருமாலும் திருமகளும் போலப் பிரியா அன்பொடு வந்தடைந்தனர்” (அம்பிகா. 384) என்பது போன்ற கவிகூற்று.

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொண் டது. (இ. வி.536 உரை)

தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -

{Entry: H08__449}

தலைவி வைகும் ஊரைப் பார்த்துத் தலைவன் ஏங்கி நினைத்தல்.

“அவளைப் பெறுதல் அரிதாயிற்று; அவள் பின்னே சென்றுவிட்ட என் நெஞ்சத்தை மீட்பது அதனினும் அரிதா யிற்று. என் செய்வேன்? இனி அவள் வாழும் ஊரினைச் சென்று உறுதலும் அரிதாம். என்னுயிர் சோர்வுறுகின்றது”. (தஞ்சை. கோ. 162) என்பது போன்ற தலைவன் கூற்று.

இதனைப் ‘பதிநோக்கி வருந்தல்’ என்னும் திருக்கோவையார் (147). இது களவியலுள் ‘பகற்குறி இடையீடு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

தலைவன் தழை கொண்டு சேறல் -

{Entry: H08__450}

தோழியிற் கூட்டத்தில் தலைவனுக்கு உடனேயே தலைவியின் உடன்பாட்டினைக் கூறின் அவளை அவன் எளியளாகக் கருதுவான் என்று சேட்படை கூறத் துணிந்த தோழியிடம் தலைவன் சென்று, அவள் குறிப்பறிந்து, பின்னும் மறுத்தற்கு இடமின்றி, “நும் கருணை வேண்டி வந்துள்ள என் கையி லுள்ள இத்தழையுடையைக் கையுறையாக ஏற்று என்குறை முடித்தருளுவீர்” என்று கூற வேண்டிச் சந்தனத்தழை கொண்டு செல்லுதல். (கோவை. 90)

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

தலைவன் தளர்ந்தோள் ஒம்பல் -

{Entry: H08__451}

உடன்போக்கின்கண் தலைவி நடைமெலிந்தவழித் தலைவன் அவளுக்கு ஓய்வளித்து இனிதின் உரையாடி மகிழ்வித்து அழைத்துச் சேறல். (இஃது ‘அசைவு அறிந்து இருத்தல்’ (ந. அ. 182) எனவும் படும்.) இது பாலை நடையியல். (வீ. சோ. 93 உரைமேற்.)

தலைவன் தளர்வகன் றுரைத்தல் -

{Entry: H08__452}

இரவுக்குறியிடத்து வந்த தலைவியைத் தலைவன் எதிர்ப் பட்டுத் திருமகளாகிய அவள் தன் இருப்பிடம் ஆகிய தாமரையை இரவில் தானே வலியத் திறந்துகொண்டு பொழிலுக்கு வந்த செய்தி தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறியது.

இதனை ‘வண்டுறை தாரோன் வந்தெதிர்ப்படுதல்’ (ந. அ. 158) எனவும் கூறுப.

இது திருக்கோவையாருள் ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 164)

தலைவன் தன்கடமை கூறல் -

{Entry: H08__453}

உடன்போக்கிக்கண் தலைவன், தலைவியை அழைத்துக் கொண்டு பாலைவனத்திடைச் செல்லும்போது, தன்னை நம்பி வந்த அவளை ஒருபோதும் கைவிடாத தன் கடமை யுணர்ச்சியை அவளிடம் கூறிக்கொண்டு செல்வான்.

தலைவன் தன் துணிபு உரைத்தல் -

{Entry: H08__454}

தலைவியைப் பெற நினைத்த தலைவன் தலைவியும் தோழி யும் சேர்ந்திருந்த இடத்தை அடைந்து தான் மடல் ஏறியாவது தலைவியைப் பெற முடிவு செய்த செய்தியைத் தோழியிடம் குறிப்பிடுதல்.

இதனை ‘ மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துச் சாற்றல்’ என்பர். (ந. அ. 145)

இது திருக்கோவையாரில் ‘மடற்றிறம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 75)

தலைவன் தன் நிலை உரைத்தல் -

{Entry: H08__455}

தலைவியின் மனத்தளர்வான் ஏற்பட்ட பொலிவு அழி வினைக் கண்ட தலைவன், தலைவியிடம் தான் கொண்ட பேரன்பினை அவள்மனத்தில் நிலைபெறுமாறு கூறல் (தொ. பொ. 98 இள.)

தலைமகள்மாட்டுத் தலைவன் தன்னுள்ளத்தில் மேலிட்டு நின்ற வேட்கை மிகுதியினை இயற்கைப்புணர்ச்சியின் முன்னர்க் குறிப்பிடுதல். அஃதாவது, தலைவன் தலைவியின் பெருவனப்பினைப் புகழ்ந்து கூறிய அளவில் அவள் நாணத் தால் கண்களைப் பொத்திக்கொள்ள, அவளை நோக்கி, “காமம் மிகுவதாயின் அதனை என்னால் தாங்குதல் இயலாது. கடை சிவந்த நின் கண்கள் என்னைக் கோபிக்கின்றன என்று அவற்றைப் புதைத்துக்கொண்டாய். உன்னுடைய கரும்பு வடிவில் தொய்யிற்கொடி எழுதப்பெற்ற தோள்களும் எனக்குத் துன்பம் தருகின்றன” (நற்.39) என்றாற் போல்வன கூறுதல். (இள.)

தம் நிலையுரைத்தல் ஆவது இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவன் தலைவியிடம், “உனக்கும் எனக்கு மிடையேயுள்ள தொடர்பு எழுபிறப்பும் தொடர்ந்து வருகிறது. இது வரை இருவராகித் தனித்து வாழ்ந்த நாம் இக்கூட்டத்தின் பின் தனித்தனிப் பிரிந்து வாழும் துயரம் நீங்கப் பெறுவோம். பிரிவு அரிதாகிய காமத்துடனேயே இருவருக்கும் ஒருசேரஉயிர் போவதாக என்று விரும்பு கிறேன்” (குறுந். 57) என்றாற் போல்வன கூறுதல். (101 நச்.)

தலைவன் தன் நிலை சாற்றல் -

{Entry: H08__456}

தோழி உதவி செய்ய மறுத்தால் தான் தலைவியைக் கூடுதல் இயலாது என்பதைத் தலைவன் அவளுக்குக் கூறுதல்.

“தோழி! நின் உதவியின்றி யான் தலைவியைப் பல பாராட்டி அணுகுவதும் கூடுவதும் இயலா. அவை இயலாவிடின், யான் உயிர் வாழ்தலும் இயலாது” (ஐங். 178) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

{Entry: H08__457}

உடன்போக்கில் சுரத்திடை நடந்து தளர்ந்து உடன்வரும் தலைவிக்குத் தன் ஊர் அருகே வந்துவிட்டமை தலைவன் கூறுதல்.

“நங்காய்!அதோ செய்குன்றுகள் உள. இவை அழகிய மலர் ஓடைகள். அங்குத் தெரிவன உயர்மரச் சோலைகள். அப்பக்கம் வேதியர் வேதம் ஓதும் இடங்கள். இவ்விடம் இறைவன் திருக்கோயில்” (கோவை. 223) என்றாற் போலத் தலைவன் தன்பதிக்கு வந்து சேர்ந்த செய்தியைத் தலைவிக்குக் கூறல்.

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றல் -

{Entry: H08__458}

தலைவன் தன் ஊர்க்குத் தான் சென்று வரல் வேண்டுமென்று தோழியிடம் கூறுதல். களவொழுக்கம் தொடர்ந்து நிகழும் போது இது நேர்கிறது.

“தோழி!யான் எனது ஊர் சென்று விரைவில் மீள்வேன். அதுவரை தலைவியைத் தேற்றுவித்தல் நின் கடமை” (தஞ்சை. கோ. 248) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -

{Entry: H08__459}

“என் கண் நிறைந்த அழகியான நின் தலைவிக்குப் பெண் ணிற்கு இயல்பாய் நிறைந்த மடமை எல்லை மிக்குள்ளது” என்று தான் பிரியாதபோதே பிரிந்துவிடக்கூடும் என்று அஞ்சிய தலைவியது குறிப்புக் கண்டு தலைவன் தோழியிடம் கூறியவாறு. (குறள் 1272)

தலைவன் தன்மனத்து உவகை கூர்தல் -

{Entry: H08__460}

பரத்தையிற் பிரிந்து சென்று தலைவியின் மகப்பேற்றை அறிந்து மனைக்குத் தலைவன் மீண்டபோது, தோழி தலைவி புதல்வனை ஈன்று நெய்யாடிய செய்தி கூறியபோது, அவன் தலைவியது உயர்வையும் புதிய அழகையும் நினைந்து உவத்தல்.

“என் தலைவியின் மையுண்ட குவளைமலர் போலும் கண்களையும், மனமகிழ்ச்சியையும், குழந்தையை ஏந்திய கைகளையும் பால் பரவியுள்ள தனங்களையும் நெய்யாடிப் பசந்து ஒளி வீசும் உடம்பையும், குணங்களையும் கண்டு மகிழ்வேன்.” (அம்பிகா. 465) என்ற தலைவன் கூற்று. (‘யாணரைக் காண விரும்பல்’ என்பது இக்கோவைக் கூற்று.)

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -

{Entry: H08__461}

‘கடல் ஞாலம்’ என்ற பாடல்-

“உலகத்தைப் படைத்ததும், உலகமாய்ப் பரந்திருப்பதும், உலகத்தைக் காலால் அளந்துகொண்டதும், அனைத்தும் யானே என்றெல்லாம் பேசுகின்றாள் என் மகள். இஃது இவளிடத்திலே திருமால் ஆவேசித்து இருப்பதால்தானோ, என்னவோ!” என்னும் தாய் கூற்று. (திருவாய். 5-6-1)

தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -

{Entry: H08__462}

தலைவியின் உருவத்தை ஓவியத்தில் வரைய ஒண்ணாது என்ற பாங்கிக்குத் தலைவன், தன்னால் அவளை ஓவியத்தில் எழுத இயலும் என்று தன் ஆற்றலைக் கூறிக் கொள்ளுதல்- இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 145)

தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -

{Entry: H08__463}

தோழி, தலைவியின் இளமை முதலிய இயல்பினை எடுத்துக் கூறித் தலைவனுடைய வேட்கையை மாற்றக் கருதிய விடத்தே தலைவன் கூறுதல்.

“தோழி! குன்றக் குறவனுடைய அன்புக்குரிய இளைய மகள் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும், தழை உடையையும், வளைல்கள் அணிந்த கைகளையும், விழுந்து முளைத்த வெள்ளிய பற்களையும், உடையவள். அவள் இளையளாய்த் தோற்றம் வழங்கினும், என்னைத் தன் வனப்பினால் பெரிதும் வருத்திவிட்டாள்” (ஐங்.256) என்பது போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன் நிலை கொளீஇக் கூறியது.

தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -

{Entry: H08__464}

“தோழி என்னை அகற்றும் சொற்களைக் கூறியகாலை நான் குழைந்து கூறியகாலை நோக்கியபொழுது, தலைவி தானும் இரங்கி நோக்கித் தனக்குள்ளே நகுகின்றாள்;அவளுடைய அந் நகைக்கண் ஒரு நன்மைக் குறிப்புண்டு” என்று தலைவன் கூறுதல். (குறள் 1098)

தலைவன் தன்னைப் புகழ்தல் -

{Entry: H08__465}

தலைவன் தலைவி முன்னர்த் தான் சென்று கற்றுத் தெளியப் போவதாகவும், பொருள் பெரிதும் ஈட்டி வந்து இரவலர்க்குக் கொடுப்பதாகவும், அறம் செய்வதாகவும், தன் நண்பனுக்கு உதவப்போவதாகவும் கூறித் தன் ஆற்றலைப் புகழ்ந்து கூறித் தலைவியைத் தன் பொதுத்தொண்டுக்கு உதவும் வகையில் பிரிவுக்கு உடன்படுமாறு செய்தல். (தொ. பொ. 230 குழ.)

தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -

{Entry: H08__466}

“குளத்தில் நீராடும் எருமை நன்கு பிணிக்கப்பட்ட ஓடத்தைப் போலத் தோன்றும் ஊரனே! (நீராடும் எருமை பலரும் ஏறுதற்குரிய அம்பி போலத் தோன்றுவது போல,நீயும் பலருக்கும்உரிமையாவாய்போலும்!) இவள், நீ தவறு செய்தவழி, உன் பெற்றோர் போல உன்னைக் கடிந்து கொள்ள உரிமையுடையவள் என்பதனை மறந்தாயோ?” என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறுதல். (ஐங். 98)

தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

{Entry: H08__467}

“புதுப்புனலில் நீராடிப் போரைச் செய்யும் சிவந்த கண்களை யுடைய இம்மகள் யாவள்?”என்று கூறித் தலைவன் தன் பரத்தையின் கைகளைப் பற்றினானாக, அவள் தோழி, “இவள் யாருடைய மகளாயிருந்தால் உமக்கு என்ன?எம் கைகளைப் பற்றுதலுக்கு உரிமை கொண்டாடும் நீர் யாருடைய மகன்?” என்றாற் போலக் கூறுதல். (ஐங்.79)

தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-

{Entry: H08__468}

தலைவி ஆயத்துடன் சேராது தனியே இருப்பது கண்ட தலைவன் கவலை நீங்க மகிழ்ந்து உரைப்பது.

“அதோ என உயிரனையாள் ஆயத்தொடு கூடி மலர் பறிக்கா மலும், சுனையாடாமலும், பந்து ஆடாமலும் தனியே நிற்கிறாள். என் வேட்கை பயன் பெறும்” (கோவை. 40)என்று தலைவன் கூறுதல்

இதனைக் களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகு திக்கண்ணும் (இ.வி)பாங்கற் கூட்டம் எனும் தொகுதிக் கண்ணும் (கோவை) அடக்குப. (இ.வி. 503 உரை; கோவை. 40)

தலைவன் தாளாண்எதிரும் பிரிவின்கண் கூறல் -

{Entry: H08__469}

களவுக் காலத்துத் தலைவன் நெடுந்தொலைவு தலைவியைப் பிரிந்து செல்லாமல் பக்கத்து ஊருக்குத் தன்முயற்சியான் செயற்படப் பிரியுமிடத்துக் கூறுதல்.

“பாக!இன்றே வினை குறித்துப் புறப்பட்டு, நாளை, மலையி லிருந்து விழும் அருவியைப் போல நம் தேர் விரைவில் தன் சக்கரங்களான் புதர்களை அறுத்துக்கொண்டு விரைந்து வர, தலைவியின் மேனியை மணந்து உவக்கும் வகையில் மீளுதல் வேண்டும்”(குறுந். 189) என்றாற் போலப் பிரிதல் அருமை கருதித் தலைவன் கூறுதல்.

பிரிந்தவழி வாடைக் காற்றை நோக்கி, “அருவிகளையுடைய மலையின் உச்சியில் மான்கள் நெல்லிக்காயைத் தின்னும் முன்னிடங்களையுடைய குடிசைகள் நிறைந்த சிறுகுடிக்கண் வைகும் தலைவி வருந்தாதவாறு அவளைக் காப்பாயாக!” (குறுந். 235) என்று தலைவன் கூறுதலும்உண்டு. (தொ. பொ. 105இள.)

இத்துறையைத் தலைவி கூற்றாகக் கொள்ளுவர் நச்சினார்க் கினியர். அவர் ‘வாளாண் எதிரும் பிரிவினானும்’ என்று பாடம் ஓதுவர். (107 நச்.)

தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -

{Entry: H08__470}

‘மனைக்கண் சோம்பியிருத்தலை விடுத்து முயற்சியால் பொருள் தேட வேண்டும்’ என்னும் எண்ணத்தை, “தலைவியை மனையில் இருந்துகொண்டு துயருறாது பேண வேண்டும்” என்னும் எண்ணமும், “எப்படியாவது பொருளீட்டல் வேண்டும் என்ற எண்ணம் கூடாது;தத்தம் தகுதிக்கேற்ற தொழில் செய்தே பொருளீட்டல் வேண்டும்; அதற்கு. நினைத்த அளவிலேயே வாய்ப்புக் கிட்டாது” என்னும் எண்ணமும் மாறாகப் பொருந்தித் தடுத்தற்கண் தலைவன் கூறல். (தொ. பொ. 41. நச்.)

தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -

{Entry: H08__471}

பகற்குறியிலோ இரவுக்குறியிலோ தலைவன் தலைவியைக் காண இயலாத நிலையில் பொழுது வீணே கழிந்தவழி, அவளைக் காணும் வேட்கையான் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி ஆசையால் மயக்கமுற்றுச் செயலற்று நிற்கும் காலத்துத் தலைவன் கூறுதல். (தொ. பொ. 105 இள.)

“இக்காந்தள் மலரில் யான் செருகி வைக்கும் மோதிரம் என் வருகையைத் தலைவிக்கு உரைப்பதாகுக” என்று கூறித் தன் மோதிரத்தை அதன்கண் செருகிச் செல்லுதல், மோதிரம் மாலை முத்தம் முதலியவற்றைக் கோட்டினும் கொடியினும் இட்டுவைத்துத் தன்னுட் கூறுதல் போல்வன. (107 நச்.)

இச்செய்தியைத் தலைவி கூற்றாகக் கொள்வர் நச்சினார்க் கினியர்.

காணாவகையின் பொழுது நனி இகந்து தலைவி குறி தப்பியக்காலும், தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரான் என்பது தான் அறியும் ஆதலின், ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஓர் குறி செய்தன்றி வாளாது பெயரான் அன்றே? அக்குறி காணும் காட்சி விருப்பினான் தலைவி பிற்றைஞான்று விடியலிற் சென்று ஆண்டைய குறி கண்டு கலங்கி அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்தல் அறியாது மயக்கத்தொடு கையறவு எய்தும் பொழு தின்கண் கூற்று நிகழ்த்துவாள்.

குறி- மோதிரம் மாலை முத்தம் முதலியன கோட்டினும் கொடியினும், இட்டு வைத்தனவாம். இவை வருத்தத்துக்கு ஏதுவாம். (நச்.)

“தோழி! இக்காந்தள் மென்முகையில் வண்டு மொய்க்க வில்லை. வெற்பர் வந்து சென்றதற்கு அடையாளமாக நீலக்கல் மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது” என்றாற் போன்ற தலைவி கூற்று. (நச்.)

தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -

{Entry: H08__472}

“நின்னின் பிரியேன்” என்று தலைவியைப் பிரியாமைக்கு உறுதி மொழி கூறிய தலைவன் தலைவிக்குச் சொன்ன சொல்லைப் பிழைத்த நிலையினைக் கொண்டவழித் தன் நெஞ்சிற்குக் கூறுதல். (பிழைத்தல்- பிரிதல்) (தொ. பொ. 144 இள.)

“நெஞ்சே! இன்று அழகிய இல்லத்தில் பூம்படுக்கையில் தலைவயோடு இனிமையாகக் கழித்துவிட்டோம். நாளை இவளை விடுத்துப் பொருள்வயின் பிரிந்து செல்லும்போது, பாழிடத்தே சிற்றூரில் அம்பலத்தில் கறையான் ஏறிய கூரைக்கடியில் மெழுகாத் திண்ணையில் தனிமைத் துயரான் உறக்கமும் நீத்துத் தங்கியிருத்தலையா நீ விரும்புகிறாய்?” (அகநா. 167) என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறுதல். (இள.)

இயற்கைப் புணர்ச்சி தொடங்கிப் பலகாலும் “பிரியேன்” என்று தெளிவித்ததனைத் தப்பித் தலைவன் பிழைத்த பிரிவின்கன் கூறுதல். (146 நச்.)

“நெஞ்சே! அன்பும் மடனும் சாயலும் இயல்பும் நெஞ்சை நெகிழ்விக்கும் சொற்களுமுடைய தலைவியோடு ஒன்றி அவளைத் தழுவி இன்று பொழுது கழித்த நாம், நாளை தேக்குமரங்கள் ஓங்கிய அரிய காட்டு வழியில் சிறிய ஊரிலே நம் தலைவியின் அறிவு கலங்கிய பார்வையையும் புலவியை யும் நினைத்தவாறு தனித்துத் தங்கியிருத்தல் இயலுமா?” (அகநா.225) என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறுதல். (நச்.)

தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -

{Entry: H08__473}

“களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றம் தெய்வத்தான் ஆயிற்றேனும் குற்றமேயன்றோ?” என உட்கொண்ட தலைவிக்கு, “யான் காதல் மிகுதியால் புணர்ச்சி வேண்ட, என் குறிப்பிற் கேற்ப ஒழுகினை ஆதலின் நினக்கொரு குற்றமும் இன்று” என்று தலைவன் தான் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூற்று நிகழ்த்துதல்.

“தோழி! ‘நன்னாள் வேண்டும்’ என்னாது கூடிய கூட்டத் துள் தங்கி நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினார் போல நாம் குறித்துழி வந்தொழுகிய தலைவர், தாம் குறித்தனவே செய்தனம் நாம் என நமக்குத் தவறின்மை கூறினார்” (பழம் பாடல்) எனத் தலைவி தோழி யிடம் கூறிய கூற்றில், தலைவன் தான் அவட் பிழைத்தமை குறித்ததைச் சுட்டியவாறு. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் தலைவிக்குத் தவறு செய்த காலத்தும் கூறுவன்; இது முன்னர்க் களவில் குறிபிழைத்ததைத் தலைவி கேட்க, அது தான் செய்த தவறே என்று தலைவன் கூறுதல்.(194 குழ.)

தலைவன், தீராத் தேற்றத்தின்கண் கூறல் -

{Entry: H08__474}

தீராத் தேற்றம் இயற்கைப்புணர்ச்சியின் பின்னரும் இடந் தலைப்பாட்டின் பின்னரும் நிகழ்வதாம். இஃது இயற்கைப் புணர்ச்சியுடன் நிறைவடையாத தெளிவு என்று ஒரு சாரார் பொருள் கூறி, இயற்கைப் புணர்ச்சியின்கண் தலைவியைக் கூடி இன்புற்ற தலைவன், “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பங்களும் இத்தலைவியிடத்து ஒரு சேரப் பெற்றேன்” (குறள் 1101) என்று கூறுவதனொடு நிறை வுறாமல் இடந்தலைப்பாட்டு இறுதியில், “இத்தலைவியின் தோள்கள் யான் விரும்புகிற ஒவ்வொரு பொருளாகவும் இருந்து எனக்கு இன்பம் தருகின்றன” (குறள். 1105) என்றாற் போல, மீண்டும் புனைந்துரைத்தற்குக் காரணமான மன நிலைக்கண் கூறுவதனை இத்துறைக்கு எடுத்துக் காட்டாகத் தருவர். (தொ. பொ. 99 இள.)

மற்றொரு சாரார், தீராத் தேற்றம் என்பதற்குத் தலைவியைக் கூடிய தலைமகன் அவள் மனம் தெளியுமாறு அவளை ஒரு போதும் தான் பிரியாமைக்கு மலையிலுள்ள தெய்வங்க ளொடு பொருத்திச் சூளுறுதல் என்று பொருள் கூறி, இஃது இடந்தலைப்பாட்டின் இறுதியில் நிகழ்வது என்ப. (102 நச்.)

தலைவன் தலைவியை மணப்பதற்குக் காலம் தாழ்த்தியவழித் தோழி அவனை நோக்கி, “மகிழ்ந! புன்கம்பூ வீழ்ந்து கிடக்கும் வெண்மணல், வேலனான் நெற்பொரி சிதறப்பட்ட வெறி யாடு களத்தை நிகர்க்கும் எம்மூர் ஆற்றங்கரையில் அமைந்த மணல்மேட்டில் தலைவியின் கையைப் பற்றிக் கொண்டு தெய்வத் தன்மை பொருந்திய அரமகளிர் சான்றாக, ‘உன்னை விரைவில் மணப்பேன்’ என்று கூறிய சூளுரையை நெகிழ விட்டுக் கொண்டிருப்பதால், அச்சூரர மகளிர் நினக்குத் துன்பம் விளைப்பரோ என்ற நினைப்பு எங்களுக்கு வருத்தத் தைத் தருகிறது” (குறுந். 53) என்று கூறிய கூற்றில், தலைவன் தலைவியை ஒருபோதும் பிரிவதில்லை என்று தெய்வத்தை முன்னிலைச் சான்றாகக் கொண்டு உறுதிமொழி கூறியமை அறியப்படும். (நச்.)

தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -

{Entry: H08__475}

“முன்பு தலைவியைக் கூடியிருந்தபோது பெற்ற இன்பம் பிரிந்திருக்கும் இப்போது நினைப்பினும், இப்பொழுதும் அதனையே பெற்றாற் போல மகிழ்வு பெறச் செய்வதால், கள்ளினும் காமம் இன்பம் பயப்பது- கள் உண்டாலன்றி மகிழ்விக்காதன்றோ!” என்று தலைவன் பாங்கனிடம் கூறுதல். (குறள் 1201)

தலைவன் தூதிற் பிரிதல் -

{Entry: H08__476}

துதிற் பிரிவினைத் தலைவன் தலைவிக்குத் தோழி வாயிலாக அறிவுறுத்தலும், தலைவி பிரிவுடன்படாமையும், தலைவிக் குத் தலைவனும் பாங்கியும் அப்பிரிவினை இன்றியமை யாமை அறிவுறுத்தி உடன்படுவித்தலும், தலைவி பிரிவிற்கு உடன்படுதலும், தூதிற் பிரிந்துழித் தலைவன் (முன்பனிப்) பருவம் கண்டு வருந்தலும், அவ்வாறே அப்பருவம் கண்டு வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தலும், ‘தலைவன் தூதிற்பிரிதல்’ என்னும் தொகுதிக்குரிய கூற்றாம். பிரிவுடன் படுத்தல், பிரிவுடன்படுதல், வன்பொறை (-தலைவி தலைவன் பிரிவை அரிதாக ஆற்றியிருத்தல்), தலைவன் வருவழிக் கலங்கல், வந்துழி (இருவர்தம்) மகிழ்ச்சி என்பனவும் ஏற்ற பெற்றி கொள்ளப்படும். இக்கூற்றுக்கள் ஏனைய கல்விப் பிரிவு, காவல் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என்னும் நான்கற்கும் பொருந்தும். அவ்வத் தலைப்பி னுள்ளும் அடக்கிக்கொள்க. (ந. அ. 209;இ. வி. 558 உரை)

தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -

{Entry: H08__477}

இருபெரு வேந்தர் போர் செய்வது குறித்தவழி, அவ்விருவரை யும் சந்து செய்வித்தல் அரசர் அந்தணர் வணிகர் குறுநில மன்னர் முதலியோருடைய கடமை ஆதலின், பகையரசர் இருவரைச் சந்து செய்வித்தலேயன்றி, மீண்டும் போர் பற்றிய எண்ணம் நிகழாதவாறு அப்பகையரசர்தம் துணைவர் முதலாயினாரைப் பிரித்தல் முதலியன கருதித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதியவழிக் கூறுதல்.

(தொ. பொ. 41 நச்.)

தலைவன் தெய்வத்திறம் பேசல் -

{Entry: H08__478}

தம்மைச் சேர்த்து வைத்த தெய்வத்தின் செயலைத் தலைவன் கூறுதல்.

“பெண்ணே! நம் இருவரையும் கூட்டிவைத்ததுஊழ்வினை. தெய்வத் தன்மை வாய்ந்த இக்காதலை யாராலும் சிதைத்தல் இயலாது!” (தஞ்சை. கோ. 22) என்ற தலைவன் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘அருட் குணம் உரைத்தல்’ என் னும் (14). இது களவியலுள் ‘வன்புறை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 129)

தலைவன் தெய்வத்தை மகிழ்தல் -

{Entry: H08__479}

தலைவியைக் கண்ட தலைவன் அவள் மானுடமகளே என்பது துணிந்து, பின் அவள் தன்னிடத்துக் காதல் கொண் டுள்ள குறிப்பையும் அவள் கண்களால் அறிந்து, இத் தலைவியைத் தான் காண வைத்த தெய்வத்தின் திருவருளை நினைத்து மகிழ்தல்.

இது ‘தெய்வம் மகிழ்ந்துரைத்தல்’ எனவும்படும் (இ. வி. 491 உரை). திருக்கோவையாருள் ‘இயற்கைப் புணர்ச்சி’ என்னும் தொகுதிக்கண் ஒரு கூற்று இஃது. (கோவை. 6)

தலைவன் தெய்வப் புணர்ச்சி துணிதல் -

{Entry: H08__480}

இயற்கைப் புணர்ச்சியன்று தான் கண்ட தலைவியுடன் கூடி மகிழத் தலைவன் முடிவு செய்தல்

இது கைக்கிளையின்கண்ணதொரு நிகழ்ச்சி. (இ. வி. 491)

இதனைப் ‘புணர்ச்சி துணிதல்’ என்றும் கூறுப. (கோவை. 7)

தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -

{Entry: H08__481}

தலைவியை எதிர்பாராத வகையில் அளித்த தெய்வம் மீண்டும் அவளைக் காணத் துணை செய்யும் என்று எண்ணங் கொண்டு, அவள் பிரிவிற்கு மனத்தைத் தேற்றிக் கொண்டு தலைவன் சேறல்.

தெய்வத்திருவருளால், எதிர்பாரா வகையால் தனியனாய் வந்த தலைவன், தனியளாய்ச் சோலையில் நின்ற தலைவியை எதிர்ப்பட்டு, அவள் குறிப்பறிந்து கூடி அவளைத் தன் உயிராகவே மதித்து, உயிரைப் பிரிந்து உடல் செல்வது போல அவளைப்பிரிந்து போதற்கு வருந்தி, அவளை அன்று கூட்டுவித்த தெய்வம் தொடர்ந்து கூட்டுவிக்கும் என்னும் உறுதியையே துணையாகக் கொண்டு மனம் தேறி அவளை விடுத்து நீங்குவது.

இஃது இயற்கைப் புணர்ச்சி என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 11)

தலைவன் தெய்வம் மகிழ்ந்துரைத்தல் -

{Entry: H08__482}

“எழில் வாய்ந்த தலைவியைத் தான் காண நேர்ந்தமை தெய்வச் செயலே” என்று தலைவன் நினைத்து மகிழ்தல். இயற்கைப் புணர்ச்சி முன் நிகழ்வது இது.

இதனைத் திருக்கோவையார் ‘தெய்வத்தை மகிழ்தல்’ என்னும் (6).

இது கைக்கிளைக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 491)

தலைவன் தெளிவு அகப்படுத்துக் கூறல் -

{Entry: H08__483}

தலைவன் ‘முன்னிலையாக்கல்’ முதலியன கூறி இயற்கைப் புணர்ச்சியை விழைந்து நிற்கும் நிலையில், தலைமகள் பண்பினைத் தான் அறிந்து அப்பண்பினைத் தன் உள்ளத்துக் கொண்டு தலைவியின் மனநிலையைத் தெளிவாக அறிதல்.

“நின்தாயும் என்தாயும் முன்னர் அறியாதவர்கள்; நின் தந்தை யும் என் தந்தையும் இதற்குமுன் உறவினர் அல்லர்; நீயும் நானும் இதற்கு முன் ஒருவரை ஒருவர் அறியோம். ஒத்த அன்புடைய இருவேம் நெஞ்சமும், செம்மண் நிலத்தில் பெய்த மழையின் நீரில் நீரின் தன்மையும் மண்ணின் செம்மை யும் பிரிக்க முடியாதவாறு போல இருவர் நெஞ்சமும் கலந்து விட்டன” (குறுந். 40) என்றாற் போல இருவர் உள்ளமும் ஒத்த பண்பினைத் தலைவன் கூறல். இஃது ஒரு கருத்து. (தொ. பொ. 98 இள.)

இனி ஏனைய கருத்து:

இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவன் தலைவியிடத்தே, “நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்;பிரியின் அறனல்லது செய்வேனாவேன்” என்று அவள் மனத்தில் அவன் என்றும் தன்னைப் பிரியான் என்ற தெளிவுண்டாமாறு கூறல்.

“மெல்லியல் மகளே! நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தியிருப்பேனாயின், என்னை நாடிப் பலநாள்கள் இரவலர் வாராதொழிக! இரவலர்க்கு ஈயும் வாய்ப்பினை யான் இழப்பேன் ஆகுக!” (குறுந். 137) என்றாற் போலத் தலைவியிடம் தன் பிரியாமை பற்றிக் கூறி அவளைத் தெளிவு பெறச் செய்தல். (தொ. பொ. 101 நச்.)

தலைவன் தோழற்கு ஆக்கம் செப்பல் -

{Entry: H08__484}

ஆக்கம் செப்பல் - தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைத்தல். வருத்தமாவன உறங்காமை முதலாயின.

“தலைவி என் உள்ளத்தைக் கைப்பற்றிக் கொண்டதனான் தொண்டி என்னும் ஊரின் கடல் துறையிலுள்ள அலை களைப் போல யானும் இரவிலும் உறக்கத்தைத் துறந்து விட்டேன்” (ஐங். 172) என்று தன் மெலிவு குறித்து வினவிய தோழனுக்குத் தலைவன் தனக்கு நேர்ந்த வேறுபாட்டை வெளிப்படையாகக் கூறியது. (தொ. பொ. 97 இள.)

தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -

{Entry: H08__485}

தோழி தன்னை இரந்து குறையுற்ற தலைவனை அன்பு தோன்ற நோக்கிக் குறை மறுத்து நக்கவழித் தலைவன் கூறுதல்

“குறுமகள்! சிறிதும் உறவு மனப்பான்மையின்றி உயிர்களைப் பாம்பு கடித்து வருத்துவது போல, நீ என்னை நகைத்து வருத்துவது தக்கதன்று. தலைவியது அம்பு போன்ற பார்வை யில் துன்புறுத்தப்பட்ட என் நெஞ்சம் ஆறுதலை உறும்படி சில கூறாது என்னை நகைத்துரைப்பது எனக்குக் கலக்கம் தருகின்றது” (நற். 75) என்பது போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -

{Entry: H08__486}

தலைவியைத் தமர் இல்லத்தை விட்டு வெளியே வாராது காவல் செய்துவிட்ட செய்தியைத் தோழி கூறத் தலைவன் வருந்திக் கூறுதல்-

“மனமே! தலைவி இற்செறிக்கப்பட்டுவிட்டாள். இனி அவளைக் காண்பது அரிது. அவள் பிரிவு நம்மால் தாங்க இயலாதது. நாம் தலைவிபால் கொண்ட நட்பினையுடைய இக்காமநோய் மறுமை யுலகத்தும் நம்மிடம் தொடர்ந்திருக் கும். ஆதலின் தலைவியை இவ்வுலகில் இனிப் பெறுதல் இயலாது போயினும் மறுமையுலகில் நாம் தவறாது பெற்று மகிழலாம். ஆதலின் வருந்தற்க” (குறுந். 199) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இஃது இச்சூத்திரத்தில் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதனாற் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -

{Entry: H08__487}

தோழி தலைவன் குறையை நிறைவேற்றுதற்கண் காலதாமதம் செய்ததனைத் தாங்காமல், தலைவன், தான் மடலேறியாவது தலைவியை எய்தத் துணிந்த திறத்தை அவளிடம் எடுத்துக் கூறல்.

“சுரபுன்னைமலர் மணம் வீசும் கூந்தலையுடைய தலைவி தன் மார்பினை யான் தழுவுமாறு கொடுக்கும் வரை, எலும்பை மாலையாகச் சூடி மடல்மாமேல் ஏறி, நும்தெருவில் நாளையே வருவதாக முடிவு செய்துவிட்டேன்! இனி எனக்கு வேறு முடிவு இல்லை” (திணைமாலை. 16) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -

{Entry: H08__488}

தோழி தன்னுடைய குறையைக் கேட்டுத் தலைவியைத் தன்னொடு கூட்டுவிக்கக் காலம் பெரிதும் பாணித்தமை கண்டு, தலைவன் தன் நெஞ்சிடம் தலைவியை எய்தும் வழி மடலேறுதல் அன்றிப் பிறிதொன்றும் இன்று என்று கூறுதல்.

“நெஞ்சே! தலைவி நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள். பனைமடலால் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்து பெரிய மாலையைப்பூட்டி, நான் வெள்ளிய என்புமாலை பூண்டு, பிறர் இகழுமாறு அம்மடல் மாமேல் ஏறி, நாணத்தை விட்டு இவள் தெருவழியே வருவதுதான் இவளுக்குத் திருமணம் குறித்து நாம் விடுகிற தூதாகும்!” (குறுந். 182) என்றல் போலத் தலைவன் தான் மடலேறும் கருத்தினை நெஞ்சிடம் கூறுதல்.

(தொ. பொ. 102 நச்.)

தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -

{Entry: H08__489}

தோழியான் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் மீண்டும் களவுக் கூட்டத்தை விரும்பிய தன் நெஞ்சிற்குக் கூறுதல்.

இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் பின்னும் களவினான் தலைவியைக் கூடுதற்கு அவாவிய நெஞ்சினை நோக்கி, “நெஞ்சே! நல்ல செய்திகளை நீக்கிப் பயனற்ற கற்பனைகளை மேற்கொண்டு, மழைநீரை ஏற்ற சுடப்படாத மட்கலம் போல, பொறுக்க முடியாத ஆசைவெள்ளத்தில் நீந்திப் பேராசைப்படுகிறாய். தாயைத் தழுவும் குரங்குக் குட்டி போல நின் விருப்பினை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவார் உளராயின் நின் ஆசை தக்கதே; ஆயின், அஃது இல்லையே!” (குறுந். 29) என்று கூறுதல்.

தோழி தன்குறையை மறுக்காமல் உடன்படும் வகையில் பொதுவாகத் தலைவன், “இத்தலைவிக்கு நான் பாவை செய்து கொடுத்துள்ளேன்; இவள் மார்பில் தொய்யில் எழுதி அணி செய்துள்ளேன். இவற்றை யெல்லாம் இவளைக் காப்பதாகச் சொல்பவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. இவற்றைச் சுட்டி அரசவையில் நீதி வேண்டி நான் தலைவியை வினவின் அவள் நிலை யாதாம்? இவையெல்லாம் நினையா மல் மக்கள் இருத்தல் அறியாமையாகும். இந்நிலை இரங்கத் தக்கது” (குறுந். 276) என்றாற் போலக் கூறுவனவும் கொள்ளப் படும்.

“தோழி! சோலைமலர்களின் மணம் கமழும் தலைவி தோள்களை விடுத்துச் செல்லுமாறு கூறுகிறாய். அதனால் என்னுயிர் நீங்கிவிடும். இவ்வாறு நீ சொல்லுதல் நினக்குப் பெருமையாமோ என்பதனைச் சொல்லுதி” (சிற்றட்டகம்) என்றாற் போல் கூறுதலும் உண்டு. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -

{Entry: H08__490}

தோழியிற் கூட்டத்தில் தலைவன் தலைவியிடம் தன் நெஞ்சிற் கிடந்த வருத்தத்தையும் எல்லையற்ற விருப்பத்தையும் எடுத்துரைத்து விளக்கியமை.

“கொடிச்சி! முருகனொடு வள்ளி பின் தொடர்ந்து சென்றமை போல, நீ எம் சிறுகுடிக்கு என்னொடு புறப்பட்டு வருகின் றாயா!”(நற். 82) என்றல் போல உள்ளம் மெலிந்து தலைவன் கூறுதல்.

இது ‘பரிவுற்று மெலியினும்’என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -

{Entry: H08__491}

தானை யானை குதிரை என்ற படைமிகுதி, வினைவலி தன்வலி துணைவலி என்ற இவற்றின் மிகுதி, இயற்கையும் செயற்கையுமாகிய அரண்வலிமை - இவற்றான் தன் பகைவர் தன்னின் மிக்க புகழினர் ஆயினார் என்று கூறக்கேட்ட அரசனாகிய தலைவன் அழுக்காறு கொண்டு, பகைவர் தனக்கு வழிமொழிந்து ஒழுகுமாறு அவரை அடக்குதற்குப் பகைவயின் பிரியுமிடத்தே தலைவியிடம் கூறுதல். (தொ. பொ. 44 இள., 41நச்.)

தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -

{Entry: H08__492}

தலைவி மகிழ்ச்சி பெரிதும் எய்தாமல், புணர்ச்சிக்கு இன மான பிரிவுநிலை கூறி, அவள் பிரிவினை ஆற்றும் தன்மை யைத் தலைவன் அறிதல். இஃது இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் நிகழ்வது.

“ஆணும் பெண்ணுமாகப் பிரியாது உடனுறைகின்ற மகன்றில் என்ற பறவையின் கூட்டம் போல, ஒருவரை ஒருவர் பிரிதல் அறியாத இம்மிக்க காமநிலையில் கூட்டத்திற்கு இடையூ றாகப் பூப்பு நிகழ்ந்து தனித்திருக்கும் முந்நாள் எல்லையும் ஓர் ஆண்டுக்காலம் போல நமக்குத் தோன்றுகிறது. முற்பிறப்பில் நாம் இருவரும் கணவன் மனைவியாக இருந்தோம். இப் பிறப்பில் நாம் வெவ்வேறாய் உள்ள அத்துன்பத்தைப் போக்கியது நம்காமம். நாம் இதுபோது மேற்கொள்ள வேண்டிய சிறுபிரிவையும், நினை யான் விரைவில் வரைந்து கொள்ளப்போவதால் இக்காமம் நீக்கிவிடும். அத்தகைய குறையாக் காமத்தொடு நம் இருவருக்கும் உயிர் சேர நீங்குவ தாகுக!” (குறுந். 57) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 101நச்.)

இனி, தலைவன் தலைவியின் அழகினைப் புனைந்துரைத்த வழித் தலைவியின் உள்ளத்து மகிழ்ச்சி முறுவல் குறிப்பான் புறத்தே தோன்ற, அதனை அவன் அறிந்து உரைத்தல் என்றும் பொருள் கூறுப. (98 இள.)

தலைவன் தன் நெஞ்சிடம்,“மனமே!சிறந்த அணிகலன்களை யும் மணம் கமழும் கூந்தலையும் உடையளாய், இம்மலை யகத்தே உறையும் அரமகளைப் போன்று காட்சிதந்த இத் தலைவி நம்மிடம் அன்பின்றிப் பொதுநோக்கு நோக்குகிறாள் என்று கவலைப்பட்டாயே!இப்போது இவள் முறுவற் குறிப்பை அறிந்துகொள்!” என்று கூறுதல். இஃது இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்தது என்ப. (இள.)

தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -

{Entry: H08__493}

நன்னெறியாவது அறம் பொருள் இன்பம் வழுவாதநெறி. தலைவன் சிறப்புத் தொன்றுதொட்டு வருதலின் குடிநலத் தைத் ‘தொன்னலப் பொருள்’ என்றார். இதனாற் சொல் லியது, அறம் பொருள் இன்பங்களை வழாமல் தன் குலத்திற் கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற்கண் தலைமகன் கூற்று நிகழும் என்றவாறு.

“தலைவி சமையல் செய்து வைத்து என்னிடமுள்ள புலவி யால் சமையலறையிலேயே உள்ளாள். இப்போது விருந்தினர் யாரேனும் வரின், இவள் புலவி நீங்கிப் புன்முறுவல் பூக்கும் முகத்தினை நாம் காணலாம்!” (நற். 120) என்ற தலைவன் கூற்றின்கண், ஊடற்குறிப்பினள் ஆகிய தலைவி, மனை வாழ்க்கை அறமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினள் ஆதலின் ‘நன்னெறிப் படர்தல்’ கூறப்பட்டது. (தொ. பொ. 144 இள.)

இல்லத்திற்கு ஓதிய நெறியின்கண் தலைவி கல்லாமல் பாகம்பட ஒழுகும் தொன்னலஞ் சான்ற பொருளின்கண் தலைவன் கூற்று நிகழும். பொருள் வருவாய் இல்லாத காலமும் இல்லறம் நிகழ்த்துதல் இயல்பாய் இருத்தற்குத் ‘தொன்னலம்’ என்றார்.

“ஒருகுடம் நீரால் சோறமைத்து உண்ணுமாறு மிடிப்பட்ட காலத்தும் மனைக்கு மாட்சியுடையாள் கடல்நீரை வற்ற உண்ணும் கேளிர் வரினும் இல்லறம் நிகழ்த்துதலை நெறி யாகக் கொள்வாள்” (நாலடி. 382.) என்று தலைவன் வியந்து கூறுதல் (146 நச்.)

தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

{Entry: H08__494}

நாட்டம் இரண்டும்- தலைமகன் கண்களும், தலைவி கண் களும்;

அறிவு உடம்படுத்தல் - ஒருவர் வேட்கைபோல இருவர் வேட்கையும் ஒத்திருத்தல்;

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆதல்- தம் வேட்கையொடு கூட்டி ஒருவர் ஒருவருக்குக் காமக்குறிப்பினைப் புலப்படுத்தல்.

தான் தன் வேட்கையைத் தன் கண்களான் புலப்படுத்த, அவளும் ஒத்த வேட்கையைத் தன் கண்களான் புலப்படுத் தியவழி, அவள் உள்ளக் குறிப்பை அறிந்த தலைவன் மகிழ்ந்து,

“நெய்தற்பூக்களையுடைய உப்பங்கழிகளினின்று தன் தமையன்மார்பிடித்துவந்த மீன்கள் உலர்த்தப்பட்டவற்றைப் பறவைகள் கவராதவாறு காவலாக வைக்கப்பட்ட இத் தலைவியின் பார்வைகள் மீன்வற்றலைப் பாதுகாவாவிடினும் என்னையே பாதுகாக்கின்றன!” (திணைமாலை. 32) என்று கூறுதல். (தொ. பொ. 93 இள.)

தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -

{Entry: H08__495}

நாணம் தன் நெஞ்சினை வருத்தத் தம் களவொழுக்கம் ஊரவர் அறிய ஆகும் என்று கலங்கும் தலைவியை நோக்கித் தலைவன் “ஊரார் அறியும் கௌவை நல்லது அன்றோ? அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது பெற்ற நீர்மைத் தாக நல்லதென்று கொள். ஊரவர் அலர் துற்றுவதைக் கேட்டால் நும் தமர் விரைவில் நம் மணத்திற்கு உடன்படுவர்” என்ற கூற்று. (குறள் 1143) (தொ. பொ. 105 இள.)

இதனைத் தலைவி கூற்று என்பர் நச்சினார்க்கினியர். தலைவிக்கு இன்றியமையாத நாணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந்நாணினைக் கைவிடுதற்கண் கூற்று நிகழ்த்துவாள். அஃது உடன்போக்கினும் வரைவு கடாவும் வழியும் வேட்கை மீதூர்ந்து நாண் துறந்து உரைத்தல் போல்வன. (தொ. பொ. 107. நச்.)

“நாணம் இரங்கத் தக்கது. நம்மொடு பல்லாண்டுகள் உடன் உறைந்து துன்புற்றுள்ளது. இப்பொழுது கரும்புப் பாத்தியின் மணற்கரை பாத்திக்குத் தண்ணீர் விரைந்து வருதலான் கரைந்து அழிவது போலக் காமம் தாக்குதலான் நம்மிடத்தை விட்டு நீங்குகிறது!” (குறுந். 149) என்றாற் போன்ற தலைவி கூற்று. (நச்.)

தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -

{Entry: H08__496}

களவுக் காலத்தில் வேட்கை மிகுதியான் தலைவன் நாணத்தின் எல்லையைக் கடந்து தன் நெஞ்சிற்குக் கூறுதல். (தொ. பொ. 100 நச்.)

“நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு; இன்றேல், தவறான செயல்கள் செய்யும்வழி வெட்குறும் நாணத்தை விட்டுவிடு. இரு வேறுபட்ட பண்புகளாகிய இவ்விரண்டனையும் யான் ஒரு சேரத் தாங்கும் ஆற்றல் உடையேன் அல்லேன்’ (குறள் 1247) எனத் தலைவன் கூறுதல். (97 இள.)

தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

{Entry: H08__497}

அச்சக்காலத்து நமக்குத் துணை ஆயிற்றெனத் தோழி ஏமுறு கடவுளை ஏத்துதற்கண் தலைவன் கூற்று நிகழும். (தொ. பொ. 144 இள.)

தோழி, “இன்னது விளையும் என்று அறியாது அஞ்சுதலை யுடைய களவுக் காலத்தே யானும் தலைவியும் வருந்தாதிருத் தற்குக் காரணமாய தொரு கடவுள் உண்டு” எனக் கூறி அதனைப் பெரிதும் ஏத்தியஇடத்து, தலைவன், “வதுவை காறும் ஏதமின்றாகக் காத்த தெய்வம் இன்றும் காக்கும்” என்று ஏத்துதல். (146 நச்.)

விரைவில் மணம் வாய்க்க வேண்டும் என்று களவுக் காலத்துத் தோழியும் தலைவியும் குரவையாடி வழிபட்ட தெய்வத்தினை (கலி. 39),தோழி கற்புக் காலத்துப் பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவன்,

“தான் சேமித்து வைத்திருந்த தேனை வந்த விருந்தினர்க்கு உதவும் நாடன் நின் தந்தை ஆதலின், நின் நோய்க்கு இயற்றிய வெறி, எனக்குப் பயன் கொடுக்க வேண்டும் என்று தோழி வழிபட்டதற்கு ஏற்ப, நின்னை யான் மணத்தற்கு உதவியது” என்று தலைவியிடம் கூறியது. (நச்.)

தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -

{Entry: H08__498}

தலைவன், காமநுகர்ச்சி ஒன்றையே நினைக்காமல், தலைவி யை மணந்து கொண்டு அவளாலேயே தனக்கு இல்லறம் இனிது நடத்தல் வேண்டும் என்னும் உறுதி மனத்துக் கொண்டு கூறுதல்; காம நுகர்ச்சி கொண்டு கலங்கும் மனத்தைக் கழறி யுரைத்தல்.

இடந்தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் நிகழ்ந்தபின் தலைவன் தன் மனத்தை நோக்கி, “தலைவியைக் கண்ட அளவில் கலங்கி நிற்கிறாயே! இங்ஙனம் விதிவயத்தான் கண்ட தலைவியைக் கண்டு கலக்க முறுதலும் உலகியல் என்னும் எண்ணத்தான் நான் நின் கலக்கத்தைப் பொருட் படுத்தவில்லை. நீ கதிரவன் ஒளி மழுங்கினும், மதியம் வெம்மையொடு திரியினும், திசைகளே நடுங்கினும், நெறி முறையினின்றும் தவறாத நம் குலத்திற்குரிய கோட்பாட் டொடு நேர்மைவழியில் நிற்கும் நாட்டம் உடையாய். காம நுகர்ச்சி ஒன்றனையும் நினையாது, இவளானே உனக்கு இல்லறம் நடத்தல் வேண்டும் என்பதனையும் உட் கொண்டு, விரைவில் இவளை மணத்தற்கு ஆவன செய்வாய்” என்றாற் போலத் தன் நெஞ்சினைக் கழறிக் கூறுதல். (தொ. பொ. 99 இள.)

பேதை ஒருத்தி பொருட்டாக மனம் காதல்வயப்பட்ட தலைவனை நோக்கிப் பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங்களை நினைப்பித்து கழறிக் கூறுதல். (102 நச்.)

“அப்பேதையைக் கண்ட அளவில் உள்ளம் கலங்குகிறாய்! ஞாயிறு தன் வெங்கதிர் மழுங்கினும், திங்கள் தீராவெம்மை யொடு திரியினும், திசை நடுங்குறினும், பெயராத தன்மைத் தாம் சீர்சான்ற நற்குலத்தில் தோன்றி அதற்கேற்ற திரியாக் கொள்கையும் நலத்தினின்று திரியாத நல்ல எண்ணமும் உடைய நீயே, அவளைக் கண்ட அளவில் கலங்குவாய் எனில், இவ்வுலகம் தனது நிலைதிரியுமன்!” என்ற பாங்கனது கழற்றுரை. (நச்.)

தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -

{Entry: H08__499}

நிலை நிற்க மிகப் பிரியும் பிரிவின்கண் அஞ்சிய நோயின்கண் தலைவன் கூறுதல்.

“மனமே!வேனிற் காலத்தே, நீண்ட மூங்கில் உயர்ந்த பரந்த வெளியை அரிதின் கடந்து சென்று பொருள் தேடுவதைவிட, தலைவியைக் கூடி இல்லறம் நடத்துதலே சிறந்தது என்ப தனை நினைப்பாயாக” (அக நா.51) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 144 இள.)

முன் நில்லாது ஒரு சிறை போய் நின்று நீட்டித்துப் பிரிவி னால் தலைவன் அஞ்சிய நோயின்கண் கூறுதல். (146 நச்.)

“மதிலுள் இருப்பவர் கள்வனைக் காணாமலேயே அவனால் வரும் துன்பத்தைக் கருதிக் ‘கள்வனைக் கண்டோம்’ என்ப வரைப் போல, முன் நில்லாது ஒரு பக்கம் போய்நின்று யான் செய்யாத தவறுகளை என்மேல் ஏற்றிக் கூறாதே;நின் ஆணைவழி நடப்பேனே அன்றி, நின் ஆணையை நான் கடப்பதுண்டோ?” (கலி. 81) என்று தலைவன் தலைவியிடம் கூறுதல். (நச்.)

தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -

{Entry: H08__500}

“மடவாய்!யான் கூறுவல், கேள். என் தலைவி சிறிது நடந்து செல்லினும் அவள் நுண்ணிடை ஒடிந்து விடுமோ என்று அஞ்சி, என் உள்ளம் அவள் அலட்சியம் செய்தாலும் பொருட்படுத்தாது, அவள் தளர்ந்து நடக்கும்தோறும் பின் சென்று தளர்தலுறும். அத்தகைய மெல்லிய இடையினள் என் தலைவி” (திணை மாலை. 17) என்ற தலைவன் தோழிக்குத் தலைவி பற்றிய அடையாளம் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘தண்டாது (தவிராது) இரப்பினும்’ என்றதனான் வேறுபட வரும் கூற்றுக்களாகத் தழுவிக் கொண்டவற்றுள் ஒன்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் நினைந்தமை செப்பல் -

{Entry: H08__501}

களவுக் காலத்தே பொருள்வயின் பிரிந்து சென்று மீண்ட தலைவன், தோழியிடம், தான் ஒருகணமும் தலைவியை நினையாமல் இருந்ததில்லை என்று, அவள் “நினைந்தீரோ?” என்று வினவிய வினாவிற்கு மறுமொழி கூறுதல்.

தலைவியைப் பிரிந்து சென்ற இடங்களிலெல்லாம் நுங்கள் இளமரக்காவும், செய்குன்றும், பாவையும், உங்கள் வடிவும், நறுமணம் கமழும் சோலையும், விளையாட்டிடமுமே என் கண்முன் உருவெளியாகக் காட்சி வழங்கின” (அம்பிகா. 325) என்றாற் போன்ற தலைவன் கூற்று. (ந. அ. 170)

தலைவன் நீங்கல் வேண்டல் -

{Entry: H08__502}

களவொழுக்கம் தொடர்ந்து நிகழுங்காலை, இடையே தலைவன் தன் ஊருக்குச் செல்லுதலை அறிவித்தபோது, பாங்கி அதைத் தடுத்துரைக்கையில், தான் செல்வது மிகவும் இன்றியமையாததாகிறது என்றும், விரைவில் மீண்டு விடுவதாகவும் கூறித் தோழியிடம் தலைவன் வற்புறுத்தி இசைவு வேண்டுதல்.

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -

{Entry: H08__503}

தலைவன் தலைவியைப் பிரிந்தவழி அவள்பிரிவான் தனக்கு விளைந்த வருத்தத்தைத் தலைவன் தன்னுள் கூறிக் கொள் ளுதல்.

“உலகில் உள்ள தீ தன்னை நெருங்கின் நெருங்கியவர்களைச் சுடும்; விலகின் அவ்வெப்பம் அவர்களைத் தாக்காது. ஆயின், இத்தலைவியிடத்துள்ள தீயோ, அவளை விட்டுவிலகின் சுட்டெரிக்கிறது; நெருங்கின் தண்ணென்று உடலுள்ளங் களைக் குளிர்விக்கிறது. இத்தகைய புது ஆற்றல் உடைய தீயினை இவள் எவ்விடத்தினின்று பெற்றாள்?” (குறள் 1104) என்றல் போன்ற தலைவன் கூற்று.

இச்சூத்திரத்துள் ‘சொல்லிய (நுகர்ச்சி)’ என்றதனான், தழுவிக் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று இது. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் நீடத் தலைவி வருந்தல் -

{Entry: H08__504}

களவு என்னும் கைகோள் நிகழுமிடத்து மறுநாளே வருவ தாகக் கூறிச் சென்ற தலைவன் வாராமல் தாமதம் செய்யவே, தலைவி வருந்துதல்.

“நேற்று ஞாயிறு மறையுமுன் சென்ற என் தலைவர் இன்று என் ஆயத்தார் என்னைத் தேடிக்கொண்டு இவ்விடம் வருவதற்கு முன் வாராவிடில் யான் என் செய்வேன்?” (தஞ்சை. கோ. 144) என்ற தலைவி கூற்று.

இது களவியலுள் ‘ஒரு சார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -

{Entry: H08__505}

தலைவி நாணத்தான் தன் கண்களைப் பொத்திக்கொள்ளு தல், ஒரு கொடியையோ கொம்பையோ சார்ந்து நிற்றல் முதலிய செயல்களைச் செய்தவழி, அவற்றான் புணர்ச்சி நிகழாது காலம் வீணே கழிதற்கு வருந்தித் தன் வருத்தம் புலப்படுமாறு தலைவன் கூறுதல்.

“என் சொற்களுக்கெல்லாம் மறுமொழி எதுவும் தாராது நீ முகம் கவிழ்த்து நாணிக்கொண்டிருப்பதால் என் காமம் எல்லை கடந்து பெருகுகிறது. அதனைத் தடுத்து எல்லைக் கண் நிறுத்தல் எளிய செயலன்று” (நற். 39) என்றாற் போலத் தன்வருத்தக் குறிப்பினைத் தலைவன் தலைவியிடம் வெளிப் படுத்தல்.

இஃது இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்வது எனவும், இடந்தலைப் பாட்டிற்கு முன்நிகழ்வது எனவும் இரு திறத்துக் கருத்தும் உள. (தொ. பொ. 102 நச்.)

தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -

{Entry: H08__506}

தலைவியும் தோழியும் ஒருங்கேயிருந்தவிடத்தை அடைந்த தலைவன், “செவ்வலரியையும் நெய்தலையும் இணைத்துத் தலைமாலையாகச் சூடிய பரதவர் மகளே! ஒருகால் நின்னைத் தழுவும் வாய்ப்பு எனக்கு ஏற்படுமாயின், நின் தமையன்மாரொடு வலைகளைக்கொண்டு கடலில்மீன் பிடித்து, தாழைமரங்களை வேலியாகக் கொண்ட இவ்வூரில் கொணர்ந்து சேர்ப்பேன்” என்றல் போல்வன கூறுதல்.

இச்சூத்திரத்துள் ‘தண்டாது - (தவிராமல்) இரப்பினும்’ என்றதான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று இது. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் நெஞ்சொடு வினாதல் -

{Entry: H08__507}

தலைவன் தலைவியைப் பற்றி நினைந்து தன் மனத்திற்குக் கூறி வினவுதல்.

“தலைவி, ‘நம் நட்பு நீடிக்குமா? அவர் ஆயத்திடை என்னைத் தேடுவாரா? வந்து சென்று விடுவாரா? அந்த வாய்ப்பு இன்னும் கூடுமா? அவ்வாய்ப்பை விதி கூட்டுமா?’ என்று எண்ணித் தன் உள்ளம் வாடுவாளோ? அறியேன்” என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் உரையாடுதல். (அம்பிகா. 26)

இது களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று, ‘தந்த தெய்வம் தருமெனச் சேறல்’ எறும் கூற்றினை அடுத்து உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 503 உரை)

தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -

{Entry: H08__508}

இரவில் அச்சமும் துன்பமும் விளைவிக்கும் வழியில் வருதல் தகாது என்று கூறும் தோழிக்குத் தலைவன் தனக்கு அவ்வழி வருதல் எளிதே எனக் கூறுதல்.

“தோழீ! என் உயிருக்கும் உயிரான தலைவியின் முயக்கினைப் பெற விரும்பும் எனக்கு, இப்புலி சிங்கம் பேய் ஐந்தலை நாகம் போன்ற யாவுமே அச்சம் விளைக்கமாட்டா” (தஞ்சை.கோ. 165) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

{Entry: H08__509}

பொறைமையும் பெருமையும் மெய்யெனக் கொள்ளுமாறு அருளி ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருந்தித் தன்னான் ஆகிய தகுதிக்கண் தலைவன் கூற்று நிகழும்.

தலைவன் தன் தவற்றைப் பொறுத்தல் வேண்டும் என்றவழித் தலைவி, “சிறுமை செய்தல் குற்றம்” எனக் கூறவே, தோழி, “நீ என் செய்தனை? இவள் வெகுடற்குக் காரணம் என்னை?” என்றவழித் தலைவன் கூறுதல்.

“காம நுகர்ச்சிக்குரியார் இருவர் ஆயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம்’ என்பது கருதி ‘யாரினும் காதலம்’ என்றேனாக, நின் தோழி அது கருதாது, ‘என்னாற் காதலிக் கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் மிகுகாதலுடையேன்’ என்றேனாகக் கருதி, ‘அம் மகளிர் யார்யாரினும் என்கண் காதலுடையீராயினீர்?’ என்று சொல்லிப் புலந்தான்” (குறள் 1314)

“காதல் மிகுதியான் ‘இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம்’ என்று சொன்னேனாக, அதனால் ஏனை மறுமை யாகிய பிறப்பின்கண் பிரிவேன் என்னும் குறிப்புடையே னாகக் கருதி, அவள் தன் கண் நிறைந்த நீரினைக் கொண் டாள்” (குறள் 1315)

(புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்து ஏனைய 3, 6, 7, 8, 9, 10ஆம் குறள்களும் அன்ன) (தொ. பொ. 144 இள.)

தலைவனான் உளதாகிய பொறையையும் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்கையினானே, வேதத்தை ஆராய்தலமைந்த அந்தண ரொடு கூடியிருந்து அம்மகவிற்குச் செய்யத்தகும் சடங்கு களைச் செய்த தகுதிப்பாட்டின்கண் தலைவன் கூறுதல்.

தன்னின் ஆகிய மெய் - கருப்பம். அவிப்பலி கொள்ளும் அங்கியங் கடவுளுக்கும் அது கொடுக்கும் தலைவற்கும் இடையே நின்று கொடுப்பித்தலின் அந்தணரை ‘வாயில்’ என்றார்.

“முற்காலத்தில் நாம் கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல் உறுதியாகும்படி, தலைவரும் சுற்றத்தாரும் நோற்றதன் பயனாக நின் வயிற்றில் கருப்பம் தங்கியது கண்டு அதற் கேற்பச் சடங்கு செய்தும் என்றார்” என்பது தோழி கூற்று. (தலைவன் கருத்தும் இதன்கண் ஒருவாறு அடங்கும்)(நச். 146)

தலைவி கருவுற்றது கண்டு மகிழ்ந்த தலைவன் அறிவரைக் கலந்து தன் தகுதிக்கேற்பச் சுற்றத்தார் நண்பர் முதலாயி னார்க்கு விருந்து செய்தல். (பொ. 194 குழ.)

தலைவன் பகற்குறியில் பரிவுற்றுக் கூறல் -

{Entry: H08__510}

பகற்குறிக்கண் சேட்படுத்த தோழியை நோக்கித் தலைவன் வருந்திக் கூறல்.

“ஒருபோதும் நீங்காத காமநோயினானே என்னை வருத்தும் தலைவி பற்றிய நினைப்பைக் கொண்டு கலங்கிக் காமம் மிகுகையினானே யான் செயலற்று வருந்தும் துன்பம் கண்டும், நீ எனக்கு அருளவில்லை யாயின், கொல்லிமலை யில் தெய்வம் எழுதிய பாவையைப் போன்ற தலைவியான் யான் கொல்லப்படும் நிலை எனக்கு நின்னான் வந்ததன்று, என் ஊழ்வினையான் வந்தது என்று அதனை நோவேன்” (நற். 185) என்றாற் போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன் துயருக்கு வருந்தித் தோழி, “அவன்துயர் தீர்க்கத் தலைவி உடன்படுவதாக இல்லையே” என்றாற் போல வருந்தியவழி, தலைவன் அவளை நோக்கிக் கூறுதல்.

“மடலேறி மாலையில் யான் வருந்தும் துயரைத் தலைவி எனக்கு அளித்துள்ளாள். அதற்கு நீ ஏன் வீணாக வருந்து கிறாய்?” (குறள். 1135) என்றாற் போலக் கூறுதல். (100 இள.)

தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

{Entry: H08__511}

தனது ஆற்றாமை மிகுதியால் தழுவி ஆற்றுதற்குக் குளிர்ந்த பயன் கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறை அழிந்த காலத்தே, அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்த லின்கண் தலைவன் கூறியது.

மகப் பெறுதற்கு முன் அத்துணை ஆற்றாமை எய்திற்றிலன், இப்பிரிவு காரணத்தான் தலைவனும் நிறைஅழிவான் என்றார்.

“நீ எவ்வளவு பெரிய குறைகளைச் செய்தாலும் இக்குறை களை நீ செய்கின்றாய் என்று கூறுவார் இல்லாத இடத்தே, அடிமுன்னே பணிந்து என் ஊடலைப் போக்க வருவாய்” (கலி. 73) என்ற தலைவி கூற்றில், தலைவன் தலைவியின் சீறடி புல்லி இரத்தல் கூறப்பட்டது. (தொ. பொ. 146 நச்.)

“இனிப் புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதுதலால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின்கண் ணேயும் ஒரு துன்பம் நிகழும்” (குறள் 1307)

“ஊடல் காரணமாகத் தோன்றுகின்ற சிறிய துனியினால் நல்ல தலையளி வாடுமாயினும், பின்னர்ப் பெருமை எய்தும்” (குறள் 1322)

“தலைவி இன்னும் நம்மோடு ஊடுவாளாக! அங்ஙனம் அவள் ஊடி நிற்றற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும்வகை இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டும்” (குறள் 1329)

இவற்றைத் தலைவன் கூற்றுக்கு இளம்பூரணர் மேற்கோள் காட்டுவர். (பொ. 144)

தலைவன் பரத்தமை நீங்கும் இடம் -

{Entry: H08__512}

தலைவன், தான் பின்னர் மணந்து கொண்ட மனைவியை முதல் மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிர்ஏற்றுக் கொள்ளும் சிறப்பை நோக்கியும், முதல் மனைவி தன் மகனைக் கோலம் செய்து பின்முறை மனைவியிடம் அழைத்துச் செல்லும்போது அப் பின்முறை மனைவி அப் புதல்வனிடம் உண்மையான அன்பு செலுத்தும் திறத்தை நோக்கியும், தான் முதல் மனைவியின் புதல்வனை வாயிலாகக் கொண்டு பின்முறை மனைவியிடம் அழைத்துச் செல்லும் போது அவள் முகமலர்ந்து வரவேற்றலைக் கண்டும், இங்ஙனம் பண்பால் உயர்ந்த தலைவியர் இருவரையும் கைவிட்டுப் புதல்வனுக்குத் தந்தையாகிய பொறுப்புணர்ச்சி யுடைய தான் பரத்தையர் தொடர்பு கோடல் தக்கதன்று என்று உணர்ந்து, தான் பரத்தையிடம் கொண்ட காதலை மீட்டும் தலைவியரிடம் கொள்ளுவான். (தொ. பொ. 172 நச்.)

தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறுதல் -

{Entry: H08__513}

“மேகமே!நீ நன்றாக மின்னி இடித்து மழை பெய்க. எனக்கு இனிக் கவலை இல்லை. யான் சென்ற காரியத்தை வெற்றி யொடு முடித்த தலைமையோடு இத்தலைவியை அடைந்து இவள் கூந்தல் அணையில் உறங்குகின்றேன்” (குறுந். 270) என்று வினைமுற்றிய தலைவன் தலைவியொடு படுக்கை யிடத்து உவந்து இருந்து கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘அவ்வழிப் பெருகிய சிறப்பின்கண்’ வரும் கூற்று. பிரிந்து சென்றவிடத்து, தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப்பின்கண் மீண்டு வந்தோன் கூறியது. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் பள்ளியின் அழுங்கல் -

{Entry: H08__514}

தலைவியை இன்றித் தனித்துப் பள்ளியில் படுத்திருந்த தலைவன் வருந்தல். தலைவி தலைவன் பரத்தமையால் ஊடல் கொண்டு தனித்துத் துயில, தலைவன், தலைவியின் தோள் களும் நகில்களும் தன் சிறந்த படுக்கையில் தனக்குப் பயன் படாது புறத்தே இருந்தமைக்கு வருந்துதல். (அம்பிகா. 472)

இது ‘பரத்தையிற்பிரிதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் உட்பிரிவின் கண்ணது.

இஃது இச்சூத்திரத்துள் ‘பிற’ என்றதனால் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (இ. வி. 555)

தலைவன் பாங்கனிடம் நிகழ்பவை உரைத்தல் -

{Entry: H08__515}

தன்னை உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங்களை நினைப் பித்து இடித்துரைத்த பாங்கனிடம் தலைவன் தன் நெஞ்சில் நிகழும் வருத்தங்களை எடுத்துரைத்தல்.

“என்னிடம் வேட்டையினின்று தப்பி ஓடிய மான் சென்ற வழியே சென்று சோலை ஒன்றில் அம்மானைப் பற்றி யான் வினவினவிடத்து, அங்குத் தோழியர் நடுவே இருந்த நறுமலர் அணிந்த கூந்தலாள் ஒருத்தி என் ஆற்றலைக் கைப்பற்றி என் உள்ளத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட மாயத்தால் தடுமாறுகின்றேன்” (திணைமாலை. 9) எனவும்,

“ஏட! அரிய நண்ப! புலவர்க்குத் தோழ! கருங்கடல் நடுவே எட்டாம் நாட்கலை நிறைந்த பிறைமதி தோன்றினாற்போல, பேரழகியாம் சிறுமி யொருத்தியின் கருங்கூந்தல் அயலே தோன்றும் சிறுநெற்றி, புதிதாகக் கொள்ளப்பெற்ற யானை போல, என்னைச் சிறை செய்துவிட்டது” (குறுந். 58) எனவும்,

“இப்பெருவனப்பினளாகிய தலைவியின் அரி பரந்த மழைக் கண்களை யான் காணாமுன்னர், நயனும் நண்பும் பெரு நாணும் பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும் ஆகிய பண்பு நலன்களைநும்மைவிட உடையனாய் இருந்தேன் மன்!” (நற். 160) எனவும் தலைவன் தான் உற்ற நிலையைத் தன் உயிர்ப் பாங்கனிடம் உரைத்தல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -

{Entry: H08__516}

தலைவன் தலைவியிடம் கொண்ட ஈடுபாடு மிகுதியானது என்பதை அறிந்த பாங்கன் அத்தலைவி பற்றி வினாவத் தலைவன்,

“கேளிர்! வாழி! சொல்லுவதைக் கேண்மின். என் நெஞ் சினைப் பிணித்த அந்த அம்சில்ஓதிநங்கையின் நாணமிகுந்த அம்மெல்லிய உடம்பினை ஒருநாள் யான் மேவப்பெறின், அதற்கு மேலே அரைநாள் உயிர்வாழ்வும் விரும்பேன்!” (குறுந். 280) எனவும்,

“தலைவியின் கொங்கைகள் அரும்பிவிட்டன; தலைமயிரும் பிடரியில் தொங்குமளவிற்கு நீண்டுவிட்டது; பற்கள் விழுந்து முளைத்து விட்டன; மார்பில் சுணங்கும் படர்ந்துவிட்டது. அவள் என்னை வருத்துதலை நான் அறிவேன். ஆயின், பெருஞ்செல்வரின் அப்பெண் தான் அறிந்தாளல்லள்” (குறுந். 337) எனவும்,

“கழைக்கூத்தி ஆடிய கயிற்றின்மேல் குரங்குக்குட்டி தொங்கி விளையாடுதலைக் கண்டு குறச்சிறுவர் ஆரவாரம் செய்யும் குன்றினுள் அமைந்த சிறிய ஊரிலே உள்ள மணம் நாறும் கூந்தலை உடைய குறப்பெண்ணின் கையில் என் நெஞ்சு அகப்பட்டுவிட்டது. அவளே இரங்கி அதனை விடுவித்தா லன்றிப் பிறரால் அது விடுவித்தற்கரியது” (நற். 95) எனவும் தலைவியின் இயல் இடங்களைக் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதனால், அதன் பகுதியாகக் கொள்ளப்பட்ட கூற்றுக் களுள் ஒன்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் பாங்கனைச் சார்தல் -

{Entry: H08__517}

இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு என்ற இரண்டானும் தலைவியை எய்திக் காதலால் வருந்திய தலைவன் தன் தோழனைச் சென்றடைதல்.

‘பாங்கனை நினைதல்’ எனவும் (கோவை. 19) கூறுப.

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -

{Entry: H08__518}

தலைவன், தலைவியின் இயலையும் அவள் இருக்குமிடத் தையும் பாங்கற்குச் சுட்டி, “காயாமலரின் மணம் காற்றினால் மனை முகப்பில் எப்பொழுதும் வீசப்படும் இயல்பிற்று, மலையகத்து ஊராகிய சிறுகுடி. அச்சிறுகுடியில் வாழ்வார் பசுக்களைக் கொள்ளையடித்தலையே தம் தொழிலாகக் கொள்பவர். நீ சிறுகுடியில் என் தலைவி இருக்கும் இடத்தைக் காணச் செல்லின், ஆண்டுத் தடுப்பார் ஒருவரும் இரார்” என்று கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள், ‘குற்றம் காட்டிய வாயில் பெட் பினும்’ என்றதன் பகுதியாகக் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -

{Entry: H08__519}

உடன்போக்கிற்குப் பின் தலைவியது ஊர்க்கே அவளொடு மீண்டு வந்த தலைவன், தோழியிடம் தலைவியைத் தான் தன் மனைக்கண் திருமணம் செய்துகொண்ட செய்தியைச் சுற்றத்தார்க்குச் சொல்லுமாறு கூறுதல்.

இது வரைவியலுள், ‘தன்மனை வரைதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 194)

தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் -

{Entry: H08__520}

களவொழுக்கத்தினிடையே வரைதலுக்கு முன் ஒருவழித் தணந்தபின் (ஒருவழித் தணத்தலாவது, காடிடையிட்டும் நாடிடையிட்டும் பொருள்வயின் பிரிதல் போலன்றி, ஓர் ஊரின்கண்ணும் ஒரு நாட்டின்கண்ணும் பிரிதல்), மீண்டு வந்த தலைவன், தான் நீட்டித்தமைக்கு நொந்து, தன் பிரிவைத் தோழியும் தலைவியும் எங்ஙனம் ஆற்றியிருந்தனர் என(த் தோழியை) வினவுதல்.

“தோழி! வீண் கவலைகளை உண்டாக்கிக்கொண்டு, நீங்கள் இருவீரும் ஐந்தலை நாகத்திடம் அகப்பட்டாரைப் போலப் பெருந்துன்பப்பட்டு என் போல் எவ்வாறு வருந்தி இருந்தீர் களோ?” (தஞ்சை. கோ. 258) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

தலைவன் பாசறைக்கண் புலம்பல் -

{Entry: H08__521}

தூதுவினை காலம் நீட்டித்தவழியும், நண்பற்கு உற்றுழி உதவச் சென்று காலம் நீட்டித்தவழியும், தானே தன் பகைமேற் சென்றவழிக் காலம் நீட்டித்தவழியும், தான் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றியவழியும், தான் தலைவிக்கு மீண்டு வருவதாகக் கூறிய பருவம் வந்தவழியும், தலைவி விடுத்த தூது கண்டவழியும் தலைவன் தலைவியின் தனிமையை நினைத்து வருந்திப் பலவாறு கூறல். (தொ. பொ. 41 நச்., 44 இள.)

‘தலைவன் பாசறைப் புலம்பல்’ (558 உரை) என்பது இலக்கண விளக்கத்துள் உரையிற் கண்ட கூற்று.

தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

{Entry: H08__522}

“தோழி! வேற்று நாட்டுக்குப் பொருள் தேடச் சென்ற விடத்து, நெருப்புப் பற்றி எரிவது போன்ற வெப்பமிக்க நிலத்தில் சிறிதளவு கண் அயர்ந்தாலும், கனவில், செறிந்த இருளில் அழகிய இல்லத்தில் என் நினைப்பில் வைகும் இனிய மணம் பொருந்திய கூந்தலையுடைய தலைவியைக் காண்பேன். இவ்வாறே நாளைக் கடத்தினேன்” (ஐங். 324) என்ற தலைவன் கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பண்ணமை பகுதி’ என்றதனால் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 146 நச்.)

தலைவன், பிரிந்தவழிக் கலங்கற்கண் கூறல் -

{Entry: H08__523}

இடந்தலைப்பாட்டின்கண் தலைவன் தலைவியைப் புணர்ந்து பிரிந்தவிடத்து, அன்பு மிகுதியால் மறைந்து நின்று காணுங் கால், “இனி இவளைக் கூடுதல் அரிது” என்று கலங்கிய நிலையில் மனத்திடம் கூறுதல்.

“நெஞ்சே! கீழைக் கடற்கரையில் தங்கியிருக்கும் சிறகு நீங்கிய ஆண்டு மூத்த நாரை, மேலைக் கடற்கரையிலுள்ள தொண்டி என்ற ஊரை அடுத்த கடலிலுள்ள அயிரைமீனை உண்ண ஆசைப்படுவது போல, நெடுந் தொலைவில் உள்ளவளும் கிட்டுதற்கு அரியவளும் ஆகிய தலைவியைப் பெறுதற்கு நினைக்கும் நீதுன்புறுத்தும் ஊழ்வினையை உடையை!” (குறுந். 128) எனவும்,

“நெஞ்சே! பொருளில்லாதவன் இன்பநுகர்ச்சியை விரும்பு வது போல, நீ கிட்டுதற்கரிய பொருளை விரும்புகின்றாய். நின் காதலி மிக இனியள் என்பதை அறிந்துள்ள நீ, அவள் கிட்டுதற்கு அரியள் என்பதனை அறியாதிருக்கின்றாய்!” (குறுந். 120) எனவும்,

“எனக்கு ஏற்பட்ட காமக் காய்ச்சலுக்கு மருந்தாக அமைந்து, என்னால் பூசப்பட்ட சாந்து சிதையுமாறு தழுவப்பெறும் கொங்கைகளை யுடைய கானவன் மடமகள், எனக்குக் கூடுங்கால் என்றும் இனியளாய் இருப்பினும்,பிரியுங்கால் தீங்கு தருபவளாக உள்ளாளே!” எனவும் பலவாறாகத் தன் நெஞ்சிடம் கூறுதல்.

இது பாங்கற் கூட்டத்தின்கண்ணும், தோழியிற் கூட்டத்தின்- கண்ணும் நிகழும். (தொ. பொ. 102 நச்., 99 இள.)

தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

{Entry: H08__524}

“தலைவி! ‘கார்காலத் தொடக்கம் வந்துவிட்டது; இனிப் பிரிந்து செல்லுதல் கூடாது’ என்று தடுத்துவிட்டாய். ‘இக்காலத்தில் நம்மன்னன் போர் செய்யும் விருப்பொடு பாடிவீட்டிற்கு வாரான்’ என்று துணிந்து யானும் நின்னைப் பிரிந்து செல்லுதலை நீக்கிவிட்டேன்” என்ற தலைவன் கூற்று. (ஐங். 427)

தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -

{Entry: H08__525}

தலைவன் பரத்தையிற் பிரிந்து தலைவியை விடுத்து இருந்த வழித் தலைவனையும் தலைவியையும் தனது அருளினால், பிரிந்து வருந்தும் ஒருவன் வாயிலாக அமைந்து, சேர்த்து வைத்தற்கண் தலைவன் கூறுதல் (தொ. பொ. 146 நச்.)

பிரிவு நிமித்தமாக வருந்திய மனைவியையும் காமக்கிழத்தியை யும் அவ்வருத்தத்தினின்றும் நீக்கிய பகுதிக்கண் தலைவன் கூறுதல். ‘பரிவு நீக்கிய’ என்பது இளம்பூரணர் பாடம்.

“மடந்தை! நின் மேனி பொன் போன்றது; நின் கூந்தல் மணி போன்றது; நின் கண்கள் குவளை போன்றன; நின் தோள்கள் வேய் போன்றன. இவற்றைக் கண்டே யான் நிறை வுறுகின்றேன். நம் புதல்வனும் விளையாடக் கற்றுக்கொண்டி ருக்கிறான். உங்களைக் கண்டு மகிழ்வதைவிட எனக்கு வேற்றுப்பணி இல்லை. உங்களிடம் எனக்குள்ள அன்பு கடலினும் பெரிது. ஆதலின் நும்மைப் பிரியேன்” (நற். 166) என்ற தலைவன் கூற்று. (144 இள.)

தலைவனும் தலைவியும் தனிமையுற்றவழி இருவரையும் பிரிவின் நீக்கித் தோழி சேர்த்து வைத்தல். அதுபோது தலைவனது கூற்று நிகழும். (பொ. 194 குழ.)

தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -

{Entry: H08__526}

தலைவன் பாலைவழியே சென்று பொருளீட்டுதற்குத் தலைவியைப் பிரியக் கருதியவழித் தலைவியும் உடன் வருதலை விரும்பினளாக, அவன், “நீ என்னொடு வரின், மெல்லிய அனிச்சமலர் முதலியவற்றில் நடந்து பழகிய நின் சிறிய அடித்தாமரைகள், பாலை நிலத்துள்ள கற்களில் பாவி நடக்கும்போது, தாமரையின் அழகிய உள் இதழ்கள் இங்குலிகம் தோய்ந்தாற் போன்று கறுத்துப் பொலிவிழந்து விடும்” (கலி. 13) என்றல் போல்வன கூறி, அவள் உடன் வருதலை மறுத்தல். இது பாலைத்திணைக்கு விரவும் பொருளாம். (தொ. பொ. 45. நச்.)

தலைவன் ‘பிறவும்’ வினாதல் -

{Entry: H08__527}

தோழியை இரந்து குறையுற முடிவுசெய்த தலைவன், தலைவியும் தோழியும் ஒருங்கே இருக்கும் இடம் நோக்கி வந்து, “இவன் வினவுவது வேறோர் உட்கருத்தினையுடையது போலும்” என்று தோழி கருதுமாறு, ஏதிலர் போல ஊரினை முதற்கண் வினவி, உறவு தோன்றப் பெயரினைப் பின் வினவிப் பின்னர், ” யானும் மெல்லிய இலைகளைப் பரப்பி நும் விருந்தினனாக நீர் கொண்டுவந்திருக்கும் உணவைப் பகிர்ந் துண்டு நுமது சிறுகுடியில் வந்து தங்குவதற்குத் தடையுள் ளதோ?” (அகநா.110) எனவும், “மகளிரே! என்னொடு கூடி நீங்கள் இல்லறம் நடத்துவதாயின் அதன்கண் தவறுண்டோ?” எனவும், தன் உள்ளக்கிடக்கை புலப்படுமாறு அவர்களை வினாதல். ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்’ என்னுமடிக் கண் ‘பிறவும்’ என்றதனால் இது கொள்ளப்பட்டது. (தொ. பொ. 102 நச்.)

தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -

{Entry: H08__528}

இரவுக்குறியில் தலைவியைக் காணாது ஆற்றாமை மிக்க தலைவன் அவளைக் காணும் விருப்பினால் அவள் தெரு விடைக் காலையில் வந்துழி, தான் விருந்தினனாகப் புகுதற்குரிய தகுதியாகிய நண்பகற் பொழுதைவிடுத்து விடியற் காலத்துக்கண் வந்தபோதும், (அம்மனையவரால்) நீக்கப்படாத விருந்தின் பகுதியனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழித் தலைவியைக் கண்டு கூறுதல்.

“என் காதலி இருவேறு திறமும் அறிந்த கள்வியாவாள். முள்ளூர்க் காட்டினைப் போலத் தன்மேனி நறுமணம் வீச வந்து நடுஇரவில் என்னொடு கலந்து உரையாடுகிறாள். விடியற் காலையில் யான் இரவு சூட்டிய மலர்களை உதிர்த் துத் தலைமுடியில் எண்ணெய் தடவிக் கூந்தலை முடிந்து கொண்டு என்னை அன்பு தோன்றப் பார்த்தலைத் தவிர்ந்து நொதுமலர் போல நோக்கித் தன் உறவினர்கள் என்னிடம் நடந்து கொள்ளுமாறுபோல நடந்து கொள்கிறாள்” (குறுந். 312) என்றல் போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 105. இள.)

இக்கிளவியைத் தலைவி கூற்றாகக் கொள்வர் நச்சினார்க் கினியர். உண்டிக்காலத்துத் தலைவி இல்லத்துத் தலைவன் புக்கு எதிர்ப்பட்டவழி, நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக் கொள்ளும் பகுதிக்கண் தலைவி கூற்று நிகழும்.

எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத தலைமை மிக்க தலைவன் புகுந்தால், “இஃது ஒன்று உடைத்து” எனத் தேராது, தாய் அவனை விருந்தேற்றுப் பின் நீக்கிவிடும் பகுதியும் தழீஇயினவாறாயிற்று.

விடியற்காலமாயின் தலைவன் புகான்; புகாஅக் காலத்து (உணவுக் காலத்து)ப்புக்க பொழுதாயின் அவர் விருந்தேற்றுக் கோடல் ஒருதலை என்று புகும். தலைவி காட்சிஆசையில் கலங்குதற்கேற்பத் தலைவற்கும் காட்சி ஆசை உண்டாயிற்று.

“தோழீ! தலைவன் ‘உண்ணுநீர் வேட்டேன்’ எனக் கூறத் தாய், ‘உண்ணுநீர் ஊட்டிவா’ என, அதற்கு வந்த என்னை அவன், வளை முன்கை பற்றி நலிய நான், “அன்னாய்!” என்று அழைக்கத் தாய் வந்தவுடன், ‘உண்ணுநீர் விக்கினான்’ என்று யான் கூற, தாய் அவனை முதுகுப்புறம் தடவிக் கொடுக்க, அவன் என்னைக் கொல்வான் நோக்குதல் போல் கடைக்கண் ணால் நோக்கிச் சிரித்தான்” (கலி. 51) எனப் புகாஅக் காலையில் புக்கானை விருந்தேற்றுக் கொண்டதைத் தலைவி பின் ஒரு காலத்துத் தோழிக்குக் கூறியவாறு.

“எந்தை கடலில் மீன் பிடிக்கச் செல்லவும், தலைவன் எம் இல் வந்து தேரை நிறுத்தி, ‘யான் நும் விருந்தினன்’ என்ன, தாய் அவளை ‘விருந்தினனாகத் தங்கு’ என்றாள். அத்தகைய அன்னை வாழி!” என்றாற் போல்வன.

“ஒரு நாள் இரவு தலைவன் ‘விருந்தினன்’ என்று வர, அவனை விருந்து ஏலாது தாய் இரவு முற்றும் துங்காமல் இருந்தாள். அவள் நரகம் புகுக!” (குறுந். 292) என்று தலை வனை விருந்து ஏலாமைக்குத் தலைவி முனிந்து கூறியவாறு. (தொ. பொ. 107 நச்.)

தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

{Entry: H08__529}

புதல்வனைப் பெற்ற ஈன்றணிமை சேர்ந்த பொழுதின்கண் சுற்றக் குழாத்துடனே தூய்மையின்மை நீங்குதல் பொருட்டாக எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகம னாகக் கூறுதலைக் குறித்து, முனிவர்மாட்டும் தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக் கருதியும் அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற்கண் தலைவன் கூறுதல்.

சிறப்பாவன பிறந்த புதல்வனை முகம் காண்டலும், ஐம்படை பூட்டலும், பெயரிடுதலும் முதலியனவும், எல்லா முனிவர்க் கும் தேவர்க்கும் அந்தணர்க்கும் கொடுத்தலும் ஆம்.

‘சேர்தல்’ கூறவே, கருப்பம் முதிர்ந்த காலத்துத் தலைவற்குப் பிறரொடு கூட்டமுண்மையும் கூறிற்றாம்.

“பாண! நம் குடிக்கு ஓர் ஆண்மகவைப் பயந்து, பேய் முதலியன தீண்டாதிருக்க நெய்யொடு வெண்சிறுகடுகப்பிய நம் இல்லத்தில் பாயொடு படுத்திருந்தாள் தலைவி. ‘மகப் பெற்ற முது பெண்டாகி உறங்குதியோ!’ என்று அவள் வயிற்றில் குவளை மலரால் ஒற்றி யான் நிற்க, அவளுக்குச் சிரிப்பு வர, நாணத்தால் கண்களை முடிக் கொண்ட செயல் எனக்கு நினைக்குந்தோறும் சிரிப்புத் தருகிறது” (நற். 370) என்ற தலைவன் கூற்றில், அவன் மகப் பெற்ற தலைவியைக் கண்டு பேசியமை குறிக்கப்பட்டவாறு. (தொ. பொ. 146 நச்.)

தலைவன் புதல்வனைக் காண்டல் -

{Entry: H08__530}

மகன் பிறந்தமை கேட்ட தலைவன் அவனை வந்து காண்டல். தலைவன் அந்தணருக்கு ஆவும் பொன்னும் தானமாக வழங்கித் தேவருக்குப் பூவும் புகையும் வழங்கி, நல்ல நேரத்தில் தன் குலத்தோன்றலாகிய மகனைக் கையில் எடுத்தான் என்பது. (அம்பிகா. 468)

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ என்ற உட் பிரிவின்கண்ணது, உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 555 உரை)

தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -

{Entry: H08__531}

தலைவன் தலைவியை மணத்தற்கு ஏற்பாடு செய்யத் தலைவி தமர் குற்றமுண்டாகுமாறு மறுத்தவிடத்துத் தலைவன் கூறுதல்.

“இத்தலைவி சிறந்த பொருளும் அணிகலன்களும் பரிசப் பொருளாகக் கொடுப்பினும், பெறுதற்கு அரியளாகிவிட் டாள். இனி, முத்துக்களைக் கடலிலிருந்து கொணர்ந்து பகுத்துக் கொள்ளும் நெய்தல் தலைவனாகிய அவள்தந்தை யுடன் கூடி, உப்பளத்தில் உப்புப் பொதியுடன் திரிந்து வருந்தி யும், கடலில் படகுடன் போகியும் அவனிட்ட பணிகளைச் செய்து அவன்வழிச் சார்ந்திருந்தால்தான் தலைவியை நமக்கு மணம் முடிப்பார் போலும்!” (அகநா. 280) என்று நெஞ்சினை நோக்கித் தலைவன் கூறுதல். (தொ. பொ. 105 இள.)

நச்சினார்க்கினியர் இக்கிளவியைத் தலைவி கூற்று ஆக்குவர்.

தலைவி, தன் குலப்பிறப்பும் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப, “பிறர் வரைவு மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறு” எனத் தோழிக்குக் கூறுதல் போல்வன. இச்செய்தி கலி.114 இல் காணப்படுகிறது.

“மள்ளர் குழீஇய விழவின்கண்ணும் மகளிர் குழீஇய துணங்கைக்கண்ணும் என் தலைவனைக் காண இயல வில்லை. யானும் ஓர் ஆடுகள மகள்; என் கையிலணிந்த சங்குவளையல்களை நெகிழச் செய்த அவனும் ஓர் ஆடுகள மகனே” (குறுந். 31) என்ற தலைவி கூற்றும் கொள்க. (107 நச்.)

தலைவன், புலந்து போதல் -

{Entry: H08__532}

‘புலந்து அவன் போதல்’ என்பது கிளவி. தன்னைக் குறியிடத் தில் வந்து காணாதிருந்த தலைவியை நொந்தும் சினந்தும் தலைவன் தனது இருப்பிடம் மீளுதல்.

“நெஞ்சே! தலைவிக்கு மாளிகை தாமரையே ஆதலின், அஃது இரவில் திறந்து அவளை வெளிவிடாது என்பதை அறிந்து வைத்தும், வீணே என்னைத் துன்புறுத்தி, யானைகள் திரியும் இவ்விரவில் என்னை இங்குக் கொண்டுவந்தாயே!” (அம்பிகா. 223) என்றாற் போலத் தலைவன் நெஞ்சிடம் வருந்திக் கூறிப் போதல். (ந. அ. 160)

தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -

{Entry: H08__533}

தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்றதால், தலைவி இரவெல் லாம் அழுது கண்கலங்கியிருந்தமை மறுநாட் காலை கண்ட தோழி, அதற்குக் காரணம் கேட்பவே, அவள் தலைவனது அப்புறத்து ஒழுக்கத்தைக் கூறுதல் (தஞ்சை. கோ. 380)

இது கற்பியலுள் ‘பரத்தையிற்பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது ‘உணர்த்த உணரும் ஊடல்.’ (ந. அ. 205)

தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -

{Entry: H08__534}

தலைவியான் பெரிதும் விரும்பப்பட்ட தோழியை வாயி லாகக் கொண்டு அவளை வேண்டித் தலைவியைப் பெறத் தலைவன் உறுதி கொண்டது. இரவு வலியுறுத்தல்- வேண்டிக் கேட்குமாறு நெஞ்சை வலியுறுத்தல்.

“அசையும் கொடி போன்ற இயல்பினையுடையாய்!கள் குடியாததனான் வரும் துன்பம் அஃது உண்டபின்னரே தீரும். அதனை மருந்தாலோ, தெய்வ மணிகளாலோ, தவத்தாலோ நீக்குதல் என்பது இயலாது. அதுபோலவே, நின்னால் ஏற்பட்ட நோய்க்கு நின்னைத் தவிர வேறு மருந்து இல்லை. ‘நின் அருள் வேண்டும்’ என்று கூறி அப்பரதவர் மகளை வேண்டுதற்கு முற்படுவாயாக, நெஞ்சே!” என்று தலைவன் நெஞ்சிடம் கூறியவாறு. (குணநாற்பது.) (தொ. பொ. 102 நச்.)

தலைவன் பெட்டவாயில் பெற்றுக் கூறுதல் -

{Entry: H08__535}

தலைவன் தலைவியான் விரும்பப்பட்டவளாகிய, தனக்கு வாயிலாகும் தன்மையுடைய, தோழியை மறைய நின்று கண்டுணர்ந்து “இவளை இரந்து தலைவியை எய்தலாம்” என்று கூறுதல்.

தலைவன் பாங்கற் கூட்டத்தின்பின் தலைவி தன்னைக் காணாத வகையில் தான் அவளைக் காண்பதோர் அணி மைக்கண் மறைந்து நின்றானாக, அப்பொழுது தலைவி தன் தோழியொடு சுனைக்கண் நீராட, அது கண்ட தலைவன், “தோழி தெப்பத்தின் தலைப்பகுதியைப் பிடித்துக் கொண்டு நீந்தினால், தலைவியும் அத்தலைப்பக்கத்தையே பிடித்துக் கொண்டு நீந்துகிறாள். தோழி தெப்பத்தின் கடைப் பகுதியைப் பிடித்துக்கொண்டு நீந்தினால், தலைவியும் அக் கடைப் பக்கத்தையே பிடித்துக்கொண்டுநீந்துகிறாள். தெப்பத்தைக் கைவிட்டுத் தோழி நீர்வழிச் சென்றாலும், தலைவி அவளைப் பின்தொடர்ந்து செல்வாள் போலும்!” (குறுந். 222) எனத் துணிந்து, “இனித் தலைவியான் விரும்பப் படும் தோழியையே எனக்கு வாயிலாகக் கொண்டு இக்கள வொழுக்கத்தைத் தொடர்வேன்” என்று தன்னுள் கூறுதல்.

(தொ. பொ. 102 நச்.)

தலைவன் பெயர்கள் -

{Entry: H08__536}

குறிஞ்சிநிலத் தலைவன் - சிலம்பன், பொருப்பன், வெற்பன்

பாலைநிலத்தலைவன் - விடலை, காளை, மீளி

முல்லை நிலத்தலைவன் - குறும்பொறை நாடன், (தோன்றல்)

மருதநிலத்தலைவன் - ஊரன், மகிழ்நன்.

நெய்தல்நிலத் தலைவன் - சேர்ப்பன், கொண்கன், துறைவன், (புலம்பன்)

‘திணை நிலைப் பெயர்’ காண்க. (இறை. அ. 1 உரை)

தலைவன் பெயர் வினாதல் -

{Entry: H08__537}

தோழியை இரந்து பின்னிற்றற்கு முடிவு செய்த தலைவன், தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த இடம் நோக்கிச் சென்று “இவன் விழைவது வேறோர் உட்கருத்தை யுடையது போலும்!” என்று தோழி கருதுமாறு, “மூங்கில் போன்ற மெல்லிய தோள்களை யுடையீரே! தினைக்கொல்லையில் கிளிகளை ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள நும் பெயர் என்ன என்பதனை யான் அறியலாமா?” என்று வினவுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -

{Entry: H08__538}

வரைந்து பொருள் பெற்றவழித் தலைவியைப் பெருமை யின்கண் நிறுத்திக் களவுக் காலத்துக் குற்றம் நிறைந்த பொருளை எடுத்துக் கூறியவழித் தலைவன் கூறுதல்.

“வந்தவர்க்குத் தேனை விருந்துப் பொருளாக வழங்கும் உன் தந்தையின் நாட்டில், உன் நோயைத் தீர்த்தற்கு முருகனுக்குச் செய்த வெறியாட்டில் உன்தோழி என் துயரமும் தீர்தற்கு வேண்டிக்கொண்டமையின், களவில் பல நாளும் உற்ற துயரம் தீர உன்தோளை இன்று மணக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்” எனத் தலைவன் கூற்றாக வந்த இப் பாடற்கண், தலைவியின் இல்லத்துப் பெருமையும் தன் குற்றங் குறைகள் தீரத் தோழி முருகனை வேண்டியமையும் சுட்டப்பட்டன. (தொ. பொ. 144 இள.)

தலைவிஅங்ஙனம் உரிமை சான்ற இடத்து அவளைப் பெருமையின் கண்ணே நிறுத்திக் குற்றம் அமைந்த களவொ ழுக்கத்தை வழுவி யமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயினும் உரைத்தற்கண் தலைவன் கூறுதல்.

அது களவொழுக்கத்தையும், தீய ஓரையுள்ளும் அகலாது ஓழுகிய குற்றத்தையும் உட்கொண்டு, அதனை வெளியிடுதல் தன் பெருமைக்குத் தகாது என்று கருதாமல் வெளியிடுதல்.

“மழையில் ஒழுகும் சிறிய இல்லமாயினும், ஊராரும் புகழும் கற்பின் நல்லாள் இருக்கும் இல்லமே இல்லம்” (நாலடி. 382) என்ற தலைவன் கூற்றில், மனைவி அமைந்து நின்ற இந் நிலையே இல்லறமாவது எனவே, தன் களவொழுக்கச் செயல் இக்கற்புடை இல்லத்துக்குத் துணையாக உதவிய தனை உட்கொண்டு சொன்னான் என்பது. (146 நச்.)

தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -

{Entry: H08__539}

தலைவன் தான் உற்ற இன்பத்தினைப் பெரிய புகழையுடைய தேரினையுடைய பாகற்குக் கூறல்.

“பாக! முன்பு யான் பொருள்வயின் பிரிந்து கார்காலத்தே மீண்டேனாக, பள்ளங்களில் தங்கிய நீரிலே தவளைகள் மிகுதியாக ஒலித்தலான் தலைவி என் தேரொலி கேளாள் ஆதலின், ‘நீங்கள் முன் சென்று அவட்கு என் மீட்சியைத் தெரிவியுங்கள்’ என்று இளையோரை முன்னர் விடுப்ப, அவர்களும் அவ்வாறே அறிவித்தனராக, அவள் நன்கு நீராடிப் பூச்சூடிய அளவில் யான் புகுத, அப்படியே வந்து என்னைத் தழுவிய அந்தக் காட்சி மறத்தற் கரியது” (நற். 42) என்று தலைவன் பாகனிடம் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

அச்சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புகழை யுடைத் தாகிய தேரினையுடைய பாகனிடம் கூற்று நிகழ்த்துதல்.

அவனது சிறப்புணர்த்துதற்குப் ‘பாகர்’ எனப் பன்மையான் கூறினார்.

“பாக! நீ வாழ்க! அரசன் போர்த்தொழில் முடித்த பின்னர் நீ சொல்லியபடி தேரில் ஏறியதல்லது, நீ முல்லை நிலத்துச் சீறூரில் எம் மனைவாயில் தேரை நிறுத்தி ‘இறங்குமின்!’ என்று கூறியது கேட்டு வியந்து இறங்கினேனே அல்லால், இடைவழியில் எதனையும் காணவில்லை. தேரில் காற்றினைப் பூட்டினாயா, அன்றி நின் மனத்தையே பூட்டினாயா?” (அகநா. 384) என்று தலைவன் தேர்ப்பாகனை வியந்து கூறுதல்.

தலைவன் தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது. (நற். 42)

“பாக! நின் பின் வரும் ஊர்திகளைப் பின்வரச் செய்து, பரியை முடுக்கித் தேரை முன்னே செலுத்து” (அகநா. 44) என்று தலைவியைக் காண்டற்கண் உள்ள ஆர்வத்தான் தலைவன் பாகனிடம் கூறுதல். (தொ. பொ. 146 நச்.)

தலைவன் பொய் பாராட்டிக் கூறல் -

{Entry: H08__540}

தலைவியை மெய்தொட்டுப் பயின்ற தலைவன் அவளைப் பலவாறு புனைந்துரையால் புகழ்தல்.

இஃது இயற்கைப் புணர்ச்சிக்கு முன்நிகழும் எனவும், இடந் தலைப்பாட்டுக்கு முன் நிகழும் எனவும் இருதிறக் கருத்துக்கள் உள்ளன.

தலைவியைத் தீண்டிய தலைவன் அவள் குறிப்பறிந்து, அவள் தலைமயிர் பிரிந்திருந்தவற்றைத் தடவிப் படிய வைப்பது போல, பிரிந்திராத நிலையிலும் அவள் கூந்தலையும் நெற்றியையும் தடவி அவளை நோக்கி, ” நின் தமையன்மா ராகிய மீனவர்கள் கடலில் வேட்டம் போய் கடல்வாழ் உயிர்களைக் கொன்று தம் வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ, நெஞ்சுவழியாக என் உடலினுள் புகுந்து என் உயிரினைத் துன்புறுத்தி வாழ்கிறாய். பருத்து, எல்லைக்கு அடங்காத நின் கொங்கைகளின் பாரத்தான் வருந்தித் தடுமாறும் மெல்லிய இடை ஓடிந்து போகும் நிலையினை உண்டாக்கிக் கொள்ளாதே!” (சிலப். கானல். 17) என்றாற் போலக் கற்பனையான் பலபடியாக அவள் அழகைப் புகழ்ந்து கூறுதல். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

{Entry: H08__541}

“‘தலைவர் என்னைப் பிரிந்து பொருள் தேடப் பாலைவழிப் போயுள்ளார்; ‘அவர் செல்லும் வழியில் வெப்பம் நீங்க மழை பெய்க’ என்று மேகத்திற்குரிய தெய்வமாகிய ஞாயிற்றை வழிபடுதல் நமக்கு ஏற்குமா? ‘மரக்கிளைகள் வாடும் வெப்பம் தணிந்து தண்ணிய கதிர்களைப் பரப்புக’ என்று கதிரவனை வழிபடுதல் நமக்கு ஏற்குமா? ‘வெப்பத்தைப் போக்கிக் குளிர் காற்று வீசுக’ என்று காற்றுக்குரிய கடவுளாகிய ஞாயிற்றை வழிபடுதல் நமக்கு ஏற்குமா? இவ்வாறெல்லாம் பிற தெய்வங் களை வழிபடுதல் ஏற்குமா? ஏலாதா? என்று மனம் சுழல வேண்டா. தலைவர் மீண்டுவிட்டார்” என்று தோழி தலைவிக்குக் கூறுதல். (மழையையும் காற்றையும் வெப்பத் தொடு தருவது ஞாயிறே என்றறிக. அவனே பாலைக்குத் தெய்வம் என்பார் ஒரு சாரார்.) (கலி. 16)

தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -

{Entry: H08__542}

தலைவன் பொருள்வயின் பிரிந்து போகின்றவனை வழி யிடைக் கண்டோர் தம்முள் கூறிக் கொண்டது.

“அறிவுடையீரே! முயற்சி கொண்டு ஒரு செயலைச் சிறப்புறச் செய்து முடிப்பதனை எளிது என்று நினையன்மின். பொருள் ஈட்டும் முயற்சியான் தலைவியை விடுத்துக் காட்டுவழியில், தலைவன் தன் நெஞ்சம் இல்லத்துக்கு மீள்வது கருதுவ தனையும் ஏற்காமல், பிரிந்து போயிருக்கிறான். வளம் சான்ற மனைக்கண் தலைவனைப் பிரிந்து அமைதியாகத் தங்கியிருக் கும் இளைய தலைவியின் தனிமைத் துன்பம் தாங்க ஒண்ணா தது. குலமகளிர் நாணத்தான் தம் கணவர் பிரியும்போது தாமும் உடன் வருவதாகக் கூறாமல் இருக்கின்றனர். அத் தகைய நாணம் பெரிதும் இரங்குதற்குரியது!” என்ற கூற்று. இவையெல்லாம் பாலைத் திணைக்கு விரவும் பொருளாம். (தொ. பொ. 45 நச்.)

தலைவன் போக்கு உடன்படுதல் -

{Entry: H08__543}

தலைவன் மறுத்தும், தோழி வற்புறுத்தியதால் அவன் தலைவியை உடன்கொண்டு செல்ல இசைதல்.

“பஞ்சும் மலரும் முள்ளென நோகும் மென் சீறடிகளை யுடைய இவளை, நஞ்சோ அழலோ என வருத்திச் சுடும் சுரத்தில், வழி நடத்திக் கொண்டேகத் துணிந்த என் நெஞ்சம் கொடிதே! (தஞ்சை கோ. 308) என்பது போன்ற தலைவன் கூற்று. (ந. அ. 182)

தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -

{Entry: H08__544}

தலைவன்தோழிக்குக் கூறுவதாக நிகழும் குறள் 1133-ஐக் அடுத்துவரும் தலைப்பில் காண்க.

“பெரியோர்களுக்கு உரிய நாணத்தையும் நல்லாண்மையை யும் பண்டு உடையேனாயிருந்தேன். இன்றோ காமம் காழ்க் கொள்பவர் தமக்குப் புகலாகக் கொண்ட மடலேறுதலையே விரும்புகின்றேன்” (குறள் 1133) என்றாற் போல்வன...

இஃது இச்சூத்திரத்துள் ‘மடல்மாக்கூறும் இடனுமார் உண்டே’ என்புழி, ‘இடன்’ என்பதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 102 நச்.)

தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

{Entry: H08__545}

“காதல் நிறைவுறாத துன்பத்தைப் பொறுக்க முடியாத என் உடம்பும் உயிரும், மடலேறுதற்கு இடையூறாக உள்ள நாணத்தை நீக்கித் தமக்கு நலம் தரும் மடலேறுதலை நினைக் கின்றன” என்று தலைவன் தான் நாணம் நீக்கியதைக் கூறுதல். (குறள் 1132)

தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

{Entry: H08__546}

“நீ கூறும் நாணமும் நல்லாண்மையும் எனக்கு முன்பு இருந்தன. தலைவிபால் காமுற்றபின் இப்போது அவற்றை இழந்துவிட்டேன். இதுபோது என்னிடமுள்ளது, காமம் மிகுந்தவர்க்குப் புகல் ஆகிய மடலொன்றுமே” என்று தலை வன் தான் நாணத்தையும் நல்லாண்மையையும் நீக்கி மடல் ஏறத் துணிந்தமையைத் தோழிக்குக் கூறுதல். (குறள் 1133)

தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-

{Entry: H08__547}

தலைவன் பொருள் வருவாய் தரும் வேற்று நாடுகளின் சிறப்பினைக் கூறி, அவற்றைக் கைப்பற்றத் தான் பிரியு மிடத்துக் கூறுதல் (தொ. பொ. 41. நச்.)

தலைவன், பகைவருடைய நாட்டின் சிறப்பினைக் கூறி அதனைக் கைப்பற்றப் பிரியுமிடத்துக் கூறுதல். (44. இள)

அ) தலைவன் பொருள் தேட வேற்றுப்புலங்களுக்குச் செல்லு மிடத்து அவ்விடங்கள் தலைவியும் உடன் வந்து தங்கும் இயல்பின அல்ல என்று அவற்றின் வசதிவாய்ப்பு இன்மை கூறிப் பிரிதல்.

ஆ) தன்வலி துணைவலி வினைவலி இவற்றால் தம் பகைவர் நாடுகளைத் தன் பகைவர் கைப்பற்றியமை கூறி, அவர்கள் தொடர்ந்து நாடுகளை வென்றுவர வாய்ப்பளிக்காமல், அவர்களை அடக்குதற்குத் தான் பிரியும் பிரிவின்கண் தலைவியிடத்துக் கூறல் (அருணாசலம் பிள்ளை)

இ) இயற்கையும் செயற்கையுமாகிய அரண்களைக் கொண்ட பகைவர்தம் நாட்டின் அருமைப்பாட்டைக் கூறி, அதனைக் கைப்பற்றத் தான் பிரியும் செய்தியைக் கூறுதல்.(பொ.225 குழ.)

இதனைத் ’தலைவன் பகைவயின் பிரிதல்’ என்பார் பாரதியார்.

தலைவன் மதியுடம்படுத்தல்-

{Entry: H08__548}

தலைவன் தோழியின் அறிவைத் தன் பக்கலில் உறுதிப் படுத்திக் கொள்ளுதல்.

இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவியின் உடல் வேறுபாடு முதலிய கண்டு ஐயுற்ற தோழி, தலைவன், தழையும் கண்ணி யும் கொண்டு தலைவியும் தானும் ஒருங்கேயிருக்கும் இடம் நோக்கி வந்து பதியும் பெயரும் பிறவும் வினவி, அந்நிலத்து வந்தறியாதானும் அவரை முன்பு கண்டறியாதானும் போல, அந்நிலத்திற்கும் அவரை வினாதற்கும் பொருத்தமான வற்றைச் சொல்லிய அளவிலே, “இவள் வேறுபட்டது இவன் காரணமாகப் போலும்! இவன் இரந்து பின்நின்றது இவள் காரணமாகப் போலும்!” எனத் தோழி தன் மனத்துள் உறுதி செய்யுமாறு, தலைவன் தோழியின் அறிவை ஒருப்படுத்தல். (இறை. அ. 6. உரை)

தலைவன் (பெருமகன்) மயங்கல் -

{Entry: H08__549}

தோழி, “இரவுக்குறி வாரற்க” எனத் தடுத்ததனைக் கேட்டுத் தலைவன் திகைத்து வருந்துதல்.

“திருமகள் இத்தலைவியுருவில் எனக்குக் கிட்டிருப்பது கருதியே என்னுயிர் நிலைத்துள்ளது. இவளை யான் எவ்வாறு பிரிந்து வரையுமளவும் ஆற்றியிருத்தல் கூடும்?” (கோவை. 169) என்றாற் போலக் கருதித் தலைவன் மயங்குதல்.

இதனை ‘ஆற்றாது உரைத்தல்’ என்னும் திருக்கோவையார் (169). இது களவியலுள் ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன் (உடன் போக்கினை) மறுத்தல் -

{Entry: H08__550}

களவு வெளிப்பட்டபின், தோழி தலைவியை உடன்கொண்டு போமாறு தலைவனிடம் கூறியவிடத்து, அவன் அதனை மறுத்து உரைத்தல்.

“தோழீ! தலைவிதமர் இப்பார் முழுதுமே பரிசப்பொரு ளாகக் கேட்பார்களோ? மேலும், என் ஊர் அருகிலும் இல்லை. காட்டுப் பாலைவழியில் இவள் என்னுடன் தனியே வருதலும் இயலாத தாகுமே!” (தஞ்சை. கோ. 306) என்பது போன்ற தலைவன் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘அருமை உரைத்தல்’ என்னும். (201) இக்கூற்று வரைவியலுள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணது. (ந. அ.182)

தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

{Entry: H08__551}

தலைவனை எதிர்கொண்டு மங்கலமாக மாலை ஏந்திநின்ற பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழுகும் ஒழுக்கத்து விருப் பின்கண் தலைவன் கூற்று நிகழும். ஈண்டு ஒழுக்கமாவது, “சொல்லாது பெயர்ந்தீர்” எனவும், “இளமையும் காமமும் நோக்காது பெயர்ந்தீர்” எனவும் கூறி “இதற்குக் காரணம் என்னை?” எனத் தலைவன் வந்துழி, அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி.

“அளவு கடந்த பாசத்தால் நுங்களையே நினைத்து நினைத்து உருகுமாறு இவ்வுலகத்தின் பண்பு இப்படிப் பாசத்தை வளர்த்துப் பிரிவிடை வாட்டுகிறதே என்று உலக வாழ்வை நினைத்து மயங்கியே காலத்தைக் கடத்தினேன்” (குறுந். 99) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 144 இள.)

அக்கேளிர் செய்யும் எதிர்கோடல் ஒழுக்கத்தின்கண் தலைவன் உள்ளம் மகிழ்ந்துரைத்தல்; பெண்டிரும் மக்களுமாகிய கேளிர் என்க.

“பாக! தலைவி இருக்கும் ஊர்க்கு நம்தேர் வந்துவிட்டது. கிளையோர் நல்வரவு கூற, நம் இல்லத்து எதிரே கூடி விட்டனர். தாயரும் புதல்வரும் தாம் முன்பு அறியாத அளவு கடந்த உவகை மிக நமக்குச் சிறப்புச் செய்தலைக் காண்போம். நம் குதிரைகளும் ஓய்ந்துவிட்டன”என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 146. நச்.)

“தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -

{Entry: H08__552}

“உடன்போக்கின்கண், தலைவன் தலைவியை அன்பாக நடத்த வேண்டும்” என்று நற்றாய் தெய்வத்தை வேண்டுதல்.

“என் மகளைக் கடுமையான பாலைவழியே அழைத்துச் சென்ற தலைவன், அவளிடம் மனத்தே அன்பு கொண்டு இன்சொல் பேசி, தன் மார்பினையே தலையணையாகக் கொடுத்து அவளை உறங்கச் செய்வானாக! அதற்கு நீ அருளல் வேண்டும்!” (அகநா. 35) என்று நற்றாய் தெய்வத்தை வேண்டுதல்.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட் டது. (இ. வி. 538 உரை)

தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -

{Entry: H08__553}

பிரிந்த தலைவன், இடைச்சுரத்துத் தலைவியின் உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின்கண் கூறுதல்.

பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றா னாகித் தலைவியின் உருவெளித் தோற்றம் நோக்கி, “முன்பு யான் விடைபெறும் பொழுது கூந்தலை விரித்து அதனுள் மறைந்து அழிந்தேங்கித் துன்புற்று நின்ற நம் காதலியின் வருந்திய நோக்கம் இப்பெருங்காட்டிடைக் கடந்தும் என் எதிரில் எய்த வந்ததே! இஃது என்னே!” (நற். 113) என்று அழுங்கிக் கூறல்.

பொருளீட்டத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், “களிறு நின்ற இடத்துச் சிறுநீர் கழித்துப் பெயர்ந்த ஈரத்தில் வயிற்றைப் பொருத்திப் படுத்துக் கிடந்த செந்நாய்ப்பிணை பசியால் முடங்கிக் கிடக்க, வேட்டைமேற் சென்ற செந்நாய் இரை பெறாமையால் தனது பிணவை நினைத்து வருந்தும் காட்டிலே, நாம் இப்பொழுது வருந்திக் கிடக்கிறோம். தொடர்ந்து செல்வோமா? அன்றி, ஊர்க்கு மீள்வோமா? நெஞ்சே! இரண்டனுள் ஒன்று சொல். உன்முடிவே என் முடிவு” (நற். 103) என்று தலைவியை நினைத்து மனம் வேறுபட்டுத் தலைவன் மீட்டு வரவு ஆய்ந்தது.

“தலைவி நம்பிரிவால் வாடி உயிர்போகும் நிலையிலிருப்பாள் என்று அவளையே நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் நம்வலிய நெஞ்சம், ஆள் வழக்கற்ற கொடிய பாலையை நீந்திப் பொருள் தேடிப் பிறகு நம்மொடு மீண்டு வருவதாகத் தெரியவில்லை!”(ஐங். 329) என மீளலுற்ற நெஞ்சினை நினைந்து தலைவன் உழையர்க்கு உரைத்தல்.

“முன்பு தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் சென்றபோது மூங்கில் காயுமாறு வெயிலின் வெப்பமிக்க பாலை, இப் பொழுது தலைவியை நினைத்து மீள்கையால் குளிர்ச்சியாக எனக்குத் தோன்றுகிறது!” (ஐங். 322) என்று மீள்கின்றவன் இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்குதல்.

‘இரட்டுற மொழிதல்’ என்பதனான் தலைவன் செய்வினை முற்றி மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சிடம், “வளமலை நாடன் இளமகளாகிய என் தலைவியை மகிழ்வொடு கூடும் நாள் எந்நாளோ!” எனவும், “அழகிய குடிமக்களையுடைய சீறூர்கள் நிறைந்த குன்றுகளைக் கடந்து கதிரவன் மறையி னும், ஊர் சேய்மைத்து என்று கருதாது, குதிரையைக் கடுகச் செலுத்தி மீண்டு வரும் என்னைவிட என் நெஞ்சம் விரைந்து ஊருக்குச் சென்றுவிட்டது. அது, கன்றுகள் தாய்ப்பசுவைக் கண்டு பால் அருந்தும் மாலையில், பல்லி சொல் கேட்டு நன்னிமித்தம் கண்டு நிற்கும் தலைவியின் கண்களைப் புதைத்து அவள் கூந்தலைத் தீண்டி அவள் தோள்களைத் தழுவி மகிழ்ந்து கொண்டிருக்கும்!” (அகநா. 9) எனவும் கூறுவனவும், பிறவும் எல்லாம் கொள்ளப்படும். (தொ. பொ. 146 நச்.)

தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -

{Entry: H08__554}

பிரிந்த தலைவன் மீண்டு வந்தவழி எடுத்துக்கூறல்.

“வானமே! நீ மின்னி இடித்து நன்றாக மழையைப் பொழிக! யான் எடுத்த வினையை முடித்த தலைமையான உள்ளத் தோடு என் தலைவியை எய்திஅவள் கூந்தலையே மெல் லணையாகக் கொண்டு மகிழ்கின்றேன்” (குறுந். 270) என்று மீண்டு வந்த தலைவன் கூறல்... (தொ. பொ. 144 இள.)

தலைவன் முல்லையை நோக்கிக் கூறல் -

{Entry: H08__555}

பொருள்வயின் பிரிந்து சென்று கார் காலத்தில் மீளும் தலைவன் தன் பாகனிடம், தலைவி தன்னைச் சினந்து கூறுவாள் என்று சொல்லித் தேரை விரைவிற் செலுத்துமாறு வேண்டியபோது, முல்லை நிலத்தைக் கண்டு, “தலைவி சினத்தற்கும் வருந்துதற்கும் காரணம் மேகங்கள் சூல் கொண்டு எழுந்தமை மாத்திரம் அன்று; முல்லை நிலத்துச் சேவற்கோழி. தன் பேடைக்கு உணவைத் தான் தன் கால்க ளால் கிளறிக் காட்டும் காட்சியை அவள் காண்பதேயாம்” என்று கூறுதல்.

இது ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 321)

தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -

{Entry: H08__556}

அ. தலைவன் தலைவியிடம், “அறத்தினான் பொருளாக்கி அப்பொருளினான் காமம் நுகர்தற்கு விழைகின்றேன். ஆதலின், அப்பொருளீட்டுதல் கருதிப் பிரிவல்” என்று கூறிப் பிரிதல். (41 நச்.)

ஆ. ‘வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்.

துணைவலியும் தூக்கிச் செயல்’ (குறள் 471) என்பது அறி வுடைமை ஆதலின், தலைவன் தன் வலிமை, துணை வலிமை, வினைவலிமை இவற்றைச் சீர்துக்கிப் பகைவரி னும், வலிமை மிக்கானாயவழியே பகைவர்மேற் சேறற்கண், அச்செய்தியைத் தலைவிக்குக் கூறிப் பிரிதல். (44. இள.)

இ. பொருள் தேடுதல், ஓதுதல், தூதுபோதல் ஆகியவற்றுள் ஒன்றனைத் தலைவிக்குக் கூறி அதற்காகப் பிரிதல் (41 பாரதி)

ஈ. தானை, யானை, குதிரை என்ற முப்படைகளின் வலிமையைத் தலைவிக்கு எடுத்துக் கூறித் தலைவன் மாற்றாரைப் பணித்தற்குப் பிரிதல். (அருணாசலம்பிள்ளை.)

தலைவன் மெய்தொட்டுப் பயிறற்கண் கூறியது -

{Entry: H08__557}

தலைவியின் மெய்யினைத் தலைவன் தீண்டிப் பழகுதலாகிய மெய் தொட்டுப் பயிறல் இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் என்பர் ஒரு சாரார்; இடந்தலைப்பாட்டின் முன் நிகழும் என்பர் ஒரு சாரார்,

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்ப் பெருநாணினள் ஆகிய தலைவி மறுநாளும் முதல் நாள் சந்தித்த இடத்தில் தலைவன் வருகையை எதிர் நோக்கி நிற்பாளோ எனின், தான் பிறந்த குடிக்குரிய சிறந்த ஒழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், வேதவிதிப்படி வாழும் அந்தணனைச் சந்திக்கும் வேத நெறியை வழுவிய அந்தணனுடைய மனநிலையும், வேட்கை மிகுதியான் சூடான பொருளை விழுங்கி அதனால் தொண்டை முதலியன புண்பட்டவர் மனநிலையும் கொண்டு, நெஞ்சும் மனஅடக்கமும் தடுமாறி, “இனிச் செய்யத் தக்கது யாது?” என நினைத்து, தலைவன் தன் தோழியர் கூடியிருக்கும் இடத்திற்கு வருவானோ என்ற அச்சமும், வாராது மறந்து விடுவானோ என்ற காதலும் மிக, புலையன் தீம்பால் போல (பால் விரும்பத்தக்கதாயினும், அதனைக் கொணர்ந்தவன் இடத்துள்ள அருவருப்பால் பாலும் வேண்டாதது போல, காம இன்பம் சுவையானதெனினும் அதனை முறையாக மணந்து பின் நுகராது களவான் நுகர்வதால் அஃது அரு வருப்புத் தருகிறது.) மனம் கொள்ளாமல் கலக்கம் கொண்ட மனநிலையுடையவளாய், நாணத்தை மறந்து, காதலால் உந்தப்பட்டு, முதல்நாள் தலைவனைச் சந்தித்த அவ்விடத் திற்கே செல்வாள். அங்ஙனம் சென்று நின்றவளைத் தலைவன், இவ்வொழுக்கம் புறத்தார் இகழுமாறு வெளிப்பட அதனால் வேறுபட்டாள்கொல்லோ எனவும், மறை வெளிப்பட்டு விட்டதாயின் இனிமேல் மணந்து கொள்ளுதலை விரும்பு வாளே யன்றி இக்களவொழுக்கத்திற்கு உடன்படாளே எனவும், கருதுமாறு மெய்யுறத் தீண்டிநின்று குறிப்பறிதற்கண் கூறியது.

“என் கை இத்தலைவியைத் தீண்டும்தோறும் என் உயிர் தளிர்த்தலால், இப்பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைக்கப்பட்டன. போலும்!” (குறள் 1106) என்று குறிப்பிடு தல் போல்வன மெய்தொட்டுப் பயிறலாம். (தொ. பொ. 102 நச்.)

தலைவன் மெலிவு விளக்குறுத்துக் கூறல் -

{Entry: H08__558}

இயற்கைப் புணர்ச்சியின் முன் தலைவன் தன் உள்ளத்தில் மிக்குக் கிடக்கும் காமநோயான் புறத்து நிகழும் தளர்வினைத் தலைவிக்குக் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற். 39) என்றாற் போன்ற சொற்களான் எடுத்துக் கூறுதல் என்பது ஓர் உரை. (தொ. பொ. 98 இள.)

இயற்கைப் புணர்ச்சியின்பின் பிரிவால் தனக்குள்ள வருத் தத்தைத் தலைவி மனம் கொள்ளுமாறு, அவள் கருங்குழல் கற்றை மருங்கு திருத்தி, அளகமும் நுதலும் தகைபெற நீவி, ஆகமும் தோளும் அணி பெறத் தைவந்து, குளிர்ப்பக் கூறித் தளிர்ப்ப முயங்கிக் குறிப்பாகப் பிரிவு அறிவித்த தலைவன், அவள் வருத்தத்தைக் குறிப்பான் உணர்ந்து, “நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்” என்று கூறுதல். (இறை. அ. 2 உரை)

தலைவியைப் பிரிவதால் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனம் கொள்ளக் கூறுதலும், தலைவி வருத்தம் குறிப்பான் உணர்ந்து அது தீரக் கூறுதலும் ஆகிய தலைவன் கூற்று.

“இருவேமாய் ஒருவேமாகிய நமக்கு நீங்காக் காதலோடு உயிர் ஒரு சேர நீங்குக!” (குறுந்.57) எனவும், ‘நீ அஞ்சல்!’ என்று யான் சொல்லிய என் சொல் பொய்க்கும் என அஞ்சற்க! யான் இவ்வுலகமே நின்னைப் பிரிவதால் கிட்டுமாயினும் அதனை வேண்டேன்” (குறுந். 300) என்றாற் போலவும் கூறுதல். (101 நச்.)

தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

{Entry: H08__559}

“காந்தள்குலை போன்ற அழகிய கைகளால் என் கண்ணைப் பொத்திய என் துணையாகிய ஆண்மயில் போலும் சாயலை யுடைய மடந்தையே!நின்னைத் தவிர என் நெஞ்சத்து இடங்கொண்டார் யார்?” (ஐங். 293) என்றாற்போலத் தலைவன் மறுமொழி கூறல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘பண்ணமை பகுதி’ என்றதனான் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று (தொ. பொ. 146 நச்.)

தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -

{Entry: H08__560}

முன்னிலையாகாத வண்டினைத் தன்முன்னே அழைத்து, வார்த்தை சொல்லும் இயல்பிற்று அல்லாத அதனை மறுமொழி தருவதாகக் கற்பித்து, அதனிடம் தான் தலைவி யிடத்துக் கொண்ட மிக்க காதலைத் தெரிவிப்பது.

“நறுமணத்தைத் தேர்வதை வாழ்க்கைத் தொழிலாக உடைய அழகிய சிறகுகளையுடைய தும்பியே! நீ என் நிலத்து வண்டு ஆகையால் எனக்காகக் கூறாது உண்மையாக நீ கண்ட தனைக் கூறு. என் தலைவியின் கூந்தலைவிட நறுமணம் மிக்கிருக்கும் மலர்கள் உளவோ?” (குறுந். 2) என்று தலைவன் கூறுமாறு. (தொ. பொ. 101 நச்.)

இஃது இயற்கைப் புணர்ச்சியின் முன்நிகழ்வது என்ற கருத்தும் உண்டு. (98 இள.)

தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -

{Entry: H08__561}

தாங்காத வேட்கையுடன் காத்திருந்த தலைவன் தலைவியை எதிர்ப்பட்டு முயங்கி மகிழ்தல்.

“மேகலையை ஒலியாமல் பற்றிக்கொண்டு, சிலம்புகளை அசையாதபடி மேலே கடுக்கி, அஞ்சத்தக்க அரையாமத்தில் ஈண்டு வந்து தங்கும் திருமகள் போன்ற நீவிர் விரும்புவது யாதோ?” (கோவை. 164) என்பது போலக் கூறிக்கொண்டு தலைவன் தலைவியைநோக்கி வருதல்.

இது ‘தளர்வு அகன்று உரைத்தல்’ (கோவை. 164) என்ப தன்கண் அடங்கும்.

இது களவியலுள் இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -

{Entry: H08__562}

“தலைவன் தலைவியை விரைவில் வரைதல் வேண்டும்” என்னும் கருத்தான் தோழியான் சொல்லப்பட்ட குற்றம் தீர்ந்த கூற்றுக்கு மறுமொழியாகப் பின்னும் களவொழுக் கத்தைத் தொடர்தல் வேண்டும் கருத்தொடு தலைவன் கூறுதல்.

“நெஞ்சே! நல்ல உரைகள் நீங்கிப் பயனற்ற உரைகள் பேசப் பட்டு, மழை நீரை ஏற்ற பசுமட்பாண்டம் போல, ஆசை வெள்ளத்தில் நீந்தி நீ அதிகமாக ஆசைப்படுகிறாய். பெண் குரங்கு தன் குட்டியான் தழுவப்பட்டு மகிழ்வது போல, உன் வார்த்தைகளைச் செவிமடுத்து உனக்கு உதவுவார் இருப்பின் உன் ஆசை நிறைவேறும். அஃது இல்லாத நிலையில் நீ யாது செய்ய இயலும்?” (குறுந். 29) என்று தலைவன் தன்மனத் திற்குக் கூறுதல். (தொ. பொ. 105 இள.)

இத்துறையைத் தலைவி கூற்றாக்குவார் நச்சினார்க்கினியர்.

வரைதல் விருப்பினான் தோழி தலைவற்கு வரைவு கடாவிக் கூறிய உயர்ச்சி நீங்கிய இயற்பழித்தலை உட்கொண்டு அவ்வியற்பழித்தலை மறுத்தாள் போலத் தலைவி கூறும் இயற்பட மொழியும் செய்திகள்.

தோழி தலைவனைத் தான் உற்ற சூள் பேணான் பொய்த்தான் என்று இயற்பழித்தவழித் தலைவி “குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றுதல் என்பது சந்திரனில் தீத்தோன்றுவது போன்ற நிகழா நிகழ்ச்சி. ‘அஞ்சல் வேண்டா’ என்று தன்னான் கூறப்பட்டவரை அவன் பொய்த் ததற்கு உரியனோ?” (கலி.41) என இயற்பட மொழிதல் போல்வன. (107 நச்.)

தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -

{Entry: H08__563}

“கதிரவன் இவ்வுலகத்தே தொன்மையான தன் இயல்பினால் கதிரூன்றிப் பகல் செய்து. ‘பிரிந்திருந்தாரை யான் வருத்து தற்கு நீ மறைக’ என்று காமன் கூறிய காரியத்தைத் தன் தலை யிலே ஏறட்டுக்கொண்டு போவான் போல அத்தகிரியை அடைந்து, கண் தன் பயன் கெடுமாறு மறையவே, தீவினை யைப் போக்குபவனது அருள் கொண்டமுகம்போல மதியம் தோன்றி இருளை அழிக்கலுற, வறியவரது இல்லறம் போலக் கழிமலர்கள் கூம்ப, தேய்கின்ற என்னுயிர்ப் புறத்தே வந்து விட்ட மாலையே! நீ அறிவினை மயக்கும் மாலையாய் இருந்தாய்.

“மாலாய்! கணவரோடு இன்புற்ற மகளிர்க்கு நேயமாய் அவர்கள் தம்மிற் கூடும் நிலையையே முன்பு மிகச் செய்து போந்தாய். இதுபோது, காதலர் தாம் அழுமாறு நீத்த அத் துன்பத்துள் கலக்க முற்ற மகளிரை வருத்தம் செய்தல் நினக்குத் தக்கதன்றே!

“மாலாய்! தம்முட் கூடினர்தம் காமத்தை மகளிர்க்குத் துணையாக ஆடவர் மனத்தினின்று நீங்காது கனன்று எரியும் தன்மையை முன்பு மிகச் செய்துபோந்தாய். இதுபோது, மகளிர்தம் நலம் கவர்ந்துகொண்டு நல்காத ஆடவர் பிரிந்த அம் மிக்க தனிமைக்கண், அவ் அலந்த மகளிர்க்குத் துணை யாகாமல் வருத்தமாதல் நினக்குத் தக்கதன்றே!

“மாலாய்! எம் கேள்வனைத் தருதலும் செய்திலை; ஆதலின் எமக்கு நீ துணை அல்லை. தம் கேள்வனைப் பிரிந்த மகளிர்க்கு ஒரு நோயாகி, கூடினவர்க்கு இன்பத்திற்கொரு தெப்பமாகி இவ்வாறு நன்மையாகாத செயல்களைச் செய்த லல்லது நன்மையாக நீ செய்யும் காரியம் இல்லையோ?” - என்றிவ்வாறு தலைவி வருந்தினாள். அவளது அவலம் நீங்க, ஞாயிறு இருட் பரப்பினை நீக்கியவாறு போல, பகைவர்தம் நிலத்தினைக் கவர்ந்து தம் செய்வினை முடித்த காதலர் அவள் பால் மீண்டார். இவ்வாறு கண்டோர் கூறினர். (கலி. 148)

தலைவன், வரைவுடன்படுதற்கண் தோழியிடம் கூறல் -

{Entry: H08__564}

விரைவில் வரைதல் வேண்டும் என்று தோழி செப்பிய புரை தீர் கிளவியைக் கேட்டுத் தலைவன் அதற்கு உடன்படுதற்கண் கூற்று நிகழ்த்துதல்.

“தோழி!நம் களவொழுக்கத்தால் தலைவியின் கற்புக்கு ஏதம் வருமோ என்று அஞ்சி நீ ஆவேசமுற்றவள் போல நடுங்கு வதற்கு, நான் சிறிது சிறிதாக இரங்கி வருந்தி, விரைவில் தலைவியை வரைந்துகோடற்கு ஆவன செய்வல்” (குறுந். 52) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 105 இள.)

நச்சினார்க்கினியர் இதனைத் தலைவிகூற்றாக்குவார். (107 நச்.) (ஐந். எழு. 3. குறுந். 34)

தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -

{Entry: H08__565}

“தோழி! நம் ஊரில் வரிசையாக விளங்கி வீழும் அருவியை உடைய நம் மலைநாடனாம் தலைவன் தன்னைச் சேர்ந்தா ரிடம் இடையறாத நட்புடையவன் எனினும், நம் தந்தை தன்னையரை இரந்தாயினும் நின்னை மனைவியாகக் கொள்ளாது, அங்ஙனம் இரத்தல் தன் பெருமைக்கு இழுக்கு என்று விடுத்தானாயின், நாம் உயிர்வாழ்தல் யாங்கனம் இயலும்?” என்ற தோழி கூற்று. (ஐங். 228)

தலைவன் வறுங்களம் நாடி மறுகல் -

{Entry: H08__566}

தலைவி இல்லாமையால் வறுமையுற்று வெறுப்பளித்த குறி யிடத்தை அடைந்து தலைவன் வருந்தி மனம் புண்ணுறுதல்.

“மயில்காள்!கானவர் (உறவினர்) தலைவியை, ‘இல்லிற்குச் செல்’ என்றபோது, அவள் கால்கள் இல்லம் நோக்கி எவ்வாறு நடந்துசென்றனவோ?” (கப்பற். 141) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -

{Entry: H08__567}

தலைவன், தினை கொய்யப்பட்டுத் தலைவியது காவல் இல்லாது பாழ்த்துக் கிடந்த தினைப்புனத்தைக் கண்டு வருந்தி உரைத்தல்.

“பாண்டியனது மதுரைநகர் போன்ற இயற்கையழகுடைய தலைவியை அவள் விளையாடும் இடமாகிய இத்தினைப் புனத்திலும் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. அவள் தலை மயிர் முடியுமாறு கூடியதை அறிந்து அவளுக்குப் பருவம் வந்துவிட்டது என்று அவள் உறவினர் அவளை இற்செறித்து விட்டனர்போலும்!” (திணைமாலை.4) என்ற தலைவன் கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 103 நச்.)

தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -

{Entry: H08__568}

பாங்கியின் வேண்டுகோட்கு இணங்கிய தலைவன் விருந்தின னாக வந்து தங்குதலை விரும்புதல்.

இறை - இறுத்தல் - தங்குதல்

“மயிலனையீர்!நும் கையால் தொடப்பட்ட பொருள் எதுவாயினும் எனக்கு அமுதமாகும். கதிரவன் மறையும் நேரத்தில் இப்பொழில் தங்குதற்கும் இனிதாக உள்ளது. உங்கள் மனையும் கானவர் காவலோ தேவர் காவலோ உடையதன்று” (அம்பிகா. 163) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 149)

தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -

{Entry: H08__569}

“வேந்தன் திறைகொண்டு மீள்வான்; நாமும் ஊர் மீளலாம்” என்று தலைவன் நினைத்த நேரத்தில், அவ்வேந்தன் திறைப் பொருளைப் பெறாது மீண்டும் போரைத் தொடர்ந்தானாக, அது கண்டு வேந்தற்கு உற்றுழி உதவச் சென்ற தலைவன், “அரசன் போரினை முடித்திருந்தால், மேடுகளைத் தூளாக்கிக் கொண்டு செல்லும் உருளைகள் கோக்கப்பட்ட தேரிலே, தம்மைக் கட்டிவைத்திருக்கும் இடங்களை வெறுத்து விரைந்து செலற்கு ஆயத்தமாக நிற்கும் குதிரைகள் பூட்டியுள்ள நிலை யில், தேரை நேரே ஊருக்குத் திருப்பி விரைவில் தலைவியைக் காணலாம். ஆனால் அதற்குரிய வாய்ப்பு இன்று இல்லையே!” (ஐங். 449) என்றாற்போன்று பாகனிடம் வருந்திக் கூறல். (தொ. பொ. 41 நச்.)

தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -

{Entry: H08__570}

தலைவி தலைவனுக்கு உபகாரம் செய்யும் விருப்பினான் இரவுக்குறியின் ஏதத்தை விளக்கி இரவுக்குறியை விலக்கிய வழித் தலைவன் கூறுதலும், தலைவி செய்த உபகாரத்தை மனம் கொண்டு குறியிடத்து அவளைப் புகழ்ந்து கூறுதலும்.

பகற்குறியிடத்துத் தலைவி தன்னுடைய கண்களைப் புதைத்த வழி, “காந்தட் குலை போன்ற அழகிய கைகளால் என் கண் களைப் பொத்திய மயில் போன்ற சாயலாய்! படுக்கையில் எனக்குத் துணையாக உதவும் உன்னையன்றி என் நெஞ்சத் திருப்பார் பிறர் உளரோ?” (ஐங். 293) என்றல் போலத் தன் காதன்மை வெளிப்படத் தலைவன் அவளிடம் கூறுதலும். (தொ. பொ. 105 இள.)

தலைவி வேளாண்மை செய்ய எதிர்கொள்ளக் கருதுதல் காரணத்தான், தோழி அவனை விருந்தாகத் தங்குமாறு கூறுதற்கண் தலைவி கூற்று தோழியிடம் குறிப்பாக நிகழ்தல். ‘விருந்தின் கண்ணும்’ என்பது பாடம். (107 நச்.)

மாலையில் தலைவி தலைவன் பிரிவு கருதிக் கண்ணீர்விட்டுக் குறிப்பான் அவன் போவதனைத் தடை செய்யுமாறு தோழிக்கு அறிவுறுத்த, தோழி தலைவனிடம் அவன் பிரிவால் தலைவிக்கு ஏதம் நிகழ்தலும் கூடும் என்று கூறி, இரவில் தம் மூரில் தமர் விருந்தாக எதிர் ஏற்றுக்கொள்ள இளையரொடும் புரவியொடும் தம் ஊரில் தங்கிச் செல்லு மாறு வேண்டுதல் (அகநா. 300) இதற்கு எடுத்துக்காட்டாம். (நச்.)

தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -

{Entry: H08__571}

தலைவன், கற்புக் காலத்தில் வேற்று நாட்டுக்குச் செல்லத் தலைவியைப் பிரியும் காலத்து, பிரிவு ஒருப்பட்ட பின், “போவோமா, தவிர்வோமா?” என்று தனக்கு நிகழும் மன நிகழ்ச்சி பற்றிய துன்பத்தின்கண் கூறுதல்.

“மனமே!கடல்நீர் போல நீ அலைந்து கொண்டிருக்கின் றாயே அன்றி, உறுதியான கோட்பாடுடையாய் அல்லை. இத் தலைவியைப் பிரிந்து வறண்ட பாலைவழியே சென்று பொருளீட்டி வரவும் அஞ்சுகிறாய்; இத் தலைவியொடு மனைக்கண்ணேயே மகிழ்வோடு இருப்போ மெனினும் வறுமைக்கு அஞ்சுகிறாய். நீ அழிதருமாறு உடைவாயாக!” (அகநா. 123) எனத் தலைவன் மனத்திற்குக் கூறுதல். (தொ. பொ. 144 இள.)

அங்ஙனம் வேற்றுநாட்டின் பிரியுங் காலத்துத் தான் உறும் இடும்பையிடத்துத் தலைவன் கூற்றுநிகழும்.

விழுமமாவன: பிரியக் கருதியவன், பள்ளியிடத்துக் கனவிற் “போவோமோ, தவிர்வோமோ” என வருந்திக் கூறுவனவும், “இவள் நலன் திரியும்” என்றலும், “பிரியுங்கொல்?” என்று ஐயுற்ற தலைவியை ஐயந் தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும், பிறவுமாம்.

தலைவன் தலைவியை அளவுக்கு மீறிப் பாராட்ட, அப் பாராட்டினால் தலைவி மகிழாமல் தலைவன் பிரியக் கருது வதை அறிந்து மனத்துள் வருந்தித் துயிலாதிருக்க, படுக்கை யில் அவளொடு கூடி அவள்தோளையே அணையாகக் கொண்டு உறங்கிய தலைவன், தன் கனவில், “பாலை நிலத்தைக் கடந்து சென்று இரு பெருவேந்தரையும் சந்து செய்வித்து யான் மீண்டு வரும்வரை என் தலைவி செயலறவு தோன் றாமல் ஆற்றியிருந்து இல்லறத்தை நடத்தும் ஆற்றல் உடைய வளோ?” என்று அரற்றியதை அவள் கேட்டுத் தோழிக்குச் சொல்லியது. (கலி. 24)

‘உண்ணாமையின்’ (அகநா.123) என்ற பாடல் “போவோமா தவிர்வோமா” என்றது.

“மனமே! புலி கொன்று உண்டு எஞ்சிய களிற்றின் உடலை யாளி இழுத்துச் செல்லும் கொடிய காட்டுவழியே, இவளை இல்லத்தில் விடுத்துப் பொருள் தேடக் கருதிச் செல்லின், இவள் மாமைஅழகு இன்றொடு போய்விடும் என்பதை நினைத்துப்பார்” (நற். 205) என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்கல்.

“தலைவி! யான் பொருள் தேடப் புறப்பட்டுப் போதற்குரிய தேரின் செலவைத் தடுக்கும் வகையில் வானவில்லை வளைத்து இக்கார் காலத்தில் மேகம் மழை பெய்யத் தொடங்கி விட்டது. அரச காரியம் ஒன்றனைத் தவிர, மற்ற எதற்கும் பிரிதல் கருதாது நின்னைப் புரத்தலைத் தொடங்கி விட்டேன். என் பொருள்வயின் செலவைத் தவிர்த்து விட்டேன்” (ஐங். 428) என்று, தலைவி “பிரிவாரோ” என்று கொண்ட ஐயத்தைத் தலைவன் நீக்கியது.

“நெஞ்சே! வறியார்க்கு ஈதல், தாமும் நுகர்தல் என்னும் இரண்டும் செல்வமில்லாதார்க்கு இல்லை கருதி, பொருள் தேடச் சூழ்கிறாய். நீ பிரிந்து பொருள் தேடச் செல்லும்போது தலைவியும் உடன் வருவாளா? என்னை மாத்திரம் அனுப்பப் போகிறாயா?” (குறுந். 63) என்று (தலைவியை ‘வருகின்றா ளன்றே’ என்று) கூறிச் செலவழுங்கியது.(தொ. பொ. 146 நச்.)

தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -

{Entry: H08__572}

களவுக் காலத்தில் வேட்கை மிகுதியால் தலைவன் நாணத் தின் எல்லையைக் கடந்து, காணும் பொருள்களில் எல்லாம் தலைவியின் தொடர்பை உட்கொண்டு, கொடியைத் தலைவியின் இடை என்று கருதித் தழுவுதலையும், காந்தட் பூவை அவள் கைகளாகக் கொண்டு மகிழ்தலையும், கருவிளம் பூக்களை அவள் கண்களாகக் கருதிப் பறித்துக் கொள்ளு தலையும், மாந்தளிரை அவள் மேனியாகக் கொண்டு தடவுதலையும், பொழில்களில் சென்ற ஆண்மயில்களின் (கண்ணுக்கு இனிமை தோற்றும்) மென்மையை அவள் மேனியின் சாயலாகக் கொண்டு மயில்களின் பின் தொடர் தலையும், மூங்கில்களைத் தலைவியின் தோள்களாகக் கொண்டு தைவருதலையும், அறல் பட்ட கருமணலை அவள் கூந்தலாகக் கொண்டு அதன் மீது புரளுதலையும் கண்ட வர்கள் தலைவனது வேட்கை மிகுதி குறித்து வியந்து கூறுதல். (97 இள.)

தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -

{Entry: H08__573}

“சில யாண்டுகளுக்கு முன் இவன் இவளுடைய கூந்தலை ஈர்த்துப் பூசலிடுவான். இவளும் இவன் தலைமயிரை வளைத்திழுத்து ஓடுவாள். தம் செவிலித்தாயர் தடுப்பவும் விடாது காரணமின்றிச் சில பூசல்கள் விளைத்துக் கொள்வர். இப்பொழுது மலரைப் பிணைத்த இரட்டை மாலையைப் போன்று காட்சி வழங்கி மணம் புரிந்து மகிழ்கிறார்கள். இத் தகு நன்மையை உண்டாக்கிய ஊழ்வினை வாழ்க!” (குறுந். 229) என்று தலைவன் தலைவியரைக் கண்டோர் கூறும் கூற்றில் அவர்கள் ஓரூரினராதல் பெறப்படும். (தொ. பொ. 93 நச்.)

தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -

{Entry: H08__574}

தன் குறையை ஏற்காமல் ஏதோ சொல்லிக் காலம் தாழ்த்திய தோழியின் குறிப்பறிந்த தலைவன் தன் மனத்திற்குள் கூறிக் கொள்ளுதல்.

“தலைவியின் தோழி யாரோ அயலார் கூறுவது போல என் கூற்றுக்கு மறுமொழி கூறினும், அச்சொற்களில் கடுமை இல்லை; ஆகவே என்குறை நேரப்படும் நன்மையே தெரி கிறது; பயன் விரைவில் காணப்படும்” என்று தலைவன் நினைத்துக்கோடல். (குறள் 1096)

தலைவி -

{Entry: H08__575}

‘தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி காண்க.

தலைவி, அச்சம் நீடியவழிக் கூறல் -

{Entry: H08__576}

களவுக் காலத்தில் தலைவிக்கு வரும் அச்சம் மூவகைப்படும். அவையாவன:1. “தலைவன் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்றாததால் தெய்வம் அவனை வருத்துமோ?” என்று அஞ்சும் அச்சம், 2. “இக்களவொழுக்கினைத் தந்தை தன்னை யர் அறிகின்றாரோ?” என்று அஞ்சும் அச்சம். (3) கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கும் உண்மை கூறுதற்கு அஞ்சிய அச்சம் என்பன. இவ்வச்சம், தலைவன் வருகின்றதற்கு இடையீடாக அமையும்.

1. தலைவன் சூள்பிழைத்ததனால் அவனைத் தெய்வம் வருத்தும் என்று கருதிய தலைவி, “மன்றத்தின்கண் அமைந்த மராமரத்திலுள்ள அச்சம் தரும் தெய்வம் கொடியவர்களை ஒறுக்கும் என்பர். எம் தலைவர் அத்தகைய கொடியர் அல்லர். அவர் எனக்குச் சிறிதும் கொடுமை செய்யவில்லை. அவரால் எனக்குத் தீங்கு ஒன்றும் விளைந்திலது. நான் அவரை விரும்பியதால் என் நெற்றி பசந்தது; என் மனம் அவரிடம் நெகிழ்ந்ததால் என் தோள் மெலிந்தன” (குறுந். 87) என்றாற் போலத் தன்னுள் புலம்புதல்.

2. சின்னாள் இடையீடிட்டு வந்த தலைவனை நோக்கி, “பன்றி தினையை உண்டு நிறைவொடு மலைப்பக்கத்தில் உறங்கும் நாடனே! ‘என் தந்தையார் நம் களவொழுக்கத்தை அறி வாரோ’ என்று அஞ்சிப் போலும் சின்னாள் குறிவயின் வாராமல் விடுத்தாய்?” (ஐங். 261) என்றாற் போலக் கூறுதல்.

“‘இவ்வூரார் அலர் துற்றுமாறு நீ அத்தகைய ஒழுக்கத்தை உடையையோ?’ என்று வினவும் தோழியே!யான் கூறுவ தனைக் கேள்.

“என் செவ்விரல்களில் சிவப்பு மிகுமாறு நான் பைஞ்சாய்க் கோரை பறிக்க வேண்டா என்று அதனை விலக்கித் தலைவன் தானே அக் கோரையைப் பறித்து எனக்குப் பாவை செய்து கொடுத்தான்.

“குளத்திலுள்ள பூக்கள் நீரில் சேய்மையில் இருந்ததால் நான் பறிக்க முடியாது திரும்பியபோது, அக்குளப்பூக்களை அவன் பறித்து எனக்குத் தொடுத்துக் கொடுத்தான்.

“எனக்கு மெய்யில் கோலம் செய்து கொள்ளத் தெரியாது என்று கூறி, என் கையைப்பிடித்து அமர்த்தித் தோள்களில் கரும்பு எழுதியதன் மேலும் தொய்யிலும் எழுதினான்.

“இவற்றைத் தவிர நிகழ்ந்தது வேறொன்றும் இன்று. அதற்கு இவ்வூரவர் தம் கற்பனையைக் கலந்து பழி துற்றுகின்றனர். இனிமேல் ஊரவரிடம் உண்மை கூறி அவர்கள் தம் மனத்தைச் செம்மைப்படுத்தல் இயலாது. வதுவையின் மூலம் என்னை நமர் தலைவனுக்கு மணம் முடித்து வைப்பதன் முன்னரே, ஊரவர் தம் பழிச்சொல் மூலம் மணம் முடித்து விட்டனர். நான் என் செய்ய இயலும்?” (கலி.76) என்றல் போலத் தோழி யிடமும் உண்மை கூறுதலுக்கு அஞ்சித் தலைவி கற்பனை யாகக் கூறுதல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -

{Entry: H08__577}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் வாராததால், கார்ப்பருவம் கண்டு கலங்கிய தலைவியைத் தோழி அது வம்பு (அஃதாவது மயில் அகவுவது போன்ற நிகழ்ச்சி மயக்கத்தால் நேர்ந்தது) என்று கூறி ஆற்றுவிக்குமிடத்தே, தலைவி அக் கூற்றினை மறுத்து, அஃது உண்மையாகவே கார்ப்பருவம் என்று கூறுதல்.

“தோழி! இது கார்காலம் அன்று என்கிறாய். கார்காலத்தில் பூக்கவல்ல மல்லிகை முல்லை செருந்திப் பூக்களை விற்பார் கூறும் பண்டமாற்று ஒலியும் பொய்யா?” (கப்பற். 243) என்ற தலைவி கூற்று.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -

{Entry: H08__578}

தலைவன் அணிமையாகப் பிரிதலேயன்றித் தன்னை அரிய னாகச் செய்துகொண்டு மறந்தான் போல் காட்டியஇடத்துத் தலைவி, “தலைவன் நெய்தல் பகுதியில் குறி செய்த இடத் திற்கு முன்பு போலத் தவறாது வருவதில்லை. பல நாள்கள் பகற்குறி பொய்த்துவிட்டது. சான்றவர் நட்பும் இவ்வாறு வியப்பைத் தரும் வகையில் நெகிழ்ந்து போகுமோ!” (திணைமொழி 41) எனவும்,

“சான்றோர், பிறர் செய்யும் தீமைகளைக் கண்ணால் கண்ட பின்னரும் ‘இனிமேல் அவ்வாறு செய்யார்’ என்று அத் தீமைகளைப் பொறுத்திருப்பார். தலைவன் என்னைக் கைவிட்டமையால், மலையிலுள்ள பலாப்பழம் பிளப்பிடத் தில் விழுந்து பயன்படாது அழிந்தவாறு போல, அவன் தொடர்பு பல நாளுக்கு முன்னரே நீங்கி ஒழிந்தது. அதனை அறியாது ஊர்ப்பெண்டிர் இன்னும் என்னைப் பழி தூற்றிக் கொண்டிருக்கின்றனர். பிறர் செய்யும் தீமைகளையும் பொறுக்கும் சால்புடைய தலைவர் நம்மைத் துறந்த பின், நாம் அரியோமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலும்!” (நற். 116) எனவும்,

தன்வயின் உரிமையும் தலைவன்வயின் அயன்மையும் தோன்றத் தோழிக்குக் கூறல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி அவண் ஊறு அஞ்சுதல் -

{Entry: H08__579}

தலைவி, இரவுக் குறியிடத்து இருளில் கொடிய வழியில் காவலர்க்கு அஞ்சாது வரும் தலைவற்கு ஏதேனும் இடையூறு நிகழுமோ என்று அஞ்சுதல். (தொ. பொ. 210 நச்.)

தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -

{Entry: H08__580}

தலைவிக்குக் காமம் மிக்கமை போலத் தலைவற்கும் காமம் மிக, அவன் வழியது அருமையை நோக்காது தலைவியைக் கூடுதற்கண் செய்யும் அன்புச் செயல்கள் மிக்கவழித் தலைவி தோழியிடம் கூறுதல்.

“தலைவனுடைய சந்தனம் பூசிய மார்பினை நினைக்கும்தோ றும் உள்ளத்தில் காமநோய் மிகுகிறது. ஆனால் அவனைத் தழுவிய அளவில் நோய் அடியோடு மறைந்துவிடுகிறதே! இதன் காரணம் என்ன?” (குறுந். 150) எனவும்,

“மன்றத்திலுள்ள பலாமரத்தின் பழச்சுளைகளை உண்டு வந்த மந்தி காட்டுப்பசுவின் மடிக்காம்புகளைத் தடவிய அளவில் தன் கன்று வருடுவதாகக் கருதி அப்பசு பாலினைச் சுரக்கும் அணிமலை நாடனாகிய தலைவனை நாமாக ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டோம். பிரிவு என்பது அவனால் வருவ தாகத்தான் இருக்கலாம்” (ஐந். எழு. 4) எனவும் (இள.).,

“மின்னலொடு மழை பெய்த நள்ளிரவில் கரடிகள் இயங்கும் வழியும் கொடிது. காட்டாறுகளும் வேகமாகக் கரை புரண்டு ஓடுகின்றன. வழியில் பாம்பின் மணி ஒளியில் புலி தான் கொன்ற யானையின் தசைகளைத் தன் பிணவுக்காக இழுத்துச் செல்லும் அத்தகைய நடுக்கம் தரும் கற்கள் நிறைந்த குறுகிய வழியில் எனக்கு இன்பம் தருவதற்காகவே வேல் ஒன்றனையே துணையாகக் கொண்டு தலைவன் வருகிறான்” (அக.நா. 72) எனவும்,

தலைவன் செய்யும் கருணையை நினைந்து பலவாறு
கூறுதல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -

{Entry: H08__581}

தலைவனது நினைவைத் தலைவிமிக அறியுமாதலின் அவனை உயர்த்திக் கூறுதற்கண் கூறுதல்.

“நிலைபெற்ற சொல்லையுடையவர்; எப்பொழுதும் என் தோளைப் பிரியாதவர் ஆதலின் எனக்கு இனியவர். வண்டுகள் தாமரைத் தாதினையும் சந்தனத்தாதினையும் ஊதிச் சந்தனமரத்திலே அமைத்த தேன்போல அவர்நட்பு மிக உயர்ந்தது” (நற். 1) என்று தலைவி தலைவனை உயர்த்திக் கூறல். (தொ. பொ. 145. இள; 147 நச்.)

தலைவன் தலைவியைச் சிறப்பித்தல் -

{Entry: H08__582}

இல்லறத் தலைமை கொடுத்தல். (195 குழ.)

தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -

{Entry: H08__583}

தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவ னொடு சார்த்துதற்கண். தலைவி கூறுதல்.

தன் மகனொடு பேசி மகிழ்கையில், தலைவன் வரவே, தான் எவ்வளவு தடுத்தும் நில்லாது, மலைமேல் சிங்கம் பாய்வது போல அறனில்லா அன்பிலி பெற்ற மகன்தானும் தாயாகிய தன்னிடத்து அன்பிலனாய்த் தந்தையின் பரந்த மார்பினை நோக்கிப் பாய்ந்து தன் கைப்பிடியினின்று விலகித் தந்தை யிடம் சென்று விட்டான்” (கலி. 86) என்ற தலைவிகூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -

{Entry: H08__584}

தலைவி தலைவன் தொடர்பு பற்றித் தன்னை வினவிய தோழிக்கு நாணத்தால் வெளிப்படையாக விடை கூறாமல் குறிப்பாகக் கூறுதல்.

தலைவியிடம் தோழி தலைவனைப் பற்றியும் அவன் குறை பற்றியும் வினவியபோது, தலைவி, “முசுக்கலை தீண்டியத னால் கிழிந்த தேன் கூட்டினின்று பெருக்கெடுத்த தேன் ஆறு போல ஓடிப் பாக்கு நாகம் முதலிய மரங்களை அடித்துக் கொண்டு மலையினின்று ஊர்ந்து வருகிறது” (தஞ்சை. கோ. 118) என்று கூறுதற்கண், மேம்போக்காக நோக்கின் இது தோழி ஒன்று வினவத் தலைவி வேறொன்று கூறியது போலத் தோன்றும்; ஆயின் இக்கூற்றின்கண், “தலைவன் தீண்டியதால், தலைவியிடம் அடைக்கப்பட்டிருந்த காம வெள்ளம் வெளிப்படவே, அதன் பெருக்கில் அவளுடைய நாணம் மடம் ஆகிய பண்புகள் அடித்துச் செல்லப்பட்டன” என்ற குறிப்புப்பொருள் புலப்பட்டவாறு.

இதனைத் திருக்கோவையார் ‘அறியாள் போறல்’ என்னும் (85).

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 147)

தலைவி அறிவு அவன் உரைத்தல் -

{Entry: H08__585}

தலைவன் தலைவியின் மூதறிவுடைமை மொழிதல். (சாமி. 94)

தலைவி, ஆடிடம் நோக்கி அழிதல் -

{Entry: H08__586}

தலைவி தான் முன்பு விளையாடிய இடத்தைப் பார்த்து வருந்துதல்.

தலைவனைக் காண வழியின்றித் துயருறும் தலைவி, தான் விளையாடி மகிழ்ந்த இடத்தைப் பார்த்தும், அங்குத் தலைவ னுடன் கூடி மகிழ்ந்ததை நினைத்தும் தனக்கு இன்பமூட்டிப் பிரிந்து போய்விட்ட தலைவனது வன்கண்மையை நினைத் தும் வருந்துதல்.

இது களவியலுள் ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -

{Entry: H08__587}

“ஆடை கழுவும் தன் தொழிலை விடுத்து நின்தூதாகத் திரி யும் வண்ணாத்தி, பரத்தையருக்குத் தெப்பமாக இருந்து அவரொடு நீராடி அவர்கள் ஊற்றிய சாதிலிங்கக் குழம்பு சிதையாமல் வந்து அந்த அழகை எனக்குக் காட்டச் சொன் னாளோ?” (கலி.72) என்று தலைவி தலைவனிடம் புலைத் தியைக் கூறி ஊடுதல்.

இது ‘வாயிலின் வரூஉம் வகை’ என்றதனான் கொள்ளப் பட்ட கூற்றுக்களில் ஒன்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

{Entry: H08__588}

“தோழி! தலைவன், யாம் விளையாடும் இடத்து வந்து ‘உனக்குச் சிற்றில் அமைத்துத் தருகிறேன்’ என்றான். யான் ‘என்னை மணந்து ஓர்இல்லம் கட்டி வாழ அறியாது சிற்றில் இழைக்க வருகிறாயே’ என்றேன். தலைவன், ‘கட்டின மாலையை உன் கூந்தலில் சூட்டுகிறேன்’ என்றான். யான், ‘நீ என்னை மணந்துகொண்டு எனக்குப் பூச்சூட்டுதலை விடுத்து, எமர் கட்டிய மாலையைக் சூட்ட வருகிறாயே’ என்றேன். தலைவன், ‘உனக்குத் தொய்யில் எழுதுகிறேன்’ என்றான். யான், ‘நீ விரைவில் மணந்து பலரும் காண எனக்கு அலங்காரம் செய்தலே அழகிது’ என்றேன். இவ்வாறு அவன் கூறியவற்றுக் கெல்லாம் யான் மாறாய் விடை கூற, அவன் இனிக் களவினைத் தொடர முடியாது என்று வருந்திப் போனான். நீ அவனுக்கு வரைந்து கொள்ளும் முறையை அறிவித்துத் தாய்க்கு அறத்தொடு நின்று என் நோயைப் போக்குவாயாக!” என்று தலைவி தோழிக்குக் கூறியது. (கலி. 111)

தலைவி (பிணைவிழி) ஆற்றல் -

{Entry: H08__589}

பொருள்வயின் பிரிந்து சென்றுள்ள தலைவன் விரைவில் மீள்வான் என்று கூறிய தோழியின் சொற் கேட்டுத் தலைவிஆற்றியிருத்தல்.

“மேகம் மழை பொழிதல் கண்டு வருந்தும் நெஞ்சே! காடுகளில் மயில்கள் ஆடுமாறு மேகம் மழை பொழிதலின், தலைவர் மீண்டு வருவதாகக் கூறிய காலம் வந்துவிட்டது. அவர் விரைவில் வந்து விடுவார்” (அம்பிகா. 318) என்று பிரிதல் துயரை தலைவி பொறுத்துக்கொள்ளுதல்.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -

{Entry: H08__590}

தலைவன் அவா மீதூர்ந்து ஆற்றாமையே வாயிலாகத் தன்னைத் தழுவ வருவோனுக்குத் தலைவி கூறுதல்.

“தலைவ! என் வளை நெகிழுமாறு பிரிந்து என்னை வருத்திய நின்னைப் புல்லவும் செய்யேன்; அதனால் நின்னை வெறுத் தேனும் அல்லேன். அயலாம் தன்மையேன் ஆதலின், என்னைத் தீண்டற்க” (நற். 340) என்று தலைவி நொந்து கூறுதல்.

‘வாயிலின் வரூஉம் வகை’யாற் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -

{Entry: H08__591}

தலைவன் இரவில் நடந்து கடந்து வந்த ஏதம் மிக்க வழியை நினைத்துத் தலைவி வருந்துதல்.

“வெற்ப! வானமும் கறுத்துள்ளது. தரையிலும் மழைநீர் ஓடுகிறது. இருளோ மிகுந்துள்ளது. பலரும் உறங்கும் இவ் விருளில் நீ எவ்வாறு வந்து எம் மூரை அடைந்தாய்? நீ பட்டுள்ள துன்பத்தை நினைந்து யான் வருந்துகிறேன்” (குறுந். 355) என்றாற் போலத் தலைவி கூறுதல்.

இது களவியலுள் ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவி, ஆற்றுவல் எனக் கூறியது -

{Entry: H08__592}

தான் பொலிவிழப்பினும், தலைவனது பிரிவினை ஆற்ற வல்லள் ஆதலைத் தலைவி தோழிக்குக் கூறியது.

“தோழி! தலைவர் என் அருகில் இருப்பின், திருவிழா நடக்கும் ஊரினைப் போலப் பொலிவோடு இருப்பேன்; மக்கள் நீங்கிய பாழ்பட்ட ஊரின்கண் அணில்கள் விளை யாடும் பாழில்லத்து முன்னி டங்களைப் போல, அவர் அகன்றஞான்று பொலிவிழந்து காணப்படுவேன்” (குறுந்.41) என்ற தலைவி கூற்று .

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலையினும்’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ஆற்றொடு புலம்பல் -

{Entry: H08__593}

“களவில் என்னை மணந்து பின் பிரிந்து என் உயிரை வாங்கும் தலைவனுடைய கொடுமையை எனக்குக் கூறுதற்குக் கூசி மனம் இரங்கி உடலை மலராடையால் மறைத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் ஓடும் நதியே! என் தீவினையால் தலைவன் என்னைப் பிரிந்தானாக, நீ யாது செய்யவியலும்?” (அம்பிகா. 291) என்று தலைவி ஆற்றொடு மனம் நொந்து பேசுதல்.

இது களவியலுள் ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று;உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -

{Entry: H08__594}

தலைவன் சேணிடையின்றி அணிமையிலுள்ள தன் ஊருக்குச் சென்று விரைவில் மீண்டு வருவதாகக் கூறிப் பிரிந்தவிடத்து, அப்பிரிவினைத் தாங்க இயலாத வருத்தத்தால் தலைவி தோழியிடம் கூறுதல்.

“யான் உன்னோடு இல்லத்தில் உள்ளேன். என் அழகுமிகுந்த வருத்தத்தொடு கடற்கரைச் சோலையிடத்தது. தலைவனோ, தன்னூர்க்குச் சென்றுவிட்டான். ஊரார் துற்றும் அலரோ ஊர்ப்பொதுவிடம் வரையில் பரவிவிட்டது” (குறுந். 97) என்பது போன்ற தலைவி கூற்று.

“தலைவன் நம்மைத் துறந்தால் இனி விடுவதற்கு நம்பால் உயிர் தவிர வேறொன்றும் இல்லை” (குறுந். 334) என்ற கூற்றும் நிகழ்வது உண்டு.

இது களவினுள் ‘புலவிப் போலி’ (ஊடலும் உணர்த்தலும் இன்றித் தோன்றுவது) எனப்படும்.

இட்டுப்பிரிவு - இட்டுவைத்துப் பிரிதல் எனவும் பொருள் கூறுவர். (109. இள.)

தலைவி, இயற்பட மொழிதல் -

{Entry: H08__595}

பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலம் கடப்பவும் வாராமை யால் வருந்திய தலைவியது நிலை கண்ட தோழி தலைவன் மீது குற்றம் சாற்றி இயற்பழித்தவிடத்து, தலைவி அதனை மறுத்து அவன் பண்புக் குறைவு அற்றவன் எனவும், விரைவில் வந்து அருளுவான் என்றும் அவனைக் குணமுடையனாகச் சிறப்பித்தல்.

“தோழி! நம் தலைவர் கொடியராயினும், அவரே என் உயிர்த் துணைவர். அவரைக் குறைகூறுதல் நமக்கு அடுக்குமோ?” (ஐங். மிகைப்.) என்றல் போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள் ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 176)

‘வரைதல் வேட்கை’ என்னும் கிளவிக்கண்ணும் இத்துறை நிகழும். ‘இறையோன் தன்னை நேர்ந்து இயற்பட மொழிதல்’ என்பது அது. ‘தலைவி தலைவனை நேர்ந்து இயற்பட மொழிதல்’ காண்க.

தலைவி (பூங்குழை) இரங்கல் -

{Entry: H08__596}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் தன்னிடம் அது பற்றிக் கூறாமை கருதித் தலைவி தோழியிடம் வருந்திக் கூறல்.

“தோழி! முன்பு என் நலமுண்டு இன்புற்ற போது, ‘உன்னைப் பிரியேன், பிரியின் தரியேன்’ எனத் தாம் உரைத்தது பொய்க் கும் என அஞ்சியே போலும் அவர் இதனை என்னிடம் சொல்லாமல் சென்றுள்ளார்?” (தஞ்சை. கோ. 264) என்பது போன்ற தலைவி கூற்று.

இதனை ‘நெஞ்சொடு வருந்தல்’ என்னும் திருக்கோவையார் (272).

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

தலைவி, இரவுக்குறி நயந்து கூறுதல்-

{Entry: H08__597}

பகற்குறிக்கு வாய்ப்புக் குறைந்த காலத்தில் தலைவன் நினை வால் பிணி மிகுந்து தோள் வாடிய தலைவி, தலைவனை இரவுக்குறி நயப்பித்தல் வேண்டும் என்ற எண்ணத்தொடு தோழியிடம் தனது இரவுக்குறி விருப்பத்தினைப் புலப்படுத் தல்.

“வேங்கைகள் மலர வண்டுகள் ஆர்க்கும் மாலைக் காலத்தே என் காமநோய் தீரவும், தோள்கள் மெலிவு தீர்ந்து வீங்கவும் வாய்ப்புத் தரும் வகையில் தலைவன் வருவானோ?” (திணை மொழி ஐம். 9) என்பது போன்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘அன்னவும் உள’ என்றதனான் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -

{Entry: H08__598}

கடிய மழையையும் கொடிய இருளையும் பொருட்படுத்தாது தன்னை மகிழ்விப்பதற்காகவே இரவுக்குறியிடத்து வந்த தலைவனை நோக்கித் தலைவி, “மழை கடுமையாகப் பெய்வ தால் வானத்தையும் நோக்க முடியவில்லை; மழைநீர் பெருக் கெடுத்து ஓடுவதால் தரையையும் காணமுடியவில்லை; கதிரவன் மறைந்துவிட்டமையால் இருளும் மிகப் பரவி விட்டது. இவ்விரவில் ஊரவர் பெரும்பாலோரும் உறங்கி விட்டனர்; அதனால் ஊரில் அமைதி நிலவுதலின் அச்சம் நிகழ்கிறது. இத்தகைய இரவில் இங்கு வரவேண்டுமா? எம் இருப்பிடமாகிய இவ்வூரை, இங்கு மலர்ந்துள்ள வேங்கைப் பூக்களின் நறுமணத்தால் அடையாளம் கண்டு வந்தாயா?” (குறுந். 355) என்றாற் போல, அவன் செய்யும் தண்ணளியை விஞ்சிய தன் கவலையை வெளிப் படுத்தியது.

இஃது இச்சூத்திரத்துள் ‘அன்னவும் உள’ என்றதனான் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -

{Entry: H08__599}

“பேரிருள் எங்கும் கவிந்து கிடக்கின்றது. இரவோ மிகக் கொடியதாக யுகமாய் நீள்கின்றது. என் மணாளனான திருமாலோ முகங்காட்டவில்லை. இனி என்னுயிரைக் காப்பார் யாரோ?” என்னும் தலைவி கூற்று. (திருவாய். 5-4-1)

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும்.

தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -

{Entry: H08__600}

பகற்குறியும் இரவுக்குறியும் தவறியவிடத்துத் தலைவி தனக்குள் செயலற்றுக் கூறுதல்.

“பேயும் உறங்கும் நள்ளிரவில் நெய்தற்பூவில் அமர்ந்து வருந்தும் அன்றிலே! என் தலைவனைப் போல நின் சேவலும் குறியிடத்துநின்னைக் காண்பதற்கு வரத் தவறியதோ?” எனவும், “தேன்மிக்க நெய்தலே! பிரிந்தார் வருந்தும் மாலைக் காலத்தில் தனிமையால் வருந்தும்என்கண்கள் உறக்கத்தை மறுத்தன. அவை போல அன்றி இனிதாக உறங்கும் நெய்தலே! நீ உறக்கத்தில் கனவு கண்டிருப்பாயே! அக்கன வில் கல் நெஞ்சினராகிய என் தலைவர் கடற்கரைச் சோலைக்கு வந்ததாகக் கண்டாயாயின் எனக்குத் தெரி விப்பாய் (சிலப். கானல். 33) எனவும் வரும் தலைவி கூற்று.

இக்கூற்றில் தன்வயின் உரிமையும், தலைவன்வயின்அயன்மை யும் பெறப்படும். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -

{Entry: H08__601}

பகற்குறியோ இரவுக்குறியோ நிகழாமல் தடைப்பட்ட விடத்துத் தலைவி தோழியிடம் கூறுதல்.

“தோழி! பனைமரத்தில் கட்டிய கூட்டில் உள்ள ஆண் அன்றில் முதற்சூலால் ஏற்பட்ட வயாநோயினையுடைய தன் பெடை அன்றிலை அதன் வாயலகு நெகிழ்ந்த அளவில் கூவி அழைக்கும் நள்ளிரவில், தலைவனது தேர், நம் இரவுக் குறியை நோக்கி வாராதாயினும், வருவது போன்ற எண்ணத் தால் என் செவியில் அத்தேர்மணிகள் ஒலிப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டதனால் இரவு முழுதும் யான் உறங்க வில்லை” (குறுந். 301) எனவும்,

“நம் மனையின் அருகில் உள்ள ஏழில் என்ற குன்றின் மேலுள்ள நொச்சிமரத்தின் பூக்கள் உதிரும் ஒலியைக் கேட்டுக் கொண்டே, இப்பெரிய ஊரிலுள்ளார் யாவரும் உறங்கிய இராக்காலத்தில், யான் உறங்காது தலைவன் வரவினை எதிர்நோக்கியிருந்தேன்” (குறுந். 138) எனவும்,

“தோழி! தலைவனைக் கூடுதற்கண் உள்ள விருப்பத்தால், பகற்குறியைத் தள்ளியது தவறு என்று நினைத்து இரவில் நொச்சிமலர் வீழும் ஓசையைக் கேட்டவாறு அவன் வருகையை யான் எதிர்நோக்கி இருப்பவும், இடிகள் ஒலிக்கும் நள்ளிரவில் தான் இரவுக்குறியிடை வந்தும் யான் தன்னைக் காணவில்லையே என்று உன்னிடம் தலைவன் குறிபிழைத் ததை என்பிழையாகக் கூறுவான்” (கலி. 46) எனவும், பலவாக வரும் தலைவி கூற்று.

இக்கூற்றில் தன்வயின் உரிமையும், தலைவன்வயின் அயன்மையும் புலப்படும். (தொ. பொ. 107 நச்.)

தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -

{Entry: H08__602}

தலைவிக்குக் கற்புக் காலத்தில் தலைவன் பிரிவால் அலமரல் பெருகியவழித் தலைவனைக் கண்டபோது இன்பமும், தனிப்பட்டபோது துன்பமும் உண்டாகுமிடத்துக் கூற்று நிகழும்.

தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும்வழியும் கூற்று நிகழும். (தொ. பொ. 147 நச்.)

“தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்றபோது அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையால் இன்பம் உடைத்தாய் இருக்கும்; இன்று அப்புணர்ச்சி நிகழவும்’ அது “பிரிவர் தலைவர்” என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தா யிற்று. அவர் அன்பின் நிலை இஃது” (குறள் 1152) என்ற தலைவி கூற்று. (நச்.)

“கோழி குரல் காட்டிய அளவில் தலைவனைத் தன்னிடத்தி னின்று பிரிக்கும் கொடிய பொழுது வந்துவிட்டதே என்று என் நெஞ்சம் திடுக்கிடுகிறது” (குறுந். 157) என்று இரவிடை இன்பம் நுகர்ந்த தலைவி பகலிடை அந்நுகர்ச்சி கூடாமைக்கு இரங்கிக் கூறுதல். (145 இள.)

“தோழி! நன்மலை நாடன் என்னொடு கூடும்போது என்னி டத்தே அழகும் வந்து சேர்கிறது; பிரியின், என் மாமை அழகைப் பசலை அழித்துவிடுகிறது. அசுணமாவை அகப் படுப்பார் கைபோலத் தலைவன் மார்பு எனக்குக் கூடியவழி இன்பமும், பிரிந்தவழித் துன்பமும் தருவதாயுள்ளது” (நற். 304) என்ற தலைவி கூற்று. (நச்.)

தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -

{Entry: H08__603}

இன்னாமையைப் பயக்கும் பொய்ச்சூளுறவினைத் தலைவன் கூறுமிடத்துத் தலைவி கூறுதல்.

தலைவன் ‘வந்த குற்றம் வழிகெட’ ஒழுகிக் களவில் சூளுற வால் வந்த ஏதம் நீக்கி, கற்பாகிய இக்காலத்துக் கடவுளரை யும் புதல்வனையும் பற்றிச் சூளுறுதலின், ‘இன்னாத சூள்’ என்றார். கற்புக் காலத்தும் களவு போலச் சூளுறுதலின், ‘தொல் சூள்’ என்றார்.

“தலைவ! நீ கூடிய பரத்தையர் முடியிற் சூடிய பூக்களில் தாது நின் தோள்களில் படிய இங்கு வந்துள்ளாய்; என்னைத் தீண்டற்க” என்று தலைவி சொல்லியவழித் தலைவன், “என்னைப் பற்றித் தவறாகக் கருதற்க; என்மேல் தவறில்லை என்பதனைச் சூளுரைத்து உறுதி செய்கிறேன்” என்றான்; என்றவழி, தலைவி, “நீ இவ்வாறு துணிந்துரைக்கும் பொய்ச் சூள் உனக்குத் துன்பம் தருமாயின், அஃது எங்களைத் தாக்குமேயன்றி நின் பரத்தையரைத் தாக்காது” என்றமை (கலி. 88) (தொ. பொ. 147 நச்.)

தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

{Entry: H08__604}

“என் கண்ணார என் கணவனைக் காண்பேனாக!அங்ஙனம் கண்டபின் என் தோள்களின் வாட்டமும் பசப்பும் தாமே நீங்கும்!” என்ற தலைவி கூற்று. (குறள் 1265)

தலைவி, உணர்ந்து தலைவனொடு புலத்தல் -

{Entry: H08__605}

பரத்தையிற்பிரிவில் தலைவன் தலைவியின் மகப்பேற்றினை அறிந்து மகிழ்ச்சியுடன் மனைக்கண் வந்து, தலைவி நெய் யாடியதையும் அறிந்த பின்னர், அவளைக் காண வந்துள்ள மையைத் தலைவிக்குத் தோழி சொன்னபோது, அவள் அவனோடு ஊடல்.

“பரத்தையரைத் தோய்ந்த தலைவன் என்னைத் தழுவினால், என் மார்பின் தீம்பால் படுதலால் அவர்கள் செய்த அலங் காரங்கள் சிதைந்து விடும்.அதனால் அவர்கள் புலத்தல் கூடும். ஆதலின் தலைவர் இங்கு வருதல் வேண்டா. யான் புதல்வனைக் கொண்டே பொழுது போக்குவேன்.” (அம்பிகா. 471) என்றாற் போலத் தலைவி புலந்து கூறுதல்.

இது கற்பியலுள் ‘பரத்தையர் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 206)

தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -

{Entry: H08__606}

தனக்கு இறந்துபாடு தோன்றும் வகையில் தன்னை அயலார் மணம் பேசத் தொடங்கியது அறிந்த தலைவி தோழியிடம் கூறுதலும், அவள் வாயிலாகச் செவிலியிடம் கூறுவித்தலும்.

“பலா மரத்திலுள்ள குரங்கு தன் உணவாகிய பலாப் பழத்தைத் தின்ன இயலாது கானவன் தொடுக்கும் அம்பிற்கு அஞ்சி மூங்கிற்புதரில் பாயும் மலைப்பக்கத்தையுடைய தலைவன், நம்மிடம் முதல் நாள் சந்தித்தபோது கொண்ட அன்பு சற்றும் குறையாமல் இருந்துவருகிறான். ஆயின், இவ்வூர் என் மணம் குறித்துப் புதியவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகிறது.” (குறுந். 385) எனத் தோழியிடம் தலைவி கூறுதல்.

“அன்னாய்! புன்னை மலரும் துறைவனை நாங்கள் எங்கள் தலைவர் என்று கொண்டிருக்கிறோம். ஆயின் இவ்வூரார் வேறாகக் கூறுகின்றனர். விதி எப்படி நிகழ்த்தப்போகிறதோ?” (ஐங். 110) எனத் தோழி வாயிலாகத் தலைவி செவிலியிடம் கூறுவித்தல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘உயிராக் காலத்து உயிர்த்தல்’ -

{Entry: H08__607}

தலைவனொடு தன் திறத்து ஒருவரும் ஒன்றும் உரையாத வழித் தனது ஆற்றாமையால் தலைவி தன்னொடும் அவ னொடும் பொருந்திய செய்திகள் சிலவற்றைத் தானே கூறுதல்.

“இச்சிறுகுடி, தலைவனுடைய கொடுமையை நினைத்தலால் நீங்காத துயரத்தொடு வருந்திப் பாதி இரவிலும் உறங்காது தடுமாறுவாரைக் கண்டு “உறங்காமைக்குக் காரணம் யாது?’ என்று வினவாத மக்களையும் நீண்ட நேரமாகிய இராக் காலத்தையும் உடையது ஆதலின், என் போல்வார் தங்கி யிருத்தற்கு ஏற்றதன்று” (குறுந். 145) எனவும்,

“என் உடல் வனப்பு மிகுந்தது கண்டு நான் பருவமங்கையாகி விட்டதாகக் கொண்டு என் உறவினர் என்னை இற்செறித்து விட்டனர். வெளியே விளையாடிக்கொண்டிருந்த நான் இற்செறித்து விட்டமையால் எத்தகைய துன்பத்தை அடைந்து கொண்டிருப்பேன் என்று என்னைக் கவலையொடு வினவாத கவலையற்ற மக்களே இவ்வூரில் உள்ளனர்” (குறுந். 159) எனவும் தலைவி தன்னுள் கூறிக் கொள்ளுதல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -

{Entry: H08__608}

தலைவனொடு தன் திறத்து ஒருவரும் ஒன்றும் உரையாத வழித் தலைவி தனது ஆற்றாமையின் தலைவனொடும் தன்னொடும் பொருந்திய செய்திகள் சிலவற்றைத் தோழி யிடம் கூறுதல்.

“தோழி! ‘நம்பால் விரும்பியொழுகும் தலைவன் இப்பொ ழுது அவ்வாறு விரும்பி ஒழுகவில்லை’ என்று யான் நினக்குச் சொல்ல வருவது எனக்கே நாணாக உள்ளது. உனக்கு என் நிலையை மறைப்பது மானக் கேடாகும். முன்பெல்லாம் நம் களவொழுக்கம் அன்னைக்குத் தெரிந்துவிடுமோ என்று யான் அஞ்சுவதனை அறிந்தும், தலைவன் என்னைவிட்டு நீங்கமாட்டான். இப்பொழுதோ, ‘நம் களவொழுக்கம் தோழியருக்குத் தெரிந்துவிடுமோ’ என்று அஞ்சுவதாகக்கூறி என்னை விரைவில் பிரிந்து செல்கிறான். இப்படியே அவன் நட்புச் சிறிது சிறிதாகக் குறைந்து இல்லையாய் விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” (நற். 72) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -

{Entry: H08__609}

தனக்கு இல்லறக் கிழமை கொடுத்த அல்லது இல்லற ஒழுக்கத்தைப் பகிர்ந்து கொடுத்த தலைவனிடத்துத் தன் குலத்திற்கேற்ற பெருமையினின்று மாறுபடாது அன்பு செய்யுமிடத்துத் தலைவி சொல்லியது.

“நாடன் நட்பு நிலத்தினும் அகலத்ததாய், வானினும் உயர்ச் சியதாய், நீரினும் ஆழத்ததாய் நிறைந்த அளவினையுடை யது” (குறுந். 3) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -

{Entry: H08__610}

தன்னை மணம் பேச வந்த தலைவனுடைய உறவினரைத் தம் உறவினர் வரவேற்று மணம் இசைந்த செய்தியைக் கேட்ட தலைவி, மகிழ்ச்சி தாங்காமல் தன் மனத்துள்ளேயே கூறிக் கொள்ளுதல்.

“நெஞ்சே! நம் இல்லத்தில் திருமணத் தொடர்பான வாத்தி யங்கள் முழங்குகின்றன. ஆதலின், குறிக்கண் வரும் தீயவழி யும், குறி பிழைத்தலும், வெறியாட்டும், பிறர் என்னை வரையக் கருதலும், இவை காரணமாக நீ படும் வருத்தமும் இனி நிகழ்தற்கு வாய்ப்பில்லை. நீ மகிழ்வோடு இருப்பா யாக!” (அம்பிகா. 333) என்ற தலைவி கூற்று. (ந. அ. 174)

இது வரைவியலுள், ‘வரைவு மலிதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

தலைவி, உவத்தல் பற்றிக் கூறல் -

{Entry: H08__611}

உவத்தல்- தலைவனை உவத்தல். அது பற்றித் தலைவி தோழிக்குக் கூறுவது.

“தோழி! தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்த காட்சி கண்ட அளவில் அது நெஞ்சினைச் சுட்டது. அவனிடம் ஊடல் கொள்ளலாம். ஊடல் மற்றவரிடத்துச் சிறந்து பயன் தருக! யான் ஊடுதலைத் தவிர்ந்து, அவனது எயிற்று நீரையுண்டு அவன் என்மார்பில் பொருந்தி உறங்கக் கிட்டிய இவ்வரிய வாய்ப்பினை அவனைத் தழுவுதற்கண் பயன்படுத்தினேன்” எனவும்,

“தலைவனைக் காணாதவிடத்து அவனைப் பற்றிய தவறு களைத் தவிரப் பிறிது ஒன்றனையும் கருதி அறியாத யான், அவனைக் காணும்போது அவன் தவற்றை நினைக்கும் ஆற்றல் இலேனாயுள்ளேன்” (குறள். 1286) எனவும், தான் தலைவனது தொடர்பால் உவத்தல் பற்றித் தலைவி கூறியவாறு. (தொ. பொ. 145 இள.)

தலைவி, உவந்து கூறல் -

{Entry: H08__612}

“கொறுக்கைத் தட்டை தீண்டுவதால், வடுக்களை உடைய மாமரத்தின் தளிர்கள் அசையும் துறைகளையுடைய தலை வனது மார்பு இனிய உறக்கத்தைக் கொடுக்கும் மென்மை யுடையது ஆதலின், அவனது பரத்தமை கருதி ஊடாது, அவனை ஏற்றுத் தழுவுகிறேன்” (ஐங். 14) என்று தலைவி தோழிக்கு உவந்து கூறியது. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -

{Entry: H08__613}

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்னும் களவுக் காலப் புணர்ச்சி நான்கன்கண்ணும் இடையீடு ஏற்படாமல் தலைவன் வந்து கூடும் வாய்ப்புப் பெற்றமையால் இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த மகிழ்ச்சியைத் தலைவி எய்தும்போது தோழியிடம் கூறுதல்.

“தோழி! காமநோயினால் வருந்தி மனவலிமை குன்றிய காலத்தில், ஆண்மக்கள் தம் மனத்திலுள்ள காமத்தை வெளிப்படையாகக் கூறுதலும் கூடும். கடலிலுள்ள புலால் நாற்றத்தைப் புன்னைமலர் போக்கும் நம் கடற்கரைத் தலைவன், தன்னிடத்தே ஆர்வமுடையாரைத் தன் மார்பால் தழுவி நாளும் நாளும் அவரிடத்தில் ஆர்வம் மிகும்படி செய்கிறான். அவ்வாறு மிகும் ஆர்வத்தை என் பெண்மை யினால் நான் வெளியிட ஆற்றேனாய், நன்கு கழுவப்படாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டுமாறு போல, தலைவனது புணர்ச்சியால் ஏற்படும் மிக்க நலனை அரிதாகத் தாங்கி நிற்கிறேன். இப்படிச் செய்யும் நம் தலைவன் என்ன மகன்!” (நற். 94) என்று, இரவில் தலைவன் சூட்டும் பூ முதலியவற்றை வைகறையில் களைந்து தலையில் எண்ணெய் நீவித் தன் தோற்றப் பொலிவை மறைத்து ஒழுகும் தலைவி (குறுந். 312) தோழியிடம் கூறல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ஒருப்பட்டு எழுதல் -

{Entry: H08__614}

தோழி கூறியதனை ஏற்றுக் கொண்டு தலைவி தலைவனோடு உடன்போதற்கு இசைதல்

“ஊரவர் கூறும் அலரையும், அன்னைமார் சினந்து நோக்குத லையும் பொறுத்துக்கொண்டு இங்கிருப்பது என்னால் இயலாததே. நான் என் நாயகனுடன் போவேன். இந்த ஊர் இன்னும் மிகுதியான அலர் பேசித் தூற்றுக!” (தஞ்சை. கோ. 312) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டில், ‘உடன் போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

தலைவிக்குத் தலைவன்குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -

{Entry: H08__615}

தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே தலைவியும் உள்ளத்துக் கொள்வாளாயின் ஒருவரை ஒருவர் சந்தித்த லாகிய புரிமுகம் புரிந்த பின்னர், (1) பொறிநுதல் வியர்த்தல், (2) நகு நயம் மறைத்தல். (3) சிதைவு பிறர்க்கின்மை, (4) கூழை விரித்தல், (5) காதொன்று களைதல், (6) ஊழணி தைவரல், (7) உடை பெயர்த் துடுத்தல், (8) அல்குல் தைவரல், (9) அணிந்தவை திருத்தல், (10) இல்வலியுறுத்தல், (11) இருகையும் எடுத்தல் என்னும் பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிக்கு முறையே நிகழும். (தொ. பொ. 97 நச்.)

தலைவனது குறிப்பறிந்து அதற்கு உடன்பாட்டைத் தன் கண்ணினால் தெரிவித்த பின்னரும், தலைவி பெண்மையால் கூற்று நிகழாது. அவள் தன் வேட்கையைக் கண்ணாலேயே குறிப்பிடுவாள். (94 இள.)

தலைவி, கடலொடு புலம்பல் -

{Entry: H08__616}

தலைவி கடலை விளித்துத் தன் துயரநிலையைக் கூறுதல்.

“ஒலி கடலே! தம் பெரும்புகழால் உலகையே போர்த்திருக் கும் நம் தலைவர் திருமாலின் அவதாரம் ஆவார். அவர் இராமனாய், அனலம்பு எய்து உன்னைத் துன்புறுத்தினார் எனவும், குரங்குப்படை கொண்டு உன்மீது அணைகட்டி உன்னைக் கடந்தார் எனவும் சினந்து அவர் தேர் சென்ற வழியை உன் அலைகளால் அழித்தியோ?” (அம்பிகா. 290) என்பது போன்ற கூற்று.

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று, உரையிற் கொள்ளப்பட்டது. (இ.வி. 525 உரை)

தலைவி, கலுழ்தற் காரணம் கூறல் -

{Entry: H08__617}

களவில் தன்னைக் கூடிப் பிரிந்து போன தலைவன் வாரா மையே தனது மிக்க துயரத்திற்குக் காரணம் என்று தலைவி தோழிக்குக் கூறுதல்.

“தோழி! என் கண்களிடத்து அன்பு பூண்டு அவற்றிற்கு என் கைகள் மை தீட்டின. தலைவனைக் கண்கள் கண்ட காரணத் தால் அவற்றிற்கு அழகு செய்வித்த கைகள் தொடி சோர வாடும் நிலை ஏற்பட்டு விட்டது. தமது தவறு நோக்கிக் கண்கள் வருந்துகின்றன” (அம்பிகா. 338) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 176)

தலைவி களம் சுட்டல் -

{Entry: H08__618}

தலைவன் கூறிய கூற்றைத் தனக்கும் உடன்பாடாக ஏற்றுச் செயற்படுதலே தலைவிக்கு அறம் ஆதலின், தலைவன் பகற் குறியும் இரவுக்குறியும் வேண்டியவழி, அவனை மறுக்காமல், குறிகளுக்கு ஏற்ற இடங்களாகத் தான் அறிந்தவற்றைத் தலைவி நேரிடையாகத் தலைவனிடம் கூறாமல், குறிப்பாகவோ, தலைவன் சிறைப்புறத்தானாகவோ, தோழி வாயிலாகவோ அறிவித்தல். தலைவன் தானே பகற்குறி இரவுக்குறிக் களன்களைத் தேர்ந்தெடுத்துக் கூறின், அக்களவொழுக்கம் பிறர்க்குப் புலப்பட்டுக் குடிப்பிறப்பு முதலியவற்றுக்குத் தகாததாக முடியுமாதலின், தலைவியே குறியிடங்களைச் சுட்டுவாள் என்பது. (தொ. பொ. 120 நச்.)

தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -

{Entry: H08__619}

களவுக் காலத்தில் தலைவன் ஓரிரு நாளே பிரிந்து செல்லுத லையும் பொறுத்துக்கொள்ள இயலாதவளாகிய தலைவி, மாலைக் காலத்தில் காமவேட்கை மீதூர்ந்து தோழியை நோக்கித் தனக்குச் சாக்காடு நேர்தல் கூடும் என்று கூறுதல்.

“வண்டுகள் சுனைப்பூக்களை விடுத்துச் சினைப்பூக்களை நோக்கிச் செல்ல, பகல் வெப்பம் குறைய, பிரிந்தவர் செயலற்று வருந்தத் தோன்றிய இம்மாலைக்காலம், முன்பே துன்புறுவார் நெஞ்சில் வேல் பாய்ச்சுவாரைப் போல என்னை வருத்து வதால், கண்ணாடியில் ஊதப்பட்ட ஆவி சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவது போல, என் வலிமையும் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. புயல் காற்றில் சுழலும் மரங்களில் தங்கிய பறவைகள் மரங்களை விடுத்துச் செல்வது போல, என் உயிரும் என் உடலை விடுத்துச் செல்லும் போலும்!” (அகநா. 71) என்று தோழியை நோக்கித் தலைவி கூறுதல். (தொ. பொ. 100 நச்.)

தலைவி, களவு அறிவுற்றவழிக் கூறல் -

{Entry: H08__620}

தலைவியும் தலைவனும் ஒழுகும் களவொழுக்கம் புறத்தார்க் குப் புலனாகும் வகையில் தலைவன் நடந்துகொண்டவிடத்தே, தலைவி தலைவனது நினைவாகவே யிருந்து தன்னை மறந்து, தன் களவொழுக்கத்தைத் தாய் அறியக் கூறுதல்.

தினைப்புனம் எய்திய தாய் தலைவியை நோக்கி, “தினையில் கிளியை உண்ணவிடுத்து யாங்குச் சென்றாய்?’ என்று வெகுண்ட அளவில், தலைவனது நினைவு மாறாத நிலையில் தலைவி, தான் தாய்க்குக் கூற வேண்டிய விடையை உணர்ந்து கூறாமல், “அருவி ஒலிக்கும் பெரிய மலைநாடனை நான் பார்த்ததுமில்லை; அவனை எனக்குத் தெரியவும் தெரியாது. அவனொடு நான் பூப்பறிக்கச் செல்லவும் இல்லை; அருவி யாடச் செல்லவும் இல்லை” என்று கூறியது (நற். 147). (தொ. பொ. 109 இள.)

தலைவன் பிரிந்து சென்றானாக, அவனுடன் தங்கியிருந்த இடத்தை நோக்கிய அளவில் தலைவிக்குத் தன்னையும் மீறிக் கண்கள் நீர் நிறைய, அதனைக் கண்ட அன்னை, “மகளே! உனக்கு உடல்நலம் இல்லையா? இங்கே வா, உனக்கு முத்தம் கொடுக்கிறேன்” என்று இனிய சொற்களால் அழைத்த அளவில், உயிரினும் சிறந்த நாணத்தையே மறந்து, தனக்கு வந்த நோய் தலைவன் மார்பினால் விளைந்தது என்று அன்னைக்குக் கூறத் தொடங்கி அதனைத் தடுத்துக் கொண்ட செய்தியைத் தலைவி தோழிக்குக் கூறியது. (நற். 17, நச். 111) இவை போன்ற கூற்றுக்கள் கொள்ளப்படும்.

தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

{Entry: H08__621}

“தோழி நேற்றிரவு தலைவன் சூடி வந்த கண்ணியை என் கூந்தலுள் செருகியிருந்தேன். இன்று தாய் என் தலைக்கு எண்ணெய் நீவக் கூந்தலை அவிழ்த்தபோது நற்றாய் காணச் செவிலிமுன் அப்பூ விழ, அன்னை வினவலோ சினவலோ செய்யாது நெருப்பைத் தொட்டவரைப் போலக் கையை உதறிக்கொண்டு அப்புறம் போயினாள்;யான் இனி என்ன செய்வது?” என்று தலைவி கூறத் தோழி, “அவன் கண்ணியை நீ புனைந்தாய். நமரும் அவனுக்கே உன்னை மணம் முடித்து வைக்க முடிவு செய்துவிட்டனர். விரைவில் திருமணம் நிகழும்” என்று தலைவியது அச்சத்தைப் போக்கியது. (கலி. 115)

தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -

{Entry: H08__622}

இரவுக்குறியிடத்து வரும் தலைவனை இன்று இரவு முழுதும் காண்டல் அரிது என்று தலைவி கருதுமாறு, அவள் பலப்பல இடையூறுகளால் குறியிடத்தை நோக்கிச் செல்ல முடியாமல் காலம் வீணான நிலையில் கூறியது.

“தோழி! மற்ற ஊர்களிலெல்லாம் திருவிழாக்காலங்களில் மக்கள் இரவில் நெடுநேரம் வரையில் உறங்காமல் விழித் திருத்தல் இயல்பு. ஆயின் இவ்வூரிலுள்ளாரோ திருவிழா இல்லாத நாள்களிலும் இரவில் நெடுநேரம் உறங்காமல் விழித்துள்ளனர். ஊரில் உள்ளார் உறங்கிய பின்னும், கடைத்தெருவிலுள்ள கடைகளெல்லாம் அடைக்கப்பட்ட பின்னும், நம்மேல் கடுஞ்சொல் சொல்லும் அன்னை உறங்காது இருக்கிறாள். நம்மை இற்செறித்து வைத்துக் காக்கும் அன்னை உறங்கியபின்னர் ஊர்க்காவலர் உறக்க மின்றிப் பறை கொட்டி ஊரைச் சுற்றிவருவர். காவலர் ஒலி அடங்கின் நாய் குரைக்கத் தொடங்குகிறது. நாயின் குரைப் பொலி அடங்கியதே என்று நோக்கின், வானத்தில் நிலா பகல் போலப் பேரொளியுடன் திகழ்கிறது. நள்ளிரவில் நிலா மறைந்தால், மனையிலுள்ள எலிகளை உணவாகக் கொள்ளும் கொடிய வாயையுடைய கோட்டான் பேய்கள் வழங்கும் நள்ளிரவில் குழறுகிறது. கோட்டான் ஒலி அடங் கிய சிறிது நேரத்தில் மனைவாழ் கோழிச் சேவல் வைகறைப் பொழுதின் வருகையைக் காட்டக் கூவத் தொடங்குகிறது. இத்தகைய இடையூறுகள் இல்லாத ஒருநாள் வாய்த்தாலும், உறுதியான மனத்தைப் பெற்றிராத நம் தலைவர் இங்கு வருமாறு இல்லை. இவற்றை நோக்கத் தித்தன் என்ற அரசனுடைய உறையூரின் காவற்காட்டைக் கடப்பதற்குள்ள இடையூறுகளைப் போல நம் களவொழுக்கம் நிகழ்வதற்கு இடையூறு மிகுதியாகவுள்ளது” (அகநா. 122) எனவும்,

“நெடிய வெள்ளிய நிலவே! வேங்கைப்பூக்கள் விழுந்த பாறை போலப் புலிக்குட்டி காட்சி வழங்கும் இரவிடைத் தலைவன் களவு ஒழுக்கத்திற்கு நின் ஒளி இடையூறாக வுள்ளது. நீ நல்லைஅல்லை!” (குறுந். 47)

“என் தலைவன் வேங்கைகள் வழங்கும் குறுகிய வழியே இரவுக்குறிக்கு வரும்போது நீ வெளிப்பட்டு ஒளி வழங்கா திருப்பின், நின்னை விழுங்கும் பாம்பின் பற்களுக்கு நீ இரையாகாமல் இருப்பாயாக என்று நின்னை வாழ்த்து கிறேன்” (யா. க. 87 மேற்.) எனவும் வரும் தலைவி கூற்று. (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

{Entry: H08__623}

தலைவனால் மனையறத்துக்கு உரியளாக வரைந்து கொள் ளப்பட்ட காமக்கிழத்தி தலைவிபுதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறு தற்குக் காரணமான விளையாட்டின் இறுதிக்கண் தலைவி கூறுதல்.

அவள், “எம்மைப் பாதுகாப்பீரோ!” என்று வினவியவழி, அவனும் அதற்கு உடன்பட்டான் போலக் கூறுவனவும் உள ஆதலின், ‘ஏமுறு விளையாட்டு’ என்றார். ‘இறுதி’ என்றார், விளையாட்டு முடியும் துணையும் தான் (தலைவி) மறைய நின்று பின்னர்க் கூறுதலின்.

“தலைவ! தெருவில் புதல்வன் விளையாட, நின் காமக்கிழத்தி நான் மறையநின்று நோக்குவதை அறியாது, அவனைத் தழுவி அவனொடு சுவைபடப் பேசிக்கொண்டிருந்தபோது, நான் அவளை அணுகி, “ஏன் பேதுற்றாய்? நீயும் இவனுக்குத் தாய்தானே!’என்று கூற, களவு கொண்ட பொருளோடு அகப்பட்ட கள்வரைப் போல நாணி நிலம் கிளைத்து நின்ற அவளும் நின்மகனுக்குத் தாயாதல் ஏற்றதே என்று நான் விரும்பி ஏற்றுக் கொண்டேன்!” என்று தலைவி கூறுதல் (அகநா. 16) (தொ. பொ. 147 நச்.)

தலைவி, காமம் சிறத்தற்கண் கூறல் -

{Entry: H08__624}

தலைவனிடம் காமம் சிறந்து தோன்றியவழி, அவன் பிரிவை யும் வரையாது போதலையும் ஆற்றாத தலைவி தோழியிடம் கூறுதல்.

“ஊரில் ஒலி அடங்கிவிட்டது. ஊரவர் உறங்கிவிட்டனர். பெண்ணை மீதுள்ள அன்றில்கள் துணை பிரியின் வருந்திக் கூப்பிடும் குரலைக் கேட்டால், தலைவி நம்மை நினைந்து வருந்துவாள் என்று நம் தலைவன் தன் நெஞ்சத்தே நினைப்பதும் உண்டோ?” (நற். 303) எனவும்,

“வானத்தில் கதிரவன் மறையும் காலத்தே பறவைகளும் மாமரத்தில் உள்ள தம் பார்ப்புக்களுக்கு இரையை ஊட்டு தற்கு விரைந்து செல்லுகின்றன. அத்தகைய கடமையுணர்ச்சி நம் தலைவன்பால் இல்லையே!” எனவும்.

“நண்டே! இம்மாலையில் என் தலைவன் என்னைப் பிரிந்து தேர் ஏறிப் போகின்றான். அவன் தேர் சென்ற சுவட்டைக் கண்டாவது நான் ஆறுதல் உறுவேன். ஆதலின் மணலில் தேர் சென்ற சுவட்டைக் கலைக்காதே!” (ஐந், ஐம். 42) எனவும்,

“நாரையே! தலைவன்தேர் நீ இருக்கும் பக்கம் வந்தால், ‘தலைவியை விரைவில் மணந்து இல்லறம் நடத்த விழையாது, இங்ஙனம் களவொழுக்கம் நிகழ்த்தித் தேரில் வந்து போதல் கூடாது’ என்பதனை அவன்தேரை நிறுத்திக் கூறு” எனவும் கூறுதல் போல்வன. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, காய்தல் பற்றிக் கூறல் -

{Entry: H08__625}

காய்தல் - தலைவனைக் காய்தல். தலைவி தோழிக்குக் கூறுவது.

“தோழி! என் அழகு தொலைய மகிழ்வு கெட உயிரே போவதாக இருப்பினும், அவரைப் பற்றிக் குறை கூறாதே. நமக்குத் தந்தையும் தாயும் அவரே. அவருக்கு நம்மிடம் அன்பு இல்லாமற் போனவிடத்து அவரை வெறுப்பதால் பயன் என்?” (குறுந். 93) என்று தலைவனைக் காய்ந்து தலைவி தோழிக்குக் கூறுதல். (தொ. பொ. 147 நச்.)

தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -

{Entry: H08__626}

“தோழி! தலைவர் கார்காலத் தொடக்கத்தில் மீண்டுவருவ தாகக் கூறிச் சென்றார். கொன்றை கார்காலத்தே அலரும் பூ. பல பொன் அணிகளையும் அணிந்த மகளிர் கூந்தல் போலப் பூக்கள் அலர்ந்த கொன்றை மரங்களை உடைய காடு கார் காலம் வந்துவிட்ட செய்தியைக் கொன்றைமலர்களைக் கொண்டு தெரிவித்தபோதிலும், தலைவர் பொய் கூறாராக லான், அவர் மீண்டு வாராத வரையில் கார் காலம் வந்து விட்டதாக யான் கொள்ளேன்” (குறுந். 21) என்று தலைவி கூறுதல். (வம்பு - பருவ மல்லாக் காலத்துத் தோன்றும் புதுமை.)

இஃது இச்சூத்திரத்துள் ‘காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் நிலையினும்’ என்றதன்கண், தோழியைப் பிரித்தலாகிய நிலையின்கண் கூறியது. “கானம் காரெனக் கூறுகிறது;தலைவர் வாரார்” என்ற தோழி கூற்றிற்கு மாறாக, “யான் அது கொள்ளேன் (‘யானோ தேறேன்’)” என்று, தோழியைப் பிரித்துக் கூறியவாறு. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சுதல் -

{Entry: H08__627}

“தலைவன் பிரிந்து சென்றவிடத்துக் கருப்பொருள்களின் அன்புத் தொழில்களைக் கண்டு, எடுத்த கருமம் முடியாது மீண்டுவிடுவானோ?” என்று தலைவி அஞ்சுதல்

“புலம்புதரு குரலோடு ஆண்புறாவைப் பெண்புறா அழைக்கும் வருத்தம் கண்டு சீறூரில் தங்கி வினைமுடியாமல் தலைவர் மீண்டு விடுவாரோ?” (குறுந். 79) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 148 நச்.)

தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -

{Entry: H08__628}

“இப்பிறப்பில் பிறர்க்குத் தீங்கு செயின் இம்மையிலேயே அதன் பயனை நுகர்தல் வேண்டும். ‘மறுமையில்தான் அதனை நுகர்வர்’ என்பவர் உண்மை உணராதார். தலைவன் பிரிந்த காலத்தில் நம்மை எளியார் என்று பொருட்படுத் தாமல் தன் ஒலியால் துன்புறுத்திய வேய்ங்குழல் இனமே சுட்டுத் துளையிடப்பட்டவாறு காண்க!” (திணைமாலை. 123) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலையினும்’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -

{Entry: H08__629}

இரவுக்குறியிடத்து வரும் தலைவன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து அக்குறியை ஒத்தவழி, அதனைத் தலைவன் செய்த குறியாகவே தலைவி மயங்கிவிடத்துத் தோழியிடம் கூறியது.

“தோழி! நம் தலைவனுடைய தேரில் பூட்டப்படும் குதிரை யின் மணியோசை கேட்டாற் போலத் தோன்ற, எழுந்து குறியின்கண் சென்று வேங்கை மரத்திலிருந்த பறவைகள் ஒலித்த ஒலிஎன்று உணர்ந்து வருத்தத்தால் மனம் உருகி மீண்டேன்” (ஐந். ஐம். 50) என்ற தலைவி கூற்று.

“ஆண்குரங்கு ஒன்று தான் தாவிப் பாய்ந்தால் கிளை தாங்குமா தாங்காதா என்பதை நினையாமல் ஒரு கிளைமேல் பாய்ந்து அதனை முறித்துவிட்டது. (அதனால் கிளை முறிந் தமைக்குக் காரணம் குரங்கின் செயலே; குரங்கு கிளையின் வன்மை யறிந்து பாய்ந்திருப்பின் அது முறிய வேண்டிய நிலை விளைந்திராது) குரங்கின் செயலால் கிளை முறிந்தது போலத் தலைவன் செயலால் என் தோள்கள் பசந்தன” (குறுந். 121) என்று தான் குறி பெறுங் காலத்து வாராது காலம் தாழ்த்து வந்து குறி பிழைக்கச் செய்த தலைவன் செயலை உட்கொண்டு தலைவி தோழியிடம் கூறியது. (தொ. பொ. 111)

தலைவி, கூடல் இழைத்தல் -

{Entry: H08__630}

தலைவன் வருகையை அறியத் தலைவி கூடல்சுழி இழைத்துப் பார்த்தல்.

“தாழையின் நிழலிலே தலைவி இருந்து கூடல்சுழியை வளைப்பாள்; சுழிப்பாள், பின் வளைக்கைகளால் அழிப் பாள். அவள் பெற்றி இது!” (அம்பிகா. 295) என்று தோழி, ஒருவழித் தணந்த தலைவன் பிரிவால் தலைவி செய்யும் செயல்களை நோக்கிக் கூறுவது.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-

{Entry: H08__631}

தோழி தலைவற்குக் குறைநேர்ந்து வாயிலாகித் தலைவி குறை நயப்பக் கூறியவழியும் பிறவழியும் அவள் கூற்றினை ஏற்றுக் கொள்ளாது தலைவி கூறுதல்.

“தலைவன் போர்க்களிறு போன்ற தன் பெருமிதம் குன்றி உன் நினைவால் உருகி நிற்கின்றான்” என்று கூறிய தோழியை நோக்கித் தலைவி, “தெருவில் ஒரு காரணமும் இன்றிக் கலங்குவோரிடத்தில் கருணை கொண்டு அவர் துயரையும் நின் துயராகக் கருதி நீ வருந்துவது எற்றுக்கு?” (கலி. 60) என்பது போன்று மறுமொழி கூறுதலும்,

“தோழி! ‘தோள்வளை நெகிழ, கண்கள் ஒளியிழக்க, நெற்றியில் பசலை பாய, இப்பொலிவுஅழிவுகளைக் கண்டு ஊர்மகளிர் பழி தூற்றுமாறு நம் காதலர் நமக்குத் துன்பம் தருவர்அல்லர் ஆதலின், விரைவில் வருகுவர்’ என்று நீ சொல்லும் இந்த அன்புச்சொல், கொல்லன் உலையில் தெளித்த நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல, என் நோயைச் சிறிது தணித்துப் பாதுகாவலாக இருக்கிறது. ஆயின் என் நோய் நிலையாகத் தணிக்கப்பட் டிலது” (நற். 133) என்பது போலக் கூறுதலும் ஆம். (தொ. பொ. 111 நச்.)

தலைவி கூறும் உள்ளுறை உவமம் -

{Entry: H08__632}

தலைவி, மருதம் நெய்தல் என்னும் ஈரிடத்தும் மிகுதியும் உள்ளுறை உவமம் கூறுவாள். அங்ஙனம் கூறும்போது பயன்படுத்தும் கருப்பொருள்களும் அவளால் அறியப்பட்ட னவாய் அவள் இருக்கும் இல்லத்தை அடுத்தனவாக இருத்தல் வேண்டும்.

குறிஞ்சிக்கண் தலைவி கூறும் உள்ளுறை உவமம் பெருவர விற்றன்று. ஏனைய திணைகளில் மிகமிக அருகியே உள்ளுறை உவமம் கூறுவாள். (தொ. பொ. 301, 304 பேரா.)

தலைவி, கைபட்டுக் கலங்கிக் கூறல் -

{Entry: H08__633}

தலைவி எதிர்பாராத வகையில் அவளைச் சந்தித்த தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழி, அவனைக் காண்டலைத் தான் விரும்பியவள் எனினும், அவ்வெதிர்பாராத சந்திப்பில் தான் கலங்கிய திறத்தை அவள் தோழியிடம் கூறுதல்.

“எதிர்பாராவகை என்னை எதிர்ப்பட்ட தலைவன், தனக்கு அருள் செய்யாமல் இருத்தல் எனக்கு ஏற்றதன்று என்று கூறி, நரந்தம்பூவின் மணம் கமழும் என் கூந்தலை அஞ்சாது பற்றி, அதில் சூடியிருந்த மாலையைத் தான் மோந்து மகிழ்ந்து, நறவம்பூப் போன்ற என் விரல்களைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, வெய்தாகப் பெருமூச்செறிந்து, தான் தொய்யில் எழுதிய என் இளைய கொங்கைகளை இனிமை யாகத் தடவிப் பின் மேனி முழுதையும் இனிதாகத் தைவந்தமையால், யான் கைப்பட்டு வருந்திய வருத்தத்தைக் களைந்தேன்” (கலி. 54) என்றல் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவன் கையகப்பட்ட பின்னர் ”என் செய்தேமாயினேம்” என்று கலக்கமுறுதல் என்று உரைப்பாரும் உளர். 109 இள.

தலைவி கையறு கிளவி -

{Entry: H08__634}

தலைவி செயலற்று வருந்திக் கூறல். “மணற்குன்றே! அன்னங் களே! நாரைகாள்! தம் தேரில் ஊர்க்குச் சென்று அன்றே மீண்டு வருவதாகக் கூறிய தலைவர் சொல்லை நம்பி வருந்தி யும் ஆற்றியிருந்தேன். ‘எனக்கும் அவருக்கும் உயிர் ஒன்று; கூர்ந்து நோக்கின் உடலும் ஒன்று’ என்றிருந்தேன். இனியவர் நட்பு நன்று!” (அம்பிகா. 294) என்றாற் போன்று தலைவி புலம்புதல்.

இது களவியலுள், “ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று;உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -

{Entry: H08__635}

தலைவி தலைவனைப் பிரிந்த துன்பத்தால் வருந்தும்போது, அவள் ஆற்றாமையைக் கண்ட செயலற்ற தோழி அவள் கண்ணீரைத் துடைத்தவிடத்தே, அவளை நோக்கித் தலைவி கூறுதல்.

“தோழி! யான் என் காமநோயைப் பொறுத்துக்கொண்டு தான் உள்ளேன். ஆயின், குன்றநாடனாகிய நம் தலைவனைக் கண்ட கண்கள் தமக்கு அவனோடு உள்ள உறவு காரணமாகக் கலங்கிக் கண்ணீர் உகுக்கின்றன!” (குறுந். 241) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -

{Entry: H08__636}

“ஐய! உனது கையுறையை எம் தலைவி ஏற்று மிகவும் மகிழ்ந்தாள். அதனைத் தலையினும் மார்பினும் வைத்துத் தழுவினாள். அவள் அத்தழையையும் கண்ணியையும் நீயாகவே கொண்டாள்போலும்!” (தஞ்சை. கோ. 129) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் ‘தழை விருப்பு உரைத்தல்’ என்னும் திருக் கோவையார்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 149)

தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -

{Entry: H08__637}

தலைவி தலைவன் தந்த கையுறையை ஏற்றுக்கொள்ளுதல்.

“தோழி!தீதாகில் என்? நன்றாகில் என்? உலகம் யாது கூறின் என்? சிலம்பன், நின்னிடத்துத் தந்த தழையும் கண்ணியும் யான் இன்று பெற்றுக்கொள்கிறேன்” (அம்பிகா. 147) என்று கூறித் தலைவி கையுறை ஏற்றல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 148)

தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

{Entry: H08__638}

“கொடியாரது கொடுமை சுடுகின்றது” எனப் புணர்ச்சியைத் தவிர்க்காமல், புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப் பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண் தலைவி கூறுதல். (145 இள.)

கொடியோராகிய பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோர் தலைவன் புகழைக் கூறுதற்கு விரும்பினோ ராகிப் பரத்தையர்க்கு வாயிலாக வந்து கூறிய சொல்லோடே, தானும் அவரிடத்தே சேர்ந்து, “காவற்பாங்கின் பக்கமும் ஆங்கோர் பக்கமும் ஆகிய பகுதி காத்தற்குப் பிரிவதாகக் கூறி அதனினின்றும் நீங்கிய, பரத்தையரைக் கூடிய கொடுமை நெஞ்சைச் சுடும்” என்று கூறி, அவன் தவற்றைக் கூறுதலைத் தவிராமல் கூறுதற்குத் தக்க தகுதியிடத்துத் தலைவி கூறுதல் (147 நச்.)

“பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேன்” என்று கூறிப் பிரிந்து, பாணர் முதலியோர் புதிதில் கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய் வேறுபாட்டோடே வந்தவனைக் கண்டு அப் பகுதிகளைப் பரத்தையராக்கிக் கூறுவாளாயிற்று.

“தலைவ! நின் பரத்தையர் உகிரால் செய்த வடுக்களையும், அவர்கள் எயிறு அழுந்திய இதழையும் நின்பாணன் எனக்குக் காட்டுவதற்காக நின்னை இங்கே அனுப்பியுள்ளானோ?”

“தலைவ! நின் பரத்தையர் புனலாடுதற்குத் தெப்பமான மார்பிலே ஊடிய அப்பரத்தையர் ஊற்றிய சாதிலிங்கத்தை எனக்குக் காட்டு என்று ஊரில் துணிகளைத் துவைக்க வாங்கிக்கொண்டு துவைக்காமல் உனக்காகத் திரியும் வண்ணாத்தி அனுப்பியுள்ளாளோ?

“தலைவ! நின் பரத்தையர் மயிர்முடிகளை நீ வகிர்ந்து கை செய்கையினாலே அவர்கள் சூடிய பூக்களில் மகரந்தம் படிந்த நின் மேனியை எனக்குக் காட்டு என்று நின்னை வீணே புகழ்ந்து திரியும் அந்தணன் அனுப்பியுள்ளானோ?” (கலி. 72)

என்ற தலைவி கூற்றுக்களால் பாணன், புலைத்தி, அந்தணன் என்னுமிவர் வாயில் ஆயினவாறு புலப்படும்.

தலைவன் காலம் தாழ்த்திச் சோர்வுடனும் கசங்கிய ஆடை யுடனும் சந்தனம் அழிந்த வேர்வையுடனும் குலைந்த முடி மாலையுடனும் வந்து, தான் சான்றோரைக் கண்டதாகவும் (கலி. 93), குதிரை வழங்கி வந்ததாகவும் (95), புதிய யானையைக் கண்டு வந்ததாகவும் (96), புதுப்புனலாடி வந்ததாகவும் (97), குறும்பூழ்ப் போர் கண்டு வந்ததாகவும் (98) கூறியவழி, அவற்றை உண்மையென்று கொள்ளாது, பரத்தையரைத் கடவுளராகவும் குதிரையாகவும் யானை யாகவும் புதுப்புனலாகவும் குறும்பூழாகவும் உருவகித்துத் தலைவி ஊடல் கொண்டவாறு. (147. நச்)

தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

{Entry: H08__639}

தலைவன் தன் கடமைகளை விடுத்துப் பரத்தையர்பால் சென்று தங்கிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தல் வேண்டி அவள் அடியின்மேல் விழுந்து வணங்க, அவனைக் கோபத்தால் இடித்துரைத்து, “நீ இங்ஙனம் பணிந்து ஒழுகுதலைப் பரத்தையர் கண்டால் நன்றாயிருக்கும்!” என்று சொல்லிப் பின் அவனிடம் ஊடல் நீங்கிக் காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின்கண் அவள் கூறுதல்.

தலைவி தலைவனது புறத்தொழுக்கத்தைச் சான்றுகளோடு உறுதிப்படுத்தியவழித் தலைவன், “யான் செய்த தவறுகளை என்மேல் ஆக்கி என் பொய்களை வெளிப்படுத்தி என் தவறு களைக் கையொடு பிடித்துக்கொண்டாய், யான் செய்தது தவறுதான்; எனக்கு அருளுக” என்று கூற, தலைவி, “நினக்கு அருள்செய்ய நான் யார்? நீ அளித்துக் கைவிட்ட குறும் பூழ்கள் வருந்தாதபடி நின் பாணனால் அழைத்து வந்து, நின் அருளினால் அளித்து ஆடுவாயாக” என்ற தலைவி கூற்றில் (கலி. 95), “எனக்கு அருளுக!” என்று தலைவன் பணிந்தமை யும், “அருளுதற்கு நான் யார்?” எனவே, தலைவி காதலும், “பரத்தையே நின் பணிவை ஏற்பவள்” என்று குறித்தமையும் உணரப்படும். (தொ. பொ. 147 நச்.)

தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -

{Entry: H08__640}

களவுக் காலத்தில் தலைவன் இட்டுப்பிரிந்தும் அருமை செய்து அயர்த்தும் தலைவியை நாள்தோறும் தவறாது வந்து காணும் நிலையினின்று தவறியவழி, தலைவி, தன்னிடத்துத் தலைவன் அன்பின்றித் தன்னைப் புறக்கணித்தான் என்ற துயரால், நாள்தோறும் செய்துகொள்ளும் ஒப்பனைகளைச் செய்துகொள்ளாமல் நோயுற்றவளைப் போல வாளா இருந்த விடத்து, அவள்நிலை கண்ட செவிலி அவளது வேறுபாட்டுக் குரிய காரணத்தை, எப்பொழுதும் அவளைப் பிரியாது உடனுறையும் தோழியை வினவல்.

“அன்னவை பிறவும்” (தொ. பொ. 113 இள.) என்பதனான் இக்கூற்றுக் கொள்ளப்படும்.

தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

{Entry: H08__641}

காமக்கிழத்தியது ஏமுறு விளையாட்டுப் போலாது தலைவி தன் புதல்வனைத் தழீஇ விளையாட்டையுடைய அவ் விடத்தே தலைவன் தோன்றி, அவ்விளையாட்டு மகிழ்ச்சி யாகிய மனையறத்தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன்னைத் தலைவி அறியாமல் அவள்பின்னே நிற்றலைச் செய்து தலைவியது துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தின்கண் அவள் கூறுதல்.

தன் வரவு அறியாமை என்றது, தன்னைக் கண்டவராகிய தலைவியருகே நின்றவர்கள் தனக்குச் செய்யும் ஆசாரங் களையும் அவர்கள் செய்யாமல் கைகவித்துத் தன்வரவு அறியாமல் (தலைவன்) நிற்றல்.

தாய் மகனை அழைத்துவந்து “நீ கற்ற சொற்களில் சிலவற்றை யான் மகிழுமாறு நின் மழலைமொழியில் கூறு” என்ற அளவில், தாயின் பின்புறமாக வரும் தன் தந்தையைப் பார்த்த சிறுவன், “அப்பா அப்பா!” என்று சொல்ல, தலைவன் வந்தமை அறியாத தலைவி, “நாம் எவ்வளவு அன்பு பாராட் டினும் இவனுக்குத் தந்தை நினைப்புத்தான்” என்று கூறிய அளவில் தலைவன் அருகில் வந்து நிற்க, தலைவி எள்ளி உரைக்க, தலைவன் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூற, தலைவி பரத்தையர் சூடிய பூக்களின் தாது உதிர்ந்து பொலிவிழந்த அவன் உடையினைச் சுட்டி அவனுடைய பரத்தைமையை மெய்ப்பிக்க, தலைவன், “யான் குற்ற முடையேனல்லேன் என்று எவ்வளவு கூறியும், உன் கோபம் தணியவில்லையாயின், கன்றினிடத்து அன்பு கொண்டு வரும் பசுப்போல என் புதல்வனைத் தழுவிக்கொள்கிறேன்” என்று தலைவியிடம் இருந்து புதல்வனை வாங்கவே, தலைவி துனி தீர்ந்தவாறு (கலி. 81). (தொ. பொ. 147 நச்.)

தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -

{Entry: H08__642}

சிலநாள்கள் தலைவனைக் களவில் கூடிய இன்பத்தை நினைத்து அவன் பிரிந்து போனதால் அது தடைப்பட்டதைச் சுட்டித் தலைவி வருந்திக் கூறுதல்.

“தோழி! வேங்கை அழகு செய்யும் சோலையில் தலைவன் என்னொடு களவில் சிலநாள்கள் இடையீடின்றிக் கூடி மகிழ்வுறுத்தினான். தடையேதுமின்றி மகிழ்ச்சி தந்த அக்களவுக்கூட்டம் இப்பொழுது அவன் பிரிந்து சென்றதால் தடையுற்று வருத்தம் செய்கிறதே!” (ஐந். ஐம். 11) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றதனான் கொள்ளப் பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 173 நச்.)

தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -

{Entry: H08__643}

‘அவன் வரைவு மறுப்பின்கண் தோழி கூறுதல்’ காண்க. (தொ. பொ. 114 நச். உரை)

தலைவி, சூளுறவு பொய் என்றல் -

{Entry: H08__644}

தலைவன், “நின்னிற் பிரியேன்” என்று கூறிய உறுதிமொழி யைத் தலைவி பொய் என்று கருதுதல்.

“தலைவன் வணங்கும் கடல்தெய்வமும் நடுவுநிலை தவறியது தானோ? என் மனத்திடை நாணத்தைத் துறந்து நான் உயிர் சோர்வது ஏன்? அன்று தாம் செய்த சூளுரையை மறந்த தலைவரை விடுத்து அத்தெய்வம் என்னை வாட்டுவது ஏன்?” (அம்பிகா. 297) என்றாற் போலக் கூறுதல்.

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -

{Entry: H08__645}

தலைவன் இல்லத்தை விடுத்துச் செல்லான் என்பதனை இடமும் காலமும் பற்றித் தலைவி அறிந்தகாலத்து, ஊடல் உள்ளத்தான் உடனே அவனைக் கூடப்பெறாது, “பரத்தை யரிடமே செல்க” என்று கூறி விடுத்தற்கண் கூறுதல்.

“எம் புதல்வனை எம் திருப்திக்காகப் பலவாறு பாராட்டிக் கொண்டு இங்கு ஏன் இருக்கிறாய்? நீ புனைந்த கோலங் களையெல்லாம் அழிக்கும் எம்புதல்வனை எம்மிடம் தந்து விட்டு அப்பரத்தையரிடமே செல்க!” (கலி. 79) எனவும்,

“ஊர! உன்னிடம் கிளக்க எமக்கு யாது உரிமை உள்ளது? நேற்றுக்கூட ஒருத்தியை நம் இல்லத்திற்கு அழைத்து வந்து மணம்செய்து கொண்டனை என்று ஊரவர் பேசுகின்றனர். யாம் அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உன் பிரிவான் என் உடல் வாட, அதனால் என் தொடி நெகிழ்ந்தாலும் நெகிழ்க. பெரும! இனி நின் விருப்பம் போலச் செயற்படுக! உன்னை, உன் செயல் தவறுகளை எடுத்துச் சொல்லித் தடுப்பவர் யார்?” (அகநா. 46) எனவும் தலைவி கூறுதல்.

(தொ. பொ. 147 நச்.)

தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -

{Entry: H08__646}

“தலைவர் அழகிய மாமை நிறத்தில் தேமல் படர்ந்த என் மார்பினைத் தம் கண்ணொடு தொடுத்து வைத்தாற்போலப் பலகாலும் கூர்ந்து நோக்கியும் திருப்தியடையாது, புணர்ச் சியால் என் நெற்றியில் தோன்றிய வியர்வையைத் துடைப்ப தாகிய அளவுமிக்க செயல்கள், அவர் என்னைப் பிரிதற்கு எண்ணுகிறார் என்பதைக் குறிக்கின்றன” (கலி. 4) என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலை’ என்றதனான் கொள்ளப் பட்ட கூற்று இது. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -

{Entry: H08__647}

“துறைவனாகிய தலைவன் பிரிந்தமையாலே, அத்துறையின் கண் இருந்து அழுதமையால் வருத்தமுற்ற எனது முகத்தை நோக்கி அன்னை என் துயரத்தைத் தனக்கு உரைக்குமாறு வினவினாளாக, நான் அதனை மறைத்துக் ‘கோரைப் புல்லாற் செய்யப்பெற்ற என் பாவையைக் கைக்கொண்டு யான் விளையாட் டயர்ந்த சிற்றிலையும் கடல் சிதைத்து விட்டது’ என்று கூறி உய்ந்தேன்” (நற். 17) என்று தலைவி தோழிக்குக் கூறும் இக்கூற்றின்கண், செவிலி தன் வேறுபாடு கண்டு காரணம் வினவியமை கொண்டு கூற்றாக வந்தது.

‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்தற்கண்’ தலைவி செவிலிக்கு மறைத்தது இத்துறை. (தொ. பொ. 111 நச்.)

தலைவி சோர்தல் -

{Entry: H08__648}

தோழியிற் கூட்டத்தில் தலைவன் தலைவியைத் தோழியர் இருப்பிடம் செல்லுமாறு விடுத்து அகன்ற பின்னர், தலைவன் பிரிந்தமைக்குத் தலைவி வருந்துதல்.

“இக் குருந்தமரங்களிடையே அன்பொடு கூடியும் வாடியும் என் அழகைக் கைக்கொண்டு சென்ற தலைவனது தேருடன் என் உள்ளமும் சென்றுவிட்டது. தலைவன் பிரிவைப் பொறுத்தல் ஆற்றாது என்னுயிர் புலம்பி வருந்த யான் உயிரற் றவள் போல உள்ளேன்” (அம்பிகா. 157) என்று தலைவி சோர்ந்து உரைத்தல். ‘நெஞ்சு மிக்கது வாய் சோர்தல்’ என்பது இக்கோவையில் நிகழும் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (‘பகற் குறி’ எனும் தொகுதிக்கும் இஃது உரியது.) (இ. வி. 509 உரை)

தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

{Entry: H08__649}

பரத்தையர்மாட்டுத் தங்கிய செவ்வியை மறையாத ஒழுக்கத் தொடு வந்த தலைவனை, “நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறு” என இரந்துகோடற்கண் தலைவி கூறியது.

“பரத்தையர் மார்பிடை அணிந்த பூக்களின் தாது உதிர்ந்து அழகிழந்த நின்முடிமாலை உனக்கு உட்பகையாய் வந்து உன் பரத்தைமையை வெளிப்படுத்தாவிடின், உன் பரத்தைமை பற்றி வெறுத்தல் இல்லாத என்னிடம், ‘யான் எத்தவறும் செய்யேன்’ என்று தெளிவித்தற்கு வருவாய். எவ்வளவு ஆற்றுநீர் வந்து வீழினும் நிறையாத கடல் போல, எத்தனை மகளிரைத் தோய்ந்தாலும் திருப்தியடையாத உன்னிடம் கோபிக்கும் தகுதியுடைய பெண்களின் கோபத்தைத் தீர்க்கச் செல். யாங்கள் உன் பொய்யை மெய்யாக நம்பி எப்பொழு தும் உனக்குத் தோற்றிருப்பவரே!” (கலி. 73) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

“தலைவ! உன் மார்பினை விரும்பிய பரத்தை விழைந்த செயல்களைச் செய்துகொண்டு, எமக்கு ஏதும் கருணை செய்யாமல், அவர்கள் இருப்பிடத்திலேயே தங்கியிருப்பது உனக்குமாத்திரமன்றி எங்கட்கும் இனிது!” (ஐங். 49) என்றல் போல்வன. (145 இள.)

தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

{Entry: H08__650}

விளையாடுகின்ற காலத்து, ‘மக்கள் தந்தையை ஒப்பர்’ என்னும் வேதவிதி பற்றி, முடிவில்லாத சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற்கண் தலைவி கூறுதல்.

மகனுக்கும் இது வரும் என்று கருதிக் கூறலின், தலைவனைப் பழித்து என்னாது, ‘மகப்பழித்து’ என்றார்.

“மகனே! அழகில் உன் தந்தையை ஒத்துள்ளாய்; ஆயின் குணத்தில் முழுதும் உன் தந்தையைக் கொள்ளற்க. பகைவரை வென்று வெற்றி கொள்ளும் வீரத்தில் உன் தந்தையைப் பின்பற்றுதி; ஆயின் உன் தந்தையைப் போல, தம்மை நம்பிய மகளிரைக் கைவிட்டுவிடும் பண்பைக் கொள்ளற்க” என்று தலைவி தன் மகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது பின்புற மாக வந்த தலைவனைக் கண்ட புதல்வன் சிரிக்க, தலைவியும் திரும்பிப் பார்க்க, தலைவன் மகனை அழைக்கவே, மலைமீது சிங்கம் பாய்ந்தது போல மகன் தந்தை மார்பில் பாய்ந்தது கண்டு, “அறனில்லா அன்பிலி பெற்ற மகன், நான் தடுக்கவும்
தந்தைமார்பினை அணைந்துவிட்டானே!” என்று அவள் கூறுதல். (கலி. 86). (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -

{Entry: H08__651}

தலைவி தலைவனொடு கொண்ட களவொழுக்கம் ஓரளவு வெளிப்பட்ட பின்னர், ஊரவர் கூறும் அலரையும் தலைவி யின் தோற்றப் பொலிவையும் அவள் அடிக்கடி வருந்துதல் முதலாகிய காரணப்பகுதியையும் நோக்கி, அவள்தமர் அவளைப் புறம் போகாவண்ணம் இற்செறித்தவழி அவள் கூறுதல்.

“விளையாடும் மகளிர்க்கு அஞ்சி நண்டு கடலில் ஓடி ஒளியும் துறையையுடைய தலைவனது மெய்யைத் தோய்ந்த நட்பு, அவனொடு மற்றொருநாள் சிரித்து விளையாடுவதைக்கூட நீக்கிவிட்டதே!” (குறுந். 401) எனவும்,

“மீன்உணங்கலைப் பறவைகள் கவராதபடி ஓட்டி, புன்னை நிழலில் தங்கி, நண்டு வளைகளைக் கோலிட்டு அலைத்து, ஞாழல்மரத்தில் தாழைக்கயிற்றால் அமைக்கப்பட்ட ஊஞ்ச லில் ஆடி, மணலில் குரவை ஆடி, மாலையில் கடலாடிக் கடற்கரைச்சோலையில் தங்கி நாம் வருவதைப் பொறுக்காத இவ்வூர்மக்கள் நம்மேல் பொய்ப்பழி சுமத்திவிட்டனர். அவர்கள் ‘பகலிலும் இரவிலும் நாம் இருக்கும் கடற்கரைச் சோலைப்பக்கம் ஒரு தேர் வந்து போகிறது’ என்று கூறியதை உண்மையாகக் கொண்டு, தாய் என்னை இற்செறித்து விட்டாளே!” (அகநா. 20) எனவும் தலைவி தோழியிடம் வருந்திக் கூறியவாறு.

“கொங்கைகள் தோற்றப் பொலிவு கொண்டுவிட்டன. முன் போன்று விழுந்தெழுந்த பற்கள் நிரலே அமைந்துவிட்டன. தலைமயிரும் கூட்டி முடியும் அளவு வளர்ந்துவிட்டது. இப்பொழுது தழையுடை அணியும் பருவம் அடைந்து விட்டாய். ஆயத்தாரோடு இனி விளையாடப் போகக் கூடாது. தீய தெய்வங்கள் நின்னைத் தீண்டிவிடும். இனிப் பேதை அல்லை; நீ பெதும்பை!” (அகநா. 7) என்று தோற்றப் பொலிவு கண்டு, தாய் தன்னை இற்செறித்ததைத் தோழி யிடம் தலைவி கூறியவாறு. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -

{Entry: H08__652}

“சோலையில் காந்தள் மலர அதன்கண் வண்டுகள் ஒலிக்கும் மலையை உடைய தலைவனும் திருமணம் முடித்தற்கு வந்துவிட்டான். இனி, அன்னை என்னை வருத்தும் வருத்த மும் நீங்கிவிட்டது.” (ஐந். எ. 3) எனவும், ‘வண்டாழங்குருகின் தொகுதி, பகைவரைக் கொன்ற வீரருடைய ஆரவார ஓசை கேட்டு அஞ்சும் குட்டுவனுடைய மாந்தை என்ற ஊர் போன்ற இயற்கை வனப்புடைய எனது அழகிய நெற்றிக்கு உரிமை உடைய தலைவனும் அவனே. இனித் தாயர் வருத்துவதும், தோழியர் அமைதிப்படுத்துவதும், தெளிவு பெறாது தலைவனைப் பிரிந்து தனித்து உறங்குவதும் இலவாகும். தலைவன் என்னை மணக்கப்போகும் செய்தி கேட்டு இவ்வூரார் மகிழ்ச்சி அடைக!” (குறுந். 34) எனவும் தலைவி கூறுதல் போல்வன. (தொ. பொ. 107 நச்.)

தலைவி, தலைவன் இகந்தமை இயம்பல் -

{Entry: H08__653}

“நின்னிற் பிரியேன்” என்று தெய்வத்தைக் கரியாக்கி உரைத்த தலைவன் தன்னைப் பிரிந்துவிட்டமையைத் தலைவி தோழி யிடம் கூறுதல்.

‘தலைவன் என்னைக் கூடியபோது யாரும் அவனைத் தவிரச் சான்று ஆவார் இலர். மீன் இரை தேடி நின்ற குருகு ஒன்று தான் இருந்தது. கொலைத்தொழிலில் முனைந்திருந்த அதுவும் நமக்குச் சான்று ஆமாறு இல்லை! இன்று தலைவன் தன் உறுதிமொழிக்கு மாறாகப் பிரிந்து சென்றுள்ளான்” (குறுந். 25) என்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொருகூற்று. (தலைவனது இப்பிரிவு ஒருவழித் தணந்ததும் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்ததும் ஆம்) (ந. அ. 176)

தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -

{Entry: H08__654}

தலைவனது பிரிவாற்றாமையால் தான் வருந்தியதைக் கண்டு கலங்கிய தோழியிடம் தலைவி, “தலைவன் இரவின்கண்வந்து என்னொடு கூடினான்” என்பதைத் தென்றல்மேல் வைத்துக் கூறுதல்.

“தோழி! நான் பிரிவாற்றாமையால் வருந்துவதாக நீ நினைத்தல் வேண்டா. அவருடைய அருளை இரவில் பெற்று நான் இன்புற்றது உண்டு. அதனை அருகிலிருந்து யாரும் அறிந்திலர்! தென்றல் ஒன்று அவரது திருத்துழாயின் மணத் துடன் வீசி என் புலன்களையும் கலன்களையும் தொட்டுத் தடவிச் செற்றது” என்ற தலைவியின் கூற்று. தலைவன் வந்து கூடியதை வெளிப்படையாகக் கூற நாணித் தென்றல்மேல் வைத்துக் குறிப்பால் கூறியவாறு.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்டமையின் புறத் திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 56)

தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -

{Entry: H08__655}

தலைவி ஆடிடத்தினின்று இல்லம் சென்றபின் தலைவனது உருவத்தை உருவெளியாக எங்கும் காணும் நிலை அடைந்து அவள் வருந்துதல்.

“புனத்தில் என்னைத் தேடிய தலைவர் என்னைக் காணாமல் இங்கே கண்ணீர் சொரிந்து கலங்கும் என்னைத் தேடி என் ஊர்க்கே வந்துவிட்டாரா? எங்குப் பார்த்தாலும் என் உயிரனைய தலைவரின் அழகு வடிவம் தெரிகின்றதே!” (அம்பிகா. 186) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள் ‘பகற்குறி இடையீடு எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 515 உரை)

தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -

{Entry: H08__656}

தலைவி தலைவனுடைய ஊருக்குச் செல்ல நினைத்தல்.

“தோழி! இற்செறிக்கப்பட்ட நாம் பகலில் பலரும் காண நம் நாணத்தை விடுத்துத் தலைவன் ஊரினை வினவி அறிந்து அங்குச் சென்று தலைவனை நேரிற் கண்டு, ‘நீ சான்றவனாகச் செயற்படவில்லை’ என்று கூறி வருதற்குப் புறப்படுவோம்; எழுவாயாக” (நற். 365) என்று தலைவி கூறுதல்.

இது களவியலுள் ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -

{Entry: H08__657}

சில போதுகளில் பரத்தையர் தாம் தலைவனால் புறக் கணிக்கப்பட்டதைத் தலைவியிடம் கூற வருவதுண்டு. அவர்கள் கூற்று உண்மைதானா வென்று தலைவி ஆராய்ந்து முடிவு செய்வாள். அஃது உண்மையாயிருப்பின், தலைவன் அவர்களை வருத்தியது பற்றித் தலைவி மகிழ்தலும் உண்டு; தலைவனிடம் பரத்தையர் உரிமை கொண்டாடுவது பற்றித் தலைவனிடம் ஊடுவதுமுண்டு. பரத்தையர் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தலைவன் இல்லின்கண் இருந்தால் தலைவி ஒன்றும் பேசாள்; பரத்தையர் இல்லாத போது தலைவன் எதிர் நின்று, அவன் புறத்தொழுக்கம் பற்றிக் குறை கூறிவிடுவாள். (தொ. பொ. 213 குழ.)

தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -

{Entry: H08__658}

தலைவி, முன்னர்த் தலைவனிடத்து நிகழ்ந்த செய்தியை நினைத்துப் பின்னர்க் கூறியது.

“தோழி! நீர் வற்றிய காட்டு வழியில் செந்நாய் பசியான் வருந்தும் தன் பிணவோடு உழிஞ்சில் மரநிழலில் அமைந்த நடுகல்லின் நிழலில் பசியோடு படுத்திருக்கும் இடங்களைக் கடந்து, ‘வறியவர்களுக்கு ஈதற்குப் பொருள் வேண்டும்’ என்ற குறிக்கோளொடு பொருள் தேடுதற்குப் பண்டு பிரிந்து சென்ற தலைவர் பொருட்காதல் உடையவரே அன்றி நம்மிடத்து அருட்காதல் உடையவர் அல்லர். ஆதலின் இனியும் நம்மை நீத்து அவர் பொருள்வயின் பிரிதலும் கூடும்” (அகநா. 53) என்று தலைவி தோழியிடம் கூறுதல். (தொ.பொ. 43 நச்.)

தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -

{Entry: H08__659}

“தோழி! ‘நெஞ்சு நடுங்கும்படி பலகாலும் கேட்டும் ஐயுற்றும் அஞ்சிய பொருள் ஒருநாள் உண்மையாகவே நிகழ்ந்து வருத் தத்தைத் தரும்’ என்ற பழமொழி என்னளவில் உண்மையாகி விட்டது. என் தலைவர் என்னைச் சில நாள்களாகப் பலபடியாகப் பாராட்டுவதனைக் கண்டு இவர் என்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறாரோ என்ற ஐயம் என்னுள் ளத்தில் இருந்தது. நேற்றுப் படுக்கையில் என்னைக் கூடி என் தோளிலே துயில் கொண்ட தலைவர் தாம் கண்ட கனவில், ‘யானை, நீர் வேட்கையால் பேய்த்தேரை நோக்கி ஓடும் கொடிய பாலை வழியைக் கடந்து, ‘போரிடத்துடித்துக் கொண்டிருக்கும் இரு பெரு வேந்தரையும் சந்து செய்வித்து யான் மீளும் வரை என் தலைவி மனம் அழிந்து விடாமல் இல்லறத்தை நன்முறையில் தனித்து நடத்த வல்லமை யுடையளோ?’ என்று அரற்றினார். இதனால் அவர் என்னைப் பிரிந்து செல்லப்போவது உறுதியாகிவிட்டது.” (கலி. 24) என்று தலைவனிடம் நிகழ்ந்ததனை நினைத்துத் தலைவி முடிவு செய்து தோழியிடம் கூறியது. இதுவும் பாலைத் திணையின் பாற்படும். (தொ. பொ. 43 நச்.)

தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -

{Entry: H08__660}

பகற்குறி இரவுக்குறி இடையீடுகளான் தலைவியைக் கூட முடியாத நிலையிலும் தலைவன் விரைவில் வரையாது காலம் தாழ்த்திய அளவில், தலைவி தோழியிடம் தலைவனை இயற் பழித்துக் கூறியபோது, “நம் தலைவனோ, ‘நின்னிற் பிரியேன். பிரியின், ஆற்றேன்’ என்று கூறிய உறுதிமொழியைப் பொய்யாக்கியவன். அங்ஙனம் பொய்த்தவற்கு இயற்கை உதவியாக இராது என்பது வழக்கு. ஆயின், பொய்த்த தலைவனது மலை மழை தவறாமல் பெய்வதால் விளங்கும் அருவிகளை உடையதாயிருக்கிறதே! இஃது என்ன வியப்பு!” (கலி. 41) என்று கூறுகையில் உறுதிமொழியைப் பொய்த்த தலைவன் மலை தம் மலையின் வேறாயது என்பதைப் பெறப்பட வைத்தல். (தொ. பொ. 93 நச்.)

தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -

{Entry: H08__661}

“தோழி! மனை உறை குருவி பகலில் இரை தேடி உண்டு, பொழுது சாயும் போது மனை இறப்பில் தன் பார்ப்புக்க ளொடு தங்க வந்து சேரும் மாலைப் பொழுதும், அதன் நிகழ்ச்சிகளும் தலைவன் பிரிந்து சென்று தங்கியிருக்கும் நாட்டில் இல்லை போலும்!” (குறுந். 46) என்ற தலைவி கூற்று.

இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -

{Entry: H08__662}

தலைவன் பரத்தையர் தொடர்பு கொண்டுள்ளான் என்றத னான், அவன் தன் இல்லத்திற்கு வந்து தன்னொடு மகிழ்வாகப் பழகுதற்கு வாய்ப்பளிக்க மறுத்த தலைவியிடம், “தலைவன் தவறே செய்திருப்பினும் அது புறத்தார்க்குப் புலனாம் வகையில் நடந்து கொள்வது குலமகளிர்க்கு ஏற்ற செய லன்று” என்று கூறிய பாங்கியை நோக்கி அவள், “மனைக்கண் உள்ள வயலைக்கொடி மனைக்கு வெளியே உள்ள கொறுக் கந்தட்டை மீது தாவிச் சென்று அதனைச் சுற்றிப் படரும் ஊரன் தலைவன் ஆதலின், அவன் நம் இல்லத்து இருப்பினும் அவன் உள்ளம் எப்பொழுதும் பரத்தையர்மீதே தாவிச் சென்று அவரைச் சுற்றித் திரியும் என்பதனை நன்கறிந்தும், அவனை ஊரவர் பழி தூற்றுதற்கு இடன் தரலாகாது என்னும் எண்ணத்தான் அவனை நல்லவன் என்றே யாங்கள் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆயின் என் மூங்கில் போன்ற மென்தோள்கள் அவனுடைய புறத்து ஒழுக்கத்தான் மிக மெலிந்து அவனைக் கொடியன் என்று பழிதூற்று கின்றனவே! இதற்கு யான் யாது செய்தல் இயலும்?” (ஐங். 11) என்பது போன்ற கூற்று.

இப்பாடற்கண், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் வருதலின் நாடகவழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறுதலின் உலகியல் வழக்கும் ஒருங்கே வந்தன. (தொ. பொ. 53 நச்.)

தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -

{Entry: H08__663}

காக்கை உப்பங்கழிகளிலுள்ள இரைகளைத் தேர்ந்துண்டு சோலைகளில் தங்கும் நெய்தல் நிலத்தலைவனொடு நாம் செய்து கொண்ட நட்பு ஒருகாலும் பிரித்தல் இயலாது. அத்தகைய நட்பினன் நம்மைப் பிரிந்திருப்பது நம் ஊழ் வினையே அன்றி அவன் தவறன்று” (குறுந். 313) என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறுநிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

{Entry: H08__664}

“பேய்த்தேர் விளங்கும் நண்பகற்பொழுதில் பெண்புறா கள்ளிமரக்கிளையில் அமர்ந்து தன் ஆண்புறாவைத் தனிமைத் துயரோடு அழைக்கும் கடத்தற்கரிய வழிகளை உடைய பாலைநிலத்தில், தலைவர் என்னைப் பிரிந்து தனித்துத் தங்கும் வன்மையை எவ்வாறு பெற்றார்?” (குறுந். 154) என்று தலைவி தோழியை வினவுதல்.

இது ‘கொடுமை ஒழுக்கத்து... ஆவயின் வரூஉம் நிலையினும்’ என்றதன்கண் அடங்குவதொரு கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -

{Entry: H08__665}

“தோழி! தலைவர் விடுத்துள்ள தூதுச் செய்தி வந்துவிட்டது. அவர் விரைவில் மீண்டு வருவார். நாமும் நெய் பெய்த தீப்போல மனவிளக்கத்தோடு அவர் தூதினை ஏற்றுக் கொண்டு, நம் தலைநாள் அன்பிற் குறைவின்றி அவரது வரவினை எதிர் நோக்கியுள்ளோம் என்ற செய்தியைத் தூதுவன் வாயிலாக அவர்க்கு விடுப்போம்” (குறுந். 106) என்று தலைவி தோழியிடம் கூறியது. (தொ. பொ. 147 நச்.)

இஃது இச்சூத்திரத்துள் ‘பல் வேறு நிலை’ என்றதனான் கொண்ட கூற்று.

தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -

{Entry: H08__666}

“தம்மால் பெரிதும் விரும்பப்படுபவரிடமிருந்து ஒரு சொல்லையும் பெறாமல் பிரிவாற்றி வாழும் பெண்டிரைப் போன்ற கல்நெஞ்சம் உடையார் உலகில் வேறு யாரும் இலர்.

“என்னால் பெரிதும் விரும்பப்பட்ட என் காதலர் என்னிடம் அன்பிலராய்ப் பிரிந்தாரெனினும், அவரைப் பற்றி அவரிட மிருந்து வந்த யாதேனும் ஒரு சொல்லே என் செவிக்கு மிக்க இனிமையைத் தரும்; அதற்கு வாய்ப்பு இல்லையே” என்ற தலைவி கூற்று. (குறள் 1198, 1199)

தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -

{Entry: H08__667}

“நெஞ்சே! நம்மை விரும்பாத தலைவர்க்கு நம் துன்பத்தைத் தெரிவித்து அவரது அருளைப் பெறுவதைவிட, நமக்குத் தன்ஒலியால் துன்பம் தரும் இக்கடலைத் தூர்ப்பது எளிய தும் பயனுடையதுமாகிய செயலாகும்” என்று தலைவனது கருணையின்மை கருதி வெறுத்துத் தலைவி தனது நெஞ்சிடம் கூறியது. (குறள் 1200)

தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -

{Entry: H08__668}

“தம்மால் விரும்பப்பட்டவர்க்கே இவ்வளவு துன்பம் தரும் தலைவர் பகைவர்க்குச் செய்யும் துன்பம் அளவிடற்கு அரியது போலும்!” என்று தலைவி தோழிக்கு முன்னிலைப் புறமொழி போன்று கூறுதல். (குறள் 1165)

தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -

{Entry: H08__669}

தலைவன் தெய்வத்தின் பெயரால் உறுதிமொழி கூறித் தான் என்றும் பிரியாத செய்தியைத் தெளிவித்தமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்.

“முதல் நாள் கூட்டத்தின்போது, தலைவன் என்னிடம் கடல் தெய்வத்தை முன் காட்டிச் சொல்லாத உறுதிமொழி ஒன்றும் இல்லை. அதனால் தலைவன் ஒருநாளும் என்னைப் பிரியான் என்று என் நெஞ்சம் உட்கொண்டது. ஆயின், இன்று என்விழிகள் கண்ணீர் உகுத்தற்குக் காரணம் புலப்பட வில்லை” (அம்பிகா. 339) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 176)

தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

{Entry: H08__670}

“தோழி! கடலலைகள் தொகுத்த நுண்ணிய வெண்மண லிலே அவர் தேர் போன சுவட்டை இன்னும் காற்று வீசி மணலைப் பெய்து அழிக்கவில்லை. இப்பொழுது ‘ஐயோ!’ என்று நம் வருத்தத்தை மெல்லிய குரலில் கூறினும், ஒருகால் அவர் கேட்டு நம்மை நோக்கி மீண்டு வருதலும் கூடும்” என்பது போன்ற தலைவி கூற்று.

இச்சூத்திரத்து ‘வரைவிடை வைத்த காலத்து வருந்துதல்’ என்பதன்கண் வேறுபட வரும் கூற்றுக்களுள் இஃது ஒன்று. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

{Entry: H08__671}

முன்னாள்களில் நிகழ்த்தியது போலாது ஒருநாள் தலைவன் தலைவியின் முத்துமாலை கிடந்து அசையும் கொங்கைகளை இடையீடுபடாமல் தழுவியும் வேட்கை தணியாது, தன் கூட்டத்தான் குலைந்த தலைவியின் கூந்தலைக் கோதி அழகு செய்தான்; தலைவியை அதரபானம் பண்ணி அவளது ஊறிய முள் எயிற்று நீர் அமிழ்தினும் இனிது என்று கூறியும் வேட்கை தவிராது, புணர்ச்சியால் நிலைகுலைந்த அவள் அணிகளைப் பண்டுபோல் கிடக்குமாறு திருத்தினான்; தேமல் பரவிய அவள் மார்பினை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தும் வேட்கை நீங்காது, புணர்ச்சியால் அவள் நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்தான். இன்னோ ரன்ன தலைவனுடைய செயல்களை நோக்கித் தலைவி அவன் விரைவில் தன்னைப் பிரிந்து செல்லத் திட்டமிடு கிறான் என்று நினைத்தல் (கலி. 4). இது பாலைத் திணையின் பாற்படும். (தொ. பொ. 43 நச்.)

தலைவி, தலைவன் பிரிந்தமைக்கு இரங்கல் -

{Entry: H08__672}

தலைவனது பரத்தையிற் பிரிவு குறித்துத் தலைவி வருந்துதல்.

“தோழி! இப்பொழுது தலைவன் தேர் இரவிலும் நம்மனைப் பக்கம் வருதலில்லை. நம் தலைவன் நம்மிடம் கொண்டுள்ள விருப்பம் நன்று!” (அம்பிகா. 450) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரும் ஊடல்; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 554 உரை)

தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -

{Entry: H08__673}

களவு அலராதல் கூடாது என்பது கருதித் தான் பிரிந்தால் தலைவி கலங்குவாள் என்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலின், பிரிவு பற்றியே கவலாத தலைவி, பின் தலைவன் பிரிந்தவழி உள்ளம் கலங்குமிடத்தே கூறுதல்.

“கடல்திவலை தன் தேர்ச் சக்கரங்களை நனைப்பத் தலைவன் எப்பொழுது பிரிவான் என்று காத்திருந்தது போலப் பசலை அவன் பிரிந்த உடனேயே என் நெற்றியில் பரவிவிட்டது” (குறுந். 205) எனவும்,

“குரவம்பூ நறுமணம் கமழும் நேரத்தில் நம்மைப் பிரிந்து துய ரத்தில் ஆழ்த்திய தலைவனுக்கு என் துயரைச் சொல்லுதற் காகப் பின்சென்ற என் நெஞ்சம் அவனொடு சேர்ந்து என்னைக் காணவரலாம் என்று காலம் தாழ்த்தி அங்கு நிற்கிறதோ? அன்றி, அவன் முகம்கொடுத்துப் பேசாமையான் வருந்தி இவ்விடத்துக்கு வந்து பழைய அழகு கெட்டுக் காணப்படும் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இவள் வேறு ஒருத்திபோலும் என்று கருதித் துயரோடு என்னைத் தேடப் போய்விட்டதோ? அறியேன்” (நற். 56) எனவும்,

“தலைவனொடு சென்ற என்மனம் மீண்டுவரப் போகிறதோ? அன்றி அவனிடத்திலேயே தங்கி இருத்தலை விரும்பி அங்கேயே தங்கிவிட்டதோ?” (ஐங். 295) எனவும்,

“புன்னைமரம் நிரம்பிய மணற்குன்றின்மேல் ஏறித் தங்கிக் கூடற்சுழி இழைத்துத் தலைவனுடைய மார்பு நமக்கு விரைவில் கிட்டுமோ என்பதனைக் காண்போம்” (ஐந். ஐம். 43) எனவும் வரும் தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -

{Entry: H08__674}

பாங்கியிற் கூட்டத்திற்குப் பின் தலைவன் பிரிந்து சென்ற போது தலைவி மாலைநேரம் வந்தது கண்டு வருந்துதல்.

இதனைத் திருக்கோவையார் ‘பொழுது கண்டு மயங்கல்’ என்னும் (188).

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -

{Entry: H08__675}

கலாய்த்தல் - சினந்து கூறல்.

“என் உடம்புக்கு அழகூட்டும் மாமை அழிகிறது; விரைவில் நெருங்கி ஊரும் பசலையும் உடம்பு முழுதும் பரவுகின்றது; இரவு நேரங்கள் யுகங்களைப் போல நீண்டு கொல்கின்றன; இப்படி நான் பெற்றுள்ள வளமெல்லாம், எம்பெருமா னுடைய துழாய்மாலையை நினைந்து ஏங்கும் என் நெஞ்சி னார் (-மனம்) தந்து போனவையே” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 12)

தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -

{Entry: H08__676}

“நின் தாயும் என் தாயும், நின் தந்தையும் என் தந்தையும் இச்சந்திப்புக்கு முன்னர் உறவினர் அல்லர்; யானும் நீயும் ஒருவரை ஒருவர் அறியாதவராக இதற்கு முன்னர் இருந் துள்ளோம். செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் நிலத்தின் செம்மையும் நீரின் தன்மையும் பிரிக்க முடியாத அளவில் பெற்றிருப்பது போல, பிரிக்க முடியாத நிலையில் இருவர் நெஞ்சமும் கலந்து ஒன்றானபிறகு யான் நின்னைப் பிரிந்து மறந்து விடுவேன் என்ற கவலையே நினக்கு வேண்டா” (குறுந். 40) என்று தலைவன் தலைவி குறிப்புணர்ந்து வற்புறுத்திக் கூறல்.

இச்சூத்திரத்துள் ‘தெளிவகப்படுத்தல்’ என்பதன்கண் சாரும் கூற்று இது. (தொ. பொ. 101 நச்.)

தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -

{Entry: H08__677}

“தலைவன் பரத்தைமை உடையனாயினும் ஒருதலையாக நமக்குப் பற்றுக்கோடாக இருப்பான் என்பது உறுதி. அவன் ஒருத்தியை மணக்க ஏற்பாடு செய்யக் காலையிலிருந்து அவ்வில்லத்தில் முரசு ஒலிக்கவும், நம் மனைக்கண் வந்து புதல்வனைப் பார்த்த அளவில் அவனொடு விளையாடுவதில் பொழுது கழித்துத் தான் மணம் நிகழ்த்த அமைத்த ஏற்பாட்டினையும் மறந்துவிட்டான்” (அகநா. 66) என்று தலைவன் புதல்வனிடம் கொண்ட அன்புமிகுதியினைத் தலைவி வியந்து கூறியவாறு. (தொ. பொ. 170 இள.)

தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -

{Entry: H08__678}

“தலைவ! எனக்குக் கோபம் சிறிதும் ஏற்பட்டிலது. பொய் யாது சொல். முக்காற் சிறுதேர் உருட்டி விளையாடும் புதல்வ னது விளையாட்டைக் காணவாவது இவ்வில்லிற்கு நீ எப்பொழுதாவது வருவாயே! அதுவும் நினைவில்லாதவாறு நின் உள்ளத்தைக் கவர்ந்த அப்பெண் யாரென்று கூறு” (ஐங். 66) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

இச் சூத்திரத்துள் ‘பல்வேறுநிலை’ என்றதனான் கொண்ட கூற்று இது.

தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -

{Entry: H08__679}

“நான் வளர்த்த மடக்கிளியே! என் நாயகனான அரங்க னுடைய பெருமைகளையும் பெயர்களையும் நான் கேட்டு உகந்து உவக்கும் வண்ணம் பாடினாய். மிகவும் மகிழ்ந்தேன்; நின்னை வளர்த்ததால் ஆகிய நற்பயனையும் பெற்றேன். இங்கே வா. நின்னைத் தொழுகிறேன்” என்றுரைத்துத் தன்மகள் கிளியைக் கைகூப்பி வணங்கினாள் என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருநெடுந். 14)

தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -

{Entry: H08__680}

பெரிதாகிய இடையீட்டுக் காலத்தில் தலைவன் என்றோ ஒருநாள் அரிதாக வந்தானாக, தலைவனைப் பல நாள்களும் பெறாமையான் ஏற்பட்ட துன்ப மிகுதியான், பெற்றதனையும் கனவு போலக் கொண்டு இகழ்ந்து தலைவி தோழியிடம் கூறுதல்.

“தோழி! அடும்பின் பூவை அலர்த்திச் சிறுமியர் விளை யாடும் கடற்கரைக்கு உரிமையுடைய நம் தலைவனை இனி நினையேன். என் கண்கள் துயில்வனவாகுக!” (குறுந். 243) என்றல் போலத் தலைவன் நேராக வந்த வருகையையும் கனவிற் கண்ட காட்சியாகக் கூறி எள்ளித் தலைவி தன்வயின் உரிமையும் அவன்வயின் அயன்மையும் தோன்றக் கூறுதல். (தொ. பொ. 111 நச்.)

இனி, தலைவன் வந்தவிடத்து அவன் வருகை அலராகும் என்று அஞ்சி அவனை இகழ்தல் என்று பொருள் கொள்வர் இளம்பூரணர். (109).

“முத்துக்களை வழங்கும் கடலில் கப்பல்கள் வந்து போகும் படியான துறைவனைத் தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையில் கண்ட நான் இதற்கு முன், ‘இவனைக் காண்பது நமக்குப் பேரின்பமாகும்’ என்று கருதிவந்த எண்ணம் மாறி, ‘இவன்தொடர்பு இப்பொழுது நமக்குத் துன்பம் தருவதா கும்’ என்று தெளிந்துவிட்டேன்” (ஐங். எழு. 61) என்றல் போலத் தலைவி தலைவன் வருகையை எள்ளிக் கூறுதல். தலைவன் பின்னும் தொடர்ந்து வருவன் என்று கருதிய மையே அவள் அப்பொழுது எள்ளியதற்குக் காரணமாம் என்பது. (நச்.)

தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -

{Entry: H08__681}

“என் கண் போன்ற காதலர் வருவாராயின், வரவு நீட்டித்த மைக்காக அவரைக் கோபித்துக் கொள்வேனோ, அல்லது என் ஆற்றாமை தீரத் தழுவிக்கொள்வேனோ, அல்லது இரண்டையும் கலந்தே செய்வேனோ? நான் யாது செய்யக் கடவேன் என்பது போதரவில்லையே?” என்ற தலைவி கூற்று. (குறள் 1267)

தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -

{Entry: H08__682}

“பாண! தலைவன் மீண்டுவருதலை நீ கண்ணால் கண்டாயா? அல்லது யாராவது சொல்லக் கேட்டாயா? உண்மை நிகழ்ச்சியை எங்கட்குத் தெளிவாகச் சொல். இந்நற்செய் தியைக் கூறிய நீ பொன் மிகுந்த பாடலிபுரத்தையே பரிசாகப் பெறுவாயாக!” (குறுந். 75) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -

{Entry: H08__683}

“தலைவன் வருகையை எனக்கு உணர்த்திய பாண! தலைவன் வருவதை நீ நேராகக் கண்டாயா? அல்லது பிறர் கூறக் கேட்டு வந்து உரைக்கின்றாயா? எமக்கு உண்மை நிகழ்ச்சியைச் சொல்? நீ பொன்மிக்க பாடலிபுரத்தையே பரிசாகப் பெறுவாயாக” (குறுந். 75) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘வாயிலின் வரூஉம் வகை’ என்றனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 145 இள.)

தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -

{Entry: H08__684}

தலைவி தலைவனை எதிர்பார்த்துக் குறியிடத்தே காத்து நிற்கும்போது தன்னை முன்போலவே தழுவி இன்புறுத்தத் தன் உயிரனைய காதலர் வருவாரோ என்று ஏங்கி நினைத்தல். (அம்பிகா. 25)

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையில் கொள்ளப்பட்டது. (இ. வி. 505 உரை)

தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -

{Entry: H08__685}

“தலைவன் இரவில் வந்து கூடுதற்கு இடையூறுகள் பலவும் நேர்கின்றன. நாய் உறங்காமை மேலும் தாயும் ஊர்க்காவ லரும் இரவில் உறங்காமல் இருக்கின்றனர்.” (அகநா. 122) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள் ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -

{Entry: H08__686}

உருவெளிப்பாடாவது, ஒரு பொருளிடத்து இடைவிடாது கருத்தைச் செலுத்திச் சிந்திப்பதால், அச்சிந்தனை ஊற்றம் பெற்று, அப்பொருள் கண்ணுக்கு எதிரே தோன்றுவது போலக் காணுதல்.

“எம்பிரானுடைய கண்களின் அழகைப் பெற்று, நீலமலை மீதும் பிற பசுமைப் பரப்பிடையும் என் கண்ணுக்குத் தோன்றும் தாமரைத் தடாகங்கள் யாவும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவி. 39)

தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -

{Entry: H08__687}

தலைவனது தொடர்பு கொண்ட எப்பொருளையும் தலைவி தன் மகிழ்ச்சிக்குக் காரணமாகக் கொள்வது இவ்விடச் செய்தி.

“தோழி! இங்கு வந்து உலவும் தென்றல், எம்பெருமானுடைய திருத்துழாய்மாலையின் நறுமணம் கலந்து வீசி என் பிரிவாற்றாமையைச் சற்றே தணிவிப்பதுடன், என்னை மகிழ்விக்கிறது” என்ற தலைவி கூற்று.

இதனைத் தோழி தலைவிக்குக் கூறிய ஆறுதல் மொழியாக வும் கொள்வதுண்டு. (திருவி. 74)

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும்.

தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -

{Entry: H08__688}

நோக்கு - கண்ணழகு

“என் தலைவனாகிய திருமாலின் பெருமைகளை அறிந்து அவனை நான் பணிந்தேன். அப்பொழுது என்னைக் குளிர ஒருக்கணித்துக் கடைக்கண்ணால் நோக்கிய அவனுடைய எழில் மிக்க கண்கள், வலிய காற்று வீசியதால் ஒரு பக்கமாகச் சாய்ந்து சரிந்திருக்கும் தாமரைப் பூக்களைப் போலப் பொலிவுற்று விளங்கின” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 42)

தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -

{Entry: H08__689}

தலைவன் பகற்குறியிலும் இரவுக்குறியிலும் இடைவிடாது வருதற்கு இடையூறுகள் பலவுள்ளன என்ற செய்தியைத் தோழி கூறும் இடத்தே தலைவி கூறல். வாயில் - ஈண்டுத் தோழி.

“யாமம் இருள் செறிந்துவிட்டது; மக்களும் சொல் அடங்கிப் படுத்துவிட்டனர்; ஊரும் உறங்கிவிட்டது. யான் ஒருத்தியே உறங்காமல் விழித்திருக்கிறேன்!” (குறுந். 6) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

“அன்னையின் காவலைக் கடந்து இல்லத்தை நீங்கித் தலைவன் ஊர் சென்று பகல்நேரத்தில் பலரும் காண அவனை எய்தி ‘நீ சான்றோய் அல்லை’ என்று கூறலாமா?” (நற். 365) என்றல் போல பிரிவாற்றாமை மிகுதியால் தலைவி நிலை கடந்து மொழிதலும் உண்டு. (109 இள.)

தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -

{Entry: H08__690}

“மகிழ்ந! நின் புதிய மனைவியைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். பலரும் படியும் நீர்த்துறையிலே மலரைக் கரையில் கொண்டு சேர்த்த நீர்அலை, தான் விளையாடிய மணல்சிற்றிலைக் கரைத்துவிட்டது என்று கண்கள் சிவப்ப அவள் அழுது கொண்டு நின்றாள்” (ஐங். 69) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறுநிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, தலைவனிடம் வேட்கை புலப்படுத்தல் -

{Entry: H08__691}

வேறுவேறாகத் தம்மில் காதல்செய்து ஒழுகும் அறிவில்லா தாரைப் போலத் தலைவன் அறியும்படியாகத் தலைவி தனக்குற்ற வேட்கையைத் தலைவன்முன் வெளிப்படையாகச் கூறாள். அவள் உள்ளத்து வேட்கையைத் தலைவன் தன் அறிவினான் ஆராயும்போது, புதிய மட்கலத்துப் பெய்த நீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறு போல, அவன் அறியக் குறிப்பான் வெளிப்படும். (தொ. பொ. 118 நச்.)

தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

{Entry: H08__692}

“கணவன் அருளின்மையைத் தம் நிறையால் மறைத்தொழு கும் பெண்டிரைத் கற்புடைய மகளிர் நன்கு மதித்துப் பாராட்டுவது பெருமையே. ஆயின் அத்தகைய பெண்டிர் தாம் மிக விரும்பும் காதலரால் விரும்பப்படாமற்போவதும் அவர்கள் தீவினையே. கணவரால் விரும்பப்படாத நிலையில் ஊரவரது நன்மதிப்பால் பயன் ஒன்றுமில்லை” என்ற தலைவி கூற்று. (குறள் 1194)

தலைவி, தலைவனை இரவுக்குறி விலக்கல் -

{Entry: H08__693}

இரவுக் குறி விலக்கல் - இரவுக்குறிக்கண் வாரற்க என வேண்டுதல்.

‘இறைமகள் இறைவனைக் குறிவிலக்கல்’ என்பது இத் தொகுதிக் கிளவி.

“தலைவ! என் பொருட்டாக, புலி முதலிய வழங்கும் மூங்கில் வளர்ந்துள்ள பிளவுபட்ட வழிகளினூடே, கதிரவனும் நுழைகல்லா இருள் மிக்க நம்மலைச் சாரலில், நீ வாரற்க” (தஞ்சை. கோ. 182) என்ற தலைவி கூற்று.

இது களவியலுள் இரவுக்குறிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 158)

தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -

{Entry: H08__694}

பரத்தையிற் பிரிவின் பிரிந்திருந்த தலைவன், பாங்கியது செவ்வணி கண்டு, பரத்தையால் விடுக்கப்பட்டுத் தனது இல்லம் நோக்கி விரைந்து வந்தபோது, நீராடிய தலைவி அவனை எதிர்கொண்டு அழைத்துப் பணிதல்.

“தலைவன்பிரிவு பசலையால் நம்மை உருக்குகிறது. இந் நிலையில் அவன் முன் அவனோடு ஊடுதல் நமக்கு எவ்வாறு இயையும்?” (தஞ்சை. கோ. 386) என்று தோழிக்குத் தலைவி கூறியவாறே, அவனை எதிர்கொண்டு பணிந்தவாறு.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -

{Entry: H08__695}

“தலைவன் தவறு செய்யினும் அவனைப் புலவாது ஏற்றுக் கோடல்தான் நின் இயல்போ?” என்று வினவிய தோழியை நோக்கி, “தலைவர் யான் புலத்தற்கு வாய்ப்புத் தாராது இல்லத்திற்கு விருந்தொடு வருகிறார்” (நற். 280) என்று தலைவி செப்புதல்.

இஃது இச்சூத்திரத்துள் ‘வாயிலின் வரூஉம் வகை’ என்றத னான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, தலைவனைக் காண விரைதல் -

{Entry: H08__696}

பிரிவாற்றாத நிலையில், தலைவி எவ்வாற்றானாயினும் தலை வனைக் கண்டேதீர வேண்டும் என விரும்பி முயலுதல்.

“எம்பெருமானே! அழகனான உன்னை அழகு மிக்க மகளிர் திரண்டுள்ள இடங்களிலேயோ, அறிவு மிக்கோரும் ஞானி களும் ஈண்டியுள்ள கூட்டங்களிலேயோ காணப் பெரிதும் விழைகின்றேன்” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 84)

தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -

{Entry: H08__697}

காய்தல் - சினத்தல்.

“தோழி! கிளையில் வைகும் பறவைக்கூட்டங்கள் தாம் ஆணும் பெண்ணுமாகக் கூடினமையின், பிரிந்திருப்பார்தம் துயர் பற்றிக் கவலைப்படாமல் இனிய குரலாலே தம்முள் அளவளாவும் ஒலியைக் கேட்டுவைத்தும், நாம் துயருறுதல் அறியாது அகன்ற தலைவர் இனி வந்தால், ‘என் கூந்தலில் பூக்களைச் சூட்டுதலும் வேண்டா; என்னைத் தீண்டவும் வேண்டா’ என்று யான் கூறப்போவதனைக் காண்பாயாக!” (குறுந். 191) என்று தலைவி கூறுதல். (தொ. பொ. 147 நச்.)

தலைவி, தலைவனை நிறுத்தற்கண் கூறல் -

{Entry: H08__698}

தலைவன் பண்பினைத் தோழி கூறியவாற்றான் தலைவி தான் நிறுத்துக் கூறுதற்கண் அவள் கூற்று நிகழும்.

“தோழி! ‘தலைவன் உயர் குடிப்பிறப்பினன், தன்னுடன் கூடுமவர்களைப் பிரியாதவன்; நாவால் கொடுமொழிகளைக் கூறாதவன், அன்புடையவன் என்றெல்லாம் பண்டு நீ அவனைப் பற்றிக் கூறிய சிறப்புக்கள் நாளும் மேம்படும் இன்பம் தருகின்றன” (அகநா. 352) என்று தலைவன் பண்பு களைத் தலைவி உறுதிப்படுத்திக் கூறல்.

(தொ. பொ. 145 இள.)

“கருங்கோல் குறிஞ்சியின் பூக்கொண்டு பெருந்தேன் இழைக் கும் நாடனாகிய தலைவனுடன் யான் செய்துகொண்ட நட்பானது நிலத்தினும் அகலத்ததாயும், வானினும் உயர்ந் ததாயும், கடலினும் ஆழ்ந்ததாயும் உள்ளது” (குறுந். 3) என்று தலைவனை நிறுத்தற்கண் தலைவி கூறியவாறு. (147 நச்., பொ. 195 குழ.)

நிறுத்தல் என்பதற்கு, தலைவியைத் தலைவன் நல்லொழுக் கத்தில் நிறுத்தல், தலைவனைத் தலைவி நல்லொழுக்கத்தில் நிறுத்தல், தலைவனிடம் கொண்ட அன்பினைத் தலைவி நிலைநிறுத்தல் என்று உரை செய்வார் குழந்தை. (பொ. 145)

தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -

{Entry: H08__699}

“தம் நெஞ்சத்தில் யாம் வர இயலாமல் தடைசெய்துவிட்ட நம் காதலர் இடைவிடாது எம் நெஞ்சத்தில் மாத்திரம் வருகி றாரே! இதற்கு அவர் நாணமுற்றிலர் போலும்!” (குறள் 1205) என்ற தலைவி கூற்று.

“எனக்குத் தும்மல் வருவதுபோல் அரும்பிப் பின் நின்றது. இதனால் என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து பின் நினையாதவராகி யிருத்தல் வேண்டுமென நினைக் கிறேன்” (குறள் 1203) என்பதும் அது.

(எங்கேயோ வைகும் உற்றவரால் நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் வரும் என்பதொரு வழக்குப் பற்றி இவ்வாறு கூறினாள்).

தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -

{Entry: H08__700}

“நான் எம்பெருமானைப் பிரிந்து அடைந்த ஆற்றாமை தீர, அவனை ஒத்த பூவையும் பிறவற்றையும் பார்த்தாவது ஆறுதல் பெறலாம் என்று சோலைக்கு வந்தேன்; ஆயின் இங்குள்ள பூக்களும் பிறவும் அவன் நினைவை மிகுதியாக்கி என்னை வருத்துகின்றன. குயிலே! பூவையே! கிளியே! நீங்கள் இவ்வாறு கூவிக் கூவிக் என்னை நோகச் செய்தல் வேண்டா; இதோ என்னுயிர் இருக்கிறது. இதைக் கொண்டுபோய் நீங்கள் எம்பெருமான் கண்ணனிடம் கொடுத்து விடுங்கள்!” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 9 - 5 - 1)

தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -

{Entry: H08__701}

இரவுக்குறிக்குப் பின் வந்து கூடாத தலைவனைப் பாங்கி பழித்து உரைத்தமை கேட்ட தலைவி, “தவறு அவருடைய தன்று” எனத் தலைவனுக்குச் சிறப்பு நேரக் கூறுதல். சிறப்பாவது குற்றமின்மை. இயற்படமொழிதல் - சிறப்பு ஏற்படுமாறு கூறுதல்.

“நம்முடைய துன்பத்தையும், உடல் வாட்டமுற்று நிறம் பெயர்வதையும் அறியாமல் தலைவர் நம்மை மறந்திருத்தல் நமது ஊழ்வினைப் பயனே. அவரை நொந்து யாது பயன்?” (தஞ்சை. கோ. 214) என்பது போன்ற தலைவி கூற்று.

இது ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -

{Entry: H08__702}

“தோழி! அவருடன் கூடியிருக்கும்போது பலப்பல நாள்கள் இன்புற்றாலும், ஒரு நாழிகையைப் பல கூறுகள் ஆக்கிய மிகச் சிறிய போதாய்க் கழிந்து விடுகின்றன, அவ்விரவு நேரங்கள். ஆயின், அவரைப் பிரிந்திருக்கும் போது, இரவின் ஒரு நாழிகையைப் பல கூறுகள் ஆக்கிய மிகச் சிறிய காலமும் பலப்பல ஊழிகள் ஆகிவிடுகின்றன. என் துன்பமும் மிகுகிறது. இவ்விருளின் சூழ்ச்சி மிக்க வஞ்சனைதான் என்னே! அம்ம! இது வாழி!” என்ற தலைவி கூற்று. (திருவி. 16)

தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -

{Entry: H08__703}

போலி - தலைவனை நினைவுபடுத்தும் நிறப்போலிகள்.

“என் தலைவனான திருமாலின் வடிவம் போல் நீலநிறம் பெற்றுத் திகழும் இக்கருநிற நெய்தற்பூக்கள், தமக்குரிய கடமையெல்லாம் ஈடேற்றிப் பின் உடலையும் வருத்தித் தண்ணீரில் புக்கு நின்று செய்த தவத்தால் தான் அவ்வாறு அவனோடு ஒப்புமை பெற்றனவோ!” என்று தலைவி கூறி மகிழ்தல்.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவி. 38)

தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -

{Entry: H08__704}

“எம் பெருமானே! உன் திருத்துழாய் கிடைக்காத காரணத் தால் (உனது பிரிவினால்) மெலிந்து யாம் எம்முடைய வளைகளை இழப்போம்; இஃது இயல்பே. ஆயின் உனது ஆணைக்குக் கட்டுப்பட்ட இவ்வாடைக்காற்று வந்து, உன் தொடர்பு பெற்று வருந்தும் என்னை உடல் முழுதும் துழாவி, என் மாமை அழகைக் கொள்ளைகொண்டு போக முயல்வது என்பற்றி? நீ தான் இதனைத் தடுத்தருளல் வேண்டும்” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளைப்பாற்படும். (திருவி. 28)

தலைவி, தலைவனைப் புகழ்தல் -

{Entry: H08__705}

தலைவி தலைவனது அன்பினை உயர்த்திக் கூறல்.

“தோழி! தலைவன் முன்பு நம்மாட்டுக் கொண்ட அன்பினை இன்னும் மறந்திலன். ஆதலின், ‘கணவனைப் போலச் சிறந்த உறவினர் வேறு யாவரும் இரார்’ என்று சான்றோர் சொன்ன மேதக்க மொழியின் பொருள் புலனாயிற்று” (தஞ்சை. கோ. 406) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடலின் ஒழிபு. (ந. அ. 207)

தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -

{Entry: H08__706}

“தோழி! ‘ஊரவர் அலர் தூற்றத் தொடங்கிவிட்டனர்; அப் பழிச் சொற்கள் தாயின் செவிகளை எட்டிவிட்டால் இவ் வில்லத்தில் நான் அமைதியுற இருத்தல் இயலாது’ என்று தலைவரிடம் தெரிவித்தால் அவர் தம்மூருக்கு நம்மையும் அழைத்துச் செல்வாரா?” (நற். 4) என்று ஆற்றாமையான் தோழியிடம் தலைவி கூறியவாறு. (தொ. பொ. 113 நச்.)

தலைவி தற்காட்டுறுதற்கண் கூறியது -

{Entry: H08__707}

களவுக் காலத்துத் தலைவன் தன்னைக் காணாவகையில் நாணான் மறைந்து ஒழுகினும், தன் பொலிவழிவினைத் தலைவற்குக் காட்டல் வேண்டும் என்று தலைவி விரும்பும் போது அவள் தோழியை நோக்கிக் கூறுதல். தற்காட்டுறுதல் - தன் (பொலிவழிவி)னைத் தலைவற்குக் காட்ட விரும்புதல்.

“தோழி! நம்மனைக் கொல்லையில் புதரிலே வளர்ந்துள்ள பீர்க்கம் பூக்கள் சிலவற்றை எடுத்துச் சென்று தலைவனை அணுகித் ‘தலைவியின் நெற்றி இப்பீர்க்கம்பூப் போலப் பசலை பாய்ந்து விட்டது’ என்று என் நிலையினை அவனிடம் கூறுவார் உளராயின், அஃது எனக்கு நன்மை பயக்கும்” (குறுந். 98) என்பது போன்ற தலைவி கூற்று.(தொ. பொ. 111 நச்.)

தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணுமாறு நிற்றல் என்று உரைப்பாரும் உளர். இந்நிலையில் கூற்று நிகழாது என்ப. (104 இள.)

தன் நெற்றி பசலை பாய்ந்தது என்பது தன்வயின் உரிமை; தலைவன் அதனை அறியவில்லை என்பது அவன்வயின் அயன்மை. (நச்.)

தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

{Entry: H08__708}

தலைவி தன்னான் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலாய காரணங்களான் இகழப்படும் என்பதனை முன்னரே உணரா நிலையில், முற்கூறிய குறியிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலான், தமக்குப் பயன்படாத வறுங்களத்தை நினைத்து, தலைவனுக்குத் தம் நிலையை முன்னரேயே உணர்வித்து வேறொரு குறியைத் தம்மனைக்கு அண்மைத்தாகக் குறிப்பிடாத தவற்றினைத் தன்மேலும் தோழிமேலும் ஏற்றிக்கொண்டு தலைவன்மீது தவறு யாதும் இல்லை என்பதனை உட்கொண்டு கூறுதல்.

“தலைவன் நம்குறியிடத்து வருவானே! வந்தால், பயனின்றி அசோகமரத்தில் தொங்கும் ஊசலையும், நாம் நீராடாததால் கலங்காது தெளிந்து காணப்படும் சுனையையும், தினை அரியப்பட்டதால் நம் காவல் இல்லாத தினைக்கொல்லை யையும் நோக்கி, நாம் குறி பெயர்த்து இடாத தவற்றைப் பெரிதாக மனத்துக் கொண்டு வருத்தத்தொடு செல்வானே! நம் ஊர் கூப்பிடு தூரத்தில்தான் உள்ளது என்பதனைச் சொல்ல நான் மறந்துவிட்டேனே!” (அகநா. 38) என்று தலைவி வருந்திக் கூறுதல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -

{Entry: H08__709}

உடன்போக்குச் செல்லும் தலைவி, வழியில் காணும் அந்தணர் முதலியோர் வாயிலாகத் தன் நற்றாயிடம் தான் தலைவனுடன் செல்வதைச் சொல்லி அனுப்புதல்.

“அந்தணீர்! என்னைப் பெற்ற தாயிடம் சென்று முல்லைப் பந்தலுக்குக் கால் நடும்படியாகவும், மானுக்கு நா வறளாது நீர் ஊட்டும்படியாகவும், என் பூவைப்பறவை உறங்குமளவும் அதன் தொட்டிலை ஆட்டும் படியாகவும் யான் வேண்டிய தாகச் சொல்வீராக” (நெல்லைக்.48) என்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், ‘உடன் போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 198)

தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -

{Entry: H08__710}

இரவுக்குறியில் கூடி மகிழ்ந்த தலைவன் மீண்டும் வாராததால் துயருற்றுக் கலங்கும் தலைவி, தன் துன்பநிலையைத் தலைவ னுக்கு அறிவித்தல் வேண்டும் என்று தோழியிடம் கூறுதல்.

“மாரிக் காலத்தில் பூக்கும் பீர்க்கம்பூக்களைக் கொண்டு சென்று, ‘தலைவியின் நெற்றி இவற்றின் நிறம் கொண்டு பசலை பாய்ந்து விட்டது’ என்று தலைவனிடம் கூறுவார் உளராயின் நன்று” (குறுந். 98) என்றாற் போல வரும் தலைவி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

{Entry: H08__711}

“செம்மால்! இங்கேவா. உனக்குப் பருக வேண்டிவைத் திருக்கும் பாலைப் பருகு. இப்பகுதி உன் தந்தையாரின் பால்; இப்பகுதி உன் தாயாரின் பால்” என்று பகுதிப்படுத்திச் சிறுவனுக்குப் பாலை உண்பித்த இடத்தே, தலைவன் அங்கு வந்து சேரவே, அதனைக் கண்டு பின்னர் மகனை நோக்கி, “எஞ்சியிருப்பது உன் தாயின் பகுதியாகிய பால். இதனை மாத்திரம் பருகிவிடு, போதும்” என்னவும், மகன் அப்பாலை மாத்திரம் பருகாமல் அப்பால் போய் விளையாட, அவன் விளையாட்டைக் கண்டு அவள் பாராட்டியது. (கலி. 85)

தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

{Entry: H08__712}

தன்மாட்டு நின்ற மிகுதியானும் அவன் (தலைவன்)மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுரையைத் தலைவி எடுத்தற்கண் கூறியது.

“தலைவ! நீ தேரில் அழைத்துவந்த பரத்தையருடைய கூட்டத் தான் ஏற்பட்ட சுவடுகள் நின் பரத்தைமையைப் புலப்படுத் தற்கு அஞ்சி நீ பொய்ச்சூள் உரைத்தால், அதனால் ஏற்படும் துன்பம் எம்மையே தாக்கும் என்பதை அறியாய்” (கலி. 88) என்ற கூற்று. (தொ. பொ. 145 இள.)

இனி நச்சினார்க்கினியர் ‘தன்வயின் சிறைப்பினும்’ எனப் பாடம் கொண்டு உரைக்குமாறு; (தொ. பொ. 147)

தன்வயின் சிறைப்பினும் -

தலைவனைவிடத் தான் புதல்வற்குச் சிறந்தவளாகி, அத் தலைவன்மாட்டும் அவன் காதலித்த பரத்தையர்மாட்டும் செல்லாமல், புதல்வனைத் தன்பால் சிறைசெய்தற்கண் தலைவி கூற்று நிகழும்.

“தலைவ! பரத்தையரைக் காணச் செய்துள்ள ஒப்பனை யொடு வந்து என் புதல்வனைத் தூக்காதே. அவன் எச்சில் நின் மார்பினை நனைத்து அலங்காரங்களைக் கெடுத்துவிடும். நீ அணிந்துள்ள முத்துமாலையை அவன் அறுத்துவிடுவான். நீ அணிந்துள்ள பூங்கொத்துக்களைப் பற்றிச் சிதைத்துவிடு வான். இச்சிதைவுகளைக் கண்டு நின் பரத்தை தவறாகக் கணக்கிட்டு நின்னை வெகுளுவாள். உன் அழகை அழிக்கின்ற என் புதல்வனை என்னிடம் கொடுத்துவிட்டு, நீ விரும்பும் பரத்தையரிடமே செல்” (கலி. 79) என்று தலைவனிடம் கூறும் கூற்றில், தலைவி புதல்வனைத் தன்னிடமே கொள்ள விரும்புதல் அறியப்படும்.

புதல்வன் புதுப்பரத்தையது இல்லத்திற்குச் சென்றது குறித் துத் தலைவி வெகுண்டு, அவனுக்கு, அவள் இல்லத்திற்குப் போகக் கூடாது என்று எச்சரித்துத் தன்னைப் போன்று தலைவன்பிரிவு நினைந்து வருந்தும் முன்னைப் பரத்தையரது (காதற்பரத்தையர்) இல்லமே செல்ல இசைவு தந்தமை கலி. 82இல் காணப்படுகிறது.

அவன்வயின் பிரிப்பினும் - தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனொடு சார்த்துதற்கண் தலைவி கூற்று நிகழும்.

தலைவி தன் மகனொடு பேசி மகிழ்கையில் தலைவன் வரவே, தான் எவ்வளவு தடுத்தும் நில்லாது மலைமேல் சிங்கம் பாய்வது போல, ‘அறன் இல்லா அன்பிலி பெற்ற மகன்’ தானும் தாயிடத்து அன்பிலனாய்த் தந்தையின் பரந்த மார்பினை நோக்கிப் பாய்ந்து தன் கைப்பிடியினின்றும் விலகித் தந்தையிடம் சென்றுவிட்டான் என்று கூறும் அவள் கூற்று (கலி. 86).

இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்கு பயக்கும் சூளுறவினைத் தலைவன் ‘சூளுறுவேன்’ என்று கூறுமிடத்துத் தலைவி கூற்று நிகழும்.

தலைவன் வந்த குற்றம் வழிகெட ஒழுகிக் களவில் சூளுறவான் வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனையும் பற்றிச் சூளுறுதலின், ‘இன்னாத சூள்’ என்றார்.

“தலைவ! நீ கூடிய பரத்தையர் முடியிற் சூடிய பூக்களில் தாது நின் தோள்களில் படிய இங்கு வந்துள்ளாய், என்னைத் தீண்டாதே” என்று தலைவி சொல்லியவழி, தலைவன், “என்னைப்பற்றித் தவறாகக் கருதாதே. என்மேல் தவறு இல்லை என்பதனைச் சூளுரைத்து உறுதி செய்கின்றேன்” என்றானாக, அது கேட்ட தலைவி, “நீ இவ்வாறு துணிந் துரைக்கும் பொய்ச்சூள் உனக்குத் துன்பம் தருமாயின் அஃது எங்களைத் தாக்குமே யன்றி நின் பரத்தையரைத் தாக்காது” என்று கூறியமை (கலி. 88)

தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -

{Entry: H08__713}

தலைவி, ‘தன் வயின் சிறைப்பினும்... தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது காண்க. (தொ. பொ. 147 நச்.)

தலைவி தன்னுள்ளே சொல்லுதல் -

{Entry: H08__714}

“என்னைக் கூடிப் பிரிந்த தலைவன் மார்பைத் தோயாததால் விளைந்துள்ள உடல் வெப்பம் அவன் மலைப்பக்கத்து மூலிகைகளை அடித்துக்கொண்டு வரும் இனிய நீரில் குளித்தால் இன்றே நீங்கிவிடும்!” (அம்பிகா. 299) என்றாற் போலத் தலைவி தனக்குள் கூறிக்கொள்ளுதல்.

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி தன்னை அழிதல் -

{Entry: H08__715}

தலைவன் இரவுக்காலத்துக் கடுமையான வழியிலே காவலைக் கூடப் பொருட்படுத்தாமல் இரவுக்குறிக்கு வரத்தான் காரணம் ஆயினமை பற்றித் தலைவி தன்னை நொந்து கொள்ளுதல். (அகநா. 72) (தொ. பொ. 210 நச்.)

தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -

{Entry: H08__716}

தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்றமையால், தலைவி தனித்திருந்து மிகவும் கோபம் கொண்டும், துயருற்று அழுதும் வருந்துதல்.

“என் தலைவர் என்னை மறந்து வேறு எங்கோ தம் காதலைத் தந்து மகிழ்கிறார். நான் இங்கே அழுதுகொண்டே, என் கண்ணீரும் இக்கொடிய இரவும் எப்பொழுது புலரும் என்று எதிர்பார்த்து ஏங்கிப் புலம்புகிறேன்” (தஞ்சை. கோ. 378) என்பது போன்ற தலைவி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘பொதுப்படக் கூறி வாடி அழுங்கல்’ என்னும் கூற்றினுள் (354) அடக்கும். (ந. அ. 205)

தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -

{Entry: H08__717}

தாயரைக் கிட்டி அவர்களுக்கு மகிழ்ச்சி செய்வித்த நல்ல அணியையுடைய (தலைவியின்) புதல்வனை, வஞ்சனையை யுடைய பரத்தை சந்தித்தமையைக் கேட்டவழித் தலைவி கூறுதல்.

புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, தலைவன் புதுப் பெண்டிர்மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச் சென்றவழி வெகுளுதல். ‘மாயம்’ பரத்தையருக்குப் பண்பாகி, இனம் சுட்டாது நின்றது. ‘நல்லணி’ எனவே, அவர் கொடுத்த நல்லணி என்பது பெறுதும். (தொ. பொ. 145 இள.)

பரத்தையர் கருதி அளித்த நன்றாகிய அணிகளையுடைய புதல்வனைத் தலைவனுடைய மாயப் பரத்தைமையைக் குறித்தஇடத்துத் தலைவி கூறுதல். (147 நச்.)

அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும், தலைநின்றொழுகும் பரத்தையர் தம் சிறப் புணர்த்தியும் அணிவர் என்றதற்குக் ‘கண்ணிய’ என்றார். பரத்தையர் சேரி சென்று அணி அணிந்ததற்கு வெகுண்டு கூறலின், ‘பொய்யாகிய பரத்தைமை’ என்றார். (நச்.)

புதல்வனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று மீடற்கு நெடுநேரம் காலம் கடத்தியமை பற்றித் தலைவி தோழியை வினவத் தோழி, “தலைவனுடைய பரத்தையர் பலரும் புதல் வனைக் கண்ட அளவில் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வோரணியை அணிவித்தனர்” என்று கூறவே, பிறர் கொடுத்ததைப் பெற்றதற்குத் தலைவி தன் புதல்வனை வெகுண்டு, புதுப்பரத்தை இட்ட மீன் பொறித்த மோதிரம் கண்டு, மன்மதன்கொடி எழுதிய மோதிரத்தை அவள் அணிவித்த குறிப்பு இவன்தந்தையைத் தான் என்றும் அகப் படுத்திக்கொள்ளும் குறிப்பைப் புலப்படுத்துகிறது என்று கூறி, பின், தந்தை கையில் அணியும் தொடியை ஒருத்தி புதல் வனுக்கு அணிவித்ததைக் கண்டு தலைவனது பரத்தைமைக்கு வருந்தி, “தவறு பிறர்மேலது அன்று; உன் ஆபரணங்கள் பற்றி வினவிய யானே தவறுடையேன்” என்று கூறுதல் (கலி. 84) (நச்.)

தலைவி, தார் பெற்று மகிழ்தல் -

{Entry: H08__718}

தலைவி தன் ஆற்றாமை தீரத் தலைவனது மாலையை அணிந்து இன்புறுதல். தார் - ஆடவர் மார்பில் அணியும் மாலை.

“யான் என் தலைவனது தாரினைப் பெறாதமுன், ஒவ்வோர் இரவிலும் அறை கூவிக்கொண்டே வந்து கனலை வீசிய அவ்வாடைக்காற்றே, யான் தார் பெற்று மகிழும் இன்று எத்துணைக் குளிர்ச்சியைத் தருகின்றது! ‘இறைவன் அருளே நம்மைக் காக்கவல்லது; அதனால் பகைவரும் நண்பர் ஆவர்’ என்று உலகம் கூறுவது மிக்க நிலையான உண்மையே” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 27)

தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -

{Entry: H08__719}

தா - வலிமை, வருத்தம். ‘உடம்பும் உயிரும் வாடியக்காலும், என் உற்றனகொல் இவை எனின் அல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை’ (தொ. பொ. 203 நச்.) என்ற நடைமுறை வரையறையைக் கடைப்பிடிக்கும் மனவலிமை இல்லாமல், “தலைவன் இருக்கும் ஊருக்குச் செல்வோம்” என்ற நன்மொழியினைத் தலைவி தானே கூறுதல்.

“‘கரடிகளும் பாம்புகளும் பன்றிகளும் புலிகளும் யானை களும் நடமாடும் இக்காட்டில் இவ்விருளில் இம்மழை பெய்யும் நேரத்தில் தனித்து வரும் நுமக்கு இப்பகுதியில் நடந்து செல்லும் வழிகளில் முன்பே பழக்கமுண்டோ?’ என்றாற்போல நடுவழியில் நம்மை விசாரிக்கக் கூடிய வழிப்போக்கர் சிலராவது இருப்பின், தலைவனூர் நோக்கிச் செல்லுதல் நமக்கு அரிதன்று” (அகநா. 8) எனத் தலைவி தோழியிடம் கூறுதல்.

‘தா’ என்ற சொற்கு வலிமை என்ற பொருளில் நச்சினார்க் கினியர் தரும் விளக்கம் இது. (தொ. பொ. 113 நச்.)

இனி ‘தா’ என்ற சொற்கு வருத்தம் எனப் பொருள்கொண்டு, வருத்தம் இல்லாத சொல்லைத் தலைவி கூறுதல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 111)

தலைவன் தான் சொன்ன சொல்லைக் காவாமையான் அவனைத் தெய்வம் வருத்தும் என்று கருதி, அவனுக்கு வருத்தம் யாவதும் நிகழாத வகையில், தலைவி, “ஊர்ப் பொதுவிடத்துள்ள மராமரத்தில் பொருந்திய அஞ்சத்தக்க தெய்வம் கொடியவர்களை ஒறுக்கும் என்று கூறுவர். எம் தலைவர் கொடியரல்லர். எமக்கு அவர் தீங்கொன்றும் செய்திலர். அவரை யான் விரும்பியதால்தான் நெற்றி பசலை பாய்ந்தது; அவரை நினைத்து என் மனம் நெகிழ்ந்ததால் தோள்கள் மெலிந்தன” (குறுந். 87) என்பது போன்ற தலைவி கூற்று. (இள.)

தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

{Entry: H08__720}

தலைவனைக் காணாதவகையில் பொழுது கடக்கத் தலைவி குறி தப்பியவழியும் தலைவன் குறியிடத்துக்கு வாராமல் இரான் என்பதனை அவள் அறிவாள் ஆதலின், குறியிடத் துக்கு வந்த தலைவன் தான் வந்ததற்கு அறிகுறியாக வைத் திருப்பதைக் காணும் விருப்பால் தலைவி மறுநாள் விடியலில் இரவுக்குறியிடத்துச் சென்று மயங்கிய செயலற்ற பொழு தின்கண் தோழியை நோக்கிக் கூறுதல்.

“காந்தள் விரலாய்! இக்காந்தள் மொட்டின்மேல் இருப்பது வண்டன்று. இதற்குப் பொருத்தமாக அணிவிக்கப்பட் டிருக்கும் இம் மோதிரம் யாருடையது என்பது நமக்கு முன்னரே தெரியும்!” என்று கலங்கி, அவனைக் காணும் வேட்கையொடு செய்வதறியாது மயங்கிக் கையற்றுக் கூறுதல். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -

{Entry: H08__721}

என் நாயகனான நாராயணன், நாளை என்னை வரைந்து வதுவை செய்துகொள்ள வேண்டி, ஆயிரம் யானைகள் சூழ ஊர்வலம் வருவதற்காக என் ஊர் முழுதும் தோரணம் கட்டிப் பூரணகும்பம் வைத்து வரவேற்பு நிகழ்த்துவதாய்த் கனவு கண்டேன், தோழி!” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (நாச்சியார். 6 - 1)

தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -

{Entry: H08__722}

“நம் காதலர் நம்பால் வந்து நம் மனத்திற்குகந்த செயல்களை நாம் விரும்பியவாறே செய்து இன்புறுத்தும்போது, பரத்தையர் தோள் தோய்ந்த அவர்மார்பினை நாம் தழுவலாகாது என்ற நாணத்தை நாம் அறியமுடியவில்லையே! இந்நிலையில் அவரொடு புலத்தல் எவ்வாறு?” என்று தலைவி தோழியிடம் கூறுதல். (குறள் 1257)

தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -

{Entry: H08__723}

தலைவன் இரவுக்குறியிடத்துத் தன்னைக் காண முடியாமல் மீண்டமை அறிந்த தலைவி, தான் வந்தபோது தன்னை நாம் பொருட்படுத்தாமல் சந்திக்காது இருந்துவிட்டோம் என்று தலைவன் நினைப்பானோ என்று தோழியிடம் கூறுதல்.

“தலைவனைக் கூடுதற்கண் உள்ள வேட்கையால் பகற்குறியை நீக்கியமை தவறு என்று மனம்கொண்டு, நொச்சிப்பூக்கள் வீழும் ஒலியைக் கேட்டவாறு இரவு முழுதும் யான் வருந்தி அவன் குறிசெய்தலை எதிர்பார்த்து உறங்காதிருப்பவும், இடியொலி மிக்க இருள் செறிந்த இராக் காலத்துத் தலைவன் வந்து நான் இரவுக்குறிக்கண் வாராது தவறிவிட் டேன் என்று என்மேல் பிழை ஏற்றுவானோ?” (கலி.46) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 109 இள.)

தலைவி, தானே கூறும் காலம் -

{Entry: H08__724}

தலைவியைத் தான் மணந்து கொள்ளுதற்குச் செலவிட வேண்டும் பொருளைத் திரட்டி வருவதற்குத் தலைவன் பொருள்தேட அவளைப் பிரிந்து சென்ற காலத்து, தனக்குப் பிரிதல்துன்பத்தால் வருத்தம் மிக்க இடத்து, தலைவி தானே கூறுவாள்.

மணம் செய்து கொள்ளாமல் களவொழுக்கம் நிகழ்த்திவரும் தலைவனை எதிர்பாராதவகையில் தோழியரோ செவிலித் தாயோ சந்தித்து அவன் நிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறிதற்கு வாய்ப்பு நிகழுமிடத்தும், தலைவன் பொருள்வயின் பிரிந்தவிடத்து அயலவர் தலைவியை மணம் பேசுவதற்கு ஏற்பாடு நிகழுமிடத்தும், தோழி வினவாமலேயே தலைவி தானே தோழியை அறத்தொடு நிற்குமாறு வேண்டுவாள். (தொ. பொ. 112 நச்.)

இயற்கைப் புணர்ச்சியின்பின் தோழியின் கூட்டத்துக்கு முயலாது தலைவன் விரைவில் தலைவியை மணந்து கொள்வ தாகக் கூறிப் பிரிந்து பின்னர்ச் சில நாள்கள் வரை தலைவியைச் சந்திக்க வாராத இடத்தும், களவொழுக்கம் நிகழ்த்தும் தலைவன் எதிர்பாராதவகையில் செவிலி முதலாயினாரைச் சந்தித்தஇடத்தும், “இவ்வொழுக்கத் தினை நின் தோழிக்கு உரை” என்று தலைவன் கூறிய இடத்தும், தலைவி தானே தோழிக்கு அறத்தொடு நிற்பாள். (தொ. பொ. 110 இள.)

தலைவி, தூதுவிடக் கருதிக் கூறல் -

{Entry: H08__725}

“பாணனே! நீ பலரும் புகழும் நம் தலைவனைக் காண்டல் வேண்டி அவன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாயின், எமக்கு இப்படிப் பிரிதல் துன்பத்தைச் செய்துள்ள பொய்யில் வல்ல தலைவனைப் போல, எங்களை மறந்துவிடாதே!” (ஐங். 473) என்று தலைவி பாணனைத் தூதுவிடக் கருதிக் கூறல். (ஐங். 474) பாணனைத் தூதுவிட்டுத் தலைவி கூறுவனவும் உள.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நிலையினும்’ என்றனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -

{Entry: H08__726}

“தோழி! ‘நின்னிற் பிரியேன்’ என்று தெய்வத்தின்மேல் சூளுரைத்த என் தலைவன் பிரிந்து சென்றான். சூள் பொய்த்த அவனைத் தெய்வம் கொடுமை செய்து ஒறுக்காமல் பொறுக்குமாறு வேண்டி வழிபடச் செல்வோம்” (தஞ்சை. கோ. 294) என்று தலைவி கூறுதல்.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (தலைவனது இப்பிரிவு ஒருவழித் தணந்ததும், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்ததும் ஆகும்.) (ந. அ. 176)