Section I09 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 3 alphabetical subsections

  1. த (CONTINUED from H08) section: 427 entries
  2. ந section: 155 entries
  3. ப section: 88 entries

I09

[Version 2l (transitory): latest modification at 10:27 on 23/04/2017, train Hamburg-Paris]

அகம்-3 (670 entries)

[TIPA file I09 (and pages 3-262 in volume printed in 2005)]

த (CONTINUED from H08) section: 427 entries

தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -

{Entry: I09__001}

தலைவன் தலைவியொடு களவொழுக்கம் நிகழ்த்தும் காலத்துப் பகைவயின் பிரியுமாறோ, நண்பனுக்கு உற்றுழி உதவப் பிரியுமாறோ இன்றியமையாமை நேரிட்டுவிட்டது. வாளாண் எதிரும் பிரிவின்கண் “இத்தனை நாளில் மீண்டு வருவேன்” என்று தலைவன் பருவம் குறித்துப் பிரிந்து செல்ல முடியாது. அந்நிலையில், தன் பிரிவுபற்றித் தலைவியிடமோ தோழியிடமோ குறிப்பிடாது தலைவன் பிரிந்து சென்று விட்டான். பலநாளாகியும் அவன் மீண்டு வந்திலன். அவன் பிரிந்து சென்ற இடமோ, பிரிந்து சென்றமைக்கான காரணமோ தலைவிக்கோ தோழிக்கோ புலப்பட்டிலது. இதனால் வருந்தும் தலைவியை ஆற்றுவிப்பதற்கும் தோழிக்கு இயலா தாயிற்று. ஆகவே, தன்பால் அன்பின்மையால் தலைவன் தன்னை முழுதும் மறந்துபோய்விட்டான் என்ற எண்ணம் தலைவியுள்ளத்தே உறுதிப்பட்டது. படவே, அவள் தன் பண்டைய பெண்மையை மறந்து, மனம் கலங்கி, மன்றத் திருந்த சான்றவர் அறியத் தன்தலைவன் பெயரும் பெற்றியும் பிறவும் கூறி, அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும், ஞாயிறு முதலிவற்றொடு கூறத்தகாதன கூறியும் துயருறுதல், இக்கூற்று.

“‘தன் தோழியர் பல் தோன்ற ஆரவாரத்தொடு சிரிக்கும் போதும், முன்பெல்லாம் தன்மகிழ்ச்சியைக் கண்களாலும் முகத்தாலுமே வெளியிடும் அமைதியையுடைய இப்பெண், தனக்கு இருக்க வேண்டிய பெண்மைக்குரிய அமைதித்தன் மையை நீத்து, வெண்பற்கள் மேலே தோன்றச் சிரித்து, மறுகணமே அழகிய கண்களில் கண்ணீர் மல்க அழுகி றாளே!’ என்று என்னை நோக்கிச் சிரிக்கிறீர்களா? என்னை இந்நிலைக்குக் கொண்டுவந்த தலைவனது மாயம் செய்யும் மார்பினைத் தழுவி நான் அவனைக் கூடப்பெற்றால், நீங்கள் இகழ்ந்து சிரிப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.

“‘பெண்ணே! உனக்கு யாது துன்பம் வந்துவிட்டது?’ என்று கேட்கிறீர்களா? என்னைத் துன்புறுத்தியவன் இவன் என்றோ, எனக்குற்ற துயரம் இது என்றோ பொதுமக்களாகிய நும்மிடம் சாற்றும் மனவலிமை எனக்கு இருந்திருப்பின். என் நெய்தல்மலர் போன்ற கண்கள் இவ்வாறு துயரத்தால் பசலைபாயும் நிலை உண்டாமோ?

“என் தலைவன் என்னை வந்து அடைவானா மாட்டானா என்பதனை நிமித்தத்தால் அறிவதற்காக நான் என் சிறிய இல்லத்தில் கூடற்சுழி வரைந்து கொண்டிருந்தபோது, அங்குப் பிறைச்சந்திரனைக் கண்ட அளவில் ஆடையால் மூடி என்னிடத்தேயே அகப்படுத்தி வைத்துக்கொள்ளலாம் என்று முதலில் கருதினேன். கொன்றைமலர் சூடிய நீலகண்ட னாகிய சிவபெருமான் தான் வழக்கமாக அணிந்து கொள் வதற்காகப் பிறைமதியைக் காணாமல் தேடுவானே! இப்பிறை நம்மை வருத்துவதாயினும், சிவபெருமானிடம் கொடுத்து உபகாரி என்ற பெயர் பெறலாம்; பிறர் உடைமைக்கு நாம் ஆசைப்படலாகாது என்று பிறையை அகப்படுத்தாமல் விட்டுவிட்டேன்.

“பின்னும் என் தலைவரது நினைவால், ‘என்னை நாடி மீண்டும் அவர் வருவாரோ? அவர் இதுவரை என்னைப் பிரிந்து சென்ற துன்பத்தை நினைத்து வருந்தி யான் அவரை எதிர்கொண்டழையாமல் பாராமுகமாயிருந்து விடுவே னோ?’ என்றெல்லாம் நினைத்தவாறே நள்ளிரவில் சற்று உறங்கினேனாக, அவர் கனவில் என்னிடம் வந்து சேர்ந்தார். நான் அவரை வளைத்துப் பற்றிக்கொண்டேன். அங்ஙனம் அவர் என்னால் வளைப்புண்ட நிலையைக் காண்பதற்கு மெல்ல என் கண்களை விழிக்க, நான் பற்றிய கைகளுள்ளே அவர் கரந்துவிட்டார்!

“பின்னர், உலகமெங்கும் சுற்றித் திரியும் ஞாயிற்றைக் கொண்டே அவரைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்து, மறுநாள் மாலை ஞாயிற்றை நோக்கி, ‘கிரணங்களைப் பிறருக்குப் பகுத்துக் கொடுக்காத ஞாயிறே! நீ மேருமலையை அடைகின்றாய் ஆதலின், இன்று இரவு அவரைத் தேடி என்முன் கைப்பற்றிக் கொண்டு வந்து என் கையில் ஒப்படைப்பாய் ஆயின், என் நெஞ்சமாகிய அகலிலே உயிரையே திரியாக அமைத்துக் கொளுத்திய என் காமத் தீ அணையும்’ என்றேன்.

“அதனைச் செவிக் கொளாது கதிரவன் மேற்குமலையை நோக்கிச் சேறலின், ‘களங்கமில்லாத ஒளியையுடைய ஞாயிறே! நீ மேற்கு மலையில் சென்று மறையப் போவதனால், மீண்டும் கீழ்கடலில் தோன்றிப் பகலையுண்டாக்கும் வரை, என் தொய்யிலை அழித்த என் தலைவனை என் கையில் விளக்காகக் கொண்டு தேடுதற்கு உதவியாக நின் கிரணங் களுள் சிலவற்றை எனக்குக் கொடு! என்றேன்.

“எனக்குச் சில கிரணங்களை வழங்கின், அவற்றை வைத்துக் கொண்டு என் தலைவனைக் கண்டுபிடித்து அவனொடு துனிகொண்டு புலம்பி வருந்துவேன் என்று கருதி ஞாயிறு எனக்கு மறுமொழி தாராது மேலைமலையை நோக்கி விரைவதாயிற்று.

“முன்னர் என்னைக்கூடி என் நலனைச் சிதைத்தவனைத் தேடிக் கண்டுபிடித்தால் பழைய நிகழ்ச்சியை மறந்து, அவ னொடு கூடி இன்புறாமல் வேறு செய்யத் தக்கது யாதுளது என்று கருதி மன்றத்திலுள்ள பனையின் உச்சியைவிட உயர்வாகக் காட்சியளிக்கும் மலையிடத்துக் காணப்பட்ட மாந்தளிர்போலச் சிவந்த மாலைஞாயிற்றை மீண்டும் அழைத்து, ‘ஞாயிறே! என் தோளை மெலிவித்த என்தலை வன் அழகை யான் காண்பேனே யல்லால், நன்று தீது எனப்படும் பிறசெயலில் எனக்கு நாட்டம் சிறிதும் இல்லை. என்னை விட்டுவிடு, இத்தனை காலமாக இவ்வுலக நிகழ்ச்சி யாது? பிரிந்து வருந்தும் மகளிர் தத்தம் கணவரைக் கண்டால் அவரொடு கூடி மகிழ்வாரேயன்றி அவரொடு கோபித்திருப்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?’ என்று கூறினேன்.

“மீண்டும் ஞாயிற்றிடம், ‘என் காமநோய் என் மனத்தை நெருப்பாகச் சுட்டெரிப்பினும், மனத்தினுள்ளே மறைத்துக் கொள்வேன். அதுபோன்று, வெளிப்படும் என் கண்ணீரை யும் இமைக்குள் மறைப்பேன். என் காமநோயால் வெளிப் படும் சூடான கண்ணீர் தரையில் உக்குவிழுமாயின், இரங்கத் தக்க இவ்வுலகம் வெந்துவிடும்’ என்று யான் காமநோயைப் பொறுத்துக் கொண்டிருக்கும் அருமையினையும் கூறினேன்.

“சான்றீர்! இதுகாறும் யான் உற்ற வருத்தம் இதுதான். என் உயிரைக் காத்தண்டாகப் பயன்படுத்தி, என் காமத்தீயாகிய துயரமும் ஊரவர் கூறும் பழிச்சொற்களாகிய துயரமும் இக்காத்தண்டின் இருபக்கமும் தொங்கி என்னைத் துன்புறுத் துகின்றன. இத்துயரத்தை என்னுயிர் மெலியுமளவும் பொறுத்து வந்துள்ளேன். இப்பொழுது யான் இறந்துபடுவ தற்கு முன்னே இதனைக் களைவீராக!” (கலி. 142) என்று நாணத்தின் எல்லையைக் கடந்த தலைவி அறிவு அழிந்த குணங்களையுடையவளாகிச் சான்றோரை நோக்கித் தெளிவு ஒழிந்து காமத்து மிகுதிறத்தால் கூறுதல் போல்வன.

இக்கூற்று அந்திக் காலத்திலேயே நிகழும்.

இக்கூற்று நிகழ்த்தும் பெருந்திணைத் தலைவி, “தலைவனைத் தழுவி அவனைக் கூட வேண்டும்” என்று கூறலின் மடமும், பிறையைக் கைப்பற்ற விரும்பிப் பின் விடுத்தேன்” என்றத னான் முயற்சியும், “சிவபெருமான் சூடிக் கொள்ள அதனை விடுப்பேன்’ என்றதனான் மருட்கையும், “நெய்தல் மலர் போன்ற கண்” என்றதனான் வனப்பு மிகுதியும் என்னும் இவை தன்னைவிட்டு நீங்கிவிட்டனபோல உரையாடுதல் மரபு. (தொ. பொ. 236 நச்.)

தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

{Entry: I09__002}

தோழி தலைவனை இயற்பழித்துக் கூறியவிடத்துத் தலைவி “இப்பொழுது கூறிப் பயன்பாடு யாது?” என்று சினந்து அவனை இயற்பட மொழிதல்.

“தோழி! தலைவனுடைய செல்வம் மிக்க மனைவாழ்க்கைக் குரிய பல கடப்பாடுகளை மேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்குப் புலவிக் காலத்திடையே தலைவ னைக் குணக்கேடுடையவன் என்று கூறுவதனால் பயன் யாது?” (குறுந். 181) என்ற தலைவி கூற்று.

இது ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமை, காய்தல்’ நிலையின்கண் தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -

{Entry: I09__003}

கற்புக் காலத்தில் ஓதல், காவல், தூது, பொருள் முதலிய வற்றுள் ஒன்றனைக் கருதித் தலைவன் தலைவியைப் பிரிந்து பலநாள்கள் வெளியே தங்கும் வகையில் நாடிடையிட்டும் காடிடையிட்டும் செல்லக் கருதியவழி, அவனது செலவுக் குறிப்பு அறிந்து அவனைச் செலவு அழுங்குவித்தற்குத் தலைவி தோழியுள்ளிட்ட வாயில்களைச் செலுத்துதல். வாயிலோர் தலைவன் பிரிவினான் தலைவிக்கு நிகழக்கூடிய ஆற்றாமைக்கு அஞ்சிச் செயற்படுவர். (தொ. பொ. 149 நச்.)

தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -

{Entry: I09__004}

“தோழி! ஆயர்கள் ஏறு தழுவச் சென்றபோது யாம் பரணி லிருந்து அதனைப் பார்த்திருந்தோமாக, தலைவன் சூடிய கண்ணியைக் காளை ஒன்று கொம்பில் ஏந்தித் துள்ள, அக்கண்ணி என் கூந்தலில் வந்து விழுந்தது அதனை யான் பெருஞ் செல்வமாகக் கருதிக் கூந்தலில் சூடினேன். இதனை அறிந்து தாய் வெகுள்வாளோ?”

“தலைவி! மணம் செய்துகொள்ளக் காலம் தாழ்த்தும் நம் தலைவன் கண்ணியன்றோ அது! தாய் கேட்டால், நாம் ஒரு பரிகாரமும் செய்யாமல் வாளா இருப்போம்.”

“தோழி! வேறொருத்தன் கண்ணியை யான் சூடினேன் என்று தாய் என்னை வெகுளாதிருக்க என்ன செய்வது?”

“தலைவி! ஆயன் கண்ணியை ஆய்ச்சி சூடியதில் தவறில்லை”

“தோழி! தாய்மனம் உன்மனம் போல் இருந்தால் நன்று”

“தலைவி! ஆயனையும் காதலிக்கிறாய், தாயையும் அஞ்சு கிறாய், உன் காமநோய்க்கு மருந்து அரிது!”

“தோழி! மருந்து இல்லையெனின், யான் வருந்தியே கிடப்பதா?”

“தலைவி! நமர் உன்னை உன் தலைவனுக்கு வரைவு நேர்ந்துவிட்டனர். ஆதலின் இனிக் கவலையின்று”

என இவ்வுரையாடல் தோழிகூற்றால் இவ்வாறு முடிந்தமை காண்க. (கலி. 107)

தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -

{Entry: I09__005}

தோழி தலைவன் பிரியக் கருதியுள்ளதைக் கூறவே, அது கேட்ட தலைவி, தலைவன் செல்லுதலைத் தவிரும் வகையான் கூறல்.

“தோழி! அருளையும் அன்பையும் புறக்கணித்துத் துணை யாகிய நம்மை நீத்துப் பொருள்வயின் பிரியும் மனவுறுதி நம் தலைவரிடத்து இருப்பின், அவர் உறுதியுடையவராகவே பிரிந்து செல்க. நாம் மடவோராகவே அறிவிலிகளாகவே, - அவர் பிரிவினைப் பொறுத்துக் கொண்டிருப்போம்.” (குறுந். 20) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

இச்சூத்திரத்துப் ‘பல்வேறுநிலை’ என்றதனான் கொள்ளப் பட்ட கூற்று இது.

தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -

{Entry: I09__006}

“தோழி! துறையில் மேயும் வலம்புரிச்சங்கினைத் தன் பெடை என்று கருதி நாரை குரல் கொடுத்து அழைக்கும் கடல்வளம் சார்ந்த சிற்றூரில், ‘அன்றில் பறவைகள் இணைபிரிந்தால் உயிர் வாழா’ என்ற செய்தியைத் தலைவனிடம் கூறு” என்ற தலைவி கூற்று.

இது ‘வரைவிடை வைத்த காலத்து வருந்துதல்’ என்பதன்- கண் வேறுபட வரும் பல கூற்றுக்களில் ஒன்று. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

{Entry: I09__007}

“தலைவனை இரவுக் குறிக்கண் கூடலாம் என்ற நாம் முயலுதற்கு இடையூறுகள் பலவாக உள்ளன. விழா இல்லாத நாள்களில் கூட இவ்வூரிலுள்ளார் நெடுநேரம் வரை உறங்காது விழித்துள்ளனர். அங்ஙனம் ஊரிலுள்ளாரும் கடைத்தெரு வணிகரும் உறங்கினாலும் கடுஞ்சொற் கூறி என்னிடம் ஐயம் கொண்டிருக்கும் அன்னை அதன் பின்னரும் உறங்குவதில்லை” (அகநா. 122) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இச்சூத்திரத்துள் ‘அன்னவை பிறவும்’ என்றதனான், இக் கூற்றுத் தழுவிக் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 115 நச்.)

தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -

{Entry: I09__008}

“தோழி! (யாம் விளையாடும் பொழிலிடத்தே, நீ பூக் கொய்யச் சென்றிருந்தபோது வந்த என் தலைவன்) நைவளம் என்னும் உயர்ந்த பண்ணில் இனிய சொற்களும் சேர்த்து மெல்லிய குரலில் பாடியவன் என்னைக் கண்டு நாணினன் போலச் சற்றே நிறுத்தி மீண்டும் இனிமையாகப் பாடினான். அதனைக் கேட்டும் அவனைக் கண்டும் நான் திகைத்தபோது, என் நெஞ்சும் கண்ணும் ஓடிப்போய் அவனைத் தஞ்சம் புகுந்தன. அப்போது என் கை வளைகளும் என் மேகலையும் என் மகிழ்ச்சி நிறைவால் இற்று உடைந்தன. அவனுடைய மகரக் குழைகளையும் தோள்களையும் காணப்பெற்றேன். பிறகு அவனுடைய ஊர் எதுவென்று கேட்டேன். இதோ திருவாலிப்பதியே நம் ஊர் என்றான்” என்னும் தலைவி கூற்று (திருநெடுந். 22)

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும்.

தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -

{Entry: I09__009}

“தோழி! அசோகந்தளிர் போன்ற என் மேனி நிறம் கெடப் பசலை பரவி விட்டது. இந்நிலை தலைவன் பிரிவால் வந்த தாகலின், விரைவில் வரைந்து பின் பிரியாது வாழ்தல் வேண்டும் என்று நம் தலைவனிடம் கூறுக; அல்லது என் நோயின் காரணத்தை அறியாத நம் தாய்க்கு இந்நோயின் உண்மைக் காரணத்தைக் கூறுக. அங்ஙனம் இரண்டனுள் ஒன்றும் செய்யாமையால் நீ கொடியையாய் இருக்கிறாய்!” (நற். 244) என்று தலைவி கூறுதல்.

இச்சூத்திரத்துள் ‘அன்ன பிறவும்’ என்றதனான் கொள்ளப் பட்டவற்றுள் ஒரு கூற்று இது. (தொ. பொ. 113 நச்.)

தலைவி தோழியை ஆற்றுவித்தல் -

{Entry: I09__010}

“தோழி தலைவன் பிரிவான் நெகிழ்ந்த என் தோள்களையும் வாடிய அழகையும் அழகிழந்த நிறத்தையும் நோக்கி, ‘இவள் துயர் தீர்க்க என்னால் முடியவில்லையே!’ என்று நீ அழாதே. ‘தலைவர் நட்பு நமக்குத் துன்பம் செய்வதை ஒருவரும் அறிய வில்லையே’ என்று வருந்தாதே. அவர் நட்பின் சிறப்பை நான் நன்கு அறிவேன் ஆதலின் பிரிவுத் துயரை ஆற்றி யிருப்பேன். நீ கவலைப்படாதே” (நற். 309) எனவும்,

“தோழி! தலைவன் இயற்கைப் புணர்ச்சி கூடிய அன்று ‘உன் நெஞ்சையே இருப்பிடமாகக் கொண்டு உன்னை ஒருபோதும் பிரியேன்’ என்று கூறிய உறுதிமொழியை நெகிழ்த்ததற்கு நானே வருந்தாது இருப்பவும், நீ வருந்துவது எதுபற்றி?” (குறுந். 36) எனவும் கூறித் தலைவி தோழியது துயரை ஆற்றுவித்தல். (தொ. பொ. 113 நச்.)

இஃது இச்சூத்திரத்துள் ‘ஆவகை பிறவும்’ என்றதால் கொள்ளப்பட்டதொரு கூற்று.

தலைவி தோழியை முனிதல் -

{Entry: I09__011}

‘தலைவி பாங்கிதன்னை முனிதல்’ காண்க.

தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -

{Entry: I09__012}

“தோழி! தலைவன் பொருள் தேடுதற்கு வேற்று நாட்டுக்குப் பிரிந்து செல்வதாகக் கூறிய அளவில், அவனைத் தடுத்து நிறுத்தாது அவன் கருத்தை உடன்பட்டு நீ நல்ல காரியம் செய்தாய். தொழில் செய்வதில் திறம் படைத்த ஆடவர் பொருள்தேட வேற்றுநாடு செல்வதும், அவர் மீண்டு வருந் துணையும் தலைவியர் துயரினை ஆற்றி இல்லிலிருந்து நல்லறம் செய்வதும் தாம் பண்புக்குரிய செயல்களாகும்” (நற். 24) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.)

இது, ‘கொடுமை யொழுக்கம் தோழிக்கு உரியவை, வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமை’ உவத்தல் நிலையின்கண் தலைவி கூறியது.

தலைவி, நாண் அழிபு இரங்கல் -

{Entry: I09__013}

தலைவனுடன் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோழி கூறியதை ஏற்றுக் கொண்ட தலைவி, “தலைவனுடன் கூடி அவனது அன்பினைப் பெறுதல் வாயிலாக என் உயிரினும் சிறந்த நாணத்தை நான் விட வேண்டி வருகிறதே” என்று கூறி வருந்துதல்.

“யான் பாதுகாத்து இன்றுவரை துறவாத நாணத்தை இன்று துறக்கும் நிலை எனக்கு ஏற்பட்டதனை நோக்கின், ‘இவ் வுலகில் பெண்ணாகப் பிறவாதிருத்தலே சிறந்தது’ என்று தோன்றுகிறது” (தஞ்சை. கோ. 310) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டிற்குரிய ‘உடன் போக்கு’ எனும் தொகுதிகண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -

{Entry: I09__014}

தனக்கு இன்றியமையாத நாணம் தன் நெஞ்சினை வருத்துத லான், உடன்போக்கின்கண்ணும் வரைவு கடாவு தற்கண்ணும் தலைவி வேட்கை மீதூர்ந்து தான் நாணத்தைக் கைவிடும் செய்தியைத் தன்னுள் கூறிக்கொள்ளுதல்.

“நம்மோடு இதுவரை துன்புற்று இணைந்திருந்த நாணம் ஆகிய கரை காமவெள்ளம் மிகுதலான் காத்தல் இயலாது அழிந்துவிட்டது!” (குறுந். 149) என்றாற் போன்று தலைவி என்ணுதல். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -

{Entry: I09__015}

தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தனது பெருநாணுடைமை தன்னைத் தடுத்தலான் அவனை ஏற்றுக் கொள்ளாது நிற்குமிடத்து அவனிடம் கூறுதல்.

“தலைவ! இப்புன்னை நிழலில் நாம் இப்பொழுது சந்திக் கின்றோம். நான் தோழியரொடு விளையாடும்போது மணலில் தவறிப் போகட்டுவிட்ட புன்னைக்காய் வளர்ந்து இம்மரமாகியுள்ளது. ‘இப்புன்னையை உன் தங்கையைப் போல அருமை பாராட்டு’ எனத் தாய் கூறியுள்ளாள். அத்தகைய தங்கை முன்னிலையில் நும்மொடு சிரித்து விளையாட நாணுகிறேன். பகற்குறியிடங்கள் பல உள. அவற்றுள் ஒன்றனை நாடுக. இவ்விடத்தைக் கொள்ளற்க” (நற். 172) என்றல் போலப் புதிதின் வந்ததொரு நாணம் மிகுதி தோன்றத் ‘தன்வயின் உரிமையும் அவன்வயின் அயன்மை யும்’ புலப்படத் தலைவி கூறியவாறு. (தொ. பொ. 111 நச்.)

தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக்க நாணம் வந்தவழி அவள் தோழியிடம் உசாவுதல்.

“மற்றவர் நம்மையெல்லாம் நோக்குவரே என்ற எண்ணம் எதுவுமின்றி, நாம் தன்னைக் காணுந்தோறும் அவன் நம்மை நோக்கித் தொழுகிறான். இங்ஙனம் தொழுது நமக்குப் பழி தூற்றாதவாறு போகச் சொன்னால் வருத்தத்துடன் போகி றான். அவனை நம்மால் வாராமல் தடுக்கவும் முடியவில்லை. நாம் என்ன செய்யலாம்?” (கலி. 63) என்றல் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 109 இள.)

தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -

{Entry: I09__016}

தலைவி தான் தலைவனிடத்துக் கொண்ட காதல் மிகுதியான் தலைவனுடைய அன்பின்மையை அவன் எதிரே நின்று கூற நினைத்து, நாணத்தான் நா எழாத நிலைமைக்கண் தோழி யிடம் கூறுதல்.

“பிறையைப் போன்ற நுதல் அழகு இழந்தது; வளைகள் முன் கையினின்றும் கழன்றுவிட்டன; ஊரவர் அலர் தூற்று கின்றனர். இவற்றையெல்லாம் தலைவனிடம் வெளிப்பட உரைக்க முற்படின் நாணம் தடுக்கிறது. அதனால் தலைவ னிடம் நாம் நம்துயர் நிலையை வெளிப்படையாகக் கூறாவிடி னும், என்னையும் கடந்து பெருகிய என் கண்ணீர் அவனிடம் என் நிலையைக் கூறியிருக்கும்!” (நற். 263) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

நிரம்பிய வேட்கையான் தலைவன் கூறிய சொற்கேட்டு எதிர்மொழி கூறாது தலைவி மடிந்து நிற்றல் என்று இதற்குப் பொருள் கூறி, இதன்கண் கூற்று நிகழாது என்ப. (தொ. பொ. 109 இள.)

தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -

{Entry: I09__017}

தலைவி தலைவனைப் பிரிந்திருக்க இயலாத நிலையை நினைத்து வருந்துதல்.

“எனது உயிராகவே ஆகியிருக்கும் என்தலைவருக்கும் எனக்கும் இறைவன் உடம்பையும் ஒன்றாகவே படைக்காமல் விட்டுவிட்டானே! அதனாலன்றோ அவரைப் பிரிந்திருக்க முடியாமல் துயருறுகின்றேன்?” (தஞ்சை. கோ. 149) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -

{Entry: I09__018}

“நாம் மிகவும் காதலிக்கும் அவர், தாமும் நம்மைப் போலவே நம்மைக் காதலிக்காவிடின், நமக்குச் செய்யும் இன்பம்தான் யாதோ?” என்ற தலைவி கூற்று. (குறள் 1195)

தலைவி, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறுதல் -

{Entry: I09__019}

“தோழி! வெப்பத்தான் பசுமை கெட்டுப் பாழாகிய பாலை வழியைக் கடந்து சென்ற தலைவனிடம் தூது சென்ற என் நெஞ்சம் வாராது காலம் தாழ்த்த காரணத்தை ஆராய்ந்து பார்ப்போம்” (ஐங். 317) என்ற தலைவி கூற்று.

இஃது இச்சூத்திரத்துள் ‘பல்வேறு நினையினும்’ என்றத னான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, நெஞ்சு நினைந்து இரங்கல் -

{Entry: I09__020}

தலைவன் பிரிவைத் தலைவி உள்ளத்துக் கொண்டு வருந்துதல்.

“தலைவர் சென்ற இடம் நோக்கிப் பின் சென்ற என் நெஞ்சு அவரை அழைத்துக்கொண்டு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறதோ? இங்கு மீண்டுவந்து என்நிறம் வேறானது கண்டு என்னை அடையாளம் காண முடியாமல் மீண்டதோ? அன்றி மாண்டதோ? நீங்காத மயக்கமுற்ற யான் நிகழ்ந்த செய்தி ஒன்றும் அறியேன்” (அம்பிகா. 287) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி, நெஞ்சொடு கிளத்தல் -

{Entry: I09__021}

தலைவன் தன்னைப் பிரிந்து சென்றமை நினைத்துக் கவலைப் படும் தலைவி தன் நெஞ்சுடன் வினவி உரையாடுவது.

“நம்மைக் கூடியிருக்கும் காலத்திலேயே ஒருநாள் நம்மை விட்டுப் பிரிய நினைக்கும் தலைவர் நம்மைப் பிரிந்தபின் மறுநாளே நம்மை மறத்தற்கும் ஆற்றலுடையவர். அவர் மறந்தபின் நாமும் நம் உயிரும் மன்மதன் அம்புகளைத் தாங்கி நாணத்தோடு எங்ஙனம் ஆற்றியிருத்தல் கூடும்?” (அம்பிகா. 287) எனவும்,

“ஒருவழித் தணந்த தலைவரை நினைத்து உடல் பசலை பாயக் கண்ணீர் பெருகத் தடுமாறும் என்னுடைய நெஞ்சமே! அதற்கு உன்நிலையை உட்கொண்டு அவர் கூறிய மாற்றம் யாது?” (அம்பிகா. 289) எனவும், தலைவி தன் நெஞ்சினை விளித்து அதனொடு வினவி உரையாடுதல்.

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 525 உரை)

தலைவி, நெஞ்சொடு புலத்தல் -

{Entry: I09__022}

தலைவன் ஒருவழித் தணந்தானாக, தலைவி தன் மனத்தே வருந்துதல்.

“எதிர்ப்பட்ட நாளன்றே தலையளி செய்து, ‘நின்னிற் பிரியேன்; அஞ்சற்க’ என்று தெளிவித்த தலைவர்தாமே, பின் பிரிந்துவிடுவாராயின் அவர்க்கேயன்றி, அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்த நமக்குக் குற்றமுண்டோ?” என்ற தலைவி கூற்று. (குறள் 1154)

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168).

தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -

{Entry: I09__023}

பரத்தையிற் பிரிவில் வைகிய தலைவன், தலைவியின் புதல்வற்பேறு கேட்டு மகிழ்ந்து வந்து ஊடிய தலைவியின் ஊடலைத் தீர்க்குமாறு தோழியை வேண்டியபோது, அவள், தலைவி புதல்வனைப் பெற்று எண்ணெய் பூசி நீராடிய செய்தியைக் கூறுதல்.

“பலர் புகழ் பாலனை இவள் பெற்று நெய்யாடினாள். ஆடியுள் (கண்ணாடி மண்டிலத்துள்) பாவை போன்று நீ வேண்டிய வாறெல்லாம் இயக்க இயங்கி வந்த இவளது உள்ளத்து நீர்மை உலர்ந்து போதற்குக் காரணமான புனலூர! இப்போது உனக்கு யாது திருவுள்ளம்?” (தஞ்சை. கோ. 388) என்றல் போன்ற தோழிகூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 206)

தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -

{Entry: I09__024}

தோழி தலைவியை நன்கு நோக்கிக் கண்சிவப்பு நுதல் வேறுபாடு முதலியவற்றால் தலைவனொடு கூட்டமுண்டு என்பதனை உணர்ந்து அவளைக் குறிப்பாக வினவியவழி, தலைவி தன் வருத்தத்தை மறைத்து அவளிடம் கூறல்.

“தோழி! நீ எப்பொழுதும் என்கண்களையும் தோள்களையும் கூந்தலையும் தழையாடையையும் காணும்போதெல்லாம் நான் மிக அழகாக இருப்பதாகக் கூறுவாயே. நீ இன்று நம் தாயைப் போல வீண் கவலையை மேற்கொண்டு, என் இயற்கையான அழகினை மறந்து மயங்கிக் கூறுகிறாயோ?” என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

{Entry: I09__025}

தலைவியைக் கூர்ந்து நோக்கிய செவிலி, தலைவன் பிரிந்த தனான் வருந்திக் கண்ணீர்விட்ட அவள்முகத்து வேறுபாட் டினை நோக்கி, அவள் துயரமுற்றதன் காரணத்தை வினவ, தலைவி செவிலியிடம் உண்மையை மறைத்துக் கூறுதல்.

“கடல் யான் செய்து வைத்திருந்த பைஞ்சாய்க் கோரையான் ஆகிய பாவையைக் கைப்பற்றி மணல்வீட்டையும் கரைத்து விட்டதனான் வருந்துகிறேன்” என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -

{Entry: I09__026}

தலைவன் இரவுக்குறி விரும்புவதைத் தோழிவாயிலாக அறிந்த தலைவி அதனை ஏற்காமல் தன் மனத்துள் கூறிக் கொள்ளுதல்.

‘இதனை நான் எவ்வாறு ஏற்பேன்? அச்சமும் துன்பமும் விளைக்கும் ஆபத்தான வழியில் இரவுப்போதில், என் உயிருக்குயிரான தலைவரை வருமாறு கூறுதல் மடமை யன்றோ?” (கோவை. 157) என்பது போன்ற வருத்தமிக்க தலைவியது கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘ஏதம் கூறி மறுத்தல்’ என்னும் (157).

இதுகளவியலுள், ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -

{Entry: I09__027}

அயலார் தன்னை வரைய வருகின்ற செய்தியை அறிந்த தலைவி, தோழி வாயிலாகத் தன் களவு ஒழுக்கத்தை வெளி யிட்டு நொதுமலர் வரைதலை நீக்க வேண்டிய நிலையில், இதுவரை நாணத்தான் மறைத்துவந்த தன் களவொழுக் கத்தை, நாணத்தினும் மேம்பட்ட கற்பினைக் காப்பதற்காக, நாணினை நீக்கிக் கூறுதல்.

“நாணமே! நீ என்னொடு நெடுங்காலம் உடனிருந்து வருந்தினாய். கரும்புப் பாத்தியின் கரை நீர் பெருகுவதான் சிதைந்து அழியுமாறு போல, என் தலைவனைத் தவறாது யான் அடைய வேண்டும் என்னும் விருப்பமிகுதியான் உன்னை நான் இழக்கும் நிலையினேன் ஆயினேன்!” (குறுந். 149) என்றாற் போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 இள.)

தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -

{Entry: I09__028}

வரைவு நீட்டித்தவழித் தலைவி மனம் நொந்து தலைவனது உறுதிமொழியை நம்பித் தாம் தெளிந்திருந்தமை தவறு என்று கொண்டு தோழியிடம் கூறுதல்; தலைவனிடம் கூறுதலும் ஆம்.

“தலைவன் என்னிடம் உரைத்த சூளினைச் சிறந்ததாகக் கருதித் தெளிவுற்றிருந்தேன். அவன் செய்த கருணை இப்பொழுது ஊர் அறியப்பட்ட பழியாகிவிட்டது. அவன் உறுதிமொழியும் அத்தகையது போலும்!” (ஐந். எழு. 9) என்று தோழியிடம் கூறுதல்.

“மகிழ்ந! எங்கள் ஊரிலுள்ள மணல்மேட்டில் என் கைகளைப் பற்றிக் கொண்டு தெய்வ மகளிரைச் சுட்டி நீ செய்த சூளுரை செயற்படாமையின் அத்தெய்வம் உன்னை வருத்துமோ என்ற எண்ணம் எங்களுக்குத் துன்பம் தருகின்றது” (குறுந். 53) என்று தோழி தலைவனிடம் கூறுதல். தலைவி கூறக் கேட்டுத் தோழி கூறினாள் என்பது. (தொ. பொ. 111 நச்.)

தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து அதனை ஒழித்தல் என்பர் இளம்பூரணர் (109).

தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -

{Entry: I09__029}

நீடுதல் - காலம் பாணித்தல்.

பகற்குறிக்கண் வந்த தலைவன் முன்பெல்லாம் தலைவி தினைக்காவல் செய்துவந்தபோது அவளைக் கண்டு அளவ ளாவுதல் எளிதாக இருந்தது. தினைக்காவல் நீக்கப்பட்டபின் அவளை வேறொரு குறியிடத்துக் கண்டு வந்தான். இந் நிலையில் தலைவி மீண்டும் தினைக்காவலுக்கு அமர்த்தப் பட்டாள். அவள் தினைப்புனத்தில் தலைவன் வருகையை நாடியிருந்தாள். அவன் வருதற்குக் காலந் தாழ்க்கவே, அதனைப் பொறுக்கமாட்டாது கிளியிடமும் தோழியிடமும் அவள் கூறுதல்.

“தினைக்கதிரைப் பறித்த கிளியே! அஞ்சாதே. உன்னை யான் துன்புறுத்தமாட்டேன். அஞ்சாது தினையைப் போதிய அளவு உண்டு உன் காரியம் முடிந்தபின்னர் என் காரியத்தை யும் செய்து கொடுப்பாயாக என்று உன்னை வேண்டுகிறேன். தலைவனுடைய நாட்டிலேயே உன் உறவினர் உளர். அவர்களைக் காண நீ புறப்பட்டுப் போகும்போது என் தலைவனிடம், யான் மீண்டும் தினைக்காவலுக்கு அமர்த்தப் பட்ட செய்தியைத் தவறாது கூறுவாயாக” (நற். 102) என்று கிளியிடம் கூறுவது போல்வனவும்,

“மலையின்மேல் காந்தள் பூப்ப அதனைப் பாம்பு என்று கருதி மேகம் இடிமுழக்கம் செய்யும் மலைநாடன், முதல் நாள் கூடியபொழுது என்னிடம் பழகியது போலப் பின்னர்ப் பழகாத காரணத்தான், என் உடல் மெலிய, வளையல்கள் முதலில் நெகிழ்ந்து பின்னர்க் கைகளை விட்டே கழன்று விட்டன” எனவும்,

“தோழி! இக்கிளிகளைப் பார். இவ்வாண்கிளி தன் பெடை யொடு சேர்ந்தே தினை உண்ண வருகிறது. இவை தலைவன் நாட்டினைச் சார்ந்தன ஆயினும், அவனைப் போலப் பிரிதலைக் கருதாத பேரன்பினையுடையன” எனவும், தோழி யிடம் கூறுவன போல்வனவும் கொள்ளப்படும்.

இக்கூற்று, இச்சூத்திரத்துள் ‘அன்னவும்’ என்றதனான் கொள்ளப் பட்டது. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -

{Entry: I09__030}

“தலைவ! நின் பரத்தை கள் குடித்த மயக்கத்தால் மயங்கிச் செயற்படத் தொடங்கி விட்டாளா? காவிரிப்பெருக்கைப் போன்று இனிதாய்த் தன்னை நோக்கிய நின்மார்பினைத் தழுவுதலை நீக்கி நின்றாளாமே!” என்றாற் போலத் தலைவி தலைவன் புறத்தொழுக்கம் பற்றிக் கூறுதல். (ஐங். 42)

தலைவி பரத்தையை ஏத்தல் -

{Entry: I09__031}

கற்புக் காலத்தில், தலைவி தலைவனுடைய புறத்தொழுக் கத்தைத் தான் அறிந்துள்ள செய்தியைத் தலைவன் உணர வெளியிடுவதற்காக, அவனொடு தொடர்பு கொண்ட பரத்தையை ஊடற் காலத்தில் உயர்த்திக் கூறி (அகநா. 6) அவனுடைய பரத்தைமை தனக்குத் தந்துள்ள துயரத்தைக் குறிப்பாக வெளியிடல். (தொ. பொ. 233 நச்.)

தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -

{Entry: I09__032}

“கருவிளை மலரை அலைத்து ஈங்கைக் கொடியின் மலர் களை உதிர்த்து வரும் குளிர்ந்த இன்னாத வாடைக் காலத்தில் தலைவி எந்நிலையில் உள்ளாளோ என்று கவலைப்படாத தலைவர் உண்மையன்பு அற்றவர் ஆதலின், அத்தகைய அன் பற்றவர் வாராதிருப்பினும் வந்தாலும் நமக்கு யாது உற வுடையர்?” (குறுந். 110) என்று தலைவி தோழிக்குக் கூறியது.

இஃது இச்சூத்திரத்துப் ‘பல்வேறுநிலை’ என்றதனாற் கொள்ளப்பட்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -

{Entry: I09__033}

தலைவனான் தோன்றிய நோயும் பசலையும் முருகனான் தீர்ந்தன என்று தான் கேட்பின் கற்பிற்குப் பழியாம் ஆதலின், தன் கற்பிற்கு வரும் பழி தீர்ந்த தன்மையான் தலைவி தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தல்.

“தலைவன் மார்பினான் எனக்கு ஏற்பட்ட நோயினை முருகனான் வந்த நோயாகக் கருதித் தாய் முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்திய அன்றைய இரவே தலைவன் என்னை இரவுக்குறிக்கண் வந்து கூடினானாக, அவன்தொடர்பால் யான் இழந்த பொலிவினை மீட்டும் பெற்ற செய்தியை அறியாத தாய், என் நோய் வெறியாட்டினான் தீர்ந்தது என்று கூறிய செய்தி கேட்டு எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று” (அகநா. 22) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

இதனைக் குற்றம் தீர்ந்த முறுவல் சிறிதே தோற்றுவித்துப் புணர்தற்கு உடன்பாடு காட்டி நிற்றல் என்பார் இளம்பூரணர் (109).

தலைவி, பாங்கனைக் குறித்துக் கூறல் -

{Entry: I09__034}

தலைமகனுக்கு வாயிலாக வந்த பாங்கன் கேட்பத் தலைவி தோழியிடம் கூறி வாயில் மறுத்தல்.

“இம் மூதூரில் அழகிய ஆடை அணிகளை உடுத்த பெதும்பைப் பருவத்துப் பரத்தையொருத்தி, ஊசலிலே தன்னை அமர்த்தி ஆயத்தார் ஆட்ட முயலவும், அதற்கு உடன்படாது தான் ஆடாமல் அழுதுகொண்டிருந்தாள். தலைவனுடைய பாங்க னாவது வந்து அவளைச் சமாதானம் செய்து மீண்டும் ஊசலாடச் செய்திருக்க வேண்டும். அங்ஙனம் செய்யாமையின் அவள் அழுது தலைவனோடு ஊடியதனாலேயே தலைவன் நம்மனை நோக்கி வருகிறான்” (நற். 90) என்ற தலைவி கூற்று.

(இது பாணனைக் குறித்துக் கூறியதாகக் கருதுவார் நச்சினார்க்கினியர் (147).

‘வாயிலின் வரூஉம் வகை’ என்பதனுள் இக்கூற்று அடங்கும். (தொ. பொ. 145 இள.)

தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -

{Entry: I09__035}

தலைவி, தான் அல்ல குறிப்பட்டதையும், தலைவர் வந்து சென்றிருக்கும் செய்தியையும் தோழிக்குச் சொல்லுதல்.

“தோழி! நான் வந்து சென்றபின் தலைவர் இங்கு வந்து காந்தள்மொட்டினை என் செங்கை விரல் என்று கருதி மணிகள் இழைக்கப்பெற்ற மோதிரத்தை அதன்கண் செறித்துள்ளாரோ?” (அம்பிகா. 225) என்று மறுநாட்காலை இரவுக்குறியிடம் வந்த தலைவி தோழிக்குக் கூறுதல்.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -

{Entry: I09__036}

தன் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்துவிட்டதைத் தலைவி தோழிக்குக் கூறுதல். அருமறை - பிறர் அறிதற்கு அரிய இரகசியம்.

“தலைவன் பிரிந்ததனால் அழுத என் ஒளியிழந்த முகத்தை நோக்கிய செவிலி என் வருத்தம்பற்றி வினவ, யான், ‘கடல் அலைகள் என் மணல் சிற்றிலைச் சிதைத்துப் பைஞ்சாய்க் கோரைப் பாவையை அடித்துச் சென்றதனால் வருந்தினேன்’ என்று கூறினேன்” என்ற தலைவி கூற்று. (‘தலைவி நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறை’த்துச் செவிலியிடம் கூறல் - காண்க.)

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -

{Entry: I09__037}

“தோழி! வெற்பர் தம்கையாற் கொடுப்பவே, அழகிய நிற முடையவாய் நெய்ப்புடையவாயுள்ள அசோகத் தழையையே புணையாகக் கொண்டு, பிரிவுத்துயிர்வெள்ளத்தை நீந்தி னேன்” (தஞ்சை. கோ. 370) என்றாற் போன்ற பெருமகள் கூற்று.

இது கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

தலைவி, பாங்கிதன்னை முனிதல் -

{Entry: I09__038}

நாணத்தால் யாதும் கூறாதிருந்த தன்னைத் தோழி கடிந்து கொண்டதைக் கேட்ட தலைவி அவளைக் கடிந்து கொள்ளுதல்.

“ஆருயிர்த் தோழி! ஏன் என்மீது இப்படிச் சீறிப் பேசுகிறாய்! நம்மிருவர் மனமும் ஒன்று. என் மனம் அறிவதை உன் மனமும் அறியும். நீ சொல்லும் எதனையாவது நான் மறுத்தது உண்டா?” (அம்பிகா. 146) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் கிளவிக்கண் ‘தலைவி குறை நயத்தல்’ எனும் வகையில் அமைந்ததொரு கூற்று. (ந. அ. 148)

தலைவி, பாங்கியொடு கூறுதல் (பகர்தல்) -

{Entry: I09__039}

“கண்ணுக்கினியதாய் இருக்கும் நெருஞ்சிலின் புதுமலர் முட்களைப் பயந்து கொடுமை செய்வது போல, நேற்று இன்பமளித்த எம் தலைவர் இப்பொழுது துன்பமும் செய்த லால் என் நெஞ்சு நோவாநின்றது” (குறுந். 202) என்பது போன்ற தலைவியின் கூற்று.

இது களவியலுள், ‘ஒரு சார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -

{Entry: I09__040}

தலைவன் இரவுக்குறி விரும்புவதைத் தோழிவாயிலாக அறிந்த தலைவி, அவன் வரும் வழியிடையுள்ள துன்பங்களை நினைத்து அதற்கு உடன்படத் தயங்கிய பின்னர், ஒருவாறு உடன்பட்டுத் தோழியிடம் கூறுதல்.

“என்னைப் பிரிந்திருக்க இயலாத வேட்கை மிக்க என் தலைவரே இரவில் வந்து கூட விரும்பும்போது, அதனை நான் மறுப்பது தகாதன்றோ?” (தஞ்சை. கோ. 171) என்ற தலைவி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘குறைநேர்தல்’ (158) என்னும்.
இது களவியலுள், ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -

{Entry: I09__041}

தோழி! இப்பாணன் ஓர் இளைய மாணாக்கன். தன் ஊரில் பொதுவிடத்தில் எத்தகையவனோ? இரந்து பெறும் உணவினால் முற்ற வளராத மேனியொடு புதிதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையை யுடையவன்” (குறுந். 33) என்று , பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தல். (தொ. பொ. 145 இள., 147 நச்.)

‘வாயிலின் வரூஉம் வகை’ என்றதனான் கொண்ட கூற்று.

தலைவி, பாணனிடம் கூறல் -

{Entry: I09__042}

“பாண! நீயே கண்டு தலைவனிடம் கூறு. தலைவன் பிரிந் தமையான் என் உடல் மெலிய, என் கைவளைகள் கழன்று நீங்கிவிட்டன.” (ஐங். 140) என்று, “தலைவன் நீ கூறுவதைத் தான் உண்மையாகக் கொள்வான்” என்ற கருத்தில், பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு உரைக்குமாறு தலைவி பாணற்குக் கூறல்.

இது ‘வாயிலின் வரூஉம் வகை’ யாற் கொண்ட கூற்று.

(தொ. பொ. 147 நச்.)

தலைவி, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது -

{Entry: I09__043}

“தோழி! நம் பாணன் பகைவரது மதிலை அழித்தற்குத் தானையொடு விரைந்த குதிரை பூட்டிய தேரை ஓட்டிக் கொண்டு சென்ற தலைவனை நம் நெற்றி விளங்குறுமாறு ‘விரைவில் அழைத்து வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டு விட்டான். நம் துயர்கண்டு அதனைத் துடைத்தற்கு முயலும் அவன் அறிவு நன்று” (ஐங். 474) என்று தலைவி தோழிக்குக் கூறியது.

இஃது இச்சூத்திரத்துப் ‘பல்வேறு நிலை’ என்றனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, பாணனைப் பற்றிக் கூறல் -

{Entry: I09__044}

“தோழி! நம் தலைவனுக்குப் புதிய பரத்தையரைக் கூட்டு வித்தற்குத் தெருவழியே சென்ற பாணன் தன்னை நோக்கிப் பாயவந்த புனிற்றாவுக்கு அஞ்சி யாழைக் கீழே வைத்துவிட்டு நம் மனையுள் நுழைய, நான் அவனை நோக்கி, ‘இது நின் இல்லம் அன்று; நின்மனை அங்குள்ளது’ என்று கூற, அவன் என்னையும் தன்னையும் நினைத்துப்பார்த்து என்னைக் கும்பிட்டு நின்ற நிலையை நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது” (அகநா. 56) என்ற தலைவி கூற்று.

இச்சூத்திரத்துப் ‘பல்வேறு நிலை’ என்றனான் கொண்ட கூற்று இது. (தொ. பொ. 145 இள.)

தலைவி, பாணனை மறுத்தல் -

{Entry: I09__045}

பரத்தையிற் பிரிவில் வைகிய தலைவன் தலைவியை மகப் பேற்றுக்குப் பின்னர்க் காணச் சென்றபோது, அவள் ஊட, அதனைத் தணிக்கும் வாயிலாகப் பாணனை அவன் அனுப்பவே, அப்பாணன் வாயிலையும் அவன் கூறியதையும் அவள் ஏற்காமல் மறுத்தல்.

“மாடு தின்னும் புலைய! நீ கூரிய ஊசியைக் கொல்லன் தெருவில் விற்பவன், தலைவன் நேர்மையானவன் எனவும், என்னிடம் மாறா அன்பினன் எனவும் பொய் பேசுவதற் காகவே நீ இங்கு வந்துள்ளாய்” (கோவை. 386) என்றல் போலத் தலைவி கூறிப் பாணனை வாயில் மறுத்தல்.

‘பாணனொடு வெகுளுதல்’ எனவும் கூறப்படும் (கோவை. 386).

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 206)

தலைவி, பிரித்தல் பற்றிக் கூறல் -

{Entry: I09__046}

பிரித்தல் - தலைவனை நீக்கி நிறுத்தல்.

“தோழி! நம் தலைவனை வலியப் பற்றி ‘நீ கைக்கொண்ட என் நலத்தைத் திருப்பித் தருக’ என்று கேட்கலாம். துன்பத்துக்கு அஞ்சி இரந்தவர் வேண்டியதைக் கொடுத்து, மீட்டும் அதனைத் தா என்று கேட்டுப் பெற்று வாழ்வதைவிட உயிரை விட்டு விடுதல் இன்னாதாகாது” என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 145 இள.)

“தோழி! கொறுக்கையின் உச்சியில் பூத்த வெண்பூக்கள் வானத்தில் பறக்கும் கழுகினைப் போலக் காட்சியளிக்கும் ஊரனாம் தலைவன், புதுப்புது மகளிரை விரும்பிச் செல்லுத லான், நம் இல்லம் வருவான் என்று அறியாமையின் கருதும் என் நெஞ்சம் நினைத்தது முடியாமல் வருந்துகிறது” (ஐங். 17) என்ற தலைவி கூற்று. (147 நச்.)

தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -

{Entry: I09__047}

“தோழி! இன்று நிலையில்லாத பொருளிடத்து விருப்பினால் வெப்பம் மிக்க பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடப் பிரிந்து சென்றுள்ள தலைவர், நேற்றுவரை நம்மை ஒரு நாளும் பிரியாதவரைப் போல அத்துணை அன்பொடு நம்மிடம் பழகினாரே!”என்ற தலைவி கூற்று. (ஐங். 336)

தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

{Entry: I09__048}

“யான் திருமால் திருமுன்றிலை அடையின், அவர்முன்னே என்னிடமிருந்து பறித்துப்போன என் வளைகளையும் கணையாழியையும் மீளப் பெற்றுக்கொள்வேன். அவற்றைக் கொடுத்தருளாமல் பாராமுகம் செய்வரேல், ‘உம்மிடம் கதையும் வாளும் வில்லும் இருப்பது போதும், உம்முடைய சங்கையும் சக்கரத்தையும் (சங்கு - வளை; சக்கரம் - ஆழி, மோதிரம்) தாரும்’ என்று கேட்பேன். அவர் ‘அவற்றை அடியார்களிடம் ஈடுவைத்துவிட்டோம் (-திருமுத்திரை வைத்துக் கொடுத்தோம்)’ என்று கூறின், அவரைத் தீண்டி அவரது திருத்துழாய் மாலையைப் பற்றிக் கொள்வேன்” என்ற பெருந்திணைத் தலைவி கூற்று. (திருவரங்கக். 91)

தலைவி, புதல்வன் வாயிலாகக் கூறல் -

{Entry: I09__049}

தலைவன் இல்லத்திற்கு வந்து புதல்வனை எடுத்துக்கொண்டு அவனை வாயிலாகக் கொண்டவழித் தலைவி, “என் புதல்வனைப் பலவாறு பொய்யாகப் பாராட்டி ஏன் இவ் வில்லத்து முகப்பில் நிற்கிறாய்? இவன் நின் அலங்காரங் களையெல்லாம் சிதைத்துவிடுவான். இவனை என்னிடம் தந்துவிட்டு அப்பரத்தையர் இல்லத்திற்கே செல்க” (கலி. 79) என்று புதல்வன் வாயிலாகப் புக்க தலைவனிடம் கூறுதல்.

(தொ. பொ. 145 இள.)

‘வாயிலின் வரூஉம் வகை’ என்றதனான் கொண்ட கூற்று இது.

தலைவி, புலவி தணியாளாதல் -

{Entry: I09__050}

தலைவியின் கோபத்தைப் பாங்கி தணிக்க முயலவும், தலைவி கோபம் தணியாமல் இருத்தல்.

“புனல் நாட! நாடும் ஊரும் இல்லும் நாங்கள் பரத்தையரைப் போல இனிமையுடையோம் அல்லோம். ஆதலின் சான்றோ னாகிய நினக்கு எம் தொடர்பு தகுவதன்று” (அம்பிகா. 496) என்று தலைவி கூறுதல்.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடல்; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 555 உரை)

தலைவி, புலவி நீங்கும் காலம் -

{Entry: I09__051}

பரத்தையிற் பிரிந்த தலைவன் தன் தவற்றை ஒத்துக்கொண்டு தவறு செய்தற்குக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன்மனத்துப் புலவியை நீக்கி அவனைத் தழுவிக் கொண்டு, தலைவி தன்னைவிட உயர்ந்த குணமுடையவள் என்று தலைவன் கருதுமாறு, வாழ்க்கைக்கு நன்மை பயப்பன வற்றையே கூறும் தாயரைப் போல, அவனுக்கு மனத்தில் பதியுமாறு நல்லுபதேசம் செய்து அவனுடைய மனக்கவலை களை மாற்றி முன்பு போல அன்பு செய்து ஒழுகுவாள். (தொ. பொ. 173 நச்.)

தலைவி, புள்ளை நொந்து கூறல் -

{Entry: I09__052}

“தோழி! தலைவன் சென்ற நாட்டிலுள்ள பறவைக் கூட்டங்கள், ‘யாங்கள் துணையொடு கூடிவாழவும், நீ எவ்வாறு உன் தலைவியைப் பிரிந்து செயற்படுகிறாய்?’ என்று தலைவனை முன் நின்று கேட்கும் ஆற்றல் இல்லாதனவோ?” (ஐங். 333) என்று தலைவி புள்ளினங்களிடத்தே வருந்திக் கூறுதல்.

இச்சூத்திரத்துப் ‘பல்வேறு நிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, புள்ளொடு புலம்பல் -

{Entry: I09__053}

தலைவன் என்னைப் பிரிந்து செல்ல என்நிலை கண்டு என்னை எள்ளுபவர்கள் தம் கணவன்மார்களைப் பிரியாத வர்கள்போலும். கூடிவாழும் அன்றில்களே! அன்னங்களே! உம் தலைவர்கள் பிரிந்து செல்வாராயின் நீங்கள் அவர்க ளோடே பிரியாது சென்று விடுங்கள்” (அம்பிகா. 292) என்றாற் போலப் பிரிவுத்துன்பத்தால் தலைவி பறவைக ளிடத்துப் பேசுதல்.

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ.வி. 525 உரை)

தலைவி, பெட்பின்கண் கூறல் -

{Entry: I09__054}

பெட்பு - தலைவனைப் பேணிக் கொள்ளுதல்.

“தோழி! தலைவன் பரத்தையைக் கூடி வரவும் சிறிதும் ஊடுதல் இன்றி ஏற்றுக் கொள்கின்றேன் என்று என்னைக் குறை கூறுகிறாய். தலைவன் விருந்தினரை அழைத்துக் கொண்டு வருகிறான்; அல்லது பொய்ச்சூள் உரைக்கத் தொடங்குகிறான்; அல்லது, புதல்வனைத் தழுவிப் பொய் யுறக்கம் கொள்கிறான். யான் விருந்தினரை எதிர்கொள்ளுத லினாலும் அவன் பொய்ச்சூளுக்கு அஞ்சுதலினாலும், அவன் புதல்வனிடம் கொள்ளும் அன்பை நினைத்தலினாலும், நெஞ்சு நெகிழ்ந்து ஊடலை மறந்து கடமைஉள்ளத்தொடு செயற்படும் நிலையினேன்” (கலி. 75) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 147 நச்.; 145 இள.)

தலைவி பெயர்கள் -

{Entry: I09__055}

குறிஞ்சி நிலத் தலைவி - கொடிச்சி, குறத்தி
பாலை நிலத் தலைவி - எயிற்றி, பேதை

முல்லை நிலத் தலைவி - கிழத்தி, மனைவி
மருத நிலத் தலைவி - கிழத்தி, மனைவி
நெய்தல் நிலத் தலைவி - நுளைச்சி, பரத்தி

‘திணை நிலைப் பெயர்’ காண்க. (இறை. அ. 1 உரை)

தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -

{Entry: I09__056}

தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுமகிழ்ச்சியுற்று, வரைவு நீட்டித்த காலத்துப் பெற்றவழி மகிழ்ச்சியை வெளிப்படையாகக் கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்ற மகிழ்வை வெளிப்படுத் தாமலும் தலைவி ஒழுகும்போது தலைவனிடமும் தோழி யிடமும்) கூறுதல்.

தலைவனிடம், “குன்றநாட! உன்னைப் பிரிந்தவழி நினைக்கும் போதெல்லாம் என்னைத் துன்புறுத்தும் வாடைக் காற்றில் பலரும் உறங்கும் நடுநிசியில் நின் வரவை யான் எதிர்நோக்கி நிற்கும் நிலை, என் கொங்கைகள் நின் மார்பில் அழுந்துமாறு நின்னைப் பலகாலும் தழுவிக்கொள்ளும் இவ்வின்பத்தைவிட இனிதாக உள்ளது” (அகநா. 58) எனவும்,

தோழியிடம், “தோழி! தலைவன் வந்தஅளவில் இரங்கத்தக்க நிலையில் மெலிந்து காணப்பட்ட என் தோள்கள் பழைய அழகினைப் பெற்றவிட்டன!” (ஐங். 120) எனவும்

“தோழி! பலமுறை கடற்கரையில் விளையாடிய தலைவன், தாய் முதலியோர்க்குத் தெரியாது பதுங்கித் தாயினது அரிய காவலிடையேயும் நம்மைக் காணவந்துள்ளான்” (ஐங். 115) எனவும்

“தோழி! தலைவன் நாட்டினின்று அருவி வழியே வந்த காந்தட் செடியினை வளர்ப்பதனையும் அதனைத் தழுவிக் கொள்ளுதலையும் தடுக்காத தாய் சுவர்க்க இன்பத்தினை இம்மையிலேயே அடைவாளாக!” (குறுந். 361) எனவும் தலைவி கூறுதல் இக்கூற்றின் பாற்படும். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -

{Entry: I09__057}

தலைவன் மடலேறுவதாகக் கூறிய கூற்றினை மெய்யென்று கொள்ளாது விளையாட்டு வகையான் கூறிய பொய் என்று தலைவி இகழ்ந்து கூறுதல்.

“ஐய! நீ மடலேறுவதற்குக் குதிரை புனையப் பனைமடல் வேண்டும். அப்படிப் பனை மட்டைகள் முழுதையும் வெட்டுவையேல், பனைமேலுள்ள வெள்ளாங்குருகின் பிள்ளைகள், சிறுகருங் காக்கைகள், தூக்கணங்குருவிக் கூட்டிலுள்ள முட்டைகள் ஆகியவை அழிந்துவிடும். அருள் உள்ளம் கொண்ட நின்னான் அத்தகைய கொடுஞ்செயல் புரிதல் இயலாது. ஆதலின் பறவைக் கூட்டம் நின்னை மடலேற விடாது” என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி பொய்ம்மை கூறல் -

{Entry: I09__058}

தலைவன் தன் பரத்தைமையை மறைத்தற்காகக் கூறிய பொய்யுரைகளைத் தலைவி அவனுக்குக் கூறுதல்.

“தலைவரே! என் தங்கைகளாம் பரத்தையர், நுங்கட்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிலையினராக - அஃதாவது ஒருநாள் புதுப்புனலாகவும், மறுநாள் வேட்டைப் புள்ளாக வும், வேறொருநாள் விழாக்காணும் கடவுளராகவும், இன்ன மொருநாள் குதிரையாகவும் பின்னும் ஒருநாள் யானையாக வும் - ஆகிவிடுவார்களோ?” என்று தலைவி எள்ளி உரைத்த வாறு. (தலைவன், புதுப்புனலாடச் சென்றதாகவும், புள்வேட் டைக்குப் போனதாகவும், திருவிழாக்காண ஏகியதாகவும், குதிரை ஊரவும் யானை இவரவும் படர்ந்ததாகவும், நாளும் பொய் உரைத்துப் பரத்தையர்இல்லம் சென்றமையை இவ்வாறு இகழ்ந்து உரைத்தாள்) (அம்பிகா. 510)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

தலைவி, பொழுதுகண்டு மகிழ்ந்து கூறல் -

{Entry: I09__059}

தலைவி தோழியிடம், “உழவர் சிறுவட்டிகளில் விதைகளைக் கொண்டு சென்று விதைத்துவிட்டு அவ்வட்டிகள் நிறையப் பூக்களைப் பறித்திட்டு மீளும் மாலையில், ‘குறுங்காட்டில் தேரில் கட்டிய மணிகள் ஒலிக்க இந்நேரத்தில் தேர் வருகிறது’ என்று சொல்லிய சொல் முடியுமுன்னே நாம் விருந்து அயருமாறு தலைவன் தேர் வந்துவிட்டது!” (குறுந். 155) என்று மகிழ்ந்து கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துப் ‘பல்வேறு நிலை’ என்றதனான் கொண்ட கூற்று. (தொ. பொ. 147 நச்.)

தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

{Entry: I09__060}

தலைவன் இரவுக்குறி வருங்கால் பொழுதோ வரும் வழியோ இடையூறாகிப் பொருந்துதல் இன்மையின், அப்பொழுதின் கண்ணும் வழியின்கண்ணும் தலைவனுக்கு இடையூறு நேருமே என்ற எண்ணம் மிகும்போது தலைவி தோழியை நோக்கிக் கூறுதல்.

“ஊரிலுள்ளவர் உறங்கிவிட்டனர். யாமம் கொலை செய்பவரைப் போலக் கொடிதாயுள்ளது. காமம் எல்லைமீற இவ்வாறு யான் உள்ளம் தடுமாறிக் கொண்டிருக்கவும், என் நெஞ்சம் என்னை விடுத்து மலையில் தலைவன் வரும் செங்குத்தான வழியில் மழைநீர் தங்கிய பள்ளத்தில் அவன் கால்களை வைக்கும்போது அவற்றைத் தான் கீழிருந்து தாங்கச் சென்றுவிட்டது.” (அகநா. 128)

“தோழி! உன்னால் ஒரு செயல் எனக்கு நடைபெற வேண்டும். தடுமாறும் என் உயிர்க்குப் பாதுகாவல் வேண்டுமாயின், நம் தலைவன் இரவில் என்னை நாடி மலைவழியே வருதலைத் தடுப்பாயாக” (ஐந். எழு. 14)

“தோழி! பகலில் யானையான் தாக்கப்பட்ட வேங்கை செந் நாயை வேட்டையாகக் கொல்லும் வாய்ப்பினை எதிர் நோக்கிப் பதுங்கி நிற்கும் இரவில் நம் தலைவன் வருகையைத் தவிர்க்குமாறு, நாளை முதல் தினைப்புனக் காவலுக்கு நம்மைத் தாய் அனுப்ப இருக்கும் செய்தியைச் சொல்லிப் பகற்குறி கொள்ளலாம் என்பதனைத் தெரிவிப்பாயாக!” (குறுந். 141) என்பன போன்ற தலைவி கூற்றுக்கள். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, போலி கண்டு உரைத்தல் -

{Entry: I09__061}

பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி தலைவனை நினைவு படுத்தும் வேறு அழகிய பொருள்களைப் பார்த்து ஆற்றாமையொடு பேசுதல்.

“மேகங்களே! உங்களது கருமைச் செறிவினிடையே மின்னற் கொடி ஓட, பொற்கொடி போன்ற பிராட்டியுடன் இணைந் துள்ள எம்பெருமானுடைய திருமேனியைப் போலவே விளங்குகிறீர். இப்படி எம்பெருமானைப் போன்ற தன்மை யைப் பெற நீங்கள் செய்த யோகம், கையாண்ட உபாயம்தாம் யாவை? நல்ல நீர்ச்சுமையைத் தாங்கிக் கொண்டு உலக மெல்லாம் வான்வழியே திரிந்து நீர் பொழிந்து உயிர்களைக் காக்கின்ற உங்கள் செயல்தான், அவன் அருளைப் பெற நீங்கள் செய்யும் தவமோ? அத்தவத்தின் பயன்தானோ, இம்மேனி ஒப்புமை?” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையில் பாற்படும். (திருவி. 32)

தலைவி, மகனைக் கண்டு கூறல் -

{Entry: I09__062}

“வெள்ளாங்குருகின்பிள்ளை இறந்ததாக, அதனைக் காணச் சென்ற நாரை தன் செயல் முடிந்த அளவில் திரும்பாது காலையிலிருந்து மாலைவரை தங்குதற்கு இடனாகிய அப்பகுதிக் கடற்கரைத் துறைவனாகிய தன் தந்தையொடு வாராமல், மகன், விளையாடித் தனித்து வந்துள்ளான். நல்ல காலம்! தலைவன் புதல்வனை வாயிலாகப் பற்றாமல் விட்டுவிட்டான்!” (ஐங். 157) என்ற தலைவி கூற்று.

‘வாயிலின் வரூஉம் வகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட கூற்று இது. (தொ. பொ. 147 நச்.)

தலைவி மடமை கூறல் -

{Entry: I09__063}

தன் அறியாமையைத் தலைவி கூறிக்கொள்ளுதல்.

“தலைவன் என்னைக் கைவிடமாட்டான் என்று நினைத்தேன். என் கண்களும் மெய்யும் அழகு அழிநிலையை எய்திவிட்டன. அறிவுடையோர் செய்யும் கல்நெஞ்சச் செய்திகளை மடவோராகிய பெண்கள் யாங்ஙனம் அறிதல் கூடும்?” (அம்பிகா. 298) என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 525 உரை)

தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -

{Entry: I09__064}

தோழி செவிலியிடம், “நின்மகள் மன்மதனை எமன் என்று கூறுகிறாள்; எல்லாராலும் விரும்பப்படும் பொதியமலையி னின்று வரும் தென்றல் தன்மேல் சிறிது வீசினும் வருந்து கிறாள்; நள்ளிரவிலும் துயிலாள். அழகரிடத்தே கொண்ட காதலால் இவளுக்கு விளைந்துள்ள துன்பத்தைப் போக்க, கரிய பனையினது மடலை ஊர்தலைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை” என்று தலைவி மடலேறத் துணிந்ததாகக் கூறி அவள் காதலைச் செவிலிக்கு அறிவுறுத்தி அவள் வாயிலாக அறத்தொடு நிற்றல்.

இது சுட்டி ஒருவர் பெயர்கோடலின் அகப்புறக் கைக்கிளை.

(அழகரந்தாதி. 17)

தலைவி, மடல் ஏறத் துணிதல் -

{Entry: I09__065}

“தோழி! என் நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, என் நெஞ்சையும் தன்பால் ஈர்த்துக் கொண்டுவிட்ட திருமால் என்னை வந்து கூடவில்லை. என்னை ஊரார் அலர் தூற்று வதையும் நான் பொருட்படுத்தேன். அவனை உலகமே பழிக்கும் வகையில், நான் அடங்காத பெண் என்று பிறர் கூறுவதனையும் பொருட்படுத்தாமல் மடல் ஊர்வேன்” என்ற தலைவி கூற்று.

இது மடலேறத் துணிதலாகக் கூறுவதன்றி, மடலேறுமாறு யாண்டும் இல்லை என்பது.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவாய். 5 - 3 - 1)

தலைவி மடன் அழியும் இடம் -

{Entry: I09__066}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தன்னிடம் புறத்தொழுக் கம் இன்று என்று கூறுமிடத்தும், அங்ஙனம் பொய் உரைத்த தலைவனைத் தலைவி கூட விரும்புமிடத்தும், தலைவி மடன் அழிந்து தலைவனொடு கூற்று நிகழ்த்தி அவனது புறத் தொழுக்கத்தை வெளிப்படுத்துவாள். (தொ. பொ. 205 நச்.)

தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -

{Entry: I09__067}

முதற்கண் தலைவனை வழிபடுதலை மறுத்த தலைவியே அவனை ஏற்றுக்கோடலை விரும்பிய நிலையில் தோழிக்குக் கூறுதல்.

“தோழி! பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினால் காமம் மெலிவு அடையும். அக்காமத்தை விட்டுவிடின் நாணம் மட்டுமே என்பால் எஞ்சியிருக்கும். தலைவன் நுகர்ந்த என் பெண்மை நலம் யானையால் தழைக்காக வளைக்கப்பட்டு நிலத்தில் படாது சாய்ந்து தோன்றும் கிளையைப் போன் றுள்ளது. (வளைந்த கிளை இப்பொழுது வாடிக் காணினும் பின்னும் தழைத்தற்கு வாய்ப்புண்டாதல் போல, இப்பொ ழுது பொலிவு இழந்திருக்கும் யான் தலைவன் வரைந்தெய் தின் பண்டை வனப்பினைப் பெறுதல் கூடும்)” (குறுந். 112) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -

{Entry: I09__068}

தலைவன் புணர்ந்து நீங்குங்கால், தலைவி, தன் காதல் மிகுதியால் அவன் மறையும்வரை நோக்கிநின்று, அங்ஙனம் மறையும் தலைவனைக் காண்டற்கண் தோழியை நோக்கிக் கூறுதல்.

“தலைவன் நம்மொடு கழிகளிலுள்ள பூக்களைக் கொய்தும், சோலையில் தங்கியும், மணலில் வண்டற்பாவை செய்து விளையாடியும், இன்புறக் கூடியும், தன் சிறுமை தோன்றப் பணிமொழி கூறியும், நம் துயரைத் தான் அறியாமையால் பிரிவுக்குத் தானே வருந்துவதாகக் கருதிச் சோர்ந்த மனத்துடன் செல்லாநிற்கும். அங்ஙனம் செல்லும் தலைவ னுக்கு முன்போய், ‘நீ செல்லற்க’ என்று தடுக்கச் சென்ற என் நெஞ்சம், அவனுக்கு முன்னர்ப் போகியும் என் காமத்தைக் கூற நாணி வாளா இருக்கிறது போலும்! அதோ தோன்றும் தலைவனது தேர் மீன்பிடி படகினைப் போல உயர்ந்து தோன்றும் தோற்றத்தொடு விரைவில் மறையப் போகிறது” (அகநா. 330) என்பது போன்ற தலைவி கூற்று.

“நம் துயரைத் தலைவன் அறியாமையான்” என்பது தன்வயின் உரிமை; “அவன் தேர் மறையும்” என்பது அவன்வயின் அயன்மை.

மறைந்தவற் காண்டல் என்பதற்குத் தன்னைத் தலைவன்
காணாமல் தான் நின்று அவனைக் காணும் காட்சி என்று உரைப்பாரும் உளர். (109 இள.) (தொ. பொ. 111 நச்.)

தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -

{Entry: I09__069}

தலைவிக்குச் செறிவு, நிறைவு, செம்மை, செப்பு, அறிவு, அருமை ஆகிய ஆறும் பிறவிப் பண்புகள் ஆதலின், தலைவன் பாங்கனிடம் தன் மறையை வெளிப்படுத்தியது போன்று, தானும் தன் தோழியிடம் கூறாமல் காலம் தாழ்த்துவாள். (தொ. பொ. 160 குழந்தை)

தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

{Entry: I09__070}

தலைவி காப்பு மிகுதிக்கண் இற்செறிக்கப்பட்டு உணர்வு அழிந்தவிடத்து கூறுதற்கு அரிய இரகசியத்தைத் தோழியிடம் கூறுதல்.

“தோழி! நேற்றுத் தலைவனிடத்துக் கொண்ட வேட்கையான் அவனை அடைய வேண்டும் என்ற அவா மிகுதிப்படக் காவல் மிகுதியான் அவனைக் காணமுடியாமல் பெருமூச்செறிந்து அம்பு தைத்த மான் போலே வருந்தினேனாக, என் துயரத்தின் காரணத்தை அறிந்தவள் போல அன்னை, ‘இன்னும் உறங்கவில்லையா?’ என்று கேட்டுக்கொண்டே என்னை அணுக, என் மனத்திற்குள்ளேயே, ‘கானக நாடன் ஆகிய தலைவனையே நினைத்துக்கொண்டிருப்பார்க்கு உறக்கமும் வருமோ?’ என்று கூறிக்கொண்டேனே ஒழியத் தாயிடம் மறுமொழி கூறவில்லை” (நற். 61) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -

{Entry: I09__071}

“மாலைப்பொழுதே! நெருப்பைக் கண்டால் அது சுட்டு விடுமோ என்று நடுங்குவதைப் போல, அது என்மீது பட்டால் என்னால் தாங்கமுடியாதே என்று நான் நடுங்கு மாறு வீசும் வாடைக்காற்றொடு சேர்ந்து நெருப்பைப் போன்று செந்நிறம் கொண்ட சிறுபொழுது அளவிற்றாய மாலையே! நீ நாள்தோறும் எம்பக்கம் வருவாய் ஆயினும் என் தலைவனுடைய நாட்டைப் பற்றி ஒன்றும் கூறாமல் இருக்கி றாயே” என்று தலைவி மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறுதல்.

‘வரைவிடை வைத்த காலத்து வருந்தல்’ என்பதன்கண் வேறுபட வரும் கூற்றுக்களில் இதுவும் ஒன்று. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -

{Entry: I09__072}

உடன்போக்குப் போய் மீண்ட தலைவனுடன் தன்னூருக்கு வரலுறும் தலைவி, வழியிடைத் தமக்கு முன் செல்பவர்க ளிடம் தான் மீண்டுவந்த செய்தியைத் தன் தோழியரிடம் கூறுமாறு சொல்லி அனுப்புதல்.

“அந்தணீர்! தம்மை யான் பிரிந்த அன்று தொடங்கி மனம் சுழலும் ஆயத்தாருக்கு யாம் அவர்கள் ஊருக்கு மீண்டுவரும் செய்தியைச் சொல்லுங்கள்” (அம்பிகா. 411) என்பது போன்ற தலைவி கூற்று. (ந. அ. 191)

தலைவி, முன்னிலைப் புறமொழி மொழிதல் -

{Entry: I09__073}

தன்னை இடித்துரைத்த பாங்கி எதிரே நிற்கவும் அவளை நோக்கிக் கூறாமல் வேறு யாருக்கோ கூறுவது போலத் தலைவி கூறுதல்.

“தாய் முகம் நோக்கி வளரும் தன்மையையுடைய யாமைப் பார்ப்பினைப் போலத் தலைவரைப் பலகாலும் காண்பதால் வளரும் என் காமமானது, அவர் நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாய் அடைகாக்காத முட்டை கிடந்தபடியே அழிவது போல, உள்ளத்துள்ளே கிடந்து மெலிதலே யல்லாமல் வேறு யாது உறுதியுடையது? என்னை இடித் துரைப்போர் இதனைச் சிறிதும் அறிகிலரே!” (குறுந். 152) என்பது போன்ற தலைவி கூற்று. (ந. அ. 154)

தலைவி மையல் -

{Entry: I09__074}

தலைவனுக்குத் தன் உறவினர் தன்னை மணம் செய்து கொடுக்க மறுத்தவழித் தலைவி மயங்கி ஆற்றாளாதல்.

இது கற்பியலுள், ‘அறத்தொடு நிலை’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 22)

“தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: I09__075}

“தோழி! தலைவன் இன்பம் தரும் இளமைப்பருவத்தில் அவன் வேற்றிடம் பிரிந்து போதற்கு உடன்பட்டு, பிரிந்த பின் வேற்று நாட்டிலிருக்கும் அவன் நலம் எவ்வாறுளதோ என்று கவலைப்பட்டு இருத்தலுக்கும் உடன்பட்டு, தமக்குப் பிரிவால் ஏற்படும் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டு அவன் மீண்டு வருந்துணையும் அமைதியாக வாழ்பவர் உலகத்து ஒருவரும் இரார்” என்ற தலைவி கூற்று. (குறள் 1160)

தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -

{Entry: I09__076}

நாளது சின்மையும் இளமையது அருமையும், தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும், இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற் சியது அருமையும் தலைவன் கூறக்கேட்ட தோழி பின்னொரு காலத்துப் பொருள் தேடுதற்குப் பிரியக் கருதிய தலைமகனை நோக்கி,

“ஐய! பொருள் தேடுதற்கண் உள்ள ஆசையால் எங்களைப் பிரிந்து வேற்றிடத்தில் தங்கியிருத்தலை நினையற்க. நீ விரும்பித் தலைவி தோளில் எழுதிய தொய்யிலின் அழகை யும், நின்னையே வலிமையாக உடைய அவள் மார்பில் பரவியுள்ள தேமலின் அழகையும் கைவிட ஒல்லுமாயின் எண்ணிப் பார்ப்பாயாக. நீ தேட நினைக்கும் பொருளும் நின் தகுதிக் கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்துச் செய்து முயன்று தேடத் தக்கதேயன்றி, நீ நினைத்த அளவில் முகந்து கொண்டு வருமாறு ஓரிடத்தில் குவிந்து கிடப்பதன்று. வெளிநாடு சென்று பொருள் தேடாதவர்களும் பட்டினி கிடந்து மடித லில்லை. இளமையையும் இருதலையும் ஒத்த காமத்தையும் ஒருசேரப் பெற்றவர்கள் செல்வத்தை விரும்புதற்கு ஒரு பெருந்தகுதி அச்செல்வத்திற்கு இல்லை. தமக்கென வரை யறுக்கப் பெற்ற வாழ்நாளில் மிகக் குறைந்த இன்றியமை யாதனவான உடைகளை யுடுத்து வாழும் எளிய வாழ்க்கை யரே ஆயினும், பிரியாதிருப்பவர்களுடைய வாழ்க்கையே சுவையான தொன்றாம். சென்ற இளமை மீட்க ஒண்ணாதது” (கலி. 18) என்று கூறும் கூற்றின்கண் தமக்கென வரையறுக்கப் பட்ட வாழ்நாள் என நாளது சின்மையும், சென்ற இளமை மீட்க ஒண்ணாதது என இளமையது அருமையும்’ பொருள் தேடுதற்கண் உள்ள ஆசை எனத் தாளாண் பக்கமும், அவரவர் தகுதிக்கேற்ற செயலே செய்து பொருள் தேட வேண்டும் எனத் தகுதியது அமைதியும், மிகக் குறைந்த இன்றியமையாமைப்பட்ட உடைகளை உடுத்து வாழும், எளிய வாழ்க்கை என இன்மையது இளிவும், இளமைச் செல்வமும் காமச் செல்வமும் ஒரு சேரப் பெற்றவர்க்குப் பொருட்செல்வம் அதனைவிடச் சிறந்ததன்று என உடைமையது உயர்ச்சியும், எங்களைப் பிரிந்து வேற்றிடத்துத் தங்குதலை நினையற்க என அன்பினது அகலமும், பிரியா திருப்பவர் வாழும் வாழ்க்கையே சுவையானது, தலைவியின் தொய்யிலையும் தேமலையும் நினைத்துப்பார் என அகற் சியது அருமையும் - எனத் தலைவன் கூற்றினின்றே அறிந்து கொண்டவள், அவனிடம் எடுத்துக்கூறி அவன் பிரிவை விலக்குதல்.

இதுவும் பாலைத்திணை.

“தம்மை அருள்பண்ணி வந்த அந்தணர் தாபதர் முதலி யோருக்கு அறம் செய்து வேண்டுவன கொடுத்தலும், பெரிய பகைவர்களை வென்று அப்பெருமிதத்தொடு தம்மை வழிபடாதவர்களை அழித்தலும், இனிய இல்லற இன்பத் தினை நுகர்தலும் தருவது பொருளே ஆதலின் அப் பொருள் தேடப் பிரிவல்” என்று தலைவன் கூறிப் பிரிந்தபின், அவன் குறித்த பருவத்து மீண்டு வாராமை குறித்து ஆற்றாளாகிய தலைவியைத் தோழி, “தலைவன் அறத்தாற் பொருள் தேடி அப்பொருளால் இன்பம் துய்ப்போம்” என்று ‘மூன்றன் பகுதி’ கூறிப் பிரிந்ததை நினைவுறுத்தி ஆற்றுவித் ததும் ‘நிகழ்ந்தது கூறி நிலையல்’ ஆகிய பாலைத்திணையாம்.
(கலி. 11) (தொ. பொ. 44 நச்.)

தலைவியைக் காப்போர் -

{Entry: I09__077}

தலைவியின் உயிரும் நாணும் மடனும் அவளை விட்டு நீங்காமல் காத்தற்குரியார் நற்றாய், செவிலி, தோழி, தலைவன் எனும் நால்வர் ஆவர்.

தலைவன்பிரிவால் தலைவி உயிர் வாடி இறந்துபோகாமலும், நாணும் மடனும் நீங்கித் தலைவனுடன் போகாமலும், கற்பில் நாணும் மடனும் நீங்கி (அவன் பரத்தைமையை) வெளிப்படக் கூறாமலும், தோழி தலைவியை ஆற்றுவித்துக் காப்பாள்.

களவில் தோழி அறத்தொடு நிற்பவே, செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தன்னையர்க்கும் அறத்தொடு நின்று, தலைவியினுடைய உயிர் நாணம் மடங்களைக் காப்பர். (தொ. பொ. 96 குழ.)

‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

{Entry: I09__078}

“நம் தலைவன் தன்னை விரும்பிய மகளிர் மையுண்ட கண்கள் பசந்து நீர்த்துளிகளைச் சொரியுமாறு பொய் சொல்லி ஏமாற் றுவதில் வல்லவன்; தான் சொன்ன உறுதிமொழிகளைச் செயற்படுத்துவதில் ஒருபோதும் நாட்டம் கொள்பவன் அல்லன்” என்ற காதற் பரத்தையது கூற்று. (ஐங். 37)

தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -

{Entry: I09__079}

தலைவியினது வருத்தம் பற்றி வினவிய தோழிக்கு, அவள் தான் தலைவனைக் கனவில் கண்டு விழித்துப் பின் அவன் இன்மையின் வருந்தியமையைக் கூறுதல்.

“தோழி! நேற்றிரவு, உண்மையில் பொய் சொல்வதில் வல்ல நம் தலைவன் என்னைத் தழுவிக்கொண்டதைக் கனவில் கண்டு, அதனை நனவாகக் கொண்டு படுக்கையினின்று மகிழ் வோடு எழுந்து, அதனைத் தடவிப்பார்த்து அவன் இல்லாமையுணர்ந்து, வண்டு கோதிய மலரைப் போலத் தனிமைத் துயரால் இரங்கத்தக்க நிலையளாய் உள்ளேன்” (குறுந். 30) என்ற தலைவி கூற்று.

இது ‘வரைவிடை வைத்த காலத்து வருந்துதல்’ என்பதன்கண் வேறுபட வரும் கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -

{Entry: I09__080}

புரை தீர் கிளவி - உயர்ச்சி நீங்கிய சொல்; அஃதாவது இயற் பழித்தல்.

தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி தலைவன் தலைவியை விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பினான் அவனை இயற்பழித்து மொழிய, அக்கூற்றினை மறுப்பாள் போன்று தலைவி அவனை இயற்பட மொழிதல்.

“தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் விடுத்தவனது மலையாய் இருந்தும், இத்தலைவன் மலை பருவமழை தவறாமல் பெய்வதால், விளங்குகின்ற அருவியையுடையதாய் இருப்பது வியப்பைத் தருகிறது!” என்று தோழி தலைவனை இயற்பழித்து மொழிய, அக்கூற்றை மறுப்பாள் போன்று, “என் தலைவன் பொய்த்தற்கு உரியன் அல்லன். ‘அஞ்சற்க’ என்று தன்னான் காக்கப்படுபவரிடம் ஒருபோதும் பொய் யான். அவனது வாய்மையினிடையே பொய் தோன்றுதல் என்பது தண்மதியத்தினின்று நெருப்புத் தோன்றுதல் போன்று நிகழா நிகழ்ச்சியாம்” என்றாற் போலத் தலைவி இயற்பட மொழிதல். (கலி. 41)

‘புரைதீர் கிளவி’ என்பதற்குத் தாழ்ச்சி நீங்கிய சொற்கள் என்று பொருள் செய்து, தலைவி தலைவனை இயற்பழிக்கத் தோழி இயற்பட மொழிய உரையாடல் நிகழ்த்துதலும் கொள்ளப்படும்.

“சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் விடுத்தவன் தலைவன்” என்று தலைவி தலைவனை இயற்பழித்தவழி, தோழி, “‘அஞ்சல்’ என்று தன்னான் காக்கப்படுவாரிடம் தான் கூறிய உறுதிமொழியைத் தலைவன் ஒருகாலும் தவறான்” என்று இயற்பட மொழிதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (கலி. 41 நச். உரை)

தலைவன் விரைவில் வரையாது ஒழுகினானாகத் தோழி தலைவியிடம், “தலைவன் நம் நிலையை அறியானாயின், அவன் திறத்து என்ன செய்வேன்?” என்று இயற்பழித்தவழித் தலைவி வெகுண்டு, “நீ அவரை அறியாது இயற்பழித்தாய். நீ கூறியதை யான் விளையாட்டாகக் கொள்கிறேன். இல்லை யெனில், உன்னைத் தண்டம் செய்ய வேண்டி வரும். அது போது நீ எந்நிலையினை ஆவாய்?’ என்று கூறுதலும் (குறுந். 96) ஆம். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -

{Entry: I09__081}

வரையாது ஒழுகும் தலைவன் ஒருஞான்று தோழியையா யினும் ஆயத்தையாயினும் செவிலியையாயினும் எதிர்பாரா வகையில் சந்தித்தலும் கூடும். இதற்குமுன் தோழியிடமும் மறைபுலப்படுத்தாது களவொழுக்கம் ஒழுகிய தலைவி, இப்பொழுதுதோழி தன்னை வினவினும் வினவாவிடினும் அவளிடம் மறையைப் புலப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவாள்; அப்பொழுது அவளிடம் கூறுதல்.

தோழி தலைவியை, “ஞாயிறு போன்ற உன்மேனி ஒளி கெடவும், பாம்பினால் மறைக்கப்பட்ட சந்திரனைப் போல உன் நெற்றி ஒளி மறையவும், உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ எனக்கு உரையாது மறைப்பினும், உன்னிடத்தே யான் உயிரையே வைத்திருப்பதால், உன் நிலையைக் கண்டு யானே உன்னை வினவுகின்றேன்” என்று கண்ணீருடன் வினவ, தலைவி, “யான் தினைப்புனம் காத்திருந்தபோது கண்ணியும் கழலும் மாலையும் அணிந்த ஒருவன் என் உடல் குளிருமாறு என் முதுகைத் தழுவினானாக, அதனையே யான் நினைத்துக் கொண்டிருந்தமையால் என் வனப்புக் குன்றிவிட்டது. யான் உற்ற நோய் இதுவே” என்று கூறுதல் (நற். 128) போல்வன.

தலைவன் ஒருநாள் தலைவியைக் காண வந்தபோது ஆயத்தார் உடன் இருந்தமையால், அவளுடைய கூட்டம் பெறாதே மீண்டு செல்ல, அதனால் ஆற்றாமையுற்ற தலைவி தோழியை நோக்கி, “தோழி! தலைவன் நம் தினைக் கொல்லையின் கதவருகே நின்றிருந்தான். அவனை நம் ஆயத்தார் எல்லோரும் கண்டனர். அவனைக் கண்டமையால் அவர்களிடை எம் மாற்றமும் நிகழ்ந்திலது - ஆயின் யானோ அவன் நினைப் பாகவே இருத்தலின், இரவில் உறங்குங்கால் அவனைக் கனவில் கூடிப் பின் கண்விழித்த அளவில் அவனை இன்றி யான் தனித்திருப்பதனைக் கண்டு தோள் நெகிழ்ந்து கண்ணீர் சொரிகிறேன்” (அகநா.82) என்று கூறுதல் போல்வன.

“தோழி!நம் கொல்லைப்புறத்தில் சிறுகதவு வழியே தலைவன் வந்து போகும் அடிச்சுவட்டைக் கண்டு, அப்பக்கமாக ஆண்மகன் ஒருவன் வந்து போகின்றான்போலும் என்று கொண்டு செவிலி அக்கதவை இனித் திறக்க முடியாதபடி அடைத்துவிட்டாள்” (கைந்நிலை 69) எனவும்,

“தோழி!நம் தலைவன் தன் தோள்களில் அழகிய மாலை புரள நம் மனைக் கொல்லைப்புறம் வந்து நின்றானாக, அவனைக் கண்ணுற்ற தாய் விரைவாக என்னிடம் வந்து, ‘நின் செயல் நன்றாக இருக்கிறது!” என்று என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சென்றாள்” (அகநா.248) எனவும் தலைவி தோழியிடம் கூறுதல் போல்வனவும் அமையும். (தொ. பொ. 112 நச்.)

தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -

{Entry: I09__082}

தலைவன், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தவழி அவன்பிரிவு குறித்து ஆற்றாத தலைவி அவன் மலையி லிருந்து வீசும் காற்றாவது தன் உடலிற் பட்டால் சற்று வருத்தம் குறையும் என்று தோழியிடம் கூறி அதற்கு வாய்ப்புச் செய்யுமாறு வேண்டுதல்.

“தோழி! என் நோய் மிகுதலால் உடலில் வெப்பம் மிகுந் துளது. நம் தலைவனது மலையுச்சியினின்று வரும் காற்று என் மேற்பட்டாலாவது சிறிது ஆறுதலாயிருக்கும்; கொடிய நெஞ்சினை யுடைய நம்தாயிடம் நீ விரைந்து சென்று, ‘நம் மனை முன்றிலில் இவளைச் சிறிது நேரம் மெல்லக் கிடத்தின், இவள் பெரிதும் நோய் நீங்கப் பெறுவாள்’ என்று கூறி அவள் இசைவு பெற்றுவா” (நற். 236) என்பது போன்ற தலைவி கூற்று.

இது ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தல்’ என்பதன் கண் வேறுபட வரும் கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -

{Entry: I09__083}

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தவழித் தலைவியது வருத்தம் கண்டு கவலையுற்ற தோழிக்கு அவள் கூறுதல்.

“தோழி! என்னைச் சந்தித்த தலைவன் என்னைப் பிரிந்து சென்ற அளவில் என்கண்கள் உறக்கத்தை நீத்துவிட்டன. அதுதான் காமநோயின் செயலோ?” (குறுந். 5) எனவும்,

“தோழி! நம் தலைவன் ‘இருவேமும் பிரியா அன்பினேம்’ என்று என்னிடம் கூறினானேயன்றி, ஊரவர் கூறும் பழி மொழிக்கு அஞ்சியவன் போல அவரெல்லாம் உறங்கிய நள்ளிரவிலும் என் நெஞ்சத்திடை வருதலைத் தவிர நேரே வருவதில்லை.என்னால் பிரிவுத்துயரைப் பொறுக்க இயல வில்லை. ‘உயிர் போய்விடுமோ’ என்று கூட அஞ்சுகிறேன். இவ்வாறு நம் தலைவன் செய்வது உயர்வுடைய செயலாமா என்பதைச் சொல்.” (குறுந். 302) எனவும் தலைவி கூறுதல். (தொ. பொ. 112 நச்.)

தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -

{Entry: I09__084}

வரைவு - தலைவன் திருமணத்தின் பொருட்டாகப் பொருள் தேடச் சென்ற வரைபொருட் பிரிவு.

“தோழி! வாழி! கொடியோராம் தலைவரது குன்றச்சாரல் நன்கு குளிர்க்குமாறு பொய்யா மேகம் மழை பொழியத் தொடங்கிவிட்டது. அவர் வாராமை குறித்து என் கண்களும் வெம்முலை மார்பினை நனைக்கலுறுகின்றன” என்ற தலைவி கூற்று.

‘வரைவிடை வைத்த காலத்து வருந்தல்’ என்றதன்கண் வேறுபட வருவதொரு கூற்று இது. (தொ. பொ. 112 நச்.)

தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -

{Entry: I09__085}

தலைவன் தலைவியை இயற்கைப் புணர்ச்சியால் கூடி நீங்கும்போது தான் வரைந்துகொள்ளத் திட்டமிட்ட நாளைத் தலைவிக்குக் குறிப்பிட்டுப் பின் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது அவளைப் பிரிந்தவழி, அவள் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததனைத் தோழி ஐயப்படாத வகையில் மறைத்து ஒழுகியபின், தலைவன் குறித்துச் சென்ற நாள்வரை பொறுத்திருக்க முடியாமல், தன் நெஞ்சிலுள்ள எண்ணம் புலப்படுமாறு தன்னுள் கூறிக் கொள்ளுதல்.

“மனைக் கொல்லையில் விளைந்த தினையில் தெய்வத் திற்காக விடப்பட்ட கதிர்களை அச்செய்தி அறியாமல் உண்ட மயில் ஆவேசம் வந்து ஆடுமவளைப் போல வேர்த்து நடுங்கும் தெய்வங்கள் பொருந்திய நம் மலைநாட்டுத் தலை வன் தொடர்பு, விடாத நினைப்பையும் கண்ணீர் நிரம்பிய கண்களையும் வழங்கிவிட்டதே!” (குறுந். 105) எனவும், (தொ. பொ. 110 இள.)

“நாடன் தகாதவனைப் போல ஒருகால் என் தொடர்பு தனக்கு இல்லை என்று பொய் கூறினாலும், அவன் என்னொடு கூடிய காலத்தில் அங்கிருந்த கடுவன் (ஆண்குரங்கு) அவனை நன்கு அறியும் ஆதலின் அது பொய்க்காது” (குறுந். 26) எனவும்,

“தலைவன் என்னைக் கூடியதற்கு அவனே சான்றாவான் அவன் என்னைக் கூடவில்லை என்று பொய்ப்பின், யான் யாது செய்ய இயலும்? அவளைத் தவிர, அவ்விடத்தில் ஓடும்நீரில் உணவுக்காக ஆரல்மீனைத் தேடிநின்ற நாரை இருந்தது. அதுவும் கொலைசூழும் மனமுடையது ஆதலின் உண்மையைக் கூறாதே! என்ன செய்வது?” (குறுந். 25) எனவும் தலைவி தன்னுள் கூறிக்கோடல். (112. நச்.)

தோழி வினவாதவழியும் தலைவி அவளிடத்துக் கூறலும் உண்டு. (நச்.)

தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -

{Entry: I09__086}

தலைவனுக்குத் தன்உறவினர் தன்னைத் திருமணம் செய்து கொடுக்க உடன்பட்டதனைக் கேட்டுத் தலைவி கூறுதல்.

“காட்டுமல்லிகை நிறைந்த சோலையில் வளர்ந்த காந்தளில் வண்டுகள் ஒலிக்கும் மலைநாடனாகிய தலைவனும் வரைவு வேண்டி வந்தான். இனி, அன்னை நம்மை வருத்தும் வருத்தம் நீங்கிவிடும்!” (ஐந்.எழு. 3) எனவும்,

“தோழி! எனது அழகிய நெற்றிக்கு உரிமையுடைய தலைவன் வரைவொடு வந்துவிட்டான். இதனால், அன்னை துன்புறுத் துவதும், தோழியாகிய நீ என்துயரை ஆற்றுவிக்க வருந்துவ தும், யான் தனிமைத் துயரில் இவர்களை அஞ்சிப் பொய் யுறக்கம் கொள்வதும், தீரும். யான் தலைவனை மணந்து அடையும் செய்தியைக் கேட்டு இவ்வூரவரும் இன்புறுக!” (குறுந். 34) எனவும் தலைவி விருப்பத்தொடு பலவாறு கூறுதல். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -

{Entry: I09__087}

தலைவன் களவு வெளிப்படாமுன்னரோ வெளிப்பட்ட பின்னரோ, தன்னை வரைதற்கு ஏற்பாடு செய்த இடத்துத் தலைவி கூறுதல்.

“தோழி! தலைவன் என்னை மணந்து கொள்ளும் நல்ல நாளில் நம் சுற்றத்தாரிடையே நான் அவர்களுடைய பரிகாசங் களுக்கெல்லாம் ஆளாக நேரிடும். வேங்கைமர நிழலிலே நம்மனை முற்றத்தில் வெளிப்படையான திருமணம் என்னும் கூட்டம் எனக்கும் தலைவனுக்கும் ஊர் ஒப்புக்காக நடை பெறும். அக்கூட்டம் நிகழ்ந்த பின்னர்க் கனவு போலத் தோன்றும் இக்களவுக் கூட்டத்தைநீக்கி விடலாம்!” (கலி. 39) எனவும்.

“நம் தலைவன் நம் கலந்த உறவு வேண்டி மணத்திற்கு ஏற்பாடு செய்வதற்காகச் சிலநாள் பிரிந்திருப்பதனை உட்கொண்டு என் தோள்கள் மெலிதலை மறந்துள்ளன.” (ஐந். எழு. 2) எனவும் தலைவி தோழியிடம் மகிழ்ந்து கூறுமாறு. (தொ. பொ. 111 நச்.)

தலைவி வலம்புரியை வாழ்த்தல் -

{Entry: I09__088}

பொருள்வயின் சென்று மீளும் தலைவனுடைய வரவை அறிவித்து மகிழ்ச்சியூட்டிய வலம்புரிச் சங்கினைத் தலைவி வாழ்த்துதல்.

“மல்லிகை மொட்டில் வண்டு இருந்தாற் போலக் காணப் படும் கரிய முகத்தையுடைய வெண்சங்கம் திருமால் கையில் இருக்கும். பாஞ்ச சன்னியத்தைப் போலப் பெருமையுற்று விளங்குக!” (தஞ்சை. கோ. 277) என்று தலைவி வலம்புரியை வாழ்த்துதல்.

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -

{Entry: I09__089}

வழி அருமை - தலைவன் பிரிந்து சென்ற சுரவழிகளது கடத்தற்கு அருமை.

“தோழி! நம் தலைவர் சென்ற வழி, கொடிய சூறைக்காற்று கிளை வழியே மோதுகையால் வாகை மரத்தினது நெற்றின் முற்றிய வற்றல்கள் ஒலிக்கும் மலைகளையுடைய கடத்தற்கரிய சுரம்” (குறுந். 39) எனவும்,

“தலைவர் பிரிந்து சென்ற வழி எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய சுனைகள் பல உடையது எனவும், அங்கு ஆறலை கள்வர் தம் அம்புகளை வெம்மையான பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பர் எனவும் கேள்வியுற்று, அவர் சென்ற அவ்வழியின் கொடுமையை நினைத்து யான் வருந்தவும், அதனை விடுத்து யான் பிரிவால் வருந்துவதாக நீ கருது கிறாயே?” (குறுந். 12) எனவும் தலைவி தோழிக்குக் கூறுவன. (தொ. பொ. 147 நச்.)

இச்சூத்திரத்துள் ‘பல் வேறு நிலை’ என்றதனாற் கொண்ட கூற்று.

தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -

{Entry: I09__090}

களவுக் காலத்தில் வருத்தமிகுதியால் தலைவனை வழிபட்டு அவன் விருப்பப்படி நடந்துகொள்ளுதலை மறுத்துத் தலைவி தோழியிடம் கூறுதல்.

“தோழி! தலைவர் எத்துணை மேம்பட்டவராயினும், அவரைப் பற்றிய நினைப்பே எனக்கு வேண்டா. அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கூறற்க. என் அறிவும் உள்ளமும் அவரை நோக்கிச் செல்லவே, என் உடல் வறிதாக உள்ளது. இனி அவர் வந்தாலும் என் நோய் தீர்க்கும் மருந்து ஆகார். ஆதலின் அவர் வாராது தம் இருப்பிடத்திலேயே இருப்பா ராக! இங்குக் காம நோயால் நான் படும் வருத்தத்தை எமர் காணாதொழிவராக!” (நற். 64) எனவும்,

“தலைவரை நினைத்தால் என் உள்ளம் வேகின்றது. அவரை நினையாது இருப்பதற்கும் இயலவில்லை; காமம் வானளாவி வருத்துகிறது. இந்நிலையில் என்னை நுகர்ந்திருக்கும் தலைவர் சான்றோரல்லர்!” (குறுந். 102) எனவும்,

“தலைவன் குறிவயின் வந்து நின்றவனை இன்று சென்று கூடும் நிலையில் என்மனம் இல்லை. ஆதலின் இன்று தலை வனைச் சந்திக்க நான் விரும்பவில்லை” (குறுந். 353) எனவும் தலைவி தோழிக்குக் கூறுவன போல்வன. (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -

{Entry: I09__091}

தலைவனுடைய குற்றத்தைத் தோழி எடுத்துக் கூறுதலைப் பொறாது, தலைவி அவனுடைய குணநலன்களை இயற்பட மொழிதல்.

“தலைவன் உன் கருத்துப்படி கொடியனாக இருப்பினும் இருக்க. அவனல்லனோ என்னுயிரைக் காக்க வேண்டிய என் கணவனாவான்!” (ஐங். மிகைப்பாடல். 6) எனவும்,

“என் தொடிகள் என் வயத்தன அல்ல. அவை முன் கையைவிட்டு நெகிழ்ந்து என்னை உடல்மெலிந்தாள் போலக் காட்டி, என் மெலிவுக்குக் காரணமான தலைவரைக் கொடியர் என்று கூறலாம். உண்மையில் என் தலைவரிடம் கொடுமை இல்லை. அவர் என் நெஞ்சத்தை விட்டு ஒரு போதும் பிரிதல் அறியார். அவர் தங்கியிருக்கும் குன்றினைப் பார்த்தவாறே நான் மகிழ்வாக இருக்கிறேன். அங்ஙனம் தம் குன்றினை யான் காணாத வகையில் அவர் தடுத்ததும் இல்லை!” எனவும்,

“மலைப்பக்கத்தேயுள்ள கரிய அடிமரத்தையுடைய குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு தேனீக்கள் பெரிய தேன்கூட்டினை அமைக்கும் நாடனொடு நான் செய்த நட்பு, தேன்கூடு ஒரு காலைக்கு ஒருகால் பெரிதாக அமைவது போல, பலநாள் முயற்சியால் சிறப்புப் பெறாது, அவனைக் கண்ட அளவி லேயே நிலத்தினது அகலம் போலவும், வானத்தது ஓக்கம் போலவும், நீரினது ஆழம் போலவும் எல்லையிட முடியாத சிறப்புடையதாயிற்று. ஆதலின் அவனை இயற்பழித்தல் தகாது” (குறுந். 3) எனவும், தலைவி தோழியிடம் கூறுதல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி வன்புறை எதிரழிந்து கூறல் -

{Entry: I09__092}

“தோழி! நெல்லிமரம் வளர்ந்துள்ள பாலைநிலவழியே எனது அறியாமையையுடைய நெஞ்சம் தம் பின்னே தொடர்ந்து வர என்னை நீத்துச் சென்ற தலைவர், நாம் அழுமாறு நம்மைவிட்டுச் சென்றமையால் கல்லைப் போன்ற வன்மனத்தவர்” (ஐங். 334) என்று தலைவி தோழியது வற்புறுத் தலுக்கு உள்ளம் அழிந்து எதிர்மொழி கூறுதல்.

இச்சூத்திரத்துள் ‘பல்வேறுநிலை’ என்றனான் கொள்ளப் பட்ட கூற்று இது. (தொ. பொ. 147)

தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -

{Entry: I09__093}

பாணன் முதலிய வாயிலர்கள் ஏதுவாகத் தலைவிக்குக் கூற்று நிகழ்தல்.

அ) பாணன் வாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி கூறியது:

“தோழி! இப்பாணன் ஓர் இளைய மாணாக்கன்; தன் ஊர்ப் பொதுவிடத்தே எத்தகையனோ!இரந்து பெறும் உணவினால் முற்ற வளராத மேனியொடு புதிதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையுடைய வன்” (குறுந். 33) என்று பாணனது சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்தாள் கூறியது.

ஆ) “வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குத் தலைவி கூறியது :

“தலைவன் வருகையை எனக்கு உணர்த்திய பாணனே! தலைவன் வருவதை நீ நேராகக் கண்டாயா? அன்றி, பிறர் கூறக்கேட்டு வந்து உரைக்கின்றாயா? எங்களுக்கு உண்மை நடப்பைச் சொல். நீ பொன் மிக்க பாடலிபுரத்தைப் பரிசாகப் பெறுக.” (குறுந். 75) என்று தலைவி கூறுதல்.

இ) பாங்கனைக் குறித்துத் தலைவி கூறியது :

தலைமகனுக்கு வாயிலாக வந்த பாங்கன் கேட்ப,” இம்மூதூ ரில் அழகிய ஆடை அணிகளைப் பூண்ட பெதும்பைப் பருவத்துப் பரத்தை, ஊசலிலே தன்னை அமர்த்தி ஆயத்தார் ஆட்ட முயலவும், அதற்கு உடம்படாது தான் ஆடாமல் அழுதுகொண்டிருந்தாள். தன் தலைவனுடைய பாங்கனா வது வந்து அவளைச் சமாதானம் செய்து மீண்டும் ஊச லாடச் செய்திருக்க வேண்டும். அங்ஙனம் செய்யாமையின் அவள் அழுது தலைவனோடு ஊடியதனாலேயே, தலைவன் நம்மனை நோக்கி வருகிறான்” (நற். 90) என்று கூறுதல்.

(ஈ) பாணற்குத் தோழிவாயிலாக வாயில் மறுத்தல் :

தலைமகனுக்கு வாயிலாக வந்த பாணனிடம், “பாண! தலைவி புதல்வற் பயந்த ஈன்றணிமையள். மார்பில் பால்சுரப்பப் புதல்வனைத் தழுவிக் கொள்வதால் அவள் மார்பகம் முடை நாற்றம் வீசும். ஆதலால் ஊரனைப் பரத்தையர்சேரிக் கண்ணே கொண்டு செல்க. எம்மைத் தொழுது பயனில கூறற்க” (நற். 380) என்று தலைவி தோழிவாயிலாக வாயில் மறுத்தல்.

உ) ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குத் தலைவி கூறியது :

‘தலைவ! என் கைவளை நெகிழும்படி பிரிந்து வருத்திய நின்னைப் புல்லவும் செய்யேன்; அதனால் நின்னை வெறுத்- தேனும்அல்லேன்; அயலாம் தன்மையேன் ஆதலின் என்னைத் தீண்டாதே” (நற். 340) என நொந்து கூறித் தலைவன் அவா மீதூர்ந்தமை கண்டு அவனை முயங்கியது.

ஊ) புதல்வன் வாயிலாகச்சென்றாற்குத் தலைவி கூறுதல் :

“என் புதல்வனைப் பலவாறு பொய்யாகப் பாராட்டி மனை முன்றிலில் ஏன் நிற்கிறாய்? இவன் நின் அலங்காரங்களை யெல்லாம் சிதைத்துவிடுவான். இவனை என்னிடம் தந்து விட்டு அப்பரத்தைஇல்லத்திற்கே செல்க” (கலி. 79) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 145 இள.)

இனி, நச்சினார்க்கினியர் (தொ. பொ. 147) மேலும் உரைப்பன:

அ) “ஏன் தலைவனைப் புலவாய்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல்:

“தலைவன் தவறு செய்யினும் அவனைப்புலவாது ஏற்றுக் கோடல்தான் நின் இயல்போ?” என்ற தோழியிடம், “தலைவன் புலத்தற்கு வாய்ப்புத் தாராமல் இல்லிற்கு விருந்தொடு வருதலால் நான் அவனொடு புலத்தற்கு வாய்ப்பு இலதாய் விடுகிறது!” (நற். 280) என்ற தலைவி கூற்று.

ஆ) பாணனிடம் தலைவி கூறல்:

“பாண! நீயே கண்டு தலைவனிடம், அவன் பிரிந்தமையால் என் உடல் மெலிய என் கைவளைகள் கழன்று நீங்கிவிட்டன என்று கூறு. (தலைவன் நீ கூறுவதைத்தான் உண்மையாகக் கொள்பவன்)” என்று பரத்தையிற் பிரிந்த தலைவற்கு உரைக்குமாறு தலைவி கூறுதல். (ஐங். 140)

இ) தலைவி மகனைக் கண்டு கூறல்:

‘வெள்ளாங்குருகின் பிள்ளை இறந்ததாக, அதனைக் காணச் சென்ற நாரை தன் செயல் முடிந்த அளவில் மீளாமல் காலையினின்று மாலைவரை அப்பகுதியில் தங்கும் கடற்கரைத் துறைவனாகிய தன் தந்தையொடு வாராமல் மகன் விளையாடித் தனித்து வந்துள்ளான். நல்ல காலமாகத் தந்தை தன்னை வாயிலாகப் பற்றாமல் புதல்வன் தனித்து விடுத்துவிட்டான்!” (ஐங். 157) என்று தலைவி கூறுதல்.

ஈ) ஆடை கழுவுவாளை வாயில் என்றது:

“ஆடைகழுவும் தன் தொழிலை விடுத்து உன் தூதாகத் திரியும் வண்ணாத்தி, பரத்தையருக்குத் தெப்பமாக இருந்து நீ அவரொடு நீராடி அவர்கள் ஊற்றிய சாதிலிங்கக் குழம்பு சிதையாமல் வந்து அந்த அழகை எனக்குக் காட்டச் சொன் னாளோ?” (கலி. 72) என்று தலைவி தலைவனிடம் புலைத்தியைக் கூறி ஊடுதல். (தொ.பொ. 147 நச்.)

தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -

{Entry: I09__094}

அரசர் குலத்தைச் சார்ந்த தலைவன் களவொழுக்கம் ஒழுகுங்காலத்துப் பகைவயிற்பிரிவை மேற்கொண்டு சென்றா னாக, பின்பனியால் வாடும் தலைவி தோழியை நோக்கிக் கூறல்.

“புதர்களைப் புகை போலச் சூழ்ந்து முல்லைமுகை போன்ற நம் பற்கள் குளிரால் மோதிக் கொள்ளுமாறு வருத்தும் இப்பின்பனி, பகைவர்களை வென்று திறைப் பொருள்களைக் கொண்டு தலைவர் தேரில் தலைமை தோன்ற மீண்டு வரும் காட்சியைக் காணும் வாய்ப்பை நமக்குத் தாராமல் அவர் மீண்டு வருமுன் நம்முயிரைப் போக்கிவிடும் போல் வருத்துகிறதே” (கலி. 31) என்றாற் போல, பின்பனி தரும் வாட் டத்தையும் தலைவன் வெற்றியொடு மீண்டு வரும் காட் சியைக் காண விழையும் ஆர்வத்தையும் இணைத்துக் கூறுதல். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘விட்டுயிர்த்து அழுங்கிக்’ கூறல் -

{Entry: I09__095}

களவொழுக்கம் பற்றிய செய்தியைத் தமர்க்கு உரைத்தல் வேண்டும் என்று தோழியிடம் கூறிய தலைவி, மீண்டும் அச்செய்தியைத் தோழி தமரிடம் கூறுதலை விரும்பாது அவளிடம் கூறுதல்.

“என் நோய் தலைவன் மார்பினைத் தழுவாமையான் ஏற்பட்டது என்ற செய்தியை நமர்க்கு அறிவிப்போமா வேண்டாவா என்று பலவாறு எண்ணிய யான் ஒருமுடிவுக்கு வந்துவிட்டேன். என் உயிர் போவதாக இருந்தாலும், ‘என் கண்கள் பசலை பாய்ந்திருப்பதன் காரணம் காம நோயே’ என்று நீ எமரிடம் கூறுதல் வேண்டா” (அகநா. 52) என்பது போன்ற தலைவி கூற்று. (தொ. பொ. 111நச்.)

இதற்கு, மறையாது சொல்லி இரங்கல் என்று உரைப்பர் இளம்பூரணர். (109)

‘என் பிணியும் தோள்மெலிவும் நீங்கத் தலைவன் வேங்கைப் பூவில் வண்டு மொய்க்கும் மாலைப்பொழுதில் என்னைக் காண வருவானோ?” (திணைமொழி 9) எனவும்,

“காட்டுப் பசுக்கள் உலவும் சோலையில் மந்திகள் தாவிக் குதிக்கும் மலைநாடனாகிய தலைவனுடைய மார்பைத் தழுவாததனான் என் நெஞ்சு துயர் உழக்கும்” (கைந்நிலை 6) எனவும் வரும் தலைவி கூற்று. (இள.)

தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

{Entry: I09__096}

“பாண! கண்ணீர் துளித்த கண்களையுடைய என் தலைவி எனக்கு யாது செய்தி சொல்லி உன்னை அனுப்பியுள்ளாள்? அதனைப் பலகாலும் என்னிடம் கூறு. நீ கூறுவதைக் கேட்குந் தோறும் எனக்கு இனிதாக இருக்கும். நானோ, தலைவியின் ஊரை விடுத்துக் காடுகளைக் கடந்து வந்து இவ்வளவு சேய்மையில் உள்ளேன். வாடையோ, தனித்து இருப்பவரைப் பெரிதும் துன்புறுத்துகிறது. இத்துன்பத்தைப் போக்கத் தலைவி கூறிவிடுத்த செய்திகளைக் கேட்பதொன்றே பரிகார மாக உள்ளது” என்பது போன்ற தலைவன் கூற்று. (ஐங். 479)

தலைவி, வெறியாட்டிடத்து வெருவின்கண்’ கூறல் -

{Entry: I09__097}

தலைவனது பிரிவினான் களவுக் காலத்தில் தலைவியின் மெய் வாடவே, அவ்வேறுபாடு முருகனான் ஆயிற்று என்று தாய் முடிவு செய்து வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்து மிடத்து, தலைவி அஞ்சித் தோழியிடம் கூறுதல்.

“தோழி! தலைவனைப் பிரிந்ததனான் எனக்கு ஏற்பட்ட இந்நோயைத் தீர்க்கும் மருந்து தலைவனது மார்பு ஆதலை அறியாத அன்னை, ஊரிலுள்ள மூத்த பெண்டிர் சொற் கேட்டு இந்நோய் முருகனான் வந்ததாகக் கருதி அதனைத் தீர்த்தற்கு வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்தத் துணிந்துவிட்டாள். உண்மையில் இந்நோய் முருகனான் வந்தது அன்மையின், வெறியாட்டு நிகழ்த்திய பின்னும் என் நோய் தீரவில்லை எனின், ஊரில் உள்ள பெண்டிர் பலவாறு பழி தூற்றத் தொடங்கி விடுவர். ஒருகால் முருகன் அருளான் இந்நோய் தீர்ந்து என் மேனி பழைய வனப்புப் பெறின், தன்னுடைய பிரிவு இந்நோய்க்குக் காரணமன்று என்று தலைவன் முடிவுசெய்துவிடுவான்; பின் என்னைப் பிரிந் திருப்பதற்குச் சிறிதும் கவலை கொள்ளான். அப்பொழுது யான் அமைதியாக வாழ்தல் இயலாது” (அகநா. 98) எனத் தலைவி வெறியாட்டை அஞ்சிக் கூறல். (தொ. பொ. 111 நச்.)

தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -

{Entry: I09__098}

தலைவன் தானே தலைவி இல்லத்துக்கு விருந்தாக வருதலே அன்றித் தலைவி தலைவனுக்கு உபகாரம் செய்யக் கருதுவதனை உட்கொண்டு, தோழி அவனை விருந்தேற்றுக் கோடற்கண், தலைவி குறிப்பால் அவளுக்குக் கூறுதல்.

தோழி தலைவனை நோக்கி, ” ‘பொழுது சாய்ந்து விட்டது; ஆதலின் நின் தோழியோடு இல்லம் எழுக’ என்று நீ கூறிய அளவில் இவள் பெரிதும் கலங்கி வருந்துகிறாள். இவளை அமைதிப்படுத்தாது நீ பிரியின், இவளுக்கு ஏதம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறேன். அதனால் நீ நின் தேரோடும் இளைஞரோடும் எம்மூர்க்கு வரின், எமர் உன்னை விரைவாக எதிர்கொண்டு இன்மொழி கூறி வினவி, இருள் பரவியதையும் துறையின் ஏதத்தையும் எடுத்துக்கூறி, ‘இன்று இங்குத் தங்கி நாளைச் செல்லலாம்’ என்பர். ஆதலின் நீ விரும்புவையேல் இன்று உன்னை எம் இல்லில் தங்கும் நல்ல விருந்தாக ஏற்றுப் பேணுவோம்” (அகநா. 300) என்று தலைவியின் குறிப்பை எடுத்துக்கூறல். (தொ. பொ. 107 நச்.)

தலைவி, ‘வேற்றுமைக்கிளவி தோற்றல்’ -

{Entry: I09__099}

தலைவி தலைவன் உணர்த்தியவழியும் ஊடல் தணியாளாக, அதனால் தலைவன் ஊடல் கொண்டபோது, தோழி, அவனுக்குப் பணிவான வார்த்தைகளை முதலில் கூறிப் பின் அவனை ‘அன்பற்றவன் கொடியன்’ என்று இடித்துக் கூறியவழி, அதனைக் கேட்ட தலைவன் சினம்கொண்டு விட்டானோ என்று அறிவதற்கும், தனது ஊடல் எல்லை கடந்து துனியாகிவிட்டால் அதனால் தலைவனது மனப் பாங்கு யாதாகுமோ என்று அஞ்சியவிடத்தும், தலைவி தலைவனைப் பற்றித் தோழியிடம், “அவர் அன்பிலர் கொடியர் என்று சொல்லற்க. அவரிடம் உண்மையன்பு இல்லாதபோது, நம்புலவி அவரை யாது செய்ய முடியும்? அவர் எப்படி இருப்பினும் நமக்குத் தந்தையும் தாயுமாகிய இன்றியமையாதவர். அல்லரோ?” (குறுந். 93) என்றாற்போல, தலைவன் தம்மை வேறாகக் கருதிப் பொருட்படுத்தா தொழியும் செய்தியைக் கூறுவாள். (தொ. பொ. 159 நச்.)

வேற்றுமைக்கிளவி - அயன்மையைப் புலப்படுத்தும் சொல், “நமக்கும் அவர்க்கும் இடையே என்ன உறவு?” என்றாற் போல.

‘தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்’ -

{Entry: I09__100}

கெடுதலில்லாத சிறப்பினையுடைய இடைநின்ற ஐந்து கிளவிகளும் முதற்பொருளொடு கூடிய அகனைந்திணைக் கண்ணவாய் நிகழும். அவ்விடை நின்ற ஐந்தாவன: பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல், ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதி, தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறல், தண்டாது இரத்தல், மற்றைய வழி என்பன. (தொ. கள. 16 ச.பால.)

தறுக்கல் -

{Entry: I09__101}

தடுத்தல். தோழி பகற்குறி இடத்தை விலக்குதல் என்னும் கிளவி. (சாமி. 98)

தன்மனை வரைதல் முதலிய மூன்று -

{Entry: I09__102}

1. தன் மனை வரைதல் - உடன்போய் மீண்டுவந்த தலைவன் தலைவியைத் தன் மனைக்கு அழைத்துப் போய் மணந்து கொள்ளுதல்

2. உடன்போக்கு இடையீடு- தலைவன் தலைவியை உடன் கொண்டு போகையில், தலைவிசுற்றத்தார் பின் தொடர்ந்து வருவதைக் கண்டதும், அவர்களைப் புண்படுத்தும் வகையில் தன் வீரத்தைக் காட்டாமல், தலைவியை விட்டுவிட்டுத் தலைவன் அகலுதல்.

3. வரைதல்- (களவொழுக்கம் தொடங்கலுற்ற 56ஆம் நாள்) தலைவன் தலைவி இல்லத்திற்கு மீண்டு வருகையில், தலைவியின் சுற்றத்தார் எதிர்கொண்டு போய் அழைத்து வந்தபின், அவன் அருங்கலம் முதலியன கொடுத்து உலக இயல்பிற்கு ஏற்ப, அந்தணர் சான்றோர் போன்றவரை முன்னிட்டுச் சடங்குகளுடன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுதல். (ந. அ. 193, 197, 199)

தன்மனை வரைதல் வகை மூன்றாவன -

{Entry: I09__103}

1. வினாதல் - தலைவியின் நற்றாய் செவிலியிடம், “‘திரும ணத்தை நம்மனைக்கண்ணேயே நடத்துவோம்’ என்று தலைவனுடைய நற்றாய்க்குக்கூறி, அவள் கருத்தை அறிவோமா?” என வினவுதல்.

2. செப்பல்- தோழி செவிலியிடம் தலைவியைத் தலைவன் தன் ஊரில் வரைந்து கொண்டான் என்று கூறலும், அதைச் செவிலி நற்றாயிடம் கூறலும், வரைந்து கொண்டதைச் சுற்றத்தார்க்குக் கூறுமாறு தலைவன் தோழியிடம் கூற, அவள் முன்னரே தான் அதனை அவர்க்குக் கூறிவிட்டமையைக் கூறலும் என இவை.

3. மேவுதல் - தலைவன் தோழியிடம் தான் தலைவியை வரைந்துகொண்டதைக் கூறி அதனைத் தலைவியின் தமர்க்கு அறிவித்துவிடக் கூறுதல். (ந. அ. 193, 197, 199)

தன்வயின் உரிமை -

{Entry: I09__104}

களவுக் காலத்தில் தலைவி தான் தலைவன் நினைப்பையே கொண்டிருக்கும் நிலையைத் தன் ஒவ்வொரு பேச்சிலும் வெளியிடுதல். (தொ. பொ. 109 இள.)

தன்வயின் உரிமையாவது தலைவி களவிலே கற்புக்கடம் பூண்டு ஒழுகல். இது களவுக் காலமாதலின், தலைவன் தம்மை மறந்து இருக்கிறான் என்ற நினைப்பான் அவள் பொய்க் கோபம் கொள்ளவும் கூடும். தான் தலைவன் நினைப்பாகவே இருக்கவும், தலைவன் தன்னை மறந்து அயலவன் போல இருக்கிறான் என்று காதல் மிகுதியான் அவனைப் பற்றித் தவறாகக் கருதுவதன் காரணம் தன்வயின் உரிமையாகும் (111 நச்.)

தலைவி தலைவனையன்றி மற்றவரை எண்ணாமல் அவனையே தன் காதல் துணைவனாக - வாழ்க்கைத் துணைவனாகக் - கொள்ளுதல். (161 குழ.)

தன்வயின் கரத்தல் -

{Entry: I09__105}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தலைவியிடம் தனக்குப் புறத்தொழுக்கம் இன்று என்று தன் தவற்றை மறைத்துக் கூறுதல் (தொ. பொ. 205 நச்.)

‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -

{Entry: I09__106}

தலைவியிடத்தே வரும் நல்ல நயப்பாட்டுப் பகுதிகளாவன: இருவகைக் குறியிடத்தும் தலைவனை நேர்தலும், பிரிவுவழிக் கலங்கலும், வரைபொருட்பிரிவின்கண் ஆற்றியிருந்தலும், உடன்போக்கிற்குத் ஒருப்படுதலும், அவை போல்வன பிறவும் ஆம்.

அப்பகுதிக்கண் நாட்டமுறுதலாவது: தலைவியைத் தோழி அரியளாக்குதலும், தலைவனைச் சேட்படுத்தலும், வரைவு கடாதலும், அறத்தொடு நிற்றலும், உடன்போக்கு வலித்தலும் அன்ன பிறவுமாம்.

அத்தகு தோழியைச்சுட்டித் தலைவற்குக் கூறல் தலைவியது கடனாம். (தொ. கள. 33 ச. பால.)

தன்னிலை உரைத்தல் -

{Entry: I09__107}

தனது புறத்து நிகழும் தளர்வின் பொலிவழிவைத் தான் கண்ட தலைமகளிடத்தே தலைவன் தனது உள்ளவேட்கை மீதூர்தலான் நிலைப்படக் கூறுதல்.

“யான் சொல்லும் சொற்களுக்கு மறுமாற்றம் தாராயாயினை; நின்திருமுகம் நிலம் நோக்க நாணுகிறாய். விரைவில் காமம் எல்லை மிகுவதாயின் அதனைத் தடுத்தல் எளிதோ? கடைமணி சிவந்த நின் கண்கள் என்னைக் கோபித்தலால் அவற்றைப் புதைக்கிறாய் போலும்! உன்னுடைய கரும்பு வடிவில் தொய்யில் எழுதப்பட்ட தோள்களும் என்னை வருத்துகின்றன! ” (நற். 39) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

(தொ. பொ. 98 இள.)

தன்னுள் குறிப்பினை அருகும் தோழி -

{Entry: I09__108}

தலைவியின் களவொழுக்கம் காரணமாகத் தன் உள்ளத்து ஏற்பட்ட ஐயக்குறிப்பினைத் தலைவியிடம் உரையாடி உறுதி செய்து கொள்ளச் செயற்படும் தோழி. (இறை. அ. 11)

தன்னுள் கையாறு எய்திடு கிளவி -

{Entry: I09__109}

தலைவி பிரிவுத்துயர் தாங்காமல் துன்பமுற்று மதி முதலிய வற்றோடு உரையாடுதல் போன்று தன் மனத்தில் பெரிதும் கலங்கிச் செயலற்றுக் கூறுதல்.

“மதியே! கண்டல் புதர்களே! சாட்சியாக, புன்னைமர நிழலில் என்னைக் கூடிய தலைவர் வருதலை வானத்திலிருந்து ஒளி வீசும் நீ காணவில்லையா? இன்று தனித்து வருந்தும் எனக்கு ஒரு மறுமாற்றம் தருதல் ஆகாதோ?” (கோவை. 177) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

தனிப்படர் மிகுதி -

{Entry: I09__110}

தலைவனைப் பிரிந்த நிலையில் தலைவி தனித்திருந்து அவனுடைய நினைப்பு மிகுதலால் வருந்துதல். (வீ.சோ. 93)

‘தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சி’ -

{Entry: I09__111}

தலைவி தலைவனோடு உடன்போயது அறிந்த அவள் அண்ணன்மார் வெகுண்டு, பின் தொடர்ந்து தலைவனோடு போரிட்டு அவளை மீட்டற்குப் புறப்படல் (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரைமேற்.)

தாம் பிழைப்பு இன்மை -

{Entry: I09__112}

இரவுக் குறிக்கண் இடையீடு உற்ற தலைவன் மறுநாள் தோழியிடம் அவர்கள் முதல்நாள் இரவுக்குறிக்கண் வாராமை பற்றி வினவவே, தலைவன் செய்த குறிகளாகப் பிறவாற்றான் நிகழ்ந்தது கண்டு தாம் முதல்நாள் இரவு வந்து அவனைக் காணாமல் மீண்டதனால், தவறு தம்மீது இல்லை என்று தோழி கூறுதல் (‘நெய்தல் நடையியல்’ பற்றிய செய்தி களுள், நூற்பாவின் 9ஆம் அடி முதல் நிகழ்பவை குறிஞ்சி நடையியலின்பாற்படுவன. அவற்றுள் இக்கூற்றும் ஒன்று.)

(வீ. சோ. 92 உரை)

தாமம் பெறாஅது தளர்வுற்றுரைத்தல் -

{Entry: I09__113}

பெண்பாற் கூற்றுக் கைக்கிளையில் தலைவி தலைவனை விளித்து “உன் மாலையை எனக்குத் தாராவிடினும், உன் தேவிமார்கள் ஊடாதபடி உன் தொடர்புடைய பிறிதொன் றனையாவது எனக்கு உன்நினைவாகத் தருதல் ஆகாதா?” என்று வேண்டுதல்.

“நாகையில் உள்ள பெருமானே! திருமகள் நீங்காது தோயும் உனது மார்பினை யான் அணைவதற்கு இயலவில்லை ஆயினும், நீ சூடிக் கழித்த துளபமாலைச் சருகையாயினும் எனக்குத் தருவாயாக. அங்ஙனம் செய்தால், உன் தேவியாகிய திருமகள் உன்னொடு புலக்கமாட்டாள்; நீயும் எனக்கு அருள் செய்ததாக மனநிறைவு உறலாம். உன் தோளைத் தழுவாத துயருடைய எனக்கும் அத்துளபச் சருகு ஆறுதலைத் தரும்” என்ற தலைவி கூற்று. (மா. அ. பாடல் 418)

தாமே தூதுவராதல் -

{Entry: I09__114}

இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் கூட்டுவாரை யின்றித் தனிமையான் பொலிவு பெறுதலின் - தனிமையாகக் கூடும் கூட்டம் ஆதலின் - இவ்விரு கூட்டத்தின்கண்ணும் தலைவனும் தலைவியும் ஒருவருக்கு ஒருவர் தூதுவராகி ஒருவரை ஒருவர் கூடுதலே நிகழத்தக்கதாகும். இவ்விரு கூட்டத்தின் பின்னர்த் தோழியிற் கூட்டமின்றித் தலைவன் தலைவியை வரைதலும் உண்டு. (தொ. பொ. 119 நச்.)

தாய் அறிவு உணர்த்தல் -

{Entry: I09__115}

தலைவியின் களவொழுக்கத்தைத் தாயும் அறிவாள் என்பதனைத் தோழி தலைவனுக்குச் சொல்லுதல்.

“தலைவ! நம் தலைவியின் தாய் தலைவியின் நகில்கள் பருத்திருப்பதைக் கண்டு மனம் வருந்தி இவள் சிற்றிடைக்குப் பற்றுக்கோடு இல்லையே என வருந்தினாள்; அவளை இனி மிகவும் கண்காணிப்பாள்; ஆதலின் களவு ஒழுக்கினைத் தவிர்த்து விரைவில் அவளை மணந்துகொள்க” (கோவை. 132) என்று தோழி தலைவனை வரைவு கடாயது.

இதனைத் ‘தாயச்சம் கூறி வரைவு கடாதல்’ என்றும் கூறுப. (கோவை.132)

இது களவியலுள், ‘வரைவு கடாதல்‘ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

தாய் தரு புணர்ச்சி -

{Entry: I09__116}

தலைவியின் களவுஒழுக்கச்செய்தியைச் செவிலி வெளிப் படுக்கு முகத்தான் நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல். இது ‘செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்’ எனவும் கூறப்படும். (ந. அ. 51, 185)

வீரசோழிய உரையுள் குறிஞ்சி நடையியலுள் வருவதொரு கிளவி இது. (வீ. சோ. 92 உரைமேற்)

தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -

{Entry: I09__117}

“தான் உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலை யும் போன்ற அனைத்துப் பொருள்களிலும் திருக்கோளூர் இறைவனையே கண்டு மயங்கிய என்மகள், வழி கேட்டுக் கொண்டு அவனூர்க்கே போயிருப்பாள்” என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய். 6-7-1)

தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -

{Entry: I09__118}

தலைவி தலைவன்மீது கொண்ட காதலால் மிகவும் துன்புற்று வாடி மெலிவதைக் கண்ணுற்ற தாய், இன்னும் பேதைமையும் மாறாத பருவத்தளாகிய தன்மகளை இந்நிலைக்கு ஆளாக்கி அருளாமல் இருக்கும் தலைவனை நேருக்கு நேர் நின்று அவன் செயல் தக்கதன்று என்று கூறுதல்.

“தேவர்க்கும் தேவனான கண்ணபுரத்துப் பெருமானே! இளமை மாறாத என் பேதைமகளை இப்படியாக்கியது உனக்குத் தக்க செயல் ஆகாது” என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (பெரிய. தி 8-2-1)

தாய் துஞ்சாமை -

{Entry: I09__119}

இல்லின் நீங்கி இரவுக்குறியிடம் நோக்கி நெடுக நடந்து செல்ல வேண்டிய நிலையின்றி இல்லினைச் சார்ந்த மதிலகத் துப் பொழில்தான் ஆயினும், இல்லினை விட்டுத் தலைவி பொழிலை நோக்கிச் செல்ல இயலாதவாறு தாய் உறங்காமல் இருக்கும் இடையூறு.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘வருந்தொழிற்கு அருமை’ யின் பாற்படும்.

இது தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் வரும்.(ந. அ. 161)

தாயச்சம் கூறி வரைவு கடாதல் -

{Entry: I09__120}

பகற்குறி இறுதிக்கண் தோழி தலைவனைச் சந்தித்து, “தாய் தலைவி வனப்பு மிகுதி கண்டு திருமணம் செய்து கொடுக்கத் துணிந்துவிட்டாள் ஆதலின் மகட்பேச வருவார்க்கு மறுக்காது அவளை மணம் செய்வித்தலும் கூடும்; ஆதலின் அந்நிலை ஏற்படுவதன் முன் நீ தலைவியை மணப்பதற்கு ஆவன செய்வாயாக” என்று அவனை வரைவு கடாதல்.

இதனைத் ‘தாயறிவு உணர்த்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 166)

இது திருக்கோவையாருள் ‘பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 132)

தாயர் ஐவர் -

{Entry: I09__121}

தலைவன்தலைவியர்க்குரிய செவிலித்தாயர் ஐவர். அவர்கள் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓல் உறுத்துவாள், நொடிபயிற்று வாள், கைத்தாய் என்பவராவர். இவர்களைப் பொதுவாகக் ‘கோடாய்’ (கோள்தாய்) என்றலும் உண்டு. (இறை. அ. 14; சீவக.184, 363)

‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -

{Entry: I09__122}

புதல்வன்தாய் வழிமுறைத்தாய் என்னும் தாயர் கருதி உணரும் பொருட்டு, மாயம் சான்ற பரத்தை, அவர்தம் புதல்வனைத் தன் குறிப்பினை உணர்த்தும் நல்லணிகளை அணிவிக்கக் கருதி அவற்றைப் புனைவாள். புதியளாய் வந்த பரத்தை தலைவன் தன்மாட்டுக் கொண்டுள்ள நேயத்தை மனைக் கிழத்தியர் அறியும்பொருட்டு அக்குறிப்புணர்த்தும் அணி கலன்களைப் புதல்வனுக்கு அணிவித்தலைக் கருதிப் புனைந்த விடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழும் என்றபடி. (தொ. கற். 6 ச. பால.)

தாயறிவு கூறல் -

{Entry: I09__123}

தலைவி தலைவனிடம் இரவுக்குறி தக்கது அன்று என்று வற்புறுத்திக் கூறிய பின்னரும், தலைவன் வேட்கை மிகுதி யான் குறியிடைச் சென்று நிற்ப, அக்குறிப்பறிந்த தோழி தலைவியிடம், “நம் கானலிடத்து நடுஇரவு ஒரு தேர் வந்து சென்றிருக்க வேண்டும் என நினைத்துத் தாய் சிறிதே கண் சிவந்து என்னையும் பார்த்தாள். நம் களவொழுக்கத்தை அறிந்தாள்போலும்” எனக் கூறுவாள் போன்று, தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்குமாறு தாய்அறிவு கூறி வரைவு கடாயது.

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 256)

தாவில் கொள்கைக் கற்பு -

{Entry: I09__124}

மன்னுயிர்க்கு வருத்தம் தருதல் ஏதும் இல்லாத கோட்பாட் டினை யுடைய அறக்கற்பு. (முருகு. 175 நச்.)

தாவில் நன்மொழி -

{Entry: I09__125}

தலைவனைப் பிரிந்து தனித்துப் பொறுத்திருக்கும் மன வலிமையின்றிக் களவுக்காலத்தும் தலைவன் இருந்த இடத்துத் தாமும் செல்லலாம் என்று தலைவி தோழியிடம் கூறும், கற்பிற்கு உறுதுணையான சொற்கள். (தொ. பொ. 113 நச்.)

தலைவன் களவிடைத் தன்னைப் பிரிந்து இருப்பதற்குத் தான் வருத்தம் இல்லாதாள் போன்று தலைவி தலைவனை உயர்த்திக் கூறும் சொற்கள். அவை தலைவி, “தலைவர் சிறிதும் கொடுமையுடையரல்லர்; யான் அவரை விரும்பிய தால் என் நெற்றி பசலைபூத்தது; என்மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததனால் என் தோள்கள் மெலிவுற்றன” (குறுந்.87) என்றாற் போலக் கூறுவன (இள.) (111 இள.)

தாளாண்பக்கம் ஒன்றாமை -

{Entry: I09__126}

முயற்சி செய்வதனான் ஏற்படும் உடல்வருத்தம் மனவருத்தம் போன்றவற்றை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. (தொ. பொ. 44 இள.)

தான் கற்ற புகழ்தல் -

{Entry: I09__127}

மடலேறுவதாகக் கூறிய தலைவனை நோக்கித் தோழி, “தலைவியின் உருவம் தீட்ட ஒண்ணாத தொன்று. ஆதலின் நினக்கு இயலாது” என்று கூறிய இடத்தே, தலைவன் தனக்கு ஓவியம் தீட்டும் திறமையுண்டு என்று தன்னைப் புகழ்ந்து கூறிக்கோடல்.

“ஒரு கிளிமேல் எனக்குள்ள வேட்கையாலே அதனை மிகப் பரந்த ஓரிடத்தே வரைந்தேன்; அழகிய பிற உறுப்புக்களையும் அமைத்து, என்னை வாழ்வித்த அந்தப் பாதகம் மிக்க கண்களையும் மாவடுவைப் பிளந்து வைத்தது போலப் பதித்தேன். எனது வல்லமை படைப்புக் கடவுளுக்கும் இல்லை” என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 122)

தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -

{Entry: I09__128}

“அவர் வந்ததுண்டு; ஆயின் நான் அல்லகுறிப்பட்டேன்” என்று தலைவி தோழிக்குரைத்தல்.

“தோழி! நம் தலைவனுடைய தேர்க்குதிரைகள் ஒலி என்று கருதி இரவுக்குறி சென்று, பின் அது பறவைஒலி என்பதனை அறிந்து மனவருத்தத்துடன் மீண்டுவிட்டேன். ஆதலின் இனி மீண்டும் ஒருமுறை இரவுக்குறியிடம் சேறல் அரிது” (ஐந் ஐம். 50) என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

‘தானே அவளே’-

{Entry: I09__129}

ஆண்பாலருள் தலைவனை ஒத்தாரோ மிக்காரோ இலர். ஏனையார் யாவரும் அவனோடு ஒப்பிடக் குறைபட்டார் களே. குணத்தினானும் உருவினானும் திருவினானும் இவனே ஒப்பற்றவன் என்பது. அதுபோல, மகளிருள் தலைவியே குணத்தினானும் உருவினானும் திருவினானும் ஒப்பற்றவள் என்பது.

கந்தருவருக்குரிய ஞானக் குறைபாடும் தருமக்குறைபாடும் முயற்சிக் குறைபாடும் இவர்களுக்கு இல்லை. ஆகவே, ‘தானே அவளே’ என்ற சொற்றொடர் ஒப்புயர்வற்ற தலைவனையும் தலைவியையும் குறிப்பதாகும். (இறை. அ. 2)

திணை -

{Entry: I09__130}

அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று. திணையாவது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து நிலத்திலும் இஃது இந்நிலம் பற்றி வந்தது என்று கொள்வது. (வீ. சோ. 90 உரை)

திணைக்கிழமைப் பெயர்கள் -

{Entry: I09__131}

முல்லை : குறும்பொறை நாடன், பொதுவன், தோன்றல் முதலியன

குறிஞ்சி : பொருப்பன், வெற்பன் முதலியன

மருதம் : மகிழ்நன், ஊரன் முதலியன

நெய்தல் : கொண்கன், துறைவன் முதலியன

பாலை : காளை, மீளி முதலியன(தொ. அகத். 22 ச. பால)

திணை கூறும் முறைமை-

{Entry: I09__132}

ஒரு செய்யுட்குத் திணை கூறுங்கால் முதற்பொருளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அஃது இன்றேல் கருப்பொருட்கும் அதுவுமின்றேல் உரிப் பொருட்கும் உரிமை தந்து கூற வேண்டும். (தொ. அகத். 3 ச.பால.)

முதலின் கருவும் கருவின் உரியும் சிறக்கும். (அகத். 3 நச்.)

திணைதொறும் மரீஇய பெயர் -

{Entry: I09__133}

முல்லை முதலிய ஐவகை நிலத்தும் வாழ்கின்ற பொதுமக்க ளின் பெயர்கள்.

இப்பெயர்கள் அவரவர் வாழ்கின்ற நிலம் பற்றியோ, அவரவர் மேற்கொள்ளும் அவ்வந்நிலத்தொழில் பற்றியோ அமையும். ஐவகை நிலத்துக் குலப்பெயர்களாகிய பொதுமக்கள் பெயர்கள் பின்வருமாறு:

1. முல்லை - கோவலர், இடையர், ஆயர், பொதுவர்; கோவித்தியர், இடைத்தியர், ஆய்த்தியர், பொதுவியர்

2. குறிஞ்சி - கானவர், வேட்டுவர், குறவர், இறவுளர், குன்றுவர்; வேட்டுவித்தியர், குறத்தியர், குன்றுவித்தியர்

3. மருதம் - களமர், உழவர், கடையர்; உழத்தியர், கடைசியர்

4. நெய்தல் - நுளையர், திமிலர், பரதவர்; நுளைத்தியர், பரத்தியர்

5. பாலை - எயினர், மறவர்; எயிற்றியர், மறத்தியர்.

(தொ. பொ. 20 நச்.)

திணை நிலைப் பெயர் -

{Entry: I09__134}

புலனெறி வழக்கில் தலைவன்தலைவியராகக் கூறப்படுதற் குரிய ஐவகை நிலத்துத் தலைமக்கள் பெயர்

இப்பெயர் நிலம்பற்றியும் தொழில் பற்றியும் அமையும். ஐவகை நிலத் தலைமக்கள் பெயர் பின் வருமாறு:

1. முல்லை - அண்ணல், தோன்றல், குறும்பொறைநாடன்; மனைவி, கிழத்தி.

2. குறிஞ்சி - வெற்பன், சிலம்பன், பொருப்பன்; கொடிச்சி.

3. மருதம் - மகிழ்நன், ஊரன்; மனையோள்

4. நெய்தல் - கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம் புலம்பன்; பரத்தி.

5. பாலை - மீளி, விடலை, காளை; கன்னி. (தொ. பொ. 20 நச்., குழ.)

திணை நிலைப் பெயர்க்கோள் -

{Entry: I09__135}

திணையை மாற்றிக் கொள்ளும் கோட்பாடு.

தலைவியைப் பிரிந்து பொருள் தேடக்கருதி மனத்தான் பாலை நிலத்தினனாகிய தலைவன், தலைவி தன் பிரிவைக் குறிப்பான் உணர்ந்து களவுக் காலத்தில், “நின்னின் பிரியேன், பிரியின் ஆற்றேன்ஆவேன்” என்று தான் கூறிய உறுதிமொழி பொய்ப்பட்டதாம் என்று ஆற்றளாகியவழி, தன் செலவை நீக்கி மனத்திலிருந்த பாலைத் திணையை மாற்றி, மருதத் திணையானாகி மனைக்கண்ணேயே தங்கிவிடுவான்.

தலைவன் தலைவியோடு உடன்போக்கினைக் கருதிப் பாலைத் திணையினன் ஆகியவழி, தோழி அறத்தொடு நின்று திரு மணத்திற்கு ஏற்பாடு செய்துவிடின், பாலைத் திணையை நீக்கிப் பண்டைய மருதத் திணையானாகி விடுவான். இவையே திணை நிலைப் பெயர்க்கோளாம். (இறை. அ. 51)

திணை பெயர்த்துரைத்தல் -

{Entry: I09__136}

கற்புக் காலத்தில் தலைவன் பொருள்வயின் பிரியக் கருதி அதனைத் தோழிக்குக் கூறத் தோழி தலைவியது ஆற்றாமை யைத் தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியிடம், “யான் நினது ஆற்றாமையைத் தலைவனிடம் கூறினேன்; அவன் எண்ணம் யாதோ? அறிகின்றிலேன்” என்று கூற, தலைவி “நின்னிற் பிரியேன் என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை மறந்தோ எம்பெருமான் எனக்குப் பொருள்தரச் செல்லப் போகின்றார்?” என்று புலந்து கூறிப் பிரிவை நினைத்துப் பாலைநிலத்தானாயிருந்த தலைவனைப் பிரிவை மறந்து பழைய மருதநிலத்தானாம்படி செய்தல்.

திணை பெயர்த்திடுதல் - மனத்தில் கருதிய நிலத்துக்குச் செல்லாது பழைய மருதநிலத்திலேயே இருக்கச் செய்தல்.

இது திருக்கோவையாரில், ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 336)

திணைமயக்கம் -

{Entry: I09__137}

(1) ‘பூசல் மயக்கம்’ என்ற புறப்பொருள் பொதுவியல் துறை - (சாமி. 148)

(2) ஒரு நிலத்துக்குரிய காலம் உரிப்பொருள் கருப்பொருள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்து வரப் பாடல் அமைத்தல்.

(3) அகம் புறம் என்ற திணைகள் ஒன்றோடொன்று மயங்கல்.

திணை மயக்குறுதல் -

{Entry: I09__138}

ஒரு நிலத்துச் செய்தி மற்றொரு நிலத்துச் செய்தியொடு கலந்துவருதல்.

ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருதலும் (ஐங். 133, 366), காலம் இரண்டு தம்முள் மயங்கி வருதலும் (கலி. 129), ஓர் உரிப்பொருள் நிற்றற்குரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும் (ஐங். 240, 265, 283), ஒரு காலம் நிற்றற்குரிய இடத்து ஒரு காலம் வந்து மயங்குதலும் (ஐங். 339), கருப்பொருள் மயங்குதலும் (ஐங். 369), அவ்வந் நிலங்களுக்குரிய முதலும் கருவும் வந்து உரிப்பொருள் மயங்குதலும் (அகநா. 11) போல்வன திணை மயக்கமாம்.

ஆகவே, முதற் பொருள்களுள் காலம் இரண்டு மயங்கினும் நிலம் இரண்டு மயங்குதல் கூடாது என்பது. (தொ. பொ. 12, 13 நச்.)

திணையின் பகுதி -

{Entry: I09__139}

பொருளதிகாரத்துக் கூறப்பட்ட கிளவிகள் துறைகள் யாவும் திணை களின் பகுதிகளாம். (வீ. சோ. 181 உரை)

‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -

{Entry: I09__140}

பரத்தையிற் பிரிந்த தலைவன் விருந்தினரோடும் புதல்வ ரோடும் இல்லத்துப் புக்கவழித் தலைவி தன் உள்ளத்துச் சினத்தை மாற்றிக்கொண்டு எல்லோரையும் எதிர்கொண் டழைத்தல். (இது மருத நடையியல்.) (வீ. சோ. 95 உரைமேற்.)

தினைமுதிர்வு உரைத்து வரைவு கடாவுதல் -

{Entry: I09__141}

களவுக்காலத்தே பகற்குறிக்கண் தவறாது வந்தொழுகும் தலைவனிடம் தோழி, “இவ்வேங்கைமரங்களெல்லாம் மலர்களைச் சிதறித் தினைக்கதிர் முற்றிவிட்ட செய்தியைத் தெரிவித்துவிட்டன. இனி எமக்குத் தினைக்கொல்லையைக் காக்கும் வாய்ப்பு நேராதவாறு தினைக்கதிர்கள் கொய்யப் பட்டுவிடும்” என்று அவன் சிறைப்புறமாகத் தலைவியிடம் கூறுவாள் போன்று தெரிவித்து வரைவு கடாயது.

இது ‘பகற்குறி’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 138)

தினையொடு வெறுத்து வரைவு கடாதல் -

{Entry: I09__142}

களவுக்காலத்தே தலைவன் தவறாது பகற்குறிக்கண் வருதலை விலக்கித் தலைவியை விரைவில் மணக்குமாறு அவனை வேண்டலுற்ற தோழி, “இத்தினைக்காவல் காரணமாக நாம் தலைவனை எதிர்ப்படலாம் என்று நினைத்துத் தினைக் கொல்லையைக் காத்துவந்தோம். அஃது எங்கட்கு நன்மை தாராது தீவினையாய் முடிந்து அதன் பயனை விளைத்து விட்டது!” என்று, அவன் சிறைப்புறத்தானாகத், தினையொடு வெறுத்துக் கூறுவாள் போன்று அவனை வரைவு கடாயது.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 140)

தீம்புனல் உலகம் -

{Entry: I09__143}

இனிய நீர்நிலைகளையுடைய வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகிய மருதம் எனப்பட்ட மென்னிலம். உலகம் என்னும் சொல் மண்ணுலகம் முழுதுமேயன்றித் தன்கண் கூறுபட்ட நிலங்களையும் உணர்த்தும் என்பது. (சீவக. 2606 நச்., தொ. பொ. 5 நச்.)

தீர்ப்பில் ஊடல் -

{Entry: I09__144}

தலைவன் தலைவி ஊடலைப் போக்க எவ்வளவு முயன்றும் அவள் ஊடல் தீராது இருத்தல்.

தலைவன் புறத்தொழுக்கம் கோடலும், அது கண்டு தலைவி புலத்தலும், தலைவன் பணிந்த மொழிகள் கூறி அவள் ஊடலைப் போக்கிக் கூடுதலுமே ஐந்திணை இன்பத்துக்கு உரிய செயல்கள். தன்னை நாடிவந்த தலைவனது மனத்தைத் தன்னிடம் ஈர்த்து அவனோடு ஊடியும் கூடியும் இன்பம் நுகர்தலை விடுத்து அவனிடம் தீராத ஊடல் கொள்ளுவது, அவன் தன்னை வெறுத்துப் பரத்தையர் முதலியோரிடமே நிலையாகத் தங்கும் பொருந்தாக் காமப்பகுதியை வளர்த் தற்கு உதவுதலின், தீர்ப்பில் ஊடல் என்பது அகப்பொருட் பெருந்திணைக் கூற்றுக்களுள் ஒன்றாக ஒருசாராரால் கொள்ளப்பட்டது.

இது நம்பி அகப்பொருள் கூறும் அகப்பொருட் பெருந் திணைக் கூற்றுக்களுள் ஒன்று. (ந. அ. 243)

தீராத் தேற்றம் -

{Entry: I09__145}

ஒருபோதும் தலைவியைவிட்டுத் தான் பிரியமாட்டாமையை உணர்த்தும் தலைவனது சூளுரை.

“பெண்ணே, உன்னைப் பிரிந்து நான் கவலைப்படாமல் என் இருப்பிடத்திலே இருப்பேனாயின், நான் பெரும்பாவி என அனைவரும் என்னைப் புறக்கணித்து ஒதுக்குவாராக!” (குறுந். 137) என்பது போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

இது களவியலில் ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 129). இலக்கணவிளக்கம் இதனை உரையில் கொள்ளும். (இ. வி. 497 உரை)

துணிந்தமை கூறல் -

{Entry: I09__146}

தலைவனை உடன்போக்குக்கு ஒருப்படுத்தித் தலைவியிடம் நாணத்தைவிடக் கற்பே சிறந்தது என்பதனை விளக்கி, “தலைவன் உன்னை அழைத்துக்கொண்டு பாலைவழியே உடன்போக்கிற்கு ஒருப்பட்டுள்ளான். நின் கருத்து என்ன?” என்று வினவுவாள் போல, தலைவன் உடன்போக்கினைத் துணிந்த கருத்தினைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

இதனை ‘பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 182)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 205)

துணிந்தவழி வியத்தல் -

{Entry: I09__147}

உறுதியாகத் தெரிந்து கொண்டபின் தலைவன் தலைவி எழிலை வியந்து கூறுதல். இது கைக்கிளைப் பகுதிக் கூற்று.

கொங்கைகளையும் அல்குலையும் கொண்டே தலைவிக்கு இடையுண்டு என்று அனுமானிக்கத்தக்க வகையில் அவள் இடை சிறுத்திருத்தலைத் தலைவன் வியத்தல் (கோவை. 4) போல்வன.

இது திருக்கோவையாருள் ‘நயப்பு’ எனும் கிளவி. (இ. வி. 491 உரை)

துணிவு -

{Entry: I09__148}

தனியிடை எதிர்ப்பட்ட தலைவியைத் தெய்வ மகளோ மானிடமகளோ என ஐயுற்ற தலைவன் மானிடமகளே என ஒருதலை துணிதலாகிய கைக்கிளை வகை. (ந. அ. 118)

துணிவு எடுத்துரைத்தல் -

{Entry: I09__149}

களவுக்காலத்தில் களவு அலராகும் எனவும், தமர் தலைவ னுக்கு மகள் தர மறுப்பர் எனவும் தான் கருதியவழித் தோழி, தலைவியைத் தலைவனோடு உடன்போக்கின்கண் செலுத்தத் திட்டமிட்டு அவ்வாறே உடன்போக்கிற்கு இசைவித்துத் தலைவனிடம், “என் தலைவி நின்னொடு போகும்போது நீ செல்லும் கரடுமுரடான கற்பாதைகூட அவள் சீறடிக்கு நல்ல தளிராம்போலும்!” எனத் தலைவியுடைய துணிவு எடுத் துரைத்தல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 209)

துணைச் சுட்டுக் கிளவி -

{Entry: I09__150}

தலைவி தன் துணைவனாகத் தலைவனை விதிவசத்தால் அடைந்திருப்பதனை வெளியிடும் அறத்தொடுநிலை. தோழி யும் செவிலியும் தலைவியிடத்துக் கொண்ட அன்பு மிகுதி யால் பலவகையிலும் அவளுக்கு உண்டாகக் கூடும் நன்மை தீமைகளை ஆராய்வர் ஆதலின், தன் திருமணம் தோழி செவிலி இவர்கள்மூலம் உறுதிப்படல் வேண்டும் என்ற கருத்தால், தலைவி தோழிவாயிலாகச் செவிலிக்குத் தன் துணைவனைச் சுட்டிக் கூறுவாள்.

ஆகவே, துணைச் சுட்டுக் கிளவி என்பது அறத்தொடு நிலைக்கு வேறு பெயராம்.

துணைச் சுட்டுக்கிளவி - தலைவி ஒரு துணையுடையாள் என்று தோழியும் செவிலியும் சுட்டுதலிடத்துக் கிளக்கும் கிளவி. (தொ. பொ. 123 நச்.)

துணையோர் கருமம் -

{Entry: I09__151}

தலைவிக்குத் துணையாக இருந்து அவளுடைய நன்மை தீமைகளை ஆராய்ந்து, அவளுக்கு நல்லனவற்றையே செய்யும் தோழி செவிலி என்னும் இருவருடைய செயலும் தலைவி யின் மணத்தைத் தலைவனொடு நன்முறையில் அமைத்துத் தருவதே.

துணையோர் கருமம் - தோழியானும் செவிலியானும் முடியும் காரியம். (தொ. பொ. 123 நச்.)

துயர் அவற்கு உரைத்தல் -

{Entry: I09__152}

தோழி தலைவியின் துயரத்தைத் தலைவனுக்குக் கூறுதல்.

“தலைவி நின்பிரிவால் துயர்க்கடலில் ஆழ்கிறாள். அவளுக்கு நின் மார்பினைத் தெப்பமாக நல்கினால்தான் அவள் துயர்க் கடலினின்று உயிருய்ந்து வாழக் கூடும்” என்பது போன்ற தோழி கூற்று.

இஃது இருபாற் பெருந்திணைக்கண் வரும் பெண்பாற் கூற்றாகிய கிளவி. (பு. வெ. மா. 17 -4)

துருக்கம் -

{Entry: I09__153}

முல்லை நிலம். (பிங். 3658)
அழுவம் (-காட்டுப் பரப்பு) (திவா. பக். 108)

துறை கூறல் -

{Entry: I09__154}

தலைவி நிலையைக் கவி தானே கூறுதல்.

“தலைவன் பரத்தையிற் பிரிந்து வர, அவனது வருகையால் மனத்தில் உவகை உண்டாயபோதும் உடனே அவன் வரவினை ஏற்றல் கூடாது என்ற எண்ணத்தால் தலைவி அவனிடம் சற்று நேரம் ஊடினாள்; அவ்வூடலினால் மனம் வாடினாள்; தாம் பேசிக்கொண்டிருந்த இடத்தில் இருந்த விளக்கு வாடைக்காற்றால் அணைந்துபோனதால், தான் இருளுக்கு அஞ்சினவளைப் போலத் தன் கணவனைத் தழுவிக் கொண்டு ஊடல் தீர்ந்தாள். மோகூரிலிருந்த மயில் போன்ற சாயலையுடைய பெண் தன் கணவனுக்கு அருளிய முறை இதுவாகும்” என்பது.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ என்னும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல். 426 உரை)

‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

{Entry: I09__155}

இரவுக்குறியில் தோழி, உறங்கும் தலைவியை எழுப்பி மனைக் கொல்லைப்புறம் அழைத்து, இரவுக்குறியிடம் சென்று அவள் தலைவனை எய்துவதற்காக அவளைத் தனித்து நிறுத்தி, வேறொரு காரணம் காட்டி அவளிடத்தினின்று பிரிந்து சேறல். (உரிப்பொருள் குறிஞ்சியாயினும், கருப் பொருள் பற்றி இதற்குரிய ஆசிரிய நடைத்தாகிய நூற்பா ‘நெய்தல் நடையியல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.) (வீ. சோ. 92 உரை மேற்.)

துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் -

{Entry: I09__156}

தலைவியின் பிரிவுத்துயரால் தானும் துன்புற்ற தோழி, “நின் துயரத்தினை நீ தலைவனிடம் கூறலே தக்கது” என்று அவட்குக் கூறுதல்.

“தலைவனுக்கு உன் துயரமெல்லாம் தெரியாது என்பதில்லை. யாது காரணத்தாலோ நீட்டித்தான். இனி நீயே அவன்பால் நின் துயரினைக் கூறலே செயற்பாலது” என்றாற் போன்ற தோழி கூற்று.

‘கூறுவிக் குற்றல்’ என்னும் இதனைத் திருக்கோவையார் (263).

இது ‘வரைதல் வேட்கை’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

துனி -

{Entry: I09__157}

ஊடல் முறுகியவழி ஏற்படும் வெறுப்புத் ‘துனி’ எனப்பட்டுப் பிரிவின்பாற்படும், அது காட்டக் காணாது கரந்துமாறுத லின். அஃதாவது உணர்த்த உணராது உள்ளத்தில் உள்ளதை மறைத்துக்கொண்டு வேறுபடுதல் என்பது.

நற்காமமாகிய இல்லறத்திற்குத் துனி ஆகாது என்பது.

(தொ. செய். 187 பேரா.)

துனி ஒழிந்துரைத்தல் -

{Entry: I09__158}

கற்புக் காலத்தில் தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டும் தன் இல்லத்துக்கு வந்தானாக, வாயிலடைத்து ஊடலோடு இருந்த தலைவி தலைவனது ஆற்றாமை கண்டு, “நம் குன்றிடத்து மிக்க இருளில் சிங்கங்கள் யானைகளை வேட்டையாடும் கொடிய வழியைக் கடந்து தம் கையிலுள்ள வேலே துணையாக வந்து பண்டு களவொழுக்கத்தில் நமக்குக் கருணைசெய்த தலைவனுடைய புணர்ச்சிக்கு இதுபோது நாம் உடன்படாதிருத்தல் தக்கதன்று” என்ற நினைத்துத் துன்பம் ஒழிந்து தலைவனொடு புணர்ச்சிக்கு உடன்படுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 395)

தூதிடையாடல் -

{Entry: I09__159}

தலைவியின் பிரிவுத்துயர்கண்டு ஆற்றாளாகிய தோழி தலைவனிடம் தூது போதல்.

“இம்மாலைப் பொழுதில் தலைவி உயிர் பிழைத்திருக்க வேண்டுமாயின் விரைவில் தேரினை ஆயத்தம் செய்து தலைவியைக் காணப் புறப்படுக. யான் நின்னைக் கண்டு தொழுது கூறும் தூதுச் செய்தி இதுவே” என்ற தோழி கூற்று.

இஃது இருபாற் பெருந்திணைக்கண்ணதொரு கூற்று.

(பு. வெ. மா. 17 - 3)

தூதிற் பிரிவு -

{Entry: I09__160}

தூதிற் பிரிவு கற்புக்காலத்துத் தலைவற்கு நிகழும் பிரிவுகளில் ஒன்று. இதற்குக் காலவரையறை ஓர் யாண்டிற்கு உட்பட்டது. (தொ. பொ. 29, 190 நச்.)

அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் ஆகிய நால்வருள் முதலிருவர்க்கும் பெரும்பான்மையும், ஏனைய இருவர்க்கும் சிறுபான்மையும் தூதிற் பிரிவு உரியது. (தொ. பொ. 32 நச்.)

இது பகைதணிவினை எனக் கூறப்படும். இருவர்அரசர் போரிடத் திட்டமிட்டகாலைத் தான் அருளுடையான் ஆதலின் பேரிழப்பிற்குரிய போர் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று கருதி, இருவரிடமும் சென்று இன்சொல் கூறிச் சந்து செய்வித்தலும் உண்டு. அவருள் யாவரேனும் ஒருவர் போரிட முனைந்திருப்பின், தானே தன் ஆற்றலால் அவருக்குப் பகையாகி அழிக்கப்போவதாக அச்சுறுத்தி அவரை அமைதி யுறச் செய்தலும் உண்டு. உலக நன்மைக்காகச் செய்யும் அவ்வருட் செயல் பிறருக்குப் பணி செய்யும் ஏவலருடைய செயலன்று. இத்தூதிற் பிரியும் தலைவன் நாள்களும் திங்களும் இருதுவுமாகத் திரும்பிவரும் காலஎல்லையை வரையறுத்துப் பிரிவான். (இறை. அ. 35, 41)

தூது எதிர்கோடல் -

{Entry: I09__161}

கற்புக் காலத்தில் ஓதல் முதலிய செயல் கருதிப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்து வாராதவழி, அவனிடம் தலைவி தன் நிலையைக் கூறிவரத் தூது விடுப்ப, அத்தூதுவனை எதிர்கொண்டழைத்துத் தலைவன் அவளது நிலையை வினவுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரைமேற்)

தூது ஒருப்படுத்தல் -

{Entry: I09__162}

பெண்பாற்கூற்றுப் பெருந்திணையில் தலைவி தலைவனிடம் தன் நிலையை எடுத்து உரைக்குமாறு தூது ஒன்றனை விடுக்க முடிவு செய்தல்.

“அன்னமே! ஆன்மஞானம் பெற்றவரும், மகளிர் முகமாகிய மதிக்கு மகிழ்ச்சி செய்யும் மார்பினருமாகிய சடகோபரிடம் காதல் என்ற பெயரால் என் அறிவு துன்புறும் இருண்ட நிலையையும், இராப்போது துன்புறுத்தி என்னை வருத்தும் நிலையையும் நீ தூது சென்று சொல்வாயாக” என்று கூறுதல் போல்வன. (மா. அ. பாடல். 559)

தூது கண்டு அழுங்கல் -

{Entry: I09__163}

தலைவன் வரைபொருட் பிரிய அது குறித்து ஆற்றாதிருந்த தலைவியை ஆற்றுவிக்கத் தோழி, “நங்காய்! ஒரு தூது வந்துள்ளது. அஃது இன்னார் தூது என்று தெரியவில்லை. ஒருகால் நம் தலைவன் அனுப்பிய தூதாகவும் இருக்கலாம்” என்று கூறத் தலைவி அஃது அயலார் தூது என்பதை அறிந்து, “தலைவன் தூதாக ஒன்றும் வரவில்லையே!” என்று தன்மனத்து வருந்துதல்.

இதனைப் ‘பிற விலக்குவித்தல்’ என்பதனுள் அடக்குவர். ‘வரைதல் வேட்கைத்’ தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

இது திருக்கோவையாருள் ‘வரைபொருட்பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 281)

தூதுவரவு உரைத்தல் -

{Entry: I09__164}

களவுக்காலத்துத் தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயின் பிரிந்து சென்றானாக, அவனது பிரிவிடை ஆற்றாமை மிக்க தலைவிக்குக் காலம் மறைத்து உரைத்த தோழி, “தூது ஒன்று வந்துள்ளது. அது தலைவன் விடுத்த தூதோ, பிறர் ஒருவர் விடுத்த தூதோ, என்று அறிகிலேன்” எனத் தலைவி மனம் மகிழுமாறு அவளுக்குத் தூது வரவினை உரைத்தது.

இது ‘வரை பொருட்பிரிதல்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 280)

தூது விடுதல் -

{Entry: I09__165}

கற்புக் காலத்துத் தலைவியை ஓதல் தூது காவல் பகை முதலியன கருதிப் பிரிந்த தலைவன் தான் மீண்டு வருவதாகக் குறித்த பருவத்தும் எடுத்துக்கொண்ட செயல் முடிவு பெறாத போது தலைவிக்குத் தன் வரவு குறித்துத் தூது விடுத்தல். இது முல்லை நடையியல். (வீ. சோ. 94 உரைமேற்)

தெய்வத்திறம் பேசல் -

{Entry: I09__166}

தம்மைக் கூட்டிவைத்த ஊழ்வினையின் தன்மையைத் தலைவன் தலைவியிடம் கூறுதல்.

“இமையாத முக்கண்ணனாம் சிற்றம்பலவனது பொழிற்கண் நிற்கும் மணமாலை கூடிய கூந்தலாய்! முயற்சியும் உளப்பா டும் இன்றித் தேவரால் பெற்ற நம் அழகிய மணத்தைச் சிதைப்பார் ஒருவரும் இரார். ஆதலின் நீ வாடித் துன்புறல் வேண்டா.” (கோவை. 14)

இது களவியலுள் ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ணதொரு
கூற்று. (ந. அ. 129; இ. வி. அகத். 125)

தெய்வத்தின் எய்தும் புணர்ச்சி -

{Entry: I09__167}

இயற்கைப் புணர்ச்சியின் ஒரு பகுதி இது. இதற்குரிய கிளவி மூன்றனையும் கூற்றுக்களாகவே கொள்ளுதல் மரபு. அவை யாவன 1. கலந்துழி மகிழ்தல், 2. நலம் பாராட்டல், 3. ஏற்புற அணிதல் என்பன. (ந. அ. 125)

தெய்வப்புணர்ச்சி -

{Entry: I09__168}

தெய்வம் கூட்டத் தலைமகன் தன் சிந்தை வேறாகித் தலை மகளைக் கூடும் கூட்டம் தெய்வப்புணர்ச்சியாம். தெய்வம் கூட்டுதலான் இக்கூட்டம் முயற்சியின்றித் தானே முடிவதாம். இஃது இயற்கைப் புணர்ச்சியின் இருவகையுள் ஒன்று. ஏனையது தலைவியின் எய்தும் புணர்ச்சி. (ந. அ. 124, 33, 32)

தெய்வம் -

{Entry: I09__169}

இது மன்றல் எட்டனுள் நாலாவது. பெரிய வேள்விகள் நடத்துவிக்கும் பலரிடையே (அவி சொரிந்தும் மறையோதி யும் வேள்வியில் தலைமையான பங்கேற்பவர் ‘ருத்விக்குகள்’ எனப்படுவர்) தகுந்த ஒருவனுக்குத் தன்மகளைத் தக்கிணை யாக நல்குதல். தெய்வங்களை வேட்டு நிகழ்த்தும் வேள்வியை முன்னிட்டு நிகழ்வதால் இஃது இப்பெயர் பெற்றது. (தொ. பொ. 92 நச். உரை)

வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித்தீயின் முன்னர்க் கன்னியைத் தக்கிணையாகக் கொடுப்பது. (வீ. சோ. 181 உரை மேற்.)

இதுவும் பொருள்கோள் என்ற மன்றலோடு ஒக்கும். இவ்வாறு ஈதற்கண் ஒத்த பிராயம் முதலாயின உளவெனின் கற்பின்பாற்படும்; அன்றெனின், பொருந்தாக் காமத் தின்பாற்படும். (த. நெ. வி. 14)

‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -

{Entry: I09__170}

தெய்வம் என்ற கருப்பொருள் ஏனையவற்றைப் போல நிலமும் பொழுதும் காரணமாகத் தோன்றாமல், மக்கள் தம் மெய்யறிவான் படைத்துக்கொண்டது ஆதலானும், தோற்றக் கேடுகளின்றி நிலைபேறுடையதாய் விளங்குதலானும் இயற்கைப் பொருளாகிய நிலத்தொடு கூட்டிக் கூறப்பட்டது. (தொ. அகத். 5 ச. பால.)

தெய்வமணம் -

{Entry: I09__171}

வேள்வி செய்வோன், வேட்பிக்கின்றாருள் ஒருவற்குத் தன் பெண்ணைத் தீயின் முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது, தெய்வமணத்தார் திறம். (தொ. பொ. 92 நச். உரை)

தெருண்டுரைத்தல் -

{Entry: I09__172}

தெருளுற்றுரைத்தல். (சாமி. 89)

தெருளுற்று உரைத்தல் -

{Entry: I09__173}

களவொழுக்கத்துள் நிகழும் பதினேழ் கிளவித் தொகை களுள், ஐந்தாவதாகிய ‘பிரிவுழிக்கலங்கல்’ என்பதன் வகை யிரண்டனுள் இரண்டாவது. தலைமகளைத் தோழியர் எண்ணற்றோர் வழிபடுதலைக் கண்டு அவளைத் தான் இனி மருவ இயலுமோ என்று மருளுற்று எண்ணிய தலைவன், அம்மயக்கம் நீங்கித் தெளிவுற்றுச் சொல்லுதல் என்பது பொருள். இதன்கண், வாயில்பெற்று உய்தல், பண்புபாராட் டல், பயந்தோர்ப் பழிச்சல், கண்படை பெறாது கங்குல் நோதல் என்னும் நான்கு கூற்றும் அடங்கும். அவற்றைத் தனித்தனியே காண்க. (ந. அ. 132, 133)

தெளித்து வழிபடுதல் -

{Entry: I09__174}

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தானும் ஊடிய தலைவனைத் தோழி முதலியோர் சொற்கேட்டுத் தலைவி கோபத்தைத் தணிவித்து வழிபட்டுக் கூடி இன்புறுதல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

தெளிதல் -

{Entry: I09__175}

தலைவன், தான் கண்ட தலைவி தெய்வமகள் அல்லள், மானுடமகளே என்று மனம் தெளிதல்.

தெய்வங்களுக்கு இல்லாத கால்நிலம் தோய்தல், சூடிய மலர் வாடுதல், வியர்த்தல் முதலிய செயல்களால் தலைவன் உள்ளத்து நிகழ்ந்த ஐயம் நீக்கப்படுதலின், இத்துறை ‘ஐயம் கடிதல்’ எனவும் படும். (ந. அ. 121; இ. வி. 490 உரை)

இது திருக்கோவையாருள் ‘இயற்கைப்புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. ஏனைய அகப்பொருள் நூல்களில் கூறப்படும் iக்கிளைச்செய்திகளும் இதன்கண் இயற்கைப் புணர்ச்சி எனும் தொகுதிக்கண் இணைத்துக் கொள்ளப்பட்டன. (கோவை. 3)

தெளிவிடை விலங்கல் -

{Entry: I09__176}

தோழி தெளிவாகக் கூறும் செய்தியைத் தலைவி மறுத்துக் கூறுதல்.

தலைவன் பொருள்வயின் பிரிந்தானாக, அவன் தான் மீண்டு வருவதாகக் கூறிய கார்காலம் இரண்டு திங்கள் அளவிற்றாக வும் அப்பருவ இறுதிக்கண்ணும் அவன் வருதல் ஒருதலை என்ற துணிவிலளாய், கார் தொடங்கியபோதே அவன் வாராமை கண்டு தன்னை அவன் மறந்துவிட்டானோ என்று தலைவி ஆற்றாமையுறவே, தோழி தலைவனுடைய அருங் குணங்களையும் சொன்ன சொல் தவறாத் தூய உள்ளத்தை யும் வலியுறுத்தி, அதுபோது பெய்த மழை காலமல்லாக் காலத்துப் பெய்த மழையாதலையும் எடுத்துக்கூறித் தலைவி யைத் தெளிவுறச் செய்ய முயலவும், அவள் மேலும் ஆற்றாது, தலைவன் தன்பால் பிரிவின்றி இயைந்த துவரா நட்பின னாகிய ஐந்திணைக் காதற்காமக் கருத்தினை மறந்து, பொருந் தாக் காமச் செய்தியாகத் தன்னை மறந்து வேற்றூரில் தங்கி விட்டானோ என்று கவலையுறுதலை அகப்பொருட் பெருந் திணைத் துறைகளுள் ஒன்றாகக் கோடல் ஒருசாரார் கருத்து.

இது நம்பி அகப்பொருள் கூறும் பெருந்திணை. (ந. அ. 243)

தெளிவு (1) -

{Entry: I09__177}

தலைவன் தன்பண்பு இருப்பிடம் முதலிய பற்றிக் கூறியதை ஏற்றுத் தலைவி தெளிதல்.

“இப்பெருமானார் சொல்லை நம்பி உயிர்வாழும் என்னை இங்கே துயர் உறுமாறு செய்துவிட்டு இவர் தம்மூரகத்தே கவலையின்றி இரார் என்பது உறுதி” (தஞ்சை. கோ. 26) எனத் தலைவி தெளிதல்.

இது களவியலுள் வரும் கூற்று. (ந. அ. 130)

தெளிவு அகப்படுத்தல் -

{Entry: I09__178}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன், தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினான் ஆயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்குக் கண்ணான் கூறியதை விடுத்து மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் இஃது இறுதிச் செய்தியாகும்.

தெளிவகப்படுத்தலாவது தலைவன் தலைவியின் உள்ளம் ஒத்த பண்பை அறிந்து அதனால் ஏற்பட்ட தெளிவைத் தன் மனத்துக் கொண்டு இயற்கைப் புணர்ச்சிக்குத் துணிதல். (குறுந். 40, தொ. பொ. 98 இள.)

இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிதலும் பிரிதல் நிமித்தமு மாகப் பொருந்துவன தலைவற்கு உரிய என்ற ஏழிலும் இறுதியில் உள்ளது தெளிவகப் படுத்தல். அஃதாவது ‘நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்; பிரியின் அறனல்லது செய்தேனாவேன்” எனத் தலைவி மனத்துத் தெளிவுண்டா மாறு தலைவன் கூறுதல். (குறுந். 137) (107 நச்.)

‘தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பல்’ -

{Entry: I09__179}

பாங்கன், தலைவனிடம் பிறருடைய மகளை அவர் இசை வின்றிக் கொள்ள நினைப்பதும் தவறு என்று கூறியவழி, தலைவன் அவன் கூற்றில் நன்மைதீமைகளை ஆராயாமல், அவன் கூறியதனை மறுத்துத் தன் நிலையினைக் கூறல்.

இதனைக் ‘கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 137)

இது குறிஞ்சி நடையியல். (வீ. சோ. 92 உரைமேற்.)

தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல் -

{Entry: I09__180}

கற்புக் காலத்தே, பரத்தையிற் பிரிவின்கண் புனல்வரவு கேட்ட தலைவன் புனலாட்டு விழாவிற்குப் பரத்தையர் தெருவிலே தேரேறிச் செல்ல, தலைவனது தேரின் வருகை கண்ட பரத்தையர் இனித் தலைவனுடைய தோள்களைத் தழுவுதற்குத் தமக்கு வாய்ப்புக் கிட்டியமை கருதி மகிழ்ந்து தம்முள் கூறிக்கொண்டது.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 370)

தேர்வரவு கூறல் -

{Entry: I09__181}

‘தேர் வரவு கூறல்’ என்ற துறை களவுக் காலத்தில் ‘வரை பொருட் பிரிதல்’ என்ற கிளவிக்கண்ணும், கற்புக் காலத்தில் ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’, ‘பொருள்வயிற் பிரிவு’ என்ற தொகுதிக்கண்ணும் உள்ள கூற்றாகும்.

1) களவுக் காலத்தில் தலைவன் வரைபொருட்பிரிய, அவன் பிரிவால் தலைவி மெலிய, அதுகண்டு அறத்தொடு நிலை நிகழ, அந்நிலையில் தலைவன் மீண்டு வரும் தேர் ஓசையைக் கேட்ட தோழி மகிழ்ச்சியொடு தலைவிக்குத் தேர்வரவினை எடுத்துக் கூறியது.

2) கற்புக் காலத்தில் தலைவன் வேந்தற்குற்றுழிப் பிரிந்து செல்லக் கார்காலத் தொடக்கத்தில், “பகைத்த மன்னர்க ளிடையே சமாதானம் ஏற்பட்டுவிட்டதால் தலைவன்தேர் விரைவில் நம் இல்லத்துக்குத் திரும்பிவிடும்” என்று கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.

3) கற்புக் காலத்தில் பொருள்வயின் பிரிந்த தலைவன் பொருள் ஈட்டிக்கொண்டு தேர்மிசை, மேகக்கூட்டங்கள் சூழ்வர, விரைந்து வாராநிற்கையில், “இம் மேகங்கள் தலைமகள் உயிரினை வெகுண்டு நின்ற காலத்து ஒருதேர் வந்து காப்பாற்றினமையின், இனிமேல் வரக் கடவது ஒன்று மில்லை” எனத் தோழி தலைவிக்குத் தேர்வரவு கூறுதல்.

(கோவை. 295, 326, 349)

தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் -

{Entry: I09__182}

தலைவன் களவுக் காலத்தில் ஒருவழித் தணந்தகாலை அவன் பிரிவினை ஆற்றாத தலைவி அன்னத்திடம் தலைவன்வரவு பற்றி வினவ, அது வாய் திறவாமையின், “இனி, தலைவன் வரும் சுவடு தோன்றவில்லை, என் உயிருக்குப் பற்றுக்கோடு அவன்தேர் வந்து சென்ற சுவடே. இத்தேர்ச்சுவட்டை உன் அலைகளால் அழித்துவிடாதே!” என்று தலைவி தேர்வழி நோக்கிக் கடலினை நோக்கிக் கூறுதல்.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 185)

தேறு ஏற்றல் -

{Entry: I09__183}

தேற்றல்; ‘உடன்போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணவாகிய வகை எட்டனுள் இறுதியாவது. (ந. அ. 181).

தேற்றேன் என்றல் -

{Entry: I09__184}

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன் மனத்திடம் கூறுவதுபோல. “நெஞ்சே! இத்தலைவி, களவுக்காலத்து இருளில் இடையூறுகள் பலவற்றிற்கிடையே நம் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த அந்த அன்பு வடிவினள் அல்லள்; அவள்வடிவில் காட்சி அளிக்கும் பிறள்ஒருத்திபோலும்” என்பது போலக் கூறுதல் (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

தேறாது புலம்பல் -

{Entry: I09__185}

களவுக்காலத்தில் தலைவன் வரைபொருட்குப் பிரிந்தானாக, தலைவனது வாய்மை சொல்லி வருத்தம் தணிவித்த தோழிக்கு, “தலைவன் சொல் தவறான் என்பது உண்மை எனினும், என் உள்ளமும் நிறையும் என் வசம் நில்லா; அதுவுமன்றி என் உயிரும் பொறுத்தற்கு அரிதாயுள்ளது. இந்நிலைக்குக் காரணம் யாதோ?” என்று தலைவன் சொற்களை முழுதும் தெளியாத தன் நிலையைத் தலைவி கூறித் தனிமைத் துயரால். வருந்தியது. (கோவை. 278)

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -

{Entry: I09__186}

தெளிய முடியாதபடி அறிவினை அழிக்கும் கழிகாமத்த னாகிய தலைவன் கொடுஞ்செயல்களைக் கண்டோர் கூறியது.

1. தலைவன் தலைவியைக் கண்டபின்னர், காட்சி வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணு வரையிறத்தல் - என்ற ஆறுநிலையை அடைவதற்குள் அவள்தன் தொடர்பு கிட்ட அவளோடு இன்புறுதல் மரபு. நாணத்தின் எல்லை யைக் கடந்த நிலையிலும் தலைவனுக்குத் தலைவியின் தொடர்பு கிட்டாது போயின், அவன் தெளிவு நீங்கிய எல்லை கடந்த காமத்தால் தான் காண்கின்ற பொருள் எல்லாவற்றை யும் தலைவியின் நினைப்பையே கொண்டு நோக்குதலின்,

“நன்கு வளர்ந்து செழித்த கொடியினைத் தலைவியின் இடை இது என்று கூறித் தழுவுகிறான்; காந்தட் பூக்களைத் தலைவியின் கைகள் என்று கருதி விரும்புகிறான்; கருவிளம் பூக்களைத் தலைவியின் கண்கள் என்று கருதி அவற்றைத் தன் கையில் கொள்கிறான்; மாந்தளிரை அவள்மேனியாகக் கருதித் தன் கைகளால் தடவுகிறான்; பொழிலில் செல்லும் ஆண்மயில்களின் கண்ணுக்கினிய மென்மையை அவள்சாய லாகக் கருதி அவற்றின் பின்னே தொடர்ந்து போகிறான்; மூங்கில்களைத் தலைவியின் தோள்களாகக் கருதி அவற்றைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறான்; ஆற்றிலுள்ள கருமணலை அவள் மயிர்முடியாகக் கருதி அவற்றின்மேல் புரளுகிறான். இவ்வாறு காணும் பொருள் எல்லாம் தலைவியின் உடலாக வும் உறுப்பாகவும் தலைவற்குக் காட்சி வழங்குகின்றன” என்று தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறத்தில் உள்ள தலைவன் செயல்களைக் கண்டவர்கள் கூறுவது. (தொ. பொ. 51 நச்; 97 இள.)

விரும்பாத பிறன் மனைவியைத் தான் விரும்பித் தன் மனத்தின்கண், “பெண்ணெல்லாம் அவளே யாக்கிப் பெயரெல்லாம் அவளவே ஆக்கித் தன் கண்ணெல்லாம் அவள் கண்ணேயே ஆக்கிக் காமனைத் தன்மீது அம்பு எய்வான் ஆக்கி அவன் செய்த ஐங்கணையின் புண்களை யெல்லாம் தன் உள்ளத்திலேயே கொண்டு தடுமாறிய இராவணன் போல்வதொரு நிலை” (கம்பரா. 7643) என்று கூறுதலுமுண்டு.

தலைவன் பெருமையும் உரனுமாகிய குணங்களையும், தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையும் கருதுதலை நீங்கிய வேட்கை மிக்க நிலை. பெருந்திணையை அறிதற்குரிய பொருட் குறிப்பு நான்கனுள் இஃது ஒன்று. (தொ. அகத். 53 ச. பால.)

தொண்டகம்

{Entry: I09__187}

1. குறிஞ்சிநிலப் பறை; ‘தொண்டகச் சிறுபறை பாணி’ (நற். 104)

2. ஆகோட் பறை ‘ தொண்ட கப்பறை துடியொடார்த்தெழ’ (சீவக. 418). (L)

தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்

{Entry: I09__188}

காமக்கிழத்தியராவார், கடனறியும் வாழ்க்கையை உடைய ராகிக் காமக்கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராவர். அவர் தலைவனது இளமைப் பருவத்தில் கூடி முதிர்ந்தோரும், அவன்தலைநின்று ஒழுகும் இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், காமம் சாலா இளமையோரும் எனப் பல பகுதியராவர். இவரன்றிக் கூத்தும் பாட்டும் உடையராகி வரும் சேரிப்பரத்தையரும், குலத் தின்கண் இழிந்தோரும், அடியரும், வினைவல பாங்கினரும் காமக்கிழத்தியர் ஆகார். காமக்கிழத்தி ஓரளவு தலைவியை ஒத்த தலைமையும் உரிமையும் உடையவள். தலைவன் தொடர்ந்து காமக்கிழத்தியிடமோ தலைவியிடமோ தங்கி இன்பம் நுகராமல் சின்னாள் காமக்கிழத்தியிடமிருந்து தலைவியை நோக்கிச் சென்றபோது, தலைவி ஊடல்கொள்ள அதனைத் தணித்துத் தலைவன் அவளொடு கூடினான் என்று கேள்விப்படும் காமக்கிழத்தி தலைவியிடம் வெகுண்டு இனித் தலைவன் அவளிடம் மீண்டு செல்லாதவாறு தன் னிடமே அவனைச் சிறைப்படுத்துவதாகக் கூறுவாள்; தலைவன் பரத்தை ஒருத்தியின் தொடர்பு கொண்டு தன்னிடம் வந்த காலை அவனொடு புலந்து உரையாடுவாள்.

தலைவன் பலநாள் தன் இல்லிடை இருந்து தலைவியோடு ஊடியும் கூடியும் இன்பம் நுகரும் செய்திகேட்டு, அவனைப் பலநாள் பிரிந்த நிலையில் இருந்த காமக்கிழத்தி அவன் தலைவியிடம் அடங்கி ஒடுங்கி வாழ்வதாக எள்ளி உரையாடு வாள்.

தலைவனுக்குத் தலைவியர்பலரிடம் பிறந்த புதல்வர்களைத் தான் எதிர்ப்படும்போது அவள் அப்புதல்வர்களுக்குக் கையுறை வழங்கித் தான் மிக மகிழ்வாள்.

தலைவன் முன் மணந்த மனைவியர், காமக்கிழத்தியர் இவரோடு அமையாமல் பின்னும் வேறொரு தலைவியொடு களவொழுக்கம் நிகழ்த்தியகாலை, அவள் தைந்நீராடலும் ஆறாடலும் முதலிய நற்செயல்கள் செய்தலைக் கண்ணுற்ற காமக்கிழத்தி, “இவள் தோற்றப்பொலிவை நோக்க இவளைத் தலைவன் கடிதில் வரைவான்” என்று மனங்கொண்டு, அவ்வரைவு தன்னை அவன் அடியொடு மறத்தற்கு ஏதுவாகு மாதலின் அது குறித்து வருந்துவாள்.

பரத்தையிற் பிரிந்துழித் தலைவன் தன்னை மறந்தது குறித்து அவனோடு ஊடல் கொள்ளவேண்டிய காமக்கிழத்தி, அவனுக்கு நற்குடிப்பிறந்தாருக்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒப்புரவு கருதித் தலைவியைச் செவிலித்தாய் போலத் தழுவிக்கொண்டு தலைவனை இடித்துரைத்துத் தலைவியின் வெகுளியைப் போக்கி அவனோடு உடன் படுத்துவாள்.

தலைவன் காமக்கிழத்தியின் ஊடலைப் போக்கத் தன் புதல்வனை உடன்கொண்டு வந்தவழி, மகிழ்வோடு அப்புதல் வனைத் தழுவி அவனுக்கு அணிகள்பல அணிவித்து அவ னொடு சிரித்து மகிழ, அது கண்டு, தலைவனும் சிரித்துக் கொண்டு காமக்கிழத்தியை அணுக, அவள் ஊடல் தீர்வதும் உண்டு.

தான் ஓரளவு தலைவியை ஒத்த தகுதியுடையவள் ஆதலின், காமக்கிழத்தி தன்னை ஏனைய பரத்தையரைப் போல நினையாமல் சற்றுப் பெருமிதமாகவே மதித்து நடப்பாள்.

தலைவி வாழும் தெருவிலேயே அடுத்த மனையில் இருந்து வாழ்பவள் காமக்கிழத்தி. இவள் தலைவன் தன்னைச் சில நாள் பிரிந்தவழி, “என் மாண் நலம்தா” என்று ஊடி உரைப்பாள்; அவனது பரத்தைமையைத் தலைவிக்குக் கூறுவதாக அவனை அச்சுறுத்துவாள்; அவனை அகப்படுத் திய சேரிப்பரத்தையரொடு புலந்து உரைப்பாள்; தலைவி யொடு அணுகியும் சேரிப்பரத்தையரிடமிருந்து விலகியுமே வாழ்வாள் (தொ. பொ. 151 நச்.).

தலைவற்குத் தகும் என்று ஆய்ந்த யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வன நுகர்ந்து அவனொடு விளை யாடி மகிழ்தற்கும் காமக்கிழத்தி உரியள். (191 நச்.).

தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி செய்திகள் -

{Entry: I09__189}

(எண்கள், பொருளதிகாரத்து நச்சினார்க்கினிய முறையில் அமைந்த நூற்பா எண்கள்).

செவிலி பரம்பரையாகத் தலைவியொடு பிரிவின்றி இயைந்த தொடர்பு உடையவள். செவிலி தலைவிக்கு வளர்ப்புத் தாயாக இருக்கும்போது செவிலியின் மகள் தலைவிக்கு உயிர்த் தோழியாயிருப்பாள். இத்தோழி பின்னர் தலைவியின் மகளுக்குச் செவிலியாகுமிடத்துழி அவள்மகள் தலைவி யுடைய மகளுக்குத் தோழியாவாள். இப்படிப் பரம்பரையாக வரும் சிறப்புக் காரணத்தான் தலைவியின் களவொழுக்கச் செய்தியைக் குறிப்பானன்றிக் கூற்றினான் நற்றாய்க்குக் கூறுவதற்கு உரிமை உடைய செவிலியே தாய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள். தலைவியைப் பயந்த தாயை ‘நற்றாய்’ என்று அடைகொடுத்தே குறிப்பிடல் வேண்டும். வாளா ‘தாய்’ என்று குறிப்பிடின் அச்சொல் செவிலியையே குறிக்கும். (124).

செவிலி தலைவியின் களவொழுக்கத்தை வெளியிட நேரிடை யாக நற்றாய்க்கே அறத்தொடு நிற்பாள். (138).

தலைவி தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டவழி அவளைத் தேடிக்கொண்டு செவிலி அருவழிக்கண் தந்தையும் தன்னையரும் உணராமுன் எதிர்ப்பட்டு மீட்டற்குச் செல்வாள். (37).

தலைவி தலைவனைத் தானே தேர்ந்துகொண்டமை அறிந்து, இவள் கொண்ட தலைவன் தம் குலத்துக்கு ஒத்தவனோ என்று தன் மனத்து ஐயுற்ற செவிலி உயர்ந்தோரை வினாவி, அவரான் தலைவியது செயல் தக்கது என்று கூறப்பட, அது கேட்டுத் தெளிதலும் உண்டு (117).

தலைவி உடன்போயவழி அவள் பிரிவு தாங்காமல் இல்லத் தில் வருந்தி இருக்கும் செவிலி அரிதின் துயில் கொண்ட வழித் தலைவி பற்றிக் கனவு காண்பதும் உண்டு (198).

முக்காலத்தும் தம் குலத்துக்கு ஏற்கும்படியாகக் கற்பு முதலிய நல்லவற்றைத் தலைவிக்குக் கற்பித்தலும், இல்வாழ்க்கைக்குத் தீயனவற்றைக் கடியுமாறு அவளுக்கு அறிவுறுத்தலும் செவிலியின் கடமைகளாம் (153).

தலைவி தலைவனுடன் உடன்போயவழி அவரைத் தேடி வந்த செவிலியை வழியிடைக் கண்டோர், அவருள் சிறப்பாக அந்தணர்கள், தடுத்து மீட்டு ஊருக்கு அனுப்புவதும் உண்டு (40).

உடன்போய மகளை நினைந்து செவிலி மனையின்கண் மயங்கி இருத்தலும், தன்னைத் தெருட்டுவாரிடம் நெஞ்சு அழிந்து கூறுதலும், மகட் போக்கிய செவிலி சுரத்திடைப் பின் சென்று கானவர் மகளையும், நவ்விப்பிணா, குராமரம் முதலியவற்றையும் விளித்துக் கூறுதலும், தன்னை வினாவினா ரிடம் தன் நிலைமை கூறுதலும் உண்டு (42).

தலைவியின் களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாக அவள் தூற்றப்படுதலைக் கேட்டவிடத்துச் செவிலி தானே வருந்திப் புலம்புவாள்; தலைவியின் கரந்தொழுகும் காமம் அவள் உடலிடை வெளிப்பட்டஇடத்து அதனைப் பற்றி நொந்து தன்னுள் கூறிக்கொள்வாள்; தலைவி உடல்வனப்பு நிரம்பிக் காமம்சான்ற இளையள் ஆயினஇடத்து அவளைப் பற்றிக் கவலைகொள்வாள் (115).

தலைவனைச் செவிலி குறியிடத்து எதிர்ப்பட்டவழி, தான் அறியாது நிகழ்ந்த தலைவியின் களவுநிகழ்ச்சிகள் குறித்து வருந்துவாள்; தலைவியின் உடல்மெலிவும் உள்ளமெலிவும் தெய்வத்தானாயின என்று கட்டுவிச்சியும் வேலனும் கூறியதை நம்பி, வெறியாட்டெடுக்க ஏற்பாடு செய்வாள்; வெறியாட்டு நிகழ்ந்தவழியும் தலைவியின் நோய்நீக்கம் காணாத வகையில் மனம் நொந்து தலைவியின் வேறுபாடு பற்றித் தோழியை வினவுவாள்; தலைவிநிலை பற்றிய கவலை யான் அவள் தன்னை அணைத்துக்கொண்டு துயிலாநின்ற வழியும், உறக்கத்தில், அவள் தொடர்பாகச் சில கூறி அரற்றுவாள்; உடன்போயவழித் தலைவி தலைவனிடம் கொண்ட நட்புச் சிறந்த நட்பாக இருத்தல் வேண்டும் என்று தெய்வத்தை வேண்டுவாள்; உடன்போக்கின் பின் தலைவியி னுடைய கற்புநிலையைத் தோழியை உசாவி அறிந்து மகிழ்வாள் (115).

தன்மகள் தன்மீது அன்பின்றிப் பிரிந்து சென்ற நிலை குறித்துச் செவிலி பெரிதும் இரங்குவாள். தன் மகளைவிடத் தலைவியிடம் மிகுதியான பரிவும் பாசமும் கொண்டு அவள் நலனையே பெரிதாகக் கருதி வாழ்ந்த செவிலி, தலைவனும் தலைவியும் துறவு நிலை எய்தும் முன்பே, தானும் ‘காமம் நீத்த பால’ ளாகித் துறவுநிலை எய்துவாள் (193).

தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -

{Entry: I09__190}

(எண்கள், பொருளதிகாரத்து நச்சினார்க்கினிய முறையில் அமைந்த நூற்பா எண்கள்)

அகனைந்திணைப் பாடல்களில் தலைவனும் தலைவியும் சிறப்புற இடம் பெறுவர். கிழவன் (93) எனவும், காமக்கிழவன் (113) எனவும், கிழவோன் (234) எனவும், செல்வன் (174) எனவும், தலைவன் பொதுவுறச் சுட்டப் பெறுவான். தலைமகனுக்கு இயற்பெயர் கூறும் மரபு இல்லை (54).

ஐந்திணையாகிய முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற நிலங்களில் வாழும் தலைமக்கள் குடியைச் சார்ந்தவ னாகவோ, மருதநிலத்தே பெரும்பான்மையராக வாழும் அந்தணர் முதலிய நாற்பாலுள்ளும் சிறந்ததொரு குடியைச் சார்ந்தவனாகவோ தலைவனைக் குறித்தல் மரபு (20, 24). பெருமையும் உரனும் மிக்கானாகிய அவனுக்கு (98) உயிர்ப் பாங்கன் ஒருவனோ, பாங்கர் இருவரோ இருத்தல் உண்மை இறையனார் அகப்பொருள் (3) உரையால் போதரும். உயிர்ப் பாங்கன் ஒருவன் என்றலே மரபு. மற்று, இளையர் எனப்பட்ட ஒரு சாரார் அவன் மேற்கொள்ளும் வேட்டை முதலாய வினைகளில் துணைநிற்றற்கும், அவன் நலன் கருதி இயைந்த பலவற்றை எடுத்துரைத்தற்கும் உரியார் (170).

இத்தலைவன் ஒரு நாள் தன் இளையர்குழாத்தின் அரிதின் நீங்கி வந்து, தண்ணறுஞ் சோலைக்கண் தன் ஆயத்தின் அரிதின் நீங்கித் தமியளாய் நின்று கொண்டிருக்கும் தலைவியைப் ‘பாலது ஆணையின்’ காண்பான் (93). பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்து வகை ஒப்புமையாலும் (273 பேரா.) பெரும்பான்மையும் அவனோடு ஒத்தவள் அவள். தலைவன், அப்பத்து வகையுள் சிலவற்றால், அவளைவிட மிக்கவனாதலும் கூடும் (93). இருவரும் ஒரு நிலத்தவர் ஆதலேயன்றி வேறு நிலத்தவர் ஆதலும் கூடும். அவன் அவள் அழகினை வியந்து, அப்பொழிற்கண் உறையும் தெய்வ மகளோ என ஐயுற்று (94), பின் கண்ணிமைத்தல் முதலிய வற்றான் அவள் மானுடமகளேயாதல் தெளிந்து (95), அவளது கட்பார்வையான் தன்பால் அவள் காதல் கொண் டுள்ளமை உணர்ந்து (96), தன் சொற்களாலும் செயல்க ளாலும் அவளுள்ளத்தைத் தன்பாலதாக்கி அவளோடு இயற்கைப் புணர்ச்சி நுகர்ந்து (101), மறுநாள் அவ்விடத்தே தான் அவளைக் கண்டு மருவ வருவதாகக் கூறி நீங்குவான்.

மறுநாள் தலைவனைக் காணலுறும் பாங்கன் அவன் மன நிலையினை அறிந்து, அவனைத் தன்வயத்தனாக்க இயலாது போகவே, தலைவியை அவன் குறித்த இடத்தே தானே சென்று கண்டு வந்து உரையாட, அன்றே தலைவன் அவளைக் கண்டு அளவளாவுவான் (102). இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்றைப் பாங்கனுக்கு அறிவியாது தலைவன் தலைவியைக் கண்டு மருவுதல் இடந்தலைப்பாடு (102) எனவும், பாங்கன் வாயிலாகக் கண்டு மருவுதல் பாங்கற் கூட்டம் எனவும் பெயர்பெறும்.

அதன் பின்றை, தலைவன் ‘பெட்ட வாயில்’ ஆகிய தோழியை அரிதின் முயன்று தனக்கு உதவியாகப் பெற்று (102) களவொழுக்கத்தினை இரண்டு திங்களின் மிகாத காலம் தொடர்ந்து, பின்னர்த் தலைவியை வரைந்துகொண்டு இல்லறம் ஆற்றுவான் (இறை. அ. 32).

தலைவன் தன்னுடைய களவு கற்பு ஒழுக்க வாழ்க்கைக்கண், இன்பமும் துன்பமும் மிகுங்கால் அவ்வுணர்ச்சிகட்குப் போக்கு வீடாக மனத்துடனும், தன்சொற் கேட்டு மறுமாற் றம் தருதற்கோ செயற்படற்கோ இயலாத அஃறிணைப் பொருள்களுடனும் உரையாடுதலுமுண்டு (196); தலைவி யைப் பிரிந்தகாலை, கனவில் அவளைக் கண்டு கண்விழித்து வருந்தலுமுண்டு (197). தலைவியினுடைய உயிர் நாணம் மடன் என்றிவற்றைக் காக்கும் பொறுப்புத் தலைவற்குமுண்டு (201). தோழியோடு உரையாடுகையில் அவள் தனக்கு உதவுவாளோ மாட்டாளோ என்ற ஐயம் அவனுக்கு நிகழும் (238). தலைவி கூற்றுக்கெல்லாம் தான் மாறுறப் பேசி, அதுபோது அவட்கு நிகழும் நிலை வேறுபாடு கண்டு அவன் மகிழ்வான் (238).

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு என்னுமிரண்டும் நிகழ்ந்த பின்னர், பாங்கற்கூட்டமும் தோழியிற் கூட்டமும் நிகழாமலேயே தலைவன் தலைவியை வரைதலுமுண்டு. அவ்விரண்டு திறமும் பிறர்க்குப் புலனாகாமை நிகழ்வதால், அவ்விரண்டிடத்தும் இடைநின்று கூட்டுவாரின்றித் தலைவ னும் தலைவியும் ஒருவர்க்கொருவர் தூதுவர் ஆதலுமுண்டு (119).

தன்சொற்களைத் தோழி மதிக்கிறாள் என்றறிந்த பின்னரே, தலைவன், தலைவியைத் தன்பால் கூட்டுவிக்க அவளை வேண்டுவான் (128). பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவன் தலைவியைக் கண்டு மருவாமல் மீளலுறும் நிலை நிகழவும் பெறும் (134). அதுபோது அவற்குப் புலவியும் ஊடலும் நிகழ்தலுமுள (156). தான் தவறினாள் போலத் தோழி பணிமொழி கூறி அவன் கோபத்தை மாற்றுவாள் (157). களவுக் காலத்தே அவன் தேர் யானை குதிரை முதலியன ஊர்ந்து தலைவியைக் காண வருதலுமுண்டு (212). வழியினது அருமை, வழியிடை நேரக் கடவ தீங்குகள், தன்னுடற்கு வரும் ஊறு கண்டு அஞ்சும் அச்சம் முதலியன களவுக் காலத்தே அவனுக்கு யாண்டும் நிகழா (136). இக்காலத்தே இடையிடை ஒருநாள் இருநாள் தன் ஏனைய வினை காரணமாக அவன் அவளைக் காண வாராமையு முண்டு (111); திருமணத்திற்குப் பொருள் தேடி வரற் பொருட்டாகப் பல நாள் அவளைப் பிரிந்து வேற்றூர் சென்று மீடலுமுண்டு. இக்களவிற்கு மிகுதி எல்லை இரண்டு திங்களே என்னும் இறையனார் அகப் பொருள் (32). களவுக் காலத்தே தீய ஓரையிலும் நாளிலு முட்படத் தலைவன் தலைவியொடு மெய்யுறு புணர்ச்சி மேவுதலுமுண்டு (135). களவொழுக்கம் வெளிப்பட்ட பின்னரோ, வெளிப்படுவதன் முன்னரோ அவன் அவளை மணப்பான் (140); களவுக் காலத்தே, நாடுகாத்தற்கும் அரசற்குப் போரிடை உதவற்கும் வரைவிடை வைத்துப் பொருள் தேடற்குமே அவளைப் பிரிந்து செல்வதன்றி, ஓதல் - பகை - தூது - இவை பற்றிய பிரிவு அக்காலத்தே இல்லை (25, 141).

தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்லும் தலைவன் அவள்தமரே வந்தெதிர்ப்பினும் தான் ஒருகாலும் அவளைக் கைவிடாமல் பேணும் உறுதியைச் சூளுரைத்து மொழிவான் (506 பேராசிரியம்). கற்புக்காலத்தே அவன் ஒரு செயல் தொடங்கு முன், நிகழ்ந்தவற்றை எடுத்துக்கூறி, நன்மை மிக்கிருப்பின் அதன்கண் ஈடுபடுவான் (44). பெரும்பான் மையும் தலைவிகுரவர் அவளைத் தனக்கு மந்திரமுறை நிகழ்ச்சியொடு கொடுப்ப முறைப்படி மணத்தலும் (142), அவளோடு உடன்போக்கு நிகழ்த்த வேண்டிய இன்றியமை யாமை இருப்பின் அவள்தமர் இன்றியே வைத்துத் தன் மனைக்கண் அவளை வரைதலும் (143) தலைவன் இயல்பு.

தலைவியை வரைந்தெய்தி வாழும் கற்புக்காலத்தே, தலைவன் அவளது சினத்தை அவளை இரந்தும் உணர்த்தியும் தணிப்ப தற்குப் பலவழியாலும் முயல்வான்; அதுபோதும் அவளது ஊடல் நீங்கிற்றிலதேல், அவனுக்கும் வெகுளி தோன்றும் (156). பெரும்பான்மையும் தோழியே, அவனது வெகுளியைத் தணிக்க முற்படுமவள், அவனை, “அன்பிலை, கொடியை!” என்று கூறுதலுமுண்டு (157, 158). தலைவியும் சினம்கார ணத்தான் அவனைத் தம்மொடு யாதும் தொடர்பிலா அயலானைப் போன்றான் என்று சுட்டுதலுமுண்டு (159). தன்னையே என்றும் வழிபட்டு வாழும் நிலையினளாகிய தலைவியின் புலவியும் ஊடலும் தீர்த்தற்பொருட்டாகத் தலைவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பணிமொழி கூறுதலே மரபு (160, 227).

பரத்தையர்பால் பிரிந்து செல்லுமவன், தன்மனைவி பின்முறை வதுவைக் கிழத்தியை எதிரேற்று உபசரிப்பதும், அவளும் தன் முன்னவள் புதல்வன்பால் அன்பு பாராட்டு வதும் கண்டு, தலைவன் அத்தகு மாசற்ற காதலரை விடுத்துத் தான் பரத்தையர்பால் சேறல் தவறு என மனங்கொண்டு, தனது இல்லம் மீண்டு அப்பரத்தையரது தொடர்பை நீத்தலு முண்டு (172). புலவிக்காலத்தே அவன் தலைவியை வான ளாவப் புகழ்வான் (228). யாறும் குன்றும் காவும் ஆடி நுகரத் தலைவியோடு அவன் பதி இகந்து போதலு முண்டு (191). தலைவன் பரத்தையரொடு நீராடியமை கேட்டு, அவள் புலத்தல் இயல்பு (164).

கற்புக் காலத்தே, ஓதல் - நாடுகாவல் - தூது - பகை - பொருள் தேடல் - என்னுமிவற்றின் நிமித்தம் தலைவன் தலைவியைப் பிரிந்து வைகும் காலஎல்லை ஓர் யாண்டே (188 - 130). பாசறைக்கண் தங்கும் பிரிவு தவிர ஏனைய பிரிவுகளிடைத் தலைவி தனது பிரிவை ஆற்றாள் என்று, அவளை அவன் உடன்கொண்டு சேறலுமுண்டு (175). தலைவியைப் பிரிந்து வினைவயின் சென்றோன், அவ்வினை முடியுங்காறும் அப்பிரிவினை நினைந்து வருந்துதலிலன். குறித்த பருவம் கடந்த விடத்தும், தலைவி தன்பால் விடுத்த தூது வரக்கண்ட விடத்தும், எடுத்த வினை வெற்றியொடு முடிந்தவிடத்தும் அவளை நினைந்து அவன் புலம்புறுவான் (186). தலைவன் தன்னைப் பிரியலுறும் போதெல்லாம் அப்பிரிவு குறித்துத் தலைவி வருந்துவாள் (184). அவளை அமைதியுறுத்த வேண்டியே அவளோடு அவன் சின்னாள் மனைக்கண் தங்குவானேயன்றி, தான் முன்னர்ச் சூழ்ந்தவாறே, அவளைப் பிரிந்து வினைமுடித்தே மீடல் அவனுக்குக் கடமை (185); தான் பிரியுமுன்னர் அவள்பால் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்து முகத்தான் அவளை அவன் மிகப் புகழ்வான் (232); தான் செய்யும் நற்காரியங்கள் பற்றி அவளிடம் தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளுதலுமுண்டு (181). சேயிடை வினைவயின் சென்றோன், நெடுஞ்சேய்மைத்தாயினும் இடையே யாண்டும் தங்காமல் தேரூர்ந்து தன் இல்லம் விரைவின் மீள்வான் (194).

இங்ஙனம் இல்லறம் பேணி வாழும் கிழவோன், ஆண்டு மூப்பவே, காமஇன்பத்தில் பற்றற்று, அறம் முதல் மூன்றினும் சிறந்ததாகிய வீட்டின்பம் எய்தவேண்டி, தன் சுற்றத்தொடு, வேண்டுவன மேற்கொள்ள முயல்வான் (192).

அடியோர், வினைவல பாங்கினோர் என்பவர்களும் கைக்கிளை பெருந்திணைக்கண் தலைவராவார் (23). தம் மனத்து நிகழ்பவற்றை மறைத்துத் தம் தலைவியரிடம் பேசுதலும் இவர்கள் இயல்பு (211).

தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -

{Entry: I09__191}

(எண்கள், பொருளதிகாரத்து நச்சினார்க்கினிய முறையில் அமைந்த நூற்பா எண்கள்)

தலைவி மனைவி (225, 227) எனவும், கிழத்தி (93) எனவும், கிழவி (232) எனவும், கிழவோள் (234) எனவும், மனையோள் (151) எனவும் சுட்டப் பெறுவாள். இவள் பெண்ணிற்கு அமைந்த பெருவனப்பும் நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்றமையால் ஒப்பற்றுத் திகழ்பவள் (209); அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவனொடு முதற்கண் மெய்யுறு புணர்ச்சி மேவாதவள் (99), ‘பாலது ஆணையின்’ அவனோடு இரண்டு மூன்று நாள் அவ்விடத்தேயே தலைப் பெய்து மருவுவாள் (102). இந்நாள்களில் அவள்பால் விளைந்த புதுமை அவளுடைய கண் முதலிய உறுப்புக்களில் குறிப்பான் நிகழும் (108).

தோழியிற் கூட்டத்தின்கண், தலைவி தன் பாங்கியிடம் கொண்ட செறிந்த நட்பினான் நாணும் மடனும் நீங்கத் தன் காதல் நிலையைக் கூறுதலுமுண்டு (110); தலைவனொடு களவொழுக்கம் நிகழ்த்துதற்கு அவனிடம் தானே நேரா கவோ, தோழிவாயிலாக வோ குறியிடத்தைக் குறிப்பாள் (120). முதல் இரண்டு மூன்று நாள் தானே தலைவன் வருமிடத்தை எதிர்ப்பட்டுக் கூடியவள் (119), பின் பெரும்பான்மையும் தோழிவாயிலாகவே பகற்குறி இரவுக் குறியிடங்களைச் சென்றெய்துவாள் (121).

களவுக்காலத்தில், பூப்பு நிகழும் முந்நாளும் தலைவனொடு கூட்டம் நிகழ வாய்க்குமாறில்லை; எஞ்சிய நாள்களிலும் அல்லகுறிப்படுதல், வரும் தொழிற்கு அருமை என்னுமிவற் றான் ஒருநாளோ இருநாளோ தொடர்ந்து அவனை மருவும் வாய்ப்பினை அவள் பெறாது போதலும் கூடும் (122). தலை வன் இட்டுப் பிரிதலானும் அருமை செய்து அயர்த்தலானும் சிலநாள் அவளுக்கு வாளா கழியும் (111). அவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியுமிடத்தே பலநாள் அவனைக் காணாது அவள் புலம்புறுவாள் (112); தன்னுடைய செறிவு நிறை முதலிய பண்புடைமை காரணமாகவே அவள் தனது களவினைத் தாயர்க்கும் புலனாகாதவாறு கரந்தொழுகுவாள் (202).

இக்களவொழுக்கத்தால் வரும் இடையூறுகளை எண்ணு மவள், விரைவில் தலைவன் தன்னை வரைந்துகொண்டு இல்லறம் பேணவேண்டும் கடமையினை அவனிடம் நேராக வும் தோழிவாயிலாகவும் கூறி வற்புறுத்துவாள். அதுபோது அவள் கூற்றுக்கள் யாவும் தான் அவனையே நினைந்து கொண்டிருப்பதாகவும், அவன் தன் நினைவின்றி வேற்றுச் செய்தியையே எண்ணுவதாகவும் ‘தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்’ புலப்படுத்தும் (111). இரவுக் குறிக்கண் அவன் தன்னைக் கருதி வருமிடத்தும் மீளுமிடத் தும் வழியிடை அவனுக்கு விளையக்கூடும் ஏதத்தையும், அவனைப் பிரிந்து தான் தனித்து இருத்தலியலாத புலம்புறும் ஆற்றாமையையும் அவனுக்குப் பலவாற்றானும் வற்புறுத்தி, விரைவில் தன்னை அவன் வரைந்து கொள்ள ஆவன முயலு மாறு அவனை ஊக்குதற்கண்ணேயே தலைவியது ஆள் வினை முழுமையும் தோன்றும் (210).

உடம்பும் உயிரும் வாடியபோதும், தலைவனது இருப்பிடம் நாடிச்சேறல் தனக்கு முறையன்று (203) என்பதனையும் கடந்து, உயிரினும் சிறந்த நாணினை விடுத்து, அதனினும் சிறந்த கற்புக்காரணமாகத் தான் அவனிடம் செல்லுதலைத் துணிந்ததாகத் தலைவி கூறலும் உண்டு (113); வரைதல் வேட்கை காரணத்தான், அன்பு அறன் இன்பம் நாணம் இவற்றை விடுத்து, பெரும்பொருள் கொண்டுவந்து பரிசப் பொருளாகத் தன் குரவரிடம் கொடுத்துத் தன்னை மணந்து கொண்டு இல்லறம் ஆற்றுமாறு அவனை வேண்டும் நிலையுமுண்டு (215, 214). (தோழி இவ்வாறு அவனை வற்புறுத் தற்குத் தான் உடன்படுவள் என்பது). தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலை, அப்பிரிவுத்துயர் தனக்கு மிகுமிடத்தே அவள் தன் நெஞ்சொடும் பிற அஃறிணைப் பொருள்களொடும், தன் கண்கால் முதலிய உறுப்புக்களொடும் உரையாடுதலும் அவற்றைத் தன் ஏவலைச் செயற்படுத்துமாறு வேண்டுதலும் (196), அவனை நினைந்து கனவுகாண்டலும் (197) அவள்பால் நிகழ்வன.

நாணத்தால் உறவினரிடத்தே தன் களவொழுக்கத்தினைக் கரந்து வந்தவள், தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயின் பிரிந்தவிடத்தே ஆற்றாமை மீதூரும் காலையும், தலைவன் வருகையைத் தோழியரோ செவிலியோ அறிந்த காலையும், தோழியிடம் தன் களவொழுக்கத்தைத் தாயரிடம் இடனறிந்து கூறித் திருமணத்திற்கு ஆவன முயலுமாறு வேண்டும் செவ்வி அவளுக்கு நிகழ்தலுமுண்டு (112).

செவிலியும் நற்றாயும் தன்னைக் கூர்ந்து நோக்கித் தன் மெய்வேறுபாடு, மனமாற்றம் என இவற்றை யுணர்ந்த விடத் தும், தலைவி இனித் தன் களவினை மறைத்தல் தக்கதன்று என்று தோழிவாயிலாகச் செவிலிக்கு அறத்தொடுநிற்பாள் (123); இவ்வாறு ஏதம் ஏதேனும் நிகழ்வுழியன்றிப் பிற காலத்தே, தனது நாண்காரணமாகத் தன் களவினைத் தமர்க்குப் புலப்படுத்தக் கூசுவாள் (112).

தலைவனை மணந்து இல்லறம் பேணும் தலைவி, அவன் பொருள் தேடப் பிரிந்து வேற்றூர் செல்லக் கருதும்வழி கடத்தற்கரிய சுரமென்று கூறித் தடுத்தலுமுண்டு. பாலையின் கொடுமை கூறித் தலைவன் அவளை உடனழைத்துச் செல்லாது இல்லத்தில் விடுத்துச் சேறலுமுண்டு (216). அவன் கூறிச் சென்ற நல்லுரையை மனங்கொண்டு, அவள் இல்லில் இருந்து நல்லறம் செய்து ஆற்றியிருப்பாள்.

அவனுடைய பரத்தையர்தொடர்பினைப் பொறுக்கமாட்டா தாள், அவன் ஊடலுணர்த்தவும் உணராது புலந்தவிடத்தே, தோழி, அவனை “அன்பற்றவன் கொடியன்” என்று இயற்பழித்தலைப் பொறாமல், தலைவன் தமக்கு இன்றியமை யாத உறவினன் எனவும், அவனே தம்பால் அன்பில்வழித் தம் புலவி அவனுக்குத் துன்பம் பயவாது எனவும் கூறுவாள் (159). அவனை எப்பொழுதும் வழிபட்டு வாழுமியல்பினளாகிய அவள் புலவிக்கண்ணும் ஊடற்கண்ணும் அவன் பணிவை ஏற்றுக் கொள்வாள் (160, 227); ஊடல் தீரும்போது, தான் அவனை விரும்பாவிடினும் தன் நெஞ்சு அவனிடமே சென்று விடுவதாகக் கூறி ஊடல் உணர்வாள் (161); அவன் வரைந்த பின்முறை வதுவைப் பெரும்பெயர்க் கிழத்தியையும் இன்முகத்தொடு வரவேற்பாள்; தன் புதல்வனைக் கோலம் செய்து அவள்பால் சீராட்டுதற்கு விடுப்பாள் (172); தலைவன் தன் பரத்தைமைக்கு வருந்திக் கலங்கிய காலத்தே, தன் ஊடலை நீக்கி அவனுக்கு நன்மை பயப்பனவற்றை எடுத்துக் கூறும் தாய் போல அறிவுரை கூறி, அவனைத் துயர் நீக்கித் தழுவிக்கொள்வாள் (173). புதல்வற்பேறு வாய்க்கப் பெற்றி லாத் தலைவி, அப்பேற்றினான் சிறப்புடையவளாகிய பின்முறை வதுவைக் கிழத்தியையும் தன்னை ஒப்ப மதித்துத் தலைவற்கு ஒருவாற்றானும் மனக்கவலை நேராதவாறு அவளோடு ஒற்றுமையுற மனையறம் பேணுவாள் (174); தலைவனது பரத்தமைபற்றி ஊடல் கொண்டவிடத்தும், வழிமுறை மனைவியொடு தான் சிறப்பாக ஒற்றுமை மனம் கொண்டு இல்லறம் செய்தலைக் கூறுமிடத்தும் அன்றிப் பிறவிடங்களிலெல்லாம் தலைவன் முன்னிலையில் தன்னைப் பற்றிப் பெருமைப்படப் பேசிக்கொள்ளமாட்டாள்; கற்புக் காலத்தே ஊடல் நிகழுமிடத்துக் கோபத்தான் தலைவனைப் புகழ்ந்து கூறுதலுமுண்டு (228). தலைவி தன்னைப் புகழ்வ தோடமையாது பரத்தையைப் புகழ்ந்து கூறினும், அவள் ஊடலால் கூறும் கூற்று அவை என்பதனைத் தலைவன் உணர்ந்து கொள்வான் (233). தலைவி வேறொரு தலைவியின் குணங்களை எடுத்துக்கூறி, அவற்றைக் கேட்குமிடத்தே அவனது முகத்தில் நிகழும் வேறுபாடுகளைக் கொண்டு, அவன் குறிப்பினை நுனித்து உணர்தலுமுண்டு (234).

பரத்தையர் தலைவனான் தமக்கு நிகழ்ந்துள்ள துயரங்களைத் தலைவியிடம் வந்து கூறலுமுண்டு. அவர் கூறுவன கேட்டு அவள் சிலபோது தலைவன் தன்னைப் போலவே பரத்தை யரையும் துயருறச் செய்துள்ளமைக்கு மகிழ்தலும், சிலபோது தன் பிரிவிற்குப் பரத்தையர் உரிமை கொண்டாடி வருந்தும் வகை அவன் அவர்களது தொடர்பினைச் செறிவாகக் கொண்டுள்ளமைக்குச் சினத்தலும் உரியாள்; பெரும்பான் மையும், பரத்தையர் உடனிருக்குமிடத்தே, “பரத்தையரை வருந்தவிட்டு இங்கு வந்து தங்குதல் வேண்டா; ஆண்டேயே சென்று உறைதல் தகும்!” என்றல் முதலாக அவனைக் கடிந்து கூறுதலும் ஒரோவழி உண்டு (235); தன் பரத்தையிற் பிரிவால் (தலைவிக்கு) ஊடல் நிகழ்ந்தமை யறிந்து அதனைப் போக்கத் தலைவன் தன்பால் விடுக்கும் வாயிலோரிடம் தலைவி அவன் பழிகளை வெளிப்படக் கூறுதற்குக் கூசமாட்டாள் (247); ஒரோவழித் தலைவன் அழைத்துச் செல்லத் தன்னூரை அகன்று புறநகர்ப் பகுதியில் யாறுகுளன்களில் நீராடியும், பொழிலில் விளையாடியும், மகிழ்ந்து மீடலுமுண்டு (191).

தலைவன் பொருள் முதலியன குறித்துப் பிரிந்தவழி, முன்பு அவன் பிரிந்து சென்ற வழியில் உடன்போக்கில் அவனுடன் சென்றிருந்தவள், அங்குள்ள மாவும் புள்ளும் துணையொடு வைகி இன்புற்றிருந்தமை கண்டனளாதலின், அவற்றைத் தலைவனும் கண்டு பிரிதல்துன்பத்தினை அஞ்சித் தான் மேற்கொண்ட வினையை முற்ற முடியாது தன் நினைவான் செயலை இடையில் விடுத்து மீண்டுவிடுவானோ என்றஞ்சி வருந்துதலு முண்டு (148).

தலைவி மடனுடையளாயினும், தலைவன் பரத்தையிற் பிரிந்துவந்து தனக்குப் புறத்தொழுக்கம் யாதுமின்று என்று வலியுறுத்திக் கூறுமிடத்தும், அங்ஙனம் பொய்யாகத் தன் தவற்றை மறைத்துக் கூறும் அவனுடன் தான் கூட்டத்தை விரும்புமிடத்தும், அவள் தன் மடன் நீங்கி, அவனது கள வொழுக்கத்தைச் சான்றுகாட்டிப் புலப்படுத்துவாள் (305).

தலைவன்தலைவியர் இருவர்க்கும் ஆகா என நீக்கப்பட்ட மெய்ப்பாடுகளுள் சினம், பேதைமை, (குற்றங்களாகிய மிகைகளைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையின்மை ஆகிய) நிம்பிரி, வறுமை என்பன நான்கும் தலைவி தலைவன் மேற்கொண்டுள்ள உண்மைக் காதலைச் சிறப்பித்துக் கூறுமிடத்தே அவளிடத்தே நிகழும் (245).

தலைவி தனது சுற்று வட்டாரம் தவிரப் பிற இடங்களில் பயின்றறியாதவள் (301); மருதம் நெய்தல் என்ற ஈரிடத்தே உள்ளுறை உவமம் கூறுவாள். எத்துணைப் பயின்று வைத்தும் தன் வேட்கையைத் தலைவன் முன் நேரே கூறாள். புதுமட்கலத்து நீர் புறம் பொசிந்து காட்டுமாறு போல, அவளகத்து வேட்கை தலைவனுக்குப் புலப்படும் (118).

கற்பியலுள், பரத்தைமையுடையனாயும் தலைவன் ஓழுகிவர, தலைவியோ, இல்லிலிருந்து நல்லறம் செய்து, தெய்வமஞ்சி, அருளும் அன்பும் கொண்டு, கணவன் பிரிவினையும் அவனைப் பற்றி அயலவர் கூறும் பழிமொழிகளையும் அஞ்சியே வாழ்பவள்; அவன் பிரிந்த காலத்தே, இன்பத்தை வெறுத்துப் பசி அட நின்று பசலை பாய்ந்து உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிக் கண்துயில் மறுத்துக் கனவொடு மயங்கித் தடுமாறுபவள் (270).

இவ்வாறு இல்லறம் பேணி வாழுமவள், ஆண்டு மூப்பவே, காமஇன்பத்திற் பற்றற்று அறமுதல் மூன்றினும் மிக்க வீடு பேறு கருதித் தலைவன் மேற்கொள்ளும் விரத ஒழுக்கத்திற்குத் தான் பெரிதும் துணையாக அமைவாள் (192).

பிறர்க்குக் குற்றேவல் செய்வோராம் அடியோர், பிறர் ஏவிய தொழிலைச் செய்வோராம் வினைவலர் இடையே, கைக் கிளை பெருந்திணைகளில், தலைவியர் உளர் (23). இவர்கள் தம்மனத்து நிகழ்பவற்றை மறைத்துத் தம் தலைவர்பால் பேசும் இயல்பினர் (211).

தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -

{Entry: I09__192}

(எண்கள், பொருளதிகாரத்து நச்சினார்க்கினிய முறையில் அமைந்த நூற்பா எண்கள்.)

தோழி என்பாள் செவிலியின் மகளாவாள் (125). தலைவி நலன் குறித்து ஆராய்தலோடு அவளுக்கு உரையாடும் துணையாகவும் தோழி இருப்பாள் (126). தலைவி வேறு, தான் வேறு என்னும் வேற்றுமை யின்றி ஒன்றுபடத் தோன்றும் இயல்பினள் ஆதலின் ‘ஒன்றித்தோன்றும் தோழி’ (39) எனப்பட்டாள். தலைவிக்குத் தோழியராய் உள்ளார் பலருள்ளும் தலைவியான் பெரிதும் பேணப்பட்டாளாய்த் தலைவிக்கு வாயிலாந்தன்மை உடைமையின் அவள் ‘பெட்ட வாயில்’ எனவும் கூறப்படுவாள் (102). தோழி தலைவியின் உறுப்புக்களைக் கூடத் தன்னுடைய உறுப்புக்கள் என்று கூறும் அளவிற்குத் தலைவியிடம் மிக உரிமை உடையவள் (221). தலைவிக்குத் தலைவன் தொடர்புண்மையைத் தோழி அவளிடம் புதியனவாக ஏற்பட்டுள்ள நாற்றம், தோற்றம், ஒழுக்கம், உண்டிவெறுத்தல், தனித்திருத்தல், செவிலிபக்கல் உறங்குதலை விடுத்துத் தனித்துத் துயிறல் முதலியவற்றான் ஐயமின்றி உணர்ந்த பின்னும், தன் கருத்தை உறுதி செய்து கொள்ளத் தான் ‘குற்றேவல் நிலையினள்’ என்ற எல்லையைக் கடவாமல் தலைவியிடம் மெய்ச்செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் உரையாடி அவள் உள்ளத்து நிலையை ஆராய்வாள். (114). தலைவிக்கு நிகழும் வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடமையாக அமைதலின், தோழி கூர்த்த மதியுடையளாகவே இருப்பாள் (239). உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் ஆயினும் அகப்பொருளுக்குப் பயன்பட வருமாயின் தலைவிக்கு நாணம் தோன்றாத வகையில் அக்கூற்றுக்களான் தலைவியிடம் தோழி உரை யாடுதலும் உண்டு (218, 219). தன்னிடம் இரந்து குறையுறவந்த தலைவனைத் தோழி தலைவியின் அருமையை அவன் உணர்தற்கு அவளை நெருங்க விடாமல், தான் அவர்தம் களவொழுக்கினை அறிந்தாளாகவும். அறியாளாகவும் மெய்யும் பொய்யும் கலந்தும் பரிகசித்தும் உரையாடுதலும் உண்டு (237). தோழி தலைவனை ‘எல்லா’ எனவும் (220), அருகி ‘என்னை’ எனவும் (246) முறையே விளித்தலும் சுட்டலும் உண்டு. தோழி தலைவனைத் தலைவியொடு கூட்டுவித்த பின்னர் முன்னர்த் தன்னைப் பணிந்து நின்ற தலைவனைத் தானே பணிந்தொழுகி அவன் விருப்பினை நிறைவேற்றுதற்கண் ஈடுபடுவாள் (114). தலைவியின் குறிப் பறிந்து தோழியும் பகற்குறி இரவுக்குறிகளைத் தலைவனுக்குச் சுட்டுதலும் உண்டு (121). தோழி அல்லகுறிப்படுதலான் குறி இடையீடுபடுதலும் உண்டு (133). தலைவன் இட்டுப்பிரிதலை விரும்பியஇடத்தும், தலைவி தலைவனைத் தன் இல்லத்துக்கு விருந்தினனாகக் கோடல் விரும்பியஇடத்தும் தோழி தலைவி நலம் கருதி உரையாடுவாள் (114); தலைவனிடம் தலைவியை இறுதிவரை பாதுகாக்குமாறு வேண்டுவாள் (114). தலைவி யின் வரைதல் வேட்கையையும், அவள் தலைவன்பிரிவு குறித்து அஞ்சும் அச்சத்தையும், களவொழுக்கம் அம்பலும் அலரும் ஆன திறத்தையும், பிறர் அறிந்து நோக்குதலான் பகற்குறி இரவுக்குறிக்கண் எதிர்ப்படல் இயலாது என்பத னையும் தோழி தலைவனுக்குக் கூறி வரைவு கடாவுவாள் (225); தலைவன் இரவுக்குறிக்கண் வரும் வழியின் ஏதத்தை குறித்து அஞ்சிக் குறிவிலக்கி வரைவு கடாவுவாள்; தலைவற்கு நாடு ஊர் இல் குடிப்பிறப்பு சிறப்பு முதலியவற்றை எடுத்துக் கூறிக் களவொழுக்கம் தவிர்த்து வரைந்துகொள்ளுமாறு வற்புறுத்துவாள் (114). தலைவியின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து அவள் விரும்பினாலன்றி தோழி அறத்தொடு நிற்றலை நினையாள் (206). தலைவிக்கு வெறியாட்டாலோ பிறர் வரைவு நேர்தலாலோ ஏதம் உற்ற காலத்துத் தோழி எளித்தல் முதலிய எழுவகையுள் ஒன்றனை உட்கொண்டு செவிலிக்கு அறத்தொடு நிற்பாள் (207, 208). அக்காலத்துக் கட்டுவிச்சி வேலன் என்பாரிடமும் தலைவி யிடமும், முருகன் பெயரை விளித்தும் தமர் கேட்குமாறும், தோழி கூற்று நிகழும் (114). தமர் வரைவு நேர்ந்தவழித் தலைவன் காலத் தாழ்ப்பின்றித் தலைவியை மணந்துகோடலை வற்புறுத்து வாள். அவள் (114). ‘தாங்கருஞ் சிறப்பின் தோழி’ (114) என்ற பாராட்டுக்குத் தக்கவள். தமர் வரைவு நேராதவழி அதற்குக் காரணம் தமர் மிகுபொருள் வேண்டுதலே என்று தோழி தலைவனிடம் கூறும் வாய்ப்பும் உண்டு (214). இங்ஙனம் கூறுமிடத்து, தலைவிக்குத் தலைவனொடு விரைவில் திருமணம் நிகழ்தல் வேண்டும் என்ற பெருவிருப்பால், தான் தலைவனிடம் கொண்ட விருப்பு - குடிப்பிறந்தார் ஒழுகும் அறம் - தமக்கு இன்றியமையாத இன்பம் - மகளிருக்கு இன்றியமையாத நாண் - என்பனவற்றை விடுத்து, தலைவ னிடம் மிகுபொருள் கொடுத்துத் தலைவியை மணத்தல் வேண்டும் என்று தோழி கூறுதல் பழியுடைத்தாகாது வழுவமைதியாகும் (215).

களவுக் காலத்தில் தமர் வரைவுக்கு உடன்படாவழித் தோழி தலைவனுக்கு உடன்போக்கின் இன்றியமையாமையை எடுத்தியம்பி அவனை உடன்போக்குக்கு ஒருப்படுத்துத் தலைவியையும் உடன்போக்குக்கு இசையச்செய்து தலைவி யைத் தலைவனொடு கூட்டி உடன்போக்குக்கு அனுப்பு மிடத்துத் தலைவியைத் தலைவனிடம் ஓம்படை சார்த்திக் கூறி அனுப்புவாள் (39); தாயரையும் தன்னையும் நீத்துச் செல்லுதற்கண் வருத்தமுறும் தலைவியைத் தேற்றி அனுப்புத லும் உண்டு; உடன்போக்குச் சென்ற மகளை மீட்கப் புறப்படும் தாயைச் சான்றோருடைய உபதேசங்கள் பலவற் றையும் கற்பனை கலந்து கூறி அவர்களை மீட்கச் செல்லாத வாறு தோழி செய்துவிடுவாள். தலைவியது பிரிவால் வருந்தும் தாயை அவள் உழுவலன்பு காரணமாகப் பிரிந்த தலையாய அறச்செய்தியை எடுத்துக் கூறி அமைதியுறச் செய்வாள் (39).

திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் அதற்குப் பெரிதும் முயன்ற தோழியை வாயாரப் புகழ்ந்தவிடத்துத் தோழி புகழுக்குரிய வன் தலைவனே என்றாற்போல மறுமொழி கூறும் உரனுடையவள் (150). கற்புக்காலத்தில் தலைவன் அறம் செயற் கும், பொருள் செயற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து ஒழுகியவழித் தலைவியின் மனநிலையைத் தோழி எடுத்துக்கூறி, அவர்கள் இல்வாழ்க்கை இரங்குதற்குரியது என்பாள் (226, 150); தலைவன் புறத்தொ ழுக்கம் கருதி மனம் வேறுபட்ட தலைவியிடம் தலைவனைப் பற்றி இயற்பட மொழிவாள் (150); புறத்துத் தங்கி வந்த தலை வனைக் கழறித் தலைவியின் ஊடலைப் போக்கிக் கூட்டு விப்பாள்; தலைவன் புறத்தொழுக்கம் தனக்கு இன்று என்று பொய்ச்சூள் உற்றவழி அவனை இடித்துரைப்பாள்; தலைவி உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றவழித் தலைவன்பக்கல் நின்று அவளை வெகுளி நீக்குவிப்பாள் (150). தலைவன் தலைவியை மறந்தவழித் தலைவியின் கற்பு, காமம், நற்பால் ஒழுக்கம், மெல்லியல் பொறை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்பல், அடிசிற்றொழில், குடி நீர்மைக்கு ஏற்ற வகையான் தலைவி ஏனைய தலைவியரையும் மனம் மகிழ் வுறுத்தல், காமக்கிழத்தியராலும் நன்கு நண்பு செய்து மதிக்கப்படுதல் முதலிய மேம்பட்ட பண்புகளை எடுத்துக் கூறி, தலைவனைப் பண்டு போல் தலைவியைப் பிரியாது வாழுமாறு கூறித் திருத்தும் வாயில்களில் தோழிக்கே முதலிடமுண்டு (152). உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலந்தவழித் தோழி அவனை இடித்துக் கூறி, அவன் ஊடலை நீக்குவாள் (157). தலைவனுடைய பரத்தைமை யையும், தலைவி அவன் பரத்தைமை அறிந்தும் அவன் பொய்யுரைகளை நம்பித் தன் மடமையால் சீற்றங்கொள் ளாது வாழும் செயலையும் உட்கொண்டு, தோழி, தலை வனை, “நீ, அன்பிலை கொடியை” என்று வெகுண்டு கூறலு முண்டு (158). தலைவனது பரத்தைமை ஊரறிய அலராம் செய்தியையும் தோழி தலைவனிடம் கூறுவாள் (162). தலைவன் பொருள்வயின் பிரியக் கருதியவழி அவள் செல்ல விருந்த சுரத்தின் கடுமை கூறித் தோழி அவனது செலவினை விலக்குதலும் உண்டு (216). தலைவன் பிரிந்து வரவு நீட்டித்த வழித் தோழி தலைவியிடம் தலைவன் சென்ற இடத்து ‘அன்புறு தகுந இறைச்சி’களைச் சுட்டி அவன் விரைவில் மீள்வான் என வற்புறுத்துதலும் உண்டு (231). தோழி தலைவனும் தலைவியும் நிகழ்த்தும் சிறப்பான இல்லறத்தை நோக்கி அவர் இருவரையும் புகழ்ந்து கூறுதலும், களவின் கண் தலைவனை உயர்த்துக் கூறுதலும் உண்டு (240). தோழி உள்ளுறை உவமம் கூறுங்கால் தன் இருப்பிடத்திற்கு அருகி லுள்ள கருப்பொருள்களையே அன்றி அந்நிலத்திலுள்ள பொருள்கள் பலவற்றையும் கொண்டு உள்ளுறை உவமம் கூறுவாள் (301 பேரா.) தன் உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் விள்ளாது மறைத்துக் குறிப்பினான் புலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் இடத்திலேயே அவள் உள்ளுறை உவமம் கூறுவாள் (306 பேரா.) தலைவன்தலைவியர்தம் கூற்றைக் கேட்போருள்ளும், தலைவன்தலைவியரிடம் கூற்று நிகழ்த்து வோருள்ளும் தோழிக்கு மிகச்சிறந்த இடம் உண்டு. (501 பேரா.)

இவ்வாறு அகத்திணை வாழ்வில் தோழி மிகச்சிறந்ததோரி டத்தைப் பெற்றுள்ளாள் ஆதலின், ‘தாங்கருஞ் சிறப்பின் தோழி’ (114) எனப்பட்டாள்.

‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்’ -

{Entry: I09__193}

“எல்லாவற்றினும் சிறந்த உயிரினும் மகளிருக்கு நாணம் சிறந்தது; அந்த நாணத்தைவிடக் குற்றம் தீர்ந்த கற்பினைச் சிறந்தது என்று மனத்தால் காணுதல் சிறந்தது” என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைத் தலைவியின் மனம் தன்னுள் கொள்ளுதல். (தொ. பொ. 113 நச்.).

தொழுது இரந்து கூறல் -

{Entry: I09__194}

“பகற்குறிக்கண் வாரற்க!” என்று தலைவனைப் பகல்வரல் விலக்கிய தோழி, தலைவன் இரவிடை வருதல் கூடும் எனக் கருதி, “சிங்கத்திற்கும் யாளிக்கும் அஞ்சி யானைகள் இடம் பெயராதிருக்கும் மிக்க இருளில் கொடிய காட்டுவழியில் நீ வாராதிருக்க வேண்டும் என்று நின்னடி தொழுகிறேன்” என, அவனை விரைவில் தலைவியை மணந்து கொள்ளுமாறு குறிப்பினால் தெரிவித்துத் தொழுது வேண்டிக் கூறுவது.

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 255)

தொன்னூல் விளக்கம் -

{Entry: I09__195}

இத்தாலி நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஐந்திலக்கணநூல்; 370 நூற்பாக்களையுடையது. இந்நூற்கு நூலாசிரியரே உரை வரைந்தார். இதன் அகப்பொருட் பகுதியில் உளநூற்செய்தி களைக் காணலாம்.

தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் அகத்திணைச்செய்திகள் -

{Entry: I09__196}

(எண்கள்: சூத்திரஎண்களைக் குறிப்பன)

சொல்லுவதற்கு எடுத்துக்கொண்ட பொருளைக் காட்டும் வழி அகத்திணையும் புறத்திணையும் என இரண்டாம் (150). பொது, சிறப்பு, உவமை, புறநிலை, எதிர்நிலை, கருவி, காரியம், காரகம், முன்னவை, பின்னவை, என அகத்திணை 12 வகைப்படும் (151). பொருள்களின் இயல்பினைக் கொண்டு அப்பொருள்களை விளக்குவது இயல்புஅகத்திணையாம் (152).

வாடைவீசுதல், இந்திரகோபமும் மயிலும் கேகயப்புள்ளும் தோன்றி மகிழ்தல், வெண்காந்தள் - செங்காந்தள் - கொன்றை - கூதாளம் - வேங்கைமரம் - காக்கணஞ்செடி - முல்லை - கம்பு - காயா - குருந்து - என இவை மலர்தல், அன்னம் - கிளி - குயில் - என்னும் இவை நீங்குதல், தாமரை முதலிய நீர்மலர் ஒளித் தல் என்னுமிவை கார்ப்பருவத்து உரிமை எனப்படும் (167).

கூதிர்க்காற்று வீசுதல், குருகு - அன்னம் - கொக்கு - சகோரம் - என்றும் பறவைகளும் சங்கு - நண்டு - நத்தை - என்பனவும் மகிழ்தல், நீர்தெளிதல், மீனினம் தோன்றல், மேகம் சூல் கொள்ளுதல், பாரிசாதம் - சந்தனம் - சிறுசெண்பகம் - செம் பரத்தை - நாணல் - எனஇவை மலர்தல், பிற பறவைகளும் விலங்குகளும் மக்களும் ஒருங்குடன் வருந்தல் என்னுமிவை கூதிர்ப்பருவத்து உரிமை எனப்படும் (168).

கொண்டல்காற்று வீசுதல், தூக்கணங்குருவி கூகை ஆந்தை எனுமிவை மகிழ்தல், மாமரமும் சிவந்தியும் மலர்தல், இலந்தை பருத்தல், குன்றி காய்த்தல், செந்நெல் விளைதல், கரும்பு முதிர்தல் என்னுமிவை முன்பனிப்பருவத்து உரிமை எனப்படும் (169).

உலவைக்காற்று வீசுதல், பல புறாஇனங்கள் - கானாங்கோழி - எனுமிவை மகிழ்தல், கோங்கு - இலவு - எனுமிவை பூத்தல், பேரீந்து - பனை - எனுமிவை பழுத்தல், பருத்தி வெடித்தல் எனஇவையெல்லாம் பின்பனிப்பருவத்து உரிமை எனப்படும் (170).

தென்றல் வீசுதல், பல வண்டினம் - கிளி - பூவை - அன்றில் - குயில் - எனுமிவை மகிழ்தல், மாங்கனி உதிர்தல், நீர்மலரே யன்றி மகிழ் - தாழை - புன்னை - செண்பகம் - எனப் பலவும் மலர்தல், கார்ப்பருவத்தே மகிழும் கோபம் - கேகயப்பறவை - மயில் - எனுமிவை மெலிதல் என இவையெல்லாம் இளவேனிற்பருவத்து உரிமை எனப்படும் (171).

கோடைக்காற்று வீசுதல், கானல் தோன்றுதல், காடை - வலியான் - வானம்பாடி - காகம் - கவுதாரி - எனுமிப் பறவைகள் மகிழ்தல், மல்லிகை - புளி - பாதிரி எனுமிவை பூத்தல், பாலை - எட்டி - நாவல் - இலுப்பை - எனும் மரங்கள் காய்த்தல், நீர்நிலை வற்றுதல், இங்குக்கூறியவை தவிரப் பிறவுயிரினங்கள் குழைந்து சோர்தல் எனஇவை முதுவேனிற் பருவத்து உரிமை எனப்படும் (172).

எனவே, அவ்வப்பருவத்துக்கு ஓதிய முறை வழுவாது செய்யுள் பாடுதல் பருவத்துரிமையாம்; பிறழ்தல் பருவமலை வாம் என்றவாறு. பின்வரும் சிறுபொழுதுகட்கும் இது பொருந்தும்.

இனிச் சிறு பொழுது ஆறாவன மாலை, யாமம், வைகறை, விடியல், உச்சிப்பகல், எற்பாடு என்பன. பகலொளிபோய் இரவு புகும் பொழுது முதற்கொண்டு பப்பத்து நாழிகையாக இவ்வாறற்கும் நேரம் கொள்ளப்படும். இவற்றுள், குவளை மலர்தல், புள்ளிளம் சோலைசேர்ந்து கலகலெனப் பெரிதும் ஒலித்தல், பசுமுதலாய கறவைகள் தம் கன்றை நினைந்து வருதல், தாமரைகூம்புதல், கன்னடம் காம்போதி எனும் இராகங்களைப் பாடுதல் என இவையெல்லாம் மாலைப் பொழுதிற்கு உரிமையாம்;

ஆகரி ராகம் பாடுதல், கூகையும் சகோரமும் மகிழ்தல், கடல் பொங்குதல், காமம் - நிசப்தம் - களவு - எனுமிவை மிகுதல் என இவையெல்லாம் யாமப்பொழுதிற்கு உரிமையாம்;

கோழிகூவுதல், நனவுபோலக் கனவு தோன்றுதல், விண்மீன்க ளது ஒளிகுறைதல், வெள்ளி முளைத்தல், மாதவர் துயி லுணர்ந்து இறைவனை வாழ்த்துதல், இராமகவி இந்தோளம் எனுமிரண்டு இராகங்கள் பாடுதல் என இவையெல்லாம் வைகறைப் பொழுதிற்கு உரிமையாம்;

விலங்கு பறவை மக்கள் முதலிய எல்லாஉயிரும் முகமலர்ந்து மகிழ்தல், பூஞ்சோலையில் பூண்டுப்பூ கொடிப்பூ கோட் டுப்பூ அன்றி நீர்ப்பூக்களுள் கமலம் முதலியன மலர்தல், வெண்பனி துளித்தல், பூபாளம் தேசாட்சி எனும் இரண்டி ராகங்கள் பாடுதல் என இவையெல்லாம் விடியற்பொழு திற்குஉரிமையாம்; சக்கிரவாகப்பறவை மகிழ்தல்,பேய்த்தேர் ஓடுதல், எருமைகள் நீரிற் பாய்ந்துகிடத்தல், சாரங்கராகம் பாடுதல் என இவையெல்லாம் உச்சிப்பொழுதிற்கு உரிமை யாகும்;

மலை முதலியவற்றின் நிழலெல்லாம் நீளுதல், வானம் சிவத்தல், பலவகை யாட்டுக் குட்டிகள் குதித்தல், காபி கலியாணி எனுமிரண்டு இராகங்கள் பாடுதல் என இவை யெல்லாம் எற்பாட்டுப் பொழுதிற்கு உரிமையாம் (173).

வெறுப்பு, மகிழ்ச்சி, இரக்கம், வெகுளி, நாணம், துணிவு, அச்சம், மயக்கம், ஆசை என்பனவும் பிறவும் மக்களிடத்துத் தோன்றும் பற்றுதல் ஆகும். ஆதலின், கேட்போரிடத்துக் கவிதான் அப்பற்றினைக் கிளப்பும்தன்மையும் பற்றுடை யார்க்கு அஃது இயலும் தன்மையும் அறிந்து அம்முறை பிறழாது உரைப்பது பற்றுதல் உரிமை எனப்படும். இவற்றுள், கேட்போர்மனத்தில் ஒன்றன்மேல் வெறுப்பும், ஒன்றன்மேல் ஆசையும், ஓரிடத்தே ஊக்கமும், ஓரிடத்தே அச்சமும், ஒருசாராரிடம் இரக்கமும் ஒருசாரிடம் வெகுளியும் என இவை முதலாகிய பற்றுதலைக் கிளப்புதல் கற்றோர்தொழில். அவ்வவற்றுக்குரிய பொருளாம் அணியும் தேர்ந்து உரைப்பது அறிவுடையோர் கடன் என்க. அன்றியும், பல வகைப்பற்றுதல் எழும்பிய தன்மையால் மனிதரும் பல குணமுடையார் ஆவர். அவருள், கடுஞ்சினமுடையான் நினைவும் மொழியும் ஒழுக்க மும் வேறாகி, அவனே சினம் ஆறப்பெற்று நாணம் கொண் டானாயின் அந்நிலையில் அவனுடைய நினைவும் மொழியும் ஒழுக்கமும் வேறாகுமன்றோ? பிற பற்றுதல்களும் அத் தன்மைய ஆதலின் மக்கள் மனத்தே எழும்பின பற்றுதற்குரிய வற்றைச் செப்பலும் உரிமையே என்றவாறு. (188).

சதுரம் முதல் பலவடிவும், எண் முதல் அளவும், வெம்மை முதல் ஊறும் என இவை முதலாகிய குணங்களுள் ஒன்றற் குரியவற்றை மற்றொன்றற்கு உரியவாக உரைப்பது குணவழு வாம். பல பொருள்கட்குப் பொதுப்படநிற்கும் குணங்களைச் சொல்லுதல் வழுவன்றாயினும், பொதுப்படாததற்கு உரிய வற்றைச் சொல்லுதல் சிறப்பு ஆகிக் குணவுரிமையாம். பைந்தினை என்புழி, பசுமை பைங்கூழுக்கெல்லாம் பொதுக் குணம். செறிகுரல்தினை, தாற்றுக் கதிர்வரகு என்புழி செறிகுரல்களையுடைமையும் தாற்றுக்கதிர்களையுடைமை யும் தினைக்கும் வரகுக்கும் முறையே சிறப்புடைக் குணவுரிமை யாம். இவ்வாறே பசுங்கதலி, உயர்தெங்கு என்புழிப் பசுமையும் உயர்ச்சியும் பொதுக்குணம்; விரிதலைக்கதலி, ஈர்க்கிலைத் தெங்கு என்புழி, விரிதலை யுடைமையும், ஈர்க்கு இலையாம் ஓலையுடைமையும் சிறப்புடைக் குணவுரிமையாம். இவ்வுரி மையை அணிநூலார் தன்மையணி என்ப(189).

தம்முள் ஒவ்வா முறைகளைத் தோற்றாமல் ஏற்ற முறை கொண்டு உலகநடை பிறழாது உரைப்பது ஒழுக்கவுரிமை யாம் (190).

சனுக்கிரகம், சங்கதம், அவப்பிரஞ்சனம், பாகதம் என்று சொல்வகை நான்காக வகுத்தனர் புலவர். இவற்றுள் முன்னைய இரண்டும் தேவர்மொழி, அவப்பிரஞ்சனம் இழி சனர்மொழி, ஏனையது எல்லா நாட்டாரும் வழங்குமொழி யாம். பாகதம், தற்பவம் - தற்சமம் - தேசிகம் -என மூவகைத்து. இவைமூன்றற்கும் முறையே எடுத்துக்காட்டாவன: சுகி போகி சுபாவம் நிதியம் எனவும், அமலம் கமலம் காரணம் குங்குமம் எனவும், நிலம் நீர் தீ வளி எனவும் கண்டுகொள்க (191).

தேசிகச்சொல்லொடு சில தற்பவச்சொல்லும் கலந்து வந்த செய்யுள் கேட்போர்க்கு இன்பமாக வழங்கும் உறுப்புச் செய்யுளாம்.

எ-டு: ‘தராதரத்(து) ஒப்பத் தராதலத்(து) ஓங்கி

வராதரத்(து) அந்தரத்தில் வாழ்ப - பராகச்

சிரசரணா சுத்திரவி திங்கள்மீன் பூண்டான்

கரசர ணாதிதொழிற் கண்டு.’

இவ்வெண்பாவில், ஒப்ப ஓங்கி வாழ்ப திங்கள் மீன் பூண்டான் தொழில் கண்டு என்பன எட்டும் தேசிகமாகிய (பிற மொழியை நோக்காது அவ்வந்நாட்டார் சொல்லேயாய் வருவன) தமிழ்நாட்டுச் சொற்கள்; பிறவெல்லாம் தற்பவம் (192).

தொன்னூல்விளக்கத்துள், சூத்திரஎண் 150 முதல் 199 முடிய நின்ற 50 நூற்பாவும் பொருளதிகாரம் பற்றியவை, இவற்றுள் 167-173 முடிய நின்றவை பெரும்பொழுது சிறுபொழுது பற்றியவை; 188-192 முடியநின்றவை, அகம் புறம் எனும் இருதிணைக்கும் பொதுவாகச் செய்யுள்புனைதல், மரபு பற்றியவை. இனி 199ஆம் நூற்பா அகத்திணைபாகுபாடு உரைக்கிறது.

அகப்பொருளாவது காமம். அதனுள்ளும், ஒருதலைக்காமம் கைக்கிளை; பொருந்தாக்காமம் பெருந்திணை; அன்புடைக் காமம் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என ஐந் நிலத்திற்கும் உரியதாய் வரும் ஐந்திணை. இவ்வாறு அகப் பொருள் ஏழுதிணையாம். இவற்றின் ஒழுக்கமுறையான கைகோள், களவெனவும் கற்பெனவும் இரண்டு. வரைவதன் முன்னர் நிகழ்வது களவு; வரைந்தெய்திய பின்னர் நிகழ்வது கற்பு. இவ்விரண்டு திறத்திற்குமுரிய பலவகை நடையை யுடையது அகப்பொருள். வதுவை நிகழ்வதற்குரிய முறையைக் காட்டுதல், வதுவை புரிந்துகொண்டபின்னர்த் தலைவன் தலைவியர்தம் வாழ்க்கை முறைகளை வகுத்தல், தலைவனது பிரிவின்கண் தலைவி புலம்புரை என்றின்னோரன்ன பல செய்திகளையும் பாரித்துரைப்பது அகத்திணைச்செய்தி. (199).

தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -

{Entry: I09__197}

தலைவன் அங்கு நிற்பதால் அவனுக்கும் தமக்கும் துன்பம் ஏற்படும் என்று தான் அஞ்சின தன்மையைத் தலைவனிடம் கூறி, அவனையும் அச்சமுறச்செய்து, தோழிகூறுதல்;

அது ‘யாய் வருவள்’ என்றானும், ‘தமையன்மார் வருவர்’ என்றானும், ‘காவலர் வருவர்’ என்றானும் கூறுதல். (தொ. பொ. 112 இள.)

அங்ஙனம் ஆற்றுவித்தும், கடிது குறை முடியாமையைக் கருதும் தோழி, குரவரைத் தான் அஞ்சுவது போலத் தலைவி யும் அஞ்சுவள் எனக் கூறல். இவ்வச்சம் கூறவே, அவன் ஆற்றும்.

“ஐய! கரும்பு போன்று பருத்த தண்டினையுடைய தினை வளர்ந்த புனத்தில் யாங்கள் கிளி கடியச் செல்கிறோம் நீ மணம் கமழும் மார்போடு அப்பக்கம் வாரற்க. தாய் அங்கு வருவாள்” (குறுந்.198) என்பது யாயை அஞ்சி உரைத்தது.

“யானைகள் திரியும் மலையிலே வாழும் குறமகளிராகிய யாம் காக்கும் தினைக்கொல்லைப்பக்கம் வருவதனைக் கண்டாலும் எம் உறவினர் உன்னையும் எங்களையும் கோபிப்பர்.” (திணை. ஐம். 6) என்பது தோழி தமரை அஞ்சி உரைத்தது. (தொ. பொ. 114நச்.)

தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -

{Entry: I09__198}

அடங்கா ஒழுக்கத்தையுடைய தலைவன்மாட்டு மனம் அழிந்த தலைவியை அடங்கக் காட்டுவதற்கு ஏதுவான பொருட் பக்கத்தில் தோழி அவட்குக் கூறுதல்.

“எருமை தன் கன்றைவிட்டு நீங்காது பக்கத்திலுள்ள பசிய பயிரை உண்ணும் தலைவனது இல்லத்தில் பல கடமை களையும் கொண்டு ஆண்டு மூத்து அனுபவஅறிவு சிறந்த பெண்களாகிய எமக்குத் தலைவன் புறத்தொழுக்கத்தான் ஏற்பட்ட புலவிக்காலத்தே, ‘ தலைவன் இத்தன்மையன்’ என்று பழித்துக்கூறும் சொற்களால் உண்டாகும் பயன் யாது?’ (குறுந். 181) என்று தோழி தலைவியைத் தேற்றியுரைத் தல். (தொ. பொ. 148 இள.)

புறத்தொழுக்கத்தை யுடைவனாகிய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியை, “புறத்தொழுக்கமின்றி அவர் நின்மேல் அன்புடையவர்” என, அவ்வேறுபாடு நீங்க நெருங் கிக் கூறுதலை யுடைத்தாகிய பொருளின்கண் தோழி கூறுதல்.

“நெற்பயிரின் கதிர்களைக் கொண்டு நண்டு நீரை ஒட்டியுள்ள தன்மண்வளைக்குச் செல்வதுபோல், வேண்டிய பொருள் களைச் சேர்த்துக்கொண்டு நம் மனைக்கு வரும் தலைவனைக் குறித்து, வளைகள் நெகிழுமாறு உடல் மெலிந்து துன்புறு வது எதற்காக?” (ஐங். 27) என்று தோழி தலைவிக்குக் கூறுதல். (150 நச்.)

தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -

{Entry: I09__199}

தாம் அரியராகக் களவுக்காலத்துத் தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக்காலத்து இரக்கத்தின்கண் தோழி தலைவற்குக் கூறுதல். அது வாளாதே இரங்குதலன்றி, “பண்டு இவ்வாறு செய்தனை; இப்பொழுது இவ்வாறு செய்யாநின்றனை” எனத் தமது உயர்ச்சியும் தலைமகனது அன்பு நிலை யின்மையும் தோன்ற இரங்குதல். இது தலைவன் நீங்கியொழுகும் ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவது.

“ஐய! முன்பு தலைவி வேப்பங்காயைக் கொடுத்தாலும் வெல்லக் கட்டியைப் போல இனிப்பதாகக் கூறினீர். இப் பொழுதோ, பாரிவள்ளலது பறம்புமலைச் சுனையின் இனிய தண்ணிய நீரைத் தரினும் அது வெவ்விதாய் உவர்க்கின்றது என்கின்றீர். அன்புநிலை இவ்வளவில் இவ்வாறு திரிந்து விட்டது!”(குறுந்- 196) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 148 இள, 150 நச்)

தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -

{Entry: I09__200}

தோழி, தலைவன் தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறி மாற்றுதல் (தொ. பொ. 112 இள.)

அவைகேட்டுப் பிற்றை ஞான்றும் வந்தவன்மாட்டுச் சிறிது நெஞ்சு நெகிழ்ந்த தோழி அங்ஙனம் கூறாது, “இவள் அரியள்” என்று கூறுதல். இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தலின் இருவர் உள்ளமும் உணர்ந்து அங்ஙனம் கூறினாள்.

“தலைவ! நெய்தல்நிலத்துத் தாழம்பூக்களொடு குறிஞ்சிநிலப் பூக்களைக் கட்டி முடிமாலை அமைத்தல் இயலுமோ? குலத்தையே பெரிதாக மதிக்கும் எங்கள் தலைவியை வேற்றுக் குலத்தவனாகிய நீ மணத்தல் இயலுமோ?” என்று தோழி வினவுதல். 114 நச்.

தோழி அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறல் -

{Entry: I09__201}

“தலைவி! தாழம்பூ மணம் கமழும் கடற்கரைத் துறைவனாகிய நம்தலைவன் நம்மால் தெளிந்துகொள்ள முடியாத குறி யினைச் செய்துவிட்டான். ஆதலின் நாம் இயற்கையில் நிகழ்வனவற்றை அவன் குறி செய்ததாக மயங்கி அல்ல குறிப்பட்டு மீண்டு விட்டோம்” (ஐந். ஐம். 49) என்று தலைவன் சிறைப்புறமாகத் தோழிகூறல். (தொ. பொ. 133 நச்.)

தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

{Entry: I09__202}

தலைவனுடைய புறத்தொழுக்கத்தான் அவன்பிரிவு கருதிப் புலவியில் முழுகிய தலைவிபக்கம் இருந்து அவள்புலவியை நீக்குதற்கண் தோழி கூறுதல். (தொ.பொ. 150 நச்.)

தலைவன் புறத்தொழுக்கம் நிகழ்த்தியவிடத்து, அவன் தலைவியை வந்தடையும் வாய்ப்பினைப் பெற முடியாத தலைவியின் புலவியை நோக்கி அவள்பக்கம் இருந்து பேசு வதுபோல அவள்புலவியைத் தீர்த்தற்கண் தோழி கூறுதல். (148 இள.)

“தலைவி! நீ வருந்துமாறு நீத்த தலைவன் சிறிதும் தன் புறத்தொழுக்கம் பற்றி நாணமில்லாதவனாயின், அவனி டத்தே ஊடுவதால் பயன் என்?” (கலி 87) என்று தோழி தலைவியிடம் கூறல்.

‘உப்பமைந் தற்றால் ................... நீள விடல்.’ (குறள் 1302)(இள., நச்.)

“ ‘காலையில் எழுந்தவுடன் பரத்தையரைத் தேரேற்றிவரத் தேரை ஆயத்தம் செய்து அவர்களை அழைத்துவந்து கூடிய விளக்கத்தொடு தலைவன் இல்லத்துக்கு வருகிறானே’ என்று தலைவி வருந்துகிறாள். உயர்குடிப்பிறப்பு, மிகவும் சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்கச் செய்கிறது” (குறுந் 45) என்றாற் போலக் கூறித் தோழி தலைவியது புலவி தீர்த்தல்.

தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -

{Entry: I09__203}

‘ அவன் அறிவுறுத்து’ என்பது இளம்பூரணர் பாடம் (112)

தன்னிடம், தலைவியை அடையவேண்டும் குறையை முன் னிட்டு வந்த தலைவனை நோக்கி, “நின்னால் காதலிக்கப் பட்ட தலைவிக்கு நின் எண்ணத்தை முதலில் அறிவித்து விட்டுப் பின் என்னிடம் வருக” என்று தோழி கூறுதல்.

“தலைவ! தலைவி தன்னுள்ளேயே ஏதோ நினைத்து நாணுற் றுக்கொண்டிருப்பவள். இதனைச் சொல்லப்போனால் அவள் என்னையும் பார்த்து நாணுவாள். ஆதலின், தனியாக ஒருநாள் பார்த்து அன்று நீ நினைப்பதை அவளிடம் வெளிப் படையாகக் கூறி அவளை நின்வழிப்படுத்து” எனவும்,

“நீயும் வேலேந்தியுள்ளாய். எம் தமையன்மார்களும் வேலெ டுத்துப் போர் செய்பவர்கள். புலி போன்றுள்ள நும்மிடைப் போர் வாராமல் இருப்பதற்காகவே, நான் நீ கொடுக்கும் தழையாடையை இன்று ஏற்கமுடியவில்லை. நான் நீ தலைவியைச் சந்தித்துக் கூறி உடன்படுவித்தபின் நாளை நின் கையுறையைப் பெற்றுக்கோடல் எனக்கு எளிது” (திணை மாலை. 20) எனவும் கூறுதல். (தொ.பொ. 114 நச்.)

தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__204}

“தலைவி! சுறாமீன்கள் திரிய இறாமீன்கள் உலவும் கடற்கரைத் துறைவனாகிய நம் தலைவன் செய்த இரவுக்குறி அடையாளங்கள் பலவாக இருப்பினும், நம்மை ஏமாற்றி இயற்கையில் அவ்வடையாளங்கள் நிகழ்ந்து விடுவதால், அவை பயனற்றுப் போகின்றன” (திணை. ஐம். 43) என்று கூறுவாள் போலத் தலைவன் இரவுக்குறி, மேன்மேலும் செய்வதனைத் தோழி தலைவிக்கு எடுத்துக்கூறுதல். (தொ. பொ. 133 நச்.)

தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -

{Entry: I09__205}

தலைவனுக்குத் தலைவியை மணம் செய்து கொடுத்தலைத் தலைவிசுற்றத்தார் மறுத்தவழியும், தோழி அறத்தொடு நிலையால் கூறுதல்.

“அன்னையே! மழை பெய்து அருவி நீரால் மூங்கில் வளர்ந் துள்ள மலைச்சரிவு வழியே இறங்கும் தலைவனுடைய மலையை ஒத்த மேம்பட்டமார்பினைத் தழுவாத நாள்களி லெல்லாம் இத்தலைவியின் குளிர்ந்த கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கும்.” (ஐங். 220) எனவும்,

“இத்தலைவியைப் பெரிய மலைநாடனாகிய தலைவன் வரைவு வேண்டிவரின் மறுக்காமல் கொடுத்தால்தான் இவளுக்கு நன்மை செய்ததாகும். தலைவன் வரைவு வேண்டித் தமரை விடுத்ததைக் கண்டபின்னும், இத்தலைவியின் துயரம் இன்னும் குறையவில்லை.” (ஐங். 258) எனவும் வரும் தோழிகூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, அவன் விலங்குறுதற்கண் கூறல் -

{Entry: I09__206}

காப்பு மிகுதியான் இரவுக்குறி இடையீடுபடத் தலைவன் வாராது போயவழித் தலைவி வருந்துமிடத்துத் தோழி கூறுதல். (தொ. பொ. 112 இள.)

தோழியானும் தலைவியானும் இடையீடுபடுதலின்றித் தலைவ னால் கூட்டத்திற்கு இடையீடு தோன்றினும் தோழி கூற்று நிகழும். இடையூறு - வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற் குற்றுழிப் பிரிவும், காவற்பிரிவும் ஆம். 114 நச்.

“தலைவ! நீ எங்களிடம் அழகான சுவைமிக்க சொற்களைக் கூறித் தலைவியை மென்மையாகத் தழுவிச் செய்த தண்ணளி யெல்லாம் உன் உண்மை அன்பின் செயல்கள் என்று யான் நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் அவை பொய் என்பது புலப்படுகிறது. ஊரவர் அலர் தூற்றுமாறு எம்மைத் தனித்திருக்க விட்டுவிட்டு நீ பாலைவழியே செல்லத் திட்ட மிட்டிருப்பதை இப்பொழுதே அறிகிறோம். நீ நிச்சயமாக உயர்ந்த மகன் அல்லை” என்று தம் பேதைமையைக் காதலால் சிறப்பித்துத் தோழி தலைவனிடம் கூறுதல். (கலி 19)

“பரதவர் முகந்து வந்த மீன்கள் காயவைக்கப்படுமிடத்துப் பறவைகள் அவற்றைக் கவர்ந்து செல்லும் துறையை உடைய தலைவனை மறுபடியும் ஒரு முறைகாணும் வாய்ப்பு நேரின், ‘நீ கவர்ந்த எம் அழகினைத் தருக’ என்று வற்புறுத்தி வேண்டலாம்” (ஐந். எழு. 66). என்று தோழி களவுக்காலப் பிரிவிடைத் தலைவியிடம் கூறல். (நச்)

தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -

{Entry: I09__207}

கண்ணும் தோளும் முலையும் பிறவும் புணர்ச்சியான் கதிர்த்துக் காரிகை நீரவாய்த் தலைவியிடத்து அவைமிகக் காட்டியவழிச் செவிலி தானே கூறுதலும், அவள் கூற்றினைத் தோழி கொண்டு கூறுதலும் ஆம்.

எ-டு: ‘கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்த்தோட் பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது’. (குறள் - 1272)

இது கதிர்ப்புக் கண்டு செவிலி தானே கூறியது. தோழி தலைவனிடம், “தலைவ! நீ தலைவியை விடுத்துப் போயின பின், செவிலி, அவள் சுருண்டகூந்தல், பொன்போல மார்பில் பரந்த தேமல், கச்சிடையே முகங்கொண்டெழுந்த நகில்கள் ஆகியவற்றை நோக்கி, ‘இவள் பருவம் உற்றதால் மிக அழகிய ளாக உள்ளாள்’ என்று பன்முறை கூறி அவளைத் தழுவி அவள் எதிர்காலத்தைப் பற்றி நெடிது நினைத்து அவளை இற்செறித்துவிட்டாள்” என்று செவிலி கருத்தைக் கொண்டு கூறியது. (அகநா 50) (தொ.பொ. 115 நச்.)

தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -

{Entry: I09__208}

களவுக்காலத்துப்பட்ட வருத்தம் நீங்கியமை பற்றித் தலைவியிட மும் தலைவனிடமும் தோழி கூறுதல்.

“மணல்மேட்டில் ஞாழல்பூக்கள் மணம் வீசும் துறைவனை நீ மகிழ்வொடு தழுவிக்கொள்க” (ஐங். 148). என்று கற்புக் காலத்தே தோழி தலைவியிடம் கூறியமை.

“நாட! நீ இவளை மணந்து நல்ல செயல் செய்தாய். நின்தந்தை வாழ்க! எம் இல்லத்தே இவளுக்குத் திருமணம் நிகழ, அதுபோது இவள் கூந்தலில் மலரைச்சூட்டி நாடறிய இவளை நின் துணைவி ஆக்கிக் கொண்டாயே!” (ஐங்.294) என்று வதுவைகுறித்துத் தோழி தலைவனிடம் மகிழ்ந்துகூறல். (தொ.பொ. 150 நச்.)

தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -

{Entry: I09__209}

குற்றமில்லாத தலைவனைக் கருதித் தெய்வத்திற்கு வழிபாடாற் றும்வழித் தோழி தலைவியிடமும் தலைவனிடமும் கூறுதல். (தொ. பொ. 148 இள.)

‘அயலார் அலருரை கேட்டுச் சுடுமொழி கூறி அச்சம் தோன்றப் பார்க்கும் தாய் படுத்தும் துயர் தீர்வதாக! ’ என்று தெய்வம் தங்கிய மலையை மறைந்து நின்று வணங்கியதன் பயனை, விரைவில் தலைவனை மணந்துகொண்டதன்மூலம் பெற்றுவிட்டோம்” என்று தோழி தலைவியிடம் கூறியது.

‘எம் தலைவன் வாழ்க! அரசன் பகைதணிக! அமைதியாகப் பல்லாண்டு கழிக!’ என்று தலைவி விரும்பினாள். யாங்கள், ‘தலைவன் விரைவில் தலைவியை வரைதல் வேண்டும்; எந்தையும் அவற்குத் தலைவியை மறாது கொடுத்தல் வேண்டும்’ என்று விரும்பினோம்” (ஐங். 6) என்று தோழி தலைவனிடம் கூறுதல்.

“தலைவ! என் தலைவி நின் பிரிவால் தோள் நெகிழ்ந்து வருந்திய துன்பத்தைப் போக்க விருந்தினனாக நீ வருமாறு கரைந்த காக்கைக்கு, நள்ளியின் காட்டிலுள்ள பசுக்களின் நெய்யோடு, தொண்டி என்ற ஊரில் விளைந்த வெண்ணெல் சோற்றை எழுகலங்களில் உணவாகப் படைப்பினும், கைம்மாறு ஆகாது” (குறுந் 210) என்று, பிரிந்துவந்த தலைவ னிடம் தோழி கூறல். (இள.)

தோழி, ‘அற்றம் இல்லாக் கிழவோட்சுட்டிய’ என்று பாடங் கொண்டார் நச்சினார்க்கினியர். (150) அவர் உரை:

களவு வெளிப்படாத வகையில் தலைவன் தலைவியை மணக்குமாறு, தான் முன் வேண்டிய தெய்வத்திற்கு, திருமணம் முடிந்தபின் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் என்று தோழி தலைவற்குக் கூறுதல்.

‘கிழவோற் சுட்டிய’ என்பது இளம்பூரணர் பாடம். அவர் உரை:

“ ‘தாய் வருத்துவதனைத் தீர்ப்பாயாக!’ என்று தலைவி மலை உறை தெய்வத்தை வழிபட்டதன் பயனாக, நின்வதுவை விரைவில் கூடிற்று ஆதலின் அம்மலையுறை தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும்” என்று தோழி தலைவனிடம் கூறியது.

தோழி அறத்தொடு நிற்றல் -

{Entry: I09__210}

தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை முதலிய சிறைகாவலான் தலைவி தலைவனை இரவுக்குறிக்கண் அடையமுடியாது போக அவளுக்கு வேட்கை மிக்கவழியும், அயலார் பெண் கேட்கத் தொடங்கியவழியும், தலைவன்தமர் பார்ப்பார் சான்றோர் ஆகியோரை முன்னிட்டு, அருங்கலன்களொடு தலைவியை மகட்பேச வந்தவழிப் பரியம் சிறிது என்றோ, நாளும் புள்ளும் அன்று தக்கன அல்ல என்றோ ஒரு காரணம் காட்டித் தலைவிதமர் மகட்கொடை மறுத்தவழியும், தலைவன் இரவுக்குறிக்கு வரும் வழி, எண்கும் வெண் கோட்டி யானையும் அரவும் உருமும் புலியும் வான்அர மகளிரும் வரைஅரமகளிரும் உடைத்தாதலின் அதன்கண் தலைவற்கு ஏதம் நிகழுங்கொல்லோ என்று தலைவி அஞ்சியவழியும்,

ஆகிய நான் கிடத்தும், தலைவி தன் நாணத்தை விட்டுத் தோழிக்கு அறத்தொடு நிற்பத் தோழி காலம் தாழ்த்தாது, செவிலிக்கு மாறுகோள் இல்லா மொழியினான் அறத்தொடு நிற்கும். (இறை. அ 29 உரை.)

தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

{Entry: I09__211}

அறன் என்று சொல்லப்படும் தன்மை இருவர்கண்ணும் குற்றம் தீர்ந்த எதிர்ப்பாடு(சந்திப்பு) என்று செவிலியிடத்தே கூறி, அக்கிளவியை நற்றாயிடத்துச் செலுத்துதற்கண் தோழி கூறுதல்; என்றது, புனல்தரு புணர்ச்சியும், பூத்தரு புணர்ச்சி யும், களிறு தருபுணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்வித்தலாம். அவள் தந்தைக்கும் தன்னையர்க்கும் உணர்த்துதலும், தோழி அதனை மீண்டுவந்து தலைவிக்கு உணர்த்துதலும் பெற்றாம்.

‘காமர் கடும்புனல்’ (கலி. 39) என்னும் கலிப்பாட்டினுள், தோழியொடு, விரைந்துசெல்லும் நீரில் நீராடிய தலைவியை நீர் ஈர்த்துச் சென்றவழி, அருளினால் நீரிற்குதித்து அவளைத் தழுவிக் கரை சேர்த்த கானகநாடன்மகன் செயலைத் தோழி செவிலிக்கு உணர்த்த, செவிலி நற்றாய்க்கு உணர்த்த, நற்றாய் தந்தை தன்னையர்க்கு உணர்த்த, அவர்கள் ஒருநாள் முழுதும் சூழ்ந்து, தலைவியை அத்தலைவனொடு மணவினையான் கூட்டுவிக்க முடிவுசெய்தமையைத் தோழி தலைவிக்குக் கூறியது. (தொ. பொ. 114 நச்.)

தோழி அறியாள் போலக் கூறல் -

{Entry: I09__212}

“இங்குள்ள அழகிய பெண்கள் பலருள்ளும் நீ விரும்பிக் குறையுறுகின்றது யாரிடத்து என்பது எனக்குப் புலப்பட வில்லை” என்று தோழி அறியாதவள் போலத் தலைவனிடம் கூறுதல்.

இஃது ‘எண்ணரும் பல்நகை கண்ணிய வகையினும்’ என்ற தால் கொள்ளப்பட்டவற்றுள் ஒருகிளவி. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -

{Entry: I09__213}

தலைவன் வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்றத னான் எய்திய கலக்கத்தின்கண் தோழி கூறுதல்.

“ஊரவர் உறங்கிவிட்டனர். பேய்கள் உலவத் தொடங்கி விட்டன. ஊர்க்காவலர் குறிஞ்சிப்பண் பாடிக்கொண்டு உறங்காமல் ஊரைக் காத்துவருகின்றனர். யானையொடு பகலில் பொருத வேங்கை உறுமுகிறது. இந்நள்ளிரவில் மின்னலொடு மலைச்சாரலில் மழை பொழிகிறது. பாம்புகள் தாம் கக்கிய மணிகளைத் தேடி உழலுமாறு இடி இடிக்கிறது. அத்தகைய காட்டுவழியே இன்று தலைவன் வாராதிருப்பி னும் நன்று. நாம் பிரிவினான் தோள் நெகிழ்ந்து வருந்தினும், நம் துயரைப் பொருட்படுத்தல் வேண்டா. அவன் ஏமமே இன்றியமையாதது” என்று தோழி தலைவியிடம் கூறியது. (நற். 255)

மழைபெய்தல், பாம்புஉலாவல், புலிஉறுமுதல் - ஆற்றதுதீமை;

ஊர்க்காவலர் உறங்காமை - வரினும், கூடுதல்அருமை.

என்பன கூறப்பட்டன.

“வேங்கையிடம் அகப்பட்டு உய்ந்து ஆண்யானை அச்சத் துடன் மெல்ல நடக்கும் வழியிலே தலைவன் நள்ளிருளில் வருதல் குறித்துத் தலைவிகண்கள் கவலையால் உறங்காவா யின” (ஐந். ஐம். 16) இது தோழி தலைவனிடம் கூறியது.

“தலைவ! காட்டு வழியில் யானைகள் இயங்கும். வானத்தில் இடி ஒலிக்கும். இடையிடையே அஞ்சத்தக்க பாம்பும் புலியும் காணப்படும். செல்லும் வழியும் குறுகியது. நீயும் தனித்து வருகிறாய். நீ விரைவில் இவளை மணந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்கிறேன். இன்றுமுதல் இரவுக்குறிக்கும் வாராதே. அவ்வாறு வரினும், துயரத்தொடு நின்செலவை நினைத்து ஏங்கிநிற்கும் யாங்கள் அமைதியுறுமாறு எங்களைக் கண்டு மீண்டு நீ உன் இருப்பிடத்தை நலமாக எய்தியதை யாங்கள் அறியுமாறு சங்கினை ஊதித் தெரிவிப்பாயாக” (அகநா 318) என்று தோழி தலைவனிடம் கூறியது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -

{Entry: I09__214}

தலைவன் வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்றத னான் எய்திய கலக்கத்தானும் காவற்கடுமை வரையிறந்தத னானும் குறியிடமும் காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலை மையை விலக்கி, தலைவி காதல் மிகுதல் உளப்படப் பிறவும் அவனுடைய நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் என இவற்றின் மிகுதியை நோக்கி அவன்மாட்டுக் கிளக்கும் கிளவியொடு கூடி அத்தன்மைத்தாகிய வகையி னானே வரைதல் வேண்டியும் தோழிகூற்று நிகழும். (தொ. பொ. 112 இள.)

தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -

{Entry: I09__215}

“தலைவ! எக்காலத்தும் கருணை செய்தலுடைய மேம்பட்ட நட்பினையுடைய உன் போன்ற சான்றோர்களும் அறிய உறுதிமொழி கூறி, எம்போன்றோர் ‘சூள் நிறைவேறவில் லையே!’ என்று வாடி வருந்தும்படி உறுதிமொழியை நிறை வேற்றாதிருப்பின், எம்போன்றார் உயிர்வாழ்தல் எவ்வாறு? உன் தெளிவுரை அழிந்தொழிக! தலைவி தான் படவேண்டும் துன்பமெல்லாம் நுகர்ந்து அழிக!” என்று தோழி, தலைவன் உறுதியாகத் தெளிவித்த சொற்களைத் தடுத்துத் தலைவி நிலை கூறுதல். (நற் 345).

இச்சூத்திரத்துப் ‘பிறவும்’ (அடி. 32) என்றதனான் கொண்ட கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி ஆறு இன்னாமை கூறல் -

{Entry: I09__216}

“தினைப்புனத்துக் கதிர்களைக் கிளிகள் உண்ணாதவாறு கொடிச்சி அவற்றை ஓட்டவும், அவளையும் மறைத்துக் கிளிகள் தினைக்கதிரைக் கவர்ந்துண்ணும் நாட! இருள் பெருகிவிட்டது. யானைகள் இயங்கும் காட்டுவழியில் இரவுக்குறி கருதி வாரற்க”(ஐங் 282) என்ற தோழி கூற்று.

இஃது ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ என்பதன்கண் அடங்கும். (தொ.பொ. 112 இள.)

தோழி இயற்பழித்தல் (1) -

{Entry: I09__217}

கற்புக்காலத்தில் தலைவன் பரத்தையிற் பிரிந்து அவள் இல்லத்தானாக, அவன் தலைவிஇல்லத்தே இருப்பதாகக் கருதி விடியற்காலையில் துயிலெழுமங்கலம் பாட வந்த பாணனிடம் தோழி, ” எம் தலைவி வருந்தத் தலைவன் அயலாரிடத்துத் தன் இன்பத்தை நல்குதலால், அவன் எங்கட்குத் தகுதியுடையன் அல்லன்” எனத் தலைமகன் பண்பினைப் பழித்துக் கூறியது. இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை 376.)

தோழி இயற்பழித்தல் (2) -

{Entry: I09__218}

பிரிந்து சென்ற தலைவன் வாராததால் வருந்திய தலைவியின் நிலை கண்ட தோழி தலைவனைக் குற்றம் சாற்றிப் பேசுதல்.

“தலைவி! ‘நின்னிற்பிரியேன்’ என்று சூளுறவு கூறியபின்னும் நீ அழுமாறு பிரிந்து சென்ற தலைவர் நல்லர்நல்லர்! ” என்று தோழி தலைவன் பண்புகளை இழித்துப் பேசுதல். (தஞ்சை கோ 292)

இது வரைவியலுள், ‘தலைவி அறத்தொடு நிற்றல்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (அறத்தொடுநிலை, ஒருவழித் தணந்ததும் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்ததும் பற்றி நிகழும்). (ந. அ. 176.)

தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

{Entry: I09__219}

“தலைவ! நெய்தல்நிலத்தலைவன் மகளாகியதலைவி, ஆம்பற் பூக்கள் இடையே தொடுக்கப்பட்ட சந்தனத்தழையாலாகிய ஆடையை அணிந்து நீலம் சூடி வருவாள். இவள் தமையன் மார் சூடும்பூ தாமரைப்பூ ஆகும். ஆதலின் நீயும் தாமரைப்பூச் சூடி வரின் இவ்வூரார் நின்னைப் புதியவன் என்று ஐயுறார்” (திணைமொழி. 40) என்று தோழி தலைவற்கு இரவுக்குறிக்கு இவ்வாறு வருக என்று அறிவுறுத்தல்.

இச்சூத்திரத்துப் ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__220}

“தலைவி! சுறாமீன் பிறழும் உப்பங்கழிகளை நீந்தி நாள் தோறும் வரும் தலைவன் இப்பொழுது இரவுக்குறி நயந்து வந்துள்ளான்” (சிற்றெட்டகம்) என்று தோழி கூறுதல்.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்படுவ தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -

{Entry: I09__221}

“தலைவி! உயர்ந்த மலையின் அருகில் இனிய ஒலியையுடைய அருவியில் யாம் நீராடியபோது அருவி நின்னை ஈர்த்துச் செல்லாதபடி பாதுகாத்த தலைவன் மார்பையே தெப்ப மாகக் கொண்டு அருவியில் ஆடியது மிக இனிமையாக இருந்தது. ஆயின் இரவில் உறக்கமின்றி விளக்கொளியில் அன்னை நம் முதுகினைத் தழுவிக்கொண்டு தூங்கவும், உறக்கம் வாராமல் நாம் உறங்கமுயல்வது துன்பமாக உள்ளது” (குறுந். 353) என்று தலைவன் சிறைப்புறமாகத் தோழி இரவிற் காவல் மிக்குள்ளமை பற்றிக் கூறுதல்.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்படுவ தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__222}

“தலைவி! நம் தலைவன், களிறு புலியைத் தாக்கி வலிசோரும் மலைப்பக்கவழியே நள்ளிரவில் நம்பொருட்டு வருவான். அவன் வருகையால் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணோம்” (குறுந். 88) என்று இரவுக்குறி பற்றித் தோழி, தலைவிடம் கூறுதல்.

இஃது இச்சூத்திரத்துள், ‘புணர்ச்சி வேண்டினும்’ என்ற தனான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 112 இள.)

தோழி, இரவுக்குறியிடம் காட்டிக்கூறல் -

{Entry: I09__223}

“கானற் சேர்ப்ப! எம் இல்லத்து முன்னிடம், உப்பங்கழியினது நெடிய கடற்கரைச் சோலையினிடத்தே புன்னைமரங்கள் தழைக்கப்பெற்று, மடல்களில் அன்றிற்பறவைகள் கூப்பிடும் நெடிய பனைகளையும் உடையது. (அவ்விடம் எம்தலைவியை நீ இரவில் மருவுதற்கேற்ற குறியிடம் ஆம்.) (திணைமாலை. 56) என்று தோழி தலைவற்குக் கூறுதல்.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -

{Entry: I09__224}

“நிலவும் மறைந்துவிட்டது; இருளும் பரவிவிட்டது. நம்மை வெளியே செல்லாது பாதுகாக்கும் அன்னையும் உறங்கி விட்டாள். காப்போரை நீத்துத் தனித்துவரும் யானை போலத் தலைவன் இப்பனியில் நடுங்கியவாறு குறிக்கண் வந்துள்ளான். காணாமற்போன நல்ல அணிகலம் மீண்டும் கிடைக்கப் பெறுவதால் விளையும் மகிழ்ச்சி போன்ற மகிழ்வுடன், இற்செறிப்பால் அடையமுடியாதுபோன தலைவன் மார்பினை இப்பொழுது பெற்று, ஆசைதீரத் தழுவி மீள்க.” (நற். 182) என்ற தோழி கூற்று.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -

{Entry: I09__225}

“எம்மூர் வாயிற்கண் நீர்த்துறையில் பருத்தோங்கிய ஆலமரத் தோடு உடனுறைவு பயின்ற, தேயாமல் வளைந்த வாயினை யும் கூரிய நகங்களையும் உடையையாய், வாயாகிய பறை யோசையாலே பிறரை வருத்தும் கூகையே! எம்மைக் காண வேண்டும் குறையாக் கொள்கையராய் எம்காதலர் எம்பால் வருதலை விரும்பி யாம் தூங்காது மனம் சுழலும் இவ்விடை யாமத்திலே, யாம் அஞ்சுமாறு நின் கடுங்குரலால் ஒலியா தொழிவாயாக! அதற்குப் பரிசிலாக நீ உண்ணுதற்பொருட்டு ஆட்டிறைச்சியை நெய்யில் புழுக்கிய அதனோடு எலியைச் சுட்ட அவ்வெண்மையான சூட்டினையும் நிறையக் கொடுப் போம்.” (நற். 83) என்ற தோழி கூற்று.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி இரவுக்குறி விலக்கியது -

{Entry: I09__226}

“தலைவ! நின் வேலையே நினக்குத் துணையாகக்கொண்டு, மிக விரைந்து இறங்கும் வெண்ணிறஅருவியை நீந்தி, நள்ளிர வில் தீங்கு பயக்கும் வழியில் நீ வருதலை நினைத்துத் தலைவி யின் உள்ளம் என்ன துயருறுமோ என்று என் நெஞ்சு வருந்துகின்றது. ஆதலின் இரவுக்குறிக்கண் வாரற்க” (ஐந். ஐம். 19) என்றது. (தொ. பொ. 114 நச். )

இது ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -

{Entry: I09__227}

“கதிரவன் மேற்றிசையில் மறைகையாலே கடல்துறையும் பொலிவு இழந்துவிட்டது. நாரைகளும் இறாமீன்களை அருந்திப் புன்னை மரத்தில் தங்கிவிட்டன. பூக்கள் மறையுமாறு வெள்ளத்தை மிகுவித்து நீர்த்துறையில் சுறாமீன்கள் இயங்கு கின்றன. விளக்குகளைக் கொளுத்திக் கொண்டு எம்சுற்றத் தாரும் மீன்வேட்டைக்குப் படகுகளில் சென்றுவிட்டனர். கடற்கரையை அடுத்து யாங்கள் வாழும் ஊரில் இன்றிரவு தங்கிச் செல்வதால் நினக்கு இழப்பு ஏதும் உண்டோ?” (நற். 67) என்று தோழி தலைவனிடம் கூறி இரவுக்குறி ஏற்பித்தது.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -

{Entry: I09__228}

நீ இல்லாத இரவு தலைவிக்கு ஊழிக்காலம் போல் நீண்டு துயர்தரும், ஆதலின் அவளைப் பிரியற்க” என்று தோழி தலைவற்கு உரைத்தல்.

“தலைவ! நின்னைப் பிரிந்தால் தலைவிக்கு இரவின் ஒவ்வொரு நாழிகையும் பல்லூழிகளாகக் கழியும். அத்தகைய இரவின் முப்பதுநாழிகைகளையும் வருத்தத்துடன் கழித்துப் பிழைத் திருந்து இவள் கதிரவனைக் காண்பது எங்ஙனம்?” என்ற தோழி கூற்று.

இது ‘பொருள்வயிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா 544.)

தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது -

{Entry: I09__229}

“தலைவி! நம் தலைவன் நம் அழகிய நலனை நுகர்ந்து நம்மைத் தனித்து வருந்தவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டானே என்று போலும், நம்மேலுள்ள கருணையான் நம்மைப் போல உறக்கமின்றி மணல்மேடுகளில் மோதி இரவுமுழுதும் கடல் உறங்காதிருக்கின்றது!” (ஐந். எழு. 60) என்பது போன்ற தோழி கூற்று. (தொ. பொ. 133 நச்.)

தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__230}

“தலைவி! பலநாளும் களவொழுக்கத்தில் அமைந்து பனை யளவு இன்பத்தை நாம் நுகரவேண்டும் என்று திட்டமிட் டிருப்பவும், நல்வினை பயன் தருவதால் செல்வம் பெருகுவது போலப் பாத்திகளில் தினைக்கதிர் மிகுதியாகத் தோன்ற, வேங்கைப்பூத் தோன்றும் காலம் தினைமுதிர் காலமாதலின், வேங்கை பூத்துத் தினையை அரியும் நாளைக் குறிப்பிட்டு நம் திட்டம் வீணாம்படி நம்மை இப்புனத்தின்கண் கூடவரும் தலைவனிட மிருந்து பிரித்துவிட்டதே! இதனை நினைத்துப் பார்” (திணை மாலை 5) என்ற தோழி கூற்று.

‘காப்பின் கடுமை கையற வரினும்’ என்பதன்கண் கொள்ளப் பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -

{Entry: I09__231}

“தலைவ! நேற்றிரவு தலைவி உன் தேர்க்குதிரையின் மணி யோசை என்று பறவைகள் எழுப்பிய ஒலியைத் தவறுபடக் கருதிப் படுக்கையினின்று எழுந்தாள். அச்செய்தி எமரால் அறியப்பட வாய்ப்புண்டு. ஆதலின் இனி இரவுக்குறிக்கண் வாரற்க” (ஐந். எழு. 59) என்பது போன்ற தோழி கூற்று. (தொ. பொ. 133 நச். உரை.)

தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -

{Entry: I09__232}

தலைவி உயிர்வாழத் தலைவன் அவளைப் பிரியாதிருத்தல் இன்றியமையாதது எனத் தோழி தலைவற்குச் சொல்லி அவன் செல்லுதலைத் தடுத்தல்.

“காமநுகர்வும், நீங்காத இளமையும், பிரியாத இன்னுயிர் போன்ற தலைவியும் பெற்றிருக்கையில், வேறு விரும்பப்படும் பொருள் எதற்கு? ஆதலால், தலைவ! தலைவி மெலிந்து வருந்த நீ பொருளுக்காகப் பிரிய ஒருப்பட்டது எற்றுக்கு?” (அம்பிகா. 541)

இது ‘பொருள்வயிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

{Entry: I09__233}

தலைவன் ஊடல்தீர்க்கவும் அதன்வழி வாராத ஊடலுற் றோள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவன் பக்கத்தளாகி நின்று, தலைவியை வெகுண்டு நின்று உண்டாக்கிய தகுதிக்கண் தோழி கூறல்.(தொ. பொ. 148 இள.)

“புலவி, கலவிஇன்பம் செய்தற்கு வேண்டுமளவினது ஆதல், உப்பானது துய்ப்பனவற்றை இன்சுவையின ஆக்குதற்கு வேண்டும் அளவினது ஆதல்போலும்; இனி, அப்புலவியை அவ்வளவினும் சிறிது மிகுமாறு நீட்டுதல், அவ்வுப்பு அவ்வளவினும் மிக்காற் போலும்” (குறள் 1302) இள.

தலைவன் ஊடலைப்போக்க முற்படவும் ஊடல் தணியாத தலைவியின் ஊடலைப் பின்னும் போக்க விரும்பிய அவனது பக்கத்தளாகி நின்று, தான் தலைவியைக் கழறி அவள் ஊடல் நீங்கும் தன்மையை உண்டாக்கிய தகுதிக்கண் தோழி கூறல். (150 நச்.)

“மனைவாழ்க்கையை மேவிய கற்புடைமடந்தையாகிய தலைவி! தலைவன் இவ்வூர் தாங்காத அளவு பலராகிய பரத்தையரைத் தேரேற்றிக் கொண்டுவந்து குடியேற்றி யுள்ளான் என்று ஒருபயனும் இல்லாமல் அவன்பால் ஊடுதல் பொருத்தமின்று. தலைவர் பரத்தைமைக்காக அவரொடு புலந்து நிலையாகப் பிரிந்து வாழும் மன வலிமையுடையவர்கள் அவரால் முற்றும் புறக்கணிக்கப்படு வதால், செல்வவாழ்க்கையை இழந்து சிறிதளவு அரிசியைத் தாமே சமைத்துண்டு புதல்வருக்கு கொடுக்கப் பாலும் சுரக்காத நகிலோடு உடல் மெலிந்து வறிய வாழ்க்கையில் வைகும் நிலையினராயிருப்பதை நீ அறியாயோ?” (அகநா 316) என்பது போன்ற தோழி கழற்றுரை. (நச்).

தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -

{Entry: I09__234}

தலைவன் தான் விரும்பிய தலைவி யாவள் என்பதனைத் தோழியிடம் கூறியவழி, “அவளும் நின்னைப் போலவே தடுமாற்றமுற்று நிற்கிறாள்” என்று தோழி அவனோடு அவளைக் கூட்டிக் கூறுதல். (தொ. பொ. 112 இள.)

“உப்பங்கழிகளினின்று பறித்துவந்த நீலமலர்களைச் சூடாம லும், நண்டுவளைகளைக் கோலிட்டு அலைக்காமலும், நெற்றியில் வியர்வை துளிக்கச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தலைவியிடம் நான் எச்செய்தியை உரையாடிக்கொண்டு நெருங்கிச் சொல்வது என்பதே எனக்கு விளங்கவில்லை!” என்பது போன்ற தோழி கூற்று. (இள)

ஆயத்தின் நீங்கித் தன்னொடு நின்ற தலைவியைத் தலைவ னொடு கூட்டவேண்டி அவளை விடுத்து அவனிடம் வந்து இன்ன விடத்து இவளைச் சந்திப்பாயாக என்று தோழி கூறல். 114 நச்.

“கொண்க! நெய்தற்பூவைப் பரப்பி அதன்மேல் என் பாவையை வைத்துவிட்டு நீ இருக்குமிடத்துக்கு யான்வந்துள்ளேன். நாரை என் பாவையை மிதித்துவிடுமோ என்றஞ்சி யாம் விரைவில் சேரவேண்டும். விரைவில் நீயே அவளைப் போகவிடு” (குறுந் 114) என்று தோழி குறிப்பான் தலைவி வரவு கூறி, அவளை இடத்து உய்த்தவாறு கூறுதல். (நச்.)

தோழி உரை மாறுபட்டது -

{Entry: I09__235}

தலைவனுடைய பிரிவால் தலைவி வருந்தியிருந்த கற்புக் காலத்து அவளது துன்பம் நீங்குமாறு தேற்றுதற்கு உரை எடுத்த தோழி, தன் கூற்றினையே செவிமடுக்காமல் தலைவி ஆற்றியிருப்பதனை அறிந்து, “மடவாய்! தலைவன் கூறிய பருவம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. தலைவன் இப்பருவத்தும் மீண்டு வரவில்லையே என்று நீ என்னிடம் ஒரு வார்த்தைகூட ஆற்றாமையொடு கூறவில்லையே! இஃது என்ன வியப்பு?” என்று மாறுபடக் கூறுதல். (நற். 237.)

தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -

{Entry: I09__236}

உலகத்தார் மகட்கொள்ளுமாறுபோலத் தலைவியை தலைவன் மணந்துகொண்டு பின் கூடுமாறு தோழி கூறுதல். “உப்பங்கழிகளில் இறாஅமீன்களை அகப்படுத்தும் சேர்ப்ப! இத்தலைவியை நீ அடைதல்வேண்டின், மணந்துகொண்டு எய்துவாயாக!” (ஐங். 196) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -

{Entry: I09__237}

தோழி, தலைவனிடம் களவொழுக்கம் புறத்தாரால் அலர் கூறிப் பலவாறு நகைக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறுதல். (தொ. பொ. 112 இள.)

“‘இப்பகலில் மகளிர் தமக்கு இயற்கையான அடக்கப் பண்பினைக் காக்கும் இயல்பினரல்லாது இருக்கின்றனர்; இவர்கள் இரக்கப்படுதற்குரியர்’ என்னாது, காமம் இரகசிய மாயிருக்கும் எல்லையைக் கடந்து ஊர்ப்பொதுவிடம் வரை சென்றுவிட்டது!” (குறள் 1138.)

“தலைவ! நம் களவொழுக்கத்தைத் தாயும் அறிந்துவிட்டாள். ஊர்முழுதும் இச்செய்தி பரவிவிட்டது. உன்னைப் பிரிந்திருக் கும் தனிமையில் எங்கட்கு இல்லத்தில் இருப்பதும் வெறுத்து விட்டது. கொடிய வாடைக்காற்றும் தனித்திருக்கும் எங்களை வருத்துகிறது. நாங்களும் உன்னோடு உங்களூர்க்குப் புறப்படுகிறோம், எழுக!” (ஐங்238) என்பது போன்று தோழி தலைவற்கு அலரச்சம் சாற்றுதல். (இள).

தலைவன் இளிவந்தொழுகுதற்குப் பொறாத தோழி அவன் இளிவரவு உணர்த்தும் கருத்தினளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரியவாக வரும் ஒன்றல்லாப் பலவகைச் செய்திகளை நகைச்சுவை தோன்றக் குறித்துக் கூறுதல். 114 நச். (இளிவந்து ஒழுகுதல் - தன்னைத் தாழ்த்திக்கொண்டு பழகுதல்).

அவை ‘என்னை மறைத்தல் எவனாகியர்’ என்றலும், அறியாள் போறலும், குறியாள் கூறலும், படைத்துமொழி கிளவியும், குறிப்பு வேறு கொளலும் பிறவும்ஆம்.(நச்).

‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

{Entry: I09__238}

என்பு உருகுமாறு தலைவனான் பிரியப்பட்ட தலைவிக்கு வழி பாடாற்றிச் சென்று தான் கூறும் மொழியை அவள்மனத்தே செலுத்தித் தலைவன் அன்பினை அவளிடத்தே சேர்த்துக் கூறிய வற்புறுத்துதற்கண் தோழி கூறுதல்.

அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயின் பிரிதலும், வேந்தர்க்கு உற்றுழிப் பிரிதலும், காவற்குப் பிரிதலும் ஆம். அவ்விடத்தே வற்புறுத்துங்கால் தோழி தலைவியை ஆற்றி யிருத்தல் செய்யும் பொருட்டாக, தலைவனை இயற்பழித்தும், இயற்பட மொழிந்தும் பலவாறாக அவனது மெய்யன்பினை அவளுக்கு விளக்கிக் கூறுவாள். “செங்கடு மொழியான்” இயற்பழித்தனவும் வற்புறுத்தல் பயனாம். (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -

{Entry: I09__239}

என்னை மறைத்து நீங்கள் இருவரும் எச்செயலும் செய்தல் இயலாது என்று தோழி தலைவனிடம் கூறல்.

“மலைநாட! மறைக்கத்தகாத என்னை மறைத்துக்கொண்டு நீ உன் விருப்பம் போலக் களவொழுக்கம் நிகழ்த்தக் கருதினாய் ஆயின், இனித் தலைவியிடம் என்னை விடுத்து நீ தனித்துச் செய்யக் கூடிய செயல் ஒன்றுமில்லை” என்ற தோழி கூற்று.

இஃது ‘எண்ணரும் பல்நகை கண்ணிய வகையினும்’ என்றதனான் கொள்ளப்பட்டவற்றுள் ஒருகூற்று. (தொ. பொ. 114நச்.)

தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

{Entry: I09__240}

தலைவிக்குப் பிறரொடு கூட்டமுண்டு என்று சொல்லிச் செவிலி ஐயுற்றவழி, அதனை மறுத்துத் தலைவி செய்த செய்கையைப் பொய்யென நீக்கிப் பிறிதோராற்றான் தாய் நம்புமாறு தோழி வேறொரு செய்தி கூறுதல்.

“தாயே! இடியொடு மழை பெய்து ஓய்ந்த நள்ளிரவில் தன் காதணிகள் ஒளிவீச மலையினின்று இறங்கும் மயில் போலத் தலைவி ஒரு மேட்டினின்று கீழே இறங்கியதைக் கண்டதாகக் கருதி எங்களை வெகுளாதே. நம் மலையிலுள்ள தெய்வங்கள் அழகிய பூக்களைச் சூடித் தாம் விரும்பிய வடிவத்தில் நம் மனைப்பக்கல் வருதலுண்டு. சிலபோது, கனவுகள் கூட நனவு போல நெஞ்சில் நிலைபெறுதல் கூடும். நம் தலைவியோ மனைக்கண் விளக்கில்லாத இடத்தில் கூடத் தனியே இருக்க நடுங்கும் இயல்பினள்; மராமரத்தில் கோட்டான் ஒலித்தா லும் நெஞ்சு நடுங்கிப் பாதுகாவலான இடத்தை நோக்கி ஓடி விடுபவள். இவைதவிர, தந்தை மனைக்கண் உள்ளபோது தலைவி இத்தகு செயல் புரிய அஞ்சமாட்டாளோ?” (அகநா.158) என்று தாய் நம்புமாறு தோழி தம் களவொழுக்கத் தினை மறைத்துப் பேசுதல்.

“தாயே! தலைவிக்குக் கண்கள் ஏன் சிவந்துள்ளன என்று வினவுகிறாய். மலையில் வேங்கைமலர்களைப் பறித்ததால் எங்கள் உடல் வியர்த்துவிட்டது. வியர்வை தீர அருவியில் பாய்ந்து நீராடினோம். அதனால் தலைவிக்குக் கண்கள் சிவந்துவிட்டன” (ஐந். ஐம். 15) என்று களவினை மறுத்துத் தோழி வினவிய தாய்க்குப் பொய்க்காரணம் கூறல். (தொ. பொ. 114 நச்.)

தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__241}

“நிலவைக் குவித்தாற் போன்ற வெண்மணலின் ஒரு பக்கத்தில் இருளைத் தொகுத்து வைத்தாற்போன்ற தண்ணிய செறிந்த நிழல் தரும் புன்னை மரம் பொருந்திய பொழில் தனிமைத் துயரம் தந்து நம்மை வருத்தவும், மீன்வேட்டைக்குச் சென்ற தமையன்மாருடைய மீன்பிடிபடகுகள் திரும்பி வருவது தெரியவும், இன்னும் தலைவன் வரவில்லையே” (குறுந். 123.) என்று ஆற்றாமை தோன்றத் தோழி கூறல். இது கேட்ட தலைவன் சிறைப்புறத்தினின்று வெளிவந்து தலைவியை அளவளாவுதல் பயன். (தொ. பொ. 112 இள.)

தலைவன் தான் புணர்ச்சியை விரும்பாது பிரிவை விரும்பு மிடத்தும் தோழி கூற்று நிகழும். அப்பிரிவு, தண்டாது இரத் தலை முனிந்த மற்றையவழி இட்டுப்பிரிவும் அருமைசெய்து அயர்த்தலும் ஆம். ஆண்டுத் தலைவற்கும் தலைவிக்கும் தோழி கூறுவன கொள்ளப்படும். (114 நச்)

ஒருவழித்தணப்பதாகக் கூறிய தலைவனிடம் தோழி, “வளைந்த அடிமரத்தையுடைய புன்னையின்மேல் கடல் அலைகள் மோதும் சேர்ப்ப! பூங்கொடி போன்ற தலைவிக்கு நின்மார்பு என்றும் உரிமையாகுமாறு அருள் செய்க!” (திணை. ஐம். 42).

என்று கூறுதல் போல்வன (நச். 114). (நற். 19. ஐங்.214) இவையும் ஈண்டுக் கொள்ளப்படும். (112 இள.)

இஃது இச்சூத்திரத்துள், “வேண்டாப் பிரிவினும்” என்ற தனான் கொள்ளப்பட்டதொரு கூற்று.

தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -

{Entry: I09__242}

“கடல் வெள்ளமே! நின் அலைகளால் புன்னைமரங்களை நனைத்தாலும், அதன்பூக்கள் நிரம்பிய கிளைகளை நனைத் தாலும், என் தலைவியின் நடையினை ஒத்த நடையழகினை யுடைய அன்னப்பறவைகளை நனைக்காதே” என்று தோழி கடல்வெள்ளத்தை நோக்கிக் கூறல். (தொ.பொ.133 நச்.)

தோழி ‘ஓம்படைக்கிளவிப் பாங்கின்கண்’ உரைத்தல்-

{Entry: I09__243}

தலைவன் ஒருவழித் தணந்தவிடத்தும், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தவிடத்தும் தோழி, “தலைவியை எந்நாளும் பாதுகாத்துக் கொள்” என்று தலைவனிடம் கூறும் பகுதிக்கண் எடுத்துக் கூறுவது.

“இவளை நீ பாதுகாத்துக் கொள்” என்று தலைவன் கூறும் பகுதிக்கண்ணும் என்று பொருளுரைத்து, வரைவிடைப் பிரிகின்றான், “ஆற்றுவித்துக் கொண்டிரு” என்றாற்குத் தோழி கூறுதலும் உடன்கொள்ளப்படும். (தொ.பொ. 114 நச்).

“நன்மலை நாட! ஒருவர் தமக்குப் பெரிய நன்மைசெய்யின், அங்ஙனம் செய்தவரைப் போற்றாதார் உலகில் இரார். அதன்கண் சிறப்புஇல்லை. இப்பொழுது நினக்குப் பேரின்பம் தரும் தலைவி மூப்பு எய்தியவழியும், சிறிதளவாவது நன்மை பயப்பாள். அப்பொழுதும் இவளிடத்து விருப்பம் மாறாது இவள்மனம் நோவாதவாறு இவளைப் பாதுகாப்பாயாக! இவள் நின்னையன்றி வேறு பற்றுக்கோடில்லாதவள்” (குறுந் 115) என்று ஒருவழித்தணத்தற்கண் தோழி தலைவனிடம் ஓம்படுத்தது. (இள. 112)

“மலைநாட! யாம் கிளிகடிதற்காகத் தினைப்புனம் வந்து தங்கினோம். எமர் தினையை விரைவில் அரிந்துவிடுவர் ஆதலின் தினைப்புனத்திற்குக் கிளியினம் வாரா. யாமும் வருவதற்கு வாய்ப்பில்லை. எங்கள் நட்பினை மறந்து விடாதே” (ஐந். ஐம். 18) என்று ஒருவழித் தணக்கும் தலைவ னிடம் அவன் திரும்பி வருதற்குள் தினை கொய்தலைச் சுட்டித் தாம் புனத்து வர இயலாமையை அறிவுறுத்தித் தலைவியை மறவாது மனங்கொள்ளுமாறு கூறியது. (இள).

“சேர்ப்ப! தாய் வெகுண்டு ஒறுக்குங் காலத்தும் ‘அம்மா!’ என்று அவள் பெயரையே சொல்லி அழும் குழந்தை போல், நீ நன்மை தீமை எது செய்யினும், தலைவி நின்னையே எல்லையாக உடையவள். அவள் துயரினைப் போக்குவார் நின்னை யன்றிப் பிறர் இல்லை.” (குறுந். 397) (நச்.)

செவ்வாய்ப் பசுங்கிளிகள் இரக்கத்திற்கு உரியன. தினையைக் குறவர்கள் அரிந்து போகத் தினைப்புனத்தில் அரிதாள்களே நிற்பதனைக் கண்டுவைத்தும், இப்புனத்தினை விட்டு நீங்கிச் செல்லாதபடி இதன்கண் பேரன்பு வைத்துள்ளன!” (ஜங். 284) (நச்.)

இவையிரண்டும் முறையே வரைவிடைப் பிரிவிடத்தும், புனத்திடைப் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் தோழி தலைவற்குக் கூறியன. பிறவிடத்துக் கூறுவனவும் உள.

“தலைவ! நீ இவளையும் உடன் அழைத்துக்கொண்டு சேறல் நன்று. இவள் கண்ணீர் துளிக்குமாறு, பெண்மானை விடுத்துச்செல்லும் ஆண்மான் போல, நீ பிரிந்து செல்லின், கார்காலத்து மாலைநேரத்தில் இவள்துயரத்தினை ஆற்றுவித்தல் என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகும்!” (நற். 37) என்ற தோழி கூற்று. இது வரைவிடைப் பிரிகின்றான், தன்னை “இவளை ஆற்றுவித்துக்கொண்டிரு” என்றானுக்குக் கூறியது. (நச். 114)

தோழிக்கு விறலி கூறல்

{Entry: I09__244}

பெரியோர்கள் தம்மொடு பழகிய எல்லோரையும் தரம் நோக்காது கொண்டாடும் இயல்பினாலோ, பலகாலமாகப் பழகிய கண்ணோட்டத்தாலோ, எளியோர்க்கும் சிறப்புச் செய்தலைப் போல, அடியாளுக்கும் தலைவி இற்சிறப்புச் செய்தாள்” (திணைமாலை . 134) என்று, பலர் வாயிலாகவும் ஊடல் தீராத தலைவி தான் வாயிலாகப் புக்கவழி ஊடல் தீர்ந்தது கண்டு மகிழ்ந்து தோழியிடம் விறலி கூறியது. (தொ. பொ. 152 நச்)

தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

{Entry: I09__245}

“தலைவன் களவுக்காலமாகிய சென்ற மாதத்தில் நெடிய வெள்ளிய நிலாவின்கண் என் நீண்ட தோள்களைத் தழுவி னான். அதனால் இக்காலத்தும் அவன் மேனியினது முல்லை மணம் என்தோள்களில் கமழ்கிறது” என்று திருமணம் நிகழும் வரை தான் ஆற்றியிருந்தமை தலைவனுடைய கருணையி னாலேயே என்பதனைத்தலைவி தோழிக்குக் கூறியது. (குறுந். 193)

தோழி கழங்கு பார்த்துழிக் கூறியது -

{Entry: I09__246}

தலைவியது மெலிவு கண்டு, தாய், கட்டும் கழங்கும் இட்டுத் தலைவியது உடல் மெலிவின் காரணம் பற்றி அறிய ஏற்பாடு செய்யவே, “பொய்யாகச் செய்தியைத் தெரிவித்தலை அறியாத கழங்கே! இவள்மேனியை வருந்தச்செய்தவன் உண்மையில் முருகப்பெருமானாகிய ஆண்டகை அல்லன்: மலைகளில் மயில்களில் ஆடுதலும் வள்ளிக்கிழங்கு நன்கு வீழ்தலும் பொருந்திய காட்டுப்பகுதிகளுக்கு உரிமையுடைய தலைவனே இவளைத் துன்புறுத்தியவன்”(ஐங் 250) என்று தோழி கூறியது. (தொ. பொ. 114 நச்)

‘களம் பெறக் காட்டினும்’ என்றதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று.

தோழி, ‘களம் பெறக்காட்டல்’ -

{Entry: I09__247}

காப்பு மிகுதியானும் காதல் மிகுதியானும் தமர் வரைவு மறுத்ததனானும் தலைவி ஆற்றாளாயவழி, “இஃது எற்றினான் ஆயிற்று?” என்று செவிலி அறிவரை வினவ, அவர் களத்தைப் பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டு மிடத்துத் தோழி கூற்று நிகழும். களமாவது கட்டும் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமும் ஆம். (தொ. பொ. 114. நச்)

தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

{Entry: I09__248}

காதல்மிகுதி தலைவன்தலைவியர் உள்ளத்தே நிகழாநிற்ப, இருவகைக் குறியிடங்களையும் அவற்றுக்குரிய இருவகைக் காலத்தையும் அவன் வரைந்துகூறும் நிலையைத் தவிர்த்து, அவனுடைய பலதிறத்தவாகிய கூற்றினையும் ஆராய்ந்து தோழி அவனிடம் கூறுதல். தோழி, தலைவன் தானே இருவகைக் குறியிடங்களையும் அவற்றிற்குரிய இருவகைக் காலத்தையும் வரையறுத்துக் கூறும் தலைமைப்பாட்டினைத் தவிர்க்கிறாள்; தலைவியைக் குறிக்கண் கண்டு மருவுதலும் அன்னபிறவும் பற்றி அவன் கூறுவனவற்றை ஆராய்கிறாள். பின்னரே அவனை நோக்கி அவளது கூற்று நிகழ்தலுறுகிறது.

இக்கூற்றின்கண் தோழி, “பகற்குறி வேண்டா” என விலக்கி யும், “இரவுக்குறிவேண்டா” என விலக்கியும், இரவுக்குறி வேண்டாமையை வற்புறுத்துவாள்போலப் பகற்குறிநேர்ந் தும், தலைவியது ஆற்றமாட்டாக் காமமிகுதி சுட்டியும் பலதிறமாகக் கூற்று நிகழ்த்துவாள். (தொ. பொ. 114 நச்.)

தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -

{Entry: I09__249}

“அன்னையே! பரணிலே இருந்து எங்களைக் காத்துக் கொள்ள முடியாத நிலையில் எங்களை நோக்கி வந்த மத யானையை, எங்களைக் காக்கவேண்டும் என்ற அருளுள்ளத் தால், அம்பு எய்து ஓட்டி, அனிச்சமலர் நீலமலர் ஒளிமிக்க அசோகமலர் இவற்றை ஆராய்ந்து தொடுத்துத் தலைவி கூந்தலில் வைத்துச் சென்ற தலைவன்ஒருவன் உளன்” (திணை மாலை 2) என்று செவிலியிடம் தோழி களிறுதரு புணர்ச்சி யான் அறத்தொடு நிற்றல்.

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தற்’ கண் கூறியது. (தொ. பொ. 114 நச்)

தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -

{Entry: I09__250}

ஆண்யானையைத் தொடர்புறுத்தித் தோழி தலைவிக்கும் தலைவற்கு மிடையே இணைப்பு ஏற்பட்ட சூழ்நிலையைச் செவிலியிடம் கூறுதல்.

“தலைவன், யானையைக் கண்டு அஞ்சிக் கண்ணீர் பெருக்கிய தலைவியை இடக்கையால் அணைத்துக்கொண்டு, வலக்கை யால் யானையொடு போரிட்டு, அதன் குருதி தன்மேல் வலப்புறம் படியத் தலைவியின் மையைக் கரைத்த கண்ணீர் தன் இடப்புறம் படிய அவளோடு அம்மையப்பன் போலக் காட்சியளித்தான். தலைவி அவன்நினைவாக உள்ளாள்” (தஞ்சை. கோ. 302) என்பது போன்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல். (ந. அ. 177)

தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -

{Entry: I09__251}

வரை இறத்தல் - எல்லை கடந்து மிகுதல்.

“தலைவ! பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிய ஆண்யானை யைப் போல வந்து இற்கடையின் கதவைத் திறக்கச்செய்ய நீ குறித்த ஒலியை நாங்கள் கேளாமலில்லை; கேட்டோம். என் செய்வது? தலைக்கொண்டை சிதையத் தோகை மெலிய மயில் வலைக்கண் அகப்பட்டாற்போல, யாம் வருந்தும் தோறும் தாய் எங்களை இறுகத் தழுவிக்கொண்டமையான், நின் குறிப்பறிந்தும் யாங்கள் இரவுக்குறிக்கு வருதல் இயல வில்லை” (குறுந். 244) என்ற தோழி கூற்று.

தன் கணவனாகிய குரங்கு இறந்துபட்டதாகக் கைம்மை நிலை தாங்க இயலாத மந்தி தன் குட்டியைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தன் கிளையிடையே ஒப்படைத்துவிட்டுத் தான் மலைச்சரிவில் பாய்ந்து உயிர் நீக்கும் மலைப்பக்கத்தை யுடைய நாட! கருணை கூர்ந்து நள்ளிரவில் வாரற்க. நினக்கு நிகழக்கூடும் ஏதத்தை நினைத்து அஞ்சுகின்றோம்” (குறுந். 69) என்ற தோழி கூற்று.

‘காப்பின்கடுமை கையற வருதற்’கண் வரும் கூற்று இது. (தொ. பொ. 112 இள.; 114 நச்)

தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -

{Entry: I09__252}

“தலைவ! இத்தலைவியின் இனிய குரல் கிளியின் குரலை ஒத்துள்ளது. இவள் கிளிகடியும் ஒலிகேட்டுக் கிளிகள் அதனைத் தம் இனத்தின் ஒலி என்று கருதித் தினைக்கதிரை நோக்கி வந்துவிடுகின்றன. இதனைக் குறவர்கள் அறிந்து இவளைத் தினைக்காவலினின்று நீக்கிவிடுவர் ஆதலின், இவளை நீ அடைய விரும்பின் வரைந்து ஏற்றுக்கொள்” (ஐங். 289) என்ற தோழி கூற்று.

‘காப்பின் கடுமை கையற வருதற்’கண் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 112 இள.)

தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -

{Entry: I09__253}

“பாண! உங்கள் தலைவர் மீண்டு வருவதாகக் கூறிச்சென்ற பருவம் வந்துவிட்டது. அவர் எம்மை நினைத்துப்பார்க்கா விடினும், தாம் சொன்ன சொல் பொய்யாகுமே என்று நாணியாவது இக்காலத்தே அவர் மீண்டுவருதல் வேண்டும். அங்ஙனமும் அவர் செய்யாமைக்கு யான் வருந்துகின்றேன்” (ஐங். 472) என்று, அவன் தலைவனிடம் தூது சென்றுரைப் பான் என்பது கருதி, தோழி கூறியது.

இச்சூத்திரத்துள் ‘பிற’ என்பதனாற் கொள்ளப்பட்ட கூற்று இது. (தொ. பா. 150 நச்)

தோழி குறியிடம் கூறல் -

{Entry: I09__254}

தலைவி, தலைவன் விருப்பிற்கு இணங்கியமை கூறிய தோழி, அவற்குப் பகற்குறியிடம் குறிப்பிடுதல்.

“கடலின் புலால்நாற்றத்தினைப் புன்னைமலரின் மணம் நீக்கும் கடல் துறைவனே! மீன்உணக்கலைக் கவரவரும் பறவைகளை ஓட்டுதற்குத் தலைவி இருக்கும் இடம் தாழை மரங்களும் ஞாழல்மரங்களும் செறிந்த பொழிலே யாகும்” (திணைமாலை 44) என்று தலைவற்குத் தோழி பகற்குறியிடம் கூறல்.

‘நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்’ என்றதனான் கொள்ளப்பட்டவற்றுள் ஒரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -

{Entry: I09__255}

தோழி, “இவன் கூறும் குறை தலைவியிடத்ததாக வுள்ளது” என்று அதனைத் தலைவிமேல் சேர்த்தி அதனை உண்மை என்றுணருமாறு, “கடலில் வலைவீசி அண்ணன்மார் பிடித்துக் காயவைத்துள்ள மீன் வற்றலைக் கவர வரும் பறவை களை வெருட்டும் இப்பெண்ணே எனக்கு மிக்கதுன்பம் தருபவளா யுள்ளாள்” எனவும்,

“நல்லாய்! இம்மலர் சூடிய தளிர்மேனித் தையல் என் பண்பினையும் உறக்கத்தினையும் கைப்பற்றிக் கொள்வதற்கு யான் செய்த தவறு யாது எனக் கூறுவாயாக” (ஐங். 176.) எனவும் தலைவன் தோழியிடம் உரையாடுதல். (தொ. பொ. 102. நச்.)

தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -

{Entry: I09__256}

தலைவன் புணர்ச்சி யுண்மை அறிந்து தாழநின்ற தோழி தானும் குறையுற்றுத் தலைவிமாட்டுச் செல்லுதற்கண் கூறுதல். (தொ. பொ. 112. இள.)

இரந்து பின்நின்ற தலைவன் உள்ளப்புணர்ச்சி உள்வழியும் குறையுற்று மெய்யுறு புணர்ச்சி வேண்டித் தலைவிமாட்டுச் செல்லுமிடத்தும் தோழி கூற்று நிகழும். (இள.)

தலைவன் இரந்து பின் நின்றமை கண்டு தோழி மனம் நெகிழ்ந்து தான் குறைந்து தலைவியிடத்தே சென்று அவன் குறை கூறுதல். (114. நச்.)

“மகளிர் விளையாடும் கடற்கரைச் சோலையிலே சிறிய நீர்த் துறையை வினவிநின்ற நெடுந்தேரினனாகிய தலைவனை நாம் காணச்செல்வோம்” (ஐங். 198) என்றாற் போலத் தோழி தலைவியிடம் கூறுதல். (நச்.) (தொ. பொ.)

தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

{Entry: I09__257}

களவொழுக்கத்தின்கண்ணே உறுதற்காகத் தனது குறையைச் சொல்ல வேண்டி எதிர்ப்பட்ட தலைவனை அவனது பெருமையின் நீக்குவதன்கண் தோழி கூறுதல். (தொ. பொ. 112 இள.)

இரத்தல் வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள்போல அவன்பெருமை கூறி அவன்குறிப்பினை மாற்றுதற்கண் கூறுதல். தான் அறிந்ததனை மறைத்துக்கூறுதலன்றித் தோழி அன்பின்மை ஒருதலையாக உடையள் அல்லள். (114. நச்.)

“சான்றீர்! மலைப்பகுதியில் தினைக்கொல்லையைக் காத்து வரும் ஏழைகளை விரும்பி வந்து, மேம்பட்ட நுமது செல்வக் குடிக்குப் பழிதேடுதல் தக்கதோ?” எனவும்,

“மலைநாட! இங்குள்ள சிறுகுடியில் வாழ்மக்கள் தமக்கு அக்களங்கம் தரும் செய்தியைச் செய்யக்கருதார். மூத்தமாட் டின் முதுகில் இடப்பட்ட சூடு, அதன் முதுமையான் அப்பகுதியில் மயிர் தோன்றாவாறு இறுதிவரை தன் வடுவைக் காட்டி நிற்பது போல, எமக்கு இறுதிவரை இப்பழி நிற்கும். ஆதலின் நின் செயல் தக்கதன்று” எனவும்,

“தலைவ! நீ சான்றோரை ஒத்த மாண்புடையை. இம்மலை வாழ்நர் சிலர், பின்னிகழ்வு கருதாமல் அபபோதைய இன்பத்தை விரும்பி, மகளிரைச் சுற்றித் திரியலாம். ஆயின் நின் போன்றோர்க்கு இச்செயல் தக்கதன்று” எனவும்,

“தலைவ! இத்தலைவியோ, கடலில் மீன்பிடிக்கும் பரதவர் இல்லத்துப்பெண். நீயோ, பேரூரில் விரைந்து செல்லும் தேரில் இவரும் செல்வனுடைய அன்பு மகன். மீன் உணக்க லிடையே புள் ஓப்பும் எமக்கு யாதுளது சிறப்பு? யாம் மீன்வாடை நாறுகிறோம். சற்று விலக நின்று பேசு. எங்கள் எளிய வாழ்க்கை செல்வராம் நும்மனோர்க்கு ஒத்ததன்று. எங்களுள்ளும் சிறிதளவு செல்வம் படைத்தவரையே இத் தலைவி மணக்கத்தக்கவள்” (நற். 45) எனவும் வரும் தோழி கூற்று. (நச். 114)

தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -

{Entry: I09__258}

“குன்றே! தாய், ‘தினைப்புனத்தின் பக்கம் ஓர் ஆண்யானை அடிக்கடி வருகிறது. அஃது ஏதம் தரும் ஆதலின் நீங்கள் தினைக்காவற்குச் சேறல் வேண்டா’ என்று கூறிவிட்டாள். இனித் தலைவி உன்னிடத்தின் இழியும் அருவியில் ஆடு தற்கோ தினைப்புனம் காத்தற்கோ, உன்னிடத்துள்ள இனிய தழைகளைக் கொய்தற்கோ ஆண்டு வருதற்கு வாய்ப்பு இல்லை” என்று தலைவி இற்செறிக்கப்பட்ட செய்தியைத் தோழி குன்றத்திடம் கூறுதல். (இதன் பயன், சிறைப்புறமாக நின்ற தலைவனை வரைவு கடாவுதல்.)

இது ‘காப்பின் கடுமை கையற வருதற்’கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி கூறும் உள்ளுறை உவமம் -

{Entry: I09__259}

தோழி காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றால் அவ்வந் நிலங்கட்குரிய கருப்பொருள்கள் எல்லாவற்றையும் கொண்டு மருதம் நெய்தல்களில் மிகுதியாகவும், குறிஞ்சியில் சிறிது குறைவாகவும், ஏனைய பாலைமுல்லைகளில் மேலும் குறைவாகவும் உள்ளுறைஉவமம் கூறுவாள்.

இது செவிலிக்கும் ஒக்கும். (தொ. பொ. 301, 306 பேரா.)

தோழி சங்கினை வாழ்த்துதல் -

{Entry: I09__260}

கற்புக்காலத்துத் தலைவன் சேயிடைப்பிரிந்து செல்ல, அவன் குறித்த பருவத்தொடக்கத்தேயே தலைவி அவன்பிரிவு குறித்து ஆற்றாளாக, தோழி அரிதின் ஆற்றுவித்துக்கொண் டிருக்க, தலைவன் தேரொடு விரைவில் மீண்டுவருகையில் அவன் தன் வருகையைக் குறிக்கச் சேய்மைக்கண்ணேயே ஊதிய சங்கொலி தலைவியது ஆற்றாமையை நீக்கியதால், தோழி சங்கினை வாழ்த்துதல்.

“ஒளி சூழ்ந்த வலமாகச் சுரிந்த முகத்தினையுடைய சங்கே! நீ தலைவனது வருகையைத் தெரிவித்தனையாதலின், இம்மலர் தலை உலகில் நீ நெடிது வாழ்க!”

இது கற்பியலுள், ‘சேயிடைப்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. பக். 52)

தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -

{Entry: I09__261}

“சந்திரனே! நீ ஓரிடத்தில் நிலைத்தலின்றிக் கலைதேய்ந்து, வெளுத்து, உடல் பாதிக்கும் குறைந்து, இராப்பகல் குளிர்ச்சி மிக்குக் களங்கத்துடன் சேர்ந்து இருக்கிறாய். என்தலைவியும், ஓரிடத்தில் நிற்காமல் திரிந்துழன்று, ஆடைசோர்ந்ததனையும் அறியாமல், உடல் வெளுத்துப் பாதியளவினும் இளைத்து, இரவும் பகலும் கண்ணீர் பெருக்கித் தரையில் புரளுதலால் மாசு சேர்ந்து இருக்கிறாள். இருவீர்நிலையும் ஒத்துள்ளமை யால், நீயும் திருவேங்கடத்துப் பெருமான்மீது கொண்ட காத லால் இவ்வாறு ஆகப்பெற்றனையோ?” என்பது அகப்புறத் தலைவியினுடைய தோழி கூற்று. (திருவேங்கடத். 19)

தோழி, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் -

{Entry: I09__262}

தலைவன் தினைப்புனத்தின் வெளியே, வேலியருகில் வரும்போது, தோழி, “தினை முற்றிவிட்டது; இனி நாம் புனம் காக்க வருதல் நேராது; தீத்தீண்டுகையார் (வேங்கையார்) நம்மைப் பிரிவித்துவிட்டார்” (திணைமாலை. 5) என்று அவன் கேட்குமாறு கூறுதல்.

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -

{Entry: I09__263}

“கடற்கரைச்சோலை நிலவுபோல வெள்ளொளி வீசுகிறது. உப்பங்கழி இருள் போலக் கருநிறமாயுள்ளது. இவை தம் இயற்கையினின்றும் சிறிதும் திரிந்தில; ஆயின் தலைவியின் நுதலும் தோள்களும் தம் பண்டை நல்லொளியை இழந்து பசலை நிறம் எய்திவிட்டன” என்றாற் போலத் தோழி சிறைப்புறமாகத் தலைவற்குத் தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாதல்.

‘அனைநிலை வகை’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__264}

“தலைவி! நம் சுற்றத்தார், தலைவன் வரைவு குறித்துத் தமரை விடுத்துழி, அவர் தருவதாகக் கூறிய பொருளினும் மிக்க பொருளை வேண்டுகின்றனர். நமர் வரைவைப் பொருள் கருதி ஏற்றுக்கொள்ளாததால், இவரிடையே அமர் நேருமோ என்றஞ்சினேன். ஆயின் அவர்கள் அமைதியாக மீண்டு சென்றனர். நமர் கேட்ட பொருளுடன் அவர்கள் விரைவின் மீண்டும் வருவர் எனக் கருதுகின்றேன்” என்று தோழி கூறியது.

இச்சூத்திரத்து ‘வகை’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

{Entry: I09__265}

செவ்விய கடிய சொல்லினானே, தலைவன் அன்பு சிதை வுடைத் தாயினும், என்பு உருகுமாறு பிரியப்பட்டவளிடத் துச் சென்று தலைவன் அன்புடைமையின் அளிப்பன் என்று ஆற்றுவித்த வற்புறுத்தற்கண் தோழி தலைவிக்குக் கூறுதல். (தொ. பொ. 112 இள.)

‘செங்கடுமொழி’ என்றது, கொடிய கடுமொழியன்றி மனத்தினான் இனியளாகிக் கூறும் கடுமொழி; அஃதாவது இயற்பழித்தல்; அவ்வாறு இயற்பழித்தவழித் தலைவன் அன்பு சிதைவுடைத் தாயினும் என்றவாறு. ‘அன்பு தலை யடுத்த வன்புறை’ யாவது தலைவன் இன்றியமையாதவன் என ஆற்றுவித்தல். (இள.)

1. இயற்பழித்தல் -

“பாறையிலே துணையைப் பிரிந்த வருத்தத்தையுடைய ஆண்மான் தங்கும் நாடனாயிருந்துவைத்தும், நின் துயர் களையாமல் நினக்கு நோய் தந்ததனால் நின் குவளைமலர் போன்ற கண்கள் பசலை பாய்ந்துவிட்டன,” (குறுந். 73.) எனத் தோழி தலைவியிடம் தலைவனை இயற்பழித்தல்.

2. வன்புறை -

“தலைவி! தலைவனது மார்பையே நீ விரும்பி வாழ்கிறாய். அஃது உண்மையே. ஆயின், பழகும்போது சிறிது கடுமை யொடு கூடிய ஆராய்ச்சியும் வேண்டும். அவன் விழையும் பகற்குறி இரவுக்குறி இவற்றிற்கு நீ உடன்படுதலால் அவன் களவை நீட்டிக்கிறான். களவில் அவன் பிரியும்போது நீ வருந்துகிறாய். உள்ளத்தில் அன்பு மிகினும், புறத்தே பகற்குறி இரவுக்குறிகளை மறுப்பின், தலைவன் விரைவில் மணப்பான்; பின் பிரிவின்றி வாழலாம்” (குறுந். 73.) என்று தோழி வற்புறுத்தியுரைத்தல்.

“தலைவி! ஒருவர்மெய் மற்றவர் மெய்யிலிருந்து பிரிதற்கு விரும்பாத மிக்க காமத்தால் நீ கடமையை அறியாதிருப்பி னும், அதனைக் கூறல் வேண்டுவது என் கடமை. தினைக் கதிர்களைப் பறிப்பதற்கு முன்பே பலதினைக்கதிர்களைக் கிளிகள் வெளவிச் சென்று விட்டன. நீயோ, தலைவனோடு இன்பம் நுகர்தலிலேயே காலம் கழிக்கின்றாய். நீ அடிக்கடித் தினையிற் கிளிகளைக் கடிதற்கண் முயலாதுவிடின், உனக்குக் கிளி கடிதல் தெரியவில்லை என்று அன்னை வேறொரு வரைத் தினைகாவலுக்கு அமர்த்திவிடின், தலைவன் மார்பு உனக்குக் கிட்டுதற்கு அரிதாகப்போய்விடும்” (அகநா. 28.) என்றாற் போலத் தோழி தலைவியிடம் அவள் கடமைகளை வற்புறுத்திக் கூறுதல்.

3. ஆற்றுவித்தல் -

“ஆண்புலி மடப்பிடி ஈன்ற குழவியினைக் கவர்தற்குப் பலாமர நிழலில் பதுங்கியிருக்கும் மலைநாடனாகிய தலைவனை நினைத்து, பறித்துப் போடப்பட்ட தளிரைப் போல நீ வாடி உடல் மெலிந்து பசலைபாய்வது எதன்பொருட்டு?” (ஐங். 216.) என்று, குறிவயின் தலைவியைத் தவறாது கோடற்காகவே தலைவன் செவ்வி பார்த்து வருபவன் ஆதலின், அவன் வருகையின் காலத்தாழ்ப்புக் கருதி வருந்துதல் வேண்டா என்று தோழி தலைவியை ஆற்றுவித்தல்.

“தலைவி! வருந்தற்க. நம் தலைவன் நம்மிடம் பேரன்பினன்; தன்னால் நமக்கு வரக்கடவ பழிக்கு அஞ்சுபவன். உலகில் அழியாத புகழை விரும்புபவனது செல்வம் விரைவில் அவனை விட்டு நீங்குமாறு போல, உன் அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலையும் விரைவில் நீங்கிவிடும்” (குறுந். 143.) என்ற தோழி கூற்றும் அது.

“களிறு மலைநெல்லை உண்டு மராமர நிழலில் இலைகளைப் பரப்பித் துயிலும் சோலைகளையுடைய மலைநாடன் நட்பு, அவனைப் பொருந்தியவருக்குப் பாதுகாவலைத் தரும்” (ஐந். எழு. 12) என்ற தோழி கூற்றும் அது.

இம்மேற்கோள் பாடல்கள் பலவும் நச்சினார்க்கினியரும் காட்டுவன.

நச்சினார்க்கினியர் இதனை இரண்டாகக் கொள்வர்:

செங்கடு மொழியால் சிதைவுடைத்தாயினும்:

தோழி செவ்வனங் கூறும் கடுஞ்சொற்களான் தலைவி நெஞ்சு சிதைவுடைத்தாயினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும். அவை தலைவனை இயற்பழித்தலும், தலைவியைக் கழறலுமாம்.

“ஊரவர் பழி தூற்ற அழகிழந்து நெற்றி பசலை பாய நம்மைத் துன்புற வைத்துப் பிரிந்த தலைவனைவிட அவனுடைய மலை, மேகத்தால் மறைக்கப்பட்டு நம் காட்சியைத் தடுத்தத னால் கொடியதுபோலும்!” என்று தோழி தலைவனை இயற் பழித்தல். இது வரைவிடைப் பருவங்கண்டழிந்தவள் கூற்று.

“பன்றி உழுத கொல்லையுள் வளர்ந்த முற்றிய வாழைக்காய் களைக் கடுவன் பழுப்பதற்காகப் புதைத்துவைத்துப் பின் புதைத்த இடம் தெரியாமல் வருந்தும் மலைநாடன் தான் தெளிவித்துச் சொல்லிய உறுதிமொழிகள் தன் தலைவியின் நெஞ்சில் அம்புகளைப் போலத் தைத்துத் துன்புறுத்துமாறு அவற்றைச் செயற்படுத்தாமல் இருக்கிறான்.” (ஐந். எழு. 11) என்று தோழி தலைவன் சூள் பொய்த்தது என இயற்பழித்தல். (114. நச்.)

1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -

{Entry: I09__266}

தலைவனது பொருட்பிரிவு எண்ணி வருந்திய தலைவியிடம் தோழி, “மாந்தளிரை ஒத்த நின் மேனி பசப்ப, நம்மினும் தலைவற்கு மேம்பட்டதாகத் தோன்றும் பொருளைத் தேடிக் கொணர, மூங்கில் உயர்ந்த நீரற்ற கொடிய இடத்தே மறவர் கொள்ளையடித்துண்ணும் காட்டைக்கடந்து பொருள் செய்ய அவர் நினையார்” என்று கூறல். (குறுந். 331.).

2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -

{Entry: I09__267}

அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீட்டித்ததாக, “மற்றொரு குலமகளை அவன் வரையுங்கொல்?” என்று ஐயுற்ற செவிலியது குறிப்பறிந்து தோழி அவட்குச் சொல்லியது.

“அன்னாய்! தலைவன் எம் தோள்களைத் துறந்தானாயின், அவனால் புதியராக விரும்பப்படுபவர் தோள்களும் விரைவில் துறக்கப்படும் அல்லவோ?” (ஐங். 108.) என்ற தோழி கூற்று.

இது ‘பாங்குற வந்த வகையும்’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று.

3. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் -

{Entry: I09__268}

தலைவன் களவுக்காலத்தே வரை பொருட்குப் பிரிந்தானாக அவன்பிரிவால் தலைவி உள்ளமும் உடலும் மெலிவுறவே, அக் காரணத்தை உள்ளவாறு உணரமாட்டாத செவிலி தலைவிக்கு மெலிவு முருகன் அணங்கியதால் வந்தது என்று முருகன் உவப்பன செய்யுமாறு வேலனைக்கொண்டு வெறி யாட்டு நிகழ்த்தத் தொடங்க, அதனைத் தோழி விலக்க முற்பட, அது போது செவிலி தோழியை வெறிவிலக்கலுறு வதன் காரணத்தை வினவத் தோழி, “அன்னாய்! யாங்கள் பண்டொருநாள் நின் ஆணைப்படி தினைப்புனங் காவல் செய்திருந்தபோது எம்மைத் தாக்க வந்த யானையை அருளுடையான் ஒருவன் எதிர்பாரா வகையால் ஆங்கு வந்து ஓட்டி நின்மகள் உயிரைக் காத்தான். தன்னுயிர் காத்த அப்பெருமகனை நினைந்து இவள் மெலிகிறாள். இதுவே என்னால் அறியப்பட்ட செய்தி. இனி நீ விரும்பியவாறு செய்க” என்று அறத்தொடு நின்றது.

இது வரைபொருட்பிரிதல் என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 293.)

தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -

{Entry: I09__269}

“ஓங்குமலைநாட! நீ பலகாலும் இரவுக்குறியிடைத் தலைவி யைச் சேர்தலின் அதனால் உண்டாகும் புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச் சார்ந்து வண்டுகள் பலவாக மொய்க்கலுற, எம் அன்னை தன் கண்களால் எம்மைக் கொல்வாளைப் போல நோக்கி, ‘ நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பட்ட தோளிணைகளை உடையை யோ?’ என்று வினவ, அதற்கு விடை கூற இயலாது தலைவி மயங்க, யான் ‘இங்குள்ள சந்தனக்கட்டைகளை விறகாக அடுப்பில் மாட்டுதலின் அவற்றிலிருந்த சுரும்புகள் இவ ளுடைய தோள்களில் மொய்க்கின்றன’ என்று மறைத்துக் கூறினேன். விரைவில் இவளை மணத்தற்கு முயலுக” (நற். 55.) என்ற தோழி கூற்று.

இச்சூத்திரத்துள் ‘அன்னவை பிறவும்’ என்றதனான் இக் கூற்றுத் தழுவப்பட்டது. (தொ. பொ. 115. நச். உரை.)

தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

{Entry: I09__270}

“அன்னாய்! கடற்கரையில் இத்தலைவிக்கு ஒப்பற்ற உதவி செய்த சேர்ப்பனை ஒப்பானொருவனை விற்போரில் வல்ல வீரர்கள் கூடி நடத்தும் வில்விழாக் கூட்டத்திலோ, பெண்கள் கூடும் மணவிழா முதலிய இடங்களிலோ யாங்கள் பார்த்த தில்லை. ஒருகால் தேவருலகில் இருத்தல் கூடும்!” (திணை மாலை. 62.) என்று கூறித் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்.

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தற்’கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி செவிலியை அருகு அடுத்தது -

{Entry: I09__271}

களவின்வழி வந்து ஒழுகும் தலைவன் இடையீடு முதலிய வற்றால் சிலநாள் வாராதொழிந்தானாக, தலைமகளது மேனி மெலிந்து வாடியது கண்ட அன்னை, அது முருகனால் ஏற்பட்டது போலும் என்று கருதி முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்க, அது கண்ட தோழி அன்னையின் அருகு சென்று, “வெறியாட்டினால் பயன் இல்லை; தலைவியை இன்னும் ஒரு முறை தினைகாவலுக்கு அனுப்பி னால், அவள் இழந்த நலனைப் பெறுவாள்” என்று ஆராய்ந்து கூறுதல். (நற். 351.)

தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

{Entry: I09__272}

தனக்கு நல்ல நிமித்தங்களே தோன்றுவதனைத் தோழி தலைவிக்குக் கூறித் தலைவன் விரைவில் அவளை மணப்பான் என்று கூறுதல்.

“தலைவி! என் கண்களில் இடக்கண் துடிக்கிறது. என் முன் கையிலுள்ள வளைகளும் நெகிழாமல் செறிகின்றன. களிற் றின் தாக்குதலினின்று தப்பிய சினம் சிறந்த புலி இடிபோல முழங்கும் மலைநாடனாகிய தலைவன் விரைவில் வரைய வருவான்” (ஐங். 218) என்ற தோழி கூற்று.

‘அவன் வரைவு மறுப்பினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -

{Entry: I09__273}

“தலைவி! நம்சுற்றத்தார், கையில் தண்டு ஊன்றித் தலையில் தலைப்பாகை அணிந்து, “நன்று நன்று” என்று வந்த தலைவன் தமரொடு முகமன் கூறி அளவளாவிநின்றனர். ஆதலின், நம்மூரில் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பவர்களும் இருக்கின்றனர் என்று கொள்” (குறுந். 146.) என்ற தோழி கூற்று.

‘அவன் வரைவு மறுப்பினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -

{Entry: I09__274}

தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் கூட்டம் நிகழ்த லான், தலைவன், தமது மனையது எல்லைப்பக்கம் வருதலைக் காணினும், தலைவி இல்லக்கட்டட எல்லையைக் கடந்து வெளியே செல்லுதலைக் காணினும், செவிலி வினவியதைத் தோழி தலைவியிடம் கூறல்.

“தலைவி! தலைவன் நள்ளிரவில் அருவியைக் கடந்து வேலே ஒளி செய்ய இருளைக் கடந்து தனியே வந்து, குளிரையும் பொருட் படுத்தாமல் நம்மூரை யடைந்து, பாறையின்மீது மிளகுக்கொடி படர்ந்திருக்கும் நம்மனைக் கொல்லையைக் கடந்து, குறுகிய தாழ்வாரத்தையுடைய நம் இல்லினுள் நுழைய, நம் தாய் அவனைக் கண்டு மிக்க உவகையோடு அவனை முருகன் என்று கொண்டு, உபசாரமொழி கூறிச் செந்தினையை நீரொடு வைத்து வழிபடத் தொடங்கினாள். இனித் தலைவனொடு நாம் கொண்ட நட்பு யாதாகுமோ?” (அகநா. 272.) என்று தலைவன் வரவினைத் தாய் அறிந்தமை யைத் தோழி கூறியது. (தொ. பொ. 115. நச்.)

தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -

{Entry: I09__275}

தலைவி தோழி கூற்றிற்கு இணங்கித் தலைவன் தேவையை முடித்தற்கு உடன்பட்டவழி, அதனைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்.

“தலைவ! நெய்தல் பூப்படுக்கையில் யாம் செய்த பைஞ்சாய்க் கோரையாலாகிய பாவையைக் கிடத்தி உன் குறியிடத்து வந்துள்ளேம். ஒரு கால் நாரை அப்பாவையை மிதித்துச் சிதைத்தலும் கூடும். ஆதலின் யாங்கள் விரைந்து திரும்பு மாறு, தலைவியை விரைவில் திருப்பி அனுப்புக” (குறுந். 114.) என்ற தோழி கூற்று.

இது ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்’ என்ற தன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 112. இள.)

தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது -

{Entry: I09__276}

“சிறுவர்கள், பெரியோர் ஊரும் பெரிய தேரினை ஊர்ந்து இன்புறாவிடினும், அத்தேரை நினைந்து பண்ணிய சிறு தேரினை இழுத்துச் செல்வதிலேயே, அவரெய்தும் இன்பத் தினைத் தாமும் அடைவது போல, யாம் பரத்தையர் பெறும் மெய்யுறு புணர்ச்சியைப் பெற்று இன்புறேமாயினும், தலைவனை நினைத்து உள்ளத்தே நட்பைப் பெருக்குதலால், அப்பரத்தையர் பெறும் இன்பத்தை யாம் பெற்றோம். அதனால் எம்முடல் மெலியவில்லை; வளைகள் நெகிழ வில்லை. ஆதலின் தலைவன் வந்து எமக்குச் செய்யவேண்டிய தலையளி வேண்டா” என்ற தோழி கூற்று. (குறுந். 61.)

தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -

{Entry: I09__277}

தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போய் அவளை வரைந்துகொண்டு பின் ஊருக்கு மீண்ட தலைவன், தான் தலைவியை வரைந்துகொண்ட செய்தியைத் தலைவியின் தமர்க்கு உரைக்குமாறு தோழியை வேண்டினானாக, தான் அதனை முன்னமேயே தெரிவித்து விட்டதாகத் தோழி கூறல்.

இஃது இச்சூத்திரத்து ‘இயல்புற’ என்றதனாற் கொள்ளப் பட்ட கிளவி.

இதனை, நம்பி அகப்பொருள் ‘தோழி தான் அது முன்னே சாற்றியது உரைத்தல்’ என்னும். (194.)

குரங்குக்குட்டி பெரிய மூங்கில்மேல் ஏறி மூங்கிற்கோலால் சந்திரனைப் புடைப்பது போலக் காட்சிதரும் நாடன் நீ. (ஆதலின், நீ தீங்கு செய்வாரைப் போலத் தோன்றுவாயே அன்றி, உண்மையிற் செய்யாய் என்பதனை யான் அறிவேன் ஆதலின்) நீ தலைவியைக் கரணவகையான் மணந்துகொண்ட செய்தியைப் பிறர்வாயிலாகக் கேள்வியுற்று யான் முன்னரே என் தாய்க்குக் கூறிவிட்டேன்”(ஐங். 280.) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 39. நச்.)

தோழி தலைமகனைத் துணிதல் -

{Entry: I09__278}

“தலைவியின் உள்ளம் கவர்ந்தவன் இவனே” என்று தோழி தன்மனத்து உறுதி செய்து கொண்டது.

இயற்கைப் புணர்ச்சியிலும் பாங்கற்கூட்டத்திலும் தலைவியை நுகர்ந்த தலைவன், தலைவியும் தோழியும் உடன் இருந்த இடம் வந்து வழி முதலியன வினவியவிடத்தே, முன்பே நாற்றம் தோற்றம் முதலியவற்றான் தலைவியிடம் ஏதோ வேறுபாடு தான் அறியாவகை நிகழ்ந்துள்ளது என்ற ஐயுற வோடு ஆராயும் தோழி, அவன் செயல்களை ஆராய்ந்து, “வேங்கைக்கிளையில் ஏறி மயில் அகவும் நாட னாகிய இத்தலைவனே தலைவியின் மனத்தில் இடம் பெற்றவன்” என்று துணிந்து முடிவு செய்தல்.

இது களவியலுள், ‘தோழியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 18.)

தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -

{Entry: I09__279}

தலைவன் தலைவியைக் கொண்டு உடன்போக்குப் போகா விடின், தலைவி தன் மேனி எழில் வாடப் பெரிதும் வருந்தும் நிலை ஏற்படும் என்பதனையும், அதற்குக் காரணமான நொதுமலர் வரைவு முயல்வதனையும், ஈரமில்லா மனத்தவ ரான அயலார் பழி மொழிதலையும், அச்சொற்களைக் கேட்டு அன்னை கடிய சொற்கள் கூறுதலையும், தலைவியை இற்செறித்தலையும் தோழி எடுத்துக் கூறித் தலைவனை உடன்போக்கிற்கு ஒருப்படச் செய்தல்.

உடன்போதலை விழையாது, நாண் இழத்தற்கு அஞ்சி இல்லத்தில் செறிப்புண்டிருப்பின், சேரிப்பெண்டிர் தூற்றும் பழிமொழிகளிலிருந்தும், அவற்றைக் கேட்டு அன்னை கூறும் கடிய சொற்களிலிருந்தும் உய்யும் வழி இன்றாதலின், தலைவனோடு உடன்போதலுக்குத் தலைவியைத் தோழி ஒருப்படச் செய்தல். (அகநா. 65.)

“தலைவ! நீ பிரியின், நின்தலைவி தனது அழகிய நிறம் வாடக் குழலைவிடப் பெரிதும் இரங்கி ஏங்குவாள்” (ஐங். 306) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 39 நச்.)

இதனை நம்பிஅகப்பொருள், ‘பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்’ (182) என்னும்.

தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -

{Entry: I09__280}

“தலைவி! ஒரு காரணமுமின்றி நம்மை இற்செறித்துக் கடுஞ்சொற் கூறித் துன்புறுத்தும் நம் தாய், இவ்வில்லத்தில் தான் ஒருத்தியாகவே இருக்க! ஊரவர் அலர் தூற்றுக! சேரியில் ஆரவாரம் பெருகுக! நீ மலைகளிடையிடையே குறுக்கிட்ட பாலை நில வழியில் இடையிடையே காணப் படும் நெல்லி மரத்தினின்று பழுத்து உதிர்ந்து கிடக்கும் காய்களைத் தின்று, மலையடிவாரத்தில் யானைகள் கால் களை அழுந்த வைத்துச் சென்றதனால் உண்டான கரும்புப் பாத்தி போன்ற பள்ளங்களில் தங்கியிருக்கும் நீரைக்குடித்து, களைப்புத் தீர்ந்து உடன் போதலைத் தக்கது என்று நினைத்துத் தலைவனிடம் கூறியுள்ளேன்” (குறுந். 262) என்ற தோழி கூற்று.

இஃது இச்சூத்திரத்து ‘இயல்புற’ என்றதனாற் கொள்ளப் பட்டதொரு கூற்று. (தொ. பொ. 39. நச்.)

இதுவும் ‘பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்’. (ந. அ. 182)

தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -

{Entry: I09__281}

“கண்டல் செடிகளே! உப்பங்கழியருகே படர்ந்துள்ள முண்ட கங்களே! முன்பு தலைவனைக் கூட்டுவித்த நல்வினைப்பயன் எமக்குத் தொடர்ந்து இல்லாமையால், கழிக்கரையில் புள்ளோப்புதல் தொழிலை விடுத்து ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம். இனி, இத்தொழிற்கு மீண்டும் வர வாய்ப்பு இன்று. எமர் இற்செறித்த செயலைச் சொல்வதற்கு நாண முறாமல் தலைவனிடம் நீவிர் கூறுமின்!” என்று தோழி கூறுதல். (கண்டல் - தாழை; முண்டகம் - முள்ளி.)

இது ‘காப்பின் கடுமை கையற வருதற்’கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது -

{Entry: I09__282}

“தலைவ! நீ ‘அல்லகுறிப் பட்டேன்’ என வருந்துகிறாய். தவறு எம்மேலது இல்லை. மழை பெய்யும் இரவிலே நீ குறிசெய்யும் ஓசை கேட்கப்படுகிறதோ என்று செவிகளைச் சாய்த்துக் கொண்டு அந்நினைவாகவே இருக்கும் என் தலைவி, நின்னை அடைய முடியாத வருத்தத்தால் கடிய காவலுடைய அன்னையின் முன்னர்த் தன் வளையல்கள் நெகிழ்ந்து கழன்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இத்தகைய நிலைக்கு எம்மைத் தொடர்ந்து ஆளாக்காமல் விரைவின் வரைந்துகொள்வாய்” (கலி. 48) என்று தோழி கூறியது. (தொ. பொ. 133. நச்.)

தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -

{Entry: I09__283}

“தலைவ! இப்பொன்னிற மேனியாளின் பருத்த கொங்கை களின் வனப்பினை நினைத்து நீ வருந்தி வாடுதல் வேண்டா. நீ தொடுத்து வந்துள்ள குறுங்கண்ணி வாடிப்போவதன் முன் அவள் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு செய்வல்” (திணை மாலை 21.) என்று தோழி தலைவனிடம் கையுறையைப் பெற்றது.

இது ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தின்’கண் வருவ தொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__284}

“நிலவும் மறைந்துவிட்டது. இருளும் பரவிவிட்டது. நம்மை வெளியே செல்லாது பாதுகாக்கும் அன்னையும் உறங்கி விட்டாள். காப்போரை நீத்துத் தனித்து வரும் யானை போலத் தலைவன் இப்பனியில் நடுங்கியவாறு குறிக்கண் வந்துள்ளான். காணாமற்போன அணிகலம் மீண்டும் கிடைப் பதனான் ஏற்படும் மகிழ்வினை ஒத்த மகிழ்வுடன் இற்செறிப் பான் அடைய முடியாதுபோன தலைவன் மார்பினை இப்பொழுது பெற்று ஆசை தீரத் தழுவி மீள்க!” (நற். 182.) என்ற தோழி கூற்று.

இது ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தின்’கண் வருவ தொரு கூற்று. (தொ. பொ. 112. இள.)

தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -

{Entry: I09__285}

“தலைவ! பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறும் எமக்குத் துயரம் உண்டாகுமாறும் இவ்வாறு அறிஞர் வருவாரோ? உன்னால் பிரியப்பட்ட தலைவி, உன் தேர்ச்சக்கரங்களான் சிதைவுண்ட நெய்தல்மலர்களைப் போல நீ இரவிடை வருவதன் ஏதம் குறித்துப் பெரிதும் வருந்துகிறாள். அவ ளுடைய இரங்கத்தக்க நிலையினை நினைத்துப்பார்” (குறுந். 336) என்றாற் போலக் கூறித் தலைவனுக்குத் தோழி இரவுக் குறி மறுத்தல்.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -

{Entry: I09__286}

“தலைவ! எம்மூர்த் தெருக்களில் நிலாவினைப் போன்ற வெண்மணல் பரவியிருக்கும். எம்மூர் சிறிய ஊர்தான். மனைகள் புல் வேயப்பெற்ற குடிசைகள்தாம். நாற்புறமும் நீர் சூழ்ந்ததுதான் எம்மூர். ஆயின், மனத்துக்கு இன்பம் தருவதில் இதற்கு நிகர் வேறு ஊர் இல்லை. எங்கள் ஊரில் ஒருநாள் தங்கியவர்கள் மறுநாள் தங்கள் சொந்தவூரை மறந்துவிடு வார்கள். மரங்கள் செறிந்த பக்கத்தில் பகற்பொழுதை எங்களொடு கழித்து மாலையில் தேரினைப் பூட்டிச் செல்க. அதுவன்றி, இரவில் எம்பதியில் தங்கிச் செல்லின், யாமும் எம்மால் இயன்ற அளவு உபசாரம் செய்வோம். உன் கருத்து யாது? கூறுக” (அகநா. 200) என்று, தலைவன் இரவுக்குறியை விரும்புமாறு தோழி கூறியது.

இது ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்’ என்ற தன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

{Entry: I09__287}

“மயிற்கழுத்துப் போலும் காயாம்பூக்கண்ணிகள் பவளம் போன்ற செந்நிறக் குருதியுடைய நிலத்திலே மாறுபட்டுக் கிடக்கும் பொதுவரும், புலிக்கூட்டமும் யானைத்திரளும் தம்முள் மாறுமாறாய்ப் போரிட்டாற்போலப் பொருது, ஏற்றைத் தழுவிக்கொண்டு சேரத் தொழுவை விட்டுப் போயினர். அவர் போன அப்போதே மலருண்கண் காதல் மகளிரும் அவர்கள் கணவரும் மைந்துற்றுத் தாதாகிய எருவினையுடைய மன்றத்திலே குரவைக் கூத்தாடுவர். ஆண்டு யாமும் சென்று அக்குரவைக் கூத்தின்கண்ணே கூடி,

‘கொல்லும் ஏற்றினுடைய கொம்பிற்கு அஞ்சி அதனை அடர்க்காது போயின பொதுவனை ஆய்மகள் மறுபிறப்பி லும் தழுவாள்;

‘ஆயர்மகள் தோள்கள், அஞ்சாது கொலையேற்றினை அடர்க்கவல்ல ஆடவர் தழுவதற்குப் பொருந்துவனவேயன்றி, வருந்துதலுற்று அவ்வேற்றினைத் தழுவுதற்கு நெஞ்சில்லா தவர் செறிதற்கு அரியன;

‘ஆயர்மகள் தோள்கள், உயிர் ஒரு காற்றே என்று உணராது அதனுடனே ஒரு செறிவாய் அதனைக் காவல் கொண்டு கொல்லேற்றினது கொம்பினை அஞ்சும் நெஞ்சினான் தோய்தற்கு எளியன ஆகுமோ?

‘கொலைஏற்றினது கொம்புகளிடையே, தாம் விரும்பும் மகளிர்தம் மார்பில் முலையிடைப் புகுமாறு போல, வீழ்ந்து அவ்வேற்றைத் தழுவின ஆடவரிடம் எம்மினத்து ஆயர் தம் மகளிர்க்கு முலைவிலை வேண்டார்.’

என்று யாம் எம் சுற்றத்தார் கூறும் முறைமையைப் பாடிக் குரவைக்கூத்தாடி, நம் பாண்டியனைப் பாடி, சீரிய புகழை யுடைய தெய்வத்தைப் பரவுவோம். நீயும் அங்ஙனம் பாடு தற்குப் போதுவாயாக!” என்று தோழி தலைவிக்குக் கூறுவது. (தொ. பொ. 45. நச்) (கலி. 103.)

தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -

{Entry: I09__288}

“தலைவி! மலைச்சரிவிலுள்ள பலாமரத்தின் பழுத்த பழம் காம்பு கழன்று கற்களிடையே பள்ளத்தில் தேன்கூட்டையும் சிதைத்துக்கொண்டு விழும் நாட்டுத் தலைவன் உன்கண்கள் அழுது கண்ணீர் விடுமாறு சிறப்புடைய தன் நல்ல நாட்டிற் குச் செல்வதாகக் கூறுகிறான்” (ஐங். 214.) என்ற தோழி கூற்று.

இது ‘வேண்டாப் பிரிவினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 112. இள.)

தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__289}

‘அங்கதன் தன்மையின் வன்புறை’ என்பதன்கண் இஃது அடங்கும். அஃதாவது, தோழி தலைவனை வரைவு கடாய வழித் தலைவன் தலைவியை மணந்துகொள்ளுதல் மெய் யாயினமையின், திருமணம் நிறைவுறும்வரை தலைவன் தலைவி இருவரும் சிறுபிரிவை ஆற்றியிருக்குமாறு வற்புறுத் துதல். அதன்கண், இது, தோழி தலைவனுடைய ஏவலாளால் தலைவன் திருமண ஏற்பாடு செய்துவிட்ட செய்தியை அறிந்து தலைவிக்குக் கூறுதல்.

“தலைவி! தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற் கொண்டானாக, அவன்தன் ஏவல்மகனை நோக்கி யான், ‘சென்ற செயல் நலமா?’ என்று வினவ, அவன் ‘நலமே’ என்றான். அவன் நெய்மிக ஊறிய குறும்பூழ் சமைத்த கறியோடு, உணவு பெறுவானாக!” (குறுந். 389) என்று தோழி தலைவனுடைய குற்றேவல்மகனால் அறிந்த செய்தியைத் தலைவிக்குக் கூறுதல். (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவன் குறியாதது கூறல் -

{Entry: I09__290}

தலைவன் தெரிந்துகொள்ள வேண்டாத தொன்றைத் தோழி கூறுதல்.

தலைவியை இயற்கைப் புணர்ச்சியிலும் இடந்தலைப்பாடா கிய பாங்கற் கூட்டத்திலும் கூடிய தலைவன் தோழியை இரந்து குறைநின்றவழி, தலைவியை எளியளாகத் தலைவன் நினைத்தல் கூடாது என்ற கருத்தான் அவனொடு பலவகை யாக உரையாடிக் காலம் தாழ்க்கும் தோழி, “தூய்மை மிக்க பழங்குடியில் தோன்றிய, சொன்ன சொல் தவறாத நாவினை யுடைய மதிதரன் என்ற வள்ளல் போலப் பெருமை பொருந் திய மலையில் சிறந்த தவ முனிவர்களும் வந்து சாருமாறு நிலைபெற்ற அவ்வூர் விளங்கித் தோற்றமளிக்கிறது” என்றாற் போல் அவனுக்குத் தேவையில்லாத ஒன்றனைக் கூறுதல்.

இது ‘தோழியிற் கூட்டம்’ என்ற தொகுதியின்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 19)

தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -

{Entry: I09__291}

தலைவனுடைய குறையை மறுக்க முடியாத வகையில் தோழி தலைவியிடம் கூறியது.

“அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போல, வளைத்துப் பின் விட்டமையால் நிமிர்ந்து வானளாவ ஓங்கும் மூங்கிலையுடைய மலைநாடன் தலைவன்(அம் மூங் கிலைப் போலத் தலைவன் நமக்காகப் பணிந்து தோன்றினும் இயல்பில் மிக மேம்பட்டவன்.) நாமும் அவனை நினைத்து உள்ளம் மெலிகின்றோம். அதனை அவன் அறியான். வேனிற் காலத்து வெம்மையை ஆற்றாத காளையைப் போல, நம் நலத்தை விரும்பி அவன் மெலிந்துள்ளான். அவனுக்கு விரை வில் அருளுதல் வேண்டும்” என்ற தோழி கூற்று. (114. நச்)

தோழி, தலைவன் கையுறை மறுத்தது -

{Entry: I09__292}

“தலைவ! எம்மொடு வந்து கடலாடும் மகளிரும் நெய்தல் தழையைக் கொண்டு தாம் விளையாடும் பாவைக்கும் ஆடைபுனையார்; தாமும் அத்தழையை ஆடையாக அணியார்; மாலைக்காகச் சில நெய்தற்பூக்களையே பறித்துக் கொள்வர். ஆதலின் உன்னைத் தவிர இப்பூவையோ தழையையோ பறிப்பார் இல்லை. ஆகவே, இதனை யாம் ஏலேம்” (ஐங். 187.) என்று கூறித் தோழி தலைவன் தலைவி பால் சேர்ப்பிக்குமாறு கொடுத்த கையுறையை ஏற்க மறுத்தது.

இச்சூத்திரத்து (‘பாங்குற வந்த’) வகை என்றதனான் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -

{Entry: I09__293}

“மணம் கமழும் மலைநாடன் தலைவியின் மெய்யழகைக் கொள்ளை கொண்டதை அறியாத தாய், தலைவியைத் தெய்வம் தீண்டியதால் அவள் அழகு குறைவதாகக் கருதி வேலனை அழைத்து வந்து ஆட்டுக்குட்டியை அறுத்து அதன் குருதியைத் தூவி வெறியாட்டு நிகழ்த்தக் கருதி வருந்துகிறாள்” (ஐந். ஐம். 20) என்ற தோழி கூற்று.

‘பிறவும்’ என்றதனான் (அடி 32) கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -

{Entry: I09__294}

சீருடைப் பெரும்பொருளாவது இல்லறம். அதனைத் தலைவன் தலைமகளிடத்து வைத்தவிடத்தே அவளை மறந்து ஒழுகினவழித் தோழி கூறுதல்; அஃது அறத்தினானாவது, பொருளினானாவது, இசை கூத்து முதலிய இன்பத்தினா னாவது தலைவியைத் தலைவன் பிரிந்து மறந்தவழித் தோழி கூறுதல். (தொ. பொ. 148. இள.)

“தலைவ! நம் தலைவியது அழகு முன்பெல்லாம் இவ்வாறு தேய்ந்திருந்ததா? நீ பக்கத்தே யிருந்து அன்பு செய்யும்வழியும், சிறிது நின் முயக்கம் நெகிழ்ந்ததனான் விளைந்த அழகு வேறு பாடா இது? அல்லது கள்ளுண்பார்க்குக் கள்கோப்பையில் கள் தீர்ந்து போங்காலத்துப் பிறந்த வேறுபாடு போல, நின் அன்பு குறைந்து நீங்கிய காலத்து விளைந்த வேறுபாடா இப்பசலை? இதனை அறிந்து செயற்படுக” (நற். 35.) என்ற தோழி கூற்று. (இள.)

தலைமையையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்த காலத்துத் தலைவன் அறம் செயற்கும், பொருள் செயற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும் தலைவியை மறந்தொழுகுமிடத்தே தோழி கூறுதல். (150. நச்.)

“தேனூரைப் போன்ற இயற்கையழகுடைய இவளது நல்ல அழகினை ஒருகாலத்து நீ விரும்பி நுகர்ந்து இப்பொழுது இவளைத் துறந்தொழுகுவதால், இவள் நெற்றி பலரும் நீ பிரிந்திருத்தலை அறியுமாறு பசலை பாய்ந்துள்ளது” (ஐங். 55) என்று தலைவன்பிரிவால் தலைவி வனப்பிழத்தலைத் தோழி கூறுதல். (நச்.)

தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -

{Entry: I09__295}

தலைவன் இரவில் மீண்டு வந்தமை கண்டு மகிழ்ந்த தோழி அவனை நோக்கி, “பூந்தார் மார்ப! பருக்கைக்கற்களை மிகவுமுடைய குறுகலான பிளவுபட்ட வழிகளில் யானை களால் ஊறு நேருமே எனவும் கருதாமல், எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உன் கருணையுள்ளம் உன்னைச் செலுத்துதலால் இடையே யாண்டும் தங்காமல், தன் கருமையால் வழிச்செலவை விலக்கும் இவ்வரிய இருளில் எவ்வாறு மீண்டு வந்தாயோ?” (ஐங். 362) என்று கூறுதல்.

இது ‘பிறவும்’ என்பதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -

{Entry: I09__296}

“அன்னையே! தலைவன் தன் மலைச்சரிவிலுள்ளதொரு மரத்தின் பொன் போன்ற மலர்களையும், செம்மணி போன்ற அரும்பு களையும் தொடுத்துத் தான் மாலையாக அளித்தான். அதன் தளிர்களைக் கொண்டு எங்களுக்குத் தழையாடை அமைத்துக் கொடுத்தான். இவ்வாறு பொன் போன்ற மலர், செம்மணி போன்ற அரும்பு, ஆடைக்கு உதவும் தழை இவற்றைக் கொண்ட மரம் யாதாக இருக்கும்?”(ஐங். 201) என்று கூறுவாள் போலத் தோழி தலைவன் தழை தந்தமை கூறிச் செவிலிக்கு அறத்தொடு நிற்றல்.

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தற்’ கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -

{Entry: I09__297}

தோழி தலைவனது துயர் மிக்க உள்ளநிலையைத் தலைவிக் குக் கூறுதல்.

“தலைவன் மெய் நடுங்கிக்கொண்டு கையில் தழையை ஏந்தித் தன் அம்பு பட்ட யானையை வினவிக் கையில் வில் இன்றிப் பித்தன் போலப் பேசுகிறான். அவன்நிலை மிகவும் இரங்கத் தக்கதாக உள்ளது” (கோவை. 102) என்பது போன்ற தோழி கூற்று.

இது கோவையாருள் ‘ இரக்கத்தொடு மறுத்தல்’ (102) போல்வது.

இக்கூற்று, களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் தொகுதிக்கண்ணது. (ந. அ. 148.)

தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -

{Entry: I09__298}

தலைவன் தலைவியை மனத்தால் பிரியான் என்பதனை உறுதியாக அறிந்த தோழி, ஊரில் அலர் அடங்கும் வரை கள வில் ஈடுபடாது தலைவன் ஒருவழித் தணத்தலை விரும்பிய விடத்தே கூறுதல். (ஒருவழித்தணத்தல் - மிக்க அணிமைக் கண் பிரிதல்.)

“தலைவ! நின் தேரைப் பாகன் செலுத்த எம்மைப் பிரிந்து செல்க. ஆயின் ஒரு செய்தியை மனம்கொண்டு செல்க. நீ சின்னாள் கழித்துத் திரும்பி வரும்போது தலைவி உயிருடன் இருக்க மாட்டாள்!” (நற். 19.) என்ற தோழி கூற்று.

இது ‘வேண்டாப் பிரிவினும்’ என்றதன்கண் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 112 இள., 114. நச்.)

தோழி, தலைவன்மேல் தவறு ஏற்றல் -

{Entry: I09__299}

“மலைப்பகுதியிலே தன் உடல்பாரத்தைச் சிறிய மரக்கிளை தாங்குமா என்பதனை அறியாது, ஆண் குரங்கு அச்சிறு கிளைமீது வேகமாகப் பாய்ந்ததால் கிளை முறிந்துபோனது போல, தலைவன் நாம் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் நம் தோள்கள் பசந்தன” (குறுந். 121.) என்பது போலத் தலைவன் சிறைப்புறமாக நிற்பத் தோழி அவன்மீது தவற்றினை ஏற்றிக் கூறுதல்.

தோழி, தலைவன் வந்தமை கூறல் -

{Entry: I09__300}

“கண்ணீர் வடித்துக் கணவன் வரவு நோக்கியிருக்கும் தலைவீ! ஞாயிறு போன்ற பேரொளியொடு நாடு காக்கும் நம் தலைவர் வந்துவிட்டார்” என்றாற்போல, பிரிந்து சென்ற தலைவனது வருகையைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

‘பிறவும்’ என்பதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 148. இள.)

தோழி,“தலைவன் வருவான்” எனல் -

{Entry: I09__301}

“பன்றி கெண்டி வெளிப்படுத்திய செம்மணிகளை நெருப் பாகக் கருதிக் குளிர் தீரக் குறவர்கள் இரவிடைத் தம் கைகளை அவ் வெப்பத்தில் காய்ச்சிக்கொள்ளும் மலைநாட்டுத் தலைவன் நம் மேனியில் பரவிய பசப்புக் கெடத் தவறாது வருவான்” என்பது போன்று தோழி தலைவியிடம் கூறுதல்.

‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் வருவதொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -

{Entry: I09__302}

“தோழி! நம் ஊரில் வரிசையாக விளங்கி வீழும் அருவியை உடைய நம் மலைநாடனாம் தலைவன் தன்னைச் சேர்ந்தா ரிடம் இடையறாத நட்புடையவன் எனினும், நம் தந்தை தன்னையரை இரந்தாயினும் நின்னை மனைவியாகக் கொள் ளாது, அங்ஙனம் இரத்தல் தன் பெருமைக்கு இழுக்கு என்று விடுத்தானாயின், நாம் உயிர் வாழ்தல் யாங்கனம் இயலும்?” என்ற தோழி கூற்று. (ஐங். 228.)

தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

{Entry: I09__303}

தலைவன் சூளுற்ற சூளுரையில் சோர்வுற்றமை கண்டு, தோழி தான் மனம் அழிந்தவிடத்தே கூறுதல் (தொ. பொ. 148. இள.)

“தலைவ! எம்மூர் நீர்த்துறையிலே தலைவியின் முன்கை களைப் பற்றி, ‘நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்; பிரியின் அறனல்லது செய்தேனாவேன்’ என்று, அஞ்சத்தக்க தெய்வ மகளிர் சான்றாக நீ கூறிய உறுதிச்சொற்களைக் காவாமை யால், அத்தவற்றுக்கு அத்தெய்வங்கள் நினக்கு யாது தண்டனை வழங்குமோ என்ற எண்ணம் எம்மை வருத்து கிறது” (குறுந். 53.) என்ற தோழி கூற்று. (இள.)

கூடுதல் வேட்கைக் கூறுபாட்டான் தலைவன் தான் சூளுறக் கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித் தலைவி வருந்து மிடத்தே தோழி கூறுதல். (150. நச்.)

(“சூள்நயத் திறத்தான்” என்பது நச். பாடம்.)

தலைவன் புறத்தொழுக்கத்தினை அறிந்து தலைவி மெலிந் துழி, அஃது இல்லை என்று தேற்றத் தலைவன் சூள் உரைத்துழித் தோழி, ” இவள் நெற்றி வனப்பு இழக்குமாறு நீ தேற்றிய சொல் பயன் ஒன்றும் தாராது; பொய்ச்சூளால் பயன் இன்று” (ஐங். 56.) என்று கூறுதல்; அகநா. 266. ஆம் பாடலும் அது. (நச்.)

தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -

{Entry: I09__304}

“தலைவ! நீ பலகாலும் எங்களைப் பிரிந்து உறைகிறாய். நீ பிரிந்திருக்கும் நேரங்களில் காமம் எல்லை கடந்து எம் உள்ளத்தைக் துன்புறுத்தின் யாம் நேரில் வந்து நின்னைக் காண வேண்டும் நிலை நிகழ்தலும் கூடும். அதுபோது நின்னை வந்து காண, ஓங்கித் தோன்றும் மலையில் நும் ஊர் யாங்குளது என்பதனை எமக்குத் தெரிவிப்பாயாக” (ஐங். 237) என்ற தோழி கூற்று.

இஃது ஊரை இறப்பக் கூறியது; ‘நாடும் ஊரும்.... கிளவி யொடு’ என்றதால் கொள்ளப்பட்ட கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -

{Entry: I09__305}

“கரையை மோதி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காட்டாற் றின் கரைவழியே எங்களை நினைத்து நள்ளிரவில் வருகின் றாயே! புலிகள் உனக்கு அஞ்சி அகன்று போவனவாக! இடி உன் கைவேலுக்கு அஞ்சி விலகுக! ஆயின் உன்னைத் தீண்டி வருத்தும் தெய்வமகளிர் நின்னைக் கவர்ந்து சென்றுவிடுவார் களோ என்று அஞ்சுகிறோம். ஆதலின் நள்ளிரவில் வாரற்க” எனத் தலைவன் வரு வழியினது இடையூற்றினைக் கண்டு அஞ்சித் தோழி கூறுதல்.

‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ என்பதன்கண் வருவதொரு கூற்று இது. (தொ. பொ. 112. இள.)

தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -

{Entry: I09__306}

“மணம் வீசும் புன்னைமர நிழலில் தன் அழகை நின்னிடம் தோற்ற தலைவியைக் தோள்வளை நெகிழுமாறு கைவிட் டிருக்கும் செயல், உன் குடிப்பிறப்பிற்கும் பெரியதொரு குற்றம் தருவதாய் அமையாதோ?” (கலி. 135.) எனத் தோழி தலைவனிடம் குடிமை சுட்டிக் கூறி வரைவு கடாவுதல்.

‘குடியை இறப்பக் கூறியது’ (அடி 33, 34.) இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -

{Entry: I09__307}

“தலைவ! தாம் எதிர்பாராத இன்பத்தை நின் நாட்டிலுள்ள குரங்கு முதலிய பல்வேறு விலங்குகளும் எய்துகின்றனவே. எதிர்பார்த்த இன்பத்தை நீ அடைதற்கண் தடை ஏது உளது? ஆதலின் விரைவில் தலைவியை மணந்து தடையில்லா இன்பம் துய்ப்பாயாக” (அகநா. 2) என்பது போன்ற தோழி கூற்று.

‘நாடும் ஊரும் . . . . கிளவியொடு’ என்றதான் வந்த கூற்று. இது (தொ. பொ. 114. நச்.)

தோழி தலைவனிடம் அவன்புகழ்மை கூறல் -

{Entry: I09__308}

“தலைவ! புன்னை நிழலில் நின்னிடம் தன் அழகிய நலம் தோற்ற தலைவியை, முன்பு அவளிடம் தோற்ற மலர்கள் இதுபோது இகழுமாறு, பொலிவிழந்த கண்ணினள் ஆகு மாறு கைவிட்டிருக்கும் செயல், நின் புகழிடத்தில் பெரிய தோர் இகழ்ச்சியாக அமையாதோ?” (கலி.135.) என்று தோழி தலைவனிடம் புகழ்மை சுட்டிக் கூறி வரைவு கடாவுதல்.

‘நாடும் ஊரும் ... கிளவியொடு’ என்றதான் கொண்ட கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி தலைவனிடம் அவன்வாய்மை கூறல் -

{Entry: I09__309}

“தலைவ! புன்னை நிழலில் நின்னிடம் அணிநலம் தோற்ற தலைவியைக் காமநோய் மிக்க நிலையளாக வைத்து நீ கைவிட்டிருக்கும் செயல், நின் மெய் கூறியொழுகும் பண் பின்கண் பெரியதொரு பொய்யாகத் தங்காதோ? ” (கலி. 135.) என்று தோழி தலைவனிடம் வாய்மை சுட்டிக் கூறி வரைவு கடாவுதல்.

‘நாடும் ஊரும் . . . . கிளவியொடு’ என்றதான் கொண்ட கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -

{Entry: I09__310}

தன்னை அழிதல் - தன் மனத்துள்ளேயே மறைத்துவைத்துக் கொண்டு துன்புறுதல்.

“தலைவ! தலைவிக்கு நின் பிரிவினால் துன்பம் மிக்கவழியும் அதனை அவள் என்னிடம் கூறின், யான் நின்னைப் பிறர் முன்னர்ப் பழித்துரைப்பேனோ என்று நாணித் தன் துயரை என்னிடம் கூறாமல் தன்னுள்ளேயே கொண்டு வருந்து கிறாள்” (கலி. 44.) என்ற தோழி கூற்று.

இஃது ‘எண்ணரும் பல் நகை கண்ணிய வகையின்’கண் நிகழ்வ தொரு கூற்று. (தொ. பொ. 112. இள.)

தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -

{Entry: I09__311}

“தலைவ! முதலில் ஒரு சிலரால் பேசப்பட்டு வந்த கள வொழுக்கம் இதுபோது அலராகிப் பரவ, அது கேட்டுத் தலைவியைத் தாய் இற்செறித்த செய்தியை அறியாது பல நாளும் தடுமாறும் மனத்தோடு என்வயின் வரும் நின்னை, ‘இவ்விடத்தை விட்டு அகல்க’ என்று யான் யாங்கனம் கூறுதல் இயலும்? தலைவியின் தமரோ அவளுக்குப் பரிசப் பொருளாக மிக்க பெருந்தொகையை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஆவன செய்து விரைவில் தலைவியை வரைக” (அகநா. 90.) என்று தோழி கூறுதல்.

இது ‘பிறவும்’ (அடி 32) என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -

{Entry: I09__312}

“தலைவ! தினைக்கொல்லையில் கதிர்கள் முற்ற விளைந்து - விட்டன. இனித் தினைக்கதிர் அறுக்கப்பட்டுவிடும். தினை யிற் கிளியைக் கடியத் தலைவி இனி வரும் வாய்ப்பு இல்லை. ஆதலின் அவளை அடைதல் அரிது. ஆகவே அவளை விரைவில் வரைக” (ஐங். 260.) என்ற தோழி கூற்று.

‘பிறவும்’ (அடி 32) என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114. நச்.)

தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -

{Entry: I09__313}

தோழி தலைவனை முன்னிலைப்படுத்தாமலும், பொதுப் படக் கூறுவது போலவும், “தலைவி இனிப் புனங்காக்க வருமாறு இல்லை; அவள் அன்னையது பாதுகாவலில் இல்லின்கண்ணேயே இருப்பாள்” என்பதனை அவனுக்கு அறிவித்தல்.

“யானையது கையைப் போல வளைந்துள்ள தினையின் கதிர்களைச் சுற்றத்தொடு சேர்ந்து உண்ணும் வளைவாய்ப் பசுங்கிளிகாள்! தலைவன் தலைவியைத் தழுவிப் பிரிந்த பின்னர், காவலின்றியுள்ள தினைப்புனத்தைக் காவல் செய்வதை நீக்குமாறு, அறனில்லாத அன்னை பணித்துவிட் டமையை நீங்கள் அறிந்திலிரோ? தலைவனைக் காண்பீரேல், தலைவி இற்செறிக்கப்பட்டுள்ள செய்தியைச் சிறிதாயினும் அவனுக்கு நன்கு அறிவுறுப்பீர்!” (நற். 376.) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று.

தோழி தலைவனை அருகு அடுத்தது -

{Entry: I09__314}

களவின்வழி வந்தொழுகும் தலைவன் சிலநாள் வாராது விடுத்து வருதலைக் கண்ட தோழி அவன் அருகு சென்று, “தலைவியை நீ தழுவி இன்புறாயாயினும், என்பால் நீ கொண்டுள்ள அன்பு மிகுதியாலாவது அவளைக் கை சோர விடாது அணைந்து தலையளி செய்வாயாக! உன்னைத் தவிர அவளுக்குப் பற்றுக்கோடாவார் பிறர் இலர்” என்பதுபடக் கூறுதல். (நற். 355.)

தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -

{Entry: I09__315}

“சேர்ப்ப! நற்பண்புகள் சிறிதும் குன்றாத கொடிபோல் வாளாகிய தலைவியை விரைவில் மணந்துகொள்ளும் செயலை நினையாமல், நீ களவொழுக்கத்தில் காலம் நீட்டுவது தக்கதோ?” (திணைமொழி. 44.) என்ற தோழி கூற்று.

‘பிறவும்’ (அடி 32.) என்றதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி தலைவனை இடித்துரைத்தல் -

{Entry: I09__316}

தலைவன் களவுக்காலத்துக் குறி தப்புதற்குத் தான் காரண மாகியவழியும், கற்புக்காலத்துத் தன்னோடு ஊடிய தலைவி தான் எவ்வளவு தெளிவிப்பினும் மனம் மாறாமல் ஊடலை நீட்டித்தவழியும், புலவியும் ஊடலும் கொள்வான். அப்பொ ழுது தலைவனை அமைதிப்படுத்தும் பொறுப்பினைத் தலைவி ஏற்றுக்கொள்ளாள். தலைவனிடம் பணிந்த மொழி கூறி அவனுடைய புலவியையும் ஊடலையும் தீர்க்கும் பொறுப்புத் தோழியினது. தலைவனுடைய பரத்தைமைக் குணத்தையும், தலைவன் கூறுவனவற்றையெல்லாம் நம்பி அவனிடம் சீற்றம் கொள்ளாது மடப்பத்தொடு தலைவி இருக்கும் பண்பு நலத்தையும் சுட்டிக்காட்டித் தோழி அவனை அன்பற்றவன், கொடியன் என்று இடித்துக் கூறுதலும் உண்டு. (தொ. பொ. 158. நச்.)

தோழி தலைவனைப் பழித்துக் கூறல் -

{Entry: I09__317}

“மலையிலுள்ள வருடைமானைக் கண்டு தினைக்கதிரைக் கொள்ள வரும் கிளிகள் அஞ்சும் நாட! நீ பொய் கூறுதற்கண் ஆற்றலுடையாய்; சொல்வதனைச்செயற்படுத்துவதில் ஆற்றலுடையை அல்லை” (ஐங்.287) என்பது போன்ற தோழி கூற்று.

இது ‘பிறவும்’ (அடி 32) என்றதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -

{Entry: I09__318}

தலைவனைத் தான் எவ்வகையாலும் மறுத்துரைக்க இயலாமையைத் தோழி தலைவியிடம் கூறுதல்.

“தலைவி! அவர் மிகவும் பணிந்து இரந்து கூறும் சொற்களைக் கேட்கும்போது என் மனம் மிகவும் வருந்துகிறது. என்னால் பொய் கூறி மறுத்தலும் இயலாத தாகிறது. இனியும் அவர் வரின் என்னால் மறுக்க ஒண்ணாது” (தஞ்சை. கோ.124) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘விரவிக் கூறல்’ என்னும் (84)

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ என்னும் கிளவிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 148)

தோழி தலைவனொடு சொல்லாடல் -

{Entry: I09__319}

தலைவன் தோழியின் கருத்தைத் தன்வழிப்படுத்திப் பின்னும் தழையும் கண்ணியும் கொண்டு பின் நிற்கும். அத்தலை வனுடைய குறையை முடிக்கக் கருதும் தோழி தன்கண் நாணம் கெடும் வரையில் குறிப்பாக அவனோடு உரையாடு வாள். இவள் உரையாட உரையாட, அவனுக்கு ஆற்றாமை பெருகும். அவனுக்கு ஆற்றாமை பெருகப் பெருக, இவளுக்கு நாணம் கெடும். அவன் ஆற்றாமையும் முழு எல்லையை அடைய, இவள் நாணமும் இறுதி எல்லைக்குச் சுருங்க, தலைவன், “உன்னால் என் காரியம் முடியாததை அறிந்தேன்; மடலேறியோ, வரைபாய்ந்தோ என் விருப்பினை முடித்துக் கொள்கிறேன்” என்று கூறுவான். தோழி அது கண்டு தன் நாணினை நீக்கி, “அரியன தாங்குவதன்றோ, பெரியோர் செய்கை! நீர் வருந்தல் வேண்டா. யான் அவள்திறத்து என்னின் ஆவதுண்டேல் காண்பன்” என்று கூறி, அவன் ஆற்றாமையை நீக்குதல். (இறை.அ.9.உரை)

தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -

{Entry: I09__320}

கடிதின் தலைவியை மணக்குமாறு தலைவனை வற்புறுத்து தற்குத் தோழி தலைவியது இசைவு வேண்டுதல்.

“தலைவி! உனக்கும் தலைவற்கும் இடையே உள்ள மிகச் சிறந்த நட்புரிமையை எடுத்துச் சுட்டி, அவனை, ‘நின்னை விரைவின் மணந்து என்றும் பிரிதலறியா இல்லறத்தைத் தொடங்குக’ என்று வற்புறுத்திக் கூறலாமா?” என்று தோழி தலைவியை வினவுதல்.

இஃது ‘அனைநிலை வகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கிளவி (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -

{Entry: I09__321}

தலைவன் தலைவியைப் பிரிந்து பல மலைகளைக் கடந்து சேயிடைப் பிரிந்தானாக, அவன்பிரிவு குறித்துத் தலைவி வருந்திக்கொண்டிருந்த நிலையில், தலைவன் விரைவாக வினைமுற்றி வர, அது கண்ட தோழி தலைவியை நோக்கி, தலைவன், சிகரங்கள் உயர்ந்த மலைகள் பலவற்றைக் கடந்து வேற்றுநாடு சென்றானாயினும், பிரிவைப் பெரிதாக நினைத்து, துடைக்கத் துடைக்கக் குறையாது பெருகிய உன் கண்ணீர்ப்பெருக்கை நினைத்து, வினையை விரைவில் முடித்து வந்துவிட்டான்” (ஐங்.358) என்று அவளது ஆற்றாமை நீங்கத் தலைவன் வருகையைக் குறிப்பிடுதல். (தொ. பொ. 45 நச்.)

தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -

{Entry: I09__322}

தலைவியை உடன்போக்குக்கு ஒருப்படுத்துத் தலைவனிடம் ஒப்படைத்து அனுப்பிய தோழி தலைவியைப் பிரிந்து தான் இருப்பதற்கும், பின் தாயும் பிறரும் கூறும் ஏச்சுக்களைக் கேட்டுப் பொறுத்திருப்பதற்கும் வருந்துவாளாயினும், கற்புக்கு ஊறு நிகழுமிடத்து நாணத்தையும் விடுத்து உடன்போக்கில் போயாவது தலைவனைத் தலைவி மணத் தலே பண்பு என்பதை மற்றவருக்குத் தெளியச் சொல்லித் தலைவியின் மாண்பினை நிலைநிறுத்துவதற்காகவே தலைவி யொடு தானும் உடன் போகாது இல்லத்துத் தங்குவாள். (இறை. அ. 23)

தோழி, தலைவிக்கு ஆராய்ந்து கூறியது -

{Entry: I09__323}

அன்னை வெறியெடுக்கத் துணிந்துவிட்டாள் என்று படைத்து மொழிந்து வரைவு உடன்படுக்கலுறும் தோழி, தலைமகளை நெருங்கி, “அன்னை எடுக்கும் வெறிக்களத் துக்கு வரும் வேலனை, நாம் நம் காதலனிடத்து அளவு கடந்த விருப்பம் உடையேமாய் இருப்பவும், அவனால் விரும்பப் படாமல் இருப்பதற்கு உரிய காரணம் யாது என்று வினவு வோமா?” என்று ஆராய்ந்து கூறியது. (நற். 268)

தோழி, தலைவிக்குத் தலைவன்வரவு அறிவுறுத்தல் -

{Entry: I09__324}

தலைவன் குறியிடத்தில் வந்திருப்பதைத் தோழி தலைவிக்குக் கூறுதல். ‘இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தல்’ என்னும் கிளவி.

“தலைவி! நம் சோலையில் ஆண்மயில்கள் தமக்கு ஏற்பட்ட இன்பத்தைப் பெடைமயில்களிடம் சொல்லுவன போலத் துயில் இன்றி ஒலித்துக்கொண்டிருக்கின்றன” என்றல் (கோவை. 160) போன்று, தலைவன் மனைப்புறத்தே வந்து புட்களை எழுப்பித் தன் வருகையைத் தெரிவித்துள்ள செய்தியைத் தோழி தலைவிக்குக் குறிப்பாகக் கூறுதல்.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தோழி, தலைவிக்கு வரவு மலிந்தது -

{Entry: I09__325}

“தலைவி! தலைவன்பிரிவால் வருந்தி உடல்மெலிய, உன் கையிலுள்ள தொடி உட்படக் கழலத் தொடங்கிவிட்டது. நின் உடல்மெலிவையும் மனவருத்தத்தையும் குறிப்பாக அறிந்து உன்புதல்வன் உன்னைத் தழுவிக்கொண்டு அன்பி னால் அழுகிறான். அவன்குரலைக் கேட்குந்தோறும் உனக்கு அவனிடம் ஆசை மிக, அவனைத் தழுவித் தலைவனது பிரிவுத்துன்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறாய். உனக்கு மனமகிழ்வு உண்டாகுமாறு, வடுகர் இருக்கும் நெடிய பல குன்றங்களைக் கடந்து தலைவன் மீண்டுவந்து விட்டான். இனி நீ அவனுடன் நெடுங்காலம் பிரிதலின்றி இல்லறம் நிகழ்த்துவாயாக!” (நற். 212) என்று, தலைவன் வருகை அறிந்த தோழி தலைவியிடம் கூறுதல்.

இது ‘பிறவும்’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -

{Entry: I09__326}

“தலைவி! நம் தலைவனை நாம் விரும்புகிறோம். நம் தாயும் அவனிடம் விருப்புடையளாயுள்ளாள். நம் தந்தையும் அவனுக்கு உன்னை மகட்கொடுக்க விரும்புகிறான். ஊரில் பழி தூற்றும் மக்களும் உன்னோடு அவனைச் சேர்த்தே சொல்கின்றனர்” (குறுந். 51)

“குளங்கள் வறண்டு போனதால் நீர் பெறாது பசுமையற்ற நிலையில் கருவொடு வாடிய நெற்பயிர்க்கு இரவில் பெய்த மழை போல, நம் துயர் தீரத் தலைவன் இப்பொழுது வரை வொடு வந்தான்” (நற். 22) என்பன போன்ற தோழி கூற்று. வரைவு மலிவு-திருமண நிகழ்ச்சி பற்றிய மகிழ்வு. (114. நச்)

இஃது ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’ என்பதன்கண் வருவ தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -

{Entry: I09__327}

“தாய் உயிரோடிருத்தலை வேண்டாத நண்டு தானியங் களைத் தின்று அவற்றை விரும்பும் ஊர! இத்தனை நாள்க ளாக இல்லாமல் இன்று எவ்வாறு தலைவியைக் காண வேண்டும் என்ற தனித்த அன்பு நினக்கு வந்தது?”

“தம்மைப் பெறாமல் புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாமல் ஆடவர் செல்லுதல், முன்னரேயே துன்பமுற்று மனம் அழிந்தவர்களை அதன்மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற் போலும்” (குறள் 1303)

இத்தோழி கூற்றுக்கள் கற்புக்காலத்தே நிகழ்ந்தவை.

“கனைபெயல் நடுநாள் யான்” என்று தலைவி சொல்லெடுப் பத் தோழி, அவள் குறிப்பினான் “என்வயின் புலந்தாயும் நீயாகின் பொய்யானே வெல்குவை” என்று தலைவனிடம் கூறுதல். (கலி.46) இது களவுக்காலத்தது.

“யான் ஊடத் தான் உணர்த்த, யான் உணராத அளவில் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரானாக, வழுதியின் மார்பைப் புல்லாமலேயே இரவு கழிந்தது. (முத்தொள். 104)

இது பாடாண் கைக்கிளை. (தொ. பொ. 157 நச்)

தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -

{Entry: I09__328}

தோழி, தலைவிதன் மனம் அன்று வேறுவிதமாக மாறுபட் டிருப்பதால் தலைவனது குறையைத் தான் எடுத்துக் கூறின் அவள் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பதனை அவனுக்குக் கூறுதல்.

“சேர்ப்ப! உப்பங்கழிகளில் மலர்ந்த நீலப்பூக்களைச் சூடாம லும், நண்டுவளைகளை அலைத்து விளையாடாமலும், நெற்றியில் வியர்வை துளிக்கச் சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவள்மனத்தை என்னிடம் திருப்பிப் பின் அவளிடம் உன் குறைகளைக் கூறுதல் என்னால் எவ்வாறு இயலும்?” என்ற தோழிகூற்று.

இஃது ‘எண்ணரும் பல்நகை கண்ணிய வகையின்’கண் கொள்ளப்பட்டதொரு கூற்று, (தொ. பொ. 114 நச்.)

தோழி, தலைவி குறியாததொன்றைக் கூறல் -

{Entry: I09__329}

தலைவி தலைவன் செய்த கொடுமையைத் தன்னிடம் கூறினால், தான் பிறரிடம் அக்குறையைக் தூற்றக் கூடும் என்று கருதித் தன்னையும் மறைத்ததாகத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! உன்னால் தனக்குத் துயர் மிகவும், நீ செய்துள்ள பிரிதல்துன்பமாகிய அருளற்ற செயலை, நான் நின்னைப் பற்றிப் பிறரிடம் குறைகூறுவேன் என்று கருதி அதற்கு நாணித் தலைவி என்னிடமும் சொல்லாமல் மறைத்து விட்டாள்” (கலி. 44) என்ற தோழி கூற்று.

இஃது ‘எண்ணரும் பல் நகை கண்ணிய வகையின்’கண் கொள்ளப்பட்டதொரு கூற்று. தோழி, தலைவனிடம் தன்னை அழிந்தமை கூறல்’ காண்க. (தொ. பொ. 114 நச்.)

தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -

{Entry: I09__330}

தலைவன் தலைவி இருவர்க்கும் சிறந்த புதல்வனை நினை யாமையால் தலைமகன் தனிமையுறுதற்கண் தோழி கூறுதல். (தொ. பொ. 148 இள)

தலைவி மகற்பெற்றாளாக,அவள்குழந்தை செவிலியோடு உறங்க, தலைவி வாலாமை நீங்க நெய்யாடி மெல்லிய படுக்கையில் கண்ணயர்ந்திருப்ப, தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியான் தலைவியையும் மகனையும் காண்டற்குத் தலைவன் பரத்தையர் இல்லத்தினின்று செறிந்த நடுஇரவில் கள்வனைப் போல் வந்தான். அவனிடம் ஊடல் கொள்ளாது அவனை எதிர்கொள்ளுமாறு தலைவியைத் தோழி வேண்டுதல். எ-டு : நற். 40 (இள.)

யாரினும் சிறந்த புதல்வனை வாயிலாகக்கொண்டு சென்றுழி, தலைவி அவற்கு வாயில் நேராளாகத் தலைவன் வருந்து மிடத்தே தோழி தலைவிக்குக் கூறுதல். (40 நச்)

தோழி தலைவியை நோக்கி, “நம் தலைவன் தன் புதல்வனைத் தூக்கிக்கொண்டு நின்னைக் காண வந்துள்ளான். ஐம்படைத் தாலியையும் தன் எச்சிலால் நனைத்துக்கொண்டு தந்தை பூசிய சந்தனத்தையும் நனைக்குமாறு எச்சிலை ஒழுக விட்டுக்கொண்டு உன் புதல்வன் மழலை மொழி பேசும் அழகைக் காணாதிருப்பது கொடிது. தன்னை விட்டு ஒதுங்கி நிற்கும் நின்னை வாயில் நேர்விக்க, தன் தந்தையொடு வருபவனைப் போலத் தன் தந்தையின் பெயரைக் கொண் டுள்ள மைந்தனொடு வந்துள்ளான் தலைவன். அவனது மார்பினைப் புறக்கணிக்காதே” என்று கூறி வாயில் நேர் வித்தல் (நச்.)

தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -

{Entry: I09__331}

“சந்தன மரங்களையழித்து உழுத மலைச்சாரலில் விளையும் தினைப்புனத்தினை, சந்தனமரத்தாற் செய்த பரண் மீதிருந்து சந்தனம் தன் மேனியிற் கமழக் கிளிகளையோட்டிக் காவல் செய்யும் தலைவியின் குரலைக் கேட்டுக் கிளிகள் ஆரவா ரித்துத் தினைக்கதிரினின்று போகமாட்டாவாய் அங்கேயே வைகிவிடும். ஆதலின் அவளை அன்னை கிளி கடிய இனி அனுப்பாது பிறரையே தினைப்புனம் காக்க இடுவாள்” என்று, தோழி, தினைப்புனம் காவல் ஒழிந்தபின் தலைவியை மணப்பதாகக் கூறிய தலைவற்குக் கூறுதல் (திணை. நூற். 3) (தொ. பொ. 114 நச்).

இது ‘காப்பின் கடுமை கையற வரினும்’ என்றதனாற் கொண்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி தலைவிதுயர் கிளந்து விடுத்தல் -

{Entry: I09__332}

இரவில் வழியில் தலைவனுக்கு யாது நேருமோ என்று நினைத்து நினைத்துத் தலைவி துயரமுறுவதைத் தோழி எடுத்துரைத்து அவனை வழி அனுப்புதல். ‘தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தல்’ என்பது நூற்பா அடி.

“தலைவ! யாளிகள் யானைகளைத் தேடித்திரியும் மலைச்சார லில் நீ திரும்பிப் போம் வழி கருதி வருந்தும் தலைவியின் துயர்தீர, நீ நின்னூர் சேர்ந்தவுடன் ஊதுகொம்பினை ஊதி எமக்கு நீ ஏதமின்றிச் சேர்ந்ததனை அறிவிப்பாயாக” (தஞ்சை. கோ. 188) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -

{Entry: I09__333}

“தலைவ! நீ யாரை நட்பாக உடையை? நீ எம்மளவில்நடந்து கொள்ளும் செயல் நண்பர்செயலாக இல்லை. குட்டுவன் என்ற மன்னனுக்கு உரிமையாவதும் கடல்வளம் பசுவளம் மிக்கதுமான மாந்தைநகர் போன்ற இயற்கை வனப்பைப் பெற்றிருந்த எம்மை விரும்புவாயல்லை ஆதலின், நின்னால் இழந்த எம் நலனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்வாயாக” (நற். 395) என்று, தலைவிநலன் தலைவன் களவிடைப் பிரிவதால் தொலைவதனைச் சுட்டி, அப்பிரிவு நிகழாதவாறு தோழி வரைவு கடாயது.

இது ‘வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ.பொ. 114 நச்)

தோழி, தலைவிநிலை கூறி விடுத்தல் -

{Entry: I09__334}

பொருள்வயின் பிரிய ஒருப்பட்ட தலைவனைத் தோழி, தலைவியது துன்பநிலையைக் குறிப்பால் உணர்த்திப் போக விடைதருதல்.

“தலைவ! நீ பொருள்பொருட்டாகப் பிரிந்து செல்ல விரும்பினால் நாங்கள் அதைத் தடுக்கவில்லை. ஆயின் புறத்தில் வருகின்ற யாரையாவது தலைவியைப் பற்றி யாதும் கேட்காமல் புறப்பட்டுச் செல். அப்படிக் கேட்பின் உன் காரியம் முடிந்து வெற்றி தாராது” (யாரையாவது கேட்பின், தலைவன் கேள்விப்படும் செய்தி ‘தலைவி இறந்துபட்டாள்’ என்பதாக இருக்கும் என்பது குறிப்பு) என்ற தோழி கூற்று.

இது‘பொருள்வயிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 543)

தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -

{Entry: I09__335}

தலைவி தன் திருமணம் இனிது நிறைவேறுதற்பொருட்டுத் தெய்வத்தை வணங்குதலைத் தோழி தலைவனுக்குக் காட்டுதல்.

“நாட! தலைவி உன்னோடு தன் திருமணம் முட்டின்றி நிலைபெறப் பூக்களின் திரளைத் தூவி நறுமணப்புகை யெடுத்துத் தெய்வத்தை வழிபடும் செயலைக் காண்பாயாக! (தஞ்சை. கோ.286) என்ற தோழி கூற்று.

இது வரைவியலுள், ‘வரைவு மலிதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174).

தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -

{Entry: I09__336}

தலைவனுடன் சென்ற தலைவி உடன்போக்கின் பின்னர் ஊர்க்கு மீண்டுவந்தகாலைத் தன்பிரிவு குறித்து ஊரவர் கொண்ட உணர்வு பற்றி வினாவத் தோழி, “தலைவி! நீ சென்ற பாலை நிலம், பறவைகள் கணக்கிட்டு அறியாத அளவு பழங்களைக் கொண்ட மரங்களைப் பெற்று, மான்களும் கணக்கிட்டறியாத அளவு நீர்நிலைகளைப் பெற்று இனிமை யாக இருத்தல் வேண்டும்!” என்று தெய்வத்தை வேண்டி, உன்னை நினைக்குந்தோறும் கண்ணீர் உகுத்துக்கொண் டிருந்த என்னைவிட, இவ்வூர் நின்னைப் பிரிந்த தனிமையால் பெரிதும் வாடிற்று” (ஐங். 398) என்று தலைவி உவகையுறு மாறு கூறுதல்.

‘இயல்புற’ என்றதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று இது. (தொ. பொ. 39 நச்)

தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -

{Entry: I09__337}

“தலைவனது தேர் காலையில் வந்து நம் கானலில் தங்கி மாலையில்தான் புறப்பட்டுப் போகிறது. அத்துணை நேரம் தங்கிய பின்னும் அத்தேரின் பிரிவால் கடற்கரைச்சோலை பெரிதும் பொலிவிழந்தது. நாமும் தனிமைத் துயரைச் சிறிது நுகர்கிறோம்” என்றாற்போலத் தலைவியது ஆற்றாமையைத் தணிக்க இரவுக்குறியும் வேண்டும் என்னும் தோழி கூற்று.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண்ணதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -

{Entry: I09__338}

“தலைவி! நம் தலைவன் உன் திருமணத்தின் முன்னர் உன்னை மகட் பேசச் சான்றோரை அனுப்பியவழி, நம் உறவினர் பரிசப் பொருளாகப் பெருந்தொகை கேட்டனர். அந்தச் சிக்கல் காரணமாக இருதரத்தாருக்குமிடையே பூசல் நிகழுமோ என்று கூட அஞ்சினேன். ஆயின், நம் நல்வினைப் பயனாகப் பரிசப்பொருளை முடிவு செய்வதில் இருவரும் பொருத்த மான ஓர் அளவினை இசைந்துகொண்டனர்” என்றாற் போலப் பண்டை நிகழ்ச்சியைத் தோழி தலைவியிடம் கூறல்.

இது‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -

{Entry: I09__339}

“தாழைத்தாது புன்னைமலரொடு நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையிலே பகற்குறிக்கண் வந்து நின் உடலழகு குன்றுமாறு நின்னைப் பிரிந்து சென்ற தலைவன், இப்பொழுது தன் மார்பில் அணிந்த மாலையில் வண்டுகள் ஊத, மணிகள் ஒலிக்கும் குதிரையைச் செலுத்தி வருகின்ற அழகைக் குன்று போலக் குவிந்துள்ள வெள்ளிய மணல்மேல் மேட்டில் ஏறிக் காண்போம்” (நற். 235) என்று தோழி தலைவியை அழைத்தல்.

‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’ என்பதன்கண் வருவதொரு கூற்று இது. (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -

{Entry: I09__340}

“தலைவி! நிலவும் மறைந்துவிட்டது. இருளும் சூழ்ந்து விட்டது. உன்னைப் புறம் போகாமல் காக்கும் அன்னையும் உறங்கிவிட்டாள். தலைவன் இப்பனிப்பொழுதிலும் தனித்த பெருங்களிறு போல, இரவுக்குறியிடத்து வந்துள்ளான். கை தவறிய பொருள் மீண்டும் கிட்டுங்கால் விளையும் மகிழ்ச்சி போலச் சின்னாளாகப் பிரிந்திருந்த தலைவன் வந்துள்ளமை யான் அவனைத் தழுவுதலால் ஏற்படும் மகிழ்ச்சியைப் பெற வருக!” (நற். 182) என்று இரவுக்குறிக்குத் தோழி தலைவியை அழைத்தது.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்றதனாற் கொண்டதொரு கூற்று. (தொ. பொ.114 நச்.)

தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -

{Entry: I09__341}

வேர்ப்பலாமரம் செறிந்த மலைப்பக்கத்தையுடைய தலைவ! பலாமரத்தின் சிறிய கிளையில் பெரிய பழம் தொங்கியது போலத் தலைவியின் உயிர் மிகச் சிறியது. அவள் காமநோய் மிகப் பெரிது. அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவரு மில்லை. ஆதலின் யான் எடுத்துக்கூறுகிறேன். விரைவில் அவளை வரைந்துகொள்வாயாக” (குறுந். 18) என்ற தோழி கூற்று. ‘காதல் மிகுதி உளப்பட’ என்பது நூற்பாப் பகுதி.

அதனால் பெறப்பட்ட கூற்று இது. (தொ. பொ. 114 நச்.)

தோழி தலைவியை ஆற்றுவித்தது -

{Entry: I09__342}

தலைவன் ஒருவழித்தணந்தவிடத்து அவன்பிரிவு கருதி ஆற்றாளாகிய தலைவியை நோக்கித் தோழி, “கடற்கரைச் சோலையிலே அலைகள் கொணர்ந்த மணல் குவிந்திருக்கும் மேட்டின்மேல் ஏறி, நின் வளையலை நெகிழச்செய்த தலைவனது கடற்கரை நாட்டைக் காண்போம், வா” (ஐங். 199) என்று தலைவனது நாட்டினைச் சுட்டிக் காட்டித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.

இது ‘வேண்டாப் பிரிவினும்’ என்பதன்கண் கொள்ளப் பட்ட தொரு கூற்று. (தொ.பொ. 112 இள.)

தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -

{Entry: I09__343}

“அவுணர்களைப் போர்க்களத்தே அழித்த சிவந்த அம்பு களையும், குருதிக்கறை படிதலான் சிவந்த தந்தங்களையுடைய யானையையும் உடைய முருகப் பெருமானுக்கு உரிமையான நம் மலைப் பகுதியில் செந்நிறக் காந்தள்கள் மிகுதியாக உள்ளன. இவற்றின் அழகைக் கண்டு சுவைப்பாயாக” (குறுந். 1) என்று தோழி தலைவியைக் குறியிடத்துச் செல்ல விடுத்துத் தான் நீங்குதல்.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவியை இரவுக்குறி நயப்பித்தல்

{Entry: I09__344}

(நயப்பித்தல் - விரும்பச் செய்தல்) -

பெண் யானையை விரும்பிய களிறு மலையிடத்தே தங்கிக் குறவர்கள் ஆரவாரித்ததனான் ஊர்மன்றத்தைக் கடந்து செல்லும் நாடன், பகலிலே வந்து குவளைகளைப் பறித்து மாலை தொடுத்துத் தந்தும் தினையிற் கிளிகளைக் கடிந்தும், மாலைவரைத் தங்கி, நம்மிடம் ஒன்றை விரும்பி அதனை வெளியிடவும் எழுச்சியின்றி வருந்தி நின்றனன்” (குறுந். 346) என்றாற்போலத் தோழி தலைவியிடம் கூறி அவளை இரவுக் குறியை நயப்பித்தல்.

இது ‘புணர்ச்சி வேண்டினும் ’ என்பதன்கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் -

{Entry: I09__345}

வேங்கைப்பூ விழுந்த பாறையைப் புலியாகக் கருதிப் பெண் யானை அஞ்சும் நாடனாகிய தலைவன் தனிமைத் துயரால் தன் வனப்புக் கெட்டு நாளும் வருந்தவும், நாம் அவனிடம் கண்ணோடிக் கருணையொன்றும் செய்யவில்லை” என்று கூறித் தோழி தலைவியைப் பகற்குறியினை விரும்பச் செய்தல்

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் கொள்ளப் படுவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி தலைவியை முனிதல் -

{Entry: I09__346}

பலவாறு கூறியும் உடன்படாது மறுக்கும் தலைவியைத் தோழி சற்றே கடிந்தது போல் கூறுதல்.

“அவர் வந்து கலங்கிய மனமும் கண்ணுமாக இரந்ததைக் கண்டு தாங்காமல் உன்னிடம் சொன்னேன். நீயும் இரக்க முடையவள்தானே? ஒருவர் உயிரையே காக்கும் செயல் இது என்றும் சொன்னேன். உனக்கு இஃது ஏற்கவில்லையானால் என் பிழையைப் பொறுத்தருள்வாயாக” என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘புலந்து கூறல்’ என்னும். (87)

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 142).

தோழி தவச்செலவு அருமை -

{Entry: I09__347}

தலைவன் இரவுக்குறிக்கண் வந்து மீண்டு சேறற்கண் வழியிடை யுள்ள ஏதங்கள் பலவாக இருத்தல் பற்றித் தோழி கூறி இரவுக்குறி விலக்குதல். (குறிஞ்சிக்கண் களவியலுள் நிகழற்பாலதாம் இக்கூற்று நெய்தல் நடையியலுள் பிறழக் குறிக்கப்பட்டுள்ளது.) (வீ. சோ. 996 உரைமேற்.)

தோழி தளர்வறிந்துரைத்தல் -

{Entry: I09__348}

களவுக்காலத்தே தலைவனுக்குத் தலைவிதமர் மகட்கொடை மறுப்பார் என்று எண்ணிய தோழி, தலைவியை உடன்போக் கிற் கொண்டு சென்று மணக்குமாறு அவனிடம் குறிப்பிடக் கருதி, “என் தலைவி கடலையும் சோலையையும் பார்த்துக் கண்ணீர் வடித்துத் தன் ஆயத்தாரையெல்லாம் தழுவிக் கொண்டாள். அவள் மனத்தே எண்ணியது இன்னது என அறிகிலேன்” எனத் தலைவியது வருத்தத்தைக் கூறுதல். (கோவை. 199)

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

தோழி தனிகண்டுரைத்தல் -

{Entry: I09__349}

பகற்குறியிடத்துப் புணர்ச்சியின் பின் தோழி தலைவியை ஏனைய தோழியரொடும் விளையாட விடுத்துத் தலைவ னிடம் வந்து தம்மூரில் அன்று இரவு தம் இல்லத்து விருந்தின னாகத் தங்குமாறு அவனுக்கு உலகியல்முறை பற்றிக் கூறல்.

இதனை ‘உலகியல் மேம்பட விருந்து விலக்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 149)

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 127)

தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -

{Entry: I09__350}

தாய் மகளது நோயின் உண்மைக் காரணம் அறியாமல் வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்கினாள் என்பதை விளக்கிக் கூறித் தோழி வெறியாட்டு நிகழ்தலை நிறுத்தியது.

“அன்னையே! மிளகுக்கொடி வளரும் மலையில் உள்ள முருகப்பெருமான்தான் தலைவியது நோய்க்குக் காரணம் என்று உண்மை அறியாத வேலன் கூறிய கூற்றை மனத்துக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்த நீ முயல்வது பொருத்த மன்று” (ஐங் 243) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 114 நச்)

‘களம் பெறக் காட்டல்’ என்பதன்கண் இக்கூற்று அடங்கும்; ‘தோழி கழங்கு பார்த்துக் கூறியது’ம் அது.

தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -

{Entry: I09__351}

“அன்னாய்! நம் மனைக்கொல்லையில் நம் தலைவி விளை யாடுதற்கு நிழல் கொடுத்துவரும் புன்னையின் காய்கள் செறிந்த கிளையில் காற்று வேகமாக வீசுவதால் அக்காய்கள் அருகேயுள்ள குளத்தில் வீழும் ஓசை கேட்கிறது என நினைக் கிறேன். நீயும் கவனித்துப் பார்த்துச் சொல்லுவாயாக” என்று தோழி தாயிடம் கூறுவாள் போலத் தலைவன் சிறைப் புறத்தானாக, இயற்கையாக நிகழ்ந்த குறியை அவன் செய்த குறியாகத் தாம் கருதி அல்லகுறிப்பட்டதை அறிவித்தல். (தொ. பொ. 133 நச் உரை)

தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -

{Entry: I09__352}

தோழி நள்ளிரவில் தாயை நோக்கி,“அன்னாய்! நம்மனைக் கொல்லையிலுள்ள பள்ளத்தில் வளர்ந்த கூதாளஞ்செடி வருந்துமாறு அதன்மீது அருவி நீர் ஓடுகிறது. தாயே! நம் மனைக் கொல்லையில் அசோக மரத்தடியில் கட்டப்பட்ட ஊசலைப் பாம்பு என்று கருதி இடி முழங்குகிறது. அன்னை! இன்னும் கேள்!” என்று கூற, அவளிடமிருந்து மறுமொழி வாராமையால் அவள் உறங்கிவிட்டதை அறிந்தாள். மனைக்கண் யாவரும் உறங்கவே, எங்கும் அமைதி நிலவிற்று. பின்னர் அவள் தலைவியை நோக்கி, “தலைவன் இப் பொழுது வந்தால் நல்லது என்று நினைக்கின்றோம் அல்ல மோ? அத்தகைய நம் நினைப்பு ஈடேறுமாறு, பகற்காலத்தும் அஞ்சும் காட்டு வழியில் காட்டாற்று வெள்ளத்தில் கன்றுகள் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெண் யானைகளின் ஒலி கேட்டு ஆண்யானைகள் வெள்ளத்தில் கன்றுகளைத் துழாவும் காட்டாற்றினை நீந்தித் தலைவன் இரவுக்குறிக்கு வந்துவிட்டான்” (அகநா. 68) என்று, தாய் துயில் உணர்ந்து, தலைவன் வந்தமையைக் கூறிக் குறிவயின் சென்றது. (தொ. பொ. 114 நச்.)

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று.

தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -

{Entry: I09__353}

உடன்போய்த் தலைவியைத் தன் மனையகத்தே மணந்து கொண்டு, பின் தலைவியின் ஊர்க்கு வந்த தலைவன், தாம் இருவரும் முறைப்படி வரைந்துகொண்ட செய்தியைச் சுற்றத் தார்க்குச் சொல்லுமாறு தோழியிடம் கூற, அதற்கு அவள் அதனைத் தான் முன்னரே அவர்களுக்குச் சொல்லி விட்டமையைக் கூறுதல்.

இது வரைவியலுள், ‘தன்மனைவரைதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 194)

தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__354}

“நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து நாம் இதுகாறும் மறைவாக வைத்திருந்த களவொழுக்கச் செய்தியை வெளிப் படையாக யான் கூறியபின், நம் தலைவன் வந்து வரைவு வேண்ட, நமர் நன்மை செய்யும் கொள்கை யோடு இசைந்து கொண்டமையின், நம்மை இதுகாறும் அலர் கூறிவந்த ஊரவர் இப்பொழுது நம்மோடு ஒத்த கருத்தினராகி விட்டனர்” (குறுந். 374) என்ற தோழி கூற்று.

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தல்’ என்பதன்கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, திங்கள்மேல் வைத்துக் கூறல் -

{Entry: I09__355}

“ஈரிய கிரணங்களையுடைய மதியமே! நீ இரவில் உறங்காது வானத்தில் நின்றுகொண்டிருக்கிறாய். மேலேயிருந்து பார்ப்பதால், உனக்கு நிலவுலக நிகழ்ச்சிகள் யாவும் புலனாகும். ‘தலைவி தோள் மெலியுமாறு, பிரிந்துஉறைய மாட்டேன்’ என்று எம்மிடம் கூறிப் பிரிந்து சென்ற எம் தலைவரைக் கண்டாயா?” என்றாற்போலத் தோழி மதியத்திடம் கூறுதல். (தொ. பொ. 133 நச். உரை)

தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -

{Entry: I09__356}

“பெருந்தன்மையில்லாத வேங்கை பூத்துத் தினை அரியும் காலத்தை உணர்த்தவே, இனித் தினைக்கதிர்கள் கொய்யப் பட்டுவிடும். தலைவனைப் பகற்குறிக்கண் காண வாய்ப்பு இல தாகிவிடும். எமர் எம்மை இற்செறித்து விடுவர். தலைவியை மணம் பேச வருவோரிடம் எமர் பரிசப்பொருளாக மிகுந்த பொன்னணிகலன்களை எதிர்பார்க்கின்றனர். யாம் பழகிப் பயின்ற தலைவன்நட்பு இனி யாதாக முடியுமோ?” (திணை மாலை 18) என்று தலைவன் சிறைப்புறமாகத் தோழி அவன் கேட்பக் கூறியது. (தொ. பொ. 114 நச்.)

இது ‘பிறவும்’ (அடி 32) என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று.

தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

{Entry: I09__357}

1) “தலைவி! தினைக்கதிர்கள் முற்றத் தொடங்கிவிட்டன. நமர் தினைக்கதிர்களைக் கொய்யலுறுவதன் முன்னமேயே பல கதிர்கள் கிளி முதலியவற்றால் கவரப்பட்டுவிட்டன. நீயோ, தலைவனைக் கூடிப் பொழுதுபோக்கற்கண்ணேயே ஈடுபட்டவளாய் உள்ளாய். அன்னை இத்தினைப்புனத்தை வந்து காணின், சிறுகிளிகளை ஓட்டும் ஆற்றல் உனக்கு இல்லை என்று முடிவுசெய்து வேறு ஒருவரைத் தினைப்புனம் காவலுக்கு அமர்த்தினால், தலைவனது மார்பு உனக்குக் கிட்டுதற்கு அரிதாகிவிடும்” (அகநா. 28) என்றாற் போன்று தோழி தலைவியிடம் அவள்கடமை பற்றிக் கூறுதல். (தொ. பொ. 115 நச்.)

இச்சூத்திரத்துள் ‘அன்னவை பிறவும்’ என்றதனான் இக் கூற்றுத் தழுவிக் கொள்ளப்பட்டது.

தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -

{Entry: I09__358}

“மலைநாட! எங்கள் தினைப்புனத்திற்கு இனிக்காவல் வேண்டுவதின்று. தினை முற்றிவிட்டமையான் அறுக்கப் பட்டுவிடும். நீ இனி எங்களைக் காண வருதல் அரிதாகும் போலும்” (திணை மொழி. 2) என்று தலைவி இல்லில் செறிக்கப்பட்டுவிடுவாள் என்பதனைத் தோழி தினை விளைந்தமை கூறித் தலைவனுக்கு அறிவுறுத்தியது. (தொ. பொ. 114 நச்)

இது ‘காப்பின் கடுமை கையற வருதல்’ என்பதனால் கொள்ளப் பட்டதொரு கூற்று.

தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__359}

“தலைவி! நீ தலைவன் பிரிந்தமை குறித்து மனம் சுழன்று வருந்தற்க. நம் தலைவன் தன் யானைப்படையான் பகைவரை வென்று போரில் மேம்பட்ட வெற்றி கொண்டுள்ளான். அவன் மீண்டு வருகிறான் என்று தூது வந்துள்ளது” (கலி. 26.) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 150. நச்.)

இது‘பிறவும்’ என்றதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று.

தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -

{Entry: I09__360}

தோழியின் நட்பு நிலைப்பதற்காகத் தலைவி தலைவனைக் கூடுதற்கு உடன்படுதல். அஃதாவது தோழி தலைவியை நோக்கி, “தலைவன் ஒருவன் நின்னையடையவேண்டி என்னைக் குறை இரக்கிறான். அக்குறையை நீ முடித்தரு ளாயாயின் என் குற்றேவலை இழப்பாய்” என்றாற்போல அச்சுறுத்த, தோழியின் நட்பை இழத்தற்கு அஞ்சித் தலைவி தலைவனைக் கூட உடன்படுதல். (இது தலைவிக்கு ஒருபோ தும் நிகழாது என்பது.) (இறை. அ. 13.).

தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__361}

“தலைவன் உன்னை வரைதலை விலக்குவதற்காக நமர் பெரும்பொருள் பரிசமாகக் கேட்டபோது, வதுவையை ஏலாது பெரும்பொருள் கேட்ட நமர்க்கும் தலைவனுக்கு மிடையே பூசல் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சினேன். நம் நல்வினை! தலைவன் பெரும்பொருள் தர இசைந்து பின் அதுதந்து நின்னை அமைதியான சூழ்நிலையில் மணந்து கொண்டான்” என்று பிற்றைஞான்று தோழி தலைவிக்குக் கூறல்.

இச்சூத்திரத்துள் ‘பிறவும்’ என்றனான் கொள்ளப்பட்ட கூற்றுக்களுள் ஒன்று.

தோழி தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் காண்க. (தொ. பொ. 150. நச்.)

தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -

{Entry: I09__362}

“தலைவன் மணம் முடிக்க அனுப்பும் குணக்குறைபாடு இல்லாத சான்றோர்களை வரவேற்று அவர்கள் வேண்டு கோளை மறுக்காது நம் தலைவியை நீர்வார்த்துக் கொடுத் தல் நம் மனத்துக்கு நிறைவுதரும் செயல் என்று செய்வோ மேயன்றி, இத்தலைவிக்குப் பரிசப்பொருள் கேட்பதாயின் இவ்வுலகமே விலை போதாது” (திணைமாலை. 15.) எனவும், “தலைவன் விடுத்த சான்றோர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி யையும் உங்களது வானளாவிய புகழுடைய குடிச்சிறப்பையும் உட்கொண்டு, இவர்கள் பரிசப்பொருளாகத் தரும் இவ்வளமான குன்றினை ஏற்றுக்கொண்டு, இத்தலைவியை மணம்செய்துவைக்கலாம். அவ்வாறன்றி இத்தலைவிக்கு முலைவிலைக்குரிய பரிசப் பொருளை நீங்கள் எதிர் பார்ப்பின், சோழனுடைய பங்குனி உத்தர விழா நடைபெறும் உறையூரும், சேரனுடைய உள்ளிவிழா நடைபெறும் வஞ்சி நகரும் கூட இவளுக்கு விலையாவதற்கு ஒப்பாகா” (நற். 234.) எனவும் வரும் தோழி கூற்றுக்கள்.

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தல்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114. நச்.)

தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

{Entry: I09__363}

தலைவியிடத்துப் புதியனவாகத் தோன்றிய நாற்றம் தோற்றம் முதலியவற்றான், தலைவிக்குக் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றிக் கொள்ளும் களவுப்புணர்ச்சி உண்டு என்று தோழி தன் மனத்துள் கூறிக்கொள்ளுதல்.

1. நாற்றம் - பூவினானும் சாந்தினானும் தலைவன்மாட்டு ளதாகிய கலவியான் தலைவிமாட்டுளதாகிய நாறுதல்; ஓதியும் நுதலும் பேதைப்பருவத்துக்குத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச்சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல்.

2. தோற்றம் - புணர்ச்சியான் வந்த பொற்பு; நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளைநோக்கு இன்றி உள்ளொன்று கொள்ள நோக்கும் கண்ணும், தம் நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டும் தோளும் முலையும் என்று இன்னோரன்ன.

3. ஒழுக்கம் - ஆயத்தாரொடு வேண்டியவாறெல்லாம் ஒழுகுதலின்றித் தன்னைப் பேணி ஒழுகுதல்; பண்ணை ஆயத்தொடு முற்றிலான் மணற்கொழித்துச் சோறமைத்தல் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு ஏற்ப ஒழுகுதல்.

4. உண்டி - உண்ணும் அளவின் குறைதல்; பண்டு பால் முதலியன கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு வருகின்றாள், இப்பொழுது ஆசாரமும் நாணும் காதலும் மீதூர, அதன் மேல் உவப்பு ஆண்டின்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல்.

5. செய்வினை மறைத்தல் - பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல்; அன்றியும், தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருத்தினைப் புலப்படவிடாது தோழியை மறைத்தல் என்றுமாம். தன் நினைவும் செயலும் பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்; அஃது ஆயத்தொடு கூடாது இடந்தலைப்பாட் டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம்.

6. செலவு - எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல்; பண்டு போல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறல்.

7. பயில்வு - ஓரிடத்துப் பயிலுதல்; செவிலிமுலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறல்.

(இவ்விரண்டாகச் சொல்லப்பட்ட பொருள்களுள், முதலாவது இளம்பூரணர்உரை; ஏனையது நச். உரை.)

புணர்ச்சி எதிர்ப்பாடு - புணர்ச்சியுண்மை; ‘எதிர்ப்பாட்டுப் புணர்ச்சி’ என மாறுக. அது கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி இருவரும் தமியராய் எதிர்ப்பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகாது.

தோழி, நாற்றம் முதலிய ஏழானும் புணர்ச்சியுண்மை அறிந்து தன் மனத்துள், “நம் தலைவியின் கண்களில் செவ்வரி பரவி யுள்ளது. நெற்றியில் வியர்வை துளிப்பதனொடு நெற்றியை வண்டுகள் சூழ்ந்து வருகின்றன. இவளிடம் ஏதோ மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று எனது உள்ளம் கருதுகிறது” (சிற்றட் டகம்) எனவும், “தலைவியின் மூங்கில் போன்ற தோள்களும், கரிய மதர்த்த குளிர்ந்த கண்களும், பருத்த இளைய கொங்கைகளும் பண்டைய நிலையின் வேறுபட்டுள்ளன. பகலும் இரவும் இவள் உடலில் இதற்கு முன் இல்லாத புதிய மணம் வீசுகிறது. அம்மணத்தை இவளும் விரும்புவதாகத் தெரிகிறது. இவட்கு ஏதோ புதுமை நிகழ்ந்துள்ளது” எனவும்,

“நம் தலைவி பண்டையள் அல்லள். இந்நிலை தெய்வத்தான் ஆகியதோ, அன்றி, மக்களான் ஆகியதோ என்பது புலப்பட வில்லை” எனவும், “நம் தலைவி தினைக்கொல்லை காப்ப தற்கு வந்ததாகத் தெரியவில்லை; இங்கு வந்து நிற்குமவன் தன்னான் அம்பு எய்யப்பட்டதாகக் கூறும் மானைத் தேடி வந்தானாகவும் தெரியவில்லை. இவர்கள் மனத்தில் கருதி யுள்ளதொன்றை மறைத்து ஒழுகுகின்றனர்; தம்முள் நாண முடையவர்களைப் போல நடித்துக் கண்ணான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” (பழம்பாடல்கள்) எனவும்,

“காக்கைக்கு இரு கண்களுக்கும் கருமணி ஒன்றாக இருப்பது போல, இவரிருவருடைய உடம்புகள் இரண்டற்கும் உயிர் ஒன்றாக அமைந்திருப்பது போலத் தோன்றுகிறது”(கோவை. 71) எனவும் பலவாறு பேசிக்கொள்ளுதல். (தொ. பொ. 114. நச்.)

தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -

{Entry: I09__364}

தோழி, தலைவியின் உறவினர் கொடியவர் ஆதலின் அவரான் தலைவற்குத் தீங்கு நிகழும் என்று உண்மையில் நிகழாத நிகழ்ச்சி ஒன்றனைத் தானே கற்பனை செய்து கூறல்.

“நீங்கள் எங்கள் பகுதிக்குப் புதியவராயிருத்தலின் என்னை வினவுகின்றீர். அதற்கு மறுமொழி கொடுக்க வேண்டியதனை யான் தக்கதாகக் கருதுகிறேன். இங்கிருப்பதால் நுமக்கு ஏதம் வரும் என அஞ்சுகிறேன். என் தலைவியின் அண்ணன்மார் கண்ணோட்டமில்லாக் கொடியவர் ஆதலின் சிறிதும் கருணை காட்டாது, நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் அவர்களான் உமக்கு இடர் வருமோ என்று அஞ்சுகிறேன்” என்றாற் போலத் தோழி நிகழாததை நிகழ்ந்ததாகத் தலைவ னிடம் கூறுதல்.

இஃது ‘எண்ணரும் பல் நகை கண்ணிய வகை’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி நிமித்தம் கண்டு கூறல் -

{Entry: I09__365}

தலைவன் பிரிந்தானாக, வருந்திப் பிரிவை ஆற்றியிருக்கும் தலைவியை நோக்கித் தோழி,“காட்டுப்பசுக்கள் முழங்கும் மலைப்புறத்து அரிய வழியில் வில்லில் அம்பைப் பூட்டி எய்யும் வேடர்களுக்கு அஞ்சி விலங்குகள் ஓடும் இரக்கமற்ற சுரத்து வழியே சென்ற தலைவன் வரக் கண்டு, பல்லி நற்சொற் கூறுகிறது. தலைவன் விரைவில் வந்துவிடுவான்” (கைந்நிலை. 18) என்று கூறல்.

இது ‘பிறவும்’ என்பதனாற் கொள்ளப் பட்டதொரு கூற்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி நிமித்தம் கூறல் -

{Entry: I09__366}

தலைவன் வருதற்கான நன்னிமித்தங்கள் தோன்றக் கண்ட தோழி அதனைத் தலைவிக்கு உரைத்தல்.

“தலைவி! பகைவரை மாய்த்து வெற்றியொடு நம் தலைவர் திரும்பி வருகிறார் என்பதற்கு அறிகுறியாய்ப் பல்லி ஒலி காட்டுகிறது. நம் இடக்கண்ணும் துடிக்கிறது. ஆகவே நீ கவலல் வேண்டா” என்ற தோழி கூற்று.

இஃது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 535)

தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

{Entry: I09__367}

புறத்தொழுக்கத்தான் தலைவியைக் கைவிட்ட தலைவனைத் தான் நிகழ்த்த வேண்டிய இல்லறத்தில் நிலைபெறச் செய்தற் காகத் தோழி, புறத்தொழுக்கத்தின் பயனின்மை கூறிக் காத்த தன்மையானே கண்ணோட்டமின்றி நீக்குதற்கண் கூறுதல். (தொ. பொ. 150. நச்.)

“காட்டுப்பூனை கவர்ந்துவிடுமோ என்று அஞ்சிப்பெட்டைக் கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாவலான இடத்தைச் சேரக் கூவி அழைப்பது போல, தலைவி உன்னைக் கவர்ந்து விடுவாளோ என்ற அச்சத்தோடு பரத்தையர் கூறும் சொற் களின் கூச்சலோடு எம் தெருவுக்கு வாராதே!” (குறுந். 139) என்று தோழி தலைவனிடம் கூறல். (நச்)

‘பரத்தையர் கூறும் பழியொடு வாரல்’ எனவே, பன்னாள் நீத்தமையும் கண்ணின்று பெயர்த்தமையும் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழுவிக்கொண்டா ராதலின், புறம் போயும் பயன் இன்று எனக் காத்த தன்மை கூறிற்று. (நச்)

தலைவியை நீத்த தலைவனை அவளொடு நிகழுமாறு படுத்தல் வேண்டி, அவளைப் பண்டு புறங்காத்த தலைவன் தன்னை வாயில் வேண்டி வந்தவிடத்து, அவனைக் கண் ணோட்டமின்றி வாயில் மறுத்தற்கண் தோழி கூறுதல். (148 இள)

தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -

{Entry: I09__368}

தலைவன் திருமணம் செய்துகொள்ளக் காலம் தாமதித்த வழிச் செவிலி தோழியை நோக்கி, “தலைவன் நும்மைத் துறந்தான் போலும்! உங்களுக்கு அவன் கூறிய செய்தி யாது?” என்று வினவச் செவிலிக்குத் தோழி கூறல்.

“அன்னையே! உள்துளையை உடைய நெய்தற்பூ நிறைந்த துறையை உடைய தலைவன் எம் தோளைத் துறந்து வரை பொருட்குப் பிரிந்திருப்பது உண்மையே. ஆயின், அவன் முதல்நாள் எமக்குக் கருணை செய்து ‘பிரியேன்’ என்று உறுதிமொழி கூறிய நேரம், நாடோறும் அவன் பிரிந்து சென்றுள்ள நாட்டிலும் வருமன்றோ? அப்பொழுது தான் கூறிய உறுதிமொழியை நாடோறும் நினைக்கும் வாய்ப்புத் தலைவற்கு ஏற்படும். ஆதலின் வரைபொருள் ஈட்டித் தலைவன் விரைவின் வருவான்” என்று, அறத்தொடுநிலை நின்ற பின்னர், வரைவான் பிரிந்த தலைவன் கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, “அவன் நும்மைத் துறந்தான் போலும். நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்றாட்குத் தோழி சொல்லியது. (ஐங். 109)

இது (பாங்குறவந்த) ‘வகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

{Entry: I09__369}

“கடல்திரையை அடுத்து வாழும் கழுத்து வெள்ளிய காக்கை, துறையில் கட்டப்பட்டிருக்கும் ஓடத்தின் அடிக்கட்டையில் முட்டையிடும் பாதுகாவலையுடைய நீர்த்துறைக்கு உரிமை யுடைய தலைவன் கருணை செய்வானாயின், இத்தலைவி பாலுணவு உண்டு மகிழ்வாள்” (ஐங். 168) என்று தலைவி பசி வருத்த நிற்றற்குக் காரணம் கூறும் வாயிலாகத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்

இது ‘புரைதீர் கிளவி தாயிடைப் புகுத்தல்’ என்பதன்கண் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -

{Entry: I09__370}

“நாம் கடலாடும்போது தானும் கடலாடியும் கடற்கரைச் சோலையில் தங்கியும், நம் ஆயத்தாரொடு குரவை கோத்தாடியும், அயலானைப் போல வந்து பழகி நின்னைத் தலைவன் தழுவிச் செல்வதால் அலர் பரவி விட்டது. அதனோடும் அமையாது, நம்மைப் பிரியாதிருக்கும் தழையாடையைப் போல் நம்மை விட்டுச் சற்றும் பிரியாது தலைவன் தங்கிய செயல், இப்பொழுது நம்மைத் தாய் இற்செறித்து வைக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது” (குறுந். 294) என்று, தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவிக் குக் கூறுவாளாய்த் தோழி தலைவி இற் செறிக்கப்பட்ட மையை அறிவுறுத்தியது.

இது ‘காப்பின் கடுமை கையற வருதல்’ என்பதன்பாற்படுவ தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -

{Entry: I09__371}

“தலைவி! நெய்தல்மலர்கள் குவிந்துவிட்டன. கதிரவன் மேற்றிசையில் மறையத் தொடங்க, நிலம் வெப்பம் தணிந்து விட்டது. கடற்கரைச் சோலையின் தோற்றப் பொலிவும் மங்கிவிட்டது. நின் காமம் முற்றும் தணியா நிலையில் தலைவன் தேர்ஏறிச் சென்றுவிட்டான். தலைவனொடு கூடியிருந்த காலத்து மகிழ்வைத் தந்த சோலை இப்பொழுது உனக்கு எவ்வாறாகியுள்ளதோ?” (நற். 187) என்ற தோழி கூற்று.

இது ‘நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்’ என்ப- தன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 112 இள).

தோழி பகற்குறி நேர்தல் -

{Entry: I09__372}

“தலைவ! எங்கள் ஊர் அருகில் பொய்கை உள்ளது. பொய்கை அருகில் காட்டாறு உள்ளது. சோலையில் இரை தேரும் நாரைகளைத் தவிர வேறு யாரும் இரார். சோலைப்பக்கம் யாங்கள் எம் கூந்தலில் அணிந்து கொள்ளச் செங்கழுநீர் கொண்டுவரச் செல்வோம். அங்குத் தலைவியும் வருவாள்” (குறுந். 113) என்றாற் போலத் தலைவனிடம் தோழி கூறிப் பகற்குறி இசைதல்.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 112 இள.)

தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -

{Entry: I09__373}

“தலைவி! திருமாலையும் பலராமனையும் போலக் கருங்கட லும் வெண்மணற்பரப்பும் காட்சி வழங்கும் இக்கடற்கரையை அடுத்த சோலையின் பக்கங்களிலெல்லாம் புன்னை மரங் களும், நடுவிலெல்லாம் ஞாழல் தாழை மரங்களும் செறிந்துள. ஆதலின் அவ்விடம் பகற்குறிக்கு ஏற்றது” (திணைமா. 58) என்ற தோழி கூற்று.

“ஊருக்குப் பக்கத்தில் பொய்கை உள்ளது. பொய்கையை அடுத்துச் சிறு காட்டாறு உள்ளது. அடுத்துள்ள சோலை யில் நாரைகளைத் தவிர மக்கள் நடமாட்டம் இராது. ஆங்கு யாங்கள் எங்கள் தலையில் அணிந்து கொள்ள வேண்டிச் செங்கழுநீர் கொய்ய வருகையில் அங்குத் தலைவியும் வருவாள்” (குறுந். 113) என்று தோழி தலைவற்குப் பகற்குறி நேர்ந்து இடம் காட்டுதல்.

இது ‘புணர்ச்சி வேண்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -

{Entry: I09__374}

“தலைவ! மின்னல் வெளிச்சத்தில் மழையைப் பொருட்படுத் தாது மலைகளைக் கடந்து, தீண்டி வருத்தும் தெய்வங்களுக்கு அஞ்சாது, வேல் ஒன்றனையே துணையாகக் கொண்டு களிறுகள் இயங்கும் வழியில் நள்ளிரவில் வாராதே. பூக்கள் பாறைகளில் விழுந்து அழகு செய்யும் நம்மலைப்பக்கத்தில் பகலிலும் இவளை நுகரலாம் அன்றோ?” (கலி. 49) என்ற தோழி கூற்று.

இது ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கு’தற்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -

{Entry: I09__375}

‘கோழிலை வாழை’ என்னும் அகப்பாட்டினுள் (2) “மலை நாட! நின் மலையிலுள்ள பல்வேறு விலங்குகளும் எதிர் பாராத இன்பங்களைக்கூடத் துய்க்கின்றனவே! எதிர்பார்க் கும் இன்பத்தைத் துய்ப்பதில் நினக்குத் தடையாதுளது? தலைவியோ, நின் பிரிவாற்றாது வருந்துகிறாள். நீயோ, இரவுக்குறியில் வந்து துன்புறுகிறாய். வேங்கையும் பூத்து விட்டன. சந்திரனைப் பரிவேடம் சூழ்ந்துள்ளது” என்று தோழி தலைவனிடம் கூறும் கூற்றில், வேங்கை மலர்ந்தத னான் தினையறுக்கப்படும் ஆதலின் பகற்குறி வாயாது எனவும், வளர்பிறை நிலவு மிக்கு வருவதால் இரவுக்குறியும் வாயாது எனவும் குறிப்பாற் கூறி, “திட்டமிட்ட இன்பத்தை நுகர்வதில் உனக்குத் தடை யாதுளது?” என்று வரைவு கடாவி, சந்திரனைப் பரிவேடம் சூழ்ந்துள்ளது என்பதனான் அண்மையில் வரும் நிறைமதிநாளே மணவினைக்கு ஏற்ற நாள் என்று மணத்துக்குரிய நாளும் வரையறுத்துக் கூறியது உணரப்படும்.

இது‘பிறவும்’ என்றதனான் கொள்ளப்படுவதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்).

தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

{Entry: I09__376}

புறக்கிடை-திரும்பிப் போதல்; மா-அவன்தேரில் பூட்டிய குதிரை.

“பகற்குறியிடத்துத் தலைவனொடு மகிழும் நாம் மாலை நேரம் வந்த அளவில் மெய் சோர்ந்து வருந்தும் நெஞ்சொடு திரும்பிப் போமாறு தலைவனை அழைத்துச் சென்ற அவன்தேரில் பூட்டிய குதிரைகள், குழந்தைகள் தம் தோளில் கோத்த பறையின் நடுவில் எழுதப்பட்டிருக்கும் குருவியின் உருவம் அவரால் கோல்கொண்டு அடிக்கப்படுதலான் சிதைவது போல, கோல்கொண்டு தாக்கப்பட்டு உடல் நலிவனவாகுக!” (நற். 58) என்றாற்போலப் பகற்குறியிறுதியில் தலைவி ஆற்றாமையைத் தோழி மாவின்மேல் வைத்துக் கூறியவாறு.

இஃது ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்ற விதப்பாற் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி பகற்குறி விலக்கியது -

{Entry: I09__377}

“தலைவ! புன்னைமரத்தின் நிழலிலிருந்து மீன்உணங்கலைப் புள் ஓட்டிப் பாதுகாத்தும், கவர வரும் அன்னங்களை ஓட்டியும், குளிர்ந்த கடற்கரைச் சோலையில் விளையாடியும் யாம்பொழுது கழிக்கவும், வளமான இப்பேரூரின் தெருக் களில் நாடோறும் எம்மைப் பற்றிப் பழிமொழி தூற்றப்படு கிறது. அதனை நீக்குதல் வேண்டி நீ பகற்குறிக்கண் வாரற்க” என்ற தோழி கூற்று.

இது ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்குதற்’கண் நிகழ்வதொரு கூற்று (தொ. பொ. 114. நச்.)

தோழி படைத்துமொழி -

{Entry: I09__378}

தலைமகன் குறையுற்றும் அக்குறை நீக்கப்பெறானாய்ச் செல் கின்றானை ஆற்றுவிக்கக் கருதிய தோழி, புதியனவாகச் சில மொழிகளைப் படைத்துக்கொண்டு, “சேர்ப்பனே! நீ எம் சிறுகுடியின்கண் இன்றிரவு தங்கிச் செல்லுவையாயின், நின் பரிகள் உணவுண்ண, நீயும் தனியாகத் தங்குவை அல்லை” எனப் புனைந்துரைத்தல். (நற். 254.)

தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -

{Entry: I09__379}

“தலைவி! கல் நிறைந்த வழியைக் கடந்து பொருள் ஈட்டச் சென்ற தலைவன் தான் கார்காலத்து மீள்வதாகக் கூறிச் சென்றானாக, அவன் குறித்த பருவம் வருமுன் காலமல்லாக் காலத்துப் பெய்த மழையைக் கார்காலப் பருவமழையாகக் கருதித் தன் கிளைகளில் அரும்புகள் அரும்பிய கொன்றை மரங்கள் ஒருதலையாக அறியாமையுடையன!” (குறுந். 66) என்ற தோழி கூற்று.

இது ‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 150 நச்)

தோழி பல்வகையானும் படைத்தல் -

{Entry: I09__380}

படைத்தல்-புனைந்து சொல்லுதல். களவுக்காலத்தில் தன்னை இரந்துகொண்டு தன் காரியத்தைக் கூறவந்த தலை வனைத் தோழி பணிவுக்குத் குறையில்லாத சொற்களான் அகற்றி நிறுத்துவாள்; “நுமது கூட்டத்தினை யான் முன்னமே அறிவல்” எனப் பொய்யாகக் கூறுவாள்; தலைவன் தலைவி இவர்களிடம் தனக்கு முன்னர் அறிமுகம் இல்லையெனின், அவனைப் ‘பொய்யன்’ என்று கூறுவாள்; அவன் தலைவியை விரைவில் வரைந்து கோடற்பொருட்டுச் சில பொய்களைக் கலந்தும் பேசுவாள்; நல்ல பயனுடைய சொற்களை ஏளனம் செய்தும் பேசுவாள்; “நின் குறையை நீயே சென்று உரை” என்பாள்; தான் தலைவியை இன்னாள் என அறியவில்லை என்பாள். அவள் கூறுவதன் பயன், தலைவியின் அருமையைத் தலைவன் உணர்ந்து களவொழுக்கத்தை நீட்டிக்காது விரைவில் அவளை மணந்து இல்லறம் நடத்துதல் வேண்டும் என்பதாம். (தொ. பொ. 237 நச்.)

தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

{Entry: I09__381}

பாணராயினும் கூத்தராயினும் விறலியராயினும் தலைவ னைச் சார்ந்து விரும்பிச் சொல்லிய வாயில் வேண்டுதலுக்கு எதிராக வாயில் மறுத்துத் தோழி கூறுதல்.

“பாண! நீ கீழ்மகன் ஆதலின், உன் வாயில் பொய்யே வருகிறது. நீ தலைவனுக்காகப் பரிந்து பேசி இங்கே நிற்காதே. பகலிலே உன்னை எம் சேரியிடத்துக் கண்டால் தலைவன் வெட்குறக் கூடும்.”

இது பாணனை வாயில் மறுத்தது.

“ஊரனுக்கு இனிவருகின்ற மறுநாளைக்கும் ஒரு பரத்தை யைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே! உன் பொய்மொழிக்கு உடன்பட்ட அப்பரத்தை யர் தாய்மாரையும் பிறர் முயங்குமாறு சேர்க்க அவர்களிடம் நின் உள்ளீடில்லாத சொற்களைப் பயன்படுத்தி யிருப்பாயே! உன் சொற்கள் பரத்தையருக்கும் அவர்தாய்மாருக்கும் ஏற்கப்படலாம். எம்மிடம் நின் சொல்லால் பயனில்லை” (நற். 310) என்று தோழி விறலியிடம் கூறி வாயில் மறுத்தவாறு.

மறுத்தல் போல ஒரோவழி வாயில் நேர்தலும் உண்டு. (தொ. பொ. 150 நச்)

தோழி பாணற்குக் கூறல் -

{Entry: I09__382}

“பாண! நிலவிலே குறுங்கால் கட்டில்மீது அமைந்த படுக்கை யில் பெருமூச்செறிந்து கொண்டு தலைவன் மகனைத் தழுவிக் கிடக்க, தலைவி அவனது முதுகைத் தழுவி ஊடல் ஒருவாற் றான் தீர்ந்து படுத்திருக்கிறாள். இது பண்புடைத்து. காண்பா யாக!” (குறுந்.359) என்ற தோழி கூற்று. (தொ. பொ. 150 இள.)

தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

{Entry: I09__383}

தலைவன் சேயிடைப் பிரியுங்காலத்து முன்னின்று சொல்லிய மரபுடைய மாறுபாட்டின்கண் தோழி கூறுதல் (தொ. பொ. 148 இள.)

“தலைவ! நீ தலைவியை நீத்துச் செல்லும் வழியில் நீர் நீத்த சுனையிலே இலையொடு வாடிய மலர்கள் நின் செலவைத் தடுக்கும்.

“தலைவ! தாம் படர்ந்த மரம் வாடுகையினாலே அதனைச் சுற்றிப்படர்தல் நெகிழ்ந்த கொடிகள் நின் செலவைத் தடுக்கும்.

“தலைவ! வாடியிறக்கும் நிலையிலுள்ள வாடல்மலர்கள் நின் செலவைத் தடுக்கும்.

“இவ்வாறு அறிவுரை கூறும் கேளிர்போல நீ போகும் காட்டிலுள்ள மரம்செடிகொடிகளே நின் செலவைத் தடுத்துவிடும்” (கலி. 3) என்று தலைவனிடமும்,

“தலைவர் பிரிவுணர்த்தியவிடத்தே அதற்கு உடம்பட்டு, பிரியுமிடத்தே நிகழும் அல்லல்நோயினையும் நீக்கி, அப் பிரிவுதன்னையும் ஆற்றி, பின்னும் இருந்து உயிர்வாழும் மகளிர் உலகத்துப் பலர்!” (குறள் 1160) என்று தலைவியிடமும் தோழி கூறுதல். (இள.)

தலைவன் கற்புக்காலத்துப் பிரியுங்கால், முன் நின்று இறந்த கால எதிர்கால நிகழ்ச்சிகளைத் தோழி கூறுதல். (150. நச்.)

“நீ தலைவியிடம் பொய்யாகப் பேரன்பு காட்டி இவளைக் கைவிட்டு எந்நாள் புறப்படுகின்றாயோ, அந்நாள் இவள் உயிர் போய்விடும்” (கலி. 5) என்று தலைவனை நோக்கித் தோழி கூறுவதன்கண், கைவிடுதல்-இறப்பு, உயிர் போதல் எதிர்வு என இருகால நிகழ்ச்சிகளும் கூறப்பட்டவாறு.

“தலைவ! வேனில்பருவத்து வெப்பத்தில் கொடிய பாலை யைக் கடந்து பொருள் தேடக் கருதுகின்றாயே. உன்னையே நம்பியிருக்கும் தலைவியின் முதற்கருவில் தோன்றிய புதல்வனது சிரிப்பைக் காணும் செல்வத்தைவிட நீ தேடும் பொருள் உயர்ந்ததோ?” (ஐங். 309) என்ற தோழி கூற்று எதிரது நோக்கிற்று. (ஐங். 424) ஆம் பாடலும் அது. (நச்.)

தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -

{Entry: I09__384}

“தலைவி! நன்னிமித்தங்கள் தோன்றுவதால், வருந்தும் நம் நெஞ்சின் நோய் தீரக் தலைவன் விரைவில் வந்துவிடலாம். அவனொடு நீ புலத்தலும் புல்லுதலும் கலத்தலும் செய்து மகிழ்க!” என்ற தோழி கூற்று.

இஃது ‘அன்புதலையடுத்த வன்புறைக்கண்’ நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, பிரிவிடை இயற்பழித்து வற்புறுத்தல் -

{Entry: I09__385}

“தலைவி! நம் தொல்வினைப்பயன் நுகர்ச்சி தரும்போது அதனை நுகர்வதன்கண் வருந்துவதால் பயன் என்? ஆதலின் வருந்தற்க. உப்புப்பொதி மழையான் கரைந்து அழிவது போல நீ நாள்தோறும் உருகி மெலிவதனைக் கண்டு உன் உயிர்க்கு ஏதம் வருமோ என்று அஞ்சுகிறேன். தலைவன் நமக்குச் செய்த கொடுமையை நினைத்து, நம்மிடம் அன்புடைய அவனது பழமுதிர்மலை துன்பத்தைத் தாங்க முடியாது கண்ணீரை அருவியாகச் சொரிகிறது. நாம் நம் துயரை அவனிடம் நேரில் சென்று தெரிவிக்கப் புறப்படுவா யாக” (நற். 88) என்று தலைவனை இயற்பழித்து, துயர் ஆற்றுமாறு தலைவியைத் தோழி வற்புறுத்தியவாறு.

‘தோளும் பழைய அழகு இழந்தன; அன்னையும் துயர் உறுகிறாள்; அலரும் மிகப் பரவி விட்டது’ என்று அழுத ழுது உன் அழகை இழக்காதே. தலைவன் சேய்நாட்டுப் பிரிந்து சென்றனன் ஆயினும், உன்னை நினையாமலிரான்; ஆதலின் விரைவில் வந்துவிடுவான்” (அகநா. 209) என்று, தலைவன் விரைவில் வந்தணையுமாறு கூறித் தலைவியைத் துயராற்றுமாறு தோழி வற்புறுத்தியவாறு.

இஃது ‘அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

{Entry: I09__386}

பிழைத்து வந்து இருந்த தலைவனை நெருங்கித் தலையளிக்கு மாறு கூறித் தலைவிமாட்டு அவனை ஆக்கிக் கொடுத்தற்கண் தோழி கூறுதல். (148 இள.)

“தலைவ! தேனூரைப் போன்ற இவள் இயற்கையழகு தனித்து வாட இவளைப் பிரிந்து நீ சென்று நுகருமாறு நின்பரத்தை அத்துணை அழகுடையவளா?” (ஐங். 57)

“தலைவ! மயக்கம் பொருந்திய உன் மனத்துயரம் தீர உனக்கு மருந்து போலப் பரிகாரம் தேடும் யான் இவள் புலவியைப் போக்கும் மருந்தாக இல்லாமல் இருப்பதை நோக்க என் மனம் வருந்துகிறது” (ஐங். 59) என்றாற் போலக் கூறி இருவர் மனவேறு பாடும் தீர்த்துத் தலைவியைக் கூட்டியவாறு.

பரத்தை மனைக்கண் தங்கி வந்து மனைக்கண் புகாது புறத்திருந்த தலைவனை இடித்துக் கூறி, அங்ஙனம் கூறுவதன் வாயிலாகத் தலைவியின் ஊடலைப் போக்கித் தலைவனுடன் அவளைக் கூட்டுமிடத்தே தோழி கூறுதல் (150 நச்.)

“கொக்கின் சேவல் கயல்மீன் குறித்து இருப்பது போலப் புதுப்பரத்தையரை அகப்படுத்தலையே எப்பொழுதும் குறிக் கோளாகக் கொண்ட தலைவனே! நீ நேற்றுப் பரத்தை மனையில் இருந்ததனை மறுக்காமல் ஏற்றுக்கொள். நீ நேற்று நின் பாணனொடும் மற்ற சுற்றத்தொடும் முழவு ஒலிக்கக் கள்ளினைக் குடித்த களிப்பொடு எம்மனைப் பக்கம் வாரா மல் நின்பரத்தைக்காக அமைக்கப்பட்ட நின் இல்லத்தை அடைந்தபோது, அக்குறுந்தொடி மடந்தை பெரிதும் மகிழ்ந்து நின்னை ஏற்றுக்கொண்டாள். நாங்கள் அதுபற்றிக் கவலையுறவில்லை. புறத்தொழுக்கம் நின்பால் இல்லை என்று மாத்திரம் கூறற்க. நீ மறுப்பது நகையாகவுள்ளது” (அகநா. 346) என்று தலைவன்பால் தலைவி கொண்ட ஊடலைத் தோழி தீர்த்தது. (நச்.)

தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -

{Entry: I09__387}

“தலைவ! சந்தன மரங்களை வெட்டி நீக்கி உழுத கொல்லை யில் விளைக்கப்பட்ட சிறுதினையைச் சந்தனமரங்களால் ஆக்கப்பட்ட பரண்மீது இருந்து கொண்டு தான் பூசிய சந்தனம் மணம் வீசத் தலைவி தினையில் படியும் கிளிகளைத் தன் குரலால் வெருட்டவும், அவள் குரல் கிளியின் குரலை ஒத்திருத்தலின் தன் இனத்தினது குரலாம் எனக் கருதிக் கதிர்களைக் கவரவரும் கிளிகள் அஞ்சி நீங்குவதில்லை. ஆதலின் தினையைக் காக்கப் பிறரை இடுவர்” (திணை மாலை 3) என்று தோழி தலைவி இற்செறிப்பினைத் தலைவற்கு அறிவுறுத்தியது.

இது ‘காப்பின் கடுமை கையற வருதல்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -

{Entry: I09__388}

அயலவர் தலைவியை மணக்கக் கருதியவழி, தலைவிசுற்றத் தார் அவருக்குத் தலைவியை மணம்செய்து கொடுப்பது பற்றி ஆராய்ந்த விடத்தே தோழி தலைவனிடம் கூறுதல்.

“தலைவ! தாழையை வேலியாகக் கொண்டு முண்டகச் செடிகளான் கூரை வேயப்பட்ட சிறிய வீடுகளையுடைய இக் கடற்கரைச் சிற்றூரில் ஆரவாரம் உண்டாகும் வகையில் நொதுமலர் தலைவியை மணம் பேச நெடுந்தேரில் வந்துள்ள னர். மலை போலக் குவிந்த மணல்மேடுகளைக் கடந்து வந்த அவர்கள் மகட்பேசாமல் வாளா மீளமாட்டார்போலும். இப்பரதவருடைய குறுமகளாகிய தலைவி, வலையும் தூண்டிலும் பற்றி மீன்பிடித்து வாழும் அக்கொலைஞர்கள் இல்லத்திற்கு மணம் பேசப்பட்டுவிடுவாள். (ஆதலின் விரைவில் நீ மணவினைக்கு முயல்க)” (நற். 207) என்று தோழி தலைவற்குச் சிறைப்புறமாக நொதுமலர் வரைவு பற்றி வந்ததை அறிவுறுத்தி அவனை வரைவு கடாஅயது. (தொ. பொ. 114 நச்.)

தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__389}

“தலைவி! குன்றத்தில் பழங்குழிகளை அகழ்ந்த அளவில் விலை உயர்ந்த மணிகள் கிட்டும் வளமான நாட்டையுடைய தலைவன், பண்டொரு நாள் உன் மயிர்முடியைத் தடவிக் கொடுத்தவாறே, ‘செறிதொடி! நீ அறிவு முதிரும் மங்கைப் பருவத் தொடக்கத்தில், என் மனைக்கு இல்லறம் நடத்த வருவாய்’ என்று கூறிச் சென்றானே! அவன் இப்பொழுது எங்கு உள்ளானோ?” (குறுந். 379) என்று தாய் கேட்பத் தலைவிக்குக் கூறும் தோழி அறத்தொடு நிற்றல். (தொ. பொ. 114 நச்.)

தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -

{Entry: I09__390}

பலவகையானும் கூறித் தோழி தலைவனை அகற்ற முயன்ற வழியும், அவன் அகலாது பின்னும் அவளை வேண்டு மிடத்துக் கூறுதல்.

பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடம் உணர்த்துதல், பகற்குறி நேர்தல், இரவு வருவானைப் பகல் வர என்றல், பகல் வருவானை இரவு வர என்றல், குறிபெயர்த்தல் முதலிய எல்லாம் கொள்ளப்படும்.

“ஊரவர் கூறும் பழிமொழிகளைத் துணையாகக் கொண்டு காமத்தைப் போக்கிக்கொள்ள நினைத்தல், நெய்யினான் தீ எரியாதபடி அவிப்பதைக் கூறும் செய்தியை நிகர்க்கும்!” (குறள். 1148) என்று தோழி அலரச்சம் கூறிய பின்னும், தலைவன் புணர்ச்சி வேண்ட, அவனுக்கு இடம் உணர்த் தற்கண், “தலைவ! தலைவி உன் சொற்களை நம்பித் தன்னை வற்புறுத்தி நயக்கச் செய்த என்சொற்களை ஏற்று, ஞாழல் மரச்சோலையில் நின்னிடத்தில் தன் புதுமை நலத்தை இழந்து இப்பொழுது தனிமைத்துன்பத்திலுள்ளாள். நிலாப் போன்ற மணற்பரப்பும் இருள் போன்ற கடல் நீரும் செறிந்த நெய்தற் பரப்பில் பனை மிக்க எம் சிறிய நல்லூர் அதோ காட்சி யளிக்கிறது. எம்மை மறவாது நினைத்து அடிக்கடி எம்மை நாடி வருதலை வேண்டுகிறோம்” (குறுந். 81) என்று தோழி தலைவனிடம் கூறல்.

“தலைவ! எம் ஊர் அருகில் பொய்கை உள்ளது. பொய்கை யருகே காட்டாறு உள்ளது. சோலையில், இரைதேரும் நாரை களைத் தவிர வேறு யாரும் இரார். சோலைப்பக்கம் யாங்கள் எம் கூந்தலில் அணிந்து கொள்ளச் செங்கழுநீர் மண மலர்களைப் பறித்துவரச் செல்வோம். அங்குத் தலைவியும் வருவாள்” (குறுந். 113) என்றாற் போலத் தோழி தலைவனிடம் கூறிப் பகற்குறி நேர்தல்.

“தலைவி! நம் தலைவன் களிறு புலியைத் தாக்கித் தன் வலிமை சோரும் மலைப்பக்க வழியே நள்ளிரவில் நம் பொருட்டு வருவான். அவன் வருகையான் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணோம்” (குறுந். 88) என்று இரவுக்குறி பற்றித் தோழி தலைவியிடம் கூறுதல். (தொ. பொ. 112 இள.)

நச்சினார்க்கினியர் கருத்தில், இத்தோழி கூற்றின்கண், தலைவன் பகற்குறியையும் இரவுக்குறியையும் விரும்பிக் கூறுமிடத்தே, பதினைந்து திறப்படுவன மேலும் உள. அவற்றை உரிய தலைப்பில் காணலாம். (114 நச்.)

தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -

{Entry: I09__391}

தலைவன் தலைவியைக் கூடிய பின், முன் தன்னைப் பணிந்து நின்றவனைத் தோழி தானே பணிந்து ஒழுகும்வழிக் கூறுதல்.

“தலைவ! நீ இங்கு வந்து என் தலைவி தினையிற் கிளிகளைக் கடிதலை மறக்குமாறு செய்துவிட்டாய். இனி நீ நீண்ட காலம் இவளை நின் மனத்திற் கொண்டு துன்புறாது பாதுகாத்தல் வேண்டும். இவளை நீ சின்னாள் பிரியின் இவள் அழகு அழிந்துவிடும். நீ அத்தகைய கொடுமையுடையாய் அல்லை. ஆயினும், விரைந்து செல்லும் குதிரையை இன்னும் விரைவாகச் செலுத்தும் தாற்றுக்கோல் போல என் சொற்களைக் கொள்.” (கலி. 50)

“இவள் உன் சொற்களை நம்பி உன்னைத் தன்னொடு கூட்டுவித்த என் சொற்களில் வைத்த நம்பிக்கையொடு தன் புதிய பெண்ணலத்தை நின்னிடம் இழந்ததனான் உண்டாகிய தனிமையையுடையள். நிலவையும் இருளையும் போல, மணல் பரந்த கடற்கரைச் சோலையும் கடலும் சார்ந்த இடத் தில் பனைகள் உயர்ந்துள்ள எங்கள் ஊர் அதோ இருக்கிறது. எங்களை ஒருபோதும் மறவாது நீ நினைதல் வேண்டும்!” (குறுந்.81) எனவரும் தோழி கூற்றுக்கள். (தொ. பொ. 114 நச்.)

தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -

{Entry: I09__392}

தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “உப்பு வாணிகர் தங்கிச் செல்லும் பாழ்த்த ஊர் போன்று பொலிவற்று ஓமைமரங்கள் வளர்ந்து காணப்படும் கொடிய பாலைநிலம் இவளை உடன்கொண்டு போதற்கு ஏற்றதன்று; மிக்க இன்னாமையுடையது” என்று கூறக் கேட்ட தோழி, “ஐய! தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு இல்லம்தானும் இனிமை யுடையதோ?” என்று வினவுமுகத்தான், தலைவியை யும் உடன்கொண்டு செல்லுமாறு தலைவனைக் குறிப்பான் வற்புறுத்தியது. (குறுந். 124)

தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -

{Entry: I09__393}

தலைவனொடு தலைவி கூடிய பகற்குறி இரவுகுறிக்கண் அல்லகுறிப்படுதலாகிய அறிவு மடம்பட்ட சிறப்பின்கண் தோழி கூறுதல். (தொ. பொ. 112 இள)

“தலைவன் தெளியாக் குறிசெய்தான்” (ஐந். ஐம். 49) எனவும், “சேர்ப்பன் ஆகிய அவன் தேரில் பூட்டிய குதிரைகளின் மணி அரவம் கேட்பதாகக் கருதித் தலைவி இரவுக்குறியிடம் சென்று அது பறவைகளின் ஒலி என்பதை அறிந்து மீண்டாள்” (ஐந். எழு. 59) எனவும், “தோழி! நம் மனைக் கொல்லையில் நமக்கு நிழலாக இருக்கும் புன்னைமரத்தின் காய்கள் பெருங்காற்றடித்தலினான் பொய்கைநீரில் விழுகின்ற ஒலியோ, வேற்றொலியோ, கேட்கின்ற ஒலி யாது எனக் கூறு” என்று தலைவி இரவுக்குறி மயங்கினாள் எனவும் கூறுதல். (இள.)

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலத்து அவன் தீங்கு உணராது அவனை நல்லனாக உணர்ந்த அறிவினது மடப்பம் கூறித் தம் காதற்சிறப்பு உரைத்தவிடத்துத் தோழி கூறுதல். (114 நச்.)

“யாம் நும்மொடு மகிழ்ந்து சிரித்த தூயவெள்ளிய பற்கள், பாலைநிலத்தே செல்லும் யானையினுடைய, மலையைக் குத்திய கொம்பு போல விரைவாக முறிவன ஆகுக! எம் உயிர், பாணர்தாம் பிடித்த பச்சைமீனைப் பெய்த மண்டையைப் போல, எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி உம்மையும் யாம் பெற முடியாத நிலையில் இருப்பதை விட அழிந்துபடுக!” (குறுந். 169) என்றாற் போலத் தொடக்கத்தில் அவனை உள்ளவாறு உணராத தம் அறியாமைக்கு வருந்திக் கூறு மிடத்தே, அவனொடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றியமையாமை கூறித் தம் காதற் சிறப்புரைத்தல். (நச்.)

தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -

{Entry: I09__394}

பரத்தையரிடத்தே உண்டாகும் ஆறும் குளனும் காவும் ஆடிப் பதி இகந்து இன்புற்று வரும் விளையாட்டைத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக்கண் தோழி கூறல் (தொ. பொ. 148 இள.)

“காலையில் எழுந்ததும், தேரை அலங்கரித்துப் பரத்தை யரைத் தேரேற்றிவரச் செல்லும் தலைவன் அவர்களொடு கூடிய விளக்கத்தொடு மீண்டு வருகிறானே என்று புதல்வற் பயந்த தலைவி வருந்துகிறாள். நற்குடியிற் பிறந்தார் மிகவும் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டியிருத்தலின் இக் குடிப்பிறப்பு மிகவும் வருத்துகிறது.” (குறுந். 45) என்று வாயில் நேரும் தோழி தலைவற்குக் கூறல். (இள.)

பரத்தையரிடத்தே உளவாம் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக்கண் தோழி கூறல். (150 நச்.)

விளையாட்டாவது பதி இகந்து யாறும் குளனும் காவும் ஆடி நுகர்தல்.

“தலைவ! வையைத்துறையிலே திரு மருதச்சோலையிலே நீ பரத்தை ஒருத்தியொடு மணம் செய்தனை என்று கூறு கின்றனர். அப்பழிமொழி நெடுஞ்செழியன் தலையாலங் கானத்தில் எழுவர் மன்னரை வென்றபோது அவன் வீரர் இட்ட ஆரவாரத்தினும் மிகுதியாக உள்ளது!” (அகநா. 36) என்று தலைவன் பரத்தமை ஊர் அறிய வெளிப்பட்ட மையைத் தோழி சுட்டுதல் (நச்.)

தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -

{Entry: I09__395}

“புன்னைமரங்கள் அடர்ந்த சோலையே! பெண் அன்னங் களே! புதரில் விளையாடும் மான்இனங்களே! நெடுங்கடலே! உங்களைக் கைவிட்டுப் போகும் எங்களை மறவாது மனத்துக் கொள்ளுமின்” என்பது போன்ற தோழி கூற்று.

இது ‘காப்பின் கடுமை கையற வருதல்’ என்பதன்கண் நிகழ்வ தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -

{Entry: I09__396}

செவிலியான் வினவப்பட்ட தோழி, தலைவிக்கும் தலைவற் கும் பூவின் தொடர்பான் கூட்டம் நேர்ந்தது என்று கூறுதல்.

“அன்னாய்! யானும் நின்மகளும் சோலையில் விளையாடிய ஒரு நாள் முருகப்பெருமான் போன்ற தலைவன் ஒருவன் வந்து ‘உன் கண்களைக் கண்டு அஞ்சித் தண்ணீரில் கிடக்கும் நீலப்பூவும் நீயும் நண்பர் ஆகுக’ என்று கூறித் தலைவிக்கு ஒரு நீலப்பூக் கொடுத்துச் சென்றான். பூத் தந்த அவனையே தலைவி தன் மனத்தில் கருதிக்கொண்டிருக்கிறாள்” (அம்பிகா. 365) என்பது போன்ற தோழி கூற்று.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 177)

தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

{Entry: I09__397}

சான்றோருடைய ஒழுக்கம் சிறப்பிற்றாக இருக்கும் என்று கூறித் தலைவியை நன்முறையில் வாழ்விக்கும் சிறப்பு இல்லாத தலைவன் தவறு கண்டு தோழி கூறுதல். (தொ.பொ. 148 இள.)

“ஊர! இதற்கு முன் பொருந்தாத செய்திகளை விரும்பாத உள்ளம் இப்பொழுது விரும்புமாயினும், தாம் பெற்ற நல்லுபதேசங்களை நினைத்துப் பார்த்து, (இல்) அறத்திற்கும் பொருளிற்கும் இழுக்கு வாராதபடி ஆராய்ந்து தம்தகுதியை யும் நோக்கி, அதற்கு இழுக்கு வாராவகையான் அமையின், நினைத்த காரியத்தை முடித்தல் பெரியோர் ஒழுக்கம். அத்தகைய பெரியோருள் ஒருவனாகிய நின்னிடத்தும் பொய் கலந்த சொற்கள் தோன்றுமாயின் உலகத்தில் வாய்மை என்பதே மறைந்துவிடும்!” (அகநா. 286) என்ற தோழி கூற்று. (இள.)

நன்மக்கள் இல்லறத்தைச் சிறப்பாக நிகழ்த்துவர் எனவும், நன்மக்கள் வாழ்க்கைச் செய்தி மேம்பட்டதாயிருக்கும் எனவும் சொல்லித் தோழி தலைவனை வழிபடுதலை நீக்கி உரைத்தற்கண் கூறுவது. (150 நச்.)

முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள் பற்றி, “நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின், இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனால் பெரியோரைத் தமது ஒழுக்கத்தான் தேருங்காலை அரியதாயிருக்கிறது! ” எனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் (அகநா. 286) அவனை வழிபாடு தப்பினாளாவாள். (நச்.)

தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

{Entry: I09__398}

பெறுதற்கரிய பெரும்பொருளாகிய வதுவையை முடித்த பிறகு அழல நோக்குதற்கரிய மரபு காரணத்தான் தலை வனைச் சிறப்பித்துக் கூறுமிடத்துத் தோழி கூறுதல். அஃதா வது தலைவனைக் கடிந்து கூற முடியாத காரணத்தால் அவனைச் சிறப்பித்துத் தோழி கூறுதல். (தொ.பொ. 148 இள.)

ஆம்பற்பூப் பறிப்பவர் நீர்வேட்கையுற்றோம் என்று கூறித் தடுமாறுவது போல, இவளைக் கற்புக்காலத்துத் தழுவிக் கொண்டிருக்கும்போதும் ஆற்றாமையுற்று நடுங்குகின்றீர். யாம் மூன்றாம் பிறையைப் போல நுமக்குக் காண்டற்கு அரியேமாய் இருந்த காலத்தில் மிகுந்த பொறுமையோடு இருந்தீர்போலும்!” (குறுந். 178) என்று தலைவிமாட்டுத் தலை வன் கொண்டுள்ள தீராக் காதலைத் தோழி சிறப்பித்தல். (இள)

தலைவனும் தலைவியும் தோழியும் பெறுதற்கரியது என நினைத்த பெரும்பொருளாகிய வதுவை வேள்விச்சடங்கான் முடிந்த பின்பு தோன்றிய தனது தெறுதற்கரிய மரபு காரணத்தான் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறு மிடத்துத் தோழி கூறுதல். (150 நச்.)

தலைவனையும் தலைவியையும் வழிபாடாற்றுதலின் ‘தெறற்கரு மரபின்’ என்றார். தெறுதல்-அழன்று நோக்குதல்; சிறப்பு-“இவளை நீ ஆற்றுவித்தலின் யான் உயிர் தாங்கி னேன்”என்றாற் போல்வன. தோழி கூற்று: “எம் பெருமானே அரிது ஆற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ?” என்றானும், “நின் அருளான் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ?” என்றானும் கூறுதல். (நச்)

“தலைவ! நீ தலைவியை மணந்த பின்னும், களவுக் காலத்து நின்பிரிவுக்கு வருந்தியது போல இப்பொழுதும் இவள் வருந்தியதனான் கண் நீண்டு பசந்தது. களவின்கண் நீங்காது அளியாநிற்பவும் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள் ளுண்பார்க்குக் கள் உண்ணாக் காலத்துப் பிறந்த வேறுபாடு போலும் காம வேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே. இஃது ஓர் அமளிக்கண் துயிலப் பெற்றும், வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையின், பிறந்த மிக்க வேறுபாடன்றோ? இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறு என்னை?” (நற். 35) என்று தோழி கூறுதல். (நச்.)

தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -

{Entry: I09__399}

பரத்தை தலைவியைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின்கண் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! நின் பரத்தை மறைந்து மெல்லென வந்து முகமன் உரைகள் கூறித் தலைவியிடம், ‘நானும் நின் தெருவில் உள்ளவளே; உன் மனைப்பக்கத்து மனைக்கண் உள்ளேன். உனக்கு நான் தோழியாவேன்’ என்று கூறித் தன் மோதிரம் அணிந்த கைவிரல்களான் தண்ணென்று பொருந்தத் தலைவி யின் நெற்றியையும் கூந்தலையும் தடவிப் பகற்பொழுதில் வந்து மீண்ட காட்சியைக் கண்டு தலைவி நாண, நானும் நாணமுற்றேன்” (அகநா. 386) என்று பரத்தை ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தாம் நாணிய செய்தியைத் தலைவற்குத் தோழி கூறல். (தொ. பொ. 150 நச்)

தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -

{Entry: I09__400}

தலைவனது பேணாத ஒழுக்கத்தினான் தலைவி நாணிய நிலை கண்டு தோழி தலைவனிடம் கூறுதல். பேணா ஒழுக்கம் - புறத்தொழுக்கம்.

பரத்தையிற் புக்கு மீண்ட தலைவற்கு வாயில் மறுக்கும் தோழி, “மாமை நிறத்தையுடைய தலைவி, நன்கு மூட்டுவாய் அமைந்த செப்பில் சூடப்படாமல் வைக்கப்பட்ட மலர் பயனற்று வதங்கிப் போவது போல நின் பிரிவான் மெய் வாடி மெலிந்த நிலையிலும், உன் புறத்தொழுக்கமாகிய கொடுமைக்கு நீ நாணாவிடினும் தான் நாணித் தன் துயர்க்காரணத்தை எங்களிடம்கூட மறைப்பதனான், சிறந்த கற்புக்கடம் பூண்டவளாவாள். அவளை நீ துறந்திருத்தல் தக்க தன்று” (குறுந். 9) என்று தலைவனது பேணா ஒழுக்கத்தைத் தலைவி நாணியதைத் தோழி கூறுதல். (தொ. பொ. 150 நச்)

தோழி, ‘பேதைமையூட்டலின்’ கண் கூறல் -

{Entry: I09__401}

குறை நேரினும் அவள் அறிவாள்ஒருத்தி அல்லள் என்று தோழி தலைவற்குக் கூறல்; தோழி தான் அறியாள் போலக் கூறல். (தொ. பொ. 112 இள.)

அங்ஙனம் “பின் வருக” என்றுழி, முன்வந்தானைத் தோழி அறியாமை ஏற்றிக் கூறுதலும், தலைவியையும் அங்ஙனம் அறியாமை ஏற்றிக் கூறுதலும், தலைவியை “இளையள் விளைவு இலள்” என்பதும் ஆம். (114. நச்)

“தகரம் வகுளம் முதலிய மணமலர்களையுடைய மரங்களை வீணான புதர்களை வெட்டுவதைப் போல வெட்டி நீக்கி நிலத்தை உழுது தினை விதைக்கு குறமக்களின் குலமகளா கிய தலைவி பிறர் துன்பம் கண்டு வருந்தக் கூடியவளா?” (திணை மாலை. 24) எனவும் (இள.),

“ஐய! தேர் ஏறிவந்து தனியே நின்று, ‘இப்பக்கம் வந்த யானை யைப் பார்த்தீர்களா? என்று வினவுகிறீர்! தினையிற் கிளிகடி யும் மகளிர் யானை வரும் வழியில் நிற்பார்களா?” எனவும் (நச்),

“வேங்கைப்பூ மணம் கமழும் மலையில் உள்ள குறமகளிர் யாம். நீர் கூறும் அக்களிறு குருதி ஒழுக இப்புனம் அருகில் செல்ல வில்லை” (திணைமொழி. 8) எனவும் (நச்.),

“என் தலைவி தேன் கலந்த பாலைக் கிண்ணத்தில் கொண்டு கையில் வைத்திருந்த அளவில், பக்கத்து வேங்கை மரத்தி லிருந்த குரங்கு அதைக் கவர்ந்து போக, அத்துயரத்தான் அழுதழுது அவள் கண்கள் மழைநீர் பட்ட நீலமலர் போலாகி விட்டன. துயரத்தான் அவள் வயிற்றில் அடித்துக் கொள்ள, அவள் விரல்கள் காந்தள்மொட்டுப் போலச் சிவந்துவிட்டன. இத்தகைய பேதைக்குணத்தாளிடம் நும் கருத்தை எவ்வாறு சொல்லுவது?” (நற். 379 இள., நச்.) எனவும் தோழி தலைவனிடம் கூறுதல்.

தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

{Entry: I09__402}

தலைவியிடம் தோழி குறை நயப்பிக்கச் சென்றவழித் தலைவி தன்மனத்தில் நிகழ்வதனை மறைத்து இசைவில்லாதவளைப் போல் நின்றவழி, அதனைத் தோழி குறிப்பினான் உணர்ந்து, மனம்மொழிமெய் மூன்றும் ஒருங்கே அன்பு தோன்றக் கலந்து, தலைவியைப் பணிவொடு வேண்டும்போது கூறுதல். (தொ. பொ. 112 இள.)

மறைத்தல்-தன்மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல்; அருகுதல்-இசைவில்லாதாரைப் போன்று நிற்றல்; முன்னம் முன் தளைதலாவது - கூற்றினானன்றிக் குறிப்பினால் உணர்தல்; பின்னிலை நிகழும் பல்வேறு மருங்காவது-வழிபாடுகொண்டு வரும் கூற்று வேறுபாடு.

எனவே, “தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம் புனத்து அயல் வாராநின் றான்” எனவும், “அவன் என்மாட்டு ஒரு குறையுடையன் போலும்” எனவும், “அருளு வார்க்கு இஃது இடம்” எனவும், “அவன் குறை மறுப்பின், ‘மடல் ஏறுவல்’எனக் கூறிப் போந்தான்; பின்பு வரக்கண்டி லேன்” எனவும், இந்நிகரன கூறுதல். (இள.)

இனி, நச்சினார்க்கினியர் உரைப்பது (114) வருமாறு:

தோழி குறை நயப்பித்தவழி, நாணத்தால் தலைவி உடன் படாது நிற்க, தலைவனொடும் தலைவியொடும் நிகழ்ந்த இயற்கைப்புணர்ச்சி முதலிய மூன்றனையும் தான் அறிந் ததைக் குறிப்பால் உணர்த்தி அவளைப் பலவாக இரந்து பின் நிற்குமிடத்துத் தோழி கூறுதல்.

மறைத்தவள் அருக- நாண் மிகுதியான் தனது வேட்கை மறைத்த தலைவி அக்கூற்றிற்கு உடன்படாது நிற்றலான்; தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ - தலைவ னொடும் தலைவியொடும் நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி முதலிய மூன்றனையும் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி; பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும் - இரந்து பின் நிற்றல் பலவாய் வேறுபட்டு நடக்குமிடத்தும்.

அவை “பெருந்தகைமையான் ஒருவன் யானை முதலியன வினாயும், தழையும் கண்ணியும் கொண்டும் இப்புனத்து வாராநின்றான்; அவன் என்மாட்டுப் பெரிதும் குறையுடை யன்; அவன் குறை முடியாமையின் வருந்தாநின்றான்; அத்தழை நீ ஏற்றல் வேண்டும்; அக்குறை முடித்தற்கு இஃதிடம்; யான் கூறியது கொள்ளாயாயின், நினக்குச் செறிந்தாருடன் உசாவிக் குறை முடிப்பாய்; மறுப்பின், அவன் மடல் ஏறுவன், வரைபாய்வன் ” எனவும் பிறவாற் றானும் கூறித் தோழி தலைவியைக் குறை நயப்பித்தல்.(114 நச்.)

“தலைவி! நாம் தினைப்புனம் காத்திருந்தபோது, தம்மால், அம்பு எய்யப்பட்ட விலங்கு அப்பக்கம் வந்ததா என்று வினவி வந்தவர் நம்மிடம் குறிப்பாக வினவலுற்றது வேறொன்று உண்டு” (ஐந். ஐம். 14 இள. நச்.)

“தலைவி! எண்ணெய் தடவிய உழுத்தமாவினைத் திரித்தாற் போன்ற வயலைக்கொடிமிக்க மலையுச்சியினின்று பறித்துத் தொடுக்கப்பட்ட அசோகந்தளிர் ஆடை வாடுகிறது” (ஐங். 211) (இள).

“தலைவி! காந்தட் பூ மணத்தொடு வரும் வாடைக் காற்றில் கொடிச்சி தன் கூந்தலைக் காயவைக்கும் மலைநாடனாகிய தலைவன் பெரிதும் காமக்காய்ச்சலான் நோகிறான். அவனைக் கூட விரும்புவார்க்கு இதுவே தக்க சந்தருப்பம்” (இள.)

“தன் பேட்டொடு விளையாடும் நண்டினையும் நோக்கிக் கானலில் என்னையும் நோக்கித் தன் உணர்வெல்லாம் குறைந்து சென்ற தலைவன் நிலை இப்பொழுது எவ்வா றுளதோ?’ (சிலப். கானல். 31) (இள., நச்.).

“தலைவி! வேங்கையை ஒத்த ஆற்றல் மிக்க தலைவன் தேவை இது என்று வாய் திறந்து சொல்லாமல், தன் நினைப்பில் உன்னையே கொண்டு, வெயில் மிக்க நண்பகலில் நிழலுக்காக வேங்கைமர நிழலில்கூடச் சிறிதுநேரம் நிற்காமல் தடுமாறு கிறான்” (திணைமாலை. 31) (இள.)

“தலைவி! ஒரு நாளன்று; இருநாளல்ல; பல நாளும் என்னை நாடி வந்து பணிவான சொற்களைப் பேசி, என் நெஞ்சு நெகிழுமாறு செய்த தலைவன், மலையில் முதிர்ந்த தேனடை தன்பாலுள்ள தேனை ஒருவரும் கொள்ளாமையால் வீழ்ந்து கழிதல் போலத் தன் சொற்களை ஒருவரும் ஏலாமையான் இவ்விடம் விட்டுப் போய்விட்டான். அவன் நமக்குப் பற்றுக் கோடு ஆவான் என நினைத்தேன். வேற்றுநாட்டிற் பெய்த மழைநீர் கலங்கி வருவது போல என் நெஞ்சம் கலங்கி யுள்ளது” (குறுந். 176) (இள).

“தலைவி! ‘மலைநாடனாகிய தலைவன் நம்மை விரும்பி நம் இசைவு பெறாமையான் வருந்துகிறான்’ என்ற என் கூற்றை நீ ஏற்கவில்லை. அது கிடக்க. நீயும் நன்றாக நினைந்து உனக்கு அமைந்த சிறந்த தோழிமாரொடும் கலந்து எண்ணி அறிய வேண்டுவதனை அறிந்து செயற்படு. அவனை மறுத்தல் எளிய செயலன்று. ஆராய்ந்து பின்னர் நட்புச் செய்தல் தக்கதே யன்றி நட்புச் செய்து பின்னர் ஆராய்தல் தக்கதன்று.” (நற்.32) (இள., நச்.)

“தலைவி! தாழை நிறைந்த கடற்கரைச் சோலையில் தன் குறை இது என்று வெளிப்படையாகக் கூறாமல், காலையும் மாலையும் வந்து நின்ற தலைவன் தான்புனைந்த தழைஆடை யையும் முடிமாலையையும் இங்கேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். அவன் இப்பொழுது எவ்வாறு உள்ளா னோ?” (நச்.)

“நம் ஆயத்தார் அறியும்படி தலைவன் தந்த தழையாடையை முன்னர் மறுக்காது பெற்றுக்கொண்ட நாம், இப்பொழுது அவன்நட்பை ஏற்றுக் கொள்வது நம் பழைய குடிக்குப் பழியாகும் என்று அவனை மறுப்பது யாங்கனம் இயலும்?” (நச்.)

“தலைவன் தெய்வம் தங்கும் மலையினின்று பறித்து வருவதற்கு மிகவும் இடுக்கண் தரும் அரிய தழையைப் பறித்து வந்து தழையாடையாக்கித் தந்துள்ளான். அதனை உடுப் போம் எனின் தாய் புதுமை கண்டு வெகுளுவாளே என்று அஞ்சுகிறோம்; மீளக் கொடுத்து விடுவோம் என்னில், தலை வன் ஆற்றானாவானே என்று அஞ்சுகிறோம். அத்தெய்வ மலைத்தழை வாடலாமா? வாடவிடின் தெய்வம் வெகு ளாதா?” (நற். 359) (நச்.)

“தோழி! தலைவன் எம்மோடு ஒருநாள் கிளிகளை வெருட் டினவனாய்த் தங்கித் தன் மனக்கருத்தை வெளியிட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டான். அவன் போய செய்தி பற்றி நான் கவலைப்படவில்லை. தேன் நுகரும் வேட்கையான் நல்ல மலர் அல்ல மலர் என்று பகுத்துப் பாராது தேன் ஊதுதல் ஒன்றையே கருதியிருக்கும் வண்டு போன்ற, அத்தலைவனது தோற்றப் பொலிவினைக் கண்டு கழலும் தொடிகளை மீண்டும் மேலே செறித்துக்கொள்ளும் என் பண்பற்ற செய்தி எனக்குக் கவலை தருகிறது” (நற். 25) (நச்.)

“தலைவி! தலைவன் கடலைப் போன்ற நம் பெரிய கற்றத்தாரி டையே மடலேறி வந்து உன்னைப் பற்றிப் பாடும்போதாவது நான் இப்பொழுது கூறிய செய்திகளை மறவற்க.” (நச்.)

இன்னோரன்ன கூற்றுக்கள்.

தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -

{Entry: I09__403}

தலைவனிடம், “நீ உனக்கு உரித்தாகக் கொண்ட தலைவியின் மேம்பட்ட அழகினை மீளத் தந்துபோ” என்று தோழி அவனது புறத்தொழுக்கம் பொறாது கூறுதல். (தொ.பொ. 148 இள)

(“தோழி! நம் தலைவனைக் கண்ணால் கண்டால், ‘நீ எம்மிடம் கைக் கொண்ட எம் மாமை அழகினைத் திருப்பித் தந்து செல்க’ என்று வற்புறுத்தலாம்” (ஐந். எழு. 64) என்று தலைவி கூறியதை உட்கொண்ட) தோழி, தலைவனை நோக்கி, “சேர்ப்ப! நீ தலைவியைக் கைவிட்டுவிட்டாய் என்று எல்லோரும் வெளிப்படையாகக் கூறும் நாள் விரைவில் வருவதாகுக! அவ்வாறு செய்வது உனக்கும் உடன்பாடாயின் யாம் உன்னைத் தடுக்கவில்லை. நீ கவர்ந்து கொண்ட தலைவியின் அழகினை மீளத் தந்து விட்டு நின் விருப்பம் போலப் புறத்தொழுக்கத்தில் பல காலம் கழிப்பாயாக!” (குறுந். 236) என்று கூறுதல். (இள.)

“இவள் இழந்த மாட்சிமைப்பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயாக” என்று தலைவனை வேறுபடுத் தற்கண் தோழி கூறுதல். (150 நச்.)

தோழி, புறத்தொழுக்கில் சென்று வந்த தலைவனிடம், “எலுவ! நீ யார்? எங்களுக்கும் உனக்குமிடையே யாது உறவு? எமக்கு நீ எவ்வுறவும் உடையாயல்லை. நீ அயலான் போன்று எம்திறத்து உள்ளாய். நின் விருப்பம் போலவே நடந்து கொள்க. மாந்தை நகர் போன்ற இயற்கை வனப்புடைய இவளிடம் நினக்கு விருப்பமில்லையாதலின், நீ கவர்ந்த இவளழகை மீளக் கொடுத்துவிட்டு நின் விருப்பம் போல் செல்க!” (நற். 395) என்று கூறுதல்.

தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -

{Entry: I09__404}

தலைவியின் தமர் தலைவற்கு மகள் கொடுக்க உடன்படத் தானும் வரைவுக்கு உடன்பட்ட தலைவன், வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, “இங்ஙனம் காலதாமதம் செய்தல் கூடாது” என்று கடுஞ்சொல் கூறித் தோழி அவனை வரைவு கடாதல்.

“தலைவ! இல்வாழ்க்கை நடத்துதல் என்பது வறியவர்க்கு அவர் வேண்டிய தொன்றை உதவுதலாம்; ஒன்றைப் பாது காத்தல் என்பது கூடினாரைப் பிரியாதிருத்தலாம்; மக்கட் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாம்; அன்பு என்பது தன் சுற்றத்தாரை வெகுண்டு நீங்காதிருத்தல்; அறிவு என்பது அறியாதார் தன்னைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தல்; செறிவு என்பது கூறியதை மறாது செய்தல்; நிறை என்பது இரகசியத்தைப் பிறர் அறியாதவாறு பாதுகாத்தல்; முறை என்பது நமர் எனக் கண்ணோடாது அவர் செய்த குற்றத்துக்கு ஏற்ப அவரைத் தண்டித்தல்; பொறை என்பது பகைவரையும் காலம் வரும் வரை பொறுத் திருத்தல். இத்தகைய அருங்குணங்களை அறிந்தொழுகும் நீ தலைவியின் நலனை உண்டு அவளைத் துறந்திருத்தல், இனிய பாலைப் பருகியவர் அது வைக்கப்பட்டிருந்த கலத்தைக் கவிழ்த்து விடுவது போல்வதாம். அதனால், நின்னால் வருத்தப்படுத்தப்பட்டிருக்கும் தலைவி துயர் தீர, அவளை விரைந்து வரைந்துகொள்ள ஆவன சூழ்ந்து, குதிரை பூட்டிய தேரில் புறப்படுக!” (கலி.133) என்று தோழி தலைவ னிடம் விரிவாக நீதி கூறி வரைவு கடாயவாறு.

இது ‘வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும், என்ற தனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -

{Entry: I09__405}

“தலைவ! மழை பெய்யக் கானம் தழைப்ப, உழவர் பயிர் வினை தொடங்க, மான்கள் புல் மேய்ந்து மகிழ்வொடு விளையாடும் கார்காலத்தும் நீ மீண்டு வரவில்லையெனில், நிலை யாதாயிருக்கு மென்று தலைவி வருந்திப் பாணனிடம் கூறி, ‘உன் எடுத்த காரியம் முடியாமையால் நீ வருந்து கின்றாயோ?’ என்று ஏங்கியிருந்த நிலையில், அவள் தனிமைத் துயரம் தீர வந்த நீ நீடு வாழ்க! தலைவியும் முல்லைப் பூக்களைச் சூடி நின் மலர்ந்த மார்பில் மன்னுக!” (அகநா. 314) என்ற தோழி கூற்று.

இது ‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -

{Entry: I09__406}

முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக் கூறுதல், நிறுத்துக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல்; “இன்னும் முன்பு கூடினாற் போலக் கூட அமையும்” என்று கூறுதல் (தொ. பொ. 112 இள.)

தலைவியை அடையத் தோழியை வேண்டி வந்த தலைவ னிடம், தோழி, முன்பு கூடினாற் போலவே அன்றும் தலைவியை அவன் கூடலாம் என்று அவனை நீங்கவிடாது உடன்பட்டுக் கூறுதல் என்றவாறு.

தான் பேதைமை ஊட்டியவழி, “இவள் இக்குறை முடிப்பள் என்று இரந்து ஒழுகிய எனக்கு இவள் புணர்ச்சி அறிந்திலள் போல் கூறினாள்” என்று ஆற்றான் ஆய தலைவனைத் தோழி, “யான் அப்புணர்ச்சி நிகழ்ந்ததனை அறிவல்” என்று கூறி வருத்தம் தீர்த்தல். (114 நச்)

“தலைவ! தலைவி எனக்கு உயிர் போன்றவள்; தன் மனத்தின்கண் பட்ட மிக்க துன்பத்தை அவள் வெளியிடாது அடக்கி வைத்துள்ளாள். அந்நிலையில் ‘தலைவி இச்சிறு வயதிலேயே மூதறிவு படைத்து விட்டாள்’ என்று உன் எதிர் கூறினேனாயின், நீ சென்று அவட்கு உரைத்தியாயின், அஃது அவட்குப் பெருநாணம் தரும் என்று யான் அறிந்த செய்தியை உன்னிடம் கூற அஞ்சுவல் ” என்ற தோழி கூற்றில், அவள் புணர்ச்சி நிகழ்ந்ததனை அறிந்த திறம் பெறப்படுத் தப்பட்டது. (நச்.)

தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

{Entry: I09__407}

மெய்யினாலும் பொய்யினாலும் தலைவி குலத்திலுள்ளோர் பெருமைக்கு இழுக்கு வாராது, பலவாகி வேறுபட்ட கவர்த்த பொருண்மையையுடைய சொற்களைக் கூறித் (தலைவியது வேறுபட்ட நிலைக்குரிய காரணத்தைத்) தோழி ஆராய்தல்.

நாற்றம் முதலிய ஏழானும் தலைவிக்குப் புணர்ச்சியுண்மையை அறிந்த பின்னர், தோழி தலைவியுடன் ஆராயுங்காலத்து, நிகழ்ந்தவற்றை மறைத்துக் கூற வேண்டுதலின், உண்மைப் பொருளானும் பொய்ப்பொருளானும் விராவி வரினும், அவட்குக் குற்றேவல் செய்யும் தன்மையின் தப்பாதவாறாக வேறு பல் கவர்பொருள்படக் கூறி ஆராய்தல். (கவர்பொருள்-வேறுபட்ட பொருள்படும் தன்மை) நாணான் தலைவி இறந்துபடாமல் கூறுதற்கு ‘வழிநிலை பிழையாது’ என்றது.

“தலைவி! நாம் முன்பெல்லாம் பிறையைத் தொழுவோமே! அப்பிறை இன்றும் தோன்றியுள்ளது. அது சோழன் அணிகலன் போல ஒளி வீசுகிறது. அதனைத் தொழலாம்!” என்று தோழி கூறத் தலைவி தொழாதது.

இதன்கண், முன் கூறியவாறு போலக் கூறுதல் மெய்; தலைவி தொழாஅள் என்று அறிந்தும், தொழவேண்டுவது போலக் கூறுதல் பொய். வழக்கம் போலப் பணிவாகக் கூறலின் வழிநிலை பிழையாது, கவர் பொருளாயிற்று.

“நம் தினைக்கொல்லையில் பகலில் யான் கண்ட களிறு இப்பொழுது உதிரம் தோய்ந்த கோட்டொடு செல்கிறது” (சிற்றெட்டகம்) என்று தலைவி நடுங்குமாறு தோழி கூறுதல் கூடாது.

“தலைவி! தொய்யில் எழுதிய உன் நகில்களும் தோள்களும் புது அழகு பெற்றுள்ளன. உன் கூந்தலிலும் தெய்வமணம் கமழ்கிறது. இவை எப்படி நிகழ்ந்தன என்பது எனக்கு ஐய மாக உள்ளது” என்று தோழி கூறியவழி, தலைவி, “சுனை யாடினேற்கு இங்ஙனம் ஆயிற்று” என்றாளாக, தோழி,

“யானையான் உதைத்துத் தள்ளப்பட்ட சந்தனமரம் விழுந்து கிடக்கும் ஆழமான சுனையில் உன்னைப் போலக் குளித்தத னான் ஆண்மயில் போன்று கண்கவர் அழகினைப் பெறலாம் எனில், அச்சுனைக்கண் யானும் ஆடி அவ்வழகு பெறு மாற்றைக் காண்பேன்!” எனவும்,

“நேற்றுச் செல்வனாகிய தலைவன் தன் பெருமைக்கு ஏலாப் பணிவுடன் என்னிடம் வந்து, யான் அவனை வருத்தினே னாகக் கூறி என் முதுகினைத் தழுவ, என்மனம் அவனிடம் நெகிழ்ந்துவிட்டது. ஆயின், நான் மனத்தை உறுதி செய்து கொண்டு கருஞ்சொற் கூறி அவனது பிணைப்பினின்று விலகி, அஞ்சிய பெண்மான் போல அகன்று நிற்ப, என்னிடம் பேச மனவலிமை இல்லாமல் பிடியைப் பிரிந்த களிற்றைப் போல நேற்று வருந்திச் சென்றவன் இன்றும் நம்மிடம் பேசித் தோற்றுச் செல்வான். நம் தோள் அவனுக்கே உரிமை என்பதை அறியாமல் பணிவுடன் நம்மை வேண்டி நிற்கும் அவனை ஏளனம் செய்யச் செல்வோம்” (அகநா. 32) எனவும்,

“தலைவி! நம்மலைப்பகுதியில் கூட்டிலிருக்கும் மயில்கள், தாம் தினைக்கதிர்களைக் கவர்வதைக் கண்டுகொண்டிருப் பதை அறியாது, கிளிகள் ஒருவர்க்கும் தெரியாமல் தாம் அக்கதிர்களை உண்பதாகக் கருதுகின்றன. அது கிடக்க. நீ தினையிற் கிளிகளைக் கடிய ஆவன செய்யாவிடினும், அயலார் வரக்கூடிய இவ்விடத்தில் அழாமல் இரு. அழுதத னான் உன் கண்கள் குருதி தோய்ந்த அம்புகள் போலச் சிவந்துவிட்டன.” (நற்.13) என்றாற் போலத் தான் ஓரளவு தலைவியது செய்கையை அறிந்துள்ளமையைக் குறிப்பான் அறிவுறுத்தித் தோழி அவளுடன் உரையாடல். (தொ. பொ. 114 நச்.)

தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

{Entry: I09__408}

“பெருங்கல் நாட! உன்னை விரும்பி நிற்கும் தலைவியின் கண்கள் உன் பிரிவு ஆற்றாமையான் உறக்கத்தை நீத்துக் கண்ணீரை உகுத்தபடியே உள்ளன. அவள் அணிந்திருக்கும் சங்குவளையல்களும் உடல்மெலிவான் நெகிழத் தொடங்கி விட்டன” (*குறுந். 365) எனத் தோழி தலைவியது ஆற்றாமை யைக் கூறுதல்.

இது ‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -

{Entry: I09__409}

“மலைநாட! நீ இவளை விரைவில் வரைந்துகொள்ள நின் மனத்து முடிவு செய்துவிட்டால், வேங்கையும் பலவும் பொருந்திய இவ்வூரில் இத்தலைவியின் உறவினரிடம் உன்தமரைக் கொண்டு நீ மணம் பேசுவதன் முன்னர், ஒரு பெண்ணாகிய யான் முன் கூட்டி மணம் முடிப்பதற்கு ஆவன செய்தற்கண் உனக்குக் கருத்து வேறுபாடு இல்லையெனில், செய்துவைப்பேன்” என்று தோழி தலைவனிடம் கூறுதல்.

இஃது ‘அனைநிலைவகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழியின் உரிமை -

{Entry: I09__410}

ஒருவர்பொருளுக்கு மற்றவர் உரிமை கொண்டாட நான்கு வழிகள் உள. அவை 1. பெற்றோருடைய பொருள்களாய் மக்களான் அடையப்படுவன, 2. பிறருக்குக் கொடுப்ப அவர் பாற் செல்வன, 3. வளர்ப்புப் பிள்ளைக்கு உரிமையாய் வந்து சேர்வன, 4. பகைவரான் கவர்ந்துகொள்ளப்படுவன - என்பன.

இந்நான்கு வகையானும் ஒருவர் பொருள் மற்றவருடைய உடைமையாம். இந்நான்கினானும் ஒருவருடைய உறுப்புக் களை மற்றவர் தம்முடையன என்று உரிமை பாராட்டல் இயலாது, ஆயினும், தலைவியொடு கொண்ட உயரிய நட்புக் காரணமாகத் தோழி தலைவிஉறுப்புக்களைத் தன் உறுப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் உரிமையுடையள். (தொ. பொ. 102 குழ.)

தோழியின் எண்வகை ஆராய்ச்சி -

{Entry: I09__411}

தலைவனொடு தலைவிக்குத் தொடர்புண்டாகிய செய்தி யைத் தோழி தலைவியினுடைய நாற்றம், தோற்றம், ஒழுக்கம், உண்டி, செய்வினை மறைப்பு, செலவு, பயில்வு, மெய்ப் பொருளானும் பொய்ப்பொருளானும் தன் குற்றேவல் நிலைக்கு ஏற்பப் பல வகைப் புதைபொருள்படக் கூறி ஆராய் தல் என்ற எண்வகை ஆராய்ச்சியானும் முடிவு செய்வாள். ‘தோழி, நாற்றமும்...... கூறல்’ - காண்க. (தொ. பொ. 147 குழ. உரை)

“தோழியைக் காட்டு” என்றல் -

{Entry: I09__412}

தலைவன், பாங்கற் கூட்டத்து இறுதியில் தன் களவொழுக் கத்தைத் தோழியின் துணையால் தொடரக் கருதி, தலைவி யிடம் அவளுடைய உயிர்த்தோழியைத் தனக்குக் குறிப்பாகக் காட்டுமாறு வேண்டுதல்.

“இந்தளூரனாகிய திருமாலின் மலைமேலுள்ள மயில் போல் வாய்! உன் உயிர் போல்பவளும், நீ இட்ட ஏவலை மகிழ் வொடு செய்து முடிப்பவளும், மயில் போலும் சாயலுடைய வளும் ஆகிய தோழியை உன் தோழியர்கூட்டத்திடையே யாவள் என்று யான் உணருமாறு உன் கண்பார்வையால் குறிப்பாகத் தெரிவித்து எனக்குக் கருணை செய்வாயாக!” என்பது போன்ற தலைவன் கூற்று.

இக்கூற்றுக் களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணது. (மா. அ. பாடல் 640)

தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -

{Entry: I09__413}

குற்றேவல் நிலையினள் கூற வேண்டிய நிலையில், தலைவ னிடம் பணிந்த மொழிகளான் தன் கருத்தினைத் தோழி எடுத்துக் கூறி வணங்கி மொழிதல்.

“நீர்த்துறையில் வரால்இனம் திரியும் ஊர! நம் தலைவியைக் கடைக்கணியாமல் மனையை நீங்கி, அப்பரத்தையர்சேரி செல்வதனைப் பெரிய காரியமாக்கிக் கொள்வது நின் பெருமைக்குத் தக்கதா?” (ஐந். எழு. 54)

“மகிழ்ந! வேள்வித் தீயினையும் செவ்வாம்பல் பூத்த வயல் களையு முடைய வளமிக்க தேனூர் போன்ற இவளது நலம் தனித்துக் கிடக்குமாறு நீ பிரிந்து செல்லுதற்கு, அப்பரத்தை அத்தகைய வனப்பு மிக்கவளா, என்ன! “(ஐங். 57 ) என வரும் தோழி கூற்று. (தொ. பொ. 150 நச்.)

தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -

{Entry: I09__414}

“அன்னாய்! துறைவனாகிய தலைவனே நம் தலைவிக்கு ஏற்றவன்! நம் தலைவியது மாமை அழகும் அவனுக்கே ஏற்றது!” (ஐங். 103) என்ற தோழி கூற்று.

இது (பாங்குற வந்த) ‘வகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

{Entry: I09__415}

“இப்பக்கம் யானை வந்ததோ? மான் வந்ததோ?” என்றாற் போலப் பொய்ச்செய்தி கூறி வந்த தலைவனைத் தலைவி வெகுளாது பொறுத்துக்கொண்ட காரணத்தைக் குறித்த விடத்துத் தோழி கூறுதல். (தொ. பொ. 112 இள.)

“வேங்கை மணம் கமழும் மலையிலுள்ள குறவர்மகளிராகிய யாங்கள் குருதி சோரும் களிறு இப்பக்கம் போனதாகக் காணவில்லை” (திணைமொழி.8) எனவும்,

“தேரில் வந்து தனியே நின்று, ‘யானை இப்பக்கம் போந் ததைக் கண்டீரோ’ என்று வினவுகிறீர். தினைக்கொல்லை யில், கிளிகளை வெருட்டும் மகளிர் யானை வரும் வழியில் இருப்பாரா?” எனவும் தலைமகற்குத் தோழி மறுமொழி கூறுதலும்,

“இவளும் தினைக்காவலுக்கு வந்தவளாகத் தெரியவில்லை. இவனும் மான்வேட்டைக்கு வந்தவனாகத் தெரியவில்லை. இருவர் உள்ளத்திலும் மறைந்திருக்கும் இரகசியம் ஒன் றுண்டு. என் கண் முன் நாணமுடையவராக நடிக்கிறார்கள். மறைத்துக் கள்ளை யுண்டவர்தம் களிப்பு அவரைக் காண்பவ ருக்குப் புலனாவது போல், இவர்கள் இருவரும் கண்களால் பேசிக்கொள்ளும் செய்தி எனக்குப் புலனாகிறது” என்று தோழி தன்னுள் கருதிக்கொள்ளுதலும் ஆம். (இள.)

தன்முன் வந்து நின்ற தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்றேயும் அவன் நாள்தோறும் தவறாது வருதலில்லை என்று அவன்மீது பொய்யாகக் குறை கூறி, அதனைப் பொறுத்த காரணம் குறிப்பினான் கொள்ளக் கூறுதல். காரணமாவது, “நீ அரியை ஆயின், இவள் ஆற்றாள் ஆவாள் என்று நின்னை எதிர்கொள்கின்றேம்” என்றல். (இஃது அவன் வரவை விரும்பியது; வரைவு கடாயதன்று) (114 நச்.)

தம்மான் இடையூறெய்தி வருந்தும் தலைவனைத் தோழி அணுகி, “நெய்தல் துறைவ! ஒருநாள் எங்கள் கடற்கரைச் சோலையில் முத்துப் போலப் புன்னைகள் அரும்பியிருக்கும் பகுதிக்கு வந்து, ‘நீங்கள் நிறம் பசலை யாகாமல் இருக்கின் றீர்களா?’ என்று எங்களை வினவினால் உன் பெருமை குறைந்துவிடுமா?” (அகநா. 30) என்றாற் போல, நாளும் வந்து மீளும் தலைவனை வாராதான் போலக் கூறுதல். (நச்.)

தோழி வந்து கூடல் -

{Entry: I09__416}

பகற்குறிக்கண் தலைவியை நீங்கித் தலைவன் சென்றபின், தோழி, பிரிவாற்றாமையாலும் தோழியைக் காண்பதன்கண் நாணினாலும் மொட்டுக்களைத் தடுமாறிப் பறித்துக்கொண் டிருந்த தலைவியை அடைந்து தான் கொண்டுவந்த மலர் களைக் காட்டி, அவள் மொட்டுக்களைப் பறித்தலை நீக்கி அவளொடு சேர்ந்து புறப்படுதல்.

இதனைப் ‘பாங்கி மெல்லியற் சார்ந்து கையுறை காட்டல்’
(ந. அ. 149) என்றும் கூறுப.

இது பகற்குறி எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 125)

தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__417}

“தலைவி! நம் மலையிலிருந்தும் அரித்து வரும் நீரினான் காந்தள் செழித்து வளரவும், காதலரைப் பிரிந்தோர் செய லற்று வருந்தவும், குளிர்ச்சியொடு வீசும் வாடைக்காற்றை யுடைய குளிர்காலம் தொடங்குவதற்குமுன் நம் தலைவன் வரைவிடைப்பிரிந்து மீண்டு வந்துவிட்டான்” (ஐங். 223) என்ற தோழியினது மகிழ்ச்சிக் கூற்று.

இது (பாங்குற வந்த) ‘வகை’ என்றதனாற் கொள்ளப்பட்ட தொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

{Entry: I09__418}

“நேற்றுத் தலைவன்மலையில் மழை பெய்துள்ளது. இன்று அந்நீர் நம்மூர் ஆற்றில் ஓடி வரும். அவன் மலையில் பெய்த நீரில் குளித்தால், ஓரளவு அவனைப் பிரிந்த ஆற்றாமையைப் போக்கலாம். தாயோ, நம்மை இற்செறித்துள்ளாள். ‘சிறுமி யரை ஆயத்தாரொடு விளையாடாது மனையில் அடைத் திருத்தல் அறனுமன்று; அச்செயல் செல்வத்தையும் அழிக் கும்’ என்று தாய்மனத்தில் படியுமாறு சொல்லுவோர் இருப்பின் நம்மை ஒருகால் அப்புதுப்புனலில் நீராட அனுப்பு தலும் கூடும்!” (நற். 68) என்று தோழி தலைவியிடம் கூறிப் பிரிவுத்துயரை ஆற்றுமாறு வற்புறுத்துதல்.

இஃது ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதனான் கொள் ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -

{Entry: I09__419}

“இவ்வெறியாட்டிற்கு நம் அன்னைதான் ஏற்பாடு செய்துள் ளாள். நம் அழகான இல்லத்தில் படிமம் ஒன்றை யமைத்து வழிபட்டு வேலன், ‘இந்நோய் தலைவிக்கு முருகனான் வந்தது’ என்று கூறுமாயின், அம்முருகன் என்ற பெயர் தெய்வத்தின் பெயரா அல்லது தலைவியொடு தொடர்பு கொண்டுள்ள மலைநாட்டுத் தலைவன் பெயரா என்பது ஐயமாக உள்ளது” (ஐங். 247) என்ற தோழி கூற்று.

இது ‘களம் பெறக் காட்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, வெறியாட்டிடத்துத் தலைவிக்குக் கூறல் -

{Entry: I09__420}

“தலைவி! இவ்வேலன் தன் வெறியாட்டை நிகழ்த்தும்போது, பல மலர்களும் மணம் வீசும் மலைநாட்டுக்கு உரிமையுடைய நம் தலைவனது மலையைப் பாடாதுபோயின், இவ்வெறி யாட்டு அவன் குறிப்பிடும் பயனைத் தாராதே” (ஐங். 244) என்ற தோழி கூற்று.

இது ‘களம் பெறக் காட்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி வெறியாட்டிடத்து முருகற்குக் கூறல் -

{Entry: I09__421}

“முருக! மலைநாட்டுத் தலைவனான் தலைவிக்கு விளைந் துள்ள இந்நோய் உன்னால் வந்ததன்று என்பதனை நன்கறிந் தும், கடம்பமாலையைச் சூடி வேலன் ‘வெறியாட்டிடத்து நீ வருதல் வேண்டும்’ என்று வேண்டியதனை நிறைவேற்ற, இவ் வெறியாடுகளத்து வந்த நீ தெய்வமாக இருப்பினும், ஒருதலையாக அறியாமையுடையாய் ஆயினை!” (நற். 34) என்ற தோழி கூற்று.

இது ‘களம் பெறக் காட்டினும்’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்)

தோழி, வெறியாட்டிடத்து வேலற்குக் கூறல் -

{Entry: I09__422}

“வெறி அறி வேல! பெரிய நீர்த்துறைக்கண் இத்தலைவியைக் கண்டு இவள் வருந்துமாறு செய்தவன் கடவுளாகிய முருகன் அல்லன்; நெய்தலும் செருந்தியும் தொடுத்துக் கட்டிய நறு மண மாலையை மார்பில் அணிந்த ஆண்மகன் ஒருவனே!” (ஐங். 182) என்ற தோழி கூற்று.

இது ‘களம்பெறக் காட்டினும்’ என்றதனான் கொள்ளப் பட்டதொரு கூற்று. (தொ. பொ. 114 நச்.)

தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -

{Entry: I09__423}

தோழி, தலைவியிடம் அவளது உடல்மெலிவைப் போக்க முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்துதலே தக்கது என்று அன்னை நினைப்பதைக் கூறுதல்.

“தோழி! நம் கண் பசலை பாயுமாறு தலைவன் செய்த நோயை அறியாத தாய், ‘இது முருகனான் விளைந்தது’ என்று கொண்டு இதனைப் போக்குவதற்கு வெறியாட்டு நிகழ்த்து தலே தக்கது என்று நினைக்கிறாள்” (ஐங். 242) என்ற தலைவி கூற்றில், செவிலி வெறியாட்டெடுக்க முயலுதல் பெறப்பட்டது.

‘அணங்குடை நெடுவரை’ (அக நா.22) என்ற பாடலில் “தலை வன் மார்பினான் விளைந்த நோய் இது என்று அறியாது தடுமாறிய செவிலி, ஊரிலுள்ள மூதறிவு வாய்ந்த மகளிர், ‘முருகனுக்கு வெறியாட்டெடுப்பின் நின்மகள் நலிவு தீரும்’ என்று கூறியது கேட்டு, ஆடுகளன் அமைத்து மாலைகள் சூட்டி முருகனைப் பற்றிப் பாடிப் பலி கொடுத்துத் தினையைக் குருதியொடு தூவி முருகனை வழிப்படுத்தி வெறியாட்டயர்ந்தாள்” (அகநா. 22) என்று தலைவி தோழி யிடம் செவிலி வெறியாட்டெடுத்தமை கூறினாள்.

இது ‘கட்டினும் கழங்கினும் . . . . . . . செய்திக்கண்’ திறம் என் றதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 115 நச்.)

தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -

{Entry: I09__424}

“முறத்தில் புதுமணலைப் பரப்பி, நாம் ‘இவன் உண்மை கூறான்’ என்று பேசுவதனால் விளைந்த கோபத்தையுடைய வேலன், ‘இவளுக்கு நோய்வந்த திறன் கழங்கினான் அறியப் படுகிறது’ என்று கூறுவதனைச் செவிலி உட்கொண்டாள்” (ஐங். 248) என்று தோழி கூறுதல்.

இது ‘கட்டினும் கழங்கினும் . . . . செய்திக்கண்’ ‘திறம்’ என்றத னான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 115 நச்.)

தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -

{Entry: I09__425}

வேளாண்மை - உபகாரம். தலைவனைத் தம் இல்லத்தில் விருந்தாக ஏற்றுக்கோடற்குத் தோழி தலைவனிடம் கூறல் (தொ. பொ. 112 இள.)

“ஞாயிறு மறைந்து விட்டது. புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்கு பெயர்ந்துவிட்டன. நீ பிரியப்போகிறாய் என்பதனை உட்கொண்டு தலைவியும் அழத் தொடங்கி விட்டாள். உன் கோவேறுகழுதை உப்பங்கழிகளைக் கடந்து வரும்போது, அதன் கால்கள் சுறாமீனால் தாக்கப்படவே புண்பட்டதனால், மீண்டும் நடந்து செல்ல வலிமையற்றிருக் கிறது. உன் இளையரும் நீயும் இப்பொழுதே மீண்டு செல்லா மல் பனைகள் ஓங்கிய மனைக்கொல்லைகளையுடைய எம் நெய்தல் நாட்டில் இன்று இரவு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதேனும் காரியம் கெட்டுப்போய் விடுமா?” (அக நா. 120) எனவும்,

“இன்று எம் ஊரில் தங்கிச் செல்வதாயின் யாங்களும் எங்கள் தகுதி ஏற்ப உங்களை விருந்தினராக ஏற்று உபசரிப்போம். இக்கருத்து உமக்கு உடன்பாடுதானா?” (அகநா. 200) எனவும், தலைவனை உபசரிப்பதற்காக அன்று இரவு தங்கள் ஊரில் தங்குமாறு அவனை வேண்டுதல். (இள.)

தலைவற்குத் தாம் சில கொடுத்தலைத் தலைவி வேண்டிய இடத்துத் தோழி கூறல்; அது தலைவி ‘வேளாண் எதிரும் விருந்தின்கண் ’ (தொ. பொ. 107) தோழி கூறல். (114 நச்.)

“புலம்ப! பல நாளாக நீ பகற்பொழுதில் வந்த புன்னைச் சோலையின் நிழலில் பொழுதுகழித்து மாலையில் தேர் ஏறி ஊருக்குச் சென்றுவிடுகிறாய். நீ செல்லும் வழியோ, இத் தலைவி நினைத்து நினைத்துத் தன் அழகு அழியுமாறு வெள்ளக்காடாக உள்ளது. பொழுதும் இருண்டுவிட்டது. வெள்ளத்தில் கொடிய பாம்புகளும் சுறாக்களும் திரிதரும். இந்த வழியில் இந்நேரத்தில் தலைவி வருந்துமாறு திரும்பிச் செல்லுதல் வேண்டா. இன்று இரவு எம்மில்லத்தில் தங்கிச் செல்வதனால் உனக்குக் குறை நேராது. மீனை விற்றுப் பண்டமாற்றாகப் பெற்ற வெண்ணெல்லின் மாவினைத் தயிரிட்டு அமைத்த கூழினை நின்குதிரை உண்ணுக. உனக்குப் பூசிக்கொள்ளப் பொதிகைமலைச் சந்தனம் அரைத்துத் தருகிறோம்.” (அகநா. 340)

“தலைவ! மீன் உணக்கும் துறையில் புள் ஓப்பிய எங்களொடு பகற்பொழுது தங்கி, மாலையில் தலைவியின் வளையல் களைத் திருத்தி மயிர்முடியைக் கோதி, ‘நின் தோழியோடு இல்லத்திற்கு ஏகுக’ என்று கூறி நீ புறப்பட ஆயத்தம் செய்த அளவில், தலைவி பெரிதும் வருந்துகிறாள். அதனை நினைத் துப் பாராமல், நீ அயலார் போலப் பிரிந்து செல்வதால் இவளுக்கு ஏதேனும் தீங்கு விளையுமோ என அஞ்சுகிறேன். உனக்கு இவளிடம் உண்மையான விருப்பம் உண்டாயின், நீ நெடுந்தொலைவினின்று வருவாரைப் போல நினையாது எம்மூருக்கு வந்தால், உன்னையும் இளையரையும் எதிர் கொண்டு இன்சொல்லான் வினவி, ‘பொழுது மங்கி விட்டது; அலைகள் பெருகிவிட்டன; சுறாவின் ஈட்டம் வந்துவிட்டது. நீ ஊருக்கத் திரும்பிப் போக வேண்டா’ என்று எமர் வேண்ட, உன்னை இளையரொடு தங்கச் செய்து எம் இல்லத்தில் உன்னையும் இளையரையும் குதிரையொடு விருந்தாக ஏற்றுப் பேணுவோம்” (அகநா. 300) என்று தலைவனிடம் தலைவியது துயர் கூறித் தோழி அவனை விருந்தாக ஏற்றவாறு. (நச்.)

தோற்றம் -

{Entry: I09__426}

1. உறுப்பு; அது கட்புலனாதலின் ‘தோற்றம்’ என்றார். ‘எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்’( தொ. பொ. 221 நச்)

2. நாடகப் பிரவேசம். (L)

தோன்றல் சூள் சொல்லல் -

{Entry: I09__427}

தலைவன் ஊடிய தலைவியிடம் தான் பரத்தையர் யாரையும் அறியாதவன் என்பதனை பெரியவர்கள்மேல் ஆணை கூறி உறுதிப்படுத்துதல். (பரி. 8. 52)

ந section: 155 entries

நகர் காட்டல்

{Entry: I09__428}

உடன்போக்கில் தலைவியை அழைத்துச் சென்ற தலைவன், அவளை வழியிடை வருத்தம் தீர நிழற்பகுதிகளில் தங்கச் செய்து, மணற் பகுதிகளில் விளையாடச்செய்து இன்புறுத் திக் கொண்டு போய், “பெரிய மாளிகைகள்மேல் கொடிகள் அசைய, மதில் தோன்றுகின்ற அப்பெரிய நகரே நம்முடைய ஊராகும்” என்று தலைவிக்குத் தனது ஊரை அணிமைக்கண் காட்டியது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிகண்ணதொரு கூற்று (கோவை. 222).

நகரணிமை கூறல் -

{Entry: I09__429}

தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இன்புற்றுச் செல்ல எதிர்வருவோர், “இன்னும் சிறிது தூரம்சென்று அக்குன்றத் தைக் கடந்தால் உங்கள் ஊர் வந்துவிடும்” என்றாற்போல, அவர்கள் போக வேண்டிய ஊர் அணிமைக்கண் இருக்கும் செய்தியைக் கூறுதல்

இதனைக் ‘கண்டோர் தம்பதி அணிமை சாற்றல்’ என்றும் கூறுப. (ந. அ. 182)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 221)

நகாதுரை என்றல் -

{Entry: I09__430}

“சிரிக்காமல் கூறு” என்ற தலைவன் தோழியிடம் கூறுதல்.

மேம்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சியிலும் பாங்கற் கூட்டத்திலும் தலைவியைக் கூடித் தோழியை இரந்துபின் நின்றபோது, அவனிடம் பலவாறாக உரையாடியவள், “தலை மகள் அரியள்” எனவும் “நின்குறையை நீயே அவளிடம் சொல்” எனவும் அவனை எள்ளிச் சிரித்துப் பலவாறு பேசியவிடத்து, அவன் மனம் நொந்து, “வளையலணிந்த, நறுமணம் கமழும் நன்னுதல் தோழி! நான் படும் துன்பத்தினின்று விடுதலை பெறுதற்குத் தலைவியை நான் அடையும் வழியை, ஏளன நகையை விடுத்து, நன்கு ஆராய்ந்து கூறு” என்று வேண்டுதல்.

இது ‘தோழியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 21)

நகை கண்டு மகிழ்தல் -

{Entry: I09__431}

தன்னை மறைத்துத் தலைவன் எதுவும் செய்யமுடியாது என்று தோழி நகைத்துரைத்ததைக் கேட்ட தலைவன், “இவளை மறையாது செய்தியை வெளிப்படையாகக் கூறின், இவள் எனக்குத் தவறாது உதவுவாள்” என்று கருதி மகிழ்தல்.

பிறர், தோழி தன்னை எள்ளி நகையாடியதற்குத் தலைவன் வருந்துவதாகக் கருதி, இதனை ‘அந்நகை பொறாஅது அவன் புலம்பல்’ என்றும் கொள்ளுப. (ந.அ. 146)

இது திருக்கோவையாருள்,‘சேட்படை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோiவை. 106)

நகைத்துரைத்தல் -

{Entry: I09__432}

தலைவன் கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்தொழுகிய காலை, அவனுடைய மேம்பட்ட பரத்தை தன்னைத் தானே வியந்து கூறினாள் எனக் கேட்ட தலைவி, “என் தங்கைய ராகிய பரத்தையருக்கும் இனி ஒரு தங்கை தோன்றின், அவரது இறுமாப்பு ஒழியுமன்றே! அதனால் வருவது அறியாது தம்மைத் தாமே புகழ்கின்றது என்னோ?” எனப் பரத்தைத்தலைவியை நோக்கி நகைத்துக் கூறியது.

இது ‘பரத்தையிற் பிரிவு எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 373)

நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -

{Entry: I09__433}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன், தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்கு, கண்ணான் கூறியதை நீக்கி, மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் இது நான்காவது.

நகை நனி . . . . . அறிதலாவது தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறக் கேட்ட தலைவிக்கு மனத்து நிகழும் மகிழ்ச்சியான் புறத்தே புன்முறுவல் தோன்ற வேண்டியதனை அவள் மறைத்து அடக்கிக்கொண்ட அந்நிலையைத் தலைவன் அறிதல். (தொ. பொ. 98 இள)

இயற்கைப்புணர்ச்சியின் பின் பிரிதலும் பிரிதல் நிமித்தமு மாகப் பொருந்துவன தலைவற்கு உரிய என்ற ஏழனுள் இது நான்காவது. நகைநனி . . . . அறிதலாவது, தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமல் வருந்துமாறு புணர்ச்சிக்கு இனமாகிய பிரிவுநிலை கூறி, அவள் பிரிவினைத் தன் மனத்தில் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முயல்கிறாள் என்பதனைத் தலைவன் அறிதல். “இவளைப் பிரியாவிடின், இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாக இவள் நாணத்தால் இறந்துபடுதலும் கூடும்; இவள் இறந்தால் என் உயிரும் போய்விடும்” என் றெல்லாம் கருதித் தலைவன் பிரிவு பற்றிக் கூறுவது அவ ளுக்கு மகிழ்ச்சி தாராது எனினும் பிரிவு இன்றியமையாதது; இதனால் தலைவிக்குப் பிரிவச்சம் கூறினார்.(101. நச். குறுந். 57)

நகையாடி மறுத்தல் -

{Entry: I09__434}

தோழியிற் கூட்டத்துக்கண், தோழி தலைவன் கையுறையாகக் கொண்டுவந்த ஒளி பொருந்திய தழையைப் பெற்றுக் கொள் ளாது அவனைச் சற்று விலக நிறுத்தித் தலைவியின் அரு மையை அவன் அறியச் செய்வதற்காகப் புன்முறுவலுடன் இனிமையாகப் பேசி மறுத்தது.

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 101)

நகைவாய்ப்பு உணர்தல் -

{Entry: I09__435}

முறுவற்குறிப்புணர்தல். அது காண்க. (சாமி.87)

நட்பின் நடக்கை -

{Entry: I09__436}

தலைவன் தலைவி என்ற இருவர்கண்ணே நட்புச் செய்து அவர்தம் அகப்புறச்செய்திகளை நன்கு அறிந்துள்ள பாங்க னும் தோழியு மாகிய இருவருடைய நட்பு நிலை. (தலைவ னொடு பாங்கன், தலைவியொடு தோழி நட்புநிலை) (தொ. பொ. 200 நச்.)

தலைவியொடு தோழி ஒழுகும் ஒழுக்கம். (197 இள.)

நடுங்க நாட்டம் (1) -

{Entry: I09__437}

.இயற்கைப்புணர்ச்சி முதலிய மூன்றனானும் தலைவனைக் கூடிய தலைவியின் நாற்றம் தோற்றம் முதலியன கண்டு ஐயுற்ற தோழி அவள் உள்ளத்தில் உள்ளதை அறிவதற்காக நாடும் திறங்களுள் ஒன்று; அஃதாவது அவள் நடுங்குமாறு கூறி ஆராய்தல்.

“எப்பொழுதும் இத்தினைப்புனம் வழியே ஓர்யானை செல்வது வழக்கம். இன்று அதன்கோடுகள் உதிரம் தோய்ந்து காணப்படுகின்றன” என்று தான் கூறத் தலைவி அவ்யானை தலைவற்கு ஏதேனும் ஊறு செய்துவிட்டதோ என்று கலங்கித் தன்னுள்ளத் தே உள்ளதைக் கூறுவாள் என்று தோழி நாடியுரைத்தது இது. (ந. அ. 139 உரை)

தலைவி நாணுமாறும் நடுங்குமாறும் தோழி ஆராய்தல் கூடாது. ஆதலின் இத்தகைய தோழி கூற்றுக்கள் ஐந் திணைக்கு ஆகா என்பாரும் உளர். (இறை. அ. 7 உரை)

நடுங்க நாட்டம் (2) -

{Entry: I09__438}

இக்கிளவி ‘தோழி தலைவியை நடுங்க நாடுதல்’ என்னும் ஒரு கூற்றையே உடையது; ‘புலிமிசை வைத்தல்’ என்பது அது. (கோவை. 72)

நடுவண் ஐந்திணை -

{Entry: I09__439}

கைக்கிளை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை பெருந் திணை என எண்ணும் வரிசைக்கண்,முதலிலும் ஈற்றிலுமுள்ள கைக்கிளை பெருந்திணைகளைப் ‘புறம்’ எனவும் (தொ.பொ. 23 நச்). ‘மரீஇய மருங்கு’ (211 நச்.) எனவும் கூறுதலின், நற்காமத் திற்கு உரிய முல்லை முதலிய ஐந்திணைகளும் ‘நடுவண் ஐந்திணை’ எனப்பட்டன. (2 நச்)

நடுவணது -

{Entry: I09__440}

முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்ற ஐவகை நிலத்தின் நடுவிலுள்ளதாகிய பாலைநிலம்.

முல்லையாகிய காடும், குறிஞ்சியாகிய மலையும் வன்னில மாம்; மருதமாகிய வயல்வெளியும், நெய்தலாகிய கடற்கரைப் பகுதியும் மென்னிலமாம்.

முல்லையும் குறிஞ்சியும் சில ஆண்டுகள் மழைபெய்யா தொழியின் வன்பாலையாம்; மீண்டும் மழைவளம் பெறின் பண்டை முறையே முல்லை குறிஞ்சி ஆம். இவ்வாறே மருத மும் நெய்தலும் மழைவளம் பெறாவாயின் மென்பாலை யாம்; மீண்டும் அது பெறின் பண்டைமுறையே மருதம் நெய்தலாம். ஆதலின் பாலைக்கென்று தனியே நிலம் இன்று. அது வன்னிலமாகிய முல்லை குறிஞ்சிக்கும் மென்னிலமாகிய மருதம் நெய்தலுக்கும் இடையே கொள்ளப்பட்டமையின் ‘நடுவணது’ எனவும் ‘நடுவு நிலைத்திணை’ எனவும் பெயர் வழங்கப்பட்டது.

உலகத்தைப் படைக்குங் காலத்து காடும் மலையும் நாடும் கடற்கரையுமாகப் படைத்த நால்வகை நிலத்திற்கும் ஆசிரியன் தான் படைத்த முல்லை முதலிய ஐவகை ஒழுக்கத் தில் பாலை ஒழிந்தவற்றைப் பகுத்துக் கொடுத்தான். அப் பாலை ஏனைய போல ஒரு பகுதியுள் அடங்காது நால்வகை நிலத்திற்கும் உரியதாகவே புலவர்கள் செய்யுள் இயற்றி வந்துள்ளனர். பாலைக்கு ‘நடுவணது’ எனவும், ‘நடுவு நிலைத் திணை’ எனவும் பெயரிட்டது குணம் பற்றியே ஆம். புணர்தல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்கிறது. அஃதாவது புணர்ந்த தலைவன் பிரிந்தால்தான் தலைவிக்குத் தனித்திருத்தலோ, அவன் பிரிவு குறித்து இரங்கலோ ஊடலோ நிகழும் என்பது. நால்வகை நிலமும் மழையின்மை முதலியவற்றான் திரிதலினாலேயே பாலைநிலம் உண்டாகிறது. காலைக்கும் எற்பாட்டிற்கும் இடைப்பட்ட நண்பகலே பாலைக்குரிய சிறு போதாக உள்ளது. புணர்தலுக்கும் இருத்தலுக்கும் இடையே பிரிவு வைக்கப்பட்டுள்ளது. உலகியல் பொருளாகிய அறம் பொருள் இன்பம் என்பவற்றுள்ளே நடுவிலுள்ள பொருள் தேடற்கு, பிரிதலாகிய ஒழுக்கத்திiனயுடைய பாலை காரணமாக உள்ளது. ஆதலின் பாலைக்கு அமைந்துள்ள அப்பெயர் குணம் பற்றி வந்ததாம். (தொ. பொ. 2 நச்).

முல்லையும் குறிஞ்சியும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலை நிலம் ஆம் என்பது. (இறை. அ. 1 உரை).

சிவஞானமுனிவர், நச்சினார்க்கினியர் ‘ நடுவணது’ என்ற பெயர் குணம் பற்றி வந்தது என்பதற்குக் கூறும் விளக்கங் களை மறுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று பகுக்கப்பட்ட நிலங்களும் ஆகாது அவற்றின் வேறுமாகாது தனக்குரிய நிலம், நடுநிகர்த்ததாய் நிற்றல் பற்றி ‘நடுவு நிலைத்திணை’ எனவும் ‘நடுவணது’எனவும் பாலை கூறப்பட் டது எனவும், இங்ஙனம் குறியிட்டதனால் பாலைக்கு நிலம் உண்டு என்பதும் அதனை ஏனைய நிலங்களின் வேறாக வைத்துப் பகுத்தெண்ணுதல் மரபு அன்று என்பதும் பெறப் படும் எனவும் கூறுவர். (சூ. வி. பக். 37).

இப்பாலைக்குரிய பெரும்பொழுது பின்பனியும் வேனிலு மாம் வேனில் எனவே, இளவேனில் முதுவேனில் இரண்டும் அடங்கும். இவற்றுள் முதுவேனிலே சிறந்தது. பாலைக்குரிய சிறுபொழுது நண்பகல். (தொ. பொ. 9, 10 நச்).

நடுவணைந்திணைக்கும் கைக்கிளைபெருந்திணைகட்கும் இடையே வேறுபாடு -

{Entry: I09__441}

நடுவணைந்திணை ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ எனக் களவியலுள் சிறப்பித்துக் கூறப்படுவதால், அகன் ஐந்தி ணைக்கு அன்பு அடிப்படையானது என்பது புலப்படுகிறது. ஏனைய கைக்கிளை பெருந்திணைகட்கு அன்பு இன்றியமை யாது வேண்டப்படுவதின்று; அவை காமத்தை அடிப்படை யாகக் கொண்டவை. (தொ. அகத். 2 ச.பால).

நடுவு நிலைத்திணை -

{Entry: I09__442}

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற நால்வகை நிலங்க ளும் ஆகாது, அவற்றின் வேறும் ஆகாது, மழைபெய்யாத கால மாறுபாட்டான் அந்நால்வகை நிலங்களிலும் ஒரோ காலத்து ஏற்படுவது பாலைத்திணை. பாலைக்கு முல்லையும் குறிஞ்சியும் திரிந்துவருதலே சிறப்பு.

‘நடுவணது’ காண்க. (தொ. பொ. 9 நச்.).

நடை -

{Entry: I09__443}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று. (வீ.சோ. 90)

குறிஞ்சி முதலிய நிலங்களில் நடக்கும் ஒழுக்கம் பற்றிய கிளவி களின் வரிசையான தொகுப்பு ‘நடையியல்’ என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

நண்பன் -

{Entry: I09__444}

குறிஞ்சி நிலத்தலைவன். (திவா. பக். 39)

நயத்தல் -

{Entry: I09__445}

கைக்கிளைத் தலைவி தன்னை நயவாத் தலைவனைத் தான் மிக விரும்புதல்.

“இவன் தோளும் மார்பும் என் கண்ணுக்கு விருந்தளித்து மகிழ்விக்கின்றன. இனி இவன் மார்பினை நான் ஆரத் தழுவின், அஃது எத்துணை இன்பம் தருமோ?” என்பது போன்ற அத் தலைவி கூற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பெண்பாற் கைக் கிளையில் ஒரு கூற்று. (பு. வெ. மா. 15-2)

நயப்ப மொழிதல் -

{Entry: I09__446}

தோழி, தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்து அவனைக் குறியிடத்து வரச்சொல்லித் தலைவி இரவுக்குறியை விரும்பு மாறு அவளிடம் உரையாடி அவளை இசையச் செய்தல்.

இக்கூற்று தோழியிற் கூட்டத்து ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக் கண்ணது. (த. நெ. வி. 4.).

நயப்பு (1) -

{Entry: I09__447}

தலைவன் தான் கண்ட தலைவி மானுடமகளே என்று துணிந்த பின் அவள் பேரழகினை வியந்து நினைத்தல்.

இது ‘துணிந்தவழி வியத்தல்’ எனவும்படும். (இ. வி. 491 உரை)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 4)

நயப்பு (2) -

{Entry: I09__448}

நயப்பு - விரும்புதல். இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைவன் காரணமின்றித் தோன்றிய இயற்கையன்பினானும் தலைவி யினுடைய குணங்களான் தோன்றிய செயற்கையன்பினானும் தூண்டப்பட்டு அவள்வனப்பினை எல்லைகடந்து புகழும் வாயிலாகத் தான் அவளிடத்துக் கொண்டுள்ள விருப்பத்தை வெளியிடுவது. (இறை. அ.2 உரை.)

நயப்புற்று இரங்கல் -

{Entry: I09__449}

கைக்கிளைத் தலைவன் தலைவிமீது கொண்ட காமம் மிகுந்து கூட்டம் பெறாது துயருறுதல்.

“என் மனம் என் வயப்பட்டு நில்லாமல் அவளையே சார்ந்து நிற்கிறதே! என் கண்களும் அவளையே பார்த்துப் பார்த்து ஏங்குகின்றனவே! அவளைத் தழுவும் என் ஆசை நிறை வேறாதோ?” என்பது போன்ற தலைவன் கூற்று.

இஃது ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையின் ஒருகிளவி. (பு. வெ. மா. 14-7)

நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -

{Entry: I09__450}

சிறந்த யாழினையுடைய பிரிவின்மையோரின் தன்மை. (நச்)

கந்தருவர் பதினெண் தேவசாதியாருள் ஒருவர். இவர்கள் எப்பொழுதும் இசையிலேயே மகிழ்வாகக் காலம் கழிப்பவர். கந்தருவர் தாம் செய்த நல்வினையின் பயனாக, ஒருவர் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி, (தலைவனும் தலைவியும் ஆகிய) இருவரும் தாமே ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுப் புணர்வது காந்தருவ மணமாம். (இறை. அ. 1. உரை.)

இக்கந்தருவ மணத்தைப் போலக் கொடுப்பாரும் அடுப்பா ரும் இன்றித் தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது இயற்கைப்புணர்ச்சி. (தொ. பொ. 92 நச்)

நலம் பாராட்டல் (1) -

{Entry: I09__451}

கைக்கிளைத் தலைவன் தலைவியின் எழில்நலத்தைப் புகழ்ந் துரைத்தல்.

“இத்தலைவியின் மொழி கிளிமொழி, நகில்கள் கோங்கரும்பு, கண்கள் கருவிளை” எனத் தன் கூட்டம் வேண்டாதாளைப் புகழ்ந்துரைப்பது.

இஃது ஆண்பாற் கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 14-6).

நலம்பாராட்டல் (2) -

{Entry: I09__452}

இயற்கைப்புணர்ச்சியில் தலைவன் தலைவியைக் கூடியபின், அவளுடைய எழில்நலத்தையும் உறுப்புக்களின் அழகையும் புகழ்ந்துரைத்தல்.

இஃது ‘இருவயின் ஒத்தல்’ என்பதன்கண் திருக்கோவையா ருள் (9) அடக்கப்படும்.

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதியது ஒரு பகுதி யாகிய ‘தெய்வப்புணச்சி’க்கண்ணதொரு கூற்று. (ந. அ. 125)

நலம் புனைந்துரைத்தல் -

{Entry: I09__453}

இயற்கைப்புணர்ச்சிக்கண் செவியின்பம் நீங்கலான ஏனைய நால்வகைப் பொறியின்பமும் துய்த்த தலைவன், தலைவியின் சொற்கேட்க விரும்பிக் கூற, தலைவியது முறுவலைக் கண்டு அதனை வியந்து புனைந்துரைத்தல்.

இது ‘சொற்கேளாத அயர்வு நீங்கியது’ எனவும்படும். (இ. வி. 493 உரை).

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதாகிய ஒரு கூற்று. (கோவை. 11)

நற்காமம் (1) -

{Entry: I09__454}

“சுவர்க்கத்தின்கண் சென்று போகம் துய்ப்பல்” எனவும், “உத்தரகுருவின்கண் சென்று போகம் துய்ப்பல்” எனவும், “மெய்ஞ்ஞான நூல்கள் கற்று வீடு பெறுவல்” எனவும், “தெய்வத்தை வழிபடுவல்” எனவும் எழும் காமம். (இறை. அ. 1 உரை)

நற்காமம் (2) -

{Entry: I09__455}

நடுவண் ஐந்திணைக்குரிய சிறந்த காமமாகிய ஒத்த காமம். (தொ. பொ. 266. பேரா.உரை) (L) .

நற்பரத்தையை நயப்புப் பரத்தை பழித்தல் -

{Entry: I09__456}

(நற்பரத்தை-சேரிப்பரத்தையாகிய விலைமகள்; நயப்புப் பரத்தை-பொருள் காரணமாக அன்றித் தன் காதலே காரணமாக ஒருவனுக்கே உரிமை பூண்டு நிற்கும் பரத்தை (மாதவி போல).

“அவள் எவ்வளவுதான் அழகினளாக இருந்து என்? தலைவன் அவளுடைய ஆடல்பாடல்களைக் கண்டு கொண் டாடுவதன்றி, என்னுடன் அவன் அன்போடு ஊடலும் கூடலுமாகப் பெறும் இன்பம் அவளிடத்தே பெறுவது இல்லையே!” என்ற நயப்புப்பரத்தை கூற்று. (அம்பிகா. 482)

நற்றாய், அயலார்தம்மொடு புலம்பல் -

{Entry: I09__457}

உடன்போக்கினை அறிந்த பின்னர் நற்றாய் மற்றவர்களிடம் அதனைச் சொல்லித் துயர் உறுதல்.

“என் மெல்லியல் சிறுமி, தோழியை நீத்து, அதற்குமுன் என்னைக் கைவிட்டு, பகைவர்முன்னே ஊரார் அலர் தூற்றுமாறு, தலைவனுடன் கொடிய பாலைவனத்தைக் கடக்கத் துணிந்துவிட்டாளே!” (கோவை. 230) என்ற நற்றாய் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘நற்றாய் வருந்தல்’ என்னும் (230)

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 185)

நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -

{Entry: I09__458}

தலைவனுடன் போகும் தலைவி, தான் அந்தணர்வாயிலாக விடுத்த செய்தி கேட்டுத் தன்னை ஈன்ற தாயாம் நற்றாய் தன் சுற்றத்தாரிடம் நிகழ்ந்தமை கூறியதனால், அவர்கள் பின் தொடர்வதைத் தலைவற்குக் கூறுதல்.

இதுவரைவியலுள் ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 198)

நற்றாய்க்கு (ஈன்றாட்கு) அந்தணர் மொழிதல் -

{Entry: I09__459}

உடன்போக்குச் செல்லும் தலைவி, தான் செல்வதைத் தன் தாயிடம் கூறுமாறு வேண்டியதற்கேற்ப, அந்தணர் (முதலி யோர்) நற்றாயிடம் தலைவி தலைவனுடன் போனமையைத் தெரிவித்தல்.

“அன்னையே! தலைவன் பின் உன்மகள் சென்ற கானம் நீண்ட நிழலையுடையது. நீ ஏன் வருந்தித் தவிக்கிறாய்? உன் மகள் பேரறிவுக்கு அருந்ததியும் நிகராகாள்” (அம்பிகா. 419) என்றாற் போலக் கூறுதல்.

இது வரைவியலுள், ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 198)

நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -

{Entry: I09__460}

தலைவன் முதலாய ஏனையோர்க்குரிய கிளவிகள் ஒன்றற்கு மேற்பட்ட உரிப்பொருளையும் நிமித்தங்களையும் கொண் டுள்ளன. நற்றாய்க்குரிய கிளவிக்கண் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒரு கூறே நிகழ்கிறது. மேலும் கொண்டு தலைக்கழிதல் அதிகாரப்பட்டுள்ளது ஆதலின் நற்றாய்க்குரிய கிளவிகளை முதற்கண் அகத்திணையியலில் எடுத்தோதி னார். (தொ. அகத். 38 ச. பால.)

நற்றாய்க்குரைத்தல் -

{Entry: I09__461}

தலைவி தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தியவழி அதனை அறிந்து தலைவியின் அடிகளது மென்மைத்தன்மை கருதி இரங்கிய செவிலி, “யான் அவளைத் தழுவிய கையைச் சிறிது நெகிழ்த்தால் அதற்கே தான் என்னைப் பிரிந்து தனித்திருப்பதாகக் கருதி அழும் என்பேதை, கற்பு முதிர்வு தோன்ற என்னை முற்றும் விடுத்து ஒரு காளையின் பின்னே போன செயல் என்னை வாட்டுகிறது” என மகளது உடன் போக்கினை ஆற்றாது நற்றாய்க்கு அதனை உணர்த்துதல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 229)

நற்றாய் கூற்று -

{Entry: I09__462}

தலைவி தலைவனொடு புணர்ந்து உடன்போகிய செய்தியை உணர்ந்த நற்றாய், அந்தணர் - தெய்வம் - அயலோர் - அறிவர் தன் உள்ளத் துயரத்தினை அறியும் உற்றார் - செவிலி - பாங்கி - கண்டோர் ஆகியவரொடு கூற்று நிகழ்த்துவாள்; ஆயின், எக்காலத்தும் தலைவனுடனேயோ தலைவியுடனேயோ நேராகக் கூற்று நிகழ்த்துவாளல்லன். (ந. அ. 218, 219)

நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -

{Entry: I09__463}

உடன்போக்குச் சென்ற தலைவி தலைவனுடன் தம்மூர் வரும் செய்தியைப் பாங்கியர் வாயிலாகக் கேட்டறிந்த நற்றாய், தலைவன்எண்ணம் இன்னதென அறிதற்பொருட்டுப் பூசாரியைக் குறி கேட்டல்.

“வேல! என் மகளோடு உடன்போக்கின் மீண்டு வருவோன் என்மனைக்கு வருவானா, அன்றித் தன்மனைக்கே செல் வானா என்பதனைக் குறிபார்த்துச் சொல்” (தஞ்சை. கோ. 354) என்று வினவுவது.

இது வரைவியலுள் ‘மீட்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 191)

நற்றாய், தமர்க்கு அறத்துடன் நிற்றல் -

{Entry: I09__464}

தலைவன் பிரிவான் தலைவிக்கு உடல் மெலிய, அம்மெலிவு தெய்வத்தான் வந்தது என்று கருதி அதனை நீக்கச் செவிலி வெறியாட்டெடுக்கத் துணிந்தவிடத்தே, தோழி தலைவி நிலை குறித்துச் செவிலியிடம் அறத்தொடு நிற்பவே, செவிலியும் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, நற்றாய் தந்தை தன்னையர்க்குக் குறிப்பால் தலைவிநிலையை உணர்த்து வாள். அஃதன்றிச் சில போது வெளிப்படையாகக் கூறி,

“தூய குடியில் பிறந்த நீங்கள் மயில்வாகனனாகிய செந்நிற முருகனைப் போன்ற தலைவற்கு நம்மகளை மணம் செய்து வையுங்கள்” என்றாற் போல அறத்தொடு நிற்றலும் உண்டு.

இஃது ‘அறத்தொடு நிலை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா : 361).

நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -

{Entry: I09__465}

“உடன்போக்கின்கண் தலைவன் தலைவியை அன்பாக நடத்த வேண்டும்” என்று நற்றாய் தெய்வத்தை வேண்டுதல்.

“என் மகளைக் கடுமையான பாலை வழியே அழைத்துச் சென்ற தலைவன், அவளிடம் மனத்தே அன்பு கொண்டு இன்சொல் பேசி, தன் மார்பினையே தலையணையாகக் கொடுத்து அவளை உறங்கச் செய்வானாக! அதற்கு நீ அருளல் வேண்டும்” (அகநா. 35) என்று நற்றாய் தெய்வத்தை வேண்டுதல்.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ.வி. 538 உரை)

நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -

{Entry: I09__466}

உடன்போக்கினை அறிந்த பின் நற்றாய், தலைவி சென்று பழகி விளையாடி வரும் மனையும் மலர்ச்சோலையும் போல்வன பார்த்துப்பார்த்துத் துயர் உறுதல்.

“இளமான்கன்றே! மணிப்பந்தலே! செய்குன்றே! குவளை பூத்துள்ள குளமே! கூவும் குயிலே! உமக்கு நல்ல செய்திகள் பலவும் சொல்லி உம்மையும் என்னையும் தலைவி தலைவ னொடு காண மீண்டு வருதற்குரிய நாள் எந்நாளோ?” (அம்பிகா.395) என்றாற் போல நற்றாய் புலம்புதல்.

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 185)

நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -

{Entry: I09__467}

உடன்போன தலைவி மீண்டு வந்தவிடத்தே, அவளைப் பெற்ற தாய் மகிழ்ச்சியொடு, கணவனோடு அவள் வந்துற்ற செய்தியைத் தன் உறவினர்க்கு எடுத்துக் கூறி அவர்களைக் காணச் செய்தல்.

“யாமெல்லாம் மயங்குமாறு துயர்செய்த அன்பில்லாத அறனும் நிச்சயமாக அருள் செய்துள்ளது. தன் தலைவ னோடு அருஞ்சுரம் உடன்போய் மீண்ட என் குறுமகளைக் காண வம்மின்!” (ஐங்.394) என்ற நற்றாய் கூற்று.

இஃது ‘அவ்வழி ஆகிய கிளவி’களுள் ஒன்று. (தொ. பொ. 36 நச்).

நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -

{Entry: I09__468}

தலைவியிடம் தான் கண்ட வேறுபாடுகளால் நற்றாய் செவிலியை வெளிப்பட வினாதல்.

“நம் மகளுக்கு ஏற்பட்ட மயக்கம் பற்றி உனக்குத் தெரியுமா? அவள்மார்பில் பொன்போல் பசலை பரவத் தொடங்கி விட்டது; தோள்வளைகள் கழலத் தொடங்கிவிட்டன; பேச்சும் தடுமாறுகிறது; வேல் போன்ற கண்கள் பசலை பாய்ந்துவிட்டன. அவளுக்கு இவ்வேறுபாடு ஏற்பட்டதன் காரணம் யாது?” (அம்பிகா. 358) என்று நற்றாய் வினவுதல்.

இதுவரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று (ந.அ. 178)

நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -

{Entry: I09__469}

நற்றாய், உடன்போக்கில் மெல்லிய தன் மகள் அடி சுடும் பொடிமணல் நிறைந்த பாலைவழியில் நடந்து செல்ல முடியாமல் வருந்துவாளே என்று நினைத்து வருந்துதல்.

“அனிச்சப்பூமேல் நடந்தாலும் வருந்தும் அடிகளையுடைய என்மகள் நெருப்பில் வேலை நட்டு வைத்தாற்போல வெப்பத்தால் கொதித்த பரற்கற்கள் நிரம்பிய பாலையில் தன் அடிகளை ஊன்றி நடத்தல் இயலுமோ?” (கோவை. 228) என்றாற் போன்று நற்றாய் வருந்துதல்.

இதனை ‘அடி நினைந்து இரங்கல்’ என்னும் திருக்கோவை யார். (228)

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 186)

நற்றாய் தன்னுள்ளே இரங்கல் -

{Entry: I09__470}

தலைவி உடன்போக்குச் சென்றதைச் செவிலி வாயிலாக அறிந்த நற்றாய் தன் மனத்து வருந்தியது.

“மகளே! எவ்வளவோ வசதிகளையுடைய இவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டாயே! நீ போகும் பாலைவழியில் உன் தோழியரோ, விளையாடற்குரிய பூவையோ, கிளியோ, பந்தோ, பாவையோ, இல்லை. சிற்றில் இழைத்து நீ விளை யாடவும் இடமில்லை. இந்நிலையை உணராது துணிந்து பாலைவழியே சென்றுவிட்டாயே!” (அம்பிகா. 391) என்றாற் போன்று, நற்றாய் வருந்துதல்.

இது வரைவியலுள் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 538 உரை)

நற்றாய், பாங்கிதன்னொடு புலம்பல் -

{Entry: I09__471}

செவிலிவாயிலாகத் தன்மகள் தலைவனுடன் சென்றதை அறிந்த நற்றாய், தோழியிடம் துயருற்றுக் கூறுதல்.

“பெண்ணே! அவள் தலைவனுடன் சுரத்தில் நடக்கவும் துணிந்து புறப்படுவதற்கு முன்னே, நீ என்னிடம் சொல்லி யிருந்தால், முறையாக மணமும் முடித்துக் கொடுத்திருப் பேன். அதனைச் செய்யாமல் இப்போது சொல்கிறாயே!” (தஞ்சை. கோ. 329) என்பது போன்ற நற்றாய் கூற்று

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 185)

நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல் -

{Entry: I09__472}

உடன்போக்கு நிகழ்ந்ததை அறிந்த நற்றாய் தலைவியின் மற்ற தோழியருடன் தலைவி தம்மை விட்டுச் சென்றது பற்றித் துயருற்றுக் கூறுதல்.

“தன் பாவைக்கு அணிய மாலை ஒன்று தந்தவனே தனக்குத் தலைவன் என்று கொண்டு, வேறு தெய்வமும் தொழ மனம் கொள்ளாமல், அவன்பின் சென்றுவிட்டாளே! கற்புநெறி கடவாமல் வாழவேண்டு மென்றால் அதற்குத் தலைவன்பின் பாலைநிலத்தில் போகவேண்டுமா?” (அம்பிகா. 393) என்றாற் போன்ற நற்றாய் கூற்று.

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 185)

நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -

{Entry: I09__473}

தலைவனும் தலைவியும் உடன்போக்குச் சென்றபின் மீண்டு தம்மூர் வருவதை அறிந்த நற்றாய், அவர் இருவரையும் கடிமணம் செய்து காணும் விருப்பத்துடன் செவிலியிடம் அதைக் கலந்துகொள்ளுதல்.

“உடன்போன தலைவன், தலைவியொடு திரும்பி வந்ததும், நம் இல்லத்திலேயே தலைவியின் திருமண நிகழ்ச்சியை நடத்தத் தலைவனுடைய அன்னையிடம் வேண்டிக்கொள் வோமா?” (தஞ்சை கோ. 355) என்று நற்றாய் செவிலியை வினவுதல்.

இது வரைவியலுள், ‘தன்மனை வரைதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 194)

நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -

{Entry: I09__474}

உடன்போன தலைவி மீண்டு வந்தவழி அவளைப் பெற்ற தாய் அவள் திருமணத்தைத் தம் இல்லத்தில் நிகழ்த்துவது பற்றித் தலைவன் கருத்தை அறிய வினவுதல்.

“தன் பொய்யால் என் மகளை மயக்கிச் சென்று மீண்ட அக் காளையைப் பயந்த தாயிடம், ‘உங்கள் இல்லத்தில் சிலம்பு கழி நோன்பை நிகழ்த்தினாலும் எங்கள் இல்லத்தில் வதுவை நன்மணத்தை வைத்துக்கொள்ளுங்கள் ” என்று கூறுவதில் யாது தவறு இருக்கிறது?” (ஐங். 399) என்று தலைவன் இல்லத்தினின்று வந்தவர்களிடம் நற்றாய் கூறுதல் போல்வன.

இஃது ‘அவ்வழி ஆகிய கிளவி’களுள் ஒன்று. (தொ.பொ.36 நச்.)

நற்றாய் வருந்தல் -

{Entry: I09__475}

தலைவியின் உடன்போக்கினைச் செவிலி வாயிலாக அறிந்த நற்றாய், “என்னையும் செவிலியையும் தோழியையும் ஆயத் தையும் நீத்து ஊரார் அலர் தூற்ற ஒருகாளைபின் என்மகள் போயினளே! யான் எங்ஙனம் ஆற்றுவேன்?” என்பது பட வருந்துதல்.

இதனை ‘நற்றாய் அயலார்தம்மொடு புலம்பல்’ என்றும் கூறுப. (ந. அ. 185)

இது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 230)

நற்றாயின் அச்சம் -

{Entry: I09__476}

தலைவி தலைவனொடு உடன்போக்கு நிகழ்த்திய பொழுதே நற்றாய்க்கு அச்சம் நிகழும். அவ்வச்சம் இரு வகைத்து.

தலைவி, தலைவனொடு செல்லும் பாலைவழியில் இயங்கும் கொடிய விலங்கும் பறவையும் கண்டும், அவ்வழியில் இரக்க மின்றிப் பொருள் பறித்துத் துன்புறுத்தும் வழிப்பறி செய்யும் பாலைநில மக்கள் செயல் கண்டும் அஞ்சி நடுங்குவாளே என்று நினைப்பது நற்றாயின் முதல்அச்சம். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் உடன்போன இருவரையும் தொடர்ந்து சென்று எய்தி, அவர்கள் உடன்போனது அறம் என்று கருதாது, அவர்களுக்குத் தீங்கு இழைப்பரோ என்பது அவளது இரண்டாம் அச்சம். (தொ. பொ. 36 நச்)

நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறல் -

{Entry: I09__477}

வரையாது வந்தொழுகும் தலைவனிடம் தோழியோ தலைவியோ களவொழுக்கத்தினது இழுக்கினை உணர்த்து முகத்தான்,

‘கழிபெருங் காதலர் ஆயினும் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ (அகநா. 112)

என்று பிறர் செயல்களை எடுத்துக் கூறினாற்போன்று அறிவு கொளுத்துதல். (தொ. பொ. 210. நச்)

நன்னயம் உரைத்தல் -

{Entry: I09__478}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன் தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்குக் கண்ணான் கூறியதை விடுத்து மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் மூன்றாவது.

அஃதாவது தலைமகளுடைய சிறந்த அழகினைப் புகழ்ந் துரைத்தல். (தொ. பொ. 98 இள.)

இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிதலும் பிரிதல்நிமித்தமு மாகப் பொருந்துவன தலைவற்கு உரிய என்ற ஏழனுள், முதல் மூன்று நயப்பின் கூறு. அவற்றுள் மூன்றாவது நன்னயம் உரைத்தல். அஃதாவது வார்த்தை சொல்லும் இயல்பு இல்லாத வண்டு நெஞ்சு முதலியன மறுமாற்றம் கூறுவன போலக் கொண்டு, அவற்றிற்குத் தான் தலைவியிடம் கொண்ட பேரன்பினைத் தான் எவரினும் காதலனாக உணர்த்துதல். நன்னயம் - மிக்க அன்பு. இங்ஙனம் கூறுவதன் பயன், புணர்ச்சி எய்திநின்ற தலைவிக்குத் தலைவன் எவ்விடத்தானோ, இப்புணர்ச்சி இன்னும் கூடுங்கொல்யோ, இவன் அன்புடையன்கொல்லோ என நிகழும் ஐயத்தை நீக்குதலாம்.

எ-டு :

“மகரந்தத்தினை ஆராயும் அகச்சிறைகளையுடைய தும்பீ! நீ என் நிலத்திற்குரிய வண்டாதலின் அதுபற்றி என்பால் அன்பு பற்றி மொழியாது, நீ நுகர்ந்து கண்டதனை மொழிவாயாக. பயின்ற கேண்மை எழுமையும் பொருந்தும் நட்பினையும், மயில் அன்ன சாயலினையும், பறிமுறை நிரம்பின செறிந்த பற்களினையும் உடைய இவளது கூந்தலைவிட நீ அறியும் பூக்களுள் நறுமணம் மிக்கனவும் உளவோ?” (குறுந். 2) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 101 நச்)

‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -

{Entry: I09__479}

ஓதற்பிரிவு முதலிய பிரிவுகளில் தலைவி விரைவில் தன்பிரி விற்கு உடன்படாள் என்பதை உணர்ந்த தலைவன், அவ ளொடு சிலநாள் கூடி இன்புற்று அவள் மனத்தைத் தன் வசப்படுத்தி உடன்படச் செயற்குத் தான் அவளோடு இல் லத்தே தங்குதல். (பாலை நடையியல்) (வீ. சோ. 93. உரைமேற்.)

நாகாதிபன் -

{Entry: I09__480}

நாகம் - மலை. மலைக்கு அதிபன் ஆகிய குறிஞ்சி நிலத் தலைவன். (சங்க. அக.)

நாட்டம் கூட்டியுரைத்தல் -

{Entry: I09__481}

தலைவன் தன் உள்ளத்து நிகழ்ந்த வேட்கையைத் தலைவிக்குச் சொற்களான் கூறாமல் தான் பார்த்த பார்வையாலே தெரிவிக்க, தலைவியும் அதனை உணர்ந்து தன் மனத்து நிகழும் வேட்கையைப் பெண்மை காரணத்தான் சொற்கள் கொண்டு கூறாது தன்கண்கள் இரண்டாலும் புலப்படுத் துதல்.

நாட்டம்-பார்வை; கூட்டிஉரைத்தல்-மனத்துப்பட்ட கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல். (தொ. பொ. 96 நச்)

நாட்டாட்சி பற்றிய பெயர் -

{Entry: I09__482}

நால்வகை நிலத்தும் உரிப்பொருள் தலைமக்கட்கு நாட் டாட்சி பற்றிய பொதுப்பெயர்கள் வழங்கப்பெறும்.

மலைகிழான் என்பது குறிஞ்சி நாட்டாட்சி பற்றிய பெயர். குறும்பொறை நாடன், கானக நாடன் என்பன முல்லை நாட்டாட்சி பற்றிய பெயர். கழனி நாடன் என்பது மருத நாட்டாட்சி பற்றிய பெயர். துறைகேழ் ஊரன் என்பது நெய்தல் நாட்டாட்சி பற்றிய பெயர். (தொ.பொ. 20 நச்)

நாடக வழக்கம் -

{Entry: I09__483}

அஃதாவது நிகழாதனவற்றைக் கற்பனை செய்து கூறுதல்.

சுவைபட வந்தனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத் துக் கூறுதல். அஃதாவது செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும் அன்பினானும் ஒத்தார் இருவர் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதி யான் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்து எய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன எல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல். (தொ. பொ. 56 இள.).

நாடகவழக்கு என்பது, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயினும் மலைசார்ந்து நிகழும் என்றும், காலம் வரைந்தும், உயர்ந் தோர் காமத்திற்கு உரியன வரைந்தும், மெய்ப்பாடு தோன்றப் பிறவாறும் கூறும் செய்யுள் வழக்கம். (53 நச்)

நாடகவழக்காவது மக்கள் வாழ்க்கையையே உயரிய குறிக்கோளோடு இயைத்துச் சுவைபட நடித்துக் காட்டும் கூத்தர் பின்பற்றும் மரபு. (52 பாரதி)

நாடகவழக்காவது உலகவழக்கங்களில் சிறந்தனவாய் உள்ள வற்றை அறிஞர்கள் ஒன்றாகத் தொகுத்துப் பிற்கால உலக வழக்கம் திருத்தமாக நடைபெறுதற்பொருட்டுப் பாடல்க ளாகப் பாடிவைக்கும் நூல் வழக்கம். (42 குழ)

நாடக வழக்கு எனப்படுவது -

{Entry: I09__484}

உலகில் பல்வேறு காலத்தும் இடத்தும் பல்வேறு நிலையின ராக வாழும் மாந்தரிடம் நிகழும் காமம் கண்ணிய ஒழுகலாற் றினுள் சான்றோர் வேண்டாதவற்றைக் களைந்து வேண்டு வனவற்றைத் தேர்ந்துகொண்டு அவற்றிற்கு இடமும் காலமும் வரையறை செய்து கருப்பொருளை இணைத்து மெய்ப்பாடு தோன்றச் சுவைபட அமைத்துக் கூறலும், தலைமக்களைப் பிணி மூப்பு இறப்பு இல்லாத ஒத்த கிழவனும் கிழத்தியுமாகத் தோற்றுவித்து அவர்க்குப் பாங்கரும் பாகரும் இளையரும் ஆகிய சுற்றத்தை அமைத்துப் பரத்தையர் காமக்கிழத்தியர் என்பாரைப் புனைந்து வாயில் ஆவாரைப் படைத்து வனைந்து கூறலும், பிறவும் ஆம். (தொ. அகத். 55 ச.பால.)

நாடத் துணிதல் -

{Entry: I09__485}

நற்றாய்க்குத் தலைவியின் உடன்போக்கினை உரைத்த செவிலி, நற்றாய் படும் துயரம் கண்டு தலைவி சென்ற இடம் நோக்கி அவளைத் தேடி அழைத்துவரத் துணிதல்.

இதனைக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண் ‘செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல்’ என்றும் கூறுப.(ந.அ. 188)

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 234)

நாடும் ஊரும் கிளத்தல்

{Entry: I09__486}

தலைவி தலைவனிடம் தன்னுடைய நாடு, ஊர், தான் பிறந்த குடி இவற்றைக் குறிப்பிட்டுத் தன்னைப் புகழ்ந்துகொண்ட வழி அவள் உள்ளத்தில் ஊடல் இருப்பது புலப்படும்.

தலைவியின் புலவியைத் தணிக்கத் தலைவன் பணிந்த மொழி கூறியவழித் தலைவி, “பெரிய நாட்டில் பேரூரில் பெரிய குடும்பத்தில் பிறந்த பெருஞ்சிறப்புடைய நுமக்குச் சிறியே மாகிய எம்மிடம் இங்ஙனம் பணிமொழி கூறல் தக்கதோ?” (பாண்டிக் 295) என்று அவனுடைய நாடு முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறியவிடத்து அவள் புலவி நீங்கப்பெற்றமை புலப்படும். (இறை. அ. 48, 49)

நாண் துறவு உரைத்தல் -

{Entry: I09__487}

களவுக்காலத்தில் பாங்கிமதியுடன்பாட்டின்போது அவ ளால் சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைவன், அவ ளிடம் தன் நாணம் நீங்கிவிட்ட செய்தியைக் கூறுதலும், களவுக் காலத்துப் பலவகைத் துயர் மிகுதியால் அறத்தொடு நிற்கத் துணிந்த தலைவி, தன்தோழியிடம் தன் நாணம் நீங்கிவிட்ட செய்தியைக் கூறுதலும் ஆம்.

தோழி தலைவனிடம் தலைவியின் நாண் நீங்கிய செய்தியைக் கூறுதல். (மணக்.)

‘நாணுத் துறவு உரைத்தல்’ என்பதும் இது. (குறள் அதி.114 பரிமே.)

நாண் விட வருந்தல் -

{Entry: I09__488}

பாங்கற் கூட்டத்துக்கண் தலைவன் தலைவியைப் புகழ்ந்தவழி அவள் நாணித் தன் கண்களைப் பொத்திக் கொண்டாளாக, தலைவன் அவள் கண்களேயன்றி அவள்மேனிமுழுதும் தன்னை வருத்துவதாகக் கூற, அவனுடைய ஆற்றாமைமிகுதி கண்டு இதற்குமுன் தன்னைவிட்டு நீங்காத நாணம் தன்னை விட்டுக் காதலால் நீங்குவது கண்டு அவள் வருந்துதல்.

இதனை ‘இயற்கைப் புணர்ச்சி’க்கண் ‘மறுத்து எதிர்கோடல்’ என்ற துறையாகக் கொள்ப. (ந. அ. 127)

இது திருக்கோவையாருள் ‘பாங்கற்கூட்டம்’ எனும் தொகு திக்கண்ணதொரு கூற்று. (கோவை. 44)

நாண நாட்டம் -

{Entry: I09__489}

தலைவி நாணும்படி சில கூறித் தோழி ஆராய்தல்.

இயற்கைப்புணர்ச்சிக்குப்பின் தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி அவ்வேறுபாட்டின் காரணம் அவளை வினவ, அதற்கு அவள் சுனையாடியமையைக் காரணமாகக் கூற, தோழி தானும் சுனையாடி அத்தகைய வேறுபாடு பெற விழைவதைக் கூறுவாள்; பின்னும் தலைவியைப் பிறையைத் தொழுமாறு அழைத்து, தான் தலைவற்கு உரியவளாயின மையின் அவனை யன்றிப் பிற தெய்வமும் தொழுதல் கூடாது என்ற கோட்பாட்டானே அவள் பிறையைத் தொழாமை கண்டு, அவள் வேறுபாட்டின் காரணத்தை ஒருவாறு ஆராய்ந்து கொள்வாள். தலைவி நாணுமாறு தோழி நிகழ்த்திய இவ்வுரையாடல்கள் ‘நாண நாட்டம்’ எனப்படும்.

தோழி, தலைவி நாணுமாறு அவளிடம் உரையாடி ஆராய் தல் தவறு என்பது ஒருசாரார் கருத்து. (இறை. அ. 7)

நாணநாட்டம்: கிளவிகள் -

{Entry: I09__490}

பிறை தொழுக என்றல், வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறி நகைத்தல், புணர்ச்சியுரைத்தல், மதியுடம்படுதல் என்ற ஐந்தும் நாணநாட்டத்தின் கூற்றுக்களாகத் திருக்கோவையார் குறிக்கும். (கோவை. 67-71)

நாணிக்கண் புதைத்தல் -

{Entry: I09__491}

பாங்கற் கூட்டத்தின்கண், தலைவன் தன் முன் நின்று தன்னைப் புகழ்தலைக் கேட்டதும், தலைவி நாணத்தினால் அவன்முன் நிற்றல் ஆற்றாது ஒரு கொடியினைத் துணை யாகக் கொண்டு கண்ணைப் பொத்திக்கொண்டு வருந்துதல். இதனை இயற்கைப் புணர்ச்சிக்கண் அமைந்த ‘வழிபாடு மறுத்தல்’ என்ற கூற்றாகத் கொள்ப. (ந. அ. 127)

இது திருக்கோவையாரில் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 42)

நாணினம் அழுங்கல் -

{Entry: I09__492}

தலைவி இயற்கைப்புணர்ச்சிக்கண் நாணம் மடம் அச்சம் முதலிய பெண்மைப் பண்புகளால் கூட்டத்திற்கு உடன்படு தற்கு மறுத்தல். (குறிஞ்சி நடையியல்) (இது ‘வழிபாடு மறுத்தல்’ (ந. அ. 127) எனவும் கூறப்படும்.) (வீ. சோ. 92 உரை)

நாணுத் தலைப்பிரியா நல்வழி -

{Entry: I09__493}

நாணம் நீங்காத நல்லொழுக்கம்.

அகப்பொருட்கண் கூறும் கூற்றுக்களுள் அறம் முதலாயின வழுவின ஆயினும், தலைவியின் நாண் அழிய வாராப் பொருளே கூறத்தக்கது என்பது. (தொ. பொ. 215 இள)

தோழி அறக்கழிவுடையனவாகிய செய்திகளைக் கூறும் போதும், தலைவியது நாண் அவளிடத்தினின்று நீங்கா மைக்குக் காரணமாகிய நன்னெறியாகிய பொருட்கூறுபாடு களை உள்ளடக்கிக் கூறுதல். (219 நச்.)

எ-டு : அகநா. 32

நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் -

{Entry: I09__494}

கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரிவின்கண் தலைவனைப் பரத்தையர்வசம் புனலாடவிட்டு, சூடுவாரின்றிச் செப் பின்கண் இட்டு அடைத்துத் தமியே வைகும் பூப்போன்ற தலைவி, “இஃது அவனுக்குத் தகாத பழியாம்” எனக் கருதி நாணி அவன் பரத்தைமையை மறைத்தாளாக, அது கண்ட தோழி, “இவளுடைய கற்பும் நலனும் மிக மேம்பட்டன” எனத் தலைவியின் நலத்தை மிகுத்துக் கூறியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 374)

“நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: I09__495}

“நாணம் எனும் தாழிட்டுப் பூட்டிய என் நெஞ்சத்து நிறை என்னும் கதவைக் காமவேட்கை என்னும் கணிச்சி உடைத் தெறிந்துவிட்டது. இனி யான் நாணும் நிறையும் காத்தல் இயலாததொன்று” என்ற தலைவி கூற்று. (குறள் 1251)

நாணு மிக வருதல் : பொருள் -

{Entry: I09__496}

கூட்டத்தான் பிறந்த மெய்வேறுபாடு கண்டு தலைவி நாணம் மிகுதல்

இவ்வொழுகலாற்றிலும் தலைவியது கூற்று நிகழும். (தொ. கள. 21 ச.பால.)

நாணுரைத்து மறுத்தல் -

{Entry: I09__497}

‘தோழியிற்கூட்டத்துக்கண், தலைவன் கொணர்ந்த பல வகைத் தழைகளையும் காரணங் காட்டித் தோழி ஏற்க மறுத்தவழி, அவன் கண்ணியொன்று புனைந்து வர அது கண்டவள், “செவிலியர் சூட்டிய கண்ணியின்மேல் வேறு எந்தக் கண்ணியைச் சூட்டினும் தலைவி சூடிக்கொள்ள நாணுவாள். நீர் கொணர்ந்த கண்ணியை எங்ஙனம் ஏற்று அவளுக்குச் சூட்டுவது?” எனத் தலைவியின் நாணினை உரைத்துக் கண்ணியை ஏற்க மறுத்தது.

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 95)

நாணுவரை இறத்தல் -

{Entry: I09__498}

மெய்யுறுபுணர்ச்சி நிகழுமுன் தலைவனுக்கும் தலைவிக்கும் நிகழும் பத்துவகை நிலைகளுள் ஆறாவது. இது நாணத்தின் எல்லையைக் கடப்பதாகும். (தொ. பொ. 97 இள)

இயற்கைப் புணர்ச்சி முதல் களவு வெளிப்படுந்துணையும் தலைவன் தலைவி என்ற இருவருக்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் இஃது ஐந்தாவது.

நாணுவரை இறத்தலாவது பொறுக்க முடியும் வரை நாணத் தான் பொறுத்துப் பொறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, நாணத்தின் எல்லையைக் கடந்து, தலைவன் பாங்கற்கும் தோழிக்கும் உரைத்தலும் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன. (100 நச்.)

மெய்யுறுபுணர்ச்சி நிகழுமுன் தலைவனுக்கு நிகழும் பத்து வகை நிலைகளுள் ஆறாவது இது. (இ. வி. 405)

நாணொடு நீங்கல் -

{Entry: I09__499}

தலைவி நாணம் நீங்கித் தோழி கூறியபடி தலைவனைக் கூடற்கு ஒருப்படல்.

இயற்கைப்புணர்ச்சி பாங்கற்கூட்டம் இவற்றின் பின் தலைவன் தோழியைக் குறையிரந்து அவள் ஆதரவைப் பெற்ற பிறகு, தோழி தலைவியைத் தலைவன் விருப்பம் கூறிக் குறை நயப்பித்தவழித் தலைவி தன் காமவேட்கையால் நாணம் கவரப்பட்ட செய்தியை நேரிடையாகக் கூறாமல் குறிப்பாக, “தோழி! அதோ பார். நம் தினைக்கொல்லையில், புறங் கொடுத்த மன்னர் செல்வத்தை வென்றவர் வீரர்கள் கைப் பற்றிச் செல்வது போல, தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்துகொண்டு செல்கின்றன” என்பது போலக் குறிப்பால் புலப்படுத்துதல்.

இது ‘தோழியிற்கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 23)

வலிதாகவும் மெலிதாகவும் சொல்லித் தோழி தலைவனது குறை நயப்பித்தவிடத்தே, தலைவி தனது ஆற்றாமையால் சொல் பிறவாது நின்று, பின் அவ்வாற்றாமை நீங்க நாணு வந்தடையச் சொல்லுதலை ‘நாணொடு சூழல்’ என்னும் களவியல் காரிகை. (பக். 67)

நாமக்காலம் -

{Entry: I09__500}

நாம்-அச்சம். தலைவன் வரும் வழியின் கடுமையையும்; இடையே விலங்குகளான் நிகழக் கூடிய தீங்கினையும்; களவொழுக்கம் ஊரார் அறிய வெளிப்பட்டுவிடுமோ என வும், செவிலி இக்களவொழுக்கத்தினை அறிந்துவிடுவாளோ எனவும், தலைவி தலைவனொடு களவொழுக்கம் நிகழ்த்துவ தனை அறியாத அயலார் தலைவியை மணம் பேச வந்துவிடு வார்களோ எனவும், தமது உள்ளம் கவற்சியுறுவதையும்; தலைவியும் தோழியும் அஞ்சும் களவுக்காலம். (தொ. பொ. 146 நச்)

‘நால்வர்க்கும் உரிய ’ எனப்பட்ட பண்புகள் -

{Entry: I09__501}

நோயும் இன்பமும் ஆகிய நிலைமைகட்கு உரிய காம மிகுதிக்கண் புலனுணர்வும், துணிதற்கு ஆற்றாத நாணமும், அறிவு செயற் படாத மடமும் ஆகிய மூன்றும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய தலைவன் தலைவி செவிலி நற்றாய் என்னுமிவர் நால்வர்க்கும் உரியவாம்.

ஈண்டு நாண் என்றது வினைபற்றி வருவதோர் பண்பாகிய ‘கருமத்தால் நாணுதல்.’ மடம் என்றது, அறியாமை; பெண் மைக்குணமாகிய மடத்தின் இது வேறு. (தொ. பொருளியல் 6 ச.பால.)

நாவாய்ப்பறை -

{Entry: I09__502}

நெய்தல் நிலப்பறை. (இறை. அ. 1 உரை).

நாள் எண்ணி வருந்தல் -

{Entry: I09__503}

கற்புக் காலத்தில் தலைவன் பொருள்வயின் பிரிய அவன் மீண்டும் வாராமை குறித்து வருந்திய தலைவியின் வருத்தம் கண்டு கவலையுற்ற தோழி, “இத்தலைவியை வருந்துமாறு தனித்து விடுத்துச் சென்ற தலைவன் சென்ற நாள்களை எண்ணும் செயலால் நிலனும் குழி விழுந்தது; நாள்களைக் குறித்த என் விரலும் தேய்ந்தது” எனத் தலைவன் சென்ற நாள்களை எண்ணி வருந்தியது. நிலன் - சுவராகிய இடம்.

இது ‘பொருள் வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 345)

நாளது சின்மை ஒன்றாமை -

{Entry: I09__504}

யாக்கை நிலையாது என்று உணரும் உணர்ச்சியைப் பொருந் தாமை. (தொ. பொ. 41 நச்).

நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

{Entry: I09__505}

வாழ்நாள்கள் சிலவே ஆதலின் விரைவில் இல்லறத்துக்குத் தேவையான பொருளைத் தேடி வந்துவிடவேண்டும் என்ற உணர்ச்சியை, அச்சிலவாகிய வாழ்நாளிலும் இளமைப் பருவம் என்பது மிகக் குறுகிய காலத்தது ஆதலின் காமச் செவ்வி நுகர்தற்குரிய அவ்விளமைப் பருவம் வீணே கழித லாகாது என்ற உணர்ச்சி தடுத்தற்கண் தலைவன் கூறுவது. (தொ. பொ. 41. நச்.)

எ-டு: “நெஞ்சே! தம் ஆண் வங்காப்பறவை நீங்கப்பெற்றமை யால் தனித்த செங்கால் பறவைகள், வல்லூறு என்னும் வலிய பறவை தம்மை இரையாகக் கொள்ளவேண்டித் தம்மேல் வந்து வீழ்ந்ததாக, தம் ஆண்பறவையைக் காணாது, வேய்ங்குழலது இசை போலும் குரலுடையவாய்க் குறிய பல ஒலிகளால் ஆண் பறவையை அழைக்கும்படியான குன்று கெழு சிறுவழிகள் கடத்தற்கு அரியன என்று எண்ணாமல், ‘மறப்பு அரிய நம் காதலி இங்கே தங்க நான் செல்வேன்’ என்று துணிவது, இங்கே நமது இளமைப்பருவத் திற்கு முடிவேயாகும்.” (குறுந். 151) என்று, பொருள் தேடத்துணிந்த தனது நெஞ்சிற்குத் தலைவன் கூறுவது.

நாற்றத்தால் ஐயமுற்று ஓர்தல் -

{Entry: I09__506}

தலைவியிடம், தோழி, தம்மனோர்பால் இல்லாத புதிய மான்மதச் சாந்தின் மணமும் பிற மணமும் கலந்து வீசுவதைக் கொண்டு ஐயமுற்று அவளுக்குத் தலைவனொடு புணர்ச்சி உண்டென்று துணிதல். இது களவியலுள் ‘பாங்கிமதியுடன் பாடு’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 507)

நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -

{Entry: I09__507}

தலைவியின் உடலில் புதுமணம் வீசுவது கண்டு தலைவி உள்ளம் முன்பு போலாது வேறாகத் திரிந்துள்ள செய்தி பற்றித் தோழியைச் செவிலி வினவுதல். ‘அன்னவை பிறவும்’ என்றதனான் கொள்ளப் படுவதொரு கூற்று இது. (தொ. பொ. 113 இள.)

நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -

{Entry: I09__508}

பயின்றதன்மேல் அல்லது செல்லாத தாது ஊதும் வண்டு, ஒருவரான் செயற்கையாகச் செய்யப்பட்ட அணிகலன்கள், முலையினும் தோளினும் எழுதும் தொய்யிற்கொடி, கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் பூ, மனிதக்கண்கள், முன்பு கண்டறியாத வடிவத்தைக் கண்டவழி மனத்திற் பிறக்கும் அச்சத்தான் ஏற்படும் தடுமாற்றம், கண் இமைத்தல், ஆண் மகனைத் தனித்துக் கண்டவழி மனத்தில் பிறக்கும் அச்சம், கால் நிலம் தோய்தல், உடல்நிழல் தரையில் தோன்றுதல், நெற்றியில் வியர்வை தோன்றுதல் முதலியவற்றைக் கொண்டு தேவருலக மகளிரையும் நில உலக மகளிரையும் வேறுபாடு கண்டுகொள்ளலாம் என்பதனையும் நூலறிவான் அறிந்த தலைவன், தான் கண்டு ஐயுற்ற தலைவியின் நெற்றியில் வியர்வை அரும்புதலினானும், அவள் அடிகள் நிலத்தில் தோய்தலினானும், செவ்வரி பரந்த அவள் கண்கள் இமைத்தலினானும், “இவள் தேவர்உலக மகள் அல்லள்; இந் நிலஉலக மகளே” என்று ஐயம் தெளிந்து தன்னுள் கூறிக்கொள்ளுதல். (பு.வெ.மா. 14-3) (*தொ. பொ. 95 நச்.)

நிகழ்ந்தது கூறி நிலையல் -

{Entry: I09__509}

பொருள் முதலியன கருதிப் பிரிய விரும்பும் நெஞ்சிற்குத் தலைவன் தன் முன்னைய பிரிவு அனுபவங்களை எடுத்துக் கூறித் தலைவியைப் பிரியாது இல்லின்கண்ணேயே இருத்தல்.

எ-டு : நற். 3. (தொ. பொ. 47 இள.)

தலைவன் கூறிய கூற்றினைத் தலைவியும் தோழியும் தம் மனத்துக் கொண்டு பின் தலைவன் பிரியக் கருதும்வழி அவனிடத்தில் எடுத்துக் கூறல். இது பாலைத் திணையாம். தலைவன் பிரிந்தவழி ஆற்றாத தலைவிக்கு அவன் முன்பு கூறிச் சென்ற கூற்றைத் தான் எடுத்துக் கூறித் தோழி ஆற்றுவித்தல் போல்வன; இவையும் பாலைத்திணையாம்.

எ-டு : கலி. 18, அகநா. 61 (44 நச்.)

காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி அதன் கண் ஈடுபடுதல்; இஃது அகத்துறை ஒழுக்கமாம். தலைவனும் தலைவியும் தம் மனத்திற்குக் கூறிக்கொள்ளுதலும், தோழி யிடம் கூறுதலும் உண்டு.

எ-டு : குறுந். 30, அகநா. 5. (43 பாரதி.)

தலைவியும் தோழியும் தலைவன் நடக்கைபால் ஐயம் கொண்டு அவனிடம் நிகழ்ந்தனவற்றை நினைந்து பேசிக் கொண்டு இல்லத்தில் இருப்பினும், அவர் உள்ளம் பிரிவையே நாடுதலால் அதுவும் பிரிவின்பாற்படும். (189 குழ.)

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவாதல் -

{Entry: I09__510}

முன்னர் நிகழ்ந்த ஒன்று பின்னர் அதே காரியத்தைத் தொடங்கு முன் நன்கு எண்ணி முடிவு செய்யக் காரண மாதல்.

எ-டு : நற். 62 (தொ.பொ. 46 இள.)

முன்னர்த் தலைவன்கண் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைத்தற்கும் (கலி.4), முன்னர்த் தலைவியின்கண் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் (அக நா. 5 ) நிமித்தம் ஆதல். (43 நச்)

காதலர் வாழ்க்கையில் முன்நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பின் நினைப் பதற்கும் எடுத்துக் கூறுவதற்கும் உரியன.

எ-டு : குறுந். 25, அகநா. 61 (42 பாரதி).

தலைவன் தலைவியருள், முன் தலைவன்செயல்களைத் தலைவியும், தலைவி செய்த செயல்களைத் தலைவனும் பின் எண்ணிப் பார்க்கும்போது அவரவர் உள்ளக்கிடக்கையை அறிதற்குக் காரணமாக அவை அமையும்.

எ-டு: கலி. 4, அகநா. 5 (188 குழ.)

நிச்சமும் பெண்பாற்குரியன -

{Entry: I09__511}

அச்சமும் நாணும் மடனும் பயிர்ப்பும் பேதைமையும் நிறையும் என்றும் பெண்பாற்குரிய பண்புகளாம். (தொ. பொ. 99 நச்.)

நிதிவரவு கூறாநிற்றல் -

{Entry: I09__512}

தலைவன் வரைபொருட்குப் பிரிந்து காலம் நீட்டிக்க, பிரிவு குறித்து ஆற்றாதிருந்த தலைவியிடம் தோழி, “நங்காய்! நம் உறவினர் வேண்டியபடியே பரிசப்பொருள்களை நம் தலை வன் அனுப்பியுள்ளான். இனி, அவன் நின்னை விரைவில் வரைந்துகொள்வான். இப்பரிசப்பொருள்களை நீ காண்பா யாக!” என்ற கூறுதல்.

இதனை ‘வரைவுமலிவு’ எனும் தொகுதிக்கண் ‘காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உரைத்தல்’ என் றும் கூறுப. (ந.அ. 174)

இது திருக்கோவையாரில் ‘வரைபொருட்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 298)

நிமித்தம் என்பதன் பொருள் -

{Entry: I09__513}

நிமித்தமாவது புணர்தல் முதலிய காரியங்கள் நிகழ்தற்கு ஏதுவாக அவற்றைச் சார்ந்து நிகழும் நிகழ்ச்சிகளாம். ஆதலால் அதனை பிரித்து ஓதினார். (தொ. அகத். 16 ச.பால.)

நிமித்தம் போற்றல் -

{Entry: I09__514}

உடன்போக்கை அறிந்தபின் நற்றாய், அதற்குக் காகம் கரைதல் போன்ற நல்ல சகுனங்கள் ஏற்படுமாறு, தலைவி மீண்டு வருதல் வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுதல்.

“காகமே! நீ கரைந்தால் ஊருக்குப் போனவர் மீண்டு வருவர் என்று கூறுவர். நீ இன்று என் மனைக்கண் கரைவாயாக. என் மகள் திரும்பி வருமாறு அருளினால் உனக்கு நல்ல சோறு போன்றவை பலியாகத்தருவேன்” (தஞ்சை. கோ. 334) என்பது போன்ற நற்றாய் கூற்று.

இது வரைவியலில் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’க் கண்ண தொரு கூற்று. (ந.அ. 186)

இதனைத் திருக்கோவையார் ‘கொடிக்குறி பார்த்தல்’ என்னும் (235).

நிரைகோட்பறை -

{Entry: I09__515}

நிரை கவரும்போது அடிக்கும் பாலை நிலத்துப் பறைவகை. (இறை. அ. 1 உரை)

நிலத்தின்மை கூறி மறுத்தல் -

{Entry: I09__516}

தோழியிற் கூட்டத்தில் தோழி தலைவனைச் சேட்படுக்கத் திட்டமிட்டிருக்கவும், தலைவன் சந்தனத்தழை கொண்டு செல்ல, அது தமக்குத் தகாது என்று தோழி கூறியது கேட்டு மற்றெரு தழையினைத் தலைவன் கொண்டு செல்ல, “இக்குன்றின்கண் காணப்படாத தழையை நீர் எமக்குக் கொடுத்தால், ‘இத்தழை எப்படி இவர்களுக்குக் கிட்டியது?’ என ஊர்மக்களிடையே ஆராய்ச்சி ஏற்பட, எம் குடிக்கே பழியாகும்; ஆதலின் இத்தழை எங்களுக்கு ஆகாது” என மறுத்துக் கூறியது.

இது சேட்படை எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 92)

நிலத்தெய்வம் -

{Entry: I09__517}

1. ஐந்திணைகளுக்கும் முறையே இன்ன இன்ன தெய்வம் உரிமையுடையது என்ற முறையால் அவ்வந் நிலத்துக்கு உரிய தெய்வம். அஃதாவது முல்லைக்கு மாயோன், குறிஞ்சிக்குச் சேயோன், மருதத்திற்கு வேந்தன் (-இந்திரன்), நெய்தலுக்கு வருணன், (பாலைக்குக் காளி) என்று வரையறுத்துக் கொள்ளப் பட்ட தெய்வம்.

2. நிலமாகிய தெய்வமெனப் பூமகளையும் குறிப்பர். (L)

நிலமயக்கம் -

{Entry: I09__518}

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நால்வகை நிலங்களும் ஒன்றன் எல்லையை மற்றதன் எல்லை தொடங்கு மிடத்து இரு நிலத்துச் சுவடுகளும் உண்டு ஆதலின் அப்பகுதி களில் காணப்படும் கருப்பொருள்கள் இரு நிலத்துக்கும் உரியவாம் நிலையே இது (சீவக. 718 நச்)

நிலயம் -

{Entry: I09__519}

மருத நிலத்து ஊர்; நிகமம், நிகாயம் என்பதும் அது (சூடா. V ஆவது 40)

நிலவு கண்டு அழுங்கல் -

{Entry: I09__520}

நிலாவினைப் பார்த்துப் பிரிவால் வருந்துதல். தலைவன் பொருள்வயின் பிரிந்தவிடத்து அவன்பிரிவால், பண்டு மகிழ்ச்சி தந்த நிலவு இப்பொழுது துன்பம் தந்ததாக, “வானத்தில் தோன்று நிலவு கணவரால் பிரியப்பட்ட பெண்களின் உயிரை வாட்டும்; ஆயின் கணவரைக் கூடி யிருப்பார் தோள்களுக்குப் பூரிப்பைத் தரும்” எனத் தலைவி தான் நிலவால் துன்புற்றுரைத்தல்.

இது கற்புக் காலத்துப் ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல். 385)

நிலவு வெளிப்பட வருந்துதல் -

{Entry: I09__521}

களவுக்காலத்தில் இரவுக்குறிக்கண் தலைவனுக்கு வரும் வழியில் உண்டாகும் ஏதம் கூறி வரைவு கடாவிய தோழி, மறுநாள் தலைவன் இரவுக்குறிக்கண் வந்து நிற்க, நிலவு வெளிப்பாட்டால் சென்று எதிர்படமாட்டாமல் தாங்கள் வருந்தி நின்ற செயலை அறிவிப்பாளாய், அவன் சிறைப்புற மாக நிற்க, நிலவொடு புலந்து கூறுதல்.

இஃது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 111)

நிலவு வெளிப்படுதல் -

{Entry: I09__522}

தலைவன் இரவில் குறியிடம் வருவதற்கு இடையூறாக நிலவு தோன்றி விடுதல். இது களவியலுள் ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இதனை ‘வருந் தொழிற்கு அருமை’ எனப்படும் கூற்றுக்களுள் ஒன்றாகவும் கொள்ளலாம்.

இது தலைவிகூற்றாகவும் தோழிகூற்றாகவும் வரும் (ந. அ. 161)

நிலை கண்டுரைத்தல் -

{Entry: I09__523}

தனது பிரிவு தாங்காமல் தலைவி தான் செயலற்று மதியொடு வருந்தி உரைப்பது கேட்ட தலைவன், அவள் துயரம் போக்க மனைஎல்லைக்குள்ளேயே வர, அது கண்ட தோழி, “நீ இங்ஙனம் வந்துள்ளதை எமர் கண்டால் நின்நிலை என்ன ஆகும்? தலைவி உயிர்வாழல் முடியுமோ? நீ இனி இங்ஙனம் வாரற்க. விரைவில் தலைவியை வரைந்து கொள்க” என்றாற் போலக் கூறல்.

இதனை ‘ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல்’ என்பதன்கண் அடக்குப. (இ. வி. 521)

இஃது ‘இரவுக்குறி’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 521, கோவை. 178)

நிலை கூறு கிளவி -

{Entry: I09__524}

தலைவிநிலையைச் சொல்லும் சொற்கள்; பாங்கன் தலைவன் சொல்லியவாறே குறியிடத்துச் சென்று தலைவிநிலையைக் கண்டு, “புனத்தயலே பெண்யானை போன்ற நடையினை உடையாள் நிற்பதைக் கண்டேன்” (கோவை. 34) என்றாற் போலத் தலைவனிடம் கூறுதல்.

இக்கூற்றுப் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணது. (க. கா. பக். 33)

நிலைமை கூறல் -

{Entry: I09__525}

தோழியிற் கூட்டத்து இறுதியில் தலைவன், தானும் தலைவி யும் மனம் பொருந்தியிருக்கும் நிலையைத் தன்னுள் கூறிக் கோடல். இது தோழியிற் கூட்டத்துப் பகற்குறி எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 24).

நிலைமை நினைந்து கூறல் -

{Entry: I09__526}

கற்புக் காலத்தில் வேந்தற் குற்றுழிப் பிரிவின்கண் வினை முற்றிய பின் தலைவியைக் காண மீள வருகின்ற தலைவன், “புறாக்கள் துணையொடு துயின்று மனைமுன் விளையாடு வதனைக் கண்டு, ‘இது நமக்கு அரிதாயிற்று!’ என்று என் நிலைமை நினைந்து தலைவி ஆற்றாது இருப்பாள்; நீ விரைந்து தேரைச் செலுத்துவாயாக!” என்று தலைமகளது நிலையை மனங்கொண்டு தேர்ப்பாகனுக்குச் சொல்லுவது.

இது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 328)

“நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: I09__527}

“இக்கண்கள் காட்டியதால்தான் நாம் அன்று தலைவனைக் கண்டோம்; இக்கொடிய காமநோயையும் பெற்றோம். இன்று அக்கண்களே அக்காதலனைக் காட்டுமாறு நம்மிடம் சொல்லி அழுகின்றனவே, இஃது ஏன்?” என்ற தலைவி கூற்று. (குறள் 1171).

“மிக விரும்பி நெகிழ்ந்து இடைவிடாமல் அன்று அவரைப் பார்த்த என்கண்கள், இன்று உறங்காமல் வருந்தும் துயரத்தை உழந்துஉழந்து அழுது தம்மிடமுள்ள கண்ணீர் அற்றுப் போகுக!” என்ற தலைவி கூற்று. (குறள் 1177.) (குறள் 1171 முதலாக ஏழு.)

“நின்குறை நீயே சென்று உரை” எனல் -

{Entry: I09__528}

தோழி தலைவனை நோக்கி, “நினது இன்றியமையாமையை நீயே சென்று தலைவியிடம் கூறுக” என்று கூறுதல்.

இது களவியலுள் ‘பாங்கியிற்கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 114).

“நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -

{Entry: I09__529}

தலைவன் தன் பாங்கனிடம், “இச் செயலை நீ உன் காரியம் போல நினைத்து முடித்துத்தரவேண்டும்” என்று கேட்டுக் கொள்ளுதல்.

கதிரவன் வெப்பம் தாக்கும் பாறையில் கையில்லாத ஊமன் ஒருவனைத் தன் கண்களால் காவல் காக்குமாறு வைக்கப் பட்ட வெண்ணெய்த்திரள் உருகிப் பாறை முழுதும் பரவிவிடுவது போல, தலைவி தந்த காமநோய் என்நெஞ்சம் முழுதும் பரவி விட்டது. என்னால் இந்நோய் பொறுத்துக் கொள்ள அரிதாகி விட்டது. பாங்க! உனது சொந்தக் காரியத் தைக் குறிக்கொள்வது போலப் பொறுப்புடன் என்னுடைய இந்நோய் தீரும் செயல்களைச் செய்க” (குறுந். 58.) என்ற தலைவன் கூற்று.

இது பாங்கற் கூட்டத்தின்கண்ணதொரு கூற்று. உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 505 உரை)

“நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

{Entry: I09__530}

“தோழி! இப்புலவியினாலேயே, என் போலிவன்மை கொண்ட நெஞ்சம் இளகும் செயல்களாகிய குளிர்ப்பக் கூறுதலையும் தளிர்ப்பத் தழுவுதலையும் தலைவர் நிகழ்த்துவார். அதன் பின் அவரைச் சற்றும் பிரியாது தழுவி இன்பம் நுகரலாம்” என்று தலைவன் தனக்குச் செய்ய இருக்கும் தண்ணளியைத் தலைவி தோழியிடம் குறிப்பாகக் கூறுதல். (குறள் 1324)

நின்று நெஞ்சுடைதல் -

{Entry: I09__531}

களவுக்காலத்தில் இரவுக்குறிக்கண் தலைவன் வரும் வழியது அருமை கூறி இரவுக்குறியைத் தோழி மறுத்தாளாக, அது கேட்ட தலைவன், “மனமே! எய்துதற்கு அரிய தலைவியை விரும்பி நீ மெலியும் இச்செயலுக்கு யான் ஆற்றேன்” எனத் தனது இறந்துபாடு தோன்ற மனமுடைந்து வருந்தி நிற்பது.

இஃது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 150.)

நின்று வருந்துதல் -

{Entry: I09__532}

பாங்கற்கூட்டஇறுதிக்கண் தலைவன் தலைவியை அவள் தோழிமார்களை அடையுமாறு விடுத்துத் தான் அவ் விடத்தே நின்று அப்புனத்தின் சிறப்பினைக் கூறித் தலைவி யது பிரிவினை ஆற்றாது வருந்துதல்.

இதனை இடந்தலைப்பாட்டின்கண் ‘தலைவன் நீங்கற்கருமை நின்று நினைந்து இரங்கல்’ என்ற கூற்றாகக் கொள்ப. (இ. வி. 503. உரை).

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 148)

“நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -

{Entry: I09__533}

பரத்தையிற் பிரிவு நீங்கித் தலைவியின்பால் வந்த தலைவன் அவளது ஊடல் தணித்தற்காக அவள் சீறடிகளைத் தொழ முற்பட்ட போது, தலைவி, “இது செயல் வேண்டா; இதனை எங்கையர் (- பரத்தையர்) காணின் நன்றாகாது” என்று கூறித் தடுத்தாளாக, “நின்னையல்லது அவ்வாறு பரத்தையரில் ஒரு வரையும் நான் அறியேன்” என்று தலைவன் கூறுதல்.

“யான் பரத்தையர் யாரையும் அறியேன் என்று கூறுவதை நீ நம்ப மறுக்கிறாயா? கங்கையில் படிந்த அன்னம் அதனை விடுத்து உவர்க்கடலில் படியுமா?” (சீவக. 1017) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது கற்பியலில், ‘பரத்தையிற்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ வகையது. (ந. அ. 806)

நினைத்தமை கூறல் -

{Entry: I09__534}

பொருள்வயிற் பிரிந்து சென்றிருந்தகாலைத் தன்னை நினைத்த துண்டா என வினவிய தலைவிக்குத் தலைவன் உரைத்தல்.

“அமுதனையாய்! பகற்பொழுதெல்லாம் உருவெளிப்பா டாய் நான் காணும் இடங்களில் எல்லாம் எனக்கு உனது எழில்வடிவைக் காட்டிக்கொண்டிருந்தாய். இத்தகைய உன்னை நான் பிரியவே இல்லையே! பிரிந்தாலன்றோ மீண்டும் நினைத்தல் உண்டு?” என்ற தலைவன் கூற்று.

இது‘ பொருள்வயிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 558)

நினைந்தவர் புலம்பல் -

{Entry: I09__535}

புலம்பல் - தனிமை எய்துதல்.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி அவனொடு முன்னர்க் கூடியிருந்தபோது பெற்ற இன்பத்தை நினைத்து இப்பொ ழுது தனித்திருக்கும் நிலையில் வருந்துதலும், பாசறையிலிருக் கும் தலைவனும் தலைவியொடு முன்னர்க் கூடிவாழ்ந்த இன்பத்தை நினைந்து இப்பொழுது தனித்திருக்கும் நிலை யில் வருந்துதலும் ஆம். (குறள் அதி. 121. பரிமே.)

நினைந்து வியந்துரைத்தல் -

{Entry: I09__536}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிவின்கண் தலைவியைப் பிரிந்து பரத்தையரொடு புதுப்புனலாடத் திட்டமிட்ட தலைவன், “யான் தலைவியை நினையாது வேறொன்றன்மேல் உள்ளத்தைச் செலுத்தும்போதும் தலைவி என்னை நினைந்து என் உள்ளம் புகுகிறாள். யான் அவளை நினையுந்தோறும், பள்ளத்துப் புகும் நீர்போலத் தடுக்கவும் நில்லாது என் மனத்தள் ஆகின்றாள். ஆதலின் தலைவியைப் பிரிந்து பரத்தையர்மாட்டு இருத்தல் மிகவும் அரிதாகின்றது” என அவளை நினைந்து வியந்து கூறியது.

இது ‘பரத்தையற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 379.)

நினையுங்காலை வாயிலர் கேட்டல் -

{Entry: I09__537}

‘நிiனையுங்காலை’ என்றதனான், தலைவனும் தலைவியும் தனித்தனி கூற அவற்றைக் கேட்ட வாயிலர் பதின்மரும் தாம் கேட்ட கூற்றிற்குச் செய்யத்தகுவன தம்முள் ஆராய்ந்து கோடற்கு உரியர். எனவே, தலைவன் கூறப் பரத்தை கேட்ட லும், தலைவி கூறப் பரத்தை கேட்டலும் முதலியவற்றுள் புலனெறிவழக்கிற்கு ஏலாதன விலக்கப்பட்டன. (தொ. செய். 196. நச்.)

நினைவறிவு கூறி மறுத்தல் -

{Entry: I09__538}

தலைவன் தோழி நிலத்தில் மக்கள் வழக்கமாக அணியும் தழையாடையைக் கையுறையாகக் கொண்டு வரத் தோழி அவனை நோக்கி, “எனக்கு இதனை ஏற்றல் விருப்பமே. ஆயினும் தலைவியின் கருத்தையும் வினவி அறிந்து, அவளுக் கும் விருப்பமுண்டாயின் இதனைப் பெற்றுக்கொள்வேன்; அவள் விருப்பம் அறியாது யான் இதனைப் பெறேன்” என்று கூறுதல்.

இதனை ‘அவள் ஆற்றுவித்து அகற்றல்’ என்றும் கூறுப.

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இ. வி. 509) (கோவை. 93)

“‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

{Entry: I09__539}

“நான் வேற்று நிலத்துப் பூவைச் சூடினால், யான் காதலிக்கும் மற்றொரு பெண்ணுக்கு எனது பூவணி காட்டவே இதனைச் சூடினேன் என்று தலைவி என்மீது கோபம் கொள்கிறாள்” என்று தலைவன் தோழிக்குப் புலவிக்காரணம் கூறியது.

“நான் எது சொல்லினும் செய்யினும் குற்றம் கண்டு அவள் ஊடுவதால், அவளுடைய ஒப்பற்ற உறுப்புக்களைப் பார்த் துக் கொண்டு நான் வாளா இருந்தாலும், என் அவயவங்கள் நும் காதலிமாருள் யார்யாருடைய எவ்வெவ் அவயவங்களை ஒத்தன என்பதைக் கருதிப்போலும், இங்ஙனம் என் உடலைக் கூர்ந்து நோக்குகிறீர்!” என்று தலைவி புலப்பதைத் தலைவன் தோழியிடம் கூறுதல். (1320) - (குறள் 1313 முதலான எட்டும்.)

நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -

{Entry: I09__540}

தலைவன், “தலைவி இசைந்து கூறாவிடில், இவள் காக்கும் தினைப்புனம் யான் இவளை அகன்றால் மிக்க துயரம் செய்து சேய்த்து ஆகின்றது; இவளைத் தழுவ வரும்போது பேரின்பம் செய்து எனக்கு அணியது ஆகிறது” (கோவை. 48) என்று புனத்தைப் பற்றிக் கூறுவது போலத் தலைவியைப் பிரிந்திருப்பது தனக்கு இயலாதவாற்றை நினைத்து வருந்தி உரைத்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘நின்று வருந்தல்’ என்னும்.

இது களவியலுள் ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 503 உரை)

நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -

{Entry: I09__541}

உடன்போக்குச் செல்லும் தலைவி, வழியிற் காணும் அந்த ணர் முதலியோர் வாயிலாகத் தன் தோழியரிடம் தனது உடன்போக்கினை அறிவிக்குமாறு சொல்லி அனுப்புதல்.

“அந்தணீர்! யான் தலைவன் பின்னே வளமான காட்டு வழியில் உடன்போக்கு நிகழ்த்துவதை, என்பிரிவை நினைத்து வருந்தும் என் தோழியர்க்கும், ‘என்னேயிது!’ என்று வருந்தும் என்னுடைய அன்னையர்க்கும் நீங்கள் சென்று சொல் லுமின்” (அம்பிகா. 418) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 198.)

நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தல் -

{Entry: I09__542}

தோழியிற் கூட்டத்தில் தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கும் தோழி தலைவனிடம், “தலைவி தனித்து இருப்பின் அழுவாள்.

உடன் உறையும் தாயும் இல்லை. இனி முழுதும் இவள் நின் காவலினள் ஆவாள். இங்ஙனம் உன்னை அவளைக் காக்குமாறு பணிப்பதற்காக என்னை வெகுளற்க. நான் விடை கொள்கிறேன்” (அம்பிகா. 153) என்று கூறுதல் போல்வன.

இது ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று உரையிற் கொள்ளப்பட்டது, ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கும் இஃது உரிய கூற்றாம். (இ. வி. 509. உரை)

நீங்குமின் என்றல் -

{Entry: I09__543}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி தலைவனிடம் மகளிர் தனித்திருக்கும் இடத்தில் ஆடவர் வந்து நின்று உரையாடுதல் அழகிதன்று எனவும், இதனை அவள்தந்தை தன்னையர் காணின் தலைவற்கு ஊறு நிகழலாம் எனவும் கூறித் தலைவனை அவ்விடத்தை விடுத்துச் செல்லுமாறு கூறுதல் (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92. உரைமேற்)

இது ‘பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்’ எனவும் கூறப்படும். (ந. அ. 114).

நீடு சென்று இரங்கல் -

{Entry: I09__544}

பாங்கி தலைவனைப் பகற்குறி விலக்கிய மறுநாள், அவன் அக்குறியிடம் சென்று தலைவி வருகைக்கு நெடுநேரம் காத்திருந்து, “மான்காள்! மடமயில்காள்! தேன்காள்! கிளி காள்! எனது இன்னுயிராம் தலைவி, எனது மனம் சுழலும் நோயைத் தான் காணவேண்டியோ, தன்னை இல்லாமல் வெறுவிதாய இடத்தை நான் காணவேண் டியோ, இங்கு எழுந்தருளாது போயினள்?” (தஞ்சை. கோ. 160)என்றாற் போலக் கூறி வருந்தல்.

பகற்குறி இடையீடு எனும் தொகுதிக்கண்ணது இக்கூற்று. (ந. அ. 156).

நீடு நினைந்து இரங்கல் -

{Entry: I09__545}

தலவியைக் கூடுதற்குத் தாமதம் நேர்வதை நினைத்துத் தலைவன் வருந்துதல். இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

நீடேன் என்று அவன் நீங்கல் -

{Entry: I09__546}

வரைவிடை வைத்துப் பொருள் தேடச் செல்லும் தலைவன் தோழியிடம், “நான் காலம் தாழ்க்க மாட்டேன்” என்று சொல்லிப் போதல்.

“நான் நிதி தேடிக்கொண்டு விரைவில் மீள்வேன். நீடல் செய்யேன். இதனை நின் தலைவிக்கு நீ சொல்லுவதே ஏற்புடையது. அவள் தெளியுமாறு சொல்லுதி” (அம்பிகா. 305) என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இது களவியலில் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

“நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

{Entry: I09__547}

“தோழி! என் காமநோயாகிய இந்தப் பூ காலைப்போதில் அரும்பிப் பகற்போதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து மாலைப்போதில் மலர்கிறது. அதனாலேயே மாலையில் பெரிதும் துயருறுகின்றேன்” என்ற தலைவி கூற்று. (குறள். 1227)

“நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: I09__548}

“தோழி! காதலர் வாராத போதில் அவர் வரவை எதிர் பார்த்து என் கண்கள் உறங்குவதில்லை; அவர் வந்துவிடினோ மீண்டும் பிரிவாரோ என அஞ்சித் துயில் கொள்வதில்லை. ஆகவே என் கண்கள் ஒருபொழுதும் துயிலுதல் இல்லை” என்ற தலைவி கூற்று. (குறள் 1179)

‘நீயே கூறு’ என்றல் -

{Entry: I09__549}

தலைவியின் பரிசப்பொருள் கொடுப்பதற்குப் பொருள் திரட்டிவரத் தலைவன் வரைபொருட் பிரிதலைத் தோழி யிடம் கூறித் தலைவிக்குத் தெரிவிக்குமாறு வேண்டவே, ” நின் பிரிவு நினைத்து, நீ கூடியிருக்கும்போதும் வாடிவருந்தும் தலைவிக்கு நின்பிரிவை நீயே கூறிச் செல்க.” என்று தோழி கூறுதல்.

இதனை ‘நின் பொருட்பிரிவு உரை நீ அவட்கு என்றல்’ எனவும் கூறுப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட்பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 269)

நீர்க்கடவுள் -

{Entry: I09__550}

வருணன். ‘கதுமெனக் கண்ட சிங்கநீர்க்கடவுளை நினைந் தான்’ (உபதேசகா. உருத்திராக். 227) (L)

நீர்மைஅன்று என்றல் -

{Entry: I09__551}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி தலைவனிடம், “மகளிர் தனித்திருக்கும் இடத்தே புதியனாகிய ஆடவன் ஒருவன் வந்து நின்று உரையாடுதல் இருபாலாருக்கும் ஏற்ற தன்று” என்று கூறுதல். (குறிஞ்சி நடையியல்.) (வீ. சோ. 92 உரைமேற்.)

இதனைப் ‘பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்’ (ந. அ. 114) என்னும் கூற்றின்கண் அடக்கலாம்; ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணது இக்கூற்று.

‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -

{Entry: I09__552}

தோழி தலைவன் நிலையை மனங்கொண்டு தோழியிற் கூட்டத்தில் குறை நயப்பித்தவழி, தலைவி தோழிகூற்றை உட்கொண்டு செயற்படுவதால் நாண் அழிதலை மனத்தில் பொறுத்துக்கொண்டு அவளுடைய சொற்களை ஏற்றுத் தலைவனைக் கூடுதற்கு உடன்படுதல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

நெஞ்சம் மிக்கது வாய் சோர்தல் -

{Entry: I09__553}

பாங்கியிற் கூட்டத்துக்குப் பின் தலைவன் பிரிந்து சென்ற தனால் தன் நெஞ்சத்தில் மிகுந்து கிளர்ந்த துன்பத்தைத் தலைவி வாய்விட்டுக் கூறுதல்.

“தாங்க முடியாத காதற்சுமையைப் பொறுக்கும் என் ஆவி தனிமையில் வருந்தும்படி என்னை விட்டுப் பிரிந்து, என் நலத்தையும் கொண்டுபோன என் தலைவனது தேருடன் என் மனமும் போயிற்று!” என்று தலைவி கூறுதல்.

இது ‘பாங்கியிற் கூட்டம் ’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 157)

“நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: I09__554}

“உலகமே உறங்கும் நடுநிசியிலும் என் நெஞ்சு காமத்துக்கு அடிமையாகி அத்தொழிலில் ஈடுபட்டுக் கலங்குகிறது. கண்ணோட்டம் இல்லாக் காமத்துக்கு அடிமைப்பட்ட என் நெஞ்சுக்குத் தன் தன்மை என்பது இல்லாமல் போகிவிட்டது. ஆதலின் காமத்தை அடக்கும் ஆற்றல் என் நெஞ்சிற்கு இல்லை” என்ற தலைவி கூற்று. (குறள் 1252)

நெஞ்சு வலியுறுத்தல் -

{Entry: I09__555}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் பிரிந்து செல்லும் தலைவன், அப்பிரிவைப் பொறுத்துக் கொள்ளுமாறு தன் நெஞ்சைத் திண்மைப்படுத்துதல்.

“ஊழ்வினை தந்த இக் கூட்டம் நீட்டித்தால், பாங்கியர் இதனை அறிய நேரலாம். அது காரணமாக என் உயிரனைய காதலி கலங்குவாள். அதைக் கருதி நான் பிரிந்தாலும் இவள் சோர்வுறுவாள். இதை நினைந்தால் என்னுயிர் நடுங்குகிறது; உள்ளமும் உருகுகிறது. ஆதலின், நெஞ்சே! நீ எவ்வகையிலும் இங்கேயிருந்து வருந்துதல் கூடாது. பிரிந்து செல்லத் துணிக!” என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுதல்.

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’த் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 18)

நெஞ்சொடு கிளத்தல் -

{Entry: I09__556}

தலைவனது பிரிவிடத்து ஆற்றாளாகிய தலைவி தனக்குப் பற்றுக்கோடாக இருந்து ஆறுதல் சொல்லுவார் ஒருவரை யும் காணாமல் தன் மனத்தொடு செய்யும் வகையறியாது உரையாடுதல். (குறள் அதி. 125 பரிமே.)

நெஞ்சொடு கூறல் -

{Entry: I09__557}

களவுக்காலத்தே தலைவன் வரைபொருள்வயின் பிரிந்தமை கேட்டு வருந்தாநின்ற நெஞ்சினை நோக்கித் தலைவி, “நமக்கு ஏதம் பயக்கும் களவொழுக்கத்தினைத் தவிர்த்து மணம் செய்துகொண்டு குற்றமற்ற வாழ்வு வாழப் பொருள்தேடச் சென்ற நம் தலைவரது இச்செயல் நினக்கு வருத்தம் தருமாயின் இதனை விடுத்து நாம் வருத்தமற வாழும் உபாயம் உளதோ?” என்று அதன் வருத்தம் தீரக் கூறுதல்.

இதனைத் ‘தலைமகள் (பூங்குழை) இரங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட்பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை 272)

நெஞ்சொடு நோதல் -

{Entry: I09__558}

தலைவியைப் பிரிந்து பொருள் தேடிவர முடிவு செய்து பொருள் தேடப் புறப்பட்டுச் சென்ற தலைவன் நடுவழியில் மீள நினைத்துப் பின் மீளமாட்டாமல் பொருள்மேல் செல்லாநின்ற உள்ளத்தொடு தன் நெஞ்சினை நோக்கி, “மனமே! இல்லத்தே இருத்தல், பொருள் தேடப் புறத்தே புறப்படுதல் என்ற இரண்டனுள் நீ எதனை உறுதியாகப் பின்பற்ற முடிவுசெய்துள்ளாய்?” என்று தன் நெஞ்சொடு நொந்து கூறியது. (கோவை. 342)

இது ‘பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று.

நெஞ்சொடு புலத்தல் (1) -

{Entry: I09__559}

கற்புக்காலத்தில் பொருள்வயின் பிரிவில் நெஞ்சொடு நொந்து இடைச்சுரத்து வருந்திய தலைவன், “மனமே! பேயொடு பழகினாலும் அதனை விடுத்துப் பிரிதல் அரிது என்ப. அங்ஙன மிருப்பவும், அன்பே வடிவான தலைவியைப் பிரித்து என்னை இவ்வளவு தூரம் அழைத்துவந்துவிட்ட உனது வீண் அஞ்சாமை அஞ்சத் தக்கது” எனப் பின்னும் இடைச்சுரத்தில் தன் நெஞ்சொடு புலந்து கூறியது.

இது ‘பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 343)

நெஞ்சொடு புலத்தல் (2) -

{Entry: I09__560}

கற்புக் காலத்துத் தலைவனும் தலைவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருங்கால், புலத்தற்குரிய காரணங்கள் உள்ள காலத்தும் புலக்கக் கருதாது புணர்ச்சியைக் கருதி விரைகின்ற தன் மனத்துடன் தலைவி கோபம் கொள்ளுத லும், சிறுபான்மை தலைவன் தன் மனத்துடன் கோபம் கொள்ளுலும் ஆம். (குறள் அதி. 130 பரிமே.)

நெஞ்சொடு மறுத்தல் -

{Entry: I09__561}

கற்புக் காலத்துப் பொருள்வயின் பிரிவின்கண் இடைச்சுரத் துத் தலைவன் நெஞ்சொடு நொந்து புலந்து கூறிப் பின்னும் பொருள்மேற் சென்ற உள்ளத்தொடு தலைவியை நினைத்த நிலையில், “மனமே! பண்புநலம் சான்ற பொன் போன்ற தலைவியை விடுத்து வேறு பொன்னைத் தேடியோ என்னை வாழச் செய்யப்போகிறாய்! இதற்கு யான் உடன்படேன். நீயே செல்க” என, மேல் தொடர்ந்து போக எண்ணமின்றிப் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய நெஞ்சினிடம் மறுத்துக் கூறுதல்.

இது ‘பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 344)

நெஞ்சொடு மெலிதல் -

{Entry: I09__562}

கைக்கிளைத் தலைவி இரவில் இருள்நெறியில் தலைவன் இருப்பிடத்தைச் சென்றடைய விரும்பிய மனநிலையால் வருந்துதல்.

“நெஞ்சே! தலைவனைக் கூடி மகிழ விரும்பி அவனைத் தேடிக் கொண்டு இரவில் நள்ளிருளில் புறப்பட்டுச் செல்ல நினைத்த என்னை, ‘அது மகளிர்க்குத் தகாது’ என்று தடுத்த நீயே அவனை நினைத்துக்கொண்டு போய்விடுகிறாயே! இது நியாயமாமோ?” என்னும் தலைவி கூற்று.

இது கைக்கிளைப் பெண்பாற்கூற்றுக் கிளவிகளுள் ஒன்று. (பு. வெ. மா. 15-11)

நெஞ்சொடு மெலிதலின் பக்கம் -

{Entry: I09__563}

கைக்கிளைத் தலைவி இரவில் இருள் சூழ்ந்த நெறியில் தலைவனது இருப்பிடம் குறித்துச் செல்லும் தன் முடிவினை எல்லோருமே தெரிந்துகொள்வாராக என்று எண்ணிப் பேசுவது.

“நெஞ்சே! இனியும் என்னால் பொறுக்க இயலாது. எனது மெலிவை என் தலைவற்குக் காட்டத் துணிந்துவிட்டேன். அவனை அவன் இருப்பிடத்தே சென்று காணவும் துணிந்து புறப்பட்டுவிட்டேன். பொய்யாக அலர் பேசிப் பழிக்கும் மகளிர் இனித் தம்மனம் போன போக்கால் அலர் தூற்றுக.” என்ற தலைவி கூற்று.

இது கைக்கிளைப் பெண்பாற்கூற்று. (பு. வெ. மா. 15-12)

நெஞ்சொடு வருந்தல் -

{Entry: I09__564}

“முன்னர்ப் பொழிலிடத்தே கரிய புன்னைமரம் பொன்போல மலர்கின்ற, முத்துப் போலும் மணலையுடையதோர் இடத்தே என்னைக் கலந்து நீங்கிய தலைவர் சென்ற தேரின் பின்னர்ச் சென்ற எனது நெஞ்சம், அவ்விடத்து இன்று செய்கின்றது என்னோ? அறிகின்றேன் இலேன்” என்று தலைவி தன் நெஞ்சத்துள்ளே கூறி வருந்துதல்.

இது களவியலுள், ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 273)

நெய்தல் -

{Entry: I09__565}

கடலும் கடல் சார்ந்த இடமும்.

இப்பகுதியில் நெய்தல்கொடி மிகுதியாக இருத்தல் பற்றி இந்நிலத்திற்கு நெய்தல் என்ற பெயர் உண்டாயிற்று எனவும், கற்புக்காலத்தில் பகை தூது முதலிய கருதிப் பருவங் குறித்துப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்து வாராக் காலத்து இரக்கம் மிக்குத் தலைவி வருந்துதல் இயல்பாதலின், இவ் விரக்கம் என்ற உரிப்பொருள் பெரிதும் நிகழும் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகிய நிலப்பரப்பிற்கு இரங்கல் என்று பொருள்படும் நெய்தல் என்பது பெயராயிற்று எனவும் கூறப்படுகிறது.

நெய்தல் நடையியல் -

{Entry: I09__566}

வீரசோழிய உரையில், தலைவன் களவிலும் கற்பிலும், குறித்த நேரத்தும் நாளிலும் பருவத்தும் வாராவழித் தலைவி கடற்கரையாகிய நெய்தற்பகுதியை அடுத்து ஆண்டுள்ள கடல் கானல் கைதை முதலியவற்றொடு புலம்பி உரையாடு தலும், பகற்குறி- இரவுக்குறி-குறிவிலக்கல்- குறியிடையீடுகள்- வரைதல் வேட்கை-முதலிய செய்திகள் பற்றிய கிளவிகள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டுள்ள செய்யுள்; இரங்கல் என்ற ஒழுக்கம் பற்றிய நடப்புக்களை நிரல்படக் கூறல். (வீ. சோ. 96 உரைமேற்.)

நெய்தல்: நீர்நிலை, மக்கள் -

{Entry: I09__567}

நீர்நிலை: இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலையம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம்தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வளம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். (பிங். பக். 87).

மக்கள்: பரதவர்,நுளையவர், கடலர், வலையர், சலவர், திமிலர், அளவர்; நுளைச்சியர், பரத்தியர், கடற்பிணாக்கள்; கொண்கன், துறைவன், மெல்லன், புலம்பன், சேர்ப்பன் - உமணர், பஃறியர், கழியர், காலர், குழைச்சியர் - என்பனவும் கொள்ளப்படும். (திவா. பக். 40,41)

மக்கள்: பரதர், கலவர், களியர், நுளையர், பரவர், வலையர், திமிலர், பரதவர், கடலர், நெய்தலர்; குழைச்சி, நுளைச்சி, குரத்தி, பரத்தி. (நா. நி. 161)

மக்கள்: கடலர், திமிலர், சலவர், நுளையர், பரதர், வலையர்; பரத்தியர், நுளைச்சியர்; மெல்லன், புலம்பன், சேர்ப்பன், துறைவன், கொண்கன். (பிங். பக். 87)

நெய்தற்கருப்பொருள் -

{Entry: I09__568}

1. தெய்வம் - வருணன்

2. உயர்மக்கள்- கொண்கன், துறைவன், சேர்ப்பன், புலம்பன்; பரத்தி, நுளைச்சி

3. பொதுமக்கள் - நுளையர், திமிலர், பரதர், அளவர்; நுளைச்சியர், பரத்தியர், அளத்தியர்.

4. பறவை - கடற்காக்கை, அன்னம், அன்றில், கம்புள்.

5. விலங்கு - சுறாமீன், கரா (-முதலை), உமண்பகடு

6. ஊர் - பாக்கம், பட்டினம்.

7. நீர் - கேணிநீர், கடல்நீர், மணற்கிணற்று நீர், உவர்க்குழிநீர்.

8. பூ - நெய்தல், தாழை, முண்டகம், அடம்பு

9. மரம் - கண்டல், புன்னை, ஞாழல்.

10. உணவு - மீனும் உப்பும் விற்றுப் பெறும் பொருள்.

11. பறை - மீன்கோட்பறை, நாவாய்ப்பம்பை

12. யாழ் - விளரியாழ் (-நெய்தல் யாழ்)

13. பண் - செவ்வழி

14. தொழில் - மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், அவற்றை விற்றல், மீன்களைக் காய வைத்தல், அவற்றை உண்ண வரும் பறவைகளை ஓட்டுதல், முத்துக் குளித்தல், கடலாடல் போல்வன.

15. கொடி - அடம்பு. (தொ. பொ. 20 இள.; 18 நச்; சிலப். பதிகம். அடி; த. நெ. வி. 6-12; ந.அ. 24)

(சாமிநாதம் கூறும்) நெய்தற் கருப்பொருள்

விலங்கு - நண்டு, ஆமை.

மரம் - பனை, பட்டில், தில்லை.

தொழில் - வெண்சங்கு, முத்து, பவளம் எடுத்தல்.(சாமி. 79)

நெய்தற்குரிய பொழுது -

{Entry: I09__569}

ஆண்டு முழுதும் நெய்தற்குரிய பெரும்பொழுதாம்.

எற்பாடு நெய்தற்குரிய சிறுபொழுது.

எற்பாடாவது பகற்பொழுதின் முப்பது நாழிகைகளுள் இறுதியில் உள்ள கூறு என்று இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் கொள்ப. (தொ. பொ. 10 இள; 8 நச்.)

பாரதியார் எற்பாடு பகற்பொழுதின் பிற்கூறு எனவும், குழந்தை கதிரவன் புறப்படும் காலைநேரம் எனவும் கொள்வர். (அகத். 8)

நம்பி அகப்பொருள் ஆசிரியரும் சிவஞானமுனிவரும் எற்பாடு என்பதனைக் காலை நேரம் என்று கொள்வர். (ந. அ. 16; சூ.வி. பக். 52)

பகலின் பிற்கூறு நெய்தலுக்குச் சிறுபொழுதாதற்கு நச்சி னார்க்கினியர், “கதிரவனது வெப்பம் குறையத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நிழல் செய்யவும், உப்பங்கழிகளில் மேய்ந்து பலவகைப் பறவைகளும் தத்தம் இருப்பிடங்களை நோக்கி ஆணும் பெண்ணுமாக ஒருங்கு சேரவும், புன்னை முதலிய பூக்களின் நறுமணம் வீசத் தொடங்கவும், கடலிலே மதியம் உதிக்கத் தொடங்கவும், காதல் கைமிக்குத் தலைவி கடலிடத் தும் கடற்கரைச் சோலையிடத்தும் அடக்கம் நீங்கி வேட்கை புலப்பட உரைத்தலின் ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின், எற்பாடு நெய்தற்கு ஏற்ற தாயிற்று” என்று விளக்கம் தந்துள்ளார். (தொ. பொ. 8 நச்.)

“படுதல்-உண்டாதல். எற்பாடு-சூரியன் புறப்படும் நாள் வெயிற்காலை. விடியல் புலரி வைகறை என்பன ஒரு பொருட் கிளவி ஆதலின், விடியல் என்பது வைகறையைக் குறிக்குமே யன்றிக் காலை நேரத்தைக் குறிக்கும் சொல் எற்பாடு என்பதே. ஊடல் இறுதிக்கண் கூடல் நிகழ்வதற்கு வைகறை ஏற்றதே யன்றிக் காலை நேரம் ஏற்றதன்று. தலைவன் பரத்தையிற் பிரிந்தவிடத்துத் தலைவி இராக்காலம் முழுதும் வீணாகக் கழிந்தமை பற்றி இரங்குதற்குரிய காலம் எற்பாடு எனப்படும் காலைநேரமே. ஆதலின் காலை நேரமே நெய்தல் திணைக்குச் சிறுபொழுது” என்பர் சிவஞானமுனிவர். (சூ. வி. பக். 52, 53).

“எற்பாடு பிற்பகல் எனின், பிரிந்து சென்ற தலைவன் வரும் நேரம் ஆகையால், ‘இனிவருவான்’ என்று தலைவி ஆற்றி யிருப்பாளே அன்றி இரங்காள். இரவுமுழுதும் தனித்துக் கண் உறங்காது கழித்த தலைவி வைகறையும் கழிந்து சூரியன் உதிக்கும் காலைப்பொழுது வரவே, “இனிப் பகற்போது கழிந்தன்றித் தலைவன் வாரான்” என்று எண்ணி இரங்கு வாள் ஆதலின், நெய்தற்குச் சிறு பொழுது காலை ஆயிற்று.” (தொ. பொ. 8 குழ.)

எற்பாடு என்பது பிற்பகலே, காலைப்பொழுதன்று என்ப தனைப் பாரதியார் தக்க காரணங்களுடன் நிறுவியுள்ளார். (தொ. பொ. 8 பாரதி.)

நெய்யணி -

{Entry: I09__570}

தலைவி மகப்பெற்ற அண்மைக் காலத்தில் மகப்பேற்றால் உடம்பில் உண்டாய தூய்மையற்ற கசடுகள் நீங்க எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் மங்கல நீராட்டு. (தொ. பொ. 147 நச்.)

நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -

{Entry: I09__571}

மகப்பேற்றுப் புனிறு தீர எண்ணெய் நீராடி விட்டு இல்லம் புகுந்த நிலையில் தன்னை விரும்பி வந்த தலைவனுக்குத் தலைவி வருந்திக் கூறுதல். புண்ணுறீஇ-புண்ணுற்று-வருந்தி-புண்ணுறுத்தி-வருந்தி என்பதும் ஆம்.

“தலைவ! நீ பரத்தையருடன்கூடிய போது உன்மார்பில் ஏற்பட்ட குறிகளுடனும், அவர்கள் பூட்டிய மாலையுடனும் இங்கு வந்துள்ளாய். அவற்றை நீரொழுகும் வாயுடன் நின்புதல்வன் உண்ணும் என் தாய்ப்பால் சிதைத்துவிடும். ஆதலின் நீ என்னைத் தழுவுதல் வேண்டா” என்ற தலைவி கூற்று. (ஐங். 65)

இது தொல். கற்பியல் 6ஆம் சூத்திரத்துக் ‘கயந்தலை தோன் றிய காமர் நெய்யணி, நயந்த கிழவன் நெஞ்சு புண்ணுறீஇ, நளியின் நீக்கிய இளிவரு நிலையும், (தொ. பொ. 147 நச்.) என்றதனாற் கொண்டது.

நெருங்குதல் -

{Entry: I09__572}

அணுகி வந்து மனத்தில் நன்கு பதியுமாறு கூறுதல்.

இது தோழி தலைவியிடமும் தலைவனிடமும் முறையே பிரிவிடைத் துயருறும்போதும், பரத்தையிற் பிரிதல் முதலிய வற்றைக் கருதும்போதும் கூறும் மரபாகும். (தொ. பொ. 39, 150 நச்.)

நெற்குறி -

{Entry: I09__573}

தலைவன்பிரிவால் களவுக்காலத்தில், வருந்தும் தலைவியின் உடல்மெலிவு கண்டு, தாய் கட்டுவிச்சியை அழைத்துத் தலைவி நோய் பற்றி வினவ, அவளும் சுளகில் சிறிது நெல் பெற்று அதனை எடுத்துத் தூவி எண்ணிப்பார்த்து, “இந் நோய் முருகனால் வந்தது” என்று முடிவு செய்து கூறுதல்.

‘வரைபொருட் பிரிதல்’ கிளவிக்கண், ‘கட்டுவித்தி கூறல்’ எனும் கிளவியிடத்து இது பற்றிய குறிப்பு நிகழ்கிறது. (கோவை. 285)

நெறி அலைப்பு -

{Entry: I09__574}

‘வழங்கு கதிக்கொண்டன’ என்று நம்பி அகப்பொருள் கூறுவதனைச் (சூ.21) சாமிநாதம் நெறி அலைப்பு என்று கூறும். வழிப்பறி செய்து கவர்வன ஆகிய பாலைக் கருப் பொருள்; உணவில் அடங்கும். (சாமி. 75)

நெறி விலக்கிக் கூறல் -

{Entry: I09__575}

களவிடைத் தலைவியோடு உடன்போக்குச் சென்ற தலைவன் மாலைநேரத்தில் ஓரூரை அடைந்தானாக, அவ்வூரிலுள் ளார், “இனிச் செல்லும் நெறிக்கண் நன்மக்கள் இல்லை; நீயும் தனியை; இத்தலைவியும் வாடிப் போயிருக்கிறாள்; பொழுதும் சென்று விட்டது; இன்றிரவு ஈண்டுத் தங்கி நாளை விடியலில் புறப்படுவாயாக” என்று மேல் தொடர்ந்து நடத்தலை விலக்கிக் கூறியது.

இஃது ‘உடன்போக்கு’ என்ற தொகுதிக்கண் அமைந்த கூற்றுக் களுள் ஒன்று. (கோவை. 218)

நெறிவிலக்கு -

{Entry: I09__576}

களவுக் காலத்தில் தலைவியை இரவுக்குறிக்கண் கூடுதல் வேண்டி இரவில் ஏற்றும் இழிவும் உடைய வழியிலே அரவு புலி யானை எண்கு இவற்றிற்கு அஞ்சாது வரும் தலைவ னுக்கு ஏற்படக் கூடிய தீங்கினுக்கு அஞ்சித் தலைவி தோழி வாயிலாகத் தலைவனிடம் வழியது ஏதம் கூறி அவன் வருதலைத் தவிருமாறு வேண்டுதல். (மா. அ. பக். 148)

நெறி விலக்குவித்தல் -

{Entry: I09__577}

தலைவன் இரவுக்குறி கருதித் துன்பம் மிகுந்த வழியைக் கடந்து வருதல் வேண்டா என்று தலைவனிடம் கூறுமாறு தலைவி தோழியை வேண்டல்.

“ஒருநாள் நம்மை நினைத்துக் குறியிடத்து வந்தாலும் மிக்க பழி தூற்றும் இம்மலையில், நம் தலைவர் இனித் திருமண நாளுக்கு முன்வரின் அவருக்குத் தீங்கு நிகழும் என்பதைக் கூறுவாயாக” (அம்பிகா. 252) என்று தோழிக்குத் தலைவி கூறுதல்.

இது களவியலில் ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

{Entry: I09__578}

“தாயே! கடற்காக்கை எவ்விதத் தீங்குமின்றி ஓடத்தின் உட் கட்டைக்குள் முட்டையிடும் துறைவன் நம் தலைவிக்கு அருள் செய்யின், அவள் பண்டு போல் உணவு கொள்ளத் தொடங்குவாள்” என்ற தோழி கூற்று. (ஐங். 168)

‘நொந்து தெளிவு ஒழித்தல்’ -

{Entry: I09__579}

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள் இஃது ஒன்று.

ஒருகால் ஆயத்தை விட்டு நீங்கி நின்ற தலைவிக்கு இடந் தலைப்பாடு நேராதவிடத்து அவள் உளம் வருந்தித் தலைவன் தெளிவித்த தெளிவு ஒழிய நிற்றல். (தொ. கள. 21 ச. பால.)

நோக்குவ எல்லாம் அவையே போறல் -

{Entry: I09__580}

களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இஃது ஒன்று. நோக்குவ எல்லாம் அவையே போறல் : தம்மால் நோக்கப்பெறும் புள்ளும் மாவும் கடலும் கானும் முதலிய அஃறிணைப் பொருள்களும் தம்மே போல வேட்கை முதலாய உணர்வுகளான் உழல்வன போலத் தோன்றுதல். (தொ. கள. 9 ச. பால.)

மெய்யுறு புணர்ச்சி நிகழும் முன் தலைவனுக்கும் தலைவிக் கும் நிகழும் பத்துவகை நிலைகளுள் ஏழாவது.

தம்மான் காணப்பட்டன எல்லாம் தாம் கண்ட உறுப்புப் போன்று காட்சி வழங்குதல் என்பது. (தொ. பொ. 97 இள)

இந்நிலையினைத் தலைவற்கு மாத்திரம் கொள்வர் இலக்கண விளக்க நூலார். (இ. வி. 405)

இயற்கைப்புணர்ச்சி முதல் களவு வெளிப்படுந்துணையும் தலைவன் தலைவி என்ற இருவர்க்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் இஃது ஏழாவது.

நோக்குவ எல்லாம் அவையே போறலாவது-பிறர் தம்மைப் பார்க்கின்ற பார்வையெல்லாம் தம் மனத்துள் மறைவாக வைத்து நடத்தும் களவுப்புணர்ச்சியை அறிந்து பார்க்கின்ற பார்வையாகவே மயங்கிக் கொள்ளுதல். (தொ. பொ. 100 நச்).

நோக்கெதிர் நோக்குதல் -

{Entry: I09__581}

தலைவன் நோக்கியவிடத்துத் தலைவி எதிர்நோக்குதல். ‘நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானை கொண்டன்ன துடைத்து’ (குறள் 1082) ( L)

நோக்கொடு வந்த இடையூறுபொருள் -

{Entry: I09__582}

தலைவி தலைவனொடு களவொழுக்கம் நிகழ்த்தும் காலத்துப் பிறர் தன்னை இயல்பாக நோக்கினாலும், தன் களவொ ழுக்கத்தினை அறிந்து வைத்தே நோக்குவதாகக் கருதி, இரு வகைக் குறிகளையும் நிறுத்துவதனான் விளைந்த துயரம். இத்துயர் தீரத் தலைவி விரைவில் தன்னை மணக்குமாறு (தோழி வாயிலாகத்) தலைவனை வேண்டுவாள்; இன்றேல், அவனோடு உடன்போக்கிற்கு ஒருப்படுவாள். (தொ. பொ. 225 நச்)

ப section: 88 entries

பஃறியர் -

{Entry: I09__583}

நெய்தல்நில மக்கள்; பரதவர். (சூடா. 2:72)

பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்

{Entry: I09__584}

களவுக்காலத்தில் இரவுக்குறியில் சிறைப்புறமாக இருந்து தலைவி கண் துயிலாமையைக் கேட்ட தலைவன் காதல் மிகுதியால் தலைவிமுன் எதிர்ப்பட, தோழி அவனை அணுகி, “நீ இக் கொடிய இரவில் கொட்டும் மழையில் வந்துள்ள செயல் புண்ணின்கண் நுழையும் வேல் போல் எங்களை வருத்துகிறது. இதற்கு நுங்கள் மலையில் ஒரு மருந்து இருந்தால் தருவாயாக!” என்று கூறுதல்.

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 259)

பகல் முனிவுரைத்தல் -

{Entry: I09__585}

காமம் மிகுந்து வருந்திய கைக்கிளைத் தலைவி பகல் நேரத்தை வெறுத்துக் கூறுதல்.

“கல் நெஞ்சனான என் காதலன் என்னிடம் அருள்காட்டி வந்து என்னுடன் கூடி இன்ப மூட்டவில்லையே என்ற என் துன்பத்தைவிட அதிகமாய் இந்த ஊரார் கூறும் அலர் என்னை நலிகின்றது; அதைவிடக் கொடிது இந்தப் பகல். இஃது ஏன் வந்தது இப்போது?” என்பது போன்ற தலைவி கூற்று.

இது பெண்பாற்கூற்றுக் கைக்கிளையுள் ஒரு கூற்று. (பு. வெ. மா. 15-7)

பகல் வருவானை “இரவு வருக” என்றல் -

{Entry: I09__586}

“பலரும் காணப் பகலில் வர வேண்டா” என்றும், “இரவில் வருதலே தக்கது” என்றும் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

“நீ பகலில் தலைவியைக் காண வருவது அலர் உண்டாதற்கு வாய்ப்பு அளிப்பதால், இனி இரவிலேயே தலைவியது தொடர்பு கொள்ள வருவாயாக” (கோவை. 254) என்ற தோழி கூற்று.

இதனைப் ‘பழிவரவு உரைத்துப் பகல்வரல் விலக்கல்’ எனும் துறையாகக் கோவையார் கூறும். (254)

இது களவியற்கண், ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ.166)

“பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -

{Entry: I09__587}

தோழி தலைவனை இருபோதும் வரவேண்டா என விலக்குதல்.

“தலைவ! தலைவியைக் காண நீ பகற்பொழுது வரின் பழி விளையும். இரவில் வரின் அவள் கடுமையான காவலில் இருப்பதால் அவளைக் காணும் வாய்ப்பு நினக்கு எய்தாது. ஆதலின் இருபொழுது வருதலும் உனக்குப் பயன் தாராது. (விரைவில் தலைவியை மணந்து இன்பம் நுகர்தலை மேற் கொள்க)” என்பது போன்ற தோழி கூற்று. (கோவை. 261)

இதனை, ‘இரவும் பகலும் வரவு விலக்கல்’ என்றும் கூறுப. (கோவை.)

இது களவியலுள், ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ. 166)

“பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -

{Entry: I09__588}

தலைவனைப் பிரிந்து தலைவி கணமும் வாழ்தல் இயலாது மிகவும் துயருறும் அவல நிலையை நீக்க வேண்டித் தோழி அவனை இருபோதும் இடையறாது தலைவியைக் காணு மாறு வர வேண்டுதல்.

இது களவியலுள், ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

பகற்குறி (1) -

{Entry: I09__589}

களவுக்காலத்தில் தலைவி தலைவனைக் கூடுதற்கு வரை யறுத்த இடம்; அஃது அவள் இல்லத்து மதிற்புறத்தே தலைவன் எளிதின் உணர்ந்து வருதற்கு உரிய இடமாக வாய்க்கும். (தொ. பொ. 132 நச்)

பகற்குறியிடத்தைச் சூழ்நிலை நோக்கி அடிக்கடி மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.

பகற்குறி (2) -

{Entry: I09__590}

தலைவன் தலைவியைப் பகற்குறியிடத்துக் கூடுதல் என்னும் களவியற் கிளவித் தொகை. களவிற்குரிய பதினேழு தொகுதி களுள் இது பத்தாவதாகக் கிடந்தது. (ந. அ. 123)

பகற்குறி இடையீடு -

{Entry: I09__591}

பகற்குறி நாடி வந்த தலைவன் அக்குறிக்கண் செல்ல இயலாத வாறு தடைகள் சில நேர்தல். (இடையீடு-தடை) இது களவிற் குரிய கிளவித் தொகை பதினேழனுள் பதினொன்றாவதாகக் கிடந்தது. (ந. அ. 123)

பகற்குறி இடையீட்டு வகை மூன்று -

{Entry: I09__592}

விலக்கல் (-தலைவனும் தலைவியும் குறியிடம் வந்து சேறலைத் தோழி விலக்குதல்), சேறல் (-தலைவியைத் தோழி ஆடும் இடத்தினின்று அழைத்துச் செல்லுதல்), கலக்கம் -தலைவனை எய்தப் பெறாமையால் தலைவி மனம் கலங்குதலும் தலைவியைக் கூடப்பெறாமையால் தலைவன் மனம் கலங்குதலும் என்பன. (ந. அ. 155)

பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -

{Entry: I09__593}

“இம்மெல்லியல் கொடிச்சி காக்குமாறு தினைக்கதிர்களில் படிகின்ற இக்கிளிகட்கு, நெஞ்சே! நாம் அவை செய்த உதவி அறிந்து செயற்பால நன்மைகள் யாவை?” என்ற தலைவன் கூற்று. (ஐங். 288) (தொ. பொ. 103 நச். உரை)

இச்சூத்திரத்துள், ‘அவட்பெற்று மலியினும்’ என்றதற்கு இரட்டுற மொழிதலான் இது கொள்ளப்பட்டது.

பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -

{Entry: I09__594}

“தலைவி அனிச்சப்பூவைக் காம்பினையும் களையாமல் சூடியிருக்கிறாளே. அந்தப் பாரம் தாங்காமல் இவளுடைய இடை வருந்தி மாயுமே!” என்ற தலைவன் கூற்று. (குறள் 1115)

பகற்குறித் துறைகள் -

{Entry: I09__595}

1. குறியிடம் கூறல், 2. ஆடிடம் படர்தல், 3. குறியிடத்துக் கொண்டு சேறல், 4. இடத்துய்த்து நீங்கல், 5. உவந்துரைத்தல், 6. மருங்கணைதல், 7. பாங்கி அறிவுறுத்தல், 8. உள்மகிழ்ந் துரைத்தல், 9. ஆயத்து உய்த்தல், 10. தோழி வந்து கூடல், 11. ஆடிடம் புகுதல், 12. தனிகண்டுரைத்தல், 13. பருவம் கூறி வரவு விலக்கல், 14. வரைவுடம்படாது மிகுத்துக் கூறல், 15. உண்மை கூறி வரைவு கடாதல், 16. வருத்தம் கூறி வரைவு கடாதல், 17. தாயச்சம் கூறி வரைவு கடாதல், 18. இற்செறிப்பு அறிவித்து வரைவு கடாதல், 19. தமர்நினைவுரைத்து வரைவு கடாதல், 20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல், 21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல், 22. அயலுரை உரைத்து வரைவு கடாதல், 23. தினை முதிர்வு உரைத்து வரைவு கடாதல், 24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல், 25. தினையொடு வெறுத்து வரைவு கடாதல், 26. வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல், 27. இரக்கமுற்று வரைவு கடாதல், 28. கொய்தமை கூறி வரைவு கடாதல், 29. பிரிவருமை கூறி வரைவு கடாதல், 30. மயிலொடு கூறி வரைவு கடாதல், 31. வறும்புனம் கண்டு வரைவு கடாதல், 32. பதிநோக்கி வருந்தல் - என இம்முத்திரண்டும் ஆம். (கோவை. 116-147)

பகற்குறிவகை நான்கு -

{Entry: I09__596}

கூட்டல், கூடல், பாங்கிற் கூட்டல், வேட்டல் என்பன நான் கும் பகற்குறி வகைகளாம். (இவை பாங்கியிற் கூட்டத்தின் வகைகளுள் இறுதி நான்காவன) (ந. அ. 151)

பகைதணிவினைப் பிரிவு -

{Entry: I09__597}

இருவர்மன்னர் தம்முள் பகைகொண்டு போர் செய்தற்குச் சமைந்து நிற்பாரைப் போரிடாதவாறு சந்து செய்வித்து அமைதியைக் காத்தற்பொருட்டுப் பிரியும் தூதிற்பிரிவு. ‘தூதிற் பிரிவு’ காண்க. (இறை. அ. 35)

பகைதணிவினைப் பிரிவு : துறைகள் -

{Entry: I09__598}

1. பிரிவு கூறல். 2. வருத்தம் தணித்தல் என்பன. (கோவை. 314, 315)

பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -

{Entry: I09__599}

“நெஞ்சமே! என் புகழ்சால் சிறப்பின் காதலி தனித்திருக்க அவளைத் துறந்து இப்பாசறையில் வந்து தங்குமாறு என்னைச் செய்துவிட்டாய். இக்கார்காலத்தில் மாலைநேரத் தில் நல்ல காளைகளுடன் பசுக்கள் செல்லும் காட்சியை நினைக்குந்தோறும் தலைவியை நினைத்துக் கண்ணீர் உகுத்துக் கலங்குகின்றாயே. நின் செயல் நன்றாய் இருக்கிறதா?” (ஐங். 445)

என்றாற்போலப் பகைவயின் பிரிந்த தலைவன் பருவம் கண்டு தலைவியை நினைத்துத் தன் நெஞ்சத்தொடு தனிமைத்துயர் உறுதல்.

‘அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்’ என்றதனான், பிறவும் வேறுபட வருவனவற்றுள் ஒரு கூற்று இது.(தொ. பொ. 41 நச்.)

பகைவயின்பிரிவு -

{Entry: I09__600}

பகைவயின் பிரிவு கற்புக்காலத்துத் தலைவற்கு நிகழும் பிரிவுகளுள் ஒன்று. தன் பகைக்கு, அரசன் தானே செல்லுத லும் உண்டு; அவனொடு நட்புக்கொண்ட முடியுடை வேந்தர் குறுநில மன்னர் முதலாயினோர் துணையாகச் சேறலும் உண்டு. உழுவித் துண்ணும் வேளாளரும் அரசனுக் குத் துணைபோதலும் உண்டு. இப்பிரிவும் ஓராண்டின் எல்லைக்குட்பட்டது. நண்பனுக்கு ஏற்பட்ட பகையை அழிக்க உதவுதலும் (தொ.பொ. 25, 27, 30, 32, 189 நச்.) இப்பிரிவில் அடங்கும். (பொ. 41 நச்)

இதனை இறையனார் அகப்பொருள் ‘வேந்தர்க்கு உற்றுழிப் பிரியும் பிரிவு’ என்னும். (35)

பங்கயத்தொடு பரிவுற்றுரைத்தல் -

{Entry: I09__601}

தலைவன் களவுக் காலத்தில் ஒருவழித் தணந்தானாக, அவன் பிரிவினால், பறவைகளை அழைத்து அவற்றொடு வருந்திய தலைவி பின் மாலையில் கூம்பிக் காணப்படும் தாமரை மலர்களை நோக்கி, “இவை என் வருத்தம் கண்டு யான் வருந் தாதபடி விரைவில் கிழக்கில் எழவேண்டும் என்று ஞாயிற்றை நோக்கித் தம் கைகளைக் குவிக்கின்றன; ஆதலின் இவை என்மாட்டு அன்புடையனபோலும்!” என்று தாமரையோடு அன்பு பூண்டு உரைத்தது.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 190)

பசப்பு -

{Entry: I09__602}

பசலை; தலைவன் பிரிவால் தலைவியின் மாமைநிறம் மாற அந்த இடத்து வந்துசேரும் பீர்க்கம்பூ நிறத்தை ஒத்த சோகையைக் காட்டும் நிறம்.

மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொ. சொல். 308 நச்.)

படப்பை -

{Entry: I09__603}

மருதநிலத்து ஊர் [ சது. (முதலாவது) பக். 108 ]

படர்மெலிந்திரங்கல் -

{Entry: I09__604}

படர்-நினைவு

கற்புக் காலத்துக் தலைவன் சேயிடையிலும் ஆயிடையிலும் பிரிய அப்பிரிவினை ஆற்றாளாகிய தலைவி தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின் அந்நினைவால் மெலிந்து இரங்குதல். (குறள். அதி. 117 பரி.)

படாமை வரைதல் -

{Entry: I09__605}

படாமை-பிறரால் அறியப்படாமல். தலைவனும் தானும் நடத்தும் களவொழுக்கம் பிறர் அறிய வெளிப்பட்டு விட்டது என்ற எண்ணம் தலைவிக்குத் தோன்றுமுன், இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு இவற்றை அடுத்தோ, பாங்கியிற் கூட்டத்தில் பகற்குறி சிலநாள் நிகழ்த்திய பின்னரோ, இரவுக்குறி சில நாள் நிகழ்த்திய பின்னரோ, களவொழுக் கத்தை நீட்டிக்காமல், அதனால் பிறர் அறியவும் கூடும் என்று தலைவி எண்ணுதற்கு வாய்ப்புத் தாராமல், தலைவன் தலைவியை முறைப்படி கரணமொடு புணரக் கடிமணம் செய்துகொள்ளுதல். (தொ. பொ. 140 நச்)

படிறு -

{Entry: I09__606}

களவுப்புணர்ச்சி. (கோவை. 390) (L)

படுகர் -

{Entry: I09__607}

மருதநிலம். (காஞ்சிப். நாட்டுப். 131) (L)

படைத்து மொழிதல் -

{Entry: I09__608}

தானாக ஒன்றனைக் கற்பனை செய்து கூறல்.

தலைவன் தலைவி என்ற இருவருடைய துயரங்களையும் போக்கும் கடமையை உடைய தோழிக்கு இச்செய்தி மிக இன்றியமையாதது.

தலைவன் தலைவியைக் களவுக் காலத்தில் பெறுவதற்குத் தோழியின் உதவியை எதிர்நோக்கித் தழையும் கண்ணியும் கொண்டு அவளை அடுத்து நின்றவழித் தோழி, “யாங்கள் இருக்கும் இவ்விடம் என்னையன்மார் பலகாலும் வரக் கூடிய இடம். கூற்றுவனைவிடவும் கொடியவராகிய அவர்கள் ஆடவனாகிய நின்னை மகளிர் இருத்தற்குரிய இச்சோலை யிடைக் கண்டால் நினக்கு ஏதம் விளைப்பது உறுதி. ஆதலின் நீ நினக்கு உற்ற குறையை இவ்விடத்தினின்று அகன்று நின்று முடித்துக் கொள்வாய்” என்றாற் போலக் கூறுதல்.

இதனைக் கேட்ட தலைவன், “இவ்விடத்திலுள்ள தீங்கினைத் தோழி எனக்கு அறிவித்தது என்னிடத்துப் பரிவினாலன்றோ? அத்தகையவள் என் குறையை இன்னது என்று அறிந்து முடித்துவைத்தலும் கூடும்” என்று ஆற்றுவான். (இறை. அ. 12 உரை).

படைத்துமொழியான் மறுத்தல் -

{Entry: I09__609}

தோழியிற் கூட்டத்தில் தலைவனைச் சேட்படுக்கலுற்ற தோழி, தலைவன் தந்த தழையைத் தலைவிநினைவு அறிந்தே பெற இயலும் என்று கூறிச் சிறிது புடைபெயர்ந்து தலைவியைச் சந்தித்தாளைப் போல நடித்து, “இத்தழையை யான் மாத்திர மன்றி அவளும் விரும்புகிறாள். ஆயின் இது வெளியூர்த்தழை யாதலின் ‘இது வந்தவாறு என்னோ?’ என்று ஆராயப்படும். ஆதலின் இத்தழை எமக்கு ஏலாது” என்று அவனிடம் தழை பெற மறுத்துக் கூறல்.

இது ‘சேட்படை’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 94)

‘பண்ணிவிடுதல் பான்மையின் மொழிதல்’ -

{Entry: I09__610}

தலைவன் தலைவிமற்றொருத்தியை மணந்துகொள்ளுதற்குத் தானே எல்லா ஏற்பாடுகளையும் குறிக்கொண்டு செய்தவள் போலத் தலைவி பிறரிடம் கூறுதல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

பண்பு எய்த மொழிதல் -

{Entry: I09__611}

‘பெற்றோரினும் கணவனே சிறந்தவன்’ என்று கொண்டு, தலைவி தலைவனுடன் போயின செய்தியைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதல். இது ‘செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்’ (ந. அ. 178) எனவும் கூறப்படும் (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

பணை -

{Entry: I09__612}

1. மருதநிலப் பறை 2. மருதநிலம் (பிங். 3766) (L)

பத்துவகை அவத்தைகள் -

{Entry: I09__613}

தலைவனுக்கும் தலைவிக்கும் மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதன் முன் ஏற்படக் கூடிய பத்துவகை நிலைகள்.(தொ.பொ. 97 இள.)

தலைவனுக்கு மாத்திரம் மெய்யுறு புணர்ச்சி நிகழுமுன் ஏற்படக் கூடிய பத்து வகை நிலைகள். (இ. வி. 405)

காட்சி-தலைவியைக் கண்டு ஐயுற்றுத் துணிதல்.

வேட்கை- தலைவியைப் பெறல்வேண்டும் என்ற உள்ள நிகழ்ச்சி

உள்ளுதல் - இடைவிடாது நினைத்தல்.

மெலிதல் - உண்ணாமையான் உடல் மெலிதல்.

ஆக்கம் செப்பல்- தன் ஆற்றாமையைப் பாங்கனுக்குக் கூறல்.

நாணுவரை இறத்தல் - நாணத்தின் எல்லையைக் கடத்தல்.

நோக்குவ எல்லாம் அவையே போறல்-தன்னால் காணப் பட்ட எல்லாம் தான் கண்ட உறுப்புப் போலுதல்.

மறத்தல் - பித்தாதல்.

மயக்கம் - மோகித்தல்.

சாக்காடு - உயிரையும் விடத் துணிதல்.

இப்பத்து அவத்தைகளுள் முதல் எட்டும் களவு நிகழ்தற்குக் காரணமாம். இது தலைமகன் தலைமகள் இருவருக்கும் ஒக்கும். (இள.)

பதங்கம் பழிச்சல் -

{Entry: I09__614}

தலைவன் விளக்கினை அவித்த விளக்குப் பூச்சியை வாழ்த்துதல்.

தலைவி தலைவனோடு ஊடித் தனித்துத் துயின்றகாலை விளக்குப் பூச்சியை அவன் வாழ்த்துதல். (அம்பிகா. 473)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் கிளவிக்கண், ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் பகுதித்தொரு கிளவி; உரையிற் கொள்ளப் பட்டது. (இ. வி. 555 உரை)

பதிநிலை உரைத்தல் -

{Entry: I09__615}

‘பதிநிலை’ காண்க

பதி நோக்கி வருந்தல் -

{Entry: I09__616}

பகற்குறிக்கு வந்த தலைவன் தினை கொய்யப்பட்ட வறும் புனம் கண்டு வருந்தித் தலைவியது ஊர் பக்கத்தேயிருந்தும் தான் அங்குச் செல்ல இயலவில்லையே என்று அவளூரை நோக்கியவாறு தன்னுள் வருந்துதல்.

இதனைத் ‘தலைவன் குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதி மயங்கல்’ (ந. க. 156) எனவும் கூறுப.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 147)

பதிபரிசுரைத்தல் -

{Entry: I09__617}

தலைவியை உடன்போக்கின்கண் அழைத்துச் சென்ற தலைவன் தன் நகரிடைப் புக்கு, அவ்விடத்துள்ள குன்றுகள் வாவிகள் பொழில்கள் மாளிகைகள் கோயில்கள் இவற்றை யெல்லாம் தனித்தனிக் காட்டி, “இதுவே நம்பதி” எனத் தன்னுடைய ஊரின் தன்மையை அவளுக்குக் காட்டி யுரைப்பது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 223)

பயந்தோர்ப் பழிச்சல் (1) -

{Entry: I09__618}

கைக்கிளைத் தலைவன், “இத்தகைய பேரழகியைப் பெற்ற தாயும் தந்தையும் நீடூழி வாழ்க!” என்றல் போன்று தலைவி யின் பெற்றோர்களை வாழ்த்துதல்.

இஃது ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 14-5)

பயந்தோர்ப் பழிச்சல் (2) -

{Entry: I09__619}

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவன் தலைவி யின் பெற்றோரை, “துன்பக் கலப்பே இல்லாத இன்பப் பெட்டகமான இவளை நான் கூடி இன்புறும் வண்ணம் இவளைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும் வாழ்க!” என வாழ்த்துதல்.

இது களவியலில் ‘பிரிவுழிக்கலங்கல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (நற்.8) தலைவியைப் பெற்ற தாயை வாழ்த்தியதாகும். (ந. அ. 133)

பயன் (1) -

{Entry: I09__620}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று. (வீ. சோ. 90); இப்பாடலைப் பயின்றதனால் மனத்தில் நிகழும் பயன் இன்னது என்பது; வழிபாடு, அன்பு, வாய்மை, வரைவு, பிழையா நிலைமை, பெருமை, தலைமை, பொறை, போக்கு, புணர்வு, முயக்கு, நிறை, எச்சம், நேசம், நீர்மை, ஐயம் அகறல், ஆர்வம், குணம், பையப் பகர்தல், பண்பு, சீற்றம், காப்பு, வெறி, கட்டு, நேர்தல், பூப்பு, புலப்பு, புரை, புரைவி முதலிய பயன் களுள் ஒன்றனைக் கொள்ளுதல். (வீ. சோ. 96 உரை மேற்.)

பயில்வு கொண்டு ஐயுற்று ஓர்தல் -

{Entry: I09__621}

முன்பு செவிலியைத் தழுவி அணைத்துக்கொண்டு கிடந்த தலைவி, இதுபோது அதனை வெறுத்துத் தனித்துத் துயிலும் நோக்கத்துடன் தனியிடம் நாடுவதால் ஐயுற்று, இவள் தலைவனுடன் தொடர்புகொண்டிருப்பாள் எனத் தோழி துணிதல்.

இது களவியலில், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 139; இ. வி. 507)

பரத்தை -

{Entry: I09__622}

தலைவனொடு தொடர்பு கொள்வதைத் தன் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட, மனைவியல்லாத மகளிர் இனத் தாள். (வரைவில் மகள், பொதுமகள், விலைமகள் என இலக் கியங்கள் இவளைச் சுட்டும்; பொருட்பெண்டு என்பாளும் அவளே.)

பரத்தை கூறல் -

{Entry: I09__623}

விறலி தலைவியிடம் தலைவன் பரத்தையுடன் கூடியதைக் கூறி, அதுபற்றி அவள் தந்த பொருளைக் கொண்டு விழாக் கொண்டாடினாளாக, அவளைப் பரத்தை கடிந்துகொண்டு, “இவ்விழாப் போன்றவற்றால் தலைவன் எம்மிடம் வருவதைத் தடுத்தல் இயலாது” என்று கூறுதல்.

இஃது இருபாற்பெருந்திணைக்கண் நிகழ்வதொரு கூற்று. (பு. வெ. மா. 17:12.)

பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல் -

{Entry: I09__624}

கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரிவிடை, ஏனைப் பரத்தை யருடைய பாங்கியர், “தலைவனுக்கு வேற்றவர் தொடர்பு இன்றாம் வகை முந்துறக் காப்போம்” என்று தம்முட் கூறுவதைக் கேட்ட பரத்தைத்தலைவி, “இவனை ஆரப் புல்லும் பரத்தையரிடத்து இவன்அருள் செல்லாமல் விலக்கேனாயின், என்னிடத்து இவனைத் தந்து அழுது கொண்டிருக்கும் இவன்தலைவிக்கு நிகராவேன்!” எனத் தன்னை வியந்து கூறியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 372)

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது -

{Entry: I09__625}

“தலைவ! நின்னையின்றி யான் பொருந்தியிருப்பின் இனிமை யற்ற என் வாழ்வு என்ன வாழ்வாகும்? உறையூர் அவையிலே அறம் கெடாது நிலைபெற்றாற் போல, நீ என்னிடத்தே சிறந்த நட்புடனே அளவளாவி என் நெஞ்சினின்றும் என்றும் நீங்காது உள்ளாய். என்னை நாடி வாராவிடினும் நீ நலமாக உள்ளாய் என்ற நினைப்பினாலேயே யான் உயிர் வாழ் கிறேன்” என்ற பரத்தை கூற்று. (நற். 400)

பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -

{Entry: I09__626}

“தலைவ! உன் ஊரில் விடியற் காலையில் மலரும் தாம ரையை ஒப்ப அல்லிப்பூவும் பொலிவு பெறுவது போல, எங்களை ஒப்பப் பரத்தையர்க்கும் பெருமை ஏற்றப்பட்டுள் ளது. உன் காதற்பரத்தையைப் பற்றிக் குறை சொல்லப் பல செய்திகள் இருப்பினும், நான் ஒன்றும் கூறாமல் அடக்கிக் கொள்ளவும், அடக்கம் என்ற பெண்மைப் பண்பே இன்றி நின் பரத்தை என்னைப் புறங்கூறிக்கொண்டிருப்பது அழகு அன்று!” என்று தலைவி தலைவனிடம் கூறியது. (ஐங். 68)

பரத்தைமை -

{Entry: I09__627}

பரத்தைமை-அயன்மை. அஃதாவது தலைவன் தலைவியை மறந்து அவள்துயரைப் போக்க முயலாது தான் அயலவன் போல அன்பின்றி நடந்து கொள்ளுதல். ‘அவன்வயின் பரத்தை’ பரத்தை - பரத்தைமை. மரத்தைமை. (தொ. பொ. 111 நச்.)

பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -

{Entry: I09__628}

தலைவி பூப்புநாளில் தலைவன் பரத்தையரிடையே தங்குதல் உலகியலான அறத்திற்கு மாறுபட்டது எனக் கருதிப் பரத்தை தலைவனை விடைகொடுத்து அனுப்ப, தலைவன் தன் இல்லம் நோக்கி வருவதை அறிந்த பாடினி முதலிய வாயில்கள் ஓடிவந்து மகிழ்ந்து தலைவிக்கு அதனைத் தெரிவித்தல்.

“நம் தலைவன் தலைவியின் மெலிவை உணர்ந்து விரைவாக வந்து சேர்ந்துவிட்டான். ஆதலின் தலைவன் உண்மையில் சொன்ன வாய்மைவழி நிற்பவன்” (கோவை. 368) என்றாற் போல வாயில்கள் தலைவனைப் புகழ்ந்து கூறுதல்.

இது கற்பியலில், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

இது திருக்கோவையாருள் ‘வாயிலவர் வாழ்த்தல்’ என்னும் கூற்று. (368)

பரத்தையர் கண்டு பழித்தல் -

{Entry: I09__629}

செவ்வணி அணிந்து வந்த தோழியைக் கண்டு பரத்தையர் எள்ளி நகையாடுதல்.

“தோழிமீர்! குவளை போன்ற கண்ணும் கூந்தலும் கருகி, ஆடையும் நகில்களும் சிவந்து, நாணும் மடமும் வெளுத்து வாழும், துறைவனுடைய தலைவியைப் பற்றிப் பேசுதல் இழிந்த செயலாம்” (அம்பிகா. 456) என்பது போன்ற பரத்தையர் கூற்று.

இது கற்பியலில் ‘பரத்தையர் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 205)

பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -

{Entry: I09__630}

தலைவனால் தாம் உற்ற வருத்தத்தைப் பரத்தையர் தலைவி யிடம் வந்து கூறிப் பரிகாரம் தேடுதல்.

இது தலைவி தலைவனிடம், “ஐயா! என் கண்கள் உன்பிரி வால் பசலை பாய்ந்துவிட்டன. குவளைப்பூவின் அழகினை என் கண்கள் இழந்துவிட்டன. உறக்கமும் நீங்கிவிட்டது. அதைப் பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. உன்னால் துன்புறுத்தப்பட்ட பரத்தையர்கள் நீ செய்யும் கொடுமை களை என்னிடம் வந்து மனம் நொந்து கூறுகிறார்களே! அதற்குத்தான் பெரிதும் வருந்துகிறேன்” (கலி.77) என்ற கூற்றின்கண், பரத்தையர் தலைவியிடம் தம் துயரங்களைக் கூறுதல் சுட்டப்பட்டுள்ளது. (தொ. பொ. 235 நச்.)

பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -

{Entry: I09__631}

பரத்தையிற் பிரிந்த தலைவனை மீட்டும் தலைவிமாட்டுச் சேர்த்தற்குப் பாங்கன் தோழி பாணன் முதலியோர் அப் பரத்தையைத் தலைவனை விடுத்துத் தலைவியிடம் அவன் மீண்டு வர இசையுமாறு இரந்து வேண்டுதல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

பரத்தையர் நால்வர் -

{Entry: I09__632}

தலைவனால் மணம் செய்துகொள்ளப்பட்ட இல்லிடைப் பரத்தையர் என்ற காமக்கிழத்தியர், அவனால் தொடர்பு கொள்ளப்படும் இயலிடைப் பரத்தையர், அவனால் ஆடல் பாடல் கண்டும் கேட்டும் மகிழப் பயன் படுத்தப்படும் காதற்பரத்தையர், புதிதாகக் குடியேறி அவனால் விரும்பப் படும் நயப்புப் பரத்தையர் என இந்நால்வர். (வீ. சோ. 95 உரை மேற்)

பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

{Entry: I09__633}

“தோழி! இன்று சிரிப்புத் தரும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தலைவனுக்குப் பரத்தையரைச் சேர்ப்பிக்கும் பாணன் நம் தெருவழியே சென்றபோது புனிற்றுப்பசு ஒன்று அவனை முட்ட வர, அவன் யாழை அங்கேயே போட்டுவிட்டு நம் இல்லத்துள் நுழைந்துவிட்டான். அவனிடம், ‘இதுவன்று நின் இல்லம்’ என்ற என்னையும் தன்னையும் நினைத்துப் பார்த்து மயங்கிய நெஞ்சத்தோடு அவன் என்னை வணங்கிய நிலை இப்பொழுது நினைத்தாலும் நகையை விளைக்கிறது!” என்ற தலைவி கூற்று. (அக நா. 56)

பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

{Entry: I09__634}

இது தொல்காப்பியம் பொருளியல் 41 ஆம் சூத்திரத்துத் ‘தம்முறுவிழுமம் பரத்தையர் கூறினும்’ என்றதனான் கொண்டது. தம்முறு விழுமம்-தலைவன் தம்மிடம் வந்து கூடாமையாலான மனத்துயரம்.

“எங்கைமீர்! என்னைப் போலவே நீயிர் விரும்பும் தலைவனை அன்பு மிகுதி காட்டித் தழுவாமல் ஊடி நிற்பீராக; அறியா மையால் அவனிடம் ஆசை மிக்கு ஏக்கத்துடன் சென்று குறை இரவாமல் இருப்பீராக! (இவ்வாறு ஒற்றுமையாயிருந்து அவனைக் கூடாமல் ஊடுவோமாயின் அவன் மீண்டும் நம்பால் அன்புடன் வருவான்)” என்ற தலைவி கூற்று. (ஐந். எழு. 50)

பரத்தையிற் பிரிவிற்கு வரையறை -

{Entry: I09__635}

தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் இல்லத்து இருக்கும்போது தலைவிக்குப் பூப்பு நிகழின், அச்செய்தியைச் செவ்வணி யணிந்து தன்னைக் காண வரும் தோழியால் உணரும் தலைவன், பரத்தையைவிட்டு நீங்கிப் பூப்பு நிகழும் மூன்று நாள்களும் தலைவியின் சொற்களைத் தானும் தன் சொற்களைத் தலைவியும் செவிமடுத்துக் கேட்குமளவு தன் இல்லத்தில் தனித்திருந்து, அம்மூன்று நாளும் கழிந்தபின் பன்னிரண்டு நாளும் தலைவியைக் கூடியிருப்பான் ஆதலின், தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்த பின் பதினைந்து நாள்கள் அவன் பரத்தையிற் பிரிவை மேற்கொள்ளான்.

பூப்புப் புறப்பட்டஞான்றும் மறுநாளும் கருத் தங்கின் அது வயிற்றுள் அழியும்; மூன்றாம்நாள் தங்கின் குறுவாழ்க்கைத் தாகும். ஆதலின் மூன்று நாளும் கூட்டமின்று. கூட்டமின்றி யும் தலைவன் மனைக்கண் தங்கியது கண்டு தலைவிக்குப் பழைய ஊடல் முதலியன நீங்கிவிடும் ஆதலின், தலைவிக்குப் பூப்புப் புறப்பட்டஉடனே தலைவன் பரத்தையை விடுத்துத் தலைவியை அடைவான் என்பது. (தொ. பொ. 187 நச்.)

பரத்தையிற் பிரிவின் வகை -

{Entry: I09__636}

தலைவன் தலைவியை விடுத்துப் புறத்தொழுக்கத்தானாகிய விடத்தே அயல் மனைக்கும் அயற்சேரிக்கும் ஊரின் வெளிப் பகுதிக்கும் அவன் பிரிந்து செல்லுதல் உண்டு. (ந.அ.63)

பரத்தையிற்பிரிவு -

{Entry: I09__637}

பரத்தையிற்பிரிவு கற்புக்காலத்துத் தலைவற்கு நிகழும் பிரிவுகளுள் ஒன்று (தொ.பொ. 41 நச்) இப்பிரிவு மருதத்திணை உரிப்பொருளாகிய புலவி ஊடல் ஆகியவற்றைச் சிறப்பிக்க உதவுவது. இப்பரத்தையிற் பிரிவு அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்ற நால்வருக்கும் உரியது. இது பெரும்பாலும் மருதநிலத்திலேயே நிகழ்வது. (பொ. 224 நச்.)

பரத்தையிற் பிரிந்த தலைவன், தலைவி பூப்பெய்திய செய்தி செவ்வணி அணிந்த சேடியர் வாயிலாக அறிவிக்கப்பட்ட பின் இல்லத்திற்கு வந்து, தலைவியொடு பூப்பு நிகழ்ந்த மூன்று நாளும் அவள் சொற்களைக் கேட்கும் அணிமையில் இருந்து, அடுத்த பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது தங்கியிருப் பான். (தொ. பொ. 187; இறை.அ. 43)

தலைவனுடைய முதுகுரவர் அவனுக்கு ஆடல் பாடல் முதலியவற்றால் இன்பம் ஊட்டுதற்கென்றே பரத்தையர் சிலரை உரிமைமகளிராக வழங்கியுள்ளனர். பகல் முப்பது நாழிகையில் முதல் பத்து நாழிகை அறத்திலும் அடுத்த பத்து நாழிகை பொருளிலும் செலவிட்ட பின், தலைவி இருப்பிடம் நோக்கி வரும் தலைவனை அவனுடைய உரிமைப் பரத்தையர் யாழ் குழல் மத்தளம் இவற்றொடு கூடிய தம் ஆடல் பாடல்களால் கவர்ச்சி செய்ய, சிறந்த கலையுணர்வினனாகிய தலைவன் தனக்கு உரிமை பூண்ட அவர்களது கலையழகில் ஈடுபட, பெருவனப்பினையு முடைய அப்பரத்தையர் தம்மை யும் தலைவன் விரும்புமாறு செய்வர். தலைவன் பரத்தையிற் பிரிந்தான் என்பது கேட்டுத் தலைவிக்குப் புலவி ஊடல் துனி என்பன நிகழும். நிகழ்ந்தால், அவற்றை நீக்கித் தலைவியைக் கூடியவிடத்துப் பெரியதோர் இன்பமாம். மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாதலின் இப்பிரிவு வேண்டினான் என்பது. இப்பரத்தையிற் பிரிவுக்குக் காலவரையறை இல்லை. இதற்கு நாடிடையிட்டும் காடிடை யிட்டும் நீங்கி உறைதல் இல்லை. பரத்தையர் வாழிடம் ஓரூரதாகவும் ஓரிடத்ததாகவும் இருக்கலாம்; பரத்தையர்சேரி என்ற தனித்தெருவாகவும் இருக்கலாம். தலைவன் இடம் பெரிதாகலால் அச்சூழலுக் குள்ளேயே தலைவியிடமும் பரத்தையர்சேரியும் வேறாய் நீங்கியிருக்கும். அதனுள்ளே செய்குன்றமும் நந்தவனமும் வாவியும் விளையாடிடமும் எல்லாம் இருக்கும். (இறை. அ. 34, 40, 42 உரை)

பரத்தையிற் பிரிவு : கூற்றுக்கள் -

{Entry: I09__638}

1. கண்டவர் கூறல், 2. பொறை உவந்துரைத்தல், 3. பொதுப் படக் கூறி வாடி அழுங்கல், 4. கனவிழந்துரைத்தல், 5. விளக் கொடு வெறுத்தல், 6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத் தல், 7. பள்ளியிடத்து ஊடல், 8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல், 9. அயலறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்,
10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல், 11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல், 12. முகமலர்ச்சி கூறல், 13. காலநிகழ்வு உரைத்தல், 14. எய்தல் எடுத்துரைத்தல், 15. கலவி கருதிப் புலத்தல், 16. குறிப்பறிந்து புலந்தமை கூறல், 17. வாயிலவர் வாழ்த்தல், 18. புனல் வரவுரைத்தல், 19. தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல், 20. புனல் விளையாட்டில் தம்முளுரைத்தல், 21.தன்னை வியந்துரைத்தல், 22. நகைத் துரைத்தல்,
23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல், 24. பாணன் வரவுரைத் தல், 25. தோழி இயற்பழித்தல், 26. உழையர் இயற்பழித்தல், 27. இயற்படமொழிதல், 28. நினைந்து வியந்துரைத்தல்,
29. வாயில் பெறாது மகன்திறம் நினைதல், 30. வாயிற்கண் நின்று தோழிக் குரைத்தல், 31. வாயில் வேண்டத் தோழி கூறல், 32. தோழி வாயில் வேண்டல், 33. மனையவர் மகிழ்தல், 34. வாயில் மறுத்துரைத்தல், 35. பாணனொடு வெகுடல்,
36. பாணன் புலந்துரைத்தல், 37. விருந்தொடு செல்லத் தணிந் தமை கூறல், 38. ஊடல் தணிவித்தல், 39. அணைந்தவழி ஊடல், 40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல், 41. கலவி கருதிப் புலத்தல், 42. மிகுத்துரைத்து ஊடல், 43. ஊடல் நீட வாடி உரைத்தல், 44. துனி ஒழிந்துரைத்தல், 45. புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல், 46. கலவியிடத்து ஊடல், 47. முன் நிகழ்வுரைத்து ஊடல் தீர்த்தல், 48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல், 49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் - என்ற நாற்பத்தொன்பதும் ஆம். (கோவை. 352-400)

பரத்தையிற் பிரிவு வகை நான்கு -

{Entry: I09__639}

1. வாயில் வேண்டல் - பரத்தையிற் பிரிவுக்குப்பின் வந்த தலைவன் ஊடிய தலைவியை நேர்விக்கத் தோழியை வாயிலாக வேண்டுதல்.

2. வாயில் மறுத்தல் - தலைவன், பாணன் முதலியோரை வாயிலாக அனுப்ப, தலைவி ஊடல் தணியாமல் அவர்களை மறுத்தல்.

3. வாயில் நேர்வித்தல்-தோழி தலைவியிடம் உரையாடி வாயில்களை ஏற்று ஊடல் தணியுமாறு அவளை உடன்படச் செய்தல்.

4. வாயில் நேர்தல் - தலைவி வாயிலை ஏற்றல். (ந. அ. 204)

பரத்தையின் அகற்சி -

{Entry: I09__640}

தலைவன் பரத்தையர்தொடர்பு குறித்து ஒரூரிலேயே வேற்றுத் தெருவிற்கு இரவிடைப் பிரிந்து சென்று, வைகறை யில் மீளுதல். ‘பரத்தையிற் பிரிவு’ காண்க. (தொ. பொ. 41 நச்)

பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -

{Entry: I09__641}

தன்னுடைய பரத்தையிற் பிரிவு காரணமாக வருந்திய தலைவியைத் தலைவன் அணுகித் தனது தவற்றைப் பொறுத் துக் கொள்ளுமாறு வேண்டுதல்.

தலைவனது பரத்தைமை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துக்கு வந்தவழி, மீண்டும் பரத்தையர் இல்லத்துக்கே செல்லுமாறு வெகுண்டு கூற, தலைவன் குறும்பூழ்ச் சண்டையைப் பார்த்துக் தான் பொழுது போக்கியதன்றிப் பரத்தையர்மனைக்குச் செல்லவில்லை என்று கூற, தலைவ னது உடலில் பரத்தையரால் உண்டாக்கப்பட்ட வேறுபாடு களை எடுத்துக் காட்டி அவனுடைய பரத்தைமையை அவள் மெய்ப்பித்தவழி வேறு வழி காணாது அவன், “நல்லாய்! யான் செய்த தவறுகளை என் தலையிலேயே யிட்டு என் பொய்களை எல்லாம் வெளிப்படுத்தி என் களவினைக் கையொடு பற்றிக் கொண்டாய்! இனி எனக்கு அருள்” என்று இரத்தல் (கலி. 95) போல்வது. (தொ. பொ. 41 நச்)

‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

{Entry: I09__642}

தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்தபோது தலைவி ஊடல் கொள்ளத் தலைவன் தான் அவ்வூடலைத் தணிக்க அவளை யடைந்து, தன்பால் தவறு எதுவுமில்லை என்றாற் போலக் கூறித் தெளிவித்தல்.

“இஃது என்னே! இரண்டு தலைகளையும் ஒரே உயிரையு முடைய பறவையொன்றன் இருதலைகளுள் ஒன்று ஏனைய தலையுடன் போரிடுவது போன்றுள்ளது, நின்செயல்!” என்று தலைவன் கூறத் தலைவி, “நின் வஞ்சனைகளை முன்னரே அறிவேன். நின் பொய்களை எனக்குச் சொல்லி வருத்தாதே” என்னவும், தலைவன் மீண்டும் அவளை நோக்கி, “நீ என்மேல் ஏற்றிச் சொல்ல விரும்பும் தவற்றை யான் செய்யவில்லை; அரசனே ஒருவன்மேல் தவறான முறை யில் கோபங்கொண்டால், அரசனது கோபம் முறையற்றது என்று எடுத்துச் சொல்லவல்லார் யாரும் இல்லாதவாறு போல, நீ கோபிக்குமிடத்தே அதனை நீக்க என்னிடம் வேறொரு பரிகாரமும் இல்லை” என்று கூறி அவள் ஊடலை நீக்குதல். (கலி. 89) (தொ. பொ. 41. நச்.).

பரத்தையை ஏசல் -

{Entry: I09__643}

பெருந்திணைத் தலைவி, தலைவனுடன் நீர்விளையாட்டினை விரும்பிப் பரத்தையைப் பழித்தல்.

“நீர்விளையாட்டில் நான் என் தலைவனை நீரலைகளுடன் சேர்த்துத் தழுவினேன் என்பதற்காகப் பரத்தையர்சேரியே கண்ணுறங்காமல் கவலைப்படுகிறது. இஃது என்னேயொரு வியப்பு!” என்றாற் போன்ற கூற்று.

இது பெண்பாற்கூற்றுப் பெருந்திணைக்கண்ணதொரு
கூற்று. (பு. வெ. மா. 16-10)

பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் -

{Entry: I09__644}

தலைவனைக் கூடிய தலைவி, “பிறருக்கும் இவ்வாறு தண்ணளி செய்தீரே!” என்று தலைவனிடம் கூற, அவன் அவளையன்றி வேறு யாரையும் தான் அறியான் போல நடிக்க, “நம் மனைவாசலில் சிறுதேர் உருட்டும் நம்மகனைக் கண்டு நின்பரத்தை தூக்கி வைத்துக்கொண்டாளாக,யான் அவளை இல்லத்துக்கு அழைக்க, அவள் நாணிச் சென்றாள். எனக்கு அவளைத் தெரியாது என்று நீர் சொல்லுதல் வேண்டா” என்று அவள் தான் பரத்தையைக் கண்டமை கூறி மீண்டும் அவனிடம் புலத்தல்.

இதனைக் ‘காமக்கிழத்தியைக் கண்டமை கூறல்’ என்ப; ‘உணர்த்த உணரா ஊடலின்’ பாற்படும். (ந.அ. 206; இ.வி. 555)

இக்கூற்று ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணது ஒன்று. (கோவை. 399)

பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

{Entry: I09__645}

பரத்தையருடன் புதுப்புனல் விளையாடி வந்த தலைவனிடம் தலைவி, “நான் இற்பரத்தையைவிட இழிந்த நிலையளாக்கப் பட்டுவிட்டேன். என் தங்கை என்று யான் ஏளனமாகக் கூறும் பரத்தையைத் தேரில் ஏற்றிச் சென்று புதுப்புனலில் விளையாடி மீண்ட கள்வர் ஒன்றும் அறியாதவர் போல நம் மனைவாயிலில் வந்து நிற்பர்! இவ்வில்லத்திலுள்ள ஏவலர் முதலியோர் அச்செய்தியை அறிந்திருந்தும் வெளியிடமாட் டார்கள்! நான் குறிப்பிட்டாலும் தலைவன்பக்கம் பரிந்து பேசுவார்கள்!” என்று கூறி அவனுக்கு வாயில் மறுத்தல்.

இஃது ‘உணர்வதோடு உணரா ஊடல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘பிறவும்’ என்றதனால் கொள்ளப் பட்டது (மா. அக. 104 உரை)

பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -

{Entry: I09__646}

“தோழி! நம் தலைவன் தன் தலைவியிடம், ‘நீ நினைப்பது போல நான் பரத்தையர்தொடர்பு கொண்டிருப்பது உண்மையாயின் அச்சம் தரும் தெய்வம் என்னை வருத்துவ தாகுக!’ என்று சூளுரைத்தானாம். அங்ஙனமாயின் மாலையை அணிந்த களிற்றினைப் போலத் தெப்பத்தின் தலைப்பகுதியைப் பிடித்துக்கொண்டு, சிறந்த ஒப்பனை செய்துகொண்ட நம் மொடு கரை புரண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் புனலாடினவர் யாவர்?” என்றாற் போலப் பரத்தை கூறியது. (அகநா. 166)

பரத்தைவாயில் -

{Entry: I09__647}

பரத்தையர்மாட்டுப் பாணன் முதலியோரை வாயிலாகத் தலைவன் செலுத்துதல். (தொ. பொ. 220 இள.)

தலைவனுடைய பரத்தைமையான் தலைவியர்க்குத் தோன்றிய ஊடல் தீர்த்தற்குரிய வாயிலாவாரை அவர்பால் செலுத்து தல். (224 நச்.)

‘பரத்தை வாயில்’ என்பது குதிரைத்தேர் என்பது போல் மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்தொக்க தொகை. இதனாற் பயன்: அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவரும் வேளாளர்க்கு ஒருத்தியு மாகிய தலைவியர் ஊடற் குரியார் என்பதும், அவரவர்பால் தத்தம் தலைவர் ஊடல் தீர்த்தற்குரிய வாயில்களை விடுவர் என்பதும், அவர் வாயில் மறுத்தலும் நேர்தலும் உடையர் என்பதும், ஏனைப் பரத்தையர்க்கு வாயில்விடுதல் இன்று என்பதும் உணரப்படும். (224 நச்) (குதிரைத் தேர் - குதிரைக ளால் ஈர்க்கப்படும் தேர்)

‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -

{Entry: I09__648}

பரத்தையிற் பிரிவு காரணமாக ஊடிய தலைவியின்பால் பாணர் முதலியோரை வாயிலாகப் போக்குதல் நானிலத்துத் தலைவர்க்கும் ஒப்ப உரியதாம். அது மருதத்திற்கு உரியதாய் ஏனைய நிலத்தும் மயங்கி நிகழ்வதன்று; அவ்வந்நிலத்திற்கும் ஒப்ப உரிய ஒழுக்கமேயாம்.

பரத்தையிற் பிரிவு தம்மனை வளாகத்து ஓரிடத்திலேயே நிகழ்வதொன்று. ஆதலின் மருத ஒழுக்கமாகிய இவ்வொழுக்-கம் தீம்புனலுலகத்திற்கே உரியது என்று கருதப்பட்டது; அது மருத ஒழுக்கமாய் ஏனைய நிலத்தினும் நிகழும். (தொ. பொரு. 29 ச. பால.)

பரத்தைவாயில் பாங்கி கண்டு உரைத்தல் -

{Entry: I09__649}

சேரிப்பரத்தையின் தோழி இற்பரத்தையின் தோழிக்குத் தலைவன் தம் சேரிக்கு வாராமல் இரான் எனக் கூறுதல்.

“தலைவன் எம்மைப் பிரிந்து சேரிப்பரத்தையர்பால் செல்லின் எங்கள் பெண்மையையே விரும்போம்; அஃது இல்லாததாகுக!’ என்று இற்பரத்தை சூள் உரைத்ததைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, எம் தலைவன் தேர் பரத்தையர் சேரியில் வந்து புகுந்தது!” என்பது போன்ற கூற்று.

இஃது ‘இருபாற் பெருந்திணை’க்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 17-15).

பரவர் -

{Entry: I09__650}

‘மீன்விலைப் பரவர்’ (சிலப். 5:25); இது பரதவர் என்பதன் திரிபு ஆகலாம். (L)

பரிசம் கிளத்தல் -

{Entry: I09__651}

தான் தலைவியை அடைய யாது செய்தல் வேண்டும் என்று தோழியை வினவிய தலைவனுக்குத் தோழி அவன் அவளை வரைந்துகோடற்கு அவள் முலைவிலைக்கு ஆம் பெரும் பொருளொடு மகட்பேசுதற்குரிய மரபில் வந்து மகள் கேட்க ஏற்பாடு செய்யுமாறு கூறல். (க. கா. பக். 115).

‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -

{Entry: I09__652}

கற்பிடைப் பிரிந்து மீளும் தலைவன், நாணத்தொடு தன்னை வரவேற்கும் தலைவி தன் வருகையால் பெற்ற மகிழ்ச்சியைக் கண்டு தன்னுள் கூறிக் கொள்ளுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை)

பருவம் -

{Entry: I09__653}

பெரும்பொழுது ஆறும் ஆறுபருவம் எனப்படும். ‘பெரும் பொழுது’ காண்க.

பருவம் அன்றென்று கூறல் -

{Entry: I09__654}

கற்புக் காலத்தில் தலைவன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தானாக, கார்ப்பருவம் வந்தும் காந்தள் மலர்ந்தும் தலைவன் வாராதது குறித்துக் கலங்கிய தலைவியிடத்துக் “கோயில் முழவின் ஒலியை இடியொலியாகக் கருதிக் கார்காலம் வந்தது என்று காந்தள் மலர்ந்தன. இஃது உண்மையில் கார்காலம் அன்று” என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.

இது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 324)

பருவம் கண்டிரங்கல் -

{Entry: I09__655}

கற்புக் காலத்தே தலைவன் பொருள்வயின் பிரிந்தானாக, அவன் மீண்டு வருமுன் கார்காலம் வந்ததாக, அவன் தலை வியை நினைத்து, பசுக்களோடு காளைகள் வருவதனைப் பார்த்து வருந்தி, “மயில்கள் ஆடும் இக்கார்காலத்தில் தலைவி என்னை நினைத்து ஆற்றாளாவள்கொல்லோ?” என வருந்தியது.

இது ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 347)

பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -

{Entry: I09__656}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் கார் காலத்துக்கு முன்பே தான் வருவதாகச் சொல்லிச் சென்றானாயினும், கார்காலம் வந்த பின்னரும் வாராதது கண்ட தலைவி வருந்துதல்.

“கொன்றைமரம் மாலையைப் போலப் பூப்பக் கானத்தில் நாரையுடன் ஏனைப் பறவைகளும் ஒலிப்ப, கண்கள் கண்ணீரைப் பெருக்க, நிறம் பசலை பாயக் கார்காலம் வந்தும் தலைவர் மீண்டு வரவில்லையே!” (அம்பிகா. 313) என்று தலைவி தனித்து வருந்துதல்.

‘வன்புறை எதிரழிந்து இரங்கல்’ என்னும் (276) திருக்கோவை யாருள் இத்துறையை அடக்கலாம்.

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

{Entry: I09__657}

தலைவியினது ஆற்றாமை கண்ட தோழி பாணனொரு வனைத் தலைவன்பால் தூதுவிட்டாள். அவனும் தலைவ னிருந்த பாசறையை எய்தி அவனைக் கண்டு, கார்ப்பருவ வருகையையும் அதனால் வைகையாற்றின் நீர்ப்பெருக்கினை யும் அப்புதுப்புனல் விழாச் செய்திகளையும் கூறலானான்.

“மலையின் மாலையிற் பெய்த பெருமழையால், வையையில் வெள்ளம் பெருகிற்று. பன்மலர்ப்போர்வையையும் பரு மணலையும் மேலே மூடிக்கொண்டு, வண்டுகள் ஒலிக்க, உலகிற் பசி முதலிய துயர் கெட, கரைக்காவலரை அழைக் கும் பறைகள் அறைய, ஆறு கடலிற் கலக்கும்பொருட்டுப் புறப்பட்டது.

“அப்புதுப்புனலாட மதுரை ஆடவரும் மகளிரும் புறப்படலா யினர்; வண்ணநீரை வீசும் கருவிகள், பனிநீர் கலந்த சந்தனம் முதலியன கொண்டு தமக்கேற்ற ஊர்திகளில் சென்றனர். மலராத முகை போன்ற இளம்பருவத்தினர் முதல் முழுநரைக் கூந்தல் முதுமகளிர் ஈறாக, கற்புடைமகளிர், பரத்தையர், இவர்தம் பணியாளர் எல்லாரும் ஆற்றங்கரையை அடைந்தனர்.

“புதுப்புனல் வரலழகினைக் கண்டார் சிலர்; நீரணிமாடம் ஏறினார் சிலர்; மலர் நிறைந்த ஆற்றிடைக் குறையில் சென்று தம் கணவரைத் தழுவினார் சிலர்; திரை வீழ்த்துப் படுக்கை யைச் சேர்ந்தார் சிலர்; தம் காதற்கணவர் தம்மை எதிர்ப்படு மாறு நீராடலைக் குறித்தெழுந்தார் சிலர்.

“இத்தகு மதுரையில், ஒரு களிறு தன்னருகே வரும் பிடிமீது மையலுற்றுப் பாகர்க்கும் அடங்காது ஒரு புலிமுகமாடத்து அருகே சென்று நின்றது. அப்பிடியும் தன் மீதுள்ள மகளி ரொடு மையல் மீதூர நடைசோர்ந்து, அப்புலிமுக மாடத்தில் கைபுனையப்பட்டிருந்த புலியுருவம் கண்டஞ்சி, பாகரையும் கடந்து அடங்காமல் சிதைந்தது. அது கண்ட களிறும், பாகர் அங்குசத்திற்கும் அஞ்சாது சிதைந்தது. மைந்தர் களிற்றினை அங்குநின்றும் செலுத்திப் பிடியின்பால் அணைவித்தனர். களிறும் பிடியும் அமைதியுறவே, பிடிமீதிருந்த மகளிரும் நடுக்கம் தீர்ந்தனர். அம்மைந்தரது செயல், சிதையும் கலத் தினைப் பிசினால் திருத்தியமைத்த மீகாமனது செயலை ஒத்ததாயிருந் தது.

“மகளிரும் மைந்தரும் இசை ஆடல் முதலியன தம் காமத்தை மிகுக்கவும், அக்கூடல் உள்ளத்தை வெளிப்படக் காட்ட இசையாமல், தாம்தாம் முதற்கண் ஊடல் நீங்க நாணுவா ராயினர். பொருது வலி குன்றிய இருதிறத்துப் படைஞரும் உடன்பாடு காண விழையும் தம் உள்ளத்தை முதற்கண் காட்ட நாணமுற்று, தாம்தாம் நொந்து நிற்றல் போன்றதா யிருந்தது, இக் காமமக்கள் நிலை.

“கள்ளுண்ட களிப்பினை அம்மயக்கமே காட்டவும், ஊரார்க்கு அஞ்சி ஒளிப்பாரைப் போல, தமது காமம் காழ்கொண்ட நிலையினைத் தம் கண்ணின் மதர்ப்பே காட்டாநிற்பவும், அயலாரது அலர்க்கு அஞ்சி அக் கைம் மிக்க காமத்தை மறைப்பாராயினர், இளங்காதலர் சிலர்.

“நீராடி மகிழ்ந்த மகளிர் உடல் இளைத்துப் புணையை விட்டுக் கரையேறினர்; அகிற்புகையால் உடலீரம் புலர்த்தி னர்; மார்பிற் கலவைக்குழம்பு பூசிக்கொண்டனர். தேவமக ளிர் மதியை வாய்மடுப்பார் போல, வள்ளத்தில் வெம் மதுவை யூற்றி வள்ளத்தில் வாய் வைத்து மதுவினைப் பருகி னார் சிலர்; வெண்துகில் உடல் மேல் போர்த்துக்கொண் டார் சிலர்; குங்குமச்சேறு, அகிற்சாந்து முதலியவற்றைச் சாந்தம்மியிலிட்டுச் செவ்வண்ணமாக அரைத்தார் சிலர்; பொன்னாற் செய்த சங்கு, நண்டு முதலியவற்றை நீரிலிட்டு ‘விளைக பொலிக!’ என வாழ்த்தினார் சிலர்; வறியோர்க்கு ‘இல்லை’ என்னா முன்னம் விரும்பியவற்றைத் தானம் செய்தார் சிலர்; பத்துவகைத் துவர்களையும் தம் கூந்தலில் தேய்த்துக்கொண்டு நீராடினார் சிலர்; மதுவை நீரில் ஊற்றினார் சிலர். இன்ன செயல்கள் எண்ணில. நீர் விளை யாட்டு ஆர்வம் சிலரை நீங்கிற்றிலது. மீண்டும் அன்னோர் நீராடலாயினர்.

“நீர்விளையாட்டில் இளைப்புறாத மைந்தர்கள் வாழைத் தண்டினைத் தழுவியவாறே தாவித் தாவி நீந்தினர். தாழம்பூவின் தாதினை அலைமேலும் நுரைமேலும் தூவி னார் சிலர்; தம் ஓடத்தை நீரோட்டத்தொடு விட்டார் சிலர்; எதிர்த்துச் சென்று விளையாட்டிளைப்பினால் சிறிது சோர்ந்தார் சிலர்; மகளிருடைய பந்தும் கழங்கும் கொண் டோடி நீரிற் பாய்ந்தார் சிலர். இன்ன செயல்கள் பல. போர்க்களம் போல, வையைப்புனல் தெளிவிலதாயிற்று.

“நீர்விளையாடல் நின்றது. மாலைப்போது வரவே, மதியமும் தோன்றிற்று. மக்கள் மதுரை புகலாயினர்; பகலணி நீக்கி, மாலைக் காலத்து அணிகளாக மாலைமலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலான ஆபணங்களையும் அணிந்தனர். யாண்டும் பாட்டொலியும் ஆடல்ஒலியும் தாள ஒலியும், இவற்றொடு வண்டொலியும் நிறைந்தன. மாடத் துள்ளிருந்து எழுந்த அகிற்புகை மலைமேல் படிந்த பனிபோலத் தோன்றியது.

“புதுப்புனல் வெள்ளத்தைக் கண்டு இவ்வாறு விருந்தயரும் கூடற்பதியில், இசைக்கு உரிமையுடையராகிய பாணரும் கூத்தரும் கூட்டத்தோடு ஒருங்கே ஏத்தித் தொழும் வண்ண மாக, வறுமையுடைய புலவரது ஏற்ற கை நிறையப் பொன் னைச் சொரியும் வழுதியைப் போலவே, வையையாறு வயலின்கண் பொன்னைப் பரப்பும் இயல்பாகிய செயல் என்றும் நீங்காதிருப்பதாகுக!” (பரி. 10)

‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -

{Entry: I09__658}

கற்புக் காலத்துத் தலைவன்பிரிவிடை ஆற்றியிருந்த தலைவி யிடம் தோழி, “தலைவன் மீள்வதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வந்துவிட்டதாதலின், நீ பிரிதல்துன் பத்தை நீக்குவாயாக. தலைவன் விரைவில் வந்துவிடுவான்” என்று கூறுதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

பருவம் காட்டி வற்புறுத்தல் -

{Entry: I09__659}

கற்புக் காலத்துத் தலைவன் வேந்தற்கு உற்றுழிப் பிரிந்தானாக, மீள வேண்டும் கார்ப்பருவம் வந்தும் அவன் வாராதது குறித்துத் தலைவி வருந்த, “கார்காலம் வந்துவிட்டபடியால் தலைவன் தேர் இன்றோ நாளையோ நம் ஊருக்கு வந்து விடும்” என்று தோழி அப்பருவத்தைக் காட்டியே தலைவியை ஆற்றுமாறு வற்புறுத்தியது.

இது ‘வேந்தற் குற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 323).

பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

{Entry: I09__660}

“பூக்கள் மலரப் பொழில்கள் அழகு ததும்ப வண்டுகள் ஒலிக்கும் காட்டுப் பகுதியில் களிறுகள் பிடிகளைத் தழுவி மகிழும் இவ்விளவேனிற் காலத்தில் யான் பொருள் முற்றி மீண்டு தலைவியைக் கூடி மகிழ்வுற்றிருக்கிறேன்” என்று தலைவன் தன்னுள் தலைவி கேட்பச் சொல்லியது. (ஐங். 416).

பருவம் கூறல் -

{Entry: I09__661}

களவுக் காலத்துப் பகற்குறி இரவுக்குறிகளான் ஏற்பட்ட அலரைத் தலைவனுக்கு அறிவுறுத்திய தோழி, “தலைவியின் உடல்வளர்ச்சி கண்டு மகட்பேசுவார்க்கு எம் உறவினர் மறுக்காமல் தலைவியை மணம் செய்து கொடுக்கவும் கூடும்; அந்நிலை ஏற்படாதவாறு நீ முற்பட்டு வரைவாயாக” எனத் தலைவியின் பருவம் பற்றிக் கூறியது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 194)

பருவம் கூறி வரவு விலக்கல் -

{Entry: I09__662}

களவுக்காலத்தில் பகற்குறிக்கண் தோழி தலைவனிடம் உலகியல் கூறுவாள் போன்று குறிப்பினால் வரைவு கடாவி, “இனி, இவ்வாறு ஒழுகாது வரைவொடு வருவாயாக!” எனத் தலைமகளது பருவம் கூறித் தலைவன் பகற்குறியை விலக்கிக் கூறியது.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 125)

பருவம் நினைந்து கவறல் -

{Entry: I09__663}

செவிலி வாயிலாக, தலைவி தலைவனுடன் சென்ற செய்தி அறிந்து வருந்திய நற்றாய், “தனக்குக் கற்பிக்கும் தாயர் அருகில் இல்லாது தலைவனுக்குச் செய்ய வேண்டிய குற்றே வல்களைச் சிறுமியாகிய என்மகள் எவ்வாறு செய்வா ளோ?” என்று அவளது இளமைத்தன்மையை நினைந்து வருந்திக் கூறல்.

இதனைக் கற்பொடு புணர்ந்த கவ்வை’க்கண், ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 186)

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொருகூற்று. (கோவை. 233)

பருவம் மயங்கல் -

{Entry: I09__664}

கார்காலம் வந்துற்றதாக, தலைவி படும் துயரினை ஆற்றாத தோழி, “இவள் மென்தோளை நீங்கிய தலைவர் எம்மை நினைந்து வரும் காலம் இதுவோ? இதுவன்றோ? புறவமெங் கும் கொன்றை பொன் போல மலரும்; மலையிடத்தே மயிலும் ஆலும்” என்று மருண்டு வருத்தமுற்றது.

இஃது இருபாற் பெருந்திணைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 17-6).

பருவம் மயங்கலின் பக்கம் -

{Entry: I09__665}

“மயில்கள் ஆடின; சோலையில் மேகங்கள் குறுந்துளி சிதறின; முல்லையும் தோன்றியும் அலர்ந்தன. ஆயின் தலைவர் வரும் கார்காலம் இஃது அன்று” என்று தலைவி தெளிதல்.

இஃது இருபாற்பெருந்திணைக்கண்ணதொரு கூற்று. (பு. வெ. மா. 17-7).

பருவம் மறைத்தல் -

{Entry: I09__666}

பருவம் அல்லாக் காலத்து நிகழ்ந்த செயல் என்பது.

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து கார்காலத் தொடக்கத்தே மீண்டு வருவதாகக் கூறிச் சென்றானாக, முல்லை மலரத் தொடங்கியதும், “கார்காலம் வந்துவிட்டதே; தலைவன் இன்னும் வரவில்லையே” என்று தலைவி வருந்தலுறவே, அதுபோது தோழி, “கார்மேகம் பருவம் வந்துறப் பெய்த மழையன்று இது; நம் மலையின் சந்தன மரக்கிளை கார்மேகத்தைக் கிழித்தமையால் உண் டான மழையே இது! இன்னும் பருவம் தொடங்கவில்லை” என்று கூறி அவளை ஆற்றுவித்தது.

இது ‘வரைபொருட்பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா.அ. பாடல் 524)

இதனை ‘இகுளை வம்பு என்றல்’ எனவும் கூறுப. (ந. அ. 170)

பருவம் மாறுபடுதல் -

{Entry: I09__667}

தலைவன் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் கழிய அடுத்த பருவம் வருதல்.

தலைவன், ஓதல்-காவல்-தூது-பொருள்-பகை-இவை குறித்துப் பிரியும்வழித் தலைவியிடம் தான் மீண்டு வருவதாக ஒருபருவம் குறித்துச் செல்வான். தான் மேற்கொண்ட செயல் அக்குறித்த பருவத்துள் முடிவு பெறாதுபோயின், தன் வருகையை எதிர்பார்த்திருக்கும் தலைவி தனது பிரிவு குறித்து வருந்துவளே என்ற எண்ணம் அவனுள்ளத்தே இடங் கொண்டு எடுத்த வினையில் மனம் முழுமையாக ஈடுபடு தலைத் தடுக்கவும் கூடும். காலவரையறையை நீட்டிச் சொல் லிக் குறித்த காலத்துக்கு முன்னரேயே வினைமுடித்து மீடலே தக்கது. அது செய்யாது காலத்தைக் குறைத்துச் சொல்லி அக்காலம் வந்துற்றபோது வினைமுற்ற இயலாமல் தடுமாறு தல் பொருந்தாக் காமப்பகுதியாகி அகப்பொருட்பெருந் திணைத் துறைகளுள் ஒன்றாக, ஒரு சாராரால் கொள்ளப் பட்டது. (ந.அ. 243)

பருவரல் -

{Entry: I09__668}

தலைவன்பிரிவு குறித்துத் தலைவி களவுக்காலத்தும் கற்புக் காலத்தும் வருந்துதல். (தொ. பொ. 151 நச்.)

பருவரல் அறிதல் -

{Entry: I09__669}

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கூடிய தலைவன் அவளைப் பிரியாமை கூற, பிரிவு பற்றிய கலக்கத்தால் தலைவி வருந்தத் தொடங்க, “இவள் வருந்துதற்குக் காரணம், பிரிந்தால் கூடுதல் அரிது என்று நினைத்திருத்தலாம்; அன்றி, இவ்வாறு நெடும்பொழுதிருந்தால் தமக்குக் குடிப் பழியாம் என்றும் நினைத்திருத்தல் கூடும்” என்று அவள்வருத்தத்தைத் தலைவன் ஊகித்து அறிதல்.

இது ‘பருவரல் உணர்தல்’ எனவும் கூறப்பட்டுத் ‘தெய்வத் திறம் பேசல்’ என்பதன் பின்னர்க் கொள்ளப்படும். (இ. வி. 497 உரை)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 13)

பருவரல் உணர்தல் -

{Entry: I09__670}

தன் பிரியலுறுவதைக் கேட்டுத் தலைவி மனத்துக் கொண்ட வருத்தத்தைத் தலைவன் உணர்தல்.

இது களவியலுள் ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 497).