Section J10 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 4 alphabetical subsections

  1. ப (CONTINUED from I09) section: 421 entries
  2. ம section: 198 entries
  3. ய section: 7 entries
  4. வ section: 237 entries

J10

[Version 2l (transitory): latest modification 2017/02/22, 09:10, Pondy time]

அகம்-4 (863 entries)

[TIPA file J10 (and pages 3-254 in volume printed in 2005)]

ப (CONTINUED from I09) section: 421 entries

பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

{Entry: J10__001}

தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி, கூறிப்போன பருவம் வந்தும் வாராது வைகிய தலைவனிடத்தே ஒரு பாணனைத் தூது விடுப்ப, அவனும் அவன்பாற் சென்று கார்ப்பருவத் தைப் பற்றிச் சொல்லலுற்றான்.

“காலைப்போதில் கடல்நீரை முகந்து மாலையில் மலையைச் சேர்ந்த மேகம் மழை பொழியவே, வையையாறு பெருகி மலர் மணமும் கனிகள்மணமும் உடன்கொண்டு தன் செலவைத் தொடர்ந்தது. ஆற்றுப்பெருக்குக் குறித்துப் பறைகள் அறையப்பட்டன. சுருங்கைவழியே நீரோடும் அரவம் கேட்டு மதுரைமக்கள் வையை நீராடப் புறப்பட்டனர். புறப்படும் தடுமாற்றத்தில், தேரிலேற விரும்பினவர் பள்ளியோட வையத்தில் குதிரையைப் பூட்டி அதிலேறினர்! வங்கத்தில் ஏறக் கருதினோர் அதற்குரிய எருதுகளைத் தேரில் பூட்டினர்! குதிரைச் சேணம் யானைக்கிடப்பட்டது! மைந்தர்தார்களும், மகளிர்கோதைகளும் இடம் மாறின! இனைய தடுமாற்றம் பற்பல.

“வையைக்கரைக்கண் மகளிரும் மைந்தரும் தம் ஒப்பனைக ளோடு வந்து நின்றனர்; அயலார் அணிந்த அணிகலன் களைப் பார்த்துக்கொண்டே வந்தனர். அதுபோது ஒரு தலைவியின் ஆயத்தார், தம் தலைவன் பரத்தையொருத்தி யொடு அங்கு நின்றமை கண்டனர்; அப்பரத்தையின் கையில் தலைவியின் வளைகள் காணப்பட்டதையும் நோக்கினர்; ‘ஆரத்தையும் வளையையும் இவளுக்குத் தந்த இக்கள்வனது முகத்தைப் பாருங்கள்!’ என்று வெகுண்டு பேசவே, பரத்தை தன் ஆயத்தாரிடை மறைந்தாள்!

“ஒளித்தவள் மீண்டும் வெளிப்படவே, ஆயத்தார் அவ ளுடைய வரைவில் போகத்தைப் பலவாறு கடிந்து ஏசிப்பேசி, ‘எம் தலைவியினுடைய ஆரம்வளைகளைப் பூண்பதற்கு நின் மார்பும் எம்தலைவியது மார்பும் ஒத்தன ஆகுமோ? தம் எருதை அயற்புலத்தில் உழுதல் செய்யாது தம்புலத்திலேயே உழுவித்துக் கொள்ளு முறைமை வேளாளர்க்கு உரியதாத லின், இவ்வாறு செய்கின்றோம். எம் எருதினை இதுவெனக் காட்டி அவையத்திலே யாவரும் அறியச் செய்யத் தொடர்ந் துள்ளோம்’ என்றனர். முதிய கற்புடைய மகளிர் சிலர் பரத்தையைக் கடிந்து, தலைவியை வந்து வணங்குமாறு அவட்கு அறிவுரை கூறினர். அதற்கு அப்பரத்தை, ‘மாற் றாளை மாற்றாள் தொழுதல் பெருமையன்று’ என்று எதிர் கூறவே, தலைவி, ‘ எந்தை எனக்குச் செய்து இட்ட வளையும் ஆரமும் நின்பால் களவினால் வந்தன அல்லவாயின், நினக்கு இவற்றைத் தந்தவனைக் காட்டிவிட்டு உன் பெருமையைப் பேசிக்கொள்!’ என்று மனம் வேதனையுற்று மொழிந்தாள்.

“அது கேட்ட அப்பரத்தை, ‘என்பால் அன்பு பூண்ட உன் தலைவன் என்பால் இன்பம் பெறுதற்கு விலையாக இவற்றை எனக்குத் தந்தான்; நாளை நின் காற்சிலம்பும் தருவான்! ஆதலின் யான் அல்லேன், கள்வி; அவன்தான் கள்வன்! அவனை நீயே தொடர்க!’ என்று எதிர்மொழிந்தாள்.

“அங்கே மகளிர்தம் அணிகலன்களைக் கண்டு வியந்து வருவார் சிலர், பரத்தையை நோக்கிக் ‘காமுகர் அளித்த பரிசில் பரத்தையரையே சார்வன’ என்று நியாயம் பேசி, அவளைச் சினம் தணிவித்து, தலைவியை நோக்கி, ‘பரத்தை யர்பால் சென்று வைகும் கணவனைத் தடுத்தலும் நீங்கி ஒழுகுதலும் குலமகளிர்க்கு இயலுமோ? சால்புடை மகளிர் தம்மைக் கணவர் இகழ்ந்தாலும் தாம் அவரையே போற்றுவர். பரத்தையரைத் தழுவும் கணவரொடு தாம் அளவளாமலிருத் தலும் மகளிர்க்கு முடியுமோ? காமம் தக்க இடத்திலேயே நிற்க வல்லதோ? ஆதலின் நீ சினம் கொள்ளற்க’ என்று அறிவுரை கூறினர்.

“இவ்வாறு வையை துனியினையும் புலவியினையும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தது. மயக்கமும் புணர்தலும் பிரிதலு மாகிய இக்காமத்தையும் கள்ளையும் உடன்விரவி, மகளிர் யாவரும் பாராட்ட, அவர்கள் தம் காதலரொடு புனலாடு மாறு அப்பிரிந்த தலைவர்களைக் கொண்டுவந்து கூட்டுதல் வையைக்கு இயல்பு. (ஆதலின் நீயும் தலைவிபால் வந்து சேர்தற்குரியாய்)” (பரிபா. 20)

பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

{Entry: J10__002}

வினைமுடித்து மீளும் தலைவன் தன்தேர்ப்பாகனிடம், “முன்பு யான் ஊரினின்றும் புறப்பட்டு வந்தபோது தலைவி யிடம் என் கருத்தினைக் கூற, அவள் விடை கூறமுடியாமல் தன்கையில் இருந்த ஞாழல்பூங்கொத்தினையும் தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையொடு துன்புற்ற நிலையை நீயும் அறிவாய் ஆதலின், அவளை யான் விரைவில் சென்று காணுமாறு தேரை விரையச் செலுத்துக!” என்று கூறியது. (நற். 106)

பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -

{Entry: J10__003}

காவல், பரத்தையிற்பிரிவு - இவற்றுக்குப் பருவம் இல்லை. (சாமி. 84).

பவனி கண்டழுங்கல் -

{Entry: J10__004}

பெண்பாற் கூற்றுக் கைக்கிளையில், தலைவன் வீதியுலா வரக் கண்டு அவனைக் காமுற்ற தலைவி வருந்துதல்.

“தோழி! சடகோபனுடைய திருப்புயங்களின் அழகை எனக்குக் காட்டி இக்காமநோயினை எனக்களித்த இக் கண்கள் அவன் நமது வீதியை அகன்றகாலை, ‘அத்திருப் புயங்களை எமக்குக் காட்டுவாயாக’ என்று அழுவது என் பற்றி? அவை காட்ட யான் கண்டேனே யன்றி, என்னால் காட்டுதல் இயலாததன்றோ? அப்புயங்களை விரும்பிய என் உள்ளம் தளர, வடிவற்ற மன்மதன் அவ்வடிவம் கொண்டு என்னைத் தாக்குவது என்?” (மா. அ. பா. 505) என்பது போன்ற கூற்று.

பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

{Entry: J10__005}

பெண்பாற்பெருந்திணையில், தலைவன் வீதியுலா வரக் கண்டு அவனிடம் மையல் கொண்ட தலைவியின் துயர் போக்கக் கருதிய தோழி அத்தலைவியின் உயிர் அவளை விட்டு நீங்காதிருப்பதற்கு உபாயமான செய்தியைக் கூறல்.

“திருமால் ஏறிவரும் களிறே! உன் பெருமானைக் கண்டு மையல் கொண்ட தலைவிமீது மன்மதன் தன் கருப்புவில்லை வளைத்து மலரம்புகள் தொடுக்கிறான். உன் வலிய கைகளால் அக்கரும்பினை முறித்துவிட்டால் இவளும் உய்வாள்; உனக்கும் அஃது உணவாகும்” (மா. அ. பா.419) என்பது போலப் பெருந்திணைத் தலைவியின் தோழி தலைவன் ஊர்தியாகிய யானையிடம் கூறுதல்.

பழவரை விடுத்தல் -

{Entry: J10__006}

பழைய எல்லையில் தலைவியைக் கொண்டுவிட்டு மீளுதல்.

இரண்டாம் நாள் பாங்கனால் தலைவியது இருப்பிடம் அறிந்து அவளைச் சென்று சேர்ந்து கூடிய தலைவன் அவளைப் பாங்கியர் இருக்கும் இடத்திற்குச் செல்லுமாறு சிறிது தூரம் உடன்சென்று வழியனுப்பிவிட்டுப் பிரிதல்.

இஃது இரண்டாம் நாள் நிகழ்ச்சியாகும் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 16).

பழனம்

{Entry: J10__007}

மருத நிலம் (L)

பழித்தகவு உயர்த்தல்

{Entry: J10__008}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி, தலைவனிடம், “தலைவியைக் களவில் கூடவிரும்புதல் ஊரவர் தூற்றும் பழிமொழிக்கு இடனாகும்” என்று கூறுதல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

பழியெனக் கூறல் -

{Entry: J10__009}

தலைவன் பாங்கனை அணுகித் தன் உள்ளத்தைத் தலைவி ஒருத்தியிடம் பறிகொடுத்ததனையும் அவளை அடைய வேண்டுவதன் இன்றியமையாமையையும் எடுத்துக் கூறிய வழிப் பாங்கன் பிறர்மகளை அவர் உடன்பாடின்றிக் கொள்ள மனத்தால் நினைப்பதும் பழிதரும் செயலாகும் என்று கூறல் (குறிஞ்சி நடையியல்)

இதனை(ப்பாங்கன்) கிழவோற்பழித்தல்’ என்றும் கூறுப. (ந.அ. 137.) (வீ. சோ. 92 உரை மேற்.)

பழிவரவுரைத்துப் பகல்வரல் விலக்கல் -

{Entry: J10__010}

வரையாது வந்தொழுகும் தலைவனைத் தோழி ஏதங்களை விளக்கிக் கூறி இரவுக்குறி வாராது விலக்க, அவன் பகற்குறிக்கண் வந்து நிற்க, “நின் அருள் எங்களுக்குப் பெரும் பழியைத் தருகின்றது; ஊரில் அலர் பரவியுள்ளது” என்றாற் போலப் பழி ஏற்படுவதனைக் கூறிப் பகற்கண் அவன் வருவதனைத் தடுத்தல்.

இதனை ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக்கண், ‘பகல் வருவானை இரவு வருக என்றல்’ என்பதன்கண் அடக்கிக் கூறுப. (ந. அ. 166).

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 254)

“பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: J10__011}

“முன்பு அவருடன் கூடி வாழ்ந்தபோது உற்ற இன்பத்தை நினைப்பதால்தான் இத்துன்பத்தையும் ஆற்றிக்கொண்டு உயிர் வாழ்கிறேன்; அதுவும் இல்லையாயின் நான் வேறு எதுகொண்டு வாழ்வேன்?”

“முன்பு அவருடன் புணர்ந்தபோது யான் உற்ற இன்பத்தை மறத்தல் அறியாமல் இருக்கும்போதே, அவரைப் பிரிந்தமை என் உள்ளத்தைச் சுட்டு எரிக்கின்றது. இனி அதனை மறந்துவிட்டால் யான் எவ்வாறு உயிர்வாழ்வேன்?” என வரும் தலைவி கூற்றுக்கள். (குறள் 1206, 1207)

பள்ளிமிசைத் தொடர்தல் -

{Entry: J10__012}

தலைவி தலைவனைப் பிறளொருத்தியை நாடிப் போக வொட்டாமல் இரவில் படுக்கையிலேயே இருத்திக் கொள்ளுதல்.

“தலைவ! நான் நின்னை ஆடையைப் பற்றி ஈர்ப்பவும் கேளா மல், என்னை நீத்துப் பரத்தையை நாடிப் போவாயோ?” என்றாற் போன்ற தலைவி கூற்று.

இது பெருந்திணைக்கண் பெண்பாற் கூற்றினதாகிய ஒரு துறை. (பு. வெ. மா. 16: 18)

பள்ளியிடத்து உய்த்தல் -

{Entry: J10__013}

இரவுக்குறி இறுதிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “இப்பொழிலிடை நின்று நீலப்பூக்களைக் கொய்யாது நின் தோழியொடு இல்லத்துக்குச் சென்று துயில்வாயாக” என்று தலைமகளை அவள் உறங்கும் இடம் நோக்கி விடுத்தல்.

இதனைத் ‘தலைவன் இறைவியை இல்வயின் விடுத்தல்’ என்ப. (ந. அ. 158)

இஃது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 167)

பள்ளியிடத்து ஊடல் -

{Entry: J10__014}

கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வர, முதலில் வாயில்மறுத்த தலைவி அவன் ஆற்றாமை கண்டு வாயில் நேரப் புக்குப் பள்ளியிடத்தானாகிய அவனிடம், “நின்னை இடைவிடாது நுகர்வதற்கு முற்பிறப்பில் நல்வினை செய்யாத நான் என்னை நோவதனைத் தவிர நின்னை நோவது பொருத்தமின்று. அது கிடக்க. நின்காதலிமார் ஆடவர் பலரிடத்தும் கற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதல் வகைகளை யான் செய்யமாட்டேன். அதனால் என்னைத் தொடாதே என் கலையினை விடுவாயாக” என அவன் பிறமகளிரொடு கொண்ட தொடர்பினை நினைத்துப் புலப்பது.

இது‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 358)

பற்றி உரையாடல் -

{Entry: J10__015}

தலைவியைத் தலைவன் நேரிற்கண்டு அவளிடம் உரை யாடுதலை விரும்புதல்.

இது காமநுகர்ச்சியிடத்து வேட்கையால் செய்யும் குறிப்பான செயல்களுள் ஒன்று.

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் ‘குறிப்பு’ (கா. 90) என்பதன்பாற்படும். (வீ. சோ. 96 உரை மேற்.)

பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

{Entry: J10__016}

பறவைகள் பறக்கும் திறனும் கூவும் திறனும் நன்மைதீமை களைக் குறிக்கும் என்பதனால், இந்த நிமித்தம் ஓரும் முறைக்குச் சகுனம் என்பது பெயர். சகுனம்-பறவை.

தலைவி, தலைவன் வருமாறு நல்ல சகுனமாகப் பறக்கவும் கூவவும் பறவைகளைக் கேட்டுக்கொள்வது துறைச்செய்தி.

“செம்போத்தே! காகமே! என்மணாளன் மாதவன் இங்கே வருமாறு பறந்து கூவுங்கள்!” என்ற தலைவியின் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (பெரியதிரு. 10 : 10 : 1 - 5)

பறவையொடு பரிவுற்றுரைத்தல் -

{Entry: J10__017}

தலைவி தன்துயரைப் பறவையிடம் கூறித் தலைவனிடம் தெரிவிக்க வேண்டுதல்.

“சோலைப்பக்கத்து நீர்நிலையில் கயலை உண்ணும் நாரையே! ‘நின்னைப் பிரிதலை மனத்தாலும் கருதேன்’ என்று கூறிய என் தலைவர் பிரிந்து இன்று முழுதும் என்னைக் காண வாராததனால், நான் கண்ணீர் விட்டுத் துன்புறும் செய்தியை அவருக்குத் தெரிவிப்பாயாக” என்று தலைவி நாரையை வேண்டுதல்.

இஃது ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல் 635).

பறவையொடு வருந்தல் -

{Entry: J10__018}

தலைவன் களவுக் காலத்தே ஒருவழித்தணந்தவிடத்து, அவனது பிரிவினால் மாலைப்பொழுது கண்டு மயங்கிய தலைவி வண்டானம் என்ற நெய்தல்நிலப் பறவைகளைக் கண்டு, “யான் படும் துயரம் கண்டு எனக்காக இரங்காமல் இப்பறவைகள் தாம் உணவு கொள்வதிலேயே குறியாயுள் ளன. இஃது என்னை பாவம்!” என்று வருந்திக் கூறுவது.

இஃது ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 189)

‘பன்னல் சான்ற வாயில்’ -

{Entry: J10__019}

வேதத்தை ஆராய்தல் அமைந்த வாயிலாகிய அந்தணர். வாயில்-வழி. அவிப்பலி கொள்ளும் அங்கியங்கடவுளுக்கும் அது கொடுக்கும் தலைவனுக்கும் இடை நின்று கொடுப்பித் தலின் அந்தணரை ‘வாயில்’ என்றார். (தொ. பொ. 146 நச்.)

பனிஎதிர்பருவம் -

{Entry: J10__020}

பனி முற்பட்டுத் தோன்றும் முன்பனிப்பருவம். இது புணர்ச் சிக்குரிய பெரும்பொழுதுள் ஒன்றாய்க் குறிஞ்சிக்குரியது. (தொ. பொ. 7 நச்.)

பாக்கம் -

{Entry: J10__021}

1. நெய்தல் நிலத்தூர்; ‘கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து’ (பட்.27)

2. ஊர் - ‘கட்கொண்டிக் குடிப்பாக்கத்து’ (மதுரைக். 37)

பாகனுக்குரிய செயல்கள் -

{Entry: J10__022}

தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டு தன் இல்லம் வந்போது ஊடல் கொண்ட தலைவியைத் தான் வாயிலாக நின்று தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுதலும், பின் ஏற்றுக் கொள்ளச் செய்தலும், அதற்கு ஏதுவாக அவளது ஊடலைப் போக்குதலும், கற்புக்காலத்தில் தலைவியைப் பிரிந்து நாடிடை யிட்டும் காடிடையிட்டும் போய்த் தன் செயலை நிறைவேற்றிய பின், “ஊர் சேய்மையிலுள்ளதே! தலைவியை விரைந்து சென்றடைதல் யாங்கனம்?” என்று தலைவன் வருந்துவது நோக்கி அவனைத் தேற்றுதலும் போல்வன பாகற்குரிய செயல்களாம். (ந. அ. 102)

பாங்கர் நிமித்தம் -

{Entry: J10__023}

பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம். அது பன்னிரண்டு வகைப்படும். அவையாவன பிரமம் பிரசாபத் தியம் ஆரிடம் தெய்வம் என்ற பெருந்திணை மணங்கள் நான்கும், அசுரம் இராக்கதம் பைசாசம் என்ற கைக்கிளை மணங்கள் மூன்றும், கந்தருவ மணத்தின் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அக்கந்தருவ மணத்தின் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் காதற்பரத்தையும் என்பன. (தொ. பொ. 101 இள.)

‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -

{Entry: J10__024}

மெய்தொட்டுப் பயிறல் முதல் மடல்மாக் கூறுதல் ஈறாக முன் சூத்திரத்துக் கூறப்பட்ட கிளவிகளுள், பாங்கரால் கூடும் இருவகைக் கூட்டத்திற்கும் நிமித்தமாக நிகழும் கிளவிகள் பன்னிரண்டு என்பர் நூலோர். அஃதாவது ‘பிரிந்தவழிக் கலங்கல்’ முதல் ‘மடல்மாக் கூறுதல்’ ஈறாக உள்ள பன்னிரு கிளவிகளும் (கள. 11), பாங்கற்கூட்டம் - தோழியிற் புணர்ச்சி - என்ற இருவகைப் பாங்கர் கூட்டத்திற்கும் உரியன. ‘பாங்கர்’ என்ற பன்மைச்சொல் பாங்கன் பாங்கி - இருவரையும் சுட்டும். (தொ. கள. ச. பால.)

பாங்கற்கு உரியன -

{Entry: J10__025}

பார்ப்பானைப் போல, தலைவனிடம் கழிகாமத்தின் தீங்கு முதலியன பற்றி எடுத்துரைக்குங்கால் தலைவன் கூறுவனவற் றிற்கு மறுமொழி கூறுதல் பாங்கற்கு உரித்து. அது களவுக் காலத்துப் பாங்கற்கூட்டம் என்ற கிளவிக்கண் விரித் துரைக்கப்படும்.

கற்புக் காலத்துத் தலைவன் புறத்தொழுக்கத்தில் புகாமல் பாங்கன் இடித்துரைத்தலும் உண்டு. (தொ. பொ. 182 நச்.)

பாங்கற் கூட்டம் (1) -

{Entry: J10__026}

பாங்கனைத் தலைவன் கூடும் கூட்டம் - பாங்கனால் தலைவி இருப்பிடம் நிலை முதலியவற்றை அறிந்து தலைவியைத் தலைவன் கூடும் கூட்டம் - என இருவகையாகப் பொருள் பெறும்.

“இரண்டாம் நாள் நிகழும் இடந்தலைப்பாட்டினை அடுத்து மூன்றாம் நாள் பாங்கற்கூட்டம் நிகழும்” என்பார் ஒருசாரார்; “இடந்தலைப்பாடு நிகழ்ந்தால் பாங்கற் கூட்டம் நிகழாது; பாங்கற் கூட்டம் நிகழ்ந்தால் இடந்தலைப்பாடு நிகழாது” என்று கொள்வர் ஒருசாரார். (இறை. அ. 3 உரை)

பாங்கற் கூட்டம் (2) -

{Entry: J10__027}

மூன்றாம் நாள் பாங்கனால் கூடும் கூட்டம் களவிற்குரிய கிளவித்தொகை பதினேழனுள் ஏழாவது. (ந. அ. 123)

இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் இரண்டனையும் கொள்வர் சிலர்.(தொல்காப்பியம், நம்பி அகப்பொருள், மாறன் அகப்பொருள், இலக்கணவிளக்கம் - இவற்றுள் காண்க.)

இரண்டனுள் ஒன்றே நிகழும் என்பது சிலர் கருத்து. (இறையனார் அகப்பொருள், களவியற் காரிகை, தமிழ்நெறி விளக்கம், திருக்கோவையார்-இவற்றுள் காண்க)

பாங்கற் கூட்டம்: துறைகள்

{Entry: J10__028}

1. நினைதல், 2. வினாதல், 3. உற்றதுரைத்தல், 4. கழறல், 5. மறுத்தல், 6.கவன்றுரைத்தல், 7. வலியழிவு உரைத்தல், 8.விதியொடு வெறுத்தல்,9.நொந்து கூறல், 10. நோதல் நீங்கி இயலிடம் கேட்டல், 11. இயலிடம் கூறல், 12. வற்புறுத்தல், 13. குறிவழிச் சேறல், 14. காண்டல், 15.வியந்துரைத்தல், 16. கண்டமை கூறல், 17. செவ்வி செப்பல், 18. அவ்விடத்தேகல், 19. மின்னிடை மெலிதல், 20. பொழில் கண்டு மகிழ்தல், 21. உயிரென வியத்தல், 22. தளர்வகன்று உரைத்தல், 23. மொழி பெற வருந்தல்,24. நாணிக்கண் புதைத்தல், 25. கண் புதைக்க வருந்தல், 26. நாண் விடல், 27. மருங்கணைதல், 28. இன்றி யமையாமை கூறல், 29. ஆயத்து உய்த்தல், 30. நின்று வருந்தல் என்ற இவை முப்பதும். (கோவை. 19-48)

பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -

{Entry: J10__029}

“பாங்கியர்தம் கூட்டத்திடையே நிற்கும் மயிர்ச்சாந்து நீவிய ஓதியையுடைய தலைவியை இனிப் பெறுதல் அரிது என்று வருந்திச் செயலற்ற நெஞ்சத்தொடு கவலையுற்று மீண்ட என் உள்ளத்துயரைப் போக்கித் தெய்வத்தை ஒத்த தலைவியின் தோள்களை யான் மீண்டும் அடையுமாறு சேர்ப்பித்த என் தோழனுடைய நட்பினை, ஊழ்வினை, இனி யான் எடுக்கும் பிறப்புக்கள்தோறும் அமைத்துத் தருவதாகுக!” என்று தலைவன் பாங்கனை வாழ்த்திக் கூறுவது.

இச்சூத்திரத்துக் ‘குற்றம் காட்டிய’ என்றதனான் கொள்ளப் பட்ட கூற்றுக்களுள் ஒன்று. (தொ. பொ. 102 நச்.)

பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -

{Entry: J10__030}

“நல்லாய்! என்னிடத்தே பேரன்பு கொண்டு கருணை செய்து மகிழ்விக்கும் நீ, தொண்டிநகரைப் போன்று இயற்கை வனப் பும் பண்புகளும் உடையை. இங்ஙனம் என்னை மகிழ்விக்கும் நீ இனி வரும்போது நின்தோழியாகிய பருத்த தோள்களை யும் நறிய நெற்றியையும் உடையாளோடு மெத்தென நடந்து என்னைக் காண வருவாயாக” (ஐங். 175) என்ற தலைவன் கூற்று.

இது ‘குற்றம் காட்டிய’ என்றதனான் கொள்ளப்பட்ட கூற்றுக் களுள் ஒன்று. (தொ. பொ. 102 நச்.)

பாங்கற் கூட்டம் வகை ஏழு -

{Entry: J10__031}

1. சார்தல்-தலைவன் தன் தோழனைச் சென்றடைதல்

2. கேட்டல்-தோழன் தலைவனது வாட்டத்திற்குக் காரணம் கேட்டல்

3. சாற்றல்-தலைவன் காரணம் கூறல்.

4. எதிர்மறை-தோழன் தலைவனை எதிர்மறுத்துக் கூறுதல்.

5. நேர்தல்-தோழன் தான் சென்று தலைவியைக் கண்டு வர ஒப்புக்கொள்ளுதல்.

6. கூடல்-தலைவன் சென்று தலைவியைக் கூடல்

7. பாங்கிற் கூட்டல்-தலைவன் தலைவியைப் பாங்கியரது இடத்தில் சேரச் சிறிதே தொலைவில் கொண்டுபோய் விடுதல். (ந. அ. 136)

பாங்கன் -

{Entry: J10__032}

தலைவனுடைய பெற்றோர்களான் தம் பிரதிநிதியாகத் தலைவனுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட நண்பன் பாங்கன் ஆவான். தலைவனுடைய பெற்றோர் போல அவன்நலன் களைப் பேணுதலும், தவறு கண்டவிடத்து இடித்துரைத்துத் திருத்துதலும் பாங்கன் தொழிலாகும். பார்ப்பார்க்குரிய கூற்றுக்களாகக் கூறப்பட்ட காமநிலை உரைத்தல், தேர்நிலை உரைத்தல், கிழவோன்குறிப்பினை எடுத்துமொழிதல், ஆவொடுபட்ட நிமித்தம் கூறல், செலவுறு கிளவி, செல வழுங்கு கிளவி முதலியன பாங்கற்கும் உள. தலைவன் கூறிய மொழிக்கு எதிர்மொழி கூறும் உரிமை பாங்கனுக்கு உண்டு. தலைவனுடைய இடுக்கண் கண்டவழி அதன் காரணம் யாதென்று அவன் மொழியும் முன்னே வினவுதலும், தலை வன் கூறுவதனை மறுத்தலும் போல்வன களவுக்காலத்துப் பாங்கற் கூட்டத்தில் காணப்படுவனவாம். (தொ. பொ. 177, 182, 183 நச்.)

பாங்கன் உற்றது வினாதல் -

{Entry: J10__033}

தோழன் தலைவனது வாட்டத்தைக் கண்டு ஐயுற்று அவனுக்கு யாது நேர்ந்தது என்று வினவுதல்

“தலைவ! பேய் தீண்டினாற்போலவும் நோயுற்றாற் போலவும் வாடி ஒளியிழந்து நிற்கிறாயே! உனக்கு உற்றது என்?” (தஞ்சை.கோ. 40) என்பது போன்று பாங்கன் வினாதல்.

இது களவியலுள், ‘பாங்கற்கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ. 137)

பாங்கன் கழறல் -

{Entry: J10__034}

தோழன் தலைவனைக் கடிந்துரைத்தல்.

பாங்கன் பல நூற்பயிற்சியும் உடையோன் ஆதலின், தலைவன் கூறியது கேட்டுச் சினந்து, “எவ்வாற்றானும் இழியாத பெருமை படைத்த தலைவ! நீ ஒரு பெண்ணின் கண்வலையிற் பட்டு மயங்கித் துன்புறுகிறாய் என்பதே பெரிதும் இழுக் குடையது. இத்தீயொழுக்கம் வேண்டா” (கோவை. 22) என்றல் முதலாகப் பாங்கன் இடித்துரைக்கும் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் கிழவோற் பழித்தல் -

{Entry: J10__035}

தோழன் தலைவன் கூறிய அதனை எள்ளி நகைத்தல்.

“தலைவ! நீ கூறுவது ஒரு சிலந்தி வலையால் களிறு கட் டுண்டு வருந்தியது என்றல் போலும். கற்றுத் தேர்ந்தவனும், கலங்காத உள்ள உரம் உடையவனுமான நீ ஒரு பெண்ணின் அழகில் உன்னைப் பறிகொடுத்துவிட்டுத் துயருறுதல் வியப்- புக்குரியதே”என்றாற் போன்ற பாங்கன் கூற்று.(தஞ்சை.கோ. 44)

இதனைத் திருக்கோவையார் ‘கவன்றுரைத்தல்’ (24) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று (ந.அ. 137)

பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -

{Entry: J10__036}

பாங்கன் கூற்றுப் பெரும்பான்மையும் தலைவனால் கொண் டெடுத்து மொழியப்பட்டு வருதலால் நூலோர் தலைவற் குரிய கிளவிகளுள் பாங்கன் கூற்றை அடக்கினர். (தொ. கள. 11 ச. பால.)

பாங்கன் தலைவன்தனக்குத் தலைவிநிலை கூறல் -

{Entry: J10__037}

பாங்கன் மீண்டுவந்து தலைவனிடம் தலைவியின் நிலையைக் கூறுதல்.

“தலைவ! உன்னைக் காமநோய்க்கு ஆளாக்கிய அப்பூங் கொடி இன்றும் உன்னைக் கூடி மகிழ்விக்க நீ கூறிய இடத் தில் காத்திருக்கிறாள்” (தஞ்சை. கோ. 56) என்றல் போன்ற பாங்கன் கூற்று. (ந. அ. 137)

இது களவியலுள் ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -

{Entry: J10__038}

தோழன் தலைவனை நோக்கி, “நின்னை இந்நோய்க்கு ஆளாக்கிய அவ்வுருவம் எங்கிருக்கிறது? அதன் இயல்பு எத்தகைத்து?” என்று வினவுதல்.

காமநோயால் வாடியுலர்ந்துவிட்ட தலைவனது உயிரைக் காக்கும் நோக்கத்துடனே தோழன் தானே முயன்று அவன் துயரினைக் களைய முற்படுவது இக்கூற்று.

இது களவியலுள், ‘பாங்கற் கூற்றம்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவனை வியத்தல் -

{Entry: J10__039}

பாங்கன் தலைவனது நிறையை வியந்து பாராட்டுதல்.

“இப்பேரழகியைக் கண்டும் அவளுடைய வாள் போன்ற கண்களால் புண்பட்டும் வருந்தும் என் பெருமான் அதனுடன் அமைந்து, இறவாமலிருப்பது அவனது உயர்ந்த நிறையால் தானோ” (தஞ்சை கோ. 54 ) என்று பாராட்டுதல் போல்வன.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவனை வியந்தது -

{Entry: J10__040}

“பூக்கள் நிரம்பிய கரிய தினைக்கொல்லையில் போர் செய்யாது புழுதியில் திளைத்துக் காந்தட் குலையினாலே தன் முகத்தில் தோன்றும் மதநீரில் மொய்க்கும் வண்டுகளைப் பிடி ஓட்ட, வேந்தன் போலப் பெருமிதமாக நிற்கும் உத்தமக் களிற்றை அக்கொல்லையினின்று வெருட்டும் வேடர்களின் தங்கையான இத்தலைவியைத் தழுவாமையாலேயே தலைவன் இத்தகைய நோய்வாய்ப்பட்டான் போலும்!” என்று பாங்கன், தலைவியைக் கண்டு மீண்டு தன்னிடம் வந்து தன் நிலையைத் தெளிவாகக் கூறிய தலைவனை வியந்து, தன்னுள் கூறிக்கொள்வது.

இது ‘குற்றம் காட்டிய’ என்பதனான் கொள்ளப்பட்டதொரு கூற்று. (தொ. பொ. 102 நச்.)

பாங்கன் தலைவனோடு அழுங்கல் -

{Entry: J10__041}

தோழன் தலைவனிடம் வருந்திக் கூறல்.

“அறிவுடைத் தலைவ! பேரின்பம் பெறுவிக்கும் நூல்பல கற்ற நீ இவ்வாறு சிற்றின்பத்தில் நின்வயம் இழந்து நிற்கிறாய். என் அறிவுரையும் பயன்படாது என்கிறாய். யான் எப்படி நின் துன்பத்தைப் போக்கவல்லேன்?” (அம்பிகா. 53) என்பது போன்ற தோழன் கூற்று.

இதனைத் திருக்கோவையார், ‘பாங்கன் நொந்துரைத்தல், (27) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவியைக் காண்டல் -

{Entry: J10__042}

தலைவன் சொன்ன நெறியே சென்று தோழன் தலைவியைக் காணுதல். இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவியை வியத்தல் -

{Entry: J10__043}

தோழன் தலைவியின் தண்ணளியை எண்ணி வியத்தல்.

“இந்நல்லாள் என் தலைவன்மேல் தனக்குள்ள அன்பாலும் அருளாலும்தான் இன்றும் இந்தக் குறியிடத்தே வந்து தனியளாய் நிற்கிறாள். இவள் என் பெருமாற்கு இன்பம் தந்து அவன் நோயைத் தீர்ப்பது உறுதி” (தஞ்சை. கோ. 55 ) என்றல் போலப் பாங்கன் தன்னுள் கூறிக்கொள்வது.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தலைவியை வியந்தது -

{Entry: J10__044}

“இந்நங்கையின் கண்களைச் சேரனுடைய கொல்லிமலையில் இருக்கும் சுனைகளில் உள்ள குவளைகள் பெற்றன. இவள் பற்களைப் பாண்டியனுடைய கொற்கைத் துறையில் காற்றால் அமைக்கப்பட்ட மணல்மேட்டில் கடலலைகளால் கொண்டு சேர்க்கப்பட்ட முத்துக்கள் பெற்றன. இவளது பளபளப்பான நிறத்தைச் சோழனுடைய ஆடு அரங்கத்தை ஒட்டி வளர்ந்துள்ள மாவின் இளந்தளிர்கள் ஈன்றன. தேன் போன்ற இனிய சொற்களையுடைய இவளைப் பெற்றவர் களை உள்ளவாறு அறியாமல், குறவர்கள் தம்மகள் என்று உரிமை பாராட்டுதலின், நிச்சயமாக அவர்கள் அறிவிலி களே!” என்பது போலப் பாங்கன் தலைவியின் உருவம் நோக்கி வியந்து கூறியது.

இச்சூத்திரத்துள் ‘குற்றம் காட்டிய’ என்றதனான் கொள்ளப் பட்ட தொரு கூற்று இது. (தொ. பொ. 102 நச்.)

பாங்கன் தன்மனத்து அழுங்கல் -

{Entry: J10__045}

தலைவனது நிலை கண்டு தோழன் வருந்துதல்.

“கல்வியும் அறவொழுக்கமும் உடைய என் தலைமகன் இவ்வாறு காமநோயுற்றுத் துயருறுகிறானே! என் செய் வேன்?” என்று தோழன் வருந்துல்.

இதுகளவியலுள், பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் தேற்றல் -

{Entry: J10__046}

தோழன், “தலைவ! நீ சொன்னவாறு சென்று அப்பெண் கொடியைக் கண்டு உடனே மீள்வேன்; அதுவரை நீ ஆற்றி யிரு” (தஞ்சை. கோ. 51) என்று அவனைத் தேற்றுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘வற்புறுத்தல்’ (30) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கன் நிமித்தம் -

{Entry: J10__047}

புலனெறி வழக்கன்றி, உலக வழக்கில் பாங்கன் துணையா யிருந்து கூட்டுவிக்கும் மணம் பன்னிருவகைப்படும். அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்திணை மணங்கள், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. இப்பார்ப்பான் பிரசாபதி எனப்படுவான். தலைவன்திறமும் தலைவிதிறமும் முற்ற அறிந்து மணம் செய்விக்க வேண்டும் முறைகளைத் தேர்ந்து இருவர்மணமும் முட்டின்றி நிகழ வழி செய்யும் இன்றியமை யாமை சிற்சில வேறுபாடுகளோடு இப்பன்னிருவகை மணங்கட்கும் உரித்தாகலின், பாங்கன் கூட்டுவிக்கும் மணம் பன்னிருவகைப்பட்டதாம். (தொ. பொ. 104 நச்.)

கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகக் கூறிய யாவற்றிற்கும் (பன்னிரண்டற்கும்) பாங்கன் நிமித்தம் (-காரணம்) ஆவான். கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணை யும், பெருந்திணைக் குறிப்பு நான்கும் எனப் பன்னிரண்டாம். (142 குழ).

பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -

{Entry: J10__048}

தலைவன் தன் நிலைiயினை வெளிப்படையாகக் கூறியதைக் கேட்ட பாங்கன், உலகத்தின் நடைபேற்றுக்குக் காரணமான நற்குணங்களை அவனுக்கு நினைப்பித்து,

“குன்றமே உருண்டு விழும்போது அதனைக் குன்றிமணி தடுத்து நிறுத்தல் கூடுமோ? யானையே எடுத்து உண்ணத் தொடங்கின் அஃதுண்ணாதவாறு மூடிவைக்கும் கலன்களும் உளவாமோ? நல்லனவற்றை அறிந்து நேரிய செயல்களையே செய்து பழகியவர்களே நெறியற்ற செயலைச் செய்யத் தொடங்கின் வேறு யார் அவருக்கு நீதியைக் கற்பித்தல் இயலும்?” எனவும்,

“கதிரவன் ஒளி மழுங்கினும், மதியம் வெம்மை யுறினும், மண் திணிந்த நிலத்தின் எண்திசைகளிலும் நடுக்கம் தோன்றினும், அசைக்க முடியாத நேர்மையினின்றும் தவறாத குலத்திற் கேற்ற கொள்கையும் அக்கொள்கையை நிறைவேற்றுதற்கேற்ற அறிவும் உடைய நீயே ஒரு பெண்ணைக் கண்ட அளவில் கலங்குவாயாயின், இவ்வுலகில் கொள்கையில் தவறாத நேர்மை இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கொள்ள முடியவில்லை!” எனவும் கற்றறி பாங்கன் தலைவனைக் கழறி உரைத்தல்.

“காமம் காமம் என்கிறாயே! காமம் வருத்தமும் அன்று; நோயுமன்று. மேட்டு நிலத்தில் தழைத்த முற்றாத இளம் புல்லினை ஆண்டில் மூத்த பசு நாவால் தடவி இன்புறுவது போல, நினைக்கும் காலத்து அக்காமம் இன்பம் தருகிறது. (நம் அறிவினால் அதனை அவித்து ஒழுகின், அதனால் இன்பம் தோன்றாது. நம் மனநிலையே அதனைப் பெரிதாக் கிக் காண்கிறது)” (குறுந். 204) என்பது போலப் பாங்கன் தலைவற்கு அறிவுவிளக்கம் தருதலும் ஆம்.(தொ.பொ. 102. நச்.)

பாங்கன் நொந்துரைத்தல் -

{Entry: J10__049}

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவன்நிலை கண்டு பாங்கன் அவன் மனத்தைத் தன்வயப்படுத்த இயலாத நிலையில் தலைவன் இவ்வாறு ஒரு பெண்ணிடம் மனம் மயங்கி நிற்பது தன் தீவினையது பயனே என்று உட்கொண்டு அவனொடுகூட வருந்துதல்.

இதனைத் ‘தலைவனோடு அழுங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 137.)

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 27)

பாங்கனிடம் தலைவன் உற்ற துரைத்தல் -

{Entry: J10__050}

‘நிகழ்பவை உரைத்தல்’ என ‘உள்ள துரைத்தல்’ தொல்காப் பியத்துள் சுட்டப்பெற்றது. (பொ. 102 நச்.)

“என்னிடம் வேட்டையினின்றும் தப்பி ஓடிய மான் சென்ற வழியே சென்று, சோலை ஒன்றில் அம்மானைப்பற்றி யான் வினவினவிடத்து, அங்குத் தோழியர்நடுவே இருந்த நறுமலர் அணிந்த கூந்தலாள் ஒருத்தி என் ஆற்றலைக் கைப்பற்றி என் உள்ளத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட மாயத்தால் தடுமாறுகிறேன்” (திணைமாலை 9)

“கதிரவனது வெப்பம் கடுமையாகத் தாக்கும் ஒரு பாறைமீது, கையில்லாத ஊமன் தன் கண்ணால் பாதுகாத்து வரும் வெண்ணெயுருண்டை உருகி அப்பாறை முழுதும் பரவுவது போல, இத்தலைவி அளித்த காமநோய் என்னுடல் முழுதும் பரவிவிட்டது. என்னால் அது பொறுக்க இயலாததாய் உள்ளது. உன் சொந்தக் காரியத்தை வெற்றி பெற நிறைவேற்றுவது போல, என் செயலையும் நிறைவேற்று வாயாக!” (குறுந். 58) என்றாற் போலத் தலைவன் தான் உற்ற நிலையைத் தன் உயிர்த்தோழனிடம் உரைத்தது.

“ஏம் உறு நண்ப! புலவர் தோழ! கேளாய், கருங்கடல் நடுவே அட்டமித்திங்கள் தோன்றினாற் போலத் தன் கதுப்பின் அருகே விளங்கும் சிறு நெற்றியை யுடைய சிறுமி, செயற்கைப் பள்ளத்தில் வீழும் யானையைப் பிணித்தாற் போல என்னைப் பிணித்து விட்டாள்!” (குறுந். 129) என்பதும் அது. (ந. அ. 137)

பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -

{Entry: J10__051}

தலைவன் தான் தலைவியைக் கண்ட குறியிடத்திற்குப் போதல் வேண்டுமெனப் பாங்கனை வேண்டுதல்.

‘ஏகு அவண் என்றல்’ என்றும் இதனைக் கூறுப. (மா. அக. 29)

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 505 உரை)

பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -

{Entry: J10__052}

தன்பொருட்டுச் சென்று தலைவியைக் கண்டு வந்து கூறித் தனக்கு இத்தகைய இன்பம் கிடைக்கச்செய்த தன் தோழ னைத் தலைவன் தன் மனத்துள் மகிழ்ந்து புகழ்ந்துரைத்தல்; கலவியின் மகிழ்ந்த பின்னர் இது நிகழ்வது.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. (இ. வி. 505 உரை)

பாங்கனை நினைதல் -

{Entry: J10__053}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன் தோழனைக் கண்டு அவனிடம் நிகழ்ச்சியைக் கூறி அவன் உதவியால் தலைவியை அடையலாம் என நினைத்தல்.

இதனைப் ‘பாங்கனைச் சார்தல்’ என்றும் கூறுப.

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 137; கோவை. 19)

பாங்கி -

{Entry: J10__054}

தோழி; இவளைப் பிங்கலந்தை நிகண்டு, சேடி, இணங்கி, துணைவி, இகுளை, சகி, சிலதி - எனப் பல பெயரால் கூறும். (933)

பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் -

{Entry: J10__055}

தலைவன் தலைவியுடன்கூட இருத்தற்கு அஞ்சிய தோழி, தலைவனை அச்சுறுத்துதல்.

“ஐய! பகல் கழிய இரவு புகும் நேரம் இது. புனத்தை இரவில் காக்க எம் தமையன்மார் வருவர். அவர்கள் மிகக் கொடியர்” (கோவை. 98) என்பது போலக் கூறுதல். தம் இனத்தராகிய ஆடவர் வரும் நேரத்தில் அயலானாம் தலைவன் அங்கிருந் தால் தீமை விளையுமே எனப் பாங்கி அஞ்சி அது கூறுவதும் (தஞ்சை. கோ. 96) இத்துறையின்பாற்படும்.

இதனைத் திருக்கோவையார் ‘சேட்படை’ என்னும் கிளவிக் கண், ‘காப்புடைத் தென்று மறுத்தல்’ (98) என்னும் கிளவி யாகக் கூறும்.

இது ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 144).

பாங்கி அயலொடு புலம்பல் -

{Entry: J10__056}

உடன்போக்கிற்குப் பிறகு தோழி அயலாருடன் பேசிப் புலம்புதல். (அயலார்-மற்றைப் பெண்டிர்)

“தான் விளையாடும்போது வந்தானொரு வள்ளல் தன் விளையாட்டுப் பாவைக்குப் பூத் தந்தான் என்றதால், (அவனையே தன் கணவனாகக் கொண்ட) தலைவி தெய்வம் தொழாதவள் ஆயினள். அவள் உள்ளத்தில், கற்பொடு புணர்ந்து பழிச்சொல்லைக் காத்தல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. அது பற்றி அவள் உடன்போக்குச் செல்லுதல் வேண்டுமோ?”

இது ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 393)

பாங்கி அருளியல் கிளத்தல் -

{Entry: J10__057}

“யான் மடலேறுவேன்” என்ற தலைவனை நோக்கித் தோழி, “மடலேறுங்கால் பனைமட்டைகளை நீர் வெட்டும்போது அங்குக் கூடு கட்டியிருக்கும் பறவைகளுக்கு மிக்க துன்பம் நேரும். நும்முடைய அருளுடைய தன்மைக்கு அஃது இயலாது” (தஞ்சை. கோ. 106) என்று கூறுதல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் -கண்ணதொரு கூற்று (ந. அ. 145)

பாங்கி, அறியாள் போன்று வினாதல் -

{Entry: J10__058}

தலைவன் தம் கூட்டத்துள் யார்மீது காதல் கொண்டுள் ளான் என்பதனை அறியாதவளைப் போன்று தோழி அவனை வினவுதல். ‘அறியாள் போன்று நினைவு கேட்டல்’ என்னும் திருக்கோவையார்.

“இக்குன்றில் வாழ்ந்து சந்தனமரச் சோலையில் பந்தாடு மகளிர் எண்ணிறந்தவர் உளர். அவருள் யாவளிடத்துக் கருணையை எதிர்பார்த்து நீ வந்துள்ளாய்?” (கோவை. 107) என்றாற் போன்ற தோழி வினா.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்- கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி அறிவு உரைத்தல் -

{Entry: J10__059}

களவுக் காலத்தே பகற்குறி இறுதிக்கண் தலைவன் தலைவிக் குக் குலைந்த ஆடை அணிகலன்களைக் கோலம் செய்து அவள் ஐயம் தீர, “இது நின் தோழி செய்த கோலமே; கலங்காதொழி” எனத் தான் தோழியை நன்கு அறிந்த செய்தியைத் தலைவியிடம் கூறுதல்.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 122)

பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -

{Entry: J10__060}

பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவனிடம் தலைவி கொண்ட புலவி சிறிதும் குறையாத அளவில் தானும் சிறுசினம் உற்று தலைவனிடம், தோழி, அன்பில்லாதவன் எனவும் கொடிய வன் எனவும் அவனது அன்பு குறைந்த திறத்தை இகழ்ந்து கூறுதல்.

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

பாங்கி ஆற்றுவித்து அகற்றல் -

{Entry: J10__061}

பாங்கி தலைவற்கு ஆறுதல் கூறி மறுநாள் வருமாறு கூறி விடுத்தல்.

“தலைவ! யான் தலைவியை அணுகி அவள் உள்ளக்கருத்தை அறிந்து, அவளுக்கு நீ கொடுக்கும் கையுறையை ஏற்க வேண்டும் என்ற மனமிருந்தால், பின்னர் வந்து இக் கையுறை யைப் பெற்றுக்கொள்கிறேன்.” (கோவை. 93) என்று தோழி கூறி அவனை விடுத்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘நினைவு அறிவு கூறி மறுத்தல்’ (93) எனும் கூற்றின்பாற்படுத்தும்.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்- கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல் -

{Entry: J10__062}

தலைவன் இரவுக்குறிக்கண் வருதலைத் தோழி ஏற்றுக் கொள்ளுதல்.

தலைவன் அம்மலைநெறி தனக்கு இருளில் வருதற்கு ஏதம் தாராது என்று உறுதியாகக் கூறியபின் தோழி, “ஆளிகள் வரிசையாகக் கூடி யானைகளைத் தேடும் இரவில் வந்து மீளுதல் நினக்கு எளிது என்று கூறுகிறாய். நான் இதனைத் தலைவியிடம் கூறி அவளை உடன்படச் செய்தல் வேண்டும்” (கோவை. 151) என்றாற் போன்ற தோழி கூற்று.

இஃது உரையிற் கொள்ளப்பட்டது; இரவுக்குறி என்னும் தொகுதிக்கண்ணது. (இ. வி. 517 உரை)

பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல் -

{Entry: J10__063}

தோழி தலைவியை இரவுக்குறியினை ஏற்கச் செய்தல்.

“தலைவி! கடற்கரைச் சோலையிலே பெடையோடு ஆண் நண்டு மகிழ்ந்து கூடுவது கண்டு மனம் வருந்தி நம் தலைவன் சென்றதை மாலையில் பார்த்தேன். இன்று இரவு அவன் எவ்வாறு கண்ணுறங்குவானோ? அறியேன்” (கோவை. 155) என்றாற் போலத் தலைவியிடம் தலைவனது துயர்நிலை கூறி அவள் இரவுக்குறியை ஏற்குமாறு பாங்கி செய்தல்.

இஃது உரையிற் கொள்ளப்பட்டதொரு கூற்று; இரவுக்குறி எனும் தொகுதிக்கண்ணது. (இ. வி. 517 உரை)

பாங்கி இறைவனை நகுதல் -

{Entry: J10__064}

பாங்கி தலைவனைப் பற்றித் தலைவியிடம் நகையாடிக் கூறுதல்.

“தலைவி! இவர் தம் கையிலுள்ள தழையையும் கண்ணியை யும் கொண்டு, முதலில் யானையை எய்து வேட்டையாடி னார்; அடுத்து, அஃது இணையைப் பிரிந்து வந்த மான் ஆயிற்று! மற்றொரு முறை கேட்டால் அது சிறு முயல் ஆயி னும் ஆகிவிடும்!” (அம்பிகா. 92) என்றாற் போன்று தோழி நகையாடும் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 141)

பாங்கி உலகியல் உரைத்தல் -

{Entry: J10__065}

தன்னை வாயிலாக்கித் தலைவியைக் கூட விரும்பிய தலைவ னுக்குத் தோழி காதல் உண்மையெனில் உடனடியாக மணந்துகோடலே உலகத்தின் இயல்பு என்பதைக் கூறுதல். (தஞ்சை.கோ. 94)

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி எதிர்மொழி கொடுத்தல் -

{Entry: J10__066}

தலைவனுக்குப் பாங்கி மறுமொழி கூறுதல்.

“ஐய! சிறுமியராகிய யாங்கள் காக்கும் இத்தினைப்புனத்தின் பக்கம் அம்பு பட்டுக் குருதியொழுகிய மானோ யானையோ வரவில்லை” (தஞ்சை. கோ. 78) என்ற தோழிகூற்று.

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 141)

பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -

{Entry: J10__067}

தோழி தலைவனிடம், “எனக்குத் தெரியாமல் உங்கள் களவை மறைத்திருந்தால், மிக எளிதாகக் கூடி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கூறிச் சிரித்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘மறைத்தமை கூறி நகைத் துரைத்தல், (105) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கியிற்கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -

{Entry: J10__068}

“எனக்குத் தெரியாமல் ஏன் இதனை மறைக்கிறாய்?” என்று தோழி தலைவியைத் தழுவிக்கொண்டு வினவுதல்.

“தலைவி! நான் அவர் படும் துயரம் கண்டு கலங்கி, நின்பாதம் பணிந்து, அவர் தந்த கையுறையும் காட்டி வேண்டுகிறேன். நீ யாவற்றையும் மறுத்து என்னிடம் உண்மையை மறைப்பதும் ஏனோ?” (தஞ்சை. கோ. 121 ) எனத் தோழி வினவுதல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 147)

பாங்கிக்கு இறைவி அருமறை செப்பல் -

{Entry: J10__069}

தலைவி தோழியிடம் தன் களவொழுக்கத்தைக் கூறுதல்.

“தோழி! என்னுள்ளத்திலிருந்த காதலை அறிந்தவளைப் போல் நம்அன்னை, என்னை, “இவள் பாயில் படுத்து உறங்காதவளாயினாள்” என்று கூறும் வகை நான் இரவில் உறக்கம் கொள்ளாமலிருந்தேன். காதலன் மார்பினை அடைந்தவர் உறங்குவதுண்டோ?” என்ற தலைவி கூற்று.

இது ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 238)

பாங்கி குலமுறை கிளத்தல் -

{Entry: J10__070}

தங்கள் குலத்தின் தாழ்வையும் தலைவன் குலத்தின் மேம்பாட்டையும் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

“தலைவ! நீ மருதநிலத் தலைவன்; யாங்கள் சிறுகுடியில் வாழும் பரதவமகளிர்” (நற். 15) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி கையடை கொடுத்தல் -

{Entry: J10__071}

உடன்போக்குக்குத் தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி தலைவியைத் தலைவனிடம் “அடைக்கலம்” என்று சொல்லி விடை கொடுத்தல்.

“தலைவ! உன்னுடைய மெய்ம்மையும் அறம் வழுவாச் சான்றாண்மையும் கருதி, இவளை நீ கைவிடமாட்டாய் (யாவரும் புகழ இவளை வரைந்து கொண்டு மீண்டும் ஈண்டு வருவாய் என்ற நம்பிக்கையோடு) என் தலைவியை உன்னிடம் அடைக்கலமாகத் தந்து விடைதருகிறேன்” (கோவை. 213) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘ஓம்படுத்துரைத்தல்’ (213) என்னும்.

இது வரைவியலுள் களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 182)

பாங்கி கையடை பணித்தல் -

{Entry: J10__072}

பாங்கி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்தல்.

திருமணம் முடிந்த பின் தோழி தலைவனிடம், “இன்று பெருவனப்பினளாய் நின் உள்ளம் கவரும் தலைவி, எதிர் காலத்தே மூத்து, அண்ணாந்து ஏந்திய கொங்கை தளரினும், கருமயிர் வெண்மயிராக மாறினும், அவளிடம் கொண்டுள்ள அன்பு மாறாமல் அவளைக் காப்பாற்றுவாயாக!” (திருப்பதிக். 402, நற். 10 ) என்ற கூற்று.

இது ‘வரைந்து கோடல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

பாங்கி, கையுறை ஏற்றல் -

{Entry: J10__073}

தலைவனைத் தேற்றிய தோழி, அவன் மனம் மகிழும் வண்ணம் அவன் தந்த கையுறைப் பொருளை ஏற்றுக்கோடல்.

“தலைவ! நும் இருவரையும் கூட்டுவித்தது ஊழ்வினையே. அதனை மாற்ற யாராலும் இயலாது. அதுவே என்னை நின் கையுறையை ஏற்று அவளிடம் சேர்ப்பிப்பது” (தஞ்சை.கோ. 115) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘தழை ஏற்பித்தல்’ (114) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

பாங்கி (தையல்), கையுறை மறுத்தல் -

{Entry: J10__074}

தோழி தலைவன் தந்த கையுறைப்பொருளை ஏற்க மறுத்தல்.

“தலைவீர்! நீர் கொண்டுவந்த இத்தழையும் மாலையும் எம் நாட்டிற் கிடைக்கப்பெறுவன அல்ல. இவற்றை அணிந்து தலைவி செல்லின் உறவினர் ஐயமுறுவர். வேறு பல தீமையும் நேர இடமுண்டு ஆதலின் இவற்றை ஏற்க மாட்டோம்” (தஞ்சை. கோ. 98) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்’ (91) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி, கொண்டுநிலை கூறல் -

{Entry: J10__075}

தலைவன் தன்னுயிரைத் தாங்கிகொண்டு நிற்கும் வகையில், குறிப்பால், அவன் குறை நிறைவுறும் என்று தோழி கூறுதல்.

“தலைவ! நீ மடலேறுவதோ ஏறாதொழிவதோ நின் விருப் பப்படி செய்க. உன் விருப்பினை யான் மாற்றுதல் விரும்பி லேன். உன்நிலையைத் தலைவியிடம் சொல்லுகிறேன். ஒருகால் உன் விருப்பினை அவள் ஈடேற்றலும் கூடும். அவள்கருத்து அறிந்த பின்னரே மடலேறுதல் பற்றி முடிவு செய்வாயாக” (கோவை. 80) என்ற தோழி கூற்று.

இதனை ‘உடம்படாது விலக்கல்’ (80) என்னும் திருக்கோவை யார்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 145)

பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -

{Entry: J10__076}

பாங்கி தலைவியிடம் தலைவனோடு உடன்போகும் காட்டு வழியின் துன்பங்களைக் கூறியபோது தலைவி கூறுதல்.

“தோழி! நீ கூறும் சுரத்தினது வெம்மை, நம் இல்லத்திலும் ஊரிலும் என்னைத் தூற்றியுரைக்கும் இச்சூழ்நிலையை விட என்னை அதிகமாகச் சுடாது!” (தஞ்சை. கோ. 313) என்பது போன்ற தலைவி கூற்று.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டில் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

பாங்கி செவிலிக்கு உணர்த்தல் -

{Entry: J10__077}

உடன்போக்கு நிகழ்ந்த பின், தலைவியைப் பற்றி வினவிய செவிலிக்குத் தோழி கூறுதல்.

“அன்னாய்! தலைவியின் மனத்தை அறிந்துகொள்ளாமல், நம் சுற்றத்தார் ஏதேதோ கூறி, வரைந்துகொள்ள வந்த தலைவனுக்கு மணம் மறுத்தனர். ஆகவே இக் கொடுமை யைப் பொறுக்காத அவள் பாலைவழியின் கொடுமையையும் பொறுக்கத் துணிந்து தலைவன் பின்னே சென்றாள்” (தஞ்சை. கோ. 324) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘அறத்தொடு நிற்றல்’ (225) என்னும்.

இது வரைவியலுள், ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 184 உரை)

பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -

{Entry: J10__078}

உடன்போக்குச் சென்று மீண்டு வந்த தலைவன் தலைவி இருவருக்கும் நற்றாய் திருமணம் நிகழ்த்தி மகிழ விரும்பு கிறாள் என்று செவிலி தோழியிடம் கூறியபோது, அவள், “தலைவியை உடன்கொண்டு போன தலைவன் தன் மனை யில் நல்லோரையில் பலரும் அறியத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்” என்று தூதுவர் வந்து கூறியமையைச் செவிலிக்குக் கூறுதல். (தஞ்சை. கோ. 356)

இது வரைவியலுள், ‘தன்மனை வரைதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 194)

பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -

{Entry: J10__079}

தோழி தலைவனிடம், தினைக்கதிர்கள் முற்றிவிட்ட காரணத்தால் இனித் தாம் புனம் காவலுக்கு வருதலில்லை என்றும், இல்லத்துள் அன்னையர் பாதுகாப்பில் இருத்தலே இயலும் என்றும் கூறிப் பின்னர், தன்னையும் தலைவியையும் நிகழ்ந்த உறவையும் மறக்காமல் இருதிறத்தார் பெருமையை யும் காத்தருளுதல் வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுதல் (ஐந். ஐம். 18)

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

{Entry: J10__080}

தலைவனுடைய உறவினரும் அவனைச் சார்ந்த பிற பெரி யோரும் மணம்கேட்டு வந்தமையைத் தம் பெற்றோரும் தம்மைச் சார்ந்த மற்றோரும் ஏற்று மகிழ்ந்தனர் என்பதைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

“தலைவனை நானும் விரும்புகிறேன். அவனொடு நின்னை மணம் முடித்து வைத்தலைத் தாயும் விரும்புகிறாள். தந்தையும் அவனுக்கு நின்னை மணம் புரிவிக்க விரும்புகிறான். ஊர் மக்களும் நின்னை அவனொடு சேர்த்தே பேசுகின்றனர்” (குறுந். 51) என்பது போன்ற தோழி கூற்று.

இது வரைவியலுள், ‘வரைவு மலிதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174)

பாங்கி தலைமகள் அவலம் தணித்தல் -

{Entry: J10__081}

அல்ல குறிப்பட்டதால் வருந்திய தலைவியின் துயரத்தைத் தோழி ஆறுதல் கூறித் தணித்தல்.

“தலைவி! நானும் அவர்செயலைத் தீங்கெனக் கருதி அவரைச் சினந்துரைத்தேன். ஆயின் அவர் வந்து போனதைப் பார்க் குங்கால் நம்பால் அவர் கொண்ட அன்பு மெய்யானது. குறி மருண்டு நீ அவருடன் கூடி மகிழாதவாறு நேர்ந்ததும் ஊழ்வினையே. நீ வருந்தற்க. இன்னே அவர் வருதல் உறுதி” (தஞ்சை. கோ. 196) என்றாற் போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

பாங்கி, தலைவற்கு உடன்போக்குணர்த்தல் -

{Entry: J10__082}

தோழி தலைவனிடம் தலைவியை உடன்கொண்டுபோய் வரையுமாறு கூறுதல்.

“தலைவ! எம்தலைவிக்கு இல்லத்தில் பாதுகாப்பு மிகுதி யாக்கப்பட்டுள்ளது. நீ தரும் பரிசப்பொருள் போதாதென்று எம்மவர் கூறுவர். ஆதலின் நீ இவளை நின் ஊருக்கே அழைத்துப்போய் வரைந்துகொள்ளுதல் தவிர வேறு வழி இல்லை” (தஞ்சை. கோ. 305) என்பது போன்ற தோழி கூற்று.

இது வரைவியலுள், களவு வெளிப்பாட்டில், ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -

{Entry: J10__083}

தலைவன் தலைவியொடு கூடி மகிழ்தற்குரிய குறியிடம் ஒன்றனைத் தோழி கூறுதல்.

இது களவியலுள், பாங்கியிற் கூட்டம் எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கும் உரியது. (ந. அ. 149)

பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -

{Entry: J10__084}

தோழி, தலைவனிடம், தலைவி அவன் இரவில் வருவதனை ஒப்புக்கொண்டாள் என்பதனைத் தெரிவித்தல்.

“தலைவ! யான் அரிதின் முயன்று தலைவியை இரவுக்குறிக்கு இசையுமாறு செய்தேன்” (தஞ்சை. கோ. 172) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள் இரவுக்குறி என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158 )

பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -

{Entry: J10__085}

தலைவனது எண்ணம் பண்டு போலன்றி வேறுவகையாக இருத்தல் கூடும் என்று தோழி தலைவிக்கு முறையாகக் கூறுதல்.

“தலைவி! இனியும் அவர் நம்மிடம் வந்து குறையிரந்து நிற்க மாட்டார்; மடலூர்ந்து வந்து நிற்கும் எண்ணமுடையவர் போல் தோன்றுகிறது!” (கோவை. 88) என்பது போன்ற தோழி கூற்று.

இதனை ‘வன்மொழியாற் கூறல்’ என்றும் கூறுப. (கோவை.88)

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ. 148)

பாங்கி, தலைவன் தீங்கு எடுத்தியம்பல் -

{Entry: J10__086}

குறியிடத்து வாராமல் தலைவன் தம்மை ஏமாற்றிவிட்ட தாகத் தோழி தலைவியிடம் கூறுதல்.

“தலைவர் தெளிவில்லாதவாறு குறிப்புச்செய்து பழகியதனா லேயே, இயற்கையில் நிகழும் செய்திகளை அவர் செய்த குறியாக மருண்டு தடுமாறும் நிலை ஏற்படுகிறது” (தஞ்சை. கோ. 192) என்றாற் போலத் தலைவனிடம் உள்ள குறைபாட் டைத் தோழி தலைவியிடம் கூறுவது.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -

{Entry: J10__087}

பாங்கி தலைவனை முன்னிலைப்படுத்தித் தாம் இனித் தினைப்புனம் காவற்கு வருமாறு இல்லை என்றும், அன்னை யின் பாதுகாப்பில் இல்லத்துள்ளேயே இருத்தல் வேண்டும் என்றும் அறிவித்தல்.

“தலைவ! தினை முற்றிவிட்டது. இனி யாங்கள் தினைக் காவலுக்கு வரமாட்டோம். அருவிநீர் பூக்களைக் கழுவும் காட்டுப் பகுதியில் பொன் விளையும் அந்தப் பாக்கமே யாங்கள் உறையும் இடம்” (ஐங்.ஐம். 12) என்றாற் போன்ற பாங்கி கூற்று.

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -

{Entry: J10__088}

மறுநாள் வந்த தலைவன் தான் அடைந்த துயரைச் சொன்ன போது, தோழி, தலைவி அல்லகுறிப்பட்டதற்குக் காரணம் அவனே என்று கூறுதல்.

“தலைவ! காமம் செலுத்துகையாலே மனவருத்தம் தாங்காமல் போயின், யாங்கள் நின் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டு வரும் நிலை ஏற்படக் கூடும். மலையில் நின் ஊர் யாங்குள்ளது என்பதனைத் தெரிவிப்பாயாக” (ஐங். 237) என்றாற் போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக் குறியிடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘அல்லகுறி’ எனும் வகையது. (ந.அ. 160)

பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -

{Entry: J10__089}

குறியிடத்தில் இரவில் வந்து தன்னுடன் கூடாமலிருந்த தலைவியைத் தலைவன் கொடுமையுடையாள் என்று கூறியதைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

“தலைவி! தலைவர் நேற்று இரவுக்குறியிடத்து வந்து மாஞ் சோலையிலுள்ள கனிகளையெல்லாம் உகுத்துத் துணை பிரியாத அன்னங்களை யெல்லாம் கூட்டில் அமைதியாக உறங்க வொட்டாது வருத்தியும் உன் வருகையைக் காணாமல் மனம் சுழன்றதாகக் கூறுகிறார்” (அம்பிகா. 230) என்று தோழி கூறுதல்.

இது களவியலுள், ‘இரவுக்குறியிடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘அல்லகுறி’ எனும் வகையது.(ந. அ. 160)

பாங்கி, தலைவன் வந்தமை உணர்த்தல் -

{Entry: J10__090}

களவொழுக்கத்தினிடையே தன்னூர்க்குச் சென்றிருந்த தலைவன் வந்ததைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்.

“தலைவி! நின் பசலையும் தனிமையும் மனத்துயரும் நீங்கும்படி, நம் தலைவர் தாம் சென்ற காரியத்தை முடித்துத் தம் மணி நெடுந்தேரில் ஏறி விரைய வந்துவிட்டார்” (அம்பிகா. 300) என்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -

{Entry: J10__091}

பொருள்வயின் பிரிந்து சென்று தலைவன் மீண்டபோது அவனிடம் தோழி, வினை ஆற்றிய இடத்தில் அவன் தம்மை நினைத்ததுண்டா என்று வினவுதல். (அம்பிகா. 324)

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

பாங்கி, தலைவன் வரவு உணர்த்தல் -

{Entry: J10__092}

பரத்தையிற் பிரிந்த தலைவனது வருகையைத் தோழி தலைவி யிடம் தெரிவித்தல்.

பரத்தையிற் பிரிந்த தலைவன், செவ்வணி கண்டு, தன் தேரைச் செலுத்திக் கொண்டு நம் மனைவாசற்கு வந்து உன்னிடத்து விருப்பத்தொடு நிற்கிறான். அவனுடைய புறத்தொழுக்கம் கருதி இப்பொழுது பெருமூச்செறிந்து வெகுளியைத் தோற்றுவித்தல் அறமும் அன்பும் அருளும் ஆகாது. அவனை எதிர்கொண்டழைத்து வரவேற்றலே உனக்குச் சிறப்புடை யது” (அம்பிகா. 457) என்ற தோழி கூற்று.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் கிளவிக்கண்ணதொரு துறை; உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -

{Entry: J10__093}

பாங்கி தலைவனிடம் அவன் நாட்டில் மகளிர் அணியும் தழையும் பூவும் அணிகலனும் சாந்தும் போன்றவற்றையும், இரவில் விளையாடும் இடத்தையும் கூறுமாறு வினவுதல், (தஞ்சை.கோ. 166) (இவற்றை வினவும் பாங்கியின் நோக்கம் தலைவற்கு இரவுக்குறியிடத்தையும் பிற அடையாளங்களை யும் கூறுதலே)

இதனை ‘உட்கோள் வினாதல்’ என்றும் கூறுப. (கோவை. 152) இது களவியலுள் ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 158)

பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -

{Entry: J10__094}

உலக வழக்கம் சிறக்கத் தோழி தலைவனை விருந்துக்கு அழைத்து அவன் அப்பொழுதே தன் ஊருக்குச் செல்வதை விலக்குதல்.

“தலைவ! அருவி முழங்கும் எம் சீறூரில் இன்று எம்மோ டிருந்து மதுவும் கிழங்கும் உண்டு குறவர் ஆடும் கூத்தினை இரவில் கண்டு பின் வைகறையில் நின் ஊருக்குச் செல்வா யாக” (கோவை. 127) என்ற தோழி கூற்று.

இதனைத் ‘தனி கண்டுரைத்தல்’ எனும் திருக்கோவையார் (127).

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘பகற்குறி’ எனும் கிளவிக்கும் உரித்து. (ந. அ. 149)

பாங்கி, தலைவனைக் கண்டமை பகர்தல் -

{Entry: J10__095}

தான் தலைவனை நேரிற் கண்டதாகத் தோழி தலைவியிடம் கூறுதல்.

“தலைவி! அன்று நாம் இருவேமும் புனத்தில் இருந்தபோது மானைத் தேடிக்கொண்டு வந்த ஆடவனையே இன்று கையுறையுடன் நம் விளையாடு பொழிலிடைக் கண்டேன்” (தஞ்சை.கோ. 119) என்றாற் போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 147)

பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -

{Entry: J10__096}

தினைப்புனம் போன்ற குறியிடத்திற்கு இனி வரல் வேண்டா எனத் தலைவனைத் தோழி விலக்கல்.

“தலைவ! தினைமுற்றி அறுவடை செய்யும் கால மாதலின், இனி நாங்கள் பகற்பொழுது முழுவதும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. அப்படி நாங்கள் இருக்கும் நேரங்களிலும் எம் அன்னையர் அடிக்கடி இவள்பால் வருவர். ஆகவே இனி இக்குறியிடத்து வருதல் வேண்டா”. (தஞ்சை.கோ. 156) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

பாங்கி, தலைவனைத் தேற்றல் -

{Entry: J10__097}

தான் நகைத்துரைத்ததனைப் பொறாமல் புலம்பிய தலைவனைத் தோழி தேற்றுதல்.

“தலைவ! தலைவி எனக்கு உயிர். யான் அவளுக்கு உயிர். ஆதலின் நீ கொய்து வந்த தழையாடையும் குவளைப் பூக்களும் கைகளில் நின்று கருகிச் சோருமாறு வருந்தற்க. பிறர் துயருற்று வாடுவதை எம்மால் காணவும் இயலாது.” (அம்பிகா. 132) என்பது போன்ற தோழியின் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -

{Entry: J10__098}

தலைவன் வாராமையால் தலைவி துயருறுவதைக் கண்ட தோழி அவனைச் சினந்து இயற்பழித்துரைத்தல்.

“ஒன்றுமே துயர் முன் அறியாதிருந்த நம்மை இவ்வாறு வேட்கைநோயுறச் செய்து தான் பிரிந்துவிட்ட தலைவ னுடைய அருளைப் பெற வேண்டி யாம் இவ்வாறு துயருறு கின்றேமே (இது நம் தலைவனுக்குத் தக்க செயல் ஆகுமா?)” (தஞ்சை.கோ. 213) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -

{Entry: J10__099}

“தலைவ! களவுக்காலத்தில் நீ தலைவியைக் கூடி இன்புற்ற நாள்கள் தவிர, களவொழுக்கத்துக்கு இடையூறு வர யான் தலைவியை உனக்கு அரியளாமாறு செய்வித்த நாள்களில் இத்தகைய பிரிதல் ஆற்றாத அன்புகொண்டு நீ எவ்வாறு ஆற்றியிருந்தாய்?” (அம்பிகா. 438) என்று தோழி தலைவனை வினாதல்.

இது கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந.அ. 203)

பாங்கி, தலைவனை வாழ்த்தல் (1) -

{Entry: J10__100}

பரிசப்பொருள் கொடுத்தும் பெரியோரை முன்னிட்டும் மணம் பேசி முடித்த பின்னர்த் தோழி தலைவனை வாழ்த்து தல்.

“தலைவ! களவில் ஒழுகி ஊரில் அலர் அரும்பிப் பரவ நீ முன்பு மறைவாகத் தலைவிக்கு சூட்டி மகிழ்வித்த ஆரமும் மாலையும் இன்று பலரும் காணச் சூட்டி மகிழ்ந்து, எம்மை யும் மகிழ்வித்து, நீடூழி நலத்துடன் வாழ்வாயாக!” (தஞ்சை. கோ. 285) என்றாற் போலத் தோழி தலைவனை வாழ்த்துதல்.

இது வரைவியலுள், ‘வரைவுமலிதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 174)

பாங்கி, தலைவனை வாழ்த்துதல் (2) -

{Entry: J10__101}

திருமணம் செய்து கொண்டு முறைப்படி இல்வாழ்க்கையும் தொடங்கி நலத்துடன் வாழும் தலைவனைத் தோழி வாழ்த்து தல்.

“தலைவ! நீ சொன்ன சொல் தவறாமல் வந்து வரைந்து எங்களை ஊரார் அலரினின்றும் கண்பொழி நீரினின்றும் காத்துள்ளாய். உங்கள் இல்லறம் இனிது வாழ்க! ” (அம்பிகா. 434) என்பது போன்ற தோழி கூற்று.

இது கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

பாங்கி, தலைவனை விடுத்தல் -

{Entry: J10__102}

களவொழுக்கத்தினிடையே தன் ஊருக்குச் செல்ல விரும்பிய தலைவனைத் தோழி தடுத்த பின்னரும், அவன் வற்புறுத்தி வேண்டியமையால் அவள் விடைதந்து அனுப்புதல்.

“தலைவ! இத்தலைவி உன்னாலன்றி உயிர் வாழ்தல் இயலாத நிலையை அறிந்துள்ளாய். உன் ஊருக்குச் சென்று உன் செயலையும் முடித்து எம்மையும் காத்தலைக் கருதுவாயா யின், இன்றோ நாளையோ உன் செயலை முடித்து விரைவில் மீண்டு வருக!” (அம்பிகா. 282) என்றல் போன்ற தோழி கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித்தணத்தல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

பாங்கி தலைவி அருமை சாற்றல் -

{Entry: J10__103}

தலைவியை அடைதல் எளிதன்று எனத் தோழி தலைவ னிடம் கூறுதல்.

“ஐய! நீ கூறும் எம்தiலைவி நாங்கள் வணங்கும் கண் கண்ட தெய்வம். அவள் எங்கள் மன்னவன்மகள். அவளை நீர் பெறு தல் மிகவும் அரிது” (தஞ்சை. கோ. 86) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -

{Entry: J10__104}

“மடலேறுவேன்” என்று கூறிய தலைவனுக்குத் தோழி, “நீர் மடலேறக் கிழியில் தலைவியுருவம் வரைதல் வேண்டுமே. அஃது இயலாது. எம் தலைவியின் உறுப்பழகு அருமை யுடைத்து. அதனை ஓவியமாக வடித்தல் இயலாது” (தஞ்சை. கோ. 104) என்று கூறுதல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 145)

பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -

{Entry: J10__105}

தலைவி இல்வாழ்க்கையில் நல்லொழுக்கம் பலவற்றையும் கடைப்பிடித்துள்ள சிறப்பைத் தோழி தலைவனுக்கு உரைத்தல்.

“தன் கணவனையும் பெரியோரையும் காணுங்கால் எழுந்து நிற்றலும், அவர்களைத் தொழலும், அன்னார் எதிரே பலவும் பேசாமல், சொல்லுதல் இன்றியமையாவிடத்துப் பல கூற வேண்டிய அளவில் ஒன்றைச் சொல்லுதலும், அந்தணர் அறிவோர் சான்றோரைப் போற்றி வணங்கி அவர்அருள் பெறுதலும் என்னுமிவற்றைத் தன் இயல்பாகத் கொண்டு விட்ட தலைவி இத்தனையும் யாரும் தனக்குக் கற்பிக்கா மலேயே கற்று ஒழுகுவது பெரிதும் மகிழ்ச்சி தருகிறது” என்ற தோழி கூற்று.

இஃது ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 441)

பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -

{Entry: J10__106}

தலைவன் தவிர்க்க முடியாமல் தன் ஊருக்குச் சென்ற செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

“தலைவி! வருந்தற்க. விரைவில் மீண்டு வருவதாகக் கூறி நம் தலைவர் இன்றியமையாக் காரணத்தால் தம் ஊருக்குச் சென்றுள்ளார்” (தஞ்சை.கோ. 252) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -

{Entry: J10__107}

தோழி தலைவியிடம் தலைவன் பொருளுக்காகப் பிரிந்து சென்றமையை உரைத்தல்.

“தலைவி! நமர் பரிசமாக வேண்டிய செல்வத்தை ஒரு சேரத் திரட்டிவரப் பாலையைக் கடந்து பொருள் தேடும் பொருட்டுத் தலைவர் சென்று விட்டார்” (கோவை. 271) என்றாற் போலத் தோழி கூறல்.

இதனைப் ‘பிரிந்தமை கூறல்’ என்றும் கூறுப. (கோவை. 271)

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

பாங்கி, தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் -

{Entry: J10__108}

தோழி தலைவியிடம் தலைவனுடன் அவள் போதலே அதுபோது செய்யத்தக்கது என்று கூறுதல்.

“தலைவி! நின் கூந்தலுக்குத் தலைவன் வேங்கை பாதிரி என்ற பூக்களொடு பாலைவனத்துப் பூவாகிய கோங்கம்பூவையும் இணைத்துச் சூட்ட விரும்புகிறான்” (கோவை. 205) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் ‘துணிந்தமை கூறல்’ என்றும் கூறுப. (கோவை. 205)

இது வரைவியவினுள், களவு வெளிப்பாட்டில் ‘உடன் போக்கு’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 182)

பாங்கி, தலைவிக்குக் கையுறை காட்டல் -

{Entry: J10__109}

“தலைவி! நின் காதுகளில் செருகும் குவளைப்பூக்களையும், வண்டுகள் ஒலிக்கும் கார்மேகம் போன்ற கூந்தலுக்கு அணி யும் முல்லைப் பூக்களையும் யான் கொய்து வந்துள்ளேன். உன்னைத் தனியே விட்டுப் போனதற்கு என்நெஞ்சம் மிகவும் துன்பப்படுகிறது. நீ யாது நினைத்தாயோ?” (அம்பிகா. 211) என்றாற் போலத் தோழி தலைவியிடம் கூறித் தான் கொணர்ந்த பூக்களாகிய கையுறைகளை அவளுக்குக் கொடுப்பது.

இது களவியலுள் ‘இரவுக்குறி’யெனும் எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; பகற்குறியிலும் நிகழ்வதுண்டு. (ந. அ. 158)

பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -

{Entry: J10__110}

தோழி தலைவியிடம் தலைவன் இரவுக்குறி வருதலை மிக விரும்புகிறான் எனக் கூறுதல்.

செறிந்த மழைக்கால இருளில் யானைகள் நடுங்குமாறு சிங்கம் வேட்டைக்குத் திரியும் மலைப்பகுதியின் வழியே இரவுக் குறிக்குத் தலைவன் வர விரும்பும் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல். (கோவை. 156)

இதனை ‘இரவு வரவு உரைத்தல்’ என்றும் கூறுப. (கோவை. 156) இது களவியலுள் ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 158)

பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -

{Entry: J10__111}

தோழி தலைவியிடம் தலைவனது இன்றியமையாமையாகிய விருப்பத்தினைக் கூறுதல்.

“தலைவி! யாரோ ஒருவர் தாம் வேட்டையாடி எய்த அம்புடன் ஓர் யானை வந்ததோ என்று வினவிக்கொண்டு நம் பொழிலிடை வந்துள்ளார். (ஆனால் அவர்கையில் வில்லு மில்லை, அம்பு மில்லை; மாறாகக்) காதலின் காணிக்கையான தழையும் மாலையுமே அவர் கையில் உண்டு. அவர் குறை யிரந்து நிற்கிறார். நாம் இதற்கு என்ன செய்வோம்?” (திணைமாலை. 31) என்னும் வினாப் போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘குறிப்பறிதல்’ (82) என்னும்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 147)

பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -

{Entry: J10__112}

பரத்தையிற் பிரிவில் வைகிய தலைவன் தலைவியது மகப் பேற்றை யறிந்து மகிழ்ந்து அவளைக் காண வந்திருப்பதைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

“தலைவி! நின் வருந்திய ஈன்றணிமையையுடைய உடல், கையிலேந்திய குழந்தை, கச்சினைக் கடந்து பரந்த நகில்கள், நீங்காத மனமகிழ்ச்சி இவற்றைக் காண்பதற்குத் தலைமகன் நின் இல்லத்து வாசலில் வந்து நிற்கிறான். நின் உள்ளக் கருத்தை நான் அறியேன்” (அம்பிகா. 466) என்பது போன்ற தோழி கூற்று.

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உனரா ஊடல். (ந. அ. 206)

பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -

{Entry: J10__113}

தோழி தலைவன்வரவைத் தலைவிக்கு அறிவித்தல்.

“தலைவி! மலர்அன்ன கண்களில் உவகைக்கண்ணீர் மல்க நீயும் கேட்டருள்வாயாக! கார்முகிலின் ஓசை போல, அதோ நம் தலைவர் வரும் தேர் ஓசை கேட்கிறது!” (தஞ்சை. கோ. 150) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘ஒரு சார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -

{Entry: J10__114}

தலைவன் இரவுக்குறியில் வந்துள்ள செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

“புன்னைமரக்கூடுகளில் இருக்கும் அன்னங்கள் உறங்காமல் துயருறுகின்றன” (கோவை. 172) என்பது போன்ற தோழி கூற்று.

(இரவில் புன்னை மரச்சோலையில் ஏதோ ஒரு காரணம் பற்றி அன்னங்கள் துயில் இழந்தன. அக்காரணம் தலைவன் வருகையாதல் கூடும் என்று எண்ணிய தலைவி, ஆண்டுச் சென்று பார்த்து, யாரும் இன்மையின் மனைமீண்டாள். பின்னர் வந்த தலைவன் குறிசெய்து, மயில்கள் உறங்கும் புன்னை மரத்தடியில் காத்திருந்து, தலைவி அங்கு வாராமை யால் மனம் வருந்தி மீளும்போது, தான் வந்ததற்கு அடை யாளமாக இரு புன்னைக்கு இடையேயிருந்த தாழையில் தன் மாலையை வைத்துப் போயினன். இவ்வாறாக அன்றிரவு இருவருமே அல்லகுறிப்பட்டனர்.

இதனைத் திருக்கோவையார் ‘அல்லகுறி அறிவித்தல்’ (172) என்னும்.

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -

{Entry: J10__115}

“தலைவி வேறு எதனையோ குறியாகக் கொண்டு இங்கு வந்து போனதும் உண்மை; அவள் அல்லகுறிப்பட்டுச் சென்று விட்டாள்” என்று தலைவனுக்குத் தோழி கூறுதல். (மருண்டமை - மயங்கியமை)

“அண்ணலே! குளத்தில் மாங்கனிகள் இயற்கையாக மூக்கு இற்று விழும் ஓசையை நின் குறிப்பாக மயங்கிக்கொண்டு இருளிலே தனியே சோலைக்கு வந்து பின் நின்னைக் காணாமல் அவள் வருந்திய துயரம் அளவிடற் கரியது” (அம்பிகா. 229) என்ற தோழி கூற்று.

இது களவியலுள், “இரவுக்குறி இடையீடு” எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -

{Entry: J10__116}

தலைவனுடைய காதலையும் அவன்துன்பத்தையும் அறியும் முதிர்ச்சியில்லாதவள் தலைவி என்று, அவளுடைய இளமைத் தன்மையைத் தோழி அவனுக்குக் கூறுதல்.

“தலைவ! எம் தலைவி தன் மயிர்முடி முடிப்பதற்கு கூடிச் சேரப் பெறாத இளையவள்; இன்னும் தனங்கள் அவளுக்கு முகிழ்க்கவில்லை. அவளிடம் காதலைப் பற்றி யான் யாது பேசுவது? (கோவை. 104) என்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 146)

பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -

{Entry: J10__117}

தலைவனுடன் கூட்டம் நிகழ்ந்துவிட்ட காரணத்தால், தலைவி, மற்றவர்களுடன் சேர்ந்து தானும் பிறையைத் தொழு தல் செய்யாது வாளா நிற்பள். கற்புடை மகளிர் கணவனைத் தவிர வேறு தெய்வம் தொழாத அறநெறி கடைப்பிடிப்பவர் ஆதலின், இந்நிகழ்ச்சி கண்டு பாங்கி தலைவிக்குத் தலைவ னொடு கூட்டமுண்டு என்று துணிதல். (தஞ்சை. கோ. 61)

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 139).

பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -

{Entry: J10__118}

தலைவனுடைய குறையைக் கேட்குமாறு தலைவி அத்தகைய நல்ல மனநிலையில் இல்லை என்பதனைத் தோழி அவற்குக் கூறுதல்.

“தலைவ! சென்ற சில நாட்கு முன்னிருந்தவாறு போலன்றி, இன்று என் தலைவியின் மனநிலை நன்றாயில்லை. அன்னம் தன் நடை கற்கவும், கிளி தன் பேச்சுக் கேட்டுப் பழகவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் தலைவி இன்று தன் விளை யாட்டில் ஈடுபடாது வாளாவுள்ளாள்!” (கோவை. 97)

பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -

{Entry: J10__119}

தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கை நடாத்தும் மனைக்கு வந்த செவிலியிடம் தோழி, அவ்விருவர்தம் இல்லறத்தின் சிறப்பினை எடுத்துரைத்தல்.

“அன்னாய்! நின் அருமை மகள் காதலின்பம் பெற்றுத் திளைத்தல் மாத்திரமன்றி, அறவோர்க்கு அளித்தல் - அந்தண ரோம்பல் - துறவோர்க் கெதிர்தல் விருந்தெதிர்கோடல் என்னுமிவை போன்ற இல்லறத்துக்கு இன்றியமையாக் கடமைகளையும் விடாது செய்து விளங்குகிறாள்” (திருப் பதிக். 465) என்பது போன்ற தோழி கூற்று. ‘பாங்கி இல் வாழ்க்கைத் தன்மை செவிலிக்கு உரைத்தல்’ என்பது இக்கோவைக்கிளவி.

இது கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

பாங்கி, தலைவியை அச்சுறுத்தல் -

{Entry: J10__120}

“நின் களவினை நம் அன்னையர் அறிந்துவிட்டால் என் செய்வது?” என்று தோழி தலைவியை அச்சுறுத்தல்.

“தலைவி! நீ இவ்வாறு தலைவனை நினைத்து ஏங்கிப் புனம் காவலில் மனம் செலுத்தாமல், கிளிகள் வந்து கதிர்களைக் கொய்வதையும் குறிக்கொள்ளாமல், உள்ளம் சோர்ந் திருப்பதை நம் அன்னைமார் காணில், நம்மைப் புனங்காவ லுக்கு அனுப்பாமல் இல்லுள் செறித்து வைத்தலும் கூடும். பேணத்தகும் நின் பெண்மையையும் நாணத்தையும் காத்தல் வேண்டாவா?” (அம்பிகா. 171, தஞ்சை. கோ. 148) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘ஒரு சார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -

{Entry: J10__121}

தோழி தலைவியை விளையாடும் இடத்திலிருந்து அப்பால் அழைத்துப் போதல். (ந. அ. 156)

“புனமே! பொழிலே! தினைமுற்றியதால் எமக்கு விளைந்த துன்பம் இது. இல்லத்திற்கே செல்கிறோம். தலைவர் வந்தால், நாங்கள் ஆறாத் துயரத்துடன் சென்றதாகக் கூறுக.” (கோவை. 145) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

பாங்கி, தலைவியை ஆற்றுவித்தல் -

{Entry: J10__122}

களவொழுக்கத்தினிடையே வரையாது பிரிந்து சென்ற தலைவன் வாராமையால் துயருற்ற தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.

“தலைவி! தலைவர் பிரிந்தமை குறித்து வருந்தும் உன் நெஞ்சம் மகிழுமாறு, வாழை கமுகு கரும்பு இவற்றையும் பூக்களையும் அடித்துக்கொண்டு அவர் ஊரினின்று பெருகி வரும் ஆறு வெள்ளப்பெருக்கோடு காட்சி வழங்குவதனைக் காண்பாயாக! அதில் நீராடி மகிழ்வோம்” (அம்பிகா. 286) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள் ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -

{Entry: J10__123}

களவொழுக்கத்தினிடை (வரைதலுக்கு முன்) ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்று மீண்ட தலைவனிடம் தோழி தான் தலைவியைத் தேற்றுதல் பெரும்பாடாயிற்று என்று அவ்வருமையினைக் கூறுதல் (தஞ்சை. கோ. 280)

இது களவியலுள்,‘ ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று (ந. அ. 168)

பாங்கி, தலைவியைக் கழறல் (1) -

{Entry: J10__124}

பிரிவின் துயர் தாங்காமல் புலம்பும் தலைவியைத் தோழி கடிந்து இடித்துரைத்தல்.

தலைவியின் செயலால் களவு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தோழி, “பிரிவு இருப்பதும் இயல்பே; அதற்கு நீ இத்தனை கலங்குதல் தகாது” (தஞ்சை . கோ. 145) என்று தலைவியை இடித்துரைத்தல்.

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனுங் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி தலைவியைக் கழறல் (2) -

{Entry: J10__125}

தலைவன் தன்னைப் பிரிந்து புறத்தொழுக்கம் ஒழுகுகிறான் என்ற செய்தியைச் சற்றே கடிந்துரைத்த தலைவியைத் தோழி இடித்துக் கூறுதல்.

“தலைவீ! மாலையில் மலர்ந்த குமுதப்பூவில் தேனை உண்ட வண்டு காலையில் தன்னிடத்துக் தேன் நுகர வரும் போது தாமரை குவிந்து தேன் கொடுக்க மறுக்கிறதா? மங்கையர் தமது கற்பினால், காதலர் எக்கொடுமை செயினும், தம் நல்லொழுக்க இயல்பு மாறார். ஆதலின், தலைவன்செயல் குறித்து வருந்தற்க” (அம்பிகா. 453) என்றாற் போன்ற பாங்கியது இடித்துரை.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -

{Entry: J10__126}

இரவுக்குறிக்கென வரைந்த இடத்துக்கண் தோழி தலைவியை அழைத்துச் செல்லுதல்.

“பொன்னே போலும் என் தலைவீ! மயில் உறங்கும் புன்னாக மரத்தடியில், தன் கைவேல் ஒளி வீச வந்து காத்திருக்கும் தலைவரை வரவேற்போம், வா” (தஞ்சை.கோ. 175) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -

{Entry: J10__127}

“தலைவி! தண்புனத்தில் முதலில் ஊசலாடிப் பக்கத்துக் குன்றினின்றும் விழும் அருவியில் நீராடுவோம்,. வருக!” (கோவை. 117) என்று தோழி தலைவியைக் குறிப்பாகப் பகற்குறியிடத்து அழைத்துச் செல்லுதல்.

இக்கூற்று ‘பகற்குறி’ எனும் கிளவிக்குரியது. (ந.அ.149).

பாங்கி, தலைவியைக் குறிவரல் விலக்கல் -

{Entry: J10__128}

தலைவியைக் “குறியிடம் செல்லுதல் வேண்டா” எனத் தோழி விலக்குதல்.

“தலைவியே! அன்னை உன்னுடைய தோள்மெலிவும் நுதல் வியர்வும் கண்டு பெமூச்செறிகிறாள். அவள் எதனை நினைத்து அவ்வாறு செய்கிறாளோ? எனக்குத் தெரிந்திலது. எப்படியும் இனி இந்த இடம் நாம் விளையாடற்குரிய இடமாயிராது” (கப்பற். 136) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 156)

பாங்கி தலைவியைக் கொடுஞ்சொல் சொல்லல் -

{Entry: J10__129}

தலைவன் பொருளுக்காகப் பிரிந்து சென்றதை ஆற்றாமல் துயறுற்றுப் புலம்பிய தலைவியைத் தோழி கடிந்துரைத்தல்.

“சோலையில் நம்மை மருவி வாய்மையும் அன்பும் கலந்த மொழி களைப் பேசிப் பின் கொடிய கானவழியிலே தலைவன் பரிசப் பொருள் தேடப் பிரிந்தமைக்கு நீ வருந்தினால் உனக்கு என்ன துன்பம் ஏற்பட்டுவிட்டது என்று அயலார் உசாவத் தொடங்குவர்” (கோவை. 275) என்று தோழி தலைவியைக் கடிந்து கூறி அடக்கிவைத்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘வழியொழுகி வற்புறுத்தல்’ (275) என்னும்.

இது களவியலுள், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்

{Entry: J10__130}

(பாங்கியிற் கூட்டம் முடிந்து தலைவன் தலைவியை ஆயத் துடன் கூடுமாறு அனுப்பிய பின்னர்த்) தோழி தலைவியை எய்தித் தான் அவளுக்கெனக் கொணர்ந்த மலர்களைக் காட்டுதல்.

தலைவனுடன் தலைவி கூடி மகிழ்வதற்கு இடையூறின்றித் தான் தலைவிக்கு மலர்க்கையுறை கொணரச் செல்வாள் போலச் சென்றிருந்த தோழி, கூட்டத்தால் அழகு பொலிந் தும் நாணுற்றும் சோர்ந்தும் இருந்த தலைவியிடம் மலர்க ளுடன் சார்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘தோழி வந்து கூடல்’ (125) என்னும். இக்கூற்று களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணது. இது ‘பகற்குறி’க்கும் உரித்து. (ந.அ. 149)

பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்

{Entry: J10__131}

பரத்தையிற்பிரிவு நீங்கி வந்த தலைவனிடம் ஊடல்கொண்டு தணியாத தலைவியைத் தோழி அறிவுறுத்தி ஊடல் தணி வித்தல்.

“தலைவி! ஊடல் உணவுக்கு உப்புப் போன்றது. அது மிகுந்தால் நலம் கெடும்; அளவோடமைவதே சுவை தருவது. நீ ஊடலை நீட்டித்தல் தக்கதன்று; பொறுத்துப் போதலே நலம் பயப்பது” (கு. 1302) என்பது போன்ற தோழி கூற்று.

இது கற்பியலுள் ‘பரத்தையிற் பிரிவு‘ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -

{Entry: J10__132}

தோழி, தலைவியின் தோற்றத்தில் (-கண் முதலிய உறுப்புக் களில்) புதிதாகத் தோன்றியிருந்த வேறுபாடுகளைக் கண்டு, அவற்றிற்கான காரணத்தை ஆராய்தல்; ஆராய்ந்த பின், “புணர்ச்சியுண்டு போலும்” என்று ஐயுற்றதனைத் தெளி வாள்.

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 139)

பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -

{Entry: J10__133}

(தலைவியைத் தோழியராடிடம் கூட்டிய பிறகு) தோழி தலைவியை விட்டுத் தனியே தலைவனிடம் வந்து, தலைவிக் கும் தமக்கும் பாதுகாப்பை வேண்டுதல்.

“ஐய! உமது பெருமைக்கும், எம் தலைவி உம்மை முற்றும் நம்பி நயந்து நலமளித்த செயலுக்கும், நும் இருவீருடைய அன்பும் பயனுறத் துணைநின்ற என் செயலுக்கும் இழுக்கும் பழியும் ஏற்படா வண்ணம் காத்தருள்வீராக. அஃது எம்மை மறவா திருத்தலேயாம்” (அம்பிகா. 161) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘பகற்குறிக்கும்’ உரியது.(ந. அ. 149)

பாங்கி, தலைவியைப் பருவரல் வினவல் -

{Entry: J10__134}

வாட்டமுற்ற தலைவியைத் தோழி அவ்வாட்டத்திற்கான காரணம் வினவுதல்.

“தலைவி! நின் கூந்தலில் நீ பூக்களும் அணியவில்லை. இதற்கு முன் இல்லாதபடி இன்று உனக்கு என்ன வருத்தம் வந்துற்றது? எனக்கும் அது புலனாகவில்லையே!” (அம்பிகா. 237) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -

{Entry: J10__135}

தலைவனொடு கூட்டத்தின் பின்னர்த் தலைவியைத் தோழி தலைவிக்குப் புணர்ச்சியுண்டு என்பது அவர்க்குத் தோன்றாத வாறாகப் பிற தோழியர்ஆயத்தொடு சேர்ப்பித்தல்.

தலைவி, தலைவனொடு கூட்டத்தால் நிலைகுலைந்த தன் ஆடைஅணிகளைத் தலைவன் திருத்தமுற அணிவிக்க, அது முன்பு பாங்கி அணிவித்தவாறே திருத்த முற்றதா இல்லையா என்ற ஐயத்தொடு நின்றபோது, தோழி வந்து அவளைப் பிற தோழியருடன் சேர்த்தல் என்றவாறு. (கோவை. 126)

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இது ‘பகற்குறி’க்கும் உரித்து.

பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -

{Entry: J10__136}

“என் ஆருயிர்த் தலைவி! நம் தலைவர் வந்து உன்னை வரைந்து கொண்ட இற்றைநாள் வரை, உற்றாரும் மற்றாரும் சொன்ன அலர்மொழிகளையும் தாங்கிப் பிரிவுத்துயரையும் எங்ஙனம் நீ பொறுத்துக் கொண்டாயோ!” (தஞ்சை. கோ. 369) என்பது போன்ற தோழி கூற்று.

இது, கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

பாங்கி தழை ஏற்பித்தல் -

{Entry: J10__137}

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியை அணுகி, அவன் ஆற்றாமை கூறி, “இத்தழை நமக்கு எளிய தொன் றன்று; இதனை ஏற்பாயாக” என்று தலைவியை அத்தழை யாடையை ஏற்கச் செய்தல்.

இதனைப் ‘பாங்கி கையுறை புகழ்தல்’ என்றும் கூறுப. (ந.அ. 147)

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 114)

பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -

{Entry: J10__138}

தோழி தன் நாட்டு மக்கள் அணியும் பூ முதலியவற்றைத் தலைவனுக்குக் கூறுதல்.

“மாந்தழையும் காந்தட் பூவும் சூடிச் சந்தனச்சாந்து பூசி இரவில் புன்னாகமரத்தடியில் இருப்பார்கள், எம் நாட்டு மக்கள்” (தஞ்சை. கோ. 168) என்பது போன்ற தோழி கூற்று. குறிப்பால், அப்பூக்களைச் சூடிச் சந்தனச்சாந்து பூசிப் புன்னாக மரத்தடிக்கு வருக என இரவுக்குறியிடமும் பிறஅடையாள மும் தலைவற்கு உணர்த்தியவாறு.

இதனைத் திருக்கோவையார் ‘குறியிடம் கூறல்’ (154) என்னும்.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந.அ. 158)

பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -

{Entry: J10__139}

தோழி, தலைவனை “நீயே இந்த வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதலைத் தலைவியிடம் கூறுக” என்று கேட்டுக் கொள்ளுதல்.

“தலைவ! .இந்தச் செய்தி கரும்பிடை வேம்பை வைத்தாற் போல்வது. தலைவிக்குத் துயரம் தரும் இச்செய்தியை நான் அவளிடம் கூறி அவளை வருத்தமுறச்செய்தல் தகாது; ஆதலின், வரைந்து கொள்வதற்கும் நன்கு இல்லறம் இயற்றவும் இன்றியமையாத பொருள் தேடச் செல்லும் உன் பிரிவை, வல்லையேல், நீயே அவளிடம் கூறுக” (தஞ்சை.கோ. 261) என்பது போன்ற தோழியின் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘நீயே கூறு என்றல்’ (269) என்னும்.

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 170)

பாங்கி, நெறியினது அருமை கூறல் -

{Entry: J10__140}

இரவுக்குறி வேண்டிய தலைவனுக்குத் தோழி இரவில் தம் இருப்பிடத்திற்குத் தலைவன் வரும் மலைக்காட்டு வழியில் இருக்கும் துன்பங்களைக் கூறுதல்.

“எம் தலைவியின் உயிர் போன்ற நீர், யானையிரையினைத் தேடித் திரியும் சிங்கங்கள் நிறைந்த குறிஞ்சி வழியில் இருள்நிறைந்த இரவில் தனியே வருதல் தகாது” (தஞ்சை. கோ. 164) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -

{Entry: J10__141}

தோழி, தலைவியை இல்லத்துக் கொண்டுபோய்ச் சேர்த்த பின் மீண்டும் வந்து தலைவனிடம், “இரவுக் குறிவரல் வேண்டா” என்று கூறுதல்.

“தலைவ! இல்லத்துள்ளிருந்து கதவைத் திறந்துகொண்டு அன்னையர் அறியாது வருதல் மிகவும் அருமைப்பாடுடை யது; யாரேனும் அறிய நேர்ந்தால் அதன் விளைவு யாது ஆகுமோ என அஞ்சுகிறோம்.” (தஞ்சை. கோ. ) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 158)

பாங்கி புலம்பல்

{Entry: J10__142}

தலைவியது துயரத்தை நினைத்துத் தோழி துயருறுதல்.

“தலைவன் தலைவியைக் கூடிப் பிரிந்துவிட்டான்; கதிரவ னும் மறைந்துவிட்டான்; செந்நிற மாலை தோன்றிவிட்டது. இப்பொழுது தலைவிக்கு என்ன நிலை ஏற்படுமோ?” (அம்பிகா. 165) என்று தோழி வருந்துதல்

இது களவியலுள், ‘ஒருசார் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 154)

பாங்கி, பேதைமை ஊட்டல் -

{Entry: J10__143}

தலைவி ஏதும் அறியாத பேதை என்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

“தலைவீர்! சிறிதும் அஞ்சாமல் வேட்டையாடும் தமையன் மார் பலருடையாள் எம் தலைவி. அவர்களைப் போலவே அவளும் தன்னால் கொடுமைக்கு ஆளாகி வாடித் துடிக்கும் உயிர்களின் துன்பத்தை அறியாத பேதை. அவள் உமது வருத்தத்தை அறிதல் எங்ஙனம்?” (தஞ்சை. கோ. 90) என்பது போன்ற தோழி கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கி மதி உடன்பாடு -

{Entry: J10__144}

பாங்கி தலைவியின் வேறுபாடு கண்டு புணர்ச்சி உண்மை அறிந்து ஆராய்ந்து தன் மதியை உடன்படுத்துதல். தலைவன் வருகையும் உரையாடல் முதலியனவும் கண்டு, தலைவியை நுகர்ந்த தலைவன் அவனே என்று பாங்கி தன் அறிவில் ஏற்றுக்கோடலும் இதனுள் அடங்கும்.

இது களவியலுள் எட்டாம் கிளவி. (ந. அ. 123)

பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -

{Entry: J10__145}

1. முன்னுற உணர்தல் (முன் உறவு உணர்தல்) - பாங்கற் கூட்டத்தில் தலைவனொடு கூடி வந்த தலைவியது வேறு பாடு கண்ட தோழி அவனொடு புணர்ச்சி நேர்ந்தமையை ஐயுற்று அறிதல்.

2. குறையுற உணர்தல் - தலைவன் தழையும் கண்ணியும் கொண்டு வந்து தன்னிடம் குறையிரந்து நிற்பதைக் கொண்டு புணர்ச்சி நேர்ந்தமையைத் தோழி அறிதல்.

3. இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தல்-தலைவியும் தானும் ஒருங்கிருந்தபோது தலைவன் முன் போலவே கையுறை கொண்டுவரத் தோழி, தலைவனுக்கும் தலை விக்குமிடையே தொடர்புண்மையை அறிந்துகொள்ளு தல். (ந. அ. 138)

பாங்கி, மனைவியைப் புகழ்தல் -

{Entry: J10__146}

பரத்தையிற் பிரிந்த தலைவன்மீது தான் உற்ற ஊடல் தணிந்து, அவனை வரவேற்று மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்த தலைவியைத் தோழி புகழ்ந்து பேசுதல்.

“நாயகன் பிழையை மறந்து அவனைத் தெய்வம் எனத் தொழுது வழிபட்டுத் தன் உடல்நலம் அனைத்தும் தந்து உவப்பிக்கும் எங்கள் தலைவியின் கற்புத்தான் என்னே!” (தஞ்சை.கோ. 407) என்பது போன்ற தோழி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் கிளவிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடலின் ஒழிபு. (ந. அ. 207)

பாங்கி, முற்புணர்ச்சி கூறல் -

{Entry: J10__147}

‘பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்’ காண்க. (சாமி. 94)

பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -

{Entry: J10__148}

தோழி தலைவனை முன் போலவே அப்பொழுதும் குறியிடத் திற்குச் சென்று தலைவியைக் கூடுமாறு கூறுதல்.

“தலைவ! தலைவி எனக்கு உயிர்போலச் சிறந்தவள் ஆயினும், தனக்கு வந்த துன்பத்தைத் தானே காத்துக்கொள்ளுதலால் இளமையிலேயே பேரறிவு படைத்துவிட்டாள் என்பதை உன்னிடம் கூறுதற்கு அஞ்சுகிறேன். என்னை மறைத்து ஒழுகிய தலைவி யான் அம்மறையினை உணர்ந்ததை அறிந்தால் என்னை வெகுளலும் கூடும். ஆதலின் மறையினை யான் அறியாதவள் போல்வேனாக, நீ முன்பு போல நேரிடையாக அவள்தொடர்பினைக் கொள்க” (தொ.பொ. 114 நச். மேற்.) என்பது போன்ற தோழி கூற்று.

இது ‘முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்து உரைத்தல்’ எனவும் படும். (தொ. பொ. 114 நச்)

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல் -

{Entry: J10__149}

உடன்போக்குச் சென்று தலைவனுடன் மீண்டும் தம் ஊருக்கு வரும் தலைவி வழியில் முன்செல்வோர் வாயிலாகத் தான் வருவதைச் சொல்லியனுப்பியதைக் கேட்ட தோழியர், அதனை நற்றாயிடம் கூறுதல்.

“தாயே! ‘தலைவியைத் துரத்திவிட்டுத் தனியே வாழும் பாவிகள்!’ என்று பழி சொல்லாத வகையில் நாங்கள் பாக்கியம் செய்துவிட்டோம். இப்பக்கம் வந்த அந்தணர்கள் தலைவி தலைவனுடன் மீண்டு வரும் செய்தியைக் குறிப்பிட் டனர்” (அம்பிகா. 413) என்றாற் போலப் பாங்கியர் நற்றா யிடம் கூறுதல்.

இது வரைவியலுள், ‘மீட்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 191)

பாங்கியிடைச் சேறல் -

{Entry: J10__150}

இயற்கைப் புணர்ச்சி பாங்கற் கூட்டம் இவற்றின் பின், தலைவன் தலைவியை இனித் தோழி உதவியின்றிப் பெறுதல் இயலாது என்ற நிலைக்கண் பாங்கியிடம் குறை கூறச் செல்லுதல்.

இதனைப் ‘பெட்ட வாயில் பெற்றுச் சேர்தல்’ என்ப. (இ. வி. 507)

இது ‘மதியுடம் படுத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 50)

பாங்கியிற் கூட்டம் -

{Entry: J10__151}

பாங்கி கூட்டிவைக்கத் தலைவன் தலைவியைக் கூடுதல்.

இது களவியலுள் ஒன்பதாம் கிளவி. (ந. அ. 123)

பாங்கியிற் கூட்டம் வகை பன்னிரண்டு -

{Entry: J10__152}

1. இரந்து பின் நிற்றல்-தலைவன் தோழியிடம் குறையுற்று நிற்றல்; அஃதாவது தன் குறையைத் தீர்க்கவேண்டும் என்று வேண்டி நிற்றல்.

2. சேட்படை-சேண்மைப்படுத்துதல்; தோழி தலைவனை மறுத்துரைத்து அகற்றுதல்.

3. மடற் கூற்று-தலைவன் தான் மடலேறுவதாகத் தோழி யிடம் கூறுதல்

4. மடல் விலக்கு- தோழி தலைவனை மடலேறுவதினின்றும் தடுத்தல்.

5. உடன்படல்-பாங்கி தலைவனது குறையை நிறைவேற்ற இசைதல்.

6. மடற்கூற்று ஒழிதல் - தலைவன், மடலேறும் எண்ணம் சொல் இரண்டனையும் விட்டுவிடுதல்.

7. குறை நயப்பித்தல் - தோழி தலைவியை வற்புறுத்தித் தலைவனது குறையை முடித்துவைக்க அவளும் விரும்பும் வகை செய்தல்.

8. நயத்தல் - தலைவி தலைவன் குறையை முடிக்க விரும்புதல்.

9. கூட்டல் - தோழி தலைவியைக் குறியிடம் கொண்டு உய்த்தல்.

10. கூடல் - தலைவன் தலைவியைக் கூடுதல்.

11. ஆயம் கூட்டல்-தோழி தலைவியை அழைத்துக் கொண் டேகித் தோழியர்கூட்டத்தில் சேர்த்தல்.

12. வேட்டல்-தலைவன் தோழியின் விருப்பத்திற்கு இணங்கி விருந்தேற்க விரும்புதல். (ந. அ. 143)

பாங்கியை அறிதல் -

{Entry: J10__153}

இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைவியைப் பாங்கியரை நோக்கிச் செல்லுமாறு வழியனுப்பி மறைந்து நின்று அவளுடைய தோழியர்கூட்டத்தைக் கண்ணுற்ற தலைவன், தலைவி தன் காதல்தோழியைப் பலகால் கடைக்கண்ணால் பார்த்து அவளொடு சிறப்பாக உரையாடுதல் கண்டு, அவளுடைய காதல்தோழி இன்னாள் என்பதனை அறிதல்.

இது ‘வாயில் பெற்று உய்தல்’ எனவும் கூறப்பெறும்(ந. அ. 133)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 18)

பாங்கியைத் தலைவன் பழித்தல் -

{Entry: J10__154}

“நின் குறையை நீயே சென்று சொல்” என்று கூறிய தோழியைத் தலைவன் கடிந்துகொள்ளுதல்.

“நல்லாய்! நின்னைத் தவிர என் குறையைத் தலைவியிடம் எடுத்துரைத்து என்னைக் காக்க வல்லார் வேறு யாரும் இல்லை” என நம்பிக் காலை முதல் நின்னை இரந்து நின்றேனே! அது பயன்படாதொழிந்ததே!” (தஞ்சை. கோ.89) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 144)

பாங்கியைத் தலைவி மறைத்தல் -

{Entry: J10__155}

தலைவனைப் பற்றி உணர்த்தலுற்ற தோழியிடம், அவ்வாறு தனக்கு யாரைப் பற்றியும் எதுவும் தெரியாது என்று தலைவி மறைத்துப் பேசுதல்.

“கையுறை கொண்டு வந்து நம் பொழிற்கண் நிற்பவர் யாரோ? அவர் யாரைக் கருதி, எதனைக் கருதி வந்தாரோ? யான் அறியேன். நீ யாரையோ பார்த்துவிட்டு இங்ஙனம் கூறுதல் தகாது” (தஞ்சை. கோ. 120) என்பது போன்று பாங்கியிடம் தலைவி கூறுதல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று (ந. அ. 147)

“பாங்கியொடு வருக” எனப் பகர்தல் -

{Entry: J10__156}

பாங்கற் கூட்டத்தில் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன், அவளிடம் “என் உயிரனையாய்! இனி நீ வரும்போது உன் பாங்கியுடன் வருவாயாக” (தஞ்சை கோ. 61) என்று கூறுதல்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

பாங்கி (இகுளை) வம்பு என்றல் -

{Entry: J10__157}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து துயருறும் தலைவி, கார்காலத்தைக் கண்டு வாடியபோது, தோழி, தலைவியைத் தேற்றுவதற்காக, அஃது உண்மையில் கார்காலமே அன்று என்று கூறுதல்.

“தலைவி! மயில்கள் காலமல்லாக் காலத்துப் பெய்த மழையைக் கண்டு அகவுதலைக் கேட்டு நீ கார்கால மழை என்று இப்போது மயங்கினாய். உண்மையில் இது கார்ப் பருவம் அன்று” (தஞ்சை.கோ.269) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘காலம் மறைத்துரைத்தல்’ (279) என்னும்.

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந.அ. 170)

பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல் -

{Entry: J10__158}

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன், செயல் முடித்து வரையத் தலைவிபால் வரும் போது, தன்தேர் வருவதை அறிவிக்கத் தன் வலம்புரிச் சங்கினை ஊதியபோது, அச்சங்கின் ஒலியைக் கேட்ட தோழி, தலைவி மகிழத் தலைவன் வருவதைத் தெரிவித்தல்.

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

பாங்கி வாயில் நேர்வித்தல் -

{Entry: J10__159}

பாங்கி தலைவியின் ஊடல் தீர்த்துத் தலைவனோடு அவள் கூடுமாறு செய்தல்.

“தலைவி! மகளிர் பூக்கள் அனையர். ஆடவர் பூக்களிலுள்ள தேனை உண்ணும் வண்டு அனையர். அதனைத் தெரிந்து கொண்டும் நீ நிறம் பசந்து வருந்துவது ஏன்?” (அம்பிகா. 500) என்றாற் போலக் கூறித் தோழி தலைவியது ஊடலைத் தவிர்த்தல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (இ.வி. 555 உரை)

பாங்கி வாயில் மறை -

{Entry: J10__160}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி வந்த தூதாகிய பாங்கியின் வேண்டுகோளைத் தலைவி மறுத்தல்.

“தோழி! மணிகட்டித் தேர் உருட்டித் தெருவில் நடக்கும் நம் புதல்வன் பிறந்த பின்னர், இன்றே நம் தலைவர் நம் இல் லத்தை அணுகியுள்ளார். அவரை ஏற்றுக்கொள் என்றலும் வேண்டுமோ?” (கோவை. 385) என்பது போன்ற தலைவி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘வாயில் மறுத்துரைத்தல்’ (385) என்னும்.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 555 உரை)

பாங்கி விலக்கல் -

{Entry: J10__161}

தலைவன் தன் செயல் குறித்துத் தன்னூருக்குச் செல்லுதலைத் தோழி விலக்குதல்.

“தலைவீர்! தலைவியை மகிழ்வாக வைத்திருத்தலைவிட நுமக்கு நும் காரியத்தை முடிக்க நும்மூர் செல்வது இன்றி யமை யாததாயின், நும்மைத் தடுக்கும் ஆற்றல் எமக்குச் சிறிதும் இல்லை. நீர் புறப்பட்டுச் செல்க!” (அம்பிகா.280) என்பது போன்ற தோழி கூற்று

இது களவியலுள், ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

பாங்கி வெறி விலக்கல் -

{Entry: J10__162}

செவிலி தலைவியின் வேறுபாடுகளுக்குக் காரணம் தெய்வம் எனக் கொண்டு வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த நினைத்தபோது, தோழி அதனை விலக்குதல்.

“முருக! அறியாமையால் ஒன்று வினவ விரும்புகிறேன்; நீ இங்கு வந்த காரணம் யாது? ஆட்டுக்குட்டியின் உயிரைக் கைக் கொள்வதற்காகவா? அன்றி இவ்வெறியாட்டால், போய்க்கொண்டிருக்கும் தலைவியுயிரை மீட்பதற்காகவா?” (தஞ்சை. கோ. 298) என்பது போல, ஆவேசமுற்ற வேலனைத் தோழி வினவுதல்.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; பாங்கி அறத்தொடு நின்றவாறு. (ந. அ. 177)

பாங்கி வைகிருள் விடுத்தல் -

{Entry: J10__163}

உடன்போக்குக்காகத் தோழி தலைவனையும் தலைவியையும் நள்ளிருளில் வழியனுப்புதல்.

“தலைவி! நீ உன் மணாளனுடன் கவலையில்லாமல் செல். நான் நம் சுற்றத்தார்க்கு உரியவாறு உரைத்து, அலர் கூறும் ஊராரையும் வாய் அடைக்கச் செய்யத் தங்கியிருக்கிறேன்; பின்னர் வருவேன்” (தஞ்சை. கோ. 315) என்று கூறித் தோழி அவளைத் தலைவனோடு உடன்போக்கில் உய்ப்பது.

இதுவரைவியலுள், களவு வெளிப்பாட்டின்கண், ‘உடன் போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 182)

பாங்கிற் கூட்டல் -

{Entry: J10__164}

தலைவியைத் தலைவன் பாங்கியருடன் சேர விடுத்தல்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக்- கண் (135) ‘ஆயத்துய்த்தல்’ எனப்படும். (ந. அ. 137)

பாங்கிற் கேட்டல் -

{Entry: J10__165}

தலைவன் தலைவி அருகில் வந்து அவளிடம் ஊர் பெயர் கெடுதி முதலியன வினவுவான் போல நடித்தல்.

இது காமநுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் ‘குறிப்பு’ என்பதன் பாற்படும். (வீ. சோ. 90)

பாங்குணர்வு -

{Entry: J10__166}

பாங்கியை உணர்தல்; இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண், தலைவன் தலைவியை ஆயத்து உய்த்துத் தனித்து நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவழி, அவள் தன் தோழி யர் பலருள்ளும் ஒருத்தியிடமே மிக நெருங்கிப் பழகியதை உட்கொண்டு அவளே அவளுடைய உயிர்த்தோழி என அறிதல்.

இது தமிழ்நெறி விளக்கத்துத் ‘தோழியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 17.)

பாங்கோர் -

{Entry: J10__167}

நட்பினர்: ‘பாங்கோர் பாங்கினும்’ (தொ. பொ. 41).

பாசறைப் புலம்பல் -

{Entry: J10__168}

தலைவன் பாசறைக்கண் தலைவிநினைப்பில் தனித்திருந்து வருந்துதல்.

கற்புக் காலத்துத் தலைவன் மேற்கொள்ளவேண்டிய பிரிவுக ளுள் பகைவயிற் பிரிவும் ஒன்று. பகை மேற்சென்று பகைவரை வென்று மீள்வது என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நிகழ்தலுமுண்டு; நிகழாமையுமுண்டு. தான் தலைவியிடம் குறிப்பிட்ட பருவம் வந்தும் செயல் முடியாமை கண்டு, செயல் மேல் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டிய தன் மனத்தைப் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்து தனித்து வாடும் நிலைக்கு வருந்தச் செய்வது, போரின் மேற் செல்லும் ஊக்கத்தைத் தடுத்துத் தளர்ச்சி தரும் ஆதலின், ‘பாசறைப் புலம்பல்’ பொருந்தாக் காமச் செய்தியாய், அகப்பொருட் பெருந் திணைத் துறைகளுள் ஒன்றாக ஒருசார் ஆசிரியரால் கொள்ளப்பட்டது.

இது நம்பி அகப்பொருள் கூறும் அகப்பொருட் பெருந் திணைக்கூற்று. (ந. அ. 243)

பாட்டுடைத்தலைவன் -

{Entry: J10__169}

பாட்டுடைத் தலைமகன். ‘உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவ னாகும்’ (ந. அ. 246) (L)

பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

{Entry: J10__170}

‘அரிபெய் சிலம்பின்’ என்னும் அகப்பாடலுள் (6), ‘தித்தன்’ எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும், ‘பிண்டநெல்லின்’ என நாடும், ‘உறந்தை’ என ஊரும், ‘காவிரி ஆடினை’ என யாறும் கூறிப் பின்னர் அகப்பொருட் செய்தி கூறப்பட்டது. (தொ. பொ. 87 நச்)

பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் -

{Entry: J10__171}

ஊடல் கொண்ட பெருந்திணைத் தலைவியைத் தலைவன் ஊடல் தணிவித்தற்காகக் காலில் வீழ்ந்தும் கைகள் கூப்பியும் வணங்கிய பிறகு அவள் வருந்துதல்.

“மனமே! என் ஏக்கம் தீர்த்து இன்பமூட்ட வந்த தலைவன் என் காலில் வீழ்ந்து வணங்குகிறான். இன்னுமா உனக்கு இரக்கம் தோன்ற வில்லை? இது உனக்குத் தகாதுகாண்” என்பது போன்ற தலைவி கூற்று.

இது பெருந்திணையுள் பெண்பாற்கூற்றில் நிகழும் ஒரு கிளவி. (பு. வெ. மா. 16 : 17)

‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -

{Entry: J10__172}

புனைந்துரை வகையானும் உலகியல் வழக்கானும் நல்லிசைப் புலவரால் பாடுதற்கு அமைந்த ‘இலக்கணமரபால் அமைந்த ஒழுகலாறு’ புலனெறி வழக்கம் எனப்படும். இது கலிப்பா, பரிபாட்டு என்னும் அவ்விரு பாக்களானும் கூறற்கு உரியதா கும். ‘இருவகைப் பாவினும்’ என்னும் எச்சவும்மையான் ஏனைய பாக்களானும் வருதல் வழக்கு என்பது பெறப்படும். (தொ. அகத். 55 ச.பால.)

பாடன் மகடூஉ -

{Entry: J10__173}

விறலி (திவா. பக். 39)

பாடுவிச்சி -

{Entry: J10__174}

பாண்மகள்; மதங்கி, விறலி எனவும் படுவாள். (சூடா.பக். 47) ( L)

பாடினி -

{Entry: J10__175}

பாட்டுப் பாடுதலில் வல்லவள்; பாணர்குடும்பத்தைச் சார்ந்தவள்; தலைவன்தலைவியர்தம் புகழ் பாடுபவள்; அவர்தம் ஊடலைத் தீர்க்கும் வாயிலோருள் ஒருத்தி.

தலைவன்பிரிவிடைத் தலைவியைத் தேற்றுதலும், தலைவி தலைவனிடம் கோபம் கொண்டபோது அதனைத் தணித்த லும், தலைவனுக்குப் பரிந்துகொண்டு தலைவியை வாயில் வேண்டலும், வாயில் நேர்வித்தலும் இவள் தொழில்களாம். (ந. அ. 96)

பாடினியருள், காண்பாருக்கு விறல் (-மெய்ப்பாடு) தோன்று மாறு கூத்தாடுவோர் ‘விறலியர்’ எனப்பட்டனர்.

பாடினி பாணற்கு உரைத்தது -

{Entry: J10__176}

“மூட்டுவாய் நன்கு அமைந்த செப்பில் இடப்பட்ட பூப் பயன் படாமல் வாடுவதுபோல, இல்லத்தில் தனித்திருந்து வருந்தும் தலைவி, தலைவனது கொடுமையை நம்முன் சொல்வதற்கு நாணமுற்றுத் தன் உடல் மெலிவிற்கு வேறு காரணங்கள் கூறுகிறாள். ஆதலின் அவள் கற்புக்கடம் பூண்ட பெருமை யள்” (குறுந்.9 ) என்ற பாடினி கூற்று. ‘அகம்புகல் மரபின் வாயில்கள்’ எனப்பட்டாருள் பாடினியும் ஒருத்தி. (தொ. பொ. 150 இள.)

பாண்மகன் -

{Entry: J10__177}

பாணன். இப்பாணர்கள் சிறிய யாழினையோ பெரிய யாழினையோ கையிற் கொண்டு நிலையாக ஓரிடத்திராமல் பாட்டுப் பாடிக் காலம் கழிக்கும் ஒருவகை இனத்தினர். இவர்களுள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப் பாணர் முதலாகப் பல பிரிவினர் உளர். (தொ. பொ. 91 நச்.)

சேட்புலம் பிரிந்து சென்ற தலைவன் தலைவியின்பொருட்டு ஆண்டு உறைதலைத் தவிர்ந்து மீளும் நிலைமை கூறுதல், கூத்தன் போலவே பாணனுக்கும் உரிய தொழிலாம். (தொ. பொ. 169 நச்.)

‘அரக்கத் தன்ன’ என்னும் அகப்பாடலுள் (14), தலைவி வருந்தி நின்ற துயர் பொறாது, தான் கடவுள்வாழ்த்தில் பிரிந்தோர் மீளவேண்டுமென்று நினைகின்ற அளவில், அவர் மீண்டமை கண்டதாகப் பாணன் கூறினமை காண்க.

யாழ் எழுவி இசைத்துத் தலைவன்தலைவியர்க்கு மகிழ்ச்சி யுண்டாக்கலும், தலைவனைத் தேரேற்றிச் சென்று பரத்தை யரொடு கூட்டுவித்தலும், தலைவி ஊடல் கொண்டவிடத்தே தலைவன் விடுப்பத் தான் வாயிலாக அவள்பால் சென்று வேண்டலும், பிறவும் அவன் தொழில்களாம். கூத்தற்குரியன பலவும் பாணற்கும் கொள்ளப்படும். ந. அ. 95 காண்க.

பாண்மகன் அவ்வுழிப் பணிந்து வெறுத்தல் -

{Entry: J10__178}

பாணன் பணிந்து மனம் வெறுத்துப் பேசுதல்.

தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டவழி ஊடல் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிப்பத் தலைவன்வாயிலாக வந்த பாணனைத் தோழி பழிக்கலுறவே, பாணன், “திருவே! சிறந்த தெய்வபக்தியுடைய தலைவனுடைய குற்றேவல் செய்ய வந்த என்மீது கோபம் கொள்ளாதே, நின் விருப்பப்படி செய்” (திருப்பதிக். 488) என்று தோழியை நோக்கித் தன் வரவு பயனற்றுப் போயினமை குறித்துத் தலைவியிடம் வெறுத்துக் கூறுதல்.

இஃது ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அக. 103)

பாண்வரவு உரைத்தல் -

{Entry: J10__179}

தலைவியிடம் தோழி தலைவனுடைய பாணன் தம் ஊர்க்கு வந்திருப்பதனைக் கூறுதல்.

“தலைவி! பாணர்கள் கூறும் வஞ்சனையைச் சிறிதும் அறியாய் நீ. பாணன் நம் சேரிக்கு யாழொடு வந்துள்ளான். என்ன செய்ய எண்ணி வந்துள்ளானோ?” என்ற தோழி கூற்று.

இஃது ‘ இருபாற் பெருந்திணை’ என்பதன்கண் நிகழ்வதொரு கூற்று (பு. வெ. மா. 17-11)

பாணர்க்கு உரியன -

{Entry: J10__180}

தலைவன் தலைவியைப் பிரியக் கருதியவழி முன்னிலைப் புறமொழியாகத் தலைவியின் பிரிவுத்துயர் தாங்க இயலாத நிலையினை அவனுக்கு எடுத்தியம்புதல், தலைவி தலைவன் பிரிவு தாங்காது வருந்தும்வழி அவள்தூதாகத் தலைவன்பால் சென்று அவள்நிலை எடுத்துணர்த்தல் போல்வன. (தொ. பொ. 167, 169 நச்.)

பாணர் கூற்று -

{Entry: J10__181}

கற்புக் காலத்துச் சேட்புலத்துப் பிரிந்த தலைவன் தலைவியின் ஆற்றாமையை நினைத்து எடுத்த வினையை விரைவில் முடித்து மீண்டு வரும் நிலையைத் தலைவிக்கு எடுத்துக் கூறுதல் பாணர்க்கு உரியது. (தொ. பொ. 169 நச்.)

பாணற்குத் தோழி வாயில் மறுத்தல் -

{Entry: J10__182}

தலைமகனுக்கு வாயிலாக வந்த பாணனிடம், “பாணனே! தலைவி புதல்வற் பயந்த ஈன்றணிமையள். மார்பில் பால் சுரப்பப் புதல்வனைத் தழுவிக்கொள்வதால் அவள்மார்பகம் முடை நாற்றம் வீசும். ஆதலால் ஊரனைப் பரத்தையர்சேரிக் கண்ணேயே கொண்டு செல்க. எம்மைத் தொழுது பயனில கூறாதே” என்று தோழி வாயில் மறுத்தல். (நற். 380)

‘வாயிலின் வரூஉம் வகை’ என்பதன்கண் வருவதொரு கூற்று. (தொ. பொ. 145 இள.)

பாணன் தலைவிக்குக் கூறுதல் -

{Entry: J10__183}

தலைவியால் மறுக்கப்பட்ட பாணன் தலைவன் சொன்னதை அவளிடம் எடுத்துரைத்தல்.

“அன்னையே! புருவம் வளைய, உதடுகள் துடிக்க, என்மேல் எறிதற்குக் கற்களை எடுத்தல் வேண்டா; உன் கோபத்தைப் போக்கிக் கொள். நீ தலைவனை வாயில்மறுப்பது அழகன்று. உன்னைப் பல்லாண்டு வாழுமாறு வாழ்த்தி உன்னைச் சுற்றிவந்து வணங்குகிறேன்” (கோவை. 387) என்றாற் போலப் பாணன் தலைவியிடம் கூறுதல்.

“இதனைத் திருக்கோவையார், ‘பாணன் புலந்துரைத்தல்’ (387) என்னும்.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. இஃது உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -

{Entry: J10__184}

‘கார்காலத்து மழை பொழிய, தம்பலப் பூச்சிகள் ஊர, காட்டில் மானும் பிணையும் மகிழ்ந்து தாவ, பசுக்கள் கன்றுகளை நினைத்து ஊர்மன்று நோக்கி வரும் கார்கால மாலையிலும் தலைவர் நம்மை நினைக்கவில்லை யெனின், நம்நிலை யாதாகும்?’ என்று வருந்திக் கூறிய தலைவி கூற்றை யுட்கொண்டு தலைவன் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்ட யான், அவனுடைய தேரினை வழியிலேயே கண்டு மகிழ்ந்தேன்” (அகநா. 14) என்ற பாணன் கூற்று. (தொ. பொ. 169 நச்.)

பாணன் புலந்துரைத்தல் -

{Entry: J10__185}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயிலாக வந்த பாணன் தலைவி கோபத்திற்கு ஆளாகி வெருட்டப்பட்ட போது, அவன், “அன்னையே! நீ என்னிடம் அளவு கடந்த சினத்தைக் காட்டுதல் வேண்டா. யான் நின் அடியிணையை வணங்கி விடை பெற்று வேற்றிடம் செல்கிறேன்” என்றாற் போலத் தன் வாயில் பயன்படாது போயினமை குறித்து மனம் வாடியுரைத்தல்.

இதனை உணர்த்த உணரா ஊடற்கண், ‘வாயில் மறுக்கப் பட்ட பாணன் கூறல்’ என்ப. (இ. வி. 555 உரை)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 387)

பாணன் வரவினைப் பாங்கி பழித்தல் -

{Entry: J10__186}

பாணன் வரவு பயனற்றதெனப் பாங்கி பழித்துரைத்தல்.

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்துழித் தலைவி ஊடல் கொள்ள, அதனைத் தணித்தற்குத் தலைவன் வாயிலாக வந்த பாணனிடம் தோழி, “முன்பு தலைவன் எம் இல்லத்தில் உறங்குவான். அவனைக் காலையில் துயிலெழுப்புதற்குக் காலைமங்கலம் பாடப் பாணர்கள் வருவது வழக்கம். இப்பொழுது தலைவன் தனக்குப் புதல்வன் பிறந்த பிறகு பரத்தை யில்லத்திலேயே இருப்பதால், இவ்வில்லத்தில் வந்து காலைமங்கலம் பாடும் தேவை இல்லாமல் போய்விட்டது” (திருப்பதிக். 487) என்று பாணன் வருகை பயனற்றது என்று தோழி பழித்துக் கூறுதல்.

இஃது ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அக. 103)

பாணன் வரவு உரைத்தல் -

{Entry: J10__187}

கற்புக்காலத்துப் பரத்தையிற்பிரிவில் தலைவனது பரத்தை மைக்கு வருந்தித் தலைவி நாணத்தொடு தனித்திருக்கவும், தலைவன் இல்லத்தில் இருப்பதாகக் கருதிப் பாணன் துயி லெழு மங்கலம் பாட வந்ததைக் கண்ட தோழி தலைவியிடம், “இரவில் இரை தேடிப் பல இடங்களிலும் சுற்றும் வாவல் இரையைத் தேடும் கால மல்லாதபடியால் பகற்காலத்து வந்து தங்கியிருக்கும் மரம் போலிருக்கும் நம்மை அறியாது, விறலியும் பாணனும் நம் தலைவனுக்குத் துயிலெழு மங்கலம் பாட வந்துள்ளனர்” என்று பாணன் வந்துள்ளமையைச் சாற்றுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 375)

பாணனொடு வெகுளுதல் -

{Entry: J10__188}

பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த தலைவன் வாயில் வேண்டி நிற்ப, அவனுக்கு வாயிலாகப் போந்த தோழிக்கு வாயில் மறுத்த தலைவி, பாணன் வாயிலாக வர, அவன் பொய் யுரைகளைக் குறித்து அவனை இகழ்ந்து கூறித் தலைவனுக்கு வாயில் மறுத்தது.

இதனை உணர்த்த உணரா ஊடலுள், ‘பாணற்கு மறுத்துரை’ என்று கூறுப. (இ. வி. 555 உரை, ந. அ. 206)

இது திருக்கோவையாருள் ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 386)

பார்த்து உறவு உரைத்தல் -

{Entry: J10__189}

பாங்கியிற் கூட்டத்தில், தோழி தலைவனிடம் அவனது வேட்கை மிகுதியை நோக்கி உலகியல் முறைப்படி தலைவி யை மணந்து எய்துமாற்றை எடுத்துக் கூறல் (குறிஞ்சி நடையியல்). (வீ. சோ. 92. உரைமேற்.)

பார்ப்பார் கூற்று -

{Entry: J10__190}

பார்ப்பாராவார் தலைவன் நலன் கருதி அவனுக்கு உறுதி கூறும் சான்றோர். அவர் கூற்றுக்கள் பின் வருமாறு:

1. தலைவனது காமமிகுதி கண்டு, “இக்காமத்தின் நிலை இத்தன்மையது” என்று இழித்துக் கூறுதல்.

2. அங்ஙனம் கூறித் தலைவன் தெளியுமாறு ஏதுவும் எடுத்துக் காட்டும் கூறுதல்.

3. தலைவன் தாழ்ந்தொழுகிய புறத்தொழுக்கத்தை அவன் குறிப்பால் அறிந்து வெளிப்படுத்தி அவனிடம் கூறுதல்.

4. தெய்வ வழிபாட்டிற்குப் பால் தரும் கபிலைப்பசு பால் குறைவாகக் கறப்பதனால் அவனுக்குத் தீங்கு நேரக்கூடும் எனவும், பால் நிறையக் கறப்பதனால் அவனுக்கு நன்மை மிகும் எனவும் அப்பசுவினைக் கொண்டு அவனிடம் நிமித்தம் பற்றிக் கூறுதல்.

5. அவன் பிரியுங்கால், நன்னிமித்தம் பற்றி, அவன் பிரிந்து சென்று செய்யும் காரியம் சிறக்கும் என்று கூறுதல்.

6. அவன் பிரியுங்கால், தீய நிமித்தம் பற்றி, “இப்பொழுது புறப்பட வேண்டா” என்று கூறுதல்.

7. தலைவன் தம் கூற்றுக்களைக் கேட்டுச் சில காலம் நல்வழியில் நடந்து பின் தீயவழியில் செல்லத் தொடங்கின் அப்பொழுது அவனுக்கு இடித்துரைத்தல்.

8. அறிவராகிய ஞானிகளைப் போலத் தலைவனிடம் தேவைப்பட்டபோதெல்லாம் அவன் கடமைகளை இடித்துரைத்து எடுத்துக் கூறுதல்.

9. வாயிலாகச் சென்று தலைவன்தலைவியர் ஊடலைப் போக்குதல்.

10. தலைவன் பிரிவால் தலைவி வருந்தியவழி அவள் விடுத்த தூதாகச் சென்று தலைவனிடம் அவள்நிலை கூறுதல். (தொ. பொ. 177 நச்.)

பால்கெழு கிளவி -

{Entry: J10__191}

இலக்கணத்தின் பக்கச் சொல்; அஃதாவது இலக்கணம் அன்றாயினும் இலக்கணம் போல அமைத்துக் கொள்ளுதல். (தொ. பொ. .199 நச்.)

பால்கெழு கிளவியாவது பயிலாது வரும் ஒரு கூற்றுச் சொல். (197 இள.)

தலைவனுக்கும் தலைவிக்கும் காமஇடையீட்டால் விளையக் கூடிய மனநிலைகள் செவிலி, நற்றாய் என்போர்க்கும் உண்டு என்பது இதற்கு எடுத்துக்காட்டாம்.

பால் முல்லை -

{Entry: J10__192}

இயற்கைப் புணர்ச்சியால் தலைவியைக் கூடிய தலைவன் தனக்குத் தலைவியை இணைத்துத் தந்த விதியினைக் கருதி மகிழ்ந்து, “குயிலனைய இனிய சொற்களைக் கூறும் கூரிய எயிறுகளை யுடைய செவ்வாய்த் தலைவியை எனக்கு நல்கிய ஊழ், மதியம் ஒளி வீசும் வானத்தில் பலரும் கண்டு தொழு மாறு விளங்குக!” என்று வாழ்த்துதல். (பு. வெ. மா. 13 - 7)

பாலர் -

{Entry: J10__193}

முல்லை நிலமக்கள் (பிங். 545)

பாலை (1) -

{Entry: J10__194}

வறண்டநிலமும் அதன் சுற்றுப் புறமும்.

உலகப் படைப்பில் பாலை என்பதொரு நிலன் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் சில ஆண்டு தொடர்ந்து மழை யின்றிப் போமாயின் வன்பாலையாகும்; மீண்டும் மழைபெய் யின் பழைய நிலங்களாகும். அங்ஙனமே மருதமும் நெய்தலும் சில ஆண்டுகள் மழையின்றிப்போமாயின் மென்பாலை யாகும்; மீண்டும் மழை பெய்யின் பழைய நிலங்களாகும்.

பாலை-வறண்டபகுதி. இங்குப் பாலை மரங்கள் மிகுதியாத லின் அது பற்றி இந்நிலம் பாலை எனப் பெயர் பெற்றது என வும், பாலையாகிய பிரிதல் ஒழுக்கத்துக்கு இந்நிலம் சிறந்தமை யின் இது பாலை எனப் பெயர் பெற்றது எனவும் கூறப்படு கிறது. (தொ. பொ. 5 இள; நச்.)

பாலை (2) -

{Entry: J10__195}

திணைப்பெயர்-மறுபுலம், செம்புலம், வன்பால் (பிங். 527 )

பாலை ஆகாத பிரிவுகள் -

{Entry: J10__196}

பரத்தையிற்பிரிவும், நாடுகாவல் அறக்காவல் பிரிவுகளும் பாலை ஆகா. (தொ. அகத். 11 ச.பால.)

பாலைக் கருப்பொருள் -

{Entry: J10__197}

புள் - குறும்பூழ், கவுதாரி, செவ்வல், கூகை.

விலங்கு - நரி, நொள்ளை

மரம் - புன்கு, நெல்லி, முருக்கு, கள்ளி, இலவு, காரை, சூரை, முருங்கை.

உணா - நெறி அலைப்பு (சாமி. 75)

மக்கள் - கொலைஞர், வனசரர், சவரர், சிலவர், கானவர்,

மாகுலர், கிராதர், புளினர், மறவர், வேடர்; வன்கட் பிணாக்கள், பேதையர், புள்ளுவர், இறுக்கர். திவா. பக். 40 (சூடா. II - 67)

பாலைக் கிழத்தி -

{Entry: J10__198}

பாலை நிலத்திற்கு உரிய தெய்வமாகிய கொற்றவை. (L)

பாலைக்குத் தெய்வம் -

{Entry: J10__199}

பாலைக்குத் தனிநிலம் கூறாத தொல்காப்பியனார் அதற்கு நிலத்தெய்வமும் குறித்திலர். பாலைக்குத் தெய்வம் கொற் றவை எனவும், சூரியன் எனவும் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பதிக உரையில் கூறுகிறார். இக்கருத்தையே இறையனார் அகப்பொருளுரையும் கூறுகிறது. நம்பி அகப் பொருள் ஆசிரியர் முதலோர் கொற்றவையை மாத்திரம் குறிப்பிடுவர்.

சூரியனைப் பாலைக்குத் தெய்வமாக்கி அவனிடத்துத் தோன் றும் மழையையும் காற்றையும் அத்தெய்வப்பகுதியாக்கிச் சிலர் கூறுவர். (கலி. 16). எல்லா நிலத்தெய்வங்களுக்கும் அந்தணர் உணவினைத் தீயில் இடுவர். அத்தீ அவ்வுணவைச் சூரியன் வாயிலாக எல்லாத் தெய்வங்களுக்கும் செலுத்தும் என்பது வேத முடிபு. ஆதலின் அக்கினியைப் போலச் சூரிய னும் எல்லா நிலத்திற்கும் பொதுவான கடவுளே அன்றிப் பாலைக்கு நிலத் தெய்வம் அல்லன் என்பர், நச்சினார்க் கினியர். (தொ. பொ. 5)

பாலைக்கு நிலமும் கருப்பொருளும் -

{Entry: J10__200}

பாலைக்கு நிலம் பிரித்தோதப்பெறவில்லையாயினும் காலம் வகுத்தோதப்பெற்றுள்ளது. ஆதலின் அக்காலங்களின் கடுமையால் வளம் திரிந்த நானிலப்பகுதிகளே பாலையாக அமைந்துவரும் என்பது உணரப்படும். அந்நிலமும் பொழு தும் பற்றித் தோன்றும் கருப்பொருள்கள் பாலைக்குரியவை யாக அமைந்துவரும். இம்முறையான் அமைந்த பாலை நிலத்து ஏனைய ஒழுக்கங்கள் மயங்கும். (தொ. அகத். 14 ச.பால.)

பாலைக்குரிய பொழுது -

{Entry: J10__201}

பாலைக்குரிய பெரும்பொழுது இளவேனிலும் முதிர்வேனிலு மாகிய சித்திரை வைகாசி ஆனி ஆடித்திங்கள் நான்கும் ஆம்; சிறு பொழுது பகற்பொழுதின் நடுப்பகுதியாகிய நண்பகலாம். பின்பனிப்பருவமாகிய மாசி பங்குனி மாதங்களும் பாலைக் குரிய பெரும்பொழுதாம். ஆகவே, பாலைக்குரிய பெரும் பொழுது மாசி முதல் ஆடி ஈறாகிய ஆறுதிங்கட் காலம் ஆம். (தொ. பொ. 9, 10 நச்.)

பின்பனிக்காலத்திலும் முதுவேனிலிலும் பிரிந்தோர் முறையே இளவேனிலிலும் கார்காலத்திலும் வந்து கூடுவர் ஆதலான், பின்பனி முதிர்வேனில் என்ற இரண்டு பருவங் களுமேயன்றி, இளவேனில் பாலைக்குரிய பெரும்பொழுது ஆகாது என்று பாரதியார் கூறுவார். (9)

ஏனையோர் யாவரும் பாலைக்கு இருவகை வேனிலும் கொள்வர்.

பின்பனிக் காலத்துக்குச் சிறுபொழுது வரையறை இல்லை; அப்பருவத்து நண்பகல் துன்பம் செய்யாது. (10 நச்.)

வேனிலும் நண்பகலும் பாலைக்கு உரியவாமாற்றிற்கு நச்சினார்க்கினியர் (9) தரும் விளக்கம் பின் வருமாறு:

“காலையும் மாலையும் நண்பகலைப் போலவே, வெப்பம் மிக, சோலைகள் வாட, கிணறுகள் வற்றிப்போக, நீரும் நிழலு மின்றி நிலங்கள் விளைவு நீங்க, பறவைகளும் விலங்குகளும் தனித்து வருந்தி இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலும் சிறப்புடையவாயின.

“தண்ணீர் அரித்தோடும் ஆற்றின் மணல் பரந்த கரையில் வண்டுகள் பாடுமாறு மொட்டுக்கள் மலர, மகரந்தம் சிதற, சோலையில் மலர்கள் மணம் வீச, தென்றற் காற்று உலவ, குயில்கள் கூவ, நிலாக்கதிரும் சந்தனமும் முத்தும் ஏனைய பருவங்கள் போலாது இன்பம் மிகத் தரும் இளவேனிற் காலத்தில், சென்ற ஆண்டு இளவேனிற் காலத்தே தலைவ னொடு பொழில் விளையாடியும் புதுப்பூக் கொய்தும் அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமை பற்றி, இப்பொழுது தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவி மெலிந்துரைக்கும் சொற்கள் பேசப்படுவதனானும், இள வேனிலில் தலைவன் தலைவியோடு உடன்போக்கு நிகழ்த் தின் அக்காலம் இன்பம் பயக்கும் ஆதலானும், இளவேனி லொடு நண்பகல் பாலைக்குச் சிறந்தது எனப்பட்டது. தலைவனைப் பிரிந்த தலைவி இல்லில் இருந்து வருந்திக் கூறுவன கார்காலம் அன்மையின் முல்லைக்கு ஆகா”

பாலை நடையியல் -

{Entry: J10__202}

பிரிதல் என்ற ஒழுக்கம் பற்றிய நடப்புக்களை வரிசையாகக் கூறுதல்.

வீரசோழியத்தின் உரையில் பாலை என்ற பிரிதல் தொடர் பான செய்திகளாகிய உடன்போக்கு கற்பொடு புணர்ந்த கவ்வை, உடன்போக்கு இடையீடு, பல ஆண்டு கழிந்தபின் மீட்சி, கற்புக் காலப் பொருட்பிரிவு முதலிய (பரத்தையிற் பிரிவு நீங்கலான) வகைகள் பற்றிய கிளவிகள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டுப் ‘பாலை நடையியல்’ எனப் பெயரிடப்பட்டன. இதன்கண் கிளவிகள் அவ்வத்தலைப்பில் கூறப்படும். (வீ. சோ. 93 உரைமேற்.)

பாலைநிலக்கடவுள் -

{Entry: J10__203}

பாலை நிலத்திற்கு ஞாயிற்றைத் தெய்வமாக்கி, அஞ்ஞாயிற் றினின்றும் தோன்றிய மழையினையும் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுப ஒரு சாரார். ஆனால் எல்லாத் தெய்வங்கட்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால், அவ் அவியை அங்கி ஆதித்தனிடம் கொடுக்கும் என்பது வேதமுடிபு ஆகலின், ஞாயிறு எல்லா நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்பது பெறப்படும். (தொ. பொ. 5 நச்)

பாலை என்பது தனி நிலம் அன்று. குறிஞ்சி முதலிய நான்கு நிலங்களும் சில ஆண்டு தொடர்ச்சியாக மழை பெய்யாது விடுப்பின் பாலையாகும்; பின் பொய்யாது மழை பெய்யின் பண்டைய குறிஞ்சி முதலிய நிலமாகும். ஆகவே, எந்நிலம் பாலையாகத் திரிந்ததோ, அந்நிலத்திற்குரிய கடவுளே அந்நிலம் திரிந்த பாலைக்கும் கடவுளாம் என்பது. (5 உரை)

இனி பாலைக்குத் தெய்வம் கொற்றவை என, நம்பி அகப்பொருள் முதலியன கூறும்.

பாலைநிலக் கருப் பொருள்கள் -

{Entry: J10__204}

1. தெய்வம் - கன்னி (கொற்றவை, திகிரியஞ்செல்வி) பருதியஞ்செல்வன் (சூரியன்).

2. உயர் மக்கள் - விடலை, காளை, மீளி; எயிற்றி.

3. பொது மக்கள் - எயினர், மறவர்; எயிற்றியர், மறத்தியர்.

4. பறவை - புறா, பருந்து, எருவை, கழுகு.

5. விலங்கு - வலியழிந்த யானை, வலியழிந்த புலி, வலியழிந்த செந்நாய்.

6. ஊர் - குறும்பு, பறந்தலை.

7. நீர்நிலை - அறுநீர்க் கூவல், அறுநீர்ச் சுனை.

8. பூ - குரா, மரா, பாதிரி.

9. மரம் - உழிஞை, பாலை, ஓமை, இருப்பை, கள்ளி, சூரை.

10. உணவு - வழிச்செல்வாரிடம் வலிதிற் கவர்ந்த பொருள் களும், ஊர்களுக்குள் சென்று கொள்ளையடித்து வந்த பொருள்களும்.

11. பறை - துடி, ஆறலைப் பறை, சூறை கோட்பறை, நிரை கோட் பறை

12. யாழ் - பாலை யாழ்.

13. பண் - பஞ்சுரம்.

14. தொழில் - வழிப்பறிசெய்தல், ஊர்க் கொள்ளையிடுதல் முதலியன.

15. கொடி - கவலை (தொ. பொ. 20 இள., 18 நச்; சிலப். பதிகம்; அடியார்க். உரை; த.நெ.வி. 6-12; ந.அ. 2.)

பிரம்ம மணம் -

{Entry: J10__205}

பிரமம் என்பதும் அது. ‘அறநிலை’ காண்க.

பிரமம் -

{Entry: J10__206}

எண்வகை மணங்களுள் ஒன்று. ‘அறநிலை’ காண்க.

பிராசாபத்தியம் -

{Entry: J10__207}

எண்வகை மணங்களுள் ஒன்று; மகட்கோடற்கு உரிய கோத்திரத்தான் கொடுத்த பரிசப் பொருளின் இருமடங் காகத் தம் மகளுக்கு ஈந்து கொடுப்பது. (தொ.பொ. 92 நச்.) இஃது ஒப்பு எனவும் படும்.

பிராம்மம் -

{Entry: J10__208}

அறநிலை; பிரமம் எனப்படுவதும் அது. ‘அறநிலை ’ காண்க.

பிரிகலக்கம் -

{Entry: J10__209}

பிரிவுழிக் கலங்கல்; அது காண்க. (சாமி. 123)

பிரிகலங்கல் -

{Entry: J10__210}

பிரிவுழிக் கலங்கல். (சாமி. 86)

பிரிதல் -

{Entry: J10__211}

தலைவன் தலைவியைக் களவுக் காலத்தில் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதலும், வேறு செயல் குறித்து ஒருவழித் தணத்தலும், கற்புக்காலத்து ஓதல், காவல், தூது, பொருள், வேந்தற்கு உற்றுழி உதவல் முதலியன கருதித் தலைவியை விடுத்து நீங்குதலும் பிரிவாம். களவு வெளிப் பட்டபின் உடன்போக்கும் பிரிவாகும். (தொ. பொ. 14 நச்.)

பிரிதல் நிமித்தம் -

{Entry: J10__212}

தலைவன் தோழியிடம் தான் பொருள் முதலியன கருதிப் பிரியப்போவதை உணர்த்துதலும், அவள் முதற்கண் உடன் படாமையும், பின் தலைவன் தன் பிரிவின் இன்றியமை யாமையை எடுத்தியம்பலும், தோழி ஒருவாற்றான் உடன் படுதலும் போல்வன பிரிதல் நிமித்தம். தலைவன் பிரிந்தபின் தலைவி வருந்துவனவும், தோழி ஆற்றுவிப்பனவும் பின் னொருகால் பிரிதற்கு நிமித்தமாம். (தொ. பொ. 14 நச்.)

‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

{Entry: J10__213}

“நினைத்த மாத்திரத்தில் களிப்பெய்துதலும், கண்டவுடனே மகிழ்தலும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு (அத்த கைய காமம் கொண்ட என்னால் ஊடியிருக்க முடியுமா? என்பது குறிப்பு)” என்ற தலைவி கூற்று. (குறள் 1281)

“இழுத்துக்கொண்டுபோய் விடும் என்பதை அறிந்து வைத் தும் வெள்ளத்தில் பாய்கின்றவர் போல, என் ஊடல் சிறிது நேரம்கூடத் தங்காது பொய்த்துவிடும் என்பதை அறிந்தும் நான் ஊடுவனோ? அதனால் யாது பயன்?” என்ற தலைவி கூற்று. (குறள் 1287)

பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -

{Entry: J10__214}

தலைவன் தான் குறித்த பருவத்து மீண்டு வாராததால் வாட்டமுற்ற தலைவி பாணனைத் தலைவன்மாட்டுத் தூதாக விடுத்தாளாக, தலைவன் அவனை நோக்கி, “முல்லைப்பண் வாசிக்கும் நல்ல யாழ்ப்பாணனே! யான் குறித்த காலத்து மீண்டு வாராது விடுத்தேனே என்று என்னைப் பற்றித் தவறாகக் கருதி, வாடிய நெற்றியும் வருந்திய உடம்பும் கொண்டு, நான் தன்னை அன்பின்றி மறந்தேனோ என்று, என் உயிர்க்காதலி சொல்லி விடுத்த செய்தியைக் கூறு” (ஐங்.478) என்று வினவியமை. (தொ. பொ. 41 நச்.)

பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -

{Entry: J10__215}

தலைவன் பின்பனிக் காலத்தில் பொருட்பிரிவு கருதித் தலைவியை நீத்துப் பாலைவழியே மேடுபள்ளங்களை கருதாது, மணிகள் ஒலிக்கும் அழகிய தேரைச் செலுத்திச் சென்றதனைக் கண்டவர்கள், “இவன் இப்பொழுது காடு களில் மேகம் உலாவுதலைக் கண்டு கார்ப்பருவம் வந்துற்ற செய்தியை உட்கொண்டு, தன் மார்பில் பூசிய சந்தனத் தைவிடக் குளிர்ந்த உள்ளத்தனாகி மீண்டும் வருகிறான். இவன் மீண்டு வரும் காட்சி நமக்கு மகிழ்ச்சி தருகிறது” (நற். 394) என்று அவன் மீண்டு வருவதைக் கண்டு கண்டோர் தம்முள் மகிழ்ந்து கூறுதல். (தொ. பொ. 44 நச்.)

பிரிந்தமை கூறல் (1) -

{Entry: J10__216}

கற்பினுள், “தம்மை நாடி வந்த வேந்தனுக்கு உதவி செய்யத் தலைவர் விரைவாகப் பாசறைக்குச் சென்றுள்ளார். நம் தலைவரால் எதிர்க்கப்படும் பகைவர்மதில் இன்று என்னாய் முடியுமோ?” என்று தலைவன் வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்

இதனைத் ‘துணைவயின் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத் தல்’ என்றும் கூறுப. (இ.வி. 558 உரை)

இது ‘வேந்தற் குற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 316)

பிரிந்தமை கூறல் (2) -

{Entry: J10__217}

தலைவியின் திருமணத்துக்குப் பரிசப்பொருள் திரட்டி வரப் பிரியும் தலைவன் தான் நேராகத் தலைவியிடம் கூறின் அவள் பிரிவிற்கு மிகவும் வருந்துவாள் என்று, தோழியிடம் மாத்திரம் கூறிப் பிரிய, தோழியும் தலைவி வருந்தா வகையில், “தலைவி! நின் திருமணப் பரிசப்பொருள் திரட்டிவரத் தலைவன் கொடிய பாலையைக் கடந்துசென்றுள்ளான்; விரைவில் பொருளொடு மீள்வான்’ என்று அவனது வரைபொருட் பிரிவு பற்றிக் கூறுதல்.

இதனைப் ‘பாங்கி தலைமகட்குத் தலைவன் (ஓடரிக் கண்ணிக்கு அவன்) செலவுணர்த்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 170).

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 271.)

‘பிரிந்து அவண் இரங்கல்’ -

{Entry: J10__218}

தலைவன் தலைவியருள் ஒருவரையொருவர் பிரிந்தவிடத்து வருந்துதல்.

அது நெடுந்தொலைவு சென்றவழி வருந்துவது போலாது ஒருவழித் தணந்தவழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியான் வருந்துதலின், ஐவகை உரிப்பொருள்களின் வேறாகக். கூறப் பட்டது. இந்த இரக்கத்தின் பொருள் மடலேறுதலும், காமத்தால் அறிவு கலங்குதலும் ஆகிய பெருந்திணைப்பகுதி. (தொ. பொ. 17 இள.)

தலைவன் தலைவியை உடன்கொண்டு போகாது தானே ஒரு காரியம் பற்றித் தனித்துப் பிரிந்துபோனவிடத்துத் தலைவி மனையின்கண் இருந்து வருந்துதல். தலைவனுடைய பிரிவாகிய பாலையில் தலைவியின் வருந்துதலாகிய இரங்கல் (நெய்தல்) மயங்கியது. (15 நச்.)

தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லும்போது தலைவியின் உறவினரின் வருகை முதலிய காரணங்களால் பிரிய நேரின், அப்பொழுது அப்பிரிவு பற்றி வருந்துதல், முல்லை முதலியவற்றுள் எந்நிலத்திற்கும் தனி உரிமையின்றி எல்லா நிலத்தும் வந்து மயங்கப் பெறும். (15 பாரதி.)

பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -

{Entry: J10__219}

பருந்தின் பேடை ஓமைக்கிளையில் ஏறித் தனிமைத் துயர் தோன்றக் கூவும் பாலைத்தன்மை சான்ற, வேற்றுமொழி பேசப்படும் மலைகளைக் கடந்து நெடுந்தூரம் வந்த பின்ன ரும், தலைவியின் பண்புகள் என் நெஞ்சினை விட்டு நீங்கா தனவாய் உடன்தோன்றுகின்றன” என்ற தலைவன் கூற்று, (ஐங். 321.)

“பிரிந்து வருகு” என்றல் -

{Entry: J10__220}

“பிரிந்து சென்று மீள வருவேன்” என்று தலைவிக்குத் தலைவன் கூறுதல்.

“பெண்ணே! நம்மிருவரது நலமும் காத்தல் வேண்டி, நான் இப்போது சற்றே பிரிந்து சென்று மீண்டு வருவேன்” (தஞ்சை. கோ. 24) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 129)

பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறல் -

{Entry: J10__221}

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் தலைவியை ஆயவெள்ளத் தொடு கூட்டித் தலைவன் தான் பிரிந்தவழி, அவள் ஆய வெள்ளம் வழிபட இருக்கும் சிறப்பு நிலையைக் கண்ணுற்றுத் தன் மனத்துக்கு “வறியவன் சிறந்த இன்பவாழ்வை விரும் புவது போல, நீ கிட்டுதற்கு அரிய பொருளை விரும்புகிறாய்; தலைவி நல்லவள் என்பது உண்மைதான்; அவள் கிட்டுதற்கு அரியவள் என்பதனையும் நினைத்துப்பார்!” என்று கூறுதல் (குறுந். 120, இ. வி. 501 உரை).

பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -

{Entry: J10__222}

இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் பகற்குறி முதலியவற்றில் தலைவியைப் பிரிய வேண்டிய நேரம் வரும்போது தலைவன் தன் மனத்துப் படும் துயரை, “இத் தலைவியைக் கூடும் கூட்டம், உயிர் உடம்பொடு கூடி நல்வாழ்க்கை வாழும் போது அதற்கு ஏற்படும் இன்பத்தை ஒப்ப இனிதாக உள்ளது; இவளை நீங்கும்போது, சாவு வருங்கால் உடம்பின் நீங்குத லால் அதற்கு ஏற்படும் துன்பத்தை ஒப்பத் துன்பமாக உள்ளது” என்று நெஞ்சிற்குக் கூறுதல். (குறள் 1124)

பிரியேன் என்றல் -

{Entry: J10__223}

“நின்னைப் பிரியமாட்டேன்” என்று தலைவன் தலைவியிடம் கூறுதல்.

“உன்னை ஒருகாலும் பிரியமாட்டேன்; பிரியின் உயிர் தரிக்கமாட்டேன்” (தஞ்சை கோ. 23) என்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று (ந. அ. 129).

பிரிவச்சம் (1) -

{Entry: J10__224}

தான் பிரிந்து சென்றால் அதனைத் தலைவி தாங்கமாட் டாளோ எனத் தலைவன் அஞ்சுதல்.

“நான் பிரிந்து செல்வேன் என்பதைக் கேட்டு இப்பேதை இவ்வாறு நடுங்கித் துயருறுகின்றாளே! ஒருகால் என் பிரிவைத் தாங்காமல் இவள் இறந்துபடின் என் செய்வேன்? அதைத் தவிர்க்க வேண்டி நான் இங்கேயே இருப்பின் பழி வருமே” (அம்பிகா. 12) என்று தலைவன் அஞ்சிக் கூறுதல்.

இது களவியலுள், ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (இ. வி. 497 உரை).

பிரிவச்சம் (2) -

{Entry: J10__225}

தலைவன் தலைவியைப் பிரிதற்கும், தலைவி தலைவனைப் பிரிதற்கும் அஞ்சும் அச்சம்.

இயற்கைப் புணர்ச்சியின் இறுதியில் தலைவன் தலைவியது வனப்பினை அளவிற்கு மீறிப் புகழ, அது கேட்டஅவள் நாணத்தால் ஆற்றாளாயினாள். அது கண்ட தலைவன் நயப்புரைத்தலுக்கே நாணும் இவள் இக்களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயின் இறந்துபடும் போலும் என்று ஆற்றானாக, தலைவி அவன் ஆற்றாமை கண்டு வருந்தினாள். அது கண்டு தலைவன் “இவள் எவ்விடத்தும் தன் தன்மை என்பது ஒன்றிலள்; என் தன்மையளே; யான் ஆற்ற ஆற்றி யான் ஆற்றாதவிடத்தே தானும் ஆற்றாளாம்; யான் பிரிந்தவிடத்து என் குறிப்பின்றி இவள் இறந்துபடாள்” என்று கருதிக் குளிர்ப்பக் கூறித் தளிர்ப்பத் தழுவி “யான் என்றும் நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்” என்று கூறிப் பின் தலைவி பிரிவு பற்றி அஞ்சுவாளோ என்று கலங்கித் தெளிந்து தான் பிரிவு பற்றி அஞ்சியும் வேற்று வழி இன்மை யால் தலைவியிடம் கூறுவான். இந்நிலையில் தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவச்சம் தோன்றும். (இறை. அ. 2 உரை).

பிரிவருமை கூறி வரைவு கடாதல் -

{Entry: J10__226}

பகற்குறி இறுதிக்கண் தோழி, “தினைக்கதிர் கொய்த பின்னும் கிளிகள் தினை அரிந்த தாள்களை விட்டு நீங்காமல் இங்கேயே உள்ளன. நாங்கள் தினைக்காவலை விடுத்துப் போனால் தலைவன் இவ்விடத்தே வந்து நின்று எம்மைத் தேடுவானோ?” என்றாற்போலச் சிறைப்புறத்திருந்த தலைவன் செவியில் விழுமாறு பேசிப் பிரிவுஅருமை கூறி வரைவு கடாவுதல்.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 144)

பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -

{Entry: J10__227}

தலைவனது பிரிவைத் தாங்க மாட்டாமல் அவனது நினை வில் ஈடுபட்டு மெலியும் மகளைக் கண்டு செவிலி துன்ப முறுதல்.

“குடங்கை போல் அகலமானவையும் கயல்கள் பாய்வது போல் அலை பாய்வனவும் ஆகிய கண்களுடனும், இறைவன் ஆகிய திருமால் இவளை வஞ்சித்து இவளுடன் வந்து கூடாமல்விட்ட அருளின்மை தந்த நோயுடனும் திரியும் இவள், இன்னும் அவன்பால் மிகப்பெரிய காதல் கொண் டிருக்கிறாளே! இவளுக்கு யாது நேருமோ?” என்ற செவிலி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவி. 24).

பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -

{Entry: J10__228}

“சந்திரனும் கடலும் அன்றிலும் தென்றலும் அனைத்துமாகச் சேர்ந்துகொண்டு என்னைப் பிளந்துவிடுவன போல மிகவும் வருத்துகின்றன; பனிவேறு நலிகிறது; இரவு முழுதும் எனக்குத் தூக்கமும் வரவில்லை. எம்பெருமானோ, ‘இவளும் ஒரு பெண்’ என்று இரக்கம் காட்டாமல் இருக்கிறான். இனியும் நான் ஆற்றேன். என்னை எம்பெருமானுடைய திருக் குறுங்குடிக்கே அழைத்துச் செல்லுமின்” என்ற தலைவி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (பெரியதி. 9-5-1)

பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -

{Entry: J10__229}

“இவள் தனது மனை முன்புறம் இருக்கும் பனையில் தொங்கும் கூட்டில் அன்றில் தன் பேடையை அழைக்கும் இனிய குரலைக் கேட்கும்தோறும் கலங்கி இளைத்து உடல் வன்மை இழந்து, மெல்லிய குரலில் எம்பெருமான் பெயரை ஆற்றாமையுடன் சொல்ல முடியாமல் சொல்லி அழைத்து வாய் புலம்புகிறாள்; இவள் துன்பமிகும் உயிரும் தளர்ந்த பிறகுதான் உய்வு கிடைக்குமோ? அறியாமல் தவிக்கிறேனே” என்ற தோழி கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவி. 83)

பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -

{Entry: J10__230}

“இன்பம் தரும் எழில் நிறைந்தவளே! யான் உலகியலாகக் கூறிய ‘பொருள்வயின் பிரிதல்’ என்ற செய்தியால், யானே உன்னைப் பிரிந்து காததூரம் சென்றுவிட்டவன் போல வருந்துகிறாய். உடம்பில் பசலை விரைவாகப் படர்கிறது. இங்ஙனம் பொன்னும் முத்தும் கொள்ளுதலோடு, அரிய பெரிய விலை மதிப்புடைய முத்துக்களைப் போன்ற கண்ணீர்த் துளிகளை உதிர்க்கும் குடங்கை போன்ற உன் கண்கள் மேலும் கீழும் பக்கத்தும் அசைந்து ஓடி மருள்வது, பெரிய கெண்டைமீன்கள் துள்ளுவதைப் போலிருக்கும் இந்த வியப்பினை இன்று காண்கிறேன்!” என்ற தலைவன் கூற்று. (திருவி. 11)

“பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -

{Entry: J10__231}

“பாண! இக்கார்ப்பருவத்தில் வானம் மழை பெய்யத் தொடங்கிவிட்டது; முல்லைக்கொடிகளில் அரும்புகள் நிறையத் தோன்றிவிட்டன. இடையர்கள் பசுக்களை இல்லம் நோக்கி அழைத்துவரும் இம்மாலைக் காலம் தலைவர் சென்ற நாட்டிலுமுண்டோ?” என்ற தலைவி கூற்று. (ஐங். 476)

பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல் -

{Entry: J10__232}

கற்புக் காலத்தில் தலைவன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தானாக, அப்பொழுது தலைவி வருந்துவதனை நோக்கிய தோழி, “தலைவன் வினைவயின் பிரிய நீ வருந்தினால், அவன் எடுத்த வினை சிறப்பாக முடியுமா?” என்று வினவத் தலைவி, “யான் அது குறித்து வருந்தவில்லை. இக்கார்மேகத்தை அவர் பாடிவீட்டில் காணின் நம்மை நினைந்து ஆற்றாராய்த் தாம் எடுத்த வினையை முடிக்கமாட்டாரே என்றே வருந்து கிறேன்” எனக் கார்மிசை வைத்துத் தான் உற்ற வருத்தத்தைச் சொல்லியது.

இது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 317)

பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

{Entry: J10__233}

போலிப் பொருள்கள் - தலைவன் நிறம் முதலியவற்றாலும் தொடர்பு போன்றவற்றாலும் அவனை நினைவுபடுத்தும் பொருள்கள்.

“பெண்களே! என் மகள் நிலையை என்னென்பேன்! மண்ணையும் விண்ணையும் கடலையும் காட்டையும் கண்டு, முறையே அவன்தொடர்பும் அவன்உறையுளும் அவன் நிறமும் பெற்றன இவை என்னும் காரணத்தால் அவன் நினைவு வந்து துயருறுகின்றாள்” என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (திருவாய் 4-4-1)

பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -

{Entry: J10__234}

தலைவன் பொருள்வயின் பிரிந்து மீண்டு வரற்குக் காலம் தாழ்த்த, அதனால் ஆற்றாமை மிக்கு வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “தலைவி! காட்டுமல்லிகை மணம் வீசும் நின் நல்ல நெற்றியைத் தலைவர் மறப்பாரல்லர். அரிதின் முயன்றும் நினைத்தபடி பொருள் முற்றவும் கிட்டாமையின் காலதாமதம் செய்கின்றார் என்று கருதற்க. ஓரளவு பொருள் கிட்டியவுடனே நின்னை நயந்து விரைவில் மீண்டுவிடுவார்” என்று கூறியது. (குறுந். 59)

பிரிவிடை ஆற்றல் -

{Entry: J10__235}

பெருந்திணைத் தலைவி தலைவன் பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.

“அவனைக் கூடப்பெற்றிலேன்; ஆயினும், இவ்வின்பமான மாலைப்போதில் அவன் என் நெஞ்சினை விட்டு நீங்காமல் இருக்கிறான். இதுவே எனக்கும் இன்பம் விளைக்கின்றது!” என்பது போன்ற கூற்று.

இது பெருந்திணையுள், பெண்பாற் கூற்றின்கண் நிகழ்வ தொருகிளவி. (பு. வெ. மா. 16-3)

பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

{Entry: J10__236}

தலைவன் வேனிற்பருவத்து மீண்டு வருவதாகக் கூறிப்பிரிந்து சென்றபின் வேனிற்பருவம் வந்துவிடவும் அவன் வாராத நிலையில், தலைவி, “முன்னைய ஆண்டுகளில் வேனிற்காலத் தில் தலைவன் யான் உறக்கமின்றி வருந்த, மயில் போன்ற சாயலையுடைய பரத்தையரைத் தழுவி அவரொடு கூடிய நிலையில் என்னை மறந்து அவரோடேயே தங்கியிருப்பதும், இவ்வேனிற்காலத்தில் காமனுக்கு நிகழும் திருவிழாவில் அப்பரத்தையரொடு விளையாடிப் பொழுது கழிப்பதும் வழக்கமாயினவே! ‘வேனிற் காலம் வந்துவிட்டது’ என்று அவனுக்குத் தெரிவிப்பார் ஒருவரும் இல்லைபோலும்” என்று நிகழ்ந்தது சிந்தித்து உரைத்ததைக் கேட்ட பாணன் பாசறைக் கண் தலைவனைக் கண்டு கூறியது. (தொ. பொ. 43 நச்., கலி. 30)

பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -

{Entry: J10__237}

தலைவன் பிரிந்த காலத்துத் தலைவி இறந்துபடுவாளோ என்று கவலையுற்ற தோழியிடம் தலைவி முன்னிலைப் புறமொழியாக, “பாலைநிலத்திடைப் பிரிந்துசென்ற தலைவன் கொடுமையை நினைத்து உறங்காது தடுமாறும் நோயைவிட, கிணற்றில் விழுந்த குரால்நிறப்பசு படும் துன்பத்தை இரவில் கண்ட ஊமை அதை மற்றவரிடம் தெரிவித்துப் பரிகாரம் தேடமுடியாது தடுமாறுவது போல, தோழி எனக்காகப் படும் வருத்தத்தை நினைப்பதனால் ஏற்படும் நோயே எனக்கு மிக்குள்ளது. என் துயரமோ வெளியிட முடியாத நிலையில் உள்ளது. என் தோழியோ என் துயரைப் போக்க முயலாது அதனை மிகுவிக்கிறாளே!” என்று கூறியது. (குறுந். 224)

பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது -

{Entry: J10__238}

“தலைவர் பிரியக் கருதினார் என்பதனை அறிந்தபோது என்னை விடுத்து அவர் பிரிந்து செல்லார் என்ற நம்பிக்கையில் அவர் செலவை விலக்காது இருந்துவிட்டேன். தம்பிரிவை எனக்கு அறிவித்தால் நான் அதற்கு உடன்பட மாட்டேனோ என்று எண்ணித் தலைவர் என்னிடம் சொல் லாமலேயே பிரிந்து சென்றுவிட்டார். எங்கள் இருவருடைய செயலாலும் இப்பொழுது என் நெஞ்சம் பாம்பு தீண்டப் பட்டு விடம் தலைக்கேற மயக்கம் கொள்பவரைப் போல மயங்கித் தடுமாறுகிறது” என்று தலைவி தோழிக்குச் சொல்லியது. (குறுந். 43)

பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -

{Entry: J10__239}

“யான் மீண்டுவருவதாகக் குறித்துச் சென்ற கார்காலம் தொடங்கிற்றாக, அதற்கு அறிகுறியாகப் பல முரசுகளைப் போல வானங்கள் இடித்து முழங்கவும், மின்னல் கூற்றுவனைப் போன்று துன்புறுத்தவும், கண்ணும் கண்ணீரு மாக நிற்கும் என்னுடைய மென்தோள் நல்லாளிடம், ‘தேர் விரைவில் மீண்டு வந்துவிடும்’ என்று சொல்வாயாக” என் றாற் போலக் கூறித் தலைவன் இளையோருள் ஒருவனைத் தலைவியிடம் தூதாக முன்னே விடுத்தது (திணைமாலை 115)

பிரிவின் வகையும் உரிமையும் -

{Entry: J10__240}

ஓதல் பகை தூது என்பனவற்றிற்குப் பிரியும் பிரிவு, தேவர் பூசை விழா முதலிய காத்தற்கும் பகைவரால் துன்புறுத்தப் பட்ட நாட்டை அவரிடமிருந்து மீட்டுப் பாதுகாப்பதற்கும் பிரியும் காவல் பிரிவு, பொருள்வயின் பிரிவு, பகைவயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என்பன தலைவன் தலைவியோடு இல்லறம் நிகழ்த்தும் கற்புக்காலப் பிரிவுகளாம். (தொ. பொ. 27,30, 35, 44 இள.)

ஓதலும் தூதும் அரசர், அந்தணர், வணிகர், உழுவித் துண்ணும் வேளாளர், குறுநிலமன்னர் ஆகியோர்க்கு உரியன. பகைவரால் துன்புறுத்தப்பட்ட நாட்டை மீட்டுப் பாதுகாத்த லாகிய காவற்பிரிவு அரசர், குறுநில மன்னர், உழுவித் துண்ணும் வேளாளர் ஆகியோர்க்கு உரித்து.

பொருள்வயின் பிரிவு அரசர், அந்தணர், வணிகர், இருவகை வேளாளர் ஆகியோர்க்கு உரித்து.

பரத்தையிற் பிரிவு அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வர்க்கும் உரித்து.

பகைவயிற் பிரிவு அரசர், வணிகர், குறுநிலமன்னர், உழுவித் துண்ணும் வேளாளர் ஆகியோர்க்கு உரித்து. (25-33 நச்.)

பிரிவினின் வியத்தல் -

{Entry: J10__241}

பிரிவுழி மகிழ்ச்சி ; அது காண்க. (சாமி. 86)

பிரிவு -

{Entry: J10__242}

இஃது ஐந்திணையொழுக்கத்துள் ஒன்று. இதற்குரிய திணை பாலை.

தலைவன் களவுக்காலத்து இட்டுப் பிரிந்தும், அருமை செய்து அயர்த்தும் தலைவியை ஓரிரு நாள் ஒருவழித்தணந்து பிரிதலும், வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்து பலநாள் தலைவியைப் பிரிதலும் நிகழும்.

கற்புக் காலத்தில் ஓதல், நாடு காவல், தூது, பொருள், பகை என்பவை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நாடிடையிட்டும் காடிடையிட்டும் போய்ப் பலதிங்கள் தங்கி வருதலும் உண்டு.

பரத்தையிற் பிரிந்து சில நாள் கழித்துத் தலைவன் தலைவியை மீண்டு வந்து கூடுதலும் உண்டு.

தலைவனைப் பிரிந்து தலைவி அவன் குறித்த பருவம் வருந் துணையும் ஆற்றியிருத்தலையும், அவன் தான் குறித்த பருவம் வந்தவழியும் வாராமை கருதி வருந்துதலையும் பிரிவினுள் அடக்கிக் கூறுதலும் உண்டு. (குறள் அதி. 116 பரிமே.)

பொதுவாகப் பிரிவினை ஆயிடைப் பிரிவு (-அணிய இடத்தில் பிரிதல்), சேயிடைப் பிரிவு (-சேய்மையான இடத்துப் பிரிதல்) என இரண்டாகக் கோடலும் உண்டு. (குறள் அதி. 116 பரிமே.)

பிரிவு அறிவித்தல் -

{Entry: J10__243}

கற்புக் காலத்தில், தன் நாட்டைக் காத்தல் வேண்டும் என்ற அறநூல்விதியை உட்கொண்டு, தலைவன் நாடுகாத்தற்குப் பிரியப் போகும் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரி வித்தல்.

இதனைக் ‘காவற்பிரிவைத் தலைவிக்குப் பாங்கி அறிவித்தல்’ என்றும் கூறுப. (இ. வி. 558 உரை)

இது ‘காவற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 312)

பிரிவு அறிவுறுத்தல் -

{Entry: J10__244}

ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகத் தலைவன் பிரிய இருப்பதைத் தோழி தலைவிக்குத் தெரிவித்தல்.

இது கற்பியலுள் ஐவகைப்பிரிவுகளில் நிகழும் செய்திகளுள் ஒன்று. (ந. அ. 209)

“பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

{Entry: J10__245}

“தலைவி! தலைவன் சென்ற வழி இப்பொழுது வளமாக உள்ளது. பாறைகளிலே கார்மேகம் கண்டு மயில்கள் ஆடு கின்றன. ஆதலின் தட்பம் மிக்க வழியைக் கடந்து சென்றுள்ள அவரை நினைந்து வருந்தாதே” என்று தோழி கூறல்.(ஐங். 431)

பிரிவு உடன்படாமை -

{Entry: J10__246}

தலைவன் ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்துபோதலை தலைவி உடன் படாமை.

இது கற்பியலுள், ஐவகைப் பிரிவுகளில் நிகழும் செய்திகளுள் ஒன்று. (ந. அ. 209)

பிரிவு உடன்படுத்தல் -

{Entry: J10__247}

ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகத் தலைவன் பிரிந்து போவதும், வினையாற்று வதும், இல்லறத்தார்க்கும் வீரமுடையார்க்கும் இன்றியமை யாதன” எனத் தோழி தலைவிக்கு எடுத்துரைத்து அவளைப் பிரிவுக்கு உடன்படச் செய்தல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் செய்திகளுள் ஒன்று. (ந. அ. 209)

பிரிவு உடன்படுதல் -

{Entry: J10__248}

ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்றன் காரணமாகத் தலைவன் பிரிந்து செல்லுதலும், வினையாற்ற லும் இன்றியமையாதன எனத் தோழி கூறியது கேட்ட தலைவி, அப்பிரிவுக்குத் தானும் உடன்படுதல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் செய்திகளுள் ஒன்று. (ந. அ. 209)

பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -

{Entry: J10__249}

“தோழி! வாடைக்காற்று வருத்தும் மிக்க பனியுடைய அற்சிரக் காலத்தில் நான் நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தை அடையுமாறு, தலைவர் என்னைப் பிரிந்து, மலைகள் பொருந்திய காடுகளைக் கடந்து செல்லப்போகின் றார் என்று கூறுகிறாயே! தலைவர் செலவைத் தடுப்பது நின்கடமையா யிருக்க, அதனைச் செய்யாமல் அயலாரைப் போல அவர்பிரிவை உணர்த்த வந்தது தக்கதன்று” என்று தலைவி கூறியது. (குறுந். 76)

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -

{Entry: J10__250}

தலைவனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவியை நெருங்கி, “பெரிதும் நகைத்தற்காகிய செயல் ஒன்றனைக் கேள். காதலர், தாம் நம்மை இங்கே கைவிட்டுத் தமியராய் வினைவயின் செல்வாரெனவும், அவர் மீண்டு வருமளவும் நாம் மனையின்கண்ணே வருந்தியிருக்கவேண்டுமெனவும் கூறுகிறார்” என்று அவளிடம் கூறுதல். (நற். 129)

பிரிவு உணர்த்தல் -

{Entry: J10__251}

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கூடிய தலைவன், தலைவி முறுவலித்ததைப் பாராட்ட, அது கேட்ட தலைவி தான் வாய் திறந்தது குறித்து நாணினால் தலைகவிழ்ந்து நிற்ப, தான் பிரியப்போவது குறித்துத் தலைவி வருந்தினாளாகக் கருதித் தலைவன் அவளிடம் தன் பிரிவின்மை கூறுதல்.

இது ‘பிரியேன் என்றல்’ எனவும் கூறப்பெறும். (ந. அ. 129; இ. வி. 497)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 12)

பிரிவுக்கு உரிய காலம் -

{Entry: J10__252}

பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற பெரும்பொழுது களும், வேனில் காலத்து நண்பகல் என்ற சிறுபொழுதும் ஆம்.

(தொ. பொ. 9, 10 நச்.)

பிரிவு கூறல் -

{Entry: J10__253}

கற்புக் காலத்தில் தலைவன் இருபெருவேந்தர் தம்முள் பகைத்துப் போரிட்டு அழியக் கருதிய செய்தி கேட்டு, அவ் விருவரையும் அடக்கவல்ல ஆற்றலுடைய தான், அவரைப் பகைதணித்துச் சந்து செய்விப்பதற்காகப் பிரியப்போகும் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

இதனைத் ‘தூதிற் பிரிவைத் தலைவிக்குப் பாங்கி கூறல்’ என்றும் கூறுப. (இ. வி. 558 உரை)

இது ‘பகை தணிவினைப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 314)

பிரிவு கேட்டிரங்கல் -

{Entry: J10__254}

கற்புக் காலத்தில், கருணை மேலீட்டால், இருபெருவேந்தர் தம்முள் போர் செய்யப்போவதனைத் தடுப்பதற்குத் தூதுவனாதற்காகத் தலைவன் பிரிய, அப்பிரிவு ஆற்றாத தலைவி, முற்காலத்தில் குரவர் பாதுகாப்பிலிருந்த நம்மை யானை தாக்க வந்தபொழுது காத்து நம் உயிரைத் தந்த தலைவர், இன்று அவரைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத நம்மைப் பிரிந்து சென்று வருத்துவது தகுமோ?” என்று அப்பிரிவு குறித்து இரங்கிக் கூறுதல்.

இது ‘காவற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 313)

பிரிவு நினைவு உரைத்தல் -

{Entry: J10__255}

கற்புக் காலத்தில், தலைவன் பொருள்வயின் பிரிவான் என்பதைக் குறிப்பாலுணர்ந்து வாட்டமுற்ற தலைவிக்குத் தோழி, “பொருளில்லார் இருமையின்பமும் எய்தார் என்பதனை மனத்துக்கொண்டு தலைவன் பாலைநிலத்தைக் கடந்து சென்று பொருள்தேட நினைக்கின்றான்” என்று தலைவனது நினைப்பினைக் கூறுதல்.

இதனைப் ‘பொருள்வயின் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவித்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 209)

இது ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 333)

பிரிவு நினைவுறுத்தல் -

{Entry: J10__256}

தலைவன் கல்விநலன் கூறக் கேட்ட தோழி, அவன் ஓதற்குப் பிரிதல் குறிப்பறிந்து, அவன் கானகத்தைக் கடந்து கல்வியான் மிக்கவரைக் கண்ணுற்று அவரோடு உசாவித் தன் கல்வி மிகுதியைப் புலப்படுத்தப் பிரியப்போகின்ற செய்தியைத் தலைவிக்குக் கூறுதல்.

இதனைக் ‘கல்விப் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 209)

இஃது ‘ஓதற்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 309)

பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -

{Entry: J10__257}

“தலைவி! மலைகள் இடையிட்ட காடுகளை நீந்திப் பொருள் தேடச் சென்ற தலைவரிடம், ‘இப்பனிக்காலத்தே நும் பிரிவினை எம்மால் தாங்குதல் இயலாது’ என்று அவர் புறப்படும்போது கூறி அவர் செலவினைத் தடுக்காமல், அவர் பிரிந்து சென்ற இதுபோது ‘பனிக்காலத்தில் பிரிவு தாங்க ஒண்ணாத தாயுள்ளது’ என்று வருந்துவதில் பயனின்று. தவறு நம்முடையதாதலின், அதனால் வரும் துயரை நாம் பொறுமையொடு பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்பது போன்ற தோழி கூற்று. (குறுந். 350)

பிரிவுழிக் கலங்கல் (1) -

{Entry: J10__258}

தலைவி பிரிந்தபோது, தலைவன் பிரிவு தாங்காமல் கலங்கிக் கூறுதல்.

களவிற்குரிய கிளவி பதினேழனுள் இஃது ஐந்தாவது.

(ந. அ. 123)

பிரிவுழிக்கலங்கல் (2) -

{Entry: J10__259}

ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தே வாராது நீட்டித்தகாலைத் தலைவி பருவம் கண்டு வருந்துதல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் நிகழ்ச்சி களுள் ஒன்று. (ந. அ. 209)

பிரிவுழிக்கலங்கல் வகை இரண்டு -

{Entry: J10__260}

1. மருளுற்று உரைத்தல் - தலைவியை ஆயவெள்ளம் வழிபடக் கண்டு, தலைவன், “இத்தகையாளை நான் கூடப்பெற்றது வியத்தற்குரியதே” என்று கூறுதல்,

2. தெருளுற்று உரைத்தல் - அவன் தெளிவு பெற்றுக் கூறுதல் என்பன. (ந. அ. 132)

பிரிவுழி மகிழ்ச்சி -

{Entry: J10__261}

தலைவி தன்னை விட்டுப் பிரிந்து போகும்போது தலைவன் அவள் செல்லும் அழகைக் கண்டு மகிழ்தல்.

இது களவியற்குரிய கிளவி பதினேழனுள் நான்காவது.

(ந. அ. 123)

பிரிவுழி மகிழ்ச்சி வகை இரண்டு -

{Entry: J10__262}

1. செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் - தலைவி தன்னைப் பிரிந்து போகும்போது அது கண்டு தலைவன் தன் மனத்தே கூறிக்கொள்ளுதல்,

2. பாகனொடு சொல்லல் - தலைவன் தன் எண்ணத்தினைப் பாகனுக்குக் கூறுதல் என்பன. (ந. அ. 131)

பிரிவே அறைதல் -

{Entry: J10__263}

‘பிரிந்து வருகு’ என்றல்; அது காண்க. (சாமி. 88)

பிற்படக் கிளந்த எழுதிணை -

{Entry: J10__264}

அகமும் அகப்புறமுமாகிய ஏழுதிணைகள் பொருளதிகாரத் தில் முற்படக் கிளக்கப்படவே, புறத்திணைகளாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழும் பிற்படக் கிளந்த எழுதிணைகளாம்.

அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல, அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழ் என்றலே பொருத்தமாம். அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையால், பிறந்த செய்கை வேறுபா டாதலின், ஒன்று ஒன்றற்கு இன்றியமையாததாயிற்று. குறிஞ்சிக்குப் புறன் வெட்சி, முல்லைக்குப் புறன் வஞ்சி, மருதத்திற்குப் புறன் உழிஞை, நெய்தற்குப் புறன் தும்பை, பாலைக்குப் புறன் வாகை, பெருந்திணைக்குப் புறன் காஞ்சி, கைக்கிளைக்குப் புறன் பாடாண் என்று கொள்ளப்படும். (தொ. பொ. 1 நச்.)

பிறபிற பெண்டிர் -

{Entry: J10__265}

தலைவிக்குக் கற்புக்காலத்தில் அவள் தன் தலைவனிடம் கொள்ளும் ஊடலைப் போக்கிக்கொள்ள எடுத்துக்காட் டாக மனையற ஒழுக்கத்தில் வாழ்ந்துகாட்டும் உலகத்துத் தலைவரொடு கூடும் தலைவியர். (தொ. பொ. 146 நச்.)

பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் -

{Entry: J10__266}

விறலி தலைவியிடம் தலைவன் பரத்தையர்சேரியில் இரவில் தங்கியிருந்த செய்தியைக் கூறுதல்.

தனக்கு ஆடை முதலிய கொடுத்துச் சிறப்புச் செய்த தலைவி யிடம், “தலைவர் பரத்தையர்சேரியில் ஒரு மனைக்கண் தங்கியமை உண்மையே; ஆயின் நான் அதனை நேரில் கண்டிலேன்” என்று விறலி கூறுதல். (பு. வெ. மா. 17-16)

இது இருபாற்பெருந்திணைக்கண் நிகழ்வதொரு துறை.

பிறர் வரைவு உணர்த்தல் -

{Entry: J10__267}

தோழி தலைவனிடம் தலைவியை அயலார் மணம் பேசுவதனைப் பற்றிக் கூறுதல்.

“தலைவ! எம்தலைவியின் எழில்நலத்தையும் பிற சிறப்புக் களையும் அறியும் அயலார் அவளை மணம்பேச வருகின்ற னர். நீ விரைவில் அவளை வரைந்துகொள்ள முயலுதலே நலம்” (கோவை. 195) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘மகட்பேச்சுரைத்தல்’ என்னும் (195)

இது களவியலுள், ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

பிறர்வரைவு விலக்குவித்தல் -

{Entry: J10__268}

பிறர் தன்னை மணக்க விரும்புவதைத் தலைவி தடுக்கச் செய்தல்.

“தோழி! அயலார் என்னை வரைதல் வேட்டு வருவதைத் தலைவனுக்கு எடுத்துச்சொல்” என்பது போன்ற தலைவி கூற்று.

இது களவியலுள், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 164)

பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -

{Entry: J10__269}

மறுநாள் தலைவன் குறியிடத்தே சென்று வருந்துதல்.

“மான்களே! பறவைகளே! நீண்ட நேரமாக என்னுயிர் போன்றவளை எதிர்பார்த்து ஏமாந்து வருந்துகிறேன். நான் இங்கே படும் துயரைத் தான் காணவோ தான் இல்லாத சந்தனச்சோலையை யான் காணவோ அவள் இங்கே எழுந்தருளாதது?” என்பது போன்ற தலைவன் கூற்று. (தஞ்சை. கோ. 160)

இதனை ‘வறும்புனம் கண்டு வருந்தல்’ என்னும் திருக் கோவையார் (146).

இதனை களவியலுள், ‘பகற்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று என்ப. (ந. அ. 156)

பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -

{Entry: J10__270}

‘மடந்தாய்! நீ காக்கும் தினைப்புனத்தின்கண் பொழுது சாயும்போது வருவேனோ? சுனைக்குவளை மலரைச் சூடி நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவதற்கு அங்கே வருவேனோ? இப்பொழுதே மறுமொழி கூறு. நின்னைச் சுவைத்து மகிழ விரும்புகின்றேன்’ என்று யான் கூறிய சொற்களைக் கேட்டு, தான் முன்பு செய்த குறியிடத்து என்னை அழைத்துச் சென்று கூடி மகிழ்ந்து, கலைமானைப் பிரிந்து செல்லும் பெண்மானைப் போலப் பிரிந்து, தனது சிறுகுடிக்குப் பெயர்ந்து சென்றாள். அவள் பின்னழகை நோக்கி ஏமாந்த மனமே! நின்கையில் அகப்பட்டவளை விட்டுவிட்டு இப்பொழுது மற்றவர் உதவியை நாடுவதில் பயன் ஏன்?” என்ற கூற்று. (நற். 204) (தொ. பொ. 102 நச்.)

பின்பனி -

{Entry: J10__271}

அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனி மிகுதி யுடைய மாசி பங்குனி மாதங்கள். இப்பெரும்பொழுது பாலைக்குரியது. (தொ. பொ. 10 நச்.)

பின்பனி நினைந்திரங்கல் -

{Entry: J10__272}

கற்புக் காலத்தே, தலைவன் வேந்தற்கு உற்றுழி உதவுதற்குப் பிரிந்தானாக, அப்பொழுது பின்பனிக்காலம் வந்தது கண்ட தலைவன், “இப்பனி தனித்திருப்பவர்க்கு மிகுந்த துன்பத்தைக் கொடுப்பதாயிற்றே!” எனத் தலைவியது துயரம் நினைந்து இரங்கியது.

இது ‘வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 321)

`பின்னர் நான்கு’ -

{Entry: J10__273}

பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் காந்தருவம் அசுரம் இராக்கதம் பைசாசம் என்ற எண்வகை மணங்களுள், இட வகையான் பின்னாகக் கொள்ளப்படும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்ற நான்கு மணங்களும் ஒருதலைக் காமம் பற்றி நிகழ்வன அல்ல. ஆகவே, இவை கைக்கிளை அல்ல; ஒருவன்முன் ஒருத்தியை நிற்க வைத்து இருவருடைய உடன்பாட்டையும் கேட்டபின் நிகழ்த்தப்படுவன அல்ல ஆதலின் காந்தருவமும் அல்ல.

ஆதலின், இவை கைக்கிளை ஐந்திணையாகிய கந்தருவம் ஆகியவற்றின் வேறாகிய பெருந்திணைப்பாற்படும்.

(தொ. பொ. 105 நச்.)

இந்நான்கு மணங்களே உலகிற் பெரும்பான்மையாதலின், இவற்றை என்றுமே பொருந்தாக்காமம் என்று கொள்ளாது, முதலில் பொருந்தாதன போன்றிருந்து பின்னர்ப் பொருந்தும் காமமாகிய பெருந்திணை என்றே கொள்ளல் வேண்டும்.

பெருந்திணைக் குறிப்பாகிய மடலேறுதல் முதலிய நான்கிலும் பாங்கன் இடைநின்று நல்வழிப்படுப்பான் ஆகலின் இவற்றிற்குப் பாங்கன் நிமித்தம் ஆயினான். (தொ. பொ. 143 குழ.)

பின்னிலை முயறல் -

{Entry: J10__274}

பெருந்திணைத் தலைவி தலைவனிடம் தன் குறையைச் சொல்லி இரந்து பின் நிற்றல்.

“முன்பு அவனைக் கண்டதும் அவன்பால் வேட்கை கொண்டு துயருறுவேனாகிய நான் மீண்டும் அவனைக் கண்டு கைதொழுதேன்; ஆயின், அவன் என்னை ஏறிட்டும் பார்த்தி லனே!” என்பது போன்ற கூற்று.

இது பெண்பாற்கூற்றுப் பெருந்திணைக்கண் ஒரு துறை.

(பு. வெ. மா. 16 - 2)

பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -

{Entry: J10__275}

தோழியிடம் இரந்து வேண்டியும் உடன்பாடு பெறாத தலைவன், தலைவிபால் சென்ற தன் நெஞ்சினை நோக்கி, “மழையில் அகப்பட்ட உப்புவண்டியிலுள்ள உப்புப் பொதிகள் கரைந்து அழிவதுபோல, தலைவியின் கூந்தலழகில் ஈடுபட்டுத் தோழியால் மறுக்கப்பட்டும் அன்பு ஒழியாமல் காமத்தால் நாண் அழிந்து வருந்தும் நீ, முன்பே கட்குடித்து மயங்கியோர் அதன்மேலும் கட்குடித்து அறிவை முற்றும் இழத்தல் போல, நீ அறிவு முற்றும் இழந்து ஆசை வயப்பட்டுத் தடுமாறு கிறாய்” என்ற கூறுதல். (குறுந். 165)

பின்னின்றான் கூறியது -

{Entry: J10__276}

“தோழி! காலை பகல் மாலை யாமம் வைகறை என்ற சிறுபொழுதுகளைப் பிரித்தறிய இயலாத நிலையில் எல்லா நேரத்தையும் ஒன்றாகக் கருதி மயங்கும் காமநிலையிலுள்ள யான் தலைவியைப் பிரிந்திருத்தல் ஆற்றேன். நீ என்குறையை மறுத்தாயாயின், யான் மடலேறித் தலைவியைப் பெறுதல் கூடும். ஆயினும் அச்செயல் தலைவிக்குப் பழி தருவதாதலின் அச்செயலுக்குத் துணிந்தேனல்லேன். அது செய்யாது உயிர் வைத்துக்கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது. ஆதலின் உயிர்நீத்தலே நன்று” என்று தலைவன் கூறுதல். (குறுந். 32)

`புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -

{Entry: J10__277}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடைய வாயிலாகப் புக்க பாங்கன் தோழி பாணன் முதலியோர், “தலைவனுடைய தவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய இன்றியமை யாமை குலப்பெண்ணாகிய தலைவியினுடைய கடமை” என்று கூறி அவளை வேண்டிப் புலவி தீர்த்தல். (மருத நடையியல்). (வீ. சோ. 95 உரை மேற்)

புகழ்தல் (1) -

{Entry: J10__278}

இரவுக்குறிக்கண் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன், “இவள் தேன் வெளிப்படும் குமுதமலர்; யான் நிறவிய கிரணங்களைக்கொண்டு அதனை மலர்த்தும் வானகத்து மதியாவேன்” (கோவை. 166) என்று அவள் தன்பால் கொண்ட காதல்திறத்தைப் புகழ்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘முகம் கண்டு மகிழ்தல்’
என்னும் (166). (ந. அ. 158)

இது களவியலுள், ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று.

புகழ்தல் (2) -

{Entry: J10__279}

தலைவன் தலைவியை அவளழகு முதலியவற்றைக் கூறிப் புகழ்தல்.

இது களவியலுள், ‘இடந்தலைப்பாடு’ எனும் கிளவிக் கண்ணதொரு துறை (இது களவியலின் புணர்ச்சிவகை பலவற்றிலும் நிகழ்வது; பண்பு பாராட்டல், நலம் பாராட்டல் போன்றது.) (ந. அ. 135)

புகழ்தல் (3) -

{Entry: J10__280}

தலைவன் தலைவியின் அழகையும் அவள் தந்த இன்பத்தை யும் புகழ்ந்து கூறுதல்.

இது களவியலுள், ‘பாங்கற் கூட்டம்’ எனும் கிளவிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 137)

புகழ்தல் (4) -

{Entry: J10__281}

“பாவாய்! உன் கண்களில் நஞ்சினைப் படைத்த பிரமன் உன் வாயிதழில் அமுதத்தைப் படைக்காது விட்டால், உன் கண் நஞ்சு சிவபெருமானுக்கும் தாங்குதல் இயலாது!“(தஞ்சை கோ. 135) என்றாற்போலத் தலைவன் தலைவியைப் புகழ்தல்.

இது களவியலுள், ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று இது. ‘பகற்குறி’க்கும் உரித்து. (ந.அ.149)

புகழும் கொடுமையும் -

{Entry: J10__282}

தக்கவர் என்று உயர்த்திக் கூறல் புகழ்; தகாதவர் என்று தாழ்த்திக் கூறல் கொடுமை.

தலைவன் தலைவியிடத்துத் தங்கிய காலத்து அவனைத் தக்கவன் என்று புகழ்தலும், அவன் பரத்தையரிடத்துத் தங்கிய காலத்துத் தகாதவன் என்று இகழ்தலும் வாயில் களுக்கு உண்டாம்; ஆகவே, தலைவிக்குப் புகழ் அன்றிக் கொடுமை இல்லை என்பது. (இறை. அ. 45,46)

‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -

{Entry: J10__283}

முரண்பட்ட மன்னர் முதலானோர் இருவரிடையே சென்று, இவ்வாறு புரியின் புகழ் எய்தும் எனவும், இவ்வாறு செய்யின் மானம் வரும் எனவும் கிளந்து கூறி வற்புறுத்தலை இடையே கொண்ட தூதிற்பிரியும் வகை. இதன் கண் தலைவன் கூற்று நிகழும். (தொ. அகத். 43 ச. பால.)

‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -

{Entry: J10__284}

தலைவன் தனக்கேற்ற புகழையும் பெருமையையும் எடுத்துக் காட்டி இதனால் பிரிதல் வேண்டும் என்று தலைவியையும் தோழியையும் வற்புறுத்தற்கண் கூற்று நிகழ்த்துதல்.

(தொ. பொ. 41 நச்.)

ஏட்டுக் கல்வி தொழிற்கல்வி இவற்றின் பொருட்டுப் பிரிந்து பயன் பெற்றுவருவதால் கிட்டும் புகழையும், பிரியாமையால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுதல். (40 பாரதி)

பொருளீட்டல், கல்வி பொதுநலப்பணி செய்தல் முதலிய-வற்றான் உளதாகிய புகழையும், பொருளீட்டாமை, கல்லாமை, பொதுநலப்பணி செய்யாமை முதலியவற்றான் உளதாகும் குற்றத்தையும் தலைவிக்கும் தோழிக்கும் கூறித் தான் மீண்டு வரும்வரை ஆற்றியிருக்குமாறு கூறுதல். (225 குழ.)

இதனைத் திருக்கோவையார் உரை ‘பகை தணிவினைப் பிரிவு’ எனவும், ‘வேந்தற்குற்றுழிப் பிரிவு’ எனவும் கூறும். (பேராசிரியர் உரைச் சூத்திரங்கள் 22, 23)

‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

{Entry: J10__285}

புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தொடே, புதுவது புணர்ந்த பரத்தையர் தன்மாட்டு மனம் நெகிழ்ந்த மென்மையின்பொருட்டு அவர்க்கு அருள் செய்யப் பிரிந்து வந்தோனை, தனது தனிமை மிகவும் அறிவித்து, அவன்மேற் சென்ற நெஞ்சினைச் செல்லாமல் அவனிடத்தினின்று மீட்டு அருகப் பண்ணி, பிறருள் ஒருத்தியைக் காணாள் ஆயினும் கண்டாள் போலத் தன் முன்னர்ப் பெய்துகொண்டு, வாயில் மறுத்ததனான் தோன்றிய நயனுடைமைக்கண் தலைவி கூற்று நிகழும் என்பது. எனவே, மறுப்பாள் போல நயந்தாளாயிற்று.

“ஊரனே! நீ உன்பரத்தையை விடுத்து விழாக்காலத்தில் ஆடிய மகளிரொடு தங்கியிருந்தது கேட்டு அவள் கோபம் கொண்டாள் போலும். தன் முகத்தின் செயற்கைஅழகு கெட அழுது ஏங்கித் தன் விரலைப் பலகாலும் திருகிக்கொண்டு, பற்களைக் கடித்ததனால் அவை நுனி மழுங்க, ஊர் முழுதும் நின்னைத் தூற்றிக்கொண்டு அலைகிறாள். அவளைக் காணச் செல்வாயாக” என்று தலைவி கற்பனையாகத் தலைவனிடம் கூறுதல்;

“அவளுக்கு, என்னைப் போலப் புதல்வனைப் பெற்றுக் கொண்டு பெரிய மனைக்கண் உன்னையின்றியும் வருவிருந் தோம்பி இல்லறம் நடத்தும் கடமையில்லையே!” என்றல். (அகநா. 176)

“தோழி! தலைவரைப் புலத்தல் கூடுமோ? ஒரு காலத்தில் என்னைத் தழுவுதலில் விருப்பம் கொண்டார்; இப்பொழுது நான் அவரைத் தழுவ இருப்பினும், புதல்வர்க்குப் பால் கொடுக்கும் நிலையிலிருக்கும் நான் தழுவின், தம் மார்பில் பால்பட்டு விடும் என அஞ்சுகிறார். நம்மைத் தழுவுதலை நீத்துவிட்டார் என்பதனை உட்கொண்டு, வந்த தலைவரிடம், ‘உமக்கு ஏற்றவர் பரத்தையரே; என்புதல்வன் என்னிடம் அன்புடையன்; நான் அவனிடம் செல்கிறேன்’ என்று மெல்ல அவனிடம் சென்றேன். ‘மகனிடம் எனக்குமாத்திரம் ஆசை யில்லையா?’ என்று கூறித் தலைவர் “என் முதுகினைத் தழுவ, பல காலம் உழப்பட்ட வயலில் மழைநீர் பெய்வதால் மண் நெகிழ்வதுபோல, என் நெஞ்சு அவரிடம் நெகிழ, புலத்தலை விடுத்து அவர்கூட்டத்துக்கு உடன்பட்டேன்” என்று தோழியிடம் கூறல். (அகநா. 26) (தொ. பொ. 147 நச்.)

“புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

{Entry: J10__286}

உணவு உண்ணும் நண்பகற்பொழுதிலோ இரவிலோ தலைவி இல்லத்துக்கண் தலைவன் புக்கு எதிர்ப்பட்டவழி, அவனை நீக்காது விருந்தினனாக ஏற்றுக் கொண்ட செய்தி பற்றித் தலைவி பிறகு தோழியிடம் கூறுதல்.

“சுடர்த்தொடீஇ! நம் தலைவன், அன்றொருநாள், நானும் தாயும் மாத்திரமே இருந்த பொழுதில் நம் இல்லத்திற்கு வந்து, ‘உண்ணு நீர் வேட்டேன்’ என்ற கூற, அன்னையும் என்னை நோக்கி, ‘உண்ணுநீர் ஊட்டி வா, என்ன, நானும் தலைவனது குறும்பு அறியாது நீருடன் அவனிருக்கும் இடம் சேர, அவன் வளையல் அணிந்த என் முன்கையைப் பற்றி வருத்த, நானும் செய்வதறியாது, ‘அன்னாய்! இவன் செய்வ தனைப் பார்’ என்று கூச்சலிடவே, அன்னை அலறிக் கொண்டு ஓடிவந்து’ ‘யாது நிகழ்ந்தது?’ என்ற வினவ, நான் அவன்தவற்றைக் கூற விரும்பாது, ‘உண்ணுநீர் விக்கினான்’ என்று கூற, அன்னை அவன் முதுகைத் தடவிக் கொடுத்துப் புரை ஏறாதவாறு செய்யும்போது, அவன் என்னைக் கடைக் கண்ணால் நோக்கிப் புன்முறுவல் செய்தான்” என்ற கூற்று. (கலி. 51) (தொ. பொ. 107 நச்.)

புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

{Entry: J10__287}

இரவில் உணவு உண்ணும் காலத்து விருந்தினனாக வந்த தலைவனை ஏற்காது விட்டதனோடு, அவனுக்கும் தனக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலும் என்று ஐயுற்றுச் செவிலி இரவு முழுதும் உறங்காமல் தன்னைக் காத்ததனால், தலைவி அவளைச் சினந்து கூறுதல்.

“ஓரிரவு தலைவன் நம் மனைக்கண் விருந்தினனாக வர, செவிலி அவனை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அவன் வருகையை நம்மோடு இணைத்து ஐயுற்று அன்றிரவு முழுதும் உறங்காமலேயே இருந்தாள். அதனால் நமக்கு இரவுக்குறி பிழைத்தது. இத்தகைய தீங்கு செய்த அன்னை பெண்கொலை புரிந்த நன்னன் எய்திய நரகத்தை அடைவாளாக!” என்ற தலைவி கூற்று. (குறுந். 292) (தொ. பொ. 107 நச்.)

புடையுரை -

{Entry: J10__288}

அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று (கா. 91). எடுத்துக் கொண்ட பாட்டின் பொருளை மாத்திரம் கூறாமல், அத னொடு தொடர்புடைய வெளிச்செய்திகளையும் கூறுதல்.

(வீ. சோ. 96)

புணர்குறி -

{Entry: J10__289}

தலைவன்தலைவியர் சந்திக்கும் குறியிடம்; ‘புணர்குறி செய்த புலர் குரல் ஏனல்’ (அகநா. 118). அது பகற்குறியும் இரவுக் குறியும் என இருவகைப்படும்.

புணர்ச்சி -

{Entry: J10__290}

அகனைந்திணையுள் குறிஞ்சிதிணைக்குரிய உரிப்பொருள் புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும். ஒத்த அன்புடைய தலைவன்தலைவியர் கூட்டம் புணர்ச்சியாம். உள்ளத்தாற் புணரும் உள்ளப்புணர்ச்சியும், மெய்யுற்றும் புணரும் மெய்யுறு புணர்ச்சியும் களவின்கண் நிகழ்வன. கற்பின்கண் களவிற்புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் தலைமகற்கு எய்தலுண்டு; முன்னது களவின் வழிவந்த கற்புக்கும் பின்னது களவின்வழி வாராக் கற்புக்கும் உரிய. (ந. அ. 34, 58, 55)

புணர்ச்சி உரைத்தல் -

{Entry: J10__291}

தலைவன் தலைவி இருவர்தம் தொடர்பு பற்றியும் ஓரளவு தோழி அறிந்த பின், தலைவி பிறை தொழ மறுத்தல் முதலிய வற்றையும் கண்டு, பின் அவளுடைய கண் சிவப்புறுதலும் உதடு வெளுப்பேறுதலும் முதலாயின பற்றி அவளை வினவ, அவள் தான் சுனையாடியதால் ஏற்பட்ட வேறுபாடு அஃது என்று கூறினாளாக, பின்னரும் விடாது, “நீ ஆடிய சுனை உன்கண்களைச் சிவக்கச் செய்து உன் உதடுகளை வெளுக்கச் செய்து உன் தலையில் அழகிய மலர்களைச் சூட்டும் ஆற்ற லுடையதோ?” என்றாற்போல அவளை வினவி, அவள் தலைவனொடு தொடர்பு கொண்டமையைத் தான் அறிய லுறுவதனைக் குறிப்பாக வெளியிடுதல்.(ந.அ. 139 உரை)

இது ‘சுனை வியந்துரைத்தல்’ எனவும் படும்.(இ .வி. 507 உரை)

இது ‘நாணநாட்டம்’ எனும் கிளவிக்கண்ணதொரு துறை.

(கோவை. 70)

புணர்ச்சி துணிதல் -

{Entry: J10__292}

தலைவியைக் கண்ட தலைவன் அவள் மானுடமகளே என்று தெளிந்து, அவள் தன்னிடத்துக் கொண்ட காதலையும் உணர்ந்து, அவளைக் கூட்டுவித்த தெய்வத்தை மகிழ்ந்து வாழ்த்தி அவளைக் கூடுதற்குத் துணிதல்.

இது ‘தெய்வப்புணர்ச்சி துணிதல்’ எனவும் கூறப்படும்.

(இ. வி. 491 உரை)

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 7)

புணர்ச்சி மகிழ்தல் -

{Entry: J10__293}

தலைவியுடன் கூடி இன்புற்ற தலைவனது மகிழ்ச்சி.

“பெண்ணே! ஐம்பொறிகளுக்கும் உரிய ஐம்புல இன்பங்களை யும் நின்பால் ஒருங்கே பெற்றேன்” (கு. 1101) என்றாற் போலக் கூறித் தலைவன் மகிழ்தல்.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

புணர்ச்சியின் மகிழ்தல் (1) -

{Entry: J10__294}

“இத்தலைவி கழுநீர் மலர்; யான் அதன்கண் தேனைப் பருகும் வண்டு” (கோவை. 123) என்றாற் போலக் கூறித் தலைவன் தலைவியை நுகர்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘உள்மகிழ்ந் துரைத்தல்’ என்னும். (123)

இது களவியலுள் ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று, ‘இயைதல்’ எனப்படும். இது ‘பகற்குறி’க்கும் உரியது; முன் மூவகைப் புணர்ச்சிகளிலும் நிகழ்வது. (ந. அ. 149)

புணர்ச்சியின் மகிழ்தல் (2) -

{Entry: J10__295}

பிற புணர்ச்சிகளில் தலைவன் கூற்றாகவே வரும் இக்கிளவி, பரத்தையிற் பிரிவில் நிகழும் ஊடலில், உணர்த்த உணர்ந்து ஊடல் தணிந்த நிலையில் தலைவனும் தலைவியும் கூடி இன்புற்ற சிறப்பினைக் கவியே கூறுவதாக நிகழும்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரும் ஊடல். (ந. அ. 205)

புணர்ச்சியின் விதும்பல் -

{Entry: J10__296}

வேட்கை மீதூர்தலின் தலைவி கலவிக்கு விரையும் உள்ளத்தி னளாய் அதனைத் தோழிக்கு உரைத்தல்.

“தோழி! என் நிறையும் நாணும் அழிந்தமை போன்றே என் வளையல்களும் கையினின்றும் கழன்று போயின; நீயும் துணைக்கு இங்கு இல்லை. இந்நிலையில் காதல் மிகுந்து ஏங்கிய என் போன்றோர் கலவிக்கு இணங்காமல் ஊடித் தனித்திருத்தல் இயலுமா?” என்பது போன்ற தலைவி கூற்று. (அம்பிகா. 512)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

புணர்ச்சி விதும்பல்

{Entry: J10__297}

விதும்பல் - விரைதல். கற்புக்காலத்தில் இல்லறம் நடத்தும் தலைவனும் தலைவியும் தம்முள் புலத்தற்குக் காரணம் உள் வழியும் வேட்கை மிகுதியால் புலவாது புணர்ச்சிக்கண்ணே விரைதல். (குறள் அதி. 129 பரிமே.)

புணர்தல் (1) -

{Entry: J10__298}

கூடி மகிழ்தல்; இஃது எல்லாப் புணர்ச்சியிலும் வரும் துறை.

தம் இல்லத்தில் இருந்துகொண்டு தாம் ஈட்டிய பொருளைப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்டாற்போல, இத்தலைவி யின் கூட்டம் எனக்கு இன்பம் தருகிறது” என்பது போன்ற தலைவன் கூற்று. (குறள் 1107)

புணர்தல் (2) -

{Entry: J10__299}

தலைவன் தலைவியை விதி கூட்டி வைக்க உள்ளத்தானும் மெய்யானும் கூடுதல். நால்வகை நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும், புலனெறி வழக்கிற்குரிய முற்பட்ட களவுப் புணர்ச்சியே புணர்தற் சிறப்புடையது. இப்புணர்தல் என்ற ஒழுக்கம் குறிஞ்சி எனப்படும். இதற்குரிய நிலம் மலையும் மலைசார்ந்த இடமுமாம்; காலம் கூதிரும் முன்பனியுமாகிய பெரும்பொழுதும், இடையாமமாகிய சிறுபொழுதும் ஆம்.

புணர்தல் என்பதன்கண் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்பனவும், பாங்கியிற் கூட்டத்தின் பகுதியாகிய பகற்குறி இரவுக்குறி முதலியனவும் அடங்கும்.

புணர்தல் நிமித்தம் -

{Entry: J10__300}

தலைவனும் தலைவியும் புணர்ந்த பின்னர் நிகழும் பிரிவச்ச மும், வன்புறையும், தலைவன் நீங்கியமையும், பாங்கற்கு உரைத்தனவும், பாங்கன் கழறியனவும், தலைவன் எதிர்மறுத் தனவும், பாங்கன் எதிர்ந்தனவும், நீங்கியமையும் தலை மகளைக் கண்டமையும், ஆற்றான் ஆயினமையும், தலைவற்கு வந்துரைத்தனவும், தலைவன் சென்றமையும், தலைவன் தலைவியைத் தலைப்பெய்தமையும் இத்தொடக்கத்தன வெல்லாம் தலைவிக்கும் தோழிக்கும் இவ்வகையானே நோக்கி விகற்பிக்க, அவையெல்லாம் புணர்தல் நிமித்தமாய் அடங்கும். (இறை. அ. 1 உரை)

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -

{Entry: J10__301}

அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அது தலைவன் தலைவியராகிய இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச் சியை முற்கூறி, புணர்ந்துழியல்லது பிரிவு இன்மையானும் அது தலைவன்கண்ணதாகிய சிறப்பானும் தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கு இன்மையானும் பிரிவினை அதன்பின் கூறி, பிரிந்துழித் தலைவி ஆற்றியிருத்தல் முல்லை யாதலின் அதனை அடுத்துக் கூறி, அங்ஙனம் ஆற்றியிருக்கும் தலைவி தலைவன் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் கடந்தவழி இரங்குதலை அதன்பின் கூறி, இந்நான்கு பொருட்கும் பொதுவாகலானும் காமத்திற்குச் சிறத்தலானும் ஊடலை அதன்பின் கூறி இம்முறையே வைத்தார் ஆசிரியர் என்பது.

(தொ. பொ. 14 நச்.)

புணர்தல் முதலிய உரிப்பொருள் -

{Entry: J10__302}

புணர்தலாவது கூடுதலுறுதலும் பிரிவின்றி உடனுறைதலும். இது தலைவன் தலைவி இருவர்க்கும் உரியது.

பிரிதலாவது களவின்கண் ஒருவழித்தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்னுமிவை காரணமாக வும், கற்பின்கண் ஓதல் - பகை - தூது - காவல் - பொருள் - பரத்தை என்னுமிவை காரணமாகவும் தலைவன் தலைவி யைப் பிரிந்து சேயனாதலும் அயல் உறைதலும் ஆம். இது தலைவனுக்கு உரியது.

கற்பிற்குரிய பிரிவுகளுள் ஓதலும் பரத்தையும் தவிர்ந்த ஏனையவை சிறுபான்மை களவின்கண்ணும் நிகழ்தலுண்டு. இருத்தல், இரங்கல், ஊடல் என்பவையும் தலைவன் பிரிந்த வழி நிகழ்வன ஆதலின் அவை ஒருவாறு பிரிவுள் அடங்கும். அது தோன்றப் பிரிதலை இரண்டாவதாக வைத்தார். இவ்வாற்றான் அக ஒழுகலாறுகள் புணர்வு பிரிவு என்னும் இருவகையுள் அடங்கும்.

இருத்தலாவது கடமை காரணமாக அறவழியில், தலைவன் பிரிந்து சென்றவிடத்தே அவன் குறித்த பருவம் வருமளவும் தலைவி அப்பிரிவினைப் பொறுத்துக்கொண்டு இல்லத்தில் உறைதலாம். இது தலைவிக்குரித்து. தலைவன் பாசறைக்கண் ஆற்றியிருத்தலும் இருத்தலின்பாற்படும்.

இரங்கலாவது ஒருவழித்தணத்தல் நீட்டிக்குமிடத்தும், தலைவன் குறித்த பருவம் கழியுமிடத்தும் பிரிவாற்றாத தலைவி வருந்துதல். இது தலைவிக்கே உரியது.

ஊடலாவது தலைவன் பரத்தமை கருதினானாக நினைந்தும் பரத்தமை யுற்றானாகத் தெரிந்தும் தலைவி சிதைந்தும் முனிந்தும் நொந்தும் தலைவனது கூட்டத்தை மறுத்தலும் பழித்தலுமாம். இது தலைவிக்குரித்து. உணர்ப்புவயின் தலைவி ஊடல் தவிராதவழிச் சிறுபான்மை தலைவன் நொந்து கூறுதல் இதன்பாற்படும். (தொ. அகத். 116 ச.பால.)

புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -

{Entry: J10__303}

“தோழி! தலைவியும் யானும் உடன்போக்குச் சென்றபோது தலைவிக்குப் பாதிரி, அதிரல், மரா ஆகிய மலர்களை அணிவித்து அவள் பின்னழகைக் காண விரும்பிச் சிறிது தூரம் என் முன்னே நடந்து செல்லுமாறு கூறினேன். அவள் அதற்கு நாணி, தன் மான் போன்ற பார்வையால் என்னை நோக்கித் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். நானும் முன்னே செல்ல மனமின்றி ஒருநாள் சுரத்திலேயே அவளோடு தங்கிவிட்டேன்” (அகநா. 261) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 45 நச்.)

புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாதல் -

{Entry: J10__304}

களவுக் காலத்தில் தலைவி தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்த அவளைத் தேடிவரப் பின்தொடர்ந்த செவிலி வேதியரை வினவி அது வழியாகச் சென்றவள், தன்னை நோக்கி வரும் தலைவன்தலைவியராகிய வேற்றவர் இருவரை நோக்கி, “உங்களைப் பார்த்ததும், என்மகளும் அவள்கண வனும் மீண்டுவிட்டனரென மகிழ்ந்தேன். நும்மைப் போன் றார் இருவர் வழியிடைச் செல்லக் கண்டீரோ?” என வினவுதல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 244)

புணரா இரக்கம் -

{Entry: J10__305}

தலைவியைக் கூடப்பெறாத கைக்கிளைத் தலைவன் வருந்துதல்.

“இவளை இப்பொழுதே சென்று தழுவிக் கூடி இன்புற்றா லன்றி என்னால் உயிர் வாழ்தலே முடியாது!” என்ற தலைவன் கூற்று.

இஃது ‘ஆண்பாற்கூற்று; கைக்கிளைக்கண்ணதொரு துறை.

(பு. வெ. மா. 14-8)

புதல்வற் புலத்தல் -

{Entry: J10__306}

தலைவி மகனிடம் கோபித்தல்.

பரத்தைஇல்லம் நோக்கிச் செல்லும் உன் தந்தையைத் தெருவில் கண்டு அழுது அழைத்து உன்னைத் தூக்கிக் கொள் ளச் செய்து உன் வாய்எச்சிலால் அவர் அணிந்த சந்தனம் சிதைய அவரைப் புல்லி இங்ஙனம் இன்பம் செய்த மகனே! இனிமேல் உனக்குப் பயந்துகொண்டே உன்தந்தையார் இங்கு வாரார். நீ யாரைத் தூக்கிக் கொள்ளச் சொல்லுவாய்?” (அம்பிகா. 503) என்றாற் போலத் தலைவி தன் மகனை வெகுள்வாள் போலத் தலைவனது புறத்தொழுக்கத்தைக் கடிந்து கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் பகுதிக்கண் ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் உட்பிரிவின்கண்ணதொரு கூற்று.

(இ. வி. 555 உரை)

“புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

{Entry: J10__307}

“நாரையின் பார்ப்பு அழைக்கும் குரல் வயல்வெளியெல்லாம் கேட்கும் ஊரன் நீ. உன்புதல்வன் அழைத்து உன்னிடம் கூறிய சொற்களைக் கேட்டுச் செயற்படும் நீ, இனி எங்களிடம் அன்புற்றிருத்தல் அரிது. உன் மனைவி இல்லத்திற்கே சென்று அவளொடு வாழ்வாயாக!” என்று பரத்தை தலைவனிடம் கூறுதல். (ஐங். 86)

புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல் -

{Entry: J10__308}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு இல்லத்துக்கு வரப் புலவி தீர்ந்து அவனைக் கூடி இன்புறுத் திய தலைவி, மீண்டும் அவன் பரத்தையர்மாட்டுப் பிரிந்து வர, அது கண்டு வாயில் மறுக்க, தலைவன் வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த புதல்வனைத் தூக்கிக்கொண்டு அவனை வாயிலாகக் கொண்டு உள்ளே வர, தலைவி மகனை வாங்கி அணைத்துக்கொண்டு தலைவன் புறத்தொழுக்கம் பற்றிப் பல பேசிப் புதல்வன்மேல் வைத்துப் புலவி நீங்கியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 396)

புதல்வன்மேல் வைத்துப் புலவியின் நீடல் -

{Entry: J10__309}

தலைவி தன் புதல்வன் தலைவனுடைய காமக்கிழத்தியர் பலருடைய இல்லங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டதைத் தன் தோழியால் அறிந்து வருந்தியிருக்கும் போது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் வேண்ட, தலைவி புதல்வனை வெகுள்வாள் போல அவனுடைய புறத்தொழுக்கத்தை யெடுத்துக் கூறி அவனிடம் கோபம் நீட்டித்தல்.

“மகனே! பொய்யையே மெய்யாகப் பாவிக்கும் பரத்தையர் சேரிக்குச் சென்று, அப்பரத்தையரால் தூக்கி வைத்துக் கொள்ளப்பட்டுக் கொண்டாடி முத்தமிடப்பட்டு வந்துள்ள நீ, அவர் வாய்த் தம்பலம் பட்ட எச்சில் வாயினால் என்னிடம் பால் அருந்த வாராதே!” என்பது போன்ற தலைவி கூற்று. (மா. அ. பாடல். 470)

புதல்வன்மேல் வைத்து வாயில் மறுத்தல் -

{Entry: J10__310}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயில் வேண்டி நின்றானாகத் தலைவி, தான் மகப் பெற்ற காலம்தொட்டே அவன் பரத்தையர்தொடர்பு கொண்ட செய்தியைத் தன் மகன்மேல் வைத்துக் கூறுவாள் போலத் தலைவனுக்கு வாயில் மறுத்தது.

“பாடகம் என்ற ஊரிலுள்ள தலைவ! இப்புதல்வனை நான் பெற்ற முகூர்த்தம் எனக்களித்த வாழ்வின் பெருமை சொல் லும்படிக்கு எளியதொன்றோ? என் தலைமைக்குப் பொருந் துவதாக என்மேல் வைத்த நின் புத்தியைப் பரத்தைமை செய்வித்ததோடு, எனக்கு மங்கைப் பருவத்துத் தங்கை யொருத்தியை உண்டாக்கி வாழ்வித்ததே!” என்பது போன்ற தலைவி கூற்று. (மா. அ. பா. 548)

புதல்வன் வாயில் வேண்டல் -

{Entry: J10__311}

“தலைவியே! உன் ஊடல் தணிவிக்க வேண்டி நம் தலைவன் அனுப்ப முன்பு வந்த பாணரும் பாகரும் போல விலக்கக் கூடிய வாயில் அன்று இது. உன் புதல்வனையே தழுவி. வாயிலாக எடுத்துக்கொண்டு வருகிறான் ஆதலின், இனியும் உன் ஊடல் நீட்டித்தல் கூடாது” என்ற தோழி கூற்று.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 502)

புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -

{Entry: J10__312}

“தோழி! பரத்தையர் புதுமணவிழாக் கொண்டாட வேண்டி முழவினை ஒலிக்க, அதனைக் கேட்ட நம் தலைவன் தேரேறிச் சென்றபோது அவனை இடைப்பட்டு என்புதல்வன் சென்று கண்டதால், தலைவன் புதுமணம் புணரப்பெறாது இட ருற்றமை எனக்குப் பெருநகைப்பினை விளைக்கிறது!” என்ற தலைவி கூற்று. (இவ்வாறு கூறி, உள்ளாரத் தலைவன்பால் கொண்டிருந்த காதலால் அவனை ஏற்றுக்கொண்டாள் என்பது குறிப்பு.) (ஐந். ஐம். 26)

புதல்வனை வாயில் நேர்வித்தல் -

{Entry: J10__313}

தலைவியின் ஊடலைத் தீர்க்கும் வாயிலாகப் புதல்வனை எடுத்துக்கொண்டு அவளிடம் செல்வாயெனத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

“தலைவனே! உன் சிறுபுதல்வன் ஓர் இளங்களிறு. நீ களவுக் காலத்தில் பெரிய முதுகளிற்றைக் காய்ந்து வெருட்டிய திறலுடையை; ஆதலின் உன் புதல்வனாகிய இந்த இள யானைக்கு அஞ்சாமல் அவனையே தழுவி எடுத்துக்bகாண்டு தலைவியிடம் சென்று அவள் ஊடலைத் தணிப்பாயாக.“

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று’ (அம்பிகா. 501)

புரி -

{Entry: J10__314}

மருத நிலத்தூர் (சூடா. ஏ- 36)

`புல்லித்தோன்றும் கைக்கிளை’ -

{Entry: J10__315}

காமக்குறிப்பிற்கு அமைதியில்லாத இளமைப்பருவத்தா ளொருத்தியிடம் தலைவனொருவன் அவளைத் தனக்கு மனைக்கிழத்தியாகக் கோடல் வேண்டும் என்று மருந்து பிறிதில்லாப் பெருந்துயர் எய்தி, தான் நன்மை செய்தவனாக வும் அவள் தீமை செய்தவளாகவும் பலவாறு பேசி, அச்சொல்லுக்கு அவளிடமிருந்து மறுமொழி பெறாது, பின்னும் தானே சொல்லி இன்புறுதல் என்றுமே கைக்கிளை யாதலின் கைக்கிளை யாதற்குச் சிறந்ததாம்.(தொ. பொ. 50 நச்.)

புல்லேம் எனல் -

{Entry: J10__316}

இது புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு ஆகும். (சாமி. 146) ; அது காண்க.

இது ‘புலவிப் பாடாண்பாட்டு’ எனவும் வழங்கப்படும்.

(இவி. 617 - 45)

புலந்து கூறல் -

{Entry: J10__317}

தலைவற்குக் குறைநேர்ந்த தோழி தலைவியை அணுகித் தலைவன் நிலை கூறவும், நாணத்தால் தலைவி நேரிடையாக இசைவு தெரிவிக்காததனால், தோழி வெகுண்டு, தன்னினும் மேம்பட்ட நண்பினர்களைக் கலந்து தலைவி தான் விரும்பி யதைச் செய்க எனவும், தன் தவற்றினை அவள் பொறுத்திடுக எனவும் கூறுதல்.

இதனைத் ‘தோழி தலைவியை முனிதல்’ என்ப. (ந. அ. 148)

இது ‘குறை நயப்புக் கூறல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 87)

புலம்பல் -

{Entry: J10__318}

தலைவி தலைவனின்றித் தனித்து வருந்துதலும், தலைவன் தலைவியின்றித் தனித்து வருந்துதலும் ஆம். ‘புலம்பே தனிமை’. (தொ. சொ. 331 சேனா.) (L)

புலம்பன் -

{Entry: J10__319}

நெய்தல் நிலத் தலைவனுக்குரிய திணை நிலைப்பெயர். (ந.அ. 24)

புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல் -

{Entry: J10__320}

மறுநாள் பொழுது விடிந்ததும், தலைவி இரவுக்குறியிட மாகிய தாழைமரத்தடியில் தலைவனுடைய மாலை இருக்கக் கண்டு, அப்பேறுற்ற தாழையை வாழ்த்திப் புலம்புதல்.

“புன்னைகளே! தாழைகளே! ‘இரவில் யான் இங்கு வந்து போன பின் தலைவர் இங்கு வந்தாரா?’ என்ற செய்தியைச் சொல்லுங்கள்” என்பது போன்ற தலைவி கூற்று. (கப்பற். 171)

இது களவியலுள், ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 160)

புலரி வைகறை -

{Entry: J10__321}

கதிரவன் தோற்றத்தை யொட்டிய மறுநாள் பத்து நாழிகை யளவும் விடியல் எனவும், காலை எனவும் கூறப்படும். முதல் நாள் இரவின் இறுதிப் பத்து நாழிகையளவும் வைகறை எனப்படும். வைகறையின் இறுதியும் விடியலின் தொடக்க மும் ஆகிய இரண்டனையும் ஒட்டிய நேரம் புலரிவைகறை யாம்.

வைகறைக்காலக் கழிவும் புலருதல் முன்னும் ஆகிய அக் காலம் என்பர் அடியார்க்குநல்லார். (சிலப். 14 - 3)

புலவி (1) -

{Entry: J10__322}

தலைவி தலைவனுடன் இல்லறம் நிகழ்த்தும்போது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமல் காலம் கருதிக் கொண்டு உய்ப்பதோர் உள்ளநிகழ்ச்சி. அஃதாவது தலைவன் மாட்டுக் குற்றம். ஏதும் இன்றாகவும், அவனிடம் கோபம் கொள்வது போலக் காட்டின், அக்கோபத்தைத் தணிக்க அவன் செய்யும் தண்ணளி பின்னர்ப் பேரின்பம் தருவது என்பதனை உட்கொண்டு தலைவி நிகழ்த்தும் செயல். தலைவன் தலைவியிடம் குளிர்ப்பக் கூறித் தளிர்ப்பத் தழுவி அவள்புலவியை நீக்குவான். அது ‘புலவி வெய்யள்யாம் முயங்குங் காலே’ என வரும். (தொ. பொ. 499 பேரா.)

இப்புலவி பொருளாகப் பாட்டுடைத் தலைவனையே கிளவித்தலைவனாகக் கூறுவதனைப் புறப்பொருள் பாடாண் துறையாக வெண்பாமாலை கூறும். (பு. வெ. 9:47)

புலவி (2) -

{Entry: J10__323}

தலைவன் தலைவி என்ற இருவர் நெஞ்சும் புணர்ச்சி விரும்பாது அதனைச் சிறிது வெறுத்தாற் போன்று இருக்கக் கருதியவழி, காரணம் எதுவும் இல்லாதுபோயினும், தாமே ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு ஒருவரோடொருவர் கோபம் கொண்டவர் போல ஒழுகுதல் (குறள் அதி. 111 பரிமே.)

புலவி ஆற்றுவித்து இகுளை சொல் -

{Entry: J10__324}

தோழி தலைவனை ஆற்றுவித்துக் கூறல். (சாமி. 94)

இது தோழியிற் கூட்டத்தின்கண்ணது.

புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -

{Entry: J10__325}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவிதான் கற்பித்துக் கொண்ட புலவியினால் அவனை அணுகி அவன் புறத்தொழுக்கத்தை இழித்துக் கூறல். (மருத நடையியல்).

(வீ. சோ. 95 உரை மேற்.)

புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -

{Entry: J10__326}

“நற்குணங்களும் தகுதியுமுடைய தலைவர்க்கும் தம் காதலியர் தம்மிடம் மிகவும் கடுமையாக ஊடுவதே இன்பம் பயப்பது.” தான் நுகர்ந்த இன்ப மிகுதி ஊடலுக்குப் பின் நேர்ந்தது என்பதனால் புலவியைப் பாராட்டுகின்றான். (குறள் 1305)

புலவி நுணுக்கம் -

{Entry: J10__327}

புலவிக்கு நுண்ணிதான காரணமொன்று கற்பித்துக் கூறல்.

கற்புக் காலத்தில் தலைவனும் தலைவியும் ஒரு சேக்கையில் கூடியிருந்தவழி, தலைவனிடம் கோபம்கொள்ள ஒரு காரணமும் இல்லாத நிலையிலும், காதல் மிகுதலான் நுண்ணிதாகியதொரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தலைவன்மேல் ஏற்றிக் கூறித் தலைவி சிறுகோபம் கொள்ளுதல். நுணுக்கமான காரணத்தால் ஏற்பட்ட சிறு கோபம் ‘புலவி நுணுக்கம்’ எனப்பட்டது. (குறள். அதி. 132 பரிமே.)

புலவிப்போலி -

{Entry: J10__328}

களவுக் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து பக்கத்து ஊருக்குச் சென்றக்காலும், ஓரிரு நாள்கள் தலைவன் தலைவியை மறந்தவன் போன்று குறியிடத்து வாராதிருப் பினும், களவிலே கற்புக்கடம் பூண்டு ஒழுகும் தலைவி, தன்வயின் உரிமையும் தலைவன் தன்னிடத்து உண்மையான அன்புடையனல்லன் என்று அவன்வயின் அயன்மையும் தோன்ற, உள்ளத்தில் புலவிகொள்வாள். களவுக் காலத்தில் ஊடலும் உணர்த்தலும் வெளிப்பட நிகழாமையின், இதனைப் புலவி என்னாது ‘புலவிப் போலி’ என்று கொள் ளல் வேண்டும்.

குறி பிழைத்தவழித் தலைவன் புலத்தல் உண்டு. அப் புலவியைத் தோழி நீக்குவாள். ஆதலின் இதனையும் ‘புலவிப்போலி’ என்று கொள்ளல் வேண்டும். இது தலைவனுக்கே உரியது. (தொ. பொ. 111 நச். உரை)

புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு -

{Entry: J10__329}

தலைவி தலைவனை நோக்கி, “சந்தனம் பூசிய நின் மார்பினை இவ்வூர்ப் பரத்தையர் தழுவிய காட்சியை இவ்வைகறையில் நின் மார்பகத்துக் காணப்படும் குறிகளால் கண்டு தெரிந்த நான், பலரும் நுகரக் கொடுக்கப்பட்ட பொதுச்செல்வ மாகிய நின் மார்பினைத் தழுவுதலை விழையேன்” என்றாற் போலப் புலந்து கூறுதல். இத்துறைக்குப் பாட்டுடைத்தலை வனே கிளவித்தலைவன் ஆவான். (பு. வெ. மா. 9 - 47)

புலவியுட் புலம்பல் -

{Entry: J10__330}

பெருந்திணைத் தலைவி தலைவனுடன் ஊடித் தனிமையில் வருந்துதல்.

தலைவன் தணித்தபின்பும் தலைவி ஊடல் தணியாது அவனது மாலையை இழுத்துச் சிதைத்துப் பின் துயருற்றுப் புலம்புதல்.

இது புறப்பொருளில் பெருந்திணையின் ஒரு பகுதியான பெண்பாற் கூற்றில் ஒரு துறை. (பு. வெ. மா. 16-8)

புலனெறிக்குச் சிறந்த பாக்கள் -

{Entry: J10__331}

கலிப்பாவும், பரிபாடலுமே புலனெறி வழக்கிற்குச் சிறந்த பாக்கள். வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறனிலை வாழ்த்து, கைக்கிளை என்ற பொருண்மைக்கண் மருட்பா சிறந்து வரும்.

கலிப்பா ஐந்திணைப் பொருளாய புலனெறிவழக்கில் காமமும், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கில் காமமும் பற்றி வரும். பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வரும். (தொ. பொ. 53 நச்.)

புலனெறி வழக்கம் -

{Entry: J10__332}

புலவரால் பாடுதற்கு அமைந்த புலவர் மேற்கொண்ட வழக்கம்.

அகனைந்திணையாகிய காமப்பொருளே புலனெறி வழக்கத் துக்குச் சிறந்தது; ஏனைய கைக்கிளையும் பெருந்திணையும் அத்துணைச் சிறந்தில. புலனெறி வழக்கத்திற்குக் கலிப்பாவும் பரிபாடலுமே சிறந்தவை; ஏனைய ஆசிரியம் வெண்பா வஞ்சி மருட்பா என்பன அத்துணைச் சிறந்தில.

இஃது உள்ளோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக இலக்கணம் போல, யாதானும் ஒரோவழி ஒருசாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொது வாக்கி இடனும் காலமும் நியமித்துச் செய்யப்படுவதால் இல்லதெனப்படாது உலகியலேயாம். (தொ. பொ. 53 நச்., மு. வீ. 378)

சுவைபட வருவன எல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்து உலகத்தார் ஒழுகலாற்றொடு சேர்த்துக் கூறுவது. (பொ. 56 இள.)

யாழோர் கூட்டம் உலகியலாதலின், இல்லது அன்றாம். (பொ. 498 பேரா.)

அகத்திணைப் புலனெறி வழக்கமெல்லாம் மக்கள் வாழ்க்கை யின் மெய்யியல்புகளையே தழுவி நடக்கும். (பொ. 52 பாரதி)

உலக வழக்கங்களில் சிறந்தனவாயுள்ளவற்றைச் சுவைபடச் சில வரையறைகளொடு கூறுவது புலனெறி வழக்கம். (பொ. 42 குழ.)

இலக்கண நெறியான் அமைந்து வரும் நல்லிசைப் புலவோர் தம் எழுவகைச் செய்யுள் மரபு. புலனெறி வழக்காகிய செய்யு ளின்கண் அகப்பொருள் பற்றி வருவன இருவகை வழக்கும் கலந்தே வரும். (தொ. அகத். 55 ச. பால.)

சுவை மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பும் ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுதல் புலனெறி வழக்கம். (காமத்துப்பால் தோற்றுவாய். பரிமே.)

இஃது இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப் பட்டதோர் ஒழுக்கம். (இறை. அ. 1 உரை)

இல்லோன் தலைவனாக வரும் தொடர்நிலைச் செய்யுள் பொய்ப்பொருள் குறிப்பன. (தொ. சொ. 155 சேனா.)

புள் ஓதிமத்தோடு புலம்பல் -

{Entry: J10__333}

அயலார் தன்னை அலர் கூறுதலைத் தலைவி, பிற பறவை களுடனும் அன்னத்துடனும் கூறிப் புலம்பல்.

“தத்தம் ஆண்களுடன் கூடி உறையும் அன்றிற் பறவைகளே! அன்னங்களே! என் காதலர் பிரிந்தமையால் என்னைப் பழி கூறும் பெண்கள், தம்முடைய காதலர்களை விட்டுப் பிரிதலை அறியார்களோ? உங்கள் காதலர்கள் பிரியப் புறப்பட்டால் நீங்களும் அவருடனேயே சென்றுவிடுங்கள். இன்றேல், இவ்வூர்ப் பெண்கள் உங்களையும் ஏசிப் பேசுவர்!“

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 292)

புள்ளுவன் -

{Entry: J10__334}

பாலை நில மகன். (சூடா. II 67)

புறத்தொழுக்கம் -

{Entry: J10__335}

பரத்தையரொடு கூடி யொழுகுதல். (தொ. பொ. 205 நச்.)

புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

{Entry: J10__336}

“‘நாடு காவற்பொருட்டு அரசன் வாழ்க! விருந்தாற்றுதற் பொருட்டு நெல் முதலிய விளைவு பொலிக! இரவலர்க்கு ஈதற்பொருட்டுப் பொன் மிக உண்டாகுக!’ என்று தலைவி இல்லறத்துக்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது பிறிது நினைந்திலள். அவள் அங்ஙனமாக, நீ ஒழுகும் தகாத ஒழுக்கத்தால் உனக்கும் உன் துணைவனாகிய பாணனுக்கும் தீங்கு வரும் என்றஞ்சி, ‘நீயும் பாணனும் வாழ்க!’ என்று யாங்கள் வேண்டினோம்” என்ற தோழி கூற்று. (ஐங். 1)

புறநகர்ப் போக்கு -

{Entry: J10__337}

தலைவன் தான் புதியளாகக் கைக்கொண்ட பரத்தையொடு மகிழத் தலைவியை விடுத்து அப்பரத்தையைத் தேரில் ஏற்றிக் கொண்டு அவளொடு சோலையில் விளையாடவும் புதுநீரில் திளைக்கவும் ஊர்ப்புறப்பகுதிகளுக்குப் போதல். (ந. அ. 66)

புன்னம் புலரி -

{Entry: J10__338}

விடியற்கு முன்னர்த்தாகிய வைகறையின் இறுதிப்பகுதி; நீராடற்கு இந்நேரத்தே புறப்பட்டுச் செல்லுதல் மரபு. ‘புலரி வைகறை’ என்பதும் அது. (பரி. 6-58)

புனத்திடைக் கண்டு மகிழ்தல் -

{Entry: J10__339}

தலைவியைத் தினைப்புனத்திலே கண்டு தலைவன் மகிழ்தல்.

“மென்மையான உடலும் எழிலும் கொண்ட இவளை இக் குறவர் தினைப்புனம் காக்க வைத்துள்ளமை அவர்களுடைய அறிவின்மையையே காட்டுவது!” (மதுரைக் கோவை. 78) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 507 உரை)

புனம் கண்டு மகிழ்தல் -

{Entry: J10__340}

தலைவியும் பாங்கியும் ஒருசேர வந்து தன்னை மகிழ்விக்கும் வகையில் அமைந்த தினைப்புனத்தைக் கண்டு தலைவன் மகிழ்தல்.

“அன்ன நடை கொண்ட அழகியான என் காதலியும் அவள் தோழியும் பரணில் ஏறித் தோன்றக் காரணமான தினைக் கதிரைக் கொய்யவரும் இக்கிளிகளுக்கு நான் யாது கைம்மாறு செய்யவல்லேன்!” (அம்பிகா. 83) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘பாங்கிமதி உடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 507)

புனல்தரு புணர்ச்சி -

{Entry: J10__341}

வெள்ள நீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்த விடத்து அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (தொ. பொ. 114 நச். உரை)

புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -

{Entry: J10__342}

நீர்வெள்ளத்தைத் தொடர்புபடுத்தித் தலைவிக்குத் தலைவ னொடு கூட்டம் நேர்ந்ததாகத் தோழி செவிலியிடம் கூறுதல்.

“அன்னாய்! நாங்கள் ஆற்றில் குடைந்து நீராடுங்கால், தலைவியை ஒரு நீர்ச்சுழி கொண்டோடி ஒளிக்க, எதிர் பாராமல் அங்கு வந்த தலைவன் கதுமென வெள்ளத்தில் பாய்ந்து சென்று அவளைத் துன்ப மொன்றும் நேராதவாறு தழுவிக் கொணர்ந்து கரை சேர்த்தான். தலைவி அவன் நினைவாகவே உள்ளாள்” (தஞ்சை. கோ. 301) என்பது போன்ற தோழி கூற்று.

இது வரைவியலுள், ‘அறத்தொடு நிற்றல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 177)

புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் -

{Entry: J10__343}

கற்புக்காலத்தில், தலைமகனது புறத்தொழுக்கம் காரணமாக அவனுடன் புனலாடிய பரத்தையர் தோழியர், அப்பரத்தை யரை விளித்து, “நம்மை விடப் பேரழகுடைய ஒருத்தி வந்து தலைவனைத் திரித்துக் கொள்ளக் கொடுத்துப் பின் வருந் தாது தலைவனை முன்னுறக் காப்போம்” எனத் தம்முள் கூறிக் கொள்வது.

இது “பரத்தையிற் பிரிவு” எனும் தொகுதிக்கண்ணதொரு துறை. (கோவை. 371)

புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் -

{Entry: J10__344}

தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தலைவியை வாயில் வேண்டிப் பெற்று அவளொடு பள்ளியிடத்தானாக, தலைவி, “நீ செய்த ஏனைய பிழைகளைப் பொறுக்கலாம். பலரும் அறியப் பரத்தை யொருத்தியைப் புதுப்புனலாட்டி வந்து ஒன்றும் அறியாதாய் போல நடிக்கும் செயல் பொறுக்க வொண்ணாதது” என்று பரத்தையைப் புனலாட்டுவித்த செய்தியைக் கூறிப் புலவி யுறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் கிளவிக்கண்ணதொருகூற்று.

புனைந்தது நினையல் -

{Entry: J10__345}

தலைவியின் குலைந்த ஒப்பனைகளை அவள்தோழி புனையு மாறு புனைந்ததாகத் தலைவன் நினைத்து அவளிடம் கூறுதல்.

தோழியிற் கூட்டத்தினால் எய்திய பகற்குறிக்கண் தலைவன் தலைவியைக் கூடிய பின்னர் அவளுடைய குலைந்த ஆடை அணிகளைத் திருத்தி, “அழகிய மாலையை அணிந்தவளே! கலங்காதே. பிறர் சிறிதும் ஐயுறாதவகையில், நின்காதல் தோழி நினக்கு அணி செய்யுமாறு போலவே நின் இயற்கை வனப்புக்குப் பேரழகு செய்யும் வகையில் நின் ஆடை அணி களைச் சிறந்த முறையில் திருத்தி அழகு செய்துள்ளேன்” என்று அவள் கவலை தீரக் கூறுதல்.

இது ‘தோழியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இதனைக் களவியற்காரிகை ‘கோலம் செய்துரைத்தல்’ என்னும் பக். 75. (த. நெ. வி.பக். 24)

புனைந்துரை -

{Entry: J10__346}

1. மிகைப்படுத்தி அழகுறச் சொல்லும் வாசகம். 2. பாயிரம்.

உலகியலை ஒட்டியும் ஒட்டாதும் கற்பனை செய்து கூறுவது புனைந்துரை. அஃது உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்த லும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும் இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும் என நான்கு வகைப்படும்.

இப்புனைந்துரை நாடகத்துக்குப் பயன்படுவது; நாடக உறுப்புப் பதினான்கனுள் ஒன்றாகிய ‘யோனி’ என்னும் உறுப்பால் குறிப்பிடப்படும் செய்தியாகும். (தொ. பொ. 3 நச்.) (கணேசய்யர் அடிக்.)

புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கத்திற்குப் புனைந் துரை பற்றிய செய்திகளை இணைத்துக் கொள்வதும் இன்றி யமையாதது.

பூக்கம் -

{Entry: J10__347}

மருத நிலத்தூர் (திவா. பக். 110); ‘பூரியம்’ என்பதும் அது.

பூங்கொடி அன்பு பகர்தல் -

{Entry: J10__348}

தோழி தலைவியை, “திருமணம் நடக்குமளவும் எவ்வாறு ஆற்றியிருந்தாய்?” என்று வினவல்.

“தலைவியே! தலைவனுடன் கூடி முயங்கிக் கணமும் பிரித லாற்றாது நீ இதுபோது காட்டும் இத்தனை அன்பும் காதலும், நம் சுற்றத்தார் உன்னை இற்செறித்தபோதும், தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்றபோதும் எங்கே ஒளிந்திருந்தனவோ?” என்ற தோழி கூற்று. (அம்பிகா. 439)

இஃது ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

பூத்தரு புணர்ச்சி -

{Entry: J10__349}

தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவன்பால் நன்றி பாராட்டித் தலைவி அவனைக் கூடும் கூட்டம். (தொ.பொ. 114 நச். உரை) இப் புணர்ச்சியும் பிறவும் தோழி செவிலிக்குக் கூறி, அவள் நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்த்துவிப்பாள் என்பது.

பூப்பியல் உரைத்தல் -

{Entry: J10__350}

தலைவி தான் திங்கள்தோறும் அடையும் பூப்பு எய்திய செய்தியைச் சேடி வாயிலாகத் தலைவற்குத் தெரிவித்தல்.

களவு ஒழுகிப் பின் வரைந்து கற்புநெறி சான்ற இல்லறம் நிகழ்த்தும் தலைவன் தன்னொடு கூடி ஒழுகாது, தான் பூப்பெய்திய பின் பன்னிரு நாள்கள் தன்னொடு உறைந்து பின், பரத்தையர் இல்லத்துச் சென்று தங்கிய நிலைமைக்கண், தலைவி தான் மறு பூப்பெய்திய செய்தியைச் செவ்வணி அணிந்த சேடி ஒருத்தி வாயிலாகத் தலைவற்குப் பரத்தை யில்லத்திற்குச் சென்று தெரிவிக்கும் அவலநிலை பொருந்தாக் காமப் பகுதியாக, அகப்பொருட் பெருந்திணைத் துறைகளுள் ஒன்றாக ஒருசார் ஆசிரியரால் கொள்ளப்பட்டது. (ந. அ. 243)

பெட்ட வாயில் பெற்றுச் சேறல் -

{Entry: J10__351}

முன்பு இயற்கைப்புணர்ச்சியின்போது தலைவிக்கு உயிரனை யாள் என்று தான் தெரிந்துகொண்ட பாங்கியின் வாயில் பெற்றுத் தலைவியுடன்கூட முயலுதல் கருதித் தலைவன் தோழியிடம் செல்லுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘பாங்கியிடைச் சேறல்’ என்னும். (50)

இது களவியலுள்; பாங்கிமதியுடன்பாடு’ எனும் கிளவிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 140)

பெட்ட வாயில் பெறுதல் -

{Entry: J10__352}

தலைவன் தன்னால் விரும்பப்பட்ட தூதாம் பாங்கனால் தலைவியைப் பெறுதல், தலைவியால் விரும்பப்பட்ட தோழியைத் தூதாகப் பெறுதல். (தொ. பொ. 99 இள.)

தலைவன் தலைவிக்கு வாயிலாதற்குரியாரை ஆராய்ந்து பலருள்ளும் தலைவியால் விரும்பப்பட்டாளாகிய தோழி தனக்குத் தலைவியை அடைவதற்கு வழிசெய்யக் கூடியவள் என்பதனைத் தலைவி குறிப்பினால் பெறுதல். மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் தலைவிக்குத் தோழியின் இன்றியமையாமையைக் கண்டு, அவளையே தலைவியைத் தான் அடைவதற்கு வழி என்று துணிவான். (தொ.பொ. 102 நச்.)

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், தன்னை அவள் காணாதவாறும் தான் அவளைக் காணுமாறும் அமைந்த அணிமைக்கண் தலைமகன் நின்றான்; மற்றையோரெல்லாம் தலைமகட்குச் செய்யும் வழிபாடும், இவள் (-தோழி) விசேடத் தால் செய்யும் வழிபாடும், எல்லார்க்கும் தலைமகள் செய்யும் அருளிச்செய்கையும், இவட்கு விசேடத்தால் செய்யும் அருளிச்செய்கையும் கண்டமையால், “தலைமகட்குச் சிறந்தவள் இவளே; இதுவும் எனக்கோர் சார்பு” என்பதனை உணர்ந்தான். உணர்ந்தமையான் இவளிடத்தே செல்வான்.

(இறை. அ. 5 உரை)

பெண்பாற் கிளவி -

{Entry: J10__353}

காமம் மிகுந்த நிலையில் பெருந்திணைத் தலைவி கூறுவது.

“மிக நுண்ணிதின் ஆராய்ந்து இவ்வூரவர் வானத்திலுள்ள மதியிடத்துக் காணப்படும் முயலையும் நன்கு அறிவர்; ஆனால் என்னைப் பிரிந்த தலைவர் இருக்குமிடம் மாத்திரம் அறியும் ஆற்றல் பெற்றிலர்போலும்” என்பது போன்ற கூற்று.

இஃது இருபாற் பெருந்திணைக்கண்ணதொரு துறை.

(பு. வெ. மா. 17-9)

பெண்பாற்குரிய இயல்பு -

{Entry: J10__354}

அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும் நாள்தோறும் முந்துறுதல் பெண்டிருக்கு இயல்பாம். ஆகவே, வேட்கை மிக்கவழியும் அச்சம் நாணம் மடம் இவை காரணமாகத் தலைவி மெய்யுறு புணர்ச்சிக்கு இசையாது வரைந்தெய்து-தலையே பெரும்பாலும் வேண்டும் என்பது.

(தொ. பொ. 96 இள.)

அச்சம் - அன்பு காரணத்தால் தோன்றும் பயம்.

நாணம் - காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ள ஒழுக்கம்.

மடம் - செவிலியர் கற்பித்தவற்றை உணர்ந்து, பிறர் அவை பற்றிக் கூறும்வழித் தான் முன் அறிந்ததை வெளியிடா திருத்தல்.

பயிர்ப்பு - முன்பு காணாதன கண்டவழி, மனம் கொள்ளாத அருவருப்பு.

பேதைமை - செய்யத் தகுவனவற்றை அறியாதிருத்தல்.

நிறை - மனத்தைப் பொறிவழிச்செல்லாது அடக்கி வைத்தல்.

இருவரும் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த உள்ளப் புணர்ச்சியும் கந்தருவமே ஆதலின், திருமணத்தின் பின் மெய்யுறுபுணர்ச்சி பெறலாம் என்று ஆற்றுமாறு செய்வனவே இப் பெண்மைக் குணங்களாம். (99 நச்.)

அவை அச்சமும் நாணும் மடனுமாம். அவற்றைச் சார்ந்து நிற்பன பிறவும் தலைமகட்கு உரிய. அவையாவன பயிர்ப்பு, பேதைமை, பொறை முதலியன.

அச்சமாவது அன்பு காரணமாகத் தோன்றும் உட்கு. நாணமாவது பெண்மைக்குப் பொலிவு தரும் உளப்பாங்கு. மடனாவது செவிலி முதலானோர் உணர்த்துவனவற்றை ஆராயாது மேற்கொள்ளலும் அங்ஙனம் கொண்டவற்றை விடாதொழுகலும். பயிர்ப்பாவது பயிலாதவற்றின் மேற் கொள்ளும் அருவருப்பு; பேதைமையாவது பிள்ளைத் தன்மை. பொறையாவது வறுமை முதலாயவற்றைப் பொறுத்தொழுகுதல். (தொ. கள. 8 ச. பால.)

பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -

{Entry: J10__355}

காண்டல், நயத்தல், உட்கோள், மெலிதல், மெலிவொடு வைகல், காண்டல் வலித்தல், பகல் முனிவுரைத்தல், இரவு நீடு பருவரல், கனவின் அரற்றல், நெஞ்சொடு மெலிதல் என்ற பத்தும் ஆம்.

தலைவன் தன்னிடம் ஒத்த அன்புடையவனா என்பதனை உணராமல், தானே அவனிடம் அன்பு செய்து, அவன் கூட்டம் பெறாது வாடி நிற்கும் தலைவியின் வருத்தம் பற்றிய இவை, ஒருதலைக்காமம் பற்றிய அகப்புறக் கைக்கிளை ஆயின. (பு. வெ. மா. 15)

பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகள் -

{Entry: J10__356}

வேட்கை முந்துறுத்தல், பின்னிலை முயறல், பிரிவிடை ஆற்றல், வரவு எதிர்ந்திருத்தல், வாராமைக்கு அழிதல், இரவுத் தலைச் சேறல், இல்லவை நகுதல், புலவியுள் புலம்பல், பொழுது கண்டு இரங்கல், பரத்தையை ஏசல், கண்டு கண் சிவத்தல், காதலின் களித்தல், கொண்டு அகம்புகுதல், கூட்டத்துக் குழைதல், ஊடலுள் நெகிழ்தல், உரை கேட்டு நயத்தல், பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கல், பள்ளிமிசைத் தொடர்தல், செல்க என விடுத்தல் என்னும் இவை பத்தொன் பதும் ஆம். பெண்பாற்குப் பொருந்தாத வெளிப்பட்ட காமத்தவையாதலின் இவை புறத்திணை யாயின. (பு. வெ. மா. 16)

`பெய்நீர் போலும் உணர்வு’ -

{Entry: J10__357}

புது மட்கலத்துள் ஊற்றப்பட்ட நீர் வெளியே கசிந்து தான் கலத்தினுள் இருப்பதைப் புலப்படுத்தும். அது போலத் தலைவி தன் மனத்துப்பட்ட வேட்கையைத் தன் மெய்ப்பாட் டால் தலைவன் உணரச் செய்வாளேயன்றி, அவன் முன்னர்ச் சொற்களால் வெளிப்படுத்தாள். அங்ஙனம் சொற்கொண்டு வெளிப்படுத்துதல் கீழ்மக்கள் இயல்பாம்.

தலைவி தலைவனிடம் தன்வேட்கையை வெளியிடாளே ஒழியத் தன் உயிர்த்தோழியிடம் வெளியிடுவாள். தோழி தலைவியின் வேட்கையைத் தலைவனுக்குக் கூறுதற்கு வாய்ப்பும் உரிமையும் பெற்றவள். (தொ. பொ. 118 நச்.)

பெயர்க என உரைத்தல் -

{Entry: J10__358}

உடன்போக்கினிடையே தலைவியின் சுற்றத்தார் பின் தொடர்ந்து வருதலைக் கண்ட தலைவன், அவர்களொடு பொருது ஊறு விளைப்பதைத் தவிர்க்க விரும்பித் தலைவியை விட்டு ஒரு குன்றின் மறைவில் சென்றபோது, அவளைத் தலைப்பட்ட சுற்றத்தார் தம்மூர்க்குத் திரும்பி வருக என வேண்டுதல்.

இஃது ‘உடன்போக்கு இடையீடு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 426)

பெயர்ப் பெயர் -

{Entry: J10__359}

பொருள் பற்றி வரும் பெயர்; பொருப்பன், சிலம்பன்; அண்ணல், தோன்றல்; சேர்ப்பன்; மகிழ்நன் - போல்வன.

(தொ. பொ. 20 நச்.)

உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயர் இவ்வாறு பெயர்ப் பெயராக வந்தன.

பெருந்திணை (1) -

{Entry: J10__360}

தன்னை உள்ளன்பொடு விரும்பாத தலைவனொருவனைத் தழுவ விரும்பித் தலைவி யொருத்தி அவனதிருப்பிடம் நோக்கி இருளில் செல்லுதல் என்னும் பாடாண் துறை. இதன்கண் பாட்டுடைத் தலைவனே கிளவித் தலைவன் ஆவான். “பாண்டியனைத் தழுவ, மக்கள் நடமாட்டமில்லாத இருளில் செல்லும் தலைவிக்கு வழிகாட்ட மேகம் மின்னி யது” என்று கூறுதல் இத்துறைச் செய்தி. (பு. வெ. மா. 9:46)

பெருந்திணை (2) -

{Entry: J10__361}

பெருந்திணை - பெரியதாகிய ஒழுக்கம். நடுவண் ஐந்திணை யாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும் வருதலானும், எண்வகை மணத்தினுள் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்திணைப்பாற் படுதலானும், இவை பெருந்திணை என்று கூறப்பட்டன. ஒத்த அன்பும் குலனும் முதலாயின ஒத்து வருவது உலகினுள் அரிதாகலின், ஐந் திணை உலகில் அருகியல்லது வாராது. (தொ. பொ. 1 இள.)

பிரமம் முதலிய எண்வகை மணத்தினுள், கைக்கிளைக்குரிய மணம் மூன்று; ஐந்திணைக்குரிய மணம் ஒன்று; ஏனைய பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்ற நான்கு மணங்களையும் தான் ஒன்றுமே பெறுதலின், ஏனையவற்றி னும் பெரிய திணையாய்ப் பெருந்திணை என்னும் பெயர் பெற்றது (1 நச்.)

தலைவன் மடலேறுதல், இன்பம் துய்த்தற்குரிய பருவம் கழிந்த பின்னரும் எழும் புணர்ச்சி விருப்பம், தெளிய ஒண்ணாமல் அறிவழிக்கும் கழிகாமம், கரை கடந்த காமத்தால் விரும் பாரை வலிதிற் புணரும் வன்கண்மை ஆகிய புரைபடு காம இழிஒழுக்க வகைகளையுடைய சிறிய திணைக்குப் பெருந் திணை என்ற பெயர் மங்கல வழக்கான் வந்தது. (50 பாரதி)

கொடிய குட்ட நோயானது ‘பெருநோய்’ எனவும், கொடிய வெடிகட்டி நோய் ‘பெருவாரி நோய்’ எனவும் வழங்குதல் போல, கொடிய முரட்டுத் தனமான மடலேறுதல் முதலிய தகா ஒழுக்கத்தையுடைய திணை ‘பெருந்திணை’ என்னப் பட்டது. (1 குழ.)

பெருந்திணையாவது பெருகியதாகிய ஒழுக்கம். அஃதாவது அளவிறந்த வேட்கை. அளவின் கடந்த நிலை பெருந் திணையாம். (தொ. அகத். 1 ச. பால.)

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். (ந. அ.5; இ. வி. 377; வீ. சோ. 97).

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் போல் தோன்றிப் பின்னர்ப் பொருந்துவது என்றலே ஏற்புடைத்து. இஃது அகப்புறத்திணை இரண்டனுள் ஒன்று; ஏனையது கைக்கிளை.

பெருந்திணைக் குறிப்பு -

{Entry: J10__362}

மடலேறுதல், இளமை தீர்ந்த பின்னும் காம நுகர்ச்சியில் மிக்கிருத்தல், காமத்து மிகுதிறத்தான் அறிவு அழிந்திருத்தல், மிக்க காமத்தால் வலியப் பற்றிக் கூடுதல் என்ற நான்கும் பெருந் திணைக் கருத்தில் அமைவனவாம். (தொ.பொ. 51 நச்.)

பெருநயப்பு உரைத்தல் -

{Entry: J10__363}

தன் காதல் மிகுதியைத் தலைவன் கூறுதல்.

“உலகில் வேறு எங்கும் யாரிடமும் இல்லாத எழிலும் பிற நலனும் இவளிடம் துய்த்து இன்புற்றேன்.” என்னும் தலைவனது புகழ்ச்சியுரை.

இது களவியலுள், ‘வன்புறை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 129)

பெரும்பான்மை கூறி மறுத்தல் -

{Entry: J10__364}

களவுக்காலத்தில் தன்னை வரைவு கடாவிய தோழிக்குத் தலைவன், “யான் தலைவியைத் தெய்வமானுடம் என்று கருதுகிறேன். இவள் தங்குகிற இடம் தெய்வமகளிர் இருக்கு மிடமோ, அன்றிக் குறத்தியரிடமோ? கூறுவாயாக” எனத் தலைவியைப் பெருமைப்படுத்திக் கூறுவான் போல விரை வில் அவளை மணத்தற்கு மறுத்தது.

இது ‘வரைவு முடுக்கம்’ எனம் கிளவிக்கண்ணதொரு துறை.

(கோவை. 251)

பெரும்பொழுதின் வகை -

{Entry: J10__365}

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வேனில், என்ற ஆறும் ஆம். இவை ஓராண்டின் இவ்விரண்டு திங்களாகப் பகுக்கப்பட்டு ஆவணி முதல் கணக்கிடப்பெறும். கார் - ஆவணி, புரட்டாசி; கூதிர் - ஐப்பசி, கார்த்திகை; முன்பனி - மார்கழி, தை; பின்பனி - மாசி, பங்குனி; இள வேனில் - சித்திரை, வைகாசி; முதிர்வேனில் - ஆனி, ஆடி; என்றிவ்வாறு காலவரையறை கொள்ளப்படும். (ந. அ. 11; இ. வி. 12)

`பெருமணல் உலகம்‘ -

{Entry: J10__366}

பெரிய மணல் மேடுகள் அலைகளால் உண்டாக்கப்பட்ட கடற்கரைப் பகுதியாகிய நெய்தல் நிலம். உலகம் என்னும் சொல் மண்ணுலகம் முழுதுமே யன்றித் தன்கண் கூறுபட்ட நிலங்களையும் உணர்த்தும் என்பது.

(தொ. பொ. 5 நச்., சீவக. 2606 நச்.)

பெருமை செய்தல் -

{Entry: J10__367}

இயற்கைப் புணர்ச்சியிறுதிக்கண், தலைவன் தலைவிக்கு அவள் தோழி அணிவித்தாற்போலவே குலைந்த ஆடை அணிகலன்களை திருத்தியமைத்தல் (குறிஞ்சி நடையியல்) இஃது ‘ஏற்புற அணிதல்’ எனவும்படும் (ந. அ. 125)

(வீ. சோ. 92 உரை மேற்.)

பெருமைப் பொதுப்பொருள் -

{Entry: J10__368}

தாளி, பூவல், நாவல், கழஞ்சு, வேலி, மாறு, பதடி, கோரை, சூரை, காரை, துவரை, அத்தி, பயறு உழுந்து கடலை மொச்சை கொள்ளு என்ற ஐவகைப் பருப்புக்கள், சுரும்பு, வண்டு முதலியன திணைதோறும் காணப்படும் பெருமைப் பொதுப்பொருள்களாம். (வீ. சோ. 96 உரை மேற்.)

பெருமையும் உரனும் -

{Entry: J10__369}

பெருமையும் உரனும் தலைவற்குரிய பண்புகள். இவற்றான் உள்ளப்புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்துகொள்ளும் உலக வழக்கும், மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்துழியும் களவு நீட்டி யாது வரைந்துகோடலும், உள்ளம் சென்ற வழியெல்லாம் நெகிழ்ந்து ஓடாது ஆராய்ந்து செயற்படுதலும், உள்ளம் மெலிந்தவழி அம்மெலிவு தோன்றாமல் மறைத்தலும், தவறான வழியிற் செல்ல விழையும் உள்ளத்தை மீட்டலும் தலைவற்கு உரிய என்பது.

பெருமையாவது அறிவும், ஆற்றலும், புகழும், கொடையும், ஆராய்தலும், பண்பும், நண்பும், பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப்பகுதி.

உரனாவது உறுதியாகக் கைக்கொண்ட கொள்கையும், மனத்தில் இரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஆற்றலும், எச்செயலையும் கலங்காது துணிதலும் முதலிய வலிமைப் பகுதி. (தொ. பொ. 98 நச்.)

‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ ஆதலின், தலைவன் உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு உரைத்தது-

பெருமையும் உரனும் உடைய தலைவன், கடற்கரைச் சோலையில் பாகன் தன் தேரை ஊர்ந்து வரச் சென்றபோது நெய்தற்பூக்களை இடையிடையே தொடுத்த தழை யாடையை அணிந்து மெல்லிய அழகிய தேமலையும் விழுந்தெழுந்த கூரிய பற்களையும் நீண்ட கூரிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய குறுமகள், தன் தோழியரொடு வெண்மணலில் உதிர்ந்த புன்னைத்தா தினைப் பொன்னாகச் சேகரித்துக் கொண்டு இல்லறம் நடத்துதலை விளையாட்டாக விளையாடிக்கொண்டிருந்த தனை நோக்கித் தன் தேரினை மெல்லச் செலுத்தி அவளிடம் வந்து, “இவ்விளையாட்டு இல்லறத்தினை என்னை மணந்து உண்மையாகவே நடத்துவதில் தவறொன்றும் இல்லையே!” என்ற கூற, அவள் அதனை மனமார ஏற்ற மகிழ்ச்சியால் வந்த உவகைக்கண்ணீரை மறைத்துத் தலையைச் சிறிது கவிழ்த்துக் கொண்ட நிலையான் அவளது குறிப்பறிந்த தான் அவளை விரைவில் மணக்காமலிருத்தல் தனக்குப் பெரிய வருத்தத்தைத் தரும் என்ற கருத்தைத் தன் பாங்கனிடம் கூறுதல்.(அகநா. 230)

இஃது உள்ளப் புணர்ச்சி ஒன்றுமே கொண்டு மெய்யுறு புணர்ச்சியாகிய களவுப்பகுதி இல்லாமலேயே வரைவு நிகழ்தலும் உண்டு என்பதனைத் தெரிவிக்கிறது.

(தொ. பொ. 95 இள.)

`பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -

{Entry: J10__370}

தலைவனுடன் சென்ற தலைவி தலைவன் ஊரில் தங்கிப் புதல்வரைப் பெறும்வரை அங்கேயே பெற்றோர் தொடர் பில்லாமலிருந்து பிறகு தம் நிலை பற்றிப் பெற்றோர்க்குச் செய்தி அனுப்புதல். (பாலை நடையியல்)

(வீ. சோ. 93 உரை மேற்.)

பெறற்கரிது என்றல் -

{Entry: J10__371}

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவிநலன் நுகர்ந்த தலைவன், “இவளுடைய தொடர்பு கிட்டுதற்கு அரிது” என்பதனை மனங்கொண்டு அவளைப் பெரிதும் பாராட்டுதல். (‘அருமை அறிதல்’ கோ. 17 என்பதும் அது) (குறிஞ்சி நடையியல்.)

(வீ. சோ. 92 உரை மேற்)

பேய்நிலை (1) -

{Entry: J10__372}

இது மன்றல் எட்டனுள் இறுதியாயது; இயல்பாலும் கடையாயது. தன்னைவிட யாண்டு மூத்தவளையும், கள் ளுண்டு மயங்கியவளையும் உறக்கத்தில் ஆழ்ந்தவளையும் புணர்வது; தன்னினும் மிக இழிந்தோளை மணப்பதும் இதன்பாற்படும். (தொ. பொ. 92 நச்.)

இதுவும் பொருந்தாக் காமத்தின் பாற்படும்.

(த. நெ. வி. 14 உரை)

பேர்வினாதல் -

{Entry: J10__373}

பொழிலிடத்திற்கு வந்த தலைவன், பாங்கியிடம் அவர்களது பெயர் யாது என்று வினவுதல்.

இது களவியலுள், ‘பாங்கி மதி உடன்பாடு’ எனும் கிளவிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 140)

`பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி’ -

{Entry: J10__374}

குறையாத சிறப்பினையுடைய எட்டுவகைப்படும் தலைவன் கூற்று. அவையாவன - மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்து இரங்கல், கூடுதலுறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல், தீராத் தேற்றம் என்பன. இவற்றுள் முதலன ஆறும் இயற்கைப் புணர்ச்சிக்கே உரியன. ஏனைய இரண்டும் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு என்ற இரண்டற்கும் உரியன. (தொ. பொ. 99 இள.)

இடந்தலைப்பாடு இருவகைத்து; தலைவனும் தலைவியும் தாமே கூடும் இடந்தலைப்பாடும், பாங்கன் சென்று அறிந்து வந்து கூறப் பின் தலைவன் குறியிடத்தை அடையும் இடந் தலைப்பாடும் என. இருவகைப்பட்ட இடந்தலைப்பாடும், ஒத்த சிறப்பின என்பதற்குப் ‘பேராச் சிறப்பின்’ என்றார் இவ்வெட்டும் இடந்தலைப்பாட்டின்கண் நிகழ்வன.(102 நச்.)

`பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்’ -

{Entry: J10__375}

பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி இல்லம் புகுந்த தலைவ னிடம் நீங்காத கோபத்தொடு அவன்தொடர்பைத் தலைவி வெறுத்துப் பேசுதல். (மருத நடையியல்).

(வீ. சோ. 95 உரை மேற்.)

பைசாசம் -

{Entry: J10__376}

எண்வகை மணத்துள் ஒன்று, மூத்தோர் துயின்றோர்ப் புணர்ச்சியும், இழிந்தோளை மணம் செய்தலும், ஆடை மாறுதலும், பிறவுமாம். (தொ. பொ. 92 நச்.)

பைசாசமாவது துஞ்சினாரோடும் மயங்கினாரோடும் களித்தாரோடும் செத்தாரோடும் விலங்கினோடும் இழிதகு மரபின் யாரும் இல்லா ஒருசிறைக்கண் புணர்ந்தொழுகும் ஒழுக்கம். (யா. வி. பக். 575)

பொதுப்படக் கூறி வாடி அழுங்கல் -

{Entry: J10__377}

தலைவனது பரத்தைமையைப் பொறுத்த தன்னைத் தோழி பாராட்டியவழித் தலைவி, “தமது நலத்தைத் தலைவன் நுகரக் கொடுத்து இழந்து பின் தலைவன் பிரியத் தம் தலையணையையே துணையாகக் கொண்டு கிடந்து, என்னைப் போல் உயிர் தேய்வார் இனி யார் உளரோ?” என்று பொதுவாகப் பரத்தையர்க்கு இரங்கி உரைப்பாள் போலத் தலைவனுடைய புறத்தொழுக்கமாகிய கொடு மையை நினைத்து வாடுதல்.

இதனை உணர்த்த உணரும் ஊடலுள், ‘தனித்துழி இறைவி துனித்தழுது இரங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 205) இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் கிளவிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 354)

பொய்ச் சூளுரை -

{Entry: J10__378}

இது நம்பியகப் பொருள் கூறும் அகப்பொருட் பெருந் திணைகளுள் ஒன்று; பொய்யாக உறுதிமொழி கூறுதல்.

தலைவன்பரத்தைமை எல்லாரானும் அறியப்பட்டதாக, பரத்தையில்லத்திலிருந்துகொண்டு அவளைத் தோய்ந்த சுவடு கூட மாறாமல் தலைவிஇல்லத்திற்கு வந்த தலைவன், தலைவி அவனுடைய பரத்தைமையை எடுத்துரைத்து அவனோடு ஊடியபோது, தன் தவற்றுக்கு வருந்தி அவளை அமைதியுறச் செய்ய ஆவன புரிதலை விடுத்து, தான் பரத்தை யொருத்தியையும் அறியாதவனாகப் பொய்யாக உறுதி மொழி கூறி, பின் தவற்றைப் பல்லாற்றானும் சான்றுகளோடு அவள் எடுத்துக் காட்டியவழித் தன் உரை பொய்யாதலை அறிந்து பணிந்தமொழி கூறும் நிலைக்குச் செலுத்தும் ‘பொய்ச்சூளுரை’ பொருந்தாக் காமப் பகுதிப்பட்டதாய், அகப்பொருட் பெருந்திணைத் துறைகளுள் ஒன்றாக ஒருசார் ஆசிரியரால் கொள்ளப்பட்டது. (ந. அ. 243)

பொய்பாராட்டல் -

{Entry: J10__379}

இயற்கைப் புணர்ச்சியின்போது தலைவன் தலைவியை அளவு கடப்பப் புனைந்து புகழ்தல். “மதியும் மலர்களும் நின் முகத்திற்கும் உறுப்புக்களுக்கும் ஒப்பாகமாட்டாமல் நாணு கின்றன” என்பது போன்ற தலைவன் கூற்று.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப்புணர்ச்சி’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

பொய்மொழிந்தனளென ஆற்றுவித்தது -

{Entry: J10__380}

செவிலி வெறியாட்டு நிகழ்த்துவதாகக் கூறுவது பொய் என்று கூறித் தோழி தலைவியை அமைதியுறச் செய்தல்.

களவொழுக்கத்தில் தலைவனோடு இன்பம் துய்த்து வரும் தனது உடல் வேறுபாட்டைக் கண்டு கலங்கிய செவிலி கட்டுவிச்சியை வினவி அவள் கூறியவாறு வெறியாட்டு எடுக்க நினைத்ததை அறிந்த தலைவி கலங்கவே, தோழி அவளை நோக்கி, “தாய் நிச்சயமாக வெறியாட்டு நிகழ்த்த மாட்டாள்; வெறியாடப் போவதாகச் சொன்னால், அது குறித்து உன் நெஞ்சம் எவ்வாறுள்ளது என்பதைக் காணவே அங்ஙனம் பொய் கூறியுள்ளாள்” என்று கூறித் தலைவியை அமைதியுறச் செய்தல்.

இது கற்பினைச் சேர்ந்த ‘அறத்தொடு நிலை’ என்ற கிளவிக் கண்ணதொரு துறை. ‘பொய்யென மொழிதல்’ என்பதும் இது. (த. நெ. வி.பக். 38)

`பொய்யும் வழுவும்............ என்ப’ பொருள் -

{Entry: J10__381}

மெய்யுறு புணர்ச்சியானாதல் உள்ளப் புணர்ச்சியானாதல் களவின்கண் ஒன்றுபட்டுக் கரணமின்றிக் கிழவனும் கிழத்தியும் மனையறத்தை மேற்கொள்ளுமிடத்து, கயமையா னாதல், பிற காரணத்தானாதல் ஆடவன் உளம் திரிந்து தலைவியைக் கைவிட்டவழி, ‘இது தகவு அன்று’ எனப் பிறர் இடித்துரைப்பர். தாம் மணந்து கொண்டமைக்குச் சான்றும் சான்றாளரும் பெறாமையால் யான் அவளை அறியேன்” என்று அவன் மறைத்தல் கூடும். தன்பால் தோன்றிய மக்கட்கு உரிமை நல்காமல் விலக்கி ஒழுகுமிடத்து, அவனை மன்றத் தார் அழைத்து உசாவுவர். அவள் காமக்கிழத்தியே அன்றி மனைக்கிழத்தி அல்லள்” என்று அவன் வழுவுதலும் கூடும். இக்குற்றங்கள் ஒரோவிடத்துத் தோன்றிய பின்னர்க் காத லுணர்வும் கடமைப்பாடும் பழிக்கு அஞ்சுதலும் தலைவ னிடம் நிலைபெற வேண்டும் என எண்ணி, அறநெறி தேர்ந்த தலையாய சான்றோர் கரணத்தைச் சீர்பெற அமைத்துத் தந்தனர் என்று நூலோர் கூறுவர். (தொ.கற். 4 (ச. பால)

பொய்யுரை புரிதல் -

{Entry: J10__382}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி தலைவனிடம் அவனால் விரும்பப்பட்ட தலைவி யாவள் என்பது தனக்குத் தெரியாது எனப் பொய்யாகக் கூறுதல். இது ‘பாங்கி அறியாள் போன்று வினாதல்’ (ந.அ. 144) எனவும் கூறப்படும். (குறிஞ்சி நடையியல்.) (வீ. சோ. 92 உரை மேற்.)

பொருத்த மறிந்துரைத்தல் -

{Entry: J10__383}

கற்புக்காலத்தில் தலைவன் பொருள்வயின் பிரிய நினையவே, பாலை நிலத்தானாகிய தலைவனை மருதநிலத் தலைவனைப் போலக் கொண்டு புலந்து கூறிய தலைவியிடம் தோழி, “நாம் எவ்வளவு கூறியும் தலைவன் நினைவு பொருள்மேல்தான் மிகுதியாக இருக்கிறது. இனி, நாம் பேசுவதனால் பயன் என்?” என்று தலைவனுடைய உள்ளப் பாங்கினை அறிந்து தான் அதற்கு நொந்து கூறுதல்.

இது ‘பொருள் வயின் பிரிவு’ எனும் கிளவிக்கண்ணதொரு துறை. (கோவை. 337)

பொருந்தா என்றல் -

{Entry: J10__384}

பாங்கியிற்கூட்டத்தின்கண் தோழி தலைவனிடம் மிக்க இளமைப் பருவத்தாளாகிய தலைவியிடம் காமப் பொருள் பற்றிய செய்தியைக் கூறுதல் பொருந்தாத செயலாகும் என்றல் (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்)

இது ‘பாங்கி பேதைமை ஊட்டல்’ (ந. அ. 144) எனவும் கூறப்படும்.

பொருந்தாக் காமம் -

{Entry: J10__385}

தலைவன்தலைவியரிடையே முன்னர்ப் பொருந்தாதது போன்றிருந்து பின்னர்ப் பொருந்துவதாகிய காமம். இது பெருந்திணை யென்னும் அகப்புறத்திணைச் செய்தியாகும்.

`பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -

{Entry: J10__386}

பொருள் தேடக் கருதிய மனத்திற்குத் தலைவன் பழைய நிகழ்ச்சியைக் கூறிப் பிரிவைத் தவிர்த்தல் -

“முன்பு பொருள் கடைக்கூட்டப் பாலைநிலவழியே சென்ற போது, பருந்துகள் தங்கும் பெரிய வேம்பின் நிழலிலே கல்லாச் சிறுவர்கள் அரங்கு இழைத்து நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டாடும், ஆறலைகள்வர்கள் நிறைந்த சீறூரை அடுத்து, மனம் தளர்வுற்ற மாலைக்காலத்தில், ‘நினைத்த செயலை முடித்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அவ்வளவு மகிழ்ச்சியை எனக்குத் தன் வடிவழகினாலும் செயல்களாலும் நல்க வல்ல என் தலைவி, இல்லத்தில் விளக்கேற்றிவைத்து என் நினைப்பில் மனம் உருகி நிற்கும் நேரமிது’ என்று யான் நினைத்துப்பட்ட துன்பம் கணக் கில்லது ஆதலின், அவளைப் பிரிந்து செய்யும் செயல் எதன் கண்ணும் ஈடுபடமாட்டேன்” (நற். 3) என முன் நிகழ்ச்சி கூறித் தலைவன் போகாதொழிதல். இதுவும் பாலைத் திணை.) (நற். 3)

பொருள் கோள் -

{Entry: J10__387}

இது மன்றல் எட்டனுள் ஒன்று; ஆரிட மணம் எனவும் படும்.

ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடைப் பெண்ணின் தந்தை தன் பெண்ணைத் தக்கானொருவனொடு நிறுத்தி, “நீரும் இவைபோலப் பொலிந்து வாழ்க!” எனத் தன் பெண்ணுக்குப் பொன் னணிந்து அவளை அவனுக்குக் கொடுப்பது. (தொ. பொ. 92 நச்.)

இவ்வாறு ஈதற்கண் ஒத்த பிராயம் முதலாயின உள எனின், கற்பின்பாற்படும்; அல்ல எனின் பொருந்தாக் காமத்தின்பாற் படும். (த. நெ. வி. 14 உரை)

பொருள்கோள் ஏழு -

{Entry: J10__388}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று.

கொழுங்கொடி வள்ளி, செழுங்குலை வாழை, தீங்கரும்பு, மலர் திகழ்தரு பலா, தேங்கமழ் அசோகு, செருவிற்பூட்டு, புனல்யாறு எனப் பாடற்குப் பொருள் கொள்ளுமுறை ஏழு வகைப்படும்.

வள்ளி - பாட்டின் முதலிலேயே பொருள் சிறத்தல்.

வாழை - பாட்டின் ஈற்றில் பொருள் சிறத்தல்.

கரும்பு - பாட்டின்கண் முதலிலிருந்து இறுதி நோக்கிப் படிப்படியே பொருள் சிறத்தல்.

பலா - பாட்டின் முதலும் இடையும் பொருள் சிறத்தல்.

அசோகு - பாட்டின் நடுவே பொருள் சிறத்தல்.

விற்பூட்டு - பாட்டின் இறுதிச்சீர் முதற்சீர்களில் பொருள் சிறத்தல்.

புனல்யாறு - பாட்டின் எவ்விடத்தும் பொருள் சிறத்தல்.

இவ்வெழுவகைப் பொருள்கோளுள் பாட்டிற்கு ஏற்ற தொன்று கொள்ளப்படும். (வீ. சோ. 96 உரை)

பொருள் நடை -

{Entry: J10__389}

அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று; அளைமறி, மொழி மாற்று, கொண்டு கூட்டு, முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, சுண்ணம் முதலாகச் சொற்றொடர்களைப் பொருள் பொருத்தமுற இணைத்தற்குப் பயன்படுத்தும் பொருள்கோள் வகை. (வீ. சோ. 96 உரை)

பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

{Entry: J10__390}

“அறத்தால் பொருள் தேடிப் பொருளால் இன்பம் துய்ப்போம்” என்று ‘மூன்றன்பகுதி’ (41) கூறிப் பிரிந்த தலைவன், பொருள் தேடும்போது இடையிடையே தலைவிநினைவு மிக, “என் நெஞ்சம், என் தலைவியின் பிரிவுத் துன்பத்தைப் போக்க அவளிடம் செல்லுவோம் என்கின்றது. என் அறிவோ, எடுத்த வினையை முற்ற முடிக்காது மீண்டு போதல். அறியாமையை யும் இகழ்ச்சியையும் தரும் ஆதலின் ஊருக்கு மீள்வதற்கு விரையாதே என்கின்றது. என் நெஞ்சமும் அறிவும் தம்முள் பகைகொண்டதனால், இரண்டு வலிய களிறுகளால் இருபுற மும் இழுக்கப்படும் தேய்புரிப் பழங்கயிறு இற்றொழிவது போல, இவ்விரண்டற்கும் இடைப்பட்ட என் உடம்பு அழிய வேண்டுவதுதான் போலும்!” என்று வருந்திக் கூறியது. (தொ. பொ. 45 நச்.) (நற். 284)

பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -

{Entry: J10__391}

“செங்காந்தள்பூப்போன்ற சிவந்த கொண்டையையுடைய கோழிச் சேவலே! பொருள் முற்றி மீண்டு வந்த தலைவ னோடு யான் இன்பமாக உறங்கும் உறக்கத்தினின்று எழுமாறு என்னைக் கூவி எழுப்பிய நீ, மனையெலிகளைப் பிடித்துத் தின்னும் காட்டுப்பூனைக்கு இரையாகி மிக்க துன்பமுறுக!” என்று தலைவி காமமிக்கதனால் உண்டான அரிய நினைப்பினால், கேட்டலும் விடைகூறலும் இல்லாத கோழிச்சேவலை நோக்கிக் கூறியது. (குறுந். 107)

பொருள்வயிற் பிரிவு -

{Entry: J10__392}

பொருள் தேடற் காரணம் பற்றித் தலைவியைத் தலைவன் பிரிகை. (கோவை. 332 அவ.)

பொருள்வயின் பிரிதலும் பொருட்பிணிப் பிரிதலும் -

{Entry: J10__393}

பொருள்வயின் பிரிதல் கற்புக்காலத்துத் தலைவனுக்கு நிகழும் பிரிவுகளுள் ஒன்று. இதன் காலவரையறை ஓராண் டுக்கு உட்பட்டது. (தொ. பொ. 29, 190 நச்.)

அறநெறி தவறாமல் பொருளீட்டுதற்குப் பிரிதல் அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்ற நால்வருக்கும் உரியது. அரசுஇறை வாங்கப் பிரிதல் மன்னர்க்கும், மன்னர் ஆணை பெற்ற மண்டிலமாக்கள் தண்டத்தலைவர் வேளிர்கள் குறுநில மன்னர் ஆகியோர்க்கும் உரியது. (29,30,32, 33 நச்.)

பொருட்பிணிப் பிரிவு என்பது தலைவன் இல்லறம் நடத்து தற்குப் பொருளில்லாமை பற்றி அது தேடப் பிரியும் என்ப தன்று; தன் முதுகுரவரால் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாம் கிடந்ததுமன்! அதனைத் துய்த்து வாழ்வது ஆண்மைத்தன்மை அன்று எனத் தனது தாளாற்றலால் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியும் என்பது. அன்றியும் தாயப்பொருளால் செய்யும் தானங்களைத் தேவர்களும் பிதிரர்களும் இன்புறார் ஆதலின், தேவர்காரியமும் பிதிரர்காரியமும் தனது தாளாற்றலால் (-முயற்சியால்) செய்த பொருளால் செய்யப் பட்டாற்றான் தனக்குப் பயன்படும் என்பது கருதியும் தலைவன் பொருள்தேடப் பிரிவான். இப்பிரிவு திங்களும் இருதுவும் எல்லையாக உடையது. (இறை. அ. 34,41 உரை)

பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

{Entry: J10__394}

யானைகள் திரிதரும் பல பிளவுபட்ட வழிகளையுடைய காடுகளைக் கடந்து பொருள்தேடச் சென்ற யான், சிறிது பொருள் ஈட்டிய அளவில், நின் அழகை நினைத்து, மீண்டும் பொருள் தேடும் வேட்கையின்றி, என்னுடன் வந்தவர்களிடம் கூட யான் மீண்டு போகும் செய்தியைக் குறிப்பிடாமல் நின்னிடத்து வந்து விட்டேன்” என்று தலைவிமாட்டுத் தான் பொருளினும் காதல் மிகவுடைய செய்தியைத் தலைவன் புலப்படுத்துதல். (தொ. பொ. 45 நச்.) (ஐங். 355)

பொருள்வயின் பிரிவுத் துறைகள் -

{Entry: J10__395}

1. வாட்டங் கூறல், 2. பிரிவு நினைவு உரைத்தல், 3. ஆற்றாது புலம்பல், 4. ஆற்றாமை கூறல், 5. திணைபெயர்த் துரைத்தல், 6. பொருத்தம் அறிந்துரைத்தல், 7. பிரிந்தமை கூறல், 8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல், 9. இகழ்ச்சி நினைந்து அழிதல், 10. உருவு வெளிப்பட்டு நிற்றல், 11. நெஞ்சொடு நோதல், 12. நெஞ்சொடு புலத்தல், 13. நெஞ்சொடு மறுத்தல், 14. நாண் எண்ணி வருந்தல், 15. வறுமை கண்டு இரங்கி உரைத்தல், 16. பருவம் கண்டிரங்கல், 17. முகிலொடு கூறல், 18. தேர் வரவு கூறல், 19. இளையர் எதிர்கோடல், 20. உள் மகிழ்ந்துரைத்தல் - என்பன இருபதுமாம். (கோவை. 332- 351)

பொருளதிகாரம் -

{Entry: J10__396}

அகம், புறம் முதலியவற்றைக் கூறும் தொல்காப்பியம், இலக்கண விளக்கம் முதலிய இலக்கண நூல்களின் மூன்றாம் பகுதி. சொல்லதிகாரத்தையடுத்து நிகழ்வது இது.

பொருளதிகாரப் புறனடை -

{Entry: J10__397}

பலவாகிய முகத்தான் விரிந்த பொருளிலக்கணங்களை யெல்லாம் சொல் கருவியால் அவை முற்றச் சொல்லத் தொடங்கின் முடிவு கூடா; ஆயினும், கூறப்பட்ட பொரு ளிலக்கணத்தோடும் அவற்றிற்கு இயைபுபட நின்ற ஏனை இலக்கணத்தோடும் அமைத்துக் கேட்போர் உளத்து உண்மையுறக் கூறவல்லோர், பூமியில் பகலவன் போல் விளங்கி, தம்மைப் பிரியா உரிமை பெற்ற கலைமடந்தை யொடு திருமடந்தை அவ்வாறு தம்மிடம் வதிய, மலை மகளை ஒரு கூற்றிற் கொண்டு உலகிற்கு இன்பம் பயக்கும் இறைவனைப் போல நெடுங்காலம் இனிது வாழ்வர். (இ.வி.பொ. 569)

`பொருளதிகாரம்‘ என்ற பெயர்க்காரணம் -

{Entry: J10__398}

இயற்சொல் முதலாய நால்வகைச் சொற்களால் ஆகிய தொடர்களால் மக்கள் ஒழுகலாறு ஆகிய பொருளை நல்லிசைப் புலவோர் நாடகவழக்கும் உலகவழக்கும் பற்றிச் செய்யுள் செய்வர். அச்செய்யுட்கு உரியனவாகத் தொன்னூ லோர் ஓதிய 34 உறுப்புக்களுள் மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை முதலியவை வடிவமைப்பு உறுப்புக்கள்; திணை கைகோள், கூற்று, கேட்போர், மெய்ப்பாடு முதலியவை பொருளமைப்பு உறுப்புக்கள். ஆதலின் அவை பற்றிய இலக்கண மரபுகளைக் கூறும் இவ்வதிகாரம் பொருளதிகாரம் எனப்பட்டது.(தொ. பொ. பாயிரம் ச. பால.)

பொருளாவன -

{Entry: J10__399}

பொருளாவன அறம்பொருள் இன்பமும், அவற்றது நிலை யின்மையும், அவற்றின் நீங்கிய வீடுபேறுமாம். பொருள் எனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்குதிணை நிலத்திணையும் பிறவும் ஆம்.(தொ.பொ. 1 நச்.)

பொருளாவன உறுதிப்பொருளாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனுள், வீடு சொற்களின் விளக் கத்திற்கு அப்பாற்பட்டதாதலின், அறம் பொருள் இன்பம் என்ற மூன்றே. அவற்றுள், இன்பத்தை அகம் எனவும், ஏனைய அறம் பொருள் இரண்டனையும் புறம் எனவும் பெயரிட்டுப் பொருளை இரண்டாகப் பகுத்துக் கோடல் தமிழ் மரபு. (தொ. பொ. 418; இ. வி. 374)

பொருளென மொழிதல் -

{Entry: J10__400}

பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்று தலைமகள் கூறுதல்.

(தொ. பொ. 211 இள.)

தோழி, தலைவனிடம், “எமர் தலைவியை நினக்குத் திருமணம் செய்து கொடுக்க இசையாமைக்குக் காரணம், நீ பரிசமாகக் கொடுக்கக்கூடிய பொருளைவிட மிகுதியான பொருளை எதிர்பார்ப்பதனாற்றான்” என்று கூறுதல். காவல் மிகுதியான் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து விரைவில் அவள் திருமணம் முடிய வேண்டும் என்று கருதும் தோழி, தம் உறவினரிடம் மிகுந்த செல்வத்தைப் பரிசப் பொருளாகக் கொடுத்தால் அவர்கள் விரைவில் மணம் முடித்துவிடுவர் என்று கருதியும், பெரும்பொருள் கொணர்தல் தலைவனுக்கு அரிய செயல் அன்று என்று கருதியும், அன்பு அறம் இன்பம் நாண் இவற்றை விடுத்துத் தலைவன் பெரும்பொருள் கொணருமாறு கூறுதலும் அகப்பொருளுக்கு ஏற்ற செயலே யாம். (214, 215, நச்.)

`பொருளென மொழிதல்’ -

{Entry: J10__401}

தோழி வினவாவழியும் தலைவி தனது களவொழுக்கத்தைத் தாயர்க்குப் புலப்படுத்துமாறு கூறுதல். இவ்வாறு மொழிதல் புலனெறி வழக்கின்கண் நீக்கும் நிலைமைத்து அன்று. அதற்கு ஏது, புறத்தே செல்லற்கு இயலாதவாறு இற்செறிக்கப்பட்டுச் செவிலி முதலியோரால் காவல் செய்யப்படும் நிலை தலைவிக்கு ஒரேவழி நிகழ்தல். (தொ. பொரு. 19 ச.பால.)

பொருளை எட்டிறந்த பலவகையான் ஆராய்தல் -

{Entry: J10__402}

பொருளைத் திணை பால் செய்யுள் நிலன் காலம் வழு வழக்கு இடம் என்ற எட்டு வகையான் ஆராய்தலோடு, அதன்கண் வரும் திணைதொறும் மரீஇய பெயர், திணை நிலைப் பெயர், இருவகைக் கைகோள், பன்னிருவகைக் கூற்று, பத்து வகைக் கேட்போர், எட்டு வகை மெய்ப்பாடு, நால்வகை உவமம், ஐவகை மரபு என்பனவற்றையும் ஆராய்தல்.(தொ. பொ. 1 நச்.)

பொருளை எட்டுவகையான் ஆராய்தல் -

{Entry: J10__403}

எட்டுவகை யாவன திணை, பால், செய்யுள், நிலன், காலம், வழு, வழக்கு இடம் என்பன.

திணை - அகத்திணை, புறத்திணை என்ற இரண்டு.

பால் - கைக்கிளை, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல், பாலை

பெருந்திணை என்ற ஏழும், வெட்சி வஞ்சி. உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்ற ஏழும் ஆகப் பதினான்கு.

செய்யுள் - ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி, பரிபாடல், மருட்பா என்ற ஆறு.

நிலன் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு.

காலம் - கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்ற பெரும்பொழுது ஆறும், மாலை யாமம் வைகறை விடியல் நண்பகல் எற்பாடு என்ற சிறுபொழுது ஆறும் ஆகப் பன்னிரண்டு.

வழு - அகத்திணை வழு ஏழும், புறத்திணை வழு ஏழும் ஆகப் பதினான்கு

வழக்கு - நாடக வழக்கும் உலகியல் வழக்கும் என்ற இரண்டு.

இடம் - வழக்கிடம் செய்யுளிடம் என்ற இரண்டு.

(தொ. பொ. 1 நச்.; சிலப். பதிகம். அடியார்க்.)

பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல் -

{Entry: J10__404}

களவுக்காலத்தில் இற்செறிப்பினான் வருந்திய தலைவி தன்னை எதிர்ப்பட இயலாமைக்கு வருந்தியதைச் சிறைப் புறமாகக் கேட்ட தலைவன் குறியிடை வந்து நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, “தன் தமையன்மாரது காவலைக் கடந்து நின்வயத்தளாய் நின்று பொலிவழிந்து வருந்தும் இத் தலைவியை நீ விரைவில் வரைந்து கொள்ளாது இவ்வாறு இகழ்ந்து கருதுதற்குக் காரணம் என்ன?” என்று தலைவியது பொலிவழிவு கூறி அவனை வரைவு கடாயது.

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 265)

பொழில்கண்டு மகிழ்தல் -

{Entry: J10__405}

பாங்கன் தலைவியைக் கண்டு வந்து தனக்குக் கூறிய பின் தலைவியைக் காணச் சென்ற தலைவன், தலைவியைக் கண்ணுற்ற சோலையைச் சென்றடைந்து, அப்பொழிலிடை அவள் உறுப்புப் போன்ற மலர்கள் முதலியவற்றைக் கண்டு அப்பொழில் தன் சிந்தனைக்கண் அவளாகவே காட்சி வழங்குவதாகக் கூறி மகிழ்தல்.

இதனை ‘அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல்’ என்ப. (இ. வி. 503 உரை)

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 38)

பொழிலிடைச் சேறல் -

{Entry: J10__406}

இயற்கைப் புணர்ச்சியிறுதிக்கண் தலைவியினது - அருமையை அறிந்த தலைவன், முதல்நாள் கூட்டி வைத்த தெய்வம் மறு நாளும் கூட்டிவைக்கும் என்ற நம்பிக்கையோடு, இரண்டாம் நாளும் தலைவியிருந்த பொழிலிடத்தே செல்லுதல்.

இதனைத் ‘தந்த தெய்வம் தருமெனச் சேறல்’ என்றும் கூறுப.
(ந. அ. 135)

இது களவியலுள், இடந்தலைப்பாட்டின்கண்ணது ஒரே கூற்று.

(பாங்கற் கூட்டத்திற்குரிய ஏனைய துறைகள் யாவும் இடந்தலைப்பாட்டிற்கும் உரிய. இடந்தலைப்பாடு நிகழின் பாங்கற் கூட்டம் நிகழாது, பாங்கற் கூட்டம் நிகழின் இடந்தலைப்பாடு நிகழாது என்பது கொள்ளப்படும்.)

(கோவை. 49)

பொழுது கண்டு இரங்கல் -

{Entry: J10__407}

பெருந்திணைத் தலைவி மாலைப்பொழுது கண்டு துயருறுதல்.

“தலைவனோ வரவில்லை. என்கண்களோ நீர் வார்ந்து கலங்குகின்றன. உடலும் வாடுகிறது. மாலைப்பொழுதும் வந்து என் நெஞ்சின் நிறையை அழிக்கின்றது. இப்பிரிவுத் துன்பத்தினை எவ்வாறு பொறுப்பேன்?” என்பது போன்ற அவள் கூற்று.

இது பெண்பாற் கூற்றுப் பெருந்திணைக் கூற்றுக்களுள் ஒன்று. (பு. வெ. மா. 16-9)

பொழுது கண்டு மயங்கல் -

{Entry: J10__408}

தலைவன் ஒருவழித் தணப்பவே, தலைவி மலையில் கதிரவன் மறைய, பறவைகள் இணையாகத் தம் கூடு நோக்கிச் செல்வன கண்டு, தான் ஆற்றாமை மிக்கு மாலைநேரத்தைக் கண்டு பிரிவினால் மனம் மயங்குதல்.

இதனைக் ‘கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு இரங்கல்’ என்ப. (ந.அ. 154)

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 188)

பொழுது தலைவைத்த கையறு காலை -

{Entry: J10__409}

கற்புக் காலத்தில் தலைவன் யாதானும் ஒரு பருவத்தே மீண்டு வருவதாகக் கூறிப் பிரிந்து சென்ற அப்பருவம் இரு திங்கள் எல்லையை யுடையதாயினும், அப்பருவம் தோன்றிய அளவிலேயே, “தலைவன் குறித்துச் சென்ற பருவம் வந்து விட்டதே; அவன் இன்னும் மீண்டிலனே” என்று தலைவி செயலற்ற காலம். (தொ. பொ. 232 இள.)

அந்திக் காலத்தே, அகனைந்திணைக்கு இதற்கு மேலதாகிய மெய்ப்பாடு கூடாது என்று வரையறுக்கப்பட்ட ‘கையற வுரைத்தல்’ என்ற மெய்ப்பாடு எய்திய காலத்தே, அவ்வாற் றாமையின் இகந்தனவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப் பாடுகளாவன - மன்றத்திருந்த சான்றோர் அறியத் தன் தலைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையும் தோன்றக் கூறியும், அழுதும், அரற்றியும் பொழுதொடு புலம்பியும், ஞாயிறு முதலியவற்றொடு கூறத்தகாதன கூறியும் இவ்வாறு நிகழ்த்துதலும் பிறவுமான இவை, களவுக்காலத்து வாளான் எய்தும் பிரிவின்கண் கூறாமல் பிரிந்த தலைவன் பலநாள்கள் மீண்டு வாராத நிலையில் தலைவிக்கு நிகழும். எ-டு : கலி. 142. (236 நச்.)

பொழுது வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -

{Entry: J10__410}

இரவுப் பொழுதின்கண் ஏற்படும் குற்றங்களை எடுத்துக் கூறித் தலைவனைத் தோழியும் தலைவியும் இரவுக்குறி விலக்குதல்.

(தொ. பொ. 210 நச்.)

`பொறியின் யாத்த புணர்ச்சி’ -

{Entry: J10__411}

ஊழினால் கூட்டப்பட்ட கூட்டம்; அஃதாவது இயற்கைப் புணர்ச்சி. (தொ.பொ. 109 இள.) தெய்வத்தான் நிகழ்ந்த புணர்ச்சி. (111 நச்.)

பொறையுவந்துரைத்தல் -

{Entry: J10__412}

கற்புக் காலத்தில் தலைவனுடைய பரத்தையிற் பிரிவில், பரத்தையர் தலைவனை எதிர்கொண்டமை கேட்ட தலைவி நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமல் பொறுத்ததனைக் கண்ட தோழி, “யான் இவ்வாறாகவும், கலங்காது நின்ற மிக்க பொறையுடைய தலைவியைப் பற்றி யான் இன்று பேசுவன என்!” என்று அவளை உவந்து கூறுவது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 353)

பொன்றத் துணிதல் -

{Entry: J10__413}

தலைவி இறக்கத் துணிதல்.

களவுக்காலத்தில் தலைவன் அடிக்கடிப் பிரிதலால் ஏற்பட்ட தலைவியது உடல்மெலிவு தெய்வத்தால் ஆயிற்று என்று கருதி அதற்குப் பரிகாரமாகச் செவிலி வெறியாட்டு நிகழ்த்தத் துணிந்தவிடத்து, தோழி தான் அறத்தொடு நிற்கலாமா என்று வினவியவழி, தலைவி, “தாய்க்கு நாம் களவொழுக் கத்தை உணர்த்திப் பின் வரைவு மாட்சிமைப்பட்ட இல்லறம் நடத்துவதை விட, தாய்க்கு உணர்த்தாது தலைவன்பிரிவி னால் ஏற்பட்ட நோயினால் என்னுயிரை இப்பொழுதே நீக்கத் துணிந்துள்ளேன்” என்று அறத்தொடுநிலை மறுத்துக் கூறியது.

இது ‘கற்பினைச் சார்ந்த அறத்தொடுநிலை’ என்ற கிளவிக் கண்ணதொரு துறை. (த. நெ. வி. பக். 39)

பொன்னணிவு உரைத்தல் -

{Entry: J10__414}

களவுக்காலத்தில் தலைவன் இரவுக்குறியைத் தவிர்த்து, விரைவில் தலைவியை மணந்துகோடல் வேண்டும் என்பதற் காக, தலைவனிடம் படைத்துமொழியான் மகட்பேசப் பலரும் வருவதாகக் கூறிய தோழி, “பலரும் தலைவியை மகட்பேச முன்வந்துள்ளனர்; இனி நின் கருத்து என்ன?” என்று பலரும் பொன்னணிய முன் வந்ததை உரைத்தல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 196)

போக்கழுங்கியல்பு -

{Entry: J10__415}

தலைவன் செலவை நீக்கும் தன்மை.

கற்புக்காலத்தில் ஓதல் காவல் தூது பொருள் பகை என்ற ஐந்து வகைப்பட்ட நற்செயல்களையும் ஆற்றத் தலைவன் தலைவியைப் பிரிந்து ஊரிடையிட்டும் காடிடையிட்டும் வேற்றிடம் எய்திச் சில திங்கள் தங்கிச் செயற்பட்டு எடுத்த செயலை நன்முறையில் முடித்து வருவதே வழக்கம். தலைவன் இவை பொருட்டுத் தலைவியைப் பிரியும்போது அவள் அவன்பிரிவு குறித்து வருந்தவே, சிலநாள்கள் இல்லத்தில் தங்கி அவளை அமைதியுறச் செய்து பின் தன் செயல் குறித்து அவளைப் பிரிந்து சென்று மீடலே அன்பின் ஐந்திணைக் கற்பியற் செய்தி. அதனை விடுத்துத் தன் பிரிவால் தலைவி வருந்துவாளே என்று தலைவன் தன் கடமைகளை மறந்து அவளுடனேயே தங்கியிருத்தல் பொருந்தாக் காமப் பகுதியாதலின், அகப்பொருட் பெருந்திணைத் துறைகளுள் ஒன்றாக ஒருசார் ஆசிரியரால் இது கொள்ளப்பட்டது. (ந. அ. 243)

போக்கு அறிவித்தல் -

{Entry: J10__416}

களவுக் காலத்தில் தலைவன் உடன்போக்கினை விரும்புதற் குரிய காரணம் வினவிய தலைவியிடம் தோழி, “நீங்கள் உடலும் உயிரும் போல, ஒருவரையொருவர் இன்றியமை யாதவர் ஆயினீர். நும் காதலை அறிந்த பிறகும் தலைவனுக்கு வரக்கூடிய துன்பத்தினை அஞ்சி யான் அவனை வரவு விலக்க வேண்டியவளாயுள்ளேன். அவன் களவினை விடுத்து வரைவுக்கு முயன்றால் நமர் நின்னை அவனுக்குக் கொடுக்க இசையார். இந்நிலையில் நீ தலைவனுடன் உடன்போக்கில் சென்று மணப்பது தவிர வேறு வழியில்லை” என்று தலை மகன் உடன்போக்கு விரும்பியதன் காரணத்தைக் கூறியது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 207)

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

{Entry: J10__417}

“நம் தலைவர் கொடிய பாலையைக் கடந்து, என்னை மணத்தற்பொருட்டுப் பொருளீட்டச் சென்றுள்ளார். அவரைப் பலகாலும் நினைப்பதால் என்நுதல் பசப்ப, என் மேனி மெலிய, என் துயரமும் பலர் அறிய வெளிப்படுகிறது. விரைவில் என்னுயிர் போய்விடுமோ என்ற நினைப்பும் வருகிறது.

“இங்ஙனம் பிரிந்த தலைவனை நினைத்து இவள் வருந்துவது இயற்கை என்றுணராது இவ்வூர்ப் பெண்டிர் தூற்றும் அலரை நோக்கி, ‘விரைவில் பழிச்சொற்கள் பல்குவதற்கு முன் என்மகள் திருமணம் செய்துகொண்டு இனிய இல்லறம் நடத்த அருள்வாயாக!’ என்று தெய்வத்தை வணங்கி நிற்கும் நம் அன்னையின்முன் நம் களவுவாழ்க்கை எவ்வளவு தவறாகத் தோன்றுகிறது?” என வரைவிடை வைத்துத் தலை வன் பிரிதலுக்கு உடன்பட்ட தலைவி, அவன் பிரிவினான் ஏற்பட்ட நிலையைத் தோழிக்குக் கூறுதல்.(தொ. பொ. 42 நச்.)

(அகநா. 95)

போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -

{Entry: J10__418}

போக்கு உடன்படுதலாவது - தலைவனொடு தானும் உடன் போக்குக்கு எழுதல். தலைவனை அடைதற்கண் ஏற்பட்ட பலவகை இடையூறுகளால் தன் நெற்றியில் பசலை பரத்தலையும் தன் தளிரையொத்த மேனி வாடுதலையும் உட்கொண்டு, இவற்றால் ஊரவர் பலரும் பலவாகப் பேசும் பழிமொழிகளுக்கு வாய்ப்பு ஏற்படுமே என்று அஞ்சியும், அன்னையின் சீற்றத்தைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டு தன் இல்லத்தில் இருத்தல் இயலாது என முடிவு செய்தும், தலைவனோடு உடன்போக்குச் செல்லுதல் தவிர வேறு உய்யும் வழி இல்லை என்று தலைவி தோழிக்கு உரைத்தல். இவ்வாறு உரைப்பவும் இப்பாடல் இடம் செய்யும். (அகநா. 95) (தொ. பொ. 42 நச்.)

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றல் -

{Entry: J10__419}

1. களவுக்காலம் போலாது இடைவிடாது இன்பம் நுகர்த லோடு இல்லறம் நிகழ்த்தும் உரிமையைத் தலைவி உறுதியாகப் பெறுதலை விரும்புதலானும்,

2. ஆள்வினைக் குறிப்புடைமையின் ஆண்மக்கள் அடிக்கடிப் பிரிந்து போவர் என்று அஞ்சும் அச்சம் மகளிர்க்கு உண்டு ஆகலானும்,

3. களவொழுக்கம் நிகழ்த்தும்போது அம்பலும் அலரும் களவை வெளிப்படுத்தக்கூடும் என்று தலைவி கருத லானும்,

4. பிறர் தன்னை ஐயமுறப் பார்க்கும் காரணத்தான் களவு வெளிப்பட்டுவிட்டதோ என்று அச்சம் கொண்டு பகற்குறி இரவுக்குறிகளை விலக்கும் நிலை ஏற்படுவத னானும்,

தலைவியிடத்தே தலைவனோடு உடன்போக்கும், தலைவனை வரையக் கருதுதலும் நிகழும். (தொ. பொ. 225 நச்.)

`போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்’ -

{Entry: J10__420}

தலைவியிடமிருந்து தூது வரப்பெற்ற தலைவன், கற்பிடைப் பிரிவில், தன் செயலை விரைவில் முடித்துத் தலைவி இல்லத்திற்கு வந்து அவளது தனிமைத்துயரைப் போக்குதல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

போய் அஃது ஈண்டல் -

{Entry: J10__421}

தலைவி, தலைவனுடைய இரண்டாம் மனைவி காமக்கிழத்தி யர் ஆகியோருடன் வெறுப்பின்றி நட்புறவோடு அன்பாகப் பழகும் செய்தி, அவனுக்குப் புலனாதல். (மருத நடையியல்)

(வீ. சோ. 95 உரை மேற்.)

ம section: 198 entries

மக்கள் திணைநிலைப் பெயர் -

{Entry: J10__422}

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலத்தும் வாழும் உயர்மக்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் பொதுப்பெயர்கள்.

முல்லை முதலிய நிலத்து வாழும் மக்களே அகனைந் திணைக்கு உரியராய் திணைநிலைப்பெயர் பெறுவர். அவர்கள் தலைமக்களாகக் கிழமை செய்யப் பெறுங்கால், அவ்வத்திணைக்குரிய மரபுப்பெயர்களையே பெறுவர். அகத்திணைக்கண் இவ்வாறு மரபுப்பெயர்களைப் பெறும் மக்களே புறத்திணைக்கண் அந்தணர் அரசர் வணிகர் வேளா ளர் மறவர் பாணர் கூத்தர் என்னும் சமுதாயப் பெயர்களைப் பெறுவர். புறத்திணை மாந்தரை ஆசிரியர் ‘ஏனோர்’ (தொ. பொ. 24) எனக் குறிப்பிட்டார். அந்தணர் முதலானோர் அகத்திணை மாந்தராக வருமிடத்து ஈண்டுக் கூறப்படும் திணைநிலைப் பெயர்களையே பெறுவர். (தொ. அகத். 22 ச. பால.)

மக்களுள் பெண்டிரைப் பாடும் மரபு -

{Entry: J10__423}

மக்களுள் பெண்பாலை இயற்பெயர் சுட்டிப் பாடுதல் சிறப்பின்மையின், ‘செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ’ (புறநா. 3) என்றாற் போலச் சிறுபான்மை ஆண்மக்களொடு படுத்துப் பாடுதலே மரபு. (தொ. பொ. 81 நச்.)

மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -

{Entry: J10__424}

இப்பொருளதிகாரத்தில் கூறப்படும் அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள் யாவும் மாந்தர்க்கே உரியவாய் அவரால் நிகழ்த்தப் பெறுவன. ஆதலின் திணைக்குரிய உரிப் பொருளை விளைத்தற்குக் காரணமானவர் மக்கள். அம்மக்களைத் திணை அறிதற்குரிய கருப்பொருளோடு ஒப்பக் கூறுதல் தகவன்று. திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை யுவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை இடமாகக் கொண்டு வரும் என்னும் இலக்கணம் மக்களைக் கருப்பொரு ளொடு சேர்த்துக் கூறின் சிதையும். ஆகவே மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறினாரல்லர். (தொ. அகத். 22 ச.பால.)

மகட்பேச்சுரைத்தல் (1) -

{Entry: J10__425}

அயலவர் தலைவியைப் பெண்கேட்கும் செய்தியைத் தோழி தலைவற்குக் கூறுதல்.

“தலைவ! இத்தலைவியை மணம்செய்துகொள்ள மகட் பேசப் பரிசப்பொருளோடு அயலவர் வரத் தொடங்கி விட்டனர். நீ இத்தலைவியின் நட்பு மிகுதல் வேண்டினை யாயின், திருமாலுடைய திருக்கடித்தானத்துக்குச் சென்று அயலவர் முன்னே இவளை மணப்பாயாக” என்று, அயலவர் தலைவியை மகட் பேச வருதல் கூறித் தலைவியோடு உடன் போகுமாறு தலைவனைத் தோழி வற்புறுத்துதல்.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல். 654)

மகட்பேச்சுரைத்தல் (2) -

{Entry: J10__426}

தலைவனை விரைவில் தலைவியை மணக்குமாறு கூறிய தோழி மீண்டும், “அயலவர் தலைவியை மகட்பேச வருகின் றனர். ஆதலின் நீ தலைவியை விரைவில் மணம் செய்து கொள்க; இன்றேல், உடன்கொண்டு செல்க. இரண்டினுள் ஒன்றை இன்றே செய்க” என்று அயலவர் தலைவியை மணம் பேச வருவதைக் கூறுதல்.

இதனை, ‘வரைவு கடாதல்’ எனும் கிளவிக்கண் ‘பிறர் வரைவு உணர்த்தல்’ என்னும் துறையாகக் கூறுப. (ந. அ. 166)

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 195)

மகடூஉக் குணம் -

{Entry: J10__427}

பெண்பாற்குரிய இயல்பு நோக்குக.

பெண்டிர்க்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம். (இறை. அ. 2 உரை)

அன்பு காரணத்தால் தோன்றிய அச்சம், காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளஒடுக்கம் (நாணம்), செவி லியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை (மடன்) என இவை. (தொ. பொ. 99 நச்.)

அடக்கமும், மறை புலப்படுத்தாமல் நிறுத்தும் உள்ளமும், மனக்கோட்டமின்மையும், களவின்கண் செய்யத் தகுவன கூறுதலும், நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிவித் தலும், உள்ளக்கருத்து அறிதல் அருமையும் இவையெல்லாம் பெண்பாற்குரிய இயல்புகள் (தொ. பொ. 209 நச்.)

மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல் -

{Entry: J10__428}

தலைவி கருவுற்றகாலை பெற்ற அழகினைத் தலைவன் மகிழ்ந்து கூறுதல்.

“தலைவி கருவுற்ற காலத்தில் அவள் உறுப்புக்கள் முழு அழகினையும் நிறத்தினையும் பெற்றுவிட்டன. அவள் குமுத வாயும், நீலக் கண்களும், மகன் தங்கியிருக்கும் ஆலிலை வயிறும் அதனால் மகிழும் முகத்தாமரையும், நாளும் அழகு மிகுகின்றன” (அம்பிகா. 461) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; உரையிற் கொள்ளப்பட்டது. இஃது உணர்த்த உணரா ஊடல். (இ. வி. 555 உரை)

மகளிர்க்கு உரிய அல்லாதன -

{Entry: J10__429}

தலைவர் கலத்தில் பிரிந்து செல்லும்போது மகளிர் உடன் செல்லுதலும், காமம் எவ்வளவு மிகுந்தாலும் தலைவரை அடைதற்காகத் தாம் மடலேறுதலும், தலைவர் இருக்கும் இடம் நோக்கித் தாமே சென்றடைதலும் மகளிர்க்கு உரிய அல்லாத செயல்களாம். (தொ. பொ. 34, 35, 98 குழ.)

“மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

{Entry: J10__430}

“காமத்தை வெளியிடக் கூடாது என்று நான் என்னுள்ளேயே மறைக்கத்தான் நினைக்கிறேன். ஆயின் அஃது என் கருத்தை நினையாமல் தும்மல் போல வெளிப்பட்டு விடுகின்றதே!“.

“இன்று வரை நான் என்னை என்னுள்ளத்திலுள்ள காமம் புறத்தார்க்கு எவ்வாற்றானும் புலனாகாது காக்கும் நிறையுடையேன் என்றே கருதியிருந்தேன். ஆயின், இன்று என் காமம் யான் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் பலரும் அறிய வெளிப்படுகிறது” என்னும் தலைவி கூற்று.

(குறள் 1253, 1254)

மகளிர் மடலேறுதல் -

{Entry: J10__431}

நடுவணைந்திணைக்கண்ணோ, கைக்கிளை பெருந்திணை இவற்றின்கண்ணோ தலைவி மடலேறினாளாகச் சூத்திரம் எதுவும் இல்லை. மடலேறுவதாகக் கூறுவதுண்டு; அது கைக்கிளைப்பாற்படும். (தொ. பொ. 35 நச்.)

மகற்கு அறிவுறுத்தல் -

{Entry: J10__432}

தலைவி தன் மகனுக்கு அறிவுரை கூறுதல்.

“நடைவண்டி ஓட்டும் சிறுவ! என் தங்கையராகிய பரத்தை யரிடத்தும் அன்பு காட்டும் செல்வ! உன்தந்தையைப் போலத் தன்னைச் சேர்ந்தவருக்குத் தீங்கு செய்வதனையும் அவர்க ளிடம் பொய்யுரைப்பதனையும் கற்காமல், நுந்தையின் பிற நல்ல பண்புகளையே பின்பற்றுவாயாக” (அம்பிகா. 504) என்று மகனிடம் தலைவி கூறுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று, உரையிற் கொள்ளப்பட்டது. இஃது ‘உணர்த்த உணரா ஊடல்’ என்பதன்பாற்படும். (இ. வி. 555 உரை)

மகற்பழித்து நெருங்கல் -

{Entry: J10__433}

மகனைத் தலைவி பழித்துக் கோபித்தல்.

“மகனே! கோயிலுக்குப் போவதாகக் கூறி இடையே பரத்தை யர்களைக் கண்டு உரையாடி வருகின்றாயே! பரத்தையர் சேரிக்கு விருந்தினராய்ப் போய்ச் சேர்வது நும் குலத்தார்க்கே இயல்பாகிவிட்டதே! உன்னை நொந்து கூறுவதில் பயன் என்ன? உன் தந்தை இப் பருவத்தில் பரத்தையர்சேரிக்குப் போகவும், நீ குழந்தைப் பருவத்திலேயே அங்குச் செல்லத் தொடங்கிவிட்டாயே!” (அம்பிகா. 505) என்றாற் போலக் கூறித் தலைவி மகனைக் கடிதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று உரையிற் கொள்ளப்பட்டது; ‘உணர்த்த உணரா ஊடல்’ என்பதன்பாற்படும். (இ. வி. 555 உரை)

‘மகப் பழித்து நெருங்கல்’ என்பதனை (தொ.பொ. 147 நச்.),

‘தலைவி, தந்தையை................ நெருங்கலின்கண் கூறல்’ - காண்க.

மகன் தாய் உயர்வு -

{Entry: J10__434}

தலைவனுடைய மூத்த மனைவியே சிறப்புடையவள். மூத்த மனைவிக்கு மகப்பேறு வாய்க்காதபோது தலைவன் பின் முறை மனைவியைக் கொள்ளுதலும் உண்டு. முதல் மனைவியை நோக்க, வழிமுறை மனைவி சற்றுச் சிறப்புக் குறைந்தவளே. ஆயின் முதல் மனைவிக்குப் புதல்வன் இல் லாத நிலையில், வழிமுறை மனைவி, மகனுக்குத் தாயாகும் பேறுற்றால், மகனைப் பெற்ற அவளைத் தன்னின் தாழ்ந்த வளாகக் கருதாது தலைவி தன்னை ஒத்தவளாக மதித்துச் சிறப்புச் செய்வாள்.

பின்முறை மனைவி முதல்மனைவியைத் தன்னின் மிக்காளாக மதித்தலும், பின்முறை மனைவி மகன்தாய் ஆயினபின் முதல் மனைவி அவளுக்குத் தன்னை ஒத்த மதிப்புக் கொடுத்தலும் இல்லறத்தின் நெறியாகத் தலைவன் தன் மனைவியர்க்குக் கற்பித்த செய்திகளாம். (தொ. பொ. 174 நச்.)

மகிழ்ந்துரைத்தல் -

{Entry: J10__435}

களவுக்காலத்தில் தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலை பிரிவு குறித்து வருந்திய தலைவியைக் குறித்து, அவன் மீண்டுவந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, மணமுரசொலி கேட்ட தோழி, “தலைவன் தந்த பெறுதற்கரிய தழைகளை வாடாமல் வைத்து அத்தழையே பற்றுக்கோடாகத் தலைவி ஆற்றியிருந்தாள்” என்று தன்னுள்ளே மகிழ்ந்து கூறியது.

இது ‘மணஞ் சிறப்புரைத்தல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 300)

மகிழ்நன் -

{Entry: J10__436}

மருதநிலத் தலைவனுக்குரிய திணைநிலைப்பெயர். (ந. அ. 23)

மங்கல மொழி -

{Entry: J10__437}

மங்கலத்தால் கூறும் சொல். அது செத்தாரைத் ‘துஞ்சினார்’ என்று கூறுதல் போல்வன. (தொ. பொ. 240 இள.)

தலைவன் தம்மை அறனின்றித் துறத்தலின் அவனுக்குத் தீங்கு வரும் என்று உட்கொண்டு தோழியும் தலைவியும் அதற்கு அஞ்சி, “நோயில ராக, நம் காதலர்!” (அகநா. 115) என்றாற் போல வாழ்த்துதல். (244 நச்.)

மடப்பம் -

{Entry: J10__438}

1. மருத நிலத்து ஊர் (பிங். 569) 2. மடம். (L)

மடம் -

{Entry: J10__439}

பெண்டிர்க்குரிய நால்வகைக் குணங்களுள் ஒன்று; கொளுத் தக் கொண்டு கொண்டது விடாமை. (இறை. அ. 2 உரை)

மடல் ஊர்தல் -

{Entry: J10__440}

“விரும்பிய காதலியைப் பெற இடையூறு நேர்ந்து நான் துன்புற்றேன்; ஆகவே ஊர்அம்பலத்தில் மடலேறுதல் நேர்ந்துவிட்டது; என் காமம் அத்துணைப் பெரிது!“என்று தலைவன் மடலேறுதல்.

இஃது இருபாற் பெருந்திணைக்கண்ணதொரு துறை.

(பு. வெ. மா. 17-2)

“மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

{Entry: J10__441}

“தலைவி காரணமாக நான் உற்ற காதலால் என் கண்கள் ஒரு போதும் துயிலுதல் இல்லை; ஆதலின் இரவிலும் விழித் திருந்து மடல் ஊர்வேன்” என்ற தலைவன் கூற்று.(குறள் 1136)

மடல் ஏறுதல் -

{Entry: J10__442}

தன் குறை தீரப்பெறாத தலைவன் பனங்கருக்கால் குதிரை செய்து, தன் உடம்பு முழுதும் நீறு பூசிக்கொண்டு, பூளைப்பூ எலும்பு எருக்கம்பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டி அணிந்துகொண்டு, அக்குதிரைமீது அமர்ந்து அதனைச் சிலர் வீதியில் இழுத்துச் செல்ல வீதியில் செல்லுதல்.

இது நம்பி அகப்பொருள் கூறும் அகப்புறப் பெருந்திணை. இது தலைவியை முறையாக அடையாமல் தன் காம மிகுதியை ஊரறியப் புலப்படுத்தி வரைய முயலுதலின் அகப் புறப் பெருந்திணை ஆயிற்று. (ந. அ. 244)

மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -

{Entry: J10__443}

பாங்கி தனது குறையை ஏற்காத நிலையில் வருந்திய தலைவன், மடலேறுதலை உலகின்மேல் வைத்துக் கூறியபின், பாங்கி அதனையும் பொருட்படுத்தாது நின்ற நிலையில், தானே அவ்வாறு மடலேறப்போவதாகக் கூறுதல்.

“உன் தலைவியின் ஓவியத்தையும் என் ஓவியத்தையும் ஒரு துணியில் எழுதிக் கைக் கொண்டு, பனங்கருக்கால் செய்யப் பட்ட குதிரைமீதேறி உங்கள் ஊர்த்தெருவில் விரைவில் காட்சி யளிப்பேன்” (கோவை. 76) என்ற தலைவன் கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘தன் துணிபு உரைத்தல்’ என்னும்.

இது ‘பாங்கியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு
கூற்று. (75). (ந. அ. 145)

மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -

{Entry: J10__444}

தலைவன் மடல் ஏறுவேன் என்று கூறுவது கைக்கிளை; மடல் ஏறுதல் பெருந்திணை.

பெற்றோர் தலைவியின் களவொழுக்கத்தைக் கருதாம லிருக்கும் நிலை, அதனால் தலைவி தோழி வாயிலாகச் செவிலிக்குக் கூறி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றற்கு வாய்ப்பு ஏற்படாத நிலை, தினைக்கதிர் முற்றிய பின்னர்த் தலைவி புறம்போதற்கு வாய்ப்பின்றி மனையகத்தே அடைந்திருக்கும் நிலை, இரவுக்குறியைப் பலவகை ஏதங்களால் நிகழ்த்த இயலாத நிலை ஆகியவை ஏற்படவே, தலைவியைக் காண வாய்ப்புப் பெறாத தலைவன், தனக்கும் அவளுக்கு மிடையே யுள்ள தொடர்பினை ஊரவர்க்கு அறிவித்து அவர்கள் வாயிலாகத் தான் அவளை மணத்தற்கு வகுத்துக்கொண்ட தொரு வழியே மடலேறுதல் என்பது. தலைவியின் உரு வத்தை ஒரு துணியில் வரைந்து கையிற்கொண்டு பனங் கருக்கால் செய்யப்பட்ட குதிரை மீதேறிச் சிலரை அக் குதிரையை இழுத்து வருமாறு செய்து ஊர்த்தெருவழியே தலைவன் செல்லத் தொடங்கின், ஊர்மக்கள் தலைவியின் பெற்றோரை அணுகி அவளை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். இதற்காக மடல் ஏறும் தலைவன் மடலூர்ந்து தெருவிடை வந்து ஊர்ச்சான்றோரை நோக்கி,

“சான்றோர்களே! பிறருடைய நோயையும் தம் நோய் போலக் கருதி அந்நோயைத் தீர்ப்பதற்குரிய பரிகாரம் தேடுதல் சான்றோர் கடமையன்றோ? மின்னலைப் போன்ற இப்பெண் தன் ஒளியையும் உருவத்தையும் காட்டி என் நெஞ்சில் இடம் பெற்றுவிட்டாள். அன்றுமுதல்யான் உறக்கத்தை நீத்துவிட் டேன். இவளைப் பெறுதற்கு இம்மடலேறி யான் பாடுவ தனைக் கேளுங்கள்.

“இத்தலைவி எனக்கு எய்தாமையால் யான் காமக்கடலில் வீழ்ந்து தத்தளித்துப் பகலும் இரவும் இம்மடல்மாவையே தெப்பமாகக் கொண்டு நீந்துவேன்.

“என்னை மயக்கிய இவள் எனக்கு அளித்திருக்கும் இம் மடல் மா இவள் தந்த காமநோய்க்கு மருந்தாக உள்ளது.

“இம்மாதராளது அழகு என்னும் பெயரால் என்னை எதிர்க்க வந்த காமனுடைய படைகள், பார்ப்பவர்கள் எள்ளி நகையாடு மாறு எனது ஆண்மையின் அழகாகிய மதிலைத் தகர்த்து விட்டன.

“காமமாகிய கொடிய பகையை உள்ளும் புறமும் அழித்த லாலே தலைவி அளித்த இம்மடல்மா எனக்குப் பாதுகாவ லாக உள்ளது.

“இத்தலைவியின் அழகால் என் நெஞ்சில் பற்றிய காமத் தீ உயிரை மட்டும் போக்காமல் என் உடல்முழுவதையும் சுட்டெரிப்பதால் யான் எங்ஙனம் ஆற்றுவேன்?

“காமநோய் ஆகிய தீயின் வெப்பத்தைத் தணித்தற்கு அமைந்த நிழலே இம் மடல்மா.

“சான்றீர்! தவத்தில் ஈடுபட்ட மன்னன் சிறிது வழுவினும் அவ்வழுவினைப் போக்கி அவனை மீண்டும் தவம் செய் வித்துச் சிறந்த முனிவர்கள் சுவர்க்கத்திற்குப் போகச்செய்து துயரினைப் போக்குவது போல, என் துயர் போக்குதலும் நும் கடமை” என்று கூறுதல் (கலி. 139) போல்வன. (தொ. பொ. 51 நச்.)

மடல் திறம் : துறைகள் -

{Entry: J10__445}

அவையாவன : 1. ஆற்றாது உரைத்தல், 2. உலகின்மேல் வைத்துரைத்தல், 3. தன் துணிவு உரைத்தல், 4. மடலேறும் வகை உரைத்தல், 5. அருளால் அரிது என விலக்கல், 6. மொழி, நடை எழுதுதல் அரிதென விலக்கல், 7. அவயவம் எழுதுதல் அரிதென விலக்கல், 8. உடன்படாது விலக்கல், 9. உடன்பட்டு விலக்கல் என்பன ஒன்பதும் ஆம். இவை ஏனைய கோவை களுள் தோழியிற் கூட்டத்தின்கண் அடங்கும். (கோவை. 73 - 81)

`மடவோள் தன்திறம் மாண்புற நோக்கல்’ -

{Entry: J10__446}

தோழி தலைவியை உடன்போக்கு நயப்பித்தவழித் தலைவி தன்னுடைய நாண் அழிந்து விடுமே என்று கருதுதல். (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

இது ‘நாண் அழிபு இரங்கல்’ எனவும்படும். (ந. அ. 182)

மடற்கூற்று -

{Entry: J10__447}

தலைவன் மடலேறித் தலைவியைத் தான் அடையப் போவ தாகக் கூறுதல்.

தலைவன் தலைவியை எய்தவேண்டித் தோழியை இரந்து பின்னின்றானாக, தோழி, அவன் தலைவியது அருமை அறிதல் வேண்டும் என்ற கருத்தோடு, அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உடனே கூறாமல் அவன் கூற்றுக்குப் பலவகையாக மறுமாற்றம் தந்து காலதாமதம் செய்தாளாக, தலைவன் அவள் உள்ளம் அறியாது அவளிடம் தான் மடலேறியாவது தலைவியை எய்தப்போவதாகக் கூறுதல்.

தோழிவாயிலாகத் தலைவியை முறையாக எய்தி அவளைக் கூடும் ஐந்திணையாகிய ஒத்த காமத்தை விடுத்து, அவளை ஊரார் அறிய வலியத் தன் வழிப்படுத்தும் செயலாகிய மடலேறுதற்கண் தலைவன் முனைந்திருத்தல் ஐந்திணை யின்பத்திற்குப் பொருந்தாத காமச் செயலாதலின், அதனை அகப்புறப் பெருந்திணைக் கிளவியுள் ஒன்றாக ஒருசாரார் கொண்டனர். (ந. அ. 243)

மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல் -

{Entry: J10__448}

வரையும் நாளன்று தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொண்ட மணக்கோலத்தினைக் கண்ட மக்கள், “தலைவ! நீ தலைவியொடு கொண்டுள்ள இம்மணக்கோலக் காட்சியைக் கண்ட எம் கண்கள் போல எங்கள் உயிரும் மகிழ்கிறது!” (திருப்பதிக். 397) என்று கூறுதல்.

இது ‘வரைந்து கோடல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

{Entry: J10__449}

பரத்தையரை நாடித் தேரில் புறப்பட்ட தலைவன், வழியில் தன் புதல்வனை எதிர்ப்பட்டு அவனை எடுத்துக்கொண்டு தலைவியின் முன்வர, அவள் புலவி தணிந்து தன் கணவனை ஏற்க, அவனும் இனிது கூடி மகிழ்ந்து சென்ற பின் வந்த பாங்கியிடம் தலைவி தன் புதல்வனைப் புகழ்தல்.

“தோழி! என் அருமை மகன் இன்று எனக்குச் செய்த நலம் தான் எத்துணைப் பெரிது! பரத்தையரை நாடிப் புறப்பட்ட என் தலைவனைத் தடுத்துத் தேரோடு என்னிடம் அழைத்து வந்துவிட்டான்!” (தஞ்சை.கோ. 405) என்பது அவனைப் புகழ்ந்த தலைவி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ என்னும் வகையது. (ந. அ. 207)

மணஞ்சிறப்புரைத்தல் : துறைகள் -

{Entry: J10__450}

1. மணமுரசு கூறல், 2. மகிழ்ந்துரைத்தல், 3. வழிபாடு கூறல், 4. வாழ்க்கைநலம் கூறல், 5. காதல் கட்டுரைத்தல், 6. கற்பறிவித் தல், 7. கற்புப் பயப்புரைத்தல், 8. மருவுதல் உரைத்தல், 9. கலவி யின்பம் கூறல் என்பன ஒன்பதும் ஆம். (கோவை. 299 - 307)

`மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

{Entry: J10__451}

வரையும் நாளன்று திருமணம் முடிந்தபின் தலைவன் தலைவிக்கு அருந்ததியைக் காட்டியதைக் கண்டதோழி, “தலைவ! நீயும் தலைவியும் மீன ராசியில் வந்த குருதசை போலப் பொலிவுடன் வாழ்க!” (திருப்பதிக். 398) என்று வாழ்த்தியது.

இது ‘வரைந்து கோடல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 82)

மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

{Entry: J10__452}

திருமணம் நடந்த பிறகு, தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் இல்லத்திற்குச் செவிலி வந்தபோது, தோழி, அவர்களது அன்பினியல்பினை விளக்கிக் கூறுதல். ‘மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை, அன்புறவு உணர்த்தல்’ என்பன நூற்பா அடிகள்.

“அன்னாய்! நின் மகளுடைய நலமெல்லாம் உண்டு மகிழும் தலைவன் அவளைக் கணமும் பிரியாமல், தழுவிய கை நெகிழாமல் அன்பு செய்கிறான்” என்பது போன்ற தோழி கூற்று.

இது கற்பியலில் ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

{Entry: J10__453}

திருமணத்திற்குப் பின்னர், தலைவனும் தலைவியும் தனிமனை இருந்து தம் இல்வாழ்க்கையை அதற்குரிய அறமும் இன்பமும் பொங்கும் வகையில் நடத்திவருவதை அவர்கள் மனைக்கே சென்று பார்த்து மகிழ்ந்து மீண்ட செவிலி, நற்றாயிடம் அதனைப் பற்றிப் பாராட்டிப் பேசுதல்.

“உன்மகள் தான் உண்ண வேண்டும் என்று கருதும் பசி யுணர்ச்சியும் மணற்சோறு அடும் விளையாட்டும் விடுத்துக் கணவன் வருந்தும் பசியைத் தீர்க்க உணவு அடும் இல் வாழ்க்கையையும், விருப்பொடு விருந்து புறந்தருதலையும், தலைவன் விரும்புமவற்றையே தான் விரும்பிச் செய்தலையும் எவ்வாறு இவ்வளவு விரைவில் கற்றுவிட்டாள் என்பது வியப்பாக உள்ளது!” (அம்பிகா. 446) என்பது போன்ற செவிலி கூற்று.

இது கற்பியலுள், ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 203)

மணமுரசு கூறல் -

{Entry: J10__454}

களவுக்காலத்தில் வரைபொருட்குப் பிரிந்த தலைவன் செல்வத்தொடு மீள, பரிசப்பொருள் தருவதற்கு தலைவியது இல்லத்து முகப்பில் தலைவனுடைய மணமுரசு முழங்க, மகிழ்ந்த தோழி தலைவியிடம் , “நாம் நம் துயர்தீர, நம் இல்லின்கண் நம் தலைவனுடைய முரசு முழங்குகிறது; இனி நமக்குக் குறையொன்றும் இல்லை” என வரைவு நிகழப் போகும் மகிழ்வில் கூறியது.

இது ‘மணஞ் சிறப்புரைத்தல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 299)

மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் -

{Entry: J10__455}

களவுக்காலத்தில் வரைபொருட்குப் பிரிந்த தலைவன் பொருளொடு மீண்டு பரிசப்பொருள் கொடுக்க முன்வர, தோழி தலைவிக்குத் தலைவனுடைய தேர்வரவு கூறிய நேரத்தில், மனையகத்தோர் தலைவனை வரவேற்கப் பூரண கும்பம் தோரணம் முதலியவற்றால் மனையை அலங்கரித் ததை மகிழ்வுடன் கூறுதல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 296)

மதிநிலை உரைத்து வாயில் நேர்வித்தல் -

{Entry: J10__456}

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயிலிடத்தானாக, தோழி இல்லிருந்து நல்லறம் செய்யும் குலமகளிருக்கு இருக்க வேண்டிய நல்லறிவின் திறத்தை எடுத்துப் புகட்டி, ஊடல் நீக்கி வாயில் நேர்வித்தல்.

“அசுவினியாகிய முதல் நட்சத்திரத்தினைப் பிரிந்து பல நாள் வேறு நட்சத்திரங்களிடத்துத் தங்கித் தன் செயல் குறித்துச் சிறிதும் சிந்தியாது சந்திரன் மீண்டும் அசுவினி நட்சத்திரத் திடம் வருங்கால் அம்முதல்நாள் ஊடாது சந்திரனை ஏற்றுக் கொள்வது போல, தலைவியாகிய நீயும் பரத்தையர் பலரையும் தோய்ந்து பன்னாள் கழித்து இறுதியில் இற் பரத்தையிடம் தங்கி அவளையும் நீங்கி நின் இல்லின்கண் வந்த இல்லறக்கிழவனைத் துன்புறுத்தி நமது கடைகாவலன் ஆக்காது ஏற்றுக் கொள்க” என்றாற் போலத் தோழி தலைவியிடம் கூறி அவள் பொறையுடைமைப் பண்பினைச் சுட்டி வாயில் நேர்வித்தல் போல்வன.

இது ‘பரத்தையிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அ. பாடல் 557)

மதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் -

{Entry: J10__457}

தோழி தன் மதிநுட்பத்தால், தலைவன் தலைவியிருவ ருடைய காதலையும் அறிந்துகொள்ளுதல்.

“இவளும் தினைகாக்க வரவில்லை; புனத்திற்கு, இவனும் மான்தேடி வரவில்லை. நம் எதிரில் நாணம் கொண்டவர் போல உள்ள இருவரும், தமக்குள் மிகவும் களிப்பது தெரி கிறது. மற்றும் இருவரும் தம் கண்களாலேயே பேசிக்கொள் வதும் தெரிகிறதே!” என்பது போன்ற தோழி கூற்று. (தொ. பொ. 114 நச். மேற்.)

இதனைத் திருக்கோவையார் ‘மதியுடம்படுதல்’ என்னும் (71) இது ‘பாங்கிமதி உடன்பாடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 141)

மதியுடம்படுத்தல் -

{Entry: J10__458}

தோழி தலைவியின் நாற்றம் தோற்றம் முதலியன கண்டு தன் மனத்தே ஒருவகையாக முடிவு செய்துகொண்ட நிலையில், தலைவன் வந்து தோழியிடம் உரையாடத் தோழி தலைவன் தலைவியிருவர் கருத்தினையும் தன் கருத்தினோடு ஒன்று படுத்தி உணர்தல்.

இது குறையுற உணர்தல், முன் உற உணர்தல், இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் என மூவகைப்படும். இம்மூன் றும் கூடிய பின்னரே தோழி மதியுடம்படுக்கும். (தொ. பொ. 127 நச்.)

மதியுடம்படுத்தல் ஐவகை -

{Entry: J10__459}

தலைவன் தோழியை அணுகிப் பதிவினாதல், வேழம் வினாதல், கலை வினாதல், வழி வினாதல், வாய்மொழிக் கிரங்கல் என்ற ஐவகையான் வினவியவழித் தோழி அவன் உள்ளக்கருத்துப் பற்றி ஐயங்கொள்ளுமாறு அவள் அவனது அறிவைத் தன்னிடத்துப் பொருந்துமாறு செய்தல். (க. கா. 30 பக். 42)

மதியுடம்படுத்தல் கிளவிகள் (திருக்கோவையார்)

{Entry: J10__460}

1. பாங்கியிடைச் சேறல், 2. குறையுறத் துணிதல், 3. வேழம் வினாதல், 4. கலைமான் வினாதல், 5. வழி வினாதல், 6. பதி வினாதல், 7. பெயர் வினாதல், 8. மொழிபெறாது கூறல்,
9. கருத்தறிவித்தல், 10. இடை வினாதல் என்னுமிவை பத்தும் தலைவன் பாங்கியை ஐயஉணர்வினளாக்கி அதுவழியாக நின்று தன் குறை கூறுதலாகிய மதியுடம்படுத்தலின் துறைக ளாம். (கோவை. 50 - 59)

மதியுடம்படுதல் -

{Entry: J10__461}

தலைவன் தன்னிடம் கூறியவற்றையும் தலைவியின் செயல் களையும் தோழி தனித்தனியாகவும் சேரவும் பார்த்து ஆராய்ந்து, தலைவனுக்கும் தலைவிக்குமிடையே இன்ப துன்பங்கள் பொதுவாயிருப்பதனையும் இருவருக்கும் உயிர் ஒன்றாயிருத்தலையும் கண்டு, இருவர் அறிவும் ஒன்றா யிருத்தலை வியந்து கூறுதல். ‘மதியுடன்பாடு’ என்பதும் அது.

இது ‘மதியினின் அவரவர் மனக்கருத்து உணர்தல்’ எனவும் கூறப்பெறும். (ந. அ. 141)

இது ‘நாண நாட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; இதுவே இறுதிக் கூற்று. (கோவை. 71)

மதியுடம்பாடு -

{Entry: J10__462}

தலைவன்தலைவியர்தம் மதியோடு தோழியதுமதியும் ஒத்துச் செல்லுதல். (தொ. கள. 37 ச. பால.)

மதியுடன் ஆக்கல் -

{Entry: J10__463}

இது தோழியிற் கூட்டத்தில் தோழி, தலைவன் தலைவி என்ற இருவர் உள்ளமும் ஒருவர் ஒருவர்மாட்டுப் பொருந்தி இருப்பதை உணர்தல். ஒவ்வொருவரும் தத்தம் அறிவை மற்றவரிடம் அமைத்துக்கொண்டதை அறிவது மதியுடம் பாடாகும்.

இது தோழியிற் கூட்டம் (பகற்குறி) எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. 17)

மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

{Entry: J10__464}

தலைவனது இருப்பிடம் வந்து தலைவி அவன்கண்களைத் தன் கையால் பொத்தியவழி, அவன் எல்லாத் தலைவியர்க்கும் பொதுவாக அமையுமாறு, “செம்பொற் கொடி போல்வாய்! சிந்தாமணியாம் தெய்விக மணியே தம் கைவரப்பெற்றவர்கள் அற்பர்களாகிய சிறுசெல்வர் முன்பு இரப்பார்களோ? என் கண்களை நீ அன்போடு பொத்தியதன் காரணம் என்ன?” (திருப்பதிக். 501) என்று கூறுதல்.

இஃது உணர்வதோடு உணரா ஊடற்குரிய தொகுதிக் கண்ணதொரு கூற்று. (மா. அக. 104)

மந்திமேல் வைத்து வரைவு கடாதல் -

{Entry: J10__465}

தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கும் விருப்பத்துடன் இருக்க, அவனை நோக்கித் தோழி, “ஒரு கடுவன் தன் மந்திக்கு மாங்கனிகளைத் தேனில் தோய்த்துக் கொடுத்துத் தான் அது நுகர்வது கண்டு மகிழ்ந்த காட்சியைக் கண்ட தலைவி, இச்செயல் நம் காதலரிடத்து இல்லையே என்று, நீ தன்னை மணந்து இல்லறம் நடத்தாமை குறித்து ஆற்றாளா யுள்ளாள்” என்று ஒரு மந்தியின் செயலைக் குறிப்பிடுவாள் போலத் தலைவனைத் தலைவியை மணக்குமாறு வற்புறுத்தல்.

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 257)

மயக்கம் (3) -

{Entry: J10__466}

களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இது ஒன்று.

மயக்கமாவது, செய்வனவற்றின்கண் ஆராய்ச்சியும் கடைப்பிடியு மின்றி நெகிழ்தலும் விளைவறியாது பேசுதலும் செயல்புரிதலும் ஆம். (தொ. கள. 9 ச. பால.)

மயங்கி உரைத்தல் -

{Entry: J10__467}

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் குறை நயப்புக் கருதி உரையாடியவழி, தலைவி உடன்படற்குக் காலம் தாழ்க்கத் தான் மனம் மயங்கித் தலைவியை முனிந்து உரைத்தல் (குறிஞ்சி நடையியல்)

இது ‘தலைவியை முனிதல்’ (ந. அ. 148) எனவும்படும்.

(வீ. சோ. 92 உரை மேற்)

மயிலொடு கூறி வரைவு கடாதல் -

{Entry: J10__468}

பகற்குறி இறுதிக்கண் தலைவன் செவியிற்படுமாறு தோழி மயிலுக்குக் கூறுவாளாய், “மயில்காள்! வேங்கைகள் பூத்தமை யால் தினை முற்றியதாகக் கருதித் தினைக்கதிர்களை எமர் கொய்துவிட்டனர். ஆதலின் இனி எமக்குத் தினைப்புனங் காக்கும் வாய்ப்பில்லை. இனி இப்பக்கம் வாரோம். தலைவன் இப்புனத்துக்கு வந்தால் யாங்கள் இனி இங்கு வர வாய்ப் பில்லை என்பதனைக் கூறுங்கள்” என்றாற்போலக் கூறித் தலைவனை வரைவு கடாதல்.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 145)

`மரீஇய மருங்கு’ -

{Entry: J10__469}

களவொழுக்கம் நீட்டித்த இடம். (தொ.பொ. 208 இள.)

நடுவண் ஐந்திணைக்கு இருபக்கங்களிலும் வைத்து ஓதப்படும் கைக்கிளை பெருந்திணை என்ற அகப்புறத்திணைகள். (211 நச்.)

மருங்கு அணைதல் (1) -

{Entry: J10__470}

இரவுக்குறியிடைத் தன்னை அளவின் மிகப் புகழ்ந்த தலைவன் சொற் கேட்ட தலைவி நாணத்தால் தலை கவிழ்ந்து நிற்ப, அந்நிலையில் அவளைச் சென்று தழுவ இயலாது, அவள் நாணம் ஒடுங்குதற்கு அவள் தனங்களால் தளர்வுற்ற இடையைக் காப்பவன் போல இடையினைத் தழுவி அவளைச் சென்றணைதல்.

இதனைச் ‘சார்தல் பயனாகப் புகழ்தல்’ என்றும் கூறுப.

(இ. வி. 517 உரை)

இது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (165) [ இப்பெயர்த்துறை பாங்கற் கூட்டத்திலும், பகற்குறியி லும் நிகழ்கிறது. (கோவை. 45, 121) ]

மருங்கு அணைதல் (2) -

{Entry: J10__471}

தலைவன் வேறு நோக்குடன் செல்வான் போலத் தலைவியை நெருங்கிச் செல்லுதல்; ‘வண்டோச்சி மருங்கு அணைதல்’ எனப்படும்.

“வண்டுகாள்! முன்பே இவள்இடை நகில்பாரம் தாங்க மாட்டாமல் நலிகின்றது. நீங்களும் இவள் குழல்மீது மொய்த்து இவளை மாய்க்க நினைத்தீரோ?” என்று வினவிய வாறே, வண்டு ஓச்சுவான் போலத் தலைவிக்கு மிக்க அண்மை யில் செல்லுதல்.

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாக இலக்கண விளக்கத்துள் தழுவப்பட்டது. (495 உரை); திருக்கோவையாருள் இடந்தலைப்பாட்டின்கண்ணது.

(கோவை. 45)

மருண்டு உரைத்தல் -

{Entry: J10__472}

மருளுற்று உரைத்தல் ; அது காண்க. (சாமி. 89)

மருதக் கருப்பொருள்கள் - (1)

{Entry: J10__473}

1. தெய்வம் - இந்திரன்;

2. உயர் மக்கள் - ஊரன், மகிழ்நன்; கிழத்தி, மனைவி, மனையோள்;

3. பொதுமக்கள் - களமர், உழவர், கடையர்; உழத்தியர், கடைசியர்;

4. பறவை - வண்டானம், மகன்றில், நாரை, அன் னம், போதா, கம்புள், குருகு, தாரா, நீர்க்கோழி;

5. விலங்கு - எருமை, நீர்நாய்;

6. ஊர் - பேரூர், மூதூர்;

7. நீர் - ஆற்றுநீர், கிணற்றுநீர், பொய்கைநீர், குளத்துநீர்;

8. பூ - தாமரை, கழுநீர், குவளை, மல்லிகை;

9. மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்;

10. உணவு - செந்நெல், வெண்ணெல்;

11. பறை - நெல்லரிகிணை, மணமுழவு;

12. யாழ் - மருதயாழ்;

13. பண் - மருதப்பண்;

14. தொழில் - விழா நிகழ்த்துதல், வயலில் களை நீக்குதல், நெல்லரிதல், கடாவிடுதல், குளநீர் ஆடல், ஆற்றில் புதுப்புனல் ஆடல் முதலியன;

15. கொடி - மாதவி

(தொ. பொ. 20 இள; 18 நச்.; சிலப். பதிகம்) (அடியார்க்; த. நெ.வி. 6 -12; ந.அ. 23)

மருதக் கருப்பொருள்கள் (2) -

{Entry: J10__474}

உயர்ந்தோர் - நாற்குலத்தார்;

தாழ்ந்தோர் - வேசையர்;

புள் - குயில், வண்டு, மயில்;

விலங்கு (ஊர்வன) - சங்கு, வளை;

மரம் - கமுகு, மா, பலா, வாழை, தென்னை;

உணவு - கனி, கிழங்கு, சேனை, கருணை, சேம்பு, மஞ்சள்;

தொழில் - வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், தமிழ் முதலிய கல்வி பயிலல், பாடல், ஆடல், நான்கு வருணத்தார்க்கும்

உரிய தொழில்கள்;

ஊர் - அங்காடி, சோலை, பூந்தோட்டம், மதில், கூடகோபுரம், மேடை, மாடம், வேலி, மாளிகை, கோயில், சாலை, படித்துறை முதலியவற்றை உடையது.

(சாமி. 77,78)

மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

{Entry: J10__475}

மருதம் நெய்தல் திணைகட்குப் பெரும்பொழுது விதந்து கூறாமையான், அவற்றிற்குரிய உரிப்பொருளாகிய ஊடலும் இரங்கலும் ஆகிய உணர்வுகள் சிறுபொழுதளவில் நிகழும் குறுகியகால எல்லையுடையன. ஊடலும் இரங்கலும் நீட்டிக்குமாயின் அவை அகனைந்திணைக்கண் நிகழும் பெருந்திணைப் பகுதியாம். (தொ. அகத். 12 ச. பால)

மருதத்துக்குரிய பொழுது -

{Entry: J10__476}

மருதத்துக்கு ஆண்டு முழுதும் பெரும் பொழுது; சிறுபொழுது வைகறையும் விடியலும்.

வைகறை - இரவில் சூழ்ந்த இருள் சிறிதுசிறிதாகக் கழிவதற்குரிய இரவின் இறுதிப் பத்து நாழிகை (2 a.m. - 6 a. m)

விடியல் - இரவுப்பொழுது நீங்கக் கதிரவன் தோன்றி ஒளிவீசும் காலை நேரம். இது பகற்போதின் முதல் பத்து நாழிகை ( 6 a.m - 10 a.m.)

இராப்பொழுதின்கண் பரத்தையரை நோக்கிப் பிரிந்த தலைவன் அவர்களுடைய ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் இராப்பொழுதினைக் கழித்து மற்றவர்களுக்குத் தெரியாமல் மனைக்கு மீளும் காலம் வைகறை. தலைவிக்கும் இரவுநேரம் தலைவனொடு கூடிக் கழியாமையால் நெஞ் சழிந்து வருத்தம் மிக்குத் தலைவனோடு ஊடல் கொள்வதற்கு வாய்ப்பினை நல்குவதும் வைகறை. பொழுது விடிதற்குச் சிறிது நேரமே இருத்தலின் இதனால் பெறும் பயன் இன்று என்று தலைவி வாயிலை அடைத்து ஊடலை நீட்டிப்பவே, வைகறையை அடுத்த விடியலில் அவன் உடம்பில் பரத்தை யர் தொடர்பால் ஏற்பட்ட வேறுபாடுகள் புலப்படும்; பிறகு வாயிலவர் வந்து சமாதானம் கூறும் நிலை ஏற்படும். ஆதலின் வைகறையும் விடியலும் மருதத்திற்குச் சிறுபொழுதாயின. (தொ. பொ. 8 நச்.)

இளம்பூரணரும் இவ்வாறே கொள்வர். (தொ. பொ. 9)

வைகுறு விடியல் என்ற தொடரை வைகுறுவும் விடியலும் என்று கொள்ளாமல், வைகறையாகிய விடியல் என்று பொருள் கொண்டு வைகறைப்பொழுதே மருதத்திற்குரியது என்பர் சிவஞான முனிவர். (சூ. வி. பக். 52)

இறையனார் அகப்பொருள் உரையும் (சூ.1) நம்பி அகப் பொருளும் (சூ. 12) மருதத்திற்கு வைகறை என்னும் சிறுபொழு தொன்றனையே கொள்ளும்.

அடியார்க்கு நல்லாரும் வைகறையே கொண்டார்.

(சிலப். பதிகவுரை)

இலக்கணவிளக்கநூலார் வைகறையும் விடியலும் கொண் டார். (சூ. 385)

மருத நடையியல் -

{Entry: J10__477}

ஊடல் என்ற ஒழுக்கம் பற்றிய நடப்புக்களை நிரல்படக் கூறுதல்.

வீரசோழியத்தின் உரையில், தலைவன் தலைவியொடு பொழில் விளையாடியும் புனலாடியும் மகிழ்தலும், தலைவன் பரத்தையர்மாட்டுப் பிரிந்தவழித் தலைவி ஊடுதலும், ஊடல் தீர்தலும், இரண்டாம் மனைவியையும் காமக்கிழத்தியரையும் தலைவி வரவேற்று இனிமையாகப் பழகுதலும் போன்ற செய்திகள் பற்றிய கிளவிகள் பலவும் ஓர் ஆசிரியப்பாவால் தொகுத்துக் கூறப்பட்டு மருத நடையியல் என்ற பெயரிடப்பட்டுள்ளன. (வீ. சோ. 95 உரை மேற்)

மருதம் -

{Entry: J10__478}

வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகிய நாட்டுப் பகுதி.

இப்பகுதியில் மருத மரங்கள் பலவாகக் காணப்படுதல் பற்றி இதற்கு மருதம் என்ற பெயர் ஏற்பட்டது எனவும், மருதம் எனப்படும் தலைவன்தலைவியர் ஊடல் பற்றிய நிகழ்ச்சி மிகுதியாகக் காணப்படுதலின் இந்நிலத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது எனவும் கூறுவர்.

மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -

{Entry: J10__479}

நிலம் : பழனம், தோடு, பணை, மென்பால், கழனி, பண்ணை (பிங். 549) அகணி, பானல், வயல், பணை. (சூடா.நி. V 32)

மக்கள் : களமர், தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், உழவர், கடைஞர், கிளைஞர்; உழத்தியர், கடைச் சியர், ஆற்றுக்காலாட்டியர்; ஊரன், மகிழ்நன், கிழவன்; மனைவி, கிழத்தி, இல்லாள், இல். (திவா. பக். 41) மருதத்தார், களமர், மள்ளர், வினைஞர், உழவர், கம்பளர், பள்ளர், களைஞர், கடைஞர்.
(நா. நி. 159)

ஊர் : பூக்கம், கொடிக்காடு, பூரியம், உறையுள், பாக்கம், அருப்பம், அகலுள், பதி, கோட்டம், வசதி, தாவளம், நியமம், வாழ்க்கை, தண்ணடை. (திவா. பக். 110)

பறை - கிணை (திவா. பக். 148)

வயல் - விளையுள், பண்ணை, செய், கழனி, தடி, பாத்தி, செறு.

சிறுவயல் - குண்டில், பாத்தி. (திவா. பக். 119)

மருவுதல் உரைத்தல் -

{Entry: J10__480}

தலைவி தலைவனோடு இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்ட செவிலி நற்றாயிடம், “தலைவன் அரசன் காரியமாக வேற்றிடம் சென்றாலும், அவ்வினை முடித்தபின் தலைவன் தேர் நேராக இல்லிற்கு வந்துதான் தங்குமேயன்றி வெளியே எவ்விடத்தும் தங்காது. தலைவி தலைவனையன்றி மற்றொரு தெய்வத்தை மனத்தாலும் நினையாள். இஃது இவர்கள் காதல்” என்று அவ்விருவர் காதலும் பொருந்தி யிருக்கும் சிறப்பினைக் குறிப்பிடுதல்.

இதனைச் ‘செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உரைத்தல்’ என்றும் கூறுப (‘இல்வாழ்க்கை எனும் தொகுதிக் கண்ணது) (ந. அ. 203)

இது ‘மணஞ் சிறப்புரைத்தல்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 306)

மருளுற்று உரைத்தல் -

{Entry: J10__481}

‘பிரிவுழிக் கலங்கல்’ எனும் கிளவியது ஒருவகை இது. இதன்கண் ‘ஆய வெள்ளம் வழிபடக் கண்டு இது, மாயமோ என்றல்’ என்ற கிளவி ஒன்றே நிகழ்கிறது. அது காண்க. (ந. அ. 132)

மலிவு -

{Entry: J10__482}

மகிழ்தல்; அஃதாவது தலைவனும் தலைவியும் கற்புக் காலத்தில் இல்லறஒழுக்கமும் புணர்ச்சியும் முதலியவற்றால் மகிழ்தல். (தொ.செய். 187 பேரா.)

“மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

{Entry: J10__483}

“தலைவி! தலைவனது குன்றினை நோக்கிக் கார்மேகம் சூழ்ந் துள்ளது. விரைவில் மழை பொழியலாம். நம்புனத்துத் தினைக்கதிர் வாடிவதங்கும் நிலை இராது. நமக்கும் புனங் காவல் மீண்டும் வாய்க்கும்” என்ற தோழி கூற்று. (ஐங். 207)

மற்றவள் தளர்ச்சி -

{Entry: J10__484}

தோழி தலைவியிடம் இரவுக்குறி நயக்குமாறு கூறியவழி, தலைவி இரவுக்குறியிடத்துத் தலைவன் வரும் வழியிடை ஏதம் கருதி மனம் தளர்தல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

இது ‘நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்’ எனவும்
படும். (ந. அ. 158)

மற்றையவழித் தலைவன் கூறல் -

{Entry: J10__485}

குறி எதிர்ப்பட்டும் கையுறை மறுக்கப்பட்டும் கொடுக்கப் பெற்றும் இரந்து பின் நின்ற தலைவன், அங்ஙனம் குறியிடத் துத் தலைவியை எதிர்ப்பட இயலாது ஆற்றானாய், இரந்து பின்நிற்றலை நீக்குமிடத்துக் கூறுதல்.

“மனமே! கிளிபோல மழலைமொழி பேசும் சிவந்த வாய், பெரிய கயல் போன்ற மையுண்ட கண்கள், மேகம் போல முதுகுப்புறம் தாழ்ந்த கரிய கூந்தல், மின்னல் போன்ற இடை இவற்றையுடைய குறுமகளை விடாது பின்தொடரும் நீ, எவ்வி என்ற நண்பன் நீதியான சொற்களை எடுத்துச் சொல்லவும் கேட்காமல் திதியனது காவல்மரமான புன்னை மரத்தை அழிக்கக் கருதி அவனொடு போரிட்ட அன்னி என்பவனைப் போல இறந்துபடுதலே முடிவாக நிகழக் கூடியது” (அகநா. 126) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

நெஞ்சே! இத் தலைவியின் மார்பினைத் தழுவுதல் கருதி, பாம்பு இரை தேடும் அஞ்சத்தக்க குறுகிய வழியிலே, இரவிருளையும் பாராது தனித்துக் கண்விழித்து நடந்து வந்தும், தலைவியைக் காணப் பெறாமையால், காண்பவர்க் கெல்லாம் பெருநகை யுண்டாகக் காமம் மிகுதிப்படக் குறை யாத துன்பத்தைத் தந்த நீ விரைவில் அழிவாயாக!” (அகநா. 258) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 102 நச்.)

மறல வினவல் -

{Entry: J10__486}

செவிலியின் செயல் கண்டு தலைவி மாறுபடத் தோழி அவளை வினவுதல்.

களவில் தலைவனை நுகர்ந்து வரும் தலைவி அவன்பிரிவை நினைத்து வருந்தியதால் அவட்கு ஏற்பட்ட மெலிவு குறித்துச் செவிலி கட்டுவிச்சியை வினவி அந்நோய் முருகனால் ஏற்பட்டது என்று அவள் கூறியதை நம்பி முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்தத் துணிந்தவழி, அது குறித்துத் தலைவி மனம் மாறுபட்டு வருந்தத் தோழி அவளை நோக்கி, “அஞ்சத்தக்க கடல் போல நம் காமம் பெருகி எல்லை கடந்துவிட்ட இந்நிலையில், நாம் இதனால் வீணே வருந்தி அழியாத வகையில் ஒருவாற்றான் செவிலிக்கு அறத்தொடு நிற்பதில் தடை யாது உள்ளது?” என்று வினவுதல்.

இது கற்பினைச் சார்ந்த ‘அறத்தொடு நிலை’ எனும் கிளவிக் கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. பக். 38)

மறவாமை கூறல் -

{Entry: J10__487}

கற்புக் காலத்தில் வேந்தற்குற்றுழிப் பிரிந்து மீண்டு வந்த தலைவன் தலைவியொடு பள்ளியிடத்தனாக, அப்பொழுது, “வினையிடத்து எம்மை மறந்தீரே!” என்ற தோழிக்கு, “யான் பாசறைக்கண் தங்கியஇடத்தும், கண்களில் கண்ணீர் துளிக்க நின்று இவள் என்னுடைய நெஞ்சினை விட்டு நீங்கவில்லை; ஆதலின் யான் மறக்குமாறு என்னோ?” எனத் தான் தலைவியை மறவாமையை அவன் கூறியது.

இது ‘வேந்தற்குற்றுழிப் பிரிவு’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 331)

மறுத்து எதிர்கோடல் -

{Entry: J10__488}

தலைவி நாணத்தை அகற்றித் தலைவனை ஏற்றுக்கொள் ளுதல்.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

இது திருக்கோவையாரில் ‘நாண் விட வருந்தல்’ (44 எனப்படும். (ந. அ. 127)

மறுத்துக் கூறல் -

{Entry: J10__489}

கற்புக் காலத்தில் தலைவன் வேந்தற் குற்றுழிப் பிரிய, அவன் மீண்டு வரும் முன்னர்க் கார் காலம் வரவே, அது குறித்துத் தலைவி ஆற்றாளாகத் தோழி அது கார்ப்பருவமன்று என்று கூற, காந்தளே யன்றித் தோன்றியும் மலர்ந்துள்ளதைக் காட்டி அது கார்காலமே என்று தலைவி தோழியிடம் மறுத்துக் கூறியது.

இது ‘வேந்தற் குற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 325)

மறை -

{Entry: J10__490}

பிறரால் அறிப்படாத பொருளுடைய வேதம் மறை எனப்பட்டது போல, பிறரால் அறியப்படாத தலைவன் தலைவியரின் களவுக்கூட்டம் ‘மறை’ எனப்பட்டது. ‘மறைஅலர் ஆகி மன்றத் தஃதே’ (குறுந். 97) எனக் கள வொழுக்கம் ‘மறை’ எனப்பட்டவாறு. (தொ. பொ. 92 நச்)

மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் -

{Entry: J10__491}

தலைவன் கொணர்ந்த கையுறையைத் தோழி ஏலாமல் பல வகைக் காரணங்களைப் படைத்து மொழியவே, தலைவன், அவள் காலம் தாழ்ப்பதனைப் பொறாது, அவளை இன்றியே தலைவியைப் பெறக் கூடிய வாய்ப்புப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க, அப்பொழுது தோழி அவனிடம், “நீ என்னை மறைத்த காரியம் இனி நினக்கு என்னையின்றி நடவாது” என்று நகையாடிக் கூறுதல்.

இதனைப் ‘பாங்கி என்னை மறைத்தபின் எளிதென நகுதல்’ என்றும் கூறுப. (ந.அ. 106)

இது ‘சேட்படை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 105)

மறைந்த ஒழுக்கம் -

{Entry: J10__492}

தலைவியின் பெற்றோர் அவளைத் தலைவற்கு முறையாக மணம் செய்துவைப்பதன் முன்னர், தலைவன் விதி கூட்டி வைக்கத் தோழியின் உதவியை மேற்கொண்டு, தலைவியொடு நடத்தும் களவொழுக்கம். (தொ. பொ. 135 நச்.)

மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

{Entry: J10__493}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் ஆயத்தொடு போகின்ற தலைவியைத் தான் மறைந்து கண்ட தலைவன், அதற்கு முன் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் உட்கொண்டு மகிழ்ச்சியுடன் தன் மனத்தை நோக்கி, “நெஞ்சே! யான் தன்னைக் காணுந் தோறும் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சியைப் பெரிதாக வெளிக் காட்டாது, தன் நெற்றியில் வியர்வை தோன்ற நாணத்தால் தலைகவிழ்ந்து, தனக்கு வந்த புன்சிரிப்பை வெளிப்படுத்தாது, முகத்தின் பொலிவுக்குள்ளேயே மறைத்துக்கொண்ட தலைவியின் மனம் என்னை நோக்கிச் சிதைந்த தன்மையை நீ உள்ளபடி அறிந்தாயல்லை. அதனை யானே உண்மையாக அறிந்து இயற்கைப் புணர்ச்சியை மேற்கொண்டேன்” என்றாற் போலக் கூறுதல். (தொ. பொ. 101 நச்.)

மறையோர் ஆறு -

{Entry: J10__494}

கந்திருவ வழக்கம்; கந்திருவருக்கு மறையோர் ஓதிய நெறி அதுவாகலின் ‘ மறையோர் ஆறு’ என்றார். எனவே, பாங்க னும் தோழியும் உணர்ந்துழியும் களவு என்றல் மறையோர் வழக்கு. (தொ.செய். 186 நச்.)

`மறையோர் தேஎத்து மன்றல் எட்டு’ -

{Entry: J10__495}

அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள் வினை, இராக்கதம், பேய்நிலை என மறையுள் கூறப்பட்ட மன்றல் எட்டாம். அவை பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் எனவும் வழங்கப்பெறும்.

மறையில் கூறப்படும் மன்றல் என்னாது மறையோரால் கொள்ளப்படும் மன்றல் இவை என்பது. இக்காலத்து இம் மணங்கள் பற்றிய குறிப்பு வேதத்துள் காலப்பட்டிலது; தரும சாத்திரங்களிலும் மனுஸ்மிருதியிலுமே உள்ளது. (இறை. அ. 1; தொ. பொ. 92 நச்.)

கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கரணமொடு புணரக் கொடுப்பவே வரைந்து கொள்வது திருமண மன்றல்.

கிழவன் கிழத்தியைக் கொடுப்போரின்றிக் கரணமொடு புணரத் தன்மனை நோக்கிக் கழிந்தவிடத்து இடைச்சுரத்துக் கற்பொடு புணர்ந்த கவ்வையான் நிகழ்வது கடிமணமன்றல்.

பாலது ஆணையான் நிகழ்வது தெய்வமணமன்றல். மற்ற துணைக்காரணமும் நிமித்த காரணமுமின்றி ஊழாகிய முதற்காரணம் பற்றியே நிகழுமிது யாழோர் கூட்டம் எனச் சிறப்பிக்கப்பட்டது.

குலவழக்கும் குடிமரபும் பற்றிப் பிறப்புரிமையான் வரைந்து கொள்வது முறைமணமன்றல்.

ஏறு தழுவல் முதலாய வீறுபற்றிக் கிழத்தியைப் பரிசாகப் பெற்று வரைவது அருமணமன்றல்.

புறத்திணை ஒழுகலாற்றின்கண் பகைவரை வென்று அவர்தம் மகளிரை உரிமை பூண்டு வரையுமது பெருமணமன்றல்.

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கரணமின்றி நிகழ்வது சிறுமணமன்றல்.

இவற்றை முறையே கற். 1, கற். 2, களவு. 50, கள-1, கற். 32, முல்லைக்கலி - 4, புறத். 19, முல்லைக்கலி. 12 இவற்றுள் காண்க.

(தொ. கள. 1 ச. பால.)

மன்றல் எட்டு -

{Entry: J10__496}

அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம் அரும்பொருள்வினை, வலிநிலை, பேய்நிலை என்பன. (இறை. அ. உரை (1)

இவற்றை முறையே பிர(hம்)மம், பிராசாபத்தியம், ஆரிடம் தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், என்றும் வழங்குவர். (தொ. பொ. 92 நச்.)

மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -

{Entry: J10__497}

‘மணவினைக்கு வந்த செவிலிக்கு...........’ கூறுதல் காண்க.

(ந. அ. 203)

மன்னர் பாங்கின் பின்னோர் -

{Entry: J10__498}

அரசரைச்சார்ந்து வாழும் இயல்பினையுடைய உழுவித் துண்ணும் வேளாளர். தன்னைச் சார்ந்து வாழும் அவர்களை அரசன் பகைவர்மேலும், நாடு காத்தல்மேலும் சந்து செய்வித்தல்மேலும், பொருள்வருவாய்மேலும் ஏவுவான்.

அவர்கள் மண்டிலங்களை ஆள்வோரும் தானைத் தலைவரு மாய், சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமும் கிழாரும் முதலிய பகுதிகளில் தோன்றி, வேள் எனவும் அரசு எனவும் சிறப்புப் பட்டம் பூண்டோரும் குறுநில மன்னர் குடிகளில் பிறந்தோரும் ஆகிய பலராய், முடியுடை மன்னனுக்குத் தம் மகளை மணம்செய்து கொடுத்தற்குத் தகுதியுடைய வேளாளர்கள். (தொ. பொ. 30 நச்.)

மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல் -

{Entry: J10__499}

தலைவி தலைவனை நினைந்து ஏங்குதல்.

“உன்னை விட்டுப் பிரியேன்” என்று சொல்லிப் போன என் உயிர் போன்ற காதலன், என்னைக் கூடி இன்புற விழைந்து மீண்டும் இவ்விடம் வருவானோ?” என்ற தலைவி கூற்று.

இது களவியலில் ‘இடந்தலைப் பாடு’ எனும் தொகுதிகண்ண தொரு கூற்று. (கோவை. 37; இ.வி. 503 உரை)

மன்னிய வகுத்தல் -

{Entry: J10__500}

தலைவன் குறிப்பிட்ட இடத்துத் தலைவியைக் காணச் சென்ற பாங்கன் அவளைக் கண்டு தலைவனிடம் நிலைபெற்ற ஆற்றலை வியந்து கூறல்.

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (த. நெ. வி. 16)

மன்னிய வினை -

{Entry: J10__501}

தலைவனும் தலைவியும், நிலையாக் காமப் பொய்யொழுக் கத்தை விலக்கி, என்றும் குன்றாது சந்தித்து இயற்கைப் புணர்ச்சி நிகழ்த்திக் களவில் தொடரும் காதற் கூட்டம், கந்தருவம் போல நேர்ந்தவழிப் புணர்ந்து தீர்ந்தவழி மறக்கும் திறத்தது அன்றாம். “இருவயின் ஒத்துப் பிரியாது கூடி வாழ்தல், அன்றேல் தரியாது இறந்து முடிதல்” எனும் துணி வுடையார் இருபாலவரும் ஆகிய ஒருவரை ஒருவர் இன்றி யமையாக் காதலுடையார்க்கே உரியதாதலின், அத்தலைவன் தலைவியரது காதற் களவொழுக்கம் ‘மன்னிய வினை’ எனப் பட்டது.

அஃதாவது மன்பதை மறையாது நிலைபெறுதற்குக் காரண மான காம ஒழுக்கம். (தொ. மெய்ப். 19 பாரதி)

மனத்தொடு நேர்தல் -

{Entry: J10__502}

களவுக்காலத்தில் தோழியைக் குறைநயந்த தலைவன் ஆற்றாமையால் மடலேறத் துணிந்த செய்தியைத் தோழி வன்மொழியாகக் கூறக் கேட்ட தலைவி, அதற்குத்தான் ஆற்றாளாய்த் தலைவனைக்காண வேண்டித் தன் மனத் தொடு கூறித் தலைவனுடைய குறை நயப்பை ஏற்றது.

இது ‘குறை நயப்புக் கூறல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 89)

மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

{Entry: J10__503}

“தோழி! கெண்டைமீன் ஒருமுறை பாய்ந்த துணையானே ஆம்பலிதழ் அவிழ்ந்து மலரும் நாடனாகிய நம் தலைவன், ஏதோ ஒருமுறை எதிர்பாராத வகையில் தன் மனைக்கண் செல்ல, அவன் வருகையால் தலைவி மகிழ்ந்ததை நிலை யானதொரு செயல் என்று நினைத்து, உண்மை அறியாத வர்கள், நாம் அழும்படி நம்மை நீத்துத் தலைவன் தலைவி யில்லத்திலேயே நிலையாகத் தங்கத் தொடங்கிவிட்டான் என்ற கூறுகிறார்கள். இவர்களது மடமையை என்என்பது?” என்ற பரத்தை கூற்று. (ஐங். 40)

மனைச்செல் பரத்தையை மகிழ்ந்து எதிர்கோடல் -

{Entry: J10__504}

தன் இல்லத்திற்கு வரும் தலைவனுடைய காமக்கிழத்தியாகிய பரத்தையைத் தலைவி மகிழ்வொடு வரவேற்றல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் -

{Entry: J10__505}

கற்புக் காலத்தில் தலைவன் பரத்தையிற் பிரிந்து பரத்தை இல்லத்தானாக, அப்பொழுது தலைவி விடுத்த செவ்வணி கண்டு, பரத்தையில்லம் நீத்துத் தலைவிமனைக்கண் அவன் புகவே, “முன்பெல்லாம் இரவும் பகலும் வாயில் பெறாது நின்று வாடும் இக்காவலையுடைய வாயிலை வாயிலே இன்றித் தலைவன் இவ்வளவு எளிமையாக அடைந்து விட்டான். கற்புக்கடன் பூண்ட தலைவியருள் தம் கடமையை நினைத்து அடங்காதவர் ஒருவரும் இலர்!” எனத் தலைவியின் வாயிலோர் தம்முள் கூறியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 362)

மனைமருட்சி -

{Entry: J10__506}

தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல, அவ்வுடன்போக்கினை அறிந்த நற்றாய் மனமகிழ்வோடு அஃது அறம் என்று கருதியும், தனியே தன் மகள் கொடிய பாலைவழியில் சென்றது கண்டு ஆற்றாளாய்த் தன் மகளுடைய கண்கள் பாலையின் வெப்பத்தால் சிவந்து ஒளி மழுங்கிச் சுழலுமே என்றும்,

தலைவியின் ஆயமும் பயிலிடமும் கிளி முதலியனவும் கண்டு துயரம் தாங்காது, “என் மகள் குற்ற மற்றவள்; அவள் கொண்ட காமம் வியப்புடையது; அவள் காரணமாக முன்னமேயே அயலார் கூறும் பழிமொழியை அறிந்திருந்தும் அறியாதவளைப் போல இருந்தொழிந்த யானே வழுவுடை யேன்” என்றும் வருந்தியும் மனையின்கண் இருந்து மருண்டு கூறுதல் போல்வன. (நற். 66, 143)

மனையவர் மகிழ்தல் -

{Entry: J10__507}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு இல்லம் வர, அவனுக்காகத் தோழி தலைவியிடம் வாயில் வேண்ட, தலைவி மகிழ்ச்சியுறுதலுக்கு மாறாகக் கடுஞ்சினங் கொள்ள, அவள் குவளை போன்ற கண்கள் வெகுளியால் செங்கழுநீர் மலர்கள் போலச் சிவக்க, அது கண்டு மனையவர், “இத்தலைவி யின் வெகுட்சி தலைவனுடைய புறத்தொழுக்கத்தை இனி நீக்கும்” எனத் தம்முள் மகிழ்ந்து கூறுவது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 384)

`மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்‘ -

{Entry: J10__508}

காமம் தலைவற்கு மிகுந்திருப்பத் தலைவி அவனிடம் அப்போது ஊடல் கொண்டவழியும், புலவிக் காலத்தும், தலைவியின் உயர்வும் தலைவன் அவளைப் பணிந்து அவள் கூட்டத்திற்கு உடன்படுதலை வேண்டி ஏங்கி நிற்றலும் நிகழும். (தொ. பொ. 227 நச்.)

மனைவி போல அல்லவை மொழிதல் -

{Entry: J10__509}

பாங்கி மதி யுடன்பாட்டின்கண் தலைவன் தனக்குத் தலைவி உரிமையுடையவள் போலப் புதிதாக வந்தவர் கூறத்தகாத சொற்களைத் தோழியிடம் கூறி உரையாடுதல். (குறிஞ்சி நடையியல்). (வீ. சோ. 92 உரை மேற்.)

மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் -

{Entry: J10__510}

களவு ஒழுகித் தலைவியை வரைந்து கற்புக்கடம் பூணும் இல்லறத்தைப் பல்லாண்டு நல்லறமாக நிகழ்த்தி நன்மக் களைப் பயந்து அவர்களை நல்வழிப்படுத்தபின் ஐந்திணை ஒழுக்கமாகிய காமஇன்பத்தில் பற்றற்றுத் தலைவியும் தலைவனும் ஒரு காட்டினை அடைந்து தம்முயிர்க்கு உறுதி தரும் நல்ல செயல்களில் ஈடுபட்டுத் தவம்செய்து வீடு பெற முயலுதல், ஐந்திணைக் காமத்துக்கு அப்பாற்பட்ட உயிர்க் காமம் ஆதலின் அஃது ஐந்திணைகளுள் அடங்காது, உடற்காமத்தை வெறுத்தமையால் பொருந்தாக் காமம் என்றதன் கூற்றாகிய பெருந்திணைத் துறைகளுள் ஒன்றாகும் என்று ஒரு சார் ஆசிரியர் கூறுவர். இதுவும் அகப்பொருட் பெருந்திணை. (ந. அ. 243)

`மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -

{Entry: J10__511}

உடன்போய்த் தலைவனுடன் இல்லறம் நடத்தி நன்மகப் பெற்ற பின் செய்தி சொல்லி யனுப்பிய தலைவியைத் தலைவி தமர் சென்று தம்மூர்க்கு அழைத்து வருதல் (பாலை நடையியல்) (வீ. சோ. 93 உரை மேற்.)

மாயப்புணர்ச்சி -

{Entry: J10__512}

‘களவெனப் படுவது.............. மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்’; காமன் போன்ற தலைவன், அழகிய மட நல்லாளொடு வேறு மலைச்சாரல் முதலிய மறைவான இடமெய்தி, ஆயமும் தோழியும் பொருந்தியறியாதவாறாக, உள்ளமும் மெய்யும் உறுமாறு களவினால் கூடும் கூட்டம். (தொ. பொ. 92 நச். உரை)

மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

{Entry: J10__513}

“திருமகளைப் போலப் பேணி நான் வளர்த்த என் ஒரே ஒரு நல்ல மகளைத் திருமால் உடன்கொண்டு போய்விட்டான்! என் இல்லமே வெறுமெனக் கிடக்கிறது. யசோதை என் மகளாகிய தன் மருமகளை அன்பொடு நடத்துவாளோ? ஒன்றும் அறியேனாயுள்ளேன்” என்ற தாய் கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (பெரியாழ். 3 : 8 : 1, 4)

மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -

{Entry: J10__514}

ஒரு தாய் தன் மகள் கண்ணன்மீது கொண்ட காதலால் படும் பாட்டினை எடுத்துரைத்தல்.

“இன்னும் பெண்மை முழுமலர்ச்சியும் பெறாத என்பேதைப் பெண் தன் உடம்பில் புழுதி படிய, கண்ணன்அழகில் ஈடுபட்டு அவன்பால் காதலும் மிகக்கொண்டு, தன் விளை யாட்டுக்களிலும் அவன்பெயரைக் கூவி கூவிக் கலங்குகி றாள்; என் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்ணனைக் காணப் புறப்படுகிறாள்” என்ற கூற்று.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (பெரியாழ். 3 : 7)

மாயோன் -

{Entry: J10__515}

கருநிறக் கடவுளாம் திருமாலாகிய முல்லைநிலக் கடவுள். காடும் காடு சார்ந்த இடமும் ஆகிய முல்லைநிலத்தே வாழும் இடையர்கள், பலவகைப் பசுக்களும் நன்கு பால்சுரத்தற்காகத் “திருமால், பாலும் நெய்யும் பயக்கும் பசுக்கள் பலவற்றையும் காப்பானாக!” என்று குரவைக் கூத்து நிகழ்த்திப் பலவகை யுணவுகளை மாயோனுக்குப் படைத்தலின், முல்லைநில மக்களுக்கு அப்பெருமானது அருள் வெளிப்படும்.

மாயோன் மகனாகிய காமனும் அந்நிலக் கடவுளாகக் கொள்ளப்படும்.

திருமால் அருளால் பசுவும் எருமையும் ஆடும் வளமாக வாழும் என்பது. (இம் மூன்றினத்தையும் குறிக்கும் சொல் ‘ஆ’ என்பது.) (தொ. பொ. 5 நச்.)

மாயோனுக்குக் காடு உரிமையாதல் -

{Entry: J10__516}

முல்லைநிலமாகிய காட்டுப் பகுதியில் ஆடுமாடு மேய்க்கும் ஆயர்கள் பசுக்கள் பலவும் பால்வளம் சுரத்தற்கு, “ஆகுதி பயக்கும் ஆபல காக்க!” என்று குரவைக் கூத்தாடித் திருமா லுக்கு நிவேதனம் கொடுத்தலின், காட்டுநிலமாகிய முல்லை நிலமக்களுக்குத் திருமால் அருள்செய்வான் என்பது. (தொ. பொ. 5 நச்.)

மாவிரதியரை வினாதல் -

{Entry: J10__517}

உடன்போக்குச் சென்ற தலைவியை மீட்டுவரப் பாலைப் பகுதிக்குச் சென்ற செவிலி வழியில் சிவவேடத்துடன் வருவோரை வினவுதல்.

“தூய்மையான திருநீற்றுப் பையினையும், எலும்புஅணியை யும், சடையினையும், வெண்ணீறுபூசிய மேனியையும் உடைய சான்றோர்களே! ஒரு பெண் தன் பின்னே வரத் தலைவ னொருவன் முன்னே செல்லுதலைக் கண்டீரோ?” (கோவை. 242) என்றாற்போலச் செவிலி சுரத்திடை வினவுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘விரதியரை வினாவுதல்’
என்னும் (242)

இது வரைவியலில், ‘கற்பொடு புணர்ந்த கவ்வைக்கண்ண தொரு கூற்று!’ (இ. வி. 538)

`மாறில் ஆண்மையில் சொல்லிய மொழி’ -

{Entry: J10__518}

ஒருவனைச் ‘சிங்கம் வந்தது’ என்றாற்போலக் கூறுவது.

(தொ. பொ. 240 இள.)

தலைவனுடைய, குறைசொல்லமுடியாத ஆண்மைத் தன்மையிடத்தே பழியுண்டாகிவிட்டது என,

‘இதுவும் ஓர் ஊராண்மைக்(கு) ஒத்த படிறுடைத்து’ (கலி. 89) “ஊரையே ஆளும் தன்மை என்ற போர்வையில் நிகழ்த்தும் வஞ்சகச் செயல் இஃது” என்றாற் போலக் கூறுவது.

(தொ. பொ. 244 நச்.)

மாறுகோளில்லாக் குறிப்பு -

{Entry: J10__519}

தலைவியின் உடல் வேறுபாடும் உள்ள வேறுபாடும் கண்ட தாய் பெரியோரை வினவ, அவர்கள் அது தெய்வக் குற்றமாக இருக்கலாம் என்று கூற, அக்குற்றம் போக்கும் கழுவாயாக முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்துவதற்காக வேலனை அழைக்க, அவன் வெறியாடலைத் தொடங்கு மிடத்தே தோழி அவனிடம், “நீ இடும் இப்பலிகளை என்தலைவிக் குரிய தலைவன் ஏற்றுக்கொள்வானாயின் தக்கது“(குறுந். 362) என்றும், ஆவேசித்து வந்த முருகனாகிய தெய்வம் கேட்ப, “முருகனே! இத்தலைவியினது நோய் தலைவனது மார்பி னால் வந்தது என்பதை அறிந்தும், வேலனைத் திருப்திப்படுத்த வெறியாட்டிடத்துக்கு வந்த நீ ஒருதலையாக அறியாமை யுடையாய்!” (நற். 34) என்றும் கூறக் கேட்ட தாய், தோழி தலைவியின் நோய்க்காரணத்தைக் குறிப்பால் அறிவித்தலை உணர்ந்து, தோழியை வினவ, தோழி முறைப்படி அறத்தொடு நிற்பாள். தோழி தான் அறத்தொடு நிற்பதற்குத் தாய் தன்னை வினவுமாறு முதற்கண் கூறிய குறிப்புமொழி மாறு கோளில்லாக் குறிப்பாகும். (இறை. அ. 14)

மாறுகோளில்லா மொழி -

{Entry: J10__520}

மாறுபாடில்லாத சொற்கள்.

தோழி அறத்தொடு நிற்கும்போது, தாய் அறிவினொடும் தலைமகன் பெருமையொடும் தலைமகள் கற்பினொடும் தனது காவலொடும் நாணினொடும் உலகியலொடும் மாறுகோள் இல்லாத சொற்களைச் சொல்லி அறத்தொடு நிற்பாள் என்பது.

தலைவியின் உடல் வேறுபாடு தெய்வத்தானாயிற்று என்று கருதித் தாய் வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்க, அது கண்ட தோழி தாய்க்குக் கீழ்க்கண்டவாறு அறத்தொடு நிற்பாள்.

“தாயே! யாங்கள் பேதையராயிருந்த காலத்து ஒரு நாள் எங்களுக்கு அழகு செய்து எங்களை விளையாடி வருமாறு சொல்லி வெளியே அனுப்பினாய். அப்பொழுது இளைஞன் ஒருவன் இரண்டு சுனைக்குவளைப்பூக்களைக் கொண்டு அவ்வழியே வந்தான். அவனை நோக்கித் தலைவி அப் பூக்களைத் தன்பாவைக்கு அணியுமாறு தரவேண்ட, அவனும் பிறிது சிந்தியாது கொடுத்து நீங்கினான். அன்று நிகழ்ந்த செய்தியை இன்று மனங்கொண்டு தனக்குப் பூக் கொடுத்த வனைத் தவிர வேறொருத்தனைத் தான் மணந்தால் தன் குடும்பத்துக்கு மாசு நிகழ்ந்துவிடுமே என்று நினைத்துத் தலைவி மனமும் உடலும் வேறுபட்டுள்ளாள்” என்பாள்.

விளையாடி வருமாறு இருவரையும் தாய் அனுப்பியதனால், இது தாய் அறிவினொடு மாறுகொள்ளாது.

அக்காலத்து நிகழ்ந்ததனை இக்காலத்தும் நினைந்தமையின் தலைவி பெருமையொடு மாறுகொள்ளாது;

பூக்கொடுத்தவனைத் தவிர மற்றொருவனை மணத்தல் குடும்பத்துக்கு மாசு என்று தலைவி கருதுகின்றமையின், அவள் கற்பினொடு மாறு கொள்ளாது;

இருவரும் இருந்த நிலைமைக்கண் தலைவி பூக்கொண்டாள் என்றமையின் தோழி காவலொடு மாறுகொள்ளாது;

இது பேதைப்பருவத்து நிகழ்ந்தது என்றமையின், தலைவி நாணத்தொடு மாறுகொள்ளாது;

‘உற்றார்க்கு உரியார் பொற்றொடி மகளிர்’ எனவும், ‘கொடுத் தார்க்கு உரியார் கொண்டார்’ எனவும் தலைவி கருதுதலின், இஃது உலகியலொடு மாறுகொள்ளாததாயிற்று. (இறை. அ. 14 உரை)

மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

{Entry: J10__521}

இந்நிலவுலகத்து மகளிர் தேவர்களைக் காதலித்துக் கூறிய செய்தி.

அஃதாவது “கருவரி படர்ந்த என் கண்கள் சிவப்பேற இராப் பொழுதில் என்மார்பில் தான் அணிந்த பூணூலினது வடுப் புலனாகுமாறு தழுவி என் நெஞ்சத்தின் அழகினைச் சிறிதும் ஒழியாமல் நுகர்ந்த இறைவனுடைய ஊர் பாசூராம்” என்றல் போன்று, தலைவி தான் மனத்தான் இறைவனைக் கூடிய இன்பநுகர்ச்சியை எடுத்தியம்பும் பாடாண்துறை.

இது ‘பூதலத்து அரிவையர் பொருவில் வானவரைக், காதலின் நயந்த கடவுட் பக்கம்’ என்று இலக்கணவிளக்கத்துள் குறிக்கப்பட்டுள்ளது. (இ. வி. 617 - 47)

`மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -

{Entry: J10__522}

கரை கடந்த காமத்தால் தன்னை விரும்பாதவளை வலியப் பற்றிக் கூடுமிடத்தே தலைவன் கூறுதல். இது பெரும்பாலும் தலைமக்களிடத்தே நிகழது; ஒருவரிடம் பணியாற்றி ஊதியம் பெற்று வாழும் அடியவர்களிடமே நிகழும்.

அடியவனொருவன் அடித்தியொருத்தியை வலியப் பற்றிய போது அவர்களிடையே கீழ்க்காணும் உரையாடல் நிகழ் கிறது.

“ஏ! இவனுக்கு நாணம் என்பதே இல்லையே. தன்னைக் கூட விரும்பாதவரையும் புணர்ச்சிவேட்கையால் வலிதிற் பற்றி யிழுக்கின்றானே!“

“பூங்கொத்துக்கள் மிக்க கொடி போல்வாய்! உனக்கு என் னொடு கூடுதற்குரிய உணர்ச்சி பொருந்தியுள்ள தென்றோ, பொருந்தவில்லையென்றோ நீதான் அறிந்துகொள்ள வேண் டுமேயன்றி யான் அறியமாட்டேன். உன்னைத் தழுவுதல் எனக்கு இனிதாய் இருந்தது; ஆதலின் தழுவினேன்!“

“தோழ! தனக்கு இனிதாக இருக்கிறது என்று பிறருக்குத் தீங்கு செய்தல் நல்ல செயலாகுமா?“

“பெண்ணே! உனது அறிவுடைய வினாவினை மறந்து யான் கூறுவதனைக் கேள் : நீர் வேட்கையுற்றவர்கள் தமக்கு நீர் குடித்தல் இனிதாயிருக்கின்றது என்று கருதி நீர் பருகுகின் றார்களா? அல்லது, தாம் பருகுவது நீருக்கு இனிதாயிருக்கும் என்ற கருதிப் பருகுகின்றார்களா?”

இவ்வாறு வினவி அவளைத் தன் வயமாக்கினான்
அவன் (கலி. 62)

`மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -

{Entry: J10__523}

கழிகாமத்தால், தன்னை விரும்பாதவளை வலியக் கூடும் தலைவனைக் கண்டார் கூறுவது. (தொ. பொ. 51 நச்.)

இராசமாபுரத்தில் கட்டியங்காரன் ஆட்சி செய்தபோது, வேத்தியல் நாடகஅரங்கில் நாட்டியம் ஆடுவதற்குச் சீவக னால் நன்கு அலங்கரிக்கப்பட்ட அனங்கமாலை என்ற மெல்லியல்நல்லாள் நாட்டியமாடி முடிந்த பின்னர், அவள் சீவகனிடத்துக் காதல் கொண்டிருப்பதனை அறிந்த கட்டியங் காரன் அவளை வலிதின் கைப்பற்றி, “தேன் உடைந்து ஒழுகும் அழகிய தாமரைப்பூவிடத்தே, பிணத்தில் அமரும் காக்கை, வந்து அதன் இதழ்கள் ஒடிய அதனைச் சிதைத்தாற் போலத் தழுவி அவள் முல்லையின் தாது உதிருமாறு அதனைப் பறித்திட்டான் (முல்லை - கற்பு) என்ற சீவகசிந்தாமணிப் பாடல் (686) மிக்க காமத்து மிடல்பற்றிப் பிறர் கூறும் கூற்றாக அமைவது.

மிக்க பொருள் -

{Entry: J10__524}

அறம் பொருள் இன்பம் என்பனவற்றில் தலைவிக்கு நாணம் அழியாத வகையில் நல்வழிக்கண் அமையும் செய்திகள்.

(தொ. பொ. 215 இள.)

அகப்பொருளுக்கு, அறத்தின் மாறுபட்டதேனும் பயன்பட வரும் மேம்பட்ட செய்தி. (219 நச்.)

மிக்கோர் ஏதுக்காட்டல் -

{Entry: J10__525}

சுரத்திடை உடன்போக்கில் சென்ற தலைவனையும் தலைவி யையும் கண்டதுண்டோ என்ற வினவிய செவிலிக்கு, முக் கோற்பகவர் காரணம் காட்டி அவளைத் தெருட்டுதல்.

“தாயே! ஒத்த காதலையுடைய தலைவனும் தலைவியும் அவ்வாறு செல்வதும் பின் வரைந்து கொள்வதும் உலகியலே காண். சந்தனமும் முத்தும் சங்கும் தாம் பிறந்த இடத்தில் பயன்படாது, விரும்பியவரிடத்தேயே சென்று அவருடற்கு அழகு தரும். நீ அதற்காக வருந்துதல் வேண்டா” என்பது போன்ற கூற்று. (கோவை. 248)

இதனைத் திருக்கோவையார் ‘உலகியல்பு உரைத்தல்’ என்னும் (248). (ந. அ. 188)

மிகுத்துரைத்து ஊடல் -

{Entry: J10__526}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் கலவி கருதிப் புலந்த தலைவி, “நீர் விழுமிய நாட்டில் விழுமிய குடியிலுள்ளீர்! எம் போல்வாரிடத்து இவ்வாறு கூட விரும்புதல் நுமக்கு விழுமியதன்று” என்ற தலைவனை உயர்த்திக் கூறி ஊடுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 393)

மிகுதியிற் கொண்டல் -

{Entry: J10__527}

கொண்டல் - கோடல். இரவுக்குறிக்கண் தலைவன், தலைவி நாட்டவர் பெரும்பாலும் அணியும் ஆடை, சூடும்பூ, பூசும் சந்தனம் இவற்றைத் தான் அணிந்துகொண்டு தலைவியைக் காண வருதல் (குறிஞ்சி நடையியல்) (கொண்டல் : பு.வெ.மா. 179) (வீ. சோ. 92 உரை மேற்)

`மின்னிடை அமளியில் வெந்நிட மெலிதல்’ -

{Entry: J10__528}

தலைவி படுக்கையில் திரும்பிப் படுத்தது கண்டு தலைவன் வருந்துதல்.

பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவன் செயல் கண்டு ஊடல் கொண்ட தலைவி, விருந்தினர் வரவே தன் ஊடலை வெளிக் காட்டாது விருந்தினரை உபசரித்து விடுத்த பின்னர், பாய லில் தலைவனை நேர்முகமாகக் காண விரும்பாது அவன் முகத்தெதிர் தன்முதுகுப் புறம் காட்டித் திரும்பிப் படுத்துக் கொண்டாளாக, தலைவன், “பாற்கடல் கடைந்தபோது விடம் முன்னிட அமுதம் பின்னிட்டது போல, இன்று படுக்கைக்கண் தலைவிகூந்தல் முன்னிட்டுத் தோன்ற, அவள் இதழ் முதலியன பின்னிட்டிருக்கின்றனவே!” (திருப்பதிக். 490) என்று கூறி வருந்துதல்.

இஃது ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (மா. அக. 103)

மின்னிடை வருத்தம் பாங்கி வினாதல் -

{Entry: J10__529}

தலைவியது வருத்தத்தின் காரணத்தைத் தோழி வினாவுதல்.

பகற்குறி இரவுக்குறி இடையீடுகளால் தலைவனைக் காணும் பொழுதினும் காணாப்பொழுது மிகுதியாயிருத்தலின், அவனை மணந்து என்றும் பிரியாத கற்பறவாழ்வு வாழவேண்டும் என்ற வேட்கையால் தலைவி வருந்தி நிற்க, அவளைக் கண்ட தோழி, “நின்உடல் வாடியுள்ளதே. முகம் கன்றியுள்ளதே. நின்மனத்திலும் சோர்வுண்டு போலும். இதன் காரணம் என்ன? பூப்பறித்த களைப்பா? சுனையில் நெடு நேரம் குளித்ததன் விளைவா?” (திருப்பதிக். 255) என்றாற் போல வினவுதல்.

இது ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அக. 56)

மீட்சி -

{Entry: J10__530}

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்றனுள் இறுதிக் கண்ணது; இக்கிளவியின் வகை நான்காவன :

1. தெளித்தல் - (அ) செவிலி நற்றாய்க்கு மகள் நெடுந்தூரம் சென்றுவிட்டதைக் கூறித் தெளிவித்தலும் (ஆ) தலைவன் மீண்டு வந்து தலைவியின் ஊர் வந்துவிட்டதைச் சொல்லித் தெளிவித்தலும் ஆம்.

2. மகிழ்ச்சி - (அ) வழியில் தலைவிக்கு முன்னே போவோர் சென்று பாங்கியிடம் தலைவி வருவதைக் கூற, அதனால் பாங்கியர் மகிழ்தலும் (ஆ) பாங்கியர் சென்று நற்றாய்க்குக் கூற அவள் மகிழ்தலும் ஆம்.

3. விளித்தல் - “மீளும் தலைவன், நம்மகளை நம் இல்லத்துக்கு அழைத்து வருவானா அல்லது தன்மனைக்கே. அழைத்துப் போவானா” என நற்றாய் வேலனைக் குறிகேட்டல்.

4. செப்பல் - முன் சென்றோர் தலைவியின் வருகையைக் கூறுதல். (ந. அ. 190)

`மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

{Entry: J10__531}

செவிலி, தலைவி தலைவனுடன் அவனுடைய ஊருக்குச் சென்றுவிட்ட செய்தியை நற்றாய்க்குக் கூறல்.

தலைவனுடன் உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிக் காணாது மனை திரும்பிய செவிலி நற்றாயிடம், “நம்மகளும் அக்கதிர் வேலவனும் பாலையைக் கடந்து (அவன்) உறவினர் ஊரினை அடைந்துவிட்டனர்” (திருப்பதிக். 437) என்று கூறுதல்.

இது ‘செவிலி பின் தேடிச்சென்று மீடல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (மா. அக. 88)

மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -

{Entry: J10__532}

பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் தான் சென்ற காரியம் முடியப்பெற்று மீண்டு வரும்போது தேர்ப்பாக னிடம் கூறுதல்.

“பாக! இக் கார்காலத்தின் மாலைப்போதினைக் கண்டு தலைவி என் பிரிவைத் தாங்க முடியாமல் துயருறுவாள். விரைவில் தேரினைச் செலுத்துக” (ஐங் 486) என்பது போன்ற கூற்று.

இது களவியலுள் ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -

{Entry: J10__533}

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்று வினைமுடித்து மீண்டு வரும்போது, வானில் திரண்டெழுந்த கார்மேகங்களைக் கண்டு தன் ஆற்றாமையால் தலைவன் அவற்றுடன் கூறுவான் போலக் கூறுதல்.

” மேகங்களே! என்னைக் காணாமல், கார்ப்பருவமும் கடுகி வந்ததை ஆற்றாமல், மேனியெல்லாம் பசலை பரவத்துயருற்று வாடும் என் தலைவிக்கு என் வருகையை அறிவியுங்கள்” (தஞ்சை. கோ. 275) என்பது போன்ற கூற்று.

இது களவியலுள், ‘வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

மீள வுரைத்தல் -

{Entry: J10__534}

எதிர்வருவோரிடம் செவிலி உடன்போக்கு நிகழ்த்திய தன்மகளையும் அவள் காதலனையும் பற்றி வினவ, அவர்கள், “அவ்விருவரும் துன்பமின்றித் தம் ஊர் சேர்ந்திருப்பர். இனிச் செல்வது தக்கது அன்று; நின் ஊர் நோக்கி மீள்க” என்று கூறுதல்.

இதனைக் ‘கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்’(ந. அ. 188) என்று கூறுப.

இது திருக்கோவையாருள் ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 247)

முகம் கண்டு மகிழ்தல் -

{Entry: J10__535}

இரவுக்குறி யிறுதியில் தலைவியின் முகமலர்ச்சி கண்ட தலைவன் தானும் தலைவியும் சந்திரனும் குமுதமும் போலும் இயல்பினராக வுள்ளமையைப் புகழ்ந்து மகிழ்தல்.

இதனை ஏனோர் ‘புகழ்தல்’ என்பதன்கண் அடக்குப.

(ந. அ. 158)

இஃது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 166)

முகம்புகு கிளவி (1) -

{Entry: J10__536}

பாங்கியும் தலைவியும் சேர்ந்திருந்தபோது பொழிலிடைச் சென்ற தலைவன் அவர்களொடு வாய்ப்புக் கருதி உரை யாடலைத் தொடங்குதல்.

“செல்வியர்களே! நீங்கள் எரியவிடும் நெருப்பில் உலையில் ஏற்றிய மணற்சோறு வேகாது. என் காமக்கனல் இட்டால் மலைகூட வெந்து குழைந்துவிடும். நீங்கள் இம்முத்துக்களை உலையிலிட்டுக் குற்றுவது, அவை உங்கள் பற்களுக்கு ஒப்புமையால் பகையாகிய காரணத்தாலோ எனவும் கூறுங்கள். உங்கள் உடம்பின் பல பாகங்களையும் தழுவி உம் கையில் அமர்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்ற இப்பந்து மிக்க நல்வினையுடையது!“என்றாற்போலத் தலைவன் தன் வேட்கையைப் புலப்படுத்தும் வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டு, தலைவி தோழி இருவரிடமும் உரையாடுதல்.

இது ‘பாங்கிமதியுடன்பாடு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 87-89)

முகம்புகு கிளவி (2)

{Entry: J10__537}

தலைவியின் உடன்பாட்டை யுணர்ந்த தோழி தொடர்ந்து பேசுதல். மதியுடம்பட்டதோழி தலைவனுக்குக் குறை முடிப்ப தாகக் கூறித் தலைமகள் உடன்பாடு கண்டு சற்று மிகை யாகவே, “தலைவன் கையிலுள்ள கண்ணியாகிய கையுறை வாடத் தருவதன்று” என்றாற் போலக் கூறித் தலைவனைக் கூடுதற்கு அவளை உடன்படுவிக்கச் சொல்லும் சொற்கள்.

இது ‘தோழியிற் கூட்டத்துப் பகற்குறி’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (க. கா.பக். 68)

முகம் புகுதல் -

{Entry: J10__538}

தோழி முகம் நோக்கி நிற்றல் (சாமி. 92)

முகமலர்ச்சி கூறல் (1) -

{Entry: J10__539}

தலைவி தலைவனைக் கண்ட அளவில் அவள்முகம் மலர்ந் ததைக் கூறுதல். இது வாயிலோர் கூற்று.

தலைவி தான் பூப்பு எய்தியதைத் தெரிவிக்கத் தோழி ஒருத்தியைச் செவ்வணி அணிவித்துத் தலைவன் தங்கியிருந்த பரத்தையில் லத்துக்கு விடுப்பவே, அத்தோழியைக் கண்டு தலைவன் தன்னைப் பரத்தையிடமிருந்து விடுவித்துக் கொண்டு மனைக்கு வர, “தலைவியின் மயங்கிய பார்வை ஒளியைப் பெற்றது; அவள் முகம் கதிரவன் வருகையால் ஒளிவிட்டு மலர்ந்த தாமரை மலரை ஒத்தது” என்று வாயிலோர் தம்முள் கூறிக்கொள்ளுதல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (இத்துறை மாறன்அலங்காரத்திலும் (பாடல் 436) உரையுள் காட்டப்பட்டுள்ளது.) (கோவை. 363)

முகமலர்ச்சி கூறல் (2) -

{Entry: J10__540}

கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரிவினை மேற்கொண்ட தலைவன் தலைவி விடுத்த செவ்வணி கண்டு இல்லம் வந்து சேர்ந்தானாக, அது கண்டு தலைவி முகம் மலர்ந்த செய்தியை அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் கூறுதல்.

“தலைவியைப் பிரிந்து பரத்தை யில்லத்துத் தங்கிய தலைவன், தலைவி விடுத்த செவ்வணி அணிந்த சேடியைக் கண்டு இல்லம் எய்தியதால், பண்டு துயரத்தால் மருண்டிருந்த தலைவி பார்வை இதுபோது அமிர்தம் பொதிந்த கருங் குவளைபோல மகிழ்ச்சிக் கண்ணீரால் நனைந்தது.“

“சூரியனுடைய உதயத்தில் செவ்வி பெற்று மலர்ந்த செந்தா மரை போல் அவள்முகம் செவ்வி பெற்று அலர்ந்தது.” என்பது போன்ற உழையர் கூற்று. (மா. பா. பா. 98)

முகிலொடு கூறல் -

{Entry: J10__541}

கற்பினுள் பிரிந்த தலைவன், தான் மீண்டு வருவதாகத் தலைவிக்குக் குறித்த பருவம் வந்தது கண்டு, தலைவியை நினைத்து இரங்கி விரைந்து தேரேறி வரும்போது, முற்பட்டுச் செல்லும் மேகங்களை நோக்கி, “என் தலைவியினுடைய ஊருக்கு எனக்கு முன்னே செல்லா தொழிவீராக!” (கோவை. 329) என்று கூறுதல்.

இது ‘வேந்தற் குற்றுழிப் பிரிவு’, ‘பொருள்வயின் பிரிவு’ (348) என்ற கிளவிகளில் காணப்படும் செய்தி.

முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -

{Entry: J10__542}

எடுத்து மேற்கொண்ட போர் தம்பக்கம் வெற்றியொடு முடிந் தவிடத்துத் தலைவன் படைவீட்டில் தன்தேர்ப்பாகனிடம் கூறல்.

“தேர்வலவ! வேந்தனும் போரினை நிறுத்திவிட்டான். பகைவரும் பணிந்து திறையளித்து நண்பராயினர். இருதிறப் படையோரும் மாறுபாடொழிந்தனர். நம் கடமை முடிந்து விட்டது. ஏனைய தேர்கள் பின்னிடுமாறு நம் தேரைச் செலுத்து. யான் குடவாயிலை ஒத்த இயற்கை யழகுடைய என் தலைவியின் அழகிய மார்பில் இன்துயில் பெறுதலை விரும்பு கின்றேன்” என்ற கூற்று. (அகநா. 44) (தொ. பொ. 41 நச்.)

முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -

{Entry: J10__543}

தன் அரசன் மேற்கொண்ட போர் வெற்றியொடு முடிந்த விடத்துத் தலைவன் தனது மனைக்கு மீண்டு போதற்கு முடிவு செய்து பாகனிடம் தன்நிலையையும் தன் தலைவி நிலையை யும் பற்றிக் கூறுதல்.

தலைவன் வினைமுடிந்தவழித் தான் ஊர் மீளுதல் கருதித் தன்னையே எதிர்பார்த்து நிற்கும் தலைவியைக் காணப் போவதால் தனக்குத் தோன்றும் மகிழ்ச்சிமிகுதியைத் தன் தேர்ப்பாகனிடம் கூறிக் கொண்டிருக்கும் போது, பின்னும் மற்றொரு பகைவன்மேல் விரைந்து செல்லும் நிலை ஏற்பட்ட தாக, அப்பொழுது தலைவன் காதலை மறந்து போர் வேட்கை மீதூர்ந்து பாகனிடம் அடுத்து நிகழ்த்த வேண்டிய போர்ச்செய்தி பற்றிக் கூறுதல்.

‘வினைத்திறவகை’ என்பதனை வகை(யின்) வினைத்திறம் என்று மாறிக் கூட்டி இங்ஙனம் பொருள் செய்வார் நச்சினார்க்கினியர். (தொ. பொ. 41)

முடைச்சேரி -

{Entry: J10__544}

முல்லை நிலத்தூர் (யாழ். அக.).

`முதலொடு புணர்ந்த யாழோர் மேன’ -

{Entry: J10__545}

நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்தருவர்பாற் பட்டன. (தொ. பொ. 104 இள.)

நடுவண் ஐந்திணையும் தமக்கு அடிப்படையாக அவற்றொடு பொருந்தி வரும் கந்தருவமார்க்கம் ஐந்தும். (106 நச்.)

நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளொடு கூடிய கள வொழுக்கம். (144 குழ.)

முதற்பொருள் -

{Entry: J10__546}

ஒவ்வொரு திணைக்கும் உரிமையுடைய நிலமும், பெரும் பொழுது சிறுபொழுது என்ற இருவகைப்பட்ட பொழுதும் ஆகிய இரண்டும் முதற்பொருளாம். (இம்முதற்பொருள் களுள் பொழுது இரண்டு மயங்கி வரலாம்; ஆயின் நிலம் இரண்டு மயங்கல் கூடாது என்பது நூலோர் கருத்து.) (ந. அ. 8.)

முதற்பொருளின் இருவகை -

{Entry: J10__547}

முதல்பொருள் நிலம் எனவும், பொழுது எனவும் இரண்டு வகைப்படும். (தொ. பொ. 17 நச்.)

முதுவேனில் -

{Entry: J10__548}

ஓர் ஆண்டினை இவ்விரண்டு திங்களாகப் பகுத்த பெரும் பொழுது ஆறனுள், ஆனியும் ஆடியுமாகிய இவ்விரு திங்கட் பருவம் முதுவேனில் எனப்படும்; முதிர்வேனில் என்பதும் அது. பெரும்பொழுதினை வடநூலார் ‘ருது’ என்ப.

முந்துறக் காண்டல் -

{Entry: J10__549}

தலைவன் தான் எதிர்பார்த்த வண்ணமே தலைவியை அவ்விடத்திலேயே காணுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘உயிரென வியத்தல்’ என்னும் (39). (ந. அ. 135.)

`முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -

{Entry: J10__550}

தலைவியால் களம் சுட்டப்பட்டுக் கூடும் இடந்தலைப் பாட்டுக் கூட்டம் மூன்றுநாள்அளவல்லது பாங்கியது துணையின்றி நிகழாது. அம்மூன்று நாளுள் பின் இரு நாள்களில் பாங்கி துணையாதல் வேண்டின் அத்துணை நீக்கும் நிலைமைத்தின்று. (தொ. கள. 32 ச. பால.)

முந்நீர் வழக்கம் -

{Entry: J10__551}

முந்நீர் - இவ்வுலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடைய கடல்.

முந்நீர் வழக்கம் - கடலைக் கலத்தின் வாயிலாகக் கடந்து செல்லுதல். காலிற்பிரிவு, கலத்திற்பிரிவு என்ற இருவகைப் பிரிவுகளுள் ஒன்றாகிய கலத்திற் பிரிவின்கண் மகளிரை உடன்அழைத்துச் செல்லுதல் கூடாது. (தொ. பொ. 37 இள.)

ஓதலும் தூதும் பொருளுமாகிய மூவகைப்பட்ட செலவின் கண்ணும் தலைவியொடு கூடச் செல்லுதல் மரபன்று. (34 நச்.)

முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

{Entry: J10__552}

“தாயே! எருமை கருங்காலிப் பூக்களையும் ஆம்பல் பூக்களை யும் தின்றதனால் அவற்றிலிருந்த வண்டுகள் அவற்றை நீத்துத் தலைவியின் கூந்தலிலுள்ள பூக்களில் தாது நுகரக் கருதி இவள்மீது மொய்க்கின்றன.” என்ற தோழி கூற்று. (ஐங். 93)

முயங்கல் -

{Entry: J10__553}

தலைவன் தலைவியைத் தழுவிக் கூடி இன்புறுதல்.

இது களவியலில் ‘இடந்தலைப்பாடு’ எனும் கிளவிக்கண்ண தொருகூற்று. பிற சில கிளவியுள்ளும், புணர்தல் கூடல் முதலாக வரும் பரியாயப் பெயர்களுள்ளும் இம்முயங்கல் நிகழும் என்க. (ந. அ. 135)

முயங்குதல் உறுத்தல் -

{Entry: J10__554}

தலைவியைத் தலைவன் இறுகத் தழுவிக் கூடுதல்.

தலைவியது புன்னகை தந்த குறிப்பினால் அவளிசைவு உணர்ந்த தலைவன் தலைவியைப் புல்லுதல்.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் கிளவிக்கண்ணதாகிய செய்தி. (ந. அ. 127)

முரசறைதல் யார்க்கென்று இகுளை வினாதல் -

{Entry: J10__555}

‘அயலவர் மணமுரசு ஆயிடை விலக்கல்’ என்னும் செய்திக் கண்ணது இக்கூற்று. தோழி, தலைவிநிலை குறித்துச் செவிலியிடம் அறத்தொடு நின்றபின், திருமணத் தொடர் பாக இல்லத்தில் முரசு அறைதலைக் கேட்டு, “இம்முரசு, நீர் நிலையின் ஆழத்தினின்றும் யானையின் தாக்குதலினின்றும் தலைவியைக் காத்த தலைவனுக்குத் தலைவியை மகட் கொடுத்தற்கா, அன்றிப் பிறர்க்கு அவளை மகட் கொடுத் தற்கா ஒலிக்கின்றது?” என்று அருகிலுள்ளாரை வினவுதல். (இதன் பயன் : அயலவர் மணம் பேசி வருதலைத் தவிர்த்தல்) (திருப்பதிக். 364).

இஃது ‘அறத்தொடு நிலை’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

‘அயலவர் மணமுரசு ஆயிடை விலக்கல்’ என்னும் செய்திக் கண் அமைந்த எடுத்துக்காட்டினது கருத்து நோக்கித் தலைப் பிடப் பெற்றது. (மா. அக. 74.)

முருகன் -

{Entry: J10__556}

1. குறிஞ்சி நிலத் தெய்வம் 2) வெறியாட்டாளன் (பிங். 828) (L)

முருகியம் -

{Entry: J10__557}

குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப்பறை. (தொ. பொ. 18 நச்.)

முல்லை (1) -

{Entry: J10__558}

காடும் காடு சார்ந்த இடமும்.

காட்டில் கார்காலத்தில் முல்லைக்கொடிகள் பலவாகப் பூத்தல் சிறப்புப் பற்றிக் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப் பெயர் பெற்றன.

கற்புக் காலத்தில் காவல் தூது முதலிய குறித்துப் பிரிந்த தலைவன் பிரிந்து வரும்துணையும் தலைவி ஆற்றியிருந்து இல்லிருந்து நல்லறம் செய்தல் மகளிர்க்குரிய இயற்கை முல்லை ஆதலின், இருத்தல் ஒழுக்கம் பற்றி, இருத்தல் என்று பொருள்படும் ‘முல்லை’ எனப் பெயர் பெற்றன எனவும் கூறப்படுகிறது. (தொ. பொ. 5 இள. நச் .)

முல்லை (2) -

{Entry: J10__559}

நிலப்பெயர் - புறவம், புறம்பணை, புறவணி, முதைப்புனம், இதைப்புனம்.

நீர் - கான்ஆறு, கலுழி, உயவை

ஊர் - பாடி

பறை - ஏறுகோள், பம்பை (பிங். 536, 539, 540, 541, 543, 544.)

மக்கள் - முல்லையாளர், கோவலர், இடையர், அண்டர், பொதுவர், ஆன்வல்லோர், குடவர், பாலர், தொறுவர், கோவிந்தர், அண்டர், கோபாலர், ஆயர், அமுதர்.

ஆய்ச்சியர், தொறுவியர், பொதுவியர், குடத்தியர், இடைச் சியர்; கானகநாடன், குறும்பொறை நாடன், தோன்றல், அண்ணல் (திவா.) (திவா. பக். 40 ; பிங். 546, 547)

முல்லைக் கருப்பொருள் (1) -

{Entry: J10__560}

1. தெய்வம் - மாயோன் (நெடுமால், கண்ணன்)

2. உயர்மக்கள் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல்; மனைவி, கிழத்தி.

3. பொதுமக்கள் - ஆயர், இடையர், குடவர், கோவலர், பொதுவர்; ஆய்ச்சியர், இடைச்சியர், கோவித்தியர், பொதுவியர்.

4. பறவை - காட்டுக் கோழி, சிவல்.

5. விலங்கு - மான், உழை, புல்வாய், முயல்.

6. ஊர் - பாடி, சேரி, பள்ளி.

7. நீர் - காட்டாற்று நீர், குறுஞ்சுனை நீர்.

8. பூ - குல்லை, முல்லை, தோன்றி, பிடா.

9. மரம் - கொன்றை, காயா, குருந்தம், புதல்.

10. உணவு - வரகு, சாமை, முதிரை.

11. பறை - ஏறுகோட் பறை

12. யாழ் - முல்லையாழ்.

13. பண் - சாதாரி.

14. தொழில் - சாமை வரகு இவற்றை விதைத்தல், களை நீக்குதல், அரிதல், கடாவிடுதல், குழல் ஊதுதல், ஆ எருமை ஆடு ஆகிய மூவினங்களை மேய்த்தல், கொல் லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடல், காட்டாற்றில் நீர் விளையாடுதல் - போல்வன.

15. கொடி - கவலை (தொ. பொ. 20 இள., 18 நச்., சிலப். பதிகம் அடியார்க்., த.நெ.வி. 6-12, ந.அ.22)

முல்லைக் கருப்பொருள் (2) -

{Entry: J10__561}

பூ - மல்லிகை மரம் - பிடவம். (சாமி. 76)

முல்லைக்குரிய பொழுது -

{Entry: J10__562}

முல்லைக்குரிய பெரும்பொழுது ஆவணி புரட்டாசித் திங்களாகிய கார்காலம்; சிறுபொழுது மாலை; அஃதாவது இரவின் முப்பது நாழிகைகளுள் முதல் பத்து நாழிகை (6 p.m. - 10 p.m )

முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குரிய காரணங் களை நச்சினார்க்கினியர் பின்வருமாறு விளக்குகிறார்.

பிரிந்து மீளும் தலைவன் தேர் ஏறிப் பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரும் காலம் ஆவணியும் புரட்டாசியும் ஆதலின், அவை, மிக்க வெப்பமோ மிக்க தட்பமோ இன்றி இடைநிகரவாகி, ஏவல் செய்து வரும் இளையர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், உணவு தட்டுப் பாடின்றி நீரும் நிழலும் பெறுதலின் மகிழ்ச்சி மிக்குப் பறவைகளும் விலங்குகளும் துணையோடு இன்புற்று விளை யாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானும், முல்லைக்குப் பெரும்பொழுது ஆயின.

புல்லை மேய்ந்து ஏற்றோடு பசு தன் கன்றை நினைத்துக் கொண்டு மேயும் இடத்தை விட்டு ஊர்ப்பொதுவிடத்துக்கு மீண்டு வரவும், கோவலர் வேய்ங்குழல் ஊதவும், பந்தரிலுள்ள முல்லைக்கொடி பூத்து மணம் வீசவும், வருகின்ற தலைவ னுக்கும் இருக்கின்ற தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின், கார் காலத்து மாலை சிறுபொழுதாயிற்று.(தொ. பொ. 6 நச்.)

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -

{Entry: J10__563}

முல்லை, குறிஞ்சி முதலியன காரணம் பற்றி முதலாசிரியர் இட்ட குறி என்று கொள்ளப்படும். காடுறை உலகிற்கு முல்லைப்பூச் சிறந்தது ஆகலானும் (முல்லைப், 8-10), மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்தது ஆகலானும் (குறுந். 3 : 3), தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும் (அகநா. 286 : 6,7), பெருமணல் உலகிற்கு நெய்தற்பூச் சிறந்தமையானும் (குறுந். 9 : 4 - 6) இந்நிலங்களை இவ்வாறு குறிப்பிட்டார். (தொ. பொ. 5 இள.)

இருத்தல் (இல்லிலிருந்து நல்லறம் செய்தல்) என்பது முல்லை என்பதன் பொருள் (சிறுபாண். 169); புணர்ச்சி எனப் பொருள் படுவது குறிஞ்சி (மதுரைக். 300); ஊடியும் கூடியும் போகம் நுகர்தல் மருதமாம் (சிறுபாண். 186); இரங்குதல் என்னும் பொருளுடையது நெய்தல், நெய்தற்பறை இரங்கற்பறையாத லின் (புறநா. 389-17). இவ்வாற்றால் உரிப்பொருள் பற்றிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன பெயர்பெற்றன. (தொ. பொ. நச்.)

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -

{Entry: J10__564}

அன்பின் ஐந்திணை இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்திக் கணவன் சொல்லைத் தவறாமல் இல்லிலிருந்து நல்லறம் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் முல்லை முற்கூறப்பட்டது; முல்லையாவது இருத்தல். புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின், புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சி அதன் பின் வைக்கப்பட்டது. புணர்ச்சிக்குப் பின் ஊடல் நிகழ்தலின் ஊடல் பொருட்டா கிய மருதம் அடுத்து வைக்கப்பட்டது. பரத்தையிற் பிரிவு பற்றி ஊடல் நிகழும்; அப்பிரிவு போலாது ஏனைய பிரிவு களில் தலைவன் குறித்துபபோன பருவம் தொடங்கிய அளவில் மீண்டு வரவில்லையே என்று தலைவி இரங்குதல் பற்றி, இரங்குதல் பொருட்டாகிய நெய்தல் ஈற்றில் வைக்கப் பட்டது. (தொ. பொ. 5 நச்.)

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முறைவைப்பு, மாலை யாமம் வைகறை காலை என்ற சிறுபொழுதின் கிடக்கை முறையை ஒட்டி அமைந்ததே என்பர் சிவஞான முனிவர். (சூ. வி. பக். 53)

முல்லை நடையியல் -

{Entry: J10__565}

வீரசோழியத்தின் உரையில், தலைவன் பிரிந்தவழி அவன் சொற்களை உட்கொண்டு தலைவி இல்லத்திலிருந்து நல்லறம் பேணி இருக்கும் இருத்தல் பற்றிய செய்திகளாகிய தலைவி பருவம் வருந்துணை ஆற்றியிருத்தலும், பருவ வருகையைக் கண்டவுடன் சற்று வருந்தலும், தலைவன் வினை முற்றிக் குறித்த காலத்து வர இயலாமைக்கு வருந்தலும், பின் தேர் ஏறி விரைந்து வந்து தலைவியைக் கூடி மகிழ்தலும் ஆகிய செய்திகள் பற்றிய கிளவிகள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டு ‘முல்லை நடையியல்’ என்று பெயரிடப்பட் டுள்ளன.

முல்லை நடை இயல் - இருத்தல் என்ற ஒழுக்கம் பற்றிய நடப்புக்களை வரிசையாகக் கூறல். (வீ. சோ. 94 உரை மேற்.)

முலைவிலை கூறல் -

{Entry: J10__566}

தோழியால் வரைவு முடுக்கப்பட்ட தலைவன் அவளிடம் தலைவியின் திருமணத்திற்கு அவள் உறவினர் வேண்டும் பரிசப்பொருள் பற்றி வினவ, “நின் வரவை எமர் ஏற்றுக் கொண்டால் நல்லது; அதனை விடுத்துப் பரிசப்பொருள் கூறுவாராயின், அவளுக்கு ஏழுலகும் விலை போதாது” என்று தோழி தலைவனிடம் தலைவியை மணத்தற்குரிய பரிசப்பொருள் பற்றிக் கூறுதல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 266)

`முற்படக் கிளந்த எழுதிணை’ -

{Entry: J10__567}

பொருளதிகாரத்தில் முதற்கண் கூறப்பட்ட ஏழுதிணைகள். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பன. இவற்றுள் முல்லை முதலிய ஐந்தும் அகனைந்திணைகள் எனவும், கைக்கிளை பெருந் திணை என்ற இரண்டும் அகப்புறத்திணை எனவும் கூறப்படும்.

அகமும் அகப்புறமுமாகிய இவ்வேழும் முற்படக் கிளந்த எழுதிணை எனவே, வெட்சி முதல் பாடாண் இறுவாய புறத்திணை ஏழும் பிற்படக் கிளந்த எழுதிணையாம். (தொ. பொ. 1 நச்.)

`முற்பட வகுத்த இரண்டு’ -

{Entry: J10__568}

முன்னர் அகத்திணையியலுள் வகுத்தோதிய இரண்டு இடங்கள். அவையாவன பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் இரத்தலும் தெளித்தலுமாகக் கூறுமிடங்கள். இவ்வீரிடங்கள் அல்லாத இடத்து, தலைவன்முன்னர்த் தன்னைப் புகழ்ந்து கூறுதல் தலைவிக்கு எத்தகைய நிலையிலும் இல்லை. (தொ. கற். 39 ச. பால.)

முறுவற் குறிப்பு உணர்தல் -

{Entry: J10__569}

தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சியில், தலைவன் தலைவியின் புன்முறுவலைக் கண்டு அதன் வாயிலாக அவள் புணர்ச்சிக்கு உடன்பட்ட திறத்தினை உணர்தல்.

முகைப்பதம் பார்க்கும் வண்டு போல நகைப்பதம் பார்க்கும் அறிவுடைமை நற்காமத்துக்கு இன்றியமையாதது. ஆதலின், தலைவன் தன் அறிவினால் தலைவியது மனக்குறிப்பை உணர்ந்தான் என்பது. (குறள் 1274).

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

முறை சிறந்த பொருள் -

{Entry: J10__570}

பாடலுள் பயின்று வருவன முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றுமாம்; இம்மூன்றனுள் முன்னதை விட இரண்டாவதும், இரண்டாவதைவிட மூன்றாவதும் சிறந்தனவாம் என்பது.

சில பாடல்களில் இம்மூன்று பொருளும் வரும். சிலவற்றில் முதற்பொருளின்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும் வரும். சிலவற்றில் உரிப்பொருள் மாத்திரமே வரும். ஆகவே, முதற்பொருளைவிடக் கருப்பொருளும், இவ்விரண்டனையும் விட உரிப்பொருளும் பாடலுக்குச் சிறந்துள்ளமை போதரும். உரிப்பொருள் இன்றேல், பாடலுக்குப் பொருட்பயன் இன்று.

(தொ. பொ. 3 நச்.)

`முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்’ -

{Entry: J10__571}

இயற்பெயரை விடுத்து, விளிப்பதற்குத் தொன்றுதொட்டு வந்த முறையான் அமைந்த சொல் எல்லா என்பது; எலா, எல்ல, எலுவ என்பனவும் கொள்ளப்படும். இச்சொற்கள் இரு பாலுக்கும் பொதுவான விளிப்பெயர்கள். தலைவனைத் தோழியும், தலைவியைத் தலைவனும் (கலி. 61, 81) விளித் தற்கண் ‘எல்லா’ என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்துதல் காண்க. (தொ. பொ. 220 நச்.)

முறைப்பெயர் அல்லாததாய் அதன் மருங்காகப் பொருந்திய தகவுடையதொரு பொதுச்சொல். அஃது எல்லா என்னும் விளிப்பெயர். இச்சொல் புலனெறி வழக்கில் பொருந்திய மரபினானே, ஆடூஉ மகடூஉ ஆகிய இருபாற்கும் உரித்தாக வருவது. அது தலைவன் பாங்கன் தலைவி தோழி என்னும் நால்வர்க்கும் உரித்தாக வருதலின் ‘கெழுதகைப்’ பொதுச் சொல் எனப்பட்டது. ஏடா, ஏடீ, எலுவன், எலுவி, என்பவை பாலுணர நின்றன. இருபாற்கும் பொதுச்சொல்லாம் எல்லா என்ற விளிப்பெயர் எலா, எலுவ எனச் சிறிது திரிந்தும் நிற்கும்.

(தொ. பொரு. 25 ச. பால)

முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல் -

{Entry: J10__572}

உடன்போக்குச் சென்று தலைவனுடன் தன்னூர்க்கு மீண்டு வந்த தலைவி, வழியில் தன் முன்னே செல்பவர் வாயிலாகத் தன் வருகையைப் பாங்கிமார்க்குச் சொல்லியனுப்ப, அவர்க ளும் அச் செய்தியை அவர்களுக்குக் கூறல்.

“மகளிரே! நும் தலைவி தன் தலைவனொடு மீண்டு வரும் காட்சியை யாங்கள் கண்டோம். ‘நாளை விருப்பத்தோடு இனியதொரு நல்விருந்தை நீங்கள் பெறுவீர்’ என்பதை மனங் கொள்ளுமின்!” (அம்பிகா. 412) என்றாற் போல, முன் செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்துதல்.

களவு வெளிப்பாட்டிற்குரிய தொகுதி மூன்றனுள் இறுதிய தாகிய ‘மீட்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று இது. (ந. அ. 191)

முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -

{Entry: J10__573}

பிரிந்திருந்தபோது தான் உற்ற துன்பத்தைத் தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

“உலகத்து ஏனைய நெருப்பு நெருங்கினால் சுடும்; அகன்றால் சுடாது. ஆயின் உன்னால் விளைந்த இக்காமத் தீ, உன்னை நீங்கினால் சுடுகிறது; அணுகினால் குளிர்ச்சியாக இருக் கிறது; உன்னிடமுள்ள இத்தீ உலகியல் தீயின் மாறுபட் டுள்ளதே!” (குறள் 1104) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது களவியலுள், ‘இடந்தலைப்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (இ. வி. 503 உரை)

முன்னத்தான் அறத்தொடு நிலை -

{Entry: J10__574}

தலைவியின் நற்றாயானவள் தந்தைதன்னையரிடம், “குலத்தா லும் செல்வத்தாலும் மிக்கான் ஒருவன் நம் குடும்பத் தொடர்பு கொள்ள விரும்புகிறான். அவனை நாம் உறவினன் ஆக்கிக் கொள்வதில் தடையொன்றும் இல்லையே” என்று கூற அவர்கள், “இவள் கருதிச் சொல்வது தன் மகள் மணம் கருதிப் போலும்” என்று குறிப்பால் உணர்வர்.

தலைவன் பார்ப்பாரை முன்னிட்டு அருங்கலன்களொடு தன் குடும்பத்து மூத்தாரைத் தலைவியை மகட்பேசி வர விடுப்ப, தலைவிதமர் மகட் கொடுக்க உடனே இசையாது மறுப்பர்.

“திருமணம் என்பது நன்கு ஆராய்ந்து முடிவு செய்யப் படுவதாகும். நல்ல அனுபவமுடைய மூத்தவர்களைச் சூழ்ந்தே முடிவு செய்ய வேண்டும். இவர்கள் இல்லத்தில் பெண் கேட்பதே பெரிய செயல். எதனையும் உடனே முடிவுசெய்து சொல்லமாட்டார்கள்” என்று மற்றவர் நினைக்குமாறு நடந்துகொள்ள வேண்டும். “பெண் கேட்பவருடைய உண்மை நிலையை ஆராயாமல் உடனே பெண் கொடுக்க ஒத்துக்கொண்டு விட்டார்களே! பெரிய அவசரக்காரர்கள் இவர்!” என்ற ஊரார் பேச்சுக்கு அஞ்சியும் பெண்கொடுப்ப இசைவதற்குக் காலதாமதம் செய்ய வேண்டும். “எப்படியோ பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தாற் போதும் என்றிருந்தார் போலும்!” என்ற ஊரார் கூற்றுக்கும் அஞ்சுதல் வேண்டும்; இறப்பப் பெரியவர் தம்மிடம் மகள் கேட்டவழித் தம் நிலையை நினைத்து முடிவு செய்யவும் சிறிது காலம் தாழ்த்தல் வேண்டும். பொதுவாக உலகியல் பற்றியும் உடனே இசைவு தருதல் கூடாது.

இவற்றால் தலைவியின் தந்தை மகட் கொடுக்க மறுத்த வழியும், நற்றாய் மேற்கூறியவாறு குறிப்பினால் அறத்தொடு நின்று வரைவு மாட்சியமைப்பட முயல்வாள். (இறை. அ. 28 உரை.)

முன்னிகழ்வுரைத்து ஊடல் தீர்த்தல் -

{Entry: J10__575}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடத்துக் கலவி கருதி ஊடிய தலைவியிடம், “நாம் உடன்போக்கின்கண் இரவு ஒரு சிற்றூரில் தங்கி, சிறிய மான்தோல்படுக்கையில் உன் மார்பகம் என்னைத் தழுவத் தங்கிய சிறு தொழிற்கு ஒப்பு எதுவும் கண்டிலேன். அந்நிகழ்ச்சியை நீ நினைத்துப்பார்த் தாயா?” என்றாற்போலப் பழைய நிகழ்ச்சியை எடுத்துரைத்து அவளது ஊடலைத் தலைவன் நீக்கியது.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 398)

‘முன்னைய மூன்று’, `பின்னைய நான்கு’ -

{Entry: J10__576}

பாங்கர் நிமித்தம் பன்னிரண்டனுள், முன்னர்க் கூறப்பட்ட பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைத்தல். குற்றங்காட்டிய வாயில் பெட்புறல் ஆகிய மூன்றும் அகனைந்திணைக்கண் கைக்கிளை ஒழுக்கமாக அமையும்; பின்னர்க் கூறப்பட்ட சொல் அவட்சார்த்தலின் புல்லிய வகை, அறிந்தோன் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல், தோழி நீக்கலின் ஆகிய நிலைமை, மடல் மாக் கூறுதல் ஆகிய நான்கும் அகனைந்திணைக்கண் பெருந் திணை ஒழுக்கமாக அமையும். (தொ. கள. 14, 15 ச. பால.)

முன்னிலைப் புறமொழி -

{Entry: J10__577}

வாயில்களாவார் தலைவன் தலைவி என்ற இவர்களுடைய ஊடலைத் தணிக்கும்போது தம்முன் நிற்கும் தலைவனை நோக்கி நேராகப் பேசாமல் பிறரைக் கூறுமாறுபோலத் தம் ஒற்றுமைப்படுத்தும் சொற்களைப் பேசி ஊடல் தீர்த்து வைப்பர். முன்னிலைப் புறமொழி - முன் நின்றானிடம் நேராகப் பேசாமல் பிறரைக் கூறுமாறு போலக் கூறுதல். (தொ. பொ. 167 நச்.)

முன்னிலை யாக்கல் (1) -

{Entry: J10__578}

தலைவன் தலைவியை முன்னிலைப்படுத்துவது.

தன்வயமிழந்து அசையாமல் நிற்கும் தலைவியை முன்னிலைப் படுத்தி அழைத்து, “பாங்கியருடன் கூடிச் சுனையாடுதல் போன்ற விளையாட்டில் ஈடுபடாமல், பதுமை போல நிற்கி றாயே! இதன் காரணம் என்?” (தஞ்சை. கோ. 7) என்று தலைவன் கூற்று.

இது தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

முன்னிலை யாக்கல் (2) -

{Entry: J10__579}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன், தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குவதற்குக் கண்ணால் கூறியதை நீக்கி மொழியாலும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் முதலாவது.

தலைவி வேட்கைக்குறிப்பு உடையளாயினும், குலத்தின்வழி வந்த இயற்கை ஆற்றலால் நாணமும் அச்சமும் மிக, அக்குறிப் பில்லாதவளைப் போல நின்றவழி அவளை முன்னிலையாக வைத்துத் தலைவன் சில கூறுதல்.

“‘நின் தோழிமாரொடு கடற்கரை மணல் விளையாட்டையும் மேவாய்; நெய்தல்மாலையையும் தொடுக்காய்; இக்கடற் கரைச் சோலையில் ஒருபக்கமாகத் தனித்து நின்றாய் நீ யார்? நின்னைத் தொழுதவாறு வினவுகிறேன். கடற்பரப்பில் மேவிய அணங்கோ? சிறிய உப்பங்கழி மருங்கில் நிலைபெற் றுள்ள தெய்வமகளோ? யாரெனச் சொல்லுக’ என்றேன். என் சொற்கு மறுமாற்றம் அவள் தந்திலளேனும், அவளுடைய முள்போலும் எயிறுகள் சிறிதே அரும்பித் தோன்றின;
(-சிறிதே முறுவலித்தாள்.) கண்களில் உவகைக்கண்ணீர் பரவியது” (நற். 155) என வரும் தலைவன் கூற்றுள், ‘முன்னிலை யாக்கல்’ புலப்பட்டவாறு. (தொ. பொ. 98 இள.)

இயற்கைப்புணர்ச்சியின் பின்னர்ப் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாய்ப் பொருந்தும் வகையான் தலைவற்குரிய எனப்பட்ட ஏழனுள், முதல் மூன்று நயப்பின் கூறு. அவற்றுள் முதலாவது முன்னிலையாக்கல். அஃதாவது முன் நின்று தான் கூறுவனவற்றைக் கேட்டு மறுமொழி கூறும் இயல்பின அல்லாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன் நிறுத்தி உரைப்பது. அறிவு தடுமாறிக் கூறாமல் தான் கூறுவதனைத் தலைவி கேட்க வேண்டும் என்பதற்காகவே வண்டு முதலியவற்றுக்குத் தன் மனமகிழ்ச்சி தோன்ற உரைப்பது.

“பூக்களில் மகரந்தங்களை ஆயும் தும்பியினத்து வண்டே! நீ என் நிலத்துக்குரியாயாதலின் என் விருப்பத்திற்கிசையக் கூறாது, நீ உண்மை எனக் கண்டதனைக் கூறுவாயாக. இத்தலைவி கூந்தலைவிட, நீ அறிந்துள்ள பூக்களில் நறு மணம் மிக்கனவும் உளவோ?” (குறுந். 2) என்ற தலைவன் கூற்று. (101 நச்.)

முன்னுற உணர்த்தல் (1) -

{Entry: J10__580}

முன்னம் மிக உணர்தல்; அஃதாவது குறிப்பு மிகுதியாக உணர்தல். தலைவியொடு தனக்குள்ள நெருக்கத்தான் குறிப்பின்றியே ஒரு பாதியை உணர்ந்த தோழி, இப்பொழுது குறிப்புப் பெற்றவழித் தலைவியின் களவொழுக்கம் பற்றி மிக உணரும் என்பது. இது மதியுடம்படுத்தலின் மூவகையுள் இரண்டாவது. (தொ. பொ. 127 நச்.)

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்றைத் தலைவியின் வேறுபாடு கண்டு, “இஃது எதனான் ஆயிற்றோ?” என்று தோழி ஐயுற்று நிற்பது.

இயற்கைப்புணர்ச்சியின் பின் தலைவியின் கண்சிவப்பும் நுதல் வேறுபாடும் கண்டு, அவள் உள்ளத்திலுள்ள மறையை அவளொடு பலவாறு உரையாடித் தோழி உணர்வது. (இறை. அ. 7 உரை)

முன்னுற உணர்தல் (2) -

{Entry: J10__581}

தலைவி உடல்வேறுபாடு கண்டு, தோழி ஐயுற்று முதற்கண் தலைவியை வினாவுதல் ஆகிய ‘முன்னுற உணர்தல்’ என்ற தொகுதிக்கண் ‘வாட்டம் வினாதல்’ என்ற ஒரு கூற்றே உள்ளது. (கோவை. 62)

முன்னுறு புணர்ச்சியில் தோழி கூற்று -

{Entry: J10__582}

முன்னுறு புணர்ச்சி - தோழி முற்பட்டுத் தலைவன் தலைவி யரைக் கூட்டுவிக்கும் கூட்டம்.

இரத்தலும் குறையுறுதலும் செய்து ஆற்றானாகிச் சென்ற தலைவனைத் தன்னினாம் கூட்டம் முடியாதுவிடின் பெரிதும் துன்புறுவான் என்பதனைத் திரிபின்றி உணர்ந்த தோழி காப்பு மிகுதி சொல்லலுற்று, “இவ்விடம் காப்பு மிகுதி உடையது; ஆதலின் நீ வருதல் கூடாது” என்று கூறி வயப் படுத்தியும், அவனிடம், “நீ இவ்வாறு சுற்றித் திரிதற்குக் காரணம் யாது?” என்று அவன் வந்த காரணத்தை வினவியும், “என்னை மறையாது கூறின், நின் விருப்பினை முடித்துத் தருவல்” எனக் கூறியும், “யான் குற்றேவல் மகள்; என் சொல் ஏலாது போகலாம்; நீயே சென்று தலைவியிடம் நின் விருப்பத்தைக் கூறு” என்று சொல்லியும், “நீ விரும்பும் மகளை யான் அறியேனே!” என்று கூறியும், தழையும் கண்ணியும் ஏந்தி வந்த வனிடம் அவன் விருப்பை ஏற்றுக் கொள்ளாது மற்றொன்று கூறியும், “இவ்விடத்தில் என்னையர் ஏதம் செய்வர்; நும் விருப்பை அகன்றுபோய் முடித்துக்கொள்க” என்று சொல்லியும், “தலைவியின் மனநிலை ஏற்ப இல்லை; அவளிடம் எதுவும் உரையாடல் முடியாது” என்று சொல்லி யும், “தலைவி எங்கட்குத் தெய்வம் போல்வாள்; அவளிடம் தகாதன பேசுதல் கூடாது” என்று சொல்லியும், “பெரியோ னாகிய நினக்கு எம்மனோர் தொடர்பு தக்கதன்று” என்று சொல்லியும் இவ்வாறாகத் தோழி தான் கூட்டுவிக்கும் புணர்ச்சிக்கண் தலைவனிடம் பல வகையாக உரையாடுவாள். (இறை. அ. 12 உரை)

‘முன்னைய நான்கு’ -

{Entry: J10__583}

இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சி, ஐயம், தெரிதல், தேறல் என்ற குறிப்பு நான்கும்.

இவை நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் சிறப் புடைக் கைக்கிளையாதற்குரிய. (தொ. பொ. 52 நச்.)

ஏறா மடல் திறம் என்னும் வெளிப்பட இரத்தலும், இளமை தீராத திறம் என்னும் நலம் பாராட்டலும், தெளிவு நீங்கிய காமத்து மிகாத் திறம் என்னும் புணரா இரக்கமும், மிக்க காமத்தின் மாறாகாத் திறம் என்னும் நயப்புறுத்தலும், இன்பம் பயப்ப வரும் கைக்கிளையின்கண் நிகழ்வனவாம். (55 இள.)

முன்னர் நிகழ்ந்தனவற்றைக் காதலர் பின்னர் நினைத்துப் பார்க்கும் நிகழ்ந்தது நினைத்தல், காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி அதன்கண் ஈடுபடுதல், அகத்துறை களில் முன்பு கூறப்படாத பிற துறைகளும் வந்து கலத்தல், ஐந்திணை உணர்த்தும் உரிப்பொருள் பகுதிகளில் உள்ளுறை உவமம் மிகுதியாக வருதல் என்ற நான்கும் அகனைந்திணை களுக்கும் சிறந்து உரியவாதல் போலவே, குற்றமற்ற சிறந்த கைக்கிளைக்கண் வரும். (எ-டு : குறுந். 25, 30, 101, 90). (தொ. பொ. 51 பாரதி)

‘முன்னைய மூன்று’ -

{Entry: J10__584}

பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்ற எண்வகை மணங்களுள், இட வகையான் முற்பட்டனவாக அமையும் ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்ற மூன்று மணங்களும், தலைவியின் குறிப் பறிதல் வேண்டாது தலைவன் தனக்குத் தலைவிமாட்டு ஏற்படும் மிக்க காமத்தால் நிகழும் மணங்கள் ஆதலின் இவை கைக்கிளை மணங்கள் எனப்பட்டன. (தொ. பொ. 105 நச்.)

‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -

{Entry: J10__585}

ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன முன்னைய மூன்று. பிரமம், பிரசாபத்தியம், ஆரியம், தெய்வம் என்பன பின்னை நான்கு. இவை முறையே கைக்கிளையும் பெருந்திணையும் ஆம். (தொ. பொ. 105 நச்.)

முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

{Entry: J10__586}

“நறுமலரையுடைய சுரபுன்னையின் கிளை வருந்தக் கடல் அலைகள் அசைக்கும் துறைவன் ஆதலின், நிலையாக நம் மிடத்துத் தங்காது, வந்தும் பெயர்ந்தும் நம்மை வருத்து கிறான். அவன் எப்பொழுதோ ஒருமுறை நம்மை அணுக வருதலின், அவன் நம்மைக் கூடும் காலத்தும், நமக்கு அவன் பிரிவு பற்றிய நினைவே இருத்தலின், நம்மைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறான். அத்தகையவனுடைய புணர்வும் பிரிவும் நமக்கு ஒரே நிலையன” என்ற தலைவி கூற்று. (ஐங். 150)

முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

{Entry: J10__587}

முதலில் பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன் மீண்டும் பொருள்வயின் பிரிதலை நினைத்தவிடத்து, “முன்பு யான் சென்ற மூங்கில் நிறைந்த காட்டில் மலைவாய்ச் செல்லும் முழுமதியை நோக்கிய அளவில், இலை உதிர்ந்த மரங்களை யுடைய மலைமீது அமைக்கப்பட்ட எனது இல்லத்தில் வாழும் முள் போன்ற பற்களையும் திலகமிட்ட நறிய நெற்றி யையும் கொண்ட முழுமதியம் போன்ற என் தலைவியின் நினைப்பு வர, யான் காட்டைக் கடந்து சென்று பொருளீட் டுதல் அரிதாய செயலாய் முடிந்தது. ஆதலின் அழகிய தலைவியைப் பிரிந்து செய்யும் செயல் இனி வேண்டா” என்று நெஞ்சிடம் சொல்லிச் செலவு தவிர்தல் (நற். 62) போல்வன. (தொ. பொ. 43 நச்.)

‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

{Entry: J10__588}

தலைவனால் மணந்துகொள்ளப்பட்ட இரண்டாம் மனைவி, காமக்கிழத்தி ஆகியோரிடம் வெறுப்புக்காட்டுதலைத் தவிர்த்து விருப்புடன் அவர்களை வரவேற்று மேம்பட்ட இல்லறத் தலைவிக்குரிய பண்பினைத் தலைவி பெறுதல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரைமேற்.)

முனைவன் -

{Entry: J10__589}

1. இறைவன் (தொ. பொ. 649 பேரா.) 2. தலைவன் (கோவை கொளு 329) (L)

மூன்றன் பகுதி -

{Entry: J10__590}

நால்வகை வலியுள்ளும் தன் வலியும் துணை வலியும் வினை வலியும் என்பன. (தொ. பொ. 44 இள. 225 குழ.)

“அறத்தினான் பொருளாக்கி அப்பொருளான் காமம் நுகர்வல்” எனல். (தொ. பொ. 41 நச்.)

கற்புக் காலத்திற்குரிய பொருள், ஓதல், தூது என்ற பிரிவின் மூன்று பகுதி. (அகத். 40 பாரதி.)

தானை, யானை, குதிரை என்ற முத்திறக் கூறுபாடு. (44, அருணா.)

மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

{Entry: J10__591}

தானை யானை குதிரை என்ற முத்திறத்துப் படைப்பகுதி யானும், தம் ஆட்சிக்குட்பட்ட அரண் அமைந்த நிலப்பரப் பின் பெருமையானும் விளக்கம் மிக்கவராய் உறையும் மாற்றாரின் செருக்குற்ற மேன்மை. இதன்கண் தலைவன் கூற்று நிகழும். (தொ. அகத். 43 ச. பால)

மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

{Entry: J10__592}

‘பிறவும்’ என்றதனான் இக் கூற்றினை இளம்பூரணர் சுட்டுவார்.

“என் மகன், முதற்கண், தன் தந்தை அடக்கமில்லாத போதில் காமுற்ற அத்தொடக்கத்துத் தாய் இல்லிற் புக்கான்; அடுத்து வழிமுறைத் தாய் மனைக்கண் புக்கான்; அடுத்து, தலைக் கொண்டு நம்மொடு காயும் புலத்தகைப் புதியவள் இல்லிலே சென்றான்; பிறகு நம்மிடத்தே புக்கான்” (கலி. 82) என்ற தலைவி கூற்று. (தொ. பொ. 149 இள.)

மெய்க்குறி உரைத்தல் -

{Entry: J10__593}

இரவுக்குறி வருதற்கு முன் தோழி தலைவனிடம் தம் நாட்டினர் இன்ன ஆடை உடுத்து இன்ன பூச்சூடி இன்ன சாந்து அணிந்து இன்ன மரத்தின் நிழலில் விளையாடுவர் என்று தம்நாட்டு அணியியல் கூறுதல். (இது ‘தன் நாட்டு அணியியல் பாங்கி சாற்றல்’ எனவும்படும். (ந.அ. 158)) (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரைமேற்.)

மெய்தீண்டல் -

{Entry: J10__594}

மெய்தொட்டுப் பயிறல். அது காண்க. (சாமி. 87)

மெய்தொட்டுப் பயிறல் (1) -

{Entry: J10__595}

தலைவன் தலைவியின் மெய்யைத் தொட்டு நெருங்குதல்.

“உன் அழகிய உறுப்புக்களையும், மெல்லிய கரிய கூந்தலையும் தொடும் வாய்ப்பு என்கைக்கு நேர்ந்ததை யான் என்னென்று கூறுவேன்!” (அம்பிகா. 31) என்ற தலைவன் கூற்று.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

மெய்தொட்டுப் பயிறல் (2) -

{Entry: J10__596}

இயற்கைப் புணர்ச்சியிடத்துப் பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் உள்ளமும் தலைவி உள்ளமும் ஒத்த பண்பினைக் கூறியபின் அது காரணமாகக் காதல்வெள்ளம் புரண்டோடத் தலைவியின் உடலைத் தீண்டிப் பழகுதல். (தொ. பொ. 99 இள.)

இடந்தலைப்பாட்டின்கண் தலைவன் தலைவி மெய்யைத் தீண்டிப் பழகும் நிலைமை.

தலைவன் மெய்தொட்டுப் பயின்றதன்கண் கூறியது - நோக்குக.

மெய்யுறு புணர்ச்சி -

{Entry: J10__597}

ஒத்த அன்பான் இயைந்த தலைவனும் தலைவியும், தம்மிடம் தோன்றிய காமம் மிகுதலினாலே, தலைவன் தனக்குரிய அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்ற நான்கு பண்புகளும், தலைவி தனக்குரிய நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளும் புனல் ஓடியவழிப் புல் சாய்ந்தாற் போலக் காமத்தால் சாய்க்கப்படவே, மெய்யுற்றுப் புணரும் கூட்டம். (ந. அ. 36)

மெய்யுறுபுணர்ச்சி நிகழும் காலம் -

{Entry: J10__598}

காட்சி, வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்ற பத்து அவத்தைகளையும் தலைமகனும், காட்சி முதலிய மூன்றும் பற்றி ஒவ்வொன்றிற் கும் நந்நான்காக புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகு நயம் மறைத்தல், சிதைவு பிறர்க் கின்மை, கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த் துடுத்தல், அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்ற பன்னிரண்டு மெய்ப்பாடுகளையும் தலைவியும் பெறுவாராயின், அவர் இருவரிடையே மெய்யுறுபுணர்ச்சி நிகழும். (இ. வி. 405)

மெல்லக் கொண்டேகல் -

{Entry: J10__599}

தலைவியை உடன்போக்கின்கண் அழைத்துச் சென்ற தலைவன், “உன்னொடு செல்வதால், இக் கொடிய காடு எனக்குக் குளிர்ச்சியாக உள்ளது. நின் சீறடி வருந்தாமல் மெல்ல நடந்து வருவாயாக” என்று தலைவிக்குச் சோர்வு ஏற்படாதவகையில் அவளை மெல்ல நடத்தி அழைத்துச் செல்லுதல்.

இதனைத் ‘தலைவியைத் தலைவன் சுரத்து உய்த்தல்’ என்றும்
கூறுப. (ந. அ. 182)

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிகண்ணதொரு கூற்று.

(கோவை. 215)

மெல்லம் புலம்பன் -

{Entry: J10__600}

நெய்தல்நிலத் தலைவன். நெய்தல்நிலம் மென்னில மாதலின் நெய்தற் பகுதி ‘மெல்லம் புலம்பு’ எனப்பட்டது. மெல்லன், புலம்பன் என நெய்தல்நிலத் தலைவன் பெயர்களைச் சுட்டுவர். (பிங். 602) (குறுந். 5)

மெல்லம் புலம்பு -

{Entry: J10__601}

மென்னிலங்களுள் ஒன்றாகிய நெய்தல்நிலம். (கோவை. 379 உரை)

மெலிதல் -

{Entry: J10__602}

கைக்கிளைத் தலைவி ஊரார் கூறும் அலரால் நாணி மெலிதல்.

“காமமிகுதியால் என்னுடல் கனலாய்க் காய்ந்துவிடுகிறது; இவனைக் கூடப்பெறாமல் என் கண்களும் நீர் சுரக்கின்றன; முன்பின் அறியாத அயலானான இவனுக்காக நான் இப்படி நலமிழந்து நலிகிறேன்” என்பது போன்ற கைக்கிளைத் தலைவி கூற்று.

இது பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 15-4)

மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் -

{Entry: J10__603}

தலைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக அவனிடம் உறுதிமொழி கூறிய தோழி தலைவியை அடைந்து, “இங்குத் தோன்றல் ஒருவன் வருகிறான். பிறர் குறை முடிக்கும் அப்பெருந்தகையாளன், என்னால் தனக்கு நிறைவேற வேண்டிய செய்தியொன்று உடையான்போலும். யான் அதனை முடித்துவைப்பதாக அவனது ஆறுதலுக்காகக் கூறிய செய்தியை உண்மையாகக் கொண்டு அவன் மகிழ்வொடு போய்விட்டான். அவன் இன்று வரின், அவன் குறையை யான் முடித்து வைக்காமையால் என்னைப் பொய்யள் என்று முடிவு செய்துவிடுவானே!” என்றாற் போலக் கூறித் தலைவியின் மனநிலையை உணர்ந்து தலைவ னொடு கூட்டுவிக்க ஆவன செய்தல்; தோழி தலைவியிடம் மென்மையான சொற்களைப் பேசி, அவள் தான் விரும்பும் செயலை நிறைவேற்றுவதற்கு விரும்பச் செய்தல். (இறை. அ. 10 உரை)

மெலிவு கண்டு செவிலி கூறல் -

{Entry: J10__604}

வரைபொருட்குப் பிரிந்த தலைவனிடமிருந்து தூதுகூட வரவில்லையே என்று வருந்திய நிலையிலிருந்த தலைவியை நோக்கிய செவிலி, “என்பெண் பண்டைய நிலையி லில்லையே! ஒருகால் இம்மலையில் முருகப்பெருமானால் தீண்டப்பட்டு இந்நிலையள் ஆகியிருத்தல் கூடுமோ?” என்று தலைவியது மெலிவு கண்டு கூறிப் பாங்கியை வினவுதல்.

இதனைச் ‘செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்’ என்றும் கூறுப; ‘அறத்தொடுநிலை’ என்னும் கிளவிக்கண்ணது. (இ. வி. 533 உரை)

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 282)

மெலிவு விளக்குறுத்தல் -

{Entry: J10__605}

தனியிடத்துத் தலைவியை எதிர்ப்பட்ட தலைவன் தன் பெருமையும் அறிவும் நீங்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைவியினுடைய அச்சம் மடம் நாண் இவற்றை நீக்குதற்குக் கண்ணால் கூறியதை விடுத்து மொழியானும் குறிப்பிடும் எழுவகைச் செய்திகளுள் ஐந்தாவது.

மெலிவு விளக்குறுத்தலாவது - தலைவன் உள்ளத்து நிறைந்த காமநோயான் தனக்குப் புறத்துறுப்புக்களில் நிகழும் தளர்வினைக் குறிப்பாக எடுத்துக் கூறல். (தொ. பொ. 98 இள.)

இயற்கைப்புணர்ச்சியின் பின் பிரிதலும் பிரிதல்நிமித்தமு மாகப் பொருந்துவனவாய்த் தலைவற்கு உரியன ஏழனுள் இஃது ஐந்தாவது. மெலிவு விளக்குறுத்தலாவது தலைவன் இப்பிரிவால் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனம் கொள்ளக் கூறலும், தலைவியின் வருத்தத்தைக் குறிப்பான் உணர்ந்து அது தீரக் கூறலும் ஆம். தண்ணீர் வேட்டு அதனை உண்டு உயிர் பெற்றவன் “இதனால் உயிர் பெற்றேன்” எனக் கருதி அதன்மாட்டு வேட்கை நீங்காதவாறு போலத் தலைவிமாட்டு வேட்கை எய்தி அவளை அரிதின் கூடி உயிர் பெற்றானாதலின், “இவளால் உயிர் பெற்றேன்” என் றுணர்ந்து அவள்மேல் நிகழ்கிற அன்புடனே பிரியக் கருதுவானாதலின், தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று.

எ-டு : ‘இவ்வுலகமே பெறினும் நின்னுடைய நட்பினை விடக் கருதுகின்றிலேன்” (குறுந். 300) என்ற தலைவன் கூற்று.

இங்ஙனம் அன்பு நிகழவும், “இப்புணர்ச்சியைப் பிறர் அறிதல் கூடாது என்பதற்காகப் பிரிகின்றேன்” என்பதனைத் தலைவிக்கு மனங்கொள்ளக் கூறுதலே விளக்குறுத்தலாம். தன் இடம் அணித்து என்றாற்போல மேலும் வற்புறுத்திப் பின்னர்ப் பிரிவான் என்பது. (தொ. பொ. 101 நச்.)

மெலிவொடு வைகல் -

{Entry: J10__606}

அலர் நாணியும் காமம் கைமிகுந்தும் வருந்திய கைக்கிளைத் தலைவி, அத்துன்பத்தொடு தளர்ந்திருந்த நிலை.

“காமம் வருத்தக் கண்ணீர் சொரிய என் வேட்கையை அடக் கிக் கொண்டு, எப்படியாவது இவ்விரவினைக் கழிப்பேன்” என்பது போன்ற தலைவி கூற்று.

இது பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகளுள் ஒன்று.

(பு. வெ. மா. 15 - 5)

மென்பால் -

{Entry: J10__607}

மருதமும் நெய்தலுமாகிய மென்னிலப் பகுதி (தொ. சொ. 10 சேனா.) மருதம் என்று நிகண்டு கூறும். (பிங். 724; திவா. பக். 108; நா. நி. 539, சூடா. V . 33)

மென்புலப் பொதுப்பொருள் -

{Entry: J10__608}

‘மென்புலப் பொருள்’ காண்க.

மென்புலப் பொருள் -

{Entry: J10__609}

கீரை, வழுதுணை, கிடை, சணப்பு, வேரி, தணக்கு, மருதம் முதலியன மென்புலமாகிய மருதம் நெய்தற் பகுதிகளுக்குரிய பொருள்களாம். (வீ. சோ. 96 உரைமேற்.)

மென்புலம் -

{Entry: J10__610}

மருதமும் நெய்தலுமாகிய மென்னிலப் பகுதி; மென்பால். (L)

மென்மொழியாற் கூறல் -

{Entry: J10__611}

களவுக்காலத்தில் தலைவனுடைய குறையைத் தலைவி நயந்து நிறைவேற்ற இணங்குமாறு கூறக் கருதிய தோழி, தலைவியை அணுகி, “பெரியோன் ஒருவன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம் புனத்தை விட்டு நீங்காது நிற்கிறான்; தன் குறை இன்னதென்று வெளிப்படக் கூறுவதும் செய்கிலன். இஃது என்ன மாயமோ, அறியேன்” என, மன்மதன் போலவும் முருகன் போலவும் பெருவனப்பினனாகிய தலைவனுடைய மெலிவுக்கு நொந்து கூறியது.

இது ‘குறை நயப்புக் கூறல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 83)

மைவரை உலகம் -

{Entry: J10__612}

மேகம் படிந்திருக்கும் மலை சூழ்ந்த குறிஞ்சிப் பகுதி. ‘உலகு’ என்னும் சொல் மண்ணுலகம் முழுதுமேயன்றித் தன்கண் கூறுபட்ட நிலங்களையும் உணர்த்தும் என்பது. (சிந். 2606 நச்.) (தொ. பொ. 5 நச்.)

மொழிசேர் தன்மை -

{Entry: J10__613}

அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று (வீ.சோ. 91). சொற்கள் ஒன்றோடொன்று வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித்தொகை படுமாற்றான் சேர்ந்திருக்கும் நிலையைக் கூறுதல். தொகையே அன்றி, முற்று, ஈரெச்சம், எழுவாய், விளி, வேற்றுமை விரி, இடைச் சொல், உரிச்சொல், அடுக்குச்சொல் ஆகிய தொகாநிலைத் தொடர்களும் ‘மொழி சேர் தன்மை’யில் அடங்கும். (வீ. சோ. 96 உரை)

மொழிப்பொருள் -

{Entry: J10__614}

நற்சொல் நிமித்தம். இது விரிச்சி என்று புறப்பொருளில் கூறப்படும். முல்லைப்பூக்களை நாழியில் கொண்டு போன நெல்லுடனே தூவி, ஊர் எல்லைப் புறத்து நின்று நற்சொல் நிமித்தம் பார்த்தல் மரபு. (முல்லைப். 8 - 11)(தொ. பொ. 36 நச்.)

மொழிபெற வருந்தல் -

{Entry: J10__615}

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர், பாங்கற் கூட்டத்துத் தலைவியைப் பொழிலிடையே தனியே கண்ணுற்ற தலைவன் அவளது புணர்ச்சியுடன்பாட்டை அவள் சொல்வாயிலாகப் பெறமுயலுதல்.

இதனைக் ‘கூடற்கு அரிதென வாடி யுரைத்தல்’ என்றும் கூறுப. (இ. வி. 503 உரை)

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 41)

மொழி பெற விரும்பல் -

{Entry: J10__616}

இது திருக்கோவையாரிலுள்ள ‘கிளவி வேட்டல்’ எனும் துறையை ஒத்தது. அஃதாவது தலைவியின் சொற்கேட்க விரும்புதல்.

இயற்கைப்புணர்ச்சிக்கு முன் தலைவன் தலைவியின் உள்ளக் குறிப்பினை அவளது புன்முறுவலால் உணர்ந்து அவள் புன்முறுவலின் அழகினை வியந்த பின்னர், “தன் கண்களால் கவரப்பட்ட யான் மகிழுமாறு புன்முறுவல் செய்த இத் தலைவி வாயைத் திறந்து சில சொற்கள் கூறின், அவை என்நோய்க்கு மருந்தாக இருக்கும்” (திருப்பதிக். 22) என்று அவள் சொற்களைக் கேட்க விரும்புதல்.

இஃது ‘இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அகப். 19)

மொழிபெறாது கூறல் -

{Entry: J10__617}

இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம் இவற்றின் பின் தோழி யின் உதவியினாலேயே களவொழுக்கத்தைத் தொடர்தல் வேண்டும் என்று முடிவு செய்த தலைவன், தலைவியும் தோழியும் உடனிருக்கும் இடத்தினை எய்தி, வேழம் கலை மான் வழி பதி பெயர் ஆகியவை பற்றித் தோழியை வினவிய வழி, அவள் மறுமொழி கொடாததைக் கண்டு, “இப்புனத்தி லுள்ள மகளிர் விருந்தினரோடு உரையாடக் கூடாது என்பது விரதமாக உடையவரோ?” என்றாற்போல வினவுதல்.

இது ‘மொழியாமை வினாதல்’ என்றும் கூறுப்பெறும்.

(இ. வி. 507 உரை)

இது ‘மதியுடம்படுத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 57)

மொழிவகை -

{Entry: J10__618}

இஃது அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று; இப் பாட்டுச் செஞ்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்னுமிவற்றில் இன்ன சொல்பற்றி வந்தது என்பது. (வீ. சோ. 86)

மோகம் -

{Entry: J10__619}

களவினுள் முதற்கண் தலைவன் தலைவியரிடை மெய்யுறு புணர்ச்சி நிகழுமுன் தலைவனுக்கு விளையக்கூடிய பத்து அவத்தைகளில் ஒன்பதாவதாகிய மயக்கம் என்ற நிலை. இதன்கண் மொழிபல பிதற்றலும் நிகழும்.

(வீ. சோ. 96 உரைமேற்.)

ய section: 7 entries

யாணரைக் காண விரும்பல் -

{Entry: J10__620}

தலைவியின் புனிற்றுக்காலத்துப் புதிய எழிலைத் தலைவன் காண விரும்புதல்.

“புதல்வனைப் பெற்றெடுத்துப் புதுப்பொலிவுடன் வைகும் என் மனைவியின் குவளை நோக்கினையும், மனமகிழ்ச்சி யினையும், கையிற் குழந்தையுடன் இருக்கும் நிலையினையும், நெய்யாடிய அழகிட்டு வெளுத்த மேனியினையும் தவமுடை யேன் சென்று காண்பது என்றைக்கோ?” என்ற தலைவன் கூற்று.

யாணர் - புதிதாகத் தோன்றும் அழகு.

இது ‘பரத்தையிற் பிரிவு’ என்னும் கிளவிக்கண்ணதொரு துறை. (அம்பிகா. 465)

“யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

{Entry: J10__621}

தன்னிடம் வந்து ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் வினவி நிற்கும் தலைவனை, “இவர் யார்? இவர் மனக் கருத்து யாது?” எனத் தோழி ஆராய்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘ஐயுறுதல்’ (60)‘அறிவு நாடல்’ (61) எனச் சுட்டும்.

இது களவியலுள், ‘பாங்கிமதியுடன்பாடு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 140)

யாழோர் -

{Entry: J10__622}

யாழ்வல்லோர்; ‘யாழோர் மருதம் பண்ண’ (மதுரைக். 658)

யாழோர் கூட்டம் -

{Entry: J10__623}

இது மன்றல் எட்டனுள் ஐந்தாவது. இதுவே காந்தருவம் எனப்படுவது. கந்தருவர் என்ற தேவசாதியினரின் இன்பம் துய்க்கும் வகை இதுவாகலின் இப்பெயர்த் தாயிற்று. யாழோர் - கந்தருவர்.

குலத்தாலும் பிறநலத்தாலும் ஒப்புமையுடைய தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்ட அளவில் உள்ளப் புணர்ச்சியுற்றுப் பின் மெய்யுறுபுணர்ச்சியும் கொள்ளுதலான், கந்தருவர் கண்ட திருமண முறையாகிய இதன்கண் கொள்வாரும் கொடுப்பாரும் உடன் இருப்பாரும் என யாருமே இல்லை; இருவரும் தனித்துத் தாமே கூடும் கூட்டம் இது.

கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும்பெறும்; ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் ‘துறையமை’ என்று ‘நல்யாழ்த் துணைமையோர் இயல்பு’ ஆகிய காந்தருவம் விசேடிக்கப்பட்டது. (தொ. பொ. 92 நச்.)

யாழோர் மணவினை -

{Entry: J10__624}

யாழோர் கூட்டம்; கந்தருவம். ‘யாழோர் மணவினைக்கு ஒத்தனள் என்றே’ (மணிமே. 22 : 86)

யாழோர் வேண்டும் புணர்ச்சி -

{Entry: J10__625}

கந்தருவர் என்ற தேவசாதியைச் சேர்ந்த ஆடவரும் கன்னிய ரும் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே பொழி லகத்துத் தனியே எதிர்ப்பட்டுப் புணர்வது. இப்புணர்ச்சிக் குப்பின் கந்தருவரிடம் கரணத்தொடு திருமணம் செய்து கொள்ளுதல் நிகழாமலும் போகலாம். ஆயின், இக்கந்தருவர் வேண்டும் புணர்ச்சிபோல் தலைவனும் தலைவியும் தாமே கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தனியிடத்து எதிர்ப் பட்டுக் கூடும் இயற்கைப் புணர்ச்சி, கரணமொடு புணரத் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நிகழ்த்தும் கற்பிய லாக மேல் தொடரப்படுவதாகலின், இஃது யாழோர் வேண் டும் புணர்ச்சியை ஒத்ததேயன்றி அதுவே யாகாது. (ந. அ. 28)

“யானறியேன் நீ யுரை” என்றல் -

{Entry: J10__626}

தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் மணத்தற்குக் கொடுக்கவேண்டும் பரிசப்பொருள் பற்றி வினாவ, அவள் அது பற்றித் தனக்குத் தெரியாது எனவும், அவனே அவள் தமரை உசாவி அது பற்றி அறிதல் வேண்டும் எனவும் கூறுதல்.

இஃது ‘உடன்போக்கு வலித்தல்’ என்னும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (த. நெ. வி. பக். 35)

வ section: 237 entries

வகுத்துரைத்தல் -

{Entry: J10__627}

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி அவனிடமிருந்து கையுறையாகப் பெற்றுவந்த தழையாடையைத் தலைவிக்கு அளிக்குமுன், “இவ்வாடையை நாம் ஏலாவிடில் தலைவன் துயருறுவான்; ஏற்றால், நம்மைப் பிறர் அலர்தூற்றும் வாய்ப்பு நிகழும். நமக்குப் பேருதவி செய்த தலைவற்குக் கைம்மாறாக ஓர் உதவி நாம் செய்யாவிடின், செய்ந்நன்றி கொன்றவரா வோம்” என்று பலபடியாகத் தலைமகள் தழையை ஏற்பதற்கு உரியவற்றை நாடிக்கூறுதல்.

இது ‘சேட்படை’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 113)

வங்கர் -

{Entry: J10__628}

நெய்தல் நிலமக்கள். வங்கம் ஓட்டுநர் என்ற காரணப்பெயர்.

வசதி -

{Entry: J10__629}

மருதநிலத்து நகரம். (பிங். 4009, சூடா. V - 40)

வஞ்சித் துரைத்தல் -

{Entry: J10__630}

தலைவனுக்குக் குறை நேர்ந்த பாங்கி தலைவியிடம் அவன் நிலையைக் கூற, அவள் அறியாதவளைப் போலக் குறிப்பாகக் கூற, தோழியும் தான் வெளிப்படையாகத் தலைவன் அவளொடு கொண்டுள்ள தொடர்பைக் கூறாமல், பாங்கற் கூட்டம் கூடித் தோழியிற் கூட்டத்துக்கு முயலும் அவனது நிலையினை வேறொருவர்மேல் வைத்து மறைத்துக் கூறல்.

இது ‘குறைநயப்புக் கூறல்’ எனும் கிளவிக்கண்ணதொரு துறை. (கோவை. 86)

வண்டோச்சி மருங்கு அணைதல் -

{Entry: J10__631}

‘மருங்கு அணைதல்’ காண்க. (கோவை. 45) (இ. வி. 495 உரை)

வந்தவழி எள்ளல் -

{Entry: J10__632}

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள் இது ஒன்று.

பாங்கனால் தலைவி ஆடிடம் தெரிந்து தலைவன் வந்த விடத்து அஃது ஆயத்தார்க்குப் புலனாகுங்கொல் என்னும் அச்சத்தான் தலைவி கூட்டத்தை இகழ்ந்திருத்தல். (தொ. கள. 21 ச. பால.)

வந்துழி மகிழ்ச்சி -

{Entry: J10__633}

ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்திருந்த தலைவன் வினை முற்றி மீண்டு வந்தபோது தலைவியும் தோழியும் மகிழ்தல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் நிகழ்ச்சி களிடை ஒன்று. (ந. அ. 209)

வந்தோன்தன்னொடு நொந்து வினாதல் -

{Entry: J10__634}

களவொழுக்கத்தினிடையே தன்னூர் சென்று மீண்ட தலைவனிடம் தோழி, நீட்டித்தமைக்கு வருந்திக் காரணம் கேட்டல்.

“தலைவ! நின் பிரிவைத் தாங்காமல் தலைவி தன்னுடல் முழுதும் வெளுத்துப் போக நின்னை நினைத்து விழுந்து எழுந்து விம்மி மெலிந்துள்ளாள்” (கோவை. 193) என்றாற் போலத் தோழி தலைவியது தாங்கொணாப் பிரிவுத் துயரைத் தலைவனிடம் கூறுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘வருத்தமிகுதி கூறல்’ என்னும். (193)

இது களவியலுள் ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 168)

வயல் -

{Entry: J10__635}

மருத நிலம் (திவா. பக். 108)

வரவு உணர்ந்துரைத்தல் -

{Entry: J10__636}

ஒருவழித் தணந்த தலைவன் வந்து சிறைப்புறத்து நிற்க, அவன் வரவு அறிந்த தோழி மதியத்திடம், “சந்திரனே! என் வளைகள் கழலுகின்றன; நெஞ்சம் நெகிழ்ந்துருகுகின்றது; கண்கள் துயிலின்றிக் கலுழ்கின்றன. இவற்றை நான் சொல்ல வேண்டா. நீயே தலைவனிடம் சொல்லுக” என்று கூறுவது.

இஃது ‘ஒருவழித் தணத்தல்’ எனும் தொகுதிகண்ணதொரு கூற்று. (கோவை. 192)

வரவு எதிர்ந்திருத்தல் -

{Entry: J10__637}

பெருந்திணைத் தலைவி தன் மனையகத்துத் தலைவனை எதிர்பார்த்திருத்தல்.

“நெஞ்சே! பூக்கள் பரப்பிய பள்ளியில் அமர்ந்து, பூவும் சாந்தும் அணிந்து, நம் தலைவன் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாய்!” என்பது போன்ற தலைவி கூற்று.

இது பெருந்திணையின் ஒரு பகுதியான பெண்பாற்கூற்றுத் துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 16 - 4)

வரவு தாழ்ந்து இரங்கல் -

{Entry: J10__638}

தலைவன், கற்புக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்து மீண்டுவருவதாகக் கூறிப் பொருள்தேடல் கருதிப் பிரிந்து சென்றவன், அக்காலத்து மீளாத நிலையில், தலைவி அவன் வருகை நிகழாமை குறித்து வருந்திக் கூறல்.

“அன்னம் தன் பெடையைக் குளத்தின் தாமரைப்பூவில் தங்கவைத்து விரைவில் நீரிலிருந்து இரையைக் கொண்டு வந்து, அச்சிறுபிரிவும் தாங்காத பெடைக்கு அருத்திப் பின் அதனை விட்டு நீங்காது எப்போதும் தங்கியிருப்பதைப் பார்க்கும்போது மனிதப்பிறவி யெடுத்த என்னைவிட அன்னப்பேடு மிகுந்த தவம் செய்துள்ளது என்பது உறுதி” என்ற தலைவி கூற்று. (மா. அ. பாடல். 550)

வரவு விலக்கல் -

{Entry: J10__639}

களவுக்காலத்தில் இரவுக்குறியில் தோழி, தலைவன் விடுப்ப மீண்டு வந்த தலைவியைப் பள்ளியிடத்துச் சேர்த்திச் சென்று, “தலைவ! இத்தலைவி காரணமாக இக்கொடிய கல்மிக்க வழியில் இனி வாராதே” என்று விரைவில் அவளை வரைந்து கொள்ளுமாறு குறிப்பிட்டு இரவுக்குறிக்கு வருதலைத் தவிர்த்தது.

இஃது ‘இரவுக்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 168)

வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

{Entry: J10__640}

வரைதற்குப் பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் மீள்வான் என்று தோழி தலைவிக்கு வற்புறுத்தி யுணர்த்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘வருத்தம் கண்டுரைத்தல்’ என்னும் (274).

இது களவியலுள், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 170)

வருங்கால் கலக்கம் -

{Entry: J10__641}

‘வருவழிக் கலங்கல்’ அது காண்க. (சாமி. 123)

வருணன் -

{Entry: J10__642}

நீருக்குரிய தெய்வம்; நெய்தல் நிலத்தெய்வம்.

கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல்நிலத்தில் வாழும் நுளை யர்கள் தங்கட்கு வலையாற் பிடிக்கும் மீன்வளம் குறைந்தால், தம் நிலத்து, மகளிரை உறவினருடன் அழைத்துக் கூட்டிச் சுறாமீன் கொம்பினை நட்டுவைத்து வருணனாம் தம் நிலத்தெய்வம் குறித்து வழிபாடுகள் நிகழ்த்துதலின், அவர்க ளுக்கு அத்தெய்வத்தினது அருள் வெளிப்படும்.

வருணன் அலைகள் மோதிக் கடற்கரை கரைந்து போகாத வாறு காக்கும். (தொ. பொ. 5 நச்.)

வருணன் பெருமணற்பகுதிக்குத் தெய்வமாதல் -

{Entry: J10__643}

‘வருணன்’ காண்க.

வருத்தம் கண்டுரைத்தல் -

{Entry: J10__644}

தலைவனுடைய வரைபொருட்பிரிவு குறித்துத் தலைவி நெஞ்சொடு வருந்துவது கண்ட தோழி, “தலைவன் சென் றுள்ள காட்டில் வேடர்கள் தத்தம் மனைவியர்தம் கண்களைப் போன்ற கண்களையுடையன என்று மான்களை வேட்டையாடமாட்டார்கள். அவ்வாறு மனைவியரிடம் விருப்பமிக்க அவர்கள் வாழும் வழியே சென்ற தலைவன் விரைவில் பரிசப்பொருளொடு மீள்வான். ஆதலின் நீ கவலைப்படாதே” என்று வருத்தம் தீர வுரைத்தல்.

இதனை ‘வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 274)

வருத்தம் கூறி வரைவு கடாதல் -

{Entry: J10__645}

களவுக்காலத்தில் பகற்குறிக்கண் தலைவனிடம் உண்மை யுரைத்து வரைவுகடாய தோழி, “இன்னும் நீர் தன்னை மணந்துகொள்ள வில்லையே என்று தலைவி வருந்துகிறாள். வரைவு என்பதை நினைத்து நீர் வருந்துகின்றீர். இவ்வாறு நும் இருவருள்ளமும் மாறுபட நிகழ்தலின், இருவர்க்கு மிடையே யான் வருந்துகின்றேன்” என்று தலைவனுக்குத் தலைவியின் வருத்தத்தையும் தன் வருத்தத்தையும் கூறி வரைவு கடாவுதல்.

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 131)

வருத்தம் தணித்தல் -

{Entry: J10__646}

கற்புக்காலத்தில் தலைவன் பகை தணி வினைக்குப் பிரிந்தா னாக, அவனது பிரிவு கேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “நின்னை விட்டு அவர் பிரியார். நீ நெருப்பினையுற்ற வெண்ணெய் போலவும், நீரினையுற்ற உப்புப் போலவும் இவ்வாறு உருகித் தனிமை யுற்று வருந்தாதொழி” என அவளது வருத்தத்தை தணித்தது.

இது ‘பகை தணிவினைப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 315)

வருத்த மிகுதி கூறல் -

{Entry: J10__647}

தலைவன் ஒருவழித் தணந்து வந்து சிறைப்புறத்து நிற்கத் தலைவி, அன்னம் மதியம் இவற்றொடு தலைவன்பிரிவு பற்றிக்கூறி வருந்திக்கொண்டிருந்த நிலையில், தோழி அவனை அணுகித் தலைவி படும் பிரிதல்துயரம் தனது சொல்லளவினைக் கடந்தது என்று கூறி, அவன் அவளை விரைவில் வரைதல்வேண்டும் என்பது படத் தலைவியின் வருத்த மிகுதியை அவனுக்குக் கூறுதல்.

இதனை ‘வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்’ என்றும் கூறுப. (ந. அ. 168)

இது ‘ஒருவழித்தணத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதாகிய கூற்று. (கோவை. 193)

வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -

{Entry: J10__648}

தலைவி அலராலும் காவல் மிகுதியாலும் தலைவனைக் குறியிடத்து எதிர்ப்பட இயலாதவளாகி அழுது வருந்தி யிருக்கும் நிலையைத் தலைவனுக்கு எடுத்துக் கூறி, அவன் அவளை விரைவில் வரைந்துகொண்டு இல்லறம் நடத்து மாறு தோழி வற்புறுத்திக் கூறுதல்.

இதனை ‘ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்’ என்றும் கூறுப; (ந. அ. 166)

இது ‘வரைவு முடுக்கம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 250)

வருமது கூறி வரைவுடம்படுத்தல் -

{Entry: J10__649}

களவொழுக்கத்தை நீட்டித்த தலைவனிடம் தோழி, “தலைவ! நீ தலைவியை வரைந்துகொள்ளாது இரவிடை அவளொடு தொடர்பு கொள்வது அவள் கருவுறுதற்கு ஏதுவானால் நம் எல்லோர்க்கும் அது பொல்லாதாக முடியும். அதற்கு இடன் தாராது விரைவில் பரிசப்பொருள் கொடுத்துத் தலைவியை வரைந்தெய்த முயல்வாய்” என மேல் வரும் இடுக்கண் கூறித் தலைவனை வரைவு கடாயது.

இது ‘வரைபொருட் பிரிதல்’ என்ற தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 267)

வருவழிக் கலங்கல் -

{Entry: J10__650}

ஓதல் காவல் தூது துணை பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்து சென்று, வினைமுற்றி மீளும் தலைவன், வரும் வழியில், பருவம் கண்டு, தான் குறித்த அப்பருவத்தில் தலைவியை வந்து கூடாததால் அவள் வருந்திப் புலம்புவாளே என்று வருந்துதல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் நிகழ்ச்சிகளில் ஒன்று. (ந. அ. 209)

வரைதல் (1) -

{Entry: J10__651}

அந்தணர் சான்றோர் போன்றாரை முன்னிட்டு அருங்கலம் கொடுத்துத் தலைவியைத் தலைவன் முறைப்படி மணந்து கொள்ளுதல்.

இஃது இத்திருமணத்தைக் கண்டோர் கூற்றாகவோ, கவி கூற்றாகவோ வரும்.

இது வரைவியற்கண் இறுதிச் செய்தி. (ந. அ. 199)

வரைதல் வேட்கை -

{Entry: J10__652}

குறிகள் இரண்டினும் இடையீடு ஏற்பட்டதால் தலைவி தலைவனை மணக்கும் விருப்பம் தோன்றக் கூறுதல். இது பத்தாம் நாள் நிகழ்ச்சி என்ப.

இது களவியற்குரிய கிளவித்தொகுதிகளுள் பதினான்காவது. (ந. அ. 123)

வரைதல் வேட்கைப் பொருள (1) -

{Entry: J10__653}

தலைவி தலைவனை மணத்தலை விரும்பிச் சொல்லும் சொற்கள்.

1. பகற்குறியிலோ இரவுக்குறியிலோ தலைவன் தலைவியைக் கூடிச் செல்வதால், அவனைக் காணும் பொழுதினும் காணாப் பொழுது பெரிதாகலான், தலைவி வேட்கை பெருகி அதனைக் கடலிடமோ கானலிடமோ புன்னை யிடமோ அன்னத்திடமோ பிறவற்றிடமோ கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவியும்;

2. நிறைகாவல் சிறைகாவல் என்ற இருவகைக் காவலுள்ளும் தன் நிறையின் வேறுபாட்டைப் புறத்தார்க்குப் புலனா காமல் காத்தவழியும், வேட்கை பெருகத் தலைவனைக் காணல் வேண்டும் என்ற ஆற்றாமை பெருகியவழியும், தாய் துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலிய சிறைகாவல் மிகுதலால் தலைவனை இரவுக்குறிக்கண் சந்திக்கும் வாய்ப்பினைப் பெறாதவழியும், ஆகிய நிலையில் கையற்றுக் கூறும் காப்புச்சிறை மிக்க கையறு கிளவியும்;

3. இரவுக்குறிக்கண் தலைவன் வரும் வழி இறப்பவும் இன்னாது, நீருடைத்து, கல்லுடைத்து, முள்ளுடைத்து, ஏற்றுடைத்து, இழிவுடைத்து எனக் கவலுதலும், அவ்வழி கள்வருடைத்து, புலியுடைத்து, எண்குடைத்து, வெண் கோட்டு யானையுடைத்து, உருமுடைத்து, பாந்த ளுடைத்து எனக் கவலுதலும் பற்றி நிகழும் ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவியும்;

4. பகலில் வரும் தலைவனை இரவில் வருமாறு வேண்டலும்,

5. இரவில் வரும் தலைவனைப் பகலில் வருமாறு வேண்ட லும்;

6. பகலிலும் இரவிலும் தவறாது வருமாறு வேண்டலும்;

7. ஊரில் அலர் பெருகிவிட்டமையால் ஒருபோதும் தன்னை நோக்கி வருதல் வேண்டா என்று கூறலும்;

8. தலைவி தன்னுள்ளத்திலுள்ள செயலற்ற நிலையை மற்ற பொருள்களின்மீதும் ஏற்றிப் புலம்புதலும்;

என்னுமிவை தலைவி தன் உள்ளத்திலுள்ள வரைதல் வேட்கையைப் புலப்படுத்தும் சொற்களாம். (இறை. அ. 30 உரை)

வரைதல் வேட்கைப் பொருள (2) -

{Entry: J10__654}

தவைன் தன்னை விரைவில் மணத்தல் வேண்டும் என்று தலைவி கருதும் கருத்தை வெளியிடும் கூற்றுக்கள் பின் வருமாறு:-

1. இராப்பொழுதும் அக்காலத்துத் தலைவன் கடந்து வரும் வழியும், வரும் இடத்திலுள்ள காவலும் என்ற மூன்றிலும் சிறிது தவறினும் தலைவனுக்கு விளையக்கூடிய துன்பத் தைத் தலைவியும் தோழியும் உணர்த்துதல்,

2. தலைவன் இராக்காலத்துக் கொடிய வழியிடத்தே தனியே வருதற்குத் தான் காரணமாயுள்ளமை நினைத்துத் தலைவி தன்னை நொந்துரைத்தல்,

3. அவ்வழியில் தலைவனுக்கு வரக்கூடிய தீங்குகட்குத் தலைவி அஞ்சுதல்,

4. இரவு பகல் இருபோதும் குறியிடத்து வருமாறு தோழி தலைவனிடம் கூறுதல்,

5. தோழியும் தலைவியும், தலைவனை, “வாரற்க” என வேண்டுதல்,

6. தலைவனுக்கு வரைதலே நன்மை, களவொழுக்கம் தீது என்ற செய்தியைப் பிறர்மேல் வைத்துத் தோழி கூறுதல்,

7. ஊடலின்றியே தலைவனைத் தலைவி, “கொடியன்” என்றல்,

8. நொதுமலர் தலைவியை மணப்பதற்கு ஏற்பாடு செய் கிறார்கள் என்று தோழி கூறல்,

9. “அன்னை வெறியாட்டு எடுக்கப்போகிறாள்” என்று தோழி கூறல் -

என இவை போல்வன. (தொ. பொ. 210 நச்.)

வரைதலாறு -

{Entry: J10__655}

களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்துகொள்ளுதல், களவு வெளிப்படா முன்னர் வரைந்துகொள்ளுதல் என வரையும் நெறி இருவகைப்படும். (தொ. பொ. 140 நச்.)

வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

{Entry: J10__656}

“தலைவ! நீ என்னொடு பிரியாது கூடிவாழ்தலை விரும்பா விடினும், மெல்லமெல்ல என்னைக் கைவிடுதற்கு முயல்க. அஃதாவது எப்பொழுதாவது ஒரு நாளாவது என் இல்லத் திற்கு வந்து அருள்செய்க. அங்ஙனம் நீ செய்ய யான் வேண்டு வது மற்றவர் என்னை உன்மனைவி என்று கூறுதற்கேயாம். இனி, உன்விருப்பம்போல் செய்க” (ஐங். 83 என்ற தலைவி கூற்று.

வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

{Entry: J10__657}

“தலைவி! பனிக்காலத்தில் நின்தோள்களை நீங்காது தழுவு தற்கு மனம் சுழலும் தலைவர், குவளை மலரப் பீர்க்குப் பொன்னைப் பூக்கும் இப்பனிக்காலத்தை ஒருபோதும் மறவார்காண்” என்று தோழி கூறுதல். (ஐங். 464)

வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல் -

{Entry: J10__658}

உடன்போய் மீண்ட தலைவனுக்கும் தலைவிக்கும் முறைப் படத் திருமணம் நிகழ்த்தி மகிழ விரும்பிய நற்றாய்க்குச் செவிலி, “தலைவன் தன்னூரில் பலருமறிய நம்மகளை வரைந்துகொண்டான்; அவன்பின்னே அவள் இன்று நம்மனை வருவாள். இவ்வாறு சில தூதர் வந்து தெரிவித் துள்ளனர்” (தஞ்சை. கோ. 357) என்று கூறுதல்.

இது வரைவியலில், ‘தன்மனைவரைதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 194)

வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்தல் -

{Entry: J10__659}

“தலைவியைத் தலைவன் முறைப்படி மணக்கும்போது பூரண கும்பங்கள் வைக்கப்பட, தோரணங்கள் தொங்கவிடப்பட, வாத்தியங்கள் ஒலிக்க, மணமுரசு முழங்கும்” (கோவை. 296) என்று கண்டோர் மகிழ்ந்து கூறுதல். (ந. அ. 199 உரை)

வரைந்துகோடல் -

{Entry: J10__660}

இது களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித்தொகையுள் ஒன்று. இக்கிளவியில், கண்டு வந்து எதிர்கொளல், களித்தன ராய்த் தமர் கொண்டு அகம் புகுதல், குழீஇய கொள்கையர் கொடுப்பக் கோடல் என்ற மூன்று வகைகள் உள. இவற்றின் விரியாக ஒன்பது கிளவிகள் வருமாறு:

குலனெதிர் கோடல், கொண்டு அகம் புகுதல், கோலம் காண்டல், கொடுப்பக் கோடல், கண்டோர் மகிழ்தல், இகுளை வாழ்த்தல், தருப்பையைத் தலைவன் மனத்துற நகுதல், ஆங்கதை இறைவிக்கு அவன் தெளிந்துரைத்தல், பாங்கி கையடை பணித்தல் என்பன. (மா. அக. 81, 82)

வரைபொருட்கு அகறல் மூவகை -

{Entry: J10__661}

களவு வெளிப்பட்டபின் கற்புக் காலமாதலின் அக் கற்புக் காலத்துத் தலைவன் நெட்டிடை கழிந்து திருமணப் பரிசப் பொருளுக்கு அகன்றானாக, அவ்வகற்சி, தோழி இயற்பழித் தல், தலைவி இயற்பட மொழிதல், தோழி தணப்பு இடர் ஒழித்தல் - என்ற மூவகை யுடைத்து (அகற்சி - நீங்குதல்; தணப்பு - பிரிவு). (க. கா. பக். 132)

வரைபொருட்பிரிதல் -

{Entry: J10__662}

வரைவிடத்துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகப் பொருட் பகுதி. (கோவை. சூ. 18)

வரைபொருட் பிரிதல் துறைகள் -

{Entry: J10__663}

1. முலைவிலை கூறல், 2. வருமது கூறி வரைவுடம் படுத்தல்,
3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல், 4. நீயே கூறு என்றல், 5. சொல்லா தேகல், 6. பிரிந்தமை கூறல், 7. நெஞ் சொடு கூறல், 8. நெஞ்சொடு வருந்தல், 9. வருத்தம் கண்டு ரைத்தல், 10. வழியொழுகி வற்புறுத்தல், 11. வன்புறை எதிர ழிந்து இரங்கல், 12. வாய்மை கூறி வருத்தம் தணிவித்தல், 13. தேறாது புலம்பல், 14. காலம் மறைத்துரைத்தல், 15. தூது வரவுரைத்தல், 16. தூது கண்டழுங்கல், 17. மெலிவு கண்டு செவிலி கூறல், 18. கட்டு வைப்பித்தல். 19. கலக்கமுற்று நிற்றல், 20. கட்டுவித்தி கூறல், 21. வேலனை அழைத்தல், 22. இன்ன லெய்தல், 23. வெறி விலக்குவிக்க நினைதல், 24. அறத்தொடு நிற்றலை உரைத்தல், 25. அறத்தொடு நிற்றல், 26. ஐயம் தீரக் கூறல், 27. வெறிவிலக்கல், 28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல், 29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல், 30. தேர்வரவு கூறல், 31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல், 32. ஐயுற்றுக் கலங்கல், 33. நிதி வரவு கூறாநிற்றல் என்பன. (கோவை 366 - 298)

வரையாது பிரியா இடம் -

{Entry: J10__664}

களவுக்காலத்தில் திருமணத்தைத் தள்ளிவைத்துவிட்டு ஓதல் பகை தூது என இவை பொருட்டாகத் தலைவன் பிரிதல் இல்லை; காவல் தூது என இவைபொருட்டாகவே மிக இன்றியாமைப்படின் பிரிவான். (தொ. பொ. 141 நச்; 177 குழ.)

வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

{Entry: J10__665}

“ஞாழலின் பூஞ்சினை வருந்தப் பறவைகள் தங்கும் நாடன் ஆதலின், தலைவன் தான் வரையாது, நமக்கு வரும் நோய் பற்றிய கவலையின்றித் தான் வேண்டும் இன்பம் ஒன்றனையே கருதியுள்ளான். அத்தகைய தலைவனை யான் இனி நினைக்க வில்லை! என் கண்கள் உறங்குவன ஆகுக!” என்ற தலைவி கூற்று. (ஐங். 142)

வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

{Entry: J10__666}

“தலைவ! ஆட்டுக்கிடாய் தன்னை விரும்பி வாராவிடினும் பெண் ஆடு அதனிடத்துள்ள ஆசையால் அதன் வரவினை எதிர்பார்த்துத் தங்கியிருக்கும் அருவிவளம் சான்ற மலை நாட! நீ பிரிந்தகாலை தொலையும் இவளழகு நீ வருகாலை இவளிடம் மீண்டும் வந்த பொருந்துதலின், இவளது கவினழிவு நினக்குப் புலனாவதில்லை” என்ற தோழி கூற்று. (ஐங். 238)

வரையா நுகர்ச்சி -

{Entry: J10__667}

மணம் செய்து கோடலின்றித் தலைவன் தலைவியர் தம்முள் நுகரும் களவுக்கால ஒழுக்கம். (பரி. 8 : 41)

வரையும் நாள் உணர்த்தல் -

{Entry: J10__668}

தோழி தலைவனிடம் தலைவியை மணந்துகொள்ளத் தகுந்த காலம் இதுவெனக் கூறுதல்.

“மலைநாட! வேங்கைகள் பூத்துவிட்டன. வேங்கை பூக்கும் காலம் தினை முற்றி அறுக்கப்படும் காலம். ஆகவே, தினைப் புனம் காவல் இனி இராது. இனி, பகற்குறிக்கு வாய்ப்பில்லை. நிலா பகல் போல ஒளி வீசுவதால் இரவுக்குறிக்கும் வாய்ப் பில்லை. ஆதலின் நீ தலைவியை மணந்தே இன்பம் துய்க்க வேண்டும். திருமணத்திற்குரிய நிறைமதி நாளும் அண்மையில் வந்துவிட்டது” (கோவை. 262) என்பது போன்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘காலம் கூறி வரைவு கடாதல்’ என்னும் (262)

இது ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

வரையொடு புலம்பல் -

{Entry: J10__669}

தலைவி தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்து அவளைத் தேடிச் சென்ற செவிலி பலரொடும் பலவாறு தன் துயரம் பற்றிப் பேசிப் பின் மலையினிடம், “நின் உள்ளம் மிக இளகியது. குடிக்க நீரும் கிட்டாத கொடிய பாலைவழியில் தலைவன்பின்னே புறப்பட்டுச் சென்ற என் பெண்ணின் செயலைக்கண்டு அதனைத் தடுத்தல் இயலாது நீ விடுத்த கண்ணீரே அருவி என்ற பெயரொடு பள்ளம் நோக்கி இறங்கி ஓடுகிறது!” என்று கூறுதல்.

இது ‘கற்பொடு புணர்ந்த கவ்வை.’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (திருவாரூர்க். பாடல். 408)

வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

{Entry: J10__670}

“தலைவி! தலைவனைக் காணாத நிலையிலும் கண்டாய் போல நீ அழகுடன் இருப்பதன் காரணம் யாது?” என்று வினவிய தோழியை நோக்கித் தலைவி,

“தோழி! ‘நின்னைப் பிரியின் உயிர் வாழேன்’ எனக் கூறிய தலைவனைப் பற்றி, ‘நீ கொண்ட என் நலத்தை மீட்டும் தருக’ என்று வளைத்துக்கொள்வேன் போலவும், அவன் என் அழகை யான் மீண்டு பெறுமாறு என்னைத் தழுவி ஆறுதல் கூறுவான் போலவும், ‘என் நகிலிடைத் துயிலை நீ மறந்தாயே!’ என்று நான் அழுவேன் போலவும், ‘வலையி லகப்பட்ட மயில் போலப் பெரிதும் வருந்தினாய்’ என்று என்னைப் பணிந்து தேற்றுவான் போலவும், அங்ஙனம் வணங் கியவனை மாலையை ஓச்சி அதனால் அடிப்பேன் போலவும், ‘என்னிடம் தவறொன்றுமில்லை’ என்று கூறி என்னைத் தெளியச்செய்வான் போலவும், நான் கனவிற்கண்டேன். கனவு நனவாதல் கூடும் என்ற ஆசையால் என்மனம் உற்சாக முறு கிறது” என்று கூறுதல். (கலி. 128)

வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

{Entry: J10__671}

“தலைவ! அறன் அல்லவற்றை என்றும் விரும்பாத உள்ளம் ஒரோவழி மயங்கி விரும்புமாயினும், தாம் பெற்ற உபதேச மொழிகளே அங்குசமாக, உள்ளமாகிய யானையை மீட்டு இல்லறமும் பொருளும் வழுவாதபடி தம் தகுதியை உணர்ந்து தாம் கருதியதை முடித்தலே பெரியோர் ஒழுக்கமாம். அத்தகைய பெரியோரிடத்தும் பொய்யொடு கூடிய கூற்றுக்கள் தோன்றின், இவ்வுலகில் மெய் யாண்டும் இராது. அத்தகைய பெரியோருள் ஒருவனாகிய நீ வாளா கூறல் அமையும். என்னைத் தொட்டுச் சூளுறுதல் வேண்டா” என்ற தோழி கூற்று. (அகநா. 286)

“வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -

{Entry: J10__672}

தலைவன் திருமணம் செய்துகொள்ளாமையால் தன் னுடைய உடலும் மனமும் வேறுபட்ட தலைவியைத் தோழி வினவ, அவளும், “மகளிர் அலைப்பதனால் வருந்தும் நண்டின் துயர் தீர அதனை அலைகள் கொண்டு சென்று காக்கும் துறைவனாகிய நம் தலைவன், நம் அன்னை முதலியோர் வருத்தும் துயர் தீர என்னை மணந்து கொண்டு இல்லறம் நடத்திப் புரக்க வேண்டியவன். அவன் மணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் வளை நெகிழ உடல் மெலிய யான் படும் நோய்க் காரணத்தை அன்னை உள்ளவாறு அறியின், யான் உயிர் வாழ்தல் ஏற்றதன்று. அன்னை அறிவாளோ என்ற அச்சமே என்னை நலிகின்றது” என்று கூறுதல். (குறுந். 316)

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

{Entry: J10__673}

“தோழி! சங்கினங்கள் கரையிடத்தே வந்து சுழல, கடல் அலைகள் முழங்க, நீர்த்துறையில் மரக்கலங்களைச் செலுத் தும் துறைவன் ஆதலின், நொதுமலர் அகல, நம் சுற்றத்தார் மகிழ, அயலார் கூறும் அலர் சிதைய, அவன் தேரில் வந்து தோன்றியுள்ளான். ஆகவே, என்தோள் பூரிப்படையாநிற்ற லின் வளையல்கள் நெகிழ்தல் நீங்கிச் செறிந்தன” என்ற தலைவி கூற்று. (ஐங். 192)

வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -

{Entry: J10__674}

தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்துபோம்போது தன்பிரிவால் தலைவி வருந்துவாள் என்று மனம்கொண்டு வாடைக்காற்றை நோக்கி, “வாடாய்! பாம்பின் தொங்குகின்ற சட்டையை ஒத்த அருவிகளையுடைய மலையின் உயரத்திலே அமைந்து, மான்கள் நெல்லிக்காயை உண்ணும் முன்னிடத் தையுடைய சிறுகுடியிலே இருக்கும் என் தலைவி என் பிரிவால் துன்புறாதவாறு அவளைக் காப்பாயாக” (குறுந். 235) (‘ஆற்றிடை யுறுதல்’ என்பதற்கு இரட்டுற மொழித லாகக் கொண்டது இது.) என்று கூறுதல்.(தொ. பொ. 103 நச்.)

வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-

{Entry: J10__675}

“பாக! உயர்ந்தோர்க்குத் தானமும் யாவர்க்கும் வயிறு நிரம்ப உணவும் வழங்கும் என் தலைவியின் தந்தையது ஊர், கவலைக்கிழங்கு தோண்டியெடுத்த குழி நிறையக் கொன்றைப் பூக்கள் பரவிச் செல்வருடைய பொன்னையிட்டு வைக்கும் பெட்டி மூடியைத் திறந்து வைத்தாற்போலக் காட்சியளிக்கும் முல்லைநிலத்திலுள்ளது. அதனை நோக்கி விரைவில் தேரினைச் செலுத்துவாயாக” (குறுந். 233) என்ற தலைவன் கூற்று. (இஃது ‘ஆற்றிடை யுறுதல்’ என்பதற்கு இரட்டுற மொழிதலால் கொள்ளப்பட்ட பொருள்.) (தொ. பொ. 103 நச்.)

வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

{Entry: J10__676}

“இனிய மாந்தளிரே! மான்கூட்டங்களைக் கொன்று தன் தமையன்மார் கொணர்ந்த கொழுப்புமிக்க இறைச்சியுண வின்மீது வந்து அமரும் பறவைகளை ஓட்டும் என் தலைவி யாகிய அழகிய எயின்மகள் போல, நின்பால் பல மாட்சி மைப்பட நல்ல நிறமுடையையாய் விரும்பத்தக்குளாய். நீ அவள் போலப் பொலிவொடு தோன்ற யாது தவம் செய்தாயோ?” (ஐங். 365) என்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 22 நச்.)

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (1) -

{Entry: J10__677}

தலைவியைத் தான் மணந்துகோடலை இடையிலே வைத்து, வரைதற்கு இன்றியமையாத பொருளை ஈட்டிவரத் தலைவன் அவளை விட்டுப் பிரிந்து செல்லுதல்.

களவிற்குரிய கிளவி பதினேழனுள்ளும் இஃது இறுதியாவது.

(ந. அ. 123)

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (2) -

{Entry: J10__678}

தலைவியுடன் களவிற்பயிலும் தலைவன் அவளை மணத் தற்கு வேண்டும் பரிசப்பொருள் கொடுக்கவேண்டிப் பொருளீட்டிவரத் தலைவியை விட்டு நீங்கி இருதிங்கள் எல்லைக்குள் நாடு இடையிட்டும் காடு இடையிட்டும் செல்லும் பிரிவு. தன்முன்னோர் ஈட்டிய செல்வம் மிகுதியும் உண்டேனும், தான் முயன்று தேடிய பொருளையே பரிசப் பொருளாக வழங்குதல் வேண்டும் என்ற ஊக்கத்தால் தலைவன் களவொழுக்கத் திடையே இப்பிரிவை மேற்கொள் வான். (ந. அ. 41)

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -

{Entry: J10__679}

1. பிரிவு அறிவுறுத்தல் - தலைவன் தான் வரைவிடை வைத்துப் பொருள் காரணமாகப் பிரிந்துபோவதைத் தலைவிக்குத் தெரிவிக்குமாறு தோழியிடம் கூறல்,

2. பிரிவு உடன்படாமை - தலைவன் பிரிந்து செல்லுதற்குத் தோழி உடன்படாது மறுத்தல்,

3. பிரிவு உடன்படுத்தல் - தலைவன் தோழியை உடன்படச் செய்தல்,

4. பிரிவு உடன்படுதல் - பாங்கி பிரிவை உடன்படுதல்,

5. பிரிவுழிக் கலங்கல் - தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்தானாக, அப்பிரிவுக்கு ஆற்றாது தலைவி மனம் கலங்கி வருந்துதல்,

6. வன்புறை - தோழி தலைவிக்கு வற்புறுத்திக் கூறுதல்,

7. வன்பொறை - தலைவன்பிரிவினால் நேர்ந்த பொறுத்தற் கரிய துயரத்தை மனவன்மையால் தலைவி பொறுத்துக் கொள்ளுதல்,

8. வரும் வழிக்கலங்கல் - தலைவன் மீண்டுவரும் வழியி டையே, தன்னைப் பிரிந்து வருந்தும் தலைவியின் ஆற்றா மையை நினைத்து மனம் கலங்கிக் கூறுதல்,

9. வந்துழி மகிழ்ச்சி - தலைவன் மீண்டு வந்தபோது தலைவி மகிழ்தல் - என்ற ஒன்பதுமாம். (ந. அ. 169)

வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

{Entry: J10__680}

“சங்குகளினின்று வெளிப்படும் சிறந்த முத்துக்களை வலைஞர் விலை பகரும் கடல்வளம் மிக்க நெய்தல் தலைவ னுடைய அன்பு மகள் எனக்குத் தன் பிரிவால் நீங்காத துயரம் தந்து என் உறக்கத்தையே கைக்கொண்டுவிட்டாள்!” (ஐங். 195 ) எனக் கண்படை பெறாது தலைவன் கங்குலில் நொந்து கூறுதல். (தொ. பொ. 45 நச்.)

வரைவியல் கிளவிகள் -

{Entry: J10__681}

1. வரைவு மலிதல் - திருமணம் செய்து கோடல் பற்றிய முயற்சி தொடங்கி விரைவாக நடத்தல், 2. அறத்தொடு நிலை - களவொழுக்கத்தைத் தோழி முதலோர் முறையே வெளிப் படுத்தி நிற்றல் என இரண்டாம். (ந. அ. 172)

வரைவு எதிர்வு உணர்த்தல் -

{Entry: J10__682}

தலைவனைத் தலைவியின் பெற்றோர்கள் எதிர்கொண்டு வரவேற்பர் என்று தோழி அவனுக்குக் கூறுதல்.

“தலைவ! தலைவியின் தோள்கள் உனக்கே உரியவாகும். மணந்து அவளை உன்னுடையவளாக்கிக் கோடலே உரிய வழி. என்னைவிட என் தாயும் மிக மகிழ்வாள். எந்தையும் உன் வேண்டுகோட்கு இசைவான். உறவினர் முன்னமேயே உன் வயப்பட்டுள்ளனர். உடனே வரைவிற்கு ஆவன செய்க!” (கோவை. 135) என்ற தோழி கூற்று.

இதனைத் திருக்கோவையார் ‘எதிர்கோள் கூறி வரைவு கடாதல்’ என்னும். ‘(135)

இது களவியலுள் ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந.அ. 166)

வரைவுக்கு முற்பட்ட பிரிவுகள் -

{Entry: J10__683}

வரைவுக்குரிய பொருள் தேடி வரப் பிரியும் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிவு, வேந்தற்கு உற்றுழிப் பிரிவு, காவற்பிரிவு என்பன வரைவுக்கு முற்பட்ட பிரிவுகள்.

ஓதற்பிரிவில் ஓதுதற்கு ஏவுவார் பெற்றோர் ஆதலின், அவர்கள் தலைவியை மணம்செய்து கொள்ளாது பிரிக என்று கூறார். பகை வென்று திறைகோடற்குப் பிரியுங்காலும் அன்புறு கிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதல் இல்லை. இது தூதிற் பிரிவுக்கும் ஒக்கும். (தொ. பொ. 141 நச்.)

வரைவு கடாதல் -

{Entry: J10__684}

தோழி தலைவனிடம் தலைவியை வரைந்துகொள்ளுமாறு அவன் உள்ளத்தைச் செலுத்துதல்.

இது களவிற்குரிய கிளவிகளுள் பதினைந்தாவது. (ந. அ. 123)

வரைவு கடாதல் வகை -

{Entry: J10__685}

அவையாவன,

1. பொய்த்தல்- தோழி தன் தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவனிடம் பொய்யுரைத்தல்,

2. மறுத்தல் - தலைவன் களவு நீட்டித்து இரவில்வரும் விருப்ப முடையவனாயிருத்தலைத் தோழி குறிப்பாகவும் வெளிப்படையாகவும் மறுத்தல்,

3. கழறல் - தோழி தலைவனைக் கடிந்துபேசித் தலைவியை அவன் விரைவில் வரைந்துகொள்ளுமாறு வற்புறுத்தல்,

4. மெய்த்தல் - தோழி தலைவனிடம் சில உண்மையான செய்திகளையும் கூறுதல் என்பன. (ந. அ. 165)

வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் -

{Entry: J10__686}

பகற்குறிக்கண் தலைமகளது பருவம் கூறி வரைவு கடாய தோழிக்குத் தலைவன், “தேவருலகிலும் வனப்பில் தன்னை யொப்பார் இல்லாத தலைவியை யான் நினைத்தவுடன் வரைந்துகொள்ளும் அளவிற்கு அவ்வளவு எளியளாக நீ கூறுவது பொருந்தாது” என்று தலைவியின் சிறப்பை மிகுத்துக் கூறுதல்.

இதனைத் ‘தலைவன் தலைவிதன்னை உயர்த்தல்’ என்றும் கூறுப. (ந.அ. 144)

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று (கோவை. 129)

‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

{Entry: J10__687}

தலைவிதமர் வரைவு உடன்படத் தானும் வரைவு உடன் பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்தா னாக, தோழி தலைவனை நோக்கி, “இனி நீட்டிக்கற்பாலை யல்லை” எனக் கடுஞ்சொற் கூறி வரைவு கடாவ வேண்டிய இடத்துக் கூறியது. (கலி. 133) (தொ. பொ. 114 நச்.)

நலம் தொலைவுரைத்து வரைவு கடாதல் -

“தலைவ! நீ யாரை நட்பாக உடையை? நீ எம் அளவில் நடந்து கொள்ளும் செயல் நண்பர்செயலாக இல்லை. குட்டுவன் என்ற மன்னனுக்கு உரிமையானதும் கடல்வளம் பசுவளம் மிக்கதுமான மாந்தைநகர் போன்ற இயற்கை வனப்பைப் பெற்றிருந்த எம்மை விரும்புவாயல்லை ஆதலின், நின்னால் இழந்த எம் நலனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்வாயாக” (நற். 395) என்று தம் நலம் தலைவன் களவிடைப் பிரிவினால் தொலைவதனைச் சுட்டி அப்பிரிவு நிகழாதவாறு தோழி வரைவு கடாயது. (தொ. பொ. 114. நச்.)

வரைவு நிகழும் காலம் -

{Entry: J10__688}

களவு வெளிப்படா முன்னும், களவு வெளிப்பட்ட பின்னும் வரைவு நிகழும். (ந. அ. 42)

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

{Entry: J10__689}

தலைவன் வரைந்துகொள்ளாமல் களவொழுக்கத்தை நீட்டித்த காலத்தே, அக்களவொழுக்கத்தால் வரும் ஏதத்தை அஞ்சி வருந்திய தலைவி தோழியை நோக்கி, “தோழி யான் நலனிழந்து இல்லின்கண் வருந்தியுள்ளேன். தினைப்புனம் காப்பவர் எறியும் கவண்கல் ஒலிக்கு அஞ்சி யானை உண்பதற் காக வளைத்த பசுமூங்கில் அதன் துதிக்கையினின்று நெகிழ்ந்து மீன் பிடிக்கும் தூண்டிலைப் போல மேலே வளைவு நீங்கி உயர்ந்து காணப்படும் கானக நாடனாகிய நம் தலைவனோடு யான் பழகிய அளவில் என் அழகு அவனிடம் சென்றுவிட்டது.(இனி, அவன் மணந்தாலன்றி இழந்த அழகை யான் மீண்டும் பெறுதல் இயலாது. தலைவனோ தனக்கு விருப்பமுள்ளபோது நம்பால் வந்து, அஃதில்லாத போது அகன்று செல்கிறான். என் செய்வது?)என்று கூறியது. (குறுந். 54)

வரைவு மலிதல் -

{Entry: J10__690}

மணம் நிகழ்வது பற்றி மகிழ்வுறுதல். (ந. அ. 172)

வரைவு மலிதல் வகைகள் -

{Entry: J10__691}

1. வரைவு முயல்வு உணர்த்தல்- தோழி தலைவிக்கு வரைவுக் கான முயற்சி நடப்பதை அறிவித்தல்,

2. வரைவு எதிர்வுணர்த்தல் - தலைவன்சுற்றத்தார் மணம் கூறிவந்த போது தலைவி சுற்றத்தார் அதனை ஏற்றுக் கொண்டமையைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

3. வரைவறிந்து மகிழ்தல்-தன் சுற்றத்தார் தன் திருமணத்தை ஏற்றுக்கொண்டமையறிந்து தலைவி மகிழ்தல்.

4. பராவல் கண்டு உவத்தல்- தன் திருமணம் நன்கு நிறை வேறத் தெய்வத்தைத் தலைவி வணங்குவது கண்டு தலைவன் மகிழ்தல் - என்பன நான்குமாம். (ந. அ. 173)

வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

{Entry: J10__692}

தலைவன் தலைவியை மணந்துகொள்ளத் தலைவிதமர் உடன்பட்டாராக, தலைவன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதனை அறிந்த தோழி, தலைவியிடம்,“நாம் கன்னிப் பருவத்தில் மார்கழிநோன்பாகிய தைந்நீராடல் நோன்பினை உளம் பொருந்தி நோற்றதன் பயனாகவே இன்று தலைவன் நம்மை விரைவில் மணந்துகொள்ள ஏற்பாடுகள் செய்து வருகிறான்“என்று வையை நதியை நோக்கித் தலைவன் கேட்கும் அணிமைக்கண் கூறுதல். (பரிபா. 11)

வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

{Entry: J10__693}

தலைவன் தலைவியை மணந்துகொள்ளுதற்குரிய முயற்சி களைச் செய்வதனையும் தமர் வரைவு ஏற்றுக்கொண்ட தனையும் அறிந்து மகிழ்ந்த தலைவியிடம் தோழி,“தலைவி! நீ ’நம் கற்புக்கு ஏதம் வரும் வகையில் நமர் தலைவனுக்கு மகட்கொடைநேராரோ? ’ என்று அஞ்சியதனை நன்கறிந்து யான் உண்மையைத் தாயர்க்கு அறிவித்ததனால் இன்று இத்தகைய நன்னிலை ஏற்பட்டது!“என்று கூறுதல்.(குறுந். 52)

வரைவு மறை -

{Entry: J10__694}

தலைவன் தலைவியை மகட்பேசச் சான்றோரை அனுப்பத் தலைவிதமர் மறுத்தல். (சாமி. 82)

வரைவு மாட்சி -

{Entry: J10__695}

வரைதலின் உயர்வு: மணத்தின் மாண்பினை எண்ணித் தலைவி உடன்போக்கிற்கு உடன்பட்டமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்துதல்.

“தலைவ! எம் தலைவி திருமணத்தின் பெருமையை உணர்ந்து நின்னுடன் போகத் துணிந்து புறப்பட்டபோது, அவள் மகவு போல வளர்த்த கிளிப்பிள்ளை, ’அன்னாய்! குழந்தையின் மேலுள்ள அன்பையும் துறந்தாயோ? ’ என்று புலம்ப, இவள் பெருக்கிய கண்ணீரில் இவளுடைய கொங்கை யிரண்டும் குளித்தன” என்ற தோழி கூற்று.

இஃது அம்பிகாபதி கோவையில் ’உடன் போக்கு’எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 371)

வரைவு முடுக்கம் : துறைகள் -

{Entry: J10__696}

1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல், 2. பெரும்பான்மை கூறி மறுத்தல், 3. உள்ளது கூறி வரைவு கடாதல்,4. ஏதம் கூறி இரவு விலக்கல்,5. பழிவர வுரைத்துப் பகல் வரவு விலக்கல், 6. தொழுதிரந்து கூறல், 7. தாயறிவு கூறல், 8. மந்திமேல் வைத்து வரைவு கடாதல், 9. காவல்மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல், 10. பகலுடன்பட்டாள் போன்று இரவுவரவு விலக்கல், 11. இரவு உடன்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல், 12. இரவும் பகலும் வரவு விலக்கல், 13. காலம் கூறி வரைவு கடாதல், 14. கூறுவிக்குற்றல், 15. செலவு நினைந்துரைத்தல், 16. பொலிவழிவுரைத்து வரைவு கடாதல் என்பன. (கோவை. 250-265)

வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

{Entry: J10__697}

“தலைவ! தலைவி இழைகள் நெகிழுமாறு உடல் இளைத்து நெற்றி பசந்ததன் காரணம் வினவுகிறாய். நின்னைக் கனவிற் கண்டு அதனை உண்மை யெனக் கருதி விழித்துப் பின்னை நின்னைக் காணாமையின் நேர்ந்த வாட்டம் இஃது” என்ற தோழி கூற்று. (ஐங் 234)

வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தல் -

{Entry: J10__698}

தலைவி மனத்தில் உறுமாறு தலைவனது துயர்நிலையை எடுத்துக் கூறித் தோழி அவளைத் தலைவன் விருப்பிற்கு இணங்குமாறு செய்தல்.

தலைவனிடம் குறையை நிறைவேற்றிவைப்பதாகக் கூறி வந்த தோழி தலைவியிடம், “மேதக்க தலைவனுடைய துயரம் கண்டு அவள் விருப்பை நிறைவேற்றுவதாகக் கூறினேன். அவன் நேற்று என்னைக் கண்ணுற்றுத் தன் துணையைக் காக்கும் நண்டினைக் கண்டு பெருமூச்செறிந்து ஆற்றானாய் என்னையும் நோக்கி நண்டினையும் நோக்கித் தன் உணர்வு என்கண்ணும் அலவன்கண்ணும் ஒழிய வருந்திப் போயி னான்- அவன் நிலை யாதோ? இன்று அவனைக் காணோம்” என்று அவள் மனத்திலுறுமாறு கூறி, அவளைத் தலைவ னொடு கூட்டுதற்கு ஒருப்படுத்தல். (இறை. அ. 10 உரை)

வலிநிலை -

{Entry: J10__699}

மன்றல் எட்டனுள் ஏழாவது. காமம் கைம்மிக்கவன் காமுறப் பட்டாளது இசைவினைப் பெறாமலும் அவளுடைய பெற்றோர் முதலியோரது இசைவினைப் பெறாமலும் வலிதின் அவளைக் கொண்டு வந்து மணந்துகோடல். இச்செயல் வலிமையே முந்துற்ற மறச் செயலாதலின் அரக்கத்தனமுடைத்து என்ற கருத்தால் ‘இராக்கதம்’ எனப் பெற்றது.

தமரினும் அவளினும் பெறாது வலிந்து கொள்ளும் வன்மண மாதலின், பொருந்தாக் காமத்தின்பாற்படும்.

(த. நெ. வி. 14 உரை) (தொ. பொ. 92 நச்.)

வலியழிவுரைத்தல் -

{Entry: J10__700}

இயற்கைப் புணர்ச்சியின்பின் பாங்கனை அடைந்து அவனோடு உரையாடிய தலைவன், “மேம்பட்ட நான் இன்று ஒரு நங்கையால் இவ்வாறாயினேன்” எனத் தனது ஆற்றல் அழிந்த செய்தியைக் கூறி வருந்துதல்.

இது ‘கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல்’ எனவும் கூறப்படும். (ந. அ. 137)

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 26)

வலையசேரி -

{Entry: J10__701}

நெய்தல் நிலம் (யாழ். அக.)

வழக்கியல் ஆணை கிளத்தல்-

{Entry: J10__702}

நீதிநூல் வழியால் ஆணை குறிப்பிடுதல்; நீதிநூல் பிறழக் கூறின் இராக்கதமாம். (தொ. செய். 194 நச்.)

மெல்லிய காமம் நிகழுமிடத்து ஆணை கூறப்பெறானாயி னும், இடைச்சுரத்தே இன்றியமையாமைப்பட்டவிடத்து அது வேண்டும் என்பது. (186 இள.)

வழி நிலைக் காட்சி -

{Entry: J10__703}

தலைவனது குறிப்பின் வழியிலே தலைவி நிலைபெறுதலைத் தெரிவிக்கும் தலைவி பார்வை.

தனித்தனியே நிற்கும் இருவர் அறிவையும் ஒன்று சேர்ப் பதற்கு வேட்கையொடு கூட்டி உள்ளக்கருத்தை வெளியிடும் இருவர் கண்பார்வையிலும், தலைவனுடைய குறிப்பிற்குத் தானும் உடன்படுதலைத் தெரிவிக்கும் தலைவியின் பார்வை. (தொ. பொ. 93 இள.)

தலைவியை மானுட மகளாதல் துணிந்த பின்னர்த் தனக்குப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்தவழித் தலைவியைக் கூடற்குக் கருதித் தலைவன் கண்ணால் உரை நிகழ்த்த, அது கண்டு தலைவியும் தன் கண்ணால் தன் வேட்கையைப் புலப்படுத்திய வாறு அவனைப் பார்க்கும் பார்வை. (96 நச்.)

தனியாகச் செல்லும் தலைவியைத் தலைவன் காணுவது; அஃதாவது வழிச் செல்வாளைக் காணுதல். (19 குழ.)

வழிநிலைக் காட்சி நிகழும் காலம் -

{Entry: J10__704}

வழிநிலைக் காட்சியாவது தலைவன் தலைவியைக் கண்டபின் அவளுடைய குறிப்பினை அறிதல்.

மழை மிகும் கார்காலத்துத் தலைவி வெளியே சோலை களுக்கு வந்து விளையாடுதலின்மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அதுதானும் இன்பம் செய் யாமையானும், இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழும் எனவே, வழிநிலைக் காட்சிக்குரிய காலம் அதுவேயாகும். ஆகவே, இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் நிகழும் களவொழுக்கத்திற்கே கூதிரும் முன்பனியும் யாமமும் சிறந்தன என்பது. (தொ. பொ. 16 நச்.)

வழிப்படுத்துரைத்தல் -

{Entry: J10__705}

களவுக்காலத்தில் தலைவி தலைவனோடு உடன்போதற்கு ஓம்படுத்துரைத்த தோழி, “ஆயமும் அன்னையும் பின் வாரா மல் இவ்விடத்தே நிறுத்தி, இவ்வூரிலுள்ள அலரையும் ஒருவாறு நீக்கி, யானும் வந்து உங்களைக் காண்பேன். நீரும் இத்தலைவியொடு சென்று நும் பதியை அடைவீராக!” எனத் தலைவியைத் தலைவனொடு வழிப்படுத்திக் கூறியது.

இஃது ‘உடன் போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 214)

வழிபாடு கூறல் -

{Entry: J10__706}

தலைவி தலைவனோடு இல்லறம் நிகழ்த்தும் மனைக்கண் வந்த செவிலிக்குத் தோழி தலைவனும் தலைவியும் உயிரும் உடம்பும் போல ஒருவரை ஒருவர் இன்றியமையாது வாழ்வ தனையும், தலைவி விரும்புவனவற்றைத் தலைவன் நிறைவேற் றுதலையும், தலைவி தலைவன் மனம் கோணாதவாறு ஒழுகி வருவதனையும் கூறி, இவ்வாறு தலைவன்வழி தலைவி வாழ்ந்து வருவதனைக் குறிப்பிடுதல்.

இதனை ‘மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற உணர்த்தல்’ என்றும் கூறுப. இஃது ‘இல்வாழ்க்கை’ என்னும் தொகுதிக்கண்ணது. (ந. அ. 203)

இது ‘மணஞ்சிறப் புரைத்தல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 301)

வழிபாடு மறுத்தல் (1) -

{Entry: J10__707}

அ. இடம் பெற்றுத் தழுவிய தலைவன் தன்னைக் கலவிக்காகச் செய்யும் உபசாரங்களைத் தலைவி மறுத்தல்.

தன்னை அணைத்தலும் சுவைத்தலும் போல்வன தலைவன் செய்து இன்பமூட்டியபோது, அச்சத்தாலும் நாணத்தாலும் அவற்றைத் தலைவி எதிர்த்துத் தவிர்க்க விரும்பி, கொடி யிடைச் சென்று மறைவதும் கண்களைப் புதைத்துக் கொள்வதும் போன்றவை.

ஆ. தலைவன் தலைவியது வேட்கைக் குறிப்புக் கண்டு சார்தல் உற்றவழி, அவள் அதற்கு உடன்படாது மறுத்தல்.

இதனைத் திருக்கோவையார் ‘நாணிக் கண் புதைத்தல்’ எனும் கூற்றின்கண் (42) அடக்கும்.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

வழிபாடு மறுத்தல் (2) -

{Entry: J10__708}

தலைவன் வேட்கை மிகுதியானே இரந்து நிற்றலைத் தலைவி தான் உடன்படாமை தோன்ற இருத்தல். அஃதாவது அவள் தலைவனது கருத்திற்கு இசையும் குறிப்பினைப் புலப்படுத் தாது நிற்றல். அந்நிலை தலைவன் இரந்து வழிபடுதலை மறுக்கும் குறிப்பினது. (தொ. கள. 21 ச.பால.)

வழியொழுகி வற்புறுத்தல் -

{Entry: J10__709}

தலைவன் வரைபொருட்குப் பிரிய, அதுகண்டு வருந்திய தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி தானும் அவளொடு சேர்ந்து வருத்தமுற்றுப் பின், “நங்கையே! நினக்கு இவ் வருத்தம் எதனால் ஏற்பட்டுள்ளது என்று அயலார் ஐயுற்று உண்மை கண்டு நின்னைப் பழிதூற்றத் தொடங்குவராதலின், அந்நிலை வாராதபடி நீ ஆற்றல் வேண்டும்” என்று தலைவி வழியிலேயே சென்று அவள் வருந்தக்கூடாது என்று வற்புறுத்தல்.

இதனைப் ‘பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்’ என்ற கூற்றுக் கண் அடக்குப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட்பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 275)

வழி விளையாடல் -

{Entry: J10__710}

களவுக்காலத்தில் உடன்போக்கில் வழியிடைக் கண்டவர் மகிழத் தலைவியைக் கொண்டு சென்ற தலைவன், “நெறி செல் வருத்தத்தில் நெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு கண்கள் விருந்து பெற்றன; இனிச் சிறிது இளைப்பாறி இக்கடுங்கானகம் தண் எனுமளவும் செவி நிறைய நின் மொழியை யான் பருக வாய்ப்பளிப்பாய்” எனத் தலைவி யுடன் தலைவன் விளையாடியது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 220)

வழுவுடைக் காமம் -

{Entry: J10__711}

பெருந்திணை (திவா. பக். 178)

வளம்பட உரைத்தல் -

{Entry: J10__712}

தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவிடத்து வந்து அவர்க ளுடைய ஊர் பெயர் முதலியன வினவிய தலைவன், தோழி தனக்கு எதிர்மொழி கொடுத்து முறுவலித்த அளவில், அவளது அறிவுக்கூர்மையை வியந்து, “நுங்களைப் புனங் காவல் வைத்த நும் உறவினர் தகுதியறிந்து தொழிற்படுத்தும் ஆற்றல் இலர்; உப்பு வாங்குவதற்கு அதன் எடைக் கற்பூரத்தை வழங்கும் அறிவாளரை ஒப்பர். நுங்கள் பற்களுக்குப் பகையாகிய முத்துக்களை அடிமை கொள்ளக் கருதி நுங்கள் மார்பின் மாலையாக அணிந்திருக்கிறீர்களா? உடலுறுப்புக் களொடு பலகாலும் தொடர்பு கொள்ளும் நீங்கள் விளை யாடும் பந்து பெரிதும் நல்வினை செய்துள்ளது!” என்றெல் லாம் அவ்விருவர் வனப்பினையும் வளமாகப் புகழ்ந்துரைத் தல்.

இஃது ‘இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்’ எனும் பகுதிக்கண்ணதொரு” கூற்று (திருவாரூர்க். 86)

‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

{Entry: J10__713}

தலைவன் பின்முறை வதுவை செய்துகொள்ளும் செய்தி யைத் தலைவி கேட்டுத் தன் மனத்திடைத் தோன்றிய வெறுப் பினை அகத்தே அடக்கிக்கொண்டு அவ்வதுவையைத் தானும் மகிழ்வுடன் ஏற்பவள் போல நடந்து கொள்ளுதல். (மருத நடையியல்.) வீ. சோ. 95 உரைமேற்.)

வற்புறுத்தல் (1) -

{Entry: J10__714}

தலைவன் பிரிவிடை வருந்துதல் கூடாது என்று தோழி தலைவியிடம் கூறுதல்.

தலைவன் களவொழுக்கத்திடையே வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிய, அவன் பிரிவாற்றாது தலைவி வருந்தவே, தோழி, “தலைவி! கார்காலத் தொடக்கம் காட்டி வானம் மின்னி இடிக்கிறது. நம் தலைவர் சென்ற இடத்திலும் இத்தகைய மழைச்சுவடு இருக்கும். அவர் உனது மனத்துயரம் அறிந்து விரைவில் மீண்டு வருவார். ஆதலின் நீ வருந்தாதே” என்று கூறுதல் (திருப்பதிக். 321)

இது ‘வரைபொருட்பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று (மா. அக. 62)

வற்புறுத்தல் (2) -

{Entry: J10__715}

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் நிலை அறிந்த பாங்கன், அவன்மனத்தைத் தன்னால் திருத்துதல் இயலாது என்ற நிலையில், தான் தலைவியைக் கண்டு வருங்காறும் அமைதியாக இருக்குமாறு அவனை வற்புறுத்துதல்.

இது ‘ பாங்கன் இறைவனைத் தேற்றல்’ எனவும் கூறப்படும் (ந. அ. 137)

இது ‘பாங்கற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 30)

வறிது நகை தோற்றல் -

{Entry: J10__716}

தலைவி காமக்குறிப்பால் நெகிழ்ந்து சற்றே புன்னகை காட்டுதல்.

இது ‘தலைவியின் எய்தும் இயற்கைப் புணர்ச்சி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (ந. அ. 127)

வறும்புனம் கண்டு வருந்தல் -

{Entry: J10__717}

தலைவியும் தோழியும் தினைக்கதிர் கொய்யப்பட்டமையால் புனங்காவல் நீத்து மனைக்கண்ணேயே வைக, மறுநாள் அப்புனத்திற்கு வந்த தலைவன், “யான் முன்பு பார்த்த இப்புனம் இப்பொழுது பொலிவு அழிந்து காணப்படுகிறதே. தலைவி இங்கு வந்திருப்பதாகத் தெரியவில்லையே!” என்றாற் போல நினைந்து வருந்துதல்.

இதனைப் ‘பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடு சென்று இரங்கல்’ என்றும் கூறுப. (ந. அ. 156)

இது ‘பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 146)

வன்சொலின் மயக்கம் -

{Entry: J10__718}

தோழியிற் கூட்டத்தில் தலைவிக்குக் குறை நேர்வதாக இசைந்த தோழி அவளை அணுகி வன்சொற்கூறிக் குறை நயப்பித்தல். இது ‘வன்சொல்லால் கூறிக் குறை நயப்பித்தல்’ எனவும்படும். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்.)

வன்பால் -

{Entry: J10__719}

(முல்லையும் குறிஞ்சியுமாகிய) வன்னிலம். (தொ. சொ. 110 சேனா)

வன்புலப் பொதுப்பொருள் -

{Entry: J10__720}

’வன்புலப் பொருள்’காண்க.

வன்புலப் பொருள் -

{Entry: J10__721}

ஆத்தி, புன்கு, அரசு, உழிஞ்சில், காரை, பருத்தி, கரும்பு முதலியன. (வீ. சோ. 96 உரைமேற்.)

வன்புலம் -

{Entry: J10__722}

வலிய நிலம்; ’ வன்புலந் தழீஇ’(பதிற்றுப். 75 - 8) குறிஞ்சி நிலம்; ’வன்புலக் கேளிர்க்கு’(புறநா. 42 - 17). முல்லை நிலம்; ’வன்புல மிறந்த பின்றை’(பெரும்பாண்.206).

வன்புறை(1) -

{Entry: J10__723}

தலைவி தலைவனுடைய இருப்பிடம் பண்பு முதலியன குறித்து ஐயுற்றபோது தலைவன் அவள் ஐயம் அகலும் வண்ணமாக வற்புறுத்திக் கூறுதல்.

வன்பு- வலிமை: உறை - உறுத்தல்.

இது களவியற்குரிய கிளவித்தொகை பதினேழனுள் இரண்டாவது . (ந. அ. 123)

வன்புறை(2) -

{Entry: J10__724}

ஓதல், காவல், தூது,துணை,பொருள் ஆகியவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வாராமை யைக் கண்ட தலைவி பருவம் கண்டு வருந்தியபோது, தோழி அவளை ஆற்றுவித்தல்

இது கற்பியலில் ஐவகைப் பிரிவுகளில் நிகழும் நிகழ்ச்சிகளுள் ஒன்று. (ந. அ. 209.)

வன்புறை எதிர்ந்து மொழிதல் -

{Entry: J10__725}

வற்புறுத்தும் தோழி சொல்லை மறுத்து வருந்தித் தலைவி உரைத்தல்.

கற்புக் காலத்துத் தலைவியை விடுத்து ஓதல் காவல் முதலிய செயல் குறித்துத் தலைவன் பிரிந்துபோதலுண்டு. பிரியும் போது மீளும் பருவம் சுட்டிச் செல்லுதல் தலைவன் கடமை.

அப்பருவம் வருமளவும் ஆற்றியிருக்கும் தலைவி அப்பருவம் வந்ததும் ஆற்றாமையால் வருந்துவாள். அப்பொழுது தோழி, தலைவன் எடுத்துக்கொண்ட வினையின் இயல்பையும் அவன் ஆள்வினையையும் எடுத்துக்காட்டித் தலைவியை ஆற்றியிருக்குமாறு வேண்டுவாள். அவள் கூறுவது கேட்டுத் தலைவி ஆற்றியிருத்தலே ஐந்திணைக்கு ஏற்ற செயல். அதனை விடுத்துத் தோழி கூற்றினை மறுத்துத் தலைவி தனது பிரிதல்துன்பத்தால் வருந்திக் கூறுதல் பொருந்தாக் காமப் பகுதியாகி அகப்பொருட் பெருந்திணைத் துறைகளுள் ஒன்றாக ஒரு சாராசிரியரால் கொள்ளப்பட்டது. (ந. அ. 243.)

வன்புறை எதிரழிதல் -

{Entry: J10__726}

தோழி வற்புறுத்தியதனை ஏலாது தலைவி வருந்திக் கூறுதல்.

தலைவன் களவுக் காலத்தில் வரைபொருட்குப் பிரிய, அவன் வரக் காலம் தாழ்த்தமை கண்டு வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தி ஆற்றியிருக்குமாறு வேண்டத் தலைவி, “‘நின்னிற் பிரியேன்’ என்று கூறிப் பிரிந்து சென்ற தலைவர் என் நெஞ்சத்தில் உள்ளார். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்’ என்ற பழமொழி உண்டே! உப்பிட்டால் என்னை மறவாமல் நினைத்து வருவார். ஆதலின் உப்பு நீராகிய என் கண்ணீர் என் மார்பகத்தில் விழுந்து நனைக்கு மாறு நெஞ்சிலுள்ள காதலருக்கு உப்பிடுகிறேன்” (திருப்பதிக். 322) என்றாற் போல வருந்திக் கூறுதல்.

இது ‘வரைபொருட் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (மா. அகப். 62)

வன்புறை எதிரழிந்திரங்கல் -

{Entry: J10__727}

தலைவன்வரை பொருட்குப் பிரிய, அவன்பிரிவு குறித்து ஆற்றாத தலைவியைத் தோழி அவள் வழியொழுகி ஆற்று விக்க முயலத் தலைவி மனமுடைந்து, “தலைவன் பிரிவால் வருந்தும் மகளிருள், அவன் மீண்டதும் அவனை மணந்து இன்புறும் வாய்ப்புடையார்க்குப் பிரிவு இனிதாகலாம். யான் அவன் மீண்டு வரும் வரை உயிர் வாழேன்” என்று, தன்னை வற்புறுத்தும் தோழிக்குக் கூறுதல்.

இதனைத் ‘தலைவி கொடுஞ்சொற் சொல்லல்’ என்றும் கூறுப. (ந. அ. 170)

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 276)

வன்புறை குறித்த வாயில் -

{Entry: J10__728}

தலைமகன் பிரிவின்கண் தலைவியை ஆற்றுவிக்கும் பல் வகையாலும் ஆற்றுவித்தற்குரிய தோழி முதலிய வாயிலர்.

“நம் பெருமாட்டி பிறந்த குலம் பண்டுதொட்டு ஒழுக்கச் சிதைவின்றி விழுப்பமுடைத்தாய் ஓங்கி வாராநின்றதொரு பெருங்குலம்; அக்குலத்தை நீ அழித்தல் தகாது” எனவும், “நாணும் கற்பும் அன்றே பெண்டிர்க்கு அணிகலமாவன? இக்குலத்துள்ளோர் கற்பெனப்பட்ட சிறை அழியாமல் காத்தொழுகினர்; அதனை நீ அழிக்கின்றாயாதலின் பெரிய தொரு பழியாக்குகின்றாய்” எனவும், “நம் பெருமான் தம் ஆண்மைத் தன்மைக் கேற்பச் செயற்படப் பிரிந்துள்ளார். அவர் கருதியது முடித்து வருந்துணையும் கற்புக் காத்திருத்தல் வேண்டும்” எனவும், “சான்றோர்மகளிர் என்பார் சிறிய ரன்றிப் பெரியராகல் வேண்டும்; அவர்தன்மை என்பது தம் குலம் நோக்கித் தம் கற்புக் காத்து ஒழுகுதல்; அதனின் மிக்க தில்லை” எனவும் இவ்வாயிலர் இவ்வகையான் ஆற்றுவிப்பர். (இறை. அ. 54 உரை)

வன்புறை வகை -

{Entry: J10__729}

1. ஐயம் தீர்த்தல் - தலைவிக்குற்ற ஐயத்தைத் தலைவன் நீக்குதல்; 2. பிரிவு அறிவுறுத்தல் - தலைவன் தனது பிரிவைத் தலைவிக்கு அறிவித்தல் என இரண்டாம். (ந. அ. 128)

வன்பொறை -

{Entry: J10__730}

வன்மையான பொறுமை, தலைவன் ஓதல், காவல், தூது, துணை, பொருள் என்னுமிவற்றுள் ஒன்று காரணமாகப் பிரிந்து சென்று குறித்த காலத்தில் வாராது நீட்டித்தவழித் தலைவி தன் பிரிவாற்றாமையை நிறையால் பொறுத்துக் கோடல்.

இது கற்பியலுள் ஐவகைப் பிரிவுகளிடை நிகழும் நிகழ்ச்சிகளுள் ஒன்று (ந. அ. 209)

வன்பொறை எதிர்தல் -

{Entry: J10__731}

ஆற்றியிருந்த தலைவி பொறுமை இழந்து தோழியொடு மாறுபட்டுக் கூறுதல்.

‘என் காதலர் சென்றுள்ள வழியில் உள்ள காடு சூரியன் வெங்கதிர் தெறுதலால் தீப்பற்றி ஆறும் மதியும் கூடச் சாம்பராகும் அத்துணை வெம்மையுடையது. அதன்கண் சென்றவர் தம் செயல் முடியப்பெற்று இடையூறின்றி வருக! அதுவரை என்னுயிரும் நிலைத்திருக்க!’ என்று, தன்னை ஆற்றவந்த தோழிக்குத் தலைவி துயருடன் கூறுதல்.

இது ‘வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 312)

வன்மொழியாற் கூறல் -

{Entry: J10__732}

தலைவனுக்குக் குறை நேர்ந்த பாங்கி தலைவியிடம் தலைவன் நிலையைக் கூறவும், அவள் நாணத்தால் வெளிப்படையாக இசைவு தெரிவிக்காத நிலையில், பாங்கி அவளை வெகுண்டு தலைவன் மடலேறத் துணிந்த செய்தியைக் கூறி, அவளை அவள் விருப்பம் போல் செயல்படுமாறு சொல்லி விடுத்தல்.

இதனைத் ‘தோழி தலைவன்குறிப்பு வேறாக நெறிப்பட கூறல்’ எனவும் கூறுப. (ந. அ. 148)

இது ‘குறைநயப்புக் கூறல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (கோவை. 88)

வனத்திடைப் பெண்டிர் நினைத்தமை கூறல் -

{Entry: J10__733}

சுரத்திடையுள்ள மகளிர் தலைவனையும் தலைவியையும் கண்டு நினைத்ததும் நிகழ்த்தியதும். இவை கவி கூற்றாகவே வரும்.

“தலைவனுடன் போகும் தலைவியின் பெண்மை நலத்தையும் பேரழகினையும் கண்ட இடைச்சுரத்துப் பெண்டிர் தத்தம் கணவரை இறுகப் புல்லிக்கொண்டு, அவர்கள் தம்மைக் கடந்து போக வொட்டாது தடுத்தனர்!”

இஃது ‘உடன் போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 379)

வாசிகரணம் -

{Entry: J10__734}

அன்புடைக்காமம் (யாழ். அக.)

வாட்டம் காண்டல் -

{Entry: J10__735}

தன்னைக் கற்புக் காலத்துப் பிரிந்து ஓதல் பொருள் முதலிய பற்றி வெளியூர் செல்ல நினைத்த தலைவனுடைய வாட்டத் தைக் கனவில் அரற்றல் வாயிலாகவோ முகத்தின் வாயிலாக வோ அறிந்து, அவன் வாட்டம் கொள்வதைத் தன் பண்பு செயல்களால் தலைவி பரிகரித்தல். இது காம நுகர்ச்சி யிடத்து வேட்கையான் செய்யும் குறிப்பான செயல்களுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் ‘குறிப்பு’ என்பதன்பாற்படும். (கா. 90)

வாட்டம் கூறல் -

{Entry: J10__736}

கற்புக் காலத்தில், தலைவன் அறமும் இன்பமும் பொரு ளானேயே உண்டாகும் என்று பொருளின் சிறப்பைக் கூற, அது கேட்டுத் தலைவனுடைய பொருள்வயின் பிரிவைத் தலைவி குறிப்பால் உணர்ந்தமையின் அவள் கண்களில் பிரிவு நினைத்துக் கண்ணீர் பெருக, அதுகண்ட தலைவன், தான் நேரில் தன் பொருள்வயின் பிரிவைத் தலைவிக்கு உணர்த் தாது தோழியை உணர்த்துமாறு கூறுமிடத்துத் தலைவியின் வாட்டமிகுதியைக் குறிப்பிடுதல்.

இதனைப் ‘பொருள்வயின் பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்’ என்றும் கூறுப. (இ. வி. 55 உரை)

இது திருக்கோவையாரில் ‘பொருள்வயின் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 332)

வாட்டம் வினாதல் -

{Entry: J10__737}

களவுக் காலத்தில் தோழி முன்னுற உணர்தற்கண், தலைவன் தோழியின் மனத்தைத் தன் பக்கல் ஈர்த்து வருந்தவும், தலைவி தன்னால் தலைவற்கு இவ்விடர் நேர்ந்ததே என்று கவலை யுறவும், அது கண்ட தோழி அவளை, “சுனையாடிச் சிலம்பில் எதிரொலியுண்டாமாறு கூவியதனாலோ, அன்றி வேறொரு காரணத்தாலோ எதனால் நின் உடம்பில் வாட்டமுண் டாகியது?” என்று வாட்டம் பற்றிய வினவியது.

இது ‘முன்னுறவுணர்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. இதன்கண் இக்கூற்று ஒன்றே உள்ளது. (கோவை. 62) (கா. 106)

வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -

{Entry: J10__738}

குளிர்ச்சியை இயல்பாகக் கொண்ட வாடைக்காற்று இவ் வூரில் இந்நேரத்தே தன்னியல்புக்கு முற்றுமுரணாக எரியை வீசுகிறது. இன்ன பொருளுக்கு இன்னது இயல்பான குணம் என்று எல்லாம் வல்ல இறைவன் நிறுவிய ஆணை (-நியதி), அவனுடைய துளப மாலைக்காக ஏங்கித் துயருறும் இப் பெண்ணின் அழகைக் கெடுப்பதற்கென்றே மாறுபட்டத னால், இறைவனது செங்கோல் கோடிவிட்டதே!” என்றாள் செவிலி.

இது நற்றாய் கூற்றும் ஆம். இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின்பாற்படும். (திரு. வி. 5)

வாய் நனி உறுதல் -

{Entry: J10__739}

தலைவி அரிதின் கண்ணயர்ந்தவழித் தலைவனது நினைவு மாறாமையால் உறக்கத்திலும் அவனைப் பற்றிய செய்திகளை வாய் வெருவிக் கூறுதல். இதன் காரணம் தலைவியது அகத்தை யுணர்ந்தார்க்கே புலனாம் ஆதலின், இஃது அக மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)

அகப்பொருள் உரைவகை இருபத்தேழனுள் மெய்ப்பாடும் ஒன்று. (கா. 90)

வாய்மை கூறி வருத்தம் தணித்தல் -

{Entry: J10__740}

களவுக்காலத்தில் தலைவியை வரைந்துகோடற்குப் பொருள் தேடத் தலைவன் பிரிந்தபோது இன்ன நாளில் மீள்வேன் என்று கூறிப் பிரிய, வரவு நீடலால் தோழி ஆற்றுவித்தலை யும் கடந்து தலைவி வருந்தத் தோழி தலைவியிடம்,“நம் தலைவர் கூறிய சொற்கள் பொய் என்பதே நின் கருத்தாயின், இவ்வுலகில் மெய்யென்பது சிறிதும் இல்லை“என்று தலைவ னுடைய வாய்மை கூறித் தலைவியின் வருத்தத்தைத் தணித்தது.

இது ’வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 277)

வாய்மொழி கூறித் தலைவி வருந்தல் -

{Entry: J10__741}

கற்புக்காலத்தில் தலைவன் ஓதற்குப் பிரிய, அப்பிரிவு குறித்து வருந்திய தலைவி, “‘நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ என்று சொன்னவர் தாமே பிரிவாராயின் நாம் செய்யத் தக்கது யாது?” என்று கூறி வருந்தல்.

இஃது ’ஓதற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 311)

வாய்விடு கிளவி -

{Entry: J10__742}

தலைவன் பிரிவால் தலைவி சோர்ந்துரைத்தல்.

களவிற் பகற்குறியில் தலைவனைக் கூடி மகிழும் தலைவி, பகற்குறி வந்து செல்லும் தலைவனைக் காணும் பொழுதினும் காணாப் பொழுது பெரிதாகலான், பிரிவு குறித்து ஆற்றா ளாகி, “தலைவனொடு சென்ற என் நெஞ்சம் இன்னும் என்பால் மீண்டு வந்திலதே!” என்றாற்போலத் தன்னுள் தானே புலம்பி வருந்துதல்.

இது ’தோழியிற் கூட்டப் பகற்குறி’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (க. கா. பக்.77)

வாயில்கள் (1) -

{Entry: J10__743}

வாயில்-வழி. தலைவனுடைய இல்வாழ்க்கையில் நிகழும் ஊடல் முதலியவற்றைப் போக்கும் வழிகளாக இருந்து பின்னர்த் துறவுக்கும் உரியவராவார் பன்னிருவர்:

1. அன்பாற் சிறந்த தோழி, 2. அவளே போலும் செவிலி, 3. அவ் விருவரினும் ஆற்றலுடைய பார்ப்பான், 4. அவரே போலும் பாங்கன், 5. தலைவனுக்குத் துணையாக ஒழுகும் பாணன், 6. தலைவிமாட்டுத் துணையாக ஒழுகும் பாடினி, 7. என்றும் பிரியா இளையர், 8. தலைவனும் தலைவியும் அன்பு செய்யும் விருந்தினர், 9. தலைவனுக்கு இன்றியமையாத கூத்தர், 10. தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியர், 11. முன்னே துறவுள்ளத்தராகிய அறிவர், 12. அவர்துறவு கண்டு கருணை செய்யும் கண்டோர் என இவர்.

இவர்கள் தலைவன் தலைவியொடு நிகழ்த்தும் இல்லறம் கண்டு மகிழ்ந்து, பின் தலைவன்தலைவியர் பெற்ற துறவின்கண் மனம் பிணிப்புண்டு, அவர் பிரிவாற்றாமையால், தாம் அவர்துறவிற்கு இடையூறாகாது முன் செல்வர். (தொ. பொ. 193 நச்.)

வாயில்கள் (ஊடலைத் தணிக்கத் துணையாவன) (2) -

{Entry: J10__744}

1. பாணன், 2. பாடினி, 3. கூத்தர், 4. இளையர், 5. கண்டோர், 6. இருவகைப் பாங்கர், 7. பாகன், 8. பாங்கி, 9. செவிலி, 10. அறிவர், 11. காமக் கிழத்தி, 12. காதற் புதல்வன், 13. விருந்தினர் என்பாரும், 14. ஆற்றாமையும் ஆம். ந.அ.68

வாயில் பெற்று உய்தல் -

{Entry: J10__745}

தோழியர்கூட்டத்தில் சென்றியையும் தலைவி அவர்களுள் ஒருத்தியுடன் நெருங்கி அளவளாவும் குறிப்பால், அவளே தலைவிக்கு உற்ற தோழி எனவும், அவளை வாயிலாக்கித் தான் செயற்படலாகும் எனவும் தலைவன் ஆறுதலுறுதல். வாயில்-வழி.

(இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்,) இது களவியலில் ’பிரிவுழிக் கலங்கல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (ந. அ. 133)

வாயில் பெறாது மகன்திறம் நினைதல் -

{Entry: J10__746}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த தலைவன், தலைவியின் நினைவொடு வாயிலின்கண் நின்று, ” என் மகன் இன்னும் என்பக்கம் வரவில்லையே! வரின், அவனைத் தூக்கிக்கொண்டு மனையகத்துச் சென்றால் தலைவியின் ஊடலைத் தீர்த்து அவளை இன்பம் நுகரலாமே” என்று, வாயிலைப் பெறாமல் மகனைப் பற்றி நினைவது.

இது ’ பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 380)

வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

{Entry: J10__747}

“வெள்ளாங்குருகின் பிள்ளை இறக்க அதனைக் காணச் சென்ற நாரை அசைய நெருங்கிய நெய்தல் கடல்நீரொடு கரையை அடையும் துறைவனுக்கு, நான் களவுக்காலத்தி லேயே அவன் பறித்துக் கொடுத்த பைஞ்சாய்க் கோரையால் அமைக்கப்பட்ட பாவையை யான் பெற்ற மகவாகக் கொடுத்துவிட்டேன்!” ஐங்.155) எனத் தலைவன் பண்டை யன்பு சுட்டிக் காய்ந்து, தலைவி தோழியிடம் கூறுதல். ‘காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ என்புழித் தலைவி தோழியிடத்துத் தலைவனைக் காய்தற் பொருளதாய் வருவதொரு கூற்று இது. (தொ. பொ. 147நச்.)

வாயில் மறுத்தல் -

{Entry: J10__748}

தூது வந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகச்செய்தி.

வாயில் மறுத்துரைத்தல் -

{Entry: J10__749}

பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டுவந்து தலைவியை அடைய வாயில் வேண்டத் தலைவி, ” சிறுதேர் உருட்டி விளையாடும் இப்புதல்வனை எனக்குத் தந்த பின் எம்பெரு மான் இன்றே இம்மனைக்கு வரவேண்டும் என்ற நினைப்புக் கொண்டுள்ளார்! அவர் என்னிடம் கொண்டுள்ள அரு ளுள்ளம் இத்தகையது!” என்று கூறி வாயில் மறுத்துக் கூறுதல்.

இதனை உணர்த்த உணரா ஊடலுள் ’பாங்கி வாயில் மறை’ என்பதன்கண் அடக்குப. (இ. வி. 555 உரை)

இது ’பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 385.)

வாயில் வேண்டத் தோழி கூறல் -

{Entry: J10__750}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்து மனைவந்து வாயில் வேண்டிய தலைவனிடம் தோழி, “முன்பு நீர் வரும் வழியிடை இருந்த இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் கன்றினை ஈன்ற புனிற்றாவினை ஒத்து எம்மைக் காணவந்தீர். முன்பு எம்மைக் காண வந்த தேரினை ஊர்ந்து இன்று தெருவழியே பரத்தையர்தெருவினை நோக்கிச் செல்கின்றீர் எம்மிடம் நுமதருள் இத்தன்மைத் தாயிற்று!” என்று அவனது அன் பின்மை கூறியது.

இது ’பரத்தையிற் பிரிவு ’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 382,)

வாயிலவர் வாழ்த்தல் -

{Entry: J10__751}

பரத்தையர்சேரியிலிருந்த தலைவனுக்குத் தலைவி செவ்வணி அணிந்த சேடியொருத்தி வாயிலாகத் தான் பூப்பெய்திய செய்தியைக் குறிப்பாகத் தெரிவிக்கவே, “தலைவியின் பூப்புச்செவ்வி கெடாமல் செவ்வியறிந்து வந்த தலைவன் உண்மையில் தக்கவனே!” என்று அவனை வாயிலவ ராகிய பாணர் பாடினி கூத்தர் முதலியோர் வாழ்த்துதல்.

இதனை உணர்த்த உணரும் ஊடற்கண்,’ தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல்’ என்றும் கூறுப. (ந. அ. 205,)

இது ’ பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 368,)

வாயிலிற் கூட்டம் -

{Entry: J10__752}

தலைவனுடைய பொருந்தாச் செயல் காரணமாகத் தலைவிக்கு ஏற்பட்ட ஊடலைப் பாணன் பாடினி முதலிய வாயிலோர் தீர்த்துவைத்த பின் தலைவன் தலைவி இருவரும் கூடும் கூட்டம். (ந. அ. 561)

வாயிலோர் -

{Entry: J10__753}

ஒருசார்த் தமிழ்க் கூத்தர். (பிங். 826)

வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் -

{Entry: J10__754}

கற்புக்காலத்தில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் பெறாது மகனது திறத்தை நினைந்து, தோழியிடம், ” “நாட்டில் விளங்குகின்ற மகளிர்தங்கள் கண்களால் வந்த பயத்தால் உண்டாகிய மயக்கம் தரும் வாட்டத்தை நீக்காத இவ்விரதம் யாதாம்?” என வாயில் வேண்டித் தோழிக்குக் கூறியது.

இது ’ பரத்தையர் பிரிவு’ எனும் தொகுதிக்கண் உள்ள கூற்றுக்களுள் ஒன்று. (கோவை. 381)

வாயிற் கிளவி -

{Entry: J10__755}

கற்புக்காலத்தில் தலைவன் புறத்தொழுக்கத்தால் தலைவிக்கு ஊடல் நிகழ்ந்தவழி அவ்வூடலைத் தீர்ப்பதற்குத் தலைவனால் வாயிலாக அனுப்பப்பட்டவர்களின் வழியே அவனது விருப்பினைப் கேட்டு அதனை மறுத்து அவனுடைய பழிகளைத் தோழியும் தலைவியும் கூறும் கூற்றுக்கள். (தொ. பொ. 241 நச்.)

‘வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்தல் -

{Entry: J10__756}

பாணர் முதலிய வாயில்கள் தத்தமக்குரிய நெறியானே வாயிலாகக் கூறும் கூற்றுக்கள் வெளிப்படையாகக் கூறுதற்கு வருத்தமின்றி உரியன. அஃதாவது வாயிலோர் கூற்றுக் கேட்போர்க்கு வருத்தம்தரும் இயல்பினவாயினும், குற்றேவல் மரபினர் ஆதலின், குறிப்பாற் கூறுதல் சாலாமையின், வெளிப்படையாகவே கூறுவர். அக்கூற்று வருந்துதற்குரிய தன்று என்றவாறு. (தொ. பொரு. 46 ச.பால.)

வாரம் பகர்தல் -

{Entry: J10__757}

தலைவி, தலைவனைப் பரத்தையர்க்கு உரிமையாக வழங்கி விட்டதனைத் தோழியிடம் கூறல்.

“யான் தலைவனைப் பரத்தையருக்கு மானியமாக வழங்கி விட்டேன். அவனுடைய மாலைகளையும் தோள்களையும் யார் வேண்டினும் வளைத்துக் கொள்வராக”. என்று தலைவி வருந்திக் கூறுதல்.

இதனைத் திருக்கோவையார் ‘வாரம் பகர்ந்து வாயில் மறுத்து உரைத்தல்’ என்னும். (357)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண், ‘உணர்த்த உணரும் ஊடல்’ என்பதன் கூற்றுக்களுள் ஒன்று. (இ. வி. 554 உரை.)

வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல் -

{Entry: J10__758}

பரத்தையிற் பிரிந்த தலைவன் வாயில் வேண்டி நிற்பத் தலைவி தன்னை வாயில் நேருமாறு பலவாறு கூறி வேண்டிய தோழி யிடம், “நான் தலைவனைப் பரத்தையருக்கு மானியமாக வழங்கிவிட்டேன். இனி, அவனைத் திரும்பப் பெறுதல் கூடாது!” என்று அவள் வேண்டுகோளை மறுத்துக் கூறுதல்.

இதனை ‘வாரம் பகர்ந்தது’ என்றும் கூறுப. (இ.வி.554 உரை)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று (கோவை. 357)

வாராமைக்கு அழிதல் -

{Entry: J10__759}

பெருந்திணைத் தலைவி தன் மனையகத்தே தலைவன் வருவான் என்று காத்திருந்து, அவன் வாராமையால் அது பற்றித் துயருற்றுப் புலம்பல்.

“எனது வலக்கண் துடிக்கின்றது; இது தீமைக்கு அறிகுறி. மாலை நேரம் வேறு என்னைக் கொல்கிறது. அவனும் வாராமலிருந்து என்னைக் கொல்லத்தான் நினைத்தானோ?” என்பது போன்ற கூற்று.

இது பெருந்திணையில் பெண்பாற் கூற்றாக வரும் கிளவிகளுள் ஒன்று. (பு. வெ. மா. 16-5)

வாழ்க்கை -

{Entry: J10__760}

மருதநிலத்து ஊர் (திவா. பக். 110.)

வாழ்க்கை நலம் கூறல் -

{Entry: J10__761}

தலைவி தலைவனோடு இல்லறம் நடத்தும் இல்லத்திற்குச் சென்று மீண்ட செவிலி அவள்நற்றாயிடம்,“நின் மகள் தன் கணவனோடு இல்லறம் நடத்தும் சிறப்பிற்கு ஒப்புமை கூறின், நீ நின் கணவனொடு கூடி நிகழ்த்தும் இல்லறத்தின் சிறப் பினையன்றி வேறெதனையும் உவமை கூறுதல் இயலாது” என்று தலைவியின் மனையறச் சிறப்பினை எடுத்துக் கூறுதல்.

இதனை ‘இல்வாழ்க்கை’ எனும் தொகுதிக்கண் ‘செவிலி நற்றாய்க்கு நன்மனை வாழ்க்கைத் தன்மை யுணர்த்தல்’ என்றும் கூறுப. (ந. அ. 203)

இது ‘மணம் சிறப்புரைத்தல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 302)

வாழ்க்கையுள் இரக்கம் -

{Entry: J10__762}

தலைவனும் தலைவியும் நிகழ்த்தும் இல்லற வாழ்க்கைக் கண்ணே தமக்கு வருத்தம் தோன்றிற்றாகத் தோழியும் அறிவரும் கூறுதல்.

“தலைவன் பரத்தையிற் பிரிந்தவழியும், அடிக்கடித் தலைவி யைத் தனித்து வருந்த விடுத்துப் பொருள் பகை முதலிய நிமித்தமாகப் பிரிந்தவழியும், தலைவன் தலைவியர் இல்லறம் சிறப்பாக நிகழாமையின் அவர்களது இல்வாழ்க்கை வருத்தம் தருவதாகும்” என்று அவர்களிடம் உரையாடுதற்கு உரிமை யுடைய தோழியும் அறிவரும் கூறுவர் என்பது:

(தொ.பொ. 226 நச்.)

உயிரொடு வாழும் வாழ்க்கையின்கண் துன்பமுற்றுக் கூறும் கூற்று தலைமக்கட்கு உரித்தென்பர் நூலோர். அஃது எப் பொழுது எனின், களவின்கண் கூட்டத்திற்கு இடையூறாக அமையும் இற்செறிப்பு, தலைவன் வருந்தொழிற்கு அருமை, அல்லகுறிப்படுதல் முதலியவற்றாலும், கற்பின்கண் பரத்தை யிற்பிரிவு, உணர்த்த உணரா ஊடல் முதலியவற்றாலும் எய்தும் வருத்தம் எல்லைகடந்து போகுமிடத்து என்க. (தொ. பொரு. 31 ச. பால.)

‘வாளாண் எதிரும் பிரிவு’ -

{Entry: J10__763}

வாளாண்மை புரியும்பொருட்டுத் தலைவற்கு நேரும் பிரிவு. இவ்விடத்துத் தலைவியது கூற்று நிகழும், தலைவன் வரைந் தல்லது பகைவயிற் பிரிதல் மரபன்மையின், இது பகைவர் மண் நசையுற்று மைந்து பொருளாக வலிந்து போரொடு வந்தவிடத்து அவரை அடர்த்து ஒடுக்குதலைக் கருதிப் பிரியும் பிரிவு. இப்பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் பொருந்தும். (தொ. கள. 17 ச. பால.)

வானோக்கி வருந்தல் -

{Entry: J10__764}

கற்புக் காலத்தில் வேந்தற்கு உற்றுழிப் பிரிவில் தலைவன். “குஞ்சுகளோடு பெடைக்குருகைச் சேவல் தன் சிறகால் ஒடுக்கிப் பனியால் வருந்தாமல் காக்கின்ற இவ்விரவிலே எனது பிரிவு என்தலைவிக்கு எத்தகைய துன்பம் தருமோ?” எனத் தலைவியது வடிவை நினைத்து ஆகாயத்தை நோக்கி வருந்துதல்.

இது ‘வேந்தற்குற்றுழிப் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 318)

விகிருதம் -

{Entry: J10__765}

தலைமகள் தலைமகனுக்குத் தன் காதலைச் சொல்லுதற்கு நாணுதல். (யாழ். அக.)

‘விட்டுயிர்த்து அழுங்கல்’: பொருள் -

{Entry: J10__766}

தலைவியது கூற்று நிகழும் ஒழுகலாறுகள் பலவற்றுள் இஃது ஒன்று.

அங்ஙனம் எண்ணிய தலைவி, தலைவனைப் போகவிட்டமை யான் வேட்கை நலிய நெட்டுயிர்த்து வருந்துதல். (தொ. கள. 21 ச. பால)

விடலை -

{Entry: J10__767}

1. பாலைநிலத் தலைவன் (பிங். 534, ந. அ. 21)

2. மருதநிலத் தலைவன் (கலி. 95)

விடியல் வைகறை -

{Entry: J10__768}

விடியலாகிய நாள் வெயிற்காலைக்கு முற்பட்டதாகிய வைகறைப் பொழுது. (தொ. பொ. 8 நச்.)

விடை தழாஅல் -

{Entry: J10__769}

வெல்லும் திறல் படைத்த தலைவன் தான் விரும்பிய தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டித் தலைவிதமர் குறிப்பிட்ட கொல்லும் திறலுடைய ஓர் எருதினைப் பிடித்துத் தழுவி அடக்குதல்.

இஃது நம்பி அகப்பொருள் கூறும் அகப்புறப்பெருந்திணை. தலைவியை மணக்க, தன் உயிருக்கே ஊறு செய்யும் கடிய செயலில் ஈடுபடுதலின் ஐந்திணையாகாது அகப்புறப்பெருந் திணை யாயிற்று. (ந. அ. 244)

விதியொடு வெறுத்தல் -

{Entry: J10__770}

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவிமாட்டுத் தன் மனத்தை இழந்த தலைவன், தன்னை யாரும் திருத்த இயலாத நிலையில் பாங்கனிடம் புலந்து வருந்தித் தன் நல்வினையும் தனக்குப் பயன் தரவில்லையே என்று தன் விதியொடு வெறுத்துக் கூறுதல்.

இது ‘ பாங்கற் கூட்டம்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 26)

விப்பிரலம்பம் -

{Entry: J10__771}

தலைவன்தலைவியரிடை நிகழும் களவுக்கால கற்புக்காலப் பிரிவுகள்.

வியந்துரைத்தல் -

{Entry: J10__772}

களவுக்காலத்தில் தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்றானாகத் தலைவியைத் தேடிப் பின் தொடர்ந்த செவிலி, வழியிடைப் புணர்ந்துடன் வருவோரை வினாவி, அவ்வழியாகப் போம்பொழுது தன் மகள் நின்ற சுவட்டினையும், அவன் கையின் வேலினால் வேங்கை இறந்து கிடந்த நிலையையும் கண்டு வியந்து கூறியது.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 245)

விரகம் -

{Entry: J10__773}

தலைவன்தலைவியர் ஒருவர் மற்றவரைப் பிரிவதால் நிகழும் பிரிவுத் துன்பம். (L)

விரதியரை வினாதல் -

{Entry: J10__774}

உடன்போன தலைவியைத் தேடிப் பாலைநிலத்தில் சென்ற செவிலி, “என் மகள் ஓராடவன் பின் பித்துப்பிடித்தவள் போல் தொடர்ந்து சென்றதனைக் கண்டீர்களா?” என்று வழியிடைக் கண்ட விரத ஒழுக்கமுடைய அடியவரை வினவுதல்.

இதனை ‘ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதல்’ (ந.அ. 188) என்றும், ‘மாவிரதியரை வினாதல்’ (இ. வி. 538 உரை) என்றும் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண் கூறுப.

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 242)

விரவிக் கூறல் -

{Entry: J10__775}

தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் வன்மொழியான் கூறின் தலைவி மனம் மெலிவாள் என்று வன்மையும் மென்மையும் கலந்து, “தலைவன், ஆண் அலவன் தன் துணைக்கு நாவற்கனியை உண்பிப்பதைப் பார்த்துப் பேய் கண்டவனைப் போல உணர்வு ஒழியப் போனான். நீ அவன்துயரைக் கண்டால் உயிரையே விட்டுவிடுவாய்!” என்றாற் போலக் கூறுதல்.

இதனை ‘மறுத்தற்கு அருமை மாட்டல்’ என்றும் கூறுப. (ந. அ. 148)

இது ‘குறை நயப்புக் கூறல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 84)

விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

{Entry: J10__776}

தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவி யிடம் தோழி, “யானும் தலைவர் வாராமை குறித்துக் கவலைப்படும்போது, அடுத்த இல்லத்துப் பெண் மற்றொ ருத்தியிடம் உரையாடும்போது ‘அவள் இப்பொழுதே வருவாள்’ என நல்வாய்ச்சொல் கூறக் கேட்டேன் ஆதலின், தலைவர் விரைவில் மீண்டு வந்து சேருவார் என்று நன்னி மித்தத்தால் போதருகிறது” எனக் குறிப்பிடும் கூற்று. (நற். 65)

விருந்து கண்டு பொறுத்தல் -

{Entry: J10__777}

தலைவன் விருந்தினரொடு மனைக்கண் வந்துழித் தலைவி தனது சினம் தோன்றாதவாறு பொறுத்துக் கொள்ளுதல். தலைவன் பரத்தையில்லத்தினின்று தன்னை நாடித் தன் மனைக்கு வருவது கேட்டுக் கண்கள் நீர் பெருகப் புருவங்க ளாகிய விற்கள் வளைய முகம் வியர்த்து வெறுப்பினால் முகம் வெண்டாமரை போல விளர்க்கப் பெருமூச்செறிந்த தலைவி, தலைவன் பக்கலில் விருந்தினர்கள் வருதல் கண்டு தன் கற்பினைப் பேணும் கருத்தான் வெறுப்பை மறைத்து முகம் மலர்ந்தமை கூறுவது. (அம்பிகா. 491)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் பகுதிக்கண்ணது. (ந. அ. 206)

`விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

{Entry: J10__778}

பரத்தையிற் பிரிவால் தலைவனிடம் ஊடல் கொண்ட தலைவி, விருந்து கண்டு, அப்போதைக்கு ஊடலைத் தவிர்ந்து விருந்தோம்பி மகிழ்ந்தும் மகிழ்வித்தும் செயற்பட்ட பின்னர், விருந்தினர் நீங்கிய பின்றை, தனிமைக்கண் சினத்தை வெளிப்படுத்தினாக, தலைவன் “சினக்க வேண்டா” என வேண்டி அவளுடைய பாதங்களைத் தொழுதல். (ந. அ. 206)

ஊடல் தணிந்த பின் நேரும் முயக்கம் உவப்பும் இன்பமும் மிகவும் பயக்கும் என்ற காதற்சுவையின் சிறப்புத் தோன்ற வந்த துறை இது. ‘ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும், கூடலில் காணப் படும்.’ (குறள் 1327)

இத்துறை திருக்கோவையாருள் ‘அணைந்தவழி ஊடல்’ (390) என்பதன்கண் அடங்கும்.

“தலைவியது சினம் நீங்காததால் அவள்கண்கள் நீரை உகுக்கின்றன; வாய் திறந்து பேசமாட்டாமல் பொருமி உடல் முழுதும் போர்த்துப் படுத்திருக்கும் இவளுடைய அடித் தாமரைகளை வணங்கி ஊடலைத் தீர்ப்பேன்” என்று தலைவன் கருதுவது கோவையாரில் வரும்கிளவி.

விருந்துப் பொதுப்பொருள் -

{Entry: J10__779}

ஒரு திணைக்குரிய கருப்பொருள் மற்றொரு திணைக்கண் சென்று சேரின் அஃது அத்திணைக்கு விருந்துப் பொதுப் பொருள் ஆகும். (வீ. சோ. 96 உரை மேற்.)

விருந்து விலக்கல் -

{Entry: J10__780}

தம் இல்லத்தில் விருந்தினனாகத் தங்குமாறு கூறித் தலைவ னைத் தலைவியொடு தன்னூர்க்குப் போதலை இடைச்சுர மக்கள் நீக்குதல்; ‘நெறி விலக்கல்’ என்பதும் அது.

“வழிநடையால் தலைவி வருந்தியிருக்கும் எம் இல்லத்தில் எத்தனையோ ஆடவர் விருந்தினராக வந்து தங்கித் தேனும் தினைமாவும் உண்டு செல்வது போல, நீயும் வந்து விருந் துண்டு எங்கள் இல்லத்து ஆடவரொடு தங்கிப் பின் திட்ட மிட்டவாறு இரவு புலருமுன் தலைவியை உடன்கொண்டு போதலை மேற்கொள்க” என்று இடைச்சுரத்து மக்கள் தலைவனிடம் கூறுதல்.

இஃது உடன்போக்கு எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்றாம். (மா. அ. பாடல். 681)

விருந்தென வந்த பெருந்தகை தளர்நிலை -

{Entry: J10__781}

விருந்தாக வந்த தலைவனைத் தான் பேணாமையால் அவன் வருந்திச் சென்றமையைத் தலைவி தோழிக்குக் கூறல்.

“இரவில் வந்து குறிபிழைத்த நம் தலைவர் விடியற்காலை நம் இல்லத்துக்கு வந்து தம்மை விருந்தினன் என்று கூறி நிற்ப, அன்னை அவரைப் பேணி உபசரிக்குமாறு என்னை விடுத் தாள். யானும் அவ்வாறே சென்று செய்வதறியாமல் நின்றேன்; அவரும் பெருமூச்செறிந்தவாறே அகன்று சென்றார்” என்ற தலைவி கூற்று.

இஃது ‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (அம்பிகா. 234)

விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -

{Entry: J10__782}

இரவுக்குறி பிழைத்தலானே மறுநாள் காலையில் விருந்தாக வந்த தலைவன் நிலையைத் தலைவி கூறுதல்.

“தோழி! நேற்று இரவுக்குறி பிழைத்த தலைவன் இன்று காலை நம் இல்லத்திற்குத் தான் விருந்தினன் என்ற பெயரால் வர, தாய் அவனை விருந்தோம்புமாறு என்னிடம் கூற, யான் அவனை உபசரிக்கச் சென்றவழி, அவன் இரவுக்குறி பிழைத்ததைக் குறிப்பாக அறிவுறுத்துவான் போலப் பெரு மூச்செறிந்தவாறு சென்றான்” (அம்பிகா. 234) என்று தலைவி தோழியிடம் கூறுதல். (இ. வி. 519)

‘இரவுக்குறி இடையீடு’ எனும் தொகுதிக்கண்ணது இக்கூற்று.

விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் -

{Entry: J10__783}

பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த தலைவன், பலரையும் வாயிலாக விடுக்க, அவரெல்லாம் வாயில் மறுக்கப்பட்ட நிலையில், விருந்தினன் ஒருவன் வர, அவனோடு இல்லத்துப் புக்கவழி, தலைவி தன் புலவியை மறந்து விருந்தினனை உபசரிப்பதில் ஈடுபட்டது கண்டு மனையிலிருக்கும் ஏவலர் தலைவியினுடைய மனையறப் பண்பினைப் பாராட்டிக் கூறல்.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 388)

விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -

{Entry: J10__784}

பரத்தையிற் பிரிவிடை வைகிய தலைவன், தலைவி மகற்பயந்து நெய்யாடிய பின் அவளைக் கூட வந்தபோது அவள் ஊடி நிற்பவே, எதிர்பாராது வந்த விருந்தினரொடு தலைவன் மீண்டும் மனைக்கண் புக்கானாக, அவர்கள் எதிரே தான் ஊடுதல் சீரியதன்று என அவள் ஊடல் தணிந்து அவ்விருந்தினரை அவனொடு சேர்ந்து உபசரிப்பவே, அது கண்டு அவன் மகிழ்தல்.

“மனமே! இவள் புலவி தணிந்து குளிர்ந்து பண்டை நிலைய ளாவதற்கு நல்ல மருந்தாக இவ் விருந்தைப் பெற்றதும் என் தவமே!” (அம்பிகா. 492) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; ‘உணர்த்த உணரா ஊடல்’ எனும் பகுதித்து. (ந. அ. 206)

விரும்பினள் நேர்ந்த பாவக் கிளவி -

{Entry: J10__785}

பாவம் - குறிப்பு. தலைவி உடன்போக்கிற்குத் தான் இசைந்த மையைக் குறிப்பால் கூறுதல்.

களவொழுக்கத்தில் தலைவனைக் கூடி மகிழ்ந்த தலைவி, அவன் தன்னை மணந்துகோடற்குத் தன் உறவினர் பல காரணங் கூறித் தடையாயவழி, தோழி கூற்றுப்படி அவ னோடு உடன்போய் அவன்தமர் இல்லத்தில் வரைவு நிகழ்த்துதற்கு இயைந்த நிலையில் தன் இசைவினை, “நாணம் மிகவும் இரங்கத்தக்கது; இதுகாறும் அஃது என்னோ டிருந்தது. கரும்புப்பாத்தியின் கரை நீர் மிகுதியாகப் பெருகும் போது கரைந்து அழிவது போல, எனக்குக் காமம் மிக்கவழி அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலின்றி நாணம் என்னை விட்டு நீங்கிவிட்டது” (குறுந். 149) என்றாற்போலக் குறிப்பால் தோழியிடம் கூறுதல்.

இஃது ‘உடன்போக்கு வலித்தல்’ என்ற தொகுதிக்கண்ண தொரு கூற்று. களவியற்காரிகை இதனை ‘செலவுடன் படுத்தல்’ என்ற கூற்றாகக் கூறும். (பக். 117) (த. நெ. வி. 20)

`விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறல்’ -

{Entry: J10__786}

தலைவன்பிரிவால் இரங்கும் தலைவி நெய்தல்நிலமாகிய கடற்கரையில் வருந்தியிருந்து தன் தலைவன் தன்னைக் கைவிடாத மேலவன் என்பது போன்ற ஆறுதல் மொழி களைத் தன்னுள் கூறிக்கொள்ளுதல். (நெய்தல் நடையியல்).

(வீ. சோ. 96 உரை. மேற்.)

`விழிதுயில் கண்டு உவந்துழி உரைத்தல்’ -

{Entry: J10__787}

தலைவனும் தலைவியும் மகவோடு துயிலுதலைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறுதல்.

“பிணையும் கலைமானும் போலத் தலைவனும் தலைவியும் இணைந்து தம் மகவுடன் படுக்கையில் கிடக்கும் இக்காட்சி மிகவும் நிறைவுடைய காட்சிதான். ஆயினும் இதற்கு ஒரு சிறுகுறை கூறலாம். இக்காட்சியைத் தலைவனே ஈருருக் கொண்டு, படுக்கையில் இவ்வாறு இனிது கிடக்கும் காட்சியைக் காணமாட்டாமையாகிய அதுவொன்றே குறை!” என்ற தோழி கூற்று.

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (அம்பிகா. 470)

விழுப்பம் பேசல் -

{Entry: J10__788}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி தலைவனுடைய சிறப்பை எடுத்துக்கூறித் தம்முடைய தொடர்பு அவனுக்கு ஏற்றதன்று என்று விளக்குதல். (குறிஞ்சி நடையியல்)

இதனை நம்பி அகப்பொருள் ‘பாங்கி குலமுறை கிளத்தல்’ (144) என்னும். (வீ. சோ. 92 உரைமேற்.)

விழைய உணர்த்தல் -

{Entry: J10__789}

பாங்கியிற் கூட்டத்தில், பாங்கி தலைவனிடம் கையுறை பெற்றபின் தலைவி அத்தழையுடையை விரும்புமாறு மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்.

இது ‘தோழியிற் கூட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. ‘பகற்குறி’ என்னும் பகுதியது. (த. நெ. வி. 17)

விளக்கொடு வெறுத்தல் -

{Entry: J10__790}

கனவில் தலைவன் வர, அதனை நனவென்று கருதிக் கண் விழித்துக் கனவிலும் கூடும் வாய்ப்பினை இழந்த தலைவி விளக்கினிடம், “நீயாவது தலைவனிடம், ‘பொய்முகம் காட்டி மறைதல் பொருத்தமின்று’ என்று கூறலாகாதா?” (கோவை. 356) என்று அவனுடைய புறத்தொழுக்கத்தை வெறுத்துக் கூறுதல்.

இதனைப் ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண் உணர்த்த உணரும் ஊடற்பகுதிக்கண் ‘செஞ்சுடர்க் குரைத் தல்’ என்றும் கூறுப. (இ. வி. 554 உரை)

இது ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று; ’உணர்த்த உணரும் ஊடல்’ எனும் பகுதித்து. (கோவை. 356)

விளைவு -

{Entry: J10__791}

அகப்பொருளுரை இருபத்தேழனுள் ஒன்று. (கா. 91)

இடையூறின்மை, இன்பப்புணர்ச்சி, நெடுநிலம் படாமை, கற்பு, காவல், கடன், நாண், இற்செறிந்திருக்கை, இருஞ்சுரம் போதல், பாசறை முடித்தல், பாத்தலின் விழவு என்று பேசப்பட்டனவும் பிறவும் போலப் பலவகையாய்ப் பயன் போலத் தோன்றிக் களவுக்கால இன்பமும், கற்புக்கால இல்லற நல்லற இன்பமும் ஆகியவற்றை விளைப்பதாகும். (வீ. சோ. 96 உரை மேற்.)

விறலி தோழிக்குக் கூறல் -

{Entry: J10__792}

பலவாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில்நேர்ந்தமை தோழிக்கு விறலி கூறியது.

வாயிலாகப் புக்க பலராலும் தன் ஊடல் தணியப் பெறாத தலைவி, விறலி வாயிலாகப் புக்கவழி ஊடல் தவிர்ந்தாளாக, அது குறித்து விறலி மிகவும் மகிழ்ந்து தோழியை நோக்கி, “தன் அடிமையாகிய எனக்குத் தலைவி பெரிதும் அருளி னாள்காண். பெரியோர்கட்கு அளிக்கும் மதிக்கற்பாட்டை எனக்கும் அருளிய அது, தன்னொடு பன்னாள் பழகியவரை அவர்தம் பிற தகுதி கருதாது அப்பழமையொன்றையே எண்ணி மதிக்கும் அவளது இயல்பாதல் வேண்டும்; அன்றி, நெடுங்காலம் என்னோடு பழகியதால் விளைந்த கண்ணோட் டம் பற்றியாதல் வேண்டும். விழுமியோர்தம் பண்புகள் அவை!” (திணைமாலை. 134) (தொ. பொ. 152 நச்.)

விறலி தோழிக்கு விளம்பல் -

{Entry: J10__793}

விறலி தோழியிடம் “தலைவன்கூட்டம் பரத்தையர்க்கு இன்பமே” என்று கூறுதல்.

“தலைவன் சற்று மூத்தவன்; பரத்தையரோ இளவயதினர். தலைவனது மூப்புப் பழங்கள்ளைப் போலப் பரத்தையர்க்கு மிகுந்த இன்பம் தருகிறது” என்றாற் போன்ற விறலி கூற்று.

(பு. வெ. மா. 17-14)

விறலிவாயில் மறுத்தல் -

{Entry: J10__794}

விறலியாகிய வாயிலை மறுத்தல்.

தலைவனுடைய வாயிலாய் ஊடல் தணிவிக்க வந்த விறலியைத் தலைவி மறுத்துக் கூறுதல்.

“பாடினி! நம் தலைவன் பரத்தையர்சேரிக்குப் போகத் தொடங்கிய அன்றே என் கண்கள் அஞ்சனத்தை மறந்து உறக் கத்தை நீத்தன. நீ அங்குப் பாடிய பாடல்கள் என் செவியைத் தூர்த்தன. இனி, நீ பரத்தையர் இருப்பிடமே சென்று பாடு” (அம்பிகா. 487) என்பது போன்ற தலைவி கூற்று.

இது கற்பியலுள், ‘பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று; உணர்த்த உணரா ஊடல். (ந. அ. 206)

வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -

{Entry: J10__795}

“என் மகளான இப்பேதை அறுபது நாழிகையும் திருக் கண்ணபுரத்துப் பெருமானையே நினைந்து நினைந்து, அவனுடைய அவயவங்களின் அழகையும் அணிகளையும் ஆயுதங்களையும் பற்றியே வாய்வெருவிப் பிதற்றுகிறாள். இவளை இப்படி ஆக்கிய அவன்மீது இவள் கொண்ட காமத்தால் இவள்மேனியில் பசலையும் பரவிக் கிடக்கிறது. இவள் திருக்கண்ணபுரத்திற்கே சென்று அவனைப் பார்த்து விட்டாள் போலும்!” என்னும் தாய் கூற்று.

இது சுட்டி யொருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக்கிளையின் பாற்படும். (பெரியதி. 8-1-1)

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் -

{Entry: J10__796}

தலைவியின் வேறுபாட்டைக் கண்டு காரணம் வினவிய செவிலியிடம் தான் தலைவியது களவொழுக்கத்தை மறைத்தமை பற்றித் தோழி தலைவனிடம் கூறுதல்.

“தலைவ! எங்கள் நிலையை உய்த்தறிந்த செவிலி நுணுகிக் கேட்டபோது யாம் ஒருவாறு அவளிடம் மறைத்துக் கூறி னோம். நாங்கள் அன்னையரது ஆணைக்கு மிகவும் அடங்கி யவர்கள் ஆதலின், விரைவில் இவளை வரைந்துகொள்ள ஆவன செய்க” (தஞ்சை. கோ. 228) என்பது போன்ற தோழி கூற்று.

இதுகளவியலில் ‘வரைவு கடாதல்’ எனும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -

{Entry: J10__797}

இடைச்சுரம் - திரும்பி வரும்போது நடுவழியிலுள்ளது பாலைநிலம்.

“எடுத்துக் கொண்ட வினையை முடித்த பிறகு, சிறிது பொழு தும் வேற்று நாட்டில் தங்காது உடனே தேரில் புறப்பட்டு, ஞாயிறு மறையும் மாலை நேரத்திலும் குதிரையை விரைந்து செலுத்தி வரும் என்னைவிட, என் மனம் விரைவில் புறப்பட் டுச் சென்று என் இல்லத்தை அடைந்து, பல்லியின் நிமித்தம் பார்த்து மாலையில் நிற்கும் என் தலைவியின் கண்களைப் புதைத்து அவள் கூந்தலை நீவி அவளைத் தழுவிற்றுப் போலும்!” (அகநா. 9) என்றாற் போலத் தலைவன் தன் காதல் மிகுதி புலப்பட இடைச்சுரத்துத் தன் உள்ளத்து எண்ணுத லும், பாகனொடு கூறுதலும் போல்வன. (தொ. பொ. 41 நச்.)

வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -

{Entry: J10__798}

“நம் சுற்றத்தார் துயர் துடைத்து அவர்கள் நல்வாழ்விற்கு வகை செய்து பகைவரும் நம்மொடு நட்பாய் ஒழுகுமாறு செய்து ஊக்கத்தொடு வினைமுடித்து மிக்க செல்வம் பெற்றுச் செயற்கரிய செயல் செய்துள்ளோம் ஆதலின், மதுரையின் நாளங்காடியைப் போல மணம் வீசும் நெற்றி யினையும் நீண்ட கரிய கூந்தலினையும் உடைய மாயோ ளொடு, நம் பெரிய மாளிகையில், நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூப்படுக்கையில், சுடர்விளக்கின் ஒளியில் ஆன்பொருநை ஆற்றிலுள்ள மணலின் எண்ணிக்கையினும் மிகுதியான அளவு தழுவுவோம்” (அகநா. 93) என்பது போன்ற தலைவன் கூற்று. (தொ. பொ. 41 நச்.)

வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -

{Entry: J10__799}

‘முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகை’ காண்க.

வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -

{Entry: J10__800}

பகை தணிவினை முதலிய பிரிவின்கண், மீண்டு வருவதாகத் தலைவியிடம் குறித்துச் சென்ற பருவ எல்லையுள் எடுத்துக் கொண்ட வினை முடியாதுபோகவே, தலைவன் குறித்த பருவத்தில் தனது ஊருக்கு மீளுதல் இயலாது போயிற்று; அது கண்டு ஆற்றாளாகிய தலைவி தன் நிலையைக் கூறித் தலைவன்நிலையை அறிந்துவரத் தூது விடுவாளாயினாள். அத்தூதுவன் சொற்கேட்ட தலைவன், “என் தலைவி தன் நிலையோ இப்படி இருக்கிறது என்று தெரிவித்துவிட்டாள். இக்கார்காலத் தொடக்கத்தில் இடி இடிக்கும் இப்பருவத் தில், பிரிதல் துன்பம் என்னைப் பெரிதும் வாட்டுகிறது. நான் எடுத்த செயலைக் குறித்த பருவத்தில் முடிக்க இயலாமலும், இக்கார்காலம் வருத்தும் துயரைப் பொறுக்கமுடியாமலும் துன்புற்று வருந்தும் நிலையை அவள் அறியின் நன்றாயிருக் கும்!” என்று தூது வந்தவனிடம் சொல்லி வருந்துதல். ஐங். 441 (தொ. பொ. 41 நச்.)

வினை முற்றி நினைதல் -

{Entry: J10__801}

கற்புக் காலத்தில் வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வினை முற்றிய பின்னர்த் தன் தேர்ப்பாகனை நோக்கிக் “கயலையும் வில்லையும் கொண்டு கோபமும் காட்டி ஒரு திருமுகம் வந்துள்ளது. இனிக் கடிது இல்லம் ஏகுதல் வேண்டும்.” எனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது உருவெளித் தோற்றத்தைக் கண்டு அவளை நினைந்து கூறியது.

இது ‘வேந்தற் குற்றுழிப் பிரிவு’ எனும் தொகுதிக்கண்ண தொரு கூற்று. (கோவை. 327)

வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -

{Entry: J10__802}

“தலைவ! காட்டாற்றின் மணல் மிக்க கரையிலே அமைந்த ஊரில் இருக்கும் உன் தலைவியின் மூங்கில் போன்ற தோள்களைத் தழுவ விரும்புகிறாய். நேற்றிரவுதானே அரசன் போரை முடித்து நினக்கு விடை கொடுத்தான் என்பதனை நினைத்துக் கவலாதே. கலையும் பிணையும் விளையாடும் இக்காட்டுப் பகுதியில் உள்ள நின் தலைவியின் மனையினை நீ விரைவில் காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்து வேன்” என்ற பாகன் கூற்று. (நள். 121)

வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -

{Entry: J10__803}

பாலையாகிய பிரிவின்கண் தலைவியை விடுத்து, மூங்கிலும் வெடிக்குமாறு முதுவேனில் வெப்பம் மிக்குக் கற்களும் பிளக்குமாறு வெயில் காய்ந்த கொடிய வழியே சென்ற தலைவன், மீண்டு அவ்வழியிலேயே திரும்பி வரும்போது, “முல்லையாகிய தலைவியின் இருத்தலை நினைந்து வருதலால், கொடிய பாலை வழியும் தண்மையுடைத் தாயிற்று” என்று நினைத்தல். (ஐங். 322) (தொ. பொ. 146 நச் .)

‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ அடங்குவது இது.

வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

{Entry: J10__804}

“முன் ஒரு முறை என்னை இறுகத் தழுவிக் கிடந்த இவ ளுடைய கைகளைச் சற்றே யான் நெகிழ்வித்தஉடனே, இவளுடைய நெற்றி பசந்ததே! அத்தகையவள் இப் பிரிவால் என்ன ஆவாளோ?” என்ற தலைவன் தன்னுள் கூறிக் கொள்ளுதல். (குறள் 1238)

வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -

{Entry: J10__805}

“தலைவ! வேந்தன் போரை வென்று வெற்றிக்கொடி உயர்த்திவிட்டான். இக்கார்காலத்தில் கோவலர் தொடர, பசுக்கள் கன்றுகளுடன் முல்லைநிலத்தில் தாவித் திரிகின்றன. நின் ஏவலர் விரைந்து ஊர் அடைகின்றனர். நின் தேரும் விரைவாக ஊர் நோக்கிப் புறப்பட்டுவிட்டது. நீ விரைந்து ஊரினை அடைவாயாயின், நின் பிரிவுக்காலத்தில் தலைவி யின் நெற்றியில் படர்ந்த பசலை விரைவில் அஞ்சி ஓடிவிடும்” என்ற உழையர் கூற்று. (அகநா. 354)

வினைவயிற் பிரிதல் -

{Entry: J10__806}

தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் இது கற்பிற்குரியதொரு கிளவி. ‘காவற் பிரிவு’ எனவும்படும் (ந.அ. 201) அது காண்க.

வினை வல பாங்காயினான் `சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

{Entry: J10__807}

பிறர் ஏவிய தொழிலைச் செய்பவனாகிய தலைவனொருவன், அவ்வாறு தன் உறவினர் ஏவிய தொழிலாகிய மோர் விற்றலைச் செய்யும் தலைவி ஒருத்தியைக் காண்கிறாள். இயற்கைச் சூழ்நிலையில் வாழ்ந்து நல்ல உடற்பொலிவினை யுடைய அத் தலைவி இன்னும் பூப்பெய்திலள் போலும். அவளைக் காமம் சான்ற இளமையாள் என்று கருதி அத்தலைவன் கீழ்க் கண்டவாறு நினைத்துத் தனக்குள் பேசி இன்புறுகிறான்.

“குடம்பால் கறக்கும் பசுவுக்கும் நல்ல காளைக்கும் பிறந்த எருது பெரிய பாரவண்டியை முயற்சியின்றி இழுத்துச் செல்வதனைப் போல, பாரமான மோர்ப்பானையை எளிதாகத் தலையிற் சுமந்து மோர் விற்று வரும் இவள் அழகிய மகளிருள் பேரழகியாவள்.

“மயிர்முடியின் ஒரு புறத்தே அழகிய முடிமாலையைச் சூடி நடந்து வரும் இவளது பார்வையால் காமக்குறிப்பில்லாத முனிவர்களும்கூடப் புண்பட்டு நெஞ்சம் வருந்துவர். இவ ளுடைய கண்களைப் போல இவள் உடல்முழுதும் என்னை வருத்துகின்றது.

“இம்மெல்லியல் தலைச்சுமை போதாதென்று நெல்லை யுடைய வட்டியை ஒரு கையால் அணைத்து மற்றைத் தோளை வீசித் தன் அணிகலன்கள் ஒளி வீச நடக்கும்போது, இவள் நுண்ணிய இடை நன்கு புலப்படுகிறது.

“பேரழகியராகிய தேவருலக அரம்பை மாதர் தத்தம் அழகை இவட்குக் கொடுத்தார் போலும். இவள் நிவேதனத்திற்குரிய பாலைச் சுமந்து மன்மதன்கோயிற்குச் சென்றால், தன் மனையாளைத் தவிர வேறொருத்தியையும் தவறான எண்ணத்தொடு நோக்காதவன் என்று இதுகாறும் புகழ் பெற்ற காமனும் நெஞ்சழிந்து தன் கையிலிருக்கும் படையைக் கீழே போகட்டுவிடுவான்.

“இவள் மோர் விற்க வந்தால், இவள் அழகில் தம் கணவன்-மார் மயங்கி நிலையிழந்து விடுவார்களே என்றஞ்சி, இவ்வூர் மகளிர் மோருக்கு மாற்றாக மாங்காயை நறிய ஊறுகாயாகக் கொண்டு நுகரத் தொடங்கி, இவள் வரும் நேரத்தில் கதவுகளை அடைத்துக் கணவன்மாரைக் காக்கலாமேயன்றி, இவள் மோர் விற்க வெளியே புறப்பட்டுவரும் வழக்கத்தைத் தவிர்த்தல் இயலாது.

“என்ன சொல்லி யாது பயன்! இவள்தான் என்மனம் வருந்தும்படி நோயைச் செய்து போதலன்றி, அந்நோயைத் தீர்க்கும் மருந்தாக அமைபவள்அல்லளே! யாது செய்வேன்?” (கலி. 109) (தொ. பொ. 50 நச்.)

வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

{Entry: J10__808}

“ஏடா, நீ நினைத்தவுடன் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள விழைகிறாய். நீ என் மெய்யைத் தீண்டுதற்கு ஒத்துக்கொண்ட அப்பொழுதே புணர்ச்சிக்கும் நான் இசைந்ததாகக் கருது கிறாய். நின் செயல், மோர் வேண்டினார்க்குச் சிறிது மோர் குடிக்கக் கொடுத்த அளவில், வெண்ணெயைக் கேட்டால் வெண்ணெயும் கொடுப்பார் என்று கருதுவது போல உள்ளது“

“நல்லாய்! மத்தைச் சுற்றி நிற்கும் கயிறு போல என் நெஞ்சு உன்னையே சுற்றி வருகிறது. தன் கன்றை நினைத்து ஓடிவரும் பசுப்போல உன் நினைவால் உன்னைக் காண வருகிறேன்.“

“எல்லா! இவ்விடத்து நின்றால், எம் உறவினர் காண்பர். நாளை புனத்திற்குக் கன்று மேய்க்கப் போவோம். ஆண்டு வந்து சேர்; மேல் பேசிக்கொள்ளலாம்.“

இவ்வாறு தலைவன்தலைவியிருவரிடையேயும் உரையாடல் நிகழ்ந்தது. (கலி. 110)

வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், `காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

{Entry: J10__809}

வினை வல பாங்காயினான் `சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ - காண்க.

வினைவலர் -

{Entry: J10__810}

வினைவலராவார் பிறர் ஏவிய தொழிலைச் செய்யும் ஆடவரும் பெண்டிருமாவார். (தொ. பொ. 23 நச்.)

பிறர் ஏவிய தொழிலைச் செய்யவேண்டிய நிலையிலிருப்ப வர்களுக்கு அறம்பொருளின்பம் என்பன வழுவாமல் நடத்த வேண்டிய அகனைந்திணை உரித்தன்று. அகனைந்திணைக்கு உரியவர், பிறர் ஏவிய தொழிலைச் செய்துகொண்டு தனி யுரிமை அற்றவராயிருப்பவரல்லர். (25 இள.)

ஆதலின் வினைவலர் அகப்புறமாகிய கைக்கிளை பெருந் திணை என்னும் இவற்றிலேயே தலைமக்களாதற்குரியோர் (நச்.) (கலி. 108, 112, 113)

வினைவலர் - அடிமையர் அல்லாக் கம்மியர் போன்ற தொழி லாளர். இவர்களும் அகனைந்திணைத் தலைமக்களா தற்குரியர். (அகத். 23 பாரதி)

வினைவலர் - ஆண்டுக் கூலிகளாய்ச் செல்வரிடம் அமர்ந்து தொழில் செய்வோர். இவர் அவ்வப்போது ஏவாமல் தொடர்ந்து தம் தொழிலைச் செய்யும் நெட்டேவலர். (தொ. பொ. 23 குழ.)

வீண்நகை -

{Entry: J10__811}

‘வறிது நகை தோற்றல்’; அது காண்க. (சாமி. 87)

`வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்’ -

{Entry: J10__812}

பரத்தை இல்லத்திருந்த தனக்கு வெள்ளணி அணிந்தா ளொரு சேடியைத் தலைவி தூதாக அனுப்ப, அவளைக் கண்டு, தலைவி புதல்வற் பயந்து நீராடிய செய்தியைத் தலைவன் நன்கு உணர்தல். (மருத நடையியல்) (வீ. சோ. 95 உரை மேற்.)

வெய்துயிர்த்து இரங்கல் -

{Entry: J10__813}

கற்புக்காலப் பிரிவிடைத் தலைவி பிரிவு தாங்கமாட்டாமல் பெருமூச்செறிந்து வருந்தியிருத்தல் (முல்லை நடையியல்)

(வீ. சோ. 94 உரை மேற்.)

வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

{Entry: J10__814}

தலைவி புதல்வனை ஈன்றெடுத்தமைக்கு அடையாளமாகத் தலைவன் அறிதற்பொருட்டு வெண்மலரும் வெள்ளாடையும் அணியச்செய்து பரத்தையர்சேரிக்குத் தலைவன் காணச் சேடியை அனுப்பியபோது, அதனைக் கண்டு மகிழ்ந்த தலைவன், மனைக்கு மீண்டு தோழியைத் தலைவியது ஊடலைத் தீர்த்துவைக்குமாறு வேண்டிக்கொள்ளுதல்

“நல்லாய்! என்னிடம் ஏற்பட்ட குறையை நினைத்து மறுக் காமல் என்னை எதிரேற்றுக் கொள்வதற்கு நீ தலைவிபால் சென்று அவள் ஊடலைத் தீர்ப்பாயாக. தலைவி நின்னைச் சினக்கமாட்டாள்” (தஞ்சை. கோ. 388) என்பது போன்ற தலைவன் கூற்று.

இது கற்பியலுள் ’பரத்தையிற் பிரிவு’ எனும் தொகுதிக் கண்ணதொருகூற்று; ’உணர்த்த உணரா ஊடல்’ எனும் பகுதித்து. (ந. அ. 206)

வெளிப்பட இரத்தல் -

{Entry: J10__815}

கைக்கிளைத் தலைவன் தலைவியிடம் சென்று வெளிப் படையாகவே வேண்டுதல்.

“இவளை அணுகிச் சென்று என் காமத்தின் கடுமையைக் கூறி இரந்தும், இவள் என்னைப் புறக்கணிக்கின்றாளே! இனி என் உயிர் தங்காது!” என்றாற் போன்ற தலைவன் கூற்று.

இஃது ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைக்கண்ணதொரு கூற்று.

(பு. வெ. மா. 14-9)

வெளிப்பட வரைதல் -

{Entry: J10__816}

தலைவனும் தலைவியும் நடத்தும் களவொழுக்கம் பிறரறிய வெளிப்பட்டது என்ற எண்ணம் தலைவிக்கும் தோழிக்கும் ஏற்பட்ட பின், தலைவன் தலைவியை மணந்துகோடல்.

(தொ. பொ. 140 நச்.)

வெளிப்படை (1) -

{Entry: J10__817}

களவு வெளிப்படுதல். அஃதாவது தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்ப, தோழி மாறுகோள் இல்லா மொழிக ளால் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, செவிலி நற்றாய்க்குக் கூற்றினால் அறத்தொடு நிற்ப, நற்றாய் தந்தைதன்னையர் எல்லாரும் தலைவி தலைவனொடு நிகழ்த்திய களவொ ழுக்கம் பற்றி யறிதல் ‘வெளிப்படை’ எனப்படும். (இறை. அ. 26 உரை)

வெளிப்படைக்கு முதல்வன் கிழவனாதல் -

{Entry: J10__818}

பொதுவாக ஊரிலுள்ள பெண்டிர் தாழ்ந்த முணுமுணுப்புக் குரலிலோ, சற்று உரத்த குரலிலோ எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருந்தாலும், தலைவியின் மனத்தில் தன் களவொழுக்கம் இவர்கள் அறியுமாறு வெளிப்பட்டு விட்டது போலும்; அதனால் இவர்கள் அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும். இங்ஙனம் பெண்கள் முணுமுணுக்கும் அம்பலும் உரக்கப் பேசும் அலரும் தலைவி நிகழ்த்தும் களவொழுக்கம் பற்றியன என்று முடிவுசெய்ய ஊர்மகளிர் தலைவனைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்; அவ்வாறு அறிந்தாலன்றி, உறுதி யாகத் தலைவியைப் பற்றிய அம்பலையோ அலரையோ எழுப்பமாட்டார்கள் என்பது. (தொ. பொ. 139 நச்.)

வெளிப்படை கற்பினொடு ஒத்தல் -

{Entry: J10__819}

தலைவனும் தலைவியும் நடத்தும் களவொழுக்கம் பிறர் அறிய வெளிப்பட்டுவிட்டது என்று கருதும் தலைவி அது குறித்து வருந்த வேண்டுவதின்று. தலைவன் தலைவியைத் தவறாது மணந்து இல்லறம் நிகழ்த்துவான் என்பதன்கண் ஐயமின்று. திருமணத்திற்கு முன்னரே தலைவியைத் தலைவ னொடு சேர்த்தி ஊரவர் பேசும் பேச்சு, பின்னர்க் கற்புக் காலத்தில் இன்னான் மனைவி என்று கூறுவதனை ஒத்ததே. மக்கள் இருவரையும் சேர்த்துப் பேசுவதனான் இருவர் திருமணமும் நன்கு உறுதிப்பட்டுவிட்டது. என்பது. (தொ. பொ. 141 நச்.)

வெளிப்படை நிலை -

{Entry: J10__820}

அறத்தொடு நிற்றல். (க. கா. பக். 122)

வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

{Entry: J10__821}

“தோழி! தாயும் பொருளைச் செலவிட்டு என் உடல் மெலிவு தீர வேண்டி மனம் சுழல்கிறாள்; வேலனும் மறியை அறுத்து வெறியாட்டு நிகழ்த்த வேண்டுவன செய்கிறான்; கானவன் எறிந்த கல் வேங்கைப்பூங்கொத்துக்களைச் சிதறித் தேன் கூட்டை அழித்துப் பலவின் பழத்துள் தங்குவதுபோல, வெறியாடலால் வரும் அலர் தலைவன் குறியிடத்து வருதலைக் கெடுத்து நமது இன்பத்தை அழித்து நம்முள்ளத் தில் ஆழமாகத் தங்கியுள்ளது; இந்நிலையில் நம் துயரம் உண்மையில் வெறியாட்டால் தீராது; தலைவன் நம்மை மணந்தவழியே தீரக்கூடியது. அவன் வந்து நம்மை மணவாது போயின் நாம் யாது செய்வோம்?” என்ற தலைவி கூற்று. (அகநா. 292)

வெறி அச்சுறுத்தல் -

{Entry: J10__822}

“தலைவியின் உடல்வாட்டத்தையும் மனஏக்கத்தையும் பெருமூச்சையும் கண்ட தாய்மார், பேயின் ஆவேசமோ இதுவென ஐயுற்று வேலனைக் கொண்டு வெறியாடல் நிகழ்த்தத் திட்டம்இடுகின்றனர். இனியும் நீர் களவு நீட்டிப் பது தக்கதன்று” (தஞ்சை. கோ. 231) என்று தோழி தலைவ னுக்குத் தாய் வெறியெடுக்கலுறுவது கூறி அச்சுறுத்துவது.

“தாய் வெறியாட்டு நிகழ்த்தப்போகிறாள்; அதற்கு இடம் தாராமல் விரைவில் தலைவியை வரைக” என்பது குறிப்பு.

இது களவியலுள், ‘வரைவு கடாதல்’ என்னும் தொகுதிக் கண்ணதொரு கூற்று. (ந. அ. 166)

வெறிக்கோள் வகை -

{Entry: J10__823}

வெறியாட்டு, கட்டுக்காணுதல் முதலியன. தலைவியின் வரை தல்வேட்கையை உணர்ந்த பின்னும் களவொழுக்கத்தைத் தவிராது தலைவன் இருவகைக் குறியினும் இடையீடுகளி டையே வந்து சென்றானாக, அச் செயலான் உடலும் மனமும் மெலிந்த தலைவியின் வேறுபாடு கண்டு “இது தெய்வத்தான் ஆகியிருக்கலாம்” என்று முதுபெண்டிர் கூற, அவர்கள்தம் மொழியை ஒட்டிச் செவிலி கட்டும் கழங்கும் இட்டுக் குறிபார்த்தலும் வெறியாட்டெடுத்தலும் முதலியன செய்தல்.

தலைவன் சிலநாள் களவொழுக்கின் பின் முறையாகத் தலைவியை மணந்திருப்பின் வெறியாட்டு முதலிய வேண் டாச் செயல்கள் நிகழ வாய்ப்பிராது. தலைவியிடத்துள்ள அன்பினான் செவிலி வெறியாட்டு முதலியன நிகழ்த்தித் தலைவியை வேதனைக்குள்ளாக்குதல் பொருந்தாக் காமப் பகுதித் துறைகளுள் ஒன்றாய் அகப்பெருந்திணையாக ஒருசார் ஆசிரியரான் கொள்ளப்பெறுகிறது.

இது நம்பி அகப்பொருள் கூறும் அகப்பொருட் பெருந் திணை. (ந. அ. 243)

வெறிப்பாட்டு -

{Entry: J10__824}

வெறியாட்டில் நிகழும் பாடல் (பரிபா. 5 : 15 உரை) (L)

வெறியயர்தல் -

{Entry: J10__825}

வெறியாடுதல்; ‘வேலன் வெறிஅயர் வியன்களம் பொற்ப’
(அகநா. 98)
(L)

வெறியாட்டாளன் -

{Entry: J10__826}

வெறியாடல் புரியும் வேலன் (பு.வெ.மா. 9 : 41 உரை) (L)

வெறியாட்டு (1)

{Entry: J10__827}

தலைவனுடைய பிரிவினான் தலைவிக்குக் களவுக்காலத்தில் ஏற்படும் வேதனை உடலைத் தாக்க அதனால் உடல்வாட, அவ்வாட்டத்தின் உண்மைக் காரணத்தை அறியாத செவிலி, “இது தெய்வத்தான் ஆயிற்று” என்று கருதி அத்தெய்வத் திற்குப் பூசனை செய்து உணவுகளைப் படைப்பதற்குத் தெய்வ ஆவேசமுற்று ஆடும் வேலனை அழைத்துவந்து, அவனைக் கொண்டு தன் இல்லத்தில் முருகப்பெருமானுக்கு அக்கால முறைப்படி அவன் கருதுமாற்றான் நடத்தும் பூசனை வெறியாட்டு எனப்படும்; இது வெறி எனவும்படும். இவ்வெறியாட்டின் வாயிலாகத் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்தாலொழியத் தலைவியின் உடல்மெலிவு தீராது என்று செவிலி முதலியோர் நம்பினர். (நச்.)

வெறிக்கூத்து, வெறியாடல், வெறியயர்தல், வெறி என்பன ஒரு பொருளன.

களவுக்காலத்துத் தலைவன்பிரிவு தாங்காது தலைவிக்கு ஏற்பட்ட உள்ளநோய் உடலை நலிய, அதனால் வருந்திய தாய் ஏதேனும் தெய்வக் குற்றமோ என்று வெறியாட்டு நிகழ்த்தும் வேலனை வினவ, அந்நோய் முருகனான் வந்த தாதலின் அது தீர அவனுக்கு ஆட்டுக் குருதி செந்தினை இவற்றொடு பலியிடல் வேண்டும் என்று வெறியாட்டாளனாகிய வேலன் கூற நிகழ்த்தப்படுவது வெறியாட்டு. இதன்கண் மகளிரும் வேலனோடு ஆடுதலுமுண்டு.

இறைவன் திருவருள் பெறக் கருதி இவ்வெறியாட்டு அகத்தும் புறத்தும் நிகழும்.

‘கட்டினும் கழங்கினும் வெறிஎன இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்’ என்பது இந்நூற்பாப் பகுதி.’

(தொ. பொ. 115 : 3, 4 நச்.)

வெறியாட்டு (2) -

{Entry: J10__828}

தலைவி தன்னைத் தலைவன் அருள் செய்தற்காகத் தாய் அறியாமல் முருகனுக்கு வெறிக்கூத்து ஆடியது.

தலைவனைப் பிரிந்துள்ள தலைவி மிகவும் வருத்தமுற்றுத் தலைவன் தன்னை மீண்டும் வந்து கூடியருளுவதற்காக அன்னையும் அயலவரும் சொல்லும் சொல்லுக்கு அஞ்சிய வாறு தன்மனையில் வெறியாடி முருகனை வழிபடுதல் என்னும் இது பெருந்திணை இருபாற்கூற்றின் கண்ணதாகிய ஒரு துறை. (பு. வெ. மா. 17 : 10)

வெறிவிலக்கல் (1)

{Entry: J10__829}

களவுக்காலத்தில், வரைபொருட் பிரிவில் தலைவனைப் பிரிந்திருக்கும் நிலை தலைவிக்கு ஏற்படவே, அவள் உடல் மெலிய, அது கண்டு தெய்வக்குற்றம் போலும் எனத் தாய் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்ய, அது கண்டு தலைவி வருந்த, தோழி வெறியாடல் நிகழாதபடி செய்வதாகத் தலைவியிடம் கூறி, வெறி அயர் களத்துச் சென்று வேலனை நோக்கி, “எம் தலைவி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டபோது எதிர் பாராது வந்து அவளைக் காத்த தலைவன் இருக்க, இந்நோய் தீர்தற்குப் பிறிதோர் உபாயத்தைத் தேடும் நின்னைப் போல் இவ்வுலகில் அறிவுடையார் இல்லை!” எனக் கூறி, மேல் அறத்தொடு நிற்பாளாக வெறி விலக்கியது.

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 292)

வெறி விலக்கல் (2)

{Entry: J10__830}

பெருந்திணைத் தலைவி, தன் மெலிவு தெய்வத்தானாயது என்று உட்கொண்டு அது முருகனான் வந்த மெலிவு என்ற வேலனது கூற்றை நம்பி வெறியாட்டிற்குத் தாய் ஏற்பாடு செய்தது கண்டு, வெறியாட்டு நிகழ விருக்கும் களத்திற்குச் சென்று அதனை நீக்கியது.

“பலி பெறும் தெய்வமே! யான் நீரில் மூழ்கிவிடும் நிலையி லிருந்தபோது என்னை எடுத்துக் காத்து அணைத்த என் தெய்வமாகிய தலைவன் இருக்கவும், ஏதோ உன் தொடர் பால் எனக்கு மெலிவு வந்ததாகத் தாய் கருதியதை உண்மை என்று நம்புமாறு பலியினை ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் உன் பொய்ச்செயலை வேறு யாரிடம் சென்று யான் சொல்லுவேன்?” என்றாற் போல்வன கூறி வெறி விலக்குதல்.

இது தலைவியே வெறிவிலக்குதலின் பெருந்திணைப்பாற் பட்டது. (மா. அ. பாடல். 521)

வெறிவிலக்கு -

{Entry: J10__831}

தலைவியின் காதல்நோயை முருகனான் விளைந்ததெனக் கருதி நற்றாய் வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்தத் துணிந்தபோது, தோழி அதனை விலக்குதல்.

“அன்னையீர்! இவள் உற்ற இந்த நல்ல நோய் இவள் திருமால் மீது கொண்ட காதல் மிகுதியான் விளைந்தது. இதனைத் தீர்ப்பார் அவனை யன்றி வேறு யாருமிலர்” என்ற தோழி கூற்று.

இத்துறை சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத் திணைக் கைக்கிளையின்பாற்படும். (திருவாய். 4-6-1)

வெறி விலக்குவிக்க நினைதல் -

{Entry: J10__832}

களவுக்காலத்தில் தலைவன் வரைபொருட்குப் பிரிய, அவன் பிரிவால் தலைவி உடலும் உள்ளமும் மெலிய, அவளது உடல்மெலிவு தெய்வத்தானாயிற்று என்று கருதிச் செவிலி வெறியாட்டெடுக்கத் துணிய, “தலைவனால் ஏற்பட்ட நோய் பிறரால் நீக்கப்படின் ஒருவாற்றானும் நமக்கு உயிர் வாழும் நெறி இல்லையாதலின், நாண் துறந்தும் வெறி விலக்கு விப்பன்” என்று தலைவி தோழியைக் கொண்டு வெறி விலக்க நினைத்தல்.

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 288)

வெறி விலக்குவித்தல் -

{Entry: J10__833}

தலைவியின் வாட்டம் கண்ட தாய் ஏதேனும் தெய்வக்குற்றம் நேர்ந்ததோ என அஞ்சி வெறியாடும் வேலனை அழைத்துக் கேட்க நினைத்ததை அறிந்த தலைவி, தோழியிடம் வேலன் வெறியாட வருவதை நிறுத்துமாறு கூறுதல்.

“தோழீ! தலைவனால் எனக்குற்ற நோயைத் தெய்வக்குற்றத் தால் ஏற்பட்டதாகக் கருதி, மின்னலின்றி இடி இடித்தாற் போல, எதிர்பார்த்தலின்றியே திடீரென அன்னை வெறி யாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டாள். அதனைத் தக்கவாறு கூறி நீக்குதல் வேண்டும்” (தஞ்சை. கோ. 225) என்ற தலைவி கூற்று.

இது களவியலில், ‘வரைதல் வேட்கை’ எனும் தொகுதிக் கண்ணதொரு துறை. (ந. அ. 164)

வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் -

{Entry: J10__834}

களவுக் காலத்தில் பகற்குறியின் இறுதிக்கண் தினையொடு வெறுத்து வரைவு கடாய தோழி, “இவ்வேங்கை அரும்பிய பொழுதே இதனை அரும்பு அறக் கொய்திருப்பின், இஃது இன்று நம்மைக் கெடுப்பதற்குத் தினை முற்றிய நாளினைத் தன் பூக்களால் உணர்த்தல் இயலாது போயிருக்கும்! முன்னரே அதனைச் செய்யாது விடுத்தோமே!” என வேங்கை யொடு வெறுத்துத் தலைவனை வரைவு கடாயது.

இது ‘பகற்குறி’ எனும் கிளவிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 141)

வேட்கை உரைத்தல் -

{Entry: J10__835}

தோழி செவிலிக்கு உணர்த்தும் அறத்தொடுநிலை வகை ஏழனுள் ஒன்று.

வேட்கையுரைத்தலாவது தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும், தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறி அறத்தொடு நிற்றல்.

“தலைவியின் கண்களைத் தலைவன் பலமுறை நோக்கிச் சென்றான்” (அகநா. 48) எனவும், “தலைவன் மார்பாகிய பாயலைத் தலைவி மிகப் பெரிதும் விரும்புகிறாள்” (ஐங்குறு. 215) எனவும் கூறுதல் போல்வன. (தொ. பொ. 112 இள.)

தலைவனது வேட்கையை மிகவும் உயர்த்துக் கூறுதல்; நீராலடித்துச் செல்லப்பட்ட தலைவியைத் தலைவன் காப்பாற்றி அவள் மார்பை உறத் தழுவிக் கரை சேர்த்தான்” (கலி. 39) என்றாற் போல்வது. (207 நச்.)

வேட்கை மறுத்துரைத்தல் -

{Entry: J10__836}

தலைவன் புணர்ச்சி வேண்டத் தலைவி மறுத்துரைத்தலும், தலைவி புணர்ச்சி வேண்டத் தலைவன் மறுத்துரைத்தலும் ஆம்.

சிறிது மறுத்தல் கைக்கிளையாம்; பலமுறை கூறியும் உடன் படாது மறுத்தல் பெருந்திணையாம்.

ஒத்த அன்புடையார் சினம் மிகினும் ஒருவருக்கொருவர் தம் கருத்தை எதிர் நின்று கூறார். தலைவன் புணர்ச்சி வேண்டத் தலைவி மறைமுகமாக மறுத்தலே, ஊடற்காலத்து ஒத்த அன்புடையாரிடம் நிகழும்.

நேரில் மறுத்துரைத்தல் ஒத்த அன்புக்கு இழுக்காமாதலின் இந்நிலை கைக்கிளை பெருந்திணை என்பனவற்றிடையே நிகழும். (தொ. பொ. 211 நச்., 39 குழ.)

வரைதல்வேட்கைப் பொருளான், குறிவயின் தலைவி வருதல் வேண்டும் என்று தலைவன் கூறியதை மறுத்து, இனிப் பகற் குறிக்கு வாய்ப்பில்லை என்றாற் போலத் தோழி வெளிப் படையாகக் கூறுதல். (208 இள.)

`வேட்கை மிகுதியின் புகழ்தகை’ -

{Entry: J10__837}

கற்புக்காலத்தில் தலைவன் தலைவியருக் கிடையே ஒவ்வொரு வரும் மற்றவருடைய பண்பு அழகு முதலியவற்றை வேட்கை மிகுதியானே புகழ்ந்துரைக்கும் சிறப்பு. தலைவி புலந்தவழித் தலைவன், “மார்பகத்தே சுணங்கு பரவியிருப்பவளும் குற்ற மற்ற கற்புடையவளுமாகிய என் மகனுடைய தாயே!” என்று தலைவியைப் புகழ்தல். (அகநா. 6)

தலைவி தோழியிடம் தலைவனைப் பற்றி, “நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமை யுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக்குறைபாடிலர்” என்றாற் போலப் புகழ்தல். (நற். 1) (தொ. பொ. 228 நச்.)

வேட்கை முந்துறுத்தல் -

{Entry: J10__838}

ஆண்மகன்தன் காதலைத் தலைவியிடம் வெளியிடற்கு முந்தியே அவள் அவன்மேற் கொண்ட பெருங்காமத்தை வெளியிட்டுக் கூறுதல்.

“காண்போரை மயக்கும் காளையே! உன் அகன்ற மார்பை எனக்கே உரியதாக்குக என்று மிக்க அறியாமையுடன் அழுது நான் இரப்பவும், நீ அருளாமல் இருத்தல் அறனன்று” என்பது போன்ற பெண்பாற் கூற்று.

இது பெருந்திணைப் பெண்பாற் கூற்றுள் ஒரு கிளவி.

(பு. வெ. மா. 16-1)

வேட்ட மாதரைக் கேட்டல் -

{Entry: J10__839}

உடன்போன தலைவியைத் தேடிப் பாலைநிலத்துச் சென்ற செவிலி, “என் மகள் ஒரு காளையின் பின் தொடர்ந்து இக் காட்டு வழியே சென்றதனைக் கண்டாயா?” என்று ஆங்கிருந்த வேட்டுவித்தியை வினவுதல்.

இதனைக் ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ எனும் கிளவிக்கண் ‘செவிலி எயிற்றியொடு புலம்பல்’ எனவும் கூறுப. (ந. அ. 188)

இஃது ‘உடன்போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 239)

வேண்டா என்றல் -

{Entry: J10__840}

பாங்கியிற் கூட்டத்தின்கண் தோழி தலைவனிடம், “தலைவி கிட்டுதற்கு அரியள்” என்று கூறி, அவளிடம் விருப்பம் கொள்ளுதல் தக்கதன்று என்று கூறுதல்(குறிஞ்சி நடையியல்)

இது ‘பாங்கி தலைவி அருமை சாற்றல்’ எனவும்படும் (ந.அ. 144.) (வீ. சோ. 92 உரை மேற்.)

வேண்டா விருப்பு -

{Entry: J10__841}

இது பெருந்திணை என்ற பாடாண்துறை. (சாமி. 146)

வேதியரை வினாவுதல் -

{Entry: J10__842}

உடன்போக்கு நிகழ்த்திய தன் மகளைத் தேடிப் பாலைவழியே சென்ற செவிலி, வழியிடை முக்கோல் பகவரைக் கண்டு அவர்களிடம், “என் மகள் ஓராடவன்பின் செல்லக் கண்டீரோ?” என்று வினவுதல்.

இது ‘கற்பொடு புணர்ந்த கவ்வை’ என்னும் தொகுதிக்கண், ‘ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதல்’ எனவும்படும். (ந. அ. 188)

இஃது ‘உடன் போக்கு’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 243)

வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

{Entry: J10__843}

தன்னைக் காண வந்த பாணனைத் தலைவன் தலைவியிடம் தூதாக விடுத்து, “நெடுங்கண்கள் பசலை பாயக் கண்ணீர் உகுத்து என்னுடைய பிரிவினான் துயருழந்து வருந்தும் தலைவியினுடைய செயலற்ற நெஞ்சத்தைத் தேற்றியவாறு நீ சிறிது நேரம் அவளிடம் தங்கியிருப்பதற்குள், என் தேர் ஊர் வந்து சார்ந்துவிடும்” (ஐங். 477) என்று கூறுதல் போல்வன. (தொ. பொ. 41 நச்.)

வேந்தற்கு உற்றுழிப்பிரிவு -

{Entry: J10__844}

‘வேந்தற்குற்றுழிப் பிரியும்’ என்பது தலைவன் அரசனுக்குக் கீழ்ப்பணியாளனாகப் பிரியும் என்பதன்று; தனக்கு நண்பனா கிய அரசன்மீது பகைமன்னன் போர் செய்ய வந்தகாலை தன் நண்பன் பக்கல் சேர்ந்துகொண்டு அவனுடைய பகைவ னுடைய ஆற்றலைப் போக்கும் செயல் வேந்தற்குற்றுழிப் பிரிவாகும். இதனை ஏனையோர் பகைவயிற் பிரிவின்கண் அடக்குவர். இப்பிரிவில் தலைவன் திங்களும் இருதுவும் எல்லையாகப் பிரியும். (இறை. அ. 34, 41)

வேந்தற்கு உற்றுழிப் பிரிவுத் துறைகள் -

{Entry: J10__845}

1. பிரிந்தமை கூறல், 2. பிரிவாற்றாமை (கார்மிசை வைத்தல்), 3. வான்நோக்கி வருந்தல், 4. கூதிர் கண்டு கவறல், 5. முன்பனிக்கு நொந்துரைத்தல், 6. பின்பனி நினைந்து இரங்கல், 7. இள வேனில் கண்டு இன்னலெய்தல், 8. பருவங்காட்டி வற்புறுத் தல், 9. பருவம் அன்றென்று கூறல், 10. மறுத்துக் கூறல், 11. தேர் வரவு கூறல், 12. வினை முற்றி நினைதல், 13. நிலைமை நினைந்து கூறல், 14. முகிலொடு கூறல், 15. வரவெடுத்து உரைத்தல், 16. மறவாமை கூறல் என்பன. (கோவை. 316 - 331)

வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் -

{Entry: J10__846}

வேந்தன், என்றது மருதநிலத்து உழவர் சிறப்பாக ஏற்று வழிபடும் தேவர்தலைவனாகிய இந்திரனை. இந்திரன் என்ற வடசொல் வேந்தன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபாகும்.

வருணன் என்றது, நெய்தல் நிலத்துப் பரதவர் சிறப்பாக அமைத்து வழிபடும் கடல்தெய்வமாகிய கடல்வாணனை யாம். வருணன் என்பது வாரி என்னும் கடற்பெயரின் முதனி லையாகிய ‘வரு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச்சொல். (தொ. அகத். 5 ச. பால.)

`வேந்தனின் ஒரீஇய ஏனோர்’ -

{Entry: J10__847}

வடக்கிலிருந்த அகத்தியனார் கங்கையைக் கடந்து, புலத்தியர் என்ற முனிவர் தங்கையை மணந்து தெற்கு நோக்கி வரும் போது, நிலம் கடந்த நெடுமுடி அண்ணல் (- கண்ணன்) வழிக்கண் வந்த மன்னர்களுடன் தாம் அழைத்துவந்த பதினெண் வகைக் குடிக்கண் பிறந்தோர் வேளிர் எனப்படு வார். அவர்கள் அரசனைப் போலவே தம் பகைக்கண் தாமே செல்லுதலும், தாம் திறைபெற்ற நாடுகளைக் காக்கப் பிரிதலும், உயர்ந்த வேளாளர்களைத் தம் தொழில்களில் ஏவிக்கொள்ளுதலும் முதலியவற்றுக்கு உரிமையுடைய வர்கள். (தொ. பொ. 32 நச். உரை)

வேந்தனுக்கு மருத நிலம் உரியதாதல் -

{Entry: J10__848}

வேந்தன் என்பான் இந்திரன். அவன் தேவருக்கும் மேகங்க ளுக்கும் உரிய தலைவன்.

மருதநிலத்தில் ஊடலும் கூடலும் ஆகிய காமச்சிறப்பு நிகழும். ‘ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்’ உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதின் நுகரும், இமையோர்க்கும் இனிய இடியோசையையுடைய மேகத்திற்கும் கடவுளாகிய இந்திரனை மருதநிலமக்கள் விழாச் செய்து அழைப்பாரா தலின், இந்திரன் மருதநிலத்தவர் இறைவன் எனப்பட்டான். (தொ. பொ. 5 நச்.)

வேலனை அழைத்தல் -

{Entry: J10__849}

களவுக்காலத்தில் தலைவன் வரைபொருட்குப் பிரிய, அப்பிரிவினால் தலைவியின் மனமும் உடலும் மெலிய, மெலிவின் உண்மைக் காரணத்தை அறிய இயலாத செவிலி அதனைக் கண்டு கூறுமாறு குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைக்க, அவள் “இது முருகனால் ஏற்பட்ட நலிவு” என்றாளாக, அதற்குச் செவிலி, “இப் பெண் இக் குடும்பத்தில் பிறந்து நம்மை இவ்வாறு நிற்பித்த பண்பிற்கு வேலனும் நம் இல்லம் வந்து வெறியாடுக! அதன்மேல் மறியும் அறுக்க!” என வேலனை வெறியாட்டு நிகழ்த்த அழைத்தது.

இது ‘வரைபொருட் பிரிதல்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று. (கோவை. 286)

`வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

{Entry: J10__850}

குறியிடத்துத் தலைவி, தலைவற்கு உபகாரம் செய்யும் கருத்தான், இரவுக்குறி நோக்கித் தலைவன் வரும் வழியில் புலி யானை கரடி முதலிய கொடிய விலங்குகளான் இருள் செறிந்த அவ்விடத்து ஏதம் நிகழுமாற்றினைக் கூறி இரவுக் குறியை விலக்க முற்பட்ட விடத்தே, தலைவன், “மடந்தை! நின்னையே நினைத்து இரவில் வரும் எனக்கு, கொல்லிப் பாவையைப் போன்று ஒளி வீசும் நின்மேனி என் நெஞ்சகத்தி லிருந்து வெளியே ஒளி தருதலால், எனக்கு இம்மலைவழியும் பாதுகாவலாகவே உள்ளது. ஆதலின், நீ கவலுதல் வேண்டா” என்று கூறுதல் (நற். 192) போல்வன. (தொ. பொ. 105 இள.)

வேளாளப் பாங்கன் செயல் -

{Entry: J10__851}

தலைவனை நன்மையின் நிறுத்தல், தீச்செயல்களில் ஈடுபடாத வாறு அவனைத் தடுத்துநிறுத்தல், தலைவனது கற்புக்காலப் பிரிவிடை அவனைச் செலவழுங்குவித்தல், செலவு உடன்படு வித்தல் முதலியன வேளாளப் பாங்கன் செயல்களாம்.

(ந. அ. 101)

வேளாளரே உயிர்க்கொடைக்கு உரியர் என்பது -

{Entry: J10__852}

அந்தணன் அறநெறியினை உலகிற்கு உணர்த்துவோன் ஆத லானும், அரசன் உலகினைப் புரப்போன் ஆதலானும், வணிகன் அவ்வரசனுக்கும் படைக்கும் வேண்டுவன வாணிக முறையில் கொணர்ந்து அளிப்போன் ஆதலானும் இம்மூவ ரும் உயிர் துறப்பின் அவர் போல நூல்வல்லாரும் அரசநீதி வல்லாரும் வாணிகம் வல்லாரும் பிறர் இல்லாத விடத்தே உலகிற்குப் பெருந்தீங்கு விளையும் ஆதலின், அவர் ஒருதலை யாக உயிர்க்கொடைக்கு உரியரல்லர். வேளாளர் உயிர் துறப்பின் அவர்புதல்வர் முதலாய சுற்றத்தார் நெடு நாட் பழக்கம் வேண்டாமலேயே உழவு நடத்துவார் ஆதலின் உலகிற்குத் தீங்கு இன்மையான், உயிர்க்கொடை அவர்க்கே உரிமையாயிற்று. (உயிர்க்கொடை - உயிர்த்தியாகம்) (பா. வி. பக். 36, 37)

வேற்றுமை கூறல் -

{Entry: J10__853}

கற்பிடைத் தலைவன் ஓதல் முதலிய குறித்துப் பிரிந்தபோது இல்லிருந்த தலைவி பண்டு இன்பம் செய்த நிலவு, குழல்ஒலி முதலியன தலைவன்பிரிவிடைத் தனக்குத் துன்பம் தரும் வகையில் அவற்றின்பண்பு வேறுபட்டுவிட்டதாகக் கூறல். (முல்லை நடையியல்) (வீ. சோ. 94 உரை மேற்.)

வேறிடம் காட்டல் -

{Entry: J10__854}

பாங்கற் கூட்டத்து இறுதியில் அறிவும் நிறையும் மேல் ஓங்கிய நிலையில் தலைவன் தலைவியிடம் இனி அவளைக் கூடுவது திருமணத்தின் பின்னரே என்பதை விளக்கிக் கூறல். (குறிஞ்சி நடையியல்) (வீ. சோ. 92 உரை மேற்)

வேறுபடுத்துக் கூறல் -

{Entry: J10__855}

தோழி தலைவியை நாணநாட்டத்துக்கண், பிறை தொழாது நாணி நிலம் கிளைத்து நிற்பதனைக் கண்டு, பின்னரும் தலைவியைச் சுனையாடி வர அனுப்ப, அவள் தலைவனொடு கூடி மீண்டு வந்த நிலையில், அவள் கண்கள் சிவப்பும் உதடுகள் வெளுப்பும் கண்டு, அவளை அம்மலையிலுறையும் தெய்வப் பெண்ணாக வேறுபடுத்திக் கூறல்.

இது ‘நாண நாட்டம்’ எனும் தொகுதிக்கண்ணதொரு கூற்று.

(கோவை. 68)

வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -

{Entry: J10__856}

வேனில் இளவேனில் எனவும், முதுவேனில் எனவும் இரு வகைப்படும். இளவேனில் சித்திரை வைகாசி மாதங்கள்; முதுவேனில் ஆனி ஆடி மாதங்கள்.

ஆற்றில் புதுவெள்ளம் பாய்ந்து வடிய, ஆற்றங்கரை மரங்க ளெல்லாம் தழைத்துக் காணப்பட, அவற்றில் மலர்ந்த பூங்கொத்துக்களில் வண்டுகள் தங்கி வரி பாட, தளிர்கள் சிறக்க, தாது கீழே உதிர நறுமணம் பரக்க, குயில்கள் கூவ, நிலாக்கதிரும் சந்தனமும் முத்தும் குளிர்ச்சியொடு கூடிய இன்பம் தரும் இளவேனிற் காலத்தில் பிரிந்து மனைக்கண் இருக்கும் தலைவி, சென்ற ஆண்டுகளில் இளவேனிற் காலத் துப் பொழில் விளையாடியும் புதுப்பூக் கொய்தும் அருவி யாடியும் நிகழ்த்தியவற்றை நினைத்து மனம் மெலிந்து உரைக்கும் சொற்கள் பயிலுதற்குரிய காலமாகலானும், உடன்போக்கின்கண்ணும் இளவேனிற்காலம் இன்பம் பயக்கும் ஆகலானும், பிரிவுக்கு இளவேனில் என்ற பெரும் பொழுதும் நண்பகல் என்ற சிறுபொழுதும் சிறந்தன. காலையிலும் மாலையிலும் நண்பகலைப் போல வெப்பம் மிகுதலால் சோலைகள் கருக, கிணறுகள் நீர்வற்ற, நிலங்கள் பசுமை யற, புள்ளும் மாவும் வெப்பம் தாங்காது வருந்த, துன்பம் பெருகும் முதுவேனிற் காலமும் சிறப்பாக அதன் நண்பகற் பொழுதும் இன்பத்துக்கு இடையூறாகிய பிரிவிற் குச் சிறந்தன. வெப்பம் மிக்க மாசி பங்குனியாகிய பின்பனிக் காலமும் பாலைக்குப் பெரும்பொழுதாதற் குரித்து. பின்பனிக்குச் சிறுபொழுது வரைவின்று.(தொ. பொ. 9,10 நச்.)

வேனிற்காலம் -

{Entry: J10__857}

கோடைக்காலம் ; இஃது இளவேனில், முதுவேனில் என்ற இரண்டனையும் சுட்டும் சித்திரை முதலிய நான்கு திங்கள் அளவிற்றாயினும், பொதுவாக வேனிற்காலம் என்பது முதுவேனிலாகிய ஆனி ஆடித்திங்களையே குறிக்கும்.

(தொ. பொ. 76 நச்.)

வைஇயமொழி -

{Entry: J10__858}

வைஇய மொழியாவது அவை அல்மொழி; அஃதாவது சான்றோர் முன்னிலையில் கூறத் தகாதனவற்றை மறைத்துக் கூறும் இடக்கரடக்கல்; கண்கழீஇ வருதும் என்பது போல்வது. (தொ. பொ. 240 இள.)

தலைவன் தம்மை வஞ்சித்தானாக, தலைவியும் தோழியும் கூறும் மொழி; தமக்குத் தீங்கினை உண்டாக்கி வைத்தானாகக் கூறுதலும் ஆம்.

‘வையினர் நலனுண்டார்’ கலி. 134.

“நம்மைத் தனித்து வருந்துமாறு வைத்துவிட்டுத் தலைவர் நம் நலத்தை நுகர்ந்து சென்றுவிட்டார்” என்றல் போல்வது.

(244 நச்.)

வைகறை -

{Entry: J10__859}

முதற்பொருளின் ஒரு கூறாகிய காலம் என்பதன் கூறாகிய சிறுபொழுது ஆறனுள் ஒன்று; இரவுப் பகுதியின் இறுதிப் பத்து நாழிகையாகிய காலப்பகுதியினை யுடையது (2 a.m. - 6 a.m.) அற்றைநாட் பகுதி வைகி அறுதியாதல் நோக்கி இது ‘வைகறை’ எனப்பட்டது. (தொ. பொ. 8 நச்.)

வைகறைப் பாணி -

{Entry: J10__860}

அதிகாலையிற் கொட்டும் வாத்திய ஒலி. (சிலப். 13 : 148) (L)

வைகுறுவிடியல் மருதத்திற்கு உரிமை -

{Entry: J10__861}

பரத்தையிற் பிரிந்த தலைவன் அவர்களுடைய ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் பொழுது கழித்துப் புறத்தார்க் குப் புலனாகாமல் மீளும் காலம் இருள் விலகாத அதிகாலைப் பொழுதாகிய வைகறை யாகலானும், தலைவிக்கும் தலைவனை இன்றி இராப்பொழுது மகிழ்வாகக் கழியாது ஆதலின் அவளும் இரவிடை உறக்கமின்றி நெஞ்சழிந்து ஆற்றாமை மிகுதலான் தலைவனோடு ஊடுதற்குரிய காலம் அதிகாலையாகிய வைகறையாகலானும், ஊடல் என்னும் உரிப்பொருளையுடையு மருதத்திற்கு வைகறை சிறுபொழு தாயிற்று. இனி, பொழுது விடிவதற்குச் சிறிது நேரமே உள்ளதாதலின் தன் இல்லம் நோக்கிவந்த தலைவனோடு ஊடுதல் இயலாதெனவே, இந்நேரத்தில் தலைவன் வருத லால் பெறும் பயன் இன்று என முனிந்து வாயிலை அடைத்துத் தலைவி ஊடலை நீட்டிப்பவே, அவ்வை கறையை அடுத்துத் தோன்றும் காலைப்பொழுதாகிய விடியற்கண் தலைவனது மெய்வேறுபாடு விளங்கக் கண்டு ஊடல் மிக, வாயில் வேண்டும் நிலை ஏற்படுதலின், விடிய லும் மருதத்திற்குச் சிறுபொழுதாயிற்று. (தொ. பொ. 8 நச்.)

வைத்து மகிழ்தல் -

{Entry: J10__862}

தலைவன் தலைவியைத் தன் பக்கலிலேயே இருக்கச்செய்து அவளைக் காணும் காட்சியான் மகிழ்தல். இது காமநுகர்ச்சி யிடத்து வேட்கையான் செய்யும் குறிப்பான செயல்களுள் ஒன்று.

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் ஒன்று - எனப் படும் குறிப்புப் பற்றி (கா. 90) நிகழ்வது.(வீ.சோ. 96 உரை மேற்.)

“வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

{Entry: J10__863}

பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவியை அடைதற்கு வாயிலாக விறலி தலைவி இல்லத்துக்கு வந்தாள். அவளிடம் தலைவி, “விறலி! ஊரில் வையைநீர்விழா நடக்கிறது. அவ் விழாவில் தலைவனும் கலந்துகொள்கிறான். ஒருநாள் அவன் இற்பரத்தையுடன் வையை நீராடினான். அது கேட்டு அவன் காதல்பரத்தை சினந்தாள். இச்செய்தி அறிந்து தலைவன் காதல்பரத்தையது இல்லம் எய்திப் பணிமொழி கூறி அவள் கோபத்தைத் தணித்து அவளொடும் கூடி மகிழ்ந்து தங்கி யுள்ளான். இத்தகைய தலைவன் பொருட்டாக நீ வாயிலாக வருவது தக்கதா?” என்று கூறி வாயில் மறுத்தல். (பரிபாடல். 6)