Section K11 inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 20 alphabetical subsections

  1. அ section: 88 entries
  2. ஆ section: 25 entries
  3. இ section: 33 entries
  4. ஈ section: 1 entries
  5. உ section: 34 entries
  6. ஊ section: 5 entries
  7. எ section: 14 entries
  8. ஏ section: 17 entries
  9. ஐ section: 3 entries
  10. ஒ section: 13 entries
  11. ஓ section: 6 entries
  12. க section: 180 entries
  13. ச section: 39 entries
  14. ஞ section: 2 entries
  15. த section: 114 entries
  16. ந section: 74 entries
  17. ப section: 239 entries
  18. ம section: 125 entries
  19. ய section: 8 entries
  20. வ section: 180 entries

K11

[Version 2l (transitory): latest modification at 11:33 on 19/04/2017, Hamburg]

புறம் (1200 entries)

[TIPA file K11 (and pages 3-310 in volume printed in 2005)]

அ section: 88 entries

அகத்தாரை அடல் -

{Entry: K11__0001}

இஃது அகத்துழிஞை என்னும் உழிஞைத்துறை; அது காண்க. (சாமி. 135)

அகத்திணை யியலை அடுத்துப் புறத்திணையியல் வைக்கப்பட்ட காரணம் -

{Entry: K11__0002}

அகத்திணையியல் 57ஆம் சூத்திரத்தில் புறத்திணை அதி காரப்பட்டது. இருவகைக் கைகோளின்கண்ணும் தலைவன் பொருள் முதலாய கடமைகள் பற்றிப் பிரிந்து செயலாற்றும் புற ஒழுக்க மரபுகளை இடையீடின்றிக் கூறுதல் முறை. திணைநிலைப் பெயர் எனச் சுட்டப்பெற்ற தலைமக்கள் உரிப்பொருள் காரணமாக எய்தும் பெயர்களைப் புலப்படுத் தல் வேண்டும்; அகவொழுக்கமாகிய காரியத்திற்குப் புறவொழுக்கம் காரணமாதலை உணர்த்தவேண்டும். ஆதலின் புறத்திணையியல் அகத்தினையியலை அடுத்துப் பின் வைக்கப்பட்டது. (தொ. புறத் பாயிரம். ச. பால.)

அகத்திணையியலைச் சாரப் புறத்திணையியல் வைக்கப்பட்ட காரணம் -

{Entry: K11__0003}

புறத்திணையாவது கைக்கிளை முதலாகச் சொல்லப்பட்ட அகத்திணை ஏழனது புறக் கூறுகளே. அகத்திணைக்கு ஓதப் பட்ட முதற்பொருள் கருப்பொருள்கள் புறத்திணைக்கும் உரியன. புறத்திணைக்கண் வரும் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் வினைவலர் அடியோர் முதலிய மாந்தரே அகத்திணைக்கண் திணைநிலை மக்களாக ஓதப்பெற்றவர். ஓதல் முதலிய பிரிவுகட்கு உரியோரும் அவரே. புறத்திணை ஒழுகலாறுகளே அகத்திணைக்கண் ஓதப்பட்ட பிரிவுக்குக் காரணம். இவையெல்லாம் இனிது புலனாதல் வேண்டியே அகத்திணையியலைச் சாரப் புறத்திணையியல் வைக்கப் பட்டது. அதன் பயன் ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ முதலாக மாட்டெறிந்து கூறலும், கைக்கிளை முதலாய ஏழ்திணைகளின் புறக்கூறுகளே ஏழ் புறத்திணைகளாம் எனப் புலப்படுத்தலும் ஆம். (தொ. கள. பாயிரம். ச. பால.)

அகத்தின் புறத்து எழுதிணை நிகழுமாறு -

{Entry: K11__0004}

“மலையாகிய குறிஞ்சித்திணைப் புறம் நிரைகோடலும் நிரைமீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இருகுறி பெற்றும், காடுறை உலகாகிய முல்லைப்புறம் மண்ணசை வேட்கையான் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் எதிர்த்துப் போரிடல் குறித்துச் செலவு மேற்கொள்வதால் இருவேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சியெனக் குறி பெற்றும், தீம்புனல்உலகாகிய மருதத்துப் புறம் எயில் வளைத்தலும் எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சியென வும் இரண்டு பெயர் பெற்றும், பெருமணல் உலகாகிய நெய்தலினது புறம் இருபெரு வேந்தரும் பொருதலாகிய ஒருதொழிலே புரிதலால் தும்பை என ஒரு குறி பெற்றும், நடுவுநிலைத்திணையாகிய பாலைப்புறம் வேந்தரேஆயினும் ஏனையோராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் வாகையென ஒருகுறி பெற்றும், பெருந்திணைப் புறம் நிலையாமையாகிய நோம்திறப் பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒருகுறி பெற்றும், கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒருபொருளே குறித்து வருதலின் பாடாண் என ஒருகுறிபெற்றும் இவ்வாறாக அகத்திணைப் புறத்து எழுதிணை நிகழ்ந்தன. (தொ. பொ. 58 இள. உரை)

புறத்திணை ஏழனுள் வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்ற நான்கும் போர்முறையையும், வாகை காஞ்சி இரண்டும் வாழ்க்கை முறையையும், பாடாண் இவ்விரு முறைகளையும் பாடு முறையையும் கூறுவன. (பொ. 278 குழ.)

அகத்துழிஞை -

{Entry: K11__0005}

உழிஞைவீரர் உள்ளே புகுந்து அரண்காவல் செய்தோருடன் பொருது, அரணகத்திருக்கும் மகளிர் அலற அவ்வரண் காவலர்களை வெல்லுதல் என்னும் புறப்பொருளின் கூறாகிய உழிஞைத்திணைத் துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 6:21)

அகத்துழிஞையான் - மதிலுள் முற்றப்பட்டோன். (மதுரைக். 741 நச். உரை)

அகத்துழிஞைப் பக்கம் -

{Entry: K11__0006}

உழிஞைவீரர் உள்ளே புகுந்து முற்றுகை நிகழ்த்தும் கடுமை யைத் தம்மதிலின் சிறப்பான் அறியாத மதிலகத்திருந்தோர், தம் மகிழ்ச்சி குறையாமல் வாழ்ந்துவரும் சிறப்பைக் கூறுதலும் அகத்துழிஞையாம்.

இவ்வகத்துழிஞைப் பக்கம் மூதுழிஞையின் பக்கமாக ஏடெழுதுவோரால் தவறி எழுதப்பட, அங்ஙனமே புறப் பொருள் வெண்பாமாலையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே எண் மாற்றமும் கொள்ளப்படும்.(பு. வெ. மா. 6:22)

இலக்கண விளக்கப் புறத்திணையின் 10ஆம் நூற்பா நோக்குக.

அகத்தோன் செல்வம் -

{Entry: K11__0007}

மதில்அகத்து அரசனுடைய செல்வம். அகத்துஉழிஞை யோனுடைய குறைவில்லாத பெருஞ்செல்வம் கூறுதல். அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப் பொருள் மேம்படு பண்டங்களும் பிறவுமாம். (தொ. பொ. 67. நச். உரை)

கொளற்கு அரிதாய், உணவு முதலியவைகளும், நன்னீரும், படையும், உலையாது ஊக்கும் அறைபோகாத் தறுகண்மறவர் காவலும் உடைய அரண்அகக் காவலன் பரிசு குறித்தல்.

(புறத். 12. பாரதி.)

இத்துறையை இருவர்க்கும் கொள்வர் இளம்பூரணர்(68.)

இத்துறை அகத்துழிஞையானுக்கே உரியது என்பர் நச். குழ.

இஃது உழிஞை வகைகளுள் ஒன்றென்பார் சோமசுந்தர பாரதியார்.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை முதுஉழிஞையின் பக்கமாகக் குறிப்பிடும் (சூ. 6). ஆயின் அகத்து உழிஞையின் பக்கமாகக் குறிப்பிடுதலே தக்கது. பதிப்பில் ஏடு பிறழக் கொள்ளப்பட்டதுபோலும்.

உழவர் உழாதன நான்குபயன் உடைத்தாகப் பாரியது பறம்பு மலைச் செல்வத்தைக் கபிலர் அதனை முற்றியிருந்தோர்க்குக் கூறுவதாக வரும் புறநா. 109 இதற்கு எடுத்துக்காட்டு ஆம்.

அகத்தோன் வீழ்ந்த நொச்சி -

{Entry: K11__0008}

முற்ற அகப்பட்ட அகத்திலுள்ளான் விரும்பிய மதில்காவல்.

(தொ. பொ. 69 இள. உரை)

புறமதிலிலன்றி உள்மதிற்கண் புறத்தோனான் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதிற்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர் செய்ய விரும்பிய உள்ளத்தைக் காத்தலும். (உள்ளத்தைக் காத்தலா வது போர் செய்தலில் உள்ளம் செல்லுமாறு அதனை ஈடுபடுத்தல்.) (68 நச்.)

நொச்சியாவது காவல். இதற்கு நொச்சிப் பூச்சூடலும் கொள்க. அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலும் என்று இருவர்க்கும் ஆயிற்று. இத்துறை புறத்தோன் அகத்தோன் ஆகிய இருவர்க்கும் பொது. (68 நச்.)

புறத்தோரான் வளைக்கப்பட்ட அகப்படைத் தலைவன் அரண்காவல் விரும்பிப் புரியும் போராம் நொச்சி. (புறத். 13. பாரதி)

இஃது இடைமதிற் போர்.

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று.

இதனை நொச்சியுள் ஊர்ச்செரு என்னும் துறைக்கண் அடக்கும். பு. வெ. மா. (பு. வெ. மாலை. சூ.5)

உழிஞையின் விகற்பங்களுள் ‘காவல்’ என்று இதனைச் சுட்டும், வீரசோழியம். (கா. 103)

அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -

{Entry: K11__0009}

அகம் புறம் அகப்புறம் புறப்புறம் என்ற நான்கனுள்ளும், முல்லை குறிஞ்சி மருதம் பாலை நெய்தல் என்னும் ஐந்திணை யும், கைக்கிளை பெருந்திணை என்னும் அகப்புறத்திணை களும், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், சுரநடை, முது பாலை, தபுதாரம், தாபதம், வள்ளி, காந்தள், குறுங்கலி, குற்றிசை, இல்லாண்முல்லை, பாசறைமுல்லை என்பனவும் அடக்கிக் கொள்ளப்படும். (வீ. சோ. 87,88)

அகமதிலிடைப் போர்த்துறைகள் -

{Entry: K11__0010}

1. அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கம், 2. இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம், 3. வென்ற வாளினை மண்ணுதல், 4. தொகைநிலை என்பன நான்கும் அகமதிலிடைப் போர்த் துறைகளாம். (தொ. பொ. 278. குழ.)

அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற் படுவன -

{Entry: K11__0011}

ஏறும் தோட்டியும் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற்படும். ஏறு - யானை; தோட்டி - காவல்.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘யானைகைக் கோள்’ என்றும் உழிஞைத் துறையாகக் குறிப்பிடும். (6 : 24)

அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கம் -

{Entry: K11__0012}

புறஞ்சேரிமதிலும் ஊர்அமர் மதிலும் அல்லாத அரண்மனை முதலான மதிற்சுவர்களின்மேல் ஏறிநின்று போர்செய்தற்குப் பரந்துசென்ற வீரர்களது மறப்பகுதி; மதிலகத்துப் போர் செய்யும் நொச்சி வேந்தன், ஏனைப் புறத்தே முற்றுகையிட்டுப் போர்செய்யும் வேந்தன் ஆகிய இவ்விருவகை வேந்தர் படைவீரர் களுக்கும் பொதுவான உழிஞைத் துறைகள் பன்னிரண்ட னுள் ஒன்று. (தொ. பொ. 68. நச்.)

அகழிப்புறத்து இறுத்தல் -

{Entry: K11__0013}

‘புறத்துழிஞை காண்க’ (சாமி. 135)

‘அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலம் கண்ணிய ஓம்படை’ -

{Entry: K11__0014}

தம் பாடாண் தலைவனுக்கு நாளானும் கோளானும் பறவைகளானும் பிறவற்றானும் தீங்கு நேருமோ என்ற அச்சமும், அங்ஙனம் அஞ்சுதற்குக் காரணமான அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின், அவர்கள் தம் தலைவ னுக்குத் தீங்கு எதுவும் நிகழ்தல் கூடாது என்று வாழ்த்துதலின் ‘காலம் கண்ணிய ஓம்படை’ என்பது பாடாண்திணைத் துறையாயிற்று. (தொ. பொ. 91 நச்.)

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப்

‘பாஅல் புளிப்பினும் பகல் இருளினும், நாஅல்வேத நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி, நடுக் கின்றி நிலீயரோ!’ (புறநா. 2) என முரஞ்சியூர் முடிநாகராயர் வாழ்த்துவதும்,

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையை, “புதுப்புள் வரினும் பழம்புள் போயினும், நடுங்காத காவலையுடைய நாட்டினையுடையாய்! அதனால் மன்னுயிர் எல்லாம் தத்தம் அன்புமிகுதியால் உனக்குத் துன்பம் வரலாகாதே என அஞ்சுகின்றன”(புறநா. 20) எனக் குறுங்கோழியூர்கிழார் பாடுவதும்,

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை, “நின்வாழ்நாள் நின்று நிலைஇயர்! நின் பகைவர் வாழ்நாள் நில்லாது பட்டுப் போவன ஆகுக! பரிசிலர் நின்புகழ் பாடுக! மகளிர் பொற்கலத்து ஏந்திய மதுவினை மடுப்ப நீ உண்டு இனிது வாழ்க!”என மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் வாழ்த்துவதும்,

கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையைக் கூடலூர் கிழார் பாடிய புறநா. 229 ஆம் பாடலில் “வானத்தேயிருந்து பொங்கி ஒருமீன் விழுந்தது. அதுகண்டு யாமும் பிற இரவலரும், ‘எம் மன்னவன் நோயிலன் ஆயின் நன்று’ என்று உள்ளம் அழியாநிற்ப, ஏழாம் நாள் எம் மிறைவன் மேலோர் உலகம் எய்தினன்”என அச்சம் கண்ணியதும் இத்துறைக்குச் சில எடுத்துக்காட்டாம். (91. நச்)

அஞ்சாச் சிறப்பு -

{Entry: K11__0015}

துறவுநிலைக்கு அஞ்சாத பெருஞ்சிறப்பாகிய ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ என்னும் காஞ்சித்துறை. அதுநோக்குக.

பகைவரைக் கண்டு அஞ்சாது போரிடும் உள்ளத்து வெற்றியை உரைப்பதுமாம். (வீ. சோ. 104. உரை)

அட்டாங்க யோகம் -

{Entry: K11__0016}

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன அட்டாங்கயோகமாம்.

(சூளா. பக். 297)

இது ‘நாலிரு வழக்கின் தாபதப் பக்கம்’ எனத் தவம் செய்து யோகம் செய்வார்க்கு உரியதாகக் கூறப்படும்.

பிரணாயாமம் வளிநிலை எனவும், பிரத்தியாகாரம் தொகை நிலை எனவும், தாரணை பொறைநிலை எனவும், தியானம் நினைவு எனவும் கூறப்படும். (தொ. பொ. 75 உரை)

அட்டையாடல் -

{Entry: K11__0017}

துன்டிக்கப்பட்ட அட்டை என்ற உயிர்ப்பொருளின் பல துண்டுகளும் ஆடும்; ஊர்ந்து செல்லும். அதுபோல, அம்பும் வேலும் உடலையும் தலையையும் துண்டித்தலான், உடலும் தலையும் நிலத்தில் நிலைகொள்ளாமல் ஆடும். இதனையே அட்டையாடல் என்ப. அட்டை அற்றுழியும் ஊருமாறு போல, உயிர் நீங்க அற்றுழியும் உடம்பு ஆடுதலின் அட்டை யாடல் என்ப. இது தும்பைக்குரிய ஒரு சிறப்பு விதி. (தொ. பொ. 71 நச்.)

அடலகத்துழிஞை -

{Entry: K11__0018}

‘அகத்துழிஞை’ காண்க. (இ.வி. 608 - 21)

இதனை ‘மூதுழிஞைப் பக்கம்’ என்ற புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்புத் தவறானது. (இவி. 608 - 22)

அடலகத்துழிஞைப் பக்கம் -

{Entry: K11__0019}

‘அகத்துழிஞைப் பக்கம்’ காண்க. இது ‘செருமதிலோர் சிறப்புரைத்த பக்கம்’ எனவும் கூறப்படும். (பு. வெ. மா. 6:22).

அடலேற்றின் மங்கலம் பாடுதல் -

{Entry: K11__0020}

இது மங்கலநிலை என்னும் பாடாண்துறை. அது காண்க. (சாமி. 144.)

அடிப்பட இருத்தல் -

{Entry: K11__0021}

மதிலகத்திருந்த மன்னன், தனது மதிலைத் தகர்த்த உழிஞை - மன்னனுக்குப் பணிந்து அவன்தலைமையை ஏற்க மறுத்த விடத்தே, உழிஞை மன்னன் தன் வீரர்களுக்கு முன்னவ னுடைய மறமும் செருக்கும் அழித்து வெல்லுமாறு ஆணை யிட்டுத் தனது பாசறைக்கண்ணையே பலநாள் தங்கியிருத் தலைக் கூறும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 31)

அடியார் வாழ்த்து -

{Entry: K11__0022}

இது வாகைத்திணையைச் சார்ந்த துறை; அடியவரின் உண்மைப் பெற்றியை உள்ளவாறு கூறுவது.

“இறைவனுடைய அடியவர்களுக்கே தொண்டு செய்யும் பண்புடைய சான்றோர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக மனிதரைப் பாடிப் பரவுதல் செய்யார்” என்றாற் போல்வன. (மா. பா. பா. 36)

அடுகளம் வேட்டல் -

{Entry: K11__0023}

‘களவேள்வி’ காண்க. (இ. வி. 613 - 6)

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தின்கண் அடங்குவன -

{Entry: K11__0024}

கடிமரம் தடிதலும், களிறும் மாவும் நீர்த்துறைகளில் படிவனவற்றைக் கொல்லுதலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியன அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின் பாற்படும்.

(தொ. பொ. 63 நச்.)

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் -

{Entry: K11__0025}

எதிர்ப்பாளரை முன்னேறிப் பொருது அழித்த வெற்றி. இது வஞ்சித்திணையுள் ஒரு துறை.

போர் குறித்து மேற்சென்ற வேந்தன் படையாளர், தம் வரவு அறியாவகை இரவு பகல் பலகாலும் தாம் முன்னேறிச் சென்று, அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற வெற்றி. (தொ. பொ. 63 நச்.)

எ-டு : பதிற். 15.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘மழபுலவஞ்சி, (3:15) என்னும் துறைக்கண் அடக்கும்; வீரசோழியம் ‘விலக்கருமை’ என்று குறிப்பிடும்.) (கா. 101.)

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்து

{Entry: K11__0026}

தலைவன் எதிர் சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேல் ஏற்றிப் புகழ்ந்த இயன் மொழிவாழ்த்து என்னும் பாடாண்துறை.

என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணம் இயல்பு என்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையாய் என்றும், அன்னோர் போல எமக்கு நீயும் இயல்பாக ஈ என்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. இதனை இயன்மொழி எனவும் வாழ்த்து எனவும் இரண்டாகக் கோடல் வேண்டும்.

இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறுதலானும், வருணப் பகுதி கூறப்படாமையானும் பரவலின் வேறாயிற்று.

(இது புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண் படலத்தின் 6, 7ஆம் துறைகள் ஆம்.)

முரசு கட்டிலில் புலவர் மோசிகீரனார் அறியாது ஏறிப் படுத்து உறங்க அவர் துயில் உணரும்வரை அருகே நின்று கவரிவீசிய பெருஞ்சேரலிரும்பொறையை அவர், “வீரமுரசம் நீராடக் கொண்டு செல்லப்பட்டது வருமளவும் அக்கட்டில் சேக்கைமீது அறியாது ஏறித் துயின்ற என்னை நின்வாளால் இரு கூறுபடுக்காது நீக்கிய அச்செயலொன்றே நீ தமிழ் முழுதறிதலைக் காட்டும். அதனோடமையாது அணுக வந்து நின் முழவுத்தோளால் சாமரம் கொண்டு தண்ணென வீசினாய். வலம்படுகுரிசில்! இவ்வாறு நீ செய்தமை, ‘இவ்வுலகில் புகழ் நாட்டினார்க் கன்றித் தேவருலகில் வாழ்வு இல்லை’ என்னும் வாய்மையை விளங்கக் கேட்ட காரணமோதான்?” (புறநா. 50) என்று பாடியமை எடுத்துக்காட்டு. (தொ. பொ. 90 நச்.)

அடையாளப்பூக்களின் இன்றியமையாமை -

{Entry: K11__0027}

ஒருகளத்தில் இருபெருவேந்தர் பொருமிடத்து, இருபெரும் படையும் தலைமயங்கிப் பொருதல் நிகழும். யாவர் வென்றார் என்பதனைக் காண்போர் அறிவதற்கும், மறவர்கள் தம்மவரை அறிவதற்கும் அன்னார் தத்தம் அரசரது அடையாளப் பூவையும் வெட்சி வஞ்சி தும்பை முதலியவற்றொடு சூடிக் கொள்வர். வெட்சி முதலிய பூக்கள் இருதிறத்தார்க்கும் பொதுவாதலின் அரசரின் அடையாளப்பூச் சூடுதலே வீரர் களை அடையாளம் காண உதவும். (தொ. பொ. 298 குழ.)

அதரிகொள்ளுதல் -

{Entry: K11__0028}

அஃதாவது பகையழித்தல். ‘கொண்டனை பெரும குடபுலத்து அதரி.’ (புறநா: 373-26) (L)

அதரிடைச் செலவு -

{Entry: K11__0029}

வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் கரந்தையைச் சார்ந்த புறத்துறை. (பு. வெ. மா. 2:3)

அதரி திரித்தல் -

{Entry: K11__0030}

நெல்மணிகளை அடித்த அரிதாளினை மீண்டும் கடாவிட்டு வைக்கோலை உதறியெடுத்தல்.

வீரராகிய வைக்கோலை யானையைக் கடவிக் கடாவிட்டு வெற்றி கொள்ளுதல் என்னும் போர்க்கள நிகழ்ச்சி இது.

‘ஆளழி வாங்கி அதரி திரித்த, வாளேர் உழவன்’

(சிலப். 26: 234, 235)

அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை -

{Entry: K11__0031}

நொச்சியின் புறத்ததாகிய உழிஞையான் விரும்பிய புதுமை.

(தொ. பொ. 69 இள.)

இடைமதிலைக் காக்கின்ற அகத்துழிஞையான் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கொண்ட புதுக்கோள்; அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை அகத்தோன் விரும்பிக் கொண்ட புதுக்கோள். இஃது இடைமதிற்போர். (தொ. பொ. 68 நச்.)

அகத்தோனுடைய எதிர்ப்பான் வெகுண்டு புகுந்த புறப் படைத் தலைவன் விரும்பிய புதுக்கோள். எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாகக் கொள்ளுதல் ‘புதுமை’ எனப்பட்டது. இத்துறை புறத்தோன், அகத்தோன் ஆகிய இருவர்க்கும் பொது (நச்.)

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று.

இதனை எயிற்போர் என்னும் நொச்சித்துறையாகக் கொள் ளும் புறப்பொருள் வெண்பாமாலை ( 5 : 6)

அந்தணர் இயல்பு -

{Entry: K11__0032}

ஓதல், வேட்டல், அவ்விரண்டனையும் பிறரைச் செய்வித்தல், ஈதல், ஏற்றல் எனப்பட்ட ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்’. (தொ.பொ. 75 நச்.)

அந்தணர்க்குக் கூறிய ஓதல் முதலாயின ஏனையோர்க்குரிமை -

{Entry: K11__0033}

அந்தணர்க்குச் சிறப்பியல்பு எனக் கூறப்பட்டவற்றுள் ஓதல் வேட்டல் ஈதல் என்னும் மூன்றனை அரசர்க்கும் ஏனை யோர்க்கும் கூறுதல் பொருந்துமோ எனில், அவை வினை நிகழ்ச்சியால் ஒரு தன்மையவாயினும், அவ்வவ் வருணத்துக் குரிய சில வேறுபாடுடைமையால் அதுபற்றி அரசர்க்கும் ஏனையோர்க்கும் சிறப்பியல்பினவாய் உரிய ஆயின என்பது. (பா. வி. பக்.28,29)

அமரர்கண் முடியும் அறுவகை -

{Entry: K11__0034}

பிறப்புவகையானன்றிச் சிறப்புவகையான் தேவர்கண்ணே வந்து முடிதலையுடைய அறுமுறை வாழ்த்து. அவை முனிவரும் பார்ப்பாரும் ஆநிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகமும் ஆம். இவை தத்தம் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பாலன என்பது. அமரரை வாழ்த்துங்காலத்து வேறுவேறு பெயர் கொடுத்து வாழ்த்துதலும், இவை ஆறனையும் பொதுவகையால் கூறி வாழ்த்தல்அன்றிப் பகுத்துக் கூறப்படாமையும் கொள்ளப்படும்.

(தொ. பொ. 81 நச்.)

அமரர்கண் முடியும் அறுவகையாவன கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பன. கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சி யன்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் பாடாண் பாட்டாகும். (தொ. பொ. 79 இள; பு. வெ. மா. 9: 39-44)

போர்செய்யும் மறவர்பால் சென்றமைவனவாகப் புறத் திணையியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி ஈறான புறத்திணை ஆறு. (புறத். 26. பாரதி)

அறுமுறை வாழ்த்தாவன : வான், நீத்தார், அறம், ஆன், அரசு உலகு என்பன. (தொ. பொ. 288 குழ.)

அமரர் - உயர்ந்தோர். பாட்டுடைத் தலைவனை வாழ்த்தும் போது உயர்ந்த பொருள்களையும் உடன்வாழ்த்துதல் மரபு.

எ-டு :

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் // வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக // ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே // சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (தே. III, 54-1)

அரச உழிஞை -

{Entry: K11__0035}

“உழிஞை சூடிய மன்னனுக்கு மிக்க ஊக்கமும் ஆற்றல் முதலியவும் உள ஆதலின், பகைவர்அரண் அவன் கையகப் படுவது உறுதி” என்று அவ்வரசன் புகழைப் பலவாறு கூறுகின்ற உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6-6)

அரசமுல்லை -

{Entry: K11__0036}

பகைவரைப் போர்க்களத்தில் வருத்தித் தண்ணளியுடன் தன்நாட்டினை உலகைக் காக்கும் கதிரவனைப் போலக் காக்கும் அரசனுடைய மேலான இயல்புகளாகிய செங் கோன்மை, சிற்றினம் சேராமை, கழிகாமமின்மை, மடி யின்மை, பெரியோரைப் பேணுதல், அருள் கண்ணோட்டம் இவையுடைமை ஆகியவற்றைச் சிறப்பிக்கின்ற வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 17)

அரசர்க்குரிய ஈதல் -

{Entry: K11__0037}

கழுத்தில் புத்தாடை சுற்றப்பட்டுக் கொம்பும் குளம்பும் பொன் அணிந்த புனிற்றாக்களும் - பொன்னும் பாக்கும் உணவும் முதலியனவும் - செறிந்த மனைக்கொல்லையை யுடைய இல்லமும் - நன்செய் நிலமும் - கன்னியரும் பிறவும் கொடுத்தலும், மழுவாள் நெடியோனாகிய பரசுராமன் நிலப்பகுதியையே தானம் செய்தது போலப் பூமிதானம் செய்தலும், இவை போல்வன பிறவும் ஆம்.

(தொ. பொ. 75. நச்.)

அரசர்க்குரிய காப்பு -

{Entry: K11__0038}

படைக்கலன்களாலும் நாற்படையாலும் கொடைத்தொழி லாலும் பிறவாற்றாலும் அறத்தின் வழுவாமற் காத்தல்.

(தொ. பொ. 75 நச். )

அரசர்க்குரிய தண்டம் -

{Entry: K11__0039}

அரசர், தம்மால் காக்கப்படும் உயிர்க்கு ஏதம் செய்யும் மக்களையாயினும், பகைக்கூட்டங்களையாயினும், அறம் செய்யா அரசையாயினும், விதிவழியால் தண்டித்தல். இத் தண்டம் அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும். (தொ. பொ. 75 . நச்.)

அரசர்க்குரிய பொருள்வகை மரபு -

{Entry: K11__0040}

‘வகை’ என்றதனானே, களவுசெய்வோர் தம் இருப்பிடத்தில் சேர்த்து வைத்திருக்கும் பொருள் கோடலும், மக்களிடம் நிலத்தில் ஆறில் ஒன்று வரிகோடலும், சுங்கம் கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் “இத்துணைப் பொருள் நும்மிடத்து யான் கொள்வன்” என்று கூறிக் கொண்டு அதுகோடலும், மறம் பொருளாகப் பகைவர்நாடு கோடலும், உறவினரோ அந்தணரோ இல்லாதவழிப் பிறன்தாயம் கோடலும், பொருளில்லாதவிடத்து வாணிகம் செய்து கோடலும், அறத்தினின்று மாறுபட்டவரைத் தண்டத்திற்குத் தகுமாறு பொருள்கோடலும் போல்வன கொள்ளப்படும். (தொ. பொ. 75. நச்.)

அரசர்க்குரிய வேள்வி -

{Entry: K11__0041}

பார்ப்பார்க்கு உரியனவாக விதந்த வேள்வி ஒழிந்த வேள்வி களுள் இராயசூயமும், துரங்க வேள்வியும் போல்வன. (தொ. பொ. 75. நச் .)

அரசர் குணம், தொழில் என்பன -

{Entry: K11__0042}

சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம் துவைதம், ஆச்சிரயம் என்பன. (இரகு. திக். 20) (L)

நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் என்பன. (குறள் 485 பரிமே.)

ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல் பல்லுயிரோம் பல், பகைத்திறம் தெறுதல் என்பன. (குறள் 384 பரிமே. உரை)

அரசர் தொழில் -

{Entry: K11__0043}

ஓதல், பொருதல், உலகு புரத்தல், ஈதல், வேட்டல், படைக்கலம் பயிலுதல் என்பன. (பிங். 767)

ஓதல், ஈதல், வேட்டல், பார்புரத்தல், படைக்கலம் பயிறல், போர்புரிதல் என்பன. (ஆ. நி. 51)

ஓதல் வேட்டல், பாரினைப் புரத்தல், ஈதல், படைக்கலம் கற்றல், விசயம் என்பன. (சேந். பக். 291)

அரசர் பக்கம் -

{Entry: K11__0044}

அரசியல் என்னாது ‘பக்கம்’ என்றதனால், அரசர் ஏனைய வருணத்தார்பால் கொண்ட பெண்டிர்க்குத் தோன்றிய வருணத்துப் பகுதியோரும், அரசர்தொழில் ஆறற்கும் உரிமையுடையார் அல்லரேனும் சில தொழில்களுக்கு உரியர். (தொ. பொ. 75 நச்.)

அரசவாகை -

{Entry: K11__0045}

“ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஓம்புதல் என்னும் ஐந்துவகைத் தொழில்களையும் குறை வின்றிச் செய்து, நான்மறைகளையும் ஓதி, ஆகவநீயம் காருக பத்தியம் தட்சிணாக்கினி என்னும் முத்தீயையும் வளர்த்து வழிபட்டு, பூணூல் அணிவதன் முன் ஒரு பிறப்பும் பூணூல் அணிந்தபின் ஒருபிறப்பும் ஆகிய இருபிறப்பினை உடைய கருணைமிக்க அரசன், நாட்டினை நடுவுநிலை தவறாது செங்கோல் முறையானே காத்தலான் அவன் நாட்டுயிர்கள் மகிழ்வோடுள்ளன” என்று புகழும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8-3)

அரசன் நாடோறும் மேற்கொள்ளுதல் செற்றமாவன -

{Entry: K11__0046}

அரசன் நாடோறும் சிறைசெய்தலும், செருச் செய்தலும், கொலைபுரிதலும் முதலிய கடுஞ்சினத்தின் காரியமாகிய செயல்களைச் செய்வது வழக்கம். (தொ. பொ. 91. நச்.)

அரசன் பிறந்தநாளில் மேற்கொள்ளும் சிறந்த தொழில்களாவன -

{Entry: K11__0047}

சிறைவிடுதலும், போர் ஒழிதலும், கொலை ஒழிதலும், வரி தவிர்த்தலும், தானம் செய்தலும், வேண்டியன கொடுத்தலும், பிறவும் ஆம். (தொ. பொ. 91. நச்.)

அரசை இழந்து இரங்கல் -

{Entry: K11__0048}

இது பூசல்மயக்கத்தின் பக்கம் என்ற புறப்பொருள் பொது வியல் துறை. அது காண்க. (சாமி. 148)

அரண் -

{Entry: K11__0049}

கோட்டை. ‘அரணம்’ நோக்குக

அரண் முற்றப்பட்டோனுக்குரிய துறைகள் -

{Entry: K11__0050}

அகத்தோன் செல்வம், முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம், திறப்பட ஒருதான் மண்டிய குறுமை, உடன்றோர் வருபகை பேணார் ஆர்எயில் - என்பன நான்கும் அரண் முற்றப்பட்டோனுக்கு உரிய துறைகளாம். (தொ. பொ. 67 நச்.)

அரண் முற்றுவோனுக்குரிய துறைகள் -

{Entry: K11__0051}

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம், உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு, தொல் எயிற்கு இவர்தல், தோலின் பெருக்கம் என்பன நான்கும் அரண் முற்றுவோனுக்குரிய துறைகளாகும். (தொ. பொ. 67. நச்.)

அரணம் -

{Entry: K11__0052}

இது கோட்டை என்று வழங்கப்பெறும். இஃது அரசர்கட்குக் காவலான இடம். அரணத்தின் நடுவில் பாதுகாவலான அரசன் கோயில் இருக்கும். அதனைச் சுற்றி அகமதில் அமைந்திருக்கும். கோயிலின்கண் அரச குடும்பத்தினர் இருப்பர். அகமதிலுக்கும் இடைமதிலுக்கும் இடைப்பட்டது ஊர். அங்கு அரசன் அலுவலரும் செல்வரும் இருப்பர். இடைமதிலுக்கும் புறமதிற்கும் இடைப்பட்டது புறஞ்சேரி அங்குப் பொதுமக்கள் இருப்பர். மதில்மேல் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள் இருக்கும். மதிலுள் உள்ள பதணம் என்னும் மேடையில் கருவிகளும் பொறிகளும் இருக்கும். மதிலில் ஏவறைகள் பலவுண்டு. கோட்டை வாயிற் கதவுகள் வலியன. மதிலின் நிலைகளுக்கருகே உட்புறம் மறவர் தங்கும் அறைகள் உண்டு. புறத்தே மதிலைச் சூழ்ந்து ஆழ்ந்த அகழ் இருக்கும். அகழின் வெளியே உள்ளது மருநிலம். அதற்கு வெளியே காவற்காடு. இவ்வாறு அரண் எனவும் கோட்டை எனவும் வழங்கும் அரணம் இருக்கும். (தொ. பொ. 275 குழ.)

அரணம் காப்போர் நொச்சிப்பூப் புனை புகழ்ச்சி -

{Entry: K11__0053}

வானளாவிய மதிலைக் காப்பதற்கு, அரணத்து உள்ளோர், சிவபெருமான் கோபித்தகாலைத் திரிபுரத்தைக் காத்த அவுணர் கூட்டத்தாரைப் போல, நொச்சிப்பூவைச் சூடிக் கொண்டார் என்பது. (பு. வெ. மா. 5-1)

அரவம் -

{Entry: K11__0054}

படையெழுச்சி என்னும் வஞ்சித்துறை. ‘இயங்கு படை அரவம்’ காண்க. (அரவமானது வெட்சியரவம், கரந்தை யரவம், காஞ்சி அதிர்வு, தும்பைஅரவம், வாகையரவம் எனப் புறப்பொருள் வெண்பாமாலையில் பல திணைகளிலும் கூறப்பட்டுள்ளது.) (வீ. சோ. 101)

அரில்தப உணர்ந்தோர் -

{Entry: K11__0055}

அகத்திணை என்னும் பொருளின்கண் மாறுபாடு அற அறிந்தோர். அகத்திணைக்கண் முதல்கரு உரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு, முறையே வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை ஒப்புமையுடைய காரணத் தால் சார்புடையன; நிலம் இல்லாத பாலை பெருந்திணை கைக்கிளை என்பனவற்றிற்கு, முறையே வாகையும் காஞ்சியும் பாடாண்திணையும் தாம் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை ஒப்புமையுடைய காரணத்தால் சார்புடையன. இவ்வாறு அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழும் சார்புடைமையை அறிந்து கூறுதற்கு ‘அரில்தப உணர்ந்தோர்’ என்றார். (அரில் - பிணக்கு; தப- கெட) (தொ. பொ. 56 நச்.)

அரு -

{Entry: K11__0056}

அஃதாவது அட்டை; ‘இருநிலம் தீண்டா அருநிலை’. இவ் அருநிலையை ‘அட்டையாடல்’ எனத் தும்பைத் திணையது சிறப்பாகக் கூறுவர். (தொ. பொ. 71. நச்.)

அருஞ்சமர் விலக்கல் -

{Entry: K11__0057}

கரந்தைவீரர், வெட்சிவீரர் இரவிடைக் கவர்ந்த தம் ஆக்களை மீட்குங்கால், அவ்வெட்சிவீரரது போரினை நீக்குதல். அஃதாவது தம் பசுக்களை விளித்துக் குருளையின் குரல் கேட்ட புலிபோல வந்து வேலைத் திரித்துச் சீறித் தமர்பிணத்தின்மேலும் நிணத்தின்மேலும் வெட்சியார் நடந்தோடுமாறு தோல்வியுறச் செய்தல் (இ.வி. 604-19) இது தொல்காப்பியத்தில் ‘ஆரமர் ஓட்டல்’ எனப்படும்.

(தொ. பொ. 60 நச்.)

’அரும் பகை தாங்கும் ஆற்றல்’ -

{Entry: K11__0058}

வெல்லுதற்கரிய பகைவர் மிகுதியை நன்கு மதியாது எதிர் ஏற்றுக் கொள்ளும் அமைதி என்னும் வாகைத்திணைத் துறை.

(தொ. பொ. 76 நச்.)

பகைவர்க்கு அஞ்சாது ஒருவனாகச் சென்று எதிர்த்தலின் மறவெற்றியாயிற்று. (தொ. பொ. 284 குழ.)

இதனை வீரசோழியம் ‘ஆற்றல்’ என்று கூறும். வீரசோழி யத்தில் ‘நிலை’ என்னும் தலைப்பில் இஃது அடக்கப்பட் டுள்ளது. (கா. 102 வீ. சோ. 104.)

‘நெடுந்தகை, அரசுவரின் தாங்கும் வல்லாளன்னே’ (புறநா. 327) என, எதிர்த்து வரும் வேந்தரைத் தடுத்து வெல்லும் வல்லாண்மை கூறப்பட்டமை இவ்வாகைத் துறையாம். (தொ. பொ. 76 நச்.)

‘அரும்பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலை’

{Entry: K11__0059}

அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகனைப் பெற்ற தாய் சாதற்கண் அவனைச் சந்தித்த தலைப்பெயல்நிலை. (தொ. பொ. 77 இள.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியற் படலத்துச் ‘சிறப்பிற் பொதுவியற்பால’ துறைகளுள் ஐந்தாம் துறையாக உளது.

அரும்பொருள் -

{Entry: K11__0060}

அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பொருளினும் விடாமல் புணர்ப்பது என்னும் வாகைத்துறை (வீ.சோ. 104) ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’ காண்க.

அருமுனை முரித்த முன்னிருப்பு -

{Entry: K11__0061}

‘முனைகடி முன்னிருப்பு’ நோக்குக. (இ. வி. 615 - 25)

அருளால் நீங்கல் -

{Entry: K11__0062}

இஃது ‘அருளொடு நீங்கல்’ என்னும் வாகைத்திணை.

(சாமி. பொ. 141)

அருளொடு நீங்கல் -

{Entry: K11__0063}

“நிலையற்றதும் நோய்க்கு இடமானதுமான இந்த ஊனுடம்பு அழிவதற்கு முன்பாகவே, இந்த உலகின் வஞ்சனையான இயல்பை அறிந்துணர்ந்து, அனைத்துயிரிடமும் அன்பும் அருளும் காட்டும் பெருநோக்குடன் வாழ்ந்து, உலகம் என்னும் வலையில் சிக்காமல் தப்பிப் போதலே உறுதி யானது” என்று கூறும் வாகைத்துறை. இஃது ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ என்று தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது. (பு. வெ. மா. 8 : 34)

‘அருளொடு புணர்ந்த அகற்சி’ -

{Entry: K11__0064}

அஃதாவது அருளுடைமையொடு பொருந்திய துறவறம். அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர் வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தம் தனதாக வருந்துதலும், பொய்யாமை, கள்ளாமை முதலியன வும் ஆம். இக்கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின், இதுவும் அறவெற்றியாயிற்று. (தொ. பொ. 76 நச்.)

அஃதாவது அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை. கள்ளுண்ணாமை என்பவற்றைப் பொருந்தும் துறவு. அவற்றுள் அருளுடைமை ஒழிந்த கொலை, பொய், களவு முதலிய எல்லாம் நீக்கப் படுதலின் ‘அகற்சி’ எனப்பட்டது. அருளுடைமை - யாதா னும் ஓருயிர் இடர்ப்படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற் போல வருந்தும் ஈரமுடைமை. பொய்யாமை - தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை. புணர்ச்சி விழையாமை - பிரமச்சரியம் காத்தல். துறவு - தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல். (75 இள.)

யார்மாட்டும் விரிந்து பெருகும் பரிவு; கடன் ஆற்றும் முயற்சிக்கு அஞ்சித் தனக்கு ஒழிவு தேடும் போலித்துறவினை விலக்கிச் சுரந்து எல்லார்மாட்டும் பரந்து பயன் தரும் அகன்ற அன்பான் பிறர்க்கென முயலும் மெய்த்துறவின் வீறு. (தொ. பொ. புறத் 21 பாரதி)

பிறவுயிர்களிடத்து வைத்த அருளால் தம்மைக் காவாத துறவுள்ளம். அவ்வருளே துறவுக்குக் காரணம். இஃது அருள் வென்றி. (தொ. பொ. 284 குழ.)

அருளுணர்வொடு நிறைந்த பண்புகளான் விரிந்து நிற்கும் நிலை. அஃதாவது தனக்கு இடர் செய்தவராயினும் அவர்க்கு ஓரிடையூறு நேர்ந்துழித் தன் உயிர் முதலாயவற்றை வழங்கிக் காத்தலும், புழு முதலிய சிற்றுயிரேனும் அவற்றின் துயர் கண்டு பொறாது வருந்தலும் - என்றின்னோரன்ன அருளுடை மையாம். அவ் அருளுடைமை மக்கட் பண்பின் மிக்கதாத லின் அது வாகைக் குரியதாயிற்று; தாபதவாகையின் வகையுள் அடங்கும். (தொல். புறத். 21 ச. பால.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘அருளொடு நீங்கல்’ என்னும் (8 : 34). வீரசோழியம் ‘மேன்மை’ என்னும் (கா. 104).

அழிந்தோரை நிறுத்தல் -

{Entry: K11__0065}

இது வேளாண் மாந்தர் இயல்புகளுள் ஒன்று (திவா. பக். 303) [ அஃதாவது உடலுள்ளம் அழிவுற்று நலிவு அடைந்தோரை ஏற்ற பெற்றி உதவி நன்னிலைக்கண் நிறுத்தும் உபகார முடைமை. ]

அவன் படும் வேலின் இவளும் படுதல் -

{Entry: K11__0066}

இஃது ஆஞ்சிக்காஞ்சிப் பக்கம் என்ற காஞ்சித்துறை. அது காண்க. (சாமி. பொ. 143)

அவிப்பலி -

{Entry: K11__0067}

வீரமிக்க மறவர் தமது உயிரையே பலியாகக் கொடுத்தல். அஃதாவது வீரர்கள்தம் ஒழுக்கங்களிற் சிறந்தது செஞ் சோற்றுக் கடன் கழித்தலே என்பதனை யுணர்ந்து, போர்க் களம் என்னும் தீயிலே தம்முயிர் என்னும் அவியை இட்டுத் தம் மறப்பண்பிற்கேற்ப வீரசுவர்க்கம் புகுதலைக் குறிக்கும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 30.)

‘ஆவிப்பலி’ எனற்பாலது முதல் நெட்டுயிர் குறுகியது என்ப.

அவையமுல்லை -

{Entry: K11__0068}

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை என்னும் எட்டுப் பண்புகளும் தம்பால் ஒருங்கமைந்த அறங்கூறவையத்தார், வழக்கிடுவோரை ஆராய்ந்து வினவி, அவர் கூறும் விடையை நன்கு கருதி, அவ்வினாவிடை வாயிலாக உண்மையுணர்ந்து துணிந்து தீர்ப்பு வழங்குதலாகிய வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 19)

அழிபடை தாங்கல் -

{Entry: K11__0069}

உழிஞை வீரர்களது தாக்குதலால் சிதறிப் போகும் தன் படையை நொச்சிவீரன் தடுத்து நிறுத்தி, தான் துணை நின்று மாற்றாரை எதிர்த்துப் போரிடுமாறு செய்து, மதில்மேல் நின்று, பகைவர் தனது மதிலகத்தே கால் வைக்காதபடி தன் வாளினை வீசிப் பிணங்கள் மிகுமாறு அவர்களை வெட்டி வீழ்த்திய திறம் கூறும் நொச்சித்துறை. (பு. வெ. மா. 5 : 8)

அறக்களவழி -

{Entry: K11__0070}

அறமாகிய பயிரை வளர்ப்பதற்குரிய முறைகளைக் குறிப் பிடும் இப்புறத்துறை வாகைத்திணையைச் சார்ந்தது.

‘திருமாலுடைய திருவடிகளாகிய வயலில் அன்பினை விதைத்து, நாள்தோறும் அதற்குத் தவத்தை நீராகப் பொழிய, ஞானம் ஆகிய முளைதோன்றி வளர்ந்து முக்தியாகிய பழத்தை நல்கும்’ என்றாற் போல அறவழியில் சிறப்புறும் திறம் கூறுவது.

அறக்களவழியாவது அறவுணர்வுடைய மாந்தரது தொழிலைக் கூறும் வாகைப்புறத்துறை. (மா. அ. பாடல். 236)

அறக்கள வேள்வி -

{Entry: K11__0071}

மறைகள் கூறிய வகையில் அரசர் அந்தணர் முதலியோர் தத்தமக்கு விதிக்கப்பட்ட வேள்வி செய்தல். (சிலப். 28:131)

அறநிலை அறம் -

{Entry: K11__0072}

நான்கு வருணத்தாரும் தத்தம் வருணத்திற்கு ஓதிய அறத்தி னின்றும் பிறழாது அதனைக் காத்தல். (பிங். 761)

அறநிலைப் பொருள் -

{Entry: K11__0073}

அஃதாவது நெறியில் நின்று தத்தம் நிலையால் உழந்து பெறும் பொருள். (பிங். 763)

அறமும் அறக்காரணமும் -

{Entry: K11__0074}

இவையிரண்டு திறமும் புறத்திணையைச் சார்ந்தன. அறம் மனையறமும் துறவறமும் என இருவகைத்து. கொடுத்தல், அளித்தன கோடல், தகாதாரிடத்து ஏதும் பெறாமை, ஒழுக்கத்தொடு புணர்தல், தம்மையடைந்தோரைப் பாதுகாத் தல் முதலியன இல்லறச் செயல்களாம். துறவு, அடக்கம், தூய்மை, தவம், அறவினைசெய்தல், தீவினை கடிதல் போல்வன மனையறம் விடுத்த துறவிகளின் செயல்களாம். (வீ. சோ. 106 உரை)

அறிஞர் வாகை -

{Entry: K11__0075}

இஃது அறிவன் வாகை எனவும்படும். (சாமி. பொ. 140)

அறிமரபின் பொருநர்கட்பால் (வாகை) -

{Entry: K11__0076}

தாம் தாம் அறிந்த இலக்கணங்களாலே போர் செய்வாரிடத் துக் கூறுபாடு என்னும் வாகை. அவை சொல்லானும் பாட்டானும் கூத்தானும் மல்லானும் சூதானும் பிறவாற்றா னும் வெல்லுதல். (இவற்றைப் பாடல் வென்றி, ஆடல் வென்றி, சூது வென்றி முதலாகப் புறப்பொருள் வெ.மாலை கூறும். (சூ. 18) (தொ. பொ. 75 நச்.)

அறிவர்க்கு உரியன -

{Entry: K11__0077}

மூன்று காலத்தும் தத்தம் குலத்திற்கு ஏற்கும்படியாகக் கற்பு, காமம், ஒழுக்கம், பொறை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்பல் முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும், காமநுகர்ச்சிக்கு இன்பமாகிக் கற்பிற்குத் தீயவற்றை நீக்குதலும், தலைவனும் தலைவியும் தவறான வழிக்கண் செல்லுமிடத்தே அவரைக் கழறி ஓர் எல்லைக்கண்ணே நிறுத்தலும் அறிவர்களுடைய தொழிலாம். (தொ. பொ. 154, 155 நச்.)

அறிவன் (1) -

{Entry: K11__0078}

காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியால் அமைத்த முழுதுணர்வுடையோன். இவனுடைய செய்தியைச் சொல்வது அறிவன் வாகையாம். (தொ. பொ. 75 நச்.)

அறிவன் வாகை -

{Entry: K11__0079}

முக்கால உணர்வும் முழுமையாகப் பெற்ற சான்றோர், “இம்மூவுலகின்கண்ணும் இருளைப் போக்கும் கதிரவனைப் போலக் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவிருள்களையும் நீக்கி, இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளை யும் உணர்ந்து கூறுதலானே, இயற்கையின் நிகழ்ச்சிகளில் மாறுபாடு தோன்றினும், அவர்கள் கூற்று எந்நாளும் தப்பாது” என்று கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8 : 13)

அறிவு மடம்படுதல் -

{Entry: K11__0080}

அஃதாவது அறிந்தும் அறியான் போன்றிருத்தல் ‘அறிவு மடம் படுதலும் அறிவுநன் குடைமையும்’ (சிறுபாண். 216). ‘அறிமடமும் சான்றோர்க் கணி’ (பழமொழி 75)

அறுமுறை வாழ்த்து -

{Entry: K11__0081}

‘அமரர்கண் முடியும் அறுவகை வாழ்த்துக் காண்க. இது முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, மன்னன், உலகு என்னும் ஆறனையும் இணைத்தும் தனித்தனியேயும் பாடும் பாடாண் துறை.

‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் // வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக // ஆழ்க தீயதெல் லாம் அரன் நாமமே // சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (தே. III 54-1)

அறுவகைத் தானை -

{Entry: K11__0082}

அறுவகைத் தானையாவன வேல்தானை, வாள்தானை வில்தானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை என்பன. (தொகை. பக். 125), (திவா. பக். 292)

அறுவகைப் படை -

{Entry: K11__0083}

மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பன. (குறள் 762 பரி.)

‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்’ -

{Entry: K11__0084}

ஆறு கூற்றின் உட்பட்ட பார்ப்பனக் கூறு. ஆறுபார்ப்பியல் என்னாது ‘வகை’ என்றதனால், அவை தலை இடை கடை என ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கொடுத்தல், கோடல் என ஆறாம். (தொ. பொ. 75 நச்.)

ஆறு வேறுவகை மரபினராகிய பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பு. தொல்காப்பியர் காலத்தே பார்ப்பார் மரபால் ஆறுவேறு பிரிவினராய் இருந்தனர். ஏற்றல் வேட்பித்தல் ஓதுவித்தல் என்பன வீறுதரும் பெற்றிய ஆகா ஆதலின் வாகைவகை ஆகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும், உயிர் செகுத்துண்டு வேட்டலும், வேதனத்துக்குரிய ஓதுவித் தலும், வெற்றிக்குரிய வாகையாகப் பழந்தமிழர் கருதார். இக்காலப் பார்ப்பார் எண்ணாயிரவர் மூவாயிரத்தர், வடமர், சோழியர் என வெவ்வேறு மரபினர் ஆதல் போல, முற்காலத் தமிழகத்துப் பார்ப்பார் மரபால் அறுவகைப் பிரிவினரா யிருந்தனர் என்று கோடலே சிறப்பு. (தொ. புறத். 20 பாரதி)

‘பக்கம்’ என்றதனால் ஒவ்வொரு தொழிலின் சிறப்புக் கூறுதலும் இதன்பாற்படும். (தொ. பொ. 74 இள)

பார்ப்பனரின் அறுவகைத் தொழில்களாவன காமநிலை உரைத்தல், தேர்நிலையுரைத்தல், கிழவோன் குறிப்பெடுத் துரைத்தல், ஆவொடுபட்ட நிமித்தங் கூறல், செலவுறுகிளவி, செலவு அழுங்குவித்தல் என்பன. இவ்வாறு தொழிலே பார்ப்பார்க்குச் சிறந்த தொழில்களாம். இவையெல்லாம் தலையிடைச் சங்கத்தார் செய்த பாடலுள் பயின்றன. இக்காலத்தே இலக்கியம் இன்று. (தொ. பொ. 283 குழ.)

‘அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்’ -

{Entry: K11__0085}

அகத்திணையுள் அந்தணர்க்கு உரியவாக ஓதப்பட்ட ஓதலும் ஓதுவித்தலும், தூது போதலும், தேவர் கோட்டம் முதலாய வற்றைப் பேணும் காவலும், வேள்வியான் மன்பதையைப் பேணும் காவலும், அரசாளும் பொறுப்பேற்றவழித் துணை வயின் சேறலும், வேட்டலானும் ஓதுவித்தலானும் பொருள் செயலும் - ஆகிய அறுவகைப்பட்ட பகுதி. (தொ. புறத். 20 ச. பால.)

புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பனவாகை (8 : 9) என்னும். வீரசோழியம் இதனை நாற்குலப்பக்கத்துள் அடக்கும். (கா. 104)

அன்ன வாழ்த்து -

{Entry: K11__0086}

ஏனைய உயிர்கட்கு இல்லாமல் அன்னத்திற்கே சிறப்பாக வாய்ந்த அதன் தன்மையைக் கூறி வாழ்த்தும் இக்கிளவி பொதுவியல் பாடாணைச் சாரும்.

“நம்மாழ்வார் ஏறிவரும் வெள்ளை அன்னம் என்னும் வாகனம், கூரிய நகங்களையும், தோலால் இணைக்கப்பட்ட விரல்களையுடைய கால்களையும், சிறகுகளில் புள்ளிகளை யும், மெல்லிய உச்சிக்கொண்டையையும் கொண்டது” எனப் புகழ்ந்து கூறி வாழ்த்துதல். (மா. அ. பா. 124)

‘அனைநிலை வகை’ -

{Entry: K11__0087}

பெண்பால் சாதியான் உயர்ந்திருப்ப ஆண்பால் இழிந்தவழிப் பிறந்த சாதிகளும் ‘அனைநிலைவகை’யின் பாற்பாடும்.

தகர்வென்றி, பூழ்வென்றி, கோழிவென்றி முதலியன ‘பாலறி மரபின் பொருநர்கண்’ ‘அனைநிலை வகை’ யாம். (தொ. பொ. 75 நச்.)

வாளானும் தோளானும் பொருது வேறல் அன்றி அத் தன்மைத்தாகிய நிலைவகையான் வெல்லுதல் ஆகும். அஃதாவது சொல்லான் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், சூதான் வேறலும், தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும் ஆம். (74 இள.)

வேறலின் கூறாய் வீறுதலும் பிறவகை வினை விறல்துறைகள்.

(புறத். 20 பாரதி)

பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் ஆகியோர்கீழிருந்து அவ்வத் தொழில்களைப் பயிலும் மாணாக்கரது பயிற்சியைச் சிறப்பித்து மாணாக்கர் சிறப்புக் கூறுதல். இதனால் பார்ப்பனர் முதலிய எழுவர்க்கும் ஓதுவித்தல் உண்டு. (283 குழ.)

அனைநிலை வகையோர் -

{Entry: K11__0088}

யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் ‘அறிவன் தேஎத்து அனைநிலை வகையோர்’ ஆவர். அவர்க்கு மாணாக்கராகித் தவம் செய்வோர் தாபத பக்கத்தர் ஆவர். (தொ. பொ. 75 நச்.)

ஆ section: 25 entries

ஆகோள் -

{Entry: K11__0089}

பசுநிரையை மீட்க எழுந்த பகைவரை அழித்தவாறே பசு நிரையைக் கைப்பற்றுதல்.

நிரைகோடற்கு எழுந்தோர் தம்மை எதிர்த்துத் தடுப்போர் இல்லாமையால் மாற்றார்ஆநிரையை அகப்படுத்திப் புறப் படுதலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை மனச் சோர்வின்றிச் சென்று மீட்டலும் ஆம். (தொ. பொ. 58 நச்.)

இது வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா.1 : 9.)

இதனை வீரசோழியம் ‘நிரைகோடல்’ என்னும். (கா. 99)

ஆகோளின் வகைகள் -

{Entry: K11__0090}

நிரையைத் தொகுத்தல், நிரையைச் செலுத்துதல் முதலியன. (தொ. பொ. 27 குழ.)

‘ஆங்கோர் பக்கம்’ -

{Entry: K11__0091}

தலைவனால் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பவராகிய, காட்டில் தவம் செய்தும் யோகம் செய்தும் வாழும் தாபதர் முதலியோர். அவர்களைப் பாதுகாத்தற்காகக் கற்புக் காலத் தில் தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் செயற்படுத லும் உண்டு. (தொ. பொ. 41 நச்.)

ஆசனம் -

{Entry: K11__0092}

ஆசனமாவது இருக்கை. இவ் வாதனம் சமம் முதலாகிய பல்வகைத்து. அவற்றுட் சிலர் பதுமம் சொத்திகை முதலாய வற்றை முதன்மையாகவும், சிலர் சித்தாசனத்தை முதன்மை யாகவும் கூறுவர். கலசயோனியாகிய ஆசிரியன் அகத்தியன் முதலாயினோர் சமாதனத்தையே முதன்மையாகக் கொண்ட னர். சமஆதனம் என்பது நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தலெனும் நால்வகை நிலையுள் ஒன்றுபற்றி, நிலத்தினும் நீரினும் ஒப்ப இருத்தல். (பா. வி. பக். 41)

இது நாலிரு வழக்கின் தாபத பக்கத்துத் தவம் செய்து யோகம் செய்வார்க்கு உரிய எண்வகை நிலையில் மூன்றாவதாம். (தொ. பொ. 75 நச்.)

ஆஞ்சிக்காஞ்சி -

{Entry: K11__0093}

எழுமையும் தன் அன்புக்கு உரியனான வீரக்கணவனது உடலுடன் தீக்குளித்த அவன்மனைவியது அன்புநிலையைக் கண்டு பொதுமக்கள் அஞ்சிய சிறப்பினை உணர்த்தும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4 - 22)

‘நீத்த கணவற் றீர்த்த வேலின், பேஎத்த மனைவி ஆஞ்சி யானும்’ (தொ.பொ. 79 நச்.) எனத் தொல்காப்பியம் வேறாகக் கூறும். “உயிர் நீத்த கணவன் தன் உறவை நீக்கின வேல் வடுவாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சி; அஞ்சின என்பது ஆஞ்சி என நின்றது.” என்பது நச். உரை

ஆஞ்சிக்காஞ்சியின் பக்கம் -

{Entry: K11__0094}

தன் கணவனது உயிரைப் போக்கிய வேலினைக்கொண்டு மனைவி தன் உயிரைப் போக்கிக் கொள்வதும் ஆஞ்சிக் காஞ்சித்துறையின் பாற்படும். (பு. வெ. மா. 4 : 23)

‘நீத்த கணவன் தீர்த்த வேலின், பெயர்த்த மனைவி ஆஞ்சி யானும்’ என்று பாடம் கொண்டு அவ்வேலான் தன் உயிரைப் போக்கின மனைவி என்று உரை கூறி, அதற்கு,

‘கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை // வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் - அவ்வேலே // அம்பின் பிறழும் தடங்கண் அவன்காதல் // கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று’

என்று காட்டுப - என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பாட பேதம் ஆஞ்சிக்காஞ்சியின் பக்கத்துக் கருத்தைக் கொண்டது.

ஆடல் வென்றி -

{Entry: K11__0095}

பூங்கொம்பு போன்ற விறலி, தன் கைகால் புருவம் கண் ஆகியவற்றால், தாளம் இசை இவ்விரண்டையும் கணித்துக் கொண்டு, பூமாலைகளில் வண்டு ஒலிக்க, மெய்ப்பாடுகள் தெளிவாகப் புலப்படத் துடி முதலிய கூத்துக்களை ஆடும் சிறப்புக் கூறும் வெற்றியாகிய வாகைப்புறத்திணை ஒழிபு. (பு. வெ. மா. 18-17)

ஆடவர் விறல் மிகுத்து அ (எ) திர்தல் -

{Entry: K11__0096}

‘காஞ்சி அ (எ) திர்வு’ (பு.வெ. மா. 4-2) காண்க.

வெட்சிஅரவம், கரந்தைஅரவம், வஞ்சிஅரவம், தும்பை அரவம், வாகைஅரவம் என்ற துறைகளை நோக்கக் ‘காஞ்சி அதிர்வு’ என்பதும், ‘ஆடவர் விறல் மிகுத்து அதிர்தல்’ என்பதும் பாடமாகக் கொள்ளத்தக்கன. (இ. வி. 615 - 2 உரை)

ஆண்பாற்காஞ்சி -

{Entry: K11__0097}

பெருங்காஞ்சி, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி, மறக்காஞ்சி, பேய்க்காஞ்சி, மன்னைக் காஞ்சி, வஞ்சினக் காஞ்சி, தொடாக்காஞ்சி, ஆஞ்சிக் காஞ்சி, மகட்பாற் காஞ்சி, தலையொடு முடிதல் என்பன பத்தும் ஆண்பாற் காஞ்சி என்ப. (தொ. பொ. 79 நச்.)

“விழுப்பவகைக் காஞ்சி என்ப” என்பார் பாரதி. (புறத். 24)

ஆண்பாற் கையறுநிலை -

{Entry: K11__0098}

‘இன்னன் என்று இரங்கிய மன்னை’க்காஞ்சியை ஆண்பாற் கையறுநிலை எனினும் அமையும். (தொ. பொ. 79. நச்.)

ஆபெயர்த்துத் தருதல் -

{Entry: K11__0099}

நிரை மீட்டல் என்ற கரந்தைப் பகுதியாம் வெட்சித்துறை. (தொ. பொ. 63 இள.)

பகைவர் கவர்ந்த நிரையைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டுத்தரும் வெட்சித்திணையின் துறை. (புறத். 5 பாரதி)

வெட்சிமறவர் கொண்ட ஆநிரையைக் குறுநில மன்னராயி னும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதல். (புறநா. 259) ஆ நிரை அல்லாத யானைக்கன்றுகளைக் கவர்தலும் இத்துறையின்பாற்படும். இது வேத்தியலின் மாறு பட்ட தன்னுறு தொழிலாதலின் வழு. (தொ. பொ. 60 நச்.)

இது புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய பொதுவியல் துறைகளுள் ஒன்றாயினும் இது வெட்சியைச் சாரும். (தொ. பொ. 298 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தைப் படலத்து ஐந்தாவது துறையாகிய ‘புண்ணொடு வருதல்’ என்பதன்கண் அடங்கும். இது வீரசோழியத்துள் ‘நிரை மீட்டல்’ என்ற கரந்தையின் வகையாகக் கூறப்படும். (கா. 100)

இஃது இலக்கணவிளக்கத்துள் வெட்சியின் இரண்டாம் பகுதிக்கண் பதினெட்டாம் துறையாக உள்ளது. (சூ. 604)

ஆயுத மங்கலம் -

{Entry: K11__0100}

இது வாள்மங்கலம் என்ற பாடாண் துறை. (சாமி. 145)

ஆர்அமர் ஓட்டல் -

{Entry: K11__0101}

பசுக் கவர்ந்த பகைவரை அரிய போரில் தோல்வியுறச் செய்து வெருட்டுதல் என்ற கரந்தைப் பகுதியாகும் வெட்சித்துறை.

(தொ. பொ. 63 இள.)

நிரை கவர்ந்த படைமறவரைக் கரந்தைவீரர் வென்று புறங் கொடுத்து ஓடச் செய்தல் என்ற வெட்சித்துறை.

(புறத். 5 பாரதி)

குறுநிலமன்னரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த் தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டல். வேந்தர்க்குத் துணையாகச் சென்றவர் பகைவேந்தரை வென்று புறங் காண்டலு முண்டு. காட்டகத்து மறவர் வழிச்செல்லும் வணிகரைக் கொள்ளையடித்தலும் இதனுள் அடங்கும். (எ-டு : புறநா. 324) இது வேந்தரொடு பொருதலின் வழு.

இது புறத்திணை எல்லாவற்றிற்கும் பொதுவான பொதுவியற் செய்தியாயினும் கரந்தையைச் சார்ந்த வெட்சிக்குச் சிறந்தது. (தொ. பொ. 298 குழ.)

இது புறப்பொருள்வெண்பாமாலையின் கரந்தைப் படலத்துப் ‘புண்ணொடுவருதல்’ என்ற ஐந்தாம் துறைக்கண் அடக்கப் படும்.

இது வீரசோழியத்துள் (கா. 100) கரந்தையது வகையாகக் கூறப்படும்.

இஃது இலக்கண விளக்கத்துள் ‘அருஞ்சமர் விலக்கல்’ என்ற பெயரில் வெட்சியின் இரண்டாம் பகுதித் துறையாகக் கூறப்படும். (பொ. 604 - 19.)

ஆள் எறி பிள்ளை -

{Entry: K11__0102}

கரந்தைப்பூச் சூடிய பிள்ளைப்பருவத்து வீரன், வெட்சி மறவரை எதிர்த்து, தன்னுடன் வந்தவர் போரிட்டுத் தோற்று மீளவும், தான் ஒருவனாகவே நின்று அவர்களைக் கொன்று வீழ்த்திய திறம் கூறும் கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2:7)

ஆள்வினை வேள்வி -

{Entry: K11__0103}

ஆற்றலும் ஒழுக்கமும் நிறைந்த தலைவனுடைய இல்லத்தில் இல்லறம் சிறப்பாக நடப்பதையும், அவர்களது விருந்தோம் பலது நலத்தையும் பாராட்டி உரைக்கும் பாடாண்துறை. ஆள்வினை வேள்வி - முயற்சியால் செய்யும் வேளாண்மை; அது விருந்தோம்புதல் முதலாயின. (பு. வெ. மா. 9: 27)

ஆற்றல் -

{Entry: K11__0104}

தன் பகையது மிகையை மதியாது பொரும் ஆற்றல் என்னும் வாகைத் துறை. (வீ. சோ. 104).

‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’ நோக்குக.

ஆற்றலன் என்று இரங்குதல் -

{Entry: K11__0105}

இது மன்னைக்காஞ்சி என்ற காஞ்சித்துறை. அது காண்க. (சாமி. 143.)

“ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்”

{Entry: K11__0106}

இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியில் நிற்றல் நன்று எனவும், கண்ட காட்சி தீது எனவும் மாறுபடத் தோன்றுகை யாலே, தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டும் திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றால் பெறலாம் என்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக்கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடாகிய பாடாண்துறை.

‘பக்கம்’ என்றதனான் அச்செய்யுள்களை அத்தெய்வத்தின் பெயரால் முருகாற்றுப்படை என்றாற் போல வழங்குதல் கொள்ளப்படும்.

முருகாற்றுப்படையுள், ‘புலம் பிரிந்துறையும் சேவடி’ (அடி - 62, 63) எனக் கந்தழி கூறி, ‘நின் நெஞ்சத்து இன்னசை வாய்ப்பப் பெறுதி’ (65, 66) எனவும் கூறி, அவன் உறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் ‘விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்’ (294, 295) எனவும் கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு. முருகன்பால் வீடு பெற்றான் ஒருவன் வீடு பெறுதற்குச் சமைந் தானோர் இரவலனை ஆற்றுப்படுத்தது முருகாற்றுப்படை. (தொ. பொ. 91 நச்.)

ஆற்றுப்படை -

{Entry: K11__0107}

ஆற்றுப்படை என்னும் அகலக்கவி இலக்கணமாவது புறத்திணையின்கண்

‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் // ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் // பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் // சென்றுபயன் எதிரத் தெரித்தஆற் றுப்படை’ (இ. வி. புறத். 19)

எனக் கூறிய பொருள்மேல் ஆசிரியப்பாவால் சொல்லைச் சேர்த்துப் பாடுவதாம். ஆகவே, வள்ளல்களை அணுகித் தம் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வவளத்தொடு மீண்டு வரும் கூத்தர் முதலியோர் வழியில் வறுமையால் நலிவுறும் தம் இனத்தவரைக் கண்டு அவர்களை அவ்வள்ளல் களிடம் செல்லுமாறு வழியிடைச் செலுத்துதலே ஆற்றுப் படையாகும். ஆறு வழி; படை - செலுத்துதல். எடுத்துக் காட்டாகப் பத்துப்பாட்டுள் பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய கூத்தராற்றுப்படை என்பன கொள்க. முருகாற்றுப்படை இலக்கணம் வேறுபட்டது. அதுபற்றி, ‘ஆற்றிடைக் காட்சி............... சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்’ காண்க. (இ. வி. பாட். 113)

ஆறங்கம் -

{Entry: K11__0108}

ஆறு அங்கமாவன நான்கு வேதங்களுக்கும் உறுப்புப் போல உதவும் ஆறு சாத்திரங்கள்.

அவை உலகில் பழகும் சொற்களை விடுத்து வேத வாக்கியங் களில் வந்துள்ள சொற்களை ஆராயும் நிருத்தம், வேத வாக்கியங்களில் வந்துள்ள சொற்களையும் ஏனைய உலகிய லில் பழகும் சொற்களையும் உடன் ஆராயும் வியாகரணம், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம் ஆத்திரேயம் முதலிய கற்பம், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதம், எழுத்தாராய்ச்சியாகிய பிரமம், செய்யுள் இலக்கணமாகிய சந்தம் என்பனவாம். (தொ. பொ. 75 நச். உரை.)

இனி, பிரமத்தை நீக்கிச் சிட்சையைக் கூட்டி ஆறு என்பாரும் உளர்.

வேதபுருடனுக்குக் கற்பம் கை, சந்தம் கால், கணிதம் கண், நிருத்தம் செவி, சிட்சை மூக்கு, வியாகரணம் முகம் என்று மணிமேகலை கூறும். (மணி. 27 : 100- 102)

ஆனந்தத்தின் பக்கம் -

{Entry: K11__0109}

நிமித்தங்களும் நல்வாய்ப்புள்ளும் மாறுபட்டிருப்பது கருதித் தன் மனம் வருந்தும் நிலையில், பலராகக் கூடி வந்துள்ள பகை மன்னரை எதிர்க்கத் தன் கணவன் போர்க்குச் சென்றமை குறித்துத் தலைவி கலங்குதல் ஆனந்தத்தின் பக்கம் என்னும் பொதுவியல் துறை (சிறப்பின் பொதுவியற் பால).

இது ‘விதுப்பானந்தம்’ எனவும் வழங்கும். (பு. வெ. மா. 11 : 12)

ஆனந்தத் துயர் -

{Entry: K11__0110}

இஃது ஆனந்தப் பையுள் என்னும் புறப்பொருள் பொதுவியல் துறை. (சாமி. 148)

ஆனந்தப் பையுள் -

{Entry: K11__0111}

தன் கணவன் போரிட்டு வீரத்துறக்கம் அடைந்த பின்னரும், அவனுடன் உடன்கட்டை ஏறாமல் தன்னுடலில் தங்கியிருந்த உயிரை நினைத்துத் தலைவி தன் அன்பின் குறைபாட்டைக் கருதி மனம் கலங்கும் நிலையைக் கூறும் பொதுவியல் துறை (சிறப்பின் பொதுவியற்பால) (பு. வெ. மா. 11 : 13)

தொல்காப்பியர் இதனைத் ‘தாமே ஏங்கிய தாங்கரும் பையுள்’ (தொ. பொ. 79 நச்.) என்பதன்கண் அடக்குவர்.

ஆனந்தம் (1) -

{Entry: K11__0112}

“போரிட்டு விழுப்புண் பட்ட வீரனுடைய புண்கள் ஆற வில்லை; நிமித்தமும் பொருத்த மின்றியுள; சகுனமும் பொருந்துவனவாக இல்லை; அவன் புண்தீர்ந்து வாழ் வானோ?” என்றாற்போல, அவன் துணைவி அஞ்சி நடுங்கும் செய்தி கூறும் சிறப்பின் பொதுவியற்பால துறை. (பு. வெ. மா. 11 - 11)

ஆனந்தம் - சாக்காடு. (தொ. பொ. 79 நச்.)

ஆனைக்கோள் -

{Entry: K11__0113}

இது யானை கைக்கோள் என்னும் உழிஞைத் துறை. சாமி.135

இ section: 33 entries

‘இகல் மதில் குடுமிகொண்ட மண்ணுமங்கலம்’ -

{Entry: K11__0114}

தம்முடன் இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலம் கொண்ட மண்ணுமங்கலம். (பொ. 69 இள.)

அங்ஙனம் இகல் செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்ட, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலம். மண்ணுதல் - நீராடுதல். இது புறத்தோன் அகத்தோன் இருவர்க்கும் பொது. (68 நச்.)

பகை மதிலின் முடி அகப்படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழா. குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகுபெய ராக்கிப் பிறர் முடிக்கலம் என்று கூறுதல் பொருந்தாது. வேந்தனுக்கு அல்லால் மதில் காக்கும் மறவர்க்கு எல்லாம் முடிக்கலம் இன்மையானும், முற்றிய மதில்மேல் முடி வேந்தன் ஏறி முடி பறிகொடுத்தல் இராவணனுக்கு அன்றிப் பிற மன்னர்க்குச் சான்றோர் செய்யுள்களில் கேட்கப்படா அருநிகழ்ச்சியாகலானும் மதிற்குடுமி என்பது மதிற்சிகரம் என்றே பொருள்படும். (புறத். 13 பாரதி)

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று.

இதனை மண்ணுமங்கலம் என்னும் பு.வெ. மா. (6 : 28)

இதனை முடிகோள் என்னும் வீ.சோ. (கா. 103)

இடரின்று உய்த்தல் -

{Entry: K11__0115}

இது ‘நோயின்று உய்த்தல்’ என்னும் வெட்சித்துறை; சுரத்துய்த்தல் என்றும் வழங்கும். (சாமி. 130)

இடன் அறிந்து ஒழுகல் -

{Entry: K11__0116}

வணிகர் எண்குணங்களுள் ஒன்று; இருக்கும் இடம் நோக்கி அதற்கு இசைய நடத்தல். (பிங். 779)

இடைநிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறல் -

{Entry: K11__0117}

இது ‘நடைவயின் தோன்றும்’ பாடாண்துறைவகைகளுள் ஒன்று. வல்வில் ஓரி என்ற வள்ளல், தான் வேட்டையாடித் திரும்பியபோது, வன்பரணர் என்ற புலவரின் பட்டினிச் சுற்றம் தன்னைப் புகழ்தலுக்கு வாய்ப்பளிக்காமல், தான் வேட்டையாடிய மான்நிணத்தினைத் தேனொடு கலந்து நல்கி அவர்தம் பசியினைப் போக்கிப் பொன்னும் மணியும் வழியிலேயே பரிசிலாக வழங்கி விடுத்த செய்தியை அப் புலவர் இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறியது. (புற. 150, தொ. பொ. 91நச்.)

இடைமதிலிடைப் போர்த்துறைகள் -

{Entry: K11__0118}

(1) அகத்தோன் வீழ்ந்த நொச்சி (2) புறத்தோன் வீழ்ந்த புதுமை - என்னும் இவ்விரண்டும் இடைமதிலிடைப் போர்த்துறைக ளாம். ‘நீர்ச்செரு வீழ்ந்த பாசி’ இடைமதில் அகழியின்கண் நிகழ்ந்த போர்த்திறமாம். (தொ. பொ. 278 குழ.)

இடையாய அறம் -

{Entry: K11__0119}

பொருள் கருதாது, பாதுகாவாதான் ஆநிரையைத் தான் கொண்டுவந்து பாதுகாத்தல் இடையாய அறமாம்.

(தொ. பொ. 91 நச்.)

இடையாய ஓத்து -

{Entry: K11__0120}

அதர்வவேதமும் ஆறங்கமும் தரும நூல்களும் இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது, பெரும் பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் தரும் மந்திரங்களும் பயிறலின் ஏனைய மூவேதங்களொடும் கூறப்படாதாயிற்று.

எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து இம்மைப் பயன் தருதலின், அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல் களும் இடையாய ஓத்தாம். இடைச்சங்கத்தார் தமிழில் செய்த செய்யுட்களும் இடையாய ஓத்தாம்.(தொ.பொ. 75 நச்.)

‘இடையில் வண்புகழ்க் கொடைமை’ப் பக்கம் -

{Entry: K11__0121}

இடையீடில்லாத வண்புகழைப் பயக்கும் கொடைமை என்ற அறவெற்றி. உலகம் முழுதும் பிறர்புகழ் வாராமல் தன்புகழ் பரத்தலின் ‘இடையில்புகழ்’ எனப்பட்டது. இக்கொடைப் புகழுடையான் மூப்புப்பிணிச்சாக்காட்டிற்கு அஞ்சாமையின் அது வாகையாம். (தொ. பொ. 76 நச்.)

அஃதாவது கொடுத்தற்கரியன கொடுத்தல் என்பார் இளம்பூரணர். (தொ. பொ. 75).

இது கொடைவென்றி. வீரசோழியம் இதனைக் ‘கொடை’ என்னும். (கா. 104)

எ-டு : “யானைகளைப் பரிசிலர்க்கு அருகாது வீசும் கேடில் நல்லிசைக் குமணனை யான் பாடி நின்றேனாக, புகழ் பெற்ற பரிசிலன் வாடிப் பெயர்தல் தான் நாடிழந்த அக்கொடுமையினும் மிக இன்னாது எனத் தன் கைவாளை என்கையில், தன் தலையைக் கொய்து கொண்டு சென்று பரிசில் பெற வேண்டித் தந்தான் அவ்வள்ளல்; தன்னிற் சிறந்தது பிறிது ஒன்று ஈய வேறு இல்லாமையால் தன் தலையையே ஈய என்கையில் தன் கைவாள் நீட்டினான்காண்” (புறநா. 165) என்று குமணன் தந்த வாளை இளங்குமண னிடம் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியதன் கண் ‘இடையில் வண்புகழ்க் கொடைமை’ காணப் படும். (தொ. பொ. 76 நச்.)

இயங்குபடை அரவத்துள் அடங்குவன -

{Entry: K11__0122}

இயங்குபடை அரவம் எனவே இயங்காத வில்ஞாண்ஒலி முதலியன கொள்ளப்படும்.

கொற்றவை நிலையும், குடைநாட்கோளும், வாள்நாட் கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப் புலத்தோர் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடை அரவமாய் அடங்கும்.

நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரை கொண்டோர்க்கும் நிரை கொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏக வேண்டுதலின், குடைநாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் வஞ்சிக்கு அவை கூறப்பட்டில. (தொ. பொ.63 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலை, குடைநிலை - வாள்நிலை - என்று கூறும். (3:34)

இயங்குபடை அரவம் -

{Entry: K11__0123}

பிறர்நாட்டைக் கைப்பற்றச் செல்லுங்கால் தானை யானை குதிரை என்ற மூவகைப் படைகளும் இயங்கும்போது அப்படைகளிடையே எழும் ஆரவாரம்; வெட்சி போல மறைவாகச் செல்லுதல் வேண்டாமையால், படைவீரர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்லுதல் இவ்வஞ்சித்துறைக் குண்டு.

போர்மேற் செல்லும் அரசன், அவன் ஆற்றலை எதிரூன்றிச் சிதைக்க வரும் அரசன் என்ற இருபெருவேந்தரின் ஆரவாரம்.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘வஞ்சியரவம்’ ‘காஞ்சி அதிர்வு’ என்னும் (3-2; 4-20). வீரசோழியம் வாளா ‘அரவம்’ என்னும் (கா. 101) (தொ. பொ. 63 நச்.)

இயமத்துள் அடங்குவன -

{Entry: K11__0124}

‘நாலிரு வழக்கின் தாபதப் பக்கத்’துள் ஒன்று இயமம். தன் நெஞ்சறிவது பொய்த்தல், பிற உயிர்க்கு உறுகண் செய்தல், ‘பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம்’ (கு. 282) எனக் கருதல், தவம் மறைந்து அல்லவை செய்தலாகிய (கு. 274) கூடாவொழுக்கம், நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை (கு. 331) என்னும் இவ்வைந்து வகைக் குற்றங் களையும் நீக்குவது இயமமாம். (பா. வி. பக். 39)

இயமம் -

{Entry: K11__0125}

‘நாலிரு வழக்கின் தாபதப் பக்கம்’ ஆகிய, அறிவர் கூறிய ஆகமத்தின் வழிநின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியும் கூறுகளுள் ஒன்று. பொய், கொலை, களவு, காமம், பொருளாசை என்னும் இவ் வைந்தனையும் அடக்குவது இயமம் என்ப.(தொ.பொ. 75 நச்.)

இயல்பு -

{Entry: K11__0126}

இது வல்லாண் முல்லை என்னும் வாகைத்துறை. (சாமி. 141.)

இயன்மொழி வாழ்த்து -

{Entry: K11__0127}

அரசனது இயல்பினைக் கூறி வாழ்த்துவது.

மன்னன்பாற் சென்ற பரிசிலன் அவனை வாழ்த்தி, “பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்கு போர்வையும் ஈந்தனர்; அன்னோர் போல நீயும் எனக்கு ஈதல் வேண்டும்” என வேண்டுவது, இத்துறை.

இது தொல்காப்பியத்துள் ‘அடுத்தூர்ந்து ஏத்திய இயன் மொழி வாழ்த்து’ (பொ. 90 நச்.) எனப்படும்.

இது பாடாண்திணைக்கண்ணதொரு துறை. (பு. வெ. மா. 9-6.)

இயன்மொழி வாழ்த்துப் பக்கம் -

{Entry: K11__0128}

மன்னன் ஒருவனுடைய சிறப்புஇயல்புகளை “வாட் போரில் வல்ல நம் அரசன் அப்போரில் தன்னுயிரைப் பாதுகாத்தலை நினையான்; தான் இரவலர்க்கு ஈயுங்கால் இவ்வளவே வழங்குதல் வேண்டும் என்ற வரையறை கொள்ளான்; உயிர்களைப் பேணும் திறத்தில் இன்னோரையே காக்கவேண் டும் என்ற வரையறை செய்யான்” என்றாற் போல எடுத்துக் கூறும் பாடாண்திணை. (பு. வெ. மா. 9-7)

இருகோன் சுற்றம் முற்றும் இறத்தல் -

{Entry: K11__0129}

இது ‘தொகைநிலை’ என்னும் தும்பைத்திணைத் துறை. (பு. வெ. மா. 7-28) சாமி. 139.

‘இருமூன்று மரபின் ஏனோர் பக்கம்’ -

{Entry: K11__0130}

அறுவகை இலக்கணமுடைய வணிகர் பக்கமும், வேளாளர் பக்கமும்.

ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் ஆகிய அறுவகை இலக்கணத்தையுடைய வணிகர் பக்கம். வேதம் ஒழிந்தன ஓதல், ஈதல், உழவு, நிரை யோம்பல், வாணிகம், வழிபாடு ஆகிய அறுவகை இலக்கணத் தையுடைய வேளாளர் பக்கம். வணிகரையும் வேளாளரையும் சேர்த்துக் கூறியமை வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்கும் ஒத்தலின்.

இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது. பெண்கோடல் பற்றி வேட்டல் உளது எனக்கொண்டு வேட்டலைக் கூட்டி ஆறு என்பாரும் உளர். (தொ. பொ. 74 நச்.)

வேளாண் மாந்தர்க்குரிய அறுவகையாவன உழவு, உழவு ஒழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி. (74 இள.)

ஏனோர் அந்தணரும் அரசரும் ஒழிந்த ஏனைய தமிழ்மக்கள். அவர்கள் ஆயர் குறவர் உழவர் பரதவர் என முல்லை முதலிய நானில மக்களும், நிலக் குறிப்பின்றி யாண்டுமுள்ள வினை வலர் ஏவல்மரபினர் என்ற இருவகையின் மக்களுமாக மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகள். (புறத். 20 பாரதி)

அகத்திணை குறிக்கும் அடியோர் பிறர் போல் இன்ப ஒழுக்கம் ஏற்பார் ஆயினும், தாம் பிறர் உடைமையாய்த் தனிவினை உரிமை தமக்கு இலர் ஆதலின், வாகைக்கு உரியவர் ஆகார் என்பது வெளிப்படை அவர் ஒழியத் தமிழர் அறுவகையாரே வாகைக்கு உரியவர். (புறத். 20 பாரதி)

வணிகர் தொழில் - ஓதல், ஈதல், உதவி, விருந்தோம்பல், நிரைகாத்தல், வாணிகம்; வேளாளர் தொழில் - ஓதல், ஈதல், உதவி, விருந்தோம்பல், நிரைகாத்தல், உழவு. (பொ. 283 குழ.)

‘இருமூன்று மரபின் ஏனோர் பக்கம்’ -

{Entry: K11__0131}

நான்மறை ஓத்துக்களின் வழிவந்த ஆகமம் முதலாய நூல்களையும் பிறகலை நூல்களையும் செய்யுள் நூல்களை யும் ஓதலும், மன்னரால் சிறப்புப் பெற்றவழி பகைமேற் சேறலும், தூது போதலும், துணைவயின் செல்லுதலும், காவல் மேற்கோடலும், வாணிகம் முதலியவற்றான் பொரு ளீட்டலும் உழுது பயன்விளைத்துப் பொருளீட்டலும் ஆகிய அறுவகைப்பட்ட வினைகளின்கண் வணிகரும் வேளாண் மாந்தரும் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தலால் எய்தும் வாகை. (தொ. புறத். 20 ச. பால)

புறப்பொருள்வெண்பாமாலை இவற்றை வாணிகவாகை, வேளாண் வாகை என்னும் (8:10,11)

வீரசோழியம் ‘நாற்குலப்பக்க’த்துள் அடக்கும். (கா. 104)

இருவகைப்பட்ட பிள்ளைநிலை -

{Entry: K11__0132}

தன்மேல் வரும் பகைவருடைய முன்னணிப்படையைத் தான் ஒருவனாகவே நின்று தடுத்தலும், வாள்தொழிலில் தவறுத லின்றி மாற்றாரைக் கொன்று தானும் இறந்துபடுதலும் என்ற இருவகைப்பட்ட, போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யும் தறுகண்ஆண்மை. இவை வெட்சியின் பாற்படுவன எனவும், போரில் முன்சென்றறியாதவர் சேறலின் வழு எனவும், போர்த்திணை எல்லாவற்றுக்கும் பொது எனவும் கூறுவர். (தொ. பொ. 60 நச்.)

போர்க்களத்திற்கு அதற்குமுன் சென்றறியாத வீர இளை ஞர்கள் புதிதாகப் போர்க்களம் சென்று செய்யும் அஞ்சாச் செயல்களே பிள்ளைநிலை ஆகும். (298 குழ.)

இருவகை வெட்சி -

{Entry: K11__0133}

நிரைகோடலும், பகைவர் கொண்ட நிரையினை மீட்டலும் என வெட்சித்திணை இருவகைப்படும். நிரை மீட்போர் கரந்தைப்பூச் சூடிப் பொருது நிரையினை மீட்டல் பற்றிப் பின்னுள்ளோர் நிரைமீட்டலைக் ‘கரந்தை’ எனத் தனித் திணை ஆக்குவர். (பு. வெ. மா. சூ.2, இ. வி. 601)

‘இருவர் தலைவர் தபுதிப் பக்கம்’ -

{Entry: K11__0134}

இருபெருவேந்தர்தம் தானைத்தலைவரும் தத்தம் வேந்தர்க் காகத் தார்தாங்குதலே யன்றி, அத்தலைவர் இருவரும் தம்முள் பொருது வீழ்தல். ‘பக்கம்’ என்றதனான், அவருள் ஒருவர் வீழ்தலும் கொள்ளப்படும். தலைவரே யன்றிப் பிறரும் அவ்வாறு போரிட்டாலும் இத்துறையின் பாற்படும். இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

‘ஒருத்திபால் கொண்ட காதலால் உடன்வயிற்று இருவராம் சுந்தோபசுந்தர் தம்முள் போர்மிக்கு நெருக்கினமை போல, துச்சாதனன் மைந்தனாம் துச்சனியும், விசயன் மைந்தனாம் அபிமன்னுவும் தம்முள் உடன்று போர்தொடங்கிய காலை, மிக்க சீற்றத்தோடே படைகளை ஏவியும் இழந்தவை மீட்டும் தேர்மீது தமியராய்த் தோன்றாமல் தரைமிசை நின்று சுடர்நோக்கி வஞ்சினம் மொழிந்து, மண் போர்த்த வடிவத் தோற்றத்தோடே, கொடிகள் தம்முள் பிணங்கி வீழ்வன போல இறுதியில் இருவரும் தம்முள் வீழ்ந்து மெய்தீண்டிப் போர் செய்தபோது, இருபெரு வேந்தரும் பெரிதும் உவந்தனர்’ (பாரதப் பாட்டு) (தொ. பொ. 72 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘இருவரும் தபுநிலை’ என்பதன்கண் அடக்கும். (7 : 12)

‘இருவர் மாய்ந்தும் அகலாப் போர்நிலை’ - சாமி. 133

‘இருவரும் தபுநிலை’ என்பது தும்பைத் திணையுள் ஒருதுறை (பு. வெ. மா. 7 : 12)

இருவரும் தபுநிலை -

{Entry: K11__0135}

தம் சேனையிரண்டும் புறங்கொடாமல் போரிட்டுக் களத்தில் மடிய, இருதிறத்து வேந்தர்தாமும் பகைமையால் பொருது களத்தில் உயிர் நீத்தமையைக் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 : 12)

இல்லாண்முல்லை -

{Entry: K11__0136}

மற்றவர் எய்தும் வளங்களைவிடத் தன் கணவனுடைய இல்லறவளம் சிறப்புடையது எனக் கருதும் கற்புடை மனை யாட்டி தன் கணவனடிகளை நாளும் தொழுது இயன்ற அளவு விருந்தோம்பி இரந்தவர்கட்கு ஈந்து மனநிறைவுடன் வாழும் இல்லறவாழ்க்கைச் சிறப்பினை எடுத்துக் கூறும் முல்லைப் பொதுவியற்பாலதொரு துறை. (பு. வெ. மா. 13 - 5.)

இலக்கணவிளக்கத்தின் கரந்தைத் துறைகள் -

{Entry: K11__0137}

இலக்கண விளக்கத்துள் வெட்சிப்பகுதி இரண்டனுள் பின்னது கரந்தையெனப் பெயர் இடப்பட்டுள்ளது. இதன் பாற்படும் 27 துறைகள் வருமாறு :-

1) மீட்க எனப் பணித்தல், 2) படை இயங்கு அரவம், 3) பறவாப்புள் தெரிதல், 4) நடைவயின் சேறல், 5) நன்கு உணர் உசா, 6) புறத்து இறை, 7) திறம்படப் பொருதல், 8) புண்ணொடு வருதல், 9) போர்க்களத்து ஒழிதல், 10) ஆள் எறி பிள்ளை, 11) பிள்ளைத் தெளிவு, 12) பிள்ளையாட்டு, 13) கையறு நிலை, 14) நெடுமொழி கூறல், 15) பிள்ளைப்பெயர்ச்சி, 16) வேத்தியல் மரபு, 17) குடிநிலை, 18) ஆ பெயர்த்துத் தருதல், 19) அருஞ்சமர் விலக்கல், 20) நலிவின்று உய்த்தல் 21) நண்ணு வழித் தோற்றம், 22) நிறைத்தல், 23) பாதீடு, 24) உண்டாட்டு, 25) கொடை, 26) துடிநிலை, 27) கொற்றவைநிலை என்பன. (இ. வி. 604)

இலக்கணவிளக்கப் புறப்பொருள் திணைகள் -

{Entry: K11__0138}

இருவகை வெட்சி, வஞ்சி, இருவகை உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என எழுவகைத் திணைகளாகப் புறப்பொருள் இலக்கணவிளக்கத்துள் பகுக்கப்பட்டுள்ளது. ஒழிபு இறுதிக்கண் கூறப்பெறும். ஒழிபை விடுத்தால் புறத்திணைகள் ஏழே என்பது. (இ. வி. 60)

இலக்கணவிளக்க வெட்சித் துறைகள் -

{Entry: K11__0139}

‘தண்டத் தலைவரைத் தருகஎனப் பணித்தல்’ முதலாக ‘வெறியாட்டு’ இறுதியாக அமைந்த 22 துறைகளாம்.

இலைபுனை வாகை சூடல் -

{Entry: K11__0140}

‘வாகை’ காண்க. (பு. வெ. மா. 8-1, இ. வி. 613 - 1)

இவுளிமறம் -

{Entry: K11__0141}

இவுளி - குதிரை. “மிகவும் உயரிய மதிலகத்தே பகைவர் உயிரைக் கவர்தற்கு விரைந்தோடும் குதிரையின் வேகத்தைத் தடுத்தல் வேண்டா” என்று மதிலகத்து வீரர் கூறும் நொச்சித்துறை. (பு. வெ. மா. 5-5.)

இற்கொண்டு புகுதல் -

{Entry: K11__0142}

இறந்த பெருவீரனுக்கு நடுகல் இடத்தே அழகான ஒரு கோயிலை அமைப்பதற்கான பொதுவியல் துறை. இல் - கோயில்; கொண்டு புகுதல் - அமைத்தல். கல் நட்ட இடத்தில் கோயில் அமைத்தல் மரபேயன்றி, வேறோரிடத்தே கோயிலமைத்து அக்கோயிற்கு, முன்னரே நடப்பட்ட கல்லைப் பெயர்த்துக்கொண்டு சேறல் மரபன்மையின், இற்கொண்டு புகுதல் என்பது கோயில் அமைத்தல் என்னும் பொருட்டாகவே வந்துள்ளது. (பு. வெ. மா. 10 : 14)

இறந்தோர்க்குப் பாணர் கடன் கழித்தல் -

{Entry: K11__0143}

இது ‘பாண்பாட்டு’ என்னும் தும்பைத்திணையின் துறை. அது காண்க. (சாமி. 137.)

இறை மழலைச் சேய்க்கு உரைத்தல் -

{Entry: K11__0144}

‘குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி’ எனவும், ‘குழவி மருங்கின் கூறிய பகுதி’ (இ.வி. 617-48) எனவும் கூறப்படும் பாடாண்துறை. (சாமிநா. 146); ‘குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி’ காண்க.

‘இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்’ -

{Entry: K11__0145}

“இத்தன்மைய தொன்றனைச் செய்தல் ஆற்றேனாயின் இன்னன் ஆகக் கடவேன்” என்னும் வஞ்சினக் காஞ்சி.

அது தான் செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வரும் குற்றத்தான் “உயிர் துறப்பேன்” என்றல். சிறப்பு வீடுபேறன்றி உலகியலில் பெறுஞ் சிறப்பு. (தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் காஞ்சித்திணைக் கண் ஒன்பதாம் துறை. வீரசோழியத்துள் ‘சூளுறவு’ எனப்படும். (கா. 102)

‘இன்னன் என்று இரங்கும் மன்னை’ -

{Entry: K11__0146}

ஒருவன் இறந்துழி அவன் இன்ன தன்மையன் என்று ஏனை யோர் இரங்கிய கழிவுப்பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சி.

இது பலவற்றின் நிலையாமை கூறி இரங்குதலின், மன்னைக் காஞ்சி எனப்பட்டது. பெரும்பாலும் இது மன் என்னும் இடைச்சொல் பற்றியே வரும் என்றற்கு மன் கூறினார். இதனை ஆண்பாற் கையறுநிலை எனினும் அமையும்.

அதிகமான் இறந்துழி ஒளவையார் பாடிய ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ என்னும் புறப்பாடல் (புறநா. 235) மன் அடுத்து வந்தது. ‘மன்’ கழிவிரக்கப் பொருள் தந்தது. (தொ. பொ.79 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலையுள் இது காஞ்சித் திணைக்கண் 20ஆம் துறையாகவுள்ளது.

ஈ section: 1 entries

ஈகை -

{Entry: K11__0147}

பகைவர்மேற் செல்லக்கடவ தன் தானைத்தலைவர்க்குப் பெருங்கொடைத் தண்ணளி நல்குதல் என்ற வஞ்சித்துறை. ‘கொடுத்தல் எய்திய கொடைமை’ காண்க. (வீ.சோ. 101)

உ section: 34 entries

உட்காது நிற்கும் நோன்றார் -

{Entry: K11__0148}

நோனார் - போர் செய்தற்கு ஆற்றாதவர் - அஞ்சுபவர். நோன்றார் - போர் செய்யும் ஆற்றலுடையவர் - அஞ்சாதவர். அஞ்சாது நிற்பவர் போர் செய்யும் ஆற்றலுடையவரே. அவர்கள் போர்கண்டு சிறப்புச் செய்யும் தேவரும், பிணம் தின்னும் பெண்டிரும், படையாளர் தாயரும், அவர்தம் மனைவியரும், கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும், கண்டோரும், பிறரும் ஆவர். (தொ. பொ. 72 நச். உரை)

உடனிலை -

{Entry: K11__0149}

பாடாண்திணையைச் சார்ந்த ஒருதுறை. அரசர்இருவர் உடனிருந்தாரை ஒருவர் தகுதியும் குறையாமல் பாடி இருவர் நட்பும் இணைந்திருப்பதே அவருக்கும் அவர்தம் நாடுகட்கும் நலன் பயப்பதாம் என்ற கருத்தமையச் சிறப்பித்துப் பாடப்படும் பாடாண் துறை ‘உடனிலை’ எனக் கருதப் படுகிறது. இத்துறை தொல்காப்பியத்துளோ, புறப்பொருள் வெண்பா மாலையுளோ இடம் பெற்றிலது.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருகாலத்து ஒருசேர நட்புரிமையொடு வீற்றிருந்த நிலை மைக்கண், அவர்களைக் கண்ணுற்ற காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் அவர்கள்தம் நட்பு நீடுவதாகுக என வாழ்த்திப் போற்றும் பாடல் ‘உடனிலை என்ற துறையில் அமைந்துள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது. (புறநா. 58)

இது போன்றே உள்ள புறநானூறு 367ஆம் பாடலின் துறை ‘வாழ்த்தியல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடைபடை -

{Entry: K11__0150}

இது தும்பைத்துறைகளுள் ஒன்று.

உடைபடையாவது ஒருவனுக்குப் பல படைத்தலைவரும் வாள்கொண்டு போரிடும் படை உடைந்தோடுதல். அதற்கு நூழில் என்பது பெயராம். (வீ. சோ. 105)

‘பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன், ஒள்வாள் வீசிய நூழில்’ காண்க.

உண்டாட்டின் வகைகள் -

{Entry: K11__0151}

நாடு வாழ்த்தல், அரசனை வாழ்த்தல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

உண்டாட்டு -

{Entry: K11__0152}

நிரை கொண்ட மகிழ்ச்சியால் விருந்துண்டு களித்தல்

நிரை பகுத்த மறவர் களிப்பினால் அயரும் விளையாட்டு. (தொ. பொ. 61 இள.)

வெட்சிமறவர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல். (பாரதி)

நிரை கொண்டார் தாம் கொண்ட நிரையைப் பார்த்துத் தாம் கொண்ட மகிழ்ச்சியால் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடலும், நிரை மீட்டோர் வென்று நிரை மீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும். (பொ. 58 நச்.)

இது வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்று. (பு.வெ. மா. 1 : 15)

இதனை வீரசோழியம் ‘களித்தல்’ என்னும். (கா. 99)

இலக்கண விளக்கம் இதனை வெட்சியின் இரு கூறுகளாகிய வெட்சி கரந்தை இரண்டன்கண்ணும் கொள்ளும். (603, 604)

உயர்மொழிக் காஞ்சி -

{Entry: K11__0153}

நல்லவர் உறையும் உலகமாகிய தேவருலகினை எய்தும் வண்ணமாக ஒருவர்க்குப் புலவர் ஒழுக்கத்தினை அறிவு கொளுத்தும் முறை. (திவா. பக். 234)

உயிர்ப்பலி -

{Entry: K11__0154}

வீரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொ. பொ. 59 நச். உரை) ‘அவிப்பலி’ காண்க.

உயிர் வேள்வி வேட்டல் -

{Entry: K11__0155}

இலக்கணவிளக்கம் கூறும் தும்பைத் துறைகளுள் ஒன்று. ‘தன்னை வேட்டல்’ காண்க. (இ. வி. 611 - 26)

உவகைக் கலுழ்ச்சி -

{Entry: K11__0156}

பலவான வாள் வடுக்கள் பதிந்த தன் கணவனது உடலைப் போர்க்களத்தே கண்ட மறக்குல மடந்தை உவகைக் கண்ணீர் உகுத்தமை கண்டு, அவள்கணவன் உயிரைப் பிரித்த கூற்றமும் நாணும் நிலையைக் கூறும் தும்பைத்துறை. (பு.வெ.மா.7:25)

உழபுலவஞ்சி -

{Entry: K11__0157}

பகைவர் நாட்டிலுள்ள நெடிய பரந்த ஊர்களை, ஆண்டு இல்லங்களில் தங்கிய மகளிர் அஞ்சி அலறி ஊர்ப் பொது விடத்தை நோக்கி வருமாறு, தீயிட்டுக் கொளுத்துதல் என்னும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3 : 14)

இது தொல்காப்பியத்தில் ‘எரிபரந்தெடுத்தல்’ எனப்படும்.

(தொ. பொ. 63 நச்.)

உழவன் வென்றி -

{Entry: K11__0158}

பாடுபட்டு உழைத்து மற்றவரைத் தன் வேளாண்மையால் காக்கும் திறமாகிய, நிலத்தின் செவ்வி பார்த்து நன்செய் புன்செய்களில் ஏர்பூட்டி உழுது பருவத்திலே விதைத்துப் பயிரைப் பாதுகாத்து, எண்வகையுணவுகளையும் பல்லுயிர்க் கும் தரும் வேளாளன் உலகிற்குச் சிறந்த செல்வம் ஆகும் செய்தியைக் கூறும் புறப்பொருள் வெண்பாமாலைத் துறை.

இது வாகைத்திணையின் ஒழிபாக நூலினது இறுதியில் கூறப்படுவது. (பு. வெ. மா. 18- 4)

உழிஞை -

{Entry: K11__0159}

தம் முடிமீது உழிஞைமாலையைச் சூடிக்கொண்டு, பகைவரது நிறைந்த குறும்பினைக் கைப்பற்ற நினைதல். (குறும்பு - மதில்) (பு. வெ. மா. 6- 1)

உழிஞை அரவம் -

{Entry: K11__0160}

மதில் முற்றுகையிடும் மன்னனுடைய ‘தேயா ஆழியின் தேரும் மாவும்’ மாக்களும் ‘கந்துகோள் ஈயாது காழ்பல முருக்கும்’ யானையும் எழுப்பும் அரவத்தினை வருணித்துப் பாடும் உழிஞைத்திணைத் துறை. (கந்துகோள்...................... முருக்கும் - கட்டுத்தறியில் நிற்றலுக் கிசையாது அதனைப் பலவாக முயன்று அசைக்கும்) (பதிற். 77)

உழிஞை இருநால்வகைத்தாதல் -

{Entry: K11__0161}

உழிஞையின் பகுதி எட்டனுள், ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலிய நான்கும் அரண்முற்றுவோனுக்கும், ‘அகத்தோன் செல்வம்’ முதலிய நான்கும் அரண் முற்றப்படு வோனுக்கும் உரிய துறைகளாதலின் அவை ஒவ்வொருவருக் கும் நந்நான்காக இருபகுதிப்பட்டு எட்டாயின. (தொ. பொ. 66 நச் .)

உழிஞைக் குடைநாட்கோள் -

{Entry: K11__0162}

பகைவரது மதிலரணைக் கைப்பற்றக் கருதிய உழிஞை வேந்தன், நல்ல நாளில் நல்ல நேரத்தில் தன் குடையைப் புறவீடு செய்தல். (பு. வெ. மா. 6-2)

உழிஞைத்திணையது இலக்கணம் -

{Entry: K11__0163}

வலிமை மிக்க அரணத்தை முற்றுதலும் அழித்தலுமாகிய தன்மைகளை யுடையது உழிஞை. (தொ. பொ.66 இள.)

வேற்று வேந்தன் குலத்துக்கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற வலி பொருந்திய கோட்டையைச் சென்ற வேந்தன் முற்றுகையிடுதலும், இருந்த வேந்தன் காத்தலுமாகிய இரண்டு வழியாகிய இலக்கணத்தையுடையது உழிஞைத் திணை. (65 நச்.)

கெடாத தலையான காவலையுடைய கோட்டையை வளைத்தலும், எயிற்காவலர் எதிர்ப்பை அழித்து ஊரைக் கைப்பற்றுதலும் என்ற அம்முறைகளின் தன்மையை உடையது உழிஞை. கோட்டையை வளைத்தல் மாத்திரமே உழிஞையாகாது; கோட்டையை வளைத்துக் கைப்பற்றிக் கொள்ளுதலும், அங்ஙனம் பகைவர் கைப்படாதவழி வளைப் புண்ட கோட்டையை உரியவன் காத்துக்கோடலும் உழிஞையாம். (புறத். 11 பாரதி)

எதிர் சென்ற வஞ்சி வேந்தன் பொருது தோற்றுப்போய்க் கோட்டைக்குள் சென்று அடைத்திருத்தலும், சென்ற வேந்தன் முற்றுகையிடுதலும் உழிஞையாம். சென்ற வேந்தன் முற்றுகை யிடாமல் சென்றுவிடின் அஃது உழிஞை ஆகாது. (பொ. 275 குழ.)

உழிஞைத் திணையின் பொதுவியல்பு -

{Entry: K11__0164}

உழிஞைத் திணையாவது, அடைத்திருக்கும் பகைவேந்தனது முழுமுதல் அரணத்தைச் சூழ்ந்து அழித்தற்குப் புறத்தோன் முற்றுதலும், கைக்கொள்ளுதலும், அகத்தோன் அவனைத் தடுத்துக் காத்துக்கோடலும் என்னும் அத்தகைய இலக்கண மரபினை யுடையது. (தொ. புறத். 10 ச. பால.)

உழிஞைத்திணையின் வகைகள் -

{Entry: K11__0165}

1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம், 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு, 3. தொல் எயிற்கு இவர்தல், 4. தோலின் பெருக்கம், 5. அகத்தோன் செல்வம், 6. முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம், 7. திறப்பட ஒருதான் மண்டிய குறுமை, 8. வருபடை பேணார் ஆரெயில் என்ற எட்டும் உழிஞைத்திணையின் வகைகள் என்பதும் துறைகள் ஆகா என்பதும் சோமசுந்தர பாரதியார் கருத்து. (புறத். 12)

உழிஞைத் திணையுள் இருவர்க்கும் உரிய துறைகள் -

{Entry: K11__0166}

1. குடைநாட் கோள், 2. வாள் நாட்கோள், 3. மடையமை ஏணிமிசை மயக்கம், 4. அமர்வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு, 5. அகத்தோன் வீழ்ந்த நொச்சி 6. புறத்தோன் வீழ்ந்த புதுமை, 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசி, 8. ஊர்ச்செரு வீழ்ந்த பாசி மாறன், 9. மதில்மிசைக்கு இவர்ந்தோன் பக்கம், 10. இகல்மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம், 11. வென்ற வாளின் மண்ணுதல், 12. உழிஞைத் தொகைநிலை என்ற பன்னிரண்டும் உழிஞைத் திணையுள் இருவர்க்கும் உரிய துறைகளாம். (தொ. பொ. 68 நச்.)

உழிஞைத்தும்பை -

{Entry: K11__0167}

மன்னன் ஒருவனான் முற்றுகையிடப்பட்ட வேந்தனை முற்றுகையினின்றும் விடுவித்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி, அரணத்துள்ள மன்னன் வெளியே வந்து களம் குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களம் குறித் துழிப் புறத்தோனும் களம் குறித்துப் போர் செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத் தும்பையாம். (தொ. பொ. 71 நச்.)

உழிஞைத் தொகைநிலை (1) -

{Entry: K11__0168}

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று.

அம்மதில் அழிந்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி அடைதல். (தொ. பொ. 69 இள.)

உழிஞையார் இருவருள் வென்றவர் செய்யும் வாள்மங்கலம் நிகழ்ந்த பின்னர், இருவருள் வென்றவர் பரந்துபட்ட படைக் கடற் கெல்லாம் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருக எனத் தொகுத்தல். (68 நச்.)

தோற்றோர் தொகுதியாக அழியும் துறை தொகைநிலை ஆகும். மக்கள் தொக்க தொகுதியாய்த் தொலைவதனையே ‘தொகைநிலை’ என்பது தொல்காப்பியர் கருத்து. (புறத். 13 பாரதி.)

இளம்பூரணரது கருத்தை யொட்டித் தொகைநிலைபுறப் பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ளது. (6 : 32)

தொகைநிலை - இருவர் சேனையும் தொக்க நிலை. (வீ.சோ. 103 உரை)

உழிஞைத் தொகைநிலை (2) -

{Entry: K11__0169}

உழிஞைப் போரில் வென்றவனது ஆற்றலைக் கண்ட வேறு சில மன்னரும், தம்மதில்களும் அவனான் அழிக்கப்படும் என அஞ்சி, அவன் கைப்பற்றிய மதிலை, அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்வதற்காகக் கூட்டமாகத் திரண்டு வந்தடைதல் என்ற உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 32.)

உழிஞைத் தொகைநிலை (3) -

{Entry: K11__0170}

அரணத்தைக் கைப்பற்றி வென்ற உழிஞைமறவர் தம் வேந்தனை ஏத்திப் போற்றவேண்டிக் குழுமுதலும், நொச்சி மறவர், வென்று நிற்கும் வேந்தனைப் பணிந்து அவனுக்கு ஆளாகக் குழுமுதலும் தொகைநிலையாம். இருசாராரும் வெவ்வேறு நோக்கில் தொகுவர். (தொ. புறத். 13 ச. பால.)

உழிஞைப் புறத்திறை -

{Entry: K11__0171}

வீரம் மிக்க உழிஞைவீரர் பலர் திரண்டு பகைவருடைய வலிமையும் காவலும் மிக்க கோட்டைக்கு வெளியே சேர்ந்திருத்தல். ‘புறத்திறை’ காண்க. (பு. வெ. மா. 6 : 10)

உழிஞை மருதத்திற்குப் புறனாதல் -

{Entry: K11__0172}

மருதம் வயல் சூழ்ந்த நிலம். கோட்டை (-மதில்) மருத நிலத்தின்கண்ணதே. தலைவன் வாயில் வேண்டத் தலைவி ஊடிக் கதவு அடைத்திருப்பது போலப் பகைவன் முற்றுகை யிடக் கதவு அடைத்திருக்கும் அகத்துழிஞை யானும் வெளியி லுள்ளவன் கதவு திறத்தலை வேண்டத் திறவாது அடைத் திருத்தல் ஒப்புமையானும், தலைவி பின்னர் உணர்ந்து ஊடல் தணிந்து கதவு திறந்து கூட விரும்புவதுபோல உள்ளிருப்ப வனும் போர் செய்ய வேண்டி வெளிப்பட விரும்புதல் ஒப்புமை யானும், மருதமாகிய ஊடல் ஒழுக்கம் போல முற்றுதலாகிய உழிஞைக்கும் பெரும்பொழுது வரையறையின்மை ஒப்புமை யானும், சிறுபொழுதிலும் ஊடற்குரிய விடியற்காலமே போர்முற்றுகைக்கு ஏற்ற காலமாதல் ஒப்புமையானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. (தொ. பொ. 64 நச்.)

மருதத்திற்கும் உழிஞைக்கும் அரணுடைய ஊர்களே நிலைக் களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருதஒழுக்கம் ஆதல் போல முற்றிய ஊர்அரணின் அகப்புறப்படைகள் தம்முள் கலாய்த்து இகலுதலே உழிஞை ஆதலானும் மருதத்திற்கு உழிஞை புறனாயிற்று. (புறத். 9 பாரதி.)

உழிஞையான் -

{Entry: K11__0173}

பகைமன்னனுடைய மதிலை உழிஞைப்பூச் சூடி முற்றுகை யிடும் வீரன் ஒவ்வொருவனும் உழிஞையான் எனப்படுவான்.

(தொ. பொ. 67 நச். உரை)

உழிஞையின் இரண்டாம் பகுதி : நொச்சி -

{Entry: K11__0174}

அம்பினை எய்து ஆங்கே மறைந்துகொள்ளும்வகை அமைந்த இடம், உயரம், அகலம், திண்மை முதலான சிறப்புப் பலவும் அமைந்த மதிலரணைக் காப்போர் சூடிய நொச்சிப்பூவைச் சிறப்பித்துக் கூறும் துறை. (இவ்வீரர் திறங்களைக் கூறும் போர்த்திணை நொச்சியாம்.) (பு. வெ. மா. 5- 1)

உழிஞை, வஞ்சித்திணையின் பின்னர் வைக்கப்பட்ட காரணம் -

{Entry: K11__0175}

எஞ்சா மண்ணசையுற்ற வேந்தன், தன்மேல் வஞ்சி சூடி வந்த வேந்தனோடு எதிர்நின்று போரிடாது, அரணகத்து மறைந்து நின்று போரிடக் கருதியவழி, சென்று தலையழித்தலை எண்ணி வந்த வேந்தன் மதிலை முற்றுதலும், உள்ளகத்தை முற்றுதலும் ஆகிய ஒழுகலாறு ஆதலின், உழிஞை வஞ்சித் திணையின் பின்னர் வைக்கப்பட்டது. (தொ.புறத். 9 ச. பால.)

உழிஞை வேந்தன் -

{Entry: K11__0176}

தானும் உழிஞைப்பூச்சூடித் தன் படையாளரையும் உழிஞைப் பூச்சூட்டிப் பகைவர்மதிலை முற்றுகையிடும் மன்னன் உழிஞை வேந்தன் எனப்படும். (தொ. பொ. 65 நச்.)

உழுது வித்திடுதல் -

{Entry: K11__0177}

மதிலகத்திருந்த நொச்சியாராகிய பகைவரை வென்ற உழிஞை வேந்தன், மதிலின் உட்புறத்து மாளிகைகளை இடித்துத் தள்ளிக் கழுதைஏர்கொண்டு உழுது சினமிக்குக் கவடியும் கொள்ளும் விதைக்கும் திறம் கூறும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 26)

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு -

{Entry: K11__0178}

நினைத்ததை முடிக்கும் திண்ணிய திறலுடைய வேந் தனுடைய சிறப்பு. (தொ. பொ. 68 இள.)

தான் குறித்தவாறு வெற்றி பெறக்கூடிய வேந்தனது சிறப் பினை அவன் படைத்தலைவர் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது சென்றோரும் எடுத்துரைத்தல். (எ-டு : புறநா. 36, தொ. பொ. 67 நச்.)

குறித்ததை முடிக்க வல்ல வேந்தன், தன் படைத்தலைவர் முதலியவர்களைப் பாராட்டுதல்; வேந்தன் சிறப்பை வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் பிறரும் கூறுதல் எனினும் ஆம்.

வேந்தன் சிறப்பைப் படைத்தலைவர் கூறுவர் எனின், வேந்தன் கட்டளையின்றி மறவர்தாமே தம் விருப்பம் போல் செய்யும் தன்னுறு தொழிலாதலின், அஃது உழிஞை ஆகாது.

(தொ. பொ. 277 குழ)

இத்துறை உழிஞைவேந்தர் இருவர்க்கும் பொது. இள.

இத்துறை புறத்துழிஞையானுக்கே உரியது. நச்., குழ.

இஃது உழிஞை வகைகளுள் ஒன்று. (புறத். 12 பாரதி.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘அரச உழிஞை’ யுள் அடக்கும்.

வீரசோழியம் இதனை ‘வேந்தன் சிறப்பு’ என்று கூறும். (கா. 103.)

‘உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறை’ -

{Entry: K11__0179}

வெட்சிப்புறத் தும்பை, வஞ்சிப்புறத் தும்பை, உழிஞைப் புறத்தும்பை ஆகிய தும்பைப் போர்களிலும் பொதுவான தும்பைப் போர்க்குரிய தானைநிலை முதலிய துறைகள் உள என்பதற்காகப் ‘புல்லித் தோன்றும் பன்னிரு துறை’ என்று தும்பைத் திணையின் பன்னிரண்டு துறைகளும் பொதுவான அடையடுத்துக் கூறப்பட்டன. (தொ. பொ. 72 நச்.)

உன்னத்துப் பகைவன் -

{Entry: K11__0180}

அரசனுக்குப் போரில் வெற்றி உண்டாக வேண்டுமாயின், அவன் நாட்டகத்துள்ள உன்னமரம் தளிர்த்துச் செழித்து வனப்புடன் காட்சி வழங்கும். அவனுக்குக் கேடு நிகழ்வது உண்மையாயின், அம்மரம் தன் இலைகளை உதிர்த்து வாடிக் காட்சி வழங்கும். உன்னமரம் வாடிக்காட்டித் தனக்குத் தீங்கு வருவதைத் தெரிவித்தாலும் அது பற்றிக் கவலாது போரிடற்கு முந்திச் செல்லும் வீரன் ‘உன்னத்துப் பகைவன்’ எனப்படுவான். (பதிற். 61-6)

உன்னநிலை -

{Entry: K11__0181}

வீரமும் வெற்றியுமுடைய மன்னனை, நிமித்தம் பார்க்கும் உன்னமரத்துடனே சேர்த்தி உரைக்கும் திறம்.

‘ஓடா உடல்வேந்(து) அடுக்கிய உன்னநிலை’ காண்க.

வெட்சிவினை முன்முடித்தவனுடைய திறம் கூறி உன்ன மரத்தை நற்போரின் நாடல் ‘உன்னக்குறி’ என்று கூறப்பெறும் கரந்தைத் துறை. (வீ. சோ. 100 உரை)

“இம்மன்னனை எதிர்த்த பகைமன்னர் யாவரும் தோற்று வழிமொழிந்தனர் ஆதலின், உன்னமரனே! நீ நம் அரசனின் நல்லூழினை விளக்குவாய் போலக் கிளைகளெல்லாம் தளிர்ப் பாயாக!” என்று இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை விளக்கும். (பு. வெ. மா. 10-4)

ஊ section: 5 entries

ஊர்கொலை -

{Entry: K11__0182}

ஆநிரை கவரச் சென்ற மறவர் பகைவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு அங்கே நின்ற காவலரைக் கொன்று பகையறுத்தல். (பு. வெ. மா. 1:8)

இதனைத் தொல்காப்பியம் ‘முற்றிய ஊர்கொலை’ என்னும். (பொ. 58 நச்.)

ஊர்கொலை வகைகள் -

{Entry: K11__0183}

ஊரை வளைத்தல், ஊர்அழிவு கண்டோர் கூறல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

ஊர்ச்செரு -

{Entry: K11__0184}

அரிய காவற்காடும் ஆழமான அகழியும் அழியுமாறு காவற் காட்டை உழிஞையார் சிதைக்க, மேலும் அழியாவண்ணம் அஞ்சா இயல்புடைய நொச்சிமறவர் உழிஞைமறவருடன் போரிட்டு ஆரவாரித்த செயலைக் கூறும் நொச்சித் துறை.

இது தொல்காப்பியத்தில் ‘ஊர்ச்செரு வீழ்ந்த பாசிமறன்’ (பொ. 68 நச்.) என்று கூறப்பெறும். (பு. வெ.மா. 5 - 3)

‘ஊர்ச்செரு வீழ்ந்த பாசிமறன்’ -

{Entry: K11__0185}

பாசி ஒழிய ஊர்ச்செருவின்கண் விரும்பிய பாசிமறன். (தொ. பொ. 69 இள.)

அவ் விடைமதிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய பாசிமறன்; பாசி என்றார், நீரிற் பாசி போல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின்.

இது புறத்தோன் அகத்தோன் இருவர்க்கும்பொது. (68 நச்.)

அரணகத்து ஊரில் அமர்விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப்போரின் தறுகண்மை. (புறத். 13 பாரதி)

இடைமதிற்கும் புறமதிற்கும் இடையேயுள்ள ஊரின்கண் போர் நிகழ்த்துதல். (பொ. 278 குழ.)

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று.

இதனை அகத்துழிஞையுள் அடக்குப. (பு. வெ. மா. 6 : 21)

‘ஊரொடு தோற்றம் உரித்தாதல்’ -

{Entry: K11__0186}

ஊரின்கண் நிகழும் காமப்பகுதி பேதை முதல் பேரிளம் - பெண் ஈறாக வருவது. அவரவர் பருவத்திற்கேற்பச் செய்யுள் கூறப்பெறும். (தொ. பொ. 83 இள.)

புணர்ச்சிவேட்கை ஊரில் பொதுமகளிரொடு கூடி வந்த விளக்கமும் பாடாண்திணைக்கு உரித்து. அது பின்னுள் ளோர் எழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்யும் உலாச் செய்யுளாம். (85 நச்.)

தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிச்சிறப்பும் பாடாண் திணையில் பாராட்டுதற்குரியன. (புறத். 30 பாரதி)

ஒரு பிள்ளை தெருவில் விளையாடும்போது ஊர்மகளிர் அவ்வாண்பிள்ளையின் நடை வடிவு அழகு குதலை முதலிய வற்றை வியந்து அதன்முன்னோர் செயலுடன் சேர்த்துப் புகழ்ந்து கூறுவதாகப் பாடுதலுறும் பிள்ளைப்பாட்டு. இதுவே பிற்காலத்து உலாச் செய்யுள் ஆயிற்று. (தொ. பொ. 293 குழ.)

புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்து 51ஆம் வெண்பாவிற்குரிய துறையாக இஃது ‘ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

எ section: 14 entries

எட்டியல் -

{Entry: K11__0187}

அழுக்காறிலாமை, அவாவின்மை, தூய்மை, ஒழுக்கம், குடிப் பிறப்பு, வாய்மை, புலமை, நடுவுநிலை என்பன. (வீ. சோ. 104)

இப்பண்புகளையுடைய சான்றோர் பகைவர்கண்ணும் தம்பாலார்கண்ணும் வேறுபாடு காணாது அவர்கட்குச் சால்புடைய நற்செய்திகளையே கூறுவர். நேர்மை தவறுத லுக்கு அஞ்சும் அவர்கள், மக்கள் யாவர்க்கும் அவர்தம் செல்வம் உடல்வலி துணைவலி குறித்து அஞ்சார்.

‘எட்டுவகை நுதலிய அவையம்’ என்னும் வாகைத்துறை நோக்குக.

எட்டுவகை நுதலிய அவையத்துப் பக்கம் -

{Entry: K11__0188}

எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமை. அது குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை - என இவை யுடையாராய் அவைக்கண் முந்தியிருப்போரது வெற்றியைக் கூறுதல். (தொ. பொ. 76 நச்.)

எண்வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப் படுகிற சிறப்பு. (தொ. புறத். 21 பாரதி)

குடிப்பிறப்பு - முன்னோர் நற்கருத்தைப் போற்றுதல்.

அவை - முறைமன்றம்.

அவையத்தார் - நடுவர், அமைச்சர் முதலியோர். (தொ.பொ. 284. குழ) புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘அவைய முல்லை’ என்றும் ( 8 : 19), வீரசோழியம் ‘எட்டியல் சான் றோர் பக்கம்’ என்றும் (கா. 104) கூறும்.

எடுத்தல் -

{Entry: K11__0189}

படையெடுத்தல் என்ற வஞ்சித்திணையின் துறை; பகைவர் நாட்டின்மீது எரியினைச் செலுத்துதல் என்பதும் ஆம்.

(வீ. சோ. 101)

‘எரிபரந்து எடுத்தல்’ காண்க.

எடுத்துச் செலவு -

{Entry: K11__0190}

படையெடுத்துச் செல்லுதல்; ‘மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு’ (தொ. பொ. 59 தோற்று. இள.)

எயில் -

{Entry: K11__0191}

‘மதில்’ நோக்குக.

எயில்கொளக் குறித்த உழிஞை -

{Entry: K11__0192}

‘உழிஞை’ காண்க. (இ. வி. 608 -1)

எயில்மிசை அழிந்த நொச்சி -

{Entry: K11__0193}

அஞ்சா நெஞ்சம் படைத்த நொச்சி மறவன் அழிபடை ஏந்தி, போர்ப்பொறிகளுடைய நெடிய மதில்மீது இருந்து போரிட்டுத் தன் தாள்கள் மதிலகத்தும் தோள்கள் மதிற்புறத்தும் வீழத் தன் உரிமை மகளிர் தன்னுடலைத் தழுவித் தன் வீரத்தைப் பாராட்ட வீரத்துறக்கம் அடைந்த செய்தி கூறும் நொச்சித் துறை.

‘எயில்தனை அழித்தல்’ காண்க.(பு. வெ. மா. 5 : 7) (இ.வி. 609-7)

எயிற்பாசி -

{Entry: K11__0194}

நொச்சி சூடிய அரண்காவலர்கள் ஆற்றல் மிக்கு எதிர்த்துத் தாக்கும் இயல்பிலராம் வகை, எயிலைச் சுற்றிக்கொண்டு பாசி படிந்தேறுவது போல, ஏணியில் ஏறிய உழிஞை வீரர்களுள் பகைவர் வீசிய வேலால் இறந்துபட்டார் ஒழிய ஏனையோர், பாம்பு போல ஊர்ந்து உடும்பு போலப் பிடியை விடாதுபற்றி மதில்மீது ஏறிய செய்தி கூறும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 19)

எயிற்போர் -

{Entry: K11__0195}

உழிஞைமறவரின் வாட்படை பாய்ந்து புண்பட்டுப் போன நிலையிலும், நொச்சிவீரர், தம் வீரம் சிதையாது மறமும் மானமும் கொண்டு எதிர்த்து நின்று மதிலுக்கு வெளியேயும் பகைவர்தம் தோள்வலிமையை அழித்தல் என்னும் நொச்சித் துறை. (பு. வெ. மா. 5 : 6)

எரித்த புலவஞ்சி -

{Entry: K11__0196}

உழபுல வஞ்சியென்னும் வஞ்சித்துறை; அது காண்க.

(சாமி. 133)

எரிபரந்து எடுத்தல் -

{Entry: K11__0197}

தானை, யானை, குதிரை என்ற படைகள் செல்லுங்கால் வழியில் பகைப்புலத்தில் தம் செலவைத் தடுக்கும் ஊர்களை நெருப்பிட்டு அழித்தல். இது வஞ்சித்திணைத் துறை.

மேற்செல்வோர், எதிர்ஊன்றுவோர் என்ற இருவகைப்பட்ட படையாளரும், இருவகைப் பகைப்புலத்துப் பரந்து சென்று எரியை எடுத்துச்சுடுதல். (தொ. பொ. 63 நச்.)

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்ட ரங்கண்ணனார் “கரும்பல்லது காடுஅறியாத பெருந்தண் மருத நிலம் பாழாக ஏமநன்னாட்டினை ஒள் எரி கவர ஊட்டினாய்” என்றது (புறநா. 16) போல்வது.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘உழபுலவஞ்சி’ (3 : 14) என்னும். வீரசோழியம் ‘எடுத்தல்’ (கா. 101) என்னும்.

எரிமூழ்கல் -

{Entry: K11__0198}

‘ஆஞ்சிக் காஞ்சி’ என்ற காஞ்சித்துறை. அது காண்க. (சாமி. 143)

எருமை மறம் -

{Entry: K11__0199}

போர்க்களத்தில் படைகளை விட்டு நீங்காமல் போர் புரியும் நிலையில், வேல்வீரன்ஒருவன் பின்னணிப் படையைத் தடுத்துக் கொண்டு, புறமுதுகிட்டோடும் தன் படைக்குப் பின்னே தான் மாத்திரம் யானைப்பிணங்களிடையே நின்று பெயராது போர் செய்த பெருமையைக் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 : 13)

இதனை ‘உடைபடை புக்குக் கூழை தங்கிய எருமை’ என்று தொல்காப்பியம் கூறும். (தொ. பொ. 72 நச்.)

எவர்க்கும் பூ விருப்பாய்ப் புகறல் -

{Entry: K11__0200}

காந்தள் என்னும் உழிஞைத்துறை (சாமி. 134)

ஏ section: 17 entries

ஏணி சார்த்தல் -

{Entry: K11__0201}

உழிஞைப் போரில் ஊன்றிய மறவர் அகமதில் அடைந்து, அம்பு எய்து மறையும்வகை அமைந்த மதில்மேலே ஏறிச் செல்லும்போது ஏணி சார்த்தியது கூறும் உழிஞைத்துறை; ‘ஏணிநிலை’ எனப்படும்.

“கற்பொறி பாம்புப்பொறி கனற்பொறி குரங்குப்பொறி விற்பொறி முதலியனவும், பகைவர் எறிந்த வேல்களும், தம்மைச் செயற்படாதவாறு விலக்கவும், அவை செய்யும் கொடுமைகளைத் தாங்கி அம்மதில்மேல் ஏணி பலவும் சார்த்தினார் மதிலை முற்றிய உழிஞை வீரர்கள்.” என்னும் துறை. (பு. வெ. மா. 6 : 18)

ஏணி நிலை -

{Entry: K11__0202}

‘ஏணி சார்த்தல்’ காண்க.

ஏணி மயக்கம் -

{Entry: K11__0203}

‘மடையமை ஏணிமிசை மயக்கம்’ காண்க.

ஏணியின் இவர் எயிற்பாசி -

{Entry: K11__0204}

எயிற்பாசி (பு. வெ. மா. 6: 19) காண்க. இ.வி. 608 - 19

ஏப்புழை ஞாயில் -

{Entry: K11__0205}

மதிலுள் மேடையாகிய பதணத்தின்கீழ் உள்ளிருந்து பகைவர் மேல் அம்பு எய்யும் துளைகள் பொருந்திய ஏப்புழை ஞாயில் என்னும் அறை ஒன்று மதிலைச் சுற்றி அமைந்திருக்கும். ஏ = அம்பு; புழை - துளை; ஞாயில் - அறை. இவ்வறைக்குள் மறவர் இருந்து மதிலைக் காத்துவருவர். இதனை ஏவறை என்றும் கூறுவர். பதணத்திலும் ஏவறையிலும் இருந்துகொண்டு மறவர்கள் பகைவர் மதில்மேல் ஏறமுடியாதபடி தாக்குவர். இத்தகைய மதில்உச்சியில் அமையும் உறுப்புக்களாகிய பதணமும் ஏவறையும், வெளிமதில் இடைமதில் உள்மதில் என்ற மூன்றுமதில்களிலும் அமைந்திருக்கும். (தொ. பொ. 275 குழ.)

ஏம எருமை -

{Entry: K11__0206}

இணையில்லா வீரன்ஒருவன் தன் கைக்கண் இருந்த ஒரே படையாகிய வேலினை தன்னைத் தாக்கவந்த யானையின் மேல் எறிந்து விட்டு, மீண்டும் தன்னைத் தாக்கவந்த போர் வீரர்களைத் தன்உடல் வலிமை மாத்திரம் கொண்டு தாக்கிப் போரிடும் திறத்தைக் கூறும் தும்பைத்துறை. (‘படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம்’ (தொ.பொ. 72 நச்.) என்று தொல் காப்பியம் கூறும். (பு. வெ. மா. 7:14)

‘ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற், பேஎய் ஓம்பிய பேய்ப்பக்கம்’ -

{Entry: K11__0207}

கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாம் இன்மையின், அருளிவந்து புண்பட்டோனைப் பேய் தானே காத்த பேய்க் காஞ்சி. பேய் காத்தது என்றமையின், ‘ஏமம்’ இரவில் யாம மாயிற்று. ஏமம் - காப்பும் ஆம். ஓம்புதலாவது, அவ்வீரன் உயிர்போம் துணையும் ஓரியும் நரியும் கிடந்தவன் தலையைக் கோடல் அஞ்சிப் பாதுகாத்தலாம். (தொ. பொ.79 நச்.)

இது சுற்றத்தார் இன்மை கூறலின், செல்வ நிலையாமை ஆயிற்று. பக்கம் என்றதனான் பெண்டிர் போல்வார் காத்த லும், பேய் ஓம்பாத பக்கமும் கொள்க. (தொ. பொ. நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் காஞ்சித் திணைக்- கண் 16ஆம் துறையாகிய ‘பேய்நிலை’ எனப்படுகிறது.

இத்துறை வீரசோழியத்தில் இல்லை.

ஏர்க்கள உருவகம் -

{Entry: K11__0208}

போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் போர்த் துறை. செங்குட்டுவன் ஆகிய வாள்ஏர்உழவன் களிறுகளா கிய எருதுகளைப்பூட்டி, வாட்படையைக் கோலாகக் கொண்டு ஓச்சி, பகை வீரர்களாகிய நெற்சூடுகளை வாங்கிக் கடாவிட்டு உழக்கியமை சிலப்பதிகாரத்துள் காணப்படும் (26: 232 - 234). புறநானூறு 369 ஆம் பாடலுள் முதற் பதினேழடிகளும் சிறந்த எடுத்துக்காட்டாம்.

“ஏந்தெழில் மருப்பினையுடைய கருங்கை யானை மேகமாகவும், வீரர்கள் பகைவர்மேல் எறிய உயர்த்திய வாள் மின்னலாகவும், குருதிப்பலி பெறும் முரசம் மேகமுழக்காவும், அரசர்களாகிய பாம்புகள் அஞ்சி நடுங்கும் வருத்த மிக்க பொழுதின்கண், விரைந்த செலவினையுடைய குதிரைகள் வீசும் காற்றாகவும், வில்லினின்று புறப்பட்ட அம்புகளாகிய மழை பொழிந்த இடமகன்ற போர்க்களத்தே, குருதி படிந்த ஈரமாகிய அவ்விடத்தில், தேர்களே ஏர்களாகவும் இருப்ப, விடியற் காலத்தில் புகுந்து நெடிய வேல் முதலிய கருவிகளை நீட்டி மாற்றார்தம் படைக்கருவிகள் கீழ்மேலாக மறிக்கப்பட்டு ஆழ்ந்த அப்படைச்சால் வழியே, சிதைத்து வீழ்த்தப்பட்ட படைக் கருவித்துகள்களை விதை போல வித்தி, கண்டார்க்கு அச்சம் உண்டாக்கும் மூளையும் நிணமுமாகிய பிணங்களாகிய பசிய பயிரினுடைய குவிக்கப்பட்டுயர்ந்த போர்வுகள் பலவற்றைக் கூட்டமாகிய நரிகளும் பேய்களும் ஈர்த்துச் சென்றுண்ண, பூதங்கள் காவல் செய்ய அப்பிணங் களாகிய நெல் பொலிந்த போர்க்களத்தினை அடைந்து போர்க்களம் பாடும் பொருநர் முதலியோர்தம் பாடல்களைக் கேட்க வேண்டி வீற்றிருந்த பெருமையோனே!” என்று மன்னன் விளிக்கப்படும் இப்பகுதிக்கண், சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவனை ஏர்க்கள உருவகம் தோன்றப் பரணர் பாடியுள்ளார்.

ஏரோர் களவழித் தோற்றிய வென்றி -

{Entry: K11__0209}

வேளாண் மாக்கள் விளையுள் காலத்துக் களத்துச் செய்யும் செய்கைகளைத் தேர் ஏறி வந்த கிணைப்பொருநர் முதலி யோர் வைக்கோற்போர் நிரம்பியிருக்கும் களத்தே சிறப்பித் துக் கூறல்.

அஃதாவது நெற்கதிரைக் கொன்று களத்தில் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்துடன் நுகர்தற்கு முன்னே கடவுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்கும் கொடைவெற்றி. (தொ. பொ. 76 நச்.)

இது களம் பாடுதலாகும். (தொ. பொ. 75 இள.)

களமர் களத்தில் நெற்போர் அடிக்கும் விழாஆர்ப்பு.

(தொ. பொ. புறத். 21 பாரதி.)

ஏர்க்களத்தைப் பொருநர் பாணர் முதலியோர் பாடுவர்.

(தொ. பொ. 284 குழ.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனைக் ‘கிணைநிலை’ என்னும் (8-32)

வீரசோழியம் இதனைப் பொதுவாகக் ‘களவழி’ என்னும். (கா. 104)

ஏழகநிலை -

{Entry: K11__0210}

ஏழகம் - ஆட்டுக் கிடாய். “யானை குதிரைமேல் இன்றி ஓர் ஆட்டுக்கிடாய்மேல் இவர்ந்து சென்றாலும், அரசன் ஆற்றல் குறையாது. அவனுக்கு அஞ்சிய பகைமன்னர் தம் மதிற் கதவுகள் தாழிட்டிருப்பர்” என்று அவனது அழியா ஊக்கத்தைக் குறிக்கும் பொதுவியல்துறை. (பு. வெ. மா. 10-5)

ஏழகநிலைப் பக்கம் -

{Entry: K11__0211}

ஆட்டுக்கிடாய்மேல் இவர்ந்து விளையாடும் இளமைப் பருவத்திலேயே அரசாட்சியை ஏற்றுத் திறம்பட நடத்தும் அரசனை இவன் இளையன்ஆயபோதே அரசனாகிவிட் டான் என்று கண்டு வியத்தல் வேண்டா. சிங்கக்குருளைகூடப் பெரிய யானையை அழிக்கும் ஆற்றலது” என்பது போலப் புகழ்வதும் ஏழகநிலையே. (பு. வெ. மா. 10 -6)

ஏறாண்முல்லை -

{Entry: K11__0212}

“என் தந்தை வீரமரணம் எய்த, நடுகல்லில் தெய்வம் ஆயி னான்; என் கணவன் போர்க்களத்திலேயே இறந்தான்; என் தமையன்மாரும் வலிமை ஓயும்வரை போரிட்டு வீரராய் உயிர்நீத்தனர்; என் மகன் பகைமன்னனை எதிர்த்துத் தன்னுடல் முழுதும் முள்ளம்பன்றி போல அம்புகள் தைப்பப் போர்க்களத்தில் வீரனாக இறந்து கிடந்தான்” என்றாற் போல வீரத்தாய் தன்குடும்பத்தில் மேன்மேலும் உயர்ந்து வரும் ஆண்மைத் தன்மையை எடுத்துக் கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8:22)

ஏனாதி -

{Entry: K11__0213}

1. மந்திரி “சோழிக ஏனாதி தன்முக நோக்கி” (மணி. 22 : 205) 2) படைத்தலைவன் 3) மறவன் (பிங். ) (L)

ஏனாதிப் பட்டம் -

{Entry: K11__0214}

யாற்றுநீரைக் கல்லணை தடுத்து நிறுத்துவது போலத் தம் படையைக் கெடுத்து மிக்கு வருகின்ற பகைவர்படையை நடுவே தனித்துத் தடுத்து நிறுத்தும் வீரன் அரசனால் ஏனாதிப் பட்டம் முதலிய சிறப்பு அளிக்கப்பெற்றுத் தானைத் தலைவன் ஆக்கப்படுவான். ஏனாதிப்பட்டம் பெற்றவனுக்கு அரசனது பொறி பொறிக்கப்பெற்ற பொன்மோதிரம் அளிக்கும் வழக்கம் உண்டு. (மதுரைக். 725 முதலிய அடிகள்)

இங்ஙனம் ஏனாதி முதலிய பட்டம் பெறுதலும், நாடும் ஊரும் கொடையாகப் பெறுதலும் ‘மாராயம் பெறுதல்’ எனப்படும்.

(தொ. பொ. 63 நச்.)

ஏனாதி மோதிரம் -

{Entry: K11__0215}

ஏனாதிப் பட்டத்தார்க்கு அரசனளிக்கும் மோதிரம்.

(சீவக. 2569. உரை)

ஏனோர் பக்கம் -

{Entry: K11__0216}

‘பக்கம்’ என்றதனான் வணிகருக்கும் வேளாளருக்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தராகிய குலத்தோர்க்கும் தொழில் வரையறை அவர் நிலைகளான் வேறுபடுதல் பற்றி அவர்தொழில் கூறாது ‘பக்கம்’ என்பதில் அடக்கினார். (தொ. பொ. 75 நச்.)

ஏனோர் வாகை -

{Entry: K11__0217}

ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்ற வணிகர்க்குரிய அறுதொழிலும் - வேதம் ஒழிந்தன ஓதலும், ஈதலும், உழவும், நிரையோம்பலும், வாணிகமும், வழிபாடும் என்ற வேளாளர்க்குரிய அறுதொழிலும் - ஆகியவற்றின் சிறப்புக் கூறல்.

‘இருமூன்று மரபின் ஏனோர் பக்கம்’ காண்க. (இ. வி. 613 - 10)

ஐ section: 3 entries

ஐந்தீ -

{Entry: K11__0218}

காருகபத்தியம், ஆகவநீயம், தக்கிணாக்கினி, சப்பியம், ஆவசத்தியம் என்னும் இவை. (பா. வி. பக். 25)

ஐவகைப் பண்டம் -

{Entry: K11__0219}

நிலம் களம் காலேயம் (கால்நடை) மெய்ப்பொருள் மெய்ப் பண்டம் என்பன. (வீ. சோ. 106 உரை)

‘ஐவகை மரபின் அரசர் பக்கம்’ -

{Entry: K11__0220}

ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டம் செய்தல் என்ற ஐவகை இலக்கணத்தையுடைய அரசியற்கூறு. ‘வகை’ என்றதனான் ஓதல் வேட்டல் ஈதல் என்பன எல்லார்க்கும் பொது என்பதும், காத்தலும் தண்டம் செய்தலுமே அரசர்க் குச் சிறப்பான தொழில்கள் என்பதும் உணரப்படும். (தொ. பொ. 75 நச்.)

ஓதல் வேட்டல் ஈதல் படைவழங்குதல் குடியோம்பல் என்பன.

(தொ. பொ. 74 இள.)

ஐவேறு குடிவகையினராய் ஆளும் மன்னர் இறைமைத் திறமை. அவை சேரசோழபாண்டியன் குடி மூன்று, ஆளுதற் குரிய வேளிர் குடி ஒன்று, மற்றைய குறுநில மன்னர் குடிமரபு ஒன்று; ஆக மன்னர் ஐவகை மரபினராய்த் தமிழகத்தை ஆண்டனர். அமர்த்தொழில், தறுகண்மறவர் அனைவருக்கும் பொதுவுரிமை. அத்தொழில் புரிபவர் பொருநர் ஆவர் அல்லது அரசர் ஆகார். (புறத். 20 பாரதி)

ஓதல், ஈதல், படைக்கலம் பயிறல், குடிகாத்தல், செங் கோன்மை இவை அரசரின் ஐவகைத் தொழில்கள்.

(தொ. பொ. 283 குழ.)

அரசியல்நூல் கலைநூல் நீதிநூல் படைக்கலக்கல்வி ஆகிய வற்றை ஓதி உணர்தலும், தூது போதலும், பிழைத்தது பிழை யாதாதல் வேண்டிக் காவல் புரிதலும், குடிபுரந்தோம்பலும், பகைவயின் சேறலும் துணைவயின் சேறலும் என இவை.

அவற்றைப் புரியுமிடத்துத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தலான் அரசர் வாகை எய்துவர்.

பொருள்வயின் பிரிவு ஒழிந்த ஏனைய கல்வி, பகை தணி வினை, தூது, காவல், துணை ஆகிய ஐந்து தொழில்கள் பற்றிய வினைகளே அரசர்க்குரியவையாக அமைந்தன. (தொ. புறத். 20 ச. பால)

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘அரசவாகை’ என்று கூறும் (8-3) ; வீரசோழியம் ‘நாற்குலப்பக்கத்துள்’ அடக்கும்.

(கா. 104)

ஒ section: 13 entries

ஒருதனிநிலை -

{Entry: K11__0221}

விரைந்து வரும் நீர்ப்பெருக்கைத் தடுக்கும் வலிய கல்லணை போலப் பகைவேந்தர்தம் படையைத் தானொருவனாகவே நின்று தடுத்த வீரனது ஆற்றலை வியந்து அவனைப் பெற்ற தாயின் வயிறு வியப்பிற்குரியது என்று போற்றும் வஞ்சித் துறை. (பு. வெ. மா. 3 : 19)

ஒருப்பாடு -

{Entry: K11__0222}

பகைவர் ஆநிரைகளைக் கவர்தற்கு ஒருப்பட்டு எழுதல் என்னும் வெட்சித் துறை (வீ. சோ. 99) ‘படை இயங்கு அரவம்’ நோக்குக.

‘ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை’ -

{Entry: K11__0223}

தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று, அங்ஙனம் கெடுத்த மாற்றுவேந்தன் படைத் தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாக்கிக் கடாப் போலக் கண்ணைச் சுருக்கிப் பார்த்துநிற்கும் எருமை மறம். (தொ. பொ. 72 நச்.)

மறவன்ஒருவன் தன் தலைவனை அவனுடைய உடையும் படைக்கு நடுவே புகுந்து அதன் பின்னணியைத் தாக்கும் பகை வரைத் தடுத்து ஏமமுறக் காக்கும் தளராத் தறுகண்மையாகிய எருமை மறம்.

முறியும் தம் படையின் பின்னணியைப் பகைவர் தாக்காது காத்தலும் அப்படை முறிய அடர்த்த பகைவரை எதிர்த்துத் தடுத்து நிறுத்தலும் ஒருவன் அருந்திறல் ஆவது ஆதலானும், அத்திறலுடைய மறவன் எதிர்வரும் எதற்கும் அஞ்சாது அசையாது நிலைத்து நிற்கும் எருமை போலத் தான் ஒருவனாய்த் தளராது எதிர்த்து வரும் படையைத் தாக்கும் தறுகண்மை வியத்தற்கு உரியது ஆதலானும் அவன் திறம் எருமைமறம் எனப்பட்டது. உடையும் படையின் பின்னணி தாங்கித் தொடரும் பகைஞரைத் தாக்கித் தகைக்கும் தறுகண்மை எருமைமறம் எனப்படும். (புறத். 17 பாரதி.)

இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘எருமை மறம்’ என்னும் (7 : 13)

‘ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமை’ -

{Entry: K11__0224}

ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக் கூழை தாங்கிய பெருமை. (தொ. பொ. 72 இள.)

பெருமை - இளம்பூரணர் பாடம். எருமை - ஏனைய உரையாசிரியர்கள்தம் பாடம்.

‘ஒருவன் ஒருவனை உடைபடை ......... எருமை’ காண்க.

இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை எருமைமறம் என்னும் (7 : 13).

‘ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கு’ -

{Entry: K11__0225}

பகைவர் ஆயினும் அவர்சுற்றத்தார் ஆயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால், அவர்க்கு அவை மனம் மகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தல்.

பாரதத்தில் பகைவனால் இறத்தலை அறிந்தும் கன்னன் தன் கவசகுண்டலம் கொடுத்தமை கூறினமையின் ‘புல்லிய பாங்கு’ ஆயிற்று. அது வீரம் பற்றிய கருணை ஆதலின் வாகை ஆயிற்று. (தொ. பொ. 76 நச்.)

பொருந்தாதார் இடத்தின்கண் பொருந்திய பக்கம்; அஃதாவது போர் இல்வழிப் பகைவர்நாடு கையகப்பட்டது என்று கொண்டு வெகுளி விட்டிருத்தல். (75 இள.)

பகைவரை இடம் வாய்ப்புழி அன்பால் தழுவிக்கொள்ளும் பெருந்தகவு. (புறத். 21 பாரதி)

சிறந்த படை ஏவாமை முதலியன உதவ வேண்டினும், அதற்கு உடன்படுதல்; இது தகை வெற்றி. (பொ. 284 குழ.)

பகையாயினாரிடத்தே அவர்தம் பகைமையை நீக்கி அவரைத் தழுவிக் கொண்ட பகுதி. பகையொடு வந்தோர் தம் பகைமை அழிதலின் அவரைத் தழுவிக்கொண்டோர்க்கு அது வெற்றியாய் வாகையாயிற்று.

இஃது அரசவாகை என்னும் வாகைக்கு உரியது.

(தொ. புறத். 21 ச. பால.)

‘ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச், சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து, தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி’ -

{Entry: K11__0226}

பகைவர்கள் நாணும்படியாக உயர்ந்தோரால் நன்கு மதிக் கப்படுதலைக் கருதி, “இன்னது செய்யேனாயின் இன்னது செய்வல்” எனத் தான் கூறிய பகுதி இரண்டனுள் ஒன்ற னொடு பொருந்திப் பல பிறப்பினும் பழகி வருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலி.(தொ.பொ. 76 நச்.)

பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன் சொன்ன வஞ்சினஉரையுடன் வாய்ப்ப அமைந்து பழந் தொடர்புடைய உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வி.

(புறத். 21 பாரதி.)

வஞ்சினம் கூறிப் பொருத வீரன் அக்காலத்திற்குள் வெல்ல முடியாது போகவே தான் சொல்லியபடி நெருப்பு மூட்டி அதில் வீழ்ந்திறத்தல். இது சொன்னசொல் தப்பாத ‘சொல் வென்றி’ யாயிற்று. ‘ஆவிப்பலி’ என்பதே குறுகி நின்றது. (பொ. 284 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை அவிப்பலி என் னும் (8 : 30). வீரசோழியம் ‘ஒற்றுமை’ என்று கூறும். (கா. 104)

இது மறத்துறையைச் சேர்ந்த வாகைத்துறை ஒன்பதனுள் ஒன்று.

ஒல்லார் நாணுதல் -

{Entry: K11__0227}

பகைவர் நாணுதலாவது, “நமக்கு இவன் வஞ்சனை எதுவும் செய்யாதிருக்கவும், நாம் இவனுடன் அறப்போர் செய்யாது வஞ்சனையான் வென்றமையின் இவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தான்” என்று தம் தவறாகிய செயல் கருதி நாணமுறுதல். (தொ. பொ. 76 நச்.)

ஒள்வாள் அமலை -

{Entry: K11__0228}

மடுவில் வாளைமீன்கள் பிறழ்வது போலக் கூரிய வாள் களைச் சுழற்றிக்கொண்டு வென்ற மன்னன்மறவர்கள் அவனுடன் கூடி ஒருங்கே ஆடும் செய்தியைக் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7: 21)

‘களிற்றொடு, பட்டவேந்தனை அட்ட வேந்தன், வாளோர் ஆடும் அமலை’ என்பது தொல்காப்பியம். (பொ. 72 நச்.)

ஒளியும் ஆற்றலும் ஈகையும் அளியும் ஆய்ந்துரைத்தல் -

{Entry: K11__0229}

‘பாடாண் பாட்டுக்’ காண்க. (பு. வெ. மா. 9-1; இ. வி. 617-1)

ஒற்று -

{Entry: K11__0230}

பிறர் அறியாமல் சென்று பார்த்துக் கண்டவற்றை உறுதிப் படுத்திக்கொண்டு வந்து சொல்லுதல். வெட்சித் திணைக்கு இஃது இன்றியமையாதது. (தொ. பொ. 271 குழ.)

ஒற்றுரைப்பு -

{Entry: K11__0231}

வெட்சிவீரர் பகைவர் ஆநிரைகளின் இருப்பிடம், அவற்றைக் காத்து நிற்போரின் திறம் ஆகியவற்றை ஒற்றரைவிடுத்து அறிந்து வந்து (ஒற்று உரைப்பு - ஒற்றன் உரைத்தல்) உரைக்கச் செய்தல் என்னும் வெட்சித்துறை (வீ.சோ.99) ‘புடைகெட ஒற்றின் ஆகிய வேய்’ காண்க.

ஒன்றன் பகுதி ஒன்றுதல் -

{Entry: K11__0232}

அறுவகை வாழ்த்து, ‘காமம் புல்லிய வகை’ என்பனவற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண்திணையாதற்குப் பொருந் தும். அஃதாவது கொடிநிலை முதலிய ஆறும், கடவுட் புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் - காமப்பகுதியில் பாடும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல் - என்ற இவ்விரு வகையானும் ஒருவனைப் புகழ்வத னால் பாடாண்திணையாம். (தொ. பொ. 79 இள.)

தேவர்பகுதி மக்கட்பகுதி என்ற பாடாண்திணையின் இரு பகுதிகளில் தேவர்பகுதியெல்லாம் ஒருங்கு வருதல். (81 நச்.)

வெட்சி முதல் வாகை ஈறாகிய புறத்திணை ஆறு, அகத்திணை ஒன்று ஆகிய இவ்வேழுதிணைகளுள் இயல்பாக இதற்கு ஏற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடாண் ஆதல் அமையும். (புறத். 26. பாரதி)

அறுமுறை வாழ்த்திலும், குற்றமற்ற புணர்ச்சி வேட்கை பொருந்திய வகையிலும் தேவர் பகுதியெல்லாம் அடங்கும். (பொ. 288 குழ.)

‘ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவை’ -

{Entry: K11__0233}

தேரோரை வென்ற மன்னனுக்கே பொருந்திய இலக்கணத் தானே தேரின்பின்னே கூழ் உண்ட கொற்றவையின் கூளிச் சுற்றம் ஆடும் குரவைக் கூத்து, (தொ.பொ. 76 நச்.)

வென்ற குரிசில் சென்ற தேரின்பின்னே அவன் தானைமற வரும் ஏனை விறலியரும் அவன்புகழ் பாடி வாழ்த்தி ஆடும் குரவைக் கூத்து. (புறத். 21 பாரதி)

மகளிர் ஆடும் குரவையை வெற்றிக்களிப்பால் வேந்தனும் மறவரும் ஆடுதலின் இது வெற்றியாயிற்று. (பொ. 294 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘பின் தேர்க் குரவை’ என்னும் (8- 8); வீரசோழியம் பொதுப்படக் ‘குரவை’ என்னும். (கா. 104).

எ-டு : புறநா. 371

ஓ section: 6 entries

‘ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்னநிலை’ -

{Entry: K11__0234}

“பின் வாங்காது போரிடும் வேந்தனுக்கு வெற்றி யுண்டாக இவ்வுன்னமரம் தளிர்க்க!” என்று மறவர் வழிப்பட்டேத்தும் உன்னநிலை. உன்னம் என்ற மரம் தன் நாட்டகத்துக் கேடு வருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும்.

(தொ. பொ. 63 இள.)

வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்ன நிலை; என்றது, வேந்தன் கருத்தான் அன்றி அவன் மறவன் “நீ வென்றி கொடுத்தால், யான் நினக்கு இன்னது செய்வல்” எனப் பரவுதலும், “எம் அரசனுக்கு ஆக்கம் உளதெனில் அக்கோடு தழைக்க” எனவும், “பகை வேந்தனுக்கு ஆக்கம் உளதெனில் அக்கோடு பட்டுப்போக” எனவும் நிமித்தம் கோடலும் என இருவகைத் தெய்வத் தன்மையும் அஃது உடையது. மன்னவன் வெற்றியே கருதாது, இருநிலையும் கருதலின் இது புறத்திணை வழு. (60 நச்.)

உன்னம் சிற்றிலையும் பொற்பூவும் உடையதொரு மரம் பண்டைத் தமிழ்மறவர் போர்க்கு எழுமுன் உன்னமரக்கிளை யில் மாலைகளை அடுக்கி நிமித்தம் கொள்வது வழக்கம்.

(புறத். 5 பாரதி)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியல் படலத்து நாலாவது துறை.

வீரசோழியத்தில் கரந்தையின் வகையாகக் கூறப்படும். (கா. 100)

உன்னம் - உன்னநிலை; வெட்சிவினை முன் முடித்தவன் திறம் கூறி உன்னமரத்தை நற்போரினின் நாடல்; ‘உன்னக் குறி செய்கெனக் கிளத்தல்.’ (வீ. சோ. 100. உரை)

ஓடாப் படையாண்மை -

{Entry: K11__0235}

தன்னை எதிர்த்து வந்த தூசிப்படையைத் தடுத்துத் தாக்குதல் என்ற கரந்தைத் துறை (வீ. சோ. 100) ‘வருதார் தாங்கல்’ காண்க.

ஓடாப்படை யியங்கரவம் -

{Entry: K11__0236}

வஞ்சி சூடிய மன்னனது படை, பகைமன்னன் மண்ணைக் கைக்கொள்ளுதற்காகச் செல்லும்பொழுது ஏற்படும் ஆரவாரம் என்ற வஞ்சித்துறை. (இ. வி. 606-2.)

இதனைப் புறப்பொருள்வெண்பாமாலை ‘வஞ்சி அரவம்’ என்னும் (3-2); தொல்காப்பியம் ‘இயங்குபடை அரவம்’ என்னும் (பொ. 63 நச்.).

வெட்சி மறவர் இரவிடைக் களவினால் கவர்ந்த ஆநிரைகளை மீட்கப் புறப்பட்ட கரந்தைமறவர்படை இயங்கும்போது ஆரவாரித்தலும் உண்டு; அது ‘படை இயங்கு அரவம்’ என்ற கரந்தைத் துறை. அது கரந்தை அரவம் எனவும்படும். (இ. வி. 604 -2)

இரவில் களவிடைப் பகைமன்னர்தம் ஆநிரைகளைக் கொள்ளக் கருதிய வெட்சிமறவர் நடந்து செல்லும்போது ஏற்படும் சிறிய ஆரவாரம் படையியங்கு அரவம் என்ற வெட்சித்துறையாம். இது வெட்சி யரவம் எனவும்படும். (இ. வி. 603 -3)

இதனைத் தொல்காப்பியம் ‘படையியங்கு அரவம்’ என்னும். இலக்கணவிளக்கத்துள் வெட்சி கரந்தை வஞ்சி என்ற மூன்றன்கண்ணும் ‘படையியங்கரவம்’ என்ற பெயரிய துறைகள் உள்ளன.

ஓம்படை -

{Entry: K11__0237}

அறிவுடைச் சான்றோர், “ஆராய்ந்து, இன்ன இன்ன செய்க” என அரசற்குச் சேமம் விளைப்பனவற்றைக் கூறுதல். அஃதாவது மெய்யறிவினாலே, நன்மை தீமைகளை ஆராய்ந்து, பகை நட்பு நொதுமல் என்ற முப்பகுதியையும் கண்டு, தன் நால்வகைப் படையாலே வென்று போர்க் களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேல் வேந்தனை, “இவ் வுலகில் ஐம்பொறிகளையும் அறிவால் வென்று, படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ற ஆறு உறுப்புக்களையும் பெருக்கி, வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொரு ளீட்டம் கள் காமம் என்ற ஏழு குற்றங்களையும் நீக்கி, இன்புற்றிருப்பாயாக!” என்று கூறும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9: 37)

தொல்காப்பியம் இதனை ‘வாயுறை வாழ்த்து’ள் அடக்கும். (செய். 112 நச்.)

ஓம்படை நிலை -

{Entry: K11__0238}

‘ஓம்படை’ காண்க.

ஓரிடத்தான கொற்றவள்ளை -

{Entry: K11__0239}

கொற்றவள்ளை என்ற வஞ்சித்துறையும், துறை கூறுதல் கருதாது, புகழ்தல் கருத்தாயின் பாடாண் திணையாம். (தொ. பொ. 86 இள.)

வெட்சிமுதல் வஞ்சி யீறாகப் பாடப்படும் ஆண்மகனது புகழைக் கிளந்து அவன்பகைவரது நாடு அழிதலுக்கு வருந்திக் கூறும் உலக்கைப் பாடலாகிய கொற்றவள்ளை தேவர்களுக்கு உரியதன்றி மக்களுக்கே உரியதாம். ஆயின் உழிஞை முதல் வாகை ஈறாக மன்னவன் புகழ்கிளந்து ஒன்னார்நாடு அழிதலுக்கு இரங்கும் உலக்கைப் பாட்டாகிய கொற்ற வள்ளை மக்கள் தேவர் என்னும் இருவர்க்கும் உண்டு. நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லுதலும் தேவர்க்கு இன்மையின், வெட்சி முதல் வஞ்சி ஈறாகிய கொற்றவள்ளை தேவர்க்கு இல்லை; மக்கட்கே யுண்டு. (89 நச்.)

கொடிநிலை, காந்தள், வள்ளி என்ற வெட்சி வகை மூன்றும் பாடாண் ஆகுங்கால் கடவுள்வாழ்த்தினைத் தழுவியே வரும். அவை போலாது, வஞ்சி வகைக் கொற்றவள்ளை பாடாணா குங்கால் ஒரோவிடத்து மாத்திரம் கடவுள் வாழ்த்தைத் தழுவி வரும். (புறத். 33 பாரதி.)

க section: 180 entries

கட்காஞ்சி -

{Entry: K11__0240}

காஞ்சி மன்னன் தன் படை வீரர்க்குப் போரில் ஊக்கமும் களிப்பும் மிகும் வகையில் கள் வழங்கும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4:2)

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை -

{Entry: K11__0241}

தமக்கென்று வரையறுத்துக் கொண்ட உயர்ந்த கோட் பாட்டை என்றும் நழுவ விடாமல் இன்பினும் துன்பினும் கடைப்பிடித் தொழுகலாகிய வாகைத்துறை

“முத்திதரும் பரம்பொருள் திருமாலே என்றுணர்ந்து நல்வினையால் கல்வியறிவுடைய நாவலர்கள், ஏனைய பாமர மக்களை, தாம் வறுமையால் வாடிய காலத்தும், அவ்வறு மையைப் போக்கிக்கொள்ளப் பொய்யும் புனைந்துரையும் கலந்து பாடும் தொழிலை மேற்கொள்ளார். அறநூல் சிறப்பித்துக் கூறும் வாய்மையையே கடைப்பிடித்து அவர்கள் வாழ்வர்” என்றாற்போல்வன. (மா. அ. பா. 496.)

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமைப் பக்கம் -

{Entry: K11__0242}

வேதம் முதலியவற்றால் கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தொடு பொருந்திய காட்சி. அஃதாவது மனத்தான் இவ்வொழுக்கங் களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்திற்கும் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை. தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை முதலியனவாம். (தொ. பொ.76 நச்.)

அடக்கமுடைமை - பொறிகள் ஐம்புலன்கள்மேல் செல்லாiம அடக்குதல்.

ஒழுக்கமுடைமை - தத்தம் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையராதல்.

நடுவுநிலைமை - பகைவர்மாட்டும் நட்டார்மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை.

வெஃகாமை - பிறர்பொருளை விரும்பாமை

புறங்கூறாமை - ஒருவரை அவர்புறத்துப் பழி உரையாமை.

தீவினையச்சம் - தீவினையைப் பிறருக்குச் செய்தற்கு அஞ்சுதல்.

அழுக்காறாமை - பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை.

பொறையுடைமை - பிறர் தமக்குத் தீங்கு செய்தவழி வெகுளாமை. (தொ. பொ. 75. இள.)

வரையறுத்த ஒழுக்கம் கருதும் உரன்; விருப்பை வென்று அறிவால் புலனைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்கம் ஆதலின், ‘கட்டமை ஒழுக்கம்’ எனப்பட்டது. அறநூல் விதிகள் மக்க ளுக்குத் தம்முள் மாறுபட விதிப்பன ஆகலானும், உளச் சான்றுக்கு எதிராக அவற்றை எழுதியோரது ஆணைக்கு எல்லாரும் கட்டுப்படுதல் இயல்பன்று ஆகலானும், ஒருகால் அவ்வகைக் கட்டுப்பாடு வற்புறுத்தப்படுமேல் அது வாகை ஆகாமையாலும் தருமநூல்வழி நிற்றல் என்பது பொரு ளன்று. (புறத். 21. பாரதி.)

ஐம்பொறி அடக்கத்தொடு கூடிய ஒழுக்கக்காட்சி. அஃதாவது ஐம்பொறி அடக்கி ஒழுக்கத்தில் வெற்றி பெறுதலாம். அவ் வொழுக்கமாவன இல்லறத்தார்க்குக் கூறிய அடக்கமுடைமை, புறங்கூறாமை முதலியனவாம். கட்டமை - அடக்கம்; கண்ணுமை காட்சி. இஃது ஒழுக்க வென்றி. (பொ. 284. குழ.)

இதனை வீரசோழியம் ‘வேட்கையார் பக்கம்’ என்னும் போலும். (கா. 104).

கட்டில் நீத்த பால் -

{Entry: K11__0243}

அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதி. அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வெற்றியாகிய வாகைப் பகுதித் துறை.

“இப்பெரிய நிலவுலகம் ஒரு பகலில் எழுவரைத் தலைவராகக் கொண்டாற்போன்ற நிலையாமையுடையது. இந்நிலவுலக ஆட்சியும் தவமும் ஆகிய இரண்டனையும் சீர்தூக்கினால், தவத்துக்குச் சிறுகடுகளவும் மண்ணுலக ஆட்சி சீர்படாது. ஆதலின் வீட்டின்பத்தைக் காதலித்தோர் இந்நிலவுலக ஆட்சியைக் கைவிட்டனர்” (புறநா. 358) (தொ. பொ. 76 நச்.)

நிலையாமையை எண்ணி அரசை இளவரசுக்கு ஈந்து அரசன் துறவு எய்தும் அரசவெற்றி இது. (பொ. 284 குழ.)

கட்டூர் -

{Entry: K11__0244}

பாசறை; ‘ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்’ (பதிற். 82-2) (L)

கடவுட்பெண்டிர் நயந்த கடவுட் பக்கம் -

{Entry: K11__0245}

தெய்வமகளிர் தேவர்களைப் புணர்ச்சியால் கூட விழையும் செய்தி கூறும் பாடாண்துறை. அஃதாவது “சிவபெருமா னுக்குப் பார்வதியின் ஊடலைத் தீர்த்தல் அரிதாயிற்று. ‘எனக்கு அருளுக’ என்று சிவபெருமான் அவளை வேண்டின், அவனது நாவிலுள்ள சொல்மடந்தை மனம் நோவாள் என்று பார்வதி கூறுவாள்; பார்வதியை வணங்கி அவள் ஊடலைப் போக்க விரும்பின், ‘நும் தலையிலுள்ள கங்கை வருந்துவாள் ஆதலின் அது செய்யற்க’ என்று பின்னும் கூறுவாள். இந் நிலையில் பார்வதியின் ஊடலை எம்பெருமான் போக்குமாறு யாங்கனம்?” என்றாற்போல அமையும் துறை. (பு. வெ. மா. 9 : 48).

கடவுள் வணக்கம் -

{Entry: K11__0246}

நூல் அல்லது அதன் பகுதி முதற்கண், கவி தான் வழிபடும் கடவுளையாவது, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற் புடைய கடவுளையாவது வாழ்த்துதல்; ‘கடவுள் வாழ்த்து’ என்பது அது.

இது, ‘புகழ்ந்தனர் பரவல்’ என்ற பாடாண்துறை

(சாமி. 145, பு. வெ. மா. 9 : 43)

கடவுள் வாழ்த்து -

{Entry: K11__0247}

அரசன் வழிபடும் முப்பெருந் தெய்வங்களுள் ஒன்றனை முறைப்படி வாழ்த்துதல்.

“திருமாலே! நீ நிலமடந்தையைத் திருவடியில் அடக்கி யருளினாய்; உலகிலுள்ளார் பலரும் உய்யும் வண்ணம் திருமேனி கொண்டருளினாய்; கொடிய ஆழிப்படையினை யும் பாம்புப் படுக்கையையும் கொண்டுள்ளாய்” என்று திருமாலை வாழ்த்துதல் போல்வன.

இஃது இலக்கண விளக்கத்துள் ‘முறையுளி வாழ்த்தல்” என்று கூறப்படும். (617-3) (பு. வெ. மா.9-3)

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருவன -

{Entry: K11__0248}

நாள்மீனாகிய கொடிநிலை, விண்வெளியாகிய கந்தழி, பொன்மாரியாகிய வள்ளி என்று சொல்லப்பட்ட மாசற்ற சிறப்பினையுடைய முதலனவாகிய அம்மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தியனவாக வரும்.

இம்மூன்றும் பரம்பொருளாகிய தெய்வம் போல உருவாக வும் அருவாகவும் அருவுருவாகவும் அமைந்து திகழ்கின்றன; எல்லாவற்றானும் தம் தன்மை திரியாமல் இலங்குகின்றன; உலகிற்கும் உயிர்கட்கும் அடிப்படையாக நிற்கின்றன. ஆதலின் இவை குற்றம் தீர்ந்த சிறப்பின என்றும் முதன்மை யுடையன என்றும் குறிக்கப்பட்டன. (தொ. புறத். 32 ச. பால)

கடவுளர் பாங்கின் காமப்பகுதி -

{Entry: K11__0249}

கடவுள்மாட்டுப் புணர்ச்சி வேட்கை கொண்டு கடவுட் பெண்டிர் நயப்பனவும், கடவுள்மாட்டு அவ்வாறே மானிடப் பெண்டிர் நயப்பனவும், மானிடப் பெண்டிரைக் கடவுள் அவ்வாறே நயப்பனவும் ஆகிய செய்தி.

இது கைக்கிளை ஐந்திணை பெருந்திணை இவற்றிற்குரிய காமமும், காமம் சாலா இளமையோள்வயின் காமமும் போலாது வேறொரு காமமாம். (தொ. பொ. 83. நச்.)

மக்கட்கன்றிக் கடவுளர்க்கும் தூய காதற்பகுதி பாடாண் ஆதற்கு உரித்து. காதலியல் கருதா மேதகு கடவுளரும் தம் முள்ளும் மனிதரொடும் காதல் கூரும் நற்காமப் பகுதியும் பாடாண்வகையாதல் உண்டு. (புறத். 28 பாரதி)

அரசர்களே பாடாண்திணையில் தெய்வமாக உயர்த்திப் பாடப் படுவதால், அரசன் ஒருவனை ஒருத்தி விரும்புவதாகவும், அரசன் ஒருவன் ஒருத்தியை விரும்புவதாகவும் பாடுதலே புணர்ச்சி வேட்கை எனப்படும். அரசன் ஒருவனை ஒரு பெண் விரும்புவதாகப் பாடுதல் கடவுளை மக்கட்பெண்டிர் நயத்தல் எனப்படும். அரசகன்னியர் முடிமன்னருக்கு மனைவியரான பின்னரே தெய்வமாக உயர்ச்சி பெறுவார் ஆகலின், கடவுளைக் கடவுட்பெண்டிரும் கடவுட் பெண்டிரைக் கடவுளும் நயத்தலாகப் பாடுவது பாடாண் மரபு அன்று. (பொ. 290. குழ)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண் படலத்தில் 48, 49ஆம் துறைகளாகிய ‘கடவுள்மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்’ ‘கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

கடவுளை வணங்கிப் பயன் கூறும் கூற்று -

{Entry: K11__0250}

இது ‘பழிச்சினர் பணிதல்’ (பு. வெ. மா. 9 : 44) என்ற பாடாண் துறை. (சாமி 145.)

‘கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு, முற்றிய முதிர்வு’ -

{Entry: K11__0251}

செலுத்திச் சூழ்ந்து தாக்கும் போர் ஒழிக என்று கைக் கொண்டு முற்றிய முதிர்வு. (தொ. பொ. 69 இள.)

புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலில் செய்யும் போர் இன்றாக, அகத்தோன் படையை வென்று அப்புற மதிலைக் கைக்கொண்டு உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சி.

இது புறத்தோன் அகத்தோன் என்ற இருதிறத்து உழிஞை யார்க்கும் பொது. இது புறமதிற்போர். (67. நச்.)

முற்றியோன் தன் மறவரைச் செலுத்தி எதிர்ந்தோரை மலைந்து மதிற்புறப்போர் முடிந்தொழியுமாறு வென்று எயிலைக் கைப்பற்றி உள்ஏறி அரண்அக மறவரைச் சூழும் முனைப்பு. (புறத். 13 பாரதி.)

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று; ‘முதுஉழிஞை’யின் பாற்படும். (பு. வெ. மா.6 : 20)

கடைநிலை -

{Entry: K11__0252}

வள்ளல் ஒருவனது வாயில்கடைத்தலையில் வந்து நின்ற இரவலன், வாயிற்காவலனிடம், நெடுந்தொலைவினின்று தான் நடந்து வந்துள்ள வருத்தம் தீரும்வகை, தான் வந்திருப்ப தனை வள்ளல்பால் அறிவித்தல் வேண்டும் எனக் கேட்கும். பாடாண்துறை. (இ. வி. 617-2). இது புறப்பொருள் வெண்பா மாலையில் (9-2) ‘வாயில்நிலை’ எனப்படுகிறது.

கடையாய அறம் -

{Entry: K11__0253}

பிறருக்குக் கொடை வழங்குவதற்காக வேற்றவனுடைய பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருதல் கடையாய அறமாம்.

(தொ. பொ. 91 நச்)

கடையாய ஒத்து -

{Entry: K11__0254}

இதிகாச புராணங்களும், வேதத்துக்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூல்களும், அவரவர் அவ்வவற்றிற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து; கடைச்சங்கத் தார் செய்த செய்யுள்களும் கடையாய ஓத்து. (முதலில், கடை என்றது தகுதி பற்றி; இறுதியில், கடை என்றது தோன்றிய காலம் பற்றி.) (தொ. பொ. 75 நச்)

‘கண்ணிதாள்கழல் கச்சு இனிப் புனைவோம்’ எனல் -

{Entry: K11__0255}

இது வாகை அரவம் என்னும் வாகைத்திணையின் துறை.

(சாமி. 139)

கண்படைநிலை -

{Entry: K11__0256}

வென்று பூமியைக் கைக்கொண்ட மறவேந்தனது உறக்கத் தினை, “திறை கொடாத மன்னரெல்லாம் திறை கொடுப் பவே, கூற்றுவனை வருத்தும் வெங்கதிர் வேந்தனுக்கு, நிலமகளும் தனது புனைகுடைநிழலில் தங்குதலால், விழிகள் அழலாதனவாய் உறக்கத்தினை ஏற்றன” என்றாற்போல மிகுத்து கூறும் வாகைத்திணைத்துறை. (பு. வெ. மா. 8 : 29) (தொ. வி. 283 உரை)

“போரின்கண் மற்றாரை வேலால் வென்றடக்கி, செங்கோல் நீதியால் கொடியவை தன் நிலத்தில் கிட்டாதவாறு எம்மர சன் நீக்குதலால் கவலை சிறிதுமின்றாகவே, அவன் கண்கள் உறக்கத்தை மேவின” என்றாற்போல வேந்தனது துயிலை மிகுத்துக் கூறும் பாடாண்திணைத் துறை. (பு. வெ. மா.9-8)

அவைக்கண் அரசரும் அவர் போல்வாரும் நெடிது நேரம் தங்கியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க் குக் கண்துயில் கோடலைக் கருதிக் கூறிய கண்படைநிலை. (தொ. பொ. 90 நச்).

கணவற்காண நீள்குழலி வரல் -

{Entry: K11__0257}

இது தன்னை வேட்டலின் பக்கம் என்னும் தும்பைத் திணையின் துறை. (சாமி. 139)

கணவனைக் காணிய ஆயிழை சேறல் -

{Entry: K11__0258}

‘தன்னை வேட்டல்’ என்னும் துறையின் பக்கம் காண்க. (பு. வெ. மா.7 : 27) (இவி. 611 - 27)

‘கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தம்’ -

{Entry: K11__0259}

மனைவி தன் கணவன் முடிந்தபொழுதே உடன்முடிந்து போகிய செலவு நினைந்து, கண்டோர் பிறர்க்கு உணர்த்திய மூதானந்தம். ஆனந்தம் - சாக்காடு. முதுமை கூறியது உழுவ லன்பு பற்றி. இப்படி இறத்தலின் இஃது யாக்கை நிலை யின்மை. (தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலைச் ‘சிறப்பிற் பொதுவியற் பால’ படலத்து ஒரு துறையாகவுள்ளது (11-9)

இத்துறை வீரசோழியத்துள் ‘மகிழ்ச்சி’ என்று கூறப்படுகிறது. (கா. 102)

கணிவன்முல்லை -

{Entry: K11__0260}

தன் உடலைப் பேணுமாறு போல் கல்வியறிவைத் தவறாது போற்றி, மக்கள் வருந்தாமல் உண்மையை உணரும் வகை யால் தவறு ஏதுமின்றி வானமும் நிலவுலகும் விளைக்கும் நிகழ்ச்சிகளை யெல்லாம் கருதிக் கூறும் கணிவனது இயல்பினைக் கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8. : 20)

கணிவன்வாகை -

{Entry: K11__0261}

இது ‘கணிவன் முல்லை’ என்னும் வாகைத்திணைத்துறை. (சாமி. 140)

கதிர்வேல் உழவன் காஞ்சி சூடல் -

{Entry: K11__0262}

‘காஞ்சி’ காண்க. (பு. வெ. மா. 4 - 1) (இ. வி. 615 - 1)

கந்தழி உழிஞை -

{Entry: K11__0263}

பன்னிறமலர்களும் தொடுத்த மாலை யணிந்த உழிஞை வேந்தனை, வாணாசுரனுடைய சோ என்னும் அரணினை அழித்த கண்ணபிரானது அம்சம் என்று புகழும் உழிஞைத் துறை. (பு. வெ. மா.6 : 7)

கந்தழிவாழ்த்து -

{Entry: K11__0264}

அரசன் பகைவர்மதிலை அழித்த திறலைத் திருமால் வாண னுடைய சோமதிலை அழித்த திறலோடு ஒப்பிட்டு வாழ்த்துதல். (தொ. பொ. 85. இள.)

ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் - கடந்த பொருளை வாழ்த்துதல் கடவுள் வாழ்த்தினைப் பொருந்தி வருவது. (88. நச்.)

கந்தழி என்பது பாடமன்று; காந்தள் என்பதே பாடம். முருகக் கடவுள் வாழ்த்துடன் போர் தொடங்கும் காந்தள் எனப்படும் வெட்சித்துறை, பாடாண் ஆகிக் கடவுள்வாழ்த்தைத் தழுவி வரும். (புறத். 32 பாரதி)

கந்து - குறி; அழி - அழிந்தது. கந்தழி குறியற்றது எனவே, குணம். உயர்குணத்தைக் கடவுள் வாழ்த்துப் போல வாழ்த்துதலும் மரபு. திருக்குறள் முதல் அதிகாரம் உயர்குண வாழ்த்தாகும். (பொ. 289. குழ.)

புறப்பொருள் வெண்பாமாலை பாடாண்படலத்து 40ஆம் துறையாகக் ‘கந்தழி’ அமைந்துள்ளது.

வீரசோழியத்துள் பாடாண் துறையாகக் ‘கந்தழி’ இடம் பெற்றுள்ளது. (கா. 106).

கந்து - பற்றுக்கோடு; அழி - அழிப்பது. எனவே, பற்றுக் கோட்டை அழிப்பதாகிய அக்கினி என்று பொருள் செய்து, அங்கியைக் கடவுளாக வழிபடுதல் என்று கூறுவாரும் உளர்.

கபிலை கண்ணிய புண்ணியநிலை -

{Entry: K11__0265}

‘கபிலை கண்ணிய வேள்வி நிலை’ காண்க. (பு. வெ. மா. 9 : 14)

கபிலை கண்ணிய வேள்வி நிலை -

{Entry: K11__0266}

செந்நிறமுடைய பசுவினைக் கொடுக்கக் கருதிய கொடை நிலை கூறல் என்னும் பாடாண்துறை.

இது வரையா ஈகை யன்றி “இன்னல் உற்றால் கொடுக்க!” என உயர்ந்தோர் கூறும் நாளின் விடியற்காலத்தில் கொடுப்ப தாகலின் வேறு கூறப்பட்டது. ‘கண்ணிய’ என்றதனான், கன்னியர் முதலியோரைக் கொடுத்தலும் கொள்ளப்படும். (தொ. பொ. 90 நச்.)

கற்றா பால் சுரந்து கொடுத்தலைப் போலக் கருதிக் கொடுக் கும் கொடை. வேள்வி - கொடை (296 குழ)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்துத் துறையாகிய ‘கபிலை கண்ணிய புண்ணியநிலை’ ஆகும். அஃது அரசன் அருமறை ஓதும் அந்தணர்க்குக் கபிலைப் பசுக்களைத் தானம் செய்தலின் திறம் கூறுவது.(9:14)

கயல்விழி நாண் துணையின் உறல் -

{Entry: K11__0267}

இது நாண்முல்லை என்னும் புறப்பொருள் பொதுவியல் துறை (பு. வெ. மா. 13 - 4) (சாமி. 149)

கரந்தை

{Entry: K11__0268}

பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை. (பு. வெ. மா.)

கரந்தைக் கையறுநிலை

{Entry: K11__0269}

வாட்போரில் வெட்சியார் படையைக் கலக்கி வலிய புலி போல நிலத்தில் வீழ்ந்து இறந்த கரந்தை மறவர்களைக் கண்டு பாணர் முதலானோர் செயலற்றுக் கூறும் கரந்தைத் துறை.

(பு. வெ. மா. 2 : 10)

கரந்தைக் கொடை

{Entry: K11__0270}

ஆநிரைகளை மீட்டுவந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாகக் கரந்தை மறவர் பாணர் முதலியோர்க்குப் பரிசில் வழங்குதல்.

(இ. வி. 604 - 25)

கரந்தைக் கொற்றவை நிலை

{Entry: K11__0271}

ஆநிரையை மீட்ட செயலில் தமக்கு வெற்றி வழங்கிய கொற்றவை, தாம் வஞ்சி சூடிப் பகைவர்மேல் செல்லாத வகையில் தம் ஆநிரைகளை மீட்டுவர அருள் செய்து, தாம் கொடுத்த எருமைப்பலியை ஏற்றுக்கொண்டாள் என்று கரந்தை மறவர் பரவுதல் (இ. வி. 604-27)

கொற்றவைக்கு நரபலியோடு எருமைப்பலியும் குருதிப்பலியும் வழங்கப்படும் என்பர் நச்சினார்க்கினியர். (தொ. பொ. 59 நச்.) அவர் இது வெட்சி, வஞ்சி இரண்டற்கும் பொது என்பர்.

கரந்தைத்திணை

{Entry: K11__0272}

இரவில் வெட்சி சூடிய மறவர் களவினால் கவர்ந்துசென்ற தம் மன்னனுடைய ஆநிரைகளை மீட்டுவரக் கரந்தைப் பூவினைச் சூடிச் செல்லும் வீரர் செயல் பற்றிய பகுதி தொல்காப்பியத்துள் வெட்சித்திணைக்கண் அடங்கு மேனும், புறப்பொருள்வெண்பா மாலையுள் கரந்தை என்று வெட்சியை அடுத்த தனிப் படலமாகக் கூறப்பட்டுள்ளது.

கரந்தைத் துடிநிலை -

{Entry: K11__0273}

கரந்தை மறவர், இரவிடைக் களவினால் வெட்சியார் கவர்ந்த தம் ஆநிரையை மீட்டு வென்ற மகிழ்ச்சியால், முத்துப்பட்ட மும் நெற்றித்திலகமும் விளங்க நறுமணப் பொருள் பூசி நல்லாடை உடுத்துத் தத்தம் துடிகொட்டுவாரை அழைத்துக் கொண்டு வீரர் குடிப்பெருமையைப் பாராட்ட ஊருக்கு வெளியே கூடும் செய்தியைக் கூறும் கரந்தைத்துறை. (இ. வி. 604 - 26)

கரந்தைப் பகுதி -

{Entry: K11__0274}

ஆர் அமர் ஓட்டல், ஆ பெயர்த்துத் தருதல், வேந்தன் சிறப் பெடுத் துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல், வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டு என்ற ஏழும் கரந்தைப் பகுதிகளாம். இவை வெட்சித்திணையைச் சேர்ந்தன.

கரந்தையாவது தன்னுறுதொழில். ஆர்அமர் ஓட்டல் முதலிய ஏழும் வேந்தன் ஏவுதலின்றி மறவரும் துணைவந் தோரும் குறுநில மன்னரும் மறக்குடிச் சிறுவரும் அரசிளங் குமரரும் தாமாகவே செய்யும் தொழிலாதலின் கரந்தை யாயின. அரசன் ஏவலின்றித் தாமே செய்தமையின் இவை ஏழும் வழுவாயின. (தொ. பொ. 60 நச்; 298 குழ.)

கரந்தைப் பாதீடு -

{Entry: K11__0275}

கரந்தை வீரர்கள், தாம் வெட்சியாரிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்த பசுக்களை உரியவர்க்குப் பகுத்துக் கொடுத் தல் என்னும் என்னும் கரந்தைத் துறை.

‘பாதீடு’ காண்க. (இ. வி. 604 - 23)

கரந்தைப் புறத்திறை -

{Entry: K11__0276}

வெட்சி மறவர் இரவில் களவினால் கவர்ந்த ஆநிரையைக் கொண்டு உய்த்த இடத்தை அடைந்த கரந்தைமறவர் அவற்றைச் சூழ்ந்து தங்குதல்.

‘புறத்திறை’ காண்க. (இ. வி. 604-6)

கரந்தையான் -

{Entry: K11__0277}

வெட்சிமறவர் கைப்பற்றிய ஆநிரைகளைக் கரந்தைப் பூச்சூடிப் போரிட்டு மீட்கப் புறப்படும் வீரன்.

கரந்தை வேந்தன் -

{Entry: K11__0278}

இரவில் களவினால் வெட்சிமறவர் கைப்பற்றிச் சென்ற ஆநிரைகளைக் கரந்தைப்பூச்சூடி மீட்கச் செல்லும் வீரரைச் செலுத்தும் வேந்தன்.

கல்காண்டல் -

{Entry: K11__0279}

கல்லைக் காணுதல்.

போர்க்களத்தில் வீரமரணம் எய்திய மறவனுடைய பெயரும் பீடும் பொறித்துக் கல் நடுதற்காக, அதற்குரிய நல்ல கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்னும் பொதுவியல் துறை. (பு. வெ. மா. 10 - 8)

‘காட்சி’ காண்க

நடுதல் -

{Entry: K11__0280}

வீரமரணம் எய்திப் போர்க்களத்தே பட்ட வீரனுடைய பெயரினையும் பெருமையினையும் கல்லில் பொறித்து, அதனைக் குழியில் இட்டுவைத்து அதன்கண் அவ்வீரனைப் பிரதிட்டை செய்தல். இது நடுகல் எனவும்படும். (பு. வெ. மா. 10 : 12)

‘நடுகல்’ காண்க.

கல் நீர்ப்படுதல்

{Entry: K11__0281}

வீரமரணம் எய்தியவனுடைய நடுகல்லுக்காகத் தேர்ந் தெடுத்த கல்லினைப் புண்ணிய நீரால் அபிடேகம் செய்தல். ‘நீர்ப்படை’ காண்க. (பு. வெ. மா. 10 - 10).

கல் நீர்ப்படுத்தலின் பக்கம் -

{Entry: K11__0282}

வீரமரணம் எய்திய வீரனுக்குக் கல் நடும் இடத்திற்கு அக்கல்லைக் கொண்டுபோவதும் கல் நீர்ப்படுத்தல் என்னும் பொதுவியல் துறையாகும். (பு. வெ. மா. 10 : 11)

கல்முறை பழிச்சுதல் -

{Entry: K11__0283}

வீரமரணம் எய்தியவனுக்குக் கொண்ட நடுக்கல்லிற்குப் பூசையும் பிற சிறப்பும் செய்து அதனைப் பாராட்டி வீரர்கள் வணங்கி வழிபடுதல். (பு. வெ. மா. 10 : 13) ‘வாழ்த்தல்’ காண்க.

‘கலையார் மனைவி’ -

{Entry: K11__0284}

களத்தில் வீழ்ந்த தலைமகனைத் தலைமகள் காத்த பெருமை. இது செருக்களத்துப் பேதைமை பற்றிச் சென்று தலைவனை அடைதல். ‘தொடாக் காஞ்சி’ காண்க. (வீ.சோ. 102)

கவந்தம் -

{Entry: K11__0285}

1. தலையற்ற உடல் 2. தலை தறிந்த மரம் (L)

கவந்தம் ஆடுவதனை ‘அட்டை ஆடல்’ என்ப. (தொ. பொ. 71 நச்.)

கழல்நிலை -

{Entry: K11__0286}

போர்க்களம் கண்டு அஞ்சாத வீரன் வீரக்கழல் புனைந்த திறத்தைக் கண்டவர்கள், “சில ஆண்டுகட்கு முன்னர்க் கிண்கிணி அணிந்த கால்களில் இன்று இவ்விளைய வீரன் வீரக்கழல் கட்டிக்கொண்ட செய்தி கொடிய நெருப்பின் வாயிலே விடத்தைத் தீற்றிய செயலை ஒக்கும் ஆதலின் இவனைப் போர்க்களத்தில் எதிர் நின்று தடுப்பவர் வீர சுவர்க்கம் புகுதல் உறுதி” என்றாற்போலப் புகழும் பொது வியல்துறை. (பு. வெ. மா. 10-7)

‘கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை -

{Entry: K11__0287}

இளமைத் தன்மை கழிந்து அறிவு மிக்கோர் இளமைத் தன்மை கழியாத அறிவில் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சி.

முதுமை மூப்பு ஆதலின், அப்மூப்பினைக் காட்சிப் பொரு ளாகக் காட்டி இளமைநிலையாமை கூறியது.

இது வீடுபேற்றுக்கு வழி கூறியது.

“நெடுநீர் ஆழத்தின்கண் மருதமரக் கொம்பினின்று துடு மெனப் பாய்ந்து குளித்துக் கீழ்நின்று மணலைக் கொண்டு வந்த அக்கல்லாத இளமைப்பருவம், தொடித்தலை விழுத் தண்டினை ஊன்றிக்கொண்டு இருமல் இடையிடையே மிடைந்த சில சொல்லே பேச வல்ல பெருமூப்பினராகிய எமக்கு இனி வருவது யாண்டையது? அதுதான் இரங்கத் தக்கது. அவ்விளமை வீணாயினமையை நினைந்தால் இது போது வருத்தமாகின்றது!” (புறநா. 243) (தொ. பொ. 79 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலையுட் பொதுவியற்படலத்துக் ‘காஞ்சிப் பொதுவியற்பால’ துறைகளுள் முதுகாஞ்சி இத்துறைக் கருத்தினை உட்கொண்டது. (பு. வெ. மா. 12-5)

இத்துறை வீரசோழியக் காஞ்சிப்பகுதியில் ‘முதுமை’ எனப்படும். (கா. 102)

‘கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை’

{Entry: K11__0288}

கணவனொடு மனைவியர் கழிந்துழி, அவர்கட்பட்ட அழிவு பொருள் எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா. தொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்த செயலறுநிலைமை.

‘ஒழிந்தோர்’ என வரையாது கூறினமையின், கழிந்தோரால் புரக்கப்படும் அவ்விரு திறத்தாரும் கொள்ளப்படுவர். ‘கழிந் தோர்’ என்ற பன்மையான் ஆண்பாலும் தழுவப்பட்டது, கையறுநிலை அவரையின்றி அமையாமையின். அழிவாவன: புனல் விளையாட்டும், பொழில் விளையாட்டும், தலைவன் வெற்றியும் போல்வன. (தொ. பொ. 79 நச்.)

மாய்ந்தோர்மாட்டு அவருக்காக மிக வருந்தி மற்றையோர் இரங்கும் கையறுநிலைக்காஞ்சி;

கணவனொடு மனைவியரும் கழிந்துழி, இறந்துபடாது ஒழிந்த ஆயத்தாரும் விறலியரும் தனிப்படருழந்த செயலறு. நிலை. மற்றை மூதானந்தம் கையறுநிலைகளுள் அடங்குதல் ஈண்டுப் பொருந்தாது. (புறத். 24 பாரதி)

இது புறப்பொருள் வெண்பாமாலைப் பொதுவியற் படலத்துக்கண் ‘சிறப்பிற் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்று. (11-4)

இத்துறை வீரசோழியத்துள் காஞ்சித்திணைக்கண் ‘நிலை’ என்ற தலைப்பில் அடக்கப்படுகிறது. (கா. 102)

“கன்னன் இறந்துபட்ட செங்களத்துள், அவனுடைய கற்பின் மனைவி, துறக்கத்தின்கண்ணும் அவனுடம்பைத் தழுவதற் காக இவ்வுடம்பைத் தழுவி உயிர்நீத்தாள்கொல்லோ?” என்ற கவி கூற்றாகிய பாரதவெண்பா மேற்கோள். (தொ. பொ. 79 நச்.)

களத்தில் பேய்க்கு ஊட்டல் -

{Entry: K11__0289}

இது களவேள்வி என்னும் வாகைத்திணையின் துறை. (சாமி. 140)

களப்பலி -

{Entry: K11__0290}

யுத்த களத்தில் போர் தொடங்கு முன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. ‘களப்பலியூட்டு சருக்கம்’ (வில்லி) (L)

களப்பாட்டு -

{Entry: K11__0291}

களத்துப் போர் அடிப்போர் பாடும் பாட்டு. ( L )

களம் வேட்டல் -

{Entry: K11__0292}

போரிற் பகைவர்படையைக்கொண்டு பேய்கட்கு விருந் தூட்டுதல். ‘அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய’ (புறநா. 26).

‘களவேள்வி’ என்பதும் அது. அது காண்க.

களவழி -

{Entry: K11__0293}

இது ‘கிணைவன் புகழ்ந்த களவழி’ என வாகைத்திணையிலும், ‘பாணர் மறுத்த களவழி’ எனப் பாடாண்திணையிலும் என ஈரிடங்களில் வந்துள்ளது. அவ்வத் தலைப்பினுள் காண்க. (இ. வி. 613 - 30, 617 - 20)

வீரசோழியம் வாகைத்திணைக் களவழியையே குறிப்பிடு கிறது. (கா. 104)

களவழி வாழ்த்து -

{Entry: K11__0294}

அரசன் போர்க்களத்துப் பெற்ற செல்வத்தைப் பாணர் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. மா. 9 : 19)

களவின் ஆதந்து ஓம்பல் -

{Entry: K11__0295}

களவினான் பசுக்களைக் கைப்பற்றி அவை உரியோரான் மீட்டுக் கொள்ளப்படாமல் பாதுகாத்தல்.

கவர்ந்த நிரையை உரியோர் மீட்கவிட்டு வாளா மீளுதல் வெட்சி ஆகாது; மீட்க விடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தன்பால் ஊறின்றி உய்ப்பதே வெட்சி என்பது இதன் கருத்து. (புறத். உ. பாரதி.)

இருபெருவேந்தர் போர் செய்யக் கருதினால், ஒருவர் மற்றவர் நாட்டு வாழும் ஆவும் பார்ப்பாரும் பெண்டிரும் சிறுவரும் நோயாளரும் முதலிய தீங்கு செய்யத்தகாத உயிர்களைப் போர்ச்செய்தியை முன்னறிவித்து அகற்றிப் பொருதலும், போதற்கு அறிவில்லாத ஆக்களைத் தாமே பாதுகாவலாகக் கொண்டு வந்து பாதுகாப்பில் விடுத்துப் பின்னர்ப் பொருத லும் முறை என்பதே இதன் கருத்தாகும். (தொ. பொ. 57 நச்.)

களவேள்வி -

{Entry: K11__0296}

அரசன் பகைவரை அழித்த போர்க்களத்தில் களவேள்வி செய்த திறத்தினை, “பலுவைப் போலும் பிறழ்ந்த பற்களை யுடைய பேயுண்ணுமாறு, மகுடமணிந்த தலையாகிய மிடாவில் தோளொடு வெட்டுண்டு வீழ்ந்த தொடிக்கையே துடுப்பாக, மூளையாகிய சோற்றை முகந்து, கொடித்தானை மன்னவன் வழங்கினான்” எனப் புகழ்ந்து பாடும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8 - 6)

களிற்றின் தொலையார் மலைவு -

{Entry: K11__0297}

இது தும்பைத் துறைகளுள் ஒன்று; களிற்றொடு மலைதலும் படுதலும் என இவை.

‘களிற்றுடன் நிலை’ காண்க. (வீ. சோ. 105)

களிற்றுடன் நிலை -

{Entry: K11__0298}

தாம் எறிந்த வேலால் புண்பட்டு இறந்து வீழ்ந்த கூரிய தந்தங்களையுடைய யானையோடே, மலை முறிந்து வீழ அதன்கீழ் அகப்பட்டிறந்த போர்வல்ல சிங்கத்தை ஒத்து, வீரரும் சாய்ந்து இறந்து கிடந்த செயலைக்கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 : 20)

‘களிற்றொடு, பட்ட வேந்தனை அட்டவேந்தன், வாளோர் ஆடும் அமலை’ -

{Entry: K11__0299}

நின்ற களிற்றொடு கூடிய வேந்தனைப் போர்க்களத்தில் கொன்ற அரசனுடைய படையாளர் வியந்து, பட்டோனைச் சூழ்ந்து நின்று ஆடும் திரட்சி. (தொ. பொ. 72 நச்.)

அமலுதல் நெருங்குதல் ஆதலின், ‘அமலை’ கூட்டம் ஆகும்.

(நச்.)

அமலை - பலர் நெருங்கி ஆர்க்கும் ஆரவாரத்திற்கு ஆகுபெயர். (புறத். 17 பாரதி)

இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘ஒள்வாள் அமலை’ என்னும் (7 : 12)

வீரசோழியம் இதனை ‘வாளாட்டம்’ என்னும். (கா. 105)

களிற்றொடு படுதல் -

{Entry: K11__0300}

இது ‘களிற்றுடன் நிலை’ என்னும் தும்பைத்திணைத்துறை.

(சாமி. 138)

‘களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடு’ -

{Entry: K11__0301}

மாற்றரசன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையால் தாக்கியோ வேகங்கொண்டு கருவிகளால் தாக்கியோ விலக்கி, அவனை யும் அக்களிற்றையும் எதிர்த்துப் போரிட்டோர் பெருமை.

இது களிறு எறிந்தான் பெருமை கூறுதலின். ‘யானை நிலை’யுள் அடங்காதாயிற்று. (தொ. பொ. 72 நச்.)

மேல்வரும் பகைவர் யானையை எதிர்த்து ஏறும் பகைவர் பெருமை. (புறத். 17 பாரதி)

இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

புறப்பொருள் வெண்பாமாலை இதற்குக் ‘களிற்றுடனிலை’ என்ற துறையைக் கொண்டு பொருள் வேறாகக் கொள்ளும். (7 : 20)

வீரசோழியம் இதனைக் ‘களிற்றின் தொலையார் மலைவு’ என்னும். (கா. 105)

கற்காண்டல் -

{Entry: K11__0302}

போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்து கொள்வதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. மா. 10 - 8)

கற்காண்டலின் பகுதி -

{Entry: K11__0303}

கல்காணச் சேறல், இடைப்புலத்துச் சொல்லுவன, கண்டுழி இரங்குவன, கையறுநிலை, பாணர் கூத்தர் முதலியோர்க்கு உரைப்பன, அவர் தமக்கு உரைப்பன - போல்வனவாம்.

(தொ. பொ. 60 நச்.)

கற்கோள் நிலை -

{Entry: K11__0304}

இறந்துபட்ட வீரனுக்கு அறிகுறியாக நடுவதற்குத் தக்க கல்லினைப் தேர்ந்தெடுத்தல். இது கால்கோள் எனவும்படும் இது பொதுவியல் துறை. (பு. வெ. மா. 10 - 9)

கற்சிறை -

{Entry: K11__0305}

கல்லாகிய அணை; அது நீரைத் தேக்குவது போலச் சிறந்த வீரன் தமரை எதிர்த்து வரும் பகைவர் பலரையும் தானொரு வனேயாய் நின்று தடுப்பான் என்பது.

‘வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை’ என்பது வஞ்சித்துறைகளுள் ஒன்று. (தொ. பொ. 63 நச்.)

கற்பகுதி ஆறு -

{Entry: K11__0306}

நடுகல்லாவது போரில் புறங்கொடாது வீரத்தொடு போர் புரிந்து புகழை நிறுத்திப் போர்க்களத்து ஒழிந்த வீரருக்கு நினைவுக்கல் நாட்டி விழாக்கொண்டாடிப் போற்றுவது. தக்க கல்லினைக் காண்டல், அக் கல்லினைக் கொண்டு வருதல், அதனை நீராட்டித் தூய்மை செய்தல், அதனை நடுதல், அதன்கண் வீரன் பெயரும் புகழும் பொறித்தல், அக்கல்லினை மறவனாகவே கொண்டு வாழ்த்தி வழிபடுதல் என்று கற்பகுதி ஆறுவகைப்படும். (தொ. பொ. 60 நச்.)

கற்பகுதி மன்னுறு தொழிலாகவும் அமையும்; தன்னுறு தொழிலாகவும் அமையும். வீரத்தை வெளியிடும் புறத்திணை எல்லாவற்றிற்கும் கற்பகுதி பொது.

கற்புமுல்லை -

{Entry: K11__0307}

தான் பிறந்த இல்லத்துப் பெருமிதமான வாழ்வு வாழ்ந்து அமுதத்தையே உணவாகக் கொள்வதைவிட, கணவனில்ல மாகிய புக்ககத்தே அவன் ஈட்டிய அற்பமான இலையுணவை உண்பதே பெருமை மிக்கது எனத் தன் உள்ளத்தே தலைவி கருதுவதைச் சிறப்பித்துக் கூறும் துறை. இது ‘முல்லைப் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 13-8)

கற்புமுல்லையின் பக்கம் -

{Entry: K11__0308}

கணவன் பிரிந்த காலத்தே தலைவி தனது உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தலும் ‘கற்பு முல்லை’ என்றே கொள்ளப்படும். (பு. வெ. மா. 13-9)

கற்பு முல்லையின் மற்றொரு பக்கம் -

{Entry: K11__0309}

நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் போந்த தலைவி, அத்தகைய கணவனது பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து கூறுதலும் ‘கற்புமுல்லை’ எனவே கொள்ளப்படும்.

(பு. வெ. மா. 13-10.)

கற்பு வென்றி -

{Entry: K11__0310}

செயற்கரிய செய்யும் உத்தமப்பெண்டிரின் கற்பு மேம் பாட்டையும் அதனால் விளையும் சிறப்பையும் எடுத்துக்காட் டும் வாகைத்துறை.

“இலக்குவன் மூட்டிய தீயில் சானகி மூழ்க, மூட்டிய தீ அவள் கற்புத்தீயால் ஒழிய, அவள் கற்புத்தீ மூட்டிய தீயைச் சுட்டு விட்டது என்பதை நோக்க, சானகியின் புனிதக் கற்புக்கு இணையுண்டோ?” என்றாற் போல்வன கற்பு வென்றியாம்.

(மா. அ. பாடல் 570)

கைக்கிளைப்படலம் -

{Entry: K11__0311}

அகப்புறமாகிய கைக்கிளை பற்றிய ஆண்பால் கூற்று, பெண் பால் கூற்றுப் பற்றிய துறைகள் தொகுத்தமைக்கப்பட்டுப் புறப் பொருளின் இறுதியில் அகப்பொருள் ஒழிபாய்க் கொள்ளப் படும் படலம். (பு. வெ. மா. 14, 15)

காஞ்சி -

{Entry: K11__0312}

தன் வலிமை கொண்டு பகைவன்மேல் படையெடுத்து வஞ்சி சூடிய வேந்தனை எதிர்ஊன்றும் துறைகள் காஞ்சித் திணையினவாம். இக்காஞ்சி புறப்பொருள் வெண்பாமாலை யின் நான்காவது திணை.

தொல்காப்பியத்தில் காஞ்சி என்பது நிலையாமையைக் குறித்துப் பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாக வரும். ஆறாம் திணையாம். (தொ. பொ. 78 நச்.)

காஞ்சி அதிர்வு -

{Entry: K11__0313}

வஞ்சிவேந்தன் படை தம்மைத் தாக்க வருதலைப் பொறாத காஞ்சி மறவர்தம் ஆற்றலைச் சிறப்பித்துக் கூறும் காஞ்சித் துறை. (பு. வெ. மா. 4-2)

இதனை இலக்கண விளக்கம் ‘விறல் மிகுத்து எதிர்தல்’ என்னும் 615-2

காஞ்சி சூடுதல் -

{Entry: K11__0314}

தன்னை எதிர்த்து வரும் வஞ்சி வேந்தனது படையைக் கண்டு சீற்றத்துடன் அவனை எதிர்க்க எழுந்த மன்னன் காஞ்சிப் பூச்சூடுதல் என்னும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4-1) (இ. வி. 615-1)

காஞ்சித் தழிஞ்சி -

{Entry: K11__0315}

தம் நாட்டின்மீது படையெடுத்தலைத் துணிந்து புறத்தே பாசறை அமைத்துத் தங்கிய வஞ்சிப்படை தம் நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே புகாவண்ணம் நாட்டில் புகுதற் குரிய காட்டு வழிகள் பலவற்றையும் காஞ்சி மறவர் பாது காத்திருத்தல் என்ற காஞ்சித் துறை. (பு. வெ. மா. 4-3)

காஞ்சித் திணை -

{Entry: K11__0316}

வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை. (தொ. பொ. 78 நச்.)

காஞ்சித்திணையின் இலக்கணம் -

{Entry: K11__0317}

உலகியல் ஒருவருக்கும் நிலைத்த துணையாக இருத்தலைத் தன்னிடத்துக் கொண்டிராதிருத்தலையே தன் பண்பாகக் கொண்டுள்ள காரணத்தால் பலவகைப்பட்ட உலக நிலை யாமைகளைக் கூறுவது காஞ்சித் திணையாம். (தொ. பொ. 76 இள.)

தனக்கு ஒப்பில்லாத வீட்டின்பம் உறுதலையே காரணமாகக் கொண்டு அறம் பொருள் இன்பமாகிய பொருட் பகுதி யானும், அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வ மும் இளமையும் முதலியவற்றானும் நிலைபேறு இல்லாத உலக இயற்கையைப் பொருந்த எடுத்துரைப்பது காஞ்சித் திணையாம். (78. நச்.)

ஒப்பற்ற மறுமை இன்பத்தைக் காட்டுதற்குப் பலவழியானும் நிலையற்ற உலகியலை இகழும் முறையினை உடையது காஞ்சித் திணை; அல்லது, முறை சிறவாத பல துறையானும் நிலையற்ற உலகியலைத் தழுவி உரைப்பது காஞ்சித் திணை. (புறத். 23 பாரதி.)

செல்வம் இளமை யாக்கை என்னும் இவற்றானாய பற்றுள் ளம், இன்ப வாழ்க்கைக்கு ஏதுவாகிய உலகியல் பொருளான அறம் பொருள் இன்பங்களை உள்ளவாறு நுகர முடியாமல் செய்து வாழ்க்கையின் இன்பத்தைக் கெடுத்துவிடும் ஆதலின், அவற்றது நிலையாமையை உணர்ந்தால்தான் அறம் பொருளின்பங்களைத் தக்கவாறு அளவறிந்து நுகர்ந்து இன்பவாழ்க்கை வாழ்தல் முடியும் என அவற்றது நிலை யாமையைச் சான்றோர் கூறுவது காஞ்சித் திணையாம். (தொ. பொ. 285 குழ.)

காஞ்சித்திணையின் விழுப்பவகைத் துறைகள் -

{Entry: K11__0318}

விழுப்பம் - மேம்பாடு. மேம்பாடு சுட்டும் துறைகள் ‘பெருங் காஞ்சி’ முதல் ‘தலையொடு முடிதல்’ ஈறாகிய பத்துமாம். ‘ஆண்பாற் காஞ்சித் துறைகள்’ காண்க. (தொ. பொ. புறத். 24 பாரதி.)

காஞ்சித்திணையின் விழுமவகைத் துறைகள் -

{Entry: K11__0319}

விழுமம் - துயரம். துயரம் சுட்டும் துறைகள் ‘பூசல் மயக்கம்’ முதல் ‘காடு வாழ்த்து’ ஈறாய பிற்பட்ட பத்துத் துறைகளாம். ‘பெண்பாற் காஞ்சித்துறைகள்’ காண்க. (தொ. பொ. 24 பாரதி.)

காஞ்சி பெருந்திணைக்குப் புறனாதல் -

{Entry: K11__0320}

‘ஏறிய மடல் திறம்’ முதலாகிய நோம்திறக் காமப்பகுதி அகத் திணை ஐந்தற்கும் புறனாயவாறு போலக் காஞ்சி புறத்திணை ஐந்தற்கும் புறனாதலானும், இதுபோல ஏறிய மடல் திறம் முதலிய நான்கும் நிலையாமை நோம்திறம் பற்றியும் வருதலானும், காஞ்சி பெருந்திணைக்குப் புறனாயிற்று. (தொ. பொ. 76 இள.)

எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்ற நான்கு மணம் பெற்ற பெருந்திணை போல, இக்காஞ்சியும் அறம் பொருள் இன்பம் என்ற மும்முதற் பொருளும், அறத்தினது நிலையாமை பொருளது நிலை யாமை இன்பத்தது நிலையாமை என்ற அவற்றது நிலை யாமையும் ஆகிய ஆறனுள்ளும், நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத்திணைகட்கும் ஒத்த மரபாயிற்று ஆக லானும், ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே’ (தொ. பொ. 105 நச்.) என்ற பிரமம் முதலிய நான்கு மணங்களையும் அகத்திணைப் பாடல் புனையும் சான்றோர் இகழ்ந்தாற் போல, அறம் முதலியவற்றது நிலையின்மை உணர்ந்த பெருந்தவச் சான்றோர் அவற்றை இகழ்தலானும், ‘ஏறிய மடல் திறம்’ முதலிய நான்கும் தீய காமம் ஆயவாறுபோல, உலக வாழ்க்கையை விரும்பி நுகர்வார்க்கு நிலையாமையும் நற்பொருள் அன்றாம் ஆகலானும், பெருந்திணை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற உரிப்பொருளிடை மயங்கி வருதலன்றித் தனக்கெனத் தனிப்பட்ட வகை நிலம் இல்லாத வாறு போல, காஞ்சி அறம்பொருள் இன்பம் பற்றி அன்றி வேறு நிலையாமை என்பதொரு பொருள் இன்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறன் ஆயிற்று. (77 நச்.)

பொறி அவிக்கும் உரன் இன்றி இன்பம் விழைந்து மேவன செய்வாரது காமவகை பெருந்திணையாவது போல, முயற்சி மேற்கொள்ளும் உரன் இன்றி நிலையாமை சொல்லி நெஞ் சழிய மனம் மடிவதே காஞ்சி ஆவதானும், இவ்விரண்டற்கும் இடம்பொழுது வரைவு இன்மையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. (புறத். 22 பாரதி)

பெருந்திணை, பெரும்பான்மை உலகியல் வழக்கும் சிறு பான்மை நாடக வழக்கும் பொருந்தி அகன் ஐந்திணையின் மருங்காக அவற்றின்கண் நிகழும். அது போல, காஞ்சித் திணை பெரும்பான்மையும் உலகியற்கையாக அமைந்து, வெட்சி முதலிய புறத்திணை ஐந்தின் மருங்காக அவற் றின்கண் நிகழும்.

பெருந்திணை, அளவிறந்த காம வேட்கையான் பெருமையும் உரனும் அச்சமும் மடனும் நாணும் ஆகிய பண்புகளை இகழ்ந்து மடலேறுதல் முதலியவற்றைப் பற்றி வரும். அது போல, காஞ்சித்திணை மறவெறிமிக்குத் தன்னைத் தானே பலவாறு வருத்திக் கொள்வது.

வேட்கை மிகுதியான் இன்பப் பகுதியாகிய காமக்கூட் டத்தை மடலேறுதல் முதலிய துன்பப் பகுதிகளாக்கி நிலை கலங்கிச் சாம்புதல் பெருந்திணை நிலைமை. அதுபோல, புகழும் வெற்றியும் நோக்கி மிக்கெழுந்த மறச்செயல்களால் துன்பத்தைப் பெருக்கிச் சிதைந்து மடிதல் காஞ்சி நிலைமை.

இளமை தீர்திறம் முதலாய மூன்று பெருந்திணைக் குறிப்பும் இளமை நிலையாமை இன்ப நிலையாமை என்பனவற்றைக் குறிப்பான் உணர்த்தி நிற்கின்றன. அதுபோல, காஞ்சித் துறைகள் செல்வ நிலையாமை யாக்கை நிலையாமை என்பனவற்றைக் குறிப்பான் உணர்த்தி நிற்கின்றன.

பெருந்திணையுள் தலைமைப்பாடில்லாத அடியோரும் வினைவல பாங்கினரும் புரியும் காம ஒழுக்கங்கள் அடங்கி யுள்ளன. அதுபோல ஊழ்முறையால் நேரும் முதுபாலை தாபதநிலை தபுதாரநிலை முதலியவை நிலையாமையின் பாங்காகிக் காஞ்சியில் அடங்குகின்றன.

பெருந்திணை ஒழுக்கம் சான்றோரான் இகழப்படுதலையும் காமநிலையின்மையையும் நோக்கிக் கிழவனும் கிழத்தியும் ‘சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’ என்று உணர ஏதுவினைப் பெறுவர்; அதுபோல, கூற்றத்தின் வலிமையை யும் யாக்கை பொருள் இவற்றது நிலையாமையையும் நோக்கி ‘யான் எனது’ என்னும் செருக்கு நீங்கி அருளுடையவராய்ச் செம்பொருள் காண்பதே பிறவிப்பயன் என உணர ஏதுவினைப் பெறுவர் மாந்தர்.

இன்ன பல ஒப்புமைகளான் காஞ்சி பெருந்திணைக்குப் புறனாம். (தொ. புறத். 22 ச. பால.)

காஞ்சியான் -

{Entry: K11__0321}

வஞ்சிப்பூச் சூடித் தன் நாட்டைக் கைப்பற்ற வரும் படை வேந்தனையும் வீரரையும் எதிர்ஊன்றிக் காஞ்சிப்பூச் சூடிப் போரிடும் வீரன். (பு. வெ. மா. 4)

காஞ்சி வேந்தன் -

{Entry: K11__0322}

முதற்கண் ஆனிரைகளைக் கவர்தலின் பூசலைத் தொடங்கிப் பகைவரது நாடு கோடற்கு வஞ்சிப்பூச் சூடிப் போர்மேல் புறப்பட்டுவரும் வேந்தனை எதிரூன்றித் தாக்கித் தன் நாட்டைப் பாதுகாக்கும் வேந்தன் ‘காஞ்சியான்’ எனவும் படும்.

காட்சி -

{Entry: K11__0323}

போர்க்களத்துப் பட்ட வீரர்க்கு நினைவுக்குறியாகக் கல் நிறுத்துதற் பொருட்டுத் தக்கதொரு கல்லினைத் தேர்ந்து காணல். (தொ. பொ. 63 இள.)

கல் உள்ள இடத்தே சென்று கல்லினைத் தேர்ந்து காணு தலும், அக் கல்லினை நாட்டிய பின் அதன்கண் மறவனைத் தெய்வமாகக் காணுதலும். (60 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியற் படலத்தின்கண் ‘கற்காண்டல்’ என்ற எட்டாவது துறையாக அமைந்துள்ளது (10-8) வீரசோழித்துள் ‘துகள் அறு கல் தேடாப் பொறித்தல்’ என்பதன்கண் அடக்கப்பட்டுள்ளது. (கா. 100)

காட்சி வாழ்த்து -

{Entry: K11__0324}

சிறந்த நிலையிலுள்ள தலைவனைத் தான் காணும் வாய்ப்புப் பெற்ற புலவன் புகழ்ந்து வாழ்த்தும் பாடாண்துறை.

“அரசே! நீ கடற்போரில் வெற்றிகொண்டு வீறு பெற் றிருக்கும் நிலையைக் காண்டற்பொருட்டாகவே, கடத்தற் கரிய அருவழி பலவற்றையும் கடந்து வந்துள்ளேன்” (பதிற். 41) என்றாற் போலப் பாடுவது. “ ‘ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள்ளிய ன்’ என்ற நின்கொடைப் புகழ் என் செவிப்படவே, அத்தகைய கொடையிற் சிறந்த நின்னைக் காண வந்துள்ளேன்” (பதிற். 61) என்று கூறுவதும் அது.

காடுகெழு செல்வி -

{Entry: K11__0325}

துர்க்கை : ‘காடுகெழு செல்விக்கு ப் பரணி நாட் கூழுந் துணங் கையும் கொடுத்து’ (தொ. பொ. 461 பேரா. உரை)

காடு வாழ்த்து -

{Entry: K11__0326}

இவ்வுலகத்தின் இயல்பை நாம் நன்கு அறியும் வகை உணர்த்தும் நன்காடு, பலரும் அழியவும், தான் மாத்திரம் அழியாது நிற்றலைக் கூறும் காஞ்சிப் பொதுவியற்பால துறை. (பு. வெ. மா. 12-6)

‘மலர்தலை உலக த்து மரபு நன்கறியப், பலர் செலச் செல்லாக் காடுவாழ்த்து என்னும் தொல்காப்பியம். (பொ. 79 நச்.)

காத்து ஊர்புகல் திறம் -

{Entry: K11__0327}

வெட்சியார் தாம் கைக்கொண்ட பகைவருடைய ஆநிரையை நலிவுறாமல் பாதுகாத்து ஊரை அடையும் செய்தி என்ற வெட்சித்துறை.

‘நுவல்வழித் தோற்றம்’, ‘தந்துநிறை’-இவை காண்க. (வீ. சோ. 99)

காதலன் இழந்த தாபத நிலை -

{Entry: K11__0328}

காதலனை இழந்த மனைவி தவம் புரிந்து ஒழுகிய நிலை.

இருவரும் ஓருயிராய் நிகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமும் செல்வமும் ஒருங்கு இழந்தாள் தலைவியேயாம். இதனை இல்லறம் இழத்தலின் அறம் நிலையின்மை எனினும் அமையும் என்ப.

“யாம் இளையமாக இருந்த காலத்தே இச்சிறுவெள்ளாம் பல் தழையாக உடுக்கப்பட்டன; இதுபோது என் கொழுநன் மாய்ந்து பட்டானாக, பொழுது மறுத்து உண்ணும் புல்லரிசி யாயின. ஆதலின் இவை இரங்கத்தக்கன” (புறநா. 248) என்றாற்போன்ற கூற்று. (தொ. பொ. 79 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியற் படலத்து (சிறப்பிற் பொதுவியற்பால கூற்றுக்களுள்) ஒரு கூற்று. (11-4)

வீரசோழியத்துள் ‘நிலை’ என்ற தலைப்பில் காஞ்சித் திணையுள் இத்துறை அடக்கப்பட்டது. (கா. 102).

காதலி இழந்த தபுதார நிலை -

{Entry: K11__0329}

தன் மனைவியைக் காதலன் இழந்த தபுதாரநிலை; என்றது, தாரம் இழந்த நிலையை. தன் காதலியை இழந்தபின் வழி முறைத் தாரம் வேண்டின் அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்ஞான்றும் மனைவி இல்லாதானும் தபுதார நிலைக்கு உரியனாயினும் அது காஞ்சி ஆகாது என்றற்கும், ‘தபுதாரநிலை’ என்றே பெயர் பெறுதல் மரபு என்றற்கும் ‘காதலி இழந்த நிலையும்’ என்றொழியாது பின்னும் ‘தபுதார நிலையும்’ எனப்பட்டது. தலைவர் வழிமுறைத் தாரமும் எய்துவர் ஆகலின் அவர்க்கு நிலையாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சி அன்றாயிற்று.

இஃது யாக்கையும் இன்பமும் ஒழுங்கு நிலையின்மையாம்.

எ-டு : “உயிர் போக்கிக்கொள்ள மாட்டாத வலிமை யுடைத்தாதலின், எனது துன்பம் அளவிறந்ததன்றா யிற்றே! களர் நிலத்துச் சுடுகாட்டு ஈமம் ஆகிய அழற்பள்ளியில் என் காதலி மாய்ந்துபட்டாள். யானோ இன்னும் உயிர் வாழ்வேன்! என்னே இவ்வுயிர் வாழ்க்கைப்பண்பு!” என்ற காதலன் கூற்று. (புறநா. 245. தொ. பொ. 79 நச்.)

புறப்பொருள்வெண்பாமாலையுள் ‘சிறப்பிற் பொதுவியற் பால’ கூற்றுக்களுள் இதுவும் ஒன்று. (11-3)

வீரசோழியத்துள் காஞ்சித் திணைத் துறைகளுள் ஒன்றாகிய ‘நிலை’ என்பதன்கண் இத்தபுதாரநிலை அடக்கப்பட்டுள் ளது. (கா. 102)

காந்தள் (1) -

{Entry: K11__0330}

வேலன் என்று சொல்லப்படும் முருகவழிபாடு நிகழ்த்து வோன் முருகனது ஆவேசம் கொண்டு அகத்திணைக்கண் ஆடுதல் ‘வெறியாட்டு’ எனவும், புறத்திணைக்கண் ஆடுதல் ‘வெறிக்கூத்து’ எனவும்படும். புறத்தில் வேலன் காந்தட் பூச்சூடி ஆடுதலின் அது காந்தள் எனவும்படும். வெறியாடுதல் அகத்திற்கே சிறந்து புறத்திற்கும் வருவது. அகத்தில் வெறி யாடிக் குறிசொல்லும் வேலன், புறத்தில் வெறிக்கூத்து மாத்திரமே நிகழ்த்துவான். (தொ. பொ. 298 குழ.)

குறிசொல்ல விரும்பி அழைக்கும் வேலன்வெறியாட்டு அகத் தினைச் சார்ந்தது. இவ்வெட்சிக்கண் வேலன் ஆடும் வெறிக் கூத்து அதனின் வேறாயது என்பதை விளக்கவே, புறத்திணைக் கண் வேலன் சூடி ஆடும் காந்தட் பூவின் பெயரால் புறத் திணை வெறிக்கூத்துக் ‘காந்தள்’ எனப்பட் டது. அகத்திணை யில் வேலன் குறிஞ்சிப்பூவே சூடி ஆடுவான். (புறத். 5 பாரதி)

தனியே காந்தள் என்பது மடலேறுதலையும் குறிக்கும் என்பாருமுளர். ஆதலின் அதனை நீக்க, ‘வெறியாட்டயர்ந்த காந்தள்’ எனப்பட்டது. மேலும், காந்தள் என்பது மடலேறும் அளவிற்குக் காமம் முறுகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறியாதலின் காமம் முறுகிப் பெண்பால் ஆடும் வெறியும், அந்நிலத்திலுள்ளார் வெற்றி வேண்டி ஆடும் வெறிபோலக் குறிஞ்சிநிலத்துக்குச் சிறந்ததாம். காமவேட்கை முறுகியநிலை யில் அத்தலைவி தன்நிலை தாய்க்குப் புலனாகாதவாறு தானே முருகன் ஆவேசம் வந்தாற் போல நடித்து ஆடுவாள் என்பது. (63 இள.)

முருகனது வேலை ஏந்தி நிற்கும் வேலன் காந்தள் சூடி ஆடுதலின் ‘காந்தள்’ எனப்பட்டது. சோதிடம் கூறும் பெண்ணாகிய கணிக்காரியும் ஆடுதல் உண்டு. (60 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் உழிஞைப் படலத்து ஒன்பதாவது துறையாக உள்ளது.

காந்தள் (2) -

{Entry: K11__0331}

“சூரபன்மனை அழிக்கும் போர்குறித்துப் புறப்பட்டபோது முருகப்பெருமான் காந்தள் மலரைச் சூடியே சென்றான்; ஆதலின், போர் விரும்பியெழும் மன்னர் யாவரும் வெவ் வேறு மலரைச் சூடாமல் இரார்” என்று கூறும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 9).

காமம் குழவி மருங்கின் கூறிய பகுதி -

{Entry: K11__0332}

‘குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி’ காண்க. (இ. வி. 617-48)

காமம் ‘குழவி மருங்கினும் கிழவதாதல்’ -

{Entry: K11__0333}

குழவிப்பருவத்தும் அவர் விளையாட்டு மகளிரொடு பொருந் தியவிடத்துக் காமப் பகுதி கூறப்படும். (தொ.பொ. 82 இள.)

குழவிப் பருவத்தும் காமப்பகுதி உரியதாகும். ‘மருங்கு’ என்றதனால், மக்கட் குழவியாகிய ஒரு பகுதியே கொள்ளப் படும்; தெய்வக்குழவி என்பது இல்லை. சிறு குழவியைக் கடவுள் காக்க என்று கூறுதலும், பாராட்டுமிடத்துச் செங் கீரையும் தாலும் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும் அம்புலியும் சிற்றிலும் சிறுதேரும் சிறுபறையும் எனப் பெயரிட்டு வழங்குதலும் மரபு. இப்பருவத்திற்கு ஏழாண்டு உயர் எல்லை. குழவிப் பருவம் கழிந்தோர் பாடுமாறு வேண்டியக்கால், அக்குழவிப் பருவமே கருதிப் பாடப்படும். (84. நச்.)

காதற்செவ்வி கருத ஒண்ணாப் பேதைப்பருவச் சிறாஅர் மாட்டும், நற்காமப் பாடாண்திணை புலனெறி வழக்காற்றில் உரிமை கொள்ளும். காம உணர்வு குழவிக்கு இன்று எனினும் அக்குழவி மாட்டுத் தூய காதல் கொள்வார் அன்புப் பெற்றி பற்றிய பாடாண் அக்குழவிமேல் சார்த்தி வருவது இதில் கூறப்படும். (புறத். 29 பாரதி)

‘காமம் நீத்த பால்’ -

{Entry: K11__0334}

அருள் உள்ளம் பிறந்த பின்னர் உலகியலுள் நின்றே எப்பொருள்களினும் பற்றற்ற பகுதி. (தொ. பொ. 76 நச்.)

வெலற்கரிய காமத்தை வெறுத்து விலக்கும் அருந்திறம். இது துறவன்று; இல்வாழ்ந்தும் காமங்கடியும் உரனுள்ளம் உடைய பெரியார் உண்மையால், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடும் பெருந்துறவின் வேறாய், இருதலை வாழ்விலும் ஒருதலை நிற்போர் அறமாகும். ஆதலின், காமம் நீத்தலாவது துறவறம் கருதாது காமம் கடிந்து இன்பம் துன்பம் என்ற இரு நிலைக் கும் பொதுவான உரனுள்ளப் பெருமை. (புறத். 21 பாரதி)

துறவுள்ளத்தால் எப்பொருளிலும் பற்றற்று நிற்கும் நிலை.

காமம் - பொருள். இது துறவு வென்றி. (284 குழ.)

இதனை வீரசோழியம் ‘துறவு’ என்னும். (கா. 104)

தத்தமக்குரிய கடமைகளை மேற்கொண்டு அவற்றைப் பிழையின்றி நடத்துமிடத்து, மண் பொன் பெண் ஆகிய மூவகை வேட்கையினும் நீங்கி ஒழுகும் பகுதி.

இது பயனை விழையாது ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பற்றற்றுச் செயலாற்றும் நிலை. (தொ. புறத். 21 ச. பால)

கார்முல்லை -

{Entry: K11__0335}

பாசறைக்கண் இருந்த தலைவன் மீண்டு வருமுன் கார்காலம் வந்த விரைவினைக் கூறும் புறப்பொருள் பற்றிய ‘முல்லைப் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 13-2)

கால்கோள் -

{Entry: K11__0336}

பொருது வீழ்ந்தார்க்கு நடுதற்பொருட்டுத் தேர்ந்துகண்ட கல்லைக் கொணர்தல்.

கால்கோள் - காலம் கொள்ளுதல் - தொடங்குதல்

கல்லில் மறவனுடைய பெயரும் பெருமையும் பொறித்தலுக்கு நாள் கொள்ளுதலும், கல்லினை நாட்டியபின்னர் மறவன் அக்கல்லின்கண் வருதற்கு நாள் கொள்ளுதலும்.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியல் படலத்தில் ‘கற்கோள்நிலை’ என்ற ஒன்பதாவது துறையாக உள்ளது; வீரசோழியத்துள் ‘கல்தேடாப் பொறித்தல்’ என்பதன்கண் அடக்கப்பெற்றுள்ளது. (கா.100) (தொ. பொ. 60 நச்.)

கால்கோளின் பகுதி -

{Entry: K11__0337}

மாலையும் மலரும் மதுவும் சாந்தும் முதலியன கொடுத்தல், அனையோர்க்கு இனைய கல் தகும் என்றல், தமர் பரிந்து இரங்குதல் முதலியன. (தொ. பொ. 60 நச்.)

காலிப்பின் வரும் கண்ணனைக் கண்டு கன்னியர் காமுறுதல் -

{Entry: K11__0338}

மாலையில் மேய்ச்சலுக்குப் பின் கன்று காலிகளோடு திரும்பும் கண்ணன் மீது ஆயர்பாடிக் கன்னியர் காமம் கொண்டமை. (காலி-மாடு)

“பகலில் பெற்றங்களை மேய்த்தபின் மாலையில் அவற்றை ஓட்டிக்கொண்டு அவற்றின் பின்னே வரும் கண்ணன் அழகில் ஈடுபட்ட பெண்கள் அவன்மேல் காமம் கொண்டு ஊணையும் உறக்கத்தையும் ஒழித்து வருந்துகின்றனர்” என்னும் கவிக்கூற்று. அத்தகைய கன்னியரின் தாய் கூறுவதும் ஆம்.

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட புறத்திணைக் கைக் கிளைப்பாற்படும். (பெரியாழ் 3-4-1)

காவல் -

{Entry: K11__0339}

‘அகத்தோன் வீழ்ந்த நொச்சி’ என்ற உழிஞைத்துறை காண்க. அகத்தோன் அரண் காக்கும் உழிஞைத் துறையை வீர சோழியம் ‘காவல்’ எனச் சுட்டுகிறது.

பிழைத்தோரைத் தாங்கும் ‘காவல்’ என்பதும் வீரசோழியத் துள் காணப்படும் ஒரு வாகைத்துறை. (வீ. சோ. 103, 104.)

காவல்தகுதி கூறல் -

{Entry: K11__0340}

இது ‘காவல்முல்லைப் பக்கம்’ என்னும் வாகைத்துறை; அது காண்க. (சாமி. 141)

காவல் முரசம் -

{Entry: K11__0341}

காத்தற் றொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு. ‘காவன் முரசம் நாட்காலையிலே முழங்க’ (பு. வெ. மா. 9:14 உரை) (L)

காவல் முல்லை -

{Entry: K11__0342}

உலகத்தை எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றுதல் தனது கடமையெனக் கொண்ட அரசனது காவற்சிறப்பினை, “இவன் ஒருநாள் காத்தற்றொழிலை விரும்பாது உள்ளம் மடிவனாயின், எண்வகை இயல்பினையுடைய அறங்கூறு அவையத்தார் செயல் பயன்படாது நாட்டில் நீதிநெறி தவறி விடும்” என்றாற் போல எடுத்துரைப்பது. (பு. வெ. மா. 8 : 24)

காவல் முல்லைப்பக்கம் -

{Entry: K11__0343}

அரசனது காவற்சிறப்புப் பற்றிச் சான்றோர், ‘இவன் தன்தந்தையிடம் பின்பற்றிய நெறியிலேயே நாட்டாட்சியைத் தொடர்ந்து நடத்தி ஆறில் ஒருபங்கு வரிவாங்கி அதனைப் பிறர்க்குக் கொடுத்துத் தானும் நுகர்ந்து தன் ஆளுகைக் குட்பட்ட உயிர்கள் தீதின்றி நல்வாழ்வு வாழுமாறு பாது காக்க வேண்டும்” என்றாற் போலக் கூறுவதும் காவல் முல்லைப்பாற்படும். (பு. வெ. மா. 8 : 25)

காவற்காடு -

{Entry: K11__0344}

புறமதிலின் புறத்தே மதிற்சுவருக்கும் அகழிக்கும் இடையே பெரிய காவற்காடு அமைந்திருக்கும். காவற்காட்டில் முள் ளுடைய மரம் செடிகொடிகள் அடர்ந்திருக்கும்; விரைந் தோடும் பகைவர் காலில் தைப்பதற்காக நெருஞ்சிமுள் போன்ற இரும்பு முட்கள் அக்காடெங்கும் பரப்பப்பட்டுக் கிடக்கும்; ஓடுவோர் கால்களில் பிணைந்து இழுத்துத் தள்ளுவதற்காகத் தோட்டி என்னும் இருப்புக் கொக்கிகள் அக்காடெங்கும் தறிகளில் கட்டப்பட்டிருக்கும். காட்டைச் சுற்றிப் பெரும்படை காவல் நிற்கும்; யானைக்காவலும் உண்டு. (தொ. பொ. 275 குழ.)

காவிதி -

{Entry: K11__0345}

1. வேளாளர்க்குப் பாண்டியர் கொடுத்து வந்த ஒரு பட்டப் பெயர். (தொ.பொ.30 நச்.); தேயவழக்காகிய சிறப்புப் பெயர்.

(தொ. எ. 154 நச்)

2. வைசிய மாதர் பெறும் பட்டவகை; ‘எட்டிக் காவிதிப் பட்டம் தாங்கி ய, மயிலியல் மாதர்’ (பெருங். இலாவாண. 3 : 144)

‘செம்மை சான்ற காவிதி மாக்களும்’ மதுரைக். 499) (L)

காவிதிப்பூ -

{Entry: K11__0346}

காவிதியென்னும் பட்டத்தோடு அரசர் அளிக்கும் பொற்பூ.

(தொ. எ. 154. நச்; 155 இள)

கிடங்கு -

{Entry: K11__0347}

மதிலின்புறத்தே, காவற்காடு மருநிலம் இவற்றிற்கு வெளியே, மதிலைச் சுற்றி அகழ் எனவும் அகழி எனவும் வழங்கப்படும் ஆழமான கிடங்குகள் காணப்படும். இக்கிடங்குகளில் கொடிய முதலைகள் பலவாக இருக்கும். கோட்டைக்குள் புக மதிலிடையே நாற்புறமும் வாயில்கள் அமைந்திருக்கும். அகழியைத் தாண்டிக் கோட்டைக்குள் செல்வதற்கு வாயிலின் வழியே பலகையிடப்பட்டிருக்கும். போக்குவரவு இல்லாதபோது அப்பலகையை உள்ளிழுத்துக் கொள்வர். (தொ. பொ. 275 குழ.)

கிடங்கொடு மிளைகாத்து வீழ்ந்த மேலோர் விறல் மேம்படுதல் -

{Entry: K11__0348}

‘செருவிடைவீழ்தல்’ காண்க. (இ. வி. 609-4)

கிணைநிலைப் பாடாண் (1) -

{Entry: K11__0349}

செல்வமிக்க அரண்மனையிடத்தே சிணைகொட்டுமவனது வளத்தைச் சொல்லும் பாடாண்துறை. அஃதாவது “வெள்ளி முளைத்த விடியற்காலத்தில் உபகாரியாம் வேந்தனது மாளிகையை எய்தி வாசற்கடை முன்னே அழகிய கிணைப் பறையைக் கொட்டி ‘நின் யானை வாழ்க!’ என்று சொல்லு வதன் முன் அவன் கொடுத்த பரிசிற்கொடையால் என்னிடத் தினின்று வறுமைத்துயர் ஒழிந்தது” என்று கிணைவன் தான் வள்ளியோனிடத்தில் - பொருள் பெற்ற வளமையை எடுத்துச் சொல்லுவது. (பு. வெ. மா. 9 : 18)

கிணைநிலைப் பாடாண் (2) -

{Entry: K11__0350}

மன்னன் போர்க்களத்தே வென்று கைப்பற்றிய செல்வத்தைக் கிணைப்பறை கொட்டும் பொருநனும், யாழ் எழூஉம் பாணனும் சிறப்பித்துக் கூறும் பாடாண்துறை. அஃதாவது “அரசே! நீ வெற்றி பெற்ற போர்க்களத்தே யாங்கள் பரிசிலாக விரும்பிப் பெற்ற வேழத்தைக் கள்விலையாட்டிக்குக் கள்விலைக்காகக் கொடுக்கவும், இத்தகைய வேழங்கள் பல முன்னரே கள் விலைக்காக அவள் பெற்றுடைமையால், ‘இவ் வேழம் எனக்கு வேண்டா’ என்கிறாள்” என்றாற்போல அரசன் கைப்பற்றிய செல்வப்பெருமையை எடுத்துக் கூறல்.

(பு. வெ. மா. 9 : 19)

கிணைநிலை (வாகை) (2) -

{Entry: K11__0351}

வேளாளன்புகழைக் கிணைப்பறை கொட்டும் பொருநன், “யான் அப்பெருமகனிடம் சென்று, ‘நின் ஏர் வாழ்க’ என்று வாழ்த்திக் கிணையினைக் கொட்டி அவன் செல்வவளத்தைப் பாடிய அன்றே என் வறுமைப்பிணி என்னை விட்டு நீங்கிவிட்டது!” என்றாற் போலப் புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 32)

கிணைவன் புகழ்ந்த களவழி -

{Entry: K11__0352}

மருதநிலத்துக்கு உரிமையுடைய உழவனை மருதப்பறை கொட்டும் கிணைவன் பலவாறு புகழ்ந்து, “இரவலர் வறுமையைத் தீர்க்கும் உழவனது செல்வம் நாள்தோறும் செழித்துச் சிறப்புறுக” என வாழ்த்தும் வாகைத்துறை.

இது ‘கிணைநிலை’ எனவும்படும். (இ. வி. 613-30)

கிணைநிலை - 2 காண்க.

கிளி வென்றி -

{Entry: K11__0353}

நன்கு பழக்கப்பட்ட கிளி, நாகணவாய்ப்பறவையும் தோற்றுப் போம் வண்ணம் பாடும் ஆற்றலைச் சிறப்பித்தல் என்னும் வாகையொழிபாகிய துறை. (பு. வெ. மா. 18 - 11)

குடுமி கொண்ட மண்ணுமங்கலம் -

{Entry: K11__0354}

‘இகல்மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம்’ காண்க.

குடிநிலை -

{Entry: K11__0355}

பழமையும் வீரமும் செறிந்த மறக்குடியின் மாண்பினை, “உலகில் மக்களினம் தோன்றிய காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி இஃது” என்று சிறப்பிக்கும் கரந்தைத் துறை. (பு. வெ. மா.2:14)

குடிநிலை யுரைத்தல் -

{Entry: K11__0356}

ஒரு புறப்பாடலின்துறை. தலைவனுக்கு அவன் ஏவலன், பரம்பரையாகத் தன் குடியிலுள்ளார் உண்மையாகப் பணிபுரியும் திறத்தை எடுத்துக் கூறும் கரந்தைத் திணையைச் சார்ந்த புறத்துறை. (புறநா. 290)

குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை -

{Entry: K11__0357}

பகைவரை வென்றாலன்றித் தன் குடுமியைக் கூட்டி முடித்தல் செய்வதில்லை என்றிருந்த மன்னன், வெற்றிக்குப் பின்னர் அதனைக் கூட்டிமுடித்த புகழ்தரும் செயலைக்கூறும் பாடாண் துறை.

‘குடுமிகளைதல்’ என்ற தொடர்க்கு, மயிர் களைதல் என்றும் பகைமன்னர் முடியினைப் பறித்துக் கைக்கொள்ளுதல் என்றும் வேறு பொருள் கொள்வதும் உண்டு. (பு. வெ. மா. 9 : 21)

குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின் பாற்படுவது -

{Entry: K11__0358}

படிவம் முதலியன கோடல் இதன்பாற்படும். அஃதாவது மதிலகத்துள்ள தெய்வத்திருமேனிகளைக் கைக்கொண்டு, வென்ற மன்னன் தன் நாட்டிற்கு எடுத்து வருதல். (தொ. பொ. 68. நச்.)

குடுமி கொண்ட மண்ணுமங்கலம் -

{Entry: K11__0359}

‘இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம்’ காண்க.

குடிமை -

{Entry: K11__0360}

இது குடிநிலை என்னும் இலக்கணவிளக்க வெட்சியின் இரண்டாம் பகுதியின் (கரந்தை) துறை. (சாமி. 131)

குடைசெலவு -

{Entry: K11__0361}

பழைய மறக்குடி வீரர் முன்னே கூட்டமாகச் செல்ல, காஞ்சி மன்னனுடைய குடை நன்னேரத்தில் போர்க்களம் நோக்கிச் செல்லும் திறன் கூறும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4 : 8)

குடைநாட்கோடலின்பாற் படுவன -

{Entry: K11__0362}

உழிஞை வேந்தன் உழையரை அழைத்து நாள் கொள்க எனல், உழையர் அரசற்கு உரைப்பன, குடைச் சிறப்புக் கூறுவன, முரசு முதலியன நாட்கோடல் போல்வன. (தொ. பொ. 68. நச்.)

குடைநாட்கோள் -

{Entry: K11__0363}

மன்னன் தன் ஆக்கம் கருதிக் குடி புறங்காத்து ஓம்பற்கு எடுத்த குடையை நாட்கொள்ளுதல்.

புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாட்கொள்ளும். தன் நாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞை எனப் பட்டது. அகத்தோனும் முற்றுவிடவேண்டி மற்றொரு வேந்தன் தனக்குத் துணையாக வந்துழிப் புறத்துப் போதற்கு நாட் கொள்ளும்.

இத்துறை புறத்தோன் அகத்தோன் என்ற இருதிறத்து உழிஞையார்க்கும் பொதுவானதாகும். (தொ. பொ. 68. நச்)

புறப்பொருள் வெண்பாமாலை உழிஞைத்துறையுள் ஒன்று.

(6-2)

இந்நூல் குடைநாட்கோளை வஞ்சி (3-3), உழிஞை இரண் டற்கும் கொள்ளும்.

வீரசோழியம் இதனை ‘நாட்கோள்’ என்னும் (கா.103)

குடைநாட்கோள் வாள்நாட்கோள் இவை உழிஞைக்குச் சிறப்பாகச் சொல்லப்பட்ட காரணம் -

{Entry: K11__0364}

ஏனைய போர்கருதிச் செல்லுங்காலும் குடையும் வாளும் நாட்கொள்ளுதல் வேண்டப்படுமாயினும் அவற்றிற்குச் சிறிது காலம் தாழ்த்துப் புறப்படினும் குறையில்லை. உழிஞைப்போர் காலம் தாழ்ப்பின் பகைவர் தம் அரணுக்குள் வேண்டுவனவற்றைத் தொகுத்து ஏமம் செய்து கொள்வர் ஆதலின் இவற்றை இத்திணைக்குச் சிறப்பாக அமைத் தோதினர் நூலோர். (தொ. புறத். 13 ச. பால.)

குடைநிலை -

{Entry: K11__0365}

பசுக்களை வெட்சிப் பூச்சூடிக் கவர்ந்தவனோ, கரந்தைப் பூச்சூடி மீட்டவனோ பகைவன்மேல் படையெடுத்துத் தன் வலிமையை அவற்குக் காட்ட வஞ்சி சூடிப் புறப்பட நினைத்து நல்ல நாளில் நன்னேரத்தே தன் குடையைப் புறவீடு செய்தல் என்னும் வஞ்சித்துறை (பு. வெ. மா. 3-3) இத்துறை தொல்காப்பியத்துள் இல்லை.

இதனையும் இலக்கணவிளக்கம் ‘குடைநாட்கோள்’ என்னும். (606-3)

குடைபுகழ் முல்லை -

{Entry: K11__0366}

‘குடைமுல்லை’ காண்க. (இ. வி. 613-26)

குடைமங்கலம் -

{Entry: K11__0367}

அரசனுடைய வெண்கொற்றக் குடையைச் சிறப்புறப் பாராட்டும் பாடாண்துறை. அஃதாவது சோழனது உயர்ந்த வெண்குடை தன்னைச் சேர்ந்தார்க்குக் குளிர்ந்த நிழல் செய்து தன் பகைவர்க்குக் கதிரவன் போல் வெப்பந் தரும் என்றாற் போலக் குடைநிழலைச் சிறப்பித்துக் கூறுதல். (பு. வெ. மா. 9 : 34)

குடைமுல்லை -

{Entry: K11__0368}

அரசனது வெண்கொற்றக் குடையினைப் புகழ்ந்து கூறுவது. அஃதாவது, “இவ்வெண்குடைக்கு வானமே போர்வையாம்; கதிரவனே மேல்வட்டமாம்; நீர்த்தாரை சொரியும் மேகமே சுற்றுமாலையாம்; திங்களும் ஞாயிறும் வழங்கும் மேரு மலையே காம்பாம்” என்றாற்போலப் புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 28)

குடைமுனைச் சேறல் -

{Entry: K11__0369}

‘குடைசெலவு’ காண்க. (இ. வி. 615-8)

குதிரைக் கதி ஐந்து -

{Entry: K11__0370}

மல்லகதி, வானரகதி, வியாக்கிரகதி, மயூரகதி; விடையின்கதி என்பன. (ஆ. நி. 102)

குதிரைநிலை -

{Entry: K11__0371}

தும்பைத் திணையில் களம்வகுத்துப் போரிடும்போது குதிரைப்படைகள் தாமே உற்சாகத்தால் பகைவரைத் தாக்குதல் ‘ குதிரைமறம்’ எனவும், ஊர்ந்தார்தம் ஏவலின் சென்று தாக்குதல் ‘குதிரைநிலை’ எனவும் தும்பைத் துறை களாகக் கொள்ளப்படும். (தொ. பொ. 72.நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘குதிரைமறம்’ என்னும் (7-7); வீரசோழியம் பொதுவாக ‘நிலை’ என்று கூறும். (கா. 105)

குதிரைநிலைத் துறைப்பகுதி -

{Entry: K11__0372}

தும்பைத் திணையில் குதிரை களிற்றின்மேலும் தேரின் மேலும் சேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் ‘குதிரைநிலை’த்துறைப் பகுதியாம். (தொ. பொ. 72. நச்.)

குதிரைமறம் -

{Entry: K11__0373}

குதிரைப்படையின் ஆற்றலைப் புகழ்தல்; அஃதாவது “வேலும் வாளும் கொண்டு பொரும் பகைவர்படை நடுவே, அரசனுடைய, தலையாட்டத்தினையுடைய குதிரை வில்லி னின்று புறப்பட்ட அம்பு போல விரைந்து படைகளைக் கலக்கிக் கொண்டு இடையே வரும்” என்றாற் போலக் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7-7)

குதிரைவென்றி -

{Entry: K11__0374}

ஐவகைக் கதியும் பதினெண் வகைச் சுற்றுவரவும் பயின்ற குதிரை, தன்மீது அமர்ந்துள்ளவனது விருப்பப்படி பணி செய்து பகைவரை வென்ற சிறப்புக் கூறும் வாகையொழி பாகிய துறை. (பு. வெ. மா. 18 - 13)

குரவனை வாழ்த்தல் -

{Entry: K11__0375}

ஒருவன் தனக்கு மெய்ப்பொருளை உபதேசித்த ஞானகுருவை வாழ்த்தும் பாடாண்துறை.

ஆன்மாக்கள் பல என்றும், அவற்றுள் இறைவன் கரந்து எங்கும் பரந்துளன் என்றும், ஆன்மா நித்தியம் என்றும், உலகியற் பொருள்கள் அழியுந்தன்மையுடையன என்றும், இறைவன் அருளே முத்தி தரும் என்றும், அவனிடம் பக்தி செலுத்த வேண்டும் என்றும், அப்பெருமான் அடி போற்றிக் காமம் முதலிய உட்பகைகளைக் களைந்து வாழவேண்டும் என்றும், நமக்கு உபதேசித்த ஞானகுருவை வாழ்த்துவது குரவர் வாழ்த்தாம். (மா. அ. பா. 34-36)

குரவை நிலை -

{Entry: K11__0376}

போர்க்களத்தே அரசன் பெற்ற வெற்றியைச் சிறப்பித்து இரவு விளக்குஒளியில் முழவு முழங்கத் துணங்கைக் கூத்தாடும் மகளிர்க்கு அக்கூத்தினைத் தொடங்கி வைக்க முதற்கை கொடுத்து அவர்களை மகிழ்வொடு குரவையாடச் செய்து வரும் தும்பைத்துறை குரவைநிலை எனப்படும்.

துணங்கை யாடுதல் காரணமாகப் பிறந்த ஊடல் பொருட்டான் அமைந்த பாடலாயினும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறின் அகத்துறை யாகாது புறத்துறையே ஆகும். (பதிற். 52)

குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி -

{Entry: K11__0377}

மகளிர் குழந்தைகளிடம் அன்பு செலுத்திய இயல்பினைக் கூறுதல். குழந்தையிடம் தாய், “மைந்த! இச்சிறுமி வருந்தி அழுமாறு இவள் பந்தினை எடுத்து ஒளித்து வைத்துவிட் டாய். இனி, உன்தந்தை உனக்காக யானை இவர்ந்து வந்து பரிந்துரை கூறினும், என்னிடம் நீ வந்து என்னைத் தழுவிக் கொள்ள விடேன்!” என்று அவனது குறும்புவிளை யாட்டைக் குறைப்பதற்காகக் கூறுதல் போலும் பாடாண் துறை. (பு. வெ. மா. 9 : 50)

குற்றுழிஞை -

{Entry: K11__0378}

பகைவருடைய அழிக்க முடியாத மதில்மீது ஏறிய உழிஞை வீரன், தான் ஒருவனேயாகிப் போர்செய்து, யானைகள் கணையமரங்களைத் தந்தங்களால் முறித்துக் கோட்டைக் கதவுகளை உடைத்தெறியக் கோட்டையைக் கைப்பற்றிய திறம் கூறும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 13)

‘திறப்பட, ஒருதான் மண்டிய குறுமை’ என்று தொல் காப்பியம் வேறாகக் குறிப்பிடும். (பொ. 68 இள.)

குற்றுழிஞைப் பக்கம் (1) -

{Entry: K11__0379}

உழிஞைவீரர் சங்கும் கொம்பும் ஊதி ஆரவாரத்துடன் வானளாவிய காவற்காட்டைத் தாண்டி, நொச்சியார்க ளுடைய மார்பில் தம் அம்புகளைச் செலுத்தி அவர்களை வீழ்த்தி உட்புகுதல் குற்றுழிஞைப் பக்கங்களுள் ஒன்றாம். (பு. வெ. மா. 6:14)

குற்றுழிஞைப் பக்கம் (2) -

{Entry: K11__0380}

ஆற்றல் மிகுந்த கேடகப்படையின் துணையோடு உழிஞை மறவர், பகைவரது புறமதிலைப் பறவை போலப் பாய்ந்து ஏறிக் கடந்து, மகிழ்ச்சியில் கூத்தாடிக்கொண்டே உட்புறம் நோக்கி வருதல் என்னும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 15)

குறிப்பு -

{Entry: K11__0381}

இது பாடாண்துறை. ‘முன்னோர் கூறிய குறிப்பு’க் காண்க.

(வீ. சோ. 106 உரை)

குறுவஞ்சி -

{Entry: K11__0382}

எதிர்த்து வஞ்சி சூடிவந்த மன்னனுக்குரிய யானை குதிரை முதலிய திறைப்பொருளைக் கொடுத்துப் பணிந்துபோன காஞ்சியான் ஆகிய பகைமன்னன் தன் நாட்டு மக்கட்கு ஏதம் நேராமல் அருளால் காத்தலைக் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3 : 17)

குறுவஞ்சிப் பக்கம் -

{Entry: K11__0383}

வஞ்சி சூடிப் போருக்கெழுந்த மன்னனுடைய பாசறையது நிலையை,”மகளிர் ஒருபால் ஆட, ஒருபால் முரசு முழங்க, யாழ் ஒலிக்க, ஒருபால் யானை மதத்தால் பிளிறும் இயல் பிற்று” என்றாற்போலப் புகழ்ந்து கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3 : 18)

குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை -

{Entry: K11__0384}

குறைவுறுதலைச் செய்யாத வெற்றிச் சிறப்பினைக் குறித்து மகளிர் பாடும் உலக்கைப் பாட்டு.

மாற்றரசனுடைய குறையற்ற வெற்றிச் சிறப்பினைக் கண்டு தோற்றோன் வழங்கும் திறைப்பொருள். (தொ.பொ. 65 இள.)

வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினான் பகைவர் நாடழிதற்கு இரங்கித் தோற்றோனை விளக்கிக் கூறும் வள்ளைப் பாட்டு.

வள்ளை - உரற்பாட்டு. கொற்றவள்ளை - தோற்ற மன்னன் கொடுக்கும் திறை என்பாரும் உளர். (63 நச்.)

இது வஞ்சித்திணைத் துறை.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் வஞ்சிப் படலத்தே ‘கொற்றவள்ளை’ என, எட்டாவது துறையாக உள்ளது.

‘கூத்தர், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்’ -

{Entry: K11__0385}

ஆடல்மாந்தர் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடாகிய கூத்தராற்றுப்படை என்னும் பாடாண்துறை.

கூத்தராற்றுப்படையாகிய மலைபடுகடாம் இத்துறைப்பட வந்தது. (தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்து 29ஆம் துறை.

கூத்தர் எனப்படுவார் -

{Entry: K11__0386}

கூத்தராவார் உலகவழக்கினைத் தேர்ந்துணர்ந்து அவரவர் போலத் தம்மைப் புனைந்துகொண்டு வேத்தியலும் பொது வியலுமாக நாடகம் இயற்றும் கலைவலார். (தொ. கற். 27 ச. பால.)

கூத்தர், பாணர், பொருநர், விறலி என்ற முறை -

{Entry: K11__0387}

கூத்தர் சாதி வரையறை இலராதலின் முன் கூறப்பட்டனர். பாணரும் பொருநரும் தத்தம் சாதியின் திரியாது வருதலின் சேர வைக்கப்பட்டனர். விறலிக்குச் சாதி வரையறை இன்மை யின் அவள் பின் வைக்கப்பட்டாள்.

கூத்தர்விலக்கியற்கூத்து, கானகக் கூத்து, கழாய்க் கூத்து முதலிய பல கூத்துக்களையும் ஆடும் பல பகுப்பினர். பாணர்கள் : இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் முதலிய பல பகுப்பினர்; பொருநர் : ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் முதலிய பல பகுப்பினர்; ஆதலின், இவர்கள் கூத்தர் பாணர் பொருநர் எனப் பன்மைச் சொல்லான் சுட்டப்பட்டனர். விறலிக்கு அன்னதொரு தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாத லின் ‘விறலி’ என ஒருமையான் குறிக்கப்பட்டாள். (தொ. பொ. 91 நச்.)

கூதிர்ப்பாசறை கண்ணிய மரபு -

{Entry: K11__0388}

கூதிர் என்று பெயர் பெற்ற பாசறைக்கண் காதலால் திரி வில்லா மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழிலைக் கருதிய பக்கம்.

கூதிர்ப்பாசறை என்றாலும், முன்பனி பின்பனிக் காலங்களும் அடக்கிக் ‘கூதிர்’ என்பதன்கண் கொள்ளப்பட்டன. தண்மைக்குத் தலைமை பெற்ற கூதிர்க்காலத்தில் தலைவி மேல் காதலின்றிப் போரின்மேல் காதலிற் சேர்ந்து போகத் தில் பற்றற்று வேற்றுப் புலத்தில் போந்திருத்தல், பிரிதல் வன்மை பற்றி வெற்றி யாயிற்று.

இருத்தற்பொருள் முல்லை என்பதே பற்றிப் பாசறைக்கண் இருத்தலால் ‘பாசறை முல்லை’ எனப் பெயர் கூறுவாரும் உளர். (தொ. பொ. 76 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனைக் கூதிர்ப் பாசறை, வாடைப் பாசறை என்னும். (8 : 15, 16). (தொ. பொ. 76 நச்.)

‘கூதிர் வேனில் என்று இரு பாசறைக், காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு’ -

{Entry: K11__0389}

கூதிர் எனவும் வேனில் எனவும் பெயர் பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணும் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழிலைக் கருதிய மரபு.

கூதிர், வேனில் என்பன ஆகுபெயர். ஓர்யாண்டு எல்லை இருப்பினும், அவ்வாண்டின் ஏனைய முன்பனி பின்பனிக் காலங்கள் கூதிர்க்கண்ணும், ஏனைய இளவேனில் கார் காலங்கள் வேனிற்கண்ணும் அடக்கிக் கொள்ளப்படும். இக் காலங்களில் தலைவியிடத்துக்கொண்ட வேட்கையை அடக்கிப் பிரிந்திருக்கும் வன்மை வெற்றியாயிற்று. (தொ. பொ. 76 நச்.)

கூதில் வேனில் என்ற இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட காதலான் பொருந்திக் கருதிய போர் நிலைவகை. (74 இள.)

இது பாசறை வெற்றி. (பொ. 284 குழ.)

இதனை வீரசோழிய உரை ‘அஞ்சாச் சிறப்பு’ என்பதன்கண் அடக்கிற்றுப்போலும். (கா. 104)

‘கூற்று உறும்முன் அறம் செய்மின்’ என்றல் -

{Entry: K11__0390}

இது ‘பெருங்காஞ்சி’ என்னும் புறப்பொருள் பொதுவியல் துறை; அது காண்க. (சாமி. 149)

கூறிடுதல் -

{Entry: K11__0391}

வெட்சி மறவர், தாம் கைப்பற்றிய பகைவர் ஆநிரையை அரசனது ஆணை பெற்றுத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளு தல் என்ற வெட்சித்துறை. ‘பாதீடு’ காண்க. (வீ. சோ. 99)

கைநிலை -

{Entry: K11__0392}

வீரர்கள் தங்குவதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப் பட்ட குடிசை (குரம்பை). (பு. வெ. மா. 4:7 உரை) (L)

கையறவு -

{Entry: K11__0393}

இது கையறுநிலை என்னும் இலக்கண விளக்க வெட்சியின் இரண்டாம் பகுதியின் (கரந்தை) துறை. (சாமி. 131)

கையறுநிலை -

{Entry: K11__0394}

இறந்தவர்களுடைய பண்புகளையும் செயல்களையும் நினைத்து அவர்களால் புரக்கப்பட்ட அருகிலுள்ளோர் செயலற்று வாடும் நிலை. ‘கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை’ என்று இது தொல்காப்பியத்துள் காஞ்சித்துறையாகக் கூறப்படும். (தொ. பொ. 79. நச்.)

புறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைக் கையறுநிலை, பொதுவியல் கையறுநிலை என்று இருதிணைக் கையறு நிலைகளைக் காணலாம்.

கொடாஅர்ப் பழித்தல் -

{Entry: K11__0395}

பிறர்க்கு ஈயாதாரைப் பழித்துக் கூறுதல் என்ற பாடாண் துறை.

சான்றோர் பிறரை இழித்துக் கூறல் தக்க தன்றேனும், நன்மக்கள் பயன்பட வாழ்தலும் தீயோர் பயன்படாமல் வாழ்தலும் கூறக் கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவர் என்பது பயப்பக் கூறுதலின் கொடாதவரைப் பழித்தலும் சான்றோர்க்குத் தக்கதாயிற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள், பாடாண்பகுதி யிலும் வாகையிலுமுள்ள ஒழிபினைக் கூறும் இறுதிச் சூத்திரத்துப் பதினெண்துறைகளுள் முதல்துறை; பாடாண் பகுதி பற்றிய ஒழிபு. (18-1)

“கொடைக்குப் பாரியொருவனும் அல்லன்; உலகு புரக்கும் மாரியுமுள்ளது. ஆயினும், பாரிபாரி என்று பல படப் பாராட்டி ஒருவனையே புகழ்வர் செந்நாப் புலவர்!” (புறநா. 107) என்பது கொடுப்போரை ஏத்தியது.

“தம்மால் முடிவதனை முடியும் என்றலும், யார்க்கும் முடியாததனை முடியாது என மறுத்தலும் ஆகிய இரண்டும் ஆள்வினையையுடைய நட்புப் பான்மைய; முடியாததனை முடியும் என்றலும், முடிவதனை முடியாது என்றலும் இரப்ப வர்களை வாட்டுதலே யன்றிப் புரப்போரது புகழினையும் குறைக்கும் வாயில்கள். நினது (பரிசில் நீட்டிக்கும்) இச்செயல் அத்தன்மைத்தாகுக.! பிற வள்ளியோர் யாவர்மாட்டும் காணப்படாத இவ்வின்னாமையை நின்பால் கண்டேன். நின் புதல்வர் நோயிலராகுக! என் மனையாளை எண்ணி இனிச் செல்வேன். நின் வாழ்நாள் சிறக்க!” (புறநா. 196) என்பது கொடாதாரைப் பழித்தல். (தொ. பொ. 90 நச்.)

கொடி நிலை -

{Entry: K11__0396}

அரசனது கொடியை முக்கடவுளர்தம் கொடிகளில் ஒன்றனோடு ஒப்பிட்டு, அக்கொடி திருமாலின் கருடக் கொடிபோல ஓங்குக எனச் சிறப்பித்துக் கூறுதல். (பு. வெ. மா. 9-39; தொ. பொ. 85 இள.)

கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் ஞாயிற்று மண்டிலத்தைப் புகழ்ந்து கடவுள் வாழ்த்தோடு ஒரு தன்மைத் தாகப் பாடுதல் கொடிநிலையாம். (88 நச். 289 குழ.)

கொடிநிலை - கொடியது தன்மை கூறும் பாடாண்துறை. (வீ. சோ. 106)

கொடிநிலை. கொடி ஏற்றப்படும் கம்பத்தைக் குறிக்கும் என்பாரும் உளர்.

கொடிநிலை வாழ்த்து -

{Entry: K11__0397}

அரசனுடைய கொடியினைத் தெய்வத்தின் கொடியோடு ஒப்பிட்டு வாழ்த்துதல். (தொ. பொ. 85 இள.)

கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் ஞாயிற்று மண்டலத்தை வாழ்த்துதல் கடவுள்வாழ்த்தினை ஒத்தது. எப்புறமும் நீண்டு சென்று எரித்தலின் அந்நீண்ட நிலைமை பற்றிச் சூரியனைக் ‘கொடி நிலை’ என்று கூறுதலும் உண்டு. (88 நச்.)

கொடி - கீழ்த்திசை (289 குழ.)

போர்த்துவக்கமாம் வெட்சிக்கண் கொடியை உயர்த்திப் புறப்படுவது கொடிநிலை. இக்கொடி பாடாண் பகுதியாகிக் கடவுள்வாழ்த்தைத் தழுவி வரும். (புறத். 32 பாரதி)

புறப்பொருள் வெண்பாமாலைக்கண் பாடாண்படலத்து 39 ஆம் துறையாகக் கொடிநிலை அமைந்துள்ளது.

வீரசோழியப் பாடாண்துறையாகவும் ‘கொடிநிலை’ அமைந் துள்ளது. (கா. 106)

‘கொடுத்தல் எய்திய கொடைமை’ -

{Entry: K11__0398}

தானை மறவர்களுக்குத் தக்காங்குப் பண்பறிந்து வரிசையின் வழங்கும் கொடைப்பெருமை. இது வஞ்சித்திணைத் துறை.

போர்மேற் செல்லும் வேந்தனும் எதிர்ஊன்ற வரும் வேந்தனும் தத்தம் படையாளர்களுக்குப் படைக்கலம் முதலிய கொடுத்தலும் பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழில்; மேற்செல் வான் மீண்டு வந்து பரிசில் தரும் என்றல் வேத்தியல் அன்று ஆகலின், பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கலம் முதலிய வற்றொடு கூறப்பட்டது. (தொ. பொ. 63. நச்.)

பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மை வேறு; இங்குக் குறிக்கப்படுவது போர்வீரர்க்கு மன்னர் வரிசை நோக்கி நாடு முதலிய நல்கும் பரிசேயாம். (புறத். 8 பாரதி.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை பேராண் வஞ்சி, கொடை வஞ்சி என்ற துறைகளில் குறிப்பிடும். (3: 9, 16)

இதனை வீரசோழியம் ‘ஈகை’ என்று குறிப்பிடும். (கா. 101)

‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’ -

{Entry: K11__0399}

பிறர்க்கு ஈவோரைப் பிறரின் உயர்த்திக் கூறிப் பிறர்க்கு ஈயாரை இழித்துக் கூறுதல் என்னும் பாடாண்துறை.

இஃது ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலும் என மூவகையாகக் கொள்ளப்படும்.

‘கொடார்ப் பழித்தல்’ காண்க.

‘களிறுகளைச் சீறியாழ்ப்பாணர்கள் பரிசு பெற்றுச் சென்றன ராக, களிறுகள் இலவாகிய கட்டுத்தறிகளின் புல்லிய விடத்தே காட்டுமயில்கள் தம் கூட்டத்தொடு வந்து தங்கின. இனி, ஆய்வள்ளலின் உரிமை மகளிரும் கொடுத்தற்கரிய தம் மங்கலஅணி நீங்கலாகப் பிறவெல்லாம் பரிசாகத் தந்துவிட்ட மையின், அம்மகளிரோடே அவன்கோயில் பொலிவற்றுள் ளது என்ப. ஆயின, சுவைக்கினிய அடிசிலைப் பிறர்க்கு ஈயாது தாமே உண்ணும் செல்வர்கள்தம் புகழ் நீங்கிய மனைகளைப் போல அக்கோயில் இராது” (புறநா. 127) என்பது ஏத்திப் பழித்தல். (தொ.பொ. 90 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்திணை ஒழிபாகிய துறை. (18-1)

கொடுப்போர்ப் பழிச்சல் -

{Entry: K11__0400}

வறியவர்களுக்கு உரிய காலத்தில் வேண்டும் உதவியை வழங்கும் கொடையுள்ளம் படைத்த சான்றோர்களைப் புகழ்ந்து கூறுதல் என்னும் பாடாண்துறை.

“இறைவனுடைய அடியவர்கள் தாம் செல்வமின்றி இடுக்கட் படும் காலத்தும், கொடைத்தொழிலைத் தம் நிலைமைக்கு ஏற்பச் செய்தலைத் தவிரார். பிறையாகிய நிலையிலும் தேய்பிறைச் சந்திரன் ஒளி தருவதன்கண் பின்னிடாதது போன்ற தன்மையே இச்சான்றோரது பண்பாகும்” என்று கொடுப்பவரைப் புகழ்ந்து கூறுதல். (மா. அ. பா. 312)

கொடுப்போரை ஏத்தல் -

{Entry: K11__0401}

பிறர்க்கு ஈவோரைப் பிறரின் உயர்த்திக் கூறல் என்ற பாடாண்துறை.

“நாஞ்சில் பொருநன் அறிவில்லாதவன், நிச்சயமாக. விறலியர் தோட்டத்தில் கொய்து கொண்டுவந்த கீரையை வேக வைத்து அதன்மேல் தூவுவதற்காக யாம் பயற்றரிசியே வேண்டி னோமாக, அவ்வள்ளல் பிறர்க்கு ஈயவேண்டும் வரிசை அறிந்தவனாதலின், எம் தகுதியொடு தன் தகுதியும் சீர்தூக்கி, குன்றம் போன்ற தொரு பெருங்களிற்றை நல்கினான். இன்னதோர் அறியாக்கொடையும் உண்டோ!” (புறநா. 140) என்ற ஒளவையார்பாடல் கொடுப்போரை ஏத்தியது. கபிலர் பாடிய பாடலும் (புறநா. 107) அது. (தொ. பொ. 90 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் இறுதிக்கண் பாடாண்திணையது ஒழிபாக வந்த துறை. (18-1)

கொடை (2) -

{Entry: K11__0402}

வெட்சிமறவர் தாம் இரவு களவில் கொண்ட ஆநிரையைத் தக்கவர்க்கு நன்கொடையாக வழங்குதல்.

பகுத்துத் தாம் கைக்கொண்ட ஆநிரையை வேண்டி இரப்பார்க்குக் கொடுத்தல். (தொ. பொ. 61 இள.)

நிரை கொண்டோர் தாம் கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மனம் மகிழ்தலும், நிரை மீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப் பகுதியும். (58 நச்.)

வென்று கொண்டோர் துடியன், கணி, பாணர் முதலியோர்க் கும் இரவலர்க்கும் ஈந்து உவத்தல். (புறத் 3 பாரதி)

கொடை வஞ்சி -

{Entry: K11__0403}

பண்களை அழகுறப் பாடிய பாணர்க்கு, வஞ்சியான் காஞ்சி மன்னவனது நாட்டில் கைப்பற்றிய பொருள்களைக் கொடை யாக அளித்தல். (பு. வெ. மா. 3:16)

கொடைவாகை -

{Entry: K11__0404}

‘இடையில் வண்புகழ்க் கொடைமை’ நோக்குக. (வீ.சோ. 104)

கொண்டி மகளிர் -

{Entry: K11__0405}

பகைவர் மனையோராய்ச் சிறைப்பிடித்து வரப்பட்ட மகளிர்; இவர்களைத் தெய்வத் தொண்டிற்குப் பயன்படுத்துதல் அரசன் ஆற்றற்குப் புகழ்தருவது. (பட். பாலை. 246 - 249 நச்.)

‘ஆங்கவர் தாரமும் அவர்குல தனமும்.... முனைவயிற் கொண்டு’ என்பது இரண்டாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி.

கொத்தளம் -

{Entry: K11__0406}

மதிலின்மேல் நான்கு மூலைகளிலும் தூண்கள் போல் மிகவும் உயர்ந்து அகன்ற கட்டடங்கள் அமைந்திருக்கும். அவை ‘கொத்தளம்’ எனப்படும். அக்கொத்தளங்களின் மேல் இரவுபகல் எந்நேரமும் மறவர்கள் இருந்து நெடுந்தொலைவி னின்று வரும் பகைவரை அறிந்து சொல்வர். கொத்தளம் கோட்டையின் முக்கியமான உறுப்பு ஆதலின், ‘கோட்டை கொத்தளம்’ என்று சேர்த்து வழங்கும் வழக்கம் இருந்து வந்தது. (தொ. பொ. 275 குழ.)

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் -

{Entry: K11__0407}

தன்னை இறை எனக் கொள்ளாதாரும் தன் ஆணையைக் கொள்ளாதாரும் ஆகிய பகைவர் நாட்டினைக் கொள்ளக் கருதிய வெற்றி. (தொ. பொ. 68 இள.)

பகைவர் நாட்டைக் கொள்ளக் கருதிய வீறு; உள்ளின் விரைந்து முடிக்கும் உறுதி பற்றிக் ‘குறிக்கும் கொற்றம்’ என, எதிர்காலத்தால் கூறாது, இறந்த காலத்தால் கூறினார். (புறத். 12 பாரதி)

பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டோன்போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி. (தொ. பொ. 67 நச்.)

தன்னை இகழ்ந்தோரையும் தான் இகழ்தோரையும் ‘கொள்ளார்’ என்ப. இராமன் இலங்கை கொள்வதன்முன் அதனை வீடணற்குக் கொடுத்தது, இதற்கு ஓர் எடுத்துக் காட்டு. (67 நச்.)

இத்துறை உழிஞைவேந்தர் இருவர்க்கும் பொது. (இள.)

இத்துறை புறத்துழிஞையானுக்கே உரியது. (நச்., குழ.)

இஃது உழிஞை வகைகளுள் ஒன்று. (பாரதி)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை உழிஞைத்திணைச் செய்தி கூறும் உழிஞைத்துறையுள் அடக்கும். (6-1)

வீரசோழியம் இதனைக் ‘கொற்றம்’ என்ற உழிஞைத் துறை யாகக் கொள்ளும். (கா. 103)

கொள்ளைப்புல வஞ்சி -

{Entry: K11__0408}

இது மழபுலவஞ்சி என்னும் வஞ்சித்துறையாம். (சாமி. 133)

கொற்ற உழிஞை -

{Entry: K11__0409}

உழிஞை சூடிய மன்னன், பகைவருடைய மதிலைக் கைப்பற்றப் பரந்தெழும் சேனைகளுடன் புறப்படுதல் என்னும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6-5)

‘கொற்றப் பொற்றார் சூடாப் பொலிகுதல்’ -

{Entry: K11__0410}

பனையும் வேம்பும் ஆத்தியும் என்று முக்கோக்களுக்கும் சொல்லப்பட்ட மூன்று தாருள் உரியது சூடிப் போருக்குச் செல்பவர் திறம் கூறல் என்னும் கரந்தைத் துறை.

‘உறுபகை வேந்திடைத் தெரிதல் வேண்டிப் // போந்தை வேம்பே ஆர்என வரூஉம் // மாபெருந் தானையர் மலைந்த பூ’ (தொ.பொ. 60 நச்.)

(வீ.சோ. 100)

கொற்றம் -

{Entry: K11__0411}

அரண் சூழ்ந்த வேந்தனது கொற்றச்சிறப்பு உணர்த்தல். ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்’ காண்க. (வீ. சோ. 103)

கொற்ற வஞ்சி -

{Entry: K11__0412}

உலகமே தன்னை வணங்குமாறு, நெருப்புப் பற்றிய மன்றங் களினின்று வருந்தியோர் வஞ்சி வேந்தனைச் சரணடைந்து அமைதி பெறவும், அவனிடம் பகைமை பாராட்டிப் போருக் கெழுந்தோர் ஒழிந்து போமாறும், வெற்றிகொண்டு வேலை மன்னன் வலமாக உயர்த்திய சிறப்பினை மிகுத்துக் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3-7)

கொற்றவர் மெலிவு -

{Entry: K11__0413}

இது ‘தோற்றோர் தேய்வு’ என்ற வஞ்சித்துறை.

(தொ. பொ. 63 நச்.) (வீ. சோ. 101)

கொற்றவள்ளை -

{Entry: K11__0414}

பகைவன்மீது போர் தொடுக்க வஞ்சி சூடிய மன்னனைப் புகழ்ந்த சான்றோர், “இவனுடைய பகைவர் நாடு பல வகையாலும் துயருற்று அழியுமே!” என்று மனம் இரங்கிக் கூறும் வஞ்சித்துறை.

“முசிறியார் கோமானால் பகைக்கப்பட்டவரது நாடு, வேரறுகு நெருங்கப்பட்டு, சுரைக்கொடி பரக்கப்பட்டு, வேளை பூக்கப்பட்டு, ஊர்கள் இவை என்றறியப்படாததாய், வழிநெடுக இவ்வாறு தூறுமண்டிக் கிடந்தது!” (முத்தொள்.)

இத்துறை ‘குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை’ எனத் தொல்காப்பியத்துள் (பொ. 63 நச்.) குறிக்கப்பெறும். (பு.வெ. மா. 3:8)

கொற்றவை நிலை (1) -

{Entry: K11__0415}

வெற்றி தரும் பெண் தெய்வமாகிய கொற்றவைக்கு வெட்சி மறவரும் வஞ்சி வீரரும் உயிர்ப்பலியாக நரபலியும் எருமைப் பலியும் குருதிப்பலியும் போல்வனவற்றையும், எட்கசிவு நெற்பொரி அவரை துவரை முதலிய பொருள்களையும் நிவேதனம் செய்து, தம் செயல் வெற்றி பெற அவளது அருளினைவேண்டும் இப்புறப்பொருள் துறை வெட்சிக்கும் வஞ்சிக்கும் இடையே சிங்கநோக்காக அமைந்து இருதிணைக் கும் உரிமை பூண்டுள்ளது. வெட்சி யெனவே, அதன் கூறாகிய கரந்தையும் அடங்கும். (தொ. பொ. 59 நச்.)

கொற்றவை நிலை (2) -

{Entry: K11__0416}

நிரை கொள்ளச் செல்லும் வெட்சி மறவர் தமக்குப் போரில் வெற்றி வாய்ப்பதற்கு வீரத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்கு உயிர்ப்பலியும் குருதிப்பலியும் இட்டு வழிபாடு செய்யுங்கால், அக் கொற்றவையின் அருள்நிலை பற்றிக் கூறுதல்.

இக்கொற்றவைநிலை வெட்சியை அடுத்த வஞ்சித் திணைக்கும் உரியது. வெட்சியில் தோற்றோர் கொற்றம் வேண்டியும், வென்றோர் தொடர்ந்து வெற்றி வேண்டியும் கொற்றவைiய வழிபடுவர். (தொ. பொ. 59 நச்.)

‘கொற்றவை நிலை’ என்றதனானே, குறிஞ்சித்திணைக்கு முருகனே யன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம். (62 இள.)

வாளைநட்டு அதற்குப் பொட்டிட்டு மாலைசூட்டுதலே கொற்றவையினது வடிவாம். (272 குழ.)

புறப்பொருள் வெண்பாமாலையுள் ‘கொற்றவைநிலை’ வெட்சித் திணையின் 20ஆம் துறையாகவும், வஞ்சித்திணை யின் 5ஆம் துறையாகவும் உள்ளது. இஃது இலக்கண விளக்கத்துள் வெட்சிமுதற்கூற்றின் 21ஆம் துறையாகவும், இரண்டாம் கூற்றின் 27ஆம் துறையாகவும், வஞ்சித் திணை யின் 5ஆம் துறையாகவும் உள்ளது. (இ. வி. 603, 604, 606.)

கோட்டை -

{Entry: K11__0417}

‘அரண்’ நோக்குக.

கோட்டை வாயில்கள் -

{Entry: K11__0418}

கோட்டையின் நாற்புறத்தும் நெடிய உயர்ந்த வாயில்கள் உள. அவ்வாயில்களுக்குப் பெரிய இரும்புக் கதவுகள் இடப் பட்டிருக்கும்; மரக்கதவுகளும் பெரியவாக இருக்கும்; நிலவுகால் மிக்க வலிய பல மரங்கள் இணைத்துச் செய்யப் பட்டிருக்கும். கதவின் உட்புறத்தில் வெளியினின்று கதவை எளிதில் திறக்க முடியாதபடி நிலவுகாலை அடுத்து இருபுறமும் ‘எழு’ என்னும் பெரிய மரங்கள் நாட்டப்பட் டிருக்கும். இருபுறத்து எழுக்களுக்கும் இடையே ‘சீப்பு’ என்னும் குறுக்குமரம் எழுக்களிலுள்ள ‘ஐயவி’ என்னும் தாங்குகட்டையின்மேல் இடப்பட்டிருக்கும். ஐயவி துலாக் கட்டை எனவும், ஐயவித்துலாம் எனவும் பெயர் பெறும்.

‘புனிற்றுமகள், பூணா ஐயவி தூக்கிய மதில’ (பதிற். 16)

பெரிய கல்லுரல்களையும் பெரிய மரங்களையும் தூக்கிக் கட்டி யானைகளைக் கொண்டு அடித்தாலும் அக்கதவுகளை உடைத்தலோ திறத்தலோ இயலாது; வெளியினின்று யானை களைக் கொண்டு தள்ளினாலும் திறக்க முடியாமல், உள் ளிருந்து தள்ளிப் பிடிப்பதற்கு எப்பொழுதும் வலிமை பொருந்திய காவலர் பலர் அங்குக் காவலிருப்பர். உள்ளி ருந்து யானைகளும் தள்ளிப் பிடிக்கும். நிலவுகளுக்கு அருகே உட்புறம் மதிற்சுவரில் உள்ள அறைக்குள் போர்க்கருவிக ளுடன் மறவர்கள் தங்கியிருந்து. வாயில் வழியாக உட்புக முயலும் பகைவரைத் தாக்குவர். இவ்வறை இருநிலவுப் பக்கமும் இருக்கும். பெரிய கோயில்களின் முதற்கோபுர வாயிலில் இத்தகைய அறைகள் உள்ளன.(தொ.பொ. 275 குழ.)

கோழி வென்றி -

{Entry: K11__0419}

போருக்கென்றே பழக்கப்பட்டதும் உயரிய இலக்கணங்களை யுடையதுமான கோழி, தன்னை எதிர்க்கலுற்ற கோழிமேற் பாய்ந்தும் அதனை எறிந்தும் அலகினால் தாக்கியும் பொருது வெற்றிபெறும் சிறப்பினைக் கூறுதல். இது வாகைத்திணை யின் ஒழிபாகப் புறப்பொருள் வெண்பாமாலையின் இறுதிக் கட் சொல்லப்படும் துறை. (பு. வெ. மா. 18-6)

ச section: 39 entries

சந்தசு -

{Entry: K11__0420}

1) யாப்பு 2) வேதாங்கங்களுள் ஒன்றாய் யாப்பிலக்கணம் கூறும் நூல்; ‘சந்தசு முதலிய ஆறங்கங்களும்’ (வேதா.சூ. 6 உரை) (L)

சபை மங்கலம் -

{Entry: K11__0421}

இஃது ‘அவைய முல்லை’ என்ற வாகைத்துறை; அது காண்க.

(சாமி. 145)

சமாதி -

{Entry: K11__0422}

சமாதி என்பது ‘நாலிரு வழக்கின் தாபத பக்க’த்துள் ஒன்று. அஃதாவது பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் கண்டு (குறள் 358), அப்பொருளொடு தான் பிறன் ஆகாத் தன்மை எய்துதல். (பா. வி. பக். 42)

சால்பு முல்லை -

{Entry: K11__0423}

“பெரும் புகழுடனும் என்றும் மாறாத ஒரே நிலையின்கண் ணும் இருந்தொழுகும் சான்றோருடைய வாழ்க்கை நிறைமதி போல என்றும் நிறைந்து நிலைபெறுமேயன்றிக் கடல் போலும் மிக்க பொருள் கையுறுமாயினும் நெறி மாறாது” என்று கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8 : 31)

சான்றோர் உறுப்பு எட்டு -

{Entry: K11__0424}

‘எட்டுவகை நுதலிய அவையத்தானும்’ (தொ. பொ. 76 நச்.) எனத் தொல்காப்பியனாரால் குறிக்கப்பெற்ற அவை - குடிப் பிறப்பு, தூய்மை, ஒழுக்கம், கல்வி, வாய்மை, அழுக்கா றிலாமை அவாவின்மை நடுவுநிலை என்பன. (பா. வி. பக். 13)

சான்றோர் பக்கம் -

{Entry: K11__0425}

பகைவர்கண்ணும் தன்பாலார்கண்ணும் ஒப்புமையாகப் பாசறையுள்ளார் சால்புடைமை கூறுதல் என்னும் வாகைத் துறை (வீ. சோ. 104 உரை) இதுவும் ‘ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினு’ள் அடங்கும். (தொ. பொ. 76 நச்.)

பாசறையிலுள்ள சான்றோர் சூழ்நிலைபற்றி ஒருவர்பக்கல் இருந்து பொருவதற்கு அமைந்தாராயினும், தம் தலைவ னுடைய பகைவர்கள் தனிப்பட்ட முறையில் தம்மால் செய் யக்கூடிய உதவி யாதானும் கருதி வந்தக்கால், அவர்களைத் தம் பகைவராகக் கருதாமல் அருளுள்ளத்தால் தம் எல்லைக்குட்பட்டுச் செய்யக்கூடும் நலன்களை அவர்களுக் கும் செய்தல் என்னும் வாகைத்துறை என்று இதற்கு விளக்கம் கூறலாம்.

சிருங்கார நிலை -

{Entry: K11__0426}

விழுப்புண்ணை ஏற்று வீரமரணம் எய்திப் போர்க்களத்தில் கிடந்த வீரர்களின் புண்பட்ட மார்பைத் தழுவிக்கொண்டு தெரிவைப்பருவத்து மனைவிமார், அவர்கள்பால் அன்று முதல் நாள் வரை உரிமை கொண்டாடிய பரத்தையர் உரிமை கெடும்படி, இருக்கும் நிலை கூறுதல்; தும்பைத்திணைத் துறை. (பு. வெ. மா. 7 : 24)

சிவல் வென்றி -

{Entry: K11__0427}

நன்கு பழக்கப்பட்ட சிவல் என்னும் பறவை தன் பெருமித முடைய பார்வையாலேயே பகைச் சிவல்களைத் தோற்று ஓடச் செய்யும் வென்றிச் சிறப்பினைக் கூறும் வாகைத்திணை ஒழிபாகிய துறை.

அஃதாவது, “நம் சிவலைக் கண்டதும் பகைச்சிவல் கொண்டு வந்திருப்போர் தம் தண்ணுமையை எறிந்துவிட்டு நாணத் தால் ஓடவேண்டிவரும். இவர்களது சிவல் நம் சிவலை எதிர்க்கு மாயின், எடுத்த எடுப்பிலேயே நம் சிவலுடைய கவட் டுக்குள் புகுந்து கண்டோர் நகைக்க ஓடிவிடும்” என்றாற் போல் இச்சிவலின் வெற்றியை மிகுத்துக் கூறுதல். (பு. வெ. மா. 18-10)

‘சிறந்த கீர்த்தி மண்ணுமங்கலம்’ -

{Entry: K11__0428}

அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும். முடி புனைந்து ஆடும் நீராட்டு மங்கலம் என்ற பாடாண்துறை.

பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதொறும் முடிசூட்டுநாள் மங்கலம், பிறந்தநாள் மங்கலம் போலப் பல மங்கல நிகழ்வுகள் கொண்டாடப்படும். ‘அரசனுக்கு இத் துணை யாண்டு சென்றது’ என்று ஆட்சியாண்டை எழுது வது நாள்மங்கலம் எனப்படும்.

குறுநில மன்னர்க்கும் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணுமங்கலம் கொள்ளப்படும். (தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்து 36ஆம் துறையாகவுள்ளது.

சிறப்பில்லாத தும்பை -

{Entry: K11__0429}

அறத்தின் திரிந்து வஞ்சனையால் கொல்வனவும், தேவரான் பெற்ற வரங்களான் கொல்வனவும் கடையூழிக்கண் தோன் றிய ஆதலின், சிறப்பில்லாத தும்பையாம். (தொ. பொ. 70 நச்.)

சிறப்புடைய அரசியலாவன -

{Entry: K11__0430}

மடிந்த உள்ளத்தோனையும், மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெய ரோனையும், படையிழந்தோனையும், ஒத்த படை எடா தோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல் லாது விடுதலும், யாரும் அறிய வஞ்சினம் கூறிப் போரிடுத லும் ஆம். (தொ. பொ. 65 நச்.)

சினகர வாழ்த்து -

{Entry: K11__0431}

இறைவன் திருமேனிகொண்டு உகந்தருளியிருக்கும் திருக் கோயிலை வாழ்த்துதல் என்னும் பாடாண்துறை.

இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயில் பீடம், கருவறை, அர்த்த மண்டபம், ஓலக்க மண்டபம், முக மண்டபம், படிக்கட்டுக்கள், கொடிக்கம்பம், பலிபீடம், திருச்சுற்று மாளிகை, வெளிமதில் கோபுரங்கள் முதலியவற்றொடு சிறப்புற்றிருக்கும் திறத்தை வாழ்த்தல். (மா. அ. பா. 197)

சீர்சால் முல்லை -

{Entry: K11__0432}

தலைவன் தன் மனைவியுடன் கூடியிருந்து, “இனி வாழ்க்கை யில் நமக்கு எவ்வகைக் கவலையும் இல்லை!” என்று வெளிப் படையாக உரைத்தல். அஃதாவது, “காற்று அசைத்தலானே வளைந்து மணம் வீசும் முல்லைக்கொடி போன்ற இடையை யுடைய இத்தலைவியின் மார்பினைத் தோய்ந்து யான் கவலையற்றிருக் கிறேன்” என்று தலைவன் தான் தலைவியுடன் கூடியிருத்தலான் ஏற்பட்ட மனநிறைவை எடுத்துக் கூறும் புறப்பொருள் ‘முல்லைப் பொதுவியற்பால’ துறைகளுள் முதலாவது. (பு. வெ. மா. 13-1)

சீர்சொல் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் -

{Entry: K11__0433}

சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக்கூறல் என்ற கரந்தைப் பகுதியாம் வெட்சித்துறை. (தொ. பொ. 63 இள.)

வேந்தனுக்குரிய புகழ் அமைந்த தலைமைகளை வேறொரு வர்க்கு உரியவாக அவன் படையாளரும் பிறரும் கூறுதல்.

வேந்தர்க்குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமையின் வழு. (60 நச்.)

மீட்சிமறவர் தம் வேந்தன் பெருமையைப் புகழ்ந்து கூறும் வெட்சித் திணைத் துறை. (தொ. பொ. புறத். 5 பாரதி)

இப்பொதுவியல் துறை பாடாணைச் சாரும்; எனினும் கரந்தைப் பகுதியாய் வெட்சிக்கும் பொருந்தும். (298 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தைப் படலத் தில் வேத்தியல் மலிபு என்ற 13 ஆவது துறையாகவுள்ளது.

வீரசோழியத்துள் (கா. 100) ‘மன்னர் கோடாத் திறம் கூறல்’ என்ற கரந்தையின் வகையாகக் கூறப்பட்டுள்ளது.

சீர்த்தகு சிறப்பின் பெரும்படை -

{Entry: K11__0434}

வீர மறவனுக்காக எடுத்த கல்லினை நீராட்டிய பின் நட்டு அதன்பின் அக்கல்லில் மறவனுடைய பெயரும் பெருமையும் பொறித்தல் பொதுவான வழக்கம். ஆயின் நீராட்டிய கல்லில் மறவனுடைய பெயரும் பெருமையும் பொறித்தே நடுதல் என்பதே காட்டு நாட்டோர் முறைமை என்ற இருவகை மரபு பற்றிய சிறப்பும் பெரும்படைக்கு உரியது. (தொ. பொ. 60 நச்.)

சுடர் விளக்கு -

{Entry: K11__0435}

‘வேலின் ஓக்கிய விளக்கு நிலை’ காண்க.

‘சுரத்திடைத் தன் தலையார் கணவனை இழத்தல்’ -

{Entry: K11__0436}

‘முதுபாலை’ என்னும் காஞ்சித்துறை காண்க. (வீ. சோ. 102 உரை)

சுரநடை (1) -

{Entry: K11__0437}

சுரத்திடையில் தலைவியை இழந்த தலைவன் வருந்தும் நிலை; உற்றார்உறவினரை விடுத்து, தலைவியொடு மகிழ்ந்து வாழலாம் என்ற நோக்குடன் வரும் வழியில், தலைவி இறந்து படத் தலைவன் வருந்தித் தவிக்கும் நிலை ஐந்திணை இன்பத் தின் மாறான அகப்புறப் பெருந்திணை ஆயிற்று. இது நம்பி யகப் பொருள் கூறும் அகப்புறப் பெருந்திணை. (ந. அ. 244)

சுரநடை (2) -

{Entry: K11__0438}

வீரன் ஒருவன் மக்கள் நடமாட்டமே இல்லாத பாலை நிலத்தில் தன் மனைவியை இழந்து மனம் கலங்கிக் கூற்று வனை விளித்து, “என் மனைவியை வஞ்சனையால் கைப்பற் றிய கூற்றுவனே!. இக் காட்டில் என் கண்முன் வருவாயேல், என் கைவேலால் நின்னை மாய்த்தொழிப்பேன்” என்றாற் போலப் புலம்புதல்.

‘சிறப்பின் பொதுவியற்பால’ துறைகளுள் இதுவும் ஒன்று. (பு. வெ. மா. 11-2)

சூட்டிஞ்சி -

{Entry: K11__0439}

நொச்சிவீரர்கள் மறைந்து நின்று அம்பு எய்தற்குரிய ஏவறையைக் கொண்ட மதில். ‘இடுசூட்டிஞ்சி ஏணி சாத்தின்று’ (பு. வெ. மா. 6: 18 கொளு) (L)

சூதர், மாகதர் -

{Entry: K11__0440}

அரசனை வைகறைப் பொழுதில் அணுகி அவன் துயிலெழு மாறு அவன் பலவகைப் புகழ்களையும் நின்றுகொண்டு ஏத்துகின்றவர் சூதர் எனவும், அமர்ந்துகொண்டு ஏத்துகின்ற வர் மாகதர் எனவும் கூறப்படுவர். இவர்களுடன் அரசன் துயிலெழும் நேரத்தில் வேதாளிகரும், நாழிகையை வரைந்து கூறும் நாழிகைக் கணக்கரும் இருந்து செயற்படுவர். (மதுரைக். 670, 671)

இருசுடர் தொடங்கி அன்றுகாறும் வருகின்ற தம் குலத்தில் உள்ளார் புகழை அரசர் கேட்க விரும்புவர் என்று கருதி, விடியற்காலத்தே பாசறைக்கண் வந்து துயிலெடை பாடுவர். குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்தலான் சூதர் ‘அகவர்’ எனப்பட்டனர். (மதுரைக். 223 நச். உரை)

சூது வென்றி -

{Entry: K11__0441}

சூதின் இயல்பையும், சூதாடுகாய்கள் இயல்பையும் நன்கு அறிந்து பலவித உபாயங்களால், தான் நினைத்தவாறே வல்லுநன் தாயம்இட்டுச் சூதாட்டத்தில் வெல்லும் திறம் கூறும் வாகைத்திணையின் ஒழிபாகிய புறத்துறை. (பு. வெ.மா. 18-16)

சூள் உரைத்தல் -

{Entry: K11__0442}

வஞ்சினக் காஞ்சி என்னும் காஞ்சித்துறை. அது காண்க. (சாமி. 142)

சூளுறவு -

{Entry: K11__0443}

‘வஞ்சினக் காஞ்சி’ காண்க. (வீ. சோ. 102)

செஞ்சோற்றுக்கடன் -

{Entry: K11__0444}

போர்க்களத்தில் வீரர்கள் தமக்கு மன்னன் உணவளித்துப் பாதுகாத்த திறம் நினைந்து அவனுக்காகத் தம் உயிரையும் விடுதற்குத் துணியும் செய்ந்நன்றியறிந்த நிலை. (சீவக. 2240)

செஞ்சோற்றுதவி -

{Entry: K11__0445}

‘செஞ்சோற்றுக் கடன்’ காண்க. ‘சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்’. (முல்லைப். 72)

இஃது அவிப்பலி எனவும் படும். (பு. வெ. மா. 8 : 30)

இது போர் பற்றிய புறத்துறைக்கெல்லாம் பொது எனலாம்.

செந்துறைப் பாடாண்பாட்டு -

{Entry: K11__0446}

விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுவது. இயன்மொழி என்பதும் அது.

பதிற்றுப்பத்தின் பாடல்கள் பலவும் இத்துறையைச் சார்ந்தன. இப் பாடல்கள் வாழ்த்துவதன்கண் அமையின், துறை இயன் மொழி வாழ்த்தாகும். (பதிற். 14) (தொ.பொ. 82. நச்.)

செயற்கைவகையான் பரவல் -

{Entry: K11__0447}

தலைவனைப் புகழும் நோக்கம் முன்னர் இன்றி, பின்னரே புலவன் தன்குறை கண்டும் தன்னைப் பொறுத்து உயர்த்திய அத்தலைவனது தகுதிகண்டும் அவனைப் புகழ்தல்.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்hதனும் தாமப்பல் கண்ணனாரும் வட்டுப்பொருத காலத்தே, புலவர் வட்டுக் காயை மறைக்க அது பொறாது மாவளத்தான் மற்றொரு வட்டுக் காயால் அவரைத் தாக்கவே, அவர் அவனைச் ‘சோழர் குடியில் பிறந்தவன் அல்லன்’ என, அவன் பிறப்பு ஐயத்தின்பாற்பட்டது போலக் கூற, அது கேட்டு உடனே வெகுண்டு எழாது தன் வெகுளி குறித்து அவன் நாணியிருந் தானாக, அந்நிலைகண்டு புலவர் தம் பேச்சின் சிறுமையினை யும் மாவளத்தானது பொறுமையின் உயர்வினையும் உட்கொண்டு அவனைப் பாடிய ‘நிலமிசைவாழ்நர்’ (புறம். 43) என்னும் பாடல் செயற்கைவகையான் பரவலுக்கு எடுத்துக் காட்டு. (தொ. பொ. 82. நச்.)

செருப்பாடு உகைப்பு அடை -

{Entry: K11__0448}

போர் முடிந்த பின்னர்ச் செலுத்தப்பட்ட பசுக்கூட்டங்களை வெட்சியார் தம் ஊர் நோக்கிச் செலுத்தி ஊரினை அடைதல் என்னும் வெட்சித்துறை.

‘நுவல்வழித் தோற்றம்’ காண்க. (வீ. சோ. 99)

செருமதிலோர் சிறப்புரைத்தல் -

{Entry: K11__0449}

‘அகத்துழிஞைப் பக்கம்’ காண்க. (இ. வி. 608-22)

‘செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசைநிலை’ -

{Entry: K11__0450}

போரிடத்துத் தன் வேந்தன் பகைமன்னனது வஞ்சகத்தான் இறந்துபட, அதுகண்டு சினம் கொண்ட பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் போரிட்ட நல்ல புகழைப் பெற்ற நிலை. அது துரியோதனனை வீமன் தொடையில் அடித்து வீழ்த்திய அன்று, இரவு ஊரை அழித்துப் பாஞ்சாலரையும் பாண்டவர்தம் புதல்வர் ஐவராகிய உபபாண்டவரையும் கொன்று வெற்றிகொண்ட அசுவத்தாமனின் போர்த்தொ ழில் போல்வன. தன் அரசன் அறப்போரில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டமையின், பெரும்படைத் தலைவனுக்குச் சினம் மிக்கது. இச்சிறப்பில்லாத் தும்பையும் இக்கலியூழிக் காம். வஞ்சத்தால் தன்வேந்தனைக் கொன்றமை பற்றிப் பகைவருள் தனக்குத் தோற்றோடியவரையும் அடங்கக் கோறற்கு உரியவன் என்பது தோன்ற, ‘நல்லிசை வஞ்சி’ எனப்பட்டது. (தொ. பொ. 72. நச்.)

போர்க்களத்தில் தன் வேந்தன் பட்டுவிழ, வெகுண்டு அவன் படைமறவன் ஒருவன் அவனை வீழ்த்தியவரை அடர்த்து அழிக்கும் தூய புகழ்ப் பரிசு. (தொ. பொ. புறத். 17 பாரதி.)

தும்பைத் துறைகளுள் ஒன்றான இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘தானைநிலை’ என்னும் துறையுள் அடக்கிக் கொள்ளும். (7 : 22)

செருவிடை வீழ்தல் -

{Entry: K11__0451}

ஆழ்ந்த அகழியையும் அரிய காவற்காட்டையும் காத்து உயிர்நீத்த நொச்சிமறவர்தம் பேராற்றலை உயர்த்திக் கூறுதல் என்னும் நொச்சித்துறை. (பு. வெ. மா. 5-4)

செலவு -

{Entry: K11__0452}

வெட்சிவீரர் பகைவருடைய ஆநிரைகளை இரவில் களவு கோடற்குச் செல்லுதல் என்னும் வெட்சித் துறை

‘புடைகெடப் போகிய செலவு’ காண்க. (வீ.சோ. 99)

செவியறிவுறூஉ (1) -

{Entry: K11__0453}

செவிக்கண் அறிவுறுத்தல் என்னும் பாடாண்துறை.

அடங்காமையை வெளிப்படுத்தி ஆடம்பரத்தைக் காட்டா மல் பெரியோர் நடுவே அடங்கி வாழ்தலே கடப்பாடு எனச் சொல்லிச் செவிக்கண் அறிவுறுத்துவது இத்துறையாம். அஃது அடங்கி வாழ்வார்க்குப் புகழாகலின் வாழ்த்தின்பாற் பட்டது. (தொ. செய். 114 நச்.)

இதனை ஒரு தலைவன் வேண்டான் ஆயினும், அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவும் கைக்கிளைப் புறனாகிய பாடாணாயிற்று.

எ-டு : நின்குடை, முனிவர் சிவபெருமான் இவர்கள்தம் இருப்பிடத்தை நீ வலம் செய்கையில் பணிக; நான் மறை முனிவரது ஆசி வழங்கும் கையெதிரே நின்தலை வணங்குக” (புறம். 6) என செவியுறைப் பொருள் சிறப்புடைத்தாக, மன்னனுடைய பிற இயல்பாகிய குணங்களொடு பாடப்பட்டது. (தொ.பொ. 90 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண் படலத்து 33 ஆம் துறை.

செவியறிவுறூஉ (2) -

{Entry: K11__0454}

தலைவனது நலம் கருதிப் பெரியோர், “வேந்தே! சான்றோர் மூத்தோர், பெற்றோர் போன்றோரிடம் அடக்கத்துடன் ஒழுகுதலே அருநலம் பயக்கும்” என்று அறிவுரை கூறுதல். இது பாடாண் படலத்தின்கண் ஒருதுறை. (பு.வெ.மா. 9:33)

செவியறிவுறூஉ (3) -

{Entry: K11__0455}

ஒருவருக்குக் கேள்வியறிவு படுத்து அவரை வாழ்த்துதல். அஃதாவது வாழ்க்கைக்கு இன்றியமையாத உபதேசங்களை முற்பட அவர் செவிக்கண் பதியுமாறு கூறிப் பின் அவரை வாழ்த்துவது. இது வாழ்த்தின்பாற்படும்.

அடங்கி வாழ்பவர்க்குப் புகழ் பல்குமாதலின், பெருக்கம் இன்றிப் பெரியோர் நடுவே அடங்கி வாழ்தல் கடன் என்று கூறி அறிவுறுத்துவது செவியறிவுறூஉ.

‘என்றும், இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும!’ (புறநா. 40) என்றல் போல அறிவுறுத்தி வாழ்த்துதல் இதற்கு எடுத்துக் காட்டு. (தொ. செய். 114 நச்.)

‘சேய்வரல் வருத்தம் வீட வாயில், காவலர்க்கு உணர்த்திய கடைநிலை’ -

{Entry: K11__0456}

அறிவான் நிறைந்த புலவர், மிகு சேய்மைக்கண் நின்றும் வருதலான் பிறந்த வருத்தம் தீர, வாயில் காக்கின்றவனுக்கு, “எம் வரவினைப் புரவலனுக்கு உரை” எனக்கூறி வாயி லின்கண் நின்ற கடைநிலை என்னும் பாடாண்துறை.

“வேற்றுச் சுரத்தில் யாம் நடந்துவந்த வெப்பத்தினையும் வேற்றுவேந்தர்பால் நிகழும் வெப்பத்தினையும் யாம் மாற்றுதற்கு வந்துள்ளோம். வாயிலோய்! எமது இவ்வர வினை நின் கோமகற்குச் சென்று இசைப்பாய்” (புறநா. 206) என்றல் போன்ற கூற்று. ஒளவையார் அதிகனுடைய வாயிற் காப்போனை நோக்கிக் கூறியது இது.

இக்கூற்று வாயிலோனை நோக்கி நிகழ்த்திற்றேனும் அவ் வருத்தம் தீர்க்கும் பாடாண் தலைவனதே துறை என்பது.

இழிந்தோரெல்லாம் தம் இசைக்கருவிகளை இயக்கி வாயிலின்கண் நிற்றல் ‘பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை’ என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே ஆம். (தொ. பொ. 91 நச்.)

தலைக்கடைக் காவலரிடம் இரவலர் கூறும் கடைநிலை.

(தொ. புறத். 34. பாரதி)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்து இரண்டாம் துறையாகிய ‘கடைநிலை’ ஆகும்.

சோற்றுநிலை -

{Entry: K11__0457}

மேற்செல்லப்படுவான் படையாளருக்குப் பெறுமுறையால் உணா மிகுக்கும் வஞ்சித்துறை. ‘பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலை’ நோக்குக. (வீ.சோ. 101)

சோறு உதவல் -

{Entry: K11__0458}

‘பெருஞ்சோற்று நிலை’ என்னும் வஞ்சித்துறை (சாமி. 133)

ஞ section: 2 entries

‘ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின், காலம் மூன்றொடு கண்ணிய’ வருதல் -

{Entry: K11__0459}

உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தானே மூன்று காலத்தும் பொருந்தக் கருதுமாறு பாடாண்திணை வரும். உலகத்து வழக்கங்கள்பல காலவேற்றுமை பற்றி வேறுபடுதல் கூடும். ஆயின் இப்பாடாண்திணைத் துறைகள் அடியொடு மாறாமல் சிற்சில புனைவுகளொடு பெயர் மாற்றம் பெற்று இப்பொருள்களின் அடிப்படையிலேயே வரும் என்பது.

பகைவர்கள் குடிகளைத் துன்புறுத்தும் நாட்டை வேந்தன் தான் கைப்பற்றி நல்லாட்சி செய்யச் சேறலும், பொருள் வருவாய் பற்றிப் பிறநாடுகளை வெல்லுதலும், பிறர் நாடுகளை வஞ்சனையாற் கைப்பற்றுதலும் ஒன்றின் ஒன்று இழிந்த நடக்கைக் குறிப்பு. மாற்றரசன் முற்றியவழி ஆற்றா தோன் அரணுள் அடைத்திருத்தலும் அரசியலாயினும், அவன் வெற்றி உள்ளமொடு வீற்றிருத்தலும், தனக்கு உதவி வருதற்காகக் காத்திருத்தலும், வேறுவழியில்லாமல் பதுங்கி யிருத்தலும் ஒன்றின் ஒன்று இழிந்த நடக்கைக் குறிப்பு. (தொ. பொ. 91 நச்.)

ஞானவென்றி -

{Entry: K11__0460}

இறைவன், உலகு, உயிர் பற்றிய மெய்யுணர்வு பெற்று, யான் எனது என்னும் பற்றற்று வாழும் சான்றோர்கள் ஞானத்தால் சிறப்புற்ற பெருமையை எடுத்துச் சுட்டுகின்ற வாகைத்துறை.

‘திருமாலுடைய கருணையமுது அன்றித் தாய்ப்பாலும் உண்ணாத சிறப்போடு, உலக மாயைகளை வென்று புறங் கண்டவன் ஞானப்பெருக்கினால் மேம்பட்ட சடகோபன்” (மா.அ. பா. 571) என்றாற் போல்வன.

த section: 114 entries

தகர்வென்றி -

{Entry: K11__0461}

போர் செய்தற்கென்றே பழக்கப்பட்டதும் உயர்ந்த இலக் கணங்களை யுடையதுமான ஆட்டுக் கிடாய், தன்னுடன் பொரவந்த கிடாயை அணுகாமலும் அகலாமலும் நின்று, பின் பாய்ந்து கொம்பாலும் தலையாலும் தாக்கி மயங்கிவிழச் செய்து வெல்லும் சிறப்பினைச் கூறும் வெற்றி.

இது வாகையின் ஒழிபாகக் கூறப்பட்ட வெற்றிகளுள் ஒன்று.

(பு. வெ. மா. 18 - 7)

தசாங்க வாழ்த்து -

{Entry: K11__0462}

ஒப்பற்ற தலைவனுடைய மலை, கடல், நாடு, ஊர், மாலை, குதிரை, களிறு, கொடி, முரசு, ஆணை என்ற பத்து அங்கங் களையும் வாழ்த்தியுரைத்தல் என்னும் பாடாண்துறை. இதனை உலா முதலிய நூல்களில் காணலாம்.

தண்டத் தலைவரை மருவலர் நிரையினைத் தருகெனப் பணித்தல் -

{Entry: K11__0463}

இது வெட்சித் திணையின் முதல் துறை; வெட்சி வேந்தன் தன் தானைத் தலைவரை அழைத்துப் பகைவருடைய ஆநிரை களைக் கவர்ந்து வருமாறு ஆணையிடுவது. ‘வெட்சி - மன்னுறு தொழில்’ காண்க. (இ. வி. 603 -1)

தத்துவத்தின் பயன் உணர்த்தல் -

{Entry: K11__0464}

இது ‘பொருளொடு புகறல்’ என்னும் வாகைத்துறை; அது காண்க. (சாமிநா. 141)

தந்து நிறை (1) -

{Entry: K11__0465}

ஓட்டிக்கொண்டு வந்து ஆநிரைகளை ஊர்ப்புறத்தே நிறுத்துதல், நிரை கொண்டோர் தாம் கொண்ட நிரையை ஊர்ப்புறத்துத் தந்து நிறுத்துதலும், நிரைமீட்டோர் தாம் மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும் (தொ. பொ. 58 நச்.)

இதனை வீரசோழியம் ‘காத்து ஊர் புகல் திறம்’ என்னும் (கா. 99). இது வெட்சித்திணைத் துறைகளில் ஒன்று.

தந்துநிறை (2) -

{Entry: K11__0466}

இரவிடை வெட்சி சூடிப் பகைவருடைய ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வீரர், தாம் கைப்பற்றி வந்த பசுக்களைத் தம் மூர்க்கு வெளியே கொண்டுவந்து நிறுத்துதல் என்னும் வெட்சித்துறை. (பு. வெ. மா. 1 : 12)

தந்துநிறையின் வகைகள் -

{Entry: K11__0467}

கண்டோர் கூறல், நிரைப் பொலிவு உரைத்தல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

தபுதார நிலை (1) -

{Entry: K11__0468}

மனைவி இறந்தபின்னர் இல்லத்தில் தங்கியிருக்கும் கணவ னுடைய துயர்மிகுதி கூறும் சிறப்பிற் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று.

தாரம் - மனைவி : தபுதல் - இறத்தல்.

“தன் மனைவி மேலுலகம் எய்த அதனால் வருந்திய இளைய வள்ளலாகிய தலைவன் துயர் கூரும் நிலையைக் கேளாமல் என் செவி செவிடுபடுக!” என்று தபுதார நிலை கேட்டோன் கூறுதல் காண்க. (பு. வெ. மா. 11-3)

தன் மனைவியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் அது காஞ்சிக் குறிப்பன்று. எஞ்ஞான்றும் மனைவி இல்லாத வனும் தபுதாரநிலைக்கு உரியன் ஆகான். (நச்.)

‘காதலி இழந்த தபுதாரநிலை’ என்னும் தொல்காப்பியம்.

(தொ. பொ. 79 நச்.)

தபுதாரநிலை (2) -

{Entry: K11__0469}

மனைவியை இழந்தபின் கணவன் தனிமையில் வருந்தி இருக்கும் நிலை. மனைவியை இழந்து அவ்விழப்புக் குறித்து வருந்தியிருத்தலின் இஃது ஐந்திணை இன்பத்திற்கு அப்பாற் பட்ட அகப்புறமாகிய பெருந்திணையாயிற்று. (ந. அ. 244)

தருகெனப் பணித்தல் -

{Entry: K11__0470}

‘தண்டத் தலைவரை .... பணித்தல்’ நோக்குக.

தரும நூல்கள் -

{Entry: K11__0471}

இன்னவை செய்தல் வேண்டும் என்று விதித்தும், இன்னவை தவிர்தல் வேண்டும் என்று விலக்கியும் உலகியல் பற்றி வரும் மனு முதலிய பதினெட்டும் ஆம். இவை வேதத்திற்கு அங்கமாகக் கூடியன. (தொ. பொ. 75 நச்.)

தலைக்காஞ்சி -

{Entry: K11__0472}

பகைவனுடைய முன்னணிப் படையைத் தடுத்துப் போர்க் களத்தில் இறந்துபட்ட வீரனது தலையின் மாண்பினைப் பற்றிக் கூறும் துறை. “போரில் வஞ்சி சூடிய பகைவர் படையைத் தடுத்து நிறுத்தித் தன் வாளால் போராடித் தூசிப்படையைத் தடுத்துப் போர்க்களத்தில் வீழ்ந்து இறந்துபட்ட இப்பெருவீரன் இவ்வுலகில் சிறந்த புகழை நிலைநாட்டிவிட்டான்; அத்தகைய பெருவீரன் தலைக்கு நம் மன்னன் மதிப்புக் கொடுப்பதனால் சிறப்போ, கொடாத தனால் இழிவோ ஒன்றும் இல்லை” என்றாற் போன்று கூறும் காஞ்சித்திணைத் துறை இது. (பு. வெ.மா. 4 : 11)

‘தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்’ -

{Entry: K11__0473}

தன்னிடத்துள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ் சொற்களைத் தன்னொடு சேர்த்துக் கூறுதல் என்னும் கரந்தைப் பகுதியைச் சார்ந்த இவ்வெட்சித்திணைத் துறைச் செய்தி மற்றுமுள்ள திணைகளுக்கும் பொதுவாகும். (தொ. பொ. 63 இள.)

தத்தம் தலைமைத்தாம் முயற்சியின் திறல் குறித்துத் தம்மைப் புகழ்ந்து வஞ்சினம் கூறும் இத்துறை போர்க்குமுன் நிகழும் வெட்சித்துறையாம். (தொ. புறத். 5 பாரதி)

இது தன்னுறு தொழிலாதலான் வழு. இச்செய்திகளெல்லாம் புறத்திணைகளுக்கும் பொது. “மடலையுடைய வலிய பனை போல நெடுவேல் பாய்ந்த மார்போடு நிற்பேன்; சீறூரை இறையிலியாகக் கொள்ளேன்; தண்ணடை கொள் வேன்” (புறநா. 297) என வீரன் ஒருவன் தன்னுறு தொழிலாக நெடு மொழி கூறியமை. (60 நச்.)

இஃது எல்லாப் புறத்திணைகளுக்கும் பொது எனினும், கரந்தையைச் சார்ந்த வெட்சிக்கு ஏற்கும். (தொ. 298 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைப் படலத்தில் ‘நெடுமொழி கூறல்’ என்ற துறையாக உள்ளது. (2-11)

இது வீரசோழியத்தில் ‘தன்திறம் கூறுதல்’ என்ற கரந்தை வகையாகக் கூறப்பட்டுள்ளது. (கா. 100)

தலைத் தோற்றம் -

{Entry: K11__0474}

வீரன் ஒருவன் பகைவர் பசுநிரையினைக் கைப்பற்றி வருத லறிந்து அவன் உறவுமுறையார் மனம் மகிழ்தலைக் கூறும் ஒரு புறத்துறை. (புறநா. 262)

தலைதந்தார்க்கு உதவல் -

{Entry: K11__0475}

இது‘தலைமாராயம்’ என்ற காஞ்சித்துறை. (சாமி. 142)

தலைப்பெயல் நிலை -

{Entry: K11__0476}

ஆண்மகனை ஈன்றெடுத்த தாய் சில நாள்களில் உயிர் நீத்தாளாக, அச்செய்தியை, “அழகிய புதல்வனைப் பெற்றுத் தன் கடமையை முடித்த இவ்விளைய தலைவி கூற்றுவ னுடைய வாய்க்கு இரையான செய்தியைக் கேட்க உலக இயல்பு கொடிது என்பது புலனாகிறது” என்று கூறும் சிறப்பிற் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று. (பு.வெ.மா.11-5)

வீரமகனைப் பெற்ற தாய் மகிழ்ச்சியால் தானும் உயிர் துறக்கப் போர்க்களத்தில் அவனைச் சென்றடைதல் என்றும், புறங்கொடுத் தோடிய மகனைப் பெற்ற தாய் வருத்தத்தால் தன் உயிர் துறக்கப் போர்க்களத்தில் அவனைச் சென்றடை தல் என்றும் பொருள் கொள்ளுமாறு தொல்காப்பியம் குறிக்கிறது. “மாய்பெருஞ் சிறப்பின்... தலைப்பெயல்நிலை’ காண்க. (தொ. பொ. 79 நச்.)

தலைமாராயம் -

{Entry: K11__0477}

வஞ்சியாராகிய பகைவரை எதிர் சென்று காஞ்சி சூடி எதிர்த்துப்பட்ட தம்படையைச் சேர்ந்த வீரனது தலை பகைவன் கையில் அகப்படும் இழிவு நேராமல், அத் தலையைக் கொண்டு வந்தவர்க்குக் காஞ்சிவேந்தன் சிறப்புச் செய்தல் என்னும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4:12)

தலையாய அறம் -

{Entry: K11__0478}

பகைவர் நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பின்னர்ப் போரிடல் தலையாய அறம் என்ப. (தொ. பொ. 91 நச்.)

தலையாய ஓத்து -

{Entry: K11__0479}

இருக்கு எசுர் சாமம் என்ற மூன்று வேதங்களும் தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கண முமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமும் ஆயின. தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்திய னாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாரும் கவுதம னாரும் போல்வார் செய்தன தலையாய ஓத்து. (தொ. பொ. 75 நச்.)

தலையொடு முடிதல் -

{Entry: K11__0480}

போர்க்களத்தில் பெருவீரத்தொடு தன்னை எதிர்த்த வஞ்சி வீரர்களைத் தாக்கி உயிர்நீத்த பெருவீரனது தலையைக் கண்டு அவன்மனைவி அதனை மார்பொடு சேர்த்தி முகத் தொடு பொருத்திச் சிறிது வருந்திய அளவில் உயிர்நீத்ததைத் தெரிவிக்கும் காஞ்சித் துறை. (பு. வெ. மா. 4:13)

“முலையும் முகனும் சேர்த் திக் கொண்டோன், தலையொடு முடிந்த நிலை” என்று இதனைத் தொல்காப்பியம் கூறும். (பொ. 79 நச்.)

தவம் செய்வார்க்கு உரிய எட்டு நிலைகள் -

{Entry: K11__0481}

ஊண் நசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரை யறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாதிருத்தல் என்பன. (தொ. பொ. 75 நச்.)

தழிஞ்சி -

{Entry: K11__0482}

தழிச்சுதல் தழிஞ்சி ஆயிற்று. தழிச்சுதல்- தழுவிக் கோடல். அஃதாவது வென்றும் தோற்றும் மீண்ட வஞ்சி வேந்தர், தம் படையாளர் முன்பு போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகள் தம் உடலைத் தாக்கப் புண்பட்டு வந்தவர் களைத் தாம் சென்று பொருள் கொடுத்தும் வினாவியும் அணைத்துக் கொள்ளும் வஞ்சித்துறை. (தொ. பொ. 63 நச்.)

இனிப் புண்பட்டோரை அவர்கள் போரில் செய்த அருஞ் செயல்களை எடுத்துக் கூறி, அரசராயினும் அவர் அருகில் இருக்கும் பெருந்தலைவராயினும் புகழ்தலும் கொடையளித் தலும் தழிஞ்சியின்பாற்படும். இதனை ‘அழியுநர் புறக் கொடை அயில்வாள் ஓச்சாக் கழிதறுகண்மை’ என்று கூறின், அஃது ‘ஒருவன் தாங்கிய பெருமையின்’ பாற்படும்.

எ-டு : நெடு நல்வாடையுள் 176 முதலான 13 அடிகள்

இனி, தன்னிடம் தோற்றோடுபவர்மேல் படைக்கலம் செலுத்தாத பேராண்மையே வஞ்சித் தழிஞ்சியாம்.

வஞ்சிமன்னர்படை தம் நாட்டினுள் புகாதபடி, படை வரும் காட்டுவழியே காஞ்சிவீரர் நின்று தடுத்து வழியைக் காத்த திறம் காஞ்சித் தழிஞ்சியாம் (பு. வெ. மா. 4 - 3)

உடைந்த படையின்பின் செல்லாமை வஞ்சித் தழிஞ்சி. (வீ. சோ. 101)

தன் திறம் கூறுதல் -

{Entry: K11__0483}

வீரன் தன்னுடைய ஆற்றலைக் கூறுதல் என்னும் கரந்தைத் துறை. ‘தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்’ காண்க. (வீ. சோ. 100)

தன்னுயிர் வேள்வி வேட்டலின் பக்கம் -

{Entry: K11__0484}

‘தன்னை வேட்டல்’ (பு. வெ. மா. 7 : 27) காண்க. (இ. வி. புறத். 13)

தன்னுறு தொழில் -

{Entry: K11__0485}

அரசனுடைய ஆணையின்றி வெட்சிமறவர் தாமே பகைவர் நாட்டகத்துப் புக்கு இரவில் களவினால் நிரைகோடல் (நிரை- பசுக்கூட்டம்)

இதனை வெட்சிமறவர் செய்தியாகப் பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் (1 : 2) கூறும்.

அரசன் ஆணையின்றி நிரை கவர்தல், கொள்ளையடித்தல் ஆகியன ஆறெறி கள்வர் செயலாகுமேயன்றி அறத்தொடு பட்ட புறத்துறையாகிய வெட்சியாகாது ஆகலின், தன்னுறு தொழில் என்பது ஒன்று வெட்சியின்கண் இருத்தல் கூடாது என்பது இளம்பூரணர் முதலியோர் கருத்து. (தொ. பொ. 60 இள.)

தன்னை வேட்டல் -

{Entry: K11__0486}

தன் அரசன் போரிட்டு வீரசுவர்க்கம் அடைய, வீரன் ஒருவன் தன்னுயிரைக் களவேள்வி செய்தல்.

வாளையே துடுப்பாகவும் மானத்தையே நெய்யாகவும் வீரத்தையே விறகாகவும் கொண்டு, போராகிய ஒள்ளிய நெருப்பில் தன்னுயிரையே அவியாக வேள்வி செய்தல் என்ற தும்பைத் துறை (பு. வெ. மா. 7 : 26)

தன்னை வேட்டலின் பக்கம் -

{Entry: K11__0487}

பகைவரை அழிக்கும் வேலும் ஆற்றலும் உடைய தன் கணவனைக் காண்பதற்குத் தலைவி போர்க்களம் நோக்கிச் சென்ற திறத்தைக் கண்டோர் கூறுவதும் தன்னை வேட்ட லாகிய அத்தும்பைத் துறையே.

“மனையெல்லையைக் கடந்து, தன் குடிப்பிறப்பையும் நாணத்தையும் பொருட்படுத்தாமல், போரில் வீரர்கள் இறந்துகிடந்த போர்க்களத்திற்குத் தன் உயிராகிய கணவனைக் காண விழுமிய கற்பின் காரணமாகத் தனிய ளாக வீரன்மனைவி வருகிறாள்” என்று கண்டோர் கூறுவது. (பு. வெ. மா. 7 : 27)

தனிச்சேவகம் -

{Entry: K11__0488}

‘வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை’ என்ற வஞ்சித்துறை. அது காண்க. (வீ. சோ. 101)

தனிநிலை -

{Entry: K11__0489}

இஃது ‘ஒருதனி நிலை’ என்னும் வஞ்சித்துறை; அது காண்க. (சாமி. 133)

தனியே இரங்கல் -

{Entry: K11__0490}

துணைவியை இழந்த தலைமகன் தனியே இருந்து இரங்கல் என்ற காஞ்சித்துறை.

‘தாமே ஏங்கிய தாங்கரும் பையுள்’ காண்க. (வீ. சோ. 102)

தாபத நிலை (1) -

{Entry: K11__0491}

தலைவனை இழந்த தலைவி தவத்தை மேற்கொண்ட நிலை. ஐந்திணை இன்பம் நீங்கத் தலைவன் நினைப்பிலேயே தவக்கோலம் கொண்டு வாழ்தலின், அகப்புறப் பெருந்திணை ஆயிற்று. (ந. அ. 244)

தாபதநிலை (2) -

{Entry: K11__0492}

கணவன் இறந்தபிறகு தலைவி கைம்மை நோன்பு நோற்று உயிர் வாழ்தல் என்னும் சிறப்பின் பொதுவியற்பால துறை களுள் ஒன்று.

‘காதலன் இழந்த தாபதநிலை’ என்பது தொல்காப்பியம். (பொ. 79 நச்.)

தாபத நிலையாவது தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துக் கொண்டானாகத் தான் அவனோடு இறந்துபடாது நொந்து வருந்தும் மனைவி தன்னைவிட்டு இறந்தவன்மாலையிடம் கோபித்துத் தான் பூச்சூடாமல் வறுநிலத்திலேயே படுத்துக் கரிய இலையுணவு உண்டே உயிர்வாழ்கிறாள் என்பது. (பு. வெ. மா. 11-4)

தாபதப்பக்கம் -

{Entry: K11__0493}

‘தாபதப்பக்கம்’ என்பதனான், தவத்தை முட்டின்றி முடிக்கும் முதியோர் பெற்றியும், தவம் செய்ய முயன்று அதற்கு ஆயத்தம் செய்யும் இளையோர் பெற்றியும் கொள்ளப்படும். (தொ. பொ. 75 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் தாபதவாகை என்னும் (8 : 14); இதனை வீரசோழிய உரை ‘அஞ்சாச் சிறப்பு’ என்னும். (கா. 104)

தாபதர்பக்கம் எட்டாவன-

{Entry: K11__0494}

நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடை புனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டில் உள்ள உணவு கோடல், தெய்வபூசையும் அதிதிபூசையும் செய்தல் என்பன. (தொ. பொ. 14 இள.)

தாபத வழக்கு எட்டாவன-

{Entry: K11__0495}

உண்ணாமை, உறங்காமை போர்த்தாமை, வெயிலிலிருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்துதல் என்ற திண்ணியோர் உள்ளம் கண்ணிய வகையின. (தொ. புறத். 20 பாரதி.)

தாபதர் -

{Entry: K11__0496}

தவத்தோர் - துறவிகள். தாபதம் - நோன்பு. நோன்பாவது - புலனடக்கம், ஊறு செய்வார்க்கும் தீங்கு செய்யாமல் பொறுத்தல் முதலியன. ஒழுக்கம்- யோகம். பொதுநலம் செய்வோரும் தவம் செய்வோரும் என அந்தணர் இருவகை யினர். தாபதர் பொதுநலம் செய்வர். பொதுநலம் செய்வோர் தவமும் செய்வர்.

எண்வகை ஒழுக்கமாவன: அடக்கம், நோன்பு, இருக்கை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைத்தல், கலத்தல் என்பன. (283. குழந்தை)

தாபதவாகை -

{Entry: K11__0497}

உணவில் விருப்பமின்மை, நீர்வேட்கை இன்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாதிருத்தல் என எட்டுப் பகுதிகளையுடைய தவம் செய்வார் இயல்பினைக் கூறுதல். அஃதாவது நீரில் பலகாலும் மூழ்கி, தரையிலேயே படுத்து, மரவுரியை உடுத்து, நெகிழ்ந்த சடை தொங்க, தீயைப் பேணி. மக்கள் வாழும் ஊரின்கண் செல்லாமல், காட்டிலுள்ள காய் கனி கிழங்கு இலை முதலியவற்றை உணவாகக் கொண்டு, கடவுள் வழி பாடும் துறவோர் வழிபாடும் செய்தல் தம்மைத் துறக்கத்தே செலுத்தும் வழியாம் - என்னும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 14)

‘தாமே ஏங்கிய தாங்கரும் பையுள்’ -

{Entry: K11__0498}

சிறைப்பட்டார் தாம் உற்ற பெறுதற்கரிய துன்பத்தினைக் கூறும் கூற்று. (தொ. பொ. 77 இள.)

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணா னொடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிருந்து தண்ணீர் வேட்டுத் “தா” எனக் கேட்டு முன்பெறாது பின் பெற்றுக் கைக் கொண்டு உண்ணான் சொல்லித் துஞ்சிய புறநா. 74ஆம் பாட்டு இதற்கு எடுத்துக்காட்டு. “சங்கிலியாற் பிணிக்கப்பட் டுள்ள நாய் போல என்னைப் பிணித்துள்ளான், பகைவன். சிறுபதமாகிய தண்ணீரைக்கூடச் சிறைக் காவலரிடம் இரந்துண்ணும் அவலநிலையில் வாழவா, இவ்வுலகில் என் பெற்றோர் என்னைப் பயந்தனர்?” என்று அப்பாடல் பொருள்படும்.

கணவர் இறந்துபோகத் தம்மைச் சுற்றி அழுது ஆறுதல் அளிக்கும் சுற்றத்தாரும் இன்றி, மனைவியர் தாமே தத்தம் கொழுநரைத் தழீஇ இருந்து அழுததாகிய, கண்டோர் பொறுத்தற்கரிய நோய். ‘தாமே’ எனப் பன்மை கூறினார். ஒருவற்குத் தலைவியர் பலர் என்றற்கு. இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது என்று கூறி, புறநா. 249 ஆம் பாடலை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர். (பொ. 79)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியற் படலத்து 27ஆம் துறையாகிய (11 : 13) ஆனந்தப்பையுள் எனப்படு கிறது. வீரசோழியத்துள் இது ‘தனியே இரங்கல்’ (கா. 102) என்று கூறப்படுகிறது.

தார் என்னும் படை -

{Entry: K11__0499}

தார் என்பது நால்வகைப் படையையும் சூழ்ந்து அலங்கல் போல முன்செல்லும் கொடிப்படை. இதனை முன்னணிப் படை என்றும் தூசிப்படை என்றும் வழங்குவர். ‘தார்’ என்பது முன்னிற்றலை உணர்த்தும் ‘தரவு’ என்ற சொல்லின் மரூஉ ஆகும். (தொ. புறத். 17 ச. பால.)

தார்நிலை (1) -

{Entry: K11__0500}

தம் அரசனைச் சூழ்ந்து மொய்த்த பகைவரை வேற்றிடத்துப் பொருது நின்ற அவன் தானைத்தலைவர் முதலியோர் விரைந்து வந்து எறிதலைக் கூறும் புறத்துறை (தொ. பொ. 72 நச்.) ‘வேல்மிகு வேந்தனை..... தார்நிலை’ காண்க.

தார்நிலை (2) -

{Entry: K11__0501}

“முன்னே எழுகின்ற மாற்றாரது தூசிப்படையை யானே தடுப்பேன்!” என்று ஒரு வீரன் தன் வேந்தனுக்குத் தனது தறுகண்மையை, “தேர்வேந்தே! நின்னொடு பகைத்து எழுகிற சேனை, ஒளிவாளொடு முன்நின்று யான் ஒரு முறை தடுப்பேனாயின், சிறுவிளக்கொளியின் முன் பெரிய இருள் போல, இரிந்தோடும்” என்றாற் போன்று மிகுத்துச் சொல் லும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 : 8)

தார்நிலைப் பக்கம் -

{Entry: K11__0502}

குடைவேந்தனொருவனைப் பல குடைவேந்தர் போர்க்களத் தில் எதிரவே, தனிவீரன் அவ்வேந்தர்களைத் தடுத்து நிறுத் தும் தறுகண்மையும் தார்நிலை எனும் தும்பைத் துறையே யாம். “வேல் வீரன் தன் கைவேலை எறிதலால் அவ் வேறுண்டு, சூரியனை மறைத்த கார்மேகம் காற்றால் நிலைகுலைந்தது போன்று, வேந்தன்மேல் அவனைத் தாக்க வந்த மலைபோன்ற யானைகள் கீழ்மேலாய் வீழ்ந்தன” என்ற வீரச் செய்தி. (பு. வெ. மா. 7:9)

‘தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை’ -

{Entry: K11__0503}

கெடாத மேம்பட்ட புகழை ஒப்பிட்டுக் கூறும் பூவைநிலை என்ற புறத்திணைத் துறை.

இங்ஙனம் பொதுவாகக் கூறவே, ஆற்றல் மிக்க தேவர்க ளாகிய பிரமன் இந்திரன் முருகன் முதலிய தேவர் பலரையும் அரசற்கு உவமமாகக் கொள்வதும், உரிப்பொருள் தலைவனை முருகன் முதலிய தேவராகக் கூறுவதும், அரசர் புகழைக் காட்டுவாழ்வோருக்குக் கூறுவதும், அவரை அரசர் பெய ரால் கூறுவதும் கொள்ளப்படும்.

எ-டு: புறநா. 56 (தொ. பொ. 60 நச்.)

‘தாவில் கொள்கைப் பாகுபட மிகுதிப்படுத்தல்’ -

{Entry: K11__0504}

தாவில் கொள்கை எனவே, தன் வலிமையைக் காட்டியோ தவறான வழியில் முயற்சி எடுத்துக்கொண்டோ பெறும் வெற்றி வாகையாகாது. இரணியன் தன் ஆற்றலாலும் ஆணையாலும் தன்னைப் பரம்பொருளாகக் கூறுவித்துக் கொண்டது வாகை ஆகாது.

வாகையின் இருவகை தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும், பிறர் தன்னைப் புகழ்ந்து கூறலுமாம்.

தானே போட்டியில் வென்று பெறும் சிறப்பு வாகை எனவும், பிறரால் தான் இயல்பாகப் புகழப்படும் சிறப்பு முல்லை யெனவும் கூறப்படும். (தொ. பொ. 74 நச்.)

‘தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச், சூதர் ஏத்திய துயில்எடை நிலை’ -

{Entry: K11__0505}

தம் வலிமையாலே பாசறைக்கண் மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயில் எடுப்பின்கண் ஏத்தின துயிலெடைநிலை என்ற பாடாண்துறை.

‘கிடந்தோர்க்கு’ எனப் பன்மை கூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்று தொட்டு வரும் என்பதூஉம், சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகள் முதலாயினோருள் சூதரே இங்ஙனம் வீரத்தால் துயின்றோரைத் துயிலெழுப்புவர் என்பதூஉம், அவர்களுடைய யாண்டொடு முன்னுள்ளோரும் பிறரும் சூதரால் குறிப்பிடப்படுவர் என்பதூஉம் கொள்ளப்படும். அவர் அங்ஙனம் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழ்தல் அவர் கருத்தாகலின், ஒருதலைக் காமம் உளதாயிற்று. (தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் இடம் பெறும் துறை (9 : 9)

தானைநிலை -

{Entry: K11__0506}

துறக்கம் புகு வேட்கையுடைய காலாள் வீரர்கள் தும்பைப்பூச் சூடிப் போர்க்களம் புக்குத் தாமே மறம் சிறப்பப் பொருது வீழ்தலும் அரசன் ஏவலால் பொருது வீழ்தலும் பற்றிக் கூறும் தும்பைத்துறை தானைநிலையாம். தானே மறம் சிறப்பப் பொரும் காலாள் பற்றிய தும்பைத்துறை தானைமறமாம். (தொ. பொ. 72 நச்.)

வீரசோழியம் பொதுவாக ‘நிலை’ என்னும். (கா. 105)

இருதிறத்துப் படைவீரரும் தன் ஆற்றலைப் புகழத் தனி மறவன் ஒருவன் போரில் சிறந்து விளங்கும் திறத்தை, “பகைவ ராகிய தேர்வீரர் குதிரைவீரர் காலாள்வீரர் ஆகியோருக்கு நடுக்கம் உண்டாகுமாறு போரிட்டான் இவன்” என்று சிறப்பித்துக் கூறும் தும்பைத்துறை தானைநிலையாகும். (பு. வெ. மா. 7 : 22)

தானைநிலையின் துறைப்பகுதி -

{Entry: K11__0507}

தும்பையில் காலாட்படை சூடிய பூக்கூறலும், அதன் எழுச்சி யும், அரவமும், அதற்கு அரசன் செய்யும் சிறப்பும், அதனைக் கண்டு இடைநின்றோர் போரை விலக்கலும், அவர் அதற்கு உடன்படாமைப் போர் துணிதலும், அத்தானையுள் ஒன்றற்கு இரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத்தாரையும் துணை வந்த வேந்தரையும் ஏத்துவனவும், “நும்போர் எந்நாட்டு?” (தொ. சொ. 223 நச். உரை) என்றலும், இரு பெரு வேந்தரும் இன்னவாறு பொருதும் எனக் கை எறிதலும் போல்வன தானைநிலை என்ற தும்பைத்துறைப் பாற்படும். (தொ. பொ. 72 நச்.)

தானைநிலையின் பிறர் கூற்றுத் துறைகள் -

{Entry: K11__0508}

தும்பைத் திணையிலுள்ள தானைநிலையைத் தாயர் கூறுதல் மூதின்முல்லையாம்; மனைவியர் கூறுதல் இல்லாண் முல்லை யாம்; கண்டோர் கூறுதல் வல்லாண் முல்லையாம்; பாணர் கூறுதல் பாண்பாட்டாம். (தொ. பொ. 72 நச்.)

தானைமறப் பக்கம் -

{Entry: K11__0509}

உலகினைக் காக்கும் அரசனுக்கும் போர்த்துறையில் பாது காவலான செய்திகளை, “முடிவு செய்த ஒன்றனை மீண்டும் ஆராய்ந்து காலம் தாழ்த்தினால் தோல்வி உண்டாகும்; படைஞர் பலர் படநேரினும், விரைவில் போர் தொடங்கு தலே தக்கது” என்றாற் போல அமைச்சர் முதலியோர் கூறுவதும் தானைமறத்தின்பாற்படும்.

“வேற்படை ஏந்திய நம் மன்னன் படை போரிடப் புறப்படின் யானைப் படையையும் தேர்ப்படையையும் உடைய பகைவர் நிலை யாதாமோ?” என்று தம் அரசனுடைய வேற்படையின் வலிமையை எடுத்துக் கூறிப் பகைமன்னர் எய்த இருக்கும் அழிவிற்கு வருந்துதலும் தானைமறத்தின் பக்கமாம். (பு. வெ. மா. 7 : 45)

தானைமறம் -

{Entry: K11__0510}

பேய்கள் வழங்கும் போர்க்களத்தில் வேல் ஏந்திய இரு திறத்துத் தும்பை மன்னர் படைகளும் பொருது நின்றால், “அரசர்கள் தம் செங்கோலால் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர்” என்ற கூற்றுக்கு ஏதம் நிகழுமே என்று உட் கொண்டு, ஒத்த ஆற்றலுடைய இரு திறத்துப் படைகளும் போரிட்டு வீணே மடிந்து போகாதவாறு சான்றோர் விலக்கும் திறம் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7-3)

வீரர், படைத்தலைவன் ஏவாமல் தாமே கறுவு கொண்டு பொருவது தானைமறமாகும். (தொ. பொ. 72 நச்.)

தானை யானை குதிரை என்ற முறை வைப்பு -

{Entry: K11__0511}

துறக்கம் புகு வேட்கையொடு போரிடுதலின் தானையாகிய காலாட்படை முதற்கண் கூறப்பட்டது. அடுத்து, மதத்தால் கதம் சிறந்து தானும் பொரவல்ல யானை கூறப்பட்டது. மதம் சிறவாமையின் கதம் சிறவாத குதிரை அதனை அடுத்துக் கூறப்பட்டது. குதிரையின் அன்றித் தேர் தானே செல்லாமை யின் தேர்க்கு வீரம் இன்று என்று அது கூறப்பட்டிலது. (தொ.பொ. 72 நச்.)

திகிரி வென்றி -

{Entry: K11__0512}

திருமாலது சக்கரப்படையின் வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் வாகைத் துறை.

“சிவபெருமானும் நேரில்வந்து துதிப்பப் பாரதப் போரில் கண்ணன் கையிற் கொண்டிருந்த சக்கரம், பகைவர் மார்பைப் பிளந்து அவர்களுடைய பச்சை உதிரத்தைப் பருகி உயிரை உண்ணும் தகைமைத்து” என்பது போன்று அதன் வெற்றி கூறுதல் (மா. அ. 127)

‘திறப்பட, ஒரு தான் மண்டிய குறுமை’ -

{Entry: K11__0513}

வலிபட ஒருதானாகிச் சென்ற குற்றுழிஞை. (தொ. பொ. 68 இள.)

அகத்தோன் அரண்அழிவு தோன்றியவழிப் புறத்துப் போர் செய்யும் சிறுமை. (தொ. பொ. 67 நச்.)

எ-டு : “வேந்தன் விடுத்த தூதன், ‘படைஞர் எல்லாம் வருக!’ என்று இசைப்பவே, நூலரிமாலை சூடிக் காற்றுப் போலக் களம் புகுந்த மறக்குடி வீரன் தடுத்தற்கரிய போரினைத் தடுத்து தனது வளைந்த வாளினை, இறந்துபட்ட யானைத் தந்தத்தில் கொடுத்து வளைவு திருத்தி, தனக்குத் தோற்றோடியவனது முதுகு கண்டு சிரிப்பானாயினான்.” (புறநா. 284)

அரண் அழியாமல் காக்க முடியாமையாகிய சிறுமை. குறுமை - சிறுமை. அரண் அழியவே, ஒதுக்கிடமின்றி வெளிப்போந்து போர் செய்யும் என்பது. (277 குழ.)

ஊறு அஞ்சாது உரனுடன் ஒருவனாய் எதிர்த்து ஏறிப்புரியும் குறும்போர் ஊற்றத்தால் தனித்தேறி மாற்றலரை நெருங்கி மலையும் தறுகண்மை குறுமை அல்லது குற்றுழிஞை எனப்படும். (புறத். 12 பாரதி)

இதனை உழிஞையார் இருவர்க்கும் பொது என்பர் இளம்பூரணர்; இதனை அகத்துழிஞையானுக்கே கொள்வர் நச்சினார்க்கினியரும், குழந்தையும்; இதனை உழிஞைத்துறை என்னாது உழிஞைவகை என்பார் பாரதி.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘அழிபடை தாங்கல்’ என்ற நொச்சித் துறையில் கொள்ளும். (5:8)

திறப்படப் பொருதல் -

{Entry: K11__0514}

வெட்சியார் இரவிடைக் களவில் கவர்ந்த தம் ஆநிரைகள் மீண்டும் தம் வயப்படும் வண்ணம் கரந்தைமறவர் வெட்சி மறவருடன் போரிடுதல் என்னும் கரந்தைத்துறை.(இ.வி.604-7)

திறைகொண்டு பெயர்தல் -

{Entry: K11__0515}

உழிஞைமன்னன் உற்ற பகை நீங்க, உள்ளிருந்த அரசன் பணிந்து வணங்கிப் பலவகைத் திறைப்பொருள்களையும் தர, அவற்றைப் பெற்றுக்கொண்டு மீளுதல் என்னும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6:30)

திறைவாங்கி இறை பெயர்ந்த பக்கம் -

{Entry: K11__0516}

இது வஞ்சி என்னும் புறத்திணையின் பேராண்வஞ்சியின் பக்கமாகும்; அது காண்க. (சாமி. 132)

தீப்பாய்தல் -

{Entry: K11__0517}

கணவனொடு நளிஅழல்புகல் என்ற காஞ்சித்துறை. ‘பாலைநிலை’ காண்க. (வீ. சோ. 102)

துகளறு கல் தேடாப் பொறித்தல் -

{Entry: K11__0518}

போருள் மடிந்தார் பெயர் பொறிக்கக் கல் தேடுதலும், பெயர் பொறித்த கல்லினை நீருட்பெய்து குளிப்பாட்டுதலும், கல் நடுதலும் ஆம். இது கரந்தைத் துறை.

‘காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்’ - காண்க. (வீ. சோ. 100)

துடிநிலை -

{Entry: K11__0519}

இது வெட்சித்திணையின் புறனாக அடுத்து வரும் துறை என்னும் தொல்கா ப்பியம். ‘மறம் கடை கூட்டிய துடிநிலை’ காண்க.

ஆநிரையைக் கவர்ந்து சென்ற வெட்சி வீரரும், ஆநிரையை மீட்டுவந்த கரந்தைவீரரும் தம் வெற்றிச் சிறப்பைத் துடி கொட்டி ஆரவாரித்து மகிழ்தல் என்னும் வெட்சித்துறையும் கரந்தைத் துறையும் ஆம். (பு. வெ. மா. 1 - 19; இ. வி. 604 - 26)

துணை வஞ்சி (1) -

{Entry: K11__0520}

வஞ்சித்திணைக்கண் பேரரசருக்குத் துணையாக வந்த குறுநிலமன்னரும் சிறப்பெய்தியிருக்கும் பாசறைநிலை உரைத்தலும் பிறவும் துணைவஞ்சி எனப்படும். இத்துணை வஞ்சி ‘நீயே, புறவின் அல்லல் அன்றியும், (புறநா. 46), ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறநா. 47) என்னும் புறப்பாட்டுக்களில் காணப்படும். (தொ. பொ. 65 இள.)

‘துணை வேண்டாச் செருவென்றி’ என்பது நாடக வழக்கு. துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. ‘நீயே புறவின் அல்லல் அன்றியும்’, ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறநா.) முதலியன துணைவஞ்சி என்பார்க்கு, அவை மேற்செல வின்கண் அடங்காமையின் பாடாண்திணை எனப்படும். (63 நச்.)

எனவே, நிரை கொண்டவனோ நிரைமீட்டவனோ தன்பகை வன்மேற் சேறற்கண் உதவியாக வரும் மன்னன் முதலியோரது நிலை கூறலே துணைவஞ்சியாம்.

இத்துறை புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லை.

துணைவஞ்சி (2) -

{Entry: K11__0521}

புறநானூற்றுக்குப் பன்னிருபடலம் முதலாக இக்காலத்து வழக்கிறந்த நூல்களை அடியொற்றித் துறைகளை வகுத்துள் ளனர். அத்தகைய துறைகளுள் ஒன்றே துணைவஞ்சி.

புறநானூற்றுள் 45, 46, 47, 57, 213 ஆம் பாடல்கள் போன்றவை இத்துறையைச் சார்ந்தனவாம்.

இவை துணைவஞ்சி என்று இளம்பூரணர் சுட்டிக் செல்கிறார். (தொ. பொ. 65)

வஞ்சியாவது பகைமேற் சேறல். இப்பாடல்கள் மேற்செல வின்கண் அடங்காமையின் இவற்றைத் துணைவஞ்சி என்றல் பொருந்தாது. இவை பாடாண்திணை எனப்படும் என்பார் நச்சினார்க்கினியர். (63)

துணையாக மேற்சென்று, அரசர்க்கோ, புலவர்க்கோ, சிறு வர்க்கோ, பொதுவாக மக்கட்கு மற்றோரரசன் தாக்குதலால் ஏற்படக் கூடிய இடுக்கண் களைதல் துணைவஞ்சி ஆகும் என்பது பன்னிருபடல நூலார் கருத்துப் போலும்.

எ-டு : புறநா. 45, 46, 47, 57, 213.

தும்பை -

{Entry: K11__0522}

மதிற்போரில் தோற்றவனும் வென்றவனும் மாற்றரசனை அறைகூவி, “இன்ன போர்க்களத்தில் இருவேமும் இன்ன நாளில் பொருவேம்” என்ன முன்னமேயே அறிவித்த பின்னர், அக்குறித்த நாளில் குறித்த களத்தே அவ்வரசர் இருவரும் அவர்தம் நாற்படையும் தும்பைப்பூவைத் தத்தம் அடை யாளப்பூவொடு சூடிப் பொரும் செய்திகள் பற்றிய புறப்பொருட் பகுதி. (தொ. பொ. 70 நச்.)

தும்பை அரவம் -

{Entry: K11__0523}

தும்பை சூடிய பின் வேந்தன் மறம் நிறைந்த படையோர்க்கு நாடும் பிறவும் பரிசிலாகக் கொடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி ஆரவாரம் பற்றிய தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 - 2)

தும்பை சூடல் -

{Entry: K11__0524}

குருதிப் பெருக்கொடும் போர்க்களம் செல்லக் கருதிய வீரவேந்தன் பைம்பூங் கொத்துக்களைக் கொண்ட வெண்மை யான தும்பைப்பூவைச் சூடுதல் என்ற தும்பைத்திணை. களம் வகுத்து நாட்குறித்துப் போரிடும் பெருவேந்தர் இருவரும் தும்பையைத் தம் அடையாளப் பூக்களொடு சூடிப் பொருதலே மரபாகும். (பு. வெ. மா. 7 - 1)

தும்பை தரித்தல் -

{Entry: K11__0525}

‘தும்பை சூடல்’ என்னும் தும்பைத் திணைக்கண் துறை. இது ‘தும்பை’ எனவும் கூறப்பெறும். (சாமி. 137)

தும்பை தலையழிக்கும் சிறப்பிற்றாதல் -

{Entry: K11__0526}

தும்பை, இருதிறத்து வீரரும் பொருவது கருதி நாட்குறித்துத் தும்பை சூடிக் களம் வகுத்து நேருக்குநேர் பொரும் சிறப் பிற்று. ஆதலின், அறத்தில் திரிந்து வஞ்சனையான் கொல்வன வும், தேவரால் பெற்ற வரங்களான் கொல்வனவும், கடை யூழிக்கண் தோன்றிய சிறப்பில்லாத போர்ச்செயல்களாம். (தொ. பொ. 70 நச்.)

தும்பையில் சிறப்பாவன சோம்பேறியையும் மலடனையும் மயிர் அவிழ்ந்தோனையும், ஒத்தபடை எடாதோனையும் கொல்லாது விடுத்தலாம். (தொ. பொ. 279 குழ.)

தும்பைத் திணையின் இலக்கணம் -

{Entry: K11__0527}

வலிமை பொருளாகப் போர் கருதி வந்த அரசன்கண் சென்று அவனைத் தலையழிக்கும் சிறப்பினையுடையது தும்பையாம்.

(தொ. பொ. 70 இள.)

தனது வலியினை உலகம் புகழ்ந்து பேசுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய வலிமையை உலகம் புகழ்ந்து பேசுதலே தானும் பெறுபொருளாகக் கருதி எதிர்சென்று அவன் தலைமையைத் தீர்க்கும் சிறப்பினை யுடையது, தும்பைத்திணை. இது மைந்து பொருளாகப் பொருதலின், மண் இடையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதில் இடை யீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற் கூறப்பட்டது. (நச்.)

தும்பைப்போர் களம் வகுத்து இருதிற வீரரும் நாட்குறித்துத் தும்பைப்பூச் சூடி மலையும் சிறந்த போராகும். (இ. வி. 610)

தன் வலியை மதித்து இகலி வந்த வேந்தனை எதிர்த்துப் போர் பொராது அடர்க்கும் சீர் உடைத்து தும்பைத் திணை. தும்பை இருபடையும் ஒருங்கு மலையும் போர் குறிப்பதால், வந்த வேந்தனை இருந்த மன்னவன் எதிரூன்றிப் பொருதலும் அவ்வாறு தடுத்து எதிர்த்தவனை வந்தோன் அடுத்தமர் தொடுத்தலும் ஆகிய இருதிறமும் அடங்கும். எதிர்த்து இருவர் மலைவதே போராதலின், போர் குறித்தும் தும்பை யின் வேறாக எதிர்ஊன்றலைக் காஞ்சி என்ற வேற்றுத் திணையாகக் கொள்ளும் பின்னூற் கொள்கை மிகையானது. (புறத். 15 பாரதி) (தொ. பொ. 70)

தும்பைத் தொகைநிலை -

{Entry: K11__0528}

போர்க்களம் புக்க இருபெரு வேந்தரும் அவர்களுடைய படை வீரர்களும் எல்லாரும் எஞ்சாமல் களத்தே பட்டொழிய, அவர்தம் உரிமைமகளிர் அவர் உடலோடு உடன்கட்டை யேறிய செயலைக் கூறும் தும்பைத்துறை. (பு. வெ. மா. 7: 28)

தும்பை நெய்தற்குப் புறன் ஆதல் -

{Entry: K11__0529}

நெய்தற் குரிய பெருமணலுலகம் போலக் காடும் மலையும் கழனியும் அல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும்பொழுது வரைவின்மையானும், நெய்தற்குரிய எற்பாடே போர்த்தொழில் முடியும் காலமாத லானும், நெய்தலில் இரக்கமும் தலைமகட்கே பெரும் பான்மையும் உளதாமாறு போலக் கணவனை இழந்த மகளிர்க்கன்றி வீரர்களுக்கு இரக்கம் இன்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள் பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப ஆதலானும், ஒருவரும் ஒழியாமல் இறந்தவழிக் கண்டோர் இரங்குப ஆதலானும், பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. (தொ. பொ. 69 நச்.)

நெய்தல் போலவே தும்பையும் ஆர்ப்பு அலைப்பு இரங்கல் இவற்றிற்கு இடனாதலானும், நெய்தலின் புலம்புறு தலைவியர் இரங்கல் ஓயத் தலைவர் கார்காலத்தே மீளுதல் போலத் தும்பையின் அமர் ஓய்வு கார்காலத்தது ஆதலானும், நெய்தற்குரிய பரந்த மென்னில வரைப்புப் போருக்குச் சிறந்து உரியது ஆதலானும் நெய்தலுக்குத் தும்பை புறன் ஆயிற்று. (புறத். 14 பாரதி.)

தும்பையான் -

{Entry: K11__0530}

களம் வகுத்துப் போரிடும் இருதிறத்தும் படைவீரன் ஒவ்வொருவனும் தும்பைப்பூச் சூடலின் தும்பையான் எனப்படுவான். (தொ. பொ. 70 நச்.)

தும்பையின் இருபாற்பட்ட ஒரு சிறப்பு -

{Entry: K11__0531}

பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கு அஞ்சி அகல நின்று அம்பான் எய்தும் வேல்கொண்டு எறிந்தும் போர் செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின், சிறிதொழியத் தேய்ந்த உயிரொடு துளங்காது நிலைத்துநின்ற அவனது உடம்பு பூமியில் சாயாது நின்றபடி இருத்தல், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் பூமியில் வீழ்ந்து கிடவாமல் துடித்து இயங்கு தல் ஆகிய இருவகை அரிய நிலைகளையும் தும்பைத்திணை நிகழ்ச்சிகளில் சிறப்பாகக் காணலாம். (தொ. பொ. 71 நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை‘வெருவருநிலை’ என்ற துறையாகக் கூறும். (7:23)

தும்பை வெண்பூச் சூடல் -

{Entry: K11__0532}

‘தும்பை’ காண்க. (பு. வெ. மா. 7 -1 ) (இ. வி. 611 -1)

தும்பை வேந்தன் -

{Entry: K11__0533}

களம் வகுத்துத் தும்பைப்பூச் சூடி ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடும் இருதிறத்து மன்னருள் ஒவ்வொருவனும். ‘தும்பை வேந்தன்’ எனப்படுவான். (தொ. பொ. 70 நச்.)

துயில் எடைநிலை -

{Entry: K11__0534}

“அனைவருக்கும் அருளல் வேண்டித் துயில் நீங்குக!” என்று மன்னனுக்குச் சூதர் பள்ளி எழுச்சிப் பாடுதல் என்னும் பாடாண்துறை.

“அரசே! நினக்குத் திறை அளிக்க நின் ஏவல் கேட்கும் மன்னர் காத்திருக்கின்றனர். ஆதலின் அவர்கள் நின் திருவடிகளை வணங்க வாய்ப்பளிக்குமாறு இவ்வைகறையில் துயிலெழுக” என்றல் போலப் பாடித் துயில் எழுப்புதல். (பு. வெ. மா. 9:9)

‘தாவில் நல்லிசை....... துயிலெடை நிலை’ என்று தொல் காப்பியம் கூறும். (தொ. பொ. 91 நச்.)

துயில் எழுப்பல் -

{Entry: K11__0535}

‘துயிலெடை’ என்னும் பாடாண்துறை; ‘துயில் எடை நிலை’ காண்க. (சாமி. 144).

துயில்நிலை -

{Entry: K11__0536}

‘கண்படை நிலை’ என்னும் வாகைத்திணைத் துறை; அது காண்க. (சாமி. 141)

துறவு -

{Entry: K11__0537}

தவத்தினை ஆற்றிக் காமத்தை வென்ற பக்கம் என்ற வாகைத் துறை.

“புத்தர்பெருமான் திருவுள்ளம் யாவர்க்கும் அருள்சுரக்கும் அளவு மெல்லிது என்ப; ஆயின், அது மன்மதன் படையாகிய மகளிர் கண்களாகிய வாளினாலும் போழப்படாத வன்மை யுடையது” என்றாற் போல, அருள் மிக்குக் காமம் கடந்த தவவலியான் ஏற்பட்ட துறவுள்ளம் பற்றிக் கூறுதல்.

‘அருளொடு புணர்ந்த அகற்சி’ காண்க. (வீ. சோ. 104)

தூசி நிலை -

{Entry: K11__0538}

“களம் வகுத்துப் போரிடும் தும்பை சூடிய போரிலே, முன் நோக்கிப் போரிட வரும் வலிமை மிக்க படையை யான் தடுத்து நிறுத்துவேன்” என்றும், “யான் வாளொடு போர்க் களம் புகின் பகைவர்படை சிறுசுடர் முன்னர்ப் பேரிருள் உடைந்து ஓடுவது போல எனக்குக் கெட்டோடும்” என்றும், அரசனிடம் மறவன் தன் ஆற்றலைக் கூறுதல். தூசி - முன் செல்லும் படை. (பு. வெ. மா. 7 -8)

தூசிநிலைப் பக்கம் -

{Entry: K11__0539}

போரில் தன் அரசனைப் பகைவர் பலரும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து தாக்கும்போது, வீரன் ஒருவன் தான் போர் செய்யும் இடத்தைவிட்டு வந்து, ஞாயிற்றை மறைத்த கார்மேகங்கள் காற்றடித்த அளவில் சிதறி ஓடுமாறு போலப் பகைவரைச் சிதறி ஓடச் செய்தல். (பு. வெ. மா. 7:9)

இதனைத் தொல்காப்பியம் ‘தார்நிலை’ என்னும். (பொ. 72 நச்.)

தூது வென்றி -

{Entry: K11__0540}

தூதாக அனுப்பப்பெற்றவர் தாம் விரும்பியாங்குத் தம் தூதினால் தம் அரசருக்கும் தம் நாட்டு மக்களுக்கும் பெரு நன்மை தேடி வருதலாகிய பாடாண் துறை.

“அனுமன் இராமனுடைய தூதுவனாய்ச் சென்று கடந்து சென்ற கடல், மற்றவர்க்குப் பெரும் பரப்பிற்று எனினும், குறுமுனியாகிய அகத்தியனுக்குக் கையால் முகந்து ஆசமனம் செய்த சிறிய அளவினதே ஆகும்” என்பது. (மா. அ. பாடல் 546)

தேர்மறம் -

{Entry: K11__0541}

வீரம் மிகுந்த அரசனுடைய தேரினது ஆற்றலை, “அது போர்க்களத்தில் செங்குருதி வெள்ளம் தன் சக்கரங்களைத் தொடரப் பகைவர் பிணங்களின் முதுகின்மேல் ஊர்ந்து வரும்” என்று எடுத்துரைக்கும் தும்பைத்திணைத் துறை. (பு. வெ. மா. 7:10)

தேர் முல்லை -

{Entry: K11__0542}

பகைவரை வென்று புறம்கண்ட மன்னன், தேர்மீது இவர்ந்து வெற்றிவீரனாக வருகின்ற காட்சியைப் புகழ்ந்து கூறுதல். அஃதாவது “பகைமன்னர் பகை தீர்ந்து தம்மை வணங்கித் திறைப்பொருள் கொடுக்குமாறு நம் கொழுநர் தமது தேரினைப் போர்முனையில் செலுத்தி வெற்றியொடு மீண்டு வர, பரிகள் தேரினை விரைந்து ஈர்த்து வரும். அவ்வொலி கேட்டு மான்கணம் கெட்டோடுகின்றன” என்று மனைவி கூற்றாக வரும் பாடற்கண் இத்துறை பயின்றவாறு.

இது முல்லைப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று.

(பு. வெ. மா. 13 - 3)

தேர் வென்றி -

{Entry: K11__0543}

தேரில் பூட்டிய குதிரைகள் தேரோட்டியின் விருப்பம் போல ஐந்து வகைச் செலவுடனே பதினெண்வகைச் சாரியும் செல்வதால், தேர் வெற்றியைத் தந்த சிறப்புக் கூறுவது. வாகைத் திணையின் ஒழிபாக நூல் இறுதியுள் கூறப்படும் வென்றிகளுள் ஒன்று. (பு. வெ. மா. 18 - 14)

தேரோர் -

{Entry: K11__0544}

1) தேரேறி வந்து ஏர்க்களத்தைப் பாடும் கிணைப் பொருநர், போர்க்களத்தைப் பாடும் புலவர் என்றின்னோர்.

2) தேர் வீரர். (தொ. பொ. 76 நச்.)

‘தேரோர் களவழி தோற்றிய வென்றி’ -

{Entry: K11__0545}

களவழிச் செய்கைகளைத் தேர்ஏறிவந்த புலவர் புகழ்ந்து பாடிய வெற்றி. (களவழி. 36)

அரசன் நாற்படையும் கொன்று களத்தில் குவித்து, களிறு எருதாக, வாளாகிய கோலைச் சுழற்றி, அதரி திரித்து, பிணக்குவியலைக் கொழுப்பாகிய சேற்றொடு குருதியை உலைநீராகக் கொண்டு அதன்கண் பெய்து, பேய்மடைச்சி இடம் துழந்து அட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து, எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாகிய வெற்றியாம். (தொ. பொ. 76 நச்.)

இது களவேள்வி பாடுதலாகும். (75 இள.)

போர்க்களத்தில் தேர்மறவர் வெற்றிவிழவின் வீறு. (புறத். 21 பாரதி.)

போர்க்களத்தைப் புலவர் பாடுவர். (284 குழ.)

ஏர்க்களம் பாடுதல் போலப் போர்க்களத்தைப் பாடுதலாம். இது போர்க்கள வேள்வி. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை மறக்களவழி, கள வேள்வி என்னும். (8-5,6).

வீரசோழியம் இதனைப் பொதுவாகக் களவழி (கா.104) என்னும்.

‘தேரோர், வென்ற கோமான் முன்தேர்க் குரவை’ -

{Entry: K11__0546}

தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலேயே நின்று போர்த் தலைவரொடு கைபிணைத்து ஆடும் குரவைக் கூத்து என்ற வாகைத் துறை. (தொ. பொ. 76 நச்.)

மகளிர் ஆடும் குரவையை வெற்றிக்களிப்பான் வேந்தனும் மறவரும் ஆடுதலின் இது வெற்றியாயிற்று. (284 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘முன்தேர்க் குரவை’ என்னும் (8-7).

இதனை வீரசோழியம் பொதுவாகக் ‘குரவை’ என்னும். (கா. 104).

எ.டு. ‘மடம்பெருமையின் உடன்றுமேல் வந்த, வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத்து ஆடும் கோவே, விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண், கோடியர் முழவின் முன்னர் ஆடல், வல்லான் அல்லன் வாழ்கவன் கண்ணி!’ (பதிற். 56) என்னும் அடிகளில் (அடிகள் மாற்றித் தரப்பட் டுள). இம்முன்தேர்க்குரவை சுட்டப்பட்டது. இவ்வடிகளின் கருத்து :

“அறியாமை காரணத்தால் படையெடுத்து வந்த பகைவீரர் அழிந்து கெட்ட போர்க்களத்தில் ஆடும் அரசன், தன்னூருள் கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலில் வல்லவன் அல்லன். இவன் போர்க்களத்தில் போர்த்தலைவரோடு ஆடும் குரவையே வல்லன்” என்பது. (நச்.)

தேவர்க்குரிய உழிஞைத் துறைகள் -

{Entry: K11__0547}

திருமால் கண்ணனாக அவதரித்து வாணாசுரனுடைய சோமதிலை அழித்த கந்தழி, சிவபெருமான் பகையசுர ருடைய முப்புரங்களை அழிக்க உழிஞை சூடிய முற்றுழிஞை, முருகன் சூரபதுமனை அழிக்கும் பொருட்டுக் காந்தட்பூச் சூடிய காந்தள் - ஆகிய துறைகள் தேவர்க்குரியன. அத்துறை களையும் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய பின் னூல்கள் உழிஞைத்திணைத் துறைகளாகக் கொள்ளும். அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ் வின்றி, ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன ஆகலின், தமிழ்கூறு நல்லுலகத்தன அல்ல ஆதலின், அவை தொல் காப்பியனாரால் உழிஞைத்திணைத் துறைகளாகக் கொள் ளப்பட்டில. (தொ. பொ. 67 நச்.)

தொகை நிலை -

{Entry: K11__0548}

‘நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்’ (தொ. பொ. 75 நச்) எனப் பட்ட எண்வகை யோகஉறுப்புக்களுள் ஒன்று. ஐம்புலனும் புறமாய விடயத்தின் இயன்றிடாமல் தடுத்தல்பொருட்டு முறையானே நால்வகை நிலையுட் படுத்து மனத்தை ஒருக்குதல்.

தொகைநிலையின் அந்நால்வகையாவன மனத்தைப் புலன்வழிப் போக்காது நாபிக்குப் பின் பன்னிரண்டு அங்கு லத்தின் கீழ் நிறுத்தலும், நாபிக்கு நால்விரல் கீழ் நிறுத்தலும், நாசிக்கு அதோமுகமாகப் பன்னிரண்டு அங்குலத்தில் நிறுத்தலும், கீழ்வாயிலைத் தாழிட்டு மூடி மேல்வாயிலாகிய பிரமரந்திரத்தில் நிறுத்திக் கண்விழித்து இருத்தலும் என்பன. (அதோமுகம் - கீழ்). (பா. வி. பக். 41, 48).

தொகைநிலை என்னும் துறை -

{Entry: K11__0549}

தொகைநிலை என்னும் துறை உழிஞை, தும்பை என்ற இருதிணைக்கண்ணும் உள்ளது.

உழிஞைத் தொகைநிலை : அம்மதிலை அழித்தமையான், மற்றுள்ள மதில்களை அடுத்திருந்த மாறுபட்ட மன்னரும் முரண் நீங்கி அம்மதிலை வென்ற மன்னனைப் பணிந்திருத் தல். (தொ. பொ. 69 இள.) இக்கருத்தையே புறப்பொருள் வெண்பா மாலையும் கூறும். (6-32).

வாள்மங்கலம் நிகழ்ந்த பின், முற்றினோன் முற்றப்பட்டோன் என்ற இருவருள் வென்ற மன்னன் பரந்துபட்ட தன் படை ஞர்க்குச் சிறப்புச் செய்ய அவர்களை “ஒருங்கு வருக” என அழைத்தல். (தொ. பொ. 68 நச்.)

தும்பைத் தொகைநிலை -

இரு பெருவேந்தரும் அவர் சுற்றமும் ஒழியாது போர்க் களத்து அழிதல். (72 நச்.)

எதிர்செல்லாது மதிலகத்து அடைத்திருந்தோன் சிறு பான்மை வெளிவந்து போர் செய்ய, இரு திறத்து உழிஞைப் படைகளும் ஒன்றனை ஒன்று எதிர்க்க, இரண்டும் தும்பைத் தொகைநிலை போல அழிதலும் உழிஞைக்கண் சிறுபான்மை உண்டு 68 நச்.

உழிஞைப்போரில் தோற்றோர் தொகுதியாக அழிதலையே தொகைநிலை என்பர். (புறத். 13 பாரதி).

இருவர் சேனையும் தொக்க நிலையே உழிஞைத் தொகை நிலை. (வீ. சோ. 103).

தொகைநிலையின் பாற்படுவது -

{Entry: K11__0550}

புறத்தோன் பலகாலும் மதிலை முற்றியிருத்தல் ‘தொகை நிலை’ப் பாற்படும்.

உழிஞையான் பகைவர் நாடு தன் அடிப்படுதல் பொருட்டும், தன்பால் போர் செய்தற்கு மதிலகத்தான் கதவம் திறந்து வெளிவருதற் பொருட்டும் மதிலின் வெளியே உள்ள தனது பாசறையில் பலநாள்கள் தங்கியிருக்கும் இச் செய்தி புறப் பொருள் வெண்பாமாலையில் ‘அடிப்பட இருத்தல்’ என்னும் துறையாக (6:31), தொகைநிலை என்னும் துறையை ஒட்டி முற்பட அமைந்துள்ளது.

புறத்தோன் கவடி வித்துதலும் தொகைநிலைப் பாற்படும் (தொ. பொ. 68 நச்.)

தொட்ட காஞ்சி -

{Entry: K11__0551}

வீரனுடைய விழுப்புண்ணுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்ற நிலையின்கண்ணும், பேய்மகள் அவனைச் சினங்கொண்டு கண்களில் தீப்பொறி பரக்க நோக்கிப் பகைவர் படைக்கலன் களால் விழுப்புண்பட்ட அவ்வீரன் மார்பினைத் தொட்ட அளவில் அவன் உயிர்நீத்தலைக் கூறும் காஞ்சித்துறை (பு. வெ. மா. 4 : 18).

தொடாக் காஞ்சி -

{Entry: K11__0552}

வீரனுடைய மனைவி, புண்ணுற்றுக் கிடக்கும் தன் கணவனைப் பேய்கள் நெருங்காவண்ணம் தடுத்துக் காக்க, அவனைச் சுற்றிலும் பேய்ப்பகையாகிய வெண்சிறுகடு கினைச் சிதறி நறுமணப் பொருள்களைப் புகையச் செய்து ஆராய்ந்த மலர்களைச் சிதறிக் குறிஞ்சிப்பண் பலவற்றையும் பாடிப் பாதுகாத்தலின், அங்கு வந்த பேய்மகள் அவனைத் தொட இயலாது தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்தாள் என்ற காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4:19).

தொடுகழல் புனைதல் -

{Entry: K11__0553}

‘கழல்நிலை’ காண்க. (இ. வி. 619-5).

‘தொல் எயிற்கு இவர்தல்’ -

{Entry: K11__0554}

பகைவர் இதற்குமுன் கைப்பற்றாத பழமையான அரண் மதிலைப் பற்றி ஏறுதல். (68 இள.)

“ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்தும்!” என்று கூறி அஃது அழித்தற்கு விருப்பம் செய்தல் - இவர்தல் - விரும்புதல்; எயில் - மதில்.

எ-டு : புறத்திரட்டு 847. (67 நச்.)

இத்துறை உழிஞைவேந்தர் இருவர்க்கும் பொது. (இள.)

இத்துறை புறத்து முற்றுகையிடும் உழிஞையானுக்கே. உரியது. (நச்., குழ.)

இஃது உழிஞை வகைகளுள் ஒன்று. (புறத். 12 பாரதி.)

இதனை ‘எயிற்பாசி’யுள் அடக்குவர் ஐயனாரிதனார். (பு. வெ. மா.)

இதனை வீரசோழியம் ‘மதிலேறுதல்’ என்னும். (கா. 103).

தொல்காப்பிய ஆண்பாற் காஞ்சித் துறைகள் -

{Entry: K11__0555}

1. பெருங்காஞ்சி 2. முதுகாஞ்சி 3. மறக்காஞ்சி 4. பேய்க்காஞ்சி 5. மன்னைக் காஞ்சி 6. வஞ்சினக் காஞ்சி 7. தொடாக் காஞ்சி 8. ஆஞ்சிக் காஞ்சி 9. மகட்பாற்காஞ்சி 10. தலையொடு முடிதல் என்ற பத்தாம். (தொ. பொ. 77 நச்.)

இவை விழுப்ப வகைக் காஞ்சியாம். இப்பத்துமே காஞ்சித் திணையின் துறைகள் என்பது ஒரு சாரார் கருத்து. (புறத். 24. பாரதி)

தொல்காப்பிய உழிஞைத் துறைகள் (இருவர்க்கும் பொது) -

{Entry: K11__0556}

1. குடைநாட்கோள், 2. வாள்நாட்கோள், 3. மடையமை ஏணிமிசை மயக்கம், 4. முற்றிய முதிர்வு, 5. அகத்தோன் வீழ்ந்த நொச்சி, 6. புறத்தோன் வீழ்ந்த புதுமை, 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசி, 8. ஊர்ச்செரு வீழ்ந்த பாசிமறம், 9. அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கம், 10. இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம் 11. வென்ற வாளின் மண் 12. தொகைநிலை - என்னும் பன்னிரண்டாம். இவை புறத்தோன், அகத்தோன் இருவர்க்கும் பொதுவான துறைகள். (தொ. பொ. 68 நச்.)

தொல்காப்பிய உழிஞை வகைகள் (சிறப்பு) -

{Entry: K11__0557}

1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம், 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு, 3. தொல்லெயிற்கு இவர்தல், 4. தோலின் பெருக்கம், 5. அகத்தோன் செல்வம், 6. முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம் 7. திறப்பட ஒருதான் மண்டிய குறுமை, 8. வருபகை பேணார் ஆரெயில் - என்னும் எட்டாம். முற்றும் புறத்தோனுக்கு முதல் நான்கு துறைகளும் அகத் தோனுக்கு ஏனையவும் உரியன. (தொ. பொ. 67 நச்.)

தொல்காப்பியக் கரந்தைத்திணை -

{Entry: K11__0558}

1. ஆர் அமர் ஓட்டல், 2. ஆ பெயர்த்துத் தருதல் 3. சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தல் 4. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் 5. வருதார் தாங்கல் 6. வாள் வாய்த்துக் கவிழ்தல் 7. வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டு - என்னும் ஏழும் கரந்தைப் பூச்சூடி நிரைமீட்டல் காரணமாக நிகழும் துறைகளாதலின் கரந்தைத் திணை எனப்பட்டு, வெட்சியின் பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயின (தொ. பொ. 63 இள.).

தொல்காப்பியக் காஞ்சித்திணைத் துறைகள் -

{Entry: K11__0559}

1. பெருங்காஞ்சி 2. முதுகாஞ்சி 3. மறக்காஞ்சி 4. பேய்க்காஞ்சி 5. மன்னைக் காஞ்சி 6. வஞ்சினக் காஞ்சி 7. தொடாக் காஞ்சி 8. ஆஞ்சிக் காஞ்சி 9. மகட்பாற் காஞ்சி 10. தலையொடு முடிதல் 11. பூசல் மயக்கம் 12. தாங்கரும் பையுள் 13. மூதானந்தம் 14. முதுபாலை 15. கையறு நிலை 16. தபுதாரநிலை 17. தாபத நிலை 18. பாலை நிலை (மாலை நிலை) 19. தலைப்பெயல் நிலை 20. காடு வாழ்த்து - என்னும் இருபதாம். (தொ. பொ. 79 நச்.).

தொல்காப்பியத் தும்பைத்திணைத் துறைகள் -

{Entry: K11__0560}

1. தானை நிலை 2. யானை நிலை 3. குதிரை நிலை 4. தார் நிலை 5. இருவர் தலைவர் தபுதிப் பக்கம் 6. கூழை தாங்கிய எருமை 7. படையறுத்துப் பாழி கொள்ளும் ஏம எருமை 8. களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடு 9. வாளோர் ஆடும் அமலை, 10. ஒருவரும் ஒழியாத் தொகைநிலை 11. ஒருவன் மண்டிய நல்லிசை நிலை 12. ஒள்வாள் வீசிய நூழில் - என்னும் பன்னிரண்டாம். (தொ. பொ. 72. நச்.).

தொல்காப்பியப் பெண்பாற் காஞ்சித்துறைகள் -

{Entry: K11__0561}

1. பூசல் மயக்கம் 2. தாங்கரும் பையுள் 3. மூதானந்தம் 4. முதுபாலை 5. கையறு நிலை 6. தபுதாரநிலை 7. தாபத நிலை. 8. பாலைநிலை (-மாலை நிலை) 9. தலைப்பெயல் நிலை 10. காடு வாழ்த்து என்னும் பத்தாம். இவை விழும வகைக் காஞ்சியாம் விழுப்பவகைக் காஞ்சித் துறைகள் பத்தனோடு, இவ்விழுமவகைக் காஞ்சித்துறைகள் பத்தனையும் கூட்டிக் காஞ்சித் திணைத் துறைகள் இருபது என்ற ஒரு சாராரைப் பின்பற்றினார், தொல்காப்பியனார். (தொ. பொ. 79 பாரதி.)

தொல்காப்பியம் கூறும் மக்கள் பாடாண்திணைக்குரிய துறைகள் -

{Entry: K11__0562}

1. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் 2. அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்து 3. கடைநிலை 4. கண்படைநிலை 5. வேள்விநிலை 6. விளக்குநிலை 7. வாயுறை வாழ்த்து 8. செவியறிவுறூஉ 9. புறநிலை வாழ்த்து 10. கைக்கிளை 11. துயிலெடைநிலை 12. கூத்தராற்றுப்படை 13. பாணாற்றுப்படை 14. பொருநராற்றுப்படை 15. விறலி யாற்றுப்படை 16. பெருமங் கலம் 17. மண்ணுமங்கலம் 18. குடை நிழல் மரபு 19. வாள்மங்கலம் 20. எயிலழித்த மண்ணு மங்கலம் 21. பரிசில் கடைஇய நிலை 22. கடைக்கூட்டுநிலை 23. இருவகை விடை 24. ஓம்படை 25. ஞாலத்து வரூஉம் நடக்கைக் குறிப்பு - என்னும் இருபத்தைந் தாம். (தொ. பொ. 90, 91 நச்.)

தொல்காப்பியம் சொல்லும் வாகைத்திணைத் துறைகள் அவையாவன -

{Entry: K11__0563}

1. பாசறை வெற்றி 2. களவழி வெற்றி 3. முன்தேர்க் குரவை 4. பின்தேர்க் குரவை 5. பெரும்பகை தாங்கும் வேல் 6. அரும்பகை தாங்கும் ஆற்றல் 7. வல்லாண் பக்கம் 8. அவிப்பலி 9. ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கு 10. சான்றோர் பக்கம் 11. கட்டில் நீத்த பால் 12. எட்டுவகை நுதலிய அவையம் 13. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை 14. இடையில் வண்புகழ்க் கொடைமை 15. பிழைத்தோர்த் தாங்கும் காவல் 16. பொரு ளொடு புணர்ந்த பக்கம் 17. அருளொடு புணர்ந்த அகற்சி 18. காமம் நீத்த பால் என்னும் பதினெட்டாம். (தொ. பொ. 76 நச்.).

தொல்காப்பிய வஞ்சித்திணைத் துறைகள் -

{Entry: K11__0564}

அவையாவன 1. இயங்குபடை அரவம் 2. எரிபரந்து எடுத்தல் 3. வயங்கல் எய்திய பெருமை 4. கொடுத்தல் எய்திய கொடைமை 5. அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம். 6. மாரா யம் பெற்ற நெடுமொழி 7. பொருளின்று உய்த்த பேராண் பக்கம் 8. ஒருவன் தாங்கிய பெருமை 9. பெருஞ்சோற்றுநிலை 10. வென்றோர் விளக்கம் 11. தோற்றோர் தேய்வு 12. கொற்ற வள்ளை 13. அழிபடை தட்டோர் தழிஞ்சி - என்னும் பதின்மூன்றாம். (தொ. பொ. 63 நச்.)

தொல்காப்பிய வாகைத்திணையின் அறத்துறை ஒன்பது -

{Entry: K11__0565}

அவையாவன 1. சான்றோர் பக்கம் 2. கட்டில் நீத்தபால் 3. எட்டுவகை நுதலிய அவையம் 4. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை 5. இடையில் வண்புகழ்க் கொடைமை 6. பிழைத்தோர்த் தாங்கும் காவல் 7. பொருளொடு புணர்ந்த பக்கம் 8. அருளொடு புணர்ந்த அகற்சி 9. காமம் நீத்த பால் - என்னும் ஒன்பதாம் (தொ. பொ. 76 நச்.)

தொல்காப்பிய வாகைத்திணையின் மறத்துறை ஒன்பது -

{Entry: K11__0566}

1. பாசறை வென்றி 2. மறக்களவழி வென்றி 3. முன்தேர்க் குரவை 4. பின்தேர்க்குரவை 5. பெரும்பகை தாங்கும் வேல் 6. அரும்பகை தாங்கும் ஆற்றல் 7. வல்லாண் பக்கம் 8. அவிப்பலி 9. ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கு - என்னும் ஒன்பதாம். (தொ. பொ. 76 நச்.).

தொல்காப்பிய வெட்சித்திணையின் பொது இலக்கணம் -

{Entry: K11__0567}

அரசர்கள் தம் நாட்டிற்கும் பகைநாட்டிற்கும் எல்லையாக உள்ள இடைநிலக் காட்டுப்பகுதியில் படையுடன் பாது காத்துவரும் மறவர்தலைவரை ஏவிப் பகைவர்நாட்டுப் பசுக்கூட்டங்களைக் களவிற் கொண்டுவந்து பாதுகாத்தலே வெட்சித் திணையின் இலக்கணம்.

வெட்சி போர் ஆகாது; போர்க்கு அறிவிப்பேயாம். ஆதலின் பகைப்படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது, பகைவர் நிலத்துப் பசுக்கூட்டங்களை அவர் அறியாமல் இரவில் மறைவாகக் கைப்பற்றும் முயற்சியே வெட்சியாம். வெளிப் படையாய்ப் பகைவரை அறைகூவி நிரை கவர்தல் தும்பை யின்பாற்பகும். நிரையைக் கவராமல், பகைவர் மீட்டுக் கொள்ள விடுத்து வருதல் வெட்சி ஆகாது. (புறத். 2 பாரதி.)

தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் -

{Entry: K11__0568}

ஒழுக்கமும் நூலும் கரியும் என (161) மூவகையுள் புறத்திணை அடங்கும். இவற்றுள் ஒழுக்கமாவது, அவ்வந் நாட்டரசன் வழுவின்றிச் செங்கோல் நடத்தும் முறை. இவ்வகை முறையொடு பொருந்தப் பாடலை யமைப்பது ஒழுக்கப் புறத்திணையாம்.

எ-டு: ‘எவ்வ துறைவ துலகம், உலகத்தோ(டு) // அவ்வ துறைவ(து) அறிவு’ (குறள் 426)

என்றாராதலின். உலகத்து வழுவற்ற முறை யாது, அதனோடு ஒத்தது இது எனக் காட்டின், உலகம் அதனைக் கொள்ளும்; அவ்வாறு கொள்ளத்தகுவது ஒழுக்கம் பற்றிய புறத்திணை என்றவாறு.

வேதநூல் மனுநூல் முதலிய நூல்கள் விதித்தன இவை, இவற்றையே செய்க; விலக்கியன இவை, இவற்றைத்தவிர்க என்று புலப்படுத்திப் பொருளினை விளங்கச்சொல்வது நூற்புறத்திணையாம்.

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் // அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.’ (குறள் 204)

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் // தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.’ (குறள் 322)

என முறையே விதிவிலக்குகள் காண்க. மறுப்பாரின்றி வழங்கும் நூல்களில் தான் எடுத்துரைத்த பொருளேயுளது எனக்காட்டின், எவரும் ஐயமின்றி ஏற்றுக்கொள்ளுதல் எளிது ஆதலின், அம் முதனூல்களிற் பிறழ்வின்றி நூல் இயற்ற வேண்டும் என்றாராயிற்று.

இனி, தான் எடுத்துக்கொண்டுரைக்கலுற்ற பொருட்குச் சான்றாகச் சான்றோர் உரைத்ததொன்றனைக் காட்டி நிறுவுதல் கரிப் புறத்திணையாம். (கரி - சாட்சி) ஆதலின் இலக்கிய மேற்கோள் எடுத்துக்காட்டுதல் இவ்வகைப் புறத்திணை என்றவாறு(161).

புறப்பொருளாவது பகைவருடைய ஆநிரையை ஓட்டிவருத லாகிய வெட்சி, கவரப்பட்ட தம் நிரையை மீட்டு வருத லாகிய கரந்தை, பகைமேற் செல்லலாகிய வஞ்சி, வருபகைக்கு எதிரூன்றலாகிய காஞ்சி, பகைவர்தம் மதிலை முற்றுதலாகிய உழிஞை, முற்றுப்பட்டோர் தம் மதிலைக் காத்தலாகிய நொச்சி, பொருது வெல்லும் சேவகம் தும்பை என ஏழு வகைப்படும். (‘வாகை’ உரையில் கொள்ளப்பட்டது. ‘அதிரப்,பொருவது தும்பையாம்; போர்களத்து மிக்கோர், செருவென்றது வாகையாம்’ என்னும் சூத்திர அடிகள் மேற்கோளாகக் காட்டப்பெற்றன.) (199)

தொன்னூல் விளக்கப் புறப்பொருட்டிணைகள் -

{Entry: K11__0569}

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்ற ஏழும் ஆம். (199.)

தோல் உழிஞை -

{Entry: K11__0570}

மதிலின் புறத்தே முற்றியுள்ள உழிஞைவீரர்கள் தமது கிடுகுபடை வெற்றியும் புகழும் விளைக்க வல்லது என்று கூறிச் சிறப்பிக்கும் உழிஞைத்துறை.

“புகழின்றி நம் உயிரைப் பேணி இம்மதிற்புறத்தே நாம் நெடுநாள் தங்கியிருப்பது நமக்கு இழிவாம். நம்முடைய கிடுகுபடைஞர் மாற்றாரது இவ்வரணத்தைக் கொள்ள விரும்பினரேல், அஃது எளிய செயலே” என்ற உழிஞை வேந்தன்கூற்று இத்துறையின் பாற்படும். ‘தோல்மலிபு உரைத்தல்’ காண்க. (பு.வெ. மா. 6:12.)

தோல்மலிபு உரைத்தல் -

{Entry: K11__0571}

உழிஞைமறவர், தமக்கு வெற்றியும் புகழும் தரும் கேடகப் படையினது தொன்று தொட்ட சிறப்பினை எடுத்துரைத்தல் என்னும் துறை.

(தோல் - கேடயம்; ஆகுபெயர்)

அஃதாவது, “பகைவரை வென்று ஒளிரும் கண்ணாடி தைக்கப்பட்ட கேடகத்தையுடைய நம்படை பகைவர்அரண் கோடல் எளிது என்று நம் அரசன் நம்மைப் பாராட்டி னானாக, நாம் புகழை விடுத்துப் போர் செய்யாது இன்று மதிலின் வெளியே தங்கியிருத்தல் நமக்கு இழிவாகும்” என்று வீரன் ஒருவன் ஏனையாரிடம் கூறுவ போல்வன.

இது புறப்பொருள் வெண்பாமாலையில் ‘தோல் உழிஞை’ எனப்படும். (இ. வி. 608 - 12.)

தோலின்பெருமை -

{Entry: K11__0572}

பகைவர் படைக்கலன் உருவாது தடுக்கச் செறித்த கேடகங் களின் பொலிவு என்ற உழிஞைச்செய்தி. (தொ. பொ. 68 இள.)

அங்ஙனம் மதில்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகும் கேடகமும் மிடையக் கொண்டுசேறல். (67 நச்.)

எ-டு : ஆசிரியமாலை: (புறத்திரட்டு 852)

தோல் - கண்ணாடி தைத்த கிடுகுபடை என்ப.

கிடுகு, கேடகம் என்பன பரிசையின்வகை. பரிசையாவது தட்டம்போன்று பின்பக்கத்தே நடுவண் கைப்பிடியுடையது; ஒரு கையில் பிடித்துக்கொண்டு பகைவர்தம் வாள்வேல் முதலியவற்றின் தாக்குதலைத் தடுக்கப் பயன்படுத்துவது இது ‘பலகை’ எனவும்படும்.

இஃது உழிஞைவேந்தர் இருவர்க்கும் பொது என்பர் இளம் பூரணர்; புறத்தோனுக்கே உரியது என்று நச்சினார்க் கினியரும் குழந்தையும் கொள்வர்; உழிஞைவகைகளுள் ஒன்று என்பர் சோமசுந்தர பாரதியார்.

புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் ‘தோல்உழிஞை’ (6:12) என்னும். வீரசோழியம் ‘படைமிகை’ என்ற உழிஞைத் துறையுள் அடக்கும் (கா. 103). இலக்கண விளக்கம் ‘தோல் மலிபு உரைத்தல்’ என்னும் (608 - 12.)

தோற்றிய காவல்

{Entry: K11__0573}

‘பிழைத்தோரைத் தாங்குதல்’ என்னும் வாகைத்துறை; ‘பிழைத்தோர்த் தாங்கும் காவல்’ நோக்குக. (வீ. சோ. 104)

தோற்றோர் தேய்வு

{Entry: K11__0574}

தோற்றுப்போனவர்தம் மெலிவு கூறுதல். வஞ்சி வேந்தனுக்கு அஞ்சித் திறை கொடுத்தோரது குறைபாடு கூறும் வஞ்சித் திணைத்துறை. (தொ. பொ. 63 நச்.)

இது ‘குறுவஞ்சி’ எனவும்படும். (பு. வெ. மா. 3 : 17)

இது வீரசோழிய வஞ்சிவகையுள் ‘கொற்றவர் மெலிவு’ என்று சுட்டப்பெற்றுள்ளது. (கா. 101) (தொ. பொ. 63 நச்)

ந section: 74 entries

நகர்வளம் சொல் துறை -

{Entry: K11__0575}

இது ‘பதிநிலை உரைத்தல்’ என்றும் பாடாண் துறை. (சாமி. 14)

‘ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி’ என்றும் கூறுப; அது காண்க.

நகர்வாழ்த்து -

{Entry: K11__0576}

சான்றோர்தம் தொடர்பால் புனிதமுற்ற நகரத்தைச் சிறப்பித் துக் கூறும் பாடாண்துறை.

பலவகைச் சேரிகளும், பெருவீதிகளும், எழுநிலை மாடங் களும், பெரிய கட்டடங்களும், நடுவே திருக்கோயிலும் கொண்ட நகரத்தினை வாழ்த்துவது. (மா. அ. பாடல் 49-53)

நடுகல் (1) -

{Entry: K11__0577}

1) நேரிய போரிடைப் புண்பட்டு உயிர் நீத்த வீரனுக்கு அவனுடைய பெயரும் பீடும் பொறித்து அவன்நினைவாக நிறுத்திப் பலரும் வழிபடுமாறு அமைக்கப்பட்ட கல். ( L)

(இத்தகைய நடுகற்களுள் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் பலவும் அவற்றில் பொறிக்கப்பட்ட சொற்களோடு இக்காலத்து அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன).

நடுதல் -

{Entry: K11__0578}

பொருது வீழ்ந்தார்க்கு நடுதற்பொருட்டுத் தேர்ந்து கொணர்ந்து குளிப்பித்த கல்லினை எடுத்து நடுதல்.

கொணர்ந்த கல்லினை நீராட்டி முறைப்பட நடுதலும், அக்கல்லின்கண் அவ்வீரனைத் தங்கும்படி செய்தலும். இது புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியல் படலத்துள் ‘கல் நடுதல்’ எனப் பன்னிரண்டாம் துறையாக உள்ளது. (10:12)

வீரசோழியத்தில், தொல்காப்பியத்துக் ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்’ (தொ.பொ. 60 நச்.) என்ற நான்கு துறை களும், ‘துகளறு கல் தேடாப் பொறித்தல்’ என்ற கரந்தைத் துறையில் அடங்கும். (கா. 100) ஆகவே நடுதல் என்பது வீரசோழியத்தில் ‘கல்தேடாப் பொறித்தலில்’ அடக்கப்பட் டுள்ளது என்பது.

நடுதலின் பகுதி -

{Entry: K11__0579}

வீரனுக்குரிய கல்லினை நடுகையில் மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்தல், பீலித்தொடையலும் மாலையும் தொங்கவிடுதல், பல வாத்தியம் முழங்க விழாச்செய்தல் முதலியன. (தொ. பொ. 60 நச். உரை)

‘நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபு’ -

{Entry: K11__0580}

உலக ஒழுக்கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழலது இலக்கணம் என்ற பாடாண்துறை.

இங்ஙனம் புகழ்ந்து உரைத்தற்கு ஏதுவாயது நிழலாம். அந் நிழல் உலகுடன் நிழற்றியதாகக் கூறவும்பட்டுக் குடிபுறங்காத் தற்குக் குறியாகக் ‘குடை கொண்டோன்’ என்று அக் கொற்றவன் குறிக்கவும்படுவான்

‘மரபு’ என்றதனான், செங்கோலும் திகிரியும் முதலியவற்றைப் புனைந்து உரைத்தலும் உண்டு.

இது ‘குடைமங்கலம்’ எனவும்படும். (பு. வெ. மா. 9 : 34)

“மேகம் விசும்பின் நடுவே தோன்றுமாறு போல, கண் ணொளி மாறுபட விளங்கும் நின் விண்ணளாவிய குடை வெயில் மறைப்பதற்காகவா எடுக்கப்பட்டது? அன்று; கூர்வேல் வளவ! வருந்திய குடிமக்களது துயரை மறைக்கவே எடுக்கப்பட்டது”. (புறநா. 35) என வரும். (தொ. பொ. 91 நச்)

நடைவயின் சேறல் -

{Entry: K11__0581}

ஆநிரைகள் சென்ற சுவட்டை அடியொற்றிக் கரந்தைமறவர் சங்கும் கொம்பும் பல்லியமும் பறையும் யாண்டும் ஒலிக்க, வேற்படை மின்ன,வெட்சியார் கவர்ந்து சென்ற தம் ஆநிரையை மீட்டு வரற்குப் புறப்படுதல். இதனைப் புறப் பொருள் வெண்பாமாலை ‘அதரிடைச்செலவு’ (2:3) என்னும். (இ. வி. 604 : 4)

நடைவயின் தோன்றும் விடை -

{Entry: K11__0582}

நடைவயின் தோன்றும் பலவகை விடைகளும் பாடாண்துறை களாம்.

அவையாவன:

1. “பரிசில் சிறிது” என்று போகலும் (புறநா. 121),

2. பிறர்பால் சென்று பரிசில் பெற்று வந்து காட்டிப் போகலும் (புறநா. 162),

3. இடைநிலத்துப் பரிசில் பெற்றமையை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும் (புறநா. 152),

4. பெற்ற பரிசிலை மனைவிக்குக் காட்டி மகிழ்ந்து கூறுவனவும் (புறநா. 163),

பிறவும் வேறுபட வரும் பல்வகைத் துறைகளாம். (தொ. பொ. 91 நச்).

நண்ணுவழித் தோற்றம் -

{Entry: K11__0583}

ஆநிரைகளை வெட்சி சூடி இரவிடைக் களவினில் வந்து காவலரை வீழ்த்தி நிரை கவர்ந்து சென்ற வெட்சியாரை எதிர்ப்பட்டுப் பொருது வெந் கண்டு கரந்தை மறவன் நிரை மீட்டு வந்தானாக, அவனுடைய தாய் அவனைப் பற்றிக்கூட வினவாமல், ஓடிவந்து புனிற்றாவைத் தழுவிக்கொண்டு, “நீ பகைவர் கையில் அகப்பட்டு யாது இன்னல் உழந்தாயோ?” என்றாற்போலக் கூறிக் கண்ணீர் விடும் கரந்தைத் திணைக் குரியதொரு துறை. (இ. வி. 604-21)

நதிவாழ்த்து -

{Entry: K11__0584}

புனிதமான நதியின் சிறப்பினைப் பலவாறு எடுத்துக் கூறி அதனை வாழ்த்தும் பாடாண்துறை.

பாசியே கூந்தலாகவும், தாமரையே முகமாகவும், அம் மொட்டுக்களே விருப்பத்தைத் தரும் நகில்களாகவும், கொடியே இடையாகவும், அலைகளே ஆடையாகவும் கொண்டு, சடகோபனுடைய திருக்குருகூரில் ஓடும் புனித நதியாகிய பொருநையாறு பெண்ணுருவில் காணப்படுகிறது. (மா. அ. பாடல். 240)

நல்லாண்மையும் வல்லாண்மையும் -

{Entry: K11__0585}

வெல்லுதல் அரிதென உணர்ந்தவழியும் போரைத் தவிராது எதிரேற்றுப் புரிவது ஆண்மை. அது நல்லாண்மை, வல் லாண்மை என இருவகைத்து. காலமும் இடமும் தேர்ந்து தன் வலியும் மாற்றான் வலியும் உணர்ந்து இயற்றுதல் நல் லாண்மை. அதனை மதியாது இயற்றுதல் வல்லாண்மை. (தொ. புறத். 21 ச. பால.)

நல்லிசை வஞ்சி -

{Entry: K11__0586}

வஞ்சி சூடிப் போர்மீது சென்று, பகைவரது போர்முனையில் சிறிதும் வெற்றிடம் இன்றித் தன் படைகளால் முனை முழுவதையும் நிறைத்த மன்னனது ஆற்றலை உயர்த்தி, மேலும் காஞ்சிமன்னன்மீது படையெடுப்பைத் தொடர அசைந்தெரியும் தீப்போல வெகுளி பொங்கும் அவ்வஞ்சி வேந்தனது நிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. மா. 3:24)

நல்லிசை வஞ்சிப் பக்கம் -

{Entry: K11__0587}

வஞ்சி சூடிப் போர்மேற் சென்ற மன்னன் பகைவர்நாட்டில் பாடி வீடு அமைத்துக்கொண்டு தங்கியதால், அந்நாடு சிறந்த மாடங்கள் இடிபட்டுச் சுரையும் பேய்ப்பீர்க்கும் படருமாறு பாழ்பட்ட செய்தியை நினைந்து இரங்கிச் சான்றோர் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3:25)

‘நல்லோள் கணவனொடு நளிஅழல் புகீஇய, சொல்லிடையிட்ட பாலை நிலை -

{Entry: K11__0588}

கற்புடை மனைவி தன் கணவன் இறந்துழி அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலை.

எல்லா நிலத்தும் உளதாகி வேறு தனக்கு நிலனின்றி வருத லானும், நண்பகல் போல வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் ‘பாலை’ என்றார். பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு ‘நிலை’ என்றார். (தொ. பொ. 79 நச்.)

வீரசோழியத்துள் இது ‘தீப்பாய்தல்’ என்று குறிக்கப்படு கிறது. (கா. 102)

பூதப்பாண்டியன் தேவியார், “பல்சான்றீரே! பல் சான்றீரே! என்னைத் தீப்புகல் வேண்டா என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சியீர்! கைம்மை நோன்பு கடைப்பிடிக்கும் உயவற் பெண்டிர் யாம் அல்லேம். இவ்வீமம் நுமக்கு அரிதாகுக! எமக்கு, எம் கணவன் மாய்ந்தானாக, தாமரைப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையவே!” (புறநா. 246) என்று உறழ்ந்து கூறித் தீப்பாய்ந்தவாறு. (நச்.)

‘நல்லோள் கணவனொடு நளிஅழல் புகீஇச், சொல்லிடையிட்ட மாலை நிலை’ -

{Entry: K11__0589}

கணவனொடு மனைவி பெரிய அழற் புகுவழி, இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்று.

புறப்பொருள் வெண்பாமாலையிற் பொதுவியல் படலத்து 22 ஆம் துறையாக ‘மாலைநிலை’ அமைந்துள்ளது. (11-8) அது காண்க. (தொ. பொ. 77 இள.) ‘மாலைநிலை’ என்றே கூறும், இலக்கண விளக்கம்.

நலிவின்று உய்த்தல் -

{Entry: K11__0590}

கவர்ந்து சென்ற வெட்சியாரிடமிருந்து தாம் மீட்டுக் கொண்ட ஆநிரைகளைக் கரந்தைவீரர், அவற்றிற்கு எத்தகைய துன்பமும் நேராமல் கான்யாற்றில் நீர் பருகவிட்டு அழைத்துக்கொண்டு போதலாகிய புறத்திணைத் துறை. (இ. வி. 604 - 20)

நற்குரவை -

{Entry: K11__0591}

வெற்றி பெற்ற பெருமிதத்தான் வேலேந்திய வாகை மன்ன னுடைய தேரின் முன் பேய்களும், தேரின்பின் வீரரும் விறலி யரும் மகிழ்ச்சிக் கூத்தாடும் நிலைகளைக் கூறும் பாடாண் துறைகள் இரண்டும் வீரசோழியத்துள் ‘நற்குரவை’ என ஒருவகையாகவே குறிக்கப்பெற்றுள.

முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை என்ற வாகைத்துறை களை நோக்குக. (வீ. சோ. 104).

நற்சொல் -

{Entry: K11__0592}

மாற்றார் ஆநிரைகளை இரவிடைக் களவில் கவர்ந்துவரச் செல்லும் வெட்சிமறவர் தம் வினை வாய்ப்பின் விளைவை முன்கூட்டியே உணர நன்னிமித்தச் சொற்களைச் செவி மடுத்தல் என்ற வெட்சித்துறை.

‘பாக்கத்து விரிச்சி’ நோக்குக. (வீ. சோ. 99)

நன்கு உணர் உசா -

{Entry: K11__0593}

ஆநிரைச் சுவடு கிடைத்தமையால் விரைவில் நிரையை மீட்கலாம் என்று அறிந்து கரந்தை மறவர் தம்முள் பேசிக் கொள்ளுதல். உசா- துணையாயவருடன் உரையாடல். இவர்களுக்குச் சான்றோர் வெற்றி வாய்ப்புக் கிட்டுமாறு ஆசி கூறுதலும் இக்கரந்தைத் துறைப்பாற்படும். (இ. வி. 604 - 5)

‘நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்த, தனிமகள் புலம்பிய முதுபாலை’ -

{Entry: K11__0594}

வெப்பம் மிகுந்த அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலை.

‘புலம்பிய’ எனவே, அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று. பாலை என்பது பிரிவாகலின், இது பெரும்பிரிவாகிய பிரிவாதல் நோக்கி ‘முதுபாலை’ எனப்பட்டது, பின்பனிப்பிரிவு முதுபாலைக்குச் சிறந்ததன்று. இஃது இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறியது. (தொ. பொ. 79. நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பிற் பொதுவியற் படலத்து முதல் துறையாக உள்ளது; வீரசோழியத்துள் ‘சுரத்திடைக் கணவனை இழத்தல்’ (கா. 102.) என்னும் துறையும் இது.

“இளையோரும் முதியோரும் வேற்று நிலத்தே கடந்து போயினர். தலைவ! யான் நின்னை எடுப்பவும் எழுந்திராய். நின் மார்பு மண்ணினைத் தழுவச் சுரத்திடையே இறந்து வீழ்ந்த இளையோய்! வெளுத்த வளையில்லாத என்வறுங் கையை தலைமேல் வைத்து ‘நீ இவ்வாறாயினை’ என்று நம் சுற்றத்திடை இவ்விறந்துபாட்டு வார்த்தையை நான் சொல் வேனாயின், நின்தாய், ‘என்மகன் செல்வமும் தலைமையும் எமக்கு, பழுத்த ஆலமரம் புது வருவாயொடு தன்னை எய்தும் பறவைகட்கு எத்தன்மைத்தாய் உதவவல்லதோ, அத்தன்மைய வாக அமைவன’ என்று நாளும் விடாது புகழுமவள், எவ்வா றாவாளோ? அவள்நிலை பெரிதும் இரங்கத்தக்கது.”(புறநா. 254.) என்ற தனிமகள் கூற்று எடுத்துக்காட்டாம். (தொ. பொ. 79. நச்.)

நாட்கொள்ளுதல் -

{Entry: K11__0595}

இராச சின்னங்களைப் பரஸ்தானம் அல்லது புறவீடு விடுதல். ‘மன்னவன் குடைநாட் கொண்டன்று.’ (பு. வெ. 3-3) (L)

நாட்கோடல் -

{Entry: K11__0596}

ஒருவன் ஒரு கருமத்தைத் தொடங்கிச் செய்ய நல்ல நாள் பார்த்துவைத்து நாளும் ஓரையும் தனக்கு ஏற்பக் கொண்டு செல்வுழி, அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக் காலத்தே முன் செலவிடுதல். (தொ. பொ. 68. நச்.)

நாட்கொள்ளலாவது இன்று மாநாட்டுத் தொடக்கத்தில் கொடியேற்றுவிழாக் கொண்டாடுவதுபோல, கோட்டைக் குள் புகத் தொடங்கும் முதல்நாளில் குடையை உயர்த்தியும் வாளைநீட்டியும் வீரர்கள் தொடக்கவிழாக்கொண்டாடுதல். குடை குடி காத்தற்கும், வாள் எதிரிகள் கேட்டிற்கும் அறி குறியாகும். கொடிநாட் கோடலும் உண்டு. (278. குழ.)

இஃது உழிஞைக்குச் சிறந்த துறை.

நாட்கோள் -

{Entry: K11__0597}

போர்மேற் செல்லும் வஞ்சி மன்னனும் உழிஞை மன்னனும் நல்ல நாளில் நல்ல ஓரையில் தத்தம் குடைவாள்களைப் புறவீடு செய்தல் என்ற புறத்துறைகள்.

‘குடைநாட்கோள்’, ‘வாள் நாட்கோள்’ என்ற உழிஞைத் துறைகளைக் காண்க.

கொற்றக்குடையைத்தான், கொற்றவாளைத்தான் குறித்து நாட்கொள்வது என்னும் வீரசோழியம். (103. உரை.)

நாட்சிறப்பு -

{Entry: K11__0598}

இது‘நாண் மங்கலம்’ என்ற பாடாண் துறை. (சாமி. 145.)

நாட்டுவளம் -

{Entry: K11__0599}

இது ‘நாடு வாழ்த்து ’ என்ற பாடாண்துறை. (சாமி. 145)

நாடு வாழ்த்து -

{Entry: K11__0600}

மன்னனது வளன் மிகுந்த நாட்டினை வாழ்த்துதல். அஃதாவது ‘விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு பெயல்நட்டம் பெரும்பெயல் பெருங்காற்று என எண்வகை யான் நிகழும் இடையூறு எதுவுமின்றி, செந்நெற் பயிரினூடே குவளைமலர்கள் களைகளாகக் காட்சி வழங்க, தேவருலகம் போன்று கவலையற்று வாழும் இன்ப வாழ்க்கையை இம் மன்னன்நாடு மக்களுக்கு வழங்கியுள்ளது” என்றாற்போலப் பாராட்டி வாழ்த்தும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 17)

நாண்மங்கலம் -

{Entry: K11__0601}

அரசற்கு ஆட்சியாண்டு இத்துணை சென்றது என்று எழுதுதல் நாள் மங்கலம் என்னும் பாடாண்துறையாம். (தொ. பொ. 91 நச்)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்திணை யின் கண் 24ஆம் துறையாகவும் நிகழ்கிறது.

நாண்முல்லை -

{Entry: K11__0602}

இது முல்லைப் பொதுவியற்பால எட்டுத்துறைகளுள் ஒன்று. தலைவன் பிரிந்தவிடத்தே, கற்புடை மனைவி, அவன் இன்மை யால் பொலிவிழந்த தன் இல்லத்தில், தனது நாணமே நற்றுணையாகத் தன்னைக் காத்துக்கொண்டிருந்த நிலையைச் சிறப்பித்தல். (பு. வெ. மா. 13-4)

நால்வகை அரண்கள் -

{Entry: K11__0603}

உள்ளே யுள்ளது கோட்டையாகிய கட்டடம். இது நீரரண், நிலவரண், காட்டரண், மலையரண் என்ற நால்வகை அரண்களாலும் சூழப்பட்டிருக்கும். ‘மணிநீரும் மண்ணும் மலையும் மணிநிழற், காடும் உடைய(து) அரண்’ (குறள் 742)

‘நாலிரு வழக்கின் தாபதப் பக்கம் -

{Entry: K11__0604}

அறிவர் கூறிய ஆகமத்தின்வழி நின்று வீடு பெற முயல் வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம் செய்யும் கூறு. ‘வழக்கு’ என்றதனான், அந்நாலிரண்டும் தவம் செய் வார்க்கு உரியனவும், தவம் செய்து யோகம் செய்வார்க்கு உரியனவும் என இருவகைய.

தவம் செய்வார்க்குரிய எட்டு: ஊண் நசையின்மை,நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாதிருத்தல் என்பன. இவற்றின் பொருள்: உணவினும் நீரினும் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீ நாப்பணும் நீர்நிலையிலும் நிற்றலும், கடலும் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்து இருத்தலும், உண்ணும்போது உரையாடாதிருத்தலும், துறந்த நேரம்தொட்டு யாருடனும் உரையாடாதிருத்தலும் ஆம்.

யோகம் செய்வார்க்கு உரியன: இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்பன. (தொ. பொ. 75 நச்.)

நாழிகைக் கணக்கர் -

{Entry: K11__0605}

அரசனுக்கு, இத்தனை நாழிகை கழிந்துள்ளது என்று கணக்குச் சொல்லுவோர். (மதுரைக். 671; சிலப் 5:49) (L)

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் // தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி // எறிநீர் வையகம் வெலீய செல்வோய்! நின் // குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப’

முல்லைப். (56-59). இவர்கள், அரசன் போர்முனைக்கண் சென்று பாசறையில் தங்கும்போதும் உடனிருப்பவராவர்.

‘நாள் அணி செற்றம் நீக்கிச் சிறந்த, பிறந்த நாள்வயின் பெருமங்கலம் -

{Entry: K11__0606}

‘சிறந்த நாள் அணி செற்றம் நீக்கிப், பிறந்த நாள்வயின் பெருமங்கலம்’ என்பன அடிகள்.

அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான பிறந்த நாளிடத்து நிகழும் வெள்ளணியே பிறந்த நாள், வெள்ளணி நாள் எனப்படும். மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து எவ்வுயிர்க்கண்ணும் அருளே நிகழ ஒழுகுதலின் அந்நாள் ‘வெள்ளணி நாள்’ எனப்பட்டது. ‘பெருமங்கலம்’ எனவே, பிறந்த நாளின் பத்தாம் நாளும் அதன் பத்தாம் நாளுமாகிய பக்க நாள்களும் திங்கள்தோறும் வரும் பிறந்த நாளும் பாடலுள் பயிலா. (நாள் - நட்சத்திரம்) (தொ. பொ. 91 நச்.)

இவ்வெள்ளணி நாளைப் பாடுதல் பாடாண்துறைகளுள் ஒன்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண் திணைக் கண் 20ஆம் துறையாகிய ‘வீற்றினிதிருந்த பெருமங்கலம்’ எனப்படுகிறது.

எ-டு : “அந்தணர்கள், கிள்ளி வேந்தனது இரேவதி நாளாகிய பெரு மங்கல நாளில் பசுவும் பொன்னும் பெற்றார்கள்; கவிஞர்கள் பெரிய களிறிவர்ந்தார் கள். ஆயின் அவ்வெள்ளணி நாளில் இல்லந்தோறும் சிலந்தி தன் கூட்டினை இழந்தமையென்னே ஓர் அவலம்!” என்று பொருள்படும் ‘அந்தணர் ஆவொடு’ என்ற முத்தொள்ளாயிரப்பாடல். (நச்)

நாள் நிமித்த அச்சத்தான் ‘எச்சமின்றிக் காலம் கண்ணிய ஓம்படை’ -

{Entry: K11__0607}

ஒருவன் பிறந்த நாள்வயின் ஏனைய நாள்கள் பற்றிப் பொருந் தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாளொடு குரு சனி முதலிய கிரகங்கள் கூடியவழி அவன் நாளிடைத் தீது பிறத்தலும், யாதானும் ஒரு நாள்மீன் விழுந்தவிடத்து அதன் வீழ்ச்சியான் அவன் நாளுக்குத் தீங்கு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். (நாள் - நட்சத்திரம்)

இந்நிமித்தத்தான் பாடாண் தலைவனுக்குத் தீங்கு கண்டு அஞ்சி அத்தீங்கின் நீங்கித் தலைவன் உயிர் வாழும் காலத்தைக் கருதும் பாதுகாவல் என்னும் பாடாண்துறை இது.

எ-டு : புறநா. 24, 229 ஆம் பாடல்கள்

இத்தீய நிமித்தங்களான் தான் அன்பு செலுத்தும் பாடாண் தலைவனுக்குத் தீங்கு வருமோ என்று அஞ்சி அவனுக்குத் தீங்கு இன்றாகப் புலவன் ஓம்படை கூறலின், ‘காலம் கண்ணிய ஓம்படை’ ஆயிற்று.

எஞ்ஞான்றும் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தான் ஒருவற்கு இன்னாங்கு வந்தவிடத்துக் கூறுதலின், இற்றைஞான்று பரிசில் இன்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினான் ஆகவே, இத்துறை கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகு படும் துயரமும் உளதாகக் கூறலின் சிறந்த புகழும் ஆயிற்று. (தொ. பொ. 91 நச்.)

நாள் மங்கலம் -

{Entry: K11__0608}

பெருமையுடைய மன்னனின் பிறந்தநாள்விழாக் கொண் டாடப்படும் சிறப்பைக் கூறுதல். அஃதாவது, “அவ்வரசனை அந்நாளில் புகழும் சான்றோர்களும் கலைஞர்களும் யானையும் பொன்னும் பரிசிலாகப் பெறுதலின்கண் வியப்பு ஒன்றும் இன்று. அன்று அவ்வரசன் போர்த்தொழிலில் ஈடு படானாதலின் அவனால் முற்றுகையிடப்பட்ட பகைவேந்த ரும் கவலையின்றித் தம் மதில்கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே போக்குவரத்துச் செய்யும் வாய்ப்பும் கிட்டியது” என்றாற் போலக் கூறும் பாடாண்துறை.

‘சிறந்த நாள் . . . . . . . . . . . . பெருமங்கலம்’ என்னும் தொல்காப்பி யம்; ‘நாளணி செற்றம் நீக்கி . . . . . . . . . . பெருமங்கலம்’ காண்க. (பு. வெ. மா. 9 : 25)

நாற்குலப்பக்கம் -

{Entry: K11__0609}

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கோடல், கொடுத்தல் - என்னும் அந்தணர் அறுதொழிலும்; ஓதல், வேட்டல் கொடுத்தல், படைக்கலத்தின் வாழ்தல், பல்லுயிர் ஓம்பல் - என்னும் அரசர் ஐந்தொழிலும்; ஓதல், வேட்டல், கொடுத்தல், உழுதல், பசுக்காத்தல், வாணிபம் - என்னும் வைசியர் அறுதொழிலும்; கொடுத்தல், உழுதல், பசுக்காத் தல், வாணிகம் சிறப்பித்தல், நரப்புக் கருவி முதலிய கல்வி கற்றல், அந்தணர்வழி ஒழுகல் - என்னும் வேளாளர் அறு தொழிலும் ஆம். (வீ. சோ. 104 உரை)

நான்காம் குலத்துக்குப் பத்து நிலங்கள் -

{Entry: K11__0610}

ஆணைவழி நிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடன் ஆற்றல், கசிவு அகத்துண்மை, ஓவா முயற்சி, ஒக்கல் (-சுற்றம்) போற்றல், மன்றிடை மகிழ்தல், ஒற்றுமை கோடல், திருந்திய அறத்தின் தீராது ஒழுகல், விருந்து புறந்தருதல் என்பனவாம். (யா. வி. பக். 358)

‘நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி, மகட்பாடு அஞ்சிய மகட் பாற் காஞ்சி’ -

{Entry: K11__0611}

“மகளை மணம் செய்து கொடுக்க ” என்று வேண்டுதற்கு ஏற்ற குடியாய் இருந்தும், அரசன் மகட்கேட்டதற்கு மறுத்தல் பற்றி, பகைவனாய் வலிந்து கோடற்குப் படையெடுத்துவந்த அரசனொடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாள ரும் தத்தம் மகளிரை மணம் செய்து கொடுப்பதற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சி.

வேத்தியலாவது உயிரைப் பாதுகாவாது வாழ்தலின் அரசன் எந்நேரத்தும் போரிட்டு நிலையாமை எய்துதல் கூடும் என்ற எண்ணத்தான், அரசனுக்கு மகளிரை மணம் செய்து கொடுக்க அஞ்சுவர் ஆதலின் ‘அஞ்சிய’ என்று கூறினார். முதுகுடிமக்கள் தாம் போரிட்டு உயிரிழக்கவும் துணிதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சியும் ஆயிற்று. ‘பால்’ என்றதனான், முதுகுடிகளே யன்றி, ‘அனைநிலை வகை’ (பொ. 75) எனப்பட்டார்கண்ணும் இத்துறை நிகழ்தல் கொள்ளப்படும். (தொ. பொ. 79 நச்.)

குடித்தொன்மையில் ஒவ்வாநிலையில் ஒத்தானாகக் கருதி மகளைக் கொள்ளப் படையொடு வந்த மன்னனொடு தொல்குடி மகளை மணம் செய்து கொடுக்க அஞ்சி அதை விலக்க, அப்பெண்ணின் தன்னையர், வந்த மன்னனொடு தம்முயிரைப் பொருட்படுத்தாது பொரும் மகட்பாற் காஞ்சி. (புறத். 24 பாரதி.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சித் திணைக் கண் 24 ஆம் துறையாக உள்ளது.

எ-டு : புறநா. 345, 349.

இத்துறை வீரசோழியத்துள் இடம்பெற்றிலது.

நிச்சம் இடுகின்ற விளக்கு -

{Entry: K11__0612}

‘விளக்கு நிலை’ என்பது கார்த்திகைத்திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றப்படுகின்ற விளக்கின் நிலை என்று பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொ. பொ. 90). வேலின் வெற்றியே நோக்கிய விளக்கு நிலை என்று கொள்வோர், விளக்கின் தண்டும் விளக்கின் ஒளிப்பிழம்பும் காற்றால் நலிவுறாது சுடர்பரந்து இணைந்து காணப்படுவது கொண்டு வேல்வெற்றி சிறக்கும் என்று அறிய வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் கார்த்திகை விளக்கினை குறிக்காமல் நாள்தோறும் ஏற்றப்படுகின்ற விளக்கின் ஒளிப்பிழம்பையே கொள்கின்றனர். (296 குழ.)

நிமித்தம் -

{Entry: K11__0613}

பின் நிகழ்ச்சியை முன்னர்க் குறிப்பாக உணர்த்துவது.

பல்லி ஒலித்தல், காக்கை கரைதல், மகளிர்க்குத் தோளும் புருவமும் கண்ணும் இடமாகத் துடித்தல் போல்வன நன்னி மித்தம்; மகளிர்க்குத் தோள் முதலியவை வலமாகத் துடித்தல் போல்வன தீய நிமித்தம்.

ஒருவன் பிறந்த நட்சத்திரம் ஏனைய நட்சத்திரங்கள் பற்றிப் பொருந்தாமையும், அவன் பிறந்த நாள்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒருவேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய தீ நிமித்தம். புதுப்புள் வருதலும், பழம்புள் போதலும், பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கண் தோன்றிய நிமித்தம். செவி சாய்த்துக் கேட்டவழி செவிக்கண் விழும் சொற்களும், நரி முதலியவற்றின் குரலும், பேய்களின் அரவமும், சூரிய மண்டலத்தினின்று கொள்ளி வீழ்தலும், அதன்கண் துளை தோன்றுதலும், பகலில் நிலவொளி வீசுதலும் போல்வன பிறவற்று நிமித்தமாம். (தொ. பொ. 14, 36, 91 நச்.)

நிரவும் வழிகை -

{Entry: K11__0614}

‘நிரவும் அழிகை’ என்றிருத்தல் வேண்டும். பகைவர் நாடு வஞ்சிவீரர் செயலால் அழிதலைப் புலப்படுத்தும், புறப் பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் ‘கொற்றவள்ளை’ என்ற துறை போலும்.

வீரசோழிய உரை ‘நாட்டக நாடு’ என்று இத்துறைக்கு விளக்கம் தருகிறது. ‘நாட்டது கேடு’ என்றிருத்தல் வேண்டும். (வீ. சோ. 101)

நிரை கவர்தல் -

{Entry: K11__0615}

வெட்சித்திணையின் செய்தி. ‘நிரை கோள்’ காண்க.

நிரை கொண்டு அவரைத் தடுத்தல் -

{Entry: K11__0616}

வெட்சிமறவர் பகைவருடைய ஆநிரையைக் கைப்பற்றி நிரை மேய்த்து வந்த ஆயர்களும் பாதுகாக்கும் வீரர்களும் அந்நிரைகளை மீட்காதவாறு தடுத்தல் என்ற வெட்சித்துறை.

‘பூசல் மாற்று’ நோக்குக. (வீ.சோ. 99)

நிரை கோடல் -

{Entry: K11__0617}

போர்த்தொடக்கமாகப் பகைவர்தம் ஆநிரைகளை வெட்சி வீரர் கவர்தல். ‘நிரைகோள்’ காண்க.

நிரைகோடல் முதற்கண் கூறப்பட்டமை -

{Entry: K11__0618}

புறப்பொருட் பாகுபாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாருள்ளும் சிறப் புடையர் அரசர் ஆகலானும், அவருக்கு மாற்றரசர்பால் திறை கொண்ட பொருள் மிகவும் சிறந்த தாகலானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்றுகோடல் வேண்டு தலானும், போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்ததாகலானும் நிரைகோடல் முதற்கண் கூறப்பட்டது. (தொ. பொ. 60 இள.)

நிரைகோள் -

{Entry: K11__0619}

நிரைகோடல்; பகைமன்னனுடைய மறவர்கள் வெட்சி சூடி இரவிடைக் களவின்கண் அரசன் ஒருவனும் உடைமையான ஆநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதல். இது போர்த்தொடக்க அறிவிப்பாம். ‘ஆகோள்’ காண்க. (தொ. பொ. 60)

நிரை மீட்சி -

{Entry: K11__0620}

பகைமன்னனுடைய மறவர்கள் வெட்சி சூடிக் கவர்ந்த ஆநிரைகளை, முன்னர் இழந்த மன்னனுடைய மறவர்கள் கரந்தைப்பூச் சூடி வெட்சியாரொடு போரிட்டு மீட்டுக் கொள்ளும் கரந்தைத் திணைச் செய்தி. (சாமி. 130)

நிரை மீட்டல் -

{Entry: K11__0621}

வெட்சிப்பூச் சூடிய பகைவர் கவர்ந்துகொண்ட ஆநிரையைக் கரந்தை வீரர்கள் மீட்டல் என்ற கரந்தைத்துறை. ‘ஆ பெயர்த் துத் தருதல்’ காண்க. (வீ. சோ. 100)

நிலை (3) -

{Entry: K11__0622}

கையறுநிலையும் தபுதாரநிலையும் தாங்கியநிலையும் தலைப் பெயல்நிலையும் என்பன. அவற்றுள் கையறுநிலையாவது கழிந்தோர் செய்த உயர்ந்த செயல்களை உயிருடனிருப்போர் கூறிப் புலம்பும் செயலற்ற நிலை. தபுதாரநிலையாவது காதலியை இழந்தான் அவள்நினைவால் வருந்தும் நிலை. தாங்கிய நிலையாவது காதலனை இழந்தோள் கைம்மை நோன்பு நோற்று உயிரைத் தாங்கியிருக்கும் தாபதநிலை. இனித் தலைப்பெயல் நிலையாவது மேம்பட்ட மிக்க சிறப்பினையுடைய புதல்வரைப் பெற்று அவர்கள் வீரப்போர் செய்து போர்க்களத்தில் மாள, அவரோடு உயிர்நீக்க வரும் தாயர் வந்து சேர்ந்த நிலையினைக் கூறலாம்; ஆகவே அவ்வீரரோடு இறந்தோரைப் பற்றிய துறை. இவை காஞ்சித் துறைகள். (வீ. சோ. கா. 102)

இனி, தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்ற பகைவர் அஞ்சும் மூவகை நிலைகளைப் பற்றிய தும்பைத் துறைகளும் வீரசோழியத்துள் ‘நிலை’ எனவே கூறப்பட் டுள்ளன; தேர் நிலையும் அடக்கப்பட்டுள்ளது. (கா. 105)  (வீ.சோ. 102, 105)

நிலையாமை -

{Entry: K11__0623}

அறம் பொருள் இன்பம் இளமை யாக்கை உயிர் முதலிய வற்றது நிலையில்லாத் தன்மை.

(இதனைத் தொல்காப்பியம் ‘காஞ்சி’ என்னும்; புறப் பொருள் வெண்பாமாலை, பொதுவியல் திணையைச் சார்ந்த ‘காஞ்சிப் பொதுவியற்பால’ (12) என்னும் நூற்பாவுள் ‘பெருங்காஞ்சி’ என்னும்.) (வீ. சோ. 102)

நிலையாமை கூறல் -

{Entry: K11__0624}

இது ‘முதுகாஞ்சி’ என்னும் புறப்பொருள் வெண்பாமாலை யின் பொதுவியல் துறை (12-5); அது காண்க. (சாமி. 149)

நிறை -

{Entry: K11__0625}

எண்வகையோக உறுப்புக்களுள் ஒன்று; பொறிவாயிலாக அவாவினைச் செலுத்தாமல் அடக்கி நிறுத்தல். (பா.வி.பக். 42).

‘நீத்த கணவன் தீர்த்த வேலின், பெயர்த்த மனைவி ஆஞ்சிக்’காஞ்சி -

{Entry: K11__0626}

தன் கணவனது உயிரைப் போக்கிய வேலினானே மனைவி தன் உயிரையும் போக்கிக்கொண்ட - கண்டார் அஞ்சுமாறு தன் உயிரைப் போக்கிய - காஞ்சி.

இது புறப்பொருள்வெண்பாமாலையில் காஞ்சித்திணைக் கண் 23ஆம் துறையாகிய ஆஞ்சிக் காஞ்சியின் பக்கமாக அமைந்துள்ளது. (தொ. பொ. 77 இள).

நீத்த கணவன் தீர்த்த வேலின், பேஎத்த மனையோள் ஆஞ்சி’க் காஞ்சி -

{Entry: K11__0627}

உயிர்நீத்த கணவன்தன் உறவை நீக்கிய வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சின ஆஞ்சிக் காஞ்சி.

எஞ்ஞான்றும் இன்பம் செய்த கணவன்உடம்பு அறிகுறி தெரியாதவாறு புண்பட்டு அச்சம் நிகழ்த்தலின் யாக்கை நிலையாமை கூறியதாம். அஞ்சின என்பது ‘ஆஞ்சி’ என நின்றது.

இது புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சித் திணைக் கண் 22ஆம் துறையாகிய ஆஞ்சிக்காஞ்சியில் வேறுவகை யாகக் கூறப்படுகிறது. (தொ. பொ. 79 நச்.)

இது வீரசோழியத்தில் ‘மகிழ்ச்சி’ என்ற துறைப்பெயரில் (கா. 102), உயிர் நீத்த கணவனுடலொடு தலைவியும் உயிர் நீத்தல் என்ற கருத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நீர்ச்செரு வீழ்ந்த பாசி -

{Entry: K11__0628}

கிடங்கின் உளதாகிய போரின்கண்ணே விரும்பிய பாசி. (தொ. பொ. 69 இள.)

கொண்ட மதிலகத்தை விட்டுப்போகாத புறத்தோரும், அவரைக் கழியத் தாக்கலாற்றாத அகத்தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி, நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கண் போரை விரும்பின பாசி; பாசி போல் நீங்காமல் நிற்றலின் ‘பாசி’ என்றார்.

இது புறத்தோன் அகத்தோன் இருவருக்கும் ஒக்கும்.

பாசி, இடைமதில் அகழியில் நிகழும்போர். (68 நச்.)

நீர்நிலையில் அகற்ற ஒழியாது வந்து விரவும் பாசி போல இரு திறப்படையும் தளர்ந்து அகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித்துறை. விட்டு விலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக் கலந்து இருபடையும் மலைந்து இருதலையும் அலையென மோதும் அமரின் பரிசு ‘பாசி’ எனப்பட்டது. (புறத். 13 பாரதி)

இஃது உழிஞைத்துறைகளுள் ஒன்று.

இதனைப் ‘பாசிநிலை’ என்றும் கூறுப. (பு. வெ. மா. 6 : 17)

இதனை வீரசோழியம் ‘நீர்ப்போர்’ என்னும். (கா. 103)

நீர்ப்படை -

{Entry: K11__0629}

பொருது வீழ்ந்தோர்க்கு நடுதற்பொருட்டுத் தேர்ந்து கண்டு கொணர்ந்த கல்லினை விழவொடு தூய நீரால் குளிப்பித்தல்.

நீர்ப்படை - அக்கல்லை நீர்ப்படுத்தல். (தொ. பொ. 63. இள).

கண்டு கொண்டு வந்த கல்லினை நீரிலிட்டுத் தூய்மை செய்தலும், கல்லினை நாட்டியபின் அதனை மீண்டும் நீராட்டித் தூய்மை யுறுத்தலும் (60 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பொதுவியல் படலத்தின்கண் ‘கல்நீர்ப் படுத்தல்’ என்ற பத்தாவது துறையாக உள்ளது.

வீரசோழியம் இதனைத் ‘துகளறுகல் தேடாப் பொறித்தல்’ என்னும் துறைக்கண் அடக்கும். (கா. 100)

நீர்ப்படையின் பகுதி -

{Entry: K11__0630}

கல்லினை இழுத்துக்கொண்டு போய் நீரில் முழுக்காட்டல், ஏற்றிய வண்டியினின்று கல்லினை இறக்கும்போதும் முழுக் காட்டி வண்டியில் ஏற்றும்போதும் உரிய இடத்திற்குக் கொண்டு வரும்போதும் ஆரவாரித்தல், இறந்த வீரன் தாயம் கூறல் முதலியன. (தொ. பொ. 60 நச்.)

நீர்ப்போர் -

{Entry: K11__0631}

மதிலை முற்றுகையிட்ட வலியவராம் வீரர்களை மெலியவ ராய் மதிலகத்துள்ள வீரர்கள் துணையில்லாமலேயே சென்று பொருதல்.

‘நீர்ச்செரு வீழ்ந்த பாசி’ நோக்குக. (வீ. சோ. 103)

நீள்மொழி -

{Entry: K11__0632}

இத்துறை கரந்தைத் திணையைச் சார்ந்ததாகப் புறநானூற்றின் 287ஆம் பாடலது அடிக்குறிப்பில் காணப்படுகிறது. இது புறப்பொருள் வெண்பாமாலையுள் கரந்தைத்திணைக்கண் ‘நெடுமொழி கூறல்’ என்ற துறை போன்றது.

“எந்நிலையிலும் புறங்காட்டி மீள்வதனைக் கருதாத கரந்தை மறவர், அரசன் பரிசிலாக வழங்கும் மருதநிலத்து ஊர்களைப் பெறுவதால் பயனில்லை; போர்க்களத்தில் வீரத்தை வெளிப் படுத்தி வீரமரணம் எய்தினால், துறக்கத்துத் தேவமகளிரை மணந்து இன்புறலாம்; அதுவே எம் வேட்கை. வீணே நம் ஆநிரை கவர்ந்து நம்மைப் பகைத்துப் போர் தொடுக்கும் வேந்தன்படை என்னை நோக்கி வந்து சிதறி ஓடுவதைக் காண்மின்!” (புறநா. 287) என்ற கரந்தை வீரன் கூற்று, இத் துறைப்பாற்பட்டதாகச் சுட்டப்பட்டுள்ளது.

நுவல்வழித் தோற்றம் -

{Entry: K11__0633}

பாடிவீட்டிலுள்ளோர் மகிழ்ந்து பேசும் வகையில், இரவில் வெட்சி சூடிக் களவினால் ஆநிரை கொண்ட வெட்சிமறவர் வருதல் என்ற வெட்சித்துறை; கவன்றுரைத்த தமர் மகிழ்தற்குக் காரணமான தோற்றரவு. (இ. வி. 603-13)

ஒரு வகையால் புறப்பொருள் வெண்பாமாலை ‘தலைத் தோற்றம்’ (1:12) என்பதன்கண் இதனைக் கொள்ளும்.

நுவலுழித் தோற்றத்தின் வகைகள் -

{Entry: K11__0634}

ஊரார் காணல், மகிழ்ந்துரைத்தல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

நுவலுழித் தோற்றம் -

{Entry: K11__0635}

மறவர் தங்கியிருக்கும் பாடிவீடாகிய மறவர் ஊரின்கண் உள்ளார் மகிழ்ந்து கூறும்படி நிரையை ஓட்டிக்கொண்டு வருதல்.

தமர் கவன்று சொல்லிய விடத்துத் தோன்றுதல் (‘நுவல்வுழி’ பாடம்) (தொ. பொ. 61 இள.)

தம்மவர் புகழும்படி நிரைகொண்டார் மீளும் பொலிவு. (புறத். 3. பாரதி.)

பாடி வீட்டிலுள்ளார் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை மீட்டோர் வரவு. (58 நச்.)

இது வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்று. இதனைப் புறப் பொருள் வெண்பாமாலை ‘தலைத்தோற்றம்’ என்னும் (1-12) இது வீரசோழியத்துள் ‘செருப்பாடு உகைப்பு அடை’ என்று கூறப்படுகிறது; போரிட்டுப் பெற்ற ஆநிரை செலுத்தப்பட்டு ஊரினை அடைதல் என்பது பொருள். (கா. 99)

நூழில் -

{Entry: K11__0636}

கொன்று குவித்தல்; இது தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று. வேழப் பழனத்து நூழிலாட்டு . . . (ஓதை)’ (மதுரைக். 257) என்றாற் போல்வது. (தொ. பொ. 72 நச்.)

பகைவர் நடுங்குமாறு அவர்கள்படை இரிந்தோடத் தும்பை வீரன் தன் மார்பகத்தில் தைத்திருந்த கூரிய வேற்படையைப் பறித்து வீசிய செய்தியைக் கூறும் தும்பைத் துறை. இது ‘நூழிலாட்டு’ எனப் பு. வெ. பதிப்பில் தவறுபட உள்ளது. (பு. வெ. மா. 7-15; இ. வி. 611-15)

நூழிலாட்டு -

{Entry: K11__0637}

களம் வகுத்துப் போரிடும் தும்பைப்போரில், பகைமன்னர்தம் படையைக் கொன்று, பகைவர்மார்பைப் பிளந்து வெற்றி கொண்ட தன் வேலை வீரன் சுழற்றிக்கொண்டு ஆடுதலை விரும்பிய தும்பைத்துறை. இவ்வாறு ஆடும் தும்பை வீரனது செயலைக் கண்டு பேய்களும் உடன்ஆடல் வேண்டிக் குடர்களாகிய மாலைகளைச் சூடுதலை மேற்கொண்டன வாம். இத்துறை ‘நூழில்’ எனப் பு. வெ. பதிப்பில் தவறாக உள்ளது. (பு. வெ. மா. 7-16; இ. வி. 611 - 16.)

தும்பைத் திணையுள் பு.வெ. பதிப்பின்கண் பாடல் முறையே நூழிலாட்டும் நூழிலுமாகத் துறைகட்கு ஏற்ற கொளுவும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளன.

நூழை -

{Entry: K11__0638}

சிறுவாயில்; ‘குறும்பி னூழையும் வாயிலும்’ (பு.வெ. மா. 1 : 7)

நெடுமொழி கூறல் -

{Entry: K11__0639}

கரந்தை மறவன் தன் மன்னவனிடம் தனது மேம்பாட்டினை, “அரசே! உன் பாதுகாப்பின் கீழ்க் கள்ளுண்டு மகிழ்வாகக் காலம் நடாத்தும் ஏனையார் போலாது, பகைவர் வெள்ளம் போல எதிர்த்துவரினும் அவர்கள் அனைவரையும் இவ்வாள் ஒன்றனாலேயே வென்று யான் அப்போர்க்களத்தில் வாட்படையுடனேயே தங்கியிருப்பேன்” என்றாற்போல எடுத்துக் கூறல். (பு. வெ. மா.2 : 11)

நெடுமொழி வஞ்சி -

{Entry: K11__0640}

போர் கடுமையாய் நிகழும் போர்க்களத்துக்குச் சென்று, வஞ்சி வீரன் அங்கே தன் ஆண்மை நெறியை, “மாறுபாடு மிக்க காஞ்சிமன்னருள் யாவர் வேண்டுமாயினும், என்னை எதிர்த்துத் தனித்துப் போரிட வரலாம். வருவோர் யாவ ராயினும், அவர்கள், பருந்துகள் உணவு கருதி வட்டமிடும் இப்போர்க்களத்தில் உயிர் நீத்துத் தேவர்களுக்கு விருந்தின ராதல் உறுதி” என்றாற்போலத் தனது போர் ஆற்றலை எடுத்துக் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3: 12)

நெறி செலுத்தல்

{Entry: K11__0641}

வெட்சிமறவர் தாம் கைக்கொண்ட ஆநிரைகளை வழியிடை ஊறுபடாமைச் செலுத்துதல் என்ற வெட்சித்துறை. ‘நோயின்று உய்த்தல்’ நோக்குக. (வீ. சோ. 99)

நொச்சி

{Entry: K11__0642}

நொச்சி என்பது மதில். மாற்றரசன் உழிஞை சூடி வீரர்க ளுடன் மதிலை வளைத்து நிற்ப, மதிலகத்து மன்னன் தன் மறவரொடு நொச்சிப்பூச் சூடி மதிலைக் காத்து நிற்கும் திறங்களை யெல்லாம் கூறும் புறப்பொருட்பகுதி இது. இத்திறம் தொல்காப்பியத்தில் உழிஞைக்கண்ணேயே அடக்கப்பட்டது. (பு. வெ. மா. 5 ; தொ. பொ. 67, 68 நச்)

நொச்சிப்பூப் புனை புகழ்ச்சி -

{Entry: K11__0643}

உழிஞை வேந்தனால் தம்முடைய மதில் முற்றுகையிடப்பட, கூரிய வேற்படை கொண்ட மறவர், சிவபெருமானிடத்தி னின்று திரிபுரத்தைக் காத்த அவுணரைப் போல மதில் காத்தல் வேண்டி நொச்சிப்பூச் சூடியதைப் புகழ்ந்து கூறுதல். (இ. வி. 609 - 1)

நொச்சியான் -

{Entry: K11__0644}

பகைவீரரால் முற்றுகையிடப்பட்ட மதிலைக் காக்கும் வீரன் நொச்சிப்பூச் சூடி ‘நொச்சியான்’ எனப்படுவான். நொச்சி-மதில் காவல்.

நொச்சிவேந்தன் -

{Entry: K11__0645}

பகைமன்னன் படையாளரால் முற்றுகையிடப்பட்ட தன் மதில் உள்ளிருந்து தன் ஊக்கத்தாலும் படை வலிமையாலும் காத்து நிற்கும் மன்னன், நொச்சிப்பூச் சூடியிருத்தலின் ‘நொச்சிவேந்தன்’ எனப்படுவான்.

நோயின்று உய்த்தல் -

{Entry: K11__0646}

வெட்சி மறவருள் சிலர் நிரைகாவலரொடு போரிட்டு அவரை வெருட்டிக்கொண்டிருக்க, மற்றவர்கள் ஆக்களைத் துன்பம் யாது மின்றிப் புல் மேயவிட்டு ஓட்டிச் செல்லுதல்.

நிரைகொண்டோர் அங்ஙனம் நின்றுநின்று சிலர் பூசல் மாற்றத் தாம் கொண்ட நிரையினை இன்புறுத்திக்கொண்டு போதலும், மீட்போரும் அங்ஙனம் நின்று நின்று சில பூசல் மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக்கொண்டு போதலுமாம். (தொ. பொ. 58 நச்)

இது வெட்சித் துறைகளுள் ஒன்று. இதனை வீரசோழியம் ‘நெறி செலுத்தல்’ என்னும் (கா.99); புறப்பொருள் வெண்பா மாலை ‘சுரத்து உய்த்தல்’ என்னும் (1 : 11).

நிரைகொண்டோரிற் சிலர் இடைநின்றுநின்று தம்மைத் தடுப்பவருடன் போர் செய்ய, மற்றவர் தாம் கொண்ட ஆநிரையை அவற்றிற்கு எவ்விதத் துன்பமுமின்றிக் கொண்டு போதல் என்னும் வெட்சித்துறை. (இ. வி. 603 - 12)

நோயின்று உய்த்தலின் வகைகள் -

{Entry: K11__0647}

நிரை ஓட்டல், நிரையை மேயவிடுதல் (நிரையைக் காட்டாற் றில் நீர் பருக விடுதல்) முதலியன. (தொ. பொ. 271 குழ.)

நோனார் உட்கும் மூவகை நிலை -

{Entry: K11__0648}

தானைநிலை, யானைநிலை, குதிரைநிலை எனப்பட்ட காலாட்களின் சிறப்பு, யானைப் படையின் சிறப்பு, குதிரைப் படையின் சிறப்பு ஆகிய-மூன்றும் போர் செய்தற்கு ஆற்றா அரசர்கள் அஞ்சித் தலைநடுங்கும் மூன்று கூறுபாடுகள். (தொ. பொ. 72 நச்.)

ப section: 239 entries

‘பகட்டினான் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கம்’ -

{Entry: K11__0649}

எருதும் எருமையுமாகிய பகட்டினான் குற்றம் நீங்கும் சிறப்பினால் அமைந்தோரது கூறுபாடு.

இதனால் உழவஞ்சாமையாகிய வெற்றி கூறப்பட்டது. ‘பக்கம்’ என்றதனால், புனிற்றாவும் கொள்ளப்படும். (தொ. பொ. 76 நச்)

இஃது ஓர் வெற்றி கூறியவாறு. (284 குழ.)

இதனை வீரசோழியம் பொதுவாகச் ‘சான்றோர்பக்கம்’ என்னும். (கா. 104 உரை)

‘பகட்டினானும் ஆவினானும், துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கம்’ -

{Entry: K11__0650}

காளைகளானும் பசுக்களானும் குற்றம் தீர்ந்த சிறப்பினை யுடைய சான்றோர் பக்கம்.

பகட்டினால் குற்றம் தீர்ந்தார் வேளாளர். ஆவினால் குற்றம் தீர்ந்தார் வணிகர். அவ்வக் குலங்களுள் பகடோ ஆவோ அதிக எண்ணிக்கையில் பேணிப் போற்றும் வெற்றி பற்றிய சிறப்பு இது. (தொ. பொ. 75 இள.)

பகட்டினால் சிறப்புடையவர் வேளாண் மாந்தர்; ஆவால் சிறப்புறுவார் கோவலர். (புறத். 21 பாரதி.)

நச்சினார்க்கினியர் பகட்டினாலும் மாவினாலும் என்று கொண்டு பகடு - காளை, ஆன், எருமை-மா-யானை, குதிரை - இவற்றால்பெறும் வெற்றி என விளக்குவர். (76)

இதனை வீரசோழியம் பொதுவாகச் ‘சான்றோர்பக்கம்’ என்னும் (கா. 104). உரையாசிரியர் அத்துறைக்கு வேறு பொருள் கூறுவர்.

எ-டு : “குறுங்கால்களையும், செற்றை வாயிலையும், கழிசெறி கதவினையும், வரகு கற்றைகளால் வேய்ந்த சேக்கை யையும், முதியோன் துயில் கொள்ளும் காவலையு முடைய குரம்பையினையும், தாமணி தொடுத்த நெடிய தாம்புகள் கட்டின குறிய முளைகளையுடைய முற்றத்தினையும், கட்டுமுள்வேலியினையுமுடைய, எரு மிகுகின்ற ஊரின்கண்,

நள்ளிருள் விடியலில் பறவைகள் துயிலெழா நிற்க, ஆய்மகள் புலி முழக்கம் போலும் மத்து முழங்கத் தயிரைக் கடைந்து, வெண்ணெய் எடுத்து, மோர்ப் பானையைப் பூஞ்சுமட்டின் மேல் தலையிலே வைத்து, குறிஞ்சிநிலத்தே ஏறப்போய்க் காலையில் மோர் விற்பள்; அதனாற் பெற்ற நெல் முதலிய வற்றாலே சுற்றத்தாரை உண்பிப்பள்; நெய்யை விற்ற விலைக்குப் பசும்பொன் வாங்க விழையாமல் கரிய எருமை நாகினை அதற்கு ஒப்பாக வாங்குவள். அவ்விடையர் குடியிருப்பின்கண் செவ்வித் தினையரிசியாலாக்கின சிலுத்த சோற்றைப் பாலுடனே பெறக் கூடும்.” (பெரும். 147-68; தொ. புறத். 21 பாரதி.)

பகட்டு முல்லை -

{Entry: K11__0651}

ஆற்றலும் வலிமையுமுடைய காளையொடு தன் கணவனை ஒப்பிட்டுத் தலைவி புகழ்தல். அஃதாவது பெரும்பாரம் தாங்குதலானும், விரைந்து நடத்தலானும், வயலில் இளைப்பு அறியாமல் இடையீடின்றி நுகத்தைப் பூண்டு உழுதலானும், மேம்பட்டு விளங்கும் காளையைப் போலக் குடும்ப பாரத் தைத் தடையின்றித் தொடர்ந்து ஏற்று யாவர்க்கும் ஆதார மாய் நிற்பவன் என்று தலைவி பாராட்டும் புறப்பொருள் பொதுவியல் துறை. (பு. வெ. மா. 13-6)

பகுப்பு ஆடு -

{Entry: K11__0652}

வெட்சி மறவர் ஆநிரை கவர்ந்து வந்ததைத் தம்முள் பங்கிட் டுக் கொண்ட பெருமகிழ்ச்சியால் உண்டு ஆடுதல் என்ற வெட்சித் துறை. பகுப்பு ஆடு- பங்கிட்ட மகிழ்வால் உண்டா டுதல்.

‘உண்டாட்டு’ நோக்குக. (வீ. சோ. 99)

படை -

{Entry: K11__0653}

மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்ற ஆறும். (குறள். 762 பரிமே.) (L)

படை இயங்கு அரவத்திற்குக் காரணமாவன -

{Entry: K11__0654}

படை இயங்கு அரவம் என்ற துறை காரியமாகவே, அதற்குக் காரணமான பலவும் அதனுள் அடங்கும். அவையாவன:

1. படைத்தலைவரை அரசன் அழைத்து வருக எனல், 2. படைத் தலைவர் வருதல், 3. அரசன் படைத்தலைவரை இன்னது செய்க எனல், 4. படைத்தலைவர் உரைத்தல், 5. பின், தலைவர் படையைக் கூவல், 6. படைச்செருக்கு, 7. கண்டோர் கூறல், 8.படைச்செருக்கைக் கண்டோர் பகைநாடு கெடும் என இரங்கல், 9. நாட்கோடலும், 10. கொற்றவையை வழிபடுத லும். நிரை மீட்போர்க்கு இவை உளவாகா, விரைந்து செல்ல வேண்டுதலின். (தொ. பொ. 58 நச்)

படை இயங்கு அரவம் -

{Entry: K11__0655}

நிரைகோடல் கருதி வெட்சி மறவர்படை செல்லும் ஓசை. (தொ. பொ. 61 இள.)

நிரைகோடலுக்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரை மீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும். (58 நச்.)

களவில் நிரைகோடற்குச் செல்லும் வெட்சி மறவர் ஆரவா ரம் செய்யாமல் நள்ளிரவில் படைவீரர் காலடியோசை ஒன்றுமே புலப்படச் செல்வர். நிரை மீட்டற்குச் செல்வோர் ஆரவாரத்துடன் பலரையும் அழைத்து விரைந்து செல்வர்.

நிரைகோடற்குச் செல்வோர் பாக்கத்தே தங்கி விரிச்சி பெற்றுப் போம்போது மகிழ்ச்சியால் சிறிது அரவம் செய்தலும் உண்டு. (நச்)

இது வெட்சித் துறைகளுள் ஒன்று.

வேந்தன் ஏவிய விடத்து ஆநிரை கோடற்கு எழுந்த மறவரது இயக்கத்தான் எழும் ஆரவாரம். பகைப்புலம் நோக்கிச் செல்லும் செலவு பிற்கூறப்படுதலின், இஃது அரசன்ஆணை கேட்டுக் கலித்து எழுமிடத்துத் தோன்றும் ஆரவாரம் ஆம். (தொ. புறத். 3. ச. பால.)

படைக்கு உதவு கொடை -

{Entry: K11__0656}

இது தும்பைஅரவம் என்னும் தும்பைத்திணையின் துறை. (சாமி. 137)

படைத் தலைவரைக் கூஉய் வருக என்றல் -

{Entry: K11__0657}

பகைமன்னருடைய சீறூரில் ஆக்களைக் கவர்ந்து வருதல் வேண்டும் எண்ணங்கொண்ட வெட்சிமன்னன் தன் படைத் தலைவர்களை அழைத்து வருமாறு ஏவலருக்கு ஆணை யிடுதல் என்ற வெட்சித்துறை. (தொ. பொ. 58 நச். உரை)

இது ‘தண்டத் தலைவரைத் தருக எனப் பணித்தல்’ என்ற துறைக்கண் அடங்கும். (இ. வி. 603 உரை)

படைதட்டு அழிந்தோர் தழிஞ்சி -

{Entry: K11__0658}

மாற்றோர் விடும் படைக்கலன்களைத் தம்மாட்டுத் தடுத்து மார்பு முதலியவற்றில் ஏற்றுப் புண்பட்ட மறவரைப் பேணித் தழுவுதல் என்ற வஞ்சித்துறை.

‘அழிபடைதட்டோர்’ என்பது இவ்வாறு விகுதிமாற்றி யுரைக்கப்பட்டது.

வஞ்சிக்கண் வென்றும் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டு அழிந்தவர்களைத் தாம் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக் கோடல். தழிச்சுதல் தழிஞ்சி ஆயிற்று.

புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சிப்படலத்துத் தழிஞ்சி என்ற 20ஆம் துறைக்குக் கூறும் பொருள் தொல்காப்பியத் தினின்று வேறுபட்டது. தோற்றோடுவார்மேல் படைகளைச் செலுத்தாத பேராண்மையே அதன்கண் தழிஞ்சி என்று விளக்கப்படுகிறது.

வீரசோழியம் இதனை வஞ்சிவகையுள் ‘பரவு தழிஞ்சி’ எனக் கூறும். (கா. 101)

தொல்காப்பியம் கூறும் தழிஞ்சிக்கு எடுத்துக்காட்டு நெடு நல்வாடையுள் வரும் அடிகள் 176 - 188. அவற்றுள், தலையா லங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வேம்பு கட்டிய வேலினை ஏந்திய படைத்தலைவன் முன் நடந்து காட்ட, புண்பட்ட வீரர்களையும் உண்ணாது உயங்கும் மாவினையும் எண்ணி வீரர்க்கு இன்சொல் வழங்கும் பாசறைத்தொழில் விளக்கப்படுகிறது. (தொ. பொ. 63 நச்.)

படைமிகை -

{Entry: K11__0659}

மதில்மேல் உழிஞையான் ஏறிச் செல்லும்போது, மதிலகத் திருக்கும் நொச்சிவீரர் செலுத்தும் அப்புமாரியை விலக்கு தற்கு, கிடுகும் கேடகமும் ஆகிய பாதுகாப்புக் கருவிகளை மிகுதியாகக் கொண்டு செல்லுதல் என்ற உழிஞைத்துறை. ‘தோலின் பெருக்கம்’ காண்க. (வீ. சோ. 103)

‘படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம்’ -

{Entry: K11__0660}

கைப்படையைப் போக்கி மெய்யால் போர் செய்யும் மயக்கம்; பாழி - வலி. இஃது ஆகுபெயர். (தொ. பொ. 72 நச்.)

“பகைவர் வேல்தாங்கினராய் யானைகுதிரைகளொடு வந்து செறிய, நீலக்கச்சையால் பூந்துவராடையை வீக்கிய பெருந் தகை மறவன், தன்மேல் வந்த களிற்றின் உயிர் போமாறு தன் கைவேலை வீசி, தன்னையும் அடுத்து மேல்வரும் யானை மேல் பாயச் செலுத்துவான் போலும்!” (புறநா. 274)

கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏமம். (72 இள)

மேல்வரும் பகைப் படைக்கலன்களை அழித்து வலிமை கொள்ளும் பாதுகாவல். (புறத். 17 பாரதி)

கைப்படை பழுதுபடவே, மெய்யால் பொரும் மற்போர்.

இது தும்பைத் துறைகளுள் ஒன்று. (281 குழ.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘ஏம எருமை’ என்னும். (7: 14)

வீரசோழியம் இதனைப் ‘பாழிகோள்’ என்னும். (கா. 105)

படையாளர் பக்கம் -

{Entry: K11__0661}

‘கருதி அறியும் படையாளர் பக்கம்’ என்ற வாகைத்துறை. கருதி அறிதலாவது பகைவராயினும் அவர் சுற்றத்தா ராயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண் டியக்கால் அவற்றை மனம் மகிழ்ந்து கொடுத்தல் மனிதப் பண்பு என்பதனை உளங்கொண்டிருத்தல். (வீ. சோ. 104)

‘ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கு’ நோக்குக.

படைவழக்கின் பக்கம் -

{Entry: K11__0662}

வஞ்சிமன்னனை எதிர்ஊன்றும் காஞ்சிமன்னன் தமக்குப் படைக் கருவிகளை வழங்கியதும், வீரர்கள் முரசொலியி னிடையே அச் செயலைப் புகழ்ந்து தம் கடமையை எடுத்துக் கூறுதல்.

அஃதாவது வீரனொருவன் “பலரும் கூடியுள்ள இக்கூட் டத்தில் தான் விரும்புதற்குரிய கொற்றவாளினை நம்மன்னன் என்னிடம் கொடுத்துள்ளான் ஆதலின், இதனால் போரிட்டு இந்நிலவுலகேயன்றித் தேவருலகும் நம் அரசற்கு உடைமை யாக்குவேன்! பகைமன்னரை இந்நிலவுலகினை விடுத்து வீரத்துறக்கம் எய்துமாறு செய்வேன்!” என்றாற் போலக் கூறும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4: 5.)

படைவழக்கு -

{Entry: K11__0663}

வழக்கு - வழங்குதல். காஞ்சிமன்னன் தன் படை மறவர்க்கு அவரவர் தகுதிக்கேற்பப் படைக்கலன்களைக் கொடுத்துத் தலையளி செய்தலைக் குறிப்பிடும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4- 4)

‘பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப், புண் கிழித்து முடியும் மறம்’ -

{Entry: K11__0664}

பெருஞ்சிறப்புப் பொருந்த வரும் பகுதியை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள விழுப்புண் ஆறிப் பின் வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது, புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சி.

இஃது யாக்கை நிலையாமையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைத்திணையின் பின்னர் வைத்தார், இக்காஞ்சியும் வாகையொடு மயங்கியும் காஞ்சியாதல் பற்றி. (தொ. பொ. 79 நச்.)

புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சித்திணையில் 15ஆம் துறையாகிய மறக்காஞ்சியின் பக்கமாக இதனைக் குறிக்கும். வீரசோழியம் இதனைக் குறிப்பிட்டிலது.

“களம் புக்க சேனைதன்னொடு முற்படப் பொருது வலி குன்றிப் புறங்கொடாத விடலை, போரிட்டு வடுப்பட்ட உடலைத் தாங்கி வாழ நாணி, தன்னுடம்பில் குளித்துக் கொல்லாநிற்கும் வேலினைத் தாங்கி, தன் முன்னோரது நடுகல் நெடுக நிற்கும் அப்புகழ்நிலை கண்டு, ‘யானும் இந் நிலை பெறுக’ என்று தன் புண்ணின் வாயினைக் கிழித்தான்.” (பழம்பாட்டு) (நச்.)

பணிதலைக் கோடல் -

{Entry: K11__0665}

பகைவர்பசுக்களைக் கவர்ந்து வருமாறு தம் மன்னனிட்ட ஆணையைப் படைத்தலைவர் ஏற்று வெட்சி சூடி இரவிடைக் களவினால் தமக்கு இட்ட ஆணையைத் தவறாது செய்யச் சேறல் என்னும் வெட்சித்துறை. (இ. வி. 603 - 2)

பதணம் -

{Entry: K11__0666}

மதில் முகட்டில் மதிலைச் சுற்றிலும் பதணம் என்னும் மேடை அமைந்திருக்கும். இம்மேடைக்கு வெளியே வலிமை பொருந் திய சுற்றுச்சுவர் அமைந்திருப்பதால் இம்மேடை மதிலுள் மேடை எனப்படும். இம்மேடையில் பகைவர் மதில்மேல் ஏறாமல் தடுக்கவும் தாக்கவும் பலவகைப் போர்க் கருவிகளும் பொறிகளும் வைக்கப்பட்டிருக்கும். கருவி-பிறர் பிடித்து இயக்குவது; பொறி-பிறர் இயக்க வேண்டாது தானாகவே இயங்குவது. (தொ. பொ. 275 குழ.)

பதி தலை கொண்டவள் உயிர் மாய்தல் -

{Entry: K11__0667}

இது ‘தலையொடு முடிதல்’ என்ற காஞ்சித்துறை; அது காண்க. (சாமி. 142)

பதிநிலை -

{Entry: K11__0668}

அழியா அன்புடை ஆடவரும் அவர்தம் உரிமை மகளிரும் ஒருவருக் கொருவர் உறுதுணையாகக் கூடி உவந்து வாழும் ஊரின் திறத்தினை, “யாழ்போன்ற இன்சொல் மகளிர் தத்தம் கணவரொடு சிறிதுபொழுது ஊடிப் பின் ஊடல் நீங்கி, ஊடிய காலத்து வாடிய தோள்களில் இடப்பட்ட வளையல் ஒலிக்குமாறு, அவரொடு கூடி, இவ்வாறு ஊடியும் கூடியும் இரவினைக் கழிப்பதற்கு இவ்வூரில் இராப்பொழுது நீட்டிப் பதாகுக!” என்றாற்போல வாழ்த்தும் புறப்பொருள் பாடாண் துறை. (இ. வி. 617-49)

‘ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி’ எனப் புறப்பொருள் வெண்பாமாலை இதனைக் குறிக்கும் (9-51)

பரவல் -

{Entry: K11__0669}

மேம்பட்ட தலைவனையும் இறைவனையும் வழிபட்டுத் தாம் அறிந்தவாறு அவர்தம் பண்புநலன்களை எடுத்துக் கூறும் பாடாண்துறை.

‘பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கு’ எனும் பாடாண் துறையை நோக்குக. (வீ. சோ. 106 உரை)

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கு’ -

{Entry: K11__0670}

ஒருவனைப் படர்க்கைக்கண் புகழ்தலும், முன்னிலைக்கண் பரவுதலும் கருதிய பக்கம். (தொ. பொ. 80 இள.)

ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத் தலும் கருதிய பக்கம். (92 நச்.)

எ-டு : பதிற். 14, புற நா. 38.

வாழ்த்தலும் புகழ்தலும் நுதலுமிடம். (புறத் 27 பாரதி)

ஒருதலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலையும் புகழ்ந் துரைத்தலையும் கருதிய இடம். (291 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் அறுமுறை வாழ்த்துக்களுள் ஒன்றாக உள்ளது. இது பாடாண்டிணை. ‘புகழ்ந்தனர் பரவல்’ (9-43;) ‘பழிச்சினர் பணிதல்’ 9-44. தனித் தனியே காண்க.

பரவார்ப் பழித்தல் -

{Entry: K11__0671}

மேம்பட்ட இறைவனையும் சான்றோரையும் வழிபடாமல், உலகத்தார் ‘உண்டு’ என்பவற்றை இல்லை என்று மறுத்துக் கொண்டே வாழ்நாளை வீழ்நாளாக்கும் நல்லறிவற்றவர் களைப் பழித்துக் கூறுதல் என்னும் பாடாண்துறை.

“நம்மாழ்வாரை வாழ்த்தி வணங்காதவர்கள், பேரானந்தம் என்பது கெட்ட பெரிய தீவினையை அடைந்து துன்பம் வந்து எதிர்கொள்ளும் கொலை முதலிய தீச்செயல்களைச் செய்ய முற்படுவர்” எனப் பரவாதவர்களைப் பழித்துக் கூறியவாறு. (மா. அ. பாடல். 344)

பரவுக்கடன் -

{Entry: K11__0672}

நேர்த்திக்கடமை, ‘கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும்’ (தொ. பொ. 58 நச்) (L)

பரவு தழிஞ்சி -

{Entry: K11__0673}

உடைந்த படைஞர் பின் செல்லாமை என்ற வஞ்சித் துறை (வீ. சோ.101) புறப்பொருள் வெண்பாமாலையின் வஞ்சித் திணையின் 20ஆம் துறையாகிய ‘தழிஞ்சி’ நோக்குக.

‘படைதட்டு அழிந்தோர் தழிஞ்சி’ என்ற தொல்காப்பியத் துறையையும் நோக்குக.

பரிசில் -

{Entry: K11__0674}

பாடாண்திணையில் பரிசில் கடாநிலை, பரிசில் கடைக்கூட்டு நிலை, பரிசில்விடை என்ற துறைகள் உள்ளன. புறப்பொருள் வெண்பாமாலையில் பரிசில் துறை என்ற துறையும் உண்டு. இத்துறைகளில் புறநானூற்றுப் பாடல்கள் பலவாக உள்ளன; ஆனால் தனியே பரிசில் என்ற துறையும் (புநா. 163) உள்ளது.

இது பாட்டுடைத்தலைவன் வழங்கிய பரிசிலைப் பெற்ற புலவன் தன் மனைவிக்குக் காட்டி அவள் விருப்பப்படி செல விடுமாறு கூறுதல் என்ற கருத்தமைந்த பாடாண்திணைத் துறை போலும்.

பரிசில் கடாநிலை -

{Entry: K11__0675}

பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில் வேட்டோன் தன்னிடும்பை கூறிக் கேட்கும் பாடாண்திணைத் துறை. (புறநா. 101) (L)

பரிசில் கடைஇய நிலை -

{Entry: K11__0676}

பரிசிலரை நீக்கும் மனமின்றி நெடிது கொண்டொழுகிய தலைவனுக்குப் பரிசில் வேட்டோன் தன் சுற்றத்தாரின் வறுமைத் துன்பம் முதலியவற்றை எடுத்துக் கூறித் தான் குறித்த பொருளை வெளிப்படையாகக் கூறி அத்தலைவனை வேண்டிய நிலை என்ற பாடாண்துறை.

தலைவன் பரிசில் தரும்வரை வாளா இராது தானே வேண்டலின், இஃது இழிந்தோன் கூற்று.

பரிசில் பெற்று ஊர் மீள வேண்டும் என்ற குறிப்பும் பரிசில் நிலையும் பலவகையால் கூறப்படும். (புறநா. 164, 200-210, 381, 392 காண்க) (தொ. பொ. 91 நச்).

பரிசில் கடைக்கூட்டு நிலை -

{Entry: K11__0677}

பரிசிலோன் தலைவனுடைய வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலை. (தொ. பொ. 91 நச்)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண்படலத்து 25ஆம் துறையாய்ப் ‘பரிசில் நிலை’ எனப்படுகிறது. அது காண்க.

பரிசில் சிறிதென்று போகல் -

{Entry: K11__0678}

இது ‘நடைவயின் தோன்றும்’ பாடாண்துறைகளுள் ஒன்று.

மலையமான் திருமுடிக்காரி என்ற வள்ளல் தன்னைக் காண வந்த கபிலரை ஏனையோரைப் போலக் கருதிப் பரிசில் தந்தானாக, அவர் அவனை நோக்கி, “வள்ளலை நாடி நாற் றிசையினின்றும் பரிசில் பெறுவோர் வருவர். யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயின், ஈத்தது கொள்ளும் பரிசிலருடைய தகுதியை அறிதல் அரிது. ஆதலின் புலவர்பால் தகுதி நோக்காது பொதுவாக நோக்குதலைத் தவிர்க” (புறநா. 121) என்று கூறிப் பரிசில் தம் தகுதிக்குக் குறைவானது என்று குறிப்பாகத் தெரிவித்துச் சென்றமை போல்வன. (தொ. பொ. 91 நச்.)

பரிசில் துறை -

{Entry: K11__0679}

மன்னன்முன்னே இரவலன் போய் நின்று தான் வெளிப்படை யாகப் பரிசில் வேண்டுதல். அஃதாவது “கார்மேகம் போன்ற கொடைக்கை மன்னனே! என் தகுதியையெல்லாம் நோக் காதே. பகைவரைப் போர்க்களத்தில் வெற்றிகொண்டு நீ கைப்பற்றி வந்த மதம் மிக்க களிறுகளில் ஒன்றனையே யான் பரிசிலாகக் கருதி வந்துள்ளேன்” என்பது போலக் கூறும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9-5)

பரிசில்துறைப் பாடாண்பாட்டு -

{Entry: K11__0680}

மேம்பட்ட தலைவனை அவன் பண்புநலன்களைப் பாடிப் பரவும் புலவன் தான் பரிசிலாக ஒன்று வேண்டுவதனைச் சுட்டிப் பாடும் பாடாண்துறை.

பலகாலும் போர்வேட்கையிலேயே திளைத்துப் பாசறையில் தங்கியிருக்கும் மன்னனுக்கு அவன்தேவியின் பிரிவுத்துய ரினை எடுத்துக் கூறி, “கனவினுள் உறையும் அம்மடந்தைக்கு நீ யாது உறவுடையாயென்று கருதி அவளை மறந்து இப் பாசறையிலேயே நெடுங்காலம் தங்கியுள்ளாய்?” என்று வினவி, விரைவில் போரினை முடித்துத் தலைவியை அவன் அடைதல் வேண்டும் என்று புலவன் வேண்டுவதும் பரிசில்துறைப் பாடாண்பாட்டு. (பதிற்.19)

“பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!” என்று தலைவனை விளிக்கு முகத்தான் தாம் பரிசில் நாடி வந்துள்ள செய்தியை இரவலர் குறிப்பால் வெளியிடுதலும் பரிசில்துறைப் பாடாண் பாட்டாம். (பதிற். 65)

பரிசில் நிலை -

{Entry: K11__0681}

இரவலன் ஒருவனை நன்கு வரவேற்று விருந்தோம்பிய அரசன், அவன் மீள ஊர் செல்வதற்கு விடையளிக்காமல் காலம் நீட்டித்த போது, அவ்விரவலன் தன் குடும்பத்தின் துன்ப நிலையை எடுத்துரைத்துத் தான் விரைவில் தன் ஊர் செல்லுதற்கு இசைவும் விடையும் தரல்வேண்டுமென்று மன்னனை அவன் மகிழ்வோடிருக்கும் நேரத்தில் வேண்டிக் கொள்ளுதலைக் கூறும் பாடாண்துறை.

இனி, மன்னன் பரிசில் நல்கிய பின்னும் இரவலனுக்குத் தன்னூர் மீண்டு செல்ல விடை நல்காதபோது அவன் விடை வேண்டுதலும் இப்பாடாண் துறையாம். (பு. வெ. மா. 9 : 25)

பரிசில் விடை -

{Entry: K11__0682}

தனது வெற்றிப்புகழைச் சிறப்பித்துப் பாடிய புலவனுக்கு அரசன் பலபரிசில்களும் அளித்துப் பண்புடன் உபசரித்து விடை தந்து அனுப்பிய திறத்தைக் கூறும் பாடாண்துறை. அஃதாவது புரவலன் புலவனுக்குக் களிறும் தேரும் குதிரை யும் பரிசிலாகத் தந்து, அவனைப் பெருமைப்படுத்தத் தான் ஏழடி பின் சென்று சிறப்பித்து அனுப்பி வைப்பது. (பு. வெ. மா. 9 : 28)

பரிசிலர் -

{Entry: K11__0683}

பரிசில் வேண்டிப் புரவலனை இரப்போர். ‘பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த’ (சிறுபாண். 218). (L)

பரிவென்றி -

{Entry: K11__0684}

அரசன் வேல் ஏந்தி, ஐவகைச் செலவும் பதினெட்டு வகைச் சுற்றுவரவும் கழியப் பாய்தலும் வெகுளுதலும் தன்னால் கற்பிக்கப்பட்ட குதிரையை இவர்ந்து சென்று, பகைவரை அழித்துத் தமர் பண்டு இழந்த வீரமகளை மீட்க உதவிய குதிரையின் சிறப்புக் கூறும் புறத்திணை ஒழிபுச் செய்தி. (இ. வி. 619-56.)

‘குதிரை வெற்றி’ காண்க.

பருவ வாழ்த்து -

{Entry: K11__0685}

வேனில் கார் கூதிர் முன்பனி பின்பனி எனப் பகுக்கப்படும் ஓர்யாண்டு முதலாகக் கணக்கிடமுடியாத எல்லைத்தாக இயங்குகின்ற காலத்தை வாழ்த்துவது..

“திருமால் உந்திச்சுழியில் தோன்றிய தாமரையிலிருந்து பிறந்த பிரமன் முதலாக உயிர்த்தொகுதிகளால் புகழப்படும் காலம், என்றும் அழியாததாய், இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்று பகுப்பிற்றாய், பல பொருள்களையும் அவ்வவற்றின் ஆயுளைக் கணக்கிட உதவுகின்றது” என்று அதனை வாழ்த் துதல். (மா.அ. பாடல். 132)

‘பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்’ ஒள்வாள் வீசிய நூழில்’ -

{Entry: K11__0686}

பலரையும் கொன்று நல்லிசை எய்திய பெரும்படைத் தலை வனுக்கு, வஞ்சத்தான் கொன்ற வேந்தனுடைய பல்படையும் புறங்கொடுத்தலின், அப்படைகளைக் கொல்லுதல் அற னன்று என்று கருதாது அவன் தன் கைவாளால் தடிந்து கொன்று குவித்தல் என்னும் தும்பைத்திணைத்துறை. (தொ. பொ. 72 நச்.)

பல்வேறாய பகைப்படை அனைத்தும் ஒருவனுக்கு அஞ்சித் தோற்று அழிந்தவிடத்து, அவ்வாறு வென்றவன் வீறு கொண்டு புகழ்க்குரிய தன் வெற்றிவாளை வீசிக் கொன்று குவிக்கும் நூழில்; ஒருவன் பலரையும் கொன்று குவிக்கும் தறுகண்மை ‘நூழில்’ எனப்படும். (புறத். 17 பாரதி)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை நூழில், நூழி லாட்டு என இரு துறைகளாகக் கொள்ளும். (7-15, 16).

இதனை வீரசோழியம் ‘உடைபடை’ என்னும். (கா. 105) (தொ. பொ. 72 நச்).

‘பாக்கத்து விரிச்சி’ -

{Entry: K11__0687}

வெட்சிமறவர் தம் பாக்கத்தில் குழுமியிருந்து மேற்செலவிற்கு நிமித்தமாகக் கேட்கும் நற்சொல். அஃதாவது தமக்குத் தொடர்பில்லாதார் தம்முள் பேசிச் சொல்லும் சொற் களைக் கேட்போர் அவற்றைத் தமது செயலுக்கு ஆக்கமாகப் பொருள் விரித்துக் கொள்ளுதலான் விரிச்சி எனப்பட்டது. வாய்ப்புள் எனவும் கூறுவர். அம்முறையான் புள் அரவங் களை நன்னிமித்தமாகக் கோடலும் இதன்பாற்படும். (தொ. புறத். 3 ச.பால.)

பவனிவாழ்த்து -

{Entry: K11__0688}

சிறந்த தலைவன் நன்கு ஒப்பனை செய்துகொண்டு சுற்றத்தார் புடைசூழ ஊர் மக்கள் யாவரும் காணுமாறு ஊர்வலம் வரும் போது அத்தலைவனது உலாவைப் பாராட்டும் பாடாண் துறை.

இதனை உலா முதலிய பிரபந்தங்களில் காணலாம். (மா. அ. பா. 408)

பழிச்சினர் பணிதல் -

{Entry: K11__0689}

இது சான்றோரைப் புகழ்ந்து வழிபடுதல் என்னும் பாடாண் திணைத் துறையாகும்.

“அரி அயன் அரன் என்னும் முத்தேவராகவும் இருப்பவன் பரவாசுதேவனே என்றருளிய மகிழம்பூ மாலையை அணிந்த நம்மாழ்வார் நம்மை ஆளும் தலைவராவார்” (மா.அ.பா.16) என்றாற்போலச் சான்றோரைப் புகழ்ந்து வழிபடுதல்.

மேம்பட்ட இறைவனை வீடுபேறு கருதி வழிபடாது உலகிய லில் தாம் விரும்பும் பயன் கிட்டுதற்காக வாழ்த்திப் பணியும் பாடாண் துறை. (பு. வெ. மா. 9 : 44)

பழிச்சினர் பரவல் -

{Entry: K11__0690}

மேதக்க சான்றோர்களைப் பலவாறு புகழ்ந்து தோத்திரித்தல் என்னும் பாடாண்துறை.

“சடகோபனுடைய ஞானமுத்திரைக் கையினைக் கண்டு தொழுது உத்தமராக வாழ்பவர்களுடைய மனம், உடல் பூரித்து மயிர்க் கூச்செறியப் புலமை மிக உயிர்தளிர்ப்ப, இறையருளில் தோய்ந்து குழையும்” என்றல் (மா. அ. பா. 128) போல்வன.

பழிச்சுதல் -

{Entry: K11__0691}

பாடாண்கைக்கிளைக்கண், காதல் கொண்ட தலைவி தான் காதல் கொண்ட தலைவனுடைய பலவகைப் பண்புநலன் களைப் புகழ்ந்து பேசுதல் என்ற புறத்துறை.

சோழன் போரவைக் கோப் பெரு நற்கிள்ளியைப் பெருங் கோழி நாய்கன்மகள் நக்கண்ணை பாடிய மூன்று பாடல் களும் புற நானூற்றில் (83-85) இத்துறையைச் சேர்ந்தனவாகக் குறிப்பிடப்பட்டுள.

“என் தலைவனது நாடும் இதுவன்று; ஊரும் இதுவன்று. ஆதலின் அவன் ஆற்றலை உள்ளவாறு உணர்ந்தவர் ஒருவரும் ஈண்டில்லை ஆதலின் அவன் ஆமூர்மல்லனை அட்டுநின்ற சிறப்பினை வெற்றி என்று கொண்டாடுவோர் சிலருளர்; அங்ஙனம் கொள்ளாதோரும் சிலர் உளர். நானோ பனை வளர்ந்து நின்ற அடியைச் சார்ந்து மறைய நின்று அவனைக் கண்ட அளவிலே என்வளை முதலியன கழன்றமை யால் என்னளவில் அவன் தன் ஆண்மையால் என்னை வென்றானாகவே கருதுகிறேன்” என்பது (புறநா. 83) முதலா யின இத்துறையின் கருத்தாகும்.

பறவாப் புள் தெரிதல் -

{Entry: K11__0692}

பறவாப்புள் - சகுன உரை. கரந்தைமறவர் வெட்சிவீரரால் இரவில் களவினால் கைப்பற்றப்பட்ட தம் ஆநிரையை மீட்கப் புறப்படும்போது தம்செயலில் கிட்டப்போகும் வெற்றி தோல்விகள் பற்றி முன்னமேயே அறியச் சகுனச் சொற்களைக் கேட்டல் என்னும் கரந்தைத் துறை.(இ.வி. 604-3)

பனுவல் வாழ்த்து -

{Entry: K11__0693}

மேம்பட்ட நூலினுடைய என்றும் மாறாச் சிறப்பினை வாழ்த்தும் பாடாண்துறை.

“மாறன் அருள்செய்த திருவாய்மொழியைக் கற்றுணர்ந்த சான்றோர்கள், வேதம் விரித்துரைத்த ‘சித் அசித் ஈச்வரன்’ என்ற தத்துவங்களை விரித்துக் கூறும் வேறு எந்நூலினையும் கற்க முற்படார்” என்றாற்போல்வன. (மா. அ. பாடல். 102)

பனுவல் வென்றி

பிறநூல்களினும் ஒருநூல் சிறப்புடைத்தெனக் கூறும் வாகைத் துறை. (மா. அ. பாடல். 477)

பாக்கத்து விரிச்சி -

{Entry: K11__0694}

படை தங்கிய இடத்தில் நற்சொல் கேட்டல்.

குறித்த பொருளின் பயன் அறிதற்குப் பாக்கத்துக்கண் நற்சொல் கேட்டல். (தொ. பொ. 61 இள.)

செல்லும் பாக்கத்தே புள்ளொலியால் நல்ல குறிப்பு அறிதல். (புறத். 3 பாரதி.)

நிரை கோடற்கு எழுந்தோர் இரவில் சென்று தங்கிய இடத்து நற்சொற் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தாம் செல்லும் இடைவழியில் வழிச்செல்வார் சொல்லும் சொற்களை நற்சொல் நிமித்தமாகக் கேட்டலும் ஆம். (58 நச்.)

இது வெட்சித்துறைகளுள் ஒன்று. இதனை வீரசோழியம் ‘நற்சொல்’ என்னும்; ‘உரைசொல் ஆய்தல்’ என்று உரை குறிப்பிடும். (கா. 99 உரை.)

பாக்கத்து விரிச்சிக்குத் தொடர்புடையன -

{Entry: K11__0695}

1. பாக்கத்துச் சென்ற இடத்து இருப்பு வகுத்தல், 2. பண்டத் தொடு உணவு ஏற்றிச் சென்றோரை விடுத்தல், 3. விரிச்சியை வேண்டா என்று விலக்கிய வீரக்குறிப்பு, 4.விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதல், 5. பிற நிமித்தப் பகுதிகள் (பல்லிச் சொல், பறவை ஒலித்தல்), 6. அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தல் முதலியன. (தொ. பொ. 58 நச்.)

பாங்கருஞ் சிறப்பு -

{Entry: K11__0696}

பாங்கருமையாவது - ஒருவற்குத் துணையாகாமை; சிறப்பா வது பிறருக்கு நிலைத்த துணையாக என்றும் இல்லாமல் நிலையாமையையே தனக்குப் பண்பாகக் கொண்டுள்ள உலகியற் பொருள்களின் இயற்கை நிலை. அவை இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என்ற இவை. (தொ. பொ. 76 இள.)

தனக்கு ஒப்பான பொருள் வேறு எதுவும் இல்லாத சிறப்புடைய வீடு பேறு. (78 நச்).

பாங்கருமை - ஒப்பின்மை. சிறப்பு - வீடுபேறாம் மறுமை யின்பம். பாங்கருஞ் சிறப்பு-ஒப்பற்ற மறுமையின்பம். பாங் கருஞ் சிறப்பு முறை சிறவாத பலதுறை எனினும் அமையும். (புறத். 23 பாரதி.)

பாங்கருஞ் சிறப்பு-இணையில்லாத வாழ்க்கை யின்பம். மன அமைதியுடன் இனிது வாழும் வாழ்க்கையின்பம்-எல்லாவற் றினும் சிறந்ததாகலின் ‘சிறப்பு’ எனப்பட்டது. வாழ்க்கை யின்பம் - இன்ப வாழ்க்கை. (285 குழ.)

பாசறை -

{Entry: K11__0697}

பகைமேற் சென்ற படை தங்கும் இடம். (தொ. பொ. 76 நச்.)

பாசறைநிலை -

{Entry: K11__0698}

‘பாசறை வஞ்சி’ காண்க. (பு. வெ. மா. 3 : 21)

பாசறை முல்லை -

{Entry: K11__0699}

பாசறையில் தலைமகன் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை. (தொ. பொ. 76 நச்.)

பாசறை வஞ்சி -

{Entry: K11__0700}

வஞ்சி சூடிப் போரிட்டு வென்ற மன்னன், பகைவர் தன்னை வணங்கியதும் அமைதியுற்றுத் தன் ஊருக்கு மீண்டு வாராமல் தொடர்ந்து பாடிவீட்டிலேயே இருத்தல்.

அஃதாவது, பகைவர் நாட்டு விளைவயலில் தீயூட்டிக் குளங் களின் கரைகளை வெட்டி உடைத்துவிட்டுத் தீயாலும் நீராலும் பகைவர் நாட்டைப் பாழ்படுத்திய பின்னரும், பகைவர் தன்னைத் தலைமையரசாக ஏற்று வழிபட்ட பின்னரும், அவர்கள் கூற்றில் நம்பிக்கையின்றி அவர்கள் ஒருபோதும் தலையெடாதவாறு செய்யப் பாசறைக்கண் வெற்றி வேந்தன் இருக்கும் செய்தியினைக் கூறும் வஞ்சித் துறை. (இ. வி. 606 - 21)

இது ‘பாசறை நிலை’ எனவும் கூறப்படும். (பு. வெ. மா. 3 : 21)

பாசிநிலை -

{Entry: K11__0701}

அகழிக்கரையிலே தங்கிய உழிஞைமறவர், அவ்வகழிநீரின் பாசியைப் போலவே, ஒருகால் நெருங்கியும் மற்றொருகால் விலகியும் மதிலைக் காக்கும் நொச்சிவீரரொடு போர் புரிதல்.

அஃதாவது உழிஞையாருக்குப் பகைவரான நொச்சிமறவர் ஓடங்களிலும் தோணிகளிலும் ஏறி அகழியில் இருந்து கொண்டு உழிஞைமறவர் அகழியைத் தாண்டாதவாறு அம்பெய்து வெருட்டவும், அதனையும் மீறி அகழியைக் கடக்க உழிஞைவீரர் முற்பட்ட அளவில், இருதிறத்து வீரரும் புண்பட்டு வீழ அகழியில் குருதிச்சேறு பரந்தது என்று குறிப்பிடும் நிலையை விளக்கும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 17)

இதனைத் தொல்காப்பியம் ‘நீர்ச்செரு வீழ்ந்த பாசி’ என்று கூறும். (பொ. 68. நச்)

பாசிமறன் -

{Entry: K11__0702}

போர்மேற் சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப் பின் பகைவர் ஊரகத்துப் போர் விரும்புதலைக் கூறும் உழிஞைப் புறத்துறை. (தொ. பொ. 68 நச்)

பாசிமறத்தின்பாற் படுவன -

{Entry: K11__0703}

எயிலுள் பொருதல், புள்போல உள்ளே பாய்தல், ஆண்டு இறந்தோர் துறக்கம் புகுதல் முதலாயின. (தொ.பொ. 68 நச்)

பாசுரம் -

{Entry: K11__0704}

1. வகை; ‘எல்லாப் பாசுரத்தானும் தலைமகளை ஆற்று விக்கும்’ (இறை. அ. 53 உரை)

2. வாய்பாடு; ‘பாசுரம் வஞ்சிக் குரிச்சீர்’ (யா. க. 95 உரை.மேற். பக். 448)

3. புல்லாங்குழலோசை. (யாழ். அக. )

4. வழிபாடு குறித்த பாடல். எ-டு: தேவாரப் பாசுரம். ( L)

பாடல் வென்றி -

{Entry: K11__0705}

பண்களையும் திறங்களையும் யாழொலிக்கும் மிடற்றொலிக் கும் வேறுபாடு தெரியாவகையில் பாடினி இசையெழுப்பிப் பாடும் திறத்தினைக் கூறும் துறை. இது புறப்பொருள் வெண்பாமாலையில் வாகைத்திணையொழிபாக இறுதி சூத்திரத்துக் கூறப்படுவனவற்றுள் ஒன்று. (பு. வெ. மா. 18-18)

பாடாண் -

{Entry: K11__0706}

பாடப்பட்ட ஆண்மகனுடைய ஒழுகலாறுகளைக் கூறும் புறப்பொருள் திணைகளுள் ஒன்றாய், கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாவது. (தொ. பொ. 80 நச்)

இது தொல்காப்பியத்துள் ஏழாம் புறத்திணை; புறப்பொருள் வெண்பாமாலையுள் ஒன்பதாம் புறத்திணை.

பாடாண் கண்படை நிலை -

{Entry: K11__0707}

பகைவருடைய படையை அழித்து வென்றபின் மன்னன் தன் செங்கோன்மையாலே தன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் கொடிய நிகழ்ச்சி ஏதும் நிகழாதபடி நீக்கித் தன் நாட்டுயிர்கள் நலிவின்றி நலமாக வாழ்தலை அறிந்து உறங்குதலைக் கூறும் துறை. (பு. வெ. மா. 9-8)

பாடாண் கந்தழி -

{Entry: K11__0708}

வாணாசுரனது சோ என்னும் மதிலை அழித்த திருமாலின் அரிய செயலை வியந்து கூறும் பாடாண்துறை. அஃதாவது பெருவலி படைத்த வாணாசுரனுடைய மதில் திருமால் கோபித்த அளவில் தீக்கு இரையாயதுகொண்டு அவன் பேராற்றலை அறிந்து, அவன் தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் ஆயனாக நடந்துகொண்டமை கருதி எள்ளற்க என்பது. (பு. வெ. மா. 9:40)

இதனை வீரசோழிய உரை ‘செருவில் திட்பமுடைமை’ என்னும். (கா. 106).

பாடாண் களவழி -

{Entry: K11__0709}

குருதி சிந்தும் கொடும்போர்க்களத்தே கவர்ந்துவந்த பெருஞ் செல்வத்தை மங்கலம் பாடும் நல்லிசை வல்ல பாணர்க்குப் பரிசிலாய்ப் பரிந்தளிக்கும்போது, “பண்டே செல்வம் பலவும் பெற்றோம்; வேண்டா எமக்கு” எனச் சொல்லும் செய்தி, ‘பாணர் மறுத்த களவழி’ (இ.வி. 617-20) என்னும் பாடாண் துறைச் செய்தியாம்.

இது ‘களவழி வாழ்த்து’ எனவும் கூறப்படும். (பு. வெ. மா. 9:19)

பாடாண், கைக்கிளைக்குப் புறனாதல் -

{Entry: K11__0710}

கைக்கிளையாவது ஒரு நிலத்துக்கு உரித்தன்றி எல்லா நிலத்தும் ஒருதலைக்காமமாகி வருவது போலப் பாடாணும் ஒரு பகுப்பிற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஒரு பயன் கருதியவழி மொழிந்துநிற்பது ஆதலானும், கைக்கிளை யாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர் பற்றிக் கூறுதலா னும், கைக்கிளை போலச் செந்திறத்தால் கூறுதலானும் பாடாண் கைக்கிளைக்குப் புறனாயிற்று. (இள.)

நோந்திறம்-கழிபேரிரக்கம்; செந்திறம்-அஃது அல்லாதன. (தொ. பொ. 78 இள)

ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின், அவை தம்மின் வேறாகிய ஒருதலைக்காமமாகிய கைக்கிளையோடொத் தலின், பாடாண் திணை கைக்கிளைப் புறன் ஆயிற்று. (80 நச்.)

கைக்கிளையில் காதற்சிறப்பு ஒருவர்க்கே ஆவது போலப் பாடாண்சிறப்பும் பொதுமையின்றித் தகவுடையார் ஒருவ ருக்கே உரித்தாகி வருதலானும், கைக்கிளையில் காதற்கூற்றும் பாராட்டும் தலைவன்மாட்டு ஆவது போலப் பாடாண் கூற் றும் புகழ்வோர் தம் பக்கலிலேயே அமைதலானும், இரண் டனுக்கும் நிலம் பொழுது வரைவின்மையானும், கைக்கிளை யில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுவது போலப் பாடாணில் பழி தழுவாப் புகழ்மை ஒன்றே பயில்வதானும், இரு திணையும் ஒருதலையாகச் செந்திறமாய் அமைதலானும் பாடாண் கைக்கிளைக்குப் புறனாயிற்று. (தொ. புறத். 25 பாரதி)

பாடாண் கைக்கிளை வகை -

{Entry: K11__0711}

பாடாண்திணையுள் முன்னர்க் கூறப்பட்ட காமப்பகுதி ஒன்றனுள்ளும் அடங்காத கைக்கிளை என்ற பாடாண்துறை.

வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்ற மூன்றும் எப்பொழுதும் ஒரேவகையான இலக்கணத்தன. அவற்றின் இலக்கணம் திரிவு படாது. ஆயின் கைக்கிளையுள் பலவகை உண்டு.

1. ‘காமம் சான்ற இளமையோன்வயின்’ கைக்கிளை,

2. ‘முன்னைய நான்கும்’ (தொ. பொ. 52) என்ற கைக்கிளை,

3. ‘காமப் பகுதி’ (தொ. பொ. 83) என்ற கைக்கிளை,

4. ‘முன்னைய மூன்றும் ’ (தொ. பொ. 105) என்ற கைக்கிளை என்பன.

இவற்றைப் போலாது, எஞ்ஞான்றும் பெண்பாலார் கூற்றாக அமையாமல், இடைநின்ற சான்றோராயினும் பிறராயினும் கூறுதற்கு உரித்தாய், முற்காலத்து ஒத்த அன்பினராகி இடைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனான் நிகழ்ந்த பெண்பாற்கைக்கிளையே இப்பாடாண் கைக்கிளை யாம். இது முதனிலைக் காலத்துத் தான் குறித்தது முடித்துப் பின்னர்த் தலைவியை வருத்தம் செய்து இன்பமின்றி ஒழித லான் ஒருதலைக்காமம் ஆயிற்று. இது, கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடிய புறப் பாடல் (144) முதலாக வருவது (தொ. பொ. 90 நச்.)

இது புறப்பொருள்வெண்பாமாலைப் பாடாண்படலத்துத் துறைகளுள் ஒன்று. (45)

எ-டு : “சிறுதுவலை துவற்றும் கார்மேகம் என்மனம் கவர மயக்கத்தைச் செய்யும் மாலைப்போதில் தனியே நின்ற எனக்கு, அருவிப் புனல் நாடனாகிய தலைவன் இரவுப் போதில் வருவானோ? என் கொங்கைமேல் தங்கி, மார்பிலணிந்த மாலையைத் தருவானோ?” என்று தலைவி தலைவனது மாலையை விரும்பி உரைத்தது.

பாடாண்திணை இலக்கணம் -

{Entry: K11__0712}

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை இவற்றான் சிறப் புற்றுப் பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாறு உணர்த் துவது பாடாண் ஆகும். பிற திணைகள் போலத் தனக்கொரு தனிநிலை பெறாமல் பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு ஏற்ற இடத்து அவை ஒவ்வொன்றன் பகுதியே பாடாணாய் அமையும். (தொ. பொ. 80 நச்.)

பாடாண் பகுதிக்குரிய பொருண்மையும் அவை செய்யுட்கண் அமைந்து வருமாறும் -

{Entry: K11__0713}

ஏழ்வகைப் பாடாண் பகுதிகளாவன வெட்சி முதல் காஞ்சி யீறாக அமைந்த ஆறும், குற்றம் தீர்ந்த காமக்கூட்டமாகிய ஒன்றும். இவ்வேழ்வகைப் பாடாண் பகுதிக்கண், பாடாண் திணை ஆதற்குரிய தலைமக்களது ஆளுமைப் பண்புகளை இருவகை வழக்கினும் வகைபட நிறுத்திப்பரவலும் புகழ்ச்சியு மாக அவற்றைக் கருதிக் கூறுமிடத்தும், முன்னோர் கூறிய உறுதிப்பொருளைக் குறித்துக் கூறுமிடத்தும், செந்துறை யாக வண்ணித்துக் கூறும் வண்ணப்பகுதி நீக்கப்படாது என்பர்.

தலைமக்களின் ஆளுமைத் திறங்களைப் பட்டாங்குக் கூறு மிடத்துச் சான்றோர் வழங்கிய வழக்கியலாகிய நாடக வழக்குப் பற்றிப் புனைந்து கூறலும் மரபு.

வண்ணமாவது அழகும் ஓசையும் ஆம். அது முறையே செய்யுட்கு அழகு செய்யும் உவமக் கூறுகளையும் ஒழுகு வண்ணம் முதலாய ஓசைகளையும் உணர்த்தி நின்றது. (தொ. புறத். 27. ச. பால.)

பாடாண் பகுதியின் நாலிரு வகைகள் -

{Entry: K11__0714}

கடவுள்வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கலவகை, செவி அறிவுறுத்தல், ஆற்றுப்படைவகை, பரிசில்துறை வகை, கைக்கிளை வகை, வசை வகை என்ற எட்டும் ஆம். (தொ. பொ. 78 இள.)

இப்பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட் பகுதி பலவும் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும், பொதுவியலும், வஞ்சி யும், தும்பையும், வாகையும், காஞ்சியும் ஆகிய பொருள் ஏழும் ஆகிய எட்டும் ஆம். (தொ. பொ. 80 நச்.)

பாடாண்திணை வகைகள் ‘கொடுப்போ ரேத்தி’ என்னும் சூத்திரத்தில் (90) கூறப்படுவன எட்டும் ஆம். அவையாவன:

1. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல், 2. அடுத் தூர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்து, 3. சேய்வரல் வருத் தம் வீட வாயில் காவலர்க்குணர்த்திய கடைநிலை, 4. கண் படை கண்ணிய கண்படை நிலை, 5. கபிலை கண்ணிய வேள்விநிலை, 6. வேலின் நோக்கிய விளக்குநிலை, 7. வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலைவாழ்த்து, கைக்கிளை என்னும் நான்கு என்பன. இவற்றுள், முதலாவது கொடுப்போர் ஏத்தலும் கொடா - அர்ப்பழித்தலும் என இரண்டாகக் கொள்ளப்படும். படவே, பாடாண் பிறக்கும் வகை எட்டு. (புறத். 25 பாரதி)

வெட்சி முதலிய ஆறு திணைகளையும் பாடும் பாடாண் ஆறும், பாடாண்திணை தனக்கே யுரிய பொருளைப் பாடும் மக்கட் பாடாண் தேவர்ப்பாடாண் ஆகிய இரண்டும் என எட்டாம். (287 குழ.)

பாடாண்பாட்டு -

{Entry: K11__0715}

புரவலன் ஒருவன் வாழும் காலத்திலே அவனுடைய புகழ், ஆற்றல், வரையாது வழங்கும் வள்ளன்மை, அருள் ஆகிய வற்றை ஆய்ந்து, “அவன் அரசர்களிடையே சிங்கம் போன்ற வன்; அந்தணர்தம் புகழ்மாலை சூடுபவன்; உரிமைமகளிர்க்கு அமுதம் போன்றவன்; பரிசிலர்க்கு வானம் போன்றவன்” எனப் புகழும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9-1)

பாடாண் ‘வழக்கொடு சிவணிய வகைமையான்’ வருதல் -

{Entry: K11__0716}

பாடாண்திணைச் செய்திகள் யாவும் தொன்றுதொட்டு வரும் வழக்கினை யொட்டியே அமைதல்வேண்டும். கடவுள் வாழ்த்துப் பாடுங்கால் முன்னுள்ளோர் பாடியவாறன்றி, முப்பத்து மூவருள் சிலரை விதந்து பாடுதல் கூடாது. அறு முறை வாழ்த்துள், ஆவினை யன்றி அதன் இனமாகிய எருமை முதலியவற்றைப் பாடுதல் கூடாது. புரைதீர் காமத்தில் ஒருவன் தொழுகுலமாகிய தெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது. செந்துறைப் பாடாண்பாட்டினை இறப்ப உயர்த்தும் இறப்ப இழித்தும் பாடுதல் கூடாது. காமப்பகுதி கடவுளரைக் கூறுங்காலும் பெண்தெய்வத் தோடு இயைபுடையவரையன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும், புத்தர் சமணர் முதலியோரையும் பாடுதல் கூடாது. தெய்வக்காதல் குழவிக்காதல் முதலியவற்றை மரபு மீறிப் பாடுதல் கூடாது. ‘ஊரொடு தோற்றம்’ பரத்தையருக் கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது.

நாடு, ஊர், மலை, ஆறு, படை, கொடி, குடை, முரசு, புரவி களிறு, தேர், தார் முதலியனவும் பாடப்படும். (தொ. பொ. 86 நச்.)

பாடிவீடு -

{Entry: K11__0717}

பாசறை; மன்னன் படையொடு விட்டிருக்கும் இடம்; ‘பாடி’ எனவும் படும். ‘படுநீர்ப் புணரியின் பரந்தபாடி’ (முல்லைப். 28) (L)

பாண்கடன் முறை கழித்த பாண்பாட்டு -

{Entry: K11__0718}

‘பாண்பாட்டு’க் காண்க. (இ. வி. 611 - 11.)

பாண்பாட்டு -

{Entry: K11__0719}

மதயானைகளைக் கொன்று போர்க்களத்தில் இறந்த வீரர்களை நினைத்துப் பாணர்கள் யாழில் விளரிப்பண் (இரங்கற்பண்) இசைத்துப் பாடித் தம் கடமையை ஆற்றுவ தாகிய தும்பைத்துறை. (பு. வெ. மா. 7:11)

பாணர் ‘ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்’ -

{Entry: K11__0720}

பாடற்பாணர் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடாகிய பாணாற்றுப்படை என்ற பாடாண்துறை.

எ-டு : “செல்வ வள மிக்க எம்மை ‘யாவிர்?’ என வினவும் கடும்பசி இரவல! பேகனாகிய அவ் வெல்வேல் அண்ணலை யாம் காண்டற்கு முன்னே நின்னைவிட இழிந்தேமாக இருந்தேம். இப்பொழுது இத்தகைய வளமுடையேமாக உள்ளேம். அவ்வள்ளலது கை வண்மை மறுமைப் பயனைக் கருதாது, பிறர்வறுமை யைத் தீர்த்தலையே நோக்கிற்று.” (புறநா. 141)

பாணரும், இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராவர். பாணர் தத்தம் சாதியில் திரியாது வருபவர். (தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண்படலத் துள் ‘பாணாற்றுப்படை’ (28) என்னும் துறையாம்.

பாணர் எனப்படுவார் -

{Entry: K11__0721}

பாணர் ஆவார் பல்வகை யாழினும் இசையமைத்துப் பண் ணொடு பாடும் கலைவலார். (தொ. கற். 28 ச. பால.)

பாணர் மறுத்த களவழி -

{Entry: K11__0722}

போர்க்களத்தில் கவர்ந்த செல்வங்களுள் சிலவற்றை அரசன் பாணருக்கு வழங்க, அவர்கள் தம்மிடம் பண்டே செல்வம் மிக உண்மையால் புதிய செல்வம் வேண்டா என மறுத்துக் கூறும் திறம் நுவலும் பாடாண்துறை. (இ. வி. 617 - 20)

‘களவழி’ காண்க. ‘களவழி வாழ்த்து’ என்பதும் அது.

பாணாற்றுப்படை -

{Entry: K11__0723}

வள்ளல்பால் செல்வம் பெற்று வறுமை நீங்கிப் பெருமிதத் தொடு வரும் பாணன் வழியிடை வறுமையால் வாடிச் சுற்றத்தோடு ஓய்ந்து தங்கியிருந்த பாணனை நோக்கி, “பாண! வேழங்கள் கன்றொடு திரியும் இக்காட்டினைக் கடந்து அப்பால் சென்றால் வரும் ஊரிலுள்ள பெருவள்ளல் உனக்குப் பொற்றாமரைப்பூச் சூட்டி உன் வறுமையைப் போக்குவான்” என்று தான் பரிசில் பெற்ற வள்ளல் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறி விடுக்கும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 28)

இதனைப் ‘பாணர் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்’ என்று தொல்காப்பியம் கூறும். (தொ. பொ. 91 நச்.)

பாதல் -

{Entry: K11__0724}

பாத்தல்; ‘பாதீடு’ காண்க. (தொ. பொ. 57 நச் உரை)

பாதீட்டின் வகைகள் -

{Entry: K11__0725}

நிரைபெற்றோர் மகிழ்ச்சி, சுற்றத்திற்கு உரைத்தல் முதலியன பாதீட்டின் வகைகளாம். (தொ. பொ. 271 குழ.)

பாதீடு -

{Entry: K11__0726}

மறவர் தாம் கொண்ட நிரையை அரசன் கட்டளைப்படி பகுத்துக் கொள்ளுதல்.

ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலின், பாத்து+ ஈடு = ‘பாதீடு’ ஆயிற்று. வேந்தன் ஏவலால் தாம் கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டோரும் தத்தம் நிரையைப் பகுத்துக்கோடலும், இழிந்தோர்க்குப் பகுத்துக்கொடுத்தலும் ஆம். (தொ. பொ. 58 நச்.)

இது வெட்சித்திணைத்துறைகளுள் ஒன்று. இதனை வீரசோழியம் ‘கூறிடுதல்’ என்னும் (கா. 99).

வாட்போர் மலைந்தவருக்கும் ஒற்றருக்கும் நிமித்தம் கூறி யார்க்கும் வெட்சியார் கவர்ந்த ஆநிரைகளைப் பகிர்ந்தளிக் கும் வெட்சித் துறை. (பு. வெ. மா. 1 : 13)

கரந்தையார் மீட்ட ஆநிரையை உரியவருக்குப் பகிர்ந்து கொடுத்தலையும் ‘பாதீடு’ என்று இலக்கணவிளக்கம் கூறும். (604 - 23)

பார்ப்பனப் பக்கத்து வகை -

{Entry: K11__0727}

பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்பு நிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினானும், அவள் பிறருக்கு உரிய ளாகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்துழித் தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாரும் ஆகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகையாம். (தொ. பொ. 75 நச்.)

பார்ப்பனப் பக்கம் -

{Entry: K11__0728}

பார்ப்பியல் என்னாது ‘பக்கம்’ என்றதனான், பார்ப்பார் ஏனைய வருணத்துக்கண் கொண்ட பெண்பாற்கண் தோன் றின வருணத்தார்க்கும் சிகையும் நூலும் உள எனினும், பார்ப்பாரைப் போல் அறுதொழிலுக்கும் உரியரன்றி அவற்றுள் சிலவற்றுக்கே அவர் உரியர் என்பது. (தொ. பொ. 75 நச்.)

பார்ப்பன முல்லை -

{Entry: K11__0729}

பகைமையான் மாறுபட்ட வேந்தர் இருவர் தம் பகைமை ஒழிந்து நண்பராதற் பொருட்டுத் தான் நடுவுநிலையில் நின்று நன்மனப்பாங்குடன் சமாதானம் பேசும் பார்ப்பானது இயல்பு மிகுதி கூறும் வாகைத் துறை. அஃதாவது,

“நல்ல புகழும் முத்தீ வேட்டலும் நான்மறை ஓதலும் உடைய அந்தணன் சந்து செய்விக்கச் சென்ற அளவில், படையெடுத் தால் வெற்றி பெற்றன்றி மீளாத கோட்பாட்டினையுடைய வேந்தரிருவரும் தம் போரினை நிறுத்தித் தத்தம் நகர்க்கு மீண்டனர்” என்று கண்டோர் கூறுமாறு, அறிவு மேம்பட்ட பார்ப்பனன் சந்து செய்விக்கும் இயல்பு மிகுதி கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 18)

பார்ப்பனர் ஓதுவித்தல் -

{Entry: K11__0730}

ஓதுவித்தலாவது கொள்வோன் உணர்வு வகை அறிந்து அவன் கொள்ளுமாறு கற்பிக்கும் ஈவோன் தன்மையும் ஈதல் இயற்கையும். (தொ. பொ. 75 நச்.)

பார்ப்பனர் கொடுத்தல் -

{Entry: K11__0731}

கொடுத்தலாவது வேள்வியாசானும் அவற்குத் துணையாயி னாரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் உபகாரம் செய்தல். (தொ. பொ. 75 நச்.)

இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல். (74 இள.)

பார்ப்பனர் கோடல் -

{Entry: K11__0732}

கோடலாவது கொள்ளத்தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும், வெறும் உணவு மாத்தி ரம் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியும், தாம் செய்வித்த வேள்வி பற்றியும், கொடுக்கின்றான் உவகை பற்றியும், கொள்பொருளின் உயர்வு தாழ்வு பற்றியும், இவற்றுள் தலை இடைகடை என்பன கொள்ளப்படும். (தொ. பொ. 75 நச்.)

கொள்வோன் தன் சிறப்பிற் குன்றாமல் கோடல். (74 இள.)

பார்ப்பனர் கோடற் பகுதி -

{Entry: K11__0733}

பார்ப்பனன் வேள்விகள் செய்வித்துப் பொருள் பெறுதலே யன்றித் தனக்கு ஓத்தினான் கோடலும், பிறர் தனக்கு விரும்பிக் கொடுப்பதைக் கோடலும், தான் வேள்வி செய் தற்குச் செல்வர்களை வேண்டிப் பொருள் கோடலும், தாயத்தார் யாருமின்றி இறந்தவருடைய பொருளைக் கோட லும், உறவினர் யாரையும் இழந்து தனித்திருப்பாரைப் பாதுகாத்து அவரிடம் பொருள் கோடலும், அரச பரம்பரை இல்வழி அரசுகோடலும், துரோணாசாரியனைப் போல்-வார் படைக்கலம் பயிற்றிப் பொருள் கோடலும், பிறவும் கோடற் பகுதியாம். (தொ. பொ. 75 நச்.)

பார்ப்பன வாகை -

{Entry: K11__0734}

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலும் புரியும் பார்ப்பார் வேதத்தைக் கரைகண்டு அறவேள்வி செய்து அவ்வேள்வியிடைத் தீயே போலத் தூயராய்த் தீவினைகளுக்கு அஞ்சி நல்லாற்றில் வாழும் இயல்பைக் கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8:9)

இதனைத் தொல்காப்பியம் ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்’ என்னும் (தொ. பொ. 75 நச்). ஒரு வரையறைப் படாது பல துறைப்படுவனவற்றையெல்லாம் ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்’ என்று ‘தொகுத்துக் கூறல்’ என்ற உத்தி வகையான் கூறியதை விடுத்துப் ‘பார்ப்பனவாகை’ என்ற துறையாக ஓதினால், அவற்றின் பகுதிகள் பலவும் அடங்கா மல் போதலின் அங்ஙனம் பெயரிடுதல் குன்றக் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர். (75 நச்.)

பார்ப்பன வாழ்த்து -

{Entry: K11__0735}

இஃது ‘அமரர்கண் முடியும் அறுவகை வாழ்த்தி’னுள் பார்ப்பனருடைய ஆன்மஞானச் சிறப்பினைக் கூறி வாழ்த்தும் பாடாண்துறை.

கற்று வல்ல சான்றோர்கள் வேதத்துக்குப் புறம்பான பௌத்தம் முதலிய சமயங்களின் கொள்கையை மறுத்து வேத நெறியை நிறுவிய திறனை வியந்து வாழ்த்துதல் போல்வன. (மா. அ. பாடல். 18 )

பார்ப்பனர் வேட்டலும் வேட்பித்தலும் -

{Entry: K11__0736}

3) வேட்டலாவது ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியல் தீயாயினும் ஒன்று பற்றி மங்கலமரபினான் கொடைச் சிறப்புத் தோன்ற அவி முதலியவற்றை மந்திரவிதியான் கொடுத்துச் செய்யும் செய்தி. வேளாண்மை பற்றி வேள்வி ஆயிற்று. (தொ. பொ. 75 நச்)

(ஐந்தீ- சப்பியம், ஆவசத்தியம், ஆகவநீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி. முத்தீ-ஆகவநீயம், காருகபத்தியம், தட்சி ணாக்கினி. உலகியல் தீ-ஒளபாசனம்)

பார்ப்பனர் வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்குரிய இலக்கணமெல்லாம் உடையராய், மாணாக்கர்க்கு அவர் செய்த வேள்விகளால் பெறும் பயனை அடையச் செய்தலை வல்லராதல். (தொ. பொ. 75 நச்).

பார்ப்பார் எனப்படுவார் -

{Entry: K11__0737}

பார்ப்பாராவார், நூலணிந்து நூலோதும் இரு பிறப்பாளர் ஆவர். (தொ. கற். 36 ச. பால.)

பாரி ஈமத்து எரி மூழ்கல் -

{Entry: K11__0738}

இது ‘மாலைநிலை’ என்னும் புறப்பொருள் பொதுவியல் துறை. ‘பாலைநிலை ’ என்பர் நச்சினார்க்கினியர். அவை காண்க. (சாமி. 148)

‘பாலறி மரபின் பொருநர்’ -

{Entry: K11__0739}

பாகுபாடறிந்த மரபினையுடைய பொருநர் பக்கம்; அஃதா வது வாளானும் தோளானும் பொருதலும் வென்றிகூறலும் வாகையாம். (தொ. பொ. 74 இள.)

அறத்தின் பாகுபாடறிந்த முறையால் பொருவார் போர்த் திறத்தின் சார்பு; ஒப்ப நடிப்பவர் பொருநுத் திறலைக் குறித்தலாகவும் கொள்ளவும். (புறத். 20 பாரதி.)

முறையொடு போர்த்தொழிலின் கூறுபாட்டை அறிந்த மறவ ரின் போர்த்திறனைச் சிறப்பித்துக் கூறுதல் . (பொ. 283 குழ.)

‘பால் அறிமரபின் பொருநர்கண்’ வாகை -

{Entry: K11__0740}

தும்பைத் திணைக்கண் கூறிய தானை யானை குதிரை என்ற மூவகை நிலையின்கண் தத்தம் ஆற்றலை மிகுதிப்படுத்து நிற்கும் பொருநவாகையும், பகைமையின்றித் தத்தம் ஆற்றலை உறழ்ந்து காணும் வகையால் புரியும் கருவிப்போர் மற்போர் ஆகியவற்றின்கண் மிகுதிப்பட்டு நிற்கும் வாகையும். தகரும் சேவலும் சிவலும் பிறவுமாகியவற்றைக் கொண்டு இகலுத லும், கவறுஆடல் முதலிய பற்றி இகலுதலும் இதன்கண் கொள்ளப்படும்.

பொருநர் என்னும் சொல் வேடம்புனைந்து கூத்தியற்று வோரையும் குறிக்குமாதலின், நாடகக் கூத்தினுள் உறழ்ச்சி வகையால் பெறும் வென்றியும் வாகையாகக் கொள்ளப்படும். ஆடல்பற்றியும் பாடல் பற்றியும் உறழ்ந்து பெறும் வெற்றியும் வாகையின் பாற்படும். (தொ. புறத். 20 ச. பால.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘பொருந வாகை’ யுள் அடக்கும். (8:12).

இதனை வீரசோழியம் ‘படையாளர் பக்கம்’ என்னும். ‘அறிமரபின் பொருநர்கட்பால்’ - காண்க. (கா. 104)

பாலாற்கு அளித்தல்

{Entry: K11__0741}

வெட்சி மறவர் தாம் கவர்ந்த ஆநிரைகளை அரசன் ஆணை யால் தமக்குள் பகிர்ந்து கொண்டு உண்டாடிய மகிழ்ச்சி யோடு எளியவர்களுக்கும் உபகரித்தல் என்ற வெட்சித்துறை. ‘பாலார்க்கு’ என்றிருப்பின் சிறக்கும்.

‘கொடை’ நோக்குக. (வீ. சோ. 99)

பாலைநிலை -

{Entry: K11__0742}

இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன்கட்டை யேறுதலை விலக்கினோருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை. ‘நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச், சொல்லிடை யிட்ட பாலை நிலையும்’ (தொ. பொ. 79 நச்.)

பாழி -

{Entry: K11__0743}

1. மருத நிலத்தூர் (சூடா. 4ஆவது 40) 2. சிறுகுளம். (தொ. சொ. 400 நச்.) (L)

பாழிகோள் -

{Entry: K11__0744}

தும்பைத்துறைகளுள் ஒன்று. அஃதாவது கைப்படையினை நீக்கி விட்டு மெய்கொண்டு போரிடும் தறுகணாளர் ஏமப்பெருமை. (வீ. சோ. 105 உரை )

பாழிகோள்-வலியால் கொள்ளுதல்.

‘படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம்’ காண்க.

பானல் -

{Entry: K11__0745}

மருதநிலம் ஆகிய வயல். (பிங். 3825) (L)

பிடிவென்றி -

{Entry: K11__0746}

‘பிடி’ என்பது பெண்யானையை போல அசைந்தாடும் கூத்துவகை. அதனைத் தாளமும் இசையும் ஆட்டமும் அசைவும் பிறழாதவாறு நிகழ்த்தும் சிறப்புப் ‘பிடிவென்றி’ ஆம்.

“குவளைத் தடங்கண் கூரெயிற்றுச் செவ்வாய்த் திருவின் சாயலாளாகிய கூத்தி ‘பிடி’ என்னும் கூத்தினை மற்றொரு கூத்தியுடன் கூடித் தாளமும் இசையும் இயக்கமும் தப்பாமல் ஆடினாள்” என்று சொல்லப்படும் இப்பிடிவென்றி வாகைத் திணை யொழிபாக நூல்இறுதியில் கூறப்பட்ட துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 18:19)

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை -

{Entry: K11__0747}

திரட்சி பொருந்திய பெருஞ்சோற்றைத் தானை வீரருக்கு வழங்கும் தன்மை.

வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானும் போர் குறித்த படையாளரும் உடனுண்பான் போல்வதொரு முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்றுநிலை.(தொ.பொ. 63 நச்.)

இது வஞ்சித்திணைத் துறை.

‘பெருஞ்சோற்று நிலை’ என இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். (3: 23 )

இதனை வீரசோழியம் வஞ்சிவகையுள் ‘ சோற்று நிலை’ என்னும். (கா. 101 )

பிழம்பு நனியுலர்த்தல் -

{Entry: K11__0748}

நியமத்தின் உறுப்பாகிய ‘காயக் கிலேசம்’. பிழம்பு நனி வெறுத்தலும் - பாடம். (தொ.பொ. 75 நச். உரை)

‘பிழைத்தோர்த் தாங்கும் காவல் பக்கம்’ -

{Entry: K11__0749}

தமக்குத் தவறு செய்தோரையும் பொறுக்கும் பாதுகாப்பு.

காவலாவது இம்மையும் மறுமையும் தமக்குத் தவறு செய் தார்க்கு ஏதம் வாராமல் காப்பதாகலான் இஃது ஏனையோ ரினின்று வெற்றியாயிற்று. (தொ. பொ. 76 நச்.)

இது தமக்குத் தீங்கு செய்தார்க்குத் தாமும் தீங்கு செய்யாமல் பொறுப்பதால், தீங்கு செய்தோர்க்குப் பாதுகாப்பு ஆயிற்று. இது பொறை வெற்றி. (284 குழ.)

இதனை வீரசோழியம் ‘காவல்’ என்னும், (கா. 104)

எ-டு : தம்மை இகழ்ந்துரைப்பாரைத் தாம் பொறுத்தலே அன்றியும், ‘எம்மை இகழ்ந்த தீவினையால் அன்னோர் மறுமையில் நரகத்தில் வீழ்வார்களே! என்று அவர் பொருட்டுக் கவலையுறுவதும் சான்றோர் கடமையாம். (நாலடி. 58)

பிள்ளைத் தெளிவு -

{Entry: K11__0750}

கரந்தை வீரன் தான் பட்ட விழுப்புண்ணைக் கண்டு மகிழ்ச்சி யுற்றுத் துடி முழங்கத் தன் வாளினை உறையினின்றும் நீக்கி அதனைச் சுழற்றிக்கொண்டு அறிவில் தெளிவோடு ஆடுதலைக் குறிக்கும் கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2 : 8)

பிள்ளை நிலை -

{Entry: K11__0751}

போரிற் சென்றறியாத மறக்குடிச் சிறுவர் தாமே செய்யும் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொ. பொ. 60 நச்.)

பிள்ளைப் பெயர்ச்சி -

{Entry: K11__0752}

தன் மன்னனுடைய ஆநிரை இரவில் வெட்சி மறவரால் களவினால் கொள்ளப்பட, அதனைப் பொறாது அந் நிரையை மீட்டுவரப் புறப்பட்டு, தீய நிமித்தங்களையும் மனம் கொள்ளாமல், பகைவரை எதிர்த்து வென்ற வீரனுக்கு அரசன் தண்ணளி செய்தல் என்ற கரந்தைத் துறை.

(பு. வெ. மா. 2 : 12)

பிள்ளையாட்டு -

{Entry: K11__0753}

கரந்தை மறவன், வெட்சி வீரரைக் கொன்று அவர்களுடைய குடர்களைத் தன் வேலுக்கு மாலையாகச் சூட்டித் துடிமுழக் கத்திற்கு ஏற்ப விருப்பத்துடன் கூத்தாடும் இயல்பினைக் கூறும் கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2 : 9)

பிள்ளை வழக்கு -

{Entry: K11__0754}

கரும்பிள்ளை (-கரிக்குருவி) நிமித்தம் கண்டு பின் நிகழ்வ தனை அறிந்துரைத்தவர்க்கு வழக்கப்படி ஆநிரைகளைப் பரிசாக வழங்குதல் என்னும் வெட்சித்துறை. (பு. வெ. மா. 1 : 18)

(இ.வி. 603 - 19)

பிறக்கடியிடுதல் -

{Entry: K11__0755}

நிலை கெட்டோடுதல்; ஓடா - பிறக்கடியிடாத (தொ. பொ. 60 நச்.); பிறக்கிடுதல் (65 நச்.), பிறக்கீடு (68 நச். மேற்) என்பன வும் அது. (L)

பிறர்பால் சென்று பரிசில் பெற்று வந்து காட்டிப் போதல் -

{Entry: K11__0756}

இது நடைவயின் தோன்றும் விடைகள் ஆகிய பாடாண் துறைகளுள் ஒன்று.

பெருஞ்சித்திரனார் தமக்கு வெளிமானுடைய இளவல் சிறிது பரிசில் கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமா னுடைய கோநகரில் இருந்த காவல்மரத்தில் அவ்யானை யைப் பிணித்து அவனைச் சென்று கண்டு, “இரப்போரைப் பாதுகாக்கும் வள்ளல் நீ ஒருவன் மாத்திரம் அல்லை; இரப் போர்க்கு ஈயும் வள்ளல்கள் பலர் உள்ளனர்; இரப்பவரும் ஈபவரும் உலகில் பலராக உள்ளனர் என்பதனை அறிவாயாக. யான் பரிசிலாகப் பெற்ற யானையை உன் காவல்மரத்தில் பிணித்துள்ளேன். யான் செல்கிறேன்” என்று கூறிச் செல்லு தல் (புறநா. 162) போல்வன. (தொ. பொ. 91 நச்.)

பிறவற்று நிமித்த அச்சத்தான் எச்சமின்றிக் காலம் கண்ணிய ஓம்படை -

{Entry: K11__0757}

ஓர்த்து நின்றவிடத்துக் கேட்ட சகுனச்சொல்லும், நரியின் குரல் முதலியனவும், பேய்க் கூட்டங்களின் இரைதலும், சூரிய னிடமிருந்து தலையிழந்த முண்டம் போன்ற களங்கம் வீழ்ந்தது போன்று தோன்றுதலும், சூரியனில் துளையேற் பட்டது போலத் தோன்றுதலும், சந்திரன் பகலில் ஒளி வீசுதலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றும் தீ நிமித்தம்.

இந்நிமித்தங்களால் தன் பாடாண்தலைவனுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி அவனை வாழ்த்துதலின், இது ‘காலம் கண்ணிய ஓம்படை’ என்ற பாடாண்திணைத் துறையாம்.

எஞ்ஞான்றும் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தான் ஒருவ னுக்குத் தீங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசில் இன்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசில் நினைந்து கூறினா னாம்; ஆகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று.

‘மண்திணிந்த நிலனும்’ (புறநா. 2) என்னும் புறப்பாடல், பகை நிலத்தரசற்கு இம்மன்னன் பயந்தபடி குறிப்பால் கூறிப் பின்னர், “திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயாக” என அச்சம் தோன்றக் கூறி ஓம்படுத்தியமையால், ஓம்படை வாழ்த்தாயிற்று. (தொ. பொ. 91 நச்.)

பின்தேர்க் குரவை -

{Entry: K11__0758}

குறுநில மன்னர்களும் விறலியரும் பெருமன்னனுடைய தேருக்குப் பின்னே ஆடிக்கொண்டு வரும் தும்பைத் துறை.

வாகை சூடிவரும் மன்னனுடைய தேரின் பின் வளைய லணிந்த விறலியர் வீரரொடு மகிழ்ச்சியால் ஆடும் திறம் கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 7 : 18; 8 - 8)

இப் பின்தேர்க் குரவையைத் தொல்காப்பியனார் வாகைத் துறையாகவே கொள்வர்; தேரின்பின் கூழுண்ட கூளிச்சுற்றம் ஆடும் குரவை என்று கருதுவர். (தொ. பொ. 76 நச்.)

‘பின்தேர்க் குரவை பேயாடு பறந்தலை’ (சிலப். 26 : 241)

புகட்சி -

{Entry: K11__0759}

புகழ்; கலைவல்லார்க்கும் இரவலர்க்கும் தம் வள்ளன்மை யால் வறுமைதீர வழங்கும் வள்ளல்களைப் புகழ்ந்து, அவ் வள்ளன்மை கொள்ளாரைப் பழித்துக் கூறும் வாயிலாக ஏனையோரும் ‘ஈத்துவக்கும் இன்பம்’ பெறச் செய்யும் பாடாண்துறை. ‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’ காண்க. (வீ. சோ. 106)

புகல் -

{Entry: K11__0760}

வெட்சி மறவர் பகைவர்ஆநிரை இருந்த சூழலை இரவிடைச் சூழ்ந்துகொள்ளுதல் என்னும் வெட்சித்துறை.

‘வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை’ நோக்குக.

(வீ. சோ. 99)

புகழ்ந்தனர் பரவல் -

{Entry: K11__0761}

வீடுபேறு அடையும் அரிய விருப்பத்தால் சான்றோர் இறைவனைப் புகழ்ந்து அவன் திருவடிகளைப் பணியும் செய்தி கூறும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 43)

புகழார்ப் பழித்தல் -

{Entry: K11__0762}

மேம்பட்ட இறைவனையும் அவனை நம்மனோர்க்கு வழி காட்டும் ஞானாசிரியனையும் மனம்விட்டுப்புகழாத கீழ் மக்களை அவர்தம் அறிவின்திரிபு குறித்துப் பழித்தலாகிய பாடாண் துறை.

“திருமகள் கேள்வனும், வைகுந்த நாதனும், திருத்துழாய் மாலையானும், சக்கரம் தரித்தவனுமாகிய திருமாலை மனத்தே கொண்டு வழிபடுதலைக் கீழ்மக்கள் மேற்கொள் ளார்” என்பது இறைவனைப் புகழாதவரைப் பழிப்பதாம்.

(மா. அ. பாடல். 664)

‘புடை கெட ஒற்றினாகிய வேய்’ -

{Entry: K11__0763}

பகைவருடைய ஒற்றர் உணராத வகையில் சென்று நிரை காவலர் இருக்கும் நிலையை அறிந்து வந்து சொல்லும் ஒற்றுச்சொல். (தொ. பொ. 61 இள.)

நிரை கோடற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமல் சென்று ஒற்றி உணர்த்திய குறளைச் சொல்லும், நிரை மீட் டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றி உணர்த்திய குறளைச் சொல்லும். (58 நச்.)

வேற்றுப்புலத்து இருதிறத்தும் ஒற்று அறிய இடம் இல்லை யாம்படி ஒற்றரால் அறிந்த அளவு. அஃதாவது இனி அறிய வேண்டிய செய்தி எதுவும் இன்றாகத் தம் ஒற்றரால் ஒற்றி வருதலும், தாம் ஒற்றியதனைப் பகைவர் சிறிதும் அறியாத வாறு ஒற்றி வருதலுமாம். (புறத். 3 பாரதி)

வேய் - ஒற்றர் வந்து சொல்லும் சொல். (தொ. பொ. 271 குழ.)

இது வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்று.

இதனை வீரசோழியம் ‘ஒற்றுரைப்பு’ என்னும் (கா. 99)

புடைகெடப் போகிய செலவின் வகைகள் -

{Entry: K11__0764}

விரைந்து செல்லுதல், காவலர் அறியாமல் செல்லுதல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

‘புடைகெடப் போகிய செலவு’ -

{Entry: K11__0765}

வெட்சிமறவர் தாம் தங்கிய இடத்தினின்று பகைவருடைய ஒற்றர் உணராமல் அவர் நாட்டிற்குச் செல்லுதல். (தொ. பொ. 61 இள.)

நிரை கோடற்கு எழுந்தோர் அங்கிருந்து பகைவர் நாட்டு ஒற்றர் உணராதபடி செல்லுதலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தம் பகைவர் ஒற்றி வந்து அறியாதபடி செல்லுதலும். (58 நச்.)

பக்கத்து இடம் இல்லையாம்படி படை பரந்து செல்லுதல். (புறத் 3 பாரதி)

புடை - தங்கிய இடம்; கெடல் - ஒற்றுக் கெடுதல்; செலவு - செல்லுதல் - இது வெட்சித் திணைத் துறைகளுள் ஒன்று.

புண்கிழித்து முடிதல் -

{Entry: K11__0766}

இது மறக்காஞ்சியின் பக்கம் என்ற காஞ்சித்துறை.

(சாமி. 143)

புண்ணொடு வருதல் -

{Entry: K11__0767}

வெட்சி மறவரை வென்று ஆநிரையை மீட்ட வீரனொருவன் விழுப்புண்ணுடன் மீளுதல். அஃதாவது வெட்சி மறவர் இரவிடைக் களவினால் கவர்ந்த ஆநிரையை மீட்டற்குச் சென்றவருள் வீரனொருவன் தன்னை எதிர்த்த வெட்சி மறவரை வெருட்டி ஆநிரையை மீட்டுத் தன் அரசன் மனம் நிறைவுறுமாறு மீண்டு வரும்போது விழுப்புண்களினின்று குருதி ஒழுகும் நிலையில் சாதிலிங்கக்குழம்பினைச் சொரியும் மலையை ஒத்துக் காணப்பட்டான் என்ற கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2 : 5)

புத்தேள்நாடு -

{Entry: K11__0768}

இவ்வுலகிற்கும் தேவருலகிற்கும் அப்பாற்பட்ட வீட்டுலகத் தின் இயல்பினைக் கூறுதல்.

அஃதாவது “மெய்யறிவு பெற்ற சான்றோர்கள் விரும்பி உறையும் வானோர்க்கும் உயர்ந்த உலகத்தில் பகலோ இரவோ பற்றுக்களோ வினை நுகர்ச்சிகளோ மனமாறு பாடோ உயர்வு தாழ்வோ ஒன்றும் இன்று” என்று கூறும் காஞ்சிப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று.

இது ‘புலவர் (-ஞானியர்) ஏத்தும் புத்தேள் நாடு’ என்றும் கூறப்பெறும். (பு. வெ. மா. 12-4)

புதல்வற் பயந்த பொலிவு மங்கலம் -

{Entry: K11__0769}

‘பொலிவு மங்கலம்’ காண்க. (இ. வி. 617 - 24)

‘புரை தீர் காமம் புல்லிய வகை’ (1) -

{Entry: K11__0770}

குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகை; அஃதாவது ஐந்திணை தழுவிய அகம்.

காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல். ஐவகைப் பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண் பகுதிக்கு ஒன்றும். இன்னும், இயற்பெயர் சார்த்தி வாராது, நாடும் ஊரும் இதுவென விளங்க வரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப் பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம். (தொ. பொ. 79 இள.)

தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டும் குறிப்புப் பொருந்தின பகுதி. புரை உயர்ச்சியாகலின், உயர்ச்சி யில்லாத காமமாவது: மறுமைப்பயன் பெறும் கடவுள் வாழ்த்துப் போல உயர்ச்சியின்றி, இம்மையில் பெறும் பயனாதலின் இழிந்த பொருள்களின்மேல் செல்லும் வேட்கைக் குறிப்பு; புல்லிய வகையாவது : அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன் பொருட்டானும் ஆக்கத்துமேல் ஒருவன் காமுற்றவழி, அவை அவற்குப் பயன் கொடுத்தல். ‘வகை’ என்றதனானே, வாழ்த்தின்கண் மக்கட் பொருளும் உடன் தழுவினும் அவை கடவுள் வாழ்த்தாம் என்பது.

எ-டு : ‘இமய உச்சிப் பாறையாகிய தவிசில் வேங்கை வீற்றிருந்தாற் போலச் சிங்காதனத்தில் பிற அரசரெல் லாம் வந்து தொழ வீற்றிருந்து பெருநிலமகளும் திரு மகளும் வந்து தழுவ, நற்புதல்வரொடும் கற்புடைத் தேவியரொடும் விளங்கி, மதிக்குடையின் தண்ணிழ லில் ஏழுலகையும் வளர்க்கும் வளவ! நினது தோற் றத்தைப் பிறரெல்லாம் போற்ற, நின் சேவடி உள்ளடி முள்ளொன்றும் நோவ உறாமல் அறம் நின்னைக் காப்ப, நின் ஆணைத்திகிரியால் உலகெ லாம் காத்து ஊழி யூழி நின் உறந்தையோடு வாழ்வா யாக!’ என்றது கடவுளை வாழ்த்தாமல் தனக்குப் பயன்படு வோன் ஒருவனை வாழ்த்தியமையின் ‘புரைதீர் காமம் புல்லிய வகை’ ஆயிற்று. (தொ. பொ. 81 நச்.)

புரைதீர் காமம்புல்லிய வகை (2) -

{Entry: K11__0771}

குற்றமற்ற அகப்பகுதியில் அன்பு அளைந்த காதல் திணை வகை. அகத்திணைகளுள் புகழ்மையொடு பொருந்தாப் பெருந்திணை போன்ற பழிபடும் இழி காமவகை விலக்கித் தூய காதற்பகுதிகளிலும் புகழ்மை பாராட்டுதற்கேற்ற கூறு பாடாண் எனப்படும் என்பது. (புறத். 26 பாரதி)

குற்றம் தீர்ந்த புணர்ச்சி வேட்கையைப் பொருந்திய வகை. (பொ. 288 குழ.)

‘புல்லா வாழ்க்கை வல்லாண்பக்கம்’ -

{Entry: K11__0772}

உயிர்வாழ்க்கையை விரும்பிக் கருதாத வலிய ஆண்பாலின் கூறுபாடு. ‘பக்கம்’ என்றதனால் தாபதப் பக்கம் அல்லாத போர்த்தொழிலாகிய வல்லாண்மையே கொள்ளப்படும். (தொ. பொ. 76 நச்.)

சிறந்து பொருந்தாச் சிறிய வாழ்வினும் வண்மை குன்றா வேளாண்மை. வறுமைக்கு அஞ்சாத் தறுகணர் ஊக்கம் வாகைக் குரித்தாயிற்று. வாழ்க்கையை விரும்பாது வாள் விரும்பிப் போர் மகிழும் வள்ளன்மை எனினும் ஆம். (புறத். 21 பாரதி)

உயிர் வாழ்க்கையை விரும்பாது நிலையான வீரப்புகழை விரும்புதலின் மன வெற்றியாயிற்று. (பொ. 284 குழ.)

மண்ணக வாழ்வே பெரிதென அதனைத் தழுவாமல், இறப் பிற்கு அஞ்சாமல் வீறுகொண்டு புரியும் வல்லாண்மைப் பகுதி. இஃது அரச வாகை, பொருநவாகை என்னும் இருவகை கட்கும் உரித்து. (தொ. புறத். 21 ச. பால.)

புறப்பொருள் வெண்பாமாலை வல்லாண் முல்லையுள் அடக்கும். 8 : 23.

இதனை வீரசோழியம் ‘வல்லாண்பக்கம்’ என்று கூறும். (கா. உரை 104)

புலமை வென்றி -

{Entry: K11__0773}

கற்றோர் பலர் நடுவே ஒருவர் தமது அறிவாற்றலால் மற்றவரை வென்று தம் புலமையை ஆங்கு நிறுவுவதாகிய பாடாண் துறை.

“நம்மாழ்வாரை வழிபட்ட நான், திருமாலே பரம்பொருள் என்பதனைக் கசேந்திரன் வரலாற்றாலும் உணர்ந்து, அப்பெருமானையன்றி, யான் கற்ற கல்வியைச் செல்வர்மனை வாசலுக்குச் சென்று அவரைப் பாடுவதில் செலவிடுவ தில்லை” என்றாற்போன்ற உயர்ந்த கொள்கையைக் கடைப் பிடித்தல் புலமை வென்றியாம். (மா. அ. பாடல். 458)

புலவர் ஆற்றுப்படை (1) -

{Entry: K11__0774}

வேண்டிய வேண்டியவாறே ஈந்தருளும் கடவுளரிடம் அரிய ஞானிகளாகிய அடியாரை ஆற்றுப்படுத்துவது. அஃதாவது “முறையாகிய தவவேடமுடைய அடியவனே! நீ வேங்கட மலைக்குச் சென்று அங்குள்ள பெருமானாகிய சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டால், ஐம்பொறிகட்கும் மயக்கம் தரும் இவ்வுலகத்துன்பம் எல்லாம் நீங்கத் தான் நினைக்கும் அருள் ஈவான் அவ் வாழியோன்“ என்றாற்போலக் கூறும் பாடாண்துறை.

புலவர் - ஞானிகள் (பு. வெ. மா. 9 : 42)

புலவர் ஆற்றுப்படை (2) -

{Entry: K11__0775}

புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புலவராற்றுப்படை இலக்கணம் தொல்காப்பிய நூற்பாவில் இல்லை.

கற்றுவல்ல புலவனாம் வறியவனை, செல்வ நலமுடைய புலவனொருவன், கல்விநலன் பேணிக் கற்றோரைப் போற்றும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதைப் புலவர் ஆற்றுப்படை என்று கொண்டு புறநானூற்றுப் பாடல் துறை அமைந்துள்ளது. (புறநா. 48, 49)

புலவர் ஏத்தும் புத்தேள் நாடு -

{Entry: K11__0776}

நுண்ணிய அறிவினராய் மெய்ஞ்ஞானம் பெற்று ஐம்புலன் களும் வென்ற சான்றோர் எய்தும் வீட்டுலகம், இரவோ, பகலோ பாசமோ வினை நுகர்ச்சியோ மாறுபாடோ தாழ்வு மனப்பான்மையோ இல்லாதது என்று கூறுதல். இது புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சிப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 12-4)

புலன் அறி சிறப்பு -

{Entry: K11__0777}

பகைவர்களது புலத்திலுள்ள நிலையை ஒற்றி வந்து உரைத்த ஒற்றர்க்கு மிகுந்த சிறப்புச் செய்தல். அஃதாவது தாம் ஒற்றி வரும் செயலால் தம்முயிர்க்கே தீங்கு நேரும் என்பதனையும் பொருட்படுத்தாது, இரவும் பகலும் பகைவருடைய ஆநிரை இருப்பிடம் சென்று உணரவேண்டிவற்றை யெல்லாம் உணர்ந்து வந்து சொல்லிய ஒற்றருக்கு ஏனையோரை விட மிகுந்த பசுக்களைக் கொடுத்துச் சிறப்புச் செய்தல் என்னும் வெட்சித்துறை. (பு. வெ. மா. 1 : 17)

புள் நிமித்த அச்சத்தான் எச்சமின்றிக் காலம் கண்ணிய ஓம்படை -

{Entry: K11__0778}

புதுப்புள் வருதலும் பழம்புள் போதலும் (புறநா. 20) பொழு தல்லாப் பொழுதில் கூகை குழறலும் போல்வன புள் ளின்கண் தோன்றிய நிமித்தம்.

இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்திய பாடாண் தலைவனுக்கு ஏதம் வருங்கொல் என்றஞ்சி, அவனுக்குத் தீங்கு இன்றாக ஓம்படை கூறுதலின், ‘காலம் கண்ணிய ஓம்படை’ என்ற பாடாண்துறை ஆயிற்று.

எஞ்ஞான்றும் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொரு வனுக்குத் தீங்கு வந்துழிக் கூறுதலின் இற்றைஞான்று பரிசில் இன்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினான். ஆகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று.

புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண்படலத்து 37ஆம் துறையாகிய ஓம்படை இதனினின்றும் வேறானது.

“அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்னுமிவை நீ அளத்தற்கு அரியை. நின் நிழல் வாழ்வார் பகைவரது தெறல் அறியார்; படைக்கருவிகளை அறியார். பகைவர் கவர்ந்து கொள்ளாத மண்ணினையுடையாய்; அறம் துஞ்சும் செங்கோலினையுடையாய். புதுப்புள் வரினும் பழம்புள் போகிலும் நடுங்குதல் வேண்டாத பாதுகாப்புடையாய்! இவ்வாறாதலின், உலகத்துயிர்களெல்லாம் நினது வாழ்நாள் பற்றி அஞ்சாநிற்கும். (-வாழ்நாள் நினக்குக் குறையாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சும்.)” (புறநா. 20) (தொ. பொ. 91 நச்.)

புள் வழக்கு -

{Entry: K11__0779}

இது ‘பிள்ளைவழக்கு’ என்னும் வெட்சித் துறை. அது காண்க.

(சாமி. 130)

புறத்திணை ஒழுகலாறு -

{Entry: K11__0780}

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.), இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிரு படலம்), இவ்வொன்பதுடன் பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை மூன்றும் சேரப் பன்னிருவகையாகவும் (பு. வெ.மா.) பிரித்துக் கூறப்படும் புறப்பொருள் பற்றிய ஒழுக்கங்கள்.

அறத்தைப் பேணலும் பொருளை ஆக்கலும் வீடு எய்துதற் குரிய நெறி அறிதலும் ஆகிய ஒழுகலாறு இன்ப ஒழுக்கத்தின் மறுதலையாய், ஒத்த கிழவனும் கிழத்தியும் என்னுமளவில் நில்லாமல் தன்னலமும் பிறர் நலமும் கருதிய பொதுஒழுக்க மாய், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் பற்றி நிகழ்தலானும், அகனைந்திணைக்கு ஓதிய முதற்பொரு ளும் கருப்பொருளும் ஆகியவற்றையே கொண்டு நிகழ்தலா னும் அவ்வொழுகலாறு புறத்திணை எனப்பட்டது.

(தொல். புறத். பாயிரம் ச. பால.)

புறத்திணைகளைத் தொகுத்துப் பெயர் கூறித் தொடங்காமைக்குரிய காரணம் -

{Entry: K11__0781}

அகத்திணைகளை உணர்த்துமிடத்துப் பெயரும் தொகையும் கூறித் தொடங்கினாற் போலப் புறத்திணைகளைத் தொகுத் துப் பெயர் கூறித் தொடங்காமைக்குக்காரணம், இவை அகத்திணையினின்று வேறுபட்டன அல்ல, அவற்றின் மறு பக்கமாகிய புறக்கூறுகளே என்பது அறிவித்தற் பொருட்டு. (தொல். புறத். பாயிரம். ச. பால.)

புறத்திணை பன்னிரண்டு எனல் -

{Entry: K11__0782}

புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களுள், வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை நொச்சி தும்பை என்ற ஏழும், அவற்றொடு வாகை பாடாண் பொதுவியல் என்ற மூன்றும், கைக்கிளை பெருந்திணை என்பனவும் சேரப் புறத்திணை பன்னிரண்டு என்று கூறப்படும். அகத்திணை ஏழேயாக, அதன் புறத்திணையும் ஏழேயாதலன்றிப் பன்னிரண்டாதல் பொருந்தாது என்பது தொல்காப்பிய உரையாசிரியர்க ளுடைய கருத்தாம்

பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமைப் பொருளது. பொதுவியல், வெட்சி முதல் தும்பை ஈறாகிய எழுதிணைக் கும் உரிய நல்லாண் மக்களுக்குப் பொதுவானது என்று பன்னிருபடலம் கூறுகிறது. அங்ஙனமாயின் அது புறப் பொருளின் தொடக்கத்தில் கூறப்படல் வேண்டும். மேலும் கைக்கிளையும் பெருந்திணையும் புறம் எனில், அகத்திணை ஏழாகாது ஐந்தாகிவிடும்; அப்பொழுது பெருந்திணை மணங்களாகிய அசுரம் முதலிய மூன்றும் புறப்பொருளாகி விடும்; யாழோர் கூட்டம் ஒன்றே அகப்பொருளாகியிருக்கும். இக்கருத்துக்கள் முன்னோர் நூலொடு முரணுவன ஆதலின், புறத்திணை பன்னிரண்டு என்றல் ஏலாது. (தொ. பொ. 59 இள.)

புறத்திணையியல் -

{Entry: K11__0783}

புறத்திணையியல் தொல்காப்பியத்திலும் இலக்கண விளக் கத்திலுமுள்ள பொருளதிகாரப் பகுதியின் இரண்டாம் இயலாம். தொல்காப்பியப் புறத்திணையியலில் வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்ற ஏழு புறத்திணைகளும், அவை எவ்வெவ் அகத்திணைக்குப் புறனா கும் என்பதும், சிலவற்றின் வகைகளும், எல்லாத் திணைகட்கு முரிய துறைகளும் 36 நூற்பாவில் விளக்கிக் கூறப்பட்டுள.

இலக்கணவிளக்கப் புறத்திணையியல் தொல்காப்பியத்தை அடியொற்றிப் புறத்திணை ஏழு என்று சுட்டி, கரந்தையை வெட்சியுள் அடக்கியும் நொச்சியை உழிஞையுள் அடக்கியும் கூறி, புறப்பொருள் வெண்பாமாலையின் துறைகளையே பெரும்பான்மையும் கொண்டு, அந்நூலிலுள்ள பொதுவியல் கைக்கிளை பெருந்திணை என்ற திணைகளின் துறைகளை ‘ஒழிபு’ என்ற தலைப்பில் குறிப்பிட்டு 21 நூற்பாவில் அமைத் துள்ளது.

புறத்திணையியல் : பெயர்க்காரணம் -

{Entry: K11__0784}

அக ஒழுக்கத்திற்குக் துணையாய் அதன் மறுதலையாகப் புறத்தே நிகழும் ஒழுகலாறு பற்றிய இலக்கணங்களைக் கூறலின் புறத்திணை இயல் எனப்பட்டது. (தொல். புறத். பாயிரம் ச. பால)

புறத்திணை வழுக்களாவன -

{Entry: K11__0785}

காந்தள், வேத்தியற் கூத்தன்றி மறவர் தாமே ஆடும் கூத்தாத லின் வழு.

தானை வீரர் தம் விளையாட்டுப் போட்டிகளில் பனை வேம்பு ஆத்திப் பூக்களை மலைதல், தம்முறு தொழிலாதலின் வழு.

வள்ளிக் கூத்தும், தன்னுறு தொழிலாய் இழிந்தோர் காணும் கூத்தாதலின் வழு.

கழல்நிலையும் உன்ன நிலையும், மறவர் தம்முறு தொழி லாதலின் வழு.

பூவைநிலை, இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமமாகக் கூறலின் வழு.

ஆரமர் ஓட்டல், ஆ பெயர்த்துத் தருதல், வேந்தன் சிறப் பினைப் பிறர்க்குக் கூறுதல், தானே நெடுமொழி கூறுதல், வருதார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தல், பிள்ளையாட்டு என்ற கரந்தைப் பகுதி ஏழும் மறவர் தம்முறு தொழிலாதலின் வழு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் பெரும்படை வாழ்த்து என்ற ஆறும் அரசன்ஆணையை எதிர்பாராமலேயே மறவர் செய்யும் தம்முறு தொழிலாதலின் வழு.

இவ்வாறு புறத்திணை ஏழற்கும் பொதுவான இருபத்தொரு வழுக்கள் கூறப்பட்டுள்ளன. (தொ. பொ. 60 நச்.)

புறத்திறை -

{Entry: K11__0786}

வெட்சிமறவர் இரவிடைப் பகைவர் ஆநிரை தங்கியிருக்கும் அரிய காவலையுடைய பகுதியின் வாயில்கள் வழியே அகத் தோர் புறம்போகாதபடி சூழ்ந்துகொள்ளும் வெட்சித்துறை.

(பு. வெ. மா. 1 : 7)

கவரப்பட்ட ஆநிரைகள் கொண்டு செல்லப்பட்ட இடம் நோக்கிச் சென்று கரந்தை மறவர் அவற்றைச் சூழ்ந்து தங்குதல். (இ. வி. 604 - 6)

பகைவர் மதிலினுட் புகுதலோ மதிலிலிருந்து வெளிச் செல்லுதலோ நிகழ்த்த இயலாதபடி உழிஞை மன்னன் தன் படைகளால் மதிலை நாற்புறமும் வளைத்துப் படைகளைப் பரப்பி மதிலின் புறத்தே தங்கியிருக்கும் உழிஞைத் துறை.

(பு. வெ. மா. 6-10)

தொல்காப்பியம் இப்புறத்திறையை வெட்சித்திணை ஒன்றற்கே கொள்ளும்.

புறத்திறையின் வகைகள் -

{Entry: K11__0787}

ஒற்றற்கு உதவுதல், எழுச்சி, நிரைகாணல், நிரை வளைத்தல் முதலியன. (தொ. பொ. 271 குழ.)

புறத்துழிஞை -

{Entry: K11__0788}

உழிஞைவீரர் வானளாவிய மரங்கள் அடர்ந்த காட்டர ணாகிய காவற்காட்டைக் கடந்து, ஆழம் மிகுந்த அகழியின் வெளிக்கரையில் வந்துசேருதல் பற்றிய உழிஞைத் துறை. அகழி - நீர் அரண். (பு. வெ. மா. 6 : 16)

புறத்துறை -

{Entry: K11__0789}

புறப்பொருள் பற்றிய திணையின் துறை; ‘வீரரைப் பாடும் புறத்துறை யெல்லாம் முடித்து’ (சிலப். 27:46 அரும்)

புறத்தொருங்கிறுத்தல் -

{Entry: K11__0790}

‘(உழிஞைப்) புறத்திறை’ காண்க. (இ. வி. 608 - 10)

‘புறத்தோன் அணங்கிய பக்கம்’ -

{Entry: K11__0791}

பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கம். (தொ. பொ. 68 இள.)

மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருத்திய கூறு. (67 நச்.)

முனைந்து அரண்கொள்ள முற்றிய தலைவன் அகத்தவர் எதிர்ப்பால் வருந்தும் பகுதி. (புறத். 12 பாரதி)

இதனைப் புறத்துழிஞையானுக்குக் கொள்வர் இளம்பூரணர்; அகத்துழிஞையானுக்கே கொள்வர் நச்சினார்க்கினியர். குழந்தை உரையும் அது. இதனை உழிஞைவகையாகக் கொள்வர் பாரதி. இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித்திணைத் துறையாகிய ‘ஊர்ச்செரு’ வினுள் கொள்ளும் (5-3)

வீரசோழியம் இதனைக் ‘காவல்’ என்னும் (கா. 103)

புறநானூற்றுத் துறைகள் -

{Entry: K11__0792}

புறநானூற்றுக்குத் துறை வகுத்தவர் அனைவரும் புறப் பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் முதலிய புதுநூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாக லின், அந்நூல்களைத் துணைக் கொண்டே புறநானூற்றுக்குத் துறை கோடல் வேண்டும். இப்பொழுது வகுக்கப்பட்ட துறைகள் அவ்வளவு பொருத்தமுடையன அல்ல என்பது நச்சினார்க்கினியர் கருத்து. (தொ. பொ. 90 நச்.)

புறப்பாட்டு -

{Entry: K11__0793}

அகமல்லாத புறப்பொருட் செய்திகள் பற்றி அமைந்த புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியவற்றுப் பாடல்கள். புற நானூற்றுக்கே ‘புறப்பாட்டு’ என்ற பெயரும் உண்டு.

‘மீனுண் கொக்கின் (227) என்ற புறப்பாட்டும் அது’ என வரும் நச்சினார்க்கினியருரையுள் காண்க.(தொ. செய். 79 நச்.)

புறப்பொருள் -

{Entry: K11__0794}

அறம் பொருள் இன்பம் என்னும் இவை பெறுவதற்காக வீரத்தைப் புலப்படுத்தும் நோக்கத்தையுடைய புறப்பொருள் ஆகும் புறத்திணைகள். அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என எண் வகையின. (வீ. சோ. 106 உரை மேற்.)

ஐந்திணைக்குப் புறம் ஆவனவும், மூதானந்தம் ஆனந்தப் பையுள் போல்வனவும், அறத்தொடு பட்ட பலவகைப் புறத்திணைச் செய்திகளும் புறப்பொருள் பொதுவியற் படலத்துள் அடங்கும்.

இன்பமாகிய அகப்பொருளுக்குத் துணையாவன ஆகிய அறமும் பொருளும் எல்லாம் புறப்பொருள்களாம்.

புறப்பொருள் திணைகள் -

{Entry: K11__0795}

தொல்காப்பியனார் வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்ற ஏழனையும் புறப்பொருள் திணைகள் என்பர்.

ஐயனாரிதனார் தம் புறப்பொருள் வெண்பாமாலையில், வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை பாடாண் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை எனப் புறப்பொருள் திணைகள் பன்னிரண்டு என்பர்.

வீரசோழிய நூலார் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை நொச்சி தும்பை என்ற ஏழும் புறத்திணை எனவும், வாகை பொதுவியல் பாடாண் என்ற மூன்றும் புறப் புறத்திணை எனவும், கைக்கிளையும் பெருந்திணையும் அகப் புறத்திணை எனவும் கூறுவர். (கா. 106 உரை மேற்.)

இலக்கணவிளக்க நூலார் தொல்காப்பியனார் கூறும் ஏழு புறத்திணைகளையும் குறிப்பிட்டு, பின்னூலார் கூறும் கரந்தையை வெட்சியிலும் நொச்சியை உழிஞையிலும் அடக்கி, அவர் கூறும் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை என்பனவற்றைப் புறப்பொருள் ஒழிபாகக் கொள்வர்.(600, 619)

தொன்னூல்விளக்கநூலார் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை என்ற ஏழே புறத்திணை என்பர் (199)

முத்துவீரியநூலார் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என்று புறத்திணைகளை எட்டாகக் கொள்வர். (பொ. 52)

புறப்பொருள் வெண்பாமாலை -

{Entry: K11__0796}

புறப்பொருளை விளக்குதற்கு எழுந்த இடைக்கால நூல் கொளுவும் உதாரணவெண்பாக்களுமாக அமைந்த இந் நூலின் இறுதிக்கண் பெரும்பான்மை பற்றிய வாகை யொழிபில் வென்றிப் பகுதிக் கொளுக்கள் இன்றி வெண் பாக்களே உள்ளன. சேரர் மரபினரான ஐயனாரிதனாரால் பன்னிரு படலத்தை முதனுலாகக் கொண்டு பன்னிருதிணை களாகப் புறப்பொருளைப் பகுத்து அமைக்கப்பட்ட இச்சிறந்த நூற்குச் சாமுண்டி தேவர் இயற்றிய அரிய பழையவுரை உள்ளது. இதன் உதாரணப் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலிய சிறந்த உரையாளரால் எடுத் தாளப்பட்டுள்ளன. பத்துப்பாட்டின் பாடல்கள் இறுதியில் காணப்படும் வெண்பாக்களில் சில இந்நூலின்கண் உள்ளன. பெருந் திணைப் படலம் முடிய 342, ஒழிபு பகுதியில் 19-ஆக இந் நூலுள் 361 வெண்பாக்கள் உள.

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் ஒன்றற்கு மேற்பட்ட கருத்துடைய துறைகள் -

{Entry: K11__0797}

ஆஞ்சிக்காஞ்சி, ஆனந்தம், இயன்மொழி வாழ்த்து, ஏழக நிலை, கற்பு முல்லை, கனவில் அரற்றல், கல்நீர்ப்படுத்தல், காவல் முல்லை, குற்றுழிஞை, குறுவஞ்சி, கையறுநிலை, கொற்றவை நிலை (வஞ்சி), தன்னை வேட்டல், தார்நிலை, தானை மறம், நல்லிசை வஞ்சி, நெஞ்சொடு மெலிதல், படைவழக்கு, பருவமயங்கல், பூசல் மயக்கு, பேராண்வஞ்சி, மங்கலநிலை, மறக்காஞ்சி, முதுவுழிஞை, மூதானந்தம், விளக்கு நிலை - என்ற இருபத்தாறு ஆம்.

இவற்றுள் முதல்கருத்தைத் துறைச் செய்தியாகக் கொண்டு அடுத்து வருங் கருத்துக்களை அவ்வத்துறைப்பக்கமாகக் கொள்ளும் இலக்கண விளக்கம்.

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் ஒன்றற்கு மேற்பட்ட திணைகளில் வரும் துறைகள் -

{Entry: K11__0798}

1. உட்கோள் - ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை

2. கண்படைநிலை - வாகை, பாடாண்

3. கந்தழி - உழிஞை, பாடாண்

4. கிணைநிலை - வாகை, பாடாண்

5. குதிரை மறம் - தும்பை, நொச்சி

6. கையறுநிலை - கரந்தை, பொதுவியல்

7. கொற்றவைநிலை - வெட்சி, வஞ்சி

8. தழிஞ்சி - வஞ்சி, காஞ்சி

9. தொகைநிலை - உழிஞை, தும்பை.

10. பின்தேர்க்குரவை - தும்பை, வாகை.

11. புறத்திறை - வெட்சி, உழிஞை

12. பெருங்காஞ்சி - காஞ்சி, பொதுவியல்

13. மண்ணுமங்கலம் - உழிஞை, பாடாண்

14. முன்தேர்க்குரவை - தும்பை, வாகை

15. வெறியாட்டு - வெட்சி, பெருந்திணை

என்பனவாம்.

புறப்பொருள்வெண்பாமாலையின் உழிஞைத் துறைகள்-

{Entry: K11__0799}

குடை நாட்கோள், வாள் நாட்கோள், முரச உழிஞை, கொற்ற உழிஞை, அரச உழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயில் உழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முது வுழிஞை, அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானை கைக்கோள், வேற்றுப்படை வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணுநிலை, மண்ணுமங்கலம், மகட்பால் இகல், திறை கொண்டு பெயர்தல், அடிப்பட இருத்தல், தொகைநிலை என்ற இருபத்தெட்டும் ஆம். (பு. வெ. மா. 6)

புறப்பொருள் வெண்பாமாலையின் ஒழிபாம் புறத்துறைகள் -

{Entry: K11__0800}

வாணிக வென்றி, மல்வென்றி, உழவன் வென்றி, ஏறு கோள் வென்றி, கோழி வென்றி, தகர்வென்றி, யானை வென்றி, பூழ் வென்றி, சிவல் வென்றி, கிளிவென்றி, பூவை வென்றி, குதிரை வென்றி, தேர்வென்றி, யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல் வென்றி, பாடல்வென்றி, பிடி வென்றி என்னும் பதினெட்டும் வாகையொழிபாம் புறத்துறைகள்.

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் என்பது ஒன்றும் (கொடுப்போர் ஏத்தல், கொடாஅர்ப் பழித்தல் என இரண்டாகக் கொள்ளினும் அமையும்) பாடாண் ஒழிபாகிய புறத்துறை. (பு. வெ. மா. 18)

புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தைத்துறைகள் -

{Entry: K11__0801}

கரந்தை அரவம், அதரிடைச் செலவு அரும்போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத் தொழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியல் மலிபு, மிகுகுடிநிலை - என்ற பதின்மூன்றும் ஆம். (பு. வெ. மா. 2)

புறப்பொருள் வெண்பாமாலையின் காஞ்சித்துறைகள் -

{Entry: K11__0802}

காஞ்சி எதிர்வு, தழிஞ்சி, பெருங்கொடை வழக்கு, பெருங் காஞ்சி, வாள் செலவு, குடை செலவு, வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலை, தலைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடு முடிதல், மறக்காஞ்சி, பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்ட காஞ்சி, தொடாக்காஞ்சி, மன்னைக்காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக் காஞ்சி, மகட் பாற்காஞ்சி, முனைகடி முன்னிருப்பு என்னும் இருபத்தொன்றும் காஞ்சித் துறைகள்.

பொதுவியலின்கண், முதுமொழிக்காஞ்சி, பெருங்காஞ்சி, பொருள்மொழிக்காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேள்நாடு, முதுகாஞ்சி, காடுவாழ்த்து என்னும் ஆறுதுறைகளும் காஞ்சித் திணையைச் சாரும் காஞ்சிப் பொதுவியற்பால.

மேலும் பொதுவியலுள், முதுபாலை, சுரநடை, தபுதாரநிலை, தாபத நிலை, தலைப்பெயல்நிலை, பூசல்மயக்கு, மாலைநிலை, மூதானந்தம், ஆனந்தம், ஆனந்தப்பையுள், கையறுநிலை என்னும் பதினொன்றும் காஞ்சித்திணையின்பாலவாம். (சிறப்பிற் பொதுவியற்பால) ஆகவே, காஞ்சித் திணையின் துறைகள் முப்பத்தெட்டாம். (பு. வெ. மா. 4, 12, 11)

புறப்பொருள் வெண்பாமாலையின் தும்பைத்துறைகள் -

{Entry: K11__0803}

தும்பை அரவம், தானை மறம், யானை மறம், குதிரை மறம், தார்நிலை, தேர்மறம், பாண்பாட்டு, இருவரும் தபுநிலை, எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு, முன்தேர்க் குரவை, பின்தேர்க்குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை, வெருவருநிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல், தொகை நிலை என்ற இருபத்து மூன்றும் ஆம். (பு. வெ. மா. 69)

புறப்பொருள் வெண்பாமாலையின் நொச்சித் துறைகள் -

{Entry: K11__0804}

மதிலினுள் அடைத்திருந்து மதிலைக் காக்கும் மன்னனுடைய வீரர்கள் நொச்சிப்பூச் சூடி மதிலைக் காத்தலின் மதில் காவல் புறப்பொருள் வெண்பா மாலையில் நொச்சி என்ற தனித் திணையாகக் கொள்ளப்பட்டது.

மறனுடைப் பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், பரிமறன், எயிலது போர், எயில்தனை அழித்தல், அழிபடை தாங்கல், மகள் மறுத்து மொழிதல் என்ற எட்டும் நொச்சித் துறைக ளாம். (பு. வெ. மா. 5)

புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண்திணைத் துறைகள் -

{Entry: K11__0805}

பாடாண்பாட்டு, வாயில்நிலை, கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில் துறை இயன்மொழி வாழ்த்து, கண்படை நிலை, துயிலெடைநிலை, மங்கல நிலை, விளக்கு நிலை, கபிலை கண்ணிய புண்ணிய நிலை, வேள்விநிலை, வெள்ளிநிலை, நாடுவாழ்த்து, கிணைநிலை, களவழி வாழ்த்து, வீற்றினி திருந்த பெரு மங்கலம், குடுமிகளைந்த புகழ் சாற்றுநிலை, மணமங்கலம், பொலிவு மங்கலம், நாள் மங்கலம், பரிசில் நிலை, பரிசில் விடை, ஆள்வினை வேள்வி, பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலி யாற்றுப்படை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, குடை மங்கலம், வாள் மங்கலம், மண்ணு மங்கலம், ஓம்படை, புறநிலை வாழ்த்து (அமரர்கண் முடியும் அறுவகையுள்) கொடிநிலை, கந்தழி, வள்ளி (என்னு மிவை மூன்று), புலவராற்றுப்படை, புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல், கைக்கிளை வகை, பெருந்திணை, துனி நவின்ற பாடாண் பாட்டு, கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம், கடவுள்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கம், குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி, ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி (-ஊரொடு தோற்றம்) என்னும் நாற்பத்தெட்டாம்.(பு.வெ.மா. 9)

புறப்பொருள் வெண்பாமாலையின் பொதுவியல் துறைகள் -

{Entry: K11__0806}

போந்தை, வேம்பு, ஆர், உன்ன நிலை, ஏழகநிலை, கழல்நிலை, கற்காண்டல், கற்கோள்நிலை, கல்நீர்ப்படுத்தல், கல்நடுதல், கல் முறை பழிச்சல், இற்கொண்டு புகுதல் என்னும் பன்னி ரண்டும்;

முதுபாலை, சுரநடை, தபுதாரநிலை, தாபதநிலை, தலைப்பெயல் நிலை, பூசல் மயக்கு, மாலை நிலை, மூதானந்தம், ஆனந்தம், ஆனந்தப் பையுள், கையறு நிலை என்னும் பதினொன்றும்;

முதுமொழிக் காஞ்சி, பெருங்காஞ்சி, பொருள்மொழிக் காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேள் நாடு, முதுகாஞ்சி, காடு வாழ்த்து என்னும் ஆறும்.

முல்லை, கார்முல்லை, தேர்முல்லை, நாண்முல்லை, இல்லாள் முல்லை, பகட்டுமுல்லை, பால்முல்லை, கற்புமுல்லை என்னும் எட்டும்; ஆக முப்பத்தேழு துறைகள். (பு. வெ. மா. 10 - 13)

புறப்பொருள் வெண்பாமாலையின் வஞ்சித்திணைத்துறைகள் -

{Entry: K11__0807}

வஞ்சி அரவம், குடைநிலை, வாள்நிலை, கொற்றவைநிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி, முதுமொழிவஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறைநிலை, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசை வஞ்சி என்ற இருபதும் ஆம். (பு. வெ. மா.3)

புறப்பொருள் வெண்பாமாலையின் வாகைத்திணைத் துறைகள் -

{Entry: K11__0808}

வாகை அரவம், அரசவாகை, முரசவாகை, மறக்களவழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிகவாகை, வேளாண்வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப் பாசறை, அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதில் முல்லை, ஏறாண் முல்லை, வல்லாண் முல்லை, காவல் முல்லை, பேராண்முல்லை, மற முல்லை, குடைமுல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்பு முல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் என்ற முப்பத்திரண்டும் ஆம்.

மேலும் பொதுவியல் முல்லைப்பால சூத்திரத்துள் முல்லை, கார்முல்லை, தேர்முல்லை, நாண்முல்லை, இல்லாண் முல்லை, பகட்டுமுல்லை, பால்முல்லை, கற்புமுல்லை என்ற எட்டும் (இயல்பு மிகுதியாகிய) வாகைத் திணையைச் சார்வனவாம். ஆகவே, வாகைத் துறைகள் நாற்பதாம். (பு. வெ. மா. 8,13)

புறப்பொருள் வெண்பாமாலையின் வெட்சித்திணைத் துறைகள் -

{Entry: K11__0809}

வெட்சி அரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர் கொலை, ஆகோள், பூசல்மாற்று, சுரத்துய்த்தல், தலைத் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலன் அறிசிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை, கொற்றவை நிலை, வெறியாட்டு என்ற பத்தொன்பதும் ஆம். (பு. வெ. மா. 1)

புறமதிலிடைப் போர்த்துறைகள் -

{Entry: K11__0810}

1. மடையமை ஏணிமிசை மயக்கம், 2. கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு என்பன.

பாசி மறம், இடை மதிற்கும் புறமதிற்கும் நடுவேயுள்ள ஊரில் நிகழும் போர்த்திறம். (தொ. பொ. 278 குழ.)

புறவீடு -

{Entry: K11__0811}

யாத்திரைக்கு முன்பு நன் முகூர்த்தத்தில் இராச சின்னத்தைப் புறத்தே அனுப்புதல். ‘வாளைப் புறவீடு விட்டது’ (பு. வெ. மா. 3 : 4 கொளு உரை)

புறன் பற்றிய பன்னிருபடலக் கருத்து -

{Entry: K11__0812}

‘புறன்’ என்பது உறுதிப்பொருள் மூன்றாகிய அறம் பொருள் இன்பம் என்பவற்றுள் பொருள் பற்றியதாய், அறமும் இன்பமும் அகலாமல் வருவது என்பது பன்னிருபடலக் கருத்து. வாகைத்திணைக்கண் ‘கட்டில் நீத்த பால்’ முதல் ‘காமம் நீத்த பால்’ ஈறாகிய ஒன்பது துறைகளும் அறம் பற்றியே கூறுதலின், அந்நூல் ‘புறன்’ என்பதற்குக் கூறிய பொதுஇலக்கணம் பொருந்தாது என்ப. (தொ. பொ. 59 இள.)

பூக்கூறல் -

{Entry: K11__0813}

இது ‘பூக்கோள்நிலை’ என்ற காஞ்சித்துறை; அது காண்க. (சாமி. 142)

பூக்கோள் காஞ்சி -

{Entry: K11__0814}

‘பூக்கோள் நிலை’ காண்க. (புறநா. 293 துறைக் குறிப்பு)

பூக்கோள் நிலை -

{Entry: K11__0815}

பகைவரை நேரில் எதிர் ஊன்றித் தாக்கிப் போர் செய்யும் காஞ்சி வீரர்களுக்கு அரசன் தன் போருக்குரிய காஞ்சிப் பூவை வழங்கிய திறம் கூறும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4:10)

பூசல் -

{Entry: K11__0816}

போர்: ‘ஆன பூசல் அறிந்திலம்’ (கம்பரா. 1096)

கூப்பீடு : ‘மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் // ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்’ (தொ. பொ. 79 நச்.)

பூசல் மயக்கத்தின் பக்கம் -

{Entry: K11__0817}

மன்னன் இறந்துபடவே, அந்நாட்டிலுள்ளார் புலம்பியதைக் கூறுவதும் பூசல் மயக்கம் ஆம். இது ‘சிறப்பிற் பொதுவியற் பால’ துறைகளுள் ஒன்று. (பு. வெ. ம. 11 - 7)

இதனைத் தொல்காப்பியம் சற்று வேறாகக் கூறும்.

‘பேரிசை: மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் // ஆய்ந்த பூசல் மயக்கம்’ (தொ.பொ. 79 நச்.)

பூசல் மயக்கம் -

{Entry: K11__0818}

சிறு குழந்தையான ஆண்மகன் இறந்துபடவே, அவனைச் சேர்ந்த பெரிய சுற்றத்தினர் பலரும், “இப்பிள்ளையைப் பெற்ற தாய் தனக்குச் சுரக்கும் பாலைப் பருகுதற்காம் பிள்ளையை இழந்து தவிக்க, அப்பிள்ளையின் பிரிவால் உறவினர் யாவரும் புலம்பி வருந்தும் துயரத்திற்குக் கூற்றுவன் இரங்குவானோ?” என்றாற் போல வருந்திப் புலம்புதல்.

இது ‘சிறப்பிற் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்று. தொல்காப்பியம் வேறாகக் கூறும். (பு. வெ. மா. 11-6)

பூசல் மயக்கு -

{Entry: K11__0819}

‘பூசல் மயக்கம்’ காண்க.

பூசல் மாற்றின் வகைகள் -

{Entry: K11__0820}

நிரைக்கு உடையோர் வந்து வளைத்தல், எதிர்த்தல், பொரு தல், வெற்றி முதலியன. (தொ. பொ. 271 குழ.)

பூசல் மாற்று -

{Entry: K11__0821}

ஆநிரையைக் கவர்ந்து வரும்போது இடையில் வந்து வழி மறித்த நிரைகாவலரைப் போர் செய்து துரத்துதல். பூசலால் மாற்றுதல் பூசல் மாற்றாம்.

நிரைகொண்டு செல்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல். பூசல் - போரின்முன் நிகழும் ஆர்ப்பு. நிரை கொண்டு போகின்றவர் தம்பின்னே பசுக்களை விளித்துக் கொண்டு தொடர்ந்து சென்று வழியிடைப் போர் செய்த நிரைகாவலர் திரும்பிச் செல்லுமாறு பூசலை மாற்றுதலும், நிரையை மீட்டுக்கொண்டு போகின்றார் தம்பின்னர் வந்து போர் செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்.

(தொ. பொ. 58 நச்.)

இது வெட்சித் திணைத் துறைகளுள் ஒன்று.

பூசலை மாற்றல் - சண்டையிடுதலை நீக்குதல்; பூசல் மாற்றுதல் - சண்டையிடுதலால் தோற்றோடச் செய்தல்.

ஆனிரைகளைக் கவர்ந்து வருங்கால் அவற்றை மீட்கக் கருதிக் கரந்தைப்பூச் சூடிவரும் பகைப்புறத்து மறவரைத் தடுத்து மாறுதலாம். (தொ. புறத். 3 ச. பால.)

இதனை வீரசோழியம் ‘நிரை கொண்டு அவரைத் தடுத்தல்’ (கா. 99) என்னும்.

பூசல் விலக்கு -

{Entry: K11__0822}

இது ‘பூசல் மாற்று’ என்னும் வெட்சித்துறை. (சாமி. 130)

பூதலத்து அரிவையர் வானவரைக் காதலித்த கடவுட் பக்கம் -

{Entry: K11__0823}

‘கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ காண்க.

(இ. வி. 617 - 47)

பூவைசியர் பெயர், தொழில் -

{Entry: K11__0824}

பெயர்கள் : உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர் என்பன.

தொழில்கள் : ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவு என்பன. (பிங். 777, 778)

பூவைநிலை -

{Entry: K11__0825}

மாயவனாகிய திருமால் நிறத்தை ஒத்த நிறமுடைய பூவைப் பூவினை அவன் நிறத்தை ஒத்திருத்தலாகிய சிறப்புப் பற்றிப் புகழ்ந்து கூறும் பாடாண் துறை.

‘மாயோன் மேய.............. பூவைநிலை’ (தொ. பொ. 60 நச்.) காண்க.

(பு. வெ. மா. 9-4)

பூவைநிலைப் பக்கம் -

{Entry: K11__0826}

மன்னனொருவனைத் திருமால் சிவபெருமான் முதலிய கடவுளரோடு ஒப்பிட்டுப் பாடுவதும் பூவைநிலையாம்.

மாயோன் மேய................... பூவைநிலை’ காண்க. (இ. வி. 617 - 5)

பூவை வென்றி -

{Entry: K11__0827}

நன்கு பயிற்றப்படாத நாகணவாய்ப் பறவை, பயிற்சியால் சொற்களைச் சேர்த்துப் பேசிக் கிளியையும் வெல்லும் ஆற்றல் பெற்று விளங்குவதைச் சிறப்பித்தல். இது வாகைத் திணையொழிபாகச் சொல்லப்பட்ட துறைகளுள் ஒன்று.

(பு. வெ. மா. 18-12)

பூழ்வென்றி -

{Entry: K11__0828}

மந்திர தந்திரங்களால் குறும்பூழாளிகள் ஏற்றிய ஆற்றல் மிக்க குறும்பூழ்ப்பறவைகள், அவ்வாய்ப்பில்லாத பிற குறும்பூழ் களை வெல்லும் சிறப்பினைக் கூறுதல். இது வாகைத் திணை யொழிபாகச் சொல்லப்பட்ட தொரு துறை.(பு. வெ. மா. 18-9)

பெண்பாற் கடவுள் வாழ்த்து -

{Entry: K11__0829}

தமக்கு அருள் செய்யும் பெண்தெய்வத்தின் பண்புநலன்களை எடுத்துக் கூறி வாழ்த்தும் பாடாண்துறை.

“தாமரையைத் தன் இருப்பிடமாகக் கொண்டவளும், பாற்கடலில் அமுதத்தொடு தோன்றியவளும், பருத்த நகில்களையும் வெள்ளிய பற்களையும் உடையவளும், காவிரிக்கு இடைப்பட்ட திட்டில் அறிதுயில் பாயல் கொள் ளும் அரங்கநாதனுடைய திருமார்பில் வீற்றிருப்பவளும் ஆகிய திருமகள் என் தலைமேல் என்றும் வீற்றிருக்கின்றாள்” என்றாற் போலப் பாடுவன. (மா. அ. பாடல். 120)

பெருங்காஞ்சி -

{Entry: K11__0830}

“இவ்வுலகம் நிலையாமையையே தன் பண்பாகக் கொண் டிருத்தலின், இன்றோ நாளையோ நம்முயிரை உடலினின்று கூற்றுவன் நீக்குதல் கூடும் என்பதை ஆராயாது, உணர்ச்சி மறந்து, படாத பாடுபட்டுப் பெரும்பொருளைச் சேர்த்து, அதனை வறியோர்க்கு வழங்காது இறுகப் பொதிந்து வைத்து, வாழ்க்கையைப் பாழாக்காதீர்!” என்று உபதேசம் கூறும் இது, புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சிப் பொதுவியற் பால துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 12 - 2)

இதனைத் தொல்காப்பியம் ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை’ (தொ. பொ. 79 நச்.) என்னும்.

பகைவரான வஞ்சியார் போர்க்களிறுகள் காஞ்சியார் செலுத்திய அம்புபட்டுத் தினை யரிந்த தாளினையுடைய மலைகள் போல் தோன்றுமாறு காஞ்சியார் போரிட்ட திறம் கூறும் மறத்துறையும் ‘பெருங்காஞ்சி’ எனப்படும். (பு. வெ. மா. 4 : )

பெருஞ்சோற்றுநிலை -

{Entry: K11__0831}

போர்க்குப் புறப்படு முன்னர், வஞ்சி மன்னன் தன் படை வீரர்க்குப் பெருஞ்சோறு அளித்துத் தானும் அவர்களுடன் இருந்துண்டு உபசரித்தல் என்னும் வஞ்சித்துறை.

(இதனைத் தொல்காப்பியம் ‘பிண்டம் மேய பெருங்சோற்று நிலை’ (தொ. பொ. 63 நச்.) என்னும். (பு. வெ. மா. 3 : 23)

பெருஞ்சோற்று வஞ்சி -

{Entry: K11__0832}

இது வஞ்சித்துறைகளுள் ஒன்று; ‘பெருஞ்சோற்று நிலை’ காண்க. (சிலப். 25 : 144)

பெருஞ்சோறு -

{Entry: K11__0833}

‘பெருஞ்சோற்று நிலை’ காண்க.

‘பெரும்பகை தாங்கும் வேல்’ -

{Entry: K11__0834}

போரிடாமலேயே, ஆற்றல் மிக்க பகைவரைத் தன் தொழில் சிறப்பான் அஞ்சுவித்துப் போரிடாமல் தடுக்கும் வேற்றொழி லின் வன்மை.

அழித்தற் றொழிலையுடைய முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும், முருகற்கு வேல் படையாதலானும், வேற்படையே சிறப்பித்துக் கூறப்பட்டதேனும், ஏனைய படைகளும் ‘மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்பதனான் கொள்ளப்படும். (தொ. பொ. 76 நச்.)

இது வேற்றொழில் வன்மையைக் கண்டு பகைவர் அணுகு தற்கு அஞ்சி நீங்குதலாம். தாங்குதல் - தடுத்தல். இது வேல்வென்றி. (284 குழ.)

‘வென்ற வாளின் மண்ணோ டொன்ற’ என உழிஞையிலும், ‘மாணார்ச் சுட்டிய வாண்மங்கலம்’ எனப் பாடாண் திணை யிலும் கூறிய வாளினை வாகைத்திணையில் கூறாது, ‘பெரும் பகை தாங்கும் வேலினானும்’ என வேலிற்கே வாகை கூறியது, காவற்றொழிலுடைய மாயோன் ஐம்படை போலாது அழித்தற் றொழிற்கே யுரித்தாய், முக்கட் கடவுளும் முருகனும் கூற்றுவனும் ஏந்தி வெற்றி பெறுதற்குச் சிறந்தது என்பது பற்றியாம். (சீவக. 2599 நச். உரை)

“தாம் கைக்கொண்ட கூர்ம்படைக் கருவிகளால் பகைவரை வெற்றி கோடல் யாவர்க்கு எளிது. ஆயின், நல்லபாம்பு உறை யும் புற்றுப்போலவும், கொல்லேறு திரியும் பொதுவிடம் போலவும், ‘மன்னன் பாசறையில் உள்ளான்’ என்ற அளவில் மாற்றாரை அஞ்சுவித்து வெற்றி கொள்ளும் பேரொளி, நெடுவேலினை ஏந்திய என் தலைவன்கண்ணதேயாம்.” (புறநா. 309) நச்.

தம்முடைய வேந்தனைத் தாக்குவதற்குச் சூழ்ந்த பெரிய பகைப்படையினை ஒருவன் தன் வேற்படையால் தடுத்து வென்ற தொழில் வன்மை. இது பொருநவாகைப் பகுதியில் அடங்கும். (தொ. புறத். 21 ச. பால.)

பெரும்படை -

{Entry: K11__0835}

வீரனுடைய புகழைக் கல்லின்கண் பொறித்தலும் அக்கல் லினைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ்சிறப்புக்களைப் படைத்தலும். 60 நச்.

பொருது வீழ்ந்தார்க்கு நடுதற்பொருட்டுக் கொணர்ந்து குளிப்பித்துச் சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல். (புறத். 5 பாரதி)

இது, புறப்பொருள் வெண்பாமாலை பொதுவியற்படலத் தில் ‘இற்கொண்டு புகுதல்’ என்ற 14ஆம் துறையாக உள்ளது.

இது வீரசோழியத்தில் கரந்தையின் வகையாகக் கூறப்பட் டுள்ளது (கா. 100). அஃதாவது தனிவீரனாய் வாட்போர் செய்து இறந்துபட்ட வீரனுக்கு அமைத்த நடுகல்லுக்குக் கோயில் எடுப்பித்து அதனைச் சிறப்பித்தல் என்னும் கரந்தைத் துறை.

பெரும்படைப் பகுதி -

{Entry: K11__0836}

நாட்டப்படும் கல்லிற்குக் கோயில் அமைத்தல், அக்கோயி லுக்கு மதிலும் வாயிலும் அமைத்தல், ஏனைய சிறப்புச் செய்தல் போல்வன. (தொ. பொ. 60 நச்.)

பெரும்பாணர் -

{Entry: K11__0837}

பாணர் சாதி வகையார். யாழ்ப்பாணருள் பேரியாழ் எழீஇ வருபவர். ‘அருட்பெரும் பாணனாரை’ (பெரியபு. திருநீல. யாழ்ப். 3) (L)

பெருமங்கலம் -

{Entry: K11__0838}

பகைவரை அழித்தபின் கவலை சிறிதுமின்றி, அரியணையில் பகை மன்னர் ஏத்த, இருந்த அரசனது வெற்றிச் சிறப்பைக் கூறுதல் என்னும் பாடாண்துறை. இது ‘வீற்றினிதிருந்த பெருமங்கலம்’ என்று கூறப்படும். (பு. வெ. மா. 9 : 20)

பெருமை -

{Entry: K11__0839}

“கூற்றம் மறுத்தற்கரிது; செயற்பாலன வல்லே செய்ம்மின்!” எனப் பெரியோரால் சொல்லப்பட்ட சொற் பெருமை. ‘பெருங்காஞ்சி’ காண்க. (வீ. சோ. 102)

பெருவஞ்சி -

{Entry: K11__0840}

வஞ்சி சூடிப் போருக்குச் சென்ற மன்னன் பகைவர்- நாட்டைத் தீவைத்து எதிரித்தபின்னரும் தனக்குப் பணிந்து வாராத அவர்கள் நாட்டை மீண்டும் சினத்துடன் தீயிட்டு எரித்தல் என்னும் வஞ்சித் துறை. (பு. வெ. மா. 3 : 22)

பெருவளன் ஏத்தல் -

{Entry: K11__0841}

‘கற்பு முல்லையின் மற்றொரு பக்கம்’ காண்க.

(பு. வெ. மா. 13 - 10)

தன் கணவன் தேடித்தந்த செல்வத்தால் விருந்தோம்பும் நலன் தனக்குப் பல்லூழிக்காலம் இவ்வுலகில் நிலைபெறுக என்று தன் புக்ககம் அடைந்து இல்லறம் நடத்தும் தலைவி கூறும் முல்லைப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று. (இ. வி. 619 - 43)

பெற்ற பரிசிலை மனைவிக்கு மகிழ்ந்து கூறல் -

{Entry: K11__0842}

பெருஞ்சித்திரனார் தாம் பெற்ற பரிசிலைத் தம் மனைவிக்குக் காட்டி, “இவை குமணன் தந்த வளம். இவற்றை நீ விரும்பி யாங்கு, என்னைக் கேளாமல், நீ விரும்பியுறைபவர், நின்னை விரும்பியுறைபவர், கற்பினையுடைய நம் சுற்றத்து ஏனையோர் முதலாய எல்லோர்க்கும் வழங்குக.” (புறநா. 163) என்று கூறுதல் போல்வது.

இதனைப் புறநானூறு ‘பரிசில்’ என்ற துறையாகக் கூறும். (அப்பாடற்குப் பின்னுள்ளார் இவ்வாறு துறை வரைந்தனர் என்று கொள்க.) இது ‘நடைவயின் தோன்றும்’ பாடாண் துறைகளுள் ஒன்று. (தொ. பொ. 91 நச்.)

‘பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி, நடைவயின் தோன்றும் இருவகை விடை’ -

{Entry: K11__0843}

இரவலன் புரவலனிடம் பரிசில் பெற்றபின், அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்திக் கூறி உலக வழக்கியலான் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடை என்ற பாடாண் துறை. இருவகையாவன : தலைவன் தானே விடுத்தலும், பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூற விடுத்தலும்.

புரவலன் தானே விடுத்தல். புறநா. 378ஆம் பாடற்கண்ணும், பரிசிலன் தானே போகல் வேண்டு மெனக் கூறவிடுத்தல் பொருநராற்றுப்படை அடிகள் 119-129 இவற்றின்கண்ணும் காணப்படும். (தொ. பொ. 91 நச்.)

பேய் அஞ்சல் -

{Entry: K11__0844}

இது ‘பேய்க் காஞ்சி’ என்ற காஞ்சித் துறை; அது காண்க.

(சாமி. 143)

பேய் ஆட்டு -

{Entry: K11__0845}

இது ‘பேய்க்குரவை’ என்னும் தும்பைத்திணையின் துறை அது காண்க. (சாமி. 137)

பேய் ஓம்புதல் -

{Entry: K11__0846}

போர்க்களத்தில் புண்பட்டுக் குற்றுயிராய்க் கிடந்த வீரனை இரவு நேரத்தில் பாதுகாக்கும் சுற்றம் ஏதும் இல்லாமை கண்டு பேய்களே அவனைப் பாதுகாத்தல் என்னும் காஞ்சித்துறை.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘பேய்நிலை’ என்னும் (4 : 16) தொல்காப்பியம் ‘புண்ணோற் பேஎய் ஓம்பிய பேய்ப்பக்கம்’ என்னும் (தொ. பொ. 79 நச்.) (இ. வி. 615)

பேய்க்காஞ்சி -

{Entry: K11__0847}

போர்க்களத்தில் புண்பட்டுக் கிடந்த வீரர்கள்தம் கண்கள் வீரத்தால் கனல விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தும், அவர்களை அச்சுறுத்துவதற்காகப் பேய்மகள் இறந்த விலங்குகளின் குடரைச் சூடிக்கொண்டு நிமிர்த்தும் குறுக்கி யும் உடம்பைச் செயற்படுத்துச் சிரித்தும் சுழன்றும் அவ் வீரரை விடாதிருந்து அவர்களுக்கு அச்சமுண்டாக்க முயலும் காஞ்சித் துறை. (பு. வெ. மா. 4 : 17)

பேய்க்குரவை -

{Entry: K11__0848}

அரசன் களம் வகுத்துப் போரிடற்குத் தும்பை சூடி ஏறிவரும் தேருக்குப்பின்னும் முன்னும் பேய்கள் (தமக்கு நிரம்பப் பிணம் தின்னக் கிடைக்கும் என்ற உவகையோடு) ஆடிய செயலைக் கூறும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 : 19)

பேய்தொடுதல் -

{Entry: K11__0849}

இது ‘தொட்டகாஞ்சி’ என்ற காஞ்சித் துறை; அது காண்க.

(சாமி. 143)

பேய்நிலை -

{Entry: K11__0850}

போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடந்த வீரன் உயிர் போமளவும் அவனை ஓரியும் நரியும் பற்றித் துன்புறுத்தாத வாறு பேய் பாதுகாத்து வந்த ‘பேய்ப் பக்கம்’ என்ற காஞ்சிப் புறத்துறை. இது ‘பேய் ஓம்புதல்’ எனவும் கூறப்படும். (பு. வெ. மா. 4 : 16)

பேய்ப்பக்கம் -

{Entry: K11__0851}

(தொ.பொ. 79 நச்.) - பேய்நிலை (2) அது காண்க.

பேயாடு குரவை -

{Entry: K11__0852}

‘பேய்க்குரவை’ காண்க. (இ. வி. 611 - 19)

பேரண்ட வாழ்த்து -

{Entry: K11__0853}

இது பாடாண் பகுதியில் அமரர்கண் முடியும் அறுமுறை வாழ்த்தைச் சார்ந்தது. திருமாலினது உந்தியந்தாமரையில் தோன்றிய பிரமனால் படைக்கப்பட்ட உலகினை வாழ்த்து வது.

“உலகம் அழிந்தொழியும் யுகாந்த காலத்தின் பின்னர்ப் பெருமான் பிரமன் வாயிலாகப் படைப்பித்த அண்ட கோடிகளுள், மேருவை நடுவாகக் கொண்டமைந்த பதி னான்கு உலகங்களுள், வெளியே பெரும்புறக்கடலை யுடையதாய், உள்ளே சக்கரவாள கிரியால் சூழப்பட்டு, ஒன்பது கண்டமாகப் பிரிக்கப்பட்டு, ஏழ்பெருங்கடலும் ஏழ்பெருந்தீவும் கொண்டு, மேருவைத் தன் நடுவே தாங்கி, ஐம்பது கோடி யோசனை அளவுடைய தாகிய இப்பூமண் டலம் வாழ்க!” என்று வாழ்த்தியவாறு. (மா. அ. பாடல் 131)

பேராண் முல்லை -

{Entry: K11__0854}

பகைவருடைய போர்க்களத்தை அடைந்து, தன்வாள் மின்னப் பகைவர் யானைப்படை ஒட, அரசன் தன் வலிமை யால் பொருது தனக்குப் போர்க்களத்தை உரிமையாகக் கொண்டு வெல்லும் வாகையியல்பினைக் கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8 : 26)

பேராண் வஞ்சி -

{Entry: K11__0855}

போரிடுவதற்கண் நிகழும் அறமுறை சிறிதும் பிறழாது, (கடவுளர் கோயில்கள், துறவிகள் இருக்கை, நான்மறை அந்தணர் இல்லம் இவற்றை நலியாது) பகைவரொடு போரிட்டு வெற்றி கண்ட சிறந்த வீரர்களுக்கு அரசன் மிகவும் அருள் சுரந்த செய்தியைக் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3 : 9)

பேராண்வஞ்சிப் பக்கம் -

{Entry: K11__0856}

எதிரூன்றிய காஞ்சியாராகிய பகைவர் பணிந்து நட்புக் கொண்டு சிறந்த திறைப்பொருள் தருதலால், சினம் நீங்கப் பெற்று வஞ்சிவேந்தன் மீண்டு வருதலும் பேராண் வஞ்சியே யாம். (பு. வெ. மா. 3 : 10)

‘பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசல் மயக்கம்’ -

{Entry: K11__0857}

பெரும்புகழுடையவனாகி மாய்ந்தான் ஒருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றம் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கம்; என்றது, சுற்றத்தார் அழுகைக் குரல் விரவி எழுந்த ஓசையை. ஆய்தல் என்னும் உரிச்சொற்பொருள் உள்ளதன் நுணுக்க மாம். ‘மாய்ந்த மகன்’ என்பது மகளிர் சுற்றத்தால் சூழ்ந் திருக்கப்பட்ட இறந்த வீரனைக் குறித்தது.

மறம் பற்றிய காஞ்சித்துறைகளுள் இஃது ஒன்று.

(தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் ‘சிறப்பிற் பொது வியற் பால’ துறைகளுள் (11-6) ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

இது வீரசோழியத்துள் ‘மயக்கம்’ எனப்படுகிறது. (கா. 102)

‘பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கம்’ -

{Entry: K11__0858}

பெரிய புகழுடையவனாய் இறந்த ஆண்மகனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் இறந்தமை குறித்து அழுத மயக்கம்.

பிற முன் தலைப்புள் காண்க. (பொ. 77 இள.)

பேரியற் காஞ்சி -

{Entry: K11__0859}

கேட்டின் இயல்புகளைப் புலவர் எடுத்துக் கூறும் துறைவகை. இது ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை’ என்று தொல் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. (தொ. பொ. 29 நச்.) (திவா. பக். 234)

பொங்கத்தம் பொங்கோ -

{Entry: K11__0860}

போரில் தோற்றவர் - ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல். (திவ். பெரியதி 10 - 2-1 வியாக்)

பொதுமொழிக் காஞ்சி -

{Entry: K11__0861}

புறநானூறு 75ஆம் பாடலின் துறை ‘பொதுமொழிக் காஞ்சி’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. உலகின் நிலையாமையை உணர்ந்து பொதுவாகக் கொள்ளத்தக்க கருத்தினை மக்கள் மனநிலையொடு பொருத்திக் கூறுவது இத்துறைபோலும். பொதுமொழி - சிறப்பில்லாத மொழி (புறநா. 58, 35 உரை).

“பரம்பரையாக வரும் அரசச் செல்வத்தைச் சிறியோன் பெரிதாகக் கருதி அதன்கண் நீங்காத பற்றுக்கொள்வான்; விழுமியோனாகிய வீரனுக்கு அது குளத்துள் கிடந்து வாடிப்போன நெட்டியினும் நொய்தாகத் தோன்றும்” (புறநா. 75) என்ற நலங்கிள்ளியின் பாடல் இத்துறைப்பாற் படுத்தப்பட்டுள்ளது.

பொதுவியல் -

{Entry: K11__0862}

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை பாடாண் என்ற ஒன்பது புறப்பொருள் திணைகளிலும் கூறப்படாமல் எஞ்சி நிற்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறும் புறப்பொருள் வெண்பாமாலையில் பத்தாம் பகுதி.

பொதுவியல் காஞ்சி என்ற புறத்திணை இலக்கணம் -

{Entry: K11__0863}

பொதுவியலாவது, பல போர்களையும் செய்து போர்க் களத்து இறந்துபட்ட வீரர் பலருக்கும் உரியது ஆதலின், அது வெட்சி முதல் தும்பை ஈறாகிய எல்லாத் திணைகளுக்கும் பொதுவானது. காஞ்சி என்பது பெருந்திணைக்குப் புறனாய் நிலையாமையைக் குறிப்பது. இவ்வாறாதலின், ‘பொதுவியல் காஞ்சி’ என்ற பாகுபாடு (பு. வெ. மா. 12) பொருந்தாது என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 59)

பொதுவியல் கையறு நிலை -

{Entry: K11__0864}

அரசன் இறந்துபடவே, அவனைச் சார்ந்து வாழ்ந்தோர், “நெஞ்சமே! ‘ஈ!’ என்று வந்தவர்க்கு ‘இல்லை’ என்று கூறியறி- யாத நம் மன்னன் இறந்துபட்டானாக, பொலிவிழந்த புலவர் போன்று நீ செயலற்றிருக்கிறாயா? அன்றிக் கவலையற்றிருக் கிறாயா? அப்புலவர் போன்று நீயும் இரங்கத்தக்காய்” என்றாற்போல நெஞ்சொடு கிளந்து மிகவும் துயருற்ற செய் தியைக் கூறும் ‘சிறப்பிற் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 11 : 14)

பொதுவியல் கையறு நிலையின் பக்கம் -

{Entry: K11__0865}

இறந்துபட்ட தலைவனுடைய புகழுக்குரிய அருஞ்செயல் களை, “உலகம்புகழ நம் தலைவன் விசும்படைந்தானாக, அவன் வீரமும் ஈரமும் புகழ்ந்து பாடி உலகத்துயிர்கள் தடு மாறுகின்றன” என்றாற்போல எடுத்துக் கூறிப் புலம்புதலும் ‘சிறப்பிற் பொதுவியற்பால’ துறைகளுள் ஒன்றான ‘கையறு நிலை’ என்றே கொள்ளப்படும். (பு. வெ. மா. 11 : 15)

பொருண் மொழி -

{Entry: K11__0866}

உறுதிப் பொருள் பற்றிய மெய் வார்த்தை. ‘பொய்க்கரி போகன் மின் பொருண்மொழி நீங்கன்மின்’ (சிலப். 30 : 192) (L)

பொருதல் -

{Entry: K11__0867}

வெட்சி மறவர் பகைவருடைய ஆநிரை காத்து நின்ற வீரர் களொடு போரிடுதல் என்னும் வெட்சித்துறை. ‘முற்றிய ஊர் கொலை’ நோக்குக. (வீ. சோ. 99)

பொருநர் ஆற்றுப்படை -

{Entry: K11__0868}

வள்ளலை நாடித் தன் வறுமை நீங்கிச் செழிப்புடன் வரும், இயங்கள் இயக்குதலில் வல்ல பொருநன், வழியிடைக் கண்ட வறுமை மிக்க பொருநனை விளித்து, தனக்குப் பரிசில் ஈந்த வள்ளல் இருப்பிடத்தைக் கூறி அவன் ஆண்டுச் சென்று பரிசில்பல பெற்று வறுமை தீருமாறு அவ்வழியே செலுத்தும் பாடாண்துறை. எ.டு. புறநா. 394. (பு. வெ. மா. 9 : 30)

பொருநர் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்’ -

{Entry: K11__0869}

இசைக் கருவிகளையுடைய பொருநர் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடாகிய பொருநர்ஆற்றுப்படை. பொருநர் தத்தம் சாதியில் திரியாது வருபவர். அன்னோர் ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணிபாடுநரும் எனப் பலராவர்.

(தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண் படலத் துத் துறைகளுள் ஒன்று. (9 : 30)

எ-டு : பொருநராற்றுப்படை என்னும் பத்துப்பாட்டுள் இரண்டாவது பாடல்.

பொருந வாகை -

{Entry: K11__0870}

மேம்பட்ட ஒருவன் தன் புகழுடனும் பிற சிறப்புக்களுடனும் பிறர் புகழையும் சிறப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவர் தனக்கு ஒப்பாகாமை பற்றி அவரை இகழ்தல் தகாது எனக் கூறுதல்.

பொருநுதல் - ஒப்புநோக்குதல். (பு. வெ. மா. 8 - 12)

பொருநன் -

{Entry: K11__0871}

ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனும் சென்று இயம் இயக்கிப் பாடும் இசைவல்லோன். (தொ. பொ. 91 நச்.)

பொருபடை அகலாப் போர்புரிநிலை -

{Entry: K11__0872}

‘இருவரும் தபுநிலை’ காண்க. களம் வகுத்துத் தும்பை சூடிப் போரிடும் இருதிறத்து வேந்தர் படைகளின் தலைவரும் இறந்தபின்னரும், போரிடுதலை நீக்காது இருவர் படைகளும் “இறுதிவெற்றி யாருடையது?” என்பதனைக் காணுமாறு தம்முள் போரிட்டுக்கொண்டிருக்கும் செய்தி கூறும் தும்பைத்துறை. (பு. வெ. மா. 7 : 12) (இ. வி. 611 - 12)

பொருபுவி -

{Entry: K11__0873}

1. போர்க்களம் 2. பாலைநிலம். (L)

பொரும் பாசி -

{Entry: K11__0874}

இது பாசிநிலை என்னும் உழிஞைத்துறை. அது காண்க.

(சாமி. 135)

பொருமதிலின் அடை தொகை -

{Entry: K11__0875}

இது தொகைநிலை என்னும் உழிஞைத் துறை. அது காண்க.

(சாமி. 136)

‘பொருள் இன்று உய்த்த பேராண்பக்கம்!’ -

{Entry: K11__0876}

பகைவரைப் பொருளாக மதியாது செலுத்திய பெரிய ஆண்மைத் திறம். இது வஞ்சி திணைத்துறை.

அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில் கிழார் கூறிய தகடூர் யாத்திரைப் பாடல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 63 நச்.)

முன்னர் மாராயம் பெற்றவனே இத்துறை நிகழ்த்துவான்.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சிப்படலத்துப் ‘பேராண்வஞ்சி’ என்ற ஒன்பதாவது துறையாகக் கொண் டுள்ளது.

இது வீரசோழியத்து வஞ்சி வகையுள் ‘நிரவும் அழிகை’ என்ற துறைக் கருத்துக்கு அடிப்படையாவது போலும். (கா. 101).

எ-டு : “பல்சான்றீரே! பல்சான்றீரே! இடுமுள் வேலிப் பாதுகாப்பிலுள்ள // கல்லென் ஆரவாரத்தையுடைய பாசறைக்கண்ணுள்ள பல்சான்றீரே! // நீவிர் பல நாள் தங்கிவைத்தும், வலிய எதிர்வந்து போர் // செய்யீராயுள்ளீர். நும்மீது எம்வீரர் படையெறிதல் யாண்டையது? // எம் வேந்தன் நும் மேற்சென்று தான் வலியப் போரில் நும்மை // யெறியமாட்டான். நீவிர் பலராயுள்ளீர் என்று எமது ஆற்றலை // இகழன்மின். நும்வேந்தன் இவர்ந்து வரும் யானைக்கு எதிராகஅன்றி, // எம்தலைவன் தன் இலங்கிலைவேலினை ஏந்தான்போலும்!” // (புறநா. 301)

பொருள்மொழிக் காஞ்சி -

{Entry: K11__0877}

மெய்யுணர்ந்த முனிவர் தம் வாழ்க்கையில் அனுபவித்துக் கண்ட உறுதிப்பொருளை, “அறவழியே ஒழுகி, தீய மனமயக் கத்தொடு செயற்படாமல், எல்லா உயிர்களிடத்தும் அரு ளொடு வாழ்ந்து, தம் வாழ்க்கையைப் பயனுடைத்தாகக் கழித்தலே செயற்பாலது” என்பது போன்றன அறிவுரையாகக் கூறுதல் என்னும் பொதுவியல் துறை. இது காஞ்சிப் பொது வியற்பால துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 12-3)

பொருளும் பொருட் காரணமும் -

{Entry: K11__0878}

பொருளும் பொருட்காரணமும் புறத்திணையைச் சார்ந்தன என்பர்.

உழவு, ஏனைய தொழில்கள், வரைவு, வாணிகம், வித்தை, சிற்பம், என்ற ஆறுவகைத் தொழிலிலும் நிலம், களம், காலேயம், மெய்ப்பொருள், மெய்ப்பண்டம் என்ற ஐவகைப் பொருள்களிலும் அரசாங்கத்தின் உதவி தனக்கு என்றும் நிலவுமாறு தொடர்புகொண்டு வாழும் வாழ்க்கையே நல்வாழ்க்கையாம். வாழ்க்கையின் செயல் நேரிய காரணங் களால் பொருளீட்டல். (வீ. சோ.106 உரை மேற்)

காலேயம் - புல்உணா விலங்குகள்.

பொருளொடு புகறல் -

{Entry: K11__0879}

நிலையாத இயல்புடைய இவ்வுலகத்துப் பொருள்களின்மீது வரும் பற்றுக்களை அறுத்து, உண்மையான தத்துவப் பொருளை ஆய்ந்து பொறிவசத்தனாகாமல் வாழ்வதே நல்லறிவாகும் என்பது போன்றனவாகக் கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 : 33)

இதனைத் தொல்காப்பியம் ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்னும்.

எ-டு : புறநா. 188; பதிற். 74

பொருளொடு புணர்ந்த பக்கம் -

{Entry: K11__0880}

அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் முதலியனவும், புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருள் கூறுபாட்டிடத்துப் பெற்ற வாகைப்பகுதி. ‘பக்கம்’ என்றத னான் மெய்ப்பொருள் உணர்த்துதலும் கொள்ளப்படும். (தொ. பொ. 76 நச்.)

‘பக்கம்’ என்றதனான், ஒற்று, தூது, வினை செயல்வகை, குடிமை, மானம் என வருவன எல்லாம் கொள்ளப்படும்; புதல்வற்பேறும் கொள்க. (75 இள.)

மெய்ப்பொருள் பற்றிய உள்ளப் பரிசு. (புறத். 21 பாரதி)

மிக்க பொருளுடைமையான் பொருள் வென்றி யாயிற்று.

(பொ. 284 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘பொருளொடு புகறல்’ என்னும்; வீரசோழியம் ‘பொருள்’ என்னும் (கா. 104)

எ-டு : தமது செயல்களால் அறிவை மயக்கும் மக்களைப் பெறாதவர்க்கு வாழ்வின் பயனாகிய இன்றி யமையாப் பொருள் இல்லை. (புறநா. 188 நச்.)

“வேத விதிப்படி விரதம் மேற்கொண்டு தேவர் மகிழ வேள்வி களைச் செய்து, நின்தேவியது வயிற்றில் காவற்கு அமைந்த அரசு துறைபோகிய வீறுசால் புதல்வனைப் பெற்று; அதனால் இவ்வுலகத்தார்க்கு அமைந்த முனிவர் கடன் (கேட்டல்), தேவர் கடன் (வேட்டல்) பிதிரர்கடன் (நன்மக்கட் பேறு) என்ற கடன்களை இறுத்த வேந்தே! அவற்றை யெல்லாம் வியந்தேனல்லேன்; நின்னை நல்வழிப்படுத்திய முதிய புரோகிதனை, ‘வண்மையும் வளனும் மாண்பும் எச்சமும் தெய்வமும் பிற எல்லாப் பொருளும் தவமுடை யோர்க்கே உரியன’ என்று சொல்லி, உன்னுடைய தவ வேடத்தால் அவனைக் காடு சென்று தவம் புரிவித்த அதுவே நான் வியப்பது.” (பதிற். 74)

அரசர் முதலானோர் தத்தம் நிலையில் செம்மாந்திருத் தற்குரிய பொருளுடைமையொடு திகழும் பகுதி.

ஈண்டுப் பொருளாவது பொன் முதலாகிய செல்வங்களும் கல்வியும் தவமும் பிறவும். இவை ஒருவர்க்குப் பிறரினும் மிக்கிருப்பின் வாகையாம்.

அந்தணர்க்குப் பொருளாவது நோன்பும் தவமும் முற்றிச் செந்தண்மை நிறைந்து திகழ்தல். அரசர்க்குப் பொருளாவது படைகுடி முதலிய அங்கங்கள் ஆறனாலும் நிறைந்து விளங் குதல். வாணிகர்க்குப் பொருளாவது மலைபடு பொருள், கடல்படுபொருள், எண்வகைக் கூலம், பொன் மணி ஆகிய வற்றால் சிறந்து நிற்றல். வேளாண் மாந்தர்க்குப் பொரு ளாவது நீர் வளம் தப்பாத நன்செய்யும் புன்செய்யும் ஆகிய நிலப்பெருக்கமும் பகட்டினப் பெருக்கமும் உடைமையாம். (தொ.புறத். 21 ச.பால)

பொலிவு மங்கலம் -

{Entry: K11__0881}

பகைவரை வென்று தன் நாட்டை நலம் செய்து காக்கும் மன்னன், புதல்வனைப் பெற்று மகிழ்ந்த பொலிவைக் கண்டு சான்றோர் இப்புதல்வன் பிறந்ததால் விண்ணோர்கள் மகிழ்வதாகவும், உலகிலுள்ளார் புகழ்வதாகவும், பகைவர்கள் மாறுபாடு நீங்கியதாகவும் வாழ்த்தும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 23)

போந்தை வேம்பு ஆர் எனத் தானையர் பூமலைதல் -

{Entry: K11__0882}

பனை வேம்பு ஆத்தி என்ற தமிழக மூவேந்தரின் அடையாளப் பூக்களை அவ்வம் மன்னர்தம் படைவீரர்கள் ஏனைய வெட்சி முதலிய திணைப்பூக்களோடு, அடையாளம் கண்டுபிடிப் பதன் எளிமைக்காகச் சூடிக் கொள்ளுதல்.

இப் பூமலைதல் வெட்சியின் கரந்தைப் பகுதி எனவும், தம் ஆநிரை கைப்பற்றப்பட்டது கேட்டு நெடுநில வேந்தரும் கதுமென எழுவர் ஆதலின், நிரை மீட்டற்கண் அடையாளப் பூப் புகழப்பட்டது எனவும் கூறுப. (தொ. பொ. 63 இள.)

ஆட்டுக்கடாவும் யானையும் நாயும் கோழியும் குறும்பூழும் வட்டும் சூதும் தருக்கமும் முதலியவற்றால் தமக்கு வரும் வெற்றிப் புகழைத் தாம் எய்துவதற்குத் தத்தம் வேந்தர் அறியாமல் படைத்தலைவர் தம்முள் மாறாய் நின்று ஆடுங்கால், இன்ன அரசர் படையாளர் வென்றார் என்றற்கு அவரவர் பூவினைச் சூடி ஆடுவர் என்பதும், தன்னுறு தொழில் என்பதும், அதனால் இச்செயல் புறத்திணை வழு என்பதும் கொள்ளப்படும். அரசன் ஏவலின் இப்பூக்களைச் சூடின், தும்பைத் திணையாம். இப்பூக்களைப் புகழ்ந்து கூறின் பாடாண்திணையாம். (60 நச்.)

போர் -

{Entry: K11__0883}

இது திறப்படப் பொருதல் என்னும் இலக்கண விளக்க வெட்சியின் இரண்டாம் பகுதியின் (கரந்தை) துறை. (சாமி. 130)

இஃது அரும்போர் மலைதல் எனவும் படும்.

(பு. வெ. மா. 2 : 4)

போர் அவி கொடுத்தல் -

{Entry: K11__0884}

இஃது அவிப்பலி என்னும் வாகைத்துறை; அது காண்க. (சாமி. 141)

போர்க்களத்து ஒழிதல் -

{Entry: K11__0885}

வெட்சி வீரரை எதிர்த்து இறுதிகாறும் போர் செய்து அவர்களுடைய படைக்கலங்கள் மேல் பட்டமையால் உரு மாறிக் கரந்தை வீரனொருவன் போர்க்களத்தில் விழுப் புண்பட்டு இறந்ததனைக் கூறும் கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2 : 6)

போர்த்தொடக்க வெட்சியின் துறைகள் -

{Entry: K11__0886}

காந்தள், போந்தை, வேம்பு, ஆத்தி என்ற அடையாளப் பூச் சூடுதல், வள்ளிக் கூத்து, கழல் நிலை, உன்ன நிலை, பூவை நிலை, அமரோட்டல், ஆ பெயர்த்துத் தருதல், வேந்தன் சிறப் பெடுத்துரைத்தல், நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்றிரு வகைப்பட்ட பிள்ளை நிலை, பிள்ளையாட்டு, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்து ஆகி யன போர்த் தொடக்க நிலையாகிய வெட்சித் திணையின் கண் நிகழ்வன ஆதலின், இவை இருபத்தொன்றும் ஆகோள் அல்லாத பிற வெட்சிவகைத் துறைகளாம். (தொ. புறத். 5 பாரதி)

போர்ப்பூ -

{Entry: K11__0887}

நிரை கவரச் செல்லும்போது அணியும் வெட்சி, நிரை மீட்கச் செல்லும் போது அணியும் கரந்தை, பகைமேற்செல்லும் போது அணியும் வஞ்சி, தன்னை எதிர்த்தவர்களை எதிர் ஊன்றி வெருட்ட முற்படும்போது அணியும் காஞ்சி, பகை வரது மதிலை முற்றுகையிடும்போது அணியும் உழிஞை, அம்மதிலைக் காக்க அகத்தோர் சூடும் நொச்சி, இருதிறப் படைஞரும் புறத்தே களம் வகுத்துப் போரிடும்போது அணியும் தும்பை, வென்ற வீரர் அணியும் வாகை என்னு மிவை போர்ப்பூக்களாம்.

ம section: 125 entries

மகட்கோள் மறுத்தல் -

{Entry: K11__0888}

‘இது மகள் மறுத்து மொழிதல்’ என்னும் நொச்சித்திணைத் துறை. (சாமி. 136).

மகட்பால் இகல் -

{Entry: K11__0889}

நொச்சியரசனுடைய மகளை மணம் புணர விரும்பிய உழிஞை மன்னன் நிலையைக் கூறும் உழிஞைத்துறை. அஃதாவது நொச்சியான்மகளுடைய பேரழகில் மயங்கி, அவள்தந்தை மதிலைக் கைப்பற்றி அவளைத் திறைப்பொரு ளாகக் கொள்ள விரும்பிய உழிஞை மன்னன், மதிற்புறத்தே தனிமையில் தங்கி மதிலைக் கைப்பற்ற இயலாது வருந்தும் வருத்தத்தை அவள் காரணமாக அடைந்த துன்ப நிலையைக் கூறுவது. (பு. வெ. மா. 6 : 29)

மகட்பால் காஞ்சி -

{Entry: K11__0890}

படையெடுத்து வந்த வஞ்சிவேந்தன், காஞ்சிமன்னனுடைய மகளைத் தனக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்க, அதற்கு அவன் மறுத்தலைக் கூறும் காஞ்சித்திணைத் துறை. அஃதாவது “நின் மகளைத் தரின் போரினை நிறுத்துவேன்; இன்றேல் தொடர்வேன்” என்று கூறும் வஞ்சி வேந்தன் கூற்றைக் கேட்டவர்கள், “நம் அரசன்மகள் பெறுதற்கு எளியவள் என்று கருதி இகழ்ந்து பேசும் பகையரசன் நம் மன்னனுடைய அம்புகளுக்கு இலக்காகிக் கருதியது முடியாமல் தோற்றோடுவோன்” என்று கூறுதல் போல்வன. (பு. வெ. மா. 4 : 24)

இதனை ‘நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி, மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்’ என்று தொல்காப் பியம் கூறும். (தொ. பொ. 79 நச்.)

மகப்பயத்தல் -

{Entry: K11__0891}

இது ‘பொலிவு மங்கலம்’ என்ற பாடாண்துறை. அது காண்க.

(சாமி. 145)

மகப் பெறாது அழுங்கல் -

{Entry: K11__0892}

வாழ்க்கைப் பயன்களுள் இன்றியமையாத செல்வமாகிய மக்கட் செல்வம் இல்லாக் குறையினால் மனம் நோதல் என்னும் பொதுவியல் துறை.

“மைந்தர்களது வாய்முத்தத்தைச் சுவைக்காத வாய் வாய் ஆகாது; அவர்களது மழலைமொழி கேளாத செவிகள் செவிகள் ஆகா; அவர்களுடைய சிறிய அடிச்சுவடுகள் தோயா மார்பு மார்பு ஆகாது; அவர்களது சிறுவிளையாட் டைக் கண்டு மகிழாக் கண்களும் கண் அல்ல” என்றாற் போலக் கூறுதல். (மா. அ. பாடல். 299)

மகள் மறுத்து மொழிதல் -

{Entry: K11__0893}

உழிஞைமன்னன் நொச்சிமன்னனிடம் அவனுடைய மகளைத் தனக்கு மணம் செய்து தருமாறு கேட்பவே, அதனை அவன் மறுத்துக் கூறுதல் என்னும் நொச்சித்துறை.

இதனை மறவர்க்கு உரித்து என்பர். (பு. வெ. மா. 5 : 9)

மகள் மறுத்தோன் மதிலை முற்றுதல் -

{Entry: K11__0894}

மகள் மறுத்தோன் என்பவன், மதிலகத்திருந்த வேந்தன். அவனிடம் அவன்மகளைத் தனக்கு மணம் செய்து கொடுத் தல் வேண்டும் என்று கேட்டு அவனால் மறுக்கப்பட்ட காரணத் தால், மறுத்த அம்மன்னனுடைய மதிலை முற்றுகை யிட்டவன் உழிஞை வேந்தன். மகள் மறுத்தோனுடைய மதிலை முற்றுதலைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘மகட்பால் இகல்’ என்ற உழிஞைத் திணையாகக் கொள்ளும். மதிற்போர் அல்லாதது ‘மகட்பாற் காஞ்சி’யின்கண் அடங்கும் (பு. வெ. மா. 4 : 24) அவை காண்க. (தொ. பொ. 68 நச்.)

மகளிரொடு மணந்த மணமங்கலம் -

{Entry: K11__0895}

‘மணமங்கலம்’ என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (9 : 22); அது காண்க.

வீரம் சான்ற வேந்தன் காமத்திலும் குறைவுறாது தனக்கு ஒத்த அரசனுடைய மகளாகிய கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி தன் மார்பினைத் தழுவி இன்புறுமாறு அவளை மணந்த மங்கலச் செய்தியைக் கூறும் பாடாண் துறை.(இ. வி. 617 - 23)

மகிழ்ச்சி -

{Entry: K11__0896}

போரில் கணவன் இறந்து பட்டானாக, அவனுக்குப் பின் தான் உயிர்வாழ்தலை வெறுத்த தலைவி அவன் இறந்த களத்திலேயே விரைவில் உயிர் நீத்ததைக் கண்டோர் வியந்து கூறும் பொதுவியல் புறத்துறை; வீரசோழியத்தில் தொல் காப்பியத்தை ஒட்டிக் காஞ்சித்திணைத் துறையாகக் கொள் ளப்பட்டுள்ளது. தலைவி மகிழ்வோடு உயிர் நீத்தமையின் இது மகிழ்ச்சி எனப்பட்டது. (வீ. சோ. 102)

மங்கல நிலை -

{Entry: K11__0897}

இரவில் நன்கு தூங்கி யெழுந்த அரசன்முன் மங்கலமான செய்திகளைக் கூறுதல். அஃதாவது, “பகையரசர் சுவர்க்கம் அடைய விரும்பின், உன்னிடம் மாறுபட்டுப் போருக்கு எழுவர்; வேற்றரசர்கள் தம் நாடுகளைத் தம் வசமே வைத்துக் கொள்ள வேண்டுமெனின், நின்னை அடிபணிந்து வாழ்வர்; மகளிர் இன்பம் வேண்டின் நின்மார்பினை முயங்கிப் பெரு மகிழ்வுறுவர்.” என்பது போன்று அவன் அறம்பொருளின் பம் பற்றிச் செய்யும் நற்செயல்களைப் பிறருடைய செயல்கள் மேலிட்டு விளக்கும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 10)

மங்கலநிலைப் பக்கம் -

{Entry: K11__0898}

அரசன் கங்குலில் பொழுது புலருங்காறும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று ஐம்பொறி இன்பமும் ஆரத் துய்த்த சிறப்பினைக் கூறும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 11)

மங்கலவண்ணம் -

{Entry: K11__0899}

மங்கல அடையாளமான வெண்ணிறம். பிறந்தநாள்வயின் மன்னன் வெள்ளாடை அணி பூண்பது மரபு. (தொ. பொ. 91 நச்.)

மட்டு ஈதல் -

{Entry: K11__0900}

இது ‘கட்காஞ்சி’ என்ற காஞ்சித் துறை; அது காண்க. (சாமி. 143)

‘மடையமை ஏணிமிசை மயக்கம்’ -

{Entry: K11__0901}

மதிலகத்து மடுத்தல் அமைந்த ஏணி சார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கம். (தொ. பொ. 69 இள.)

மீதிடு பலகையொடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசை நின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தல். இவை தனித்தனி வருதலும் இரண்டும் ஒரு சேர வருதலும் கொள்ளப்படும். (68 நச்.)

தொடையமைந்த ஏணிப்படிகளின்மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முள் கலந்து மலைதல். ஏணியின் பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுவதால் ‘மடையமை ஏணி’ எனப்பட்டது. (புறத். 13 பாரதி)

அகழியின் மீது இடுகின்ற பலகையொடு சேர்த்துச் செய்யப் பட்ட ஏணிமேல் நின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தல். மடை - பலகை. மதில் ஓரத்தில் அகழ் இருப்பதால் அகழின்மேல் போடப்படும் பலகையொடு சேர்த்தே மதில்மேல் சார்த்தும் ஏணி செய்யப்பட்டிருக்கும் (278 குழ.)

இத்துறை புறத்தோன் அகத்தோன் என்ற இரு திறத்து உழிஞையார்க்கும் பொது. (68 நச்.)

இஃது உழிஞைத்திணைத் துறைகளுள் ஒன்று. இது புறமதிற் போர்.

மண்டைப் பாணர் -

{Entry: K11__0902}

உண்கலம் ஏந்தி இரக்கும் பாணர் வகையினர். பாணர், இசைப் பாணரும் யாழ்ப் பாணரும் மண்டைப்பாணரும் எனப் பலராவர். (தொ. பொ. 91 நச். உரை)

மண்ணு மங்கலம் -

{Entry: K11__0903}

பெரும்புகழ் படைத்த மன்னன் புண்ணியநீரில் நீராடிய சிறப்பைக் கூறும் பாடாண்திணைத் துறை. மண்ணுதல் நீராடல்.

இஃது ஆண்டுதோறும், முடிபுனைந்த நாளன்று நிகழ்த்தும் புண்ணிய நீராட்டாகும். (இதனைத் தொல்காப்பியம் ‘சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலம்’ என்கிறது.) (பு. வெ. மா. 9 : 36)

மண்ணு (மணந்த) மங்கலம் -

{Entry: K11__0904}

மதிலகத்திருந்த பகைமன்னன் தன்னிடம் தோற்றுத் தன் அடிகளைத் தொழும்வண்ணம் முற்றுகையிட்ட புறமன்னன், மதிலைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுதல் என்னும் உழிஞைத் துறை. மதிலைக் கைக்கொண்ட மன்னன் வெற்றி நீராடுதல் பற்றி இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ‘மண்ணு மங்கலம்’ என்றே பெயர் சுட்டுவர்.

(பு. வெ. மா. 6 : 28)

இதனை ‘மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்’ என்று தொல்காப்பியம் சுட்டும். (பொ. 91 நச்.)

மணச்சிறப்பு -

{Entry: K11__0905}

இது மணமங்கலம் என்ற பாடாண்துறை அது காண்க.

(சாமி. 145)

மணமங்கலம் -

{Entry: K11__0906}

வீரம் மிக்க வேந்தன் தன் உரிமைமகளிர் இன்பத்தால் பெருமகிழ்வுறுமாறு அவர்களொடு கூடிய சிறப்பினைச் சொல்லும் பாடாண்துறை.

இது ‘மகளிரொடு மணந்த மணமங்கலம்’ எனவும் படும் (இ. வி. 617- 23) (பு. வெ. மா. 9 - 22)

மதலை வாழ்த்து -

{Entry: K11__0907}

பெரிய புனிதமான மாடத்தைத் தாங்கும் தூண்களை வாழ்த்தும் பாடாண்துறை.

“நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் புனித புளியமரத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள முன் மண்டபத் தூண்கள் சிங்கங்கள் சுமப்பன போல அமைக்கப்பட்டு அழகிய போதிகைகளை யுடையனவாய்க் காணப்படுகின்றன” என்றாற் போலக் கூறுதல். (மா. அ. பா. 125)

மதில் -

{Entry: K11__0908}

கோட்டையின் பாதுகாவலான சுற்றுச்சுவர். கோட்டை மதில், புறமதில் - இடைமதில் - அக மதில் - என மூவகைப்படும். மதில் என்ற சொல் ஆகுபெயராய்க் கோட்டையை உணர்த்த லும் உண்டு. (தொ. பொ. 275 குழ.)

மதில்குமரி மணத்தல் -

{Entry: K11__0909}

இது மணந்த மங்கலம் என்னும் உழிஞைத் துறை;

‘மண்ணு மங்கலம்’ எனவும் படும்; அது காண்க. (சாமி. 136)

மதில்சீர் சொல்லல் -

{Entry: K11__0910}

இது ‘முது உழிஞைப் பக்கம்’ என்னும் உழிஞைத் துறை. அது காண்க. (சாமி. 135)

மதில் நிலை -

{Entry: K11__0911}

வாளேந்திய உழிஞை வீரர் பகைவரின் நீண்ட மதிலினுடைய உயரம், அகலம், திண்மை முதலியவற்றை எடுத்துக் கூறுதல்.

(சாமி. 134)

இஃது ‘ஆரெயில் உழிஞை’ எனவும் வழங்கும்.

(பு. வெ. மா. 6 : 11)

மதில் பாய்தல் -

{Entry: K11__0912}

இது மூதுழிஞை என்னும் உழிஞைத்துறை அது காண்க.

(சாமி. 135)

‘மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கம்’ -

{Entry: K11__0913}

மதிலை மேற்கோடற்குப் பரந்த மதிலோர் பக்கம். ‘அக மிசைக்கு இவர்ந்தோன் பக்கம்’ காண்க. (தொ. பொ. 69 இள.)

‘மதில் மிசைக்கு இவர்ந்தோர் பக்கம்’ -

{Entry: K11__0914}

மதில்மேல் ஏறி அகற்றப்படாது ஊன்றிய மறவர் பக்கம் ‘அக மிசைக்கு இவர்ந்தோன் பக்கம்’ காண்க. (புறத். 13 பாரதி)

மதில் மேடையிலுள்ள கருவிகளும் பொறிகளும் -

{Entry: K11__0915}

வளைவில் பொறி - வளைந்து தானே அம்பு எய்யும் விற்பொறி;

கரு விரல் ஊகம் - கரிய விரல்களையுடைய குரங்கு போலக் கடிக்கும் பொறி ; இது குரங்குப் பொறி; கல் உமிழ் கவண் - கல்லை வீசி எறியும் கவண் என்ற பொறி; பரிவுறு வெந்நெய் - மதில் மீது ஏற முயலும் பகைவர் மீது காய்ச்சிய எண்ணையை ஊற்றும் பொறி; பாகு அடு குழிசி - பகைவர் மேல் ஊற்றும் பொருட்டு எண்ணெயைக் காய்ச்சவும், செம்பினை உருக்க வும் பயன்படுத்தப்படும் பெரிய மிடாக்கள்;

காய்பொன் உலை - இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை;

கல்லிடு கூடை - கவணில் வைத்தெறியும் கற்களிட்டு வைக்கும் கூடை;

தூண்டில் - மதில்மேல் ஏறுவோரை மாட்டி இழுக்கும் தூண்டில் போன்ற கருவி;

தொடக்கு - கழுத்தில் மாட்டி முறுக்கும் சங்கிலி;

ஆண்டலை அடுப்பு - மதில்மேல் ஏறுவோர் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப் பொறி;

கவை - மதில்மேல் ஏறுவோர் கழுத்தில் கொடுத்துக் கீழே தள்ளுதற்கான இருப்புக் கவை ;

கழு - இருப்புலக்கை ;

புதை - அம்புக் கட்டு ;

புழை - வெந்நீரை ஊற்றி மதில்மேல் ஏறுவோர் முகத்தில் அடிக்கும் குழாய்; தீ வீசும் குழாயுமாம்;

கை பெயர் ஊசி ; மதில்மேல் ஏறும் பகைவர் கையைக் குத்தும் ஊசி;

சென்றெறி சிரல் - மதில்மேல் ஏறுவோரைக் கொத்தும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறி;

பன்றி - பன்றிப்பொறி;

பணை - மூங்கில் போன்ற இரும்புக் கம்பிகள்;

கணையம் - வளைதடி;

கோல் - ஈட்டி, வாள், வேல்;

அரி நூற் பொறி - மதில் மேல் ஏறுவோர் உடலை அறுக்கும் நூல்போன்ற பொறி;

நூற்றுவரைக் கொல்லி - ஒரே எடுப்பில் நூறுபேரைக் கொல்லும் பொறி;

தள்ளி வெட்டி, களிற்றுப் பொறி, புலிப் பொறி, தகர்ப்பொறி, கழுகுப் பொறி, விழுங்கு பாம்பு, குடப்பாம்பு, வண்டிப் பொறி என இவை போல்வன பல. (தொ. பொ. 275 குழ.)

மதில்வேந்தன் மகட்கேட்கும் இகல் -

{Entry: K11__0916}

இது ‘மகட்பாலிகல்’ என்னும் உழிஞைத் துறை அது காண்க.

(சாமி. 136)

மதிலகத்து ஊர் -

{Entry: K11__0917}

கோட்டையின் அகமதிலுக்கும் இடைமதிலுக்கும் இடைப் பட்டது ‘ஊர்’ எனப்படும். ஊரில் அமைச்சர் படைத்தலைவர் வணிகர் உழுவித்துண்ணும் வேளாளர் முதலிய செல்வர்கள் இருப்பர். (தொ. பொ. 275 குழ.)

மதிலகத்துக் களஞ்சியங்கள் -

{Entry: K11__0918}

கோட்டையுள் இருப்போர்க்குப் பல ஆண்டுகளுக்கு வேண்டிய உணவுப்பொருள் சேர்த்துவைக்கும் பல பெரிய களஞ்சியங்கள் அதனகத்தே இருக்கும். இருக்கவே, பகை வர்கள் பல ஆண்டுகள் மதிலை முற்றுகையிட்டபோதும் உணவுக் குறைபாடு உண்டாகாது. (தொ. பொ. 275 குழ.)

மதிலகத்துக் கோயில் -

{Entry: K11__0919}

மும்மதில்களும் அகழும் காவற்காடும் முதலிய காவல் அமைந்த சூழலில் கோட்டையின் அகமதிலுள்ளே அரச குடும்பத்தினர் வைகும் மனை அமைந்திருக்கும். கோ - அரசன்; இல் - இருப்பிடம். (தொ. பொ. 275 குழ.)

மதிலகத்துப் புறஞ்சேரி -

{Entry: K11__0920}

இடைமதிலுக்கும் புறமதிலுக்கும் இடைப்பட்டது, புறஞ்சேரி யாகும். சேரி - சேர்ந்திருக்கும் இடம். புறஞ்சேரியில் எல்லாக் குடி மக்களும் இருப்பர். இங்கே மிகுந்த பரப்புடைய விளை நிலமும், வற்றா நீர்க் கிணறுகளும் இருக்கும்.

(தொ. பொ. 275 குழ.)

மதிலின் நிலை எடுத்தியம்பல் -

{Entry: K11__0921}

‘ஆரெயில் உழிஞை’ காண்க.

“நொச்சி வீரர் பலரையும் அழித்தாலும் இம்மதிலைக் கைப்பற்றுதல் அரிது” என்று மதிலை முற்றுகையிட்ட உழிஞைவீரர்கள் உளம் கொள்ளும் வகையில், உயர்வு அகலம் திண்மை முதலியன பொருந்திய மதிலின் சிறப்பினை, புறத்தே முற்றுகையிடுவோர் எடுத்துக் கூறும் உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 11) (இ. வி. 608 - 11)

மதிலேறுதல் -

{Entry: K11__0922}

‘தொல் எயிற்கு இவர்தல்’ காண்க. (வீ. சோ. 103)

மதிற்குமரியொடு மணந்த மங்கலம் -

{Entry: K11__0923}

‘மண்ணு மங்கலம்’ காண்க. (பு. வெ. மா. 6 - 28)

வெளியே முற்றுகையிட்ட வேந்தன் பகைவருடைய மதிலா கிய அழிவில்லாத கன்னித்தன்மை உடையாளைத் தன் கைப்படுத்தி மங்கலநீராடிய செய்தியைக் கூறும் உழிஞைத் துறை. (இ. வி. 608 - 28)

மயக்கம் (1) -

{Entry: K11__0924}

புகழுடையன செய்து துஞ்சிய பெருமக்களைக் கூடி நின்று சுற்றத்தார் புலம்புதல் என்ற காஞ்சித் துறை.

‘பேரிசை மாய்ந்த................ பூசல் மயக்கம்’ காண்க.(வீ. சோ. 102)

மருநிலம் -

{Entry: K11__0925}

காவற் காட்டிற்கும் கிடங்கிற்கும் இடையே, பகைவர் மதிலை அணுகாமல் பார்த்துக்கொள்ள, மரம் செடி கொடிகள் இல்லாத வெட்ட வெளியாக இருக்கும். நிலம். (தொ. பொ. 275 குழ.)

மருவலர் நிரையைத் தருக எனல் -

{Entry: K11__0926}

வெட்சிவேந்தன், தன் நாட்டிற்கும் பகை நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப்புறத்தைக் காக்கும் தன் முனைப்புலக் காவலரான தானைத்தலைவரை அழைத்துப் பகைமன்னர் ஆநிரையைப் போர்க்கு அறை கூவி அழைக்கும் அடையாள மாகக் கைப்பற்றி வருமாறு பணிக்கும் வெட்சித்துறை.

‘தண்டத் தலைவரைத் தருகெனப் பணித்தல்’ காண்க.

(இ. வி. 603 - 1 உரை)

மல்வென்றி -

{Entry: K11__0927}

மல்லனொருவன் தன் தோளைத்தட்டி ஆரவாரித்துத் தன் எதிரியைக் கட்டிப்பிடித்துத் தூக்கி மேலே வீசி எறிந்து வென்ற வெற்றிச் சிறப்புக் கூறுவது; வாகைத் திணை பற்றிய ஒழிபு பதினேழனுள் ஒன்று. (பு. வெ. மா. 18-3)

‘மலர்தலை உலகத்து மரபுநன் கறியப்’ பலர் செலச் செல்லாக் காடுவாழ்த்து’ -

{Entry: K11__0928}

அகன்ற இடத்தையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறையினைப் பலரும் பெரிதும் உணரும்படியாகப் பிறந்தோ ரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதல்.(தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் காஞ்சிப் பொது வியற்பால் துறைகளுள் இறுதியாயது (12-6). வீரசோழியத் துள் இது ‘வாழ்த்து’ என்று சுட்டப் பெறுகிறது. (கா. 102)

“களர்நிலமாகப் பரந்து, கள்ளிமரங்கள் ஓங்கப் பெற்று, கூகைகள் பகலிலும் குழறும்படியான முதுகாட்டில், பிணஞ் சுடும் விறகுத் தீயில் பேய்மகளிர் அஞ்சுவரத் தோன்ற, காதல்மகளிர் தம் காதலர் இறந்துபாடு கருதி அழுத கண்ணீர் சுடலையின் வெண்ணீற்றினை அவிக்கிறது. அம்முதுகாடு தான், எல்லாரையும் புறங்கண்டு உலகுக்கெல்லாம் சென்று முடிதற்குரிய இடம் தானேயாகித் தன்னைத் புறங்காண வல்லவரைத் தான் கண்டறியாது!” (புறநா. 356)

மலைந்த பூ -

{Entry: K11__0929}

சேரசோழபாண்டியராகிய மூவேந்தர்களின் படையிலுள் ளோர், தம்மிடையே வேறுபாடு தெரியத் தத்தம் அடையாள மாக முறையே சூடிய பனை ஆத்தி வேம்பு என்ற பூக்களைப் புகழ்தல். (தொ. பொ. 60 நச்.; பு. வெ. மா. 10 - 1, 2, 3)

மலை வருணனை -

{Entry: K11__0930}

தெய்வத் தொடர்புடையதாய்ப் பலரானும் வணங்கப்படும் மலையை வாழ்த்தும் பாடாண்துறை.

மலை சிவபெருமானையும் திருமாலையும் பிரமனையும் ஒத்திருக்கின்றது என்று சிலேடைப் பொருளால் அதன் சிறப்புக்களைத் தேவரோடு இணைத்துப் பாடி வாழ்த்துதல் போல்வன மலைவாழ்த்தாம். (மா. அ. பாடல். 68 - 70)

மழபுலவஞ்சி -

{Entry: K11__0931}

காவல் மிக்க பகைவருடைய எல்லைப் பகுதிகளைக் கொள் ளையடித்து, அங்கு வாழ்வோர் வருந்த அவர்கள் இல்லத் தைப் பாழ்படுத்தி, அவர்கள் சேமித்து வைத்திருந்த மணி முத்து பொன் முதலிய உயரிய செல்வங்களையும் அவர் களுடைய ஏவலாட்களையும் போர்மேல் வந்த வஞ்சிவேந்த னுடைய வீரர்கள் கவர்ந்துகொண்ட செய்தியைக் கூறும் வஞ்சித்துறை. (பு. வெ.மா. 3 : 15)

மறக்களவழி -

{Entry: K11__0932}

அரசனை உழவனோடு ஒப்பிட்டுக் கூறுதல்; அஃதாவது “போர்க்களம் என்னும் வயலிலே, வேலாகிய கோலினை ஓச்சி, யானையாகிய காளையை விடுத்து உழுது, கோபம் ஆகிய வித்தினை விதைத்து வளர்த்து, புகழ் என்னும் தானியத்தை விளைத்தெடுக்கும் எம்மன்ன (னாகிய உழவ) ன் காத்தலால் எம் நாட்டு மக்களுக்கு வறுமை என்றும் உளதாகாது” என்று கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8-5)

மறக்கள வேள்வி -

{Entry: K11__0933}

போர்க்களமாகிய வயலில் குருதியை நீராகப் பாய்ச்சி யானையை உழவுக்குப் பயன்படுத்தி, வாளையே ஏராகக் கொண்டு உழுது, வீரர்களாகிய அரிகளைக் கடாவிட்டு, அரசர்களின் தலையை அடுப்பாக அடுக்கிக் குருதியை உலையாகப் பெய்து இறந்தோர் உடற்கூறுகளைச் சமைத்துத் தோள்களைத் துடுப்புகளாகக் கொண்டு துழாவிய ஊன் சோற்றைப் பேய்களுக்கு அருத்தும் வேள்வி. (சிலப். 26 : 231 - 234, 242 - 244; 28 : 132)

மறக்காஞ்சி -

{Entry: K11__0934}

பகை மன்னனான வஞ்சிவேந்தன் வியந்தும் அஞ்சியும் தலை நடுக்கம் உறும் வகையில், காஞ்சிவீரன் ஒருவன் தன் தறு கண்மை விளங்கப் போரிட்டு, கருந்தலையையும் வெள்ளிய கொழுப்பையும் சிவந்த தசைத்தொகுதியையும் உணவுக்காகப் பற்றிக்கொண்டு பருந்தும் கழுகும் பறந்து செல்லுமாறு தன் வீரத்தை வெளிப்படுத்தும் காஞ்சித் துறை.

வீரன் தன் மார்பில் ஏற்பட்ட விழுப்புண்களைக் கிழித்துக் கொண்டு உயிர் நீக்கும் வீர நிலையும் மறக்காஞ்சியின்பாற் படும். இதனைத் தொல்காப்பியம் ‘பண்புற வரூஉம் பகுதி நோக்கிப், புண்கிழித்து முடியும் மறக்காஞ்சி’ (தொ.பொ. 79 நச்.) என்று சுட்டும். (பு. வெ. மா. 4 : 14)

மறக்காஞ்சியின் பக்கம் -

{Entry: K11__0935}

‘மறக்காஞ்சி’ இரண்டாம் பத்தியுள் காண்க. (பு. வெ.மா. 4 : 15)

மறங்கடைக் கூட்டிய குடிநிலை -

{Entry: K11__0936}

வீரத்தொழில் முடித்தலையுடைய குடியின் நிலைமையைக் கூறுதல் ஆகிய வெட்சியின் புறனடைத்துறை.

குடி என்பது ஆடவருக்கும் மகளிருக்கும் பொதுவாகும்.

ஆண்பால் பற்றி வந்த குடிநிலையை ‘இல்லாண் முல்லை’ எனவும், பெண்பால் பற்றி வந்த குடிநிலையை ‘மூதில் முல்லை’ எனவும் கூறுப. (தொ. பொ. 62 இள.)

இது புறப்பொருள் வெண்பா மாலையின் கரந்தைப் படலத்தில் ‘குடிநிலை’ என்று 14 ஆம் துறையாக உள்ளது.

இஃது இலக்கண விளக்கத்தில் வெட்சித்திணையின் முதற் கூற்றின் 20ஆம் துறையாகவும் இரண்டாம் கூற்றின் 17ஆம் துறையாகவும் உள்ளது. (இ. வி. 603, 604)

மறங்கடைக் கூட்டிய கொடிநிலை -

{Entry: K11__0937}

கொடியை எடுத்துச் சேறல் போர்த்தொடக்கத்தில் நிகழ்வது ஆதலின், போர்த்தொடக்கக் குறியாகிய வெட்சித்திணையில் வெட்சி வீரர்களின் வீரத்தைத் தொகுத்துக் காட்டும் கொடியினை உயர்த்திக்கொண்டு ஆநிரை கவரப் புறப்படு தல் வெட்சித்திணைத் துறையின் பாற்படும். (தொ.புறத். 4 பாரதி)

புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண் படலத்துள் இக் ‘கொடி நிலை’ என்ற துறையுள்ளது. (பு. வெ. மா. 9 : 39)

இது வீரசோழியத்துப் பொருட்படலப் பாடாண் வகையுள் ஒன்றாக இடம் பெறுகிறது. (கா. 106)

மறங்கடைக் கூட்டிய துடிநிலை -

{Entry: K11__0938}

வீரத்தை ஒன்று சேர்க்கும் முரசின் சிறப்புக் கூறும் வெட்சிப் புறனடைத் துறை. (தொ. பொ. 59 நச்.)

போர் அற்றபோது முழங்காதிருந்த முரசினைப் போர்த் தொடக்கத்தில் பரவி அதற்குப் பலியிட்டு எடுத்து முழக்குத லால் போர்வீரர் பலரும் ஒன்று சேர்வர். ஆதலின் இம்முரசு போர்க்களத்து மறவர்களுடைய வீரத்தை ஒன்று சேர்க்கும் துடி எனப்பட்டது. இத்துடிக்குப் பலியிட்டுப் பரவி இதனை முழக்குதலும் வெட்சித் திணையின் பாற்படும்.(புறத். 4 பாரதி)

இத்துடிநிலை புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் துறைகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டுள்ளது. (1 : 19)

இஃது இலக்கண விளக்கத்தில் வெட்சியின் முதற் கூற்றின் 20 ஆம் துறையாகவும், இரண்டாம் கூற்றின் 26ஆம் துறையாக வும் உள்ளது.

மறப்பாசி -

{Entry: K11__0939}

‘மறனுடைப் பாசி’ எனப்படும். விரைவுடன் வந்து தம்மைத் தாக்கும் உழிஞைமறவரை எதிர்நின்று தடுத்துத் தேவர் களுக்கு விருந்தாக நொச்சிவீரர் விண்ணுலகு எய்தும் செய்தி யைக் கூறும் நொச்சித் துறை. (பு. வெ. மா. 5 - 2)

மறமுல்லை -

{Entry: K11__0940}

மன்னன் தன் வீரனுக்குத் தகுந்த பரிசில் முதலியவற்றை வழங்கிச் சிறப்பிக்கையில், அவ்வீரன் தன் கடமையாற்றின மைக்கு எப் பரிசிலையும் விரும்பாமலும் பகைவரிடம் தான் கொண்ட சீற்றம் நீங்காமலும் இருக்கும் வீரத்தின் உயர் நிலையைக் கூறும் வாகைத் துறை.

போரிடத்து வேட்கையால் தன் வணக்கத்திற்குரிய அரசன் கூற்றிற்கும் செவி சாய்க்காத வீரத்தின் நிலை இது.

(பு. வெ. 8 : 27)

மறவரை மீட்க எனப் பணித்தல் -

{Entry: K11__0941}

வெட்சி மறவர் இரவிற் களவினாற் கவர்ந்த ஆநிரைகளைக் கரந்தைமன்னன் மீட்டு வருமாறு தன் மறவரைப் பணிக்கும் கரந்தைத் துறை இது புறப்பொருள் வெண்பாமாலையில் ‘கரந்தை’ என்றே திணைப் பெயர் சொல்லப்படும்.

(பு. வெ. மா. 2-1)

மறனுடைப்பாசி -

{Entry: K11__0942}

எயில் காத்த சினமன்னர் வீரசொர்க்கம் அடைந்ததைக் கூறும் நொச்சிப் புறத்துறை. (பு. வெ. மா. 5-2)

‘மறுவில் செய்தி மூவகைக் காலமும்’ நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்’ -

{Entry: K11__0943}

காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்ற மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கம்; கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவர் என்று உணர்க. (தொ. பொ. 75 நச்.)

குற்ற மற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம்; இறந்த காலம் முதலிய மூன்று காலத்தினையும் நெறி யினான் தோற்றிய அறிவன் பக்கம் எனின், அது முழுதுணர்ந் தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்று. (74 இள.)

அறிவன் என்றது கணிவனை; மூவகைக் காலமும் ஆகாயத் தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர் கோளும், தூமமும், மீன் வீழ்வும், கோள் நிலையும், மழை நிலையும், பிறவும் பார்த்துப் பயன் கூறுதல். (இள.)

வழுவற்ற வகையால் நிகழ்ச்சிகளை வெயில் மழை பனி என்னும் தன்மையால் வேறுபட்ட முக்காலத்திற்கும் ஏற்ப முட்டின்றிக் கடைபோக நடத்தி முடிக்கும் அறிஞன் திறம்; பெரும்பொழுது ஆறும், வெயில் மழை பனி என்ற மூன்றில் அடங்கும். மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் என்றது, தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பனி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளைவும் நுண்ணிதின் உணர்ந்து காலத்தால் ஆற்றுவ ஆற்றிப் பயன் கொள்ளும் மதி நுட்பம் நூலோடுடைய அமைச்சர். (புறத். 20 பாரதி.)

நாளும் கோளும் கண்டது போலக் கூறி வயிறு வளர்ப்போர் கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணும் அளவினர். அவர்களை எதிர்கால விளைவுகளை எடுத்துக் கூறும் கணிகள் என்பதன்றி, மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. (பாரதி.)

குறைபடாத செயற்பாடுடைய நாள், கோள், ஞாலம் ஆகிய இம்மூன்றானும் நிகழும் மூவகைக் காலங்களையும் நூலானும் நுண்ணறிவானும் அறிந்து செயலாற்றிய அறிவன் வாகை யாகிய பகுதி.

நெறியின் ஆற்றுதலாவது விருப்பு வெறுப்பின்றி கால நிலைமைகளைக் கணக்கியலால் அறிந்து அவற்றால் மன்பதைக்கு நேரும் நன்மை தீமைகளை உணர்ந்து நன்மை பெருகவும் தீமை அழியவும் மந்திரங்களாலும் வேள்விக ளாலும் செயலாற்றலும் ஆற்றுவித்தலும் ஆம்.

இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்திலும் தவறில்லாத ஒழுகலாற்றினை முறையொடு செய்யும் அறிவர். முக்காலத் திற்கும் ஒத்த நன்மைதீமைகளை ஆராய்ந்தறிந்து அவற்றை எடுத்துக் கூறி, மக்களை நன்னெறிக்கண் நிறுத்துதல் அறிவர் தொழிலாகும். தமிழகத்திருந்த பதினெண் சித்தர்களே அறிவர். (பொ. 283 குழ.)

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘அறிவன் வாகை’ என்னும் (8-13)

இதனை வீரசோழியம் ‘முக்காலம்’ என்னும் (கா. 104)

மன் இறப்ப முரணின் இறத்தல் -

{Entry: K11__0944}

இது ‘தன்னை வேட்டல்’ அது காண்க. (சாமி. 139)

‘மன் எயில் அழித்த மண்ணு மங்கலம்’ -

{Entry: K11__0945}

மாற்றரசன் வாழ்ந்த மதிலை அழித்துக் கழுதை ஏரான் உழுது வெள்ளைவரகும் கொள்ளும் வித்தி (புறநா. 392) மங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடும் மங்கலம் என்ற பாடாண் துறை.

“விரைந்து செல்லும் தேர்ச் செலவால் குழிகளையுடைய தெருக்களில் கழுதையை எருதாகப் பூட்டி உழுது பகைவரது பெரிய மதிலை அழித்தாய்” (புறநா. 15) என்று நெட்டி மையார் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை இப் பாடற்பகுதியில் மங்கலம் அல்லாதவை செய்தமை பற்றிச் சுட்டியவாறு. (தொ. பொ. 91 நச்.)

குடுமி கொண்ட மண்ணு மங்கலம் (68) எயில் அழித்தல் கூறா மையின், இஃது அதனின் வேறாகிய உழிஞைத்துறையாம். (நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பாடாண்படலத்து 21ஆம் துறையாகிய ‘குடுமிகளைந்த புகழ் சாற்றுநிலை’ யாகும்.

மன்னர் வெற்றிக் கோடாத் திறம் கூறல் -

{Entry: K11__0946}

‘சீர் சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தல்’ காண்க. சிறப் புடைய வேந்தனுடைய வெற்றிச் சிறப்பை எடுத்துக் கூறுதல் என்ற கரந்தைத் துறை. வெற்றித்திறம், கோடாத்திறம் என்க. கோடாமை - பிறழாமை. (வீ. சோ. 100)

மன்னன் முன்னர் பரிசில் இதுவென உரைத்தல் -

{Entry: K11__0947}

‘பரிசில் துறை’ காண்க. (பு. வெ. மா. 9-5) (இ. வி. 617 - 6)

மன்னுறு தொழில் -

{Entry: K11__0948}

வீரர் அரசன்கட்டளை பெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் வெட்சித்திணை. (பு. வெ. மா. 1)

மன்னைக் காஞ்சி -

{Entry: K11__0949}

இறந்துபட்ட வீரன் பண்டிருந்தவாறெல்லாம் கூறிப் புலம்பி மற்றவர்கள் துயருறுதல். அஃதாவது, “இவ்வீரன் போர் எனும் கடலைக் கடத்தற்குத் தெப்பமாகவும், உயர்ந்தோரைத் தாங்குதற்குத் தூணாகவும், ஊருக்கும் நாட்டுக்கும் உட னிருந்து உதவுதற்கு உயிராகவும் இருந்தானே! இவன் மார்பைப் பிளந்து இவனுயிரைப் போக்கிய வேல் எல்லாருக் கும் அறத்தின் பொருட்டுத் திறக்கப்பட்ட வாயிலை அடைத்து விட்டதே!” என்றாற்போல, அவன்திறம் கூறி வருந்துதல்.

‘போர்க்குப் புணைமன்; புரையோர்க்குத் தாணுமன்’ என்றாற் போலக் கழிவைக் குறிக்கும் மன்னைச்சொல் அடுத்துப் பாடப்படும் இக்காஞ்சித்துறை ‘மன்னைக் காஞ்சி’ எனப் பட்டது. (பு. வெ. மா. 4 : 20)

‘இன்னன் என்று இரங்கும் மன்னை’ (க்காஞ்சி) என்னும் தொல்காப்பியம். (பொ. 79 நச்.)

மனைநிலைவகை வாகை -

{Entry: K11__0950}

மனைக்கிழமை பூண்டொழுகும் முதுகுடி மகளிரின் திறல் மிகுவாகைப் பகுதி.

இல்லற மாண்புகளான் மனைத்தலைவி மிகுதிப்பட்டு நிற்றலும், கொழுநன்குடி வறனுற்றபோது அசைவின்றி அறத்தாற்றில் நிற்றலும், தம் புதல்வரை வேல் கைக்கொடுத் துப் போர்க்களத்துச் செல்ல விடுத்தலும், புதல்வனின் மற வீறு கண்டு மகிழ்வுறுதலும், அன்னபிறவும் மனநிலை வகையாகிய இவ்வாகைப் பகுதியுள் அடங்கும். (தொ. புறத். 20 ச. பால.)

மனையறம் துறவறம் -

{Entry: K11__0951}

காஞ்சித்திணையின் நிலையாமையை உட்கொண்டு இல்லறம் துறவறம் என்ற இரண்டனையும் ஒப்பிட்டு விளக்கும் புறத்துறை.

“இவ்வுலகவாழ்க்கை, ஒரே நாளில் எழுவரைத் தலைவ ராகக் கொண்டு இயங்குவோர் இடர்ப்படுவது போலத் துன்பம் தருவதாம். உலகியலாகிய இல்லறம் தவவாழ்வாகிய துறவறத்தின் முன், மலைக்கு முன்னர்த் தோன்றும் சிறுகடுகு போல, தோன்றும் ஆதலின், வீட்டின்பம் காதலித்தோர் இல்வாழ்வில் பற்றுவிட்டனர். திருமகள் தன்பால் பற்றுவிட் டோரை நீங்காது அடிப்பணி செய்வாள். இவ்வாழ்க்கையில் பற்று விடாது அதனுள் அழுந்தி வருந்துவோர் திருமகளால் கைவிடப்படுவர்” என்ற கருத்தமைந்த வான்மீகியாரால் வரையப்பட்ட புறப்பாடல், காஞ்சித்திணையின் மனையறம் துறவறம் என்ற துறையில் அமைந்துள்ளது. (புறநா. 358)

‘மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்’ -

{Entry: K11__0952}

பகைவரைக் குறித்த வாள்வெற்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாள்மங்கலம் என்ற பாடாண்துறை.

இது பிறரால் வாழ்த்தப்படுதலின், கொற்றவையைப் பரவும் ‘வென்ற வாளின் மண்’ (தொ. பொ. 68) என்பதனின் வேறாயிற்று. பகைவரை இகழ்ந்து தலைவனைப் புகழ்தலின் ‘மாணார்ச் சுட்டிய’ எனப்பட்டது. (தொ. பொ. 91 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண்படலத்து 35ஆம் துறையாகிய வாள்மங்கலம் ஆகும்.

‘மாபெருந்தானையர் மலைந்த பூ’ -

{Entry: K11__0953}

“போந்தை வேம்பே........... மலைந்த பூ” க் காண்க. (இ. வி. 619- 1)

‘மாய்பெருஞ் சிறப்பின் புதல்வன் பெயரத், தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலை’ -

{Entry: K11__0954}

பொருகளத்துப் பொருது மாயும் சிறப்பினின்று நீங்கித் தன் மகன் புறங் கொடுத்துப் போந்தானாக, அது கேட்டுத் தாய் தான் சாதல் துணிந்து சென்று மகனைக் கூடும் கூட்டமாகிய காஞ்சித்துறை.

இனி, உய்த்துக் கொண்டுணர்தல் என்னும் உத்தி வகையால், மற்றொருபொருள் :

தன்மகன் பிறர் சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ் சிறப்பொடு களத்தில் இறந்து துறக்கம் போனவிடத்தே, அவனோடு இறந்துபட வரும் தாயினது தலைப்பெயல் நிலைமை.

எ-டு : “என் வயிற்றைக் கிழித்து மாள்வேன். பகைவரது // போர்க்களத்தே அவரைத் தோற்றோடுமாறு போர்செய்து // அக்களத்தேயே இறந்துபடமாட்டாது, யானைமேல் எறிந்த வேல் // அதன் முகத்திலேயே ஒழிய, வெறுங்கையொடு வந்தாயே! // அதனால், எம்குடிக்கு அடாத பெரும்பழியை உண்டாக்கி விட்ட, // வீரம் கல்லாத காளையாகிய நின்னை ஈன்ற என் வயிற்றைக் கிழித்து // மாய்வேன்” (புறத்திரட்டு - மூதில் மறம். 9)

இத் தகடூர்யாத்திரை, கரியிடை வேலொழியப் போந்தாற்குத் ‘தாய்தப வந்த தலைப்பெயல் நிலை.’

“இவ்விளைஞனுடைய கண்கள், அம்புகளால் தைப்புண்டு மறைந்தன; தலைமிசைச் சூடிய வண்ணமாலையும், அம்பெய் யப்பட்டுத் துணிந்தன; கணைகள் மூழ்கியமையால் அம்புறாத் தூணிபோன்றது, வாய்; மார்பு, வெஞ்சரங்களுடைய ஆற்றலைக் கடந்து அவற்றைத் தம்மிடம் நிறுத்திக் கொண் டன; தொடைகள், தம் நிறம் மறைப்புண்டு சரங்கள் வரிசையாகத் தம்மேல் தைக்கப்பெற்றன. இவ்வாற்றால் அம்புப் படுக்கையில் கிடக்கும் இவன் முட்கள் சூழப்பெற் றுள்ள கழற்காய் போன்றுள்ளான். எதனால் நான் இவனை என் மகன் என அடையாளம் கண்டுகொள்வேன்?” (அம்புறை தூணி அம்புறாத் தூணி எனப்படும்.)

இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோள னுடைய தாய் இறந்துபட்ட தலைப்பெயல் நிலை.

(தொ. பொ. 79 நச்.)

இனி, நாவலர் சோமசுந்தர பாரதியார் உரைக்குமாறு :

பெருஞ் சிறப்பொடு களத்துப் பொராது மாய்ந்த மகனைப் “படையழிந்து மாறினன்” எனப் பிறர் பழி கூறக் கேட்ட தாய், அன்னவனை ஈன்றமைக்கு நாணித் தன்னுயிர் விட முனைந்து களம் சேரும் தலைப்பெயல் நிலைக்காஞ்சி என்ற புறத்துறை.

“கொக்கிறகு போலும் வெளுத்த கூந்தலையுடைய முதியவ ளான வீரத்தாயொருத்தி, தன் மகன் போரில் புறமிட்டான் என்று பிறர் கூறவே, மான வுணர்வு மிக்கு, ‘போரில் அவன் புறங்காட்டி யிருப்பனேல், அவன் பாலினை யுண்ட இவ்வங் கத்தினை அறுத்தெறிவேன்!’ என்று வஞ்சினம் கூறி வாள் கைக் கொண்டு படுகளம் சென்றவள் கைவாளால் பிணங் களைப் புரட்டிப் பார்த்துத் தன் மகன் விழுப்புண்பட்டுச் சிதைந்து கிடந்த அவனது இறந்துபாட்டினைக் கண்டு, அவனை ஈன்ற பொழுதடைந்த மகிழ்ச்சியினும் மிக மகிழ்ந்தாள்.” (புறநா. 278) (தொல். புறத். 24)

இத்துறை வீரசோழியத்தில் ‘நிலை’ என்ற தலைப்பில் அடக்கப்பட்டுள்ளது. (கா. 102)

‘மாயோன் மேய மன் பெருஞ்சிறப்பின்............ பூவைநிலை’ -

{Entry: K11__0955}

முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் விரும்பிக் காப்பதைப் போல நிலைபெற்ற மிக்க சிறப்புடன் காத்து (மன்னன்) அடைந்த நீங்காத பெரும்புகழைக் கூறும் பூவைநிலை. (தொ. பொ. 298 குழ.)

பூவை நிலை - ஒருவர் புகழை ஒப்பிட்டுக் கூறுதல் -

{Entry: K11__0956}

மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ்சிறப்பினை யுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதல். (63 இள.)

பூவை மலர்ச்சியைக் கண்டு அது மாயோன் நிறத்தை ஒத்துள்ளது என்று கூறுதல் (இள.)

உன்ன மரத்தை நிமித்தம் கொள்வதுபோல, இப்பூவையாகிய காயா மரத்தைக் கொண்டு நிமித்தம் கொள்வதும் உண்டு.

(புறத். 5 பாரதி.)

மாயோனுடைய காத்தற்புகழையும், ஏனோருக்கும் உரியவாய் மேவிய பெருஞ்சிறப்பின் தீராத படைத்தல் அழித்தல் என்னும் புகழ்களையும், மன்னர் தொழிலுக்கு உவமமாகக் கூறும் பூவைநிலை. இவ்வாறு கூறுதலை நெடுநில மன்னர்க் கும் குறுநில மன்னர் முதலாயினார்க்கும் கொள்க. அவ்வத் தேவருடைய தொழிலை ஒப்பிடுதலன்றி, அரசன் முதலா யினாரை முருகன் இந்திரன் முதலிய அவ்வத் தேவராகவே கூறுதலும் கொள்க.

இறப்ப உயர்ந்த தேவரை மக்களுக்கு உவமமாகக் கூறுதலின் இது புறத்திணை வழு. (60 நச்.)

எ-டு : மணிமிடற்றோனாம் சிவபெருமான், பனைக்கொடி யோனாம் பலதேவன், கருடப்புட்கொடி உயர்த்த திருமால், பிணிமுக ஊர்தியுடைய முருகன் என உலகங் காக்கும் இந்நால்வருள்ளும் நீ சீற்றத்தால் சர்வசங்காரக் கடவுளாம் அரனை ஒத்துள்ளாய்; வலிமையால் பலதேவனை ஒத்துள்ளாய்; புகழால் மாயோனை ஒத்துள்ளாய்; கருதியதை முடித்தற்கண் செய்யோனை ஒத்துள்ளாய். அவரவரை அவ்வவ் விடத்தே ஒத்துள்ள நினக்கு அரியவும் உளவோ?” (புறநா. 56) என நன்மாறனை நக்கீரனார் பாடியவாறு. (நச்.)

மாராயம் -

{Entry: K11__0957}

வேந்தனாற் பெறும் சிறப்பு. ‘மாராயம் பெற்ற நெடுமொழி யானும்’ (தொ. பொ. 63 நச்.)

‘மாராயம் பெற்ற நெடு மொழி’ -

{Entry: K11__0958}

படையாளர் பரிசில் பெற்ற பெருமித்தால் தம்மைப் புகழ்ந்து கூறும் தற்புகழ்ச்சிச் சொல். இது வஞ்சித்திணைத் துறை. மாராயம் - வரிசையொடு பெற்ற பரிசு சுட்டும் நன்மதிப்பு. நெடுமொழி - தற்புகழ்ச்சி. (தொ. புறத். 8 பாரதி)

போர்மேற் சென்றவன், எதிரூன்றியவன் இவ்விரு மன்ன ராலும் சிறப்பெய்திய வீரர்கள் தாமேயாயினும் பிறரைச் சுட்டி யாயினும் கூறும் புகழ்ச்சிச் சொல்லும் வஞ்சினமும். சிறப்பாவன : ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும், ஊரும் முதலியனவும் பெறுதல். இது ‘கொடுத்தல் எய்திய கொடை’ போலாது, அப்படைக்கு ஒருவனைத் தலைவ னாக்கி அவன் கூறியபடியே அப்படை செயற்படல் வேண்டும் என்று வரையறை செய்ததாம். (63 நச்.)

போருக்குப் புறப்படுமுன் நெடுமொழி கூறலும், போர்க்களம் புக்கு நெடுமொழி கூறலும் உள.

‘துடியெறியும் புலைய’ (புறநா. 287) என்பதன்கண், வீரன், “தண்ணடையாகிய மருதநில வயல்களைப் பரிசிலாகப் பெறுதல் சிறிது; வீரத்துறக்கம் பெறுதலே நன்று” என்று நெடுமொழி கூறியவாறு. இது போர்க்குப் புறப்படுமுன் கூறிற்று. (நச்.)

இது புறப்பொருள்வெண்பாமாலையில், மாராய வஞ்சி எனவும் நெடுமொழி வஞ்சி எனவும் இருதுறைகளாகக் கூறப்படும். (3 -11, 12)

இது வீரசோழியத்தில் ‘வென்றி கூறல்’ என்னும் துறை (கா. 101)

மாராய வஞ்சி -

{Entry: K11__0959}

வலிமை மிக்க மன்னனால் சிறப்புப் பெற்றோர் தாம் அடையும் அரசனது வள்ளன்மையைக் கூறுதல்; அஃதாவது “வஞ்சி வேந்தன் தன் பகைவரது போர்முனையை நோக்கிக் கண் சிவந்த அளவிலே, போர்முனைக்குச் சென்று பகைவரை எதிர்த்து வேலால் விழுப்புண்பட்ட வீரர்களுக்கு முத்து மாலைகள் பரிசிலாக வழங்கப்பட்டன” என்று கூறுதல் போன்ற வஞ்சித்துறை. (பு. வெ. மா. 3 : 11)

மாராயன் -

{Entry: K11__0960}

அரசனாற் பெறும் பட்டப்பெயர் பெற்றவன். ‘பஞ்சவ மாராயன்............ கொங்காள்வான்.’ (L)

மாலை நிலை -

{Entry: K11__0961}

கற்புடைய மனைவி, இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தீயில், அவனுடன், தானும் புகுதற்கு மாலைப் பொழுதிலே நின்ற தனைக் கூறும் பொதுவியல் துறை. அஃதாவது “இற்றைக் கதிர் படுமுன் பகைவரைக் கொல்வேன்; இன்றேல், களத்தில் மாய்வேன்” என்று தன் கணவன் கூறிய கூற்றை, மயிலன்ன தலைவி, மாலைப் பொழுதில் நினைத்துப் பார்த்துத் தன் மனத்தைச் செலுத்தி ஒரு முடிவு செய்து காலையில் தன் கணவனை எரித்த ஈமத்தீயில் அவனுக்குத் துணையாகத் தானும் புகுந்ததைக் கண்டோர் வியந்து கூறல்.(பு.வெ.மா. 11-8)

மாவினான் ‘துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கம்’ -

{Entry: K11__0962}

யானையும் குதிரையுமாகிய மாக்களைக் கொண்டு குற்றத்தின் நீங்கும் சிறப்பினான் அமைந்தோரது கூறுபாடு.

இதனால் பகையஞ்சாமையாகிய வெற்றி கூறப்பட்டது.

‘பக்கம்’ என்றதனான், காலாளும் தேரும் கொள்ளப்படும்.

“பண்ணமைந்த தேரும் மாவும் மாக்களும் எண்ணற்கரியன வாயுள; நான் அவற்றை எண்ணிற்றிலேன்; கொங்கருடைய பசுக்கள் பரந்து செல்லுமாறு போலச் செல்லும் யானைக ளையே சேரமான் சேனையுள் காண்கிறேன்” (பதிற். 77) என வருமாறு காண்க. (தொ. பொ. 76 நச்.)

இது போர்வெற்றி கூறியவாறு. (284 குழ.)

இதனைப் பொதுவாக வீரசோழியம் ‘சான்றோர் பக்கம்’ என்று கூறும். (கா. 104 உரை)

‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை’ -

{Entry: K11__0963}

பிறரால் தடுத்தற்கரிய கூற்றம் வரும் என்று சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சி.

கூற்றாவது வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையான் கூறுபடுத்தும் கடவுள். கூற்றம் ‘காலக் கடவுள்’ என்றும் கூறப்படும் (சொல். 58) புறநா. 195 இலும் காண்க.

இப்புறப்பாடல் வீடு ஏதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கண் செல்லும் நெறி ஏதுவாகக் கூறியது. (தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சிப் பொது வியற்பால துறைகளுள் ஒன்று (12-2); ‘பெருங்காஞ்சி’ எனப் பெயர் பெற்றது.

இது வீரசோழியத்துள் ‘பெருமை’ எனப்படுகிறது. (கா. 102)

மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

{Entry: K11__0964}

இந்நிலவுலகத்து மகளிர் தேவர்களைக் காதலித்துக் கூறிய செய்தி.

அஃதாவது “கருவரி படர்ந்த என் கண்கள் சிவப்பேற இராப் பொழுதில் என்மார்பில் தான் அணிந்த பூணூலினது வடுப் புலனாகுமாறு தழுவி என் நெஞ்சத்தின் அழகினைச் சிறிதும் ஒழியாமல் நுகர்ந்த இறைவனுடைய ஊர் பாசூராம்” என்றல்போன்று, தலைவி தான் மனத்தான் இறைவனைக் கூடிய இன்ப நுகர்ச்சியை எடுத்தியம்பும் பாடாண்துறை.

இது “பூதலத்து அரிவையர் பொருவில் வானவரைக் காதலின் நயந்த கடவுட் பக்கம்” என்ற இலக்கணவிளக்கத்துள் குறிக்கப் பட்டுள்ளது. (இ. வி. 617 - 47)

மிளை கடத்தல் -

{Entry: K11__0965}

இது குற்றுழிஞை என்னும் உழிஞைத் துறைப்பக்கம் இரண் டனுள் ஒன்று; அது காண்க. (சாமி. 135)

மிளை காத்தோர் விறல் மேம்படுத்தல் -

{Entry: K11__0966}

இது செருவிடை வீழ்தல் என்னும் நொச்சித்திணைத்துறை; அது காண்க. (சாமி. 136)

மீட்க எனப் பணித்தல் -

{Entry: K11__0967}

வெட்சி யிரண்டாம் பகுதித் துறைகளுள் முதலாயது. தன் னுடைய ஆநிரை கவரப்பட்டதைக் கேட்ட கரந்தைமன்னன் தன் வீரர்களை அழைத்து, வெட்சியார் கவர்ந்த பசுக்களை மீட்டு வருமாறு ஆணையிடும் கரந்தைத்துறை. (பு. வெ. மா. 2 - 1)

தொல்காப்பிய நெறியில் வெட்சியின் இரண்டாம் பகுதி என இ.வி. கூறும்; பிற நூல்கள் ‘கரந்தை’ என்றே கூறும்.

(இ. வி. 604 -1)

முக்காலம் -

{Entry: K11__0968}

இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் முக்காலத்தும் நிகழ்ந்த வற்றையும், நிகழாநின்றவற்றையும், நிகழக் கூடியவற்றையும் எடுத்துரைக்கும் முக்கால அறிவு சான்ற சான்றோர் சிறப்பை எடுத்துக் கூறும் வாகைத்துறை.

‘மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்’ என்ற வாகைத்துறை நோக்குக. (வீ. சோ. 104)

முடக்கறை -

{Entry: K11__0969}

மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பாகிய ஏப்புழை. (பு. வெ. மா. 6 : 24 உரை)

முடிகோள் -

{Entry: K11__0970}

பகைமன்னன் மதிலைக் கைப்பற்றி அவன் சூடும் முடியினைக் கவர்ந்த உழிஞைமன்னன் சிறப்பினைக் கூறும் உழிஞைத் துறை.

‘இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலம்’ காண்க. (வீ. சோ. 103)

முத்துவீரியப் புறப்பொருட்டிணைகள் -

{Entry: K11__0971}

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டும் ஆம். (மு. வீ. அக. 51-60)

முதல் வஞ்சி -

{Entry: K11__0972}

இது புறநானூற்று 37ஆம் பாடலின் அடிக்குறிப்பில் காணப் படும் துறையாகும். புறநானூற்றுக்குத் துறை வகுத்தவர் தொல்காப்பியத்தைப் பின்பற்றாது, பன்னிருபடலம் முதலிய நூல்களைப் பின்பற்றினாராவர். (தொ. பொ. 90 நச். உரை) பன்னிருபடலம் இக்காலத்து வழக்கு இறந்தது. அதனைப் பின்பற்றியமைக்கப்பெற்ற புறப்பொருள் வெண்பாமாலை யில் இத்துறை இலது.

“அரசே! நீ, பழைய கோநகரத்தில் அரணினுள் அந்நாட்டு மன்னன் இருப்பதனால் அவனுடைய நாட்டுப்புறங்களைப் பலவாறு சிதைத்துக்கொண்டு அவன்மேல் போரிடப் புறப் பட்டுள்ளாய்” (புறநா. 37) என்ற கருத்தை அப்பாடல் அடிப் படையாகக் கொண்டிருப்பதால், மதிலகத்து அடைத்துக் கொண்டு பாதுகாவல் தேடும் மன்னனது நாட்டின்மீது படையெடுத்துவரும் முதல்செய்தியை ‘முதல் வஞ்சி’ எனவும், பின் அரணை முற்றுகையிடுதலை ‘உழிஞை’ எனவும் கொண்டனர்போலும். இதனால் வெட்சியை அடுத்து வஞ்சியும் இறுதியில் தும்பையும் நிகழ்தல் வேண்டும் என்ற வரையறையின்மையும் போதரும். (புறநா. 37)

முதுகாஞ்சி -

{Entry: K11__0973}

மிக உயரிய உறுதிப்பயன்களை நன்கு உணர்த்தி, வீடுபேற் றின் நிலைத்த சிறப்பையும் ஏனைய பொருள்களின் நிலை யாமையையும் வற்புறுத்தி விளக்கும் பொதுவியல்துறை.

“இளமைப் பருவத்து உடலின் உறுதிநிலை தளர மூப்பாலே உடலில் கூனல் தோன்ற, இளமை நிலையாமை - யாக்கை நிலையாமை - இவற்றை உணராது உலகியலில் ஈடுபட்டுச் செல்வத்தின் மருட்கையில் மயங்கி வாழாமல், பற்றறுத்து உலகத்தொடர்பினின்றும் பிழைத்துப்போதலே மேம்பட்ட செயலாகும்” என்பது போன்ற காஞ்சி (- நிலையாமை) த் துறைச் செய்தி.

இது காஞ்சிப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 12-5.)

முதுசொல்வஞ்சி -

{Entry: K11__0974}

இது முதுமொழி வஞ்சி என்னும் வஞ்சித்துறையாம். (சாமி. 133)

முதுபாலை (1) -

{Entry: K11__0975}

வெம்மை மிக்க பாலைநிலத்தில் தன்னுடன் வந்த கணவன் எதிர்பாரா வகையான் இறந்துபடவே, தமியளான தலைவி புலம்புதல்.

“பேய்மகளே! விளங்கனிகள் உதிரும் இக்கொடிய பாலையில் கணவன் உயிர் நீங்க, அவன் பிணத்தை வைத்துப் புலம்பும் என் நிலைக்குச் சற்றும் இரங்காமல் அவன் உடலை நின் உணவுக்காகக் கைப்பற்ற முயலும் நின்செயல் மிகவும் கொடிது!” என்றாற் போலப் புலம்பும் கூற்று.

இது சிறப்பிற் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று.

(பு. வெ.மா. 11-1)

முதுபாலை (2) -

{Entry: K11__0976}

சுரத்தின்கண் தலைவனை இழந்த தலைவி மனம் கவன்று புலம்பும் நிலை.

உற்றார்உறவினர் அற்ற தனியிடத்துக் கணவனை இழந்து செய்வது அறியாது தவிக்கும் தலைவி நிலை அகப்புறப் பெருந்திணையாயிற்று. (தொ. பொ.) (ந. அ. 244)

முதுமை -

{Entry: K11__0977}

தவத்தின்கண் நின்றார்க்கு எடுத்துக்காட்டிய உறுதிச்சொல் (உவமைச் சொல் என்று அச்சில் இருப்பது பிழைபட்டது). அஃது ‘அருளிலார்க்(கு) அவ்வுலகம் இல்லை; பொருளி லார்க்(கு), இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (குறள். 247) எனவரும். (வீ. சோ. உரை.)

இது காஞ்சித்துறைகளுள் ஒன்று; ‘கழிந்தோர் ஒழிந்தோர்க் குக் காட்டிய முதுமை’ நோக்குக. (வீ. சோ. 102 உரை.)

முதுமொழிக் காஞ்சி -

{Entry: K11__0978}

மாசற்ற அறமுதலிய உறுதிப்பொருள்களின் இயல்பு இன்ன தெனச் சான்றோர் தெரிந்து கூறிய செய்திகளை விளங்கக் கூறுதல் ஆகிய பொதுவியல் துறை.

“நூல்களைக் கொண்டு ஆராயுமிடத்து அருளுடைமையே அறமாகும்; பொதிந்து வையாது வறியவர்களுக்கு உற்றுழி உதவும் பொருளே உறுதி பயக்கும் பொருளாம்; கணவன் நெஞ்சு உவப்பன செய்யும் கற்புடையாளைக் கூடிவாழும் இன்பமே உறுதியாகும் இன்பம்” என்றாற் போலக் கூறுவது.

இது காஞ்சிப் பொதுவியற்பால துறைகளுள் ஒன்று.

(பு. வெ. மா. 12-1)

முதுமொழி வஞ்சி -

{Entry: K11__0979}

வாட்போரில் வல்லமையுடைய குடியிற் பிறந்த குல முன்ன வனது புகழை எடுத்துரைக்கும் வஞ்சித் துறை.

“முரசு ஒலிக்கப் பகைவர் வாட்படைகளைச் சிதறுவித்து விழுப்புண்பட்டு வந்துள்ள வீரனுடைய மகனுக்கு மருத நிலங்களை முற்றூட்டாக வழங்குதல் வேண்டும்.” என்றாற் போன்ற கூற்று. (பு. வெ. மா. 3 : 13)

முதுவுழிஞை -

{Entry: K11__0980}

‘மூதுழிஞை’ காண்க. (பு. வெ. மா. 6: 20)

முதுவுழிஞைப் பக்கம் -

{Entry: K11__0981}

முற்றுகை யிடப்பட்ட மதிலகத்துள்ள நொச்சி வீரரது மேம்பாட்டைக் கூறுவதும் முதுவுழிஞையேயாம். அஃதாவது “தமது நெடிய மதிலுள் பகைவர் புகுந்த பின்னருங் கூட, நொச்சி வீரர், கிளி போன்ற கிளவியையுடைய தம் மனைவிய ருடைய ஒளியுடைய கண்களின் களிப்புறு காமம் மனத்தில் கலத்தலால், உணரார் ஆயினர்!” என்றாற் போல வருவது. (பு. வெ. மா. 6 : 21)

முரச உழிஞை -

{Entry: K11__0982}

பேரொலி எழுப்பும் தன் முரசுக்கு, பகைவர்மதிலை முற்றுகை யிடும் வேந்தன், பொன்னாலான உழிஞைப் பூச் சூட்டிச் சிறப்பித்தலைக் கூறும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6-4)

முரசவாகை -

{Entry: K11__0983}

வெற்றி பெற்ற அரசனுடைய கோநகரில் ஒலிக்கும் முரசின் சிறப்பைக் கூறுதல்.

அஃதாவது “வெற்றி பெற்ற மன்னனை, வெண்குடை கவித்த மன்னர் பலரும் பணிந்து புகழ்மாலை சூட்ட, அந் நேரத்தே இரவலர் பலர்க்கும் கொடைப்பொருளை வாரி வழங்கும் மன்னனது அரண்மனையில் இனிதாக முரசு முழங்கும்” என்று அதன் சிறப்பினைக் கூறும் வாகைத் துறை.

(பு. வெ. மா. 8-4)

முரசு நிலை உரைத்தல் -

{Entry: K11__0984}

வெற்றி பெற்ற மன்னன் அரண்மனையில் முழங்கும் முரசின் சிறப்பைக் கூறும் வாகைத் துறை. ‘முரசவாகை’ காண்க.

(இ. வி. 613 ..... 4.)

முரண் புகறல் -

{Entry: K11__0985}

இது பெருங்காஞ்சி என்ற காஞ்சித்துறை; அது காண்க

(சாமி. 142)

முல்லை என்ற புறத்துறை -

{Entry: K11__0986}

காமவேட்கையில் செல்லாத மன்னனது வெற்றி வேட்கைச் சிறப்பை எடுத்துக் கூறும் வாகைத்திணைத் துறை இது.

“அரசே! நீ களிறு பாய்ந்து இகல, கடுமா தாங்க, ஒளிறு கொடி நுடங்க, தேர் திரிந்து கொட்ப, பகைவர்மதிலை முற்றி வேறு புலத்திறுத்த வெல்போர் அண்ணலாய்க் காலம் கழிக்கிறாய்; உன்தேவி மலர் சூடிப் பல அணிகளும் அணியுமாறு அம்மாண்இழை அரிவையைக் காணிய ஒரு நாள் பூண்க, நின் புரவிநெடுந்தேர்! அன்று துஞ்சா வேந்தரும் துஞ்சுக! நின் பெருந்தோட்கு விருந்தும் ஆக!” என்று அரசன் காமத்தைக் கடந்த போர்வேட்கையைப் புகழ்ந்தவாறு. (பதிற். 81)

‘முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலை’ -

{Entry: K11__0987}

போர்க்களத்து இறந்துபட்ட தன் கணவன் தலையைத் தன் முகத்திலும் முலையிலும் சேர்த்திக்கொண்டு அத்தலையான் மனைவி இறந்த நிலை. அவன் தலையல்லது உடம்பினைப் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலையின்மை எய்து தலின், இஃது ஆண்பாற்கே சிறந்தது. தலையை அடையாளம் கண்டுகொண்ட மனைவி தலைவன் உடலை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவு தலையிலிருந்து துண்டிக் கப்பட்ட உடல் சிதைவுற்ற செய்தியே ஈண்டு உடலது நிலையாமை எனப்பட்டது. (தொ. பொ. 79 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் ‘தலையொடு முடிதல்’ என்ற காஞ்சித்திணைத் துறை. (பு. வெ. மா. 4 : 13)

முழுமுதல் அரணம் -

{Entry: K11__0988}

முழு அரணாவது மலையும் காடும் நீரும் அல்லாத அகநாடு எனப்படும் மருதநிலத்தில் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலிய பதித்த காவற்காடு புறம் சூழ்ந்து, அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத் தாகிய கிடங்கு புறம் சூழ்ந்து, யவனர் இயற்றிய பலபொறி களும் ஏனைய பொறிகளும் மதிலுள் உயர்ந்த மேடையாகிய பதணமும் அம்பு எய்து மறையும் சூட்டாகிய ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, எழுப்பப்படும் தாழ் முதலியவற்றால் வழுவின்றி அமைந்த வாயில் கோபுரமும் பிற இயந்திரங்களும் பொருந்த அமைக்கப்பட்டதாம். (நச்.)

இனி, மலைஅரணும் நிலஅரணும், சென்று சூழ்ந்து நேர்தல் இல்லா அருவழி அமைந்தனவும், இடத்தியற்றிய மதில் போல் இயற்கையாக மலையரண் அமைந்தனவும், மீதிருந்து கணை சொரியும் இடமும் பிற இயந்திரங்களும் அமைந்தன வும் ஆம். இனிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே அமைந் தனவுமாம். இங்ஙனம் அடைத்திருத்தலும், உள்ளிருப்பவனை முற்றுகையிட்டு அழித்தலும் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்ச முடைத்தாயிற்று. (தொ. பொ. 65 நச்.)

சில கோட்டைகள் மலைகட் கிடையிலும் கட்டப்பட்டிருக் கும் ஆதலின் கோட்டையானது நீரரண் நிலவரண் காட் டரண் மலையரண் என்னும் நால்வகை அரண்களால் சூழப் பட்டிருக்கும்.

அரணத்திற்கு ஓதப்பட்ட இலக்கணம் பலவும் உடையதாகிய கோட்டை. (66 இள.)

முற்றிய ஊர் கொலை -

{Entry: K11__0989}

புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு நிரைகாவலரைக் கொல்லுதல். புறஞ்சேரி - மறவர் குடியிருப்பு.

சூழப்பட்ட ஊரை அழித்தல். (தொ. பொ. 61 இள.)

நிரை கோடற்கு எழுந்தோர் மாற்றோர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டு நின்ற நிரைகாவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் அவ்வூரைவிட்டுச் சிற்றூரைக் காத்துக் கோறலும் (நிரை கொண்டோர் தங்கிய சிற்றூரை வளைத்து அவரைக் கொல்லுதல்) . (58 நச்.)

முற்றிச் சென்ற வெட்சி மறவர், தொழுவங்களைக் காவல் புரிவார் எதிர்ந்தவழி அவரை அழித்தலாம். ‘ஊர்’ என்றது கரந்தைமறவரை. பகைப்புலத்து ஊரார் சூழ்ந்து நெருங்கிய வழி அவர்களைக் கொல்லுதல் எனினும் ஆம். (தொ. புறத். 3 ச. பால.)

இது வெட்சித் துறைகளுள் ஒன்று. இதனை வீரசோழியம் ‘பொருதல்’ என்னும். (கா. 99)

முற்றினோர்ப் போக்கி இருத்தல் -

{Entry: K11__0990}

இஃது அடிப்பட இருத்தல் என்னும் உழிஞைத் துறை; அது காண்க. (சாமி. 136)

முற்றுமுதிர்வு -

{Entry: K11__0991}

மதிலகத்திருந்த மன்னன் முரசம் வழக்கம் போல வைகறை ஒலிக்க, அதனைப் பொறாதவனாய், உழிஞை மன்னன், “மாலைக்குள் மதிலைக் கொள்வோம்!” என வஞ்சினம் கூறும் உழிஞைத்துறை. மதிலகத்திருந்தோன் வழக்கம் போலக் காலையில் போர்த் தொடக்க முரசினை ஒலிக்க, அதனைச் செவி மடுத்த மதிற்புறத்திருந்த உழிஞைமன்னன் வீரர்கள், “மாலைக்குள் இம்மதிலைக் கைப்பற்றி இரவு மதிலினுள் உணவு சமைப்போம்!” என்று வஞ்சினம் கூறி, அகப்பைகளை யும் துடுப்புக்களையும் அம்மதிலுக்குள் வீசி எறியும் செய்தியைக் கூறுவது. (பு. வெ. மா. 6 : 23)

(இதனைக் ‘கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு, முற்றிய முதிர்வு’ என்று தொல்காப்பியம் வேற்றுப் பொருள தாகக் கூறும்.)

முற்றுழிஞை -

{Entry: K11__0992}

“வானத்தில் திரிந்துகொண்டிருந்த முப்புரங்களை அழித்த சிவபெருமானும் தான் இயற்கையாகச் சூடும் கொன்றைப் பூவொடு மதில் வளைப்போர் சூடும் உழிஞைப்பூவைச் சூடியே முப்புரங்களையும் அழித்தான் ஆதலின், யாரும் கண்டவுடனே ‘இவர்கள் மதிலை முற்றுகையிடச் செல்கி றார்’ என்று அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சூடப்படும் உழிஞைப்பூவின் பெருமை மேதக்கது” என்றாற் போன்று கூறும் உழிஞைத்துறை. (பு. வெ. மா. 6 : 8)

முறையுளி வாழ்த்து -

{Entry: K11__0993}

அரசன் வழிபடும் முப்பெருந் தெய்வங்களுள் ஒன்றனை முறைப்படி வாழ்த்தும் கடவுள் வாழ்த்தாகும் பாடாண்துறை.

‘கடவுள் வாழ்த்து’க் காண்க. (இ. வி. 617 -3)

முன்தேர்க் குரவை -

{Entry: K11__0994}

போரில் வெற்றி பெற்ற அரசனுடைய தேரின் முன்னே நின்று பேய்கள் கூத்தாடத் தொடங்கிய செய்தி கூறுதல். அஃதாவது பகைமன்னர் வருந்துமாறு அவர்படையாளரைக் கொன்று குவித்துக் களவேள்வி செய்த மன்னன் முரசு ஒலிக்க வாகை சூடிச் செல்லும் தேரின் முன்னர்த் தமக்குச் சிறந்த உணவிட்டுக் கெடாத நலம் செய்த அவ்வாகை வேந்தன் வாழ்க என்று வாழ்த்திப் புலால் நாறும் வாயினையும் சிவந்த தலைமயிரினையும் உடைய பேய்கள் ஆடும் செய்தி கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8 -7)

இதனை, வென்ற மன்னன், தான் தேர்த்தட்டில் நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடும் குரவைக் கூத்து என்று தொல்காப்பியம் கூறும். தொல்காப்பியம் இத் துறையை வாகைக்கே கொள்ளும். (பொ. 76 நச்.)

அரசன் தேர்முன் வீரர்கள் ஆடும் முன்தேர்க்குரவை தும்பைத் துறையாகும் என்று பு.வெ.மா. கூறும். (7 : 17)

இவ்வாறு இத்துறை, தும்பை வாகை எனும் இருதிணைக் கண்ணும் வருவது.

முன்னிருப்பு -

{Entry: K11__0995}

தன்னை எதிர்த்து வந்த வஞ்சியரசனது வீரம் நலிந்து குறை யும் வகையில், வேலேந்திய காஞ்சிமன்னன், முன் இருந்து போர்முனையிலிருந்து வஞ்சிவேந்தனைத் துரத்திவிட்டுத் தங்கிய செயலைக்கூறும் காஞ்சித் துறை. இதனை ‘முனைகடி முன்னிருப்பு’ என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (4 - 26). (இ. வி. 615 - 25)

முன்னிலைப் பரவல் -

{Entry: K11__0996}

கடவுளை முன்னிலைப்படுத்திப் புகழுதல்; சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையுள், ‘வடவரையை மத்தாக்கி’ முதலாகிய மூன்று பாடல்கள் (32, 33, 34).

முன்னோர் கூறிய குறிப்பு -

{Entry: K11__0997}

முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பு; குறிப்பு என்பது ஈண்டுக் காமம். (தொ. பொ. 80 இள.)

அறம் பொருள் இன்பங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள் ளோர் கூறிய குறிப்புப் பொருள். (தொ. பொ. 82 நச்.)

பண்டைச் சான்றோர் இசைத்தமிழ்ப்பாட்டின் வகையான செந்துறை வழக்குச் சுட்டும் பிறவிடம். (புறத். 27 பாரதி.)

“தேவர்களது அமுதம் தமக்குப் பொருந்துவதாயினும் அதனைத் தாமேயுண்டல் இனிதென்று உண்ணார்; வாழ்க்கையை வெறுத்தலிலர்; காரியங்களைச் செய்தலில் நீட்டித்தல் இலர்; பிறர் அஞ்சத்தக்க பழிபாவம்கேடுகட்குத் தாம் அஞ்சுவர்; தமக்குப் புகழ் வருவதாயின் உயிரைக் கொடுத்தும் அது பெறுவர்; பழியெனின், அது பெற உலகையே பரிசிலாகக் கொடுப்பினும் கொள்ளார்; மனம் தளர்தலிலர்; அத்தகைய மாண்பினராய்த் தமக்கென உயிர் வாழாது பிறர்நலம் பற்றியே முயலும் வலிய முயற்சியை யுடையர். இப் பெற்றியாளர் சிலராவது வாழ்தலால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது” (புறநா. 182). இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. (தொ. பொ. 82 நச்.)

முனிவர் வாழ்த்து -

{Entry: K11__0998}

இஃது ‘அமரர்கண் முடியும் அறுவகை’ யோருள் ஒருவ ராகிய துறவு சான்ற பெரியோர்களை வாழ்த்தும் பாடாண் துறை.

பல்வகை அவதாரங்கள் செய்து பலநிலையினவாகிய உயிர்களை ஒத்தும் ஒவ்வாதும் இவ்வுலகில் அறம் தழைக்க வும் தீமை அகலவும் அருள்செய்த இறைவனை உள்ளத் திருத்தித் தவமும் யோகமும் செய்து வீடுபேற்றுக்கு முயலும் முனிவர்களை வாழ்த்துதல். (மா. அ. பாடல். 54 - 59)

முனைகடி முன்னிருப்பு -

{Entry: K11__0999}

தன்னை எதிர்த்த வஞ்சிவேந்தனும் அவனுக்குத் துணையாக வந்தோரும் ஆகிய எல்லாரையும் தமது மறம் காலப்பண்ணி அவர்களிருந்த போர்முனையினின்று வெருட்டிய காஞ்சி மன்னன் வீரத்தைக் கூறும் காஞ்சித் திணைத்துறை.

‘காஞ்சி வேந்தன் துடிமுழக்கித் தன் கொல்களிறுகளைச் செலுத்தி அவற்றால் தன்னூரின் புறவாயில்கள்தோறும் பகைமன்னனுடைய படைவீரர்களைப் புறங்காட்டி ஓடச் செய்து போர்க்களத்தினின்றும் ஓட்டினான்.” (பு. வெ. மா. 4 : 35)

முனைஞர் -

{Entry: K11__1000}

முனைஞர் - முனை ஊரகத்துள்ளார். (தொ. பொ. 60 இள.)

முனைஞர் - முனைப்புலம் காத்திருக்கும் தண்டத்தலைவர்.

(270 குழ.)

தம் நாட்டிற்கும் பகைவர் நாட்டிற்கும் எல்லையாக உள்ள இடைநிலமாகிய காட்டுப் பகுதியைக் காத்துப் பகைவர் தம் நாட்டுள் புகாவண்ணம் விழிப்பாக இருக்கும் மறவர்தலை வர்கள் முனைஞர் எனப்பட்டனர். (தொ. பொ. 57 நச்.)

முனைமுரிப்பு -

{Entry: K11__1001}

இது ‘முரண்கடி முன்னிருப்பு’ எனவும், ‘அருமுனை முரிந்த முன்னிருப்பு’ எனவும் கூறப்படும் காஞ்சித் துறை. ‘முனைகடி முன்னிருப்பு’க் காண்க. (சாமி. 143)

முனையிடம் -

{Entry: K11__1002}

1. போர்க்களம் 2. பாலை நிலத்தூர் (பிங். 530) (L)

மூதானந்தத்தின் பக்கம் -

{Entry: K11__1003}

வீரன் ஒருவன் பகைவருடைய கூரிய அம்புகள் தன்மீது பாய்தலால், தன் செயலை முடித்து வெற்றி காணாமல் இறந்துபட்டதைக் கூறுவதும் மூதானந்தம் எனவே கொள்ளப்படும்.

போர் தொடங்கிய அளவில் குதிரை ஏறிச் சென்று, போர்க் களத்தில் பகைவரை அழித்துத் தன் கையின் படையாலே பகைவர் எய்த அம்புகளைத் தடுத்துத் தன் படைகளுக்குக் கரை போல நின்று பகைவரைத் தடுத்து நின்று அவர்கள் எய்த அம்புகளால் விழுப்புண்பட்டுத் தன் வெற்றித் தொழிலை முடியாமலேயே இறந்துபட்ட வீரன் சிறப்பைக் கூறுதல் இது.

இது சிறப்பிற் பொதுவியற்பால துறைகளில் ஒன்று.

(பு. வெ. மா. 11 - 10)

மூதானந்தம் -

{Entry: K11__1004}

தலைவன் இறந்துபட்ட உடனேயே மனைவியும் இறந்தமை கேட்டு, வழிச்செல்வோர் வியந்து கூறும் புறப்பொருள் பொதுவியல் துறை.

“போரில் தலைவன் இறந்தது கண்டதும் உடன் உயிர் நீத்த இத்தலைவியை நோக்க, இருவருக்கும் உடல் இரண்டே அன்றி உயிர் ஒன்றேயாம்” என்றாற்போலக் கண்டோர் வியந்து கூறுவது.

பு. வெ. மா. கூறும் சிறப்பிற் பொதுவியற்பால துறைகளுள் ஒனறு. (பு. வெ. மா. 11 - 9)

‘கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச், செல்வோர் செப்பிய மூதானந்தம்’ என்று தொல்காப்பியம் கூறும். (தொ. பொ. 79 நச்.)

மூதின்முல்லை -

{Entry: K11__1005}

வீறு பெற்றொழுகும் வீரப் பெருமிதம் ஆண்களுக்கேயன்றிப் பழமை படைத்த அம்மறக்குடியைச் சார்ந்த மகளிர்க்கு முண்டு என்று மிகுதிப்படக் கூறும் வாகைத் துறை.

பகைப்படை தன் நாட்டின் மீது எதிர்த்து வருதலைப் பொறா தவளாய்த் தனது மனைமுகப்பில் பூத்திருந்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் மகனுக்குக் காவல்முல்லையாகச் சூட்டி, மனைக்கண் இருந்த வேலினை வளைவு நிமிர்த்தி அவன் கையிற் கொடுத்து, தன் குடியிலிருந்த முன்னோர் வீரமரணம் எய்தி நடுகற்களில் தெய்வமாகக் காட்சி வழங்கும் சிறப்பினை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல வீரத்தாய் விடுக்கும் துறையாம். (பு. வெ. மா. 8 : 21)

மூதுழிஞை -

{Entry: K11__1006}

‘முதுவுழிஞை’ என்னும் புறப்பொருள் வெண்பாமாலை (6 : 20). உழிஞை மறவர், மூங்கில் ஓங்கி முழுவதும் பிணைந்த காவற்காட்டின்கண் பறவைகள் போலப் பாய்ந்து சென்று அரணுட் புகுதலைக் கூறும் உழிஞைத்துறை. அஃதாவது மலையுச்சியில் பறந்துகொண்டிருக்கும்போதே தரையில் தமக்கு உணவாகும் பொருளைக் கண்டு விரைந்து தரையை நோக்கி இறங்கிவரும் பறவைகளைப் போல, அரணின் உள் இருக்கும் தம் பகைவராகிய நொச்சிமறவர் ஆற்றல் கெட உழிஞைமறவர்கள் மதிலுக்குள் பாய்ந்து இறங்கும் செய்தி யாம். (இ. வி. 608 - 20)

மூதுழிஞைப் பக்கம் -

{Entry: K11__1007}

‘முதுவுழிஞைப் பக்கம்’ காண்க.

மூவகைக் காலம் -

{Entry: K11__1008}

மழை பனி வெயில் என்ற மூவகைக் காலம்.(தொ. பொ. 74 இள.)

இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக்காலம். (தொ. பொ. 75 நச்.)

மூவகை நிலை -

{Entry: K11__1009}

‘தானை யானை குதிரை என்ற மூன்றுநிலை’ என்னாது, ‘மூவகை நிலை’ என்றதனான், அம்மூன்று நிலையும் தாமே மறம் சிறப்பப் பொருது வீழ்தலும், தானை அரசன் ஏவலின் பொருது வீழ்தலும், யானையும், குதிரையும் ஊர்ந்தார் ஏவலின் பொருதலும், படையாளர் ஒருவர் ஒருவர் நிலை கூறலும், அவர்க்கு உதவலும் என இப்பகுதியெல்லாம் கொள்ளப்படும்.

தானை தானே கறுவுகொண்டு பொருதல் தானைமறம்; யானை அவ்வாறு பொருதல் யானைமறம்; குதிரை அவ்வாறு பொருதல் குதிரைமறம். (தொ. பொ. 72 நச்.)

மூவகை மதில்கள் -

{Entry: K11__1010}

கோட்டைக்கு வெளியே காவலாக அமைந்த புறமதில், புற மதிலை ஒட்டி உள்ளே அமைந்த புறஞ்சேரியை வெளியிருத்தி அமைந்துள்ள இடைமதில், இடைமதிலையொட்டி அமைந் துள்ள அமைச்சர் படைத்தலைவர் வணிகர் வேளாண் செல்வர் ஆகியோர் இருப்புக்களை வெளியிருத்தி அரச குடும்பத்தினர் இருக்கைக்குக் காவலாக இருக்கும் அகமதில், என இவை. (தொ. பொ. 275 குழ.)

மெய்ப்பெயர் மருங்கின் வழிவைத்தல் -

{Entry: K11__1011}

பாடாண்பாடல்களில் மெய்ப்பெயராகிய இயற்பெயர் சுட்டப்பட வாய்ப்பு உண்டு. (தொ. பொ. 84 இள.)

அகத்திணையின் வழியாகிய புறத்திணையிடத்துப் பாட் டுடைத் தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறுவர். (45 குழ.)

புறத்திணைக்குரிய மெய்ப்பெயர்களாகிய இயற்பெயர் வழியே புறத்திணை தோன்றுதற்குரிய வழியாகிய அகத் திணை வைக்கப்பட்டுள்ளது. அகப்பொருள் பாடல்களில் பாட்டுடைத் தலைவன் நாடும் பெயரும் ஊரும் சுட்டப் படலாம். (87 நச்.)

தலைமக்களின் உண்மைப் பெயரைப் பாடாண் பகுதியில் நெறியாக அமைத்துக் கூறுதல். அகத்திணைக்கு விலக்கப் பட்ட இயற்பெயர் காதற்பாடாண் புறத்திணையில் வருதல் புலனெறி வழக்கம். (புறத். 31 பாரதி.)

‘புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலும் உள்ளார்கொல்’ (கலி. 27)

‘வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்’ (கலி. 27)

இவ்வடிகளில் முறையே, ‘கூடலிடத்துத் தலைவி’, ‘வென் வேலான் குன்று’ என ஊரும் மலையும் கூறினார்.

‘அரிபெய் சிலம்பின்’ (அகநா. 6) என்றும் அகப்பாட்டிளுள் ‘தித்தன்’ எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும் ‘பிண்ட நெல்லின்’ என(ச்சோழன்) நாடும், ‘உறந்தை’ என ஊரும், ‘காவிரி ஆடினை’ என யாறும் கூறினார். (நச்.)

மேன்மை -

{Entry: K11__1012}

பெரும்பகை தாங்கும் மேன்மை. அஃது ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ யாம். (வீ. சோ. உரை)

‘பெரும்பகை தாங்கும் வேல்,’ அருளொடு புணர்ந்த அகற்சி’ - இவை நோக்குக.

வீ. சோ. உரை தம்முள் தொடர்பில்லாத இவ்விரண்டனை யும் இணைத்து ‘வாகை’ என்ற பொதுமை பற்றி ஒரே தலைப் புக்கு விளக்கமாகத் தந்துள்ளது. (வீ. சோ. 104)

ய section: 8 entries

யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகை -

{Entry: K11__1013}

வாளும் திகிரியும் முதலியவற்றால் எறியப்பட்ட தலையே யாயினும், உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாமல் எழுந்தாடும் உடம்பினது பெறற்கரு நிலைத்தாகிய பகுதி. இதனை ‘அட்டையாடல்’ என்ப. (தொ. பொ. 71 நச்.)

யாழ்வென்றி -

{Entry: K11__1014}

படுமலைப்பாலையையும் அல்லாத பாலைகளையும் (பிற பண்களையும்) முறைப்படக் கற்றுத் தேர்ந்து, அவற்றை யாழ்நரம்புகளில் இசைத்து இசையைக் கேட்டவர் யாவரை யும் தன்வசப்படுத்தி அமுதம் போன்று செவிச்சுவை நல்கும் யாழ் எழுப்புவதில் ஒருத்தி சிறப்புறுதல்.

இது வாகைத்திணை யொழிபாகக் கூறப்பட்ட துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 18 - 15)

யானை கைக்கோள் -

{Entry: K11__1015}

பகைவரை அழித்த உழிஞைவேந்தன் நொச்சிவேந்தனுடைய காவல் அரணையும் யானைப் படையினையும் கைப்பற்றுதல். அஃதாவது மதிலை வளைத்த உழிஞை வேந்தன், தன் தலைமையை ஏலாத அரணகத்திருந்த நொச்சி வீரர்பட் டொழியும்படி ஞாயில் முதலிய உறுப்புக்களையுடைய அம்மதிலைத் தன் வசப்படுத்தி, மதிலினுள் இருந்த மன்ன னுடைய யானைப் படையையும் தன்னுடைமையாக்கிக் கொள்ளுதல் என்ற உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 24)

யானைநிலை -

{Entry: K11__1016}

தும்பைத்திணையில் களம் வகுத்துப் போரிடப் புறப்பட்ட போது போர் செய்யும் யானைகள் மதத்தால் கதம் சிறந்து தாமே போரிடும் தும்பைத் துறை ‘யானைமறம்’ எனவும், ஊர்ந்தார் ஏவலின் பொருது வெற்றி காணும் தும்பைத்துறை ‘யானைநிலை’ எனவும் கூறப்படும். (தொ. பொ. 72 நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘யானை மறம்’ என்னும் (7-6)

வீரசோழியம் பொதுப்பட ‘நிலை’ என்னும். (கா. 105)

யானைநிலைத் துறைப் பகுதி -

{Entry: K11__1017}

தும்பைத் திணையில் யானை அரசர்மேலும் படைத் தலைவர் மேலும் ஏனையோர்மேலும் செல்லுதல். (தொ. பொ. 72 நச்.)

யானைமறம் -

{Entry: K11__1018}

யானைப்படையின் வீரத்தைச் சிறப்பித்தல். அஃதாவது அரச னுடைய களிறு, கடல் போன்ற பகைவருடைய படையகத்தே சென்று, பகைமன்னருடைய உயிரை உண்ணுவதற்குக் கூற்றும் உடல்தசையை உண்டற்குப் பேயும் கழுகும் பின் தொடர, சினத்தொடு போரிடும் தும்பைத் துறை. (பு. வெ. மா. 7 - 6)

யானைகள் தாமே மதத்தால் கதம் சிறந்து போரிடும் தும்பைத் துறையே யானைமறம் என்பது. (தொ. பொ. 72 நச்.)

யானை வென்றி -

{Entry: K11__1019}

மதத்தால் சினம் மிகுந்த யானை, பகைத்து வந்த யானையை வீழ்த்திய பிறகும், கணைய மரத்தை முறித்து அங்கே நின்று சினம் தணியாமல் தன் நிழலையே கண்டு சினந்து அதனைக் காலால் துகைக்கும் நிலையைச் சிறப்பிக்கும் வென்றி; வாகைத்திணை பற்றிய ஒழிபாகிய துறைகளுள் ஒன்று. (பு. வெ. மா. 18 - 8).

யோகம் செய்வார்க்குரிய எட்டு நிலைகள் -

{Entry: K11__1020}

இயமம் - பொய் கொலை களவு காமம் பொருளாசை என்னு மிவற்றை நீத்தல்.

நியமம் - பெற்றது கொண்ட மகிழ்ச்சி, உடலிடத்துப் பற்றுக் கொள்ளாமை, தூய ஒழுக்கம், யோகநிலை கற்றல், குருபக்தி முதலியன.

ஆசனம் - நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்ற நான்கு நிலைகளிலும் தளராமல் இருந்து இன்பதுன்பங்களைச் சமமாகப் பாவித்தல்.

வளிநிலை - கொப்பூழினின்று தோன்றும் இருவகைக் காற்றையும் அவ்வவற்றுக்குரிய இயக்கத்தில் செலுத்துதல்.

தொகைநிலை - பொறிபுலன்களை அடக்கி ஒருவழிப்படுத்தல்.

பொறைநிலை - மனத்தை ஒருவழிப்படுத்தல்.

நினைவு - ஒருவழிப்படுத்திய மனம் அலையாதபடி அதனைத் தான் குறித்த பொருளிலேயே நிலைநிற்கச் செய்தல்.

சமாதி - தான் குறித்த பொருளொடு மனத்தால் இரண்டறக் கலந்திருத்தல். (தொ. பொ. 75 நச்.)

இவை முறையே அடக்கம், நோன்பு, இருக்கை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைத்தல், கலத்தல் எனவும் கூறப்படும். (283 குழ.)

வ section: 180 entries

‘வண்ணப்பகுதி வரைவின்றாதல்’ -

{Entry: K11__1021}

செந்துறைப்பாட்டின்கண் வரும் வண்ணப்பகுதி பாடாண் திணைப் பாடலுக்கு வரையறை செய்யப்படாமை.

இதனால் சொல்லியது; தேவபாணியும் அகப்பொருள்பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஓதினாற்போலச் செந் துறைப் பாட்டிற்குரிய செய்யுள். இவை என்று பாடாண் திணையைப் பொறுத்த வரை வரையறை இல்லை; பாடாண் திணைக்கு எல்லாச் செய்யுளும் ஆம் என்பது. (தொ. பொ. 80 இள.)

மக்களைத் தேவராக உயர்த்திக் கூறாமல் மக்களை மக்க ளாகவே பாடும் செந்துறைப்பாடாண் பாட்டின்கண் எல்லா வருணத்தாரையும் பாடலாம்; இன்ன வருணத்தாரைத்தான் பாடுதல் வேண்டும் என்ற வரையறை இன்று. வருகின்ற காமப்பகுதிக்கண் வருணப்பகுதி நீக்கப்படும். கைக்கிளைத் தலைவியை உயர்ந்தோன் வருணத்துப் படுத்துக் கூறாது, அனைநிலை (சூ. 75) வருணத்துப் படுத்துக் கூறுப. (82 நச்.)

பாடாண் பகுதியைப் பாடுமிடத்து இயற்பாக்களே யன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படமாட்டா. (புறத். 27 பாரதி)

ஒருவரை இயல்பாக வாழ்த்தியும் புகழ்ந்தும், அறம் பொரு ளின்பம் பயக்கவும் பாடும் செந்துறைப் பாடாண்பாட்டிற்குப் பெரும்பாலும் வண்ணங்கள் மிகுதியும் பயிலும் ஆசிரியப்பா வும் அதன் இனமான வஞ்சியும், சிறுபான்மை பிறபாக்களும் உரியன. (291 குழ.)

வணிகர் எண்குணம் -

{Entry: K11__1022}

தனிமை ஆற்றல், முனிவு இலனாதல், இடனறிந்தொழுகல், பொழுதொடு புணர்தல், உறுவது தெரிதல், இறுவது அஞ்சாமை, ஈட்டல், பகுத்தல் என்பன. (யாவ. பக். 346) (பிங். 779)

வஞ்சி -

{Entry: K11__1023}

வெட்சி சூடிய மறவர் அரசன் ஏவலால் இரவில் ஆநிரையைக் கவர்ந்துவர, ஆநிரையை இழந்த மன்னன் வீரர்கள் கரந்தை சூடி அதனை மீட்க வர, இருவருள் ஆநிரையைக் கைப்பற் றியவனோ ஆநிரையை இழந்தவனோ வஞ்சிப் பூச் சூடிப் பகைவர் நாட்டைக் கைப்பற்றும் நோக்குடன் படை யெடுத்துச் சென்று செய்யும் செயல்களைக் கூறும் புறப் பொருட்பகுதி. (தொ. பொ. 62 நச்.)

வஞ்சி அரவம் -

{Entry: K11__1024}

‘வஞ்சியரவம்’ காண்க.

வஞ்சி ஓடாப் படையியங்கு அரவம் -

{Entry: K11__1025}

ஆநிரை கோடல் தொடர்பாகப் பகைமை வெளிப்பட, மாற்றரசர்நாட்டைக் கைப்பற்ற வஞ்சிசூடிப் புறப்பட்ட மன்னனுடைய படைவீரர் செல்லும்போது ஏற்படும் ஆர வாரம் பற்றிக் கூறும் வஞ்சித்திணைத்துறை. (இ. வி. 606 - 2)

வஞ்சிக் குடைநாட்கோள் -

{Entry: K11__1026}

பகைவர்மண்ணைக் கொள்வதற்காக வஞ்சி சூடிய மன்னன், நல்லதொரு நாளின்கண் நன்னேரம் பார்த்துத் தனது வெண்கொற்றக் குடையைப் புறவீடு செய்தல் என்னும் வஞ்சித்துறை. (இ. வி. 606 -3)

இது குடைநிலை எனவும் கூறப்படும். (பு. வெ. மா. 3 - 31)

வஞ்சிக் கொற்றவைநிலை -

{Entry: K11__1027}

வஞ்சி வீரர் தம் செயல் வெற்றி பெறல் வேண்டிக் கொற்ற வைக்கு எள்ளுருண்டை, நெற்பொரி, அவரை, துவரை, அவல், கொழுப்பு, குடர், குருதி என்னுமிவற்றை நிவேதனம் செய்து வழிபாடு நிகழ்த்துதல். (பு. வெ. மா. 3 : 5)

வஞ்சிக் கொற்றவைநிலைப் பக்கம் -

{Entry: K11__1028}

தம் கைவேலால் பகைவர்மார்பை உழுகிற வீரர்களுடைய போர்ச்செயலைக் கூறுதலும் கொற்றவை நிலையாகும். (பு. வெ. மா. 3 : 6)

வஞ்சித்தழிஞ்சி -

{Entry: K11__1029}

தோற்றோடுவோர் முதுகில் படைக்கலன்களை எறியாத மேம்பட்ட வீரத்தைப் பாராட்டியுரைத்தல் என்ற வஞ்சித் துறை. அஃதாவது “காட்டுத்தீயைப் போலப் பகைவராகிய காஞ்சியார் தன்னை எதிர்த்து வரினும், அப்படைவீரர்கள், போரிட்டு வீரத்துறக்கம் புகும் வேட்கையராய் வாராது, அஞ்சி ஓடி உயிர் பிழைக்கும் கருத்தோடு வருவாராயின், வஞ்சி வீரன் தன் படைக்கலன்களைத் தொட்டு அவரொடு போரிட முற்படான்” என்பது போன்று அத்தறுகண்மையை மிகுத்துக் கூறுதல். (பு. வெ. மா. 3 : 20)

வஞ்சித்தழிஞ்சியின்பாற்படுவன -

{Entry: K11__1030}

புண்பட்டோரை, அன்னோர் முன்னர்ச் செய்த படைவலம் கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வன போல்வன. இதனை ‘முதுமொழி வஞ்சி’ என்ப. ‘அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சாக் கழிதறுகண்மை’ தழிஞ்சி யாகாது, ‘ஒருவன் தாங்கிய பெருமை’ யின் பாற்படும்.(தொ.பொ.63 நச்.)

வஞ்சித்திணையில் இருசாராருக்கும் பொதுவான துறைகள்-

{Entry: K11__1031}

தொல்காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறைகள் பதின்மூன் றனுள் இறுதியிலுள்ள வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளை என்ற மூன்றும் நீங்கலாக முதலன பத்தும் இரு சார் வஞ்சி வேந்தருக்கும் பொதுவான துறைகளாம்.

இரு சார் வேந்தருக்கும் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறைநிலை யுரைத்தலும் இரு சாரார்க்கும் பொதுவாவதாம். (தொ. பொ. 65 இள.)

வஞ்சித்திணையின் பொதுஇலக்கணம் -

{Entry: K11__1032}

பிறர்நாட்டைக் கவருவதில் ஒழியாத விருப்பமுடைய மன் னனை மற்றொரு வேந்தன் அஞ்சுமாறு சென்று தாக்குவது. (தொ. பொ. 64 இள.)

இரு பெரு வேந்தருக்கும் இடையீடான மண்ணிடத்து வேட்கையால், ஆண்டு வாழும் மக்கள் அஞ்சுமாறு அந்நாட் டிடத்துச் சென்று, ஒரு வேந்தனை மற்றொரு வேந்தன் வெற்றி கொள்ளுதல். (62 நச்.)

தணியாத, பிறர்நாட்டை வெல்லும் ஆசையுடைய ஒரு வேந்தனை அறமும் மறமுமுடைய மற்றொரு வேந்தன் அவன் வஞ்ச நெஞ்சம் அஞ்சுமாறு தானே படையொடு மேற் சென்று வென்றடக்குதல். (புறத். 7 பாரதி)

தன் நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் இடையேயுள்ள பொதுநிலத்தைத் தனதாக்க எண்ணி அடுத்த நாட்டரசனை வெல்லுதற்குப் படையெடுத்துச் செல்லுதல். (273 குழ.)

வஞ்சிப்பூவைச் சூடி மன்னனொருவன் மாற்றரசனது மண்ணைக் கவருதலைக் கருதும் புறப்பகுதி வஞ்சித்திணை யாம். (பு. வெ. மா. 3-1)

வஞ்சித் தும்பை -

{Entry: K11__1033}

வஞ்சிப் போருள் முகத்தினும் மார்பினும் புண்பட்ட வீரரை நோக்கி வேந்தர்களுக்கு வீரம்பற்றிய பொறாமை நிகழத் தாம் போர்க்களத்தை விடுத்துச் செல்லாது இறுதிவரை போரிட் டுத் துறக்கம் எய்தும் விருப்பம் கொண்டு பொரும் போர் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். (தொ. பொ. 71 நச்.)

வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு -

{Entry: K11__1034}

பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாற்றினை இறப்ப உயர்த்தித் தேவரோடொப்பக் கூறாது, மக்கள் நிலையிலேயே புனைந்துரைக்கும் பாடாண்பாட்டில், அவன் பகைவர்மேற் செல்லுதலைக் குறிப்பிடும் பாடல்.

பாடாண்பாட்டில் செந்துறை, வஞ்சித்துறை, பரிசில் துறை, வாகைத்துறை என்ற நான்கு வகைகள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன. (பதிற். 11, 22, 19, 35)

வஞ்சி முல்லைக்குப் புறனாதல் -

{Entry: K11__1035}

மாயோன் மேய காடுறை உலகமும் கார் காலமும் முல்லைக்கு முதற்பொருளாதல் போலப் பகைவயின் சேறலாகிய வஞ்சிக்குப் பருமரக் காடாகிய நிலமும், நீரும் நிழலும் உள்ள கார்காலமும் உரியன. (தொ. பொ. 64 இள.)

முதலெனப்பட்ட காடுறையுலகமும் கார்காலமும், அந்நிலத் திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கண் தலைவி யைப் பிரிந்து இருத்தலும் அவளும் அவனைப் பிரிந்து மனைவயின் இருத்தலும் ஆகிய உரிப்பொருளும், ஒப்பச் சேறலின் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல் பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றொடு சென்று இருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம்முதல்கரு உரியும் வந்தன. (61 நச்.)

அகத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் அல்லது வினைமேல் செல்வது போல, வஞ்சித்தலைவனும் தலைவி யைப் பிரிந்து பகைமேல் செல்லுதலானும், முல்லையிலும் வஞ்சியிலும் தலைவரைப் பிரிந்த தலைவியர் தனிமை தாங்காது வருந்திக் கற்பறம் பேணியிருப்பது பொது ஒழுக்கம் ஆகலானும், முல்லைத் தலைவர் புலம்புறு தலைவியரைப் பிரிந்து செலவு மேற்கொள்வது மனையறம் பேணும் கடனி றுக்கும் பொருட்டாதல் போன்று வஞ்சித்தலைவர் மேற் செலவும் ஆண்மையறம் பேணும் பொருட்டாதலானும், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. (புறத். 7 பாரதி)

மண்ணாசை கொண்டு தன் மண்ணை நெறியின்றி அகப் படுத்திய வேந்தனொருவனை அவன்நாட்டின்கண் அஞ்சு மாறு சென்று பொருதழிக்கும் அரசியற்கடமை மேற் கொண்ட மற்றைய வேந்தன் தன்தலைவியைப் பிரிந்து சென்று பாசறைக்கண் இருத்தல் வேண்டியுள்ளது. பாசறை அமைப்பிற்கு ஏற்ற நிலம், நீரும் நிழலும் உணவும் பெற வாய்ப்புடைய முல்லை நிலமே. அந்நிலமும் செழித்தற்குரிய காலமும் கார்காலமே. தனது மண்ணைக் காத்துக்கொள் ளுதல் அரசியற்கற்பாம். அது கருதி அடல் குறித்துச் சென்ற தலைவன் தன் கடமை முற்றுமளவும் தலைவியைப் பிரிந்து ஆற்றியிருக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் ஒத்தமைந்து, தலைவி ஆற்றியிருப்பதற்குக் காரணமாக வஞ்சிஒழுக்கம் நிகழ்கிறது. ஆதலின் அது முல்லைக்குப் புறனாயிற்று. (தொ. புறத். 6 ச. பால.)

வஞ்சியரவம் -

{Entry: K11__1036}

வீரமுரசுடனே யானைமுழங்கப் பகைவர்மீது சேனை கோபித்துக் கிளர்வதைக் கூறும் வஞ்சிப் புறத்துறை. (பு. வெ. மா. 3 - 2)

வஞ்சியான் -

{Entry: K11__1037}

பிறர்மண்ணிடத்துக் கொண்ட விருப்பானே முதலில் இரவுநேரத்தில் களவினால் பகைப்புலத்து ஆநிரைகளைக் கவர்ந்து போர்த்தொடக்க அறைகூவல் விடுத்த மன்ன னுடைய வீரன் ஒவ்வொருவனும் வஞ்சிப்பூச் சூடிப் பகைவர் நாட்டைக் கவர்வதற்கு அந்நாட்டின்மீது பலவகைப் படைக ளுடன் போர்க்குச் செல்லும் நிலையில் வஞ்சியான் எனப்படுவான்.

தன் அரசனுடைய ஆநிரைகளைப் பகைவர் கவரக் கொடுத்து எச்சரிக்கையுடன் தன் நிலத்தைக் காத்தற்கு ஆயத்தமாகப் படையுடன் இருந்து வஞ்சி சூடிப் பகைவரொடு போரிடும் வீரனும் வஞ்சியானே என்பது தொல்காப்பியர் கருத்து. (தொ. பொ. 62 நச்.)

எதிர்த்து வந்த வஞ்சி வீரனை எதிரூன்றும் வீரன் காஞ்சிப்பூச் சூடி மலைவான் எனவும், அவன் காஞ்சியான் எனப்படுவான் எனவும் புறப்பொருள் வெண்பாமாலை கூறம். (4-1)

வஞ்சி வேந்தன் -

{Entry: K11__1038}

பகைவருடைய நிலத்தைக் கைப்பற்றும் விருப்பத்தானே தன் பலவகைப் படைகளொடு பகைவர்நாட்டை நோக்கிப் போரிடச் செல்லும் மன்னன். (தொ. பொ. 62 நச்.)

அவனை எதிர்த்துத் தன் நாட்டைக் காக்கும் வேந்தனையும் தொல்காப்பியம் வஞ்சிவேந்தன் என்னும். புறப்பொருள் வெண்பாமாலை காஞ்சிவேந்தன் என்னும். (4 - 1)

வஞ்சினக் காஞ்சி -

{Entry: K11__1039}

“யான் இது செய்யேனாயின் எனக்கு இன்ன பழி வந்தெய் துக!” என்று அரியசூள் உரைத்து, தன்னை எதிர்த்து வந்த பகைவனொடு போரிடற்கு முற்படுதலைக் கூறும் காஞ்சித் திணைத் துறை. (பு. வெ. பா. 4 : 9)

‘இன்னது பிழைப்பின் இதுஆகியரெனத், துன்னருஞ் சிறப்பின் வஞ்சின’க் காஞ்சி என்னும் தொல்காப்பியம். (தொ. பொ. 79) அது காண்க.

வஞ்சினம் -

{Entry: K11__1040}

சூளுறவு. ‘வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர்’ (பதிற். 41 - 18)

வணிகர் அறுதொழில் -

{Entry: K11__1041}

ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம் என்பன வணிகர் ஆறுதொழிலாம். (திவா. பக். 291)

வணிகர் வேளாளர் பிரிவு -

{Entry: K11__1042}

அரசனுடைய சார்பாளராகிய நிலையில் வணிகரும் வேளாளரும் பகையை வெல்லவும், நாட்டைக் காக்கவும், வரிகளைத் திரட்டவும், சந்து செய்விக்கவும், தம் சொந்த வாழ்க்கைக்கு அறத்தில் திரியாத வகையில் பொருள் தேடவும் பிரிதல் உண்டு. (தொ. பொ. 30 -32 குழ.)

வணிகர் வேளாளர் வேறுபாடு -

{Entry: K11__1043}

வணிகர் இயல்பாவன ஓதலும் வேட்டலும் நிரையோம் பலும் வாணிகமும் உழவும் ஈதலும் என்னும் ஆறும்; வேளாளர்க்கு வணிகர்க்கு ஓதியவற்றுள் வேட்டல் ஒழிந்த ஐந்தனொடு வழிபாடும் என ஆறும் ஆம். (தொ. பொ. 75 நச்.)

‘வயங்கல் எய்திய பெருமை’ -

{Entry: K11__1044}

போர்மேற் செல்லும் வஞ்சிவீரர்கள் வினைஆற்றல்களால் விளங்கிய சிறப்பு. இது வஞ்சித் திணைத் துறை.

ஒருவன் மேற்செல்ல, மற்றவன் எதிர்ஊன்றச் செல்லுங்கால் பிற வேந்தர் தத்தம் தானையொடு அவ்வஞ்சி வேந்தர் களுக்குத் துணையானபோது அவர்கள் விளக்கமுற்ற பெருமை. (தொ. பொ. 63 நச்.)

வயங்குதல் - மனக் கிளர்ச்சியால் விளக்க முறுதல். (274 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘கொற்றவை நிலைப்பக்கம்’ என்ற துறையின்கண்ணும், ‘கொற்ற வஞ்சி’ என்ற துறையின்கண்ணும் குறிக்கும். (3 - 6, 7)

இதனை வீரசோழியம் ‘வயங்கியல்’ என்று குறிக்கும்.(கா. 101)

‘வயங்கல் எய்திய பெருமை’க்கண் அடங்குவன -

{Entry: K11__1045}

துணைவேந்தரும் பெருமன்னரும் பொலிவு எய்திய பாசறை நிலை கூறுதலும், அவர் வேற்றுப்புலத்து இறுத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து இரிந்தோடப் புக்கிருந்த ‘நல்லிசை வஞ்சி’ முதலியனவும் ஆம். (தொ. பொ. 63 நச்.)

வயங்கியல் -

{Entry: K11__1046}

மேற்செல்வான் துணையரசரால் விளக்க முற்ற பெருமை. ‘வயங்கல் எய்திய பெருமை’ காண்க. (வீ. சோ. 101)

‘வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை’ -

{Entry: K11__1047}

இளைஞன் ஒருவன் பெரும்படையைக் கண்டு அஞ்சி ஓடாது எதிர்நின்று பொருதமை கண்ட மறவர்கள் அவன் காலின்கண் கழல் புனைந்து ஆடும் கழல்நிலைக் கூத்து.

வீரரால் புகழப்பட்ட கெடாத கழல் நிலை. (தொ. பொ. 63 இள.)

இக்கழல்நிலைக் கூத்தினை மறவரொடு மறக்குடி மகளிரும் ஆடுப. அவ்வீரனை வியந்து கொடி முதலியன கொடுத்தலும் உண்டு. இது வேத்தியலன்றித் தம்முறு தொழிலாதலின் வழு. (60 நச்.)

கழல் - போர் வெற்றிப் பெருமிதக் குறிப்பாக மறம் பேணும் திறலுடையார் காலில் பூணும் ஓர் அணிவகை.(புறத். 5 பாரதி)

இது போர்த் தொடக்க வெட்சிவகைத் துறைகளுள் ஒன்று; புறத்திணை எல்லாவற்றிற்கும் பொதுவானது. (298 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் பொதுவியல் படலத்து 7ஆம் துறை; கழல்நிலை என்பது துறைப்பெயர். (10 -7)

இது வீரசோழியத்துள் ‘ஓடாப் படையாண்மை’ என்ற கரந்தை வகையாகக் கூறப்படும். (கா. 100)

வயவன் தொடு கழல் புனைதல் -

{Entry: K11__1048}

இது தொல்காப்பியத்தில் ‘வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை’ எனவும், புறப்பொருள் வெண்பாமாலையில் ‘கழனிலை’ எனவும் கூறப்படும். இதனைக் கரந்தைத் திணைக்கு உரிய தென வீரசோழியமும், புறத்திணைகள் எல்லாவற்றிற்கும் உரியதெனக் குறிப்பாக ஏனை நூல்களும் கூறும். (இ. வி. 619 - 5)

வரிசை ஏற்று ஆர்த்தல் -

{Entry: K11__1049}

இது ‘படைவழக்கின் பக்கம்’ என்ற காஞ்சித் துறை; அது காண்க. (சாமி. 142)

வருதார் தாங்கல் -

{Entry: K11__1050}

தன்மேல் வரும் கொடிப்படையினைத் தானே எதிர்த்து நிற்றல் என்ற பிள்ளைப்பருவத்தான் செயல் கூறும் கரந்தைப் பகுதியாகிய வெட்சித்திணைத் துறை. (தொ. பொ. 63 இள.)

தன்மேல் வரும் கொடிப்படையினைத் தானே தடுத்தல், வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலின் கரந்தை யாம்; தும்பையாகாது. இது போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு. (60 நச்.)

“முன் நடந்த போர்களில் தன் தமையனையும் கணவனையும் இழந்தவள், இன்று போர் முரசம் கேட்டு விருப்புற்று மயங்கி, ஒரு மகன் அல்லது இல்லாதவள், வெளிய ஆடை விரித் துடுத்தி பாறுமயிர்க் குடுமியில் எண்ணெய் தடவி, போர் முகம் நோக்கிப் போமாறு தன் சிறுவனை விடுக்கிறானே! கெடுக சிந்தை!, கடிது இவள் துணிவு!” (புறநா. 279) என்பது போர்வினை கல்லாத இளைஞனைப் போர்க்கு விடுத்தலின் இத்துறைப்பாற்படும். (நச்.)

எதிர்த்து வரும் படையின் முன்னணியைத் தனித்து நின்று தடுத்தல் என்ற பிள்ளைநிலைத்துறை கரந்தைப் பகுதியாம் வெட்சித்திணைத் துறையே. (புறத். 5. பாரதி)

இஃது எல்லாத் திணைகட்கும் பொது எனினும், கரந்தையைச் சார்ந்த வெட்சிக்கு ஏற்கும். (298 குழ.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் கரந்தைப் பட லத்துள் ‘ஆளெறிபிள்ளை’ என்ற 7ஆம் துறையாக உள்ளது.

இது வீரசோழியத்தில்’ ஓடாப் படையாண்மை’ என்ற கரந்தை வகையில் அடங்கும். (கா. 100)

இஃது இலக்கண விளக்கத்தில் வெட்சியின் இரண்டாம் பகுதிக்கண் ‘அருஞ் சமர் விலக்கல்’ என்ற 19ஆம் துறையாக உள்ளது. (இ. வி. 604)

‘வருபகை பேணார் ஆரெயில்’ -

{Entry: K11__1051}

வெகுண்டு வருகின்ற பகையைப் பேணார் ஆரெயில் உழிஞை.

(தொ. பொ. 68 இள.)

புறத்தோன் அகத்தோன்மேல் வந்துழி, அவன்பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தலுக்கு அமைந்த மதிலரண் கூறுதல். இஃது அகத்தோன் செல்வம் போற்று தற்கு ஏதுவாகிய மதிலரண் கூறுதலின் செல்வத்துள் அடங்காது. (67 நச்.)

“மலைமார்ப! ‘வேற்கையராய்ப், பகைவர்மாட்டுத் தம் மாறுபாடு மிக்கு, உலகமே தமது வீரத்தினை அறியுமாறு அத்தகு வலிமையைத் தம்பாலுடையராய்த் திகழும் வீரர் இருப்பிடம் எது?’ என்று வினவுதி. திண்ணிய கூரிய படைக் கருவிகளைக் கொண்ட பகைவரை யாண்டுக் காணினும், அவ்விடமெல்லாம் தோன்றி, பகைவரே பாராட்டுமாறு புண்கள் மிக்க தம் உடல் வலியாலே யாண்டும் பரவி நின்று, வலிமை மிக்க தடக்கையுடையராய்ப் பேராண்மை மிக்க வீரர்களால் நிறையப்பட்டு, மாற்றோர் தன்பால் தீண்டுதல் கூடாத எம்வேந்தன் உறையும் அரணமே அவ்விடம்” என்ற பொருளமைந்த தகடூர் யாத்திரைப்பாடல் எடுத்துக்காட் டாவது. (நச்.)

வெகுண்டு மேல்வரும் உழிஞைப்பொருநரைப் பொருட் படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கு அரிதாம் அரணின் பெருமை. (புறத். 12 பாரதி)

இதனை உழிஞையார் இருவர்க்கும் பொதுவாகக் கொள்வர் இளம்பூரணர், அகத்துழிஞையானுக்கே கொள்வர் நச்சினார்க் கினியரும் குழந்தையும்; உழிஞைவகைகளுள் ஒன்றென்பார் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

புறப்பொருள் வெண்பாமாலை இதனை ‘ஆரெயில் உழிஞை’ என்னும். (6-11)

இதனை வீரசோழியம் ‘காவல்’ என்ற உழிஞைத்துறையுள் அடக்கும். (கா. 103)

‘வருவிசைப் புனலைக் கற்சிறைபோல, ஒருவன் தாங்கிய பெருமை’ -

{Entry: K11__1052}

விசை கொண்டு வரும் புனலைத் தடுக்கும் கல்லணை போல எதிர்த்து மேல்வரும் பகைப்படையை அஞ்சாது ஒருவனாய்த் தனிநின்று தடுக்கும் வீறு. இது வஞ்சித்திணைத் துறை.

தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையொடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற் போலத் தன்மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமை. (புறநா. 330) (தொ. பொ. 63 நச்.)

முன்னர் மாராயம் பெற்றவனே இத்துறையை நிகழ்த்துவான். (நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சிப்படலத்து ‘ஒருதனி நிலை’ என்ற 19ஆம் துறையாகக் கொள்ளும்; வீர சோழியம் வஞ்சி வகையுள் ‘தனிச் சேவகம்’ என்ற துறையாகக் கொள்ளும். (கா. 101)

வல்லாண் பக்கம் -

{Entry: K11__1053}

பகை வென்று விளங்கி மதிப்பெரு வாகை வண்டார்த்துப் பெறுதற்காகப் போரிடும் வீரன் செங்களத்தில் போராடி இறத்தல். ‘புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்’ நோக்குக.

(வீ. சோ. 104 உரை)

வல்லாண் முல்லை -

{Entry: K11__1054}

மறவனுடைய பிறந்த இல்லும் வாழும் பதியும் ஆகிய இவற்றைச் சிறப்பித்துக் கூறி, அவற்றிற்கு ஏற்ற குலஇயல் பினைப் பாராட்டி, அவனுடைய மேதக்க ஆண்மையின் பெருமையினை,”போர்க்களத்தில் தன் அரசன் முன் அவனுக் குத் துணையாக நின்று மார்பில் வேல் மூழ்க விழுப்புண் பட்டுப் புகழ்மாலை சூடியவன் இவன்“ என்றாற்போல உயர்த்திக் கூறும் வாகைத் திணைத் துறை. (பு. வெ. மா.8:23)

வழிச் செலவு -

{Entry: K11__1055}

இது வழியிடைச் சேறல் என்னும் வெட்சித் துறை (இ. வி. 603:6); ‘செலவு’ என்றும் (பு. வெ. மா. 1 : 5; வீ.சோ.99) வழங்கும். (சாமி. 129)

வழிமுறைத் தாரம் -

{Entry: K11__1056}

முதல் மனைவி மணத்துக்குப் பின் மணந்து கொண்ட தாரம். ‘தன் காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின்’. (தொல். பொ. 79 உரை) ( L)

வழியிடைச் சேறல் -

{Entry: K11__1057}

வெட்சி மறவர் பகைவருடைய பசுக்களைக் கவர்வதற்கு வில்லை ஏந்தி, போர் நிகழின் ஆண்டு இறந்துபடும் உடல் களை உண்பதற்குக் கழுகு முதலிய பறவைகள் பின் தொடர்ந்து வர, தம் பகைவருடைய ஆநிரைகளை வில்லேந் திக் காக்கும் மறவர் தங்கியுள்ள குன்றம் நோக்கிச் சேறல் என்ற வெட்சித்திணைத் துறை.

இது தொல்காப்பியத்துள் ‘புடைகெடப் போகிய செலவு’ எனவும் கூறப்படும்; பு.வெ.மாலையிலும் (1:5) வீரசோழியத் திலும் ‘செலவு’ (கா. 99) என்றே கூறப்படும். (இ. வி. 603 - 6)

வள்ளி - (1) -

{Entry: K11__1058}

மகளிர் மனம் உருகி முருகனுக்கு ஆடும் வள்ளிக் கூத்து. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் (தொ. பொ. 85 இள.)

வள்ளி - கொடி. பல விண்மீன்கள் கொடி போலச் சூழத் தான் இடையேயுள்ள சந்திரன் வள்ளியெனப்பட்டது. மதியத் தினை வாழ்த்துதலும் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும். அமரர் என்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண் பால் தெய்வங்களும் வள்ளி என்னும் கடவுள் வாழ்த்தினுள் பொருந்தும். திங்கள் நீரின் தன்மையும் பெண் தன்மையும் உடைமையான் பெண்பால் தெய்வ வழிபாட்டினை வள்ளி யில் அடக்கலாம். வள்ளன்மையுடையது வள்ளியென்ற பொருளில் தேவர்க்கு அமுதகிரணங்களை வழங்கும் மதியம் வள்ளி எனப்பட்டது எனலும் ஆம். (88 நச்.)

முருகனைப் பெண்டிர் பலரும் பாடிப் பரவும் வெட்சி வகைப் பாடாணாகிக் கடவுள்வாழ்த்தைத் தழுவி வரும். (புறத். 32 பாரதி)

வள்ளி (2) -

{Entry: K11__1059}

தம்முள் ஒத்த வளையல்களை அணிந்த இளநங்கையர், இசைக் கருவிகளின் முழக்கத்திடையே முத்தலைச் சூலத்தை ஏந்திய சிவபெருமான் மகனாகிய முருகன்பொருட்டு வேல னுடனே ஆடும் வெறிக்கூத்து, வீடுபேறு நல்கும் இயல்பிற் றாதலின் எல்லோரானும் விரும்பத்தக்கது என்று போற்றப் படும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 - 41)

‘வள்ளி’ முருகவேளைக் குறித்தது; பாடாண் வகையைச் சார்ந்தது. (வீ. சோ. 106)

வள்ளி வாழ்த்து -

{Entry: K11__1060}

கடவுள் வாழ்த்தொடு சேர்த்து உயர்வாக எண்ணி வாழ்த் தப்படும் சந்திரனை வாழ்த்தும் பாடாண்துறை.

“நல்வினை பயன்தருவதால் நல்வாழ்வு வாழ்பவர், நல்வினை தேயத் தீவினை பயன் தரத் தொடங்கின் வறுமை எய்துவர்; தீவினைப் பயனால் துன்புறுபவர் தீவினை தேய நல்வினை தலையெடுக்க நல்வாழ்வுறுவர் - என்ற செய்தியை வளர்பிறை யிலும் தேய்பிறையிலும் சந்திரன் நமக்குத் தெரிவிக்கின்றான்” என்றாற் போலச் சந்திரனது பண்பினை எடுத்துக் கூறுவது வள்ளி வாழ்த்தாம். வள்ளி - சந்திரன். (மா. அ. பாடல் 324)

வளிநிலை -

{Entry: K11__1061}

பிராணன், அபானன் என்னும் இருவகை வளியினையும் ஆயாமம் செய்து நிறுத்துதலாகிய யோக உறுப்பு; ‘நாலிரு வழக்கின் தாபதப் பக்க’த்துள் ஒன்று (தொ. பொ. 75 நச்.) இருவகை வளியினையும் வேறுவேறு கூறாது பிராணன் எனவும் கூறுப. ஆயாமம் என்பது தடுத்து நிறுத்துதல்.

இவ்வளி நிலை இரேசகம், பூரகம், கும்பகம், நிலை என நான்கு வகைப்படும். அவற்றுள் இரேசம் என்பது உந்தியின் மேலிட மாகிய வெளியில் நின்ற காற்றினைப் பதினாறு மாத்திரை மீண்டும் வெளியில் விடுத்தல். பூரகம் என்பது வெளியில் நின்ற காற்றை உள்ளிழுத்து உந்தியில் முற்றும் தடாமல் உடனே மீண்டும் வெளியில் விடுத்து, பின்னர் உந்தியில் தடுத்து மீண்டும் இழுத்தல். கும்பகம் என்பது பதினாறு மாத்திரை பூரித்து, முப்பத்திரண்டு மாத்திரை இரேசித்து, பின் அறுபத்து நான்கு மாத்திரை உந்தியில் தடுத்தல். இனி, நிலை என்பது இரேசித்துப் பூரித்து நில்லாது கழிதற் பாலதாகிய நான்கு அங்குலக் காற்றினைக் கழியாது தடுத்துக் கும்பித்து, கும்பித்த காற்றினை நடுநாடியாகிய சுழுனையிற் செலுத்தி நிலைக்கச் செய்தல்.

வளிநிலை வகை நான்கனுள் முன்னைய மூன்றும் பூரகத் தையும், ஈற்று நிலை இரேசகத்தையும் முதல் தொழிலாகக் கோடலின், இறுதியில் நிகழும் தொழிலான் அவை அப் பெயர் பெற்றன. இவ்விலக்கண மெல்லாம் திருமந்திரத்துள் கண்டவை. (பா. வி. பக். 41, 45, 46)

வாகை -

{Entry: K11__1062}

இழிவொடு பழிபடும் துறைகளை விடுத்து ஏனைய நல்லாற் றின் அமைந்த துறைகளில் வல்லார் தத்தம் துறைகளில் பிறருடன் உறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதலும், உறழ்பவர் இன்றித் தமக்கு நிகர் தாமேயாய் வீறு பெற்றிருத்தலும் வாகையாம். இதற்கு வாகைப்பூச் சூடுதலும் உண்டு. பொது வாக, வாகை என்பது வெற்றியைச் சுட்டுவதாம். (தொ. பொ. புறத்.19 பாரதி)

வாகை அரவம் -

{Entry: K11__1063}

விழுப்புண் பட்ட வேதனையாவும் வெற்றி பெற்றதால் மறந்த மறவர் வெள்ளிய வாகைக் கண்ணியும் வலிய வீரக் கழலும் செங்கச்சும் புனைந்துகொண்டது கண்டு பக்கலிலுள்ளார் மகிழ்ச்சியால் ஆரவாரிக்கும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8-2)

வாகைக் கண்படைநிலை -

{Entry: K11__1064}

பகைவரை வென்று களங்கொண்ட வேந்தன்,அதுவரை அமைதியுடன் கண் உறங்காமல் இருந்த நிலை நீங்கி, பகை நாடும் தன் குடை நிழற்கீழ்த் தங்குதலின் மன அமைதியுற்று உறக்கம் கொண்ட நிலையைக் கூறும் வாகைத் துறை. (பு. வெ. மா. 8 : 29)

வாகை சூடுதல் -

{Entry: K11__1065}

கடல் போன்ற பெரிய சேனையையுடைய பகைமன்னனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற வேந்தனொருவன், புலவர் பலரும் போற்றுமாறு, இலைகளும் சேர்த்துத் தொடுத்த வாகைப்பூமாலையைச்சூடும் துறை. (பு. வெ. மா. 8-1)

வாகைத்திணைக்கு வழு -

{Entry: K11__1066}

தண்மைக்கும் வெம்மைக்கும் தலைமைபெற்ற கூதிர்க்காலத் தும் வேனிற் காலத்தும் போகத்தில் பற்றற்றுப் பகைப்புலம் சென்று தலைவி மேல் காதலின்றிப் போரின்மேற் காதலோடு ஒன்றியிருக்க வேண்டிய தலைவன்,

‘புறவடைந் திருந்த அருமுனை இயைவின் // சீறூ ரோளே, ஒண்ணுதல்!- யாமே, ............ ............ // அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து, // வினைவயின் பெயர்க்கும் தானை // புனைதார் வேந்தன் பாசறை யேமே!’ (அகநா. 84)

எனத் தலைவியை நினைக்கும் செயல், அகத்திணைக்கு மரபே யாயினும், வாகைத்திணைக்கு வழுவாம். (தொ .பொ. 76 நச்.)

வாகைத்திணையின் பொது இலக்கணம் -

{Entry: K11__1067}

இழிவொடு பழிபடும் எல்லாத்துறையும் வெறுத்து, புரைதீர் திறல் எதுவாயினும் அவரவர் துறையில் பிறருடன் உறழ்ந்து வெற்றி பெறுதலும், உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்புயர் வற்று வரும் பரிசும் வாகையாகும். இஃது இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், உறழ்வாரை வென்றுயரும் வீறும், எதிர்ப்பின்றி ஒரு துறையில் மேம்படு விறலும் ஆகும். (உறழ்தல்- போட்டியிடுதல்) (தொ. புறத். 19. பாரதி.)

வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோரும் அறிவரும் தாபதர் முதலியோரும் தம் முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தல் வாகையாம். உறழ்ச்சியால் பெற்ற வெற்றி வாகையெனவும், இயல்பாகப் பெற்ற மேம்பாடு முல்லையெனவும் கூறப்படும். (தொ. பொ. 74 நச்.)

அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அறிவர் தாபதர் பொருநர் என்ற எழுவர் தொழிலையும், அவ்வவர்கீழ் இருந்து அவ்வத்தொழில் பயிலுவோர் எழுவர் தொழிலையும் சிறப் பித்துக் கூறுதல் வாகைத் திணையாம். (283 குழ.)

குலமும் குடியும் பற்றிய மரபானும் மேற்கொண்ட பணி களின் நிலைகளானும் அவரவர்க்கு அமைந்த வருத்தமில் லாத ஒழுகலாறுகளுள் தமக்குரியவாக வகைபட நின்ற செயற் கூறுகளை அவை விளக்கமுறத் தம் அறிவாற்றல்களான் பிறரினும் மேற்படச் செய்து விளங்குதல் வாகையாகிய ஒழுகலாறு என்பர். (தொ. புறத். 19 ச.பால.))

வாகைத்துறைப் பாடாண் பாட்டு -

{Entry: K11__1068}

அரசன் பெற்ற வெற்றியைச் சிறப்பித்து அவன் பெருமையுள் புலவர் பாடும் பெற்றியவாய் அமைந்தவற்றை விளக்கும் பாடாண்திணைத் துறை.

“வேந்தே! நீ போரிட்டு ஊன்தின்னும் பறவைகளையும் பேய்களையும் உணவிட்டு ஓம்புவதனால் நின் வெற்றிப் பெருமை பாடத்தக்க சிறப்புடைத்து” என்றாற் போன்ற கூற்று. (பதிற். 35)

வாகை பாலைக்குப் புறனாதல் -

{Entry: K11__1069}

பாலையாவது தனக்கென ஒரு நிலம் இன்றி எல்லா நிலத்தி னும் எல்லாக் குலத்தினும் காலம் பற்றி நிகழ்வது ஆகலானும், புணர்ச்சியின் நீங்கி இல்லறம் நிகழ்த்திப் புகழ் எய்துதற்குப் பொருள் முதலிய தேடப் பிரியுமாறு போலச் சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம் பெறும் கருத்தி னால் சேறலானும், பாலை இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையான் நால்வகை நிலனும் பற்றி நிலை பெறுமாறு போல வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்ற புறத்திணை நான்கும் பற்றி வாகைத்திணை நிகழ்தலானும், பாலை அறக் காதலை வளர்த்து மீட்டும் இன்பத்தை மிகுப்பது போல வாகை மறக்காதலை வளர்த்து வெற்றி யின்பம் விளைத்தலானும் வாகை பாலைக்குப் புறனாயிற்று. (தொ. பொ. 73 இள., 74 நச். புறத். 18 பாரதி.)

எழுமைக்கும் ஏமாப்புடைய கல்விபற்றியும், இன்பமும் அறனும் ஒருங்கு எய்துதற்குக் காரணமாகிய பொருள் பற்றியும், ஏதமில் புகழ் பயக்கும் தூது பற்றியும், அறப்புறம் முதலாகிய காவற்கடன் பற்றியும் பிரியும் பிரிவுகட்கு உரிய தாகிப் பாலைத்திணை நிகழ்கிறது. அதுபோல, வாகைத் திணையும், வேந்தர்க்கும் மறவர்க்குமே உரிய வெட்சி முதலிய திணைகளைப் போலன்றி, அந்தணர் முதலிய நாற்பாலார் அறிவர் தாபதர் முதலானோர் மூதில் மடவாராகிய மனை மகளிர் என்னும் இவர்களுக்கெல்லாம் ஒப்ப உரியதாய் அவர்கள் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுக்கும் ஒழுக லாறாக நிகழ்கிறது; பாலை கல்வியிற் பிரிவையும் பொருள் வயின் பிரிவையும் உடையதாய்த் தலைமகனுக்குப் பெருமை யும் புகழும் சேர்க்கிறது. அது கருதி ஆற்றியிருந்து, தலைவன் மீண்ட காலை ஆயத்தாரும் பிறரும் தலைவனைப் புகழ்தல் கண்டு தலைமகள் பெருமிதமுற்று உவப்பாள். அவ்வாறே தலைவனும் தன்னை ஒத்தாரோடு உறழ்ந்து மேம்பட்டு வெற்றிப் பெருமிதம் உறுவான். பாலை ஏனைய நானிலத்தும் அவற்றின் திரிபாக நிகழ்வது போல, வாகையும் பெரும் பான்மையும் வெட்சிமுதலிய திணைகளிடமாக அவற்றின் பயனாக நிகழ்கிறது. ஓதலும் தூதும் பிறவுமாகிய கடப்பாட் டாண்மை புரிதற்குப் பின்பனியும் இருவகை வேனிலுமாகிய பெரும் பொழுதும் நண்பகலாகிய சிறு பொழுதும் ஏற்புடைய காலங்கள். இவ்வாறு வாகைத்திணைக்குப் பாலைக்குரிய முதலும் கருவும் ஒத்துச் சிறந்துள. ஆகவே வாகை பாலைக்குப் புறனாயிற்று. (தொ. புறத். 18 ச. பால.)

வாகையான் -

{Entry: K11__1070}

களம் வகுத்துத் தும்பை சூடி இருதிறத்துப் படைகளும் பொருதவழி வெற்றிபெற்ற மன்னனும் அவன் படையாளரும் வாகைப்பூச் சூடிப் போர் வெற்றிவிழா அயரும் நிலையில், வீரன் ஒவ்வொருவனும் ‘வாகையான்’ எனப்படும். ஏனைய துறைகளிலும் பலரையும் வென்ற திறலுடையாருள் ஒவ்வொருவனும் ‘வாகையான்’ எனப்படும். (தொ. பொ. 73 நச்.)

வாகை வேந்தன் -

{Entry: K11__1071}

பகைமன்னனொடு களம் வகுத்துப் போரிட்டு வெற்றி பெறும் வேந்தன் வாகைப் பூச்சூடி வெற்றி விழாவினைக் கொண்டாடி வாகை வேந்தன் எனப்படும்.(தொ. பொ. 73 நச்.)

வாடா வஞ்சி மலைதல் -

{Entry: K11__1072}

பகையரசனை வென்று அவன்நாட்டைக் கைப்பற்றும் வேட் கையுடன் அவனை எதிர்த்துப் போர் செய்தற் பொருட்டு, மன்னன் பொன்னாலான வஞ்சிப்பூவினைச் சூடுதலைக் குறிப்பிடும் வஞ்சித் திணை. (பு. வெ. மா. 3-1)

வாடா வள்ளி -

{Entry: K11__1073}

வாடும் கொடி அல்லாத வள்ளிக் கூத்து.

வள்ளி என்பது வாடும் ஒரு கொடிக்கும் ஆடும் ஒரு கூத்திற்கும் பொதுப்பெயராதலின், கொடியை நீக்கிக் கூத்தினைச் சுட்டுதற்கு ‘வாடா வள்ளி’ எனப்பட்டது.

வள்ளிக் கூத்து இழிந்தோர் காணும் கூத்து. இது பெண் பாலார்க்கே பெரிதும் உரித்து. இஃது அகத்திணைக்கண் வாராது. ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவான இக் கூத்து மறவர் தம்முறு தொழிலாதலின், வழு. (தொ. பொ. 60 நச்.)

முருகனைப் பரசி வேலன் ஆடுவது காந்தள், அப்பெரு மானைப் பரசி மகளிர் ஆடுவது வள்ளி. இக்கூத்தும் காந்தளைப் போலக் கடவுள் வாழ்த்தினை உட்கொண்டே வரும். போர்த் தொடக்கத்து அரசன் வெற்றி குறித்து மகளிர் ஆடித் தெய்வத்தை வேண்டுவது ஆகிய இத்துறை வெட்சித் திணையைச் சார்ந்தது. (புறத். 5. பாரதி.)

வள்ளி - குறிஞ்சிநிலப் பெண், குறத்தி போலக் கோலங் கொண்டு ஆடும் கூத்து இது. ஆடவர் குறத்தி போலக் கோலங்கொண்டு ஆடுதலும் உண்டு. இஃது இருபாலார்க் கும் பொது. இஃது அகத்திணைக்கண் வாராது. மறக்குடி மகளிர் போர்க்களத்தே வள்ளிக்கூத்தாடி மறவர்க்கு ஊக்க மூட்டுவர். இது புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய துறை. (298 குழ.)

இது வீரசோழியத்துப் பாடாண் வகையில், ‘இகட்சி மலி வள்ளி’ எனப்படும்.

வாடைப்பாசறை -

{Entry: K11__1074}

போர்வேட்கை மிக்க வீரர் தம் இல்லத்தே நுகரக் கடவ காமவேட்கையை மறந்து, பிரிந்தாரை நலியும் வாடைக்காற்று வீசும் பருவத்திலும் பாசறைக்கண் தங்கி, மறம் கருதிக் காமத்தை வென்ற வாகைத் துறை. (பு. வெ. மா. 8 : 16)

வாண் மங்கலம் -

{Entry: K11__1075}

வெற்றி மன்னனுடைய வாளினைப் புகழ்ந்து கூறும் பாடாண் திணைத்துறை. அஃதாவது, “வியன்கோயிலுள், மகளிர், மாற்றார் நிலத்தைத் தருவான் வேண்டிச் செல்லும் செங் கோலினது நன்மையைப் புகழ்ந்து பாட, சேரமன்னன் வெற்றி வேண்டி உயர்த்த வாள் சினம் அழலும்” என்று புகழ்வது. (பு. வெ. மா. 9 : 35)

பகைவரைக் குறித்த வாள்வென்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் பாடாண்துறை. இத்துறை பரணியிற் பயின்று வரும்.

“கூளிகாள்! போர்க்களத்துச் செந்நீரால் நீராட்டி, களம் போர்த்த நிணத்தினைப் படைத்துக் காளிக்குப் பசி தீரப் பலிகொடுப்போம். அடல் வெய்யோனாம் இவ்வெற்றி வேந்தனது வாளினைப் பாடிக் கூத்தாட வம்மின்!” இது பேயினது கூற்றாக வந்தது. (தொ. பொ. 91 நச்.)

வாணிக வாகை -

{Entry: K11__1076}

நெறியற்ற செயல் செய்ய நாணுபவனாய், உழுது பயன் கொண்டு, ஆநிரை காத்து, பண்டம் விற்று, ஓதி, வேட்டு, ஈந்து வாழும் வணிகனுடைய சிறப்பான வாழ்க்கை நிலை யினைக் கூறும் வாகைத்துறை. (பு. வெ. மா. 8:10)

வாணிக வென்றி -

{Entry: K11__1077}

காடும் கடலும் நாடும் நகரங்களும் கடந்து சென்று நேரிய முறையில் வாணிகம் இயற்றிப் பொருளீட்டி, அந்தப் பொருளை அறத்தாற்றில் செலவு செய்து பிறர் வறுமையைப் போக்கும் வணிகன் சிறப்பைக் கூறும் வாகையொழிபாக வந்த துறை. (பு. வெ. மா. 18-2)

வாய் வாளாமை -

{Entry: K11__1078}

பேசாதிருக்கை; “வாய்வாளாமை........ மாற்றம் உரையாது இருத்தல்” (மணி. 30: 245-249). இது விடை வகையுள் ஒன்று. தவம் செய்வார்க்கு உரிய எட்டனுள் ஒன்று.

வாயில் நிலை -

{Entry: K11__1079}

அரசனுக்குத் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனிடம் புலவன் சொல்வதாகக் கூறும் பாடாண்திணைத்துறை. (பு. வெ. 9-2)

‘வாயினும் கையினும் வகுத்த பக்கம்’ -

{Entry: K11__1080}

நூற்கல்வியும் தொழிற்கல்வியும் பற்றிப் பிரிதலாகிய ஓதற் பிரிவு. வாயான் வகுத்த பக்கமாவது: எண்ணும் எழுத்தும் ஆகிய இயற்றமிழ்க் கலைகளும், பிறமொழிக்கலைகளும், இசைக்கலையும், கணிதம் முதலாகிய கலைகளும், பிறவுமாம். கையான் வகுத்த பக்கமாவது: ஓவியம், சிற்பம், நாடகக்கலை, படைக்கலக் கல்வி, போர்முறைக் கல்வி முதலியன. இவை ஓதலும் புரிதலும் என இரண்டாய் அடங்கின. (தொ. அகத். 43 ச. பால.)

‘வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியம் கருதிய ஒருதிறத்’ துத் தலைவன் கூறுதல் -

{Entry: K11__1081}

வாயான் அறியும் நூல் முதலிய கற்கும் கல்வியாகிய ஓதுதல், கையான் உணரும் படைக்கலம் பயிறல்-இயம் ஓவியம் சிற்பம் பயிறல்-ஆகிய தொழிற்கல்வி என்னும் இருதிறக் கல்விகளின் பயனைப் பெற எண்ணிப் பிரியும்வழித் தலைவன் கூறுதல். (தொ. பொ. 44இள.)

உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்தும் விளக்கிக் கூறும் நூல்களால் பெறும் பயனைக் கருதித் தலைவன் மெய்ப்பொருள் உணர்ந்தோரை நினைந்து அவரி டத்துப் பொய்யற்ற நூற்கேள்விகளை யறிதற்குப் பிரியும் வழித் தலைவன் கூறுதல். எனவே, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குத் தலைவன் பிரிதலாம். (கலி. 15 41நச்.)

வாழ்த்தல் (2) -

{Entry: K11__1082}

பல வாள்வினை செய்து இறந்த வீரனுக்கு நடப்பட்ட கல்லினைப் பார்த்துப் புகழ்தல் என்ற கரந்தைத் துறை. (வீ. சோ. 100)

வாழ்த்து (1) -

{Entry: K11__1083}

பொருது வீழ்ந்தார்கள் நினைவாக நடுதற்பொருட்டுத் தேர்ந்து கொணர்ந்து குளிப்பாட்டி நட்டுப் பலியூட்டிய நடுகல்லைப் பழிச்சுதல்.

கல் கொள்ளுங்கால் தெய்வத்துக்குச் சிறப்பு செய்து கல் நடுதல் முட்டின்றி முடிதல் வேண்டும் என்று வாழ்த்தலும், பின் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தலும். (தொ. பொ. 60 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியல் படலத்தில் ‘கல் முறைப்பழிச்சல்’ என்ற 13ஆம் துறையாக உள்ளது. வீரசோழியத்தில் கரந்தையின் வகையாகக் கூறப்பட்டுள்ளது. (கா. 100 உரை)

வாழ்த்து (2) -

{Entry: K11__1084}

கடவுள் வாழ்த்து முதலியன.

இதனைக் ‘காடு வாழ்த்து’ என்ற காஞ்சித் துறையாகக் கோடலே ஏற்றது. ‘காடு வாழ்த்து’ நோக்குக. (வீ. சோ. 102 உரை)

வாழ்த்துதற் பகுதி -

{Entry: K11__1085}

“இக்கல் நெடிது வாழ்க!” என்றல், “இக்கல்லின்கண் மறவன் நிலைத்து வாழ்க!” என்றல், மறவன் தாயத்தை வாழ்த்தல் முதலியன வாழ்த்துதற் பகுதியாம். (தொ. பொ. 60 நச்.)

வாள் செலவு -

{Entry: K11__1086}

வஞ்சிவேந்தன் போருக்கு அழைத்தபின், அவனை எதிரூன்றிப் பொருதற்குரிய காஞ்சிமன்னன் தன் வாளினை நல்லநேரம் பார்த்துப் போர்க்களம் நோக்கிக் கொண்டு செல்லுதல் என்னும் காஞ்சித்துறை. (பு. வெ. மா. 4 : 7)

வாள் நாட்கோள்(1) -

{Entry: K11__1087}

மன்னன் பிறன்கேடு கருதியும் தன்ஆக்கம் கருதியும் தன் வாளினைத் தனக்கு ஏற்ற நல்ல நாளின்கண் நல்ல ஓரையில் புறப்படவிடுதல். புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாட்கொள்ளும்; தன் நாட்டினின்றும் புறப்படுதற்கு நாட் கோடல் உழிஞையாகாது. அகத்தோனும் தனக்குத் துணை யாக ஒரு வேந்தன் வந்தால், போர் செய்யக் கோட்டையை விட்டு வெளிச்செல்வதற்கு நாட்கொள்ளும்.

இத்துறை புறத்தோன் அகத்தோன் என்ற இருதிறத்து உழிஞையார்க்கும் பொதுவானது.

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று. (தொ. பொ. 68 நச்.)

வாள் நாட்கோள் (2) -

{Entry: K11__1088}

தனக்கு வழிபாடு கூறி அடங்கி யொழுகாத பகைவர் மதிலைக் கொள்ளக் கருதி உழிஞையான் நல்ல நாளில் நல்ல நேரத்தில் தன் வாளைப் புறவீடு செய்த அளவில், அப்பகைவர் மதிலி னுள் மகளிர் ஆடும் அரங்கத்தில் பேய்கள் கூடியாடித் தீய நிமித்தத்தைத் தெரிவிக்கும் நிலையை உண்டாக்குதல் என்னும் உழிஞைத் துறை.

இதனை வீரசோழியம் பொதுவாக ‘நாட்கோள்’ என்னும். (கா. ‘103) (பு. வெ. மா. 6-3)

வாள் நாட்கோள் (3) -

{Entry: K11__1089}

கணிகள் கூறிய நல்ல நாளின் நன்னேரத்தில் வஞ்சிவேந்தன் பகைவரை வெட்டி வீழ்த்தவல்ல தன் கொற்ற வாளினைப் புறப்பாடு செய்யும் செய்தியை அறிந்த கோட்டான்கள் பகைவர் நாட்டில் நண்பகலிலும் தீயநிமித்தம் காட்டக் குழறும் என்ற நிலை தோன்ற வாளினைப் புறவீடு செய்தல் என்னும் வஞ்சித்துறை.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘வாள்நிலை’ என்னும். (3 : 4) (இ. வி. 606 -4)

வாள்நிலை -

{Entry: K11__1090}

ஆநிரைகளை வெட்சி சூடிக் கவர்ந்தவனோ கரந்தை சூடி மீட்டவனோ பகைவன்மேல் படையெடுத்துத் தன் வலி மையை அவனுக்குக் காட்ட வஞ்சி சூடிப் புறப்பட நினைந்து நல்ல நாளில் நன்னேரத்தில் தன் வெற்றி வாளினைப் புறவீடு செய்தல் என்னும் வஞ்சித்துறை இத்துறை தொல்காப்பி யத்தில் இல்லை.

இதனை இலக்கண விளக்கம் ‘வாள் நாட்கோள்’ என்னும் (இ. வி. 606-4) அது காண்க. (பு. வெ. மா. 3 : 4)

வாள் மங்கலம் -

{Entry: K11__1091}

இது ‘வாள் மண்ணுநிலை’ என்னும் உழிஞைத் துறை; அது காண்க (சாமி. 135). பு.வெ. மாலையிற் காணப்படும் வாள்மங் கலம் (9:35) வெற்றிபெற்ற வேந்தனது கொற்றவாளினைப் புகழும் துறை.

வாள்மண்ணுநிலை -

{Entry: K11__1092}

உழிஞைப் போரில் வென்ற வேந்தன், வெற்றி தந்த வாளினைச் சான்றோர் வாழ்த்தப் புண்ணிய நதிநீரால் கழுவுதல் என்ற உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 27)

வாள் மண்ணு மங்கலம் -

{Entry: K11__1093}

சான்றோர் ஏத்த மதிலைக் கைப்பற்றி உழிஞைமன்னன் தான் வெல்லுதற்குப் பயன்படுத்திய வாளினைப் புனித நீரால் கழுவுதல். இது ‘வென்ற வாளின் மண்’ எனவும், ‘வாள் மங்கலம்’ எனவும் கூறப்படும். ‘வாள்மண்ணுநிலை’ (பு. வெ. மா. 121)

என்னும் பாடாண் திணையிலுள்ள ‘வாள் மங்கலம்’ வாளின் சிறப்பினை நுவல்வது; அதனை நீராட்டுவதாகக் கூறுவது உழிஞைத் துறை வாள்மங்கலம். (இ. வி. 608 - 27)

‘வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க, நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டு’ -

{Entry: K11__1094}

வாட்போரில் இறந்த வீரனுக்குச் சுவர்க்கமாகிய நாட்டினை அளித்த ‘பிள்ளையாட்டு’க் கரந்தைப் பகுதியில் வெட்சியைச் சார்ந்த துறை. (தொ. பொ. 63 இள.)

வீரன் ‘மலைந்து எழுந்தோன்’ எனப்படுதலானும், சுவர்க் கத்தை அவனுக்கு அளிப்பவர் அவன் பகைவரே ஆதலானும், வீரன் இறந்து சுவர்க்கம் புக்கான் என்று பொருள் கோடல் பொருந்தாது.

வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந்நாட்டி லுள்ளார் கண்டு உவந்து பறை மங்கலமாக ஒலிக்க அவனுக்கு அரசு கொடுத்து, பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடும் பிள்ளையாட்டு, அரசனன்றி நாட்டிலுள்ளோர் கொடுத்த லின் தன்னுறு தொழிலாய் வழுவாயிற்று. (60 நச்.)

ஆகோள் அல்லாத வெட்சிப் போரில் வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசு ஒலிக்க நாட்டை அவனுக் குப் பரிசிலாக அளிக்கும் பிள்ளையாட்டு என்ற வெட்சித் திணைத் துறை. (புறத். 5. பாரதி.)

இது பொதுவாயினும், கரந்தையைச் சார்ந்த வெட்சித் துறைக்குச் சிறந்தது. (298 குழ.)

‘வாள்வாய்த்து, இருபெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும், ஒழியாத் தொகைநிலை’ -

{Entry: K11__1095}

இருபெருவேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்த ரும் தானைத்தலைவரும் தானையும் வாட்டொழில் முற்றி ஒருவரும் எஞ்சாமல் களத்து வீழ்ந்த தும்பைத் தொகைநிலை. (தொ. பொ. 72 நச்.)

எ-டு : “போர்க்களத்தே பொருது மாண்ட மறவரது புண்களைத் தோண்டித் தம் குருதி படிந்த கையைத் தம் கூந்தலில் தீண்டிப் பேய் மகளிர் பறை மந்தமாக ஒலிக்கும் சீர்க்கு ஏற்ப ஆடாநிற்ப, தாம் தானையொடு மறத்தினால் மிக்குச் சென்று பொருத இருதிற வேந்தரும் ஒருங்கே மாய்ந்தனர்; குடைகள் நடுக்குற்று வீழ்ந்தன; முரசங்கள் ஒலி அவிந்தன; இனிக் களம் வெற்றிக் கொள்ளற் குரியாரில்லையாகவே, பாசறைத் தொழிலும் மடிந்தன. தம் கணவரையிழந்த மறக்குடி மகளிரும் கைம்மை பெறாது தம் கொழுநர் மார் பினைத் தழுவி உடனே அவிந்து போயினர். வீரத் துறக்கம் புக்க அவ்வீரர் ஆவிகளால், தேவருலகம் நல்விருந்து பெற்று மலியலாயிற்று.” (புறநா. 62)

உழிஞைத் தொகைநிலை தோற்றோன் தொலைவு குறிக்கும்; தும்பைத் தொகைநிலையாம் இது, போரிடும் இருதிறத் தார்தம் தொலைவினையும் தெரிவித்தலின் அதனின் வேறாயிற்று. (புறத். 17 பாரதி).

இது தும்பைத் துறைகளுள் ஒன்று.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை தும்பைத்திணை யின் இறுதித் துறையாகக் குறிக்கும். (7 : 28)

‘வாள் வாய்த்துக் கவிழ்தல்’ -

{Entry: K11__1096}

வாட்போரில் பகைவரைக் கொன்று தானும் இறத்தல் என்ற பிள்ளைப் பருவத்து வீரனுடைய கரந்தைச் செயல் வெட்சித் திணைத் துறையாம். (தொ. பொ. 63 இள.)

வாட்டொழிலில் பொய்த்தலின்றி மாற்றோரைக் கொன்று தானும் வீழ்தல். வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத் தலைவருமாகிய இளையர் செய்யினும், தன்னுறு தொழி லாதலின் கரந்தையாம்; தும்பையாகாது.

இது தன்னுறு தொழில். போரில் சென்றறியாதவன் சேறலின் வழு. (60 நச்.)

பகைவர் வாளால் பட்டு வீழ்தல் என்ற கரந்தைவீரன் செயல் வெட்சித்திணைத் துறையின் பாற்படும். (புறத். 5 பாரதி.)

இஃது எல்லாத் திணைகட்கும் பொதுவான பொதுவியல் துறைகளில் ஒன்று எனினும், கரந்தையைச் சார்ந்த வெட்சிக்குச் சிறக்கும். (தொ. பொ. 298 குழ.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘போர்க்களத்து ஒழிதல்’ என்னும். (பு. வெ. மா. 2:6)

வாளாட்டம் -

{Entry: K11__1097}

இது தும்பைத் துறைகளுள் ஒன்று; முரண்தேர் சூழ்ந்த களிற்றினத்தொடும் பட்ட வேந்தனை அட்ட வேந்தர் தாமும் மறவரும் ஆடும் பொலிவு. (வீ. சோ. 105)

‘களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவேந்தன், // வாளோர் ஆடும் அமலை’ காண்க.

வாளாண்மை -

{Entry: K11__1098}

வாள் வீரம். (தொ. பொ. 107 நச்.)

வானரவென்றி -

{Entry: K11__1099}

மற்றவர் வியக்கும் வண்ணம் குரக்குப்படையினர் தனித்தோ தொகுதியாகவோ பெறும் மேதக்க வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் பாடாண்துறை.

“அநுமன் இராமனுக்குக் கவசமாகவும் வாகனமாகவும், அவன் ஏவிய தூதனாகவும், அரக்கர் படைக்குக் கூற்றுவனாக வும், மாயையைப் போக்கவல்ல மருந்தாகவும் தொண்டு புரிந்தான்” என்றல் போல்வன. (மா. அ. பாடல். 376)

விடைச்செலவு -

{Entry: K11__1100}

இது பரிசில் விடை என்ற பாடாண்துறை. (சாமி. 146)

விடைபெறாமை -

{Entry: K11__1101}

‘விடை பெறாதிருத்தல்’ என்பது சூத்திரத்துறை.

இது ‘பரிசில் நிலை’ என்ற பாடாண் துறை; அது காண்க (சாமி. 146)

விதுப்புஆனந்தத்தின் பக்கம் -

{Entry: K11__1102}

மிகப் பெரிய போர்க்களத்திற்குப் போரிடச் சென்று அடை யும் தன் கணவன் செயல் கண்டு தலைவி, “பகைமன்னர் பலராக எதிர்க்க வந்துள்ளனர். நம் தலைவனோ போரிடல் மீதுள்ள வேட்கையால் பகைவரை மதியாமல் துடியொலி யால் உற்சாகம் மிக்குப் போர்க்களம் புக்குள்ளான். நிமித் தங்களும் இனியவல்ல; நற்சொல்லும் பொருந்தில; என் உயிர் சுழல்கிறது. போரில் நம் தலைவன் முடிவு யாதாமோ?” என்று இரங்கிக் கூறுதலும் விதுப்பு ஆனந்தம் என்றே கொள்ளப் படும்.

இதனையும் புறப்பொருள் வெண்பாமாலை ‘ஆனந்தத்துள்’ அடக்கும் (11 : 12) (இ. வி. 619 - 24)

விதுப்பு ஆனந்தம் -

{Entry: K11__1103}

ஆனந்தம் - சாக்காடு. விதுப்பு - நடுக்கு; சாக்காடு பற்றிய அச்சத்தால் விளைந்த நடுக்கம்.

போர்க்களத்தில் புண்பட்ட தன் கணவனைக் காத்துக் கொண்டிருக்கும் மனைவி, நல்வாய்ப்புள்ளும் பிற சகுனங் களும் தமக்குத் தீமையை அறிவிப்பனவாக இருத்தலைக் கண்டு தன் கணவன் உயிருக்கு ஏதம் நிகழுமோ என அஞ்சி நடுங்குதலைக் கூறும் புறத்திணையியல் ஒழிபின்கண் நிகழும் துறை.

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘சிறப்பிற் பொது வியற்பால’ துறைகளுள் ‘ஆனந்தம்’ என்னும் (11-11) (இ. வி. 619 - 23)

விரிச்சி -

{Entry: K11__1104}

ஒரு செயல் செய்யத் தொடங்குவோர், அதன் பயன் யாங் கனம் அமையும் என்பதனை முன் கூட்டி அறிய, தெருப் புறத்துச் சந்தியிலோ ஊர்ப்புறத்தோ மாலைக் காலத்துச் சென்று, அங்கு முல்லைப்பூக்களையும் நெல்லையும் தூவி எதிர்பாராத வகையில் தம் செவியிற் கேட்கும் செய்திகளை நிமித்தமாகக் கோடல்.

‘அருங்கடி மூதூர்....................... நல்வாய்ப்புள்’ (முல்லைப். 6 - 17)

விரிச்சி ஓர்த்தல் -

{Entry: K11__1105}

போர் வேட்கை மிகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரப் புறப்பட்ட வெட்சிவீரர், தமக்கு விளையும் விளைவு பற்றி அறியும் பொருட்டு நல்வாய்ப்புள் கேட்டல் என்னும் வெட்சித்துறை. இத்துறை வெட்சித்திணைக்கே சிறப்பாக அமைந்தது. ‘விரிச்சி’ என்னும் வெண்பாமாலை. (பு.வெ.மா. 1 - 4) இ.வி. 603 - 4

விருப்பு ஆநிரை கோடல் -

{Entry: K11__1106}

தாம் விரும்பியவாறு வெட்சிமறவர் பகைவருடைய ஆநிரைகளைக் கைப்பற்றுதல் என்னும் வெட்சித்துறை.

‘ஆகோள்’ நோக்குக. (வீ. சோ. 99)

விலக்கருமை -

{Entry: K11__1107}

மேற்செல்வான்தனது விலக்குதற்கரிய வென்றிமிகு செலவு என்ற வஞ்சித் துறை. ‘அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம்’ காண்க. (வீ. சோ. 101)

விளக்கு நிலை (1) -

{Entry: K11__1108}

மனநடுக்கம் இல்லாத மன்னனுடைய மாண்புறு வெற்றியை எடுத்துக்காட்டும் விளக்கின் நிலையைக் கூறுதல். அஃதாவது, “குடிபுறங்காத்து நலம் பேணும் செங்கோல் மன்னனுக்கு அவனுடைய மங்கலம் காட்டும் திருவிளக்குக் காற்று வேக மாக வீசினும் வலமாகச் சுழன்று ஒளி மிக்கு உயர்ந்து வருதலால், அவன் எஞ்ஞான்றும் வெற்றி வீரனாகவே விளங்குவான்” என்று அரசனுடைய ஆக்கத்தை அவன் திருவிளக்கின் வாயிலாகக் கண்டு மகிழும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9 : 12)

விளக்குநிலைப் பக்கம் -

{Entry: K11__1109}

பொன்னும் மணியும் பூண்டு ஒளிரும் மன்னனைச் சூரிய னோடு ஒப்பிட்டுக் கூறுவதும் விளக்குநிலையே ஆம். அஃதாவது, “கதிரவன் தோன்றியவுடனே இரவில் வானிடை ஒளி வீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற் போல, இம்மன்னன் அரியணை ஏறியபின் ஏனைய வேந்தர்திரள் ஒளியிழந்து நிற்கும்” என்பது முதலாகக் கூறும் பாடாண் துறை. (பு. வெ. மா. 9 : 13)

விறல் மிகுத்தது -

{Entry: K11__1110}

காஞ்சித் திணையைச் சார்ந்த இத்துறையைக் ‘காஞ்சி எ (அ) திர்வு’ என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிக்கும். அது காண்க.

பகைவன் பண்டே விழுப்புண்பட்ட தன்மேல் எதிர்த்து வருதலைக் கண்டும், அவனைத் தாக்குதற்குத் தனக்கு உற்சாக மூட்டவேண்டிப் புலையனை வீரன் முரசு முழக்கச் செய்யும் துறை இது. (இ.வி. 615-2)

விறலி -

{Entry: K11__1111}

விறல் (-சத்துவம்) பட ஆடுபவள் விறலி. கூத்தன் ஆண்பால்; விறலி பெண்பால். எண்வகைச் சுவையும் மனத்தின்கண் பட்ட குறிப்புக்களும் வெளியே போந்து புலப்பட ஆடுவது விறல்பட ஆடுதல் எனப்படும். இவ்வாறு விறல்பட ஆடுதலா கிய தொழிலொன்றே விறலி உடையவள். இவட்குச் சாதி வரையறை இல்லை என்ப. (தொ. பொ. 91 நச். உரை)

விறலி ஆற்றுப்படை -

{Entry: K11__1112}

ஒரு விறலி மற்றொரு விறலியை ஆற்றுப்படுத்தல் அஃதாவது “வறுமையால் வாடிச் சிலவளைகளையே மங்கலமாகக் கையில் அணிந்து காணப்படும் செவ்வாய் விறலியே! நீ என்னைப் புரந்த அம்மன்னன் புகழ் பாடி அவன் இருப்பிடம் செல்வாயாயின், நின் கலைநலத்தை அவன் அவைக்களத் தோர் வாயாரப் புகழ்வர். நீயும் அவன் நல்கும் அரிய அணி கலன்களை அணிந்து பூத்த கொடி போல விளங்கி வரலாம்!” என்றாற் போலக் கூறித் தனக்குப் பரிசில் ஈந்த வள்ளலிடம் செல்லச் செய்தல். (பு. வெ. மா. 9 : 31)

‘விறலியர், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்’ -

{Entry: K11__1113}

கூத்தர் பாணர் பொருநர் என்ற இனங்களுள் பெண்பாலரா கிய விறலியர் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடாகிய விறலியாற்றுப்படை என்னும் பாடாண்துறை.

எண்வகைச் சுவையும் மனத்தின்கண் பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்பட விறல்பட ஆடுவாளை ‘விறலி’ என்பர். இவளுக்குச் சாதி வரையறை இன்று. விறலிக்கு ஆடுதல்தொழிலன்றிப் பிறதொழில் இல்லை.

விறலியாற்றுப்படை புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண் படலத்து 31ஆம் துறை.

புறநா. 105,133 போல்வன எடுத்துக்காட்டாம். (தொ. பொ. 91 நச்.)

வீரசோழியத்தின் உழிஞைத்துறைகள் -

{Entry: K11__1114}

வேந்தன் சிறப்பு, மதிலேறுதல், வெற்றி வாட் சிறப்பு, படை மிகை, நாட்கோள், காவல், முடிகோள், தொகைநிலை, கொற்றம், நீர்ப்போர் என்பன. இவற்றுள் பின் வருமாறு புறப்பொருள் வெண்பாமாலைத் துறைகள் அடங்குமாறு காணப்படும்.

வேந்தன் சிறப்பு - கொற்ற உழிஞை, அரச உழிஞை

மதிலேறுதல் - எயிற்பாசி

வெற்றிவாட்சிறப்பு - பாசிநிலை

படைமிகை - புறத்திறை, தோல்உழிஞை

நாட்கோள் - குடைநாட்கோள், வாள்நாட்கோள்

காவல் - ஆரெயில் உழிஞை

முடிகோள் - மண்ணு மங்கலம்

தொகைநிலை - உழிஞைத் தொகைநிலை

கொற்றம் - யானை கைக்கோள், திறை கொண்டு பெயர்தல்.

நீர்ப்போர் - பாசி (கா. 103)

வீரசோழியத்தின் கரந்தைத் துறைகள் -

{Entry: K11__1115}

ஓடாப் படையாண்மை, உன்னநிலை, நிரை மீட்டல், மன்னர் கோடாத் திறம் கூறல், தன் திறம் கூறல், கொற்றப் பொற்றார் சூடாப் பொலிகுதல், ஆரமர் ஓட்டல், துகளறு கல் தேடாப் பொறித்தல், பெரும்படை, வாழ்த்தல் - என்ற பத்தும் ஆம்.

(கா. 100)

வீரசோழியத்தின் காஞ்சித்துறைகள் -

{Entry: K11__1116}

1. நிலையாமை, 2. வாழ்த்து (- காடுவாழ்த்து), 3. மயக்கம் (-பூசல் மயக்கம்), 4. முதுமை (-முதுகாஞ்சி), 5. நிலை (- கையறுநிலை, தபுதார நிலை, தாங்கிய நிலை, தலைப்பெயர் நிலை), 6. மகிழ்ச்சி (-ஆஞ்சிக் காஞ்சி), 7. பெருமை (-பெருங்காஞ்சி), 8. தீப்பாய்தல் (பாலை நிலை), 9. சுரத்திடைக் கணவனை இழத்தல் (-முதுபாலை), 10. தனியே இரங்கல் (-தாங்கரும் பையுள்), 11. கலையார் மனைவி (-தொடாக் காஞ்சி) 12. சூளுறவு (- வஞ்சினக் காஞ்சி) எனும் இவை. இவற்றுக்குரிய பு.வெ. மாலைத் துறைகள் பொருளாகத் தரப்பட்டுள்ளன. (கா. 102)

வீரசோழியத்தின் தும்பைத் துறைகள் -

{Entry: K11__1117}

1. நிலை, 2. பாழிகோள், 3. வாளாட்டம், 4. உடைபடை, 5. களிற்றின் தொலையார் மலைவு முதலியன. (கா. 105)

வீரசோழியத்தின் பாடாண்திணைத் துறைகள் -

{Entry: K11__1118}

1. புகட்சி, 2. பரவல், 3. குறிப்பு, 4. கொடிநிலை, 5. கந்தழி, 6. வள்ளி முதலியன. (கா. 106)

வீரசோழியத்தின் வஞ்சித் துறைகள் -

{Entry: K11__1119}

1. அரவம், 2. எடுத்தல், 3. வயங்கியல், 4. ஈகை, 5. விலக்கருமை, 6. தனிச்சேவகம், 7. வென்றி கூறல், 8. வென்றார் விளக்கம், 9. நிரவும் வழிகை, 10. சோற்றுநிலை, 11. கொற்றவர் மெலிவு, 12. பரவு தழிஞ்சி என்பனவாம். (கா. 101)

வீரசோழியத்தின் வாகைத் துறைகள் -

{Entry: K11__1120}

1. நாற்குலப் பக்கம் - பார்ப்பனப் பக்கம் முதலிய நான்கு

2. முக்காலம் - அறிவன் செய்தி (‘மறுவில் செய்தி.......... அறிவன் தேயம்’)

3. களவழி - களவழி வென்றி

4. குரவை - முன்தேர், பின் தேர்க் குரவைகள்

5. ஆற்றல் - ‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’

6. வல்லாண் பக்கம் - ‘புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்’

7. வேட்கையார் பக்கம் - அறிமரபின் பொருநர் கட்பால் (‘பாலறி மரபின் பொருநர் கண்ணும்’)

8. மேன்மை - ‘அருளொடு புணர்ந்த அகற்சி.’

9. பொருள் - ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’

10. காவல் - ‘பிழைத்தோர்த் தாங்கும் காவல்’

11. துறவு - ‘காமம் நீத்த பால்’, ‘கட்டில் நீத்த பால்’

12. கொடை - ‘இடையில் வண்புகழ்க் கொடைமை’

13. படையாளர் பக்கம் - பொருநர் பக்கம்; ‘பெரும்பகை தாங்கும் வேல்.’

14. ஒற்றுமை - ‘தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி (ஒல்லார் நாணப்..................... அவிப்பலி’)

15. எட்டியல் - ‘எட்டுவகை நுதலிய அவையம்’

‘16. சான்றோர் பக்கம் ‘பகட்டினானும் மாவினானும், துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கம்’

17. அஞ்சாச் சிறப்பு - தாபத பக்கம் -

என்னுமிவை. இவற்றுக்குத் தொல்காப்பியத் துறையால் பொருள் கூறப்பட்டுள்ளது. அவை காண்க. (கா. 104)

வீரசோழியத்தின் வெட்சித்துறைகள் -

{Entry: K11__1121}

1. ஒருப்பாடு, 2. நற்சொல், 3. செலவு, 4. ஒற்றுரைப்பு, 5. நிரை நின்ற பகுதியைச் சூழும் புகல் 6. பொருதல், 7. நிரை கோடல், 8. எதிர்ப்பவரைத் தடுத்தல், 9. நெறி செலுத்துதல், 10. கொண்ட நிரையின் செலவு காண்டலாகிய ‘செருப்பாடு உகைப்பு அடை, 11. நிரையைத் தம்மூர் மன்றத்து நிறுத்த லாகிய ‘காத்து ஊர் புகல் திறம்’, 12. நிரையைப் பங்கு பிரித்தலாகிய ‘கூறிடுதல்’, 13. உண்டாட்டு, 14. உபகரித்தல் - என்னுமிவை. (கா. 99)

வீற்றினிதிருந்த பெருமங்கலம் -

{Entry: K11__1122}

அரசன் தன் அரியணைமீது தன் வெற்றிப் பெருமிதம் தோன்றச் செம்மாந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் கூறும் பாடாண்துறை. (பு. வெ. மா. 9: 20)

வெட்சி -

{Entry: K11__1123}

போர் தொடங்கு முன் தம் கருத்தைப் பகைவர்க்கு அறிவிப் பது போலப் பகைவர்நாட்டு ஆநிரைகளைக் களவிற் கொள் ளும் ஒழுக்கம். போர் தொடங்கியபின் ஆநிரைகளைக் கோடல் வெட்சியாகாது. பகைவர்க்குத் தாம் போரிட வரும் செய்தியை முன்னர் அறிவித்து, அவர்கள் வேண்டுவன செய்துகொள்ள வாய்ப்பளித்துப் பின் அவர்மேற் செல்வதே போர்அறம் ஆகலின், போர்ச் செய்தியை அறிவிக்க ஆநிரை கோடலை மரபாகக் கொண்டனர். இங்ஙனம் ஆநிரை கைப்பற்றச் செல்லுவார் வெட்சிப் பூச்சூடிச் சேறலின், இப்புறத்திணை வெட்சி எனப்பட்டது. (தொ. பொ. 57 நச்.)

வெட்சி அரவம் -

{Entry: K11__1124}

‘வெட்சிப்படை இயங்கரவம்’ காண்க. (பு. வெ. மா. 1: 3)

வெட்சி உட்குவரத் தோன்றுதல் -

{Entry: K11__1125}

வெட்சி அச்ச முண்டாகத் தோன்றுதல். வேற்றுப் புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சிப் பாதுகாவலான இடத்தை அடைவதற்குச் செய்யும் எச்சரிக்கையாதலின், வெட்சி அச்சம் தருவதாயிற்று. (தொ.பொ. 56 நச்.)

வெட்சித்துறைகள் வேந்தனுடைய படைமறவர் தம் வீரம் காட்டி விளைக்கும் செயல்களாதலின், போரில் பழக்கமில் லாத நிரைகாக்கும் ஆயரும் அயலாரும் அஞ்சுதல் இயல்பாத லின் வெட்சி அச்சம் தருவதாயிற்று. (புறத். 1 பாரதி.)

வெட்சிக்கரந்தை -

{Entry: K11__1126}

பகைவர் கொண்ட பசுக்கூட்டத்தைக் கரந்தைப் பூச் சூடிய, பசுக்களுக்கு உரிமையுடையவர் மீட்டலைக் குறிப்பிடும் திணை. பசுக்களை மீட்டலைக் கரந்தைத்திணை எனப் பின்னோர் கூறுதல் தொல்காப்பியருக்கு உடன்பாடன்று. கரந்தை என்பது தனியே ஒரு புறத்திணையாயின் அதற்குரிய அகத்திணை ஒன்று வேண்டும்; அஃது இன்றாகவே, கரந்தைப் பூச்சூடிப் பகைவர் கைக்கொண்ட ஆநிரையை மீட்டலும் வெட்சியின்பாற் படுவதேயாம். (தொ. பொ. 57 நச்.)

வெட்சிக்குப் புறன் -

{Entry: K11__1127}

வீரத்தை வெளிப்படுத்தும் குடிநிலையும், போர்க்களத்தில் மறவரது வீரத்தை ஒன்று கூட்டும் துடிநிலையும், அத் தொழிலுக்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக் குங்கால் அவள்நிலைமை கூறுதலும் வெட்சித்திணைக்குப் புறனாம். கொற்றவையைப் பரவி உயிர்ப்பலி கொடுத்தலும் குருதிப்பலி கொடுத்தலும் உண்டு.

குடிநிலை - இளம்பூரணர் பாடம்; துடிநிலை - நச்சினார்க் கினியர் பாடம்.

‘கொடிநிலை’ என்று பாடம் கொண்டு, போருக்குப் புறப்படு முன் தத்தமக்குரிய கொடிகளை உயர்த்திக் கொண்டு சேறலும் என்று பொருள் கூறுவார், சோமசுந்தர பாரதியார்.

(துடிநிலையும் கொற்றவை நிலையும் புறப்பொருள் வெண் பாமாலையில் வெட்சித்திணைத் துறைகளாகக் கொள்ளப் பட்டுள. அவற்றைத் தனித்தனியே காண்க.) (தொ. பொ. 59 நச்.)

வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொதுவான துறைகள் -

{Entry: K11__1128}

போர்மறவரது வீரத்தை முற்றுவிக்கும் துடியினது நிலையைக் கூறும் துடிநிலையும், அப் போர்த்தொழிற்குச் சிறந்த கொற்றவையைப் பரவும் கொற்றவை நிலையும் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொதுவாவன.(தொ. பொ. 272 குழ.)

வெட்சியில் தோற்றோருக்குக் கொற்றம் வேண்டியும் வென் றோர்க்குத் தொடர்ந்து வெற்றி வேண்டியும், கொற்றவையை வழிபடுதல் நிகழுமாதலின், கொற்றவைநிலை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது; துடிநிலை இருவகை வெட்சிக்கும் பொது. (59 நச்.)

வெட்சிக் கொடை -

{Entry: K11__1129}

தாம் கொண்ட நிரையை வெட்சிவீரர் பாணர் முதலிய இரவலர்க்கு வரையாது கொடுத்து மனம் மகிழ்தல்.

(பு. வெ. மா. 1 : 16)

வெட்சிக் கொடையின் வகைகள் -

{Entry: K11__1130}

கொடைவளம் கூறல், கொடையினை ஏற்றோர் மகிழ்ச்சி முதலியன. (தொ. பொ. 271 குழ.)

வெட்சிக் கொற்றவை நிலை -

{Entry: K11__1131}

மிக்க ஆற்றலையுடையவளும் மானை ஊர்தியாகக் கொண்ட வளுமான கொற்றவையின் திருவருளை வாழ்த்தி, அவள் தன் சிங்கக்கொடியொடும் கிளியொடும் மானாகிய ஊர்தி யொடும் பேய்ச்சுற்றத்தொடும் தான் ஆற்றும் போருக்குத் தனக்கு முற்படச் சென்று வென்றி தருமாறு வீரன் வேண்டும் வெட்சித் துறை.

‘கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’ (தொ.பொ. 59) என்னும் தொல்காப்பியம். (பு. வெ. மா. 1 : 19)

வெட்சி குறிஞ்சிக்குப் புறனாமாறு -

{Entry: K11__1132}

குறிஞ்சி மலை சார்ந்த நிலத்தின்கண் நிகழும். இது பெரும் பாலும் களவொழுக்கமாகும். தலைவன்தலைவியர் குறிஞ்சி நிலப் பூக்களைச் சூடுவர். குறிஞ்சி யொழுக்கம் நிகழும் காலம் கங்குற் காலமாகும். இனி, வெட்சியாகிய நிரை கவர்தலும் மலை சார்ந்த இடத்தில், கங்குற்காலத்தில், களவொழுக்கத் தால், குறிஞ்சி நிலத்துப் பூவைச் சூடி நிகழ்த்தப்படும். காவலர் கடுகினும் தலைவன் இரவிடைத் தலைவியைக் கூடியே மீள்வது போல, காவலர் எதிர்ப்பினும் வெட்சிமறவர் நிரை கொண்டே மீளுதலும் கொள்ளப்படும். (தொ. பொ. 59 இள. 56 நச்.)

காதல் ஒழுக்கங்கள் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போல, அமர் கொள் மரபின் புறத்திணைகள் எல்லாம் வெட்சியைக் கொண்டு தொடங்குதலும் உணரப்படும். (புறத். 1 பாரதி)

ஆகவே, முதற்பொருளாகிய நிலம்பொழுதுகள், கருப்பொரு ளாகிய பூ, உரிப்பொருளாகிய களவிற் கூடுதல் ஆகிய எல்லாவற்றானும் ஒத்தலின் வெட்சித்திணை குறிஞ்சித் திணைக்குப் புறனாயிற்று.

வெட்சித்திணையின் துறைகள் -

{Entry: K11__1133}

படை இயங்கு அரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசல் மாற்று, நோயின்றி உய்த்தல், நுவல்வழித் தோற்றம், தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை - என்ற பதினான்கும் வெட்சித் துறைகளாம்.

இத்துறைகளைப் பசு கவர்வோர், கவரப்பட்ட நிரைகளை மீட்போர் என்ற இருசாராருக்கும் கொள்வர் நச்சினார்க் கினியர். (தொ. பொ. 58 நச்.)

‘நுவலுழித் தோற்றம்’ என்பது அவர் கொண்ட பாடம். பசுக்களைக் கவர்வோர்க்கே கொள்வர் இளம்பூரணரும் பாரதியாரும். குழந்தை நச்சினார்க்கினியரை யொட்டிக் கருத்துக் கொள்வார்.

புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, பெருந்துடி நிலை, கொற்றவை நிலை, வெறியாட்டு என்ற துறைகளும் புறப் பொருள் வெண்பாமாலையில் இடம் பெறும் (1). இவற்றுள் துடிநிலையும் கொற்றவை நிலையும் வெட்சியின் புறக்கூற்றுத் துறைகளாகத் தொல்காப்பியத்திலும் இடம் பெறும்.

தருக எனப் பணித்தல், பணிதலைக் கோடல், விரிச்சி வேண்டா வீரம் என்பன இலக்கண விளக்கத்தில் மிகுதியாகக் கொள்ளப்பட்ட துறைகள். (603 - 1, 2, 4)

இத்துறைகள் யாவும் வீரசோழியத்தில் இடம் பெறுகின்றன (கா. 99). அந்நூல் குறிப்பிடும் வாய்பாடு புதிது.

வெட்சித் துடிநிலை -

{Entry: K11__1134}

இரவிடை வெட்சி சூடிப் பகைவருடைய ஆநிரையைக் களவினால் கவர்ந்த வெட்சி மறவர்க்குப் பரம்பரை பரம்பரை யாய்த் துடிகொட்டுமவனைப் பாராட்டிச் சிறப்புச் செய்தல் என்னும் வெட்சித் துறை. (பு. வெ. மா. 1- 19)

வெட்சித் தும்பை -

{Entry: K11__1135}

நிரை கொள்ளப்பட்டோன் தன் தாழ்வினைப் போக்கக் கருதிப் பொருகளம் குறித்துப் போர் செய்தலும், அவன் களம் குறித்தது பொறாது நிரையைக் கைப்பற்றிய மன்னனும் களம் குறித்துப் போர் செய்தலும் வெட்சிப் புறத்துத் தும்பைக ளாம். (தொ. பொ. 71 நச்.)

வெட்சிப் படை இயங்கரவம் -

{Entry: K11__1136}

வெட்சி மன்னனுடைய படைகள் பசுக்களைக் கவர்ந்து வருதற்குப் புறப்பட்டுச் சென்றபோது ஏற்படும் ஆரவாரம் என்னும் வெட்சித்துறை. (இ.வி. 603 - 3)

‘வெட்சி அரவம்’ என்னும் புறப்பொருள் வெண்பாமாலை (1 : 3)

வெட்சிப் பாதீடு -

{Entry: K11__1137}

வெட்சி மறவர், போரிட்டார்க்கும் ஒற்றி வந்து கூறியவர்க்கும் நல்வாய்ப்புள் கூறியவர்க்கும் தாம் கொண்ட ஆநிரையைப் பகுத்துக் கொடுத்தல்; ‘பாதீடு’ காண்க. (பு. வெ. மா. 1 : 14)

வெட்சிப் புறத்திறை -

{Entry: K11__1138}

‘புறத்திறை’ காண்க. (பு. வெ. மா. 1 : 6)

வெட்சி முதலியன கைக்கிளைப் புறன் ஆகாமை-

{Entry: K11__1139}

வெட்சி முதலிய திணைகளும் சுட்டி, ஒருவர் பெயர் கொடுத்தும் கொடாதும் பாடப்படுதலின் பாடாண்திணை யாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறு புகழ் பிறரை வேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், கைக்கிளைப் புறன் ஆகா. (தொ. பொ. 80 நச்.)

வெட்சியான் -

{Entry: K11__1140}

போர்த் தொடக்க அறைகூவலாகப் பகைப்புலத்து ஆநிரை களை இரவில் கைப்பற்றற்கு வெட்சிப்பூச் சூடிச் செல்லும், போர்விரும்பும் மன்னனுடைய வீரன். (தொ. பொ. 57 நச்.)

வெட்சி வேந்தன் -

{Entry: K11__1141}

பகைமன்னனது நாட்டைக் கவர விரும்பும் தன் எண்ணத்தை வெளியிடும் அறைகூவலாகத் தன் முனைப்படை வீரர்களை வெட்சிப் பூச்சூடிப் பகைப்புலத்து ஆநிரைகளை இரவில் களவினால் கொணர ஏவும் வேந்தன். (தொ. பொ. 57 நச்.)

வெண்கண்ணி புனைதரும் அரவம் -

{Entry: K11__1142}

தாம் தும்பை சூடிப் பொருத போரில் தமர் விழுப்புண்பட்டு வெற்றி தேடினர் ஆதலின், கவலையின்றி வெண்ணிற வாகை மாலை சூடி வலிய வீரக்கழலைக் கட்டிச் செந்நிறக் கச்சினை அணிந்து மகிழ்ச்சியால் வீரர் ஆரவாரிக்கும் வாகைத் துறை. ‘வாகை அரவம்’ காண்க. (இ. வி. 613 -2)

வெருவருநிலை -

{Entry: K11__1143}

பகைவர் எய்த அம்புகளும் எறிந்த வேல்களும் தன்மேல் ஒன்றன் அருகே மற்றொன்றாகப் பாய்ந்து தைத்த நிலையில், மறவனொருவன் உயிர் சென்ற பிறகும் அவனுடல் தரைமீது படாமல், அம்புகளாலும் வேல்களாலும் குத்திட்டு நிற்கும் அச்சம் விளைவிக்கும்நிலையைக் கூறும் தும்பைத் துறை.

இது தொல்காப்பியத்தில் ‘யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகை’ (பொ. 71 நச்.) என்று கூறப்படும். (பு. வெ. மா. 7 : 23)

வெவ்வாய் வேலன் -

{Entry: K11__1144}

முருகப்பெருமானுக்கு ஆட்டுக் குட்டியைப் பலியிடல் வேண்டும் என்று உயிர்க்கொலை கூறுதலின் கொடிய வாயினையுடையவனும், முருகனுடைய வேலினை ஏந்தி யாடலின் வேலன் என்ற பெயருடையவனுமாகிய முருக வழிபாடு செய்வோன். (தொ. பொ. 60நச்.)

முருகப் பெருமானுக்குரிய களியாட்டில் குறி யுணர்ந்து கூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்பினை யுணர்த்தும் வேலன். (புறத். 5. பாரதி.)

(வெம்மை - கொடுமை, விருப்பம்) ‘வெறி’ காண்க.

வெள்ளணிநாள் -

{Entry: K11__1145}

அரசன் தான் பிறந்த நாளில் மனத்து நிகழும் செற்றங்களை நீக்கி, வெண்சாந்து நீவி, வெண்பூச் சூடி, வெள்ளாடை அணிந்து, வெண்பூண் பூண்டு, எவ்வுயிர்க்கண்ணும் அருள் சுரந்து, சிறைவிடுதல் செருவிடுதல் கொலைஒழிதல் இறை தவிர்த்தல் தானம்செய்தல் வேண்டியன ஈதல் முதலிய சிறந்த தொழில்களை மேற்கொள்ளுதலின், பிறந்த நாள் ’வெள் ளணி நாள்’ எனப்படும். (தொ. பொ. 91 நச்)

வெள்ளி நிலை -

{Entry: K11__1146}

வானில் தெரியும் வெள்ளி (-சுக்கிரன்) என்ற கோளினது நிலையைக் கண்டு, “இவ்வெள்ளி, நம் அரசன் செங்கோன்மை யால் இந்நிலவுலகம் வாழ மழை நிறையக் கொடுக்கும்” என்று அதனைப் பாராட்டுமுகத்தான் தம் அரசனது செங்கோன் மையைச் சுட்டுதல். (பு. வெ. மா. 9 : 16)

வெற்றி மாலை -

{Entry: K11__1147}

பகையை வென்று அணிந்துகொள்ளும் வாகை மாலை. (L)

வெற்றி முரசு -

{Entry: K11__1148}

வெற்றி கொண்டதற்கு அடையாளமாகப் போர்க்களத்தில் அடிக்கப்படும் முரசு. (சீவக. 299) (L)

வெற்றி வாள் சிறப்பு -

{Entry: K11__1149}

பகைவர்மதிலைக் கைப்பற்றி வெற்றி பெற வாய்ப்பளித்த வாட்படையையும் அதனோடு ஏனைய படைகளையும் புகழ்ந்து கூறும் உழிஞைத்துறை. ‘வென்ற வாளின் மண்’ காண்க. (வீ. சோ. 103)

வெறி (1) -

{Entry: K11__1150}

முருகப் பெருமானை வழிபட்டு அவன் தம்மீது ஆவேசமுற வேலனும் கணிக்காரியாகிய குறிசொல்பவளும் ஆடும் கூத்து. இக்கூத்து அகம் புறம் என்ற இரண்டன்கண்ணும் உண்டு. அகத்தில் வேலன் குறிஞ்சி சூடி ஆடும் இவ்வாடல் ‘வெறி யாட்டு’ எனப்படும்; புறத்தில் வேலன் காந்தள் சூடி ஆடும் இவ்வெறிக்கூத்துக் ‘காந்தள்’ எனப்படும். (தொ. பொ. 60 நச்.)

வெறி - தெய்வத்திற்கு செய்யும் கடன்கள்.

வெறி - வெறிக் கூத்தாடுதல். (63 இள.)

இவ்வெறிக் கூத்து அரசன் ஆணையாலன்றிப் படையாளர் தாமே தம்முறு தொழிலான் ஆடும் கருங்கூத்து ஆதலின் வழுவுமாய், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் பொதுவியலு மாயிற்று. வேலன் தானே ஆடுதலும் சிறுபான்மை புறத்திற்கு உண்டு. (60 நச்.)

வெறி (2) -

{Entry: K11__1151}

இது வள்ளி என்ற பாடாண்துறை. (சாமி. 145)

‘வெறிஅறி சிறப்பின்’ என்ற நூற்பாவுள் கூறப்பட்ட துறையின் வகைமை -

{Entry: K11__1152}

முதல் எட்டுத்துறைகள் போர் தொடங்க மேற்கொள்ளும் பொதுவான துறைகள்; அடுத்த ஐந்து வெட்சியின் மறுதலைக் கூறாகிய துறைகள்; இறுதி எட்டும் போர்மேற் கொண்ட பின்னரும் போர் முடிந்த பின்னரும் நிகழும் ஒழுகலாற்றிற் குரிய பொதுவான துறைகள். (தொ. புறத். 5 ச. பால.)

வெறிக்களம் -

{Entry: K11__1153}

வெறியாட்டு அயரும் இடம்.(பெருங். இலாவாண. 2 : 104) ( L)

வெறிக் கூத்து -

{Entry: K11__1154}

வெறியாட்டு (பு. வெ. மா. 17 - 10 உரை) (L)

வெறியாட்டு (3) -

{Entry: K11__1155}

வெட்சி வீரருடைய வெற்றி குறித்து இளமைப் பருவத்து மகளிர் வேலனுடன் முருகப்பெருமான் பொருட்டாக வெறியாடலை நிகழ்த்தல்.

அணிகலன்களை அணிந்தவளும் உறுப்பழகு படைத்தவளும் ஆகிய மறக்குல மடந்தை தான் முருகனுடைய ஆவேசத்தைப் பொருந்தித் தான் சூடிய மாலைகள் அசைந்து முதுகுப்புறம் செல்லுமாறு முருகன்பொருட்டாக ஆடும் வெற்றிக்கூத் தினைக் கண்டால் ஆடல் வல்லானாகிய சிவபெருமானும் மகிழ்ச்சி யுறுவான் என்று கூறுமாறு அமைந்த வெட்சித் துறை. (பு. வெ. மா. 1 : 21)

வெறியாட்டுப்பறை -

{Entry: K11__1156}

வெறியாட்டில் முழக்கும் குறிஞ்சிநிலப் பறை. (இறை அ. 1 உரை) (L)

வென்ற வாளின் மண்ணுதல் -

{Entry: K11__1157}

இரு பெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ங னம் வென்ற கொற்றவாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதல். இது புறத்தோன் அகத்தோன் ஆகிய இருவ ருக்கும் பொது. ‘வாள்’ எனக் கூறினும் வேலினை நீராட்டு தலும் உண்டு. (புறநா. 332)

இஃது உழிஞைத் துறைகளுள் ஒன்று. (தொ. பொ. 68 நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘வாள் மண்ணு நிலை’ என்னும் (6 : 27)

இதனை ‘வெற்றி வாட் சிறப்பு’ என்னும் வீரசோழியம். (கா. 103)

வென்றார் விளக்கம் -

{Entry: K11__1158}

வெற்றி கொண்டவர் சிறப்பு என்ற வஞ்சித்துறை; ‘வென் றோர் விளக்கம்’ காண்க. (வீ. சோ. 101)

வென்றி கூறல் -

{Entry: K11__1159}

“பத்துத் தலையோனைக் கட்டி மடமொழியை உன் பாதத்து வைத்தல்லது மீளேன்” என்றாற்போல வீரன் நெடுமொழி கூறல் என்ற வஞ்சித்துறை; ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ காண்க. (வீ. சோ. 101)

வென்றிப் புறத்திணை -

{Entry: K11__1160}

வாகைப் பகுதியுள் கூறப்படாத வாணிக வென்றி முதல் பிடி வென்றி ஈறாகிய பதினெட்டு வெற்றிகளையும் கூறும் ஒழிபாகிய நூற்பாச் செய்தி. இது புறப்பொருள் வெண்பா மாலையில் ‘ஒழிபு’ என்னும் தலைப்பின்கண் தொகுத்துச் சொல்லியது. (பு. வெ. மா. 18)

வென்றோர் விளக்கம் -

{Entry: K11__1161}

வென்றோர்மாட்டு உளதாகிய விளக்கம்.

பிண்டம் மேய பெருஞ்சோற்றைப் படையாளருக்கு வகுத்த இரு பெரு வேந்தருள் ஒருவர் மற்றவர் சிறப்புக் கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியான் திறை கொடுப்ப, அதனை வாங்கி னார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறுதல்.

எ-டு :

“களிறுகளோடு அருங்கலன்களைத் தாராத பகைவர், விளைவு // கண்டு அஞ்சி உடல் நடுங்கி, ‘அணங்கு’ என நின்னை // வழிபட்டொழுகுதலின், மன்னவ! பலி கொண்டு பெயரும் பாசம் // போல நீ திறை கொண்டு பெயர்கிறாய். நின்புகழ் ஊழி வாழ்க!” (பதிற். 71)

இது வஞ்சித்திணைத்துறை. (தொ. பொ. 63 நச்.)

இது புறப்பொருள் வெண்பாமாலையில் ‘நல்லிசை வஞ்சி’ எனும் துறை. (3 : 24)

வீரசோழியத்தின் வஞ்சி வகையுள் இத்துறை ‘வென்றார் விளக்கம்’ என்று சுட்டப்பட்டுள்ளது. (கா. 101)

(தொ. பொ. 63 நச்.)

வேட்கையார் பக்கம் -

{Entry: K11__1162}

விருந்தோம்பலும் அழல்ஓம்பலும் உட்பட என்வகைத்தாம் பக்கம்.

‘எட்டுவகை நுதலிய அவையத்தானும்’ என்பதனை வீர சோழிய உரையாசிரியர் ‘எட்டுவகை நுதலிய வையத் தானும்’ என்று கொண்டு, அதன் பரியாயமாக ‘வேட்கையார் பக்கம்’ என்ற வாகைத்துறை அமைக்கப்பட்டிருப்பதாகக் கருதி இங்ஙனம் விளக்கம் வரைந்தார்போலும். (வீ. சோ. 104)

வேண்டா வீரம் -

{Entry: K11__1163}

தம் போர் ஆற்றிலில் முழு நம்பிக்கை கொண்ட வெட்சி வீரர், “நல் வாய்ப்புள் அறிதலும், பிறவும் வேண்டா” என்று விரிச்சியை விலக்குதற்குக் காரணமாகிய வீரம். இது ‘விரிச்சி ஓர்த்தல் வேண்டா வீரம்’ எனப்படும். (இ. வி. 603- 5)

இதனை, “விரிச்சி வேண்டா என விலக்கின வீரக்குறிப்பு” என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவார். (தொ.பொ. 58 நச்.)

எ-டு : “எம் மன்னன் நாளும் நிமித்தமும் பாராமல் எங்கட்கு ஆநிரை கவருமாறு ஆணையிட்டுள்ளான் ஆதலின், வெட் சிப் பூக்களையும் தினையரிசியையும் மன்றில் தூவி நல்வாய்ப் புள் கேட்டல் வேண்டா. பகைவருடைய ஆநிரைகளை யாங்கள் மதிற்புறத்தே விரைவில் கொணர்ந்து சேர்ப்போம்” (தகடூர் யாத்திரை) என்ற வீரனுடைய கூற்றில் ‘விரிச்சி ஓர்த்தல் வேண்டா வீரம்’ புலப்படுகிறது. (நச்.)

வேத்தியல் மலிபு -

{Entry: K11__1164}

தோள்வலிமை மிக்க அரசனை வாள்வீரர் புகழ்ந்து, “இம் மன்னன் குடைநிழற்கீழ்த் தங்கிச் சினத்தை மிகுவிக்கும் வாட் போரில் புகுந்து பகைவருடைய வேலுக்கு இரையாக உயிரைப் பலியிடும் வாழ்க்கையே உயரிய வாழ்க்கை” என்பது போலக் கூறும் கரந்தைத் துறை. (பு. வெ. மா. 2 : 13)

வேதாங்கம் -

{Entry: K11__1165}

சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறும். இவை வேதப் பொருளையுணர்தற்குரிய கருவிகளாம். நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சந்தம் எனவும் கூறுப. (தொ. பொ. 75 நச். உரை)

வேதாளிகர் -

{Entry: K11__1166}

வைதாளிக்கூத்து நிகழ்த்துவார். இவர்கள் அரசனை நின்றும் இருந்தும் ஏத்தும் சூதர்மாகதர்களுடன் உறைபவர்; வைகறை யில் துயிலெழுப்பும் போது பாடுபவர். (மதுரைக். 671) (L)

வேதோபாங்கம் -

{Entry: K11__1167}

புராணம், நியாயம், மீமாம்சை, தருமசாத்திரம், அர்த்த சாஸ்திரம், ஆயுதசாத்திரம், ஆயுள்வேதம், காந்தர்வ சாத்திரம் என எண்வகையாய் வேதத்திற்குத் துணையான சிற்றுறுப்புக்கள். (L)

வேந்தன் அரசிருப்பு -

{Entry: K11__1168}

இது ‘வீற்றினிதிருந்த பெருமங்கலம்’ என்ற பாடாண் துறை; அது காண்க. (சாமி. 145)

வேந்தன் சிறப்பு -

{Entry: K11__1169}

மதிலை முற்றுகையிடும் வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைக்கும் உழிஞைத்துறை.

‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு’ நோக்குக.

(வீ. சோ. 103)

வேந்தன் ‘வயவர்க்கு நாடு முதல் கொடுத்த பீடுபெறும் அரவம்’ -

{Entry: K11__1170}

பகைவர் தலை நடுங்கப் போரிடற்குக் களம் குறித்துத் தும்பை சூடிய மன்னன், தன் படையாளரை அழைத்து அவர்களுக்குச் சிறந்த படைக்கலங்களும் களிறும் குதிரையும் செல்வமும் விளைநிலமும் வழங்கி உற்சாகப்படுத்துங்கால் ஏற்படும் ஆரவாரம் பற்றிய தும்பைத் துறை.

‘தும்பை அரவம்’ காண்க. (பு. வெ. மா. 7-2) (இ. வி. 611 - 2)

வேந்து அரண் எய்தும் என்றல் -

{Entry: K11__1171}

இஃது அரசு உழிஞை என்னும் உழிஞைத் துறையாம். (சாமி. 134)

வேந்து விடுமுனைஞர் -

{Entry: K11__1172}

அரசனால் நிரை கொள்ளுமாறு ஆணையிட்டு விடுக்கப் பட்ட முனைப்புலம் காக்கும் மறவர் தலைவர்.

வெட்சி அமர் தொடங்கும் ஒழுக்கம் ஆதலின், போர் விரும்பும் மன்னர் போர்க்குறியை அறிவிக்கும் ஒரு வாயி லாகக் கொண்ட வெட்சியில், மறவர், அரசனது ஆணை பெற்றே பகைப்புலப் பசுக்கூட்டங்களைக் கவரச் செல்வதே அறமுறை என்பதாம். மறவர் தம் விருப்பப்படி ஆநிரை கவர்வது, கொள்ளையடித்தல் என்ற குற்றத்தின்பாற் படுமேயன்றி வெட்சி என்ற அறமுறைப் போர்த்தொடக்க அறைகூவல் நிகழ்ச்சியின்பாற்படாது.

ஆகவே, வேந்தன் ஏவலின்றி மறவர் தம்முறு தொழிலால் நிரை கொள்வதைக் குறிப்பிடும் பன்னிருபடலம் புறப் பொருள் வெண்பாமாலை போல்வன குறிப்பிடும் செய்தி தொல்காப்பியனாருக்கு உடன்பாடு அன்று. (புறத். 2 பாரதி.)

வேந்துவினை இயற்கை -

{Entry: K11__1173}

முடியுடை அரசனுக்குரிய தொழில்களாகிய இலக்கணங்கள்; அவையாவன தன் பகைவயின் தானே சேறலும், தான் திறை பெற்ற நாடு காக்கப் பிரிதலும், அரசரைச் சார்ந்து அவர் ஏவியன செய்யும் வேளாளர் தலைவர்களை ஏவிக்கொள்ளு தலும் போல்வன. (தொ. பொ. 32 நச்.)

வேய் -

{Entry: K11__1174}

இரவில் பகைமன்னனுடைய ஆநிரையைக் கவரப் புறப்பட்ட மறவர் ஒற்றர்களை அனுப்ப, ஒற்றர்கள் பகைவர் போர்ப் புறத்துச் சென்று அவர்கள் அறியாதவாறு தங்கிப் பசுக்கள் நின்ற இடம், அவற்றின் எண்ணிக்கை, அவற்றைக் காத்திருந்த வீரர்களின் எண்ணிக்கை, முதலியவற்றை இரவில் கண்டு வந்து சொல்லுவது. இது வெட்சித் துறைகளுள் ஒன்று.

இது தொல்காப்பியத்துள் ‘ஒற்றினாகிய வேய்’ (தொ. பொ. 58 நச்.) எனப்படும். (பு. வெ. மா. 1 : 6)

வேய்க்குத் தொடர்பாயின துறைகள் -

{Entry: K11__1175}

வேய் கூறினார்க்குச் சிறப்புச் செய்தல், ஒற்றுச் செல்லல், ஒற்றல், மீளல், ஒற்றியது கூறல் போல்வன. (தொ. பொ. 58 நச்., 271 குழ.)

‘வேய்ப்புறம் முற்றிய ஆகிய புறத்திறை’ -

{Entry: K11__1176}

ஒற்றி வந்த ஒற்றர்களுக்கு வேண்டியதைக் கொடுத்த பின்னர், வெட்சிமறவர் உள்ளே உள்ள காவலர் வெளிச் செல்லாமல் நிரையின் வெளிப்பக்கத்தைச் சூழ்ந்துகொண்டு தங்குதல். புறத்து இறை - நிரைப்புறத்தே தங்குதல்.

ஒற்றரான் ஒற்றிவந்து சொல்லப்பட்ட இடத்தைப் புறத்தே சூழ்ந்திருத்தல். வேய் - ஒற்றரான் கூறப்பட்ட இடம். (தொ. பொ. 61 இள.)

உளவறிந்த சூழலை வளைத்து அற்றம் நோக்கி அடங்கி யிருத்தல். (புறத். 3 பாரதி.)

நிரைகோடற்கு எழுந்தோர் வேய் உரைத்தோரிடத்துச் செய்யும் சிறப்புக்கள் முடிந்த பின்னர் உளதாகிய நிரைப் புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந் திருக்கும் இருக்கையும். (பொ. 58 நச்.).

இது வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்று.

இதனை வீரசோழியம் ‘புகல்’ என்னும். (கா. 99)

(தொ. பொ. 58 நச்.)

வேயுரை -

{Entry: K11__1177}

இது வேய் என்னும் வெட்சித்துறை. அது காண்க. (சாமி. 130)

வேல்உழவர் செய்தொழில் கூறல் -

{Entry: K11__1178}

இது வஞ்சி என்னும் புறத்திணையின் ‘கொற்றவை நிலையின் பக்கம்’ ஆகும். அது காண்க. (சாமி. 132)

வேல்கணை மொய்ப்ப உடல் தீண்டா அச்சம் -

{Entry: K11__1179}

இது ‘வெருவரு நிலை’ என்னும் தும்பைத்திணைத்துறை; அது காண்க. (சாமி. 138)

‘வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன், தான்மீண்டு எறிந்த தார் நிலை’ -

{Entry: K11__1180}

தன் படை போர் செய்கின்றமை கண்டு தானும் படையாள ருக்கு முன்னே சென்று வேலான் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி, அது கண்டு, வேறோர் இடத்தே பொருகின்ற தன் தானைத்தலைவ னாயினும் தனக்குத் துணை வந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனொடு பொருகின்றாரை எறிந்த தார்நிலை.

தார் என்பது முந்துற்றுப் பொரும் படையாதலின், இது தார் நிலை ஆயிற்று.

“கதிரவன் எழாதமுன் அவன் ஒளியினது செம்மை இருளை அகற்றுவது போல, அரசன் போரிடாத முன், அவனுக்குத் துணையாக வந்த வீரன், அவனுக்கு முன்னே வந்து நின்று கொண்டு, பகைவருடைய தூசிப்படையைத் தானே தடுத்து நின்றான்!” (பெ.பொ.வி.) என்றாற் போல்வன.

இது தும்பைத் துறைகளுள் ஒன்று. (தொ. பொ. 72 நச்.)

இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை தார்நிலைப் பக்கமாகக் கொள்ளும் (7 : 9); வீரசோழியம் ‘நிலை’ என்ற தும்பைத்துறையுள் அடக்கும் (கா. 105)

வேலன் -

{Entry: K11__1181}

அகத்திணையில் வெறியாட்டும், புறத்திணையில் வெறிக் கூத்தும் நிகழ்த்தும் முருகவழிபாடு செய்வோன். இவன் யாருக்கு நோய் வரினும், அது தீர்க்க முருகனுக்கு ஆட்டு மறியை அறுத்துப் பலியிட்டு வழிபாடு செய்யுமாறு கூறுவான்.

‘வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’ -

{Entry: K11__1182}

வேலன் ஆவேசமுற்றுக் காந்தள்மலர் சூடி ஆடிய காந்தள் என்ற புறத்துறை.

அரசனுக்கு வெற்றி வேண்டி வேலனேயன்றிச் சிறப்பு அறியா மகளிர் ஆடலும் உண்டு. இஃது அரசன் ஆணையான் நிகழாது பொதுமக்களாகிய வீரர்களது ஆர்வத்தான் நிகழும் இழிந்த கூத்து. வேலன் வெறியாடுதல் அகத்திற்கும் புறத்திற்கும் பொது. அகத்தில் வேலன் தானே ஆடுவான்; புறத்தில் மகளிரோடு ஆடுதலேயன்றித் தானே ஆடுதலு முண்டு. (தொ. பொ. 60 நச்.)

வெறியாட்டு மலை சார்ந்த இடத்து வழங்கும் கூத்து. அது கரந்தைப் பகுதியின்பாற்படும். (63 இள.)

வெறியாட்டு போர்த்தொடக்க வெட்சித்துறைகளுள் ஒன்று.

(புறத். 5 பாரதி)

வெறியாட்டு எழுதிணைக்கும் பொதுவான செய்திகளுள் ஒன்று; ஆதலின் பொதுவியலின் பாற்படும். (298 குழ.)

இது வேத்தியலின் வழீஇய கருங்கூத்தாகலின் வழு. (60 நச்.)

‘வேலின் ஓக்கிய விளக்கு நிலை’ -

{Entry: K11__1183}

வேலும் வேல்தலையும் ஒன்றனை விட்டு ஒன்று நீங்காது உயர்ந்து காணப்படுவது போலச் செங்கோலொடு விளக்கும் ஓங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலை என்ற பாடாண் துறை. இங்குக் கூறப்படுவது விளக்குநிலையே. வேல் உவமப் பொருளாக வந்தது.

இது “கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளின்கண் ஏற்றிய விளக்குக் கீழும் மேலும் வலமும் இடமும் திரி பரந்து சுடரோங்கிக் கொழுந்துவிட்டெழுந்தது” என்று சான்றோர் அரசனுடைய செல்வவளர்ச்சியைக் கூறுவதாம்.

(தொ. பொ. 90 நச்.)

மறத்தான் காத்து அறத்தான் ஓச்சும் செங்கோல் மாட்சியை விளக்கும் விளக்குநிலை. ஓக்கிய - ஒச்சிய என்பதன் மரூஉ. இருளொழித்து ஒளி உதவும் விளக்குப் போல., நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்கும் துறை. (புறத். 34 பாரதி.)

“வேலைப் போல நேராக விளக்கு ஓங்கி எரிவது போலச் செங்கோலும் ஓங்குக” எனப் பெரியோர் ஆக்கம் கூறுதலாம். விளக்கு அசையாமல் நேராகக் கொழுந்துவிட்டெரிவது போலச் செங்கோலும் நேராக வளையாமல் நிலைத்திருக்க வேண்டும் என்பது. (296 குழ.)

‘வேலின் நோக்கிய விளக்கு நிலை’ -

{Entry: K11__1184}

வேலினைக் குறித்த விளக்குநிலை என்ற பாடாண் துறை. நோக்குதலாவது விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல். எனவே, வேலின் வெற்றியை நோக்கி நின்ற விளக்குநிலை என்பது பொருள். (தொ. பொ. 87 இள.)

இது புறப்பொருள் வெண்பாமாலையின் பாடாண்படலத்து 12, 13 ஆம் துறையாக உள்ளது.

வேலை நோக்கிய விளக்கு நிலை -

{Entry: K11__1185}

‘வேலின் நோக்கிய விளக்கு நிலை’ காண்க.

வேவு -

{Entry: K11__1186}

ஒற்றுக் கேட்டல்; ‘வேய்’ நோக்குக.

வேள்வி -

{Entry: K11__1187}

அறக்கள வேள்வியாகிய அறச்செயல்களும், மறக்கள வேள்வி யாகிய மறச்செயல்களும் என வேள்வி இருவகைத்து வேளாண்மை (-உபகாரம்) செய்தலின், வேள்வியாயிற்று. (தொ. பொ. 75 நச். உரை)

வேள்வி நிலை -

{Entry: K11__1188}

புகழுடைய வேந்தன் வேள்வி செய்து, மறையவர் மகிழ்தலே யன்றி, தேவர்களும் அக்கினியாகிய தேவனைத் தம் வாயாகக் கொண்டு முறையாக அவியுணவு உண்டு மகிழுமாறு வேள்வி செய்த சிறப்பினைக் கூறும் பாடாண்துறை.

வேளாண்மை செய்தலின் வேள்வியாயிற்று. (பு. வெ. மா. 9 : 15)

வேளாண் மாந்தரியல்பு -

{Entry: K11__1189}

நான்காம் குலத்துப் பத்து நிலங்கள் - காண்க.

வேளாண் வாகை -

{Entry: K11__1190}

வேளாளன் செய்தற்குரிய கடமைகளை நிறைவேற்றலைக் கூறும் வாகை பற்றிய புறத்துறை. “அந்தணர் முதலிய மூவரும் மனமகிழ அவர் ஏவல்வினைகளை ஏற்றுச் செய்து, தனக்கு ஓதிய நீதிநூல்வழி நின்று, வயலுள் உழவுத் தொழிலை மேற்கொண்டொழுகும் வேளாளன் உலகோர்க்கு உயிர் போன்றவன்” என்று கூறப்படுதல் அவனது வாகையாம். (பு. வெ. மா. 8 : 11)

வேளாளர் அறு தொழில் -

{Entry: K11__1191}

உழவு, நிரையோம்பல், வாணிபம், குயிலுவம் (-இசைக் கருவிப் பயிற்சி), காருக வினை (-நெசவு), மூவருக்கும் ஏவல் செய்தல் என்பன. (திவா. பக். 291)

வேளாளர் இயல் -

{Entry: K11__1192}

வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்து ஆதலின் அவர்க்குத் தொழில் உழவே என்றார்.

நிரைகாத்தலும் உழவுத்தொழிலும் வணிகர்க்குச் சிறு பான்மையன ஆயினவாறு போல, வாணிகமும் வேளாள ருக்குச் சிறுபான்மைத்தேனும், வாணிகமே வைசியனுக்கும், உழுதொழிலே வேளாளனுக்கும் பெருவரவின என்பது கொள்ளப் படும் என்பது மரபியலில் பேராசிரியர் கருத்து.

(இ. வி. பாட். 167 விளக்கவுரை)

வேளாளர்க்குப் பத்து நிலன்கள் -

{Entry: K11__1193}

நான்காம் குலத்துப் பத்து நிலங்கள் - காண்க.

வேளாளர்க்குப் பத்துப் பண்புகள் -

{Entry: K11__1194}

‘வேளாளர்க்குப் பத்து நிலன்கள்’ காண்க. ஈண்டுப் பண்பு, குணப்பண்பும் தொழிற்பண்புமென இருதிறத்தனவும் ஆம்.

வேற்றுப்படை வரவு -

{Entry: K11__1195}

மதிலின் உள்ளிருந்த வேந்தனுக்கு உறவான வேந்தொருவன், உழிஞைமன்னனது முற்றுகையை விடுத்துத் தன்னுடன் போருக்கு வரும் வகை செய்து, தன் வெற்றிப் படையுடன், மதிலுக்குள் இருக்கும் மன்னனுக்குத் துணை செய்ய வருதல் என்ற உழிஞைத் துறை. (பு. வெ. மா. 6 : 25)

வேனில் பாசறை கண்ணிய மரபு -

{Entry: K11__1196}

வேனில் என்று பெயர் பெற்ற பாசறைக்கண் காதலான் திரிவில்லாத மனத்தனாகிய தலைவன் ஆண்டு நிகழும் போர்த்தொழிலைக் கருதிய பக்கம். ‘வேனில் பாசறை’ என்பது இளவேனில் முதுவேனில் கார் என்ற முக்காலங் களையும் உள்ளடக்கியது. வெம்மைக்குத் தலைமை பெற்ற வேனிற்காலத்தில், தலைவிமேல் காதலின்றிப் போரின்மேல் காதலான் போகத்தில் பற்றற்று வேற்றுப்புலத்தில் சேர்ந்திருத் தல் பிரிதல்வன்மை பற்றி வெற்றியாயிற்று.

இருத்தல்பொருள் முல்லை என்பதே பற்றிப் பாசறைக்கண், இருத்தலால் இத்துறைக்குப் ‘பாசறைமுல்லை’ எனப் பெயர் கூறுவாரு முளர். (தொ. பொ. 76 நச்.)

வைசியர் பெயர், தொழில், வகை -

{Entry: K11__1197}

தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளாளர், இளங்கோக் கள் என்பன வைசியர் பெயர்களாம். அவர்தம் தொழில்கள் பசுக்காவல், பொருளீட்டல், ஏர்த் தொழில்கள் என்பன. இவை முறையே கோவைசியர் தனவைசியர் பூவைசியர் என்னும் மூவகையினர்க்கும் உரியன. இவருள் பூவைசியர்க்கு ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவு என்னும் தொழில்கள் உரியன. (பிங். 773-778)

வைசியர் மாலை, கொடி, பொருள் -

{Entry: K11__1198}

மாலை - வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் ஆகிய பூக்களாகிய மாலை. (சிலப். 22 : 68 - 70)

பொருள் - பசுக்களைக் காத்தும், வாணிபம் செய்தும், ஏர்த் தொழில் புரிந்தும் பெறும் பொருள். (பிங். 774)

கொடி - கருடக் கொடி (மதுரைத் தமிழ்ப் பேரகராதி பக். 919)

மலர் - காந்தள் - (மதுரைத் தமிழ்ப் பேரகராதி பக். 919)

வைதாளிகர் -

{Entry: K11__1199}

அரசரைப் புகழ்ந்து பாடுவோருள் ஒருவகையினர். வைதாளி பாடுவோர் வைதாளிகர் எனக் காரணப் பெயர்.(சிலப்.26 : 74)

வைதிகச் சொல் -

{Entry: K11__1200}

வேதவழக்கான சொல் (நச். உரை) (தொ. பொ. 75 நச். உரை)