Section M13b inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 20 alphabetical subsections

  1. அ section: 17 entries
  2. ஆ section: 4 entries
  3. இ section: 26 entries
  4. ஈ section: 6 entries
  5. எ section: 9 entries
  6. எ section: 1 entries
  7. ஏ section: 2 entries
  8. ஐ section: 1 entries
  9. ஒ section: 3 entries
  10. ஓ section: 10 entries
  11. க section: 12 entries
  12. ச section: 24 entries
  13. த section: 13 entries
  14. ந section: 14 entries
  15. ப section: 8 entries
  16. ம section: 50 entries
  17. ய section: 3 entries
  18. ர section: 1 entries
  19. வ section: 10 entries
  20. ஸ section: 1 entries

M13b

[Version 2k (transitory): latest modification at 15:13 on 19/04/2017, Hamburg]

சொல்லணி, மடக்கு, சித்திரகவி (215 entries)

[Part 2 (out of 3) in TIPA file M13 (and pages 221-311 in volume printed in 2005)]

அ section: 17 entries

அக்கரச்சுதகம் -

{Entry: M13b__001}

சித்திரகவியுள் ஒன்று. அக்கரம்-எழுத்து; சுதகம் - நீங்கப் பெறுவது. ஒருபொருளைத் தருவதொரு சொல்லைக் கூறி, அதன் எழுத்துக்களை ஒவ்வொன்றாக நீக்க, வெவ்வேறு சொற்களாய் வெவ்வேறு பொருள் தருவது. அட்சரச் சுதகம் என்பதுமது.

எ-டு : ‘பொற்றூணில் வந்தசுடர் (1), பொய்கை பயந்த அண்ணல்(2),

சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல் (3).
மற்றியார் கொல்லெனில் மலர்தூவி வணங்கி நாளும்
கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி,’

பொன்மயமான தூணில் தோன்றிய சோதி (1) - கநகாரி; சரவணப் பொய்கையுள் தோன்றிய கடவுள் நகாரி; திருமால் பெண்வடிவங் கொண்டு சிவபெருமானுடன் கூடிப்பெற்ற மைந்தன் (3) - காரி.

1. கநகனுக்கு (இரணியனுக்கு) அரி (பகைவன்) நரசிங்கப் பெருமான்.

2. நகத்திற்கு (-கிரவுஞ்சமலைக்கு) அரி முருகன்;

3. காரி என்பது சாத்தனுக்கு ஒரு பெயர். (தண்டி. 98 உரை)

அக்கரச்சுதகம் : அதன் ஒரு பேதம் -

{Entry: M13b__002}

ஒரு பாடலில் ஓர் இன்றியமையாத சொல்லை முதலெழுத்து நீக்கிய சொல்லாகவும், மற்றொரு சொல்லை இடை யெழுத்து நீக்கிய சொல்லாகவும் கொண்டு கூறக் கருதிய பொருளை விளக்குவது.

எ-டு : ‘எந்தை இராமற்(கு) இமையோர் சரண்புகுத
முந்த நகரி முதலெழுத்தில் லாநகரி;
உந்துதிரட் கிள்ளைஇடை ஒற்றில்லாக் கிள்ளைகள்தேர்
சிந்த முழுதும் இழந்தான் தெசமுகனே.’

இராமனுடைய திருவடிகளில் தம்மைக் காக்குமாறு தேவர்கள் சரண் புக்காராக, இராவணனுடைய இலங்கை மாநகரம், நகரி என்ற சொல்லில் முதலெழுத்து நீங்கியதா யிற்று. (கரியாயிற்று; அநுமன் வாலில் வைத்த தீ நகரைக் கரியாக்கிவிட்டது). கிள்ளை என்பதன்கண் இடையொற்றில் லாதவற்றைத் தன் குதிரை தேர்ப்படையோடு இராவணன் முற்றும் இழந்தான். (கிள்ளை, இடையொற்று நீங்கின் கிளை; அஃதாவது உறவினர்.) இராவணன் தன் உறவினர் எல்லோ ரையும் இழந்துவிட்டான் என்ற கருத்திற்று.

இவ்வாறு அமைக்கும் அக்கரச்சுதகமும் உண்டு என்பது. அக்கரச்சுதகம் - எழுத்துச் சுருக்கம். (மா. அ. பா. 809)

அக்கர வர்த்தனம் -

{Entry: M13b__003}

அக்கர வருத்தனை காண்க. இஃது எழுத்துப் பெருக்கம் எனவும் கூறப்படும் மிறைக்கவியாம். (பி. வி. 26 உரை)

அக்கர வருத்தனை -

{Entry: M13b__004}

அக்கரம் - எழுத்து; வருத்தனை - கூட்டுதல் (-பெருக்கல்). மிறைக்கவியெனும் சித்திரகவியுள் ஒன்று. ‘எழுத்து வருத்தனம்’ என இதனைத் தண்டியலங்காரம் சுட்டும். ஒரு சொல், முதலெழுத்து ஓரெழுத்தொருமொழியாய்ப் பொருள் தந்து, பின்னர், முறையே ஒவ்வோர் எழுத்தாய் அதனுடன் கூட்டுந் தோறும் வேறுவேறு பொருள் தருமாறு அமைவது.

எ-டு : ‘ஏந்திய வெண்படையும் (1), முன்னாள் எடுத்ததுவும் (2),
பூந்துகிலும்(3), மால் உந்திப் பூத்ததுவும் (4), - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரைஎன் றாம்.’

முழுச்சொல்லும் சேர்ந்து ‘கோகநகம்’ என்றாகித் தாமரை எனப் பொருள்படும்.

1. திருமால் கையில் ஏந்தும் வெண்படை, கம் (-சங்கு)

2. அவன் முன்பு கண்ணனாய்த் தூக்கியது, நகம் (-கோவர்த் தனமலை)

3. திருமால் உடுத்த ஆடை, கநகம் (-பீதாம்பரம்)

4. அவன் உந்தியில் மலர்ந்தது, கோகநகம் (-தாமரை)

சங்கினைக் குறிக்கும் ‘கம்பு’ எனும் சொல் கடைக்குறையாய் நின்றது; மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத் தொருமொழியாயிற்று என அமைவு கொள்க. (தண்டி. 98 உரை)

அகரக் குற்றுயிர் மடக்கு -

{Entry: M13b__005}

அகரம் என்னும் குற்றெழுத்தொன்றே ஏனைய மெய்களொடு கலந்து உயிர்மெய்யாய்ப் பாடல் முழுதும் வருமாறு அமைக்கும் ஓரெழுத்து மடக்கு.

‘ஓரெழுத்து மடக்கு’க் காண்க. (மா.அ. பாடல். 760)

அட்ட நாக பந்தம் -

{Entry: M13b__006}

எட்டுப் பாம்புகளின் உருவத்தால் அமையும் மிறைக்கவி இது.

ஒரு நான்(கு)அக் கரத்தோடு நாற்பத் தொன்றாம்

ஆறுடன்நாற் பத்தைந்தாம் எட்டுடன்ஐந் நான்காம்

இருளறுபன் னிரண்டுடனே பதினெட் டாகும்

இருபத்தி ரண்டுடனே நாற்பத் தேழாம்

பரவுமிரு பத்துநான் குடன்முப் பத்தொன்

பானாம்முப் பான்மூன்றோ(டு) ஐம்பத் தொன்றாம்

அருமுப்பத் தேழுடன்நாற் பத்தொன் பானாம்

அட்டநாக பந்த மாம்செய் யுட்கே.

51 எழுத்துக்களால் அட்டநாகபந்தம் அமையும். பின்வரும் எண்களையுடைய எழுத்துக்கள் எழுத்தொன்றேயாகக் கணக் கிடப்படும்.

4ஆம் எண்ணுடைய எழுத்தும் 41ஆம் எண்ணுடைய எழுத்தும்

6ஆம் எண்ணுடைய எழுத்தும் 45ஆம் எண்ணுடைய எழுத்தும்

8ஆம் எண்ணுடைய எழுத்தும் 20ஆம் எண்ணுடைய எழுத்தும்

12ஆம் எண்ணுடைய எழுத்தும் 18ஆம் எண்ணுடைய எழுத்தும்

22ஆம் எண்ணுடைய எழுத்தும் 47ஆம் எண்ணுடைய எழுத்தும்

24ஆம் எண்ணுடைய எழுத்தும் 39ஆம் எண்ணுடைய எழுத்தும்

33ஆம் எண்ணுடைய எழுத்தும் 51ஆம் எண்ணுடைய எழுத்தும்

37ஆம் எண்ணுடைய எழுத்தும் 49ஆம் எண்ணுடைய எழுத்தும்

ஓர் எழுத்தாகவே அமையுமாறு 51 எழுத்துக்களால் இம் மிறைக்கவி அமையும். நாகங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் சந்திகளில் வருபவை 4ஆமெழுத்து முதலியவை. (இ. வி. அணி. 690. உரை)

அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகை மடக்கு -

{Entry: M13b__007}

முதலொடு இடைமடக்கு 15, முதலொடு கடை மடக்கு 15, இடையொடு கடைமடக்கு 15 என, அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கும் 45 வகைப்படும். (மா. அ. 255 பாடல்கள் 670 - 729)

அடிமடக்கு -

{Entry: M13b__008}

பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவது. பொருள் வேறுபட்டு வருவதே சிறப்புடைத்தாகச் சொல்லணிவகையுள் அடங்கும். தண்டி.96

‘ஒன்றி னம்பர லோகமே

ஒன்றி னம்பர லோகமே

சென்று மேவருந் தில்லையே

சென்று மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)

இதன்கண், முதலடியே இரண்டாமடியாகவும், மூன்றா மடியே நான்காமடியாகவும் மடக்கியவாறு காண்க. பொருள் வேறுபட்டு வந்தவாறு. ‘சென்று தில்லையே மேவரும்; பரலோகமும் ஒன்றினம்; ஒன்று இன்னம் பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ - எனப் பொருள்செய்க.

அடிமுதல்மடக்குப் பதினைந்து -

{Entry: M13b__009}

முதலடி முதல் மடக்கு

இரண்டாமடி முதல் மடக்கு

மூன்றாமடி முதல் மடக்கு

நான்காமடி முதல் மடக்கு

முதல் ஈரடியும் முதல் மடக்கு

முதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்கு

முதலடியும் நான்காமடியும் முதல் மடக்கு

கடை ஈரடியும் முதல் மடக்கு

இடை ஈரடியும் முதல் மடக்கு

இரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்கு

ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு

ஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு

முதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு

முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு

நான்கடியும் முற்றும் முதல்மடக்கு என்பன (மா. அ. 256. பாடல் 624- 639)

அடியிடைமடக்குப் பதினைந்து -

{Entry: M13b__010}

முதலடி இடை மடக்கு

இரண்டாமடி இடை மடக்கு

மூன்றாமடி இடை மடக்கு

நான்காமடி இடை மடக்கு

முதலீரடியும் இடை மடக்கு

முதலடியும் மூன்றாமடியும் இடை மடக்கு

முதலடியும் நான்காமடியும் இடை மடக்கு

கடையீரடியும் இடை மடக்கு

இடையீரடியும் இடை மடக்கு

இரண்டாமடியும் நான்காமடியும் இடை மடக்கு

ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு

ஈற்றயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு

முதலயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு

முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு

நான்கடியும் முற்றும் இடை மடக்கு என்பன. (மா.அ. 257)

(பாடல் 640 - 654)

அடியிறுதிமடக்குப் பதினைந்து -

{Entry: M13b__011}

முதலடி இறுதி மடக்கு

இரண்டாமடி இறுதி மடக்கு

மூன்றாமடி இறுதி மடக்கு

நான்காமடி இறுதி மடக்கு

முதலீரடியும் இறுதி மடக்கு

முதலடியும் மூன்றாமடியும் இறுதி மடக்கு

முதலடியும் நான்காமடியும் இறுதி மடக்கு

கடையீரடியும் இறுதி மடக்கு

இடையீரடியும் இறுதி மடக்கு

இரண்டாமடியும் நான்காமடியும் இறுதி மடக்கு

ஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு

ஈற்றயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு

முதலயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு

முதலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு

நான்கடியும் முற்றும் இறுதிமடக்கு என்பன. (மா. அ. 257 பாடல் 655- 669)

அடியிறுதி முற்று மடக்கு -

{Entry: M13b__012}

அடிதோறும் நான்கடிப் பாடலில் நான்காம் சீரும் எட்டாம் சீரும் இடையிட்டு வந்து மடக்கவே, அடியிறுதி முற்று மடக்கு ஆம் என ஒரு சாராரால் கொள்ளப்பட்டது. (தண்டி : 95)

எ-டு : ‘வருமறை பலமுறை வசையறப் பணிந்தே
மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே
அருநடம் நவில்வதும் அழகுபெற் றமன்றே
அருளொடு கடவுவ(து) அணிகொள்பெற் றமன்றே
திருவடி மலர்வன திகழொளிச் சிலம்பே
தெளிவுடன் உறைவது திருமறைச் சிலம்பே
இருவினை கடிபவர் அடைபதத் தனன்றே
இமையவர் புகல்அவன் எனநினைத் தனன்றே’

மறை பணிந்தே - வேதம் வணங்கி;

மருவும் அப்பு அணிந்தே - (கங்கை) நீரை அணிந்து பொருந்தும்.

அழகு பெற்ற மன்றே - அழகு பெற்ற சபை;

அணிகொள் பெற்றம் அன்றே - அழகிய இடபம் அன்றோ?

ஒளிச் சிலம்பு - ஒளியுடைய சிலம்பு ஆகிய அணி;

மறைச் சிலம்பு - வேதமயமான கயிலைமலை.

அடை பதத்தன் அன்றே - அடையும் திருவடியுடையன் அல்லனோ; நினைத்தல் நன்றே - நினைப்பது சிறந்தது - என்று இவ்வாறு மடக்கிற்குப் பொருள்கொள்க.

அந்தாதி மடக்கு (முதல் வகை) -

{Entry: M13b__013}

முதலும் ஈறும் ஒருசொல்லாய் இடையிடைப் பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதி மடக்கு எனவும், ஒரு சொல்லே முதலும் இறுதியும் ஒவ்வோரடியிலும் நிகழ்ந்த அந்தாதி மடக்கென வும் அந்தாதி மடக்கு இருவகைத்து.

எ-டு : ‘தேனே கமழ்நறுந் திருமகிழ் மாறன்
மாறன் சேவடி வணங்கிறை! வரைவாய்;
வரைவாய் அன்றெனில் வல்லைநீ இறைவா!
இறைவால் வளையைநீப் பினும்வருந் தேனே!’

“தேன்கமழும் நறிய மகிழம்பூமாலையை அணிந்த சடகோபன் புகழும் திருமால் அடியை வணங்கும் தலைவ! நீ இவளை மணந்து கொள்வாய். விரைவில் மணக்கவில்லையெனில், நீ இவளை உடன்கொண்டு சென்றாலும் வருந்தேன்; அல்லது நீ சிலநாள் குறியிடை வருதல் தவிர்ந்தாலும் வருந்தேன்” என்பது பொருள்.

‘மால் தன் சேவடி வணங்கு இறை! வல்லைநீ வரைவாய். அன்றெனின் இறைவா! வளையலை அணிந்தாளொடு நீப்பினும் வருந்தேன்’ என்று பொருள் கொள்க. முதலும் ஈறும் ‘தேனே’ என்ற சொற்கள் வர, அடிதோறும் வேற்றுச் சொற்கள் அந்தாதியாக வந்தவாறு.

இதன் இரண்டாம் வகை ‘சந்தொட்டியமகம்’ எனப்படும் அது காண்க.

எ-டு : ‘நாகமுற்றவும்’ (மா. அ. 266, பா. 751)

அம்மனை மடக்கு -

{Entry: M13b__014}

1) கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. கலம்பகப் பிரபந்தத்துள் இஃது அம்மானை என்னும் உறுப்பாக ஐந்தடியால் வெண்டளை யாப்பிற்றாக நிகழும்.

2) அம்மனையைக் கைக்கொண்டு ஆடும் மகளிர் இருவருள் ஒருத்தி தலைவன்ஒருவனை வஞ்சப்புகழ்ச்சி அணியால் ஒருவாறு வருணித்தலும், மற்றவள் அச்செய்யுள் இடைப் பட்ட அடியை மடக்காய் அந்தாதித்து அவ்வருணனை பற்றி வினவுதலும், அதன்பின் முதலாமவள் தான் கூறியது பிழை யாதபடி சிலேடைவாய்பாடு அமைய விடை கூறுதலும் ஆகிய அம்மனைப் பாடலில் காணப்படும் மடக்கு அம்மனை மடக்காம். (மா. அ. 267)

எ-டு : ‘தேன்அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண் அலிஅலர்காண் அம்மானை’

என்றாள் முதலாமவள். இரண்டாமவள் அவ்விரண்டாம் அடியினை அந்தாதித்து ‘ஆனவர்தாம் ஆண்பெ ண் அலி அலரே ஆமாகில், சானகியைக் கொள்வாரோ தாரமா அம்மானை என வினவினாள். உடனே முதலாமவள் அதற்கு விடையாக,

‘தாரமாக் கொ ண்டதுமோர் சாபத்தால் அம்மானை’ என, சாபம் என்ற சொல் வில் எனவும், சாபமொழி எனவும் இரு பொருள்படச் சிலேடையாய் விடைகூறி முடித்தவாறு. (திருவரங்கக் 26) அம்மானையாடும் மகளிர் மூவராகக் கொண்டு கூற்று நிகழ்த்துவதாகக் கூறலும் உண்டு; முன்றா மவள் சிலேடை யாக விடை கூறுவதாகக் கொள்க.

அரவுச் சக்கரம் -

{Entry: M13b__015}

நாகபந்தம் எனப்படும் இது சித்திரகவி வகையுள் ஒன்றாகும். (யா. வி. பக். 533)

அருங்கவி -

{Entry: M13b__016}

சித்திரகவி. அது காண்க. (தொ. பொ. 146 நச்.)

அலகிருக்கை வெண்பா -

{Entry: M13b__017}

மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது இக்காலத்து வழக்கின்று. (யா. வி. பக். 548)

ஆ section: 4 entries

ஆதி மடக்கு -

{Entry: M13b__018}

முதலடி முதல்மடக்கு, இரண்டாமடி முதல்மடக்கு, மூன்றாமடி முதல்மடக்கு, நான்காமடி முதல்மடக்கு, முதலிரண்டடியும் முதல் மடக்கு, முதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்கு, முதலடியும் நான்காமடியும் முதல்மடக்கு, கடையிரண்டடியும் முதல்மடக்கு, இடையிரண்டடியும் முதல் மடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்கு, ஈற்றடியொழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, ஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு, நாலடியும் முதல் முற்றுமடக்கு என ஆதிமடக்கு பதினைந்து வகைப்படும். (மா. அ. 258 உரை)

ஆதியோடு இடைமடக்கு -

{Entry: M13b__019}

முதலோடு இடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம்.

முதலடி ஆதியோடு இடைமடக்கு

இரண்டாமடி ஆதியோடு இடைமடக்கு

மூன்றாமடி ஆதியோடு இடைமடக்கு

நான்காமடி ஆதியோடு இடைமடக்கு

முதலிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு

முதலடியும் மூன்றாமடியும் ஆதியோடு இடைமடக்கு

முதலடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்கு

கடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு

இடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு

இரண்டாமடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்கு

முதல் மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு

முதலடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு

இரண்டாமடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு

ஈற்றயலடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு

நான்கடியும் ஆதியோடு இடைமடக்கு

- எனப்பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை)

ஆதியொடு கடைமடக்கு

{Entry: M13b__020}

முதலொடு கடைமடக்குப் பின்வருமாறு பதினைந்தாகும்.

முதலடி ஆதியொடு கடைமடக்கு

இரண்டாமடி ஆதியொடு கடைமடக்கு

மூன்றாமடி ஆதியொடு கடைமடக்கு

நான்காமடி ஆதியொடு கடைமடக்கு

முதலிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு

முதலடியும் மூன்றாமடியும் ஆதியொடு கடைமடக்கு

முதலடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்கு

கடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு

இடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு

இரண்டாமடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்கு

முதல் மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு

முதலடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு

ஈற்றயலடி ஒழிந்த ஏனை
முன்றடியும் ஆதியொடு கடைமடக்கு

இரண்டாமடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு

நான்கடியும் ஆதியொடு கடைமடக்கு

- எனப் பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை)

ஆறாரச்(ஆறாரைச்) சக்கரம் -

{Entry: M13b__021}

இஃது ஆறு ஆராய், இங்குள்ள எடுத்துக்காட்டுப் பாடல் அமைந்த சக்கரவடிவில், நடுவே ரகர ஒற்று நிற்ப, குறட்டைச் சூழத் தா என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஏழு எழுத்துக்கள் நிற்ப, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று முடிவது; மிறைக்கவி வகைகளுள் ஒன்றான சக்கரத்தின் வகை.

எ-டு : ‘பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார்
கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு - மோங்குநன்
மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற்
பூக்கோதை மாதர்தன் பொற்பு.’

இப்பாடலின் சக்கர பந்த அமைப்பினை அமைத்துக் காண்க. குறடு - ஆர்க்கால்களின் அடியிலமைந்த குடத்தின் வளை வான பகுதி.

சூடு - வட்டை

ஆர்க்கால், ஆர், ஆரம், ஆரை - என்பன ஒருபொருட்கிளவி.

நடுஆரை நெடுக முதலடியும், அதன்மேல் நின்ற இரண்டு ஆரை நெடுக இரண்டாம் மூன்றாம் அடியும், நடு ஆரை இணையும் வட்டை வலமாக முழுதும் சூழ ஈற்றடியும் அமையுமாறு காண்க. நடுவே நின்ற ரகர ஒற்று முதல் மூன்றடிகட்கும் பொதுவாய் நின்றது. ஆறு ஆரைகளும் வட்டையில் இணையும் இடத்து நிற்கும் ஆறெழுத்துக்களும் பொதுவாக நின்று ஈற்றடிக்கு உபகாரப் பட்டமையும் காண்க. (யா. வி. பக். 528)

இ section: 26 entries

இடை ஈரடி ஆதிமடக்கு -

{Entry: M13b__022}

குரவார் குழலாள் குவிமென் முலைநாம்

விரவா விரவாமென் தென்றல் - உரவா!

வரவா வரவாம் எனநினையாய் வையம்

புரவாளர்க்(கு) ஈதோ புகழ்.

(‘விரவா - இரவு ஆம் - மென் தென்றல் வரவு - ஆ / அரவு ஆம்’- என இடையீரடியும் பிரித்துப் பொருள் செய்யப்படும்.)

“மனவலியுடைய தலைவ! குரவம்பூச் சூடிய இத்தலைவியின் குவிமென் முலையிடை நீ கலக்காத இராக்காலத்தில் வீசும் தென்றற்காற்றின் வரவு, ஆ! பாம்பு தீண்டியது போலத் துயரம் தரும் என நினையாது பிரியத் துணிந்துள்ளாய். உலகு புரக்கும் சான்றோர்க்கு இதுவோ புகழுக்குரிய செயல்?” எனத் தோழி தலைவனுடைய கற்புக்காலப் பிரிவினை விலக்கிய செய்தி அமைந்த இப்பாடற்கண், இரண்டாம் மூன்றாம் அடிகளில் முதற்சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95)

இடை ஈரடி மடக்கு -

{Entry: M13b__023}

‘கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்

உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்

உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்

வருமாய வினைதீர ஒருநாளும் அருளார்கொல்’

‘(மதன் ஆகம், மதன் நாகம்’ எனப் பிரித்துப் பொருள் கொள்க.)

“உருவமே மறையுமாறு மன்மதன் உடலை அழிக்கும் செயலை மேற்கொள்ள விரும்பிய சிவபெருமானை முன்னர்ப் பிறவித் தொடர்ச்சிதோறும் அன்பு நீங்காது தொழுதாலும், இடி போன்று பிளிறி வரும் மதயானையைக் கொல்லும் தொழிலைப் புரிந்த அப்பெருமான், தொன்று தொட்டு வரும் மாயமான கொடிய வினைகள் தீருமாறு ஒரு காலத்தும் அருள்புரியாரோ?” என்ற இப்பாடலில் இடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96)

இடையிட்டு வந்த இடைமுற்று மடக்கு -

{Entry: M13b__024}

ஒரு பாடலின் முதலடி நடுவில் வரும் சீர் நான்கு அடிகளிலும் நடுச்சீராய் வர, ஏனைய சீர்கள் வெவ்வேறு சொற்களால் அமைய இயற்றப்பட்ட பாடல், இடையிட்டு வந்த இடைமுற்று மடக் கினைப் பெற்ற பாடலாகும். அவ்வாறு மடக்கிய சீர் வெவ்வேறு பொருள் தரும்.

எ-டு : ‘வாச நாள்மலர் வண்டுகள் வாய்விடா வகையுண்டு
மூசி ஏழிசை வண்டுகள் களிமுகிற் குழலாளைப்
பூசல் மாமதன் வண்டுகள் பொரத்துழாய் புல்லாணி
ஈசன் நல்கிலன் வண்டுகள் இறைதுறந் தெழுமன்னோ’

முதலடி : வண்டுகள் - வண் + துகள் - வளவிய மகரந்தப் பொடி

3 ஆமடி - வண்டுகள் - வண்டுகள் மொய்க்கும் மலராகிய அம்புகள்

4 ஆமடி - வண்டுகள் - கைவளைகள்

பூக்களில் மகரந்தத்தைத் தெவிட்டாது உண்டு ஏழிசைபாடும் வண்டுகள் மொய்க்கும் மன்மதன் பஞ்சபாணங்கள் தலைவியைத் துன்புறுத்துமாறு திருப்புல்லாணி ஈசன் தன் திருத்துழாய் மாலையை இவளுக்குத் தாராமையால் இவள் முன்கையினின்றும் வளையல்கள் கழன்றுவிட்டன என்பது பொருள். (மா. அ. பாடல். 731)

இடையிட்டு வந்த கடைமுற்று மடக்கு -

{Entry: M13b__025}

ஏனைய சீர்கள் வெவ்வேறாக வரவும், நான்கடிகளிலும் கடைசி அசையோ சொல்லோ எழுத்துக் கூட்டமோ ஒன்றா கவே அமையப் பாடும்போது இடையிட்டுவந்த கடைமுற்று மடக்கு அமையும்.

எ-டு : ‘மறைப யின்றவண் தமிழ்முனி குருகையில் மன்காவே
இறைவர் பின்னர்நெஞ்(சு) அகன்றது கன்றிடத்(து) இரங்காவே!
அறையில் இங்(கு)இணை யாமென உயிர்உண அங்காவே
யுறைபு ரந்தகண் மலர்களும் ஒல்லையும் உறங்காவே’

குருகையில் மன் (-நிலைபெற்ற) காவே! (-சோலையே),
கன்றிடத்து இரங்கு ஆவே! (-பசுவே), அறையில் இங்கு இணையாம் என் உயிர் உண அங்கா (-வாயைத் திறத்தல்), வேய் (தந்த) உறை புரந்த (-கண்ணீர்த் துளிகளைக் கொண்ட) கண்மலர்களும் ஒல்லையும் உறங்காவே - எனப் பிரித்துப் பொருள் செய்க.

இப்பாடலின் நான்கடிகளிலும் ஈற்றில் ‘காவே’ என ஈரெழுத் துக்களே மடங்கி வந்தவாறு. (மா. அ. பாடல். 732)

இடையினப் பாடல் -

{Entry: M13b__026}

‘யாழியல் வாய வியலளவா லாயவொலி

யேழிய லொவ்வாவா லேழையுரை - வாழி

யுழையே லியலா வயில்விழியை யையோ

விழையே லொளியா விருள்’

‘யாழ் இயல் வாய இயல் அளவால் ஆய ஒலியின் ஏழ் இயல் ஏழை உரை ஒவ்வாவால்; உழையேல் அயில்விழியை இயலா; ஐயோ! இழையேல் இருள் ஒளியா, வாழி’ என்று பொருள் செய்யப்படும்.

“யாழிலிருந்து தோன்றிய தூய்மையான எழுவகை இசை ஒலிகள் இப்பெண்ணின் பேச்சினிமையை ஒவ்வா; மானின் விழியும் இவளுடைய கூரிய விழிகளை ஒவ்வா; வியத்தக்க இவள் அணிகலன்களின் ஒளியும் இவள் மேனி யொளிக்கு முன் தம் ஒளி மழுங்கி இருள்போல ஆகும்“ என்று தலைவன் தலைவியைப் புகழும் இப்பாடற்கண், இடையின மெய்களும் இடையின உயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 96 உரை)

இடையொடு கடைமடக்கு -

{Entry: M13b__027}

இடையொடு கடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம்.

1. முதலடி இடையொடு கடைமடக்கு

2. இரண்டாமடி இடையொடு கடைமடக்கு

3. மூன்றாமடி இடையொடு கடைமடக்கு

4. நான்காமடி இடையொடு கடைமடக்கு

5. முதல் ஈரடியும் இடையொடு கடைமடக்கு

6. முதலடியும் மூன்றாமடியும் இடையொடு கடைமடக்கு

7. முதலடியும் நான்காமடியும் இடையொடு கடைமடக்கு

8. கடையீரடியும் இடையொடு கடைமடக்கு

9. இடையீரடியும் இடையொடு கடைமடக்கு

10. இரண்டாமடியும் நான்காமடியும்

இடையொடு கடைமடக்கு

11. ஈற்றடிஒழிந்த ஏனை
மூன்றடியும் இடையொடு கடைமடக்கு

12. ஈற்றயலடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் இடையொடு கடைமடக்கு

13. முதலயலடி ஒழிந்த
ஏனை மூன்றடியும் இடையோடு கடைமடக்கு

14. முதலடி ஒழிந்த ஏனை
மூன்றடியும் இடையொடு கடைமடக்கு

15. நான்கடியும் இடையொடு கடைமடக்கு (மா.அ. 258 உரை)

இடைவிட்டும் விடாதும் இடையும் இறுதியும் நாலடியும் முற்றும் மடக்கிய மடக்கு -

{Entry: M13b__028}

எ-டு : ‘தாமாலமால மருமென்ற மாலமால
நாமாலமால நளிநீர்க்கட மாலமால
தேமாலமால கரிசேர்மலர் மாலமால
மாமாலமால மலதாளுள மாலமால’

’தாமாலம் ஆல் அமரும் மென்தமாலம் ஆல நாம் ஆலம் மால நளி நீர் கட மாலமால தே(ன்)மால மாலகரி சேர் மலர்மால மால மா மால் அ மால் அமலதாள் உளமால் அமால’ - எனப் பிரித்துப் பொருள் செய்க.

தாமாலம் - பிரளயம்; ஆல் அமரும் - ஆலமரத்தில் தங்கும்; மென் தமாலம் ஆல - மெல்லிய இலையில் துயிலுதலை யுடைய; நாம் ஆலம் ஆல - அச்சம் தரும் விடம் போலக் கறுத்த; நளிநீர் கட மாலமால - கடலைக் கடக்கும் பெரிய குரங்கு ஒழுங்கினையுடைய; தே மால - தேன் துளும்ப; மா லகரி சேர் - பெரிய வண்டு உண்டு களிக்கும்; மலர் மால - தாமரைப் பூவினை விருப்பமாக; மால - பெரிய இருப்பிடமாக் கொண்ட; மா - திருமகள்; - மால் - மயங்கும்; அ மால் - அத்திருமால் ; அமல தாள் - மலம் நீக்கும் திருவடிகளை; உளமால் - உள்ளத்திற் கொண்டிருப்பதால்; அமால - அந்தப் புதனுக்கு நிகராவோம்:

மாலமால என்ற மடக்கு இடையிலும் இறுதியிலும் இடை யிடையே வேற்றுச்சீர் வரப்பெற்றும் பெறாதும், நான் கடியிலும் மடக்கிய முற்றுமடக்காக இப்பாடல் அமைந் துள்ளது. (மா. அ. பா. 733)

இடைவிடா மடக்கு -

{Entry: M13b__029}

ஓரடி மடக்கு 4, ஈரடிமடக்கு 6, மூவடிமடக்கு 4, நான்கடி மடக்கு 1, என்னும் இவற்றை, ஆதி, இடை, கடை, ஆதி யோடிடை, ஆதியோடு கடை, இடையொடு கடை, முழுதும் என்னும் ஏழானும் உறழ, 15 x 7 = 105 ஆகும். இவ்வாறு இடைவிடாது வரும் மடக்கு 105 என்பது வரையறுக்கப் பட்டுள்ளது. இவையன்றி, இடைவிட்ட மடக்கு 105, இடை விட்டும் விடாதும் அமைந்த மடக்கு 105 ஆக இம்மடக்குக் களின் கூடுதல் எண்ணிக்கை 415 ஆகிறது. (தண்டி. 95 உரை)

இணைமடக்கு -

{Entry: M13b__030}

கலம்பகத்துள் வரும் அம்மானை என்னும் உறுப்புப் பற்றிய பாடல்களில் இரண்டாமடி மூன்றாமடியாக மடக்கி வருதலும், சிலேடை வெண்பாக்களில் கடையிரண்டடிகளில் முதல் இரண்டு சீர்கள் மடங்கி வருதலும் இணைமடக்கு என்று வழங்கப்படுகின்றன. எனவே, இவ்விணைமடக்கு மாறனலங்காரத்துள்.

1. அம்மனைப் பாடற்கண் இணைமடக்கு

2. இருபொருள் சிலேடை இணைமடக்கு

3. முப்பொருள் சிலேடை இணைமடக்கு

4. நாற்பொருள் சிலேடை இணைமடக்கு

5. ஐம்பொருள் சிலேடை இணைமடக்கு

என ஐவகையாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. தனித்தனித் தலைப்பிற் காண்க. (மா. அ. 267, 268)

இதழ் அகல் அந்தாதி -

{Entry: M13b__031}

இதழ் - உதடு ; அகலுதல் - நீங்குதல். இதழ் தொடர்பில்லாத எழுத்துக்களாலாகிய பாடல்களை அந்தாதியாகத் தொடுத் தமைக்கும் நூல். உ ஊ ஒ ஓ ஒள ப ம வ என்னும் எட்டு எழுத்தும் இதழின் தொடர்புடையவை. இவை நீங்கிய ஏனைய எழுத்தால் அமைந்த பாடல்கள் அந்தாதியாக அமைந்த தொகுப்பு இதழகலந்தாதியாம். இது நீரோட்டக அந்தாதி என வடமொழியில் வழங்கப்படும்.

இதழ் இயைந்த ஓட்டியம் -

{Entry: M13b__032}

ப் ம் வ் என்னும் மெய்கள் இதழ் இயைதலால் பிறக்கும் ஒலிகள் ஆதலின், இவற்றாலேயே இயைந்த பாடற்கண் ‘இதழியைந்த ஓட்டியம்’ என்னும் சொல்லணி காணப்படும்.

எ-டு : ‘பம்மும்பம் மும்பம்மு மம்மம்ம மைமாமை

பம்முமம்ம மும்மேமம் பாம்’

மை பம்மும்; பம்மும் பம்மும்; அம்மம்ம! மாமை பம்மும் அம்மமும் ; ஏமம் பாம் - எனப் பிரித்து உரை செய்க.

(பாகனே! நாம் ஊர் திரும்பிச் செல்வதன் முன்) மேகங்கள் (நம் ஊர்க்குச் சென்று) படியும்; விண்மீன் கணங்களும் மறைவதால் (வழி இருண்டு விட்டது) ஐயோ! ஐயோ! பாலையுடைய தலைவிநகில்களும் மாமை மறைந்து பசலை படிந்துவிடும். (கார்காலத் தொடக்கத்தில் மீண்டுவருவேன்“ என்ற என் சொற்கள் என்னாம் என்பது குறிப்பெச்சம்) என்ற இப்பாடற்கண், இதழ் குவிந்த ஓட்டியம் அமைதற்குரிய ப் ம் வ் என்னும் மெய்யெழுத்துக்களே வந்துள்ளன.

மை - மேகம்; பம்முதல் - படிதல்; மறைதல்;

பம் - விண்மீன்கள்; அம்மம் - நகில்கள்;

ஏமம் - பொன் நிறத்த பசலை (மா. அ. பா. 772)

இதழ் குவிந்த ஓட்டியம் -

{Entry: M13b__033}

மேலுதடும் கீழுதடும் குவிந்து ஒலிக்கும் உயிர்எழுத்துக்க ளாகிய உ ஊ ஒ ஓ ஒள என்னும் உயிரொடு கூடிய மெய் யெழுத்துக்களே அமையப் பாடும் சொல்லணி இதழ் குவிந்த ஓட்டியம்.

எ-டு : ‘குருகு குருகு குருகொடு கூடு
குருகுகுரு கூருளுறு கோ’

‘குருகு குருகொடு(ம்), குருகு
குருகொடு(ம்) கூடும் குருகூருள் கோ உறு’ என்க.

‘சங்கு சங்கோடும், குருகு என்னும் பறவை குருகுகளோடும் திரண்டு இயங்கும் குருகூரின் தலைவன் ஆன சடகோபனை நினைப்பாயாக’ என்ற பொருளமைந்த இப்பாடலின், உ ஊ ஓ என்னும் உயிர்கள் கூடின உயிர்மெய்யெழுத்துக்களே வந் துள்ளமையால், இவையாவும் உதடு குவிந்து ஒலிக்கப்படு தலின் இஃது இதழ் குவிந்த ஓட்டியம் என்னும் சொல்லணி பெற்றுள்ளது. ஓட்டம் - உதடு; ஓட்டியம் - உதட்டொடு தொடர்புடைய எழுத்துக்களாலே அமைந்த பாடல்.
(மா. அ. பா. 771)

இதழ் குவிந்தும் இயைந்தும் வந்த ஓட்டியம் -

{Entry: M13b__034}

இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்னும் உயிர்களும் இதழ் இயைதலால் பிறக்கும் ப் ம் வ் என்னும் மெய்களும் கூடிய சொற்கள் வரப் பாடப்படும் செய்யுள் இவ்வோட்டிய அணிவகை வரப்பெறும்.

எ-டு : ‘குருகுமடு வூடு குழுமுகுரு கூரு
ளொருபெருமா னோவாமை ஊறு - முருகொழுகு
பூமாது வாழும் புவிமாது மேவுமொரு
கோமா னுவாவோது கோ’

குருகு மடுவூடு குழுமு குருகூருள் ஒருபெருமான்! ஓவாமை ஊறும் முருகு ஒழுகு பூமாது வாழும் கோமான்! புவிமாது மேவும் ஒரு கோமான்! உவா ஓதுகோ எனப் பிரிக்க.

சங்குகள் மடுக்களில் கூட்டமாகத் திரியும் குருகூரில் உள்ள தலைவனே! இளமையும் அழகும் மணமும் நீங்காமல் தன்னிடத்தே வெளிப்படும் திருமகள் தங்கப்பெற்ற பெரு மானே! நிலமகள் தன் பக்கலில் தங்கியிருக்கும் ஒப்பற்ற தலை வனே! உன் நிறைவை யான் யாங்கனம் எடுத்துரைப்பேன்?” என்ற கருத்தமைந்த இப்பாடலுள், இதழ் குவியத் தோன்றும் உ ஊ ஒ ஓ என்னும் உயிர்களும், இதழ் இயையத் தோன்றும் ப் ம் வ் என்னும் மெய்களுமே வந்துள்ளமையால் இதன்கண் இதழ் குவிந்தும் இயைந்தும் வந்த ஓட்டியம் வந்துளது. (மா. அ. பா. 773)

இயமா வியமகம் -

{Entry: M13b__035}

ஒரு சொல்லானே நான்கு அடிகளும் மடக்கி வரும் மடக்கினை இயமா இயமகம் என்ப. இஃது ஒரு சொல் முற்று மடக்கு. ஓரடியே நான்கடியும் மடக்கி வரும் ஏகபாதம் என்னும் சித்திரகவிவகையுள் இஃது அடங்கும்.

எ-டு : ‘உமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதரன்’

உமாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் ஆதரனும் மாது அரன் எனப் பிரித்துப் பொருள் செய்க. உமாதரன் - உமையைத் தரித்தவன்; மா தரன் - மானை ஏந்தியவன்; மாதரன் - அழகினை யுடையவன்; மாதரன் - மாமரத்தின் கீழே இருப்பவன்; மாதரன் - யானையின் தோலை மேலாடையாகத் தரித்தவன்; மாதரன் - காளையால் தாங்கப்படுபவன்; ஆதரன் - விருப்பம் உடையவன், மாது அரன் - பெருமை மிக்க சிவபெருமான். (தண்டி. 95 உரை)

இரட்டை நாகபந்தம் -

{Entry: M13b__036}

‘அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்

தெருளின்மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா

ஒன்றே யுமையா ளுடனே யுறுதிதரு

குன்றே தெருள அருள்.’

‘மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு

பெருகொளியான் தேயபெருஞ் சோதி - திருநிலா

வானம் சுருங்க மிகுசுடரே சித்த

மயரு மளவை ஒழி.’

இரண்டு நேரிசை வெண்பாக்களையும் இரண்டு நாகங்களின் தலையினின்று தொடங்கி, வாலின் முனைகள் இறுதியாக, இடையிடையே தத்தம் உடலினும் மறுபாம்பின் உடலிலும் மாறாடிச் சந்திகளின் நின்ற எழுத்தே மற்றை இடங்களிலும் உறுப்பாய் நிற்க, ஒவ்வொரு பாம்பிற்கும் மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச்சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டுபாம்பிற்கும் நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாம்பிற்கும் பொருந்த நான்கு எழுத்துமாகச் சித்திரத்தில் அடைத்து அமைத்தல் இதன் இலக்கணமாம். (தண்டி. 98-5)

இரண்டாமடி ஆதிமடக்கு -

{Entry: M13b__037}

எ-டு : ‘கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கின்
இனியார் இனியார் எமக்குப் - பனிநாள்
இருவராய்த் தாங்கும் உயிரின்றி எங்குண்(டு)
ஒருவராய்த் தாங்கும் உயிர்’

“காவல! கொவ்வைக்கனி போன்ற வாயளாகிய இவள் தனித்திருக்க நீ இவளைப்பிரிந்து சென்றால், எங்களை இனி யார் இன்சொற் பேசி மகிழ்விப்பவர்? பனிக்காலத்தில் கூடியவராகிய தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் தாங்கும் உயிரே அன்றி, பிரிந்து ஒருவராய் இருந்து தாங்கும் உயிரும் உண்டோ?” என்று கற்புக் காலத்துத் தோழி தலைவன்பிரிவைத் தடுத்த இப்பாடற்கண், “இனி யார் எமக்கு இனியார் ஆவர்?” என்ற பொருளில், இரண்டாமடி ஆதியில் ‘இனியார் இனியார்’ என மடக்கியவாறு. (தண்டி. 95)

இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு -

{Entry: M13b__038}

எ-டு : ‘கடிய வாயின காமரு வண்டினம்
அடிய வாயகன் றாருழை வாரலர்
கடிய வாயின காமரு வண்டினம்
கடிய வாயின காமரு வண்டினம்...’

கடிய ஆயின வண்டு இனம் அடியவாய், அகன்றார் உழை வாரலர்; காமரு வண்டு இனம் கடிய ஆயின, காமரு வண் தினம் கடிய ஆயின’ எனப் பொருள் கொள்க.

அடிகள் 1, 2 : விளக்கம் உற்றனவாகிய விருப்பம் மருவும் வளைகள் பாதங்களை நோக்கிக் கழன்று விழவும், நம்மை அகன்ற தலைவர் நம் நலிவு கண்டு நம்பக்கல் மீண்டு வரவில்லை.

3. சோலைகளில் மருவும் வண்டினங்கள் அச்சம் தருவன வாயுள்ளன.

4. விரும்பத்தக்க சிறந்த (பழைய) நாள்கள் நமக்கு நீக்கப்பட்டன ஆயின.

‘கடிய வாயின’ - விளக்க முற்றனவாகிய, அச்சம் தருவன வாயுள்ளன, நீக்கப்பட்டன ஆகிவிட்டன - எனப் பொருள் கொள்ளப்படும்.

காமரு - விருப்பம் மருவின (1, 4), சோலையில் மருவின (3); வண்டினம் - வளையல்கள் (1), வண்டுக் கூட்டம் (3) சிறந்த
நாள்கள் (4).

இப்பாடலில் இரண்டாமடி ஒழிந்த மூவடியும் மடக்கிய வாறு காண்க. (தண்டி. 96)

இரண்டாமடி நான்காம் அடி ஆதிமடக்கு -

{Entry: M13b__039}

எ-டு : ‘மழையார் கொடைத்தடக்கை வாளபயன் எங்கோன்
விழையார் விழையார்மெல் லாடை - குழையார்
தழையாம் உணவும் கனியாம் இனமும்
உழையா முழையா முறை.’

விழையார், விழை ஆர் மெல்லாடை எனவும்

உழையாம், முழையாம் உறை எனவும் மடக்கடிகளைப்
பிரித்துப் பொருள் செய்க.

“மழைபோல் வழங்கும் அபயனாகிய எம் அரசனால் விரும்பப்படாத பகைவர்க்கு (தோற்றுக் காட்டில் ஓடுதலால்) அவர்கள் விரும்பத்தக்க மெல்லிய ஆடை காட்டில் தளிர்த் தலையுடைய தழைகளே; உணவும் கனிகளே; அவர்கட்குச் சுற்றமும் மான்களே; அவர்கள் தங்கும் இடமும் குகைகளே” என்று பொருள் செய்யப்படும் இப்பாடற்கண், இரண்டாம் அடியுடன் ஈற்றடி ஆதிமடக்கு வந்தவாறு. (விழையார் - விரும்பப்படாத பகைவர், விருப்பம் பொருந்திய; உழை - மான்; முழை - மலைக்குகை.) (தண்டி. 95)

இரண்டாமடி மூன்றாமடி நான்காமடி ஆதிமடக்கு -

{Entry: M13b__040}

எ-டு : ‘பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே
மாலைவாய் மாலைவாய் இன்னிசை - மேலுரை
மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ,
காவலர் காவலராங் கால்?’

‘காவலர், காஅலர் ஆங்கால், மாலைவாய், மாலை வாய் இன்னிசை மேல், உரை மேவலர் மேவு அலர்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.

“தலைவர் என்னை மணந்து பாதுகாப்பவர் அல்லாதகாலை, மாலைக்காலத்தில், வரிசையாக ஆயர் வாயினின்று வெளிப் படும் இனிய குழலிசை பாலையாழைவிட இருபது மடங்கு துன்பம் தரவும், புகழை விரும்பாத தீயமக்கள் விரும்பிக் கூறும் அலர் என் உயிரை வாட்டாதோ?” என்று தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி தன் துயரைத் தோழிக்கு உரைத்தது இப்பாடல்.

மாலைவாய் - மாலைப்பொழுது, வரிசையாக வாயினின்று வரும்;

மேவலர் - (உரை) மேவாத தீயமக்கள், சொல்லும் பழிச் சொல்;

காவலர் - தலைவர், நம்மைக் காவாதவர் - என முதலடி ஒழிந்த மூவடியிலும் ஆதிமடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)

இரண்டாமடியும் நான்காமடியும் மடக்கு -

{Entry: M13b__041}

எ-டு : நலத்தகை பெறஇரு சரணம் ஓதும்நம்
குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே
நலத்தகை மகளொரு பாகம் நண்ணுமேல்
குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே.

மேம்பட்ட நலம் பெற, திருவடிகள் இரண்டனையும் பரவிப் பணியும் அடியார் குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும் ஏகாம்பரநாதன், பார்வதியை ஒருபாக மாக கொண்டு, குலத்தான் மேம்பட்ட பாம்புகளைக் கொண்டு புனையப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன் என்று பொருள்படும் இப்பாடற்கண்,

நலத்தகை பெற, இரு சரணம் ஓதும் நம்குலத்த கை பணிகொள் ஏகாம்பரத்தனே, நலத்தகை மகள் ஒரு பாகம் நண்ணவும் குலம் தகை பணி கொள் ஏக அம்பரத்தனாம் - எனப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.

ஏக + அம்பரத்தன் - ஒற்றை மாமரத்தடியில் இருக்கும் பெருமான்.

ஏக + அம்பரத்தன் - ஒற்றை ஆடையை உடையவன்.

பணி - தொண்டு, பாம்பு. (தண்டி. 96 உரை)

இரண்டாமடியும் மூன்றாமடியும் நான்காமடியும் மடக்கு -

{Entry: M13b__042}

எ-டு : ‘வரிய வாங்குழல் மாத ரிளங்கொடி
அரிய வாங்கயத் தானவ னங்களே
அரிய வாங்கயத் தானவ னங்களே
அரிய வாங்கயத் தானவ னங்களே.’

வரி அவாம் குழல் மாதர் இளங்கொடி! அரிய ஆங்கு அயத்து ஆன வனங்களே, அரி அவாம் கயத்(துத்) தான வனங்களே, அரி அவாம் கயத் தான வனங்களே - எனப் பிரித்துப் பொருள் கொள்க. அரி - வண்டு, சிங்கம்; கய - யானை, பெருமை; வனம் - நீர், காடு.

“வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய விரும்பத்தக்க இளங்கொடியே! அடைதற்கரிய அவ்வழியிலே பள்ளத்தில் நீர் ஊறியுள்ளது. வண்டுகள் அவாவத்தக்கனவாய்க் களிறு களின் மத வெள்ளங்கள் உள்ளன; காடுகள் சிங்கங்கள் விரும்பும் பெரிய இடங்களை யுடையன (ஆதலின் நீ என் னுடன் வருதல் எளிதன்று)” என்னும் பொருளுடைய இப்பாடலில், இரண்டாமடி மூன்றாமடியாகவும் நான்காமடி யாகவும் மடக்கியதால் இப்பாடல் மூவடி மடக்கில் ஒன்றாம். (தண்டி. 96 உரை)

இரண்டெழுத்தான் வந்த மடக்கு -

{Entry: M13b__043}

‘ஈரெழுத்து மடக்கு’க் காண்க.

இரதபந்தம் -

{Entry: M13b__044}

சதுரங்க அறையுள் தேர்செல்வதெனவும் மந்திரி செல்வ தெனவும் ஒருசெய்யுட்கு உண்டான எழுத்துக்களைத் தேரினது அறைக்கு நடுவே ஒரு திருநாமமோ பழமொழியோ அழகுபெற நிற்க இரதத்திலே பந்திப்பது என்னும் சித்திரகவி வகை

எ-டு : ‘நாராரா ராய நயனய ணாவிண்ண
ணாராம ணாயனில மாயவா - சீராய
நன்கா நமநம நன்கா நமநம
மன்காமன் தாதாய் நம’

இவ்விரதபந்தத்துள் நடுவும் இருபக்கமும் ‘நாராயணாயநம’ எனும் திருநாமம் நின்று அழகு செய்வது காண்க.

(மா. அ. 286 பாடல் 791)

இருபாதம் -

{Entry: M13b__045}

சித்திர கவியுள் ஒன்று.

எ-டு : பாரினன குடையின கண்டங்கவெ
சிரி (நிர) (னிக) (னிர) தறகிருந (த, (த) (தி) மா (லி) (ர) (ர) னெ

இஃது இருபாதம்; இதனையே இரண்டாமுறையும் உச்சரித் துப் பொருள் வேறாக்கிக் கண்டுகொள்க. (பாடல் மிக்க வேறுபாட்டிற்கு இடனாக வுள்ளது.) (வீ.சோ. 181 உரை )

முதலீரடியும் முற்றும் மடக்கியும் பின் ஈரடியும் முற்றும் மடக்கியும் அமையும் சித்திரகவி இது.

எ-டு : ‘ஒன்றி னம்பர லோகமே
ஒன்றி னம்பர லோகமே
சென்று மேவருந் தில்லையே
சென்ற மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)

‘சென்று தில்லை மேவரும்; பரலோகமே ஒன்றினம்; ஒன்று இ (ன்) னம் பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ - என்று பொருள் கொள்க.

இஃது ஓரடியே நான்குமுறை மடக்கிவரும் ஏகபாதத்தின் வேறாகி இரண்டிரண்டடிகள் மடக்கி வருதலால் இருபாதம் என்னும் பெயர்த்து.

இருபொருள் சிலேடை இணை மடக்கு -

{Entry: M13b__046}

எ-டு : ‘மூவுலகெண் முத்தரைப்போல் முந்நீர் முகிற்பெயல்போல்
காவலர்கள் வீழ்வேங் கடவெற்பே - தேவர்
பெருமான் பெருமான்கண் பெண்வளைக்கை யார்மூ -
வருமால் வருமாலின் வைப்பு’

இப்பாடலில், முதல் ஈரடியும் சிலேடை; பின் ஈரடியும் இணை மடக்கு.

மூவுலகும் புகழும் முத்தரைப் போலக் காவலர்கள் (-அரசர்கள்) விழுந்து வணங்கும் வேங்கடமலை, கடலில் படிந்த மேகம் மழைபொழிவது போலக் கா அலர்களினின்று தேன் சொரியும் வேங்கடமலை என்பது சிலேடை. காவலர் - அரசர்; கா அலர் - சோலைமலர்கள்.

தேவர்கள் பெருமானாய், பெரிய மான் போன்ற கண்ணி னரும் வளையல் அணிந்த கையினருமான திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் ஆகிய மூவருள்ளத்தும் வேட்கை யைப் பெருகச் செய்யும் திருமாலின் இருப்பிடம்.

பெருமான் என்பது பெரு மான்; (மூ)வரு(ம்) மால், வருமால் என்பது மடக்கு.

இவ்வாறு இப்பாடல் இருபொருட் சிலேடை இணைமடக்கு ஆதல் காண்க. (மா. 755)

இலக்கணவிளக்கம் கூறும் சொல்லணிகள் -

{Entry: M13b__047}

தண்டியலங்காரம் குறிப்பிடும் மடக்கும், 12 சித்திரகவிகளும் உரையில் காணப்படும் 8 சித்திரகவிகளும் ஆக 20 சித்திர கவிகளுமே இலக்கண விளக்கம் குறிப்பிடும் சொல்லணிகள் ஆம்.

ஈ section: 6 entries

ஈரடி மடக்கு -

{Entry: M13b__048}

ஒரு பாடலில் நான்கடிகளுள் 1, 2; 1, 3; 1,4; 2, 3; 2,4; 3, 4 - ஆம் அடிகள் மடக்கி வரும் மடக்கு. இஃது அடிவகையால் ஆறு வகைப்படும். (தண்டி. 96 உரை)

ஈரடி வருக்கம் -

{Entry: M13b__049}

செய்யுள் வகை. முதலடி எழுத்துக்களே இரண்டாம் அடியினும் பொருள் வேறுபாட்டொடு மடக்கிவரப் பாடப்படும் ஈரடிப் பாடல். (w) (L)

ஈரெழுத்து மடக்கு -

{Entry: M13b__050}

மெய்வருக்கத்துள் இரண்டெழுத்துக்களே ஏனைய உயிர்க ளொடு சேர்ந்தும் தனித்தும் ஒரு பாடல் நிரம்ப வரும் மடக்கு.

எ-டு : ‘மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா
மின்னமா னேமுன்னு மானினி - மென்மென
மின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனே
மன்னுமான் மானுமான் மான்,’

‘மன்னுமால் மால்; முன்னம் மானமும் ஈனமாம், இன்ன முன்னும் மான்சனி மென்மென நாம் மின்னும் ஆம் என்னின், அன்ன மும் ஆம்; மான் மானும் (-ஒக்கும்) மால் மான் என் மனனே மன்னும்’ - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.

“எனக்குக் காமமயக்கம் உண்டாகிறது; முன்பிருந்த பெருமை குறைகிறது. இத்தகைய யான் நினைக்கும் தலைவி இப்போது மின்னலைப் போல மெல்ல மறைவாள் எனினும், அன்னம் போன்ற நடை அழகையும் காட்டுகின்றாள். மானினை ஒத்த மருண்ட பார்வையுடையாளாகிய இப்பெண் என்மனத் துள்ளும் தங்கியுள்ளாள்” என்று பொருள் தரும் பாடற்கண், மகரமும் னகரமும் ஆகிய இரு மெய்யெழுத்துக்களே தனித்தும் உயிரொடு கலந்து உயிர்மெய்யாயும் வந்துள்ளன. (தண்டி. 97 உரை)

ஈற்றடி ஆதிமடக்கு

{Entry: M13b__051}

‘இவள்அளவு தீஉமிழ்வ(து) என்கொலோ, தோயும்

கவள மதமான் கடாமும் - திவளும்

மலையார் புனலருவி நீ அணுகா நாளின்

மலையா மலையா நிலம்?’

மலையா(ம்) மலைய அநிலம் - பொதியமலையில் தோன்றும் தென்றற்காற்று.

“தலைவ! இவளை நீ வந்தடையாத நாள்களில், யானையின் முகத்தினின்று வழியும் மதநீரை ஒத்து அருவி பாயும் பொதிய மலையினின்று தோன்றும் தென்றற்காற்று இவளொருத்திக்கு மாத்திரம் நெருப்பைக் கக்குவதன் காரணம் யாதோ?” என்று தோழி கூறிய இப்பாடல் ஈற்றடியின் ஆதியில் ‘மலையா மலையா’ என மடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)

ஈற்றெழுத்துக் கவி சொல்லல் -

{Entry: M13b__052}

ஒருவர் கூறிய பாட்டின் கடையெழுத்தை முதலாகக் கொண்டு பிறர் இயற்றிவைத்த கவி ஒன்றனைக் கூறுதல். (L)

எட்டிதழ்ப் பதும பந்தம் -

{Entry: M13b__053}

சித்திர கவியுள் ஒன்று

வானிதி சீரிய சாதநி கிழவா வாழகி நிதசார யிபவா ரிபவா

வாபரி வாபர மேநிச பதிவா வாதிப சநிசா டுபரா துணைவா

வாணிது ராமவெ னாதக மதிவா வாதிம கதமெ னோதவா மிதுவா

வாதுமி வதானி யாமண துறவா வாளது னமவே பரிசீ தினிவா.

இக்கவியை எட்டிதழ்க் கமலவடிவில் அடைப்பின் இரண் டாம் வட்டத்தில் ‘சீநிவாசராகவன்’ எனவும், மூன்றாம் வட்டத்தில் ‘திகிரிபதுமமிது’ எனவும் அமைந்தமை காண்க. (ஆனால் இதற்குரிய படம் அமைக்குமுறை இதுகாறும் புலப்பட்டிலது.)

(மா. அ. 283) இனி மாறனலங்காரம் இச்சித்திர கவியைக் கூறுமாறு :

ஒரு தாமரையை எட்டுக் கோணத்திலும் இவ்விரண்டாகப் பதினாறுஇதழ் எழுதி, நடுவே ஒரு பொகுட்டுத் தோன்றுமாறு செய்து, பொருட்டிலேயுள்ள முதலெழுத்தே ஒவ்வோரடியின் ஆறாம் எழுத்தாகவும் முதலெழுத்தாகவும் அமையுமாறு அடைக்கப்படும் கவி பதுமபெந்தம் ஆம்.

வருமாறு :

“மாறா மாலா லேமா றாமா

மாறா மாவே ளேமா றாமா

மாறா மாகோ வாமா றாமா

மாறா மாவா தேமா றாமா.”

(முதலடியீற்று) மா மாறா மாலால் ஏமாறா (இரண்டாமடி) மால் தா மா வேள் ஏ மாறு ஆம் (ஆம்); (மூன்றாமடியில் மகர ஒற்றைப் பிரிக்கவே) ஆறு ஆம் ஆ (-ஐயோ) கோ வா மாறா; (மூன்றாமடி ஈற்றில் நின்ற மா எழுத்தை ஈற்றடியில் கூட்டி) மா மாறா! மாவா தேம் ஆல் தாமா - இவ்வாறு பிரித்துப் பொருள் கொள்க.

பொழிப்புரை -

திரு அன்னவளாகிய தலைவி தனது நீங்காத காம மயக்கத்தால் வருந்தும்படிக்கு, மாயோனால் தரப்பட்ட கரிய மன்மதன் விடுத்த அம்புகள் மாற்றம் ஆகின்றன (ஆம் : அசை); அந்தோ! ஆறு போலப் பெருகும் கண்ணீர் வருதல் தீராது. பெரிய மாறனே! வண்டுகள் (தேனை யுண்ண) வருகின்ற, தேன் துளும்புகின்ற மாலை யணிந்தோனே!

எ section: 9 entries

எழுகூற்றிருக்கை -

{Entry: M13b__054}

மிறைக்கவியுள் ஒன்றாக யாப்பருங்கலத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது; விருத்தியுரை இதனை விளக்குகிறது. சம்பந்தர் தேவாரத்துள் இது காணப்படுகிறது. ஒன்று முதல் ஏழு வரையுள்ள எண்கள் கூடியும் குறைந்தும் பெரும்பான்மையும் இணைக்குறள் ஆசிரிய யாப்பில் இது நிகழும்.

எழுகூற்றிருக்கையில் சம்பந்தர் தேவாரத்தில் ஒரு பதிகம், திருமங்கை மன்னன் பிரபந்தங்களில் ஒன்று, நக்கீரதேவ நாயனார் இயற்றிய திருஎழுகூற்றிருக்கை என்ற 11 ஆம் திருமுறைப் பதிகம், மாறனலங்காரச் சொல்லணியியலின் மிறைக்கவிகளுள் ஒன்றாக உதாரணம் காட்டப்பெறுவது - என்பன பிரசித்தமானவை. யாப்பருங்கல விருத்தியுரையில் இரண்டு எடுத்துக்காட்டுக்கள் உள. (யா. வி. பக். 534 - 537)

எழுத்தலங்காரம் -

{Entry: M13b__055}

எழுத்தைக் கூட்டல், குறைத்தல், மாற்றங்களால் தோன்றும் அழகு. எழுத்துப்பெருக்கம், எழுத்துச்சுருக்கம் என்ற மிறைக் கவிகள் இவ்வணியின்பாற்படுவன. (தண்டி. 98)

எழுத்தழிவு அணி -

{Entry: M13b__056}

மிறைக் கவிகளுள் ஒன்று. ‘அக்கரச் சுதகம்’ காண்க.

(மு. வீ. சொல்லணி. 17)

எழுத்துச் சுருக்கம் -

{Entry: M13b__057}

‘அக்கரச் சுதகம்’ காண்க. (யா. வி. பக். 547)

எழுத்துப் பெருக்கம் -

{Entry: M13b__058}

எழுத்து வர்த்தனம் என்னும் மிறைக்கவி ; ‘அக்கர வருத்தனை’ காண்க.

எழுத்துமடக்கின் சிறப்பு -

{Entry: M13b__059}

அடிமடக்கும் சொல்மடக்கும் எழுத்தின் கூட்டம் என்பதும், ஓர் எழுத்தானும் ஓர்இனத்தானும் வருவனவும் எழுத்து மடக்கின்பாற்படும் என்பதும், கோமூத்திரி முதலிய மிறைக் கவிகளும் ஆராயுங்கால் பெரும்பான்மையும் எழுத்துமடக் கின் பாற்படும் என்பதும் பற்றி எழுத்துமடக்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. (இ. வி. 709 உரை)

எழுத்து வர்த்தனம் -

{Entry: M13b__060}

‘அக்கர வருத்தனை’ காண்க. (தண்டி. 98)

எழுத்து வருத்தனை -

{Entry: M13b__061}

‘அக்கர வருத்தனை’ காண்க. (வீ. சோ. 181. உரை மேற்.)

எழுவகை மடக்கு -

{Entry: M13b__062}

ஆதிமடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு, ஆதியொடு இடை மடக்கு, ஆதியொடு கடைமடக்கு, இடையொடு கடை மடக்கு, முற்று மடக்கு என்பன. (தண்டி. 94)

எ section: 1 entries

எட்டாரைச்சக்கரம் -

{Entry: M13b__063}

மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது எட்டு ஆராய், ஆர் ஒன்றுக்கு அவ்வாறு எழுத்தாய், நடுவே ககரம் நின்று குறட்டின்மேல் ‘அறமே தநமாவது’ என்னும் உறுதிமொழி நின்று சூட்டின்மேல் 32 எழுத்து நின்று, இடக்குறுக்கு ஆரின் முனையினின்று தொடங்கி அதன் எதிர்முனை இறுதி சென்று முதலடி முடித்து, முதல் தொடக்கத்திற்கு வலக்கீழ் ஆரின் முதல் தொடங்கி எதிர் ஏறி இரண்டாம் அடி முடித்து, அதற்கு அடுத்ததும் அப்படியே ஏறி மூன்றாமடியும் அடுத்ததும் அப்படியே ஏறி நான்காம் அடியும் முடித்து, முன் தொடங்கிய நடுக்குறுக்கு ஆரின் முதலெழுத்தினின்று வட்டைமேல் இடம்சுற்றி ஐந்தாவதும் ஆறாவதும் ஆகிய அடிகள் முடியுமாறு. அமைக்கப்படும் கவி. சந்திகளில் நின்ற எழுத்து அடிகட்குப் பொதுவாய் நிற்பது இக்கவியுள் ஓர் அருமைப்பாடு; குறட்டைச் சூழ அதன்மேல் உறுதிமொழி யொன்று அமைவதும் ஒரு பெருவித்தகம்.

ஆர், ஆரை, ஆர்க்கால், ஆரம் - இவை ஒரு பொருளன. குறடாவது குடத்தின் வளைவுப்பகுதி : சூட்டாவது வட்டை வளைவு. (தண்டி. 98)

ஏ section: 2 entries

ஏகபாதம் -

{Entry: M13b__064}

சொல்லணியுள் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய நான்கடியும் மடக்காய் வருவது. ஓரடியே நான்கடியும் மடக்கி வருவது.

எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின’

வானம் கம் தரும் இசைய ஆயின; வானகம் தரு மிசைய ஆயின; வானகம் தரும் இசைய ஆயின; தரு மிசைய ஆயின வான் நகம்- எனப் பிரித்து,

மேகம் கடலிடத்துக் கொடுக்கும் ஓசையொடு கூடியிருந்தன; அவை ஆகாயத்தை வவ்விக் கொள்ளும் எழுச்சியை உடைய வாயின; விண்உலகத்தை ஒக்கும் புகழையுடையன. மரங்களை உச்சியிலே யுடையன பெரிய மலைகள் என்று பொருள் செய்யப்படும். (தண்டி. 95 உரை)

ஞானசம்பந்தர் அருளிய திருப்பிரமாபுரம் ( தே. 1 - 127) பதிகம் 12 பாடலும் ஏகபாதம் பயின்றவை.

ஏகாட்சரி (ஏகாக்ஷரீ) -

{Entry: M13b__065}

ஓரெழுத்துப்பாடல். பாடல் முழுதும் ஒரே உயிரெழுத்தின் உயிர்மெய் வருக்கத்தால் அமையப் பாடுவது.

‘குற்றெழுத்துப்பாடல்’, ‘நெட்டெழுத்துப்பாடல்’ நோக்குக.

ஐ section: 1 entries

ஐந்துபொருள் சிலேடை இணைமடக்கு -

{Entry: M13b__066}

முதலீரடிகளும் ஐந்து பொருள்களுக்குச் சிலேடையாய்ப் பின்னீரடிகளும் மடக்காய் அமையும் பாடல்.

எ-டு : ‘சூழி மறு(கு)ஆ டவர்தோள் விரல்பொழில்தேன்
ஆழி பயிலும் அரங்கமே - ஊழி
திரிநாட் டிரிநாட் டினவுயிராய்க் கொண்ட
அரிநாட் டரிநாட் டகம்’

‘ஊழி திரிநாள் த்ரிநாட்டின் உயிர் உயக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டு அகம் அரங்கமே’ - ஊழி முடிவில் மூவுலக உயிர்களையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த பாற்கடல் என்னும் இடத்தையுடைய ஹரி என்னும் திருநாமம் உடையானது பதி அரங்க நகராகும். அதன்கண்,

சூழி ஆழிபயிலும் - குளங்கள் வட்டமாக அமைந்திருக்கும்; மறுகு ஆழி பயிலும் - தெருக்களில் தேர்வண்டிச் சக்கரங்கள் பொருந்தும்; ஆடவர்தோள் ஆழிபயிலும் - ஆடவர்களின் வலத்தோளில் திரு ஆழி முத்திரை வைக்கப்படும்; விரல் ஆழி பயிலும் - விரலில் மோதிரம் பொருந்தும்; பொழில் தேன் ஆழி பயிலும் - சோலையிலுள்ள தேன் கடலை நோக்கிச் செல்லும் என ஐம்பொருள் சிலேடை மடக்குடன் இணைந்து வந்தவாறு. இறுதியடிகளின் முதல் இரு சீர்கள் மடக்கின. (மா. அ. பா. 758)

ஒ section: 3 entries

ஒருபொருட்பாட்டு -

{Entry: M13b__067}

கவி தான் எடுத்துக்கொண்ட ஒரு செய்தியினையே வருணித்துப் பாடும் பாட்டாகிய சித்திரகவி வகை. (யா. வி. பக். 542)

ஒன்றனையே துணித்துப் பாடுதல் (வீ. சோ. 181 உரை)

துணித்துக் கூறலாவது வேறொன்றனொடு கலவாது தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டு கூறுதல் என்னும் கருத்துடையது.

ஆகவே வருணித்துக் கூறுதலும், துணித்துப் பாடுதலும் ஆகிய இரண்டும் ஒரே பொருளன.

எ-டு : ‘நெடுநல்வாடை 1-72 அடிகள்.

இவ்வடிகளில் கூதிர்க்கால வருணனை வந்து இவ்வகைப் படுமாறு காண்க.

ஒற்றுப் பெயர்த்தல் -

{Entry: M13b__068}

மிறைக் கவிகளுள் ஒற்றை மாற்றுதல் - ஒற்றைப் பிரித்தல். ஒரு மொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படுவனவற்றை வேறு பொருள்பட, ஒற்றைப் பெயர்த்தலால் பாடுவது. இஃது ஓரளவு சிலேடையும் அமையும்.

எ-டு : ‘வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரச் சாயல் வளர்க்குமாம் - தண்கவிகைக்
கொங்கார் அலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்
கங்கா புரமாளி கை.’

கங்காபுரம் ஆளி கை - கங்காபுரத்தை ஆள்கின்ற சோழனின் கைகள். அவன் தரும் பெருங்கொடை காரணமாக அக்கைகள் கார்மேகத்தைத் தோற்பித்துக் கற்பகமரத்துடன் போட்டி யிட்டுப் பொருது உலகினை அருள்செய்து மகிழ்விக்கும்.

கங்காபுரத்து மாளிகைகள் மேகத்தையும் கடந்து வானரைவி தங்கள் உச்சியில் கற்பக மரங்களைத் தங்கச்செய்து தங்கள் பெரும்பரப்பால் உலகிற்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்றன. இவ்வாறு ‘கங்காபுரமாளிகை’ என்ற தொடர்மொழி பிரிக்கப் பட் டுள்ளமை ஒற்றுப் பெயர்த்தலாம். (தண்டி. 98 உரை.)

ஒரு மொழியைப் பாட்டின் இறுதியில் வைத்துப் பிறிது பொருள் பயக்கப் பாடுவது ஒற்றுப் பெயர்த்தல். (யா. வி. பக். 541)

ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒருமொழியைப் பாடி நிறுத்தி
வைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவதும், பலபெயர் கூட்ட ஒரு பொருள் வரப்பாடுவதும் என இரண்டு வகைப்படும்.
(வீ. சோ. 181 உரை)

இதன் இரண்டாம் வகையை ஏனைய அணிநூல்கள் வினா உத்தரத்துள் அடக்கும் (மா. அ. 280; மு.வீ. சொல்லணி. 15); இது தண்டியலங்காரத்தும் இலக்கணவிளக்க அணியிய லுள்ளும் ஒற்றுப் பெயர்த்தலை அடுத்துக் கூறப்படுவது. ‘வினா உத்தரம்’ காண்க.

ஒற்றெழுத்தில்லாப் பாடல்

{Entry: M13b__069}

எ-டு : ‘நுமது புனலி லளியி வரிவை
யமுத விதழி னிகலு - குமுத
மருவி நறவு பருக வளரு
முருவ முடைய துரை.’

‘அளி! நுமது புனலில் இ(வ்)வரிவை அமுத இதழின் இகலு(ம்) குமுதம் மருவி நறவு பருக வளரும் உருவம் உடையது உரை’ என்று பொருள் செய்யப்படும்.

“வண்டே! நீ பழகும் குளங்களில் இப் பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள் போலத் தோற்றம் அளிக்கும் குமுத மலர்களில் ஒருமுறை மருவித் தேனை நுகர்ந்த பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மையுடைய மலர்கள் உளவாயின் கூறு” என்று தலைவன் தலைவியது நலம் பாராட்டிய இப் பாடற்கண், ஒற்றெழுத்து ஏதுமில்லாது எல்லாம் உயிர் மெய்யெழுத்தாக இருத்தல் காணப்படும். (தண்டி. 97 உரை)

ஓ section: 10 entries

ஓட்டிய நிரோட்டியம் -

{Entry: M13b__070}

முதலிரண்டடி இதழ்குவிந்தும் கூடியும் ஒலிக்கப்பெறும் உ ஊ ஒஓஒள என்ற உயிர்களும் - ப் ம் வ் என்ற மெய்களும் - கொண்ட சொற்களாக அமைய, அடுத்த இரண்டடியும் இவை நீங்கலான எழுத்துக்களைக் கொண்ட சொற்களாக அமையும் பாடலில் உள்ள சொல்லணி.

எ-டு : ‘வதுவைஒரு போதும் வழுவாது வாழும்
புதுவைவரு மாதுருவம் பூணும் - முதுமைபெறு
நாதன் அரங்கனையே நன்றறிந்தார்க் கேஅடியேன்
தாதனென நெஞ்சே தரி.’

“மனமே! எப்போதும் திருமணங்கள் நிகழும் வளம் சான்ற திருவில்லிபுத்தூரில் தோன்றிய ஆண்டாளைத் தமக்குள் அணிந்துகொண்ட சர்வக்ஞனான அரங்கன் அடியார்க்கே அடியவனாகும் தன்மை மேற்கொள்ளுவாயாக” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளில் உ ஊ ஒ ஓ ஒள, ப்ம்வ் என்ற உயிரும் மெய்யும் அவை சேர்ந்தமைந்த உயிர்மெய் யெழுத்துக்களுமே வந்து ஓட்டியம் ஆயவாறும், இறுதியீரடிகளில் இவ்வுயிரும் மெய்யும் உயிர்மெய்யும் தொடர்புறாத ஏனைய மெய் உயிர் உயிர்மெய்யெழுத் துக்களே வந்து நிரோட்டிய மாயவாறும் காணப்படும். (மா. அ. பா. 775)

ஓட்டியம் -

{Entry: M13b__071}

இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்ற உயிரும் இதழ் இயைதலால் பிறக்கும் ப் ம் வ் என்ற மெய்களும் தொடர்புடைய உயிர்மெய் எழுத்துக்களால் இயன்ற பாடல் ஓட்டியம் என்ற சித்திர கவியாம்.

இவ்வோட்டியம் இதழ்குவிந்த ஓட்டியம், இதழ் இயைந்த ஓட்டியம், இருவகையும் வந்த ஓட்டியம் என மூவகைத்து. மேலும் ஒருபாடலில் முதலீரடிகள் ஓட்டியமாகவும் கடை யீரடிகள் நிரோட்டியமாகவும் வரின், அப்பாடல் ஓட்டிய நீரோட்டியம் எனப் பெறும். முதலீரடிகள் நிரோட்டிய மாகவும் கடையீரடிகள் ஓட்டியமாகவும் வரின், அது நிரோட்டிய ஓட்டியம் எனப்பெறும். அவ்வத் தலைப்பிற் காண்க.

நிரோட்டியம் - மேற்கூறிய எட்டு எழுத்துக்களின் தொடர் பின்மையால் இதழ் குவியாமையும் இதழ் இயையாமையும் உடையதாய் ஒலிக்கப்படுவது. (மா. அ. 275, 276)

ஓர் உயிரான் வரும் செய்யுள் -

{Entry: M13b__072}

சொல்லணியில் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய குற்றுயிர் மடக்கு அல்லது நெட்டுயிர் மடக்கு.

எ-டு : ‘அமல லகல மகல லபய
கமல பவன மவள - தமல
மடர வளக சலச வதன
மடர மதன நட.’

‘அபய! அல் அகலம் அமலல்; அகல்; மதன! கமல பவனம் அவளது அமல அடர அளக சலச வதனம் அடரல்; நட, எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் செய்யப்படும். (சலசம் - தாமரை. ‘அடரல்’ என்பது கடைக் குறைந்து நின்றது.)

“அபயனே! எங்கள் மார்பினைத் தழுவாதே இரவில் அகலுக. காமனே! தாமரையை இடமாகவுடைய திருவை ஒத்த இத் தலைவியது களங்கமற்ற செறிந்த கூந்தலையுடைய முகத்து அழகினைக் கெடுக்காதே; நீங்குக” என்று, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவற்குத் தோழி வாயில் மறுக்கும் கூற்றாக வந்த இப்பாடற்கண், அகரமாகிய குற்றுயிரே தனித்தும் மெய்யுடன் கூடியும் வந்தமையின் இஃது ஓருயிரான் வந்த செய்யுள் எனவும், குற்றுயிர் மடக்கு எனவும் கூறப்பெறும். (எடுத்துக்காட்டுப் பாடல் இ.வி. 689 உரை வாயிலாகத் திருத்தியமைக்கப்பட் டுள்ளது.) (தண்டி. 97 உரை)

ஓரடி ஒழிந்த மடக்குப் பதினொன்று -

{Entry: M13b__073}

ஈரடி மடக்கு ஆறு :

நாலடிப் பாடற்கண், முதலடியும் இரண்டாமடியும், முதலடியும் மூன்றாம் அடியும், முதலடியும் நான்காம் அடியும், இரண்டாம் அடியும் மூன்றாமடியும், இரண்டா மடியும் நான்காம் அடியும், மூன்றாமடியும் நான்காமடியும் மடங்கிவரும் ஈரடி மடக்கு ஆறாம்.

மூவடி மடக்கு நான்கு :

நான்கடிப் பாடற்கண், ஈற்றடி நீங்கலான ஏனைய மூன்றடிகள் (1, 2, 3), முதல் அயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 3, 4), ஈற்றயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 2, 4), முதலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (2, 3, 4) மடக்கி வரும் மூவடி மடக்கு நான்காகும்.

நான்கடி மடக்காகிய முற்றுமடக்கு ஒன்று. ஆகவே, ஓரடி ஒழிந்த ஈரடி மூவடி நான்கடி மடக்குக்கள் ஆறும் நான்கும் ஒன்றுமாகப் பதினொன்றாதல் காண்க. (தண்டி. 95 உரை)

ஓரடி மடக்கு நான்கு -

{Entry: M13b__074}

நான்கடிச் செய்யுளுள் முதலடி மடக்குதல், இரண்டாமடி மடக்குதல், மூன்றாமடி மடக்குதல், நான்காமடி மடக்குதல் என்பன. (தண்டி. 93)

ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆதல் -

{Entry: M13b__075}

ஓரடி மடக்கு 4, ஈரடி மடக்கு 6, மூவடி மடக்கு 4, நான்கடி மடக்கு 1 = 15

இப்பதினைந்தனையும் அடிமுதல், அடியிடை, அடியிறுதி என மூன்றாக உறழ்ந்து நோக்க, 15 x 3 என ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆயின. (மா. அ. 258)

ஓரெழுத்தினம் -

{Entry: M13b__076}

இன எழுத்துப்பாட்டு மிறைக்கவி வகை. வல்லினப் பாடல், மெல்லினப்பாடல், இடையினப்பாடல், குற்றெழுத்துப் பாடல், நெட்டெழுத்துப்பாடல் என்பன பலவும் ஓரெழுத் தினம் என்ற சித்திரகவியில் அடங்கும். அவ்வத் தலைப்பிற் காண்க. (தண்டி. 97 உரை; யா.வி.பக். 540)

ஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்கு -

{Entry: M13b__077}

அடி முதற்கண் ஓரெழுத்து மடங்கி மீண்டு வருதல் அடி முதல் மடக்கு. இவ்வாறு ஒவ்வோர் அடியிலும் முதலெழுத்து மடங்கி மீண்டும் வரின் அஃது ஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்காம்.

எ-டு : ‘நாநா நாதம் கூடிசை நாடும் தொழிலோவா
தாதா தார மாக வரைத்தண் மலர்மீதே
வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே
யாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்’

‘நாநா (-பல விதமான) நாதம் கூடும் இசைநாடும் தொழில் ஓவா(மல்) தாது ஆதாரமாக (-மகரந்தம் சேர்க்க) மலர்மீது வாவா (-தாவி) வாழும் வரிவண்டே! யாய் ஆயாள் (-தாயானவள்) இல் சேர்த்துவது (என்னை இற்செறிப்பதை) அன்பற்கு இசையாய்’ என்று பொருள்படும் இப்பாடற்கண், நாநா, தாதா, வாவா, யாயா - என அடிதோறும் ஓரெழுத்து அடிமுதல் மடக்காகப் பாட்டு முழுதும் வந்தமை காணப் படும். (தண்டி. 97)

ஓரெழுத்துப்பாடல் -

{Entry: M13b__078}

பாடல் முழுதும் ஒரே உயிரெழுத்தினாலாய உயிர்மெய் களைக் கொண்டு அமைவது. இது வடமொழியில் ஏகாக்ஷரி (ஏகாட்சரி) என வழங்கும். ‘குற்றெழுத்துப்பாடல்’, ‘நெட்டுயிர் மடக்கு’ இவற்றை நோக்குக. இஃது ஓர் எழுத்து மடக்கு எனவும்படும். (மா. அ. பா. 760)

ஓரெழுத்து மடக்கு -

{Entry: M13b__079}

ஓர் உயிரெழுத்தே மெய்யொடு கூடி உயிர்மெய் எழுத்தாய்ப் பாடலின் நான்கடிகளிலும் மடக்கி வருவது.

எ-டு : ‘அரவ மகர சலசயன படஅரவ!
கரசரண நயன வதன கமலதர!
வரத! சரத! மகவர தசரதமக!
பரம! பரம மமல! அநக! பரமபத!’

“ஆரவாரத்தையுடைய கடலில் படுக்கையாக ஆதிசேடனை உடையவனே! கைகளும் கால்களும் முகமும் தாமரை போன்றவனே! வரதனே! என்றுமிருப்பவனே! மிக மேம்பட்ட தசரதனின் மைந்தனே! பரமே! களங்கமற்றவனே! பாவ மற்றவனே! பரமபதத்தை உடையவனே! உனக்கே மேம் பாடுகள் உரியன” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அகரமாகிய ஓரெழுத்தே பாடல் முழுதும் மடக்கி வந்தவாறு. பரமம் + அமல = ‘பரமமமல’ என அகரமாக வருதல் காண்க. (மா. அ. பா. 760)

க section: 12 entries

ககர மெய் வருக்க மடக்கு -

{Entry: M13b__080}

‘கூக்குக்கிக் காக்காகா!

கூக்கக்கு கைக்கொக்கோ

கூக்கொக்கா கைக்காகா

கூக்காக்கைக் கேகாகா’

அடி 1

கூ - பூமியை

குக்கிக்கு - வயிற்றிற்கு

ஆக்கு ஆகா - இரையாக்கும் திருமேனியுடையவனே!

அடி 2

கூ - பூமியை

கக்குகைக்கு ஒ - மீளப் புறத்து உமிழ்தற்கு ஒத்த

கோ - கோவே!

அடி 3

கூ - பூமியில்

கொக்கு - குதிரை (-கற்கி) யாக

ஆகைக்காகா - அவதரிக்கப் போகின்றவனே!

அடி 4

கூ - பூமியை

காக்கைக்கு - பாதுகாப்பதற்கு

ஏகா - இந்நிலவுலகத்திற்குப் பரமபதத்தினின்று வந்தவனே!

கா - என்னைக் காப்பாயாக.

இப்பாடல் முழுதும் ககரமெய்யும் ககரமெய்யோடு உயிர் கூடிய உயிர்மெய்யுமாக அமைதலின், இது ககரமெய் வருக்க மடக்காம். (மா. அ. பா. 762.)

கடகபந்தம் -

{Entry: M13b__081}

ஒருமிறைக்கவி விசேடம்

‘நாகநக ராகநிதி நாகரிக ராகநிறை

ஏகநக ராசி யிணையில்லா - தார்கணிகழ்

தென்னரங்க னாளாய சீராள ராஞான

நன்னரங்கர்க் கேயடியே னான்’ (மா. அ. பா. 812)

இது, பூட்டுவாய்நின்று வலப்பக்கம் இரண்டாம் அறை சென்று கீழ்அறையில் இறங்கி அவ்வழியே மேல் அறையில் ஏறி இறங்கி, வலம்சென்று, இடையிடையேயுள்ள குண்டுக ளாகிய நான்கு அறைகளிலும் சென்று மேலேறிக் கீழிறங்கி இவ்வாறாக இறுதிஅறை சென்று முடியுமாறு காண்க.

இஃது ஒருவகைக் கடக(b)பந்தம். பிறிதொருவகை மா.அ.பா. 811இல் சொல்லப்பட்டுள்ளது. முகப்பின் பூட்டுவாய் இரண் டிடங்களில் நடுவறையினின்று கீழிறங்கி அவ்வழியே மேலேறிக் கீழிறங்கி வலமாகச் சென்று முடிவதாக இப் (b)பந்த அமைப்பு எழுத்துக்கள் அடையும்; இதன்கண் இடையிடையே குண்டுகள் இல.

கடைமடக்கு -

{Entry: M13b__082}

ஈற்றடி மடக்கும், ஒவ்வோரடியின் கடைமடக்கும் இம் மடக்கின்கண் அடங்கும். ‘இறுதி மடக்கு’ நோக்குக.

கண்டகட்டு -

{Entry: M13b__083}

இஃது ஒரு மிறைக்கவி விசேடம் போலும்.

“பசுக் கொண்டு போது” என்று சொல்லப் போயினான், சென்று கண்டு மீண்டு வந்து, “அவை உள்ளாயின” என்னில், “போதாவாயின” என்று அவிழ்ப்பது ‘கண்டகட்டு’ என்பது யாப்பருங்கல விருத்தியுரை. (இதன்பொருள் தெளிவுறப் புலப் பட்டிலது) (யா. வி. பக். 550)

கரந்துறை செய்யுள் -

{Entry: M13b__084}

வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத் தேயே இருக்குமாறு பாடப்படும் பாடல் கரந்துறை செய்யு ளாம். கரந்து உறைதலாவது ஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம் மாறி மறைந்திருத்தல். மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று.

எ-டு :

‘அகலல்குற் றேரே யதர மமுதம்

பகர்தற் கரிதிடையும் பார்க்கின் - முகமதியம்

முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல

மைத்தடங்கண் வெவ்வேறு வாள்’

இப்பாடற்கண்

‘அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு’

என்னும் குறட்பாவிற்குரிய எழுத்துக்கள் யாவும் இடம் மாறி அமைந்துள்ளமையின் இப்பாடல் கரந்துறை செய்யுள் ஆகும்.

(தண்டி. 98-8; இ.வி. 690 - 15)

மாறனலங்காரம் காதைகரப்பைக் கரந்துறை செய்யுளாகவும், கரந்துறை செய்யுளைக் காதை கரப்பாகவும்கொண்டு இலக்கணம் கூறும். இவ்விலக்கணம் அந்நூலுள் காதை கரப்புக்குக் கொள்ளப்படும். (மா. அ. 288, 289)

முத்துவீரியம் இதனைக் கரந்துறை பாட்டு என்னும்.

(சொல்லணி. 14)

கரந்துறை பாட்டு -

{Entry: M13b__085}

ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்று மொழிக்கு முதலெழுத்துத் தொடங்கி எதிரேறாக இடை யிடை ஓரெழுத்தாக இடையிட்டு முதன்மொழி முதலெழுத்து வரை வாசிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்து மறைந் துறைவது கரந்துறை செய்யுளாம் என்று வீரசோழியமும் மாறனலங்காரமும் கூறும். (வீ. சோ. 181 உ ரை. மா. அ. 288)

ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப் பாடுவது காதை கரப்பு என்று தண்டியலங்காரமும் இலக்கண விளக்கமும் கூறும். (தண்டி. 98-7; இ.வி. 690-14; மு.வி. சொல்லணி 13)

எ.டு -

‘தாயேயா நோவவா வீரு வெமது நீ

பின்னை வெருவா வருவதொ ரத்தப

வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்

தாவா வருங்கலநீ யே’

“எங்களுக்குத் தாவா அருங்கலம் நீயே, தாயே! யாம் நோவு அவா ஈரு (க); எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஒ(ஓ)ர் (க); அது தப எம்புகல் வேறு இருத்தி வைத்தி சின்; இச்சை கவர் (க)” எனப் பிரித்துப் பொருள் செய்க.

இப்பாடலுள் முற்கூறிய முறையான் நோக்க,

‘கருவார் கச்சித்

திருவே கம்பத்

தொருவா வென்னீ

மருவா நோயே’

என்னும் வஞ்சித் துறைப்பாடல் அமைந்துள்ளமை காணலாம்.

‘வருங்கல நீயே’ என்பதனுள் ஈற்றுமொழி ‘நீயே’. அதற்கு முதலெழுத்து ‘ல’. லகரம் மொழி முதலாகாமையின் அதன் முன் நின்ற ககரம் முதலாகக் கொள்ளப்பட்டது.

கல்லவல் -

{Entry: M13b__086}

நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகம் செய்வது.

எ-டு : ‘மனையிற்கு நன்று’, ‘முதுபோக்குத் தீது’, ‘முதுபோக்கே அன்று’

‘பெருமூர்க்குத் தீது’ என்பனவாம். (யா.வி. பக். 550)

(இச் செய்தி விளங்கவில்லை.)

காதைகரப்பு -

{Entry: M13b__087}

மிறைக்கவிகளுள் ஒன்று.

ஒரு செய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப் பாடுவது ‘காதை கரப்பு’ என்னும் சித்திரகவி எனத் தண்டியலங்காரமும் முத்துவீரிய மும் கூறும். இதனைக் ‘கரந்துறை பாட்டு’ எனவும் ‘கரந்துறை செய்யுள்’ எனவும் முறையே வீரசோழியமும் மாறனலங்கார மும் கூறும். அவை ‘கரந்துறை செய்யுள்’ என்று தண்டி யலங்காரமும் இலக்கண விளக்கமும் கூறும் சித்திரக் கவியைக் ‘காதை கரப்பு’ என மாற்றிக் கூறும்.

மாறனலங்காரம் ஈற்று மொழியின் முதலெழுத்தை விட்டு ஈற்று மொழியின் ஈற்று உயிர்மெய்யைத் தொடங்கிக் கணக்கிடும்.

வீரசோழிய உரையும் மாறலனங்காரமும் கூறும் காதை கரப்புக்கு எடுத்துக்காட்டாகக் ‘கரந்துறை பாட்டு’க் காண்க. (தண்டி. 98; வீ. சோ. 181 உரை; மா. அ. 288; இ. வி. 690.)

குற்றுயிர் மடக்கு -

{Entry: M13b__088}

‘அகரக் குற்றுயிர் மடக்கு’ நோக்குக.

கூட சதுக்கம் -

{Entry: M13b__089}

சித்திரகவி வகைகளுள் ஒன்று; பாட்டின் நாலாவது அடி எழுத்துக்கள் ஏனைய முதல் மூன்றடிக் கண்ணும். மறைந்து கிடக்குமாறு பாடுவது.

எ-டு :

‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்த

பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத்

தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தே

திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே’

இப்பாடற்கண், முதல் மூன்றடியுள் நான்காமடி மறைந் துள்ளது.

கூடம் - மறைந்தது; சதுககம் - சதுர்த்தம் - நான்காவது.

நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும் வெகுட்சிப் பார்வையையும் பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர் கூட்டம் அழியக் கொன்றவளும், காஞ்சி மாநகரில் உள்ளவளும், அழகு தங்கிய இனிய யாழொலி போன்ற சொற்களையுடைய வளும், கிளி போன்றவளுமான கொற்றவையிடம் பக்தி செய்யும் திறத்தில் ஈடுபடாத மனத்தை நல்வழிப்படுத்தினால், இருவினையும் நீங்குதற்குக் காரணமான ஞானத்தை அறிதல் ஆம் என்பது இப்பாடற் பொருள். (தண்டி. 98-2)

கூட சதுர்த்தம் -

{Entry: M13b__090}

நான்கா மடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடி களுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. ‘கூடசதுக்கம்’ என்பதும் அது. (தண்டி. 95)

நாலடியாய ஒரு செய்யுளில் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேல் நின்று கீழும் கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றில் இடைவரியின் மறைந்து நிற்பது. (பதம். அடி) கூடசதுர்த்தமாம்.

எ-டு :

‘நாதா மானதா தூய தாருளா

ணீதா னாவா சீராம னாமனா

போதா சீமா னாதர விராமா

தாதா தாணீ வாமனா சீதரா!’ (மா. அ. 293)

வரையுமாறு :

நா ன ய ளா னா ரா ம தா னா வி

தா தா தா ணீ வா ம னா சீ த ரா

மா தூ ரு தா சீ னா போ மா ர மா

பாடலின் நான்காமடி மேலை நடுவரிக்கண் நிகழுமாறு காண்க.

கோமூத்திரிகை -

{Entry: M13b__091}

சித்திரகவி வகைகளுள் ஒன்று; கோமூத்திரி எனவும்படும்.

பெற்றம் நடந்துகொண்டே நீர் விடுகையில் அந் நீர்த்தாரை பட்ட நிலம் நெளிந்த வடிவுடைத்தாகக் காணப்படுமாறு போல, இம்மிறைக்கவியின் வரிவடிவு அமைந்திருக்கும்; இரண்டிரண்டு அடியாக ஒரு செய்யுளை எழுதி (மேல் வரி இரண்டடி, கீழ் வரி இரண்டடி) மேலும் கீழுமாக அமைந்த அவ்விரண்டு வரிகளிலும் எழுத்துக்களை ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே தோன்றுவது இச்சித்திரகவி யாம்.

‘பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே’ என்பது பாடல்.

‘ஆயிழை! வெருவல்! கன மாலையில் கனம்மாலை ஆசை விடா(து) மருவும்; பொரு இலா உழை கானம் மேவன; (ஆதலின்) இது பருவம் ஆக, அவர் பூ அணி காலம்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.

ஆயிழாய்! அஞ்சாதே. செறிந்த மாலைப்பொழுதில் மேக வரிசைகள் திக்கெல்லாம் நீங்காது பொருந்தி மழை பெய்தலை மேவும்; ஒப்பற்ற மான்கள் காட்டில் திரிகின்றன. ஆதலின் தலைவர் மீண்டு வந்து நின்னைப் பூஅணியால் ஒப்பனை செய்யும் காலம் இதுவாதல் வேண்டும்” என்று பருவ வரவின்கண் தோழி தலைவன் கடிதின் வருவான் என்று தலைவியை ஆற்றுவித்தவாறு. (தண்டி. 98)

ச section: 24 entries

சக்கரங்களில் பலவகை -

{Entry: M13b__092}

பூமி சக்கரம், ஆகாயச் சக்கரம், பூமி ஆகாயச்சக்கரம், வட்டச் சக்கரம், புருடச்சக்கரம், சதுரச் சக்கரம், கூர்மச்சக்கரம், மந்தரச் சக்கரம், காடகச் சக்கரம், கலிபுருடச் சக்கரம், சலாபச் சக்கரம், சக்கரச் சக்கரம், அரவுச் சக்கரம், முதலாக உடையன புணர்ப்பாவை, போக்கியம், கிரணியம், வதுவிச்சை என்ற நூல்களில் காணப்படும்.

அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத்தது பாடுதற்கும் பற்றாகும் எனக் கொள்க. (யா. வி. பக். 532, 533)

சதுரங்க பந்தம் -

{Entry: M13b__093}

‘மானவனா மேவலா மாறனித்த மாமாலை

யானதவ போதனுமா யாய்ந்தகோ - மானவடி

நாதனின்மே னன்கலன்பூ ணென்முனநீ வந்தெவனொன்

றாதயமா வன்புலமா ய.’

‘ஒன்றாத யமா! மானவனா! மேவல் ஆம் மாறன், நித்தம் ஆம் மாலை ஆன தவ போதனுமாய், ஆய்ந்தகோ, மானஅடி, நாதனின் மேல் நன்கலன் பூண் என் முனம் நீ வந்து, எவன்? வன்புலம் ஆய’ எனப் பிரித்துப் பொருள் செய்க.

“எவ்வான்மாக்களொடும் பொருந்தாத நமனே! மனுகுலம் காவலன் ஆகுக. நங்கையார்க்கும் காரியார்க்கும் புத்திரனாக மேவிய மாறன் என்னும் பிள்ளைத் திருநாமமுடையவன், நித்தமாக நிலைபெற்ற திருமாலைத் தன்னிடத்து ஆக்கம் பெற்ற மெய்த்தவத்தொடு கூடிய ஞானவான், திருமாலே பரத்துவமென்று தெளிந்த தெரிசனராசன், ஆகிய சடகோப னுடைய பெருமையுடைய திருவடிகளை என் நாவிலும் தலையிலும் நல்ல ஆபரணமாகப் பூண்டுள்ள என் முன்னே வந்து நீ சாதிப்பதுதான் யாது? (ஒன்றுமில்லை) என்னிடம் நீ வருதற்கு எளிய இடம் அன்று; வலிய இடமாகப்பட்டன” என்று பொருள்படும் இந்நேரிசை வெண்பாவினைச் சதுரங்க அரங்கின் நாலு பக்கமும் மையங்களில் நால்நான்கு பதினாறு அறையிலும் நடுவில் நாலு அறையிலும். மாதவன் என்னும் திருநாமம் நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக் கொள்ளப் படும். சதுரங்க பெந்த வரைபடம் காண்க. சதுரங்கம் வரையப் பட்டுள்ளது. அறைகள் 64 தோன்றச் சதுரமாக வடிவம் கீறப்பட்டதன்கண், இப்பாடலை அமைக்குமாறு தெரிந் திலது. பலவாறு முயன்றும் உரையுள் காணப்பட்டவாறு ‘மாதவன்’ அமையப் பெற்றிலது. (மா. அ. 299 உரை; பாடல் 810)

சந்தட்ட யமகம் -

{Entry: M13b__094}

ஸந்தஷ்டயமகம் - ‘முற்றுமடக்கு’க் காண்க.

சந்தொட்டியமகம் -

{Entry: M13b__095}

அடிதோறும் வரும் இறுதிச் சொல்லை அதன்மேல் வரும் அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதி மடக்கு எனப்படும். இதனைச் சந்தொட்டி யமகம் எனவும் கூறுவர்.

எ-டு :

‘நாக முற்றவும் களிதர நிருதர் கோனாக

நாக மையிரண் டொருங்கறப் பொருத. மைந்நாக

நாக மூலமென் றழைத்தகார் துயிலிட நாக

நாக மொய்த்தபூம் பொழில்திரு நாகையென் னாகம்’.

‘நாகம் (-தேவருலகத்தார்) முற்றவும் களிதர நிருதர்கோன் (-இராவணன்) ஆகம், நா, கம் (-தலை) ஐஇரண்டு(ம்) ஒருங்கு அறப் பொருத மைந்நாகம் (-நீலமலை) நாகம் மூலம் என்று அழைத்த கார் துயிலிடம் நாகம் (-ஆதிசேடன்); நாகம் (-சுரபுன்னை) மொய்த்த பூம்பொழில் திருநாகை என் ஆகம். (-மனம்)’ எனப் பொருள் செய்க.

“தேவர்கள் மகிழ இராவணனுடைய மார்பு, நா பத்து, தலைபத்து இவை ஒருசேர அழியும்படி பொருத நீலமலை போல்வானும், கசேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று அழைத்த கார்மேனி வண்ணனும், ஆதிசேடனில் துயில் கொள்வானும், சுரபுன்னை மரங்கள் செறிந்த சோலைகளையுடைய திருநாகை என்ற தலத்தில் உகந்தருளியிருப்பவனும் ஆகிய திருமால் என் நெஞ்சத்துள்ளான்” என்ற இப்பாடற்கண் நாகம் என்ற சொல்லே நான்கடிகளிலும் ஆதி அந்தமாக வந்துள்ளமை ‘சந்தொட்டி யமகம்’ என்ற சந்தட்டய மடக்காம். (மா. அ. 266)

சப்தபங்கி -

{Entry: M13b__096}

ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியே ஏழு வேறுபாடல்களாக அமைக்கும் வகையில் பாடுவதாகிய சித்திரகவி வகை.

சமுற்கம் -

{Entry: M13b__097}

இரண்டடிகளோ பல அடிகளோ சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும் வரும் மிறைக்கவி வகையாகிய மடக்கு.

எ-டு :

‘காம ரம்பயி னீரம துகரம்

காம ரம்பயி னீரம துகரம்

காம ரம்பயி னீரம துகரம்

நாம ரந்தை யுறனினை யார்நமர்’ (தண்டி. 95 உரை)

‘கா மரம் பயில் நீர மதுகரம் காமரம் பயில் நீர; மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உறல் நினையார் நமர்’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.

“சோலையின் மரந்தோறும் நெருங்கின வண்டினம் காமரம் என்னும் இசையைப் பாடுகின்றன; தேன் பொழியும் மதவேள் அம்புகள் வேலின் தன்மையும் உடன் உடையவாயின; வேனில் காலத்து (மது) எதிர்ப்பட்ட (கரம்) நாம் துயருறு வதை நம் காதலர் நினைவாரல்லர்” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதல் மூன்றடிகளும் சொல்லளவில் ஒத்துப் பொருளளவில் ஒவ்வாது வெவ்வேறு பொருள் பயக்க வந்தமையால் இது சமுற்கம் எனப்படும் மடக்காம்.

சர்வதோ பத்திரம் -

{Entry: M13b__098}

ஸர்வதோபத்ரம்; ‘சருப்பதோபத்திரம்’ காண்க.

சருப்பதோ பத்திரம் -

{Entry: M13b__099}

மிறைக்கவியுள் ஒன்று. நான்கடிப்பாடல் செவ்வே முதல் நான் கடியும், ஈற்றடியை முதலாகக் கொண்டமைத்த நான்கடியு மாக இருமுறை எழுதப்பட்டு, பாடலின் ஒவ்வோர் அடியை யும் முடிவிலிருந்து முதல் நோக்கி வாசித்தாலும் கீழிருந்து மேல் நோக்கி வாசித்தாலும் நான்கு நிலையிலும் அவ்வடியே வருமாறு அமைப்பது. இது மாறனலங்காரம் கூறும் இலக்கணம். (மா. அ. 292)

நாற்புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும் மடக்கிப் படித்தாலும் நான்கடியும் மேலிருந்து கீழ் இறக்கியும் கீழேயிருந்து மேலே ஏற்றியும் படித்தாலும் உருவம் கெடா மலேயே மாலைமாற்றாய் அமையுமாறு வருவது என்று தண்டி உரைக்கிறது. (தண்டி 98-11 உரை)

சாமிநாதம் குறிப்பிடும் சொல்லணிகள் -

{Entry: M13b__100}

தண்டியலங்காரம் கூறுவனவற்றொடு சதுரங்கம், கடக பெந்தம், தேர்க்கவி என்ற மூன்றும் சாமிநாதத்தில் இடம் பெறுகின்றன.

சித்திரகவி (1) -

{Entry: M13b__101}

பொருட்சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லமைப் பையே குறிக்கோளாகக் கொண்டு சொல்லழகு காணும் விருப்ப முடையோர் உள்ளம் உவகையுறும் வகையில் பாடப்படும் மடக்கும், மிறைக்கவிகளும் சித்திரகவிகளாம். (இ. வி. பாட். 6)

சித்திரகவி (2) -

{Entry: M13b__102}

அருங்கவியாகிய மிறைக்கவி,

சித்திரகவி பாடும் புலவன் (இ. வி. பாட். 170) ( L)

சித்திர கவி (3) -

{Entry: M13b__103}

எழுத்துச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், வினாவிடை, கரந்துறை செய்யுள், காதைகரப்பு, பிறிதுபடுபாட்டு, நடுவெழுத்தாக்கம், எழுகூற்றிருக்கை, திரிபங்கி, நிரோட்டம், மாலைமாற்று, சக்கரபந்தம், கமலபந்தம், தேர்ப்பந்தம், வேல்பந்தம், நாகபந்தம், தேள்பந்தம், சுழிகுளம், கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோ பத்திரம் என்பனவும் பிறவும் தென்னூல் அணியியல் (50) சுட்டும் சித்திரகவிகளாம்.

சித்திரப் பா -

{Entry: M13b__104}

சித்திரகவி; நான்கு கூடின எல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல் லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது வருமாறு :

எ-டு :

அ) ‘ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்

ஈரறம் பயந்த நான்முக அண்ணல் 1+3+2+4=10

மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்

நால்வகை யோனியுள் இருவினை கடிந்து 3+1+4+2=10

முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்

நால்வகை அளவையும் இருவகைப் பண்பும் 3+1+4+2=10

ஒன்றி யுரைத்த முக்குடைச் செல்வன்

ஈரடி பரவினர் என்ப

பேரா நால்நெறி பெறுகிற் போரே.’ 1+3+2+4=10 (திருப்பாமாலை.10)

இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப் பா. இதனை நான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்ளலாம்.

எ-டு :

ஆ) ‘இருவரமாம் எழுநாள் ஆறமர்ந்தான் கோயில் 2+7+6=15

ஒருவனையே நாடிய போந்தேம் - ஒருவனும்

எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோடு 8+3+4=15

ஐந்தலைய நாகத் தவன்’. (திருப்பாமாலை) 1+9+5 = 15

இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனை ஈசானன் திசைமுதலாக எட்டுத்திசை மேலும் நிறுத்தி நடுவே பின் ஐந்து நிறுத்தி விடுவது. வருமாறு: (செய்தி விளங்கிற்றிலது.) (யா.வி.பக். 543)

சிலேடை இணை மடக்குகளில் எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னும் ஓசைவேறுபட உச்சரித்துப் பொருள் வேறுபடுத்தல் -

{Entry: M13b__105}

செய்யுளடியில் வெவ்வேறு பொருள் தந்து முதற்சீரும் இரண் டாம் சீரும் மடக்குதல் இணைமடக்காம். அடி அளவடியாகக் கொள்ளப்படும். அம்மடக்குக்கள் சிலேடைப் பொருளொடு வரும்போது வரிவடிவம் ஒன்றாயிருத்தலின். பொருள் வேறு பாட்டிற்கு ஏற்ப ஒலிவடிவத்தை உச்சரிக் கின்ற இடத்தே, பொருள் சிறந்த பகுதியை எடுத்தும், சிறவாப் பகுதியைப் படுத்தும், ஏனைய பகுதியை இடை நிகர்த்ததாயும், வடசொற் களை உரிய ஒலியோடும் உச்சரிக்க வேண்டும்.

எ-டு :

‘திரிநாட் டிரிநாட் டினவுயி ருய்க்கொண்ட

அரிநாட் டரிநாட் டகம்.’

இவை இணைஎதுகை.

“(ஊழி) திரிநாள் த்ரி நாட்டின் உயிர் உய்யக்கொண்ட அரிநாட்டு ஹரி நாட்டு அகம்’ - ஊழி இறுதியில் உகங்கள் மீளவரும் நாளில் மூன்றுலகிலும் உள்ள உயிர்க்கணங்களை வயிற்றில் வைத்துக் காத்த பாற்கடல் என்னும் இடத்தை யுடைய திருமால் நாட்டிய பதி நிலைபெறச் செய்த அரங்கம் ஆகும்.

இதன்கண், ‘திரிநாள் த்ரிநாடு அரிநாட்டு ஹரிநாட்டு’ என ஒலியைப் பொருளுக்கேற்ப மாற்றி ஒலித்தால் எளிதில் பொருள் புலப்படும். (மா. அ. பாடல் 758)

சிறப்புடைய மடக்கு -

{Entry: M13b__106}

அடி முழுதும் மடக்கி வருதலே மடக்குக்களுள் சிறப்புடைய மடக்காம். அடி முழுதும் எனவே, இரண்டடி மடக்கி வருவதும், மூன்றடி மடக்கி வருவதும், நான்கடி மடக்குவதும் என்ற மூவகையும் கொள்ளப்படும். (தண்டி. 96)

சீர்மடக்கு -

{Entry: M13b__107}

இஃது அடிதோறும் நிகழ்தல் ஆம்; அன்றி, முதல் இடை கடையில் நிகழ்தலும் ஆம். ‘முதல் இடைகடை மடக்கு வகைகள்’. நோக்குக. (தண்டி. 95)

சுழிகுளம் -

{Entry: M13b__108}

மிறைக்கவிகளுள் ஒன்று. ஒரு செய்யுளை எட்டு எட்டு எழுத்துக்களாக நான்கடியும் நான்கு வரியாக எழுதி, மேல் இருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் படிக்கும்போது, அவ்வடி நான்குமாகவே அமைந்து அச்செய்யுளே முற்றுப் பெறுவது.

எ-டு :

‘க வி மு தி யா ர் பா வே

வி லை ய ரு மா ந ற் பா

மு ய ல் வ து று ந ர்

தி ரு வ ழி ந் து மா யா.’

கவிகளில் முதிர்ந்தோரின் பாடலே விலைமதித்தற்குரிய நல்ல பாவாகும்; இடைவிடாது முயன்று பாடுபட்டாரது செல்வம் அழிந்தாலும் அப்பா அழியாது என்பது பொருள்.

(தண்டி. 98 - 10)

சேகாநுப்ராஸம் -

{Entry: M13b__109}

இரண்டிரண்டு மெய்கள் உயிர் ஏறப்பெற்று இடைவிடாது மறுத்து வருவது.

எ-டு :

‘பண்டு பண்டவழ் நாவினொர் பாவைதெம்

மண்டு மண்டலத் தோரவை மாழ்கிமன்

கொண்ட கொண்டலன் னாய்நின் திருப்பெயர்

கொண்டு கண்டனன் கோதைப் புறத்தையே’.

இதன்கண் ண், ட் என்பனவற்றுள் டகரத்தின்மேல் உயிரேறி வந்துள்ளது.

அநுப்ராசம் - வழி எதுகை (யா. வி. பக். 208). வல்லொற்றை அடுத்துக் கொண்ட மெல்லொற்று வழிஎதுகையை வட நூலார் ‘சேகாநுப்ராஸம்’ என்பர். இஃது இணையெதுகை அலங்காரம் என்று மாறன் அலங்காரத்துள் கூறப்பட்டுள் ளது. (பக். 277)

சொல்லும் பொருளும் ஒன்றாகவே தொடர்ந்து குறிப்பினால் பொருள் மாறுபடுதல் ‘லாடாநுப்ராஸம்’ (பிரதாபருத்ரீயம் சப்தாலங்கார ப்ரகரணம் - 1 (5)) (L)

சொல் அந்தாதி மடக்கு -

{Entry: M13b__110}

எ-டு :

கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரி

காவிரி மலருகக் கரைபொரு மரவ

மரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும்

சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே.

‘கயல் ஏர் பெற வரும் கடிபுனல் காவிரி, காவிரி மலர் உகக் கரை பொரும் அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், சிலம்புசூழ் தளிரடி (தலைவி) திருமனைக்கு அயலே’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.

“கயல்மீன்கள் எழுச்சி பெறப் பெருக்கெடுத்து வரும் நறுமண மிக்க புனலையுடைய காவிரியாறு, சோலையில் விரிந்த மலர்கள் கீழே உகுமாறு கரையைத் தாக்கும் ஒலி, மரவமரத் தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ள வண்டொலியோடு ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்கும் இடம் சிலம்பு அணிந்த அணிகளால் சூழப்பட்ட தளிர் போன்ற அடிகளையுடைய தலைவியின் மனைக்கு அருகின்கண்ணேயாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், கயல் காவிரி. மரவம் சிலம்பு என்னும் சொற்கள் அந்தாதியாக வந்தமை சொல்லந்தாதி மயக்காம். (அந்தாதி மண்டலித்தும் வந்தவாறு.) (தண்டி. 96)

சொல் ஒப்பணி -

{Entry: M13b__111}

இது தொன்னூல் விளக்கம் குறிப்பிடும் சொல் அணிவகை நான்கனுள் ஒன்று. ஒப்புமைபற்றி வருவனவற்றைக் கூறுதல் இதன் இலக்கணமாம். இது திரிபுஇயைபு, ஒழுகிசை, சமம், இயைபிசை என நால்வகைப்படும்.

1. திரிபு இயைபு

ஒரு பெயரோ ஒருவினையோ பலவேறு உருபு பெற்றும், பலவினையோ பலபெயரோ ஓர்உருபு பெற்றும் வரத் தொடுப்பது.

எ-டு “படை வரவினால் காற்றெனவும், முழக்கத்தால் கடலெனவும். அச்சத்தால் இடியெனவும், செய் கொலையால் கூற்றெனவும், மதகரி வந்து எதிர்த்த படையை அழித்தது” என்றற்கண் கூறிய பெயர் களில் ஆல் உருபும் ‘என’ என்பதும் பலமுறை மீண்டும் வந்தவாறு.

2. ஒழுகிசை

இனிய ஓசை; இயற்றமிழிடத்துப் பெயரும் ஈரெச்சமும் உரிச்சொல் முதலியனவும் பலபல ஒப்ப வந்து பொருந்துதல்.

எ-டு: ‘விடாது நறுநெய் பூசி, நீங்காது ஒளிமணி சேர்த்து, மங்காது மதுமலர் சூடி’ என, இரண்டாம் வேற் றுமைத் தொகைகள் இணைந்து வந்தவாறு. செய்து என்னும் வினையெச்சமும், எதிர்மறை வினையெச்ச மும் ஒப்ப வந்தவாறு. நெய்பூசி, மணிசேர்த்து, மலர் சூடி என்பன இரண்டன் தொகைகள்; இவற்றுள் முன்மொழி பெயராம். நறு, ஒளி, மது என்பன அம்மூன்று பெயர்க்கும் முறையே அடையாக வந்து உரியாக நின்றவாறு.

3. இயைபு இசைஅணி

பற்பல வசனத்து இறுதிமொழிகள் தம்முள் உருவின் ஒப்புமையால் இணைந்து வருதல்.

எ-டு : ‘செங்கதிர் நெடுங்கை நீட்டி, மல்கிருள் கங்குல் ஓட்டி, படரொளி முகத்தைக் காட்டி’ என இதன்கண், நீட்டி. ஓட்டி, காட்டி என்பன ஓசை ஒப்புமையால் இணைந்து வந்தவாறு.

4. சம ஒப்புமை

இருமொழி பலமொழிகள் தம்முள் மாத்திரையாலும் ஓரெழுத்தாலும் வேறுபாடுடைய ஆதல் அன்றித் தம்முள் ஒப்ப வருவது.

எ-டு : ‘கோடா ராவிப் பாற்குருகே
கோடா ராவிப் பாற்குருகே’ - என மடங்கி வருவது.

கோடு ஆர் ஆவிப் பால் குருகே - கரை பொருந்திய குளத்தை அடுத்துள்ள, பால் போன்ற நிறத்தையுடைய நாரையே; கோடாரா இப்பால் குருகே - தாம் கவர்ந்த என் வளைகளைத் தலைவர் மீட்டும் தாராரோ? என வருவது. இஃது இரண்டடி மடக்கு.

இனிச் சமமாகாது, காந்தாரம் > கந்தாரம் > கந்தரம் என, மாத்திரை குறைந்து வேற்றுச்சொல் ஆயின; இது மாத்திரைச் சுருக்கம் என்னும் சொல்லணி.

கமலம் > கலம், மலம் இஃது எழுத்துச் சுருக்கம் என்னும் சொல்லணி. (தொ. வி. 320-324)

சொல் மிக்கணி -

{Entry: M13b__112}

வந்த சொல்லே மீண்டுமீண்டும் வருவது சொல்மிக்கணி என்று தொன்னூல் விளக்கம் கூறும். இவ்வணி மடக்கு, இசைஅந்தாதி, அடுக்கு என மூவகைப்படும்.

1. மடக்கணி

தனித் தலைப்பிற் காண்க.

2. இசை அந்தாதி

உரைநடையில் ஒருவசனத்துக்கு ஈறாக நின்ற மொழி மற்றொரு வசனத்துக்கு ஆதியாக வருவது. உருபு ஒன்றே ஆயினும் வேறே ஆயினும் ஏற்புடைத்தாம்.

எ-டு : அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது; செல்லப் பசிகடுகுதலும்...’

‘மாந்தர்க்கெல்லாம் கேள்வியால் அறிவும், அறிவினால் கல்வியும், கல்வியால் புகழும், புகழால் பெருமையும் விளையுமன்றே?’

இது மாறனலங்காரம் முதலியவற்றுள் காரணமாலை அணி யாகக் கொள்ளப்படும் (செய்யுட்கண்ணேயே என்பது). இங்குச் சொல்அமைப்பு நோக்கிச் சொல்மிக்கணி ஆயிற்று.

3. அடுக்கணி

சிறப்பினைக் காட்டவும், அன்பு துயர் களிப்பு முதலிய வற்றைத் தோற்றவும் ஒருபொருள் தரும் பல திரிசொற்கள் அடுக்கி வருவது.

எ-டு : ‘என்னுயிர் காத்துப் புரந்(து)ஆண்ட என்னிறைவன்
தன்னுயிர் பட்(டு)இறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய்
மீண்டென்னைக் காத்(து)ஓம்பி மேவிப் புரந்(து)அளிப்ப
யாண்டையும் யார்யார் எனக்கு?’

காத்துப் புரந்து, பட்டு இறந்து, காத்து ஓம்ப, புரந்து அளிப்ப என ஒரு பொருள் தரும் பலதிரிசொற்களும் அடுக்கி வந்தமை இவ்வணியாம். (தொ. வி. 314 - 317)

சொல்லணி (1) -

{Entry: M13b__113}

செய்யுளிலுள்ள சொற்கள், பரியாயச் சொற்களாக மாற்றப் படின் அணி கெடுவது சொல்லணி. முல்லை நகைத்தன என்றதற்கு முல்லை பூத்தன என்று கூறின் அணி நில்லாது. (தொ. வி. 302 உரை)

இச் சொல்லணி மறிநிலை அணி, சொல் மிக்கணி, சொல் எஞ்சணி, சொல் ஒப்பணி என நான்கு வகையாம். (தொ. வி. 303)

மறிநிலை 5, பொருள்கோள் 8, சொல் மிக்கணி 3, சொல் எஞ்சணி 10, சொல் ஒப்பணி 4, ஆகச் சொல்லணி விரி 30 என்னும் தொன்னூல் விளக்கம். (325)

சொல்லணியை மடக்கு, சித்திரகவி என இருவகைப்படுத்தும் தண்டியலங்காரம். (92, 98)

சொல்லணி (2) -

{Entry: M13b__114}

பலவகைத் தொடைகளையும் பாட்டடி சீர்களில் அமைத்தல்.

அவ்வாறே பலவண்ணங்களையும் பயில அமைத்தல்.

எழுத்துநிரல்நிறை, சொல்நிரல்நிறை, சொல்லையும் பொருளை யும் முரண்பட நிறுத்துதல், சொல்லும் பொருளும் ஒன்றே பலமுறை தொடர்ந்து வரச்செய்தல் (ஒரு சொல் பலபொருட் படத் தொடர்ந்து வரவேண்டும்; ஒரு பொருளே பலசொல் வடிவத்தில் தொடர்ந்து பின்வரவேண்டும்), ஒரு சொல்லோ சொற்றொடரோ அடியோ மீண்டும் வேறு பொருள் பட மடக்குதல், சித்திரக்கவி, எண்ணுமுறையாகத் தொடுத்தல் - என்பனவும் பிறவும் சொல்லணியின்பாற்படும். (எண்ணு முறையாகத் தொடுத்தல் - எழுகூற்றிருக்கை)(தென். அணி. 47)

சொல்லலங்காரம் -

{Entry: M13b__115}

சொல்லணி; சொல்லின்கண் தோன்றும் அணி. அதனைத் தண்டியலங்காரம் மடக்கு, சித்திரகவி என இருபாற்படுக்கும்.

த section: 13 entries

தகர வருக்க மடக்கு -

{Entry: M13b__116}

பாடல் முழுதும் தகர ஒற்றும் தகரத்தை ஊர்ந்த உயிருமே வருவது.

எ-டு : ‘தத்தித்தா தூதுதி; தாதூதித் தத்துதி;
துத்தித் துதைதி; துதைத்ததா தூதுதி;
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது’

பாய்ந்து மகரந்தத்தை ஊதும் வண்டினை நோக்கி, “தத்தித் தாது ஊதுதி; தாது ஊதித் தத்துதி; துத்தித் துதைதி; துதைத்த தாது ஊதுதி; தித்தித்த தாது எது? எத்தாது தித்தித்த தாது? தித்தித்தது எத்தாது?” என, மகரந்தங்களுள் சுவையுடைய மகரந்தம் யாது என மும்முறை வினவியவாறு.

தகர ஒற்றும் தகர உயிர்மெய்வருக்கமுமே வந்தமையால் இப்பாடல் தகர வருக்க மடக்காம். (தண்டி. 97)

தண்டியலங்காரம் குறிப்பிடும் சொல்லணிகள் -

{Entry: M13b__117}

கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினா உத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகம் என்ற பன்னிரண்டும். பலவகை மடக்கும், உரையில் கொள்ளப்பட்ட நீரோட்டகம், ஒற்றுப் பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம், திரிபாதி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு என்ற எட்டும் தண்டி யலங்காரம் குறிப்பிடுபவை. தண்டி. 92-98.

தலைமடக்கு -

{Entry: M13b__118}

செய்யுள் அடியில் முதற்சீரே அவ்வடியில் மடங்கி வரும் மடக்கணிவகை. ‘ஆதிமடக்கு வகைகள்’ காண்க.

திரிபங்கி -

{Entry: M13b__119}

திரிபங்கி - முன்றாகப் பிரிவது; மிறைக் கவிகளுள் ஒன்று.

ஒரு செய்யுளின் உறுப்புக்களைப் பெற்று ஒரு வகை யாப்பால் வந்த பாட்டினை மூன்றாகப் பிரித்து எழுதினால், வேறு வேறுதொடையாக அமைந்து பயனிலையும் பெற்று முடியும் வகையில் செய்யுளை அமைத்தல்.

எ-டு : ‘ஆதரம் தீர்அன்னை போல்இனி யாய்அம்பி காபதியே
மாதர்பங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீள்முடியாய்
ஏதம்உய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம் பிரான்இனியாய்
ஓதும்ஒன் றேஉன்னு வார்அமு தேஉம்பர் நாயகனே.’

கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த இப்பாடல் ஒன்றனையே,

1 2 3

‘ஆத ரம்தீர் ‘அன்னைபோ லினியாய்! ‘அம்பிகா பதியே!

மாதர் பங்கா வன்னிசேர் சடையாய்! வம்புநீள் முடியாய்!

ஏதம் உய்ந்தோர் இன்னல்சூழ் வினைதீர் எம்பிரான் இனியாய்!

ஓதும் ஒன்றே! உன்னுவா ரமுதே! உம்பர்நா யகனே!

என்று மூன்று பாடலாகப் பிரிப்பினும், அடியெதுகைத் தொடையொடு பொருளும் அமைய, வஞ்சித்துறை என்னும் யாப்பின்பாற்படுமாறு காணப்படும். (தண்டி. 98 உரை)

திரிபதாதி -

{Entry: M13b__120}

இது ‘திரிபாகி’ எனவும் வழங்கும் சித்திரகவியாம். அது காண்க. (மா. அ. பாடல். 808)

திரிபாகி -

{Entry: M13b__121}

மிறைக் கவிகளுள் ஒன்று. திரிபாகி - மூன்று பாகங்களைக் கொண்டது.

மூன்றெழுத்தாலான ஒரு சொல்லின் முதலெழுத்தும் இறுதியெழுத்தும் சேர ஒரு சொல்லாய், இடையெழுத்தும் இறுதி எழுத்தும் சேர மற்றுமொரு சொல்லாய், வெவ்வேறு பொருள் தரும் வகையில் பாடல் அமைத்தல்.

எ-டு : ‘மூன்றெழுத்தும் எம்கோன்; முதல் ஈ(று) ஒருவள்ளல்;
ஏன்றுலகம் காப்ப(து) இடைகடையாம்; - ஆன்றுரைப்பின்
பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்தும்
காமாரி, காரி, மாரி’

மூன்றெழுத்தும் சேர்ந்தால் எம் இறைவன் - காமாரி (-மன்மதனை அழித்த சிவபெருமான்);

முதலும் இறுதியும் சேர்ந்தால் ஒருவள்ளல் - காரி;

இடையெழுத்தும் கடையெழுத்தும் சேர்ந்தால் உலகினைக் காப்பது - மாரி. (தண்டி. 98 உரை)

‘திரிபதாதி’ என்பதும் இதுவே.

திரிபு அணி (2) -

{Entry: M13b__122}

மடக்கணியில் சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்து மடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அது திரிபு மடக்காம். ‘திரிபு அந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.

எ-டு : ‘திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றனையால்
தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன; தாழ்பிறப்பின்
உருவேங் கடத்துக்(கு) உளத்தே இருந்தன; உற்றழைக்க
வருவேங் கடத்தும்பி அஞ்சலென்(று) ஓடின மால்கழலே.’ (திருவேங்கடத்.)

முதலடி - திருவேங்கடத்து; இரண்டாமடி - தரு வேம் கடத்து; மூன்றாமடி - உருவேங்கள் தத்துக்கு; நாலாமடி - ‘வரு வேம் கட(ம்) தும்பி.

திருமாலின் பாதங்கள் திருவேங்கடமலைமீது நிலைபெற்று நின்றன; இராமாவதாரத்தில், தாய் கைகேயியால், மரங்கள் வெப்பத்தில் கரியும் காட்டில் தரைமீது நடந்தன. தாழ்ந்த பிறப்பினால் இம்மானுட உருவங்களையுடைய எம் துன்பங் களுக்காக அவற்றைப் போக்கவேண்டி எம் உள்ளத்தில் இருந்தன; பெருகும் வெப்பமான மதத்தையுடைய கசேந்திர னாம் யானை அபயக் குரல் எழுப்பிப் பொருந்தி அழைக்கவே “அஞ்சற்க!” என்று கூறி ஓடி (அதனைக் காத்த)ன.

துவாசி -

{Entry: M13b__123}

சுழிகுளம் என்ற சித்திரகவியை எவ்வெட்டு அறைகள் கொண்ட நான்கடிகளாகக் கட்டங்களில் அமைத்து, முதல் வரிசை எட்டாம் வரிசை - இரண்டாம் வரிசை ஏழாம் வரிசை, மூன்றாம் வரிசை ஆறாம் வரிசை, நான்காம் வரிசை ஐந்தாம் வரிசை - என்ற இரண்டிரண்டு பகுப்புக்களையும் இணைத்துக் காண, அப்பாடலே மீண்டும் வருமாற்றைக் காணலாம். இச் சுழிகுளத்தின்கள் 1, 8; 2, 7; 3, 6; 4, 5 - என்ற இரண்டு வேறு பட்ட வரிசைகளையும் இணைத்து நோக்குதல் துவாசி எனப்பட்டது.

துவாசி - இரண்டு வேறுபாடு. (வீ. சோ. 181 உரை)

தூசம் கொளல் -

{Entry: M13b__124}

ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதனீறே முதல் எழுத் தாக மற்றொரு வெண்பாப் பாடுவது. (வீ. சோ. 181 உரை)

எ-டு : ‘கண்ணவனைக் காண்கஇரு காதவனைக் கேட்கவாய்
பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்
கையொத்து நேர்கூப்பு க’ (பு. வெ. மா. கடவுள். 2)

கடிது மலர்ப்பாணம் கடிததனின் தென்றல்
கொடிது மதிவேயும் கொடிதால் - படிதழைக்கத்
தோற்றியபா மாறன் துடரியில்மான் இன்னுயிரைப்
போற்றுவதார் மன்னாசொல் க. (மா. அ. பாடல். 563)

என முதல் வெண்பாவின் ஈற்றெழுத்தே முதலெழுத்தாக மற்றொரு வெண்பாப் பாடுவது. (இப்பாடல் ஈற்றடி சிறிது மாற்றப்பட்டுள்ளது.)

ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதன் ஈற்றெழுத்தே ஈறாக, முதலெழுத்தே முதலாக, மற்றொரு வெண்பா ஈற்றினின்றும் மேற்பாடுவது. (யா. வி. பக். 538)

மேலை எடுத்துக்காட்டுள் இவ்வமைதியையும் காண்க.

தேர்க்கவி (1) -

{Entry: M13b__125}

‘இரதபந்தம்’ எனப்படும் சித்திரகவி காண்க. (சாமி. 200)

தேர்க்கவி (2) -

{Entry: M13b__126}

கடக பந்தம். (சாமி. 200)

தேர்கை -

{Entry: M13b__127}

தேர்கையாவன : குறைத்தலைப் பிணம் கண்டு ‘காவிப்பல் லன்’ என்றான் என்பதும், ‘குதிரை பட்ட நிலம் இது,’ ‘செத்தது பெட்டைக் குதிரை’ என்றான் என்பதும் முதலா உடையன.

‘விரலும் கண்டகமும் கண்டறிந்தான்’ என்பதுவும் பிறவும் அன்ன.

சித்திர கவி வகைகளுள் தேர்கையும் ஒன்று. (இப்பொருள் உணரப்படாமையின், உரையில் கண்டவாறே குறிப்பிட்டுள் ளோம்.) (யா. வி. பக். 549)

தொன்னூல் விளக்கம் கூறும் சொல்லணிகள் -

{Entry: M13b__128}

மறிநிலை அணி ஐந்தும், பொருள்கோள் எட்டும், சொல் எஞ்சு அணி பத்தும், சொல் மிக்கணி மூன்றும், சொல் ஒப்பணி நான்கும் ஆக முப்பதும் தொன்னூல் விளக்கச் சொல்லணிகள். (தொ.வி. 325)

ந section: 14 entries

நடு எழுத்து அலங்காரம் -

{Entry: M13b__129}

சித்திரகவி வகைகளுள் ஒன்று. (விளக்கமும் எடுத்துக்காட்டும் புலப்பட்டில).

நவபங்கி -

{Entry: M13b__130}

ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியே ஒன்பது வேற்றுப் பாடல்களாக அமைக்கப் படும் வகையில் இயற்றப்படுவதாகிய சித்திரகவி. (தனிப் பாடல் திரட்டு)

நாகபந்தம் -

{Entry: M13b__131}

மிறைக்கவியாம் சித்திரகவிகளுள் ஒன்று. தண்டியலங்காரம் (உரை) இரட்டை நாக பந்தத்தையே சுட்டுகிறது. (மற்றொன்று அட்ட நாக பந்தம்) இரண்டு பாம்புகள் தம்முள் இணைவனவாகப் படம்வரைந்து, ஒரு நேரிசை வெண்பாவும் ஓர் இன்னிசை வெண்பாவும் எழுதி, சந்திகளில் நின்ற எழுத்தே மற்றை யிடங்களினும் உறுப்பாய் நிற்கப் பாடுவது. மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும் என்றிவ்வாறு சித்திரத்தில் அடைப்பது.

வருமாறு: நேரிசைவெண்பா.

அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்

தெருளின் மருவாச்சீர்ச் சீரே - பொருவிலா

ஒன்றே யுமையா ளுடனே யுறுதிதரு

குன்றே தெருள அருள்.

(அறத்தின் அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! ஒப்பற்ற தேவர்கள் அறிவிற்கும் எட்டாத அழகிய புகழ்ச்சி யுடையாய்! ஒப்பற்ற ஏகரூபத்தினையுடையாய்! உமையொடு கூடி எமக்குச் சிவபதம் அளிக்கும் மலைபோல் வாய்! யாங்கள் தெளிவு பெற மெய்யறிவினை அருள்வாயாக.)

இன்னிசைவெண்பா.

மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு

பெருகொளியான் றேயபெருஞ் சோதி - திருநிலா

வானம் சுருங்க மிகுசுடரே சித்த

மயரு மளவை ஒழி.

(நின்னை அடைந்தவருள்ளத்தின்கண் நிலைபெற்ற ஒளியாக உள்ளாய்! உண்ட நஞ்சினால் விளைந்த பெருகிய நிறம் நிறைந்து பொருந்திய (திருநீலகண்டத்தினையுடைய) பெருஞ் சோதி வடிவனே! அழகிய மதியையுடைய வானம் சிறுகு மாறு பெருகிய ஒளித்திரு மேனியாய்! எனது நெஞ்சம் நின் திருவடிகளை மறக்கும் அளவினைப் போக்கியருள்வாயாக.)

முன்னர் ‘இரட்டை நாக பந்தம்’ என்ற தலைப்பினைக் காண்க. (தண்டி. 98)

நாலசைச்சீர் முழுதொன்று இணையெதுகை அணி -

{Entry: M13b__132}

இணையெதுகை செவிக்கு இன்பம் பயக்கும் ஓசைத்தாய் இருத்தலின், அதனை ‘இணைஎதுகையணி’ என்னும் பெயரிய ஓரலங்காரமாகக் குறிப்பிடும் மாறனலங்காரத்தில், ஓரடியில் நாலசைச்சீர் நான்கும் முழுதும் பெரும்பாலும் எழுத்து ஒன்றிவரும் இணை எதுகை அணிவகை உரையில் கூறப் பட்டுள்ளது.

எ-டு : ‘குயில்போல்மொழியும் அயில்போல்விழியும்
கொடிபோலிடையும் பிடிபோனடையும்’

என்ற அடியில் இணையெதுகைஅணி நாலசைச்சீர் நான்கன் கண்ணும் வந்து செவிக்கு இன்பம் செய்வது இவ்வணிவகை யாகக் காட்டப்பட்டுள்ளது. (மா. அ. 180)

நாலெழுத்தால் வந்த மடக்கு -

{Entry: M13b__133}

எ-டு : யானக வென்னே யினையனா வாக்கின
கானக யானை யனையானைக்-கோனவனைக்
கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக்
கன்னிக் கனியனைய வாய்.

‘என் ஏய் யான் நக, இனையனா ஆக்கின, கானக யானை அனையானை கோன் அவனைக் கொல் நயனவேல் நக்க கோகனகக் கைக் கன்னிக் கனி அனைய வாய் கன்னி’ என்று பொருள் செய்யப்படும்.

“எத்துணையும் சிறிய யானே எள்ளி நகைக்குமாறு, இவ்வாறு தன்னுணர்வு அற்றுப் போம்படி ஆக்கிய, காட்டானையை ஒத்த என் தலைவனைத் துன்புறுத்திய கொல்லும் வேல்களை ஒத்த கண்களையும், மலர்ந்த செந்தாமரையை ஒத்த கைகளையும் உடைய இப்பெண்ணின் கொவ்வைக்கனி அனைய வாய் புதுமை அழகு உடைத்தா யுள்ளது!” எனப் பாங்கன் தலைவியைக் கண்டு வியந்து கூறிய இப்பாடற்கண், க ய வ ன என்ற நான்கு மெய் வருக்கங்களே பெயர்த்து மடக்கி வந்துள்ளன. (தண்டி. 97)

நான்கடி ஒருசொல் மடக்கு (யமக யமகம்) -

{Entry: M13b__134}

ஒரு சொல்லே நான்கடியும் முழுதுமாக மடக்கி வருவது. இஃது இயமா வியமகம் எனவும் வழங்கப்பெறும்.

எ-டு :

உமாதர னுமாதர

னுமாதர னுமாதர

னுமாதர னுமாதர

னுமாதர னுமாதரன்.

உமா தரன் - உமையைத் தரித்தவன்; ஆதரன் - ஆதரிக்கின்ற வன்; மா தரன் - மானைத் தரித்தவன்; மா தரன் - அழகை யுடையவன், திருவைத் தரித்தவன்; மா தரன் - மாமரத்தடியில் தங்கியிருப்பவன், இடபத்தைச் செலுத்துபவன்; மா தரன் - யானைத்தோலைப் போர்த்தியவன்; ஆதரன் - விருப்ப முடையவன்; மாது அரன் - பெருமை மிக்க சிவன்.

நான்கடி மடக்கு -

{Entry: M13b__135}

முதலடியே நான்கடிகளாகவும் மடங்கி வரும் மடக்காகிய ஏகபாதம். ‘ஏகபாதம்’ காண்க.

இவ்வாறு வஞ்சித்துறையாகிய இப்பாடலில் ஒரு சொல்லே நான்கடியும் வெவ்வேறு பொருள் தருமாறு மடக்கியவாறு காணப்படும். (தண்டி. 96 உரை)

நான்காரைச் சக்கரம் -

{Entry: M13b__136}

மிறைக்கவிகளுள் ஒன்று; சக்கரம் போன்ற அமைப்புடையது. இச்சக்கரம் நான்கு ஆர்க்கால்களையுடையது. வட்டை ‘சூட்டு’ எனப்படும்; சக்கரத்தின் இடையே விட்டமாகச் செல்வது ஆர்க்கால். (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள, குடத்தின் வளைவான பாகமாகிய, குறடு நான்காரைச் சக்கரத் தில் இல்லை; ஆறு எட்டு ஆரைச்சக்கரங்களில் உண்டு.)

பாட்டு :

‘மேரு சாபமு மேவுமே

மேவு மேயுண வாலமே

மேல வாமவ னாயமே

மேய னானடி சாருமே.’

மேருவை வில்லாகக் கொள்பவனும், விடத்தை உணவாக விரும்புபவனும், உயர்ந்த உருவினவாகிய கூளிக் கூட்டத்தை மேவியவனும் ஆகிய அத்தகையானுடைய திருவடிகளைச் சார்வீராக - என்பது இதன்பொருள்.

இது, ‘மே’ எனும் எழுத்து நடுவே நின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்து நின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவிலிருந்து கீழ் ஆரின் வழியே இறங்கி இடமாகச் சென்று அடுத்த ஆரின் வழியாக நடுவையடைந்து முதலடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து அந்த ஆரின் வழியாகவே இடமாகத் திரும்பி வலமாகச் சூட்டின் வழியே அடுத்த ஆரில் இறங்கவே இரண்டாம் அடி முடியவும்; மீண்டும் நடுவிலிருநது ஆர் வழியே மேலேறிச் சூட்டில் வலமாகச் சென்று அடுத்த ஆர்ப்பகுதியில் இடமாகச் செல்ல, மூன்றாமடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து ஆரின் வழியே வலமாகச் சென்று சூட்டின்கீழேயிறங்கி அடுத்த ஆர்ப்பகுதியில் மேலேறவே, நான்காமடியும் முடியவும் இப்பாடல் நிகழுமாறு. (தண்டி. 96 உரை)

நான்கு பொருள் சிலேடை இணைமடக்கு -

{Entry: M13b__137}

முதலீரடிகள் நான்கு பொருள்களுக்குச் சிலேடையாகவும், பின் இரண்டு அடிகள் மடக்காகவும் அமையும் மடக்கு வகை.

எ-டு : கொம்பரஞ்சொன் மின்னார் குயம்பொன்னி யன்பருள
மம்பரந்தோ யுந்தென் னரங்கமே - தும்பி
யுரைத்தா னுரைத்தா னுயர்திரை நீர் தட்டீ
னரைத்தா னரைத்தா னகம்.

‘தும்பி உரைத்தான் நுரை தான் உயர் திரை நீர் தட்டு ஈனரைத் தான் அரைத்தான் அகம்’- கசேந்திரனால் அழைக் கப்பட்டவனும், நுரையை உயர்த்தும் அலைகளை உடைய கடலை அணைகட்டிக் கடந்து நீசராம் அரக்கரை அழித்த வனும் ஆகிய திருமாலது இருப்பிடம் அழகிய அரங்க நகராகும்;

கொம்பர் அம்பரம் தோயும் அரங்கம் - கொடிகள் வான் அளாவியிருக்கும் அரங்கம்.

மின்னார் குயம் அம்பரம் தோயும் அரங்கம்-மகளிர் தனம் மேலாடையை நீங்காதிருக்கும் அரங்கம்.

பொன்னி அம்பரம் தோயும் அரங்கம் - காவிரி கடலைப் பொருந்தக் கிழக்குத் திக்கில் ஓடும் அரங்கம்.

அன்பர் உளம் அம்பரம் தோயும் அரங்கம்-அடியார்உள்ளம் மேம்பட்ட பரம் ஆகிய இறைவனைத் தியானம் செய்யும் அரங்கம்.

இவ்வாறு ‘அம்பரம் தோயும்’ என்ற சொற்றொடரைச் சிலேடைப் பொருளால் கொம்பர், மகளிர் தனம், காவிரி, அடியவர் உள்ளம் என்ற நான்கும் கொண்டு முடிந்தமை நாற்பொருள் சிலேடை. இச்சிலேடையை அடுத்து, ஈற்றடிகளில் மடக்கு முதற் சீர்களில் இணைய அமைந்ததால், இப்பாடல் நாற்பொருள் சிலேடை இணைமடக்கு ஆயிற்று. (மா. அ. பாடல் 757)

நிரோட்டகம் -

{Entry: M13b__138}

மிறைக்கவிகளுள் ஒன்று. உதடுகளின் தொடர்பில்லா மலேயே உச்சரிக்கக் கூடிய எழுத்துக்களாலான செய்யுள். உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் என்னும் எழுத்துக்கள் இதழ்களின் துணைகொண்டே உச்சரிக்கப்படுவன. இவ்வெட்டும் நீங்க லான பிற எழுத்துக்களால் அமையும் செய்யுள் இம்மிறைக் கவியின்பாற்படும்.

எ-டு : சீலத்தான் ஞானத்தான் தேற்றத்தான் சென்றகன்ற
காலத்தான் ஆராத காதலான் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் செறிந்தடி யேற்கினிதாங்
கச்சிக்கச் சாலைக் கனி.

“காஞ்சிமா நகரில் திருக்கச்சாலை எனும் திருத்தலத்தில் உள்ள கனி போன்ற சிவபெருமான் ஒழுக்கத்தாலும் ஞானத் தாலும் மனத் தெளிவாலும் வரையறை இன்றியே பலகால மாக வழிபடுவதாலும், நீங்காத காதலாலும், மிக உயரிய பெரியோர்களால் நினைக்கப்பட வேண்டியவனாயினும், தாழ்ந்தவனாகிய அடியேனுக்கும் இரங்கி என் மனத்தில் வந்து பொருந்தி இன்பம் தருகின்றான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உதடுகளின் தொடர்பு எவ்வாற்றானும் அமை யாத எழுத்துக்களே வந்துள்ளமையின் இது நிரோட்டகம் ஆயிற்று. ‘எய்தற் கரிய தியைந்தக்கால்’ என்ற குறளும் (498) அது. (தண்டி. 98 உரை)

நிரோட்டக யமக அந்தாதி -

{Entry: M13b__139}

நிரோட்டகம் யமகம் என்னும் மிறைக்கவி வகையும் சொல் லணியும் அமைய, அந்தாதித்தொடையால் நிகழும் பிரபந்தம். இது பாடுதல் பெருஞ்சதுரப்பாடுடையது.

எ-டு : திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி.

நிரோட்டிய ஓட்டியம் -

{Entry: M13b__140}

ஒரு நேரிசை வெண்பாவில் முதலீரடியும் இதழியைந்தும் குவிந்தும் வரும் எழுத்துக்களான் இயலாத நிரோட்டியமாய் அமைய, கடையிரண்டடியும் அவ்வெழுத்துக்களைப் பெற்று வரும் ஓட்டியமாய் அமைவது.

எ-டு : கற்றைச் சடையார் கயிலைக் கிரியெடுத்தான்
செற்றைக் கரங்கள் சிரங்களீரைந் - தற்றழிய
ஏஏவும் எவ்வுளுறு ஏமமுறு பூமாது
கோவே முழுதுமுறு கோ.

சிவபெருமானது கயிலையை எடுத்த இராவணனுடைய வலியற்ற இருபதுகரங்களும் பத்துத்தலைகளும் அற்று விழுமாறு அம்பு தொடுத்த திருஎவ்வுள் என்ற திருப்பதியில் எழுந்தருளி, பூமாது புணரும் திருமாலே பரம்பொருள் - என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளும் உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் - என்னும் எட்டெழுத்துக்களும் இன்றியமைந்த நிரோட்டியமாக, ஈற்றடியிரண்டும் அவ்வெழுத்துக்களைக் கொண்ட ஓட்டியமாக அமைந்துள்ளமை காணப்படும். (மா. அ. பாடல். 776).

நிரோட்டியம் -

{Entry: M13b__141}

‘நிரோட்டகம்’ காண்க. ‘இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.’ (மா. அ. 274)

நெட்டுயிர் மடக்கு -

{Entry: M13b__142}

யாதானும் ஒரு நெட்டுயிரெழுத்தே மெய்யொடும் கலந்து பாடல் முழுதும் வருவது. வரும் எடுத்துக்காட்டுள் ஆகார நெட்டுயிரே பயின்றுள்ளவாறு காண்க:

எ-டு : தாயாயா ளாராயா டாமாறா தாராயா
யாமாரா வானாடா மாதாமா - தாவாவா
யாவாகா காலாறா காவாகா காணாநா
மாலானா மாநாதா வா.

‘தாய் ஆயாள் ஆராயாள் (ஆதலின்) தா (-வருத்தம்) மாறாது. அதனை நீ ஆராயாய். (அங்ஙனம் ஆராயாத நினக்கு) யாம் ஆரா? (-யாவர் ஆகுவோம்?) வான் நாடா! (-தேவருலகை ஒத்த நாட்டை யுடையோனே!) மாது (-இப்பெண்) மா தா ஆம் (-பெரிய வருத்தம் அடைவாள்); வா; வா (வந்தால்) யா ஆகா? (-உனக்கு எப்பொருள் வாய்க்காது?) கால் ஆறா கா (-கால் ஆறி அவசர மின்றி வந்து எங்களைக் காப்பாயாக). ஆகா காண் (-இத்துன்பம் தாங்க ஒண்ணாது என்பதனை நோக்குவாயாக) நா நாம் (-பழி கூறும் அயலார் நா எங்களுக்கு அச்சம் தருகிறது). மால் ஆனா (-மயக்கம் நீங்காத) மா நாதா! (-பெரிய தலைவனே!) வா (-எம்மிடம் அன்பு கொண்டு வருவாயாக) - என்று பொருள்படும் இப்பாடற் கண் ஆகார நெட்டுயிர் மடக்கியவாறு.

இது மடக்கு வகைகளுள் ஒன்று. (தண்டி. 97 உரை)

ப section: 8 entries

பாடக மடக்கு -

{Entry: M13b__143}

பாடகம் என்பது வளைவாக மடங்கியிருக்கும் ஒரு வகைக் காலணி. இக் காலணியை மடக்குவது போல இரண்டிரண்டு அடிகள் ஒரே அளவினை உடையனவாய் மடங்குவது பாடக மடக்காம்.

எ-டு : ‘ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே
ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே.’

ஓத நின்று உலவா அரு வேலைவாய் மாதர் அங்கம் அலைக்கும் நிகரவே, ஓதம் நின்று உலவாவரும் வேலைவாய் மாதரங்கம் மலைக்கு நிகரவே-நின்று சொல்ல முடியாத அரிய காலத்தின்கண் இப்பெண்ணுடைய உறுப்புக்களைத் துன்புறுத்துமாறு (அக்கால நிகழ்ச்சிகள்) பொருந்தின; வெள்ளம் நிலைபெற்று உலவி வருகின்ற கடலில் பெரிய திரைகள் மலைக்கு ஒப்பாக இருக்கும்.

முதல் ஈரடியும் மீண்டு பின் ஈரடிகளாக மடக்குதலின், பாடக மடக்காயிற்று, இப்பாடல். (தண்டி. 96)

பாதமடக்கு -

{Entry: M13b__144}

எழுத்துமடக்கு, அசை மடக்கு, சீர் மடக்கு, அடிமடக்கு என்ற மடக்கு வகைகளில் சிறப்பான மடக்கு அடிமடக்கு எனப்படும். இம்மடக்கு இரண்டடி மடக்குதலும், மூன்றடி மடக்குதலும் நான்கடி மடக்குதலும் என மூவகைப்படும்.

முதல் ஈரடி மடக்குதல், முதலடியும் மூன்றாமடியும் மடக்கு தல், முதலடியும் ஈற்றடியும் மடக்குதல், கடையிரண்டையும் மடக்குதல், இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்குதல், இடையீரடி மடக்குதல் என ஈரடி மடக்கு ஆறும்; ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல், இரண்டாமடி ஒழித்து ஏனைய மூன்றடியும் மடக்குதல், மூன்றாமடி ஒழித்து ஏனை மூன்றடி மடக்குதல், முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல் - என மூவடி மடக்கு நான்கும்;

நான்கடியும் மடக்குதலாகிய மடக்கு ஒன்றும்; ஒரு சொல்லானே நான்கடி முழுதும் மடக்கும் சொல்மடக்கு ஒன்றும்; இரண்டடியாக மடக்கும் பாதமடக்கு 1, 2 - 3, 4; 1, 3 - 2, 4; 1,4 - 2, 3 என மடக்கும் மூன்றும்; பாடக மடக்கு ஒன்றும்;

எனப் பாதமடக்கு 6+4+1+1+3+1 = 16 ஆகும். (தண்டி. 96 உரை)

பாதமயக்கு -

{Entry: M13b__145}

மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியை கொளுத்துவது.

எ-டு : ‘ஈயல்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகநா. 8-1)

கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37)

நன்னாள் பூத்த பொன்னிணர் வேங்கை (அகநா. 85 - 20) மலர்கொய லுறுவதென் மனமவள் மாட்டே’

இது பழவடி மூன்றினொடு தாம் ஓரடி பாடிப் பாக்கணார் பாடிய பாத மயக்கு. (யா. வி. பக். 541)

பாவில் புணர்ப்பு -

{Entry: M13b__146}

ஒரு செய்யுள் நான்கு அடி யுடையதாக நால்வர் நான்கடி களுக்கும் ஈற்றுச் சீர்களைச் சொல்ல ஒருவன் ஏனைய சீர்களைப் பாடிச் செய்யுளை நிரப்பிக் கொடுப்பது என்ற சித்திரகவி வகை. (வீ. சோ. 181 உரை)

நால்வர் முறையே பதியே, நதியே, யதியே, விதியே என்ற ஈற்றுச் சீர்களைக் கூற, ஒருவன்,

‘பதிகளிற் சிறந்தது அரங்கப் பதியே

நதிகளிற் சிறந்தது பொன்னிநன் னதியே

யதிகளில் மிக்கோன் பூதூர் யதியே

விதிகளில் தக்கது வாய்மைசொல் விதியே’

என்றாற்போலப் பாடி முடிப்பதாம்.

பாவின் புணர்ப்பாவது நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால் அவையே அடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது.

எ-டு : மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கை
பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன்
கண்டகம் புக்க செங்கண் மறவன்
யாழின் இன்னிசை மூழ்க
வீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே.’

தடித்த எழுத்தின, நால்வர் நான்கு பாவில் உரைத்த கட்டுரை யின் தொடக்கச் சொற்கள். அவை முறையே முதல் நான்கடி களிலும் முதற்சீராக அமைய, இந்நேரிசை ஆசிரியப்பாப் பொருள் முற்ற இயற்றப்பட்டமையின் ‘பாவின் புணர்ப்பு’ ஆகும். (யா. வி. பக். 541)

பிந்துமதி -

{Entry: M13b__147}

சித்திரகவியுள் ஒன்று. எல்லா எழுத்தும் புள்ளியுடையன வாகவே வருவது.

எ-டு : ‘நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென்

செய்கொண்டென் செம்பொன்கொண் டென்.’

(முன்பு எகர ஒகரங்கள் குறில் எனக் காட்டப்புள்ளி பெற்ற னவாய் எழுதப்பட்டன.) (யா. வி. பக். 548)

பிரிந்தெதிர் செய்யுள் -

{Entry: M13b__148}

முதலில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் ஈற்றெழுத்துத் தொடங்கி மடக்கி எழுதப்பட்டால் பிறிதொரு செய்யுளாக அமையு மாறு பாடப்படும் சித்திர கவி.

எ-டு : ‘நீர நாகமா, தார மாகமே,
வார மாகமா, ணார ணாககா’.

நீரநாக - நற்குணத்தவனே! நீரிலுள்ள பாம்பில் துயில்பவனே!

மா தாரமாக - திருமகள் தேவியாக;

மேவு ஆரம் ஆக - பொருந்திய மாலையை அணிந்த மார்பனே!

மாண் ஆரண ஆக - மேம்பட்ட வேதவடிவினனே!

கா - என்னைப் பாதுகாப்பாயாக.

எதிரேறு வருமாறு:

‘காக ணாரணா, மாக மாரவா,

மேக மாரதா, மாக நார நீ’

மாகமார் அவாம் - மேலுலகத்துள்ளார் விரும்பும்;

நார - நற்குணத்தையுடையவனே!

மேக மாக - மேக வடிவனே!

மா ரதா - பெருவீரனே!

நாரணா - நாராயணன் என்னும் திருநாமத்தோனே!

நீ கண் - நீயே பற்றுக்கோடாவாய்;

கா - காப்பாயாக. (பொருள் கொண்டுகூட்டியுரைக்கப் பட்டது) (மா. அ. பாடல் 796)

பிறிது படு பாட்டு -

{Entry: M13b__149}

மிறைக்கவிகளுள் ஒன்று; ஒருவகை யாப்பமைதியுடன் அமைந்த பாட்டினை வேறுதொடையும் அடியும் கொண்ட பாட்டாகப் பிரித்தாலும் சொல்லும் பொருளும் வேறுபடா மல் அதுவும் ஓர் யாப்பமைதியுடைய செய்யுளாக அமை யும்படி செய்வது.

எ-டு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு
வரியளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த்
திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண் ணாத்தேமொழி
அரிவைதன் நேரென லாம்இயற் றையயாம் ஆடிடனே’

இப்பாட்டுக் கட்டளைக் கலித்துறை யாப்பு. தலைவன் தலைவியது ஆடிடம் கண்டு நெஞ்சுடன் கூறியது இது.

“தலைவியிடத்தே ஆசையால் இங்கு வந்த நாம் விரும்பத்தக்க தாய், வண்டுகள் பாட, இடை போன்ற கொடிகள் ஆடி அசைய, அழகாக இருக்கும் இந்த இடம், தன் ஆயத்துடன் இங்கே இன்று வாராத நம்தலைவியைப் போலவே தோன்று கிறது” என்று தலைவன் நெஞ்சொடு கிளக்கும் இப்பாடலை ஆறடிகள் கொண்ட நேரிசை யாசிரியப்பாவாகப் பிரிப்பி னும், தொடையழகும் பொருளும் கெடாமலேயே அமையும். பிறிதாக வரும் அப்பாடல் வருமாறு :

‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும்

பரிசு கொண்டு வரியளி பாட

மருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதரும்

காமர் மயிலியல் ஆயம் நண்ணாத்

தேமொழி அரிவைதன் நேரெனல்

ஆமியற்(று) ஐய யாம்ஆ(டு) இடனே.’ (தண்டி. 98 உரை)

போக்கியம் -

{Entry: M13b__150}

சித்திரகவி வகை பற்றிக் கூறும் பண்டைய நூல்; இக்காலத்து வழக்கிறந்தது. (யா. வி. பக். 533)

ம section: 50 entries

மடக்கிற்கு அடிவரையறை -

{Entry: M13b__151}

மடக்கு நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுத லாக ஈரடிக்கண்ணும் மூவடிக்கண்ணும் நான்கடிக்கண்ணும் நடைபெறும். (மா. அ. 254)

மடக்கு -

{Entry: M13b__152}

ஓரெழுத்தொருமொழியோ பல எழுத்தொரு மொழியோ செய்யுளில் தொடர்ந்தும் இடையிட்டும், முதலிலோ நடுவிலோ இறுதியிலோ மடங்கி வந்து வேறொரு பொருள் தருமாயின், அவ்வனப்பு மடக்கு என்னும் சொல்லணியாகக் கூறப்படும். (தண்டி. 92)

முதலெழுத்தொன்று மாத்திரம் மாற, ஏனைய எழுத்துக்கள் அவையேயாய் மேற்கூறியவாறு மடக்கி வருவது ‘திரிபு மடக்கு’ எனப்படும்; ‘திரிபு’ என்பதுமது.

மாத்திரைச் சுருக்கம் -

{Entry: M13b__153}

மிறைக் கவிகளுள் ஒன்று; ஒரு சொல்லின் முதல் நெட்டுயிர் மாத்திரையைக் குறைத்தால் வேறொரு சொல்லாகிப் பிறிதொரு பொருள் தர அமைப்பது. (பண்டைக் காலத்தில், எ, ஒ (இன்றைய ஏ, ஓ) என்ற நெடில்களைக் குறிலாக்க ஏடுகளில் எ ஒ - இவற்றின் மேல் புள்ளி யிட்டு (எ ) ) என்று) எழுதுவது மரபு.)

எ-டு : ‘நேரிழையார் கூந்தலின்ஒர் புள்ளிபெறின் நீள்மரமாம்;
நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்; - சீரளவு
காட்டொன்(று) ஒழிப்ப இசையாம்; கவின் அளவும்
மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு.’

ஓதி (பண்டு ‘ஒதி’ என்று எழுதப்பட்டது) என்பது கூந்தல்; நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், ஒதி - மர விசேடம்.

ஏரி (பண்டு ‘எரி’ என்று எழுதப்பட்டது) என்பது நீர்நிலை; நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், எரி - நெருப்பு. காந்தாரம் - காடு; முதல் நெட்டுயிர்மெய் குறிலானால், காந்தாரம் - கந்தாரப்பண்.

கந்தாரம் என்ற சொல்லின் இடைநின்ற நெட்டுயிர்மெய் குறிலானால், கந்தரம் - கழுத்து

மாத்திரை குறைத்து ஒரு மாத்திரைத்தாகிய குறிலாக்கி வெவ்வேறு பொருள் காணும் சித்திரம் அமைதலின், இது மாத்திரைச் சுருக்கம் (சுதகம்) ஆயிற்று. (தண்டி. 98 உரை)

மாத்திரைப் பெருக்கம் -

{Entry: M13b__154}

மிறைக் கவிகளுள் ஒன்று; ‘மாத்திரை வருத்தனம்’ எனவும் படும். மாத்திரைச் சுருக்கத்தில் கூறிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் மறுதலையாகக் கொண்டு பாடல் அமைப்பது. அஃதாவது ஒரு மாத்திரை அளவுடைய குறில் களை இரண்டு மாத்திரை அளவுடைய நெடில்களாக்கிப் பிறிதொரு பொருள் வரப் பாடுவது.

எ-டு : ‘தருவொன்றை நீட்டிடத் தருணி கூந்தலாம்;
மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை;
திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்;
உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்.’
தரு - ஒதி; மங்கை கூந்தல் - ஓதி
தீ - எரி; நீர்நிலை - ஏரி
கழுத்து - கந்தரம்; தீம்பண் - கந்தாரம்
‘கந்தாரம்’ மேலும் நீளின் காந்தாரம் (- காடு)

எ-டு : ‘அளபொன் றேறிய வண்டதின் ஆர்ப்பினால்
அளபொன் றேறிய மண்அதிர்ந் துக்குமால்;
அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனை
அளபொன் றேறழ (கு) ஊடலைந் தாடுமால்’ (தண்டி. 98 உரை)

அளபு (- மாத்திரை) ஒன்று ஏறிய வண்டு : (வண்டு - அளி) ஆளி;

அளவு ஒன்று ஏறிய மண் : (மண் - தரை) தாரை;

அளபு ஒன்று ஏறிய பாடல் : (பாடல் - கவி) காவி;

அளபு ஒன்று ஏறிய அழகு : (அழகு - வனப்பு) வானப்பு.

(வான்அப்பு - மழைநீர்)

தன் மகள் உடன்போயவழி, தாய் புலம்புவதாக அமைந்தது இது.

“காட்டில் ஆளி முழங்குவதால் என் மகளுடைய காவி (நீலோற்பலப்பூப்) போன்ற கண்கள், அச்சத்தால் மனம் நடுக்குறவே, தாரையாகக் கண்ணீர் பெருக்கும். அருஞ்சுனை நீர் மழைநீர்ப் பொழிவினால் அலைவுற்று அசையாநிற்கும்.”

‘உகுமால்’ என்பது ககரம் விரித்தல் விகாரம் பெற்றது. காவி - உவமையாகுபெயரால், கண்.) (இ. வி. 690 - 5 உரை)

மாலை மாற்று -

{Entry: M13b__155}

மிறைக்கவிகளுள் ஒன்று; ஒரு பாட்டினை ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு (-தலைகீழாகப்) படிப்பினும் அப்பாட் டாகவே மீளவருவது.

எ-டு : ‘நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.’

நீவாத மாதவா - நீங்காத மாதவத்தை உடையவனே! தா மோக ராகமோ - வலிய அறியாமையாகிய ஆசைகள்; தாவா - நீங்க மாட்டா; (ஆதலின்) மாதவா (மாது அவா) - இப் பெண்ணின் ஆசையை; நீ - நீக்குவாயாக.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஒரு பதிகம் பதினொரு பாடல்களுமே (மூன்றாம் திருமுறை 117ஆம் பதிகம்) மாலை மாற்றாக அமைந்தவை. அவையே இச்சித்திர கவிக்கு மூலகவியாம். (தண்டி. 98 - 3)

மாறன் அலங்காரம் கூறும் சொல்லணிகள் -

{Entry: M13b__156}

மடக்கு அணி வகைகள் (சூ. 252-269) வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், நிரோட்டிய ஓட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கரபந்தம், பதும பந்தம், முரசபந்தம், நாகபந்தம், இரத பந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடுபாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என்பன வும் சதுரங்க பந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப் பெயர்த்தல், திரிபதாதி என்பனவும்கூட 32 வகைச் சித்திரகவிகள் மாறன் அலங்காரத்தில் இடம்பெறுவன.

மாறனலங்காரம் கூறும் மிறைக்கவிகள் -

{Entry: M13b__157}

வல்லினப்பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப்பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், ஓட்டிய நிரோட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கர (நாலாரம், ஆறாரம், எட்டாரம்) பெந்தம், பதும பெந்தம், முரசபெந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடு பாட்டு, சருப்பதோ பத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என இருபத்தாறு. (மா. அ. 270)

சதுரங்கபந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி - என்பவற்றுடன் 32 ஆகும்.

மிறைக்கவி இருபது -

{Entry: M13b__158}

மிறைக்கவி சித்திரகவி எனவும்படும். இலக்கண விளக்கம் கூறும் மிறைக்கவி இருபதாம். அவையாவன : கோமூத்திரிகை, கூடசதுக்கம், மாலைமாற்று, மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், எழுத்து வருத்தனம், ஒற்றுப் பெயர்த்தல், வினாவுத்தரம், நாகபந்தம், முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு, காதை கரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச்சுதகம், நிரோட்டம் என்பன. (இ. வி. 690)

முச்சொல்லலங்காரம் -

{Entry: M13b__159}

ஒரு தொடர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள் கொண்டு நிற்கும் சொல்லணிவகை; இது சிலேடை அணியின்பாற்படும். ‘மூன்று பொருள் சிலேடை இணை மடக்கு’ எனும் தலைப்பில் இச்சிலேடைவகை காண்க.

முத்துவீரியம் கூறும் சொல்லணிகள்:

முத்து வீரியம் சொல்லணிகள் -

{Entry: M13b__160}

பலவகை மடக்குக்கள், காதை கரப்பு, கரந்துறைபாட்டு, வினா உத்தரம், எழுத்து வருத்தனம், எழுத்தழிவு, மாலை மாற்று, நிரோட்டகம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், திரிபங்கி, திரிபாதி, ஒற்றுப் பெயர்த்தல், பிறிதுபடுபாட்டு என்பன முத்துவீரியச் சொல்லணிகளாம். (மு.வீ. சொல்லணி. 1-25)

முதல் ஈரடி ஆதி மடக்கு -

{Entry: M13b__161}

முதலடிக்கண் முதற்சீர் மடக்கி வருதல் போலவே, இரண் டாம் அடிக்கண் வந்த முதற்சீரும் மடக்கி வர அமைவது.

எ-டு : ‘நினையா நினையா நிறைபோய் அகல
வினையா வினையா மிலமால் - அனையாள்
குரஆளும் கூந்தல் குமுதவாய்க் கொம்பின்
புரவாள்! நீ பிரிந்த போது’

“குரவம்பூச் சூடிய கூந்தலையும், குமுதம் போன்ற வாயையும் உடைய கொம்பனைய தலைவியைப் பாதுகாக்கும் தொழிலைப் பூண்ட தலைவனே! நீ பிரிந்தபோது நின்னை யாம் நினைத்து, எங்களது நிறை என்ற பண்பு எங்களை விட்டு நீங்க வருந்தி எச்செயலும் யாம் செய்யும் ஆற்றல் இலேமாவேம்.”

‘நி(ன்)னை யாம் நினையா, நிறை போய் அகல

இனையா வினையாம் இலமால்’ எனப் பிரிக்க

நினையா நினையா

வினையா வினையா முதலீரடி ஆதிமடக்கு . (தண்டி. 95)

முதல் மூவடி மடக்கியது -

{Entry: M13b__162}

எ-டு : ‘காம ரம்பயில் நீர மதுகரம்
காம ரம்பயில் நீர மதுகரம்
காம ரம்பயில் நீர மதுகரம்
நாம ரந்தை உறநினை யார்நமர்.’

கா மரம் பயில் நீர மதுகரம், காமரம் பயில் நீர; மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உற நமர் நினையார் - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.

“சோலைகளிலுள்ள மரங்களில் நெருங்கிய வண்டுகள், காமரம் என்ற பண்ணினைப் பாடும் நீர்மையுடையன. தேனைக் கொண்ட மன்மதனாருடைய அம்புகள் வேல் போன்று கூரியவாக உள்ளன. வேனிற்காலம் எதிர்ப்படவும் நாம் துன்புறுதலை நம்தலைவர் நினைக்கவில்லையே!” இப்பாடல், பிரிந்த தலைவி வேனிற்காலத்து வருந்துவதாக நிகழ்கிறது. இதன்கண், முதல் மூவடிகளும் மடக்கியவாறு . (மூன்றாமடிக்கண், மது - வேனிற் பருவம்; கரம் - எதிர்ப்படுதல்.) (தண்டி. 96 உரை.)

முதலடி ஆதி மடக்கு -

{Entry: M13b__163}

நான்கடிச் செய்யுளுள் முதலடி முதல் இருசீர்கள் மடக்கி வரத் தொடுப்பது.

எ-டு : ‘துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்க
உறைவார்க்கும் உண்டாங்கொல், சேவல் - சிறைவாங்கிப்
பேடைக் குரு(கு) ஆரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக்(கு) உருகா மனம்?’

“நெய்தல் நிலத் தலைவ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத் துணைவர் பிரிதலாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும் இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம் அப் பிரியப்பட்ட மகளிருக்கும் உண்டோ?” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடி யில் ‘துறைவா’ என்ற முதற்சீர் மடங்கி வந்தவாறு. (தண்டி. 95 உரை.)

முதலடி ஒழிந்த மடக்கு -

{Entry: M13b__164}

‘இரண்டாமடி, மூன்றாமடி, நான்காமடி மடக்கு’ நோக்குக.

முதலடி, நான்காமடியாக மடக்கியது.

{Entry: M13b__165}

எ-டு : ‘மறைநுவல் கங்கை தாங்கினார்
நிறைதவ மங்கை காந்தனார்
குறைஎன அண்டர் வேண்டவே
மறைநுவல் கங்கை தாங்கினார்.’

கங்கை - தேவகங்கையாம் ஆறு; கம் - தலை.

நிறைந்த தவத்தையுடைய பார்வதியின் துணைவராம் சிவபெருமான் வேதங்கள் புகழும் கங்கையைச் சடையிலே தாங்கினார்; உதவிவேண்டித் தேவர்கள் வேண்டவே, இரகசி யங்களைப் பிறர்க்கு உபதேசித்த பிரமனுடைய தலையை (-பிரம கபாலத்தை)த் தம் கையின்கண் தாங்கினார் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் நான்காம் அடிகள் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.)

முதலடி மூன்றாமடி நான்காம் அடிகளாக மடக்கியது -

{Entry: M13b__166}

‘இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு’ நோக்குக.

முதலடியும் மூன்றாமடியும் மடக்கியது -

{Entry: M13b__167}

எ-டு : ‘கடன்மேவு கழிகாதல் மிகநாளு மகிழ்வார்கள்
உடன்மேவு நிறைசோர மெலிவாள்தன் உயிர்சோர்வு
கடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள்
உடன்மேவு பெடை கூடும் அறுகாலும் உரையாகொல்!’

அடி 3, 4 கடன் மேவு கழிகாதல் மிக நாளும் மகிழ்வார்கள் உடன் மேவும் பெடை (யொடு) கூடும் அறுகாலும் உரையாகொல் என்று பிரித்துப் பொருள் செய்க.

“முறையாகப் பொருந்தும் மிக்க காதல் சிறக்க நாடோறும் மகிழ்வார் பலர்; ஆயின், தலைவி தன்னொடு பொருந்திய நிறை என்ற பண்பு சோர மெலிகிறாள். இவளுடைய உயிர் தளர்வதனை, கடலை அடுத்த உப்பங்கழிகளில் மகிழ்ச்சி மிக நாடோறும் களிப்பு மிக்க பூக்களிலுள்ள தேன்களைப் பெடையொடு கூடி அருந்தும் வண்டுகளும் தலைவற்கு உரையாபோலும்” என்று, தோழி, தலைவன் சிறைப்புறமாகக் கூறிய இப்பாடற்கண், முதலடியும் மூன்றாமடியும் மடக்கிய வாறு. (தண்டி. 96 உரை.)

முதலடியோடு இரண்டாமடி நான்காமடி ஆதி மடக்கு -

{Entry: M13b__168}

இது மூன்றாமடியொழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.

எ-டு : ‘மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும்
கலையும் கலையும் கடவும் - தொலைவில்
அமரில் எமக்கரணாம் என்னுமவர் முன்னிற்
குமரி குமரிமேற் கொண்டு.’

குமரி, மலையும் அலையும் மகிழ்ந்து உறையும்; கலையும் வேயும்; கலையும் கடவும்; அரணாம் என்னுமவர்க்கு அரிமேல் கொண்டு முன் நிற்கும் என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.

குமரியாகிய கொற்றவை, மலையையும் கடலையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, பிறைச்சந்திரனை வேய்ந்து, ஆண்மானை வாகனமாகக் கொண்டு விளங்குவாள்; அழிவற்ற போரில் தமக்குப் பாதுகாவலாக வேண்டும் என்று இறைஞ்சுபவர்க்குச் சிங்கத்தின்மேல் ஏறிக்கொண்டு வந்து முன் நிற்பாள் என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் இரண்டாம் நான்காமடிகள் மடக்கியவாறு.(தண்டி. 95 உரை.)

முதலடியோடு இரண்டாமடி மூன்றாமடி ஆதிமடக்கு -

{Entry: M13b__169}

இஃது ஈற்றடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.

எ-டு : ‘இறைவா இறைவால் வளைகாத்(து) இருந்துயார்
உறைவார் உறைவார் புயலால் - நறைவாய்ந்த
வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக்
கண்டளவில் நீர்பொழியும் கண்.’

இறைவா, இறை வால் வளை; உறைவார் உறை வார் புயலால்; வண்தளவு, வண்டு அளவு - எனப் பிரித்துப் பொருள் செய்க.

“தலைவ! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமான முல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள் ஆடுதலைக் கண்ட அவ்வளவில் கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ள வெள்ளிய வளையல்களைக் கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டிருந்து யாவர் உயிர் வாழ்தல் கூடும்?” என்று தோழி கார்ப்பருவத்தே தலைவி நிலையைக் கூறித் தலைவன் பிரிவு விலக்கிய இப்பாடற்கண், முதல் மூன்றடியும் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.)

முதலடியொடு நான்காமடி ஆதி மடக்கு -

{Entry: M13b__170}

எ-டு : ‘மானவா மானவா நோக்கின் மதுகரம் சூழ்
கான்அவாம் கூந்தல் என் காரிகைக்குத் - தேனே
பொழிஆரத் தார்மேலும் நின்புயத்தின் மேலும்
கழியா கழியா தரவு.’

மானவா, மான் அவாம் நோக்கின்; கழியா, கழி, ஆதரவு - என்று பிரித்துப் பொருள் செய்க.

“மனுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினை யும் வண்டு சூழும் மணம் நாறும் கூந்தலையும் உடைய என் மகளுக்கு, தேனைப் பொழியும் உன் ஆத்திமாலைமேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க ஆசை நீங்காது” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடியும் நான்காமடியும் முதலில் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95)

முதலடியொடு மூன்றாமடி ஆதி மடக்கு -

{Entry: M13b__171}

எ-டு : “அடையார் அடையார் அரண்அழித்தற்(கு) இன்னல்
இடையாடு நெஞ்சமே ஏழை - யுடை ஏர்
மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம்
குயிலாமென் றெண்ணல் குழைந்து.”

அடையார் அடை ஆர் அரண்; ஏர் மயிலாம், அயிலாம் கண் என்று பிரித்துப் பொருள் செய்க.

“பகைவர் அடையும் அரிய அரணை அழித்தற்கு முயல்வார் படும் இன்னல் போன்ற இன்னலுற்றுத் தடுமாறும் மனமே! நீ இவ்வேழை (-தலைவி) யினுடைய ஏர், மயில் போன்றது; மதர் நெடுங்கண், அயில் (-வேல்) போன்றன; மாற்றம் (-சொல்), குயில் போன்றது என்று உருகி நினைத்தலைத் தவிர்” - எனத் தலைவியது அருமை நினைந்து தலைவன் நெஞ்சிற்குக் கூறிய இப்பாடற்கண், முதலடியும் மூன்றாமடியும் அடிமுத லில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.)

முதலடியொடு மூன்றாமடி நான்காமடி ஆதி மடக்கு -

{Entry: M13b__172}

இஃது இரண்டாமடி ஒழிந்த மூவடி ஆதி மடக்கு எனவும் படும்.

எ-டு : ‘கொடியார் கொடியார் மதில்மூன்றும் கொன்ற
படியார் பனைத்தடக்கை நால்வாய்க் - கடியார்
உரியார் உரியார் எனைஆள ஓதற்
கரியார் கரியார் களம்.’

கொடியார், கொடி ஆர் மதில்; (நால்வாய்) உரியார், (எனை ஆள) உரியார்; ஓதற்கு அரியார், களம் கரியார் - என்று பிரித்துப் பொருள் செய்க.

கொடியவராகிய முப்புர அசுரரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும் அழித்த இயல்பினர்; பருத்த பெரிய கையையும், தொங்கும் வாயினையும் உடைய யானையின் அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளு தற்கு உரியவர்; தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்தவர் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் மூன்றாம் நாலாம் அடிகள் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)

முதலீரடி மடக்கு -

{Entry: M13b__173}

எ-டு : “விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகம்
விரைமேவும் நெறியூடு தனிவாரல் மலைவாண!
நிரை மேவும் வளை சோர இவளாவி நிலைசோரும்.“

விரை மேவு மதம் ஆய இடர் கூடு கடு நாகங்களை இரை மேவும் மதம் ஆய விடர் கூடும் கடு நாகம் விரை(தல்) மேவும் நெறி - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.’

“மலைநாட! நறுமணம் கமழும் மதநீரையுடைய துன்பம் உறும் கொடிய யானைகளை இரையாக விரும்பும் வலிய குகைகளில் தங்கும் கடிய பாந்தள்கள் விரைதலுறுகின்ற மலைவழியிலே தனியே வாராதே. வரிசையாக அணிந்த வளையல்கள் சோர இவள் உயிர் வாடுவாள்” எனத் தோழி தலைவனை ஏதம் கூறி இரவு வருதலை விலக்கிய இப்பாட லில், முதல் இரண்டடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை)

முதலீரடியும் கடையீரடியும் மடக்கு -

{Entry: M13b__174}

எ-டு : ‘பணிபவ நந்தன தாக மன்னுவார்
பணிபவ நந்தன தாக மன்னுவார்
அணியென மேயது மன்ப ராகமே
அணியென மேயது மன்ப ராகமே.’

பணி பவனம் தனது ஆகம் மன்னுவார், பணி (- கீழான) பவம் (-பிறப்பு) நந்து (-இறப்பு) அந் அது ஆக (-இல்லையாக) மன்னுவார்; அன்பர் ஆகம், மன் பராகம் - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.

பாம்புகளுக்கு இருப்பிடமாகத் தமது மார்பைக் கொடுப்பவர்; கீழான பிறப்புஇறப்புக்கள் இன்றி நிலைபெற்றிருப்பவர்; அழகு என்று பொருந்தியதும் அன்பர் இதயமே; அலங்காரம் என்று தரித்துக்கொள்வதும் நிலைபெற்ற திருநீறே (பராகம் - பொடி) என்று பொருள்படும் இப்பாடலில், முதலீரடியும் கடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.)

முதலொடு இடை மடக்கு -

{Entry: M13b__175}

முதலடி முதலொடு இடை மடக்கு, இரண்டாமடி முத லொடு இடைமடக்கு, மூன்றாமடி முதலொடு இடைமடக்கு, நான்காமடி முதலொடு இடைமடக்கு, முதலிரண்டடியும் முதலொடு இடைமடக்கு, முதலடியும் மூன்றாமடியும் முதலொடு இடைமடக்கு, முதலடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு, கடையிரண்டடியும் முதலொடு இடை மடக்கு, இடையிரண்டடியும் முதலொடு இடை மடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு, முதல் மூன்றடியும் முதலொடு இடை மடக்கு, இரண்டா மடியொழிந்த ஏனை மூன்றடியும் முதலொடு இடை மடக்கு, முதலடி யொழித்த ஏனை மூன்றடியும் முதலொடு இடைமடக்கு, ஈற்றடி ஒழித்த ஏனை மூன்றடியும் முதலொடு இடைமடக்கு, நான்கடியும் முதலொடு இடைமடக்கு என, முதலொடு இடைமடக்குப் பதினைந்து வகைப்படும். (மா.அ. 258, 259 உரை.)

முதற்சீர் ஒழித்து நான்கடியும் முற்று மடக்கு -

{Entry: M13b__176}

எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர்
இனைய மாலைய மாலைய மாலைய
எனைய வாவிய வாவிய வாவிய
இனைய மாதர மாதர மாதரம்.’

அனைய கா அலர் காவலர் காவலர்; இனைய - (வருந்த) மாலைய (மயக்கம் தரும்) மாலைய (- இயல்பின) மாலைய (மாலைக் காலங்கள்); என்னை அவாவிய ஆவிய (-உயிர் போன்ற) வாவிய (- தாவிய) இனைய மாது அரம்; ஆதரம் (-ஆசை) மா தரம் (- பேரளவிற்று) - என்று பிரித்துப் பொருள் செய்க.

“அத்தன்மைத்தாகிய சோலையில் மலர்களாகிய மன்மத பாணங்களை நம் தலைவர் விரும்பவில்லை; நாம் வருந்து வதற்குரிய மயக்கத்தைத் தரும் இயல்பினையுடையன, மாலைப் பொழுதுகள்; என்னை விரும்பிய உயிர் போன்ற, என் விருப்பத்திற்கு மாறாக மனம் தாவிய இந்தத் தோழி, அரத்தை ஒத்தவள்; ஆசையோ எனக்கு மிக்குளது” என்று தலைவி மாலையிற் புலம்பியவாறாக நிகழும் இப்பாடற்கண், நான்கடியும் முதற்சீர் ஒழிய முற்றும் மயக்கியவாறு. (தண்டி. 95)

முரச பெந்தம் -

{Entry: M13b__177}

மிறைக்கவி வகைகளுள் ஒன்று.

பாடல்

போ த வா ன து வா த ரா

மா த வா த ண வா த நா

நா த வா ண த வா ர வா

வே த வா ன து வா ர கா

முதலடி - நான்கடிகளையும், இம்முறையே நெடுவார் குறுவார்களாகப் போக்கிக் காண்க.

பதவுரை -

போத - ஞானவானே!

வானது ஆதரா - வானவர் ஆதரிக்கப்பட்டவனே!

மாதவா - திருமகள் காந்தனே!

நா தணவாத நாத - நாவை விட்டு நீங்காத என் நாதனே!

தவா அரவா - அழிவில்லாத அராவை யுடையவனே!

வான வேத துவார கா (எனச் சொல் மாற்றுக) - பரமபதமிட மாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமை யுடைய வேதத்தை வாயிலாக உடையோனே! என்னைக் காப்பாயாக! (மா. அ. 284 உரை)

முற்று ஆதி இடை மடக்கு -

{Entry: M13b__178}

எ-டு : ‘ கொண்டல் கொண்டலர் பொழில்தொறும் பண்ணையாய்
பண்ணை யா யத்துள்ளார்
வண்டல் வண்டலர் தாதுகொண் டியற்றலின்
வரு
மண மண ல்முன்றில்
கண்டல் கண்டக மகிழ்செய ஓதிமம்
கலந்
துறை துறை வெள்ளம்
மண்டல் மண்டல முழுதுடன் வளைதரு
வளைதரு மணிவேலை.’

கொண்டல் கொண்டு அலர், பண்ணினை ஆயும் பண்ணை, வண்டல் வண்டு அலர் தாது, கண்டல் கண்டு, கலந்து உறை துறை, மண்டல் மண்தலம், வளைதரு வளை தரு - எனப் பிரித்துப் பொருள் செய்க.

“உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கும் சங்குகளைக் கொழிக் கும் அழகிய கடலே! கீழ்க்காற்றைக்கொண்டு பூக்கின்ற சோலைகள்தொறும், இசையை ஆராயும் விளையாடற் சிறுமியர் சிற்றிலை வண்டுகளால் வெளிப்படும் மகரந்தத் தூள்களைக் கொண்டு இயற்றுதலின் மணம் வீசவும், மணற் பகுதியிலே தாழையைக் கண்டு மனம் மகிழ் கூரவும், அன்னங்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும் நீர்த்துறையில் வெள்ளத்தைக் கொண்டு ஏறாதொழிவாயாக!” எனச் சிறுமியர்விளை யாடல் கண்டு மகிழும் தாயர் கடலைப் பரவிய இப்பாடற் கண், நான்கு அடிகளிலும் முதலிலும் இடையிலும் இடை யிட்டு மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)

முற்று ஆதி இடையிட்ட மடக்கு -

{Entry: M13b__179}

எ-டு : ‘ தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சேர்ந்த
தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தம்
தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை இடைதோய்ந்
தோடு தண்புனல் நித்திலம் துறைதொறும் சொரியும்.’

தோடு கொண்டு - கூட்டம் ;

தோடு கொண்ட - பூவின் இதழ்;

தோள் துதைந்த, (தோய்ந்து) ஓடு தண்புனல் - எனப் பிரித்துப் பொருள் செய்க.

“கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ் கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம்மகளிருடைய தோள்களில் பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்துப் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்து ஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக் கும்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தோடு என்ற சொல், பாடலின் நான்கடிகளிலும் பிறசொற்றொடர்கள் இடையிட்டு வர, அடிமுதற்கண் மடக்கி வந்தமை காணப் படும். (தண்டி. 95 உரை.)

முற்று ஆதி இறுதி மடக்கு -

{Entry: M13b__180}

எ-டு : ‘ நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல்கோடல்
வரையா வரையா மிருள்முன்வரு மாலைமாலை
விரையா விரையா எழுமின்ஒளிர் மேகமேகம்
உரையா உரையா ரினும்ஒல்லன முல்லைமுல்லை .’

“கோடல்! நிரையா ஆநிரை மணிபோல் நிறை கோடல், வரையா அரை யாம இருள் முன் வரும் மாலை மாலை, விரையா, இரையா மின் ஒளிர் மேகம் எழும், முல்லை முல்லை, ஏகம் உரையா உரையாரினும் ஒல்லன.” - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். யாமிருள்: அகரம் தொகுத்தல்.

“காந்தளே! வரிசையாக வருகின்ற பசுக்கூட்டங்களின் மணி ஓசையைப் போல எங்கள் நிறையைக் கவராதே. அளவிட முடியாத அரையாம இருளுக்கு முன்வரும் மயக்கம் தரும் மாலைக்காலத்தில், விரைந்து ஒலித்துக்கொண்டு மின்ன லாகிய ஒளியைத் தரும் மேகங்களும் எழும். ஒன்றும் உரை யாத புகழாளராகிய தலைவரினும், முல்லைநிலத்து முல்லைக்கொடிகளும் பகையாயின” எனக் கார்ப்பருவ மாலைக் காலத்துத் தலைவி தலைவன் பிரிவால் வருந்திக் கூறிய இப்பாடற்கண், அடிதோறும் முதலும் இறுதியும் மடக்கியமையால், இது முதலிறுதி முற்று மடக்கு ஆம். (தண்டி. 95)

முற்று ஆதி மடக்கு -

{Entry: M13b__181}

நான்கடியும் முதலில் மடக்கி வரும் பாடல்.

எ-டு : ‘ வரைய வரைய சுரம்சென்றார் மாற்றம்
புரைய புரைய எனப் பொன்னே! - உரையல்
நனைய நனைய தொடைநம்மை வேய்வர்
வினையர் வினையர் விரைந்து.’

வரைய - களவொழுக்கத்தை நீக்க, மலைகளையுடைய;

புரைய - மேம்பட்டவை, குற்றமுடையவை;

நனைய - மதுவினையுடைய, குளிர்ச்சியினையுடைய;

வினையர் - வினையில் வல்ல தலைவர், வினையை முடிப்பர் - எனப் பொருள் செய்க.

“நீக்கத்தக்க களவொழுக்கத்தை நீக்க, (வரைவிற்கு வேண்டும் பொருள் தேடிவர) மலைகளையுடைய சுரம் கடந்து சென்ற தலைவருடைய மேம்பட்ட சொற்கள் குற்றமுடையன என்று இதுபோது சொல்லற்க! பொன் போன்றவளே! மதுவினை யுடைய குளிர்ச்சியையுடைய மாலையை, எடுத்த செயலைச் செய்து முடிக்கவல்ல நம் தலைவர் தம் வினையை முடித்தவ ராய் விரைந்து வந்து, நமக்குச் சூட்டுவார்” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிவிடை ஆற்றுவித்த இப்பாடற்கண், நான்கடியும் முதற்கண் மடக்கியவாறு. (தண்டி. 95)

முற்று இடை மடக்கு -

{Entry: M13b__182}

பாடலின் நான்கடிகளிலும் ஒவ்வோரடி இடையிலும் ஒரே சீர் மடக்கி (வெவ்வேறு பொருள்பட) வருதல்.

எ-டு : ‘பரவி நாடொறும் படியவாம் பல்புகழ் பரப்பும்
இரவி சீறிய
படியவாம் பரிஎரி கவர
விரவி மான்பயில்
படியவாம் வேய்தலை பிணங்கும்
அருவி வாரணம்
படியவாம் புலர்பணை மருதம்!’

படி அவாம், படிய வாம், படிய ஆம், படிய ஆம் என்று பிரித்துப் பொருள் செய்க. (உலகினர் விரும்பும், படியுமாறு தாவிச் செல்லும், தன்மைய ஆகும், படிந்து கலக்க ஆம் (-நீர்) - எனமுறையே பொருள் அமையும்)

உலகினர் நாள்தோறும் போற்றி விரும்பும் பல புகழ்களைப் பரப்புகின்ற சூரியகுலத்துச் சோழமன்னனால் கோபிக்கப் பட்ட நாடுகள், படியுமாறு தாவிச் செல்லும் விரைந்த செலவினை யுடைய நெருப்புக் கவரவே, தம்முள் விரவி, மான்கள் பயிலத்தக்க தன்மையுடைய முல்லை நிலங்கள் ஆம்; அருவிநீர் போன்று தெளிந்த குளங்களில் அவன் யானைகள் படிந்து கலக்கவே, முன்பு வயல்களையுடையவாயிருந்த அம் மருதநிலங்கள் இதுபோது நீர் வற்றி மூங்கில்கள் தம்முள் பிணங்கிச் செறிந்திருக்கின்ற வறண்ட பாலைநிலம் ஆம்.

இவ்வாறு நான்கடியிலும், சொற்றொடர் பல இடையிட்டு வர, இடையே மடக்கு வந்தவாறு. இதில் பிறிதொரு வகை வருமாறு.

எ-டு : ‘மனமேங் குழைய குழை யவாய் மாந்தர்
இனநீங்
கரிய கரிய - புனைவதனத்
துள்
வாவி வாவி க் கயலொக்கும் என் உள்ளம்
கள்
வாள வாள வாங் கண்.’

ஒவ்வோரடியிலும் இடையே அசையோ சீரோ மடக்கி வருவதும் முற்று இடைமடக்காம்.

என் உள்ளம் கள்வாளுடைய வாள் அவாம் கண், மனம் ஏங்கு உழைய, குழை அவாய், மாந்தர் இனம் நீங்க அரிய, கரிய, வதனத்துள் வாவி, வாவிக் கயல் ஒக்கும் - என்று பொருள் செய்யப்படும்.

“என் மனத்தைக் களவு கொண்ட தலைவியின் வாளை யொத்த கண்கள் என் மனத்தை ஏங்க வைக்கும் மான்பார்வை யொடு, காதணி வரை நீண்டு, கண்டவர் நீங்க மனமில்லாமை செய்தலுடையவாய், கரியனவாய், முகத்தில் உலாவி, குளத்தி லுள்ள கயல்மீன்களை ஒத்துள்ளன” என்று தலைவன் தலைவியின் கண்களை நயந்துரைத்த இப்பாட்டின்கண், குழைய, குழைய - கரிய, கரிய - வாவி, வாவி - வாள, வாள - என்பன நான்கடி இடைமடக்காக வந்தவாறு.

(தண்டி. 95 உரை)

முற்று இடையிறுதி இடையிட்ட மடக்கு -

{Entry: M13b__183}

ஒரு பாடலின் நான்கடிகளிலும் ஒரே சொல் இடையிலும் இறுதியிலும் இடையிட்டு மடக்கி வந்து பொருள் தருமாறு அமையும் மடக்கு வகை.

எ-டு : ‘வா மான மான மழைபோல்மத மான மான
நா
மான மான நகமாழக மான மான
தீ
மான மான வர் புகுதாத்திற மான மான
கா
மான மான கவின்கான்கனல் மான மான .’

வாம் மான மான; மழைபோல் மத மானம் (அம் சாரியை) ஆன; நாம் ஆன மான நகம் ஆழ் அகம் மானம் (அம் சாரியை) ஆன; தீம் (ஐகாரம் கெட்டது) ஆன; மானவர் புகுதாத் திறமான ஆன; கா மான மான கவின் கான் கனல் மானம் ஆன - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். கவின் கான் : எழுவாய்.

“கவின் கானங்கள், தாவிச் செல்லும் மான்களினுடைய பெருமையையுடைய; மேகம் போன்ற மதயானைகளை உடையன; அச்சம் தரும் விலங்குகளுடைய நகங்கள் ஆழ்ந்து கிழிக்கும் மார்பினை மான்கள் உடையவாயின (-அத்தகைய மான்கள் பயில்வன) ; தீமையே வடிவமாயின; மக்கள் உள்ளே நுழையாத தன்மையுடையன ஆயின. சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய அக்காடுகள் (இதுபோது வேனிலால்) நெருப்பு வடிவினையுடைய ஆயின” என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘மான்’ என்ற சொல் இடையிடாதும் இடை யிட்டும் பாட்டின் இடையிலும் இறுதியிலும் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)

இம்மடக்கில் பிறிதொருவகை வருமாறு :

‘நான்கடிகளிலும் இடைச்சீரும் இறுதிச்சீரும் மடக்கிவரும் மடக்கும் சீரின் எழுத்துக்கள் ஒவ்வோரடியிலும் வேறாக இருக்கலாம்.

எ-டு : ‘மாறர் குருகூர் குருகூர் வடி வேல வேல
நாறு
மளகத் தளக த் துணை வீகை யீகை
யாறி
னகலா தகலாத தாமாக மாக
நீற
னிலவா னிலவா நினைத் தேக லேகல்’

மாறர் குருகு ஊர் குருகூர் வடிவேல! ஏலம் நாறும் அளகத்தள் அகத்துள் நைவு ஈகை ஈகையா(ற்)றின் அகலா. தகலாததாம். ஆகம் மாகம் நீறு அல் நிலவால் நிலவா. நினைத்தே கல் ஏகல் -எனப் பிரித்துப் பொருள் செய்க.

கற்பிடைத் தலைவன்பிரிவால் தலைவிக்கு நிகழக்கூடிய ஆற்றாமையைக் கூறித் தோழி தலைவனைச் செலவழுங் குவித்தது இது.

“சடகோபருடைய, சங்குகள் தவழப்பெற்ற, குருகூரிலுள்ள கூரிய வேலை ஏந்திய தலைவ! ஏலம் கமழும் கூந்தலையுடைய தலைவியது மனத்துயர், பொன்னைத் தேடித்தரும் நெறியால் நீங்காது. நின் பிரிவு தகுவதாகாது. இவள் மேனி, வானம் நீறாகும்படி இரவில் எழும் நிலவினால், அழகுகள் நிலவமாட்டா (-அழகு கெடும்). இதனை நினைத்தே கற்கள் நிறைந்த கடங்களின் வழியே பொருள் தேடச் செல்லுதலை நீக்குக” என்று பொருள்படும் இப்பாடற்கண், அடிதோறும் வெவ்வேறு சீர்கள் இடையும் இறுதியும் மடக்கி வந்தவாறு. (மா. அ.பாடல். 714)

முற்று இறுதி மடக்கு -

{Entry: M13b__184}

வெவ்வேறு சொற்கள் நான்கடியிலும் இறுதியில் மடக்கி வருவது.

எ-டு : மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான்
வேலை அமரர் கடைவேலை - வேலை
வளையார் திரைமேல் வருமன்ன மன்ன
இளையா ளிவளை வளை.

வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்ற சொற்கள் முறையே நான்கடிகளிலும் ஈற்றில் மடக்கியவாறு.

அமரர் கடைவேலை, அவ்வேலைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன இவளை அருளாது, வஞ்சியான், இவள் வளைகளை வஞ்சியான் - எனப் பிரித்துப் பொருள் செய்க.

பண்டு தேவர்கள் பாற்கடல் கடைந்தபோது, அக்கடலின் வளைகளைக் கொழித்துவரும் அலைகளின்மேல் தோன்றிய அன்னம் போன்ற திருமகளை ஒத்த இவளை, வஞ்சிநகரை ஆளும் வேந்தன், தன் மாலையைத் தாராது வளைகளைக் கவர்ந்து வஞ்சிக்க மாட்டான்” எனத் தாயர் ஆற்றியவாறு கூறும் இப்பாடற்கண், முற்று இறுதி மடக்கு வந்தவாறு. (தண்டி. 95)

முற்றும் முற்றுமடக்கு (இடையிட்டது) -

{Entry: M13b__185}

முதல் இடைகடை யென ஒவ்வோரடியிலும் மூவிடத்தும் சொற்கள் மடக்கி வருவது.

எ-டு : ‘ களைகளைய முளரிவரு கடை கடை ய மகளிர்கதிர் மணியுமணியும்
வளைவளை யக் கரதலமு மடைமடைய மதுமலரு மலையமலைய
இளையிளை யர் கிளைவிரவி யரியரி யின் மிசைகுவளை மலருமலருங்
கிளைகிளை கொள் இசை அளிகள் மகிழ்மகிழ் செய் கெழுதகைய மருதமருதம் .’

முளரிக்களை களை(ய) அருகுஅடை கடைய மகளிர் கதிர் மணியும், அணியும் வளை வளைய கரதலமும், அடை அம்மடைய மது மலரும், மலைய மலைய, இளைய இளையர் கிளைவிரவி அரிஅரியின்மிசை குவளைமலரும் அலரும்; கிளைகிளைகொள் இசை அளிகள் மகிழ் கெழுதகைய மருத (மரங்களையுடைய) மருதம் மகிழ்செய்யும் - என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.

தாமரையாகிய களைகளைக் களைய அவற்றின் அருகே அடையும் உழத்தியர் அணிந்த ஒளி வீசும் மணிகளும், அணிந்திருந்த வளைகளால் வளைக்கப்பட்ட கைகளும், அடைக்கப் பட்ட மடையிலுள்ள தேனை உடைய பூக்களும், ஒன்றோ டொன்று நலன் அழிப்பதற்கு மாறுபட, மிக்க இளைஞர் குழாம் கூடி அரிகின்ற நெற்கதிர்கள்மீது குவளைப் பூக்களும் மலரும். கிளை என்னும் நரம்பின் ஒலி ஏனை ஒலியினங்களொடு தொடர்பு கொள்ளும் ஓசை போலப் பாடும் வண்டுகள் தேனையுண்டு மகிழுமாறு விளக்கமுடைய மருதமரங்களையுடைய மருத நிலம் மகிழ்ச்சியைத் தரும் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அடிதோறும் முதல் இடை கடை என மூன்றிடங்களிலும் வெவ்வேறு சொற்கள் மடக்கி வந்தன. இடையே பிற சொற்கள் இடையிடுதலின் இதனை ‘இடையிட்ட முற்று மடக்கு’ என்றும் கூறுப. (தண்டி. 95)

முற்றும் முற்று மடக்கு (இடையிடாதது) -

{Entry: M13b__186}

ஒரே அடி நான்கடியுமாக வரும் மடக்கு; இந்நான்கடி மடக்கினை ஏகபாதம் எனவும் கூறுப. (திருஞானசம்பந்தர் அருளிய முதல்திருமுறைக்கண் (பண்முறைத் தேவாரம்) 127 ஆம் பதிகம் பன்னிரண்டு பாசுரங்களும் இவ்வகையின.

எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின’

வான் அகம் தரும் இசைய ஆயின, வானகம் தரும் இசை அவாயின; வானகம் தரும் இசைய ஆயின, வான் நகம் தரு மிசைய ஆயின - எனப் பிரித்து பொருள் காண்க.

வானகம் - ஆகாயம், விண்ணுலகம், பெரிய மலை;

இசை - ஓசை, எழுச்சி, புகழ்.

மேகங்கள் கடலிடத்தில் கொடுக்கும் ஓசையை உடையன- வாய் ஆகாயத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் எழுச்சியை விரும்பின; விண்ணுலகத்தில் ஓங்கும் புகழுடையனவாகிய பெரிய மலைகள் மேலிடத்தில் மரங்களைக் கொண்டுள்ளன. மிசை - மேலிடம். (தண்டி. 96 உரை)

முன் முடுகு வெண்பா -

{Entry: M13b__187}

முன்னிரண்டடிகள் முடுகிய சந்தம் கொண்டு வரும் வெண்பாவகை. ‘புளிமா’ ச்சீர் தொகுப்பின் சந்தம் முடுகும்.

மூவகை மடக்கு -

{Entry: M13b__188}

எழுத்து மடக்கு, சொல் மடக்கு, அடிமடக்கு என்பன. அணிநூலார் இம்மூவகை மடக்கினையே இடைவிடாத மடக்கு, இடைவிட்ட மடக்கு, இடைவிட்டு இடைவிடாத மடக்கு என மூவகையாகப் பகுப்பர். (மா. அ. 253)

மூவடி மடக்கு -

{Entry: M13b__189}

ஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் மடக்கியது, ஈற்றயலடி ஒழிந்த ஏனைய மூவடியும் மயக்கியது, முதலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது, முதலயலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது - என நால்வகைத்து. எடுத்துக்காட்டுக் கள் தனித்தனித் தலைப்புள் காண்க. (தண்டி. 96 உரை)

மூன்றாமடி ஆதிமடக்கு -

{Entry: M13b__190}

நான்கடிச் செய்யுளில் மூன்றாம் அடியின் தொடக்கத்தில் முதற்சீர் மடக்கி (இரண்டாம் சீராகவும்) வருவது.

எ-டு : ‘தேங்கானல் முத்(து) அலைக்கும் தில்லைப் பெருந்தகைக்கு
ஓங்காரத் துட்பொருளாம் ஒண்சுடர்க்கு - நீங்கா
மருளா மருளா தரித்துரைக்கும் மாற்றம்
பொருளாம் புனைமாலை ஆம்.’

மருளாம் - ஆசையாகிய; மருள் - பாசம்

“கானலில் முத்து அலைக்கும் தில்லையில் பெருந்தகையாய், ஓங்காரத்து உட்பொருளாம் சோதிவடிவாகிய சிவபெரு மானுக்கு, நீங்காத ஆசையாகிய பாசத்தினை மேற்கொண்டு அடியார்கள் கூறும் சொற்கள் மேம்பட்ட பொருள்களும் அணியும் மாலைகளும் ஆம்” என்று பொருள் படும் இப்பாடற்கண், மூன்றாமடி ஆதியில் ‘மருளா’ என்ற சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95)

மூன்றாமடி ஒழிந்த மடக்கு -

{Entry: M13b__191}

எ-டு : ‘கோவ ளர்ப்பன கோநக ரங்களே
கோவ ளர்ப்பன கோநக ரங்களே
மேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ்
கோவ ளர்ப்பன கோநக ரங்களே’.

கோ - பெரிய, ஒளி, அரசன், மேம்பாடு, பூமி என்ற பொருள் களிலும்,

கோநகரங்கள் - மேம்பட்ட ஊர்கள், இறைவனுடைய ஊர்கள் என்ற பொருள்களிலும் வந்துள்ளன. கோந(ன) கரங்கள் - அரசன் கைகள்.

பெரிய நகரங்கள் ஒளியை மிகுப்பன; அரசன் பெருக்குவன இறைவன் கோயில்களே; கடல் தனது அலையோடும் கரை யோடும் சூழ்ந்திருக்கும் நிலவுலகத்தைக் காப்பன அரசனுடைய கைகளே என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் அடியே இரண்டாம் நான்காம் அடியாக மடக்கி வந்தவாறு. (தண்டி. 96)

மூன்றாமடி நான்காமடியாக மடக்கியது -

{Entry: M13b__192}

எ-டு : ‘தளைவிட் டார்மகிழ் மாறன்தன் வெற்பில்வான்
முளைவிற் போல்நுத லீர்! உங்கள் முன்றில்வாய்
வளைவிற் கோமன் மதனம் படுக்கவோ
வளைவிற் கோமன் மதனம் படுக்கவோ’.

“பற்றற்றார் பரவும் சடகோபன் மலையில் வானவில் போன்ற நெற்றியுடையீர்! உங்கள் இல்லத்து முகப்பில், (வளை விற்கோ-) சங்குவளையல்களை விற்பேனோ, (மன் மதனம் படுக்க-) என்னிடம் நிலைபெற்ற விருப்பம் என் அறிவை அகப்படுத்த, (வளை வில்கோ-) வளைக்கும் கரும்புவில்லை யுடைய என் பகையாகிய (மன்மதன் அம்பு அடுக்கவோ-) மன்மதன் தொடுக்கும் அம்புகளாகிய பூக்களை உங்கள் குழற்குச் சூட்டுவேனோ?” எனத் தலைவன், தலைவி தோழி இருவரிடமும் குறையுற்று நிற்றலைக் கூறும் இப்பாடற்கண், மூன்றாமடி நான்காமடியாக மடக்கி வந்தவாறு. (மா. அ. பாடல் 739).

மூன்றாமடியொடு நான்காமடி ஆதிமடக்கு -

{Entry: M13b__193}

எ-டு : ‘ஆயிரம்பெற் றான் ஒருமூன் றைந்துற்றான் ஆதியர்க்கு,
மேய முதல்வனெனும் மெய்வேதம் - பாய் திரைப்பால்
ஆழியா ன் ஆழியான் அஞ்சிறைப்புட் பாகனெனும்
கோழியான் கோழியான் கோ’.

கண் ஆயிரம் பெற்றான் - இந்திரன்

கண் மூன்று பெற்றான் - சிவன்

கண் மூன்றும் ஐந்தும் உற்றான் - பிரமன்.

பால் ஆழியான் - பாற்கடலையுடையவன்; ஆழியான் - சக்கராயுதத்தை யுடையவன்; கோழியான் - உறையூரிலிருப் பவன், கோழிக்கொடியை உயர்த்த முருகன். கோ - கண்.

பாற்கடலை யுடையவனும் சக்கராயுதம் ஏந்தியவனும் கருடனை ஊர்பவனும் உறையூரில் உகந்திருப்பவனும் ஆகிய திருமால், கோழிக்கொடியையுடைய முருகன், ஆயிரங் கண்ணான் ஆகிய இந்திரன், முக்கண்ணனாகிய சிவபெரு மான், எண்கண்ணனாகிய பிரமன் ஆகிய எல்லோருக்கும் முதல்வன் என்ப.

ஆழியான், ஆழியான் - கோழியான், கோழியான் - மூன்றாமடி நான்காமடி ஆதி மடக்கு. (மா. அ. பாடல் 632)

மூன்றிடத்தும் மடக்குப் பதினைந்து -

{Entry: M13b__194}

மூன்றிடத்தும் மடக்காவது, ஓரடியின் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் எழுத்தோ அசையோ சீரோ மடக்கி வரலாம். இது பதினைந்து வகைப்படும். அவை பின் வருமாறு:

முதலடி மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி மூன்றிடத்தும் மடக்கு, மூன்றாமடி மூன்றிடத்தும் மடக்கு, நான்காமடி மூன்றிடத்தும் மடக்கு, முதலடியும் இரண்டா மடியும் மூன் றிடத்தும் மடக்கு, முதலாமடியும் மூன்றாமடியும் மூன்றிடத் தும் மடக்கு, முதலடியும் நான்காமடியும் மூன்றிடத்தும் மடக்கு, கடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு, இடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி யும் நான்காமடியும் மூன்றிடத்தும் மடக்கு, ஈற்றடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, ஈற்றயலடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, முதலடி ஒழிந்த ஏனை மூன்றிடத்தும் மூவடியும் மடக்கு, முதலயலடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, நாலடியும் மூவிடத்தும் முற்று மடக்கு என்பன. (மா. அ. 261)

மூன்று பொருள் சிலேடை இணைமடக்கு -

{Entry: M13b__195}

எ-டு : ‘மாயன்சேய் வில்லும் மலர்ப்பொழிலும் காஞ்சனமும்
காயம் புதைதிறங்கூர் கச்சியே - நேய
மகத்தா ரகத்தா ரருவினையாட் செய்யு
மகத்தார் மகத்தார்தம் வாழ்வு’.

முதலிரண்டியும் சிலேடை : கடையிரண்டடியும் மடக்கு.

நேயம் அகம் தாரகத்தார் - கருணையை ஆன்மாவுக்கு உயிர் நாடியாக உடையவர்; அருவினை ஆட்செய்யும் மகத்தார் - நீங்குதற்கு அரிய வினைகள் அடிமைசெய்யும் மகத்துவத்தை உடையவர்; மகத்தார் தம் வாழ்வு - செய்யும் யாகத்தில் யூபத்தம்பமாக இருக்கும் திருமாலின் இருப்பிடம்; மாயன் சேய்வில் - திருமாலின் மகனாகிய மன்மதனுடைய கரும்பு வில்; காய் அம்பு உதை திறம் கூர்கச்சி - பிரிந்தவர்மீது கொடிய அம்பு செலுத்தும் காஞ்சி நகர்; மலர்ப்பொழில் காயம் புதை திறம் கூர் கச்சி - பூஞ்சோலைகள் தம் உயர்ச்சி யாலும் செறிவாலும் ஆகாயத்தை மறைக்கும் நிலை மிக்க காஞ்சிநகர்;

காஞ்சனம் - கண்ணாடி; காயம் - தன்னை நோக்கியாரது உடல் பிம்பத்தை; புதை திறம் கூர் கச்சி - தன்னிடம் உட்கொண்டு காட்டும் தன்மை மிக்க காஞ்சி நகர் - என மன்மதனுக்கும் சோலைக்கும் கண்ணாடிக்கும் சிலேடையாக, ‘காயம் புதை திறம் கூர்’ என்னும் தொடர் வந்துள்ளமையால், இப்பாடல் மூன்று பொருள் சிலேடையோடு இணைந்த மடக்காகும், (காயம் புதை திறம் கூர்: முச்சொல்லலங்காரம்) (மா. அ. பாடல் 756).

மூன்றெழுத்தால் வரும் மடக்கு -

{Entry: M13b__196}

ஒரு செய்யுளில் மூன்றே மெய்களும் அவற்றானாய உயிர் மெய்களும் மாத்திரமே வருவது மூன்றெழுத்து மடக்கு என்ற சொல்லணியின் பாற்படும்.

எ-டு : ‘மின்னாவான் முன்னு மெனினு மினிவேனின்
மன்னா வினைவே னெனைவினவா - முன்னான
வானவனை மீனவனை மான வினைவென்வேன்
மானவனை மானுமோ வான்?’

மின்னா வான் முன்னும் எனினும், இனி இளவேனிலில் மன்னாது இனைவேனாகிய என்னை வினவாத வானவனை யும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னான மானவனை வான் மானுமோ - எனப் பிரித்துப் பொருள் செய்க. (மானவன் - சோழன்).

“மின்னி வானம் மழைபெய்யக் கருதும் எனினும், இப்பொ ழுது இளவேனிற் காலத்து மனம் நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத, யாவர்க்கும் மேம்பட்ட சேரனையும் பாண்டியனையும் போர்வினையால் வென்ற வேலினையுடைய மனுகுலத்துச் சோழனை வானம் ஒக்குமோ? ” எனப் பொருள்படும் இப்பாடற்கண், ம - வ - ன - என்ற மூன்றெழுத்துக்களே வந்தமை காணப்படும். (தண்டி. 97 உரை)

மெல்லினப் பாடல் -

{Entry: M13b__197}

எ-டு : ‘மானமே நண்ணா மனமென் மனமென்னு
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான்’

மானமான் மன்னா! மானமே நண்ணா மனம் என்மனம் என்னும், நனி நாணும் ஈனம் ஆம், ஆனா மி(ன்)னல் மின்னி முன்னே நண்ணினும், மானா (-ஒப்பில்லாத) மணிமேனி மான் என்று பிரித்துப் பொருள் கொள்க.

“பெருமை பொருந்திய யானைகளையுடைய தலைவனே! அமையாத மின்னல் மின்னி நீ விடுத்த தூதாகத் தலைவி முன்னே வந்து காட்சி வழங்கினாலும், அதனால் நீ விரைந்து வருகையைக் குறித்து ஆறுதல் அடையாமல், ‘என் மனம் மானமில்லாத மனம்’ என்றும்,‘என் நாணும் மிகக் குறைகிறது’ என்றும், அழகிய மேனியளாகிய தலைவி கூறிக் கொண்டிருந்தாள்” என்று வினைமுற்றி மீண்ட தலைவ னிடம் தோழி கூறிய இப்பாடலில், மெல்லின மெய்களும் மெல்லின உயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 97 உரை)

மெல்லின மெய் வருக்கத்தால் வரும் செய்யுள் -

{Entry: M13b__198}

எ-டு : ‘நின்னைநா னென்னென்னே னின்னைநா னென்னுன்னே
நின்னைநா னின்னெனே னின்னானி - னின்னானா
நாநாநா நின்னுனா னூனநீ நன்னானே
நீநா னெனநீ நினை’

நின்னை நான் என் என்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான் நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம், ஊனம், நின் உன் நான் நீ (த்துள்ள) நான் என நினை; நீ நன்னானே - எனப் பிரித்துப் பொருள் செய்க.

“நின்னை யான் நின் செயல் பற்றி வினவேன்; நின் செயல்களை எக்காரணம் பற்றியும் நினையேன்; உன்னை நான் உன்னைச் சேர்ந்த எனக்கு இன்னா செய்பவனாக நின் தன்னலம் கருதுகின்றாயே என்று கூறமாட்டேன்; நின் னையே விரும்பும் நான் பலவித அச்சங்களையும் குற்றங்களை யும் உறுவேன். என்னை நீத்துவிடும் நீ, நானா இருந்து நினைத்துப்பார். நீ அதனை விடுத்து மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருக்கிறாய்” என்ற பொருளுடைய இப்பாடற்கண், நகரமும் னகரமும் ஆகிய இரண்டு மெல்லெழுத்து வருக்கங் களே வந்துள்ளன. (இ. வி. 689 உரை)

மொழி வழி நிலை -

{Entry: M13b__199}

ஒரு பாடலில் வந்த மொழியே மீண்டும் வர அமைப்பது. இது மடக்கணி வகைகளுள் அடங்கும்.

எ-டு : ‘மாதராள் மாதர்நோக் குண்ட மடநெஞ்சம்
காதலார் காதன்மை காணாதே - ஏதிலார்
வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழில் மானோக்கி
இன்சொல்லா லின்புறுமோ ஈங்கு’.

“இப்பெண்ணின் காதல்பார்வையிற் பட்ட என் மடநெஞ்சம், நான் கொண்ட ஆசையை அறியாது, அயலார் போலத் தோழி யான் அரிதின் பொறுக்குமாறு வன்சொற்கூறி என்னை விலக்குவாளாயின், அது பற்றிக் கவலைப்படாமல் தலைவி இனிமையாகப் பார்த்துக் கண்ணால் பேசிய சொற் களை நினைத்து இன்புறுமோ?” என்று, தலைவன், தன்னைத் தோழி சேட்படுத்தியவழி வருந்திக்கூறிய இப்பாடற்கண், மாதராள், மாதர் - காதலார், காதன்மை - வன் சொல், வன் பொறை - இன்சொல், இன்புறுமோ - எனச் சொன்ன சொல்லே ஒவ்வோரடியிலும் மீண்டு வருதல் மொழிவழி நிலையாம். (வேறு பொருள் படாமையின் மடக்கு ஆகாமை அறிக.) (வீ. சோ. 159 உரை)

மோனை அந்தாதி -

{Entry: M13b__200}

முதலடியின் முதலெழுத்தே அவ்வடியின் ஈற்றெழுத்தாக, அதுவே அடுத்த அடிகளிலும் முதலெழுத்தாகவும் ஈற்றெழுத் தாகவும் வரத் தொடுப்பது.

எ-டு : ‘ மே னமக் கருளும் வியனருங் கல மே
மே வக விசும்பின் விழவொடு வரு மே
மே ருவரை அன்ன விழுக்குணத் தவ மே
மே வதன் திறநனி மிக்கதென் மன மே

இப்பாடற்கண், அடிமோனை எழுத்தாகிய ‘மே’ என்பது பாடல் முழுதும் அந்தாதியாக வந்தவாறு. (யா. க. 52 உரை)

ய section: 3 entries

யமகம் -

{Entry: M13b__201}

தமிழ்நூலார் மடக்கு என்பதனை வடநூலார் யமகம் என்றனர். ‘மடக்கு’ நோக்குக.

யமாயமகம் -

{Entry: M13b__202}

ஒரு சொல்லே நான்கடி முற்றும் மடக்கி வருவது. ‘இயமாவியமகம்’ காண்க.

எ-டு : ‘உமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதரன்’

யாப்பருங்கலம் குறிப்பிடும் சித்திரகவிகள் -

{Entry: M13b__203}

மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற் றிருக்கை, காதைகரப்பு, கரந்துறை பாட்டு, தூசம்கொளல், வாவல் ஞாற்று, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்து இனத்தால் உயர்ந்த பாட்டு, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட்பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, விகற்ப நடை, வினா உத்தரம், சருப்ப தோ பத்திரம், எழுத்துவருத்தனை ஆதியனவும், வடதூற்கடலுள் ஒருங்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடிக்கும் மிறைக்கவிப் பாடல்களுமாம். (யா. வி. சூ. 96)

ர section: 1 entries

ரத பந்தம் -

{Entry: M13b__204}

இரத பந்தம்; ‘இரத பெந்தம்’ காண்க.

வ section: 10 entries

வட்டச்சக்கரம் -

{Entry: M13b__205}

சித்திரகவி வகைகளுள் ஒன்று; நான்கா(i)ரச் சக்கரம், ஆற(i)ரச் சக்கரம், எட்டா(i)ரச் சக்கரம் எனப் பலவகைப் படும். ‘சக்கரம்’ என அடைமொழியின்றிக் கூறுவதே பெரும்பான்மை. (யா. வி. பக். 527)

வல்லினப்பாடல் -

{Entry: M13b__206}

வல்லின மெய்களும் உயிர்மெய்களுமே வந்துள்ள பாடல்.

எ-டு : ‘துடித்தடித்துத் தோற்றத் துடுப்பெடுத்த கோட
றொடுத்த தொடைக்கடுக்கை பொற்போற் - பொடித்துத்
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு’

தடித்து - மின்னல்; துடுப்பு - பூக்குலை; கடுக்கை - கொன்றை; துடி - துடித்தல், நடுங்குதல்.

“நடுங்குதலையுடைய மின்னல் தோன்றவே, காந்தள் பூக் குலைகளை வெளிப்படுத்தின. தொடுத்த மாலைகள் போலக் கொன்றை பொன் போன்ற பூக்களை மலரச் செய்தன. தொடி அணிந்த தோள்களும் இடப்புறம் துடித்தன. மயில்கள் ஆடக் கானகம் புதிய தளிர்களைத் தோற்றுவித்துக் காட்டு கின்றது.” என்று கார்காலம் கண்டு தலைவன் வருகை குறித்துத் தலைவி கூறியது. இப்பாடல். (தண்டி. 97)

வழிமடக்கு -

{Entry: M13b__207}

மடக்கணியில் சீர்தோறும் தொடர்ந்து வரும் ஒருவகை.

எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர்
இனைய மாலைய மாலைய மாலைய
எனைய வாவிய வாவிய வாவிய
வினைய மாதர மாதர மாதரம்’

1. அனைய கா அலர் காவலர் காஅலர் - அத்தன்மைய வாகிய (காமன் அம்புகளாகிய) சோலையின் மலர்களை நம் தலைவர் காத்தல் இலர்;

2. இனைய மாலைய மாலை அ மாலைய - இத்தன்மைத் தாகிய மயக்கத்தைத் தருகிற மாலைப்பொழுதுகள் அத்தன்மையை யுடையன;

3. எனை அவாவிய ஆவிய - என்னை நீங்காது பற்றிக் கொண்டுள்ள உயிரினைப் போன்ற; வாவிய - என் எண்ணத்தைத் தாண்டிச் செயற்படுகின்ற,

4. வினைய - வருத்தும் தொழிலையுடைய

மாது - தோழியானவள்

அரம் - அரத்தினைப் போன்றுள்ளாள்;

ஆதரம் மா தரம் - (தலைவர் பால் யான் கொண்டுள்ள)

ஆசைமிக்க எல்லையுடையதாயுள்ளது.

இப்பாடலில் அடிதோறும் முதற்சீர் நீங்கலாகத் தொடர்ந்து சீர் மடக்கியவாறு (தண்டி. 95)

வன்மைமிக்கு வருதல் -

{Entry: M13b__208}

வல்லெழுத்து மிக்கு வருதல்

எ-டு : ‘தெறுக தெறுக தெறுக பகை தெற்றாற்
பெறுக பெறுக பிறப்பு’

அகர உகர இகர எகர, ஆகார ஐகாரங்களாக உயிர்களால் ஊரப்பட்ட வல்லின உயிர்மெய்களும் வல்லின மெய்களுமே இப்பாடற்கண் வந்தன. (யா. க. 2 உரை)

வாவல் ஞாற்று -

{Entry: M13b__209}

முதலிற் கொடுத்த எழுத்துக்கு ஈற்றடி பாடி; பின்னர்க் கொடுத்த எழுத்துக்கு ஈற்றயலடி பாடி, அதன் பின் கொடுத்த எழுத்திற்கு இரண்டாமடி பாடி, இறுதியாகக் கொடுத்த எழுத்துக்கு முதலடி பாடி முடிக்கும் சித்திரகவி.

வெளவால் தலைகீழாகத் தொங்குவது போல, ஈற்றினின்று தொடங்கி முதலடி முடியப் பாடும்வகை பாடல் அமைத லின், வாவல்ஞாற்று என்ற பெயர்த்தாயிற்று. வாவல்- வெளவால்; ஞாற்று-தொங்குதல். (வீ. சோ. 181 உரை)

இனி யாப்பருங்கல விருத்தியுரையுள்(பக்.539) காணப்படு மாறு:

“வாவல் நாற்றி என்பது ஓர் எழுத்துக் கொடுத்தால் அது முதலாக ஈற்றடி பாடி, பின்னு மோரெழுத்துக் கொடுத்தால் எருத்தடி பாடி, மற்றோர் எழுத்துக் கொடுத்தால் இரண்டா மடி பாடி, பின்னுமோர் எழுத்துக் கொடுத்தால் முதலடி பாடிப் பொருள் முடிய எதுகை வழுவாமல் பாடுவது.”

விகற்ப நடை (1) -

{Entry: M13b__210}

‘வினாவிற்கு விடையிறுக்கும்போது இருபொருள்படும் வகையில் இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு தொடர்மொழியில் விடையிறுத்தல் முதலியன. வழக்காற்றில் விடையிறுக்கும்போது தெளிவு பட விடையிறுக்காமல், ‘இவ்வாறு இரட்டுற மொழிதலாக அமைத்தல் வேறுபட்ட நடையுடைத்து ஆதலின் விகற்ப நடை எனப்பட்டது. (வீ. சோ. 181 உரை)

எ-டு : தன்னையும் உடன் கொண்டு செல்லுமாறு வேண்டிய தாய் கோசலைக்கு மறுமொழி கூறும் இராமன்,

‘சித்தம் நீதி கைக்கின்றதென்?’ என்ற கூற்றில், ‘சித்தம் நீ திகைக்கின்றது என்’ (நீ எதற்காக மனம் தடுமாறுவது? எனவும், ‘சித்தம் நீதி கைக்கின்றது என்?’ (நின் உள்ளம் நீதியை வெறுப்பது எதற்கு?) எனவும் இருபொருள்பட விகற்ப நடைவந்தவாறு. (கம்பரா. 1626)

விகற்ப நடை (2) -

{Entry: M13b__211}

இதனைச் சித்திர கவி வகைகளுள் ஒன்றாகக் கூறுவர். ‘வேறுபட்ட நடையுடைத்தாவது’ என வீரசோழிய உரை கூறும் (181)

எ-டு : ‘தமர நூபுர ஆதார சரணீ ஆரணா காரி
தருண வாள்நிலா வீசு சடில மோலி மாகாளி
அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக
அருளு மோகினீ யாகி அமுதபானம் ஈவாளே’ (தக்க. 107)

இதன்கண், முதலடி பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் அச்சந்திகளோடு புணர (நூபுராதார’ என்பது பிரித்துக் காட்டப்பட்டுள்ளது), அடுத்தஅடி தமிழ் நடையால் அமைந்தவாறு. இதுவும் வேறுநடைத்து ஆதல் கூடும்.

யாப்பருங்கல விருத்தியில், விகற்ப நடை என்பது ‘வினாவுத் தரம்’ என்ற மிறைக்கவிக்கு அடையாக ‘விகற்ப நடைய வினாவுத்தரமே’ என்று வினாவியதற்கு ஒரு மொழியும் தொடர்மொழியுமாக விடையிறுப்பது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. (பக். 545)

விசித்திரப்பா -

{Entry: M13b__212}

எங்கும் - ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாகிய எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி; அவ்வெழுத் துக்களை ஒழுங்கும் கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெழுத் துக்கு ஓர்அடியாகவாயினும் ஒரு சீர் ஆகவாயினும் முற்றுப் பெறப் பாடுவது. (இதன் பொருள் புலப்பட்டிலது.) (வீ. சோ. 181 உரை)

வினாவுத்தரம் -

{Entry: M13b__213}

மிறைக்கவிகளுள் ஒன்று; பாட்டின் இறுதியில் நிற்கும் ஒரு சொற்றொடரின் எழுத்துக்களை ஓரெழுத்தோ இரண்டு மூன்றெழுத்துக்களோ கொண்ட சொற்களாகப் பிரித்து அவை விடையாகும் வகையில் தொடக்கத்திலிருந்து வினாக் களை அமைத்துக் கடைசியில் அத்தொடர் முழுதுமே விடையாமாறு இறுதி வினாவை அமைத்துப் பாடும் சித்திரகவி. (உத்தரம் - விடை)

எ-டு : ‘பூமகள்யார்? போவானை ஏவுவான் என்னுரைக்கும்? // நாமம் பொருசரத்திற்(கு) என் என்ப? - தாம் அழகின் // பேர் என்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும் // சேர்வென்? திருவேகம் பம்’

சொற்றொடர் ‘திருவேகம்பம்’ என்பது. வினாக்களும் விடை யும் ஆமாறு : பூ மகள் யார்? - திரு; போவானை ஏவுகின்றவன் என் உரைக்கும்? - ஏகு; சரத்திற்கு நாமம் என் என்பர்? - அம்பு; அழகின் பேர் என்? - அம்; பெருமான் உவந்துறையும் இருப்பிடம் என்? - திருவேகம்பம். இவ்வாறு முறையே காணப்படும். (தண்டி. 98 உரை)

வீரசோழியம் கூறும் சொல்லணிகள் -

{Entry: M13b__214}

மாலைமாற்று, சக்கரம், இனத்தாலும் எழுத்தாலும் கூறிய பாட்டு, வினா உத்தரம், ஏகபாதம், காதை கரப்பு, சுழிகுளம், சித்திரப்பா, கோமூத்திரி, பலவகை மடக்குக்கள், என்பன காரிகையிலும், யாப்பருங்கலம் குறிப்பிடும் சித்திர கவிகள் உரையிலும் இடம் பெற்றுள்ளன. (வீ.சோ. 179, 181)

ஸ section: 1 entries

ஸர்வதோபத்ரம் -

{Entry: M13b__215}

சருப்பதோபத்திரம்; அம்மிறைக்கவி காண்க.