Section O15a inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 7 alphabetical subsections

  1. த (continued from N14) section: 79 entries
  2. ந section: 170 entries
  3. ப section: 138 entries
  4. ம section: 137 entries
  5. ய section: 14 entries
  6. ல section: 1 entries
  7. வ section: 177 entries

O15a

[Version 2l (transitory): latest modification at 16:24 on 20/04/2017, Hamburg]

யாப்பு-2 (716 entries)

[Part 1 of TIPA file O15 (and pages 3-214 in volume printed in 2005)]

த (continued from N14) section: 79 entries

தனிக்குறில் நேரசையாகும் இடங்கள்-

{Entry: O15a__001}

தனக்குறிலானது தற்சுட்டு, ஏவல், குறிப்பு, சுட்டு, வினா என்ற ஐந்தும் தவிர ஏனைய இடங்களில் நேரசையாக வாராது.

எ-டு : ‘அ,ஆ, இழந்தானென் றெண்ணப் படும்’ (நாலடி. 9)

அ ஆ - அந்தோ என்னும் பொருளது. ஈண்டுக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழி முதற்கண் நின்று விட்டிசைத்து நேரசை யாயிற்று. ஆகவே, அ ஆ- நேர் நேர் என்க.

எ-டு : ‘நொஅலையல் நின்ஆட்டை நீ’

நொ என, ஏவற்கண் தனிக்குறில் மொழிமுதற்கண் விட்டிசைத்து நேரசையாயிற்று. நொஅலையல்- நேர் நிரைநேர் (நொ - நோவ - வருந்த; அலையல், நின் ஆட்டை- நினது ஆட்டினைத் துன்புறுத்தாதே.)

எ-டு : ‘அ உ அறியா அறிவில் இடைமகனே’

அஉ - எழுத்துக்களைச் சுட்டியமையின் தற்சுட்டாய் இரண்டு குற்றுயிர்களும் விட்டிசைத்து நேர்நேர் ஆயின.

எ-டு : ‘அ அவனும் இ இவனும் உ உவனும் கூடியக்கால் // எ எவனை வெல்லார் இகல்’

அவன், இ இவன், உ உவன் - சுட்டு

எவன் - வினா.

அ அவனும் முதலிய நான்கும், சுட்டு வினா இடைச்சொற் களாகிய குற்றுயிரெழுத்துக்கள் விட்டிசைத்தலின் நேர்நிரை நேர் ஆம்.

இவை விட்டிசைப்பின்அல்லது மற்றொன்றனோடு இயைந்து இனியவாய் நடப்பின் முதற்கண் நேரசை ஆகா..

‘யரல வழள இடையினமாம் ஏனை’

‘து மருந்து தூயனவே கொண்டு’

‘யரல வழள’ என்பன தற்சுட்டின்கண்ணும் விட்டிசையாமை யின் யரல - நிரைநேர்; வழள - நிரைநேர் என்க. துமருந்து - து ஏவல் ஆயின போதும் விட்டிசையாமையின் துமருந்து - நிரை நேர் நேர் என்க. (து - உண்)

‘அஇ உஎஒ இவைகுறிய மற்றை // ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே’

‘உஎஒ’ -விட்டிசைத்துத் தற்சுட்டின்கண் இடையிலும் இறுதியிலும் தனிக்குறில்கள் நேரசையாயின. (யா. க. 7 உரை)

தனிக்குறில் விட்டிசைக்கும் இடங்கள் -

{Entry: O15a__002}

தன்னைத்தானே சுட்டிக்கொள்ளுமிடம் - ஏவற்பொருள் - குறிப்புப்பொருள் - என்ற இம்மூவிடத்தும் தனிக்குறில் விட்டிசைத்து நேரசையாம். (தென். யாப். 14)

எ-டு :

‘அஉ அறியா அறிவில் இடைமகனே’ - தற்சுட்டு

‘நொஅலையில் நின்ஆட்டை நீ’ - ‘நோவ’ என்னும் வினை யெச்சம் முதல் குறுகி ‘நொ’ என நின்று ‘அலையல்’ என்னும் ஏவல்பொருட்டாய வியங்கோளைக் கொண்டு முடிந்தது.

‘அஆ, இழந்தானென்(று) எண்ணப் படும்’ (நாலடி. 9) - அஆ - அவலத்தைக் காட்டும் குறிப்பின்கண் வந்த இடைச்சொல். (யா. கா. 39 உரை)

தனிச்சீர் -

{Entry: O15a__003}

நேரிசை வெண்பா கலிவெண்பா இவற்றில் இரண்டாம் அடியின் இறுதியில் எதுகை பெற்றுவரும் சீர். இன்னிசை வெண்பாவில் முதல் மூன்றடிகளும் ஒருவிகற்பமாய் ஓரடி எதுகை பெற்றுவர, மூன்றாம் அடியின் இறுதிச் சீரும் ஒத்த எதுகை பெற்றுத் தனிச்சீராக வருதலும் உண்டு;மூன்று விகற்ப இன்னிசை வெண்பாவில், இரண்டாமடியின் இறுதிச் சீர் தனிச்சீராதலுமாம். ஒரூஉ எதுகை பெற்று வருவது வேறு; தனிச்சீர் வேறு எனப்படும். தனிச்சீர் முன்னருள்ள அடியின் முதற்சீரோடும் ஒத்த எதுகை பெறுவது; ஒரூஉ எதுகை அவ்வோரடிக்கண்ணேயே வருவது.

தனிச்சொல் (1) -

{Entry: O15a__004}

கலிப்பாவினுள் உறுப்பாக வரும் சொல்.

அகநிலை ஒத்தாழிசையின் தனிச்சொல், தாழிசைக்குப் பின்னும் சுரிதகத்திற்கு முன்னும் பெரும்பாலும் ‘ஆங்கு’ என்ற அசைச்சொல்லாக வரும்; ‘எனவாங்கு’ என்றாற் போன்ற தனிச்சொற்கள் பொருள் பெற்றும் வரும்.

ஆங்கு என்னும் அசைச்சொல் பயிலும் எனவே, அல்லாதன வாகிய எனவாங்கு, என இவன், எனநின், அதனால், எனநீ, எனநம், அவனை, என்றுநின் - என்றாற் போல்வன பொருள் பெற வருதல் பெற்றாம். ‘ஆங்கு’ என்பது ‘ஆங்க’ எனவும் வரும். ‘ஆங்கு’ என்பது ஏழனுருபாய்ப் பொருள் உணர்த்திற் றேல், யாண்டும் பொருள் உணர்த்துதல் வேண்டும்; அங்ஙனம் நில்லாமையின் அசைநிலை ஆயிற்று. (தொ. செய். 135 நச்.)

தனிச்சொல் தாழிசை முன்னரும் சிறுபான்மை வரும். (131 இள.)

தாழிசைதோறும் தனிச்சொல் வரவும் பெறும். (128 இள.)

எ-டு: கலி. 118, 120, 130, 148

தனிச்சொல்(2) -

{Entry: O15a__005}

இஃது அடிமுதற்கண் பொருள் பெற நிற்பது. இதனைக் கூன் எனவும் வழங்குவர். நான்கு பாவினும் அடிமுதற்கண் சீர் கூனாய் வரப்பெறும். எனினும், வஞ்சியடியின் முதற்கண் கூனாய் வருவதும், உகர ஈறாகிய நேரீற்றியற்சீர் கூனாய் வருவதும் சிறப்புடையன. வஞ்சியடியின் இடையும் இறுதியும் அசை கூனாய் வருவதன்றிச் சீர் கூனாய் வாராது. ஆண்டு உகர ஈறாகிய நேரீற்றியற்சீர் அருகிக் கூனாய் வரவும் பெறும். அச்சீர், அல்லாத பாவின் அடிமுதற்கண் அருகியல்லது கூனாய் வாராது. கொச்சகக்கலியுள் ஓரடி கூனாய் வருமா யினும் சிறப்பில்லை. வெண்பா ஆசிரியம் கலி இவற்றின் அடியில் இடையும் இறுதியும் கூன் வரப்பெறாது.

எ-டு: வஞ்சி : ‘அடி, அதர்சேர்தலின் அகம்சிவந்தன’

‘மா, எறிபத த்தான் இடம்காட்ட’ (புறநா. 4)- முதற்கண் அசை கூன்ஆக வந்தது.

‘வேந்து, வேல்வாங்கிப் பிடித்துருத்தலின்’

தெருவு, தேரோடத் தேய்ந்தகன்றன’

- உகர ஈற்று நேர்ஈற்று இயற்சீர் கூன்ஆக வந்தது.

‘கலங்கழாலின் துறை கலக்குற்றன’ - இடையில் அசை கூன்ஆக வந்தது.

‘மாவழங்கலின் மயக்குற்றன வழி’ - கடையில் அசை கூன்ஆக வந்தது.

ஆசிரியம்:

‘வடாஅது, பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது’ - அடிமுதற்கண் உகர ஈறாகிய நேரீற்றியற்சீர் கூன் ஆயிற்று.

வெண்பா:

‘உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’ - அடிமுதற்கண் சீர் கூனாக வந்தது.

கலி:

‘உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’ அடிமுதற்கண் சீர் கூனாக வந்தது.

‘சிறுகுடி யீரே சிறுகுடி யீரே’ (சிலப் 24 : 11) கொச்சகக் கலியுள் ஓரடியே கூனாக வந்தது. (யா. க. 94)

தனிச்சொல் : பெயர்க்காரணம் -

{Entry: O15a__006}

ஒரு சொல்லாய்ப் பொருள் நிரம்பித் தனியே நிற்றலின் தனிச்சொல் என்பது காரணக் குறியாம். (யா. க. 82)

தனிநிலை அளபெடை -

{Entry: O15a__007}

சீருக்கு முன்னும் பின்னும் வேறு எழுத்தின்றி ஒரோவோ ரெழுத்தே நின்று அளபெடுப்பது.

எ-டு: ‘ஏஎ வழங்கும் சிலையாய்! இரவரல்

மாஅ வழங்கும் வரை!’ (யா. க. 41 உரை)

தனிப்பாதச் செய்யுள் -

{Entry: O15a__008}

செய்யுள் மூவகைப்படுவதன்கண் ஒன்று; (‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என) ஓரடியால் நடக்கும் பாடல். (வீ. சோ. 181 உரை)

தனியசை -

{Entry: O15a__009}

ஓரசையாகத் தனித்து வருவது. அது வெண்பாவின் இறுதிக்கண் நாள், மலர் என்னும் வாய்பாட்டால் வருவதும், வஞ்சியடி முதல் நடு இறுதிக்கண் அசை கூனாக வருவதும் போலாம்.

தாஅ வண்ணம் -

{Entry: O15a__010}

பொழிப்பும் ஒரூஉவுமாக எதுகை சீர்களில் இடையிட்டு வரத் தொடுப்பது

எ-டு: ‘உலக முவப்ப வலனேர்பு திரிதரு’ முருகு.

‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங். மிகைப். 2)

(தொ. செய். 215 பேரா.)

தாண்டக அடி -

{Entry: O15a__011}

இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துக்களான் இயன்ற அடி (யா. வி. பக். 476)

தாப்பிசைப் பொருள்கோள் -

{Entry: O15a__012}

ஊஞ்சல்கயிறு நடுஇடத்தினின்று இருபுறமும் செல்வது போல, செய்யுள் நடுவிலுள்ள சொல்லே முன்னும் பின்னும் பொருள் கொள்ளச் சென்று அமையும் பொருள்கோள் இது.

எ-டு: ‘உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு’ (குறள் 255)

இதன்கண், ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு என, நடுநின்ற ‘ஊன்’ என்ற சொல்லே இருமருங்கும் சென்று இயைந்து பொருள் தந்தவாறு. (யா. க. 95 உரை)

தாய பனுவல் -

{Entry: O15a__013}

அறம் பொருள் இன்பம் மூன்றற்கும் இலக்கணம் கூறுவன போன்றும், இடையிடையே அன்றாயும் தாவிச் செல்வது. இலக்கணம் கூறலின், பனுவல்; இலக்கியமாதலின் ‘தாய’ என்றார். தாவுதல் - இடையிடுதல். (தொ. செய். 235 நச்.)

தாவு வண்ணம் -

{Entry: O15a__014}

தாஅ வண்ணம்; தாவு வண்ணமாவது இடையிட்டு வந்த எதுகைத்தாவது. ‘தாஅ வண்ணம்’ காண்க. (வீ. சோ. 142)

தாழம்படுதல் -

{Entry: O15a__015}

ஓசை தாழ்ந்து வருதல். (யா.க. 56 உரை)

தாழிசை -

{Entry: O15a__016}

ஒருபுடையான் தத்தம் பாவினங்களோடு ஒத்தலானும், அடிகள் ஒத்துத் தாழம்பட்டு இசைத்தலானும், ஒத்த பொருள்மேல் பெரும்பான்மையும் மூன்றாய்த் தாழ்ந்து இசைத்தலானும் தாழிசை என்பது காரணக்குறி (யா. க. 56 உரை)

தாழிசை அளவு -

{Entry: O15a__017}

இதன் சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி, தரவளவிற்குச் சுருங்கியும், சிறுபான்மை சமமாயும் தாழிசை வரும். (யா. க. 82 உரை)

தாழிசை இன்றித் தரவு பெறுதல் -

{Entry: O15a__018}

தாழிசையின்றித் தரவு மாத்திரம் வருதல்.

தரவு ஓசை பெறுவது பொதுவாய் நின்ற கொச்சக ஒருபோகு என்னும் செய்யுள். அது தாழிசையொடு கூடிய தரவு இலக் கணத்தில் திரிந்து வரும். தரவினைத் தவிர ஏனைய உறுப் புக்கள் விலக்குண்டு தரவு தனித்துவரும். அது தொடர்நிலைச் செய்யுளாய் வரும் தேவபாணியும், தரவிணைக் கொச்சகமாய் வருவனவும் ஆம். தாழிசை முதலிய இன்றி வருதலின், தரவு 4, 6, 8 என்ற அடிகளை உடைத்தாய் வரல் வேண்டும் என்ற வரையறை யின்று.

தரவு தனித்து வருதலேயன்றித் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருதலும், பெரும்பான்மை தரவிணையாய் வருதலும் கொள்ளப்படும். அவை தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவுகொச்சகம், தரவிணைக் கொச்சகம் எனக் கூறப்படும். இவை தாழம்பட்ட ஓசையின்றி வருதலின் தாழிசை எனப்படாமல் தரவு எனப்பட்டன.

எ-டு: ‘பூணாக என்பணிந்தான் பூதத்தான் வேதத்தான்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

யானார்வம் செய்யும் இறை;

‘எனவாங்குப் பாடி இறைஞ்சுவோர்க் கெல்லாம்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

நினையா தொழியற்க நெஞ்சு”

இது தரவிணைக் கொச்சகம்.

தொடர்நிலைச் செய்யுளின் முதற்கண் நின்ற தேவபாணி தன் பொருளொடு தான் முடியும் தனித் தரவுகொச்சகம்.

எ-டு : ‘மூவா முதலா உலகம்மொரு மூன்றும் ஏத்தத்

தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி

ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன் அவன்சேவடி சேர்தும் அன்றே’ (சீவக. கடவுள்.)

இனி, தேவபாணி அல்லாது வரும் தரவுகொச்சகங்கள் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய தரவுகொச் சகங்களாம். (தொ. செய். 149 நச்.)

தாழிசைக்குறள் -

{Entry: O15a__019}

இது குறட்டாழிசை எனவும்படும். இது குறள்வெண்பாவின் இனங்களுள் ஒன்று. இரண்டடிகளான் அமையும் இக் குறட்டாழிசை மூவகைப்படும்.

1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வெண் செந்துறை போலச் சமமான ஈரடிகளான் அமைவது.

எ-டு : ‘திடுதிம் எனநின் றுமுழா அதிரப்

படிதம் பயில்கூத் தருமார்த் தனரே!’

2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது.

எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்

கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’

இதன் முதலடி எண்சீர்த்து; இரண்டாமடி நாற்சீர்த்து.

3. தளை வழுவி வரும் குறள்வெண்பா.

எ-டு : ‘வண்டார் இருங்கூந்தல் வரிவளைக்கை வாணுதலாள்

பண்டையள் அல்லள் படி!’

முதலடி இரண்டாம் மூன்றாம் சீர்களிடை கலித்தளை தட்டு வந்தமையான், குறள் வெண்பா ஆகாது குறட்டாழிசை ஆயிற்று.

இவை இரண்டடியாய்த் தாழ்ந்து இசைத்தலானும், ஒழுகல் ஓசையினும் செப்பலோசையினும் வழுவித் தாழ்ந்த ஓசைய வாகலானும், விழுப்பமில்லாத பொருளைச் சொல்லுத லானும், தாழிசைக் குறள் எனவும் குறட்டாழிசை எனவும் பெயர் பெற்றன. குறட்டாழிசை ஏழுதளையானும் கூறுபடும். இவை சிறப்புடைய தளை, சிறப்பில்லாத தளை என்று பாகுபடுத்தப்படவே, தளை பற்றிக் குறட்டாழிசை 14 வகைப்படும். (யா. க. 64, 65 உரை)

தாழிசை: பெயர்க்காரணம் -

{Entry: O15a__020}

ஒத்த ஒரு பொருள் முடிவினால் ஒத்த தாழ்ச்சியால் இசைத்த லானும், தரவின் குறைந்து இசைத்தலானும் ஒத்தாழிசை எனவும் தாழிசை எனவும்படும். (யா. க. 82 உரை)

திரிகோட்ட வேணி -

{Entry: O15a__021}

இடையீடில்லாத நிலத்தினை ‘ஒருபோகு’ என்ப ஆதலின், அஃது ஒப்பினான் ஆகிய பெயர். ‘ஒருபோகு’ என்பதனைத் ‘திரிகோட்டவேணி’ என்பது போலக் கொள்க (பேரா. உரை). திரிந்த கொம்பு போன்ற வேணியை உடையவள் என்று, வேணி வேணியை யுடையவளைக் குறித்தாற்போல, போகிய தனையுடையதை உணர்த்துமாறு போகு என்பது வந்தது. (வேணி - கூந்தல்) (தொ. செய். 148 பேரா.)

திரிபாதி -

{Entry: O15a__022}

மூன்றடியாய்த் தம்முள் அளவொத்துவரும் பத்தியக்கவி. இதற்கு வீரசோழிய உரைகாரர் எடுத்துக்காட்டு உரைத்திலர். பின்வரும் ஆசிரியத் தாழிசை (யா. க. 75 உரை) எடுத்துக் காட்டாதல் தகும்.

எ-டு : ‘வானுற நிமிர்ந்தனை; வையகம் அளந்தனை;

பான்மதி விடுத்தனை; பல்லுயிர் ஓம்பினை;

நீனிற வண்ண! நின் நிரைகழல் தொழுதனம்.’ (வீ. சோ. 127)

திரிபாதிப் போலி -

{Entry: O15a__023}

மூன்றடியாய்த் தம்முள் அளவு ஒத்து வாராத பத்தியக்கவி. (உரையுள் இச்செய்தி குறிக்கப்படாவிடினும், ‘குறட்போலி’ போன்றவற்றது உரை நோக்கி இவ்வாறு கொள்ளப்பட்டது. எடுத்துக்காட்டும் மூன்றடியாய் ஈற்றடி இரண்டும் சீர் குறைந்துவந்த ஓரொலி வெண்டுறை (யா. க. 67 உரை) காட்டப்படுகிறது. வீரசோழிய உரை இதற்கும் உதாரணம் காட்டிற்றிலது.

எ-டு : ‘தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம்

ஆளியைக் கண்டஞ்சி ஆனைதன் கோடிரண்டும்

பீலிபோற் சாய்ந்துவிடும் பிளிற்றி யாங்கே.’ (வீ. சோ. 127)

திலதக் கலித்துறை -

{Entry: O15a__024}

கட்டளைக் கலித்துறை வகை இரண்டனுள் ஒன்று; ஏனையது கோவைக் கலித்துறையாம்.

நேரசை முன்வரின் பதினாறு எழுத்தாயும் நிரையசை முன்வரின் பதினேழு எழுத்தாயும் முடியும் அடிகள் நாலாய்ச் சீர் இருபதினால் வருவது திலதம் என்னும் பெயராலே வழங்கும்.

(அடிதோறும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாது, இறுதிச் சீரொன்றும் விளங்காயாக வரப்பெறுதல் வேண்டும் என்னும் இலக்கணம் ‘கட்டளைக் கலித்துறை’ என்னும் தலைப்பிற் காண்க.)

கோவைக் கலித்துறை ஈற்றடிச் சீர்கள் வகையுளியாக அமைத லும், திலதக் கலித்துறை ஈற்றடிச் சீர்கள் வகையுளி இன்றி அமைதலும் தம்முள் வேறுபாடு என்னும் பழையவுரை.

‘நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே’ (தஞ்சை. கோ. 2)

‘தேர்முந்து பேரல்குல் மாதே அஃது திலதமன்றே’ (வீ. சோ. 128)

(அஃது : ஆய்தம் அலகு பெற்றது.)

இவையிரண்டும் முறையே கோவை திலதக் கலித்துறைகளின் ஈற்றடிகள்; முறையே வகையுளியுடைமை இன்மைகளைக் காண்க. (வீ. சோ. 128)

திலதப் போலி -

{Entry: O15a__025}

திலதக் கலித்துறைக்கண், ஒரோவடியில் ஒன்றாதல் இரண் டாதல் எழுத்து மிக்கும் குறைந்தும் வருவது திலதப் போலி யாம்.

எ-டு : ‘எனவே தனமென் றிராசேந்திர சிங்கனொ டின்றணைந்த // கனவே யுடையன் களிப்புக்கண் டாற்கட லேழுமமைந் // தனவே யெனவவன் றானுதித் தன்றே தொடங்கியென்று // நனவே புணர்திரு வின்களிக் கேதுகொ னல்லனவே’.

இதனுள், முதலடிக்கண் ஓரெழுத்து மிக்கு வந்தவாறு. ‘இராசேந்த்ர’ என்னாது ‘இராசேந்திர’ என்றமையின் ஓரெழுத்து மிக்குக் கனிச்சீர் விரவியவாறு காண்க. [ ‘இரா சேந்த்ர’ எனக் கொள்ளின் விரவியலாய் (-வடவெழுத்து விரவியது) அது போலியாகாமையும் உணரப்படும். ]

(வீ. சோ. 128)

திலதம் -

{Entry: O15a__026}

திலதக் கலித்துறையே ‘திலதம்’ என வழங்கும். திலதம் ஆமாறு ‘திலதக் கலித்துறை’ என்னும் தலைப்பிற்காண்க. (வீ. சோ. 128)

துகள் -

{Entry: O15a__027}

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னுமிவற்றை அரசன் பாதுகாவாமை (யாகிய குற்றம்).(தொல். செய். 128 நச்.)

துகளொடும் பொருளொடும் புணர்தல் -

{Entry: O15a__028}

அரசன் தனக்குரிய அரசியலில் தப்பிய நிலையைக் கூறும் கூற்றோடும், அவ்வறம் பொருள் இன்பம் பயக்கக் கூறும் கூற்றோடும் ஒரு செய்யுள் கூடிவருதல். (தொ. செய். 128 நச்.)

துள்ளலோசை -

{Entry: O15a__029}

ஒழுகு நடைத்தன்றி இடையிடை உயர்ந்து வருதல்; ‘கன்று துள்ளிற்று’ என்றாற் போலக் கொள்க. (தொ. செய். 79 இள.)

முரற்கைப் படுமாற்றான் துள்ளச் சொல்லும் ஓசை.

(83 நச்., பேரா.)

வழக்கின்கண் பெரும்பாலும் இல்லாததாய்ச் செய்யுட்கண் துள்ளச் சொல்லும் ஓசை கலிப்பாவிற் குரிய துள்ளல் ஓசையாம்.

துள்ளலோசையின் வகைகள் -

{Entry: O15a__030}

1. ஏந்திசைத் துள்ளல்

கலித்தளையான் அமையும் செய்யுளின் ஓசை.

எ-டு : ‘முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே

வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்

இருவினைபோய் விழமுறியா எதிரியகா தியை எறியா

நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே.’

2. அகவல் துள்ளல்

கலித்தளையொடு வெண்சீர் வெண்டளையும் கலந்தமையும் செய்யுளின் ஓசை.

எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி

முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்

எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம் போல்

மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந்த தொளித்ததே’.

3. பிரிந்திசைத் துள்ளல்

கலித்தளையோடு ஏனைய தளைகளும் கலந்து அமையும் ஓசையையுடைய கலிப்பாவினது ஓசை.

எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும் போன்(று)

அணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்

நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்

இரைநயந் திறைகூரும் ஏமஞ்சால் துறைவகேள்.’

இப்பாடல் நிரையொன்று ஆசிரியத்தளையும் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும், வெண்சீர் வெண்டளையும், கலந்தமையின் பிரிந்திசைத் துள்ளல் ஓசைத்தாயிற்று.

கலித்தாழிசைகள் ஈரடியினவாயவழிப் பெரும்பான்மையும் பிரிந்திசைத் துள்ளல் ஓசை பெறுவனவாம்.

எ-டு : ‘தொன்மைக்கண் வினைசெய்யார் துப்புரவின் இரங்குவார்

பன்மைக்கண் உள்ளந்தேர் பயமின்றிக் கழிவாரோ’

என வரும். (யா. க. 78 உரை)

துறை (1) -

{Entry: O15a__031}

ஒரு புடையால் தத்தம் பாவிற்குத் துறை போன்று நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும், எல்லாத் துறைமேலும் இனிது நடத்தலானும், துறையும் (ஏனைய தாழிசை, விருத்தம் போலக்) காரணப்பெயராம். (யா. க. 56 உரை)

துறை (2) -

{Entry: O15a__032}

ஐவகை நிலத்திற்கும் உரியர் எனப்பட்ட மக்களும் மாவும் பறவையும் வரையறுக்கப்பட்ட வரையறை கடந்து, சான்றோர் சுவைபடல் கருதிச் செய்யுள் புனைதலும் உண்டு. (அவை) தத்தம் திணையொடு வாரா ஆயினும், எத்திணை கருதிச் செய்யப்பட்டனவோ அத்திணைப் பொருளாகக் கொள்ளத்தக்கன என்று வரையறுத்துக் கூறும் அகப்பாட்டு உறுப்புத் துறை எனப்படும்.

ஞாழல்பூவைச் சூடிய நெய்தல்நிலத் தலைவியை ஊரிடத்துச் சோலையாகிய மருதநிலத்துக் கண்டான் போலக் கூறிக் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தல் உரிப்பொருளான் முடித்த கலிப்பாடல் (56) குறிஞ்சித் திணையின்பாற்படுதல் இத்துறை என்ற உறுப்பான் நிகழும் செயலாம். (தொ. பொ. 521 பேரா.)

உரைப்போரும் கேட்போரும் இன்றி, செய்யுள் செய்யும் புலவனே கவிக்கூற்றாக உரைப்பனவும் துறை என்ற செய்யுள் உறுப்பின்பாற்படும் என்ப. (ந. அ. 234; இ. வி. 583)

துறை என்ற இவ்வுறுப்பின்றியும் செய்யுள் நிகழும்.

துறை (3) -

{Entry: O15a__033}

ஒரு செயல் நிகழ்வதற்குக் காரணம் ஆயினவற்றையெல்லாம் அவற்றின் காரியமாகிய அச்செயற்கண் செறித்தல். எடுத்துக் காட்டாக, படையியங்கு அரவம் என்பதன்கண், நிரை கோடல் குறித்த மன்னன் படைத் தலைவரைத் தருக என்ற லும், அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்க என்றலும், அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்துதலும், நாள் கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும் என்ற காரணங்கள் அடங்கும். (இ. வி. 603)

மக்களும் மாவும் சென்று நீருண்ணும் துறைபோலப் பல வகைப்பட்ட பொருள்களும் ஒருவகைப்பட்டு இயங்குதலா கும் மார்க்கம் ‘துறை’ எனப்பட்டது. (தொ. பொ. 56 நச்.)

ஒவ்வொரு துறையிலும் உட்பிரிவுகள் பல இருத்தலும் கூடும். (நச்.)

ஒரு செய்யுளுள் பல துறை ஒருங்குவரினும் ஒரு துறையின் பாற்படுதல் கொள்க. (நச்.)

துறை என்னும் பெயர்க் காரணம் -

{Entry: O15a__034}

பரந்துப்பட்டதொரு நீர்நிலையுள் எவ்வழிப்புகினும் நீரை அடையலாம் எனினும், சில இடங்களை வகுத்துக்கொண்டு அவற்றைத் துறை எனக் கூறி அவ்வழிப்புக்கு நீரைக்கொள் வது போல, பரந்துபட்ட புறஒழுகலாற்றினைச் சில கூறு படுத்து அவற்றின் வாயிலாகப் புலப்படச் செய்தலான் துறை என்றார். செய்யுளுறுப்பாகக் கூறப்படும் துறை வேறு, இது வேறு. (தொ. புறத். 1 ச. பால)

‘தூக்கியல் வகையே ஆங்கு’ -

{Entry: O15a__035}

தூக்கு என்னும் செய்யுள்உறுப்பு நடக்கும் இடவகை (-முன்) சொல்லப்பட்ட ஆசிரியம் வெண்பா கலிவஞ்சி என்ற நான்கு பாவும் ஆம். (தொ. செய். 87 பேரா.)

தூக்கு -

{Entry: O15a__036}

1. செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயில் தூக்கு, நிவப்புத் தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு என எழுவகைப்படும் தாளவகை. (சிலப். 14 : 150 உரை)

2. தாளத்தில் இரண்டு மாத்திரைக்காலம். (சிலப். 3 - 16 உரை)

தூக்கு என்னும் செய்யுள் உறுப்பு -

{Entry: O15a__037}

நிறுக்கப்படும் பொன் வெள்ளி முதலியவற்றின் கட்டிகளைக் கழஞ்சு தொடி துலாம் எனத் துலாக்கோலால் தூக்கி அளப்பது போல, அடிவரையறையுடையவாய்ப் பரந்த பாக்களை அடிகளால் துணித்துத் தூக்கி ஓசை வேறுபாடு உணர்த்தும் செய்யுள் உறுப்புத் தூக்கு எனப்பட்டது. படவே, தூக்கு என்பது ஓசை பற்றிப் பாக்களை இன்ன பா என வரையறை செய்யும் செய்யுள்உறுப்பாம்.

தூக்கு என்பது நிறுத்தல், அளத்தல், பாடுதல் என்னும் பொருள்களைக் கொள்ளும். பா என்று பரந்துபட்டுச் செல்லும் ஓசையை இத்துணை அடி என்று விதந்து கூறுபாடு அறிய உதவுவது தூக்கு.

இருசீர் முதல் ஐந்துசீர்காறும் பரந்துபட்ட அகவல்ஓசையை, ‘பெரியகட் பெறினே’ எனச் சொற்சீரடியாகவும், ‘யாம் பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே’ என அளவடியாகவும், ‘நரந்தம் நாறும் தன்கையால்’ எனச் சிந்தடியாகவும், தூக்குத் துணித்தவாறு காண்க. இங்ஙனம் தூக்கின்று என,

‘நரந்தம் நாறும் தன்கையாற் புலவு

நாறும் என்தலை தைவரு மன்னே’ (புறநா. 235)

என இரண்டு நாற்சீரடிகளாகத் துணிப்பின், அகவலோசை பிறவாது.

‘உள்ளார் கொல்லோ தோழி

முள்ளுடை அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்’ (ஐங். மிகைப். 2)

என அடி எதுகையாய்ச் சிந்தடியும் நெடிலடியுமாகக் கொள்ள நின்றதனை, இத்தூக்கு என்னும் உறுப்பு, அகவல்ஓசைக்கு ஏற்றற்போல,

‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை

அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்’

என அறுத்து இரண்டு அளவடி ஆக்கியது.

தூக்கு இல்லையேல் ஆசிரியத்துள் மயங்கி வரும் வஞ்சி யடிகளைப் பகுத்துக் காண்டல் இயலாது. (தொல். செய். 87 நச்., பேரா.)

தூக்கு - இறுதி (இள.)

தூங்கல் வண்ணம் -

{Entry: O15a__038}

தூங்கல் ஓசையுடைத்தாய் வரும் வண்ணம்; அது வஞ்சிபோல் அற்றுச் செல்லுதல்.

எ-டு : ‘யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின்

தானூட யானுணர்த்தத் தானுணரான் - தேனூனும்’, (முத்தொள். 47) (தொ. செய். 230 நச்.)

தூங்க லோசை -

{Entry: O15a__039}

வழக்கின்கண் நிகழாது, செய்யுட்கண் அடியிறுதியில் தூங்காது (-ஓசை அறுபடாமல்) சீர்தோறும் ஓசை குறைந்து வரும் தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியதாம். (தொ. செய். 84 நச்.)

தூங்கல் - சீர்தோறும் ஓசை அறுதல். (80 இள.)

தூங்கிசை -

{Entry: O15a__040}

செய்யுட்குரிய நால்வகை ஓசையுள் ஒன்று. (L)

தூங்கிசை அகவல் -

{Entry: O15a__041}

நிரையொன்று ஆசிரியத் தளையான் வரும் அகவல்.

எ-டு : ‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய

மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே!’ (யா. க. 69 உரை)

தூங்கிசைச் செப்பல் -

{Entry: O15a__042}

இயற்சீர் வெண்டளையான் வரும் வெண்பாவின் ஓசை.

எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்’. (கு. 1121)

இப்பாடல் முழுதும் இயற்சீர் வெண்டளையே வந்தமையின், இதன்கண் தூங்கிசைச் செப்பலோசை வந்தது.

இயற்சீரே வந்து வெண்டளை தட்பத் தூங்கிசைச் செப்பல் பிறக்கும் என்ப. (யா. க. 57 உரை)

தூங்கிசைத் துள்ளல் -

{Entry: O15a__043}

கலிப்பாவிற்கு உரிய ஓசைவகை; கலித்தளையால் வரும் அடிகளில் இவ்வோசை பிறக்கும். ‘துள்ளலோசையின் வகைகள்’ காண்க.

தூங்கிசை வண்ணம் இருபது -

{Entry: O15a__044}

குறில் அகவல் தூங்கிசைவண்ணம், நெடில் அகவல் தூங்கிiச வண்ணம், வலி அகவல் தூங்கிசைவண்ணம், மெலி அகவல் தூங்கிசை வண்ணம், இடை அகவல் தூங்கிசைவண்ணம் - என அகவல் தூங்கிசைவண்ணம் ஐந்து. (ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் போல்வன இவ்வண்ணத்திற்கு எடுத்துக் காட்டாம்.)

குறில் ஒழுகல் தூங்கிசைவண்ணம், நெடில் ஒழுகல் தூங்கிசைவண்ணம், வலி ஒழுகல் தூங்கிசைவண்ணம், மெலி ஒழுகல் தூங்கிசைவண்ணம், இடை ஒழுகல் தூங்கிசை வண்ணம் - என ஒழுகல் தூங்கிசைவண்ணம் ஐந்து. (வஞ்சியும் வஞ்சிப்பாவினமும் இவ்வண்ணத்திற்கு எடுத்துக்காட்டாம்.)

குறில் வல்லிசைத் தூங்கிசைவண்ணம், நெடில் வல்லிசைத் தூங்கிசைவண்ணம், வலி வல்லிசைத் தூங்கிசைவண்ணம், மெலி வல்லிசைத் தூங்கிசைவண்ணம், இடை வல்லிசைத் தூங்கிசை வண்ணம் - என வல்லினத் தூங்கிசைவண்ணம் ஐந்து.

எ-டு : ‘பூவி னார்பொழிற் பிண்டியின்கீழ்ப்

பொருவரு திருநகர்ப் பொன்னெயிலுள்

மாவி னார்நலம் நோக்கினல்லார்

பலர்ப ணிந்துவந் தடிவணங்கி’

என இன்ன வண்ணத்தன எல்லாம் வல்லிசைத் தூங்கல்
வண்ணத்தன.

குறில் மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், நெடில் மெல் லிசைத் தூங்கிசைவண்ணம், வலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், இடை மெல்லிசைத் தூங்கிசை வண்ணம் என மெல்லிசைத் தூங்கிசைவண்ணம் ஐந்து.

எ-டு : ‘தேனி னார்மலர்ப் பிண்டியி னீழல் தேவரேத்த

வானி னார்குடை யானடி நாளும் வணங்குதுமே’

இவ்வாறாக ஐவகைப்படுதலின், தூங்கிசைவண்ணம் இருபது ஆமாறு. (யா. வி. பக். 411, 412, 416 உரை)

தேமா -

{Entry: O15a__045}

நேர் நேர் என ஈரசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 7)

தேமாங்கனி -

{Entry: O15a__046}

நேர் நேர் நிரை என மூவசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 7)

தேமாங்காய் -

{Entry: O15a__047}

நேர் நேர் நேர் என மூவசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 7)

தேமாந்தண்ணிழல் -

{Entry: O15a__048}

நேர் நேர் நேர் நிரை என நாலசையாலமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 8)

தேமாந்தண்பூ -

{Entry: O15a__049}

நேர் நேர் நேர் நேர் என நாலசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 8)

தேமாநறுநிழல் -

{Entry: O15a__050}

நேர் நேர் நிரை நிரை என நாலசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 8)

தேமாநறும்பூ -

{Entry: O15a__051}

நேர் நேர் நிரை நேர் என நாலசையால் அமைந்த சீரினைக் குறிக்கும் வாய்பாடு. (யா. கா. 8)

தேவபாணி -

{Entry: O15a__052}

தேவரைப் புகழ்ந்து கூறும் தமிழ்ப்பாடல் வகை.

தேவபாணி யாப்பும் பொருளும் வேறுபடுதல் -

{Entry: O15a__053}

‘வெண்பலிச் சாந்தம் முழுமெய்யும் மெய்பூசி.

உண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக்

கண்பலிக் கென்று புகுந்த கபாலிமுன்

எண்பலித் தாலிவள் யாதுவாய் வாளே.’

இது தெய்வத்தின்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்க மாகிய பாடாண்திணைக் கைக்கிளை யாதலின் பொருள் வேறுபட்டது.

‘கன்று குணிலா’ முதலிய சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் அந்நிலத்திற்குரிய அவர்தெய்வத்தைப் பாடும் பாடல்கள்; அந்நிலத்திற்குரிய அவர்தெய்வத்தைப் பரவுதலின் தேவபாணியே அன்றி, புறத்திணைக் கைக்கிளைப் பாடல்கள் அல்ல. (தொ. செய்.149 நச்)

தேவபாணியின் இருவகை -

{Entry: O15a__054}

வண்ணக ஒத்தாழிசை எனவும், ஒரு போகு எனவும் தேவபாணி இருவகைப்படும். ஒரு போகுக்கு ஒத்தாழிசை எனப் பெயர் கூறப்படாது என்பது; அதன்கண் தாழிசை பெய்து பாடுதலும் கூடாது. தொல்காப்பியனார் ஒருபோகு தாழிசை யுறுப்புப் பெறும் என்று கூறிற்றிலர். ஒரு போகு சிறுபான்மையே பாடப்பெறும். (தொ. செய். 139 நச்.)

தேவர்ப் பராவும் ஒத்தாழிசை -

{Entry: O15a__055}

இஃது ஒத்தாழிசையின் இருவகைகளுள் ஒன்று. இஃது அகநிலை ஒத்தாழிசை ஆகாது. வாழ்த்தியல் நால்வகைக் கலிக்கண்ணும் வருமேனும், அவை தேவபாணி ஆகா. பாடற்கண் தெய்வவாழ்த்து படர்க்கையாகியவழி அது புறநிலை வாழ்த்தேயாம். பாட்டுடைத் தலைவனைக் கூட்டிக் கூறினும் கூட்டாவிடினும், தேவபாணி முன்னிலைக் கண்ண தேயாம். தெய்வம் தானே மனிதவடிவில் ஆவேசமுற்று, “நின்னைப் புரப்பேன்” என்று கூறும் உலகவழக்கு புலனெறி வழக்கிற்கு ஏலாது. கலிப்பா புலனெறி வழக்கேயன்றிச் சிறு பான்மை கடவுளைப் பராவும் பொருளானும் வரும். (தொ. செய். 138 நச்.)

தொகுத்தல் விகாரம் -

{Entry: O15a__056}

அறுவகைச் செய்யுள் விகாரங்களுள் ஒன்று. செய்யுட்கண் ஓசையும் தளையும் கருதி, விரிக்கப்பட வேண்டிய உருபு முதலாயின தொகுக்கப்படுதல்.

எ-டு : ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல்

வேண்டுமாம் வேண்டார் மகன்.’

‘வேண்டாரை வணக்கி’ என உயர்திணைக்கண் இரண்டாம் வேற்றுமையுருபு விரிந்தே வரற்பாலது, செய்யுளமைப்புக் கருதி ‘வேண்டார் வணக்கி’ என உருபு இடையே தொகுக் கப்பட்டவாறு. பகாப்பதமாம் ஒரு மொழிக்கண் இடையே ஓரெழுத்துக் குன்றல் இடைக்குறையின் பாற்படும். (யா. வி. 394 பக்)

தொகைநிலை விரி -

{Entry: O15a__057}

தொகைநிலையும் விரியுமாகக் கூறிய (ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என்ற) நான்கு பா. (தொ. செய்.120 நச்.)

தொடை -

{Entry: O15a__058}

எழுத்து சொல் பொருள் இவை மூன்றையும் பொருந்தி வரிசைப்பட அமைந்த இயல்பினவாகி, அடியோடு அடி பொருந்தித் தொடுக்கும்போது அமைவன தொடைகளாகும். (தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும்.) (யா. கா. 33 உரை மேற்.)

தொடை ஓத்து -

{Entry: O15a__059}

யாப்பருங்கலத்துள் உறுப்பியற்கண் ஆறாவதாகிய உட்பிரிவு; 21 நூற்பாக்களையுடையது. மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் தொடை ஐந்தனையும், இணை பொழிப்பு ஒரூஉ கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று அடி எனும் எட்டு விகற்பங்களொடும் விளக்கி, செந்தொடை இரட்டைத் தொடை அந்தாதித்தொடை என மூன்றனையும் அடுத்து விளக்கிச் செல்வது இவ்வோத்து.

தொடைகளின் எண்ணிக்கை (1) -

{Entry: O15a__060}

நான்கு பாக்களுக்கும் 51 நிலங்கள் உள. அவற்றின விரிவு 625 அடி. ஒவ்வோரடியும் 22 தொடைபெறும். தொடை இரண்டடிகளைக் கொண்டு காணப்படினும் ஓரடியின் கண்ணேயே கொள்ளப்படுதலின் 625 x 22 = 13750-இல், ஓரடிக்குரிய 51 நிலங்களைக் களைய, 13699 ஆம். இவற்றை விகற்பங்களொடு கணக்கிடத் தொடையெண்ணிக்கை வரம்பின்றி ஓடும். (யா. க. 49 உரை).

தொடைகளின் எண்ணிக்கை (2) -

{Entry: O15a__061}

தொல்காப்பியனார் தொடைகளின் எண்ணிக்கையை நேராகக் கூறாமல், ‘ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு, தொண்டுதலை யிட்ட பத்துக் குறை எழுநூற், றொன்ப தென்ப உணர்ந்திசி னோரே’ என்றார். எழுநூறு ஒன்றும் - இளம்பூரணது பாடம்.

விளக்கம் வருமாறு :

ஐயீராயிரம் - பத்தாயிரம் - 10000

ஆறைஞ்ஞூறு - மூவாயிரம் - 3000

தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூறு ஒன்றும் - றொன்பது - அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது என்பது பொருந்தும். 9 + (700-10)

பத்துக்குறை எழுநூற்றொன்பது - 699; ஆக, 13699. தொண்டு தலையிடவே, 699+9 = 708; ஆக, 13708 என்றலும் ஒன்று. (709-10) +9.

இளம்பூரணர் 13699 என்பர்; பேராசிரியர் 13708 என்பர். பத்துக்குறை எழுநூற்றொன்பது - 699; தொண்டு தலையிட்ட என்பது ஒன்பதால் பெருக்கிய என்றவாறு; எனவே, 699 x 9 = 6291 எனக் கொண்டு; 13000 + 6291 = 19291 என்று கணக்கிடுவர், நச்சினார்க்கினியர்.

இக்கணக்கீடுகளால் வரையறுக்கப்படும் தொடைகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் இக்காலத்தில் இல்லை. இளம்பூரணர் நேராகக் கணக்கிடவும், பிற உரையாசிரியர் இருவரும் தம்புலமைநலம் தோன்ற வலிந்து பலவாறாகக் கணக்கிடுவர்.

(1) இளம்பூரணர் விளக்கம்

மோனை

மொழி முதலாகிய உயிர் 12. இப்பன்னிரண்டு உயிர்களுள் ஒவ்வொன்றற்கும் அது நீங்கலான 11 எழுத்தும் கிளையாம். ஆகவே, ஒவ்வோருயிர்க்கும் கிளையெழுத்துப் பதினொன்று உள ஆதலின் அவற்றை உறழ, 12 x 11 = 132. கதநபம என்னும் மெய்களை உயிர் பன்னிரண்டோடும் உறழ, 12 x 5 = 60. அவற்றைக் கிளையெழுத்தோடு உறழ, 60 x 11 = 660. சகரத்தின் முதலெழுத்து அ ஐ ஒள நீங்கலாகவுள்ள ஒன்பதனைக் கிளையெழுத்து எட்டோடும் உறழ, 9 x 8 = 72. வகரத்தின் முதலெழுத்து உ ஊ ஒ ஓ நீங்கலாக வுள்ள எட்டனைக் கிளை யெழுத்து ஏழோடும் உறழ, 8 x 7 = 56. யகரத்தின் முத லெழுத்து ஒன்றே. ஞகரத்தின் முதலெழுத்து அ எ ஒ என்னு மூன்றனைக் கிளையெழுத்து இரண்டனோடு உறழ, 3 x 2 = 6.

இவ்வகையான் முதலெழுத்து 12 + 60 + 9 + 8 + 1 + 3 = 93. அவற்றைக் கிளையெழுத்தோடு உறழக் கிளையெழுத்து 132 + 660 + 72 + 56 + 6 = 926. முதலெழுத்து 93; கிளையெழுத்து 926; ஆக, மோனைத் தொடை 1019 ஆம்.

எதுகை

உயிரெழுத்து மொழியிடையே வாராது. உயிர்மெய் யெழுத்து 216 - இல் ஙகர வருக்கம் பன்னிரண்டும் ஒழிய எஞ்சி யன 204. இவற்றைக் கிளையெழுத்துப் பன்னிரண்டுடன் உறழ 204 x 12 = 2448. இவற்றோடு மெய் 18; ஆய்தம் 1; குற்றுகரம் 6. இவற்றைக் கூட்ட எதுகையின் கூடுதல் 2473 ஆம்.

முரண்

முரண்தொடை சொல் முரண், பொருள் முரண் என 2.

இயைபு

மொழியிறுதியில் வாராத உயிர்மெய்யெழுத்துக்கள் வருமாறு : ஙகர வருக்க உயிர்மெய்கள் 12, உ ஊ எ ஏ ஒ ஓ ஒள என்ற உயிரெழுத்துக்களால் ஏறப்படாத மெய்கள் முறையே 1, 1, 17, 1, 16, 1, 15 ஆக 52. ஆதலின் எஞ்சிய உயிர்மெய்யெழுத் துக்கள் [ 216 - (12 + 52) ] 152, ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்ற மெய்யெழுத்துகள் 11, குற்றியலுகர ஈறு 6 - ஆக, இவ்வாற்றான் இயைபுத்தொடை 169 என்க. [ இளம்பூரண ருரையுள் 182 என (அடிகளாசிரியர் பதிப்பில்) காணப்படு கிறது. ]

அளபெடை

மொழி முதலாகும் உயிரளபெடை 7; க த ந ப ம எனும் உயிரளபெடை 7 x 5 = 35; சகர அளபெடை 5; வகர அளபெடை 5; ஞகர யகர அளபெடை 2; ஆக இவை 54. இவற்றுள் உயிரளபெடை தனிநிலையாம் 7 நீங்க, ஏனைய 47 ஐயும் முதனிலை இடைநிலை இறுதிநிலை என உறழ, 47 x 3 = 141 உயிரளபெடையாம். ஒற்றுக்களுள், வல்லெழுத்து ஆறும் ரகர ழகரங்களும் ஒழிந்த ஏனைய பத்தும் ஆய்தமும் அளபெடுக்க, ஒற்றளபெடை 11. இவ்வகையால் அளபெடைத் தொடை 7 + 141 + 11 = 159 ஆம்.

இவ்வாற்றான் மோனை முதலிய ஐந்தொடைகளின் கூடுதல் 1019 + 2473 + 2 + 169 + 159 = 3822 ஆம். அடிகளாசிரியர் பதிப்பில் 3835 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவே கொள்வோம்.

பொழிப்புத் தொடையில் கிளையெழுத்து வாராது

ஆதலின் மோனைப் பொழிப்பு 93; எதுகைப் பொழிப்பு 229 (65 + 18 + 146 எனக் காண்க). முரண் பொழிப்பு 2, இயைபு பொழிப்பு 182, ஒற்றளபெடை பொழிப்பாக வாராமையின், உயிரளபெடைப் பொழிப்பு 148. இவையெல்லாம் கூட்ட, 93 + 229 + 2 + 182 + 148 = 654 ஆம்.

ஓரூஉத் தொடையும் மேற்கண்ட வகையான் 654 ஆம்.செந்தொடை

மொழிமுதலாகிய எழுத்து 93. மற்றை அடியிலும் அவை ஒத்து வருங்கால் அவை மோனையுள் அடங்குதலின், அவற்றை ஒழித்து எஞ்சிய எழுத்து 92. இவற்றை உறழ 93 x 92 = 8556 ஆம்.

ஆகவே, இவ்வகையான் தொடை விகற்பம் 3835 + 654 + 654 + 8556 = 13669 ஆம். (தொ. செய். 97 இள.)

(2) பேராசிரியர் விளக்கம்

பேராசிரியருக்குத் தொடைகள் 32 + 1 = 33 ஆம். அவற்று எண்ணிக்கை வருமாறு :

(1) மோனைத்தொடை - 566; (2) தலையாகு எதுகை - 566; (3) அடி எதுகை 566; (4) எழுத்தடி இயைபு 566; (5) சொல்லடி இயைபு - 566; இவற்றது கூடுதல் : 2830. (6) வழிமோனை - 549; (7) வருக்க மோனை - 549; (8) உயிரெதுகை - 549 (9) சொல் முரண் - 549 (10) பொருள் முரண் 549; (11) சொல்லும் பொருளும் சொல்லொடு முரண் - 549; (12) சொல்லும் பொருளும் பொருளொடு முரண் - 549; (13) சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரண் - 549; இவற்றது கூடுதல்; 4392. (14) மூன்றாமெழுத்தொன் றெதுகை - 479; (15) வருக்க எதுகை - 443; (16) நெடில் மோனை 270; (17) மெல்லின எதுகை 270; (18) இடையின எதுகை - 270; (19) ஆசெதுகை - 270; (20) வல்லின எதுகை - 218; இவற்றது கூடுதல் : 2220 (21) உயிரளபெடை - 333; (22) ஒற்றளபெடை - 45; இவற்றது கூடுதல் : 378 (23,24) பொழிப்பு, கிளைப்பொழிப்பு - 551; (25,26) முற்று, கிளை முற்று - 913; (27) ஒரூஉ - 528; (28) கிளை ஒரூஉ - 530; இவற்றது கூடுதல் : 2522. (29) அசை அந்தாதி - 325; (30) சீர் அந்தாதி - 164; (31) எழுத்து விட்டிசை - 164; (32) குறிப்பு விட்டிசை - 164; (33) செந்தொடை - 549; இவற்றது கூடுதல் : 1366.

இவ்வெல்லாவற்றையும் கூட்ட, 13708 ஆம். (தொ. செய். 101 பேரா.).

(3) நச்சினார்க்கினியர் விளக்கம்

(1-5) மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்து தொடையான மூன்று பாவிற்கும் வரும் தொகை - 2830 (6-15) ஐவகை முரண், வருக்க மோனை, வருக்க எதுகை, வழி மோனை, உயிரெதுகை, செந்தொடை என்னும் இவற்றான் வரும் தொகை 5490.

(16) மூன்றாமெழுத்தொன்று எதுகை - 479. (17-20) மெல்லின எதுகை, இடையின எதுகை, ஆசெதுகை, நெடில்மோனை என்னும் இவற்றால் வரும் தொகை - 1097.

(21) வல்லின எதுகை - 218

(22) உயிரளபெடை - 333

(23) ஒற்றளபெடை - 45

(24) அசை அந்தாதி, சீர்அந்தாதி - 272, 164.

(25) எழுத்து விட்டிசை, குறிப்பு விட்டிசை - 164, 164.

ஆக, 25 தொடையான் பெற்ற தொகை 11256 ஆம்; இவை ஈரடித்தொடை.

இனி ஓரடித்தொடை ஏழு; அவை வருமாறு :

(1) அகவற்பொழிப்பு - 578; (2) வெண்பாப் பொழிப்பு - 441; (3) கலிப்பொழிப்பு - 60; (4) முற்றெதுகை - 153; (5) வருக்க முற்றெதுகை - 395; (6) ஒரூஉ எதுகை - 449; (7) வருக்க ஒரூஉ எதுகை - 237; ஆக, இவற்றின் கூடுதல் 2513; (இவ் வெண்ணிக்கை ஆராயற்பாலது.) இவற்றுள் நீக்கப்படுவன - 79; எஞ்சிய, ஓரடித்தொடைகளின் கூடுதல் - 2434.

இவ்வாற்றால், 25 ஈரடித்தொடை 7 ஓரடித்தொடை என்னும் இவற்றின் கூடுதல் 11256 + 2434 = 13690.

ஆசிடை எதுகை வேறுபாடு, இரண்டடி எதுகை, செந் தொடை வேறுபாடு, இரட்டை, அந்தாதி வேறுபாடு, இணை, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று, கடை யிணை, கடைக்கூழை, இடைப்புணர் என்னுமிவற்றின் தொகை - 5601.

இவ்விருதிறமும் கூட்ட, 13690 + 5601 = 19291 ஆம் (இத் தொடைக் கணக்கினை அறிவதனால் பயன் சிறப்பாக யாதும் இன்று). (தொ. செய். 101 நச்.)

தொடை 13,700 ஆமாறு -

{Entry: O15a__062}

அடிவகைத்தொடைகள் பதினாறும் (5 அடி வகைத் தொடைகள் சீர்வகைத் தொடைகள் காண்க) வழுவிலவாய் அமைந்த 625 அடிகளில் வரும். இவற்றை உறழ 10,000 தொடைகள் வருமாறு காண்க.

சீர்வகைத் தொடைகள் ஐம்பதனைப் பதினேழ் நிலத்தவாய் வழுவின்றி வரும் அடிகளில் பயின்று வருதற்குரிய 74 சீர்க ளோடும் உறழ (50 x 74) 3,700 தொடைகளாம்.

பதினேழ் நிலத்தும் பயின்று வரும் 74 சீர்களாவன :

உரியசைச்சீர் - 2

இயற்சீர் - 10

ஆசிரியவுரிச்சீர் - 6

வெண்சீர் - 4

வஞ்சியுரிச்சீர் - 52 (தொ. செய். 101 ச. பால.)

தொடைகளுள் சிறந்தது -

{Entry: O15a__063}

தொடைகளுள் எதுகைத்தொடையே சிறந்ததாம். ஆகவே, பொழிப்பு முதலிய விகற்பங்களை எதுகைத் தொடைக்கே நூற்பாவில் கூறி, ஏனைய தொடைகளுக்கு அருத்தாபத்தி யால் கொள்ள வைத்தார் தொல்காப்பியனார். (தொ. செய். 98 நச்.)

‘தொடைநிலை வகையே ஆங்கு’ -

{Entry: O15a__064}

சீர்வகை அடியின் தொடைப்பகுதி வரையறைப்படா எனினும், அவை செய்யுட்கண் நிற்கும் நிலைமை முற்கூறிய கட்டளை போல் நின்று தொடை கொள்ளப்பெறுதல். தொ. செய். 103 நச்.) ஆங்கு - அவ்விரண்டு; வரையறையுடையனவும், இல்லனவும் (103 பேரா.)

ஆங்கு - மேற்சொல்லப்பட்ட பாகுபாடு; எழுத்தானும் சொல்லானும் பொருளானும் வேறுபடுதல். (99 இள.)

தொடைப்பகுதி எண்ணில ஆதல் -

{Entry: O15a__065}

மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்பன வற்றின்கண், இணை கூழை முற்று மேற்கதுவாய் கீழ்க் கதுவாய் கடை கடையிணை கடைக்கூழை இடைப்புணர் என வேறுபடுத்து உறழவும், எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி அடியந்தாதி எனவும், உயிர்மோனை உயிரெதுகை நெடில் மோனை நெடிலெதுகை வருக்கமோனை வருக்கஎதுகை இனமோனை இனஎதுகை ஆசெதுகை மூன்றாமெழுத் தொன்றெதுகை இடையிட்டெதுகை எனவும் இவ்வாறு வருவனவற்றையும் எழுத்து வேறுபாட்டினால் உறழவும், நிரல்நிறைப்பொருள்கோள் வகையானும் உறழவும், தொடைகள் வரம்பிலவாகி விரியும். (தொல். செய். 98 இள.).

625 வகைப்பட்ட அடிகளுள் ஒன்றை நிறுத்தி, அதனோடு 624 ஐயும் கூட்டியும், அதனோடு சீர்வகை அடிகளையும் விகற்பத் தொடைகளையும் கூட்டியும் தொடுக்கத் தொடைப்பகுதிகள் எண்ணிலடங்கா. (102 நச்.)

தொடை பல விரவின் பெயர் வழங்குமாறு -

{Entry: O15a__066}

ஒரு செய்யுட்கண் தொடை பல விரவி வரினும், முதலில் வந்த தொடையான் பெயரிடப்படும் என்பர் யாப்பருங்கல ஆசிரியர்; அவிநயனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார், பல்காயனார், நத்தத்தனார் முதலியோர் கருத்தும் இதுவே.

எ-டு : ‘தாமரை புரையும் காமர் சேவடி - பொழிப்பெதுகை

பவளத் தன்ன மேனித் திகழொளி’.

குன்றி யேய்க்கும் உடுக்கை குன்றின் - ஒரூஉஎதுகை

நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் - பொழிப்பெதுகை,

ஒரூஉ மோனை

சேவலங் கொடியோன் காப்ப

ஏம வைகல் எய்தின்றால் உலகே’ - பொழிப்பு மோனை.

இப்பாடற்கண் இவ்வாறு தொடைபல வந்தன வாயினும், முதலில் வந்த தொடையான் பெயர்கொடுத்து, இதனைப் பொழிப்பெதுகைச் செய்யுள் என்று வழங்குக என்பது.

தொடைபற்றிய யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுமாறு -

{Entry: O15a__067}

நான்கு பாக்களுக்கும் 51 நிலங்கள் உள. அவற்றின் விரிவு 625 அடி. ஒவ்வோரடியும் 22 தொடை பெறும். தொடை இரண்டடிகளைக் கொண்டு காணப்படினும் ஒரே அடியில் கொள்ளப்படுதலின் 625 x 22 = 13750 இல் ஓரடிக்குரிய நிலங்கள் 51 ஐக் களைய தொடை 13699 ஆகும். (யா. க. 49 உரை)

தொடைமுரண் -

{Entry: O15a__068}

முரண்தொடை ‘செம்மை பசுமை’ - தொடை முரண் (சீவக. 2 நச்.)

தொடையின் தொகை -

{Entry: O15a__069}

மோனை எதுகை முரண் இயைபு அளபெடை செந்தொடை இரட்டைத்தொடை அந்தாதித்தொடை எனத் தொடையின் தொகை எட்டாம். (யா. க. சிறப்புப். உரை)

தொடைவகை -

{Entry: O15a__070}

தலையாகுமோனை, இடையாகு மோனை, கடையாகு மோனை - 3

தலையாகுஎதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை - 3

சொல்முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண், மோனை முரண், எதுகை முரண், செம்முரண் - 6.

மோனைஇயைபு, எதுகைஇயைபு, முரண்இயைபு, அள பெடைஇயைபு, மயக்கு இயைபு, செவ்வியைபு - 6

மோனை அளபெடை, எதுகை அளபெடை, முரண் அளபெடை, இயைபு அளபெடை, மயக்கு அளபெடை, செவ்வளபெடை - 6

இயற்செந்தொடை, மருட்செந்தொடை - 2

ஒருபொருளிரட்டை, இருபொருளிரட்டை, பல பொருளி ரட்டை, இரு முற்றிரட்டை - 4.

எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீரந்தாதி, அடிஅந்தாதி, மயக்கந்தாதி, இடையிட்டந்தாதி - 6

என்றிவ்வாறு தொடைவகைகள் 36 ஆம். (யா.க.சிறப்புப். உரை)

தொடைவிகற்பக் குறள் வெண்பா -

{Entry: O15a__071}

இனவெழுத்தால் இணைமோனை முதலிய தொடைவிகற்பம் பெற்றுவரும் குறள் வெண்பா.

எ-டு : ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு’ (கு. 1081)

முதலடி இனவெழுத்தால் இணைமோனை பெற்றது. (யா. க. 59 உரை)

தொடை விகற்பங்கள் -

{Entry: O15a__072}

ஓரடிக்குள் அமைந்த சீர்களிடையே இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற எழுவகை விகற்பங்களும் நாற்சீர் அடிகளுள் வரும்.

இவ்வேழு விகற்பங்களையும், ஈரடிகளிடையே அமையும் அடி என்பதனையும், மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்ற ஐந்தனோடும் உறழ (5+(7 x 5)) அடி மோனை முதலாக நாற்பது தொடைவிகற்பங்கள் வரும். அவற்றோடு அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பன வற்றையும் கூட்டத் தொடைவிகற்பம் நாற்பத்துமூன்று ஆகும். (யா. க. 34. உரை)

தொடை விரி -

{Entry: O15a__073}

அடி, இணை, பொழிப்பு, ஓரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற இவ்வெட்டனையும் மோனை - எதுகை - முரண் - இயைபு - அளபெடை - என்ற ஐந்தனோடும் உறழ வரும் நாற்பது தொடையும்

கடை, கடையிணை, பின், கடைக் கூழை, இடைப்புணர் என்ற ஐந்தனையும், மோனை முதலாய ஐந்தனோடும் உறழ வரும் இருபத்தைந்து தொடையும்.

அசை, சீர், இசை, முற்று விரளச்செந்தொடை நான்கும்,

குறை நிறை முற்று என்பனவற்றை, ஒன்று பல என்பவற்றொடு முரண வரும் இரட்டைத்தொடை ஆறும்.

எழுத்து, அசை, சீர், அடி, மயக்கு, இடையீடு என்ற ஆறனை யும், மண்டிலம் செந்நடை என்பவற்றொடு முரண வரும் அந்தாதித் தொடை பன்னிரண்டும் ஆகத் தொடைவிரி 87 ஆம். (யா. க. சிறப்புப். உரை)

தொல்காப்பியம் பற்றிய தொடைவிரிச் செய்தியைத் ‘தொடை களின் எண்ணிக்கை’ எனும் தலைப்பினுட் காண்க. (யா. க. சிறப்புப். உரை)

தொல்காப்பியம் வகுக்கும் தொடை வகை -

{Entry: O15a__074}

மோனை எதுகை முரண் இயைபு என்ற நான்கும் சிறப்பான தொடைகள்; உயிரளபெடை ஐந்தாவது தொடை; ஒற்றள பெடை ஆறாவது தொடை.

வந்த சீரே நாற்கால் வரத் தொடுக்கும் இரட்டைத்தொடை யும், நிரல்நிறைத்தொடையும், செந்தொடையும் அடுத்துக் கொள்ளப்படும். செந்தொடை ஓரடிக்கண்ணே வரினும் ஈரடியை இணைத்துக் கண்டாலன்றிச் செந்தொடை என்பதை உணர்த்தல் இயலாது.

ஓரடிக்கண்ணே வரும் பொழிப்பு ஒரூஉ என்பனவும் தொல்காப்பியத்திற் சுட்டப்பட்டுள்ளன.

வந்த அசை சீர் முழுதும் மீண்டும் வரும் வழிமோனை, முற்றெதுகை, கிளைமுற்றெதுகை, இருவகை அந்தாதி, இருவகை விட்டிசை, இணை கூழை மேற்கதுவாய் கீழ்க்கது வாய் முதலிய விகற்பங்கள் - உரையாசிரியர்களால் கொள்ளப்பட்டுள்ளன. (தொ. செய். 89-91 நச்.)

தொல்காப்பியனார் தளை என்பதனைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளாமை -

{Entry: O15a__075}

இடைக்காலத்தார் செய்யுளுறுப்பாகக் கொண்ட தளை யினைத் தொல்காப்பியர் உறுப்பாகக் கொள்ளாமைக்குக் காரணம் தளை என்பது சொற்புணர்ச்சி போலச் சீரினது தொழிலேயன்றி வேறோர் உறுப்பினை உண்டாக்குதல் இல்லை ஆகலானும், தளையை உறுப்பாகக் கொள்ளின் சீரான் அடி வகுப்பது பயனில் செயலாம் ஆகலானும் என்க. (தொ. செய். 1 ச.பால)

தொன்மை -

{Entry: O15a__076}

அம்மை முதலாய வனப்பு எட்டனுள் ஒன்று; உரை விரவிப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவனயாவும் தொன்மையாம். அவை பெருந்தேவனார் செய்த பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. சிலப்பதிகாரமும் தொன் மையின் பாற்படும். (தொ. செய். 237 நச். )

‘தொன்று’ என்பதே “தொண்டு” எனப் பிழைபடவந்தமை -

{Entry: O15a__077}

பத்து என்னும் எண்ணிற்குத் தொன்மையாயது ஒன்பது என்பதனைக் குறிக்க ஆசிரியர் ‘தொன்று’ என்று கூறி யுள்ளார். இதன் உரிச்சொற்பகுதி ‘தொல்’ என்பது.

‘தொன்று தொட்டு என்பது’ என்பது தொண்டுதொட்டு எனப் பேச்சுவழக்கில் திரிந்த பிழைவழக்கை ஆராயாமல் நோக்கித் ‘தொண்டு’ என்பதற்குப் பழையது, முந்தியது எனத் தவறாகப் பொருள்கொண்டனர் போலும். அன்றி, ‘தொன்று’ என்பதனடியாகப் பிறந்து திரிந்த தொண்ணூறு தொள்ளாயிரம் என்பவற்றுள், தொண்- தொள் - என்பவை முதனிலையாக நிற்றலை நோக்கி, அதுவே உண்மை எனவும் கருதியிருக்கலாம், அவை தொல்நூறு (தொன்னூறு), தொல் + ஆயிரம் = தொல்லாயிரம் என்பவற்றைத் திரித்து அமைத்துக்கொண்டவையே. (தொ. செய் 101 ச. பால.)

தோல் -

{Entry: O15a__078}

வனப்பியல் எட்டனுள் ஒன்று; இழுமென்னும் ஓசையை யுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், ஆசிரியப் பாட்டான் ஒரு கதைமேல் தொடுப்பினும் தோல் என்று கூறுவர், தொன்னெறியை அறிந்த புலவர்.

தோல் கொச்சகத்தானும் அகவலானும் செய்யப்படும் இரு வகைத்து. கொச்சகத்தால் செய்யப்படும் பொருட்டொடர் சிந்தாமணி முதலியன; ஆசிரியப்பாவான் அடிநிமிர்ந்து வந்தன தேசிகப்பா முதலியன. (தொ. செய். 238 நச்.)

தோன்றுவது கிளந்த துணிவு -

{Entry: O15a__079}

ஒன்று கூற அச்சொற்றொடர் கொண்டு மற்றொருபொருள் தோன்றும் துணிவுடையதாகக் கூறுதல். (‘பிசி’ வகை இரண்டனுள் ஒன்று) ‘பிசி’ காண்க. (தொ. செய். 176 பேரா.)

ந section: 170 entries

நலிதல் ஓசை -

{Entry: O15a__080}

எடுத்தல்ஓசைக்கும் படுத்தல்ஓசைக்கும் இடைநிகர்த்ததாகிய ஓசை.

‘நடந்தனன் ’ என்னும் வினைச் சொற்கண், ‘நட’ எனும் பகுதி எடுத்தல் ஓசையானும், ‘அன்’ எனும் விகுதி படுத்தல் ஓசை யானும் கூறப்படும். இடைப்பட்ட இடைநிலை சாரியை என்பன நலிதல் ஓசைப்படக் கூறப்படும். ஆய்தம் இத்தகைய நலிந்த ஓசையுடையது ஆதலின், ஆய்தம் பயின்று வரும் ஓசை ‘நலிபு வண்ணம்’ எனப்பட்டது. (நன். 88)

நலிபு வண்ணம் -

{Entry: O15a__081}

ஆய்தம் பயின்றுவரும் சந்தம்.

எ-டு : ‘னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு’ (தொ.எழுத். 123 நச்) (தொ. செய். 223 பேரா.)

நலிவு -

{Entry: O15a__082}

ஆய்த எழுத்து. இது பயின்று வரும் வண்ணம் நலிவு வண்ணமாம். (தொ. செய். 223 பேரா)

நால்வகைச்சீரும் செய்யுளுள் நிற்கும் முறை -

{Entry: O15a__083}

இயற்சீரும் உரிச்சீரும் விரவியும் வரும். இயற்சீரும் உரிச்சீரும் வேறுவேறாகியும் வரும். பொதுச்சீர் அருகிவரும். அசைச்சீர் வெண்பா ஈற்றில் வரும்; ஏனைய பாக்களில் அருகிவரும். நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் வஞ்சியிலேயே வரும். வஞ்சியுரிச்சீராகிய கனிச்சீர் வெண்பாவினுள் வரப்பெறா. நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும் வஞ்சிப்பாவின் இறுதியிலும் வரப்பெறா. நேர் ஈறாகிய நாலசைச்சீர் எட்டும் ஆசிரியப்பாவில் அருகி வரும். கருவிளங்கனி கூவிளங்கனி என்ற சீர்கள் வஞ்சிக்கே பெரும்பான்மையும் உரிய. (யா. க. 15 உரை)

எ-டு:

1. இருநோக் கிவள்உண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (க. 1091)

குறள்வெண்பாவினுள் இயற்சீரும் உரிச்சீரும் விரவின.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே. (குறுந். 2)

இவ்வாசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவின.

‘போது சாந்தம் பொற்ப ஏந்தி’

இவ்வாசிரிய அடியுள் இயற்சீர் வந்தது.

2. ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்’ (கு. 397)

இவ்வெண்பா அடியுள் வெள்ளைஉரிச்சீரே வந்தது.

3. ‘அல, ரி, நா, று துவர்வாய் அமர்ந்த நோக்கின்’ - புளிமாந்தண்பூ.

‘செந், து, சிதை, ய உழுத செங்குரல் சிறுதினை’ - தேமாநறும்பூ.

இவ்வாசிரிய அடிகளுள் நாலசைச்சீர் அருகி வந்தது.

‘நற்றாள் தொழாஅ ரெனின் ’ - நிரை (குறள் 2)

‘வாலெயி றூறிய நீர் ’ - நேர் (குறள் 1121)

அசைச்சீர் வெண்பா ஈற்றில் வந்தது.

கை விரிந்தன காந்தளும் பூஞ்சுனை’ - நேர்

‘குர வணங்கிலை மாவொடு சூழ்கரை’ - நிரை

அசைச்சீர் இரண்டும் பாவினத்துள் அருகி வந்தன.

5. ‘விரிகுயிற்பெடை மெலிவினை’

‘பூந்தாமரைப் போதலமர’

கருவிளங்கனி கூவிளங்கனிச்சீர்கள் வஞ்சியிலேயே வந்தன.

வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; கலியுள்ளும் பெரும் பான்மையும் குற்றுகரம் வந்துழியன்றி வாரா; வஞ்சியுள் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும். வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் அருகி ஓரடியுள் கண்ணுற்று நிற்கவும் பெறும். அல்லனவற்றுள் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; இரண்டு வரினும் இயற்சீராயின இடையிட்டு வரும். ஓரசைச் சீர் பெரும்பான்மை வெண்பாவின் இறுதிக்கண்ணும், அம்போதரங்க உறுப்பின்கண்ணும் வரும். உரிச்சீராnன ஆசிரியம் பயின்று வாரா. இயற்சீரானே வஞ்சியும் கலியும் பயின்று வாரா.

1. ‘நின், று, நின், றுளம் நினை, பு, நினை, வொடு’

‘செலச், செல, வூ, ரலர் செவி, சுடச், சுட, முகிழ்’

- வஞ்சிப்பாவினுள் நாலசைச்சீர் இரண்டு ஓரடிக்கண் வந்தன.

2. ‘திரைந், து, திரைந், து திரைவரத், திரள்,முத்தம் கரைவாங்கி’

- கலியடியுள் குற்றுகரம் வந்தவழி நாலசைச்சீர் அருகி வந்தது.

3. ‘கொண், ட, ஞெண், ட மணற்குன்றில் பண்ணையாயம் குடிகெழுவவும்’

- கலியடியுள் நாலசைச்சீர் இடையிட்டு வந்தது.

நால்வகைப் பாக்களின் ஓசை -

{Entry: O15a__084}

ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களின் ஓசை முறையே அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் என்பனவாம்.

அகவுதல் அழைத்தல்; வலித்தும் மெலித்தும் நெகிழ்ந்தும் கூறப்பெறும் ஓசையை அகவல் என்ப.

செப்பல் - விடுத்தல் ஆதலின், அழைத்தலுக்கு மறுதலை யாயிற்று. செப்பலாகிய விடை வினாவை உள்ளடக்கியதாக லின் இவ் வோசை வினாவும் செப்பும் போல் எடுத்தலும் படுத்தலுமாக வரும் என்க.

துள்ளுதலாவது தாவுதல்; முரன்று வருமோசை ஈண்டுத் துள்ளல் எனப்பட்டது. துள்ளுதல் எனினும் கலித்தல் எனினும் ஒக்கும்.

தூங்கலாவது நெகிழ்ந்து நிற்றல். இஃது இக்காலத்தே தொங்குதல் என வழங்குகிறது. வஞ்சிப்பா ஆசிரியத்தின் கிளையாதலின் அகவலோசை சிறிது நீண்டு நெகிழின், அது வஞ்சிக்குரிய தூங்கலோசை ஆகின்றமை புலனாகும். (தொ. செய். 81-84 ச. பால.)

நாலசைச்சீர் -

{Entry: O15a__085}

பொதுச்சீர் காண்க.

நாலசைச்சீர் பற்றி முன்னோர் கருத்து -

{Entry: O15a__086}

தொல்காப்பியனார் நாலசைச்சீர்களைக் கொண்டாரல்லர். பிற்காலத்தவர் நாலசைச்சீர்களுக்குக் காட்டிய உதார ணங்கள் யாவும் ஈரசைச்சீர் இரண்டாவதற்கு அமைவுடை யனவாகவே உள்ளன.

அங்கண்வானத் தமரர சரும்’ என்ற குறளடி

‘அங் கண் வானத் தமரரசரும்’ என்ற சிந்தடி ஆதற்குப் பெரிதும் இயைபுடையது.

இங்ஙனமே அப்பாட்டுள் ஏனைய குறளடிகளையும்

‘வெங்களி யானை வேல்வேந்தரும்

வடிவார் கூந்தல் மங்கையரும்

கடிமலர் ஏந்திக் கதழ்ந்திறைஞ்சச்

சிங்கம் சுமந்த மணியணிமிசைக்

கொங்கிவர் அசோகின் குளிர்நிழற்கீழ்

செழுநீர் பவளத் திரள்காம்பின்

முழுமதி புரையும் முக்குடைநிழல்

வெங்கண் வினைப்பகை விளிவெய்தப்

பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப

அனந்த சதுட்டய மவையெய்த

நனந்தலை உலகுடை நவைநீங்க

மந்த மாருதம் மருங்கசைப்ப

அந்தர துந்துபி நின்றியம்ப

இலங்கு சாமரை எழுந்தலமர

நலங்கிளர் பூமழை நனிசொரிதர’

என முச்சீரடிகளாகக் கொள்ள, நாலசைச்சீர் கொள்ள வேண்டிய தேவை யின்றாம்.

யாப்பருங்கலம் கூறும் நாலசைச்சீர்களை வேண்டாது கணக் கிடுவதற்கு அதன் உரையாசிரியர் ஏழு நயங்களைக் குறிப்பிடு கிறார்.

1. ‘குற்றியலுகரத்தை ஒற்றாக்குதல்

‘குண், டு, நீ, டு, நீர் குவளைத்தண்சுனை’ - ஐயசைச்சீர்

‘கொன், று, கோ, டு, நீ, டு குருதிமாறவும்’ - ஆறசைச்சீர் என்னும் வஞ்சியடிகளில், ஐயசைச்சீரும் ஆறசைச்சீரும் ஆவான் செல்லும் சீர்களின் குற்றுகரங்களை ஒற்றாக்கின், அவை மூவசைக் சீரே யாகும்.

2. கூன் வகுத்தல்

அடியதர்சேர்தலின் அகஞ்சிவந்தன’ - நாலசைச்சீர்

மண்கொண்டகுழி குவளைபூக்கும்’ - நாலசைச்சீர்

‘மாவழங்கலின் மயக்குற்றனவழி - நாலசைச்சீர்

இவ்வடிகளில் வந்துள்ள நாலசைச்சீர்களில் அடி, குழி வழி என்பனவற்றை முதல் இடை கடைகளில் கூனாகக் கொள் ளின்,

‘அடி அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன’

‘மண்கொண்ட குழி குவளைபூக்கும்’

‘மாவழங்கலின் மயக்குற்றன வழி’

என்று அமையும் இவ்வடிகளில் நாலசைச்சீர் இன்றாகும்.

3. சிந்தடி யாக்குதல்

‘அங்கண்வானத் தமரரசரும்’ - நாலசைச்சீர் என்ற குறளடியை

‘அங்கண் வானத் தமரரசரும்’

எனச் சிந்தடியாக்க, நாலசைச்சீர் இன்றாம்.

4. நெடிலடி யாக்குதல்

‘சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே’ (புறநா. 235)

‘கண்டல் வண்டல் கழிபிணங்கிக் கருநீல மதுவிம்மவு ம்’ என நெடிலடியாக்கின், நாலசைச்சீர் இன்றாம்.

5. வகையுளி கூறுதல்

‘பா, டு, நர்க், கும் ஆ, டு, நர்க், கும் பண்டுத்தாம் கண்டவர்க் கும்’ என்னும் அடியின் முதல் இரு நாலசைச்சீர்களையும்

‘ பா டுநர்க் கும் ஆ டுநர்க் கும் பண்டுத்தாம் கண் டவர்க் கும்’ என்று வகையுளி ஆக்கின், ஆண்டு, நாலசைச்சீர் இன்றாம்.

6. அசைச்சீர் கொள்ளுதல்

‘இருநெடுஞ் செஞ்சுட ரெஃகமொன் றேந்தி யிர, வின், வந், த

அருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லா, து, விட், டால்,

கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூ, டு, நெற், றிப்

பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண், கொடிக், கே.’

என்றமைந்த கட்டளைக் கலித்துறையின் ஐந்தாம் சீரினை இருசீர்கள் ஆக்கி இப்பாடலை அறுசீர் விருத்த மாக்கின் நாலசைச்சீரினை நீக்கிவிடலாம். அப்பொழுது ஈற்றடியின் இறுதிச்சீர் ‘பெண் கொடிக்கே’ என்ற இருசீராகும்; பெண் என்பது அசைச்சீராம்.

7. அளபெடையை அழித்தல்

‘தாஅய்த்தாஅய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார்

போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப் போஒய்ப்’

இவ்வெண்பாவில் நாலசைச்சீர்களில் ஓர் அளபெடையை அழித்துவிடின் மூவசைச்சீராகி விடும். தாய்த் தா அய் - நேர்நேர்நேர்.

இவ்வேழ் வகைகளைப் பின்பற்றினால், பாக்களில் நாலசைச் சீர் இல்லாமலேயே அலகிடலாம். இங்ஙனம் பின்பற்றுதல் நுண்ணுணர்வினோர்க்கன்றி இயலாது என்று கருதிப்போ லும் காக்கைபாடினியார் முதலிய ஆசிரியர் நாலசைச்சீர் கொண்டனர். (யா. வி. பக். 430-443)

நாலசைச்சீர் வாராமல் காக்கும் வழிகள் -

{Entry: O15a__087}

குற்றுகரம் ஒற்றாக்குதல் - ‘குன்று கோடு நீடு குருதிபாயவும்’

கூன்வகுத்தல் - அடி அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன’

சிந்தடியாக்குதல் - ‘அங்கண் வானத் தமரரசரும்’

நெடிலடியாக்குதல் - ‘சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே’

வகையுளி கூறுதல் - ‘பா டுநர்க் கும் ஆ டுநர்க் கும் பண்டுத்தாம்

கண்டவர்க் கும்’

அசைச்சீர் கொள்ளுதல் - ‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இர வின்வந்த’

அளபெடை அழித்தல் - ‘போஒய்ப்போஒய்ப் பூசலிடச் செய்து’

இவ்வேழ் நயங்களாலும் நாலசைச்சீர் வாராதவாறு செய்யலாம். விளக்கம் ‘நாலசைச்சீர் பற்றிய முன்னோர் கருத்து’ள் காண்க. (யா. க. 95 உரை)

நாலசைச்சீரின் தேவை -

{Entry: O15a__088}

நாலசைச்சீர் வேண்டாமலேயே செய்யுளை நடத்தும் உபாயங்கள் ஏழு உள. அவற்றைப் பின்பற்றி உரைப்பின், நுண்ணுணர்வினார்க்கன்றி அறிய ஒண்ணாது ஆகலானும், காக்கைபாடினியார் முதலிய ஒருசார் ஆசிரியர் நாலசைச்சீர் கொண்டார் ஆகலானும், யாப்பருங்கல நூலுள்ளும் நாலசைச்சீர் கூறப்பட்டன. (யா. வி. பக். 443)

நாலெழுத்துச்சீர் ஒன்பது -

{Entry: O15a__089}

கணவிரி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய், நாணுத்தளை, உரறுபுலி என்ற ஒன்பதாம்.

இவை நிரை நிரை, நேர் நிரைபு, நிரைநேர்பு, நிரைபுநேர், நிரை நிரைபு, நேர்நிரைநேர், நிரைநேர்நேர், நேர்புநிரை, நிரைபு நிரை என்பன. முற்றியலுகரம் எண்ணப்பட்டன. (தொ. செய். 41. நச்)

நாள் -

{Entry: O15a__090}

வெண்பாவின் ஈற்றடி இறுதியில் ஓரசைச்சீராக வரும் வாய்பாடு.

எ-டு :‘நிலமிசை நீடுவாழ் வார்’ (யா. கா. 7.)

நாற்சீரடிக்கே அடிவரையறை -

{Entry: O15a__091}

தொடை கொள்ளுதற்குச் சிறந்த நாற்சீரடிகளுக்கே 625 என்று அடிவரையறை செய்யப்பட்டது. அவற்றுள்ளும் தொடை கொள்ளுங்கால் அகவற்கு நாற்பத்தொன்றும், வெள்ளைக்குப் பதினெட்டும் ஆக 59 அடிகளுக்குத் தளை வழுப்படுதலின் அவை களைந்து எஞ்சிய அடியே கொள்ளப் படும். தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் சிறப்புடைய நாற்சீர்அடிகளுள் கட்டளை அடிகளைக்கொண்டே செய்யுள் செய்தலின் அவற்றிற்கே வரையறை கூறப்பட்டது. பின் கடைச்சங்கத்தார்க்கு அஃது அரிது ஆகலின், அவர்கள் சீர்வகை அடி பயிலச் செய்யுள் செய்தனர். இக்காலத்தார் அளவடியால் செய்யுள் செய்திலர் எனக் கொண்டு, குறளடி சிந்தடி நெடிலடி கழிநெடிலடி என்ற நால்வகை அடிகளுக் கும் வரையறை கூறப் புகின் அது வரம்பின்றி ஓடும். (தொ. செய். 51 நச்.)

நாற்சீரடியின் சிறப்பு -

{Entry: O15a__092}

பாட்டு, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி என எழுவகைப்படும் செய்யுளுள், அடி வரையறையுடைய பாட்டுக்களே முதற்கண் கூறப்பட்டுள்ளன. அவற்றுள்ளும் அகவல், வெண்பா, கலி என்பன நாற்சீரடிகளாலேயே அமைதலின் நாற்சீரடியின் சிறப்புப் புலப்படும். (தொ. செய். 35 நச்.)

நாற்சொல் இயல் -

{Entry: O15a__093}

பெயர் வினை இடை உரி அல்லது இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற நாற்சொல்லினையும் உலகத்தார் வழங்குகின்ற வழக்கு வடிவு. (பேரா.)

பெயர் வினை இடை உரி என்பன இயற்சொல்லின் பாகு பாடாகலின் நாற்சொல் இயற்சொல் முதலிய நான்கே. (நச்) (தொ. செய். 80)

நாற்பத்து நான்கு சீர்கள் பதினெட்டாதல் -

{Entry: O15a__094}

கட்டளை ஆசிரியத்திற்குரிய சீர்கள் - 14, கட்டளை வெண்பா விற்குரிய சீர்கள் - 16, கட்டளைக் கலிப்பாவிற்குரிய சீர்கள் -14 ஆக இந்நாற்பத்து நான்கும் இயற்சீர் -10, ஆசிரிய உரிச்சீர் -2, வெண்சீர் - 4, அசைச்சீர் - 2 ஆக 18 சீர்களை வரையறுத்துக் கூறியனவே. (தொ. செய். 28 நச்.)

நாற்பெயர் எல்லையகம் -

{Entry: O15a__095}

வடவேங்கடம் தென்குமரி கிழக்கும் மேற்கும் கடல் என்ற எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு. (பேரா)

மலைமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம், தொண்டைமண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ்நாடு. (நச்.) (தொ. செய். 79)

நான்கு விகற்ப இன்னிசை வெண்பா -

{Entry: O15a__096}

எ-டு : ‘கடற்குட்டம் போழ்வார் கலவர் படைக்குட்டம்

பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில்

தவக்குட்டம் தானுடையான், நீந்தும் அவைக்குட்டம்

கற்றான் கடந்து விடும்.’ (நான்மணிக். 16)

இப்பாடல் (இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெறாது, முதல் மூன்றடிகளிலும் ஒரூஉத்தொடை பெற்று) நான்கு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. (யா. க. 61 உரை)

நிகிர்தம் -

{Entry: O15a__097}

பிசி, நிகிர்தம் என்பன ஒரு பொருட் கிளவி. ‘பிசி’ காண்க. (இ. வி. பாட். 144 உரை)

நிரல் நிறை, இரட்டை - இத்தொடைகளை இறுதிக்கண் வைத்தமை -

{Entry: O15a__098}

நிரனிறை ஓரடியினின்று மற்றோரடிக்கண்ணும் விரவுத லானும், இரட்டைத் தொடையானது மோனை எதுகை இயைபு என்றற்கும் ஏற்ப நிற்றலானும், இவற்றின் சிறப் பின்மை தோன்ற இவற்றை இறுதிக்கண் கூறினார். (தொ. செய். 91 ச.பால.)

நிரைபு நிரைபு நிரை -

{Entry: O15a__099}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறு வழங்கு சுரம், உருமு வழங்கு சுரம், உருமு விரவு சுரம் எனக் கொள்ளப் படும். (குற்றுகர முற்றுகர வேறுபாட்டால் வாய்பாடு மூன்றாயின.) (தொ. செய். 20 நச்.)

நிரல்நிறைத் தொடை விகற்பங்கள் -

{Entry: O15a__100}

அடிநிரல்நிறையும் இணை-பொழிப்பு-ஒரூஉ-கூழை-மேற்கது வாய்-கீழ்க்கதுவாய்-முற்று-நிரல்நிறைகளும் ஆம். (இவை அளவடிக்கண் நிகழ்வன)

ஈரடிகளின் தொடக்கத்தில் நிரல்நிறைப் பொருள்கோள் அமைதல் அடிநிரல்நிறையாம்.

எ-டு : முலைகலிங்கம் மூரி நிலமா மகட்கு

மலைபரவை மாரிமென் கூந்தல்.

(முலை மலையாம்; கலிங்கம் பரவையாம் - என்க)

அடியின் முதல் இருசீர்களிலும் நிரல்நிறை அமைதல் இணை நிரல்நிறை யாம்.

எ-டு : நண்ணினர் பகைவரென் றிவர்க்கு நாடொறும்

தண்ணியன் வெய்யன் நம் தானை வேந்தனே.

(நண்ணினர்க்குத் தண்ணியன், பகைவர்க்கு வெய்யன்- என்க)

1, 3 ஆம் சீர்களில் நிரல்நிறை அமைதல் பொழிப்பு நிரல்நிறை யாம்.

எ-டு : புருவமும் பூணார் புணர்முலையும் கூறின்

வரிசிலையும் மாண்பமைந்த கோங்கும்.

(புருவம் வரிசிலை போலும், புணர்முலை கோங்கு போலும்-என்க)

1, 4, ஆம் சீர்களில் நிரல்நிறை அமைதல் ஒரூஉ நிரல்நிறையாம்.

எ-டு : புரிகுழலும் பூணார் முலையாள் திருமுகமும்

கொன்றையும் குன்றாது ஒளிசிறக்கும் திங்களும்

(புரிகுழல் கொன்றை போலும், திருமுகம் திங்கள் போலும்-என்க)

முதல் மூன்று சீர்களிலும் நிரல்நிறை அமைதல் கூழை நிரல்நிறையாம்.

எ-டு : கண்ணும் புருவமும் மென்தோளும் இம்மூன்றும்

வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்

(கண் இதழை வெல்லும், புருவம் வில்லை வெல்லும், தோள் வேயை வெல்லும் என்க.)

1, 3, 4 ஆம் சீர்களில் நிரல்நிறை அமைதல் மேற்கதுவாய் நிரல் நிறையாம்.

எ-டு : பல்லும் பணிமொழியாள் வாயும் பணைமுலையும்

முல்லையும் முந்நீர்ப் பவளமும் கோங்கரும்பும்

(பல் முல்லையரும்பு போலும், வாய் பவளம் போலும், முலை கோங்கரும்பு போலும் என்க)

1, 2, 4ஆம் சீர்களில் நிரல்நிறை அமைதல் கீழ்க்கதுவாய் நிரல் நிறையாம்.

எ-டு : பொறையன் செழியன் பூந்தார் வளவன்

கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தைப்

பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை

மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே

(சேரனது கொல்லிப்பாவை போன்ற மாயோட்கு, செழியனது கொற்கை முத்துப் போன்றன பற்கள்; சோழனது குடந்தையிற் பூத்த குவளை போன்ற கண்கள்- என்க.)

நான்கு சீர்களிலும் நிரல்நிறை அமைதல் முற்று நிரல் நிறையாம்.

எ-டு : அடல்வேல் அயில்நோக்கி! நின்முகம் கண்டே // உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் // கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் // தடமதியம் ஆமென்று தாம்.

(பெண்ணே! நின்முகம் கண்டு மதியம் என்று கருதி, கடல் உடலும்; கனையிருள் உடைந்தோடும்; ஆம்பல் முறையே மலரும்; பாம்பு பார்க்கும் - என்க) (யா.வி. பக். 386-388)

நிரல்நிறைப் பொருள்கோள் -

{Entry: O15a__101}

யாப்பருங்கல விருத்தி சுட்டும் ஒன்பது வகைப் பொருள் கோளுள் ஒன்று. பொருள்கோள்-செய்யுட்கண் சொற்கள் அமைப்பில் பொருள் கொள்ளும்வகை. (யா. க. 95 உரை.)

நிரல்நிறை வகை -

{Entry: O15a__102}

பெயர் நிரல்நிறை, எழுத்து நிரல்நிறை, வினை நிரல்நிறை, முறை நிரல்நிறை, எதிர்நிரல்நிறை (-உவமையும் பொருளும் முறை மாறி வருவது) என்பன. தனித்தனியே காண்க. (யா. க. 95 உரை.)

நிரைஅசை -

{Entry: O15a__103}

குறிலிணைந்தோ அவை ஒற்றடுத்தோ, குறில்நெடில் இணைந்தோ அவை ஒற்றடுத்தோ வரும் அசை.

எ-டு : வெறி, நிறம்; சுறா, விளாம். (யா.க. 8)

இனி, நிரையசையே ஓரசைச் சீராக வெண்பா இறுதியில் நிற்பின் அது மலர் எனும் வாய்பாடு பெறும்.

எ-டு : ‘நற்றாள் தொழாஅ ரெனின்.’

நிரைஅசை ஆகாதன -

{Entry: O15a__104}

நெடில் இரண்டு இணைந்தும், நெடிலும் குறிலும் இணைந் தும் நிரையசை ஆகா. (யா. க. 8 உரை)

நிரைஅசைக் கலித்துறை -

{Entry: O15a__105}

நிரையசையில் தொடங்கும் கட்டளைக் கலித்துறை. இதற்கு ஓரடிக்கு ஒற்று ஒழித்து உயிரும் உயிர்மெய்யுமாகிய எழுத்துப் பதினேழாம். (ஆய்தம் அலகு பெறாமையே பெரும்பான்மை; சிறுபான்மை பெற்று வரின் அதுவும் எழுத்தெண்ணப்படும்)

நிரைஅசையின் மறுபெயர் இணையசை என்பது. (யா. க. 5 உரை)

நிரை ஒன்று ஆசிரியத்தளை -

{Entry: O15a__106}

நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் இயற்சீர்வந்து ஒன்றும் தளை. தளைகள் ஏழனுள் ஒன்று. பெரும்பான்மையும் ஆசிரியப் பாவிற்கு உரியது. நிரைமுதல் பிற சீர் வந்தொன் றின், அது சிறப்பில்லாததாம். (யா. கா. 10)

நிரை நிரை -

{Entry: O15a__107}

அகவற்பாவிற்குரிய ஈரசைச்சீர்களுள் ஒன்று. இதற்கு வாய்பாடு கருவிளம், கணவிரி, துலைமுகம் என்பன. மலர்மழை, இனிமொழி, வலம்புரி, வரிவளை எனவும் கூறுப. (தொ. செய். 13 பேரா., யா. க. 11 உரை)

நிரைநிரைநிரை -

{Entry: O15a__108}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு கருவிளங்கனி, புலிவருசுரம் என்பன; புலிபடுசுரம், திருவுறைபதி, சுறமறி துறை, புணரிளமுலை எனவும் கூறுப. (தொ. செய். 20 நச்.; யா.க. 12 உரை)

நிரைநிரைநிரைபு -

{Entry: O15a__109}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புலிவருகடறு, புலிவருகுரவு என்பன. (முன்னது குற்றுகர ஈறு; பின்னது முற்றுகர ஈறு. பின் வருவனவற்றுள்ளும் ஏற்றவிடத்தே கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைநேர் -

{Entry: O15a__110}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு கருவிளங்காய், புலிவருவாய் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைநேர்பு -

{Entry: O15a__111}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புலிவருகாடு, புலிவருகாவு என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைபு -

{Entry: O15a__112}

ஈரசைச்சீர்களுள் ஒன்று இதன் வாய்பாடு மழகளிறு நரையுருமு என்பன. (தொ. செய். 16 நச்.)

நிரைநிரைபுநிரை -

{Entry: O15a__113}

மூவகைச் சீர்களில் ஒன்று. இதன் வாய்பாடு புலிவழங்குசுரம், புலிவிரவுசுரம் எனக்கொள்க. (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைபுநிரைபு -

{Entry: O15a__114}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிவழங்கு கடறு, புலி மருவு குரவு என்பன; புலிமருவுகடறு, புலி வழங்குகுரவு என்பனவும் கொள்ளப்படும். (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைபுநேர் -

{Entry: O15a__115}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிவழங்குவாய், புலி விரவு வாய் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைநிரைபு நேர்பு -

{Entry: O15a__116}

மூவகைச் சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிவழங்குகாடு, புலிமருவுகாவு என்பன. புலி வரவு காடு, புலி வழங்கு காவு என்பனவும் கொள்ளப்படும். (தொ. செய். 20 நச்.)

நிரைநேர் -

{Entry: O15a__117}

ஈரசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புளிமா, தலைவாய் என்பன; மலர்பூ, எழினி, அரிமா எனவும் கூறுப. (தொ. செய். 13 பேரா., யா.க. 11 உரை)

நிரைநேர்நிரை -

{Entry: O15a__118}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புளிமாங்கனி, புலிசேர்சுரம் கெழூஉமணி என்பன (மூன்றாவது நடுவே அளபெடுத்து வரின் வருவது) புலிவாழ்சுரம், திருவாழ்பதி, சுறவாழ்துறை எனவும் கூறுப. (தொ. செய். 20 நச்.; யா.க. 12 உரை)

நிரைநேர் நிரைபு -

{Entry: O15a__119}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு, புலிசேர்கடறு, புலிசேர்குரவு என்பன. (தொ. செய். 20 நச்)

நிரை நேர் நேர் -

{Entry: O15a__120}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புளிமாங்காய், புலிசேர்வாய் என்பன. விரிபூமா, பொருளாக்கும், வடமேற்கு, வளைமென்தோள் எனவும் கூறுப. (தொ. செய். 20 நச்.) (யா.க. 12 உரை)

நிரைநேர்நேர்பு -

{Entry: O15a__121}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிசேர்காடு, புலிசேர்காவு என்பன. (முதலாவது குற்றுகர ஈறு; இரண்டா வது முற்றுகர ஈறு. வருவனவற்றுள்ளும் ஏற்றவிடத்தே கொள்க) (தொ. செய். 20 நச்.)

நிரைநேர்பு -

{Entry: O15a__122}

ஈரசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு கடியாறு, பெருநாணு என்பன. (தொ. செய். 16 நச்.)

நிரைநேர்புநிரை -

{Entry: O15a__123}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிபோகுசுரம், புலிமேவுசுரம் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைநேர்பு நிரைபு -

{Entry: O15a__124}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிபோகுகடறு, புலிமேவு குரவு என்பன. புலிமேவுகடறு, புலிபோகு குரவு - என்பனவும் கொள்ளப்படும் (முதலாவது குற்றுகர ஈறு; இரண்டாவது முற்றுகர ஈறு. பின் வருவனவற்றுள்ளும் ஏற்றவிடத்தே கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைநேர்புநேர் -

{Entry: O15a__125}

மூவகைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு புலிபோகு வாய், புலிமேவு வாய் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரை நேர்பு நேர்பு -

{Entry: O15a__126}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு புலிபோகு காடு, புலிமேவு காவு என்பன. புலிபோகு காவு, புலிமேவு காடு - என்பனவும் கொள்ளப்படும். (தொ. செய். 20 நச்.)

நிரைபு -

{Entry: O15a__127}

இவ்வசைச்சீர்க்குரிய வாய்பாடு வரகு, இரவு என்பன. (தொ. செய். 4. நச்.)

நிரைபு அசை -

{Entry: O15a__128}

குற்றியலுகரத்தாலாவது முற்றியலுகரத்தாலாவது தொடரப் படும் நிரையசை. எ-டு : விரகு, விரவு.

இந்நிரைபுஅசை நிரைநேராய் அடங்கும். (யா. க. 5 உரை)

நிரைபு ஈற்று மூவசைச்சீர் பதினாறு - வாய்பாடு -

{Entry: O15a__129}

1. நேர் நேர் நிரைபு - மாசேர்கடறு

2. நேர் நிரை நிரைபு - மாவரு கடறு

3. நேர் நேர்பு நிரைபு - மாபோகு கடறு

4. நேர் நிரைபு நிரைபு - மா வழங்கு கடறு

5. நிரை நேர் நிரைபு - புலி சேர் கடறு

6. நிரை நிரை நிரைபு - புலி வரு கடறு

7. நிரை நேர்பு நிரைபு - புலி போகு கடறு

8. நிரை நிரைபு நிரைபு - புலி வழங்கு கடறு

9. நேர்பு நேர் நிரைபு - பாம்பு சேர் கடறு

10. நேர்பு நிரை நிரைபு - பாம்பு வரு கடறு

11. நேர்பு நேர்பு நிரைபு - பாம்பு போகு கடறு

12. நேர்பு நிரைபு நிரைபு - பாம்பு வழங்கு கடறு

13. நிரைபு நேர் நிரைபு - களிறு சேர் கடறு

14. நிரைபு நிரை நிரைபு - களிறு வரு கடறு

15. நிரைபு நேர்பு நிரைபு - களிறு போகு கடறு

16. நிரைபு நிரைபு நிரைபு - களிறு வழங்கு கடறு (தொ. செய். 20 நச்)

நிரைபு ஈற்று வஞ்சி உரிச்சீர்க்கு எடுத்துக்காட்டு -

{Entry: O15a__130}

சீற்றம்மிகுபு செல்சினம்சிறந்து

கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று

புலிப்போத்துலவு பொலங்கொடியெடுத்துப்

புகலேற்றுமலைந்து பகையரசுதொலைத்து

வேம்புமீதணிபு போந்துபடத்தொடுத்து

வீற்றுவீற்றுப்புனைந்து வேற்றுச்சுரும்புகிளர்பு

களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்து

சொரிந்துதூங்குகடாத்து விரைந்துமலைந்துதொலைத்து

குறளடியெட்டிலும் அவை பதினாறும் முறையே வந்தவாறு காண்க.

(‘நிரைபு ஈற்று மூவசைச்சீர் பதினாறு’ காண்க) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரை -

{Entry: O15a__131}

ஈரசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு குளிறுபுலி, விரவு கொடி என்பன. (முதலாவது குற்றியலுகரம்; இரண்டாவது முற்றியலுகரம். வருவனவற்றுக்கும் ஏற்றவிடத்தே கொள்க. (தொ. செய். 14 நச்.)

நிரைபுநிரைநிரை -

{Entry: O15a__132}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறுவருசுரம், உருமு வரு சுரம் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரை நிரைபு -

{Entry: O15a__133}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறு வரு கடறு, உருமு வரு குரவு என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரை நேர் -

{Entry: O15a__134}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறுவருவாய், உருமு வருவாய் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரை நேர்பு -

{Entry: O15a__135}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறு வருகாடு, உருமு வரு காவு என்பன. களிறுவருகாவு, உருமு வருகாடு என்பனவும் கொள்க. (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரைபு -

{Entry: O15a__136}

ஈரசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு தடவு மருது என்பது. (வேறு காட்டப்பெற்றிலது. வழங்குகளிறு, விரவு குரவு என முறையே குற்றுகர முற்றுகர ஈறுகட்குக் கொள்ள லாம்) (தொ. செய். 13 நச்.)

நிரைபு நிரைபு நிரை -

{Entry: O15a__137}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறு வழங்கு சுரம், உருமு வழங்கு சுரம், உருமு விரவு சுரம் எனக் கொள்ளப் படும். (குற்றுகர முற்றுகர வேறுபாட்டான் வாய்பாடுகள் மூன்றாயின...) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரைபு நிரைபு -

{Entry: O15a__138}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறு வழங்கு கடறு, உருமுமருவுகுரவு என்பன. (உகர வேறுபாட்டான் பிறவும் வாய்பாடு கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நிரைபு நேர் -

{Entry: O15a__139}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறுவழங்கு வாய், உருமுவிரவுவாய் என்பன. (தொ. செய். 20 நச்) (பிறவும் கொள்க.)

நிரைபு நிரைபு நேர்பு -

{Entry: O15a__140}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுவழங்கு காடு, உருமுமருவு காவு என்பன. (விறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர் -

{Entry: O15a__141}

ஈரசைச்சீர்களுள் ஒன்று இதன்வாய்பாடு களிற்றுத்தாள், முழவுத்தோள்; குளத்துநீர், விரவு சீர் என்பன. (முன்னவை இடையே ஒற்று மிக்கன; பின்னவை இயல்பாக முடிந்தன) (தொ. செய். 15 நச்.)

நிரைபு நேர் நிரை -

{Entry: O15a__142}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுசேர்சுரம், உருமுச்சேர்சுரம் என்பன. (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர் நிரைபு -

{Entry: O15a__143}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு களிறுசேர்கடறு, உருமுச்சேர்குரவு என்பன. (பிறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர்நேர் -

{Entry: O15a__144}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுசேர்வாய், உருமுச்சேர்வாய் என்பன. (தொ. செய் 20 நச்.)

நிரைபு நேர் நேர்பு -

{Entry: O15a__145}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறு சேர்காடு, உருமுச்சேர்காவு என்பன. (பிறவும் கொள்க.) (தொ.செய். 20 நச்.)

நிரைபு நேர்பு -

{Entry: O15a__146}

ஈரசைச்சீர்களுள் ஒன்று. இதன்வாய்பாடு வரகுசோறு என்பது. (விரவுசோறு, பெருகுநாணு, விரவுநாணு என்பன வும் குற்றுகர முற்றுகர வாய்பாடுகளுக்கு ஏற்பக் கொள்ள லாம்.) (தொ. செய். 13 நச்.)

நிரைபுநேர்பு நிரை -

{Entry: O15a__147}

மூவசைச் சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுபோகு சுரம், உருமுமேவுசுரம் என்பன. (பிறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர்பு நிரைபு -

{Entry: O15a__148}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுபோகு கடறு, உருமுமேவுகுரவு என்பன. (பிறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர்பு நேர் -

{Entry: O15a__149}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுபோகு வாய், உருமுமேவுவாய் என்பன. (பிறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரைபு நேர்பு நேர்பு -

{Entry: O15a__150}

மூவசைச்சீர்களுள் ஒன்று. இதன் வாய்பாடு களிறுபோகு காடு, உருமுமேவுகாவு என்பன. (பிறவும் கொள்க.) (தொ. செய். 20 நச்.)

நிரையீற்று மூவசைச்சீர் பதினாறு - வாய்பாடு -

{Entry: O15a__151}

1. நேர்நேர்நிரை மா சேர் சுரம்

2. நேர்நிரைநிரை மா வரு சுரம்

3. நேர்நேர்புநிரை மா போகு சுரம்

4. நேர்நிரைபுநிரை மா வழங்கு சுரம்

5. நிரைநேர்நிரை புலி சேர் சுரம்

6. நிரைநிரைநிரை புலி வரு சுரம்

7. நிரைநேர்புநிரை புலி போகு சுரம்

8. நிரைநிரைபுநிரை புலி வழங்கு சுரம்

9. நேர்புநேர்நிரை பாம்பு சேர் சுரம்

10. நேர்புநிரைநிரை பாம்பு வரு சுரம்

11. நேர்பு நேர்பு நிரை பாம்பு போகு சுரம்

12. நேர்புநிரைபுநிரை பாம்பு வழங்கு சுரம்

13. நிரைபுநேர்நிரை களிறு சேர் சுரம்

14. நிரைநிரைநிரை களிறு வரு சுரம்

15. நிரைபு நேர்பு நிரை களிறு போகு சுரம்

16. நிரைபு நிரைபு நிரை களிறு வழங்கு சுரம். (தொ. செய். 20 நச்.)

நிரையீற்று வஞ்சிஉரிச்சீர் எடுத்துக்காட்டு -

{Entry: O15a__152}

‘தண்டண்டலைத் தாதுறைத்தலின்

வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந்

தயலாலையி னறைக்கடிகையின்

வழிபோகுவர மறித்துருபுகிளர்ந்

தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப்

போதுதூங்குசிலை மீதுபுகுந்துபுகுந்

தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாம்

திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளும்

நன்னர் நன்னா டென்னா குங்கொல்?’

குறளடியெட்டிலும் அச்சீர் பதினாறும் முறையே வந்தவாறு காண்க. (தொ. செய். 21 நச்.)

நிலைக்குரி மரபு -

{Entry: O15a__153}

ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபு; அஃதாவது ஆசிரியப்பாவொடு மயங்கி அதற்குரிமை பூண்டு நிற்கும் மரபு. இயற்சீர் வெண்டளையான் நடக்கும் அடிக்கு இம்மரபு உண்டு என்பது. (தொ. செய். 62 நச்)

நிலைமண்டில ஆசிரியப்பா -

{Entry: O15a__154}

நேரிசை இணைக்குறள் என்னும் ஆசிரியப்பாப் போலாது, எல்லா அடிகளும் சமமான நாற்சீர்அடிகளாக அமையும் ஆசிரியப்பா வகை. ‘என்’ எனும் அசைச்சொல்லால் முடிதல் இதற்குச் சிறப்பு.

நூற்பா நிலைமண்டிலமும் பிறவும், ஏ ஓ ஈ ஆ ஐ என்ற ஐந்து உயிரேயன்றிப் பிற உயிரும் இசைவன எல்லாம் வரப்பெறும்.

எ-டு: மணிமேகலை, சிலப்பதிகாரம், உதயணன்காதை, கலியாண(ன்) கதை என்பவற்றின் ஆசிரியப்பாக்கள் ‘என்’ அசையால் இற்றனவாம். (யா. க. 74 உரை)

கொடுப்போ ரின்றியும் கரண முண்டே

புணர்ந்துடன் போகிய காலை யான

இஃது அகரத்தான் இற்ற நூற்பா நிலைமண்டிலஅகவல்.

நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் -

{Entry: O15a__155}

நிலைவிருத்தம் நிலைமண்டிலஆசிரியப்பாவிற்கு இனம் என்றும், (தனித்தும் ஒருபொருள்மேல் மூன்று அடுக்கியும் வரும்) ஆசிரியத் தாழிசை நிலைமண்டிலஆசிரியப்பாவிற்கு இனம் என்றும் வேண்டுவாருமுளர். (வீ. சோ. 122 உரை)

நிலைமண்டிலம் -

{Entry: O15a__156}

நிலைமண்டில ஆசிரியப்பா காண்க. (இ. வி. 134)

நிலைவிருத்தம் -

{Entry: O15a__157}

நாற்சீர் நாலடியான் வரும் கலிவிருத்தத்துள், அடிதோறும் பொருள் முற்றுப் பெற்று வருவது மண்டில விருத்தம்; ஏனையது நிலைவிருத்தம் ஆகும். (வீ. சோ. 123 உரை)

நிலை வெளிவிருத்தம் -

{Entry: O15a__158}

எ-டு : ‘சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ-அம்மானாய்!

ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும்-அம்மானாய்!

மாயிருந் தானை மயிடன் தலையின்மேல் - அம்மானாய்!

பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!

இஃது அடிதோறும் பொருள் முடியாது தொடர்ந்து வந்த மையின், நிலை வெளிவிருத்த மாயிற்று. (அளவடிக்குப் புறத்தே ஒரு சீரே அடிதோறும் வந்தமையின் வெளிவிருத்த மாயிற்று) (யா. க. 68 உரை)

வெஞ்சமன் அஞ்ச வேலொ டெதிர்ந்தால்- நமரங்காள்!

அஞ்சல் எனும்சொல் ஆர்சொல வல்லார்- நமரங்காள்!

மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர் - நமரங்காள்!

நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ - நமரங்காள்!’

என்னும் சிதம்பரச்செய்யுட்கோவைப் பாடலும் (40) அது.

நிழற்சீர் எட்டு -

{Entry: O15a__159}

நாலசையாலாகிய பொதுச்சீர் பதினாறனுள், நிரையிறுதி எட்டும் நிழற்சீராம். மூவசைச்சீர் எட்டன் இறுதிக் கண்ணும் நிரையசையினைக் கொணர்ந்து கூட்ட, இவை அமையும். நிரையீற்றுப் பொதுச்சீராம் இவை கனிச்சீர்போலக் கொள்ளப்படும், தளை கொள்ளுமிடத்து.

சீர் வாய்பாடு

நேர் நேர் நேர் நிரை தேமாந்தண்ணிழல்

நிரை நேர் நேர் நிரை புளிமாந்தண்ணிழல்

நிரை நிரை நேர் நிரை கருவிளந்தண்ணிழல்

நேர் நிரை நேர் நிரை கூவிளந் தண்ணிழல்

நேர் நேர் நிரை நிரை தேமா நறுநிழல்

நிரை நேர் நிரை நிரை புளிமா நறு நிழல்

நிரை நிரை நிரை நிரை கருவிள நறு நிழல்

நேர் நிரை நிரை நிரை கூவிள நறு நிழல்

(யா. க. 13.உரை)

நிறைமொழி -

{Entry: O15a__160}

சொல்லிய சொல்லின் பொருளை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் சொல். (பயத்தல்-பயன்கொடுத்தல்) (தொ. செய். 178 பேரா.)

நிறையீற்று ஒரு பொருள் இரட்டை -

{Entry: O15a__161}

அடுக்கிவரும் நான்கு சீர்களும் ஓரெழுத்தும் குறையாது அமைதல்.

எ-டு : ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’.

நான்கு சீர்களும் குறையாது அமைந்த இவ்வடியில், ‘பாடுவேனோ’ என்ற சொல் ஒரு பொருளையே தந்தவாறு. (யா. க. 53 உரை)

நிறையீற்றுப் பல பொருள் இரட்டை -

{Entry: O15a__162}

பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொற்கள் ஈற்றில் குறையின்றி இயல்வது.

எ-டு : ஓடையே ஓடையே ஓடையே ஓடையே

ஓடைக்கொடி, மலைவழி, நெற்றிப்பட்டம், நீரோடை எனப் பொருள் வேறுபட வந்தவாறு; ஈறு குறையாமல் வந்தவாறும் காண்க. (யா. க. 53 உரை)

நிறையெண்நிரல் நிறை -

{Entry: O15a__163}

முன் நிறுவிய பொருள்களுக்குப் பொருத்தமான பொருள் களைப் பின்னர் நிறுவி அமைப்பது.

எ-டு : சாந்தும் தண்டழை யும்சுர மங்கையர்க்(கு) // ஏந்தி நின்றன இம்மலை ஆரமே; // வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியும் // ஏந்து சாகைய இம்மலை ஆரமே.

இதனுள் இரண்டு பொருள்களை நிறுவிப் பின்னும் இரண்டு பொருள்களை நிறுவியமை நிறைஎண் நிரல்நிறை. (யா. க. 95 உரை.)

நீட்டல் விகாரம் -

{Entry: O15a__164}

செய்யுட்கண் தொடை நயம் கருதிக் குறில் நெடிலாக நீட்டப் படுதல்.

எ-டு : ‘பாசிழை ஆகம் பசப்பித்தான் பைந்தொடியை // மாசேனன் என்று மனங்கொளீஇ’

இதனுள், ‘பச்சிழை’ எனற்பாலது அடியெதுகை நோக்கிப் ‘பாசிழை’ எனக் குறில் நெடிலாய் விகாரப்பட்டது. (யா. க. 95 உரை)

நுந்தை : அலகிடுமாறு -

{Entry: O15a__165}

நுந்தை என்ற சொற்கண் உள்ள மொழிமுதற் குற்றியலுகரம் குற்றெழுத்துப் போல் அலகு பெறவே, நேர்பு அசையாகாது, நேர் நேர் அசையாகவே கொள்ளப்பெறும். (தொ.செய். 5. நச்.)

நுவன்று அறைதல் -

{Entry: O15a__166}

கூறித் துணித்தல். அறைதல்-துணித்தல், ‘அறைக் கரும்பு’ (பொருந. 193) என்புழிப் போல. கொச்சக ஒருபோகுக்குக் கூறப்பட்ட இலக்கணங்களுள் ‘தரவின்றாகித் தாழிசைபெறு தல்’ என்ற ஒன்றனைத் துணித்து நீக்கி ஏனைய எல்லாம் அகநிலைக் கொச்சகக் கலிக்குக் கொள்ளுதல். (தொ. செய். 155 நச்.)

நூற்பா -

{Entry: O15a__167}

சூத்திரம்; பெரும்பான்மையும் இஃது ஆசிரிய யாப்பிற்று; சிறுபான்மை வெண்பாவானும் கட்டளைக் கலித்துறையா னும் ஆசிரிய விருத்தத்தானும் அமையும். சொற்சீரடியானும் நூற்பா அமையும். ‘நூற்பா அமைப்பு’க் காண்க.

நூற்பா அகவல் -

{Entry: O15a__168}

நூற்பா இயலும் அகவற்பா. இவ்வகவல் நிலைமண்டில ஆசிரியமாகவே பெரும்பான்மையும் நிகழும். ஏகார ஈற்றா னன்றிச் சிறுபான்மை ‘வழக்கத் தான’ ‘அதன்பால என்மனார்’ என அகரம் ரகரம் முதலிய ஈற்றான் முடிதலும் உண்டு. இவ்வகவல், தொல்காப்பியப் பாயிரம் போல, இடையே சொற்சீரடி பயின்று வரவும் பெறும். இஃது இலக்கணம் அமைத்தற்குரிய அகவல் வகை (திவா. பக். 232)

நூற்பா அமைப்பு -

{Entry: O15a__169}

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்ற ஐவகை யடியானும், வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா பரிபாடல் என அடிவரையறை உளவாம் பாட்டினானும், நூல் உரை பிசி முதுமொழி மந்திரம் குறிப்புமொழி என அடிவரையறை இலவாம் பாட்டினானும், பா இன்றி ஒழுக லாறுடைய பல சொற்றொடரானும், கற்றோர் காட்டப்பட்ட பாட்டு நூல் உரை பிசி முதுமொழி மந்திரம் குறிப்புமொழி என எழுநிலத்து எழுந்த செய்யுள்நடைத்தாயும், அவற்றுள் பாட்டிற்குக் கூறிய பொருளொடும் கூடிக் குற்றமற்ற ஓசை செறியப்பட்டுப் புலவரான் மதிக்கும்படிக்கு, தலைமை சான்ற பன்னிரண்டு எழுத்து எனலாய நாற்சீரடியின் மிகுந்தும் குறைந்தும் வரும் பண்ணத்தியாகிய பாவினத்தோடும், நூல்கள் பயின்றுவரும் என்றவாறு. (நூல்-இலக்கணம்)

எனவே, நூலுட் பயிலும் சூத்திர அமைப்பு ஈண்டுக் கூறினார்.

‘நூற்பா’ எனவே, அஃது ஐவகையடியானும் அமைதலும், பெரும்பான்மையும் ஆசிரியம் வெண்பாவான் அமைதலும், சிறுபான்மை அடிவரையறை யிலதாய் அமைதலும், எழு நிலத்தெழுந்த செய்யுள்நடைத்தாய் அமைதலும், பா என்றற் கேற்ற ஓசைத்தாய் அமைதலும், நாற்சீரடியின் மிக்கும் குறைந்தும் வரும் பாவினத்துள் ஒன்றாய் அமைதலும் இலக்கணம் என்பது பெறப்படும். (மா.அ. 26).

‘அரியே ஐம்மை’ (தொ.சொ. 356) முதலாகச் சொற்சீரடியான் வருதலும் கொள்ளப்பெறும். ‘துவன்று நிறை வாகும் ’ (தொ.சொ. 332) என்பதும் அது. இவை முறையே குறளடி யானும் சிந்தடியானும் வந்தன; ‘நிறை’: அசைச்சீராகக் கொள்க. இவை தொல்காப்பிய உரியியல் நூற்பாக்கள்.

நெடில் எதுகை -

{Entry: O15a__170}

முதலெழுத்துக்கள் அளவொத்து நிற்ப, இரண்டாமெழுத் துக்கள் அடிதோறும் ஒன்றி வாராவிடினும், இரண்டா மெழுத்தாகிய உயிர்மெய்யில் மெய்மேல் ஏறிய உயிர்கள் நெடிலாக இருக்கும் எதுகை.

எ-டு : ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார் // கூகூஎன்றே கூவிளி கொண்டார் ஒருசாரார் // மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் ஒருசாரார், // ஏகீர் நாகீர் என்செய்தும் என்றார் ஒருசாரார்.

இதன்கண் அடிதோறும் இரண்டாமெழுத்துக்கள் உயிர் மெய் நெடில்களாக அமைந்துள்ளமையின், நெடில் எதுகை யாம். (யா. க. 37)

நெடில் மிக்கு வருதல் -

{Entry: O15a__171}

ஒரு செய்யுட்கண் நெட்டெழுத்தே மிக்கு வருதல்.

எ-டு : ‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் // சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ (குறள் 127)

இதன்கண், இறுதிச்சீர் இரண்டொழிய ஏனை ஐந்து சீரிலும் நெட்டெழுத்தே மிகுதியும் பயின்றவாறு காண்க. (யா. க. 2 உரை)

நெடில்மோனை -

{Entry: O15a__172}

முதலெழுத்து அடிதோறும் வெவ்வேறாயினும் அவை உயிர் நெட்டெழுத்தாக இருப்பின், அவ்வியைபு பற்றி நிகழ்வது.

எ-டு : ர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

தலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. (முதுமொழிக். 1)

ஆ, ஓ என்னும் இம் முதலெழுத்துக்கள் நெடிலாதல் ஒற்றுமை பற்றி, இது நெடில்மோனை யாயிற்று. (யா. க. 37)

நெடிலடி -

{Entry: O15a__173}

1. ஐஞ்சீரான் வருமடி (யா.கா. 12) 2. இனித் தொல்காப்பிய னார் நாற்சீரடிதன்னையே பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழ் எழுத்து வரை உயர்ந்த மூன்றடியும் நெடிலடி என்ப. (தொ. செய். 39 பேரா.)

எ-டு :

1. ‘மூவா முதலா உலகம்மொரு மூன்று மேத்த’ (சீவக. 1 )

2. ‘அணிநடை யசைஇய அரியமை சிலம்பின்’ (15 எழுத்து)

‘மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல்’ (16 எழுத்து)

‘ஒளிநில வயங்கிழை உருவுடை மகளிரொடு’ (17 எழுத்து)

(எழுத்து எண்ணுமிடத்தே உயிரும் உயிர்மெய்யும் மாத்திரமே எண்ணப்படும்).

நெடுஞ்சீர் வண்ணம் -

{Entry: O15a__174}

நெட்டெழுத்துப் பயின்று வரும் சந்தம்.

எ-டு : ‘மாவா ராதே மாவா ராதே’

நெட்டுயிர் மடக்காக வரும் மிறைக்கவியும் அது.

எ-டு : நீரூர் பானா யாறே காடே

நீலூர் காயாப் பூவீ யாதே

யூரூர் பாகா தேரே

பீரூர் தோளாள் சீறூ ராளே

ஈ , ஊ, ஆ, ஏ என்னும் நெட்டுயிர் நான்கும் மடக்கி வந்தவாறு. (தொ. செய். 220 நச்)

நெடுந்தூக்கு -

{Entry: O15a__175}

தூக்கு ஏழனுள் எழுசீர் கொண்டது. (சிலப். 3 : 16 அரும்.) (L)

நெடுவெண்பாட்டு -

{Entry: O15a__176}

ஏழு அடிமுதல் பன்னீரடிவரை நிகழும் வெண்பா. மூன்றடிப் பேரெல்லையுடைய குறுவெண்பாட்டினும், ஆறடிப் பேரெல்லையுடைய அளவியல் வெண்பாட்டினும் இது நெடிதாயிற்று. நான்கடி முதல் நிகழினும் ஒரோவழி நெடுவெண்பாட்டாம். (கலித்தொகையுள் (104) நச். உரையுள் காண்க.) (தொ. செய். 158 நச். உரை)

நெறி பெற்று வருதல் -

{Entry: O15a__177}

வழக்கப்பட்டு நடத்தல்; வழக்குப் பெற்று நடத்தல். (தொ. செய். 64)

‘நேர்’ அசைச்சீர் -

{Entry: O15a__178}

நேர் என்னும் ஓரசைச் சீர்க்குரிய வாய்பாடு ‘நாள்’ என்பது. வெண்பாவின் ஈற்றிலேயே இது வாய்பாடு பெறும்.

எ-டு : ‘நிலமிசை நீடுவாழ் வார்’ (குறள். 3) (யா. கா. 7)

‘நேர்’ என்பதன் சொற்பொருள் -

{Entry: O15a__179}

நேர் என்ற சொற்குப் பொருள் பல. அச்சொல்,

1. ‘நேர்ந்தார், அரண்பல கடந்த அடுபோர்ச் செழிய’ என மாறாதற்கண்ணும்.

2. ‘நேர்பொருள் நிறுத்தனன்’, ‘நேர்இன மணியை நிரல்பட வைத்தாங்கு’ (நன். 15) என ஒத்தற்கண்ணும்,

3. ‘நேர்அசை’ என தனிமைக்கண்ணும்

4. ‘நேரே நல்லன நேரே செல்வன’ என மிகுதிக்கண்ணும்,

5. ‘நேர்நூல், நேர்ஆடை’ என நுட்பத்தின்கண்ணும்,

6. ‘நாற்சீர் கொண்டது நேரடி’ எனச் சமனாதற்கண்ணும்,

7. ‘நெட்டெழுத்தா நேரப்படும், என உடன்படுதற்கண்ணும்

8. ‘நேர்போகி’ எனப் பாதிக்கண்ணும்

9.‘நேர்பட்ட இரண்டு படையும்’ எனத் தலைப்பாட்டின் கண்ணும்

10. ‘நேராமல் காப்பது கல்வி,‘நேரா நோன்பு,’ ‘நேரா நெஞ்சத் தான் நட்டான் அல்லன்’ என நிலைப்பாட்டின்கண்ணும்

11. உப்பு நேர்ந்தார், புளிநேர்ந்தார் எனக் கொடையின்கண்ணும்,

12. ‘நேரிழை மகளிர்’ எனப் பொருத்தத்தின்கண்ணும் வரும். (யா. க. 58 உரை)

நேர் ஒன்று ஆசிரியத்தளை -

{Entry: O15a__180}

நேர்ஈற்று இயற்சீர் நின்று வரும்சீர் முதல்அசையொடு நேராக ஒன்றும் தளை.

எ-டு: ‘உள்ளார் (1) கொல்லோ (2) தோழி (3) முள்ளுடை’

இவ்வடிக்கண் வரும் மூன்றுதளையும் நேர்ஒன்றாசிரியத் தளையாம். (யா. கா. 10)

நேர்நிரை : வாய்பாடு -

{Entry: O15a__181}

இவ்வியற்சீர்க்குரிய வாய்பாடு கூவிளம். (யா. கா. 7)

பாதிரி, வாய்த்தலை எனப் பல கூறுப. (தொ. செய். 13 நச்.)

நேர் நிரை நிரை: வாய்பாடு -

{Entry: O15a__182}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு கூவிளங்கனி (யா.கா.7), மாவரு சுரம் (தொ.செய். 20 நச்) என்பன.

நேர்நிரை நிரைபு: வாய்பாடு -

{Entry: O15a__183}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவரு கடறு, மாவரு குரவு (தொ. செய். 57 நச்) என்பன. ஒன்று குற்றுகர ஈறு, ஏனை யது முற்றுகர ஈறு. பின் வருவனவற்றுள்ளும் ஏற்றவிடத்தே கொள்க.

நேர்நிரை நேர்: வாய்பாடு -

{Entry: O15a__184}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு கூவிளங்காய் (யா. கா. 7), மாவருவாய் (தொ. செய். 20 நச்) என்பன.

நேர் நிரை நேர்பு: வாய்பாடு -

{Entry: O15a__185}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவருகாடு, மாவருகாவு (தொ. செய். 57) என்பன.

நேர் நிரைபு: வாய்பாடு -

{Entry: O15a__186}

இவ்வீரசைச் சீர்க்குரிய வாய்பாடு பூ மருது, காருருமு என்பன. (தொல்.செய். 16). இவை ‘பாதிரி’ போல, வருஞ்சீரொடு தளை கொள்ளும்.

நேர் நிரைபு நிரை: வாய்பாடு -

{Entry: O15a__187}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவழங்குசுரம், மாவிரவு சுரம் என்பன (தொ. செய். 57)

நேர் நிரைபு நிரைபு: வாய்பாடு -

{Entry: O15a__188}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவழங்கு கடறு, மாமருவு குரவு என்பன. மாமருவு கடறு, மாவழங்கு குரவு என்பனவும் கொள்க. இவ் வாய்பாட்டு வேறுபாடு ஏற்புழிஎல்லாம் கொள்க.

நேர் நிரைபு நேர் : வாய்பாடு -

{Entry: O15a__189}

இம் மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவழங்குவாய், மாவிரவு வாய் என்பன. (தொ. பொ. 57)

நேர் நிரைபு நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__190}

இம்மூவசைச் சீர்க்குரிய வாய்பாடு மாவழங்குகாடு, மாமருவு காவு என்பன (தொ. செய். 57)

நேர்நிலை வஞ்சி -

{Entry: O15a__191}

சமநிலைவஞ்சி; அஃது இருசீரான் வரும். (தொ.செய். 42 நச்.)

எ-டு : ‘ஓங்குதலை வியன்பரப்பின் . . . . . (மதுரைக். 1-9)

நேர்நேர் வாய்பாடு -

{Entry: O15a__192}

இவ்வியற்சீர்க்கு வாய்பாடு தேமா என்பது. (யா. கா. 7)

நேர் நேர் நிரை : வாய்பாடு -

{Entry: O15a__193}

இம்மூவசைச்சீர்க்கு வாய்பாடு தேமாங்கனி. (யா. கா. 7), மாசேர்சுரம் (தொ.செய். 20 நச்) என்பன: தூஉமணி என்பதும் ஒன்று (யா. கா. 26 உரை.)

நேர் நேர் நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__194}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு மா சேர் கடறு, மா சேர் குரவு என்பன. இவற்றுள் முதலாவது குற்றுகர ஈறு, ஏனையது முற்றுகர ஈறு. பின் வருவனவற்றுள்ளும் ஏற்றவாறு கொள்க. (தொ. செய். 57 நச்).

நேர் நேர் நேர் : வாய்பாடு -

{Entry: O15a__195}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு தேமாங்காய் (யா.கா. 7), மாசேர்வாய் (தொ. செய். 20 நச்.) என்பன.

நேர் நேர் நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__196}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு மாசேர்காடு. மாசேர்காவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர் நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__197}

இவ்வீரசைச் சீர்க்கு வாய்பாடு போரேறு, நன்னாணு என்ப. (இவை ‘பாதிரி’ போல நின்று, வருஞ்சீரொடு தட்கும்) (தொ. செய். 16 நச்.)

நேர் நேர்பு நிரை : வாய்பாடு -

{Entry: O15a__198}

இம்மூவசைச்சீர்க்கு வாய்பாடு மாபோகு சுரம், மாமேவு சுரம் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர் நேர்பு நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__199}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு மாபோகு கடறு, மாமேவு குரவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர் நேர்பு நேர் : வாய்பாடு -

{Entry: O15a__200}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு மாபோகுவாய், மாமேவுவாய் என்பன (தொ. செய். 57 நச்.)

நேர் நேர்பு நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__201}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு மாபோகு காடு, மா மேவு காவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு அசை -

{Entry: O15a__202}

குற்றுகரமுற்றுகரங்களோடு இயைந்து வரும் நேரசை.

எ-டு: வண்டு, நாகு, காம்பு; மின்னு, நாணு, தீர்வு. (தொ. செய்.4 நச்.)

இதனை நேர் நேர் எனக் கொள்ப, பிற்காலத்தார் (யா. க. 5 உரை)

நேர்பு ஈற்று மூவசைச்சீர் பதினாறு -

{Entry: O15a__203}

1. நேர் நேர் நேர்பு - மா சேர் காடு, மா சேர் காவு

2. நேர் நிரை நேர்பு - மா வரு காடு, மா வரு காவு

3. நேர் நேர்பு நேர்பு - மா போகு காடு, மா மேவு காவு

4. நேர் நிரைபு நேர்பு - மா வழங்கு காடு, மா மருவு காவு

5. நிரை நேர் நேர்பு - புலி சேர் காடு, புலி சேர் காவு

6. நிரை நிரை நேர்பு - புலி வரு காடு, புலி வரு காவு

7. நிரை நேர்பு நேர்பு - புலி போகு காடு, புலி மேவு காவு

8. நிரை நிரைபு நேர்பு - புலி வழங்கு காடு, புலி மருவு காவு

9. நேர்பு நேர் நேர்பு - பாம்பு சேர் காடு, மின்னுச் சேர் காவு

10. நேர்பு நிரை நேர்பு - பாம்பு வரு காடு, மின்னு வரு காவு

11. நேர்பு நேர்பு நேர்பு - பாம்பு போகு காடு, மின்னு மேவு காவு

12. நேர்பு நிரைபு நேர்பு - பாம்பு வழங்கு காடு, மின்னு விரவு காவு

13. நிரைபு நேர் நேர்பு - களிறு சேர் காடு, அரவு சேர் காவு

14. நிரைபு நிரை நேர்பு - களிறு வரு காடு, அரவு வரு காவு

15. நிரைபு நேர்பு நேர்பு - களிறு போகு காடு, அரவு மேவு காவு

16. நிரைபு நிரைபு நேர்பு - களிறு வழங்கு காடு, அரவு விரவு காவு (தொ. செய். 20, 57 நச்.)

நேர்புஈற்று வஞ்சி உரிச்சீர்க்கு எடுத்துக்காட்டு -

{Entry: O15a__204}

வான் பொய் யாது தீம் பெயல் பெய்து

மால் யாறு போந்து கால் சுரந்து பாய்ந்து

சுரை பொய் யாது நிரை வளம் சான்று

வரை யாது தந்து பலாப் பழுத்து வீழ்ந்து

பாம்பு கொள் ளாது வீங்கு சுடர் நீண்டு

வித்து நாறு வாய்த்து முத்துக் கரும்பு பூத்து

வரம்பு கொள் ளாது நிரம்பு பெருங் கூட்டு

விரும்பு நீங்கு மஞ்சு துயின்று பெயர்ந்து போந்து

என அப்பதினாறும் முறையே வந்தவாறு. (தொல். செய். 20 நச்)

நேர்பு என்ற அசைச்சீர் வாய்பாடு -

{Entry: O15a__205}

வண்டு, மின்னு முதலியனவாம். (தொ. செய். 4. நச்)

நேர்பு நிரை : வாய்பாடு -

{Entry: O15a__206}

இவ்வீரசைச் சீர்க்கு வாய்பாடு நீடு கொடி, நாணுத்தளை என்பன. இவை ‘பாதிரி’ போல, வரும் சீரொடு தட்கும். (தொ. செய். 14 நச்)

நேர்பு நிரை நிரை : வாய்பாடு -

{Entry: O15a__207}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு பாம்பு வரு சுரம், மின்னு வரு சுரம் என்பன (தொ. செய். 57 நச்) இவற்றுள் முதலாவது குற்றுகர ஈறு, ஏனையது முற்றுகர ஈறு. பின் வருவனவற்றுள் ளும் ஏற்ற இடத்துக் கொள்க.

நேர்பு நிரை நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__208}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு பாம்பு வரு கடறு, மின்னு வரு குரவு என்பன. (தொ. செய். 57 நச்)

நேர்பு நிரைநேர் : வாய்பாடு -

{Entry: O15a__209}

இம்மூவசைச்சீர்க்கு வாய்பாடு பாம்பு வரு வாய், மின்னு வரு வாய் என்பன (தொ. செய். 57 நச்)

நேர்பு நிரை நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__210}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு பாம்பு வரு காடு, மின்னு வரு காடு, மின்னு வரு காவு என்பன. (தொ.செய். 57 நச்)

நேர்பு நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__211}

இவ்வீரசைச் சீர்க்கு வாய்பாடு, பாறு குருகு என்பது. (தொ. செய். 13 நச்) (முற்றுகர ஈறு காட்டப்பட்டிலது. ‘பேணு நிலவு’ என்று கொள்ளலாம்).

நேர்பு நிரைபு அசைகளின் தேவை -

{Entry: O15a__212}

குற்றுகரம் புள்ளி பெற்று நின்றும், புள்ளி பெற்ற ஒற்றுப் போன்று ஒருங்கு நில்லாது, தன்னான் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரை மாத்திரைத்தாய் நிற்பினும் அகன்று இசைத்தலின், ஒற்று என்றலும் ஆகாது; ஒரு மாத்திரை பெற்ற உயிர் போல அகன்று இசையாமையின், உயிரென வேறோர் அலகு கொடுத்தலும் ஆகாது. இதனைச் செயற்பாலது வேறோர் அசைக்கு உறுப்பு ஆக்குதல் நோக்கி, நேர்பசை நிரைபசை என்பன தொல்காப்பியனாரான் கொள்ளப்பட் டன.

ஒரு மாத்திரை பெற்ற முற்றுகரமும், ‘வண்டு வண்டு வண்டு வண்டு’ என்புழிப் பிறந்த அகவலோசை ‘மின்னு மின்னு மின்னு மின்னு’ என்புழியும் பெறப்படலானும், வெண்பா வின் ஈற்றடி ‘வண்டு’ எனக் குற்றுகர ஈற்றான் நின்றுழியும், ‘கோலு’ என முற்றுகர ஈற்றான் நின்றுழியும் ஒத்த ஓசையவாம் ஆகலானும், நேர்பசை நிரைபசைகளாயிற்று.

பின்னர் வந்த யாப்புஆசிரியர்கள் குற்றியலுகரம் அலகு பெறும் எனக் கொண்டாரேனும், அவர்க்கும் அலகு பெறா எனக்கொள்ள வேண்டிய இடமும் இருப்பதாற்றான், தேமா புளிமா என்ற வாய்பாடுகள் இருப்பவும், காசு பிறப்பு எனக் குற்றுகர ஈறாக வேறு வாய்பாடுகளும் கொள்ள வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. (தொ. செய். 4. நச்.)

(தொல்காப்பியனார் தனிச்சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரம் அல்வழி வேற்றுமைப்பொருளில் தொடரில் வரும்போது முற்றியலுகர மாகும் (தொ. எ. 408 நச்.) என்று கூறியதனான், செய்யுளில் குற்றியலுகரங்கள் யாவும் முற்றியலுகரங்கள் போலாதலின், இருவகை உகரங்களுக்கும் ஒரே விதி கூறியுள்ளமை குறித்துணரத்தக்கது.)

“நேரசையொடு பின்னும் ஒரு நேரசை கூடியதே நேர்பு அசையாகவும், நிரையசையோடு பின்னும் ஒரு நேரசை கூடியதே நிரைபுஅசையாகவும் வருதலின், நேரசை நிரை யசைகள் மாத்திரமே அமையும்; நேர்பு நிரைபு அசைகள் இன்றியமை யாதன அல்ல” என்ப ஒரு சாரார். அன்னோர் நேரசையொடு பின்னும் ஒரு நேரசை கூடியதே நிரையசை ஆகலின் நேரசை ஒன்றே அமையும், நிரையசையென ஒன்று தேவையின்று என மறுக்க வாய்ப்பிருத்தலையும் நோக்குதல் வேண்டும்.

நேரசை ஒன்றே அமைவதாகப் பின்னும் நிரையசை நேர்பசை நிரைபசைகளைக் கொண்ட காரணம் பின் வருமாறு:

வடமொழியைப் போலக் குறில் நெடில் என்ற எழுத்துக் களையே சிறப்பாகக் கருதுவதாயின் நேரசை ஒன்றுமே அமையும். தமிழ் மொழியில் சொற்களுக்குச் சிறப்புத் தந்து எண்ணினமையின், இந்நான்கு அசைகளும் இன்றியமையா தவை ஆயின. தமிழில் யாதேனும் ஒரு பொருளைத் தருவதொரு சொல்லே அசையாகும் என்ற மரபு (பண்டு) கொள்ளப்பட்டது.

‘அடி’ என்ற சொல்லில் ‘அ’ மாத்திரம் ஒரு பொருளை உணர்த்துதல் இன்றி, ‘டி’ என்ற எழுத்தொடு கூடியே ஒரு பொருளை உணர்த்துகிறது. ஆதலின் இவ்வீரெழுத்துக் களையும் தனித்தனியே பிரித்து இரண்டு அசைகளாகக் கோடல் முறையன்று.

அவ்வாறே, காது (- செவி) என்ற சொல்லிலுள்ள ‘கா’ என்ற எழுத்திற்கு ஈண்டுத் தனியாகப் பொருள் இன்மையானும், அது ‘து’ என்ற எழுத்தொடு செர்ந்து நின்றே அப்பொருளை உணர்த்துதலானும் அவ்வீரெழுத்துக்களையும் தனித்தனி யாகப் பிரித்து இரண்டு அசைகளாகக் கொள்வதும் தக்கதன்று. இவ்வாறே ஓங், கு; வர, கு; குரங், கு எனப்பிரித்து அசைகோடலும் அமைதியன்று.

பல எழுத்துக்கள் கூடி ஒரு பொருளை உணர்த்துமிடத்து அவ்வெழுத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்துக் கூறுதல் அமைதியன்று என்ற பண்டையோர் மரபை உட்கொண்டு, நேரசையோடு, நிரை, நேர்பு, நிரைபு என்ற அசைகளும் கொள்ளப்பட்டன.

ஆயின், உவரி கவலை முதலிய மூவெழுத்துச் சொற்கள் இரண்டு அசைகளாகவே கொள்ளப்படுகின்றன எனின், அவற்றின் வேர்ச்சொற்களாகிய உவர் கவல் என்பனவற்றின் சிதைவாகிய உவ கவ எனப் பகுத்து அசைகோடலும் பொருந்துவதேயாம்.

யானை, ஞாயிறு, திங்கள் - இவற்றை யா, னை; ஞா, யிறு; திங்;கள் - என்று பிரிப்பதனால், ஒரு காலத்தே யா, ஞா, திங் என்பனவும் தனிப்பொருள் உடையனவாய் இருந்திருத்தல் வேண்டும் என்றே கருதல் வேண்டும். (அசை: இலக். கட்.).

பொருள் பயந்து நிற்கும் அசைகளே சிறப்பசை எனவும், அங்ஙனம் நில்லாத அசைகள் சிறப்பில் அசை எனவும் யாப்பருங்கல. உரையாசிரியர் குறிக்கிறார். (யா. க. 8)

எ-டு : பறவை, தோல்வி, - பற, தோல் - சிறப்பசை. மாலை, ஞாயிறு - மா, ஞா - சிறப்பில்லாஅசை.

இவ்வாற்றால் நேர்பு நிரைபு அசைகளது இன்றியமையாமை உணரப்படும்.

நேர்பு நிரைபு காணும் முறை -

{Entry: O15a__213}

நேர்பு, நிரைபு அசைகள் வருமொழி வல்லெழுத்து வரு மிடத்தே வல்லொற்றொடு தோன்றி நிற்கவும்பெறும்.

எ-டு : ‘சேற்றுக்கால் நீலம்’ - குற்றுகரம் - நேர்பசை ஒற்றடுத்து வந்தது. ‘நாணுத் தளையாக’ (அகநா. 29) - முற்றுகரம் - நேர்பசை ஒற்றடுத்து வந்தது. ‘நெருப்புச்சினம் தணிந்த’ (புறநா. 125) - குற்றுகரம் - நிரைபசை ஒற்றடுத்து வந்தது.

‘கனவுக்கொல் நீ கண்டது’ (கலி. 90) - முற்றுகரம் - நிரைபசை ஒற்றடுத்து வந்தது.

எனவே, நடக்கும் உண்ணும் போல்வன புளிமா தேமா ஆவதல்லது நிரைபசை நேர்பசை ஆகா என்பது.

ஒற்று அடாது வருதலே பெரும்பான்மை.

எ-டு : ‘பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (குறள். 5) - குற்றுகரம் ‘புனைமலர்த் தாரகலம் புல்லு’ - முற்றுகரம்.

நேர்பு அசை ஒற்றடாது வந்தது.

‘பகவன் முதற்றே உலகு (குறள் 1) - குற்றுகரம் ‘நாணுத்தாள் வீழ்த்த கதவு’ (குறள் 1251) - முற்றுகரம்.

நிரைபு அசை ஒற்றடாது வந்தது. (தொ. செய். 10 நச்.)

நேர்பு நிரைபு நிரை: வாய்பாடு -

{Entry: O15a__214}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு வழங்கு சுரம், மின்னு விரவு சுரம் என்பன. (தொ. செய். 57. நச்.) முதலது குற்றுகர ஈறு, ஏனையது முற்றுகர ஈறு. பின்வருவனவற்றுள்ளும் ஏற்ற விடத்துக் கொள்க. (பாம்பு விரவுசுரம், மின்னு வழங்கு சுரம் என்பனவும் கொள்க.)

நேர்பு நிரைபு நிரைபு: வாய்பாடு -

{Entry: O15a__215}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு வழங்கு கடறு, மின்னு விரவு குரவு என்பன. (தொ. செய். 57. நச்.)

நேர்பு நிரைபு நேர்: வாய்பாடு -

{Entry: O15a__216}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு வழங்கு வாய், மின்னு விரவு வாய் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நிரைபு நேர்பு: வாய்பாடு -

{Entry: O15a__217}

இம்மூவசைச் சீர் வாய்பாடு பாம்பு வழங்கு காடு, மின்னு விரவு காவு என்பன. (தொ. செய். 57 நச்..)

நேர்பு நேர் : வாய்பாடு -

{Entry: O15a__218}

இவ்வீரசைச்சீர் வாய்பாடு போது பூ, மேவு சீர், சேற்றுக்கால், வேணுக்கோல் முதலாயின. (தொ. செய். 15 நச்.)

நேர்பு நேர் நிரை: - வாய்பாடு -

{Entry: O15a__219}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு சேர் சுரம், மின்னுச் சேர் சுரம் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர் நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__220}

இம் மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு சேர் கடறு, மின்னுச் சேர் குரவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர் நேர் : வாய்பாடு -

{Entry: O15a__221}

இம்மூவசைச் சீர் வாய்பாடு பாம்பு சேர் வாய், மின்னுச் சேர் வாய் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர் நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__222}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு சேர் காடு, மின்னுச் சேர் காவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__223}

இவ்வீரசைச்சீர் வாய்பாடு வீடுபேறு என்பது. (தொ. செய். 13 நச்.)

(முற்றுகர ஈறு காட்டப்பட்டிலது. ‘மேவு காவு’ எனக் கொள்க.)

நேர்பு நேர்பு நிரை: வாய்பாடு -

{Entry: O15a__224}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு போகு சுரம், மின்னுமேவு சுரம் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர்பு நிரைபு : வாய்பாடு -

{Entry: O15a__225}

இம்மூவசைச்சீர் வாய்பாடு பாம்பு போகு கடறு, மின்னு மேவு குரவு என்பன. (தொ.செய். 57 நச்.)

நேர்பு நேர்பு நேர் : வாய்பாடு -

{Entry: O15a__226}

இம்மூவசைச் சீர் வாய்பாடு பாம்பு போகு வாய், மின்னு மேவு வாய் என்பன. (தொ. செய். 57 நச்.)

நேர்பு நேர்பு நேர்பு : வாய்பாடு -

{Entry: O15a__227}

இம்மூவசைச் சீர்க்கு வாய்பாடு பாம்பு போகு காடு, மின்னு மேவு காவு என்பன. (தொ. செய். 57 நச்.)

நேரசை -

{Entry: O15a__228}

இரண்டெழுத்தான் ஆகாது ஓரெழுத்தான் ஆதல் நேரிது ஆதலின், நேரிய அசை நேரசை ஆயிற்று. இஃது ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர். அது தனிக்குறிலும் தனிநெடிலும் ஒற்றடுத்த குறிலும் ஒற்றடுத்த நெடிலும் என நால்வகைத்து.

எ-டு : உள், ளார்; தோ, ழி- ஒற்றடுத்த குறிலும், ஒற்றடுத்த நெடிலும், தனி நெடிலும், தனிக்குறிலுமெனக் காண்க. (தொ. செய். 3 நச்.)

ஐகார ஒளகாரக் குறுக்கங்களும் நேரசையாம். (யா. க. 6 உரை)

நேரசைக் கலித்துறை -

{Entry: O15a__229}

நேரசையில் தொடங்கும் கட்டளைக் கலித்துறை. இதற்கு ஓரடிக்கு எழுத்து, ஒற்று ஒழித்து உயிரும் உயிர்மெய்யுமாகிய பதினாறாம். (ஆய்தம் அலகு பெறாமையே பெரும்பான்மை; அவ்விடத்து ஆய்தமும் ஒழித்து எழுத்தெண்ணப்படும்.)

எ-டு : ‘கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிகண் ணார்நிழற்கீழ்’

எனத்தொடங்கும் சிறப்புப் பாயிரம். (யா. கா. 1)

‘கட்டளைக் கலித்துறை’ காண்க.

நேரசையின் மறுபெயர் -

{Entry: O15a__230}

தனியசை என்பது. (யா. க. 5 உரை)

நேரடி -

{Entry: O15a__231}

சமநிலை அடி; அஃதாவது 4, 6, 8 என இரட்டைப்படை எண்ணுடைய அடி. தரவு நாற்சீரடியான் வருதல் முன்னரே உணர்த்தப்பட்டமையின், நேரடி என்பதற்கு அளவடி என்று பொருள் கொள்வதை விடுத்து, சமநிலை யாதலன்றி வியனிலையாக வாராத அடி என்றே பொருள் கொள்ள வேண்டும். (தொ. செய். 141 நச்.)

நேரிசை -

{Entry: O15a__232}

‘நேரிசை வெண்பா’ காண்க. (இ. வி. 729)

நேரிசை ஆசிரியத்தின் இனம் -

{Entry: O15a__233}

ஓரடி குறைந்து வரும் ஆசிரியத்துறை நேரிசைத்துறை எனவும் படும். இது நேரிசை ஆசிரியத்தின் இனமாம்.

எ-டு : கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருவிராயின்

அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி அகன்றுபோக

நரையுரும் ஏறுநுங்கை வேலஞ்ச நும்மை

வரையர மங்கையர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையே

இஃது ஈற்றயலடி குறைந்துவந்த ஆசிரியத்துறை. (வீ. சோ. 122)

நேரிசை ஆசிரியப்பா -

{Entry: O15a__234}

ஈற்றடியின் மேலையடி முச்சீரான் அமைய, இறுதிச்சீர் உயிர் மெய்யெழுத்தான் முடியும் ஆசிரியப்பாவகை. இது பெரும்பான்மையும் ஏகாரத்தான் முடியும்.

எ-டு : நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினு மாரன வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3 )

இஃது ஈற்றயலடி முச்சீராக வந்தமையின், நேரிசையாசிரியப் பாவாம்; ஏனைய அடியெல்லாம் அளவடியாதலும் காண்க. (யா. க. 71)

நேரிசை ஆசிரியம் -

{Entry: O15a__235}

ஈரடிக்கு ஓரடியெதுகையாக, இரட்டைப்பட அடியெண்ணை உடையதாகியும், ஈற்றடிக்கு முதலடிக்கண் ஈரசை (-ஒரு சீர்) குறைவாகியும் வரும் அகவற்பா. (அறுவகை. யாப்பு. 4, 5, 6)

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா -

{Entry: O15a__236}

தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்ற அளவிற்பட்ட நான்கு உறுப்புக்களை யுடையதாய், உடன்பட்ட ஒலியின தாய், நுண்பொருள்மேல் சொல்லப்படுவதாய், கலிப்பாவி னுள் புகழுடைத்தாதல் பற்றி இப்பெயர்த்தாயிற்று. (யா. க. 80 உரை)

முதலில் எடுத்தலோசையான் அமையும் தரவு என்ற உறுப் பினைப் பெற்று, அடுத்துத் தாழ்ந்த ஓசையவாய்த் தரவினை ஒத்தும் தரவினைவிடச் சுருங்கியும் வரும் அடிகளையுடைய தாழிசை மூன்று அடுக்கப்பெற்று, அடுத்துத் தனிச்சொல் பெற்று, இறுதியில் நலிதல் ஒலியையுடையதாய்த் தரவினை ஒத்தோ அதனிற் சிறிது சுருங்கியோ அருகிச் சிறிது மிக்கோ வரும் அடிகளையுடைய ஆசிரியச் சுரிதகத்தாலோ வெள்ளைச் சுரிதகத்தாலோ அகப்பொருள் பற்றியதாய் அமைவது நேரிசை ஒத்தாழிசைக்கலியின் அமைப்பு. (யா. க. 82 உரை)

நேரிசை ஒத்தாழிசையின் இனம் -

{Entry: O15a__237}

இது கலித்தாழிசை ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவது. ‘கலித்தாழிசை’ காண்க. (வீ. சோ. 123 உரை)

நேரிசைச் சிந்தியல் வெண்பா -

{Entry: O15a__238}

மூன்றடியால், நேரிசைவெண்பாவைப் போல வருவன; இவை ஒரு விகற்பத்தாலும் இருவிகற்பத்தாலும் வரும்.

எ-டு : ‘அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து

சிறந்தார்க்குச் செவ்வன் உரைக்கும் - சிறந்தார்

சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.’

இஃது ஒரு விகற்பம்.

‘நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு

சுற்றும்வண் டார்க்கப் புடைத்தாளே - பொற்றேரான்

பாலைநல் வாயின் மகள்.’

இஃது இரு விகற்பம். (யா. க. 59 உரை)

நேரிசைத் துறை -

{Entry: O15a__239}

ஆசிரியத்துறை என்னும் இனத்துள் ஓரடி குறைந்து வருவது. ‘நேரிசை ஆசிரியத்தின் இனம்’ காண்க. (வீ. சோ. 122 உரை)

நேரிசை மண்டில ஆசிரியப்பா -

{Entry: O15a__240}

நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம் என்னும் ஆசிரி யங்கள் முதலும் இறுதியும் ஒன்றிவந்தால் அவற்றை நேரிசை மண்டில ஆசிரியம், இணைக்குறள் மண்டில ஆசிரியம், நிலை மண்டில மண்டில ஆசிரியம் என வழங்குப.

எ-டு : முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே

மலையன் ஒள்வேற் கண்ணி

முலையும் வாரா முதுக்குறைந் தனளே.

இது நேரிசை மண்டில ஆசிரியம். (யா. க. 73 உரை)

நேரிசை முதலியன காரணக்குறி ஆதல் -

{Entry: O15a__241}

மிக்க புகழும் சொல்லும் ஓசையும் உடைத்தாதலின் நேரிசை என்றும், இணைந்து குறைந்த அடியுடைத்தாதலின் இணைக் குறள் என்றும், எல்லா அடியும் முதல் நடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் ஒத்துவருதலின் அடி மறி மண்டிலம் என்றும், ஒரு பெற்றியே நின்று எல்லா அடியும் ஒத்து நடத்தலின் நிலைமண்டிலம் என்றும் காரணம் பற்றிப் பெயரிடப் பட்டன. (யா. க. 70 உரை)

நேரிசை வெண்பா இலக்கணம் -

{Entry: O15a__242}

நான்கடியாய், முதல் மூவடியும் நாற்சீரினவாய், ஈற்றடி முச்சீர்த்தாய், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண் டளையும் தட்டு, இரண்டாமடியின் இறுதிச்சீர் முதற் சீரோடு ஒத்த எதுகை பெற்ற தனிச்சீராய், ஒரு விகற்பத்தாலும் இரு விகற்பத்தாலும் வரும் வெண்பாவகை. இரண்டாமடி ஒரூஉத் தொடையாகவும் மேற்கதுவாய்த் தொடையாகவும் கீழ்க்கதுவாய்த் தொடையாகவும் முற்றுத் தொடையாகவும் எதுகை அமையும்.

இதன் முதலிரண்டடிகளும் மோனையும் எதுகையும் ஒருசார் முரணும் அளபெடையும் என்னும் இந்நான்கு தொடை யானுமல்லது, செந்தொடையானும் இயைபுத் தொடை யானும் வாரா.

இந்நேரிசை வெண்பா இரண்டு குறட்பாவின் இணைப்பாய், நடுவில் தொடைக்கேற்ற தனிச்சொல்லான் அடி நிரம்பி, முதற்குறட்பா மோனை எதுகை முரண் அளபெடை என்னும் நான்கு தொடைகளுள் ஒன்றாய் அமைய, இரண்டு குறட் பாவும் ஒத்த விகற்பத்தானும் ஒவ்வா விகற்பத்தானும் வரும். முதற் குறட்பாவின் இறுதிச்சீர் தனிச்சொல்லோடு இணை வதற்கு இடையே ஓரசையோ ஈரசையோ, ஒற்றுமைப்படாத உலோகங்களைப் பற்றாசு இட்டு ஒற்றுமைப்படுத்து வது போல, ஆசாக வரும். இவை ஓராசிடையிட்டதும் ஈராசிடை யிட்டதும் ஆகிய இரு குறள் நேரிசை வெண்பாவாம். (யா. க. 60 உரை)

நேரிசை வெண்பா : காரணக்குறி -

{Entry: O15a__243}

முன்னும் பின்னும் ஒவ்வாததாய் மறுதலைப்பட்ட விகற்பத் தான் (முதலீரடி ஒரு விகற்பம், பின்னீரடி ஒரு விகற்பம்) சொல்லுவர் ஆகலானும், ஒத்த ஒரு விகற்பத்தான் இசைத்த லானும், தனிச்சொல் உடைமையானும், மிக்க புகழிற்று ஆகலானும், நுண்ணிய பொருள்மேல் சொல்லப்படலானும், அளவிற்பட்ட நான்கடியான் சொல்லப்படலானும், புலவ ரான் உடன்பட்ட ஓசையும் சொல்லும் புகழும் உடைய தாகலானும், குறட்பா இரண்டான் அமையும் இந்நேரிசை வெண்பா முதற்குறளொடு தனிச்சொல் இடையே ஒன்றும் இரண்டும் அசை கூட்டி இசைக்கப்படுதலானும், தலைப் பட்ட சொல்லும் பொருளும் உடைத்தாகலானும், புகழ் வேண்டும் ஒருவர்க்குத் தாய்ப்பாட்டாய் (- உரிமையுடைய பாடலாய்)க் கொடைக்கடம் பூண்பித்துப் போய்ப் பாடுடைத்தாய் (-எங்கும் பரவிப் பொருத்தமாய்)க் கிடத்த லானும் ‘நேரிசை வெண்பா’ காரணம் பற்றிய பெயர்.

நேர் என்ற சொற்குரிய பன்னிரு பொருளும், இசை என்ற சொற்குரிய மூன்று பொருளும் நேரிசை வெண்பாவில் பொருத்தி விளக்கப்பட்டுள்ளன. (யா. க. 58 உரை)

நேரிசை வெண்பா வகை -

{Entry: O15a__244}

1. இரு விகற்ப நேரிசை வெண்பா, 2. ஒரு விகற்ப நேரிசை வெண்பா, 3. இரு விகற்ப ஓராசிடை நேரிசை வெண்பா, 4. ஒரு விகற்ப ஓராசிடை நேரிசை வெண்பா, 5. இரு விகற்ப ஈராசிடை நேரிசை வெண்பா, 6. ஒரு விகற்ப ஈராசிடை நேரிசை வெண்பா, 7, 8, இரண்டாமடி மேல் கீழ்க்கதுவாய் எதுகைத் தொடை பெற்ற நேரிசை வெண்பா, 9. இரண்டாமடி முற் றெதுகைத் தொடை பெற்ற நேரிசை வெண்பா. 10. இரண்டா மடி அளபெடைத் தொடை பெற்ற நேரிசை வெண்பா, 11. இரண்டாமடி மோனைத் தொடைபெற்ற நேரிசை வெண்பா, 12.இரண்டாமடி முரண் தொடை பெற்ற நேரிசை வெண்பா, 13. இரண்டாமடி ஒரூஉ எதுகைத் தொடை பெற்ற நேரிசை வெண்பா என்று நேரிசை வெண்பா பல வகைப் படும். (யா. க. 60 உரை)

நேரிசை வெண்பாவின் இனம் -

{Entry: O15a__245}

நான்கடி விருத்தம் தனிச்சொல்லுடைத்தாக வருவது. (வீ. சோ. 121 உரை)

நேரீற்று மூவசைச்சீர் பதினாறு -

{Entry: O15a__246}

1. நேர் நேர் நேர் - மா சேர் வாய்

2. நேர் நிரை நேர் - மா வரு வாய்

3. நேர் நேர்பு நேர் - மா போகு வாய்

4. நேர் நிரைபு நேர் - மா வழங்கு வாய்

5. நிரை நேர் நேர் - புலி சேர் வாய்

6. நிரை நிரை நேர் - புலி வரு வாய்

7. நிரை நேர்பு நேர் - புலி போகு வாய்

8. நிரை நிரைபு நேர் - புலி வழங்கு வாய்

9. நேர்பு நேர் நேர் - பாம்பு சேர் வாய்

10. நேர்பு நிரை நேர் - பாம்பு வரு வாய்

11. நேர்பு நேர்பு நேர் - பாம்பு போகு வாய்

12. நேர்பு நிரைபு நேர் - பாம்பு வழங்கு வாய்

13. நிரைபு நேர் நேர் - களிறு சேர் வாய்

14. நிரைபு நிரை நேர் - களிறு வரு வாய்

15. நிரைபு நேர்பு நேர் - களிறு போகு வாய்

16. நிரைபு நிரைபு நேர் - களிறு வழங்கு வாய் (தொ. செய். 20 நச்)

நேரீற்று வஞ்சி உரிச்சீர் எடுத்துக்காட்டு -

{Entry: O15a__247}

நேரீற்று மூவசைச்சீர் பதினாறில், வெண்பாவுரிச்சீர் 4 நீங்க லாக வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டாம்.

‘மேற்கோட்டுநீர் 3 கீழ்ப்பரந்துதன் 4

விழுக்கோட்டுமெய் 7 வியல்விசும்புதோய்ந் 8

தோங்குமுன்னர்க்9 காம்புகிழியப் 10

பாய்ந்துசென்றுசென்11 றாங்குநலிபுநின் 12

றெதிர்ந்துமீண்டாங்13 கதிர்த்துக்கரைகொன் 14

றலங்குகோட்டுமுத்15 திலங்குநிலவுச்செய்16 . . . . . மூதூர். . . . ’

என்ற பாடலடிகளில் வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டும் வந்த வாறு. எண்ணிடப்படாத 1, 2, 5, 6 என்பன வெண்பாவுரிச் சீராம். ஆகவே 3, 4 முதலிய பன்னிரண்டனையும் நேர் நேர்பு நேர், நேர் நிரைபு நேர், நிரை நேர்பு நேர், நிரை நிரைபு நேர் முதலாகக் கண்டு கொள்க. (முன் தலைப்புள் வாய்பாடு காண்க.) (தொ. செய். 20 நச்.)

நோக்கு என்னும் செய்யுள் உறுப்பு (1) -

{Entry: O15a__248}

யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருiள முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை. அஃது ஓரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்கப்படும். அஃது ஒரு நோக்காகவும், பல நோக்காகவும், இடையிட்ட நோக்காகவும் வரும்.

எ-டு : அறுசுவை உண்டி அமர்ந்(து) இல்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி உண்டாரும் - வறியராய்ச்

சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனின்; செல்வமொன்(று)

உண்டாக வைக்கற்பாற் றன்று. (நாலடி 1)

இது செல்வ நிலையாமை கூறல் என்ற ஒரே நோக்காக வந்தது.

எ-டு : அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல். (நாலடி. 172)

இது நல்வாழ்க்கைக் குரிய பல நெறிகளையும் கூறும் பல நோக்காக வந்தது.

எ-டு : உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு)

ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி

உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை

மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (முருகு. 1-6)

என்ற அடிகளில் ஒளி என்பது அதன் அயற் கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின், இடையிட்டு நோக் கிற்று. (ஒளியையுடைய கணவன் என்க) (தொ. செய். 100 இள.)

செய்யுள் உலகத்தார்வழக்குப் போல நால்வகைச் சொற்க ளானும் யாக்கப்படும் எனவே, உலகவழக்குப் பேச்சுப் போல வெள்ளைமை கலந்து நில்லாது, செய்யுளடிகள் முழுமையும் ஒருசேர நோக்கிப் பயன் கொள்ளுமாறு ஒரு பொதுக் கருத்தினை உட்கொண்டு அமையுமாறு செய்தலே ‘நோக்கு’ என்னும் செய்யுளுறுப்பாம்.

எ-டு : ‘முல்லை வைந்நுனை’ (அகநா. 4)

என்ற பாடலில் கூறப்படும் செய்திகள் யாவும், தோழி தலைவியது ஆற்றாமை கண்டு வற்புறுத்துதற்கு ஏதுவாயின செய்திகளாக இருப்பனவே என்பதனைக் குறித்து உணர்த்திய வாறு காண்க. (தொ. செய். 104 நச்.)

நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (2) -

{Entry: O15a__249}

யாப்பமைந்த செய்யுளின்கண் அமையும் ஓசையளவும்-ஓசையைப் பயக்கும் எழுத்தும் - அவற்றாலாம் அசையும் - இசையறுதி செய்யும் சீரும் - அடியும் - ஆகிய கருவியுறுப்புக் கள் யாவும், அச் செய்யுளைக் கேட்போர் செவியின்பமுறுத லோடு அதன் பொருளையும் பயனையும் மீண்டும் மீண்டும் கருதி இன்புறுதற்கு உரியவாகச் செய்யும் காரணம் ‘நோக்கு’ எனக் கொள்ளப்படும்.

கருதக்கருத ஒருகாலைக்கொருகால் பொருள் நுணுகிச் செல்வதற் கேற்றவாறு அவ்வுறுப்புக்கள் அமையும் அடிப் படையைக் காரணம் என்றார்.

மாத்திரை முதலியன அடியுள் அடங்குமேனும், அவை ஒவ் வொன்றும் நோக்குதற்குக் காரணமாக அமைதல் வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். செய்யுள் முழுதும் இந்நோக்கு எனும் உறுப்பு அமைந்துநிற்றல் வேண்டும். (தொ. செய். 104 ச. பால.)

ப section: 138 entries

பஃறொடை வெண்பா -

{Entry: O15a__250}

நான்கடியின் மிக்க பலவடியான் வரும் வெண்பா. இது நேரிசைவெண்பாவாகவும் இன்னிசைவெண்பாவாகவும் வரும்; ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வரும்; அவ்வாறு வருமிடத்தே முறையே ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா எனப் பெயர் பெறும். (யா. க. 62 உரை)

பஃறொடை வெண்பா 5 அடிமுதல் 12 அடிகாறும் வருமென்பர் ஒரு சாரார்; 7 அடிமுதல் 12 அடிமுடிய வரும் என்பர் மற்றொரு சாரார். தொல்காப்பியனார் இதனை நெடுவெண்பாட்டு என்பர். (தொ. பொ. செய். 118 பேரா)

பஃறொடை வெண்பா 7 அடிமுதல் 16 அடிகாறும் வரும் எனவும், பல அடியானும் வரும் எனவும் கூறும் ஆசிரியரும் உளர்.

பஃறொடைவெண்பா : காரணக்குறி -

{Entry: O15a__251}

பல தொடையானும் தொடுக்கப்படுதலின் பஃறொடை வெண்பா என்பது காரணப்பெயர். (யா. க. 58 உரை)

பஃறொடை வெண்பாவின் இனம் -

{Entry: O15a__252}

நான்கடியின் மிக்கு வரும் வெண்டுறை.

எ-டு : வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்

உறவுற வரும்வழி உரைப்பன உரைப்பன்மன்

செறிவுறு தகையினர் சிறந்தனர் இவர்நமக்(கு)

அறிவுறு தொழிலரென் றல்லன சொல்லன்மின்

பிறபிற நிகழ்வன பின்.

இஃது ஐந்தடியாய் ஈற்றடி ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை; பஃறொடை வெண்பாவிற்கு இனமெனத் தகும்.

பகைத்தொடை -

{Entry: O15a__253}

1. முரண்தொடை 2. மாறுபட்டவற்றின் சேர்க்கை. (L)

படலம் -

{Entry: O15a__254}

ஒருபொருள் நெறியின்றிப் பலவேறு வகைப்பட்ட பொரு ளெல்லாவற்றிற்கும் வேறுவேறு இலக்கணம் கூறக் கருதியவற் றொடு பொருந்திப் பொதுவகையாகத் தொடர்ந்து கூறப் படுவது. அஃதாவது ஒருநெறிப்படாமல் விரவிய பொருள் கட்கெல்லாம் பொதுவாக மொழிவது. படலமாவது அதிகாரம் ஆம். (தொ. செய். 171 நச்)

வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்றம் உடைத் தாகத் தொடர வைப்பது. (யா. வி. பாயிரம் உரை)

பண்ணத்தி -

{Entry: O15a__255}

பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி ஆயிற்று; ஆகவே இசைப்பாடல் என்பது. (பண்ணத்தியாவது பாவினம்.) (தொ. செய். 173 இள.)

பண்ணத்தி என்னும் பாவகை அடிவரையறையுடைய தெனினும் ஆசிரியம் முதலிய பாட்டுக்களைப் போலல்லா மல் இசைத்தமிழ் மரபில் தோன்றி இயற்றமிழ்ப் பகுதியாக வழங்குவது.

அறுவகைப் பாக்களுக்கும் உரியதாக, அவற்றிடைக் கலந்த அற முதலாய மும்முதற்பொருளையும் அகமும் புறமும் ஆகிய திணைப்பொருளையும் தனக்குப் பொருளாகக் கொண்டு, அகவல் முதலாய பாட்டினைப்போல் யாப் பமைதி உடையதாய் வருவது பண்ணத்தியாம்.

இது பண்ணொடும் இசையொடும் கூடி யாழொடும் முழவொடும் பொருந்த வரின், இசைத்தமிழ்ப் பகுதியாம்; இசையின்றிப் பண்ணளவாய் ஓசை பெற்றுவரின் இயற் றமிழ்ப் பகுதியாம்; அஃதாவது பண்ணினை அகத்தே உடையது (பண்+அகத்து+இ) என்பது இதன் பொருள். நாட்டுப்பாடல் என இக்காலத்து வழங்கும் பாடல்கள் இப்பண்ணத்திவழி வந்தனவாம். பள்ளு முதலாய சிற்றிலக் கியங்கள் இதன்வழித் தோன்றியன எனலாம். (தொ. செய். 179 ச. பால.)

பண்ணத்திச் செய்யுள் -

{Entry: O15a__256}

பழம்பாட்டில் சொல்லப்பட்ட பொருளே தனக்குப் பொரு ளாகப் பாட்டும் உரையும் போலப் பண்ணத்தி செய்யப்படும்.

மெய்வழக்கு அல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுத்துப்பயிற்சி யில்லாத புறஉறுப்புப் பொருள் களைப் பண்ணத்தி என்ற பெயரால் கூறப்பட்டது. அவை யாவன நாடகச் செய்யுள் ஆகிய பாட்டுமடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின. அவை நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின் பாட்டு எனப்படா. பண்ணத்தி பெரும்பாலும் செவிலிக்கு உரித்து; உரையிடை யிட்ட பாட்டு (என்னும் பண்ணத்திவகை) கூத்திற்கே உரித்து.

பண்ணத்திக்கு மேலளவு பெரும்பான்மையும் 12 அடியே; சிறுபான்மை அவ்வெல்லையைக் கடந்தும் வரும்; 6 அடியின் குறைந்து வாராது; நெடுவெண்பாட்டாகி நிகழும். (தொ. செய் 180 - 183 பேரா)

இனி, இளம்பூரணர் உரைப்பது வருமாறு: (173 - 175)

பண்ணைத் தோற்றுவிக்கும் இசைப்பாடல்கள் பண்ணத்தி எனப்படும். இப்பண்ணைத்தோற்றுவிக்கும் செய்யுள்கள் பாட்டுக்களின் இயல்பையுடையனவாம். அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஓதப்படு வன. பண்ணத்தி பிசிச் செய்யுளை ஒத்து இரண்டடியானும் வரும். (173)

எ-டு : கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை // என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

இது பிசியோடு ஒத்த அளவிற்றாகிப் பாலையாழ் என்னும் பண்ணிற்கு இலக்கணப்பாட்டாகி வருதலின் பண்ணத்தி எனப்பட்டது. (174).

பண்ணத்தி எனினும் பா இனம் எனினும் ஒக்கும் -

{Entry: O15a__257}

நாற்சீரடியின் மிக்கு வரும் பாட்டுப் பன்னிரண்டும் நாற்சீரடி யின் வேறுபட்டு வருதலும் கொள்ளப்படும் என்பது. எனவே, இருசீரடி முதலாக எல்லா அடியானும் மூன்றடிச் சிறுமை யாகப் பாவினங்கள் பயிலும். பன்னிரண்டாவன: ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என்ற நால்வகைப் பாவினும் அமைந்த தாழிசைதுறை விருத்தங்களாம். அவை ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம்; வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம்; வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்; கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்பன.

ஆசிரியத் தாழிசை மூன்றடி ஒத்துவருவது சிறுபான்மை. ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதலும் கொள்ளப்படும்.

எ-டு : ‘கன்று குணிலா’ முதலாய மூன்று பாடல். (சிலப். ஆய்ச்சியர் குரவை.)

வஞ்சித்தாழிசை - குறளடி நான்கனான் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது.

வெண்டாழிசை - மூன்றடியான் வந்து வெண்பாவே போல முடிவது. சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவன வெள்ளொத்தாழிசை எனப்படும்.

கலித்தாழிசை - அடிவரையறையின்றி ஒத்து வந்து ஈற்றடி சில சீர் மிக்கும் குறைந்தும் வருவது. இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரினும் ஈற்றடி மிக்கு வருதலின் கொச்சக ஒரு போகு எனப்படா.

இனி, ஆசிரியத்துறையாவது நான்கடியாய் இடையிடை சீர் குறைந்து வருவது.

வஞ்சித்துறை - குறளடி நான்கனான் தனித்து வருவது.

வெண்டுறை மூன்றடிச் சிறுமையாக, ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்து வருவது.

கலித்துறை - நெடிலடி நான்கனான் வருவது. அஃதாவது ஐஞ்சீரடி நான்கான் வருவனவும், பதினாறும் பதினேழும் எழுத்துப்பெற்று நான்கடியான் வருவனவுமாம்.

ஆசிரிய விருத்தம் - அறுசீரடி முதலாக மிக்க அடியான் நான்கடியும் ஒத்து வருவது.

வஞ்சிவிருத்தம் - முச்சீரடி நான்காய் வருவது.

வெளிவிருத்தம் - நான்கடியானும் மூன்றடியானும் அடிதோறும் தனிச்சொல் பெற்று வருவது.

கலிவிருத்தம் - நாற்சீரடி நான்கனான் வருவது.

இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனானும், பிற நூல் முடிந்தது தானுடன்படுதல் என்பதனானும் கொள்ளப்படும். (தொ. செய். 175 இள.)

பத்தியம் -

{Entry: O15a__258}

பாதங்களால் நடைபெறுவது; பாவும் பாவினமும் ஆம். (வீ. சோ. 112 உரை)

பத்தியம் ஏழ்வகைப்படுமாறு -

{Entry: O15a__259}

குறள், சிந்து, திரிபாதி, வெண்பா, திலதம், விருத்தம், சவலை என்பன. இவை மிக்கும் குறைந்தும் வருவன இவற்றுப் போலியாம். (வீ. சோ. 126)

பத்து இயற்சீரும் வந்த பாடல் -

{Entry: O15a__260}

எ-டு : குருகுவெண் டாளி கோடுபுய்த் துண்டென

மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது

மருள்பிடி திரிதருஞ் சாரல்

அருளா னாகுதல் ஆயிழை கொடிதே

என்பது இதன்கண், நிரைபுநேர், நேர்நேர், நேர்புநேர், நேர்நிரை; நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு, நேர்நேர்பு; நிரைநிரை, நிரைநிரை நேர்நேர்; நிரைநேர், நேர்நிரை, நேர்நிரை, நிரைநேர் என்ற சீர்கள் வந்துள்ளன.

நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு, நிரைபுநேர், நேர்புநேர் என்ற பத்து இயற்சீர்களும் இவற்றிடையே காணப்படும். (யா.வி. பக். 449, 450).

பதினைந்து வகை அடிகள் -

{Entry: O15a__261}

குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்பனவற்றை இயலடி, உரியடி, பொதுவடி என்பனவற்றான் உறழ அடிகள் பதினைந்து வகைப்படும். (யா. க. 25 உரை)

பயன் (2) -

{Entry: O15a__262}

இன்ன செயலால் இன்னது நிகழும் என்று தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயனாகும். ஒவ்வொரு பாட்டிற்கும் பயன் உண்டு. பயன் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (தொ. பொ. 515 பேரா.)

பரந்த மொழியான் நிகழும் தோல் -

{Entry: O15a__263}

தொன்மைத் தன்மையுடையது தோல் எனும் வனப்பாம். பரந்த மொழியாவது அறிவுடையோரானும் அருளாளர்க ளானும் பல கால் பேசப்பட்டுப் பயிலும் சொற்கள். அவற்றைப் ‘பெருமொழி’ என்பது வழக்கு.

தொன்றுதொட்டு வந்தும் என்றும் புதிதாகவே இருப்பது தோல். இவ்வகைத் தோலுக்கு எடுத்துக்காட்டு திருமுருகாற் றுப்படை. (தொ. செய். 237 ச.பால.)

பரிபாட்டு -

{Entry: O15a__264}

தாவிச் செல்லும் இசையினையுடைய பாட்டு. அஃதாவது செப்பலும் துள்ளலுமின்றி இடைநிகர்த்ததாய்த் தாவியும் தத்தியும் செல்லும் ஓசை. இது பெரும்பான்மையும் பண் ணொடு பொருந்துமாறு யாக்கப்படுதலின் ‘பரிபா’ என்னா மல் ‘பரிபாட்டு’ எனப்பட்டது. (தொ. செய். 121 ச. பால.)

பரிபாடல் -

{Entry: O15a__265}

பரிந்து வரும் பா; பரிபாட்டு எனவும்படும். இது கலியுறுப்புப் போலாது நான்குபாவானும் வந்து பல அடியாக நிகழும். இது வெண்பா உறுப்பான் வருதலேயன்றி, பா நான்கனுள் இன்ன பா என்றறியப்படும் நிலையினதன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றலுமுண்டு.

‘மண்ணார்ந் திசைக்கும்’ என்ற பரிபாடல் வெண்யாப்பு.

‘ஆயிரம் விரித்த’ என்ற பரிபாடல் வெண்பா உறுப்பாக. ஆசிரியத் தளையும் விரவித் துள்ளலோசைப் படவும் கூறப்படுதலின், பரிபாடல் எல்லாப் பாவுக்கும் பொதுவாய் நிற்கும் எனப்பட்டது.

பரிபாடலான் கூறப்படும் கடவுள்வாழ்த்தும் மலைவிளை யாட்டும் புனல் விளையாட்டும் பிறவும் எல்லாம் காமம் கண்ணியே வரும். (தொ. செய். 120, 121 நச்.)

பரிபாடல் உறுப்புக்கள் -

{Entry: O15a__266}

சிறப்பில்லாதது என்று பொருள்படும் கொச்சக உறுப்பு, குறிலிணை பயின்ற அடிகளான் ஆகிய அராகம், சுரிதகம், தரவு என்பனவற்றொடு நான்கு பாவையும் தனக்கு உறுப் பாகக் கொண்டு காமப்பொருள் கருதிப் பரிபாடல் நிகழும்.

பரிபாடலில் கொச்சக உறுப்புப் பயில வருதலின் அதனை முற்கூறி, அராகம் முதற்கண் வாராமையின் அதனை இடை வைத்து, சுரிதகம் எஞ்ஞான்றும் இறுதியிலேயே வருதலின் அதனை அதன்பின் கூறினார். எருத்து இன்றியும் பரிபாடல் வருமாதலின், எருத்து இறுதிக்கண் கூறப்பட்டது. (எருத்து - தரவையடுத்து, இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமை யாக வருவதோர் உறுப்பு) (தொ. செய். 117 இள.)

பரிபாடலில் ஆசிரியம் முதலிய நான்கு பாவும் விரவி வரும். அராகம் இன்றி வருதலும், கொச்சகம் ஈற்றடி குறைந்து வருதலும், அவ்வழி அசை சீராகி இறுதலும், கலிப்பாவிற்குக் கூறியவாறு ஆசிரியச்சுரிதகமும் வெள்ளைச் சுரிதகமும் வருதலும், அடுத்த அடியொடு தொடர்ந்த சொற்சீரடி வருதலும், முடுகியலொடு விரவித் தொடர்ந்து ஒன்றாகிய வெண்பா அடி வருதலும் காணப்படும். (தொ. செய். 121 நச்.)

பரிபாடலுக்கு அடிவரையறை -

{Entry: O15a__267}

பரிபாடலுக்கு உறுப்பாகிய வெண்பாவும் பொதுப்பாக்களும் ஆகியவற்றின் அடிகளின் கூடுதல் நானூறடியைக் கடந்து உயராமலும் இருபத்தைந்து அடிக்குக் கீழ்ச் சுருங்காமலும் அமைதல் வேண்டும். (தொ. செய். 162. நச்.)

பரிபாடலும் கலிப்பாவும் -

{Entry: O15a__268}

பரிபாடலைக் கலியுள் அடக்கலாம் என்பார் சிலர். கலியும் பரிபாடலும் எனத் தனித்தனிப் பாடலாக ஓதப்படலானும், உறுப்புக்களில் வேறுபாடுடைமையானும், இரண்டும் வெவ்வே றெனவேபடும். அராகஉறுப்பு இல்லாத முடுகிய லடி பரிபாடலுக்கு உண்டு. பரிபாடலைக் கலியுள் அடக்கின், எல்லாக் கலியுள்ளும் அராக உறுப்பு இல்லாத முடுகியலடி விரவி வரலாம் என்ற நிலை ஏற்பட்டு விடும். (தொ. செய். 130 பேரா.)

பலபொருள் இரட்டை -

{Entry: O15a__269}

நாற்சீரடி முழுதும் ஒருசீரே பொருள் வேறுபாட்டொடு நான்குமுறை அடுக்கி வருவது.

எ-டு: ‘ஓடையே ஓடையே ஓடையே ஓடையே’

‘ஓடை’ என்ற ஒரு சொல்லே நாற்சீரிலும் முறையே நீர்நிலை, ஒருமரம், யானையின் நெற்றிப்பட்டம், கிலுகிலுப்பை என நான்கு வேறுபட்ட பொருளில் வந்தவாறு. (யா. க. 51 உரை)

பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா -

{Entry: O15a__270}

மூன்றடியாய் இரண்டாமடியின் ஈற்றில் தனிச்சொல்லின்றி அடியெதுகைத் தொடையமையாமலும், முன்னிரண்டடி இறுதிச் சீரில் ஒரூஉ எதுகை பெற்றுவைத்தும் அடியெ துகைத் தொடையமையாமலும் இன்னிசை வெண்பாவே போல வரும் வெண்பா.

எ-டு : ‘முல்லை முறுவலித்துக் காட்டின; மெல்லவே

சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற: போயினார்

திண்டேர் வரவுரைக்கும் கார்.

மூன்றடிகளும் அடியெதுகை பெறாது மூன்று விகற்பமாய் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இதன்கண் முன் னிரண்டடிகளும் ஒரூஉஎதுகைத்தொடை பெற்று வந்தவாறு. (யா. வி. 59 உரை)

பலவிகற்ப இன்னிசைவெண்பா -

{Entry: O15a__271}

நேரிசைவெண்பாவின் இலக்கணத்தின் வேறுபட்டு வரும் இன்னிசைவெண்பா வகைகளுள் ஒன்று.

எ-டு : தலைக்கண் தலைஐந்தும் காணேன் கடைக்கணேல்

என்னா இருவரும் ஈங்கில்லை- பொன்னோடை

ஆழியாய் நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ்

ஏழியான் இக்கிடந்த ஏறு.

இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் (ஒரூஉத் தொடை) பெற்று இரண்டுக்கு மேற்பட்ட (மூன்று) விகற்பம் பெற்று வந்த இன்னிசை வெண்பா. (யா. க. 61 உரை)

பலவிகற்பக் குறள் வெண்பா -

{Entry: O15a__272}

அடியெதுகையின்றி மோனைவிகற்பங்கள் பெற்று வரும் குறள்வெண்பா.

எ-டு : உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு) // அச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)

இதன்கண் அடியெதுகை இன்று; முதலடியில் ஒரூஉ மோனை வந்தது; இரண்டாமடியிலும் முதலிருசீர்க்கண் மோனை வந்தது. (யா. க. 59 உரை)

பலவிகற்பப் பஃறொடை வெண்பா -

{Entry: O15a__273}

பலவாகிய அடியெதுகைத் தொடை நிகழுமாறு வரும் வெண்பா; நான்கற்கு மேற்பட்ட அடிகளால் நிகழும் வெண்பா பஃறொடை வெண்பாவாம். இதற்குப் பெருமை எல்லை பன்னிரண்டடி. தொல்காப்பியனார் ‘நெடு வெண் பாட்டு’ என்பர்.

எ-டு : பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே-பொன்னோடைக்கு

யானைநன் றென்றாளும் அந்நிலையள்-யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார்நன் றென்றேன் தியேன்.

இதன்கண், முதல் மூன்றடிகளும் ஓரெதுகை; ஈற்றடியிரண் டும் ஓரெதுகை; நான்காமடி எதுகை பெறாது வந்தது. ஆகவே, மூன்றுவிகற்பத்தால் இப்பஃறொடைவெண்பா வந்தவாறு. (யா. வி. 62 உரை)

பழிகரப்பு அங்கதம் -

{Entry: O15a__274}

வசைப்பொருளினை வெளிப்படையாகக் கூறாமல் மறை வாகக் குறிப்பிடும் பாடல்.

எ-டு : ‘தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணா ராகுப நீர்வேட் டோரே’ (புறநா. 204)

என்றவழி, “நின் செல்வம் கடல்போலப் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாது” என வசையைக் கரந்து கூறியது போல்வன. (தொ. செய். 126 நச்).

இது பழிகரப்புச் செவியுறை அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும் (128). இவ்வங்கதம் வசைப்பொரு ளொடும் அதனால் பிறந்த நகைப் பொருளொடும் வரும். (129).

பழிகரப்புச் செவியுறை அங்கதம் -

{Entry: O15a__275}

அரசன் தனக்குரிய அரசியலில் தப்பிய நிலையைக் கூறும் கூற்றொடும், அவ்வறம் பொருள் இன்பம் பயக்கக் கூறும் கூற்றொடும் ஒரு செய்யுள் செய்தியை மறைவாகக் கூறி புலப்படுத்துவது.

எ-டு : ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறநா. 47)

இஃது அரசனுக்கு வருகின்ற துகளினை வெளிப்படையாகப் புலப்படுத்தல் இன்றிச் செய்யுள் செய்து, தமது சொல்லைக் கேட்டு அரசன் தவறு செய்ய அஞ்சினான் என்னும் பொருளை நிறுத்துதலால் பழிகரப்புப் செவியுறை அங்கத மாயிற்று. (தொ. செய். 12 நச்.)

பற்றாசு -

{Entry: O15a__276}

பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் உலோகத்துகள். இவை ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துதற்கு அவற்றினிடையே இடப்பெற்று உருக்கப்படுவன. அது போல, முதற் குறட்பாவின் இறுதிச் சீர் இரண்டாமடியின் தனிச்சீராம் நான்காம் சீரோடு இணையாத நிலையில் அதனை இணைப்பதற்கு இடையே ஓரசையோ ஈரசையோ கூட்டி அம் மூன்றாம் சீரோடு இணைத்து நான்காம் சீரோடு தளை கொள்வர். மூன்றாம் சீரையும் நான்காம் சீரையும் இணைப்பதற்கு இடையே கூட்டப்படும் அசையே ஆசு எனப்படும்.

இதுபோலவே, சீர் அமைப்புக்குப் பயன்பட்டு அடி எதுகை காணும்போது கணக்கிடப்படாமல் விடப்படும் எழுத்துக் களாகிய ய் ர் ல் ழ் என்பனவும் ‘ஆசு’ என்று சொல்லப்படும். (யா. க. 60 உரை)

பனுவல் இயல்பு -

{Entry: O15a__277}

‘அறுவகையிலக்கணம்’ என்ற நூற்கண் நாலாம் பகுதியாகிய யாப்பிலக்கணத்துள் பனுவலியல்பு சொல்லப்பட்டுள்ளது.

நூல், பிரபந்தம், புராணம், காவியம் என்பன பனுவலின் வகைகள். இவற்றுள் நூல் ஆண்; பிரபந்தம் பெண்; ஏனை யவை அலி எனப்படும். பனுவல் உணர்த்தும் அறம் பொருள் இன்பம் வீடு என்பன முறையே மாதா பிதா குரு தெய்வம் என்பவர்களை ஒக்கும். நூல் எனும் வகையுள் இலக்கணம், இலக்கியம், சோதிடம், நீதி, மருத்துவம், சிற்பம் முதலிய திறமெல்லாம் சொல்லப்படும். பிரபந்தமாவது தெய்வம், அரசன், வள்ளல், சுவை நுகர் நன்மக்கள் ஆகியோரைத் துதிப்பது. புராணமும் காவியமும், மலை நதி நகர் நாடுகளின் வளங்கள், தெய்வச்செயல், வேந்தனது போர், அவன் செங்கோன்மை, சான்றோர் தன்மை போல்வன பலவற்றையும் வருணிப்பன. பாயிரம் பனுவலுக்குத் திலகமாவது. ஆசிரியன் கூறும் பொதுப்பாயிரம், தெய்வக் காப்பு, கொள்ளுமவர் செயல், பனுவலியற்றக் காரணம், பனுவற்பயன் என்பன வற்றையும் இயைந்த பிறவற்றையும் உணர்த்துவது. சிறப்புப் பாயிரம், பனுவலைச் செய்தோன் பெயர், சேர்ந்த அரங்கு, அதன் புகழ் முதலாயவற்றை உணர்த்துவது. பாயிரத்தினும் பனுவல் தொடக்கத்தேயுள்ள கடவுள் வாழ்த்து நூறுமடங்கு சிறந்தது. தெய்வ வணக்கம் செயப்படுபொருள் என்னும் இவற்றைச் சொல்லவாவது பாயிரம் வேண்டும்.

நூற்கு மெய்ப்பொருள் கொலை புலை மறுத்தல்; பிரபந்தத் திற்கு மெய்ப்பொருள் கொற்றமும், பெருங்கொடையும்; புராணம் காவியங்கட்கு மெய்ப்பொருள் கடவுள், தொண்டர் என்பர் உணர்ந்தோர். (நூல் முதலியவற்றில் கொலை புலை மறுத்தல் முதலியன வற்புறுத்தப்படும் பொரு ளாக இடம் பெற வேண்டும் என்பது கருத்து).

நூல்களின் பகுதிகட்கு அதிகாரம், இயல்பு, உருவகம் முதலாகப் பெயரிட்டுள்ளனர் புலவர். தசாங்கம், பவனி, தூது இவை முதலாகப் பிரபந்தத்தின் பிரிவு பல. காவியம் புராணம் இவற்றின் பிரிவு காண்டம், சருக்கம், படலம், கதி முதலியன. பிரபந்த வகை 96 என்ப; எனினும் இலகரி முதலாக நொண்டி ஈறாகிய வேறு பல விதமும் விளங்குகின்றன. பனுவலுக்கு உரிய பெயரை ஆக்கியோன் இடுதலே சிறப்பு.

இனி, யாப்பு இயல்பு சிலவும் பனுவல்இயலுள் கூறத்தகும்.

சுத்தம் பொலிந்து தோம் அற ஒழுகுதலின், வெண்பா அந்தணப்பெண் போலும். கட்டும் காவலும் போல் அளவு அமைதலின் கட்டளைக்கலித்துறை அரசர்பெண் போலும். வெண்டளை பிறழாது மேம்பட வரும் கலிப்பாவும் அந்தணப் பெண் போலும். விருத்தம் பலவும் தாழிசையும் வணிகச்சாதி யாம். மூன்றசைச்சீர் வரும் கொச்சகக் கலிப்பாவுக்கு இணை வேளாண்சாதியாம். பதம், சிந்து ஆதிய பாடல்கள் பாணப்பெண் ஆம். வண்ணம் சிதையாத தூநலவண்ணப் பாடல்கள் கற் புடைப் பெண் ஆம். எதுகைமோனைகளும் அளவும் இன்றி வேற்றுச்சீர் வேற்றடிகள் பல விரவிப் சொல் பொருள் முதலிய பலவற்றாலும் பிழைபடு பாடல்கள் பீடழி மகள் ஆம்.

பனுவலின் மெய்ப்பொருள் -

{Entry: O15a__278}

‘பனுவலியல்பு’ காண்க. (மூன்றாம் பத்தி)

பா -

{Entry: O15a__279}

சேட்புலத்திருந்து சொல்லும் பொருளும் புலனாகாத வகை யில் ஒருவன் கூறியவழியும், இஃது இன்ன செய்யுள் என்றறி வதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோர் ஓசைத்தொகுதி. (தொ. செய். 1. பேரா., நச்.)

பாஅ வண்ணம் -

{Entry: O15a__280}

சொற்சீரடி உடைத்தாய் நூற்பாவினுள் பயின்று வரும் வண்ணம். அகவலுள் இத்துணைப் பயிலாது.

எ-டு : ‘வடவேங்கடம் தென்குமரி’ (தொ.பாயிரம்)

‘எழுத்தெனப் படுப

அகரமுதல்

னகர இறுவாய் முப்பஃ தென்ப’ (தொ. எ. 1 )

‘பெரியகட் பெறினே’ (புறநா. 235) (தொ. செய். 214 பேரா)

பா என்னும் செய்யுள் உறுப்பு -

{Entry: O15a__281}

இது செய்யுளின் இனறியமையாத 26 உறுப்புக்களுள் ஒன்று. அஃதாவது சேட்புலத்திருந்து சொல்லும் பொருளும் புலனாகாதவாறு ஒருவன் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கு ஏதுவாய்ப் பரந்துபட்டுச் செய்வதோர் ஓசைத் தொகுதி; இவ்வோசை வேறுபாடுகளால் பாக்கள் பல வகைப்பட்டன. (தொ. செய். 1 நச்.)

இப்பா என்னும் உறுப்பு, தூக்கு என்று செய்யுளடிகளை அறுத்து இசைக்கும் உறுப்பின் தொடர்ச்சியாம். ஓரோர் செய்யுட்கண் ஒரே பாவும் வரும்; சிலபாக்கள் விரவியும் வரும். (தொ. செய். 105 நச்.)

பாக்களின் அடிச்சிறுமை -

{Entry: O15a__282}

வெண்பா, கலி, வஞ்சி. 2 அடி; அகவல்: 1 அடி. (சாமி. 154)

பாக்கள் முதலியவற்றின் இராகம் -

{Entry: O15a__283}

வெண்பாவிற்குரிய இராகம் சங்கராபரணம். அகவல், தாழிசை இவற்றுக்குத் தோடி, கலிக்குப் பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தத்துக்கு மத்தியமாவதி - காம்போதி - கலியாணி - முதலிய பல, உலாவுக்கு சௌராட் டிரம், தோடையத்துக்குச் சௌராட்டிரம்-நாட்டை-என்பன, மங்களத்துக்கு மங்கள கௌசிகம், பிள்ளைக்கவிக்குக் கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என இராகங்கள் சொல்லப்படுகின்றன.

இனிக் குணம் பற்றிய இராகத்துள், இரக்கத்துக்கு ஆகிரி, பியாகடை, நீலாம்புரி, புன்னாகவராளி, கண்டாரவம் என்பன; துக்கத்துக்கு ஆகிரி முதலிய இரக்க ராகங்களோடு வராளி; மகிழ்ச்சிக்குத் தந்நியாசி, சாவேரி, காம்போதி என்பன; யுத்தத்துக்கு நாட்டை என இராகம் சொல்லப்படும்.

இனிக் காலம் பற்றிய இராகத்துள், வசந்த காலத்துக்குக் காம்போதி, அசாவேரி தந்நியாசி என்பன; மாலைக்குக் கலியாணி, காபி, கன்னடம், காம்போதி என்பன; யாமத்துக்கு ஆகிரி; விடியலுக்குப் பூபாளம், நாட்டை, இராமகலி, தேசாட்சரி, இந்தோளம் என்பன; உச்சிக்குச் சாரங்கம், தேசாட்சரி என இராகம் சொல்லப்படும்.

எக்காலத்திற்கும் இயையும் இராகங்கள் ஆகிரி, இந்தோளம், சாரங்கம், இராமகலி, பூபாளம் என்னும் இவை நீங்க லானவை எல்லாம் என்க. (தொகை. பக். 35)

பாக்களின் அடிச்சிறுமை பெருமைகள் -

{Entry: O15a__284}

வெண்பாவிற்குச் சிறுமை ஈரடி; ஆசிரியப்பாவிற்குச் சிறுமை மூன்றடி; கலிப்பாவிற்குச் சிறுமை நான்கடி: வஞ்சிப்பா விற்குச் சிறுமை மூன்றடி.

வஞ்சிப்பாவிற்கு ஈரடிச் சிறுமையும் ஆசிரியச் சுரிதகத்திற்கு ஈரடிச் சிறுமையும் ஆம் எனக் கொண்டார் மயேச்சுரர். (யா. கா. 14 உரை)

இனி, வெண்பாவின் பெருமை ஏழடி; ஆசிரியப் பாவின் பெருமை ஆயிரம் அடி; வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை, அங்கதம், கலிப்பா - இவற்றிற்குப் பெருமையின் எல்லை உரைப்போர் குறிப்பே என்றார் நத்தத்தனார். (யா. க. 32 உரை)

பாக்களின் அடிப்பெருமை உரைப்போர் குறிப்பே என்றா,

காக்கைபாடினியாரும் அவிநயனாரும். (யா. வி. பக். 132)

ஆசிரியப்பாவின் அடியின் பேரெல்லை. ஆயிரம்; வஞ்சிப்பா வின் அடியின் பேரெல்லை ஆயிரம்; வெண்பா, அங்கதம் இவற்றின் அடியின் பேரெல்லை பன்னிரண்டு; கலிவெண்பா, கைக்கிளை, செவியுறை, வாயுறை புறநிலை என்பன வற்றிற்கு மேலெல்லை இல்லை என்றார். தொல்காப்பியனார். (செய். 157, 108, 158, 159, 160 நச்.)

வெண்பாவிற்கு உயர் எல்லை ஏழடி; அதற்கு மேலும் வரலாம். ஆசிரியப்பா அடியின் பெருமைக்கு எல்லை ஆயிரம் என்றார் சங்கயாப்புடையாரும் பல்காயனாரும். (யா. வி. பக். 133.)

ஆசிரியம் வஞ்சி இவற்றின் அடிப்பெருமை ஆயிரம் என்ப; கலி நீங்கலாக ஏனைய பாக்களுக்குப் பொருள் முடியும் அளவு அடிகள் மிக்கு வரலாம்; கலிப்பா, தன் உறுப்புக்களுக்குக் கூறிய அடிப்பெருமையைக் கடவாமல் வருதல் வேண்டும்; கொச்சகக்கலியுள் வரும் தாழிசைகளுக்கு எண்ணிக்கை வரையறை இல்லை என்றார் மயேச்சுரனார். (யா. வி.பக். 133.)

ஆசிரியம் ஆயிரம் அடியாகிய பேரெல்லை யுடையது; வெண்பாவின் அடிப்பெருமை பன்னிரண்டு; வஞ்சியின் பேரெல்லைக்குரிய அடிவரையறை இல்லை என்றார் பரிமாணனார்.

யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் பாக்களின் அடிகளுக்குப் பேரெல்லை பாடுவோர் கருத்தின் அளவே என்னும். (யா. க. 32 உரை, யா. கா. 14.)

எனவே, பாக்களின் அடிகளுக்குச் சிற்றெல்லை கூறுவதில் இலக்கண ஆசிரியர் யாவரும் ஒருபடித்தான கருத்துக் கொண்டுள்ளது போல அடிப்பெருமை கூறற்கண் ஒருபடித் தான கருத்துக் கொண்டிலர் என்பது தெளிவு.

பாக்களின் ஓசைகள் -

{Entry: O15a__285}

வெண்பாவின் ஓசை செப்பல்; ஆசிரியப்பாவின் ஓசை அகவல்; மருட்பாவின் ஓசை இவ்விரண்டும் விரவியது; கலிப்பாவின் ஓசை துள்ளல்; வஞ்சிப்பாவின் ஓசை தூங்கல்; பரிபாடலின் ஓசை, அதன்கண் அமைந்த ஆசிரியம் வெண்பா கலி வஞ்சி என்ற நால்வகைப் பாக்களின் ஓசைகளே.

செப்பலும் அகவலும் மருட்பாவின்கண் இடையீடின்றிக் கலந்தாற்போலத் துள்ளலும் தூங்கலும் யாண்டும் கலந்து வாரா.

எனவே, பிற்காலத்து ஆசிரியர்கள் இனம் என்று கொண்டு இவ்வோசைகளைச் கலத்தல் தொல்காப்பியனார்க்கு உடன் பாடன்று. இசைக்குப் பண்ணும் திறமும் பகுத்தாற்போல இயற்குப் பாவும் இனமும் பகுக்கப்படவில்லை. (தொ. செய். 81-86 நச்.)

பாக்களின் தொகை விரி -

{Entry: O15a__286}

அடிப்படைப் பாக்கள் ஆசிரியம் வெண்பா என இரண்டே ஆசிரிய விகற்பமாகி அகவலோசையில் தூங்கலோசை விரிந் தடங்கும். ஒழிந்த வெண்பா விகற்பமாகிச் செப்பலோசையில் துள்ளலோசை விரிந்தடங்கும்.

‘வீடுபேறு மிக விழைந்து, நீடுநினைந்து நெடிதிருந்து’

நேர்புநேர்பு நிரைநிரைபு நேர்புநிரைபு நிரைநிரைபு என ஆசிரியச்சீரான் வஞ்சித்தூக்குப் பிறந்தது.

‘யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்’ (குறள் 377)

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் என வெண்சீர் வெண்டளை முழுதுமாக வரும் வெள்ளடிக்கண் கலிக்குரிய துள்ளலோசை பிறந்தது.

ஆசிரியமும் வெண்பாவும் இயல்பான பாக்கள். ஏனைய இரண்டும் விகாரம் என்பது உணரப்படும். ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா இவற்றில் அருகிவரும் துள்ளிய கலி யோசை ஒருவகையான் வெண்பா நடைத்தே ஆம். (தொ. செய். 107, 108 நச்.)

பாசி நீக்கம் -

{Entry: O15a__287}

பாசி முறையாக நீங்குவது போல, அடிதோறும் பொருள் முற்றுப்பெற்று நிற்பதொரு பொருள்கோள். இதனைப் பிற இலக்கண நூலார் யாற்றுநீர்ப் பொருள்கோள் என்ப. ( L )

எ-டு : ‘சென்றார் வருவது நன்கறிந் தேன்; செருச் செந் நிலத்தை வென்றான் பகைபோல் மெலியல்; மடந்தை! உம் வெற்பெடுத்து

நின்றான் அளந்த நிலமும் குளிர்ந் தது; நீள்புயலால்

பொன்தான் மலர்ந்து பொலங் கொன்றை தாமும் பொலிந்தனவே’. (பாண்டிக். 318)

இதனுள் ‘நன்கறிந்தேன்’ எனவும், ‘மடந்தை! மெலியல்’ எனவும் ‘நிலமும் குளிர்ந்தது’ எனவும் ‘கொன்றை தாமும் பொலிந் தன’ எனவும் அடிதோறும் ஒரு கருத்து முற்ற வினைச்சொல் முற்றி நின்றவாறு, பாசிநீக்கு ஆம். (இறை. அ. 56 உரை)

பாட்டாங்குக் கிளத்தல் -

{Entry: O15a__288}

பாட்டினைப் போலக் கூறுதல்.

ஓசையை ஒழித்துச் சீரும் தளையும் அடியும் படக் கூறின் ‘பாட்டாங்கு’ ஆகாது என்பது. அடியும் தொடையும் பெற வந்தனவாயினும், நூற்செய்யுளாகவோ உரைச்செய்யு ளாகவோ கொள்ளப்படும்.

தொல்காப்பிய நூற்பா ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணம் உடைத்தாயினும் ஓசையின்மையின் ஆசிரியம் எனப்படாது நூலின் பாற்படும். (தொ. செய். 82 இள)

பாட்டாங்குக் கிளவார் -

{Entry: O15a__289}

ஆங்கு என்றது முதல்நூலாகிய அகத்தியத்தினை. (தொ. செய். 86 நச்.)

பாட்டினைப் போலக் கூறார்; பாட்டாங்குக் கூறுதலாவது ஓசை ஒழித்துச் சீரும் தளையும் அடியும்படக் கூறுதல். அவ்வாறுபடக் கூறுதலால் பாட்டாங்கு ஆகாது என்பதும், அடியும் தொடையும் பெற வந்தனவாயினும் நூலின்பாலோ உரையின்பாலோ படும் என்பதும் கொள்ளப்படும். ஆங்கு: உவமஉருபு. (தொ. செய். 82 இள.)

பாட்டின்கண் வேறு இலக்கணம் கூறப்படாது. நான்கு பாவினையும் நோக்கி, ‘ஆங்கு’ என்றான். (தொ. செய். 86 பேரா)

பாட்டாவது -

{Entry: O15a__290}

பாட்டு என்பதனுள் பாவும் அடங்கும். பாட்டாவது, அறம் முதலாகிய மும்முதற்பொருளைப் பயனாகக் கொண்டு, அகமும் புறமுமாகிய பொருளைத் தழுவி, மாத்திரை முதலாகிய செய்யுளுறுப்புக்களுள் வேண்டுவன பெற்று நிகழும் ஆசிரியம் - வெண்பா- கலி - வஞ்சி - மருட்பா - பரிபாடல் - என்னும் அறுவகையினதாகும். (தொ. செய். 79 ச. பால.)

பாட்டின் அடிவரையறை -

{Entry: O15a__291}

ஆசிரியப்பாவிற்குச் சிற்றெல்லை 3 அடி ; பேரெல்லை 1000 அடி. வெண்பாவிற்குச் சிறுமை குறுவெண்பாட்டு எனும் ஏழு சீராகிய இரண்டடி; பெருமை 12 அடி. பரிபாடற்குச் சிறுமை 25 அடி; பெருமை 400 அடி. (தொ. செய். 157, 158, 162 பேரா.)

ஆசிரியத்திற்கு ஓரடியும், வெண்பாவிற்கு இரண்டடியும், வஞ்சிக்கு மூன்றடியும், கலிக்கு நான்கடியும் சிற்றெல்லையாகக் கூறும் அவிநயம். (யா. வி. பக். 132)

வெண்பாவிற்குச் சிறுமை 2 அடி; அகவற்பா வஞ்சிப்பாக்கட் குச் சிறுமை 3 அடி; கலிப்பாவிற்குச் சிறுமை 4 அடி; பெருமை இம்மூன்று பாவிற்கும் வரையறையில்லை என்று கூறுவன யாப்பருங்கலமும் (32) யாப்பருங்கலக் காரிகையும் (14). முத்து வீரியமும், சிதம்பரப்பாட்டியலும் இம்முத்திறப்பாக்களுக் கும் சிறுமை இவற்றையே சொல்லி, இவற்றுக்குப் பெருமை வரையறை யின்று எனக் கூறும்.(மு.வீ. யாப்பு. 19-23; சித. பாட். 5)

அகவலுக்குச் சிறுமை ஓரடி; வெண்பா, வஞ்சி, கலி இவற்றுக் குச் சிறுமை இரண்டடி எனச் சாமிநாதம் கூறும். (154)

பாட்டின் இலக்கணம் -

{Entry: O15a__292}

யாப்புறச் செய் பாட்டென்பது பைந்தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கும் யாப்பிலக்கணங்கள் அமையச் செய்யப் பட்டுப் பா என்னும் உறுப்புக் காரணமாக மிகுந்தொலிக்கும் இயல்பினை யுடையது.

பாட்டு, நூல், உரை, பிசி, மந்திரம், முதுசொல், குறிப்புரை எனப்பட்ட செய்யுள் ஏழனுள்ளும் பா உறுப்பாக இசைக் கப்படுவது பாட்டு ஒன்றே. இப் பா என்பது யாதெனின், தொலைவில் நின்று ஒருவன் ஒருபாட்டை ஓதும்போது, அந்தப் பாட்டின் எழுத்தும் சொல்லும் தெளிவாக விளங்க வில்லை யாயினும், அவ்வோ சையைக் கொண்டே அஃது இன்ன வகைப் பாட்டு என்று இனம் கண்டறிய இயலும்; அவ்வாறு மிக்கொலிக்கும் ஓசையே பா என்பது. இஃது உறுப்பான் வந்த பெயர்; பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்பது இதன் பொருள். (இ. வி. பாட். 2 )

பாட்டின் வகை -

{Entry: O15a__293}

பா உறுப்பான் எழுந்தொலிக்கும் பாட்டின்வகையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திர கவி, அகலக்கவி என்பன. (இ. வி. பாட்.3)

பாட்டு -

{Entry: O15a__294}

1. பா உறுப்புத் தோன்ற யாக்கப்படும் செய்யுள். 2. பாடப் படும் கீதம். 3. கீர்த்தனை. (L)

பாட்டாகிய செய்யுள் அடிவரையறை உடையது. ஏனைய உரை, நூல், முதலிய செய்யுள்களுக்கு அடிவரையறை இல்லை. (தொ. பொ. 476, 477 பேரா.)

பாதிரி: இதனுள் அடங்குவன -

{Entry: O15a__295}

போது பூ - நேர்புநேர்; போரேறு - நேர்நேர்பு; பூமருது - நேர்நிரைபு என இம்மூன்றும் நேர்நிரையாகிய பாதிரியுள் அடங்கும். (தொ. செய். 15, 16 நச்.)

பா - தொகை, வகை, விரி -

{Entry: O15a__296}

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்று பாவின் தொகை ஐந்தாகும்.

குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என வெண்பா வகை 6; நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி மண்டிலம் என ஆசிரியப்பா வகை 4; நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை, வெண்கலிப்பா, தரவுகொச்சகம், தரவிணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம் எனக் கலிப்பா வகை 9; குறளடி, சிந்தடி என வஞ்சிப்பா வகை 2; புறநிலை, வாயுறை, செவியுறை, கைக்கிளை என மருட்பா வகை 4; இவ்வாறாகப் பாவின் வகை 25 ஆம்.

குறள் வெண்பா, விகற்பக்குறள் வெண்பா;

நேரிசைச்சிந்தியல் ஒரு விகற்பம், இருவிகற்பம்;

இன்னிசைச் சிந்தியல், ஒரு விகற்பம், பலவிகற்பம்;

ஒரு விகற்ப, இருவிகற்ப நேரிசை வெண்பா, ஒருவிகற்ப, பல விகற்ப இன்னிசை வெண்பா;

ஒத்த விகற்ப, ஒவ்வா விகற்பப் பஃறொடைவெண்பா;

நேரிசை முதலிய நான்கு ஆசிரியப்பாவினையும் இன்னியல் விரவியல் என்னும் இரண்டானும் முரண எட்டாக வரும் ஆசிரியப்பா;

வெள்ளைச் சுரிதக, அகவற் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா; அளவியல், அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா; அளவியல், அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா;

கலிவெண்பா, வெண்கலிப்பா; இயல் சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா, இயல் சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா; குறை, சிஃறாழிசை, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா; இயல், அயல், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா;

இயல், விரவியல் குறளடி வஞ்சிப்பா; இயல் விரவியல் சிந்தடி வஞ்சிப்பா;

சமநிலை, வியநிலை என்னுமிரண்டனோடும் வாயுறை முதலிய நால்வகை மருட்பாக்களையும் உறழ வரும் எட்டு மருட்பா;- என இவை பாவின் விரியாம். (யா.க.பாயிரம். உரை)

பா நிலை வகை -

{Entry: O15a__297}

பாவி நின்ற நிலைவகை; பலவாறு விரித்துரைக்கப்பட்ட நிலைகளையுடைய கொச்சகக் கலிப்பாவின் வகைகள். (தொ. செய். 155)

பாரதம் -

{Entry: O15a__298}

பழையதாய் நிகழ்ந்த செய்தியைக் குறிப்பிடும் (தொன்மை என்ற) தொடர்நிலைச் செய்யுளுக்குப் பாரதம் எடுத்துக் காட்டு. (யா. வி. பக். 399)

பாவகை -

{Entry: O15a__299}

வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா எனப் பா ஐவகைப்படும். வெண்பா முதற்கண் வந்து ஆசிரியமாய் இறும் மருட்பா ஏனைய நான்கு பாக்களைப் போலச் சிறப்பு இன்று. (யா. க. 55)

பாவகை: ஒரு சாரார் கூற்று -

{Entry: O15a__300}

ஒருசார் யாப்பிலக்கண நூலார், குறளும், சிந்தும், திரிபாதி யும், வெண்பாவும், திலதமும், விருத்தமும், சவலையும், குறட்போலி சிந்துப்போலி முதலாக இவ்வேழனது போலி யும் எனப் பாவகை பதினான்காம் என்பர். அவற்றுள், குறள், சிந்து, வெண்பா, விருத்தம் என்னும் நான்கும் எல்லா ஆசிரி யர்க்கும் ஒப்ப முடிந்த இலக்கணத்தனவாம். (வீரசோழிய நூலார் இரண்டடிப்பாடல் சீர் ஒத்து முடிவதனையே சிந்து என்பர்.) அடிமூன்றாய்ச் சீர் ஒத்து முடியும் பாடல் திரிபாதி எனவும், கட்டளைக்கலித்துறைப் பாடலே திலதம் எனவும், குறள் முதலான ஆறும் சீர் தளை வழுவி வருதல் சவலை எனவும், குறள் முதலான ஏழும் தம் சீர் அசை அடி இவற்றில் சுருங்கி வருவன அவ்வவற்றுப் போலி எனவும் கூறுப. (தென். இயற். 41, 42)

பாவகை நான்கு -

{Entry: O15a__301}

ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனப் பாவகை நான்கு. ஆசிரிய நடைத்து வஞ்சி ஆகலானும், வெண்பா நடைத்துக் கலி ஆகலானும், ஆசிரியம் வெண்பா என்ற அடிப்படைப் பாடல்களை அடுத்து அமைந்த வஞ்சியும் கலியும் சிறப்பில என்று நீக்கத்தக்கன அல்ல என்று கோடற்கு ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்று பாவகை நான்கும் முறைப் படுத்துக் கூறப்பட்டன. (தொ. செய். 105 நச்)

பாவண்ணம் -

{Entry: O15a__302}

நூற்பாவுக்குரிய சந்தம் (தொ. பொ. 526 பேரா.)

பாவிற்குரிய பொருண்மை -

{Entry: O15a__303}

நான்கு பாக்களும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று முதற்பொருள்களையும் விளக்கிக் கூறுதற்கு உரியன. மூன்று முதற்பொருள் எனவே, அவற்றின் துணைப்பொருள்களாகிய அறத்தினது நிலையின்மையும், பொருளினது நிலையின்மை யும், இன்பத்தினது நிலையின்மையும் அடங்கும். உலகியல் பொருள் மூன்றனையும் இவையெனக் கூறி, அவற்றை விடுக்கு மாறும் கூறவே, வீடும் ஓராற்றான் கூறப்பட்டதாம். அது கூறுதற்குரிய செய்யுளும் கொச்சகமாம். (தொ. செய். 106 நச்.)

பாவின் தொகை -

{Entry: O15a__304}

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என ஐந்தாம். (யா. க. பாயிரம் உரை)

பாவின் மறுபெயர்கள் -

{Entry: O15a__305}

தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, கவிதை (திவா. பக். 233) என்பன. ‘தொடர்பு’ என்பதும் கொள்க.

பாவின் வகை -

{Entry: O15a__306}

குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, பஃறொடை என வெண்பா வகை 6; (சிந்து, நேரிசை இன்னிசை என இருவகைத்து. நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி மண்டி லம் என ஆசிரியவகை 4; நேரிசை ஒத்தாழிசை, அம்போ தரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை, வெண் கலிப்பா, தரவு கொச்சகம், தரவிணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம், எனக் கலிப்பா வகை 9; குறளடி, சிந்தடி என வஞ்சிப்பா வகை 2; புறநிலை, வாயுறை, செவியுறை, கைக்கிளை என மருட்பா வகை 4; இவ்வாறாகப் பாவின் வகை 25 ஆம். (யா. க. பாயிரம். உரை)

பாவினங்களின் பெயர் -

{Entry: O15a__307}

வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்ற பாக்கள் நான்கற்கும் தாழிசை, துறை, விருத்தம், என்ற இனங்கள் அமைய, அவை வெண்டாழிசை வெண்டுறை வெளிவிருத்தம் எனவும், ஆசிரியத் தாழிசை ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் எனவும், கலித்தாழிசை கலித்துறை, கலிவிருத்தம் எனவும், வஞ்சித் தாழிசை வஞ்சித்துறை வஞ்சிவிருத்தம் எனவும் பன்னிரண் டாம். இவற்றொடு குறள் வெண்பாவின் இனமாகிய குறட் டாழிசையும், வெண் செந்துறையும் கொள்ளப்படும். பண் ணுக்குத் திறம் இல்லை; அதுபோலவே மருட்பாவிற்கு இனம் இல்லை என்ப. காக்கைபாடினியார், அவிநயனார், மயேச்சுரர் முதலாயினோர் கருத்தும் இதுவே.(யா.க. 56 உரை)

பாவினங்களுக்குரிய அடிகள் -

{Entry: O15a__308}

பாஇனங்கள் குறளடி முதலிய எல்லா அடியானும் வரப் பெறும். வஞ்சித்துறை குறளடியானும், வஞ்சி விருத்தம் சிந்தடியானும், கலிவிருத்தம் முதலியன அளவடியானும், கலிநிலைத்துறை நெடிலடியானும், ஆசிரியவிருத்தமும் ஆசிரியத்துறையும் சிறப்புடைய கழிநெடிலடியானும் சிறப்பில்லாத கழிநெடிலடியானும் வரப்பெறும். (யா.க. 28)

பாவினத்துள் தளை மயக்கம் -

{Entry: O15a__309}

பாக்களைப் போலவே, பாஇனங்களுள்ளும் தம்தளையொடு பிற தளைகள் மயங்கி வருதலுண்டு. பாக்களைவிடப் பாவினங்களுள் தளைமயக்கம் மிகுதி. (யா. க. 22 உரை)

பாவினத்தொகை -

{Entry: O15a__310}

தாழிசை, துறை, விருத்தம் எனப் பாவினம் மூன்றாம். (யா. வி. பாயிரம் உரை)

பாவினம் -

{Entry: O15a__311}

தொல்காப்பியனாரால் உரைக்கப்பெற்ற கொச்சகவகையும், பின்னூலார் (வீரசோழிய நூலார் முதலியோர்) கூறிய (குறட்போலி, சிந்துப்போலி, திரிபாதிப்போலி முதலான) போலிவகையும், வடமொழிச் சந்தம் வடமொழி விருத்தங்கள் என இவை தம்முள் விரவி, விருந்து என்னும் வனப்பு வகையால், அடி தொடை யாப்பு நயமுறும் வண்ணம் என இசைக்கப்படும் திறத்தவாய் எழுந்த பாடல்களும் பாவினம் எனப்படும். அவை தாழிசையும் துறையும் விருத்தமுமாய் வெண்பா முதல் நாற்பாவொடும் முரணப் பன்னிரண்டாம். (தென். இயற். 50 51)

பாவின வகை -

{Entry: O15a__312}

தாழிசை துறை விருத்தம் என்ற மூன்றனையும், வெண்பா, ஆசிரியம் கலி வஞ்சி என்ற நான்கனோடும் உறழப் பன்னிரண்டாம். (யா. க. பாயிர உரை)

பாவின விரி -

{Entry: O15a__313}

வெண்செந்துறை, குறட்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, வெளிநிலை விருத்தம், வெளி மண்டில விருத்தம் என வெண்பா இனம் எட்டும்;

ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத்தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறட்டுறை, ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம் என ஆசிரியப்பா இனம் ஆறும்;

கலி ஒத்தாழிசை, கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம், கலி நிலைத்துறை, கலி மண்டிலத்துறை, கட்டளைக் கலித்துறை, கலிநிலை விருத்தம், கலி மண்டில விருத்தம் எனக் கலிப்பா இனம் ஒன்பதும்;

வஞ்சி நிலைத்தாழிசை, வஞ்சி மண்டிலத்தாழிசை, வஞ்சி நிலைத்துறை, வஞ்சி மண்டிலத்துறை, வஞ்சி நிலைவிருத்தம், வஞ்சி மண்டிலவிருத்தம் என வஞ்சிப்பா இனம் ஆறும்;

ஆக பாவினங்களின் விரி இருபத்தொன்பதாம். (யா. க. பாயிரம் உரை)

பாவும் பாட்டும் -

{Entry: O15a__314}

பா என்னும் உறுப்பும் அவ்வுறுப்பான் அமைந்த உறுப்பி யாகிய பாட்டும் ஒற்றுமைப்பட நிற்றலின், பா என்னும் உறுப்பின் பெயரானே அப்பாட்டும் பெயர் பெறும்.

அஃதாவது ஆசிரியம் என்னும் உறுப்பு அமைந்த பாட்டு ஆசிரியப்பா என்றும், வஞ்சி என்னும் உறுப்பு அமைந்த பாட்டு வஞ்சிப்பா என்றும், கலி என்னும் உறுப்பு அமைந்த பாட்டு கலிப்பா என்றும் வழங்குதல் தொல்லோர் மரபு.

பா என்னும் பலபொருள் ஒரு சொல் ஓசையினையும், ஆகுபெயரால் பாட்டினையும் குறித்து வரும். (தொ. செய். 105 ச. பால)

பாவு வண்ணம் -

{Entry: O15a__315}

செய்யுட்கண் நிகழும் வண்ணங்கள் இருபதனுள் ஒன்று. இவ்வண்ணம் நூற்பாப் பயில வருவது. (வீ. சோ. 142 உரை)

பிசி -

{Entry: O15a__316}

அடிவரையறையின்றி வரும் இலக்கணத்தன ஆறனுள் ஒன்று. ஒப்புமையொடு பொருந்தி வரும் உவமைப்பொருளானும், ஒன்று சொல்ல ஒன்று தோன்றுதல் துணிந்த சொல்லானும் என இருவகை பற்றிப் பிசி நிகழ்வது.

எ-டு : ‘பிறை கவ்வி மலை நடக்கும்’ என்பது யானையைக்

குறித்தல்-ஒப்பொடு புணர்ந்த உவமம்.

‘நீராடான் பார்ப்பான் நிறம்செய்யான் நீராடின்

ஊராடும் நாட்டிற்காக் கை.’

இது நெருப்பு என்பதனைக் குறித்தல் தோன்றுவது கிளந்த துணிவு. (தொ. செய். 176 நச்.)

பிண்டப் புறனடை -

{Entry: O15a__317}

‘மூன்றுறுப் படக்கிய பிண்டத்திற்குப் புறனடை; அது ‘பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையி னானே ’ (நன். 462) என்றாற் போல்வது.

பிண்டம் -

{Entry: O15a__318}

சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய முழுமை நூல் பிண்டம் எனப்படும். (தொ.செய். 168 பேரா.)

பிராசம் -

{Entry: O15a__319}

எதுகை. அது காண்க.

பிரிந்திசை -

{Entry: O15a__320}

செய்யுளோசை வகை. (L)

பிரிந்திசைக்குறள் -

{Entry: O15a__321}

அம்போதரங்கம் எனினும், பிரிந்திசைக்குறள் எனினும் ஒக்கும். (யா. கா. 31 உரை)

அம்போதரங்கத்தினைப் பிரிந்திசைக்குறளடி என்னும் வீரசோழிய உரை (கா. 117)

பிரிந்திசைத் துள்ளல் -

{Entry: O15a__322}

கலித்தளையோடு ஏனைய தளைகளும் கலந்து அமையும் ஓசையையுடைய கலிப்பாவினது ஓசை.

எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன் (று)

அணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்

நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்

இரைநயந் திறைகூரும் ஏமஞ்சேர் துறைவகேள்.’

இப்பாடல் பகுதியில் நிரை ஒன்று ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும், வெண்சீர் வெண் டளையும் கலந்தமைந்தமையின் பிரிந்திசைத்துள்ள லோசைத் தாயிற்று.

கலித்தாழிசைகள் ஈரடிய ஆயின விடத்தே பெரும்பான் மையும் பிரிந்திசைத்துள்ளல் ஓசை பெறுவனவாம்.

எ-டு : ‘தொன்மைக்கண் வினைசெய்யார் துப்புரவின் இரங்குவார்

பன்மைக்கண் உள்ளந்தேர் பயமின்றிக் கழிவாரோ’ (யா. க. 78 உரை)

பிரிந்திசைத் தூங்கல் -

{Entry: O15a__323}

வஞ்சித்தளைகளும் பிற தளைகளும் விரவிவரும் ஓசை.

எ-டு : ‘தொடியுடைய தோள்மணந்தனன்.

கடிகாவிற் பூச்சூடினன்.

நறைகமழும் சாந்தநீவினன்

செற்றோரை வழிதபுத்தனன்.

வேந்துடை அவையகத்

தோங்குபுகழ் தோற்றினன்.

வருபடை எதிர்தாங்கினன்’ (புறநா. 239)

இவ்வடிகளில் ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றாத வஞ்சித்தளை என்னும் இவற்றொடு, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை,இயற்சீர் வெண்டளை என்பனவும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் தூங்கலோசை வந்தவாறு. (யா. க. 90 உரை)

பிரிந்திசை வண்ணம் இருபது -

{Entry: O15a__324}

குறில் அகவல் பிரிந்திசை வண்ணம், நெடில் அகவல் பிரிந் திசை வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம், இடை அகவல் பிரிந்திசை வண்ணம் - என அகவல் பிரிந்திசை வண்ணம் 5.

எ-டு : ‘முன்றில் நின்ற முடமுதிர் பெண்ணைமேல்

அன்றில் காணுமை ஆற்ற வினவுதும்

தொன்று காலம் தொடர்ந்துட னாடினான்

சென்று ழிச்செலும் செந்நெறி யாதென.’

இது குறில் அகவல் பிரிந்திகை வண்ணம்.

குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் பிரிந் திசை வண்ணம், வலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம், இடை ஒழுகல் பிரிந்திசை வண்ணம் என ஒழுகல் பிரிந்திசை வண்ணம் 5.

எ-டு : ‘அறிவல் அறிவல் அமுதே அமுதே

எறிவெண் டிரைமீ திகலிற் றறிவல்

இறுகல் இறுகல் இதுகேள் இதுகேள்

பெறுவல் பெறுவல் பிழைப்பொன் றுபெறாய்’

இது குறில் ஒழுகல் பிரிந்திசை வண்ணம்.

குறில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் என வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் 5.

எ-டு : துடித்த டித்தி மிழ்தரு துளங்கு வெள்ள ரு(வ்)விநீர்

தொடுத்தெ டுத்த மாலைபோல் தொடர்ந்து தோன்றும் தூய்மைசால்

அடுத்த டுத்து ரைபுக அசைவில் சீரு ருச்சந்தம்

மடுத்த டுத்து வைகலும் மறத்த லின்றி வாழ்த்துவாம்.

இது குறில்வல்லிசைப் பிரிந்திசை வண்ணம்.

குறில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், நெடில் மெல் லிசைப் பிரிந்திசை வண்ணம், வலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம், இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் என மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் 5.

எ-டு : களியுந்தி வீழ்ந்த கதிர்ச்செய்ய வெய்யோன்

ஒளியுந்த நீண்டகுடை ஒருவனல் கானேல்

நிலமுந்தி யோடும் வளைமுல்லை மெல்ல

நகுமுந்தி யாகின்ற தாவியா தாங்கொலோ.

இது குறில் மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம்.

இவ்வாறு வரும் வண்ணம் இருபதும் பெருங்குதிரைப் பாய்தல் போலவும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டி யும் முதலாக உடையறுத்துக் கொட்டுப் போலவும் வரும். (யா. க. 85 உரை)

பிரேளிகை -

{Entry: O15a__325}

விடுக்கும் பிதிர்; விடுகதை.

ஒருவர் ஒருபொருள் குறித்துப் பிதிர்போல் வினவ, மற்றவர் விடையிறுக்கச் செய்யும் வினாவிக்கவி என்று இது வழங்கப்படுகிறது.

எ-டு : ‘நீராடான் பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின்

ஊராடு நாட்டிற்காக் கை’

தண்ணீரில் குளிக்கமாட்டான்; பார்க்கப்படுபவன்; செந்நிறத் தான்; நீராடினால் காக்கை போலாகிவிடுவான் - என்ற விடுகதை நெருப்பைக் குறிக்கிறது.

இதனைத் தொல்காப்பியம் ‘பிசி’ என்னும். ‘வினாவிக்கவி’ வகைகளுள் ஒன்று என்று வீரசோழியம் உரை கூறும்.

(வீ. சோ. 182)

பிற்கட்டு -

{Entry: O15a__326}

பாட்டின் இறுதியில் உள்ள (இயைபுத்தொடை போல்வ தொரு), நல்லோசை அமைதி; ‘பிற்கட்டும் முன்முரணும் பின்முரணும்’ (விறலிவிடு கண்ணி. 493) (L)

பின் அளபெடை -

{Entry: O15a__327}

அளவடிக்கண் இரண்டாம் நான்காம் சீர்கள் அளபெடுத்து வருவது.

எ-டு : ‘செய்கையும் வழாஅள் தெய்வமும் தொழாஅள்

என வரும். (யா.க. 39 உரை)

பின் இயைபு -

{Entry: O15a__328}

அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்கள் இறுதி ஒத்து வரத் தொடுப்பது.

எ-டு : ‘தொய்யி லும் பொன்னே சாய லும் மயிலே’ (யா. க. 39 உரை)

பின் எதுகை -

{Entry: O15a__329}

அளவடிக்கண் இரண்டாம் நான்காம் சீர்களில் எதுகை ஒன்றி வருவது.

எ-டு : ‘மலர்புரை வ டி க்கண் வாங்கமைத் தொ டி த்தோள்’

(யா. க. 39 உரை)

பின்முடுகு வெண்பா -

{Entry: O15a__330}

பின்னிரண்டடிகள் முடுகிச் செல்லும் வெண்பா வகை.

எ-டு : ‘தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்

நீரோ டுலாவிவரும் நெல்லையே - காரோடும்

கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்தர் அந்தரத்தர்

கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு.’

இப்பாடலின் பின் ஈரடியும் குற்றெழுத்துப் பயின்று முடுகிய லாகிய விரைவுடன் அமைந்தவாறு காணப்படும்.

பின்முரண் -

{Entry: O15a__331}

அளவடிக்கண் இரண்டாம் நான்காம் சீர்கள் மறுதலைப் படத் தொடுப்பது.

எ-டு : ‘கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து’ (யா. க. 39 உரை)

பின்மோனை -

{Entry: O15a__332}

அளவடிக்கண் இரண்டாம் நான்காம்சீர்கள் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

எ-டு : ‘மைம்மலர் நெடுங்கண் வாங்கமை நெடுந்தோள்’ (யா. க. 39 உரை)

புராணகவி -

{Entry: O15a__333}

பழம்புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள். இவர்கள் இயற்றிய ஆசிரியப்பா கலிப்பா ஆகியவற்றில் இடை யிடையே ஐஞ்சீர் அடிகளும் வந்தமையின், ஆசிரியப்பா கலிப்பா இவற்றில் ஐஞ்சீரடிகள் இடையிடையே வருதலும் மரபாயிற்று. புராண கவிஞரால் பாடப்படும் புராண கவி (- பழம் பாடல்) களில் மிக்கும் குறைந்தும் வருவன ஒருபுடை ஒப்புமை நோக்கிப் பாக்களுள்ளும் இனங்களுள்ளும் அடக்கிக் கொள்ளப்படும். (யா. வி. பக். 368)

புலன் (1) -

{Entry: O15a__334}

1. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. இவை ஐம்பொறிகட்கும் விடயமாவன. (L)

2. சேரிமொழியால் (-பாடி மாற்றங்களாலே) செவ்விதாகக் கூறப்பட்டு, ஆராய்ந்து காண வேண்டாமல் பொருள் தானே தோன்றச் செய்வது; எண்வகை வனப்பினுள் ஒன்று.

(தொ. செய். 241 நச்.)

புலனெறிக்குச் சிறந்த பாக்கள் -

{Entry: O15a__335}

கலிப்பாவும், பரிபாடலுமே புலனெறி வழக்கிற்குச் சிறந்த பாக்கள். வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறனிலை வாழ்த்து, கைக்கிளை என்ற பொருண்மைக்கண் மருட்பா சிறந்து வரும்.

கலிப்பா ஐந்திணைப் பொருளாய புலனெறிவழக்கில் காமமும், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலேபற்றிய புலனெறி வழக்கில் காமமும் பற்றி வரும். பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வரும். (தொ. பொ. 53 நச்.)

புளிமா -

{Entry: O15a__336}

‘நிரை நேர்’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு. (யா. கா. 7)

புளிமாங்கனி -

{Entry: O15a__337}

‘நிரை நேர் நிரை’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு. (யா. கா. 7)

புளிமாங்காய் -

{Entry: O15a__338}

‘நிரை நேர் நேர்’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு. (யா. கா. 7)

புளிமாந் தண்ணிழல் -

{Entry: O15a__339}

‘நிரை நேர் நேர் நிரை’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு.

(யா. கா.8)

புளிமாந்தண்பூ -

{Entry: O15a__340}

‘நிரை நேர் நேர் நேர்’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு. (யா. கா. 8)

புளிமாநறுநிழல் -

{Entry: O15a__341}

‘நிரை நேர் நிரை நிரை’ என்னும் சீர்க்குரிய வாய்பாடு.

(யா. கா. 8)

புளிமாநறும்பூ -

{Entry: O15a__342}

நிரை நேர் நிரை நேர் என்னும் சீர்க்குரிய வாய்பாடு. (யா. கா. 8)

புறநிலை, வாயுறை, அவையடக்கு, செவியறிவுறூஉ என்ற முறை வைப்பு -

{Entry: O15a__343}

தெய்வத்தொடு பட்டமையின் புறநிலை வாழ்த்தினை முதற்கண் கூறி, முன்னிலைப்படுத்திக் கூறுதற்கு உரிமை யுடைய காரணத்தான் வாயுறை வாழ்த்தை அதன்பின் கூறி, வரையறையின்மையின் அதன்பின் அவையடக்கியலைக் கூறி, முன்னிலைக்கண் வருமேனும் இன்ன குணத்தினையுடையை ஆவாய் எனப் புகழ்பட வாழ்த்திப் பிற்கூறுதல் வேறுபாடுடை மையின் அதன்பின் செவியறிவுறூஉக் கூறினார். (தொ. செய். 111 நச்.)

புறநிலை வாழ்த்து (1) -

{Entry: O15a__344}

எடுத்துக்கொண்ட காரியம் நன்கு நிறை வேறுதற்கு உதவும் தெய்வத்தைப் படர்க்கையாகப் புறத்தே நிறுத்தி, அத்தெய்வத் தான் பயன் பெற வேண்டிநிற்கும் ஒருவனை முன்னிலை யாக்கிக் கூறுதலின் புறநிலைவாழ்த்து எனப்பட்டது. “நீ வழிபடும் குலதெய்வம் நின்னைப் புறத்தே நின்று காப்ப இல்லறத்தாற் பொலிந்த செல்வத்தோடே, நீ பெறும் புதல்வரும் அவர் பெறும் புதல்வரும் சிறப்பு எய்த, எல்லீரும் நீடு வாழ்வீர்!” என்று, தெய்வத்தைப் புறத்தே நிறுத்தி வாழ்த்தும் வாழ்த்து இது.

எ-டு : ‘அறிதுயில் அரவணை அமர்ந்தோன் காப்ப

அருட்கடம் பூண்ட அகலாச் செல்வமொடு

நீயும் நின் புதல்வரும் சிறந்து

வாழிய பெரும! பூழியர் கோவே!’

இப்புறநிலை வாழ்த்திற்கு மருட்பாவே சிறந்தது. இஃது ஆசிரியத்தானும் வெண்பாவானும் பாடப்படுதலுமாம். இவ்வாழ்த்துப் பகுதியுள் அடங்கும் வாயுறை வாழ்த்துக்கும், அவையடக்கியல் செவியறிவுறூஉ என்பனவற்றிற்கும் இப்பாடல்களே சிறந்தவை. இப்புறநிலைவாழ்த்து முதலிய வாழ்த்துவகை நான்கற்கும் கலியும் வஞ்சியும் பரிபாடலும் ஏற்றவை அல்ல. (தொ. செய். 110 நச்.)

கலிப்பாவில் வாழ்த்துக் கூறுங்கால் கடவுள் முன்னிலையாக வரும். (பேரா.)

புறநிலை வாழ்த்து (2) -

{Entry: O15a__345}

இது மக்கள் பாடாண் துறையாதலின், தெய்வம் சிறந்ததே னும் அதனைப் படர்க்கையாக்கிப் பாட்டுடைத் தலைவனை முன்னிலையாக்கி வாழ்த்தும் வாழ்த்து.

இதுவும் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தான் அவனை வாழ்விக்கும் ஆற்றுலுடையார்கண்ணது ஆதலின், கைக் கிளைப் புறனாயிற்று.

இது புறப்பொருள் வெண்பாமாலையுள் பாடாண்படலத்து 38 ஆம் துறை. (தொ. செய். 98 நச்.)

புறநிலை வாழ்த்து மருட்பா -

{Entry: O15a__346}

‘புறநிலை வாழ்த்து’ (1) ஈற்றுப் பத்தியுள் காண்க.

புறப்பாட்டு வண்ணம் -

{Entry: O15a__347}

ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாது வருவது.

எ-டு : ‘இன்னா வைகல் வாரா முன்னே

செய்ந்நீ முன்னிய வினையே

முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே’ (புறநா. 363)

‘முன்னிய வினையே’ என ஏகாரம் மிக்கமையான் முடிந்தது போலக் காட்டி, (அடுத்த அடியில் செய்தி தொடர்தலின்) முடியாதாயிற்று.

இவ்வண்ணம் வீ. சோ. 142 உரையிலும் குறிக்கப்பட்டுள்ளது.

(தொ. செய். 225 பேரா.)

புனல்யாற்றுப் பொருள் கோள் -

{Entry: O15a__348}

அடிதோறும் பொருள் அற்று மீளாது செல்லும் பொருள் கோள்.

எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;

விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்;

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;

கொலைப்பாலும் குற்றமே ஆம்.’ (நான்மணிக். 100)

இப்பாடலில் பொருள் அடிதோறும் தனித்தனியே முடிந்தவாறு. (யா. க. 95 உரை)

இனி, தொடக்கம் முதல் இறுதிவரை மடங்காமல் சொல் கிடந்தவாறே நேராகப் பாடல் பொருள் கொள்ளப்படுவதும் இது.

எ-டு : ‘சொல், அருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருஇருந்து, ஈன்று, மேல்அலார்

செல்வமே போல்தலை நிறுவித், தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’ (சீவக. 53)

சொல் (- நெற்பயிர்கள்), கரு இருந்து ஈன்று தலை நிறுவி இறைஞ்சிக் காய்த்தன என எழுவாய் முறையே எச்சங்கள் தொடர வினைமுற்றுக்கொண்டு முடிந்தமையால், இப் பொருள்கோள் இப்பாட்டில் பயின்றது. (நன். 412)

பூட்டுவில் பொருள்கோள் -

{Entry: O15a__349}

வில்லின் இருதலையிலும் நாண் பூட்டிப் பயன் கோடல் போலப் பாடலின் முதற்சீரையும் ஈற்றுச் சீரையும் இயைத்துப் பொருள் கொள்வதொரு பொருள்கோள்.

எ-டு : ‘திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்து படின்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்

தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு.’

‘கதவு திறந்திடுமின்’ எனக் கூட்டிப் பொருள் கொள்ளப் பட்டவாறு. (யா. க. 95 உரை)

பூதத்தார் பாடல் -

{Entry: O15a__350}

ஆரிடப் போலிக்கு எடுத்துக் காட்டாகச் சுட்டப்படுவது.

“கறைப்பல் பெருமோட்டுக் காடு கிழவோட்(கு)

அரைத்திருந்த சாந்துதொட்(டு) அப்பேய்

மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு”

இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது. இவ் வெண்பாவுள் இரண்டாமடி குறைந்து வந்து, ஆரிடப் போலியாதலின் அமைந்தது. (யா. வி. பக். 371)

பெய்துரை -

{Entry: O15a__351}

1. இடைப் பெய்து உரைப்பது; அஃதாவது சொற்களைப் பொருட் கியையச் சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் புலப்பட வருவித்துரைத்தல். 2 பாயிரம் (பிங். 2031)

பெயர் நிரல்நிறை -

{Entry: O15a__352}

பெயர்களை (உபமான உபமேயங்களைக் குறிப்பன முதலாக வருவன) ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவ்வரிசை பிறழாது பொருள் கொள்ள வருவதொரு பொருள்கோள்.

எ-டு : ‘மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல்’

இவ்வடியுள், முதல் மூன்று பெயர்களும் உபமானம், பின் னின்ற மூன்று பெயர்களும் உபமேயம். இவை மதி போன்ற முகம், பவளம் போன்ற வாய், முத்துப் போன்ற முறுவல் (- பற்கள்) என்று முறையே வரிசைப்படப் பொருள் கொள்ளப் பட்டவாறு. (யா. வி 95 உரை)

பெருநூல் -

{Entry: O15a__353}

சூத்திரத்தான் இயன்ற நூல், ஓத்தினான் இயன்ற நூல், படலத்தான் இயன்ற நூல், பிண்டத்தான் இயன்ற நூல் என நூலினை நால்வகைத்தாகக் கூறுதலே தொல்காப்பியனார் கருத்து. ஒரு சாரார் அதற்கு மாறாகச் சிறுநூல், பெருநூல், இடைநூல் எனக் கூறுப. சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்குறுப்பினையும் உடையது பெருநூல் என்பது அவர் கருத்து. (பா. வி. பக். 111)

பேரெண் -

{Entry: O15a__354}

அம்போதரங்க உறுப்புவகை; நாற்சீரடி இரண்டாய் நிகழ்வது. (யா. கா. 31 உரை)

பேரெல்லை -

{Entry: O15a__355}

செய்யுளின் அடிப்பெருமைக்கு அமைந்த வரையறை; பெருமை எனவும்படும் (அவ்வாறே சிற்றெல்லை சிறுமை எனவும்படும்.)

பேரெல்லை வரையறை இல்லாத பாட்டுக்களும் அவற்றின் சிற்றெல்லையும் -

{Entry: O15a__356}

கலிவெண்பாட்டு, கைக்கிளை, செவியறிவுறூஉ, வாயுறை, புறநிலை என்னும் இவ்வைந்தும் பேரெல்லை வரையறை யில்லாத பாட்டுக்கள். இவற்றின் சிற்றெல்லை வரையறைப் படும் என உய்த்துணர வைத்தார். அஃதாவது கலிவெண்பாட் டிற்குப் பத்தடி, ஏனையவற்றிற்கு நான்கடி என்றவாறு.

(தொ. செய். 159 ச. பால.)

பேரெல்லை வெண்பா -

{Entry: O15a__357}

எட்டடியால் நிகழும் வெண்பா. (யாழ். அக.)

‘நெடுவெண்பாட்டே முந்நாலடித்தே’ என்று வெண்பா விற்குத் தொல்காப்பியனார் 12 அடி பேரெல்லை கூறுவர்.

(தொ. செய். 158 நச்.)

பொது அடி -

{Entry: O15a__358}

இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர் ஆகிய நாலசைச்சீர், ஓரசைச் சீர் ஆகியவற்றான் வழங்கும் அடி. (யா. க. 25)

பொதுச்சீர் -

{Entry: O15a__359}

நாலசையாலாகிய சீர். இச்சீர், நேர்இறுதி எட்டும் நிரையிறுதி எட்டும் எனப் பதினாறாம். மூவசைச்சீர் எட்டனோடும் இறுதியில் நேரசையைக் கூட்ட, நேரீற்றுப் பொதுச்சீர் 8 ஆம்; அவ்வாறே மூவசைச்சீர் எட்டன் இறுதியிலும் நிரையசை யைக் கூட்ட, நிரையீற்றுப் பொதுச்சீர் 8 ஆம்.

நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூ

நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூ இவை நேர் ஈறு

நிரை நிரை நேர் நேர் - கருவிளந்தண்பூ எட்டும், காய்ச்சீர் போலவே தளை கொள்ளப்படும்.

நேர் நிரை நேர் நேர் - கூவிளந்தண்பூ

நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூ

நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூ

நிரை நிரை நிரை நேர் - கருவிளநறும்பூ

நேர் நிரை நிரை நேர் - கூவிளநறும்பூ

நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழல்

நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல் இவை நிரை

நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல் ஈறு எட்டும்,

நேர் நிரை nநர் நிரை - கூவிளந்தண்ணிழல் கனிச்சீர் போலவே

தளை கொள்ளப்

படும்

நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல்

நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல்

நேர் நிரை நிரை நிரை - கூவிளநறுநிழல்

நிரை நிரை நிரை நிரை- கருவிளநறுநிழல்

எ-டு : முதற்சீர்களின் வாய்பாடு

அங், கண், வா னத் தமரரசரும் - தேமாந் தண்பூ

வெங், களி, யா, னை வேல்வேந்தரும் - கூவிளந் தண்பூ

வடி, வார், கூந், தல் மங்கையரும் - புளிமாந் தண்பூ

கடி, மல, ரேந், திக் கதழ்ந்திறைஞ்சச் - கருவிளந் தண்பூ

சிங், கஞ், சுமந், த பொங்கணைமிசைக் - தேமா நறும்பூ

கொங்,கிவ,ரசோ,கின் கொழுநிழற் கீழ்ச் - கூவிளநறும்பூ

செழு, நீர்ப், பவ, ளத் திரள்காம்பின் - புளிமாநறும்பூ

முழு, மதி, புரை, யு ம் முக்குடைநிழல் - கருவிளநறும்பூ

வெங், கண், வினைப், பகை விளிவெய்தப் - தேமாநறுநிழல்

பொன், புனை, நெடு மதில் புடைவளைப்ப - கூவிளநறுநிழல்

அநந், த, சதுட், டயம் அவையெய்த - புளிமாநறுநிழல்

நனந்,தலை,யுல,குடை நவைநீங்க -கருவிளநறுநிழல்

மந், த, மா, ருதம் மருங்கசைப்ப - தேமாந் தண்ணிழல்

இலங், கு, சா, மரை எழுந்தலமர - புளிமாந் தண்ணிழல்

இனிதிருந்து,

அருள்நெறி நடாத்திய ஆதிதன்

திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.

சிறப்பில்லாத சீர் ஆதலின் பொதுச்சீர் எனப்பட்டன.

இவற்றுக்கெனத் தனியே தளைகோடல் இல்லை. தளை கொள்ளுங் கால், பூச்சீர்கள் காய்ச்சீர்கள் போலவும், நிழற் சீர்கள் கனிச்சீர்கள் போலவும் கருதித் தளை கொள்ளப்படும். (யா. க. 13, 21 உரை)

பொதுச்சீர்த் தளைகள் -

{Entry: O15a__360}

தளை வழங்குமிடத்தே நேர் ஈற்று நாலசைப் பொதுச்சீரை வெண்பா உரிச்சீராகிய காய்ச்சீர் போலக் கொண்டு, வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளை என்றும் ஒன்றாதது கலித்தளை என்றும் கொள்ளப்படும்.

அதுபோலவே நிரையீற்று நாலசைப் பொதுச்சீரை வஞ்சி உரிச்சீராகிய கனிச்சீர் போலக் கொண்டு, வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றினும் ஒன்றாவிடினும் வஞ்சித்தளை என்று கொள்ளப்படும்.

எ-டு : ‘வெங், களி, யா, னை வேல்வேந்தரும்’ வெண்சீர் வெண்டளை. ‘கடி, மல, ரேந், திக் கதழ்ந்திறைஞ்ச’ - கலித்தளை. ‘மந், த, மா, ருதம் மருங்கசைப்ப’ - ஒன்றிய வஞ்சித்தளை. ‘அந், தர, துந், துபி நின்றியம்ப’ - ஒன்றாத வஞ்சித்தளை. (யா. க. 21 உரை; யா.கா. 8)

பொதுவான இயற்சீர் -

{Entry: O15a__361}

இயற்சீர் எனப் பொதுவாகக் குறிப்பிட்டால், இயலசை மயக்கமாகிய தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்ற நான்கு சீர்களே கொள்ளப்படும். (தொ. செய். 19 நச்.)

பொதுவான உரிச்சீர் -

{Entry: O15a__362}

பொதுவாக உரிச்சீர் என்று குறிப்பிட்டால், உரியசை மயக்கமாகிய வீடு பேறு, இரவுக் கலித்து, பாறு குருகு, வரகு சோறு (வாய்பாடு : நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு, நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு) என்ற நான்கு சீர்களே கொள்ளப்படும்.

(தொ. செய். 19 நச்.)

பொதுவான உரைநடை நான்கு -

{Entry: O15a__363}

1. ஒரு பாட்டின் இடையிடையே கொண்டு நிற்கும் கருத்தினான் வருவன; அவை தகடூர் யாத்திரையும் சிலப்பதிகாரமும் போல்வன.

2. பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவன போல்வன.

3. பொருள் முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவன; அவை ஓர் யானையும் குதிரையும் தம்முள் நட்பாடி இன்னவிடத்துச் சென்று இன்னவாறு செய்தன என்று, அவற்றுக்கு இயையாப் பொருள்பட்டதொரு தொடர்நிலையாய் ஒருவனிடம் ஒருவன் கற்றுத் தொன்று தொட்டு வருவன.

4. பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலை; அவை சிறுகுரீஇ உரையும், தந்திர வாக்கியமும் போல்வன.

இவை நான்குமாம் என்பது (தொ. செய். 173 நச்.)

பொருள்கோள் ஒன்பது -

{Entry: O15a__364}

நிரல் நிறை, சுண்ணம், அடிமறிமொழிமாற்று, அடி மொழி மாற்று, பூட்டுவில், புனல்யாறு, அளைமறிபாப்பு, தாப்பிசை, கொண்டுகூட்டு என்பன. (யா. வி. 95 உரை)

பொருள்கோள் விரி இருபது -

{Entry: O15a__365}

நிரல்நிறை, சுண்ணம், அடிமறி மொழிமாற்று, அடிமொழி மாற்று என்ற நான்கனையும் பூட்டுவில், புனல்யாறு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு என்ற ஐந்தானும் உறழப் பொருள்கோள் இருபதாம். ஆதித்தீவகம், மத்திமத்தீவகம், அந்தத் தீவகம், சிங்க நோக்கு, தேரைப் பாய்த்து, பாசி நீக்கம், ஒரு சிறை நிலை என்ற பொருள் கோள்களும் இவற்றுள் அடங்கும். (வீ. சோ. 96 உரை)

பொருள் முரண் -

{Entry: O15a__366}

மாறுபாடுடைய பொருளைச் சொல்லுவது.

எ-டு : ‘ இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

பொ ன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்’

இவ்வடிகளில், இரும்பும், பொன்னும் மாறுபாடுடையவை யாதலின், பொருள் முரண் வந்தவாறு. (தொ. செய். 91 இள.)

பொருள் முரண் தொடை -

{Entry: O15a__367}

பொருளொடு பொருள் முரணத் தொடுப்பது.

எ-டு : ‘தீ மேய் திறல்வரை நுழைஇப் பரிமலிந்து

நீர் நசை பெறாஅ நெடுநல் யானை’

தீ என்ற பொருட்கு நீர் என்ற பொருள் மறுதலைப்பட்ட தாகலின், இவ்வடிகளில் முதற்சீர்களில் (பொருளொடு) பொருள் முரண்தொடை வந்தவாறு. (யா. க. 38 உரை)

பொருள் வகை (1) -

{Entry: O15a__368}

இன்பம் துன்பம் புணர்தல் பிரிதல் ஒழுக்கம் எனப்பட்ட செய்திகளைத் தனிப்பட்ட முறையில் ஒரு திணைக்குரிய ஆக்காது எல்லாத் திணைகளுக்கும் பொதுவாகச் செய்யுள் அமைப்பது; இது செய்யுளுறுப்புக்களுள் ஒன்று.

“தலைவியை நாடிச் சென்ற என் நெஞ்சம் எனக்கு முன் அவளை எய்தித் தழுவி மகிழ்ந்ததோ?” (அகநா. 9) என்ற தலைவனது எண்ணம் பாலைப்பாட்டினுள் வந்ததாயினும், இச்செய்தி முல்லை முதலாயினவற்றுக்கும் பொதுவாம் என்பது.

இவ்வுறுப்பின்றியும், செய்யுள் நிகழும்.

(தொ. செய். 208 பேரா., நச்.)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்று சொல்லப்பெற்ற அவ்வொழுகலாறுகள் இழுக்குறும் முறைமை யின்றி அகமும் புறமுமாகிய எல்லாத் திணைக்கும் ஓதப்பெற்ற மரபினான், ‘இவ்வொழுக்கம் இத்திணைக்கே உரியது’ என்று வலிந்து கூற இயலாமல், பொதுவாகவே நிற்றல் ‘பொருள்வகை’ எனப்படும்.

இன்பம் - களவின்கண் இயற்கைப் புணர்ச்சி முதலியவற்றான் வரும் இன்பம்.

இடும்பை - ஒருவழித் தணத்தல், வருந்தொழிற்கு அருமை, வரைபொருட் பிரிவு முதலியவற்றான் வரும் துன்பம்.

புணர்வு - கற்பின்கண் இல்வாழ்க்கை, ஊடலுணர்தல் முதலிய வற்றைப் பொருந்தி வரும் பிரிவில்லா உடனுறைவு.

பிரிவு - ஓதல், பகை முதலியவற்றான் நிகழும் பிரிவு.

ஒழுக்கம் - விருந்தோம்பல், அறப்புறங்காவல் முதலிய ஒழுக்கம்.

புறத்திணையுள் வெட்சி முதலியவற்றான் இன்பமும் இடும்பை யும், பாடாணும் வாகையும் பற்றி நிகழும் ஒழுக்கமும் என இவையும் ஈண்டு அடங்கும். (தொ. செய். 207 ச. பால.)

பொருள் வகை (2) -

{Entry: O15a__369}

அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்று. மேலைச் செய்தியே கொள்க. (இது பொருள்கோள்களைச் சுட்டிய தாக உரைத்தாரும் உளர்.) (ந. அ. 211)

பொருள் வகை (3) -

{Entry: O15a__370}

பொருளானது அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்று நான்கு வகைப்படும். மேலும் அப்பொருள்தான், அளப்பான், அளவை, அளக்கப்படுபொருள் என்று மூவகைப்படும் என்பாருமுளர். (வீ. சோ. காரிகை எண். 86)

பொருள்வகை, துறை: இவ்வுறுப்புக்களிடை வேறுபாடு -

{Entry: O15a__371}

பொருள்வகை என்னும் உறுப்பு அமையுங்கால், அது திணைப்பொருளை மயக்கும் அளவிற்கு நிகழ்தலாகாது.

துறை என்னும் உறுப்பு அமையுங்கால், அது ‘பொருள் நிகழ்ச்சியால் இதன் உரிப்பொருள் இது’ என உய்த்துணரும் வண்ணம் மரபிற் பிறழாமல் வரும். (தொ. செய். 208 ச. பால)

பொருளிசை அந்தாதி -

{Entry: O15a__372}

ஓசை வகையால் வாராது பொருளால் வரும் அந்தாதித் தொடை.

எ-டு : அந்தாதித் தொடையில் முதற்பாடல்,

‘பரிவதில் ஈசனைப் பாடி

விரிவது மேவ லுறுவீர்

பிரிவகை யின்றிநன் னீர்தூய்

புரிவ தும்புகை பூவே’

என்று முடிகிறது. அடுத்த பாடல் ‘மதுவார் தண்ணந் துழாயான்’ எனத் தொடங்குவது பொருளிசை அந்தாதியா தல் காண்க. (திருவாய். 1-6-2) (ஜீயர் அரும்பதவுரை)

இனி, பூ என்பது முதலாகுபெயராய்த் தன்னுள் இருக்கும் மதுவினை யுணர்த்த அம் ‘மது’ என்பதனையே அடுத்த பாடலின் தொடக்க அசையாகக் கொண்ட இப்பாடல் ஆகு பெயர்அந்தாதி என்பது மாறனலங்கார உரையாசிரியர் கருத்தாம் (மா.அ. 70) ‘ஆகுபெயர் அந்தாதி’ காண்க.

பொருளும் பொருளும் முரணிய கட்டளை ஈர் அடி -

{Entry: O15a__373}

எ-டு : ‘ நெருப்பின் அன்ன சூட்டுச் சேவல்

நீர் சேர் கானத்து நெடுமணல் கிளைப்ப’

நெருப்பு, நீர் எனப் பொருள்கள் இக்கட்டளையடிகளில் முரணின. (தொ. செய். 95 நச்.)

பொருளும் பொருளும் முரணிய கட்டளை அடியும் சீர்வகை அடியும் -

{Entry: O15a__374}

எ-டு : ‘ நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னஎன் உரனவித் தன்றே’ (குறுந். 95)

நீர், தீ என, இவ்விருவகை அடிகளில், பொருள்கள் முரணின. (முதலடி கட்டளையடி; ஏனையது சீர்வகையடி.)

(தொ. செய். 94 நச்.)

பொருளொடு பொருள் முரண் தொடை -

{Entry: O15a__375}

முரண்தொடையின் ஐவகையுள் ஒன்று; ‘பொருளும் பொரு ளும் முரணிய கட்டளை ஈரடி,’ ‘பொருளும் பொருளும் முரணிய கட்டளை அடியும் சீர்வகை அடியும் காண்க.

(தொ. செய். 95 நச்.)

பொழிப்பாதி ஐந்து -

{Entry: O15a__376}

பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, இரட்டைத் தொடை, நிரல் நிறைத் தொடை என்பன. (யா. க. 49 உரை)

பொழிப்பு அளபெடைத்தொடை -

{Entry: O15a__377}

நாற்சீர்களையுடைய அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்களில் அளபெடை வரத்தொடுப்பது.

எ-டு : ‘ சுறாஅக் கொட்கும் அ றாஅ இருங்கழி’ (யா. க. 43 உரை)

பொழிப்பு இயைபுத்தொடை -

{Entry: O15a__378}

நாற்சீர்களையுடைய அளவடிக்கண் இரண்டாம் நான்காம் சீர்கள் ஈற்றெழுத்தோ அசையோ ஒன்றிவரத் தொடுப்பது.

எ-டு : ‘பெருங்கண் கய லே சீறியாழ் சொல் லே ’ (யா. க. 43 உரை)

பொழிப்பு எதுகைத் தொடை -

{Entry: O15a__379}

அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்களில் எதுகை வரத் தொடுப்பது.

எ-டு : ‘ப ல் கால் வந்து மெ ல் லக் கூறி’

பொழிப்புத் தொடை -

{Entry: O15a__380}

அளவடிகளில் முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற விகற்பத் தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை. இவற்றுள் இயைபுத் தொடை ஈற்றுச் சீரே முதற்சீராகக் கொண்டு வருதலின், இரண்டாம் நான்காம் சீர்கள் இயைபுபடத் தொடுப்பது பொழிப்பியைபுத் தொடையாம். (யா. க. 43 உரை)

பொழிப்பு நிரல் நிறை -

{Entry: O15a__381}

அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்களில் நிரல்நிறை அமைதல்.

எ-டு : ‘புருவமும் பூணார் புணர்முலையும் கூறின்

வரிசிலையும் மாண்பமைந்த கோங்கும்.............’

புருவம் வரிசிலை, புணர்முலை கோங்கு என, பொருளும் உவமமும் இவ்வீரடிகளிலும் முதலாம் மூன்றாம் சீர்களில் முறையே வந்தவாறு. (யா. க. 95 உரை) (பக். 387)

பொழிப்பு முரண்தொடை -

{Entry: O15a__382}

அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்களைச் சொல்லானும் பொருளானும் மறுதலைப் படத் தொடுப்பது.

எ-டு : ‘ ஓங்கு மலைத் தொடுத்த தாழ்ந்தில ங்கு அருவி’

ஓங்கு, தாழ்ந்து - எனப் பொருளால் மறுதலைப்படத் தொடுத்தவாறு. (யா. க. 43 உரை)

பொழிப்பு மோனை -

{Entry: O15a__383}

அளவடிக்கண் முதலாம் மூன்றாம் சீர்கள் முதலெழுத் தொன்றி வரத்தொடுப்பது.

எ-டு : ‘ ணங்கொள் வண்டினம் வர்வன மொய்ப்ப’ (யா. க. 43 உரை)

போக்கியல் வகை -

{Entry: O15a__384}

போக்கினது இலக்கணப்பகுதி. (போக்கு - சுரிதகம் )

(தொ. செய். 136 நச்.)

போக்கு -

{Entry: O15a__385}

செய்யுள் பிறிதொன்றனை அவாவாமல் கடைபோகச் செய்தலின், சுரிதகம் ‘போக்கு’ எனப்பட்டது. (தொ. செய். 136 நச்.)

போக்கு இன்றாதல் -

{Entry: O15a__386}

சுரிதகம் இன்றி முடிதல். (இஃது உறழ்கலியின் இலக்கணம்)

(தொ. செய். 156 நச்.)

போலிவகை ஐகாரம் செய்யுளில் பயன்படுமாறு -

{Entry: O15a__387}

எ-டு : ‘அம்பொ ரய் ந்து டய் ய காம னய் ய னென்ன’ (சீவக. 1997)

ஐகாரம் போலிவகையால் அய் என நின்றது.

(தொ. செய். 18 ச. பால.)

ம section: 137 entries

மக்களின் முப்பத்திரண்டு உறுப்புக்கள் -

{Entry: O15a__388}

முப்பத்திரண்டு உறுப்பொடு புணர்ந்தது மக்கட் சட்டம். அவ்வுறுப்புக்கள் குழல், நெற்றி, புருவம், கண், காது, மூக்கு, இதழ், பல், நாக்கு, முகம், கழுத்து, தோள், முன்னங்கை, உள்ளங்கை, கைவிரல், கைவிரல் நகம், கொங்கை (மார்பு கொங்கைக்கண் அடங்கும் என்பது) வயிறு, வயிற்றின் மயிரொழுங்கு, வயிற்று மடிப்பு, இடை, கொப்பூழ், குறி, துடை, முழங்கால், கணைக்கால், புறங்கால், காற்பரடு, குதிகால், கால்விரல், கால்விரல் நகம், அடி என்பன. (திருவரங்கக் கலம்பகம் பா. 56) (யா.க. 1 உரை)

மகரக் குறுக்கம் -

{Entry: O15a__389}

தனிமொழியில் லகர ளகரங்கள் திரிந்த னகர ணகரங்களின் முன்னும், தொடர்மொழியில் வருமொழி வகர முதலெழுத் தின் முன் நிலைமொழி ஈறாக நிற்குமிடத்தும், மகரம் தன் அரைமாத்திரையின் குறுகிக் கால்மாத்திரை அளவிற்றாய் ஒலிக்கும். செய்யுட் குறுப்பாம் எழுத்துக்களுள் இதுவும் ஒன்று.

போன்ம், மருண்ம், வரும் வளவன் - என வரும்

இம்மகரக்குறுக்கம் பாட்டுடைத் தலைவன் பெயரை ஒட்டி வரின் வழுவாம் (மாபுராணம்). (யா. க. 2 உரை)

மடக்கியல் -

{Entry: O15a__390}

சுரிதகத்திற்கு ஒரு பெயர். (யா. க. 31 உரை)

மண்டல அசையந்தாதி -

{Entry: O15a__391}

பாடல் முதலடியின் முதலசையும் ஈற்றடியின் ஈற்றசையும் ஒன்றாக வரத் தொடுப்பது. அடிதோறும் அசை அந்தாதித் தொடை நிகழப்பெறும்.

எ-டு : ‘பேதுற விகந்த பெருந்தண் காவிரி

விரிதிரை தந்த வெறிகமழ் வாசம்

சந்தனக் குழம்பு முலைமிசைத் தடவிய

வியனறுங் கோதைக்கு மெல்லிதால் நுசுப்பே.’

இதன்கண், முதலடி முதலசையும் ஈற்றடி இறுதியசையும் மண்டலித்து வர, அடிதோறும் (ஈற்றசை) அந்தாதியாக வந்தவாறு காண்க. (யா. க. 52 உரை)

மண்டல அடி அந்தாதி -

{Entry: O15a__392}

பாடலின் முதலடியே ஈற்றடியாகவும் அமையின், அப்பாட லின் தொடை (இடையடிகளும் அந்தாதித்தொடை பட நிகழ்தல் வேண்டும்.) மண்டல அடி அந்தாதியாம்.

(யா. க. 52 உரை)

எ-டு : வாழியர் நெடிதே வாழியர் நெடிதே

தேயம் போற்றுறத் தோன்றி நேயம்

அம்புகழ்ச் சான்றோர் நன்பலர் வாழி

வாழியர் நெடிதே வாழியர் நெடிதே. (புனையப்பட்டது)

மண்டல அந்தாதி -

{Entry: O15a__393}

இறுதியடியின் இறுதியும் முதலடியின் முதலும் ஒன்றாய் வரத் தொடுப்பது, மண்டல எழுத்தந்தாதி முதலாக இது பலவகைப்படும். (யா. க. 52 உரை)

மண்டல இடையிட்ட அந்தாதி -

{Entry: O15a__394}

சிறு பிரபந்தங்களில், முதற்பாடலின் முதலசை ஈற்றுப் பாடலின் ஈற்றின்கண் வர, இடையிலுள்ள பாடல்களும் அந்தாதியாய் அமையத் தொடுப்பது. (யா. க. 52 உரை)

நால்வர் நான்மணிமாலை ‘பூவான் மலிமணிநீர்’ என்று தொடங்குகிறது. அதன் நாற்பதாம் பாடலாகிய இறுதிப் பாடல் ‘பூவெனப் படுவது பொறிவாழ் பூவே’ என்று முடிகிறது. இடையே 38 பாடல்கள் இடையிட, முதற்பாட லின் முதலெழுத்தும் ஈற்றுப் பாடலின் ஈற்றுச் சீரிலுள்ள (-பூவே) அசையெழுத்தும் (-பூ) ஒன்றி வந்துள்ளமை காண்க.

மண்டல எழுத்தந்தாதி -

{Entry: O15a__395}

பாடலின் அடிதோறும் எழுத்துஅந்தாதி நிகழ, முதலடியின் முதலெழுத்தும் ஈற்றடியின் ஈற்றெழுத்தும் ஒன்றிவரத் தொடுப்பது.

எ-டு : ‘வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி

விரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி

திருந்திய சிந்தையைத் திறைகொண் டதுவே’ (யா. க. 52 உரை)

மண்டலச் சீரந்தாதி -

{Entry: O15a__396}

பாடல் முதலடியின் முதற்சீரே ஈற்றடியின் இறுதிச் சீராகவும் அமையத் தொடுப்பது. (இடையடிகள் அந்தாதியால் தொடர வேண்டும்.)

எ-டு : ‘கண்ணே பசலை பாய்ந்த; ஒண்ணுதல்

நுதல்வணம் பீர்பூத் தன்றே; உதவுறும்

உறுநல் லுண்டியும் ஓய்ந்தனள்; பெறுதுயில்

இல்லா நாள்பல; ஆயமும் ஒல்லாள்;

ஆளுறும் பிணிஎன், ஆயிழைக் கண்ணே?’ (புனையப்பட்டது)

மண்டல மயக்கந்தாதி -

{Entry: O15a__397}

ஒரே பாடலில் முதலும் ஈறும் மண்டலிப்பதனோடு இடை யிடையே எழுத்து அசை சீர் அடி என்பன அந்தாதித்து வரத்தொடுப்பது. (யா.க. 52 உரை)

‘உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி

மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை

முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்

ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்

ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை

அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து

துன்னிய மாந்தரஃ தென்ப

பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’

இப்பாடற்கண், ‘மதி’ என்ற அசையும், ‘முக்குடை’ என்ற சீரும், ‘ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்’ என்ற அடியும், து - ப என்ற எழுத்துக்களும் அந்தாதித்து வர, உலகே என்ற ஈற்றுச்சீர் அந்தாதியாய் முதற்சீராகவும் அமைய, எல்லா வகை அந்தாதிகளும் மயங்கிய மண்டல அந்தாதி ஆதலின், இப் பாடலில் மண்டல மயக்கந்தாதித்தொடை வந்தவாறு.

மண்டலித்தல் -

{Entry: O15a__398}

இறுதிப் பாட்டினது ஈற்றடி இறுதிஎழுத்து - அசை-சீர் - என்பவற்றுள் ஒன்று முதற்பாட்டினது முதலடி முதல் எழுத்து - அசை - சீர் - என்பவற்றுள் ஒன்றாக வருமாறு இசைத்தல்.

மண்டில ஆசிரியம் -

{Entry: O15a__399}

எல்லா அடியும் நாற்சீரடியாகவே வரும் ஆசிரியத்தினை நிலைமண்டிலம் எனவும், அடிமறிமண்டிலம் எனவும் பெயரிட்டு வழங்குப. நின்றவாறு நிற்றலும், அடிமறித்துக் கொள்ளினும் பொருள் திரியாது நிற்றலும் உடையன அவை என்பது அவர் கருத்து. அடிமறித்தல் பொருள்கோளுள் ஒன்று. அடிமறிப் பொருள்கோளால் செய்யுள் வேறுபட்டு வேறுபெயர் கொள்ள வேண்டும்; ஆதலின் மண்டில ஆசிரியம் என்ற பெயரே ஏற்றது. (தொ. செய். 117 பேரா.)

மண்டிலக் கலித்துறை -

{Entry: O15a__400}

நெடிலடி நான்காய் வரும் கலித்துறை வகையுள் ஒன்று. ஈரசைச் சீர்களால் மாத்திரம் நிகழ்வது மண்டிலக் கலித்துறை எனப்படுகிறது.

எ-டு : ‘நன்மை மேவுவார் மேவுவார் பெரும்பொருள் நான்கும்

புன்மை மேவுவார் யாவரும் புகழொடு பொருந்தார்

தொன்மை மேவுவார் மேவுவார் தொடர்வறாச் சுற்றம்

இன்மை மேவுவார் யாவரும் இன்பமொன் றெய்தார்.’

ஈரசைச் சீர்களால் நிகழும் ஆசிரியத்தளையும் இயற்சீர் வெண்டளையுமே இதன்கண் பயின்று வருமாறு காண்க.

(வீ. சோ 123 உரை)

மண்டிலக் கலி விருத்தம் -

{Entry: O15a__401}

நாற்சீரடி நான்காய் வரும் கலிவிருத்த வகையுள் ஒன்று; அடிதோறும் (அடுத்த அடியை நோக்காது) பொருள் பெற்று நிகழ்வது. (வீ. சோ. 123 உரை)

எ-டு : ‘இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி;

வெந்திறல் ஞாயிற் றெழில் வீவிலொளி வெல்லுமடி;

மந்திரத்தின் ஓதுமடி மாதுயரம் தீர்க்கு மடி;

அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையின் அங்கணடி’

(யா. வி. பக். 351)

மண்டிலம் -

{Entry: O15a__402}

எல்லா அடியும் நாற்சீரடியான் யாத்து வருவன; ‘மண்டில யாப்பும்’ அது. (எவ்வடியும் யாண்டும் நிற்கப்பெறும்.)

எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாக் கட்பனி வரலா னாவே

வேறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே!’ (தொ. செய். 115 பேரா.)

மண்டிலமாவது -

{Entry: O15a__403}

மண்டிலம் என்பது வட்டம். அஃது எல்லா அடிகளும் சீரானும் அளவானும் ஒத்துவரும் கலியுறுப்பாகிய செய்யுட் பகுதியைக் குறித்து நின்றது. மண்டிலம் நான்கடிகளாக வருவது சிறப்புடைத்து; மிக்கு வரினும் இழுக்காது.

(தொ. செய். 115 ச. பால)

மண்டில யாப்பு -

{Entry: O15a__404}

‘மண்டிலம்’ காண்க. (தொ. செய். 115 பேரா.)

மண்டில விருத்தம் -

{Entry: O15a__405}

‘மண்டிலக் கலி விருத்தம்’ காண்க. (வீ. சோ. 123 உரை)

மந்திரச் செய்யுள் -

{Entry: O15a__406}

அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களை விளைத்தேவிடும் நிறைந்த மொழியினையுடைய குரவர்கள், தாம் அனுபவத்தால் அறிந்த பொருளைப் பிறர்க்கு உணர்த்த லாகாமையால், அவர்க்குப் பயன்படுதல் கருதி, ஆணை யாலே, மறைந்த பொருளை அடங்கக் கூறப்பட்ட செய்யுள். மந்திரங்கள் உபதேச வாயிலாக அறியப்படுதலின் மந்திரம் வல்லார்வாய்க் கேட்டுணரப்படும். (இ. வி. பாட். 146)

மந்திர நூல் -

{Entry: O15a__407}

இந்நூலிலுள்ள பாடலடிகள் அவற்றின் மரபைக் கடந்து மிக்கும் குறைந்தும் வரினும், அவை ஆரிடப் போலியாய் அவ்வப்பா, பாவினங்களில் அடக்கிக் கொள்ளப்படும். (யா. வி. பக். 371)

மந்திரம் -

{Entry: O15a__408}

‘மந்திரச் செய்யுள்’ காண்க. (தொ. செய். 178 பேரா.)

மந்திரமாகிய மறை மொழி -

{Entry: O15a__409}

அகத்து உறுப்பு நான்கனுள் மந்திரம் என்பது சித்தத்தின் செயற்பாடு. அஃது அகத்து எழு வளியிசையான் குற்றமற நாடின், அகச்செவிக்குப் புலனாக அமைந்து நிகழும் நுண்மொழி.

நிறைமொழியாளர் அவற்றை மெய்தெரி வளியிசையான் புறச்செவிக்குப் புலனாக அருளுதலான் அவை மறைமொழி எனப்பட்டன. (தொ. செய். 175 ச. பால.)

மந்திரமும் குறிப்பும் ஆவன -

{Entry: O15a__410}

‘பாட்டுரை நூலே’ என்னும் சூத்திரத்துள் (செய். 79) வாய் மொழி என்றும் அங்கதம் என்றும் கூறப்பட்டவை, ஈண்டு முறையே மந்திரம் என்றும் (மேற்கோளினை இடைவைத்துக் கூறும்) குறிப்பு என்றும் சொல்லப்பட்டன.

வாய்மொழியை மந்திரமாகக் கூறாமல் வாயுறையாகக் கூறினும், அங்கதத்தைக் குறிப்புமொழியாற் கூறாமல் செம்பொருளாகவும் மொழிகரப்பாகவும் கூறினும் அடி வரையறையுற்ற பாட்டாக நிகழும். அவை அடிவரையறை யின்றி மறைமொழி கிளந்தும் கூற்றிடைவைத்தும் வரின், முறையே மந்திரம் எனவும் குறிப்பு எனவும் பெயர் பெறும். (தொ. செய். 164 ச. பால)

மயக்க அளபெடைத் தொடை -

{Entry: O15a__411}

மோனை எதுகை முரண் முதலிய தொடைகள் தன்னிடைக் கலக்க, அடிதோறும் முதற்சீர் அளபெழுந்து வருமாறு.

எ-டு : ‘வாஅங் குதிரை வயமான் நடை லிப்பத்

தேஎர் இவர்ந்து திகழ்வின் பொருள்முற்றி

நோஒ இலரா உடைமையின் நோக்கரிய

நேஎ நின்பால் நிகழ்நெஞ் செதிர்கொண்ட

ஓஒநம் காதலர் மேஎய தீதின்மை

ஈஇ திவண்வந்த இன்கால் நுவன்றிசைக்கும்;

தூஉ மொழிகாத்த தோன்றல் பழிப்பிலரால்;

வாஅ! வரவவர் வாய்த்தனர் வாய்மையர்;

பூஉப் பொலிந்தன்று வேங்கை; புகழ்மதியும்

ஊஉர் கொளக்காண்டி உற்று.’ (புனையப்பட்டது.)

இதன்கண், அடிதோறும் முதற்சீர் அளபெடைத் தொடை பயின்றது; அடிதோறும் சீர்மோனையும் வந்தது; நான் காமடியில் மூன்றாம் நான்காம் சீர்கள் முரண்; ஐந்தாமடியில் பொழிப்பளபெடை; ஆறாமடியில் இரண்டாம் நான்காம் சீர்கள் எதுகை; ஏழாமடியிலும் அது; எட்டாமடியில் முற்று மோனை பயின்றது; இரண்டு மூன்று நான்காம் சீர்கள் இயைபு.

இவ்வாற்றால், இப்பாடற்கண் மயக்க அளபெடைத் தொடை பயின்றவாறு. (யா. க. 41 உரை)

மயக்க நிரல்நிறை -

{Entry: O15a__412}

உவமமாகிய சொற்களையும் உபமேயமாகிய பொருள்களை யும் (முடிக்கப்படுவன, முடிப்பன ஆகிய சொற்களை) முறைமாற்றி நிறுத்தி ஏற்றபடி பொருள் கொள்வது எதிர் நிரல்நிறைப் பொருள்கோள். மயக்க நிரல்நிறைப் பொருள் கோள் அன்னதன்று. சொல்லும் பொருளும் என்ற முறை யாகவோ, பொருளும் சொல்லும் என்ற முறையாகவோ நிறுத்தாமல் இரண்டு திறமும் விரவநிறுத்திப் பொருள் கொள்வது இது.

எ-டு : ‘கண்ண் கருவிளை’ என்று தொடங்கும் பாடல்.

இதன்கண், முறையே பொருளும் உவமமும், உவமமும் பொருளும், உவமமும் பொருளும், பொருளும் உவமமும், உவமமும் பொருளுமென இவ்வைந்து திறமும் மயங்க நிறுத்தப்பட்டவாறு காண்க. பொருளுரைக்குமிடத்து, இவளுடைய கண்கள் கருவிளைமலர் போலும், கூரிய பற்கள் முல்லைமுகை போலும், பொலிவு பெற்ற சுணங்கு பொன் போலும், திறந்த வாய் இலவம்பூப் போலும், நுண்ணிடை மின்னுப் போலும் என, மயக்குத் தீரப் பொருள்களும் உவமங்களும் இயைக்கப்பட்டவாறு காண்க. (யா.வி.பக். 383)

‘விலங்கொடு மக்கள்’ (குறள் 410) என்பதும் அது. (பரிமே. உரை)

மயக்கு அந்தாதி -

{Entry: O15a__413}

மண்டல மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி என இரு வகைப்படுவது; இடையேயுள்ள அடிகளில் (எழுத்தும் அசை யும் சீரும்) அந்தாதி விரவுமாறு நிகழ்தலின், மயக்கு அந்தாதி என்னும் பெயர்த்தாயிற்று. அவ்வத்தலைப்புள் காண்க.

(யா. க. 52 உரை)

மயக்கு இயைபுத் தொடை -

{Entry: O15a__414}

இயைபுத் தொடை ஏனைய தொடைகளோடு இணைந்து வருவது.

எ-டு : ‘ஓங்குவரை அமன்ற வேங்கைநறு மலரும் // ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும் // உராஅங் கடற்றிரை விராஅம் மலரும் // வேறுபட மிலைச்சிய நாறிருங் குஞ்சி // ஏந்தல் பொய்க்குவன் எனவே // பூந்தண் உண்கண் புலம்பா னாவே.’

இதன்கண் அடி இயைபுத்தொடையொடு, பொழிப் பெதுகை யும், பொழிப்பளபெடைத் தொடையும், அடி யெதுகையும், பொழிப்பு மோனையும் அமைந்திருத்தலின் இது மயக்கு இயைபுத் தொடை ஆயிற்று. (முதல் மூன்றடிகளில் அடி இயைபு; முதல் நான்கடிகளில் பொழிப்பெதுகை; மூன்றாமடி யில் பொழிப்பளபெடை; இறுதி யிரண்டடிகளிலும் அடி யெதுகை; ஈற்றடியில் பொழிப்பு மோனை.) (யா. க. 40 உரை)

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா இனம் -

{Entry: O15a__415}

கலித்துறையும், தனிக் கலித்தாழிசையும், ஒத்தும் ஒவ்வாதும் வரும் கலிவிருத்தமும், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவின் இனமாம். (வீ. சோ. 123 உரை)

மயங்கிசைக் கொச்சகம் -

{Entry: O15a__416}

கலிக்கு ஓதப்பட்ட உறுப்பெல்லாம் குறைவின்றிக் கலியது தன்மை பெற்ற உறுப்புக்கள் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும், வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும், அராக அடி அந்தாதித் தொடை தொடுத்தும், அத்தொடை பலவாய் வந்தும், கலிக்கண் வாரா என்ற நேரீற்றியற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வந்தும், ஐஞ்சீரடி வந்தும், முச்சீராலும் இருசீராலும் அம்போதரங்க உறுப்புப் பெற்றும், இவ்வாறு ஒத்தாழிசைக்கலிகளோடு ஒவ்வாது வருவன எல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகும். (யா. க. 86 உரை)

மயங்கிசைவண்ணம் இருபது -

{Entry: O15a__417}

குறில் அகவல் மயங்கிசைவண்ணம், நெடில் அகவல் மயங் கிசைவண்ணம், வலி அகவல் மயங்கிசை வண்ணம், மெலி அகவல் மயங்கிசைவண்ணம், இடை அகவல் மயங்கிசை வண்ணம் என அகவல் மயங்கிசை வண்ணம் ஐந்து;

எ-டு : ‘வாங்குபு கொள்ள நின்றான் வாரண வாசி மன்னன் // தேங்கமழ் ஒலிமென் கூந்தல் தேவினாட் கீன்ற மங்கை // ஆங்கவன் அருகல் அல்லாள் அத்தின புரத்து ராசன் // வான்புகழ் மங்கை வாகைப் பூநிறம் அன்ன மேனி.’

இது குறில் அகவல் மயங்கிசை வண்ணம்.

குறில் ஒழுகல் மயங்கிசைவண்ணம், நெடில் ஒழுகல் மயங்கிசைவண்ணம், வலி ஒழுகல் மயங்கிசைவண்ணம், மெலி ஒழுகல் மயங்கிசைவண்ணம், இடைஒழுகல் மயங்கிசை வண்ணம் என ஒழுகல் மயங்கிசைவண்ணம் ஐந்து;

எ-டு : ‘ஆசைப் படுவ அருந்தவம் கல்விஅல் லாப்பிறகள் // பேசப் படுவ திலம்இவை யாவை பிறப்பிறப்பாம். // தேசத் தியற்கை தெரிந்துணர் வார்க்குச் சேயிழைமார் // பாசப் படுகுழிப் பற்றறுத் தார்வினைப் பற்றறுத்தார்.’

இது குறில் ஒழுகல் மயங்கிசை வண்ணம்.

குறில் வல்லிசை மயங்கிசைவண்ணம், நெடில் வல்லிசை மயங்கிசைவண்ணம், வலி வல்லிசை மயங்கிசைவண்ணம், மெலி வல்லிசை மயங்கிசைவண்ணம், இடை வல்லிசை மயங்கிசை வண்ணம் என வல்லிசை மயங்கிசைவண்ணம் ஐந்து.

எ-டு : ‘தாமத் தூண்களைத் தருக்கொடு முருக்குதல் முரணும்
தூமத் தூவகல் எடுத்துக்கொண் டுழையவர் எறியும்
வாமத் தோள்களின் வலித்தனன் புடைத்தெடுத் தரற்றும்
பேய்மைத் தீத்தொழில் பெருகிய தரசனும் உணர்ந்தான்.’

இது குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம்

குறில் மெல்லிசை மயங்கிசைவண்ணம், நெடில் மெல்லிசை மயங்கிசைவண்ணம், வலி மெல்லிசை மயங்கிசைவண்ணம் மெலிமெல்லிசை மயங்கிசைவண்ணம், இடைமெல்லிசை மயங்கிசைவண்ணம் என மெல்லிசை மயங்கிசைவண்ணம் ஐந்து;

எ-டு : ‘உருகா தார்தம் இன்னுயிர்காத் தொழிய லாமோ உணர்ந்தார்க்கு
வருகார் போல வளஞ்சுரந்திவ் வையம் காக்கும் வயமாறன்
முருகார் ஆர மார்பினான் முரசம் ஆர்ப்ப முல்லைகாள்
குருகார் பௌவம் உண்டிருண்ட கொண்டல் என்று குழைந்தீரோ’

இது குறில் மெல்லிசை மயங்கிசைவண்ணம்.

ஆக மயங்கிசை வண்ணம் இருபதாம். இவை நகரம் இரைந் தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப்பிசையும் இயமர இசையும் தேரைக் குரலும் போலவும் வரும். (யா. க. 95 உரை)

மயங்கி வரும் மோனைஎழுத்துக்கள் -

{Entry: O15a__418}

ஆ அ, ஈ இ, ஊ உ, ஏ எ, ஐ இ, ஓ ஒ, ஒள உ - என நெட்டுயிர் ஏழற்கும் ஒத்த குற்றுயிர் இனமாம்.

அ ஆ ஐ ஒள - இவை தம்முள் ஓர் இனம்; இ ஈ எ ஏ இவை தம்முள் ஒத்த ஓர் இனம்; உ ஊ ஒ ஓ - இவை தம்முள் ஒத்த ஓரினம்; இவையெல்லாம் தம்முள் ஒத்த மோனை யெழுத்துக்கள்.

இனி, ஞ ந - தம்முள் ஓரினம்; மவ - தம்முள் ஓரினம்; சத - தம்முள் ஓரினம். இவை அனு (மோனை) எழுத்துக்கள் எனவும் கூறப் பெறும்.

எ-டு : ‘அருந்தவர்கட்(கு) ஆதியாய் ஐயம் நீக்கி
ஒளவியம் தீர்த்(து) அவிரொளிசேர் ஆக்கை எய்தி, (அ,ஆ,ஐ,ஒள)
இருந்திரள்கை இனமருப்பின் யானை ஊர்தி
ஈரைஞ்ஞூ(று) எழில்நாட்டத்(து) இமையோன் ஏத்த (இ,ஈ,எ, ஏ)
ஒருங்குலகின் நூல்கற்றோர் ஊதை முந்நீர்
ஒலிவளர அறம்பகர்ந்த உரவோன் பாதம், (உ, ஊ, ஒ, ஓ)
கருங்கயற்கண் காரிகையார் காதல் நீக்கிக்
கைதொழுதால் கையகலும் கௌவை தானே. (க, கா, கை கௌ)

வண்டிவரும் மலர்வெட்சி மாலை மார்பன்
மால்வேண்ட மண்ணளித்த மலிதோள் வள்ளல் (ம,வ)
ஞண்டிவரும் தண்படப்பை ஞாழல் மூதூர்
நரபதிக்கு வாள்கொடுத்த நகைவேல் நந்தி, (ஞ, ந)
தண்டிவரும் தடவரைத்தோட் சயந்தன் வாடச்
சதுமுகனைச் சயஞ்செய்த சங்க பாலன் (ச, த)
தெண்டிரைவாய்த் திருமகளோ டமிர்தங்’ கொண்டான்
சீர்பரவச் சென்றகலும் செல்லல் தானே.’ (தி, தெ, சி, சீ, செ)

என இனவெழுத்துக்கள் மோனைத்தொடைக்கண் வந்த வாறு. (யா. க. 53 உரை பக். 206, 207)

மரபு என்னும் செய்யுள் உறுப்பு -

{Entry: O15a__419}

யாப்பு என்ற செய்யுளுறுப்பின் வழியே, இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற நால்வகைச் சொற்களையும், திணை பால் இடம் பொழுது வினா விடை மரபு என்ற எழுவகை வழுவும் ஏற்படாதவாறு உலகத்தார் அமைக்கும் நெறியே மரபாகும். அஃதாவது இயற்சொல் முதலிய நான்கு சொல்லானும் காலந்தோறும் இடந்தோறும் வழங்கும் வழக்கும் செய்யுளும் தவறாமல் தொடர்படுத்தி முறை பிறழாமல் செய்யுள் செய்ய வேண்டும் என்பது.

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற நான்கு நிலத்தினும் ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்தனவாகச் சொல்லுத லும், உலகொடு மலைதலும், சமயங்களொடு மலைதலும், கலையொடு மலைதலும், பிறவும் நாடகவழக்கிற்கே அமையும்.

ஒரு காலத்து வழங்கிய சொற்களும் பொருள்களும் அணிக ளும் கோலமும் முதலியன மற்றொரு காலத்து வழங்காதன வும் உள. ஓரிடத்து நிகழும் பொருள்கள் மற்றோரிடத்து நிகழாதனவும் உள. அக்காலமும் இடமும் பற்றி ஏற்றவாற் றான் செய்யுள் செய்க.

அதோளி, இதோளி, உதோளி, குயின் முதலிய சொற்கள் கடைச்சங்க காலத்தேயே பெரும்பாலும் வழக்கிறந்தன.

‘அட்டா னானே குட்டுவன்’ (பதிற். 47.)

‘உச்சிக் கூப்பிய கையினர்’ (முருகு. 185)

என்றாற் போன்ற சொற்றொடர்கள் கடைச்சங்கத்துக்கு ஆகி, இக்காலத்துக்கு ஆகாவாயின.

‘வரிமணல் ஞெமிரக் கற்பக நடக்கும்

பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ’ (புறநா. 90)

‘கீழ்மரத்து யாத்த சேமஅச் சன்ன’ (புறநா. 102)

என்றாற் போலும் உவமப் பொருள்கள் இக்காலத்துக்கு ஆகாவாயின.

‘குண்டலம் ஒருபுடை குலாவி வில்லிட

விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய’ (சீவக. 1009)

‘வண்காது நிறைத்த பிண்டி யொண்தளிர்

நுண்பூண் ஆகம் திளைப்ப’ (முருகு. 31, 32)

‘அம்மலர் அடியும் கையும் அணிகிளர் பவள வாயும்

செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரும் அங்கேழ்

விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி யிட்டாள்

அம்மலர்க் கண்டம் உள்ளிட்(டு) அரிவையைத் தெரிவைதானே’ (சீவக. 2446)

என்றாற்போலும் அணியும் கோலமும் இக்காலத்துக்கு ஆகா ஆயின.

‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி

ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்’ (அகநா. 7)

இது பருவத்துக் கேற்ற அணி.

‘கொல்வினைப் பொலிந்த’ (அகநா. 9) என்ற பாடலில், முல்லையும் குறிஞ்சியும் திரிந்து அமைந்த பாலை நிலத்திற்கு, முல்லைக்கும் குறிஞ்சிக்கும் ஏற்ற கருப்பொருள்களாகிய இருப்பையின் தளிர், பூ, ஆலங்கட்டி மழை, வில், அம்பு, செந்நிலம், குருதி, கொழுப்பு, உரல், உலக்கை, கோட்டான், குதிரை, பசு, கன்று என்பன மரபு பற்றிக் கூறப்பட்டுள.

குடவாயிலைக் குடந்தை எனவும் (அகநா. 60) உறையூரை உறந்தை எனவும் (புறநா. 69) முன்னோர் திரித்து வழங்கி னாற்போல, இக்காலத்தார் களத்தூரைக் களந்தை எனவும், நாகப்பட்டினத்தை நாகை எனவும், ஆற்றூரை ஆறை எனவும், தஞ்சாவூரைத் தஞ்சை எனவும் வழங்குதலை ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

தமிழ்நூற்கண் கூறப்பட்ட மரபினை விடுத்து ஆரியரும் பிறபாடை மாக்களும் பின்பற்றும் மரபினை ஒட்டித் தமிழ்ச் செய்யுள் செய்தலும் மரபன்று என்பது. (தொ.செய். 80 நச்.)

மருட்செந்தொடை -

{Entry: O15a__420}

இனஎழுத்துப் பெற்று ஏனைய தொடையும் தொடை விகற்பமும் இன்றி வருவது, மருட்செந்தொடை ‘செந் தொடை மருள்’ எனவும்படும்.

எ-டு : ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்’ (கு. 64)

இதன்கண், இன எழுத்தாகிய அ, ஆ இவற்றால் அமைந்த இணைமோனையன்றிப் பிற வந்திலாமை காண்க. (யா. க. 53 உரை பக். 205)

மருட்செந்தொடை விகற்பக் குறள் வெண்பா -

{Entry: O15a__421}

இனஎழுத்தினால் மோனை அமைய ஏனைய தொடையும் தொடை விகற்பமும் இன்றி வரும் குறள் வெண்பா. ‘மருட் செந்தொடை’ காண்க. அவ்வெடுத்துக்காட்டே அமையும். (யா. க. 59 உரை)

மருட்பா -

{Entry: O15a__422}

மருட்பா, தனித்தகுதியுடைய பா அன்று. வெண்பா முதல் வந்து ஆசிரியமாய் முடிவது மருட்பாவாம். வெண்பா அடியும் ஆசிரியஅடியும் சமமாக வருவது சமனிலை மருட்பா; சமமன்றி வருவது வியனிலை மருட்பா. இவற்றைச் சமமருட்பா, வியமருட்பா எனவும் வழங்குவர். கங்கையமுனை களின் சங்கமம் போலவும், சங்கர நாராயணர்களின் சட்டகக் கலவியே போலவும், வெண்பாவும் ஆசிரியமும் விராய்ப், புறநிலை வாயுறை செவியுறை கைக்கிளை என்ற நான்கு பொருள்களின்மேல் யாப்புற்று மருட்சியாகப் பாவி நடக்கும் மருட்பா, இந்நான்கு பொருள்களிலும் சமமருட்பா விய மருட்பா என இருவகையாலும் உறழவே, எட்டாதல் காணப்படும். அவை புறநிலை வாழ்த்துச் சமமருட்பா, புற நிலைவாழ்த்து வியமருட்பா, வாயுறை வாழ்த்துச் சம மருட்பா, வாயுறை வாழ்த்து வியமருட்பா, செவியறிவுறூஉச் சமமருட்பா, செவியறிவுறூஉ வியமருட்பா, கைக்கிளைச் சம மருட்பா, கைக்கிளை வியமருட்பா என வருவன காண்க.

கைக்கிளை மருட்பாவில் ஆசிரியப் பகுதி இரண்டே அடியாய், முதலடி முச்சீராய் ஈற்றடி நாற்சீராய் முடிதல் வேண்டும் என்று கடியநன்னியம் கூறுகிறது. வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை இம்மூன்றும் ஈற்றய லடி முச்சீராய் ஈற்றடி நாற்சீராய் எழுசீரானாகிய ஆசிரியப் பாவினாலேயே முடிதல் வேண்டும் என்பது நல்லாறம். [ கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வருவழி எருத்தடி முச்சீரான் வரப்பெறாது என்பர் கடிய நன்னியனார் (யா. வி. பக். 270) என்று காணப்படுவது பிழையாகும். ]

இம்மருட்பா அந்தணனும் அரசகுலக்கன்னியும் மணந் தமைந்த குலம் போல்வது என்ப. (யா. க. 55 உரை)

மருட்பாக் கைக்கிளை -

{Entry: O15a__423}

மருட்பாவாவான் வரும். கைக்கிளை அகப்புறக்கைக் கிளையாம்.

எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
போகிதழ் உண்கணும் இமைக்கும்
ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே.’

(பு. வெ. மா. 14 -3) (தொ. செய். 119 நச்.)

மருட்பாவின் ஓசை -

{Entry: O15a__424}

மருட்பா, வெண்பா ஆசிரியப்பா என்ற இரண்டு பாக்களின் அடிகளால் அமைக்கப்பட்டதாதலின், அதன்கண் முதலில் செப்பலோசையும் அடுத்து அகவலோசையும் இடையீடின்றி வரும். அதற்கெனத் தனியோசை இன்று.(தொ. செய். 85 நச்.)

மறைமொழி -

{Entry: O15a__425}

புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற் றொடராகிய மந்திரம்; இது சொல்லிய சொல்லின் பொருண்மை எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் குறை வின்றிப் பயன்தருமாறு சொல்லும் ஆற்றலுடையோராகிய ‘நிறைமொழி மாந்தர்’ தமது ஆணையான் சொல்லியது. (தொ. செய். 178 பேரா.)

மன்விருத்தம் -

{Entry: O15a__426}

ஆசிரிய விருத்தம். (யாழ். அக.)

மா (2) -

{Entry: O15a__427}

இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் வாய்பாடு.

(யா. கா. 7)

மாச்சீர் -

{Entry: O15a__428}

நேரசையால் முடியும் தேமா புளிமா என்னும் இரண்டுமாம்.

(யா. கா. 7)

மாட்டு (1) -

{Entry: O15a__429}

கொண்டு வந்து கொளுத்துதல். இது மொழிமாற்றுப் பொருள்கோளன்றிப் புலவர் வேறுசெய்வதொரு செய்கை. இது பல பொருள் தொடராய்ப் பல அடியான் வரும் ஒரு செய்யுட்கண்ணும், பல செய்யுளைப் பலபொருள் தொட ரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும். இதனைப் பத்துப் பாட்டு, சீவகசிந்தாமணி இவற்றுள் (நச்சினார்க் கினியர் உரையில்) பரக்கக் காணலாம். (தொ. செய். 210 நச்.)

மாட்டு (2) -

{Entry: O15a__430}

பாட்டின் அடிகளுக்குப் பொருள் கொள்ளுங்கால் ஓரடி பல அடிகளைக் கடந்து வரும் அடியொடு பொருந்திப் பொருள் கிடப்பச் செய்தலும், பல அடிகள் கடவாமல் அணுகிப் பொருள் கிடப்பச் செய்தலும் என்ற இருவகையானும் சென்று பொருள் முடியுமாற்றால் செய்யுள் செய்தல் மாட்டு என்னும் செய்யுள் உறுப்பாகும்.

இம் மாட்டு என்னும் உறுப்பின்றிச் செய்யுள் ஆற்றொழுக் காகப் பொருள்படுமாறு அமைத்தலும் உண்டு.

(தொ. செய். 210, 211 பேரா.)

மாட்டும் எச்சமும் இன்றி வருதல் -

{Entry: O15a__431}

தொடர்நிலைச் செய்யுள் மாட்டும் எச்சங்களும் நிறுத்த லின்றி அச் செய்யுள் கிடந்தவாறே அமையச் செய்தல்.

எ-டு : ‘வேலினும் வெய்ய கானம்அவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே’ (பாட் 300, 301)

கானம் வெய்ய, தோள்தண்ணிய என (வஞ்சி நெடும்பாட் டுள்) அகன்று கிடந்து மாட்டின்றி வந்தது.

‘யானே, ஈண்டையேனே....’ (குறுந். 54)

என்னும் பாட்டு (ஐந்தடிகளே உடைமையின்) அணுகி, (யான் ஈண்டையேன், என் நலன் அவணொழிந்தன்று - என) மாட்டின்றி வந்தது.

சிந்தாமணியுள், மாட்டு எச்சம் என்னும் இவ்விரண்டுமின்றிச் செய்யுள் கிடந்தவாறே அமைந்த தன்மையை யுடையன வாகிய செய்யுள்கள் நச்சினார்க்கினியர் உரையால் தெளியப் படும்.

எ-டு : ‘காய்மாண்ட தெங்கின்’ என்னும் பாடல். சீவக. 31

(தொ. செய். 211 நச்.)

மாட்டுவேறு, பொருள்கோள் வேறு ஆதல் -

{Entry: O15a__432}

தொடர்நிலைச்செய்யுளுள் இடையே வரும் வண்ணனை களையும் இடைப்பிறவரலாக வருவனவற்றையும் ஓர்ந்து பொருள்தொடர்பைக் காட்டும் சொற்றொடரை ஆங் காங்கே இயைபுபடுத்துவது மாட்டு என்னும் செய்யு ளுறுப்பாம்.

சுண்ணம் முதலாய பொருள்கோள் சொற்களைத் துணித்துப் பொருள் பொருந்தக் கூட்டுவது. மாட்டு என்பது புலவரின் கருத்துத் தோன்ற இயன்ற பொருளை இணைத்துக் காட்டுவது. (தொ. செய். 209 ச. பால)

மாத்திரை -

{Entry: O15a__433}

இயல்பான கண்ணிமைப் பொழுதும், கைந்நொடித்தற் பொழுதும் ஒரு மாத்திரையினது அளவாம். (யா. க. 2 உரை)

‘உன்னல் காலே, ஊன்றல் அரையே,

முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே’

என்று செயற்கையாகிய கைந்நொடித்தற்கு ஆம் மாத்திரை கூறு செய்யப்படும்.

மாத்திரை அளவு -

{Entry: O15a__434}

எழுத்துக்கள் ஒலிக்கும் அளவு; குற்றெழுத்து ஒரு மாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரளபெடை மூன்று மாத்திரை; ஒற்றளபெடை ஒரு மாத்திரை; ஐகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை; குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் மெய்யும் ஓரோஒன்று அரைமாத்திரை; மகரக்குறுக்கம் கால் மாத்திரை; ஏறிய உயிரின் அளவே உயிர்மெய்க்காம். ஆகவே, செய்யுளியலின் மாத்திரைஅளவு மேல் எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டதேயாம்.

இது செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் முதலாவது.

(தொ. செய். 2 இள.)

மாத்திரை, எழுத்தியல் முதலியவற்றின் முறைவைப்பு -

{Entry: O15a__435}

மாத்திரை எழுத்தினது குணமாகலானும், அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும் வண்ணங்களும் என்ற இன்னோ ரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆகலானும் மாத்திரை முன்னர் வைக்கப்பட்டது.

அம்மாத்திரை என்ற பண்பினையுடைய பண்பியாகிய எழுத்து அடுத்து வைக்கப்பட்டது.

அவ்வெழுத்தான் அசையும் , அசையான் சீரும் , சீரான் அடியும், அவ்வடி பெற்றவழி அதனை ஆக்குமாறு அறியக் கூறும் யாப்பும் , அவ்வடிஅகத்தன சொல்லும் பொருளும் ஆகிய மரபும் ஆகலான், அம்முறையே அவை வைக்கப் பட்டன.

அவ்வடி இரண்டனைத் தொடுக்குங்கால் அவற்றை ஓரடி என ஒன்றாகவே கொள்ளாதபடி துணிப்பது தூக் கு ஆகலான் அது முன்னும், அடிகளில் வைத்துக் காணப்படும் தொடை அதன் பின்னும் வைக்கப்பட்டன.

அவ்வடி இரண்டு தொடுத்தவழியும் கொள்ளப்படும் நோக்கு அதன்பின் வைக்கப்பட்டது.

அவ்வடி இரண்டும் பலவும் தொடர்ந்தவழி முழுவதும் கிடைப்பது பா ஆகலான், அஃது அதன்பின் வைக்கப் பட்டது.

திணையும், திணைக்கு உறுப்பாகிய ஒழுகலாறும், அவ் வொழுக்கத்தனவாகிய கூற்றும், அதன்பின் கேட்போரும், கேட்கும் இடனும், அதுபோலப் புலப்படாக் காலமும், இவற்றான் பயனும், பயனான் வரும் மெய்ப்பாடும், இவற்றி னெல்லாம் ஒழிந்து நின்ற எச்சமும், அவ்வெச்சத்தொடு கூட்டி உரைக்கப்படும் முன்னமும் அம்முறையானே பின் வைக்கப்பட்டன. அவற்றிற்கும் பொதுவாகிய பொருள் அடுத்து வைக்கப்பெற்றது.

அப்பொருட் பிறழ்ச்சியை ஒருப்படுக்கும் துறை அதன்பின் வைக்கப்பட்டது.

எச்சமும் மாட்டும் இன்றியும் செய்யுள் வருதல் கூடுமாதலின் துறையின் பின் அவையிரண்டும் வைக்கப்பட்டன.

வண்ணம் பாவினது பகுதி உறுப்பாதலின் அஃது அவற்றின் பின் வைக்கப்பட்டது.

வனப்பு எட்டும், அவற்றினை ஒவ்வொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டும் இன்றியும் செய்யுள் அமைதல் கூடுமாதலின் இறுதியில் வைக்கப்பட்டன.

இவை இருபத்தாறும் எட்டும் செய்யுள் உறுப்புக்களாம். இவற்றை உயிருடைய பொருள்களின் உறுப்புப் போலக் கூறின், உயிர் வேறு கூறப்படல் வேண்டும். இவ்வுறுப்புக்களை இன்றிச் செய்யுள் என்ற தனிப்பட்ட பொருள் ஒன்றும் இல்லை. எனவே, இவற்றை உயிரில்லாததொரு கலவையின் உறுப்புப் போலக் கொள்ளல் வேண்டும்.(தொ. செய். 1 பேரா.)

மாத்திரை முதலா அடி -

{Entry: O15a__436}

மாத்திரை முதலிய உறுப்புக்களைக் கொண்ட அடி.

(தொ. செய். 104 நச்.)

மாத்திரையை அளவு படுத்தாக்கால் வரும் இழுக்கு -

{Entry: O15a__437}

குறிலிணை, குறிலிணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று என்ற நான்கும் நிரையசை.

‘நிரைநேர் நிரைநேர் நிரைநேர் நிரைநேர்’ என்ற சீர்களைக் கொண்ட அடி ‘வரகு வரகு வரகு வரகு’ எனவும் வரும். முதலடி ‘வரகு வரகு வரகு வரகு’ என்றமைய, இரண்டாமடி ‘பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு’ என்று அமை யின், ஈரடியும் சீர்வகையால் ஒத்திருப்பினும், இரண்டாமடி மாத்திரை வகையால் முதலடியைவிட மிகவும் நீண்டுவிடுத லின், அடிகளை அமைக்குமிடத்துச் சீர்களை நோக்குவது போலவே மாத்திரையையும் நோக்காவிடின், ஓரடியோடு அடுத்தஅடி சீர்வகையான் ஒத்தும், மாத்திரை வகையான் சிதைவுபட்டு விடும்.

‘அம்ம வாழி கேளாய் தோழீ’

என்பதினும், ‘அம்ம வாழி கேளாய் தோழி’ என இறுதிச் சீரினைக் குறுக்கியவழி இன்னோசைத்தாம். ஆகவே, சீர்களை அமைக்குமிடத்தே மாத்திரையினையும் அளவு படுத்தல் வேண்டும். (தொ. செய். 2 பேரா.)

மாத்திரையானல்லது செய்யுள் வேறுபாடு உணரலாகாமை யின் மாத்திரை செய்யுளுறுப்புக்களில் முதலாவதாகக் கூறப்பட்டது. (நச்.)

மிகை எண் நிரல்நிறை -

{Entry: O15a__438}

முன் நிறுவியவற்றைவிட மிக்க எண்ணிக்கையுடைய பொருள் களைப் பின்னர் நிறுவுவது.

எ-டு : ‘ஆசை அல்குல் பெரியாரை அருளும் இடையும் சிறியாரைக்
கூசும் மொழியும் புருவமுமே குடில மாகி இருப்பாரை
வாசக் குழலும் மலர்க்கண்ணும் மனமும் கரிய மடவாரைப்
பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மட நெஞ்சே!’

முன்னடி யிரண்டிலும் இருபொருள்களை எண்ணி மூன்றா மடியில் மூன்று பொருள்களை எண்ணியமை மிகைஎண் நிரல்நிறையாம். (யா. வி. பக். 384 உரை)

முச்சீரடி கலிப்பாவில் வரப் பெறுதல் -

{Entry: O15a__439}

முச்சீரடிகளான் இயன்ற முழுக் கலிப்பாடல் வருதலேயன்றி முச்சீரடி ஒன்றோ பலவோ கலிப்பாவின் தொடக்கத்திலோ நடுவிலோ வருதலும் கூடும்.

எ-டு : ‘நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக்
கார்வரக் கண்டநம் காதலர்
தேர்வரக் கண்டில மன்னோ
பீர்வரக் கண்டன தோளே.’

முச்சீரடி பாடல் முழுதும் வந்தவாறு.

முல்லைக்கலி மூன்றாம் பாடலில் அடிகள் 24 - 27 காண்க. முடுகியலான் முதலடியும் மூன்றாம்மடியும் ஒவ்வொன்றும் முச்சீர் பெற்றன.

குறிஞ்சிக்கலி 3. அடி 43 : ‘நின்கண்ணாற் காண்பெ ன்மன் யான்’ என இடையே முச்சீரடி வந்தது.

குறிஞ்சிக்கலி 15இல் ‘செய்தானக் கள்வன் மகன்’ எனக் கலிவெண்பாவின் ஈற்றடி முச்சீர் பெற்று வந்தவாறு.

(தொல். செய். 70 நச்.)

சிந்தடி 7 முதல் 9 வரை எழுத்துக்கள் பெறும்.

(தொல். செய். 55 இள.)

கலிப்பாட்டின் ஈற்றடியும் ஈற்றயலடியும் ஏழு சீர்கள் பெறும். அஃதாவது கலிப்பாட்டின் இறுதியுறுப்பாகிய சுரிதகம், ஆசிரியம் அல்லது வெண்பாவினால் நிகழ்வதனால், ஆசிரியத் தின் ஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் நிகழும்; அன்றி, முச்சீரடி ஈறாகவும் நிகழும்; எப்படி நிகழினும் ஈற்றில் வரும் இரண்டடிகளின் சீர்கள் எண்ணிக்கை ஏழேயாம்.

வெள்ளைச் சுரிதகம் மேற்கண்டவாறு முடிதல் சிறப் புடைத்து. மூன்றடியின் குறைந்த வெள்ளைச் சுரிதகம் சிறப்புடைத்தன்று. இரு சீரானும் நாற்சீரானும் ஐஞ்சீரானும் இறும் அடிகள் கொச்சகத்திற்கு உரியன. சிறுபான்மை, கலிப்பாவில் உறுப்பாக வரும் வெண்பாக்களில் ஆசிரியத் தளை நிகழ்தலும் கொள்க.

கலி. 11 ‘இனைநல முடைய கானகம் சென்றோர்’ என்ற அடி முதலான இறுதி நான்கடிகளும் ஆசிரியச் சுரிதகம்.

கலி. 70 ‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல்’ முதலான இறுதி நான்கடிகளும் வெள்ளைச் சுரிதகம். முதலடிச் சீர்கள் இடையே ஆசிரியத்தளை நிகழ்தல் காண்க. (தொ. பொ. 76, 77, நச்.)

இருசீர் முச்சீர் ஐஞ்சீர் அடிகளான் முடியும் கலிப்பாடல்கள் கொச்சகம் எனப்படுவன. அவை ஆசிரியம் அல்லது வெள்ளைச் சுரிதகத்தான் முடிவனபோலச் சிறப்புடையன அல்ல.

வெள்ளைச் சுரிதகம் மூன்றடிக்குக் குறைவாக நிகழின் கலிப்பாடல் தனக்குரிய இயல்பான் அமையும் இறுதியைப் பெறாதாகலின், மூன்றடிக்கும் குறையாமையே வெள்ளைச் சுரிதகத்திற்கு இயல்பாம். ஆசிரியச் சுரிதகமும் மூன்றடியின் குறைவாக நிகழாமையே சிறப்பு.

எ-டு : கலி. 49-இல் சுரிதகம் மூன்றடியான் வந்தவாறு.

(தொ. பொ. 77 பேரா., நச்.)

முட்டடி -

{Entry: O15a__440}

தூக்குப்பட்டு முடியும் அடி. (‘முற்றடி’ என்பது சிறந்த பாடம் என்ப.) (தொ. செய். 123 பேரா.)

முடியாத் தன்மையின் முடிதல் -

{Entry: O15a__441}

தன்னை முடித்தற்குரிய ஈற்றசை ஏகாரத்தான் வாராது, இறுதி இடையடி போன்று நிற்பது. இஃது அகப்பாட்டு வண்ணம் எனப்படும்.

எ-டு : கலித்தொகை, கடவுள் வாழ்த்து ‘ஆணமில் பொரு ளெமக் கமர்ந்தனை யாடி’ என (ஆசிரியச் சுரிதகம்) முடிந்து நிற்பது. (தொ. செய். 224 நச்.)

முடுகியல் -

{Entry: O15a__442}

வேறு அடிகளொடு கூடிச் செய்யுள் அமைத்தற்கு உதவு வதாய்த் தான் தனித்து நில்லாது பிற அடிகளொடு கூடி வருவது முடுகியலாம்.

ஆசிரியத் தளையொடு முடுகிய அடி கலியடி யாகும். (‘அராகம் முடுகியல் போலக் குற்றெழுத்துக்கள் தொடர்ந்து வருதலால் நிகழுமேனும், பிறிது ஒன்றனொடு கூட்டி அற்று விடாமல் தானே தனித்து அற்று நிற்பது; அது பரிபாடல் செய்யுள் உறுப்பு என்ப.) (தொ. செய். 67 பேரா. நச்.)

முடுகியல் அடி மூன்று -

{Entry: O15a__443}

4, 5, 6, சீர்களான் நிகழும் அடிகளில் முடுகியல் நிகழும். (செய். 67 நச்.)

முடுகியல் நடத்தல் -

{Entry: O15a__444}

முடுகியலின்கண்ணே பயின்று நடத்தல்.

எழுசீரான் வரும் அடி முடுகியலில் பயின்று நடக்கும்.

(தொ. செய். 65 நச்.)

முடுகியல் வண்ணம், முடுகு, முடுகு வண்ணம் -

{Entry: O15a__445}

இவை மூன்று பெயரும் ஒரே பொருள. அஃதாவது முடுகியல் தொடுத்த அடியொடு பிற அடி வேறுபடத் தொடர்ந்து ஓடுவது.

எ-டு : ‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇ’ (கலி.39)

என்னும் சுரிதகமும்,

‘இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க’ (கலி. 104)

என்பது முதலியனவும் ஆம். (தொ. செய். 67 நச்.)

முடுகு வண்ணமாவது அடி இற்றது அறியலாகாததாய், நீண்ட அடியதாய், அராகத்தொடு கூடிவருவது. (வீ. சோ. 142 உரை)

முடுகு வெண்பா -

{Entry: O15a__446}

சந்த முடுகுடைய வெண்பாவகை (‘புளிமா புளிமா’ எனப் பெரும்பான்மையும் வருவது.)

முதல் இயைபு -

{Entry: O15a__447}

அடி இயைபுத்தொடை; அது நோக்குக.

முதல் ஈரெழுத்து ஒன்றின் பெயரிடுதல் -

{Entry: O15a__448}

முதலெழுத்தும் ஒன்றி இரண்டாம் எழுத்தும் ஒன்றின், முந்துற்ற மோனையால் பெயரிட்டு வழங்கப்படும்.

எ-டு : ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை’ (கு. 350)

இது கூழை மோனை. (தொ. செய். 89 இள.)

முதல் எதுகை -

{Entry: O15a__449}

அடி எதுகைத் தொடை; அது காண்க.

முதல்நிலை அளபெடை -

{Entry: O15a__450}

முதல் நின்ற சொல்லின்கண்பின்னும் எழுத்து இருப்ப, முதலெழுத்து அளபெழுதல்.

எ-டு : காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்த லவன். (யா. க. 41 உரை)

முதல் முரண் -

{Entry: O15a__451}

அடிமுரண்; அது காண்க.

முதல் மோனை -

{Entry: O15a__452}

அடிமோனை; அது காண்க.

முதற்குறை -

{Entry: O15a__453}

செய்யுட்கண் ஒரு பகாப்பதம் தன் முதலெழுத்துத் தொடை நயம் கருதிக் குறைக்கப்பட்டவழியும் தன்பொருளைத் தவறாது புலப்படுத்துவது.

எ-டு : ‘மரைஇதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’

தாமரை எனற்பாலது ‘மரை’ என முதல் குறைக்கப்பட்ட வாறு. (யா. க. 95 உரை)

முதற்சீர் -

{Entry: O15a__454}

கருவிளம், கூவிளம், தேமா, புளிமா என்னும் ஈரசைச் சீர் நான்கும் வீரசோழியத்துள் ‘முதற்சீர்’ எனப்பட்டன. (வீ. சோ. 108)

முதற்பா -

{Entry: O15a__455}

முற்பா ; அஃதாவது வெண்பா. (பிங். 2079)

முதுமொழி (1) -

{Entry: O15a__456}

எ-டு : ‘உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவியரிந் தற்றே - வழுதியைக்
கண்ட கருங்கண் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு!’

“உழுந்து விளைந்த வயலை ஏதோ ஓர் ஊர்க்கன்று மேய்ந்து விடவே, அது பற்றி அக்கன்றினை அலைக்காமல், கழுதை யொன்றனைச் செவியரிந்துவிட்டாற்போல, வழுதியைக் கண்ட கருங்கண்கள் தாம் பசவாமல் இருப்பவும், அக்காட்சி யோடு இயைபில்லாத பெரும்பணைத் தோள்கள் தாம் பசப்புற்றன” என்று தலைவி கூற்றாக வரும் இப்பாடலுள், ‘ஒன்றன் வினைப்பயனைத் ஒன்று நுகர்ந்தது’ என்பது குறித்த அப்பொருள், இயைபில்லாத தன்மையைச் சொற்றொடர்கள் இனிது விளக்கமாட்டா ஆயினும், முன்னடிகளில் உவமை முகத்தான் கூறிய முதுமொழிக்கண்ணே, அப்பொருளை முடித்தற்கு ஏதுவாகிய ‘இயைபில்லாதிருக்கும் தன்மை’ அமைந்து முடிந்தவாறு காணப்படும்.

இதனுள், நுண்மை முதலிய நான்கும் காணப்படும். (2) காண்க. பழமொழி என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் இவ்விலக் கணம் பற்றிச் செய்ததே. (தொ. செய். 177 நச்.)

முதுமொழி (2) -

{Entry: O15a__457}

கூர்மையும், சொற் சுருங்கி யிருத்தலும், விழுப்பமும், எளிதில் பொருள் தெரிதலும் என்ற இந்நான்கும் விளங்கித்தோன்றி, அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள் ஒன்றை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனை, அப்பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதிவரும் முதுமொழி என்பர் புலவர். (தொ. பொ. 177 நச்.)

எ-டு : முதுமொழி (1)இல் காண்க.

‘ஏது நுதலிய முதுமொழி’ என்ற தலைப்பும் காண்க.

முப்பான் சீர் -

{Entry: O15a__458}

அசை 2, ஈரசை 4, மூவசை 8, நாலசை 16 - ஆக, 30. (சாமி. 153.)

மும்மூன்றாம் ஆவி இழிவு -

{Entry: O15a__459}

ஒன்பதாம் உயிராகிய ஐகாரக் குறுக்கம்.

எ-டு : ‘கண்கெண் டையைமருட்டும் காண்.’

சீர் முதற்கண் இரண்டு ஐகாரம் குறுகிக் குற்றெழுத்துக்களின் நீரவாய் நிரையசையாயின. (யா. க. 9 உரை.)

முரண் -

{Entry: O15a__460}

முரண்தொடை (தொ. பொ. 407 பேரா.)

முரண் அந்தாதி -

{Entry: O15a__461}

முதலடியின் இறுதியில் முரண்பட்ட பொருளில் அமைந்த சொல் அடுத்த அடியின் முதலில் அந்தாதித்து வரும் தொடை.

எ-டு : ‘சிறுமை கூர்ந்த யானையின் பெருமலை // பெருமலை அடுக்கம் சிறுதினைப் புனமே.’

பெருமலை என்பது அந்தாதித்து அடிமுரண் தொடைபட அமைந்தவாறு. (யா. க. 52 உரை. பக். 196)

முரண்அளபெடைத் தொடை -

{Entry: O15a__462}

ஈரடிகளிலும் தொடக்கச் சீரில் முரணான சொற்கள் வந்து அளபெழுவது.

எ-டு : ‘ சீஇறடி மாதர் சினத்தினைக் காண்குவல்
பேஎ ரெழில் கண்க ளிடை.’

சிறுமை, பெருமை : முரண். (யா. க. 41 உரை. பக். 168)

முரண் இயைபு -

{Entry: O15a__463}

இயைபுத் தொடை முரண்தொடையோடு இணைந்து வருவது.

எ-டு : ‘ இருளிற் (கு) எரிவிளக்(கு) என்றும் பகையே

அருளிற்( கு) அலைவாழ்க்கை என்றும் பகையே.’

இருள், விளக்கு; அருள், அலைவாழ்க்கை என்பன முரண்; பகையே, பகையே என வருவன இயைபு. இவ்விரண்டும் இணைந்து வந்தவாறு. (யா. க. 40 உரை)

முரண் இனக்குறள் வெண்பா -

{Entry: O15a__464}

அடி முதலில் முரண்தொடை அமைய வரும் குறள்வெண்பh.

எ-டு : ‘ இன்பம் விழையான் வினைவிழையான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (கு. 615) (யா. க. 59 உரை)

முரண்தொடை -

{Entry: O15a__465}

சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்பட்ட சொற் களைத் தொடுத்தல். (தொ. செய். 95 நச்.)

முரண்தொடையின் ஐவகை -

{Entry: O15a__466}

1. சொல்லொடு சொல் முரண் :

எ-டு : ‘செந்தொடைப் பகழி வாங்கலின் சினம்சிறந்து

கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’

செந்தொடை - செய்யதாகிய வண்ணம் இல்லை; நேரிது என்ற பொருளது.

கருங்கை - கருமை என்ற வண்ணம் இல்லை; கொன்று வாழும் கை என்ற பொருளது.

இங்குச் செம்மை, கருமை என்ற நிறப்பண்புகளான் முரணாமல், செம்மை கருமை என்ற சொற்களே முரணு தலின், இத்தொடை சொல்லொடு சொல் முரணும் முரண்தொடையாம்.

2. பொருளொடு பொருள் முரண் :

எ-டு : ‘ தீ மேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து

நீர் நசை பெறாஅ நெடுநல் யானை’

தீ என்ற பொருளுக்கு நீர் என்ற பொருள் மறுதலைப் பட்டதாகலின், இவை பொருளொடு பொருள் முரணுதல்.

3. சொல்லும் பொருளும், சொல்லொடு முரணுதல் -

எ-டு : ‘பெருமலைக் குறமகள் பிறிதோர்த்து நடுங்கலின்

சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு.’

பெருமை என்ற சொல்லும் உண்டு; மலை என்ற பொருளும் உண்டு. ஆயின், சிறுமை என்ற சொல்லே இரண்டாமடியில் உள்ளது. ஆகவே, பெருமை என்ற சொல்லும் மலை என்ற பொருளும், சிறுமை என்ற சொல்லொடு முரணின.

4. சொல்லும் பொருளும், பொருளொடு முரணுதல் :

எ-டு : ‘செந்தீ அன்ன சினத்த யானை

நீர்நசை பெறாஅக் கானல்

தேர்நசைஇ ஓடும் சுரனிறந் தோரே’

செந்தீ - செம்மையாகிய சொல்லும் உண்டு; தீயாகிய பொருளும் உண்டு.

‘நீர் நசைஇ’ என்புழி, நீர் என்ற பொருளே தீ என்ற பொருளொடு முரணியது. ஆகவே, செந்தீ என்ற சொல்லும் பொருளும், நீர் என்ற பொருளொடு முரணின.

5. சொல்லும் பொருளும், சொல்லொடும் பொருளொடும் முரணுதல்:

எ-டு : ‘செங்குரல் ஏனல் பைங்கிளி இரிய’

செங்குரல் என்புழி ‘குரல்’ என்ற பொருளும் உண்டு; செம்மை யாகிய நிறப்பண்புச்சொல்லும் உண்டு. ‘பைங்கிளி’ என்புழி யும் ‘கிளி’ என்ற பொருளும் உண்டு; பசுமையாகிய நிறப் பண்புச்சொல்லும் உண்டு. ஆகவே, சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியவாறு. (யா. க. 38 உரை)

முரண்தொடையின் மூவகை -

{Entry: O15a__467}

சொல் முரண், பொருள் முரண், சொல்லும் பொருளும் முரண் என்பன. (யா. க. 38 உரை)

முரண்தொடை விகற்பங்கள் -

{Entry: O15a__468}

இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என்பன.

எ-டு : ‘ சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு
சுருங்கிய நுசுப்பிற் பெருகு வடம் தாங்கிக்
குவிந்து சுணங் கரும்பிய கோதை விரிந்து
சிறி ய பெரிய நிகர் மலர்க் கோதைதன்’
வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணு ம்
இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியா(து)
என்றும் இன்னணம் ஆகுமதி,
பொன்திகழ் நெடுவேற் போர்வல் லோயே!‘

முதலேழடிகளிலும் இணைமுரண் முதலான ஏழும் முறையே வந்தவாறு. இவ்விகற்பம் அளவடிக் கண்ணேயே கொள்ளப் படும் என்பது. (யா. வி. 38 உரை.)

முரண் நிரல்நிறை -

{Entry: O15a__469}

முரண்பட்ட சொல்லையும் பொருளையும் வரிசையாக அமைத்தல்.

எ-டு : ‘பகல்செய்யும் செஞ்ஞாயிறும்

இரவுச் செய்யும் வெண்திங்களும்’ (மதுரைக். 7, 8)

பகல், இரவு; செம்மை, வெண்மை; ஞாயிறு, திங்கள் என முரண்பட்ட சொல்லும் பொருளும் நிரல்நிறையாக அமைந்த வாறு. (பொருள் என்றது, ஈண்டு முடிக்க வரும் சொல்லை என்க.) (யா. வி. பக். 388)

முரற்கை -

{Entry: O15a__470}

கலிப்பா. (தொ. செய். 70)

முரிநிலை -

{Entry: O15a__471}

இயற்றமிழில் தேவபாணியாய் இறுதியிற் பாடும் தரவு. (சிலப். 6 : 35 உரை)

முழுவிரளச் செந்தொடை -

{Entry: O15a__472}

அசை சீர் இசை இவை அடிதோறும் மாறிவருவது.

எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி

மயிலினம் அகவும் நாடன்

நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே’ . (யா .க. 50 உரை)

முற்கட்டு -

{Entry: O15a__473}

பாட்டின் தொடக்கத்திலுள்ள எடுப்பு (விறலிவிடு. 493) (L)

முற்சீர் -

{Entry: O15a__474}

முதற்சீர். (வீ. சோ. 107)

முற்பா -

{Entry: O15a__475}

நால்வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா. (சூடா. 29) (L)

முற்றடி -

{Entry: O15a__476}

தூக்குப்பட்டு முடியும் அடி. ‘முட்டடி’ என்று பேராசிரிய ரும் இளம்பூரணரும் பாடம் கொள்ப. முட்டடி நாற்சீரடி. (தொ.செய். 119 இள.) (தொ. செய். 123 நச்.)

முற்றியலுகரம் ஈற்றடி இறுதியில் வருதல் -

{Entry: O15a__477}

எ-டு : ‘இனத்துள்ள தாகும் அறிவு’ (கு. 454)
‘இன்னா(து) இனியார்ப்
பிரிவு’ (கு. 1158)
‘பேரறி வாளர்
துணிவு ’ (ஆசாரக் 19)
‘பாடறியா தானை
இரவு’
‘புன்கண் உடைத்தால்
புணர் வு’ (கு. 1152)
‘அஞ்சொல் மடவார்க்
கருளு
‘புனைமலர்த் தாரகலம்
புல்லு‘

அறிவு, பிரிவு, துணிவு, இரவு, புணர்வு, அருளு என்பன நிரைபு அசை; புல்லு என்பது நேர்பு அசை.

(இவ்வாறு முற்றியலுகரம் ஈற்றடியிறுதியில் வருதல் தொல் காப்பியனார்க்கு உடன்பாடன்று, பிற்பட்ட வழக்கேயாம்.)

(தொ. செய். 9 நச்.)

முற்றியலுகரம் உயிர் முதல்மொழி வருமிடத்துக் கெடுதல் -

{Entry: O15a__478}

முற்றியலுகரம் பெரும்பான்மையும் நிலைமொழித்தொழில் காரணமாகப் பெற்ற சாரியை உகர ஈறாக வருதலன்றி, இயல்பீற்றுச் சொல்லாக வருதல் அரிதாம். அதனால் அஃது உயிர்முதன்மொழி வந்தியையுங்கால் கெடும் என்பது. (தொ. செய். 4 ச. பால.)

முற்றியலுகரம் மொழி சிதைத்துக் கொள்ளப்படாமை -

{Entry: O15a__479}

முற்றியலுகரம் நிலைமொழித் தொழிலாகவோ, நிலை மொழி ஈறுகெட நின்ற உகரமாகவோ இருப்பின், உரியசைக் குப் பயன்படுமேயன்றி வருமொழி முதலிலுள்ள முற்றுக ரத்தை நிலைமொழியோடு இணைத்து உரியசை அமைக்கப் பயன்படுத்தல் கூடாது.

எ-டு : ‘நாணுத் தளை, இரவுத் துயில், விழவுத் தலைக் கொண்ட, சுறவுக் கொடி.’

நாண் என்பது உகரம் பெற்று ‘நாணு’ ஆயிற்று;

இரா, விழா, சுறா என்பன இரவு, விழவு, சுறவு என்றாயின.

இவை நிலைமொழித் தொழில்.

‘சுரும்புலவு நறுந்தொடையவள்,’ ‘கலனளவு நலனளவு’ என இவற்றுள், உலவும், அளவும் என்பன உலவு, அளவு என ஈறு கெட்டு முற்றுகர விதியீறாய் நின்றன.

இதுவும் நிலைமொழித் தொழில்.

நாணுத் தளை - நேர்பு நிரை

இரவுத் துயில் - நிரைபு நிரை

உலவு கடல் - நிரைபு நிரை

சுரும் புலவு - நிரை நிரைபு

நாண் + உடை + அரிவை - நாணுடை அரிவை.

நாணுடை என்பது நேர்பு நேர் அன்று; நேர் நிரையே யாம்.

ஆகவே, வருமொழி உகரத்தை இணைத்து உரியசை ஆக்குதல் கூடாது என்பது. (தொ. செய். 9 நச்.)

முற்றியலுகரமும் (குற்றியலுகரமும்) வருமொழியைச் சிதைத்து உரியசை கொண்டு நிற்றலில்லை.

அஃதாவது நாணுடையரிவை, பரன்முரம்பு, வார்முரசதிரும், வற்றுறு செய்தி, நீள்குருந்து - எனவரும் சீர்களிடத்து வருமொழியைச் சிதைத்து அவற்றின் முதல் நிற்கும் உகரத்தை வாங்கி நாணு டையரிவை, பரன்மு ரம்பு, வார்மு ரசதிரும், வற்று றுசெய்தி, நீள்கு ருந்து - என உரியசை கொள்ளப்படா.

(தொ. செய். 9 ச.பால.)

முற்று அளபெடை -

{Entry: O15a__480}

அளவடிக்கண் நாற்சீரினும் அளபெடை நிகழ்தல்.

எ-டு : ‘குராஅம் விராஅம் பராஅம் உராஅம்’ (யா. க. 48 உரை)

முற்று இயைபு -

{Entry: O15a__481}

அளவடியில் நான்கு சீரிலும் இயைபுத்தொடை வருவது. இறுதி எழுத்தேனும் அசையேனும் சொல்லேனும் சீர்களில் ஒன்றிவரத் தொடுப்பது. இயைபாம்.

எ-டு : ‘கண் ணும் புருவ மும் மென்தோ ளும் இம்மூன் றும்’

ஈற்றசை உம்மை இயைபுத்தொடையாக நாற்சீரிலும் வந்தவாறு. (யா. க. 48 உரை)

முற்று எதுகை -

{Entry: O15a__482}

அளவடிக்கண் நான்கு சீரிலும் எதுகை வருவது.

எ-டு : ‘க ல் லிவர் மு ல் லையும் மெ ல் லியலார் ப ல் லரும்பும்’

(யா. க. 48 உரை)

முற்றுத்தொடை -

{Entry: O15a__483}

நாற்சீரடியாகிய அளவடிக்கண் நான்கு சீர்களிலும் மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்ற தொடைகளின் விகற்பம் பெற்று வருதலாகிய சீர்இடை யமைந்த தொடை முற்றுத் தொடையாம். முதல் இரு சீரும் ஒருவகையான் முரணிப் பின் கடை இரு சீரும் பிறிதொருவகையான் முரணுதலும் முற்று முரணாம். ‘முற்றுமுரண்’ காண்க.

‘முற்று மோனை’ முதலியவற்றை அவ்வத்தலைப்புள் காண்க. (யா. க. 48 உரை)

முற்று நிரல்நிறை -

{Entry: O15a__484}

நாற்சீர்களிலும் நிரல்நிறை அமைய வருவது. முடிக்கும் சொற் களும் முடிக்கப்படும் சொற்களும் முறையான வரிசையால் அமைவது நிரல்நிறையாம்.

எ-டு : ‘அடல்வேல் அயில்நோக்கு நின்முகம் கண்டே
உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும்
தடமதியம் ஆமென்று தாம்.’

நின்முகம் கண்டு, கடல் உடலும்; கனையிருள் உடைந் தோடும்; ஆம்பல் மலரும்; பாம்பு பார்க்கும் - என நாற்சீர் களிலும் நிரல்நிறை அமைந்தவாறு. (யா. க. 95 உரை)

முற்று முடுகு வெண்பா -

{Entry: O15a__485}

நான்கடியும் முடுகுச் சந்தமாக வரும் வெண்பா. (காய்ச்சீரான் அன்றி, ‘கருவிளம்’ மிகவும் பயிலும் வெண்பாவில் இச்சந்தம் நிகழும்.) (சங். அக.)

முற்று முரண் -

{Entry: O15a__486}

அளவடிக்கண், நாற்சீரிலும் முரண்தொடை யமையப் பாடுவது.

எ-டு : ‘ நெடுந் தோள் குறுந் தொடி வீங்கு பிணி நெகிழ

(முதலிரு சீர்களும் தனிமுரண்; பின்னிரு சீர்களும் தனி முரண்) (யா. க. 48 உரை)

முற்றுமோனை -

{Entry: O15a__487}

அளவடிக்கண் நாற்சீரிலும் மோனைத்தொடை யமையப் பாடுவது.

எ-டு : ‘ ணியிழை மைத்தோள் ம்பசப்(பு) டைய’

(யா. வி. 48 உரை)

முறை நிரல்நிறை -

{Entry: O15a__488}

முடிக்கப்படும் சொற்களையும் முடிக்கும் சொற்களையும் வரிசையாக நிறுத்தி அம்முறை பிறழாமல் பொருள் கொள்ளும் பொருள்கோள்.

அடிநிரல்நிறையும், இணை பொழிப்பு முதலாய நிரல் நிறையும் அவ்வத் தலைப்புள் காண்க.

பொருள்கோடலைக் கருதியவழி இது பொருள்கோள்; செய்யுள் அணிநலம். கருதியவழி அணியாம் என்பது. (யா. க. 95 உரை)

முன்னம் -

{Entry: O15a__489}

யாதானும் ஓரிடத்து யாதானும் ஒரு மொழி தோன்றி யக்கால், அம்மொழியைச் சொல்லுதற்குரியாரும் கேட்டற் குரியாரும் இன்னார் என்று அறியுமாறு செய்யுளுள் அமைக் கப்பட்ட குறிப்பு.

‘யார் இவன் எம்கூந்தல் கொள்வான்?’ கலி. 89.

‘என் கூந்தலைத் தீண்டுகின்றவன் யார்?’ என்று கூறுபவள் தலைவி; அதனைக் கேட்பான் தலைவன் என்பது முன்னத்தான் அறியப்பட்டவாறு.

முன்னம் என்னும் உறுப்பின்றியும் செய்யுள் நிகழும். (தொ. செய். 207 பேரா.)

முன்னமாவது இடமும் செவ்வியும் தகுதியும் பற்றிய குறிப்பு. இம்முன்னம் பிழையாமல் தலைவன்தலைவியரொடு செவிலி, தோழி, பாங்கன், பரத்தை முதலியோர் கூற்று நிகழ்த்துவர். (தொ. செய். 194 ச. பால.)

முன்னுதல் இல் -

{Entry: O15a__490}

வரப்பெறா, புகா என்பது. (ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டு பாவிலும் முடுகியலடி மூன்றும் புகா.) (தொ. செய். 67 பேரா., நச்.)

மூவகைச் சீர்கள் -

{Entry: O15a__491}

இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர் என்பன. இவற்றுள் இயற்சீர் எல்லாச் செய்யுள்களிலும் இயன்று நடத்தலின் சிறப்புடைத் தாதலின் முற்கூறப்பட்டது. உரிச்சீர் எல்லாச் செய்யுட்கண் ணும் வருமெனினும், வெண்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்றலின் இடைக்கண் வைக்கப்பட்டது. பொதுச்சீர் அருகியன்றி வாராமையின் இறுதிக்கண் வைக்கப் பட்டது.

இனி, அவை ஈரசைச்சீர் மூவசைச்சீர் நாலசைச்சீர் என்னும் என்று முறைபற்றி வைக்கப்பட்டன எனினும் ஆம்.

தொல்காப்பியனார் நேர்பசை நிரைபசை கோடலின், நாலசைச் சீர் வேண்டார். காக்கைபாடினியார் முதலாயினார் நேர்பசை நிரைபசை கொள்ளாமையின் நாலசைச்சீர் கொண்டனர். யாப்பருங்கலம், காரிகை என்பன இவ்வகையன. பல்காயனார் முதலாயினோர் நேர்பு நிரைபு அசைகளையும் கொண்டு நாலசைச்சீரும் கொண்டனர்.

நேர்பசை நிரைபசை கோடல் நுண்ணுணர்வினார்க்கல்லது புலனாகாமையின், அவற்றை விடுத்து நாலசைச்சீர் கொள்ளப்பட்டது. (யா. க. 10 உரை.)

மூவசைச் சீர் -

{Entry: O15a__492}

நேர் நிரை நேர்பு நிரைபு என்ற நான்கு அசைகளையும் ஒன்றன்கீழ் ஒன்றாக நிறுத்தி, அவற்றின் முன் ஒருகால் நேரசையையும், ஒருகால் நிரையசையையும், ஒருகால் நேர்புஅசையையும் ஒருகால் நிரைபுஅசையையும் தந்து உறழின் 4 x 4 = 16 சீர்களாகும். இவ்வீரசைச்சீர் பதினாறன் இறுதியிலும் நேரசையை நிறுத்தின் நேரீற்று மூவசைச் சீர் 16 ஆகும்; நிரையசையை நிறுத்தின் நிரையீற்று மூவசைச்சீர் 16 ஆகும்; நேர்பசையை நிறுத்தின், நேர்பு ஈற்று மூவசைச்சீர் 16 ஆகும்; நிரைபசையை நிறுத்தின், நிரைபு ஈற்றுமூவசைச் சீர் 16 ஆகும். இவ்வாற்றான் மூவசைச் சீர் 64 ஆம். (தொ. செய். 20 நச்.)

இனி யாப்பருங்கல (12) விருத்தி உரை வருமாறு.

நேரசை நிரையசை என இரண்டசையானும் அமைந்த மூவகைச் சீர்கள் எட்டாம். நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என்னும் நான்கு இயற்சீர் இறுதியிலும் நேர் அசையையும் நிரையசையையும் முறையே கொணர்ந்து கூட்ட, நேரசையான் முடியும் மூவசைச்சீர் நான்கும், நிரையசையான் முடியும் மூவசைச்சீர் நான்கும் ஆம். நேர் இறுதியான மூவசைச் சீர் நான்கும் பெரும்பான்மையும் வெண்பாவிற்கே உரிமை பூண்டு நிற்றலின் வெண்பா உரிச்சீர் எனப்படும்; நிரை இறுதியான நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டு நிற்றலின் வஞ்சி உரிச்சீர் எனப்படும். இம்மூவசைச்சீர் எட்டும் இருவகைப் பாக்களுக்கும் பெரும்பான்மையும் உரிமை பூண்டு நிற்றலின் உரிச்சீர் எனப்பட்டன.

மூவசைச் சீர்கள் அறுபத்து நான்கு -

{Entry: O15a__493}

நேர் ஈற்று மூவசைச் சீர் 16, நிரை ஈற்று மூவசைச் சீர் 16, நேர்பு ஈற்று மூவசைச்சீர் 16, நிரைபு ஈற்று மூவசைச் சீர் 16 என 64 ஆமாறு அவ்வத்தலைப்புள் காண்க.

மூவசைச்சீர் முழுதொன்று இணையெதுகை அணி -

{Entry: O15a__494}

எ-டு : ‘துடியிடையார் பிடிநடையார் துணைமலையாம் இணைமுலையார்

அடிபிடியா மடிபடியா அணைந்தழிசாந் தகலத்தாய்’

துடியிடையார், பிடிநடையார் இவை மூவசைச்சீர்கள்

துணைமலையாம், இணைமுலையார் முழுதும் ஒன்றிவந்த

இணையெதுகை வகை } அணி.
அடிபிடியா, மடிபடியா

(மா. அ. பாடல் 410)

மூவெழுத்துச் சீர்கள் -

{Entry: O15a__495}

புளிமா, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய், நீடுகொடி என்பன பத்தாம். இவை முறையே நிரைநேர், நேர்நிரை, நிரை நிரை, நேர்பு நேர், நேர் நேர்பு, நேர் நிரைபு, நிரை நேர்பு, நிரைபு நேர், நேர் நேர்நேர் நேர்பு நிரை என்பன. இவற்றுள் முற்றுகரம் எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பத்தொடு நிரைபு என்ற முற்றியலுகர அசைச்சீர் (அரவு) சேர, மூவெழுத்துச் சீர் 11 ஆகும் (குற்றியலுகரம் போலவே முற்றியலுகரமும் கணக்கிடப்படலாகாது என்பர் வேங்கட ராஜுலு ரெட்டியார்). (தொ. செய். 41 நச்.)

மூன்றடிப்பா -

{Entry: O15a__496}

மூன்றடியான் இயன்ற ஆசிரியப்பா (ச் சிறுமை), சிந்தியல் வெண்பா என்பன. பிற, பாவினமாய் அடங்கிவிடும் என்பது.

மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை -

{Entry: O15a__497}

இரண்டாமெழுத்து ஒன்றாது, அடிதோறும் மூன்றாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.

எ-டு : ‘பவ மும் பொன்னும் குவைஇய முத்தின்

திக ரும் பீன்றபுன் னை.’

இவ்வடிகளில் மூன்றாமெழுத்து ஒன்றி வந்தமையும், இரண் டாம் எழுத்து உயிரெதுகையாய் நின்றமையும் காணப்படும். (யா. க. 36 உரை.)

மெய் மிக்கு வருதல் -

{Entry: O15a__498}

எ-டு : ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு’ (கு. 350) (யா. க. 2 உரை)

மெய்யின் மறுபெயர்கள் -

{Entry: O15a__499}

ஒற்று, உடம்பு, உறுப்பு என்பன. (யா. க. 2 உரை).

மெய்யுரை -

{Entry: O15a__500}

நூலுக்குப் பொருத்தமான உரை. (இறை. அ. 1. உரை.)

மெய்வசை -

{Entry: O15a__501}

ஒருவனைப் பற்றி உண்மையாகவே வசை தோன்றப் பாடுவது.

எ-டு : ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நன் மரம்.’ (மூதுரை. 12)

கல்வியறிவில்லாதவனையும் குறிப்பறியாதவனையும் ‘மரம்’ என்று பழித்தவாறு. (இ. வி. 753)

மெய்வாழ்த்து -

{Entry: O15a__502}

ஒருவனைப் பற்றி உண்மையாகவே வாழ்த்திக் கூறுவது.

எ-டு : ‘கார்நறு நீலம் கடிக்கயத்துள் வைகலும்

நீர்நிலை நின்ற பயன்கொலோ? - கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.’

நீலமலர் தவம்செய்து பாண்டியன் தன்னைச் சூட்டிக்கொள் ளும் வாய்ப்பினைப் பெற்றது என வெளிப்படையாக வாழ்த்தியவாறு. (இ. வி. 753)

மெல்லிசை வண்ணம் -

{Entry: O15a__503}

மெல்லெழுத்து மிகப் பெற்று வருவது.

எ-டு : ‘பொன்னி னன்ன புன்னைநுண் டாது’ (தொ. செய். 217)

இஃது அன்ன நடையும் தண்ணம் பறையும் போலவும், மணல்மேல் நடந்தாற் போலவும் வருவது. (யா. வி. பக். 415)

மெல்லின எதுகை -

{Entry: O15a__504}

அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்ப, இரண்டா மெழுத்தாகிய மெய் மெல்லினமெய்யாக இருப்பின், அவ்வெதுகை மெல்லின எதுகையாம்.

எ-டு : ‘அ ன் பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும்

ண் பென்னும் நாடாச் சிறப்பு’ (குறள் 74) (யா. க. 37 உரை)

மெல்லின நடை -

{Entry: O15a__505}

மெல்லெழுத்து மிகவும் வரச் செய்யுளைத் தொடுப்பது.

எ-டு : ‘ நன்னீ ரை வாழி யனிச்சமே நின்னினு

மென்னீ ரள் யாம்வீழ் பவள்’. (கு. 1111)

மெல்லெழுத்தே வரத் தொடுப்பது மிறைக்கவியாம்; இஃது அன்னதன்று. (யா. வி. பக். 209)

மெல்லின மோனை -

{Entry: O15a__506}

அடிகளின் முதற்கண் வந்த உயிர்மெய்யெழுத்துக்களில் மெய்கள் மெல்லின மெய்களாக இருப்ப, அவற்றின் மேல் ஏறிய உயிர்கள் வெவ்வேறாக இருப்பின் அம்மோனை மெல்லினமோனையாம்.

எ-டு : ‘ ஞா யிறு காயும் வெவ்வறை மருங்கின்

நே யம் உந்தத் தொடர்ந்தனள் போகி’

இதனுள் அடி முதற்கண் வந்த எழுத்துக்கள், உயிர்களால் ஊரப்பட்ட மெல்லின மெய்கள் என்ற இயைபு பற்றி, மெல்லின மோனை எனப்பட்டன. (யா. க. 37 உரை)

மெலித்தல் விகாரம் -

{Entry: O15a__507}

செய்யுட்கண் தொடைநயம் கருதி வல்லெழுத்து அதன் இனமாகிய மெல்லெழுத்தாகத் திரித்துக் கொள்ளப்படுதல்.

எ-டு : ‘த ண் டையின் இனக்கிளி கடிவோள்

பண்டையள் அல்லள் மான்நோக் கினளே’

இதன்கண், ‘தட்டை’ எனற்பாலது எதுகைத் தொடை நோக்கித்’ தண்டை என மெலித்தவாறு. (யா. க. 95 உரை)

மென்பா -

{Entry: O15a__508}

ஆசிரியப் பாவிற்கு ஒரு பெயர். (யா. வி. பக். 219)

மென்மை (2) -

{Entry: O15a__509}

எளிதிலே பொருள் தெரிதல். (தொ. செய். 177 நச்.)

(‘எண்மை’ என்பது பேராசிரியர் பாடம்)

மென்மை மிக்கு வருதல் -

{Entry: O15a__510}

எ-டு : ‘மணிநீரும் மண்ணு மலையு மணிநிழல்

காடு முடைய தரண்’ (கு. 742)

இதன்கண் மெல்லினம் மெய்யும் உயிர்மெய்யுமாக மிகுதியுற வந்தவாறு. (யா. க. 2 உரை(பக். 32)

மேற்கதுவாய்(த் தொடை) -

{Entry: O15a__511}

நாற்சீரடிக்கண், இரண்டாம் சீர்க்கண் இன்றி மற்ற எல்லாச் சீர்க்கண்ணும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற தொடை விகற்பம் பெற்று வருதலே சீரிடை அமைந்த தொடையாம். இயைபுக்கு ஈற்றுச்சீரையே முதற்சீராகக் கொண்டு கணக்கிடப் பெறும்.

எ-டு : ணைக்கால் நெய்தல் ண்போல் டிமலர்’ - மேற்கதுவாய் மோனை

‘க ண் டலங் கைதையொடு வி ண் டன மு ண் டகம்’ - மேற்கது வாய் எதுகை

வெளி யவும் வெற்பிடைக் கரிய வும் செய்ய வும்’ - மேற்கது வாய் முரன்

‘இருங்க ண் விசும்பின்க ண் மான்ற முகங் கா ண் - மேற்கதுவாய் இயைபு

கூஉ ம் புடைக்கலம் சு றாஅ றாஅ - மேற்கதுவாய் அளபெடை (யா. க. 46).

மேற்கதுவாய் நிரல்நிறை -

{Entry: O15a__512}

‘நிரல்நிறைத் தொடை விகற்பங்கள்’ காண்க.(யா. க. 95 உரை)

மேற்கோள் -

{Entry: O15a__513}

ஆசிரிய வசனமாகிய எடுத்துக்காட்டு. (நன். 9)

மொழிமாற்றுப் பொருள்கோள் -

{Entry: O15a__514}

அ. நாற்சீரடி இரண்டிலுள்ள சொற்களைப் பொருள் பொருந்துமாறு அறிந்து பிரித்து இணைத்துப் பொருள் கொள்ளுதல் சுண்ணமொழிமாற்று எனப்படும்.

எ-டு : ‘சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப’

சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து என ஈரடியிலுள்ள சொற்களைப் பொருள் பொருத்தமுறச் சுண்ணம் செய்து கூட்டுதல்.

ஆ. யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பி னும் ஓசையும் பொருளும் மாறாது வருவது அடிமறி மொழிமாற்று எனப்படும்.

எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாகக் கட்பனி வரலா னாவே

வேறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே’.

ஒவ்வோரடியிலும் கருத்துத் தனித்தனியே முடிந்துமாறுத லானும் ஏகாரத்தான் ஒவ்வோரடியும் முடிதலாலும் இப்பொருள்கோளுக்கு இப்பாடல் ஏற்றவாறு காண்க.

இ. இரண்டடி மொழிமாற்று எனவும்பட்டு இரண்டடிகளில் உள்ள சொற்களைப் பிரித்துப் பொருள் பொருத்தமுறக் கூட்டிப் பொருள் செய்வது அடிமொழிமாற்று எனப்படும்.

எ-டு : ‘ஆலத்து மேல குவளை குளத்துள

வாலின் நெடிய குரங்கு’.

ஆலத்துமேல வாலின் நெடிய குரங்கு, குவளை குளத்துள என இரண்டடியிலும் மொழி மாற்றியவாறு காண்க. (யா. க. 95 உரை)

மோனை அளபெடைத் தொடை -

{Entry: O15a__515}

சீர்களில் முதலெழுத்து ஒன்றி வந்து அளபெடுப்பது.

எ-டு : அரா அவின் மான அயாஅம் வெங் காமம்

அலாஅ லொன் றுண்டோ, பகை?’ (புனையப்பட்டது)

முதலடிக்கண், முதலாம் மூன்றாம் சீர்கள் முதலெழுத்து ஒன்றி வந்து ஆகாரம் அளபெடுத்து நின்றன; பொழிப்பு மோனை அளபெடை. அடிதோறும் முதற்சீர்கள் முத லெழுத்து ஒன்றிவந்து இரண்டாமெழுத்து ஆகாரம் அள பெழுந்தமையால் அடிமோனை அளபெடையும் அமைந்த வாறு. (யா. க. 41 உரை)

மோனை இயல்பு -

{Entry: O15a__516}

அ, ஆ, ஐ, ஒள; இ, ஈ, எ ஏ; உ ஊ ஒ ஓ - இவை தம்முள் ஒத்த மோனை எழுத்துக்கள். இனி இவற்றால் ஊரப்பட்ட மெய்யெழுத்துக்களும் இவ்வாறே கொள்ளப்படும். (க கா கை கௌ; கி, கீ, கெ, கே; கு, கூ, கொ, கோ - முதலாகக் கொள்க.)

இனி உயிர்மெய்யாக வரும் பிற வருக்கமோனையும் (ககரத்துக்குக் கி, கீ, கு, கூ, கெ, கே, கொ, கோ - போல்வன), ஒரு சொல் நடுவே வரும் உயிர்மெய் மோனையும், நிலையிடம் தவறி நிற்பனவும் ‘கள்ள மோனை’ என்று கடியப்படும்.

தக்க இடத்தே வருமோனை அரசாக நிற்கும் தகுதியுடையது. மோனை நலமில்லாத முத்தமிழ்ப்பாட்டு நாணமில்லா நங்கைக்கு ஒப்பாம். தவறிய மோனை, கலவிக்கு இசைந்த பின்னர் ஊடும் நங்கைக்கு ஒப்பாம். (தவறிய மோனை - ஒத்த மோனையாகாத வருக்க மோனை முதலியன.) (அறுவகை. மோனை இயல்பு 8 - 11)

மோனை இயைபுத்தொடை -

{Entry: O15a__517}

‘இயைபுத்தொடை மோனைத் தொடையொடும் கலந்து வருவது.

எ-டு : ‘ பூ ந்தண் பொழிலிடை வாரணம் துஞ்சும்

பூ ங்கண் அன்னை இல்லிடைத் துஞ்சும்

அடிமோனைத் தொடையோடு இயைபுத் தொடையும் சேர வந்தவாறு. (யா. க. 40 உரை)

மோனை இலக்கணம் -

{Entry: O15a__518}

ஓரடிக்கண்ணும் ஈரடிக்கண்ணும் தொடைகோடல் வேண்டு மாகலின், அடிகளின் முதலெழுத்து ஒரே எழுத்தாக வரத் தொடுக்கும் அடிமோனை ஈரடிகளில் கொள்ளப்படும். சீர்மோனை ஓரடிக்கண் கொள்ளப்படும். (தொ. செய். 92 நச்.)

மோனை இணைக் குறள் வெண்பா -

{Entry: O15a__519}

அடிமோனைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா.

எ-டு : ‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (கு. 267) (யா. க. 59 உரை)

மோனை எதுகை : கிளை எழுத்து ஐந்து -

{Entry: O15a__520}

வருக்கமோனை, வருக்க எதுகை, வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை - என்பன. (தொ. செய். 94 நச்.)

மோனை, எதுகை : சொல்லாராய்ச்சி -

{Entry: O15a__521}

முன்னை என்னும் இயற்சொல் மோனை எனத் திரிந்து இலக்கணக் குறியீட்டுச் சொல்லாயிற்று.

எதிர்கை என்னும் இயற்சொல் திரிக்கப்பெற்று எதுகை என இலக்கணக் குறியீடாக நின்றது. (தொ. செய். 92, 93 ச. பால.)

மோனைத் தொடை விகற்பம் -

{Entry: O15a__522}

சீர்தோறும் முதற்கண் வந்த எழுத்தே வரின் சீர்மோனையாம்.

அளவடிக்கண்ணேயே கொள்ளப்படும் இச்சீர்மோனை எழுவகைத்து. அவை இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்பன.

எ-டு : ‘ ணிமலர் சோகின் தளிர்நலம் சுவற்றி

ரிக்குரற் கிண்கிணி ரற்றும் சீறடி

ம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் கற்றி

கன்ற ல்குல் ம்நுண் மருங்குல்

ரும்பிய கொங்கை வ்வளை மைத்தோள்

விர்மதி னைய திருநுதல் ரிவை

யில்வேல் னுக்கி ம்(பு)அலைத்(து) மர்ந்த

கருங்கயல் நெடுங்கண் நோக்கமென்

திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே’

இந்நேரிசையாசிரியப்பாவின் முதலேழடிக் கண்ணும் இணை மோனை முதலிய ஏழும் முறையே வந்தவாறு ‘இணை மோனை’ முதலியவற்றை அவ்வத்தலைப்புள் காண்க. (யா. க. 35 உரை)

மோனை முரண் -

{Entry: O15a__523}

மோனையும் முரணும் கலந்துவரும் தொடை.

எ-டு : ‘சொல்லுப சொல்லப் பொறுப்பவே; யாதொன்றும்

சொல்லாத சொல்லப் பொறா.’

இதன்கண், மோனையும் முரணும் அடிமுதற்கண்ணேயே அமைந்தமையால், மோனைமுரணாம்.’ (யா. க. 53 உரை).

மோனை வகைகள் -

{Entry: O15a__524}

மோனையானது அடி, இணை, பொழிப்பு, ஒருஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என எண்வகைப்படும். இவை நாற்சீரடியாகும் ஆசிரியம், வெண்பா, கலி என்ற மூன்று பாக்களிலும் காணப்படும்.

தன்னொடு தான் தொடுத்த கட்டளை அடிமோனை:

கா ன மஞ்ஞை ஈன்ற முட்டை

கா த லின்றி வீசு மந்தி’

(ஈரடியும் எழுத்தொத்தமை காண்க.)

பிறவடி தொடுத்த கட்டளை அடிமோனை:

கோ தை மார்பிற் கோதை யானும்

கோ தையைப் புணர்ந்தோர் கோதை யானும்’

(ஈரடியும் எழுத்தொவ்வாமை காண்க.) (புறநா. 48)

இருவகை அடியும் தொடுத்த அடிமோனை:

யா ண்டும் காணேன் மாண்டக் கோனை

யா னுமோர் ஆடுகள மகளே என்கை (குறுந். 31)

(முதலடி கட்டளை; ஏனையது சீர்வகை)

சீர்வகையடியின் அடிமோனை

ண்டற் கானற் குருகினம் ஒலிப்பக்

ரையா டலவன் அளைவயின் செறிய’ (அகநா. 260)

கட்டளை இணைமோனை:

வவுமதி ருவின் ஓங்கல் வெண்குடை’ (புறநா. 3)

சீர் வகை இணை மோனை :

லகம் வப்ப வலனேர்பு திரிதரு’ (முருகு. 1)

கட்டளைப் பொழிப்பு மோனை:

செ றுநர்த் தேய்த்த செ ல்லுறழ் தடக்கை’ (முருகு. 5)

சீர்வகைப் பொழிப்பு மோனை :

வெ யிலுருப் புற்ற வெ ம்பரல் கிழிப்ப’ (சிறுபாண். 8)

கட்டளை ஒரூஉ மோனை:

டாஅது பனிபடு நெடுவரை டக்கும்’ (புறநா. 6)

சீர்வகை ஒரூஉ மோனை:

ல்லா தவரும் நனிநல்லர் ற்றார்முன்’ (கு. 403)

கட்டளைக் கூழைமோனை:

வா னம் வா ய்த்த வா ங்குகதிர் வரகின்’ (முல்லைப். 98)

சீர்வகைக் கூழைமோனை:

டக்கண் யிலியல் றலி யாங்கு’ (புறநா. 373)

கட்டளை மேற்கதுவாய் மோனை:

ந்திற் பிணிப்பர் ளிற்றைக் தம்தவிர’ (நான்மணி. 10)

சீர்வகை மேற்கதுவாய் மோனை:

கு ளகரை யாத்த கு றுங்கால் கு ரம்பை’ (பெரும். 148)

கட்டளைக் கீழ்க்கதுவாய் மோனை:

ல்லை ம்மொடு கழிப்பி ல்லுற’ (அகநா. 200)

சீர்வகைக் கீழ்க்கதுவாய் மோனை:

ல்லா(து) ல்லும் என்றலும் ல்லுவ(து)’ (புறநா. 196)

கட்டளை முற்று மோனை:

ற்க சடறக் ற்பவை ற்றபின்’ (கு. 391)

சீர்வகை முற்று மோனை:

து ப்பார்க்குத் து ப்பாய து ப்பாக்கித் து ப்பார்க்கு’ (கு. 12)

(தொ. செய். 92 நச்.)

ய section: 14 entries

யாத்த சீர் -

{Entry: O15a__525}

பொருளைப் பெறத் தொடர்ந்து நிற்கும் சீர் என்பது. அசை பல தொடர்ந்து சீராங்கால், அவ்வசையும், தத்தம் வகையால் பொருள் பெற்று நிற்றலும், அவ்வாறன்றிச் சீர் முழுதும் ஒரு சொல்லாங்கால் அவ் அசை பொருள் பெறாது நிற்றலும் அமையும். தேமா என்ற வாய்பாட்டில் தே - மா - என்ற இரண்டசைகளும் பொருள் பெற்றவை. ‘சாத்தன்’ என்ப தன்கண், சாத் - தன் - என்ற தனித்தனி அசைகள் பொருள் பெறாது, அவை தொடர்ந்து சீராகியவழியே பொருள் பெறும். பொருள் பெறுதலால் அசைக்குச் சிறப்போ பெறாமையால் இழிவோ இல்லை.

‘யாத்த சீர்’ இவ்வகையால், அசையும் தனித்தனியே பொருள் பெறுவனவும், அசைகள் பொருளின்றிச் சீராய் இயைந்த வழியே பொருள் பெறுவனவும் என இருவகைப்படும். (தொ. செய். 1 பேரா.)

யதி -

{Entry: O15a__526}

1. சீரோசை முடியுமிடம் (தண்டி. 113 உரை). 2. தாளப்பிர மாணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது (பரத. தாள. 25). 3. மோனை. 4. உரைநடையில் நிறுத்திப் படிக்குமிடம் (யாழ். அக.) ( L)

யாப்பதிகாரம் என்ற பெயர் -

{Entry: O15a__527}

வீரசோழியம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் முதலிய நூல்களில் செய்யுள் பற்றிய பகுதி யாப்பதிகாரம் என்ற பெயர் பெறும்.

எழுத்தினும் சொல்லினும் வழக்கிற்கும் செய்யுட்கும் வேண்டு வன விராய்க் கூறி, பொருளதிகாரத்துள் முதல் ஏழு இயல்க ளான் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிய தொல்காப்பியனார் செய்யுளியலில் அப்பொருள் பற்றிய செய்யுள் கூறினார். பொருளதிகாரத்து முதல் ஏழு இயல் களும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொது. செய்யுளியல் செய்யுட்கே உரியது. இதனை யாப்பதிகாரமெனப் பெயரிட் டால், செய்யுள் வழக்கல்லாத உலகவழக்குப் பற்றிய செய்தி களைத் தொகுத்துக் கூறும் பகுதிக்கு வழக்கதிகாரம் எனப் பெயரிடல் வேண்டும். அங்ஙனம் கூறாமையின், செய்யுள் பற்றிய பகுதியை யாப்பதிகாரம் என்ற தனிப்படலமாகக் கொள்ளாமல், செய்யுளியல் என்ற பெயரால் பொருளதி காரத்தின் ஒரு பகுதியாகக் கோடலே தொல்காப்பியனார் கருத்தாகும். (தொ. செய். 1 பேரா.)

யாப்பருங்கலஉரை கூறும் தொடைகள் -

{Entry: O15a__528}

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந் தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித் தொடை எனத் தொகைவகையான் 8 ஆம்.

தலையாகு மோனை, இடையாகு மோனை, கடையாகு மோனை; தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை; சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண், மோனை முரண், எதுகை முரண், செம்முரண்; மோனை இயைபு, எதுகை இயைபு, முரண் இயைபு, அளபெடை இயைபு, மயக்க இயைபு, செவ்வியைபு; மோனை அளபெடை, எதுகை அளபெடை, முரண் அளபெடை, மயக்கு அளபெடை, செவ்வளபெடை; இயற்செந்தொடை, மருட் செந்தொடை; ஒரு பொருள் இரட்டை, இருபொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, இருமுற்று இரட்டை; எழுத்து அந்தாதி, அசை அந்தாதி, சீர் அந்தாதி, அடி அந்தாதி, மயக்க அந்தாதி, இடையீட்டு அந்தாதி - என வகையாகிய நிலையான் 35 ஆம்.

(அடி தோறும் முதற்கண் நிகழ்வதாகிய) அடி, இணை - பொழிப்பு - ஒரூஉ - கூழை - மேற்கதுவாய் - கீழ்க்கதுவாய் - முற்று - கடையிணை - பின் - இடைப்புணர் - கடைக்கூழை - என்னும் இவ்விகற்பங்கள், (அடிதோறும் இறுதிக்கண் நிகழ்வதாகிய) கடை என்னும் இத்திறம் பதின்மூன்றனையும் மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் தொடை. ஐந்தனோடும் உறழவே வருவன (13 X 5) = 65; மற்றும் அசை விரளச் செந்தொடை, சீர் விரளச் செந்தொடை, இசை விரளச் செந்தொடை, முற்று விரளச் செந்தொடை; குறையீற்றுப் பலபொருளிரட்டை, நிறையீற்றுப் பலபொரு ளிரட்டை, ஒரு பொருளிரட்டை, நிறையீற்று ஒரு பொருளி ரட்டை, குறையீற்று முற்றிரட்டை, நிறையீற்று முற்றிரட்டை; மண்டில எழுத்தந்தாதி, செந்நடை. எழுத்தந்தாதி, மண்டில அசையந்தாதி, செந்நடை அசையந்தாதி, மண்டிலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டில அடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டில மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, மண்டில இடையீட்டந்தாதி, செந்நடை இடையீட்டந்தாதி; எனச் செந்தொடையும் இரட்டைத் தொடையும் அந்தாதித் தொடையும் விகற்பித்து வருவன 20 ; ஆக விரிவகையான் 85 ஆம். (யா. க. (சிறப்புப் பாயிரம்) உரை)

யாப்பருங்கலஉரை நாலசைச் சீரை நீக்கக் கூறும் ஏழு நயங்கள் -

{Entry: O15a__529}

‘நாலசைச் சீர் வாராமல் காக்கும் வழிகள்’ என்ற தலைப்புள் காண்க.

யாப்பியல் -

{Entry: O15a__530}

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, முதுசொல், அங்கதம் அல்லது குறிப்புமொழி என்பன பற்றிய செய்திகளை விளக்கிக்கூறும் இலக்கணப் பகுதி. பாட்டு என்பது ஓசையும் அடிவரையறையும் உடையது; ஏனைய செய்யுட்களுக்கு அடிவரையறை இல்லை.

யாப்பின் உறுப்புகள் -

{Entry: O15a__531}

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்னும் இவ்வேழுமாம். இவற்றொடு புணர்ந்து யாப்புக் குற்றமின்றி நடைபெறுவது. முப்பத்திரண்டு உறுப்பில் தீர்ந்து மக்கள் சட்டகம் (-உடல்) இல்லாதவாறு போல, இவ்வேழுறுப்பின் தீர்ந்து யாப்பு இல்லையாம். ஆகவே, இவ்வுறுப்புக்களைக் கூறவே, அவற்றது கூட்டமாய் அமைந்த உறுப்பியாகிய யாப்பும் அடங்கும். (யா. க. 1 உரை)

யாப்பின் பிறபெயர்கள் -

{Entry: O15a__532}

பாட்டு, தூக்கு, செய்யுள், தொடர்பு என்பன.(யா. க. பாயிர உரை)

யாப்பினும் பொருளிலும் வேற்றுமையுடைத்து ஆதல் -

{Entry: O15a__533}

தரவின்றாகித் தாழிசை பெறுதல், தாழிசை யின்றித் தரவுடைத்தாதல், எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றுதல், அடக்கியலின்றி அடி நிமிர்ந் தொழுகுதல் என்பன தவிர, ஏனைய வகையில் யாப்பினானும் பொருளினானும் வேற்று மையுடையதாய் வருதல். அவை வருமாறு.

1. இருசீர் முதல் எண்சீர்காறும் வந்த அடி நான்காகி வருதல் :

எ-டு : ‘நெய்யொடு தீயொக்கச்

செய்யானைச் சேர்ந்தார்க்குப்

பொய்யாத உள்ளமே

மெய்யாதல் வேண்டுமே.’

இது குறளடி நான்கான் வந்தது.

‘மையணி கண்டனை வானோர்

ஐயனை ஆயிரம் பேழ்வாய்ப்

பையர வம்பல பூணும்

மெய்யனை மேயது வீடே.’

இது சிந்தடி நான்கான் வந்தது.

‘வென்றான் வினையின் தொகையாய்வி ரிந்து தன்கண்

ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும்

சென்றான் திகழும் சுடர்சூழொளி மூர்த்தி யாகி

நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்.’

இது நெடிலடி நான்கான் வந்தது. (சூளா. காப்பு.)

‘மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாணமுழுது’ (சூளா. துறவு. 64)

இது கொச்சகம் போல் அடுக்கி வாராது, தாழம்பட்ட ஓசையுடைய தரவு கொச்சகம்.

2. அவற்றுள் பிற அடி விராய் வருதல் :

எ-டு : ‘ஒரு வான்யா றோடுச டாடவிப்

பெரு நாகமே பூணும் பெருமான்

அரு வானா னாயினு மன்பர்க்

குரு வாயினான் உள்ளத்தி னுள்ளே.’

இது நிரையசைச்சீர் முதற்கண் வந்த அளவடி நான்காய்ப் பிற அடி விராஅயது.

3. பா மயங்கி வருதல் :

எ-டு : ‘முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகும் ஏவல்செய மொழிசெய் கோமான்

வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன் தாக்கரிய வைவேல் பாடிக்

கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்

இலங்குவா ளிரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்

தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்

பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்

விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.’

இது தெய்வம் பற்றாது மதங்கியின் ஆடல் பற்றிய புறப் பொருளதாய் அடி ஒவ்வாது பலஅடி வந்து பா மயங்கியது.

‘தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு

படந்தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர

வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட

நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே.’

இது நான்கடியும் ஒத்துப் பா மயங்கி வந்தது.

4. ஈரடியான் வருவனவற்றுள் ஈற்றடிமிக்கும் குறைந்தும் குறையாதும் வந்து இயலசைச் சீர் பெற்று வருதல்:

எ-டு : ‘கங்கை சூடிய கபாலிநின் அடியிணை

தங்கு நெஞ்சினர் தளர்வுறு பிறவியை நீப்பர்.’

இஃது ஈரடியாய் ஈற்றடி மிக்கது.

‘புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்த!

நினையடி பரவுதும் யாம்.’

இஃது ஈரடியாய் ஈற்றடி குறைந்தது.

‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.’

இஃது ஈரடியாய் ஈற்றடி குறையாது வந்தது. இவை மூன்றிலும் இயலசைச்சீர் அடிதோறும் வந்தது.

5. ஓசையும் பொருளும் இனிதாகாது வருதல்:

எ-டு : ‘அறுவர்க் கறுவரைப் பெற்றும் கவுந்தி

மறுவறு பத்தினி போல்வை கினீரே.’

6. ஈரடிச்செய்யுள் முடிந்து நிற்கவும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருதல் :

எ-டு : ‘கொன்றைசேர் சடைமுடியோன் கொந்தழல்போல் மேனியோன்

ஒன்றிய யெண்களை ஓவாதே யுள்ளுக;

செல்கதி யின்றிச் சிவகதி சேர்வதோர்

நல்லறி வெய்துது நாமே.’

இஃது ஈரடி யிற்றதன்மேல் ஈற்றடியிரண்டு மிக்கு வந்து ஒன்று உட்பட்டது.

7. மூவடியான் வருவனவற்றுள் ஈற்றடி குறைந்தும், முதலடி மிக்கும், இடையடி குறைந்தும், இறுதியடி மிக்கும், மூன்றடி யில் குறையாதும் பிறவாறாகவும் வருதல்:

எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்.’

இது மூன்றடியான் வந்து ஈற்றடி குறைந்து அசைச்சீரான் முடிந்தது.

‘தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம்

யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்

பீலிபோற் சாய்ந்து விடும்பிளிற்றி யாங்கே.’

இது முதலடி மிக்கது.

‘பூண்ட பறையறையப் பூத மருள

(நீண்ட சடையா னாடுமே)

நீண்ட சடையான் ஆடு மென்ப

மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.’

இஃது இடையடி குறைந்து இறுதியடி மிக்கது; கந்திருவ மார்க்கத்தான் இடை மடக்கி நான்கடியும் ஆம்.

8. இரண்டும் மூன்றும் நான்குமாகிய அடியுள் ஈற்றடி குறைதல்:

எ-டு : ‘புனைமலர்......... யாம்’ என்பது ஈரடியாய் ஈற்றடி குறைந்தது.

9. ஈற்றடி குறையாதவழி இயலசைச் சீர் அடிதோறும் வருதல்:

‘அறுவர்க் கறுவரை ....... னீரே’ என்பது ஈரடியாய்க் குறையாது அடிதோறும் இயலசைச் சீர் பெற்றது.

10. மூவடி இற்றபின், ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்குவருதல்:

எ-டு : ‘பிறையணிந்த சடைமுடியோன் பிஞ்ஞகன் பெம்மான்

கறையணிந்த கண்டத்தான் கையிலங்கு சூலத்

திறையணிந்த நெஞ்சினோர்க் கின்றாம் பிறவி;

இம்மைப் பிணியும் இயலும் பசியொடு

தம்மைத் துறந்திடும் தாவில் புகழுளதாம்.’

இது மூன்றடி இற்றதன்மேல் இரண்டடி வந்தது.

11. நான்கடியாய் வருவனவற்றுள், முதல் இடை கடையில் குறைந்து வருதல் :

எ-டு : ‘சதுர்முக ஒருவ!நின் சரணடைந்தேம்

முதிர்மிகு நீருள்நந்து மிவ்வங்க நாவாய்

திருவுறு நிலைமைத்தாய்ப் போதெனக் கூறிநிற்பார்

அதிர்வன ரிருகையு மாற்றுறக் கூப்பி நிற்பார்.’

இது நான்கடியாய் முதலடி குறைந்தது.

‘தனுவெழ அரிவையைத் தகுமணம் புணர்ப்பின்

முனிவுறு தொழிலினை மூளாள்

நனிதவிர்த் திலர்க்கிடு நாடொறு நாடொறும்

கனியென இனியள்முன் கலந்தமற் றவர்க்கே’

இஃது இரண்டாமடி குறைந்தது.

அம் முதல் இடை கடைக்கண்ணே ஓரடியும் ஈரடியும் சீர் மிக்கு வருதல் :

எ-டு : ‘வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை

கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போல்

பண்டணி யாகப் பலர்தொழும் கங்கை நீர்வைத்தால்

உண்டணி கொண்டநஞ் சுண்பார்க் கமிழ்தா(கு)மே.’

இது நான்கடியாய், அளவடியிரண்டும் ஐஞ்சீரடி யிரண்டும் வந்தது.

‘கண்டெழப் பாவை தனிக்கரம் பிடிப்பா ராயிற்

கொண்டவற் பேணிக் குடிக்கு விளக்காகும்

நெண்டொழி நெடுமானை தன்னை நீங்கிப்போய்

மற்றொரு குழகன் தன்னையே.’

இது முதலடி மிக்கது.

‘போதுறு முக்குடைப் பொன்னெயி லொருவன்

தாதுறு தாமரை யடியே

தாதுறு தாமரை அடியடைந் தாரெனில்

தீதுறு தீவினை யிலரே.’

இது சில அடி குறைந்து இடைமடக்கிப் பிறவாறாயிற்று.

12. நான்கடி இற்றபின், ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருதல் :

எ-டு : ‘வேயே திரள்மென்தோள் வில்லே கொடும்புருவம்

வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி

நோயே முலைசுமப்ப என்றார்க் கருகிருந்தார்

ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்

எரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்.’ (சீவக. 654)

இது நான்கடிச் செய்யுள் இற்றபின் ஈற்றடி ஒன்று மிக்கு வந்தது.

13. நான்கடி இற்றபின், ஈற்றடி ஒன்று மிக்கு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருதல் :

எ-டு : ‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகையளந்த

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போத்து

சோவரணம் போர் மடியத் தொல்லிலங்கைக் கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?’

‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் கனிவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?’

‘மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?

நாராய ணாஎன்னா நாவென்ன நாவே?’ (சிலப். ஆய்ச்சியர் குரவை.)

14. பத்து அடுக்கி ஒரு பொருள்மேல் பதிகப் பாட்டாய் வருதல் :

எ-டு : ‘தேவாரம், திவ்விய பிரபந்தம், திருவாசகம் முதலிய வற்றுள் இப்பாடல் காணப்படும். இவற்றுள் ஈரடி மேல் இரண்டடி வைப்பும், நாலடிமேல் ஈரடி வைப்பும் (சம்பந்தர் தேவாரம்), நாலடிமேல் ஓரடி வைப்பும் (அப்பர் தேவாரம், ‘மாதர்ப் பிறைக் கண்ணி யானை’ என்னும் பதிகம்). ஒருபொருள்மேல் பத்தடுக்கி வந்தவாறு காண்க. (பதினொருபாடல் வருவனவும் கொள்க.)

15. அளவியலின் வேறுபட்டு வருவது :

எ-டு : முன்னர்க் காட்டிய பாடல்களுள்ளே காணப்படும்.

16. ஐந்தடியான் வருவனவற்றுள் ஈற்றடி குறைந்து வருவது :

எ-டு : ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்

உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன்

செறிவுறு மெழிலினர் சிறந்தவ ரிவர்நமக்(கு)

அறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்

பிறபிற நிகழ்வன பின்’

17. ஐந்தடி இற்றபின் ஓரடியும் ஈரடியும் மிக்கு வருவது :

எ-டு : ‘வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்

ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின்!

ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க!

பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி

காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?’

‘கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்

ஒள்ளெரி உண்ணுமிவ் வூர்என்ற தொருகுரல்.’ (சிலப். துன்பமாலை)

இஃது ஐந்தடிச் செய்யுள் முடிந்தபின், ஈரடி மிக்கது.

18. முச்சீரான் இற்றுச் சிலசீர் மிக்கு வருதல் :

எ-டு : ‘கோழியும் கூவின குக்கில் குரல்காட்டும்

தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ!

ஆழிசூழ் வையத்தெம் அண்ணல் அடியேத்திக்

கூழை நனையக் குடைதும் குளிர்புனல்

ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்!’

19. ஆறு முதலிய அடிகளான் வருதல் :

எ-டு : பாவைப்பாட்டு எட்டடியான் வருவன.

20. கடவுட்பொருள் தொடர்நிலைகளாக வருதல்.

21. பலதரவும் தாழிசையுமாகி இடைமிடையச் செய்தல்.

22. அடக்கியலின்றி அடிநிமிர்ந்து பின் அடக்கியல் பெற்று வருதல்.

23. புறப்பொருளான் வருதல்.

24. கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கி வருதல் என்னு மிவை போல்வன. (தொ. செய். 149 நச்.)

யாப்பு -

{Entry: O15a__534}

பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்க ளாலும், செய்யுளும் உரைநடையும் என இருவகை நடையில் படைக்கப்படும் இலக்கிய வடிவத்தை, இயற்றத்தகு முறை யானே, மாத்திரை - எழுத்து - அசை - சீர் - தளை - அடி - தொடை - நோக்கு - ஓசை - வண்ணம் - என்னும் உறுப்புக்க ளொடு வனப்பும் அமைந்துவரத் தொடுப்பது யாப்பு எனப்படும். (தென். யாப். 1)

யாப்பு என்ற செய்யுள் உறுப்பு -

{Entry: O15a__535}

எழுத்து முதலாக அசையும் சீரும் ஒன்றாகத் தொடர்ந்து அமைந்த அடியிலே, தான் குறிப்பிடக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டிப் பொருள் செய்யாமல், அவ்வப் பொருள் அவ்வவ் அடியிலேயே முற்றுப்பெறுமாறு செய்தல்.

எ-டு : ‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து தீரத் தீரும்;

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே.’

இஃது ஆசிரியம்.

‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்;

சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2)

இது வெண்பா.

‘அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்

பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப்

பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநங் காதலர்

வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி’. (கலி : 11)

இது கலிப்பா.

‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

தற்பாடிய தளியுணவின்

புட்டேம்பப் புயன்மாறி

வான்பொய்ப்பினும் தான்பொய்யா

மலைத்தலைஇய கடற்காவிரி’ (பட். 1-6)

இது வஞ்சி.

இவ்வாறு இந்நால்வகைச் செய்யுட்கண் முடியும் துணையும். அடிதோறும் குறித்த பொருளை முடிய நாட்டியவாறு காணப்படும்.

இரு சீரானும் முச்சீரானும் குறித்த பொருளை முடிப்பனவும், அங்ஙனம் முடித்த பிறகும் அச்சீரை மேல் வருகின்ற அடியொடு பொருள் முடியச் செய்வனவும், சிறுபான்மை யாப்பினுள் அடங்கும்.

‘மண்டிலமழுங்க, மலைநிறம்கிளர - இருசீர்

வண்டினம் மலர் பாய்ந் தூத, மீமிசை - முச்சீர்

கண்டற் கானற் குருகின மொலிப்ப’ - நா ற்சீர் (அகநா. 260)

என இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானும் குறித்த பொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.)

முச்சீரான் முடிய நாட்டுவன வெண்பாவிற் காணப்படும்.(நச்.)

‘முயற்கோடு சீவி முதுவிசும்பு போழ்ந்தான்’

என எழுத்தும் அசையும் சீரும் பொருளிலவாகி வருதல் யாப்பெனப்படாது. பொருத்தமில்லா நிரல்நிறையமைப்பும் யாப்பெனப் படாது. (பேரா.)

யாப்புப்படலம் -

{Entry: O15a__536}

வீரசோழியத்துள் பொருளதிகாரமாகிய பொருட்பட லத்தை அடுத்த படலம்; ஐந்திலக்கணம் கூறும் நூலுள் இது நான்காவதாக உள்ளது.

யாப்புறுப்பின் பகுதி -

{Entry: O15a__537}

குறித்த பொருளை அவ்வவ் வடிக்கண் முடிய நாட்டும் யாப்பு என்ற உறுப்பு, அவ்வுறுப்பை யுடைய செய்யுள்களிடத்தது ஆதலின், அச்செய்யுள்களின் பெயராகிய பாட்டு, நூல், உரை, வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவற் றொடு கலந்து, பாட்டியாப்பு, நூல்யாப்பு, உரையாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல் யாப்பு எனவும் வழங்கப்பட்டு அவ்வச் செய்யுள்களையும் குறிக்கும். இவற்றுள், பாட்டு என்பன அடிவரையறை யுடையன; ஏனையவற்றுக்கு அடிவரையறை இன்று. (தொ. பொ. 79 நச்.)

எனவே, யாப்பு பாட்டுயாப்பு முதலாக எழு வகைப்படும். (75 இள.)

யாற்றுநீர்ப் பொருள்கோள் -

{Entry: O15a__538}

அடிதோறும் பொருள் அற்று மீளாது சேர்வது.

எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;

விலைப்பாலின் கொண்டூன் மிசைதலும் குற்றம்;

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;

கொலைப்பாலும் குற்றமே யாம்’. (நான்மணி. 100)

இப்பாடலில் பொருள் அடிதோறும் தனித்தனியே முடிந்தது.

இனிப் பிற நூலார், தொடக்க முதல் இறுதிவரை நேராக (மடங்காது ஒரு முகமாகவே யாறு ஒழுகுமாறு போல)ப் பொருள் கொள்ளப்படுவதே இப்பொருள்கோள் என வேண்டுவர்.

எ-டு : ‘சொல், அருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருஇருந்(து), ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூற்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’ (சீவக. 53)

நெற்பயிர்கள் (சொல்) கரு இருந்து, ஈன்று, தலை நிறுவி, இறைஞ்சிக் காய்த்தன என மடங்காது ஒரு முகமாகப் பாடல் பொருள்கொள்ளக் கிடந்தவாறு. (யா. க. 95 உரை)

ல section: 1 entries

லகு -

{Entry: O15a__539}

தனிக்குற்றெழுத்து ‘லகு’ வாகும் இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று. அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் ‘குரு’ வாக ஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. வி. பக். 476)

வ section: 177 entries

வகுத்தனர் கொள்ளுதல் -

{Entry: O15a__540}

ஆராய்ந்து கொள்ளுதல். (தொ. செய். 113 நச்.)

வகை நிலைக் கொச்சகம் -

{Entry: O15a__541}

கொச்சகம் வகை. (சீவக. 2514 உரை)

வகையுளி -

{Entry: O15a__542}

அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் வண்ணமும் செய்யுட்கு அழியாத நிலையில், முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றம் உண்டாகாத வாறு வண்ணம் அறுத்தல்.

எ-டு : ‘நிலமிசை நீடுவாழ் வார்’

‘பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும்

ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால்’

‘அழலா னாவெங் கண்ணே தெய்யோ’

‘நீடு வாழ்வார்’ என்ற சொற்களை ‘நீடுவாழ்’ எனவும் ‘வார்’ எனவும் இருசீர்களாகக் கணக்கிடுவதும்,

‘பாடு நர்க்கும்’ முதலியவற்றை, டுகர நகரங்கள் பிரிந்தொலிப் பினும், பா-டுநர்க்-கும் முதலாகக் கூவிளங்காயாகக் கணக் கிடுவதும்,

‘அழல் ஆனா எம் கண்ணே’ என்பனவற்றை ‘அழலா னாஎம் கண்ணே’ எனப்பிரித்து இசை கோடலும் வகையுளியாம்.

ஓசை யடிப்படையில் சீர்களின் அசைகளைப் பிரித்துக் கூட்டுதல் இதற்கு இன்றியமையாதது. பொருள் நோக்காது, இசை பற்றிச் சீர் பிரிக்குமிடத்து வகையுளி நிகழும்; அதுகுற்றமாகாது, தளை கெடாதவாறு காத்தலின். (யா. வி. பக். 396)

வசை, நசை : சொற்பொருள் -

{Entry: O15a__543}

வசையாவது, வெறுப்பும் சினமும் பற்றி வரும் கடுமொழி, நசையாவது, இயையாதாயினும் பெறல் வேண்டும் என்னும் சிறுவேட்கை. அங்கதச் செய்யுள் இவ்விரண்டொடும் கூடி வரும். (தொ. செய். 129 ச. பால.)

வஞ்சி அடிவகைகள் -

{Entry: O15a__544}

வஞ்சி அடிகள் சமநிலை, வியனிலை என இருவகைய. சமநிலை வஞ்சியடி இருசீர்த்தாகும். ஒவ்வொரு சீரும் மூன்று முதல் ஆறு எழுத்தின்காறும் முடியப்பெறும்.

எ-டு : ‘கொன்று கோடு நீடு கொலைக் களிறு கடாம்’

3 எழுத்து 6 எழுத்து

மெய்யும் குற்றுகரமும் நீக்கப்படும்.

வியநிலை வஞ்சியடி முச்சீர்த்து ஆகும்; இவ்வஞ்சிக்கண் அருகி ஈரெழுத்துச் சீரும் வரப்பெறும்.

எ-டு : ‘நுந்தைகாடு’ - இதனுள் நு-டு என்று வந்த இரண்டு குற்றுகரமும் ந் என்ற ஒற்றும் நீக்கிக் கணக்கிட இஃது ஈரெழுத்துச் சீராம்.

சமநிலைவஞ்சி குறளடிவஞ்சி எனவும், வியனிலை வஞ்சி சிந்தடிவஞ்சி எனவும், இவையிரண்டும் கலந்து வருவது மயக்கடிவஞ்சி எனவும் பெயர்பெறும். சிந்தடிவஞ்சி சிறு பான்மையே வரும். சிந்தடி கட்டளை வஞ்சிஅடி அன்று. (தொ. செய். 45 - 47நச்.)

வஞ்சிஉரிச்சீர் (1) -

{Entry: O15a__545}

மூவகைச் சீர்கள் அறுபத்து நான்கனுள், வெண்பா உரிச்சீர் நான்கும் நீங்கலான அறுபதும் ஆம். (நேர் நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர், நிரை நேர் நேர் என்ற நான்கும் வெண்பா உரிச்சீர்களாம்.) ‘மூவசைச்சீர் அறுபத்து நான்கு’ தனித் தலைப்பிற் காண்க. (தொ. செய். 20 நச்.)

வஞ்சி உரிச்சீர் (2) -

{Entry: O15a__546}

சீர்கள் -

நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை;

வாய்பாடுகள்:-

1. தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி

2. மாவாழ்சுரம் புலிவாழ்சுரம் புலிபடுசுரம் மாபடுசுரம்

3. பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி

4. மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை

5. பூண் மென்முலை புணர்மென்முலை புணரிளமுலை பூணணிமுலை

இவ்வைந்து திற வாய்பாடுகளுள், தேமாங்கனி முதலாகிய நான்குமே வழக்கில் மிக்குள்ளன.

எ-டு : தேன்தாழ்வன - தேமாங்கனி; இறவீன்பன - புளிமாங் கனி; சுறமறிவன - கருவிளங்கனி; மீன்திரிவன - கூவிளங்கனி. (யா. க. 12 உரை)

வஞ்சி உரிச்சீர் வந்து உறழுதல் இல்லா ஆசிரிய அடிகள் -

{Entry: O15a__547}

பதினேழ் நிலத்திற்குமுரிய ஆசிரியப்பாவினுள் 4 எழுத்து முதலாக 14 எழுத்தளவும் பெறும் என்ற குறளடி சிந்தடி அளவடிகளின்கண் வஞ்சியுரிச்சீர் வந்து உறழுதல் இல.

வஞ்சியுரிச்சீருள் மூன்றெழுத்துச் சீரும் சிறுபான்மை நான்கெழுத்துச் சீரும் மிக அருகியே வரும்.

எ-டு : ‘விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’ (குறுந். 210)

‘பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய’ (புறநா. 161)

(தொ. செய். 56 ச. பால.)

வஞ்சிஉரிச்சீர் வருமிடம் -

{Entry: O15a__548}

வஞ்சியுரிச்சீர் அறுபதும் வஞ்சிப்பாவிலேயே வரும்; ஏனைய ஆசிரியம், கலி, இவற்றுள் அருகி வரும். ஆசிரியஉரிச்சீர் தூங்கல்ஓசையை ஆக்குமாறு போல, வஞ்சியுரிச்சீர்கள் அகவல்ஓசையை ஆக்கா ஆதலின், அவை வஞ்சிப்பாவிற்கே கொள்ளப்பட்டன. (தொ. செய். 21 நச்.)

வஞ்சிஓசை வகை -

{Entry: O15a__549}

ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என்பன. மூன்றும் ஆம். (யா. க. 90) (தூங்கல் ஓசையானது வழக்கின்கண் நிகழாது; செய்யுட்கண் அடியிறுதியில் தூங்காது (-ஓசை குறையாது), சீர்தோறும் ஓசை குறைந்து வருவது. இத்தூங்கல்ஓசை வஞ்சிப்பாவிற்கு உரியதாம். (தொ. பொ. 84 நச்.) தூங்குதல் - சீர்தோறும் ஓசை அறுதல்.

(தொ. செய். 80 இள.)

வஞ்சிக்குரிய நிலம் -

{Entry: O15a__550}

4 எழுத்து முதலாக 12 எழுத்து முடிய வரும் குறளடி வஞ்சிப்பாவிற்குரியன; 8 எழுத்து முதலாக 17 எழுத்து முடிய வரும் சிந்தடி வஞ்சிப்பாவிற்குரியன. (எழுத் தெண்ணு கின்றுழி, மெய்யும் குற்றுகரமும் எண்ணப்படா.)

இருசீரடி வஞ்சிப்பா எடுத்துக்காட்டு

4 எழுத்தடி - ‘கல்சேர்ந்து கால்தோன்று’

5 எழுத்தடி - ‘தண்பால் வெண்கல்லின்’

6 எழுத்தடி - ‘க ண்டுதண்டாக் கட்கின்பத்து’

7 எழுத்தடி - ‘காழ்வர க் கதம்பேணா’

8 எழுத்தடி - ‘தாழிரும் பிணர்த்தடக்கை

9 எழுத்தடி - ‘நிலனெளியத் தொகுபீண்டி’

10 எழுத்தடி - ‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’

11 எழுத்தடி - ‘தாள் களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4)

12 எழுத்தடி - ‘குரு கிரிதலின் கிளிகடியினர்’

முச்சீரடி வஞ்சிப்பா எடுத்துக்காட் டு

8 எழுத்தடி - ‘வேங்கை வாயில் வியன்குன் றூர்’

13 எழுத்தடி - ‘பயில்படுவினை பத்தியலாற் செப்பி யோன்’

14 எழுத்தடி - ‘பணையெருத்தி ன் இணையரிமான் அணை யேறி

15 எழுத்தடி - ‘வடிவாலெயிற் றழலுளைய வள்ளுகிர’

16 எழுத்தடி - ‘கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன’

17 எழுத்தடி - ‘மதுவிரவிய மலர்கஞலிய வயற்றாமரை’

(யா. வி. பக். 500, 501)

வஞ்சிச்சீர் -

{Entry: O15a__551}

‘வஞ்சி உரிச்சீர்’ காண்க.

இவற்றை ‘நேர் நேர்பு நேர்’ என்பதற்கு மா போகு வாய் மா மேவு வாய் எனக் குற்றியலுகர முற்றியலுகர வேறுபாடு களால் இருநிலைமைப்படுப்பது போல், ஏனையவற்றையும் இருநிலைமைய ஆக்கிக் கொள்ளல் வேண்டும். (பாம்பு - மின்னு; களிறு - அரவு; வழங்கு - விரவு எனக் குற்றியலுகரங் கட்கு முற்றியலுகரம் கொள்ளப்படும்.)

மாசேர் காடு - மாசேர் காவு - மாசேர் கடறு - மாசேர் குரவு

மாவரு காடு - மாவரு காவு - மாவரு கடறு - மாவரு குரவு

புலிசேர் காடு - புலிசேர் காவு - புலிசேர் கடறு - புலிசேர் குரவு

புலிவரு காடு - புலிவரு காவு புலிவரு கடறு - புலிவரு குரவு

இவை நேர்புஈறு நான்காவன. இவை நிரைபுஈறு நான்காவன.

(தொ. செய். 57 நச்.)

வஞ்சிச்சீர் அறுபதனுள் எட்டு நிலைமையவாகும் 8 சீர்கள்-

{Entry: O15a__552}

நேர்புஈறு நான்கும், நிரைபுஈறு நான்கும் ஆம்.

‘வஞ்சிச்சீர் இருநூற்றிருபத்து நான்கு ஆதல்’ காண்க.

(தொ. செய். 57 நச்.)

வஞ்சிச்சீர் அறுபதனுள் நான்கு நிலைமையவரும் 28 சீர்கள் -

{Entry: O15a__553}

‘வஞ்சிச்சீர் இருநூற்றிருபத்து நான்கு ஆதல்’ காண்க.

(தொ. செய். 57 உரை)

வஞ்சிச்சீர் ஆசிரியத்துள் வருதல் -

{Entry: O15a__554}

கட்டளையல்லாத சீர்வகை ஆசிரியப்பாவில், அறுபது வஞ்சிச்சீருள், நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை, நேர் நேர் நேர்பு, நிரை நேர் நேர்பு, நேர் நேர் நிரைபு, நிரை நேர் நிரைபு, நேர்பு நேர் நேர், நேர்பு நிரை நேர், நிரைபு நேர் நேர், நிரைபு நிரை நேர் என்ற பத்துச் சீர்களே ஒரோவழி அருகி வரும்.

எ-டு :

மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை’ - நேர் நேர் நிரை

குறிஞ்சியொடு கம்ழும் குன்ற நாடன்’ - நிரை நேர், நிரை

முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக் கும்’ - நேர் நேர் நேர்பு

அலரிநாறு துவர்வாய் அமர்த் த நோக்கின்’ - நிரை நேர் நேர்பு

கண்போல்மலர்ந்து ண்டு மயங்கு தாமரை’ - நேர் நேர் நிரைபு

கரடிவழங்கு குன்று கண்டு போகி’ - நிரை நேர் நிரைபு

காடுதேரா உழிதரும் கடுங்கண் யானை’ - நேர்பு நேர் நேர்

சந்துசிதைய உழுத செங்குரல் சிறுதினை’ - நேர்பு நிரை நேர்

மருந்துநாடாத் திருந்து சிலம்பில் சேக்கும்’ - நிரைபு நேர் நேர்

கடறுகவரா இழிந்து கான்யாறு வரித்த’ - நிரைபு நிரைபு நேர் (தொல். செய். 31 நச்.)

வஞ்சிச்சீர் இருநூற்றிருபத்து நான்கு ஆதல் -

{Entry: O15a__555}

நான்கெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் வஞ்சிப் பாவின் அடிகள் வரும். கட்டளை வஞ்சி எனப்படும் குறளடி வஞ்சிப்பாவிற்கே இவ்வரையறை என்பது.

அறுபது வஞ்சியுரிச் சீர்களுள்ளும் 24 சீர்கள் இரு நிலைமைய (48). ‘வஞ்சிச்சீர் அறுபதனுள் இரு ....’ காண்க; 28 சீர்கள் ஒரோவொன்று நான்கு நிலைமையுடையன (112); எட்டுச்சீர் ஒரோவொன்று எட்டு நிலைமையன (64). இவ்வாறு கொள்ளவே, உறழ்தல் நிலைமையால் வஞ்சிச் சீர்கள் 224 ஆகும்.

நான்கு நிலைப்படும் 28 சீர்களும் வருமாறு :

பாம்பு போகுவாய் பாம்பு சேர் சுரம் களிறுசேர் சுரம், மாபோகுகாடு; பாம்பு வழங்குவாய் பாம்பு வரு சுரம், களிறுவருசுரம், மாவழங்குகாடு; களிறு போகுவாய், பாம்பு போகுசுரம்; களிறுபோகுசுரம், புலிபோகுகாடு; களிறுவழங்கு வாய் பாம்பு வழங்கு சுரம், களிறுவழங்குசுரம், புலிவழங்குகாடு, பாம்பு சேர் காடு, மா போகு கடறு, பாம்பு சேர் கடறு; பாம்பு வரு காடு, மா வழங்கு கடறு, பாம்பு வரு கடறு; களிறு சேர் காடு, புலி போகு கடறு, களிறு சேர் கடறு; களிறு வரு காடு, புலி வழங்கு கடறு, களிறு வரு கடறு;

பாம்பு போகு வாய் , மின்னுப் போகுவாய், பாம்பு மேவு வாய், மின்னு மன்னு வாய் - என ஒன்று நான்காக வாய்பாடு பெறுவிக்க.

இனி, வழங்கு - விரவு; களிறு - அரவு; சேர்சுரம் - சேர்வது; வருசுரம் - வலியது; களிறு சேர் சுரம் - ஒளிறு ஞாயிறு; அரவு சேர் சுரம் - பரவு ஞாயிறு என வாய்பாடுகள் கொள்வதால், ஒன்று நான்காக, 28 சீர்களும் 112 வாய்பாடாம்.

எட்டு நிலைமைப்படும் சீர் எட்டும் நேர்புஈறு 4, நிரைபுஈறு 4 என வரும்.

அவை வருமாறு :

பாம்பு போகு காடு, பாம்பு போகு கடறு; பாம்பு வழங்கு காடு, பாம்பு வழங்கு கடறு; களிறு போகு காடு களிறு போகு கடறு; களிறு வழங்கு காடு, களிறு வழங்கு கடறு;

பாம்பு போகு காடு , மின்னு போகு காடு; பாம்பு மேவு காடு, மின்னு மின்னு காடு, பாம்பு போகு காவு ; பாம்பு மேவு காவு, மின்னு போகு காவு , மின்னு மின்னு காவு - என ஒன்று எட்டாக வாய்பாடு பெறுவிக்க.

இனி, வழங்கு - விரவு; களிறு - அரவு; கடறு - குரவு எனக் குற்றுகரங்கட்கு ஏற்றவாறு முற்றுகரம் கொடுத்து வாய்பாடு சொல்லுவதால், ஒன்று எட்டாக, எட்டுச் சீர்களும் 64 வாய்பாடாம். (தொ. செய். 57 நச்.)

வஞ்சித்தளை -

{Entry: O15a__556}

நிலைமொழி நிரையீற்றதாகிய கனிச்சீராக நிற்க, வரும்சீர் முதலசை நிரையாயின் அஃது ஒன்றிய வஞ்சித்தளையாகும்; வரும் சீர் முதலசை நேர் ஆயின், அஃது ஒன்றாத வஞ்சித் தளை யாகும். ஒன்றுதல் - நிரை ஒன்றுதல், ஒன்றாமை - நிரை ஒன்றாமை என்று கொள்க.

இவற்றுள் வருஞ்சீரும் வஞ்சியுரிச்சீராக இருப்பின், அது சிறப்புடைய வஞ்சித்தளையாம்; வேற்றுச் சீராக இருப்பின் சிறப்பில்லாத வஞ்சித்தளையாம். அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க. (யா. க. 21 உரை)

வஞ்சித்தளைகளுள் சிறப்புடையவும், சிறப்பில்லவும் -

{Entry: O15a__557}

எ-டு : ‘வெண்சாமரை புடை பெயர்தர

செந்தாமரை நாண்மலர்மிசை’

முதலடிக்கண், கனிமுன்னர்க் கனிச்சீரின் முதல் நிரையசைவர, ஒன்றிய வஞ்சித்தளையாம், இரண்டாமடிக்கண், கனி முன்னர்க் கனிச்சீரின் முதல் நேரசை வர, ஒன்றாத வஞ்சித் தளையாம்; இரண்டு சீரும் கனிச்சீராதலின் இவை சிறப் புடைய வஞ்சித் தளைகள்.

எ-டு : ‘புனல்பொழிவன சுனையெல்லாம்

வரைமூடுவ மஞ்செல்லாம்

முதலடிக்கண், கனிமுன்னர்க் காய்ச்சீரின் முதல் நிரையசை வர ஒன்றிய வஞ்சித் தளையாம்; இரண்டாமடிக்கண் கனி முன்னர்க் காய்ச்சீரின் முதல் நேரசை வர ஒன்றாத வஞ்சித் தளையாம் வரும்சீர் வேற்றுச் சீராதலின் இவை சிறப்பில்லா வஞ்சித்தளைகள். (யா. க. 21 உரை)

வஞ்சித்தளை : பெயர்க் காரணம் -

{Entry: O15a__558}

கனிமுன்னர் நிரை வருவது வஞ்சித்தளை என்றல் பொருந் தும்; கனி முன்னர் நேர் வருவதும் வஞ்சித்தளை என்றல் பொருந்துமோ என்றால் பொருந்தும்; எவ்வாறு எனில், நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரின் நேர்பு அசையாம் என்பதும், நிரைக்கீழ்க் குற்றியலுகரம் வரின் நிரைபு அசையாம் என்பதும் பொருந்தும்; ஆயின் நேர்க்கீழும் நிரைக்கீழும் முற்றியலுகரம் வரினும் வேற்றுப் பெயர் கொடாது நேர்பசை நிரைபசை என்றே பெயரிட்டவாறு போல, கனிமுன் நிரையன்றிக் கனிமுன் நேர்வரினும் வஞ்சித்தளை என்றே இலக்கணநூலார் கொண்டார் என்பது. (யா. க. 21 உரை)

வஞ்சித் தாழிசை-

{Entry: O15a__559}

இருசீரடி நான்காய் ஒரு பொருள்மேல் மூன்றாய் அடுக்கியே வருவன. இவை அடி மறித்து வரின் வஞ்சிமண்டிலத் தாழிசை எனவும், அடி மறியாதே வரின் வஞ்சிநிலைத் தாழிசை எனவும் பெயர் பெறும். இவ்விருவகையும் 14 தளையொடு கூட, விரி 28ஆம்.

(தன் சீரின் இறுதிநேரசை தன்சீராகவே வருவதன் முதல் நேரசையோடு ஒன்றுவதும் ஒன்றாமையும், தன்சீரின் இறுதி நிரையசை தன் சீராகவே வருவதன் முதல்நிரையசையோடு ஒன்றுவதும் ஒன்றாமையும் ஒருவகை; வேற்றுச்சீராக வருவதன் முதலசையோடு ஒன்றுவதும் ஒன்றாமையும் பிறிதொரு வகை. இவ்வாற்றால் ஏழுதளைகளும் 14 ஆம் என்க.)

எ-டு : ‘இரும்பிடியை இகல்வேழம்

பெருங்கையால் வெயில்மறைக்கும்

அருஞ்சுரம் இறந்தார்க்கே

விரும்புமென் மனனேகாண்.’

‘மடப்பிடியை மதவேழம்

தடக்கையால் வெயில்மறைக்கும்

இடைச்சுரம் இறந்தார்க்கே

நடக்குமென் மனனேகாண்’

‘பேடையை இரும்போத்துத்

தோகையால் வெயில்மறைக்கும்

காடகம் இறந்தார்க்கே,

ஓடுமென் மனனேகாண்.’

இவை ஒரு பொருள்மேல் மூன்றாய் அடிமறி ஆகாதே வருதலின், வஞ்சி நிலைத்தாழிசையாம். அடிமறியால் வரும் வஞ்சி மண்டிலத் தாழிசை உரிய தலைப்பில் கண்டுகொள்க. (யா. க. 91 உரை)

வஞ்சித்துறை -

{Entry: O15a__560}

இரு சீரடி நான்காய் ஒருபொருள்மேல் ஒன்றாயே வருவது. இஃது அடிமறித்து வரின் வஞ்சிமண்டிலத் துறை எனவும், அடிமறியாது வரின் வஞ்சி நிலைத்துறை எனவும் பெயர் பெறும். சிறப்புடையனவும் சிறப்பில்லாதவுமாக (ஏழும் ஏழும் என இருவகையால்) வரும் 14 தளைகளோடே இவ்விருவகை வஞ்சித்துறையும் கூட, விரி 28 ஆம். வஞ்சி நிலைத்துறை, வஞ்சிமண்டிலத்துறை தனித்தனியே காண்க. (யா. க. 91 உரை)

வஞ்சித்தூக்கு (1) -

{Entry: O15a__561}

வஞ்சிப்பாவின் இறுதி. (தொ. செய். 71)

வஞ்சித்தூக்கு (2) -

{Entry: O15a__562}

வஞ்சி அடி. பரிபாடலில் ஆசிரிய அடிகளிடையே வஞ்சித் தூக்கு நிகழும்.

எ-டு : ‘எரிமலர் சினைஇய கண்ணை பூவை’ முதலாக (பரி. 1 : 6 - 13)

ஆசிரிய அடிகள் வந்தன; ‘நின்னொக்கும் புகழ்நிழலவை’ (அடி. 58) என்பது வஞ்சித் தூக்கு. (தொ. செய். 121 பேரா.)

வஞ்சித்தூக்குச் செந்தூக்கு இயற்று ஆதல் -

{Entry: O15a__563}

வஞ்சித்தூக்கு - வஞ்சி அடி; செந்தூக்கு - ஆசிரிய அடி. வஞ்சிப் பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இறுதி போன்று இறும்; ஆதலின் ஆசிரியப்பாவிற்கு ஓதிய சீரானும் தளையா னும் ஈற்றயலடி முச்சீரான் வருதலும், இடைக்கண் முச்சீரடி பெறுதலும், இடையே ஆசிரியஅடியும் வெள்ளடியும் வருதலும் வஞ்சிப்பாவிற்கு ஏற்றன. வஞ்சிப்பாவிற்குத் தனிச்சொல் வேண்டா.

‘அரிமயிர்த் திரள்முன்கை’ (புறநா. 11) என்னும் வஞ்சிப் பாட்டினுள்,

‘ஒள்ளழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே’

என ஈற்றயலடி முச்சீர்த்தாய் ஈற்றடி செந்தூக்கு இயல்பிற்றாய் முடிந்தது.

‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா. 4) என்ற வஞ்சிப்பாட் டினுள்,

‘எருத்து வவ்விய புலிபோன்றன’

‘அனையை ஆகன் மாறே’

என முச்சீரடிகள் இடையே வர,

‘தாயில் தூவாக் குழவி போல

ஓவாது கூஉம்நின் உடற்றியோர் நாடே’

என ஈற்றடி மண்டில ஆசிரியத்தான் முடிந்தது.

பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டினுள்,

‘நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை’ (அடி 22, 23)

என ஆசிரியஅடியும் வெண்பாஅடியும் முறையே இடையில் வந்தன. (தொ. செய். 71 நச்.)

வஞ்சி நிலைத்தாழிசை -

{Entry: O15a__564}

வஞ்சித்தாழிசை அடிமறியாமல் வருவது. வஞ்சித்தாழிசை நோக்குக.

வஞ்சி நிலைத்துறை -

{Entry: O15a__565}

வஞ்சித் துறை அடிமறியாமல் வருவது.

எ-டு : ‘மார்வுற அணிந்தாலும்

மார்வுறாய் மணிவடமே

தோளுறச் செறித்தாலும்

தோளுறாய் கிளர்வளையே’

வஞ்சி நிலை விருத்தம் -

{Entry: O15a__566}

வஞ்சி விருத்தம் அடிமறியாமல் வருவது.

எ-டு : ‘துன்ப முற்ற வர்க்கலால்

இன்ப மில்லை யாதலால்

அன்ப மற்று யானுனைத்

துன்பத் தாற்றொ டக்கினேன்.’ (சீவக. 579) (யா. க. 91, 92 உரை)

வஞ்சி நெடும்பாட்டு -

{Entry: O15a__567}

பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டுள் ஒன்பதாம் பாட்டு, 301 அடிகளையுடைய இதன்கண் வஞ்சியடிகள் ஆசிரிய அடியினும் மிகுதியாக வந்துள்ளன. ஆதலின், இப் பெயர்த்தாயிற்று.

வஞ்சிப்பா (1) - ஆறுவகை

{Entry: O15a__568}

இரண்டு கனிச்சீர்களையுடைய அடிகளையுடையதாய், ஆசிரியப்பாவிற்போல மோனைஎதுகைத் தொடைகள் பயில, ஈரசையுடைய தனிச்சொல் பெற்று, பின் வருமடிகள் ஆசிரியப்பாவால் முடியப்பெறுவது வஞ்சிப்பாவாம். தனிச்சீர் (முதலிய சில) நீங்கினும் வஞ்சிப்பா எனும் பெயர்க்கு இழுக்கு இன்று. ஆசிரியப்பா அடியைவிட வஞ்சிப்பாஅடி எண்ணிக்கை குறைதலின், ‘குறளடி வஞ்சிப்பா’ என்னும் பெயரிட்டுச் சிலர் கூறுவாருமுளர்.

வஞ்சிப்பா (2) -

{Entry: O15a__569}

இஃது இருசீரடியானும் முச்சீரடியானும் வரும். இவ் விரண்டடிகளைத் தவிர, ஏனைய அளவடி நெடிலடி கழி நெடிலடிகளை வஞ்சித்து வருதலானும், புறநிலை வாயுறை அவையடக்கியல் செவியறிவுறூஉ கைக்கிளை என்றிப் பொருள்களை வஞ்சித்து வருதலானும், வஞ்சிக் கொடி போல் நேர்ந்து நிற்றலானும், தூங்கல்ஒசைத்தாய்ச் சீர்தோறும் ஓசை தாழ்தலானும், வஞ்சி என்னும் திறமே போல வனப்பும் ஓர்ப்பும் உடைத்தாகலானும், ‘வஞ்சிப்பா’ என்பதும் காரணக்குறி. இதனை வேளாள வருணத்தது என்ப. தூங்கல் ஓசையுடைத்தாய், இருசீரடியானும் முச்சீரடியானும் வரும் வஞ்சிப்பா தனிச்சொல்லொடு புணர்ந்து ஆசிரியச் சுரிதகத் தால் முடியும். (யா. க. 55 உரை)

வஞ்சிப்பாட்டின் அளவு -

{Entry: O15a__570}

ஆசிரிய நடைத்தே வஞ்சியாதலின், வஞ்சிப்பாவின் பெருக் கத்துக்கு எல்லை ஆயிரம் அடி; சுருக்கத்துக்கு எல்லை மூன்று அடி. (தொ. செய். 157 நச்.)

வஞ்சிப்பாட்டு (1) -

{Entry: O15a__571}

ஒருவகை நாடகச் செய்யுள். எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப. நாடகச் செய்யுளாகிய வஞ்சிப்பாட்டு என்பதும் பண்ணத்தியாம் என்பது. (தொ. செய். 180 பேரா.)

வஞ்சிப்பாட்டு (2) -

{Entry: O15a__572}

1. ஓடப்பாட்டு (நாஞ்சில்நாட்டு வழக்கு)

2. ஒரு நாடக நூல் (தொ. பொ. 492 பேரா.) (L )

வஞ்சிப்பா வகை விரி -

{Entry: O15a__573}

குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என்பன இரண்டும் ஒரு வகையாம்; இன்னியல் வஞ்சிப்பா, விரவியல் வஞ்சிப்பா என்பன இரண்டும் ஒருவகையாம்.

குறளடி வஞ்சி, சிந்தடி வஞ்சி என்பன வஞ்சிப்பாவின் தொகை.

இன்னியல் குறளடிவஞ்சி, விரவியல் குறளடி வஞ்சி, இன்னியல் சிந்தடி வஞ்சி, விரவியல் சிந்தடி வஞ்சி என வஞ்சிப்பாவின் வகை நான்கு.

இவற்றை ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என மூன்று ஓசையானும் உறழ (4 x 3) பன்னிரண் டாம். அவற்றைச் சிறப்புடைய ஏழுதளை, சிறப்பில்லா ஏழு தளை ஆகப் பதினான்கு தளைகளானும் உறழ, (12 x 14) நூற்றறுபத்தெட்டு விரியாம். (யா. க. 90 உரை)

வஞ்சிப்பாவில் இயற்சீர் -

{Entry: O15a__574}

எல்லா ஆசிரியரும், வஞ்சியுள் முதல் இடை கடை என மூவிடத்தும் நிரையீற்றியற்சீர் மிக்கு வரும்; நேரீற்றியற்சீர் முதலும் இடையும் அருகி வரப்பெறும் என்ப. பல்காயனார்; நேரீற்றியற்சீர் வஞ்சியடியின் இறுதியும் அருகி வரப்பெறும் என்றார். (யா. வி. பக். 435)

வஞ்சிப்பாவில் பிறபா அடிகள் மயங்குமாறு -

{Entry: O15a__575}

குறளடி வஞ்சிப்பாவின் இடையே, சிந்தடி மயங்கி வருவனவும் உள. ஆசிரியஅடி மிகுதியாக விரவிவரும்; கலியடியும் வெள்ளடியும் அருகி விரவி வரும்.

எ-டு : ‘குருகு நாரையொடு கொட்பானா

விரிதிரைநீர் வியன்கழனி

மறுகெழீஇய மலிசும்மை.’

எனச் சிந்தடியும் குறளடியும் வஞ்சிப்பாவில் மயங்கின.

அகத்திணை பற்றிய வஞ்சிப்பாவில் ஆசிரியஅடி வந்து மயங்குதல் சிறப்பின்று என்ப. ‘பட்டினப்பாலை’ என்னும் வஞ்சி நெடும்பாட்டினுள்,

‘நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்’ (அடி. 22) என்றித் தொடக்கத்தன ஆசிரியஅடி.

‘வயலாமைப் புழுக்குண்டு ம் வறளடம்பின் மலர்மிலைந்தும்’ என்பது கலியடி. (அடி. 64, 65)

‘கோழி யெறிந்த கொடுங்கால் கனங்குழை’ (அடி. 23) என்பது வெள்ளடி. (யா. க. 31 உரை)

வஞ்சிப்பாவில் வரும் சீர்கள் -

{Entry: O15a__576}

கட்டளை யல்லா வஞ்சிப்பாவின்கண், அஃதாவது சீர்நிலை வஞ்சிப்பாவின்கண் ஈரசைச்சீர் 16, மூவசைச்சீர் 64 ஆகிய 80 சீர்களும் வருதற்குரிமையுடையன.

எ-டு : ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ - மூவசைச்சீரில் நிரை முன் நிரை. ‘திசைதிரிந்து தெற்கேகினும்’ - இயற்சீரின்முன் (நிரை நிரைபு) வஞ்சிச்சீரின் நேரசை

‘தற்பாடிய தளியுணவின்’ - வஞ்சிச்சீரின் முன் வெண்சீரின் நிரையசை; ‘புட்டேம்பப் புயன்மாறி’ - வெண்சீரின்முன் வெண் சீரின் நிரையசை; ‘புள்ளும்துயின்று புல ம்புகூர்ந்து’ - நேர் நிரைபு என்ற ஆசிரிய உரிச்சீரின் முன் நிரைபு நேர்பு என்ற ஆசிரிய உரிச்சீர்.

இவ்வாறு வந்து தூங்கல் பிறக்கும். (தொ. செய். 22 நச்.)

வஞ்சிப்பாவிற்குரிய அடிகள் -

{Entry: O15a__577}

‘நான்கெழுத்து முதலாகப் பதினான்கெழுத்து அளவும் வஞ்சிப்பாவின் அடிகள் வருவன கட்டளைவஞ்சி எனப்படும். குறளடி வஞ்சிப்பாவிற்கே இவ்வரையறை உண்டு.

60 வஞ்சி உரிச்சீர்களுள்ளும் 24 சீர்கள் குற்றுகரம் முற்றுகரம் என்பனவற்றால் இருவகை நிலைமைய; 28 சீர்கள் ஒரோ வொன்று நான்கு நிலைமைய; 8 சீர்கள் ஒரோஒன்று எட்டு நிலைமைய. அவ்வாறு கொள்ளவே, 24 x 2 = 48; 28 x 4 = 112; 8 x 8 = 64; 48 + 112 + 64 = 224. உறழும் நிலைமையான் வஞ்சிச்சீர்கள் 224 ஆகும் என்பது.

இவ்வஞ்சிச்சீர்கள் 224-இல், அடி உறழாதன 43 அவற்றை, வஞ்சியடிகள் உறழாத சீர்கள் நாற்பத்து மூன்று என்ற தலைப்புள் காண்க. வஞ்சியடியுள் ஒவ்வொரு முதற்சீர்க்கும் 3 முதல் 6 எழுத்து முடிய நான்கு நிலைமைகள் உரிமை யுடையனவாக, எஞ்சிய வஞ்சிச்சீர்களாகிய (224 - 43) 181 சீர்களையும் அந்நான்கால் உறழ, (181 x 4=) 724 வஞ்சியடி களாம். (தொ. செய். 57 நச்., பேரா.)

வஞ்சிப்பாவின் அடிகள் வருமாறு -

{Entry: O15a__578}

‘வஞ்சிப்பாவிற்குரிய அடிகள்’ காண்க.

வஞ்சிப்பாவின் நிலங்கள் -

{Entry: O15a__579}

இருசீரடி வஞ்சிக்கு 4 முதல் 12 எழுத்துமுடிய நிலைக்களம் கூறினமையின், அதன் நிலம் 9 ஆகும். முச்சீரடி வஞ்சிக்கு மற்றுமோர் எழுத்து எல்லை மிகுமாதலின் அதற்கு நிலம் 10 ஆம். (யா. க. 90 உரை. பக். 358)

வஞ்சிப்பாவும் ஆசிரியச் சுரிதகமும் -

{Entry: O15a__580}

வஞ்சிப்பாவும் அதன் ஆசிரியச் சுரிதகமும் ஈரடியானும் வரும் என்று மயேச்சுரர் முதலானோர் கருதுப.

எ-டு : ‘சுற்றுநீர்ச் சூழ்கிடங்கின்

பொற்றாமரைப் பூம்படப்பைத்

தெண்ணீர்,

நல்வய லூரன் கேண்மை

அல்லிருங் கூந்தற் கலரா னாவே.’

வஞ்சிப்பாவும் மருட்பாவும் -

{Entry: O15a__581}

வஞ்சிப்பா இருசீரடியானும் முச்சீரடியானும் வரப்பெற்றுப் பின்பு தனிச்சொல் பெற்று முடியும். வெண்பா முன்னடி களில் நிகழப் பின்னடிகளில் ஆசிரியத்தால் இறுவது மருட்பh. (வீ. சோ. 119)

வஞ்சி மண்டிலத்தாழிசை -

{Entry: O15a__582}

வஞ்சித்தாழிசை அடிமறித்து வருவது.

எ-டு : நாடுமின் நறுந்தில்லை;

வீடுமின் வெவ்வினைகள்;

சூடுமின் துணைமன்றம்;

ஆடுமெம் அரசன்அரன்!

ஏத்துமின் இருந்தில்லை;

நீத்திடும் நீள்வினைகள்;

சீர்த்திடும் திருமன்றம்.

மூர்த்தியெம் கூத்தன்காண்;

படர்செயும் பதித்தில்லை;

விடல்செயும் மேல்வினைகள்;

சுடர்செய்யும் தூமன்றம்,

நடம்செயும் நம்மிறைகாண்! (புனையப்பட்டது). (யா. க. 91 உரை)

வஞ்சிமண்டிலத்துறை -

{Entry: O15a__583}

வஞ்சித்துறை அடிமறித்து வருவது.

‘முல்லைவாய் முறுவலித்தன;

கொல்லைவாய்க் குருந்தீன்றன;

மல்லல்வான் மழைமுழங்கின;

செல்வன்தேர் வரவுண்டாம்.’

வஞ்சி மண்டில விருத்தம் -

{Entry: O15a__584}

வஞ்சி விருத்தம் அடிமறித்து வருவது.

எ-டு : ‘சொல்லல் ஓம்புமின் தோ(ம்)நனி;

செல்லல் ஓம்புமின் தீநெறி;

கல்லல் ஓம்புமின் கைதவம்;

மல்லல் ஞாலத்து மாந்தர்காள்!’ (யா. க. 92 உரை)

வஞ்சியடிகள் உறழாத சீர்கள் நாற்பத்துமூன்று -

{Entry: O15a__585}

எட்டு நிலைமை எய்துவனவற்றில் அரவு விரவு குரவு - என்ற 9 எழுத்துச்சீர் - 1

நான்கு நிலைமை எய்துவனவற்றில் அரவு விரவு சுரம், புலிவிரவு குரவு, அரவு வருகுரவு - என்ற 8 எழுத்துச் சீர் - 3

எட்டு நிலைமை எய்துவனவற்றில் அரவு விரவு காவு, மின்னு விரவு குரவு, அரவு மேவு குரவு, அரவு விரவு கடறு, அரவு வழங்கு குரவு, களிறு விரவு குரவு - என்ற 8 எழுத்துச் சீர் - 6.

இரண்டு நிலைமை எய்துவனவற்றில் புலி விரவு சுரம், புலி வரு குரவு - என 7 எழுத்துச்சீர் - 2.

நான்கு நிலைமை எய்துவனவற்றில் அரவு விரவு வாய், மின்னு விரவு சுரம், அரவு வரு சுரம், அரவு மேவு சுரம், அரவு வழங்கு சுரம், களிறு விரவு சுரம், புலிவிரவு காவு, அரவு வருகாவு, மாவிரவு குரவு, புலிமேவு குரவு, புலிவிரவு கடறு, புலிவழங்கு குரவு, மின்னு வரு குரவு, அரவு மேவு கடறு, அரவு வரு கடறு, களிறு வரு குரவு - என 7 எழுத்துச்சீர் - 16.

எட்டு நிலைமை எய்துவனவற்றில் மின்னு விரவு காவு, அரவு மேவு காவு, அரவு விரவு காடு, அரவு வழங்கு காவு, களிறு விரவு காடு, மின்னு மேவு கடறு, மின்னு விரவு கடறு, மின்னு வழங்கு குரவு. பாம்பு விரவு குரவு, அரவு மேவு கடறு, அரவு போகு குரவு, களிறு மேவு குரவு, அரவு வழங்கு கடறு, களிறு விரவு கடறு, களிறு வழங்கு குரவு - என 7 எழுத்துச்சீர் - 15

இவ்வாற்றால் ஒன்பதெழுத்துச் சீர் 1, எட்டெழுத்துச்சீர் 9, ஏழெழுத்துச்சீர் 33; ஆக 43 சீர்கள் வஞ்சியடிக்கண் நிகழாதன.

(தொ. செய். 57 நச்.)

வஞ்சியடியுள் தளைமயக்கம் -

{Entry: O15a__586}

வஞ்சியடியுள் வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும், கலித்தளையே வருதலும்; முச்சீரடி வஞ்சியுள் தன் தளையும் வெண்டளையும் வருதலும், ஆசிரியத் தளையும் தன் தளையும் வருதலும், கலித்தளையும் தன்தளையும் வருதலும், வெண்டளையும் ஆசிரியத்தளையும் வருதலும், வெண்டளையும் கலித்தளையும் வருதலும், கலித்தளையும் ஆசிரியத்தளையும் வருதலும் - என்று இவ்வாறாகப் பொது வகையாற் கூறிய சிறப்புத்தளையும் ஏனைய சிறப்பில் தளையும் வந்து மயங்கும்.

எ-டு : ‘பூம்பொழிற் 1 றண்கானல் 2

புனல்பொழி 3 தண்படப்பை 4

வீநாறு 5 பூங்காஞ்சிக் 6

கானாறு 7 கோட்டெருமைக் 8

குழக்கன்று 9 பிழைத்தோடிக் 10

காய்த்துறுப 11 பெருஞ்செந்நெல் 12

தேய்த்துழக்கு 13 மதுநோனார்

எனவாங்குத்

தீங்கழை வாங்கி விலங்கும்

பூம்புனல் ஊர புலம்பா னாளே.’

இக்குறளடி வஞ்சிப்பாவினுள், இயற்சீர் வெண்டளை, கலித்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை வெண்சீர் வெண்டளை, கலித்தiள, வெண்சீர் கலித்தளை என்றிவ்வாறு தன் தளைகளும் பிறதளைகளும் விரவி வந்தவாறு. (யா. க. 22 உரை)

வஞ்சியில் அசை கூன் ஆதல் -

{Entry: O15a__587}

வஞ்சியடிக்கண் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்ற நான்கு அசை களும் அடியின் முதல் இடை இறுதி என்ற மூன்றிடத்தும் கூனாய் வரும்; சிறுபான்மை சீர் கூனாய் வரும்.

எ-டு : ‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா. 4) - நேர்

‘அடி, அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன’ - நிரை

‘வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின’ - நேர்பு

‘களிறு, கதவெறியாச் சிவந்துராஅய்’ (புறநா. 4) - நிரைபு

இவை அடிமுதற்கண் வந்த கூன்.

கலங்கழாலின், துறை கலக்குற்றன’ - இடையில் கூன் வந்தது.

‘மாவழங்கலின் மயக்குற்றன, வழி -இறுதியில் கூன் வந்தது. ‘தேரோடத் துகள்கெழுமின, தெருவு ’- இறுதியில் நிரைபு அசை கூனாயிற்று.

அவரே , கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை,

வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந். 216)

முதலில் சீர் கூனாயிற்று. (தொ. செய். 48 நச். பேரா.)

வஞ்சிவிருத்தத்துள் பிறதளை -

{Entry: O15a__588}

எ-டு : ‘பீழை செய்து பெற்றனென்

வாழி என்று மாக்கடல்

ஆழ்வித் திட்ட அம்பியைத்

தோழர்ச் சுட்டிக் காட்டினான்’ (சீவக. 580)

என வஞ்சி விருத்தத்துள் நேரொன்றாசிரியத்தளை 2, இயற்சீர் வெண்டளை, நேரொன்றாசிரியத்தளை 2, இயற்சீர் வெண் டளை, நேரொன்றாசிரியத்தளை 2, இயற்சீர் வெண்டளை, நேரொன்றாசிரியத் தளை 2 - எனப் பிறதளைகளே மயங்கி வந்தவாறு. (யா. க. 22 உரை)

வஞ்சி விருத்தம் -

{Entry: O15a__589}

முச்சீரடி நான்காய் ஒரே விகற்பமாய் வருவது. இஃது அடிமறியாதே வருவது வஞ்சிநிலை விருத்தம்; அடிமறித்து வருவது வஞ்சி மண்டில விருத்தம். இவ்விருவகையும் சிறப் புடையனவும் இல்லனவுமாகிய 14 தளைகளோடும் கூட, விரி 28ஆம். வஞ்சிநிலை விருத்தம், வஞ்சி மண்டில விருத்தம் - காண்க. (யா. க. 92)

வடமொழி எழுத்துச் சீர்முறை தமிழுக்குப் பொருந்தாமை -

{Entry: O15a__590}

வடமொழியைப் போலக் குறில் நெடில் என்ற எழுத்துக் களையே சிறப்பாகக் கருதுவதாயின், நேரசை ஒன்றுமே அமையும். தமிழ்மொழியில் சொற்களுக்குச் சிறப் புத்தந்து எண்ணினமையின், நேர் நிரை நேர்பு நிரைபு என்ற இந்நான்கு அசைகளும் இன்றியமையாதனவாயின. தமிழில் யாதேனும் ஒரு பொருளைத் தருவதொரு சொல்லே அசை யாகும் என்ற மரபு கொள்ளப்பட்டது.

வடமொழி விருத்தம் -

{Entry: O15a__591}

நான்கடி அளவொத்து நடப்பது விருத்தமாம்; எழுத்தும் சீரும் மிகுந்தாலும் குறைந்தாலும் விருத்தப்போலியாம் என்ப வடநூலார். (தென். இயற். 69)

வண்ணக ஒத்தாழிசை -

{Entry: O15a__592}

தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலானும், தரவு தாழிசை முதலியவற்றில் வாராநின்ற ஒலியில் திரிந்து வேறொரு வண்ணமாகிய முடுகியல் வண்ணத்தான் அமைந்த அராக அடிகளை உடையதாகலா னும், (தரவு - தாழிசை - அராகம் - அம்போதரங்கம் - தனிச் சொல் - சுரிதகம் - என்னும் ஆறு உறுப்புக்களையும் கொண்டு வரும்) இக்கலிப்பா வண்ணக ஒத்தாழிசை எனப்பட்டது. (வண்ணித்தல் - வருணித்தல்). (யா. க. 80 உரை)

வண்ணக ஒத்தாழிசை உறுப்புக்கள் -

{Entry: O15a__593}

வண்ணக ஒத்தாழிசை தரவு தாழிசை எண் சுரிதகம் என்ற நான்கு சிறப்பு உறுப்புக்களையுடையது; சிறுபான்மை தனிச் சொல்லும் சுரிதகத்தின்முன் கொள்ளப்படும்.

தரவினால் தெய்வத்தை முன்னிலையாக நிறுத்தித் தாழிசை யால் தெய்வத்தை வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகமா யிற்று. ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினும், வண்ணித்தற்குச் சிறந்த உறுப்புத் தாழிசையேயாம். ஆகவே, அகநிலை ஒத்தாழிசையுள் தாழிசை வண்ணித்து வாரா என்பது.

எண்ணுறுப்பு நீர்த்திரை போலச் சுருங்கிவருதலின், எண் ணுறுப்பு உடைய கலியை அம்போதரங்க ஒத்தாழிசை எனவும், அராக உறுப்பு உடைய கலியை வண்ணக ஒத்தா ழிசை எனவும் பின்னுளோர் கூறுவது தொல்காப்பிய னார்க்கு உடன்பாடன்று. (தொ. செய். 140 நச்.)

சொல்லப்பட்ட உறுப்புக்கள், தனிச்சொல் வருவழி, இடை யொழியாமல் வருதல் வேண்டும்; தனிச்சொல் இன்றி எண்ணிடையிட்டவழி ‘ஒரு போகு’ எனப் பெயர் பெறும். (140 இள.)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா -

{Entry: O15a__594}

தரவு முதலிய ஆறுறுப்பும் குறைவின்றி வரும் கலிப்பா.

எ-டு : ‘விளங்குமணிப் பசும்பொன்னின்’ (யா. வி. பக். 314)

இஃது ஆறடித்தரவு, 4 அடித்தாழிசை மூன்று, ஏழுசீர் அராகம் நான்கு, நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் இரண்டு, நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கு, முச்சீர் ஓரடி அம்போ தரங்கம் எட்டு, இருசீர் ஓரடி அம்போதரங்கம் பதினாறு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என ஆறுறுப்புக்களையும் முறையே பெற்று வந்தது.

இனி, அராக அடி எண்சீரான் எட்டாய், ஏனைய உறுப்புக் குறையாதே வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலியும் உண்டு.

எ-டு : ‘தெரிவில்லா வினைகெடுத்து’ (யா. வி. பக். 316)

இஃது ஆறடித்தரவு, 4 அடித் தாழிசை மூன்று, இரு விகற்பங் களால் வந்த எண்சீர் அராகம் எட்டடி, பேரெண் இரண்டு, இடையெண் நான்கு, சிற்றெண் எட்டு, அளவெண் பதினாறு, தனிச்சொல், ஆறடிச்சுரிதகம் என ஆறுறுப்புக்களையும் முறையே பெற்று வந்தது. (யா. க. 84 உரை)

வண்ணகத்தின் அடக்கியல் வாரம் -

{Entry: O15a__595}

முன்னர்ப்பலவகையாற் புகழ்ந்த தெய்வத்தை ஒரு பெயர் அடக்கி நிற்றலின் அடக்கியல் என்றும், தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் வாரம் என்றும் கூறப்படும் வண்ணகத்தின் சுரிதகம் 8, 6, 4 அடிகளாகத் தரவினை ஒத்து வரும். (தொ. செய். 144 நச்.)

வண்ணகத்தின் எடுத்துக்காட்டு -

{Entry: O15a__596}

1. ‘மணிவிளங்கு திருமார்பின்’ என்ற வண்ணகம், 8 அடித் தரவு, 4 அடித் தாழிசை மூன்று, தலையெண் இரண்டு, இடையெண் நான்கு, கடையெண் எட்டு, சின்னம் பதினாறு, தனிச்சொல், 8 அடிச் சுரிதகம் இவற்றையுடையது.

2. ‘பலியுருவிற் கேலாத’ என்ற வண்ணகம் 8 அடித்தரவு, 4 அடித்தாழிசை மூன்று, தலையெண் இரண்டு, இடையெண் நான்கு, கடையெண் எட்டு, (சின்னம் இல்லை) தனிச்சொல், 8 அடிச் சுரிதகம் இவற்றையுடையது.

3. ‘ஆயிரம் கதிராழி’ என்ற வண்ணகம், 8 அடித்தரவு, 4 அடித்தாழிசை மூன்று, இருசீர் நான்கு, ஒருசீர் எட்டு, தனிச்சொல், 8 அடிச் சுரிதகம் இவற்றையுடையது.

4. ‘உறை பதியின்’ என்ற வண்ணகம், 6 அடித்தரவு, 3 அடித்தாழிசை மூன்று, ஒரு சீர்ச்சின்னம் 16, தனிச்சொல், 6 அடிச் சுரிதகம் இவற்றையுடையது.

5. ‘கெடலரு மாமுனிவர்’ என்ற வண்ணகம், 6 அடித்தரவு, 4 அடித்தாழிசை மூன்று, தலையெண் இரண்டு, இடையெண் நான்கு, கடையெண் நான்கு, சின்னம் எட்டு, தனிச்சொல், 6 அடிச் சுரிதகம் இவற்றையுடையது.

பின்னுள்ளோர் இருசீரடியை முச்சீரடியாக்கியும், ஒரு சீரடியை இரு சீரடியாக்கியும் காட்டுவது பொருந்தாது. (தொ. செய். 146 நச்.)

இனி, யாப்பருங்கல விருத்தியுள் (சூ. 84) காணப்படுமாறு;

எ-டு : ‘விளங்குமணிப் பசும்பொன்னின்’ -

6 அடித்தரவு, 4 அடித்தாழிசை மூன்று, எழுசீர் அராகம் நான்கு, நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் இரண்டு, நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கு, முச்சீர் ஓரடி அம்போதரங்கம் எட்டு, இருசீர் ஓரடி அம்போதரங்கம் பதினாறு, தனிச்சொல், 6 அடிச் சுரிதகம் இவற்றை உடைய, ஆறு உறுப்பும் குறை வின்றி வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

2. ‘தெரிவில்லா வினைகெடுத்து’ -

6 அடித்தரவு, 4 அடித் தாழிசை மூன்று, எண் சீர் அராகம் இருவிகற்பங்களால் 8 அடி, பேரெண் இரண்டு, சிற்றெண் நான்கு, இடையெண் எட்டு, அளவெண் பதினாறு, தனிச் சொல், 6 அடிச்சுரிதகம் இவற்றை உடையதாய், வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. (பக். 314 - 319)

வண்ணகத்தின் எண் உறுப்பு -

{Entry: O15a__597}

எண்ணுறுப்பு வண்ணக ஓத்தாழிசையில் தாழிசையின் பின்னர்த் தனிச்சொல்லுக்கு முன்னர்ப் பெருகிய வழி முறையால் சுருங்கி வரப்பெறும்.

ஈரடி சுருங்கி ஓரடி, ஓரடி சுருங்கி இருசீரடி, இரு சீரடி சுருங்கி ஒரு சீரடி என வழிமுறையே வரும். ஒன்றுக்கு ஒன்று பாகமே (-பாதியே) சுருங்கும்.

‘நாற்சீர் கொண்ட(து) அடியெனப் படுமே’ (செய். 32) என்றலின், அளவடியே கொள்ளப்படும். இருசீரான் இயைந் தன இரண்டு இணைந்து அளவடி ஆதற்கேற்பத் தொடை கொண்டு சுவடுபட நிற்றலானும், ஒரு சீரான் வருவனவும் நான்கு இணைந்து அளவடி ஆதற்கேற்பத் தொடை கொண்டு சுவடுபட நிற்றலானும், அவையும் அளவடிக்கண் அடங்கின.

சுருக்கம் பாதிப்பாதியாக வருதலின், அவற்றின் எண்ணிக் கையும் இவ்விரு மடங்காகும்.

இருசீர் வருவன குறளடி என அடிக்கண் அடங்கும். ஆதலின் ஒரு சீரே சின்னம் எனப்படும். அளவடியிற் சுருங்கிய இரு சீரையும் சின்னம் என்பாருமுளர்; ஒரு சீரினை அளவெண் என்றும் கூறுப.

நாற்சீரடி இரண்டு, நாற்சீரடி ஒன்று, இருசீரடி என்பன முறையே தலையெண் இடையெண் கடையெண் எனவும், பேரெண் சிற்றெண் இடையெண் எனவும் கூறப்படும்.

இரு சீரடியை முச்சீரடியாக்கியும் ஒரு சீரடியை இரு சீரடியாக்கியும் அலகு கொள்ளின், அதற்கு அசையும் சீரும் இசையொடு சேரா என்பது. (தொ. செய். 145 நச்.)

வண்ணகத்தில் சின்னம் என்னும் ஒரு சீரடி மாத்திரம் வர, ஏனைய தலையெண் இடையெண் கடையெண் வாராதொழி தலும், அவை வரச் சின்னம் மாத்திரம் வாராதொழிதலும் சுவைபயக்கும். தலையெண் 2, இடையெண் 4, கடையெண் 8 சின்னம் 16 என்ற அமைப்பில், கடையெண் நான்காகவும் சின்னம் எட்டாகவும் சுருங்கிவருதலுமுண்டு.

மூவகை எண்ணும் சின்னமும் பெற்றுவருதல் வண்ணக ஒத்தாழிசைக்குப் பெருஞ்சிறப்பாகும். (146 நச்.)

எண் : இரண்டயான் வருவன இரண்டும், ஓரடியான் வருவன நான்கும், சிந்தடியான் வருவன எட்டும், குறளடியான் வருவன பதினாறும் எனப் பிற நூலாசிரியர் உரைப்பர். இவ்வாசி ரியர்க்கு வரையறை இல. (139 இள.)

சின்னம் - தனிச்சொல். 140 இள.

வண்ணகத்தின் தரவு -

{Entry: O15a__598}

இதன் தரவுக்குத் தலையளவு 8 அடி, இடையளவு 6 அடி, கடையளவு 4 அடி. தரவு அடிகள் சமநிலை யாவதன்றி வியனிலையான் வாரா. (சமநிலை - இரட்டைப்படைஎண்; வியநிலை - ஒற்றைப் படை எண்) (தொ. செய். 141 நச்.)

வண்ணகத்தின் தாழிசை -

{Entry: O15a__599}

வண்ணக ஒத்தாழிசையின் தாழிசை பொருளும் அளவும் தம்முள் ஒத்து மூன்றாய்வரும். ஆகவே, அகநிலை ஒத் தாழிசைக்கண் தாழிசை சிறுபான்மை பொருள் ஒவ்வாதும் வரும்.

எ-டு : ‘கல்லெனக் கவின்பெற்ற’ (கலி. 5) என்பதன் தாழிசைகள்.

இக்கலிப்பாவகையின் தாழிசை தரவை ஒவ்வாது அதனைவிடச் சுருங்கியே வரும். 8 அடித்தரவின் பாகமாகிய 4 அடியும், 6 அடித்தரவின் பாகமாகிய 3 அடியுமே இதன் சிறுமைபெருமைக்கு எல்லை. 4 அடித்தரவின் பாகமாகிய 2 அடியைத் தாழிசைக்குச் சிறுமையாகக் கொள்ளின், ஈரடிஎண்கள் தாழிசையை அடுத்து வருதலின், தாழிசைக்கும் எண்ணுக்கும் வேறுபாடு புலனாகாமல் போய்விடும். ஆதலின், இத்தாழிசைக்கு ஈரடிச் சிறுமைகூடாது; ஐந்தடிப் பெருமையும் கூடாது, நான்கடித் தரவும் உண்டு ஆதலின் என்பது. (தொ. செய். 142, 143 நச்.)

வண்ணகம் -

{Entry: O15a__600}

வண்ணகம் - அராகம்; அது காண்க.

வண்ணகம் பற்றி ஒரு சாரார் கருத்து -

{Entry: O15a__601}

தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும் தாழிசையும் பெற்ற அடியளவு பெற்று, தாழிசைப் பின்னர்த் தனிநிலை பெற்றும், அதன் பின் அராகஅடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நாற்சீர் முதலாகப் பதின்மூன்றுசீர் ஈறாக, இடை அந்தாதித்து இத்துணைச் சீராலும் அராகஅடி பெற்று, அம்போதரங்கத்துக்கு ஓதப் பட்ட அராக அடியின்றிக் குறிலிணை பயின்ற அடி பெற்று, அடுக்கிசை அராகம் முடுகியல் என்ற மூன்று பெயரும் பெற்று, தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் எனப்படும்; இடை அந்தாதித்தொடை யாலும் வரப்பெறும்”, என்பது ஒருசாரார் (மயேச்சுரனார்) கருத்து.

எ-டு : ‘கல்லின்மேல் நாறிய’ (யா. வி. பக். 319)

எ-டு : ‘சிலம்பொலிக்கும் இணையடியும்’ (யா. வி. பக். 322)

இதன்கண், தரவு 6 அடி, 4 அடித்தாழிசை மூன்று, தனிச் சொல், 4 சீர் முதல் 13 சீர்காறும் பத்து அராகஅடிகள் (8 சீரடி வந்திலது), பேரெண் இரண்டு குறள்வெண்பா, சிற்றெண் நாற்சீரடி நான்கு, தனிச்சொல், 6 அடிச் சுரிதகம் என்பன முறையே உறுப்புக்களாக வந்தன. (அராக அடி எட்டு வாராது பத்து வந்தமை மிக அருகியதொன்றே.)

இம்முறை மயேச்சுரனார், அகத்தியம் செயிற்றியம் செயன் முறை ஆகிய நூல்களைப் பின்பற்றிக் கூறியதாம். (யா. க. 84 உரை)

வண்ணங்கள், சீர் - தொடை - எழுத்து - ஓசை - சொல் - இவைபற்றி வருவன -

{Entry: O15a__602}

பாஅவண்ணம் சீரைப்பற்றித் தோன்றும்.

தாஅவண்ணம், அளபெடை வண்ணம், ஒரூஉ வண்ணம் இவை தொடையைப் பற்றித் தோன்றும்.

வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், நெடுஞ்சீர்வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபுவண்ணம் - இவை எழுத்தைப் பற்றித் தோன்றும்.

அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், தூங்கல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் - இவை ஓசையைப் பற்றித் தோன்றும். எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், ஏந்தல் வண்ணம் - இவை சொல்லைப் பற்றித் தோன்றும். (தொ. செய். 213 - 232 ச. பால.)

வண்ணங்களால் பெயரிடல் -

{Entry: O15a__603}

நூறுவண்ணமும் தம்முள் மயங்கி வரினும், மிக்கதனால் பெயர்கொடுத்து வழங்கப்படும். (யா. வி. பக். 415)

வண்ணங்களின் விரி நூறு -

{Entry: O15a__604}

தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம். பிரிந்திசை வண்ணம் மயங்கிசை வண்ணம் என்ற இவ்வைந்தினையும்.

அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசைவண்ணம் என்ற இந்நான்கினையும்,

குற்றெழுத்துவண்ணம் நெட்டெழுத்துவண்ணம் வல் லெழுத்து வண்ணம் மெல்லெழுத்துவண்ணம் இடை யெழுத்து வண்ணம் என்ற இவ்வைந்தனையும் கூட்டி உறழ, (5 x 4 x 5 =) நூறு வண்ணங்களாகும்.

தூங்கிசை வண்ணம் இருபது, ஏந்திசைவண்ணம் இருபது, அடுக்கிசைவண்ணம் இருபது, பிரிந்திசைவண்ணம் இருபது, மயங்கிசை வண்ணம்இருபது. இவற்றை அவ்வத் தலைப்பிற் காண்க. (யா. க. 95 உரை)

வண்ணம் இருபது -

{Entry: O15a__605}

பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப் பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒருஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன. (தொ. செய். 213 பேரா.)

‘வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு’ -

{Entry: O15a__606}

கொடையாற் பெற்ற புகழினையுடைய சேரசோழ பாண்டிய ருடைய குளிர்ச்சியையுடைய நாவலம் பொழிலுள் தமக்கு வரைந்துகொண்ட வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைக் குட்பட்ட நிலம். (தொ. செய். 79 நச்.)

வணிகர்க்கு எண்ணிலமாவன -

{Entry: O15a__607}

கலிப்பாவிற்கு நிலம் அடிதோறும் 13 முதல் 20 எழுத்து முடிய உள்ள எட்டு நிலம் ஆம். (யா. வி. பக். 346 உரை மேற்.)

வருக்க எதுகை -

{Entry: O15a__608}

இரண்டாம் எழுத்தாகிய மெய் அடிகள்தோறும் ஒன்றிவர, அம்மெய்ம்மேல் ஏறிய உயிர் வெவ்வேறாக வரத் தொடுப்பது.

எ-டு : ‘நீ டி ணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப்

பா டு ம்வண் டஞ்சி யகலும் பருவத்து’

இவ்வடிகளில் இரண்டாமெழுத்தாக டகரமெய் ஒன்றிவர, அம்மெய்ம் மேலேறிய உயிர்கள் முறையே இகரமும் உகரமு மாக வேறுபட வந்தன. (யா. க. 37 உரை)

வருக்க எழுத்து -

{Entry: O15a__609}

தானல்லாத ஏனைய உயிரெழுத்துக்கள் ஏறப்பெற்று வரும் உயிர்மெய் தான் ஏறிய அவ்வுயிர்மெய்க்கு வருக்க எழுத்தாம். டகரத்திற்கு டா, டி, டீ முதலிய பதினொன்றும் மெய்வருக்க எழுத்தாம் என்பது; இனி, உயிர் பன்னிரண்டனுள் ஒன்றற்கு ஏனைய பதினொன்றும் உயிர்வருக்க எழுத்தாம். (யா. க. 43 உரை)

வருக்க மோனை -

{Entry: O15a__610}

மெய்யெழுத்துக்கள்மேலேறிய உயிர்வருக்கம் அடிதோறும் அமையின், (அடி) வருக்க மோனையாம். அஃதாவது மெய்யெழுத்து ஒன்றிவர, அதன் மேலேறிவரும் உயிர் வேறுபடவருதல்.

எ-டு : ‘பகலே, ல்பூங் கானல் கிள்ளை ஓப்பியும்

பா சிலைக் குளவியொடு கூதளம் விரைஇ................’

இப்பாடற்கண், பகர வருக்கமோனை (ப-பௌ) அடிதோறும் வந்தவாறு. (யா. க. 37 உரை)

வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு -

{Entry: O15a__611}

இது புறநிலை வாழ்த்து. இது வாழ்த்தின்பாற்படும். “நீ வழிபடும் குலதெய்வம். நின்னைப் புறத்தே நின்று காப்ப, இல்லறத்தாற் பொலிந்த செல்வத்தோடே நீ பெறும் புதல்வரும் அவர் பெறும் புதல்வரும் சிறப்பு எய்த, எல்லீரும் நீடு வாழ்வீர்!” என்று தெய்வத்தைப் புறத்தே நிறுத்தி வாழ்த்தும் வாழ்த்து இது.

எடுத்துக்கொண்ட காரியம் நன்கு நிறைவேறுவதற்கு உதவும் தெய்வத்தைப் படர்க்கையாகப் புறத்தே நிறுத்தி, அத் தெய்வத்தால் பயன் பெற வேண்டி நிற்கும் ஒருவனை முன்னிலையாக்கிக் கூறுதலின் இது புறநிலை வாழ்த் தாயிற்று.

எ-டு : ‘அறிதுயில் அரவணை அமர்ந்தோன் காப்ப

அருட்கடம் பூண்ட அகலாச் செல்வமொடு

நீயுநின் புதல்வரும் சிறந்து

வாழிய பெரும! பூழியர் கோவே!’

இப்புறநிலை வாழ்த்திற்கு மருட்பாவே சிறந்தது. இஃது ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் பாடப்படலாம். இவ் வாழ்த்துப்பகுதியுள் அடங்கும் வாயுறை வாழ்த்து, அவை யடக்கியல், செவியறிவுறூஉ என்பனவற்றிற்கும் இப்பாடல் களே சிறந்தவை; கலியும் வஞ்சியும் பரிபாடலும் ஏற்றவை அல்ல. (தொல். செய். 110 நச்.)

கலிப்பாவில் வாழ்த்துக் கூறுங்கால் கடவுள் முன்னிலையாக வரும். (பேரா.)

வல்லிசை வண்ணம் -

{Entry: O15a__612}

வல்லெழுத்துப்பயின்று வரும் வண்ணம். எ-டு: ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்’ . (பட். 218)

‘முட்டாட் டாமரைத் துஞ்சி’ (முருகு. 73.) (தொ. செய். 216 பேரா.)

இவ்வண்ணம் தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கல்மேல் கல் உருட்டினாற் போலவும் வருவது.(யா. வி. பக். 415)

வல்லின எதுகை -

{Entry: O15a__613}

அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப, இரண்டா மெழுத்தாகிய மெய் வல்லினமெய்யாக இருக்கும் எதுகை.

எ-டு : ‘த க் கார் தகவில ரென்ப தவரவர்

ச் சத்தாற் காணப் படும்! (குறள். 114.) (யா. க. 37.உரை)

வல்லின நடை -

{Entry: O15a__614}

வல்லெழுத்து மிக்கு வரும் நடை வழுவாது செய்யுளைத் தொடுப்பது.

எ-டு : ‘நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு’ (குறள். 1082) (யா. க. 53 உரை; பக் 208)

வல்லின மோனை -

{Entry: O15a__615}

அடிகளின் முதற்கண் வந்த உயிர்மெய்யெழுத்துக்களின் மெய்கள் வல்லின மெய்களாக இருப்ப, அவற்றின் மேல் ஏறிய உயிர்கள் வெவ் வேறாக இருப்பின் நிகழும் மோனை.

எ-டு : ‘கயலேர் உண்கண் கலுழ நாளும்

சுடர் புரை திருநுதல் பசலை பாய’

இதனுள் க,சு என அடிமுதற்கண் நிற்றலின்(அடி)வல்லின மோனை வந்தவாறு. (யா. க. 37 உரை.)

வலித்தல் விகாரம் -

{Entry: O15a__616}

செய்யுட்கண் தொடை நயம் கருதி மெல்லெழுத்தை அதற்கினமாய வல்லெழுத்தாகத் திரித்துக் கோடல்.

எ-டு : குறுத்தாட் பூதம் சுமந்த அறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே’

குறுந்தாள் எனற்பாலது அடியெதுகை (வல்லின எதுகை) நோக்கிக் ‘குறுத்தாள்’ என விகாரப்பட்டமை வலித்தல் விகாரமாம். (யா. க. 95)

வழக்கில் உள்ள ஓசைகள் -

{Entry: O15a__617}

அகவலோசை, செப்பலோசை - என்ற இரண்டும் ஆம். (தொ. செய். 82 நச்.)

வழி எதுகை -

{Entry: O15a__618}

அடிக்கண் அடுத்தடுத்து வரும் எதுகை. இது நாற்சீரடி அல்லாதவழியே கொள்ளப்படுவது. வட நூலார் இதனை ‘அனுப்பிராசம்’ என்ப.

எ-டு : ‘கொ ங் கு த ங் கு கோதை ஓதி மாத ரோ டு கூ டு நீடு மோடை நெற்றி’

‘ம ண் டலம் ப ண் டுண்ட தி ண் டோள் வரகுணன் தொ ண் டியின்வாய்’

இவ்வாறு நாற்சீரடியல்லாத நெடிலடி முதலிய ஏனை யடிக்கண் வரும் சீரெதுகை வழியெதுகையாம். முதலெடுத் துக்காட்டில் இருவகை எதுகை (ங், டு) வந்தன. (யா. க. 532 உரை)

வழிமுரண் (1) -

{Entry: O15a__619}

நாற்சீரடி அல்லாத நெடிலடி முதலிய அடிக்கண் வரும் சீர்முரண். இது பலவாக வருதல் சிறப்பு.

எ-டு : ‘ செய்ய வாய்ப் பசும் பொன் ஓலைச் சீறடி ப் பரவை யல்குல்’ (சூளா. 673)

இவ்வறுசீரடிக்கண், செம்மை - பசுமை; சிறுமை - பரப்பு என முரண் பட்ட சொற்கள் பலவாக வந்தமை வழிமுரணாம். (யா.க. 53 உரை)

வழிமோனை -

{Entry: O15a__620}

பாடலடிகளில் மோனை சீர் இடையிட்டும் இடையிடாதும் வரத் தொடுப்பது. அதனால் இப்பாடல் சொல்லின்பம் பயிலும்.

எ-டு : ‘ மு ன்னைத்தம் சிற்றில் மு ழங்கு கடலோதம் மூ ழ்கிப் போக

ன்னைக் குரைப்பன் றிவாய் கடலேயென்(று) லறிப் பேரும்

ன்மை மடவார் ளர்ந்துகுத்த வெண்முத்தம் தயங்கு கானல்

பு ன்னையரும் பேய்ப்பப் போ வாரைப் பேதுறுக்கும் பு காரே எம்மூர்.’

இப்பாடல் மோனை இடையிட்டு வரத் தொடுக்கப்பட்டது. (தண்டி. மேற். 19 உரை)

வழிமோனையின் பாற்படுவது -

{Entry: O15a__621}

‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்’ - (நாலடி - 39) என முதலிருசீரும் ஒன்றாக வருதல் எதுகையுள் அடக்கப் படாது, வழிமோனைப் பாற்படும், முதற்கண் வருவது மோனையே ஆதலின். (தொ. செய். 93 நச்.)

வழிமோனை, வழியெதுகை

{Entry: O15a__622}

அளவடிக்கண்ணேயே (நாற்சீரடிக்கண்ணேயே) இணை, பொழிப்பு முதலாய தொடை விகற்பம் சொல்லப்படும். நாற்சீர் இகந்த பலசீரான் நிகழும் அடிக்கண் பயிலும் மோனை எதுகைகள் வழிமோனை வழியெதுகை யெனப்படும். முரண் முதலான பிறதொடையும் கொள்க.

து னிவருநீர் து டைப்பவளாத் து வள்கின்றேன் து ணைவிழிசேர் து யிலை நீக்கி’ (தண்டி. பக். 17)

‘ம ண் டலம் ப ண் டுண்ட தி ண் டோள் வரகுணன் தொ ண் டி யின்வாய் (யா. வி. பக். 207)

வழியசை

{Entry: O15a__623}

தன்னொடு பின்னும் அசை வந்துசேர்தற்கு உரியதாய் நிற்பது. ஒழியசை போலத் தனிஅசையாய் நில்லாது, பின்னும் சில அசையொடு புணர்ந்து வருதலின் வழியசை எனப்பட்டது. ‘என’ என்பது ‘எனவாங்கு’ எனவும், ‘ஆங்கு’ என்பது ‘ஆங் கொருசார்’ எனவும் வருதல் போல்வன இதற்கு எடுத்துக் காட்டாவன.

இவ்வுறுப்புக் கலிப்பாவுள் தனிச்சொல்லாய் வரும். (தொ. செய். 123. நச்.)

வழியசைபுணர்த்தல் -

{Entry: O15a__624}

ஒரு சீரின்கண்ணே பிறிதொரு சீர் வரத் தொடுக்காமல் ஓரசை வரத் தொடுத்தல் (தொ. செய். 119 இள.)

வழுநேரும் எழுபது வகைமையாவன -

{Entry: O15a__625}

இயலசைச்சீர் 2, உரியசைச்சீர் 2. இயற்சீர் 10, ஆசிரியஉரிச்சீர் வெண்சீர் 4, வஞ்சிச்சீர் 60 ஆகிய 84 சீர்களுள் இயலசைச்சீர் இரண்டும் நாற்சீரடிக்கண் சீராக நிரம்பாமையின் அவை களையப்பெறும்.

வெண்சீர் நான்கும் தளை கொள்ளுமிடத்து நிரையசை இயல்பினவாம் ஆதலின் அவை இயற்சீர்பாற்பட்டு அடங் கும். அசைச்சீர் தளைகொள்ளுமிடத்து இயற்சீர் போலக் கொள்ளப்படுமேனும், அவை முற்றுகர குற்றுகரங்களான் வேறுபடுதலின், இயற்சீருள் அடங்காது வேறாகக் கொள்ளப் படும்.

வஞ்சியுரிச்சீர் அறுபதனுள் ஐந்தெழுத்தின் மிக்குவருவன நிரையீற்றுள் நான்கும் நேர்ஈற்றுள் நான்கும் ஆக எட்டாம். ஆகவே அவை நீக்கப்படும்.

எஞ்சியவை 70 சீர்களாம்.

இந்த 70 சீர்களும் ஆசிரியம் வெண்பா கலி ஆகிய பாக்களுக்கு உரியவை. நின்ற சீரும் வருஞ் சீருமாய்ப் புணர்ந்து தளை கொள்ளுமிடத்தே, ஒரு பாவிற்குரிய அடியுள் ஏனைப்பாக்க ளின் ஓசை புகுமாயின், வழுவாம் அவ்வாறு 70 வகைச் சீர்க ளான் நேரும் வழு 70 வகைமையாகும்.(தொ. செ. 50. சி. பால)

வன்பா -

{Entry: O15a__626}

வெண்பாவிற்கு ஒரு பெயர். பாடுதல் அருமைகுறித்து வந்தது. (யா. வி. பக். 219)

வனப்பு (1) -

{Entry: O15a__627}

அஃதாவது பெரும்பான்மையும் பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு. இவ்வனப்பு அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எட்டாம். (தொ. பொ. 547 பேரா.)

வாக்கிய பேதம் -

{Entry: O15a__628}

சூத்திரத்தில் புகலாகாத ஒரு குற்றம். ‘ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும்’ (தொ. பொ. 480 பேரா.) என்ப ஆதலின், சூத்திரம் ஒரு செய்தியையே கருதி விதித்தலன்றி இரண்டு முதலிய பலவற்றைக் கருதி விதிப்பின் இக்குற்றம் புகும் என்பது.

வாய்மொழி -

{Entry: O15a__629}

மந்திரம். (தொ. செய். 79 நச்.)

வாயுறை முதலிய மூன்றாவன -

{Entry: O15a__630}

அவையாவன வாயுறை, அவையடக்கியல், செவியுறை என்பன.

வாயுறை - மெய்ப்பொருள் நிறைவு.

அவை அடக்கியல் - பணிந்த மொழியான் அவையோரைத் தன்நோக்கிற்குள் அடக்கும் இயல்பு.

செவியுறை - கேட்போர் உளங்கொள்ளுமாறு அவர் செவி கொளக் கூறுதல். (தொ. செய். 112 - 114 ச. பால.)

வாயுறை மொழி -

{Entry: O15a__631}

‘வாயுறை வாழ்த்து’க் காண்க.

வாயுறை வாழ்த்து - (1)

{Entry: O15a__632}

மருந்து போன்ற வாழ்த்துச் செய்தி கூறும் பாடாண்துறை; முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாகிய இன்சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கும் எனக் கருதிப் பாதுகாத்துக் கூறுவதனால் உண்மையாக அறிவுறுத்துவது. வாயுறை- வாய் மொழியாகிய மருந்து; மருந்து போலுதலின், மருந்து எனப்பட்டது.

எ-டு : “இந்நிலவுலகினைத் தாமே ஆண்ட காவலர் கடல் அலைகள் சேர்க்கும் மணலினும் பலர். அன்னோர், பிறர் தம் நாடு கொள்ள, நன்காடே தம் பதியாக மாய்ந்து போயினர். மன்னவ! கேள். உடம்பொடு நிலைத்த உயிரும் இல்லை. உயிரைக் கவர்ந்து செல்ல வல்ல மடங்கல் இருத்தல் ஒருதலை. முதுகாட்டில் பிரேதத்துக்கு உப்பில்லா அவிப்புழுக்கலை நிலத்தி லிட்டு ஈயும் அக்கொடிய நாள் வாராமுன்னே, இவ் வுலகினைத் துறந்து முற்பட்டதாகிய தவமாகிய அறவினையைச் செய்க” என்னும் அறிவுரை. (புறநா. 363) (தொ. செய். 112 நச்.)

இவ்வாயுறைவாழ்த்தினை ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின், இதுவும் கைக்கிளைப் புறனாகிய பாடாண் ஆயிற்று. இப்பாடற்கு வெண்பா, ஆசிரியம், மருட்பா என்பனவே உரியன. (தொ. பொ. 90 நச்.)

வாயுறை வாழ்த்து (2) -

{Entry: O15a__633}

“யாம் கூறும் சொற்கள் கேட்டதற்குக் கடுமையானவையாயி னும், அவற்றை ஏற்று அந்நெறி யொழுகின், தொடர்ந்த நற்பயனே விளைவன” என்று சான்றோர் கூறும் உபதேசம் பற்றிய பாடாண் துறை. (பு. வெ. மா. 9: 32)

வாயுறை வாழ்த்து மருட்பா-

{Entry: O15a__634}

வாயுறை வாழ்த்து வெண்பாவானும் ஆசிரியத்தானும் இவையிரண்டும் கலந்த மருட்பாவானும் பாடப்பெறலாம். கலி வஞ்சிப் பாக்கள் இதற்குரியன அல்ல.

எ-டு : ‘பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்:

சொலல்முறைக்கண் தோன்றிச் சுடர்மணித்தேர் ஊர்ந்து

நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும்

சிலமுறை யல்லது செல்வங்கள் நில்லா;

இலங்கும் எறிபடையும், ஆற்றலும், அன்பும்,

கலந்ததம் கல்வியும், தோற்றமும், ஏனைப்

பொலன்செய் புனைகலனோ(டு), இவ்ஆற னாலும்

விலங்கிவரும் கூற்றை விலக்கலும் ஆகா(து); -

அனைத்தாதல் நீயிரும் காண்டிர் நினைத்தக்க

கூறிய எம்மொழி பிழையாது;

தேறிநீர் ஒழுகின் சென்றுபயன் தருமே!

வாயுறை வாழ்த்து மருட்பாவால் வந்தவாறு. (யா. வி. பக். 312)

வார்த்திகம் -

{Entry: O15a__635}

சூத்திரக் கருத்தை விளக்கவல்ல ஒருவகை எளிய உரை.

வாரம் -

{Entry: O15a__636}

1. சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைய இசைப்பாடல். (சிலப். 3-67 அரும்.

2. அம்போதரங்க ஒருபோகு கலிப்பாவினுள் ஓர் உறுப்பு; தரவு, கொச்சகம், அராகம், சிற்றெண் என்னும் உறுப்புக்களிற் கூறிய பொருளை அடக்குமியல்பிற்றாகலின் ‘அடக்கியல் வாரம்’ எனப்படும். (தொ. பொ. 464 பேரா.)

சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வாரம் எனினும், வைப்பு எனினும், போக்கியல் என்னும் ஒக்கும். (வீ. சோ. 117 உரை)

வாழ்த்தியல் வகை -

{Entry: O15a__637}

மும்முதற்பொருட்கண் அறமாவது வாழ்த்துதற் பொருட்கும் உரியது ஆதலின், அந்நிலையில் வாழ்த்துதல் நான்கு பாவிற்கும் உரித்தாகும்.

‘வகை’ என்றதனால், கடவுள் வாழ்த்தே யன்றி, முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்னும் அறுமுறை வாழ்த்து வருதலே பெரும்பான்மை என்பதும், கடவுளரை வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இருவகையான் வாழ்த்து வரும் என்பதும், வாழ்த்து முன்னிலையாகவும் படர்க்கையாகவும் வரும் என்பதும் கொள்ளப்பட்டன.

எ-டு : ‘மாநிலம் சேவடி யாகத் தூநீர்.....

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே! (நற். கடவுள்)

இது தனக்குப் பயன்பட வாழ்த்தியது.

‘நீல மேனி வாலிழை யாகத் (து)

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!’ (ஐங். கடவுள்.)

இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. இவை ஆசிரியப்பா.

‘முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா;

பொற்பனை வெள்ளையை உள்ளார் எழிலின்னா;

சக்கரத் தானை மறப்பின்னா; ஆங்கின்னா

சத்தியாள் தாள்தொழா தார்க்கு’ (இன்னா நாற்பது கடவுள்.)

இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது; வெண்பா.

‘ஆறறி அந்தணர்க்(கு) அருமறை பல பகர்ந்து’

எனத் தொடங்கும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துக் கலிப்பாவான் அமைந்தது.

‘உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’ (குறள் 24)

இது முனிவரை வாழ்த்தியது; குறள் வெண்பா.

‘ஆயிர வெள்ள ஊழி

வாழி யாத! வாழிய பலவே!’ (பதிற். 63)

இஃது அரசனை வாழ்த்தியது; ஆசிரியப்பா.

‘விசும்பிற் றுளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புற் றலைகாண்(பு) அரிது’ (குறள் 16)

இது மழையை வாழ்த்தியது; குறள் வெண்பா.

இவை அறுமுறை வாழ்த்தாம்.

‘அங்கண் வானத் தமரரசரும்

வெங்களி யானை வேல்வேந்தரும்....’ (யா. வி. மேற்.)

இவ்வஞ்சிப்பா பின்னுள்ளோர் கூறிய கடவுள்வாழ்த்து.

இவை இயற்கையான வாழ்த்து. புறநிலை வாழ்த்து முதலியன இயற்கை வகையானன்றி வாழ்த்தியல்பால் சார்த்தப்படுவன. (தொ. செய். 109 நச்.)

‘வகை’ என்றது தேவரை வாழ்த்தலும், முனிவரை வாழ்த்த லும், ஏனையோரை வாழ்த்தலும் ஆம். (105. இள.)

பாடாண்திணையின் பகுதியாகக் கூறப்பெற்ற கடவுள் வாழ்த்து முதலாக ஓம்படை யீறாகக் கூறப்பெற்றவை யாவும் வாழ்த்தினது பாகுபாடே ஆதலின், ‘வாழ்த்தியல் வகை’ எனப்பட்டன. இஃது ஆசிரியம் முதலிய நான்கு பாக்களுக்கும் உரியது. (தொ. செய். 109 ச.பால.)

விகற்பக்குறள் வெண்பா -

{Entry: O15a__638}

அ) செந்தொடையாலும், ஆ)தொடை விகற்பத்தாலும் வரும் குறள் வெண்பா. அஃதாவது அடியெதுகை யின்றி வருவது; இருவிகற்பம் எனினும் ஆம்.

எ-டு : அ) ‘அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே

நன்னுதல் நோக்கோர் வளம்’ (செந்தொடை)

இஃது அடியெதுகை யின்றிச் செந்தொடையால் வந்தது.

ஆ) ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு’ (விகற்பத்தொடை)

இது முதலடி இணைமோனை பெற்று வந்தது. இரண்டாமடியுள் முதலிருசீரும் மோனை. (யா. க. 59 உரை)

விகற்பம் இல்லாத் தொடைகள் -

{Entry: O15a__639}

செந்தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்பன இணை பொழிப்பு ஒரூஉ முதலிய விகற்பமில்லாத தொடைகளாம். (யா. க. 49)

விகற்ப மயக்கம் -

{Entry: O15a__640}

வரன்முறையின்றிப் பல தொடைகள் வரின், விகற்ப மயக்கம் என்று பெயரிடப் பெறும்.

எ-டு : வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ (குறுந். 18)

முதல் மூன்றடிக்கண் அடியெதுகையே யன்றி, முதலடிக்கண் கூழை மோனையும், மூன்றாமடிக்கண் ஒரூஉ எதுகையும், ஈற்றயலடிக்கண் இணைமுரணும் கடையிணை எதுகையும், ஈற்றடிக்கண் பின் முரணும் எனப் பல தொடை விகற்பங்க ளும் விரவி வந்தவாறு. (யா. க. 53 உரை)

விட்டிசைமோனை -

{Entry: O15a__641}

ஒவ்வோரடியிலும் முதலெழுத்துக் குறிலாக இருந்து விட்டிசைப்பது. விட்டிசைத்தலாவது அடுத்த எழுத்தொடு தொடராமல் பிரிந்திசைத்தல்.

எ-டு : ‘அஉ அறியா அறிவில் இடைமகனே

நொ, அலையல் நின் ஆட்டை நீ’

அ, நொ என்னும் முதலெழுத்துக்கள் அளவொத்து விட்டிசைத்தமையால் விட்டிசை மோனை ஆயிற்று. (யா. க. 37 உரை.)

விட்டிசை வல்லொற்று எதுகை -

{Entry: O15a__642}

ஈரடிகளில் முதலடி முதற்குறில் வல்லொற்றொடு கூடி அடுத்த அடி முதற்குறில் வல்லொற்று அடுத்தாற் போன்று விட்டிசைத்து வரும் தொடை.

எ-டு : பற்றிப் பலகாலும் பால்முலை உண்ணாமை

நொ, அலையல் நின்ஆட்டை நீ’

முதலடிக்கண் முதற்குறில் வல்லொற்றடுத்து விட்டிசைத்து நேரசையானாற்போல, இரண்டாமடிக்கண் தனிக்குறில் விட்டிசைத்து ஓரலகு பெற்றமையால் இவ்வெதுகையாம். (யா. க. 53 உரை)

வியனிலை மருட்பா -

{Entry: O15a__643}

வெண்பா அடியும் ஆசிரிய அடியும் தம்முள் ஒவ்வாது வரும் மருட்பா வகை. (வியனிலை, வியநிலை என இருவகையாகவும் எழுதுப.)

எ-டு : ‘தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
முன்றில் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க்
குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப, என்றும்
தீரா நண்பின் தேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே!’

இப்புறநிலை வாழ்த்து மருட்பாவில், முன் மூன்றடிகளும் வெண்பாவடி; பின்னிரண்டடிகளும் ஆசிரியவடி யாதலின் இது வியனிலை மருட்பாவாம். (யா. கா. 36 உரை)

வியனிலை வஞ்சி -

{Entry: O15a__644}

சிந்தடி வஞ்சிப்பா இவ்வாறு பெயர் பெறும். (தொ. செய். 47 நச்.)

விரவியல் ஆசிரியப்பா -

{Entry: O15a__645}

வேற்றுப்பாவின் அடிகள் விரவிய ஆசிரியப்பா.

எ-டு : ‘எறும்பி யளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பஅவர் தேர்சென்ற வாறே;
அதுமற் றவலம் கொள்ளாது.

நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.’ (குறுந். 12)

இப்பாடலின் முதலடி வெண்பாவடி ஆதலின் இது விரவியல் ஆசிரியப்பா ஆயிற்று. (யா. க. 70 உரை)

விரவியல் வஞ்சிப்பா -

{Entry: O15a__646}

வஞ்சிப்பா வேற்றடி விரவி வருவது. (வேற்றடி விரவாமல் வருவது இன்னியல் வஞ்சிப்பாவாம்.)

எ-டு : பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டு ஆசிரியஅடிவிரவி வந்த ஏந்திசைத் தூங்கல் விரவியல் குறளடி வஞ்சிப்பா. (யா. க. 90 உரை)

விரவு உறுப்புடைய கலிவெண்பா -

{Entry: O15a__647}

விரவுறுப்புடைய கலிவெண்பா தரவிற்கும் போக்கிற்கும் இடையில் உள்ள பாட்டாகப் பயின்றும், இடையிடையே ஐஞ்சீரடியும் அறுசீரடியும் பெற்றும், வெண்பா எனப்பட்ட உறுப்பின் இயற்கை சிதையாமல் உட்பொருள் ஒன்றனை அடக்கி வாராது நேரே பொருள் புலப்படத் தோன்றும்; தனிச்சொல் பெற்று வெள்ளைச் சுரிதகமோ அகவல் சுரிதகமோ பெற்று முடியும். வெள்ளைச் சுரிதகமும் ஒரோவழித் தரவினைப் போல, ‘கோதை பரிபாடக் காண்கும்’ (கலி. 80) என்றாற்போல அசைச்சீரான் இறாது இயற்சீரானும் இறும்.

சுரிதகம் போல இடையே வரும் பாட்டும் முச்சீரான் இறாது, சிறுபான்மை,

‘கரந்தாங்கே இன்னாநோய் செய்யுமற் றிஃதோ

பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு’ (கலி. 141)

என்றாற் போல நாற்சீரான் இறுதலும் உண்டு.

ஐந்துசீர் பெறுதலும் ஆறுசீர் பெறுதலும், பெரும்பாலும் தரவு சுரிதகம் இவற்றின்கண்ண அன்றி, இடையிலுள்ள பாட்டின்கண்ணேயே நிகழும். அடுக்கும் சீர் பாட்டின் முதலிலேயோ இறுதியிலேயோ வரும்.

எ-டு : ‘சான்றவிர் வாழியோ சான்றவிர்’ (கலி. 139)

என்ற பாடல் தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து ஆசிரியச் சுரிதகத்தான் இற்ற கலிவெண்பாட்டு.

‘கண்டவிர் எல்லாம் கதுமென வந்தாங்கே’ (கலி. 140)

என்பதன்கண்,

‘என்னானும், பாடெனின் பாடவு ம் வல்லேன் சிறிதாங்கே’ என ஐஞ்சீர் பாட்டின்கண் வந்தது.

‘காராரப் பெய்த’ (கலி. 109) என்னும் முல்லைக்கலியுள்,

இவடான், வருந்தநோய் செய்திறப்பி னல்லால் மருந்தல்லள்’ எனச் சுரிதகத்தின்கண்ணும் ஐஞ்சீர் வந்தது.

‘அரிதினில் தோன்றிய யாக்கை புரிபுதாம்’ (கலி. 141) என்ற நெய்தற்கலியுள்.

‘வாழி சான்றீர், பொய்தீர் உலகம் எடுத்த கொடிமிசை’ எனவும்,

‘அம்ம சான் றீர், கரந்தாங்கே இன்னாநோய் செய்யுமற் றிஃதோ’ எனவும், அறுசீர் அடுக்கிய பாட்டுக்கள் வந்தன.

இவற்றை முதற்பாட்டின் ஈற்றடியொடு கூட்டின்,

‘மன்றம் படர்வித் தவள் வாழி சான்றீர்’ எனவும்,

இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் எனவும், ஐஞ்சீரடி அடுக்கிய பாட்டுக்களாம்.

சொற்சீரடியே ஐஞ்சீரும் அறுசீருமாய் அடுக்கின.

இதற்கு நேர்ந்த சொற்சீரடி, ஒத்தாழிசைக்கும் தனித்து வரும் கலிவெண்பாவிற்கும் வாரா.

தரவுக்கும் சுரிதகத்துக்கும் இடையே வருவன. தாழம்பட்ட ஓசை இன்மையின் தாழிசை எனவும், துள்ள லோசை சிறிதும் இன்மையின் கொச்சகம் எனவும் கூறப்படாமல், வெண்பாட் டாகவே வருதலின் ‘பாட்டு’ எனப்பட்டன. இவற்றை வெள்ளைக்கொச்சகம் என்றும் கூறலாம். (தொ. செய். 154 நச்.)

விராஅய் வருதல் -

{Entry: O15a__648}

விரவி வருதல். கலந்து வருதல் என்பர் பேராசிரியர்.

ஐவகை அடியும் ஆசிரியத்துள் வருங்கால், ஆசிரியவுரிச்சீரும் இயற்சீருமாய் ஆசிரியத்தளையாயே வருதலன்றி, பிறசீர் களும் தளைகளும் விரவி வரினும் அவை நீக்கும் நிலைமை இல)

அவற்றை இசையொடு சேர்த்தி அகவலோசையாற் கூறிக் கொள்க. (தொ. செய். 53 ச. பால.)

விரித்தல் விகாரம் -

{Entry: O15a__649}

செய்யுளுள் அசையை மிகுத்தல் கருதிச் சாரியை முதலியன இரு சொற்களின் இடையே மிடைய அச்சொற்கள் விரிக்கப்படுதல்.

எ-டு : ‘தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்
வண்ணம் கடைப்பிடியா தார்’

‘தண் துறைவர்’ எனற்பாலது சீரமைப்பு நோக்கித் ‘தண்ணந் துறைவர்’ என ‘அம்’ சாரியை விரிக்கப்பட்டவாறு.

விரிமுரண் -

{Entry: O15a__650}

பண்டு வழங்கிய ஒருவகை இசைப்பா என்று சிகண்டியார் வரைந்த இசைநுணுக்கம் கூறும். (சிலப். 6 : 35 உரை)

விருத்தகந்தி -

{Entry: O15a__651}

எதுகை மோனை முதலிய தொடைநலம் திகழ வரும் செய்யுள் நடையிலமைந்த வசனம். (இலக். அக.) (L)

விருத்தக் கலித்துறை -

{Entry: O15a__652}

கலித்துறைப்பா வகை. இக் கலித்துறை ‘காப்பியக் கலித்துறை’ எனவும் கூறப்படும். (வீ.சோ. 123 உரை) ‘மூவா முதலா’ முதலாக வரும் நெடிலடிப் பாடல்களை விருத்தக் கலித்துறை என்று கூறுதல் பொருந்தாது, ‘கொச்சகம்’ என்றே கூறல் வேண்டும் என்று விளக்கும் நச்சினார்க்கினியரது உரைப் பகுதியுள் இவ் யாப்புப் பெயர் சுட்டப்பட்டுள்ளது. (சீவக. 1 நச்.)

விருத்தம் (1) -

{Entry: O15a__653}

தம்மில் ஒத்த அடி நான்காய் வரும் செய்யுள். குண்டலகேசி முதலிய காப்பியம் எல்லாம் விருத்தமாம். (வீ.சோ. 129 உரை)

விருத்தம் (2) -

{Entry: O15a__654}

ஒரு புடையான் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தானும், எல்லா அடியும் ஒத்து நடத்தலானும், புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும் ‘விருத்தம்’ என்பது காரணப் பெயர்.

இவை ஒருபுடை ஒப்புமை வரலாற்று முறைமையால் பெயர் பெற்றன. காக்கைபாடினியார், விருத்தம் துறை தாழிசை என்ற முறையே குறிப்பிட்டார். சிறுகாக்கைபாடினியார் முதலாயி னோர், தாழிசை துறை விருத்தம் எனக் குறிப்பிட்டனர். (யா. க. 56 உரை)

விருந்து -

{Entry: O15a__655}

வனப்பெட்டனுள் ஐந்தாவது; புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலைச்செய்யுளின் மேற்று; தோல் போலப் பழையதும் புதியதுமாகிய கதைமேலதன்றி, இது புதிதாகப் படைத்துத் தொடர்நிலை செய்வது. முத்தொள்ளாயிரமும், பின்னுள்ளார் பாட்டியல் மரபிற் கூறிய கலம்பகச்செய்யுள் முதலியவற்றைப் பாடுதலும் விருந்து என்னும் வனப்பு வகையாம். (தொ. செய். 239 பேரா.)

விருந்தாவது, தமிழகத்தில், யாப்பின்வழியதாகி வாராமல். புதுவதாகப் புனைந்து கூறும் யாப்பின்மேற்று ஆகும்.

அது பொதுவியற் கூத்தினுள் படைத்துமொழியாகவும் பொருளொடு புணர்ந்த நகைமொழியாகவும் அவ்வப்போது புனைந்து கூறும் செய்யுளாம்.

அஃது இக்காலத்து வழங்கும் ஆசுகவியும் இலாவணியும் போன்றது என்க. (தொ. செய். 238 ச. பால.)

விளச்சீர் -

{Entry: O15a__656}

நேர்நிரை நிரைநிரை என நிரையசையால் முடியும் இயற்சீர் இரண்டும். (யா. கா. 7)

விளம் -

{Entry: O15a__657}

இயற்சீரின் இறுதியாக நிற்கும் நிரையசைக்குரிய வாய்பாடு.

விற்பூட்டுப் பொருள்கோள் -

{Entry: O15a__658}

பூட்டுவில் பொருள்கோள் - காண்க.

வெண்கலிப்பா -

{Entry: O15a__659}

கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீரான் முடிவது கலிவெண்பா (வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும்.) (யா. வி. பக். 325)

ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு, முச் சீரான் இறுவனவும் வெண்கலிப்பா எனப்படும்; பெரும் பான்மையும் ஈற்றடி வெள்ளோசை கொண்டும் கொள்ளா தும் முச்சீரடியால் இறுவதே கொள்ளப்படும்.

இது சிறப்புடைக் கலித்தளையானும், உரிச்சீர் வெண்டளை யானும், சிறப்பில்லாத ஆசிரியத் தளையானும், சிறப்பில்லாத வஞ்சித் தளையானும் வரும். வெண்பா ஒழித்து அல்லாத செய்யுட்களுள் வேற்றுத்தளை விரவும் எனினும், அவையும் தம் தளையால் வருவதே சிறப்புடையதாம். (யா. க. 85 உரை)

ஒரு சாரார் செப்பலோசையில் சிறிதும் வழுவாது வருவன கலிவெண்பா எனவும், சிறிது வழுவிவருவன வெண்கலிப்பா என்றும் கூறுவர். (யா. கா. 32 உரை)

எ-டு : ‘பண்கொண்ட வரிவண்டு’ - சிறப்புடைக் கலித்தளை (யா. வி. பக். 325)

‘நாகிளம்பூம் பிண் டிக்கீழ்’ - உரிச்சீர் வெண்டளை. (யா. வி. பக். 325)

‘ஏர்மலர் நறுங் கோதை’ - ஆசிரிய நிரைத்தளை. (யா. வி. பக். 326)

‘முழங்குகுரல் முரசியம்ப’ - சிறப்பில்லாத வஞ்சித்தளை. (யா. வி. பக். 326)

வெண்கலிப்பா, கலிவெண்பா -

{Entry: O15a__660}

ஒரு பொருளையே நுதலிவரும் பல அடிகளாலும் சில அடிகளாலும், வெண்பாநடை பெற்று, கலித்தளை பயில, ஒன்று விட்டு அடிதோறும் ஒரூஉஎதுகை அமைந்தும்,

இனி, வெண்டளை வழுவாமல் அமைய அகப்பொருள் பற்றியும், என இவ்விருதிறத்தானும் நிகழ்ந்து ஈற்றடி வெண்பா இயலால் முச்சீரடியாக முடியப் பெறுவது வெண்கலிப்பாவாம். அது கலிவெண்பா எனவும்படும். (தென். இயற். 29)

வெண்கலியும் கலிவெண்பாவும் -

{Entry: O15a__661}

ஆசிரியத் தளையானும் தன் தளையானும் இயன்று ஈற்றடி வெண்பாவே போல சிந்தடியால் முடிவது வெண்கலிப்பா.

எ-டு : ‘ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்திய என்
தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங் கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து.’ (யா. கா. 32 உரை)

வெண்தளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வந்து, ஈற்றடி வெண்பாப் போல முடிவது கலிவெண்பா.

எ-டு : ‘சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில்நாம் ஆடும்’
(குறிஞ்சிக்கலி. 15) என்னும் பாடல். (யா. கா. 32 உரை)

வெண்கலிப்பா அளவடியாய், ஈற்றடி அசையால் முடியும் முச்சீரடியாய்ப் பலதளையும் தொடையும் விரவி வருவது. கலிவெண்பா வெண்டளையே பெற்று ஈற்றடி முச்சீராக வருவது. (தொ. வி. 235)

வெண்கூ வெண்பா -

{Entry: O15a__662}

நேரிசை வெண்பா இப்பெயர் பெறும் என்பர் ஒரு சாரார். (யா. க. 57 உரை)

வெண்கவி -

{Entry: O15a__663}

1. வெண்பா. 2. பொருளாழ மற்ற கவிதை. (L)

வெண்சீர் -

{Entry: O15a__664}

வெண்பா வுரிச்சீர் (இ. வி. 718)

வெண்சீர் ஆசிரியத்துள் வருதல் -

{Entry: O15a__665}

விரவியல் ஆசிரியப் பாவில், வெண்சீர் வந்து விரவப்பெறும்.

‘அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்

பூசல் வாயா புலம்புமனைக் கலங்கி

ஏதில் மாக்களும் நோவர், தோழி!

என்றும் நோவா ரில்லை,

தண்கடற் சேர்ப்பன் உண்ட என் நலக்கே’

இவ்வாசிரியப்பாவுள் முதலடி வெண்பா அடி; ‘அரவின் வாய்’ என்பது காய்ச்சீராகிய வெண்சீர். (யா. க. 29 உரை; யா. கா. 41 உரை)

வெண்சீர் ஈற்றசை -

{Entry: O15a__666}

வெண்சீர்கள் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி, அவ்வெண்சீர்களுள் ஈற்று நின்ற சீரின் முதற்கண்வந்த நேரசை. (தொ. செய். 29 நச்.)

‘வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்று’ ஆதல் -

{Entry: O15a__667}

ஒரு கலியடியுள் நான்கு சீர்களும் வெண்சீர்களாக இருப்ப, முதல் மூன்று சீர் நிரைமுதல் சீர்களாக அமைய, நான்காம்சீர் நேர் முதலாக அமைந்தாலும், முதல் மூன்று சீர்களும் நிரை முதலாக வந்து கலித்தளை ஆயவாறு போலக் கலியோசையே கொள்ளப்பெறும்.

எ-டு : ‘அடிதாங்கும் அளவன்றி அனலன்ன வெம்மையால்’ (கலி. 11)

என்ற கலியடியில், ஈற்றுச்சீரில் முதலில் வந்த நேரசை நிரை யசை போலத் துள்ளளோசை கோடலின் கலித்தளையா யிற்று.

‘பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்’ (கலி. கடவுள்.)

‘அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்’ (கலி. 11)

என்ற அடிகளில், வெண்சீர் இறுதி நிரை முதல் இயற்சீர் தட்டலின் துள்ளலோசை சிறவாதாயிற்று.(தொ.செய். 29 நச்.)

‘வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்று’ என்பதற்கு இளம்பூரணர் உரைக்கும் நேரிய பொருள் பின்வருமாறு :

தேமா, புளிமா என்ற நேரீற்றியற்சீர் முன் வருஞ்சீரின் முதலி லுள்ள நேரசை ஒன்றுவது நேரொன்றாசிரியத்தளை. வெண் சீர்களும் நேரீற்றுச்சீர்களே; வருஞ்சீரின் முதலிலுள்ள நேரசை அவற்றோடு ஒன்றும். நேர்முன் நேர் வருதலின் நேரொன்றாசிரியத்தளைதான் என்று கருதுவார்க்கு, வெண்சீரின் ஈற்றிலுள்ள நேரசையை நிரையசை போலக் கொண்டு, நிரைமுன் நேர்வருவது வெண்டளை என்று கொள்வதுபோல, இதனையும் வெண்டளை என்று கொள்ளுக என்பது. (28 இள.)

வெண்சீர்முன் நேர்வருதல் ஒன்றுதல் ஆகாமை -

{Entry: O15a__668}

தளைகோடற்கண் வெண்சீர் ஈற்றசை நிரையசை இயல்பினது ஆதலின், நேர்முதலாகிய சீர்வரின், நிரைமுன் நேர்வந்த ஒன்றாத் தன்மையதாகவே கருதப்படும். (தொ. செய். 58 ச. பால)

வெண்சீர் வெண்டளை -

{Entry: O15a__669}

வெண்பாவுரிச்சீர் முன் நேர் வந்து ஒன்றும் தளை; வெண்பா வுரிச்சீரின் நேர்வந்து ஒன்றுவது சிறப்புடைய வெண்சீர் வெண்டளை எனவும், பிறசீரின் நேர்வந்து ஒன்றுவது சிறப்பில்லா வெண்சீர் வெண்டளை எனவும் கொள்ளப் படும். (யா. கா. 10 உரை)

வெண்செந்துறை -

{Entry: O15a__670}

குறள்வெண்பாவின் ஓர் இனம்; தம்முள் ஒத்து வந்த இரண் டடிகள் விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடைய னவாய் வந்து வெண்செந்துறை என்று பெயர் பெறும்; ஒவ்வோரடியும் நாற்சீர் முதல் பலசீர்களானும் வரும்.

எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!’

இது நாற்சீரடி இரண்டான் ஆகியது.

‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’

இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது.

இது செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறும். (யா. க. 63)

வெண்டளை -

{Entry: O15a__671}

வெண்பாவிற்குரிய இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமாம். மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர்வெண்டளையாம்; காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாம். (யா. க. 18 உரை)

வெண்டளையின் இருவகை -

{Entry: O15a__672}

‘வெண்டளை’ காண்க. வெண்பா உரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளை யாம். இயற்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாம்.

வெண்பா உரிச்சீர் நின்று வரும் சீரும் வெண்பா உரிச்சீராக வர ஒன்றுவது சிறப்புடையது; வரும்சீர் பிற சீராக வர ஒன்றுவது சிறப்பில்லாதது. இயற்சீர் நின்று வரும் சீரும் இயற் சீராக வர ஒன்றாதது சிறப்புடையது; வரும் சீர் பிறசீராக வர ஒன்றாதது சிறப்பில்லாதது. (யா. க. 18)

வெண்டளை விரவுதல் -

{Entry: O15a__673}

வெண்பாவொடும் கலிப்பாவொடும் கலத்தல். ஈண்டுத் தளை என்றது அப்பாக்களை. வெண்டளையெனவே இரண்டு வெண்டளையும் அடங்கலின், அவற்றுள் வெண்சீர் வெண் டளையான் வரும் சீர்வகைவெண்பாவும் சீர்வகைக் கலியும் அடங்கின. (தொ. செய். 63 நச்.)

வெண்டாழிசை -

{Entry: O15a__674}

வெண்டளையே வரல் வேண்டும் என்ற வரையறையின்றி வெண்டளையொடு வேற்றுத்தளையும் விரவி, அடி மூன்றாய், அடிதோறும் நாற்சீராய் ஈற்றடி முச்சீராய், ஒரு பொருள்மேல் தனித்து ஒன்றாகவும் இரண்டும் பலவும் இணைந்தும், வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கியும் வருவன ஈரடிமுக்கால் எனப்படும் சிந்தியல் வெண்பாவின் இனமாகிய வெண்டாழிசையாம்.

எ-டு : ‘போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியனையான்

தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்

தீதார் வினைகெடுப்பார் சிறந்து.’

இது வெள்ளோசை தழுவாது வேற்றுத்தளை விரவி முதற்கண் வெண்டளை தட்டு வந்த வெண்டாழிசை.

‘நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவ செய்யார்

அன்பு வேண்டு பவர்.’

இஃது ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை. வெண் டாழிசை கலித்தளையானும், வஞ்சித்தளையானும் வருவன உள. (யா. க. 66 உரை)

வெண்டாழிசைக்கும் வெள்ளொத்தாழிசைக்குமிடையே உள்ள வேறுபாடு -

{Entry: O15a__675}

வெண்டாழிசை சிந்தியல் வெண்பாப்போல நாற்சீரடியிரண் டும் முச்சீர்த்தாய இறுதியடி ஒன்றும் உடையதாயினும், பல தளைகளும் விரவித் தனித்தும் ஒரு பொருள்மேல் பலவாக அடுக்கியும் வரும். வெள்ளொத்தாழிசை தனித்து வாராது ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கி வந்த சிந்தியல் வெண் பாக்களாம். நாற்சீரடி இரண்டு முன்வர முச்சீரடி ஈற்றடியாக வருதலொன்று தவிர, பிறஎல்லாம் இவற்றிடையே வேறுபாடுகளாம்.

வெண்டாழிசை வெள்ளொத்தாழிசை என்ற இரண்டனை யும் ஒன்றாகக் கொள்வர் காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார், அவிநயனார் முதலானோர். (யா. க. 66 உரை)

வெண்டுறை -

{Entry: O15a__676}

வெண்பாவின் இனங்களுள் ஒன்று. மூன்றடிமுதல் ஏழடி காறும் இதற்கு எல்லை உண்டு. கடைக்கண் ஓரடியிலும் பல அடியிலும் ஒரு சீரும் இருசீரும் பலசீரும் குறைந்து வரும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவதும் உண்டு; முதல் சில அடிகள் ஓரோசையாகவும், ஏனைய அடிகள் வேறோர் ஓசையாகவும் வருதலுமுண்டு. பாடல் முழுதும் ஓரோசை யாக வருவது ஓரொலி வெண்டுறையாம்; வெவ்வேறோசை யாக வருவது வேற்றொலி வெண்டுறையாம். தளை வரையறை இல்லை. மூன்றடி வெண்டுறை சிந்தியல் வெண்பாவின் இனம்; நான்கடி வெண்டுறை இன்னிசைவெண்பாவின் இனம்; 5, 6, 7 அடி வெண்டுறைகள் பஃறொடைவெண்பா வின் இனம். வகைகளைத் தனித்தனியே காண்க. (யா. க. 67 உரை)

வெண்டுறையுள் பிறதளை -

{Entry: O15a__677}

எ-டு : ‘முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய் கோமான்

வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன் தாக்கரிய வைவேல்பாடி’

இவ்வெண்டுறை யடிகளுள், வெண்சீர் வெண்டளை, கலித்தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, நேரொன்றா சிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண் டளை, வெண்சீர் வெண்டளை, நேரொன்றாசிரியத்தளை எனத் தன் தளையொடு பிற தளைகளும் வந்தவாறு. (யா. க. 22 உரை)

வெண்பா - (1)

{Entry: O15a__678}

ஈற்றில் நேர்வரும் மூவசைச்சீர்களாகிய காய்ச்சீர் நான்கும், ஈரசைச்சீர் நான்கும், ஓரசைச்சீர் இரண்டும் வெண்பாவிற் குரியனவாம். வெண்பா ஈற்றில் ஓரசைச் சீரே வரும்; பிற வாரா. காய்ச்சீராகிய மூவசைச் சீரினையும் நிரை ஈறாகிய ஈரசைச் சீரினையும் அடுத்து நேர்வரும்: நேர் ஈறாகிய ஈரசைச்சீரினை யடுத்து நிரை வரும்: இவை வெண்பாவிற் குரிய தளை நிலை. நேரசைச் சீராகிய நாள் வாய்பாட்டாலும் நிரையசைச் சீராகிய மலர் வாய்பாட்டாலும் முடித்த வெண்பாக்கள் உத்தமப் பகுதியாம்; ஏனைய காசு, பிறப்பு என ஈரசை வாய்பாட்டால் முடித்த வெண்பாக்கள் உத்தமம் அல்லாப் பகுதியாம்; இந்நுட்பம் உணர்ந்த பாவலன் நூற்று வருள் ஒருவனே. முதலடி நாற்சீரால் அமைத்து அடுத்த அடி ஓரெதுகையில் முச்சீரால் அமைத்து முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனையில் அமையப் பாடுவது குறள் வெண்பாவாம். இரண்டுகுறள் வெண்பாக்கள் (தனிச்சீர் பெறாமல்) அணைவது சவலைவெண்பா - என்றனர் ஒரு சாரார். சவலை வெண்பாவின் முதற்குறள் ஈற்றில் அவ்வடி யெதுகையமைய தனிச் சீரொன்று (நான்காம் சீராக) இயையின், அது நேரிசை வெண்பாவாம். முதல் மூன்றடிகளும் நந்நாற்சீரினவாகவும், ஈற்றடி முச்சீரினதாகவும் வருவது இன்னிசை வெண்பாவாம். நேரிசை வெண்பாக்களை நிறைய அடுக்கி இடையே (நான்காம் சீராகத்) தனிச் சொல்லைப் பொருத்தி இயற்றுதல் பஃறொடை வெண்பாவாம்; இதனைக் கலிவெண்பா என்பாரும் உளர். இன்னும் சிலவகை வெண்பா உளவேனும், அவையெல்லாம் இக்கூறிய ஐந்தனுள்ளும் அடங்கும். தளை பிழைபடாமல் பொருட் செறிவொடு திகழும் வெண்பா மோனை எதுகைகள் பிறழ்ந்தாலும், தவிர்ந்தாலும், தக்கோர் அவற்றிற்கு இசைவு காட்டினும், அவை இனிமை குன்றி விடும். குறில் தனித்து வரும் அசைச்சீர் வெண்பாவின் இறுதி யிலன்றிப் பிறவிடத்து வாராத் தன்மையையும், குற்றிய லிகரத்தைக் கொள்ளலும் தள்ளலுமாதிய தன்மையையும் அறிபவர் யாம் சொன்ன முறையால் வெண்பா இயற்றுவர்; அசைச்சீர் இடையே வர ஒருகாலும் வெண்பாப் புனையார். வெண்பா இயற்கை இன்னும் பல உள. ஈறறடிக்கண் சிறப்பாக அமையும் அம்மோனையியல்பால், வெண்பா, தண்ணுமைக் கருவி பல வாத்தியங்களிடையே தயங்குமாறு போல, பாக்களிடையே சிறந்து திகழவல்லது. (அறுவகை யாப்பு 13 - 24)

வெண்பா - (2)

{Entry: O15a__679}

நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவது வெண்பாவாம். (வீ. சோ. 127)

வெண்பா, அகவல், கலிப்பா அடிகள் -

{Entry: O15a__680}

வெண்பாவும் ஆசிரியமும் கலியும் நாற்சீரடியாகிய அளவடி யால் நடைபெறும். கலியுள் அம்போதரங்க உறுப்புச்சில இருசீரடியானும் முச்சீரடியானும் வரும். அராக உறுப்பு நாற்சீரின் மிக்கும் வரும்.

வெண்பாவின் ஈற்றடியும், ஆசிரியப்பாவின் ஈற்றயலடியும், கலிவெண்பாவின் ஈற்றடியும் முச்சீரான் வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும் பலவும் இருசீரடி யானும் முச்சீரடியானும் வரும். ஆசிரிய விருத்தமும் கலித் துறையும் ஒழித்து மூன்று பாவினமும் பெரும்பான்மையும் நாற்சீரடியான்வரும்.

ஒருசார் ஆசிரியஅடியும் கலியடியும் ஐஞ்சீரான் அருகி வருவனவும் உள. (யா. க. 27 உரை)

வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்ற முறை -

{Entry: O15a__681}

வெண்பா பிறதளையொடு மயங்காமையானும், மிக்கும் குறைந்தும் வாராத அடியான் வருதலானும், அந்தணர் நீர் மைத்து என முற்கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாய்ப் பிற தளையும் வந்து இனிய ஓசையுடைத்தாய்ப் பரந்து வருதலின் அரசத் தன்மைத்து என்றதனான், ஆசிரியப்பாக் கூறினார், அதன்பின், அந் நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவின் வணிக நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன்பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடி யும் சிந்தடியும் வந்து பலதளையும் விரவுதலின் வேளாண் மாந்தர் இயல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். (தொ. செய். 101 இள.)

யா. க. 55 உரை வருமாறு :

நாற்சீரடியால் நடைபெறுதலும் வேற்றுப்பாவினால் இறாமையும் எல்லாப்பொருள்மேலும் சொல்லப்படுதலும் என்றிவற்றால் ஆசிரியத்தோடு ஒத்திருத்தலும், உயர்ந்த ஓசைத்து ஆகலும், அந்தணர் வருணத்ததாகலும், வேற்றுத் தளையும் வேற்றுப்பாவும் விரவாமையும் என்னும் மிகுதிக் குணமுடைமை நோக்கி வெண்பா ஆசிரியத்தின்முன் வைக்கப்பட்டது.

அளவடியான் நடைபெறுதலும் தனது நடையால் தான் இனிது இறுதலும் எல்லாப் பொருள்களையும் தன்கண்ணே அடக்கலும் ஒருவாத பொருளிற்றாகலும் ஆகிய ஒருபுடை யான் வெண்பாவோடு ஒத்தலும், அகவிய ஓசைத்தாகலும், அரசர் குலத்தினதாகலும், வேற்றுத்தளையும் அடியும் விரவி வருதலும் என்னும் வேறுபாடுடைமையும் நோக்கி ஆசிரியப்பா வெண்பாவின் பின் வைக்கப்பட்டது

அளவடியான் நடைபெறுதலும் அயலடியும் அயற்றளையும் விரவி வருதலும் ஆகிய இவ்வாற்றான் ஆசிரியத்தோடு ஒத்தலும், அயற்பாவினால் இறுதலும், புறநிலைவாழ்த்து முதலிய பொருள்கள்மேற் செல்லாமையும், வணிகர் குலத்தினதாகலும், துள்ளலோசைத்தாகலும் நோக்கிக் கலிப்பா ஆசிரியத்தின் பின் வைக்கப்பட்டது.

புறநிலை வாழ்த்து முதலிய பொருள்கள்மேல் புகாமையும் அயல்தளையும் அயலடியும் விரவி வருதலும் அயற்பாவி னால் இறுதலும் என்றிவற்றால் கலிப்பாவினோடு ஒத்தலும், நாற்சீரடியால் வாராமையும், வேளாளர் குலத்தினதாகலும், தூங்கலோசைத்தாகலும் அகப்பொருள்மேல் அருகியன்றி வாராமையும் உடைமை நோக்கிக் கலிப்பாவின்பின் வஞ்சிப்பா வைக்கப்பட்டது.

வெண்பா ஆறுவகை -

{Entry: O15a__682}

குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, சவலை, பஃறொடை என வெண்பா ஆறு வகைப்படும். ஈரடியுடையது குறள்; இரு குறள் கொண்டது சவலை; இருகுறளும் இடையே தனிச் சொல்லும் பெறுவது நேரிசை; நாலடியும் விகற்பநடை பெற்று வருவது இன்னிசை; நேரிசை இன்னிசை போல மூவடியால் வருவது சிந்து; நாலடியின் மிக்கு வருவது பஃறொடையாம். (தொ. வி. 222)

வெண்பா இயல் -

{Entry: O15a__683}

வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே வேற்றுத்தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்தாதலின் வெள்ளை என்பது, திருவே போல்வாளைத் ‘திரு’ என்றாற் போலக் காரணம் பற்றி வந்த பெயராம். இதனைப் பாடுதல் அருமை நோக்கி வன்பா என்றும் கூறுவர். இது வேதியர் வருணத்தை ஒத்தது என்ப. இதன் ஓசை செப்பலோசையாம். (யா. க. 55 உரை)

வெண்பா இனங்களின் தொகை வகை விரி -

{Entry: O15a__684}

வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்ற மூன்றும் தொகை. வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, அடிமறி மண்டில வெளிவிருத்தம், நிலைவெளிவிருத்தம் என்ற ஆறும் வகை.

இவற்றுள் வெள்ளொத்தாழிசைக்கண், சிறப்புடைய வெண்சீர் வெண்டளை, சிறப்பில்லாத வெண்சீர் வெண்டளை, சிறப் புடைய இயற்சீர் வெண்டளை, சிறப்பில்லாத இயற்சீர் வெண் டளை என்ற நான்கு தளைகளே வரும்.

ஏனைய வெண்டாழிசை முதலிய ஐந்தன்கண்ணும் சிறப்புடைய நேரொன்றாசிரியத்தளை, சிறப்பில்லாத நேரொன்றா சிரியத்தளை முதலாகச் சிறப்புடையன சிறப் பில்லன என இரு கூறுபட்ட ஏழுதளைகளும் பதினான்காக வரவே, அவற்றொடு வெண்டாழிசை முதலிய ஐந்தனையும் உறழ, அவை எழுபது எனக் கூறுபடும். வெள்ளொத் தாழி சையின் கூறு நான்கனையும் கூட்ட, வெண்பாஇனங்களின் விரி தளைகளையொட்டி 74 ஆகக் கூறுபடும்.(யா. க. 68 உரை)

வெண்பா உரிச்சீர் -

{Entry: O15a__685}

இயலசையானாகிய இயற்சீர் இறுதிக்கண் நேரசை வந்து நிற்பின் நேர்நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர், நிரை நேர் நேர் என்ற நான்கு வெண்பா உரிச்சீர்கள் தோன்றும். இவை முறையே தேமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், புளிமாங்காய் என வாய்பாடு பெறும். (தொ. செய். 19 நச்.)

இனி, யா.க. 12 உரையுட் கண்டது வருமாறு :

சீர்கள் - வாய்பாடுகள்

நேர் நேர் நேர் - தேமாங்காய், பூவாமா, பொன்னாக்கும், தென்மேற்கு, வேய்மென்தோள்.

நிரை நேர் நேர் - புளிமாங்காய், விரிபூமா, பொருளாக்கும், வடமேற்கு, வளைமென்தோள்.

நிரை நிரை நேர் - கருவிளங்காய், நறுவடிமா, பொருள் பெருக்கும், வடகிழக்கு, வளைகெழுதோள்.

நேர் நிரை நேர் - கூவிளங்காய், பூவிரிமா, பொன்பெருக்கும் , தென்கிழக்கு, வேய்கெழுதோள்.

இவ்வெண்பா உரிச்சீர் காய்ச்சீர் எனவும் படும்.

வெண்பா ஐந்து வகை -

{Entry: O15a__686}

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்பன. (யா. கா. 24, 25)

வெண்பாப் போலி -

{Entry: O15a__687}

1) நடுவு தனிச்சொல் இன்றி மூன்றாமடி குறைந்தும், 2) முதலடியும் மூன்றாமடியும் குறைந்து, ஏனையடிகள் நீண்டு, மேலிரண்டடியும் ஓரெதுகையாயும் கீழிரண்டடியும் ஓரெ துகையாயும், 3) தனிச்சொல் இன்றியும், பதினைந்து சீரும் பதினான்கு சீரும் பெற்று வெண்டளை பிறழாமல் ஈற்றுச்சீர் நாண் மலர் காசு பிறப்பு எனும் வாய்பாடு பிழையாது நான்கடியால் வருவன எல்லாம் வெண்பாப் போலியாம்.

எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவ ராற்றான்;
விளங்காய் திரட்டினா ரில்லை;
களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்’ (நாலடி. 103)

2) ‘கடற்குட்டம் போழ்வர் கலவர்
படைக்குட்டம் பாய்மா வுடையான் உடைக்கிற்கும் தோமில்
தவக்குட்டம் தன்னுடையா னீந்தும்
அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும்.’ (நான்மணிக். 16)

இவையிரண்டும் 15 சீர்கள் உடையன.

3) ‘கறைப்பற் பெருமோட்டுக் காடுகிழ வோட்கொத்
தறைத்திருந்த சாந்துகொண் டப்பேய்
மறைக்குமாம் காணாது வன்பேய்தான் கையைக்
குறைக்குமாம் கூன்கத்தி கொண்டு.’

இது 14 சீர்கள் உடையது. (வீ. சோ. 127 உரை)

வெண்பா யாப்பின -

{Entry: O15a__688}

நெடுவெண்பாட்டு குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள் என்பன வெண்பா என்னும் உறுப்பான் யாக்கப்படுவன.

‘முன்னைய நான்கும்’ (தொ.பொ. 53 நச்.) என்ற அகத்திணை யியற் கைக்கிளையும், ‘கடவுளும் வரையார்’ (தொ.பொ. 83) என்ற உம்மையால் கொண்ட புறத்திணையியற் கைக்கிளையும் போல்வன வெண்பா யாப்பான் வரும்.

காமஞ் சாலா இளமையோள்வயின் கைக்கிளையும் (தொ. பொ. 50 நச்.), ‘கைக்கிளை வகையோடு’ (தொ.பொ. 90) என்ற கைக்கிளையும், கடவுட் கைக்கிளை அல்லாக் கைக்கிளையும் வெண்பா யாப்பான் வாரா. (செய். 118 நச்.)

நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள், நான்கடியான் வரும் சமநிலை வெண்பாக்கள் என்பன எல்லாம் ஓசையான் ஒக்குமாயினும், அளவானும் தொடையானும் பொருளானும், இனத்தானும் வேறுபடுத்திக் கூறப்பட்டன.

நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு என்பன அளவு பற்றிய பெயர். கைக்கிளை என்பதும், அங்கதம் என்பதும் பொருளா னாகிய பெயர். இவை ஓரினம். பரிபாட்டாவது பரிந்து பாடும் பாட்டு; அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவெண்பாவுமாகிப் பல உறுப்புக்களொடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது; இவை தொடையான் வேறுபட்டன. (தொடையாவது ஈண்டு அடியெதுகை.)

இவை போல்வன எனவே, அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடாத நான்கடி வெண்பாக்களாகிய சமநிலை வெண்பாக்களும் கொள்ளப்படும். (செய். 114 இள.)

வெண்பா விருத்தம் -

{Entry: O15a__689}

வெளிவிருத்தம்; வெண்பா இனங்களுள் ஒன்று.

இது மூன்றடியானும் நான்கடியானும் வரும். ஒரே சீர் தனிச்சீராய் நான்கு சீர்களுக்கும் புறம்பாய் அடிதோறும் ஐந்தாம் சீராக வரும். எனவே, வெளிவிருத்தத்தின் எல்லா அடிகளும் சமமான ஐஞ்சீரடிகளே. இதற்கு வெண்டளையே வருதல் வேண்டும் என்ற நியதி இல்லை. அடிதோறும் பொருள் முடிந்துவிடின், அஃது அடிமறி மண்டில வெளி விருத்தம் எனப்படும். அடிதோறும் பொருள் முடியாதன நிலைவெளிவிருத்தம் எனப்படும். மூன்றடி வெளிவிருத்தம் சிந்தியல்வெண்பாவின் இனம். நான்கடி வெளிவிருத்தம் தனிச்சொல்லுடைமையால் நேரிசைவெண்பாவின் இனம்.

எ-டு : ‘உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே!

பெற்ற முடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே!

மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே!’

இஃது அடிதோறும் பொருள் முடிதலின் அடிமறி மண்டில வெளிவிருத்தம். இது மூன்றடியா னமைந்தது.

‘சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - அம்மானாய்!

ஆய் மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும் - அம்மானாய்!

மாயிருந் தானை மயிடன் தலையின்மேல் - அம்மானாய்!

பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!’

இஃது அடிதோறும் பொருள் முடியாது தொடர்ந்து வந்தமையின் நிலை வெளிவிருத்தம். இது நான்கடியான் அமைந்தது. (யா. க. 68 உரை)

வெண்பாவில் ஆசிரிய அடி -

{Entry: O15a__690}

வெண்பாவினுள் ஆசிரியஅடி முழுதும் தன் தளையொடு வாராது; கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய் வரும் வெண்பாக் களில் சிறிது வரும். வெண்பாக்களில் ஆசிரியத்தளை வரின், அவை வெண்பா ஆகாது வெள்ளைக் கொச்சகமாகிவிடும். (தொ. செய். 62 நச்.)

வெண்பாவில் பிறதளை -

{Entry: O15a__691}

வெண்பாவினுள், மூவசைச்சீரின் ஒரு கூறாகிய காய்ச்சீர் இறுதி நேர் வரும் சீர் முதலசையோடு ஒன்றி வரும் வெண்சீர் வெண்டளையும், ஈரசைச் சீராகிய இயற்சீர் வருஞ்சீர் முதலசையொடு மாமுன் நிரையும் விளமுன் நேருமாக விகற்பித்து வரும் இயற்சீர் வெண்டளையும் அன்றிப் பிற தளைகள் வருதல் கூடாது. வரின், வெண்பா என்ற பெயரே சிதைந்துவிடும்.

‘கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ நீபிறர்’ என்ற வெண்பா அடியுள் ‘கோவின்மையோ’ என நான்கசைச் சீர் வருதலும், அது கொண்டு தளைகோடலும் தவறு என்று நீக்கப்படும். வேற்றுத்தளை விரவிய வெண்பா சான்றோர் செய்யுளுள் யாண்டும் காணப்பெறாமையின் வெண்பாவுள் பிறதளை விரவுதல் கூடாது என்பது. கொச்சக வெண்பாக் களில் பிறதளை விரவி வருதல் காணப்படும்.(யா. க. 22 உரை)

வெண்பாவில் முச்சீரடி நாற்சீரடி -

{Entry: O15a__692}

வெண்பாவின் இறுதியடி முச்சீர்த்தாய் வரும். அவற்றுள் மூன்றாம் சீர் இயலசை உரியசைச் சீர்களாகிய நேர் - நிரை - நேர்பு - நிரைபு - இவற்றுள் ஒன்றாகவே இருக்கும்.

வெண்பாவின் ஏனைய அடிகள் நாற்சீரடிகளே.

சிறுபான்மை ஈற்றடி நாற்சீரான் வருதலும், சிறுபான்மை முதலடி இடையடிகளும் முச்சீரான் வருதலும் ஒரோவழிக் காணப்படும்.

எ-டு : ‘அறையருவி யாடாள் தினைப்புனமும் காவாள்
பொறையுயர் தண்சிலம்பின் பூந்தழையும் கொள்ளாள்
உறைகவுள் வேழமொன் றுண்டென்றாள் அன்னை
மறையறநீர் வாழிய மணிநெடுங் குன்று.’

இது வெண்பாவின் ஈற்றடி நாற்சீரான் வந்தது.

‘நாளுமொன் றீயாப் பகலும்
பகாஅஅ நண்புடைக் கேளிர்ப் பிரித்தலும்
தகாஅன் இவனென்னும் சொல்லுமிம் மூன்றும்

வகாஅ தொழிக எமக்கு’

இது வெண்பாவின் முதலடி முச்சீரான் வந்தது.

‘அட்டாலும் பால்சுவையிற் குன்றா(து) அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.’ (மூதுரை)

இது வெண்பாவின் இடையடி முச்சீரான் வந்தது. இங்ஙனம் வெண்பாவின் முதலிலும் இடையிலும் முச்சீரடி வரும் செய்யுள்களைப் பிற்காலத்தார் ஆரிடச் செய்யுள் என்று கூறி வழுவமைத்தல் வேண்டா. (தொ. செய். 72 நச்.)

வெண்பாவில் மோனை விகற்பங்கள் -

{Entry: O15a__693}

இணைமோனை : வே ண்டுதல் வே ண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ (கு. 4)

பொழிப்பு மோனை : ம்மை இகழ்ந்தமை hம்பொறுப்ப தன்றியுமற்(று)’ நாலடி. 58)

பு ல்லி விடாஅப் பு லவியுள் தோன்றுமென்’ (கு. 1324)

ஒரூஉ மோனை : கு ற்றமே காக்க பொருளாக; கு ற்றமே (கு. 434)

கூழை மோனை : ற்றுக ற்றற்றான் ற்றினை அப்பற்றைப்’
(கு. 350)

‘இனியர் இவரெமக்(கு) இன்னம்யாம் என் று’ (கு. 790)

மேற்கதுவாய்மோனை : ழிவந்த செய்யினும் ன்பறா ர் ன்பின்’ (கு. 807)

கீழ்க்கதுவாய் மோனை : ற்றால் ளவறிந் துண்க ஃதுடம்பு’ (கு. 944)

முற்றுமோனை : ற்க சடறக் ற்பவை ற்றபி ன்’ (கு. 391)

(தொ. செய். 92 நச்.)

வெண்பாவிற்கு நூற்றெண்பத்தோரடிகள் உரியவாதல் -

{Entry: O15a__694}

வெண்பாஅடிகள் 7 எழுத்திலிருந்து 14 எழுத்து முடிய உயரும்.

7 எழுத்தடி 14 எழுத்து முடிய உயர்ந்தால் வரும் வெண்பாஅடிகள் - 8

8 எழுத்தடி 14 எழுத்து முடிய உயர்ந்தால் வரும் வெண்பாஅடிகள் - 7

9 எழுத்தடி 14 எழுத்து முடிய உயர்ந்தால் வரும் வெண்பாஅடிகள் - 6

10 எழுத்தடி 14 எழுத்து முடிய உயர்ந்தால் வரும் வெண்பாஅடிகள் - 5

1. நுந்தை, வண்டு, ஞாயிறு, போதுபூ, போரேறு என்னும் இவ்வைந்து சீரும் (முதற்சீராக நிற்பின்) 8 அடிபெறுவன (5 x 8) 40 ஆம்.

2. தேமா, மின்னு, வரகு, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய் என்னும் இப்பதினொருசீரும் (முதற்சீராக நிற்பின்) 7 அடி பெறுவன (11 x 7 =) 77 ஆம்.

3. புளிமா, அரவு, கணவிரி, காருருமு, பெருவேணு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய் என்னும் இவ்வொன் பது சீரும் (முதற்சீராக நிற்பின்) 6 அடி பெறுவன ( 9 x 6 = ) 54 ஆம்.

4. நனிமுழவு, புலிவருவாய் என்னும் இவ்விரண்டுசீரும் (முதற்சீராக நிற்பின்) 5 அடி பெறுவன (2 x 5 = ) 10 ஆம்.

7 முதல் 14 எழுத்து முடிய உயரும் 8 வெண்பா அடிகள் வருமாறு.

நுந்தை வரகு வரகு வரகு - 7 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை வரகு வரகு கடியாறு - 8 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை வரகு வரகு கணவிரி - 9 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை வரகு புளிமா கணவிரி - 10 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை புளிமா புளிமா கணவிரி - 11 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை புளிமா கணவிரி காருருமு - 12 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை கணவிரி காருருமு காருருமு- 13 எழுத்துக்களானாகிய அடி.

நுந்தை நனிமுழவு காருருமு காருருமு - 14 எழுத்துக்களானாகிய அடி.

‘வண்டு’ என முதற்சீர் குற்றுகர ஈறாக நிற்பினும் இது பொருந்தும். இனி, ‘ஞாயிறு’ முதற்சீராக நிற்ப வருமாறு :

ஞாயிறு வண்டு வரகு வரகு - 7 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு வண்டு வரகு கடியாறு - 8 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு வண்டு வரகு கணவிரி - 9 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு வண்டு புளிமா கணவிரி - 10 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு வண்டு கணவிரி காருருமு - 11 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு தேமா கணவிரி காருருமு - 12 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு தேமா புலிவருவாய் காருருமு - 13 எழுத்துக்களானாகிய அடி.

ஞாயிறு காருருமு மாவருவாய் காருருமு - 14 எழுத்துக் களானாகிய அடி.

போதுபூ, போரேறு எனுமிவை முதற்சீராக நிற்பினும் இது பொருந்தும்.

இவ்வாற்றான் வரும் வெண்பா அடிகள் 5 x 8 = 40 ஆம்.

2. 8 முதல் 14 எழுத்து முடிய உயரும் 7 வெண்பா அடிகள் வருமாறு :

தேமா வரகு வரகு வரகு - 8 எழுத்துக்களானாகிய அடி.

தேமா வரகு வரகு கடியாறு - 9 எழுத்துக்களானாகிய அடி.

தேமா வரகு வரகு கணவிரி- 10 எழுத்துக்களானாகிய அடி.

தேமா வரகு புளிமா கணவிரி - 11 எழுத்துக்களானாகிய அடி.

தேமா புளிமா புளிமா கணவிரி - 12 எழுத்துக்களானாகிய அடி.

தேமா புளிமா கணவிரி காருருமு - 13 எழுத்துக்களானாகிய அடி.

தேமா நனிமுழவு காருருமு பாதிரி - 14 எழுத்துக்களானாகிய அடி.

மின்னு, வரகு எனுமிவை முதற்சீராக நிற்பினும் இது பொருந்தும்.

வலியது வண்டு வரகு வரகு - 8 எழுத்துக்களானாகிய அடி.

வலியது வண்டு வரகு வலியது - 9 எழுத்துக்களானாகிய அடி.

வலியது வண்டு வலியது பாதிரி - 10 எழுத்துக்களானாகிய அடி.

வலியது வண்டு வலியது காருருமு - 11 எழுத்துக்களானாகிய அடி.

வலியது வண்டு கணவிரி காருருமு - 12 எழுத்துக்களானாகிய அடி.

வலியது தேமா கணவிரி காருருமு - 13 எழுத்துக்களானாகிய அடி.

வலியது காருருமு காருருமு பாதிரி - 14 எழுத்துக்களா னாகியஅடி.

ஏனையவற்றையும் ஏற்குமாறு இவ்வாறொட்டவே, இவ்வாற் றான் வரும் வெண்பா அடிகள் 11 x 7= 77 ஆகும்.

3) 9 முதல் 14 எழுத்து முடிய உயரும் 6 வெண்பாக்கள் வருமாறு:

புளிமா வரகு வரகு வரகு - 9 எழுத்துக்களாலாகிய அடி.

புளிமா வரகு வரகு கடியாறு - 10 எழுத்துக்களானாகிய அடி.

புளிமா வரகு புளிமா கடியாறு - 11எழுத்துக்களானாகிய அடி.

புளிமா வரகு புளிமா கணவிரி - 12 எழுத்துக்களானாகிய அடி.

புளிமா புளிமா புளிமா கணவிரி- 13 எழுத்துக்களானாகிய அடி.

புளிமா புலிவருவாய் காருருமு தேமா - 14 எழுத்துக்க ளானாகிய அடி.

‘அரவு’ என முதற்சீர் நிற்பினும் இது பொருந்தும்.

கணவிரி வண்டு வரகு வரகு - 9 எழுத்துக்களானாகிய அடி.

கணவிரி வண்டு வரகு கடியாறு - 10 எழுத்துக்களானாகிய அடி.

கணவிரி வண்டு புளிமா கடியாறு - 11 எழுத்துக்களானாகிய அடி.

கணவிரி வண்டு புளிமா கணவிரி - 12 எழுத்துக்களானாகிய அடி

கணவிரி தேமா வரகு கணவிரி - 13 எழுத்துக்களானாகிய அடி.

கணவிரி காருருமு காருருமு தேமா - 14 எழுத்துக்களானாகிய அடி.

ஏனையவற்னையும் ஏற்குமாறு ஓட்டவே, வரும் வெண்பா அடிகள் 9 x 6 = 54 ஆகும்.

4) 10 முதல் 14 எழுத்து முடிய உயரும் 5 வெண்பா அடிகள் வருமாறு:

நனிமுழவு வண்டு வரகு வரகு - 10 எழுத்துக்களானாகிய அடி.

நனிமுழவு வண்டு வரகு கடியாறு - 11 எழுத்துக்களானாகிய அடி.

நனிமுழவு வண்டு வரகு கணவிரி - 12 எழுத்துக்களானாகிய அடி.

நனிமுழவு காருருமு வண்டு புளிமா - 13 எழுத்துக்களானாகிய அடி.

நனிமுழவு காருருமு பாதிரி தேமா - 14 எழுத்துக்களானாகிய அடி.

புலிவருவாய் என முதற்சீர் நிற்பினும் இது பொருந்தும். இவ்வாற்றான் வரும் வெண்பா அடிகள் 2 x 5 = 10 ஆம்.

ஆகவே, வெண்பாவிற்குரிய அடிகள் 40 + 77 + 54 + 10 = 181 ஆமாறு அறியப்படும்.

இவற்றுள் 7 எழுத்துக்களானாகிய அடி (5) தன்னொடு தன்னைத் தொடுக்குமிடத்தே தளை வழுவுதலின், அது நீக்கிக் கொள்ளப்படும். பிறவும் இவ்வாறே தளை வழுவாது தொடுக்கப்படும். (தொ. செய். 50 பேரா.)

இனி நச்சினார்க்கினியர் உரையுள் கண்டவாறு:

வெண்பாவிற்கு இயற்சீர் 19; வெண்சீர் 4; அசைச்சீர் 4; ஆக, சீர்கள் 27. வெண்பா அடிகள் 7 முதல் 14 எழுத்து முடிய உயரும். அவ்வாறு உயர்கையில் 8 வகை அடியாம். 14 எழுத்தளவின் மிக உயரின் அவ்வடி செப்பலோசை சிதையும் ஆதலின், அது கட்டளைவெண்பாஅடிக்கு ஆகாது.

ஆகவே, 7 எழுத்துஅடி முதல் 10 எழுத்து அடி முடிய நின்ற நான்கடிகளும், 14 எழுத்தளவாக ஏறியக்கால் வரும் அடி களின் கூடுதல் முறையே 8, 7, 6, 5 என 26 ஆம். அடிதோறு முள்ள நாற்சீர்களான் உறழ்ந்தால் பெறும் கூடுதல் 26 x 4 = 104. முற்றியலுகரம் காரணமாக இருநிலைமைப்பட்ட இயற்சீர் 9, அசைச்சீர் 2 என இந்த 11 சீர்களையும், 8 முதல் 14 எழுத்து வரை உயரும்போது கிட்டும் 7 அடிகளோடும் உறழ வரும் வெண்பா அடிகள் 11 x 7 = 77 ஆம். ஆகவே, 104 + 77 = 181 வெண்பா அடிகள் என்றவாறு. ( 7எழுத்தாலாகிய அடி தன்னொடு தன்னைத் தொடுக்குமிடத்தே தளை வழுவுதலின், நீக்கப்பட்டது. அவ்வாறே தளை வழுப்படும் அடிகளும் நீக்கப்படும்.) (தொ. செய். 50)

வெண்பாவிற்குரிய சீர்கள் -

{Entry: O15a__695}

வெண்பாவிற்கு இருவகை இயற்சீர் பத்தும், வெண்சீர் நான்கும், அசைச்சீர் இரண்டும் எனப் பதினாறு சீர்களும் அடி உறழும் சீர்களாம். (தொ. செய். 28 நச்.)

வெண்பாவிற்குரிய நிலம் -

{Entry: O15a__696}

வெண்சீர் முதற்சீராக நிற்ப, வெண்சீரே அடியிலுள்ள ஏனைய மூன்று சீர்களாக வந்து ஒன்றிய வெண்சீர் வெண் டளை துள்ளலோசைக்கும் ஒப்ப உரியதாகலின் அத்தகைய வெண்டளையும் இயற்சீர் ஒன்றிய ஆசிரியத் தளையும் நீக்கி, இயற்சீர் ஒன்றாத இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் இயற்சீரொடு (தேமா, கூவிளம்) தட்ட வெண்சீர் வெண்டளையும் கொண்டு இயங்கும் கட்டளை வெண்பாவிற்குச் சிந்தடி மூன்றும் அளவடி ஐந்தும் ஆகிய 7 முதல் 14 எழுத்து முடிய உள்ள எட்டு நிலங்களும் உரியனவாம்.

எ-டு : ‘நின்று நினைந்து நெடிது பெயர்ந்து’ - ஏழ் எழுத்தடி

இதன்கண், அசைச்சீர் நான்கும் இயற்சீராய் நின்றன. நேர்பு, நிரைபு, நிரைபு, நிரைபு என்ற நான்கும் நேர் நேர், நிரைநேர், நிரைநேர், நிரைநேர் எனச் சீர்நிலை எய்தின.

‘கற்றவரைச் சேர்வர் கலைநிறையும் காட்சியார்’ - 14 எழுத்தடி. 8 முதல் 13 எழுத்து முடிய இடைப்பட்ட அடிகளும் கொள்ளப்படும்.

கட்டளைவெண்பாவின் ஈற்றடி 7 முதல் 9 எழுத்து அள வினதாதல் வேண்டும்.

‘வானவரும் நான்முகனும் வாசவனு மாமுனிவர்’

இது 16 எழுத்துடைய சீர்வகை அடிவெண்பாவாம்.

பின்னுள்ளோர் கூறும் ஏந்திசைச் செப்பலடி எழுத்து மிகுதற்கும் உரித்தாதலின் கட்டளைவெண்பாவிற்கு ஏலாது. ஏனைய ஒழுகிசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் 14 எழுத்தின் இகந்து வாராமையின் கட்டளைவெண்பா அடிக்கு ஏற்கும். (தொ. செய். 58 நச்)

வெண்பாவின் அளவு -

{Entry: O15a__697}

குறுவெண்பாட்டு - 2 அடி, 3 அடி யுடையது

அளவடிவெண்பா - 4 முதல் 6 அடிகாறும் நடப்பது.

நெடுவெண் பாட்டு - 7 முதல் 12 அடிகாறும் நடப்பது.

இவற்றுள், குறள்வெண்பாவாகிய ஈரடி வெண்பாவும், 4 அடி அளவியல்வெண்பாவுமே பெரும்பான்மைய.

(தொ. செய். 158 நச்.)

யா.க. 58 உரை : குறள்வெண்பாவினை ஓரடி முக்கால் எனவும், சிந்தியல்வெண்பாவினை ஈரடிமுக்கால் எனவும், நேரிசை வெண்பாவினை நேரிசை மூவடி முக்கால் எனவும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் எனவும், பஃறொடை வெண்பாவினைப் பலவடிமுக்கால் எனவும் ஒருசார் ஆசிரியர் வழங்குவர்.

வெண்பாவின் இறுதிச்சீர்கள் சிறப்புடையனவும் சிறப்பல்லனவும்-

{Entry: O15a__698}

வெண்பாவின் இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்ற நான்கு ஓரசைச் சீர்களுள் ஒன்றாக அமையும்.

எ-டு : ‘கையொத்து நேர்கூப்பு க’ (பு.வெ.மா. கடவுள்.) - நேர்
‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (கு. 2) - நிரை
‘சாந்துணையும் கல்லாத வாறு’ (கு. 397) - நேர்பு
‘பற்றுக பற்று விடற்கு’ (கு. 350) நிரைபு

இவற்றுள் ஈற்றுச்சீர் நிரையசையாகவோ நிரைபசையாகவே வரின், ஈற்றயல் சீர் தேமா, புளிமா என்ற நேர்நேர் நிரைநேர் இவற்றுள் ஒன்றாகவே இருத்தல் வேண்டும் என்பது.

நேரும் நேர்புமாக இற்ற சீர்கள் கருவிளம் கூவிளம் என்ற நிரைநிரை நேர்நிரை ஆகிய ஈற்றயல் சீர்களோடு இணைந்து தளை கொள்ளும். சிறுபான்மை வெண்சீர்களும் ஈற்றயற் சீர்களாக வரும்.

முச்சீரடியின் முதற்சீர்க்குத் தளையினை ஆசிரியர் கூறவில்iல. ஏனெனின், முச்சீரடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் தளைவகையானும் வரலாம்; தளைவகையின்றியும் வரலாம்.

எ-டு : ‘கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள்) தளைவகை
காய்சினவேற் கோதை களிறு’ (முத்தொள்)
} யான் வந்தன
‘உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழியென் நெஞ்சு.’ (கு. 1200)
‘செறாஅய் வாழியென்’ - நேரொன்றாசிரியத்தளை.

‘கலாஅற் கிளிகடியும் கானக நாட
இலாஅர்க் கில்லை தமர்.’ (நாலடி. 283)

‘இலாஅர்க் கில்லை’ - நேரொன்றாசிரியத்தளை.

இவை தளைவகை யின்றி வந்தன. (பேரா.)

(இவற்றை ‘செறாஅஅய்’ ‘இலாஅஅர்க்’ என நான்கு மாத்திரையாக்கித் தளைவகை பிழையாமல் வந்ததாகவே கொள்வர். தொ. செய். 73, 74, 75 நச்., 74 பேரா.)

இனி, யா. க. 57 கூறுவன வருமாறு :

வெண்பாவின் ஈற்றுச்சீர் நேரசையாயின் அதன் வாய்பாடு நாள். இந்நேரசை பெரும்பாலும் தனி நெட்டெழுத்தாக வருவதே சிறப்பு; குற்றெழுத்தாக வருவது சிறப்பின்று. நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒற்றடுத்தும் வரும்.

எ-டு : ‘தாவாத மாதவா நீ’

‘வாலெயி றூறிய நீர்’ (கு. 1121) இவை சிறப்புடையன

‘கையொத்து நேர்கூப்பு க’ (பு.வெ.மா. கடவுள்.)

‘கருமமே கட்டளைக் கல்’ (கு. 505) இவை சிறப்பில்லன.

வெண்பாவின் ஈற்றுச்சீர் நிரையசையாயின் குறிலிணையும் குறிலிணை ஒற்றும் வருதலே சிறப்பு; குறில் நெடிலும் குறில் நெடிலொற்றும் வருதல் சிறப்பின்று.

எ-டு : ‘நினைப்பானை நீங்கும் திரு’ (கு. 519
‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (கு. 2) இவை சிறப்புடையன.
‘வேம்போஎன் வாயின் வினா’
‘சொல்லாத சொல்லப் பெறார்’ இவை சிறப்பில.

ஈரசைச் சீர்களாகிய தேமா புளிமா ஆகிய காசு பிறப்பு என்ற வாய்பாட்டான் அமையும் ஈறுகள் முற்றியலுகர ஈற்றனவாக வருதல் சிறப்பின்று.

எ-டு : ‘சாந்துணையும் கல்லாத வாறு’ (கு. 397) இவை சிறப்புடையன;
‘ஆக்கம் எவனோ உயிர்க்கு’ (கு. 31) குற்றுகர ஈற்றன.
‘புனைமலர்த்தா ரகலம் புல்லு’ இவை சிறப்பில்லன;
‘உள்ளத் தனைய துயர்வு’ (கு. 595) முற்றுகர ஈற்றன.

வெண்பாவின் ஈற்றடி -

{Entry: O15a__699}

வெண்பா ஈற்றடி சிந்தடியாம். அதன் இறுதிச்சீர் ஈரசைச் சீராகவோ அசைச்சீராகவோ வரும்.

ஈற்றுச்சீர் அசைச்சீராக அமையுமிடத்தே, தனிக்குறிலினாகிய நேரசையும் நெட்டெழுத்தைக் கொண்ட நிரையசையும் வருதல் சிறப்பின்று. நேர் நேர், நிரை நேர் என்ற இயற்சீர்களே இறுதிச்சீராக வருதற்குரியன. அவையும் உகர ஈறாக அன்றி வாரா. அவற்றுள் குற்றியலுகர ஈறாய் வருதல் சிறப்புடைத்து; முற்றியலுகர ஈறு சிறப்பின்று. ஈற்றுச்சீர் இயற்சீராயின் உகர ஈறாகவே அமைதலின் தேமா புளிமா என்ற வாய்பாடுகளை நீக்கிக் காசு பிறப்பு என்ற வாய்பாடுகளே கொள்ளப்படும்.

நத்தத்தர், நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு மாவாழ்சுரம் புலிவாழ் சுரம் என்ற வாய்பாடுகள் இருப்பவும் ஒரு பய னோக்கித் தூஉமணி கெழுஉமணி என்ற வாய்பாடுகளையும் கொண்டார். அவர் போலவே, இந்நூலாசிரியரும், தேமா புளிமா என்ற வாய்பாடுகள் இருப்பவும், வெண்பாவின் ஈற்றுச்சீர்க்கு உகர ஈற்றவாகிய காசு பிறப்பு என்ற வாய்பாடு களையும் கொண்டார். (யா. க. 57 உரை)

வெண்பாவின் ஒன்பது வகை -

{Entry: O15a__700}

குறள், இருகுறள் நேரிசை, இருகுறள் ஆசிடை நேரிசை, ஆசிடை ஒரு விகற்ப இருவிகற்ப நேரிசை, இன்னிசை, நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல், பஃறொடை, கலி என்பன. (சாமி. 156)

வெண்பாவின் பேரளவிற்கு எல்லை -

{Entry: O15a__701}

வெண்பாவின் பேரளவிற்கு எல்லை 7 அடிகளாம். 12 அடி பேரெல்லை என்பர் உரையாசிரியன்மார். 8 அடி முதலாகப் பயின்று வருவன கொச்சக வெண்பாக்களாக உள்ளமையா னும், 10 அடி முதலாகக் கலிவெண்பா வருதலானும், அங்கதப் பாட்டினை இவ்வெண்பா அளவோடு ஆசிரியர் மாட் டெறிந்து கூறுதலானும் ஏழடி என்றலே ஏற்புடைத்தாம்.

(தொ. செய். 157 ச. பால.)

வெண்பாவின் பொதுஇலக்கணம் -

{Entry: O15a__702}

செப்பலோசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்டளை தட்டு வேற்றுத்தளை விரவாது, ஈற்றடியின் இறுதிச்சீர் காசு பிறப்பு தோள் (நாள்) வளை (மலர்) என்ற வாய்பாட்டான் இறுவது; குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஒற்றும் ஆய்தமும் அல்லாத எழுத்து ஏழுமுதலாகப் பதினாறின்காறும் உயர்ந்த பத்து நிலமும் பெற்ற நாற்சீரடிகளை முன்னடிகளாகக் கொண்டு, ஐந்தெழுத்துமுதல் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறு நிலமும் பெற்ற முச்சீரடியை ஈற்றடியாகக் கொண்டு வருவது. (யா. க. 58 உரை)

வெண்பாவின் பொதுவகை நூற்றிருபது -

{Entry: O15a__703}

குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என வெண்பா வின் தொகை ஐந்து. இனக்குறள்வெண்பா, விகற்பக் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல்வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசைவெண்பா, இருவிகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப இன்னிசைவெண்பா, பல விகற்ப இன்னிசைவெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என விகற்பிக்கப் பத்து வகையாம் . இவற்றை வெண்சீர் வெண்டளை யான் வருவன இயற்சீர் வெண்டளை வருவன என விகற்பிக்க இருபது வகைப்படும். சிறப்புடைய வெண்சீர் வெண்டளை, சிறப்பில் லாத வெண்சீர்வெண்டளை, சிறப்புடைய இயற்சீர் வெண் டளை, சிறப்பில்லாத இயற்சீர் வெண்டளை என விகற்பிக்க, நாற்பது ஆம் . இவற்றை ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை என்ற மூவசைச் செப்ப லோசையோடும் உறழ, விரி 120 ஆம் மற்றும் பலவகையானும் விகற்பிக்கப் பலவாம். (யா. வி. பக். 251)

வெண்பாவின் மூவகை ஓசை பற்றி ஒருசாரார் கூற்று -

{Entry: O15a__704}

செப்பல், வெண்கூ, அகவல் என்னும் மூவோசை உடைத்து வெண்பா.

1) செப்பல் வெண்பா என்பது எழுசீரால் நடப்பது.

எ-டு : ‘சிறப்பீனும் செல்வமு மீனும் அறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு.’ (கு. 31)

2) வெண்கூ வெண்பா என்பது நேரிசை வெண்பா இனவெழுத்து மிக்கு நடப்பது.

எ-டு : ‘தண்டடைந்த திண்டோளாய்! தாங்கலாம் தன்மைத்தோ
கண்டடைவார் தம்மைக் கனற்றுமா - வண்டடைய
நாணீலம் நாறுந்தார் நன்னன் கலைவாய
வாணீலக் கண்ணார் வடிவு.’

வெண்சீர் மிக்கு வருதலின் இவ்வெண்பா எழுத்து மிக்கு நடப்பதாயிற்று.

3) இனி, அகவல் வெண்பாவாவது இன்னிசை வெண்பா.

எ-டு : ‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவார்
வைகலும் வைகல்தம் வாணாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.’ (நாலடி. 39) (யா. வி. பக். 228, 229)

வெண்பாவின் வகை -

{Entry: O15a__705}

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று வெண்பா ஐந்து வகைப்படும். ‘வெண்பாவின் அளவு’ காண்க.

செப்பலோசையிற் சிறிது சிதைந்த பஃறொடை வெண்பா வினைக் கலிவெண்பாவாகவும், அல்லாத வெண்பாக்களது சிதைவினை ஒருபுடை ஒப்புமை நோக்கித் தத்தம் இனமாக வும் கொண்டு வழங்குவர். (யா. க. 58 உரை)

வெள்ளடி -

{Entry: O15a__706}

வெண்பாவிற்குரிய அடி. அவை அளவடியும் சிந்தடியுமாம்.

(தொ. செய். 62, 153 நச்.)

வெள்ளை விருத்தம் -

{Entry: O15a__707}

‘வெண்பா விருத்தம்’ காண்க.

வெள்ளொத்தாழிசை -

{Entry: O15a__708}

சிந்தியல் வெண்பா ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவன; வெண்பாவின் இனமாகிய தாழிசை வகைகளுள் ஒன்று.

(யா. க. 66)

எ-டு : ‘அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.

‘வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணா இறந்து விடல்.

‘கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இறந்து விடல்’ (சி. செ. கோ. 34)

வெள்ளோசை -

{Entry: O15a__709}

வெண்பாவிற்குரிய செப்பலோசை; இது வெண்டளையால் நிகழ்வது.

வெளி -

{Entry: O15a__710}

வெண்பா (இலக். அக.)

வெளிப்படை -

{Entry: O15a__711}

அறம் முதலாய உறுதிப்பொருள் நான்கனிடத்தும், கைக்கிளை முதலான அகத்திணை ஏழும் வெட்சி முதலான புறத்திணை ஏழும் என்னும் இப்பொருட்பாகுபாட்டுக்கு இயைய, அறவுரை அறிவுரை வாழ்த்துரை வசவுரை விருப் புரை வெறுப்புரை என்னும் அறுவகைப்படவரும் முறையான கருத்துக்களை வழங்குகையில், அவற்றின் பொருள் தேர்ந் துணர வேண்டுவ தின்றிக் கேட்ட மாத்திரையானே புலப் படுதல் வெளிப்படைச் செய்யுள் எனப்படும்.(தென். இயற். 43)

வெளி விருத்தம் -

{Entry: O15a__712}

‘வெண்பா விருத்தம்’ என்பதன் பிறிதொரு பெயர்; அது காண்க.

வெறுத்திசைப்பு -

{Entry: O15a__713}

ஓசைக்குற்றம் மூன்றனுள் ஒன்று. (ஏனையன : அறுத்திசைப்பு, அகன்றிசைப்பு என்பன); செவிக்கு இன்னாதாக இசைத்தல்.

எ-டு : ‘சிறுநன்றி இன்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளை

பெறுநன்றி பின்னும் பெரிது.’

இதன்கண், ‘இன்றிவர்க்கியாம்’ என்னும் சீர்க்கண் குற்றிய லிகரம் வந்து வெட்டென்று இன்னாங்கு இசைத்தமை வெறுத்திசைப்பாம். (யா. வி. பக். 425)

‘வேம்பும் கடுவும் போல’ -

{Entry: O15a__714}

முற்பருவத்துக் கைத்தும் துவர்த்தும் (-கடுத்தும்), பிற்பரு வத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல; வேந்தற்குப் பாதுகாப்புத் தரும் அறிவுடையோர் சொற்களுக்கு உவமை.

(தொ. செய். 112)

வேற்றொலி வெண்டுறை -

{Entry: O15a__715}

முன் சில அடிகள் ஓரோசையாகவும், ஏனைய அடிகள் வேறோர் ஓசையாகவும் வரும் வெண்பா இனமாகிய வெண்டுறை.

எ-டு : ‘முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகும் ஏவல்செய்ய முறைசெய் கோமான்

வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய

வைவேல் பாடிக்

கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்

இலங்குவா ளிரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்(து)

அலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்

புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்

விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.’

இஃது ஏழடியாய், முன்னிரண்டடியும் அறுசீராய் ஓரோசை யால் வந்து, பின் ஐந்தடியும் நாற்சீராய் வேறோர் ஓசையால் வந்தமையால் வேற்றொலி வெண்டுறை. (யா. க. 67)

வைப்பு -

{Entry: O15a__716}

தரவு தாழிசைகளின் பொருள்களைக் கொண்டு தொகுத்து வைத்தலின், சுரிதகம் ‘வைப்பு’ எனப்பட்டது. (தொ. செய். 136 நச்.)