Section O15b inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 17 alphabetical subsections

  1. அ section: 22 entries
  2. ஆ section: 4 entries
  3. இ section: 11 entries
  4. உ section: 4 entries
  5. ஊ section: 2 entries
  6. எ section: 5 entries
  7. ஏ section: 1 entries
  8. ஒ section: 1 entries
  9. ஓ section: 2 entries
  10. க section: 8 entries
  11. ச section: 51 entries
  12. த section: 26 entries
  13. ந section: 7 entries
  14. ப section: 14 entries
  15. ம section: 14 entries
  16. ய section: 2 entries
  17. வ section: 44 entries

O15b

[Version 2l (transitory): latest modification at 13:11 on 19/04/2017, Hamburg]

விருத்தம், வண்ணம் (218 entries)

[Part 2 of TIPA file O15 (and pages 217-301 in volume printed in 2005)]

அ section: 22 entries

அசுவகதி விருத்தம் -

{Entry: O15b__001}

இஃது அடிக்குப் பதினாறு எழுத்துக்கள் கொண்ட வட மொழி விருத்தம். இதன் அமைப்பு, முதற்கண் குருவான கணம் ஐந்து வந்து ஈற்றில் ஒருகுரு வருதல்; மாத்திரைகள் 22 கொண்டது ஓரடி. (இந்த இலக்கணம் ‘கொட்டுவ’ என்ற பாடலில் ஒற்றுநீக்கிக் காண முற்றிலும் பொருந்தி நிற்கிறது.)

அ) முதல் நான்கு சீர்கள் குற்றெழுத்தீற்று 4 மாத்திரைக் கூவிளச்சீர்கள், 5 ஆம் சீர் 6 மாத்திரை கொண்ட தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் இவற்றில் ஒன்று என்றமைந்த 5 சீரடி நான்கான் ஆயது.

எ-டு : ‘கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கைகு றுந்தாளன // விட்டுவ(ர்) பூதங்க லப்பில ரின்புக ழென்புலவின் // மட்டுவ ருந்தழ(ல்) சூடுவ(ர்) மத்தமு மேந்துவர்வான் // தொட்டுவ ருங்கொடி தோணிபு ரத்துறை சுந்தரரே’ (தே.1:117-5)

(வி. பா. பக். 55)

விட்டுவர், ருந்தழல், சூடுவர் - இம்மெய்கள் குறிலையடுத்து வரினும், குறிலை நெடில் ஆக்கா; ‘பூதங்க’ என்பதிலும் ஙகரஒற்று தனக்கு முன்னுள்ள எழுத்தை நெடிலாக்காது.

ஆ) இதே வகைப் பாவில் 5 ஆம் சீர் தேமாங்காயாகவே 6 மாத்திரை பெற்று 4 அடியிலும் வருமாறு அமைவது.

எ-டு : ‘கன்மிசை மஞ்ஞையி ருந்துக லாபம்வி ரித்தாட // வின்மணி சிந்தரு வித்திர டாழ்ந்துவி ழுந்தோற்ற // முன்னிய சேடன மஞ்ஞையை யஞ்சிமு ரன்றொரல்லை // தன்னுல கெய்துவ தன்மைத ருங்கயி லாயத்தில்’

இஃது ஓரெழுத்துக் குறையினும், மாத்திரை 22 பெற்றது ஒக்கும்.

(இ) புளிமா, கூவிளம், கூவிளம், கூவிளம் மாங்காய் அல்லது மாங்கனி அல்லது கூவிளங்காய் என அமைந்த 5 சீரடி நான்கான் அமைவது. முதற்சீர் 5 மாத்திரை, இறுதிச்சீர் 6 மாத்திரை, ஏனைய சீர்கள் 4 மாத்திரை.

எ-டு : ‘இலங்கைத் தலைவனை ஏந்திற் றிறுத்த திரலையின்னாள் // கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது // கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச் // சலங்கிளர் வாழ்வயற் சண்பையுள் மேவிய தத்துவரே’ (தே 1 : 117 -9)

அதிஉத்தம் -

{Entry: O15b__002}

சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதப்படுவன வற்றுள் அதியுத்தமும் ஒன்று.

‘போதி, யாதி, பாத, மோது’ என்றாற்போல வருவது இச்சந்தம். ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது அடியொன்றற்கு இரண்டெழுத்துப் பெறும் இச்சந்தம். (வீ. சோ. 139 உரை)

அதிகரணீ விருத்தம் -

{Entry: O15b__003}

அ) மூன்று புளிமாங்கனியும் ஒரு புளிமாவும் பெற்று அமையும் அடி நான்காகி வரும் விருத்த வகை இது. (வி. பா. 24 பக். 49)

எ-டு : ‘மயிலாலுவ குயில்கூவுவ வரிவண்டிசை முரல்வ; // மயில்பூவைகள் கிளியோடிசை பலவாதுகள் புரிவ; // அயில்வாள்விழி மடவாரென அலர்பூங்கொடி அசைவ; // வெயிலாதவர் புறமேகுற விரிபூஞ்சினை மிடைவ’ (விநாயக.)

ஆ) மூன்று புளிமாங்கனிகளுக்கு ஈடாக முதலில் தேமாங்கனி அடுத்து இருபுளிமாங்கனிகளும் இறுதியில் புளிமாவும் அமையும் அடி நான்காகி வருவதும் அது.

எ-டு : ‘பூணித்திவை உரைசெய்தனை அதனாலுரை பொதுவே // பாணித்தது பிறிதென்சில பகர்கின்றது பழியால் // நாணித்தலை யிடுகின்றிலென் நனிவந்துல கெவையுங் // காணக்கடி தெதிர்குத்துதி யென்றான்வினை கடியான்’ கம்பரா. 7188

இ) ஈற்றுச்சீர் புளிமாவுக்கு ஈடாகத் தேமா வர, மூன்று கருவிளங்கனிகளும் ஒரு தேமாவும் அமைந்த அடி நான்காகி வருவதும் அது

எ-டு : ‘எழுதுருவின எழுதளிரன இணரணிவன இரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொழிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை
பொழுதுருவின அணிபொழிலின பொழிதளிரன புன்னை’

(பின்னீரடிகளிலும் ஈற்றுச்சீர் தேமா என நின்றது.) சூளா.433

அதிகிருதி -

{Entry: O15b__004}

எழுத்து வகையான் இருபத்தாறு பேதமாகிய சந்தங்களுள் அதிகிருதி என்பதும் ஒன்று.

எ-டு : ‘தளையவி ரும்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடே
வளைமொழி நித்தில மளநில வைத்தரு மயிலையி லெழுகாரே
யளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயவீரா
விளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ழருளாயே’

கருவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம் புளி மாங்காய் - என இவ்வாய்பாட்டால் அறுசீர்அடி நான்காய் வரும் விருத்தத்துள் இச்சந்தம் வருமாறு காண்க. ஒற்றெ ழுத்தை நீக்கி உயிரும் உயிர்மெய்யுமாக அடிக்கு எழுத்து 22 எனக் கொள்ளப்படும். (வீ. சோ. 139 உரை)

அதிசக்குவரி -

{Entry: O15b__005}

எழுத்துவகையால் இருபத்தாறு பேதப்படும் சந்தங்களுள் ஒன்று இது. புளிமா புளிமா தேமா தேமா தேமா புளிமா என்னும் வாய்பாட்டால் அறுசீர்அடி முதலாவதும் நான்கா வதும் நிகழ, இடையிரண்டடிகளும் புளிமா புளிமா தேமா புளிமா தேமா தேமா என்னும் வாய்பாட்டால் நிகழும் ஆசிரிய விருத்தத்துள் இச் சந்தம் பயிலும். ஒற்றெழுத்து நீங்கலாக உயிரும் உயிர்மெய்யும் ஓரடிக்கு எழுத்து 15 எனக் கொள்க.

எ-டு : ‘அருண கிரண மேபோ லங்க ராகங் குலவும்
தருண கலவி மாரன் தயங்கு சிந்தை யென்னோய்
தெருண முழைய தென்றா லதுவோ சேலாங் கண்ணார்
கருணை சிறிது பெய்யுங் காலை யுண்டே லினிதாம்.’ (வீ. சோ. 139 உரை)

அதிசயதி -

{Entry: O15b__006}

எழுத்துவகையால் இருபத்தாறு பேதம் ஆம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று. ஐஞ்சீர்களை அடிதோறும் உடைய கலிநிலைத்துறை. (நெடிலடி விருத்தம்)முதலாம் நான்காம் அடிகள் கருவிளம் கூவிளம் தேமா தேமா தேமா என நிகழ, இடையீரடிகளும் கருவிளம் தேமா புளிமா தேமா தேமா என நிகழ்வதன்கண் இச்சந்தம் பயிலும். ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு எழுத்து 13 என்க.

எ-டு : ‘பரிசில வெம்மொடு போது மம்பு மென்றாங்
கரிசில வேந்தி யகன்று நீண்ட கண்மேற்
குரிசிலை யன்று கனற்றி வெந்த காமன்
கருசிலை போற்புரு வத்தாள் காட்சி மிக்காள்’ (வீ. சோ. 139 உரை)

அதிதிருதி -

{Entry: O15b__007}

எழுத்துவகையான் இருபத்தாறுபேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று. எழுசீர் விருத்தத்துள் பயின்றுவருவது : ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு எழுத்து 19 வரப்பெறுவது

எ-டு : ‘பாரா வார மருங்கு லாவு மொலியி னோடு பரவைகொண்டே
சாரா வார மளைந்து தங்குந் தொன்னுமர் தெள்ளு புகார்மன்னவர்
வீரா வார மணிந்த வாழி வலவர் மென்பூங் கரும்பினறுங்
காரா வார மருள ராய கவின்பூ மலரொண் சூடாமணி’

அடிதோறும் முதற்சீர் நான்கும் தேமா தேமா புளிமா தேமா என நிகழ, ஐந்தாம்சீர் புளிமா அன்றித் தேமாவாக நிகழ, ஆறாம் சீரும் அவ்வாறே நிகழ, ஏழாம் சீர் காய்ச்சீராகவோ கனிச்சீராகவோ நிகழும் இவ்விருத்தயாப்பில் இச்சந்தம் பயிலுமாறு. (வீ. சோ. 139 உரை)

அதியாடி -

{Entry: O15b__008}

எழுத்துவகையான் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று. மாச்சீரால் இயன்ற எழுசீர் விருத்த யாப்புள் இச்சந்தம் பயிலும்; விளச்சீர் சிறுபான்மை விரவினும் இழுக்காது.

எ-டு : ‘தேனார் பொழுதிற் றிருந்தா தேநீ சிந்தைகொண் டேவே றூரிற்
போனார் தேரூர் சுவடு புதையல் வாழிபொங் கோத வேலை
வானூர் மாவும் கிரியு முதலா வாரல் கொடுவாய் மேவிக்
கானார் சோலைத் தருவி லுலாவுங் காவல் யாவ ருளரே’

இதன்கண், முன்னீரடிகளில் ஐந்தாம்சீர் கூவிளம் என வந்தவாறு காண்க. ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு எழுத்து 17 எனக் கொள்க. (வீ. சோ. 139 உரை)

அதியுத்தம் -

{Entry: O15b__009}

‘அதிஉத்தம்’ காண்க. (வீ. சோ. 139 உரை)

அபிகிருதி -

{Entry: O15b__010}

எழுத்து வகையால் 26 பேதமாம் எனப்பட்ட சந்தத்துள் ஒன்றாம். அடிதோறும் 25 எழுத்துக்கள் ஒற்று நீக்கி எண்ணப் படுமாறு காண்க.

எ-டு : ‘அங்குலிய மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழ
அந்தமுனி தேடுமினெனாப்
புங்கமொடு புங்கமுற எய்தவன் எடுத்தமை
புகன்றருகு நின்றவரைநீர்
இங்கித னிலைத்தொகைகள் யாவுமுரு வப்பகழி
ஏவுமினெ னாமுன்விசயன்
துங்கவில் வளைத்தொரு கணத்தினில் வடத்திலை
துளைத்தனனி லக்கில் தொடையால்.’ (வில்லி. வாரணா. 51)

இவ்வாறு காய்ச்சீரும் விளச்சீரும் சிறுபான்மை கனிச்சீரும் அறுசீரடியுள் விரவுமாறு நாலடியால் நிகழும் விருத்த யாப்பினுள் இச்சந்தம் பயிலுமாறு காண்க.(வீ. சோ. 139 உரை)

அரைச்சந்தம் -

{Entry: O15b__011}

தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய, தத்தா, தாத்தா, தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா என்ற பதினாறன்மேல் ன - னா என்ற உயிர்மெய் வரினும், இவ்வுயிர் மெய்யோடு த் - ம் - என்ற ஒற்று வரினும், த் - ம் - என்பன அப்பதினாறு ஒலிகளுடன் தனித்து வரினும் அரைச் சந்தமாம்.

தத்த என்பது - தத்தன, தத்தனா, தத்தனாத், தத்தனத், தத்தனம் தத்தனாம், தத்தத், தத்தம் - எனவும்

தாத்த என்பது - தாத்தன, தாத்தனா, தாத்தனத், தாத்தனாத், தாத்தனம், தாத்தனாம், தாத்தத், தாத்தம் எனவும் அரைச் சந்தமாகி வரும். ஏனைய ஓசைகளோடும் ஒட்டிக்கொள்க. (செய்யு. பக். 36)

அளவடி விருத்தம் -

{Entry: O15b__012}

நான்கடியும் எழுத்தொத்து அலகு நிலை ஒவ்வாது வருவனவும், எழுத்தும் அலகும் தம்முள் இயையாது வருவனவும் ஆகிய இருவகை விருத்தமும்.

எ-டு : ‘கொள்ளுங் கூற்றி னினைந்துணர் வுசிறி
துள்ள நிற்க வொழிந்திடு மாறுபோல்
வள்ளல் தரள வனவ லையுளக்
கள்வ ரைவரு மென்றே கரந்திட்டார்.’

இது நான்கு அடியும் தம்மில் எழுத்து ஒத்து, அலகு ஒவ்வாது வந்தது.

எ-டு : ‘சொற்றவா வளவி னுளவா வெனுந்தடத்
திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளது
சொற்றவாண் மனத்தினா லுறுவிப் பின்னரே
மற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்.’

இது நான்கடியும் தம்மில் எழுத்தும் அலகும் ஒவ்வாது வந்தது. (வீ. சோ. 139 உரை)

அளவழிச் சந்தப் பையுள் -

{Entry: O15b__013}

அளவழிச் சந்தச் செய்யுளில் நான்கு அடியும் சீரான் ஒத்து, ஒவ்வோரடியும் வெவ்வேறு எழுத்து எண்ணிக்கை பெற்று வருவது. (அளவு + அழி = அளவழி)

எ-டு : ‘என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவி யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்சென்று துளங்க ஆங்கோர்
கொன்னவில் பூதம் போலும் குறள்மகள் இதனைச் சொன்னாள்.’ (சூளா. 679)

இது முதலடி 15 எழுத்தாய், இரண்டாமடி 17 எழுத்தாய், பின்னிரண்டு அடிகளும் 16 எழுத்தாய் வந்தமையால் அளவழிச் சந்தப் பையுள் ஆயிற்று.

(எழுத்தெண்ணிக்கையில் புள்ளியெழுத்து விலக்குண்ணும்.)

(யா. வி. பக். 518)

அளவழிச் சந்தம் -

{Entry: O15b__014}

நாலெழுத்து முதலாக 26 எழுத்தின்காறும் உயர்ந்த 23 அடியானும் வரும் நாலடிப்பாடல் அடிகளின் எழுத்து ஒத்தும் ஒவ்வாதும் அலகு ஒவ்வாதும் வருவது.

எ-டு : ‘பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க பீடம் அமர்ந்தவெங்
கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ணானடி சேர்மினே’

இவ்வஞ்சி விருத்தம் அடிதோறும் எழுத்தெண்ணிகையான் (8) ஒத்து, அலகு ஒவ்வாது வந்த அளவழிச் சந்தம்.

எ-டு : ‘அருங்கயம் விசும்பிற் பார்க்கும் அணிச்சிறு சிரலை அஞ்சி
இருங்கயம் துறந்து திங்கள் இடங்கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
கருங்கயல் அல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே’ (சீவக. 626)

இஃது எழுத்து ஒவ்வாதது.

அளவழிச் சந்த வகைகள் -

{Entry: O15b__015}

நிசாத்து, விராட்டு, புரிக்கு, சுராட்டு, யவமத்திமம் (தோரை யிடைச் செய்யுள்), பிபீலிகா மத்திமம் (எறும்பிடைச் செய்யுள்), பாதிச் சமச்செய்யுள், அளவழிப் பையுட் சந்தம் என வடநூல்வழித் தமிழாசிரியர் அளவழிச் சந்தவகைகள் வகுத்துக் கூறுப. (யா. வி. பக். 513, 514)

அளவழித் தாண்டகம் -

{Entry: O15b__016}

27 எழுத்து முதலாக உயர்ந்த அடியினவாய் எழுத்தும் குருலகுவும் ஒவ்வாது வருவன அளவழித் தாண்டகமாம். ‘மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண, (சூளா. 1904) - எனத் தொடங்கும் எண்சீர் விருத்தத்துள், முதலடி 30, இரண்டாமடி 28, மூன்றாமடி 29, நான்காமடி 28 என அடிதோறும் எழுத்து ஒவ்வாதும் குருலகுவும் ஒவ்வாதும் வந்தமை காண்க. (யா. வி.பக். 485)

அளவழிப் பையுட் சந்தம் -

{Entry: O15b__017}

நான்கடிகளும் சீரான் ஒத்து எழுத்துக்களான் வேறுபட்டு வரும் சந்தப்பாடல்.

‘ஆதியான் அருளாழி தாங்கினான் ஆயிரவெங் கதிரோன் நாணும்
சோதியான் சுரர்வணங்கும் திருவடியான் சுடுநீற்றான் நனையப்பட்ட
காதியான் அருளிய கதிர்முடி கவித்தாண்டான் மருகன் கண்டாய்
ஓதியான் உரைப்பினும் இவன்வலிக்கு நிகராவார் உளரோ வேந்தர்’ (சூளா. 250)

இது முதலடி 19 எழுத்தாயும், இரண்டாமடி 22 எழுத்தாயும், மூன்றாமடி 20 எழுத்தாயும், நான்காமடி 21 எழுத்தாயும் வந்தமையால் அளவழிப் பையுட் சந்தம். (யா. வி. பக். 517)

(அளவழிச் சந்தப் பையுட்கும் அளவழிப் பையுட் சந்தத்திற் கும் இடையே வேறுபாடு அடிகளின் எழுத்தெண்ணிக்கை குறைவு மிகுதியாக அமைதலில் கிடப்பதுபோலும்)

அளவியல் சந்தம் -

{Entry: O15b__018}

நாலெழுத்து முதலாக 26 எழுத்தின்காறும் உயர்ந்த 23 அடியானும் வரும் நாலடிப்பாடல் குருவும் இலகுவும் ஒத்து வருவது.

4 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘ஆதி நாதர்’

5 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘பந்தம் நீக்குறில்’

6 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘திரித்து வெந்துயர்’

7 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘பாடு வண்டு பாண்செயும்’

8 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘முரன்று சென்று வண்டினம்’

9 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்’

10 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘கருதிற் கவினார் கயனாட்டத்’

11 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘ஆதி யானற வாழியினானலர்’

12 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘குரவு தான்வரி கொங்கொடு’

13 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘கலையெலா முதற்கணே’

14 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘குரவக் கோலக் கோங்கணி’

15 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘யதிகணம் இருநிலம்’

16 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘மாவரு கானல் வரையதர்ப்’

17 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘செருவினை வைவேல்’

18 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘பிணியார் பிறவிக் கடலு ட்’

19 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘அன்னங் கண்டர விந்த’

20 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘அருவிப் பலவரைகாள்’

21 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘பின்தாழும் பீலி கோலிப்’

22 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘அருமாலைத் தாதலர நின்றமர் குழுவினோ டாயிரச் செங்கணானும்’

23 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘சோதிம ண்டலம் தோன்றுவ துளதேல் சொரியு மாமலர்த் தூமழை யுளதேல்’

24 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘விலங்கு நீண்முடி யிலங்க மீமிசை விரிந்த மாதவி புரிந்த நீள்கொடி’

25 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘திருகிய புரிகுழல் அரிவைய ரவரொடு திகழொளி இமையவரும்’

26 எழுத்தடி அளவியற்சந்தம் - ‘கரிமருவு கடிமதிலி னிடுகொடிகள் திசைதடவு கடுமை யினவாய் .’ (யா. க. 95 உரை பக். 477 - 482)

அளவியல் தாண்டகம் -

{Entry: O15b__019}

27 எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடியினவாய் எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டக மாம்.

எ-டு : ‘வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்’

எனத் தொடங்கும் எண்சீர்விருத்தம் (யா. வி.பக். 483) 27 எழுத்தடி அளவியல் தாண்டகம். (யா. வி. பக். 476)

அறுசீர்ச் சந்த விருத்தம் -

{Entry: O15b__020}

1) மூன்று மாத்திரையுடைய அறுசீரும் ஈற்றில் ஒரு நெட்டெழுத்தும் பெற்ற அறுசீரடி நான்கால் அமைவது.

எ-டு : ‘மரண சோக நரக வாதை பிணிம யக்கினோ
டரண மான விருளெ லாம கன்ற நீரராம்
கரண நான்கு புலன்க ளோடு மனது கைப்படிற்
சரண டைந்து ளாரு முத்தி சார்ப திண்ணமே’ (நல்லா. பாரதம்)

2) நீண்ட புளிமாச்சீர் ஆறும் ஈற்றில் ஒருநெட்டெழுத்தும் பெற்ற அறுசீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘அதிர்பொற் கழலான் விழுதிண் கிரியா லதிசூ ரன்மான்தேர்
பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா
உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்
கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடறீர்ப்பான்.’ (கந்தபு. இரண்டா. 57)

3) குற்றுயிர் ஈற்றினுடைய ஆறு கூவிளச்சீரொடு நெட் டெழுத்து ஈற்றில் பெற்ற அறுசீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘மீட்டுமி ரும்படை மேவநெ டுங்கணை விட்டுவி யன்வழியில்
மாட்டிவ ழக்கம றுத்துல கெங்கும லிந்தவு டற்குறையின்
ஈட்டம றிந்துக னன்றுவி ழிப்பவெ ரிந்தவு டற்றொகுதி
ஓட்டறு சோரிவ றந்தது சூரனொ ருத்தனு நின்றனனே.’(தணிகைப்.)

4) நான்கு மாத்திரை விளச்சீரும் மாச்சீரும் கடையில் ஒரு காய்ச்சீரும் அமையும் அறுசீரடி நான்கான் அமைவது.

விளச்சீர் -

‘இறைவனெ ழிற்கதிர் மணிகள ழுத்திய தவிசினி ருத்தலுமே

நெறுநெறெ னக்கொடு நிலவரை யிற்புக நெடியவ னப்பொழுதே

மறலியெ னத்தகு நிருபனி யற்றிய விரகைம னத்துணரா

முறுகுசி னத்துட னடிகள் பிலத்துற முடிக்கக னத்துறவே’

மாச்சீர் -

எ-டு : ‘மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்

நஞ்சைக் கண்டத் தடக்கும் மதுவும் நன்மைப் பொருள்போலும்

வெஞ்சொற் பேசும் வேடர் மடவார் இதணம் மதுவேறி

அஞ்சொற் கிளிகள் ளாயோ வென்னும் அண்ணா மலையாரே’ (தே. I 69-2) ( I 60 -2)

5) ஐந்து மாத்திரை யுடைய விளங்காய்ச்சீர் ஐந்தும் நெடி லடுத்த ஈற்று விளங்கனிச் சீருமாகிய அறுசீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘வாவியொரு தேரைவடி வாளிபொழி யக்கனகன் வார்குருதி சோரவுடலின் // மேவினன்எ டுத்திரதம் விண்ணிடையு கைத்தனன்வி ளங்குதிற னீலனவுணன் // தாவியொரு தேர்புகவ ரக்கடிதெ ழுந்துதட மார்பிறவெ ருக்கிவரதன் // பாவிநில னிற்படமி தித்தனனு ருட்டுபுப ழங்கண்மிகு வித்தனனரோ’ (தணிகைப். சீபரி. 381)

6) ஐந்து மாத்திரை யுடைய குறில் ஈற்று மாங்காய்ச்சீர் ஐந்தும் இறுதிச்சீராகிய ஆறு அல்லது ஏழு மாத்திரையுடைய கனிச்சீரும் சேர்ந்த அறுசீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல வெனதூனு முண்டகொடியோன்
உண்ணாடு முயிர்கொண்டு வலிகொண்டு குறிதான வுதரங்கி ழித்துவருவன்
அண்ணாவில் வலனேயெ னக்கூறி யேதம்பி யரிபோல்மு ழங்கியிடலும்
மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்திட்ட மாயந்தெரிந் துவெகுள்வான்.’ (கந்தபு. வில்வ. பட. 30)

7) ஒற்றடுத்த குறில் அல்லது நெடிலை ஈற்றினுடைய ஐந்து விளச்சீரும் இறுதி விளங்காய்ச்சீரும் கொண்ட அறுசீரடி நான்கான் அமைவது. நேரசையில் தொடங்குவது :

எ-டு : ‘ஓதவார் கடலகத் துற்றவா ரமிழ்தெனா வோதினார் புலவர் மற்றுந்
தீதிலாத் தீங்கனிச் சுவையெனப் பாலெனத் தேமொழிக் குவமைசொன்னார்
ஏதமே புலனுறா வழிநினைப் பாலவை யின்பமே நல்கிலாவால்
யாதெனக் கூறுகே னின்மொழிப் பண்பைநா னேந்திழைப் பொற்கொடிக்கே’

(புலவர்மற்றுந் - இந்நாலசைச்சீர் கருவிளங்காய்ச்சீர்க்கு ஒப்பாம்.)

நிரையசையில் தொடங்குவது

எ-டு : ‘அரம்பையு ருப்பசி மேனகை முதலிய வரிமதர் விழிமடவார்
நிரம்பிய காமந லங்கனி யவிநய நெறிமுறை கரமசையப்
பரம்புமி டற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினொடும்
வரம்பெறு மற்புத மின்னவிர் கொடியென மகிழ்நட மெதிர்புரிய’ (காஞ்சிபு. திருநெறி. 190)

8) நெடிலேனும் மெய்யேனும் இறுதியடையப் பெற்ற விளச்சீர்கள் - மூன்று குற்றெழுத்தாய் முடிந்த விளங்காய்ச் சீர்கள் - குறிலீற்று மாங்காய்ச் சீர்கள் - ஆகிய ஐந்து மாத் திரைச் சீர்கள் முதலைந்து சீர்களாய் நிற்க, இறுதிச்சீர் ஒன்றும் ஏழு மாத்திரை அளவுடைய மெய்யெழுத்து நடுவே மிகுந்த விளங்காய்ச்சீரோ- மூன்று குறில் நடுவே பெற்ற விளங்கனிச்சீரோ - மாங்கனிச்சீரோ - வரும் அறுசீரடி நான்கான் அமைவது. (இலக்கணம் எடுத்துக் காட்டுள் பொருந்து மாறில்லை.)

எ-டு : ‘சிலைக்குருவி றற்குருகு லக்குமர ருக்குவரு சிரமநிலை காண்மினெனவே
அலைக்கிலைநி லாவெழுச ரிற்புதல்வ னுக்குநல் லறக்கடவு ளுக்குமுறையா
னிலைப்படுவி லாசமணி யணிதிகழ ரங்குமிசை நிகழ்பலிகொ டுத்தரியுடன்
கலைப்புரவி யூர்திருவை யுந்தொழுது புக்கனன கத்துணர்வு மிக்ககலையோன்’ (நல்லா. வாரணா. 66)

(இரண்டாமடி 4, 5ஆம் சீர்கள் ‘னுக்குநல அறக்கடவு’ என இருத்தல் வேண்டும்.)

9) முதற்சீர் குற்றுயிரீற்றுத் தேமா, இரண்டாவது நெடில் ஒன்றும் குறில் மூன்றும் இணைந்த கூவிளங்காய், மூன்றா வதும் நான்காவதும் குறில் ஈற்றுக் கூவிளம், ஐந்தாவது தேமா, ஆறாவது புளிமாங்காய் - என அமையும் அறுசீரடி நான்கான் அமைவது.

எ-டு : தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுட லைப்பொடி பூசியெ னுள்ளங் கவர்கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (தே
I -1-1)

8 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியது -

எ-டு : ‘பண்ணேனு னக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்சவாங்கே
பார்க்கின்ற மலரூடு நீயேயி ருத்தியப் பனிமலரெ டுக்கமனமும்
நண்ணேன லாமலிரு கைதான்கு விக்கவெனி னாணுமென் னுளநிற்றிநீ
நான்கும்பி டும்போத ரைக்கும்பி டாதலா னான்பூசை செய்யல்முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே
மேதக்க வேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேயவ் வித்தின்முளையே
கண்ணேக ருத்தேயெ னெண்ணேயெ ழுத்தேக திக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நர்த்தமிடு கருணாக ரக்கடவுளே’ (தாயுமானவர் பாடல்)

இவ்யாப்பிற் சிறிது திரிந்தது ‘ஏடாயிரங் கோடி’ என்னும் அந்தகக்கவி வீரராகவர் விடுத்த சீட்டுக்கவியும் கொள்ளப் படும்.

4 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியது

எ-டு : காரென வாருயிர் மீதரு ளேபொழி கண்ணனை விண்ணவனைக்
கந்தனை எந்தையை வந்தனை யன்பர்க டும்பகை கொன்றவனைச்
சீர்சம ராபுரி யாளனை மாளுறு தேவர்ம ளாளனையோர்
சின்மய ரூபனை நன்மையெ லாமுறு சேயினை யருள்புரிக
ஓர்வரி தாமுயிர் யாவையு நேர்வினை யொத்தும லப்பகை போய்
ஒண்சுக மேவிட வைந்தொழி றந்திடு முத்தம சிற்பரமாய்ச்
சேருரு வாயரு வாயிரு வகையுஞ் செறிபொரு ளாய் நிறைவாய்ச்
செம்முக மைந்தொடு செம்மையி னின்றருள் செய்தச தாசிவமே!
(திருப்போரூர் சந்நிதிமுறை காப்பு.2)

10) நான்கு மாத்திரை மாச்சீர் ஆறுகொண்ட அறுசீரடி நான்கான் வருவது.

எ-டு : ‘பிறியார் பிரிவே தென்னும் பெரியோய் தகவே யென்னும்
நெறியோ அடியேம் நிலைநீ நினையா நினைவே தென்னும்
வறியோர் தனமே யென்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ வென்னும் அரசர்க் கரசே என்னும்’ (கம்பரா. 1635)

அறுபத்துநாலடிச் சிந்து -

{Entry: O15b__021}

64 என்ற அடிவரையறையுடைய தாளத்தொடு பாடப்படும் இசைப்பாட்டு.

அனுட்டுப்பு -

{Entry: O15b__022}

சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப் பட்டவற்றுள் ‘அனுட்டுப்பு’ ஒன்று; அடிதோறும் இஃது எட்டு எழுத்துப் பெறுவது.

எ-டு : ‘அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாத மல்லாற்
றுணிபொன் றிலாத தேவர்
மணிதங்கு பாத மேவார்’

எழுத்தெண்ணுமிடத்துப் புள்ளியெழுத்தும் ஆய்தமும் விலக்குண்ணும். (வீ. சோ. 139 உரை)

ஆ section: 4 entries

ஆகிருதி -

{Entry: O15b__023}

(வீ. சோ. 139) உரையில் மூலத்தில் அதிகிருதி என்றிருக்கிறது. ஆகிருதி என்பதே பொருந்தும்.)

1) உருவம்

2) அடிதோறும் ஒற்று நீங்கிய உயிரும் உயிர்மெய்யுமாகிய 22 எழுத்துக் கொண்ட நான்கடியை யுடைய சந்தம். கருவிளம் - கூவிளம் - கருவிளம் - கூவிளம் - கருவிளம் - புளிமாங்காய் என அடிதோறும் நிகழ்வது.

எ-டு : ‘தளையவி ருட்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடே
வளைமொழி நித்தில மனநில வைத்தரு மயிலையி லெழுகாரே!
அளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயவீரா!
விளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ழருளாயே’

இவ்வறுசீர் விருத்தத்துள் அடிதோறும் ஒற்று ஒழிய 22 எழுத்து வருதல் ஆகிருதி என்ற சந்தமாம். (வீ. சோ. 139 உரை)

ஆடி -

{Entry: O15b__024}

எழுத்து வகையால் இருப்பத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தத்துள் ஒன்று. அடிதோறும் பதினாறெழுத்தாக, கூவிளம் தேமா கருவிளம் புளிமா புளிமாங்காய் எனவரும் நெடிலடி முதலடியும் ஈற்றடியுமாக, நடுவடியிரண்டும் கூவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளங்காய் என நிகழும் செய்யுட்கண் இச்சந்தம் பயிலும்.

எ-டு : ‘தேனுட னாடுஞ் சிலைபொழி மலினச் செயலாட
ஆனுட னாடுங் கவிரித ழாயத் தயில்விழியென்
மானுட னாடும் மயிலன சாயல் மதர்விழியார்
வானுட னாடும் மதிதரு துனிநோய் மதியாரோ’ (வீ. சோ. 139 உரை)

ஆரியை விருத்தம் -

{Entry: O15b__025}

ஆரியா விருத்தம் எனப்படும் ஆரியையும், வைதாளீயம் எனப்படும் வைதாளியையும் மாத்திரைக் கணங்களால் அமையும் விருத்தங்கள். (வீ. சோ. 139 உரை)

ஆரியைக்கு இலக்கணம் வருமாறு :

ஆரியைக்கண் பாதம் நான்கெனக் கொள்வோரும், “பாதங்கள் இல்லை; இரண்டு பாகங்களான முன் அரை (பூர்வார்த்தம்) பின் அரை (உத்தரார்த்தம்) என இவையே உள” என்பாரும் என வடமொழியாப்பு நூலார் இருதிறத்தர். தமிழில் வீரசோழிய உரை இரண்டு பாகமெனக் கொண்டே இலக்கணம் கூறும்.

மாத்திரை 4 கொண்ட 7 கணங்களும் இறுதியில் ஒரு குருவும் கொண்டு 30 மாத்திரைகளில் அமைந்த இரு பாகங்களைப் பெற்று வருவது ஆரியை எனப்படும். இவற்றுள் ஒற்றைப் படையான 1, 3, 5, 7 என்ற கணங்கள் நடுவில் குருஉடைய ‘ஜகணம்’ ஆதல் கூடாது. ஆறாவது கணம் நான்கும் லகுவான கணமோ, இடைக்குருவான ஜகணமோ ஆகலாம். பின் அரையில், அஃதாவது இரண்டாம் பாகத்தில் ஒரே லகுவுடைய கணமாயிருத்தலும் கூடும்.

வீரசோழிய உரை கூறும் ஆரியை மூன்றுவகையெனத் தெளியலாம்.

1. மாத்திரைக் கணங்கள் ஏழும் ஈற்றில் ஒரு குருவும் பெற்று, இரண்டா மடியில், ஆறாவது கணம் ஒரு தனி லகு மாத்திரமே வந்த ஆரியை.

எ-டு : ‘அம்பொற் கயிலைக் கிறைவா

ஆகம் பெறாத நோதக வதனாலே

வெம்பித் திரிமதி மேவும்

பார்வதி யாளா விகாவா யால்.’

முதற்பகுதியில் ஆறாவது கணம் நான்கு லகுக்களால் வந்த ஆரியை.

எ-டு : ‘இசைமிகு மொழியா ரனையே
அசைவுறு மனமொழி மதுமொழி யாரனையே
நசைவுற நீபே துறலே
பசையொடு சேருக வாழிய பேதுறலே’

3. இரண்டாம் பாதியில் ஆறாவதுகணம் இடைக்குருவான ஜகணமாய் வரும் ஆரியை.

எ-டு : ‘அனுபம பண்டித சோழ
மனுவவ னாகுல மொழிவள வாவருளே
எனவரு வரதா மிகவே
அனவர தமுமுனது தோகை பேதுறுமால்’

செய்யுளில் நிறுத்துமிடமே பாதமெனக் கொள்ளும் வகையில், மேலே காட்டப்பெற்ற மூன்று ஆரியை விருத்தச் செய்யுளுள்ளும், முதற்பாதமும் மூன்றாம் பாதமும் 12 மாத்திரையில் நின்று இறுவதையும், இரண்டாம் பாதமும் நான்காம்பாதமும் நந்நாள் கோணமாய் இறுதி இருபெற்று இறுவதையும் காணலாம்.

இனி இந்த ஆரிய விருத்தம் இன்னும் வேறுபல வகையானும் வருவதுண்டு. (வீ. சோ. 139 உரை)

ஆனந்தக் களிப்பு -

{Entry: O15b__026}

இது பல்லவியும் சரணம் பலவும் உடையது. பல்லவி, எதுகை ஒத்து அளவு ஒவ்வா ஈரடிகளான் ஆனது. முதலடி முச்சீரும் தனிச் சொல்லும் பெற, இரண்டாமடி நாற்சீராகி ஓசை நீள்கிறது.

பல்லவியும் முதற் சரணமும் ஒரே எதுகையாயின், பல்லவி யின் வடிவம் இரட்டித்துச் சரணத்தில் முச்சீர் நாற்சீர் இரட்டையாக அமைகிறது. சரணங்கள் சிந்துக்குரிய தொடை அமைதி பெற்றுப் பல்லவியினின்று சிறிது மாறுபடுகின்றன. கடுவெளிச்சித்தரது ஆனந்தக்களிப்பு 34 சரணம் உடையது.

பட்டினத்தாரின் முதல்வன் முறையீடு, பல்லவிப் பகுதியையும் வெண்டளை பெற்ற 72 கண்ணிகளையும் உடையது. நான்கு கண்ணிக்கு ஒருமுறை பல்லவிப் பகுதி பாடப்பெறல் வேண்டும்.

கடுவெளிச்சித்தரது ஆனந்தக்களிப்புத் தனிப்பட்ட யாப் புடையது; பல்லவி அமைப்புடைய பகுதியும் 34 சரணமும் கொண்டு இயல்வது; பல்லவி எதுகையுடைய அளவொத்து வாராத ஈரடியால் ஆனது; முதலடி முச்சீரும் தனிச்சொல் லும் பெற, இரண்டாமடி நாற்சீர் பெற்று ஓசை நீளுகிறது. பல்லவியும் முதற்சரணமும் ஒத்த எதுகை யுடையன. பல்லவி யின் வடிவம் இரட்டித்து முச்சீர்இரட்டை நாற்சீரிரட்டை யாகச் சரணம் அமைகிறது. சிந்துக் குரிய தொடைஅமைதி பெற்றவை சரணங்கள். அவை பல்லவியின் சிறிது வேறுபடு கின்றன. சரணங்கள்தோறும் பல்லவி பாடப்பெற வேண்டி யுள்ளது. (இலக்கணத். முன் பக். 101, 102)

இ section: 11 entries

இசை அளவுபா -

{Entry: O15b__027}

இசைப்பா - இசையுடன் சேர்ந்த பாக்களில் ஒருவகை.
(சிலப். 6 : 35 உரை)

இசைத்தமிழ்ப்பா வகை -

{Entry: O15b__028}

இசை துணையாக இயலால் சிறந்து வருவன இசைத்தமிழ்ப் பாவகையாம் பரிபாடல், வரிப்பாட்டு, பண்ணத்தி, குரவை, அம்மானை, குறத்திப்பாட்டு, ஊசல், பாவை, கோத்தும்பி, உழத்தி, பூவல்லி, தெள்ளேணம், உந்தி, சாழல், புலம்பல், தாழிசை, வண்ணம், தாண்டகம், மங்கலம், ஓடம், தாலாட்டு, ஏசல், ஒப்பாரி, வள்ளை, ஏற்றம், வில்லு, கிளிகடி, குயில், ஆனந்தக்களிப்பு - என்பனவும், அன்ன பிறவும் இசைத்தமிழ்ப் பாவின்பாற்படும்.

தாள மாத்திரையோடு பொருந்தும் பலவகைக் கண்ணிகள், சிந்து, தென்பாங்கு, கும்மி, தேவாரம் என்பனவும் அன்ன. பிறவும் இசையும் இயலுமாகிய இரண்டும் சமமாக இசைக்கும் தன்மையுடையன. (தென். இசைப். 6,7)

இசை நுவல் மரபின் இயன்ற பாடல் -

{Entry: O15b__029}

‘இசைப்பா’ காண்க.

இசைப்பா (1) -

{Entry: O15b__030}

இசையொடு சேர்ந்த பாக்களில் ஒருவகை. (சிலப். 6: 38 உரை)

(2) நாற்பெரும்பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசையுள் அடங்கப் பாடப்படும் பாடலாகிய செந்துறைப் பாடல். (யா.வி.பக். 579) இசைப்பாப் பத்துவகைப்படும் : அவையாவன- (1) செந்துறை, (2) வெண்டுறை, (3) பெருந் தேவபாணி, (4) சிறுதேவபாணி, (5) முத்தகம், (6) பெரு வண்ணம், (7) ஆற்றுவரி, (8) கானல்வரி, (9) வரிமுரண், (10) தலைபோகு மண்டிலம் என்பன.

(சிலப். 6: 38 அடியார்க். உரை)

இசைப்பாட்டின் பெயர் -

{Entry: O15b__031}

பாணி, வரி, பண், இசை, கானம், கொளை, பாண், கீதம், கந்தருவம், கேயம், காமரம் என்பன . (திவா. பக். 235)

இசைப்பாட்டு -

{Entry: O15b__032}

பண்ணும் திறமுமான இராகங்களும் இராக வகைகளும் பொருந்தி, குழலுடனும் யாழுடனும் இசைந்து, தாள வகைகளுடனும் முழவுடனும் சேர்ந்து இசைப்பதாய், பொரு ளாழம் கொண்ட சொற்கள் புணரப் பாடுவது. இதைக் ‘கீதவுரு’ என்றும் சொல்லுவதுண்டு.

கீர்த்தனம் (கீர்த்தனை) எனப்படுவதும் இதனுடன் அடங்கும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்பவற்றைப் பெற்றுத் தாளமும் முறையும் வழுவாமல், இராகதாளம் சேர்ந்து, இசை வல்லுநரால் செய்யப்படும் பாட்டே கீர்த்தனமாவது. அநுபல்லவியின்றி வரும் கீர்த்தனமும் உண்டு. வரிப்பாட்டு என்பதும் இசைப்பாட்டின் வகையே (சிந்து, ஆனந்தக்களிப்பு, கும்பி என்பனவும் இசைப் பாட்டுக்களே) (நாடக. 71-75)

இடையாகு சந்தம் -

{Entry: O15b__033}

பாடலின் நான்கடியும் ஓர் எழுத்து மிக்கும் குறைந்தும் வருவன இடையாகு சந்தமாம். (யா. வி. பக். 522)

இரட்டை விருத்தம் -

{Entry: O15b__034}

பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். (வீ. சோ. 109 உரை)

இரதோத்தத விருத்தம் -

{Entry: O15b__035}

இரதோத்தம் என்று விருத்தப் பாவியலில் சொல்லப் பட்டிருப்பினும், ‘இரதோத்ததம்’ என்பதே சொல். இவ்வட மொழி விருத்தம் 11 எழுத்தே பெறுவது. 1, 3, 7, 9, 11 என்ற இடங் களில் நெட்டெழுத்தும் மற்ற இடங்களில் குற்றெழுத்தும் கொண்டியல்வது. அடிக்கு எழுத்தெண்ணுங்கால் ஒற்றெழுத்து நீக்கப்படும். (வி. பா. பக். 48)

‘காவி யோவிழி கலாஞ்செய் வேலெனா

மேவி யேஎனை விராவி வீடவே

ஓவி லாதுற உணாவின் றூனையே

காவி யேஉயிர் கடாவப் போதர்வேன்’ (புனையப்பட்டது)

இடைச்சுர மருங்கில் செலவழுங்கி மீண்டவன் தலைவியை நோக்கிக் கூறுவதாக அமைந்த இவ்விருத்தத்தில் மேற் சொன்ன இலக்கணம் முற்றும் அமைந்துளது. (இது புலனெறி வழக்கிற்கு மாறுபட்டது;)

கா வி யா ம்விழி க லா ஞ்செய் வே ல்க ளே

மேவி யேநகில் விழூஉமுள் நீர்மையே

கோவை வாயிதழ் கொளூஉமெல் லாவியே

பாவை தூநகைப் படூஉமென் சீலமே’ (இதுவுமது)

தன்னைத் தலைவி வருத்தியதாகத் தலைவன் தோழிக்குக் கூறுவதாக வரும் இப்பாடற்கண், மேற்கூறிய இலக்கணம் அமைந்துள்ளமையால் இஃது இரதோத்தத விருத்தமாகக் கொள்க. எழுத்தெண்ணுகின்றுழி அளபெடை யெழுத்தும் அலகுபெறாமையால் எண்ணப்படாது எனக் கொள்க. (வி. பா. பக். 48)

இரு துள்ளல் கொண்ட கலையால் வந்த வண்ணம் -

{Entry: O15b__036}

‘தந்தனதத் தானத் தனதாந்த தாந்தனா’ என்னும் ஓசையால் வரும் எண்சீர்க் கழிநெடிலடி விருத்தத்துள் இவ்வண்ணம் நிகழும்.

இலகுவும் குருவும் ஆமாறு -

{Entry: O15b__037}

நெட்டெழுத்தும், நெடில் ஒற்றும் குறில் ஒற்றும் குரு என்பர். அஃது இரண்டு அலகுடைத்தாகி இளம்பிறை போன்ற குறியினைப் பெறும். குற்றெழுத்து இலகுவாம். அஃது ஓரலகு உடைத்தாய், நேரே கீழ்நோக்கி வலிக்கப்பட்ட ஒரு கீற்றினைப் பெறும்; ஈற்றின்கண் நின்றபோது குரு ஆதலும் ஒருகால் உண்டு.

வடமொழி யாப்பிலக்கணம், விருத்தங்களுக்கு எழுத்துக் களையும் மாத்திரைகளையும் கணக்கிடும் வகையால் கூறும் அடிப்படைகள் இலகுவும் குருவும் ஆகும்.

சிவ என்பது இரண்டு இலகு : ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை பெறும். இதன் குறி I என்பது.

தா என்பது ஒரு குரு; இரண்டு மாத்திரையுடையது இதன் குறி ‘ Yappu-shape1.bmp ’ என்பது. தார் என்பதும் ஒருகுரு; இரண்டே மாத்திரை. இதன் குறியும் ‘ Yappu-shape1.bmp ’ என்பதே. கண் என்பதும் ஒருகுரு; மாத்திரை இரண்டு. இதன் குறியும் ‘ Yappu-shape1.bmp ’ என்பதே. (வீ. சோ. 132)

உ section: 4 entries

உடற் கூற்று வண்ணம் -

{Entry: O15b__038}

பட்டினத்தார் பாடியது. இவ்வண்ணம் ஒவ்வொரு கலையும் நான்கு குழிப்பும் ஒரு தொங்கலுமாக அமைந்துள்ளது. முதற் கலையும் மூன்றாங்கலையும் எதுகையும், முதலாவதும் இரண்டாவதும், இரண்டாவதும் மூன்றாவதும் மோனையும் பெறுகின்றன. தாயுமானவர் பாடும் வண்ணங்களிலும் இவ்வமைப்பைக் காணலாம். (இலக்கணத். முன். பக். 102)

உத்தம் -

{Entry: O15b__039}

எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு ஓரெழுத்தாய் வருவது.

‘கார், நேர், வார், யார்’ என வரும். (வீ. சோ. 139 உரை)

உற்கிருதி -

{Entry: O15b__040}

எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங் களுள் ஒன்று. ஒற்றொழித்து உயிரும் உயிர் மெய்யுமாக அடி ஒன்றற்கு 26 எழுத்துக்களாக வரும். நிரை முதலாகத் தொடங்கும் ஐஞ்சீர்க் கலிநிலைத்துறையுள் இச்சந்தம் பயில்வது. அடி தோறும் முதல் நான்கு சீர்களும் கருவிளங்கா யாக ஐந்தாம்சீர் கருவிளங் கனியாக வரும்.

எ-டு : ‘தொழுவடிய ரிதயமல ரொருபொழுதும் பிரிவரிய துணைவனெனலா
மெழுமிரவி கிரணநிக ரிலகுதுகில் புனைதருசெ யிறைவரிடமாங்
குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனுமெவருந்
தொழுதகைய விமையவரு மறமருவு துதிசெய்தெழு துடிதபுரமே’ (வீ. சோ. 139 உரை)

‘உற்கிருதி’ என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் நில அளவை அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதின் காதமும், நூற்றொரு கோலும், ஒருமுழமும், ஏழ்விரலும் எனக் கொள்க. (யா. வி. பக். 51)

உறழ்ச்சி -

{Entry: O15b__041}

பிரத்தாரம்

அனைத்தும் குருவாய் அமைந்த அடி ஒன்றில் (1 முதல் 26 எழுத்து வரை பெற்றவற்றுள் எந்த விருத்தத்தினுடைய தாயினும்) முதலாவது குருவின் கீழே இலகு எனக் குறித்துக் கொண்டால், முதல்வகை கிடைக்கும். இது போலவே, அடுத்த வகையை முதலாவது குருவாகவே அமைய இரண் டாவதை இலகுவெனக் குறித்துக் கொண்டால் இரண்டாம் வகை கிடைக்கும். இது போலவே, அனைத்தும் இலகுவே கொண்ட அடியிலும் செய்க. உதாரணமாக அடிக்கு நான்கெழுத்துக்கள் கொண்ட ஒரு விருத்தம் பிரத்தாரம் செய்யும்போது 16 வகையாக உறழ்ச்சி பெறுவது காண்க. குரு என்பதை ‘கு’ என்ற எழுத்தாலும், இலகு என்பதை ‘ல’ என்ற எழுத்தாலும் குறிப்பர்.

1. கு கு கு கு 9 ல ல ல ல

2. ல கு கு கு 10. கு ல ல ல

3. கு ல கு கு 11. ல கு ல ல

4. ல ல கு கு 12. கு கு ல ல

5. கு கு ல கு 13. ல ல கு ல

6. ல கு ல கு 14. கு ல கு ல

7. கு ல ல கு 15. ல கு கு ல

8. ல ல ல கு 16. கு கு கு ல

இவற்றுள் முதலெட்டும் அனைத்தும் குருவான அடியின் பிரத்தாரம்; பின்னெட்டும் அனைத்து லகுவான அடியின் பிரத்தாரம்.

இது நிலை (- பிரதிட்டை) என்ற பெயரைக் கொண்ட, ஓரடிக்கு நான்கு எழுத்துக்கள் கொண்ட விருத்தத்தின் பிரத்தாரம்.

இவ்வாறு ஐந்து எழுத்துக்களைக் கொண்ட விருத்தங்களைப் பிரத்தாரம் செய்தால், முப்பத்திரண்டு வகை வரும். இதுபோலவே 26 எழுத்துக்கள் வரை கொண்ட அடிகளைக் கொண்ட விருத்தங்களைப் பிரத்தாரம் செய்தால், ஒன்றொன் றினும் அடுத்ததற்கு இருமடங்கு வகைகள் வரும். ஆறெழுத் திற்கு 64; ஏழு எழுத்திற்கு 128. இவ்வாறே இறுதிவரை செய்து கொள்க. (வீ. சோ. 133)

ஊ section: 2 entries

ஊசல் வரி -

{Entry: O15b__042}

ஊஞ்சற்பாட்டு. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் ஊசல்வரியாகச் சேரமன்னனைப் புகழ்ந்து மூன்று பாடல்கள் ‘ஆடாமோ ஊசல்’ என முடிவனவாக உள்ளன.

இப்பாடல்கள் மூன்றும் வெண்டளையான் அமைந்தவை. நாற்சீரடி ஐந்து கொண்டு அமையும் இம்மூன்று பாடல்களும் ஈற்றடியிலும் ஈற்றயலடியிலும் ‘ஆடாமோ ஊசல்’ என்று முடிகின்றன. வரி எனவே, இவை இசைப்பாடல்களாம்.

ஊசற்சீர் -

{Entry: O15b__043}

அஃதாவது ஊசல் வரி. ‘நாம்பாடும் சேயுயர் ஊசற்சீர்.’

(கலி. 131 : 23, 24)

எ section: 5 entries

எண்கலை விருத்தம் -

{Entry: O15b__044}

குழிப்பு ஒன்றும், ஒருசிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை. இவ்வாறு எட்டுக் கலைகள் அமைந்த விருத்தம் எண்கலை விருத்தமாம்.

தந்த தானன தனதன தனதன - தனதானா -

அடி - 1 கஞ்ச மாமலர் மனையென வளர்தனி

அஞ்ச வாகன முதுகினில் வரும்விதி

கன்றி யேபல உடலினி லலைதர - விதியாதே

கங்கு லேயெனும் நிறமுறு பகடதில்

வெம்பு தூதுவர் செறிதர அன்றுமிழ்

கண்க ளானவை சினமிக நமனிவ - ணெதிராதே

அடி - 2 அஞ்சு வாள்விழி அரிவையர் படையொடு

தென்ற லேறியொர் கணமதில் எணிலவர்

அம்பி னாலடர் சமர்புரி தரமதன் - அடையாதே

பந்த வானுறை அரியயர் பலர்தினம்

நின்று தேடிட வழிபடும் இருமுனி

அன்று காணுற அருளிய திருவடி - தருவாயே,

அடி - 3 செஞ்சொ லார்தரு கவுணிய மதலையை

எங்கள் தேசிக மணியென அருள்பரை

சிங்க வாகினி பகவதி திரிபுரை - மணவாளா!

செங்கை வேல்கொடு கரிமுகன் அரிமுகன்

மிண்டு சூருயிர் கடல்வரை அடுமுயர்

செந்தில் மேவிய சரவண குகன்வரும் - விழியானே!

அடி - 4 மஞ்சு மாமதி வரநதி நகுதலை

கொன்றை தாதகி அறுகணை அவைபுனை

மங்க ளாகரம் இலகிய சடைமிசை - யுடையானே!

வண்கொள் மாமறை உயிர்நிகர் பசுநிரை

கொம்பு மேவிடும் வரமதை உதவிட

வந்து மாதையில் வதிதரும் அழகிய - பெருமாளே!

இப்பாடலில் நான்கடிகளுக்கு எட்டுக்கலைகள் வந்துள்ளன. இவ்வண்ணம் மிக்கு வருங்கால் அடிக்கு நான்கு கலையாக வும், எட்டுக் கலையாகவும் பதினாறு கலையாகவும் நீண்டு வருதலும் உண்டு. இவை ‘வண்ணத்தியல்பு’ என்ற முருகதாச சுவாமிகளது நூலில் காணப்படும்.

எண்சீர்ச் சந்தவிருத்தம் -

{Entry: O15b__045}

குறிலீற்று விளச்சீர், தேமா-2, புளிமாங்காய், தேமா, புளிமாங்-காய், தேமா, புளிமா எனவரும் எண்சீரடி நான்காகி வருவது.

எ-டு : ‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்’
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே. (தே.
I 85-1)

நாற்சீர்ச் சந்தக் கலிவிருத்தங்கள் இரட்டித்து எண்சீர்ச் சந்த விருத்தம் ஆதலும் உண்டு. (வி. பா. பக். 73)

எண்வகைச் சந்தங்கள் -

{Entry: O15b__046}

1. தத்த, தத்தா (2) தாத்த தாத்தா (3) தந்த தந்தா (4) தாந்த தாந்தா (5) தன, தனா (6) தான, தானா (7) தன்ன, தன்னா (8) தய்ய தய்யா என இவை. (வண்ணத்.)

எழுசீர்ச் சுகந்தி விருத்தம் -

{Entry: O15b__047}

குறில் ஈற்றுத் தேமாச்சீர் ஏழனோடு இறுதியில் (பெரும் பாலும்) நெட்டெழுத்துப் பெறும் அடிநான்கான் ஆயது (வி. பா. பக். 68)

நேரசையில் தொடங்குவது :

எ-டு : ‘மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர்
தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி லேந்தி யாடினான்
ஒட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை
இட்ட லர்ந்த போது போல ஏந்த லேந்தி நீக்கினான்’ (சீவக. 690)

நிரையசையில் தொடங்குவது.

எ-டு : ‘உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்
கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே
உறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்.’ (கம்பரா. 7316)

எறும்பிடைச் செய்யுள் -

{Entry: O15b__048}

அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து முதலடியும் முடிவடியும் எழுத்தெண்ணிக்கையான் ஒத்து. இடையிரண்டடி எழுத்தெண்ணிக்கை வேறுபட்டுக் குறைந்து வருவது.

மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத் (14)

துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும் (13)

அணிமலர் நாற்றமும் என்ன அன்னவாய் (12)

அணிவரு சிவகதி அடைவ தின்பமே. (14) (சூளாமணி. 2075)

அளவழிப் பையுட் சந்தத்துள் ஒருவகை இது.

(யா. வி. பக். 517, 518)

ஏ section: 1 entries

ஏக, த்வி, ஆதி, லகுக்கிரியா -

{Entry: O15b__049}

ஓர்இலகு உடையன, இரண்டு இலகுஉடையன ஒருகுரு உடையன, இரண்டுகுரு உடையன என்றிவ்வாறு 26 எழுத் துக்கள் கொண்ட சந்தங்கள் அனைத்திற்கும் அமைத்துக் காட்டித் தொகை கூறல் முறை.

ஒரு சந்தத்திலுள்ள எழுத்துக்களைக் கீழிருந்து மேல் நோக்கி ஒன்றுகூட்டி, 1 என்று எண்களைக் குறித்துக்கொண்டு, பின்னும் அந்த ஒன்றில் தொடங்கி இடமிருந்து வலமாகவும் அவ்வாறே குறித்தல் வேண்டும். பிறகு இரண்டாவது வரிசையாகக் கீழ் இருந்துமேல், ஈற்றயல் தவிர்த்த எண்களைக் கூட்டி எழுதிக் குறித்தல் வேண்டும். எத்தனை எழுத்துக்கள் உளவோ அத்தனையும் இவ்வாறு குறித்து முடியும்வரைச் செய்தல் வேண்டும். அங்ஙனம் குறித்தால் இறுதியில் நிற்கும் எண்களால் அந்தந்தச் சந்தத்திலுள்ள, எழுத்துக்களில் எத்தனை இலகு எத்தனை குரு என்ற தொகை வரும்.

அடி ஒவ்வொன்றிலும் நான்கு எழுத்துக்களைக் கொண்ட சந்தத்தில் வரும் விருத்தங்கள் பதினாறு; அவற்றுள் மேலே கூறிய வகையில் இலகு குரு அமைப்பினைக் கீழே காணும் படவிளக்கத்தால் அறிக.

(ல என்பது இலகு; கு என்பது குரு ) (வீ.சோ. 137 உரை)

1 கு கு கு கு 9. ல ல ல ல

2 ல கு கு கு 10 கு ல ல ல

3 கு ல கு கு 11 ல கு ல ல

4 ல ல கு கு 12 கு கு ல ல

5 கு கு ல கு 13 ல ல கு ல

6 ல கு ல கு 14 கு ல கு ல

7 கு ல ல கு 15 ல கு கு ல

8 ல ல ல கு 16 கு கு கு ல

இப்பதினாறிலும் அவ்வமைப்புக் காண்க.

1 1 யாவும் குரு (ஓரடி)

1 3 4 குரு 1 லகு 3 (4 அடிகள்)

1 2 3 6 2 குரு 2 லகு (6 அடிகள்)

1 1 1 1 4 1 குரு 3 லகு (4 அடிகள்)

1 யாவும் லகு (ஓரடி)

ஒ section: 1 entries

ஒன்பதுவகை இசைப்பா -

{Entry: O15b__050}

சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்பனவாம் ஒன்பதுவகை இசைப்பாக்கள். (பொ.நிக. 773)

ஓ section: 2 entries

ஓர் இலகு முதலாக உடைய விருத்தங்களை அறிதல் -

{Entry: O15b__051}

இன்ன சந்தத்தினையுடைய ஓர் இலகுடைய விருத்தம் எத்தனை? இரண்டு இலகுடைய விருத்தம் எத்தனை? மூன்றி லகுடைய விருத்தம் எத்தனை? என்று இப்படி ஏற வினவி னால், சந்தத்தில் எழுத்துக்களை வீடு வகுத்து இரண்டு மூன்று நான்கு ஐந்து எனக் கீழ்நின்று மேல் மேல் நிறுத்திப் பின்னையும் இடம் நின்று வலம் நோக்கி முன் வைத்த திரள்களே ஈறாக்கி இரண்டின் வீடு இசையவிட்டுப் பின்பு ஒவ்வொரு பந்தியினும் ஒருவீடு குறைய வகுத்து வீடுதோறும் அதன் அயல் வீட்டிலக்கங்களைத் தொகுத்து வைத்து மேல் நின்று கீழ்நோக்கி எண்ண ஓரிலகு முதலாக உடைய விருத்தங்களாம். அவையெல்லாம் கூட்டி முழுக்குரு இலகுவை இடத் தொகையாம். (வீ. சோ. 137 உரை)

‘ஏக, த்வி, ஆதி லகுக் கிரியா’ காண்க.

ஓரொற்று வாரம் -

{Entry: O15b__052}

தாளத்தில் ஒரு மாத்திரை பெற்று வரும் இசைச்செய்யுள்.

(சிலப். 3 : 136 உரை) (L)

க section: 8 entries

கலவைச் சந்தக் கலித்துறை -

{Entry: O15b__053}

அ) தேமா புளிமா கலந்து முதல் நான்கு சீர்கள் அமைய, ஐந்தாம்சீர் மாங்காய் அல்லது கருவிளமாக அமைந்த ஐஞ்சீரடி நான்கான் அமைவது. (வி. பா. பக். 57)

எ-டு : ‘கையால் தொழுதே தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்

மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்

நெய்யா டுதலஞ் சடையார் நிலாவு மூர்போலும்

பைவாய் நாகங் கோடல் லீனும் பாசூரே’ (தே. II 60-3)

ஆ) முதல் சீரும் மூன்றாம் சீரும் மூன்று மாத்திரை மாச்சீர், இரண்டும் நான்கும் நான்கு மாத்திரையுடைய கூவிளம், ஐந்தாவது ஐந்து மாத்திரையுடைய நீண்ட கூவிளம் என் றமைந்த ஐஞ்சீரடி நான்கானாய கலவைச் சந்தக் கலித் துறையும் உண்டு.

எ-டு : ‘முதலு மூன்றது மாவி னத்தொரு மூன்றெழுத்

துதவு சீரதி ரண்டு நான்கொரு நான்கெழுத்

துதவு கூவிள மைந்தி லோங்கிய கூவிளம்

மதிநு தற்கலை யல்குல் மாந்தளிர் மேனியே’-

என்னும் விருத்தப்பாவியற் காரிகை கொள்க.

இ) மூன்று குற்றெழுத்தை இறுதியிலுடைய ஐந்து மாத் திரையவாய ஐந்து காய்ச்சீரும் இறுதியில் ஒரு நெட்டெழுத் துமுடைய ஐஞ்சீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்

இற்பலிகொ ளப்புகுது மெந்தைபெரு மானதிட மென்பர்புவிமேல்

மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை

விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரு வேதவனமே’ (தே. III 76-1)

‘தந்தைமன முந்துதுயர் நந்தஇருள் வந்தவிறல் நந்தன்மதலை

எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்றநகர்தான்

மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்க ளாடுபொழில்சூழ்

நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே’.

(பெரிய தி. 5-10-7)

இப்பாடல்கள் இறுதிச்சீர் நெடில் ஒன்று சேர்வதால் நான்கசைப் பூச்சீர்கள் ஆகின்றன.

ஈ) நீண்ட உயிருடைய விளச்சீர் நான்கு, இறுதியில் காய்ச்சீர் ஒன்று என்றமைந்த ஐஞ்சீரடி நான்கான் அமைவது.

எ-டு : வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும் // களங்கொளச் சடையிடை வைத்தவெங் கண்ணுதற் கபாலியார்தாம் // துளங்கு நூல் மார்பினர் அரிவையோ டொருபகல் லமர்ந்தபிரான் // விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே” (தே. III 90-5)

நீண்ட உயிருடைய விளச்சீர் ஐந்து மாத்திரையவாயின. காய்ச்சீர்கள் எட்டு மாத்திரை அளவு நீள்வன.

உ) ஐந்து மாத்திரைக் காய்ச்சீரானும் முதல் நான்கு சீர்கள் அமைய, ஐந்தாம்சீர் ஏழு மாத்திரைக் காய்ச்சீரானும் கனிச்சீரானும் அமையும் ஐஞ்சீரடி நான்கான் அமைவது.

எ-டு :‘மாடகமு றுக்கியிசை பாடுமுனி நீடுபிணி மாற்றுமுறைமை // நாடியுரை செய்தலும கிழ்ந்துகழன் மன்னவன யந்துபணியா // கூடியநல் லன்பினது கூறுவன ருந்தவக தம்பநகரில் // பீடுறவி ருந்தபெரு மானையெவர் பூசனைகள் பேணினர்களே’. (விநாயக. இந்திரன் படலம் - 1)

ஊ) முதற்சீரும் கடைச்சீரும் தேமாங்காயும் புளிமாவும்; மூன்றாம் சீர் புளிமாங்காய்; இரண்டாம் நான்காம் சீர்கள் தேமா - என அமையும் ஐஞ்சீரடி நான்கான் அமைவது. ஈற்றுப் புளிமாவிற்கு ஈடாக மாத்திரை மாறாத தேமாவும் தேமாங்காயும் வருதல் அமையும்.

எ-டு : ‘தேரோடு சென்ற அசுரன்ம கன்சே ணின் மீண்டு

பாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கின்

காரோடு வானந் தவறுற்று ழிக்கா மர்தாருத்

தூரோடு சாய்ந்து மறிக்கின்ற தோர்தோற் றமொக்கும்’ (கந்த. முதல் நாட். 206) (வி. பா. பக். 56-60)

இவை ஆறுமே பழக்கத்தில் மிக்குவரும் சந்தக் கலித்துறை களாம்.

எ) சந்தக் கலித்துறையில் ஏழு மாத்திரை அமையும் ஐந்தாம் சீராக விளங்காய்ச் சீர் வருதலும் உண்டு.

எ-டு : ‘பொய்யுரைத் துலகினில் சினவினார் குலமறப் பொருதுதன்வேல்

நெய்யுரைத் துறையினிட் டறம்வளர்த் தொருவனாய் நெறியினின்றான்

மையுரைத் துலவுகண் மனைவிபால் வரமளித் தவைமறாதே

மெய்யுரைத் துயிர்கொடுத் தமரரும் பெறுகிலா வீடுபெற்றான்’.

(கம்பரா. 6154) (வி. பா.பக். 80)

ஏ) புளிமா, தேமா, கூவிளம், தேமா புளிமாங்காய் என அமையும் ஐஞ்சீரடி நான்கான் அமைவது.

எ-டு : ‘மலையே போல்வான் மால்கட லொப்பான் மறமுற்றிக்

கொலையே யொப்பான் கூற்றைநி கர்ப்பான் கொடுமைக்கோர்

நிலையே போல்வான் நீர்மையி லாதான் நிமிர்திங்கட்

கலையே போலும் காலவெ யிற்றான் கனல்கண்ணான்’.

(கம்பரா. 4595) வி. பா. பக். 80

கலிச்சந்த விருத்தம் -

{Entry: O15b__054}

தமிழில் சந்தப்பாக்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள சந்தக் குழிப்பை அடியொற்றிப் பாடுதலை விடுத்து, வடமொழி மரபையொட்டி மாத்திரையைக் கணக்கிட்டு அடிதோறும் அடிதோறும் இவ்வளவு மாத்திரை வருதல் வேண்டும் என்ற முறைக்கு ஒப்பப் பாடப்படும் கலிவிருத்தப் பாடல்கள். சந்தமாவது மாத்திரையளவால் அமைவது ஆதலின், அம்மாத்திரைத் தொகைகள் ஒழுங்காகவும் அடுக்காகவும் ஒருமுறையைப் பின்பற்றி நிற்றல் செவிக்கு முறையான இன்பம் தரும் என்ற கருத்தில் அமைந்தவை இவை.

இத்தகைய விருத்தங்களில் குறில் ஒரு மாத்திரை, குற்றொற்று இரண்டு மாத்திரை, நெடிலும் நெட்டொற்றும் இரண்டு மாத்திரை, அடியின் இறுதியில் வரும் குறில் இரண்டு மாத்திரை என்று அளவு கணக்கிடப்படும். இரண்டு சமமான அரையடிகள் சேர்ந்து ஒரு முழு அடி ஆகும்போது, முதல் அரையடியின் இறுதியில் குறில் இருந்தாலும் அதுவும் இரண்டு மாத்திரை பெறும்.

மனோரமா, தோடகம் முதலான அதன் வகைகளைத் தனித் தனியே காண்க (வி.பா. பக். 35-38)

கவிராசவிராசித விருத்தம் -

{Entry: O15b__055}

கருவிளஞ்சீர் முன்வரப் பின் கூவிளஞ்சீர்கள் வர ஏழு சீர்களான் அமையும் அடிகள் நான்கான் அமைவது; அடிதோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காய் ஆம்.

எ-டு :

‘கொடிகளி டைக்குயில் கூவுமி டம்மயி

லாலுமி டம்மழு வாளுடைய

கடிகொள்பு னற்சடை கொண்டநு தற்கறை

கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்

செடிகொள்வி னைப்பகை தீருமி டந்திரு

வாகுமி டந்திரு மார்பகலத்

தடிகளி டம்மழல் வண்ணனி டங்கலிக்

கச்சிய னேகதங் காவதமே’ (தே. ஏஐஐ 10-3)

இதன்கண், இரண்டா மூன்றாமடி முதற்சீர்கள் ‘கருவிளம்’ என்பதற்கு ஈடாகப் ‘புளிமாங்காய்’ என வந்தன. (வி. பா. பக். 69)

காந்தி (1) -

{Entry: O15b__056}

நான்கு மாத்திரைச் சீர்கள் நான்காகி நேரசையில் தொடங் கும் வெண்டளை யாப்பிற்றாய சந்த விருத்தம்; கலிச்சந்த விருத்தம்.

எ-டு : ‘வெய்தா கியகா னிடைமே வருநீ

ரைதா தலினோ அயலொன் றுளதோ

நொய்தாய் வரவே கமுநொய் திலனால்

எய்தா தொழியா னிதுவென் னைகொலாம்’ (கம்பரா. 3603)

அப்பர் அருளிய ‘விடந்தீர்த்த பதிகம்’ இத்தகையதே (இரண்டாம் பாசுரம் தவிரக் கொள்க) (தே. IV 18)

காயத்திரி -

{Entry: O15b__057}

நான்கடிகட்குமாக இருபத்துநான்கு உயிரெழுத்துக்க ளுடைய சந்தம்; அடிதோறும் அவ்வாறு உயிரெழுத்தாக வருவது.

எ-டு : ‘கருவி வானமே

வருவர் மாதிரம்

பொருவி லாமிதே

பருவ மாவதே’ (வீ.சோ. 139 உரை.)

கிருதி (1) -

{Entry: O15b__058}

எழுத்துவகையால் இருபத்தாறுபேதமாம் எனப்பட்ட சந்தங் களுள் ஒன்று. ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு இருபது எழுத்துப் பெற்று வருவது.

எ-டு : ‘ஒருவேனின் றுயிரன்ன தோகையுரை யுள்ளங்கிழித் தூடுபோம்

செருவேநின் றசோகதரு வின்செழுந் தாதுதிரப் போதுகொண்டு

பொருவேநின் றான்கொடிய வேனிலான் மதுவுணவுங் கொண்டானன்னோ,

வருவேனென் றார்பிரிந்த வஞ்சருரை யிற்கொடிது வாணிலாவும்.” (வீ. சோ. 139 உரை)

குருவும் லகுவும் -

{Entry: O15b__059}

தனிநெட்டெழுத்தும் ஒற்றடுத்த நெட்டெழுத்தும், ஒற்றடுத்த குற்றெழுத்தும் ‘குரு’. இஃது ஈரலகு பெறும். இது டகர வடிவிற்று.

தனிக்குற்றெழுத்து ‘லகு’. இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று. அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் குருவாக ஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. க. 95. உரை)

கேடு அல்லது நட்டம் -

{Entry: O15b__060}

உறழ்ச்சி என்னும் பிரத்தாரத்தால் விருத்தங்களின் தொகையை அறியலாகும். ஆயின், இன்ன விருத்தத்தில் இத்தனை
யாவது எண்ணுடையது எவ்வகையில் லகு குருக்களின் அமைப்பைப் பெற்றிருக்கும் என்று அறிவதற்கான உபாயமே இத்தெளிவு. நட்டம் என்பதற்கு அறியப்படாதது என்றே பொருள் கொள்ளல் வேண்டும். விருத்தத்தின் எழுத்துக் களின் எண் மிகுந்து கொண்டே (இருபத்தாறு வரை) போகுங்கால். விருத்தங்களின் மொத்தத்தொகை ஆயிரம் பல்லாயிரமாகப் பல்கிப் பெருகுதலின், அவற்றுள் ஒன்றின் (- எளிதில் அறியப்படாத ஒன்றின்) நட்டம் ஆனதின் குரு லகு அமைப்பை அறிவதற்கு எளிய வழி கூறும் தெளிவு இது.

எடுத்துக்காட்டாக, பிரத்தாரத்தில் காட்டிய நான்கெழுத்துக் களைக் கொண்ட அடிகளால் அமையும் விருத்தவகை பதினாறில், இத்தனையாவது விருத்தம் இன்னவகையில் குருலகு எழுத்துக்களைப் பெற்றிருக்கும் என்பதை இந்நட்டம் (-கேடு) என்னும் தெளிவால் அறியும் முறையைக் காண்போம்.

இரண்டாவது எழுத்துக் காண, விருத்தத்தின் எண்ணைப் பாதியாக்கவும், எண் விஷமமானால் ஒன்றனைச் சேர்த்துப் பாதியாக்கவும் வேண்டும்.

1, 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை எண்கள் விஷமஎண்கள். இவை வியமன் என்றும் வியனிலை என்றும் கூறப்படும் 2, 4, 6, 8, 10 போன்ற இரட்டைப்படை எண்கள் சம எண்கள்; இவை சமநிலை என்று கூறப்படும்.

பின்வரும் முறையில் எழுத்துக்களைப் பகிர்ந்தும் கூட்டியும் செய்தபின் வரும் எண் விஷமமானால் குருவையும், சமமா னால் இலகுவையும் இட்டுக் கொள்ளல் வேண்டும்.

இனி நான்கெழுத்தடிகளைக் கொண்ட விருத்தங்களில் பதினோராவது விருத்தத்தின் எழுத்தமைப்பு எங்ஙனம் என்றறிய, நட்டம் என்ற தெளிவு முறையைக் காட்டுவோம். (இது குரு லகு குரு லகு என்ற அமைப்புக் கொண்டது.)

அ) 11 என்பது விஷம எண்; ஆதலின் முதலில் குரு எழுத்து.

ஆ) அதனுடன் ஒன்று கூட்டினால் 11 + 1 = 12.

இது சமாண்; ஆகவே இரண்டாம் எழுத்து வரு. இந்த 12-ஐப் பாதியாக்கினால் வருவது 6; (இ) அதனைப் பாதியாக்கினால் வருவது 3. இது விஷமம். ஆகவே மூன்றா மெழுத்து குரு. (ஈ) மூன்றோடு ஒன்று சேர்த்தால் 4; அதன் பாதி 2. இது சமம். ஆகவே நான்காவது எழுத்து இலகு.

இனிச் சமமான ஒன்றைப் பற்றி அறிய எடுத்துக்காட்டு:

அடிக்கு நான்கெழுத்துக்கள் கொண்ட விருத்தங்களில் பன்னிரண்டாவது எங்ஙனம் அமையுமெனில், காண்போம். (லகு லகு குரு லகு என்பது இதன் அமைப்பு)

12 என்பது சமம்; ஆகவே முதலில் லகு. அதன் பாதியும் (6) சமம்; ஆகவே இரண்டாவதும் லகு. ஆறன் பாதி 3; இது விஷமம்; ஆகவே மூன்றாவது குரு. 3+1=4; இதன் பாதி 2; இது சமம். ஆகவே நான்காவது லகு.

இவ்வாறே, அனைத்து விருத்தங்களையும் அறியலாகும்.

(வீ. சோ. 135)

ச section: 51 entries

சக்குவரி -

{Entry: O15b__061}

ஒற்று ஒழித்து அடியொன்றற்குப் பதினான்கு எழுத்துக்கள் கொண்ட நாலடி விருத்தம்.

எ-டு : ‘சந்த நீழ லுலாவித் தண்ணென் றமருந் தெண்ணீர்

சிந்து துவலை வீசித் தெண்ணி லாவூ டுலாவு

மந்த வலைய மேன வல்லி தகர வாசந்

தந்த பொழுது வாழ்வார் தமைவைத் தேகு நண்பர்’ (வீ. சோ. 139 உரை)

சகதி -

{Entry: O15b__062}

ஒற்றொழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டு எழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி விருத்தம்.

எ-டு :

‘உருண்ட தேர்மேற் செலவுந்த னுள்ளமாம்

மருண்ட தேர்மிசை மாதர்கண் மீட்சியுங்

கருண்ட வாளுடைக் காளன் ஒருவனே

இருண்ட தேர்மிசை யெவ்வா றியங்கினான்’ (வீ. சோ. 139 உரை)

சங்கியானம் -

{Entry: O15b__063}

ஸங்கியானம்; 26 எழுத்தளவும் உள்ள சந்தங்களில் வரும் விருத்தங்களின் மொத்தத் தொகை.

நான்கு எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் லகு, குரு அமைப்பால் 1 6 வகையென்று, ஏக த்வி ஆதி லகுக் கிரியை என்னும் தெளிவில் அறியப்படும். (‘ஏகத்வி ஆதிலகுக் கிரியா’ காண்க) அதே தொகைதான் நான்கெழுத்துச் சந்தத்தில் வரும் விருத்தங்களின் தொகையும் ஆம். அடுத்து, ஐந்தெழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் நான்கெழுத்துச் சந்தத் தொகையின் இருமடங்காகிய 32 விருத்தங்கள்; ஆறு எழுத்துக்கொண்ட சந்தத்தில் முன்னதினும் இருமடங்கு எனவே, 64 விருத் தங்கள்; ஏழெழுத்துச் சந்தத்தில் 128; எட்டெழுத்துச் சந்தத் தில் 256; இவ்வாறே 26 எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் வரும் விருத்தங்களின் தொகை 6, 71, 08, 864 ஆம். (வீ. சோ. 138 உரை)

சங்கிருதி -

{Entry: O15b__064}

ஒற்று ஒழித்து ஓரடிக்கு 24 எழுத்துக் கொண்டதாய்த் தமிழில் வழங்கும் வடமொழிச் சந்தம்.

எ-டு : ‘உடைய தானவ ருடைய வென்றவ உடைய தாணம சரண மாகுமே.’

இது சங்கிருதி அமைந்த நாலடி விருத்தத்துள் ஓரடி. நாலடி யுமமைந்த விருத்தம் வருமாறு :-

அண்டர் குலபதி யாம்விடை வாகன

னம்பொ னடிமலர் நாறிடு சேகர

னெண்டி சையுமனு நீதிசெய் கோலின

னெங்கு மொருகுடை யாலிடு நீழலன்

மண்டு கிரணசி காமணி மௌலியன்

வண்டு மதுநுகர் தாதகி மாலையன்

மிண்டு முதுபுலி யேறுப தாகையன்

வென்றி வளவனை யார்நிக ராவரே? (வீ. சோ. 139 உரை)

சந்த அடி -

{Entry: O15b__065}

நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த, தம்முள் ஒத்த, அடியான் இயன்ற விருத்தம் அள வியற் சந்தமாம். அவ்விருத்தத்தின் அடி சந்த அடி என்றவாறு. (யா. வி. பக். 476)

சந்தக் கலித்துறை -

{Entry: O15b__066}

சிந்தாமணி சூளாமணி குண்டலகேசி நீலகேசி அமிர்தபதி என்ற இவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடிக்கு எழுத்து 14, நிரையசை முதலாய் வரின் ஓரடிக்கு எழுத்து 15. இவை சந்தக் கலித்துறை யாம்.

‘மூவா முதலா உலகம்மொரு மூன்று மேத்தத்

தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி

ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன் அவன்சேவடி சேர்து மன்றே’ (சீவக. கடவுள்.)

‘மதியம் கெடுத்த வயமீனெனத் தம்பி மாழாந்

துதிதற் குரியாள் பணியாலுடன் ஆய வாறும்

நிதியின் னெறியின் அவன்தோழர் நிரந்த வாறும்

பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்’. (சீவக. பதிகம். 28)

இவை முறையே ஓரடிக்கு எழுத்துப் பதினான்கும் பதினைந் தும் பெற்று வந்தன. (மூன்றாம் சீர் புளிமாங்கனியாக வருதல் குறித்துணரத் தகும். இரண்டாம் பாடல் ஈற்றடிகளில் அச்சீர்கள் மாங்காய் வாய்பாடாக வருதலின் ஓரெழுத்துக் குன்றிவருதல் காண்க.) (யா. வி. பக். 520, 521)

சந்தக் கலி விருத்தம் -

{Entry: O15b__067}

நேரசை முதலாகத் தொடங்குமடி பதினோரெழுத்தும், நிரையசை முதலாகத் தொடங்குமடி பன்னீரெழுத்தும் கொண்டு வரும் கலிவிருத்தம் சந்தக்கலி விருத்தமாம்.

‘முன்றி லெங்கு முருகயர் பாணியும்

சென்று வீழரு வித்திர ளோசையும்

வென்றி வேழ முழக்கொடு கூடிவான்

ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்’ (சூளா. 13)

‘அணங்க னாரன ஆடல் முழவமும்

கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்

மணங்கொள் வார்முர சும்வயல் ஓதையும்

இணங்கி எங்கும் இருக்குமோர் மாடெலாம்’. (சூளா. 15) (யா.வி. பக். 520)

இவை முறையே அடி நேரசையிலும் நிரையசையிலும் தொடங்கி அடிக்கு பதினோரெழுத்தும் பன்னீரெழுத்தும் பெற்று வந்தன.

தமிழில் யாப்பில் கூறப்படும் தேமா புளிமா முதலிய சீர்களால் அமைக்கப்பட்டு மாத்திரை எண்ணிக்கைக்கும் பெரும்பான்மையும் ஒத்து வரும் கலிப்பாக்கள் சந்தக் கலி விருத்தமாம். இவை வடமொழி விருத்தங்களோடு ஒருபுடை ஒத்து வருதலு முண்டு. (வி. பா. சந்தவிருத்தம் 5)

I அ) நான்கு மாத்திரையுடைய தேமா புளிமாச் சீர்களால் ஆக்கப்பட்ட நாற்சீரடி நான்கு கொண்டு வருவது :

எ-டு : ‘நீரும் மலரும் நிலவும் சடைமேல்

ஊரும் மரவம் முடையா னிடமாம்

வாரும் மருவி மணிபொன் கொழித்துச்

சேரும் நறையூர்ச் சீத்தீச் சரமே’ (தே. VII . 93-1)

‘கொழித்துச்’ என்றசீர் 5 மாத்திரை; ஏனைய 4 மாத்திரை; யாவும் மாச்சீர்களே.

ஆ) இக்கலி விருத்தம் இரட்டித்து எண்சீர் நாலடியாய் வருவதுண்டு. அதுபோது இஃது எண்சீர் ஆசிரிய விருத்த மாகும்.

II அ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் நான்கு கொண்ட நான்கு அடிகளான் அமைவது; அடியிறுதி நெட்டெழுத் தாவது

எ-டு : ‘வடிவே லதிகன் படைமா ளவரைக்

கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்

கொடிமா மதினீ டுகுறும் பொறையூர்

முடிநே ரியனார் படைமுற் றியதே’. (பெரியபு. 41 : 27)

(மாத்திரை கொண்டு நோக்கக் குற்றொற்று நெட்டெழுத்துப் போல்வதாம்)

ஆ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் மூன்றும் இறுதிச் சீராகிய புளிமாங்காய் ஒன்றும் அமைந்த அடி நான்காய் வருவது.

எ-டு : ‘பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம்

சுலவும் மயில்கா முறுபே டையொடாடிக்

குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டந்

நிலவும் பெருமா னடிநித் தநினைந்தே’ (தே. I 31-6)

‘பொழில்சூழ்ந்’ என்பது நீங்கலாக நாலடியிலும் முதல் மூன்று சீர்களும் 4 மாத்திரை அளவின. அது சிறுபான்மைத்தாக 5 மாத்திரை கொண்டது.

இ) இவ்வகையில் அடிதோறும் முதற்சீர் நேரசையில் தொடங்குவது.

எ-டு : ‘சூலப் படையான் விடையான் திருநீற்றான்

காலன் தனையா ருயிர்வவ் வியகாலன்

கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்

தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே’ (தே. I 31-3)

ருயிர்வவ் - பொழில்சூழ்ந் - கமழ்புன் - நீங்கலான முதல் மூன்று சீர்களும் நாலடியிலும் 4 மாத்திரை அளவின. இவை மூன்றும் சிறுபான்மையவாக 5 மாத்திரை பெற்றன.

சந்தக்குழிப்பு -

{Entry: O15b__068}

சந்தச் செய்யுளின் ஓசை வாய்பாடு. சந்தங்களில் சிலபல சேர்ந்து ஒரு துள்ளலாம்; துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம். ‘சந்தப்பா’ காண்க.

எ-டு : தானதன தானதந்த தானதன தானதந்த

தானதன தானந்த தனதானா

என்னும் வாய்பாட்டால் வரும் சந்தக்குழிப்பு :

பாவையரை யேவிரும்பி நாளுமவ ரோடுறைந்து

பாழுமன மேமெலிந்து - நலியாதே

பூவலய மேலனந்த லோபிகளை யேபுகழ்ந்து

போதவறி வேயிழந்து - மெலியாதே

நாவலர்க ளோடுகந்து பூதிமணி யேயணிந்து

ஞானசிவ யோகமென்று - புரிவோனே

ஆவலுடன் மாமுகுந்த னோடுமய னார்வணங்கும்

ஆதிபுரி வாழவந்த - பெருமாளே!

‘நலியாதே’ போன்ற தனிச்சொற்கள் சந்தப்பாக்களில் ‘தொங்கல்’ எனப்படும்.

சந்தங்கள் பதினாறு -

{Entry: O15b__069}

(1) தத்த (2) தாத்த (3) தந்த (4) தாந்த (5) தன (6) தான (7) தன்ன (8) தய்ய என்பன எட்டும் இவற்றின் ஈற்றின் நீட்டமான (1) தத்தா (2) தாத்தா (3) தந்தா (4) தாந்தா (5) தனா (6) தானா (7) தன்னா (8) தய்யா என்பன எட்டும் ஆகப் பதினாறாம். (வண்ணத். 4)

சந்தங்களின் துள்ளல் -

{Entry: O15b__070}

சிலவகைச் சந்தங்களைப் புணர்ப்பது ஒரு துள்ளல். (வண்ணத். 85)

சந்தங்களின் கலை -

{Entry: O15b__071}

மூன்று சந்தக் குழிப்புக்களின் பின்னர், ஒரு தொங்கல், ஒரு தாழிசை, ஒரு துள்ளல் இவற்றைப் பாடுதல் ஒரு கலை என்று கூறப்படும். (வண்ணத். 87)

இருதுள்ளல் கொண்ட கலையால் வந்த வண்ணம்.

மின்னலையொத் தேயுற் றிருக்கின்ற வாழ்விலே

வெம்மையுறத் தான்மிக் கிளைப்புண் டிராமலே

யின்னலறுத் தேசிற் சுகத்தின்கண் மேவுமா

என்னையெடுத் தாணற் றமிழ்ச்சந்த மோதுவேன்

வன்னமலர்ச் சோலைத் திருச்செந்தில் நாயகா!

வண்ணமிசைப் பாரைப் புரக்குந்த யாபரா!

தென்னணிவெற் பானுக் குவப்பொன்று தேசிகா!

சென்னைநகர்க் கோயில் திருத்தண்ட பாணியே! (வண்ணத். 87)

சந்தங்களின் தொகை -

{Entry: O15b__072}

1. தத்த, தத்தா, 2) தாத்த, தாத்தா, 3) தந்த, தாந்தா, 4) தாந்த, தாந்தா, 5) தன, தனா, 6) தான, தானா, 7) தன்ன, தன்னா,
8) தய்ய, தய்யா என எட்டு. (வண்ணத். 4)

சந்தங்களின் தொடர்ச்சி இயல்பு -

{Entry: O15b__073}

குறில் நெடில் இவற்றின் சந்தம் ‘தனா’; குறில் நெடில் ஒற்று வரின் இத் ‘தனா’ என்னும் சந்தத்தைத் ‘தனான்’ என்னும் சந்தம் போல மனத்திற்கொண்டு கணக்கிடுக.

எ-டு : கடாம், வரால் (வண்ணத். 83)

சந்தங்களின் மதிப்பியல்பு -

{Entry: O15b__074}

வன்மை, மென்மை, இடைமை என்னும் மூவின மெய்களுள் ளும் சந்தியில் ஏற்படும் தோன்றல் திரிதல் கெடுதல்களை உட் கொண்டு அச்சந்திக்கு ஏற்பச் சந்த வாய்பாடு கொள்ளுதல். (வண்ணத். 84)

சந்தங்களின் விகாரம் -

{Entry: O15b__075}

மெலித்தலால் தய்யச் சந்தம் ‘தன்ன’ எனவும், அது ‘தன’ எனவும் ஆகும்.

எ-டு :

நெய்நி - தய்ய; நெய்ந்நி - தன்ன

வர்ம - தய்ய; வர்ம்ம - தன்ன

தொய்வு - தய்ய, தன; செய்கை - தய்ய, தன

சண்மு - தன்ன, தன; மன்வில் - தன்ன, தன (வண்ணத். 82)

சந்தங்களுக்கு உறழ்ச்சி முதலிய ஆறு தெளிவுகள் -

{Entry: O15b__076}

அளவியற் சந்தங்களின் பெருக்கத் தொகையும் பரப்பும் தெளிதற்குத் துணையாகின்றமையின் இவை ‘தெளிவு’ எனப் பட்டன. அவை ஆறாவன : 1) உறழ்ச்சி (பிரத்தாரம்), 2) கேடு (நட்டம்), 3) உத்திட்டம் (இது நித்திட்டம் எனவும்படும்), 4) ஓர் இலகு உடையன, இரண்டு இலகு உடையன, ஒரு குரு உடையன, இரண்டு குரு உடையன என்றிவ்வாறு சந்தங்கள் அனைத்திற்கும் அமைத்துக்காட்டி (26 எழுத்துக்கள் கொண்டதாக)த் தொகை கூறுதல். (இது வடமொழியில் ‘ஏக த்வி ஆதி லகுக்கிரியா’ எனப்படும். வடநூல் மரபில் ‘ல’ எனும் எழுத்து இலகுவையும் ‘கு’ எனும் எழுத்து குருவையும் குறிக்கும்), (5) 26 எழுத்தளவும் உள்ள சந்தங்களின் விரிவினைக் காட்டி இத்தனை என்று கூறும் விருத்தத் தொகை (ஸங்கியானம்), 6) நில அளவு (இச் சந்தங்கள் அனைத்தையும் குறித்த அளவுடன் நிலத்தில் வரைந்து பார்க்குங்கால், ஒவ்வொன்றும் இத்தனை நிலப்பரப்பினைக் கொள்ளும் என்ற அளவு) என்பன. (வீ. சோ. 133 உரை)

சந்தங்களைப் பிரத்தரித்துக் காட்டுதல் -

{Entry: O15b__077}

பிரத்தாரம் செய்தலாவது உறழ்ச்சி செய்தல்.

அனைத்தும் குருவாய் அமைந்த அடியொன்றில் (1 முதல் 26 எழுத்து வரை பெற்றுள்ள எவ்விருத்ததினுடையதாயினும்) குருவின் கீழே இலகு எனக் குறித்துக் கொண்டால் முதல் வகை கிடைக்கும்.

இதுபோலவே அடுத்த வகையை முதலாவது குருவாகவே அமைய இரண்டாவதை இலகு எனக் குறித்துக்கொண்டால், இரண்டாம் வகை கிடைக்கும். இதுபோலவே, அனைத்தும் இலகுவே கொண்ட அடியிலும் செய்க.

உதாரணமாக, அடிக்கு நான்கு எழுத்துக் கொண்ட ஒரு விருத்தம் பிரத்தாரம் செய்யும்போது 16 வகையாக உறழ்ச்சி பெறுவது காண்க. குரு என்பதைக் ‘கு’ என்னும் எழுத்தாலும், இலகு என்பதை ‘ல’ என்னும் எழுத்தாலும் குறிப்பது மரபு.

1. கு கு கு கு

2. ல கு கு கு

3. கு ல கு கு

4. ல ல கு கு

5. கு கு ல கு

6. ல கு ல கு

7. கு ல ல கு

8. ல ல ல கு

இவை எட்டும் அனைத்தும் குருவான அடியின் பிரத்தாரம்.

9. ல ல ல ல

10. கு ல ல ல

11. ல கு ல ல

12. கு கு ல ல

13. ல கு ல ல

14. கு ல கு ல

15. ல கு கு ல

16. கு கு கு ல

இவையெட்டும் அனைத்தும் இலகுவான அடியின் பிரித்தாரம்.

இது நிலை (பிரதிட்டை) என்னும் பெயரைக் கொண்ட ஓரடிக்கு நான்கு எழுத்துக்கொண்ட விருத்தத்தின் பிரத்தாரம்.

இவ்வாறு ஐந்து எழுத்தடி விருத்தங்களைப் பிரத்தாரம் செய்தால், 32 வகைப்படும். இதுபோலவே 26 எழுத்து வரை யுடைய அடிகளைக் கொண்ட விருத்தங்களை பிரத்தாரம் செய்தால், ஒன்று ஒன்றைவிட அடுத்ததற்கு இருமடங்கு வகைகள் வரும்; ஆறு எழுத்திற்கு 64; ஏழ் எழுத்திற்கு 128, அவ்வாறே இறுதிவரை செய்து காண். (வீ. சோ. 134 உரை)

சந்தத் தாண்டகம் -

{Entry: O15b__078}

சந்தஅடி பலவாயும், தாண்டகஅடி சிலவாயும் வருவன வற்றைச் சந்தத் தாண்டகம் என்பர் ஒரு சாரார்.

சந்தஅடி சிலவாயும், தாண்டகஅடி பலவாயும் ஓசைகொண்டு வருவனவற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ என்பர்.

எ-டு :

‘அங்குயிலின் அவிரொளியால் அருண மாகி

அணியாழி மரகதத்தால் பசுமை கூர்ந்து

மங்கலம் சேர் நூபுரத்தால் அரவம் செய்யும்

மலரடியை மடவன்ன மழலை ஓவாச்

செங்கமல வனமென்று திகைத்த போழ்தில்

தேமொழியால் தெருட்டுதியோ செலவி னாலோ?

தொங்கலம்பூங் கருங்கூந்தல் சுடிகை நெற்றிச்

சுந்தரி! நிற் பணிவார்க்கென் துணிவு தானே!”

ஒரு சாரார், சந்தஅடி பலவாய் வருவனவற்றைச் ‘சந்தத் தாண்டகம்’ எனவும், தாண்டகஅடி பலவாய் வருவன வற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ எனவும், இருவகை அடியும் ஒத்து வருவனவற்றைச் ‘சமசந்தத் தாண்டகம்’ எனவும் வழங்குவர். (யா. வி. பக். 486)

சந்தத்தில் ஆய்தம் -

{Entry: O15b__079}

சந்தத்தில் ஆய்தம் இடையின ஒற்றுடன் உறழும். (எ-டு. ‘அஃதே; எய்தா’) (வண்ணத். 3)

சந்தத்தில் ஐ ஒள -

{Entry: O15b__080}

ஐயும் ஒளவும் ஈற்றில் குறளாயும், இடையிலும் முதலிலும் அய், அவ் எனக் குறில் அடுத்த ஒற்றாயும் நெட்டெழுத்தின் தன்மை யாண்டும் பெறாது சந்தத்தில் கணக்கிடப்படும். (வண்ணத். 2)

சந்தத்தில் மெலித்தல் இயல்பு -

{Entry: O15b__081}

தன்னவும் தய்யவும் ஆகிய சொற்களில் ஒற்றின்பின் வரும் உயிர்மெய் வேறாயின், சந்தி வேற்றுமையால் ‘தன’ என்னும் சந்தம் ஆகும்.

எண்ண என்பது எண எனவும், சொன்ன என்பது சொன எனவும், செய்ய என்பது செய எனவும், கொள்ள என்பது கொள எனவும் வரின், தன்ன, தய்ய என்ற சந்தங்கள் ‘தன’ என்ற சந்தமாகும். (வண்ணத். 82)

சந்தத்தின் தொகை, அளவு முதலியன -

{Entry: O15b__082}

அத்துவயோகம் என்னும் நில அளவு.

விருத்தங்களைத் தரையில் பிரத்தாரம் செய்து வரைவதால் நிறையும் நிலத்தின் அளவு. எல்லாவகைச் சந்தங்களிலும் அமையும். பல்லாயிரக்கணக்கான விருத்தங்களையும் விரற்கிடை போன்ற அளவுகள் வைத்து வரைவதால் அதன் பரப்பு இவ்வளவு என்று கூறும் அளவு எனும் தெளிவு பிரத்தியயம் ஆம்.

இவ்விருத்தங்கள் சமம், விஷமம், அர்த்தசமம் என்னும் முறையில் பார்க்கும்போது கோடிக்கணக்கில் விரியும். இவற்றைத் தரையில் ஓரெழுத்திற்கு ஓரங்குலம் இடைவெளி விட்டு வரைந்துபார்க்க அவை அடையும் பரப்பின் அளவைப் பற்றிய இத்தெளிவில், ஒன்றையோ இரண்டையோ விடுவ தும் அல்லது கூட்டிக் கொள்வதும் போன்ற மாறுபட்ட கருத்துக்கள் வடமொழி நூல்களில் காணப்படுகின்றன. தமிழ்மரபிற்கேற்ப இது வீரசோழியத்திலும் யாப்பருங்கல விருத்தியிலும் கணக்கிட்டுக் கூறப்படுகிறது. விரற்கிடை களைக் கூட்டிச் சாண் முழம் கோல் கூப்பீடு காதம் என்னும் நிலஅளவுகளும் கூறப்பட்டு. 26 எழுத்துள்ள ‘உற்கிருதி’ என்னும் சந்தத்திற்கு 699 காதமும் 101 கோலும் 1 முழமும் 7 விரலும் என்று நிலஅளவைத் தொகையும் கொடுக்கப்பட் டுள்ளது. இதன் விரிவினை யா.வி. பக். 501-512 வரை காண்க.

சமம் - நான்கு அடிகளும் எழுத்தும் அலகும் ஒத்துவரும் விருத்தம். வியமம் (விஷமம்) - நான்கு அடிகளும் தம்முள் ஒவ்வாது வரும் விருத்தம்.

பாதிச் சமம் - (அர்த்தசமம்) முதலாம் அடியும் மூன்றாமடியும் ஒருவகையிலும், இரண்டாமடியும் நான்காம் அடியும் வேறு வகையிலும் வரும் விருத்தம். (வீ. சோ. 139)

சந்தத்தின் தொகை அறியும் விதம் -

{Entry: O15b__083}

நான்கு எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் லகு, குரு அமைப்பால் 16 வகை என்று, ‘ஏகத்வி ஆதி லகுக்கிரியா’ என்ற தெளிவால் அறியப்படும் (அத்தலைப்புள் காண்க) அத் தொகையேதான் நான்கு எழுத்துச் சந்தத்தில் வரும் விருத்தத்தின் தொகையும் ஆம். அடுத்த ஐந்து எழுத்துக் கொண்ட சந்தத்தில், நான்கு எழுத்துக் கொண்ட சந்தத் தொகையின் இருமடங்கு ஆகிய 32 விருத்தங்கள். ஆறு எழுத்துக் கொண்ட சந்தத்தில், முன்னதினும் இருமடங்கு எனவே 64 விருத்தங்கள்; ஏழு எழுத்து 128; எட்டெழுத்து 256; இவ்வாறே 26 எழுத்துக் கொண்ட சந்தத்தில் வரும். விருத் தங்களின் தொகை 6,71,08,864 (ஆறு கோடியே எழுபத்தொரு நூறாயிரத்து எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு) (வீ. சோ. 138 உரை)

விருத்தங்களின் தொகை 6, 71, 08, 864 என்பது.

சந்த தாண்டகங்களில் எழுத்து எண்ணல் -

{Entry: O15b__084}

சந்தம், தாண்டகம் இவற்றுள் எழுத்து எண்ணும்வழிக் குற்றுகரம், குற்றிகரம் இவற்றையும் எழுத்தாகவே கொண்டு கணக்கிடல் வேண்டும். (யா. வி. பக். 486)

சந்தப்பா -

{Entry: O15b__085}

தாளஅறுதிக் கேற்ப ஓசையைக் கொண்டு அமைக்கப்படும் பாக்கள். இவற்றின் வகைகளை வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களின் தாழிசை துறை விருத்தம் என்னும் இனங்களின் அமைப்புக்களில் காணலாம். விருத்தங்களிலேயே இவை மிகுதியும் பயிலும். சந்தக்குழிப் பினை ஆதாரமாகக் கொண்டு வருவன சந்தப்பா எனலாம்; வண்ணப்பாவும் அது.

சந்தங்களில் சிலபல சேர்ந்து ஒரு துள்ளலாம். துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம்; குழிப்பு ஒன்றும் ஒருசிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்து ஒரு கலையாம். கலை எட்டுக் கொண்டது வண்ணமாம். சந்தங்கள் ‘தத்த’ முதலாகப் பதினாறு ஆகும்.

சந்தப்பாச் சீர்களிடை வழுவமைதி -

{Entry: O15b__086}

1. தேமா புளிமா புளிமாங்கனி, தேமா, தேமா என்ற 5 சீரடியுடைய நான்கடிப் பாடல் பின்வருமாறு:

எ-டு : ‘கால்வா னகத்தே குடைவெய்யவன் காய்க டுங்கட்

கோல்மாய் கதிர்புல் லுளைகொல்சினக் கோள ரிம்மா

மேல்பால் மலையிற் புகவீங்கிருள் வேறி ருந்த

மால்யானை யீட்ட மெனவந்து பரந்த தன்றே’ (கம்பரா. 882)

‘நொய்தாங் குழவி யெனக்கொள்சில நோன்மை நாடின்

வெய்தா மவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்

எய்தாத மாய முளனாலிவன் றன்னை வெம்போர்

செய்தாடல் கொள்வ மிவணென்றுதெ ரிந்து சூழ்ந்தார்’ (கந்தபு. I 14-42)

‘மால்யானை யீட்டம்’, தேமா முன் நிரை வரவேண்டியவிடத்துத்

தேமாங்காய் முன் நேர்வந்து ஓசை கெடாமல் நின்றவாறு.

‘எய்தாத மாயம்’, ‘செய்தாடல் கொள்வ’ என்பனவும் அது.

முதற்பாடல் நான்காமடியில் புளிமாவும் (பரந்த) தேமாவும் (யீட்ட) இடம் மாறி நின்றவாறு. ‘மெனவந்து’ என்று புளிமாங்காய் வந்தது.

2. ஒரு சீராகவே தேமாவோ புளிமாவோ வரலாம் என்ற இடங்களில் புளிமாச்சீரின் முதல் எழுத்தைப் பிரித்து முன் சீருடன் கூட்டி அதனைத் தேமாவாகக் செய்வது கூடாது.

‘சென்று கருத்தை யின்றே தேரினை வருதி என்றான்’ என்பதனைச்

‘சென்றுக ருத் தை யின்றே தேரினை வருதி என்றான்’ எனப் பிரித்துப் புணர்ப்பது கூடாது.

3. ஆயினும், மொழிகளின்வழியேதான் சீர்கள் செல்ல வேண்டும் என்னும் வரையறையின்மையின், மொழி முதலி லுள்ள எழுத்து முதற்சீர் இறுதியிலும், மொழிக் கடையி லுள்ள எழுத்து அடுத்த சீர் முதலிலும் சேர்ந்து வகையுளி யாகி ஓசைநயம் கருதி ஒலிக்கப்படலாம்.

எ-டு : ‘இறந்தனர்பி றந்தபயன் எய்தினர்கொ லென்கோ

மறந்தனர றிந்துணர்வு வந்தனர்கொ லென்கோ’ (கம்பரா. 5291)

எனவும்,

எ-டு : ‘என்றென் றுயிர்விம் மியிருந் தழிவாள்

மின்றுன் னுமருங் குவிளங் கிழையாள்’ (கம்ப. 5237)

எனவும் வருவன காண்க.

4. மெய்யொலியைச் சந்தப்பாக்களில் தேவைப்பட்டபோது கொண்டு மற்றைய இடங்களில் நீக்கி விடலாம்.

எ-டு : ‘நீ ண் டவிழி நேரிழைதன் மின்னினிற மெல்லாம்

பூ ண் டதொளிர் பொன்னனைய பொம்மனிற மெய்யே

ண் டகைதன் மோதிரம டுத்தபொரு ளெல்லாம்

தீ ண் டளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ’ (கம்ப. 5295)

இவ்வொற்றுக்கள் நீக்கப்பட்டால்தான் இப்பாடல் வனமயூர விருத்த விதிக்குப் பொருந்தும். (முதற்சீர்களிற் காணப்படும் ணகர ஒற்று)

5. ஒரு மாத்திரை மிக்கோ குறைந்தோ வருவதால் ஒரு விருத்தத்தின் பெயர் மாறிவிடாது.

எ-டு : ‘இனமுற என்ன வுள்ள கரத்தி லொன்ற தெனலாலி தென்ன தெனலால்

மனமுநீ யல்ல வென்ற வதனாலு முந்து மதியல்ல வந்த வகையே’.

‘இனமுற’ என்பதனை அடுத்த ‘மனமுநீ’ என்பது ஒரு மாத்திரை மிக்கதேனும் எண்சீர்க் சந்தவிருத்த இலக்கணத்தில் திரியாது.

எ-டு : ‘செய்தா யேனும் தீவினை யோடும் பழியல்லால்

எய்தா தெய்தா தெய்தினி ராமன் னுலகீன்றான்.

வைதா லன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும்

கொய்தா னன்றே கொற்றமு டித்துன் குழுவெல்லாம்’. (கம்பரா. 3249)

இப்பாடலில் மூன்றாமடியின் இரண்டாஞ்சீர் ஏனை அடிகளின் இரண்டாம்சீர் போல 4 மாத்திரையாகாமல் 3 மாத்திரையாகக் குறைந்து நின்றதேனும் அஃது ஒன்றுபற்றி இம் மத்தமயூர விருத்தம் தவறு என்று கோடல் கூடாது.

6. மாத்திரையே கணக்கிடப்படும் சந்தவிருத்தங்களில் நேரசைச் சீருக்கு அதே மாத்திரையுடைய நிரையசைச் சீரும், நிரையசைச் சீருக்கு அதே மாத்திரையுடைய நேரசைச்சீரும் மற்ற சீர்களுக்கு அவ்வளவே மாத்திரையுடைய வேறுசீர் களும் சிறுபான்மை கொள்ளப்படலாம்.

எ-டு : ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்

எண்ணுளா ரியலுளார் இசையுளார் திசையுளார்

கண்ணுளா ராயினார் பகையுளார் கழிநெடும்

புண்ணுளா ராருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)

இப்பாடலடிகளில் 2, 3, 4 ஆம் சீர்கள் நேருக்கு ஒப்பாக நிரையில் தொடங்கினும் 5 மாத்திரை என்னும் அளவினை மாறாமையின் ஏற்றுக் கொள்ளப்படும்.

சந்தப்பாட்டு -

{Entry: O15b__087}

நான்கு முதல் 26 எழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை. சந்தவிருத்தமும் சந்தப்பாட்டு எனப்படும். (திவா. பக். 233).

சந்தப் பிறழ்ச்சி இயல்பு -

{Entry: O15b__088}

குறிலுடன் இடையினத்தொற்றும் மெல்லினத்து உயிர்மெய் யெழுத்தும் ஒன்றினும், அவற்றொடு மீண்டும் மெல்லொற் றோ இடையொற்றோ வந்து அடுப்பினும் தன்ன என்ற சந்தமும் தய்ய என்ற சந்தமும் ஆகிய இரண்டும் ஏற்கும்.

எ-டு : பொய்மை, வர்மம்

குறிலையடுத்து இடையொற்றும் அதனை அடுத்து மெல் லொற்றும் அடுத்து மெல்லின உயிர்மெய்யும், அடுத்து இறுதியில் மெல்லொற்றோ வல்லொற்றோ வரினும் தன்ன, தய்ய என்ற இரண்டு சந்தத்திற்கும் பொருந்தும்.

எ-டு : மெய்ம் மெய். (வண்ணத். 80, 81)

சந்தம் -

{Entry: O15b__089}

1) செய்யுளின் வண்ணம் 2) வேதத்தில் வரும் யாப்பிலக் கணத்தைக் கூறும் வேதாங்க நூல்; ‘கற்பங்கை சந்தங்கால்’ (மணி. 27 : 100) 3) கவிதை (சூடா XI - பக். 35) 4) சந்தப்பாட்டு; 4 எழுத்து முதலாக 26 எழுத்தின் காறும் உயர்ந்த 23 அடியானும் வந்து அடியும் எழுத்தலகும் ஒத்தும் ஒவ்வாதும் வருவன. (யா. வி. பக். 477 - 482)

எ-டு :

தத்த - பத்தி, ஒற்று, சிட்டன், நெய்த்து, மெய்ச்சொல், கர்த்தன்.

தாத்த - காற்று, பாட்டர், கூத்தன், பார்ப்பு, தூர்த்தன், தாழ்த்தல்.

தந்த - மஞ்சு, கொண்கர், கந்தன், மொய்ம்பு, மொய்ம்பர், மொய்ம்பன்.

தாந்த - வேந்து, வேந்தர், பாங்கன், பாய்ந்து, சார்ங்கர், சார்ங்கம்

தன - குரு, தவர், சுதன்

தான - காது, சூதர், பாதம், கேள்வி, சார்கண், கூர்முள், மான்மி, தேன்வி, மாண்மன், கூன்வில், மான்மர், மாண்வின்.

தன்ன - கண்ணி, மென்வி, அண்ணன், பொன்வில், முன்னர், மென்வென்.

தய்ய - வள்ளி, செய்தி, வள்ளல், செய்தல், மெய்யன், செய்கண்.

தத்தா - அத்தா, அற்றார், தொட்டான், பொய்க்கோ, நெய்க்கோல், மெய்க்கோன்.

தாத்தா - சாத்தா, ஆற்றார், மாற்றான், வேய்ப்பூ, வாய்த்தோர், சீர்க்கோன்.

தந்தா - அந்தோ, தங்கார், வந்தேன், மொய்ம்பா, மொய்ம் போர், மொய்ம்போன்.

தாந்தா - சேந்தா, வாங்கார், நான்றான், நேர்ந்தோ, சார்ந்தோர், மாய்ந்தான்.

தனா - குசா, சிறார், கவான்.

தானா - தாதா, போகார், மேவான், ஓர்பூ, கூர்வேல், சேர்மான், கேண்மோ, ஆன்வா, ஆண்மான், கூன்வாள், வான்மேல், தேன்வீண்.

தன்னா - அண்ணா, மன்வா, முன்னோன், அன்னோர், பொன்வேல், தண்வான்.

தய்யா - மெய்யே, நொய்தோ, தள்ளார், செய்தார், வல்லோன், ஓல்கேன்.

(வண்ணத். 12, 23, 32, 42, 50, 60, 70, 76; 17, 27, 37, 47, 53, 67, 73, 79.)

சந்தம் தாண்டகம் பற்றிய பிறர்கருத்து -

{Entry: O15b__090}

காக்கைபாடினியாரும் பாட்டியலுடையாரும் வாய்ப்பிய முடையாரும் சந்தம், தாண்டகம் இவற்றை இனத்தின்பாற் படுத்து வழங்குவர். தொல்காப்பியனார் முதலியோர் இவற் றையும் பாவினங்களையும் கொச்சகக்கலிப்பாற்படுத்து வழங்குவர்.

வடமொழிவழித் தமிழாசிரியர்கள் “ஒருபுடை ஒப்புமை நோக்கி இனம் எனப்படா; மூவகைப்பட்ட விருத்தங்களுள் ளும் (ஆசிரியம், கலி, வஞ்சி) சந்த தாண்டகங்களுள்ளுமே எல்லாப் பாவினங்களும் அடங்கும்” என்பர். (யா. வி. பக். 487)

சந்த விருத்தம் -

{Entry: O15b__091}

எழுத்து வகையானும் அசைவகையானும் ஓசை இயைபு காரணமாகச் சந்தம் என்னும் பெயர் பொருந்திச் சமமான ஒருவிசுற்பத்து நான்கடிகளையுடையது சந்தவிருத்தம். (தொ. வி. 249)

சந்த விருத்த வகைகள் -

{Entry: O15b__092}

ஓசை இயைபு காரணமாகச் சந்தம் என்னும் பெயரடை கொண்டு எழுத்துவகையானும் அசைவகையானும் இயையும் யாப்புவகை, சந்த விருத்தம் ஆகும். ஆகவே, இஃது எழுத்துச் சந்தவிருத்தம், அசைச் சந்தவிருத்தம் என இருவகைப்படும். வடமொழியில் அட்சரகணம், மாத்ராகணம் என அமைந்த பகுப்புப் போன்றது இது. (புதுவை நடராசனார் நூற்செய்தி) (தொ. வி. 249)

சம்பகமாலா சந்த விருத்தம் -

{Entry: O15b__093}

நான்கு அடிகளிலும் 2, 3, 7, 8 ஆகிய இடங்களில் குற்றெழுத்து வருமாறு அமைக்கப்படும் விருத்தம்.

‘எ றிசு ற விளை யவ ரேந்து பூங்கொடி

றிதி ரை வரை புரை மாட மாக்கலம்

பெ றவ ருந் தி ருவ னா ரமுதம் பேரொளி

றைக டல் வ ளந க ராய தொப்பவே. (சீவக. 1446)

சம்மதம் - சந்த விருத்தம் -

{Entry: O15b__094}

அ) 1, 3 - குற்றெழுத்து ஈற்றுமாச்சீர், 2,4 - விளச்சீர் கொண்ட அடி நான்காய் அமைவது.

எ-டு : ‘துலாம ணிந்தவர் சூளி கைத்தலைத்

துலாமி வர்ந்தெழும் சோம திக்கினன்

நிலாவி ரும்பொருள் நிறைந்த தாமென

நிலாவு மத்தலை யிவர்ந்து நிற்குமே’. (தணிகைபு.)

ஆ) இதே அமைப்பில் 1 மாச்சீர், 2, 4 விளச்சீர், 3 முழுதும் புளிமாச்சீர் என்ற அமைப்பைக் கொண்ட நான்கடியாய் வருவது.

எ-டு : ‘எழுது குங்குமத் திருவி னேந்துகோ

டுழுத மார்பினா னுருகி யுள்ளுறத்

தழுவி நிற்றலுந் தாழ்ந்து தாளுறத்

தொழுத மாருதிக் கினைய சொல்லுவான்’ (கம்பரா. 8811)

(வி. பா. படலம் 7 : 11. பக். 43, படலம் 9; பக். 82)

சமசந்தத் தாண்டகம் -

{Entry: O15b__095}

சந்த அடியும் தாண்டக அடியும் சமமாக வருவனவற்றைச் சமசந்தத் தாண்டகம் என்ப ஒரு சாரார். (யா. வி. பக். 486)

சமபாத விருத்தம் -

{Entry: O15b__096}

இசைப்பா வகை.

சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறை பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்பன இசைப்பாக்கள் என்பார் பஞ்சமரபுடைய அறிவனார். (சிலப். 6 : 35 அடியார்க்.)

சமம் (2) -

{Entry: O15b__097}

ஓரடிபோல் நான்கடியும் எழுத்தும் அலகும் ஒத்த விருத்தம்.

(வீ. சோ. 139 உரை)

சமயதி -

{Entry: O15b__098}

எல்லா அடிகளும் ஒத்த அளவினவாய் வரும் இசைப்பாட்டு வகை. (L)

சமவிருத்தம் -

{Entry: O15b__099}

அளவழிச் சந்தங்களுள் முதலடியும் மூன்றாமடியும் எழுத்து மிக்கு இரண்டாமடியும் ஈற்றடியும் எழுத்துக் குறைந்து நாலடியும் சீர் ஒத்துவருவது.

‘அடிமிசை அரசர்கள் வணங்க ஆண்டவன்

பொடிமிசை யப்புறம் புரள இப்புறம்

இடிமுர சதிர்தரவொர் இளவல் தன்னொடும்

கடிமணம் புகுமிவள் கற்பின் நீர்மையே’. (சூளா. 2091)

இதன் முதலடியும் மூன்றாமடியும் 14 எழுத்து வந்தன. ஏனைய இரண்டடியும் 13 எழுத்து வந்தன. (யா. வி. பக். 516)

சமானம் -

{Entry: O15b__100}

குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும் வரும் பாடலும், முற்றக் குருவேயாயும் முற்ற இலகுவேயாயும் வரும் பாடலும் ஆம்.

எ-டு : ‘போது விண்ட புண்ட ரீக
மாத ரோடு வைக வேண்டின்
ஆதி நாதர் ஆய்ந்த நூலின்
நீதி ஓதி நின்மின் நீடு’

முதலடி குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும் வந்தது.

எ-டு : ‘காரார் தோகைக் கண்ணார் சாயல்
தேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்
போரார் வேற்கட் பொன்னே இன்னே
வாரார் அல்லர் போனார் தாமே’

இது முற்றக் குருவே வந்தது.

எ-டு : ‘முருகு விரிகமலம்
மருவு சினவரன
திருவ டிகடொழுமின்
அருகு மலமகல’

- முற்றவும் இலகுவே வந்தது. (யா.வி. பக். 523, 524)

சாத்துவி விருத்தம் -

{Entry: O15b__101}

கூவிளச்சீர் முன்னும் கருவிளைச்சீர் பின்னுமாக எழுசீர் வந்து செய்யுள் இறுதியில் நெட்டெழுத்துப் பெறும் அடிகளை நான்காக உடைய விருத்தம்.

எ-டு : ‘போனதும் வருவதும் கருதுதல் தவிர்ந்துகொள்

புசிப்பினுள் கிடைத்ததை மாந்தி

மேனியில் உடுத்துடை அருந்துதல் இரண்டையும்

விருப்புடன் அளித்திடின் ஏற்று

நானெனத் தவநெறி தனிநடந் துளக்கடி

நணுகிய துறவிகள் நாணும்

வானவர்க் சரசென வருமொரு மழவனை

வணங்கடி யவர்க்கிலை மாலே’ (வி. பா. 10ஆம் படலம் 2)

சாதி (1) -

{Entry: O15b__102}

மாராச்சை, மிச்சாகிருதி முதலியன. (யா. வி. பக். 486)

ஆரியை, வைதாளியை எனச்சாதி இரண்டாம் (வீ.சோ. 139 உரை)

சாதியாவது ஈண்டுச் செய்யுள் பற்றிய சாதி.

சாதி விருத்தமும், அதன் வகையும் -

{Entry: O15b__103}

சாதிவிருத்தமாவது மாத்திரையாலும் எழுத்தாலும் வகை தெளியப்படும் விருத்தம்; ஆரியை எனவும், வைதாளியை எனவும் சாதி விருத்தம் இரண்டு வகைத்தாம். (வீ. சோ. 139 உரை)

சிந்து -

{Entry: O15b__104}

ஈரடி அளவொத்து அமைவது சிந்து (பஞ்ச மரபு). இவ் வடிகளுக்கிடையே தனிச்சீர் அமைவது ஒருவகை. ஒவ்வோர் அடியும் இருபகுப்புற்று இடையே தனிச்சீர் பெறுதலும் உண்டு. முதற்பகுப்புக்கும் இரண்டாம் பகுப்புக்கும் இடையே சிறு ஓசை நிறுத்தம் நிகழ்கிறது. தனிச்சீரால் நிகழ்கின்ற ஓசை நீட்சி சிந்தின் தனிச்சிறப்பு. முன்னிலைப்படுத்தும் நிலையிலும் தொடர்ச்சிதரும் நிலையிலும் பொருள் பொருத்தத்துடன் இத்தனிச்சொல் அமைகிறது.

ஈரடி அல்லது இருபகுதி அளவொத்து வருதல் சிறிதே மாறுபட்டு ஓசை சிந்தி நிற்றல் இங்கு அமைகிறது. இவ் வோசை சிந்துதலிலும் நிலைத்த அமைப்புண்டு. இவ்வியல் புகளே இலக்கணமாக இப்பா இப்பெயர் பெற்றது.

பிறிதொருவகைச் சிந்து அளவொத்த ஈரடிகள் இவ்விரண் டாய்த் துண்டுபட்டு அவற்றிடையே தனிச்சீர் உடைத்தாய் நாற்சீர் இரட்டை என்ற பெயருடன் அமைவது. ஒவ்வோ ரடிப் பகுதியும் நாற்சீர் பெறுவது இது. இவற்றின்கண் அடிகளின் ஈற்றில் வரும் இருசீரும் இயைபாக அமைகின்றன.

அடிப்பகுதிகள் முச்சீர் பெறுவது முச்சீரிரட்டை, இருசீர் பெறுவது இருசீரிரட்டை. (சிந்துப் பாடல்களின் சொற்கள் மிருதங்கத் தாளத்தை ஒட்டி அமைக்கப்பட்டவை; அசைசீர் வரையறைகொண்டு அமைக்கப்பட்டன அல்ல.) (இலக்கணத். முன். பக். 99, 100)

சிந்தடி ‘சிந்து’ எனவும்படும். (யா. கா. 12)

சிந்துப்பாட்டு (1) -

{Entry: O15b__105}

ஆறு முதலிய பல சீர்களால் வரும் இரண்டடிகள் தனிச் சொல் இடையே வரத்தொடுப்பதும், ஈரடிகளின் பின்னர், இரு சீர் முதலாகப் பல சீர்கள் முடுகியல் சந்தத்தொடு வந்து இயையுமாறு தொடுப்பதும்,

மோனை எதுகை முதலான தொடை நயம்பட, பலவகைத் தாளக் கொட்டொடு பல அடியாலே தனிச்சொல் இடையே வரத்தொடுப்பதும் என இவை சிந்துப்பாட்டாம். இச்சிந்துப் பாடல் காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து - என இருவகைப் படும். (இப்பெயர்கள் காரணம் பற்றியவை). அடிதோறும் சீர்ஒத்து வருவன சமனிலைச் சிந்தாம்; சீர் ஒவ்வாது வருவன வியனிலைச் சிந்தாம். (தென். இசைப். 35)

சிந்துப்பாடல் -

{Entry: O15b__106}

தமிழ்ப்பாக்கள் இயற்பா, இசைப்பா என இருவகைப்படுவன. இசைப்பாக்களில், பண்ணுடன் கூடியவையும், பண்ணுடனும் தாளத்துடனும் கூடியவையும் என இருவகையுள. பண்ணுட னும் தாளத்துடனும் கூடிய இசைப் பாக்களை வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி என நான்காகப் பாகுபடுத்த லாம். இவற்றுள், வண்ணப்பாக்கள் சந்தக்குழிப்புக்களையும், சந்தப்பாக்கள் சந்தமாத்திரைகளையும், சிந்துப்பா உருப்படி என்னும் இருவகையும் - தாளநடைகளையும் - அடிப்படை யாகக் கொண்டுள்ளன. எழுத்துக்களின் ஒலியளவு நீளல் குறுகல்களில் ஓர் ஒழுங்குமுறையையும், மோனை எதுகை என்னும் தொடைகளோடு இயைபுத் தொடையையும், சிறுபான்மை எடுப்பு முடிப்பு உறுப்புக்களையும், மிகுதியான தனிச்சொற்களையும் பெற்று வரும் தனித்தன்மையுடையன சிந்துப் பாடல்கள். இத்தனித்தன்மைகளால் மற்ற இசைப் பாடல்களினின்று இவை வேறுபட்டு நிற்கின்றன.

மிகவும் குறுகிய ஒன்றே முக்கால் அடியையுடைய குறளினும் சற்று நெடியதாய் அளவொத்து இரண்டடியாக நிகழும் பாடல் சிந்து எனப்பட்டது. அசையும் சீரும் தனிச்சொல்லும் முடுகியலும் அடியும் சிந்துப்பாடலில் (இயற்பாவிற்கு அமைந்த யாப்பிலக்கண முறையில் காணாமல்) புதுமுறையில் அறியப்படும். குறிலசையும் நெடிலசையுமென அசை இருவகைத்து. குறிலசை தனிக்குறிலாக நிகழும். குறிலொற்று, நெடில், நெடிலொற்று என இம் முத்திறமாக நெடிலசை நிகழும். தாள அடிப்படையில் சீர்கள் அமைகின்றன. அவை தகிட, தகதிமி, தகதகிட, தகிடதகதிமி - என முறையே மூன்றும் நான்கும் ஐந்தும் ஏழுமாகிய அசைகளால் அமை வன. சிந்துப்பாவில் வரும் தனிச்சொல் அடியில் நிகழும் சீராக வரும்; அடிக்குப் புறம்பாக வாராது. முடுகியலின் சீரமைப்புச் சந்தப்பாடலின் இலக்கணம் பெறும். நான்கு முடுகியல்சீர்கள் ஓரடியில் இடம்பெறும். விரைவு நடையில் வருமவை ஓரசைக்கு இரண்டுயிராக நடப்பதுண்டு. சிந்துப்பா அடிகள் தாள அடிப்படையுடையன. 8, 12, 20, 24 சீர்களையுடைய கழிநெடிலடிகளே சிந்துப்பாடலில் பயின்று வரக் காணலாம். (ஒற்றைப்பட அவை நிலைத்தலில்லை); எத்தனை சீராலும் அடி நடக்கலாம். நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, வளையல் சிந்து, தங்கச் சிந்து முதலாகச் சிந்து எனப் பெயரிய இசைப்பாடல்கள் பலவுன. (சிந். யாப். 9. 1, 2, 6)

சிரக்விணீ விருத்தம் -

{Entry: O15b__107}

வடமொழி விருத்த விசேடம்; அடிக்கு 12 எழுத்துக்களை யுடையது; இடையில் இலகு பெறும் கணங்கள் 4 வருவது; அவற்றை மாத்திரைஅளவுகொண்டு கணக்கிட்டால், அடிக்கு 20 மாத்திரை என ஆம். முதலாவது எடுத்துக்காட் டில் எழுத்தளவிலும் மாத்திரை அளவிலும் வடமொழி விருத்தத்தின் இலக்கணம் முற்றும் அமைந்துள்ளது. இரண் டாவதன்கண் எழுத்தளவு மாறுபடினும் மாத்திரையளவு பொருந்தும். ஒருபுடை ஒப்புமையான் அதுவும் இவ்வகை விருத்தமே என்ப.

எ-டு :

அ) கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்

வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்

தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை

தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே’. (தே. III 35-7)

இஃது ஐந்து மாத்திரைக் கூவிளச்சீரினால் அமையும் நாற்சீரடி நான்கினையுடையது.

ஆ) ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்

எண்ணுளார் இயலுளார் இசையுளார் திசையுளார்

கண்ணுளார் ஆயினார் பகையுளார் கழிநெடும்

புண்ணுளார் ஆருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)

இஃது ஐந்து மாத்திரைக் கூவிளத்திற்குரிய இடத்தே சில விடத்துக் கருவிளம் அமையும் நாற்சீரடி நான்குடையது. (வி. பா. ஏழாம்பட லம். 23)

சுத்த விராட்டுச் சந்த விருத்தம் -

{Entry: O15b__108}

அடிக்குப் பத்து எழுத்துக்கொண்ட வடமொழி விருத்தம். இதன் அமைப்பு : (1) முற்றிலும் குருவான கணம், (2) ஈற்றில் குருவரு கணம், (3) இடையில் குருபெற்ற கணம் ஈற்றில் குரு வருதல் - என மூவகைத்து. கீழ்வரும் நேரசையில் தொடங்கும் உதாரணத்துள் இந்த அமைப்பு முற்றிலும் உள்ளது; நிரையசையில் தொடங்குவதில் பொருந்தவில்லை.

ஒவ்வோரடியிலும் ஒற்றெழுத்து நீக்கிக் கணக்கிடப்படும். ஒவ்வோரடியிலும் 4, 5, 7, 9ஆம் எழுத்துக்கள் குறிலாகவும் ஏனைய இடங்களில் நெடிலாகவும் அமைந்த நான்கடி களையுடைய பாடல்.

அ) நேரசையில் தொடங்குவது

‘சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்

சங்கா ரத்தணி தந்த செங்கையாள்

உங்கா ரத்தினு ரத்த ஆடையாள்

உங்கா ரத்தினு ரப்பு மோதையாள்’ (கந்தபு. IV 8-95)

ஆ) நிரையசையில் தொடங்குவது

‘கடற்சுற வுயரிய காளை மன்னவன்

அடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில

மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாம்

கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார்’ (சீவக. 1173)

‘கா’ என்பது நீங்கலாக ஏனைய ஒத்தவாறு காண்க. (வி. பா. பக். 44)

சுராட்டு -

{Entry: O15b__109}

அளவழிச் சந்தங்களுள் சீர்ஒத்து ஓரடியில் ஈர் எழுத்து மிக்கு வருவது.

எ-டு : ‘கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன்

றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்;

அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள;

மலையென நிவந்துள மதலை மாடமே’.

முதன் மூன்றடிகளுள் 12 எழுத்து வர, ஈற்றடி 14 எழுத்து வந்தவாறு. (யா. வி. பக். 515)

சுவாகதச் சந்த விருத்தம் -

{Entry: O15b__110}

இஃது அடிக்குப் பதினோர் எழுத்துக்கள் வரும் வடமொழி விருத்தம். இதன் அமைப்பு 1) இடையில் இலகு வந்த கணம், 2) முற்றும் இலகுவான கணம், 3) முதலிற் குருக்கணம் ஈற்றில் இரு குருக்கள் என வருவது. இவ்வமைப்பு உதாரணத்தில் முற்றும் உள்ளது.

அ) குற்றெழுத்தீற்று மாச்சீர் ஒன்று, மூன்று குற்றெழுத்துக் காய்ச்சீர் ஒன்று, கூவிளம் தேமா - என்ற இவை முறையே அமைந்த அடி நான்காகி வருவது. இரண்டாமடியிலும் நான்காமடியிலும் வந்த 2ஆம் சீர்களின் இறுதியில் உள்ள ஒற்றெழுத்துக்களை நீக்கியே அமைப்புக் காண்டல் வேண்டும்.

எ-டு : ‘ஊரு லாவுபலி கொண்டுல கேத்த

நீரு லாவுநிமிர் புன்சடை அண்ணல்

சீரு லாவுமறை யோர்நறை யூரில்

சேரும் சித்திசுரம் சென்றடை நெஞ்சே’. (தே. I 29-1) (வி.பா.பக். 47, 48)

ஆ) மேற்கண்ட கலிவிருத்தம் இரட்டித்து எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தமாகவும் அமையும். கீழ்வரும் பாடலில் எட்டு அரையடிகளில் மூன்று நீங்கலாக ஏனைய வற்றில் இரண்டாம் சீரில் மூன்று குற்றெழுத்துக்கள் இறுதி யில் இணைந்து வந்தவாறு காணப்படும்.

எ-டு : ‘வேட்ட நல்வரம ளித்துவி டுக்கும்

வீறி லார்கள்பலர் விண்ணவர் மாட்டும்

வேட்ட நல்வரம னைத்தும்வ ழங்கல்

வேட்ட மாத்திரைவி ளைப்பவர் சில்லோர்

வேட்ட நல்வரம ளித்ததன் மேலும்

வேறு நல்வரம்வி னாவிய ளிப்ப

வேட்ட வண்ணங்கரு ணைத்திற நோக்கி

விம்மி தப்புணரி விம்முமு ளத்தான்’

(தணிகைப். பிரமன். 97) (வி. பா. பக். 78)

சேணீ விருத்தம் -

{Entry: O15b__111}

இது வடமொழியில் சிரேணி அல்லது சியேனி என்ற பெயருடையது; அடிக்குப் பதினோர் எழுத்துடையது.

1. இடை இலகு, 2. இடைக்குரு, 3. இடைஇலகு என வருவது முதலில் மூன்று மாத்திரைத் தேமாச்சீர் நான்கும், ஈற்றில் ஐந்தெழுத்துத் தேமாங்காய்ச்சீர் ஒன்றும் புணரும் ஐஞ்சீரடி நான்கு கொண்டது இவ்விருத்தம். இத்தகைய பாக்கள் வடமொழியிலேயே உள. இது

எ-டு : ‘கண்டு சென்று நின்று காலை மீக்கொண்டு

பண்டு நல்ல ஆசி மாற்ற மாண்போடு

மண்டு போல விண்ட பான்மை உட்கொண்டு

கொண்ட நல்ல இன்பு கூட ஏருற்றான்’.

எனவரும். இதன்கண் மேற்கூறிய வடமொழியிலக்கணம் முழுதும் பொருந்தியுள்ளது. (வி. பா. பக். 52)

த section: 26 entries

‘தத்த’ எனும் சந்தம் -

{Entry: O15b__112}

1. இடையில் வல்லின ஒற்று, இரு மருங்கும் உயிர்மெய்க் குறில் ஒன்றி வருதல். எ-டு. பத்தி

2. முதலில் குறிலடுத்து வல்லொற்று, அடுத்து உயிர்மெய்க் குறில் அடுத்து மெல்லொற்றோ இடையொற்றோ வரல். எ-டு : சிட்டன், ஒற்றர்.

3. முதலில் குறிலடுத்து இடையொற்று, அடுத்து வல் லொற்று, இறுதியில் உயிர்மெய்க் குறில் வருதல். எ-டு : நெய்த்து.

4. முதலில் குறிலடுத்து இடையின ஒற்று, அடுத்து வல்லொற்று, அடுத்து உயிர்மெய், அடுத்து மெல்லின ஒற்றோ இடையின ஒற்றோ வருதல். எ-டு : கர்த்தன், மெய்ச்சொல்.

இவ்வாறாகத் ‘தத்த’ எனும் சந்தம் நால்வகைத்து. (வண்ணத். 28-32)

தத்தா எனும் சந்தம் -

{Entry: O15b__113}

1. முதலில் குறில், அடுத்து வல்லொற்று, அடுத்து வல் லினத்து உயிர்மெய் நெடில் அமைவது. எ-டு : அத்தா.

2. முதலில் குறிலெழுத்து எழுத்து வல்லொற்று அடுத்து வல்லின உயிர்மெய் நெடில், ஈற்றில் மெல்லின ஒற்றோ இடையின ஒற்றோ தொடர அமைவது எ-டு : தொட்டான், கற்றார்.

3. முதலில் குறில், அடுத்து இடையின ஒற்று வல்லின ஒற்றுக்கள், அடுத்து வல்லின உயிர்மெய் நெடில் தொடர அமைவது. எ-டு : பொய்க்கோ.

4. முதலில் ஒரு குறில், அடுத்து முறையே இடையின ஒற்று வல்லின ஒற்று, வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில் இடையின ஒற்றோ மெல்லின ஒற்றோ அமைவது. எ-டு : நெய்க்கோல் - மெய்க்கோன்.

இவை நான்கும் ‘தத்தாச்’ சந்த வகைகளாம். (வண்ணத். 13-17)

தந்த எனும் சந்தம் -

{Entry: O15b__114}

1. குறில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில் என வருவது எ-டு : மஞ்சு.

2. குறில், மெல்லொற்று வல்லின உயிர்மெய்க்குறில் மெல்ஒற்றோ இடையொற்றோ ஒன்று என வருவது.

எ-டு : கந்தன், கொண்கர்.

3. குறில், இடையொற்று, மெல்லொற்று, வல்லினத்துயிர் மெய்க் குறில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருவது. எ-டு : மொய்ம்பு; மொய்ம்பன்; மொய்ம்பர்.

இவை நான்கும் ‘தந்த’ச் சந்த வகைகளாம். (வண்ணத். 28-32).

தந்தா எனும் சந்தம் -

{Entry: O15b__115}

1. குறில், மெல்லொற்று, வல்லினத்து உயிர்மெய் நெடில் என வருவது. எ-டு : அந்தோ.

2. குறில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருதல். எ-டு : வந்தேன், தங்கார்.

3. குறில், இடையொற்று, மெல்ஒற்று, வல்லின உயிர்மெய் நெடில் என வருவது எ-டு : மொய்ம்பா.

4. குறில் இடையொற்று மெல்லொற்று வல்லின உயிர்மெய் நெடில், ஈற்றில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருவது. எ-டு : மொய்ம்போன், மொய்ம்போர்.

இவை நான்கும் தந்தாச் சந்த வகைகளாம். (வண்ணத் 33-37)

தமிழில் பயின்றுவரும் கலிச்சந்த விருத்தம் -

{Entry: O15b__116}

அ) 1, 3, 7, 11, 15ஆம் இடங்களிலுள்ள உயிர் நெடிலாய், மற்றவை குறிலாய் வரும் அடி நான்கினையுடையது.

எ-டு : ‘ ஒன் றோ டொ ன்றுமுனை யோ டுமுனை யுற் றுறவிழும்

ஒன் றோ டொ ன்றுபினை யோ டலினச் சோ டுபுதையும்

ஒன் றோ டொ ன்றுதுணி பட் டிடவொ டிக் குமுடனே

ஒன் றோ டொ ன்றிறகு கவ் வுமெதி ரோ டுகணையே’

(நல்லா. பதினேழாம். 358)

குற்றொற்றை 2 மாத்திரையளவான் நெடில்போலக் கணக்கிடுக.

ஆ) 1, 3ஆம் சீர்கள் 4 மாத்திரைக் கூவிளம், 2,4 ஆம் சீர்கள் 6 மாத்திரைக் கூவிளங்காய் அமைந்த அடி நான்காகி வரும்.

எ-டு : ‘கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த

வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்

செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்ப்புக்

கென்பொனை என்மணியை என்றுகொ லெய்துவதே’ (தே. VII 83-7)

இ) இக்கலிவிருத்தம் இரட்டித்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்த மாகவும் வரும்.

எ-டு : ‘தொண்டர டித்தொழலும் சோதியி ளம்பிறையும்

சூதள மென்முலையாள் பாகமு மாகிவரும்

புண்டரி கப்பரிசா மேனியும் வானவர்கள்

பூசலி டக்கடனஞ் சுண்டக றுத்தமருங்

கொண்டலெ னத்திகழும் கண்டமு மெண்டோளுங்

கோலந றுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்

கண்டுதொ ழப்பெறுவ தென்றுகொ லோவடியேன்

கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே’. (தே. VII 84-1)

மாத்திரையே கணக்கிடுவதால் நேரசைச் சீருக்கு அதே மாத்திரையுடைய நிரையசைச் சீரும், நிரையசைக்கு அதே மாத்திரையுடைய நேரசைச் சீரும் மற்றசீர்களுக்கு அதே மாத்திரையுடைய வேறுசீர்களும் கொள்ளப்படலாம்.

ஈ) முதல் சீர் தேமாங்கனி ஏனைய மூன்றும் புளிமாங்கனி என அமைந்த நாற்சீரடி நான்கான் அமைவது.

‘நீர்கொண்டுதண் மலர்கொண்டுநன் னெறிகொண்டுநின் குறிகொண்டுவன்

சீர்கொண்டுவந் தனைசெய்துனைச் செறிவார்களென் பெறுவார்களோ

போர்கொண்டிலன் பொறிகொண்டிலன் பெரியோர்களா லருள்கொண்டிலன்

கார்கொண்டுகண் டருள்சோதியே நாராயணா நாராயணா.’ (வி. பா. பக். 51, 78, 84)

தமிழில் பயின்றுவரும் சந்தக் கலிவிருத்தம் -

{Entry: O15b__117}

இது வனமயூர விருத்தம் போலக் குறிலீற்றுத் தேமாங்காய்ச் சீர் வருவது. முதலில் குறிலீற்றுத் தேமாங்காய், அடுத்துக் குறிலீற்று விளங்காய், அடுத்துக் குறிலீற்றுத் தேமாங்காய் அடுத்துத் தேமா என அமைந்த நாற்சீரடி நான்காய் வருவது.

எ-டு : ‘வெங்கார்நி றப்புணரி வேறேயு மொன்றைப்

பொங்கார்க லிப்புனல்த ரப்பொலிவ தேபோல்

இங்கார்க டத்திரென வென்னாவெ ழுந்தாள்

அங்கார தாரைபெரி தாலால மன்னாள்.’ (கம்பரா. 4815)

2) தேமா ஒன்று கூவிளம் மூன்று என்றமையும் நாற்சீரடி நான்கான் வருவது.

எ-டு : ‘வாழி சானகி வாழியி ராகவன்

வாழி நான்மறை வாழிய ரந்தணர்

வாழி நல்லற மென்றுற வாழ்த்தினான்

ஊழி தோறும் புதிதுறு சீர்த்தியான்’. (கம்பரா. 5168)

ஈற்றடியில் ‘தோறும்’ தேமாவாயினும், ‘புதிதுறு’ கருவிள மாயினும் ஓசை கெடாமையின் கொள்ளத் தக்கனவே. (வி. பா. 46, 87)

‘தய்ய’ எனும் சந்தம்

{Entry: O15b__118}

1. குறில், இடையொற்று, இறுதியில் இடையின உயிர்மெய்க் குறிலோ வல்லின உயிர்மெய்க்குறிலோ ஒன்று வர அமைவது. எ-டு : வள்ளி, செய்தி

2. குறில், இடையொற்று அடுத்து இடையின உயிர்மெய்க் குறில் அல்லது வல்லின உயிர்மெய்க்குறில், இறுதியில் இடையொற்றோ மெல்லொற்றோ ஒன்றுவர அமைவது.
எ-டு : வள்ளல், செய்தல் : மெய்யன், செய்கண். (வண்ணத் 74 - 76)

இவ்வாறு ‘தய்ய’ச் சந்தம் இருவகைத்தாம்.

‘தய்யா’ எனும் சந்தம் -

{Entry: O15b__119}

1. குறில், இடையொற்று, இறுதியில் இடையின உயிர்மெய் நெடில் அல்லது வல்லின உயிர்மெய் நெடில் வர அமை வது. எ-டு : மெய்யே, நொய்தோ

2. குறில், இடையொற்று, அடுத்து இடையின உயிர்மெய் நெடில் அல்லது வல்லின உயிர்மெய் நெடில் இறுதியில் இடையின ஒற்றோ மெல்லின ஒற்றோ ஒன்றுவர அமை வது. எ-டு : தள்ளார், செய்தார்; வல்லோய், ஒல்கேன். (வண்ணத் 77 - 79)

இவ்வாறு ‘தய்யா’ச் சந்தம் இருவகைத்தாம்.

தலையாகு சந்தம் -

{Entry: O15b__120}

நான்கடியும் ஒத்து வருவன.

எ-டு : ‘போது விண்ட புண்ட ரீக

மாத ரோடு வைக வேண்டின்

ஆதி நாதர் ஆய்ந்த நூலின்

நீதி யோதி நின்மி னீடு’. (யா. வி. பக். 522)

(எழுத்து எண்ணுமிடத்தே ஒற்று நீக்கிக் கணக்கிடப்படும்.)

‘தன்ன’ என்னும் சந்தம் -

{Entry: O15b__121}

1. குறில், மெல்லொற்று, இறுதியில் மெல்லின உயிர்மெய் அல்லது இடையின உயிர்மெய் வருவது.

எ-டு: கண்ணி, மென்வி.

2. குறில், மெல்லொற்று, அடுத்து மெல்லின உயிர்மெய்க் குறில் அல்லது இடையின உயிர்மெய்க் குறில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என அமைவது

எ-டு: மண்ணன், பொன்வில், முன்னர், எண்வென்.

இவ்வாறு தன்னச் சந்தம் இருவகைத்து. (வண்ணத். 67-70)

‘தன்னா’ என்னும் சந்தம் -

{Entry: O15b__122}

1. குற்றெழுத்து, மெல்லொற்று, மெல்லின உயிர்மெய் நெடில் அல்லது இடையின உயிர்மெய் நெடிலால் அமைவது. எ-டு : அண்ணா, மன்வா

2. குற்றெழுத்து, மெல்லொற்று, அடுத்து மெல்லின உயிர் மெய் நெடில் அல்லது இடையின உயிர்மெய் நெடில், ஈற்றில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என அமைவது.

எ-டு:முன்னோன், மன்னோர், பொன்வேல், தண்வான், இவ்வாறு தன்னாச் சந்தம் இருவகைத்து. (வண்ணத். 71-73)

தன என்னும் சந்தம் -

{Entry: O15b__123}

1. இரு குறில் இணைந்து வருவது. எ-டு : குரு.

2. குறில் இரண்டு, இறுதியில் மெல்லொற்றோ இடை ஒற்றோ இவை கூடி வருவது. எ-டு: கதன், தவர்.

இவை யிரண்டும் தனச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 48 - 50)

‘தனா’ எனும் சந்தம் -

{Entry: O15b__124}

1. குறிலும் நெடிலும் கூடிவருவது. எ-டு : குகா.

2. குறிலும் நெடிலும் மெல்லொற்றோ இடையொற்றோ இணைந்து வருவது. எ-டு : கவான், சிறார். (வண்ணத். 51, 53) இவை இரண்டும் தனாச் சந்த வகைகளாம்.

தாண்டக அடி -

{Entry: O15b__125}

இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துக்களான் இயன்றஅடி

(யா. வி. பக். 476)

தாண்டகச் சந்தம் -

{Entry: O15b__126}

‘சந்தத் தாண்டகம்’ காண்க.

சந்தஅடி பலவாயும் தாண்டக அடி சிலவாயும் வருவன வற்றைச் ‘சந்தத் தாண்டகம்’ என்ப, ஒருசாரார்; தாண்டக அடி பலவாயும் சந்தஅடி சிலவாயும் வருவனவற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ என்ப, ஒருசாரார் (யா. வி. பக். 485)

தாண்டகம் -

{Entry: O15b__127}

இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடி யினவாய், எழுத்தும் குரு லகுவும் ஒத்தும் ஒவ்வாதும் வருவன தாண்டகமாகும். எழுத்தும் குரு லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம்; ஒவ்வாது வருவன அளவழித் தாண்டகம் ஆம் என்பது. (யா. வி. பக். 476)

எ-டு: 27 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘வானிலவி முகிலார்ப்ப’

37 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘கருநிறப் பொறிமுக’

43 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘அனவரதம் அமரர்’

47 எழுத்தடி அளவியல் தாண்டகம்: அல்லற் கோடை’

அளவழித் தாண்டகம்: ‘மூவடிவி னாலிரண்டு’

(இவை பாடல் தொடக்கம்.) (யா. வி. பக். 483 - 485)

‘தாத்த’ எனும் சந்தம் -

{Entry: O15b__128}

1. நெடில், வல்லொற்று, இறுதியில் உயிர்மெய்க்குறில் என்பன. எ-டு: காற்று.

2. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில், மெல்லொற்று அல்லது இடையொற்று என்பன. எ-டு : கூத்தன், பாட்டர்.

3. நெடில், இடையினமெய், வல்லொற்று, இறுதியில் உயிர்மெய்க் குறில் என்பன. எ-டு : பார்ப்பு.

4. நெடில், இடையினமெய், வல்லினமெய், வல்லின உயிர் மெய்க்குறில், இறுதியில் மெல்லொற்று அல்லது இடை யொற்று என்பன. எ-டு : தூர்த்தன், காழ்த்தல் (வண்ணத். 18-22)

இந்நான்கும் தாத்தச் சந்த வகைகளாம்.

‘தாத்தா’ எனும் சந்தம் -

{Entry: O15b__129}

1. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில் என்பன. எ-டு: சாத்தா

2. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு:மாற்றான், ஆற்றார்.

3. நெடில், இடையினமெய், வல்லொற்று, இறுதியில் வல்லின உயிர்மெய் நெடில் என்பன. எ-டு: வேய்ப்பூ

4. நெடில், இடையினமெய், வல்லொற்று, உயிர்மெய் நெடில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. (வண்ணத். 23-27)

எ-டு: சீர்க்கோன், வாய்த்தோர்,

இந்நான்கும் தாத்தாச் சந்த வகைகளாம்.

‘தாந்த’ எனும் சந்தம் -

{Entry: O15b__130}

1. நெடில், மெல்லொற்று, இறுதியில் வல்லின உயிர்மெய்க் குறில் என்பன. எ-டு: வேந்து.

2. நெடில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு: பாங்கன், வேந்தர்.

3. நெடில், இடையொற்று, மெல்லொற்று, வல்லின உயிர் மெய்க்குறில் என்பன. எ-டு: பாய்ந்து.

4. நெடில், இடையொற்று, மெல்லொற்று, வல்லின உயிர் மெய்க்குறில், இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு: சார்ங்கம், சார்ங்கர்.

இவை நான்கும் தாந்தச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 38-42)

தாந்தா எனும் சந்தம் -

{Entry: O15b__131}

கீழ்க்காணும் நால்வகையான எழுத்து அமைப்பால் ஆகிய சொற்கள் பயில வருவது தாந்தா எனும் சந்தமாம்.

1. ஒரு நெட்டெழுத்தும், அடுத்து மெல்லின ஒற்றும், அடுத்து வல்லினநெடில் உயிர்மெய்யுமாக வருவது. எ-டு : சேந்தா

2. அம்மூன்றனையும் அடுத்து மெல்லினமோ இடையின மோ ஆகிய மெய்யெழுத்து வருவது. எ-டு : நான்றான், வாங்கார்

3. ஒரு நெட்டெழுத்து, ஓர் இடையினமெய், ஒரு மெல்லின மெய் என இவற்றையடுத்து வல்லின நெடில் உயிர்மெய் வருவது. எ-டு : நேர்ந்தோ

4. அந்நான்கெழுத்தினையும் அடுத்து ஒரு மெல்லின மெய் யோ இடையின மெய்யோ வருவது. எ-டு : மாய்ந்தான், சார்ந்தோர் (வண்ணத். 43 - 47)

‘தான’ எனும் சந்தம் -

{Entry: O15b__132}

1. நெடிலும் குறிலும் இணைந்து வருவது. எ-டு : காது.

2. நெடிலும் குறிலும் மெல்லொற்றோ இடையொற்றோ அடுத்து வருவது. எ-டு: பாதம், சூதர்.

3. நெடிலும் இடையின மெய்யும் இறுதியில் குறிலும் இணைந்து வருவது. எ-டு: கேள்வி.

4. நெடிலும் இடையின ஒற்றும் குறிலும் இறுதியில் மெல் லொற்றோ இடையொற்றோ ஒன்றும் இணைந்து வருவது. எ-டு : சார்கண், கூர்முள்.

5. நெடில், மெல்லொற்று, இறுதியில், மெல்லின உயிர் மெய்க் குறிலோ, இடையின உயிர்மெய்க் குறிலோ ஒன்று என்னும் இவை இணைந்து வருவது. எ-டு : மான்மி, தேன்வி.

6. நெடில், மெல்லின மெய், மெல்லின உயிர்மெய் அல்லது இடையின உயிர்மெய், இறுதியில் மெல்லொற்று அல்லது இடையொற்று என்னும் இவை இணைந்து வருவது. எ-டு : மாண்மன், கூன்வில், மான்மர், மாண்வின்.

இவையாறும் தானச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 54-60)

‘தானா’ எனும் சந்தம் -

{Entry: O15b__133}

1. இரண்டு நெடில்கள் இணைந்து வருவது. எ-டு: தாதா

2. இரண்டு நெடில்கள் இணைந்து, இறுதியில் மெல்லின ஒற்றோ இடையின ஒற்றோ ஒன்று பெற்று வருவது. எ-டு: மேவான், போகார்.

3. நெடில், இடையே இடையொற்று, இறுதியில் ஒரு நெடில் என்று வருவது. எ-டு: மோர்பூ.

4. நெடில், இடையின ஒற்று, நெடில், இறுதியில் மெல் லொற்றோ இடையொற்றோ ஒன்று என்று வருவது. எ-டு: சேர்மான், கூர்வேல்.

5. நெடில், மெல்லொற்று, இறுதியில் மெல்லின உயிர் மெய்நெடில் அல்லது இடையின உயிர்மெய் நெடில் என்று வருவது. எ-டு: கேண்மோ, மான்வா

6. நெடில், மெல்லொற்று, அடுத்து மெல்லின உயிர்மெய். நெடில் அல்லது இடையின உயிர்மெய்நெடில், இறுதியில் மெல்லொற்று அல்லது இடையொற்று என்று வருவது. எ-டு: மாண்மான், வான்மேல், தேன்வீண், கூன்வாள்’ இவையாறும் தானாச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 61-67)

திருதி -

{Entry: O15b__134}

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள், அடிதோறும் பதினெட்டு எழுத்தாக வரும் விருத்தம் இது. இவ்வாறு எழுத்து எண்ணுகின்றுழி ஒற்றும் ஆய்தமும் கணக்கிடல்பெறா.

எ-டு : ‘கூரெயிற்றி னேர்தோற்ற முகைவென்று சீர்கொண்டு கொல்லை முல்லை

நேரிடைக்கு முன்தோற்ற பகைகொண்டு வந்துத னீல மேவுங்

காரளக்கு நாளென்று கடனீந்து வார்சொன்ன கால மன்றாற்

பேரமர்க் கற்றமன மேகுகின்ற வாறென்னை பேதை மாதர்.’ (வீ. சோ. 139)

தொங்கல் -

{Entry: O15b__135}

சந்தப்பாக்களில் தனிச்சொற்களாக அடிதோறும் முடிவன தொங்கல் எனப்படும்.

எ-டு : ‘வண்ணக் கழிநெடில் விருத்தம் - எழுசீர்’ காண்க. அடிதோறும் ஏழாம் சீராக வருவன ‘தொங்கல்’ ஆம்.

தோடகம் -

{Entry: O15b__136}

இஃது அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம். இதன் அமைப்பு, ஈற்றில் குருஎழுத்தைக் கொண்ட கணங்கள் நான்கு வருதல். கீழ்க்காணும் விருத்தத் தில், முதலடி மூன்றாம் சீர், ஈற்றடி இரண்டாம் சீர் - இவை தவிர மற்றவகையில், மாத்திரை அளவிலும், எழுத்துக்களின் எண்ணிக்கையிலும், வடமொழியிலக்கணம் முற்றும் பொருந்து கிறது. இது நான்கு மாத்திரைச் சீர்கள் நான்கான் ஆயது; நிரையசையில் தொடங்குவது; பெரும்பாலும் வெண் டளையே வருவது.

எ-டு : ‘கமையா ளொடுமென் னுயிர்கா வலினின்

றிமையா தவனித் துணைதாழ் வுறுமோ

சுமையா வுலகூ டுழறொல் வினையேன்

அமையா துகொல்வாழ் வறியே னெனுமால்.’ (கம்புரா. 3616)

‘னுயிர்கா’ ‘துகொல்வாழ்’ இரண்டும் என்ற ஒன்றும் நீங்க லாக ஏனைய சீர்கள்யாவும் நான்கு மாத்திரையன. வி.பா. ஏழாம் படலம் - 4

இது தோதக விருத்தம் போல்வது.

தோதக விருத்தம் போல்வது -

{Entry: O15b__137}

1. நான்கு மாத்திரை கொண்ட குற்றுயிரீற்ற கூவிளச்சீர் மூன்று, அடுத்து நான்கு மாத்திரைத் தேமாச்சீர் ஒன்று, கொண்ட அடி நான்கான் அமைவது.

எ-டு : ‘எண்ணியி ருந்துகி டந்துந டந்தும்

அண்ணலெ னாநினை வார்வினை தீர்ப்பார்

பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்

புண்ணிய னாருறை பூவண மீதோ. (தே. 7 : 11-2)

2. நான்கு மாத்திரைச்சீர்கள் நான்கனுள் முதலாவதும் நான் காவதும் தேமா ஆக, ஏனைய கூவிளமாக அமைந்த அடிநான் கான் அமைவது.

எ-டு : ‘எந்தாய் பண்டொரி டங்கர்வி ழுங்க(ம்)

முந்தாய் நின்றமு தற்பொரு ளேயென்

றுந்தாய் தந்தையி னத்தவ னோத(வ்)

வந்தா னென்றன்ம னத்தின னென்றான்.’ (கம்பரா. 6281)

3. நான்கு மாத்திரைச் சீர்கள் நான்கனுள் இரண்டாம் மூன்றாம் சீர்கள் கருவிளம், நான்காம் சீர் புளிமா, முதற்சீர் கூவிளம் என்றமைந்த அடி நான்கான் அமைவது.

எ-டு : ‘தூணுடை நிரைபுரை கரமவை தொறுமக்

கோணுடை மலைநிகர் சிலையிடைக் குறையச்

சேணுடை நிகர்கணை சிதறின னுணர்வோ

டூணுடை யுயிர்தொறு முறையுறு மொருவன்.’ (கம்பரா. 9787)

4. நான்குமாத்திரைச் சீர்கள் நான்கனுள் முதலாவதும் மூன்றா வதும் கூவிளம் ஆக, ஏனைய இரண்டும் புளிமா என்றமைந்த அடிநான்கான் வருவது.

எ-டு : ‘குஞ்சர மனையார் சிந்தைகொ ளிளையார்

பஞ்சினை யணிவார் பால்வளை தெரிவார்

அஞ்சன மெனவா ளம்புக ளிடையே

நஞ்சினை யிடுவார் நாண்மலர் புனைவார்.’ (கம்பரா. 1558)

5. முதலாம் மூன்றாம் சீர்கள் நான்கு மாத்திரையுடைய கூவிளம், இரண்டாம் நான்காம் சீர்கள் ஆறுமாத்திரையுடைய நடுவில் நெட்டெழுத்து மிகாத கூவிளங்காய் என்றமைந்த அடி நான்காய் வருவது.

எ-டு : ‘கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த

வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை யொப்பமராச்

செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்

கென்பொனை யென்மணியை யென்றுகொ லெய்துவதே.’ (தே. 7 : 83-7)

6. இவ்வமைப்பில் இரண்டாம் நான்காம் சீர்கள் கூவிளங் காய்க்கு மாறாக புளிமாங்காய் வர அமைந்த அடி நான்காய் நிகழ்வது.

எ-டு : ‘ஏந்திள முலையாளே எழுதரு மெழிலாளே

காந்தளின் முகைகண்ணிற் கண்டொரு களிமஞ்ஞை

பாந்தளி தெனவுன்னிக் கவ்விய படிபாராய்

தீந்தள வுகள்செய்யும் சிறுகுறு நகைகாணாய் (கம்பரா. 2007)

‘காந்தளின்’-5 மாத்திரை; ஏனைய கூவிளங்கள் 4 மாத்திரை. ‘வுகள்செய்யும்’-7 மாத்திரை; ஏனைய புளிமாங்காய் 6 மாத்திரை. (வி.பா. ஏழாம்படலம். பக். 41, 81, 82, 51.)

ந section: 7 entries

நடைச்சவலைப் பாதச் சமவிருத்தம் -

{Entry: O15b__138}

தம்மில் ஒத்த அடி நான்காய் வரும் செய்யுள் விருத்தமாம்.

முடிவு இரண்டடி மிக்கும் முதல் இரண்டடி நைந்தும், முடிவு இரண்டடி குன்றி முதல் இரண்டடி மிக்கும், இடையிடை அஃகியும் மிக்கும் வரினும் நடைச்சவலைப் பாதச் சம விருத்தம் என்பாருமுளர். நான்கடியின் மிக்க அடிகளால் வரும் சவலைப் போலியுள் இது நிகழும். (வீ. சோ. 130 உரை)

நவநந்தினி விருத்தம் -

{Entry: O15b__139}

முதல் மூன்றும் காய்ச்சீர், இறுதி தேமாச்சீர் என அமைந்த அடி நான்கான் ஆவது. (வி. பா. ஏழாம்படலம் 14)

நேர் அசையில் தொடங்கும் காய்ச்சீர்:

தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்

வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்

வீசப்பு லார்த்தியிட விண்படரும் வெய்யோன்

ஆசுற்ற தானவர மர்ந்தினிதி ருந்தான். (கந்தபு. III நகர்புகு. 48)

நிரை அசையில் தொடங்கும் காய்ச்சீர்:

மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்

முடிச்சிகையொ ராயிரமு மொய்ம்பினொடு கையால்

பிடித்தவுணர் மன்னனமர் பேரவைநி லத்தின்

அடித்தனனொ டிப்பிலவ ராவிமுழு துண்டான். (கந்தபு. III அவைபுகு. 156)

நளினீ விருத்தம் -

{Entry: O15b__140}

இஃது அடிக்குப் பதினைந்து எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்.

இதன் அமைப்பு இறுதி இலகுவான கணங்கள் ஐந்து வருதல். மாத்திரைக் கணக்கில் அடிக்கு இருபது மாத்திரை. பின் வரும் எடுத்துக்காட்டுக்களில் முதலாவது இருபது மாத்திரை அளவில் அமைகிறது; இரண்டாவதில் மாத்திரை மிக்குளது.

1) 4 மாத்திரைச்சீர் ஐந்து புணர்ந்த அடிநான்காய் வருவது. நான்கு மாத்திரை மாச்சீர் அவை.

எ-டு : அம்மா ணகருக் கரச னரசர்(க்) கரசன்

செம்மாண் டனிக்கோ லுலகே ழினுஞ்செ லநின்றா

னிம்மாண் கதைக்கோ ரிறையா யவிரா மனென்னு

மொய்ம்மாண் கழலோற் றருநல் லறமூர்த் தியன்னான். (கம்பரா. 168)

2) 4 கூவிளஞ்சீர்கள் நான்கு மாத்திரை அளவினவாக, இறுதிச்சீர் ஆறுமாத்திரைத் தேமாங்காய்ச்சீராக அமைந்த அடி நான்கான் வருவது.

எ-டு : ஓர்பக னீர்நிறை பூந்தட மொன்றுறு பூக்கொய்வான்

சீர்தரு திண்கரி சேறலு மங்கொரு வன்மீன (ம்)

நீரிடை நின்றுவெ குண்டடி பற்றிநி மிர்ந்தீர்ப்பக்

காரொலி காட்டிய கன்கரை யீர்த்தது காய்வேழம். (காஞ்சிப்புண்ணிய. 10) (வி.பா.8 ஆம் படலம்)

நன்னிலை -

{Entry: O15b__141}

சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு எனப்பட்ட பேதங்க ளுள் ஒன்று. ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு ஐந்தெழுத்தாக வரும் நாலடிப் பாட்டுள் நிகழ்வது.

‘மன்ன னேரியன்

சென்னி மானதன்

கன்னி காவலன்

பொன்னி நாயகன்.’ (வீ. சோ. 139 உரை)

நிசாத்து -

{Entry: O15b__142}

அளவழிச் சந்தங்களுள் சீர் ஒத்து ஓரடியில் ஓரெழுத்துக் குறைந்து வருவது.

எ-டு : பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (12)

செங்கய லினநிரை திளைக்கும் செல்வமும் (13)

மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி (13)

அங்கயற் பிறழ்ச்சியு மமுத நீரவே. (13) (யா. வி. பக். 514)

நிலை (1) -

{Entry: O15b__143}

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தம்; ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது அடி ஒன்றற்கு நாலெழுத்தாய் வருவது.

எ-டு : ‘போதி நீழற்

சோதி பாதங்

காத லானின்

றோத னன்றே’ (வீ. சோ. 139 உரை)

நெட்டிசை -

{Entry: O15b__144}

விருத்தமாகிய பாவினத்தில் பயிலும் நெடிய சந்தம். ( W) (L)

ப section: 14 entries

பகுதி -

{Entry: O15b__145}

‘பிருஹதி’ என்ப வடநூலார். எழுத்துவகை 26 பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து, உயிரும் உயிர்மெய்யும் அடி ஒன்றற்கு ஒன்பதெழுத்தாய் வருவது.

எ-டு : இளையார் கனிவா யெனவே

விளையா மதுவே தருநோய்

தளர்வார் நிறைநேர் கவரு

ளுளவே லளியே யுரையாய். (வீ. சோ. 139 உரை)

பந்தி -

{Entry: O15b__146}

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று. ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்குப் பத்து எழுத்து வருவது.

எ-டு : குறியா ரெனவே புனலின்மீ

துறுதா மரைமே லுறைவார்தாம்

நெறியார் சடையாய் நினபாத

மறிவா ரினியா ரறிவாரே. (வீ.சோ. 139 உரை)

பாதிச் சமச் செய்யுள் -

{Entry: O15b__147}

அளவழிச் சந்தங்களுள் நான்கடியும் சீர் ஒத்து முதலிரண் டடியும் எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து வருவதாம்.

எ-டு : ‘மடப்பிடியை மதவேழம்

தடக்கையால் வெயில்மறைக்கும்

இடைச்சுரம் இறந்தோர்க்கே

நடக்குமென் மனனேகாண்’

இவ்வஞ்சித் தாழிசையுள் முதலிரண்டடியும் 9 எழுத்து; கடையிரண்டும் 8 எழுத்து. (யா. வி. பக். 516)

பாதிச் சமப்பையுட் சந்தம் -

{Entry: O15b__148}

அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து முதலடியெழுத்தும் மூன்றாமடி எழுத்தும் எண்ணிக்கை வேறாய் இரண்டாமடி நான்காமடி எழுத்து எண்ணிக்கை ஒத்து வருவது.

எ-டு : ‘செஞ்சுடர்க் கடவுள் திண்டேர் இவுளிகால் திவள ஊன்றும்

மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயில் மாடத்

தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம்

வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.’ (சூளா. 38)

இதன்கண் முதலடி எழுத்து 17; மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடி நான்காமடி எழுத்து 15 என அமைந்துள்ள வாறு. (யா. வி. பக் 518)

பாதிச்சம விருத்தம் -

{Entry: O15b__149}

முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும் ஏனை இரண்டடியும் எழுத்து மிக்கும் நான்கடியும் சீர் ஒத்து வந்த அளவழிச் சந்தப் பாடல்.

எ-டு : ‘மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய

கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின்

மையற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை

நெய்யற நிழற்றும் வேலோய் நினைத்தனை நினைக்க என்றான்’ (சூளா. 198)

இதன்கண், முதலடி மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடி நான்காமடி எழுத்து 17 என அமைந்துள்ளவாறு. (யா. வி. பக். 517)

பிபீலிகா மத்திமம் (1) -

{Entry: O15b__150}

முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக் குறைந்து நாலடியும் சீரொத்து வரும் செய்யுள்.

எ-டு : ‘பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவா

வரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம்

விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான்

இரவும் பகலும்வந் தென்தலைமே லானே’

இதன்கண் முதலடியும் ஈற்றடியும் 13 எழுத்துப் பெற்றுவர, நடு இரண்டடியும் 12 எழுத்துப் பெற்று வந்தவாறு. இஃது எறும்பின் உடலின் இடைப்பகுதிபோல இடையடிகள் இரண்டும் எழுத்துக் குறைந்து சுருங்கிவருவதால், தமிழில் ‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என்று இதனை மொழி பெயர்த்துக் கூறுவர். (யா. வி. பக். 515)

பிபீலிகா மத்திமம் (2) -

{Entry: O15b__151}

எறும்பின் உடலிடை போல இடைப்பகுதி சுருங்கிவரும் பாடல்; ‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என (யா.வி.உரை) குறிக்கும் பாடல் (பக். 518), அளவழிச் சந்தச் செய்யுளெனவும் வழங்கும். அளவழிச்சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து, முதலடியும் முடிவடியும் எழுத்தெண்ணிக்கையில் ஒத்து, இடையிரண்டடியும் ஓரோரெழுத்து முறையே எண்ணிக்கை குறைய நிகழ்வது இது; மேலைப் பிபீலிகா மத்திமத்தின் (1) சிறிதே வேறுபட்டது. (வீ.சோ. 139 உரை)

எ-டு : மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத்

துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும்

அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால்

அணிவரு சிவகதி அடைவ தின்பமே’. (சூளா. 2075)

இதன்கண், முதலடியும் ஈற்றடியும் எழுத்து 14; இரண்டாமடி எழுத்து 13; மூன்றாமடி எழுத்து 12 - என வந்தவாறு.

பிரகிருதி -

{Entry: O15b__152}

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு 21 எழுத்தாக வரும் நாலடிச் செய்யுள்.

எ-டு : ‘கந்தாரம் பாடியாடும் கான்மதுக ரமும் கன்னிகா ரமும்செருந்தும்

கொந்தாரும் குரவமும்கான் மலிதருங் கோகிலமும் தாதுகோதும்

சந்தாரங் கோவையா ரமுந்தருணன் தடகடஞ்சா ரணங்கெள்ளிப்பார்

வந்தார்தம் தேர்மிசையால் வரவுதனை அறிகுதிவண் தோகை நல்லாய்.’ (வீ.சோ. 139 உரை)

பிரத்தரித்தல் -

{Entry: O15b__153}

பிரத்தாரஞ் செய்தல். (L)

பிரத்தாரம் -

{Entry: O15b__154}

கட்டளையடியிற் பல்வேறு வகையாக வரக்கூடும் அசை களையெல்லாம் மொத்தக் கணக்கிடுகை(யா. வி. பக். 503. ) (L)

பிரத்தியயம் -

{Entry: O15b__155}

தெளிவு; உறழ்ச்சி, கேடு, உத்திட்டம், இலகு குருச் செய்கை, விருத்தத் தொகை, நில அளவு என்பன ஆறும் தெளிவுகளாம். (வீ. சோ. 133)

‘பிரத்தாரம் முதலாகிய ஆறு பிரத்தியயமும்’(யா. வி. பக். 502)

பிரமாணம் -

{Entry: O15b__156}

லகுவும் குருவும் புணர்ந்து முறையே வரும் பாடல்.

எ-டு : ‘கயற்க ருங்க ணந்நலார்

முயக்க நீக்கி மொய்ம்மலர்

புயற்பு ரிந்த புண்ணியர்க்

கியற்று மின்க ளீரமே.’ (யா. வி. பக். 524)

புரிக்கு -

{Entry: O15b__157}

அளவழிச்சந்தங்களில், சீர் ஒத்து ஓரடியில் ஓரெழுத்து மிக்கு வருவதாம்.

எ-டு : ‘பேடையை இரும்போத்துத் (7)

தோகையால் வெயில் மறைக்கும் (8)

காடகம் இறந்தார்க்கே (7)

ஓடுமென் மனனே காண்’ (7)

இவ்வஞ்சித்துறை இரணடாமடி ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்துவந்தவாறு. (யா. வி. பக். 514, 515)

பெண்கலை -

{Entry: O15b__158}

வண்ணப்பாவின் பின் பகுதி.

ம section: 14 entries

மணிமாலை விருத்தம் (1) -

{Entry: O15b__159}

எழுசீர்ச் சந்த விருத்தம்; 1, 3, 5ஆம் சீர்கள் குறிலீற்றுப் புளிமாங்காய், 2, 4, 6ஆம் சீர்கள் குறிலீற்றுத் தேமா; 7ஆம் சீர் புளிமா என்றமைந்த எழுசீரடி நான்கான் நிகழ்வது.

அ) நேரசையில் தொடங்குவது :

எ-டு : ‘இத்தன்மை யெய்தும் அளவின்க ணின்ற இமையோர்க ளஞ்சி இதுபோய்
எத்தன்மை யெய்தி முடியுங்கொ லென்று குலைகின்ற எல்லை இதன்வாய்
அத்தன்மை கண்டு புடைநின்ற அண்ணல் கலுழன்த னன்பின் மிகையால்
சித்தங்க லங்கு மிதுதீர மெள்ள இருளூடு வந்து தெரிவான்!’ (கம்பரா. 8244) (வீ. பா. பக். 81)

ஆ) நிரையசையில் தொடங்குவது :

எ-டு : துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன் ஒளிமண்டி யும்பர் உலகங்க டந்த உமைபங்க னெங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக்க லந்த கமலங்கள் தங்கு மதுவின்
தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே. (தே.
II 88-1) (வி. பா. பக். 70)

இ) புளிமாவும் கருவிளமும் மும்முறை அடுக்கிவர இறுதியில் நீண்ட கருவிளம் (அல்லது புளிமாங்காய்) வரும் எழுசீரடிகள் நான்கான் நிகழ்வது :

எ-டு : ‘இனியின் றொழிமினிவ் வெறியு மறியடு தொழிலு மிகுகுர வையுமெலாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர் நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ் விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை அணிமின் துயரொடு மயலும் கெடுவது சரதம்மே’.

(ஆளுடை : திருக். 22)

ஈ) இத்தகைய பாடலில் இறுதிச்சீர் தேமா ஆவது.

எ-டு : ‘சயமி குத்தகு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் கீதன்
கயலு டைப்புனல் வயல்வ ளந்தரு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழ றொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே!’ (ஆளுடை. திருக் பக். 72)

2) தேமா, கூவிளங்காய், தேமா, கூவிளங்காய், தேமா கூவிளங்காய், கூவிளம் எனவரும் எழுசீரடி நான்கான் நிகழ்வது.

எ-டு : நீல நின்றதொரு நீல மால்வரைநெ டுந்த டக்கையினி டந்துநேர்

மேலெ ழுந்தரிவி சும்பு செல்வதொரு வெம்மையொடு வரவீசலும்

சூல மந்தகனெ றிந்த தன்னதுது ணிந்து சிந்தவிடை சொல்லுறும்

கால மொன்றுமறி யாம லம்புகொடு கல்லி னானெடிய வில்லினான். (வி.பா. ப. 84)

மணிமாலை விருத்தம் (2) -

{Entry: O15b__160}

அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்.

இதன் அமைப்பு : 1, இறுதிக்கண் இலகுவான கணம், 2. முதற்கண் இலகுவான கணம், 3. இறுதிக்கண் இலகுவான கணம், 4. முதற்கண் இலகுவான கணம் வருதல்; எடுத்துக்காட் டுச் செய்யுளில் சில எழுத்துக்கள் நெட்டோசை பெறுதலால் இலக்கணம் பொருந்தும்.

3, 4, 9, 10ஆம் உயிர் குறிலாக நிற்கும் அடிகள் நான்கனை உடையது இது.

எ-டு : ‘அங்கோல் வளைமங்கை காண அனலேந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ நமையாள்வான் நல்ல நகரானே!’ (தே.
I 85 - 7)

முதலடியில், மங்கை, காண - என்ற சீர்களின் ஈற்றெழுத்தும், இரண்டாம் அடியில், சூடி, காக - என்ற சீர்களின் ஈற்றெழுத் தும், மூன்றாமடியில், ‘மாக’ - என்ற சீரின் ஈற்றெழுத்தும் நெட்டோசை பெறும். (வி. பா. பக். 50)

மணிரங்கம் -

{Entry: O15b__161}

இது வடமொழி விருத்தங்களுள் ஒன்று. இதன் அமைப்பு : முதலில் குருவும் இடையில் இலகுவும் ஈற்றில் குருவும் கொண்ட ஒரு கணமும், அடுத்து, முதற்கண் இலகுவும் இடைக்கண் குருவும் இறுதிக்கண் குருவும் கொண்ட கணமும், அடுத்தும் அதே கணமும், இறுதியில் ஒரு குருவும் நிற்பது.

எ-டு : ‘வீரத் திண்டிறல் மார்பினில் வெண்கோ
டாரக் குத்திய ழுந்திட நாகம்
வாரத் தன்குலை வாழை மடற்சூழ்
ஈரத் தண்டென இற்றன வெல்லாம்’ (கம்பரா. 6285) (வி. பா. பக். 42)

மத்த கோகில விருத்தம் -

{Entry: O15b__162}

அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று வரும் வடமொழி விருத்தம். இதன் அமைப்பு : 1. முற்றிலும் இலகு கணம், 2. முதற்கண் குரு பெற்ற கணம், 3. இடையில் குரு வரும் கணம், 4. இடையில் இலகு பெற்ற கணம் என வருதல். இது ‘பிரியம்வதா’ எனவும்படும்.

எழுசீர் மத்தகோகில விருத்தம் : குறிலீற்றுத் தேமா கூவிளம் ஆகியவை மும்முறை அடுக்கி வரப்பெற்று, இறுதியில் நெடிலீற்றுக் கூவிளம் அமையப் பெறுவதாகிய அடி நான்கனையுடையது.

அ) நேரசையில் தொடங்குவது :

எ-டு : ‘வாயி டைம்மறை யோதி மங்கையர் வந்தி டப்பலி கொண்டு போய்
மேயி டம்மெரி கானி டைப்புரி நாட கம்மினி தாடினான்
பேயொ டுங்குடி வாழ்வி னான்பிர மாபு ரத்துறை பிஞ்ஞகன்
தாயி டைப்பொருள் தந்தை யாகுமென் றோது வார்க்கருள் தன்மையே’

(தே. III 37 -5 ) (வி.பா. பக். 71)

ஆ) நிரையசையில் தொடங்குவது :

எ-டு : மறைது ளங்கினும் மதிது ளங்கினும் வானு மாழ்கடல் வையமும்
நிறைது ளங்கினும் நிலைது ளங்கினு நிலைமை நின்வயி னிற்குமோ
பிறைது ளங்கிய வனைய பேரெயி றுடைய பேதையர் பெருமை - நின்,
குறைது ளங்குறு புருவ வெஞ்சிலை யிடைது ளங்குற இசையுமோ! (கம்பரா. 4213) (வி. பா. பக். 80)

இ) எழுசீர் மத்தகோகில விருத்தம் ஒருசீர் குறைந்து, தேமா கூவிளம் - தேமா - கூவிளம் - தேமா - நெடிலீற்றுக் கூவிளங் காய் - என்ற அறுசீரடி நான்கான் அமைவது :

எ-டு : ‘திங்க ளைத்தலை யாக மன்னவர் செப்பு மாமரவோர்
தங்க ளிற்பகை யாகி வானவர் தான வர்க்கெதிரா
யெங்க ளுக்கெழு பார டங்கலு மென்று போர்புரியும்
வெங்க ளத்தினி யற்கை யெங்கண்வி யந்து கூறுவதே’ (நல்லாப். கன்ன. 49) (வி. பா. பக். 71)

மத்த மயூர விருத்தம் -

{Entry: O15b__163}

அடிக்குப் பதின்மூன்று எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம். இதன் அமைப்பு : 1. முற்றிலும் குருவான கணம், 2. இறுதி இலகுவான கணம், 3. முதற்கண் இலகுக் கணம், 4. ஈற்றில் குருக்கணம், அடுத்து ஒரு குரு வருதல், அடிக்கு இருபத்திரண்டு மாத்திரைகள், முதல் நான்கெழுத்தில் ஒரு நிறுத்தம், பின்னர் அடியிறுதியில் நிறுத்தம் என அமையும். பின்வரும் செய்யுளில் கண அமைப்பு இல்லை; ஆயினும் மாத்திரையளவும் நிறுத்தமும் முற்றிலும் பொருந்துகின்றன.

அ) தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் - என வரும் ஐஞ்சீரடி நான்காக அமைவது. தேமா கூவிளம் என்பன நான்கு மாத்திரை அளவின. புளிமாங்காய் ஆறு மாத்திரை அளவிற்று.

எ-டு : ‘காறோய் மேனிக் கண்டகர் கண்டப் படுகாலை
ஆறோ வென்ன விண்படர் செஞ்சோ ரியதாகி
வேறோர் நின்ற வெண்மணி செங்கேழ் நிறம்விம்மி
மாறோர் வெய்யோன் மண்டில மொக்கின் றதுகாணீர்’ (கம்பரா. 9601)

படுகாலை, ரியதாகி - ஈற்று நின்ற குறில் இரண்டு மாத்திரை அளவின.

ஆ) புளிமா தேமா தேமா தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. மாச்சீர் நான்கு மாத்திரை; காய்ச்சீர் ஆறு மாத்திரை.

எ-டு : ‘மழுவின் கூர்வாய் வன்பலி டுக்கின் வயவீரர்
குழுவின் கொண்டந் நாடிதொ டக்கப் பொறிகூட்டித்
தழுவிக் கொள்ளக் கள்ளம னப்பே யவைதம்மை
நழுவிச் செல்லு மியல்பின காண்மின் நமரங்காள்’

22 மாத்திரை என்ற அளவில் பொருந்தும். (கம்பரா. 9592)

இ) கூவிளம் தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. மாவும் விளமும் நான்கு மாத்திரை; காய்ச்சீர் ஆறுமாத்திரை.

எ-டு : ‘மந்தர மன்னன் திண்புயன் வைவேல் மதிமன்னன்
இந்திர துய்மன் னென்பவ னுலகீ ரேழுந்தன்
சிந்தையி னுஞ்சந் தம்பெற வேசெங் கோலோச்சிக்
கந்தர வாகன் தன்புவி கண்டான் கடைநாளில்’

இதுவும் மாத்திரை அளவில் பொருந்துவதே.

(நல்லாப்.) (வி.பா.பக். 54)

மத்திமம் (1) -

{Entry: O15b__164}

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு மூன்றாக வருவது.

எ-டு : ‘வேரம் போய்
மாரன் சீர்
சேருங் கால்
நேர்வன் யான்’

(அடிதோறும் இரண்டாம்சீர் நேரசைச் சீராம்.) (வீ. சோ. 139 உரை)

மதனார்த்தை விருத்தம் -

{Entry: O15b__165}

குற்றெழுத் தீற்றுத் தேமாங்கனிச்சீர் மூன்றினோடு, இரண்டு நெட்டெழுத்தானாகிய தேமாச்சீர் கொண்ட அடிநான்கான் அமைவது.

எ-டு : ‘ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே’ (தே.
I - 11-2)

(வி. பா. பக். 48)

மயூர இயல் வெண்பா -

{Entry: O15b__166}

ஈற்றடி எழுத்து மிக்கு ஏனையடி எழுத்துக் குறைந்து தம்முள் ஒவ்வாது வரும் வெண்பா. (எழுத்தெண்ணுகையில் புள்ளி யெழுத்து விலக்கப்படும்.)

எ-டு : ‘குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு (8)
மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது (8)
பெரும்பிணியை நீக்குவதாம் பீடு.’ (10) (யா. வி. பக். 499)

மனோரமா -

{Entry: O15b__167}

அடிக்குப் பத்தெழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்; இதன் அமைப்பு; 1) முற்றிலும் இலகுவான கணம், 2) இடைக்கண் இலகு பெற்ற கணம், 3) இடையியல் குரு பெற்ற கணம், 4) ஈற்றில் ஒரு குரு வருதல் என்பன. எழுத்துக்களின் எண்ணிக்கையிலும் மாத்திரை எண்ணிக்கையிலும் கீழே காட்டப்படினும், கணங்கள் அவ்வாறு அமைந்தில.

எ-டு : ‘வாம தேவன் என்று மாமுனி
காம ரன்னை கருவு வைகுநாள்
பேமு றுக்கு பிறவி யஞ்சினான்
ஏமு றாமை யிதுநி னைக்குமால்.’

மா முனி - னி ‘னீ’ என ஒலித்து இரண்டு மாத்திரை பெறும். இப் பாடலடிகளில், முதல் மூன்று சீர்களும் மும்மூன்று மாத்திரை, இறுதிச்சீர்கள் ஐந்து மாத்திரை அளவினவாதல் காணப்படும்.

(இறுதிச் சீர்கள் கூவிளச்சீர் ஆகும்; நெடிலும் குறிலும் மாறி மாறி வந்து இறுதியில் நெட்டெழுத்தால் முடியும்.

(வி. பா. பக். 36)

மாங்காய்ச் சீர்ச் சந்த விருத்தம் -

{Entry: O15b__168}

ஐந்து மாங்காய்ச்சீர் பெற்ற அடி நான்கான் அமைவது; இறுதியில் நெட்டெழுத் தொன்று மிகுவது.

எ-டு : ‘பூபால ரவையத்து முற்பூசை பெறுவார்பு றங்கானில்வாழ்
கோபால ரோவென்று ருத்தங்க திர்த்துக்கொ தித்தோதினான்
காபாலி முனியாத வெங்காம னிகரான கவினெய்தியேழ்
தீபால டங்காத புகழ்வீர கயமன்ன சிசுபாலனே’ (2:1: 116)

ஐந்தாம்சீர் தண்பூவாகவும் வரலாம்; முதலடியிற் காண்க. (வி. பா. பக். 56)

மாராச்சை -

{Entry: O15b__169}

வடமொழிச் செய்யுள் வகைகளுள் ஒன்று. இது மாத்ராகணம் பற்றி அமைவது என்பர் ஒரு சாரார். (யா. வி. பக். 456)

மானினீ விருத்தம் -

{Entry: O15b__170}

ஏழு கூவிளச்சீர்கள் அழகாகப் புணர இறுதியில் நெடிலைக் கொள்ளும் அடி நான்காய் அமைவது. வரும் காரிகையே இதற்கு எடுத்துக்காட்டாம்.

எ-டு : கூவிள மேழுகு லாவநெ டிற்கடை கொள்வது மானனி நேரசைசே

ராவிள மாதிந டப்பது பேர்கவி ராசவி ராசித மென்றனரால்

கூவிள மேகரு வார்விள மேயிவை கூடுவ சாத்துவி காசுலவும்

பூவிள மென்முலை யாமமு தாரிரு பொற்குட மேந்துபொ லங்குழையே. (வி. பா.பக். 69)

மிச்சா கிருதி -

{Entry: O15b__171}

வடமொழிச் செய்யுள் வகைகளுள் ஒன்று; மாராச்சை போல மாத்ராகணம் பற்றி இதுவும் அமையும் என்பர் ஒருசாரார்.

(யா. வி. பக். 486)

மைகாச மானம் -

{Entry: O15b__172}

இது ‘சமானம்’ என்றே இருத்தல் வேண்டும்; ‘மைகா’ பிழைபடச் சேர்ந்துள்ளது.

நான்கடியும் முற்றக் குருவே வரினும், முற்ற இலகுவே வரினும், குருவும் இலகுமாய் முற்ற மாறி வரினும் ‘சமானம்’ ஆம். (வீ. சோ. பக். 193).

ய section: 2 entries

யவமத்திமம் -

{Entry: O15b__173}

அளவழிச் சந்தங்களுள், நாலடியும் சீர்ஒத்து முதலடியும் நான்காமடியும் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் எழுத்து மிக்கு வருவதொரு வகை.

எ-டு : ‘மல்லல்மா மழையார்ப்பக்

கொல்லைவாய்க் குருந்திளகின

முல்லைவாய் முறுவலித்தன

செல்வர்தேர் வரவுண்டாம்.

இவ்வஞ்சித்துறை, முதலடியும் நான்காமடியும் 7 எழுத் துக்கள் வர, இடையிரண்டடியும் 9 எழுத்துக்களாக மிக்கு வந்து, நாலடியும் சீரொத்து வந்தவாறு. (யா. வி. 95 உரை. பக். 515)

யவமத்தியயதி -

{Entry: O15b__174}

‘யவ மத்திமம்’ எனப்பட்ட அளவழிச் சந்தவகை அதுகாண்க.

(யா. வி. பக். 515 அடிக்குறிப்பு)

வ section: 44 entries

வகுப்பு -

{Entry: O15b__175}

சந்த ஓசை; வண்ணமாகப் பாடுவது.

வடமொழிச்சந்தம் -

{Entry: O15b__176}

வடமொழியமைப்பில், சந்தமாவது, அடிதோறும் ஓரெ ழுத்து முதல் இருபத்தாறு வரை அமைந்து அடிநான்காக இசைக்கும். எழுத்து எண்ணுழி, ஒற்றும் ஆய்தமும் எண்ணப் பெறா. உத்தம், அதியுத்தம் முதலாக உத்கிருதி ஈறாக, எழுத் தளவையினாலே சந்தம் பெயர் பெறும். (தென். இயற். 68)

வடமொழித் தண்டகம் -

{Entry: O15b__177}

துண்டம் எனப்படும் சீர்களது தொகுதி நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு என இரட்டி வரும் முறையால் நான்கடியான் அமைவது தண்டகமாம். (அத்துண்டங்கள் மிகினும் குறையினும் தண்டகப் போலியாம்.) துண்டம் அடிதோறும் சம அளவிற்றாதல் வேண்டும்; பிழைப்பின் அது போலியாம் என்க. (தென். இயற். 70)

வடமொழியில் சந்தம் பற்றிய கணம் -

{Entry: O15b__178}

வடமொழி விருத்தங்கள் இலகு, குரு என்பன பற்றி அட்சர கணம் எனவும், மாத்திரையைக் கணக்கிட்டு மாத்ராகணம் எனவும் அமைக்கப்படுவன. அவ்விருத்தங்களில் பலவகை யுண்டு. தமிழில் சீர் அமைப்பது போல அங்குக் கணங்கள் என்று வகுப்பட்டுள்ளன. விருத்தங்களுக்கு எழுத்து, மாத்திரை இவற்றைப் பற்றி யமைந்த பெயரேயன்றித் தமிழில் பாவினத் தொடர்பாக அமைந்த ஆசிரிய விருத்தம், கலி நிலைத்துறை, கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் என்பன போன்ற பெயர்கள் வடமொழியில் இல்லை.

விருத்தப்பாவியல் ஆசிரியர் வடமொழி மாத்திரையையும் அட்சரங்களையும் ஒருபுடை கணக்கிட்டுத் தமிழிலுள்ள ஆசிரிய கலி வஞ்சி விருத்தங்களில் ஒப்பனவற்றிற்கு அவ்வட மொழிப் பெயர்களை அமைத்துள்ளார். வடமொழி விருத்த இலக்கணம் முழுமையும் அப்பெயரிடப்பட்ட தமிழிலுள்ள விருத்தங்களில் இருக்கும் என்று எதிர்பாராது ஒருபுடை ஒப்புமையே கோடல் வேண்டும்.

வடமொழியிலுள்ள மாத்ரா, கணம் என்ற பாகுபாட்டைத் தமிழில் சீர்களிடைக் காண விரும்புகிறார், விருத்தப்பா ஆசிரியர். அட்சரம்பற்றி வடமொழியில் எட்டுக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

முதற்கண் குரு, இடைக்கண் குரு, கடைக்கண் குரு; முதற்கண் இலகு, இடைக்கண் இலகு, கடைக்கண் இலகு; முற்றும் குரு, முற்றும் இலகு; என எண்கணங்கள் அமையும்.

1. முதற்கண் குரு - ‘ Yappu-shape1.bmp ’ கணம் - மா தவ, மன் வை.

2. இடைக்கண் குரு - ‘ஜ’ கணம் - ப தா தி, சு கந் தி.

3. கடைக்கண் குரு - ‘ஸ’ கணம் - இது வோ , வரு வோன் .

4. முதற்கண் இலகு - ‘ய’ கணம் - ணேசா, வந்தே, வந்தும்.

5. இடைக்கண் இலகு ‘ர’ கணம் - ஈ னே, தூ வன்.

6. கடைக்கண்இலகு ‘த’ கணம் - வாரா வந்தீ வந்தைக் .

7. முழுதும் குரு. ‘ம’ கணம் - மாயோனே , வந்தானே, வந்தன்றே, யாதானும்.

8. முழுதும் இலகு - ‘ந’ கணம் - அதல.

இலகு - ஒரு மாத்திரைக் குறில் - அ; இதன் வடிவு ‘ I ’ என்பது.

குரு - இரண்டு மாத்திரை நெடில், நெடிலொற்று, இரண்டு மாத்திரை பெறும் குற்றொற்று - ஆ, ஆல், கல்.

நெடிலுக்கும், நெட்டொற்றுக்கும் இருமாத்திரையே. குருவின் வடிவு ‘ Yappu-shape1.bmp ’ என்பது.

வடமொழியில் சீர் -

{Entry: O15b__179}

வடமொழியில் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சீர்களைக் கணம் என்பர். எழுத்து இலகு என்றும், குரு என்றும் இருவகைப்படும். மூன்று எழுத்துக்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். இலகுவும் குருவுமான எழுத்துக்களை மாறிமாறி அமைக்குங்கால், எட்டுக் கணங்கள் அமையும். அவை ஒவ்வொன்றையும் குறிக்கத் தனித்தனிப் பெயர் உண்டு.

‘வடமொழியில் சந்தம் பற்றிய கணம்’ பிற்பகுதி காண்க.

இலகுவை ‘மால்’ (-திருமால்) என்றும், குருவை ‘ஈசன்’ என்றும் பெயரிட்டு வழங்குப. இவ்வெட்டுக் கணங்கட்கும் பின் வருமாறு வேறு பெயரும் கூறுப.

1. முதற்கண் குரு, பின் இரண்டும் இலகு - மதி (‘ப’ கணம்)

2. முதற்கண் இலகு, பின் இரண்டும் குரு - நீர் (‘ய’ கணம்)

3. முதற்கண் இலகு, இடையே குரு, ஈற்றில் இலகு - இரவி (‘ஜ’ கணம்)

4. முதற்கண் குரு, இடையே இலகு, ஈற்றில் குரு - கனல் (‘ர’ கணம்)

5. முதற்கண் இலகு, இடையே இலகு, ஈற்றில் குரு - காற்று (‘ஸ’ கணம்)

6. முதற்கண் குரு, இடையே குரு, ஈற்றில் இலகு - ஆகாயம் (‘த’ கணம்)

7. மூன்றும் குரு - நிலம் (‘ம’ கணம்)

8. மூன்றும் இலகு - இயமானன் (‘ந’ கணம்)

வடமொழி விருத்தம் -

{Entry: O15b__180}

நான்கடி அளவொத்து நடப்பது விருத்தமாம்; எழுத்தும் சீரும் மிகுந்தாலும் குறைந்தாலும் விருத்தப்போலியாம் என்ப வடநூலார். (தென். இயற். 69)

வண்ண அளவடி -

{Entry: O15b__181}

நாற்சீரடி ‘தானத்-தானன - தானத் - தானன என்ற சந்தம்பட நிகழ்வது’

எ-டு : ‘தேனைப் போல்கவி மாலைச் சீரியர்

வானைச் சீயென வாழ்விட் டாள்பவள்

மானைச் சீறுகண் மாதர்க் கோரிறை

யானைக் காவுடை யானிற் பாதியே.’ (செய்யு. செய்.)

வண்ண இயல்பு -

{Entry: O15b__182}

வண்ணமாவது சந்தம். தத்த, தத்தா; தாத்த, தாத்தா; தந்த, தந்தா; தாந்த, தாந்தா; தன, தனா; தான, தானா; தன்ன, தன்னா, தய்ய, தய்யா - எனப் பலவகைப்பட்ட சந்தங்களது இயல்பு. இதனைக் கூறும் நூல் வண்ணத்தியல்பு. அது காண்க.

வண்ணக் கழிநெடிலடி -

{Entry: O15b__183}

இஃது அறுசீர், எழுசீர் முதலாகப் பலவாம். 1) ‘தனதன - தனதன - தய்யன - தய்யன - தனதன - தனதனனா’ என அறுசீர்க் கழிநெடிலடி வரும்; 2) ‘தானதன - தானதந்த - தானதன - தானதந்த - தானதன - தானதந்த - தனதானா’ என எழுசீர்க்கழி நெடிலடி வரும்.

எ-டு : ‘முதலிடை கடையன இல்லவர் உள்ளவர் முழுவதும் நிறைபவராம்

இதமுறு மிசைவளர் தய்யலை மெய்யினில் இயலுடன் அணைபவராம்

நுதலினில் ஒருசுதன் இவ்வுல குய்வகை நொடியினில் அருள்பவராம்

விதபிர மபுரியின் நல்லவர் நள்ளிட விழைவுடன் உறைபவரே’

‘பாவையரை யேவிரும்பி நாளுமவ ரோடுறைந்து பாழுமன மேமெலிந்து - நலியாதே

பூவலய மேலனந்த லோபிகளை யேபுகழ்ந்து போதவறி வேயிகழ்ந்து - மெலியாதே

நாவலர்க ளோடுகந்து பூதிமணி யேயணிந்து ஞானசிவ யோகமென்று - புரிவேனோ

ஆவலுடன் மாமுகுந்த னோடுமய னார்வணங்கும் ஆதிபுரி வாழவந்த -பெருமானே.’

(இதன்கண், ‘நலியாதே’ போன்ற தனிச் சொற்கள் சந்தப் பாக்களில் ‘தொங்கல்’ எனப்படும்.)

வண்ணக் குழிப்பு -

{Entry: O15b__184}

வண்ணச் செய்யுளின் சந்த வாய்பாடு.

வண்ணக் குறளடி -

{Entry: O15b__185}

‘தானா - தனதன’ என்ற சந்தத்தோடு வரும் இருசீரடி.

எ-டு : ‘பாணார் மொழிநிறை

சோணா சலரடி

பேணா தவனுறும்

மாணா நரகமே.’ (செய்யு. செய்.)

வண்ணக்குனிப்பு -

{Entry: O15b__186}

வண்ணக்குழிப்பு; அது காண்க.

வண்ணங்களை அறியாதாரின் புலமை யியல்பு -

{Entry: O15b__187}

வண்ணங்களின் இயல்பினை அறியாதாரது தமிழ்ப்புலமை மனுமுதலிய (அரசியல்) நீதிநூல்களைக் கல்லாத அரசர்தம் கோலினையும், சத்தியம் பயிலாதாரது தவத்தினையும் போலும். எவ்வகைப் புலமைத்திறம் பெற்றோரேனும், வண்ணம் கூறும் வலிமையிலராயின், கற்றாரவை நடுவண் கள்வரைப் போலத் தடுமாறும் நிலையினராவர். (வண்ணத். 95, 96)

வண்ணச் சிந்தடி -

{Entry: O15b__188}

‘தனன - தானன - தந்தனா’ என வரும் சந்தத்தால் இயன்ற முச்சீரடி.

எ-டு : ‘நரக வாதையில் வன்பிறார்

தரணி மீதொரு கொன்பெறார்

சுரரு லோகமு மின்புறார்

அருணை நாயகர் அன்புறார்!’ (செய்யு. செய்)

வண்ணத் தரு -

{Entry: O15b__189}

ஒருவகைப் பாடல் (யாழ். அக.)

வண்ணத்தியல்பு -

{Entry: O15b__190}

சென்ற நுற்றாண்டினராம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட சந்தங்களைப் பற்றிய இலக்கணநூல். இதன்கண் 100 நூற்பாக்கள் உள. பொதுப்பாயிரம், நூல் மாட்சி, நூல் பிறப்பிடம், காலம் முதலியன என இவை பற்றிப் பத்துப் பாக்கள் உள (100 நீங்கலாக). தொகையிலக்கணம் வகை யிலக்கணம் என 7 நூற்பாக்கள் அமைந்துள. தத்தச் சந்தம் முதலாகத் தய்யாச் சந்தம் ஈறாகச் சந்தங்கள் 72 நூற் பாக்களில் சொல்லப்படுவன. பிறழச்சியியல்பு, மெலித்தல் இயல்பு, தொடர்ச்சியியல்பு, மதிப்பியல்பு, புணர்ச்சியியல்பு, சிறப்பியல்பு, தழூஉம் இயல்பு, புலமையியல்பு என்பன பற்றி எஞ்சிய 21 நூற்பாக்கள் விளக்குகின்றன. இயம்பாதன பிறவும் மேலோர் நூல் நெறியாற் கொள்க என இறுதி வெண்பாப் புறனடையொன்று அமைக்கிறது.

வண்ணத்தில் எளியன, வலியன -

{Entry: O15b__191}

‘தன’,‘தான’- இவ்விரண்டு வண்ணமும் எளிதினும் எளியன; ‘தத்த’, ‘தந்த’ - இவ்விரண்டும் எளியன.

‘தாத்த’, ‘தாந்த’ - இவ்விரண்டும் வலியன;

‘தய்ய,’ ‘தன்ன’ - இவ்விரண்டும் வலிதினும் வலியன.

(அறுவகை. வண்ண இயல்பு 16)

வண்ணத்தில் சந்தி -

{Entry: O15b__192}

ஒரே வகையினவாகிய இரண்டு வண்ணம் ஒன்றோடொன்று இசைவுறும் இடம் சந்தியாம்.

எ-டு : தத்த + தத்த = தத்தத்த; தன்ன + தன்ன = தன்தன்ன.

(அறுவகை. வண்ணஇயல்பு. 10)

வண்ணத்திற்கு ஆகாதன -

{Entry: O15b__193}

கொடுந்தமிழ்ப்புணர்ச்சி அருகியே வரல் வேண்டும்; சந்தக் குழிப்புக் குளறிடல் கூடாது; பெரும்பாலும் அளபெடை வருதலும் ஆகாது. வடமொழி மரூஉச் சொற்கள் புகலாகாது. (அறுவகை. வண்ணஇயல்பு 19, 20, 21)

வண்ணத்தின் சிறப்பியல்பு -

{Entry: O15b__194}

சந்தக்குழிப்பில் மோனை அமைந்திருத்தல் வேண்டும். இருகலைகள் சேர்ந்து ஒரு நீண்ட அடியாகும். அவை ஒரே மோனை உடைய வாதல் வேண்டும். எதுகை நான்காகும். வண்ணப்பா இரண்டாகப் பகுக்கப்படும். வண்ணப்பாவின் நான்கடிகளும் இரு பகுப்பாக வரு மெனவே, முதலிரண்டடி ஒரு பகுப்பு. அவ்விரண்டடிகளுக்கு நான்கு கலைகள். அவற்றுள் மூன்று கலையால் தலைவன் புகழ் கூறி, அடுத்த கலையால் அவன் மலை நாடு இவற்றின் அழகைக் கூறி, மூன்று நான்காம் அடிகளாகிய நான்கு கலைகளால் கவிதான் சொல்லக் கருதும் அகப்பொருள் புறப்பொருள் துறைச் செய்திகளைக் குறிப்பிடுவது வண்ணப்பாவின் வழக்காகும்.

தொங்கலும் தாழிசையும் எண்வகைத் துள்ளலும் கவி கூறும் அகப்பொருள் புறப்பொருள் துறைகளுக்கு உபகாரமாக வாராவிடினும், தமிழ்ப்புலவர் அவற்றை நீக்காது கொள்வர். தம்முடைய வேட்கையையும் தன்மையையும் தாம் விரும்பும் தெய்வத்தின் சிறப்பையும் செந்தமிழ்க்கு அழகு தரும் வண்ணப்பாவினால் குறிப்பிடுவது நன்மக்கள் மரபே.

எல்லாப் பாக்களையும் பாவினங்களையும் வண்ணத்தொடு கூடிய துறைச் செய்திகள் உடையனவாக அமைப்பதும் சான்றோர் வழக்கே. (வண்ணத். 89 - 94)

வண்ணத்தின் தொடர்ச்சி இயல்பு -

{Entry: O15b__195}

இரண்டு சந்தங்கள் கூடி ஒன்றாதல்; தத்தன, தந்தத்த, தனத்தா போல்வன. (அறுவகை. வண்ணஇயல்பு 13)

வண்ணத்தின் நாற்குலம் -

{Entry: O15b__196}

‘தத்த’ சந்தம் அந்தணர் குலத்தது; ‘தன்ன’ சந்தம் அரசர் குலத்தது; ‘தய்ய’ சந்தம் வணிகர் குலத்தது; ‘தன’ சந்தம் வேளாளர் குலத்தது. (அறுவகை.வண்ணஇயல்பு. 2)

வண்ணத்தின் நீள்வன நீளாதன -

{Entry: O15b__197}

தத்த - தாத்த; தந்த - தாந்த; தன - தான - இவை நீள்வன.

தன்ன, தய்ய - இவை நீளாதன.(அறுவகை. வண்ணஇயல்பு 14)

வண்ணத்தின் பால் பாகுபாடு -

{Entry: O15b__198}

தத்த, தந்த, தாத்த, தாந்த - இவை ஆண்பாலாம்; தன்ன, தய்ய, தன, தான - இவை பெண்பாலாம்; தன, தய்ய, தன்ன - இவை பிறழ்வன எல்லாம் அலிப்பாலாம். (அறுவகை. வண்ணஇயல்பு 4 - 6)

வண்ணநெடிலடி -

{Entry: O15b__199}

‘தனதத்தத் - தனதத்தத் - தனதத்தத் - தனதத்தத் - தனதானா’ என்ற சந்தப்பட நிகழும் ஐஞ்சீரடி.

எ-டு : ‘பொலிவற்றுத் தினமற்பக் கலைகற்றுத் தெருளற்றுப் பொருள்மாலே

சொலிவைத்துப் புகழ்கெட்டுப் புவனத்திற் றளர்வுற்றுச் சுழலாமே

புலியக்கத் ததனைச்சுற் றரைபொற்பத் திருவொற்றிப் புணர்வார்பால்

ஒலிமுற்றுத் துதிசொற்றுக் கதிபெற்றுப் பயன்மிக்குற் றுயர்வாயே.’ (செய்யு. செய்.)

வண்ணப்பா -

{Entry: O15b__200}

மூன்று சந்தக் குழிப்புக்களின் பின்னர் ஒருதொங்கல், ஒரு தாழிசை, ஒரு துள்ளல். இவற்றைப்பாடுதல் ஒரு கலை எனப் படும். இவ்வாறு எட்டுக்கலைகள் சேர்ந்தது ஒருவண்ணப்பா (சந்தங்களில் சில பல சேர்ந்து ஒரு துள்ளலாம்; துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம்.) (வண்ணத்து. 85 - 88)

சந்தக்குழிப்பு சிறிதும் தவறாமல் பாடப்படும் இசைப்பாடல் வல்லினமும், மெல்லினமும் இடையினமும் ஆகிய எழுத்துக் களைக் கொண்டு, ஓரின எழுத்து உள்ள இடத்தில் மற்றோர் இன எழுத்துச் செல்லாமல் அமையப் பெற்று, குறில் வந்த இடத்தில் குறிலும் நெடில் வந்த இடத்தில் நெடிலுமே பொருந்தப் பெற்று இயலும். 4 அல்லது 8 கலைகளைக் கொண்டது ஓரடி. நான்கடியும் ஓரொலியை உடைத்தாய் வரும் சந்தப்பாடல் வண்ணப்பா ஆகும்.

சந்தங்களில் சில சேர்ந்தது ஒரு துள்ளல் (தந்தன, தந்தன); துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பு (தந்தன - தந்தன, தந்தன - தந்தன, தந்தன - தந்தன); ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல்துள்ளலும் ஒரு கலை. (தந்தன-தந்தன, தந்தன - தந்தன, தந்தன - தந்தன, தனதான) தொங்கல்துள்ளல் முன் வந்த துள்ளல்களினும் ஓசையில் வேறுபட்டிருக்கும். இத்த கைய கலைகள் 4 அல்லது 8 கொண்ட அடி நான்காய் வருவது வண்ணப்பா.

இத்தகைய வண்ணப்பாக்கள் ஒலிஅந்தாதி, கலிஅந்தாதி என்ற பிரபந்தங்களில் வரும். (பன். பாட். 267, 265)

வண்ணம் (1) -

{Entry: O15b__201}

ஒரு பாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம். (தொ. செய். 1 நச்.)

வண்ணம் - ஒசைநடை. இயற்றமிழுள் அமையும் ஓசை நடையை வண்ணம் என்றல் மரபு.

இவ்வண்ணங்கள், எழுத்துப் பற்றியும் தொடை பற்றியும் இசைபற்றியும் சொல்பற்றியும் வருதலின், சொற் சீரடி முதலாக எழுசீரடியளவும் எல்லா அடிக்கண்ணும் கொள்ளப்பெறும். நாற்சீரடிக்கண் வருவன சிறப்புடையன வாம். தொடைபற்றி வரும் வண்ணம் நாற்சீரடிக்கண்ணேயே கொள்ளப்படும். (தொ. செய். 211, 212 ச. பால.)

வண்ணம் (2) -

{Entry: O15b__202}

தலைவனுக்கு நான்கு கலைகளும் எடுத்துக்கொண்ட பொருளுக்கு நான்கு கலைகளும்ஆகச் சந்தங்கள் அமைத்துத் துள்ளலும் தொங்கலும் மும்மூன்றாக அமைய எட்டுக்கலை களால் பாடுவது வண்ணம். (சாமி. 172)

வரிதகம் -

{Entry: O15b__203}

முப்பத்திரண்டடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப். 3 : 13 அடியார்க்)

வழிமொழி (2) -

{Entry: O15b__204}

ஒரு வகைச் சந்தப்பாட்டு -

எ-டு : சம்பந்தர் அருளிய மூன்றாம் திருமுறை 67ஆம் பதிகம்.

‘சுரருலகு நரர்கள்பயில் தரணிதல முரணழிய அரணமதில்முப்

புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்

வரமருள வரன்முறையின் நிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினால்

பிரமனுயர் அரனெழில்கொள் சரணஇணை பரவவளர் - பிரமபுரமே’

இப்பதிக முதற்பாசுரத்தின்கண், வழியெதுகை நான்கடியி லும் எல்லாச்சீர்களிலும் வந்தவாறு. ‘வழிமொழித்திரு விராகம்’ என்று ஞானசம்பந்தர் அருளிய பதிகப்பாடல் இது. இதனைப் பதிகம் முழுதும் காணலாம்.

வள்ளை -

{Entry: O15b__205}

மகளிர் நெற்குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் வரும் ‘வள்ளைப் பாட்டு’க் காண்க.

வனப்பு (2) -

{Entry: O15b__206}

திருட்டுபு என்னும் சந்தம்; உயிரும் உயிர்மெய்யுமாக அடிதோறும் 11 எழுத்து வருவது.

எ-டு : ‘பற்றொன் றோவில ராகி யொழுகுதல்

அற்றன் றேலறி விற்றெளிந் தாற்றுதல்

எற்றொன் றானு மிலர்தாம் பிரிவரே

மற்றொன் றென்னை மயக்குவ தேகொலோ’ (வீ. சோ. 139 உரை.)

வனப்பு வண்ணம் -

{Entry: O15b__207}

இசைவகைகளுள் ஒன்று. (பெரியபு. ஆனாயர். 28)

வனமயூர விருத்தம் -

{Entry: O15b__208}

இஃது அடிக்குப் பதினான்கு எழுத்துக்கள் கொண்ட வட மொழி விருத்தம். இதன் அமைப்பு முதற்குருக்கணம் இடைக் குருக்கணம் கடைக்குருக்கணம் முற்றும் இலகுவான கணம், ஈற்றில் இரண்டு குருக்கள் வருதல். இதன் எடுத்துக்காட்டாக வருவனவற்றில் நேரசையால் தொடங்குவதன்கண் அப் பொருத்தம் இல்லை. இவ்விருத்தம் ‘இந்துவதனா விருத்தம்’ எனவும் படும். ஈற்றயலெழுத்து இலகு ஆவதே இந்துவதனா’ என்பர் ஒருசாரார்.

எ-டு : ‘சொன்றிமலை துய்த்துமுத ரத்தெழுசு டுந்தீ யன்றைவட வைக்கனலெ னப்பெரித லைப்பக் குன்றினைநி கர்த்திடுகு றட்டனுவ ருந்தா நின்றுசிவ னைப்பரவி நேர்படவு ரைக்கும்.’ (ஆறழைத்த திருவிளை. 1)

இது நேரசையால் தொடங்குவது (வி. பா. பக். 44)

வஸ்து நிர்த்தேசம் -

{Entry: O15b__209}

காப்புச் செய்யுளின்றியே பொருளைச் சொல்லலுறும் நெறி

எ-டு : குமாரசம்பவம் மங்களச் செய்யுளின்றியே இமயமலை வருணனையொடு தொடங்குவது.

வாரம்பாடுதல் -

{Entry: O15b__210}

பின்பாட்டுப் பாடுதல். ‘வாரம் பாடுந் தோரிய மடந்தையும்’ (சிலப். 14 : 155)

விதிருதி -

{Entry: O15b__211}

எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று; ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு 23 எழுத்து வரப் பாடும் பாடற்கண் இது காணப்படும். ‘விக்கிருதி’ என்றலும் அமையும். (வீ. சோ. 139 உரை)

எ-டு : ‘வன்போர்புரி வெங்கணை யங்கர்பிரான் // மறனாலுயர் பேரற னார்குமரன் // தன்போலவி ளங்கின னாதலினென் // தனுவுங்குனி யாதுச ரங்கள்செலா // அன்போடிய துள்ளமெ னக்கினிமேல் // அவனோடமர் செய்தலு மிங்கரிதால் // வென்போகுவ னென்றலு மேயிறைவன் //விசையோடிர தத்தினை மீளவிடா’ (வில்லி. 17ஆம் போர்ச். 204)

வித்யுந்மாலா -

{Entry: O15b__212}

நாற்சீரடி நான்காய் நிகழும் சந்த விருத்தம். இஃது அடிக்கு எட்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழிவிருத்தம். இதன் அமைப்பு’ நான்கடிகளிலும் தொடர்ந்து (8 x 4=) 32 எழுத்துக் களும் உட்பட வந்து, தேமா தேமா தேமா தேமா என்ற வாய்பாட்டான் நிகழ்வது.

எ-டு : ‘வீயா வாமா மாவா யாவீ

யாவா யாரா ராயா வாயா

வாயா டேமா மாடே யாவா

மாரா மாதோ தோமா ராமா’ (காஞ்சிப். சுரேசப். 20) (வி. பா. பக்.4)

விதானம் -

{Entry: O15b__213}

இரண்டு குருவும் இரண்டு லகுவுமாய் முறையானே வரினும், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும் விதானம் எனப்படும்.

எ-டு : ‘துங்கக் கனகச் சோதி வளாகத் (துங், கக்; க, ன, கச்; சோ, திவ; ளா, கத்;)

தங்கப் பெருநூல் ஆதியை ஆளும்

செங்கட் சினவேள் சேவடி சேர்வார்

தங்கட் கமரும் தண்கடல் நாடே’

இப்பாடல், இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வந்தது.

‘பொருளாளிற் புகழாமென் (பொ, ரு; ளா, ளிற்; பு, க; ழா, மென்)

றருளாளர்க் குரையாயுந்

திருமார்பிற் சினனேயொன்

றருளாய்நின் அடியேற்கே’

இப்பாடல், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறை யானே வந்தது. இவ்வாறு கூறுதல் வடநூல்வழித் தமிழா சிரியர் ஒரு சாரார் கருத்து. (யா. வி. பக். 524)

விதானம் - ஒரு பண் (யாழ். அக.)

வியமம் -

{Entry: O15b__214}

விஷமம்; சமமில்லாதது. ஓரடியும் எழுத்தும் எழுத்தலகும் ஒவ்வாமல் வரக்கூடிய விருத்தம் வியமம் எனப்படும். ஏனை யன சமம், பாதிச்சமம் என இரண்டாம். (வீ. சோ. 139 உரை)

வியம விருத்தம் -

{Entry: O15b__215}

‘வியமம்’ காண்க. நான்கடியும் தம்மில் எழுத்தும் எழுத்தல கும் ஒவ்வாது வரும் விருத்தம்.

எ-டு : ‘கொற்றவா வளவி னுளவா வெனுந்தடத் (13)
திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளது (11)
சொற்றவாள் மனத்தினா லுருவிப் பின்னரே (13)
மற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்.’ (12)

இவ்வடிகளுள் முறையே எழுத்துக்கள் 13, 11, 13, 12 என ஒவ்வாது வந்தவாறும், முதற்சீர்கள் நீங்கலாக ஏனைய சீர்கள் அலகு ஒவ்வாமையும் காணப்படும். (வீ. சோ. 139 உரை)

விராட்டு -

{Entry: O15b__216}

அளவழிச் சந்தங்களில் சீர் ஒத்து ஓரடியில் ஈரெழுத்துக் குறைந்து வருவதாம்.

எ-டு : ‘கொல்லைக் கொன்றைக் கொழுநன் தன்னை
மல்லற் பொழில்வாய் மணியேர் முறுவல்
முல்லைக் குறமா மடவாள் முறுகப்
புல்லிக் குளிரப் பொழியாய் புயலே.’

இதன்கண், முதலடியில் 9 எழுத்தும், ஏனைய அடிகளில் 11 எழுத்தும் வந்தவாறு. (யா. வி. பக். 513, 514)

விருத்தமும் தண்டகமும் ஆமாறு -

{Entry: O15b__217}

வடமொழி மரபில் விருத்தமும் தண்டகமும் அமையும் வகை கூறப்படுகிறது. நான்கடிகள் கொண்டதே விருத்தம். வட மொழியில் அடி ‘பாதம்’ எனப்படும். அளவு ஒத்து வரும் விருத்தங்களை, அடி ஒன்றுக்கு ஓர் எழுத்து முதல் இருபத்தாறு எழுத்துக்கள் வரை கொண்டனவாகக் கூறுவர். ஓர் எழுத்து இரண்டெழுத்து மூன்றெழுத்துக்களைப் பெற்ற அடிகளுக்கு ஓசை உண்டாகாது என்று கூறி, நான்கெழுத்து முதல் இருபத்தாறு எழுத்து வரை கொண்ட நான்கடிகளைப் பெற்று வருவதே விருத்தம் என்பாருமுளர். இருபத்தாறு எழுத்துக்கு மேற்பட்டன எல்லாம் விருத்தம் ஆகா; விருத்தப் போலியே யாம். இது வடநூல் மரபு. தமிழில் முப்பத்து மூன்று வரை வரும். அடி இரட்டித்த விருத்தங்களில் அவ்வெண் ணிக்கையின் மேலும் வரும்.

தண்டகம் நான்கு கட்டளை முதலாக வரும். (வீ. சோ. 134)

வைதாளியை (விருத்தம்) -

{Entry: O15b__218}

வடமொழியில் இது வைதாளீயம் எனப்படும். இதன் அமைப்பு: முதலடியும் மூன்றாமடியும் முதற்கண் ஆறு மாத்திரையும், பின் இடையில் இலகு பெற்ற ஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர் இலகுவும் குருவுமாகக் கொண்டு நடக்கும். இரண்டாமடியும் நான்காமடியும் முதற்கண் எட்டு மாத்திரை யும், பின் இடையில் இலகு பெற்ற ஒரு மாத்திரைக் கணமும், பின் ஓர்இலகுவும் குருவும் பெற்று நடக்கும். ஆகவே, இந்த வைதாளியை என்னும் சந்தத்தில், முதலாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் 14 மாத்திரைகளும், இரண்டாம் அடி யிலும் நான்காம் அடியிலும் 16 மாத்திரைகளும் இருக்கும் என்பது போதரும். மேலும் ஓர் அமைப்பு முறை வடமொழி யாப்பு நூலில் கூறப்படுகிறது. அஃதாவது இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் அமையும் 8 மாத்திரைகள் முற்றிலும் இலகுவான நான்கெழுத்துக்களைக் கொண்டன வாகவோ, இரண்டு குருக்களால் ஆனவையாகவோ இருத் தல் கூடாது என்பது. இவ்விலக்கணமும் கீழே காட்டப்படும் வீரசோழிய உரை உதாரணச் செய்யுட்களில் அமைந்துள் ளது.

எ-டு : ‘கருவே யேறூர்வ னாளிலே
வருவே னென்றே போந்த மன்னவன்
திருவே றாய்த்தூர வெய்தினார்
மருவா ரெனினென் னின்னு யிர்நிலா.’

(கருவேயே றூர்வனா ளிலே
வருவேனென்றே போந்த மன் னவன்
திரு வே றாய்த் தூர வெய் தினார்
மருவாரெனினென் இன்னுயிர் நி லா)

வேறொருவகை :

‘கொன்றைப் புதுவேரி கொண்டிதோ
மன்றற் றண்ணிள வாடை வந்ததால்
ஒன்றிப் பலகோப முள்ளினான்
வென்றிக் கார்முக வேந்து மாரவேள்.’

(கொன்றைப் புது வேரிகொண் டிதோ
மன் றற்றண்ணிள வாடைவந் த தால்
ஒன்றிப்பல கோபமுள் ளினான்
வென்றிக் கார்முக வேந்துமா ரவேள்)

மற்றொருவகை :

‘கானத்தண் கொன்றை மாலைதா
மான
த்தின்றென் கொம்பு வாடுமால்
ஊனத்திங் கட்கு மாறுகொல்

நானித்தாற் றிலனாரி பாகனே.’

(கானத்தண் கொன்றைமா லைதா
மான
த்தின்றென் கொம்புவா டுமால்
வானத்திங் கட்குமா று
கொல்
நானித்தாற்றில னாரிபா கனே.)

அடைப்புக் குறியுள் குறிப்பிட்டவாறு சீர்பிரித்துக் கொள்க. பிறவாறு வருவனவும் கண்டுகொள்க. (வீ.சோ.பக். 192, 193)