Section P16a inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 20 alphabetical subsections

  1. அ section: 78 entries
  2. ஆ section: 18 entries
  3. இ section: 40 entries
  4. உ section: 19 entries
  5. ஊ section: 9 entries
  6. எ section: 7 entries
  7. ஏ section: 8 entries
  8. ஐ section: 4 entries
  9. ஒ section: 7 entries
  10. ஓ section: 7 entries
  11. க section: 91 entries
  12. ச section: 92 entries
  13. ஞ section: 1 entries
  14. த section: 92 entries
  15. ந section: 55 entries
  16. ப section: 152 entries
  17. ம section: 60 entries
  18. ய section: 6 entries
  19. ல section: 2 entries
  20. வ section: 71 entries

P16a

[Version 2l (transitory): latest modification 2017/04/17, 18:13, Aachen-Hamburg train]

பாட்டியல் (819 entries)

[Part 1 of TIPA file P16 (and pages 3-189 in volume printed in 2004 and in 2005 edition)]

அ section: 78 entries

அக்கரத்தாரணை

{Entry: P16a__001}

நவதாரணையுள் ஒன்று. அவ்வொன்பதாவன : நாமம், அக்கரம், செய்யுள், சதுரங்கம், சித்திரம், வயிரம், வாயு, நிறைவு குறைவாகிய ஒண்பொருள், வத்து என்னும் தாரணைகள்.

இதனை உரு அக்கர சங்கேதங்களால் இடம்பட அறிந்து தரித்து, அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும் பிறவாறாக வும் சொல்லும் திறம் தாரணை நூலுள் கூறப்பட்டது. அந்நூல் இக்காலத்து வழக்கு ஒழிந்தது. (யா. வி. 96. பக். 555)

அக்கினி கணம் -

{Entry: P16a__002}

செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும், நிரைநேர்நிரை யென வருவதும் ஆகிய செய்யுட் கணம். புளிமாங்கனி எனும் வாய்பாடு பெறும் இச்சீர் நோய் பயக்கும்.

அக்கினிகணம், நெருப்புக்கணம், தீக்கணம், அனற்கணம் எனப் பரியாயப் பெயரால் இக்கணம் பல பாட்டியல்களில் சுட்டப் பெறும். இதற்குரிய நாண்மீன் கார்த்திகை என்ப. (பன். பாட்.111)

அகத்தியம் -

{Entry: P16a__003}

அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்து இலக்கண நூல்; எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திற இலக்கணக் கூறுபாடும் தம்முள் விரவ இயற்பகுதி யாக்கப்பட்டது என்ப. தொல்காப்பியத்திற்கு இதுவும் முதல்நூல்.

“தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவ ராயினார் அவனருளால் அவன் கண்ட இயற்கை முதல் நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் சூத்திரம் எனச் செயற்கை நலம் தோன்றச் செய்த நூல் செயற்கைமுதல் நூலாம். கலச யோனி யாகிய ஆசிரியன் அகத்தியன், முனைவனாகிய திரிபுரம் எரித்த விரிசடைக் கடவு ளிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூல் உணர்ந்து, பின்னர் அதன் பொருளைக் குன்றெறிந்த முருக வேளிடத்துக் கேட்டுத் தெளிந்து, முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆகலின், அவன் அருளிச் செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இரு நூலும் தமிழிற்குச் செயற்கைமுதல்நூல் ஆயின.” (பா. வி. பக். 97)

அகத்தியத்தைச் செயற்கைமுதல்நூல் என்பர் ஆசிரியர் அரசஞ்சண்முகனார்.

தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின், தலைவர்வழிநின்று தலைவனாகிய அகத்தியனான் செய்யப்பட்டதும் முதல்நூல்; அகத்தியமே முற்காலத்து முதல்நூல். (தொ. பொ. 649 பேரா)

பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளது என்பது. அது முதல்நூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின். (தொ. பொ. 484 பேரா.)

அகத்தியன் -

{Entry: P16a__004}

முத்தமிழ் அகத்திய முதல்நூல் ஆசிரியன் அமர முனிவன் அகத்தியன். குடத்தில் தோன்றிய காரணத்தான் கும்பமுனி, கும்பசம்பவன் முதலாய பெயர் அவனுக்கு வழங்கின. குறுமுனி, தமிழ்முனி முதலாய பிற பெயரும் வழங்கும். அவனே தேவஇருடிகளுள் சிறந்தவன் எனப் புராணம் கூறும். அவன் புகழ் கூறாத புராண இதிகாசம் இல்லை; தேவரும் முனிவரும் இல்லை.

நகுடனை இந்திரபதத்தினின்றும் இழிந்து பூமியிற் சர்ப்பம் ஆகுமாறு சபித்தமை; பன்னீர்யாண்டு பொதியின்கண் இருந்து வேள்விசெய்து, இந்திரன் முதலாய தேவர் ஏலாமல் மழைவளம் தடுப்பவே, தன் தவவலியான் பலவளனும் படைத்து, நான்முகன் முதலாய மூவர்க்கும் வித்தினைக் கொண்டு அவிஅளித்தமை; உயிர்க்கொலை வேள்வி புலைவினை ஆகா அறவினையே ஆயினும், கடையாய வேள்வி என்றும், அல்லாத வேள்வியே உத்தம வேள்வி என்றும் கூறித் தேவர்க்கு வரம் அளித்த அருந்தவக் கொள்கை யுடைமை; வாதாபி இல்வலன் என்னும் அசுரர் இருவரையும் தனது தவவலியான் அழித்தமை; தேவர்கள் வேண்டத் தென்திசைப் போந்து, மேருத் தாழ்ந்து தெற்கு உயர்ந்த நிலையைச் சமம் செய்தமை; இராமன் இலங்கை சென்ற காலத்திற்கு முன்னும், பரசுராமனை அஞ்சி ஒளித்த காந்தன் காலத்திற்கு முன்னும், காவிரி யுற்பத்திக்கு முன்னும், எனக் கருதப்படும் பண்டைக் காலத்தே தென்திசை மலயத்திற்குப் போந்திருந்தபோது தமிழ் முதல்நூல் அளித்தமை - முதலா யின அகத்தியன் பெருமைகள். (பா. வி. பக். 98-101)

கம்பராமாயணம் அகத்தியப் படலத்துள் தொடக்கக்கவிகள் அகத்தியன் பெருமைகளைப் பாரிப்பன.

அகத்தியனார் -

{Entry: P16a__005}

அகத்தியன் என்னும் சொல், உயர்வுபற்றிய ஆரைக்கிளவி பெற்று அகத்தியனார் என முடிந்தது.

‘அகத்தியன்’ - காண்க.

அகத்தியனார் மாணாக்கர் -

{Entry: P16a__006}

அகத்தியனார்க்கு மாணாக்கர் பன்னிருவர். அவர்களாவார் தொல்காப்பியனும், அதங்கோட்டாசானும், துராலிங்கனும், செம்பூட்சேயும், வையாவிகனும், வாய்ப்பியனும், பனம்பார னும், கழாரம்பனும், அவிநயனும், காக்கைபாடினியும், நற்றத்தனும், வாமனனும் என்ப. (பா. வி. பக். 104)

அகப்பொருட் கோவை -

{Entry: P16a__007}

அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். இரு வகைப் பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப் பொருளும் பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாக, திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட 12 அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப் பொருட் கோவை என்றவாறு. (இ. வி. பாட். 56 உரை)

அவ்வுறுப்புப் பன்னிரண்டாவன திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், திணைவகை, துறை என்பன. (ந. அ. 211)

அகப்பொருள் நூல்கள் -

{Entry: P16a__008}

இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள், தமிழ்நெறிவிளக்கப் பகுதி, களவியற் காரிகை என்பனவும், தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், சாமிநாதம், முத்து வீரியம் என்பவற்றிற் காணப் படும் அகப்பொருட் பகுதிப் படலங்களும் ஆம். திருக் கோவையார் உரையில் பேராசிரியர் அமைத்துள்ள அகப் பொருள் நூற்பாக்களும் அகப்பொருள் தொடர்பான நூலினவே. (நூல் - இலக்கணம்)

அகப்பொருள் விளக்கம் -

{Entry: P16a__009}

இஃது அகப்பொருள் பற்றிய தனி இலக்கணநூல்; நாற் கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. இதன்கண் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழி பியல் என ஐந்து இயல்கள் உள. இதன்கண்ணுள்ள நூற்பாக் களின் எண்ணிக்கை 252. தொல்காப்பியத்துக்குப் பின்னர் இறையனார் அகப்பொருள் சுருக்கநூலாக அமைய, அகப் பொருள் பற்றிப் பிற்காலத்து எழுந்த விரிவானநூல் இதுவே. அகப்பொருளைத் தொடர்நிலைச்செய்யுளாகக் கொள்வதற் கேற்ப, இதன்கண் கிளவிகள் தொடர்புறக் கூறப்பட்டுள்ளன. இன்று தமிழில் வழங்கப்படும் அகப்பொருள் நூல்களுள் பெருவரவிற்றாக நிலவுவது இதுவே. கற்பியல் முடிய, தஞ்சைவாணன்கோவை கிளவிகட்கு எடுத்துக்காட்டாகத் தொடர்ந்து வருகிறது. ‘ நம்பி அகப்பொருள் ’ என்று இந்நூல் பெருவரவிற்றாகப் பெயர் கூறப்படும் இதன் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.

அகலக்கவி -

{Entry: P16a__010}

வித்தார கவி; அகலமுற (-விரிவாக)ப் பாடப்படுவதால் இஃது அகலக்கவி என்னும் பெயர்த்தாயிற்று. தொடர்நிலைப் பாட்டு எனவும், பல அடியால் நடக்கும் தனிப்பாட்டு எனவும் இக்கவி இருவகைத்தாம். (இ. வி. பாட். 7)

இது விருத்தக் கவிதை, அகலப்பா, அகலம் என்றும் வழங்கப் படும்.

‘குண்டலகேசியும் உதயணன்கதையும் முதலாக உடைய வற்றுள் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது என்பது’

(வீ.சோ. 146. உரை)

அகலக்கவிக்குச் சிறப்பு விதி -

{Entry: P16a__011}

அகலக்கவியுள், அகப்பொருளைக் கூறும் ஆசிரியப் பாவினுள் வஞ்சியடி உறல் ஆகாது. அவ்வகப்பொருளின் கண் அன்றி ஏனைய பொருள்மேல் பெரும்பான்மையும் கலி வாரா; வஞ்சிப்பாத் தொகைபெற்று நிற்கப் பெறாமல், தனித்துச் சொல்லப்படும். (இ. வி. பாட். 115)

அகலக் கவிக்குப் புறனடை -

{Entry: P16a__012}

மங்கலம் சொல் முதலாகக் கூறப்பட்ட பத்துவகைப் பொருத்த இலக்கணத்தில் குறைவின்றி, பலவகையாலும் தெளிந்த மூவசைச்சீர் முதலாக அகலக்கவி பாடப்படும். உண்டிப் பொருத்தத்தில் விலக்கிய நச்சுஎழுத்தும், கதிப் பொருத்தத்தில் விலக்கிய எழுத்தும் எடுத்த மங்கலச்சொல் லில் வருமாயின் அமுதமாய் அமைவுடையனவாம். (இ. வி. பாட். 44)

அகலக்கவிக்குப் பெயரிடுமாறு -

{Entry: P16a__013}

பொருள், இடம், காலம், தொழில், உறுப்பு, எல்லை (-அளவு), செய்தோன் பெயர், செய்வித்தோன் பெயர் என்னும் இவற்றால் அகலக்கவி பெயர்பெறும். இவற்றுக்கு முறையே ஆசாரக் கோவையும், மதுரைக்காஞ்சியும், வேனில் விருத்த மும், யானைத் தொழிலும், பயோதரப்பத்தும், குமரேச சதகமும், கல்லாடமும் பாண்டிக்கோவையும் உதாரணமாகக் கொள்க. (இ. வி. பாட். 116)

அகலக்கவி கொள்வோர் பெறும் பயன் -

{Entry: P16a__014}

ஒண்மையான் புலவன் உரைத்த அகலக்கவியைக் கொடை முதலிய வரிசைசெய்து புனைந்து கொள்பவர் “பெரிய புகழாலும் உருவத்தாலும் முறையே நிறைமதியும் இளஞாயி றும் இவராவார்!”எனச் சிறப்புற்று, இவ்வுலகில் புகழுடம் பான் நிலைபெற்றுத் தலைமை எய்தி நிலவுவர்.

‘உருவும் புகழும் ஆகுவிர் நீர்’ (புறநா. 6) என்றார் பிறரும். ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்தே’ (புறநா. 27) என மறுமைப்பயன் மிகுதி கூறப்பட்டவாறு காண்க. (இ. வி. பாட். 180)

அகலக்கவி பாடுவோன் -

{Entry: P16a__015}

அகலக்கவி பாடுவோனும் அகலக்கவியாம். வித்தார கவி, அகலக்கவி என்பன ஒரு பொருட்கிளவி.

(வெண்பாப். செய். 5. உரை)

அகலப்பா -

{Entry: P16a__016}

அகலக்கவி; அது காண்க.

அகலம் - (1) அகலஉரை (2) அகலக்கவி. இரண்டு திறமும் தனியே காண்க.

அங்கமாலை -

{Entry: P16a__017}

ஆண் பெண் எனும் இருபாலாருடைய அங்கங்களாகிய உறுப்புக்கள் அனைத்தையும், ஓருறுப்பில் அடங்கும் சிறு பகுதிகளையும்கூட விடாமல், உள்ளங்கால், விரல், நகம் என்பன உட்பட, வெண்பாவாலோ வெளிவிருத்தத்தாலோ, கடவுளர்க்காயின் பாதாதி கேசம் - மக்கட்காயின் கேசாதி பாதம் - என்னும் முறை பிறழாமல், அந்தாதித் தொடை அமையப் பாடுவது இப்பிரபந்தம். (இ. வி. பாட். 75)

நாவுக்கரசர் அருளிய திருவங்கமாலை (தே. 4 : 9 ஆம் பதிகம்.)

அசை ஓத்து -

{Entry: P16a__018}

இஃது யாப்பருங்கலத்துள் உறுப்பியலில் முதலாவது பகுதி. இதன்கண் நேரசை நிரையசை யென்னும் அசைவகையும், தனிக்குறில் நேரசையாகாத இடங்களும், ஐகாரக் குறுக்கம் இணைந்த நிரையசை வருமாறும் இடம் பெறும்.

அஞ்சனகேசி -

{Entry: P16a__019}

இஃது ஒரு தருக்க நூல்; அஞ்சனம் என்றும் கூறப்படும். இக்காலத்து வழக்கு இறந்தது. (யா. வி. பக். 583)

அஞ்ஞவதைப்பரணி -

{Entry: P16a__020}

இது வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம் (தக்க. பக். 153). பாசவதைப்பரணி, மோகவதைப் பரணி, என்பனவும் தத்துவத்தையுட்கொண்டு பாடப்பட்ட பரணிப் பிரபந்தங்கள் (கஞ்சவதைப் பரணி, இரணியன் வதைப் பரணி முதலியன வேறுபட்டவை.) (L)

அட்டகணம் -

{Entry: P16a__021}

நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமான கணம், சூரிய கணம், தீக்கணம், வாயு கணம், ஆகாய கணம் என எண்வகையுடையனவும், நல்லவும் தீயவுமாய் வருவனவும் ஆகிய நூல் முதற்சீர்கள்.

முதற்சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இறுதிக்கண் நின்றது கணம். (இ. வி. பாட். 10)

அட்டகம் -

{Entry: P16a__022}

எட்டு உறுப்புக்களைக் கொண்ட கூட்டம். ‘உருவ மெலாம் பூத உபாதாய சுத்தாட்டக உருவம் என்னின்’ (சி. சி. புர. சௌத். மறு 17)

பாடல்கள் எட்டனையுடைய தொகுதி பெரும்பான்மையும் அட்டகம் எனப்படுகிறது. ஆதிசங்கரர் அருளிய குருவஷ்டகம் காண்க. (L)

அட்டக வருக்கக்கோவை -

{Entry: P16a__023}

வேதங்களின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதியாகிய வருக்கங்களின் முதல்நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை. இதற்கு அநுக்ரமணிகா என்ற பெயரும் உண்டு. யாப்பருங்கலக்காரிகை முதல்நினைப்புச் சூத்திரங் களை உடையது என்பதைக் குறிக்க வந்த உரையாசிரியர் குணசாகரர், ‘அருமறை யகத்து அட்டகஓத்தின் வருக்கக் கோவை போல’ என உவமை எடுத்துரைத்தார். (யா. கா. பாயிரம். 1 உரை)

அட்டமங்கலம் -

{Entry: P16a__024}

கடவுளைப் பாடி, அக்கடவுள் காக்க எனக் கவி எட்டால் பொருளுற அகவல் விருத்தத்தால் பாடப்படும் பிரபந்தம்.

(இ. வி. பாட். 83)

அடி ஓத்து -

{Entry: P16a__025}

யாப்பருங்கலநூலுள் முதலாவதாகிய உறுப்பியலுள் ஐந்தாவதாக வரும் ஓத்து.

அடிநூல்-

{Entry: P16a__026}

இது நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது; பாக்களின் அடிகள் பற்றிய செய்தியைக் குறிப்பிடுவது. இதன் நூற்பாக் கள் ஆசிரிய யாப்பில் அமைந்தவை. இந்நூற்பாக்களுள் ஒன்றே இதுபோது கிட்டியுள்ளது. (யா. வி. பக். 367.)

அடியார்க்குநல்லார் -

{Entry: P16a__027}

சிலப்பதிகார உரையாசிரியருள் தலையாயவர். இவர் உரை 19 காதைகள் முடியக் கிட்டியுள்ளது. எஞ்சிய காதைகட்கும் இவர் உரை வரைந்திருந்தமைக்கு அகச்சான்று உளது. முத்தமிழிலும் இவரது பெரும்புலமையை அரங்கேற்று காதை முதலியவற்றில் காணலாம். இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு; நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது என்ப. ‘கானல்வரி’க்கு இவர் இயற்றிய உரை இக்காலத்துக் கிட்டவில்லை.

அணிகல நூல் -

{Entry: P16a__028}

யாப்பருங்கலம் 95ஆம் சூத்திரத்து அகலவுரையுள் குறிக்கப் பட்டுள்ள நூல்களுள் ஒன்று. அணிகலன்களை அமைக்குமா றும் அவை பூணுமாறும் பற்றிய நாள் முதலாய விசேடங் களை இந்நூல் விளக்குவது. இந்நூல் முதலாயவற்றுள் நிகழும் மறைப்பொருள் உபதேசத்தை வல்லார்வாய்க் கேட்டுணர்க என்பது உரை. இந்நூல் இக்காலத்து இறந்தது. (யா. வி. பக். 491)

அணியியல் -

{Entry: P16a__029}

தண்டியலங்காரத்துககு முற்பட்ட நூல். இதன்கண் தனிநிலை தொடர்நிலைச் செய்யுள் பற்றியும், இருது வருணனை பற்றியும் கூறப்பட்ட செய்தி யாப்பருங்கல விருத்தியுரையுள் எடுத்தாளப்பட்டுள்ளது. (பக். 566, 573) இனி, சிலப்பதிகார உரையுள் அடியார்க்குநல்லார் அணியியல் என்ற நூல் மேற்கோளாகக் காட்டிய ‘உரையும் பாட்டும் விரவியும் வருமே’ ‘உதாரம் என்பது ஓதிய செய்யுளின், குறிப்பின் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றல்’ என்ற இரண்டு நூற்பாக் களும் தண்டியலங்காரத்துள (11, 21). அதனை நோக்கின் அணியியல் நூற்பாக்கள் சில தண்டியலங்காரத்தில் ‘தானெடுத்து மொழிதலாகக்’ கொள்ளப்பட்டிருத்தல் கூடும் என்பது புலனாகிறது.

அணியியல் உடையார் -

{Entry: P16a__030}

அணியியல் என்ற நூலை இயற்றியவர். இவ்வாசிரியர் தம் நூற்பாக்களில் செய்யுள்நடைபற்றிக் கூறுவதோடு, எடுத்துக் காட்டுக்களும் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

(யா. க. 23, 57 உரை பக். 105, 229)

அத்தியாயம் -

{Entry: P16a__031}

நூற்பிரிவு. அத்தியாயம், படலம், இலம்பகம், சருக்கம், காண்டம், பரிச்சேதம் என்பன ஒருபொருட் கிளவிகள் (பிங்.2068)

அந்தணர் வருணம் -

{Entry: P16a__032}

பன்னிரண்டு உயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும், மறையோர் வருணத்திற்குரிய எழுத்தாம். ஒற்று எனப் பொதுப்படக் கூறினும் உயிரொடு கூடிய மெய் என்றே கொள்ளப்படும். (இ. வி. பாட். 14)

அந்தரகணம் -

{Entry: P16a__033}

செய்யுட்கணத்து ஒன்று இது. இதற்குரிய நாள் புனர்பூசம்; பயன் வாழ்நாள் நீக்கம். ஆதலின் ஆகாயகணமாகிய இதற்குரிய ‘கருவிளங்காய்’ முதற்பாடலின் முதற்சீராக வைத்துப் பாடார். (இ. வி. பாட். 40 உரை)

அந்தாதி -

{Entry: P16a__034}

1) அந்தாதித்தொடை; அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா. கா.7)

2) ஒரு பிரபந்தம். ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். - நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதி என்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும். அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமே சிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9)

அநுபூதி -

{Entry: P16a__035}

அனுபவ ஞானம் (வேதா. சூ. 151). முருகனுடன் தாம் கண்ட அநுபவஞானத்தை அருணகிரிநாதர் பாடியது, கந்தர் அநுபூதி என்னும் தோத்திரநூல். (L)

அநுராகமாலை -

{Entry: P16a__036}

அனுராகமாலை காண்க. (இ. வி. பாட். 104)

அப்பர் தேவாரயாப்பு -

{Entry: P16a__037}

திருநேரிசை - அறுசீர் விருத்தம்; திருவிருத்தம் - கட்டளைக் கலித்துறை; திருக்குறுந்தொகை - கலிவிருத்தம்; திருத்தாண் டகம் - எண்சீர் விருத்தம்; பழமொழியாப்பு - பழமொழியை இறுதியில் கொண்ட அறுசீர் விருத்தம்; சரக்கறைத் திரு விருத்தம் - கட்டளைக் கலித்துறையாலமைந்த வருக்கமாலை; இவையன்றித் கலித்தாழிசைப் பதிகம் இரண்டும் ( iv 3, 4) ஆசிரியத்துறைப் பதிகம் ஒன்றும் ( iv .20) சிறப்பாக அமைந்தன. நான்காம் திருமுறைத் தொடக்கத்தில் பலவகை அறுசீர் விருத்தங்களும் தரவு கொச்சகமும் கலிவிருத்தமும் ஈரடிக் கலித்தாழிசையும் (அங்கமாலைப் பதிகம்) எனப் பலதிற யாப்புக் காணலாம். (இலக். தொகை. முன். பக். 83-85)

அம்புலி -

{Entry: P16a__038}

1) சந்திரன் (கலி. 80) (2) அம்புலிப்பருவம் (L)

அம்புலிப் பருவம் -

{Entry: P16a__039}

பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஏழாம்பருவம் இது சாம தான பேத தண்டங்கள் அமைத்துப் பாடப்படுவது.

அம்போதி -

{Entry: P16a__040}

பாட்டின் உட்பொருள் (சங். அக.) (L)

அம்மானைப்பாட்டு -

{Entry: P16a__041}

அம்மானை ஆட்டத்தில் பாடும் பாட்டு. ‘சிறுபான்மை பாவைப்பாட்டும் அம்மானைப்பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன ஆயின, (தொ. பொ. 461 பேரா.)

அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.

‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை

ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை’ - முதலிய 4 பாடல்

(சிலப். 29 : 16-19)

இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீர்க்கும் அடுத்த அடி முதற்சீர்கும் தளைகோடல் கூடாது.

‘வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக் கெட்டும்’ (சிலப். 29 : 18)

முதலடியும் அடுத்த அடியும் தளைகொள்ளின் கலித்தளை வருதல் காண்க.

அம்மானை (1) -

{Entry: P16a__042}

1) அம்மானையாட்டம் (இ.வி. 807) 2) அம்மானை ஆடும் கருவி : ‘அம்மானை ஆடி அருளே, (மீனாட்சி அம்மானை 1) 3) ஒருவகைப்பாடல் (திருவாசகம் 8) 4) அம்மானைப் பருவம் ஆகிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழ்வது 5) கலம்பகஉறுப்பு. (இ. வி. 812)

ஐந்தடிக் கலிப்பாப் போன்ற யாப்பில், 2ஆம் 4 ஆம் அடி ஈற்றில் தன்பெயர் குலவப் பாடப்படும் அம்மானைப் பாட்டில், சொல்லுதல் - மறுத்தல் - விடை - யென்னும் மூன் றும் அமையும். ஈற்றில் வரும் விடைமொழியுள் இருபொருள் படச் சிலேடை அமைதல் இயல்பு. முப்பொருள் நாற்பொருள் படச் சிலேடை மொழியின் சிறப்பு மிகும். கலிப்பா வரையறை யாகக் கூட்டியும், எதுகையின்றித் தனித்தனியே சேர்த்தும், காதை அம்மானை என்று சிலர் பாடினர். கொச்சகச் சீர்களால் பாடும் அம்மானை இழிவுடையது. (அறுவகை. யாப்பிலக்கணம் 29-32)

திருவாசகத்திலுள்ள அம்மானைப் பாடல் வெண்டளை பிறழா அடிகளைக் கொண்டு, முதலடிக்கும் அடுத்த அடிக் கும் தளை கோடல் இன்றி ஓரெதுகையான் ஆறடியான் முற்றுப்பெற்று இறுதியில் அம்மானாய் என்ற சொல்லுடன் முடிவது. திருவாசகப் பகுதியாகிய திருஅம்மானையில் 20 பாடல்கள் உள்ளன.

எ-டு : ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை // வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் // கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை // வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் // தில்லை நகர்ப்புக்குச் சிற்றம் பலமன்னும் // ஒல்லை விடையானைப் பாடுதும்காண் அம்மானாய்’

பெண்பாற் பிள்ளைத்தமிழில் உள்ள அம்மானைப் பருவத்துப் பாடல்கள் ஆசிரியவிருத்தங்களாக அமைவன.

அம்மானை (2) -

{Entry: P16a__043}

மங்கையர் மூவர் அம்மானை ஆடுவர். முதலாமவள் பிரபந்தத் தலைவனுடைய சிறப்பைக் கூறுவாள். இரண்டாமவள் அதன்கண் ஐயுற்று ஒரு வினாவினை எழுப்புவாள். மூன்றா மவள் அவ்வையத்தை அறுத்து மொழிகையில், சிலேடை வாய்பாடு நயம் செய்யும். இவ்வாறு பாடும் அம்மானை என்னும் பாடல் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.

“திருவரங்கப் பெருமானே எல்லாப் பொருளுமானவர்; அவர் ஆண் பெண் அலி அல்லர்” என்றாள் முதலாமவள். “அங்ங னம் ஆயின் அவர் சீதையை மனைவியாகக் கொண்டது யாங்கனம்?” என்று வினாவினாள் இரண்டாமவள். “சீதையை மனைவியாகக் கொண்டது ஒரு சாபத்தினால்” என்றாள் மூன்றாமவள். ‘சாபம்’ என்பது பிருகு முனிவரிட்ட சாபம் எனவும், சிவபெருமானுடைய வில் எனவும் இரு பொருள்படும். (சிவதனுசை முறித்ததால் இராமன் சீதையை மணந்தமை வெளிப்படை.) (திருவரங். 26)

அம்மானை (3) -

{Entry: P16a__044}

2, 4, 5 ஆம் அடிகளில் அம்மானை என்ற சொல் ஈற்றில் அமைய வரும். அம்மானை 5 அடிக் கலிப்பாப் போல்வது. அதனில் சொல்லலும் மறுத்தலும் விடையும் அமையும். அம்மானையின் விடைமொழி சிலேடையாக அமையும். ஓரடியெதுகையின்றி இரண்டிரண்டடி எதுகையுடைய கலிப்பாவாக அம்மானைப்பாடல் அமைதலு முண்டு. கொச்சகச்சீரால் பாடும் அம்மானை இழிபுடையது. (அறுவகை. யாப்பு. 31, 32)

சந்த ஆசிரிய விருத்தமாகப் பாடப்படும் அம்மானைப் பருவம் பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழும். ஈற்றடி அம்மானை ஆடியருளே போன்ற வாய்பாட்டால் முடியும்.

அம்மானைப்பருவம் -

{Entry: P16a__045}

பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் எட்டா வது. முன்னர் உள்ள ‘அம்மானை’ காண்க.

அம்மானை வரி -

{Entry: P16a__046}

மகளிர் அம்மானை ஆடும்போது பாடும் ஒருவகையான இசைப்பாடல். இஃது ஐந்தடிப் பாடலாக நிகழும்.

(சிலப். 29 : 17 - 20)

வெண்டளை பயின்ற அளவடியால் நிகழும் இப்பாடல்களில் இரண்டு நான்கு ஐந்தாமடிகளின் இறுதிச்சீர் அம்மானை என முடிவுறும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும்.

எ-டு : ‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன் // ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை? // ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் // தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை! // சோழன் பூம்புகார் பாடலோர் அம்மானை!’ (சிலப். 29: 17)

அமிதசாகரர் -

{Entry: P16a__047}

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய செய்யுள் இலக்கணநூல்களை இயற்றியவர். யாப்பருங்கல நூற்பாயிரத் தில், ‘அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே’ என்னும் அடி, இவரது பெயரினைக் குறிப்பாற் சுட்டும். இவர் சமண சமயத்தவர் என்பது இந்நூல்களின் சிறப்புப் பாயிரத்தில் போதரும். இவரது காலம் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்ப.

அமிர்தபதி -

{Entry: P16a__048}

இஃது ஒரு காவியம். “சிந்தாமணி சூளாமணி போல்வதொரு காப்பியம் அமிர்தபதி. இதன் முதற்பாட்டு வண்ணத்தான் அமைந்தது. நேரசை முதலாக வருவதால் இப்பாடலின் ஒவ்வோரடியும் பதினான்கு எழுத்துடையது.” என்ற செய்தி யாப்பருங்கல விருத்தியுரையில் போதரும்.(யா. வி. பக். 520, 521)

அமுத வெழுத்து -

{Entry: P16a__049}

காப்பியத்தின் முதற்செய்யுள் முதல்மொழியிலும், தசாங்கத் தயலிலும் வருதற்குரிய மங்கல எழுத்து அமுத எழுத்தாம். க ச த ப ந ம வ - என்னும் ஏழொடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு உயிர்எழுத்தும் முன்மொழிக்கு ஆம் அமுத எழுத்துக்கள். (இ. வி. பாட். 19, 21)

அமுதெழுத்து -

{Entry: P16a__050}

‘அமுதவெழுத்து’க் காண்க.

அரசசட்டம் -

{Entry: P16a__051}

இன்று இறந்துபட்ட கணிதநூல்களுள் ஒன்று. பதினாறு வரி கருமம், ஆறு கலாச வருணம், இரண்டு பிரகரணச்சாதி, முதகுப்பையும் ஐங்குப்பையும் என்ற இப்பரிகருமம், மிச்சிரகம் முதலிய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவது. அவினந்தமாலை, வருத்தமானம் முதலியனவும் அரசசட்டம் போன்றவையே. (யா. வி. பக். 569)

அரசஞ் சண்முகனார் -

{Entry: P16a__052}

கி.பி. 1868 முதல் 1911 வரை 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த பெரும்புலவர்; தந்தையார் அரசுப்பிள்ளையாதலின், அரசஞ் சண்முகன் என்று தந்தையது பெயருடன் தமது இயற் பெயரையும் கொண்டார்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறை போயவர்; வடமொழிப் புலமையும் உடையவர்; நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்; பண்டைய உரையாசிரியர் களிடம் பெருமதிப்புக் கொண்டவர்; நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர். கவிதைபாடும் சிறப்பும் அவர்பாலுண்டு. இவர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசை இருநூறு, பஞ்ச தந்திர வெண்பா, மதுரைச் சிலேடை வெண்பா, மதுரை மீனாட்சி யம்மை சந்தத் திருவடிமாலை, திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பியப் பாயிரம் சண்முக விருத்தி, ஆகுபெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சி என்பன. இவற்றுள் இன்று திருக்குறள் சண்முக விருத்தி காணப்பட்டிலது. இவரெழுதிய வேறுசில நூல் களும் இதுபோது கிட்டில. திருக்குறளும் தொல்காப்பிய முமே இவரது புலமைக்கு இருகண்கள் எனலாம். தொல் காப்பியச் சண்முக விருத்தியை நல்வினையின்மையால் தமிழ்நாடு இழந்துவிட்டது.

அரசர் பா -

{Entry: P16a__053}

ஆசிரியப்பா. ஆற்றுப்படை அரசர்பாவால் பாடப்படுவது என, இப்பெயர் இச்சூத்திரத்தே ஆட்சிபெற்றுள்ளமை காண்க. (இ. வி. பாட். 113)

அரசர் வருணம் -

{Entry: P16a__054}

த,ந,ப,ம,ய,ர என்னும் ஆறும் அரசர்க்கு உரியன. (மெய்யெழுத் தன்றி உயிர்மெய்யே கொள்ளப்படும்) (இ. வி. பாட். 15)

அரசன் விருத்தம் -

{Entry: P16a__055}

இஃது ஒரு பிரபந்தவகை. “பாவாலும் பொருளாலும் அள வாலும் பிறகாரணத்தாலும் பிரபந்தங்கள் வேறுபடப் பெயர் பெறுவன உள” என்னும் இச்சூத்திரத்துள், பிற காரணத்தால் பெயர் பெறும் நூல்களுள் ஒன்றாக ‘அரசன் விருத்தம்’ இடம் பெறுகிறது. (தொ. வி. 283 உரை)

அரசனைச் சார்ந்துவரும் இலக்கியங்களில் அரசன் விருத்த மும் ஒன்று: மலை, நீர், நாடு, நிலம் ஆகியவற்றின் வருணனை களும், அரசனுடைய தோள்மங்கலம், வாள்மங்கலம் ஆகியனவும், பத்துக் கலித்துறையும் முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாகிய யாப்பினால் பாடி முடிப்பதொரு பிரபந்தம். இது முடிபுனைந்த வேந்தர்க்கு ஆம். (நவ. பாட். மிகைச் செய்யுள்கள் - 1 சது. 5)

அரிகண்டம் பாடுதல் -

{Entry: P16a__056}

கழுத்திற் கத்திகட்டி எதிரி கொடுக்கும் சமத்திக்கு இணங்கப் பாடுதல் (சமத்தி - சமஸ்யை) (L)

அரிவை -

{Entry: P16a__057}

இருபது வயது முதல் இருபத்தைந்து வயது ஈறாக உள்ள பெண். (பிங். 941); [ இச்சொல் பொதுப்படப் பெண் என்றும் பொருள்படும் (பிங். 945) ]. (இ. வி. பாட். 102)

அருங்கலச்செப்பு -

{Entry: P16a__058}

குறள்வெண்பாவால் இயன்ற சமண மதத்து நீதிநூல். (L)

அருங்கலநூல் -

{Entry: P16a__059}

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் மறைப்பொருள் உபதேசம் காணப்படுவதாயும் அது வல்லார்வாய்க் கேட்டு உணரத் தக்கதாயும் யாப்பருங்கல விருத்தி கூறுகிறது. இந்நூல் இப்போது வழக்கில் இல்லை. (யா. வி. பக். 491)

அருங்கலை விநோதன் -

{Entry: P16a__060}

நூல் ஆராய்ச்சியையே விளையாட்டாக உடையவன். ‘அருங்கலை விநோதன் அமராபரணன்’ (நன். சிறப். 4) (L)

அலங்கார பஞ்சகம் -

{Entry: P16a__061}

வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தனையும் அந்தாதியாகப் பாடும் பிரபந்தம். (இ. வி. யாப். 84).

அலி எழுத்து -

{Entry: P16a__062}

ஒற்றெழுத்தும் ஆய்தமும் அலிஎழுத்து எனப்படும். (வெண்பாப். 7)

ஆயின், பிங்கலந்தை நிகண்டு அலியெழுத்தென மெய் யெழுத்தினைக் குறிக்கிறது. (1360)

அவலோகிதன் -

{Entry: P16a__063}

பௌத்த முனிவருள் ஒருவன். அவன்பால் அகத்தியன் பாடம் கேட்டுத் தண்டமிழ் இலக்கணம் வகுத்தான் என்னும் வீர சோழியம். (பாயிரம் 2)

அவிநயம் -

{Entry: P16a__064}

இஃது ஒரு காலத்தே எழுத்துச் சொற் பொருள் என்ற மூன்றனையும் விளக்கிய பெருநூலாக வழங்கியதுபோலும். அவிநயம் என்ற நூலின் யாப்புப் பகுதியினின்று 63 நூற் பாக்கள் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள் இடம் பெற்றன. இந்நூற்கு இராசபவித்திர பல்லவதரையன் உரை வரைந்த செய்தி நன்னூல் மயிலைநாதருரையால் (சூ. 359) புலப்படுகிறது. தளைச் செய்திகள் சில, தொடைச் செய்திகள் சில, ஆசிரியத்தாழிசை - வஞ்சிவிருத்தம்- போல்வன நீங்கலாக ஏனைய யாப்புப் பற்றிய செய்திகள் பலவும் மேற்கூறிய 63 நூற்பா வாயிலாகப் பெறப்படுகின்றன. இதன் ஆசிரியர் அவிநயனார். ஆசிரியனது இயற்பெயரால் பெயர்பெற்றது இந்நூல். (யா. வி. பக். 21, 25, 27 முதலியன)

அவிநயனார் -

{Entry: P16a__065}

அவிநய நூலாசிரியர்.

அவினந்த மாலை -

{Entry: P16a__066}

கணித நூலுள் ஒன்று; பதினாறு வரிகருமம், ஆறு கலாச வருணம், இரண்டு பிரகரணச் சாதி, முதகுப்பை ஐங்குப்பை என்ற பரிகருமம், மிச்சிரகம் முதலாகிய எட்டு அதிகாரம் முதலாய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவது. (யா. வி.பக். 569)

அவை நான்கு -

{Entry: P16a__067}

அவை - சபை; நல்லவை, தீயவை, குறையவை, நிறையவை என்ற நான்கும் சபை. (யா. க. 96 உரை. பக். 553)

அவைப் பரிசாரம் -

{Entry: P16a__068}

சபை வணக்கம். இது ஸபாஸ்தவம், விநயப்பிரசாரம் எனவும் கூறப்படும். (சீவக. 647 அடிக்)

அவையடக்கம் -

{Entry: P16a__069}

அவையினர்க்கு வழிபடுகிளவி கூறுதல். இஃது அவையடக்கு, அவையடக்கியல் எனவும் பெயர் பெறும். (சீவக. 4 உரை)

அவையடக்கு -

{Entry: P16a__070}

‘அவையடக்கம்’ காண்க.

அவையம் -

{Entry: P16a__071}

1) பண்டிதர் கூட்டம் 2) நியாயம் உரைக்கும் சபையோர் - ‘சிறந்த கொள்கை அறங்கூறவையமும்’ (மதுரைக் 492) 3 சபாமண்டபம் : ‘வாய்மை யிகழ்ந்துளான் அவையத்தை முன்னீறு செய்து’ (கந்த. சதமுக. 21) (L)

அவையினமைதி -

{Entry: P16a__072}

அவையின் அமைதியாவது, நல்லோர் இருந்த நல்லவையும், தீயோர் இருந்த தீயவையும் எனக் கொள்க (வீ. சோ. 181 உரை)

அழுகுணிச்சித்தர் பாடல்கள் -

{Entry: P16a__073}

இவர் பாடிய 32 பாடல்களும் கலித்தாழிசையை ஒத்த ஒருவகைச் சிந்து அமைப்பின. பாடல், நான்கு அடிகளும் தம்முள் அடியெதுகை பெற்று ஈற்றடி நீண்டிசைத்து ‘என் கண்ணம்மா’ என்ற தனிச்சொல் பெற்று வருகிறது; ஈற்றடி நீண்டிசைப்பதால் கலித்தாழிசை போல்வது. கலித்தாழி சையினின்றே பிற்காலத்துச் சிந்துயாப்புத் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர். (இலக்கணத். முன். பக். 102, 103)

அறிவனார் -

{Entry: P16a__074}

பஞ்சமரபு என்னும் நூலின் ஆசிரியர். (சிலப். 6 : 35 உரை)

அறிவுடை நம்பி சிந்தம் -

{Entry: P16a__075}

சிந்தம் என்ற இந்நூல் அறிவுடை நம்பி என்பவரால் இயற்றப் பட்டது. இது செவியறிவுறூஉ என்னும் புறத்துறை பற்றியது. இது நீண்ட பாடல் வடிவிற்று; தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத்தின் அருகு தனிச்சொல்லின்றி முழுதும் இருசீரடியா யமைந்தது. இது வஞ்சிப்பாப் போன்றது எனினும், வஞ்சிப்பா ஆகாது. செவியறிவுறூஉ ஆனது ஆசிரியம் வெண்பா மருட்பா என்ற பாக்களாலேயே பாடப்படல் வேண்டும் என்ற வரையறை யுண்டு ஆதலின், இதனை வஞ்சியடியால் வந்து பொருள் உறுப்பு அழிந்தமை பற்றி ‘உறுப்பழி செய்யுள்’ என்க. (யா. வி. பக். 372)

அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் -

{Entry: P16a__076}

இவ்விரு நூல்களையும் இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவற்றில் யாப்புப் பற்றிய செய்தியே யுள. எழுத்து முதலிய ஐந்திலக்கணத்துடன் புலமையிலக் கணத்தையும் கூறும் நூல் அறுவகை இலக்கணம். இதனால் பெயர்க் காரணம் புலனாகும். இந்நூலில் 786 நூற்பாக்கள் உள்ளன. பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் இத் தொகையுள் அடங்கும்.

ஏழாம் இலக்கணம் அறுவகை இலக்கணத்திற்கு ஓர் அங்கமாய் அவற்றது புறநடையாக அமைகிறது. பாயிரமும் நூல் இறுதி வெண்பாவும் தவிர 318 நூற்பாக்கள் இதன் கண்ணுள்ளன. புணர்ப்பு இயல்பு, சொன்னிலை இயல்பு, பெயர்ச்சொல் இயல்பு, விபத்தி இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல் இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு, பொருள் இயல்பு, யாப்பு இயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு என்னும் இவற்றுடன் தவஇயல்பு என்ப தொன்றும் சேர 13 பிரிவுகளை யுடையது இந்நூல். புணர்ப் பியல்பும் சொன்னிலையியல்பும் பற்றியே பெரும்பாலான நூற்பாக்கள் அமைந்துள்ளன.

அனுராகமாலை -

{Entry: P16a__077}

தலைவன் கனவின்கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கற்கு உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவில் பாடுவதொரு பிரபந்தம். (இ. வி. பாட். 104)

அஷ்டகம் -

{Entry: P16a__078}

அட்டகம்; அது காண்க.

ஆ section: 18 entries

ஆகாய கணம் -

{Entry: P16a__079}

நூலின் முதற்பாடல் முதற்சீர்க்குப் பொருத்தமற்ற கணங் களுள் ஒன்று. அது பாட்டுடைத் தலைவன் வாழ்நாளைக் குறைக்கும் என்பர் மாமூலனார். இஃது ‘அந்தரகணம்’ எனவும்படும். அது காண்க. (இ. வி. பாட். 40 உரை)

ஆசிரியம் அரசர்குலம் ஆதல் -

{Entry: P16a__080}

4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 நிலங்களையுடைய குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்ற எல்லா அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரியவாதல் உண்டு. எல்லாப் பொருள்மேலும் ஆசிரியம் வரும். எல்லா நிலமும் அடிப் படுத்தலும் எல்லாப் பொருள்மேலும் நண்ணுதலும் அரசர்க்கும் உரியன. ஆதலின் ஆசிரியம் அரசர்பா ஆகும். (யா. க. 74 உரை மேற்)

ஆசு கவி -

{Entry: P16a__081}

“இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருளாலே பாடுக, இவ்யாப்பாலே பாடுக, இவ் வலங்காரத்தாலே பாடுக” என்று ஒருவன் சொன்ன உள்ளுறைக்கு அவனெதிரே அப்பொழுதே பாடுவது. ஆசுகவி பாடும் புலவனும் ஆசுகவியாம். இவற்றில் இரண்டும் மூன்றும் அகப்படப் பாடுதல் சிறப்புடைத்து என்ப. மிக்க புலமைத் திறனோடு இறையருள் வாய்த்தவற்கே இவ்வாறு பாடுதல் கூடுதலின், இக்கவி முதல்வகையாகக் கூறப்பட்டது. (வெண்பாப். செய். 2., இ.வி.பாட் 4)

ஆடை நூல் -

{Entry: P16a__082}

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்பட வேண்டுவது. (யா. வி. பக். 491)

ஆண்பாலெழுத்து -

{Entry: P16a__083}

அ இ உ எ ஒ என்னும் குற்றெழுத்து ஐந்தும் ஆம்.

(இ. வி. பாட். 13)

ஆண்பாற் பிள்ளைக்கவி -

{Entry: P16a__084}

‘ஆண்பாற் பிள்ளைத்தமிழ்’ காண்க.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் -

{Entry: P16a__085}

தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; சிவ பெருமான் நீங்கலான ஆண்பாற்கடவுளரையோ ஆடவருள் மிக்காரையோ குழவியாகக் கருதி அதன்மேலேற்றிக் கூறும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் பத்தும் பருவத்திற்குப் பத்துப்பாடலாக ஆசிரியவிருத்தத்தாலும் சந்தவிருத்தத்தாலும் பாடப்பெறுவது இத்தொடர்நிலைச் செய்யுள். காப்புப் பருவத்துள் பத்துப்பாடல் மேலும் சில கூடப்பெறுதலும் உண்டு. முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் ஓர் எடுத்துக்காட்டு. (இ. வி. பாட் 46, 47)

ஆண்பாற் பிள்ளைப்பாட்டு -

{Entry: P16a__086}

அஃதாவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ். தெய்வக்காப்புப் பருவம் இரண்டாம் திங்களிலும், செங்கீரை ஐந்தாம் திங்களிலும், தால் ஏழாம் திங்களிலும், இன்னமுதூட்டல் எட்டாம் திங்களிலும், சப்பாணி ஒன்பதாந் திங்களிலும், முத்தம் பத்தாம் திங்களிலும் வருகை ஓராண்டு நிறைவிலும், அம்புலி காட்டல் பதினாறாம் திங்களிலும், சிறுபறைகொட் டல் இரண்டாம் ஆண்டிலும், சிற்றில் சிதைத்தல் மூன்றாம் ஆண்டிலும், சிறுதேர் உருட்டல் நாலாம் ஆண்டிலும், இவ்வாறாகப் பன்னீராண்டுவரை பிள்ளைப்பாட்டுப் பாடப்பெறும். (திவா. பக். 309)

இதனைச் சிறிது வேறுபடக் கூறுதலுமுண்டு. (பிங். 1368)

ஆணெழுத்து -

{Entry: P16a__087}

உயிரெழுத்து. (பிங். 1358)

ஆத்திரேயம் -

{Entry: P16a__088}

வேதாங்கமாகிய கற்பத்தைப் பற்றிய ஒரு வடநூல். ‘போதா யனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும்’ (தொ. பொ. 75 நச்.)

ஆத்திரையன் பேராசிரியன் -

{Entry: P16a__089}

ஆத்திரைய கோத்திரத்திற் பிறந்த இவர் தொல்காப்பியம் முதலிய நூற்குப் பொருந்த பொதுப்பாயிரம் செய்த ஆசிரியர். (தொ. பொ. 653 பேரா.)

இப்பொதுப் பாயிரத்தில் ஈவோன்தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன்தன்மை, கோடல்மரபு என்ற நான்கும் விரித் துரைக்கப்பட்டுள்ளன. இப்பொதுப்பாயிரத்துக்கு அரசஞ் சண்முகனார் தம் பேரறிவுடைமை தோன்ற விருத்தியுரை செய்துள்ளார்.

ஆதிப்புலவன் -

{Entry: P16a__090}

தமிழில் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியத்தைத் தன் பெயரால் வழங்கிய அகத்தியனே ஆதிப்புலவன் எனப்படு வான்.

ஆதிவாயிலார் -

{Entry: P16a__091}

ஆதிவாயிலார் என்னும் புலவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலை இயற்றினார் என்ப. (சிலப். அடியார்க்குநல்லார் உரைப் பாயிரம்). அடியார்க்குநல்லார்தம் அரங்கேற்றுக் காதை யுரைக்கு இவ்விசைநூல் மேற்கோளாக உதவிற்று.

ஆதோரண மஞ்சரி -

{Entry: P16a__092}

எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும் போந்த வீரனது சிறப்பினை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தம். (தொ. வி. 283 உரை)

ஆயுத நூல் -

{Entry: P16a__093}

ஆடை நூல் போல், அறம்பொருளின்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக அமைந்த வொருநூல். இதன்கண் கிடக்கும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரத் தக்கது. (யா. வி. பக். 491)

ஆரிய படலம் -

{Entry: P16a__094}

முதல்நூலால் பெயர் பெற்றதாகிய ஒரு பண்டைய நூல் இது.

(நன். 49 மயிலை.)

ஆளவந்தபிள்ளை -

{Entry: P16a__095}

பத்துப்பாட்டுள் இறுதிப்பாட்டாகிய மலைபடுகடாத்தில் 145 ஆம் அடியாகிய ‘தீயி னன்ன ஒண்செங் காந்தள்’ என்றற்கு உரை வரையுமிடத்தே, “இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடு அடுத்த தன்மையின் ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர் கூறினாரால் எனின், அவர் அறியாது கூறினார்................. சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளா ரென மறுக்க” என்று நச்சினார்க்கினியர் குறித்த செய்திக் கண், ‘ஆளவந்த பிள்ளையாசிரியர்’ என்பார் பெயர் காணப்படுகிறது. ஆளவந்த பிள்ளையாசிரியர் நச்சினார்க் கினியர்க்கு முற்பட்ட காலத்தவராய், தொல்காப்பியத்தி லன்றிப் பின்னுள்ளோர் செய்த நூல்மரபு பற்றிய நூல்களில் தேர்ச்சி யுடையராய் இருந்தவர் என்பதும்; எழுத்து முதலிய ஆறு வகை ஆனந்தக் குற்றங்களும் பற்றி இலக்கியம் பாட்டின் பாடிய புலவனுக்கும் பாடப்பட்ட பாட்டுடைத் தலைமக னுக்கும் ஏதமுண்டாம் என்று துணிந்தவர் என்பதும்; யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கொண்ட கருத்தே தம் கருத்தாதலின், பொருளானந்தம் நிகழ வந்தனவாக அவ்வுரை யாசிரியர் குறித்த மலைபடு. 145-150 அடிகளிடையே, 145 ஆம் அடிக்கண், ‘இயற்பெயர் மருங்கின் மங்கல மழிய’த் ‘தீயினன்ன ஒண்செங் காந்தள்’ என்று நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவனது பெயர் தீயோடு அடுத்து வந்த தன்மையால் சொல்லானந்தக் குற்றம் வந்துற்றமையால் பாடிய புலவனும் பாட்டுடைத் தலைவனும் இறந்துபட்டனர் என்ற துணிவுடையார் என்பதும் புலப்படுகின்றன. இவ் வானந்தக் குற்றங்களைச் சொல்லியவர் குணசாகரர் போன்ற சமணப்புலவர் சிலரே.

“பண்டை நூலாகிய தொல்காப்பியம் முதலியவற்றுள் அவை காணப்படாமையின், சங்கச் சான்றோர் பாடலுள் அவை வரினும் குற்றம் உடையன அல்ல, அப்பாடல்கள்; அன்றியும், இப்பாடற் பகுதிக்கண் ‘நன்னன்’ என்பது சொல்லன்றி ‘அன்ன’ என்பதே சொல்லாதலானும், ‘நன்ன’ என விளிக்கப்பட்ட விடத்தே “தீப்போன்ற நன்ன!” என்று பொருள்படுமாயினும், ஆண்டுப் படர்க்கையாக வரும் செய்திக்கண் முன்னிலைச் சொல் வருதற்கு இயைபு இன்மையானும், இவ்வானந்தக் குற்றம் இவ்வடிக்கண் வந்தது என்று சொல்லற்கு இடனில்லை” என்பது நச்சினார்க் கினியரது மறுத்துரை.

ஆனந்த ஓத்து -

{Entry: P16a__096}

அகத்தியனார் இயற்றிய முத்தமிழ் நூலாகிய அகத்தியத்துள் இப்பெயருடைய இயல் ஒன்று உளதாகவும், அதன்கண் எழுத்தானந்தம் சொல்லானந்தம் பொருளானந்தம் யாப் பானந்தம் தூக்கானந்தம் தொடையானந்தம் ஆனந்தப்பை யுள் முதலிய குற்றங்கள் கூறப்பட்டுள்ளவாகவும் யாப்பருங் கல விருத்தி கூறும். (யா. வி. பக். 45 முதலியன)

இங்ஙனம் ஆனந்தஓத்து என்று இயலொன்று அகத்தியனா ரால் இயற்றப்பட்டதென்பது பொருந்தாக் கூற்று என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் கருத்து.

(தொ. பொ. 312 பேரா.) (மலைபடு. 145 நச்.)

இ section: 40 entries

இங்கித கவி -

{Entry: P16a__097}

1) பாட்டுடைத் தலைவன் கருத்தினை விளக்கும் பாடல்

2) இனிமை தரும் கவி பாடுவோன் (L)

இசைத்தமிழ்ச் செய்யுட்துறைக்கோவை

{Entry: P16a__098}

இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை என்னும் நூல் தன்கண் பயிலும் எடுத்துக்காட்டுக்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும் நூற்பாக்களை யுடையது; இயல்தோறும் செய்யுள்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும் நூற்பாக்களை யும் அவ்வப்பகுதி இறுதிதோறும் உடையது. அதுபோலவே யாப்பருங்கலக்காரிகையும் உதாரணப்பாடல்கட்கும் இயல் தோறும் காரிகைச்சூத்திரங்கட்கும் முதல்நினைப்புணர்த்தும் காரிகைகளைத் தன்னகத்தே கொண்டது. முதல்நினைப்பு ஓதிய யாப்பருங்கலக்காரிகையாகிய நூலுக்கு இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை எடுத்துக்காட்டாக உரையாசிரியர் குணசாகரரால் எடுத்துக்காட்டப்படுகிறது. (யா. கா. 1 உரை)

இசை நுணுக்கம் -

{Entry: P16a__099}

இஃது ஓர் இசைத்தமிழ் இலக்கணநூல். இடைச் சங்கத் தார்க்கு நூலாக இருந்தவற்றுள் இதனையும் ஒன்றாக இறை யனார் அகப்பொருள் உரை எண்ணும். இந்நூல் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலம் வரை இருந்து இறந்தது போலும். இது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன் பொருட்டுச் செய்த இடைச்சங்கத்து வழிநூல் என்ப. (சிலப். அடியார்க்.உரை)

‘முந்து நூல்’ எனப்பட்டவற்றுள் இசை நுணுக்கமும் ஒன்றாக உரைக்கப்படும். (தொ. சிறப். நச்.)

ஆதியின் முனைவன் தமருகத்தினின்று ஆரியத்திற்கு முதல் நூலாக மாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத் தில் தானே அவனது வாயினின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்து மூன்று சொற்கள் தோன்றின. அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை நுணுகி ஆராய்ந்த விடத்தே, இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் முற்றத் தோன்றும் இயல்பினவாயிருந்தமை யால், அச்சூத்திரங்கட்கு ‘இசை நுணுக்கம்’ எனப் பெயர் வழங்கிற்று. இசை என்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கை முதல்நூல் எனப்படும். இசைநுணுக்கம் என்னும் பெயரான் இசைத்தமிழே கூறுவதாகிய நூலொன்றுமுண்டு. அது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன் பொருட்டுச் செய்த இடைச்சங்க காலத்து வழிநூல். (பா. வி. பக். 96, 97)

இசைமரபு -

{Entry: P16a__100}

இசையிலக்கணம் கூறும் ஒருநூல். (சீவக. 658 நச்.)

இடைக்காடனார் -

{Entry: P16a__101}

எழுத்தல்லாத முற்கு, வீளை முதலாயின செய்யுளில் வந்தால் அவை செய்யுள்நடை அழியாமல் அசை சீர் தளை முதலா யின பிழையாமல் கொண்டு வழங்கப்படும். இடைக்காடனார் பாடிய ஊசிமுறி இவ்வகைய எழுத்தல்லாத ஓசை செய்யுள் நடை அழியாவாறு எழுதப்பட்ட யாப்பினை உடையது. விட்டி சைக்கும் தற்சுட்டுக் குறிப்புச்சொற்கும் இவர் பாடலே எடுத்துக் காட்டாக வுள்ளது. (யா. வி. பக். 396, 153)

இடைச்சியார் -

{Entry: P16a__102}

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைப் பாடல்களிடை இதுவும் ஒன்று. தெருவிடை மோர் விற்றுக் கொண்டு செல்லும் இடைக்குலக் கன்னியின் எழில் நலம் தன் உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக் கூறும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது.

( மதுரைக் கல. 63)

இணைமணிமாலை -

{Entry: P16a__103}

வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து, வெண்பாஅகவல் இணை மணி மாலை, வெண்பாக்கலித்துறை இணைமணிமாலை என நூறு நூறு அந்தாதித்தொடையாக வரப் பாடுவது இணை மணிமாலை என்னும் பிரபந்தத்து இலக்கணமாம். முதற் பாடலின் முதற்சீரும் இறுதிப் பாடலின் இறுதிச்சீரும் மண்டலித்து வருதல் அந்தாதித் தொடையால் அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். (இ. வி.பாட். 58)

இந்திர கணம் -

{Entry: P16a__104}

செய்யுட் கணங்களுள் ஒன்று. இதனைச் சுவர்க்க கணம் என்றும் கூறுப. கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப் பாகக் கொள்ளப்படும். முற்றும் நேராகிய தேமாங்காய் இந்திர கணமாம். இதற்குரிய நாள் பரணி என்றார் இந்திர காளியர். இதன் பலன் பெருக்கம் செய்தல் என்றார் மாமூலர். இன்பம் செய்தல் என்றார் இந்திரகாளியர். ஆகவே முதற் சீர்க்கு எடுத்த சீர்களுள் இதுவும் ஒன்று.(இ.வி.பாட். 40 உரை)

இந்திரகாளியம் -

{Entry: P16a__105}

இஃது ஓர் இசைத்தமிழ்நூல்; யாமளேந்திரரால் இயற்றப் பட்டது. (சிலப். பதிகம்.அடியார்க். உரை)

இயமான கணம் -

{Entry: P16a__106}

சுவர்க்க கணம் எனவும், இந்திர கணம் எனவும், சொல்லப் பெறும். பாடப்படும் முதற்பாடலின் முதற்சீர் தேமாங்காய் என்ற வாய்பாட்டால் நிகழ்வது. இதற்குரிய நாள் பரணி யாகும். (இ. வி. பாட். 40 உரை)

இயலிசை அந்தாதி -

{Entry: P16a__107}

பொருளானன்றி ஓசையான் முதற்பாடலின் அந்தம் அடுத்த பாடலின் ஆதியாக வருவது.

எ-டு : ‘புரிவதும் புகைபூவே’ என முதற்பாடல் முடிய, அடுத்த பாடல் ‘மதுவார் தண்ணந் துழாயான்’ என மகர வருக்க ஒசையில் தொடங்கும் அந்தாதிவகை இயலிசை அந்தாதி எனப்படும். (ஈ.டு 1:6:2 ஜீயர் அரும்பதவுரை)

இது பொருளிசை அந்தாதிக்கு மறுதலையானது. (பூவின் ஆகுபெயராக மது வந்தமையால் இஃது ஆகுபெயரந்தாதி யாம்.)

இயற்சீரின் கணம் -

{Entry: P16a__108}

தொடர்நிலைச் செய்யுளின் முதற்சீர் தேமா புளிமா வாகிய நேரீற்று இயற்சீரும், கூவிளம் கருவிளமாகிய நிரையீற்று இயற்சீருமாயிருப்பின் அவற்றுக்கும் பின்வருமாறு கணம் கூறப்படும்:

சீர் கணம் தெய்வம்

தேமா சுவர்க்கம் பிரமன்

புளிமா சந்திரன் இலக்குமி

கூவிளம் நீர் கருடன்

கருவிளம் நிலம் சுரபி (இ.வி.பாட். 42)

இயற்றமிழ் -

{Entry: P16a__109}

இயலிசைநாடகம் என்னும் முத்தமிழுள் முதலாயது. இசை யும் நாடகமும் நீங்கலான ஏனைய இலக்கிய இலக்கணங்கள் செய்யுளும் உரைநடையுமாக இயல்வன இயலுள் அடங்கும்.

இரங்கற்பா -

{Entry: P16a__110}

இறந்தவர்மீது வருந்திப் பாடும் சரமகவி. (L)

இரட்டை மணிக்கோவை -

{Entry: P16a__111}

பத்து வெண்பாவும் பத்து அகவலும், ஒரு பாவினை அடுத்து மற்றொருபா வருமாறு அந்தாதித்தொடையால் மண்டலித்து வரப் பாடுவதொரு பிரபந்தம். இவ்விலக்கணம் சாமிநாதத் தில் மாத்திரமே காணப்படுகிறது. (சாமி. 169)

இரட்டை மணிமாலை -

{Entry: P16a__112}

முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும் அடுத்து வெண்பாவும் கலித்துறையுமாக. இவ்வாறு அந்தாதித் தொடையான் இருபது பாடல் பாடப்படும் பிரபந்தம். முதற் பாடலுடன் இறுதிப் பாடல் மண்டலித்து வரும்.

(இ. வி. பாட். 59)

இரணமா மஞ்சுடை -

{Entry: P16a__113}

வடமொழிவழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் சந்தங்கள் தாண்டகங்கள் இவற்றின் பலவகைகளுடைய இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 523)

இராச பவித்திரப் பல்லவ தரையர் -

{Entry: P16a__114}

அவிநயனார் இயற்றிய அவிநயநூல் உரையாசிரியர். ‘பெயர் வினை யும்மை’ (நன். 359) என்னும் சூத்திரத்துள் கூறிய பத்துவகை எச்சங்கட்கும் இராச பவித்திரப் பல்லவதரையர் மொழிந்தவாறு மயிலைநாதர் உரை கூறினார். ‘இந்தப் பத்தெச்சமும் புவிபுகழ் புலமை அவிநயநூலுள் தண்டலம் கிழவன் தகைவரு நேமி எண்டிசை நிறை பெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி என்றறிக’ என்பது அவர் உரை.

இராசி உரிமை -

{Entry: P16a__115}

வெண்பாவிற்கு உரிய இராசி கடகம், விருச்சிகம், மீனம் என்பன. ஆசிரியப்பாவிற்குரிய இராசி மேடம், சிங்கம், வேணு (வில்) என்பன. கலிப்பாவிற்கு உரிய இராசி மிதுனம், துலாம், கும்பம் என்பன. ஏனைய வஞ்சிப்பாவிற்குரிய இராசி இடபம், கன்னி, மகரம் என்பன. (இ. வி. பாட். 122)

இராட்சத கணம் -

{Entry: P16a__116}

கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் என்பன. (விதான. கடிமண உரை)

இராமாநுச கவிராயர் -

{Entry: P16a__117}

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த இயற்றமிழ் ஆசிரியர். இவர் நாற்பது வயதுக்குப் பின்னரேயே கற்றுப் புலமைப் பெற்றார் என்பர். இவருடைய ஆசிரியர் சிவஞான முனிவருடைய மாணவருள் ஒருவராகிய சோமசுந்தரக் கவிராயர் (முனிவருடைய மாணாக்கர் பரம்பரையைச் சார்ந்த வராகச் சோமசுந்தரக் கவிராயர் இருத்தலும் கூடும்) இவருடைய மாணாக்கர்களாக விசாகப்பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர், டாக்டர் போப்பையர் முதலி யோர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றனர். நாயுடு வகுப் பினைச் சேர்ந்த இவர் இயற்பெயர் இராமாநுசர் என்பது. ஆசுகவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவர் என்பது இவரது வரலாற்றில் காணப்படும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, திருக்குறள், நன்னூல் இவற்றுக்கு இவர் உரை இயற்றியுள்ளார். திருவேங்கட அனுபூதி, பார்த்தசாரதி பதம் புனை பாமாலை, வரதராசர் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் பஞ்சரத்தின மாலிகை, இலக்கணச் சுருக்கம் என்பன இவரியற்றிய நூல்களாம். குடாரம் என்ற மறுப்பு நூலொன்றும் ஆத்தும போதப் பிரகாசிகை என்னும் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றும் இவரால் ஆக்கப்பட்டவையாக அறிய முடிகிறது. இவ ருடைய பேருதவி, தாம் ‘ஆங்கிலம் - தமிழ்அகராதி’ தொகுக்கப் பெரிதும் பயன்பட்டதாக வின்ஸ்லோ அவ்வக ராதி முன்னுரையில் குறித்துள்ளார். இவர் 1853இல் உயிர் நீத்ததாகத் தெரிகிறது.

இராமாயணம் -

{Entry: P16a__118}

கம்பர் இயற்றிய இராமாவதாரப் பெருங்காப்பியத்திற்கு மிக முற்பட்டுத் தமிழில் பல அடியான் வந்த பஃறொடை வெண் பாக்களையும் உள்ளடக்கிய ‘இராமாயணம்’ என்ற பெருங் காப்பிய நூல் இருந்தமை யா.க. விருத்தி உரையினால் உணரப்படுகிறது. (யா. வி. பக். 250)

இருக்குக் குறள் -

{Entry: P16a__119}

சிறிய பாவகை; ‘ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி’ (பெரியபு. திருஞான. 276); இரு சீரான் இயன்ற அடி உடைய பாட்டுத் ‘திருவிருக்குக் குறள்’ எனச் சம்பந்தர் தேவாரத்துள் ளும் திருவாய்மொழியுள்ளும் காணப்படும்.

‘அரனை உள்குவீர்

பிரம னூருளெம்

பரனை யேமனம்

பரவி உய்ம்மினே’ (தே. I - 90-1)

இவ்விருக்குக் குறளின்கண், குறளடியில் சீர் இயற்சீராகவே வந்தவாறு.

இருபா இருபஃது -

{Entry: P16a__120}

பிரபந்தவகைகளுள் ஒன்று, பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித் தொடையாக இருபது இணைந்து வருவது. முதலும் இறுதியும் பாடல் மண்டலிக்கும். (இ. வி. பாட். 62)

இலக்கணக்கொத்து -

{Entry: P16a__121}

17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகரால் சொல்லிலக் கணம் பற்றிய பல இலக்கண நூல்களிலும் உரைகளிலும் இலைமறை காய்போலப் பொதிந்து கிடந்த அருஞ்செய் திகள் பலவும் தொகுத்துரைக்கப்பட்ட அரிய இலக்கணநூல். இந்நூல், பாயிரமாக அமைந்த 12 நூற்பாக்களொடு, வேற்று மையியல், வினையியல், ஒழிபியல் என்னும் முப்பகுப்புக் களையுடையது. நூற்பா 131. இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் என்னும் இருநூல்கட்கும் இந்நூல் பிற்பட்டது, அவ்விரண்டற்கும் அவ்வவ்வாசிரியரே உரையும் வரைந்தாற் போல, இந்நூலுக்கும் இவ்வாசிரியர் உரை வரைந்துள்ளார். தமிழ்நூலார் பல வடமொழி இலக்கணச் செய்திகளை யுணர இந்நூல் பெரிதும் துணைசெய்யும். இந்நூற்பயிற்சி பிரயோகவிவேகம் பயிலுதற்குப் பெரிதும் துணைசெய்வது. தஞ்சைச் சரசுவதிமகால் பதிப்பு மிக விழுமியது. அதன்கண் விளக்கவுரை அறிஞர்க்கு விருந்தூட்டவல்லது.

இலக்கணவிளக்கச் சூறாவளி -

{Entry: P16a__122}

வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கணவிளக்கத்து எழுத் ததிகார சொல்லதிகாரங்களுள் சில சூத்திரக் கருத்துக்களை மறுத்த தமது உரைக்குச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்று பெயரிட்டார். இலக்கணம் ஆகிய விளக்கை அணைந்து போமாறு வீசிய சூறைக்காற்று என்பதே பொருள். இச்சூறாவளி மறுப்புரை பொருந்தாமை அரசஞ் சண்முகனார் உரை முதலியவற்றால் தஞ்சைச் சரசுவதி மகால் இலக்கண விளக்க எழுத்ததிகார சொல்லதி காரப் பதிப்பில் ஐயம் திரிபறப் புலப்படுத்தப்பட்டுள்ளமை தமிழறிஞர்தம் நடுவுநிலை ஆய்வுக்கொரு கலங்கரை விளக்கம் போல உதவும்.

இலக்கணவிளக்கப் பாட்டியல் நுவல்வன -

{Entry: P16a__123}

பாட்டின்கண்ணவாகிய இலக்கணம், நூலின்கண்ணவாகிய இலக்கணம், உரையின்கண்ணவாகிய இலக்கணம், பிசியின் கண்ணவாகிய இலக்கணம், முதுசொற்கண்ணவாகிய இலக்கணம், மந்திரவாய்மைக்கண்ணவாகிய இலக்கணம். குறிப்புமொழிக்கண்ணவாகிய இலக்கணம், வழக்கும் செய்யுளுமாகிய ஈரிடத்தும் நடக்கும் இருவகை மரபின் இலக்கணம், நால்வகை வருணத்து இலக்கணம், நாற்புலவர் இலக்கணம், அவை இலக்கணம், அகலக்கவி செய்து கொடுப்போர் இலக்கணம், அதனைக் கொள்வோர் இலக்கணம் ஆகிய பதினான்கனோடும் ஏற்பன பிறவும் ஆம். பிற இலக்கணமாவன நான்குபாவிற்கும் வருண உரிமையும், நில உரிமையும், நிற உரிமையும், நாள் உரிமையும் இராசி உரிமையும் கோள் உரிமையும் அக்கோள்கட்கு உரிய பூவும் சாந்தும் கலையும், அகலக் கவியைக் கொள்ளும் ஓரையும் என்றவாறு.

இலக்கணவிளக்கம் -

{Entry: P16a__124}

பதினேழாம் நூற்றாண்டினரான பெரும் புலவர் வைத்திய நாத தேசிகரால் எழுத்தும் சொல்லும் பொருளும் பற்றி இயற்றப்பட்ட சீரிய இலக்கண நூல். ‘குட்டித் தொல்காப்பி யம்’ என இது வழங்கப் பெறுதலே இதன் பெருமைக்குச் சான்று. நூல் ஆசிரியரே உரையாசிரியரும் ஆவர். இதன்கண் 941 நூற்பாக்கள் உள.

இந்நூலின் மிக விழுமிய பதிப்புத் தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடு. அரிய விளக்கமும் ஆராய்ச்சியுமுடைய அதனைப் பின்பற்றியே கழகப்பதிப்பு முதலாகப் பிற வெளிவந்துள்ளன.

இந்நூலின் பெருமையினைக் குறைக்க இலக்கண விளக்கச் சூறாவளி என்ற கண்டனநூல் அடுத்த நூற்றாண்டில் வெளி யிடப்பட்டது. ஆயினும் இந்நூலின் பெருமை குன்றாது இன்றும் நின்று நிலவுகிறது.

இலம்பகம் -

{Entry: P16a__125}

பெருங்காப்பியத்துள் உட்பிரிவு. சீவகசிந்தாமணியுள் நாமகள் இலம்பகம் முதலாக வருதல் காண்க. (தண்டி. 8)

இலேசு -

{Entry: P16a__126}

நூற்பாவுள் வரும் மிகையான சொல். அதனால் சில கருத் துக்களை வருவித்துரைப்பது உரையாசிரியர்தம் கொள்கை.

இளம்பாலாசிரியன் -

{Entry: P16a__127}

ஐந்து வயதுக்குட்பட்ட இளம்பாலார்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். அகநா. 102ஆம் பாடல் பாடிய ஆசிரியர் இளம் பாலாசிரியன் சேந்தங்கூத்தன் எனப்பட்டார். (L)

இளம்பூரணர் -

{Entry: P16a__128}

தொல்காப்பியத்திற்கு முதலாக உரை வரைந்த பெரியார்; இவரைப் பெயர் சுட்டாமல் உரையாசிரியர் என்றே வழங்கு வர். இளம்பூரண அடிகள் என்றும் கூறுப. இவரது காலம் 12 ஆம் நூற்றாண்டென்ப. ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர் என்னும் ஏதமில் மாதவர்’ என்று மயிலைநாதரால் போற்றப் படுபவர். (நன். 359 மயிலை.)

இறையனார் -

{Entry: P16a__129}

குறுந்தொகை இரண்டாம் பாடலை இயற்றிய கடைச்சங்கப் புலவர். இறையனார் சிவபெருமானையே குறிப்பதாகக் கொண்டு புராண வழக்கொடு தொடர்புறுத்திக் கூறவும்படும். ‘அன்பின் ஐந்திணை’ முதலாகத் தொடங்கும் 60 சூத்திரங் களையும் கொண்ட அகப்பொருள் நூல் இறையனார் அகப்பொருள் எனவும் இறையனார் களவியல் எனவும் பெயர் வழங்கப்படுகிறது.

இறைவன் அருளியதால் பிற்காலத்தே தோன்றினும் இதனை முதல்நூலே என்பர். (தொ. பொ. 649 பேரா. உரை)

இறையனார் அகப்பொருள் -

{Entry: P16a__130}

கடைச்சங்க காலத்தை ஒட்டி எழுந்ததோர் அகப்பொருட் சுருக்கநூல். இதன்கண் 60 நூற்பாக்கள் உள்ளன. அவற்றுள் களவு பற்றியன 33; கற்புப் பற்றியன 27. இந்நூலில் களவு பற்றிய பகுதி மிக்கிருத்தலின் அம்மிகுதி பற்றியே இந்நூலை இறைய னார் களவியல் என்றும் கூறுவர். இதனை இயற்றியவர் சிவபெருமானே என்பது முன்னோர் கருத்து. இறையனார் என்ற புலவரது படைப்பு இஃது என்பது இக்காலத்தார் துணிபு. 60 அழகிய நூற்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு விரிவான சிறந்த உரை ஒன்றுளது. கடைச்சங்க காலத்தை யொட்டிய இந்நூலுக்கு வரையப்பட்ட உரைப்பகுதிகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிக் கோவையோடு இணைக்கப்பட்டமைந்த உரையே இப்போது காணப்படு கிறது. தமிழில் இப்போது காணப்படும் உரைகளில் இது பழமையானது. (உரையாசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பது தொன்றுதொட்டுத் துணியப்பட் டமை தொ.பொ. 649 பேரா. உரையாலும் அறியலாகும்.)

இந்நூற் கருத்துக்கள் சில தொல்காப்பியத்துடன் மாறு பட்டிருப்பினும் கற்க வேண்டிய சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இஃது இறைவன் அருளியதாதலின் பிற்காலத்தே தோன்றினும் இது முதல்நூலேயாம் என்பது தொல்லா சிரியர் துணிவு (தொல். பொ. 649 பேரா. உரை)

இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் செய்தான் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக் கூடல் ஆலவா யில் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாக வுடைய அழலவிர்சோதி அருமறைக் கடவுள் என்பது’ என்று காணப்படும் தொடரால் இந்நூலை ஆலவாய்ப் பெருமான் அடிகளே இயற்றியருளினார் என்பது முன்னை யோர் கோட்பாடு. (இறை. அ. 1 உரை) அரசஞ் சண்முகனா ரும் இக்கருத்தினரே. (பா. வி. பக். 90)

இறையனார் அகப்பொருள் உரை -

{Entry: P16a__131}

இவ்வுரை சொற்பொருள் நலம் சான்றது. மோனை எதுகை நயம்படச் சிலவிடத்தே நெடிய தொடராக நிகழ்வது; உவமைகள் பல இடையிடையே மிடையப் பெற்றது. இதனை இயற்றியவர் நக்கீரர். இவர் சங்ககாலப் புலவர் அல்லர் என்பதும் அப்பெயரிய பிற்காலத்தொருவரே என்பதும் இக்காலத்து ஆய்வாளரின் துணிபு. இன்று காணப்படும் உரைகளில் இதுவே பழமை மிக்கது என்பது தெளிவு.

இன்கவி -

{Entry: P16a__132}

1. மதுரகவி 2. மதுரகவிபாடும் புலவன் (யா. வி. பக். 551)

இன்பசாகரம் -

{Entry: P16a__133}

ஒரு காமநூல். (தத்துவப் 155 உரை.) (L)

இன்பமடல் -

{Entry: P16a__134}

பவனிக்காதல், இன்பமடல், விரகமாலை என்னுமிவை தம்முள் சிறிது வேறுபாடுடையன. தனது காமமிகுதியைத் தலைவி கூறுவதாக அமையும் பிரபந்தம் இன்பமடலாம். (சாமி. 168)

இன்மணியாரம் -

{Entry: P16a__135}

நாட்டியத்திற்குரிய நடச்செய்யுள்களாகிய வரி, குரவை, மதலை, மேடம், முரி, தாழிசை, முன்னிலை வாழ்த்து, தேவபாணி, சிற்றிசை, நேரிசை, பாவைப்பாட்டு, மடல் போல்வன ‘இன்மணியாரம்’ என்ற நாட்டிய நூலால் அறியப்படும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக். 583)

இன்னிசைமாலை -

{Entry: P16a__136}

அகப்பொருள்பற்றிய ஓர் இலக்கியம். கள. கா. பக். 24 (L)

உ section: 19 entries

உண்டிப் பொருத்தப் புறனடை -

{Entry: P16a__137}

அமுத எழுத்தும் நச்செழுத்தும் செய்யுள் முதன்மொழிக் கேயன்றித் தசாங்கத்தயலிலும் வருதலும் வாராமையும் முறையே பொருந்தும். (இ. வி. பாட். 210)

உண்டிப் பொருத்தம் -

{Entry: P16a__138}

க ச த ப ந ம வ என்னும் மெய் ஏழோடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு உயிரும் செய்யுள் முதல் மொழிக்கு அமைதல் அமுத எழுத்தாகிய உண்டிப் பொருத் தம் ஆம். ய ர ல ள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும், அவ்வொற்றுக்களும், ஆய்தமும், மகரக்குறுக்க மும் செய்யுள் முதல்மொழிக்கு ஆகா நச்செழுத்து ஆதலின், அவை நீக்கப்படும். மங்கலமாக எடுத்த மொழிக்கண் இவ் வெழுத்துக்கள் வரின், அவை குற்றமுடைய அல்ல. இவ் வுண்டிப் பொருத்தம் தசாங்கத்தயலிலும் அமையும்.

(இ. வி. பாட். 19, 20, 21)

உதயணன் கதை -

{Entry: P16a__139}

இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக, னகர ஈற்றான் இற்றுப் பொருள் தொடர்ந்த இலக்கியமாக உதயணன் கதை உரைக்கப்பட்டுள்ளது. (தொ. செய். 240 பேரா., நச்.)

உந்தியார் -

{Entry: P16a__140}

சிறுமியர் விளையாட்டாகிய ‘உந்தி பறத்தல்’ என்பதனை அடியாகக் கொண்டு சிறந்த தத்துவக் கருத்துக்களை மூன்றடிப் பாடலாகப் பல புனைந்து பாடும் பிரபந்த விசேடம். பாட்டின் இறுதியிரண்டடியும் ‘உந்தி பற’ என முடியும். மாணிக்கவாசகர் அருளிய ‘திருவுந்தியார்’, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்களுள் ஒன்றாகிய ‘திருவுந்தியார்’ என்பன எடுத்துக்காட்டுக்களாம். அவற்றது பெருமை கருதித் ‘திரு’ என முன்னும் அடைமொழி கூடிற்று; விகுதியாக ஆரைக்கிளவி ‘நாலடியார்’ போலப் புணர்ந்தது.

உயிர்மெய் வருக்க நாள்கள் -

{Entry: P16a__141}

க கா கி கீ - திருவோணம்

கு கூ - திருவாதிரை

கெ கே கை - புனர்பூசம்

கொ கோ கௌ - பூசம்

ச சா சி சீ - ரேவதி

சு சூ செ சே சை - அசுவினி

சொ சோ சௌ - பரணி

ஞா ஞி ஞெ ஞொ - அவிட்டம்

த தா - சுவாதி

தி தீ து தூ தெ தே தை - விசாகம்

தொ தோ தௌ - சதயம்

ந நா நி நீ நு நூ - அனுடம்

நெ நே நை - கேட்டை

நொ நோ நௌ - பூரட்டாதி

ப பா பி பீ - உத்தரம்

பு பூ - அத்தம்

பெ பே பை பொ போ பௌ - சித்திரை

ம மா மி மீ மு மூ - மகம்

மெ மே மை - ஆயிலியம்

மொ மோ மௌ - பூரம்

யா - உத்தரட்டாதி

யூ, யோ - மூலம்

வ வா வி வீ - உரோகிணி

வெ வே வை வெள - மிருக சீரிடம்

இவ்வாறு உயிர்மெய் வருக்கஎழுத்துக்கட்கு உரிய நாள்கள் கொள்ளப்படும். (இ. வி. பாட். 27-35)

உரிச்சொற் பனுவல் -

{Entry: P16a__142}

நிகண்டு நூல்; ‘பிங்கலம் முதலான............... உரிச்சொற் பனுவல் களுள்’ (மயிலை.) நிகண்டு நூல்களைத் தமிழ்நூலார் உரிச் சொல் பனுவல் என்றலே முறை. பிற்காலத்து ‘உரிச்சொல் நிகண்டு’ என ஒருபொருட்பன்மொழியாகப் பெயர் வழங்கலாயிற்று. (நன். 459)

உரிச்சொல் நிகண்டு -

{Entry: P16a__143}

காங்கேயர் இயற்றிய வெண்பாவான் அமைந்த ஒரு நிகண்டு நூல். (நிகண்டு - கூட்டம்.) (L)

உரூபாவதாரம் -

{Entry: P16a__144}

ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவரால் இயற்றப் பட்ட வடமொழி இலக்கண நூல். இது பாணினியின் சூத்திரங் கட்கு உரை போல அமைவது. ‘நீதகஸ்லோகம்’ என்ற முதல் நினைப்புச் சூத்திரம் இந்நூலுக்குண்டு. யாப்பருங்கலக் காரிகை முதல்நினைப்புக்காரிகைகளை யுடையது என்ப தனைக் குறிக்குமிடத்தே, உரையாசிரியர் குணசாகரர் ‘உரூபாவதாரத்திற்கு நீதகச்சுலோகமே போலவும்’ என உதாரணம் கூறுகிறார். (யா.கா. பாயிரம் உரை)

உரையாசிரியர் -

{Entry: P16a__145}

1. உரையாசிரியன்மார்

2. இளம்பூரணர்; ‘உரையாசிரியரும் உயர்திணை எனப்பட்ட பகுப்பை விரிப்புழி.....................’ (தொல்.சொல். 2 சேனா) (L )

உரையாசிரியன் -

{Entry: P16a__146}

உரைகாரன்; ‘நூல் உரை போதகாசிரியர் மூவரும்’ (இ. கொ. 6 : 23) (L)

உலக்கைப் பாட்டு -

{Entry: P16a__147}

உலக்கையால் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடும் ஒருவகை இசைப்பாடல் வள்ளைப்பாட்டு. இப்பாட்டுள் ஒரு தலைமகனது வீரம் முதலியவை இடம் பெறும்.

சிலப்பதிகாரத்துள் வாழ்த்துக்காதைக்கண் ‘தீங்கரும்பு நல்லுலக்கையாக’ முதலான பாடல் மூன்றும் வள்ளைப் பாட்டு. கலித்தொகையிலும் (41, 42, 43) வள்ளைப்பாட்டு இடைநிலைப் பாடல்களாக வந்துள்ளது.

உலா -

{Entry: P16a__148}

இளமைப் பருவமுற்ற தலைமகனைக் குலத்தானும் குடிப் பிறப்பானும் மங்கலங்களானும் பரம்பரையானும் இன்னான் என்பது தோன்றக் கூறி, பெரும்பாலும் அணிகலன்களான் அலங்கரித்துக்கொண்டுள்ள மகளிர் நெருங்கிய அழகிய பரத்தையர் வீதியிடத்து அன்னோன் பவனி வரப் பேதை முதலிய ஏழ் பருவ மானார் கண்டு தொழ உலாவந்ததனைப் பாடுவது இப்பிரபந்தம் ஆம். நேரிசைக் கலிவெண்பாவால் இவ்விரண்டடி ஓரெதுகையாய்த் தனிச்சீர் பெற்றுவர இது பாடப்படும். இவ்விரண்டடியாகிய இவ்வமைப்புக் ‘கண்ணி’ எனப்படும். (இ.வி.பாட். 98)

எ-டு : விக்கிரமசோழனுலா

உலாமகள் பருவம் -

{Entry: P16a__149}

ஐந்து முதல் ஏழ் ஆண்டு அளவும் பேதை; எட்டு முதல் பதினோர் ஆண்டு அளவும் பெதும்பை; பன்னிரண்டு பதின் மூன்று ஆண்டு அளவும் மங்கை; பதினான்கு முதல் பத் தொன்பது ஆண்டு அளவும் மடந்தை; அதன்மேல் ஆறாண்டு அளவும் அரிவை; இருபத்தாறுமுதல் முப்பத்தோர் ஆண்டு அளவும் தெரிவை; முப்பத்திரண்டு முதல் நாற்பது ஆண்டு அளவும் பேரிளம்பெண். இவ்வாறு ஏழு பருவ உலாமகட்கு வயது எல்லை சொல்லப்படும்.

இவ்வயது எல்லை பாட்டியல் நூல்களில் சிறிதுசிறிது வேறுபடும்.

பன்.பாட் வெண்.பாட் நவ.பாட். சித.பாட் பி.ம
பேதை-ஆண்டு 5 -8 5 -7 5 -6 7 வயது வரை 7வயதளவு
பெதும்பை - ” 9 - 10 8 - 11 7 - 10 8 -11 8 - 11
மங்கை - ” 11 - 14 12 11, 12 12 - 13 12 - 13
மடந்தை - ” 15 - 18 13 - 18 13 - 18 14 - 19 14 - 19
அரிவை 19 - 24 19 - 25 19 - 24 20 - 25 20 - 25
தெரிவை 25 - 29 26 - 31 25 - 30 26 -31 26- 30
பேரிளம் பெண் 30 - 36 32 - 40 31 - 40 32 - 40 31 - 40

(இ. வி. பாட். 99 - 103)

உலாமடல் -

{Entry: P16a__150}

கனவின்கண் ஒரு பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந் தோன், விழித்தபின், “அவள் பொருட்டாக மடலூர்வேன்” என்று கலிவெண்பாவால் சாற்றுதல் உலாமடலாம். இதுவும் உலாப் போல இவ்விரண்டடி ஓரெதுகையாய்த் தனிச்சொல் பெற்று நேரிசைக்கலி வெண்பாவால் அமைவது.

(இ. வி. பாட். 97)

உலோக விலாசனி -

{Entry: P16a__151}

இஃது ‘ஆடைநூல்’ போலத் தன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரத்தக்கது.

(யா. வி. பக். 491)

உழிஞை மாலை -

{Entry: P16a__152}

மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூமாலை சூடிப் படை வளைப்பதைக் கூறும் பிரபந்தம். மாலை யெனவே அந்தாதி யாகப் பாடல்கள் வரத் தொடுக்கப்படும் என்பது; மண்ட லித்து வருதலும் கொள்ளப்படும். (தொ. வி. 283 உரை)

உழத்திப்பாட்டு -

{Entry: P16a__153}

உழவுச் செய்திகளைக் கூறும் பிரபந்தவகை. கடவுள் வணக்கம், மூத்த பள்ளி - இளையபள்ளி - குடும்பன் - வரவோடு அவன் பெருமை கூறல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளன் முதலான உறுப்புக்கள் உற, பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்ற, சிந்தும் விருத்தமும் வரப் பாடுவது என, முக்கூடற் பள்ளினை இலக்கியமாகக் கொண்டு சதுரகராதி இப்பிரபந்த இலக்கணம் கூறும்.

வேந்தனைப் பெயர் கூறி அவன் வாழ்க என்று தொடங்கி வயலுள் நிகழும் தொழில்களை ஒருசேரத் தான் உணர்ந்த னள் எனப் பாடும் பத்துப்பாடல் தொகுப்பு உழத்திப்பாட் டாம். (பன். பாட். 335)

உள்ளுறை -

{Entry: P16a__154}

ஆசுகவிக்குக் கொடுக்கும் சமதியை. ‘ஒருவன் நேர்கொடுத்த உள்ளுறைக்கப்போது உரைப்பதனை ஆசென்றார்’ (வெண்பாப் செய். 2) (L)

உற்பவமாலை -

{Entry: P16a__155}

திருமாலின் பிறப்புப் பத்தனையும் அகவல்விருத்தத்தால் அந்தாதித்தொடையுறப் பத்துப்பாடல் பாடும் பிரபந்தம்.

(இ. வி. பாட். 108. )

திருமாலின் தசாவதாரமும் தோன்ற வாழ்த்திப் பாட்டுடைத் தலைவனைக் காக்குமாறு வேண்டி அகவல் விருத்தம் பத்துப் பாடுவது இதன் இலக்கணமாகப் பன்னிருபாட்டியல் (298) பகரும்.

ஊ section: 9 entries

ஊசல் (1) -

{Entry: P16a__156}

பிரபந்தத் தலைவன் தன்தேவிமாரோடு ஊஞ்சலாடுதலைப் புகழ்ந்து பாடும் ஊசல் என்ற துறை கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.

“யான் பற்பல பிறப்புக்களிலும் உருவம் மாறிப் பிறந்தும் செத்தும் பிறவித்துயரில் ஊசலாடும் செயல் நீங்குமாறு, என் நெஞ்சையே பலகையாகவும் கருணை என்பதனையே ஊஞ் சலைத் தொங்கவிடும் கயிறாகவும் கொண்டு, திருத்துழாய் மாலையும் காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களும் அசையு மாறு, திருமகளோடும் நிலமகளோடும் திருவரங்கப்பெரு மான் ஊஞ்சல் ஆடுக!” (திருவரங்கக். 58) என்றாற் போலப் பாடுவது.

ஊசல் (2) -

{Entry: P16a__157}

1. ஆசிரிய விருத்தத் தாலாவது கலித்தாழிசையாலாவது, சுற்றத் தோடும் பொலிக எனக் கூறி ‘ஆடீர் ஊசல்!’ ‘ஆடோமோ ஊசல்!’ எனச் செய்யுள்தோறும் முடிக்கும் சொல் வரப் பாடும் பிரபந்தம். (இ. வி. பாட். 85)

2. கலம்பக உறுப்புக்களுள் ஓர் உறுப்பாவது ‘ஊசல்’

(இ. வி. பாட். 52.)

3. பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் ‘ஊசல்’ என்பது இறுதிப்பருவம். (இ. வி. பாட். 47)

ஊசல் (3) -

{Entry: P16a__158}

வெண்டளை வழுவாது வரும் தரவுகொச்சகயாப்பினால், ‘ஆடாமோ ஊசல்!’, ‘ஆடீர் ஊசல்!’ என்று ஊசலை வருணித்து, அசைவது போன்ற இசை பொருந்தப் பாடுவது ஊசற்பாட்டாம். (தென். இசைப். 15)

ஊசற்பருவம் -

{Entry: P16a__159}

பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப்பருவம்; ஆசிரியச் சந்த விருத்தம் பத்துடையதாக, ‘ஊசல் ஆடியருளே’ முதலிய வாய்பாடு இறுதிக்கண் முடியப் பாடப்பெறும்.

( இ. வி. பாட். 47)

ஊசிமுறி -

{Entry: P16a__160}

இடைக்காடனார் என்ற புலவர் எழுத்தொலி அல்லாத ஓசை அணுகரணம், விட்டிசை முதலியவற்றைப் பெரும்பாலன வாக அமைத்துப் பாடிய நூல் ஊசிமுறி எனப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் அமைக்க முடியாத பாடல்கள் எழுத்தாணி கொண்டு எழுத மறுப்பது பற்றி ஊசி பயன்படாமை கருதி ஊசிமுறி எனப்பட்டது இந்நூல். (யா. வி. பக். 396)

ஊஞ்சற்பாட்டு -

{Entry: P16a__161}

ஊஞ்சல் ஆடும்போது பாடும் பாட்டு; ஊசல்வரி, ஊசற்சீர் என்பனவும் அது.

ஊர்இன்னிசை -

{Entry: P16a__162}

பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார இன்னிசைவெண் பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 65)

ஊர்நேரிசை -

{Entry: P16a__163}

பாட்டுடைத்தலைவனது ஊரைச் சார்ந்து வர நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதே னும் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 70)

ஊர் விருத்தம் -

{Entry: P16a__164}

தலைவனது ஊரை விருத்தச்செய்யுள் பத்தினாற் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 93)

எ section: 7 entries

எண்வகைமாலை -

{Entry: P16a__165}

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்னும் மாலைகள். (பிங். 734)

எச்சரிக்கை -

{Entry: P16a__166}

எச்சரிக்கை என்று ஈற்றடியில் முடியும் பலபாடல்களால் இயன்ற பிரபந்தமும் உண்டு. இரு பெரும்பாலும் கோயில் களில் இறைவன் சந்நிதியில் பாடப்படும். (இ. வி.பாட்.பிற். 7)

எட்டாம் திருமுறை யாப்பு -

{Entry: P16a__167}

திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை யாவன. நேரிசைவெண்பா, ஆசிரியப்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கலிநிலைத்துறை, கலிவிருத்தம், (6, 8, 12, சீர்) ஆசிரிய விருத்தம், 4, 6, 8 அடிகளால் வரும் தரவு கொச்சகம், பலவகைச் சீர்களாலாகிய அடக்கலப்பத்துப் பதிகம், கட்டளைக் கலித்துறை என்பன இத்திருமுறையில் பயில்வன.

திருக்கோவையார் முழுதும் கட்டளைக் கலித்துறை. திருவெம்பாவை, வெண்டளையான் வந்த இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

திருவம்மானை திருப்பொன்னூசல் இவை ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா.

எண்செய்யுள் -

{Entry: P16a__168}

பாட்டுடைத் தலைவனின் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரம் அளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ்வெண்ணால் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுள் ஆகும். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன. (இ. வி. பாட். 88)

எழுத்துக்களைப் படைத்த இறைவர் -

{Entry: P16a__169}

12 உயிரெழுத்துக்களையும் நான்முகன் படைத்தான்; 18 மெய்களையும் இரண்டிரண்டாக முறையே அரன், அரி, முருகன், இந்திரன், ஆதித்தன், சந்திரன், இமயன், வருணன், குபேரன் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர். (இ.வி. பாட். 18)

எழுத்துக்குறிவெண்பா -

{Entry: P16a__170}

மந்திர வகையால் தகடுகளில் எழுத்துக்களைப் பொறிக்கும் திறத்தை வெளியிடும் ஒருவகையான வெண்பாநூல். இதனைப் புட்கரனார் என்பவர் இயற்றினர் என்பர்.

‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை

நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்

உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதே

புட்கரனார் கண்ட புணர்ப்பு’

இது மந்திர நூலுள் புட்கரனார் கண்ட எழுத்துக் குறி வெண்பா. இவ்வாறு வருவதை யாப்பருங்கலம் 93ஆம் சூத்திர மாகிய புறனடையாற் கொள்ளுவர் உரையாசிரியர். இது சவலை வெண்பாவில் அடங்கும். (யா. வி. பக். 371)

எழுத்துப் பொருத்தம் -

{Entry: P16a__171}

முதற்சீர் எழுத்தினை எண்ணுமிடத்து வியனிலை ஆகிய மூன் றெழுத்தும் ஐந்தெழுத்தும் ஏழெழுத்தும் ஒன்பதெழுத்தும் பொருத்தமுடையனவாம். சமனிலையாகிய நான்கெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும் பொருந்தாவாம். ஒற்றெழுத் தும் உடன் எண்ணப்படும். (இ. வி. பாட்., 24; பன்.பாட். 14)

ஏ section: 8 entries

ஏசல் -

{Entry: P16a__172}

பிற்காலத்துப் பிரபந்தங்களில் ஒன்று. பள்ளியர் இருவர் தம்முள் தத்தம் மரபு முதலியன கூறி ஏசுவதாகப் பாடப் படுவது.

ஏர்மங்கலம் -

{Entry: P16a__173}

பொன்னேர் பூட்டி நின்றோர் பாடும் ஒருவகையான மங்கலப் பாட்டு. இஃது இசைப்பாடல். (சிலப். 10 : 135)

ஏரம்பம் -

{Entry: P16a__174}

ஒரு கணித நூல். (குறள். 392 பரி. உரை)

ஏலப்பாட்டு -

{Entry: P16a__175}

கப்பற்பாட்டு. படகு செல்லும்போது படகோட்டிகள் ‘ஏலேலம்’ என்று முடியும் தொடர்களையுடைய இசைப் பாட்டுக்களைப் பாடுவர். அவை ஏலப்பாட்டு எனப்படும். (L)

ஏழாம் இலக்கணம் -

{Entry: P16a__176}

அறுவகை இலக்கணம் இயற்றிய தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட பிறிதோர் இலக்கணநூல் இது. இஃது அறுவகை இலக்கணத்திற்குப் புறனடையாக அமைந்துள் ளது. முதற்கண் பாயிரம் பற்றிய செய்யுள்கள் ஏழும், இறுதி யில் யாப்பியல்பு பற்றிய நூற்பாக்கள் பதினாறும் இந்நூலுள் காணப்படுகின்றன.

வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் என்னும் இவற்றின் தளையிடையே சிறுபான்மை வண்ணத்தில் ‘தய்ய தன்னவே தன’ ஆம். வெண்டளை பிழையாக் கலி புரவலர் குலம்; விருத்தம் வணிகச் சாதி; மூன்றசைச்சீர்க் கொச்சகக் கலிப்பா வேளாண் சாதி; பதம், சிந்து ஆதிய பாணர் சாதி; தூநிலை வண்ணம் கற்புடைமகள்; எதுகை மோனைகள் அளவின்றி யும் பிழைபடவும் பாடுதல் பீடு அழிமகள்; பழமை குறையுள தேல் களைக; புதுமை நிறைவுளதேல் கொள்க. இவை இந்நூலிற் காணும் விசேடச் செய்திகள்.

ஏழு பெண்பருவம் -

{Entry: P16a__177}

பெண்மக்கட்குரிய எழுவகைப் பருவம் (திவா. பக். 36) அவை பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் - என்பன.

ஏழு பெண்பருவ வயது:

5 முதல் 7 ஆண்டு அளவும் பேதை,

8 முதல் 11 ஆணடு அளவும் பெதும்பை,

12 , 13 ஆண்டு அளவினள் மங்கை,

14 முதல் 19 ஆண்டு அளவும் மடந்தை,

20 முதல் 25 ஆண்டு அளவும் அரிவை,

26 முதல் 32 ஆண்டு அளவும் தெரிவை

33 முதல் 40 ஆண்டு அளவும் பேரிளம்பெண். (இ. வி. பாட். 99-103)

ஏற்றப்பாட்டு -

{Entry: P16a__178}

ஏற்றம் இறைப்போர் தாம் செயற்படும்போது பாடும் இசைப்பாட்டு வகை. 96 வகைப் பிரபந்தத்துள் அடங்காதது. (இ. வி. பாட். பக். 505)

ஏனைய பாக்களுக்கு நாளுரிமை -

{Entry: P16a__179}

மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை சுவாதி விசாகம் என்ற ஏழ்நாளும் ஆசிரியப்பாவிற்கு உரியன.

அநுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம் என்ற ஏழ்நாளும் கலிப்பாவிற்கு உரியன.

சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி, அசுவினி பரணி என்ற ஆறு நாளும் வஞ்சிப்பாவிற்குரியன.

வெண்பா நீங்கலான மூன்றுபாவும் ஏனைய எனப்பட்டன. அவ்வெண்பாவுக்கு நாள் உரிமையினைத் தனித்தலைப்பிற் காண்க. (கார்த்திகை........ ஆயிலியம்) (இ. வி. பாட். 121)

ஐ section: 4 entries

ஐந்திணைச் செய்யுள் -

{Entry: P16a__180}

புணர்தல் முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறும் பிரபந்தம். (இ. வி. பாட். 89)

ஐந்திரம் -

{Entry: P16a__181}

இந்திரனால் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணமாகிய ஐந்திரவியாகரணம்; ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ (தொ. பாயிரம்)

ஐம்படை விருத்தம் -

{Entry: P16a__182}

திருமாலின் ஐந்து ஆயுதங்களாகிய சக்கரம், வில், வாள், சங்கு, தண்டு என்னும் இவற்றை அகவல்விருத்தத்தால் பாடும் பிரபந்தவகை. (பன்.பாட். 29)

ஐயனாரிதனார் -

{Entry: P16a__183}

புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஆசிரியர்; சேரர் பரம்பரையில் வந்தவர்; தமிழ் நூல்களிற் சிறந்த புலமை மிக்கவர்; சிவபெருமானிடம் ஈடுபாடுடையவர்; சேர மரபினராயினும் சோழ பாண்டியர்களையும் ஒப்பச் சிறப்பித் துள்ளமை இவர்தம் நடுநிலைமை மனப்பான்மையைக் காட்டுவது; சைவ சமயத்தவராயினும், திருமாலையும் உரிய இடத்தே போற்றியுள்ளமை இவர்தம் சமயத்துறைப் பொறையினைக் காட்டும்.

பன்னிருபடலத்தை முதல்நூலாகக் கொண்டு ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றினார். சூத்திரம் கொளு மேற்கோள்பாடல்கள் யாவும் இவர் இயற்றியவையே. இவரியற்றிய புறப்பொருள் வெண்பாமாலையை ஒத்த புறப் பொருள்நூல் தமிழில் பிறிதொன்று தோன்றி நிலைத்திலது.

ஐயனாரிதனார் என்பது திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ் சேரியிலுள்ள சாஸ்தாவின் பெயர். ஆரித கோத்திரத்தைச் சார்ந்தவர் ஆதலின் ஐயன் ஆரிதனார் எனப்பட்டார் என்பதும் ஒன்று.

இவர்காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பர்.

ஒ section: 7 entries

ஒயில்கும்மி -

{Entry: P16a__184}

ஒயில் எனப்பட்ட ஒருவகைக் கூத்து ஒயிலாட்டம் எனவும் பெறும். அக்கூத்துடன் பாடும் கும்மிப்பாட்டும் கூடியது ஒயில் கும்மியாம். கும்மி என்பது பெண்கள் ஆட்டம் எனினும், ஒயில் கும்மி ஆடவர்க்கே உரியது. யாதேனும் ஒரு பழங்கதை அல்லது வரலாறு பற்றி இசையுடன் இளை ஞர்கள் இரவு முழுவதும் இக்கூத்தினைப் பாடியாடும் வழக்கம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது. தைப் பொங்கல்நாளில் இக்கூத்துச் சிறப்புற இடம்பெறும். இருவரிசையாக ஒத்த எண்ணிக்கையில் இளைஞர்கள் தலைப்பாகை முதலிய கோலத்துடன் கைக்குட்டை ஏந்திய வாறே பாடியாடுவர். வள்ளியம்மை ஒயில்கும்மி, சிறுத் தொண்டர் ஒயில்கும்மி எனப் பலவுள. பாட்டின் சந்தம் வேறுபடுமிடத்து ஆட்டமும் வேறுபடும். நாடோடிக் கூத்துக்களில் ஒயில்கும்மி சிறந்ததொன்று.

ஒருதுறைக் கோவை -

{Entry: P16a__185}

அகப்பொருள் துறை ஏதேனும் ஒன்று பற்றிப் பல கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் இயற்றப்படுவதொரு பிரபந்தம் இது. பொன்னாங்கால் அமிர்தகவிராயர் என்பார் ‘நாணிக்- கண் புதைத்தல்’ என்னும் அகப்பொருட் கிளவிபட, தளவாய் இரகுநாத சேதுபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 400 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஒரு துறைக்கோவை பாடியுள்ளார். கவிராயர்காலம் 17ஆம் நூற்றாண்டு. அக்கோவையுள் 311-399 வரையுள்ள 89 பாடல்கள் கிடைத்தில. ‘நாணிக் கண்புதைத்தல்’ என்னும் இத் துறைப்படவே, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘திராவிடக் கவிமணி’ முத்துசாமி ஐயர் என்னும் பெரும் புலவர் ‘திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை’ 133 பாடல்களால் பாடியுள்ளார். ‘நாணிப் புறங்காட்டல்’ ஒருதுறைக்கோவை 100 பாடல்களால் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில், வரகவி மு. கணபதியாப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டு அச்சிடப்பெற்று வெளியாகியது. மற்றும், வெறிவிலக்கல் - பாலனைப் பழித்தல் - முதலிய துறைப்படவும் 19ஆம் நூற் றாண்டில் பாடப்பட்ட ஒரு துறைக்கோவைப் பிரபந்தங்கள் சிலவுள. பாடல் எண்ணிக்கை வரையறையின்றி இப்பிரபந்தம் அமைவதுபோலும்.

மேற்போக்காக நோக்கின் ஒரு புறப்பொருள் துறையும், கூர்த்து நோக்கின் அகப்பொருட்கிளவி ஒன்றும் சிலேடை வகையால் தோன்றப் பாடல்கள் அமையும் இப்பிரபந்தம் பாடுதல் பெரும்புலமை வித்தகர்க்கே இயல்வதொன்று. ஆதலின் கோவைப் பிரபந்தம் பலவாகக் காணப்படுதல் போல, இவ்வொருதுறைக் கோவைப் பிரபந்தம் பல்கிக் காணப்படுவதில்லை.

ஒருபா ஒருபஃது -

{Entry: P16a__186}

அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவினால் பத்துப்பாடல் அந்தாதித்தொடையுறப் பாடப்படும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 63)

திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 10 அகவல்களால் ஆகியது.

ஒலிஅந்தாதி (1) -

{Entry: P16a__187}

பல சந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாகிய முப்பது எண்ணால் அந்தாதித் தொடையாக அமையும் பிரபந்தமாம்.

(இ. வி. பாட். 64)

ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பலசந்த வகுப்புக்கள் அந்தாதியாக 30 செய்யுள் பாடுவது. ‘ஒலியலந்தாதி’ என்பதும் அது. (வெண்பாப். செய். 13)

16 கலை ஓரடியாக வைத்து இங்ஙனம் நாலடிக்கு 64 கலைவகுத்துப் பல சந்தமாக வண்ணமும் கலைவைப்பும் தவறாமல் அந்தாதித்து வர 30 செய்யுள் பாடுவது; சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும்; அன்றியும், வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத் தாக அந்தாதித்துப் பாடுவதும் ஆம். (தொ. வி. 283 உரை)

ஒலியல் அந்தாதி -

{Entry: P16a__188}

‘ஒலிஅந்தாதி’ காண்க.

ஒன்பதாம் திருமுறையாப்பு -

{Entry: P16a__189}

இருபத்தெட்டுத் திருப்பதிகங்களையுடைய திருஇசைப்பா வும், சேந்தனாரின் திருப்பல்லாண்டுமாக அமைந்தது ஒன்பதாம் திருமுறை. திருமாளிகைத் தேவரின் ‘உறவாகிய’, எனும் கோயிற் பதிகம் பன்னிரண்டு ஆசிரியத் துறையால் அமைந்தது. திருஆலிஅமுதனாரின் பாதாதிகேசம் ஏறக் குறைய ஆசிரியத் துறை அமைப்பினையுடைய யாப்பிற்று. திருவாலியமுதனாரின் ‘பவளமால் வரை’ எனும் கோயில் பதிகப்பாடல் அறுசீர் எழுசீரடிகள் விரவியது போன்ற அமைப்பிற்று. சேதிராயரின் கோயில்பதிகப் பாடல் சில ஈற்றடியில் முச்சீர் பெற்றுப் பொதுக் கலிவிருத்தயாப்பின் மாறுபட்டன. இவையெல்லாம் இசை முதன்மைக் காரணம் பற்றிப் புகுந்த யாப்புச் சிதைவுகள் ஆதல் கூடும். பிற வேறுபடாத யாப்பின. (இலக்கணத். முன். பக். 88)

ஒன்பது வகை விருத்தம் -

{Entry: P16a__190}

வில்விருத்தம், வாள்விருத்தம், வேல்விருத்தம், செங்கோல் விருத்தம், யானைவிருத்தம், குதிரைவிருத்தம், நாட்டுவிருத் தம், ஊர்விருத்தம், கொடைவிருத்தம் என்பன. இவை ஒவ்வொன்றும் அகவல் விருத்தம் பத்தால் பாடப்பெறும். (இ. வி. பாட். 93; பன்.பாட். 290)

ஓ section: 7 entries

ஓடப்பாட்டு -

{Entry: P16a__191}

ஓடம் ஓட்டுகையில் பாடப்படுவது; கப்பற்பாட்டு என்பதும் அது. (L)

ஓரைப் பொருத்தம் -

{Entry: P16a__192}

அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும் தத்தம் இன எழுத்துக்களுடன் சார்த்தி, ஐகாரம் இகரத்தொடும் ஒளகாரம் உகரத்தொடும் சார்த்தி ஐவகை ஆக்கி, ஆதித்தன் உதயம் தொடங்கி நன்பகலின் முடிவுவரை ஓர் ஆறு ஆறாக வகுத்தவற்றுள் முன் நின்ற ஓரை மூன்றில் அகலக் கவியைப் புனைந்து இன்புறுதல் முறை. அகலக்கவியின் முதலெழுத்து உயிர்மெய்யாயினும் அதன்கண் உயிரே கொள்ளப்படும். ஏனைய இரண்டு ஓரையும் ஆகா என்பது.

அ. ஆ - உதயம் தொடங்கி முதல் 6 நாழிகை முடிய; 1-3 நாழிகை ஏற்றன.

இ ஈ ஐ 7 முதல் 12 நாழிகை முடிய; 7 - 9 நாழிகை ஏற்றன.

உ ஊ ஒள 13 முதல் 18 நாழிகை முடிய; 13 - 15 நாழிகை ஏற்றன.

எ ஏ 19 முதல் 24 நாழிகை முடிய; 19-21 நாழிகை ஏற்றன.

ஒ ஓ 25 முதல் 30 நாழிகை முடிய; 25- 27 நாழிகை ஏற்றன.

ஒவ்வொரு பகுப்பிற்கும் உரிய அவ்வாறு நாழிகைகளில் முதல் மும்மூன்று நாழிகைகளே ஏற்றனவாம். (இ.வி. பாட். 177)

ஓலைத் தூக்கு -

{Entry: P16a__193}

சீட்டுக் கவியாகிய ஓலைப்பாசுரம். (நன். 53). ‘ஓலைப் பாயிரம்’ (தொ.பொ. 461, பேரா.) என்பதும், ஓலைத்தூக்கு என்பதும் ஓலைப் பாசுரத்தோடு ஒத்த ஒருபொருட்கிளவிகள். (நன். 53) (L)

ஒலைப்பாசுரம் -

{Entry: P16a__194}

கடிதச் செய்தி. ‘வருக என்னுமளவும் ஓலைப்பாசுரம்’

(சீவக. 2147 உரை) (L)

ஓலைப்பாயிரம் -

{Entry: P16a__195}

‘ஓலைப் பாசுரம்’ காண்க. ‘ஓலைப்பாயிரமும் முதலாயின வெல்லாம்’. (தொ. பொ. 461 பேரா. )

ஓலை முகப்பாசுரம் -

{Entry: P16a__196}

கடிதத் தொடக்கத் தெழுதும் வணக்கம். (சிலப். 13 : 67 உரை) (L)

ஓவிய நூல் -

{Entry: P16a__197}

ஓவியமுறை பற்றிக் கூறுவதொரு நூல். ‘ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’ (மணி. 2 : 31.) (L)

க section: 91 entries

கடகண்டு -

{Entry: P16a__198}

ஒரு பழைய நாடக நூல். (தொ. பொ. 492 பேரா.)

பண்ணத்திக்கு இஃது எடுத்துக்காட்டாகும்.

கடாநிலை -

{Entry: P16a__199}

கொற்றவைக்குப் பலியாக மறவர்கள் வீழ்த்தும் கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.

வடதிசையில் கோவில் கொண்ட கன்னியாகிய கொற்றவைக்கு மன்னர் வீழ்த்தும் கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.

வெற்றிபெற வேண்டியோ, வெற்றி பெற்றமைக்குக் கொடை நேர்ந்தோ எருமைக்கடாவை வீழ்த்தும் திறத்தைப் பலபட உரைப்பது. யாப்பு வரையாமையால், பெரும்பான்மையும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவதாகக் கொள்க. (பன். பாட்.326,327)

கடிகை வெண்பா -

{Entry: P16a__200}

அரசர் கடவுளர் முதலியோர் தம் அருஞ்செயல்கள் ஒரு கடிகை (-நாழிகை)ப் பொழுதில் நிகழ்ந்தனவாகக் கூறும் பிரபந்த விசேடம். (தொ.வி.283 உரை)

கடிய நன்னியம்

{Entry: P16a__201}

இது கடிய நன்னியார் என்பவரால் இயற்றப்பட்ட யாப்பு நூல். கைக்கிளை மருட்பாப் பற்றி இவர் இயற்றிய இரண்டு நூற்பாவும், கைக்கிளை ஆசிரியப்பாப் பற்றி இவர் இயற்றிய ஒரு நூற்பாவும் ஆகிய மூன்றே இதுபோது கிட்டியுள்ளன. கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியப்பா நிகழுமிடத்தே ஈற்றயலடி முச்சீரான் வரப்பெறாது நாற்சீராக வரப்பெறும் என்பது ஒரு நூற்பாக் கருத்து. (யா. வி. பக். 270, 215, 270)

கடைக்காப்பு -

{Entry: P16a__202}

பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு. ‘திருப்பதிகம் நிறை வித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி’ (பெரியபு. திருஞான. 80) (L)

கடைதிறப்பு -

{Entry: P16a__203}

கதவு திறக்கை. பரணிப் பிரபந்தத்தின் உறுப்புக்களுளொன்று (இ. வி. பாட். 79) (L)

கடைமூன்று உயிர்களின் நாள் -

{Entry: P16a__204}

ஒ, ஓ, ஒள என்னும் இக்கடை மூன்று உயிரெழுத்துக்களுக்கு உரிய நாள் உத்தராடம் ஆம். (இ. வி. பாட். 26)

கண்படைநிலை

{Entry: P16a__205}

‘கண்படை கண்ணிய கண்படைநிலை’ (தொ. பொ. 90) என்னும் தொல்காப்பியத் துறைப் பொருளையுட்கொண்டு பாடப்படும் ஒரு பிரபந்தம்; சதுரகராதி சுட்டும் 28ஆம் பிரபந்தம்.

கணக்கியல் -

{Entry: P16a__206}

இந்நூல் எழுத்துக்களின் பிறப்பிடம் பற்றி விரித்துக் கூற எழுந்ததாம். இதன் நூற்பா ஒன்று மெய்யெழுத்துக்களின் பொதுப்பிறப்பைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 69)

கணக்கு -

{Entry: P16a__207}

கணக்காவது நூல். மேற்கணக்கு எனவும், கீழ்க்கணக்கு எனவும் அஃது இருவகைப்படும்.

அகவல் கலிப்பா பரிபாடல் என்னும் இவ்யாப்பால் ஐம்பது முதல் ஐந்நூறு பா எல்லையாக மிகுத்துடன் தொகுப்பன மேற் கணக்காம்; வெண்பாவும் அவ்வாறு தொகுக்கப்படின் கீழ்க் கணக்காம். அடிநிமிர்பு இன்றிச் சில அடிகளாக வெண்டளை யாப்பில் அறம்பொருள் இன்பம் பற்றி அடுக்கி அவ்வத்திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கின் முழுமை இலக்கணம். (பன். பாட்.344-348)

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கு ஆவன; அறம்பொருள் இன்பம் பற்றிய சங்க மருவிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்றே வழங்கப்படுவன காண்க.

கணப்பொருத்தம் -

{Entry: P16a__208}

செய்யுள் முதல்சீர்க்குப் பொருத்தவகை பத்தனுள் ஒன்று.

ஆதியினும் இடையினும் இறுதியினும் முற்றினும் நேரசையும் நிரையசையுமாய் வரின், ஆதிநேர் நீர்க்கணம் எனவும், இடைநேர் தீக்கணம் எனவும், இறுதிநேர் ஆகாய கணம் எனவும், முற்றும் நேர் சுவர்க்ககணம் எனவும், ஆதிநிரை சந்திர கணம் எனவும், இடைநிரை சூரியகணம் எனவும், இறுதிநிரை வாயுகணம் என வும், முற்றும்நிரை பூகணம் எனவும் ஆகும். இவற்றுள், முற்று நேரும் முற்றுநிரையும் ஆதிநேரும் ஆதிநிரையும் முதற்சீர்க்குப் பொருத்தம் உடையனவாம்.

கணப்பொருத்தம் மூவசைச்சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும். (இ. வி. பாட்.40)

கணிகம் -

{Entry: P16a__209}

இது கலம்பகத்துள் காணப்படும் பலதுறைக் கவிகளிடை ஒன்று. (வீ.சோ. 183 உரை) கணநேரத்தில், சித்துக்களில் வல்லவர் தமது திறமையைப் பல்லாற்றானும் வெளிப்படுத்து வதாகக் கூறும் கருத்தமைந்த பாடல் இது. இதனைக் கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய ‘சித்து’ என்று கூறுவர்.

கதி நால்வகை -

{Entry: P16a__210}

தேவர் கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரகர் கதி என்பன. இக்கதி நான்கும் எழுத்துக்கட்குக் கொள்ளப்படும். செய்யுள் முதன் மொழிக்கு முதலிரு கதியும் பொருந்தும்; ஏனையிரண்டும் விலக்கப்படும். (இ. வி. பாட். 38, 39)

கதிப் பொருத்தம் -

{Entry: P16a__211}

செய்யுள் முதல்மொழிக்குப் பொருந்தும் கதிகள் தேவர் கதியும், மக்கட்கதியும் ஆம். தேவர்கதிக்குரிய எழுத்துக்கள் அ இ உ எ என்னும் குற்றுயிரும், க் ச் ட் த் ப் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்த உயிர்மெய்யும் ஆம்; மக்கட்கதிக்குரிய எழுத் துக்கள் ஆ ஈ ஊ ஏ என்னும் நெட்டுயிரும், ங் ஞ் ண் ந் ம் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்த உயிர்மெய்யும் ஆம். இவ் வுயிர்மெய்களுள்ளும் மொழிமுதற்கண் வரும் ஆற்றலில்லாத ஙகர டகர ணகரங்கள் நீங்கலான பிறவே கொள்ளப்படும் என்பது. (இ. வி. பாட். 38)

கந்துகவரி -

{Entry: P16a__212}

மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல் வகை. சிலப்பதி காரத்துள் வஞ்சிமகளிர் பாண்டியனைத் ‘தேவர்ஆர மார் பன்வாழ்க என்றுபந்த டித்துமே’ என வாழ்த்திப் பந்தாடு வதாக இவ்வரி நிகழ்கிறது.

கந்துகம் - பந்து; வரி - ஒருவகை இசைப்பாடல். (சிலப். 29 பாடல் 20-22.)

கப்பற்பாட்டு -

{Entry: P16a__213}

கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் (L)

கம்பராமாயண யாப்பு -

{Entry: P16a__214}

பலவகைக் கலிவிருத்தம், வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், கலிநிலைத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர் ஆசிரிய விருத் தங்கள், பெரும்பான்மையும் வெண்டளை பயின்றுவந்த தரவு கொச்சகம் என்பன.

கலிவிருத்தம் 5094. இவற்றுள் 86 தரவு கொச்சகம் போன்ற யாப்பு.

அறுசீர் ஆசிரிய விருத்தம் 3195

எழுசீர் ஆசிரிய விருத்தம் 178

எண்சீர் ஆசிரிய விருத்தம் 6

கலிநிலைத்துறை 1805

வஞ்சி விருத்தம் 294

வஞ்சித்துறை 4

இலக்கணத் முன். பக். 95, 96

கமகன் -

{Entry: P16a__215}

பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கற்றார் வியக்கும் வண்ணம், கல்லாத நூல்களையும் உய்த் துரைக்கும் கருத்துடைய புலவன். (யா.வி.பக். 552; வீ.சோ. 181 உரை)

நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப் பயிற்சியால் தெளிந்த அறிவானும், முன்னர்க் கற்றுவல்லோர் கூறிய பொருளை ஞாபகத்தானும் செம்பொருள் நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும் விரித்துச் சொல்ல வல்லோன். (இ. வி. பாட். 171)

கருட நூல் -

{Entry: P16a__216}

நாகங்களின் குலங்களை வகைப்படுத்திக் கூறும் செய்யுள் பலகொண்ட இந்நூலுள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோ ளும் பலஇடங்களில் உண்டு என்பது யாப்பருங்கல விருத் தியுரைச் செய்தி. (யா. வி. பக். 382)

கருநாடகச் சந்தம் -

{Entry: P16a__217}

இது கன்னடமொழியில் பண்டு வழங்கிய யாப்பிலக்கண நூல். இதன்கண் மகடூஉ முன்னிலையும் அவையடக்கச் செய்யுளும் காணப்பட்டன. இது குணகாங்கி எனவும், குணகாங்கியம் எனவும் வழங்கப்பட்டது. இது குணகங்கன் என்ற கன்னட அரசன் ஆக்குவித்த யாப்புநூல் போலும்.

(யா. வி. பக். 523; யா. கா. பாயிர உரை.)

கல்லவல் -

{Entry: P16a__218}

நாடு அறி சொற்பொருள் பயக்குமாறு பிழையாமல் வாசகம் செய்யும் வகை.

வரலாறு :

‘மனையிற்கு நன்று’

‘முதுபோக்குத் தீது’

‘முதுபோக்கே அன்று’

‘பெருமூர்க்குத் தீது’

என்பனவாம். (யா. வி. பக். 550)

கல்லாடர் -

{Entry: P16a__219}

‘கல்லாடம்’ என்னும் அகப்பொருளின் இலக்கியத்தை இயற்றிய ஆசிரியர். நூறு அகவற்பாடலால் ஆகிய இந்நூல் திருக்கோவையார் குறிப்பிடும் அகப்பொருள் கிளவிகளை உட்கொண்டு சிவபெருமான் பெருமையை இடைமடுத்துப் பாடப்பட்டது; கடிய நடை உடையது.

தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைகளைப் பெரும்பான்மையும் உட் கொண்டு, வேண்டும் விகற்பம் கூறி உரை எழுதிய கல்லாடர், கல்லாடம் என்ற நூல் இயற்றிய கல்லாடரின் வேறானவர்.

சங்க காலத்துக் கல்லாடனார் என்ற நல்லிசைப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ளன.

கலம்பகப் பாடல் தொகை -

{Entry: P16a__220}

தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதுமாகக் கலம்பகப் பாடல் தொகை பெறும். அந்தணரைத் தேவர்க்கு ஒப்பவும், குறுநில மன்னரை அரசர்க்கு ஒப்பவும் பாடப்பெறும்.

இத்தொகை பன். பாட் 214, வெண். பாட் 12, நவ. பாட். 34, சிதம். பாட். 30, மு. வீ. யா. ஒ. 80 இவற்றிலும் காணப்படும். (இ. வி. பாட். 53)

கலம்பகம் -

{Entry: P16a__221}

1. ‘கலவை; ‘கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல்’

(திவ். திருப்பள்ளி. 5)

2. குழப்பம்

3. ஒரு கணித நூல் (கணக்கதி. 5 உரை) (L )

4. ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவி உறுப்பாக முற்கூறப்பட்டு, கலவையின் புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார்,தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் (கொற்றியார், பிச்சியார், இடைச்சியார், வலைச்சியார் என்பன காலத்தான் மருவிப் போந்தன.) ஆகிய பதினெட்டுப் பொருட்கூற்று உறுப்புக்களும் இயையுமாறு பிற்கூறப்பட்டு, மடக்கும் மருட்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியவிருத்தமும் கலிவிருத்தமும் கலித்தா ழிசையும், வஞ்சி விருத்தமும் வஞ்சித்துறையும், வெண்துறை யும் ஆகிய கவிக் கூறுகளும் உடைத்தாய், இடையிடை வெண்பாவும், கலித்துறையும் பாடப்பட்டு, அந்தாதித் தொடை முற்றும் உற இறுதியும் முதலும் மண்டலித்துப் பாடுவதொரு பிரபந்தம். (இ. வி. பாட். 52.)

கலம்பகமாலை -

{Entry: P16a__222}

1. பல பூக் கலந்த மாலை; ‘கலம்பக மாலையைப் பணியாக’ (ஈடு. அவ.)

2. கலம்பகம் தான் ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி ஏனை உறுப்புக்கள் எல்லாம் வரப் பாடுவது கலம்பகமாலை என்னும் இலக்கண விளக்கம் (பாட். 54). ஒரு போகினையும் அம்மானையையும் நீக்கி, வெண்பாமுதலாக எல்லா உறுப்பானும் குறைவின்றி வருவது இப்பிரபந்தம் என்னும் பன்னிரு பாட்டியல் (960). ஊசலையும் நீக்கி வருதல் வேண்டும் என்னும் செய்தி பிற பாட்டியல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. கலம்பக மாலை ‘பன்மணிமாலை’ எனவும் படும்.

கலி அந்தாதி -

{Entry: P16a__223}

ஒலிஅந்தாதியைப் போல வண்ணப்பாக்கள் முப்பது கொண்டதாய்ப் பாடல்தோறும் 32 கலைகளை உடையது கலி அந்தாதியாம். கலித்தல் - மிகுதல் ஆதலால், ஒலி அந்தாதியின் மிகுந்த கலைகளையுடைய இப்பிரபந்தம் கலிஅந்தாதி எனப்பட்டது. இப்பாடல்களில் வெண்கலியும் சிறுபான்மை வரும். வெண்கலி வரும் காரணத்தால் இது கலி அந்தாதி எனப்பட்டது என்பதும் ஆம். ‘வண்ணப்பா’ இலக்கணம் அத்தலைப்பில் காண்க.

ஒவ்வோரடியிலுள்ள எட்டுக் கலைகளில் முதல் நான்கு கலைகள் ஓரொலியாகவும் பின் நான்கு கலைகள் வேற்றொலியாகவும் கலி அந்தாதியில் அமைதலும் கூடும். (பன். பாட். 265, 266, 268)

சந்தக் குழிப்புக்கள் - தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என்ற எட்டு.

இவை ஈறு நீண்டு தத்தா, தாத்தா, தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா - எனவரும் எட்டுடன் பதினாறு.

இப்பதினாறன்மேல் ன, னா என்னும் உயிர்மெய்கள் தனித்து வரினும் அவை த், ம் என்ற ஈற்றுக்களொடு கூடிவரினும், இவ் வொற்றுக்கள் தனித்து வரினும் அவை அரைச்சந்தமாம்.

எ-டு : தந்தனத், தந்தனாத், தந்தனம், தந்தனாம், தந்தத், தந்தம்.

தந்த : முழுச்சந்தம்; னத்; அரைச் சந்தம்; தந்தனத் ; ஒன்றரைச் சந்தம்.

இங்ஙனமே ஏனையவும் கொள்ளப்படும்.

சந்தங்கள் சில சேர்ந்து அமைவது ஒரு துள்ளல் (தந்தன தந்தன) துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பு (தந்தன, தந்தன, தந்தன, தந்தன, தந்தன தந்தன)

ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை. (தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன தனதான)

தொங்கல்துள்ளல் குழிப்புத்துள்ளலில் சிறிது வேறு பட்டுள்ளமை காண்க.

கலை எட்டுக் கொண்டது ஒருவண்ணம்.

அங்ஙனம் அடி தொறும் எட்டுக் கலைகள் கொண்ட நான் - கடிப்பாக்கள் முப்பது அந்தாதியாக அமைவது கலி அந்தாதியாம்.

(பன். பாட். 265)

கவி, கமகன், வாதி, வாக்கி எனுமிவர் -

{Entry: P16a__224}

இந்நால்வரும் புலவர் எனப்படுவர். விளக்கம் தனித்தனித் தலைப்புள் காண்க. (இ. வி. பாட். 169)

கவி அரங்கேறுதல் -

{Entry: P16a__225}

1) புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல். ‘அவருட் கவியரங்க கேறினார் மூவர் பாண்டியர் என்ப’. (இறை. அ.1. உரை)

2) கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல். (L)

கவி அரங்கேறுதல் பற்றிய செய்திகள் -

{Entry: P16a__226}

உருவக அணி, உவமை அணி முதலாக வாழ்த்து ஈறாக எய்திய இருபத்தெட்டு அலங்காரத்தாலும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு நெறியாலும் குற்றமறச் செய்யும் பாவலன், அவையும் அரசும் அறியப் பாடுவோன், முத்தமிழ் வல்லோன், நாற்கவி பாடுவோன், உத்தமச் சாதியிற் பிறந்தோன், உறுப்புக் குறையாது ஒழுக்கமொடு புணர்ந்தோன், முப்பது முதலாக எழுபது ஈறாய பிராயமுடையோன் ஆகிய இத்தகைய கவிஞன் பாடிய செய்யுளைக் கொள்ளுமுறையாவது: தோரணம் நாட்டித் துகிற்கொடியை எடுத்து, முரசொலிப் பவும் மறையோர் வாழ்த்தவும், அழகிய பூத்தொழிலுடைய கலிங்கத்தினைத் தரைமீது பரப்பி, பல தானியமுளைகள் தோன்றிய பாலிகைகளும் விளக்கும் பூரண கும்பமும் பிறவும் மங்கலப்பொருளாக எடுத்து, விதானித்துப் படுத்த தூண் நிரைகள் அமைந்த பந்தரின்கீழ்ப் பலசுற்றமும் நெருங்க, பாவையர் பல்லாண்டிசைப்ப, அக்கவிஞனை அவ் வள மனைக்கண் அழைத்துக் கொண்டுவந்து, தான் உடுத்துச் சூடுவதன் மேலும், அவனையும் வெண்துகில் உடுப்பித்து வெண்பூச் சூடுவித்துப் புரவலன் தன் தவிசின் மீது இருத்தித் தான் அயலில் இருந்து அம்மங்கலச் செய்யுளை மகிழ்ந்து கேட்டு, அவனுக்குப் பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் என்றின்னவற்றை அவன் வேண்டுவன பிறவற்றோடும் அளித்து, ஏழடி நிலம் புலவன்பின் போய் மீளுதல் அவ னுக்குக் கடனாவது. (பிங். 1370)

இனி, அகலக் கவிகொள்ளு முறையாக இலக்கண விளக்கம் (பாட். 179) இயம்பும் செய்திகள் வருமாறு :

நல்லாசிரியனுக்கு அமைந்த நற்குணங்களை எய்திய புலவ னால் செய்யப்பட்ட செய்யுளை, நல்லவை நிறையவை ஆகிய மன்றின்கண், ஒளிகிளர் அழகிய விளக்கத்தினோடும் ஏனை எழுவகை மங்கலங்களும் பொலிய, நான்மறையோர் ஆசி கூற, நாலவிட்ட பூமாலைகள் நறுமணம் செய்ய, பலவகை வாத்தியத் தொகுதிகள் ஒலிக்க, அஞ்சொல் மடவார்கள் செஞ்சொல்லால் வாழ்த்தெடுப்ப, பாமகளைப் புணரும் திறத் தாலே வெண்துகிலும் வெண்மலர்மாலையும் வெண்முத்து மாலையும் அலங்கரித்துக்கொண்டு, விசித்திரத்தவிசின் இருந்து, அப் புலவனுக்கும் அன்னதோர் தவிசு இட்டு, எண்திசையில் உள்ளாரும் துதிக்கத் தண்டமிழ்ப்பாமாலை சூடி, மருதநிலத்து உளவாகிய வளம் மாறாத ஊரும், பெரிய ஆபரணமும், பொன்னும், களிறும், பண் அமை இரதமும், குதிரையும் ஆகியவற்றை அப்புலவற்குப் பரிசிலாகக் கொடுத்து ஏழடி புலவன் பின்போய் மீளுதல் தமிழ் நாட்ட கத்தே அகலக்கவியைக் கொள்வோர்க்கு வகுக்கப்பட்ட உரிமைத் திறமாம் என்ப.

கவிப்புலவன் இலக்கணம் -

{Entry: P16a__227}

கவிப் புலவன் - அகலக் கவிபாடுவோன். கற்கப்படும் ஆசிரிய ருக்கு ஓதிய குலம் முதலாய எண்வகை முறையும் எய்தி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் கவி நான்கும் பாடும் தன்மையுடனே, இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கினையும் முற்ற உணர்ந்து, இருபது முதல் எழுபது வயதின் மிகாதிருக்கும் மாட்சிமையுடையோனே அகலக்கவி பாடும் ஆற்றலோன் ஆவான். (இ. வி. பாட். 178)

கவிப்பெண் இயல் -

{Entry: P16a__228}

கவிதையினைப் பெண்ணாக உருவகித்து அதன் இலக்க ணத்தைப் பிரபந்த மரபியல் கூறுகிறது.

மதுரம் கனிந்த சொல்லும் இலக்கிய நலம் சான்ற நாவும் ஆகிய இருபாலும், இலக்கணம் சுரப்பக் கலவி நிகழ்த்தலால், தோன்றிய கருவில் எழுத்தாகிய குழவி பிறக்கிறது. அக்குழவி தான் (அசையாகிய) சேயாக முற்றி, சுவை கலந்து சிறந்த முச்சீரில் தவழ்ந்து கவிதையாக வளர்தலால் தமிழ்க்குலப் பெண் என்று சாற்றுதல் தகும்.

இக் கவிதையாம் குலமகட்கு உறவு கூறப்புகின் புலவனே தந்தை; பொருட்செல்வம் இல்லா வறுமையே தாய்; அக் கவிதைப் பொருளை அணிநயம் பட விரித்து உரைப்பக் கேட்பவரே மாதவர்; அவைமாந்தர் மனம் கொள்ளக் கவிதையைச் சந்தமுறப் படித்து அச்சந்தப் பொருளை உணரச் செய்பவனே தமையன்; அவ் அவைமாந்தரிடையே அக் கவிதையை நயந்தும் வியந்தும் போற்றி ஏற்றுக் கொள்பவரே உறவின் வந்த சுற்றத்தார்; அதனை மனம் மகிழ்ந்து கேட்டு அக்கவி பாடிய புலவனுக்கு உவகையொடு பரிசு கொடுப் போனே அக்கவிமகளுக்குக் கணவன் ஆவான். (பி. ம. 32, 33)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடல்களின் யாப்பு -

{Entry: P16a__229}

கவிமணியின் ஐந்து கவிதைநூல்களிலும் 1410 பாடல்கள் உள. அகவற்பாக்களும், அறுசீர் ஆசிரிய விருத்தம் - எழுசீர் ஆசிரிய விருத்தம் - எண்சீர் ஆசிரிய விருத்தம் - ஆகிய மூவகை ஆசிரிய விருத்தங்களும், எண்சீர் - எழுசீர் - அறுசீர் - நாற்சீர் - அடிபடநிகழும் தாழிசைகளும், பல்லவி - அனுபல்லவி - சரணம் - ஆகிய மூவுறுப்பும், பல்லவி - சரணம் - ஆகிய ஈருறுப் பும்பெற்ற கீர்த்தனங்களும், வெண்பா - கலிவிருத்தம் - கலித் துறை - தரவுகொச்சகம் - போன்ற பிறவும் இக்கவிஞரது யாப்பில் இடம் பெற்றுள்ளன. இவர் கையாண்ட சிறப்புற்ற கவிதை வடிவம் சிந்து ஆகும். (இலக்கணத். முன். பக். 114 - 116)

கவியாவான் இலக்கணம் -

{Entry: P16a__230}

ஆசு, மதுரம், சித்திரம், அகலம் என்னும் நால்வகைப் பாடல் களில் ஒருவகையோ பலவகையோ யாவுமோ பாடும் ஆற்ற லுடையான் கவியாவான். அவன் எவ்வகையிற் சிறந்தானோ அவ்வகையால் அடையடுத்து, ஆசுகவி மதுரகவி சித்திரகவி அகலக்கவி (-வித்தார கவி) என்று சிறப்பிக்கப்படுவான்.

(இ. வி. பாட். 170)

கழங்குப் பருவம் -

{Entry: P16a__231}

பெண்பாற்பிள்ளைத் தமிழிற்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று; கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறுவது.

கள்ளக்கவி -

{Entry: P16a__232}

பிறனொருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன் (L)

ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன். (வெண்பாப். செய். 48 உரை)

களரியாவிரை -

{Entry: P16a__233}

இறந்துபட்ட தலைச்சங்க நூலுள் ஒன்று. (இறை. அ. 1 உரை)

களவியல் -

{Entry: P16a__234}

இது தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் மூன்றாவது இயல். அகத்திணையியலின்கண் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை ஓதி, அவற்றின் புறத்தே நிகழும் எழுதிணைகளும் புறத்திணையியலில் ஓதினார். அகத்திணை ஏழனுள்ளும் ஒருதலை வேட்கை ஆகிய கைக்கிளையும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையவாகிய நடுவண் ஐந்திணைக்கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் ஆகிய உரிப்பொருள்கள் களவு கற்பு எனும் இருவகைக் கைக்கோளிலும் நிகழுமாதலின், களவா கிய ஒழுக்கம் இம்மூன்றாம் இயலில் கூறப்படுகிறது. இதன்கண், தலைவனும் தலைவியும் விதிவயத்தால் ஒருவரை ஒருவர் காண்பது முதலாகக் களவு வெளிப்படும் துணையும் உள்ள செய்திகள் கூறப்படுகின்றன. இதன்கண் 50 சூத்தி ரங்கள் (நச். உரைப்படி) உள்ளன.

களவியல் முதனூலே -

{Entry: P16a__235}

தானே தலைவனாகிய முனைவனான் செயற்கைநலம் தோன்றச் செய்யப்பட்ட நூல்கள் ஆலவாய்ப் பெருமானடிகள் செய்த களவியல் போல்வன. அகத்தியம் தொல்காப்பியம் முதலிய நூல் தோன்றிய பிற்காலத்தே களவியல் செய்யப்படினும், இயற்கைநூலின் வழித்தாகவோ செயற்கை நூலின் வழித் தாகவோ செய்யப்படாமையின், முனைவன் அருளிய முதல் நூல் எனவே அது சான்றோரால் கொள்ளப்பட்டது. (பா. வி. பக். 98) (தொ. பொ. சூ. 649 பேரா.)

களவியற்காரிகை -

{Entry: P16a__236}

அகப்பொருள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் இந்நூல் அந்தாதிக் தொடையால் அமைந்த கலித்துறை நூற்பாக் களால் ஆகியது. இந்நூல் முதல் நடு இறுதியாகிய மூவிடத் தும் சிதைந்துள்ளது. இறையறார் களவியற்கு அங்கமாவது.

பாலைக்கருப்பொருள் பற்றிய கலித்துறையே, இதுபோது கிட்டியுள்ளவற்றுள் முதலாவது. உடன்போக்குவரையுமே இன்று கிட்டியுள்ளது. சுருக்கமான உரை துறை விளக்கம் தருகிறது. உதாரணப்பாடல்களாகப் பாண்டிக்கோவை, திருக்கோவையார், பழம்பாடல்கள் ஆகியவையே அமைந் துள்ளன. இந்நூல் தமிழ்நெறி விளக்கத்தோடு பெரிதும் தொடர்புடையதாக உள்ளது. ‘களவியற்காரிகை’ என்ற நூற்பெயர்தானும் பதிப்பாசிரியர் இட்ட பெயரேயாம். அகப்பொருட் செய்திகள் பலவற்றை எடுத்துக்கூறும் இந்நூல் இந்நிலையிலும் ஓளரவு பயன்படுகிறது. தமிழ்ப் பேரறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் பரிசோதித்து வெளியிட்ட பதிப்பு 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது.

களி -

{Entry: P16a__237}

கட்குடியர் தாம் குடிக்கும் கள்ளின் பெருமையைச் சிறப் பித்துக் கூறுவதாக அமையும் இத்துறை கலம்பக உறுப்புக் களுள் ஒன்று.

“புத்தர்களே! அரங்கநாதனை வழிபடும் கட்குடியர் யாம். மனத்தில் பெருமகிழ்வு தரும் களிப்பு வந்து சேர்ந்தது. யாங்கள் செய்கின்ற துர்க்கை பூசையே வேள்விகளில் சிறந்தது. வானுலகத்தேவர் அருந்தும் அமிர்தமும் கள் போன்று வெண்ணிறத்ததுதான். சாதிகளைக் கொள்ளாத மனிதர்கள் உலகத்தில் இல்லையே; மந்திரத்துக்கு வசப்படாத தேவரும் வானுலகில் இல்லை; வடிவம் இல்லாத பொருள் கள் அண்டகோளத்துக்குட்பட்ட எவ்வுலகிலும் இல்லை. ஆதலின் சாதி, மந்திரம், வடிவு - இவை மிக இன்றியமை யாதவை. இவையெல்லாம் நாங்கள் குடிக்கும் கள்ளுக்குப் பெயர் ஆதலின், கள்ளின் பெருமையை அறிக!” என்று கட்குடியர், கட்குடியை வெறுக்கும் பௌத்தர்களிடம் கூறுதல். (திருவரங். 65)

களியர் வண்ணம் -

{Entry: P16a__238}

கட்குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு. (L)

கற்பியல்

{Entry: P16a__239}

இது தொல்காப்பியப் பொருளதிகாரத்து நான்காம் இயலாகும். இதன்கண், முன்பு களவொழுக்கம் நிகழ்த்திய தலைவன் கரணமொடு புணரத் தலைவியை மணப்பது முதல் காமத்தில் பற்றறுத்து இருவரும் வீட்டின்பத்திற்குப் பாதுகாவலான செயல்களில் ஈடுபடுவதுகாறும் உள்ள செய்திகள். 53 சூத்திரங்களில் (நச்) கூறப்பட்டுள்ளன.

இறையனார் களவியலில் 34 முதல் 60 முடிய உள்ள நூற்பாக்கள் கற்பியற் பகுதியாம். நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள், இலக்கண விளக்க அகத்திணையியல் முதலிய நூல்களிலும் கற்பியற் பகுதிகள் உள.

கனக வைப்பு -

{Entry: P16a__240}

காரைச் சித்தர் இயற்றியது. ஒரு சீரடி நான்காலமைந்த செய்யுளொன்று இதன்கண் உள்ளது. (யா. வி. பக். )

கனாநூல் -

{Entry: P16a__241}

கனாப் பயன்களைப் பற்றி, 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமணராகிய பொன்னவன் என்ற புலவர் இயற்றிய நூல். அம்பரில் இருந்த கணபுரத்தேவன் விரும்பியவாறு இந்நூல் இயற்றப் பட்டது என்ப. சிலப்பதிகாரம் 15 : 106ஆம் அடியுள் கனாநூல் பற்றி அடியார்க்குநல்லாரது உரைக்குறிப்பு நிகழ்வதால், இப்பெயரிய நூல் அவர் காலத்துக்கு முற்பட்ட தொன்றாயிருத்தல் வேண்டும்; பொன்னவன் இயற்றியது அதன் வழிநூலாதல் கூடும். (L)

காக்கைபாடினியம் -

{Entry: P16a__242}

தொல்காப்பியனார் தோன்ற விரித்துரைத்த யாப்பிலக்கணத் தைப் பல்காயனார் வகுத்துரைப்பவே, நல்யாப்பினைக் கற்றார் மதிக்கும் கலைவல்ல காக்கைபாடினியார், அவ் விலக்கணத்தைத் தம் நூலுள் தொகுத்துரைத்தார். காக்கை பாடினியார் பெயரானே, அந்நூல் காக்கைபாடினியம் என வழங்கப்படுவதாயிற்று.

தொல்காப்பியனார்தம் ஒருசாலை மாணாக்கர் எனக் கூறப்படும் பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பெற்ற இவ்வியாப்புநூல் அகவல்நூற்பாக்களால் ஆகியது. யாப்பருங்கலம் முதலிய பிற்கால நூல்கள் இதனை அடி யொற்றியே எழுந்தன. இதன் நூற்பாக்கள் 73 யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றில் இடம் பெற்றுள. இவற்றுள் எதுகை முதலிய தொடை இலக்கணம், ஆசிரிய வகைகள் சில, ஆசிரியத் தாழிசை, கலிவகைகள் சில, வஞ்சி விருத்தம் - முதலிய சில நீங்கலான எல்லாச் செய்திகளும் காணப்படுகின்றன. (யா. வி. பக். 19 முதலியன.)

இலக்கண விளக்கம் - செய்யுளியல் ‘பிற்சேர்க்கை’ காண்க.

காக்கைபாடினியார் -

{Entry: P16a__243}

காக்கைபாடினியம் இயற்றிய ஆசிரியர்; தொல்காப்பியனார் தம் ஒரு சாலை மாணாக்கர் எனக் கருதப்படுபவர். (பா. வி. பக். 104)

காஞ்சி மாலை -

{Entry: P16a__244}

காஞ்சிமாலை சூடிப் பகைவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் பிரபந்தம். (தொ. வி. 283 உரை)

காண்டம் -

{Entry: P16a__245}

தொடர்நிலைச்செய்யுளின் நூலுட் பெரும்பிரிவு. கம்பரா மாயணத்துள் - பாலகாண்டம் முதலியன.

காதல் -

{Entry: P16a__246}

1) காதல் பொருட்டாகிய பிரபந்த விசேடம். ‘கூளப்ப நாயக்கண் காதல்’ ஓர் எடுத்துக்காட்டு. இது கலிவெண்பா வால் தலைவன் தசாங்கம் முதலியனவும் அவன் முன்னோர் சிறப்பும் அவன் பவனி வந்தபோது அவனால் விரும்பப்பட்ட தலைமகள் சிறப்பும் பின் அவன் அவளைக் கூடி மகிழ்ந்த சிறப்பும் ஆகிய செய்திகளைக் குறிப்பிடுவதாகும்.

2) தான் கொண்ட ஆசையை இரண்டுஅடிக் கண்ணியாகக் கொண்டு பாடுதல் காதல் ஆகும். (சாமி. 171 உரை)

காப்பு -

{Entry: P16a__247}

1. எடுத்த நூற்பொருள் இனிது முடிதற்பொருட்டு நூலின் தொடக்கத்தில் செய்யும் தெய்வ வணக்கம். 2. பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் பத்துப்பருவங்களில், “குழவியைக் கடவுள் காக்க!” என முதற்கண் வைக்கப்படும் பருவம். (L)

காப்புப் பருவக் கடவுளர் -

{Entry: P16a__248}

மங்கலம் பொலியும் செங்கண் மாயோன் சங்கு சக்கரங் களைத் தரித்தலானும் காத்தல்கடவுள் ஆகலானும் பூமடந் தையைப் புணர்தலானும் அவனை முற்கூறி, கங்கை பிறை கொன்றை முதலியவற்றைப் புனைந்த உமையோர்பாகன் என்று சிவபிரானைப் புகழ்ந்து கூறி, முழுதுலகு ஈன்ற பழுதறும் இமயமால் வரைச் செல்வியாம் பார்வதிதேவியை விருப்ப மாகக் கூறி, நாமகள் கேள்வனாம் அயனைப் புகழ்ந்து கூறி, கறுத்த மேகவாகனனாம் இந்திரனை அதன்பின் புகழ்ந்து கூறி, ஒற்றைக் கொம்பனாம் விநாயகனைப் புகழ்ந்து கூறி, வீரத்தன்மை பொருந்திய வேலனைப் புகழ்ந்து கூறி, சத்த மாதர்களைப் புகழ்ந்து கூறி, வாணியாம் கலைமடந்தையைப் புகழ்ந்து கூறி, பதினொரு கோடி உருத்திரர், பன்னிரண்டு கோடி ஆதித்தர், இரண்டு கோடி மருத்துவர், எட்டுக் கோடி வசுக்கள் இவர்களைப் புகழ்ந்து கூறி, ஏனைய காரி முதலிய தேவரையும் பிள்ளையைப் பாதுகாத்தற் பொருட்டுக் காப்புக் கூறப்படும்.

இக்கடவுளர் முறைவைப்பில் சில மாறுதல் உண்டு.

(இ. வி. பாட். 48)

காப்புப் பருவம் -

{Entry: P16a__249}

பிள்ளைத்தமிழாகிய பிரபந்தம் பாடும் பருவங்களுள் முதலாவது. இப்பருவம் பாடுங்கால் ஒன்பது பாட்டானும் பதினொரு பாட்டானும் பாடுதல்வேண்டும்.

பருவங்கள் பத்தும் தம்மில் ஒப்பக் கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்படப் பாடுதல் சிறப்புடைத்து; இரட்டிக்கப் பாடுமிடத்து ஓசைபெயர்த்துப் பாடப்படும்.

காப்பு முதற்கண் எடுத்த அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்து ஒப்பப்பாடுதல் வேண்டும் என்பது பன்னிரு பாட்டியல் விதி (191)

கடவுளர் பலரைப் பாடுமிடத்துப் பாடல் எண்ணிக்கை வரையறைப்படாது வருதலும் கொள்க. (இ.வி. பாட். 51)

காப்பு மாலை -

{Entry: P16a__250}

கடவுள் காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும் அந்தாதித்தொடையுறப் பாடும் பிரபந்தம்.

(இ. வி. பாட். 72)

காமத்துப்பால் -

{Entry: P16a__251}

அறம் பொருள் இன்பம் என முப்பாலாக அமைந்த திருக் குறளில் இறுதியாக அமைந்திருக்கும் இப்பகுதி 25 அதிகாரங் களை யுடையது. ‘தகையணங்குறுத்தல்’ முதலாக ‘ஊடலு- வகை’ ஈறாக அவை அமைந்தவை. இங்கு இன்பம் என்பது காமவின்பத்தினை; அஃதாவது ஒருகாலத்து ஒரு பொருளான் ஐம்பொறியும் நுகர்தற் சிறப்புடையது. இக்காமத்துப்பாலைக் களவு ஏழு அதிகாரங்களானும் கற்புப் பதினெட்டு அதிகாரங் களானும் பாகுபடுத்துப் பெரும்பான்மை பற்றிப் புணர்ச்சி யைக் களவென்றும், பிரிவினைக் கற்பென்றும் கூறுகிறார். (பரிமே. தோற்று. உரை.)

காரிகை -

{Entry: P16a__252}

பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் என்னும் சமணப் புலவரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கண நூல். அவர் இயற்றிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாக, காரிகை யென்னும் கட்டளைக் கலித்துறை யாப்பிற்றாக, மகடூஉ முன்னிலை பெரும்பான்மை யும் பயில இந்நூல் அமைந்தது. யாப்பருங்கலக் காரிகை என்னும் முழுப்பெயர்த்தாகிய இந்நூலுள் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூன்று இயல்களும், அவற்றுள் முறையே 18, 16, 10 ஆகிய காரிகைச் சூத்திரங்களும், நூல் தொடக்கத்தே தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும் அவையடக்கம் இரண்டும் ஆகிய காரிகைகளும் உள.

பிற்காலத்தே யாப்புப் பயில்வார்க்குப் பெரிதும் துணையாகப் பயிலப்பட்ட இந்நூற்சிறப்புக் ‘காரிகை கற்றுக்கவிபாடு’ என்னும் தொடரால் புலனாம். இந்நூற்கு உரையாசிரியர் குணசாகரர் என்பார். அவரே யாப்பருங்கல விருத்தியுரைகார ரும் ஆவார் என்பது ஒரு சாரார் கூற்று.

காரிகை - அழகு, கட்டளைக் கலித்துறை, மகடூஉ எனப் பல பொருள்படும்.

தற்சிறப்புப் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக அமைந்த 44 கட்டளைக் கலித்துறைகள் உதாரண முதல்நினைப்புக் காரிகைகளும் உள்ளிட்டன. இந்நூற்கு யாப்பருங்கலப் புறனடை என்ற பெயரும் உண்டு.

வடமொழியில் உரைநடையில் வரையப்படும் நூலுக்குக் காரிகை என்பது பெயர். தமிழில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமையும் சூத்திரங்கள் காரிகை எனப்படும்.

எ-டு : வீரசோழியத்துள் காரிகை

காரைக்கால் பேயார் பாடல் -

{Entry: P16a__253}

இவர் பொய்கையாரோடு சேர்ந்து பாடிய பாடலொன்று இரண்டாமடி குறைந்து ஆரிடப்போலி வெண்பாவாக எடுத்துக் காட்டப்படுகிறது. (யா. வி. பக். 371)

இவருடைய மூத்த திருப்பதிகங்கள் அறுசீர் ஆசிரிய விருத் தத்தைச் சாரும். திரு இரட்டை மணி மாலை 10 வெண்பா, 10 கட்டளைக் கலித்துறை ஆகும். அற்புதத்திருவந்தாதி வெண்பா ஆகும். இவை பதினோராம் திருமுறையைச் சார்ந்தன.

காலதேசி -

{Entry: P16a__254}

தருக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 583)

கிளவிக்கவி -

{Entry: P16a__255}

அகப்பொருள் புறப்பொருள் தொடர்பான கூற்றுக்கள் பற்றி அமைந்த பாடல்கள் கிளவிக்கவி என்ற பெயரால் பல திறப்படும் என வீரசோழிய இறுதி நூற்பாக்காரிகை சொல்லும். (வீ. சோ. 183)

கிளவிக்கொத்து -

{Entry: P16a__256}

அகப்பொருள் நூல்களில் பல கூற்றுக்களின் தொகுப்பாய் ஒருமுறையில் அடங்கும் இயற்கைப் புணர்ச்சி போன்ற சந்தருப்பங்களை இடம் எனவும் கிளவித் தொகை எனவும் கிளவிக் கொத்து எனவும் கூறுவர். (கோவை. பாயி. பேரா. உரை)

கிளவிக்கோவை -

{Entry: P16a__257}

அகப்பொருட் கோவைநூல் கிளவிக்கோவை எனவும் கூறப் படும். (கோவை. 4. பேரா.உரை) கிளவி - கூற்று (நிகழும் சந்தகுப்பம்); கோவை - தொகுப்பு.

கிளிக்கண்ணி -

{Entry: P16a__258}

கிளியை விளித்துக் கண்ணியமைப்பில் பாடப்படும் நூல்; பெரும்பான்மையும் அகப்பொருட் செய்தி பற்றியது. பாரதியார் பாடிய கிளிக்கண்ணிகள் உலகியற்செய்திகளைக் கூறுவனவாக உள. பலசீர்களையுடைய ஒத்த இவ்விரண்டடி அமைப்பினை யுடையவை அவை; தனிச்சீராக ‘கிளியே’ என்ற விளி நிகழும்.

கீதை -

{Entry: P16a__259}

‘கீதா’ என்ற வடசொற்குப் பொருள் பாடப்பட்டது என்பது. தத்துவநூல் சிலவும் இப்பெயரால் வழங்கப்பட்டன. மகாபாரதத்தில் போர்முனையில் கண்ணபிரான் பார்த்த னுக்கு அருளிய பகவத்கீதையே சிறப்பாகக் கீதை எனப்படும். உபதேசங்களாக வரும் தத்துவ உரையாடல்கள் மகாபாரதத் தில் கீதை எனப்படுகின்றன; அனுகீதை, உத்தரகீதை என்பன வேயன்றி, மங்கி கீதை, சமியாக கீதை முதலாக வருவன காண்க. கடவுளர் தம் அடியார்க்கு உபதேசித்த தத்துவங்கள் பிற புராணங்களிற் காணப்படுவன சிலவும் கீதை எனப்படு கின்றன. தேவிகீதை, சிவகீதை, ராமகீதை கணேசகீதை, சூதகீதை முதலாகச் சொல்லப்படுவன உள. வேதாந்தம் முதலிய மதங்களின் கொள்கைகளை விளக்குவனவாகச் சுருதிகீதை என்பது முதலாக சில உள. சீக்கிய மதக்கொள் கையை விளக்கும் நானக்கீதையும் தோன்றிற்று.

கீர்த்தனம் -

{Entry: P16a__260}

‘கீர்த்தனை’ காண்க.

கீர்த்தனை -

{Entry: P16a__261}

பல்லவம், அதன் இருபங்கு அநுபல்லவம், அதன் இருபங்கு சரணம் - இவற்றொடு தாளம் பிழையாமல் அமைந்து, பேரின்பம் தருவது கீர்த்தனையாம். அனுபல்லவமும் சரணமும் அளவிற் கூடியும் வரும்; ஆயின் தாளம் குழம்பாது. யாவரும் அறிவுறும் பொருண்மை பற்றியே கீர்த்தனை நிகழும். (அறுவகை. நாடகத்தமிழியல்பு. 1,2)

கீழ்க்கணக்கு -

{Entry: P16a__262}

அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம்பொரு ளின்பங்களைப் பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிரு. 346)

குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம் -

{Entry: P16a__263}

கும்பகோணத்தில் வாழ்ந்த அடியார் பகவர் என்பார். இவர் இயற்றிய செய்யுள் நூல் ‘வாசுதேவனார் சிந்தம்’ என்பது. இவர் பாடல்கள் ஆரிடச்செய்யுளின் பாற்படும். உலகியல் செய்யுட்கு ஓதிய உறுப்புக்கள் சில மிக்கும் குறைந்தும் இப்பாடல்கள் காணப்பட்டன. இந்நூல் இக்காலத்தில் இல்லை. (யா. வி. பக். 369)

குண்டலகேசி -

{Entry: P16a__264}

சொற்குற்றத்தால் பாட்டுடைத் தலைமகன் உடலுக்கு ஊனம் உண்டாம். பொருட் குற்றத்தால் உயிர்க்கு ஊனம் ஆதலின் பொருட்குற்றம் தவிர்தல் சிறப்புடைத்து. “சொற்பொருள் புலப்படினன்றே, அக்குற்றம் தவிர்க்கப்படும்? குண்டலகேசியில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தனவால்” என்னும் வினாவை எழுப்பி, உரைகாரர் விடை கூறுவார்: “அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது; அன்றியும், அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருத்தல் கூடும் எனினும் அமையும் எனக் கொள்க.” (வீ. சோ. 146 உரை)

குண்டலகேசி என்பாளது தோற்றமும் தொழிலும் போல் வன சொன்ன காப்பியம் அவள் பெயரால் குண்டலகேசி எனப்பட்டது. (யா. வி. பக். 39)

குண்டலகேசியின் முதற்பாடல் வண்ணத்தால் வருவதாய் நேரசையால் தொடங்கியதால் அடிதோறும் பதினான்கு எழுத்துடையது. (யா. வி. பக். 520)

குண்டலம் -

{Entry: P16a__265}

தருக்க நூல்களில் ஒன்று. (யா. வி. பக். 583)

குணகாங்கி -

{Entry: P16a__266}

இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல். இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன் சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும், யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண், சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள் விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523)

குணசாகரர் -

{Entry: P16a__267}

யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டு யாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர் ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குண சாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச் சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும், யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார். இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றே சுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர் காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.

யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொரு கருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்து வேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப.

குணநூல் -

{Entry: P16a__268}

பண்டை நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று.

(சிலப். 3 : 12 அடியார்க். உரை)

குணவீரபண்டிதர் -

{Entry: P16a__269}

பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவர்; சமணப்பெரியார்; நேமிநாதம் என்ற பெயரை உடையதாய், எழுத்து சொல் என்ற ஈரதிகாரங்களை உடைய சின்னூல் என்ற இலக்கண நூலினையும் வெண்பாப் பாட்டியலையும் வெண்பாயாப்பில் இயற்றியவர். இவருடைய நேமிநாதத்தின் உரை வயிரமேக விருத்தி எனப்படும். நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப் பியச் சொல்லதிகாரச் சுருக்கமாய் அமைந்துள்ளது.

கும்மி -

{Entry: P16a__270}

வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்; ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும் முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.

சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று. (இலக்கணத். முன். பக்.101)

எ-டு :

அ) பெரிய திருமொழி 2 - 9 - 1

‘சொல்லுவன் சொற்பொருள்’

ஆ) திருவாசகம் - அன்னைப்பத்து.

குரவைக் கூத்து -

{Entry: P16a__271}

குரவையெனினும் அமையும்; கூத்துவகை ஏழனுள் ஒன்று.

எழில் மிக்க மாதர் எழுவரோ எண்மரோ ஒன்பதின்மரோ இணைந்து ஒருவர் மற்றவர் கையினைக் கோத்துக்கொண்டு, காமமும் வெற்றியும் பொருளாகப் பெற்ற இன்பம் ஊட்டும் இனிய இசையுடன் பாடிக்கொண்டே ஆடும் கூத்து. (நாடக. 202)

குரவைப்பாட்டு -

{Entry: P16a__272}

ஒரு வட்டத்தின் பன்னிருகோணப் பகுதியிலும் பொருந்து மாறு மாதர் எழுவர் வட்டமாய்க் கைகோத்து இணைந்தும் மாறி மாறி ஓடிச் சென்று கைகோத்து இணைந்தும் எழு வகைப் பண்களையும் கொட்டும் பண்ணும் ஒட்டுமாறு பாடி ஆடுவதற்கு ஏற்குமாறு, நாற்சீரடி மூன்று தாழிசையாக ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரவும், நாற்சீரடி நான்கு இடைமடக்காக வரவும், வழிபடுகடவுளை முன்னிலைப்படுத் தியும் படர்க்கையாகத் தனியே நிறுத்தியும் வழுத்துவதாகப் பாடுவது குரவைப் பாட்டு எனப்படும். (பன்னிரு கோணப் பகுதியும் மேடம், இடபம் முதலாகப் பன்னிரண்டு இராசிப் பெயர்பெறும். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் எனப் பண்கள் ஏழன் பெயர் பூண்ட மாதர் எழுவர் முறையே இடபம், கற்கடகம், சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனம் இவற்றுக் கோணங்களில் நின்று கைகோத்து வட்டமாக நிற்பர்) (தென். இசைப். 12)

குவலயானந்தம் -

{Entry: P16a__273}

வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம் தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள் விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ என வடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம் நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறு அலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாக ஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச் சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சமஸ்தான வடமொழிப் பண்டிதராம் சங்கரநாராயணசாஸ்திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம் ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சமஸ்தானத் தமிழ் வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின் மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத் தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறை நூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்கு எடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகிய செய்யுள்கள் காணப்படுகின்றன.

மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல் சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29 சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது.

குழமகன் -

{Entry: P16a__274}

மகளிர் தம் கையிற் கொண்ட இளமைத்தன்மையுடைய குழமகனைக் கலிவெண்பாவினால் புகழ்ந்துபாடும் பிரபந்த வகை. (குழமகன் - ஆண்குழந்தை) (இ. வி. பாட். 110)

குழமணிதூரம் -

{Entry: P16a__275}

வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து. (பெரியதி. 10-3-3)

குற்றமற்ற பாடல் கோடலின் பயன் -

{Entry: P16a__276}

முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்து நன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால் புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர், “பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்” எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமை எய்தியிருப்பர்.

‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ. வி. பாட். 180)

குறத்திப் பாட்டு -

{Entry: P16a__277}

தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப் பற்றிக் குறத்தி குறிசொல்வதைக் கூறும் ஒரு பிரபந்தம். ‘குறவஞ்சி’ காண்க.

(தொ. வி. 283)

குறம் -

{Entry: P16a__278}

கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃது ஒன்று. தலைவியின் உடலும் மனமும் வாடியமை கண்ட செவிலி, அவள் தலைவனொடு நிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறியாது, ஏதோ தெய்வக்குற்றத்தால் அவள் உடல் வாட்டமுற்றுள்ளதோ என்ற எண்ணத்தால் குறத்தி ஒருத்தியை அழைத்துத் தலைவியின் மனநிலையைக் குறியால் அறிந்து சொல்லும்படி வினவ, குறத்தி தான் குறிசொல்லுமுகத்தான் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள அன்பினை எடுத்துக்கூறித் தலைவி விரைவின் அவனை மணக்கும் வாய்ப்புப் பெறுவாள் என்று கூறும் அகப்புற மாய்ச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட பாடல் இது.

“முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறவல்ல குறத்தி நான். நீ மனத்துள் எதனை நினைத்தாயோ அதனைக் கூறவல்லேன். என் சிறுகுழந்தையின் தலையில் எண்ணெய் வாரு; ஒரு பழைய புடவையை எனக்குக் கொண்டுவந்து கொடு. அழகிய மலர்போன்ற கையை யுடைய தலைவி! நின்முலைக்கண்ணின் குறி நன்றாக உள்ளது. ஆதலின் நீ உலகம் முழுதும் மகிழும்படி நாளையே திருவரங்கநாதனாகிய நின்நாயகனை அடைவாய்!” (திருவரங்கக். 69)

குறத்திஒருத்தி தலைவியை நோக்கிக் குறிசொல்வதாக அமையும் இவ்வுறுப்புக் கலம்பகம் என்ற பிரபந்தத்து நிகழும் 18 உறுப்புக்களுள் ஒன்று. (இ. வி. பாட்.52)

குறத்தி தலைவிக்குக் குறிசொல்வதாகக் கூறும் குறம் என்ற சிறு பிரபந்தமும் ஒன்று.

எ-டு : மீனாட்சியம்மை குறம்.

குறவஞ்சி -

{Entry: P16a__279}

நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுர அகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.

தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி, “உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலிய கூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் - எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பா தரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்ற இச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும் பிரபந்தவகை. (நவ. பாட். 20-22)

குறுவேட்டுவச் செய்யுள் -

{Entry: P16a__280}

பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வர அமைந்த இலக்கியங்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)

குறை அவை -

{Entry: P16a__281}

போலிச் சதுரப்பாட்டினைப் பேசி, பலகாலும் நகைத்தலைச் செய்து, பக்கத்திருப்பாரிடம் பேச்சு நிகழ்த்தி, தமக்கொரு தலைமையின்றி அஃதுள்ளது போல நடிப்பு நிகழ்த்தி, நல்ல நூற்பொருளை ஏடு விரித்து நோக்காமல், மாறுபாட்டைத் தம்முள் பெருக்கிக்கொண்டு, அறம் துறந்து, மறைவான சொற்செயல்களால் பொல்லாங்கு விளைத்துப் பொய்யே கூறுவது குறைஅவை. குறைபாடுற்றார் கூடிய அவை குறை யவை எனப்பட்டது. நிறையவைக்கு மறுதலையாயது குறைஅவை. அவையினரது குணக்குறைபாடு அவைமீது ஏற்றப்பட்டது. (நவ. பாட். 89)

கூத்த நூல் -

{Entry: P16a__282}

பண்டு தோன்றிய நாடகத்தமிழ் நூல்; அபிநயத்தைப் பற்றிய இந்நூற்பெயர் நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகிறது.

(சீவக. 124)

கூத்தர் ஆற்றுப்படை -

{Entry: P16a__283}

நால்வகை ஆற்றுப்படையுள் ஒன்று. (ஏனைய மூன்றுமாவன: பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப் படை என்பன.) வள்ளல்ஒருவனிடம் பரிசில் பெற்று மீளும் ஒரு கூத்தன், தான் வழியிற் கண்ட ஓர் ஏழைக் கூத்தனை நோக்கித் தனக்கு நிறைய வழங்கிய வள்ளலிடம் அவனும் சென்றால் வறுமை தீரப் பரிசில் பெற்று வாழலாம் எனக்கூறி, அவனை அவ்வழியில் செல்லுமாறு கூறுதல். ஆறு - வழி; படை - படுத்துதல்; தான் சென்றவழிக்கண் அவனும் சென்று பரிசில் பெறுமாறு செலுத்துதல் ஆற்றுப்படைப் பிரபந்தம் என்பது. (பு. வெ. மா. 9 : 29)

கேசாதி பாதம் -

{Entry: P16a__284}

கலிவெண்பாவால் ஒருவரை முடி முதல் அடியளவும் வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம். மக்களில் ஆண்பாலரை யும் பெண்பாலரையும் கேசம் முதல் அடிவரை பாடுதலே முறை. தெய்வங்களைப் பாதாதி கேசமாகப் பாடவேண்டும் என்ப. (இ. வி. பாட்.111)

கைக்கிளை -

{Entry: P16a__285}

ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் பாடுவது கைக்கிளைச் செய்யுளாம்.

பிரபந்த மரபு, பன்னிரு பாட்டியல் இவை கைக்கிளைமாலை எனச் சுட்டுதலின் (பி.ம.30, பன்.பாட்.295), பாடல்கள் அந்தாதித் தொடையுற வருதல் வேண்டும்போலும்.

ஒருதலைக் காமத்தினை முப்பத்திரண்டு வெண்பாவாற் பாடுதலும் கைக்கிளைப் பிரபந்தம் என்ப. (மு. வீ. யா. ஒ. 149; தொ. வி. 283 உரை)

கையனார் யாப்புநூல் -

{Entry: P16a__286}

கையனார் என்பவர் இயற்றிய இந்நூற்கருத்துக்கள் யாப் பருங்கல விருத்தியுள் மேற்கோளாக எடுத்தியம்பப் பெற்றுள. மெய்யின் மாத்திரை அரை என்பது, ஆய்தம் சொற்களில் அமையும் இடம், இயைபுத்தொடைக்கு எட்டுவிகற்பங்கள், நேரிசை ஆசிரியப் பாவிற்கு எடுத்துக்காட்டு, இடைப்புணர் முரணுக்கு எடுத்துக்காட்டு ஆகிய கையனார் யாப்புச் செய்திகள் அதன்கண் இடம் பெறுகின்றன.

“நாற்சீரடிக்கண் முதல் அயற்சீர்க்கண் தொடை இல்லதனைக் கீழ்க்கதுவாய் எனவும், ஈற்றயற்சீர்க்கண் தொடையில்லதனை மேற்கதுவாய் எனவும் வேண்டினார் கையனார் முதலிய ஒரு சார் ஆசிரியர்” என யாப்பருங்கலக்காரிகையுரை கையனார் யாப்பு நூற் செய்தியைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 23, 27, 138, 159; யா. கா. 19. உரை)

கொற்றியார் -

{Entry: P16a__287}

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃது ஒன்று. சிறந்த வைணவஅடியவர் வேடம் பூண்டு வைணவநாமத்தை நெற்றி முதலான உறுப்புக்களில் தரித்துக்கொண்டு பிச்சையேற்க இல்லம்தோறும் வரும் இளம்பெண் ஒருத்தியின் வனப்பில் தனதுள்ளத்தைச் செல விட்ட காமுகன் ஒருவன் அவளது வடிவழகு தன்னை வருத்து வதாக எடுத்துக்கூறும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல்.

எ-டு : மதுரைக்கலம்பகம். (பாடல். 36)

கோள் உரிமை -

{Entry: P16a__288}

சந்திரனும் பிரகற்பதியும் வெண்பாவிற்கு உரியோர்; ஆதித்த னும் செவ்வாயும் ஆசிரியப்பாவிற்கு உரியோர்; புதனும் சனியும் கலிப்பாவிற்கு உரியோர்; சுக்கிரனும் இராகுகேது வாகிய பாம்பிரண்டும் வஞ்சிப்பாவிற்கு உரியோர். (இ. வி. பாட். 123)

ச section: 92 entries

சக்கரமாற்று -

{Entry: P16a__289}

சீகாழியின் பன்னிருபெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒருபாடலின் இறுதியிற்கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு பாடிய சம்பந்தர் தேவாரப் பதிகம். (இரண்டாந்திருமுறை - பதிகம் 73)

சங்கயாப்பு -

{Entry: P16a__290}

உயிர், குறில், நெடில், மாத்திரை அளவு, அரை மாத்திரை அளவு, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறுதல், நேரசை நிரையசை, தொடர்வகை, வெண்பாஓசை, ஆசிரி யப்பாவின் ஓசை, கலிப்பாவகை, பாக்களின் அடிவரையறை முதலியன பற்றிய செய்திகளுக்கு இந்நூலின் சூத்திரங்கள் பதினான்கு யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்பட் டுள்ளன. (யா. வி. பக். 53 முதலாயின)

சங்கர நமச்சிவாயர் -

{Entry: P16a__291}

நன்னூலுக்கு விருத்தியுரை கண்டவர். இவரது ஊர் திருநெல் வேலி. இவர் வாழ்ந்த இடம் தடிவீரையன் கோயில் தெரு என்றும், இவரது குலம் பாண்டிநாட்டு வேளாளர் குலம் என்றும் டாக்டர் ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளார். நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்துச் சாமிநாத தேசிகரிடம் இவர் இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றார். ‘நன்னூலுக்குச் சிறந்ததோர் உரை செய்திடுக’ என்று தம் ஆசிரியர் பணித்தமையாலும், ஊற்றுமலை மருதப்பதேவரது வேண்டுகோளாலும் இவர் இவ்விருத்தியுரை வரைந்தமை அகச்சான்றுகளால் புலப்படுகிறது. தம் ஆசிரியர் போலவே இவரும் தொல்காப்பியம் திருக்குறள் திருக்கோவையார் என்னும் இம்மூன்றிலும் தக்க புலமையும் ஈடுபாடும் கொண் டிருந்தமை உரை வாயிலாக உணரப்படும். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு. அடுத்துத் தோன்றிய வடமொழி தென் மொழி இரண்டிலும் புலமை நிரம்பிய மாதவச் சிவஞான முனிவர் இவரது புத்துரையை மேலும் புதுக்கிப் புத்தம் புத்துரை ஆக்கியமையே இவரது உரைமாட்சிக்கொரு சான்று என்பர் டாக்டர் ஐயரவர்கள்.

சச்சபுட வெண்பா -

{Entry: P16a__292}

அங்கப் பிரமாணமாகிய சச்சபுடம் முதலிய 108 தாளங்களையும் விளக்கும் தாளநூல் இதனை அகத்தியமுனிவர் இயற்றியதாக நூலின் இறுதி வெண்பா கூறுகிறது. இந்நூலில் 210 வெண் பாக்கள் உள்ளன. ‘மறைகும்பமுனி சொற்றான் மிளிரிய; இருநூற்றொரு பதாம்’ என்பது இறுதிப்பாடலின் இறுதிப் பகுதி அடிகள்.

சதகம் -

{Entry: P16a__293}

விரும்பத்தகும் அகப்பொருள் ஒன்றன்மேலாவது புறப்பொ ருள் ஒன்றன்மேலாவது கற்பித்து நூறுகவி பாடுவதொரு பிரபந்தம். இதன் பாடல்களின் ஈற்றடிதோறும் பாட்டுடைத் தலைவன் பெயர் வருதல் பெருவழக்கு. (இ. வி. பாட். 87)

பொருள் இடம் காலம் தொழில் என்னும் இவை பற்றி வெண்பா அல்லது கலித்துறை யாப்பால், சதகம் பாடப் பெறும் என்னும் பிரபந்த மரபியல் (34). (சதகம் அந்தாதியாக முதலும் இறுதியும் மண்டலித்து வருதல் சிறப்புடைத்து என்ப.)

சதுரகராதி -

{Entry: P16a__294}

பெயரகராதி தொகையகராதி பொருளகராதி தொடையக ராதி என்ற நாற்பிரிவுகள் உடையதாக, 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட அகராதி.

சந்தம் பற்றிய நூல்கள் -

{Entry: P16a__295}

ஞானசாரியம், சயதேவம், மிச்சாகிருதி, பிங்கலம், மாபிங் கலம், இரணமாமஞ்சுடை, சந்திர கோடிச் சந்தம், குணகாங்கி என்னும் கருநாடகச் சந்தம், வாஞ்சியார் செய்த வடுகச்சந்தம், மாபுராணம் முதலிய தமிழ்நூல்கள் ஆகியனவாம். (யா. வி. பக். 523)

சந்திரகணம் -

{Entry: P16a__296}

நூல் முதற்சீரில் அமையுமாறு புளிமாங்காய் என்னும் வாய் பாடு. பற்றி வரும் கணம். இதற்குரிய நாள் மிருகசீரிடம். இதன் பயன் வாழ்நாள். தருதல். (சீர்த்தி பயத்தல் என்னும் பன்னிரு பாட்டியல்). (இ. வி. பாட். 40 உரை)

சந்திரகோடிச்சந்தம் -

{Entry: P16a__297}

சந்தம், தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் வகுத்துக் கூறி விளக்கும் வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று.

(யா. வி. பக். 486)

சந்திரா லோகம் -

{Entry: P16a__298}

‘குவலயானந்தம்’ காண்க.

19ஆம் நூற்றாண்டில் சந்திராலோகம் முத்துசாமி ஐயங்கார் அவர்களால் தமிழில் நூற்பா யாப்பில் மொழிபெயர்க்கப் பட்டது.

சந்தோவிசிதி -

{Entry: P16a__299}

சந்தோபிசிதி; பிங்கலம், மாபிங்கலம், சயதேவம், ஞானா சிரியம், சந்திரகோடிச் சந்தம், மயூரத்திரிசந்தம், மேடகத் திரிசந்தம் முதலிய நூல்கள் சந்தோபிசிதிகள் எனப்படும். இவை எழுத்தொலி பற்றியன. (யா. வி. பக். 486)

வேதங்களின் சந்தங்களை யுணர்த்தும் நூல். (L)

சப்பாணிப் பருவம் -

{Entry: P16a__300}

பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்துக்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று; குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். ‘சப்பாணி கொட்டியருளே’, ‘கொட்டுக சப்பாணி’ என்றாற்போன்று இப்பாடல் முடியும். சக + பாணி - சப்பாணியாயிற்று இருகைகளையும் சேர்த்தல் என்னும் பொருளது.

சம்பந்தப் பாட்டியல் -

{Entry: P16a__301}

வரையறுத்த பாட்டியல் என்பது சம்பந்தப்பாட்டியல் எனச் சிலபிரதிகளில் காணப்படுவதாகத் தெரிகிறது. சம்பந்தப் பாட்டியல் என்பது சம்பந்த மாமுனிவன் செய்வித்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பந்த மாமுனி பாதமலர் இறைஞ்சி நிகழ்த்துகின்றேன்’ என்ற பாடல் இதற்குச் சான்றாம். இது மங்கலம் முதலிய 10 பொருத்தங்களில் மங்கலத்தை மாத்திரம் ஒன்பது விருத்தங்களில் கூறுவது.

சம்பந்தர் தேவாரயாப்பு -

{Entry: P16a__302}

கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம், கலித்துறை, கொச்சகங்கள், ஆசிரியத் துறை, வஞ்சி விருத்தம், வஞ்சித் துறை, குறட் டாழிசை, நாலடிமேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, இணைக் குறள் ஆசிரியம் என்பன. சம்பந்தர் பாடிய 385 பதிகங்களில் இவ்யாப்புக்கள் முறையே 106, 88, 79, 54, 27, 13, 9, 3, 3, 2, 1 ஆகிய பதிகங்களாம். இவற்றுள் திருவியமகம் 4, திருச்சக்கர மாற்று 2, ஏகபாதம் 1, எழு கூற்றிருக்கை 1, திருக்கோமூத்திரி 1, திருமாலைமாற்று 1 - ஆகிய சித்திரகவிப்பதிகங்களும், மொழி மாற்றுப்பொருள்கோள் நிலையில் வரும் பதிகம் ஒன்றும் உள்ளன.

இவற்றுள் மேல்வைப்பும் சித்திரகவியும் சம்பந்தர் புகுத்தி யருளிய புதுமை யாப்புக்களாம். (இலக்கணத். முன். பக். 81, 82)

சம்பிரதம் -

{Entry: P16a__303}

இந்திரசாலம் முதலிய மாயவித்தை வல்லுநர் தம் சிறப் பினைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யும் இவ்வுறுப்புக் கலம்பகத்துள் நிகழ்வது.

“இதுவரை காணாத புதுமைபல காட்டுவேன்; அட்டமா நாகங்களையும் படமெடுத்து ஆடச் செய்வேன்; கடலைப் பருகுவேன்; மேருவைச் சிறிய கடுகினுள் அடைத்து வைப்பேன்; அண்ட முகட்டை அடையுமாறு பேரொலி எழுப்புவேன்; இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாறிவரச் செய்வேன்; ஆகாயம் முழுதையும் மறைப்பேன்; ஏழுலகங் களையும் எடுப்பேன்; இவையெல்லாம் எனக்கு எளிய செயல்; திருமாலாகிய அரங்கநாதனுடைய சக்கர முத்திரை தன்மீது பொறிக்கப்பெறாத ஒரு தெய்வத்தைத் தேடிக் கொண்டுவந்து உங்கள் முன்னே விடுவேன்” (திருவரங். 49) என்றாற் போன்ற இந்திரசால வித்தை பற்றிய செய்தி கூறுவது.

சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிய பாவினம் -

{Entry: P16a__304}

சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிய பாவினம் அல கிட்டுப் பாச் சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும் உலோக விலாசனியும் பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையனவாம். (யா. வி. பக். 491)

சமுத்திர விலாசம் -

{Entry: P16a__305}

தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையில் இருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்த வகை. (L)

சயதேவம் -

{Entry: P16a__306}

சந்தம் தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் விரித்துக் கூறி விளக்கும் வடமொழியாப்பு நூல்களுள் ஒன்று.

(யா. வி. பக். 486)

சயந்தம் -

{Entry: P16a__307}

இறந்துபட்ட நாடகத்தமிழ்நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று அடியார்க்குநல்லார் உரையுள் (சிலப். பக். 80) உள்ளது.

பதினோராடற்கு உரிய உறுப்பு ஐம்பத்து மூன்றும் இந்நூலில் விரித்துக் கூறப்பட்டதாக யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக். 581)

சரமகவி -

{Entry: P16a__308}

இறந்தவர்மீது இரங்கிப் பாடும் கவி; இரங்கற்பா. (L)

சனிப்பாட்டு -

{Entry: P16a__309}

தம் ஆசிரியர் சம்மானம் பெறும்பொருட்டு ஆண்டு முடிவில் பலரிடத்தும் சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (W) (L )

சாத்துகவி -

{Entry: P16a__310}

சிறப்புப் பாயிரக்கவி. (L)

சாம்பராக்கு -

{Entry: P16a__311}

பாட்டின் இறுதிதோறும் ‘சாம்பராக்கு’ என்று முடியுமாறு பாடப்படும் ஒருவகைப் பாட்டு. (L)

சாமிநாதம் -

{Entry: P16a__312}

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதிகை நிகண்டு என்ற நிகண்டு நூலை வரைந்த கல்லிடையூர் வேளாண்குலத் திலகரான சாமிகவிராயரால் எண்சீர் ஆசிரிய விருத்த யாப்பில், அந்தாதித் தொடையில், ஒவ்வோரதிகாரமும் மும்மூன்று இயல்களைக் கொண்டதாய், ஐந்து அதிகாரங் களையும் நுவலும் ஐந்திலக்கண நூலாய், பொதுப்பாயிரமும் நூன்மரபும் உட்பட 213 விருத்தச் செய்யுட்களில், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம், நம்பிஅகப்பொருள், புறப்பொருள்வெண்பா மாலை, யாப்பருங்கலம், காரிகை, தண்டியலங்காரம், பாட்டியல் நூல்கள் - என இவற்றை அடியொற்றி, அருகிய சிற்சில மாற்றங்களோடு புனையப்பட்ட நூல் இது. எழுத்து - 33; சொல் 37; பொருள் - 81; யாப்பு - 27; அணி - 24 என்ற எண்ணிக்கை உடைய விருத்தங்களால் மூலம் மாத்திரம் பாடப்பட்ட சாமிநாதம் என்னும் இந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் உரையோடு வெளியிடப்பட் டுள்ளது. உரை மிகவும் செப்பம் செய்யப்படும் நிலையிலுள் ளது. ‘சுவாமிநாதம்’ என நூற்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

சாமுத்திரியம் -

{Entry: P16a__313}

அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொன்ன நூல்களின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படல் வேண்டும் என்று யாப்பருங்கல விருத்தியுரை சுட்டுகிறது. (யா. வி. பக். 491)

சார்த்து கவி -

{Entry: P16a__314}

ஒருவன் கவியிசையில் வேறு ஒரு செய்யுளைப் புணர்க்கும் கவிஞன். இலக்கண விளக்கம் ‘சாத்துக்கவி’ என (பாட். 174) ஓதி, ‘ஒருவன் பா இசைக்கு ஒப்ப மேவி உரைப்போன்’ எனவும் இலக்கணம் கூறும். (வெண்பாப். செய். 482 உரை)

சாவெழுத்து -

{Entry: P16a__315}

நச்செழுத்து. யரலள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும் அவ்வொற்றுக்களும் ஆய்தமும் மகரக் குறுக்கமும் அளபெடையும் என்னுமிவை. இவை நூலின் முதற்சீர் முதன் மொழிக்கண் ஆகாதன. மங்கல மொழிக்கண் இவ்வெழுத் துக்கள் வரின் அவை குற்றமில. (இ. வி. பாட். 20)

சாழல் -

{Entry: P16a__316}

முன் இரண்டு அடிகள் வினாவாகவும் பின்னிரண்டடிகள் விடையாகவும் அவ்விடையின் இறுதியில் ‘சாழலே’ என்ற சொல் உடை யதாகவும் வரும் 10 பாடல்களையுடைய பிரபந்தமாகக் ‘பெரிய திருமொழியில்’ உள்ளது. (11-5)

திருவாசகத்தில் உள்ள ‘திருச்சாழல்’ 20 பாடல்களையுடைய பிரபந்தமாகச் ‘சாழலோ’ என்று முடிகிறது.

சாழல் என்ற பிரபந்தம் வெண்டளையால் அமைந்த நான்கடித் தரவு கொச்சகக் கலிப்பாக்களால் ஆகிய பிரபந்தமாகும்.

சிகண்டி -

{Entry: P16a__317}

இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர்; அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் ஒருவர். (சிலப். உரைச் சிறப்புப். அடியார்க்.)

சிங்காதனப் பாட்டு -

{Entry: P16a__318}

அரசன் தன் ஓலக்கத்தில் அரியணையில் ஐம்பெருங்குழு புடைசூழக் குறுநிலமன்னர் பரவ, பெருஞ்சிறப்புடன் வீற்றிருக்கும் சிறப்பை விரித்துப் பாடும் பிரபந்தம்.

இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.

(இ. வி. பாட்பக். 505)

சிங்கிப் பாட்டு -

{Entry: P16a__319}

கைகளை முடக்கி விலாஎலும்புகளில் பொருந்துமாறு அடித்துக்கொண்டே கூத்தாடும் மகளிர் குழாத்தினர் அத்துணங்கைக் கூத்தின்போது பாடும் பாடல். சிங்கி - துணங்கைக் கூத்து.

இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.

(இ. வி. பாட். பக். 505)

சித்தர் பாடல்கள் யாப்பு -

{Entry: P16a__320}

சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை, வண்ணம், ஆனந்தக் களிப்பு போன்றன.

ஈரடிகள் அளவொத்து அமைவது சிந்து. சித்தர்தம் சிந்துக்கள் பெரும்பான்மையும் ஈரடிச் செய்யுளாய் நிகழ்வன. ஓரடிக்கும் அடுத்த அடிக்கும் இடையே ஓசைநிறுத்தம் அமையுமாறு தனிச்சீர் ஒன்று நிகழ்தலும் காணப்படுகிறது. அடிகள் எதுகை பெற்று, அடிப்பகுதியில் மோனை பெற்று வருதல் இயல்பு. அடிப்பகுதிகள் நாற்சீர் பெற்று நாற்சீர் இரட்டை யாகவும், முச்சீர் பெற்று முச்சீர் இரட்டையாகவும், இன்னோ ரன்னவாகச் சிந்தின் அமைப்புச் சிறிது சிறிது வேறுபடுவன உள. ‘குதம்பாய்’ என விளியாக வரும் ஓரடிச் சிந்தினின்று இவ்வீரடிச் சிந்து கிளைத்தது என்ப.

கும்மியும் அளவொத்த ஈரடி அமைப்பு; வெண்டளை மிக்க எழுசீர் அடி; பாட்டில் அடியெதுகையொடு, பாட்டடியுள் முதலாம் ஐந்தாம் சீர்கள் மோனைத் தொடை அமைய வரும்.

எ-டு : கொங்கணர்தம் வாலைக்கும்மி.

கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பு தனித்த யாப்பும் இசையமைப்பும் உடையது. எதுகையுடைய அளவொத் திராத ஈரடி கொண்டது பல்லவி. 34 சரணங்கள் தொடர் கின்றன. இவை சிந்துக்கு உரிய தொடையமைதி பெற்றுப் பல்லவியொடு சிறிது வேறுபடுகின்றன. சரணங்கள் முடியுந் தோறும் பல்லவி பாடப்பெறும்.

இடைக்காடரின் தாண்டவராயக்கோன் கூற்று கீர்த்தனைத் தோற்றமுடையது. பல்லவி அனுபல்லவியாக எட்டுத் தாழிசைகள் அமைகின்றன; பெரும்பான்மையும் வெண் டளை யாப்பு.

அருணகிரியாரது திருப்புகழ் சந்தக் குழிப்புக்கள் அமைந்த வண்ணக் களஞ்சியம் என்ப. (இலக்கண. முன். பக். 100-103)

சித்து -

{Entry: P16a__321}

இரசவாதிகள் தம் திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச் செய்யப்படும் செய்யுள்; கலம்பக உறுப்புக் களுள் ஒன்று. இரசவாதமாவது ஓர்உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுதல். சித்தர் என்பார் இரும்பு முதலிய இழிந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகங் களாகப் படைக்கும் வல்லமை உடையவர்.

எ-டு : ‘பொற்பாவைக்குக் கஞ்சம் பொன்னாக்கிய சித்தரேம்

திருமாலுக்(கு) இரும்பைப் பொன்னாக்கினேம்

ஈயத்தை வெள்ளியதாக உருக்குவோம்.’

வெண்கலத்தைப் பொன்னாக்கிய சித்தர்: பொற்றாமரை மலரைச் செய்து கொடுத்த சித்தர் யாங்களே என்பது.

இரும்பைப் பொன்னாக்கினேம் - பெரிய காளீயன் என்னும் பாம்பின் படத்தை(க் கண்ணனுக்கு) நடிக்கும் இடமாச் செய் தோம்; ஈயத்தை வெள்ளியது ஆக உருக்குவோம் - ஈயத்தை நல்ல வெண்ணிறமாகுமாறு உருக்குவோம்.

பொற்பாவைக்குக் கஞ்சம் (-வெண்கலத்தைப்) பொன் ஆக்குதல் - திருமகளுக்குப் பொற்றாமரைப் பூவினைக் கொடுத்தல். இவ்வாறு சிலேடையாக மற்றொரு பொருள் அமையப் பாடுதல் சிறப்பு. (திருவரங்கக். 42)

சிதம்பரச் செய்யுட் கோவை -

{Entry: P16a__322}

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வ அருள் பெற்ற பெரும் புலவரான குமரகுருபர அடிகளால் பாடப்பட்ட அரியதோர் இலக்கியம். வைணவ மாறன் பாப்பாவினம் என்ற யாப் பிலக்கணத்தை ஒருபுடை ஒத்தது இது. பாடல்கள் சிவபெருமானைப் போற்றுவன. யாப்பருங்கலக் காரிகையுள் சுட்டப்பட்ட பாப் பாவினம் அனைத்திற்கும் இந்நூலுள் காணப்படும் 84 செய்யுளும் சிறந்த எடுத்துக்காட்டாவன. செய்யுள்களின் கீழ்க்குறிப்பு அடிகளே வரைந்தவை என்பர். அக்குறிப்புக்கள் திட்பநுட்பம் சான்றவை.

சிதம்பரப் பாட்டியல் -

{Entry: P16a__323}

16ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரால் இயற்றப் பட்ட பாட்டியல் இலக்கணநூல்; 47 எண்சீர்விருத்த நூற்பாக் களையுடையது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொதுவியல், மரபியல் என ஐந்து இயல்களையுடையது. முதல் மூன்று இயல்கட்குக் குறிப்புரை உளது. அவ்வுரை காரர் பெயர் தெரிந்திலது. இந்நூல் பாட்டியல் எனப்படினும் செய்யுளிலக்கணத்தையும் முழுதும் சொல்லுகிறது.

சிந்தம் -

{Entry: P16a__324}

ஆரிடப் போலிப் பாவகை நூல்களுள் ஒன்று. குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம், அறிவுடைநம்பி செய்த சிந்தம் என்ற சிந்தநூல்களுள் இரண்டு யாப்பருங்கல விருத்தி யுரையுள் கூறப்பட்டுள. முதலாவது ஆரிடச் செய்யுளாகவும் அடுத்தது உறுப்பழி செய்யுளாகவும் சுட்டப்படுகின்றன. (யா. வி. பக். 369, 372)

சிந்தாமணி -

{Entry: P16a__325}

திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் பாடல் ஒன்று பாதிச்சம விருத்தத்திற்கு எடுத்துக்காட்டாகவும் (பாடல் 1488), கடவுள் வாழ்த்தாகிய முதற்பாடல் நேரசை முதலாய் அடிதோறும் 14 எழுத்துப் பெற்று வண்ணத்தான் வந்த நாலடிச் செய்யுட்கு எடுத்துக்காட்டாகவும் உரையுள் சுட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516,521)

சிந்தாமணி யாப்பு -

{Entry: P16a__326}

திருத்தக்கதேவர் இயற்றிய விருத்த யாப்பில் அமைந்த சீவகசிந்தாமணி என்ற காப்பியத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தம் 1525, கலிவிருத்தம் 1291, கலித்துறை 255, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, எண்சீர் ஆசிரிய விருத்தம் 16, வஞ்சித் துறை 16, கலித்தாழிசை 2 , ஆசிரியத் தாழிசை 1 என்பன அமைந்துள்ளன. சிந்தாமணியின் கலித்துறை பல மா-மா-கனி-மா-மா-என்ற சீர்அமைப்புடன் காப்பியக் கலித்துறை எனச் சிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளன.

காந்தருவதத்தையார் இலம்பகப் பேடி வருணனையில் இரண்டு பாடல்கள் ஓரடிமிக்கு வந்த கொச்சக ஒருபோகுகள். அவை ஈற்றடி மிக்கு வந்த கலித்தாழிசையாகக் கொள்ளப்படு கின்றன.

ஆசிரியத்துறை போன்ற ஒரு பாடல் (2578) நிகழ்கிறது.

ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் இடையடிகள் மடக்கியும் வரும் இசைப்பாடல்கள் சில காமம் நுதலி வருகின்றன. இவற்றுள் சில கடவுள் வாழ்த்தாகும். (இலக்கணத். முன். பக். 93, 94)

சிலப்பதிகார யாப்பு -

{Entry: P16a__327}

சங்க காலத்தனவாகிய பத்துப்பாட்டு எட்டுத் தொகைபோல ஆசிரியம் வெண்பா கலி வஞ்சி பரிபாடல் என்ற யாப்போடு அமையாமல் சிலப்பதிகாரமானது உரைபெறுகட்டுரை, உரைப்பாட்டு, கருப்பம், கலி ஆசிரிய இணைப்புப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, கலித்தாழிசை என்ற பாவினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆசிரிய விருத்தம் - கானல்வரி, ஆற்றுவரி முதலியன.

கலி விருத்தம் - முரிவரி முதலியன.

ஆசிரியத்துறை - கானல்வரியுள் முகமில்வரி, கானல்வரி முதலியன.

ஆசிரியத் தாழிசை - ஆய்ச்சியர் குரவையுள் ‘கன்றுகுணிலா’ முதலிய மூன்றும்.

தரவு கொச்சகம் - ஆய்ச்சியர் குரவையுள் முன்னிலைப் பரவல், படர்க்கைப்பரவல் முதலியன.

கலித்தாழிசை - குன்றக் குரவையுள், சிறைப்புறம் முதலியன.

அ) உரைபெறு கட்டுரை

உரைநடை போன்ற சீர்வரையறையின்றிப் பொருள் பொதிந்த சொற்களால் இனிய தீவிய நடையில் அமைவது.

எ-டு : ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வி யால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியது’.

ஆ) உரைப்பாட்டுமடை

உரைநடை போன்று அடிசீர் என்ற வரையறையின்றி வரும் பாடல்களைப் பொருத்தி யமைப்பது.

எ-டு :

‘குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி

அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்

மலைவேங்கை நறுநிழலில் வள்ளிபோல்வீர் மனநடுங்க

முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோ என முனியாதே’ (சிலப். 24 : 1-24)

இ) கருப்பம்

பின் நிகழ்ச்சிக்குரிய செய்தியைத் தாங்கிவரும் பகுதி இது. கலியடியும் ஆசிரிய அடியும் கொள்ளும் சீர்கள் விரவி உரை போல அடிவரையறை செய்ய இயலாது அமைவதும் உண்டு.

எ-டு :

‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின்

மடக்கண்ணீர் சோருதலும் உறியில் வெண்ணெயுருகாமையும்

மறிநுடங்கி யாடாமையு மான்மணிநிலத் தற்று வீழ்தலும்

வருவதோர் துன்பமுண்டென மகளைநோக்கி மனமயங்காதே

மண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியும் தான்காண

ஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் தம்முனாடிய

வாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கண் பிஞ்ஞையோடாடிய

குரவை ஆடுதும் யாமென்றாள் கறவைகன்று துயர்நீங்குக என்னவே.’ (சிலப். 17-5)

ஈ) கலி ஆசிரிய இணைப்பு

எ-டு :

‘என்றுதன் மகளைநோக்கி தொன்றுபடு முறையானிறுத்தி

இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள்

குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்

கைக்கிளை யுழையிளி விளரி தாரமென,

விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். 17-13)

இதன்கண் முதலீடியும் கலியடி; ஏனைய ஆசிரியஅடி.

சிலேடை வெண்பா -

{Entry: P16a__328}

முன் இரண்டடிகளும் சிலேடையான் அமைய, பின் இரண் டடிகளிலும் மடக்குப் பயிலப் பாடப்படுவதொரு நேரிசை வெண்பா. பெரும்பான்மையும் இறைவனது திருத்தலம் ஒன்றுபற்றி இப்பாடல் வருணனையாக அமையும். பின் னிரண்டடியும் இறைவனது சிறப்பினைப் பாடி அவனது திருத்தலமாவது இஃது என்னும் பொருள்பட அமைய, முன்னிரண்டடியும் அத்திருத்தலத்தின் பெயரைச் சுட்டும். இத்தகு வெண்பாக்கள் 40 முதலாக 100 வரை அமையப் பாடும் பிரபந்தமும் அத்திருத்தலப் பெயருடன் புணர்த்து கலசைச் சிலேடை வெண்பா. திருவரங்கச் சிலேடை வெண்பா முதலாகப் பெயர் பெறும்.

எ-டு :

‘ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்

காவலரைச் சூழும் கலைசையே - மேவும்

அரிவையம் பாகத்தான் அரண்ஒருமூன் றெய்தோன்

அரிவையம் பாகத்தான் அகம்.’

அரிவை அம் பாகத்தான் அரி வை அம்பு ஆகத் தான் அரண் ஒருமூன்று எய்தோன் அகம் கலைசையே; ஆவலுடன் பாவலர் காவலரைச் சூழ்வதும், ஆறுகால் வண்டினம் கா அலரைச் சூழ்வதும் ஆகிய தலம் கலைசையே.

உமாதேவியை தன் அழகிய வாமபாகமாகக் கொண்டவனும், திருமாலைக் கூரிய அம்பாகக் கொண்டு திரிபுரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிவபெருமானது தலம் கலைசையே. விருப்பத்தொடு கவிஞர்கள் (பரிசில் பெற வேண்டி) அரசரை வந்து சூழ்வதும் (சூழ்தல் - ஆய்ந்து பாடுதல்), அறு கால்களை யுடைய வண்டுகள் சோலைப்பூக்களை(மது அருந்த) வந்து மொய்ப்பதும் ஆகிய தலம் கலைசையே.

இப்பாடற்கண் பின்னிரண்டடிகளும் மடக்கணி. இரண்டா மடிக்கண் ‘காவலரைச் சூழும்’ என்பது பிரிமொழிச் சிலேடை.

சிவஞான முனிவர் -

{Entry: P16a__329}

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெரும்புலவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் மிக்க புலமை சான்றவர். இருமொழியிலும் இலக்கிய இலக்கணங்களை நுணுகிப் பயின்றவர். சைவ சித்தாந்தச் சாத்திரப் பயிற்சியிலும் வல்லுநர். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தே சைவ வேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என் பார்க்கு மயிலம்மையாரிடத்துத் தோன்றிய இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் என்பது. திருவாவடு துறையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகராம் ஞானசிரியர்பால் சிவதீட்சையும் சைவத் துறவும் சிவஞானயோகி என்னும் தீட்சா நாமமும் பெற்று, சைவ ஆகம நூல்களைக் கற்றுத் தெளிந்து, மெய்கண்ட சாத்திரங் களையும் பண்டாரச் சாத்திரங்களையும் அவர்பால் ஐயம் திரிபறக் கற்றார்; வடமொழி தென்மொழி யிரண்டிலும் பெரும்புலமை பெற்றுச் சைவசித்தாந்த வாழ்வே தமது உயிராகக் கொண்டு வாழ்ந்தார்.

இலக்கியம் இலக்கணம் தருக்கம் சித்தாந்த சாத்திரம் முதலியன இவர்பால் பாடம்கேட்ட மாணாக்கர் பலராவர். குறிப்பாக அவர்களுள் கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பர நாதமுனிவர் முதலாகப் பன்னிருவர் புகழ் மிக்கவர் என்பர்.

இப்பெருமானார் இயற்றிய நூல்களும் பண்டை நூல்கள் ஆகியவற்றின் உரைகளும் குறிக்கத்தக்கன: காஞ்சிப் புராணம் முதற்காண்டம். சோமேசர் முதுமொழி வெண்பா, குளத் தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங் கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசு வரி பதிகம், திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, திருத்தொண்டர் திருநாமக் கோவை, பஞ்சாக்கர தேசிகர்மாலை, கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத் தரவிருத்தி என்பன இலக்கியங்கள்;

தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல் விருத்தியுரைத் திருத்தமாகிய புத்தம் புத்துரை என்பன இலக்கண நூல் உரைகள்:

தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும், திராவிட மாபாடியம் எனப்படும் சிவஞானபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்திப் பொழிப்புரை - சுபக்கம், சித்தாந்தப் பிரகாசிகை, அரதத்தாசாரியார் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம், ‘என்னை இப்பருவத்தில்’ என்னும் செய்யுட் சிவசமவாத உரைமறுப்பு, ‘எழுத்து’ எனும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம் என்பன. சைவமதச் சார்புடைய, இவரால் இயற்றப்பட்ட பிற நூல்கள். (தமிழ் பக். 169 - 172)

சிற்றிற்பருவம் -

{Entry: P16a__330}

ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் பருவம். சிறுமியர் இழைத்த மணற்சிற்றிலைப் பாட்டுடைத் தலைவனாகிய பாலன் சிதைக்க வருவது கண்டு அச்சிறுமியர் ‘சிறியேம் சிற்றில் சிதையேலே!’ என்று வேண்டுவதாகப் பத்துச் சந்த விருத்தங்களாற் பாடுவது.

சிற்றெட்டகம் -

{Entry: P16a__331}

அகப்பொருள் பற்றிய ஓர் இலக்கியம். இதன் செய்யுள்கள் ஆசிரியப்பாவான் இயன்றன. பண்டையுரையாசிரியர்களால் மேற்கோளாக இதன் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.

சிறுகாக்கைபாடினியம் -

{Entry: P16a__332}

இவ்யாப்புநூலினின்று 34 சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட் டப்பட்டுள்ளன. சில தொடை வகைகள், சில பாவகைகள், சில இன வகைகள் நீங்கலாக எஞ்சிய செய்திகள் பலவும் இம்முப்பத்து நான்கு நூற்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் சிறுகாக்கைபாடினியார் பெருங்காக்கைபா டினியார்க்குப் பிற்பட்ட யாப்பு நூலாசிரியர். இவர் காலத்தே தெலுங்குநாடு தமிழகத்தின் வடஎல்லையாயிற்று.

சிறுகாக்கைபாடினியார் -

{Entry: P16a__333}

‘சிறுகாக்கைபாடினியம்’ காண்க.

சிறுதேர்ப் பருவம் -

{Entry: P16a__334}

ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் இறுதிப்பருவம், பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறியதேரை உருட்டி விளையாடும் நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தினால் ‘சிறுதேர் உருட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு 10 பாடல்கள் பாடப்படும்.

சிறுபறைப் பருவம் -

{Entry: P16a__335}

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் ஒன்று. (-எட்டாவது). பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தால் ‘சிறுபறை கொட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு பத்துப் பாடல்கள் பாடப்பெறும்.

சின்னப்பூ -

{Entry: P16a__336}

அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலால் சின்னப்பூ ஆயிற்று. தகுதி பெற்ற தசாங்கத்தினை (மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு, தார், பெயர், கொடி என்னும் இவற்றை)ச் சிறந்த நேரிசை வெண்பாவினால் நூறு, தொண் ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் எண்படப் பாடின் அது சின்னப்பூவாம். (இ. வி. பாட். 86)

வண்ணக ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைகட்கும் சுரிதகத்திற் கும் இடையே வரும் உறுப்பு ‘எண்’ எனப்படும். ஈரடி இரண்டான் வரும் எண். பேரெண்; ஓரடி நான்கான் வருவது சிற்றெண்; இருசீர் எட்டான் வருவது இடையெண்; ஒருசீர் பதினாறான் வருவது அளவெண் எனப்பட்டன. ஆகவே, ஒரு சீராகிய முடிவிற்கு எல்லையாக நிற்கும் அளவெண் ‘சின்னம்’ எனப் பெயர் பெறும். (தொ. செய். 145 நச்.)

சின்னூல் -

{Entry: P16a__337}

1. சிறுநூல்; ‘சின்மையைச் சின்னூல் என்றது போல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க’ (பதிற். 76 உரை)

2. நேமிநாதம்; “சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்”

(தொண்டை. சத. 32) (L)

சீட்டுக்கவி -

{Entry: P16a__338}

புலவன் ஒருவன் தன்னைப் பலவாறு புகழ்ந்து கூறி வள்ளலை யும் புகழ்ந்து கூறி இறுதியில் தான் வேண்டும் பரிசிலைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ சுட்டி எழுதிவிடுக்கும் ஓலைப் பாசுரம். ‘ஓலைத் தூக்கு’ என்பதும் அது.

எ-டு :

‘ஏடாயி ரங்கோடி எழுதாமல் தன்மனத்

தெழுதிப் படித்தவிரகன்

இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிவீர

இராகவன் விடுக்குமோலை

சேடாதி பன்சிரம சைத்திடும் புகழ்பெற்ற

திரிபதகைக் குலசேகரன்

தென்பாலை சேலம்பு ரந்துதா கந்தீர்த்த

செழிய னெதிர் கொண்டுகாண்க;

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,

பற்றிக்கோ லாத கோணம்,

பறவாத கொக்கு,அனல் பண்ணாத கோடை, வெம்

படையில்தொ டாதகுந்தம்,

சூடாத பாடலம், பூவாத மாவொடு,

தொடுத்துமுடி யாத சடிலம்,

சொன்ன சொற் சொல்லாத கிள்ளையொன் றெங்கும்

துதிக்கவர விடல் வேண்டுமே!’

அந்தகக் கவி வீரராகவ முதலியார் விடுத்த சீட்டுக் கவி இது. 12 சீர்ச் சந்த விருத்தம். இதன்கண், முதலடியில் தம்மைப் புகழ்ந்து கொண்டார்; இரண்டாம் அடியில் வள்ளலைப் புகழ்ந்தார்; ஈற்றடிகளில் தாம் விழைந்த பரிசிலைக் கல்வியறி வுடைய வள்ளற்குப் புலப்படுமாறு குறிப்பாற் பாடினர். வெளிப்படை என்னும் இலக்கணத்தால், வினை யெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தும் ‘விபாவனை’ அணிநயம் தோன்றக் கவி அமைந் துள்ளது. குதிரையின் பரியாயப் பெயர்கள் வந்துள்ளமை மற்றோர் அணிநயம். புலவர் விழையும் பரிசில் குதிரை என்பது.

சீர் ஓத்து -

{Entry: P16a__339}

யாப்பருங்கலத்துள் சீரினைப் பற்றி விளக்கும் பகுதி. முதலாவதாகிய உறுப்பியலுள் மூன்றாவது. இதன்கண் மூவகைச் சீர்கள், இயற்சீரின் திறம், தொகை, உரிச்சீரின் திறம், வகை, பொதுச்சீராவன, ஓரசைச்சீர், நால்வகைச் சீரும் செய்யுளுள் நிற்கும் முறை, கலியினும் ஆசிரியத்தினும் வரும் தனிச்சீர்கள் என்னும் செய்திகள் இடம் பெறுவன. இவ் வோத்தின்கண் ஏழு நூற்பாக்கள் உள்ளன.

சீவகசிந்தாமணி யாப்பு -

{Entry: P16a__340}

‘சிந்தாமணி யாப்பு’க் காண்க.

சுத்தானந்தப் பிரகாசம் -

{Entry: P16a__341}

சுத்தானந்தப் பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்ட கூத்து நூல். கூத்து வகைகளைப் பதினொன்று என இந்நூல் கூறு கிறது. பரத சேனாபதியம் 13 என்கின்றது. இந்நூலில் முதலி லும் இறுதியிலும் வடமொழிப் பாடல்கள் காணப்படுகின் றன. இது

செங்காட்டங்குடி எல்லாம் ஆனந்தம் ஆனந்தம்

சிறுத்தொண்டர் மாமடமெல்லாம் ஆனந்தம் ஆனந்தம்

பண்காட்டி நடந்ததொர் ஆனந்தம் ஆனந்தம்

பாணிக்குள் நடந்ததும் ஆனந்தம் ஆனந்தம் - என முடிகின்றது.

சுந்தரர் தேவார யாப்பு -

{Entry: P16a__342}

கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியத் துறை, கொச்சகக் கலி என்பன. (இலக்கணத். முன். பக். 85)

சுப்பிரமணிய தீக்கீதர் -

{Entry: P16a__343}

பிரயோக விவேகம் என்ற சொல்லிலக்கண நூலை இயற்றி யவர். 17ஆம் நூற்றாண்டினர்.

சுவர்க்க கணம் -

{Entry: P16a__344}

இந்திர கணம்; நூல் முதற்சீருக்குப் பொருத்தமான தேமாங் காய் என்னும் சீரைக் குறிப்பது. இதற்குரிய நாள் பரணி; பயன் பெருக்கம். இந்திரகணம் என்பதும் யமானகணம் என்பதும் அது. (இ. வி. பாட். 40)

சுவாமிநாத தேசிகர் -

{Entry: P16a__345}

18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்துச் சைவத் துறவியார்; வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை மிக்கவர். சைவ சித்தாந்தி; இலக்கணக் கொத்து, தசகாரியம் முதலியன இயற்றியவர். சங்கரநமச்சிவாயர் இவருடைய மாணாக்கருள் ஒருவரே.

சூடாமணி நிகண்டு -

{Entry: P16a__346}

16ஆம் நூற்றாண்டினரான மண்டல புருடர் என்ற சமண ஆசிரியரால் விருத்தச் செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. இதன்கண் சிறப்புப் பாயிரம் (8 விருத்தங்கள்) நீங்கலாக, தெய்வப் பெயர்த் தொகுதி (93), மக்கட் பெயர்த்தொகுதி (106), விலங்கின் பெயர்த்தொகுதி (78), மரப்பெயர்த்தொகுதி (68), இடப்பெயர்த் தொகுதி (68), பல்பொருட் பெயர்த் தொகுதி (35), செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி (76), பண்பு பற்றிய பெயர்த்தொகுதி (82), செயல் பற்றிய பெயர்த் தொகுதி (67), ஒலி பற்றிய பெயர்த் தொகுதி (53) எனப் பத்துத் தொகுதிகள் உள்ளன. (பிறைவளைவுக் குறியுளிடப்பட்டவை சூத்திர மாகிய விருத்தங்களது எண்ணிக்கை.)

சூத்திர விருத்தி -

{Entry: P16a__347}

தொல்காப்பியம் முதற்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் எழுதிய விரிவுரை.

சூர்ணிகை -

{Entry: P16a__348}

செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனம் நிற்கும் சூர்ணிகையைப் பின்பற்றி வார்த்திகமும், வார்த்திகத்தைப் பின்பற்றி அதிகரணங்களும் பகுக்கப் பட்டுள்ளன. (சி.போ. பாண்டிப்.) இது சூரணிகை, சூரணை எனவும் படும். (L)

சூர்ணிகைக் கொத்து -

{Entry: P16a__349}

இரண்டு முதலாக வரும் சூர்ணிகைத் தொகுதி; அஃதாவது செய்யுட் கருத்தை இனிது விளக்கி நிற்கும் சொற்றொ டர்களின் தொகுப்பு. (L)

சூரியகணம் -

{Entry: P16a__350}

நூலின் முதற் செய்யுட்கண் முதற்சீராக அமைதல் கூடாது என்று நீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்பாடு சூரிய கணமாம். இதற்குரிய நாள் பூசம்; பயன் வீரியம் போக்கல். (இ. வி. பாட். 40)

சூளாமணி -

{Entry: P16a__351}

தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி என்னும் இச்சிறு காப்பியச் செய்யுள் சில பாதிச் சமவிருத்தம், சம விருத்தம், அளவழிப் பையுட் சந்தம், எறும்பிடைச் சந்தம், பாதிச்சமப் பையுட் சந்தம், அளவழிச் சந்தப்பையுள், நேரசை முதலாய் அடிதோறும் 12 எழுத்தும் 14 எழுத்தும் பெற்று வரும் சந்தச் செய்யுள் என்பனவற்றிற்கு யாப்பருங்கல விருத்தியுள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516-518; 520-522 உரை)

சூளாமணி யாப்பு -

{Entry: P16a__352}

12 சருக்கங்களையும் அவற்றுள் 2131 பாடல்களையும் உடைய இந்நூலுள் கலிவிருத்தம் 1210, அறுசீர் ஆசிரிய விருத்தம் 735, பலவகைக் கலித்துறைகள் 92, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, வஞ்சி விருத்தம் 31, எண்சீர் ஆசிரிய விருத்தம் 14, தரவு கொச்சகம் 8, வஞ்சித்துறை 1 வந்துள்ளன. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிய பாடல் 24 உள்ளன. இவை வஞ்சி விருத்தம், கலி விருத்தம், கலித்துறை, அறுசீர் விருத்தம் என்ற யாப்பைச் சார்ந்தன. (இலக்கணத். முன். பக். 98, 99)

ஏனைய பல பாவினங்களொடு, முதலடியாக நான்காம் அடியாகும். இரட்டையாப்பு விசேடமாயதோர் யாப்பு.

‘ஓடு மேமன மோடுமே

கூடு மோதணி கோதையாய்

காடு சேர்களி காண்டொறும்

ஓடு மேமன மோடுமே’ என்பது. (1619)

மற்று, முதற்சீர் ஒத்து வருதல், முதல் இருசீர் ஒத்து வருதல், இரண்டாம் நான்காம் சீர் அடிதோறும் ஒத்துவருதல், இடையடி மடக்கி வருதல், அவை அந்தாதியாக வருதல் போன்ற பிற நயமான வேறுபாடுகளையும் ஆங்காங்குக் காண்டல் கூடும்.

செங்கீரை -

{Entry: P16a__353}

பிள்ளைத்தமிழாகிய பிரபந்தத்துள் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் பொதுவான பருவங்கள் ஏழனுள்ளும் இரண்டாவது பருவம். குழந்தை பிறந்து ஐந்தாம் திங்களில் தன் தலையை நிமிர்த்தி முகத்தை இங்குமங்கும் அசைத்தாடு வதைச் சிறப்பித்துப் பாடும் பகுதி. ஆசிரியச் சந்தவிருத்தம் பத்து அமையும். (இ. வி. பாட். 46)

செந்தமிழ் இலக்கணம் -

{Entry: P16a__354}

வீரமா முனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் பற்றிய இலக்க ணம். இது 1730-இல் இலத்தீன் மொழியில் யாக்கப்பட்டது. செந்தமிழ் கற்கும் புறநாட்டு மாணாக்கர்க்குப் பயன்படவே எழுதப்பட்டது. ஆங்கில மொழியிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது,

செந்தமிழ் மாலை -

{Entry: P16a__355}

யாதொரு பொருளைப் பற்றியேனும் 27 வகையாகப் பாடுவ தொரு பிரபந்தம். “பாவானும் பாவினத்தானும் பாடுவாரு முளர்: நான்கு முதற்பாவானாதல் ஒரு பாவினத்தானாதல் பாடுக என்பாரும் உளர்” என்பது பண்டைய குறிப்பு. (பன். பாட். 306)

செம்பூட் சேய் -

{Entry: P16a__356}

அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் (பா.வி. பக். 104) கூற்றியல் என்னும் நூலாசிரியரும் இவரே என்ப.

(இறை. அ. 56 உரை)

செய்யுட்கணம் -

{Entry: P16a__357}

பிரபந்தத்தை இயற்றத் தொடங்கும் கவிஞன் செய்யுள் முதற்கண் மேற்கொள்ளத் தரும் நற்கணம் நான்கும், நீக்கத் தகும் தீக்கணம் நான்கும் ஆகிய எட்டும் ஆம். அவை முறையே நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம் (சந்திரகணம்), இயமான (சுவர்க்க, இந்திர) கணம் எனவும், சூரியகணம், தீக்கணம், வாயு (மாருத) கணம், அந்தர (ஆகாய) கணம் எனவும் பெயர் பெறும். (திவா. பக். 299; பிங். 1333; இ.வி. பாட். 40)

செய்யுட் கலம்பகம் -

{Entry: P16a__358}

பலவகைப் பாடல் திரட்டு. (L)

செய்யுட் கோவை -

{Entry: P16a__359}

எ-டு : சிதம்பரச் செய்யுட் கோவை. நால்வகைப் பாவும் பாவினங்களும் நிரலே அமைக்கப்பட்டு அமைந்த பிரபந்தம். (L)

செய்யுள் இயல் -

{Entry: P16a__360}

ஐந்து இலக்கணங்களும் கூறும் நூல்களுள் யாப்பிலக்கணம் கூறும் பகுதி. தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தில் எட்டாவதாக இவ்வியல் இடம் பெறும். இச்செய்யுளியலின் தலைமையும் சூத்திரப் பன்மையும் பற்றித் தொல்காப்பி யனாரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் முதலியோர் ‘செய்யுளியலுடையார்’ என்று குறிப்பர். (யா. வி. பக். 125, 205). யாப்பு நூல்களிலும் சிதம்பரம் பாட்டியலிலும் செய்யுளியல் நால்வகைச் செய்யுள்களையும் அவற்றின் இனங்களையும் கூறும் பகுதியின் பெயராக அமைகிறது.

செய்யுள் பொருத்தம் -

{Entry: P16a__361}

‘செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்’ காண்க.

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் -

{Entry: P16a__362}

மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி, கணம் எனக் காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியில் பார்க்கும் பொருத்தம் பத்தாம். அவை மங்கலப் பொருத்தம் முதலாகப் பெயர் பெறும். (இ. வி. பாட். 10)

செய்யுள் வழுக்கள் -

{Entry: P16a__363}

பலரானும் உடன்பட்ட வழக்கொடு நூற்பயன் கொடுக்கும் இன்பத்தினை விட்டு மறுதலையால் புணர்த்தலும், வட வெழுத்தே மிகப்புணர்த்தலும், பழையோர் கூறிய இலக் கணச் சொற்களை விடுத்துக் காலத்திற்கு ஏற்றவாறு கூறும் வழூஉச்சொல் புணர்த்தலும், பொருள் மயக்கமுறக் கூறுத லும் என இவை. (இ. வி. பாட். 126)

செயல்முறை -

{Entry: P16a__364}

பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவு கூறுதல் பற்றி எழுந்த நூல் இது. “கலியுறுப்புக்கு அளவை, செயல்முறையில் கண்டுகொள்க” (யா.வி. பக். 298) முதலாயின வந்தவாறு காண்க. தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி ஆறடித் தரவு, நான்கடித் தாழிசை மூன்று, இரண்டடி அராகம் ஒன்று, பேரெண் இரண்டு, இடையெண் நான்கு, சிற்றெண்எட்டு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என்ற அமைப்பில் பாடப்படு வது செயல்முறையில் சொல்லப்பட்ட தொரு செய்தியாகும். (யா. வி. பக். 310)

செயிற்றியம் -

{Entry: P16a__365}

பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள் கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின் வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம் மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.) இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர்.

செருக்களவஞ்சி -

{Entry: P16a__366}

போர்க்களத்தினைச் சிறப்பித்துக் கூறும் தனிநிலைச் செய்யுள் வகை. இதன் யாப்பு ஆசிரியம் வஞ்சி என்னும் இவற்றால் அமையும் என்னும் பிரபந்த மரபியல் (39). போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரை உடலையும், பேயும் பிசாசும் கழுகும் பருந்தும் காகமும் தின்று களித்து ஆரவாரமாயிருக்க, பூதமும் பேயும் பாடி ஆட, இங்ஙனம் இருந்த சிறப்பினைப் பாடும் இதனைப் ‘பறந்தலைச் சிறப்புப்பாட்டு’ எனவும் கூறுவர் என்பது சதுரகராதி. அந்நூல் ஆசிரியப் பாவால் செருக்களத்தைப் பாடுவது என்னும் (இ. வி. பாட். 109.)

செருக்களவழி -

{Entry: P16a__367}

பாட்டுடைத் தலைமகன் புகழ் நிலைபெறக் காரணமாகப் போர்க்களத்தே ஆற்றிய வீரச்செயல்களை நேரிசை இன் னிசை பஃறொடை வெண்பாக்களால் புனையும் தொடர் நிலைச் செய்யுள். இது மறக்களவழி எனவும்படும். (பன்.பாட். 315, 316).

சேந்தன் திவாகரம் -

{Entry: P16a__368}

நிகண்டுகளுள் காலத்தால் முற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் திவாகரர் என்பதும், சேந்தன் என்னும் சிற்றர சனால் இவர் உபகரிக்கப்பட்டார் என்பதும் துணியப்பட்ட செய்திகள். திவாகரர் விநாயகனை வணங்கிப் பாடி நூல் செய்தமையின் சைவசமயத்தராதல் ஒருதலை. தம்மை ஆதரித்த வள்ளலை நூலின் பன்னிரு தொகுதியிலும் இறுதி தோறும் புகழ்ந்து பாடியுள்ளமையும் நூற்பெயரின் முன் மொழியாக அவன்பெயர் வைத்தமையும் இவருடைய செய்ந் நன்றியறிதலைப் புலப்படுத்துவன. சோழநாட்டில் காவிரிக் கரைக்கண் அமைந்த அம்பர் நகரை ஆண்டு வந்த அக்குறு நில மன்னன் வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை சான்றிருந்தமையும், ஒளவையாரால் போற்றப்பட்டமையும், கோதண்டம் காண்டீபம் காளியின் முத்தலைச் சூலம் இவற்றைக் கவிபாடிப் போற்றியுள்ளமையும் போன்ற செய்திகள் ஒவ்வொரு தொகுதியிலும் இறுதிச்செய்யுளால் போதருவன.

இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகல் கூடும். இதன்வழியாகவே அடுத்துப் பிங்கலந்தையும் அடுத்துச் சூடாமணி நிகண்டும் அவற்றை அடுத்தே பிற நிகண்டுகளும் தோன்றின. இதன் சூத்திரம் நூற்பா யாப்பிற்று. தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பல்பொருள் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி யீறாகப் பன்னிரு பாகுபாடுகள் இதன் உட்பிரிவுகள்.

சேவல்பாட்டு -

{Entry: P16a__369}

முருகப்பெருமானுடைய கொடி ஊர்தி ஆகிய கோழிச் சேவலையும், திருமால் ஊர்தி கொடி ஆகிய கருடச் சேவலையும் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம். இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.

சேனாவரையம் -

{Entry: P16a__370}

வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் தொல் காப்பியம் சொல்லதிகாரத்திற்கு எழுதியவுரை. அவர் பெய ரால் சேனாவரையம் என வழங்கப்படும். இலக்கியத்திற்குத் திருக்குறட் பரிமேலழகரது உரைபோல, இலக்கணத்திற்கு இவ் வுரை பெரிதும் பாராட்டப்பெறும். சொற்சுருக்கமும் பொருள் ஆழமும் மிக்க இவ்வுரை, தனித்தவொரு நடைச் சிறப்புடை யது; ஆங்காங்கு வடநூலார் கருத்தை எடுத்துக்காட்டுவது; ஏற்றவிடத்துத் தமிழிலக்கண நெறியைப் பிறழாது எடுத்து ஓதுவது; சூத்திரங்கள் சிலவற்றுக்குப் பொழிப்புரை கூறாது கருத்துரையே கூறிச் செய்வது; ‘இனி ஓருரை’ எனச் சூத்திரத்துக்கு மற்றொரு பொருள் உரைப்பதும், ‘இதுவும் ஓர் நயம்’ எனச் சிறப்பினை எடுத்துச் சுட்டு வதும் பிறவும் இவ்வுரையின் தனிச் சிறப்புக்கள். சேனாவரையரது காலம் 14ஆம் நூற்றாண்டின் முற்பட்டது என்பது துணிவு.

சேனாவரையர் -

{Entry: P16a__371}

தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்குப் பிறரினும் சிறக்க உரைவகுத்த உரையாசிரியர். தமிழ் வடமொழி இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்தவர். ‘வடநூற்கடலை நிலைகண்டு ணர்ந்த சேனாவரையர்’ என்று இவரை மாதவச் சிவஞான முனிவர் தமது சூத்திர விருத்தியுள் பாராட்டுவர். இவர்காலம் பரிமேலழகர் காலமாகிய 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர் மு.இராகவையங்கார் அவர்கள்.

சைமினி -

{Entry: P16a__372}

பூருவ மீமாஞ்சையின் ஆசிரியராம் முனிவர். ‘அக்கபாதன் கணாதன் சைமினி’ (மணி. 27:82) (L)

சொக்கப்ப நாவலர் -

{Entry: P16a__373}

பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்கு நல்லுரை கண்ட சான்றவர் சொக்கப்ப நாவலர். இவர் காலம் புலப்பட்டிலது. குறிப்பிடும் கனவுக்கால நான்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் பின்வருமாறு:

இயற்கைப் புணர்ச்சி - முதல் நாள் : இடந்தலைப்பாடு இரண் டாம் நாள்; பாங்கற் கூட்டம் - மூன்றாம் நாள்; பாங்கிமதி உடன்பாடு - மூன்றாம் நாள்; பாங்கியிற் கூட்டம் - நாலாவது நாள்; ஒரு சார்ப்பகற்குறி - ஐந்தாம் நாள்; பகற்குறி - ஆறாம் நாள்; இரவுக்குறி - ஏழாம் நாள்; இரவுக்குறி - இடையீடு - எட்டாம்நாள்; வரைதல் வேட்கை - 9, 10, 11 ஆம் நாள்; வரைவுகடாதல் - 12, 13, 14 ஆம் நாள்; ஒருவழித் தணத்தல் - 12, 13, 14, 15 ஆம் நாள்; வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் - 16ஆம் நாள் தொடங்கி 50ஆம் நாள் முடிய; வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்டு வருதல் - 51 ஆம் நாள்; வரைவுமலிவு - 51ஆம் நாள்; அறத்தொடு நிற்றல் - 52ஆம் நாள்; உடன்போக்கும் கற்பொடு புணர்ந்த கவ்வையும் - 53ஆம் நாள்; மீபசி - 54ஆம் நாள்; உடன்போக்கு இடையீடு - 55ஆம் நாள்; தன்மனை வரைதல் - 56ஆம் நாள்.

எனவே, களவொழுக்கம் தொடங்கியபின் 56ஆம் நாளில் திருமணம் நிகழும் என்பது சொக்கப்பநாவலரது கருத்தாகும்.

சொகினம் -

{Entry: P16a__374}

சகுனம்; அறம் பொருள் இன்பம் வீடு சொன்ன நூல்களைச் சார்ந்து தோன்றிய இந்நூல் குறிப்பிடும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும் என்பது உரை. (யா.வி. பக். 491)

சொல்லகத்தியம் -

{Entry: P16a__375}

கால வெள்ளத்தில் இறந்துபட்ட ஓர் இசைநூல். (சிலப். 8:24 அரும்.) (L)

சொற்கட்டு -

{Entry: P16a__376}

பண்டைய இலக்கியங்களுள் ஒன்றான இதன் பாடலடிகள் சொற்சீரடியின் பாற்படுவன. (யா.வி. பக். 373)

சொற்பொருத்தம் -

{Entry: P16a__377}

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் இரண்டா வது; செய்யுள் முதற்கண் எடுத்த மங்கலச்சொல் விழுமிய பொருள் தன்னிடம் தோன்ற நிற்றலோடே, பல்வேறு பொருள் படக் கூறுதலும் வகையுளியுறுதலும் ஈறுதிரிதலுமாகிய குற்றம் மூன்றும் இன்றி, புலவரால் செய்யப்படுவது. ஏற்புழிக் கோடலால், மங்கலச் சொல்லிற்கு ஏனைய பொருத்தங்கள் கருதி அடைமொழியை முன் புணர்ப்பின் மங்கலச்சொல் சீரின் இடையே வரும்; அவ்வாறு வருவழி அடையடுத்த மங்கலச் சொல்லாகிய முதற்சீர் ஈறு திரிதலும் உண்டு; ஆண்டும் திரியாமையே சிறப்புடையதாவது. (இ. வி. பாட். 12)

சோதிடம் -

{Entry: P16a__378}

அறம் பொருள் இன்பம் வீடு ஆமாறு சொன்ன நூல்களின் சார்பாக வந்த சோதிடம் என்ற நூலின் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும். (யா.வி. பக். 491)

சோபன வாழ்த்து -

{Entry: P16a__379}

சோபனம் - மங்கலம். சோபன வாழ்த்தாவது மங்கலப் பாட்டு. (W) (L)

சோரகவி -

{Entry: P16a__380}

ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு மற்றவனிடம் கூறி வருபவன்; ‘கள்ளக்கவி’ எனவும்படும்.

(இ.வி. பாட். 174)

ஞ section: 1 entries

ஞானாசாரியம் -

{Entry: P16a__381}

வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் பலவகை யான சந்தச்செய்யுள் இலக்கணமும் தாண்டகச்செய்யுள் இலக்கணமும் கூறப்பட்டன. (யா.வி. பக். 486)

த section: 92 entries

தக்காணியம் -

{Entry: P16a__382}

இஃது இடைச்சொல் உரிச்சொற்களைத் தொல்காப்பியம் - அவிநயம் - நல்லாறன் மொழிவரி - என்ற நூல்கள் போல விளக்கிக் கூறிய பண்டைய இயற்றமிழ் நூல். (யா. வி.பக். 579)

தசகம் -

{Entry: P16a__383}

பத்துச் செய்யுட்களைக் கொண்ட பிரபந்தம்.

தசாங்கத்தயல் -

{Entry: P16a__384}

அரச உறுப்புப் பத்தினை, ஆசிரியப்பா பதினான்கால் பாடும் பிரபந்தம். (பி. தீ. 24)

அரசனுடைய தசாங்கத்தை ஆசிரிய விருத்தத்தால் பத்துச் செய்யுள் கூறுவது. (மு. வீ. யா. ஒ. 141)

தசாங்கத்திற்குச் சிறப்புவிதி -

{Entry: P16a__385}

பாட்டுடைத் தலைவனுக்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒருசீராலே முடிவுபெறப் பாடுவது இலக்கணமாம். பிரித்து வேறு சொல்முடிபு கொடுத்துக் கூறல் குற்றமாம். பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண் தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது. (கந்தர் கலிவெண்பாவுள் கண்ணி 64 - 74 காண்க)

எ-டு : ‘ஐந்தொழிலும் ஓவா(து) அளித்துயர்ந்த வான்கொடியும்

வந்த நவநாத மணிமுரசும்’ (70) (இ. வி. பாட். 43)

தசாங்கப்பத்து -

{Entry: P16a__386}

நேரிசை வெண்பாவால் சிறப்புத் தோன்ற அரசன் படைத்த மலை நதி நாடு ஊர் முதலிய தசாங்கத்தினைப் பத்துக் கவியால் கூறும் பிரபந்தம். (இ. வி. பாட். 80)

தசாங்கம் -

{Entry: P16a__387}

வேந்தனுடைய மலை, நதி, நாடு, ஊர், புனையும் தார் (-மார்பிலணியும் மாலை), குதிரை, மதவேழம், கொடி, முரசு, ஆணை (-ஆக்கினை) ஆகிய இவைபத்தும். இவற்றைப்பாடும் பிரபந்தமும் இப்பெயர்த்து. (இ. வி. பாட். 22)

தண்டகமாலை -

{Entry: P16a__388}

முந்நூறு வெண்பாக்களால் இயன்ற பிரபந்த வகை. இது வெண்புகழ்ச்சி மாலை எனவும்படும். (தொ. வி. 283 உரை)

தண்டிசைக் கவிதை -

{Entry: P16a__389}

வேந்தனுடைய படையினைப் புகழ்ந்து இசைக்கும் பாடல். தண்டு - படை; இசை - புகழ்ச்சி. பிற்காலச் செய்யுள் வகையுள் இதுவும் ஒன்று. (இ. வி. பாட். பிற். 7)

தண்டியலங்காரம் -

{Entry: P16a__390}

தமிழில் அணியிலக்கணத்தை அழகுற எடுத்தியம்பும் இலக்கணம். வடமொழியில் தண்டி என்ற பெருங்கவிஞர் காவியாதரிசம் என்ற அணியிலக்கணம் செய்தார். அதனை வீரசோழியம் தமிழில் மொழிபெயர்த்துப் பாடுகிறது. காவியாதரிசத்தோடு ஒருபுடை ஒத்தும் ஒவ்வாதும் தமிழில் தண்டியலங்காரம் பாடப்பெற்றது. வடமொழித் தண்டியின் இலக்கணச் செய்தியைப் பெரும்பாலும் தழுவ இயற்றப்பட் டமையால், இவ்வழிநூலும் முதல்நூல் ஆசிரியர் பெய ராலே தமிழில் தண்டியலங்காரம் எனப்பட்டது; அன்றி, இத்தமிழ்நூல் ஆசிரியர்தம் பெயர் தண்டி என்றும் இருத்தல் கூடும். இத்தண்டியாசிரியர் கம்பர் மகனாம் அம்பிகாபதியின் புதல்வர் என்ற வரலாறும் உண்டு.

இவ்வணி நூலகத்தே பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களும், அவற்றுள் முறையே 25, 64, 35 நூற்பாக்களும் உள. இவை நீங்கலாகத் தற்சிறப்புப்பாயிரமும் நாமகள் வாழ்த்துப் பாடலும் எனச் செய்யுள் இரண்டாம்.

நூலாசிரியரே எடுத்துக்காட்டுப் பாடல்களையும் வரைந்தார். இவற்றுள் வெண்பாப் பாடலே பெரும்பான்மை.

இரண்டாங் குலோத்துங்கன் அவைக்களத்தே இந்நூல் அரங்கேறியது என்ப. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனலாம். மிக்க வழக்குப் பயிற்சியுடைய இவ்வணியிலக்கணம் உவமை முதல் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து அணிகளை மொழிகிறது. சொல்லணியுள் சித்திரகவிகள் பன்னிரண்டு சொல்லப்பெறுவன; மேலும் எட்டு உரையுள் கொள்ளப் பட்டன. பொதுவணியியல் பத்துக் குணங்களைப் பாரிக் கிறது. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணவிளக்கம் தனது அணியியலுள் தண்டியலங்காரத்தையே தழுவி யுரைத்துள்ளமை இவ்வணி நூலின் பெருமையைப் பறை சாற்றுவது.

தத்துவ தரிசனம் -

{Entry: P16a__391}

பண்டைய தருக்க நூல்களுள் ஒன்று; செய்யுள் வடிவில் அமைந்தது. (யா. வி. பக். 583)

தந்திரவாக்கியம் -

{Entry: P16a__392}

நகைச்சுவை தோற்றும் ஒரு பழைய தமிழ் நூல்.

(தொ. பொ. 485 பேரா.)

தமிழ்நெறி விளக்கம் -

{Entry: P16a__393}

இறையனார் அகப்பொருளுக்குப் பின்னர்த் தோன்றிய அகப்பொருள் நூல்களில் ஒன்று. இந்நூலின் பொருளியல் என்ற பகுதியே கிடைத்துள்ளது. அதுவும் முழுமையாகக் கிட்டவில்லை. அகப்பொருளின் பெரும்பான்மையான பகுதி கிட்டியுள்ளது. அகப்பொருளின் முதல் கரு உரிப் பொருள் களைக் கூறிக் கைக்கிளையை விடுத்து ஆசிரியர் களவினைத் தொடங்கியுள்ளார். அறத்தொடு நிலையும் உடன்போக்கும் இந்நூலுள் கற்பியலுள் அடக்கப்பட்டுள. தலைவனுடைய நற்றாய் கூற்று ஒன்றும் இதன்கண் காணப்படுவது புதிய தொரு செய்தியாம். நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார் போலும். இந்நூல் உதாரணப் பாடல்கள் பல களவியற் காரிகையில் மேற்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவர், பொருளியலை அகம், புறம், அகப்புறம் என மூன்றாகப் பிரித்து விளக்கியுள்ளார். இப்பொழுது கிட்டியுள்ள நூற்பகுதி அகத்தைப் பற்றியதே. இவர் ஓதல் தூது முதலிய கற்புக்காலப் பிரிவுகளைச் ‘சேயிடைப்பிரிவு’ எனவும், பரத்தையிற் பிரிவை ‘ஆயிடைப் பிரிவு’ எனவும் குறிப்பிடுகிறார். இந்நூலுள் 25 நூற்பாக்களும், உரையில் 173 எடுத்துக்காட்டுப் பாடல்களும் உள்ளன.

தருக்க சங்கிரகம் -

{Entry: P16a__394}

வடமொழியில் அன்னம்பட்டர் வரைந்த தர்க்க சங்கிரகத்தை சிவஞானமுனிவர் தமிழாக்கம் செய்த நூல். (L)

தருக்க சங்கிரக தீபிகை -

{Entry: P16a__395}

வடமொழியில் அன்னம்பட்டர் தாம் வரைந்த தருக்க சங்கிர நூலுக்குத் தாமே எழுதிய உரை இது. தமிழில் சிவஞான முனிவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ( L)

தருக்க சாத்திரம் -

{Entry: P16a__396}

நியாய வாத நூல். (L)

தருக்க பரிபாஷை -

{Entry: P16a__397}

கேசவமிசிரர் வடமொழியில் யாத்த தர்க்க பரிபாஷா என்னும் நூலினின்று சிவப்பிரகாச முனிவர் இயற்றிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல். (L)

தவம் -

{Entry: P16a__398}

தவம் செய்வார்க்கு உளதாம் சிறப்பினை எடுத்துக் கூறி அத்தவம் செய்யும் உடல் துன்பமின்றியே பக்தியினால் எளிதில் இறைவனை அடையலாம் என்றாற் போலக் கூறும், கலம்பக உறுப்புக்கள் பதினெட்டனுள் ஒன்று.

“காய்களையும் இலைகளையும் உணவுக்காகத் தின்றும், காட்டில் தங்கியும், நற்கதியை அடைதலை வேண்டி ஐந்தீ நாப்பண் நின்றும், உலகினைச் சுற்றியும் தவம் செய்து திரியும் சான்றோர்களே! நீயிர் அரிதின் முயன்று தவம் செய்து பெறக் கூடிய பயனைப் பாம்பு அணையான் ஆகிய திருவரங்கன் திருக்கோயிலைப் பணிந்து தொழுவதனாலேயே எளிதில் எய்திவிடலாம்” என்பது போன்ற கூற்று. (திருவரங்கக். 18)

தனிநிலைச் செய்யுள்வகைப் பெயர் -

{Entry: P16a__399}

வளமடல், உலாமடல், உலா, அநுராகமாலை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சி மாலை, நாமமாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, பல பொருள் வஞ்சி, நிலைபெறு குழமகன், பாதாதி கேசம், கேசாதிபாதம், உவாத்தொழில், (கூத்தர் முதலியோர் தம்மை ஆற்றுப்படுத்தும்) ஆற்றுப்படை, தூது, மஞ்சரி- என்னும் பெயர் வேற்றுமையால் தனிநிலைச் செய்யுள் இருபத் திரண்டாம். (இ. வி. பாட். 95)

தனியன் -

{Entry: P16a__400}

(1) ஒரு நூலினை அல்லது அதனை ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச்செய்யுள் (திவ்.) (2) குருவைத் தோத்திரம் செய்யும் ஒற்றைச் சுலோகம். (L)

தாப்புலி -

{Entry: P16a__401}

ஒரு வகையான பழைய பா. (செங்கோன் தரைச்செலவு) (L)

தாயுமானவர் பாடல் யாப்பு -

{Entry: P16a__402}

நேரிசை வெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்துறை, சிந்து, எளிய சந்த அமைப் பினை உடைய வண்ணம் என்பனவாம். குறள் வெண்செந் துறை எனப்படும் பாக்கள், தாழிசை எனவும் கண்ணி எனவும் இருவகைப்படும். அவை எண்சீர் அடி இரண்டாயும், நாற் சீரடி இரண்டாயும் நிகழ்வன. (இலக்கணத் முன். பக். 107)

தாரகை மாலை -

{Entry: P16a__403}

அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களை வகுப்பினால் பாடும் பிரபந்தவகை. ‘வகுப்பு’த் தனியே காண்க. (இ. வி. பாட். 107)

தாலப்பருவம் -

{Entry: P16a__404}

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் மூன்றாவதாக வரும் பருவம் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தையைத் தொட்டிலி லிட்டுத் தாய் நாவினை யசைத்துப் பாடிப் பாராட்டுவது. பத்து ஆசிரிய விருத்தத்தான் சந்தவின்பம் தோன்றப் பாடப் பெறும். (தால் - நாவு)

தாலாட்டு -

{Entry: P16a__405}

(1) குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப் பாடுதல்; ‘தாலாட்டு நலம்பல பாராட்டினார்’ (பெரியபு. திருஞான.44)

(2) ‘தாலே லோ’ என்று முடியும் ஒருவகைப் பாட்டு

(3) தாலாட்டுதற்குரியதாய்ப் பிரபந்தத் தலைவனுடைய சிறந்த செயல்களைத் தெரிவிக்கும் பல கண்ணிகளை யுடையதொரு பிரபந்தம் எ-டு: சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு. (L)

தாள ஓத்து -

{Entry: P16a__406}

108 தாளங்களை விவரிக்கும் ஒரு பழையநூல் (L)

தாள சமுத்திரம் -

{Entry: P16a__407}

பரத சூடாமணி என்ற அரசன் இயற்றிய தாள வகையைக் கூறும் பண்டைய நூல். சிலப். முகவுரை (உ. வே. சா.)

தாற்பருவம் -

{Entry: P16a__408}

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத் தலைமக னையோ தலைமகளையோ எட்டாம் மாதத்தில் தாலாட்டு வதாகக் கூறும் மூன்றாம் பருவம். தாலப் பருவம் என்பதும் அது. தால் - நாவு; தாய் பிள்ளையைத் தொட்டிலிலிட்டு நாவசைத்துப் பாடுதலின், இப்பருவம் இப்பெயர்த்தாயிற்று. ஆசிரிய விருத்தம் பத்துப் பாடல்கள் சந்தவின்பம் பெற இது பாடப்பெறும்.

தானப் பொருத்தம் -

{Entry: P16a__409}

அகலக்கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள் ஒன்று. உயிர் எழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என ஐந்து இனங்களாகப் பகுத்துப் பாட்டுடைத் தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பால(த்தான)ப் பொருத்தம் எனக் கொண்டு தொடங்கி, மேல் குமாரப் பொருத்தம், இராசப் பொருத்தம், மூப்புப் பொருத்தம், மரணப் பொருத்தம், என உயிரினங்களை எண்ணி மூப்புத்தானப் பொருத்தமும் மரணத் தானப் பொருத்தமும் ஆகிய எழுத்துக்களை நீக்கி, பிற தானங்களி லுள்ள எழுத்துக்களால் நூலைத் தொடங்கும் செய்யுள் முதல்மொழிப் பொருத்தமாம்.

தலைவனது இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள- என்பனவற்றுள் ஒன்று முதற்கண்வரும் முதற்சீரே ஏற்றது.

தலைவனது இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தின தாயின் இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பன வற்றுள்ஒன்று முதற்கண் வரும் முதற்சீரே ஏற்றது.

பிறவும் இவ்வாறே இயைத்துக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 23)

தானை மாலை -

{Entry: P16a__410}

ஆசிரியப்பாவால் அரசரது தூசிப்படையினைப் பாடும் பிரபந்தவகை. தூசிப்படை - முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படை (இ. வி. பாட். 109)

திக்குவிசயம் -

{Entry: P16a__411}

அரசனுடைய நாற்றிசை வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்தம். இது 96 வகையான பிரபந்தத்தின் வேறுபட்டது. (இ. வி. பாட். பக். 505; சாமி. 171)

திண்டிம கவி -

{Entry: P16a__412}

திண்டிமம் முழக்கிக் கொண்டு வாதம் செய்யும் கவி. திண்டிமம் - ஓர் இசைக்கருவி. (திருச்செந். பிள். சப்பாணி 2) (L)

திணை நூல் -

{Entry: P16a__413}

பிற்காலப் பாட்டியல் நூல்கள் போலப் பாக்களுக்கு நிறமும் திணையும் பூவும் சாந்தும் புகையும் பண்ணும் திறனும் இருதுவும் திங்களும் நாளும் பக்கமும் கிழமையும் பொழுதும் கோளும் இராசியும் தெய்வமும் திசையும் மந்திரமும் மண்டிலமும் பொறியும் - போல்வனவற்றை விளக்கிக் கூறும் பழைய இலக்கணநூல். (யா. வி. பக். 488)

திரிபந்தாதி -

{Entry: P16a__414}

ஒவ்வோரடி முதற்சீரிலும் முதலெழுத்து மாத்திரம் திரிய இரண்டு முதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிப் பொருள் வேறுபட வரும் செய்யுளாகிய அந்தாதிப் பிரபந்தம்.

எ-டு : திருவேங்கடத்தந்தாதி திரிபந்தாதியாக அமைந்துள்ள வாறு காண்க.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் -

{Entry: P16a__415}

மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருக்குருகா மான்மியம் முதலிய நூல்கள் இயற்றிவர்; ஆழ்வார் திருநகரி என்னும் ஊரினர். இவர்காலம் 16 ஆம் நூற்றாண்டு.

திருக்குறுந்தாண்டகம் -

{Entry: P16a__416}

திருமங்கையாழ்வார் இயற்றியதும், நாலாயிர திவ்விய பிரபந்தத்துள் அடங்கியதுமான பிரபந்தம்.

அறுசீர்த் தாண்டகங்களாலாகிய தேவாரப் பதிகங்கள். (L)

திருக்கோலக் கவிதை -

{Entry: P16a__417}

தலைவன் தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் திறத்தைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம். இது 96 வகைப் பிரபந்தங் களின் வேறுபட்டது. (இ.வி. பக். 505)

திருட்டுக்கவி -

{Entry: P16a__418}

1. சோர கவி; ‘திருட்டுக் கவிப்புலவரை’ (தமிழ் நா. 221). பிறர் கவியைத் திருடித் தன்னுடையதாகப் பாடுபவன்; ‘கள்ளக் கவி’ எனவும்படும். (L)

திருநாமப்பாட்டு -

{Entry: P16a__419}

இயற்றியவர் பெயர், பயன் முதலியன கூறும் பதிக இறுதிப் பாடல்.

திருநெடுந் தாண்டகம் -

{Entry: P16a__420}

1. நாலாயிர திவ்விய பிரபந்தத்துள் திருமங்கையாழ்வார் அருளிய ஒரு பகுதி; 30 பாசுரங்களை உடையது.

2. எண்சீர்த் தாண்டகத்தால் ஆகிய தேவாரப் பதிகங்கள். அப்பர் அருளிய ஆறாம் திருமுறை எடுத்துக்காட்டாம்.

திருப்பணிமலை -

{Entry: P16a__421}

கோயில் திருப்பணிகளைக் கூறும் பாடல்நூல்.

திருப்பதிகம் -

{Entry: P16a__422}

1. பெரும்பாலும் பத்து அல்லது பதினொன்று (மிக அருகியே பன்னிரு பாடல்கள் வரும்) பாசுரங்களைக் கொண்டதாய்த் தேவாரத்தில் உள்ளது போலத் தெய்வத் தைப் புகழ்ந்துபாடும் பாடல் தொகை.

2. புத்தன் அருமை பெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி.பா. சௌத். 2, ஞானம்.) (L)

திருப்பல்லாண்டு -

{Entry: P16a__423}

1. நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம்.

2. சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். (L)

திருப்பாட்டு -

{Entry: P16a__424}

1. கடவுளைப் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்; ‘இவ் விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம்’ (கோவை. 86 உரை)

2. தேவாரம் (தொ. செய். 149 நச்.)

3. வசைச்சொல். (L)

திருப்பாற்கடல்நாதன் கவிராயர் -

{Entry: P16a__425}

முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூற்குப் பாயிரம் செய்தவர். “தன்னாசிரியன் முதலாம் ஐவருள் இந்நூற் (சிறப்புப்) பாயிரம் செய்தார் தகும் உரைகாரராகிய திரு நெல்வேலி மகாவித்துவானாகிய திருப்பாற் கடல்நாதன் கவி ராயர்” - என வருதலின், இவரே இந்நூற்கு உரையாசிரியரும் ஆவார். இவரது காலம் 19ஆம் நூற்றாண்டு.

திருப்புகழ் -

{Entry: P16a__426}

1. தெய்வப் புகழ்ச்சியான பாடல்; ‘தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி’ (திவ். பெருமாள். 1-9)

2. அருணகிரிநாதர் முருகக்கடவுள் மேல் பாடிய சந்தக் கவிகளால் ஆகிய நூல். (L)

திருப்பூவல்லி -

{Entry: P16a__427}

மகளிர் பூக்கொய்தல் பற்றிக் கூறுகின்ற திருவாசகப்பகுதி; 20 பாடல்களையுடைய பதின்மூன்றாம் பகுதி. (L)

திருமஞ்சனக்கவி -

{Entry: P16a__428}

கோயில் திருமூர்த்திகளின் அபிடேகக் காலத்திற் சொல்லும் கவி. (கோயிலொ. 68) (L)

திருமந்திரம் -

{Entry: P16a__429}

1. சிவன், திருமால் இவர்களுக்கு உரியவான பஞ்சாக்கர அட்டாக்கரங்கள்; ‘திருமந்திரமில்லை சங்காழி இல்லை’ (திருவேங்கடத்தந். 99)

2. திருமூலநாயனார் அருளிச்செய்த மூவாயிரம் பாடல் களைக் கொண்டதொரு நூல். சைவத் திருமுறைகளில் பத்தாவதாக உள்ளது. (L)

திருமுகப்பாசுரம் -

{Entry: P16a__430}

1. தான் அரசன் முதலியோரிடம் பரிசு வேண்டிப் புலவன் அவர்களிடம் எழுதி விடுக்கும் ஓலைப்பாட்டு; சீட்டுக்கவி, ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் எனவும்படும். ‘சீட்டுக் கவி’ காண்க.

2. மதுரை ஆலவாயின் அவிர்சடைக் கடவுள், சேரமான் பெரு மாள் நாயனாருக்கு, பாணபத்திரன் வறுமையைப் போக்கிப் பெருநிதியம் கொடுக்கவேண்டும் என வரைந்த பாடல். இது பதினோராம் திருமுறையில் முதற்கண் உள்ளது. (L)

திருமுகம் -

{Entry: P16a__431}

1. பெரியோர் விடுக்கும் முடங்கல்; ‘உலகு தொழுதிறைஞ் சும், திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி’ (சிலப். 8 - 53)

2. அரசனது சாசனம்; ‘திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்வது’ (ஈடு. 1-4-4)

3. தெய்வ சந்நிதி. (L)

திருமுறை -

{Entry: P16a__432}

மூவர் தேவாரம்; திருவாசகம், திருக்கோவையார்; திரு விசைப்பா, திருப்பல்லாண்டு; திருமந்திரம்; திருமுகப்பாசுரம் முதலியன; பெரியபுராணம் - என்னும் இச்சைவநூல்களது வைப்பு முறை. மூவர் தேவாரமும் முதல் ஏழு திருமுறையுள் அடங்கும். பிற, முறையே எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினோராவது, பன்னிரண்டாவது திருமுறை யாம். மூவர் தேவாரத்துள் சம்பந்தர் அருளியவை முதல் மூன்று திருமுறையாம்; திருநாவுக்கரசர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறையாம்; சுந்தரர் அருளியவை ஏழாம் திருமுறையாம்.

திருவகுப்பு -

{Entry: P16a__433}

சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை;

எ-டு : ‘அருணகிரி நாதர் திருவகுப்பு’. ‘வகுப்பு’க் காண்க. (L)

திருவருட்பா -

{Entry: P16a__434}

19ஆம் நூற்றாண்டினராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தோத்திரப் பாடல்கள் ஆறு திருமுறையாக அடங் கிய நூல். இறைவன் திருவருளால் பாடப் பெற்றமையின் சுவாமிகள் தம் நூற்கு இப்பெயர் இட்டார்.

திருவலங்கல் திரட்டு -

{Entry: P16a__435}

பாம்பன் சுவாமிகள் என்னும் குமரகுருதாச சுவாமிகளின் படைப்பாகிய பல பாடல்களின் தொகுப்புநூல் இது. இஃது இறைவழிபாட்டுச் செய்யுள்கள் பலவற்றைக் கொண்டது, இரண்டு காண்டங்களாக உள்ளது. இதன் இரண்டாம் காண்டம் ‘பல் சந்தப் பரிமளம்’ என்ற பெயரொடு முருகப் பெருமானைப் பாடும் பாக்கள் பாவினங்கள் சித்திரகவிகள் இவற்றைக்கொண்டு 532 செய்யுள்களில் அமைந்துள்ளது. சிதம்பரச் செய்யுள்கோவை, மாறன் பாப்பாவினம் போல யாப்புநூல்களின் செய்யுள்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் பாடல்களை யுடையது இந்நூல்.

திரையக் காணம் -

{Entry: P16a__436}

வெண்பா, விருத்தம் இவற்றால் செய்திகளை உய்த்துணர நிரல்நிறையாக அமைத்துப் பாடப்பட்ட கோள்கள் பற்றிய பழையநூல். (யா. வி. பக். 386)

திவாகரம் -

{Entry: P16a__437}

இதுபோது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிக்க தொன்மை யுடையது, அம்பர்ச் சேந்தன் என்பானது ஆதரவால், திவாகர முனிவர் இயற்றியது; ஆக்கியோனால் பெயர் பெற்றது. தெய்வப்பெயர்த் தொகுதி முதலாகப் பலபொருட் கூட்டத் தொரு பெயர்த்தொகுதி ஈறாக இதனகத்துப் பன்னிரண்டு தொகுதிகள் உள. நூல் தொடக்கத்திலுள்ள காப்பு விநாயகனைத் தொழுவது. நூற்பா யாப்பாக நூல் நிகழ்கிறது.

தினகவி -

{Entry: P16a__438}

1. அரசன் திருவோலக்க மண்டபத்தில் அமரும் போதும், அங்குநின்று எழும்போதும் இசைக்கப்படும் பாட்டு. (L)

2. நாட்கவி பாடுவோன்.

தீக்கணம் -

{Entry: P16a__439}

கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும். ‘புளிமாங்கனி’ தீக்கணம் ஆம். இதற்குரிய நாள் கார்த்திகை; இதன் பயன் நோய். ஆதலின், அகலக் கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இத்தீக்கணம் ஆகாதது என்று விலக்கப்படுவது. (இ. வி. பாட். 40)

செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் ‘நிரை நேர் நிரை’ என வருவதும் ஆகிய செய்யுட்கணம். (திவா. பக். 299)

தீக்கவி -

{Entry: P16a__440}

பிரபந்தத்தின் முதற்பாடல் முதல் சீர்க்கு ஓதிய பத்துப் பொருத்தங்களில் ஏற்பனகொண்டு சான்றோர் வகுத்த வழியின் வழுவாமல் பாடும் கவி நற்கவியாகும். அல்லாதன எல்லாம் தீக்கவியாகும். தீக்கவியினைப் பெற்றவனுக்குச் செல்வம் போம்; நோயாம்; சுற்றம் அறும்; மரணம் உறும்; கால்கள் சோரும். தீக்கவியைத் தெய்வங்கள் பற்றிப் பாடிய புலவனுக்கும் இத்தீங்கு உண்டாகும். (சிதம். பாட். மர. 20)

தீட்டுக்கவி -

{Entry: P16a__441}

சீட்டுக்கவி; ‘அந்தத் தீட்டுக்கவி காட்டுக்கு எறித்த நிலவாகிப் போம்’ (தமிழ்நா. 255) (L)

தீத்தானம் -

{Entry: P16a__442}

தலைவனது இயற்பெயரின் நான்கு ஐந்தாம் எழுத்துக்கள் பிரபந்த முதலில் வரப் பாடுதலாகிய கேடு விளைக்கும் செய்யுள்தானம். (பிங். 1347)

தீய அவை -

{Entry: P16a__443}

அவையினது திறத்தை அறியாதவர், ஆராய்ந்து பொருந்த அமைதியாகச் சொல்லாதவர், குற்றமின்றிச் சொல்லமாட் டாதவர், அவ்வாறு கூற நாணாதவர், சொற் பொருட்சுவை யுணரமாட்டாதவர், கலைநுட்பத்தைத் தெரியாதவர், அஞ்சாதவர், செருக்குடையோர் இன்னோர் குழீஇயுள்ள அவை தீய அவையாம். (வெண்பாப். பாட். பொ. 11)

குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் அவை குறைஅவையும் தீஅவையுமாம். (இ. வி. பாட். 176 உரை)

தும்பிப் பாட்டு -

{Entry: P16a__444}

வண்டினை விளித்தலை ஈற்றில் கொண்டு அமையும் ‘கோத் தும்பி’ என்ற தலைப்பில் அமைந்த இப்பாடல்கள் கலிப்பாக் களைப் போலக் குறில் அகவல் ஏந்திசை வண்ணத்தில் அமைவனவாம். இப்பாடல்களது தொகையாக அமைந்த ‘தும்பிப்பாட்டு’ இறந்துபட்டதொரு பண்டைய நூல். (யா. வி. பக். 417)

தும்பி பறத்தல் -

{Entry: P16a__445}

மகளிரது விளையாட்டு வகை; உந்தி பறத்தல் போல்வது. மகளிர் பாடிக்கொண்டே அயரும் இவ்விளையாட்டில், அவர் பாடுவனவாக வரும் பாடல்கள் ‘தும்பி பற’ என ஈற்றடி இரண்டும் முடிவு பெறுவவாக அமையும். (திருவாசகத்துள் 14ஆம் பகுதியுள் இப்பாடல்களைக் காணலாம்.)

தும்பை மாலை -

{Entry: P16a__446}

தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து பாடும் பிரபந்த வகை. (தொ. வி. 283)

துயில் எழுமங்கலம் -

{Entry: P16a__447}

பாணரும் விறலியும் முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப் பாட்டு. (கோவை. 375 பேரா.)

இதனைத் துயிலெடை நிலை என்னும் தொல்காப்பியம். (பொ. 91 நச்.)

துயிலெடைநிலை -

{Entry: P16a__448}

அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடும் பிரபந்த விசேடம். (சது.) (L)

துவரைக்கோமான் -

{Entry: P16a__449}

இடைச்சங்கப்புலவருள் ஒருவர். (இறை. அ. 1 உரை)

துறைக்கவி -

{Entry: P16a__450}

அகப்பொருள் துறைகளேயன்றிக் கலம்பகம் முதலிய சிறு பிரபந்தங்களில் அமையும் மறம், களி, தூது, வயிரபம், சம்பிரதம், தவசு, குறம், கணிகம் முதலிய செய்திகள் பற்றிய பாடல்கள் எல்லாம் புறப்பொருள் பற்றிய துறைகளாதலின் இவை துறைக்கவி என்று கொள்ளப்படுகின்றன.

வயிரபம் - வலிமை வாய்ந்த புயங்களின் சிறப்புக் கூறும் ‘புயவகுப்பு’ என்ற கலம்பகத் துறை போலும்.

கணிகம் - மிகக் குறுகிய நேரத்தில் தம் சித்துக் களால் புதுமை தோற்றுவித்தலைக் கூறும் ‘சித்து’ என்ற கலம்பக உறுப்பு.

ஏனைய மறம் போல்வன கலம்பகங்களில் பெருவரவினவாக உணர்த்தப்படும் துறைகளாம். (வீ. சோ. 183)

துறைச் சுவடி -

{Entry: P16a__451}

நீர்த்துறைகளில் இருந்து படிக்கப்படும் புராண ஏடு. ‘ஸ்ரீ கஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும்’ (ஈடு. 6 - 10 - 10) (L)

துறைப்பாட்டு -

{Entry: P16a__452}

அகப்பொருள் புறப்பொருள் துறைகளைக் குறித்து வரும் செய்யுள். (இ. வி. 603 உரை)

தாம் சொல்ல விரும்பும் கருத்தை நேரிடையாகக் கூறாமல் அகப்பொருள் புறப்பொருள் செய்திகள் அமைந்த பாடல் களாக இயற்றி அவற்றின் வாயிலாகத் தாம் கருதுவதைக் கவிஞர்கள் பெறப்படவைக்கும் வகையில் அமையும் பாடல்கள்.

இத்தகைய துறைப்பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந் தத்துள் நிரம்ப வந்துள்ளன.

தூது -

{Entry: P16a__453}

கலிவெண்பாவினாலே, பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணை இருபாலினையும், கேளா மரபின வற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னம் கிளி வண்டு மயில் குயில் முதலிய அஃறிணைப் பொருள்களையும் இளைய கலாம் முதிய கலாம் இவற்றின் துனி நீக்குதற்கு வாயிலாக விடுத்தல் தூது என்னும் பிரபந்தத்தின் இலக்கண மாம். (இ. வி. பாட். 114)

தெம்மாங்கு -

{Entry: P16a__454}

தேம் பாங்கு எனவும்படும்; தென்னாட்டில் நாட்டுப்புறத்தவர் வயல் முதலியவற்றில் பணியாற்றும்போது அப்பணியிடைக் களைப்புத் தோற்றாமலிருக்கப் பாடுவதோர் இசைப் பாட்டுவகை. (L)

தெய்வக் காப்பு -

{Entry: P16a__455}

பாட்டுடைத் தலைவனைத் திருமால் முதலாகிய தெய்வங்கள் காக்குமாறு பாடும், பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துள் முதலாக நிகழும் பகுதி. பத்துப் பாடல்களுக்குக் குறையாது ஆசிரியச்சந்த விருத்தத்தால் இக்காப்புப்பருவம் நிகழும். (திவா. பக். 309)

தெய்வச்சிலையார் -

{Entry: P16a__456}

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரையிட்ட உரை யாசிரியருள் ஒருவர். சில நூற்பாக்களுக்கும் அவற்றுட் சில சொற்களுக்கும் இவர் காணும் உரை, பிறர் உரையினும் நுட்பம் வாய்ந்தமை அறிந்தின்புறத்தகும். எடுத்துக் காட்டாக ‘காலம் உலகம்’ (சொல். 55) என்னும் சூத்திரத்துள் இவர் சொற்களுக்கு விளக்கம் கூறும் நயம் காண்க. ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ என்றதனான், இரண்டு சொல்லே தொகையாயினவாறு தோன்ற, ‘உலகம் உவப்ப... கணவன்’ (முருகு. 1 - 6) என்பதனை ஒரு சொல் நடை ஆக்கிக் காட்டும் உரை (சொல். 407) நயமுடையது. ‘கடிசொல் இல்லை’ (441) போன்ற சூத்திரங்களுக்கு இவர் உரை பிறர் உரையின் வேறுபட்டுச் சிறந்தமை தெளிவு. ‘முன்னத்தின் உணரும்’ (448) என்றற்கு இவர் எடுத்துக்காட்டுவது தெளி வானதொன்று. இன்ன நயம்பல இவருரையிற் காணலாம். இவர் காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது; என்ப 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆதல் கூடும். ஆனால் இவர் உரை நச்சினார்க்கினியருக்குக் கிட்டவில்லை.

தெய்வ வணக்கம் -

{Entry: P16a__457}

நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து. ‘தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்’. (யா. க. பாயிரம். 1 உரை) (L)

தெள்ளேணம் -

{Entry: P16a__458}

கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகை. ‘நாம் தெள்ளேணம் கொட்டாமோ’ (திருவா. 11 - 1) (L)

தேசிகமாலை -

{Entry: P16a__459}

அந்தாதித் தொடையால் பன்மணிமாலை, மும்மணிக் கோவை, உதயணன் காதை என்பன போல அமைந்த பழந்தமிழ்த்தொடர்நிலைச் செய்யுள் தொகுப்பாம் இது. (யா. வி. பக். 196)

தேவகணம் -

{Entry: P16a__460}

‘கணம்’ காண்க. அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அநுடம், திருவோணம், ரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள்.

தேவகதி -

{Entry: P16a__461}

நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800).

தேவர்கதியும் மக்கட்கதியும் -

{Entry: P16a__462}

றகர ஒற்று அல்லாத ஏனைய வல்லொற்று ஐந்தும், ஒ என்னும் குற்றுயிர் அல்லாத ஏனை நாற்குற்றுயிரும் தேவகதியின் கூறாம். ஆ, ஈ, ஊ, ஏ என்னும் நான்கெழுத்தும், னகர ஒற்றல் லாத ஏனைய ஐந்து மெல்லொற்றும் மக்கள் கதிக்குரிய எழுத்துக்களாம். இவ்விரு கதியும் முதல் மொழிக்குப் பொருந்தும். (மெய் ஈண்டு உயிர்மெய்யையே குறிக்கும்.) (இ.வி. 798)

தேவர்கதி, மக்கட் கதி எழுத்துக்கள் -

{Entry: P16a__463}

க ச ட த ப, அ இ உ எ என்பன தேவகதி எழுத்துக்கள். மக்கட் கதி எழுத்துக்கள் : ஆ ஈ ஊ ஏ, ங ஞ ண ந ம என்பன.

இவற்றுள்ளும் மொழி முதற்கண் வரும் ஆற்றல் உடையன ஙகர, டகர ணகரங்கள் அல்லாத 15 எழுத்துக்களே ஆம் எனக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 38.)

தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர் -

{Entry: P16a__464}

பிள்ளைத்தமிழ், கலம்பகம், பன்மணிமாலை, மும்மணிக் கோவை, அகப்பொருட் கோவை, தொகைச்செய்யுள், இணைமணிமாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, நான்மணிமாலை, இருபா இருபஃது, ஒருபா ஒருபஃது, ஒலி அந்தாதி, இன்னிசை, வருக்கமாலை, கைக்கிiள, மங்கல வள்ளை (வேறுவகை), இரட்டைமணிமாலை, நேரிசை, மெய்க்கீர்த்தி மாலை, காப்புமாலை, வேனில்மாலை, பல்சந்த மாலை, அங்கமாலை, வசந்தமாலை, நவமணிமாலை, பரணி, தசாங்கப்பத்து, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, அட்டமங்கலம், அலங்காரப் பஞ்சகம், ஊசல், சின்னப்பூ, சதகம், எண் செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற் பது, முலைப்பத்து, நயனப்பத்து, வில் வாள் வேல் கோல் வேழம் குதிரை நாடு ஊர் கொடை என்னுமிவ் ஒன்பதனையும் தனித்தனியே பப்பத்தாகக் கூறும் ஒன்பது வகை விருத்த மாகிய வில் விருத்தம் முதலியன, பெருங்காப்பியமும் காப்பியமும் எனப்பட்ட இருவகைக் காப்பியம் எனச் சொல் லப்பட்ட ஐம்பத்தைந்தும் தொகை பெற வகுத்த அகலக்கவி வேறுபாடும், அவை போல்வன பிறவும் தொடர்நிலைச் செய்யுளாம். (பல அடிகளான் அமைந்த பொருள் தொடர் புடைய வளமடல், உலாமடல், உலா முதலியன தனிநிலைச் செய்யுளாம்.) (இ.வி.பாட். 45) சதுரகராதியும் பிரபந்த மரபியலும் தொடர்நிலை தனிநிலைச் செய்யுள் வகைகளைப் பிரபந்தமென 96 ஆகக் கூறும். தொடை அகராதி - வீரமா முனிவரின் சதுரகராதியின் தொடை பற்றிய பகுதி.

தொல்காப்பிய அகத்தியம் -

{Entry: P16a__465}

இந்நூலுள் ஒரு சூத்திரம் “புறப்புறப் பொருளாவன வாகை யும் பாடாணும் பொதுவியல்திணையும்” என்று சுட்டுவதை யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுகிறது. இந்நூல் பொரு ளிலக்கணம் பற்றியிருக்கலாம் போலும். (யா. வி. பக். 571).

தொல்காப்பியச் சூத்திர விருத்தி -

{Entry: P16a__466}

தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற்சூத்திரத்திற்கும் 18 ஆம் நூற்றாண்டினராகிய திருவாவடுதுறையைச் சார்ந்த மாதவச் சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட விருத்தியுரை. இவ் விருத்தி யுரைக்கு, சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தே வாழ்ந்த பெரும்புலவர் சண்முகனார் மறுப்பு எழுதிய நூல் ‘சண்முகனார் பாயிர விருத்தி’ எனப்படும். சண்முகனார், சிவஞான முனிவரது பாயிர விருத்தியுரையை மாத்திரம் மறுத்துள்ளார்; முதற்சூத்திர விருத்தியுரையை மறுத்து அவர் எழுதிய மறுப்புரை இந்நாள் கிடைத்திலது. சண்முக னாரது இப்பாயிர விருத்தியை மறுத்துச் சிவஞான முனிவ ருரையை அரண்செய்து ‘செப்பறை விருத்தி’ என்பதொன் றும் சென்ற நூற்றாண்டுத் தொடக்ககாலத்தில் சண்முகனார் மறைவிற்குப் பின்னர்த் தோன்றியது.

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் -

{Entry: P16a__467}

ஆதிநூலாகிய இசைநுணுக்கமும், அகத்தியமும், அதற்கு இணைநூலாகிய தேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல்களும், என இவை முதலாய (செயற்கை) முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம் இசை நூல் ஆகிய இசைநுணுக்கம் முதலாய நூல்களும் எனப்பட்ட தலைச்சங்கத்து நூல்கள். (பா. வி. பக்.174)

தொல்காப்பியம் -

{Entry: P16a__468}

முழுமையாகக் கிடைக்கப்பெற்ற இடைச்சங்ககாலத்துத் தமிழ்இலக்கண நூல். இதன்கண், எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களும், அதிகாரம்தோறும் ஒன்பது ஒன்பது இயல்களும், மூன்றதிகாரத்திலும் முறையே 483, 463, 665 என நூற்பாக்களும், அமைந்துள. நூற்பாக்களின் எண்ணிக்கை உரையாசிரி யன்மார்தம் உரை அமைதிக் கேற்பச் சிறிது வேறுபடும். மூன்றுறுப்பு அடக்கிய பிண்டமாகத் தமிழில் தனித்து இயங்கும் சிறப்புடைய இந்நூற்கு இளம் பூரணஅடிகள் உரை முழுதும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை பொருளதிகாரத்துள் மெய்ப்பாட்டியல், உவமஇயல், மரபியல், இம்மூன்றற்கும் கிடைத்திலது. சொல்லதிகாரத் திற்குச் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் இவர்கள்தம் உரைகள் உள. பேராசிரியர் என்பார் உரை பொருளதிகாரத்துள், மெய்பாட்டியல் உவம இயல், செய்யுளியல், மரபியல் இந்நான்கற்கும் அமைந்துள்ளது.

கடைச்சங்க இலக்கியங்கட் கெல்லாம் தொல்காப்பியமே இலக்கணமாவது. இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்ப. வடமொழியாசிரியர் பாணினிக்கும் தொல்காப்பிய னார் காலம் முற்பட்டமை துணிபு. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப் பாயிரம் கூறுதலின், இவர் பாணீ னியத்திற்கு முற்பட்ட காலத்ததாகிய ஐந்திரத்தில் புலமை மிக்கிருந்தமை தேற்றம். அது பற்றியே, இவர் விளிவேற்று மையைத் தழுவிக் கொண்டார் என்ப. வடமொழி வழக்கில் ஏற்பனவே கொண்டு, தமிழின் தனித்தன்மைகளை வலியுறுத் திச் செல்லும் இந்நூலே. இன்றுகாறும் கண்ட தமிழ்ப்பனு வல்களில் காலத்தால் முற்பட்டது. இதன் முதனூல் எனப்படும் அகத்தியம் இயலிசைநாடகம் எனும் முத்திறமும் விரவ இயற்றப்பட்ட தெனவும், அவற்றுள் இவர் இயற்ற மிழையே முப்படலமாக விரித்து நூல்யாத்தனர் எனவும் உரைகாரர்கள் கருதுப. இந்நூலுள் அமைந்த பொருள திகாரம் பிறமொழிகளில் காணலாகாப் பலதிறச் சிறப்பும் ஒருங்கமைந்து பண்டைத் தமிழரின் நாகரிகமேம்பாட்டைப் புலப்படுத்த வல்லது. இத்திறம் மேலும் விரிக்கின் பெருகும்.

தொல்காப்பியம் கூறும் பிரபந்தவகை -

{Entry: P16a__469}

துயிலெடை நிலை, கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, பெருமங்கலம், மண்ணுமங்கலம், குடைநிழல் மரபு, வாள்மங்கலம், எயில் அழித்த மண்ணு மங்கலம், கடைக்கூட்டு நிலை, இருவகை விடை, காலம் கண்ணிய ஓம்படை, ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பு - எனத்தொல்காப்பியனார் அகலக் கவியை விதந்து கூறுவனவாக வரும் இவையெல்லாம் (தொ. பொ. 91 நச்.) அவர் கூறும் பிரபந்த வகைகளாம்.

இனி, ‘அகன்று பொருள் கிடப்பினும்’ எனவும், ‘மாட்டும் எச்சமும்’ எனவும் (தொ. பொ. 522, 523 பேரா.) அவர் செய்யு ளியலுள் கூறுவனவற்றால், முறையே பொருள் தொடர் நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும் பெறப்படும் என்பது.

இவ்வாற்றான் பல அடியால் நடக்கும் தனிநிலைப் பாட்டு எனவும், தொடர்நிலைப் பாட்டு எனவும் சொல்லப்பட்ட அகலக்கவி யாகிய பிரபந்தங்களின் வகை சிலவற்றைத் தொல்காப்பியம் கூறிற்று என்பது. (இ.வி.பாட். 7 உரை).

தொல்காப்பியனார் -

{Entry: P16a__470}

காப்பியக்குடியிற் பிறந்தவரும், அகத்தியனார்க்கு மாணாக் கரும், தொல்காப்பியம் இயற்றியவருமாகிய ஆசிரியர்; இவர் இடைச் சங்க மிருந்தவர் என்னும் இறை. அ. உரை.

தொன்னூல் விளக்கம் -

{Entry: P16a__471}

வீரமாமுனிவர் இயற்றிய ஐந்திலக்கண நூல். 18ஆம் நூற்றாண்டு.

தோணோக்கம் -

{Entry: P16a__472}

தோள் நோக்கம்: மகளிரது விளையாட்டுவகை. ‘குழலினீர் தோணோக்கம் ஆடாமோ’ (திருவா. 15-2)

தோரணமஞ்சரி -

{Entry: P16a__473}

ஆற்றல் மிக்க களிற்றை வயப்படுத்தி அடக்கியவருக்கும், எதிர்ப் போரிடும் யானையை எதிர்த்துப் பொருது வெட்டி அடக்கியவருக்கும், மதகளிற்றை அதட்டிப் பிடித்து வயப் படுத்தியவருக்கும் இப்பிரபந்தம் பாடப்பெறும். வஞ்சிப்பாவி னால் இஃது யாக்கப்படுவது. ‘வாதோரண மஞ்சரி’ எனவும் இது பெயர்பெறும்.

இப்பிரபந்தத்தை முத்துவீரியமும், பிரபந்த தீபிகையுமே குறிக்கின்றன. (மு. வீ. யா. ஒ. 118)

ந section: 55 entries

நக்கீரனார் அடிநூல் -

{Entry: P16a__474}

‘அடிநூல்’ காண்க. (யா. வி. பக். 367, 437)

நச்சினார்க்கினியர்

{Entry: P16a__475}

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்; பேருரை யாசிரியர். பத்துபாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம் இவையெல்லாவற்றுக்கும், குறுந்தொகை யுள் பேராசிரியர் உரை வரையாது விடுத்த இருபது செய்யுட் கும் இவர் உரையியற்றியுள்ளார். குறுந்தொகையுரையும், தொல்காப்பியத்துள் மெய்ப்பாடு, உவமம், மரபு என்னும் மூன்று இயல்கட்கு இவர் வரைந்த உரையும் இதுபோது காணப்பட்டில. மிக்க நினைவாற்றலோடு இவர் வரைந்த உரைநயம் பெரும்பான்மையும் ஆன்றோரான் போற்றப் படுவன. பண்டை இலக்கணத்துள் பிற்கால இலக்கியங்களை அடக்கிக் காட்ட வேண்டுமெனப் பெரிதும் முயன்று இவர் இயற்றிய உரையுள் கொண்டுகூட்டுப் பயிலும். ஆராய்ச்சியும் நுணுக்கமும் நனி பேரிலக்கியப் புலமையும் தொல்காப்பியத் துள் திளைத்த தமிழ்ப்புலமையும் சீர்த்த இவ்வுரையாளரை ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்ப. இவர் அந்தணர்; பாரத்துவாசி; மதுரையில் வாழ்ந்த ஆசிரியர்.

நச்சுச் சொல் -

{Entry: P16a__476}

1. செய்யுளில் வழங்கக் கூடாத தீய சொல். 2. கொடுஞ்சொல். (L)

நச்செழுத்து -

{Entry: P16a__477}

பாடப்படும் பிரபந்தத்தினது முதற்சொல் மங்கலமொழியாக இல்லாதவிடத்து, ஆதிமொழிக்கு ஆகாதன என்று கடியப் பட்ட எழுத்துக்கள். அவை யா ரா லா ளா, யோ ரோ லோ ளோ, ய்ர்ல்ள், ஆய்தம், மகரக்குறுக்கம், அளபெடை என்பன வாம். எடுத்த மங்கல மொழிக்கண் இவ்வெழுத்து வரின், அவை குற்றமுடைய அல்ல என்பது. (இ. வி. பாட். 20)

நட்சத்திரமாலை -

{Entry: P16a__478}

1. நட்சத்திரங்களைப் பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல். 2. இருபத்தேழ் பாடல் கொண்டதொரு பிரபந்த வகை. (பன். பாட். 305)

நம்பியகப்பொருள்

{Entry: P16a__479}

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம். அகப் பொருள் விளக்கம் என்பது நூற்பெயர். சிறப்புப் பாயிரமாகிய ஒன்று நீங்கலாக இந்நூலில் 252 நூற்பாக்கள் அமைந்துள. அகத்திணையியல் களவியல் வரைவியல் கற்பியல் ஒழிபியல் என இதன்கண் ஐந்து இயல்கள் உள. அகத்திணையியலுள் முதல் கரு உரிப்பொருள்கள் பற்றிய செய்திகளும், களவு கற்பெனும் இருவகைக் கைகோள் பற்றிய பொதுச்செய்தி களும், கைக்கிளை பற்றிய குறிப்புக்களும், பிறவும் கூறப்பட் டுள. களவியல், கைக்கிளை வகை நான்கனொடு, களவிற்குரிய பதினேழ் கிளவிகளையும் வகையும் விரியும் கூறி விளக்குகிறது. வரைவியலுள், வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலும் பற்றிய துறைகள் விளக்கப்பட்டுள. புணர்தலும் ஊடலும் ஊட லுணர்த்தலும் பற்றிய செய்திகள் கற்பியலுள் இடம் பெறு வன. இனி, ஒழிபியல் அகப்பாட்டுறுப்புக்கள் பன்னிரண் டனையும் விளக்குகிறது. அவ்வியலுள், அகப்புறக் கைக்கிளை பற்றியும் அகப்பொருட்பெருந்திணை பற்றியும் அகப்பாட் டுள் வருந் தலைமக்களைப் பற்றியும் பல செய்திகள் சில இயைபு பற்றிக் கூறப்பட்டுள.

இதற்கொரு பழைய சிறந்த உரை உண்டு. இதன் துறை களுக்குப் பெரும்பான்மையும் தஞ்சைவாணன் கோவை எடுத்துக் காட்டாகும். இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.

‘நம்பியப்பொருள்’ என்றே நூற்பெயர் நிலவுகிறது.

நம்பியகப்பொருள் விளக்கம் -

{Entry: P16a__480}

‘நம்பியகப்பொருள்’ காண்க.

நயனப்பத்து -

{Entry: P16a__481}

தலைவனுடைய கண்களைப் பத்துப்பாடல்களால் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. பாடல் ஆசிரியவிருத்தம் அன்றிக் கலித்துறையால் அமைதல் வேண்டும் எனச் சில பாட்டியல் நூல்கள் கூறும். (வெண்பாப்.செய்.25) (இ. வி. பாட்.92)

நல்லவை, நிறையவை இலக்கணம் -

{Entry: P16a__482}

காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் உட்பகை ஆறனையும் அடக்கி, அருங்கலை அறுபத்து நான்கனையும் ஐயம் திரிபற ஆராய்ந்து, அதனால் புவியில் பிறவிப்பயனாம் கீர்த்தி பெற்றோர் இருக்கலுறும் அவை நன்மையையுடைய அவையாம். (அவை - சபை)

கல்வியான் நிறைந்த, அடக்கம் வாய்மை நடுவுநிலைமை - இவற்றையுடையோர் குழுமி, மாட்டாதார் தம் கவிகளை அரங்கேற்றுகையில் அவர்களது குற்றத்தை நினையாது குணங்களையே மேற்கொண்டு, அவர்களை வல்லமையுடைய ராக்கி வினவிக் கேட்போர் இருக்கலுறும் அவை நிறைஅவை யாம்.

இவ்விரண்டு அவைகட்கும் மறுதலையாகக் குறையவையும் தீயவையும் முறையே குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் குழீஇய அவை என்பது பெறப்படும். (இ. வி. பாட். 176)

நல்லாதம் -

{Entry: P16a__483}

நல்லாதனார் யாத்த பண்டைய யாப்பு நூல். இதன் செய்தி வரையறை பற்றிய சூத்திரம் இரண்டு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 215)

நல்லாறம் -

{Entry: P16a__484}

பழைய யாப்பு நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று இனமாக வரும் அனுஎழுத்துக்களுக்கும், மற்றொன்று செய்தி வரையறைக்கும், ஏனையதொன்று சீர் அமைப்புக்கும் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் நல்லாறனாரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 206, 372, 454)

நல்லாறன் மொழிவரி -

{Entry: P16a__485}

இஃது இடைச்சொல் உரிச்சொல் என்னும் இவைபற்றியும் விளக்கி வரையப்பட்ட சொல்லிலக்கண நூல் என்பது அறியப்படுகிறது. (யா. வி. பக். 579)

நல்லிசைப்புலவர் செய்யுள் -

{Entry: P16a__486}

மாத்திரை முதலாகிய இருபத்தாறு உறுப்புக்களும் குறை யாமல் செய்யப்படுவன நல்லிசைப்புலவர் செய்யுள் என்பது. பாட்டு நூல் உரை முதலாகிய எழுநிலத்து எழுந்த செய்யு ளுள்ளும் அடி வரையறையுடைய பாட்டுக்கே இக்கூறிய இருபத்தாறு உறுப்புமுள என்பதனையும், ஏனைய நூல் உரை முதலிய செய்யுளுக்குத் திணை கைகோள் முதலாகக் கூறும் உறுப்புக்களெல்லாம் உறுப்பாகா என்பதனையும், அவை ஒழிந்த உறுப்பில் ஏற்பன பெறுமாயினும் வரையறையுடை யன அல்ல என்பதனையும், அவை செய்தார் நல்லிசைப் புலவர் எனக் கொள்ளத்தகார் என்பதனையும், இவ்விலக் கணத்தில் பிறழ்ந்தும் குன்றியும் வருவன எல்லாம் வழு என்பதனையும், ‘நல்லிசைப்புலவர் செய்யுள்’ என்ற தொடர் புலப்படுத்துவது. (தொ. பொ. 313 பேரா)

நலுங்கு -

{Entry: P16a__487}

மணமக்களை ஊசலில் அமர்த்திப் பாடும் ஒருவகை இசைப் பாட்டு; நடை பற்றிக் கருதாது இசையையே சிறப்பாகக் கொண்டமைவது. (L)

நவதாரணை -

{Entry: P16a__488}

நாமதாரணை, அக்கரத்தாரணை, செய்யுட்டாரணை, சதுரங் கத் தாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தா ரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதான வகைகள். (யா. வி. பக். 555).

நவநீதப் பாட்டியல் -

{Entry: P16a__489}

கட்டளைக் கலித்துறையால் இயன்றமையின் ‘கலித்துறைப் பாட்டியல்’ எனவும்படும். இந்நூலினை நவநீத நடன் என்ற வைணவப் புலவர் இயற்றினார். காலம் 14 ஆம் நுற்றாண்டின் முற்பகுதி. இதன்கண் பொருத்த இயல், செய்யுள்மொழி இயல், பொதுமொழி இயல் என்ற மூன்று பாகுபாடுகளும், அவற்றுள் 108 காரிகைச் சூத்திரங்களும் உள. மிகையாகச் சில காரிகைகளும் காணப்படுகின்றன. பிற பாட்டியல்கள் உணர்த்தாத செய்திகள் சில இதன்கண் இறுதியியலுள் காணப்படும்.

நவமணி மாலை -

{Entry: P16a__490}

வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் ஒன்பது உற அந்தாதியாகப் பாடப்படும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 77)

நற்கணம் -

{Entry: P16a__491}

செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய சுவர்க்கம், மதி, நிலன், நீர் என்ற நான்கு கணமும் நற்கணமாம். இவற்றுக்குரிய வாய்பாடுகள் முறையே தேமா, தேமாங்காய்; புளிமா, புளிமாங்காய்; கருவிளம் கருவிளங்கனி; கூவிளம் கூவிளங்கனி என்பனவாம்.

இவற்றுக்குரிய தெய்வங்கள் முறையே பிரமன், திருமகள், சுரபி, கருடன் என்ப. (இவி.பாட்.42) சுவர்க்க கணத்தை இயமான கணம் என்னும் பிங்கலந்தை (1333).

நற்கவி -

{Entry: P16a__492}

ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்று சொல்லப்படும் நால் வகைக் கவியும் ‘நற்கவி’ எனப்படும். கவிப்புலவன் இந்நற் கவி பாடும் இயல்பினனாயிருத்தல் வேண்டும் என்பது, அவனுக்குச் சொல்லிய இலக்கணத்துள் ஒன்று. (இ. வி. பாட். 178)

நற்றத்தம் -

{Entry: P16a__493}

யாப்பிலக்கணம் பற்றிய பல நூல்கள் பெயர் தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீர சோழியம் முதலியவற்றின் உரையில் உரிய சூத்திரங்களொடு காணப்படுகின்றன. இவற்றுள் மிகுதியும் காணப்படுவன யாப்பருங்கல விருத்தியுரைக்கண்ணேயே. இவ்வியாப்பு நூல்களிடை நத்தத்தம் எனவும் வழங்கப்படும் நற்றத்தமும் ஒன்று.இந்நூலிற் காணப்படும் (கிடைத்துள்ள) நூற்பாக்கள் 24. அவற்றான்,

யாப்பு என்பது தூக்கு-தொடை-அடி- இம் மூன்றனையும் நோக்கி நிற்குமாறும், நேரசை நிரையசை ஆமாறும், அசை ஒரோவழிச் சீராக நிற்குமாறும், நேரடியாவது யாதென்ப தும், அவ்வடி பெறும் பாக்களாவன இவை என்பதும், முரண்-இயைபு-அளபெடை-இரட்டைத் தொடைகள் ஆமாறும், செந்தொடை ஆமாறும், பல தொடைகளையுடைய செய்யுட் குத் தொடையால் பெயரிடுமாறும், பாக்கள் தம்முள் மயங்குமாறும், பாக்களின் அடிவரையறையும், மோனை எதுகை ஆமாறும்,அவ்விருதொடைக்கும் கிளை யெழுத் துக்கள் உரியவாமாறும், கூன் நிகழுமாறும், வகையுளி ஆமாறும், அடிவரை யில்லன இவை என்பதும் குறிக்கப் பெற்றுள. (இ. வி. செய்யுளியல் பிற்சேர்க்கை பக். 430-432)

நற்றாய் -

{Entry: P16a__494}

தலைவியை ஈன்ற தாய்.

நற்றானம் -

{Entry: P16a__495}

தலைவனது இயற்பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும் பிரபந்த முதலில் வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்கும் செய்யுள்தானம்.

இனி, இலக்கண விளக்கம் (பாட்.23) சொல்லுவது வருமாறு:

தலைவன் இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினதா யின், அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.

தலைவன் இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தினதா யின், இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.

தலைவன் இயற்பெயர் முதலெழுத்து உ ஊ ஒள வருக்கத்தின தாயின், உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.

தலைவன் இயற்பெயர் முதலெழுத்து எ ஏ வருக்கத்தினதா யின், எ ஏ, ஒ ஓ, அ ஆ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.

தலைவன் இயற்பெயர் முதலெழுத்து ஒ ஓ வருக்கத்தினதா யின், ஒ ஓ, அ ஆ, இ ஈ ஐ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.

அ ஆ இயற்பெயர் முதலெழுத்தாயின், அ ஆ - பாலப் பொருத்தம்; இ ஈ ஐ - குமாரப் பொருத்தம்; உ ஊ ஒள - இராசப் பொருத்தம். (எ ஏ - விருத்தப் பொருத்தம்; ஒ ஓ மரணப் பொருத்தம்.)

பிற இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றையும் இவ்வாறே இயைத்துக் காண்க.

பாலப்பொருத்தம் முதலிய மூன்றையும் முறையே நட்பு அரண் எதி என்று பெயரிட்டார் மாமூலனார். (இம்மூன்றும் நற்குணம் எனப்படும்) (பிங். 1347)

நற்றீக்காலம் -

{Entry: P16a__496}

கால வகை ஆறனுள் ஒன்று. அவையாவன நன்னற் காலம், நற்காலம், தீநற்காலம், தீக்காலம், நற்றீக்காலம், தீத்தீக்காலம் என்பன.

குறிப்பிட்ட நேரத்தின் முற்பகுதி நன்றாகவும் பிற்பகுதி தீதாகவும் அமையும் காலம் நற்றீக்காலமாம். (யா. வி. பக். 573)

நன்னூல் -

{Entry: P16a__497}

தொல்காப்பியத்திற்குப் பின்னர் இயற்றப்பெற்ற இலக்கண நூல்களுள் நன்னூற்கு இணை வேறு எந்நூலும் இல்லை என்பது பெரியோர் பலர்தம் துணிபு. இதன் சூத்திரம் நூற்பா ஆகிய அகவலால் யாக்கப்பெற்றது. சிறப்புப்பாயிரம் பொதுப் பாயிரம் இவற்றோடு, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என் னும் இரண்டதிகாரங்களையுடைய இந்நூலின் நூற்பாக்கள் எண் 462. தொல்காப்பியத்திற்கு இது வழிநூல்; தொல்காப் பியத்தின் முந்து நூலாம் அகத்தியத்திற்குச் சார்பு நூல். இந் நூலாசிரியர் சமண முனிவராகிய பவணந்தி என்பார். இவர் மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1216) காலத்துச் சிற்றரசனாகிய சீயகங்கன் வேண்டுகோட்கு இணங்க இந் நூலை இயற்றினர் ஆதலின், இந்நூல் தோன்றிய காலமும் அக்கால அளவிலேயாம்; உரையாசிரியராம் இளம்பூரணர் காலத்துக்குப் பிற்பட்டது; நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது.

சூத்திரங்களின் திட்ப நுட்பமும் கிடக்கை முறையும் இயற் பாகுபாடும் இந்நூலது பெருமையைப் புலப்படுத்துவன. தொல்காப்பியனார் விரிவாகக் கூறிய குற்றியலுகரப் புணரி யற் செய்தியை இவர் தொகுத்து உயிரீற்றுப் புணரியலுள் கூறினார்; அவர் இரண்டு சூத்திரங்களால் தொகுத்துக் கூறிய வடமொழி ஆக்கத்தை இவர் பதவியல் இறுதியில் விரித்துக் கூறினார். பழையன கழித்துப் புதியன புகுத்திப் படைக்கப் பட்ட இந்நூல், தொல்காப்பியர் காலத்தினின்று இவர் காலம் வரை மொழித் துறையில் நேர்ந்துள்ள மாறுதல் களைப் புலப்படுத்த வல்லது.

இந்நூற்கு மயிலைநாதர் என்ற சமணப்புலவரது காண்டிகை யுரை பழமையானது; அடுத்து ஆறுமுக நாவலர், இராமா நுசக் கவிராயர் முதலாகப் பலரும் காண்டிகையுரைத்தனர். சங்கர நமச்சிவாயர் இந்நூற்கு விருத்தியுரை வரைந்தார். அதனைச் சற்றே புதுக்கினார் மாதவச் சிவஞான முனிவர்.

இடைக்காலத் தமிழிலக்கிய வளர்ச்சியை மனம்கொண்டு பவணந்தி இயற்றிய இந்நூல் காலத்திற்கு ஏற்ப வேண்டப் பட்ட தமிழிலக்கணம். இவ்வாசிரியர் ஏனைய பொருள் யாப்பு அணி அதிகாரங்களும் இயற்றியிருக்கக் கூடும்; அவை கால வெள்ளத்தில் அழிந்தன என்பது ஒருசாரார் கருத்து. ‘அரும்பொருள் ஐந்தையும் தருகென’ என்பது சிறப்புப் பாயிரம்.

நாட்கவி -

{Entry: P16a__498}

நாள்தோறும் அரசனைப் புகழ்ந்து பாடும் பாடல். ‘நாமே நாட்கவி பாடுநாட் போல’ (ஈட்டியெழுபது - 2) (L)

நாட்பொருத்தம் -

{Entry: P16a__499}

பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்திற்கு உரிய நாள் தொடங்கி வருகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப் பகுத்துச் சென்மம்-அநுசென்மம்-உபசென்மம்-என்று கூறப்பட்ட முப்பகுதியின்கண்ணும் ஒன்று மூன்று ஐந்து ஏழ் என்னும் எண்ணின் வந்த நாள்கள் பொருத்தம் உடைய அல்ல எனக்கொண்டு, இரண்டு நான்கு ஆறு எட்டு என்னும் எண்ணின் வந்த நாள்களைப் பொருத்தம் உடையன வாக முதற்சீரை எடுத்துச் சொல்லுவர். ‘பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்’ என்னும் நியாயநூல் வழக்கால், இறை வன் பெயர் நாளுக்கு மூன்றாம் பரியாயத்தில் (உபசென்மம்) நின்ற மூன்று ஐந்து ஏழ் என்பன பொருத்தம் உடையன என்று கோடலும், சென்ம நாள் தொடங்கி முன் கூறியவாறு பொருத்தம் கோடலும் கொள்ளப் படும்.

இது நாட்பொருத்தம் கொள்ளும் வகை.

மொழி முதலாகும் எழுத்துக்களுக்கு நாட்பொருத்தம் ஆமாறு :

அ ஆ இ ஈ - கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ - பூராடம்; ஒ ஓ ஒள - உத்தராடம்; க கா கி கீ - திருவோணம்; கு கூ - திருவாதிரை; கெ கே கை - புனர்பூசம்; கொ கோ கௌ - பூசம்; ச சா சி சீ - ரேவதி; சு சூ செ சே சை - அசுவனி; சொ சோ சௌ - பரணி; ஞா ஞி ஞெ ஞொ - அவிட்டம்; த தா - சுவாதி; தி தீ து தூ தெ தே தை - விசாகம்; தொ தோ தௌ - சதயம்; ந நா நி நீ நு நூ - அனுடம்; நெ நே நை - கேட்டை; நொ நோ நௌ - பூரட்டாதி; ப பா பி பீ - உத்தரம்; பு பூ - அத்தம்; பெ பே பை பொ போ பௌ - சித்திரை; ம மா மி மீ மு மூ - மகம்; மெ மே மை - ஆயில்யம்; மொ மோ மௌ - பூரம்; யா - உத்தரட் டாதி; யூ யோ - மூலம்; வ வா வி வீ - உரோகிணி; வெ வே வை வெள - மிருக சீரிடம்; இவ்வாறு மொழிமுதலாகும் எழுத்துக்குரிய நாட்பொருத்தம் சொல்லப்பட்டுள்ளது. (இ.வி. பாட் 25-36) செய்யுள் முதல்மொழிக்குரிய பொருத்தம் பத்தனுள் எட்டாவது நாட்பொருத்தம் ஆம்.

நாம மாலை -

{Entry: P16a__500}

அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மகனைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 106)

நால்வகை நூல்கள் -

{Entry: P16a__501}

அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும், இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையே பயப்பதா கிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லையும் பொருளையும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் என்பன. (பா. வி. பக். 62, 63)

நாலடி நாற்பது -

{Entry: P16a__502}

இஃது அவிநயர் யாப்பிற்கு அங்கமாய் அமைந்த நூலாகும். இதன் நூற்பாக்களில் நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறையும் மேற்கோள்களாகக் கிடைத்துள் ளன. அதனால், இவ்விருவகை யாப்பாலும் இந்நூல் அமைந்தமை தெரிகிறது. இது நாற்பது நூற்பாக்களைக் கொண்டிருந்தது போலும். கட்டளைக் கலித்துறை இந் நூலைச் சேர்ந்தது அன்று என்பாரும் உளர். இந்நூலின் மேற்கோள் நூற்பாக்கள் அசைக்கு உறுப்பாவன பற்றியும் அடிமயக்கம் பற்றியும் குறிப்பிடும். (யா. வி. பக்.30,31, 129)

நாலாயிர திவ்வியப் பிரபந்த யாப்பு -

{Entry: P16a__503}

நேரிசைவெண்பா, நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, கலிவெண்பா, தரவு கொச்சகம், ஆசிரியத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர் ஆசிரிய விருத்தங்கள், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம்; வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம், இரண்டாம் நான்காம் அடிகள் ஏனைய முதலாம் மூன்றாம் அடிகளைவிடச் சீர்கள் குறைந்து வரும் சவலை விருத்தம் - ஆகிய பாவும் பாவினமும் ஆம். (இலக்கணத். முன்னுரை பக். 77)

நாழிகைக் கவி -

{Entry: P16a__504}

அரசரும் கடவுளரும் நாழிகைதோறும் செய்யும் செயல்களை முப்பது நேரிசை வெண்பாவாற் பாடும் பிரபந்தவகை. (பன். பாட். 292, 293 )

நாழிகை வெண்பா -

{Entry: P16a__505}

தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் நாழிகை அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாக் கூறும் பிரபந்த வகை. (இ. வி. பாட்.90)

நாற்கவி -

{Entry: P16a__506}

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி. (திவா. பக். 286) (வெண்பாப். 24)

ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள். (வெண்பாப். 25-28)

நாற்கவி இயல்பு -

{Entry: P16a__507}

பட்டினத்தடிகள் கழுமரம் எரியப்பாடியது போன்ற கவியினம் ஆசுகவியாம். பாண்டியன் குலசேகரன் பாடிய அம்பிகைமாலை போல்வன மதுரகவியாம். கொங்கு மன்னன் கொடுத்த கொடுவாள் அருணையூர்ப் புரவலனது அரண்மனையைச் சேருமாறு பாடிய நூல் முதலாயின சித்திரகவியாம். ஓராயிரம் முதலாக நூறாயிரம் வரை செய்யுள் தொகைபெறும் வகையால் பலவகைப் பொருள் களையும் பாடும் பனுவல்எல்லாம் வித்தார கவியாம்; அகவல் பஃறொடைவெண்பா இவற்றால் 32, 64 எனப்படும் கலை களை வகுத்துரைக்கும் விரிவான செய்திகளைக் கொண்ட பல பாடல்கள் கொண்டவையும் வித்தாரகவி ஆகும் தன்மைய. (அறுவகை. நாற்கவி இயல்பு 1-4)

நாற்கவிராச நம்பி -

{Entry: P16a__508}

அகப்பொருள் விளக்கம் இயற்றிய சைன ஆசிரியர். அவரது பெயரொடு நூல் நம்பி அகப்பொருள் என்று வழங்கும்.

நாற்பயன் -

{Entry: P16a__509}

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் என்பன. (யா. வி. பக். 426; நன்; 10)

நான்மணிக்கோவை -

{Entry: P16a__510}

பத்து வெண்பா, பத்து அகவல், பத்துக்கலிப்பா, பத்து வஞ்சிப்பா இந்நாற்பதனையும் வெண்பா அகவல் கலி வஞ்சி என்ற முறையால் அந்தாதியாகத் தொடுத்து மண்டலித்து வரப்பாடும் பிரபந்தம். (சாமி. 169)

நான்மணிமாலை -

{Entry: P16a__511}

வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆசிரிய விருத்தமும் அகவலும் என இந் நால்வகை யாப்புச் செய்யுளும் அந்தாதி யால் நாற்பது வருமாறு, முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்தம். இந்நால்வகையுள் விருத்தம் அகவல் என்பன இடம் மாறியும் வரலாம். (இ.வி.பாட். 61, மு.வீ.யா.ஒ. 91, பி.தீ. 11)

நானாற்பது -

{Entry: P16a__512}

காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பா பொருந்த உரைப்பதாகிய பிரபந்த விசேடம். இன்னாமையும் இனிமையும் எனப் பொருள் இரண்டு என்பது. காலம் பற்றி வருவது கார் நாற்பது; இடம்பற்றி வருவது களவழி நாற்பது; பொருள்பற்றி வருவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன. (இ.வி.பாட். 91)

நிகண்டு -

{Entry: P16a__513}

1. ஒருபொருட் பலசொல் தொகுதியையும், பலபொருள் ஒரு சொல் தொகுதியையும் பாவில் அமைத்துக் கூறும் நூல். நிகண்டு - கூட்டம்;

2. வைதிகச் சொற்களின் ஒரு பொருட் பல சொல் தொகுதியை யும், பலபொருள் ஒருசொல் தொகுதியையும் உணர்த்தும் நூல்;

3. அகராதி; 4. படலம்.

தமிழில் தோன்றிய நிகண்டு நூல்கள் பலவாம். அவற்றுள் சில பின் வருமாறு:

திவாகரர் இயற்றிய திவாகரம் தோன்றிய காலம் 8ஆம் நூற்றாண்டு என்ப.

பிங்கலர் இயற்றிய பிங்கலந்தை தோன்றிய காலம் 9ஆம் நூற்றாண்டு.

காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு தோன்றியகாலம் 11ஆம் நூற்றாண்டு என்ப.

இரேவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு தோன்றிய காலம் 16ஆம் நூண்றாண்டு என்ப.

மண்டல புருடர் இயற்றிய சூடாமணிநிகண்டு தோன்றிய காலம் 16ஆம் நூற்றாண்டு என்ப.

ஈசுர பாரதியார் இயற்றிய வடமலைநிகண்டு தோன்றிய காலம் 17ஆம் நூற்றாண்டு என்ப.

வீரமாமுனிவர் இயற்றிய சதுர அகராதி தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டு என்ப.

அருமந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு தோன்றிய காலம் 18ஆம் நாற்றாண்டு.

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு தோன்றிய காலம் 18ஆம் நூற்றாண்டு என்ப.

கயாதரர் இயற்றிய கயாதர நிகண்டு தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டு என்ப.

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதி தீபம் தோன்றிய காலம் 18ஆம் நூற்றாண்டு என்ப.

அண்ணாசாமி பிள்ளை இயற்றிய ஒருசொல் பலபொருள் விளக்கம் தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு என்ப.

சுப்பிரமணிய தீக்ஷிதர் இயற்றிய கந்தசுவாமியம் தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு என்ப.

வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.

வேதகிரி முதலியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.

வேதகிரியார் இயற்றிய மற்றொன்று தொகைப்பெயர் விளக்கம் 19ஆம் நூற்றாண்டு என்ப.

முத்துசாமிபிள்ளை இயற்றிய நானார்த்த தீபிகை தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.

அருணாசல கவிராயர் இயற்றிய விரிவு நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.

அரசஞ் சண்முகனார் இயற்றிய அந்தாதித்தொகை நிகண்டும், நவமணிக் காரிகை நிகண்டும் தோன்றிய காலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி.

சிவசுப்பிரமணிய கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.

கைலாசம் என்பார் இயற்றிய கைலாச நிகண்டு சூடாமணி தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு; ஏகபாத நிகண்டும் அக்காலத்ததே.

இனி, இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றிய தமிழ் உரிச் சொல் பனுவல் அந்நூற்றாண்டில் தோன்றியது.

நியாய சூடாமணி -

{Entry: P16a__514}

ஒரு தருக்க நூல். (வீ. சோ. 181 உரை இறுதிப்பகுதி)

நிலக்கணம் -

{Entry: P16a__515}

பூமிகணம்; மூன்றும் நிரையசையாக வரும் மூவசைச்சீர் செய்யுள் தொடக்கத்தில் முதற்சீராக அமைவது பொருத்த முடையதொரு செய்யுட்கணம். இது பூகணம் எனப்படும். ‘நிலக்கணம் தானே மலர்த்திரு விளங்கும்’ என்றார் மாமூலர். நீர்க்கணம், இந்திர கணம், சந்திரகணம், நிலக்கணம் என்பன நான்கும் நன்மை செய்யும் பொருந்திய கணங்களாம். (இ. வி. பாட். 40 உரை)

நிருத்தம் -

{Entry: P16a__516}

நிருக்தம்; இடையாய ஓத்து எனப்பட்ட ஆறங்கங்களுள் ஒன்று; உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் அங்கம். (ஏனையன வியாகரணமும், கற்பமும், கணிதமும், பிரமமும், சந்தமும் ஆம்.) (தொ. பொ. 75 நச்.)

யாஸ்கர் என்பவரால் இஃது இயற்றப்பட்டது.

நிலத்து நூல் -

{Entry: P16a__517}

அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களின் சார்பாக அமைந்த நூல்களில் ஒன்றாகிய இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும். (யா. வி. பக். 491)

நிறையவை -

{Entry: P16a__518}

எல்லாப் பொருளையும் அறிந்து மனம்கொண்டு வாதுபோர் புரிவோர், கருதி விடுப்போர்தம் எதிர்வருமொழிகளை ஏற்றவாறு ஆன்றோர் உளம் ஏற்கும் வண்ணம், எடுத்துரைக் கும் வல்லவர்கள் குழுமிய அவை.

‘ நல்லவை நிறையவை’ காண்க. (யா. வி. பக். 554)

நீதகச் சுலோகம் -

{Entry: P16a__519}

ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவர் இயற்றிய வடமொழி இலக்கண நூலாம் உரூபாவதாரத்திற்கு அமைந் துள்ள முதல்நினைப்புச் சூத்திரம் இது. (யா. கா. 1 உரை)

நீர்க்கணம் -

{Entry: P16a__520}

செய்யுள் முதற்கண் மங்கலமாக அமைக்கத் தகும் கூவிளங் கனிச்சீர். இதற்குரிய நாள் சதயம். “இதன் பயன் பாட்டுடைத் தலைவன் சீர் சிறப்பு எய்துதல்” என்றார் மாமூலர். இக்கணம் நிலைபேற்றினைத் தருவது என்று இந்திரகாளியர் பலன் கூறினார். (இ. வி. பாட். 40)

நீராடற்பருவம் -

{Entry: P16a__521}

பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள் ஒன்று; பாட்டுடைத் தலைவியாம் சிறுமி தோழியர் புடைசூழக் குதூகலம் கொண்டு வாசனை கமழும் நறுநீரில் திளைத்துக் குளித்தலைப் பாடுவது. இதற்கு ஒப்பாக, கழற்சிக்காய் ஆடும் கழங்குப் பருவத்தைக் கொள்வாரும் உளர். சந்த விருத்தமாகப் பத்துப்பாடல் இடம்பெறும் (இ. வி. பாட். 47).

நீலகேசி -

{Entry: P16a__522}

ஐஞ்சிறு காப்பியம் எனப்படுவனவற்றுள் ஒன்று; நீலகேசி என்பாளைப் பற்றி எழுந்தமையால் இப்பெயர்த்தாயிற்று இதன் முதற்பாடல் வண்ணத்தான் நேரசை முதலாக வந்து அடிதோறும் 14 எழுத்துக்களையுடைய நான்கடிப் பாடல் ஆயிற்று. (யா. வி. பக். 39, 521).

நுண்பொருண்மாலை -

{Entry: P16a__523}

16ஆம் நூற்றாண்டுப் புலவரான காரிரத்தின கவிராயர் என்பார், தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினி யர் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை என்னும் இரண்டற் கும் நுண்பொருள் வரைந்த பனுவல். இதுபோது திருக்குறள் பரி மேலழகருரைக்கு விளக்கமாக அவர்வரைந்துள்ள நுண்பொருள் மாலையே கிட்டியுள்ளது.

பரிமேலழகரது உரை நுட்பத்தினையும் திருக்குறள் சொல் லாட்சி மாண்பினையும் ஒரு சேர அதன்கண் காணலாம்.

நூற்றந்தாதி -

{Entry: P16a__524}

வெண்பா நூறு அல்லது கலித்துறை நூறு அந்தாதித் தொடை யமைய மண்டலித்துப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 82)

முதல் திருவந்தாதி முதலியன வெண்பாவான் இயன்றன. இராமாநுச நூற்றந்தாதி போல்வன கட்டளைக் கலித்துறை யான் இயன்றன.

நெஞ்சுவிடு தூது -

{Entry: P16a__525}

1. தலைவி தன் மனத்தைக் காதலன்பால் தூது விடுவதாக அதனை விளித்துப் பாடும் பிரபந்த வகை. இறைவனை நாயகனாகக் கொண்டு தம்மைத் தலைவி நிலையில் பாவித்துக் கவிஞர் இப்பிரபந்தம் பாடுவது இயல்பு.

2. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று; உமாபதி சிவம் இயற்றியது. காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. (L)

நொண்டிச்சிந்து -

{Entry: P16a__526}

நொண்டி நாடகம், கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றனைக் களவாட முயல்கையில் கால் வெட்டப்பட்டுப் பின்னர் நற்கதி பெற்ற வரலாற்றைச் சிந்துச்செய்யுளால் புனைந்து பாடும் நாடக நூல். சிந்து என்பது ஒருவகை இசைப்பா. (L)

நொண்டி நாடகம் -

{Entry: P16a__527}

‘நொண்டிச் சிந்து’ காண்க; எடுத்துக்காட்டு : சீதக்காதி நொண்டி நாடகம். (L) .

நொச்சிமாலை -

{Entry: P16a__528}

வீரர் எயில் காத்தலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்த வகை. (யாழ். அக.) (L)

ப section: 152 entries

பகைநாள் -

{Entry: P16a__529}

செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள்கள்; அவை யாவன; பாட்டுடைத் தலைவனது பெயர்க்குரிய நாள் தொடங்கி எட்டாவது இராசிக்கண் உற்ற இரண்டேகால் நாளும், எண்பத் தெட்டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும் முதலாயின. தலைவனது பெயர்க்கு முதற்சீர் எடுத்துக் கூறற்கு இவை பொருத்தமற்றனவாம். (இ. வி. பாட். 36, 37)

‘நாள் பொருத்தம்’ காண்க.

பஞ்சகம் -

{Entry: P16a__530}

ஒரு பொருளைப் பற்றிப் பாடும் ஐந்து பாடல்களின் தொகுதி. (L)

இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிப் பாடிய பாடல் தொகுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களுள் மேம் பட்டாரைப் பற்றியும் இது பாடப்பெறும். ஐந்து பாடல் களும் வெவ்வேறு பாவும் பாவினமுமாக வரும்.

எ-டு : காந்தி பஞ்சகம்.

பஞ்ச பாரதீயம் -

{Entry: P16a__531}

இசைத்தமிழ் இலக்கணநூல்; தேவஇருடி நாரதனால் செய்யப்பட்டது. இது போன்ற தொன்னூல்கள் இறந்தன. (சிலப். அடியார்க். உரைப்பாயிரம்)

பஞ்சமரபு -

{Entry: P16a__532}

நாடக இலக்கணநூல்; அறிவனாரால் இயற்றப்பட்டது. தமது உரைக்கு உதவிய நாடக இலக்கணநூல் ஐந்தனுள் இதனை யும் ஒன்றாகக் குறிப்பிடுவர் அடியார்க்கு நல்லார். (சிலப். உரைப் பாயிரம்) இந்நூல் அண்மைக் காலத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

பஞ்சரத்தினம் -

{Entry: P16a__533}

ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தம் (L) இசைப்பாடல்கள் ஐந்து வெவ்வேறு இராகத்தில் அமைந்தவற்றது தொகுதியும் இப்பெயர் பெறும். தியாகய்யரது ‘பஞ்சரத்ன கீர்த்தனம்” எனப்படுமாறு காண்க.

பட்டினப்பாலை -

{Entry: P16a__534}

பத்துப்பாட்டுள் ஒன்பதாவதாகிய இது வஞ்சி நெடும் பாட்டு எனப் பெயர் பெறும். இதனுள் ஆசிரிய அடியொடு, கலியடியும் இயற்சீர் வெள்ளடியும் மயங்கி வந்தன. (யா. வி. பக். 127)

பட்டினப் பாலையின் அமைப்பு -

{Entry: P16a__535}

இவ்வஞ்சி நெடும்பாட்டு ஆசிரியஅடி விரவிவந்த ஏந்திசைத் தூங்கல் விரவியல் குறளடி வஞ்சிப்பா. (யா. வி. பக். 357)

பத்தாம் திருமுறை யாப்பு -

{Entry: P16a__536}

திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாம்.

இதன்கண் பாடல்கள் நாற்சீரடி நான்கால் நிகழ்வன. பெரும்- பாலும் வெண்டளையே பயிலும் கொச்சகக் கலி யாப்பின இவை. தளைகள் விரவி வரும் கலிவிருத்தப் பாடல்களும் சில வாக உள. நாலாம் தந்திரத்துப் பகுதி பதின்மூன்றும் அந்தா தித் தொடையால் நிகழ்வன. (இலக்கணத். முன். பக். 88, 89)

பத்தினிச் செய்யுள் -

{Entry: P16a__537}

ஆரிடப் போலியாக அமைந்த ‘கண்டகம் பற்றி’ என்று தொடங்கும் வெண்பா இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள் பெற்று வெண்பா யாப்பில் சிறிது திரிந்து பத்தினிச் செய்யுள் என்ற குறிப்பொடு காணப்படுகிறது. (யா. வி. பக். 370)

பத்து விச்சை -

{Entry: P16a__538}

ஆடைநூல் போல்வது. அது காண்க. (யா. வி. பக். 491)

பதிகம் -

{Entry: P16a__539}

1. தெய்வத்தைப் பற்றிப் பெரும்பான்மையும் பத்துச் செய்யு ளாற் பாடப்படும் பிரபந்தம். தேவாரம் திவ்விய பிரபந்தங் களுள் காண்க.

2. பாயிரம் (நன். 1 ) (L)

பதிற்றந்தாதி -

{Entry: P16a__540}

பத்து வெண்பா அல்லது பத்துக் கலித்துறை இவற்றால் அந்தாதித் தொடையாக மண்டலித்துப் பாடப்படும் பிரபந்தம். (இவ்விரண்டு யாப்பினாலும் அடுத்தடுத்து இருபது பாடலாக அந்தாதித்துப் பாடுவதே இரட்டைமணிமாலையாம் என்க.) இவை வெண்பாப் பதிற்றந்தாதி, கலித்துறைப் பதிற்றந்தாதி எனப் பெயர் பெறும். (இ. வி. பாட். 81)

பதிற்றுப் பத்தந்தாதி -

{Entry: P16a__541}

பெரும்பான்மையும் பத்துப் பாடற்கு ஒருவகைச் சந்தமாகப் பத்து வேறுபட்ட சந்தங்களால் நூறு செய்யுள் அந்தாதித் தொடையாக மண்டலித்துப் பாடும் பிரபந்தம். சந்த விருத்தம்

எ-டு : மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி. (L )

பதிற்றுப்பத்துப் பதிகம் -

{Entry: P16a__542}

பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத்துள், ஒவ்வொரு பத்துப்பாட்டும் ஒரு மன்னன்மேல் பாடப்பட்டவற்றின் இறுதியில், அப்பத்துப்பாடல்களின் கருத்தையுட் கொண்டு பாடப்பட்ட பாடல்; கிடைத்துள்ள (முதலும் இறுதியும் நீங்கலான) எட்டுப் பத்துப்பாடல்கட்கும் எட்டுப் பதிகங்கள் காணப்படுகின்றன. பதிகத்தின் இறுதியில் உரைநடையால் புலவர் பாடிப் பெற்ற பரிசில்கள் உரையாசிரியரால் குறிக்கப் பட்டுள. பத்துப்பாடல்கட்கும் அமைந்த சிறப்புப் பெயர் களும் வரையப்பெற்றுள. இப்பதிகம் நூலாசிரியரால் பாடப் பட்டன அல்ல எனவும் உரையாசிரியர்தாமே பாடின என்றும் கூறுவர்.

பதினாறு படலம் -

{Entry: P16a__543}

சிலப்பதிகாரம் அரும்பதவுரையாசிரியரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டதோர் இசைத்தமிழ் நூல் (சிலப். 7 : 12 - 16). வார்தல் முதலாகப் பட்டடை ஈறாகக் கிடந்த எட்டு வகை இசைக் கரணங்களின் இலக்கணத்தைப் பதினாறு படலத்துள் கரணவோத்திற் காணுமாறு குறிப்புரை பணிக்கிறது.

பதினோராம் திருமுறை யாப்பு -

{Entry: P16a__544}

ஆசிரியர் பன்னிருவரால் பாடப்பெற்ற நாற்பது பிரபந்தங் களது தொகுப்புப் பதினோராம் திருமுறை. திருவாலவா யுடையார் அருளிய திருமுகப்பாசுரம் நேரிசை ஆசிரியப் பாவாம். நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையும் அது. இரட்டைமணிமாலை நான்கும் மும்மணிக்கோவை மூன்றும், கோயில் நான்மணிமாலை ஒன்றும் என்னுமிவை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பால் இயன்றன. எழு கூற்றிருக்கை ஆசிரியப் பாவாம். உலா ஒன்றும் கலிவெண்பா யாப்பிற்று. கலம்பகம் ஒன்றும் பலவகைப் பாவும் பாவினமும் விரவ இயன்றது. காரைக்காலம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் ஆசிரியவிருத்த யாப்பின; பண்ணோடு பாடப்படும் நடையின. அவர் அருளிய அற்புதத் திருவந்தாதி 101 வெண்பாக்களால் மண்டலித்தமைய இயன்றது. ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திரக் கோவை தற்போது 24 வெண்பாக்களாகவே எஞ்சியுள்ளது. சேரமான்பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதிக் கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது. நக்கீரர் அருளிய வற்றுள் கைலை பாதி காளத்திபாதி அந்தாதி 100 வெண்பாக் களால் அமைந்தது; திரு ஈங்கோய் எழுபது, எழுபது வெண் பாக்களால் இயன்றது; பெருந்தேவபாணி 67 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கோபப் பிரசாதம் 91 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கார் எட்டு எட்டு வெண்பாக்களான் இயன்றது; திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 157 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா. இனிக் கல்லாட தேவ நாயனார் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடினார்; 38 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா அது. கபிலதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதி ‘ஒன்று, முதலாகத் தொடங்கி ‘ஒன்று’ என முடியும் 100 வெண்பாக்களால் இயன்றது. பரணதேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி யும் 100 வெண்பாக்களால் ஆயது. பட்டினத்துப் பிள்ளை யார் அருளிய திரு ஏகம்ப முடையார் திருவந்தாதி கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது; திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பத்து ஆசிரியப்பாவால் அந்தாதித் தொடை பெற அமைந்தது. நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தம் எழுபது கட்டளைக் கலித்துறையான் அந்தாதித்து அமைந்தது; திருத்தொண்டர் திருவந்தாதி 89 கட்டளைக் கலித்துறைப் பாடலால் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100 கட்டளைக்கலித்துறையான் இயன்றது; ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 10 கட்டளைக் கலித்துறையான் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பேதை முதலாகிய ஏழு பருவத்து மகளிரைத் தனியே பிரித்துக் கூறாது, பொதுவாக, மகளிர் காமுறாநிற்கத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருஉலாப் போந்த தன்மையைச் சுட்டிக் கலிவெண்பா யாப்பால் இயன்றது (மாலை-தன்மை); ஆளுடைய பிள்ளை யார் திருத்தொகை 65 அடிகளான் இயன்ற கலிவெண்பா; திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதச மாலை 11 ஆசிரிய விருத்தப் பாக்களான் இயன்றது.

பிற பிரபந்தங்கள் தத்தம் பெயராலே யாப்புத் தோன்ற நின்றன. (இலக்கணத். முன். பக். 89-92)

பந்தடிப்பாட்டு -

{Entry: P16a__545}

விளையாட்டுப் பருவத்துச் சிறுமியர் பந்தடித்து விளையாடு கையில் பாடும் பாட்டு விசேடம். சிலப்பதிகாரத்துள் ‘கந்துக வரி’ என்ற பெயர் பெற்ற சந்த விருத்தப்பாடல் மூன்றும் பந்தடிப் பாட்டே யாம். ( L)

பயோதரப் பத்து -

{Entry: P16a__546}

நங்கை நகிலினைப் பத்துப்பாடல் ஆசிரிய விருத்தத்தாலோ கட்டளைக் கலித்துறையாலோ பாடும் பிரபந்தம். (நவ. பாட். 49)

பரணர் பாட்டியல் -

{Entry: P16a__547}

இருடிகள் அல்லாத ஏனையோராய், மனத்தது பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரவும் வல்ல கபிலர் கல்லாடர் மாமூலர் பெருந்தலைச்சாத்தனார் முதலானாரோடு ஒப்ப எண்ணப்பட்டவர் பரணர். இவரால் இயற்றப்பட்ட பாட்டியல் நூல் ஒன்றிருந்ததாக அறிகிறோம். (யா.வி. பக். 371) (தொ.சொல். 81 நச்.)

பரணி -

{Entry: P16a__548}

போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிரபந்த வகை. (இ. வி. பாட். 78)

பரணி உறுப்புக்கள் -

{Entry: P16a__549}

கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை கூறல், காளி கோயில் பாடுதல், பேய்களைப் பாடுதல், காளிக்குக் கூளி கூறல், கூளிக்குக் காளி கூறல், தலைவன் புகழ் பாடுதல், போர் பாடுதல், களவேள்வி என்பன. (இ. வி. பாட். 79)

பரதசங்கிரகம் -

{Entry: P16a__550}

இந்நூல் நாட்டிய சாத்திரமாகிய பரதத்தின் இலக்கணத்தைத் தொகுத்துச் சுருங்க உரைப்பது. பாயிரத்துள் இதன் பெயர் பரதசார சங்கிரகம் என்று சுட்டப்பெற்றுள்ளது. இந்த நூற்பொருள் முத்தமிழொடும் தொடர்புடையதாக இருக் கிறது. இயற்றமிழ்க் குறிப்புக்களும் இசைத்தமிழ் இலக்கணங் களும் பரதநாட்டியத்தின் இயல்பினை விரித்துரைக்கும் முகத்தால் இடம் பெற்றுள. இந்நூலிற் காணப்படும் சூத்தி ரங்கள் 262. அவற்றின் யாப்புவகைகள் வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை, நூற்பா என்பன. வெண்பாக்களே மிகுதியாக உள. இந்நூற்குப் பண்டைய உரையொன்று காணப்படுகிறது. தெளிவான சுருக்கவுரை அது.

இந்நூலாசிரியர் பெயர் அறம்வளர்த்தான் என்பது. காலம் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்ப.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பெரும்புலவர் க. வெள்ளைவாரணனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப் பில் இந்நூலோடு, அறம் வளர்த்தான் இயற்றிய ஆசிரிய நடையான் அமைந்த (தேவதைரூப அவினயத்தை விளக்கும்) அவினயக் கிரந்தம் என்ற நூலும் இடம் பெற்றுள்ளது.

பரத சேனாபதீயம் -

{Entry: P16a__551}

ஆதிவாயிலார் என்பாரால் இயற்றப்பட்ட நாடகத்தமிழ் நூல். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் தாம் வரைந்த உரைக்கு ஆதாரமாக மேற்கொண்ட நாடகத்தமிழ் நூல் ஐந்தனுள் ஒன்று. (சிலப். உரைச் சிறப்புப்.)

பரதம் -

{Entry: P16a__552}

நாடகத்தமிழ் நூலாகிய தொன்னூல்களில் முற்றும் அழிந்து பட்ட ஒன்று. (சிலப். உரைச்சிறப்புப்.)

பரிச்சேதம் -

{Entry: P16a__553}

அத்தியாயம்; நூலினது பெரும்பாகுபாடு; படலம், இலம்பகம், சருக்கம், காண்டம் என்பனவும் அது. (பிங். 2068)

பரிசில் வழங்காதவன் அழிவு -

{Entry: P16a__554}

பரிசில் வழங்காதவன்மேல் முன் முறையாகப் பாடியதற்கு மாறுபட வழுக்களால் முன்மொழி எடுத்து இயற்பெயர் தோறும் அழிவுண்டாகுமாறு செய்யுள் பெயர்த்தெழுதி அப்பிரபந்தத்தைச் செந்நூல் சுற்றிச் செம்மலர் சார்த்திக் கவர்தெரு, காளிகோயில், பாழ்மனை, மயானம் முதலிய இடங்கட்கு எடுத்துச் சென்று, அப்பரிசில் வழங்காதானை நினைந்து பழுத்த இரும்பினால் அகம் நொந்து அச் சுவடியைப் புலவன் சுடுவானாயின், அப்பாடப்பட்டான் ஓராண்டில் மாய்வான்; இவ்வாறு ஒன்றும் செய்யாமல் இதயம் நொந்துகொண்டு புலவன் இருக்குமாயினும், அவன் தன் கிளைஞரோடு இறுதியாவான் என்று அகத்தியரது உண்மை நூல் நெறி கூறுகிறது. (பி. ம. 58)

சிதம். பாட். மரபியல் 19 சூத்திரமும் இக்கருத்துக்களையே கூறுகிறது.

புரவலன் குற்றமுடைய பாடல்களைக் கொண்டால் அவன் செல்வம் அகலும்; தீரா நோய் கூடும்; சுற்றமும் புகழும் சூனியமாகும்; காலமிருத்து கடுகி வந்திடும். (பி. ம. 60)

பரிமாணம் (1) -

{Entry: P16a__555}

பரிமாணனார் என்பவரால் யாப்புப் பற்றி வரையப்பட்ட இதன் நூற்பாக்களில் ஏழு யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. அந்நூற் பாக்கள் தொடை விகற்பம், இரட்டைத் தொடை, வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா அடி வரையறை என்பன பற்றி அமைந்துள்ளன. (யா. வி. பக். 134, 182).

பரிமாணனார் -

{Entry: P16a__556}

பரிமாணம் (1) காண்க.

பரிமேலழகர் -

{Entry: P16a__557}

திருக்குறட்கு அமைந்த பண்டையுரையாசிரியர்களுள் தலை சிறந்தவர். நுண்மாண் நுழை புலம் காட்டும் இவருரை என்றும் அறிஞருலகத்தே போற்றப்படுதல் ஒருதலை. இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடற்கும் இவருரை காணப்படுகிறது.அதுவும் நுணுக்கம் வாய்ந்தது; ஆயின் குறிப்புரையாகவே உள்ளது. அவ்வுரையின்றேல் பரிபாடற்கு மெய்ப்பொருள் காண்டல் அரிது. வண்துவரைப் பெருமாள் என்ற இயற்பெயருடைய வைணவ அந்தணப் பெருமகனாராம் இவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் பெரும்புலமை மிக்கார். இவரது திருக்குறளுரை ‘தண்டமிழின் மேலாம் தரம்’ எனப்படுகிறது.

பல்காப்பியம் -

{Entry: P16a__558}

பல்காப்பியனாரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கணநூல் (தொ. மர. 95 பேரா. உரை) இதன் நூற்பாக்கள் இரண்டு, சீர் வரையறை பற்றியன இக்காலத்துக் கிட்டியுள்ளன. இது தொல்காப்பியத்தில் விரிக்கப்பட்ட செய்தியை வகுத்துக் கூறிய நூலாகும்.

பல்காயம் -

{Entry: P16a__559}

யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பண்டைய யாப்புநூல்களுள் ஒன்று. இதன் நூற்பாக் களுள் 26 மேற்கோளாகக் காட்டப்பெற்றுள. அவை யாப்புறுப்புக்கள், அசை, சீர், தொடை, விட்டிசை, சீர் மயக்கம், அடிவரையறை, கூன், அடி வரையறை இல்லன-என்பன பற்றியனவாம். (யா. வி. பக். 17 முதலியன)

பல்காயனார் -

{Entry: P16a__560}

பல்காயம் எனத் தம் பெயரால் ஓர் யாப்பிலக்கண நூல் இயற்றியவர். (தொ. மர. 95 பேரா. உரை)

பல்சந்தமாலை -

{Entry: P16a__561}

பத்துக் கவி முதலாக நூறுகவி ஈறாகச் சந்தம் பத்துவகை யாகப் பாடப்படுவதொரு பிரபந்தவகை. (இ. வி. பாட். 74)

பல்லாண்டு -

{Entry: P16a__562}

பெரியாழ்வாரால் அருளப்பட்ட பிரபந்தம்; பாட்டுடைத் தலைவனாம் நாராயணனைப் “பல ஆண்டு வாழ்க!” என ஏனை மக்களை வாழ்த்துவது போல வாழ்த்துவது.திவ்விய பிரபந் தத்தின் தொடக்கமாக அமையும் பன்னிரண்டு பாசுரம் அடங்கிய பதிகம் இது. சேந்தனார் அருளிய பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையுள் உள்ளது. (L)

பலதிரட்டு -

{Entry: P16a__563}

பலவாகச் சிதர்ந்து கிடக்கும் பலதிறச் செய்திகளைத் திரட்டிக் கூறும் தொகை நூல். (யாழ். அக.)

பள் -

{Entry: P16a__564}

(‘பள்’ உகரச்சாரியை பெற்றுப் ‘பள்ளு’ என வரும்.)

1. நாடகப் பிரபந்தவகை. எ-டு: ‘முக்கூடற்பள்ளு’

2. காளி முதலிய தெய்வங்கட்குப் பலி கொடுக்குங் காலத்துப் பாடப்படும் ஒரு பண். (L)

பள்ளியெழுச்சி -

{Entry: P16a__565}

அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம். (L)

பள்ளு -

{Entry: P16a__566}

‘பள்’ காண்க.

பிற்காலத்து எழுந்த பாப்பாவின எடுத்துக்காட்டு நூல்கள் -

{Entry: P16a__567}

1. மாறன் பாப்பாவினம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16ஆம் நூற்றாண்டு

2. சிதம்பரச் செய்யுட் கோவை - குமரகுருபர சுவாமிகள் 17ஆம் நூற்றாண்டு

3. திருஅலங்கல்திரட்டு - குமரகுருதாச சுவாமிகள் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதி

4. அரங்கன்துதி அமுதம் - சக்திசரணன் 20ஆம் நூற்றாண்டு பிற்பகுதி

5. யாப்பும் பாட்டும் - அரங்க. நடராசன் (புதுவை) 21ஆம் நூற்றாண்டு

பறை -

{Entry: P16a__568}

1. ஒருவகைப் பிரபந்தம். 2. வரிக்கூத்து வகை. (சிலப். 3:13 அடி. உரை) 3. ஐவகை நிலத்திலும் முழக்கப்படும் தோற்கருவி. (L)

பன்மணிமாலை (1) -

{Entry: P16a__569}

அந்தாதித் தொடையாய் அமைந்த தொடர்நிலைச் செய்யுள் களுள் ஒன்று. இதன்கண் இறுதி எழுத்தும் சொல்லும் இடை யிட்டுத் தொடுத்த செய்யுள் அந்தாதிவிகற்பத்தைக் காணலாம். (யா. வி. பக். 196, 205)

பன்மணிமாலை (2) -

{Entry: P16a__570}

கலம்பகம்தான், அதன் உறுப்புக்களுள் ஒருபோகும் அம்மானை யும் ஊசலும் இன்றி ஏனைய உறுப்புக்களெல்லாம் வரப் பாடும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 54)

பன்னிரண்டாம் திருமுறை யாப்பு -

{Entry: P16a__571}

திருத்தொண்டர் புராணம் ஆம் பெரியபுராணம் பன்னிரண் டாம் திருமுறையாக அமைவது. கொச்சகக் கலிப்பா, பலவகைப்படும் அறுசீர் விருத்தங்கள்,எழு சீர் விருத்தங்கள், எண்சீர் விருத்தங்கள், சந்தம் வாய்ந்த எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கலித்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் எனப் பலவகை யாப்புக்கள் இத்திருமுறையில் பயில்கின்றன. (இலக்கணத். முன். பக். 98)

பன்னிருபடலம் -

{Entry: P16a__572}

அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவராலும் தனித்தனி ஒவ்வொருவரும் ஓரோரு படலம் யாக்கப் பன்னிரண்டு படலங்களாக அமைந்த புறப்பொருள் நூல். வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி மயங்கி வருவது பெரும்பாலும் அகத்திணைப் பாடற்கண் இல்லை என்பதற்குப் பன்னிருபடலப் பெருந் திணைச் சூத்திரம் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. வெட்சி கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி-என்ற திணைகள் தம்முள் மறுதலைப்பட்டன என்பதனை விளக்கவும் பன்னிரு படலச் சூத்திரங்கள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக். 128, 571)

அகத்தியன்பால் தமிழிலக்கணத்தைக் குற்ற மற உணர்ந்த தொல்காப்பியன் முதலான பன்னிருவராலும் பாங்குறப் பகரப்பட்டதாகப் பன்னிருபடலம் சொல்லப்படுகிறது, புறப்பொருள்வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்துள்.

பன்னிரு பாட்டியல் -

{Entry: P16a__573}

செய்யுள் வகைகளைப் பற்றிக் கூறும் பாட்டியல் நூல்களில் மிக்க தொன்மையானது. இந்நூல் ஒருவரால் இயற்றப்பட் டது என்றும், பன்னிருவரால் இயற்றப்பட்டது என்றும் கூறுவர். இதன்காலம் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலம்; காலம் துணியக் கூடவில்லை. இதன்கண், பாயிரம் நீங்கலாக 231 நூற்பாக்கள் உள. மேற்கோளாக வந்த நூற்பாக் களையும் கூட்டி யுரைப்பர் ஒருசாரார். எழுத்தியல், சொல் லியல், இன இயல் என்பன இந்நூற்பாகுபாடுகள். இனவிய லுள் பிரபந்த வகைகள் விரிவாகப் பேசப்படுகின்றன. எழுத்தியலும் சொல்லியலும் முறையே எழுத்தும் சொல்லும் பற்றிய பன்னிரு பொருத்த நிலைகளைப் பேசுவதால், இந்நூற்குப் பெயர் அத்தொகைப்பெயரால் அமைந்தது என்றும் கூறுவர்.

பனம்பாரம் -

{Entry: P16a__574}

தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணக்கராகிய பனம்பார னார் இயற்றிய இலக்கண நூல்; அவர் பெயராலேயே அப்பெயர் பெற்றது. அகத்திணை அல்லாதவழி வஞ்சியடி யொடு சொற்சீரடி மயங்கும் என்பதற்குப் பனம்பாரச் சூத்திரம் ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. (யா. வி. பக். 125)

பனம்பாரனார் -

{Entry: P16a__575}

அகத்தியனார் மாணாக்கருள் ஒருவர்; இவரியற்றிய இலக் கண நூல் பனம்பாரம் என இவர் பெயராலேயே வழங்கியது. இவர் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரமும் இயற்றி யுள்ளார்.

பாக்களின் பண்புகளை எடுத்துரைக்க வல்லோர் -

{Entry: P16a__576}

அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆமாறு சொன்ன நூல் களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும் சொகினமும், வக்கின கிரந்தமும், மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத் திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும், பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாய வற்றுள்ளும் உள்ள மறைப்பொருள் உபதேசிக்க வல்லராய், கவிப்பெருமையோடு, சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும் பாடப்படுவோருக்கு வரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லராய், உரைக்கவல்ல சான்றோர்கள். அவ்வல்லோராவர். (யா. வி. பக். 491)

பாசண்டங்கள் -

{Entry: P16a__577}

வைதிக சமயத்தின் மாறுபட்ட புறச்சமயக் கொள்கைகளைக் குறிப்பிடும் நூல்கள். இவற்றின் அடிகள் சொற்சீரடியின் பாற்படும். (யா. வி. பக். 373)

பாட்டியல் -

{Entry: P16a__578}

பிரபந்த இலக்கணம் கூறும் நூல். பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல் முதலாயின காண்க.

பாட்டியல் கூறும் பாச் செய்திகள் -

{Entry: P16a__579}

வெண்பா முதலிய நால்வகைப் பாவிற்கும் அவற்றின் இனங்களுக்கும் நிறம், திணை, பூ, சாந்து, புகை, பண், திறன், இருது, திங்கள், நாள், பக்கம், கிழமை, பொழுது, கோள், இராசி, தெய்வம், திசை, மந்திரம், மண்டிலம், பொறி, எழுத்து முதலாகிய பண்புகள் கூறப்படும். இவற்றை அறிந்து ஆராதிப்ப, இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி நன்மை பயக்கும். இவை யெல்லாம் திணைநூலுள் விரிக்கப் படும். (யா. வி. பக். 488)

பாட்டியல் நுவல்வன -

{Entry: P16a__580}

பாட்டு, நூல், உரை, பிசி, முதுசொல், மந்திரம், குறிப்புரை, வழக்கு மரபு, செய்யுள் மரபு, வருண மரபு, நாற்புலவர், அவை, அகலக்கவியைச் செய்து கொடுப்போர், அகலக்கவி கொள் வோர் இப் பதினான்கு திறத்த இலக்கணமும் ஆம். (இ. வி. பாட். 1 )

பாட்டியல் மரபு -

{Entry: P16a__581}

இந்நூல் இறந்துபட்டதொரு பாட்டியல் பற்றிய நூல். இது ‘தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றத்திற்கு இலக்கியமாகப் பேராசிரியரால் (தொ. பொ. 663) குறிப்பிடப் பட்டுள்ளது. பாட்டியல் கூறும் பத்துவகைப் பொருத்தம் போல்வன அவருக்கு உடன்பாடல்ல.

இந்நூலின் 3 நூற்பாக்கள் ஆரிடச் செய்யுளுக்கும் அச் செய்யுள் பாடுவோருக்கும் உரிய இலக்கணங்களை உணர்த்து வனவாக யாப்பருங்கல விருத்தியில் (பக். 370, 371) மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

பாட்டின் வகை -

{Entry: P16a__582}

பா உறுப்பான் எழுந்து ஒலிக்கும் பாட்டின் வகையாவன - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, அகலக்கவி என்பன. (இ.வி.பாட். 3)

பாடலனார் உரை -

{Entry: P16a__583}

பாடலனார் என்பாரால் உரைக்கப்பட்ட இலக்கணநூல். இதன்கண், நூல், நூல்வகை, நாற்பயன், எழுமதம், பத்து வகைக் குற்றம், பத்துவகை வனப்பு, முப்பத்திருவகை உத்தி என்பன விளக்கப்பட்டுள்ளன. (யா. வி. பக். 427)

பாடியகாரர் -

{Entry: P16a__584}

பாணினீயத்தின் பேருரையாசிரியரான பதஞ்சலி. (பி.வி. 1 உரை) (L)

பாடியம் -

{Entry: P16a__585}

பாஷ்யம்; விருத்தியுரையாகிய பேருரை. (L)

பாடுதுறை -

{Entry: P16a__586}

1) புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை; ‘பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே’ (புறநா. 21 )

2) தத்துவராயர் பாடிய பல (வேதாந்தி பனுவல். (L)

பாணினி, பாணினீயம் -

{Entry: P16a__587}

பாணினியால் இயற்றப்பட்ட இலக்கணத்தின் பெயர் பாணி னீயம். பாணினி பாரத நாட்டின் வடமேற்குக் கோடிப் பகுதி யில் வாழ்ந்தவர். இவரது காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. ஏறத்தாழ 4000 சூத்திரங்களைக் கொண்ட வடமொழி இலக்கணநூலைப் பாணினி இயற்றினார். இவர் தமக்கு முன் வாழ்ந்த இலக்கணம் வல்லார் அறுபத்து நால்வர் இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளனர். தம் காலத்துக்கு முற்பட்ட நூல்கள் ஆகிய தாதுபதம், கணபதம் என்ற இரண்டனையும் பாணினி குறித்துள்ளார். தாது மஞ்சரி, பதமஞ்சரி எனப் பிற் காலத்தெழுந்தவை அவற்றை அடியொற்றியனவே. பாணி னியே உத்திவகைளை முதன் முதலாகக் கையாண்டவர். அவ்வுத்தி வகைகள் ‘பாஷேந்து சேகரம்’ என்ற நூலாகச் 18ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள.

பாணினியால் மிகுதியும் குறிப்பிடப்பட்டவர் சாகடாயநர், கார்க்கியர், சாகல்யர் முதலானோர். பெயர்ச்சொற்கள் யாவும் வினைப்பகுதியாகிய தாதுக்களிலிருந்து தோன்றிய னவே என்ற சாகடாயநர் கொள்கையைப் பாணினி தம் நூலில் முழுதும் அடியொற்றியுள்ளார்.

பாணினீயம் தோன்றிய பின்னர் ஏனைய இலக்கணங்கள் மறைந்துவிட்ட செய்தியொன்றே இதன் பெருஞ்சிறப்பினைக் காட்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாணினீயத்தில் 1245 சூத்திரங் களுக்குக் காத்தியாயனர் என்ற வரருசி வார்த்திகம் (-காண் டிகை) ஒன்று வரைந்தார். அடுத்துக் குணிவிருத்தி முதலிய உரைகள் தோன்றின. கி.மு. முதல் நூற்றாண்டில் பதஞ்சலி யால் வரையப் பட்ட மாபாடியம் என்ற பேருரை இப்போது 1713 சூத்திரங்களுக்கே கிடைத்துள்ளது.

பாணினீயம் முழுமைக்கும் கி.பி. 650-ஐ ஒட்டிய காலத்தில் காசி நகரில் வாழ்ந்த ஜயாதித்யர், வாமநர் என்ற பெருமக்க ளால் காசிகாவிருத்தி என்ற விளக்கவுரை இயற்றப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டில் பர்த்ருஹரி என்பவரால் மாபாடிய விளக்கமான வாக்கியபதீயம் என்ற நூலும், 13ஆம் நூற்றாண் டில் கையடர் என்பவரால் கையடம் என்ற நூலும் இயற்றப் பட்டன. 15ஆம் நூற்றாண்டில் இராமபத்திரர் என்பவரால் பிரகிரியா கௌமுதி என்ற நூல் இயற்றப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் பட்டோஜீ என்பவரால் சித்தாந்த கௌமுதி இயற்றப்பட்டது; அஃது இன்னும் எளிமையாக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் வரதாசர் என்பவரால் லகு கௌமுதி என்று சுருக்கி வரையப்பட்டது. (பி. வி. பக் 434-436)

பாதாதி கேசம் -

{Entry: P16a__588}

தலைமக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும் கூறும் பிரபந்தம். சிறப்பாகத் தெய்வங்களை அவ்வாறு பாடுப. (இ. வி. பாட். 111)

பாமாலை -

{Entry: P16a__589}

பெரும்பான்மையும் இறைவனைப் பற்றிய துதிப்பாடல்க ளாகிய பதிகம், இரட்டை மணிமாலை, நான்மணிமாலை முதலாயின. ‘மாலை’ என்றமையால் அந்தாதியாக வரத் தொடுப்பது சிறப்புடைத்து. (L)

பாயிர விருத்தி -

{Entry: P16a__590}

தொல்காப்பியப் பாயிரத்துக்கு வரையப்பட்ட விருத்தியுரை. அரசஞ்சண்முகனார் இயற்றிய ‘பாயிர விருத்தி’ சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விழுமிய தொரு விருத்தி. அவருக்கு முன்னர் மாதவச் சிவஞான முனிவர் பாயிரவிருத்தி எழுதியுள்ளார்.

பாரதியார் யாப்பு -

{Entry: P16a__591}

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய கவிதைகளுள் வசன கவிதைகளும் இன்ன என்று யாப்பு வரையறுக்க இயலாத பாடல்களும் நீங்கலான பிறவெல்லாம் வெண்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித் துறை, கண்ணி, சிந்து, தாழிசை, கீர்த்தனை, தரவு கொச்சகக்கலிப்பா என்னும் யாப்புள் அடங்குவன. அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்களே மிக்குப் பயில்கின்றன. கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன அருகியே நிகழ்கின்றன. ‘புதிய ஆத்திசூடி’ சொற்சீரடி யாப்பிற்று. கலிவெண்பா யாப்பும் ஆண்டாண்டு நிகழ்கின்றமை காணலாம். (இலக்கணத். முன்.பக். 110, 111 )

பாலாசிரியன் -

{Entry: P16a__592}

பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப்பாலாசிரியர் நற்றாமனார் (அகநா. 92) பாடியுள்ளமை காண்க.

பாவிற்குத் திணை உரிமை -

{Entry: P16a__593}

முல்லைத்திணைக்கு வெண்பாவும், குறிஞ்சித்திணைக்கு ஆசிரியப்பாவும், மருதத்திணைக்குக் கலிப்பாவும், நெய்தல் திணைக்கு வஞ்சிப்பாவும் உரியனவாம். (இ. வி. பாட். 118)

பாவிற்கு நிறஉரிமை -

{Entry: P16a__594}

வெண்பாவிற்கு நிறம் வெண்மை, ஆசிரியப்பாவிற்கு நிறம் செம்மை; கலிப்பாவிற்கு நிறம் கருமை; வஞ்சிப்பாவிற்கு நிறம் பொன்மை ஆகும். (இ. வி. பாட். 119)

பாவிற்கு வருண உரிமை -

{Entry: P16a__595}

வெண்பா அந்தணர்க்குரிய பா; அகவல் அரசர்க்குரிய பா; கலிப்பா வணிகர்க்குரிய பா; வஞ்சிப்பா வேளாளர்க்குரிய பா ஆகும். (இ. வி. பாட். 117)

பாவைப்பாட்டு -

{Entry: P16a__596}

“ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் உடையன” என்பது. (யா. வி. உரை. பக். 415)

திருப்பாவை, திருவெம்பாவை பாவைப்பாட்டுக்கு நூலாக அமைந்த எடுத்துக்காட்டாம். இவை (பெரும்பான்மையும்) வெண்டளை பிறழாமல் அளவடியால் நிகழும் எட்டடிப் பாடல்கள்; பாடல்கள் ஒத்த அடி எதுகையால் ஒரு விகற்பம்பட நிகழ்ந்து ‘ஏலோரெம்பாவாய் என முடியும். ‘கோழியும் கூவின’ என்னும் பாவைப்பாட்டு ஐந்தடியால் நிகழ்ந்தது. (யா. வி. பக். 363)

பாவைப்பாட்டு (2) -

{Entry: P16a__597}

ஈரசை, மூவசைச் சீர்களான் இயன்ற நாற்சீரடி எட்டான் அமைந்து, வெண்பா யாப்பால், இசையொடு பொருந்தி, பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னியரால், வைகறையில் நன்னீராடற் பொருட்டு ஏனைய மகளிரைத் தம்மோடு உடன் வருமாறு துயிலெடைநிலையாக, பாடப்பெறுவதே பாவைப்பாட்டாம்.

எ-டு : ஆண்டாள் அருளிய திருப்பாவை, மணிவாசகர் அருளிய திருவெம்பாவை. (தென். இசைப். 16)

(ஓரடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும் இடையே தளை இழுக்கினும் அமையும்)

பாவைப்பாடல்கள் -

{Entry: P16a__598}

பாவைப்பாடல்கள் ஒரே விகற்பத்தனவாகிய நாற்சீரடி எட்டுக் கொண்ட பாடல்களாம். இவை வெண்டளையே பெற்று வருவன. பாடல் நிரையசையில் தொடங்கின், மிக அருகி ஈற்றுச்சீர் அடுத்த அடி முதற்சீரோடு இணையு மிடத்தே கலித்தளை வருதலுமுண்டு. நேரசையில் தொடங்குவன வெண்டளை பிறழாமல் வரும். இவை உண்மையில் ஈற்றடி அளவடியாக்கப்பட்ட பஃறொடை வெண்பாக்களே எனலாம். வெண்பாக்களின் ஈற்றடியும் நாற்சீரடியாக்கப்படும் மரபு தொல்காப்பியத்தில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது (செய். 72 நச்.) பிற்காலத்தார் முழுதும் வெண்டளையாக வரும் இப்பாவைப்பாடலைத் தரவு கொச்சகம் என்று கூறுவா ராயினர். திருவாசகத்தில் வரும் அம்மானைப் பாடல்களும் பாவைப்பாடல் போன்றனவே. நேரசையில் தொடங்கும் அம்மானைப் பாடல் ஈற்றடியும் அளவடியாக நிரம்பிய ஆறடிப் பஃறொடை வெண்பாவே. அதனையும் பிற்காலத் தார் தரவு கொச்சகம் என்ப.

பாவைப்பாடல் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிதலும், அம்மானைப்பாடல் ‘அம்மானாய்’ என முடிதலும் மரபு.

பாவையாடல் -

{Entry: P16a__599}

பெண்பாற்பிள்ளைத் தமிழின் உறுப்புக்களுள் ஒன்று; பாட்டுடைத் தலைவி பாவையை வைத்துக்கொண்டு விளை யாடுதல். (திவா. பக். 310)

பாளித்தியம் -

{Entry: P16a__600}

பிராகிருத மொழிகளில் ஒருவகையாகிய பாளி மொழிக்கு அமைந்த இலக்கணம் கூறும் நூல். யாப்பருங்கலக்காரிகை இப்பாளித்தியம் போலக் காரிகை யாப்பிற்றாக இருத்தலை அதன் உரையாசிரியர் குணசாகரர் சுட்டுகிறார். (யா. கா. பாயிர உரை)

பாற்பொருத்தம் -

{Entry: P16a__601}

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் ஒன்று. குற்றெழுத்து ஐந்தும் ஆண்பாலாம்; நெட்டெழுத்து ஏழும் பெண்பாலாம்; ஒற்றும் ஆய்தமும் பேடாம். ஆண்பாலைக் கூறுமிடத்து ஆண்பால் எழுத்துக்கள் அமையும். பெண் பாலைக் கூறுமிடத்துப் பெண்பால் எழுத்துக்கள் அமையும். இம்முறை மயங்கினும் அமையும். (இ. வி. பாட். 13)

பிங்கலகேசி -

{Entry: P16a__602}

பொன்னிறமான மயிர்முடியை உடையாளொரு தலைவி யினுடைய பிறப்பு பண்பு வரலாறு ஆகியவை கூறும் தொடர் நிலைச் செய்யுளும் அவள் பெயரால் அப்பெயர்த் தாயிற்று.

பிங்கலகேசியின் முதற்பாட்டின் இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்க்கப்பட்டது. (யா. வி. பக். 39, 520)

பிங்கலம் -

{Entry: P16a__603}

பிங்கலம் வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன்கண் விருத்தசாதி விகற்பங்கள் பலவும் விரித்துக் கூறப் பட்டுள்ளன. நான்கடியும் ஒத்தும் ஒவ்வாதும் பருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும், பிறவாற்றான் வருவனவும், மாராச்சையும் மிச்சாகிருதி முதலாகிய சாதியும், ஆரிடமும் பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும் பிங்கலம் முதலிய வடமொழி யாப்புநூல்களில் விரித்துக் கூறப்பட் டுள்ளன. (யா. வி. பக். 370, 486)

பிச்சியார் -

{Entry: P16a__604}

கலம்பக உறுப்புப் பதினெட்டனுள் ஒன்று; சைவத்தவக் கோலத்தில் பிச்சை யிரந்து நிற்பாளொருத்தியைக் காமுகன் ஒருவன் காமுற்றுப் பாடுவது.

தவ வேடத்தில், நெற்றியில் திருநீறு அணிந்து கையில் சூலம் ஏந்தி இல்லம்தோறும் பிச்சை ஏற்றுச் செல்லும் இளம்பெண் ணின் வடிவழகு தன் உள்ளத்தைப் பிணித்த செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக்கூறுவதாக அமைந்த அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது. (மதுரைக்கல. 33)

பிரபந்த தீபிகை -

{Entry: P16a__605}

19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாட்டியல் நூல். ஆசிரியர் முத்துவேங்கட சுப்பையர் என்பார். இந்நூல் பி. பாஸ்கர ஐயரவர்களால் செந்தமிழில் (1918-19) வெளியிடப் பெற்றது. பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த இதன் பாடல்கள் 26 கிடைத்துள. 26 ஆம் பாடலின் ஈற்றடி கிடைத்திலது. இன்னும் நான்கு பாடல்கள் இருந் திருக்கலாம். கிடைக்கப்பெற்றவற்றுள் 80 பிரபந்த இலக் கணங்கள் சொல்லப்பட்டுள. எஞ்சிய பாடல்கள் நான்கும் கிடைத்திருப்பின் 96 பிரபந்தங்களின் இலக்கணமும் முழுமை யாகப் பெறும் வாய்ப்புப் பெற்றிருப்போம். இலக்கண விளக்கம் - பாட்டியல் தஞ்சை சரசுவதி மகால் பதிப்பில் பிற்சேர்க்கையாக இந்நூல் சொற் பிரிப்போடு பொருள் புலப்படுவகையில் தரப்பட்டுள்ளது.

பிரபந்தம் -

{Entry: P16a__606}

தொடர்நிலைச் செய்யுளாகிய பிள்ளைத்தமிழ் கலம்பகம் பன்மணிமாலை மும்மணிக்கோவை முதலாயினவும், தனி நிலைச் செய்யுளாகிய வளமடல் உலாமடல் உலா அநுராக மாலை முதலாயினவும் பிரபந்தம் என்னும் பெயரால் பிற்காலத்தே வழங்கப்பட்டன. இப்பிரபந்தம் 96 வகைப்படும் என்ப. இவற்றின் இலக்கணம் கூறும் நூல் பாட்டியல் எனப்படும்

பிரபந்தமானது சாதகத்தின் நிலையையும், திதி நிலை, வார நிலை, நாண்மீன் நிலை, யோக நிலை, கரண நிலை, ஓரை நிலை, கிரகநிலை ஆகிய இவ்வேழ்வகை உறுப்புக்களின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்து அவற்றால் தலைவற்குறுவன கூறுவது என்னும் தொகையகராதி.

பிரபந்த மரபியல் -

{Entry: P16a__607}

16ஆம் நூற்றாண்டில் இது தோன்றியது என்ப. இதன்கண் நூற்பாக்கள் 35 உள. முதல் 21 நூற்பாக்களில் 96 பிரபந்த இலக்கணங்கள் குறிக்கப்பட்டுள. இந்நூலாசிரியர் பற்றிய செய்தி தெரியவில்லை.

பிரமாணம் ஆகாத நூல்கள் -

{Entry: P16a__608}

சின்னூல் (-நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கணவிளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும், ஆசிரி யனது கருத்துணராமல் மரபுநிலை திரியச் செய்யப்பட்ட மையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம்-நூல்நெறிக்குச் சான்றாக எடுத்துக்காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார். (பா.வி. பக். 104, 105)

பிரயோக விவேகம் -

{Entry: P16a__609}

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய, தமிழால் அமைந்த இலக்கண நூல். இதன் ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர். தமிழின் சொல்லிலக்கணத்தை வடமொழியின் சொல் லிலக்கணத்தோடு ஆய்ந்து உணர்த்தும் இந்நூற்கண் காரக படலம், சமாச படலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்னும் நான்கு இயல்களும் அவற்றுள் 51 காரிகைச் சூத்திரங்களும் உள. நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார். மிக நுண்ணிய திட்பம் வாய்ந்த உரை அது. வடமொழிக்கே உரிய செய்திகளொடு தமிழிற்கே உரிய செய்திகளும் பல இடங்களில் வரையறுத்து உரைக்கப்பட்டுள. இருமொழிக் கும் பெரும்பான்மையும் இலக்கணம் ஒன்றே என்ற கருத்தினர் இவ்வாசிரியர். இலக்கணத்கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகரும் இக்கருத்தினர். ஏற்ற வடமொழி இலக்கணச் சொற் களுக்கு விளக்கமாக உரைச்சூத்திரம் பல இவ்வாசிரியர் ஆண்டாண்டு இயற்றியுள்ளமை இவ்வுரையின் தனிச்சிறப்பு.

தற்சிறப்புப் பாயிரம் முதற்சூத்திரமாக அமைய, நூல் அரங்கேற்றம் இறுதிச்சூத்திரமாக அமைகிறது.

1973 இல் வெளியிடப்பெற்ற தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு விரிவான விளக்க உரையொடு நூலாசிரியர் கருத்தைத் தெளிவிக்க வல்லது.

பிள்ளைக்கவி -

{Entry: P16a__610}

1. பிள்ளைத்தமிழ் எனப்படும் பிரபந்தம்.

2. முன்னோர் பாடிய செய்யுளடிகள் பலவற்றை எடுத்துக் கொண்டு, தான் சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன். (இ. வி. பாட். 45, 175)

பிள்ளைக் கவிப்பருவம் -

{Entry: P16a__611}

ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின் ஆண்பாற்குப் பதினாறாண் டும், பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் பெண்பாற்குப் பூப்புப் பருவமும், எல்லை என்கிறது இந்திரகாளியம். மூன்று முதல் இருபத்தொரு திங்கள் அளவும் என எல்லை வகுக்கிறது. பன்னிரு பாட்டியல். அந்நூற் கருத்துப்படி ஆண்பாற்கு ஏழு, ஐந்து, மூன்று ஆண்டுகள் எனக் கொண்டு பாடுதலும், பன்னீ ராண்டு எல்லையாகக் கொண்டு பாடுதலும் உண்டு. பெண் ணுக்குப் பன்னீராண்டு என்பது வெண்பாப் பாட்டியல் செய்தி. அரசற்கு முடிகவித்தல் பருவம் எல்லை என்னும், நவநீதப் பாட்டியல். பிரபந்த தீபிகை பருவந்தோறும் திங்கள் அல்லது ஆண்டு எல்லை வகுக்கிறது. காப்பு - 2 திங்கள்; செங்கீரை 5 திங்கள்; தால் - 7 திங்கள்; சப்பாணி - 9 திங்கள்; முத்தம் - 11 திங்கள்; வருகை - ஓர் ஆண்டு நிறைவு; அம்புலி - ஒன்றரை ஆண்டு; சிற்றில் 2 ஆண்டு; பறை முழக்கல் - 3 ஆண்டு; இரதம் ஊர்தல் - 4 ஆண்டு. மூன்று முதல் 21 திங்கள் வரை ஒற்றைப்படைத் திங்களில் இப்பருவங்கள் கொள்ளப் படும் என்று சிதம்பரப் பாட்டியல், இ.வி. பாட்டியல், தொ.வி. செய்யுளியல் என்பன கூறுகின்றன.

இந்திரகாளியம் பல பருவங்களைக் கூறுகிறது. பிறப்பு, ஓகை, காப்பு, வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியன அவை.

பிற பாட்டியல்கள் ஆண்பாற்பருவம் எனவும், பெண்பாற் பருவம் எனவும், பத்தாக வகுத்துத் தனியே வரையறுக்கின் றன. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற்பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கே சிறப்பாக உரிய இறுதி மூன்று பருவங்கள் சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன. இனிப் பெண்பாற்கே உரிய இறுதிப்பருவங்கள் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும், சிற்றிலிழைத்தல், சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமன் நோன்பு எனவும் வெவ்வேறு பாட்டியல்களில் சொல்லப்பட்டுள்ளன. பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பல பருவங்கள் இறுதியில் கூறப்படினும், பொதுவான அவ்வே ழோடே சிறப்பான எவையேனும் மூன்றே கூட்டிப் பத்துப் பருவமாகப் பாடுதலே மரபு. இந்நூல்கள் குறிப்பிடாத நீராடற்பருவம் மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழில் பாடப் பட்டுள்ளது.

இனி, யாப்புப் பற்றிய கருத்து; இந்திரகாளியம், பருவ மொன்றுக்கு 1, 3, 5, 7, 9 அல்லது 11 எனக் கொச்சகக்கலி, 12 அடியின் மிகாத நெடுவெண்பாட்டு ஆகிய இவ்யாப்பில் பாடப்படும் என்று கூறும். பிறப்பு, ஓகை, வளர்ச்சி, அச்சம் ஆகிய நான்கும் 1, 3, 5 அல்லது 7 எனச் செய்யுள் பாடப் பெறும் எனவும் அந்நூல் கூறுகிறது. பன்னிருபாட்டியல், அகவல் விருத்தம் கலிவிருத்தம் கட்டளை ஒலி நெடுவெண் பாட்டு இவற்றால் பிள்ளைக்கவி பாடப்படும் எனவும்; வெண்பாப் பாட்டியல் சிதம்பரப்பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல் தொன்னூல் விளக்கச் செய்யுளியல் சுவாமி நாதம் என்பன, வகுப்பு அகவல்விருத்தம் இவற்றால் பாடப்படும் எனவும்; நவநீதப்பாட்டியல், மன்ன விருத்தம் ஈரெண்கலை வண்ணச் செய்யுள் இவற்றால் பாடப்படும் எனவும்; முத்து வீரியம் அகவல்விருத்தத்தால் பாடப்படும் எனவும் கூறுகின்றன.

பருவத்திற்குப் பத்துப்பாடல் என்பது பெரும்பான்மையான பாட்டியல்களது வரையறை. காப்புப் பருவத்துக்கு பாடல்கள் 9 அல்லது 11 என வரவேண்டும் என நவநீதப் பாட்டியலும் இ.வி. பாட்டியலும் குறிக்கின்றன.

காப்புப்பருவத்தில் பாடப்படும் கடவுளர் இன்னார் என்பதும், அவர்களுள் முதற்கண் பாடப்படுபவர் திருமாலே என்பதும், இப்பருவத்துள் பாடப்படும் அக்கடவுளர் பற்றிய செய்தியில் கொலைத் தொழில் தவிர்க்கப்படும் என்பதும் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் - என இவை கூறும் சிறப்புச் செய்தி.

பிள்ளைத் தமிழ் -

{Entry: P16a__612}

பிள்ளைக் கவி; இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும், பெண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும் இருவகைப்படும். இதன் பருவங்கள் முதலியன ‘பிள்ளைக்கவி’ யுள் காண்க.

பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம், அதன் புறநடை -

{Entry: P16a__613}

(பாட்டுடைத் தலைவனோ, தலைவியோ) பிறந்து மூன்றாம் திங்கள் முதல் இருபத்தொரு திங்கள்காறும் ஒற்றித்த திங்களில் நிறைமதிப் பக்கத்தில் பிள்ளைக்கவி கொள்ளப் படும்.

பிள்ளைப்பருவம் கழியும் முன்னரே பாடுதல் வேண்டும் என்பது குறிப்பு. முதியோரைப் பிள்ளையாகக் கருதிப் பாடு மிடத்தும் இப்பிள்ளைப்பருவத்தினராகவே கொண்டு பாடவேண்டும். ஒற்றைப்படை மங்கலம் தருவது; நிறைமதிப் பக்கம் (-சுக்கில பக்கம்) வளர்ச்சி தருவது).

இனி, பிள்ளைக்கவி, மேற்கூறிய திங்களெல்லையில் பாட முடியாக்கால், மூன்று, ஐந்து, ஏழ் ஆகிய ஒற்றை பெற்ற ஆண்டிலும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 49, 50)

பிள்ளைத்தமிழின் பருவங்கள் -

{Entry: P16a__614}

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கேயுரியன. சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன; இனிப் பெண்பாற்கேயுரியன : கழங்கு, அம்மானை, ஊசல் என்பன. (இ. வி. பாட். 46)

பிள்ளைத்தமிழின் யாப்பு -

{Entry: P16a__615}

வகுப்பும் ஆசிரியவிருத்தமும் பிள்ளைத்தமிழ் பாடும் யாப்பு. பிற பாட்டியல்கள் கூறுவன ‘பிள்ளைக்கவி’ எனும் தலைப்புள் காண்க. (இ. வி. பாட். 47)

பிள்ளைப்பாட்டு -

{Entry: P16a__616}

பிள்ளைத்தமிழ்; அது காண்க.

புகழ்ச்சி மாலை -

{Entry: P16a__617}

அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் வியத்தகும் மகளிரது சிறப்பினைக் கூறும் பிரபந்தம்.

(இ. வி. பாட். 106)

புட்கரனார் எழுத்துக் குறி வெண்பா -

{Entry: P16a__618}

‘எழுத்துக் குறி வெண்பா’ - காண்க. (யா. வி. பக். 371)

புணர்ச்சி மாலை -

{Entry: P16a__619}

தண்டக மாலை (சங். அக); வெண்பா முந்நூறு கவியால் அமைந்த பிரபந்தம். (பி. தீ. 14)

புணர்ப்பாவை -

{Entry: P16a__620}

சக்கரக் கவியாகிய மிறைக்கவி விசேடங்களைக் கூறும் பண்டைய நூல்; இதுபோது வழக்கற்றது. (யா. வி. பக். 533)

புத்தமித்திரனார் -

{Entry: P16a__621}

வீரசோழிய நூலாசிரியர். இவர்காலம் 11ஆம் நூற்றாண்டு என்ப. வீரசோழியம் என்ற தலைப்பைக் காண்க.

புதியா நுட்பம் -

{Entry: P16a__622}

ஒரு தருக்க நூல் (வீ. சோ. 179 உரை)

புய வகுப்பு -

{Entry: P16a__623}

பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பக உறுப்பு. (மதுரைக். 11)

புயவருணனை -

{Entry: P16a__624}

சிறந்த தலைவனொருவனுடைய புயங்கள் செய்துள்ள வீரம் கொடை முதலிய செய்கைகளைப் பாராட்டி அப்புயங்களின் உருவ அமைப்பினையும் வருணித்தல். (இது கலம்பகத்தில் புய வகுப்பு என்ற பெயரிற் காணப்படும் கலம்பக உறுப்பாம்.) இது பாடாண்துறைகளுள் ஒன்று.

காப்பியத் தலைவனுடைய திருப்புயங்கள் அடியவரை அளிக்கும் திறனையும், பகைவர்களை அழிக்கும் திறனையும் புனைந்து கூறும் துறை. (திருவரங்கக் . 7)

புரவலனுக்குக் கேடு -

{Entry: P16a__625}

‘பரிசில் வழங்காதவன் அழிவு’ காண்க.

புராண சாகரம் -

{Entry: P16a__626}

பல அடியான் வந்த பஃறொடை வெண்பாக்களையும் கொண்டு அமைந்த தொரு பழைய தொடர்நிலைச் செய்யுள்.

(யா. வி. பக். 250)

புலவர் தம் வகைகள் (5) -

{Entry: P16a__627}

கவி, கமகன், வாதி, வாக்கி என்று புகழப்படும் நால்வகை. ‘கவி’ முதலியவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்புள் காண்க.

(இ. வி. பாட். 169)

புள்வகை -

{Entry: P16a__628}

அகரம் வல்லூறு; இகரம் ஆந்தை; உகரம் காக்கை; எகரம் கோழி; ஒகரம் மயில். (பிங். 1354)

புறக்கோவை -

{Entry: P16a__629}

புறப்பொருள் தலைவனைக் கிளவித்தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு பிரபந்தம் போலும்.

எ-டு : திருவிருத்தம் முதலியன. (சாமி. 165)

புறநானூற்றுத் துறைகள் -

{Entry: P16a__630}

புறநானூற்றுக்குத் துறை வகுத்தவர் அனைவரும் புறப் பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் முதலிய புதுநூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும், அகத்திய மும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அந்நூல்களைத் துணைக் கொண்டே புறநானூற்றுக்குத் துறை கோடல் வேண்டும். இப்பொழுது வகுக்கப்பட்ட துறைகள் அவ்வளவு பொருத்தமுடையன அல்ல என்பது நச்சினார்க் கினியர் கருத்து. (தொ. பொ. 90 நச்.)

புறநிலை -

{Entry: P16a__631}

1. 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; “நீ வணங்கும் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் மரபு சிறப்பதாகுக!” என்று பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவது.

2. சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப். 8-41 உரை)

புறப்பாட்டு -

{Entry: P16a__632}

அகமல்லாத புறப்பொருட் செய்திகள் பற்றி அமைந்த புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியவற்றுப் பாடல்கள். புற நானூற்றுக்கே ‘புறப்பாட்டு’ என்ற பெயரும் உண்டு.

‘மீனுண் கொக்கின் (227) என்ற புறப்பாட்டும் அது’ என வரும் நச்சினார்க்கினியருரையுள் காண்க.(தொ. செய். 79 நச்.)

புறப்பொருட்கோவை -

{Entry: P16a__633}

புறப்பொருள்மேல் வருவன புறப்பொருட் கோவை.

(சாமி. 167)

பூதத்தார் பாடல் -

{Entry: P16a__634}

ஆரிடப் போலிக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுவது.

“கறைப்பல் பெருமோட்டுக் காடு கிழவோட்(கு)

அரைத்திருந்த சாந்துதொட்(டு) அப்பேய்

மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு”

இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது. இவ் வெண்பாவுள் இரண்டாமடி குறைந்து வந்து, ஆரிடப் போலியாதலின் அமைந்தது. (யா. வி. பக். 371)

பூதபுராணம் -

{Entry: P16a__635}

தொல்காப்பியத்துக்கு முந்துநூல்களுள் ஒன்று. பூத புராணம் முதலாகிய அவையெல்லாம் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழங்குநூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொ. பொ. 652 பேரா. உரை)

பூ முதலியவற்றின் நிற உரிமை -

{Entry: P16a__636}

வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நாற்பாவுக்கும், சூடுவன பூவும், பூசுவன சாந்தும், உடுப்பன கலையும், அலங்கரிப்பன அணியும் முறையே வெள்ளையும் சிவப்பும் கருமையும் பொன்மை நிறமும் ஆம். (மருட்பாவிற்கு வெண் சிவப்பு நிறமாம்) (இ. வி. பாட். 124)

பூர்வ மீமாஞ்சை -

{Entry: P16a__637}

வேதத்தில் கரும காண்ட ஆராய்ச்சி பற்றி iஜம்நி முனிவர் இயற்றிய சாத்திரம்.

பெண்ணெழுத்து -

{Entry: P16a__638}

1. உயிர்மெய் (பிங். 1359). 2. நெட்டெழுத்து. (வெண்பா. முதன் மொ. 6)

பெண் பருவம் -

{Entry: P16a__639}

பேதை (வயது 6, 7), பெதும்பை (11), மங்கை (12), மடந்தை (13) அரிவை (25), தெரிவை (31), பேரிளம் பெண் (40) என்பன.

வாலை (5), தருணி (11), பிரவுடை (40), விருத்தை (40க்கு மேல்) என்றும் சில பருவம் கூறுப. (பிங். 939) பேதை முதலிய பருவ மகளிர்க்கு வயது பிறவாறும் கூறுப. (இ.வி.பாட். 99 - 103)

(ஆ. நி. 72, பிங். 941. நா. நி. 118, பொ.நி. 97)

பெண்பாலெழுத்து -

{Entry: P16a__640}

பெண்ணெழுத்து, நெட்டெழுத்து ஏழும் ஆம்.

(இ. வி. பாட். 13)

பெண்பாற் பிள்ளைக்கவி -

{Entry: P16a__641}

பெண்பாற் பிள்ளைத் தமிழ்; அது காண்க.

பெண்பாற் பிள்ளைத்தமிழ் -

{Entry: P16a__642}

இருபாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாக உரிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்னும் ஏழு பருவங்களோடே, பெண்பாற்கே சிறப்ப உரியவான கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் அமைய, சந்த விருத்தத்தாலும் பிற ஆசிரிய விருத்தத்தாலும் பாடப்படும் பிரபந்தம். அம்மானை, நீராடல், ஊசல் என இறுதிப் பருவங்கள் அமையப் பெறுவனவும் உள. ‘பிள்ளைத் தமிழ்’ காண்க. (இ. வி. பாட். 47)

பெண்பாற் பிள்ளைப்பாட்டு -

{Entry: P16a__643}

‘பெண்பாற் பிள்ளைத் தமிழ்’ காண்க.

பெதும்பை -

{Entry: P16a__644}

எட்டு முதலாகப் பதினொன்று காறும் ஆண்டு நிகழும் பெண்பாற் பருவம்; உலாமகளின் பருவமேழனுள்ளும் இஃது இரண்டாவது. (இ. வி. பாட். 100)

பெயர் இன்னிசை -

{Entry: P16a__645}

பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சாருமாறு இன்னிசை வெண்பாவால் 90,70, 50 என்ற எண்ணிக்கைப்படப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 65)

பெயர் நேரிசை -

{Entry: P16a__646}

பாட்டுடைத்தலைவன் பெயரையும் ஊரையும் சார்ந்து வருமாறு தொண்ணூறும் எழுபதும் ஐம்பதும் நேரிசை வெண்பாவால் கவிகள் பாடின், அவை பெயர்நேரிசை எனவும் ஊர்நேரிசை எனவும் வழங்கப்படும். ஈண்டுப் பாட்டுடைத் தலைவனது பெயரைச் சார்ந்துவரப் பாடப் படும் 90, 70, 50 ஆகிய நேரிசை வெண்பாவாலமைந்த பிரபந்தம். (இ. வி. பாட். 70)

பெயர் மாலை -

{Entry: P16a__647}

‘நாம மாலை’ என்பதன் பரியாயப் பெயர். அது காண்க.

பெரிய பம்மம் -

{Entry: P16a__648}

பழைய யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. அசைக்கு உறுப் பாகும் எழுத்துக்கள் பதினைந்து என்பதற்கு இந்நூல் சூத்தி ரம் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

(யா. வி. பக். 31)

பெரிய முப்பழம் -

{Entry: P16a__649}

பாட்டியல் மரபு கூறுவதொரு பண்டையிலக்கண நூல்.

(யா. வி. பக். 555)

பெரியவாச்சான் பிள்ளை -

{Entry: P16a__650}

13ஆம் நூற்றாண்டினராகிய வைணவ ஆசாரியார்; திருப் பனந்தாளை யடுத்த சேய்ஞலூரில் தோன்றியவர்; ஸ்மார்த்தச் சோழியர்; பின் வைணவர் ஆகியவர்; திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் வியாக்யானம் வரைந்துள்ளார். பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதிக்கு இவர் வரைந்த வியாக்யானம் கிட்டவில்லை. திருவாய்மொழிக்கு இவர் வரைந்த இருபத்து நாலாயிரப்படி மிகச் சிறந்தது என்ப. நம்பிள்ளையினது ஈடு இதனைப் பெரும்பாலும் விளக்குவதாக அமைந்துள்ளது.

பெருங்கலித்தொகை -

{Entry: P16a__651}

இறந்துபட்ட இடைச்சங்கத்து நூல்களிடையே ஒன்று என்ப; ‘இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு’ (சிலப். உரைப் பாயிரம் அடிக்குறிப்பு)

பெருங்காக்கைபாடினியம் -

{Entry: P16a__652}

பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பட்டதோர் யாப்பிலக்கண நூல். இவர் தொல்காப்பியனார் காலத்தவர் என்பது பேராசிரியர் கருத்து. இவருடைய நூலிலிருந்து 73 நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இலக் கண விளக்கம் செய்யுளியல் பிற்சேர்க்கை காண்க.

பெருங்காக்கைபாடினியார் -

{Entry: P16a__653}

பெருங்காக்கை பாடினியம் எனத் தம் பெயரால் ஓர் யாப் பிலக்கண நூலியற்றிய புலவர். இவர் காலத்தில் ‘வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம்’ என, வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் தமிழகஎல்லைகளாக இவை இருந்தன என்பது இவர் இயற்றிய தற்சிறப்புப் பாயிரச் சூத்திரத்தால் போதருகிறது.

பெருங்குருகு -

{Entry: P16a__654}

தலைச் சங்கத்தே வழக்கிலிருந்த ஓர் இசைத்தமிழிலக்கண நூல். (சிலப். உரைப் பாயிரம்)

பெருங்குறிஞ்சி -

{Entry: P16a__655}

பத்துப்பாட்டுள் ஒன்றாகிய, கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு, ‘கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும்’ (பரி. 19-77 உரை)

பெருஞ்சித்திரனார் பாடல் -

{Entry: P16a__656}

இவர் பாடல்களில் சில, பாடல்கட்கு என்று வரையறுக் கப்பட்ட இலக்கணங்களின் மிக்கும் குறைந்தும் அமைந்தiவ; ஆரிடப்போலி எனவும் ஆரிட வாசகம் எனவும் அவை கூறப்படும். (யா. வி. பக். 370, 371)

பெருந்தலைச் சாத்தனார் பாடல் -

{Entry: P16a__657}

‘பெருஞ்சித்திரனார் பாடல்’ என்பதற்குரிய குறிப்பு ஈண்டும் கொள்க. (யா. வி. பக். 370, 371)

பெருந்தேவபாணி -

{Entry: P16a__658}

1. கடவுளரைத் துதிக்கும் இசைப்பா வகை. (சிலப். 6 : 35 உரை)

2. பதினோராம் திருமுறையைச் சார்ந்த, நக்கீரரால் பாடப் பெற்ற ஒரு சைவப் பிரபந்தம்.

பெருந்தேவனார் -

{Entry: P16a__659}

1. பாரதம் பாடிய சங்கப் புலவர். (தொ. பொ. 72 நச்.)

2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்

3. பதினோராம் நூற்றாண்டினரான வீரசோழிய உரை யாசிரியர்.

பெருநாரை -

{Entry: P16a__660}

தலைச்சங்கத்து வழக்குப் பெற்றிருந்த இசை இலக்கண நூல்களுள் ஒன்று. (சிலப் உரைப்.)

பெரும்பொருள் -

{Entry: P16a__661}

பொருட் பகுதி பற்றியதொரு விரிவான நூல் (சீவக. 187 நச். உரை). இது பெரும்பொருள் விளக்கம் எனவும் பெயர் பெறும். இதன் பாடல்கள் பல புறத்திணையியல் உரையிலும் புறத்திரட்டிலும் உள.

பெருமகிழ்ச்சி மாலை -

{Entry: P16a__662}

கற்புடைப் பெண்டிருடைய பெருமைகளைக் கூறுவதொரு பிரபந்தம். (சது.)

பெருவளநல்லூர்ப் பாசண்டம் -

{Entry: P16a__663}

பாவினங்களுள் நவக்கிரகமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால், அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் நிலைச் செய்யுள் குறிப்பிடப்பட்டுள்ளது. (யா. வி. பக். 491)

பேடியெழுத்து -

{Entry: P16a__664}

ஆய்த எழுத்து. (இ. வி. பாட். 13)

பேதை -

{Entry: P16a__665}

எழுவகைப் பருவமாகப் பிரிக்கப் பெற்ற மகளிரில், முதற் பருவத்தினள்; வயது வரையறை ஐந்து முதல் ஏழாண்டு அளவும். (இ. வி. பாட். 99)

பேரகத்தியம் -

{Entry: P16a__666}

அகத்தியரால் இயற்றப்பட்டதோர் இலக்கணநூல்; அளவிற் பெரியதாயிருந்தமை ‘சிற்றகத்தியம்’ என்ற பெயரை நோக்கப் புலனாம். இஃது இறந்துபட்டது. இஃது இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலக்கணமும் கூறிய மகா பிண்டமாக இருந்தது. (மா. அ. பாயிரம். 20)

பேராசிரியர் -

{Entry: P16a__667}

தொல்காப்பிய உரையாசிரியர்; நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர். காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. இவர் பொரு ளதிகாரத்தில் நச்சினார்க்கினியரால் மூன்று இடங்களில் போற்றப்பட்டுள்ளார். மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் பொருளதிகார நான்கு இயல்கட்கும் இவர் உரை உள்ளது. திருக்கோவையார் உரையாசிரியரொருவர்க்கும் பேராசிரியர் என்ற பெயர் உண்டு. இவ்விருவர் உரையும் திட்ப நுட்பம் வாய்ந்தவை; தமிழுக்குப் பெருமை கூட்டுவன.

பேரிளம்பெண் -

{Entry: P16a__668}

எழுவகைப் பருவ மகளிருள் இறுதிப் பருவத்தவள்; நாற்பது வயதினள்; என்றது முப்பத்திரண்டு முதல் நாற்பதுகாறும் நிகழும் ஆண்டினள். (இ. வி. பாட். 103)

பொங்கத்தம் பொங்கோ -

{Entry: P16a__669}

போரில் தோற்றவர் - ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல் (திவ். பெரியதி 10 - 2-1 வியாக்)

பொய்கைக் கதயானை சூழாசிரியர் -

{Entry: P16a__670}

இப்பழம்புலவர் பாடிய வெண்பாக்களுள் மூன்று, ‘ஒற்றுப் பெயர்த்தல்’ என்ற சித்திரகவிக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள. (யா. வி. பக். 542)

பொய்கையார் -

{Entry: P16a__671}

‘ஆழி யிழைப்பப் பகல்போம்’ என்ற எழுத்தானந்த எடுத்துக் காட்டு வெண்பா பொய்கையார் என்ற பழம்புலவரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 558, 45) மூன்றாமெழுத்து ஒன்று எதுகைக்கும் (பக். 143), முற்றியலுகரத்தான் இற்ற பிறப்பு எனும் வாய்பாட்டு ஈற்றுச்சீர் அமைந்த பாடற்கும் (பக். 231), வெண்பா இலக்கணத்தில் திரிந்து ஆரிடப் போலியாய் அமையும் பாடல்களுக்கும் (பக். 369, 371) இவருடைய பாடல்கள் எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள.

பொருத்தம் பத்து என்றல் -

{Entry: P16a__672}

அகலக்கவிக்கும், அதனைக் கொள்ளும் பாட்டுடைத் தலை மகனுக்கும் பத்துப் பொருத்தங்கள் குறைவின்றி அமைதல் இன்றியமையாதது. புலவன் இயற்றிய அகலக் கவியைப் பாட்டுடைத் தலைமகன் கொள்வது என்பது பாமகளை அவன் மணம் செய்துகொள்ளுதலேயாம் என்ற மரபு ஏற்பட் டமையால், இவ்வாறு பொருத்தம் இருப்பதும் இன்றியமை யாதது எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

அப்பத்துப் பொருத்தங்களாவன மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்பன. (இ. வி. பாட். 9,10)

பொருளதிகாரம் -

{Entry: P16a__673}

அகம் புறம் முதலியவற்றைக் கூறும் தொல்காப்பியம். (திவா. பக். 232.)

இலக்கணவிளக்கம் என்ற நூலின் மூன்றாம்பகுதி. சொல்லதி காரத்தை அடுத்து நிகழ்வது இது.

பொருளியல் -

{Entry: P16a__674}

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் ஐந்தாவது.

இருதிணை ஐம்பால் மூவிடங்களில் அமையும் சொற்கள் தம் பொருள் வேறுபட்டிசைப்பினும் அப்பொருள்களைக் கொள்ளவேண்டும் எனவும், அகத்திணையியல் களவியல் கற்பியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொருள்களில் சற்று வேறுபட்டு வருவனவும் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைத்து, சொல் உணர்த்தும் பொரு ளையும் தொடர்மொழிப் பொருளையும் ஒருங்கே தொகுத் துச் சொற்பொருளின் வழுவமைதியினையும் பொருளின் வழுவமைதியினையும் ஒருங்கே கூறும் இப்பொருளியல் 54 சூத்திரங்களை (நச். உரைப்படி) உடையது.

பொருளியல் : பெயர்க்காரணம் -

{Entry: P16a__675}

இருதிணை ஐம்பாற்பொருள்களின் பண்பும் செயலுமாகிய வற்றை உணர்த்தற்குச் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற விதிகளான் ஆக்கமுற்றமைந்த சொற்கள், பொருளதிகாரத் துள் தலைவன் தலைவி முதலானோர் கூற்றுக்களுள் அமைந்து வருங்கால், அவை சொல்லிலக்கண நெறிபற்றி யமைந்த பொருளினின்றும் வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்கும் எனவும், அங்ஙனம் பொருள் பயத்தற்கும் அச்சொற்களே கருவியாக உள்ளமையான் அப்பொருளும் அவற்றிற்குரிய பொருளே எனவும், பொருளதிகாரத்துள் சொற்பொருளை அறியும் முறைமை கூறுதல் பற்றி இவ்வியல் பொருளியல் எனப்பட் டது. (தொ. பொரு. பாயிரம்)

பொருளியலின் கோட்பாடு -

{Entry: P16a__676}

புலவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளைப் புனைந்துரை வகையால் கூறுமாறு போல, அதனைக் கூறுதற்குக் கருவி யாகிய சொற்களைப் புனையுங்காலும், குறிப்பாற் பொருள் தரும் சொற்களைப் பெருக அமைத்தலும், வெளிப்படைச் சொற்களுக்குக் குறிப்புப்பொருளை ஏற்றி அமைத்தலும் நல்லிலக்கியங்களைச் செய்யும் மரபாகும். அங்ஙனம் வெளிப் படைச் சொற்களும் குறிப்புப்பொருளை உள்ளடக்கி நிற்கும் முறைமையைத் தெரிந்து அதனைப் படைத்த ஆசிரியன் கருதிய பொருளை உணர்ந்துகொள்ளும் பாங்கினை அறிவித்தலே பொருளியலின் கோட்பாடு. (தொ. பொரு. பாயிரம் ச. பால)

பொருளிலக்கணம் -

{Entry: P16a__677}

அகம், புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். மெய்ப்பாடு, அணி, யாப்பு, மரபு என்பனவும் பொருளிலக் கணத்துள் அடங்கும்.

பொலிப்பாட்டு -

{Entry: P16a__678}

அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு. ‘பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள்’ (விறலி. 785)

பொலிபாடுதல் -

{Entry: P16a__679}

களத்திற் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுதல்.

போர்க்கு எழுவஞ்சி -

{Entry: P16a__680}

பகைமன்னனது நாட்டினைக் கவரப் புறப்படும் மன்னன் தன் குடும்ப அடையாளப் பூவினொடு வஞ்சிப்பூவினையும் சூடும் ஆதலின், அவனால் சூட்டிக்கொள்ளப்பட்ட வஞ்சிப்பூச் சூடுதலைப் புகழும் பிரபந்த வகை.

இது ‘வரலாற்று வஞ்சி’ என்று பாட்டியல் நூல்களில் கூறப்படும். அது காண்க.

ம section: 60 entries

மக்கட் கதி (யெழுத்து) -

{Entry: P16a__681}

ஆ ஈ ஊ ஏ என்ற நெடிலும், ங் ஞ் ண் ந் ம் என்ற ஐந்து மெல்லொற்றும் ஆம். ஒற்றெழுத்து என்பது ஈண்டு உயிர் மெய்யினையே குறிக்கும். ஙகரம் ணகர மிரண்டும் மொழி முதலாகாமையின் ஏனைய மூன்றும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 38)

மகளிர் பருவம் -

{Entry: P16a__682}

1. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பெண் பருவம். (திவா. பக். 38)

2. வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம். (பிங். 939)

மங்கலச் சொற்கள் -

{Entry: P16a__683}

சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை, யானை, கடல், நிலை, மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ், நிலம், ஆரணம், கடவுள், திகிரி என்பனவும் பிறவும் அகலக்கவியின் முதற்கண் நிற்கும் மங்கலச் சொற் களாம்.

‘பிற’ என்றதனால், வாழி, மாலை, சங்கு, தார், விசும்பு, கவி, கயல், சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு, மலர், பழனம், இடபம் என்பனவும், செல்வம், சீர்த்தி, கீர்த்தி, ஞாயிறு, புயல், புனம், வேழம், களிறு, பரி, மதியம், தீபம் முதலிய பரியாயச் சொற்களும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 11)

எவ்வெம் மங்கலச்சொற்கள் எவ்வெம் முதலெழுத்துக்களை யுடைய சொற்களுக்கு உரிய என்பது வரையறுத்த பாட்டியல் குறிப்பிடும்.

க, கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ, யா, வ, வா, வி, வீ - என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘சீர்’ என்பது. நு, நூ, யூ - இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘எழுத்து’ என்பது. (சூ. 4).

கு, கூ, சௌ, து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மெ, மே, மொ, மோ, மௌ- என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச் சொல் ‘பொன்’ என்பது. கௌ, சை, ம, மா, மி, மீ, மு, மூ, வை, வெள - இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘பூ’ என்பது (சூ. 5).

கொ, கோ - எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்குத் ‘திரு’ என்பதும் ‘திங்கள்’ என்பதும், கெ, கே, எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்கு ‘மணி’ என்பதும், கை, சி, சீ, தி, தீ, தை, நொ, பை - எனும் எழுத்தால் தொடங்கும் பெயர்களுக்கு ‘நீர்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 6).

ஓள, சு, சூ, செ, சே, தௌ, நௌ - எனும் எழுத்தால் தொடங் கும் தலைவர் பெயர்களுக்குக் ‘கங்கை’ என்பதும், ஞெ, ஞொ எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு ‘வாரணம்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 7)

இ, ஈ, ஞா - எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர் களுக்குக் ‘குஞ்சரம்’ என்பதும், ப, பா எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு ‘உலகு’ என்பதும், ச, சா, பெ, பே, பொ, போ, வெ, வே எனும் எழுத்தால் தொடங்குவனவற் றிற்குப் ‘பார்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 8)

உ, ஊ, எ, ஏ, ஐ, நை, மை - எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘தேர்’ என்பது (சூ. 9).

சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன் என்னும் இவை பதினெட்டும் இவற்றின் பரியாயப் பெயர்களும் ஆம். (ஆ.நி. xii - 18)

மங்கலச் சொற்குச் சிறப்பு விதி -

{Entry: P16a__684}

தலைவன் இயற்பெயரைக் குறித்து மங்கலச் சொற்குக் குற்றப்பாடு உளதாயின், அம்மங்கலச்சொற்கு அடை கொடுத் துக் கூறுதலும் பரியாயச் சொற் கூறுதலும் உரியனவாம். அம்மங்கலச் சொல் முதற்கண் அன்றி நடுவிலும் இறுதி யிலும் நிற்கவும் பெறும். (இ. வி. பாட். 41)

மங்கலப் பாடல் -

{Entry: P16a__685}

திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சியின்போது இசைக்கப் படும் இன்னிசை (‘(இ) லாலி’ என்று வழங்குப.) மங்கலப் பாட்டு, மங்கல கீதம் எனவும் வழங்கப் பெறும்.

மங்கலப் பொருத்தம் -

{Entry: P16a__686}

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதலாவது; சொற்பொருத்தம் எழுத்துப்பொருத்தம் உண்டிப் பொருத் தம் என்னும் இவற்றினும் சிறந்தது. மங்கலத்தைக் குறித்துச் சொல் முதலிய மூன்றும் வேறுபடினும் அமையும். (இ. வி. பாட். 10)

மங்கல வள்ளை -

{Entry: P16a__687}

உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதனால் வகுப்புறப் பாடுவதொரு பிரபந்தம். (வகுப்பு - சந்தப் பொலிவு.)

(இ. வி. பாட். 68)

வெண்பா ஒன்பதனாலும் வகுப்பு ஒன்பதனாலும் என இரு வகையாகப் பாடுதலைச் சதுரகராதி சுட்டுகிறது. அக்கருத் துக்கு வகுப்புச் சந்தவிருத்தத்தைக் குறித்தல் அமையும். (இ. வி. பாட். 68)

மங்கல வெள்ளை -

{Entry: P16a__688}

சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலாவது, ஒருகலி வெண்பாவாலாவது, ஒன்பது வெண்பாக்களா லாவது, ஒன்பது சந்தங்களாலாவது உயர்குடிப் பிறந்த கற்புடைய மடவரலைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (பன்.பாட். 302 - 304)

மங்கை -

{Entry: P16a__689}

பன்னிரண்டு பதின்மூன்று வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள் மூன்றாவது பருவத்தவள். (இ. வி.பாட். 101)

மஞ்சரிப்பா -

{Entry: P16a__690}

பிரபந்த விசேடம். (தொண்டை. சத. 95)

மடந்தை -

{Entry: P16a__691}

பதினான்கு முதல் பத்தொன்பது வரை வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள் நான்காம் பருவத்தவள்.

(இ. வி. பாட். 102)

மணிமாலை -

{Entry: P16a__692}

96 பிரபந்தங்களுள் ஒன்று; வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரப் பாடப்பெறுவது. (சது.)

மதங்கியார் -

{Entry: P16a__693}

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் ஒன்று. மதங்கர் என்பார் இசைக்கும் கூத்திற்கும் உரிய ஒரு சாதியார். அச்சாதியைச் சார்ந்த பெண் ஒருத்தி இரு கைகளிலும் இரண்டு வாள்களை ஏந்தி வீசிப் பாடி ஆடும் அக்காட்சியைக் கண்ட காமுகன் ஒருவன் அவளது பேரழகில் ஈடுபட்டு மனத்தைப் பறிகொடுத்து அவள்அழகு தன்னை வருத்திற்றாகக் கூறும் செய்தி அமைந்த அகப்புறக் கைக்கிளைத்துறைப் பாடல் இது.

(மதங்கி - ஆடல் பாடல்களில் வல்ல பதினாறு வயதுப் பெண்) (மதுரைக் கல. 16)

மதிக்கணம் -

{Entry: P16a__694}

நூலின் முதற்சீர்க்குக் கொள்ளப்படும் பொருந்திய கணங் களுள் ஒன்று; சந்திரகணம் எனவும் படும். இதற்கமைந்த சீர் புளிமாங்காய்; நாள் மிருகசீரிடம்; பயன் வாழ்நாள் தருதல். (இ. வி. பாட். 40 உரை)

மதிவாணனார் -

{Entry: P16a__695}

இடைச்சங்க காலத்தவராகக் கருதப்படும் இப்புலவர் இயற்றிய நாடக நூல், இவர் பெயரால் மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் எனப்படும். அடியார்க்கு நல்லார் உரையியற்ற உதவிய நாடகநூல்களுள் இதுவும் ஒன்று. (சிலப். உரைப்பாயிரம்)

மதுரகவி -

{Entry: P16a__696}

1. ஆசு முதலிய நால்வகைக் கவியுள் ஒன்று; சொல்லும் பொருளும் ஆகிய இலக்கணத்திற் சிதையாமல், மெய்ப்பாடு தோன்றக் கூறி, தொடையும் விகற்பத் தொடையும் செறிந்து, உய்த்துணர்வோர் மனத்தினுள் ஊறும் அமுதம் போல, தன்மை உவமை உருவகம் முதலிய அணிகளால் அலங்கரிக் கப்பட்டுக் கேட்போர் செவிக்கு இனிய ஓசை பொலிவுறப் பாடுவது. (இ. வி. பாட். 5)

2. இன்கவி பாடும் புலவன்.

3. திவ்விய பிரபந்தத்துள் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பாசுரப்பதிகம் அருளிய ஆழ்வார்; நம்மாழ்வாரைத் தம் வழிபடு ஆசானாகக் கொண்டவர்.

மந்திரவாதம் -

{Entry: P16a__697}

அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களுக்குச் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டே உணரப்படும்.

(யா. வி. பக். 491)

மயில்பாட்டு -

{Entry: P16a__698}

முருகப்பெருமான் வாகனமாகிய மயிலைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம்.

இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறானது. (இ. வி. பாட். பக். 506)

மயிலைநாதர் -

{Entry: P16a__699}

நன்னூற்குக் காண்டிகையுரை முதற்கண் வரைந்த சமண சமயப் புலவர். இவர் இளம்பூரணர், அவிநயவுரையாசிரியர், அமிதசாகரர் இவர்கள்தம் காலத்திற்குப் பிற்பட்டவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணையெழுபது, களவழி நாற்பது, கார் நாற்பது, திணை மாலை நூற்றைம்பது, திரிகடுகம், திருக்குறள், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, சூளாமணி முதலிய இலக்கியங்களை யும், அகத்தியம், தொல்காப்பியம், பனம்பாரம், அவிநயம், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணங்களையும் இவர் தம்முரையில் எடுத் தாண்டுள்ளார். இவர்காலம் 13ஆம் நூற்றாண்டாயிருத்தல் கூடும். இவரது உரை பல அரிய நுணுக்கங்களையுடையது.

மயூரத் திரிசந்தம் -

{Entry: P16a__700}

வடமொழியில் பண்டிருந்த யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இது பலவகை விருத்த வகைகளையும் அவ்விருத்த வகை இலக்கணங்களுள் சிறிது திரிந்த செய்யுள்களையும் எடுத்தியம்பியது. (யா. வி. பக். 486)

மயேச்சுரம் -

{Entry: P16a__701}

பண்டை யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மயேச்சுரனார். இவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரிய ரால் பெரிதும் புகழப்படுபவர். இந்நூற் சூத்திரங்களாக இதுபோது 64 கிட்டியுள. தொடைகள் சில, வெண்செந்துறை, குறட்டாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வஞ்சிவிருத்தம் எஞ்சிய யாப்பிலக்கணச் செய்திகள்யாவும் இந்த 64 சூத்திரங்களில் சுட்டப்பட்டுள. இலக்கணங்களுக்கு உதாரணங்களும் இவ்வாசிரியராலேயே எடுத்தோதப்பட் டிருந்தன. (யா. வி. பக். 45 முதலியன)

மயேச்சுரனாருடைய வேறு பெயர்கள் -

{Entry: P16a__702}

1. பிறை நெடுமுடிக் கறைமிடற்று அரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 2. நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், 3. வாமமேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர், 4. உயரும் புரம் நகரச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 5. திரிபுரம் எரித்த விரிசடை நிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 6. பெண்ணொரு பாகர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 7. காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர், 8. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் - முதலியன. (யா. வி. பக். 117 முதலியன)

மருத்துவ நூல் -

{Entry: P16a__703}

அறம் பொருள் இன்பம் வீடு இவற்றைக் குறிப்பிடும் நூல் களின் சார்பாகத் தோன்றி, மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கனவாய் அமைந்த நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)

மலைபடுகடாம் -

{Entry: P16a__704}

இது கடைச்சங்கத் தொகுப்பாகிய பத்துப்பாட்டில் இறுதிப் பாடல். இதன்கண், பாட்டுடைத்தலைவனது நாட்டின் யாதானு மொன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற இடத்தே அத்திணைக்குரிய இறைச்சிப்பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதும் (313, 314 ஆம் அடிகள்), புகழ்தலுற்ற இடத்தே ஆகாத பெற்றியின் மங்கலம் அழியச் சொல்லுவ தும் (44 - 46ஆம் அடிகள்) இறப்பஇழிந்த பொருளுக்கு இறப்ப உயர்ந்த பொருளை உவமமாகக் குறிப்பிடும் இறப்ப உயர்ந்த ஆனந்தஉவமை கூறுவதும் (99-101ஆம் அடிகள்), கருப் பொருள் செயல்களில் நினைந்தது கிட்டாமையைக் குறிப்பி டும் பரிசிற்பொருள் ஆனந்தம் கூறுவதும் (145 - 150ஆம் அடிகள்) ஆகிய ‘பொருளானந்தம்’ என்ற குற்றங்கள் அமைந் திருக்கின்றன என்று யாப்பருங்கல விருத்தியுரை குறிப் பிடுகிறது. (யா. வி. பக். 559 - 561)

மறம் -

{Entry: P16a__705}

தமது குடும்பத்தில் தோன்றிய மகளை மணம் பேசும்படி அரசனால் விடுக்கப்பட்ட தூதனை நோக்கி மறவர்கள் மகட் கொடுக்க மறுத்து அவ்வரசனை இகழ்ந்து பேசியதாக அமையும் செய்யுளாகிய ‘மறம்’ என்பது கலம்பகம் என்னும் பிரபந்த உறுப்புகளுள் ஒன்று.

“அரிச்சந்திரன் மனைவியை விற்றான். நளன் தன் மனை யாளை நடுக்காட்டில் பாதியாடையொடு நீத்துச் சென்றான். இராமன் சீதையைச் சிறை புகுமாறு விட்டான். பாண்டவர் திரௌபதியை மாற்றார் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டு வாளா இருந்தனர். இத்தகையவர் தோன்றிய மன்னர் பரம்பரையினர், மறவராகிய எம் இல்லத்துப் பெண்ணை மணம் பேச வரலாமா? ‘மணம் என்ற சொன்ன வாயெச்சிலை உமிழ்; மணவோலையைக் கிழித்துக் காற்றில் பறக்க விடு. முத்தி கொடுக்கும் திருவெங்கை நாதர்தம் மலை வேடுவர் யாம். சிவபெருமான் எமை அன்போடு அடுத்து எம் மூதாதையான கண்ணப்பன் எச்சிலையும் உண்டதனால், இரக்கப்பட்டு யாங்கள் வளர்த்த பெண்ணை அவன்மகன் வேலனுக்கு மணம் செய்வித்தோம். பெற்ற பெண்ணை அரசனுக்கு ஒருகாலும் கொடுக்க மாட்டோம்”. என்று மறவர் மணவோலை கொண்டு வந்த தூதுவனிடம் கூறியது (‘விற்றதார்’ எனத்தொடங்கும் பாடல்) (வெங்கைக். - பிற்சேர்க்கைப் பாடல்)

மாணிக்கவாசகர் குவலயானந்தம் -

{Entry: P16a__706}

இக்குவலயானந்த அணிநூலை இயற்றியவர் மாணிக்க வாசகர் என்ற சைவர். இவர் அகத்தியர் வரைந்த சிவவியா கரணம் என்ற நூலை முதனூலாகக் கொண்டு இந்நூலை இயற்றினார் என்று இதன் சிறப்புப்பாயிரம் குறிக்கிறது. நூலாசிரியரே வரைந்ததோர் உரையும் இந்நூற்கு உள்ளது. நூலைப் பதிப்பித்தவர் அதனை உரையுடன் பதிப்பிக்க வில்லை. இந்நூல் உறுப்பியல் அணியியல் சித்திரவியல் என்ற மூன்று பகுப்புக்களையும், அவற்றுள் முறையே 150 120 29 நூற்பாக்களையும் கொண்டு அமைந்து உள்ளது. இந்நூலின் இறுதியில் சில பகுதிகள் கிட்டாமல் போயிருக்கலாம் என்பது உணரப்படுகிறது. உறுப்பியலில் சொல்லிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது; அவ்வியலின் இறுதியில் யாப்புப் பற்றிய சில செய்திகள் உள்ளன. அணியியலில் 87 அணிகள் கூறப்பட்டுள. இறுதியியலில் சித்திரகவிகள், நூற்குற்றங்கள் முதலியன குறிக்கப்பட்டுள்ளன.

இந்நூல் குறிப்பிடும் சில அணிகள் உண்மையில் அணிகள் தாமா என்றே ஐயம் எழுகிறது. பேராசிரியர், பிற்காலத்தார் தாம்தாம் நினைத்தவற்றை யெல்லாம் அணியென்று பெய ரிட்டு வழங்கத் தலைப்பட்டனர் என்றுரைத்த செய்திக்கு இந்நூல் இலக்கியமாக உள்ளது. எனலாம்!

இந்நூல் குறிப்பிடும் 87 அணிகளுள் ஏறத்தாழ 40 அணிகள் இவ்வாசிரியரே படைத்துக் கூறுவன. அவற்றுட் பல உவமை, அதிசயம், தற்குறிப்பேற்றம் என்பவற்றுள் அடங்கிவிடுவன.

இந்நூலின் மூலத்தை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தி னின்று பெற்று அம்மூலமாத்திரமே வெளியிட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை), உரையையும் சேர்த்து வெளியிட்டிருப்பின் இதனை நன்குணரலாம்.

மாபாடியம் -

{Entry: P16a__707}

பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை; கி.மு. முதல் நூற்றாண்டில் வரையப்பட்ட இப்பேருரை இப்பொழுது 1713 சூத்திரங்கட்கே கிடைத்துள்ளது. (பி.வி. பிற்சேர்க்கை பக். 435)

மாபிங்கலம் -

{Entry: P16a__708}

வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. பல வகை யாகத் திரிந்த நான்கடி விருத்த விகற்பங்களும் மாராச்சையும் மித்தியா விருத்தியும் முதலாகிய சாதியும், ஆரிடமும், பிரத் தாரம் முதலிய அறுவகைப் பிரத்தியமும் இதன்கண் குறிப் பிடப்பட்டுள்ளன. (யா. வி. பக்.)

மாபுராணம் -

{Entry: P16a__709}

தமிழில் அகத்தியத்தின் பின்னர்த்தோன்றிய பேரிலக்கண நூல். இதன் சூத்திரங்கள் ஆசிரியத்தானும் வெண்பாவானும் ஆகியவை. இவை இக்காலத்து மிகச் சிலவே கிட்டியுள. இந் நூலில் மகரக்குறுக்கத்தின் பயனை எடுத்தோதிய நூற்பா ஒன்று யாப்பருங்கல விருத்தியுள் மேற்கோளாக இடம் பெறு கிறது. (பக். 33) வஞ்சிப்பா அகப்பொருள் பற்றிய பாடல்களில் சிறுபான்மை வரினும் சிறப்பின்று என்பது குறிக்கப் பெற்றுள் ளது (பக். 128). உயிரளபெடையும் மகரக் குறுக்கமும் தலைவன் பெயருக்கும் அவன் பெயருக்கு அடையாகிய சொற்கும் புணர்ப்பது குற்றம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. (பக். 564)

இடைச்சங்க காலத்து வழங்கிய இலக்கண நூலாக இதனை இறையனார் களவியலுரை (சூத்திரம் 1) குறிக்கிறது.

(யா. வி. பக். 564)

மார்க்கண்டேயனார் காஞ்சி -

{Entry: P16a__710}

மார்க்கண்டேயனார் என்ற பழம்புலவர் நிலையாமையாகிய காஞ்சித் திணையைப் பற்றிப் பாடிய ஆசிரியப்பா ஒன்று இழுமென் மொழியால் விழுமியது நுவல்வதாகிய ‘தோல்’ என்ற வனப்புக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பெற்றுள்ளது. (யா. வி. பக். 399)

மாருத கணம் -

{Entry: P16a__711}

தேமாங்கனி எனும் வாய்பாடு பற்றி வருவதும், நூல் முதற் பாடல் முதற்சீராக அன்றிச் சொல்லாக வருதலாகாது என விலக்கப்பட்ட அமங்கலமானதுமான செய்யுட் கணம். இதனை வாயுகணம் என இலக்கண விளக்கம் கூறுமாறு காண்க (இ. வி. பாட். 40). மாமூலனார் ‘மாருத கணம்’ என்றார் என்பதும் அவ்வுரைச் செய்தி. இதற்குரிய நாள் சுவாதி; இதன் பயன் சீர்சிறப்பு நீக்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

மாலை -

{Entry: P16a__712}

பிரபந்த வகை. இது கட்டளைக் கலித்துறையாகவோ, வெண்பாவாகவோ நூறுபாடல்கள் அந்தாதித் தொடையில் மண்டலித்து வருதல் சிறப்பு.

எ-டு : திருவரங்கத்து மாலை. இது கட்டளைக் கலித்துறை யால் வந்தது.

மாறன் அகப்பொருள் -

{Entry: P16a__713}

இந்நூல் 16ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப்பெருமாள் கவிராயர் குடும்பத்தில் தோன்றிய சடையன் என்பவரால் இயற்றப்பட்டது. இவரே மாறன் அலங்காரம், திருக்குருகாமான்மியம் முதலியவற்றை இயற் றியவர். மாறனகப் பொருள் அகத்திணை இயலும் ஒழிபிய லும் விரிவாக உள்ளன. அவை தொல்காப்பியத்தையும் நச்சினார்க்கினியர் உரையையும் உட்கொண்டு அகப் பொருட்குச் சிறந்த விளக்கமாக அமைந்தவை. இக்காலத்துக் கிட்டும் களவியல் வரைவியல் கற்பியல்களில் நம்பியகப் பொருளில் கூறப்படாத 30 துறைகள் காணப்படுகின்றன. களவு வெளிப்படற்குரிய கிளவித்தொகைகளில் வரைந்து கோடல் என்ற கிளவியை அமைத்து ஒன்பது துறைகளில் விளக்கியுள்ள இந்நூலில் காணப்படும் சிறப்புச் செய்தியாம். இதற்கு இலக்கியமான 527 பாடல்கள் கொண்ட திருப்பதிக் கோவை அமைந்துள்ளது. அண்மையில் நூல் முழுவதும் உரையுடன் வெளிவந்து உள்ளது. புதுவை ஃபிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியின் பதிப்பு அது.

மாறன் பாப்பாவினம் -

{Entry: P16a__714}

பாக்களையும் பாவினங்களையும் நூற்பாக்களால் விளக்கா மல் இலக்கியங்களைக் கூறியே இந்நூல் விரிவாக விளக்கு கிறது. (குமர குருபரர் அருளிய சிதம்பர செய்யுட் கோவை யை இஃது இவ்வகையால் ஒக்கும் எனலாம்.)

வெண்பா முதலான நூற்பாக்களும் அவற்றின் பாவினங் களும், மருட்பாவும், பரிபாடலும் இதன்கண் இலக்கியமாகத் தரப்பட்டுள. நூலுள் 140 பாடல்கள் உள.

இந் நூலாசிரியர் 16ஆம் நூற்றாண்டுப் புலவரான திருக்குரு கைப் பெருமாள் கவிராயர் என்ப. பாடல்கள் இன்ன யாப்பின என்று திட்ப நுட்பமுற விளக்கும் சிறு குறிப்புக்கள் திருப் பேரைக் காரிரத்தினக் கவிராயரால் இயற்றப்பட்டன என்ப.

மாறன் அலங்காரத்துள் காணப்படும் புதுமை -

{Entry: P16a__715}

தண்டிஅலங்காரம் குறிப்பிடும் அணிகளுள் நுட்பம் என்பதனைக் குறைத்து, பிற முதனூல்களில் கூறப்பட்ட அணிகளையும் திரட்டி, முந்து நூல்களுள் கூறப்பெறாத பூட்டுவில் அணி - இறைச்சிப் பொருள்கோளணி - பொருள் மொழி அணி - என்பவற்றொடு வகைமுதல் அடுக்கணி - இணைஎதுகை அணி - உபாய அணி - உறுசுவை அணி - புகழ்வதின் இகழ்தல் அணி என்னும் அணிகளையும் கூட்டிப் பொருளணிகளை 64 ஆக மிகுத்து இந்நூல் கூறும். நுட்ப அணி ‘பரிகரம்’ என்ற அணியுள் அடக்கப்பட்டது. அடுத்த மூன்றும் சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத் திணையியலிலும் கூறியபடியே செய்யுட்கு அழகாதலின் கொள்ளப்பட்டன. ஏனைய ஐந்தும் அழகு எய்துவதால் இலக்கியம் கண்டு இவ்வணியிலக்கணத்துள் கொள்ளப் பட்டன. (மா.அ. 87)

மாறனலங்காரம் -

{Entry: P16a__716}

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்ட அணியிலக்கணநூல். இவ்வரும்பேரணிநூற்கு விருத்தியுரையருளிச் செய்தவர் தென்திருப்பேரைக் காரிரத்தின கவிராயர். இந்நூலுள் பாயிரமாக அமைந்த நூற்பாக்கள் - 64; பொதுவணியியல் நூற்பாக்கள் 21; பொருளணியியல் நூற்பாக்கள் - 166; சொல் லணியியல் நூற்பாக்கள் 48; எச்சவியல் நூற்பாக்கள் - 28. உதாரணப் பாடல் என். 844.

இதன்கண், வைதருப்பம் கௌடம் என்னும் இருநடைக்கும் இடைப்பட்டதாகப் பாஞ்சாலம் என, மூவகைச் செய்யுள் நெறி சொல்லப்படும். பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் நன்னூல் போன்ற பிறநூல்கள் கூறுவதினும் சிறப்ப உள. 64 பொருளணிகள் விளக்கப்பட்டுள. மடக்கணியின் (சொல் லணி) விரிவான திறங்கள் 18 நூற்பாக்களால் பல எடுத்துக் காட்டுக்களுடன் திகழ்கின்றன. வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாக இருப்பத்தாறு சித்திரகவிகள் சிறப்புற இடம் பெற்றுள.

சூத்திரங்கள், பாயிரத்திலும் பொதுவணியியலிலும் வெண்பhக் களாகவே நிகழ்கின்றன. பிறவற்றில் ஆசிரிய நடையாக இயலுகின்றன.

மானிடப் பாடலையே மறக்குமாறு வழிபடுதெய்வத்தை ஏத்துதலால், செங்கண்மால் கோயில் கொண்டருளிய திருப்பதிகளைப் பற்றியும், மாறன் எனப்படும் நம்மாழ்வாரைப் பற்றியும் நூலாசிரியர் உதாரணப் பாடல்களைத் தாமே புனைந்து சடகோபராம் மாறன் பெயரால் இவ்வலங்கார நூலை அருளினார். இன்று நிலவும் அணியிலக்கண நூல்க ளிடை இதனை ஒப்பதும் மிக்கது மில்லை. ஆயின் பயிலுதற் கண் கடுமை நோக்கி இவ்வரிய நூலை விரும்பிப் பயில்வார் அருகியே உளர்.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம் பெருமுயற்சியால் அரிதாகப் பதிப்பித்த இந்நூற்கு இன்று காறும் மறுபதிப்பில்லை. என்ற குறை நல்க அண்மையில் புதுவை-பிரஞ்சுப்பள்ளி விளக்கங்களுடன் வெளியிட் டுள்ளது. இது திருவரங்க ஆண்டவன் ஆசிரம வெளியீடு.

முகவைப் பாட்டு -

{Entry: P16a__717}

களத்தில் நெற்சூடுகள்மீது கடாவிட்டு நெல்லைப் பிரிக்கும் போது அவ்வினைஞர் பாடும் பொலிப்பாட்டு. (சிலப். 10 : 136, 137)

முத்தப்பருவம் -

{Entry: P16a__718}

பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் ஐந்தாவது பருவம்;

குழந்தையைத் தனக்கு முத்தம் தருமாறு தாய் கேட்ப அமைத்துப் பாடுவது. செங்கீரை போன்ற பிற பருவம் போல, இதன்கண்ணும் பத்துப் பாடல்கள் வரும். ‘கனிவாய் முத்தம் தருகவே’ போன்ற வாய்பாட்டால் பாடல் முடியும்.

முத்தம் -

{Entry: P16a__719}

கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறும் அகத்துறை களுள் ஒன்று. தலைவன் தோழியிடம் தலைவிக்கு அளிப்ப தற்குக் கையுறையாகக் கொண்டு சென்ற முத்தினைத் தோழி தன் நயமான பேச்சினால் கையுறையாகக் கொள்வதை மறுத்துக் கூறுவதாக இவ்வகத்துறைப் பாடல் அமையும். (திருவரங்கக். 61)

முத்துவீர உபாத்தியாயர் -

{Entry: P16a__720}

19ஆம் நூற்றாண்டினர்; தம்பெயரால் முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூல் இயற்றியுள்ளார். இதன் சூத்திரங்கள் ‘நூற்பா’ எனப்படும் ஆசிரியயாப்பின. திருப்பாற்கடல்நாதன் கவிராயர் இந்நூற்கு உரை எழுதியுள்ளார். நூலாசிரியர் தச்சமரபினர்.

முத்து வீரியம் -

{Entry: P16a__721}

முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்ட ஐந்திலக்கண நூல்; 19ஆம் நூற்றாண்டினது.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்ததி காரங்களிலும் முறையே எழுத்தியல் மொழியியல் புணரியல் எனவும், பெயரியல் வினையியல் ஒழிபியல் எனவும், அகவொழுக்கவியல் கள ஒழுக்கவியல் கற்பொழுக்கவியல் எனவும், உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனவும், சொல் லணியியல், பொருளணியியல் செய்யுளணியியல் எனவும் அதிகாரம்தோறும் மும்மூன்று இயல்கள் உள. அதிகாரம் தோறும் தற்சிறப்புப் பாயிரம் ஒன்று பரம்பொருளை வாழ்த்தி அதிகாரத்தை நுதலிப் புகுகிறது. இவை நீங்கலாக ஒன்பது இயல்களிலும் முறையே 114, 44, 297; 135, 48, 125; 59, 24, 9; 38, 61, 167; 25, 104, 31 எனும் எண்ணிக்கைப்பட நூற்பாக்கள் நிகழ் கின்றன.

“சுப்பிரமணிய தேசிகன் கவிப்பெருமாள் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, உறந்தையகத் தெழுந்தருளிய முத்துவீரமா முனிவன், அகத்திய நூல்வழியே இந்நூலைத் தன் பெயர் நிறுவி வகுத்தனன்” என்கின்றது சிறப்புப்பாயிரம்.

திருப்பாற்கடல்நாதன் என்ற பெயரினர் இதன் உரையாசிரியர்.

முதல் ஒன்பது உயிர்களின் நாள்கள் -

{Entry: P16a__722}

அ ஆ இ ஈ என்னும் நான்கும் கார்த்திகை நாளாம்; உ ஊ எ ஏ ஐ என்னும் ஐந்தும் பூராட நாளாம். (இ. வி. பாட். 25)

முதல் சீருக்கு ஒரு தனி இலக்கணம் -

{Entry: P16a__723}

பாடப்படும் தலைமகனது பெயர்நாள் தொடங்கி எட்டாம் இராசிக்கண் உற்ற இரண்டே கால் நாளும், எண்பத்தெட் டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும் தள்ளிப் பொருத்த முடைய நாள்களைக் கொண்டு தலைவன் பெயர்க்கு முதற்சீர் எடுத்துக் கூறுதல் மரபு.

இனிக் கணநாள்களில் விலக்கியன ஒழித்தே பொருத்த முடைய நாள்களே கொள்ளப்படும் என்பதும் உரையிற் கொள்ளப்படும். விளக்கம் வருமாறு :

பாட்டுடைத் தலைவன் இராமன் என்க. அவன் பெயர் நாள் கார்த்திகை; அதற்குரிய இராசி இடபம்; அதனுடைய எட்டாம் இராசி தனு; அதற்குரிய நாள்கள் மூலம், பூராடம், உத்தராடம் முதற்கால்; அவற்றுக்குரிய எழுத்துக்கள் யூயோ - மூலம்; உ ஊ எ ஏ ஐ - பூராடம் ; ஓ உத்தராடம் முதல் கால்; இவ்வெழுத்துக்களால் முதல்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.

இனி, விநாசத்தை (-அழிவினை) த் தரும் வைநாசிகம் இயற் பெயருக்குரிய நாளாகிய கார்த்திகைக்கு இருபத்திரண்டாம் நாளாகிய சதயத்தின் நான்காம் கால்; அதற்குரிய எழுத்து தொ என்பது. இதனானும் பாட்டின் முதற்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.

இனி, கணநாளில் விலக்கியன தீக்கணம் அந்தரகணம், சூரியக ணம், மாருதகணம் என்பன; தீக்கணம் - கார்த்திகை; அந்தரகணம் - புனர்பூசம்; சூரிய கணம் - பூசம் ; வாயு கணம் - சுவாதி. இவற்றுக்குரிய எழுத்துக்கள் முறையே அ ஆ இ ஈ என்பனவும் ஆம். இவையும் புகுதல் கூடாது என்பது. (இ. வி. பாட். 37)

முதற்சூத்திர விருத்தி -

{Entry: P16a__724}

மாதவச் சிவஞான முனிவரால் ‘வடவேங்கடம்’ என்ற சிறப்புப் பாயிரத்திற்கும் ‘எழுத்தெனப் படுப’ எனும் தொல்காப்பிய முதற்சூத்திரத்திற்கும் எழுதப்பட்ட விருத்தியுரை. அவ் வுரையே நூலாகக் கருதப்படும். சிறப்புப் பாயிரப் பகுதிக்குச் சோழ வந்தான் அரசஞ் சண்முகனார் எழுதிய மறுப்பு நூலொன்றுண்டு. அம்மறுப்புக்கு மறுப்பாகச் சூத்திரவிருத் திக்கு அரணாகச் செப்பறை விருத்தி என ஒன்றுண்டு. இவ்வாறு பலரும் கருத்து வேறுபாடும் ஒற்றுமையும் காட்டு மாறு அமைந்த சிறந்த நற்றமிழ் நடையிலமைந்த விருத்தியுரை இம்முதற் சூத்திர விருத்தி. இவ்விருத்தி யுரையுள் தொல் காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரான சேனாவரை யரும் திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகரும் முனிவரால் பாராட்டப்படுவர். இவ் விருவரையும் அவர் மறுக்கு மிடங்களும் உள. சிவஞானமுனிவர் எடுத்தாண்ட பல வடமொழிக் கருத்துக்கள் பிரயோக விவேகம் எனும் நூலினின்று ஏற்றுக்கொண்டவை; அந்நூற் கருத்துக்களுள் முனிவர் மறுக்குமிடமும் உள. இவ்விருத்தி யுரையுள் முனிவ ருடைய இருமொழிப் புலமையும் கண்டு மகிழலாம்.

முதுகுருகு -

{Entry: P16a__725}

தலைச்சங்கத்து இயற்றப்பட்டுக் காலப்போக்கில் இறந்து போன நூல்களுள் ஒன்று. முதுநாரை, முதுகுருகு என எண்ணப்படும் இவை இயற்றமிழ் நூலாயிருத்தல் கூடும். இறையனார் களவியல் உரையுள் (சூ. 1) இடம் பெற்றுள்ளன இவை.

முதுநாரை -

{Entry: P16a__726}

முதுகுருகு போல இதுவும் தலைச்சங்க காலத்து நூலாய், இதுபோது இறந்துபட்டது. (இறை. அ. 1 உரை)

முதுமகன் -

{Entry: P16a__727}

முப்பதுக்கு மேற்பட்ட பிராயமுடையவன். (பன்.பாட். 234)

முப்பேட்டுச் செய்யுள் -

{Entry: P16a__728}

இவ்விலக்கியத்துள் நான்கடியின் மிக்கு ஆறடியான் வந்த பாடல்களும் உள. அவை கலிவிருத்தத்தின்பாலோ, கொச்சகக் கலியின்பாலோ சார்த்திக் கொள்ளப்படும்.

(யா. வி. பக். 365)

மும்மணிக் கோவை (1) -

{Entry: P16a__729}

தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்று; ஆசிரியப் பாவும், வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் ஒன்றனை யடுத்து ஒன்றாகத் தொகை முப்பது பெற அந்தாதித் தொடையால் மண்டலித்து வரப் பாடுவது.

எ-டு : குமரகுருபரர் அருளிய சிதம்பர மும்மணிக் கோவை.

(இ. வி. பாட். 55)

மும்மணிக் கோவை (2) -

{Entry: P16a__730}

இத்தொடர்நிலைச் செய்யுளின் பாடல்கள் இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பத் தொடையால் இணைந்துள்ளன. (யா. வி. பக். 205)

மும்மணி மாலை -

{Entry: P16a__731}

வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அகவலும் முறையே ஒன்றனை அடுத்து ஒன்று வர, முப்பது பாடல்கள் அந்தா தித்து முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 60.)

முற்றவை -

{Entry: P16a__732}

அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. ‘கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்’ (பெருங். உஞ்சைக். 36 - 245) (L)

முறுவல் -

{Entry: P16a__733}

இறந்துபட்டதொரு பண்டை நாடகத்தமிழ்நூல்.

(சிலப். உரைப்.) (L)

மூவடி முப்பது -

{Entry: P16a__734}

இடைக்காடர் செய்ததாகக் கூறப்படுவதும், சிந்தடிச் செய்யுள் முப்பது கொண்டதுமான ஒரு நூல். (தொ. பொ. 548 பேரா.)

மெய்க்கீர்த்தி -

{Entry: P16a__735}

சொற்சீரடியால் வேந்தனுடைய புகழ் வரலாற்றினைக் கூறி அவன் தன் தேவியொடு வாழுமாறு வாழ்த்தி, அவனுடைய ஆட்சியாண்டினையும், இயற்பெயரினையும் (பிற சிறப்புப் பெயர்களையும்) குறித்து விளக்கும் பாட்டு வகை. (இச்செய் யுள் நடையில் அவனுடைய போர் கொடை இவற்றின் வெற்றியேயன்றி, ஒரோவழி முன்னோர் வெற்றியும் இடம் பெறக் கூடும்.) (இ. வி. பாட். 71, பன்னிருபாட். 313)

மெய்க்கீர்த்தி மாலை -

{Entry: P16a__736}

சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த கீர்த்தியை அழகுற மொழியும் பிரபந்தம். இது வேந்தற்கே சிறந்தது, ‘மெய்க்கீர்த்தி’ வேந்தன் புகழ் சொல்லுவதாதலின். (இ. வி. பாட். 105)

மெய்ப்பாட்டியல் -

{Entry: P16a__737}

இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாம் இயலாக உள்ளது. முன் ஐந்தியல்களில் கூறப்பட்ட அகப்புறச் செய்தி களை உடற்குறியால் வெளியிட்டு உவமத்தைப் போலப் பொருளைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு, அவ்வைந்தியல் களையும் அடுத்துச் செய்யுளியலை ஓட்டி அமைந்த உவம இயற்கு முன்னர்தராக ஆறாம் இயலாக அமைந்துள்ளது.

இவ்வியலில் நாடகநூலார் குறிப்பிடும் மெய்ப்பாடுகள், இயற்றமிழ் அகம்புறம் பற்றிய செய்யுள்களுக்கு மிகத் தேவையாகப் பயின்று வரும் மெய்ப்பாடுகள், பயிலாது அருகிவரும் மெய்ப்பாடுகள், களவுக் காலத்தில் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள், களவுக்காலத்திற்கே சிறந்து கற்புக்காலத்தும் கலந்து வரும் மெய்ப்பாடுகள், வரைதல் வேட்கையைப் புலப் படுத்தும் மெய்ப்பாடுகள், கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள், தலைவன் தலைவியர்க்கு உரிய பத்துவகை ஒப்புமைகள், நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகள் ஆகியவை இறுதிப் புறனடைச் செய்தியோடு 27 நூற்பாக்களால் கூறப்பட்டுள.

மெய்ப்பாடு கூறிய ஓத்து ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் எனப்பட்டது. அகத்திணையியல் முதல் பொருளியல் ஈறாகக் கூறப்பட்ட ஐந்தியல்களிலும் சுட்டப்படும் அகமும் புறமும் பற்றிய ஒழுகலாற்றிற்கும், பொருளியல் இறுதியில் சுட்டப் பட்ட காட்டலாகாப் பொருள் எல்லாவற்றிற்கும் பொது வாகிய மனக்குறிப்பு இவையாகலின், இவற்றை வேறு கொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியல் என வேறோர் இயலாக, முன் கூறப்பட்ட அகப்பொருள் புறப்பொருள் பற்றிய ஐந்தியல் களொடும் தொடர்புடையதாகத் தொல்காப்பியனார் அமைத்துள்ளார். (தொ. பொ. 249 பேரா.)

கூத்தநூலுக்குரிய இம்மெய்ப்பாடுகளை இயற்றமிழ் நூலா கிய தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் ஆராய்வது என்னையெனின், இவ்வியற்றமிழில் அகம் புறம் பற்றிய பாடல்களுக்கு இன்றியமையாத செய்திகளையே கூறினார்; சுவைக்கு ஏதுவாகிய பொருளினை அரங்கினுள் நிறீஇ, அது கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்தும் கூத்தனையும் அரங் கில் தந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வாராக வருகின்ற நாடக நூல் முறைமையெல்லாம் ஈண்டுக் கூறினாரல்லர். (250 பேரா.)

இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்ச்சி வழக்காறில்லை. உணர்வோடு உள்ளக்கருத்தை உரைக்கப் பல செயற்கைக் குறி வகுத்துக்கோடல் கூத்த நூல் வழக்காம். (மெய்ப். பாரதி. முன்.)

இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்பொருள் புறப் பொருள் துறைகள் அனைத்திற்கும் அமைய வருவனவும், சிறப்பாக அகத்துறைகளுக்கே ஆவனவும் என இருவகைப் படுதலின், பொதுவியல்புடையனவற்றை முன்னர்க் கூறிச் சிறப்பியல்புடையனவற்றைப் பின்னர்க் குறிப்பிடுகிறார். ஒருவருடைய உள்உணர்வுகளுள், மற்றவர் கண்டும் கேட்டும் அறியப் புற உடற்குறியால் புலப்படுவனவே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்படும். ஆதலின், அவையே இவ்வியலில் விளக்கப்பட்டுள. (மெய்ப். பாரதி. முன்.)

மேகவிடுதூது -

{Entry: P16a__738}

காதலனிடம் மேகத்தைத் தலைவி தூது விடுவதாகப் பாடும் பிரபந்த விசேடம்.

எ-டு : திருநறையூர் நம்பி மேகவிடு தூது. (L)

மேடகத்திரிசந்தம் -

{Entry: P16a__739}

இது பழைய வடமொழி யாப்பு நூல்களுள் ஒன்று. நான்கடி விருத்த வகைகளில் பிறழ்ந்து வருவனவும், மாராச்சை மிச்சா கிருதி முதலிய சாதியும், ஆரிடமும் பிரத்தாரம் முதலியவும், ஆறு பிரத்தியமும் இந்நூலுள் பரக்கக் கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 486)

மோதிரப்பாட்டு -

{Entry: P16a__740}

பண்ணத்தியாகச் சுட்டப்படுவனவற்றுள் ஒன்று.

(தொ. பொ. 492 பேரா.)

ய section: 6 entries

யாண்டு நிலை -

{Entry: P16a__741}

இப்பிரபந்த இலக்கணம் பன்னிருபாட்டியலில் மாத்திரம் காணப்படுகிறது. பல்லாண்டு பாடுவது இப்பிரபந்தத்தின் நோக்கம். பெரும்பான்மை நேரிசைவெண்பாவாலும், சிறுபான்மை அனைத்துப் பாவாலும் “மன்னன் பல்லாண்டு வாழ்க!” என்று ஏத்துவது இது. (பன். பாட். 328)

யாப்பருங்கலக் காரிகை -

{Entry: P16a__742}

யாப்பருங்கல ஆசிரியர் அமிதசாகரர் அவ்யாப்பு நூலுக்கு அங்கமாக யாப்பருங்கலக் காரிகை இயற்றினார். அலங்கார முடைத்தாகச் செய்யப்பட்டமையால் இந்நூல் காரிகை எனப்பட்டது. இந்நூலின் சூத்திரங்கள் கட்டளைக் கலித் துறை யாப்பின.

இவ்யாப்பு நூலின்கண் கடவுள் வாழ்த்தும் வருபொரு ளுரைத் தலுமாகிய தற்சிறப்புப் பாயிரம் 1, அவையடக்கம் 2, உறுப்பியல் காரிகைகள் 18, செய்யுளியல் காரிகைகள் 16, ஒழிபியல் காரிகைகள் 10 - ஆக 47 காரிகைகள் காணப்படு கின்றன. முதல் மூன்றும் நீக்கப்படின், அவை 44 ஆம்.

பல காரிகைகள் மகடூஉ முன்னிலை பெற்று நிகழ்கின்றன. சில காரிகைகள் முதல் நினைப்பு உணர்த்துவனவாக உள. ‘தூங்கேந் தடுக்கல்’ என்ற காரிகை ஆசிரியராலே இயற்றப் பட்டது என்பர் சிலர். ஆயின் உரையாசிரியர் குணசாகரர் அக்காரிகையைக் கணக்கிடாமையாலேயே 44 என்ற எண் ணிக்கை கிட்டிற்று. அவர் கருத்துப்படி அக்காரிகையை ஆசிரியர் புனைந்திலாமை தெளிவு.

உரையாசிரியராம் குணசாகரர் அமிதசாகரர்தம் மாணாக் கரே என்பது பெரும்பான்மையோர் கருத்து. உரை இயற்றி யவர் குணசாகரரா அன்றிப் பிறரொருவரா என்பதன்கண் கருத்து வேறுபாடுண்டு. இந்நூலின் காலம் 11ஆம் நூற்றாண் டின் முற்பகுதி என்ப.

யாப்பருங்கலம் -

{Entry: P16a__743}

யாப்பு என்னும் கடலைக் கடக்க அமைந்த அரிய மரக்கலம் என்ற காரணப் பெயரால் அமைந்த இந்நூல் (‘பெயர்க் காரணம்’ அடுத்துக் காண்க.) அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி; என்ப.

இந்நூலுள் பொதுவும் சிறப்புமாகப் பாயிரச் செய்யுள் இரண்டும், உறுப்பியல் முதலாக ஒழிபியல் ஈறாகச் சூத்தி ரங்கள் தொண்ணூற்றாறும் உள்ளன. சூத்திரம் ஆசிரிய நடைத்து.

இதன்கண், உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலும் என முப்பெரும் பாகுபாடுகள் உள. உறுப்பியலுள் எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்னும் இவ்வகை ஆறனையும் உணர்த்தும் நூற்பாக்கள் எழுத்தோத்து அசையோத்து முதலாகப் பெயர் பெறுகின்றன. பிற இயல்களுள் இவ்வோத் துப் பாகுபாடு பெயர் பெற்றிலது.

இவ்வாசிரியரே யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்க மாக யாத்த பிறிதொரு நூல் யாப்பருங்கலக் காரிகையாம்.

இந்நூற்கு அரிய விருத்தியுரை வரைந்தவர் குணசாகரர் என்ப; மற்றொருவர் எனவும் கூறுப. இவ்வுரையின் பெருமை, இந்நூலே யாப்பருங்கல விருத்தி என உரைப்பெயரொடு பிற்காலத்தே வழங்கப்படும் சிறப்பால் போதரும்.

யாப்பருங்கலம் : பெயர்க் காரணம் -

{Entry: P16a__744}

சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிவு நோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு, அருங்கலஅணி ஒருங்கு கோத்தாற்போலவும், அலைகடல் கடைந்து அமுது கொண்டாற்போலவும், ஒருங்கு கோத்து ஒரு கோவைப் படுத்து எல்லார்க்கும் உணர்வு புலன்கொள்ளுமாற்றான் யாப்புச்செய்தியை உணர்த்தும் சார்பு நூலாதலின் யாப்பருங் கலம் என்னும் பெயர்த்தாயிற்று. (யா. க. பாயிர உரை)

யாமளேந்திரர் -

{Entry: P16a__745}

இசைத்தமிழ் நூலாசிரியருள் ஒருவர் (சிலப். உரைப்பாயிரம்.)

யானைத்தொழில் -

{Entry: P16a__746}

யானையைப் பற்றிய கிரிசரம் நதிசரம் வனசரம் ஆகிய நிலம், அவயவங்களின் அளவு, ஏழுமுழ உயரம், தருணவயது, பிறந்த நிலத்தான் வீரம் பெறும் குலநன்மை, ஒன்பதுமுழநீளமும் முப்பத்திரண்டு முழச் சுற்றும் உடைத்தாய இலக்கணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதிற் கோறல், அரசனை அறிதல் என்னும் இவையிற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 112)

ல section: 2 entries

லக்கின கிரந்தம் -

{Entry: P16a__747}

அறம் பொருள் இன்பம் வீடுபேறு பற்றிய நூல்களுக்குச் சார்பாக அமைந்த நூல்களுள் ஒன்று. இது குறிப்பிடும் மறைபொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரப்படும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது.(யா. வி. பக். 491)

லாலி -

{Entry: P16a__748}

ஒருவகை ஊஞ்சற்பாட்டு. இஃது ஒவ்வொரு பகுதியிலும் ‘லாலி’ என்று முடிவது. தாலாட்டு என்றலுமாம்.

வ section: 71 entries

வச்சணந்தி மாலை -

{Entry: P16a__749}

தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர் பெயரால் குணவீர பண்டிதர் என்ற சமணர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல் நூல்; வெண்பாப் பாட்டியல் எனவும் பெயர் பெறும். நூல் இயற்றப்பட்ட காலம் 12ஆம் நூற்றாண்டு, முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என மூன் றாகப் பாகுபட்டுள்ள இந்நூலுள் 103 வெண்பாக்கள் உள. இப்பாட்டியற்கண் பத்துப் பொருத்தங்களும், பிரபந்த வகைகளும், பா வருணம் முதலிய பலவும் சொல்லப்பட்டுள. இதன் பண்டையுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.

வச்சத் தொள்ளாயிரம் -

{Entry: P16a__750}

உரிப்பொருட் செய்தியாகிய அகப்பொருளைப் பாடலுட் பயின்ற கருப்பொருளால் தொகுத்து விளங்கச் சொல்லுவது தொகைமொழியாகிய சுருக்கம் ஆம். வச்சத் தொள்ளாயிரம் முழுதுமே இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் வந்த தாக உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பர். (வீ. சோ. 153 உரை)

வசந்தமாலை -

{Entry: P16a__751}

தென்றலை வருணித்து அந்தாதியாகப் பாடும் பிரபந்தம்.

(இ. வி. பாட். 76)

வசைக்கவி -

{Entry: P16a__752}

வசையைப் பாடும் கவி. கவி-கவிபாடுவோனையும் குறிக்கும். ‘வசைகவி’ என இயல்பாகக் கூறினும் ஆம்.

வசைக்கூத்து -

{Entry: P16a__753}

செம்பொருள் அங்கதம் கலிப்பாட்டினால் வருவன இந் நூலுள் காணப்படும். இஃது ஒருநாடக நூல் போலும். (தொ. பொ. 437 பேரா.)

வசைப்பாட்டு -

{Entry: P16a__754}

‘வசைக்கவி’ காண்க.

வடுகச் சந்தம் -

{Entry: P16a__755}

சந்தம் என்ற அமைப்புடைய வடமொழி விருத்த வகைகள் தெலுங்கு மொழியில் வாஞ்சியார் என்பவர் இயற்றிய வடுகச் சந்தம் என்ற நூலுள் விளக்கமாகக் கூறப்பட்டுள. (யா. வி. பக். 523)

வண்ணக்களஞ்சியம் -

{Entry: P16a__756}

வண்ணக்கவி பாடுதலில் வல்லுநன்; வண்ணக்களஞ்சியப் புலவன்.

வணிகர் இயல் -

{Entry: P16a__757}

வைசியன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறுமாறு. (இ. வி. பாட். 166)

வணிகர் வருணம் -

{Entry: P16a__758}

லவறன என்னும் நான்கு மெய்யும் வணிகர்க்குரிய எழுத் துக்கள். (வருணம் - எழுத்து). (இ. வி. பாட். 16)

வயிரபம் -

{Entry: P16a__759}

இது துறைக் கவிகளுள் ஒன்றாக வீரசோழியத்தில் கூறப்பட் டுள்ளது. ‘பிச்சியார்’ என்ற கலம்பக உறுப்பைக் குறிப்பது போலும்.

இது ‘பயிரவம்’ என்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ‘பைரவம்’ என்ற ஒருவகைச் சிவவழிபாடு கொண்ட பிச்சியார் பற்றியதாகக் கோடல் பொருந்தலாம்போலும். (வீ. சோ. 183 - 1)

வயிர மேகவிருத்தி -

{Entry: P16a__760}

தக்க யாகப்பரணி (16) உரையிற் குறிக்கப்பட்ட இது, நேமிநாத உரையினைக் குறிப்பது என்பது மு. இராகவையங்கார் ஆராய்ச்சியாற்கண்ட செய்தி. (ஆராய்ச்சித் தொகுதி : கட்டுரையெண் : 32)

வர்த்த மானம் -

{Entry: P16a__761}

கணிதத்தின் பகுதிகளாகிய பதினாறுவரி கருமமும், அறு கலாச வண்ணமும், இரண்டு பிரகரணச் சாதியும், முதகுப்பை யும் ஐங்குப்பையும் என்ற இப்பரிகருமமும், மிச்சிரகம் முதலிய எட்டதிகாரமும் ஆகிய இவற்றைக் குறிப்பிடும் நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 569)

வரருசி -

{Entry: P16a__762}

பாணினி வியாகரணத்துக்கு வார்த்திகம் செய்த முனிவர். வார்த்திகம் - காண்டிகையுரை.

வரலாற்று வஞ்சி -

{Entry: P16a__763}

அகவல் ஓசையிற் பிறழாது, ஆசிரியப் பாவால், போர்க்களத் திற் செல்லும் படையெழுச்சியைக் கூறும் சிறு பிரபந்தம்.

(இ. வி. பாட். 109)

வருக்கக் கோவை (1) -

{Entry: P16a__764}

மொழி முதலில் வரும் எழுத்துக்களை அகர முதலாகக் கிடந்த எழுத்து முறையே அமைத்துக் கலித்துறைப் பாடல்க ளாகப் புனையும் பிரபந்தவகை. (சது.)

எ-டு : நெல்லை வருக்கக் கோவை.

வருக்கக் கோவை (2) -

{Entry: P16a__765}

அகப்பொருளில் ஏற்பனவற்றைக் கொண்டு அகர வரிசைப் படி வருக்கத்தால் பாடுவது வருக்கக் கோவை. (சாமி. 167)

வருக்கமாலை -

{Entry: P16a__766}

மொழிக்கு முதலாம் வருக்கஎழுத்தினுக்கு ஒவ்வொரு கவி கூறுதல் என்னும் பிரபந்தம்; அவ்வெழுத்தை முதலாகக் கொண்டு கூறுதல் என்க. (ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போல்வன எனலாம்). இனி, உயிரானும், கதசநபமவ - என்னும் உயிரொடு கூடிய மெய் ஏழானுமாக எட்டு ஆசிரியப்பா வந்தால் அவை வருக்கமாலை எனவும் கூறுவாரு முளர். (அப்பர் பெருமாளது தேவாரத்துள் ( V -97) சித்தத் தொகைத் திருக்குறுந்தொகையுள் பாடல்கள். 2 - 13 ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்தால் வந்த வருக்க மாலை.) (இ. வி. பாட். 66)

வருணர்ப்பாட்டியல் -

{Entry: P16a__767}

பாட்டியல் நூல்களில் ஒன்றான இதன் நூற்பாவொன்று இலக்கணவிளக்கப் பாட்டியலுரையில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆதலின், சிறந்த பாட்டியல் நூலாக இது 17ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல் வேண்டும் என அறிகிறோம்.

வருணப் பொருத்தம் -

{Entry: P16a__768}

பன்னீருயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும் மறையோர் வருணத்திற்குரிய எழுத்தாம். தநபமயர என்னும் ஆறு ஒற்றும் அரசர்க்குரியன. லவறன என்னும் நான்கு ஒற்றும் வணிகர்க் குரியன. ழ, ள என்னும் இரண்டு ஒற்றும் வேளாளர்க் குரியன.

‘ஒற்று’ எனப் பொதுப்படக் கூறினும், உயிரொடு கூடிய மெய் என்றே கொள்ளப்படும். (இ. வி. பாட். 14 - 17)

வருணம் -

{Entry: P16a__769}

அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என நால்வகைப்பட்ட சாதி; நால்வேறு வருணப் பால்வேறு காட்டி’ (மணி. 6 : 56)

வரையறுத்த பாட்டியல் -

{Entry: P16a__770}

இப்பாட்டியல் நூல் மங்கலப் பொருத்தத்தினை மாத்திரம் தனது நூற்பொருளாக வரையறுத்துக் கொண்டமையால் இப்பெயர்த்தாயிற்று. சூத்திரம் கட்டளைக் கலித்துறை யாப்புப் பெறுகிறது. சம்பந்த முனிவரால் இயற்றப்பட்டமை யின் இது சம்பந்தர்பாட்டியல் எனவும் படும். இப்பெயர் பெற்றது என்ப. அன்றி ஞான சம்பந்தப் பெருமான் இவருடைய வழிபாட்டுக் குரவராதலும் கூடும். நூலாசிரியர் பெயர் துணியக் கூடவில்லை. காலம் 14ஆம் நூற்றாண்டு எனலாம். இன்ன இன்ன மங்கலமொழிகள் இன்ன இன்ன முதலெழுத்தில் தொடங்கும் பெயரையுடைய பாட்டுடைத் தலைவனுக்கு உரியன என்ற செய்தியை 9 பாடல் களிலும், ஏனைய பொருத்தங்களைப் பொதுவாக இறுதிப் பாடலாகிய பத்தாம் பாட்டிலும் இந்நூல் குறிப்பிடுகிறது.

இனி, வரையறுத்த பாட்டியல் சுட்டும் மங்கலமொழிகளும், அவற்றுக்கு ஏற்ற, பாட்டுரைத் தலைவனுடைய பெயரின் முதலெழுத்துக்களும் வருமாறு : (கா. 4 - 9)

மங்கல மொழி -

{Entry: P16a__771}

மங்கலமொழி பெயரின் முதலெழுத்து

சீர் - க, கா, கி, கீ; சொ, சோ;

ந, நா, நி, நீ; யா; வ, வா, வி, வீ.

எழுத்து - நு, நூ; யூ.

பொன் - கு, கூ; சௌ; து, தூ, தெ, தே; நெ, நே; பு, பூ;

மெ, மே, மொ, மோ, மௌ.

பூ - கௌ; சை; ம, மா, மி, மீ, மு, மூ; வை, வெள.

திரு, திங்கள் - கொ, கோ.

மணி - கெ, கே.

நீர் - கை; சி, சீ; தி, தீ, தை; நொ, நோ; பை.

சொல் - ஒள; சு, சூ, செ, சே; தௌ; நௌ.

கங்கை - அ, ஆ, ஒ, ஓ; த, தா, தொ, தோ, யோ.

வாரணம் - ஞெ, ஞொ.

குஞ்சரம் - இ, ஈ; ஞா.

உலகம் - ப, பா.

பார் - ச, சா; பெ, பே, பொ, போ; வெ, வே.

தேர் - உ, ஊ, எ, ஏ, ஐ; நை, மை.

வலைச் சியார் -

{Entry: P16a__772}

கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும். அகத்துறைப் பாடல்களுள் இஃது ஒன்று. தெருவில் மீன் விற்கும் வலையர் குல மகளின் வனப்புமிகுதி தனது உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக் கூறுவதாக அமையும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல். (மதுரைக் கல. 67)

வழிநடைப்பதம் -

{Entry: P16a__773}

வழியில் நடந்து செல்லும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும் பாடல். சிலப்பதிகாரத்துள் நாடு காண் காதையுள் இவ்வருணனைப் பகுதி நெடிய ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது.

வள்ளலார் பாடல் யாப்பு -

{Entry: P16a__774}

இராமலிங்க அடிகளார் அருளிய ஆறு திருமுறைப் பாடல்கள் எண்ணிக்கை 5818; பலவகைத் தனிப்பாடல்களின் எண்ணிக்கை 152. வள்ளலாரது ‘அருட் பெருஞ்சோதி அகவல்’ 1596 அடிகளாலியன்ற நிலை மண்டில ஆசிரியம்; இவ்விரண்டடியெதுகையாக இகர ஈற்றால் (ஜோதி என) அமைவது.

‘திருவடிப் புகழ்ச்சி’ என்ற ஆசிரிய விருத்தம் 192 சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். வள்ளலார் தாண்டவராயத் தம்பிரானார்க்கு வரைந்த ‘திருமுகப் பாசுரம்’ 102 சீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

பிரசாதப் பதிகம் தரிசனப் பதிகம் போன்ற பதிக அமைப்புக் களும், குறையிரந்த பத்து, முறையிட்ட பத்துப் போன்ற பத்துப்பாடல் அமைப்புக்களும் முறையே தேவார திருவாசக மரபுகளைப் பின்பற்றியன. ஒரு பொருள் பற்றிப் பல பாடல்கள் எழும் ‘மாலை’களால் ஐந்தாம் திருமுறை அமைந்துள்ளது.

தேவ ஆசிரியம், போற்றித் திருவிருத்தம், நெஞ்சுறுத்த திருநேரிசை முதலாக அமைந்தவை யாப்பின் பெயரால் எழுந்தவை.

அருட்பாவில் நிகழும் உள்ளப் பஞ்சகம், நாரையும் கிளியும் நாட்டுறு தூது, ஞானசிகாமணி திருச்சீர் அட்டகம் முதலி யன பிரபந்தங்களை யொட்டி எழுந்தவை; நடேசர் கொம்மி, சல்லாப லகரி என்பன நாட்டுப் புற இலக்கியங்களை நினைவூட்டுவன. கண்ணி, தாழிசை, சிந்து, கீர்த்தனை என்ற வடிவு கொண்டு இசைக்கப்படும் பாடல்கள் பல உள; பண் வகுப்புப் பெறுவனவும் உள.

வருக்கமாலை வருக்கக் கோவைப் பிரபந்தங்களையொட்டி, பாங்கிமார் கண்ணி அமைகிறது.

திருவருட்பாவில் குறள் வெண்பா 3, குறள் வெண் செந்துறை 3, குறட்டாழிசை 1, நேரிசை வெண்பா 306, வெண்டுறை 1, நிலைமண்டில ஆசிரியப்பா 3, ஆசிரியத்துறை 5, அறுசீர் விருத்தம் 1034, எழுசீர் விருத்தம் 765, எண்சீர் விருத்தம் 1526, பன்னிருசீர் விருத்தம் 125, பதினான்குசீர் விருத்தம் 10, நாற்பத்தெட்டுச்சீர் விருத்தம் 1, 192 சீர் விருத்தம் 1, 102 சீர்விருத்தம் 1, வண்ணவிருத்தம், 1, சந்தவிருத்தம் 8, கலிவெண்பா 2, கொச்சகக் கலிப்பா 190, கட்டளைக்கலிப்பா 15, கலித்தாழிசை 31, கலித்துறை 23, கலிநிலைத்துறை 16, கலிநிலை வண்ணத்துறை 14, கட்டளைக் கலித்துறை 571, கலிவிருத்தம் 208, வண்ணக்கலிவிருத்தம் 10, வஞ்சித்துறை 11, தாழிசை 191, சிந்து 748 எனப் பாவும் பாவினமும் அமைந்துள. (இலக்கணத். முன். பக். 108 - 110)

வளமடல் -

{Entry: P16a__775}

அறனும் பொருளும் வீடும் என்று கூறும் இம்மூன்று பகுதி யின் பயனை இகழ்ந்து, மங்கையரைச் சேர்தலான் உளதாகிய மெல்லிய காமவின்பத்தினையே பயன் எனக் கொண்டு, தனிச்சொல்லின்றி, இன்னிசைக்கலிவெண்பாவால் தலைவ னது இயற்பெயரமைந்த அவ்வெதுகையில் அப்பொருள் முற்றப் பாடும் பிரபந்தம். இன்பமடல் எனவும் பெறும். (இ. வி. பாட். 96)

வாக்கி -

{Entry: P16a__776}

அறமும் பொருளும் இன்பமும் இவற்றின் நிலையின்மையான் எய்தும் வீடும் எனப்பட்ட உறுதிப்பொருள் நான்கனையும் மிகுதி குறைவு கூறாமல், கேட்போர் விரும்ப, செஞ்சொல் இலக்கணச் சொல் குறிப்புச் சொல் என்ற மூன்றனுள் செஞ்சொல் மிகுதி தோன்ற, உலகம் தவம் செய்து வீடுபெற, உயிர்களிடம் கருணை கொண்டு கூறுபவன் வாக்கி ஆவான்.

சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டினை, அதற்கு ஏதுவாகிய கேள்வி விமரிசம் பாவனை என்னும் உபாயங்கள் வாயிலாக வாக்கி கூறுவானாம். ஆகவே, ஞானாசிரியனே வாக்கி எனப்படுவான். (இ. வி. பாட் 173)

வாகன மாலை -

{Entry: P16a__777}

இறைவன் வீதி உலா வருங்கால் பயன்படுத்தப்படும் இடபம், கருடன் முதலிய வாகனங்களின் சிறப்பை எடுத்துப் பல பாடல்களில் நுவலும் பிற்காலப் பிரபந்த வகை. (நவ. பாட். பிற்சேர்க்கை)

வாகை மாலை -

{Entry: P16a__778}

வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம்; ஆசிரியப் பாவால் நிகழ்வது (சது)

வாசுதேவனார் சிந்தம் -

{Entry: P16a__779}

குடமூக்கிற் பகவரால் செய்யப்பட்ட பாடல் நூல். இது செய்யுள் இலக்கண மரபுக்குச் சிறிதே அப்பாலமைந்த ஆரிடச் செய்யுள் தொகையாகும். (யா. வி. பக். 369) குடமூக்கிற்பகவர் திருமழிசை யாழ்வார் எனவும், வாசுதேவனார் சிந்தம் அவர் அருளிய திருச்சந்த விருத்தம் எனவும் மு. இராகவஐயங்கார் கருதுகிறார். (ஆழ்வார்கள் கால நிலை பக். 43)

வாதி -

{Entry: P16a__780}

ஏதுவும், ஏதுவினாற் சாதிக்கும் பொருளும் ஆகிய அவ் விரண்டற்கும் எடுத்துக்காட்டு முதலியன கொண்டு தன் கோட்பாட்டினை நிறுவிப் பிறர் கோட்பாட்டினை மறுக்கும் திண்ணிய அறிவுடையோன். (இ. வி. பாட். 172)

வாதோரணமஞ்சரி -

{Entry: P16a__781}

கொலை புரி மதயானையை வசப்படுத்தி அடக்கினவர் களுக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடுவது.(சதுரகராதி)

வாய்ப்பியம் -

{Entry: P16a__782}

வாய்ப்பியர் என்பவரால் இயற்றப்பட்ட பண்டைய இலக்கண நூல். பாக்களின் வருணம் பற்றிய நூற்பாக்கள் நான்கு இந் நூலினின்று மேற்கோளாக யாப்பருங்கல விருத்தியில் காணப்படுகின்றன. மாவாழ் சுரம், புலிவாழ் சுரம் என்ற வாய் பாடுகள் நேர்நேர்நிரை, நிரைநேர்நிரை என்ற சீர்களுக் குரியன; இவை இருப்பவும், இடையே உயிரள பெடை அமைந்த தூஉமணி, கெழூஉமணி என்ற வேறிரண்டு வாய்பாடு களையும் வாய்ப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தம், தாண்டகம் என்ற விருத்த வகைகளை வாய்ப்பிய நூல் பாவினங்களாகக் குறிப்பிடுகிறது.

’சீரினும் தளையினும் சட்டக மரபினும், பேரா மரபின பாட் டெனப்படும்’ எனவும், ’அவை திரிபாகின் விசாதி யாகும்’ எனவும் வாய்ப்பியம் குறிப்பிடுகிறது.

பண் நால்வகைத்து என்றற்கு வாய்ப்பிய நூற்பா மேற் கோளாகும்.

வாகையும் பாடாணும் பொதுவியலும் (புறப்) புறமாகும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பா மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. சொல்லானது பெயர், தொழில், இடை,உரி என நால்வகைப்படும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள.

செந்துறை, வெண்டுறை என்பன இவையிவை என வாய்ப்பிய நூற்பாவால் விளங்கச் சுட்டப்பட்டுள்ளன.

இந்நூற்பாக்களை நோக்க, வாய்ப்பியம் என்பது இறந்துபட்ட பண்டைய முத்தமிழிலக்கண நூலோ என்று கருத வேண்டி யுள்ளது. (யா. வி. பக்.219, 358, 226, 486, 488, 567, 571, 578, 579.)

வாயுகணம் -

{Entry: P16a__783}

மூவசைச் சீர் இறுதி நிரை வருவது வாயு கணத்தைச்சாரும்; மற்ற இரண்டசையும் நேராக வருதல் வேண்டும் என்க. எனவே,தேமாங்கனி என வரும் சீர் வாயுகணம் ஆம். இந்திர காளியர் இக்கணத்திற்கு நாள் சுவாதி என்றார்; பயன் சீர் சிறப்பு நீக்குதல் என்றார். (இ. வி. பாட். 40)

வாரானை -

{Entry: P16a__784}

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் ஆறாவது பருவமாகிய வருகை; பாட்டுடைத் தலைவன் அல்லது தலைமகளாகிய குழந்தையைத் தன்னிடம் வருமாறு தாய் முதலியோர் அழைப்பதாகப் பாடும் பருவம். பாடல்தோறும் ஈற்றடியில் ‘வருகவே’, ‘வருக வருகவே’ என்று முடிதல் மரபு.

வித்தைக் கவி -

{Entry: P16a__785}

செய்யுளிலக்கணம் முதலிய கற்றுக் கவி பாடுவோன்

வியாழமாலை அகவல் -

{Entry: P16a__786}

இடைச்சங்க காலத்து நூல்களுள் ஒன்று. (இறை. அ. 1 உரை)

விராகமாலை -

{Entry: P16a__787}

தன் பாங்கன் முதலானோரிடம் தனது காதல் மயக்கத்தைத் தலைவன் கூறுவது பற்றிப் புனையும் ஒரு பிரபந்தம். சாமி. 168

விருத்த கவிதை -

{Entry: P16a__788}

வித்தார கவி (L)

விருத்தப்பாவியல் -

{Entry: P16a__789}

1855 - 1910 வரை வாழ்ந்த வீர பத்திர முதலியாரால் இயற்றப் பட்ட விருத்த அமைப்புக்களைப் பற்றிய இலக்கணநூல். வடமொழி விருத்தங்களின் இயல்பினைத் தமிழ்மொழி விருத்தச் செய்யுட் கண் பலவற்றில் ஒருபுடை ஒப்புமை கண்டு வகைப்படுத்தி மொழியும் இந்நூலுள், பன்னிரண்டு படலங் களும் அவற்றுள் 83 நூற்பாக்களும் உள. விதியைக் கூறும் நூற்பாவே தாம் நுதலிய விருத்த வகைக்கு எடுத்துக்காட்டா மாறு ஆசிரியர் யாத்துள்ள நயம் வியக்கத்தக்கது. இவ்வாசிரி யர் வடமொழி மாத்திரையையும் அட்சரங்களையும் ஒருபுடை கணக்கிட்டுத் தமிழிலுள்ள ஆசிரிய கலி வஞ்சி விருத்தங்களில் ஒப்பனவற்றிற்கு அவ்வடமொழிப் பெயர் களை வழங்கியுள்ளார். வடமொழி விருத்த இலக்கணம் முழுமையும் அப்பெயரிடப்பட்ட தமிழ் விருத்தச் செய்யுள் களில் இருக்கும் என்று எதிர்பாராது ஒருபுடை ஒப்புமையே கோடல் வேண்டும்.

மாத்ராகணம் 4 மாத்திரை கடவாது. வடமொழியிலுள்ள இப்பாகுபாட்டைத் தமிழில் சீர்களிடைக் காண விரும்பு கிறார் இவ்வாசிரியர். அட்சரம் பற்றி வடமொழியில் எட்டுக் கணங்கள் கூறப்படும். அவற்றையும் ஒருவாறு சீருளடங்கத் தமிழ் விருத்தத்துள் இவர் காட்டுகிறார். (வடமொழியில், இலகு - ஒரு மாத்திரைக் குறில்; எ-டு : அ. குரு இரண்டு மாத்திரை நெடில், இரண்டு மாத்திரை பெறும் குற்றொற்று; எ-டு : கா, கல், நெட்டொற்றுக்கும் இரண்டு மாத்திரையே. (எ-டு : கால்.)

விருத்தம் எனும் பிரபந்தம் -

{Entry: P16a__790}

பிரபந்தம் தொண்ணூற்று ஆறனுள் அரசனுடைய வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், குடை - இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் புகழும் பிரபந்தம். (சது)

வில்லுப்பாட்டு -

{Entry: P16a__791}

கோடைவிழா முதலியவற்றில் வில்லடித்து ஒருவகைப் பண்ணொடு பாடும் பாட்டு. ( L)

விலங்கின் கதியும் நரகர் கதியும் -

{Entry: P16a__792}

ஒஓ ய ர ல ழ ற என்னும் ஏழெழுத்துக்களும் விலங்கின் கதிக்குக் கூறும் எழுத்துக்கள். ஐ ஒள வளன என்பன ஐந்தும் நரகர் கதிக்குக் கூறும் எழுத்துக்கள். இவ்விரு கதியையும் குற்ற முடைய கதியென முதல்மொழிக்கு ஆகா என்பர்.

இவற்றுள் ழ ற ள ன உயிர்மெய்கள் ஒருவாற்றானும் மொழிமுதல் ஆகா. யகர ரகர உயிர்மெய்கள் உயிர்க் குற்றெழுத்து ஒன்றனைச் சார்ந்தே மொழி முதலாகும். ஆகவே, தெளிவாக மொழி முதலாவன ஐ ஒ ஓ ஒள வ என்பனவே. இவை மங்கலச் சொல்லின் முதலெழுத்தாதல் ஐயை, ஒண் கதிர், ஓங்கல், ஒளடதம், வாரிதி முதலியவற்றில் காண்க. (இவ்வைந்தன் பொருள் : திரு, திங்கள், மலை, அமுதம், கடல் என்பன) (இ. வி. பாட். 39 விளக்க உரை)

விளக்கத்தனார் பாடல் -

{Entry: P16a__793}

விளக்கத்தனார் பாடிய பலவகைப் பாடல்கள் தொகுக்கப் பட்டு ‘விளக்கத்தனார் பாடல்’ என்று வழங்கப்பட்டன. அவற்றுள், ‘கெடலரு மாமுனிவர்’ என்ற பாடல், கலிப்பா வாய்ப் புறநிலை வாழ்த்துப் பொருளதாய் வந்து ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது என்று யாப்பருங்கல விருத்தியுரை குறிக்கிறது. (யா. வி. பக். 372)

விளக்கத்தார் கூத்து -

{Entry: P16a__794}

‘புலன்’ எனப்பட்ட வனப்பின்பாற்படுவதாகிய வழக்கு வீழ்ந்த ஒரு நாடகத் தமிழ்நூல். இது வெண்டுறைச் செய்யுளான் இயன்றது. (தொ. செய். 241 நச்.)

விளக்குநிலை (2) -

{Entry: P16a__795}

பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று; வேலும் அதன் தலையும் நீக்கமின்றி ஓங்கியவாறு போல, மன்னனுடைய செய்கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குவதாகக் கூறுவது. (சது.)

‘வேலின் ஓக்கிய விளக்குநிலை (தொ. பொ. 90) என்று தொல்காப்பியம் கூறும். அது காண்க.

விற்பாட்டு -

{Entry: P16a__796}

வில்லுப்பாட்டு; வில் போன்ற இசைக் கருவியை ஒலிக்கச் செய்து கதை தழுவிப் பாடும் பாட்டு. ‘வில்லுப் பாட்டு’க் காண்க.

விறலி விடு தூது -

{Entry: P16a__797}

கழிகாமுகனாய்ப் பரத்தையர் சேரியில் திளைத்துத் திரிந்த ஒருவன், கழிந்ததற்கு இரங்கிப் பின்னர்த் தலைவனொரு வனை அடுத்துப் பரிசில் பெற்று மகிழ்ந்து, தன் மனைவிபால் விறலி யொருத்தியைத் தூது விடுத்தமை பற்றிக் கூறும் பிரபந்தம். கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது எனும் பிரபந்தம் சுப்பிரதீபக் கவிராயரால் பாடப் பெற்றது. காலம் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

வினாவெண்பா -

{Entry: P16a__798}

மெய் கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றான சைவ சித்தாந்த நூல்; பாடல்கள் வினா வாய்பாட்டில் அமைந்த வெண்பாக்களாதலின் நூல் இப்பெயர்த்தாயிற்று. இதன் ஆசிரியர் உமாபதி சிவம். (L)

வீரசோழன் -

{Entry: P16a__799}

வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றுவித்த பதினோராம் நூற்றாண்டுச் சோழமன்னன் ஆகிய வீர ராசேந்திரன் (கி.பி. 1062 - 1070).

வீரசோழியம் -

{Entry: P16a__800}

தமிழிலமைந்த ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறும் நூல்களில் காலத்தால் முற்பட்டது; வீர (ராஜேந்திர) சோழன் காலத்தது (கி.பி. 1062 - 1070); அவன் பெயரால் இயற்றப் பெற்றது. இதன்காலம் 11ஆம் நூற்றாண்டு. பொன்பற்றி என்னும் ஊரினை யாண்டு வந்த சிற்றரசர் புத்தமித்திரனார் இந்நூலாசிரியர். ஆக்குவித்தோன் பெயரால் இந்நூல் பெயர் பெற்றது. இதன் உரையாசிரியர் பெருந்தேவனார். நூலாசிரிய ரும் உரையாசிரிரும் புத்தமதச் சார்பினர். நூல் 183 கட்டளைக் கலித்துறை நூற்பாக்களால் இயன்றது. எழுத்து, சொல், யாப்பின் பிற்பகுதி இம்மூன்றதிகாரங்களும் பெரும்பான்மை யும் வடமொழி மரபினைத் தழுவியன. பொருளதிகாரத்துள் பாடாண்பகுதியுள் நிகழும் உரைப்பகுதி நாடகம் பற்றிய பல வடமொழிச் செய்திகளைத் தருகிறது. அலங்காரப் படலமும் வடமொழி அணிகள் பலவற்றைத் தழுவியது. சுருங்கக் கூறின் வடமொழி இலக்கணநயங்களைத் தமிழிலும் கண்டு மகிழுமாறு இருமொழிப்புலமையும் மிக்க புத்தமித்திரனார் இயற்றிய இந்நூற்கு அவ்வாறே புலமை மிக்க பெருந்தேவ னார் உரை ஒருவாறு விளக்கமாக அமைந்துள்ளது. ஆயின், படியெழுதுவோரால் நேர்ந்த பிழைகள் பலவும் நீங்கத் தூயதொரு பதிப்பு இன்று வெளிவருதல் மிக இன்றியமை யாத ஒன்று. என்று, புதுவை பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளி இந்நூலை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது. (திருவரங்கம் ஆண்டவன் ஆசிரியப் பதிப்பு.)

எழுத்தும் சொல்லும் யாப்பின் பிற்பகுதியும் வடமொழி இலக்கணங்களைத் தமிழில் வலிந்து புகுத்தியவாகத் தோன்றும்.

வீரமாமுனிவர் -

{Entry: P16a__801}

பெஸ்கி என்ற இயற்பெயருடைய இத்தாலிய நாட்டுப் பாதிரியார். தமிழ்நாட்டில் கிறித்தவமதம் போதகராய் வந்து, தமிழ்மொழிப் பயிற்சி நிரம்பப் பெற்றுச் சதுரகராதி, தேம்பாவணி, தொன்னூல் விளக்கம் முதலாகிய பல தமிழ் நுல்களைப் பல துறைகளில் இயற்றியுள்ளார். இவர் காலம் கி.பி. 1680 முதல் 1747 வரை.

வீரமாலை -

{Entry: P16a__802}

வீரனைப் புகழ்ந்து பாடும் பாடல் வகை. (L)

வீர வெட்சி மாலை -

{Entry: P16a__803}

96 பிரபந்தங்களுள் ஒன்று; வெட்சிமாலை சூடிப் பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து வந்த வீரனுடைய வெற்றித் திறத் தினைத் தசாங்கத்தொடு புகழ்வது. (சது.)

வெண்கவி -

{Entry: P16a__804}

பொருள் கடைசிநூல் (பக். 291)

வெண்டாளி -

{Entry: P16a__805}

இறந்துபட்டனவாகிய இடைச்சங்க நூல்களுள் ஒன்று.

(இறை. அ. 1 உரை)

வெண்டுறைச் செந்துறைப்பாட்டு -

{Entry: P16a__806}

வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன : கலியும், வரியும், சிற்றிசையும், பேரிசையும், சிற்றிசைச் சிற்றிசையும் என்ற இவை முதலாயின வெல்லாம். இவை பாணியும் இயமும் தூக்கும் பொருந்துமாறு இயன்றவை. (யா. வி. பக். 580)

வெண்பாப் பாட்டியல் -

{Entry: P16a__807}

குணவீர பண்டிதர் என்னும் சமணப்புலவர் தம் ஆசிரியரான வச்சணந்தி என்பார் பெயரால் ‘வச்சணந்தி மாலை’ என்று இயற்றிய இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்த பாட்டியல் நூலாதலின், வெண்பாப் பாட்டியல் எனப் பெருவரவிற் றாகப் பெயர் பெற்றது. காலம் 12ஆம் நூற்றாண்டு என்ப. இதன் உரையாசிரியர் பெயர் தெரிந்திலது. இப்பாட்டியல் முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என முப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள் 103 வெண்பாக்கள் உள.

வெண்பாமாலை -

{Entry: P16a__808}

புறப்பொருள் வெண்பாமாலை; புறப்பொருளை அழகிய 361 வெண்பா எடுத்துக்காட்டுக்களால் விளக்கும் இலக்கண நூல். இந் நூலாசிரியர் ஐயன் ஆரிதனார் சேரர் பரம்பரையில் தோன்றியவர்; ஆரித கோத்திரத்தினர். சாஸ்தாவாகிய ஐயனாரது பெயராக இப்பெயர் பல விடத்தும் வழங்கு கின்றது. திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ்சேரியிலுள்ள சாஸ்தாவின் பெயர் ஐயனாரிதன் என்பது.

பன்னிருபடலத்தை முதனூலாகக் கொண்டு, இந்நூல், வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை பாடாண் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை எனப் பன்னிரு படலங்களைத் தன் உட்பிரிவாகக் கொண்டு, படலத்துள் சூத்திரம் துறைகளைப் பெயரும் தொகையும் குறிக்க, துறைவிளக்கமாக இவ்விரண்டடியாலமைந்த கொளு அமைய, மேற்கோளாக வெண்பா அப்புறப்பொருள் துறையை விளக்குமாறு யாக்கப்பெற்றுள்ளது. பொதுவிய லுள் பொதுவான துறைகளும், சிறப்பிற் பொதுவியற்பால, காஞ்சிப் பொதுவியற்பால, முல்லைப் பொதுவியற்பால பற்றிய துறைகளும் 4 நூற்பாவால் பெயர் குறிக்கப்பட்டுள. கைக்கிளைப் படலத்துள் ஆண்பாற் கூற்றுக்கு அமைந்த துறைகளும், பெண்பாற் கூற்றுக்கு அமைந்த துறைகளும் 2 நூற்பாவால் பெயர் சுட்டப்பட்டுள. பெருந்திணைப் படலத் துள் பெண்பாற் கூற்றும் இருபாற் கூற்றுமாகிய துறைகள் 2 நூற்பாவால் சொல்லப்பட்டுள. இறுதியாக, ‘ஒழிபு’ என்பது பற்றிய நூற்பாவில் பாடாண் ஒழிபாக வரும் ஒரு துறையும், வாகையொழிபாக வரும் 18 துறையும் இடம் பெற்றுள. இவ்வாற்றால் இந்நூலுள் 9 + 4+ 2 + 2+ 1 = 18 நூற்பாக்கள் உள.

தொல்காப்பிய உரையாசிரியர்களாலும், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், புறநானூற்றுரையாசிரியர் முதலியோ ராலும் இந்நூல் வெண்பாக்கள் மேற்கோள் காட்டப்பெற் றுள. இலக்கணவிளக்க நூலார் இந்நூலையே தம் புறத்திணை யியலுட் பெரும்பான்மையும் எடுத்தாண்டுள்ளனர். இவை யெல்லாம் இந்நூற் பெருமைக்குச் சான்று பகர்வன. புற நானூற்றுப் பாடல்கட்குத் திணைதுறைகள் இந்நூல்வழியே குறிக்கப்பட்டுள.

தொல்காப்பியம் புறத்திணையியற் செய்திக்கும் இந்நூற் செய்திக்குமிடையே வேற்றுமைகள் சில உள. காஞ்சி என்று தொல்காப்பியனார் குறித்தது நிலையாமையைக் கூறுவது. ‘காஞ்சிப் பொதுவியற்பால’ என இந்நூலுள் வரும் துறைகள் தொல்காப்பியனார் கருத்தைச் சிறுபான்மை சுட்டுவன. இவ்வாசிரியர் வாகை ஒழிபாகக் கூறிய செய்திகள் (18ஆம் சூத்திரம்) தொல்காப்பியத்தில் ‘பால் அறிமரபின் பொருநர் கண்ணும்’ (புறத். 20 : 7 நச்) என்னும் ஓரடிக்கண்ணேயே குறிப்பாக உணர்த்தப்பட்டன. இரண்டு நூல்களிடையேயும் பல செய்திகள் தம்முள் ஒப்புமையுடையன. ஆயின் இந்நூற்கு முதல்நூல் தொல்காப்பியம் அன்று; பன்னிரு படலமே.

நூல் தொடக்கத்தே விநாயக வணக்கமும், சிவபிரான் வணக்க மும் பாடப்பட்டிருத்தலின், ஆசிரியர் சிவ வழிபாடுடை யராதல் தெளிவு. ‘புலவராற்றுப்படை’ முதலான துறைகளில் திருமால் முதலிய பிற கடவுளரையும் சிறப்பப் பாடியுள்ளமை இவரது சமயப் பொறையைப் புலப்படுத்தும்.

12 அடிகளால் ஆசிரியப்பாவான் இயன்ற சிறப்புப் பாயிரம் நூற்கு அணி செய்கிறது. நூற்கு உரை இப்பாடலினின்று தொடங்குகிறது.

இவரது காலம் 10ஆம் நூற்றாண்டு என்ப. வெண்பா அளவடிக்கோதிய எழுத்து வரையறை மிகாது செல்வது இவரது காலத்தின் சேய்மையைப் புலப்படுத்தும். திட்ப நுட்பம் சான்று சிறந்த செய்யுட்சொற்களால் தேர்ந்து யாக்கப்பட்டன இவ்வெண்பாக்கள். குறளடியாகவும் அளவடியாகவும் கொளு நிகழ்கிறது.

இந்நூற்கு உரையாசிரியர் (சயங்கொண்டசோழ மண்டலத்து மேற்காநா(னா)ட்டு மாகறலூர் கிழார்) சாமுண்டி தேவ நாயகர் என்பார். அப்பெயரால் அவர் வேளாண் மரபினர் என்பது தெளிவு. இவ்வழகிய நயமிக்க உரையில்லையேல், இந்நூலின் அருமை பெருமைகள் நமக்குப் போந்திரா. உரை பொழிப்புரையாகச் சொற்கள் கிடந்தபடியே அமைந்துள் ளது; ஒரோவழி இலக்கணக்குறிப்பு இடம் பெறுகிறது. தொல்காப்பிய மேற்கோளொடு, பிற இலக்கிய மேற்கோளும் மிக இன்றியமையாமைப்பட்டவிடத்தே காணப்பெறு கின்றன. உரையில் வடசொற்கள் ஓரளவு பயில்கின்றன.

இதன் முதற்பதிப்பு டாக்டர் ஐயரவர்களால் 1895இல் வெளி வந்தது.

வெண்பாவிற்கு நாளுரிமை -

{Entry: P16a__809}

கார்த்திகை முதலாக ஆயிலியம் ஈறாக ஏழு நாள்களும் வெண்பாவிற்குரியன. (கார்த்திகை, உரோகணி, மிருகசீரிடம் திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம் என்பன.)

(இ. வி. பாட். 120)

வெண்புணர்ச்சிமாலை -

{Entry: P16a__810}

முந்நூறு வெண்பாக்கள் கொண்ட பிரபந்த வகை.

வெள்ளைக் கவி -

{Entry: P16a__811}

புன்மையான (- கொச்சையான) சொற்களால் பாடுவோன்.

(இ. வி. பாட். 175)

இனி, பிறரைத் தொடங்கச் செய்து கவிபாடுவோன் எனவும், பிறர் தொடங்கிப் பாடும் துதிக்கவி எனவும் பொருள் சொல்லப் பெறும். (W) (L)

வெற்றிக் கரந்தை மஞ்சரி -

{Entry: P16a__812}

சதுரகராதி கூறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; பகைவர் கவர்ந்துகொண்ட தம் ஆநிரையை மீட்போர் கரந்தைப்பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது. (சது.)

வேளாளர் வருணம் -

{Entry: P16a__813}

முதற்சீர்ப் பொருத்தமாகச் சொல்லப்பட்ட பத்தனுள், வருணப் பொருத்தத்தின்கண், வேளாளர் வருணத்திற்குரிய எழுத்துக்களாகச் சொல்லப்பட்டவை ழ ள என்பன. (இவை சீர் முதலாகாமையின் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டா ஆயிற்று.) (இ. வி. பாட். 17)

வேற்றிசைப்பா -

{Entry: P16a__814}

சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசை பெற்று வரும் பா. (திவா. பக். 232)

வேறு வகை இரட்டைமணி மாலை -

{Entry: P16a__815}

வெண்பாப் பத்தும், விருத்தம் பத்தும் அந்தாதித் தொடை யான் பாடுதலும் இரட்டைமணிமாலையாம்.(இ. வி. பாட். 69)

வேனின்மாலை -

{Entry: P16a__816}

இளவேனிலையும் முதிர்வேனிலையும் சிறப்பித்துப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 73)

வைத்தியநாத தேசிகர் -

{Entry: P16a__817}

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; குட்டித் தொல்காப்பியம் எனப்படும் இலக்கணவிளக்கம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்; அதற்குத் தாமே உரை வரைந்துள்ளார். (பொருளதிகாரம் இறுதி இயலாகிய பாட்டியற்கு இவர் மைந்தர் உரை வரைந்தார் என்ப.) திருவாரூர்ப் பன்மணிமாலை, நல்லூர்ப் புராணம், பாச வதைப் பரணி முதலிய இலக்கியங்களும் இவரால் இயற்றப் பெற்றவை. படிக்காசுப் புலவர் இவருடைய மாணாக்கர். இவருடைய வேறு பெயர் வைத்தியநாத நாவலர் என்பது.

வைதாளி -

{Entry: P16a__818}

பொதுவாக அரசரைக் காலையில் துயிலெழுப்புமுன் புகழ்ந்து பாடும் பாட்டு. (மதுரைக். 671 நச்.)

வைநாசிகம் -

{Entry: P16a__819}

பாட்டுடைத்தலைவன் பிறந்த நாள் தொடங்கி எண்பத் தெட்டாங்கால் பொருந்திய நாள்; அஃதாவது இருபத்திரண் டாவது நட்சத்திரத்தின் கடைசிப் பாதம். இது நீக்கப்பட வேண்டிய நாள்களுள் ஒன்று.

பாட்டுடைத் தலைவன் பெயர்க்கு முதற்சீர் அமைக்கும் போது இது நீக்கப்பட வேண்டும். (இ. வி. பாட். 37)