Section Q17a inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 18 alphabetical subsections

  1. அ section: 34 entries
  2. ஆ section: 8 entries
  3. இ section: 25 entries
  4. உ section: 17 entries
  5. ஊ section: 1 entries
  6. எ section: 6 entries
  7. ஏ section: 3 entries
  8. ஐ section: 2 entries
  9. ஒ section: 3 entries
  10. க section: 41 entries
  11. ச section: 28 entries
  12. ஞ section: 1 entries
  13. த section: 21 entries
  14. ந section: 27 entries
  15. ப section: 40 entries
  16. ம section: 36 entries
  17. ய section: 1 entries
  18. வ section: 27 entries

Q17a

[Version 2l (transitory): latest modification 2017/02/24, 09:08, Pondy time]

மெய்ப்பாடு (321 entries)

[Part 1 of TIPA file Q17 (and pages 3-121 in volume printed in 2004)]

அ section: 34 entries

அகச்சுவை -

{Entry: Q17a__001}

தலைவனும் தலைவியும் களவும் கற்புமாக நிகழ்த்தும் நல்லற வாழ்வாம் இல்லறமாகிய அகப்பொருளில் மிகுதியாகப் பயின்றுவரும் சுவைகளாகிய உவகை, நகை, மருட்கை என்பன அகச்சுவையாம். (ம. சூ. பக்.6)

அகமெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__002}

சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம் என்னும் நான்கு நிலைகளை விளைக்கும் மன்மதபாணங்களால் உடல் வருந்துதலால் நிகழ்வன அகமெய்ப்பாடுகள்.

விளர்ப்பு, பசப்பு, மெலிவு, விதிர்ப்பு, துளக்கம், துயர்தல், தும்மல், சோர்தல், வேர்த்தல், வெருவுதல், விம்முதல், விரும் புதல், ஒப்பிலாமை உருகுதல், மயங்குதல், மூரி, உயிர்ப்பு, மூர்ச்சனை, முறுவல், காரிகை கடத்தல், கழிகண்ணோட்டம், இருந்துழி இராமை, இராகம் இகழ்தல், வருந்திக் காட்டுதல், வாய்நனி உறுதல், சிந்தனை கூர்தல், சேர்துயிலின்மை, கண்டது மறுத்தல், காட்சி விரும்பல், உண்டி விரும்பாமை, உரைத்தது மறுத்தல், கண்ணீர் வழிதல், கனவு நனி காண்டல் - என்பனவாக முப்பத்திரண்டு துறைகளாம். (‘அகமெய்ப் பாடு’ என்பது அகப்பொருளினுக்கு உரை இருபத்தேழனுள் ஒன்றாம். கா. 90) (வீ. சோ. 96. உரை மேற்.)

அச்சக்குறிப்பு நான்கு -

{Entry: Q17a__003}

அச்சத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி, மனத்தில் விளையும் பொருளாவது அச்சம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என்னும் நான்கு பகுதி பற்றியும் அச்சம் பிறக்கும் (தொ. பொ. 256 பேரா.)

அச்சம் எப்பொழுதும் பிறிது பொருள் பற்றியே வரும். (பேரா.)

‘என்னைப் பார்த்தால் அச்சமாக உள்ளது’ என்ற கூற்றில் உடலையும், உயிரையும் வேறாகக் கருதி, உடலைக் கண்டு அவ்வுடலகத்துள்ள உயிர் அஞ்சுவதாகக் கோடல் வேண்டும்.

இந்நான்கு குறிப்பேயன்றிப் புலவி முதலியன பொருளாகவும் அச்சம் பிறக்கும்.

வீரசோழியவுரையுள், அச்சக்குறிப்பு, மாற்றலர் விலங்கு மன்னவர் சோரர் என்னும் நான்கு பொருள் பற்றியும் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. (அச்சுப்பிழை திருத்தப்பட்டுள்ளது) இச் சொற்கள், அணங்கு விலங்கு தம்இறை கள்வர் என்பவற்றையே குறிப்பன. (வீ. சோ. 96 உரை. மேற்.)

அச்சச்சுவைக்குப் பொருளாவன -

{Entry: Q17a__004}

கூரிய பற்களையுடைய சிங்கம், வேங்கைப்புலி, முள் போன்ற விடம் பில்கும் பற்களையுடைய அரவு, கொடிய தீ, ஈன்றணிமை யுடைய பசு, மதம் பிடித்த யானை, ஒற்றைக்கால் பூதம், யமதூதர்கள், பிற கொடிய விலங்கு போல்வன.

(தொ. பொ. 249. பேரா.)

(வடநூலார் சுவைப்பொருளை விபாவம் என்ப)

‘அச்சத்தின் அகறல்’ -

{Entry: Q17a__005}

களவுக்காலத்தில் தலைவி தலைவன் இரவுக்குறிக்கு வரும் போது அவன் வரும் வழிகளில் உள்ள தீங்குகளை நினைத்து, அவற்றால் அவனுக்கு ஊறு நேருமோ என்று அஞ்சி, அவன் இரவுக்குறிக்கு வாராத வகை அவனை நீக்குதற்கு எழுந்த மெய்ப்பாடு இது. (தொ. பொ. 271. பேரா.)

இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகும் என்னும் அலர் அச்சத்தால் தலைவனுடைய கூட்டத்தின் அகன்று ஒழுகுதல்.

(தொ. பொ. 267 இள.)

இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக்காதல் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. பாரதி.)

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. 267. இள.)

‘தலைவற்கு வரும் தொழிலால் ஊறு நேருமோ? ‘எனத் தலைவி அஞ்சிக் குறியிடத்துச் செல்லாது சேயளாய் ஒழுகுதல்.

இது பெருமிதத்திற்குப் பொருளாக அமைவது.

(தொ. மெய்ப். 23. ச.பால.)

அச்சம் -

{Entry: Q17a__006}

தெய்வம், விலங்குகள், கள்வர், தமக்குத் தெய்வம் போன்ற தந்தை தாய் அரசன் போன்ற காரணங்களால் தம் உயிர்க்கும் பொருட்கும் துன்பம் நேருமோ என நடுங்கிக் கலங்குதல் ஆகிய சுவையுணர்வு. (நாடக. 53.)

அசைவு -

{Entry: Q17a__007}

இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. அசைவு - தளர்ச்சி ; அது தன் நிலையில் தாழ்தல். (தொல்.மெய்ப். 5 இள.)

எ-டு : ‘பொருளும் மனஎழுச்சியும் குறைந்து போதல், சாபம் எய்துதல், பற்றுக்கோடாவாரை இழந்து கலங்குதல், கயவர்களால் மனம் நோவத் துன்புறுத்தப்படுதல், காவல் இன்றிக் கலக்கமொடு திரிதல்,’

என்பன (செயிற்றியம்). அசைவு - பண்டைநிலை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.

மடலேறப் போகும் தலைவன், தன் தலைவி மின்னலைப் போலத் தோன்றித் தன் ஒளியையும் வடிவத்தையும் அவனுக்குக் காட்டி அவன் மனத்தைக் கவர்ந்ததால், தான் உறக்கமின்றி வருந்துகின்ற நிலையினைக் கூறுதல் (கலி. 139) தன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை.

மகளிர் மனத்தைப் பிணிக்குமாறு இளமை அழகொடு கூடியிருந்தவன் இப்போது தவம் செய்வோனாகி, நீர்பலகால் மூழ்கித் தலைமயிர் செந்நிறச் சடையாக, உணவுக்காகத் தாளிச்செடியின் இலைகளைக் கொய்கிறான் - என்பதனைப் பார்த்த மக்கள் வருந்துதல், பிறன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை. (புறநா. 252) (தொல்.பொ.253. பேரா.)

அடக்கம் -

{Entry: Q17a__008}

அடக்கம் என்பது மனம்மொழிமெய்யின் அடங்குதல். அது பணிந்த மொழியும் தணிந்த நடையும், உடையைக் காற்றில் பறக்காமல் ஒதுக்கிக் கொள்ளுதலும், வாயைக் கையால் பொத்திக்கொண்டு பேசுதலும் முதலாயின.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்’ (குறள். 126)

‘யாகாவா ராயினும் நாகாக்க’ (குறள். 127)

‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்’ (குறள். 124)

என்றாற் போல்வன. (தொ. பொ.256. இள.)

அடக்கம் என்பது உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை பணிந்த மொழியும், தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய் புதைத்தலும் போல்வன. (தொ. பொ. 260 பேரா.)

இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

அடக்கவுணர்ச்சி மெய்ப்பாடாகும். (247 குழ.)

அடக்கமாவது தன்னறிவு அடங்கி ஒடுங்கும் நிலை. உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகுவது தேசாசாரம் அல்லது மெய்ப்பாடு ஆகாது. இது வடநூலுள் ‘நிர்வேதம்’ எனப்படும். (தமிழ் வரலாறு. பக். 285.)

அணங்கு -

{Entry: Q17a__009}

அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் ஒன்று.

அணங்கு - பேயும், பூதமும், பாம்பும், பதினெண் தேவ கணங்களும், நரகத்துத் தலைவர்களும், துன்புறுத்தும் பிணந் தின்னும் பெண்டிர் முதலாயினோரும், இடியோசை முதலி யனவும் ஆம்.

எ-டு : ‘யானை தாக்க வரினும், பாம்பு தம்மை நோக்கி வரினும், வானத்தே இடி இரவில் அமைதியான நேரத்தே இடிக்கத்தொடங்கினும் கருக்கொண்ட மகளிர் நடுங்குதல், அணங்கு பொருளான அச்சத்தினாலேயாம்.’ (பெரும் : 134 - 136)

(தொ. மெய்ப். 8 பேரா.)

காட்சியளவில் காரணம் கூறமுடியாத இடத்துக் கார- ணத்தைக் கடவுள்மேல் ஏற்றிக் கூறுவது உலகியல். அம் முறையில் மலையில் உறையும் தெய்வங்கள் தீண்டி வருத்தும் என்ற நம்பிக்கையால், அணங்கு பொருளாக அச்சம் பிறக்கும். (மெய். 8 பாரதி)

அணிந்தவை திருத்தல் -

{Entry: Q17a__010}

தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மன நெகிழ் வான் உடை நெகிழ, அதனைத் தலைவி கையால் தடுத்துக் கடிசூத்திரம் (-அரைஞாண்) முதலாயினவற்றை அவ்வுடைக் குப் பாதுகாப்பாக மேலே இறுக்கி அணிதல். (தொ. பொ. 263 பேரா.)

அரைஞாண் தோள்ஆடை முதலியவற்றை நெகிழ்ச்சி போற்றி இறுக்கி அணிதல் என்றவாறு.

இது மூன்றாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (259)

களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இது மூன்றாம் கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

அணிந்தன களைஇ ஆடை பெயர்த்துடுத்தல் -

{Entry: Q17a__011}

தலைவன் பிரியப்போவதைக் குறிப்பான் அறிந்த தலைவி, தன் மங்கலஅணி நீங்கலான அணிகலன்களையும் பட்டாடையை யும் நீக்கி எளிய உடை உடுத்து அவன்முன் தோன்றுதல்.

இது காம நுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று.

இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்பதன் பாற்படும். (வீ. சோ. 90) (வீ. சோ. 96 உரை மேற்.)

அபிநயம் -

{Entry: Q17a__012}

அஃதாவது மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் அங்கச் செய்கை. ‘மகளிர் தங்கள் அபிநயம்’ (இரகு. தசரதன் சா. 30) (L)

அரற்று -

{Entry: Q17a__013}

அரற்றாவது உறக்கத்தில் தன்னை மறந்து பிதற்றல். அது சாதாரண நிலையிற் பேசும் ஏனைய சொற்களினின்று வேறு படுதலின் அரற்று என ஒரு மெய்ப்பாடாயிற்று. அரற்று என்பது ஒரு பொருளைப் பலகால் கூறுதல். அஃது அப்பொருளின்மேலுள்ள காதலால் கூறலின், அதுவும் ஒரு மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.)

அரற்று என்பது அழுகையைப் போலாது, தனக்குள்ள குறையைப் பல சொல் வாயிலாகக் கூறிப் புலம்புதல். அது பரணியில் காளிதேவியிடம் பேய்கள் தம் பசிக்கொடுமை பற்றி முறையிடுவது போல வழக்கிலுள்ளோர் கூறுவன. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (தொ. பொ. 260 பேரா.)

இதனை வடநூலார் ‘க்லானி’ என்பர்.

அருள் -

{Entry: Q17a__014}

தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.

பிறர் வருத்தத்துக்குப் பரியும் கருணையே அருளாகும். (தொ. பொ. 90 இள. உரை)

எல்லா உயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருள் உடையராய் இருத்தல். அதுவும் காமத்துக்கு இன்றியமையாததோர் உறுப்பு. (273 பேரா. உரை)

அருள் - பிறர் வருத்தம் பொறாப் பரிவுடைமை.

(தொ. மெய்ப். 25 பாரதி)

பொருள்முற்றி மீளும் தலைவன், தன் தேர்மணி ஒலி இணை யாக இருக்கும் வண்டுகளை அஞ்சுவித்துப் பிரித்துவிடும் என்று கருதி மணிகளின் நாக்களைக் கட்டிவிட்டு ஒலியின்றி வந்தான் (அகநா. 4) என்பது அருளுடைமை.

அருள் மிக உடைமை -

{Entry: Q17a__015}

தலைமகள்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. அஃது இரவுக்குறிக்கு வந்து மீண்ட தலைவன் இடையூறின்றித் தன்னூர் மீண்டு சென்றானோ என்று கவலை கூர்தல் (அகநா. 88) போல்வன. (தொ. பொ. 268 இள.)

தலைவி களவுக்காலத்துப் போலத் துன்பம் மிகுதலின்றி அருள் மிகத் தோன்றிய நெஞ்சினளாய்த் தன் கணவர்

‘நின்ற சொல்லர், நீடுதோன்று இனியர்

என்றும் என்தோள் பிரிபு அறியலரே’ (நற். 1)

என்றாற் போலக் கருதி மகிழ்தல் (272. பேரா.)

கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. முன்பு களவில் தலைவன் அருளை வேண்டிநின்ற தலைவி, கற்பில் தான், கணவனை அவன் செய்த தவறுகளையும் புறக்கணித்து அருளொடு பேணும் பெற்றி.(மெய்ப். 24 பாரதி)

அருளல் -

{Entry: Q17a__016}

அஃதாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல். ‘அரிதாய அற னெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி. 11) என்றாற் போல வருவது. (அருளியோர் - நம்மால் அருள் செய்யத் தக்கவர்) (தொ. பொ. இள. 256)

மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல். கருணை அழுகை யின்பாற்படும் ஆதலின், அருள் கருணையின் வேறாகும்.

(260 பேரா.)

இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. துணைமெய்ப்பாடு 32இல் இதுவும் ஒன்று.

இதனை அருளால் விளையும் துக்கமாகிய ‘விஷாதம்’ என்பர்.

மக்கள் முதலிய சுற்றத்தார்துயர் கண்டு வருந்தி அதனைப் போக்க முயலுதல்; அவ்வருத்தத்தால் பிறந்த வேறுபாடு இங்கு மெய்ப்பாடாகும். (247 குழ.)

அல்குல் தைவரல் -

{Entry: Q17a__017}

தலைவியைத் தலைவன் தீண்டியவழித் தலைவி மனம் நெகிழ்தலின் அதன் செயலாகத் தலைமுடி அவிழ, காதணி ஒன்று கழல, வளையல்கள் நெகிழ, உடையும் சிறிது நெகிழ, அதனைப் பலகாலும் இறுக்கி உடுத்து உடைநெகிழாதவாறு தன்கையால் அதனைப் பாதுகாத்துக் கொள்ளுதல்.

வயிற்றின் அடிப்பகுதியில் உடுக்கப்பட்ட ஆடை நெகிழாத வாறு கைகளால் போற்றிக் கொள்ளுதல்.

இது மூன்றாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 259)

களவிற் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப் பாடுகளுள் இது மூன்றாம் பகுதியின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.)

நெகிழ்ச்சி போற்றி உடுத்த ஆடை உடம்பொடு படியுமாறு இடைக்கீழ் அவ்வுடை உடம்பொடு பொருந்தும் இருப்புறுப் பைத் தடவி உடையின் மடிப்புக்கள் நன்கு படியச் செய்தல்.

(தொ. பொ. மெய்ப். 15 பாரதி)

‘அல்லல் நீத்த உவகை’ -

{Entry: Q17a__018}

துன்பம் நீங்கிய உவகை எனவே, பிறர் துன்பம் கண்டு வரும் உவகை உண்மை உவகை ஆகாது.

பிறருக்குத் தீங்கு செய்து பெறும் மகிழ்ச்சி எதுவும் அழுகை இளிவரல் முதலிய உணர்வின்வழித்தாம் ஆகலின் அதனை விலக்கி, யாண்டும் எக்காலத்தும் துன்பம் தீர்ந்த இன்ப உவகையே உவகையாகும் என்பதனை ‘அல்லல் நீத்த உவகை’ என்பதனான் பெற வைத்தார். (தொ. பொ. 259 பேரா.)

அலை -

{Entry: Q17a__019}

வெகுளி என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவதாகும்.

அலை - வைதலும் புடைத்தலும் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 254.) கோல்கொண்டு அலைத்தல் முதலாயின என்பர் பேராசிரியர். (258)

புலியால் துன்புறுத்தப்பட்ட யானை புலியொடு பொருது வென்ற பின்னும் அப்போரிடுதலை நினைத்துக் கோபம் கொண்டமை போல, அதிகமான் தன்னூர் வந்து தனக்குப் பிறந்த புதல்வனைக் கண்டபோதும் தான் பகைவருடன் போரிட்ட செயலை நினைத்த கோபம் மாறாமல் கண் சிவந்து காணப்பட்டான் என்பது இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 100)

அவலம் (1) -

{Entry: Q17a__020}

பிறரால் இகழப்பட்டு எளியவனாகும் இளிவும், தந்தை தாய் சுற்றத்தார் போல்வாரை இழந்து வருந்தும் இழவும், பண்டை நல்ல நிலைகெட்டு வருந்தும் அசைவும், வறுமையும் என்னும் இவை காரணமாகத் துயரம் உண்டானபோது, விம்முதலும் ஏங்குதலும், புலம்பி அரற்றுதலும், கண்ணீர்விட்டு அழுத லும், மயங்கி விழுதலும் அவலச் சுவை என்பர்.

தலைவனைப் பிரிந்து இரங்கும் தலைவியின் துயர் அவலம் ஆகாது. (நாடக. 51, 52)

அவலம் (2) -

{Entry: Q17a__021}

அவலமாவது சோகம். இனிய சுற்றமும் பொருளும் இழந்தத னால் வரும் உள்ளத்தின் உளைவு அவலம் எனப்படும். இஃது அவலச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54)

அவன்தமர் உவத்தல் -

{Entry: Q17a__022}

தலைவி தலைவன் சுற்றத்தையும், அவன் நாடு மலை ஊர் இவற்றின் தொடர்புடைய உயர்திணை அஃறிணைப் பொருள்களையும் தனிப்பட்ட முறையில் மகிழ்வொடு விரும்புதல்.

தலைவன்புதல்வனை வழிமுறைத்தாய் கண்டு மகிழ்ந்து வரவேற்றலும் (கலி. 82), தெருவில் செல்லும் பாணன் தலைவ னது ஊரைச் சார்ந்தவன் என்பதனால் தலைவி அவனிடத்தே தனிப்பட்ட கருணை காட்டுதலும், தலைவனது மலையி னின்று அடித்து வரப்பட்ட காந்தள் செடியின் கிழங்கைத் தன்மனைத் தோட்டத்தே வைத்து வளர்த்தலும் (குறுந். 34) போல்வன அவன்தமர் உவத்தலாம்.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266)

அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து, களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந் துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாம். (270 பேரா.)

அவன் புணர்வு மறுத்தல் -

{Entry: Q17a__023}

தலைவி அறத்தொடு நின்றபின் தமரை அஞ்சிப் பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்த ‘திளைப்பு வினை மறுத்தல்’ என்ற மெய்ப்பாடு போலன்றி, வரைதல் வேட்கையால் இரவுக்குறி யையும் பகற்குறியையும் மறுத்தல். இங்ஙனம் மறுக்கவே, களவொழுக்கம் தவிர்த்துத் தலைவன் தலைவியை விரைவில் மணப்பான் என்பது பயன். (தொ. பொ. 271. பேரா.)

தலைவன் புணர்ச்சிக்கு வாராதவழி, முன்பு போல அன்றி, தலைவிதானும் மனம் வருந்தாது நிற்கும் நிலை என்பர் இளம்பூரணர் (பொ. 267)

இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் பாரதி (271).

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர் (267).

அழிவில்கூட்ட மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__024}

அழிவில் கூட்டம் - பின் கெடுதல் இல்லாத கூட்டம். திருமணம் ஆகாமல் நிகழ்த்தும் களவுக்கூட்டம், இடையூறுக ளான் அழிவுறுமோ என்று அஞ்சிக் கூடும் கூட்டம் ஆதலின், வரைந்து எய்தும் கூட்டம் எவ்வித இடையூறுமின்றிக் கூடும் கூட்டம் என்பது புலப்பட, ‘அழிவில் கூட்டம்’ எனப்பட்டது. தான் வரைந்தெய்தும் கூட்டத்தை விரும்பும் வேட்கை புலப் படத் தலைவியின்பால் நிகழும் மெய்ப்பாடுகள் அழிவில் கூட்ட மெய்ப்பாடுகள் எனப்பட்டன. அவை முட்டுவயின் கழறல், முனிவு மெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பனவாம். இவற்றை வரைதல்வேட்கையைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகள் என்றும் கூறலாம். (தொ. பொ. 271 பேரா.)

அழுகைக் குறிப்பு நான்கு -

{Entry: Q17a__025}

அழுகை - அழுகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழித் துயரத்தொடு மனச்சோர்வைத் தருவது. இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கு குறிப்புப் பற்றியும் அழுகை நிகழும்.

இவை, தன்னைப் பிறர் இகழ்ந்தவழி வருந்துதல், ஒருவர் மற்றவரால் இகழப்பட்டதைத் தான் கண்டு வருந்துதல், அரிய பொருள்களைத் தான் இழந்து வருந்துதல், பிறர் இழந்ததைக் கண்டு தான் வருந்துதல், தன்னிலையில் தாழ்ந்த தளர்ச்சி யால் தான் வருந்துதல், பிறர்தளர்ச்சி கண்டு தான் வருந்துதல், தன் நல்குரவு கண்டு தான் வருந்துதல், பிறர் துயர்உறும் நல்குரவு கண்டு தான் வருந்துதல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறர்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.

இவையேயன்றி வீரம்பற்றி உவகைக் கண்ணீர் வடித்தலும் அழுகையின்பாற்படும். (தொ. பொ. 253 பேரா.)

தன்கண் தோன்றிய துயரம் பற்றிய சுவையை அழுகை எனவும், பிறன்கண் தோன்றிய துயரம் பற்றித் தன்கண் நிகழும் சுவையைக் கருணை அல்லது இரக்கம் எனவும் கொண்டு சுவையை ஒன்பது கூறாகக் கருதலும் உண்டு. (251 பேரா.)

வருத்தம் இகழ்வு வலியின்மை வறுமை என்ற நான்கனையும் இரக்கத்திற்குரிய குறிப்புக்களாக வீரசோழியம் கூறும்.

(வீ.சோ. 96 உரை மேற்.)

அழுகையைத் தோற்றுவிப்பன -

{Entry: Q17a__026}

தன் செல்வ நிலைமையையும் இழந்து துணைவர்களையும் பிரிதல், மேம்பாடு பொருந்திய தன் தகுதி நீங்குதல், சிறை யிலடைக்கப்பட்டுச் செயலற்றிருத்தல், தேவையான பொருள் களும் இன்றி வாடியிருத்தல், சாபம் எய்துதல், சேர்ந்தவர் களுக்குத் தவறிழைத்து வருந்துதல், மனத்தை அடக்க இயலாது கலக்கமொடு தடுமாறுதல், கடகம் அணிந்த கையில் வெறும் மஞ்சட் கயிற்றோடிருத்தல், முடி சூடிய தலையால் பிறருடைய அடிகளில் வீழ்ந்து வணங்குதல், களிறும் பரியும் ஊர்ந்தவன் கால்கள் விலங்கிடப்பட்டு வருந்துதல், பொன் னணி அணிந்த மார்பு புழுதிபடத் தரையிற் கிடத்தல், கயவர் களால் மனம் நோவுமாறு துன்புறுத்தப்படுதல், கொலைக் களம் போர்முனை இவற்றால் வருந்துதல், பிறர் துன்புற்று அழும் அழுகுரல் கேட்டல், பிறர் தம் குறைகளைக் கூறி வருந்தும் புலம்பலைக் கேட்டல் - ஆகிய செய்திகள் அவலத் தைத் தோற்றுவிப்பனவாம் (செயிற்றியம்). (தொ.பொ. 249 இள.)

அறன் அழித்து உரைத்தல் (1) -

{Entry: Q17a__027}

பிரிவிடைத் தலைவி அறத்தினை அழித்துக் கூறுதல். பிரிந்த தலைவன் கூறிய பருவம் வந்தவழியும் அவனிடமிருந்து தூதுகூட வரக் காணாது வருந்தும் தலைவி, தன்னை ஆற்று விக்க வந்த தோழியிடம், “முன்பெல்லாம் ‘நாமிருவரும் வேறு அல்லம்’ என்று சொல்லிய தலைவர் இப்பொழுது என்னி டம் சிறிதும் அன்பில்லாது பிரிந்து கவலையின்றி இருக்கும் நிலையினை எண்ணி என்னுயிர் கழிகின்றது” (குறள். 1209) என்று கூறி, தலைவன் வருந்துணையும் ஆற்றி இல்லின்கண் இருந்து நல்லறம் செய்யும் மகளிர்க்கு உரிய அறத்தினை அழித்து உயிர் போவதாகக் குறிப்பிடுவது இம்மெய்ப்பாடு. இது பெருந்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளில் ஒன்று. (தொ. பொ. 266 இள.)

அறன் அழித்து உரைத்தல் (2) -

{Entry: Q17a__028}

களவினும் கற்பினும் பிரிவிடைத் தலைவி காதல் மிகுதியால் அறன் அழிய வெறுப்பது போலத் தலைவனை

ஏதி லாள ன் இவண்வரின்

.......................................................................

எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே!’ (குறுந். 191)

எனவும்‘யாரும் இல்லை தானே கள்வன் ’ (குறுந். 25) எனவும் ‘அளித்(து) அஞ்சல் என்றவர் நீத்ததால் அவர்க்கே தவறு ’ (குறள். 1154) எனவும், ‘வேறல்லம் என்பார், அளியிலர் ’ (குறள். 1209) எனவும் கூறுவனவும், தாயை ‘ அறனில் யாய் ’ (ஐங். 385) எனவும் ‘ அறனில் ன்னை ’ (குறுந். 262) எனவும் கூறுவன வும், அறன் அழிவது போலக் கூறினும், காதன்மையால் எழுதலான் மெய்யாக அறனழிக்கும் நோக்குடையன ஆகாதனவாகக் கூறுதல். (தொ. பொ. மெய்ப். 22 பாரதி)

அறன் அழித்துரைத்தல் (3) -

{Entry: Q17a__029}

அறனழித்துரைத்தல் : பிரிவுத் துன்பத்தால் உளம் நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்தில் அறமில்லை என்று வெறுத்துப் பேசுதல். (தொ. மெய்ப். 22 ச.பால.)

அறன் அளித்து உரைத்தல் -

{Entry: Q17a__030}

பிரிவிடைத் தலைவி தலைவன்வரவு குறித்து நினைத் திருக்கையில், பல்லி நல்ல இடத்திலிருந்து நன்னிமித்தமாக ஒலித்தல் முதலிய சகுனம் கண்டு, தனக்கு அச்சகுனங்கள் வாயிலாக அருள் செய்யும் தருமதேவதையை வழிபட்டுப் பரவுதல். அறனளித்து உரைத்தல் - அறக்கிழவனை அன்பு செய்து வழிபாடு கூறல். (தொ. பொ. 270 பேரா.)

அறன் - ஞாயிறு திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவும் ஆம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டுமெனப் பல்லியைச் சொல்லும்படியும் காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலும் ஆம். அளித்துரைத்தல் - அன்புடன் பரவுதல். (பொ. 257 குழ.)

இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும். (பேரா.)

அறிமடம் -

{Entry: Q17a__031}

ஒரு பொருளையே பற்றி நிற்கும் அறிவுடையராம் தன்மை. விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் என்றது, விளை யாட்டைப் பற்றியே நிற்கும் அறிவுடையளாயிருத்தலை.

(தொ. பொ. 264 பேரா.)

அன்பு -

{Entry: Q17a__032}

அன்பு என்பது பயின்றார்மாட்டுச் செல்லும் காதல். அஃது உடம்பிலுள்ள ஏனைய புறத்துறுப்புக்கள் போலாது, உடம் பின் அகத்து உறுப்பாய் நல்வாழ்விற்கு இன்றியமையாதது.

(தொ. பொ. 256 இள.)

அன்பு என்பது அருளுக்கு அடிப்படையாய் மனத்தின்கண் நிகழும் நேயம். அன்புடையார்க்குப் பிறரிடம் துன்பம் கண்ட வழிக் கண்ணீர் சொரிதலினால் அவரிடத்துள்ள அன்பு டைமை வெளிப்படும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப் படுத்தலால் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 260 பேரா.)

இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் சபலதை என்ப.

குடத்துள் விளக்கும் உறையினுள் வாளும் போல அன்பு காட்டலாகாப் பொருள். அன்புடையார்கண் நிகழும் சாவின் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கி னிது மொழிதல், புணர்வுநனி வேட்டல், பிரிவு நனி இரங்கல் முதலிய செயல்களைக் கொண்டே அவர்மாட்டு அன்பு உள்ளது என்பதனை அறிந்துகொள்ளல் வேண்டும். (இறை. அ. 1 உரை)

‘அன்பு தொக நிற்றல்’ -

{Entry: Q17a__033}

தலைவன் தவறு செய்தானாகத் தோழி கூறியவழியும், தலைவி, “கொடியன் ஆயினும் ஆக, அவனே தோழிஎன் உயிர்கா வலனே” (சிற்றெட்டகம்) என்றாற் போலத் தலைவ னிடம் தான் கொண்டுள்ள அன்பு புலப்பட இருத்தல். ‘அன்புமிக’ என்பதும் பாடம். (தொ. பொ. 268 இள.)

விரிந்த அன்பெல்லாம் ஒருங்கு கூடிநிற்றல். அஃதாவது களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் கற்புக்காலத்துத் தலைவியிடம் இல்லறம் பேணிப் புதல்வற்பயந்து விருந்தோம் புதற்கண் பெருகிய விருப்பினாலே ஒருங்கு தொக நிற்றல்.

(தொ. பொ. 272 பேரா.)

தலைவன் செய்த கொடுமைகளையும் தவறுகளையும் மனம் கொள்ளாமல் அவன்பால் காதல் குறையாது ஒழுகுதல்.

(தொ. மெய்ப். 24 பாரதி)

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

அன்பு தொக நிற்றல் : பொருள் விளக்கம் -

{Entry: Q17a__034}

புரையறம் தெளிந்த அறிவினளாயினும், புலவியானது புணர்ச்சி வகையைத் தோற்றுவித்தலின், தலைவன்மாட்டுச் செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல். இதுவும் உவகைக்குப் பொருள்.

(தொ. மெய்ப். 24 ச. பால.)

ஆ section: 8 entries

ஆக்கம் -

{Entry: Q17a__035}

இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது. (தொ. மெய். 7)

ஆக்கமாவது ஒன்றன் வளர்ச்சி கண்டு வியத்தல்.

எ-டு : நன்னிலம் சார்பாகத் தோன்றும் மரம் முதலாயின தம் அளவின் மீறி வளர்ந்தவழி வியத்தலும், யாதொன்றும் இல்லாத வறியவன் செல்வனாயவழி அதற்குக் காரணம் உணராதான் வியத்தலும், இளையான் வீரம் கண்டு வியத்த லும், பிறவும் உலகியலில் வியக்கத் தகுவன கண்டு வியத்தலும் போல்வன.

வினைமுடித்து மீண்ட தலைவன், தேரினைப் பாகன் விரை வில் செலுத்தி ஊர் அடைந்தமை கண்டு வியத்தல் போல்வன. (அகநா. 384 இள.)

ஆக்கம் - ஒன்று ஒன்றாய்த் திரிதல்

{Entry: Q17a__036}

ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட அளவில் தம் நோய் நீங்கி நரிவெரூஉத்தலையார் தம் பழைய உடம்பு பெற்றமை தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பாகும். சிறிய ஆலம்விதை பெரிய மரமாதல் (நாலடி. 38) பிறபொருட்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. (பேரா.)

ஆக்கம் - அறிவுடை மக்கள் சமைப்பாலாவது. ஆக்க மருட்கை செயற்கையில் தோன்றும் அரும்பொருள்கள் விளைக்கும் வியப்பாகும். வானஊர்தி, பேசும்படம், வானொலி போல்வன ஆக்க மருட்கை. (பாரதி.)

‘ஆங்கு நெஞ்சு அழிதல்’

{Entry: Q17a__037}

தலைவி அறத்தினை அழித்துக் கூறுமிடத்து, “என் நெஞ்சம் தலைவன் வாராவிடில் ‘வரவில்லையே’ என்றும், வந்தால் ‘பிரிந்துவிடுவானே’ என்றும் எப்பொழுதும் துன்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.” (குறள் 1295) என்றாற் போலத் தன்வாழ்க்கை துன்பமாகிவிட்டமை நினைந்து மனம் நோதல். (பொ. 266 இள.)

களவிலும் கற்பிலும் பிரிவிடைத் தெய்வத்தை வழிபட்டு உரைக்குங்கால், “ஞாயிறே! என்னை வருந்துமாறு விடுத்துப் பிரிந்த என் தலைவனைத் துன்புறுத்துவது உன் கருத்தாயின், அவனோடு சேர்த்து என்னையும் துன்புறுத்தி அழித்துவிடு” எனத் தலைவி தன் நிலை கலங்கிப் பேசுதல். (கலி. 143) (தொ. பொ. 270 பேரா . )

சொல்லளவில் அறன் அழிவது போலக் கூறிய தலைவி, பின் அங்ஙனம் கூறியதற்கு மனம் வருந்தி, “தோழி! நமக்கு நம்தலைவர் நம்தாயும் தந்தையும் போல்வார். நம் உயிர் போவதாயினும் அவரைக் குறை கூறுதல் கூடாது.” (குறுந். 93) என்றாற் போலக் கூறுதல். (மெய்ப். 22. பாரதி)

இது பெருந்திணை மெய்ப்பாடு என்பது இளம்பூரணர் கருத்து. களவிற்கும் கற்பிற்கும் பொதுவாகப் பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து.

ஆசியம் -

{Entry: Q17a__038}

ஹாஸ்யம் என்னும் நகைச்சுவை. (L)

ஆண்டு -

{Entry: Q17a__039}

தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.

ஆண்டு என்பது ஒருவரின் ஒருவர் மூத்தவர் ஆகாமல் ஒத்த பருவத்தர் ஆதல். அது பதினாறு பிராயத்தானும் பன்னி ரண்டு பிராயத்தாளும் ஆதல். (தொ. பொ. 90 இள. உரை))

யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனில், பன்னிரண்டு ஆண்டும் பதினாறு ஆண்டுமே பெண்மையும், ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது வேத முடிவு ஆதலின், அதுவும் ‘ஒப்பு’ எனவேபடும். (தொ. பொ. 273 பேரா.)

ஆண்டு - காமக்குறிப்புத் தோன்றிய பருவம். பொ.260 குழ.

‘என்தோள் எழுதிய தொய்யிலும்’ (கலி. 18)

என்பதனால், தலைவி தொய்யில் எழுதிக்கொள்ளும் பருவத் தாள் எனவும் தலைவன் அவள்தோளில் தொய்யில் எழுதும் பருவத்தான் எனவும் இளமைச்செவ்வி ஒத்தவாறு. (தொ. பொ. நச். உரை)

ஆண்மை -

{Entry: Q17a__040}

தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.

ஆண்மையாவது ஆள்வினையுடைமையும் வலி பெயராமை யும் ஆம். தலைவிமாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிருக்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். (தொ. பொ. 90 இள. உரை)

ஆண்மை - ஆள்வினை; அஃது ஆண்பாற்கு உரியது. குடி யாண்மை என்புழி, ஆண்மை இருபாலார்க்கும் உரித்து. (273 பேரா.)

ஆண்மை - ஆளும் திறம். இது காதலர்க்கு இன்றியமையா ஒப்புவகையுள் ஒன்று எனப்படுதலின், இருபாலார்க்கும் பொது. மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆளும் தொழில் உண்டென்பது தெளியப்படும். (தொ. பொ. மெய்ப். 25 பாரதி)

தலைவன் ஊக்கத்தொடு பொருள் தேடப் பிரிய அவன் வருமளவும் தலைவி இல்லிருந்து நல்லறம் செய்தல் இருவ ருக்கு முரிய ஆண்மைச் செயல்களாம். (அகநா. 93)

ஆண்மையாவது ஆளுந்தன்மை. அஃது ‘ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்’ (குறுந். 43) என இருபாலையும் உணர்த்திற்று. எனவே, ஆண்மை தலைவற்கும் தலைவிக்கும் ஒப்ப உரித்து. (தொ. சொ. 57 நச்.)

ஆராய்ச்சி -

{Entry: Q17a__041}

ஆராய்ச்சி என்பது ஒருபொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்.

ஆராய்தல் எனினும், தெரிதல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும்.

‘நன்மையும் தீமையும் நாடி’ (குறள். 511)

‘ஆயும் அறிவினர்’ (குறள். 918)

என ‘ஆராய்தல்’ தோன்றியவாறு. (தொ. பொ. 256 இள.)

ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்றென்றும் தீதென்றும் ஆராய்தல். அவ்வாராயும் உள்ளக்குறிப்புப் புறத்தே புலனா வது மெய்ப்பாடாம். இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண் டனுள் ஒன்று. (260 பேரா.)

ஆறாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__042}

காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப் பட்ட பத்து அவத்தையுள் ஆறாம் அவத்தையாகும் நாணு வரை இறத்தல் என்பதன்கண் தலைமகட்கு நிகழும் மெய்ப் பாடுகள் புறம்செயச் சிதைதல், புலம்பித்தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்னும் நான்குமாம். (தொ. பொ. 262 இள.)

இவற்றைக் களவில் புணர்ச்சிக்குப் பின் தலைவிபால் நிகழும் மூன்று பகுதியவான மெய்ப்பாடுகளுள் மூன்றாம் பகுதிக்கு உரியனவும், பொதுவாகக் களவின் ஆறாம் பகுதிக்கு உரியன வும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (266 பேரா., 253 குழ.)

இவை நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். (மெய்ப். 18)

இ section: 25 entries

இசைமை -

{Entry: Q17a__043}

இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. இசைமையாவது இன்பமும் பொருளும் மிகுதியாகக் கிட்டுவன ஆயினும், பழியைத் தரும் செயல்களைச் செய்யாமை.

‘கழியக் காதலர் ஆயினும் சான்றோர் // பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ (அகநா. 112 : 11, 12)

என இவ்வெஃகாமைக்கு ஏதுவாகிய பெருமிதக் குறிப்பு இவ்வடிகளில் இசைமை எனப்பட்டமை காண்க. (தொ. பொ. 257 பேரா.)

இடந்தலைப்பாட்டிற்கு உதவும் துணை மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__044}

கைம்மிகல் முதல் கனவு ஈறாகிய எட்டும் இடந்தலைப் பாட்டுக்கு உதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோம சுந்தர பாரதியார் கருத்து.

கைம்மிகல் : அடங்காத காதல் பெருக்கு. ‘காதல் கைம்மிக’ ‘காதல் கைம்மிகல்’ (பொ. 115 நச், 271 பேரா.) என்பன தொல்காப்பியம்.

நலிதல் : மெலிவு : அஃதாவது வலிஅழிவு.

சூழ்ச்சி : நேராக் கூட்டம் (-முன்பு இடையீடுபட்ட களவுப் புணர்ச்சி) நிகழ, வழி ஆராய்தல்.

வாழ்த்தல் : காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்தல்.

‘வாழி என் நெஞ்சே’ (குறள் 1242)

‘நீ வாழி பொழுது’ (குறள் 1221)

‘வாழி அனிச்சமே’ (குறள் 1111)

‘காதலை வாழி மதி’ (குறள் 1118)

‘புன்கண்ணை வாழி மருள்மாலை’ (குறள் 1222)

என்பன போல வருவன காண்க.

நாணுதல் : வெள்குதல்

‘காமமும் நாணும்’ (குறள் 1163)

‘காண வந்து நாணப் பெயரும்’ (குறுந். 212)

என்பன காண்க.

துஞ்சல் : காதல் கனவுற உறங்கல்

‘கயலுண்கண் யான்இரப்பத் துஞ்சின்’ (குறள் 1272)

‘துஞ்சுங்கால் தோள்மேல ராகி’ (குறள் 1218)

அரற்று : வாய்விடல்; அஃதாவது உறக்கத்தில் தன்னை அறியாது மனத்துள்ள மறைவான கருத்தினை வெளியிடல்.

கனவு : தூக்கத்தில் தோன்றுவது; இதுவும் காதலின் கனிவினால் உண்டாவதாம்.

‘இன்துயில் எடுப்புதி கனவே’ (குறுந். 147)

எனத் தலைவன் கனாக் காண்டலும்;

‘கனவினான் என் எம்மைப் பீழிப்பது’ (குறள் 1217)

எனத் தலைவி கனாக் காண்டலும் போல்வன.

இவை எட்டும் இடந்தலைப்பாடு என்னும் இரண்டாம் காதல் நிலைக்குச் சிறப்பாக உரியனவாம். (தொ. பொ. மெய்ப். 12 பாரதி)

இடுக்கண் -

{Entry: Q17a__045}

இடுக்கண் என்பது துன்புறுதல். கையாறு என்பது இன்பம் பெறாமையால் வரும் துன்பம். இடுக்கண் - துன்பமாயின ஒருவனை வந்தடைதல்.

‘இடுக்கண் அடுக்கி வரினும்’ (குறள் 625) என்பதனால் துன்பம் பலவாகத் தொடர்ந்தும் ஒருவனை வந்தடைதல் பெறப்படும். (256. இள.)

இடுக்கண் என்பது மலர்ந்த பார்வையின்றி மயங்கிய பார்வை யோடு இருக்குமாறு துன்புறுதலால் உள்ள, பரிதாபமான நிலை. துன்பம் தாக்கியதால் கண் இடுங்கியதால் இடுக்கண் எனப்பட்டது.

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

(260 பேரா.)

கையாறு மனத்தின்கண் நிகழ்வது; இடுக்கண் உடம்பினும் மனத்தினும் சேர்ந்து நிகழ்வது. (தொ. பொ. இள)

வடநூலார் இதனைச் ‘சிரமம்’ என்பர்.

இடுக்கண் - பெருநோக்கின்றிக் குறுகிய நோக்கத்தால் வரும் இரக்கம். (247 குழ.)

இயற்கைப்புணர்ச்சிக்கு உதவும் துணைமெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__046}

உடைமை முதல் அன்பு ஈறாகிய எட்டும் இயற்கைப் புணர்ச் சிக்குதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோமசுந்தர பாரதியார் கருத்து.

உடைமை : அன்பின் வழித்தாகும் உரிமை உணர்வு. தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மற்றவர்க்குப் பொரு ளாதல் காதலின் முதற்படி.

இன்புறல் : ஒருவர் மற்றவர்க்கு உடைமையாகும் உரிமை யுணர்வால் விளையும் மகிழ்ச்சி.

நடுவுநிலை : காதலும் கடமையும் ஒன்றோடொன்று மோது மாறு இடம் கொடுக்காத மனச்செம்மை; தன்னை மறக்கும் கற்புக் காதலின் உணர்வு இது.

அருளல் : தவறு உணரா அன்பின் பெருக்கம். ‘காணுங்கால் காணேன் தவறாய’ (குறள் 1286) என்னும் மனநிலை.

தன்மை : தான் அதுவாகும் இயல்பு; ‘நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்னும் மனமாட்சி (தொ. பொ. 100: 3 நச்.)

அடக்கம் : தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யால் பணிதல். மறை பிறர் அறியாமல் காக்கும் நிறை எனினுமாம்.

வரைதல் : நாணத்தின் எல்லையைக்கடந்து முன் உவந்தன பலவற்றையும் வெறுத்து விலக்கும் மனநிலை. இது காதலின் எழுவது.

அன்பு : அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ் வது.

இவை எட்டும் காதலின் முதல் நிலையாம் இயற்கைப் புணர்ச்சியொடு தொடர்வன.

(தொ. மெய்ப். 12 பாரதி)

இரண்டாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__047}

காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள், இரண்டாம் அவத்தையாகும் வேட் கைக்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணிதைவரல், உடை பெயர்த்துடுத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 258 இள.)

இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவிக்கு நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பார் பேராசிரியர்.

(தொ. பொ. 262 பேரா.)

இவை நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாம் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். தொ.மெய்ப். 14

இராகம் இகழ்தல் -

{Entry: Q17a__048}

தலைவனிடம் உள்ள வேட்கை மிகுதியால் அவன் பிரிந்த விடத்துத் தலைவி தான் பண்டு விரும்பிய பொருள்களை யெல்லாம் இப்பொழுது வெறுத்தல்; பூவும் சாந்தும் அகிலும் ஆரமும் முதலாயின விரும்புதலைத் தவிர்தல். இந்நிலைக்குக் காரணம் தலைவியது உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தவர்க்கே புலனாம் ஆதலின் இந்நிலை அகமெய்ப் பாடுகள் 32இல் ஒன்று (கா. 90) (வீ. சோ. 96 உரை மேற்.)

இருகையும் எடுத்தல் -

{Entry: Q17a__049}

தலைவன் தன்னைத் தீண்டியதால் தன்கண் ஏற்பட்ட மனநெகிழ்வைப் போக்கத் தலைவி மிகமுயன்றும் இயலாது போகவே, நிறையழிதலின், கைகள் தாமே தலைவனைத் தழுவ அமைவாக இருப்பனபோலத் தலைவி இருகைகளையும் முன்பக்கத்தே விரித்து அசைத்தல்.

தலைவனைத் தழுவத் தலைவி இருகைகளையும் விரித்து அசைத்தல். இது மூன்றாம் அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதிப்படும் 12 மெய்ப்பாடுகளுள் இது 3ஆம் பகுதி யின் இறுதி மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

இம்மெய்ப்பாடு தோன்றிய பிறகு தலைவன் தலைவியரிடை இயற்கைப் புணர்ச்சி நிகழும். (தொ. பொ. 263 பேரா.)

இருகையும் எடுத்தலாவது, தலைவன் தன்னைத் தழுவும் குறிப்பொடு நெருங்குமிடத்து, தலைவி நாணம் மீதூர்தலான் தனது முகத்தினை மறைத்துக்கொள்ளும் கருத்தொடு கைகளை முகம் நோக்கி எடுத்தல். களவியலுள் ‘இடையூறு கிளத்தல்’ என்னும் கிளவிக்கு உரியதாய் நிகழும் மெய்ப் பாட்டுப் பொருள் இஃதாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். இடைக்காலத்தார் இப்பொருளை ‘நாணிக் கண் புதைத்தல்’ என்ற துறையாகக் கூறுவர். (தொ. மெய்ப். 15 ச. பால)

இருந்துழி இராமை -

{Entry: Q17a__050}

தலைவனிடத்துள்ள வேட்கைமிகவினால் அவனை இன்றி இல்லத்தில் எங்கிருத்தற்கும் அமைதியின்றி எந்த வோரிடத் தும் தொடர்ந்து அமர்ந்திராது அடிக்கடி இடம் பெயர்ந் திருத்தல்.

இந்நிலைக்குக் காரணம் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந் தார்க்கே புலனாவதாதலின், இஃது அகமெய்ப்பாடுகள் 32இல் ஒன்றாவது. (நா. 90) (வீ. சோ. 96 உரை. மேற்.)

இருவகை நிலன்கள் -

{Entry: Q17a__051}

இருவகை நிலன்களாவன சுவைக்கப்படு பொருளும், அதனைச் சுவைக்கும் பொறிகளின் சுவையுணர்வும் ஆம். வேம்பு என்னும் சுவைக்கப்படுபொருளும், அதனைச் சுவைக்க வேண்டிய நா என்னும் பொறியும் தனித்தனி நின்றவழிக் கைப்புச் சுவை பிறவாது, இரண்டும் சேர்ந்தவழியே கைப்புச் சுவை பிறக்கும். அதுபோல, அச்சத்துக்கு முதலாகிய விலங்கும் அதனைக் காணும் கண்ணின் பார்வையும் தனித் தனி நின்றவழி அச்சச்சுவை பிறவாது, அவையிரண்டும் சேர்ந்தவழியே அச்சச்சுவை பிறக்கும் என்பது.

சிலர் அனுபவிப்பவனுடைய அனுபவம் காண்பவர்க்கு எய்துதலே இருவகை நிலம் என்ப.

வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பு உணர்வினை நாவுணர் வினால் பிறன் உணர முடியாது. ஆயின் “இவன் வேம்பு சுவைத்தவன்” என, அவன்முகத்தைப் பார்த்து அதன்கண் காணப்படும் மெய்ப்பாடுகளாலேயே அறிவான். அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய புலி முதலியன கண்டு அஞ்சி ஓடி வருகின்றவனை மற்றவன் கண்டவழி, “இவன் அஞ்சி வருகின் றான்” என அறிவதல்லது தான் புலியினைக் கண்டான் போல அச்சம் கொள்ளான். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணை செய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலின், சுவைப்போன் நிகழ்த்திய சுவையைக் கண்டு “இவன் சுவைத்தான்” என்று அறிந்தவன் தன் அறிவுத் தன்மையினால் அச்சுவையினைப் பெறான் ஆதலின், சுவைக் கப்படுபொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வுமே இருவகை நிலம் எனப்படும். (தொ. பொ. 249 பேரா.)

இல்லது காய்தல் -

{Entry: Q17a__052}

தலைவன்பால் இல்லாத குறிப்பினை அவன்மாட்டு உளதாகக் கொண்டு தலைவி வெகுளுதல்.

தலைவன் சான்றோர்களையே கண்டு தங்கினான் ஆயினும், அவன் கூறியதை நம்பாமல் அவன் பரத்தையரிடம் சென்று தங்கினான் என்று (கலி. 93) தலைவி தலைவனிடம் இல்லாத ஒன்றை அவனிடம் உள்ளதாகக் கொண்டு வெறுத்தலைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு இது. கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. (தொ. பொ. 272 பேரா.)

இல்வலி யுறுத்தல் -

{Entry: Q17a__053}

இல்வலி - தன்பால் இல்லாத வலிமை. தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மனநெகிழ்வால் தலைவியின் கூந்தல் அணிகலன்கள் ஆடை முதலியன நெகிழவும், தன்னிடம் இல்லாததொரு வலிமையை இருப்பதாகக் கொண்டு தலைவி ஆடை அணி முதலியவற்றை முன்போல் இருக்குமாறு ஏற்ப அமைத்துக் கொள்ள முயலுதல்.

இல்லாத வலிமையினைப் படைத்துக் கொண்டு செயற்படல் இற்பிறப்பால் வந்த வலிமை என்று பொருள் செய்வர் இளம்பூரணர். அது பொருந்தாது, இவ்வளவெல்லை சிதைய இடங்கொடுத்த இற்பிறப்பு இனிமேல் வந்து செய்யக் கூடியது ஒன்றுமில்லை யாதலின். (பேரா.)

இது மூன்றாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர். இளம்பூரணர் (தொ. பொ. 259.)

களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளுள் இது மூன்றாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.)

இல்வலியுறுத்தல் : பொருள் விளக்கம் -

{Entry: Q17a__054}

இல்வலியுறுத்தலாவது, தலைவன் தனது மெய்தொட்டுப் பயின்று முன்னிலையாக்கி இடம்பெற்றுத் தழுவ முற்பட் டுழி, பாலது ஆணையான் உள்ளம் அவன்வழிச் சேறலைத் தனது மடப்பத்தான் தகைத்தற்பொருட்டு, எதிலார் போலப் பொதுநோக்கு நோக்கித் தனது இற்பிறப்பின் மாண்பினைத் தலைவி வலியுறுத்தலாம். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். (தொ. மெய்ப். 15 ச. பால.)

இழவு -

{Entry: Q17a__055}

இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

இழவு - உயிரானும் பொருளானும் இழத்தல். (தொ. பொ. 249 இள.)

தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும்

நுகர்ச்சி முதலானவற்றையும் இழத்தல். (53 பேரா.)

எ-டு : ‘தன் நிலைமையையும் இழந்து துணைவர்களையும் நீங்குதல்; பிரிதல் துயரத்தால் நீங்காத அழுகுரலும் ஒலியும்.’ (249 இள.)

கணவனை இழந்த தலைவி அவனுக்குப் பலிக்கொடை நேர்தற்குக் கண்ணீரே நீராக நிலத்தை மெழுகுதல் (புறநா. 249) தன்கண் தோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலம்.

தலைவன்பிரிவால் தலைவி வருந்த, அதனைப் பார்த்துத் தோழியும் வருந்துதல் (அகநா. 73) பிறன்கண் தோன்றிய இழவு பற்றிய அவலம். (253 பேரா.)

இழிப்பு (1) -

{Entry: Q17a__056}

மூப்பும் பிணியும் துயரமும் காரணமாக வெறுப்பை யுண்டாக்கும் பொருளற்ற செயலும் மொழியும் இச்சுவை பயப்பன. இழிப்பு - இளிவரல் (நாடக. 50)

இழிப்பு (2) -

{Entry: Q17a__057}

இழிப்பு - அருவருப்பு. பொருள்களிலும் நிகழ்ச்சிகளிலும் குற்றமும் கூச்சமும் விளைவிக்கும் இயல்புகளைக் காண்பதால் நேரும் அருவருப்பு. இஃது இழிப்பு என்னும் சுவையின் நிலைக்கருத்து. இழிப்பினை வடநூலார் குச்சை என்ப. அது ஜுகுப்ஸை எனவும்படும். (நாடக. 54)

இழிப்பு அவிநயம் -

{Entry: Q17a__058}

இழிப்பு, இளிவரல், அருவருப்பு, பீபத்ஸம் என்பன ஒரு பொருட் கிளவி. கூச்சத்தால் சுருங்கி நெருங்கிய கண்களுடை மையும், பற்கள் வெளியே தெரிதலும், முகம் கூம்பி வேறுபட லும், கைகால்கள் செயலற்றுப் போதலும், உடற்சோர்வும் உரை குழறுதலும், இவை போன்ற பிறவும் இழிப்பிற்கான அவிநயங்கள். (நாடக. 249)

இளமை -

{Entry: Q17a__059}

நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

இளமை - தன் இளமையான் பிறரை நகுதலும், பிறர் இளமை கண்டு தான் நகுதலும் (தொ. பொ. 252 பேரா.)

அறிவு முதிராப் பிள்ளைமை - மெய்ப் 4 பாரதி.

குழவி கூறும் மழலை (248 இள.)

திருமணம் நடந்த அண்மையில் தலைவன் தான் வேற் றூர்க்குப் பிரிந்து செல்லப் போவதாகக் கூறித் தலைவியை நடுங்கவைத்துத் தான் நகுதல், தலைவனிடம் தன் இளமை பொருளாகத் தோன்றிய நகை. (கலி. 13) குழந்தையது இனிய மழலைமொழி கேட்டுத் தாய் நகுதல், பிற பொருட்கண் தோன்றிய இளமை பொருளாகத் தனக்குத் தோன்றிய நகையாம். (அகநா. 16) (252 பேரா.)

இளிவரல் -

{Entry: Q17a__060}

இழிப்புச்சுவை. காண்க (தொ. பொ. 251 பேரா.)

இளிவரல் குறிப்பு நான்கு -

{Entry: Q17a__061}

இளிவரல் - அருவருப்பைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருளாவது.

மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்கு குறிப்பும் பற்றி இளிவரல் பிறக்கும்.

இவை தன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறன்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.

இவையே யன்றி, வீரம் பற்றிய இளிவரலும் உண்டு.

(254 பேரா.)

உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்ற வரும் இழிநிலையே இளிவரல். (மெய்ப். 6 பாரதி)

இளிவரலானது நாற்றம், சுவை, தோற்றம், ஊறு என்ற நான்கு குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96)

இளிவு -

{Entry: Q17a__062}

அழுகை என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இது முதலாவது

இளிவு - பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது.

(தொ. பொ. 249. இள.)

எ-டு : ‘தலைமை சான்ற தன்நிலை அழிதல், சிறைப்படு துயரமொடு // செயலற்றிருத்தல், முடியுடைச் சென்னி பிறர் அடியுறப் // பணிதல், நிறங்கிளர் அகலம் புழுதி படிய இருத்தல்’ இள.

தன்னைத் தலைவன் எள்ளித் தன் தொடர்பினை விட்டு விட்டான் என்பது கருதிப் பரத்தை தன் செயற்கையழகு சிதைய அழுதேங்கிக் கைவிரல்களைத் திருகிக்கொண்டு அவன்பழி தூற்றுதல், அவளுக்குத் தன்கண் தோன்றிய இளிவு பற்றிய அழுகை. (அகநா. 176)

தலைவன் தன்பெருமைக்கு ஏலாமல் நடந்து கொள்வதைப் பார்த்துத் தோழி தானும் துயர்உறுவதாகக் கூறுவது பிறன்- கண் தோன்றிய இளிவரல் பற்றிய அழுகை. (கருணையான் நிகழ்வது) (கலி. 37) (253 பேரா.)

இளிவு - பிறர் இகழ்வால் பிறக்கும் அவலம்; பழியை வெளிப் படுத்தும் இளிவரலன்று. தலைவனைத் தலைவி ‘பன்மாயக் கள்வன்’ (குறள் 1258) என்றும், தன் மகனை ‘மகனல்லான் பெற்ற மகன்’ (கலி. 86) என்றும் கூறுவது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (மெய்ப். 5 பாரதி)

இன்பத்தை வெறுத்தல் -

{Entry: Q17a__063}

நிலவும், சாந்தும், பூவும் முதலாக இன்பம் தரும் பொருள் களைத் தலைவி வெறுத்தல்

தலைவனுடைய கூட்டத்தின் முன்னும் அவனோடு உடனுiற யும்போதும் தனக்கு இனியவாகிய பொருள்களே தலை வனைப் பிரிந்து களவிலும் கற்பிலும் தனித்திருக்கும் தலைவிக் குத் துன்பம் தருதலின், நிலவு தென்றல் முத்துமாலை கண்ணி முதலிய இன்பப் பொருள்களை வெறுத்துப் பழித்தல். தலைவிமாட்டு நிகழும் இந்நிலை பிரிதல்துன்பமுறும் தலைவற்கும் உண்டு.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266)

அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்த மாகும். (270 பேரா.)

இன்பமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__064}

துன்பம் நீங்கித் தெளிவுற்ற உடம்பும், நிறைந்து வழியும் பெரு மகிழ்ச்சியும், காரணமின்றி அங்குமிங்கும் மிகவும் அதிகமாய் நடமாடலும், அழகுடைய இன்சொல் பேசலும், நறுமண மலர் கொண்டிருத்தலும், தோளிலும் மார்பிலும் அணிந்து நீக்கிய அணிகளுடைமையும் போன்றவை இன்பம் அனுபவிப் பவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் உரைப்பன. (நாடக. 253)

இன்புறல் (1) -

{Entry: Q17a__065}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. இன்புறல் - ஒருவர் ஒருவரின் தாமே இன்புறுகின்றாராக நினைத்தல். இங்ஙனம் நினைக்கும் இன்பம் காதல் இல்லற வாழ்வின் சிறப்பிற்கு ஏதம் பயத்தலின் விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.)

இன்புறல் (2) -

{Entry: Q17a__066}

துணை மெய்ப்பாடு 32-இல் இதுவும் ஒன்று. இன்புறல் - நண்பர்களாகிச் சிலகாலம் பிரிந்து மீண்டும் மருவ வந் தோரைக் கண்டவழி நிகழ்வதொரு மன நிகழ்ச்சி போல்வது.

காணாமற்போன பொருள் மீண்டும் கிட்டியக்காலும், எடுத்துக்கொண்ட வினை இடையூறின்றி முடிந்தக்காலும், பிரிந்து சென்ற நண்பரைப் பல ஆண்டுகட்குப் பின்னர்க் கண்டக்காலும் ஏற்படும், காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறல். (தொ. பொ. 256 இள.)

தான் செலவிடாது ஈட்டிவைத்துள்ள செல்வத்தை அவ்வப் போது நினைத்துப்பார்க்குமிடத்தெல்லாம் பிறக்கும் மனமகிழ்ச்சி. இதுமனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (இதனை வடநூலார் ‘ஹர்ஷம்’ என்பர்)

(260 பேரா.)

இன்புறல் (3) -

{Entry: Q17a__067}

இன்புறலாவது, தம் உடைமைசெயல்களைப் பற்றித் தாமே மகிழ்தல். (தொ. மெய்ப். 12 ச. பால.))

உ section: 17 entries

உடம்பு நனி சுருங்கல் -

{Entry: Q17a__068}

உணவு உண்ணாமை உயிரைத் தாக்காது உடம்பைத் தாக்க, பிரிதல்துயரோடு உணவின்மையும் வருத்துவதால் உடல் நாளும் மிக மெலிதல்.

இது பிரிதல்துயரால் உணவை வெறுத்து உடல் மெலிய நிற்கும் காதலியல்பு கூறுகிறது.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266)

அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.)

உடன்பட்டோன் அவிநயம் -

{Entry: Q17a__069}

பிறர் தான் செய்ய வேண்டிய செயலைத் தாம் செய்வதாகச் சொல்ல, அதற்கு உடன்பட்டவனுடைய அவிநயங்கள். (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன)

1. அச்செயல் தனக்கு முன் நிகழினும், அதன்கண் ஈடுபா டில்லாத மனநிலை,

2. அச்செயல் செய்ய உடன்பட்டவனது கையைப் பிடித்துக் கொண்டு அச்செயல் செய்வதை அவனிடம் ஒப்படைத்து மகிழ்தல்,

3. அச்செயலில் தான் இனி ஈடுபட்டுத் தொடர்ந்து செயற் படாதிருத்தல்.

4. அச்செயல் பற்றி மற்றவர் கூறுவனவற்றை மனத்தில் கொள்ளாதிருத்தல் - ஆகிய நிலைகளாகும். (நாடக. 253 உரை)

உடைபெயர்த்து உடுத்தல் -

{Entry: Q17a__070}

முதன்முதல் தலைவன் தன்னைத் தீண்டியவழித் தலைவி அவனது பரிசத்தால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியானே மயிர்முடி நெகிழ, காதணிகளுள் ஒன்று கழல, வளையல் முதலியன நெகிழ, அவற்றை ஏற்ப அமைத்துக்கொண்டவள் தன் உடையும் நெகிழ்வது போலத் தோன்ற அந்நெகிழ்ச்சி தீர உடுத்த உடையினைப் பலமுறை இறுக உடுத்தல்.

உடுத்த உடையினை நெகிழ்ச்சி நீங்கப் பலகாலும் இறுக்கி உடுத்துக்கோடலாம். (தொ. பொ. 262 பேரா.)

இஃது அகத்திணைக்கேயுரிய அவத்தை பத்தனுள் இரண்டாம் அவத்தையின் இறுதி மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (258).

களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் இறுதி மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து.

உடைமை -

{Entry: Q17a__071}

இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று.

உடைமை - யாதானும் ஒரு பொருளை உடையனா யிருத்த லால் வரும் மனநிகழ்ச்சி. அது நால்வகைப்படைகளையும் உடையராயிருத்தல் பற்றி (புறநா. 72) மன்னர் மனத்தில் தோன்றும் மெய்ப்பாடு (தொ. பொ. 256 இள.)

உடைமை - செல்வம்; செல்வத்தை அனுபவிப்பதாயின் அப்பொழுது செல்வம் உவகை என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய தாகும். செல்வத்தை அனுபவிக்காமல் அதனை நினைத்து நினைத்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்று; செல்வம் தன் னிடத்து நிறையவுளது என்னும் நினைப்பால் வரும் மெய் வேறுபாடு இவ்வுடைமையாகும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப்பாடாயிற்று. (260 பேரா.)

இதனை வடநூலார் ‘ஒளத்சுக்யம்’ என்ப.

உண்டியிற் குறைதல் -

{Entry: Q17a__072}

பசி அட நிற்றலே யன்றிச் சிறிது உணவு ஊட்டியவழிப் பண்டு போலாது மிகவும் சிறிதுண்ணுதல். அஃதாவது உற்றார் ஊட்டும் உணவை மறுப்பின் அவர்கள் வெகுள்வர் என்று அஞ்சித் தன் வெறுப்பினை மறைத்து உட்கொள்வது போன்ற பாவனையில் மிகக் குறைவாக உண்டுவைத்தல். ‘பசி அட நிற்றல்’ என்பது பிரிதல் துயரான் பசி என்பதனையே உணராத கைகடந்த காதல்நிலையைக் குறிக்கும். இஃது, எல்லைக்குட்பட்ட காதல்துயரால் உணவு சுவைக்காமை யால் மிகக் குறைவாக உண்டலைக் குறிக்கும். (தொ. பொ. 270 பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் . (தொ. பொ. 266)

அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம் மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

(தொ. பொ. 270 பேரா.)

உணர்வு (1) -

{Entry: Q17a__073}

இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.

உணர்வு - அறிவுடைமை; அஃதாவது உலகியலான் செய்யத் தகுவது அறிதல்.

இரவுக்குறியில் அரிதின் முயன்று வந்த தலைவனைத் தலைவியும் இடையூறுகளைக் கடந்து வந்து சந்தித்துத்

‘தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப

இன்னுயிர் குழைய முயங்குதொறும்’ (அகநா. 22)

என்பதன்கண் இருவர் உணர்வும் ஒத்தவாறு.

(தொ. பொ. 273 பேரா.)

உணர்வு (2) : பொருள் -

{Entry: Q17a__074}

உணர்வாவது ஒருவர் ஒருவர்தம் உள்ளக்குறிப்பை அறிந் தொழுகும் நுண்ணுணர்வு. (தொ. மெய்ப். 25 ச. பால.)

உயிர்ப்பு -

{Entry: Q17a__075}

முன்பெல்லாம் விடும் அளவு போலன்றி மிகுதியாக மூச்சு விடுதல்.

“தலைவியிடம் உள்ளத்தைச் செலுத்திய தலைவன் தனிமை யிற் கிடக்கும் யானை போல மிகுதியாகப் பெருமூச்சு விடுகின்றான்” (குறுந். 142) என்பதனால், அவன் உள்ளத்திருக் கும் காமநோயை அவன் உயிர்ப்பு வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.)

உயிர்ப்பாவது வேண்டிய பொருளைப் பெறாதவழிச் செய லற்று நிற்கும் கருத்து. அது நெட்டுயிர்ப்பாகிய பெருமூச்சுக்கு அடிப்படை ஆதலின் அதனை ‘உயிர்ப்பு’ என்றார்.

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)

இதனை வடநூலார் ஜடதை என்ப.

உருத்திரம் -

{Entry: Q17a__076}

1. பெருங்கோபம் 2. வெகுளிச் சுவை. (தண்டி. 69)

உருவு -

{Entry: Q17a__077}

இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.

உரு(வு) என்பது வனப்பு. (தொ. பொ. 90 இள.)

பெண்மை வடிவும் ஆண்மைவடிவும் பிறழ்ச்சியின்றி ஒருவர்க்கு ஒருவர் பொருத்தமாக அமைதல்.

இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும், குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவமே அன்பிற்கு அடிப்படைக் காரணமாம்.

‘முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லும் பணைத்தோளும்’ (கலி. 108)

என்றாற் போல்வன உருவு. (273 பேரா.)

உருவு வெளிப்பாடு -

{Entry: Q17a__078}

கற்பனையாக வடிவம் கண்முன் தோன்றுதல் என்ற மெய்ப்பாடு.

தலைவன் தலைவி யென்னும் இருவரும் பிரிவிடை ஒவ்வொரு வரும் மனக்கண் முன் மற்றவர் உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு பிரிவுத்துயரம் மிகுதல். இஃது ‘எதிர்பெய்து பரிதல்’ எனவும் (தொ. பொ. 270 பேரா.) கூறப்படும்.

உவகைக் குறிப்பு நான்கு -

{Entry: Q17a__079}

உவகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருள்.

செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கு குறிப்புப் பற்றியும் உவகை பிறக்கும்.

உவகை தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும்; சிறுபான்மை பிறன்கண் தோன்றிய இன்பம் பற்றி வருதலு முண்டு. பிறன்கண் தோன்றிய துன்பம் பற்றி உவகை கூர்தல் கடையாயினார் இயல்பு. (தொ. பொ. 259 பேரா.)

இவ்வுவகை என்னும் சிருங்காரம், இளமை வனப்பு வளமை கலவி என்ற நாற்குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96 உரைமேற்.)

உள்ளது உவர்த்தல் -

{Entry: Q17a__080}

தலைவன் செய்கின்ற தலையளியைத் தலைவி வெறுத்துக் கூறுதல். அஃதாவது தலைமகனான் பெற்ற அன்பு உள்ளதே ஆயினும், அதனை உண்மையென்றே தெளியாது, அதனை அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி.

தலைவன் தலைவிபால் அன்பு கொண்டு இல்லத்துக்கு வரவும், தலைவி அவனை நோக்கி, “பரத்தையரைத் தேர் ஏற்றிக் கொண்டு வருமாறு பாகனை விடுத்து, அவன் வரக் காலதாமதம் ஆயினமையான் என்னையும் பார்த்துச் செல்லலாம் என்று இங்கு வந்துள்ளாய்!” (கலி. 69) என்றாற் போலக் கூறுதல்.

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

(தொ. பொ. 272 பேரா.)

உள்ளப்பட்ட நகை -

{Entry: Q17a__081}

எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு குறிப் பும் பொருளாகப் பிறந்த நகை உள்ளத்தொடு பொருந்திய நகையாம். உள்ளத்தொடு பொருந்திய நகை எனவே, உள்ளத் தொடு பொருந்தாத நகையும் உண்டு என்பது. அது தலைவன் விரைவில், தன்னை விடுத்துப் பிரியப்போவதனை அறிந்த தலைவி தன் அழுகையை மறைத்துக்கொண்டு தலைவன் முன் பொய்ச்சிரிப்புக்கொண்டு வருதலாம். (அகநா. 5) (தொ. பொ. 252 பேரா.)

உறங்கினோன் அவிநயம் -

{Entry: Q17a__082}

இருபுறமும் மாறி மாறிப் படுத்தும் மல்லாந்தும் குப்புறக் கவிழ்ந்தும் உறங்குதலும், மூச்சுப் பெரிதாக விடும் இயல்பும் உறங்கியவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

உறுப்பறை -

{Entry: Q17a__083}

இது வெகுளி என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.

உறுப்பறை - அங்கமாயினவற்றை அறுத்தல். 254 இள. - கை குறைத்தலும் கால் குறைத்தலும் கண்ணை நீக்குதலும் முதலாயின. 258 பேரா. - உறுப்பின் ஊறு. மெய்ப். 10 பாரதி.

எ-டு : தன் பின்புறமாகத் தன் காதுகளின் மறைவைப் பயன்படுத்தித் தன்னைத் தாக்கிய புலியை வெகுண்டு யானை தாக்கிக் கொன்றது. (கலி. 52) என்றவிடத்து, புலி தன் உறுப்புக்களுக்கு ஊறு செய்த காரணத்தான் யானைக்கு வெறுப்பால் சினம் விளைந்தது; புலி யானையின் உறுப்புக்களுக்கு ஊறுசெய்யாவிடில் யானைக்குப் புலியைத் தாக்கவேண்டிய காரணமே இன்று. (தொ. பொ.258பேரா.)

உறுபெயர் கேட்டல் -

{Entry: Q17a__084}

(களவினும் கற்பினும்) தலைவி தலைவனுடைய பீடார் பெரும்புகழைப் பிறர்வாய்க் கேட்டு மகிழ்தல். (தொ. பொ. 270.பேரா.)

எ-டு : நீலமாலை என்னும் தோழி வில்லை வளைத்து முறித்த இராமனைப் பற்றி,

‘மராமரம் இவையென வளர்ந்த தோளினான்

அராவணை அமலனென்(று) அயிர்க்கும் ஆற்றலான்’ (கம்பரா. 724)

என்றாற்போலக் கூறியன கேட்டுச் சீதை மகிழ்ந்தமை போல்வன.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266)

அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்தது; களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார்.

ஊ section: 1 entries

ஊழணி தைவரல் -

{Entry: Q17a__085}

நெகிழும் அணிகளை முறையாக மேல் நோக்கிச் செறித்துக் கொள்ளுதல்.

தலைவன் முதன் முதல் தலைவியைத் தீண்டிய அளவிலே அந்தப் பரிசத்தால் அவள் மனம் நெகிழ, அந்நெகிழ்ச்சியான் கூந்தல் அவிழக் காதணி ஒன்று கழன்றமையோடு ஏனைய அணிகளும் நெகிழ்வன போலத் தோன்ற, அந்நெகிழ்ச்சி நீங்கத் தலைவி வளையல் மோதிரம் முதலியவற்றை மேல் நோக்கித் தள்ளி இறுகச் செறித்தலாம்.(தொ. பொ. 262 பேரா.)

இஃது இரண்டாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (258)

களவுப்புணர்ச்சியில், புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்றுப் பன்னிரண்டு மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார்.

எ section: 6 entries

எண்ணான்கு நானான்கு ஆதல் -

{Entry: Q17a__086}

வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்ற எண்வகைச் சுவையும், வீரக் குறிப்பு அச்சக்குறிப்பு இழிப்புக்குறிப்பு வியப்புக்குறிப்பு காமக்குறிப்பு அவலக்குறிப்பு உருத்திரக்குறிப்பு நகைக்குறிப்பு என இவ்வெண்வகைக் குறிப்பும் ஆகிய பதினாறும் எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பொருளையும் (தொ.பொ. 248- 255) குறித்ததன் (குறித்து அவற்றின்) புறத்தே நிகழும். (தொ. பொ. 245 இள.)

சுவைக்கப்படுபொருளும் சுவையுணர்வும் வேறு நின்றவழிச் சுவை பிறவாமையானும், குறிப்பும் சத்துவமும் முறையே மனநிகழ்ச்சியும் உடம்பில் தோன்றும் வேறுபாடும் ஆகலா னும், சுவைப்பொருளையும் சுவையுணர்வையும் ஒன்றாக்கி குறிப்பையும் சத்துவத்தையும் ஒன்றாக்கி, இவற்றை வீரம் அச்சம் முதலிய எட்டனோடும் உறழ, முப்பத்திரண்டு பதினாறு ஆம். (தொ. பொ. 249 பேரா.)

எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகக் கூறப்பட்ட முப் பத்திரண்டு பொருளும் நான்கு நான்காய்த் தொகுத்து எண்ணப் படும். (மெய்ப். 1 பாரதி.)

எண்ணான்கு பொருளாவன -

{Entry: Q17a__087}

வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை வெகுளி என்னும் எட்டுக்குணங்களும் சுவைப்பொருள் - சுவைப் போன் - அவனது சுவையுணர்வு - அவன் வெளிப்படுத்தும் சத்துவம் - ஆகிய நான்கனோடும் உறழ்தலான் வருவன 32 பொருள்களாம்.

சுவை வெளிப்பாட்டினை விறல் என்னும் தமிழ்ச் சொல்லா னும் சத்துவம் என்னும் வடசொல்லானும் வழங்குவர். ஒருபொருளைச் சுவைத்தவன் வெளிப்படுத்தும் விறல் காண் போரிடத்து எழுப்பும் அவ்வுணர்ச்சியே நாடக நூலார் கூறும் சுவை (ரசம்) ஆகும். (தொ. மெய்ப். 1, 2 ச. பால)

எண்வகை மெய்ப்பாடு -

{Entry: Q17a__088}

நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்பன. இவற்றுள் நகைக்கு மறுதலை அழுகை; இளிவரலுக்கு மறுதலை மருட்கை; அச்சத்துக்கு மறுதலை பெருமிதம்; வெகுளிக்கு மறுதலை உவகை.

வாழ்க்கைக்கு இன்றியமையாத நகையை முன்னரும் அதற்கு மறுதலையாகிய அழுகையை அதனை அடுத்தும், அழுகை யுடன் இயைபுடைய இளிவரலை அதனை அடுத்தும், தான் இளிவந்து பிறிதொரு பொருளை வியக்குமாதலின் வியப் பினை அதனை அடுத்தும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்த லின் அச்சத்தை அதனை அடுத்தும், அச்சத்திற்கு மறுதலை யாகிய வீரத்தை அதனை அடுத்தும் வீரத்தின் பயனாகப் பிறக்கும் வெகுளியை அதனை அடுத்தும், வெகுளிக்கு மறுதலையாகிச் சுவைகளுள் நகையைப் போலச் சிறந்த உவகையை அதனை அடுத்து இறுதிக்கண் ணும் வைத்தார். (தொ. பொ. 251 பேரா.)

இவற்றுள், நகை வியப்பு உவகை மூன்றும் அகப் பொரு ளுக்கே சிறந்து புறப்பொருளில் அருகி வரும்; ஏனைய அழுகை, இளிவரல், அச்சம். பெருமிதம், வெகுளி - என்பன புறப்பொருளுக்கே சிறந்து அகப்பொருளில் அருகிவரும்.

(ம. சூ. பக். 6)

எதிர்பெய்து பரிதல் -

{Entry: Q17a__089}

கண்முன்னர்க் கற்பனையில் காணும் உருவெளித்தோற்றம். பிரிவிடைத் தலைவி தலைவனுடைய தேர் முதலானவற்றைத் தன் எதிர் கற்பனையால் ஏற்றுக்கொண்டு வருந்திச் செய லறுதலும், தலைவன் தலைவியின் துயர்தோய்ந்த வடிவைத் தன்னெதிர் பெய்துகொண்டு வருந்தலும் ஆம். (தொ. பொ. 270 பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர் (தொ.பொ. 266). அன்புத்திணையின் தனிப் படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் எனவும், பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும் எனவும் கொள்வர் ஏனையோர்.

‘எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ -

{Entry: Q17a__090}

1. யாதானும் ஒரு பொருள் காணப்பட்டாலும் அதனைத் தன்னோடு ஒப்புமை கொள்ளுதல். தலைவி மாலைக் காலத்தை நோக்கி “மாலையே! நீ வருந்துகின்றாயே; நின் கணவனும் என்தலைவனைப் போலக் கொடியவனோ?” என்று வினவுதல் (குறள் 1222) போல்வன. (தொ. பொ. 266 இள.)

2. யாதானும் ஒரு பொருளைக் கண்டவிடத்தே அதனைத் தலைவனோடு ஒப்பிட்டு அவனிடம் பேசுதல். (கேட்ட பொருள் பற்றியும் ஒப்புமை கொள்வாள்.)

பிரிய நினையும் தலைவனிடம் “நீவிர் செல்லும் காட்டில் ஆண்மான்கள் பெண்மான்களைப் பிரிந்து வாழ்கின்ற னவா என்பதை நினைத்துப் பாருமின்” (கலி. 20) என்றாற் போலக் கூறல். (270. பேரா.)

3. தலைவி தான் காணும் பொருள் எதுவும் தலைவன் வண்ணம் வடிவு பண்பு வினைகளுள் ஒன்றற்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு. அசோகவனத்தில் சீதைக்கு இராம னது வண்ணம் பற்றிய நினைவு மிகுந்தமை போல்வது. (கம்பரா. 5075) (மெய்ப். 22 பாரதி)

இது பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். ஏனையோர் களவுக்கும் கற்புக்கும் உரிய பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்று கருதுவர்.

எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல் : பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொரு ளெல்லாம் தன்னைப் போலவே துன்புறுவனவாகக் கருதிக் கோடல். மெய் - பொருள். தலைவன் பிற பொருளைத் தலைவியோடு ஒப்புமை கண்டு கூறுவனவும் இதன்கண் அடங்கும். (தொ. மெய்ப். 22 ச.பால.)

‘எள்ளல்’ -

{Entry: Q17a__091}

நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.

எள்ளல் - பரிகசித்தல்; தான் பிறரைப் பரிகசித்துச் சிரித்தல்; தான் பிறரால் பரிகசிக்கப்பட்டவழித் தான் சிரித்தல்.

(பழிப்பில்லாப் பரிகாசம் விளையாட்டாக ஏதுவாவது.)

எ-டு : முடவர் செல்லும் செலவு, கூனரும் குறளரும் நடக்கும் நடை, ஊமர் பேச முயலும் ஓசை, செவிடர் பிறர் கூறியதை உணராமல் பேசும் பேச்சு, பேதையர் பேசும் பேச்சு, கல்லார் கூறும் கல்வி, கள்ளுண்டு களித்தோர் செயல், அலி பேடி இவர்கள்தம் நடை உடைகள், ஆரியர் கூறும் தமிழ் போல்வன. ( தொ. பொ. 248 இள. மேற்.)

தன்னைக் குறை நேர்ந்த தலைவனைத் தோழி எள்ளி நகுதல். (கலி. 61) தன்கண் தோன்றிய எள்ளல் பொருட்டாகிய நகை.

தலைவி தன்னை எள்ளித் தலைமைசெய்துகொண்டு களவு ஒழுக்கம் நிகழ்த்துவதை அறிந்த செவிலிக்கு நகை தோன்றல் (அகநா. 248) பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் தோன்றிய நகை. (252 பேரா.)

ஏ section: 3 entries

ஏதம் ஆய்தல் -

{Entry: Q17a__092}

தலைவி, தலைவனுடைய கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டு என்று பலவும் ஆராய்தல். அவை ஆற்றிடைத் தலைவனது இடையூற்றினுக்கு அழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தார்கொல் எனத் துயர்உறுதல், ஏதிலார்தம் வரைவின் தீதினை அஞ்சல் போல்வனவாம். (தொ. பொ. 270 பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (266) அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

ஏழைமை -

{Entry: Q17a__093}

நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை - பேதைமை. (தொ. பொ. 270 இள.)

ஏழைமை - நுட்ப உணர்வின்மையால் ஏற்படும் வெண்மை. (274 பேரா.) ஏழைமையான் இல்லறக் கடமைகள் தடைப்படும் ஆதலின் இது விலக்கப்பட்டது.

கிட்டாத பொருளில், கிட்டும் பொருள்மீது வைக்கும் ஆசை யினை வைத்தல். (திருவாய். 2-4-10 உரை)

ஏழைமை மறப்பு -

{Entry: Q17a__094}

நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை என்பது எளிமை; அஃதாவது தணிவு. தணிவுஉணர்வினை மறப்பது அன்பொழுக்கத்திற்கு ஆகாத தவறாகும். தலைவி பெருமை அனைத்தும் உடையவளாயினும் தலைவனைத் தணிவொடு பணிதலும், தலைவன் தன்னின் தாழ்ந்தவன் எனினும் தலைவன்உயர்வு தன் உள்ளத்து நிறுத்தலும் வேண் டும். தலைவிக்கு உயர்குடிஉவகை விலக்கியதோடு அமை யாது, தன் பணிவு மறவாது தலைவன்உயர்வு நினைத்தலும் இன்றியமையாதது என்று வற்புறுத்தக் குடிமையின்புறலை அடுத்து ஏழைமைமறப்பும் குறிக்கப்பட்டு இவை விலக்கப் பட்டன. (தொ. மெய்ப். 26 பாரதி.)

ஏழைமை, மறப்பு எனத் தனித்தனி மெய்ப்பாடாகக் கொள்வர் இளம்பூரணர், பேராசிரியர் முதலியோர்.

ஐ section: 2 entries

ஐந்தாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__095}

காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட பத்து அவத்தையுள் 5ஆம் அவத்தையாம் ஆக்கம் செப்பல் என்பதன்கண், தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் தெரிந்துடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத் தொழில், கண்டவழி உவத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 26 இள.)

இவற்றைக் களவில், புணர்ச்சிக்குப் பின் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்கு உரியனவும் பொதுவாகக் களவின் ஐந்தாம் பகுதிக்கு உரியனவும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 265) பிறரெல்லாம் இக்கருத்தினரே. இவை நான்கும் கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பார் பாரதியார். (தொ. மெய்ப். 17)

ஐயம் செய்தல் -

{Entry: Q17a__096}

பிரிவிடைத் தலைவனிடத்துள்ள காதல்மிகுதியால் வீணே ஐயுற்றுத் தலைவி மனம் வருந்துதல்.

பிரிந்த தலைவனிடமிருந்து குறித்த பருவம் வந்தவழியும் தூது வாராமையால் தலைவன் தன்னை அடியொடு மறந்து துறந்து விடுவானோ (கலி. 33) எனவும், தலைவன் தலைவியை வழக்கத்துக்கு மிகையாகப் பாராட்டியவிடத்தே விரைவில் தன்னைப் பிரிந்துபோகின்ற குறிப்பினை இப்படி அளவின்மீறிப் பாராட்டித் தெரிவிக்கின்றானோ (கலி. 4) எனவும் பலவாறாகத் தலைவி தானே ஐயங்களை மனத்தே எழுப்பிக் கொண்டு வருந்துதல். (தொ. பொ. 270 பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர். அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

ஒ section: 3 entries

ஒப்பிலாமை உருகுதல் -

{Entry: Q17a__097}

தலைவனது பிரிவின்கண் தலைவி தனக்குத் தோழியர் முதலாயினார் செய்யும் இன்பம்தரும் செயல் எதுவும் அவனிடம் பெறும் இன்பத்துக்கு ஒப்பாகாமையின் அவன் இன்பம் குறித்து மனம் உருகுதல்.

இது தலைவியது உள்ளத்தை உணர்ந்தார்க்கன்றி ஏனை யோர்க்கு உண்மை புலனாகாத நிலையிற்று ஆகலின், அகமெய்ப்பாடு 32இல் ஒன்றாம். (வீ. சோ. 95)

(வீ. சோ. 96 உரை மேற்)

ஒப்புமை -

{Entry: Q17a__098}

இது நற்காமத்துக்காகாத மெய்ப்பாடுகளில் ஒன்று.

ஒப்புமை - ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகத்தே கீழ்மக்கள்மாட்டும் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என விலக்கப்பட்டது. (தொ. பொ. 270 இள.)

“இன்னாளை ஒக்கும் இவள்” என்று தலைவன் தலைவி. மாட்டு அன்பு செய்தல். (தொ.பொ. 274 நச்.) இது தலைமக னுக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

பிறரொடு தலைவனை ஒப்ப நினைப்பது பெண்மைக்கு ஏலாப் பிழையாதலான் தலைவிக்குக் கடியப்பட்டது. பிறரொடு தலைவியை ஒப்ப நினைப்பது காதல் அறவாழ்வின் முழுப்பயன் கோடலைச் சிதைக்கும் ஆதலின் தலைவற்கும் கடியப்பட்டது. (தொ. பொ. மெய்ப். 26 பாரதி)

‘எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ என்பது புதல்வனை யும் மலர், மதி போன்ற பொருள்களையும் காதலர் உடல் உறுப்புப் போன்றவற்றோடு ஒப்புமை கோடலின் அது குற்றமற்ற காதற் குறிப்பு; இஃது அன்னதன்று. (மெய்ப். 26 பாரதி)

ஒப்புவழி உவத்தல் -

{Entry: Q17a__099}

தலைவனோடு ஒப்புமையுடைய பொருளைக் கண்டவழி மனம் மகிழ்தல்.

எ-டு : தலைவனுடன் வடிவு ஒப்புமையுடைய மகனைக் கண்டு அவனிடம் அன்பு மிகுந்து அவன் தன் தந்தையை வடிவால் ஒத்திருக்கும் செய்தியைக் கூறி மகிழ்தலாம். (கலி. 86) (தொ. பொ. 270. பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ.பொ. 266). அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பது ஏனையார் கருத்து.

க section: 41 entries

கட்டுரையின்மை -

{Entry: Q17a__100}

தலைவி வரைதல் வேட்கையான் தலைவனது களவொழுக் கத்தை முனிந்தாள் போலத் தலைவன் வினவுவனவற்றிற்கு மறுமாற்றம் ஏதும் கூறாதிருத்தல்.

கூற்று நிகழ்த்துதலின்றி உள்ளக்கருத்தை மறைத்து அமர்ந் திருத்தல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267)

‘கையி னால்சொலக் கண்களில் கேட்டிடும்

மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’ (சீவக. 997)

என்ற குணமாலை கூற்றில், காதல் மிக்கவழிப் பேச்சுத் தடைபடும் என்பது புலனாகிறது.

இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக் காதற் கூட்டவேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (271 பேரா.)

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர்.

துஞ்சி சேர்ந்து கையறவுற்ற நிலையில் பிறரைக் கழறியுரைக் கும் மனஎழுச்சியின்றி வாய்வாளாதிருத்தல்.

இஃது இளிவரலுக்குப் பொருளாக அமைவது.

(தொ. மெய்ப். 23 ச. பால)

கண்டது மறுத்தல் -

{Entry: Q17a__101}

நினைப்புத் தலைவனிடத்தே இருத்தலின், தன் கண்முன் நெடு நேரம் இருக்கும் பொருளையும் கண்பொருந்திக் காணாமை யால் அவளால் காணப்பட்டவாக மற்றவர் கருதும் பொருள் களைத் தலைவி தான் காணவில்லை என்று மறுத்துக் கூறுதல்.

இந்நிலைக்குக் காரணம் அவள்அகத்தை நன்குணர்வார்க்கே புலனாம் ஆதலின், இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ.96 உரைமேற்)

கண்டவழி உவத்தல் -

{Entry: Q17a__102}

தமர்க்கு அறத்தொடு நின்று இற்செறிக்கப்பட்டு இல்லத் துள்ளேயே மறைந்து வாழும் தலைவி, தலைவனை ஒருகால் எதிர்பாராவகையால் கண்டவழிப் பெரிதும் மகிழ்தல்.

இஃது ‘ஆக்கம் செப்பல்’ என்ற ஐந்தாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்.(தொ. பொ. 261)

இது களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய நான்காம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர். (265 பேரா.)

கண்ணோவு உற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__103}

கண்ணில் துளிக்கும் கண்ணீரை அடிக்கடி விரலால் அப்புறப் படுத்துதல், புருவம் வளைதல், முகம்வாடுதல், எப்பொருளையும் நேரே பார்க்க விழிகூசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

கண்துயில் மறுத்தல் -

{Entry: Q17a__104}

இரவும் பகலும் தண்டாக்காதல் கொண்டார் உறங்காமை யாகிய நிலை. இது தலைவன் தலைவி இருவருக்கும் பிரிவிடையே நிகழ்வது. அது

‘நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ (குறுந். 6)

‘பா(டு)இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க’ (கலி. 16)

என்றாற் போலப் பிரிவிடைக் கண்துயில் ஒல்லாக் காதல் இயல்பாம்.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். (270 பேரா.)

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

கரந்திடத்து ஒழிதல் -

{Entry: Q17a__105}

அறத்தொடு நின்று, தலைவனொடு திளைத்தலை நீக்கிய தலைவி சுரந்து எழு காதலைக் கரந்து அழியும் தனிமையில், தான் செய்ய வேண்டிய செயல்களைத் தவிர்ந்திருத்தல். (மெய்ப். 17 பாரதி)

அறத்தொடு நின்றபின் இற்செறிக்கப்பட்ட தலைவி தலைவ னொடு கூடுதற்கு மறுத்த தவற்றிற்கு நாணியும் அஞ்சியும் தலைவன் காண வெளிப்படாது இல்லத்துள்ளேயே தங்கி யிருத்தல். (265 பேரா.)

இஃது ஆக்கம் செப்பல் என்ற ஐந்தாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 261)

களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்துநான்கு மெய்ப்பாடுகளுள் இது, கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய மூன்றாம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர்.

கருணை -

{Entry: Q17a__106}

இஃது அழுகை என்ற மெய்ப்பாடு; தன் துன்பம் கண்டு வருவது அவலம் எனவும், பிறர் துன்பம் கண்டு வருவது கருணை எனவும் இஃது இருவகைத்து. (தொ. பொ. 351. பேரா)

கருதல் -

{Entry: Q17a__107}

கருதல் என்பது குறிப்பு.

“தலைவி குறிக்கொண்டு தலைவனை நோக்காது கண்களைச் சுருக்கி நோக்கினாள்” (குறள் 1095) என்றவழி, குறிக்கோள் என்றதொரு மெய்ப்பாடுண்மை அறியப்படுகிறது. (தொ. பொ. 256.இள)

கருதல் என்பது மறந்ததனை நினைத்தல்.

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260. பேரா.)

இதனை வடநூலார் ‘விபோதம்’ என்ப.

கல்வி -

{Entry: Q17a__108}

இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. (தொ. பொ. 257)

கல்வி - தவ முதலிய விச்சை. பேரா.

நூல் முதலியன பயிறல். (இ. வி. 578 உரை)

மடலேறும் தலைவன் தன் பேச்சாற்றலைப் பற்றி, “கல்வியில் வல்ல சான்றோர்முன் அரிய செய்திகளை எடுத்துக் கூறுத லில் வல்லேன் யான்” (கலி. 141) என்று கூறுவது கல்வி பற்றிய பெருமிதம். (தொ. பொ. 257 பேரா.)

கலக்கம் -

{Entry: Q17a__109}

தலைவனுடைய பிரிவைத் தாங்க இயலாத நிலையில் களவிலும் கற்பிலும் தலைவி மனம் கலங்கிக் “கனவில் தோன்றிய கணவனைக் கையால் இறுகப் பற்றி அவனைக் காண்பதற்கு யான் கண்களை விழிக்க அவன் என் கையுள் மறைந்துவிட்டான்”

(கலி. 142) என்றாற் போன்ற செய்திகளைப் பிறர் கேட்பக் கூறுதல்.

தலைவிக்குக் களவிலும் கற்பிலும் பிரிதல் துன்பம் மிக்கவழி நிகழக் கூடிய இறுதி மெய்ப்பாடு இதுவே. இதனைக் கடந்த மெய்ப்பாடுகள் தலைவிக்கு உரிய அல்ல. தலைவனுக்கு இதற்கு மேலே வருவதொரு கலக்கம் உளதாம். அதுபொழுது அவன் மடலேறவும் வரை பாயவும் துணிவன்.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (266) (தொ. பொ. 270 பேரா.)

கலக்கப் பொருள் -

{Entry: Q17a__110}

கலக்கமாவது தலைவி ஆற்றாமையான் மதி திரிந்து, சொல்லுதற்கு ஆகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வா தன செய்தலுமாம். இது சிறுபான்மை தலைவற்கும் உரித்து. (தொ. மெய்ப். 22 ச. பால)

கலங்கி மொழிதல் -

{Entry: Q17a__111}

களவில் தலைவன்பிரிவால் வருந்தி இல்லத்துத் தனித்திருக் கும் தலைவியை நோக்கி உறவினர் அவள்துயரின் காரணம் வினவியவழித் தடுமாற்றம் தோன்றத் தன் இரகசியங்களைத் தன்னையும் அறியாது வெளியிடுதல்; சொல்லுவது அறி யாது தடுமாறும் உணர்வால் மறுமொழி கூறல் என்றவாறு. (தொ. பொ. 266 பேரா.)

இது ‘நாணுவரை இறத்தல்’ என்ற ஆறாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (262)

களவுக் காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதியின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

கழிகண்ணோட்டம் -

{Entry: Q17a__112}

தலைவனிடத்துக் கொண்ட அன்பு மீதூர்தலால் தலைவி அவன் ஊரினின்று வந்த அஃறிணைப் பொருள்களிடத்தும் பாணன் முதலியோரிடத்தும் அன்பு செலுத்துதல். இது ‘அவன் தமர் உவத்தல்’ (தொ. பொ. 270 பேரா.) போல்வது.

தலைவியின் இந்நிலைக்குக் காரணம் அவள் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தார்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா நிலையிற்றாகலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ. 90, 96 உரை மேற்.)

கள்வர் -

{Entry: Q17a__113}

இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.

கள்வர் - தீத்தொழில் புரிவார், அலைத்துப் பொருள் வெளவுவார்.

எ-டு : பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு ஊடிய தலைவி, அவனைக் கள்வர்பாற் சார்த்தி, அவனைக் கண்ட அளவில் தான் நடுங்குவதாகக் கூறல், கள்வர் பொருளாக அச்சம் பிறந்ததாம்.

(கலி. 87) (தொ. பொ. 56 பேரா.)

களவில் புணர்ச்சிக்குப் பிற்பட்ட மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__114}

களவில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு இயற்கைப் புணர்ச்சி நிகழ்த்திய பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. அவை நந்நான்கு ஒரு பகுதியாய் மூன்று பகுதிப்பட வருவன. ஒவ்வொரு பகுதியிற் கூறப்படும் மெய்ப்பாட்டுக்கும் அடுத்த பகுதி மெய்ப்பாட்டுக்கும் இடையே கால இடையீடு உண்டு. இம்மெய்ப்பாடுகள் களவுப் புணர்ச்சியின் நான்கு ஐந்து ஆறாம் பகுதிகளாகக் கூறப்பட்டுள.

1. பாராட்டெடுத்தல், 2. மடம்தப உரைத்தல், 3. ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல், 4. கொடுப்பவை கோடல் - இவை நான்காம் பகுதி.

5. தெரிந்துடம்படுதல், 6. திளைப்பு வினை மறுத்தல், 7. கரந்த இடத்தொழிதல், 8. கண்டவழி உவத்தல் - இவை ஐந்தாம் பகுதி.

9. புறம்செயச் சிதைதல், 10. புலம்பித்தோன்றல், 11. கலங்கி மொழிதல், 12. கையறவுரைத்தல். இவை ஆறாம் பகுதி

பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கும் ஆதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 16-18 பாரதி.)

களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__115}

களவின்கண் தலைவன் தலைவியைக் கண்டது முதல் புணர்ச்சி நிகழும் வரை முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. இவை நந்நான்காய் மூன்று கூறுகளாகக் கொள்ளப்பட்டு ஒன்றை அடுத்து ஒன்றாக நிகழும்.

1. புகுமுகம் புரிதல், 2. பொறி நுதல் வியர்த்தல், 3. நகுநயம் மறைத்தல், 4. சிதைவு பிறர்க்கு இன்மை - என இவை நான்கும் முதற்பகுதி.

5. கூழைவிரித்தல், 6. காது ஒன்று களைதல், 7. ஊழ் அணி தைவரல், 8. உடை பெயர்த்து உடுத்தல் - என இவை நான்கும் இரண்டாம் பகுதி.

9. அல்குல் தைவரல், 10. அணிந்தவை திருத்தல், 11. இல் வலியுறுத்தல், 12. இருகையும் எடுத்தல் - என இவை நான்கும் மூன்றாம் பகுதி.

பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கு மாதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 13 - 15 பாரதி. தொ. பொ. 261 - 263 பேரா.)

களித்தோன் அவிநயம் -

{Entry: Q17a__116}

கட்குடித்துக் களி கொண்டோனுக்குரிய அவிநயங்கள்: ஒளிக்கத் தக்கவற்றை ஒளியாது கூறுதலும், ஒரோவழி உரையே இல்லாதிருத்தலும், ஒருகால் குனிந்து தாழ்தலும், மற்றொருகால் சோர்ந்து வீழ்தலும், தளர்ந்து தடுமாறிக் குழறிப் பேசுதலும், சாய்ந்த நடையும் சுழன்று பார்க்கும் பார்வையும் உடைமையும் போன்றவை. அடியார்க்குநல்லார் காட்டுவன இவை. (நாடக. 253 உரை.)

கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__117}

1. தெய்வம் அஞ்சல், 2. புரையறம் தெளிதல், 3. இல்லது காய்தல், 4. உள்ளது உவர்த்தல், 5. புணர்ந்துழி உண்மை, 6. பொழுது மறுப்பு ஆக்கம், 7. அருள்மிக உடைமை, 8. அன்பு தொக நிற்றல், 9. பிரிவு ஆற்றாமை, 10. மறைந்தவை உரைத்தல் என்ற பத்தும் புறஞ்சொல் மாணாக்கிளவி என்பதனொடு கூடக் கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகளாம். (தொ. பொ. 272 பேரா.)

பத்து என்ற எண்ணிக்கை வருதற்கு இளம்பூரணர் ‘மறைந் தவை உரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி’ என இரண் டனை ஒன்றாக இணைத்தார். (268 இள.)

நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘புணர்ந்துழி உண்மைப் பொழுது மறுப்பாக்கம்’ என இரண்டனை ஒன்றாக்கினார். (மெய்ப். 24)

இவை நடுவண் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் இளம்பூரணர்.

கனவு -

{Entry: Q17a__118}

கனவு - உறக்கத்தினிடையே கனவு காணுதல். அக்கனவில் தன் உள்ளத்தில் பொதிந்து கிடக்கும் செய்தியை வெளியிடுதலும் உண்டு ஆதலின் கனவு மெய்ப்பாடாயிற்று.

(கலி. 24) (தொ. பொ. 256 இள.)

கனவு என்பது உறக்கத்தில் வாய்வெருவுதல். அஃதாவது தன்னை அறியாது, தன் மனத்தில் நினைத்து இரகசியமாக வைத்திருக்கும் செய்தியை வெளியிடுதல். அதனானும் அவள் உள்ளத்து நிகழ்கின்ற இரகசியம் ஒன்று உண்டு என்பது அறியப்படுதலின், கனவு மெய்ப்பாடாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)

இதனை வடநூலார் ‘ஸ்வப்னம்’ என்ப.

காமம் இடையீடுபட்டகாலை கனவு காண்டல் தலைவன், தலைவி என்ற இருவருக்கும் நிகழும். தலைவன் கனவு காண்டலை அகநானூறு 39ஆம் பாடலிலும், தலைவி கனவு காண்டலை கலித்தொகை 128ஆம் பாடலிலும் காண்க.

கனவானது உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. (தொ. மெய்ப். 12 ச. பால)

கனவொடு மயங்கல் -

{Entry: Q17a__119}

பிரிவிடைத் தலைமகனோ தலைமகளோ அரிதின் துயிலெய் தியவழித் தன் துணையைக் கனவில் கண்டு திடீரென்று கண்விழித்துப் பின் துணையைக் காணாது மனம் தடுமாறுதல். (தொ. பொ. 270 பேரா.)

இதுவும் தலைவன் தலைவியர் இருவர்க்கும் நிகழும் மெய்ப்பாடாம்.

இதனைப் பெருந்திணை மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளைக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

காதல் கைம்மிகல் -

{Entry: Q17a__120}

தலைவி, தலைவனுடைய புணர்வும் பெறாமல் அவன் தன்னை மணக்கும் காலமும் பாணிப்பவே, ‘உள்ளின் உள்ளம் வேமே; உள்ளா திருப்பின்எம் அளவைத் தன்றே’ (குறுந். 102) என்றாற்போலக் கையிகந்த காதலால் நைந்துரைத்தல். கைமிகல் - எல்லையைக் கடத்தல். (தொ. பொ. 271 பேரா.)

‘இகலும் தோழிநம் காமத்துப் பகையே’ (குறுந். 257)

‘காமம், மறையிறந்து மன்று படும்’ (குறள் 1254)

என்று தலைவி கூறுதற்கு அமைந்த மெய்ப்பாடு இது.

இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (மெய்ப். 23 பாரதி)

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். (பொ. 267)

காதொன்று களைதல் -

{Entry: Q17a__121}

தலைவன் தலைவியைத் தீண்டியவழி இதுகாறும் இல்லாது புதிதாக ஏற்பட்ட பரிசத்தால் நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக்கொள்ள முயலவும், தலைமயிர்முடி அவள் வயப்படாது நெகிழ, காதில் செருகப்பட்ட காதணிகளுள் ஒன்று கழல்வதாயிற்று. இரண்டு தோடுகளும் கழன்று வீழ்கின்ற அளவுக்கு மனத்தில் நெகிழ்ச்சி நிரம்பத் தோன்ற வில்லை என்பது. (தொ. பொ. 262 பேரா.)

மனநெகிழ்ச்சியால் காதணிகளுள் ஒன்று கழன்று விழுதல்.

(பேரா.)

காதிலணிந்த தொன்றை விழப்பண்ணி அதனைக் தேடுகின் றாள் போலத் தலைவன் முன் நிற்றல். (258 இள.)

இஃது இரண்டாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார்.

குடிகோள் -

{Entry: Q17a__122}

இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்கு உரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

குடிகோளாவது - கீழ்வாழ்வாரை நலிதல் (தொ. பொ. 254 இள)

தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயினவற்றுக்கண் கேடு சூழ்தல். (258 பேரா.) சுற்ற நலிவு (மெய்ப். 10 பாரதி)

வீரத்தாயிடம் ஒருத்தி தன் மகன் போரில் புறங்காட்டினான் என்றுகூற, அதுகேட்ட அவ்வீரத்தாய், தன் குடிப்பிறப்பிற்கு மகன் கேடு சூழ்ந்தானோ என்று வெகுண்டு அவனைக் காணப் போர்க்களம் சென்றமை (புறநா. 278) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

குடிமை (1) -

{Entry: Q17a__123}

இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.

குடிமையாவது குலத்திலுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய நற்குடிவரவு. (தொ. பொ. 90 இள. உரை)

குடிப்பிறத்தலுக்குத் தக்க ஒழுக்கம் குடிமை. (273 பேரா.) குடிப்பிறந்தாரது தன்மை குடிமை. (260 குழ.)

குடிமை - ஒழுக்கநிலை. ‘ஒழுக்கமுடைமை குடிமை’ (குறள் 133) (மெய்ப். 25 பாரதி)

தலைவன் தலைவியை ‘உள்ளிய வினைமுடித் தன்ன இனி யோள்’ (நற்.3) எனத் தனது இல்லறத்தினைத் தலைவிமேல் வைத்துக் கூறுதல் குடிமை. (பேரா.)

குடிமை (2) -

{Entry: Q17a__124}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. குடிமை - இவள் இழிந்த பிறப்பினள் என்று தலைவன் தன்னை மதித்தொழுகுதல், தலைவியை இழிந்தாளென்று கருதும் உள்ளம் காதல் இல்லற வாழ்க்கைக்கு ஏதம் தருதலின் ‘குடிமை’ என்பது விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.)

குடிமை -

{Entry: Q17a__125}

குடிமையாவது, குலனுடையார்க்கு உரியவை என்று சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பாகிய பண்பாடு. (தொ. மெய். 25 ச. பால.)

குடிமை இன்புறல் -

{Entry: Q17a__126}

இது நற்காமத்துக்கு ஆகாத துறைகளுள் ஒன்று.

குடிமை இன்புறல் - தம் குலத்தினானும் தம் குடிப்பிறப்பா னும் தலைமக்கள் தம்மை மதித்து இன்புறுதல் (தொ. பொ. 270 இள)

குடிமை இன்புறலாவது தலைவி தன்குடி உயர்வு உள்ளி உவத்தல். தலைவனே மிக்கோனாயிருத்தல் வேண்டும் என்று வரையறை செய்தது, தலைவி உயர்ந்தவளாயின், என்றாவது ஒரு நாள் தலைவி தன்னுயர்வை உரைக்கும் நிலை ஏற்படின் அது தலைவனுக்கு இழிவு உணர்த்தி ஏதம் விளைக்கும் ஆதலின், அது மெய்க்காதலுக்கு இழிவாயிற்று. தலைவன் உயர்ந்தோனாயினும் அதனை அவன் அடிக்கடித் தலைவி யிடம் சுட்டுதல் அவள் உள்ளத்தை வருத்தி நற்காமத்துக்கு இழுக்குத் தரும் ஆதலின், அவனுக்கும் அது விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி)

இதனைக் குடிமை என்றும் இன்புறல் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்வர், பேராசிரியர் முதலியோர். (261 குழ)

குற்சை -

{Entry: Q17a__127}

ஜிகுப்ஸை என்னும் இரசம். அஃதாவது இளிவரல் (அருவருப்பு) என்ற மெய்ப்பாடு. (L)

குறிப்பு -

{Entry: Q17a__128}

குறிப்பு என்பது கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ளநிகழ்ச்சி போல, அஞ்சத்தக்கன கண்டவழி அவற்றை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. (தொ. பொ. 249 பேரா.)

(உள்ளக்குறிப்பை வடநூலார் ‘அநுபாவம்’ என்ப.)

குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -

{Entry: Q17a__129}

தலைவன் தன் கண்களால் குறிப்பிட்ட வேட்கையைத் தலைவியும் உணர்ந்து தானும் தன் வேட்கையைத் தன் கண்பார்வையான் குறிப்பிடுவாளாயின், தலைவன் நோக்கிய நோக்கிற்குத் தலைவி தான் எதிர்நோக்கியதனை முதலாவ தாகக் கொண்டு, நுதல் வியர்ப்பொறித்தல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் மூன்று நூற்பாக்களான் கூறப்படும் ஏனைய பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிகண் நிகழும். (தொ. பொ. 97 நச்., 261 - 263 பேரா.)

கூழை விரித்தல் -

{Entry: Q17a__130}

தலைமயிரினைக் குலைத்து அதனை நேர் செய்பவள் போலச் சிறிதுநேரம் தலைவன் முன் நிற்றற்கு வாய்ப்புத் தேடல். (தொ. பொ. 258 இள.)

கைக்கிளைக்குரிய மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__131}

புகுமுகம் புரிதல் முதலாகக் கையறவுரைத்தல் ஈறாக வரும் இருபத்து நான்கு மெய்ப்பாடுகளும், நடுவண் ஐந்திணை அல்லாத கைக்கிளைக்கண்ணும் பாடாண்பாட்டில் வரும் புறத்திணை பற்றிய கைக்கிளைக்கண்ணும் அருகிவரும் என்பர் இளம்பூரணர்.

கைக்கிளை ஒருதலைக்காமம் எனவே, புகுமுகம் புரிதல் நிகழாதே எனின், தலைவியைத் தலைவன் தான் கண்ட அளவிலேயே தலைவியும் தன்னைப் போலவே தன்னிடம் அன்பு கொண்டிருப்பாள் என்று கருதிக்கொள்வதே ஆண்டுப் புகுமுகம் புரிதலாம்.

புகுமுகம் புரிதல் முதலியன கைக்கிளைக்கண் வரும் என்ற கருத்து இளம்பூரணரைத் தவிர மற்ற உரையாசிரியர்கட்கு உடன்பாடன்று. (தொ. பொ. 265 இள.)

கந்தருவ மணத்தோடு ஒத்து இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் தலைவியைக் கூடுமுன் அவளைக் கண்ட அளவில் அவனிடம் ஒருதலைக்காமமாகிய கைக்கிளை நிகழும். (ந. அ. 28)

கைம்மிகல் -

{Entry: Q17a__132}

கைம்மிகல் என்பது குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல். ‘கை’ என்பது அளவு குறித்ததோர் இடைச்சொல். ‘காதல் கைம்மிகல்’ (தொ. மெய்ப்.23) ‘குணனிலனாய்க் குற்றம் பலவாயின்’ (குறள் 868) என்றாற் போல வருவன. (தொ. பொ. 256 இள.)

கைம்மிகல் ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கி யமை தன் உள்ள நிகழ்ச்சியானே மற்றவர் அறியுமாறு நடந்து கொள்ளுதல். இஃது ஒருவன் மனநிகழ்ச்சியை வெளிப்படுத்த லின் மெய்ப்பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத் திரண்டனுள் ஒன்று. (260. பேரா)

இதனை வடநூலார் வெறிகொண்டார் செயலாகிய ‘உன்மாதம்’ என்ப.

கைம்மிகல் : பொருள் -

{Entry: Q17a__133}

கைம்மிகலாவது, குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல். (தொ. மெய்ப். 12 ச.பால)

கையற உரைத்தல் -

{Entry: Q17a__134}

கையற உரைத்தல்; அஃதாவது செயலறவு தோன்றச் சொல்லுதல்.

களவில் தனிமை தாங்காத் தலைவி காதல் கைம்மிகத் தெருமரு நிலையில், வற்புறுத்தி ஆற்றுவிக்கும் தோழிக்கு எதிர் மனம் தளர்ந்து கூறுதல் போல்வன. (தொ. பொ. 266. பேரா.)

இது நாணுவரை யிறத்தல் என்ற ஆறாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு. (262. இள.)

களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இஃது இறுதியானது. இதனைக் கடந்து வரும் மெய்ப்பாடுகள் ஐந்திணைக்கு உரியன அல்ல; பெருந்திணைக்கு உரியன.

கையாறு -

{Entry: Q17a__135}

கையாறு என்பது காதலர் பிரிந்ததால் வரும் துன்பமும், அத்துன்பம் போன்ற பிற நிலைகளும்.

“யான் பிரியின் தலைவி கையாறு கொள்ளாது இல்லறத்தை நன்கு பாதுகாக்கவல்லளோ?” (கலி.24) என்று தலைவன் உறக்கத்தில் அரற்றிய உரையில் கையாறு என்ற மெய்ப்பாடு சுட்டப்படுகிறது. (தொ. பொ. 256.இள.)

கையாறு என்பது விரைய மூச்செறிந்து வருத்தத்தைத் தெரி விக்கும் நிலையையும் கடந்து செயலற்று அயர்த்திருத்தல். இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று.

(260 பேரா.)

இதனை வடநூலார் மரணம் என்ப.

கொடை -

{Entry: Q17a__136}

இது பெருமிதம் என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.

கொடை - உடம்பும் உறுப்பும் உயிரும் போல்வன எல்லாப் பொருளும் கொடுத்தல்.

தன்னை அடைக்கலமாக வந்தடைந்த புறாவைக் காப்பதற் காகத் துலைத்தட்டில் சிபிமன்னன் ஏறிய செயல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 43) (தொ. பொ. 257 பேரா.)

கொடுப்பவை கோடல் -

{Entry: Q17a__137}

தான் ஒன்றும் வேண்டாச் செல்வ நிலையையுடைய தலைவி தலைவன் தருவனவற்றைப் பொருட்பொருட்டன்றி அன்புக்கு அறிகுறியாக அவன்பொருட்டு ஏற்றல். தரும் தலைவனது உணர்வில் பெறுந் தலைவி உயர்ந்தவள் என்று எண்ணுவது இயல்பாதலின், ஈவன தருவன என்னாது ‘கொடுப்பவை’ என்றார். (தொ. பொ. 264 பேரா.)

இது மெலிதல் என்ற நான்காம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 260) களவின்கண் புணர்ச்சிக்கு முன்னர் மூன்று, பின்னர் மூன்று என ஆறு பகுதியவாகக் கூறப்படும் இருபத்துநான்கு மெய்ப்பாடு களில் இது தோலாக் காதலின் நாலாம் பகுதியின் நாலாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

கொடுமை -

{Entry: Q17a__138}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

கொடுமை - அறன் அழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. (தொ. பொ. 270 இள.)

கேடு சூழ நினையும் தீவினையுள்ளம். (274 பேரா.)

இவ்வுள்ளம் உடையாரிடம் நற்காமம் சிறவாதாகலின் இது விலக்கப்பட்டது.

கொலை -

{Entry: Q17a__139}

இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.

கொலை - கொல்லுதற்கு ஒருப்படுதல். (தொ. பொ. 254 இள.)

அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். (258 பேரா.)

நெடுஞ்செழியன் தன்னைச் “சிறுவன்” என்று பகைவர் கூறிய சொற்களை நினைத்தே வெகுளிகொண்டு அவர்களை எதிர்த்தமை (புறநா. 72) கொலை பொருளாகத் தோன்றிய வெகுளி பற்றியேயாம்.

கோபம் -

{Entry: Q17a__140}

‘வெகுளி’ என்ற மெய்ப்பாடு; அது காண்க.

ச section: 28 entries

சத்துவம் -

{Entry: Q17a__141}

உள்ளத்தில் உள்ள கருத்தைப் பிறர் அறியுமாறு வெளிப் படுத்தும் மெய்ப்பாடு சத்துவம் எனப்படும். சத்துவம் என்பன செந்நூலில் வெண்பளிங்கு கோத்தால் அதன் செம்மை புறம் பொசிந்து தோன்றினாற்போலக் கருதியது புலனாக்கும் குணங்களாம். அவை சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர் நெகிழ்ச்சி, மெய் வெதும்பல், மெய்ம் மயிர் அரும்பல் முதலாயின. (இ. வி. 661 உரை)

சமநிலை -

{Entry: Q17a__142}

(1) வன்மை மென்மை இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம் (தண்டி. 18) (L)

(2) சாந்தம் என்னும் சுவை - ‘மற்றிவ் வெட்டனொடும் சமநிலை கூட்டி’ (தொ. பொ. 251 பேரா)

சமநிலை அவிநயம் -

{Entry: Q17a__143}

பிறர்க்கென எதையும் செய்யாத கொள்கையும், அறம் செறிந்த மனமும, அமைதி நிறைந்த கண்களும், மயக்கமும் கலக்கமுமான பிறழ்ந்த அறிவு நீங்கிய தூய அறிவுநிலையும், எதையும் முயன்றடையும் குறிப்பில்லாத நிலையும், அச்சமற்ற பெருமித நிலையும், உலகத்துயிர்கள்பால் குளிர்ந்த உள்ளமும் செயலும் படைத்திருத்தலும், அளவிட்டு உரைக்க இயலாத அருமையும், அன்பும், கண்ணில் ஒளியுடைமையும் போன்றவை சமநிலை - சாந்தரசம். (நாடக. 246)

சமநிலை என்னும் மெய்ப்பாடு (1) -

{Entry: Q17a__144}

(1) மெய்ப்பாடுகளை ஒன்பது என்று கணக்கிடுவோர் வீரம் அச்சம் முதலிய எண்வகை மெய்ப்பாடுகளொடு நடுவுநிலை யையும் சேர்த்துக் கணக்கிடுவர். நடுவுநிலை மத்திமம் எனவும் சாந்தம் எனவும் கூறப்படும். இதனை நிலையில்லா மெய்ப் பாடுகளில் தொல்காப்பியனார் அடக்கியுள்ளார். (பொ. 260 பேரா.)

நடுவுநிலையாவது, கூறப்பட்ட வீரம் அச்சம் முதலாகிய எண்வகைச் சுவையொடும் தான் கலவாது தனித்திருக்கும் சிறப்பினை உடையது. தன்மேல் சந்தனம் பூசுபவர்மாட்டும் தன் உடலை வாள்கொண்டு துணிப்பவர்மாட்டும் ஒரே வித மனநிலையொடு கூடியிருத்தலே நடுவுநிலையாகும். இந்நிலை காமம் வெகுளி மயக்கம் மூன்றும் நீங்கிய தாபதர் சாரணர் சமணர் மாசற்ற முனிவர் அறிவர் முதலியோர்கண் நிகழ்வது. அவர்களிடம் வீரம் அச்சம் முதலிய எண்வகைச் சுவையும் நிகழா. இன்ப துன்பங்களில் சமநோக்குக் கொள்ளும் இச்சுவை தனித்துக் கூறப்பட்டுள்ளது.(245 இளம். உரைமேற்)

‘சமநிலை உலகியல் நீங்கினார் பெற்றி ஆதலின் உலக வழக்குப் பற்றிய இயற்றமிழ் இலக்கணத்தில் இம்மெய்ப்பாடு ஏனையவற்றொடு கூட்டிச் சிறப்பித்து ஓதப்பட்டிலது. (251 பேரா.)

சமநிலை என்னும் மெய்ப்பாடு (2) -

{Entry: Q17a__145}

சமநிலை என்னும் மெய்ப்பாட்டினுள் ஏதேனும் விகாரம் உண்டாயின் அது வீரம் அச்சம் முதலிய ஏனைய எண்வகை மெய்ப்பாட்டினுள் அடங்கும். (தொ. பொ. 251 பேரா.)

நடுவுநிலை என்பது ஒன்பது சுவையுள் ஒன்று என நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை. அஃதாவது செஞ்சந் தனத்தைப் பூசினும் உடலைச் செதுக்கினும் பிளப்பினும் மனம் நிலைபேறு குலையாது இன்பதுன்பங்களில் செல்லாது ஒரு நிலையிலேயே இருக்கும் நிலை. அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினார்கண்ணே நிகழ்வது. அது சிறுவரவிற்றாக லின் நிலையில்லா மெய்ப்பாடுகளுடன் சேர்த்தெண்ணப் பட்டது. (தொ. பொ. 260 பேரா.)

நடுவுநிலை ஐம்புலன் அடக்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமவெகுளி மயக்கத்தினின்றும் நீங்கியவராதலால் யாவரும் கண்டஞ்சும் இயமனுக்கும் இவர் அஞ்சார்; எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார்; கல்வி நிறைந்திருந் தும் அதனைப் பொருளாகக் கொள்ளாத காரணத்தால் பெருமிதம் காட்டார்; புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்பன நிலையில் பொருள்கள் என அறிவராதலின் அவற் றினைக் கண்டு வியப்புறார்; துன்பம் வந்தெய்தாத் தூய உள்ளத்தராகிய இவர் இன்பத்தை விழையார் ஆதலின், சமநிலை எனப்படும் நடுவுநிலை பொருந்தி நிற்கும் நல்லோ ரிடத்து, ‘நகையே அழுகை இளிவரல் மருட்கை, அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று, அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப’ எனத் தொல்லாசிரியர் வகுத்துக் கூறிய எண்வகை மெய்ப்பாடும் நிகழாவாம்; ஒரோவழி நிகழு மிடத்துக் காமமின்றி அருளே பற்றுக்கோடாக நிகழும் என்பது. (ம. சூ. பக். 5, 6)

இத்தகைய மனநிலையாகிய நடுவுநிலை உலகில் அருகியே காணப்படுதலின், உலகில் பெருவரவிற்றாக நிகழும் நகை அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டொடும் இதனைச் சேர்க்காது, நிலையில்லா மெய்ப்பாடுகளாகிய ‘உடைமை இன்புறல்’ (தொ. பொ. 260 பேரா.) என்பவற்றொடு தொல் காப்பியனார் சேர்த்துவைத்துள்ளார்.

சமம் (3) -

{Entry: Q17a__146}

இது சமநிலை எனவும்படும். ஐம்புலன்களிலும் பற்றற்று விளங்கும் நல்ல நிலைமை. தயையும் பொறுமையும் விளங்கும் இயல்பும் இச்சுவையே. ‘சமநிலை’ எனப்படும் மெய்ப்பாடு காண்க. (நாடக. 46, 47)

சாந்தச் சுவை -

{Entry: Q17a__147}

மகிழ்ச்சிக்குரிய செயற்கண் மகிழ்வும், துயரத்திற்கு உரிய செயற்கண் அவலமும் கொள்ளாது இன்பத்தையும் துன்பத் தையும் சமமாக நோக்கும் மனஅமைதியே சாந்தமாவது. தண்டியலங்காரம் (70) சாந்தம் நீங்கலாக ஏனைய எட்டுச் சுவைகளையே கூறிற்றேனும் சாந்தமும் சுவையணியுள் தழுவப்படும்.

எ-டு :

‘மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும்

இத்தி ருத்துறந்(து) ஏகென்ற போதினும்

சித்தி ரத்தின் அலர்ந்தசெய் தாமரை

ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள்’ (கம்பரா. 5088)

நாட்டாட்சியைத் தந்தையார் நல்கியபோதும், “காட்டிற்குச் செல்” என்று தாயார் ஆணையிட்டபோதும், இராமன் மகிழ்ச்சியோ வருத்தமோ உற்றிலனாயிருந்தான் என்னும் இதன்கண் சாந்தச் சுவை அமைந்துளது. இதனை மாறனலங் காரம் சாந்தரதம் என்னும் (மா. அ. 198 உரை)

சமநிலை, நடுவுநிலை என்றும் இது பெயர் பெறும்.

சிங்காரம் -

{Entry: Q17a__148}

சிருங்காரம்; நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. உவகை என்பதும் அது.

சிதைவு பிறர்க்கின்மை -

{Entry: Q17a__149}

தலைவனை நோக்கித் தன்னுள்ளம் சிதைந்த தன்மையினைப் பிறர் அறிவுறாதவாறு தலைவி மறைத்துக் கோடல்.

தலைவனைக் கண்டு அச்சத்தாலும் நாணத்தாலும் நெற்றி யில் வியர்வை துளிக்க, அவனுடைய குறிப்புக்களான் தனது சிரிப்பினை வெளிப்படுத்தற்கு வாய்ப்பு நேர்ந்துழியும் அதனை மறைத்துக்கொண்ட தலைவி, தன்னுள்ளம் சிதைந்து நிறை அழிகின்ற செய்தி புறத்தார்க்குப் புலனாகாமல் நெஞ் சினை அடக்கிவைத்துக்கொள்ளுதல். அவள் தன் மனத்தை அடக்கிக் கொண்டிருக்கும் செய்தி தலைவனறிய வெளிப் படும். தலைவன் தன்மனம் சிதைந்ததைத் தலைவிபோல மறைக்க முயலாது வெளிப்படையாக உணர்த்திவிடுவான். (தொ. பொ. 261 பேரா.)

இது காட்சி என்ற முதல்அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 257) களவு என்னும் கைகோளில் புணர்ச்சிக்கு முன் நானான்காக நிகழும் முக்கூற்றுப் பன்னிரு மெய்ப்பாடுகளில் இது முதல் கூற்றின் நான்காம் மெய்ப்பாடு என்பர் பிறர்.

சிறப்பொடு வரும் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__150}

சினம், பேதைமை, சகிப்புத் தன்மை, நல்குரவு என்னும் நான்கும் பொதுவாக மக்களுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் எனினும், ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் காரணத்தான் அவை வரின் அமைவுடையன ஆகும்.

எ-டு : ‘தொடிய எமக்குநீ யாரை’ (கலி. 88)

‘என்னருகே வந்து என்னைத் தீண்டுதற்கு நீயார்?’ என்று தலைவி சினம் பற்றிக் கூறுவது, அவளது காதலைச் சிறப்பித்தலான் அமைந்தது.

‘செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு

பைய முயங்கிய அஞ்ஞான்(று) அவையெல்லாம்

பொய்யாதல் யான்யாங்(கு) அறிகோ?மற்று ஐய!

அகல்நகர் கொள்ளா அலர்தலைத் தந்து

பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்

மகள்அல்லை மன்ற இனி.’ (கலி. 19)

‘கழிகாதன்மையால் நின்னை உள்ளவாறு அறிந்திலேன்’ என்ற தலைவியது பேதைமை, அவளது காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது.

‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்

விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ

பெறவரும் பொழுதொடு பிறங்(கு)இணர்த் துருத்திசூழ்ந்(து)

அறல்வாரும் வையைஎன்று அறையுநர் உளராயின்’ (கலி. 30)

“இளையவராம் பரத்தையரொடு வையைத்துறையில் விழாக் காலத்தே நீராட்டு அயர்வானோ?” என்று தலைவனிடத்துத் தலைவி கொள்ளும் இந்நிம்பிரி அவரொடும் விளையாடு வான் எனப் பொறாமை கூறியும், “அவன் இவ்விடத்து என்பால் அடைதல் வேண்டும்” எனக் காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது.

‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் ... ... ...

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி ... ... ...

கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்

கொடுத்த தாதை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்

பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே’ (நற். 110)

தனது குடும்பம் வறுமையுற்றமையான் என நல்குரவு கூறியும், சிறுவன்மையுடையளாய் இல்லறம் நிகழ்த்தும் காதல் வாழ் வினைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது. (தொ. பொ. 245 நச்.)

சிறுமை -

{Entry: Q17a__151}

இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டுக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது.

சிறுமை என்பது கடுகின்கண் பல துளை போலும் மிகவும் நுண்ணியன கண்டு வியத்தல். (தொ. பொ. 251 இள.)

இறப்பச் சிறியன கண்டு வியத்தல். (255 பேரா.)

(எடு) தலைவியின் இடையினைக் கண்ட தலைவன் அது மிகவும் நுண்ணிதாயுள்ளது என்று கருதுவது பிறன்கண் தோன்றிய சிறுமை பற்றிய வியப்பு. (பேரா.)

சீதமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__152}

துன்பம் மிக்க உள்ளத்தொடு தடுமாறுதல், ஈரமாகிய போர்வையை விடுத்துக் காய்ந்த போர்வையை வேண்டல், வெயிலிலும் நெருப்பின் அருகிலும் இருத்தலை விரும்புதல், கைகளை உரசிக் கொள்ளுதல், முனகியும் பெரு மூச்செறிந்து கொண்டும் பேசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டும் அவிநயம். (நாடக. 253 உரை)

சுவை (1) -

{Entry: Q17a__153}

எப்பொழுது எச்சுவை தோன்றும் என்ற காலவரையறை இன்றியும் பிறர் தூண்டுதல் இன்றியும் இயற்கையாகவே ஒருவனுக்குத் தோன்றும் இச்சுவையுணர்வு மனக்கிளர்ச்சி யால் நேர்ந்து எழும். அது பிறர் மனத்தில் உடனே தோன்றும் உணர்ச்சியால் (அநுதாபத்தால்) வெளிப்படும். இதற்கு வியப்பே உயிர் போன்றது.

மனத்தின்கண் தோன்றும் கிளர்ச்சி வெளிப்பட்டுத் தோன்றும் வகையில் சுவை இயலும்.

அஃது உவகை, பெருமிதம், நகை, சமம், வெகுளி, வியப்பு, இழிப்பு, அவலம், அச்சம் என ஒன்பது. இஃது ஆரியப் புலவோர் கருத்து. (நாடக. 38, 39)

இனிச்சுவையென்பது சிருங்காரம் முதலாகவுடைய நாடகச் சுவை ஒன்பதும் எனக் கொள்க. (வீ. சோ. 106 உரை)

உவகை - காமம் முதலிய மகிழ்ச்சி. பெருமிதம் - வீரம்; நகை - சிரிப்பு; சமம் - சமநிலை, சாந்தம்; வெகுளி - கோபம்; வியப்பு - அதிசயம்; இழிப்பு - இளிவரல், அவலம் - அழுகை; அச்சம் - பயம். இவற்றை முறையே சிருங்காரம், வீரம், ஆசியம், சாந்தம், ரௌத்திரம், அற்புதம், குச்சை, சோகம், பயானகம் என்பர் வடநூலார். (நாடக. 39 உரை)

சுவை (2) -

{Entry: Q17a__154}

நாவினால் நுகரப்படும் கைப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன. அன்றிக் கண்ணானும் செவி யானும் உணரப்படும் நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் வீரம் உவகை வெகுளி என்னும் எண்வகைப்பட்ட சுவைகள்; இவற்றொடு நடுவுநிலையைச் சேர்த்துச் சுவை ஒன்பது என்றலும் உண்டு. இச்சுவைகோடல் மனித இனத் திற்கேயுரிய தனிச்சிறப்பு ஆதலின் ஏனைய உயிர்களுக்குரிய நாச்சுவையினின்றும் இச்சுவைகள் பிரித்து ஓதப்பட்டன. செவியான் பெரும்பாலும் செய்யுள்கள் வாயிலாக உணரும் இச்சுவைகளை அறியாதார் ‘செவியின் சுவை யுணரா வாயுணவின் மாக்கள்’ (குறள் 420) என இழிக்கப்பட்டனர்.

சுவையென்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதொரு விகாரம். (தொ. பொ. 245. இள.)

சுவையாவது நகைமுதலிய சுவைக்குரிய பொருளும் சுவைப் பேறுடைய பொறியும் கூடியவழி நிகழும் மன உணர்ச்சி என்பார் பேராசிரியர். (தொ. பொ. 249)

வடநூலார் சுவையினை இரசம் என்ப.

உவகை, அழுகை, சாந்தம் என்னும் மூன்றும் மென்மையான சுவைகள்; வெகுளி, இளிவரல், வீரம் என்னும் மூன்றும் வன்மையான சுவைகள்; நகை, வியப்பு, அச்சம் என்னும் மூன்றும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்ட சுவை என்பது ஒரு சாரார் கருத்து.

உவகையும் அழுகையும் மிகுமென்மைச் சுவைகள்; வெகுளி யும் இளிவரலும் மிகு வன்மைச் சுவைகள்; நகையும் நடுவு நிலையும் மருட்கையும் சற்றுமென்மையுடைச் சுவைகள்; பெருமிதமும் அச்சமும் சற்று வன்மையுடைய சுவைகள் என்பது மற்றும் ஒரு சாரார் கருத்தாம். (பேராசிரியர் - கணேசய்யர் முன்னுரை)

இவை பாடல்களில் வருமிடத்து, அவ்வச் சுவைக்கு ஏற்ப வன்மை மென்மை இடைப்பட்டன ஆகிய சொற்களாலேயே அவ்வப் பாடல்கள் இயற்றப்படுவது சிறந்தது. (முன்னுரை)

நகை, வியப்பு (-மருட்கை), உவகை மூன்றும் பெரும்பாலும் அகத்திணையினைச் சாரும். வீரம், வெகுளி, அவலம், அச்சம் இளிவரல் ஐந்தும் பெரும்பாலும் புறத்திணையைச் சாரும்.

(ம. சூ. பக். 6)

சுவை அவிநயம் -

{Entry: Q17a__155}

உவகை முதலாய ஒன்பான் சுவைக்கும் உரிய அவிநயங்கள். தனித்தனித் தலைப்பிற் காண்க. (நாடக. 242)

சுவை இருவகை நிலத்தின் இயல்வது -

{Entry: Q17a__156}

சுவைக்கப்படும் பொருளும், சுவைக்கும் பொறியும் ஒன்று சேரின்அன்றி எவ்வகைச் சுவையும் பிறவாது; ஆதலின், சுவைப்பொருள் சுவைக்கும் பொறி என்னும் இரண்டும் சேரும்போது தோன்றுவது சுவை.

சுவை, உள்ளத்தில் எழும் குறிப்பு, அது புறத்தார்க்குப் புலனாம் வகை உண்டாகும் விறல் - என இம்மூன்றும் காரண காரிய முறையில் தோன்றுவன. ஆதலின் மெய்ப்பாடுகள் இவை மூன்றனையும் ஒருங்கே பெறும். (நாடக. 231, 232)

விறல், மெய்ப்பாடு, சுவை - ஒரு பொருளன.

சுவைக்கு நிலைக்களன்கள் -

{Entry: Q17a__157}

சுவைப்படும் பொருள், சுவைஉணர்வு, குறிப்பு, சத்துவம் என்பன நான்கும் சுவைக்குரிய நிலைக்களன்களாம்.

பேயையோ புலியையோ கண்ட ஒருவன் அஞ்சியவழி, மயக்கமும் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பும் உண்டாகின்றன. அச்சத்திற்கு ஏதுவாகிய புலியும் பேயும் சுவைப்படுபொருள்; அவற்றைக் கண்டகாலம்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவையுணர்வு; அதன்கண் வரும் மயக்கமும் கண்ணை மூடிக் கொள்ளுதலும் குறிப்பு; நடுக்கமும் வியர்த்தலும் மெய்ப்பாடு.

இவற்றுள் நடுக்கமும் வியர்த்தலும் ஆகிய மெய்ப்பாடுகளால் ஒருவனுக்கு உண்டான அச்சம் மற்றவர்க்கும் புலப்படும்.

(தொ. பொ. 245 இள.)

சுவைக்குறிப்புக்கள் ஒன்பது -

{Entry: Q17a__158}

சுவைப்படுபொருளும் சுவையுணர்வும் ஒன்று கூடியவழி மனத்தின்கண் தோன்றி மலரும் கிளர்ச்சி சுவையாம்.

சிருங்காரம் முதலாவுள்ளனவே சுவையாவன. அவற்றை வீரக்குறிப்பு, பயக்குறிப்பு, உக்கிரக் குறிப்பு, சிருங்காரக் குறிப்பு, காருணியக் குறிப்பு, அற்புதக் குறிப்பு, புகழ்க் குறிப்பு, நகைக் குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு என ஒன்பதாகக் கூறுவர்.

(வீ. சோ. 106 உரை)

சுவை கோடல் -

{Entry: Q17a__159}

இது சுவையுணர்வு எனப்படும். நகையும் அச்சமும் முதலாகிய உணர்வுகளை முற்காலத்து உலகியலான் அறிவான்ஒருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள் பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் சுவை எனப்படும் ஆதலின், சுவைப்படும் பொருளொடு சுவைக்கும் பொறி இணைந்து செயற்படுதல் சுவை கோடல் எனப்படும். வேம்பு என்னும் பொருளும் நா என்னும் பொறியும் சேராதவழிக் கைப்புச்சுவை பிறவாத வாறு போல, அப்பொருள்களைக் கண்டவழியல்லது நகையும் அச்சமும் முதலிய சுவைகள் தோன்றா. ஒழிந்த காமம் முதலாயினவும் அன்ன. இதனான் ‘இருவகை நிலத்தின் இயல்வது சுவையே’ என்றார் செயிற்றியனார். (தொ. பொ. 249 பேரா.)

சுவைப்பொருளை ‘விபாவம்’ எனவும். சுவைநிலை அவி நயத்தை ‘ஸ்தாயிபாவம்’ எனவும் வடநூலார் கூறுப. (ம. சூ. பக். 116) சுவைப்படும் பொருள்களை ஐம்பொறிகளான் நுகர்ந்து சுவைக்குமாற்றிற்கு உதாரணங்கள் பின்வருமாறு.

இவள் மேனி அணை போன்றது - இது பரிசத்தால் அறிந்து சுவைத்தது.

இக்கனி அமுதம் போலும் - இது நாவால் உணர்ந்து சுவைத்தது.

இவள் மேனி மாந்தளிர் போலும் - இது கண்ணால் உணர்ந்து சுவைத்தது.

இவள் கூந்தல் பூவின் மணமுடையது - இது மூக்கால் உணர்ந்து சுவைத்தது.

இவள் மொழி யாழிசை போலும் - இது செவியால் உணர்ந்து சுவைத்தது.

சுவைகோடல் பற்றி வடநூல்கள் கூறுவன பின்வருமாறு :

ஒருவன் ஒருபொருளைக் கண்டவிடத்து அப்பொருள் காரணமாக அவன் மனத்தில் நுண்மையாகத் தோன்றும் காதல் முதலிய சுவையின் முளை ‘ஸ்தாயிபாவம்’ (நிலையான மனக்கருத்து) எனப்படும்.

அச்சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள் ‘விபாவம்’ எனப்படும். அச்சுவைத் தோற்றத்தை வெளியே தெரியப்படுத்தும் உள்ள நிகழ்ச்சியாகிய குறிப்பு ‘அநுபாவம்’ எனப்படும்.

அச்சுவைத் தோற்றத்தின் விரிவாய் உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களாகிய மெய்ப்பாடுகள் ‘சாத்துவ பாவம்’ என்று பெயர் பெறும். மனவிகாரங்களாகிய மெய்ப் பாடுகள் வளர்வதற்குக் காரணமாய் அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவாகும் துணைமெய்ப்பாடுகள் ‘சஞ்சாரிபாவம்’ எனப்படும்.

அச்சுவைத் தோற்றம் வளர்ந்து அவனால் சுவைக்கப்படுத லினால் சுவை ‘இரசம்’ எனப் பெயர் பெறும்.

ஆதலின், ஒருவனிடத்துச் சுவைத்தோற்றமாவது விபாவங்க ளால் தோன்றி, அநுபாவங்களால் வளர்ந்து, சஞ்சாரிபாவங்க ளால் உறுதி பெற்று அவனால் சுவைக்கப்படுதலின் சுவை ஆகின்றது.

ஸ்தாயிபாவம் எனப்படும் சுவைத்தோற்றம் ஒன்பது வகைப் படும். அவையாவன காதல், சிரிப்பு, துன்பம், கோபம், எழுச்சி (-முயற்சி) அச்சம், அருவருப்பு, வியப்பு, அடக்கம் என்பன.

காதல்மாத்திரமன்றி உவப்பும் உவகைக்குக் காரணமாகும். இவை ஒருவனுள்ளத்தில் தோன்றியபோது நிலையாய்த் தடைப்படாமல் வளர்ந்து, பால் தயிரானாற் போலச் சுவை யாக மாற்றப்படுகின்றன. சுவையும், சிருங்காரம் (உவகை), ஹாஸ்யம் (நகை), கருணை (அவலம்) உருத்திரம் (வெகுளி), வீரம் (பெருமிதம்), பயானகம் (அச்சம்), பீபத்சம் (இளிவரல்), அற்புதம் (மருட்கை), சாந்தம் (நடுவுநிலை) என ஒன்பது வகைப்படும்.

விபாவமும், ஆலம்பந விபாவம், உத்தீபந விபாவம் என இருவகைத்து.

ஆலம்பந விபாவமாவது, ஒருவன் உள்ளத்தில் தோன்றும் சுவைத் தோற்றத்திற்கு நேரே காரணமாயுள்ள பொருளாகும்.

உத்தீபந விபாவமாவது, சுவைத் தோற்றத்திற்குக் காரணமா யுள்ள அடிப்படைப் பொருளைச் சார்ந்தும் சாராமலும் பொருந்தி நுட்பமான சுவைத்தோற்றத்தை வளர்க்கும் பொருள்.

இளம்பூரணரும் பேராசிரியரும் உள்ளத்தில் நிகழ்வதனைக் குறிப்பு என்றும், குறிப்புக்கள் தோன்றிய உள்ளத்தின் நிகழ்ச்சி யான் உடம்பில் உண்டாகும் வேறுபாடுகளைச் சத்துவம் என்றும் கூறுவர்.

வடநூலாருள் சிலர், உடம்பின் உருவினின்று தோன்றும் மனோதர்மத்தை அநுபாவம் (குறிப்பு) என்றும், உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களைச் சாத்துவிகம் என்றும் கூறுவர். சாத்துவிகபாவம் அநுபாவத்தினின்று வேறுபட்டதும் வேறுபடாததுமாய் இருத்தலின், அநுபாவத் தினுள் சாத்துவிகபாவம் அடங்கும் என்ற கருத்தும் உண்டாம். ஆகவே வடநூலார் கருத்துப்படி சுவைகோடல் கீழ்க்கண்டவற்றால் நிகழும்.

1. ஸ்தாயிபாவம் - மனத்தில் தோன்றும் சுவையின் முளை

2. விபாவம் - சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள்

3. அநுபாவம் - சுவையைத் தெரிவிக்கும் உள்ள நிகழ்ச்சி யாகிய குறிப்பு.

4. சாத்துவிக பாவம் - குறிப்பைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு.

5. சஞ்சாரிபாவம் - மெய்ப்பாடுகளை நிறைவுபடுத்தும் துணைமெய்ப்பாடு

6. இரசம் - சுவைத் தோற்றத்தைச் சுவைக்கும் சுவை.

இவற்றைப் பாடல் ஒன்றில் காணுமாறு :-

எ-டு :

‘ஆளை யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு

நாளை வாஎன நல்கினன் நாகிளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்’. (கம்பரா. 7271)

இராமன், இராவணனுடன் நிகழ்த்திய முதல்நாள் போரில் அவன் யாவற்றையும் இழந்து தனியனாய் நின்ற நிலையை நோக்கி “இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று கூறித் திருப்பியனுப்பிய செய்தி கூறும் இராமாயணப்பாடல் இது. இதன்கண் யாவற்றையும் இழந்து தனியே நின்ற இராவ ணனைக் கொல்லாது இராமன் அவனை மறுநாள் போருக்கு வருமாறு சொல்ல எண்ணியது ‘ஸ்தாயிபாவம்’ என்ற சுவையின் முளை.

இராவணன் - ‘ஆலம்பந விபாவம்’ என்ற சுவைக்கு நேர் சார்பான பொருள்.

இராணவன் தனிமை - ‘உத்தீபந விபாவம்’ என்ற சுவைக்கு நேரே சார்பான பொருளைச் சார்ந்தது.

நாளைவா என்றல் - ‘அநுபாவம்’ என்ற உள்ளக்குறிப்பு.

இரக்கம் - ‘சாத்துவிக பாவம்’ என்ற மெய்ப்பாடு.

நீதிநெறியைப் பின்பற்றிய ஆராய்ச்சி - ‘சஞ்சாரிபாவம்’ என்ற துணை மெய்ப்பாடு.

உயிர்க்கொடை பற்றிய வீரம் - ‘இரசம்’ என்ற சுவை. (பேராசிரியம் கணேசய்யர் முன். பக். 4, 5; 7, 8; 12.)

சுவைத்துணை -

{Entry: Q17a__160}

உவகைச் சுவைக்குப் பொருந்தும் துணை களிப்பு (மகிழ்ச்சி); பெருமிதச் சுவைக்குத் துணை சிறுகோபம்; சமநிலைச் சுவைக்குத் துணை வெறுப்பு; பிறவற்றுக்கும் இவ்வாறே ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அவிநயத்தின் சிறப்பும், காட்சி நலம் அமைந்த களமும், பொருத்தமான காலமும் சுவையினை மேன்மேலும் ஓங்கி விளங்கச் செய்வன. சுவைகளில் சில ஒன்றோடொன்று இணைந்து இயன்றும் இன்பம் பயக்கும்.

பெருமிதமும் வெகுளியும் இணையும்; வியப்பும் அச்சமும் சேரும்; அவலமும் அச்சமும் கூடும்; உவகையும் நகையும் ஒன்றும். (நாடக. 55-57)

தலைமையான சுவையை ‘அங்கி ரஸம்’ என்றும், இணைந்து வருவதை ‘அங்க ரஸம்’ என்றும் வடநூலார் கூறுப.

சுவைப்பாகுபாடு -

{Entry: Q17a__161}

மென்சுவையும் வன்சுவையும் என்பன.

1. உவகைச் சுவையும், அவலச் சுவையும் மிகுமென்சுவைகள்.

2. வெகுளியும், இழிப்பும் மிகவும் வன்மையான சுவைகள்.

3. நகை, சமம், வியப்பு இம்மூன்றும் மென்சுவையைச் சார்ந்தன.

4. பெருமிதமும் அச்சமும் வன்சுவையினைச் சார்ந்தவை.

3, 4 ஆகிய பிரிவில் வந்தவற்றை மென்மை வன்மைகட்கு இடைப்பட்டவாகிய நடுவுநிலைச் சுவைகள் எனவும் கொள்ளலாம். (நாடக. 59, 60)

சுவைப்பொருள் -

{Entry: Q17a__162}

நாவினால் நுகரும் அறுவகைச் சுவைகளுக்கும் முதலாகிய வேம்பும் மிளகும் புளியும் உப்பும் கடுக்காயும் கரும்பும் போல, நகை அச்சம் முதலிய சுவைகள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருள்கள்.

சூழ்ச்சி -

{Entry: Q17a__163}

சூழ்ச்சி - எண்ணம்

‘சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்’ - குறள் 445

என்னும் குறளில் சூழ்தல் எண்ணுதல் என்ற பொருளில் வந்துள்ளது. இதுவும் ஒரு மனநிகழ்ச்சி. (தொ. பொ. 256 இள.)

சூழ்ச்சி என்பது சுழற்சி; அஃதாவது மனத்தடுமாற்றம். உலக வழக்கில் சூழ்வருவானைச் சுழல்வரும் என்று கூறுவதுண்டு. மனத்திலுள்ள சூழ்ச்சி யாதானும் ஒரு குறிப்பான் வெளிப் படுதலின் இதுவும் மெய்ப்பாடாயிற்று. (தொ.பொ. பேரா. 260)

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் கள் முதலியன உண்டார் செயலாகிய ‘மதம்’ என்பர்.

செத்தோன் அவிநயம் -

{Entry: Q17a__164}

அச்சமும் இழிப்பும் தரும் நிலையில் கிடத்தலும், பற்கள் இறுகச் சேர்ந்து வெளியே தெரிகின்றமையும், கைகால் முதலிய உறுப்புக்கள் விரைத்து இழுத்துக்கொண்டு இருத்த லும், வயிறு மெலிந்திருத்தலும், வெள்விழி வெளியே தெரியக் கருவிழி மறைந்திருத்தலும் போன்றவை. (நாடக. 253 உரை)

இவை அடியார்க்குநல்லார் காட்டுவன.

செல்வம் -

{Entry: Q17a__165}

இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது.

செல்வம் - செல்வநுகர்ச்சி (தொ. பொ. 255 இள.)

செல்வம் என்பது நுகர்ச்சி (259 பேரா.)

“பெரும் பொருளீட்டி அச்செல்வத்தான் இன்புறத்தக்கது இவ்வில்லறம்” (கலி. 12) என்று தலைவன் கூறிய கூற்றில், செல்வம் உவகைப் பொருளாமாறு உணர்த்தப்படுகிறது. (பேரா.)

செல்வமாவது மனத்தை மகிழ்விக்கும் பொருள்களுக்குப் பொதுப்பெயர். எக்காலத்தும் பிறரை வருத்திப் பெறும் செல்வம் உவகைப்பொருள் ஆகாது. (தொ. பொ. மெய்ப். 11 பாரதி)

சொல்லப்பட்ட பெருமிதம் -

{Entry: Q17a__166}

‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனால் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்பது. அது, நலங்கிள்ளி தன் வஞ்சினத்தில் “மாசற்ற நெஞ்சத்தான் காதல் கொள்ளாத பரத்தையர் தொடர்பான் என் மார்பின் மாலை வாடுவதாகுக!” (புறநா. 73) என்ற கூற்றில், அவன் தன்னை உள்ளன்புடன் விழையும் மகளிரின் தொடர்பையே விரும்புபவனாகி அன்புடைக் காம வாழ்க்கையே நடத்தினன் என்று அறியப்படும். (தொ. பொ. 257 பேரா.)

சோகம் -

{Entry: Q17a__167}

அவலச் சுவை (வீ. சோ. 96 உரைமேற்.)

சோம்பினோன் அவிநயம் -

{Entry: Q17a__168}

விரல்களை நொடித்தவண்ணம் மிகுதியாகக் கொட்டாவி விடுதலும், சோம்பல் முரித்தலும் (மூரி நிமிர்தலும்), சிடு சிடுவென இருத்தலும், காரணமின்றி முடங்கிப் படுத்துக் கிடத்தலும், நோய் இல்லாவிடினும் சோர்வுடன் நடத்தலும் போன்றவை சோம்பல் உடையவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253)

ஞ section: 1 entries

ஞஞ்ஞையுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__169}

ஞஞ்ஞை - மயக்கம்.

பற்கள் இறுகிப் பேச்சிழந்த நிலையும், நுரை வழியும் கூம்பிய வாயும், மற்றவர்க்குச் சொல்லுபவன் போலத் தொடங்கிச் சொல்ல உணரா நிலையும், கண்விழிகள் வெளியே தெரிந் தும் எதையும் காணாத நிலையும், துன்பமுற்றுச் செயலற்ற நிலையும், முகத்தின் ஒளி நீங்கலும், இவை போன்றன பிறவும் மயக்கமுற்று விழுந்தவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன (நாடக. 253 உரை).

த section: 21 entries

தம்இறை -

{Entry: Q17a__170}

இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியாவது.

இறையெனப்படுவார் தந்தையும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொ. பொ. 256 பேரா.)

எ-டு : ‘அரசன் தம்மை நிமிர்ந்து பார்க்கும் பார்வைக்கு அஞ்சிக் குறுநில மன்னர்கள் அவனுடைய திருவடி களையே நோக்கி இருக்கின்றனர்’ என்பது தம் இறை பொருளாகிய அச்சம். (பேரா.)

தம் இறை - தவறு செய்தவரைத் தண்டிக்கும் மன்னன். தாம் செய்யும் தவறுகள் பற்றியும், அத்தவற்றான் அரசன் தம்மைத் தண்டிப்பானே என்ற எண்ணம் பற்றியும் அச்சம் நிகழும். (பேரா.)

கொலை களவு கள் காமம் பொய் என்பனவற்றை நிகழ்த்தின வர்களுக்கு அரசனால் அச்சம் வருதலின், அரசன் அஞ்சப் படும் பொருள் ஆயினான். (தொ. எ. 252 இள.)

தம்மிறை -

{Entry: Q17a__171}

தம் இறை = அரசன்; தம் மிறை - தம் தவறுகள் என இருவகையாகப் பொருள் கொள்க. (மெய்ப். 8 பாரதி)

தலை நோவு உற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__172}

(1) ஒரு நிலையில் இல்லாமல் தலை ஆடிக்கொண்டே இருத்தல், (2) எந்த இடத்திலும் நேராக அமர முடியாத நிலை அடைதல், (3) உற்சாகம் தளர்ந்திருத்தல், (4) நெற்றியை விரல் களுக்கு இடையில் கொண்டு நெருக்குதல், (5) கண்கள் நோவி னால் வருந்திச் சுருங்குதல் முதலியன. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253)

தலைமயிர் முடிநெகிழ்தல் -

{Entry: Q17a__173}

தலைவன் தலைவியின் உள்ளம் தன்னிடத்து ஈடுபட்டதனை அறிந்து அவள் மெய்யைத் தீண்டியவழி, இதற்கு முன் அறியாத இப்புதிய பரிசத்தால் தன்னுள்ளத்து நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக் கொள்ள முயல்வாள். அப்பொழுது உடம்பொடு தொடர்புடைமையும் தொடர் பின்மையும் என்ற நிலையிரண்டு முடைய மயிர்முடி மனத்தில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான் அவிழ்தலாம். (262 பேரா.)

இதனை வேட்கை என்ற இரண்டாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட நான்குநான்கு பகுப்பினவாகிய முக்கூற்றுப் பன்னிருமெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் கூற்றின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

தலைவிக்குத் தலைவன் குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -

{Entry: Q17a__174}

தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே தலைவியும் உள்ளத்துக் கொள்வாளாயின் ஒருவரை ஒருவர் சந்தித்த லாகிய புரிமுகம் புரிந்த பின்னர், (1) பொறிநுதல் வியர்த்தல், (2) நகு நயம் மறைத்தல். (3) சிதைவு பிறர்க்கின்மை, (4) கூழை விரித்தல், (5) காதொன்று களைதல், (6) ஊழணி தைவரல், (7) உடை பெயர்த் துடுத்தல், (8) அல்குல் தைவரல், (9) அணிந்தவை திருத்தல், (10) இல்வலியுறுத்தல், (11) இருகையும் எடுத்தல் என்னும் பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிக்கு முறையே நிகழும். (தொ. பொ. 97 நச்.)

தலைவனது குறிப்பறிந்து அதற்கு உடன்பாட்டைத் தன் கண்ணினால் தெரிவித்த பின்னரும், தலைவி பெண்மையால் கூற்று நிகழாது. அவள் தன் வேட்கையைக் கண்ணாலேயே குறிப்பிடுவாள். (94 இள.)

தறுகண் -

{Entry: Q17a__175}

இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

தறுகண் - அஞ்சத்தக்கன கண்டவழி அஞ்சாமை. மடலேறும் தலைவன், “யான் போர்க்களத்தில் வலிய யானைமேல் ஏறிப் போர் செய்ய வல்லவன்” (கலி. 141) என்று கூறுவது அவன் தறுகண்மை பற்றிய பெருமிதத்துக்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 257 பேரா.)

தன்மை -

{Entry: Q17a__176}

தன்மை என்பது சாதி இயல்பு.

பார்ப்பார், அரசர், இடையர், குறவர் என்று இன்னோர் மாட்டு ஒருவரை ஒருவர் ஒவ்வாமல் கிடக்கும் இயல்பு. அது நடை உடை பாவனைகளால் மெய்க்கண் கிடந்து வெளிப் படுதலின் மெய்ப்பாடாயிற்று.

பார்ப்பான் வயலைக்கொடி போன்று வாடிய இடையினை யும், தளர்ந்த நடையினையும் உடையன் (புற நா. 315) எனவும், அரசன் பகைவர் விடுத்த அம்பின் தழும்புபட்ட பரந்த அழகிய மார்பினன் (புறநா. 13) எனவும், இடையன் சாயம் ஏற்றிய ஆடையையும் காயாம் பூவினாலாகிய முடிமாலை யையும் ஆனிரைகளை ஓட்டுதற்குரிய கோலினையும் உடையன் (கலி. 108) எனவும், குறவன் தேனும் மயிற்பீலியும் கொண்டு வருபவன் எனவும் நடைஉடை செயல் முதலியன கொண்டு இன்னான் என்று உணர உதவும் மெய்ப்பாடு.

(தொ. பொ. 256 இள.)

தன்மை சாதித்தன்மை, அது பார்ப்பாராயின் அழுந்த மிதியாது மெல்லென அடியிட்டுக் குறுநடை கொண்டு வந்து சேறலும், அரசராயின் நிமிர்த்திய கழுத்தொடும் முன் னோக்கிய மார்பொடும் நடந்து சேறலும், இடையராயின் ஆடையில் இலை முதலியன இடுதற்கு வளைந்த மடியை விட்டுக் கட்டிக்கொண்டு கையில் மூங்கிற்கோலை ஏந்தி ஆனிரைகளை ஒருங்கு சேர்த்தற்குச் சீழ்க்கை ஒலி எழுப்பிக் கொண்டு வெற்றிலை பாக்கு உண்ணாமையால் காவிக்கறை ஏறாத பற்களுடன் தோன்றுதலும் முதலாக வழக்கு நோக்கிக் கண்டுகொள்ளுதல் (260 பேரா.)

இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலால் மெய்ப் பாடாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண் டனுள்ஒன்று.

தன்மை சாதித்தன்மை என்று பொருள் கொள்வது ஆசாரம் ஆவது அல்லது, மெய்ப்பாடு ஆகாது. ஆதலின் ‘தண்மை’ என்று பாடம் கொண்டு எளிமை என்று பொருள் செய்வர் இரா. இராகவய்யங்கார். ‘தண்மை’ வடநூலுள் தைன்யம் எனப்படும்.

இனி, குழந்தை உரைக்குமாறு:

தன்மை அவரவர் நிலைக்கு ஏற்ற தன்மை; செல்வம் கல்வி இவற்றின் உயர்வுக்கு ஏற்றவாறும் அதிகாரத்திற்கு ஏற்ற வாறும் பேசுதல், நடத்தல் முதலியன (247)

தன்மையாவது - குணவியல்பும் குலவியல்பும் தோன்ற நிகழும் இயற்கைப் பண்பு. (தொ. மெய்ப். 12 ச. பால.)

திரு -

{Entry: Q17a__177}

இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.

திரு - செல்வம் (தொ. பொருள். 269 இள.); தொ. பொ. 90 ஆம் நூற்பா.வில் இப்பத்தும் விளக்கப்பட்டுள.

திரு - செல்வம். இது பொருள் பற்றியதன்று. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. (மெய்ப். 25 ராக.)

திரு - பொருள் உடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி. அது ‘வினையுள் உடைமை’ (தீவினைக் காலத்தும் செல்வம் உடையவர் போன்றிருத்தல்) எனவும்படும். (மெய்ப். 25 பேரா.)

கணவன்குடும்பம் வறுமையுற்றபோதும், தந்தையின் செல்வநிலையைக் கருதாது கணவனொடு தலைவி,

‘கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்’ (நற். 110)

நிறைவொடு வாழ்வது திரு என்ற ஒப்புமை. (பேரா.)

திளைப்புவினை மறத்தல் -

{Entry: Q17a__178}

தலைவி தோழிவாயிலாகத் தமர்க்கு அறத்தொடுநின்ற பின்னர்த் தலைவனொடு முன்பு பகலும் இரவும் திளைத்த வாறு திளைத்தலை, அச்சமும் நாணும் மடனும் காரணமாக நீக்குதல்.

தலைவனது பிரிவினால் அழியும் தலைவி முன்பு விரும்பித் திளைத்த விளையாட்டு முதலியவற்றை இப்பொழுது வெறுத்து நிற்றல் என்றுரைப்பினும் ஆம்.

இஃது ‘ஆக்கம் செப்பல்’ என்ற ஐந்தாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 261)

களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளில் இது கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற்பகுதிக்குரிய இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 265 பேரா.)

துஞ்சல் -

{Entry: Q17a__179}

துஞ்சல் - உறக்கம். உறங்காமையாகிய நிலையினின்று உறக்கம் என்னும் நிலை, மெய்யில் தோன்றும் வேறுபாடுகளால் உரைப்படும். (தொ. பொ. 256 இள.)

துஞ்சல் என்பது உறக்கம். அது நடந்து வருகின்றான்கண்ணும் விளங்கத் தோன்றுதலின், அதுவும் மெய்ப்பாடு எனப் பட்டது. (260 பேரா.)

இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் ‘நித்திரை’ என்பர்.

துஞ்சிச் சேர்தல் -

{Entry: Q17a__180}

1. தலைவி, இரவுக்குறியிடத்துத் தலைவன் வரும் வருகையை, வரைதல் வேட்கையான், மகிழ்வோடு ஏலாமல் மனை யகத்துப் பொய்த்துயிலொடு சோம்பிக் கிடத்தல்; தலைவன் தன்னை வரைந்து கொள்ளாத புலவியான் இங்ஙனம் செய்கின்றாள் என்பது. (271 பேரா.)

2. கவலைகொண்டு உறங்காதிருத்தலேயன்றி உரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல் என்ற கற்புக்காலச் செய்தியைக் கொள்வர், இளம்பூரணர். (267)

3. தலைவன் வரவை மகிழாது வருத்தத்துடன் அவனைக் கூடுதல். (மெய்ப். 23 பாரதி)

இஃது ஒழியாது ஒளியாது உடனுறையும் கற்புக் காதற்கூட்ட வேட்கைக்குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (271 பேரா.)

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (267 இள.)

துஞ்சிச் சேர்தல்: பொருள் -

{Entry: Q17a__181}

வரைதலான் எய்தும் கூட்டம் தான் விரும்பியவாறு நிகழா மல் நீட்டித்தலான் தலைவி உளம் மடிந்து மனை சேர்ந் திருத்தல்.

இஃது இளிவரல் அழுகைகளுக்குப் பொருளாக அமைவது. (தொ. மெய்ப். 23 ச. பால)

துயில் உணர்ந்தோன் அவிநயம் -

{Entry: Q17a__182}

சிறு கொட்டாவியும், நெடுமூச்சு விடுதலும், தொங்கும் முகமும், தள்ளாடும் உடம்பும், தெளிவின்மையும் போன் றவை.

இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

துவர்ப்பு -

{Entry: Q17a__183}

1. அறுவகைச் சுவைகளில் ஒன்று; தனிப் பாக்கின் சுவை.

2. ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்னும் குண பேதங்கள். ‘அறுவகைத் துவர்ப்பும் பேசின்’ (சீவக. 3076) (L)

துன்பத்துப் புலம்பல் -

{Entry: Q17a__184}

தலைவியும் தலைவனும் களவிலும் கற்பிலும் பிரிவு ஆற்றாது துன்புறுங்காலை, அவ்வாற்றாமை மற்றவர்க்கு இன்றித் தாமே துன்புறுகின்றாராகத் தனிமை தாங்காது படர்மெலிந்து இரங்கல். இது புணர்ச்சியை வெறுத்த குறிப்புப் போலத் தோன்றினும், ஆராய்ந்து உணரின், அக்கூட்டத்திற்கே நிமித்தமாம்.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (266). அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். (தொ. பொ. 270 பேரா.)

தூது முனிவின்மை -

{Entry: Q17a__185}

தூது விடுத்தற்கண் வெறுப்பு இல்லாமை.

தலைவி விலங்கும் பறவையும் போல்வன கண்டு களவொழுக் கத்தான் தான் படும் துயரங்களைத் தலைவற்குப் பன்முறை- யானும் தூதாகச் சென்று சொல்லுமாறு வேண்டுதல். தூது விடுவதன் பயன், தலைவன் விரைவில் களவொழுக்கத்தைத் தவிர்ந்து வரைய வேண்டும் என்பது.

இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பினை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (தொ. பொ. 271 பேரா.)

இது நடுவண் ஐந்திணையுள் மனன் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (267 இள.)

தெய்வம் அஞ்சல் -

{Entry: Q17a__186}

தலைவி தெய்வத்தை அஞ்சுதல். (தொ. பொ. 268 இள.)

தெய்வம் அஞ்சல் என்பது தலைவனுடைய குலதெய்வமும் அவனுக்கு ஆசிரியராகிய முனிவரும் இன்னார் என்று அவனான் உணர்த்தப்பட்டு உணர்ந்த தலைவி அத்தெய்வத் தினை அஞ்சி ஒழுகும்போது பிறக்கும் உள்ள நிகழ்ச்சியாம். தலைவிக்குத் தெய்வம் தலைவன்ஆயினும், அவனின் தான் வேறு அல்லளாக மந்திரவிதியோடு அவனான் மணக்கப் பட்டவள் ஆதலின், தலைவன் அஞ்சும் தெய்வத்துக்குத் தலைவியும் அஞ்ச வேண்டியவளே. (தொ. பொ. 272 பேரா.)

சூள் பொய்த்தல், பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் வருத்தும் என்று தலைவி அஞ்சுவது. (மெய்ப் 24 பாரதி.)

தலைவி தலைவனான் உணர்த்தப்பட்டு அவன் வழிபடும் தெய்வத்தை அஞ்சி வழிபடுதல். தெய்வமாவது - ஆசிரியர், பெற்றோர், பெரியோர், இறந்துபோன முன்னையோர் முதலானோர். அஞ்சி வழிபடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடு எனப்பட்டது. (தொ. பொ. 259 குழ.)

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

தெய்வம் தொழல் -

{Entry: Q17a__187}

தெய்வம் வாழ்த்தல். (சாமி. 112)

தெய்வமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__188}

பழைய பழக்க வழக்கங்களை நீத்துப் புதிதாகக் கொண்ட முறை பற்றிக் கைகளை உதறும் செயலுடைமையும், கலக்க மும், உதடுகளை மடித்துக் கடித்த வாயுடைமையும், புருவங் கள் துடிப்பதும், அசைந்தாடிக்கொண்டே யிருப்பதும், சிவந்த முகமுடைமையும், செருக்கிய நிலையுடைமையும் ஆம். இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

தெரிந்து உடம்படுதல் -

{Entry: Q17a__189}

களவில் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் வழங்கும் அன்புக் கையுறைகளை ஏற்ற தலைவி, ஊரவர் தூற்றும் பழிச்சொற் களுக்கு நாணி, இச்செய்தியைத் தோழி வாயிலாகச் செவி லிக்கு அறிவித்தலே தக்கது என்று தனக்குத் தலைவனொடு தொடர்புண்டாய செய்தியைக்கூற முறையாக அறத்தொடு நிற்றல். (தொ. பொ. 265 பேரா.)

நன்கு ஆராய்ந்து தலைவனொடு தான் கொண்ட தொடர்பினைத் தாய்க்கு அறிவிக்கத் தோழியிடம் கூறுதல்.

இஃது ஆக்கம் செப்பல் என்ற ஐந்தாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு. (தொ. பொ. 261 இள.)

களவுக் காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற்பகுதிக்குரிய முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

தோழியிற்புணர்வுக்கு உதவும் துணைமெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__190}

கையாறு முதல் நடுக்கம் முடியவுள்ள எட்டுத்துணை மெய்ப் பாடுகளும் தோழியிற் கூட்டத்துக்கு உதவுவன என்பது நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து.

1. கையாறு - தன்வசமிழத்தல்; அஃதாவது செயலற்றிருத்தல். இதுவும் முற்றிய காதல் நோயான் வருவது.

2. இடுக்கண் - காதலால் வரும் துன்பம்.

3. பொச்சாப்பு - மறதி; ‘வேட்கை ஒருதலை’ (தொ.பொ.100 நச்.) என்ற நூற்பாவில் கூறப்பட்ட ‘மறத்தல்’ களவு என்னும் கைகோளுக்குச் சிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

4. பொறாமை - காதலர் இருவர் தம்முள் ஒருவரைப் பற்றி மற்றவர் பழித்துப் பேசுதலைப் பொறுத்துக் கொள்ள இயலாமை. இயற்பழிக்கும் தோழி கூற்றும் ஏனோர் கூற்றும் தாங்காமல், தலைவி அவற்றை வெறுக்கும் காதலியல்பே பொறாமையாவது.

5. வியர்த்தல் - நாணாலும் நடுக்கத்தாலும் வேர்த்தல். இது காதலர் இயல்பு.

6. ஐயம் - காதல் மிகுதியால் ஐயுறுதல். இது முதற்காட்சி யின்கண் நிகழும் ஐயமன்று;ஊடலில் எழும் ஐய உணர் வாம். திருக்குறளில் ‘புலவி நுணுக்கம்’ என்னும் 132 ஆம் அதிகாரத்து நிகழும் கூற்றெல்லாம் இவ் ஐயத்தால் நிகழ்வன.

7. மிகை - காதல் எல்லை மீறியதால் வரும் நிறையழிவு. தலைவிக்கும் காதல் மிகுதியால் நிறையழிவு தோன்றும்.

8. நடுக்கு - காதலர்க்கு உணர்ச்சி மிகுதலால் உண்டாகும் பனிப்பு. ‘இடமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்’ (குறுந். 178) எனத் தலைவற்கும், ‘சூர்நசைந் தனையையாய் நடுங்கக் கண்டே’(குறுந். 52) எனத் தலைவிக்கும் நடுக்கம் தோன்றும்.

இவையெட்டும் காதலின் நான்காம் நிலையாம் தோழியிற் கூட்டத்தொடு தொடர்வன. (தொ.பொ. மெய்ப். 12 பாரதி)

ந section: 27 entries

நகுநயம் மறைத்தல் -

{Entry: Q17a__191}

புன்னகை புலப்படுதற்குக் காரணமாகிய அன்பினை வெளியே புலப்படாது மறைத்தல்.

தலைவன் தன்னைக் கண்ட அளவில் அச்சமும் நாணமும் கொண்ட தலைவிக்கு நெற்றி வியர்த்ததாக, அதன்பின் தலைவனிடத்துத் தோன்றிய குறிப்புக்களான் முறுவல் செய் தற்கு ஏதுவாகிய அன்புடைமை மனத்துப் பிறந்தவழியும், அவள் முறுவல் செய்யாது நிற்றல். தலைவி போல முறுவலை அடக்கிக் கொள்ளாது, தலைவன் வெளிப்படையாக முறுவலிப்பான். (தொ. பொ. 261 பேரா.)

இது முதல் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்; களவு எனும் கைகோளில் புணர்ச்சிமுன் நந்நான்காக நிகழும் முக்கூற்றுப் பன்னிரு மெய்ப்பாட்டினுள் முதற் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்ப ஏனையார்.

நகை -

{Entry: Q17a__192}

எள்ளல் (-இகழ்ச்சி), பகைமை, மயக்கம் என்பன காரணமாகச் சிரிப்பை விளைவிக்கும் செயலும் சொல்லும் பொருந்தியது நகை.

இது புன்னகை, வெளிநகை, பெருநகை, இடிநகை, அழுநகை, வலி நகை என அறுவகைப்படும். (நாடக. 44, 45)

நகை அவிநயம் -

{Entry: Q17a__193}

அளவு கடந்த சிரிப்பு, பிறர்க்குச் சிரிப்பூட்டுதல், முகக் கோணல், கன்னம் சுருங்குதல், புருவம் இடைவிட்டு வளை தல், தொடங்கிய செயலை விடுத்து வேறொன்று செய்து பின் முன்னதையே செய்வது - போன்ற வேறுபாடுகள் என்னும் இவையும் இவை போல்வன பிறவும் நகைச்சுவைக்குரிய அபிநயங்களாம். (நாடக. 245)

நகைக்குறிப்பு நான்கு -

{Entry: Q17a__194}

நகைபடுபொருள் கண்டவழி முறுவலொடு வரும் மகிழ்ச்சிப் பொருளாவது நகை. எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு குறிப்புப் பற்றி நகை நிகழும்.

இவை தான் பிறரை எள்ளி நகுதலும் தான் பிறரான் எள்ளப் பட்டவழித் தான் நகுதலும், தன் இளமையான் நகுதலும், பிறர்இளமை கண்டு தான் நகுதலும், தன்பேதைமையை நினைத்து நகுதலும், பிறர்பேதைமை கண்டு நகுதலும், தன் மடமை (அறியாமை)யை நினைந்து நகுதலும், பிறர்மடமை யை நினைந்து நகுதலும் என, தன்கண் தோன்றுவனவும் பிறன்கண் தோன்றுவனவும் ஆகிய பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.

இந்நால்வகை நகையும் உள்ளத்தொடு பிறப்பனவாம். ஆகவே, உள்ளத்தொடு பிறவாத பொய்நகையும் உண்டு என்பது. (பேரா.)

மயக்கம், பெயர்ப்பு, இகழ்வு, நோக்கம் என்ற நான்கனையும் நகைக்குறிப்பாக வீரசோழிய உரை குறிக்கும் (மயக்கம் - பேதைமை; பெயர்ப்பு-நிகழ்ச்சியைப் பிறழக்கொள்ளும் மடம்; நோக்கம்-நோக்குதற்கு இனிய இளமை; இகழ்வு-எள்ளல். ஆதலின் மயக்கம் முதலிய நான்கும் முற்கூறிய எள்ளல் முதலிய நான்கேயாம்.) (தொ. பொ.252 பேரா; வீ.சோ. 96 உரைமேற்.)

நகைச்சுவைக்குப் பொருளாவன -

{Entry: Q17a__195}

தமிழினத்தொடு சிறிதும் பழகாத ஆரியர் தமிழை நூல்வாயி லாகக் கற்ற அறிவினைக் கொண்டு கூறும் தமிழும், குருடரும் முடவரும் நடந்து செல்லும் நடையும், பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்தலும், குழவி கூறும் மழலையும் போல்வன. (தொ. பொ. 249 பேரா.)

நகையைத் தோற்றுவிப்பன -

{Entry: Q17a__196}

முடவர் செல்லும் செலவும், கவலை மிகுந்து பேசுவோர் பேச்சும், பித்தர் கூறும் பிதற்றலும், கோபத்தான் பேசுவது இன்னது என்று அறியாது உண்மையான சுற்றத்தாரை இகழ்ந்து பேசுவதும், ஒருவனுக்கு அடங்கி நடப்பவன் அவனில்லாதபோது பேசும் பேச்சும், குழந்தை கூறும் மழலையும், மெலியவர் தம் வலிமைபற்றிப் பேசுவதும், வலியவர் தம் மெலிவு பற்றிப் பேசுவதும், பகைவரை அளவு மீறி மதித்து அவரை உயர்த்திப் பேசுவதும், கல்லாதவர் தம் கல்வியை மிகுத்துப் பேசுவதும், பெண்தன்மையும் உடைய அலி ஆண்வடிவில் வருதலும் ஆண்தன்மையும் உடைய பேடி பெண் வடிவில் வருதலும், கள்ளுண்டார் பேசுவதும், மனம் போனபடி நடப்பவன் பேசுவதும், தெளிவற்றவர் செய்யும் கடவுள்வழிபாட்டுச் சடங்கும், தமிழ்நாட்டில் பயிலாத ஆரியர் கூறும் தமிழும், தாம் விரும்பும் பெண்ணின் உள் ளத்தை அறியாத காமுகர் பேச்சும், கூனர் குறளர் ஆகியோர் தோற்றமும், ஊமர் செவிடர் ஆகியோர் செயல்களும் முதலியன. (செயிற்றியம்) (தொ. பொ. 248. இள. உரைமேற்)

நஞ்சுண்டோன் அவிநயம் -

{Entry: Q17a__197}

மொழி குழறுதல், பற்களிடையே நாவினை மடித்துக் கொள் ளுதல், வாயில் பனி போலவும் பஞ்சு போலவும் நுரை தோன்றுதல், தன்னைச் சுற்றியுள்ளாரிடம் பேச விரும்பியும் ஏதும் பேச இயலாமை முதலியன. (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)

நடுக்கு -

{Entry: Q17a__198}

நடுக்காவது யாதானும் ஒருபொருளை இழக்கின்றோம் என வரும் மனநிகழ்ச்சி. ‘நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே’ (கலி.13) என்றவழி, தலைவன்பிரிவு நினைந்து தலைவி நடுங்குதல் சுட்டப்பட்டது. (தொ. பொ. 256 இள).

நடுக்கம் என்பது அன்பும் அச்சமும் முதலாயின உடம்பில் வெளிப்படும் வகையில் மனம் நடுங்குதல். மகனுக்கு நோயில் லாத போதும் அவனுக்கு நோய் வந்தால் என் செய்வது என்று மனம் நடுங்குவது அன்பினான் நடுங்குவதாம்; அச்சம் என்னும் சுவை தோன்றிய பின்னர் நடுக்கம் உண்டாயின் அஃது அச்சத்தினான் நடுக்கமாம் (260 பேரா).

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று; இதனை வடநூலார் ‘திராசம்’ என்ப

நடுவுநிலை -

{Entry: Q17a__199}

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. இஃது ஒன்பான் சுவையுள் ஒன்று என நாடகநிலையுள் வேண்டப்படும் சமநிலையாகும். இது காமம் வெகுளி மயக்கம் இவை நீங்கினார்கண்ணேயே நிகழ்வதாய்ச் சிறுவரவிற்றாகலின் துணைமெய்ப்பாடுகளொடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. (தொ. பொ. 260 பேரா.) ‘சமநிலை’ காண்க.

இதனை வடநூலார் ‘த்ருதி’ என்ப.

நலிதல் -

{Entry: Q17a__200}

நலிதலாவது பிறரை நெருக்குதல். அதன்கண் நிகழும் மன நிகழ்ச்சி நலிதல் எனும் மெய்ப்பாடாயிற்று. அரசன் பகைவரை நலிதற்குப் பாசறைக்கண் தங்கியிருத்தல் இதற்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 256 இள).

நலிதல் என்பது பிறர்க்கு இன்னா செய்து நெருக்குதல். அது தீவினை புரியும் கொடியோரிடமே நிகழும் செயலாகும். அக்கொடியோரைக் கண்ட அளவில் அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சம் என்ற மெய்ப்பாட்டில் அடங்கும்; ஆதலின் நலிதல் அச்சத்தின் வேறுபட்டது. இது மனத்திலுள்ள தீய எண்ணத்தைச் செயலால் வெளிப்படுத்தலின் மெய்ப்பா டாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா)

இதனை வட நூலார் நோயான் வருந்துதலாகிய ‘வியாதி’ என்ப.

நவரசம் -

{Entry: Q17a__201}

ஒன்பான் சுவைகளாம் நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, சாந்தம் என்னும் நூற் சுவைகள்.

நற்காமத்துக்கு ஆகா மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__202}

நிம்பிரி, கொடுமை, வியப்பு, புறமொழி, வன்சொல், பொச் சாப்பு, மடிமை, குடிமை, இன்புறல், ஏழைமை, மறப்பு, ஒப்புமை என்பன. இவற்றுள் குடிமை, இன்புறல், ஏழைமை, மறப்பு என்ற நான்கனைக் குடிமை இன்புறல், ஏழைமை மறப்பு எனக் கூட்டி இரண்டாக்கி நற்காமத்துக்கு ஆகாத மெய்ப் பாடுகள் பத்து என்பர் சோமசுந்தரபாரதியார் (மெய்ப். 28)

குடிமை இன்புறலை ஒரு தொடராகக் கொண்டு பதி னொன்று என்று தொகை கொள்வார் இளம்பூரணர். (தொ. பொ. 270)

ஒவ்வொரு சொல்லும் தனித்தனியாகக் கொண்டு பன் னிரண்டு என்று தொகை கொள்வர் பேராசிரியரும் (274), குழந்தையும் (261).

நற்காமத்துக்கு மெய்ப்பாட்டுப் பொருள் ஆதற்கு ஏலாதவை -

{Entry: Q17a__203}

அவையாவன: நிம்பிரி, கொடுமை, வியப்பு, புறமொழி, வன்சொல், மறதி, சோம்புதல், குடிமை இன்புறல், ஏழைமை மறப்பு, ஒப்புமை நோக்கம் - என்பன.

நிம்பிரியாவது நேயமின்மை; அஃதாவது வெறுப்பு.

புறமொழியாவது, தமது உள்ளத்தும் இல்லத்தும் நிகழ்வன வற்றைப் புறத்தார்க்குப் புலனாமாறு பேசுதல்.

குடிமையின்புறலாவது, தத்தம் குடிமைச் சிறப்பினை உயர் வாக எண்ணிச் செருக்குக் கொள்ளுதல். இது மற்றவர் குடிமையை இகழும் குறிப்பாக அமைதலின் காதலுணர்வைச் சிதைக்க வல்லது.

ஏழைமை மறப்பாவது, பணிவுடைமையை மறந்தொழுகுதல். ஈண்டுப் பணிவென்பது அன்பிற்கு எளியராதல். மதிக்கத்தக் கார்மாட்டும் மேலாளர்மாட்டும் தம்மை அடியேன் எளியேன் சிறியேன் எனப் பண்புடையோர் கூறிக்கொண் டொழுகும் வழக்கினைக் காண்க. (தொ. மெய்ப். 26 ச. பால)

நாடகச் சுவையும் நாட்டிய மெய்ப்பாடும் -

{Entry: Q17a__204}

நாடக உறுப்பாகிய சுவை, காண்போரின் அறிவொடு கலந்து அவரை அவ்வுணர்வினராகவே ஆக்கிவிடும். நாட்டிய உறுப்பாகிய மெய்ப்பாடு காண்போரின் அறிவினைச் சார்ந்து அவ்வுணர்வினைப் புலப்படுத்தி நிற்கும். அஃதாவது நாடகத் துள் நிகழும் அழுகைக் காட்சியைக் காண்போர், தாமும் அழுவர். நாட்டிய மகள் அவினயத்துக் காட்டும் அழுகை யைக் காண்போர் அறிந்துகொள்ளுதலன்றி அழுதலைச் செய்யார். அதனால் நாடக உணர்வுகள் ‘சுவை’ என்றும் நாட்டிய உணர்வுகள் ‘மெய்ப்பாடு’ என்றும் தொன்னூ லாசிரியர் வேறுபடுத்தினர். (தொ. மெய்ப். பாயிரம். ச.பால.)

நாணமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__205}

தலை கவிழ்ந்திருத்தல், தன்செயலைப் பிறர் அறியாவாறு மறைத்தல், முகம் வாடுதல், உடம்பு கம்பீரமின்றிக் கூனிக் குறுகுதல், உடம்பின்ஒளி நீங்குதல், பார்வையை மேலே செலுத்தாமல் தரையை நோக்கியே செலுத்துதல் முதலியன. (இவை சிலப்பதிகார உரையுள் அடியார்க்குநல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை.)

நாணுதல் -

{Entry: Q17a__206}

நாணுதல் - தமக்குப் பழி வருவன செய்யாமை.

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாண்ஆள் பவர் (குறள் 1015)

எனவரும். (தொ. பொ. 256 இள.)

நாணுதல் என்பது தான் ஒரு செயல் செய்வது குறித்து உள்ளத்தில் நாணுகின்ற செயல் பிறருக்கு வெளிப்படுமாறு நிகழும் நிகழ்ச்சி (260 பேரா).

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் ‘வ்ரீடை’ என்ப.

நாலிரண்டாகும் பால் (1) -

{Entry: Q17a__207}

எட்டாகும் பகுதி என்பது பொருள். இத்தொடர் தொல் காப்பிய மெய்ப்பாட்டியல், உவமஇயல் என்ற ஈரிடங்களிலும் வந்துள்ளது.

சுவைக்கப்படு பொருளையும் சுவையுணர்வையும் ஒன்றாக வும், மனத்துக்கண்பட்ட குறிப்பையும், உடல்வாயிலாக வெளிப்படும் மெய்ப்பாட்டையும் ஒன்றாகவும் என இரண் டாக அடக்குதலேயன்றி, எல்லாவற்றையும் சுவை என்ற ஒன்றற்குள் அடக்கிச் சுவைகள், நகை - அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெகுளி - உவகை- என்ற எட்டாகக் கூறுதல். (250 பேரா.)

நாலிண்டாகும் பால் (2) -

{Entry: Q17a__208}

நந்நான்காய்த் தொகுத்து வழங்குதலன்றி, ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ (மெய்ப். 12) என எவ்வெட்டாகத் தொகுத்து வழங்குதலும், ‘புகுமுகம் புரிதல்’ (மெய்ப். 13) முதலிய 24 மெய்ப்பாடுகளையும் ஆறுகூறுகளாகத் தொகுத்து வழங்குதலும் ஆம். (மெய்ப். 2 பாரதி).

‘நாலிரண்டாகும் பால்’ (3) -

{Entry: Q17a__209}

சுவைத்தோன் வெளிப்படுத்திய விறல் அரங்கின்கண் இருந்து காண்போரது உணர்வொடு பொருந்தி நிற்பதே சுவையாம் ஆதலின், நாடகக் காட்சியைக் கண்டு சுவைப்போரை அடிப்படையாக வைத்து நோக்குங்கால் அவை பதினாறும் எட்டாக அடங்கி விடும். (‘நானான்கு பொருளாவன’ காண்க.) (தொ. மெய்ப். 1, 2 ச. பால.)

நானான்கு பொருளாவன -

{Entry: Q17a__210}

சுவைப் பொருளையும் சுவைப்போனையும் ஒரு கூறாகவும், சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலை யும் ஒரு கூறாகவும் தொகுத்துக்கொண்டு வீரம் அச்சம் முதலிய எட்டுக்குணங்களோடும் அவற்றை உறழ்வதனால் நானான்கு பொருள் வரும். சுவைத்தோன் சுவைத்த பொரு ளும் சுவைத்தோனது உள்ளஉணர்வும் அரங்கின்கண் அமர்ந்து காண்போர்க்குத் தெற்றெனப் புலப்படாமல், சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விற லுமே புலப்படு தலின் அவ்விரண்டுமே கொள்ளப்பட்டன. (தொ. மெய்ப். 1, 2 ச. பால.)

நான்காம் அவத்தையின் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__211}

காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப் பட்ட பத்து அவத்தையுள் நான்காம் அவத்தையாகும் மெலிதல் என்பதன்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப் பாடுகள் பாராட் டெடுத்தல், மடம் தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணல், கொடுப்பவை கோடல் என்ற நான்குமாம். (260 இள.)

இவற்றைக் களவில் புணர்ச்சிக்குப் பின் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் முதற்பகுதிக்கு உரியவும், பொதுவாகக் களவின் நான்காம் பகுதிக்கு உரியவும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (264)

இவைநான்கும் தோலாக் காதலின் நாலாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் சோமசுந்தர பாரதியார். (தொ. பொ. 16)

நானான்கு பொருளாவன -

{Entry: Q17a__212}

சுவைப்பொருளையும் சுவைப்போனையும் ஒரு கூறாகவும், சுவைப்போன் உணர்வையும் அவன் வெளிப்படுத்தும் விறலையும் ஒரு கூறாகவும் தொகுத்துக்கொண்டு வீரம் அச்சம் முதலிய எட்டுக்குணங்களோடும் அவற்றை உறழ்வத னால் நானான்கு பொருள் வரும். சுவைத்தோன் சுவைத்த பொருளும் சுவைத் தோனது உள்ளஉணர்வும் அரங்கின்கண் அமர்ந்து காண்போர்க்குத் தெற்றெனப் புலப்படாமல், சுவைத்தோனும் அவன் வெளிப்படுத்தும் விறலுமே புலப்படு தலின் அவ் விரண்டுமே கொள்ளப்பட்டன. (தொ. மெய்ப். 1, 2 ச. பால)

நிம்பிரி -

{Entry: Q17a__213}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

நிம்பிரி - அழுக்காறு, அவ்வியம் (தொ. பொ. 270 இள.)

பொறாமை (சகிப்புத்தன்மையின்மை) (274 பேரா.)

நிம்பிரி - பிழை பொறாப் பெற்றியாகிய சகிப்புத் தன்மை யின்மை. அழுக்காறு தனித்தார்மாட்டும் தவறாதலின், நிம்பிரிக்குப் பொருள் அதுவன்று. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ யாதலின், தலைவிக்கு இன்றியமையா மடன் என்பது தலைவனது குற்றம் தான் அறியாமையே ஆதலின், தலைவனைக் காணாக்கால் அவனது தவறு அல்லன காணாத் தலைவி அவனைக் காணுங்கால் தவறாய காணாள் எனத் தலைவியின் இலக்கணம் சொல்லப்படுதலின் (கு.1286), நிம்பிரி என்பது அழுக்காறு என்னும் பொருள்படாது பிழைபொறாப் பெற்றியையே குறிப்பதாம். அஃது உளதா யின் காதல்வாழ்வுக்கு ஏதமாதலின் அது விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி). (நேம்+பிரி - நிம்பிரி. அண்டி நீங்குதல்)

நிலையில்லா மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__214}

உடம்பின் வழியாக மனக்குறிப்புக்கள் வெளிப்படுங்கால் அவற்றை வெளிப்படுத்தும் நகை அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாடுகளின் வளர்வுக்குக் காரணமாய் அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவும், தனிப்பட்ட முறையில் நகை அழுகை முதலிய எதற்கும் துணையாகும் உரிமை பூணாது எல்லா மெய்ப்பாடுகளுக்கும் பொதுவாய் இருந்து அவற்றை நிறைவு செய்து நிற்பனவும் ஆகிய மெய்ப்பாடுகள். இவை 32 என்று குறிக்கப்பெறுவன.

உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்தல், நாணுதல், துஞ்சல், அரற்றல், கனவுதல், முனிதல், நினைதல், வெருவுதல், மடிதல், கருதல், ஆராய்தல், விரைதல், உயிர்த் தல், கையறுதல், இடுக்கட்படுதல், பொச்சாத்தல், பொறா திருத்தல், வியர்த்தல், ஐயுறுதல், மிகைத்தல், நடுங்குதல், என்பன அவை.

இவை நகை முதலியவற்றிற்கு உதவியாதலேயன்றித் தனித்து வருதலும் உண்டு. நகை முதலியவற்றொடு வருமிடத்து இவை அவற்றுக்கு அங்கமாகும். (இவை ‘சஞ்சாரிபாவம்’ எனப் படும்.) இவை அகம் புறம் இரண்டற்கும் பொது. (தொ. பொ. 260 பேரா.)

இனி, சோமசுந்தர பாரதியார் கருத்து வருமாறு :

நகை முதலிய எட்டும் புறத்தே மெய்யில் தோன்றும் தன்மை யன. உடைமை முதல் நடுக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட இத்துணை மெய்ப்பாடுகள் புறக்குறிச்சுட்டின்றிச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகளாம். நகை முதலிய எட்டும் அகம் புறம் இரண்டற்கும் பொது. இம்முப்பத்திரண்டும் அகத்திற்கே உரியன. இவை எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடுதழாஅல், தோழியிற் புணர்வு என்ற நான்கற்கும் ஏற்பத் தொகுக்கப்பட் டனவாம். ஆகவே, உடைமை முதல் அன்பு ஈறாகிய எட்டும் இயற்கைப் புணர்ச்சிக் குரிய; கைம்மிகல் முதல் கனவு ஈறாகிய எட்டும் இடந்தலைப்பாட்டிற்குரிய; முனிதல் முதல் உயிர்ப்பு ஈறாகிய எட்டும் பாங்கற் கூட்டத்திற்குரிய; கையாறு முதல் நடுக்கு ஈறாகிய எட்டும் தோழியிற் கூட்டத்திற்குரிய. இம் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் களவுக்கே உரியன. (தொ. மெய்ப். 12)

நிறுத்த காம வாயில் -

{Entry: Q17a__215}

இது தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று.

நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில், அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவருக்கு அன்பு. (தொ. பொ. 90 இள. உரை)

பொருத்தமான வடிவழகுடையாரிடம் நிகழும் இன்பத்துக்கு வாயிலாகிய அன்பு. (273 பேரா.)

நிலைத்த காதல் நிலை. (மெய்ப். 25 பாரதி)

தலைவன் தலைவியின் கண்களைப் பலகாலும் உற்று நோக்கிச் சென்றானாக, அன்று மாலை தலைவி அவன் சென்று மறைந்த இடத்தை நோக்கியவாறே, தோழியிடம், “மற்று இவன் மகனே தோழி” என்று அவன் நினைப்பாகவே கூறியது நிறுத்த காமவாயில். (அகநா. 48) (பேரா.)

நிறுத்த காமவாயிலாவது, நிலைபேறுடைய காமவொழுக் கத்திற்கு உரிய உள்ளக்கிளர்ச்சி. (தொ. மெய். 25. ச. பால.)

நிறை -

{Entry: Q17a__216}

தலைவன் தலைவி இருவருக்குமிடையே கூறப்படும் பத்துவiக ஒப்பினுள் ஒன்று.

நிறை - அடக்கம். (தொ. பொ. 90 இள. உரை).

நிறை - மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்துதல். (273 பேரா)

தலைவன் தன்நோயைக் கண்நின்று கூறுதல் ஆற்றான் என்பதும், அவன்நோய் இன்னது என்று வினவுவது தமக்குப் பெண்மை யன்று என்பதும் இருவர்மாட்டும் அமைந்த நிறை என்ற பண்பினை விளக்கும். எ-டு: (கலி.37).

நினைதல் -

{Entry: Q17a__217}

நினைதல் என்பது கழிந்ததனை நினைத்தல். அஃது ஒரு முறை மறந்த அளவிலேயே கழியாது பின்னும் நினைவுக்கு வருத லின் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256. இள).

நினைதல் என்பது விருப்புற்று நினைதல். நின்னை மிகவும் நினைத்தேன்’ என்று உலக வழக்கிலும் பேசப்படுகிறது. அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடா யிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

இதனை வடநூலார் ‘ஸ்மிருதி’என்ப.

ப section: 40 entries

பசலை பாய்தல் -

{Entry: Q17a__218}

கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவி காதல் நோயால் தன் மாமைக் கவின் இழந்து அவ்விடத்துப் பசலை என்ற நிறவேறுபாடு பரவுமாறு இருத்தல்.

இதனைப் பெருந்திணைக் குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (266)

அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்த மாகும். (தொ. பொ. 270 பேரா)

பசி அட நிற்றல் -

{Entry: Q17a__219}

பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல் (பேரா.) தனிமைத் துயரில் வருந்துவார் உணவை வெறுத்துப் பிறரை வருத்தும் பசிப்பிணியைத் தாம் வருத்தி உணவு கொள்ளா மலிருத்தல் என்றலும் ஒன்று.

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266)

அன்புத்திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாம்.

‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு’ -

{Entry: Q17a__220}

விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய 32 பொருள்கள். அவையாவன: வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்ற எட்டனையும், சுவைக்கப் படு பொருள்-சுவையுணர்வு-குறிப்பு-சத்துவம் என்ற நான்கானும் உறழத் தோன்றுவன. (தொ. பொ. 245 இள.)

முடியுடை வேந்தரும் குறுநிலமன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருள்கள் அம் முப்பத்திரண்டாவன. ஒன்பது சுவையுள் வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் நகை நடுவுநிலை என்று உருத்திரம் ஒழித்த எட்டனையும் கூறுங்கால், சுவைக்கப்படுபொருளும்-அதனை நுகர்ந்த பொறியுணர்வும்-அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழ்ந்த குறிப்பும்-குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் கண்ணீர் அரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச்சுவை எட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்து உறழ, இவை முப்பத்திரண்டு என்பது. பண்ணை-விளையாட்டு. (249 பேரா)

இவை தனிநிலை கருதாமல் ஒரு புறக்குறியால் புலப்படும் இனத் தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உணர்வுகளாகிய எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகக் குறிப்பிடும் முப்பத்திரண்டாம்.

பண்ணை என்பது தொகுதி. ‘ஒலித்தன முரசின் பண்ணை’ என்றார் கம்பரும். பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும், சுற்றம் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒருகழகமும் தொகுதி பற்றிப் ‘பண்ணை’ எனப்படும். (மெய்ப். 1 பாரதி.)

பண்ணை : பொருள் விளக்கம் -

{Entry: Q17a__221}

பண்ணை என்பது விளையாட்டு.விளையாட்டாவது அறிவின்பப் பயன் விளைக்கும் ஆடலாகும். இதன் மறுதலை வீணாட்டு. ஆடுதல்-செயலுறுதல். நா அசைத்தலான் பேச்சு நிகழ்தலின் பேசுதலை உரையாட்டு என்பது வழக்கு. எனவே, உடம்பாலும் நாவாலும் ஒருபொருள் விளையுமாறு நிகழும் ஆடல் விளையாட்டு என்பது போதரும்.

வெறியாட்டு, களியாட்டு உண்டாட்டு என்பவை உடம்பு பற்றியன; பாராட்டு, சீராட்டு, கோதாட்டு என்பவை உரை பற்றியன; கொண்டாட்டு, திண்டாட்டு என்பவை உள்ளம் பற்றித் தோன்றி உடம்பாலும், உரையாலும் வெளிப்படுவன. ஈண்டு அவையாவும் தொகுதியாக அடங்கி நிற்றலின் பண்ணை எனப்பட்டது. பண்ணுதல் பண்ணை ஆயிற்று. (தொ. மெய்ப். 1, 2 ச.பால.)

பத்துவகை ஒப்புக்கள் -

{Entry: Q17a__222}

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தும் தலைவனுக்கும் தலைவிக்கும் உரிய ஒப்புக்களாம். இவற்றுள், சிலவற்றான் தலைவன் தலைவியைவிட மேம்பட்டவனாக இருக்கலாம்; ஆயின் தலைவி ஒருவாற்றானும் தலைவனை விட மிக்காளாதல் கூடாது. (தலைவி கல்வியில் மிகக் குறைந்தவளாதலின் இவ்வொப்புக்களுள் கல்வி இடம் பெறவில்லை) (தொ. பொ. 273 பேரா.)

பயம் -

{Entry: Q17a__223}

அச்சச்சுவை (பிங். 3042)

பயானக ரஸம் -

{Entry: Q17a__224}

அச்சச்சுவை; சுவையணி வகைகளுள் ஒன்று. அது காண்க.

பாங்கற் கூட்டத்துக்கு உதவும் துணைமெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__225}

முனிதல் முதல் உயிர்ப்பு முடிய உள்ள எட்டும் ஆம் என்பது சோமசுந்தர பாரதியார் கருத்து.

முனிதல்-முன் விரும்பியவற்றை வெறுத்தல்; அது ‘பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்’ (குறுந். 396). என வருவது.

நினைதல் - விருப்புற்று நினைத்தல்; அது ‘நினைப்பவர் போன்று நினையார்கொல்’ (குறள் 1203), ‘உள்ளா திருப்பி னெம் அளவைத் தன்றே’ (குறுந். 102)

எனத் தலைவியும், ‘நினைந்தனென் அல்லனோ பெரிதே’ (குறுந். 99) எனத்தலைவனும் நினைத்தல் போல்வன.

வெரூஉதல்-பிரிவும் ஊறும் அஞ்சுதல். ‘பிரிவு ஆங்கு அஞ்சி’ (குறுந். 177) ‘நீயே, அஞ்சல் என்றஎன் சொல்அஞ் சலையே’ (குறுந். 300)

என்றாற் போல்வன பிரிவச்சம் பற்றியன. ‘இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்’ (குறுந். 217), ‘உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253)

என்றாற்போல்வன, வழியிடை வரும் ஏதம் பற்றித் தலைவி வெருவியதனைப் புலப்படுத்தும்.

மடிமை -ஆற்றாமையின் அயர்வு; அது ‘விளையாடு ஆய மொடு அயர்வோள்’ (குறுந். 396) என்றாற் போல்வது.

கருதல் - குறிப்பு ‘உறாஅர்போன்(று) உ ற்றார் குறிப்பு’ (குறள் 1097) என்பதனால் குறிப்பு என்பது மனத்தாற் குறித்துணர்வது எனப்படும்.

ஆராய்ச்சி-காதலர் அன்புகளின்வழி சூழ்தல். ‘தோழி, வன்கண் சூழ் ச்சியும் வேண்டுமால் சிறிதே’ எனத் தலைவி அன்பு கனிதற்குரிய செய்திகளைத் தான் ஆராய்வ தனைத் தோழிக்குக் கூறுதல் போல்வன.

விரைவு-வேகம்; ஆர்வ மிகுதியான் எழுவது.

உயிர்ப்பு-களவுக்கூட்டம் நிகழாவழிக் காமம் மிகுந்து நெடிதாக மூச்சு விடுதல்.

இவை பாங்கற் கூட்டத்துக்குரிய. (மெய்ப். 12. பாரதி)

பாராட்டெடுத்தல் -

{Entry: Q17a__226}

களவொழுக்கத்தில், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினைச் சிறப்பாக மனத்துக் கொள்ளுதல்.

தலைவன் தலைவிநலத்தை அவளிடம் நேரே பாராட்டுவான்; ஆயின் தலைவி அவன்நலத்தை அவனில்லாத போது தோழி யிடம் பாராட்டுவாள். (குறுந். 3, 193) (தொ. பொ. 264 பேரா.)

இது ‘மெலிதல்’ என்ற நான்காம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (260). களவியல் புணர்ச் சிக்குப் பின் நிகழும் மூன்று பகுதியவாகிய பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் முதற் பகுதியின் முதல் மெய்ப்பாடு இது என்பர் ஏனையார். இது தோலாக் காதலின் நாலாங்கூற்றின் முதல் மெய்ப்பாடு என்பர் பாரதியார்.

‘பிணங்கல் சாலா அச்சம்’ -

{Entry: Q17a__227}

மாறுபடுதல் இல்லாத அச்சம். மாறுபடுதல் நிகழுமாயின் நடுக்கம் முதலியன உளவாகா. அஃதாவது மற்றவர் அஞ்சத் தக்க பொருள்களை எதிர்த்துப் போரிடும் மனநிலை ஒருவ னுக்கு ஏற்பட்டால் அவனுக்கு அச்சம் தோன்றாது. (தொ. பொ. 252 இள.)

‘பிணங்காத அச்சம்’ என்னாது ‘பிணங்கல் சாலா அச்சம்’ என்றதனால், ஊடல் பொருளாகவும் அச்சம் பிறக்கும். புலந்த தலைவியை நோக்கித் தலைவன், “என்னிடத்தினின்று விலகி நின்று, யான் செய்யாத குற்றங்களை என்மேல் ஏற்றிக் கூறாதே. நின் ஆணையை யான் கடப்பதில்லையே” என்று கூறுதல் (கலி. 81) இதற்கு எடுத்துக்காட்டு. (256 பேரா.)

பிணங்கல் சாலா அச்சம் என்பது, பகைமையான் மாறுபடு வதோ, அன்பினால் நெருங்குவதோ இல்லாத அச்சம் என்பது. மாறுபடுதலும் நெருங்குதலும் உளவாயின் அச்சம் இன்றாம். (மெய்ப். 8 பாரதி.)

பிணி -

{Entry: Q17a__228}

இஃது இளிவரல் என்ற மெய்ப்பாட்டுக் குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

பிணி-பிணியாகிய நோய் ஏற்பட்டிருப்பது கண்டு இழித்தல்; அதனானே உடம்பு தூயதன்று என்று இழித்தலும் ஆம்.

எ-டு : “பேரழகுடையது என்று புகழும் உடம்பில் சிறிதளவு மேல்தோல் நீங்கினாலும், அப்புண்ணைக் கொத்த வரும் காக்கையை வெருட்ட ஒரு கோல் கையில் கொள்ள வேண்டியிருக்கிறது” என உடம்பினை அருவருத்துக் கூறும் பாடல். (நாலடி. 41 ) ( தொ. பொ. மெய்ப். 6 இள.)

தலைவனைப் பிரிந்த தலைவி வாடையை நோக்கி, “மலையை யும் அசைக்கும் ஆற்றலுடைய நீ காமப்பிணியால் வருந்து வாரைத் துன்புறுத்துவது அழகன்று.” என்று கூறற்கண் (குறுந்: 158) தலைவிக்குத் தன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல் பிறந்தது.

தலைவியின் அருமையை அறிந்த தலைவன் தன் நெஞ்சை வேறாக நிறுத்தி, “மனமே! நமக்குச் சேய்மையிலுள்ளவளும், கிட்டுதற்கு அரியவளுமாகிய தலைவியை நினைத்துக்கொண் டிருப்பதால், நீ நோயால் நலியப்படுகிறாய்” என்று கூறற்கண் (குறுந். 128) பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல் பிறந்தது. (மெய்ப். 6 பேரா.)

பிரிவாற்றாமை -

{Entry: Q17a__229}

களவுக்காலத்தில் பிறர் அறியாமல் ஒழுகவேண்டுதலின், பிரிவு தேவைப்பட்டது. கற்புக்காலத்தில் பிறர் அறியாது ஒழுகல்வேண்டுவதின்றாகலின், தலைவன் ஓதல் தூது முதலிய குறித்துப் பிரிதலைத் தலைவி ஆற்றாதவளாய்ப் பிரியாதிருத்தலையே வேண்டும் குறிப்பினளாதல்.

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

(தொ. பொ. 272 பேரா.)

பிறப்பு -

{Entry: Q17a__230}

இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று.

பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.

(தொ. பொ. 90 இள. உரை)

பிறப்பு - குடிப்பிறத்தல் - தொ.பொ. 273 பேரா.

பிறப்பு - தோன்றிய குடிநிலை - மெய்ப். 25 பாரதி.

பிறப்பு - நற்குடிப் பிறத்தல் - பொ. 260 குழ.

குடி என்பது குடும்பம்; குலம் என்பதும் அது. குலம் என்பது சாதியின் வேறுபட்டது. ஒவ்வொரு சாதியிலும் நல்லகுலம், தீயகுலம் என்ற இரண்டும் உண்டு. (திருவாய். 3-8-1)

‘குலம் தாங்கு சாதிகள் நாலிலும்’ என்றதனால், குலம் வேறு சாதி வேறு என்பது பெறப்படும். இக்கருத்தும் உண்டு.

தோழி அறத்தொடு நிற்கும்போது தலைவனைக் ‘கானக நாடன் மகன்’ என்று கூறுவது பிறப்பொப்புமை. (கலி. 39 பேரா.)

புகுமுகம் புரிதல் -

{Entry: Q17a__231}

தலைவன் நோக்கிய நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதலைத் தலைவி விரும்புதல்.

இதனைக் காட்சி என்ற அவத்தைக்கண் தலைவிக்கு நிகழும் முதல் மெய்ப்பாடாக இளம்பூரணர் கொள்வர்.

ஏனையோர் களவு என்ற ஒழுக்கத்தில் புணர்ச்சிமுன் தலைவிக்கு நிகழும் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் இது முதலாவது என்பர்.

தலைவி தலைவன் பார்வையில் படுமாறு தான் போய் நிற்பாளே யன்றித் தலைவியின் பார்வையில் படுமாறு தலை வன் தான் போய் நிற்பான் அல்லன்; நிற்பது சிறப்பாகாது. அவன் தான் தலைவியைக் காண்பதை விரும்புவானேயன்றித் தன்னைத் தலைவி காணவேண்டுமென்று விரும்பான். (தொ. பொ. 261 பேரா.)

‘புணர்ந்துழி உண்மை’ -

{Entry: Q17a__232}

தலைவி ஊடற்காலத்து மனத்தில் உள்ளதனை மறைத்துக் கூறுவது போல அல்லாமல், புணர்ச்சிக்காலத்தில் தன் மனத்துப் பட்டதனை, “ஊரன் நறுமேனி கூடலின் இனிதாம் எமக்கு” (ஐந்.ஐம். 30). என்றாற் போல உண்மையாகக் கூறல் (தொ. பொ. 268 இள.) இஃது இல்லது காய்தலும் உள்ளது உவர்த்தலும் ஆகிய வேறுபாடின்றிப் புணர்ச்சிக்காலத்துச் செய்வன செய்தற்கண் உண்மை உவகை கொள்ளுதல். (272 பேரா.)

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

‘புணர்ந்துழி உண்மைப் பொழுது மறுப்பாக்கம்’ -

{Entry: Q17a__233}

மணந்து வாழ்வார், கற்புக்காதலுக்கு எந்தச் சிறுபொழுதை யும் பகுத்துத் தடையாகக் கருதாது, நாள் முழுதும் சிறு பொழுது வரையறையின்றி மகிழ்வோடிருத்தல்.

பேராசிரியரும் இளம்பூரணரும் புணர்ந்துழி உண்மை எனவும், பொழுதுமறுப்பு ஆக்கம் எனவும், இரண்டு மெய்ப் பாடாகக் கொண்டதனைச் சோமசுந்தரபாரதியார் “இம் மெய்ப்பாடுகள் பத்து” என்ற வரையறை அமைவதற்காக ஒன்றாகக் கொண்டார். (மெய்ப். 24 பாரதி.)

புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப்பு ஆக்கம், பொருள் விளக்கம் -

{Entry: Q17a__234}

புணர்ந்துழி ................. ஆக்கம் : தலைவன் குறித்த பருவம் இகந்து மீண்டு வந்து கூடியவழிக் கூறிச்சென்ற பருவ மாறுபாட் டினைக் கருதாது அதனையே பருவமாகக் கொண்டு தலைவி மகிழ்தல். இஃது உவகைக்குப் பொருள். (தொ. மெய்ப். 24 ச. பால.)

புணர்வு -

{Entry: Q17a__235}

இஃது உவகை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.

புணர்வு - காமப்புணர்ச்சி முதலாயின. (பேரா.)

அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயின் ஒத்த கற்புறு காதற் கூட்டமாம். (மெய்ப். 11 பாரதி.)

தலைவி இரவுக்குறியிடத்து வந்து யாழ் ஒலி போல இனிய குரலில் அன்புறு சொற்கள் பேசித் தன் தொடி தலைவன் உடலில் தழும்பு படுமாறு ஆரத் தழுவிச் சென்றமையால் இரவுக்குறி நீங்கும் தலைவன் தன் மனத்திடம் பெரிதும் மகிழுமாறு கூறுதற்கண் (அகநா. 142) புணர்வு பற்றிய உவகை பெறப்பட்டவாறு. (தொ. பொ. 259 பேரா.)

புதுமை -

{Entry: Q17a__236}

இது மருட்கை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் முதலாவது.

புதுமையாவது யாதொன்றானும் எவ்விடத்தினும் எக் காலத்தினும் தோன்றாததொரு பொருள் தோன்றியவழி வியத்தல். அது கந்தருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வது. (தொ. பொ. 251 இள.)

புதிதாகத் தோன்றுவது. 255 பேரா.

எ-டு : தலைவனைக் கண்ட தலைவி இரவில் உறங்கும் போது அவனைக் கனவில் கண்டு உடனே விழித்துப் பின் அவன் இன்மை கண்டு கண்ணீர் வடித்தல் தலைவிக்குத் தன்கண் தோன்றிய புதுமை பற்றிய வியப்புத் தந்தது. (அகநா. 82)

பண்டு ஒருகாலும் கண்டறியாதபடி மயில் ஆடிய காட்சி தலைவிக்குப் பிற பொருட்கண் தோன்றிய புதுமை பற்றிய வியப்புத் தந்தது (அகநா. 82) பேரா.

புதுமை - முன் அறியா யாணர்த்தன்மை; கங்காரு, பறக்கும் மீன், சிற்றுயிர்களைப் பிசைந்து தின்னும் பூச்செடி, கையில் அடங்கும் சிறுநாய், கண் கொள்ளாப் பெருமலை, இருதலை முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கில் இல்லாத உறுப்புடைய உயிர்கள் போல்வன காண எழும் உணர்வு புதுமையிற் பிறக்கும் வியப்பாகும். (மெய்ப். 7 பாரதி)

புரையறந் தெளிதல் -

{Entry: Q17a__237}

கற்பினுள் தலைவி மேம்பட்ட இல்லறத்தைத் தெளிந்து பின் பற்றுதல்.

தலைவன்பரத்தைமை கண்டு புலவாது அதனையும் போற்றல் இல்லுறை மகளிர்க்கு இயல்பு என்னும் அறத்தினைத் தெளிந்து ஒழுகுதல். (268 இள.)

கற்பினுள் தனக்கு ஒத்த இல்லறம் இன்னதென்று, ஊடியும் கூடியும் விருந்து புறந்தந்தும் வாழும் வாழ்க்கையைத் தலைவி தன் மனத்தில் தெளிதல் (272 பேரா.)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற் காக்கும் சோர்வின்மையே திண்ணிய கற்பின் பெண்மையறம் எனத் தலைவி உயர்ந்த மனையறத்தை உணர்ந்து ஓம்புதல். (மெய்ப். 24 பாரதி.)

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

புலம்பித் தோன்றல் -

{Entry: Q17a__238}

அறத்தொடு நின்று இற்செறிக்கப்பட்டுத் தலைவனிடமிருந்து பிரிந்து நிற்கும் தலைவி தான் விரும்பியன பெறவும் வெறுப் பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத் தனிமையின் ஏங்கும் நிலை இது.

தலைவனைப் பிரிந்த தலைவி, இல்லத்தே மற்றவர் பலர் இருப்பவும், அவர்களையெல்லாம் வெறுத்துத் தான் தனித்திருப்பதாகவே நினைந்து வருந்துதல்.

(தொ. பொ. 266 பேரா.)

இது ‘நாணு வரை யிறத்தல்’ என்ற ஆறாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு. (262 இள.)

களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய 24 மெய்ப்பாடு களுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

புலன் -

{Entry: Q17a__239}

இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

புலன் - கல்விப் பயனாகிய அறிவுடைமை. (தொ. பொ.259 பேரா.)

புலனாவது கல்விப்பயனாகும் அறிவு. அரிய புதிய செய்தி களை ஆராய்ந்து நுட்ப முணர்ந்து மகிழ்தற்கு ஏதுவாகிய அறிவே புலன் என்பது.

கல்விப் பயனாகிய அறிவின்பம் புலனுவகை என்று கூறப்பட்டது. (தொ. மெய்ப். 11 பாரதி)

முகைப்பதம் பார்க்கும் வண்டு போல நகைப்பதம் பார்த்துத் தலைவியின் உள்ளக்குறிப்பறிந்து அவளொடு தலைவன் கூடுதற்கண், உவகை என்னும் மெய்ப்பாட்டின் புலன் என்ற குறிப்பு உணரப்படுகிறது. (கலி. 40 பேரா.)

புறஞ்செய்தல் -

{Entry: Q17a__240}

உடம்பை அலங்கரித்தல்; ‘புறஞ்செயச் சிதைதல்.’ காண்க.

(தொ. பொ. 266)

புறஞ்செயச் சிதைதல் -

{Entry: Q17a__241}

புறத்தே கோலம் செய்யவும் அகத்தே சிதைவு உண்டாதல். உடன்போக்கோ மணமோ நிகழப்பெறாமல் இற்செறிப்பான் வருந்தும் கற்புடைத்தலைவி உணர்ந்தொழுகுதலான் தளர்ந் துழி நெஞ்சொடு தனிமை தாங்காத் துனியான் வருந்துவாள். அந்நிலையில் அவள் எண்ணம் அறியாத வண்ண மகளிர் பண்ணும் கோலம் தலைவன் காண வாய்ப்பின்மையான் மனத்தான் அதனை வெறுத்தும், வெளிப்படையாக அவ் வலங்காரங்களை நீக்க முடியாமையான் அணிசெய்ய உடன்பட்டும் தலைவி உள்ளுர வருந்தும் நிலை.

களவுக் காலத்துக் குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதிக்கண் முதல் மெய்ப்பாடு என்பர் பெரும்பான்மையோர்.

இளம்பூரணர் இது நாணுவரையிறத்தல் என்ற ஆறாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர்.

(தொ. பொ. 262 இள; 266 பேரா.)

‘புறஞ்சொல் மாணாக் கிளவி’ -

{Entry: Q17a__242}

வரைந்துகொண்ட பின்னர், தலைவனுக்குப் பழி வாராமல் காத்தலும் தலைவிக்குரிய அறம் ஆதலின், தலைவனுக்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து அப்பழியுரையை மாற்றுதற்குத் தலைவி கூறும் சொற்கள்.

(தொ. பொ. 272 பேரா.)

புறஞ்சொல் - பிறர் கூறும் பழிச்சொல்; மாண் ஆ கிளவி - மாண்புடைய சொற்கள் ; பிறர் பழியைப் போக்கக் கூறும் சொற்கள்.

அஃதாவது பிறர் கூறும் பழியுரையைச் சுட்டி அத்தகைய நிலை எதிர்காலத்து வாராதவாறு நடந்து கொள்ளும்படி தலைவி தலைவனை வேண்டுதல்.

தலைவனைத் தன் உயிர்த்தோழி போல்வார்கூடப் புறம்தூற் றும் புன்சொல் பொறாத தலைவி அதனை வெறுத்து மறுப்பது. தலைவனைப் புறம்பழித்த தோழியைக்கூடத் தலைவி வெகுளும் என்பது. (குறுந். 96) (மெய்ப். 84 பாரதி.)

புறமெய்ப்பாடு -

{Entry: Q17a__243}

காமனால் உண்டாக்கப்பட்ட காமம் ‘சிருங்காரம்’ என்ற தனித்த சுவையாதலே யன்றி, ஏனைய நகை அழுகை இளி வரல் மருட்கை, அச்சம் பெருமிதம் வெகுளி என்ற ஏழினோடும் கூடிவெளிப்பட்டு எட்டுவகையாக நிகழ்வது.

(வீ. சோ. 96 உரை மேற்.)

புறமொழி -

{Entry: Q17a__244}

இது நற்காமத்திற்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

புறமொழி - புறங்கூறுதல். (270 இள; 274 பேரா.)

(அஃதாவது பிறரைக் காணாத விடத்தே இகழ்ந்து கூறுதல், இல்லாளுக்கு நல்லறம் ‘புறஞ்சொல் மாணாக் கிளவி’ யாதலின், பழிதூற்றும் தவறுடைமை காதல்வாழ்வுக்கு ஏதம் பயத்தலின் அது விலக்கப்பட்டது. (தொ. பொ. மெய்ப். 26 பாரதி)

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__245}

தெளிவு ஒழிந்த காமத்தின்கண்ணே மிகுதலும், ஐந்திணைக்- கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருதலும் ஆகிய நிலைமையில் உள்ள தலைவிக்குக் களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் ஒப்ப நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசி அட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண்துயில் மறத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயம் செய்தல், அவன்தமர் உவத்தல், அறனழித்து உரைத்தல், ஆங்கு நெஞ்சு அழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் என்பன வாம். 266 இள.

இவை களவிற்கும் கற்பிற்கும் உரிய எனவும், களவிற்கு இவை வருங்கால் புகுமுகம் புரிதல் முதல் கையற வுரைத்தல் ஈறாகக் கூறப்பட்ட இருபத்து நான்கின் பின்னரே அவற்றோடு இவை பெரும்பான்மையும் உடன் நிகழ்ந்து வரும் எனவும், கற்பிற்கு இவை பயின்று வரும் எனவும் கூறுவர். (269, 270 பேரா.)

அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் மெய்ப்பாடுகள் இவை என்பர் சோமசுந்தர பாரதியார். (மெய்ப். 22)

பெருமிதக் குறிப்பு நான்கு -

{Entry: Q17a__246}

பெருமிதம் - வீரத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருளாகிய வீரம். கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு குறிப்புப் பற்றியும் பெருமிதம் பிறக்கும்.

இந்நான்கேயன்றி காமம் பற்றியும் பெருமிதம் பிறப்பதுண்டு. பெருமிதம் எப்பொழுதும் தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும். (தொ. பொ. 257 பேரா.)

பெருமிதம் - தன்னைப் பெரியவனாக மதித்தல். 253 இள.

எல்லாரொடும் ஒப்ப நில்லாது தனித் தகுதியுடன் இருத்த லின், வீரம் பெருமிதம் எனப்பட்டது. பெருமிதம் பேரெல்லை பேரா.

‘பெருமிதம்’ வெறுப்புக்குரிய செருக்கன்று, ‘வீறு’ தருக்கு ஆகும். ஆகவே, இது புகழ்க்குரிய பெருமையில் பிறக்கும் மகிழ்வாம். (பாரதி)

பெருமிதக் குறிப்புப் பகை, செரு, இ(மி)கல், முனிவு என்ற நான்கென வீரசோழிய உரை கூறும். (கா. 96 உரை மேற்.)

பெருமிதச் சுவை -

{Entry: Q17a__247}

இது வீரச்சுவை எனவும் வழங்கப் பெறும். அது காண்க.

(மா. அ. 198)

பெருமிதம் -

{Entry: Q17a__248}

கல்வி, தறுகண் (-அஞ்சாமை), இசை (-புகழ்), கொடை என்னும் இவை காரணமாக மிக்க வலிமையும் அஞ்சாத மன உறுதியும் கூடிப் பொலிவது. (நாடக. 43)

பெருமை -

{Entry: Q17a__249}

இது மருட்கை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் இரண்டாவது.

பெருமை - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவின் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்பு கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும். (தொ.பொ. 251 இள.)

எ-டு : தலைவனொடு தலைவி கொண்ட தொடர்பு தொடக் கத்திலேயே நிலத்தினது அகலம் போலவும், மலை யினது உயரம் போலவும், நீரினது ஆழம் போலவும், அவளிடத்து அமைந்தமை தன்கண் தோன்றிய பெருமை பற்றிய வியப்பு (குறுந். 3) (தொ. பொ. 255 பேரா.)

பேதைமை -

{Entry: Q17a__250}

நகை என்ற மெய்ப்பாடு தோன்றதற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.

பேதைமை - கேட்டதனை, இஃது உண்மையா, பொய்யா என்று ஆராயாது உண்மையாகவே கோடல். (தொ. பொ. 248 இள.)

அறிவின்மை - 252 பேரா.

எ-டு : (அறிவுக்குழப்ப முடையோர் கூற்றாக இளம்பூரணர் கூறுவது)

தன் இல்லத்தை நாடி வந்த பாணன், தன்னை முட்டவந்த பசுவுக்குப் பயந்து இல்லம் தெரியாமல் தலைவியது மனைக்கண் நுழைந்தனனாக, அவன் நுழையத்தகும் மனை பரத்தை மனையே, தன்மனை அன்று என்று கூறித் தலைவி சிரித்தாள். இது பாணனாகிய பிறன்பேதைமைப் பொருளாகத் தோன்றிய நகை. (அகநா. 56)

தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த செவிலி, அதனைத் தலைவிக்கு வெளியிடு முகத்தான் சிரித்துச் சென்றதை அறியாது, தலைவி தானும் சிரித்தமை தன்கண் தோன்றிய பேதைமைப் பொருளாகத் தோன்றிய நகை. (அகநா. 248)

பொச்சாப்பு (1) -

{Entry: Q17a__251}

பொச்சாப்பு என்பது மறத்தல். (தொ. பொ. 256 இள.)

பொச்சாப்பு என்பது அற்றப்படுதல். அஃதாவது சோர்வு படுதல். தான் பாதுகாத்துச் செல்லும் பொருட்கண் யாதானும் ஒரு சோர்வு காரணத்தான் செயற்படாமல் சில காலம் இருத்தல். (260 பேரா.)

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

இதனை வடநூலார் ‘அபஸ்மாரம்’ என்ப.

பொச்சாப்பு (2) -

{Entry: Q17a__252}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

பொச்சாப்பு - தம்மைக் கடைப்பிடியாமை; அது சோர்வு.

(தொ. பொ. 270 இள.)

பொச்சாப்பாவது கடைப்பிடியினின்று நெகிழ்ந்திருத்தல். (274 பேரா.)

உவகை மகிழ்ச்சியில் பிறக்கும் இச்சோர்வு கடமையுணர்வை மறக்கச் செய்தலின் விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி)

பொய்யாக் கோடல் -

{Entry: Q17a__253}

தலைவனிடத்துள்ள காதல்மிகுதியால் அவன் கூறிய சொற்களையும் அவன் செயலையும் பொய்யாகத் திரித்துக் கொண்டு, தன்னைத் தழுவிய தலைவன்மார்பினை,

கனவினால் எய்திய செல்வத்(து) அனையதே, ஐய! எமக்கு நின் மார் பு ’ (கலி. 68)

எனவும், தலைவன் ‘தானுற்ற சூள் பேணான் பொய்த்தான்’ (கலி. 41) எனவும், ‘அவன் வருவல் என்று குறிப்பிட்டுச் சொன்ன நாளும் பொய்த்தன (அகநா. 144)’ எனவும் தலைவி கூறுதல் போல்வன. (பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266). அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்குரிய நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.)

‘பொழுது மறுப்பு ஆக்கம்’ -

{Entry: Q17a__254}

தலைவன் தலைவியைக் காண இன்ன பொழுது வருவான் என்று வரையறை இல்லாத காலத்தில், அவன் வரும் பொழு தினையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டு, ‘புல்லிய கேளிர் புணரும் பொழுதறியேன்’ (கலி. 144) என்ற மனநிலை யில் தலைவி இருத்தல். (தொ. பொ. 268 இள.)

களவுக் காலத்தில் தலைவனைக் காண்பதற்குப் பகற்குறி இரவுக்குறி என்றாற்போல நேரம் வரையறுக்கப்பட்ட இடர்ப் பாட்டின் நீங்கிய ஆக்கமாகிய மனமகிழ்ச்சி; களவின்கண் பகற்குறி இரவுக்குறி என வரையறுத்தாற் போலக் கற்புக் காலத்தில் வரையறை இன்மையின் தலைவி தலைவனோடு எந்நேரமும் ஊடியும் கூடியும் இன்பம் நுகர்ந்து அவனைப் பிரியாதிருத்தல். (272 பேரா.)

பொறாமை -

{Entry: Q17a__255}

பொறாமை என்பது பிறருடைய ஆக்கம் முதலியன கண்ட வழி அதனைச் சகிக்காமல் நடக்கும் மனநிகழ்ச்சி. அஃது ‘அழுக்காறு என ஒரு பாவி’ (குறள் 168) என அழுக்காறு ஒரு மெய்ப்பாடாகக் கொள்ளப்படுகிறது. (தொ. பொ. 256 இள.)

பொறாமை என்பது அழுக்காறு. அழுக்காறாவது பிறர் செல்வம் கண்டவழி வேண்டாதிருத்தல். (260 பேரா.)

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

இதனை வடநூலார் ‘அசூயை’ என்ப.

பொறாமையாவது, செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. (தொ. மெய்ப். 12 ச. பால)

பெரறிநுதல் வியர்த்தல் -

{Entry: Q17a__256}

நெற்றியில் வியர்வை துளித்தல்.

புகுமுகம் புரிதலுக்கு அடுத்த மெய்ப்பாடு இது. தலைவன் தன்னை உற்று நோக்கியவழித் தலைவிக்கு அச்சமும் நாண மும் ஒருங்கு வந்தடைதலின், அவற்றை வெளிப்படுத்தும் முகத்தான் நெற்றியில் வியர்வை துளிப்பதாயிற்று. தலைவ னுக்கு அச்சமோ மகளிரைப் போன்ற நாணமோ இன்று ஆதலின், அவனுக்கு நுதல் வியர்த்தல் இல்லை. (தொ. பொ. 261 பேரா.)

இதனைக் காட்சி என்ற முதல் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்.

களவு என்ற ஒழுக்கத்தில் புணர்ச்சிக்கு முன் நிகழும் நந் நான்காய் அமைந்த முக்கூற்று மெய்ப்பாட்டினுள், இது முதற்கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர்.

பொறிபுலன் முதலியவற்றால் அறியப்படுவன -

{Entry: Q17a__257}

கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல் முடக்கல் விரித்தல் குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும் தீமையாகவும் பயப்பன. வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவது வெண்மை பொன்மை முதலாயின. செவிப் புலனாவது ஓசை. நாவினால் அறியப்படுவது கைப்பு, கார்ப்பு முதலிய சுவை. மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம் என்பன. மனத்தான் அறியப்படுவன இன்பம், துன்பம் முதலாயின.

எ-டு :

புலி போலப் பாய்ந்தான்
வினை
மழை போன்ற கொடை
பயன்
துடி போன்ற இடை
வடிவு
பொன் போன்ற மேனி
நிறம்
குயில் போன்ற மொழி
செவியாலறியப்படுவது
வேம்பு போலக் கைக்கும்
நாவாலறியப் படுவது
தீப் போலச் சுடும்
மெய்யாலறியப்படுவது
ஆம்பல் நாறும் துவர்வாய்
மூக்காலறியப்படுவது
‘தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் // அம்மா அரிவை முயக்கு.’
மனத்தாலறியப்படுவது

(தொ. பொ. 272 இள.)

ம section: 36 entries

மடம் தப உரைத்தல் -

{Entry: Q17a__258}

களவியல் புணர்ச்சி நிகழ்ந்த பின் தலைவி, தோழியர் முதலானோரிடம் விளையாட்டையே பற்றி நின்ற அறிவு மடமை நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிது அறிவுதோன்ற உரைத்தல். (தொ. பொ. 264 பேரா.)

மடம் - கள்ளமற்ற பிள்ளைத்தன்மை; தபுதல் - கெடுதல்; முன்னைய பிள்ளைத்தன்மை நீங்கத் தேர்ந்து உரையாடுதல் என்பது. (பாரதி.)

இது ‘மெலிதல்’ என்ற நாலாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு. (260 இள.)

களவில் புணர்ச்சிக்குப்பின் நிகழும் மூன்று பகுதியவாம் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் இது முதற் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு; இதனைத் தோலாக் காதலின் நாலாங் கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர்.

மடன் -

{Entry: Q17a__259}

நகை என்ற மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் நான்காவது. (மடன் - மடம்)

மடன் - செய்தியை உள்ளவாறு உணராமல் தவறாக உணர்தல். (தொ. பொ. 248 இள.)

மடன் - பெரும்பான்மையும் பெற்றோரும் தலைவனும் கற்பித்த செய்திகளை மனத்துக்கொண்டு, தான் அவற்றை அறிந்திருக்கும் செய்தியை வெளிக்காட்டாதிருத்தல். (252 பேரா.)

மடம் - ஐயுறாது நம்பும் இயல்பு.

எ-டு : மடவோர் சொல்லும் சொல், பிதற்றிக் கூறும் பித்தர்மொழி, தமக்கு உற்றுழி உதவும் சுற்றத்தாரை இகழும் மொழி, ஒருவரிடம் அடியவராகப் பணிபுரி வோர் அவரைப் பற்றிய உண்மையை ஆராயாது கூறும் மொழி, மெலியோர் தம்மை வலியோராகக் கருதிக் கூறுவது, வலியோர் தம்மை மெலியோராகக் கருதிக் கூறுவது, தம்முடைய பகைவரை நண்பராக மதித்துப் பேசுவது, ஒரு பெண்ணின் உள்ளத்தை உள்ளவாறு அறியாது காமுகன் தன் உள்ளத்தை அவள்பால் செல்லவிட்டுப் பேசுவது - போல்வன பொருண்மை அறியாது திரியக்கொண்டு கூறும் மடன் பற்றியன. இவற்றைக் கேட்பவருக்குப் பிறர் மடம் பொருளாக நகை பிறக்கும் (இள.)

தலைவன் தலைவியை விரைவில் வரைந்துகொள்ளாமல் களவினை நீட்டித்தவழித் தலைவி தலைவனிடம், “உம்மை உள்ளவாறு பண்டே அறியாமையால் உம்மொடு சிரித்து விளையாடினேன்” என்று கூறுமிடத்து (குறுந். 168), தலைவி தன் மடம் காரணமாகச் சிரித்தமை பெறப்படும்.

தலைவி தலைவனொடு பாலை நிலத்தைக் கடந்து செல்வதற்கு உடன்வருவதாகக் கூறியவழித் தலைவியின் மடம் காரண மாகத் தலைவற்கு நகை பிறந்தது. (அகநா. 121 பேரா.)

மடிமை -

{Entry: Q17a__260}

மடிமை என்பது சோம்புதல் தன்மை.

‘குடிப்பிறந்தானிடம் மடிமை இருப்பின் அவனை அஃது அவன் பகைவருக்கு அடிமையாக்கிவிடும்’ (குறள் 608) என்ற வழி, மடி என்னும் மெய்ப்பாடு தோன்றும். (தொ. பொ. 256 இள.)

மடிமை என்பது சோம்பு. சோம்பியிருப்பவன் உள்ளம், அவன் குணம் செயல் இவற்றால் புலப்படுதலின், அதுவும் மெய்ப் பாடு ஆயிற்று. இது துணைமெய்ப்பாடுகள். முப்பத்திரண் டனுள் ஒன்று. (260 பேரா.)

இதனை வடநூலார் ‘ஆலஸ்யம்’ என்ப.

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. மடிமை - முயற்சியின்மை. (தொ. பொ. 270 இள.)

மடிமை சோம்புள்ளம். (274 பேரா.)

சோம்புள்ளம் நாடோறும் நிகழ்த்தும் இல்லறத்துக்குத் தடையாதலின் விலக்கப்பட்டது.

மத்திமம் -

{Entry: Q17a__261}

நடுவுநிலை எனப்படும் சாந்தச்சுவைக்கு ஒரு பெயர்.

(தொ. பொ. 245 இள.)

‘மதிமை சாலா மருட்கை’ -

{Entry: Q17a__262}

அறிவால் மதித்து உணரப்படாத வியப்பு என்ற மெய்ப்பாடு. எனவே, மதிமை சான்ற அறிவுடையோர் இப்பொருள்களைக் கண்டு வியவார். (தொ. பொ. 251 இள.)

மதிமை சாலா மருட்கை அறிவினை உலகவழக்கினுள் நின்றவாறு நில்லாமல் திரித்து வேறுபடுத்தவல்லது. ஆதலின் சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தவழியும் (நெடுஞ் செழியன் இளையனாயிருந்த போதே தலையாலங்கானத் துப் போரில் எழுவர் மன்னரை வென்றமை போல்வது), பெருமைப் பொருள் சிறுதொழில் செய்தவழியும் (மேம் பட்ட தலைவன் குற்றேவல் செய்யும் தோழியை இரந்து நிற்பது போல்வது) வியப்பு என்ற மெய்ப்பாடு தோன்றும் (255 பேரா.)

ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளை கண்டாங்கே ஆராய்ந்து அறியக் கூடுமிடத்து மயக்கம் இல்லை. மதியால் மதிக்கப்படாவிடத்து மாத்திரமே வியப்பு விளையும். ஆத லின் தேர்ந்து தெளியும் திறனற்று அறிவு சிறவா நிலையில் வருவதே மயக்கமாம் என்பது தோன்ற, ‘மதிமை சாலா மருட்கை’ என்றார். (மெய்ப். 7 பாரதி)

அறிவு நிறையாவிடத்து உண்டாகும். மருட்கை என்றது யாதொரு பொருள் மருட்கை செய்கின்றதோ, அப்பொருள் பற்றிய அறிவு நிரம்பவில்லை என்றவாறு. அப்பொருள் பற்றிய அறிவு நிரம்பியவழி, அது பற்றி மருட்கை நிகழாது என்பது. (தொ. மெய்ப். 7 ச. பால)

மயக்கம் -

{Entry: Q17a__263}

களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இது ஒன்று.

மயக்கமாவது, செய்வனவற்றின்கண் ஆராய்ச்சியும் கடைப்பிடியு மின்றி நெகிழ்தலும் விளைவறியாது பேசுதலும் செயல்புரிதலும் ஆம். (தொ. கள. 9 ச. பால)

மருட்கை -

{Entry: Q17a__264}

மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொ. பொ. 251 பேரா.)

மருட்கைக் குறிப்பு நான்கு -

{Entry: Q17a__265}

மருட்கை - வியப்பைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் சுவை. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு குறிப்பும் பற்றி மருட்கை பிறக்கும்.

இவை தன்கண் தோன்றிய புதுமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய புதுமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய பெருமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய பெருமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய சிறுமை பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய சிறுமை பற்றிய மருட்கை, தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கை, பிறன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கை - எனத் தன்கண் தோன்றுவனவும் பிறன்கண் தோன்றுவனவுமாகிய பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய.

இவையே யன்றிச் சிறுபொருள் பெருந்தொழில் செய்தவழி யும், பெரும்பொருள் சிறுதொழில் செய்தவழியும் மருட்கை உண்டாதலும் உண்டு. (தொ. பொ. 255 பேரா.)

தறுகண், புலமை, பொருள், பண்பு இவை பற்றி மருட்கை நிகழும் என்பது வீரசோழிய உரை. (கா. 96 உரை மேற்.)

மருட்கைச் சுவை -

{Entry: Q17a__266}

இதுவியப்புச் சுவை எனவும்படும்; அது காண்க.

(மா. அ. பாடல் 473 உரை)

மறத்தல் -

{Entry: Q17a__267}

மெய்யுறு புணர்ச்சி நிகழும் முன் தலைவனுக்கும் தலைவிக் கும் நிகழும் பத்துவகை நிலைகளுள் எட்டாவது; பித்தாதல் என்பது இதன் பொருள். (தொ. பொ. 97 இள.)

களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகள் பத்தனுள் இஃது ஒன்று. மறத்தலாவது, பிறப்பும் குடிமையும் பிறவு மாகிய தம் தகவுகளை நினையாமையும், ஆயம் விளையாட்டு முதலியவற்றின்கண் சோர்வுறுதலும் ஆம்.

(தொ. கள. 9 ச. பால)

இந்நிலை தலைவற்கே உரியது என்பர் இலக்கண விளக்க நூலார். (இ. வி. 405)

இயற்கைப்புணர்ச்சி முதல் களவு வெளிப்படுந்துணையும் தலைவன் தலைவி என்ற இருவர்க்கும் உளவாம் இலக்கணம் ஒன்பதனுள் ஏழாவது இது.

மறத்தலாவது - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்.

தலைவனுக்கு மறத்தலாவது தான் வழக்கமாகச் செய்யும் செயல்களை விடுத்துத் தலைவிக்கு வழங்குவதற்குக் கையுறை யாகத் தழையாடை குறுங்கண்ணி முதலியன தொடுத்தலும், தலைவியிடத்து வேட்கை மேலிட்டுக் காட்டுள் திரிதலும் போல்வன.

தலைவிக்கு மறத்தலாவது கிளியும் பந்தும் முதலாயின கொண்டு விளையாடுதலை நீக்குதலாம். (தொ. பொ. 100 நச்.)

மறப்பு -

{Entry: Q17a__268}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. மறப்பு யாதொன்றாயினும் கற்றதனையும் கேட்டதனையும் பயின்ற தனையும் மறத்தல். (தொ. பொ. 270 இள.)

மறத்தல், இல்லறவாழ்வின் கடமைகளை உரிய காலத்தில் செய்வதைத் தடுக்குமாதலின் விலக்கப்பட்டது.

‘மறைந்தவை உரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி’ -

{Entry: Q17a__269}

மறைந்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாமல் கற்புக்கடம் பூண்டல்.

அஃதாவது ஊரில் அலர் எழுந்தவழிக் களவொழுக்கம் நிகழ்த்தும் தலைவி தலைவனொடு உடன்போக்கு நிகழ்த்தி ஊரார் நிகழ்த்தும் அலர் தொடராதவாறு செய்யும் செயல்களுக்குரிய உள்ள நிகழ்ச்சி. ‘மாணாக்கிளவி’ என்ப தற்கு மிகாத சொல் என்ற பொருள் கொண்டு, தொடர்ந்து ஊரார் அலர் தூற்றாத வகையில் நடந்துகொள்ளுமாறு பரத்தையர் தொடர்புடைய தலைவனுக்குத் தலைவி எடுத்துரைத்தல் போல்வன கொள்ளப்படும்.

இம்மெய்ப்பாடுகளின் தொகை பத்து என்பது பொருந்து வதற்காக, மறைந்தவை உரைத்தல், புறஞ்சொல் மாணாக் கிளவி என்ற இரண்டனையும் இளம்பூரணர் ஒன்றாக்கிக் கொண்டார். (தொ. பொ. 268 இள.)

‘மறைந்தவை உரைத்தல்’ -

{Entry: Q17a__270}

தலைவி களவுக்காலத்து நிகழ்ந்தவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல். மறைவில் நிகழ்ந்ததைத் தலைவி பின்னர்த் தோழிக்கு எடுத்துரைத்தல் என்பதும் உரை.

“நான் வேண்டா என்றபோதும் பண்டு விடாது தழுவிய தலைவன் நான் இப்பொழுது அவனைத் தழுவிக் கொள்ள விரும்பும்போது, என் புதல்வன் பால் அருந்திய என் நகில்களின் பால் தன் மார்பில் பட்டுவிடும் என்று அஞ்சி ஒதுங்குகின்றான். புதல்வனைப் பெற்று மூத்ததனால் வந்த நிலை இது” (அகநா. 26) என்றாற் போலப் பழைய செய்தியும் மறைவில் நிகழ்ந்த செய்தியும் ஆகிய ஒன்றை வெளிப்படக் கூறுதல்.

இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று.

(தொ. பொ. 272 பேரா.) (மெய்ப். 24 பாரதி.)

மனன் அழிந்தவழி நிகழும் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__271}

இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாகச் சொல் லப்பட்ட மெய்ப்பாடுகள், தெளிவொழிந்த காமத்தின் கண்ணே மிகுந்து, ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறு பட்டு வரும் பெருந்திணைத் தலைவியின் மெய்ப்பாடுகள் ஆதலின், இவை மனம் அழிந்தவழி நிகழும் மெய்ப்பாடுகள் என்பர், இளம்பூரணர். (தொ. பொ. 267)

இவை பிரிதல்துயரை விளக்குவன என்பர் நாவலர் சோம சுந்தர பாரதியார்.

இவை கற்பிற்குச் சிறந்து களவிற்கும் உரியன என்பர் பேரா சிரியர் (271)

மனன் அழியாவழி நிகழும் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__272}

முட்டுவயின் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைமிகல், கட்டுரை யின்மை என்ற எட்டும் மனம் அழியாதவழி நிகழும் மெய்ப்பாடுகளாம் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267)

இவை வரைதல் வேட்கைப் பொருளை வெளிப்படுத்தும் மெய்ப் பாடுகள் என்பர் பேராசிரியர் (271) பிறரும் அவ்வாறே கூறுப.

மிகை -

{Entry: Q17a__273}

துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

மிகை என்பது ஒருவனை நன்கு மதியாமை; ‘மிகுதியான் மிக்கவை செய்தாரை’ (குறள் 158) என்புழி, மிகுதி இப்பொரு ளில் வந்துள்ளது. (தொ. பொ. 256 இள.)

மிகை என்பது கல்லாமையும் செல்வமும் இளமையும் காரணமாக வரும் உள்ளமிகுதி. (அஃதாவது அளவு கடந்த உற்சாகம்) 560 பேரா.

இதனை வடநூலார் ‘கர்வம்’ என்ப.

முட்டுவயின் கழறல் -

{Entry: Q17a__274}

களவுக் காலத்தில் தலைவன் தன்னைக் காண வருதற்கண் இடையூறுகளாகத் தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், கூகை குழறுதல், நிலவு வெளிப்படுதல், கோழி குரல் காட்டல் முதலியன நிகழ்ந்த வழித் தலைவி தலைவனுடைய களவொழுக்கத்தை இடித்துக் கூறித் தன் வரைதல் வேட்கையைப் புலப்படுத்துதல். இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பினை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகும். (271 பேரா. 23 மெய்ப். பாரதி)

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாதவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். (267 இள.)

முதல் அவத்தை மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__275}

காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள் முதல் அவத்தையாகும் காட்சிக்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள். அவை புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க் கின்மை என்ற நான்குமாம். (தொ. பொ. 257 இள.)

இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவிக்கு நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் முதற்பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (261 பேரா.)

இவை நான்கும் தலைக்காதலின் முதற் கூறாகும் மெய்ப் பாடுகள். (மெய்ப். 13 பாரதி)

பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்குமாதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன.

முறுகிய நகைச் சுவை -

{Entry: Q17a__276}

அளவுக்கு மீறி நகையைப் புலப்படுத்தும் நகைச்சுவை. இஃது அறிவும் பண்பும் உடையவரிடத்தே நிகழாதது.

எ-டு : ‘பள்ளியுள் வாழும் பறியறு மாதவர் // பிள்ளைகள் எல்லாம் பெரியர் முதிர்ந்தவர் // வெள்ளைகள் போல விலாஇற நக்குநக்கு // உள்ளவர் எல்லாம் ஒருங்குடன் மாய்ந்தார்.’

சான்றோர் இருப்பிடங்களில் வாழும் பொறுப்பற்ற மாதவ ரும், பிள்ளைகளும், வயதில் மூத்தவரும், கலையறிவு மிக்க வரும் ஆகிய எல்லாரும் அறிவற்றவர் போல விலாஎலும்பு முறியுமாறு சிரித்து ஒரு சேர இக்காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே மறைந்தனர் - என்ற பொருளமைந்த இப் பாடற்கண், பெருகச் சிரித்தல் என்ற சிறுதொழில் ‘முறுகிய நகை’ என்ற சுவையணி வகையாக வந்துள்ளது. (வீ. சோ. 170)

முனிதல் - பொருள்

{Entry: Q17a__277}

முனிதல் என்பது வெறுத்தல்.

தலைவனுடைய புறத்தொழுக்கத்தை அறிந்து மனம் நொந்து அவனைத் திருத்தும்வகை யறியாத தலைவி குடிப்பிறத்தலை வெறுத்து மனம் வருந்துதல் போல்வன (குறுந். 45) (தொ. பொ. 256 இள.)

முனிதல் என்பது வெறுத்தல். அஃது அருளும் சினமும் இன்றி இடைப்பட்ட மனநிலையொடு கூடியிருத்தல். வாழ்க்கையை முனிந்தான் எனவும், ‘அதிகமான் நெடுமானஞ்சியின் மகன் போரிடச் செல்லும் ஊர்களில் இருந்த மக்கள் அங்குத் தங்கியிருத்தலை முனிந்தனர்” (புறநா. 96) எனவும் கூறுதல் போல்வன.

முனிவுள்ளம் புலப்பட நடந்துகோடலின் இதுவும் மெய்ப்பா டாயிற்று. இது துணைமெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. (தொ. பொ. 260 பேரா.)

உளம் கொள்ளாவிடத்தும் மாறுபட்ட விடத்தும் எய்தும் வெறுப்பு. (தொ. மெய்ப். 12 ச. பால.)

இதனை வட நூலார் ‘அமர்ஷம்’ என்ப.

முனிவு மெய் நிறுத்தல் -

{Entry: Q17a__278}

தலைமகள் தன் வெறுப்பினைப் பிறருக்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்துதல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267 இள.)

தலைமகள் தன் உள்ளத்து வெறுப்பு வெளிப்படத் தோழி யிடம், “என் உயிரே போவதாயினும் எனக்கு ஏற்பட்டுள்ள இம்மெய்வேறுபாடு காமநோயால் ஏற்பட்டது என்று தாயிடம் சொல்லாதே” (அகநா. 52) என்றாற் போலக் கூறி நிற்கும் நிலை என்பார் பேராசிரியர். (271 பேரா.)

இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக்காதல் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று.

இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர்.

மூப்பு -

{Entry: Q17a__279}

இளிவரல் என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. மூப்பு - வேறொரு காரணமின்றி ஆண்டு மிகுந்தமை ஒன்றே காரணமாக உடம்பின்கண் தோன்றும் வேறுபாடு. (56 சேனா.)

எ-டு : தொடித்தலை விழுத்தண்டினார், தம் இளமைக் கால நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்துத் தாம் இது பொழுது தளர்ந்த கால்களுக்கு ஆதாரமாகத் தடி ஊன்றி உடல்நடுங்கிச் சில சொற்கள் இருமலுக் கிடையே பேசும் தம் வயது மூத்த நிலை குறித்து வருந் திக் கூறுதல், தன்கண் தோன்றிய மூப்புப் பொருளாக வந்த இளிவரல். (புறநா. 243)

ஆண்டு மூத்தமையான் தலை தொங்கிப் போன வீரனோடு இளைய வீரன் போரிட நாணுவதாகக் கூறல் பிறன்கண் தோன்றிய மூப்புப் பொருளாக வந்த இளிவரல். (தொ. பொ. 254 பேரா.)

மூர்ச்சனை -

{Entry: Q17a__280}

தலைவன் நினைவிலேயே இருக்கும் தலைவி, அவன்நினைவு மிகுதலால் கருவிகரணங்கள் செயற்படுதல் தவிர்ந்து மயங்கி விழுதல்.

இந்நிலைக்குக் காரணம் தலைவியின் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தார்க்கே புலனாவதாதலின் இஃது அக மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 96 உரை மேற்.)

மூன்றாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__281}

காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள் மூன்றாம் அவத்தையாகும் ‘உள்ளுதல்’ என்பதன்கண், தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்ற நான்குமாம்.(தொ. பொ. 259 இள.)

இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் மூன்றாம் பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 263 பேரா.)

இவை நான்கும் ஊன்றியெழும் அன்பின் மூன்றாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். (மெய்ப். 15)

மெய்ப்பட முடிப்பது -

{Entry: Q17a__282}

கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய சத்துவம் படுமாறு வெளிப்படச் செய்வது. அது தேவருலகம் முதலியவற்றைக் கூறினும் கண்டாங்கு அறியச் (செய்யுள்) செய்யும் செய்யுளுறுப்பாம். (தொ. செய். 204 நச்.)

மெய்ப்பாட்டியலுள் மெய்ப்பாட்டிற்குரிய பொருள்கள் சொல்லப்பட்ட வகை -

{Entry: Q17a__283}

நாடகச்சுவைக்கும் உரிமையுடையனவாய், நகைமுதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குச் சிறப்புடையனவாய் அகத்திற் கும் புறத்திற்கும் பொதுவாய் அமைந்து வரும் 32 பொருள் களை (எள்ளல் முதல் விளையாட்டு ஈறாக) முதற்கண் விதந்து ஓதினார்; மேலவற்றைப் போல் வரையறைப்பட்டு அடங்கா மல், எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருவனவும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்பனவுமாகிய 32 பொருள்களை (உடைமை முதல் நடுக்கு ஈறாக) ‘அவை அல்லாதவிடத்து எண்வகைமெய்ப் பாட்டிற்குரிய பொரு ளாக இவையும் உள’ என்று, அடுத்து ஒதினார்.

அகத்திணை பற்றிய மெய்ப்பாட்டுப் பொருள்களைக் களவிற் குரியவை, அழிவின் கூட்டத்திற்குக் காரணமாகிய வரைவிற் குரியவை, அழிவில் கூட்டமாகிய கற்பிற்குரியவை என மூவகைப்படுத்து, களவொழுக்கத்தின்கண் சிறந்து வரும் 24 பொருள்களை புகுமுகம் புரிதல் முதல் கையறவுரைத்தல் ஈறாக முதற்கண் மொழிந்தார். களவிற்கும் வரைவிற்கும் இடைப்பட்ட வரைவுமலிதல் வரைவு கடாதல் என்ற பகுதிக்கும் ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஆகிய பிரிவுப்பகுதிக்கும் உரியவாக நிகழும் கிளவிகள் பற்றி வரும் 20 பொருள்களை (அவை உணர்வும் செயலும் ஆவன) ஒரு சேரத் தொகுத்து மெய்ப் பாட்டுப் பொருள்களாக அடுத்து ஓதினார். அவை இன் பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாக வருபவை - அடுத்து, கற்பொழுக்கத்திற்கு அடிப்படையாய் அதற்கு முன் நிகழும் வரைவிற்குரிய கிளவிகள் பற்றிவரும் (உணர்வும் செயலு மாகிய) பொருள்களை எண்வகை மெய்ப்பாட்டுப் பொரு ளாகத் தொகுத்து ஓதினார். அவை முட்டுவயின் கழறல் முதல் கட்டுரையின்மை ஈறாக எட்டாம். இறுதியாக, கற்பொழுக் கத்திற்கு உரியவற்றுள் சிறப்புடைய பத்தனைத் தெய்வம் அஞ்சல் முதலாகப் புறஞ்சொல் மாணாக்கிளவி ஈறாக மெய்ப்பாட்டுப் பொருளாகத் தொகுத்துக் கூறினார்.

(தொ. மெய்ப்.)

மெய்ப்பாட்டியலோடு உவம இயலின் தொடர்பு -

{Entry: Q17a__284}

மெய்ப்பாடாவது உலகத்தார் உள்ளத்து நிகழும் உணர்ச்சி களைப் புறத்தார்க்கு உடலின்கண் புலப்படும் வேறுபாடு களான் எடுத்துரைத்துப் பொருளைப் புலப்பட வைப்பது.

உவமமாவது எடுத்துக்காட்டுக்கள் வாயிலாக அறியாப் பொருளைப் புலப்படுத்தியும் அறிந்த பொருளைச் சிறப்பாக விளக்கியும் வருவது.

ஆதலின், பொருளைப் புலப்படுத்தல் என்ற செயல்ஒப்புமை பற்றிப் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலை அடுத்து உவமஇயல் அமைந்துள்ளது. (தொ. பொ. 276 பேரா.)

குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாட்டை அடுத்துப் பண்பும் தொழிலும் பற்றி வரும் உவமம் கூறப்பட்டுள்ளது என்பார் உரையாசிரியர். (272 இள.)

மெய்ப்பாடு (1) -

{Entry: Q17a__285}

உடம்பில் தோன்றி மற்றவர்க்குப் புலப்படும் கண்ணீரும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் போன்ற வேறுபாடுகளே மெய்ப்பாடு எனப்படுவன. இவை உய்த்துக் காணும் அறிவு இல்லாமல், எதிர்ப்பட்ட பொருளின் தன்மையான், அதனை மெய்ப்பொருளை எதிர்ப்பட்டது போலவே கருதிப் பார்த்த னான் விளையும்.

இம்மெய்ப்பாடு நிலைமெய்ப்பாடு எனவும், பொதுமெய்ப் பாடு எனவும் இருவகைப்படும்.

1. சுவைகளின் அனுபவம் உள்ளவரை நிலைத்திருக்கும் ஒன்பான் சுவைகளும் காரணமாக நிகழும் மெய்ப்பாடுகள் ‘நிலை மெய்ப்பாடு’ எனப்படும். வடமொழியினர் இதனை ‘ஸ்தாயிபாவம்’ என்பர்.

2. ஒரு சுவைக்கே உரியன ஆகாமல், பல சுவைகளிலும் தோன்றும் மெய்ப்பாடுகள் ‘பொது மெய்ப்பாடு’ எனப் படும். வடமொழியினர் இதனை‘அநுபாவம்’ என்பர்.

மெய்ப்பாடு நடிப்பு இயல்களில் ஒன்று. (நாடக. 225 - 228)

மெய்ப்பாடு (2) -

{Entry: Q17a__286}

மெய்ப்பாடு என்பது 34 செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. மெய் - பொருள்; பாடு - அறிவித்தல். அஃதாவது உலகத்து மக்கள் உள்ளத்தின்கண் நிகழும் நகை முதலிய குறிப்புக்கள் உள்ளத்தில் நிகழ்ந்தபடியே, மற்றவர்க்கு, அவர்கள் உடம்பின்கண் நிகழும் வேறுபாடுகளாற் புலப்படுதல். (தொ. பொ. 249 பேரா.)

ஆராய்ந்து அறியவேண்டும் தேவையின்றிச் செய்யுளுள் கூறப்படும் பொருளினாலேயே கண்ணீர் அரும்பல், மெய்ம் மயிர் சிலிர்த்தல் முதலாகிய சத்துவம் உண்டாகுமாறு செய்வது. ஆகவே, செய்யுளுள் சில சொற்களான் விளக்கப் பட்டுள்ள பொருளை நோக்கி அறிந்தவன், அதனை நேரில் கண்டதுபோலச் செய்யும் செய்யுள்உறுப்பு மெய்ப்பாடாம். அது, தேவருலக வருணனையைச் செய்யுளுள் வாசித்தவன் நேரே தேவருலகைக் கண்டவன் போலப் பெருமிதம் கொள் ளச் செய்வது. இவ்வகையான், செய்யுளிலுள்ள சில சொற்கள் தம்மை வாசித்தவர்க்குத் தாம் குறிப்பிடும் பொருளை நேரே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினாற் போன்ற உணர்வு பிறப்பித்தலே மெய்ப்பாடாம். (517 பேரா.)

‘உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல்

மெய்ய்பா(டு) என்ப மெய்யுணர்ந் தோரே’

என்று செயிற்றியனார் ஓதுதலின், அச்சமுற்றவன்மாட்டு நிகழும் அச்சம், அவனிடம் ஏற்படும் உடல் நடுக்கமும் மயிர் செவ்வன் நிற்றலும் முதலிய குறிகளால் காண்போர்க்கும் புலனாகும் தன்மை மெய்ப்பாடாம். மெய்யின்கண் தோற்று தலின் மெய்ப்பாடாயிற்று. (247 இள.)

மெய்ப்பாடு என்பது அகஉணர்வுகளை ஆழ்ந்து ஆராயா மலேயே யாரும் இனிது அறியப் புலப்படுத்தும் இயற்புற உடற்குறியாம். உள்ளத்திலுள்ள உணர்ச்சிகளைப் பொருத்த மான வகையில் உடலான் வெளிப்படுத்தப்படும் குறிப்புக் களைக் கொண்டு புலவன் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுள் உறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. (மெய்ப். பாரதி. முன்.)

மெய்ப்பாடு (3) -

{Entry: Q17a__287}

இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று.(கா. 90).

மெய்ப்பாடாவது உடம்பில் ஏற்பட்டு வெளியே நன்கு புலப்படும் வேறுபாடுகளை நன்றாகத் தெரிந்து சொல்லுதல். மன்மதனுடைய ஐந்தம்புகளாலும், மனத்தில் முன்பே இருக்கும் காமஉணர்வு சிறிது சிறிதாக முதிர்ந்து பரவும்; அப்பொழுது சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்ற ஐந்து நிலைகள் ஏற்படும்.

சுப்பிரயோகம் காமத்தால் விளைந்த பேச்சும் நினைவும்; விப்பிரயோகம் - காமத்தால் பெருமூச்செறிதல்; சோகம் - காமத்தால் சோறுண்ணாமை; மோகம் - காமத்தால் மயக்க மும் பிதற்றலும்; மரணம் - காமத்தால் பெரிதும் வருந்துதல். (வீ. சோ. 96 உரைமேற்.)

மெய்ப்பாடு எட்டன் முறைவைப்பு -

{Entry: Q17a__288}

உணர்தற்கு எளிமையும் யாவர்க்கும் ஒப்பதும் பற்றி நகை முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வாறே அமைந்து நகைக்கு மறுதலையாக வருதலின் அழுகை அதன்பின் வைக்கப்பட் டது. அழுகையோடு இயைபுடைமையானும் இளநிலை அறிவு காரணமாக எய்துதலானும் இளிவரல் அதன்பின் வைக்கப்பட்டது. நிரம்பா அறிவும் ஆய்விலா நிலையும் பற்றி வருதலின், இளநிலை அறிவான் எய்தும் இளிவரலுக்குப் பின் மருட்கை வைக்கப்பட்டது. தளர்நிலை அறிவும் மெலிநிலை உள்ளமும் காரணமாக வரும் அச்சம் ஆய்விலா அறிவான் வரும் மருட்கையின் பின் வைக்கப்பட்டது. அச்சத்திற்கு மறுதலையாகலின் பெருமிதம் மருட்கையின் பின் வைக்கப் பட்டது. பெருமிதத்திற்கு வரும் ஊறு காரணமாக வரும் வெகுளி அதன்பின் வைக்கப்பட்டது. யாவரானும் விரும்பப் படுதலானும், அறிவானும் ஆற்றலானும் நிரம்பி நிற்றலானும் உவகை இறுதிக்கண் வைக்கப்பட்டது.

அன்றி, அவை சான்றோர் செய்யுள்களுள் ஒன்றின் ஒன்று மிக்குப் பயின்று வரும் சிறப்பு நோக்கி வைக்கப்பட்டன எனினும், தொல்லோர் அமைத்த முறை அஃது எனினும் ஆம். (தொ. மெய்ப். 3 ச. பால.)

மெய்ப்பாடு சுவையொடு தொடர்புடைமை -

{Entry: Q17a__289}

இயற்றமிழின்கண் இலக்கியக்கலையுள் செய்யுளிடத்து அமையும் உணர்வுகள் ஒலிவடிவாயின் செவிவாயிலாகவும், வரிவடிவாயின் விழிவாயிலாகவும் புக்கு அச்செய்யுள் உணர்த்தும் நிகழ்ச்சிகள் அகத்தே புலப்படுகின்றன. ஆதலின் மெய்ப்பாடு என்பது சுவைப்பொருளின் அடிப்படையில் பொருள் புலப்பாட்டினைத் தலையாகக் கொண்டுவரும். எனவே மெய்ப்பாடு சுவையொடு தொடர்புடையதாதல் போதரும்.

முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பு நாடகத் தமிழுக்குரிய சுவையுறுப்பொடு தொடர்புடையதாதலின், ஆசிரியர் நாடக நூலார் கூறும் சுவை பற்றிய கோட்பாடுகளை ஒப்புமை பற்றி இவ்வியலுள் முதற்கண் எடுத்துக் கூறிப் பின்னர் இயற்றமிழுக்குரிய மெய்ப் பாட்டியல்புகளைப் பொதுவும் சிறப்புமாக வகுத்தோது கிறார். (தொ. மெய்ப். பாயிரம் ச.பால.)

மெய்ப்பாடும் சுவையும் -

{Entry: Q17a__290}

மெய்ப்பாடாவது உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளின் மெய்ம்மை வெளிப்படுதல் அல்லது உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளின் உண்மைத் தோற்றமாகிய புற உடற்குறி யாகும். மெய்ப்பாடுகள் பொறிவாயிலாகப் பெறும் அக உணர்வுகளோடும் உணர்ச்சிகளொடும் புறஉடற் கூறுக ளொடும் நெருங்கிய தொடர்புடையன. இவை தோன்று வதற்கு அடிப்படையான உணர்ச்சிகள் நிலைக்களன்கள் எனப்படும்.

இயற்கையாக எழும் உள்ளத்துணர்ச்சிகளின் உண்மை வெளிப்பாடே மெய்ப்பாடாகும். இயற்கையாக அவ்வுணர்ச் சிகள் எழாதபோதும், ஒருவன் அவ் உணர்ச்சிகளை உய்த் துணர்ந்து, மனத்தால் பாவித்து அவற்றிற்குரிய புற உடற் குறிகளைச் செயற்கையாக எழுப்பி நடித்தல் ‘பாவம்’ எனப் படும். ஒன்றைப் போலப் பாவித்தல் ‘பாவம்’ ஆகும். இவ்வாறு போலியாக எழுப்பும் உடற்குறிகள் சத்துவம் அல்லது விறல் எனப்படும். விறல்பட ஆடுகின்றவள் விறலி ஆவாள்.

உய்த்து உணர்வதால் எழுப்பப்பெறாது, தாமே தலைப்பட்டு வரும் உணர்ச்சிகளை அவற்றின் மெய்ம்மைப் பதிவாகச் செய்யுளில் அமைப்பதே மெய்ப்பாடு என்பது தொல்காப்பி யர் கருத்து.

தாமே இயற்கையாக எழாமல் பொய்யாகப் பாவனையால் விறல்படச் செயற்கை முறையில் அவ்வுணர்ச்சிகளுக்குரிய புற உடற்குறிகளை எழுப்புதல் விறல் அல்லது சத்துவம் எனப்படும். மெய்ப்பாட்டியலில் கூறப்படுவன மெய்ப்பாடே யன்றிச் சுவைகள் அல்ல. மெய்ப்பாட்டினின்றும் தோன்றியதே என்று கொள்ளும் சுவை மெய்ப்பாட்டின் வேறுபட்டது.

சுருங்கச் சொல்லின், உடலின்பத்தை விரும்பினோர் வகுத்தது சுவைக் கொள்கை. அறிவின்பத்தை விரும்பினோர் வகுத்தது மெய்ப்பாடு.

(கம்பரும் மெய்ப்பாட்டியலும் - கோதண்டபாணி பிள்ளை).

மெய்யே என்றல் -

{Entry: Q17a__291}

பிரிவினுள் தலைவன் கூறிய சொல் நிகழாது போயினும் அதனை மெய்யென்றே துணிந்து,

‘கானம் கார் எனக் கூறினும்

யானோ தேறேன்அவர் பொய்வழங் கலரே’ (குறுந். 21)

என்றாற் போலத் தலைவன் சொல் ஒரு காலத்தும் பொய்யாது என்று கொள்ளும் காதலியல்பு. (மெய்ப். 22 பாரதி.)

தலைவி தான் கொண்ட பொய்யான கருத்தை மெய் என்று துணிதல் என்பதும் பொருள். தலைவன் மகனை வாயிலாகக் கொண்டு தலைவியை அடையவும், தலைவி அதனை நம்பாது, “தலைவன் பரத்தை ஒருத்தியை மணத்தற்குத் தன் தெருவழியே சென்றபோது தன் மகன் அவனைத் தடுத்துப் பிடிவாதம் செய்து இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டான்” (அகநா. 66) என்று தான் கொண்ட பொய்யான கருத்தையே மெய் என்று சாதிப்பது போல்வன. (270 பேரா.)

இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர்.

பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்த மாகும்.

மென்மை -

{Entry: Q17a__292}

இஃது இளிவரல் என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய நான்கு குறிப்புக்களுள் நாலாவது.

மென்மை - நல்குரவு. (தொ. பொ. 250 இள.)

மென்மை - வலிகுன்றியிருத்தல். (254 பேரா.)

மென்மை - இகழ்ச்சிக்கு ஆளாக்கும் எளிமை; அஃதாவது நொய்ம்மை. (மெய்ப். 6 பாரதி.)

எ-டு : ‘அறத்தொடு பொருந்தாத நல்குரவுடையான் தன் தாயானும் புறக்கணிக்கப்படுவான் (குறள் 1047);

‘குடிப்பிறந்தவர்களிடத்தினும் நல்குரவு தாழ்வான சொற்கள் பேசப்படுதற்கு இடம் தரும். (குறள் 1044) (இள.)

பகைவர் வலியர் என்று அவரை வணங்கி வாழ்தல், தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல்; ‘பகைவர் மெல் லியர்’ என்று அவரோடு பகைத்துப் போரிடுதல்; பிறன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் (புறநா. 239).

மேட்டிமை -

{Entry: Q17a__293}

மேட்டிமை - பெருமிதச் சுவை.

(கொடை பற்றிய) பெருமிதம், மேன்மை; அகந்தை; தலைமை. (L )

ய section: 1 entries

‘யாப்புற வந்த இளிவரல்’ -

{Entry: Q17a__294}

திட்பமுற வந்த இளிவரல். இதனால் இழிக்கத்தக்கன பிறவும் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் அற்பமாகத் தோன்றுவன. (250 இள.)

இருகையுடைய வீரன், ஒருகையுடைய யானையை எதிர்த்துப் போரிடாத, தன்கண் உற்ற வீரம்பற்றிக் கூறுவன போல்வன வும் இளிவரவின் பாற்படும். (தொ. பொ. 254 பேரா.)

ரௌத்திரம் - வெகுளிச்சுவை

வ section: 27 entries

வருத்தம் -

{Entry: Q17a__295}

இஃது இளிவரல் என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது.

வருத்தம் - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய துயரம்.

(தொ. பொ. 250 இள.)

வருத்தம் - முயற்சி. (254 பேரா.)

வருத்தம் - இடுக்கண்; அஃதாவது அல்லல். (மெய்ப். 6 பாரதி)

எ-டு : தம்மை அகன்று சென்றார் பின் செல்லாது தாமும் அகன்றிருக்கும் நிறையுடைமை காமநோயுற்றாரிடம் தோன்றாது” (கு. 1255) என்ற தலைவி கூற்றுப் பற்றித் தோழிக்குப் பிறர் வருத்தம் கண்டு இளிவரல் நிகழ்ந்தது. (இள.)

சிறைப்பட்ட சேரமான் கணைக்காலிரும் பொறை வருந்திக் கூறியது (புறநா. 74) தன் வருத்தம் பற்றிய இளிவரலான் நிகழ்ந்தது. (இள.)

தலைவன் தன் மனத்தைத் தனித்து நிறுத்தி, “மனமே! நீ சேய்மையில் உள்ளவளும் கிட்டுதற்கு அரியளுமாகிய தலைவி நினைப்பாகவே உள்ளாய்” (குறுந். 128) என்றது. பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். (பேரா.)

தோழியை இரந்து பின் நின்ற தலைவன், “தலைவி என்னை வருத்துகிறாள். அதனை யான் அறிகின்றேன்; ஆயின் அவள் அதனை அறிகின்றாளில்லை” என்று கூறியதன்கண் (குறுந். 337) தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல் வந்தது. (பேரா.)

வருந்திக் காட்டுதல் -

{Entry: Q17a__296}

எவ்வளவு புறத்தே கோலம் செய்யினும், தலைவனைப் பிரிந்திருக்கும் வாட்டத்தைத் தலைவி தன்முகத்தின் வாயி லாகத் தெரிவித்தல்.

இந்நிலைக்குக் காரணம் அவள் அகத்தது உணர்ந்தார்க்கே புலனாம் ஆதலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ. 96 உரைமேற்)

வரைதல் -

{Entry: Q17a__297}

வரைதல் என்பது செய்யத்தகுவனவும் தவிரத் தகுவனவும் இவை என்று வரையறை செய்துகொண்டு ஒழுகும் ஒழுக்கம். அவை பிறன்மனைவியையும் செல்வங்களையும் தான் பெற விரும்பாமை போல்வன. (தொ. பொ. 256 இள)

வரைதல் என்பது காக்கவேண்டிய நற்செயல்களைப் பின்பற்றி, நீக்க வேண்டிய தீச்செயல்களை அகற்றி ஒழுகும் ஒழுக்கம். அவை பார்ப்பாராயின் முத்தீக்களையும் விரும்பிப் போற்றுதலும், புலாலுணவும் கள்ளும் முதலாயினவற்றைக் கொள்ளாமையும் போல்வன. இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப்பாடாயிற்று.

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)

வரைதல் என்பது வெளிப்படுவது புலப்படாது நீங்கி ஒளித்தல் என்று கொண்டு, வடநூலார் இதனை ‘அவகித்தம்’ என்ப.

உண்மை நடுநிலை முதலியன காத்துப் பொய் பொறாமை முதலியன நீக்கி ஒழுகல். அஃதாவது செய்வன தவிர்வன கடைப்பிடித்தல். நல்லன செய்ய மகிழ்தலும், தீயன செய்ய அஞ்சுதலும் மெய்ப்பாடாகும். (247 குழ.)

வரைதல் வேட்கை உணர்த்தும் மெய்ப்பாடுகள் -

{Entry: Q17a__298}

முட்டுவயின் கழறல், முனிவு மெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன்புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச்சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்ற எட்டும் வரைந்து எய்தும் கூட்டமாகிய திருமணத்திற்குத் தலைவனை வரைவு கடாவுவதற்கு முன்னர் தலைவி தான் வரைதலையே வேட்கின்ற செய்தியைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகளாம்.

இவை ‘அழிவில்கூட்ட மெய்ப்பாடுகள்’ எனவும் வழங்கப் பெறும். (தொ. பொ. 271 பேரா.)

வறுமை -

{Entry: Q17a__299}

இஃது அழுகை என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்க னுள் இறுதியாவது.

வறுமை- நல்குரவு (தொ. பொ. 249 இள.)

வறுமை - தான் விரும்பிய பொருள் கிட்டாதாயினும் அதனிடத்து வைத்த ஆசை குறையாதிருத்தலாகிய, போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம். (253 பேரா.)

எ-டு : கடகம் அணிந்த கையில் வெறுமஞ்சட்கயிறு அணிந் திருத்தல் (இள.)

தாயிடம் பால்குடிப்பதற்குப் பால் இல்லாமையால் குழவி அழுதல் தன்கண் தோன்றிய வறுமை பற்றிய அழுகை; அக்குழவியின் துயர் கண்டு தாய் அழுதல் பிறன்கண் தோன் றிய வறுமை பற்றிய அழுகை. (புறநா. 164) (பேரா.)

வன்சொல் -

{Entry: Q17a__300}

நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

வன்சொல் - கடுஞ்சொல் கூறல். (தொ. பொ. 270 இள.)

வன்சொல் - கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொற்கள் (274. பேரா)

வருத்த முறுத்தும் கடுஞ்சொற்கள் காதல் வாழ்க்கையைக் கைக்கச் செய்யுமாதலின் வன்சொல் விலக்கப்பட்டது.

வாழ்த்தல் -

{Entry: Q17a__301}

வாழ்த்தல் - பிறனை வாழ்த்துதல், ‘வாழி ஆதன்’ (ஐங். 6) ‘எங்கோ வாழிய குடுமி!, (புறநா. 9) என்று ஒருவனை வாழ்த்தும்போது வரும் மனநிகழ்ச்சி மெய்ப்பாடாம்.

வைதல் மெய்ப்பாடு ஆகாது. அது வெகுளியின் முதிர்ச்சி. வாழ்ச்சி அன்பின் முதிர்வு ஆகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின், வாழ்த்தல் அன்பினுள் அடங்காது. (தொ. பொ. 256 இள.)

வாழ்த்தல் என்பது பிறரால் வாழ்த்தப்படுதல். இது பிறவினை யன்றோ எனின், ஒருவனை “நீடு வாழ்க” என்று வாழ்த்தல் பிறவினை யாயினும், அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (260 பேரா.)

இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

இதனை வடநூலார் பெருவலி உள்ள இடத்து நிகழும் ‘உக்ரதை’ என்ப.

பிறர் வாழ்த்தும்போது பிறக்கும் உள்ளக்குறிப்பு மெய்ப் பாடாகும். 247குழ.

விகாரம் என்ற சுவை -

{Entry: Q17a__302}

இயல்பான நிலை மாற்றத்தால் குறிப்பாக ஒருபொருள் அறியக் கிடக்குமாறு அமையுமாயின் அம்மாற்றமும் சுவைப் பொருளாதலின் விகாரமும் ஒரு சுவையாயிற்று.

எ-டு: ‘கலைகால் நெகிழ்ந்து குழலும் சரிந்து, வளைகழல

முலைகால் பசந்து முன் போலாள்....’

தலைவியின் கலைநெகிழ்தல், குழல் சரிதல் வளை கழலுதல், நகில் பசத்தல் முதலிய விகாரங்கள் அவளுக்குத் தலைவ னொடு நிகழ்ந்த கூட்டத்தைக் குறிப்பிக்கும் மெய்ப்பாடுகள் ஆயினமையின், சுவையெனப்பட்டன. (வீ. சோ. 154 உரை)

விப்பிரயோகம் -

{Entry: Q17a__303}

தலைவன் தலைவியென இருவரிடையேயும் நிகழும் பிரிவு; தலைவன் தலைவியை எய்துதற்கு முன் மன்மதனுடைய ஐந்து அம்புகளாலும் இருவரிடையேயும் நிகழும் ஐவகை நிலைகளுள் ஒன்றாகிய பெருமூச்செறிதல். இஃது ஒரு மெய்ப்பாடு. (வீ. சோ. 96 உரை மேற்.)

வியப்பு -

{Entry: Q17a__304}

இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று.

வியப்பு - தம்மைப் பெரியதாக நினைத்தல் (தொ.பொ. 270 இள.)

வியப்பு - தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான் போல வியந்து ஒழுகுதல்; தலைவன் தன் பண்புநலன்கள் மிக்கன என்று தன்னைத் தானே வியத்தலும் ஆம். (தொ. பொ. 274 பேரா.)

இஃது ஒத்த காதலுக்கு ஒவ்வாக் குற்றம். புனிதவதியாரிடம் தெய்வத்தன்மை கண்ட பரமதத்தன், அவரொடு தான் வாழ்ந்த காதல்வாழ்வை நீத்து வேற்றுநாடு சென்று அங்கு மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்தமை பெரியபுராண வரலாறு.

வியப்பு அவிநயம் -

{Entry: Q17a__305}

(வியப்பு, அற்புதம், ஆச்சரியம் என்பன ஒருபொருட் கிளவிகள்.)

சொல்லாடலில் சோர்வு, பிற செயல்களிலும் சோர்வு, மயிர்க் கூச்செறிதல், பிறரை வியப்பில் ஆழ்த்தும் செயல்கள், இமைத்தலின்றி விழித்த கண் விழித்தவாறிருத்தல், ஒரோ விடத்து மூடிய கண்ணுடன் இருத்தல் போன்றவை. (நாடக. 248)

வியர்த்தல் -

{Entry: Q17a__306}

வியர்த்தலென்பது தன் மனத்தில் வெகுளி தோன்றியவழிப் பிறப்பதொரு புழுக்கம். (தொ. பொ. 256 இள.)

வியர்த்த லென்பது பொறாமை முதலியன பற்றி மனம் புழுங்குதல். (260 பேரா.)

இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.

இதனை வடநூலார் ‘ஸ்வேதம்’ என்ப.

விரைவு -

{Entry: Q17a__307}

விரைவு என்பது ஒரு பொருளைச் செய்ய நினைத்தான், அது தாழ்க்கில் அப்பயன் எய்தான், கடிதில் முடித்தல் வேண்டும் எனக் குறித்த மனநிகழ்ச்சி.

“கன்றை நினைந்து வரும் பசுப் போலத் தன் நண்பனுக்கு உதவ விரைந்து வருகின்றான்” (புறநா. 275) என்றாற் போல்வது. (தொ. பொ. 256 இள.)

விரைவு என்பது இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ளம் நிகழும் கருத்து. (இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று.)

இதனை வடநூலார் ‘ஆவேகம்’ என்ப.

விரைவாவது, காலத்தையும், இடத்தையும் சுருக்கி மேற் செல்லக் கடிதுவிழையும் உள்ளஎழுச்சி. (தொ. மெய்ப். 12 ச. பால.)

விலங்கு -

{Entry: Q17a__308}

இஃது அச்சம் என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது.

விலங்கு என்பன அரிமா முதலிய அஞ்சத்தக்கன.

(தொ. பொ. 256 பேரா.)

எ-டு : தினைக்கொல்லை காக்கும்போது மயக்கம் பொருந் திய யானை தலைவியைத் தாக்க வந்தவிடத்தே, அவளுக்கு விலங்கு பொருளாக அச்சம் பிறந்தது. (குறிஞ்சிப். 165- 169) 252 இள.

‘விளிவில் கொள்கை அழுகை’ -

{Entry: Q17a__309}

கேடில்லாத கொள்கையையுடைய அழுகை. இவ்வடை மொழியாகிய இலேசினான், அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு; அதுவும் அழுகை யின்பால் சார்த்தி உணரப்படும்.

யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தித் தம் புதல்வர் தந்தையொடு விழுப்புண்பட்டு இறந்து கிடத்தலைக் கண்டு வீரப்பெண்டிர் வடித்த கண்ணீர் (புறநா. 19) உவகைக் கண்ணீர் ஆகும். (தொ. பொ. 253 பேரா.)

விளையாட்டு -

{Entry: Q17a__310}

இஃது உவகை என்ற மெய்ப்பாட்டுக்கு உரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது.

விளையாட்டு - யாறும் குளனும் காவும் ஆடிப் பதி இகந்து வருதல் முதலாயின. (தொ. பொ. 259 பேரா.)

விளையாட்டாவது மக்கள் உளம் களித்து ஆடும் தீது அறியாப் பொய்தல். அஃதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக்கும். இஃது ஆண்பெண் இருபாலார்க்கும் பொது. (மெய்ப். 11 பாரதி.)

“இளவேனிற் பருவம் வந்து விட்டதை அறிந்தால், தலைவன் விரைந்து ஊருக்கு மீண்டு, வையையாற்றுப் புதுவெள்ளத்தில் பரத்தையரொடு மகிழ்ந்து மயங்கி நீர்விளையாட்டு நிகழ்த்து வானே” என்ற தலைவி கூற்றில் (கலி. 30) விளையாட்டுத் தலைவனுக்கு உவகைப்பொருளாமாறு குறிப்பிடப்படுகிறது. (பேரா.)

விறல் (1) -

{Entry: Q17a__311}

விறல் என்பன அவ்வவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி, வேம்பு தின்றார்க்குத் தலை நடுங்குவது போலத் தாமே தோன்றும் நடுக்கம் முதலாயின. (தொ. பொ. 249 பேரா.)

விறல் எனினும், சத்துவம் எனினும், மெய்ப்பாடு எனினும் ஒக்கும்.

‘சத்துவம் என்பது சாற்றுங் காலை,

மெய்ம்மயிர் குளிர்த்தல், கண்ணீர் வார்தல்,

நடுக்கம், கடுத்தல், வியர்த்தல், தேற்றம்,

கொடுங்குரல் சிதைவொடு, நிரல்பட வந்த

பத்தென மொழிப சத்துவம் தானே.’

என்பதனால், மெய்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், உடல் நடுங்குதல், முகத்தில் சினக்குறி காட்டுதல், வியர்த்தல், முகத்தில் தெளிவு காட்டுதல், குரலில் வேறுபாடு காட்டுதல், சொற்கள் பேசும்போது தடுமாறுதல் போல்வன சத்துவமாம். (245 இள.)

சத்துவங்களை வடநூலார் ‘சாத்துவிக பாவம்’ எனவும், துணையாகும் மெய்ப்பாடுகளைச் ‘சஞ்சாரி பாவம்’ எனவும் கூறுப.

விறல் (2) -

{Entry: Q17a__312}

நுகர்தற்குரிய பலபொருள்களையும் துய்த்த புலனுணர்ச்சி யான சுவை காரணமாக மனத்தில் உண்டாகும் உணர்வே அடிப்படையாய், விரும்பி முயன்று செய்தலின்றித் தாமே தோன்றிப் புறத்தே வெளிப்படும் கண்ணீரும் மெய்ம்மயிர் சிலிர்ப்பும் போன்ற குறிப்புக்கள்; சத்துவம் என்பதும் அது.

விறலின் பத்து வகைகளாவன :

1. மெய்ம்மயிர் சிலிர்த்தல்; ‘உரோமாஞ்சம்’ என்ப.

2. விழி நீர் வார்தல்.

3. நடுக்கம் அடுத்தல் - உடம்பு நடுங்கத் தொடங்குதல்.

4. வியர்த்தல் - திடீரென்று வியர்வை தோன்றுவது.

5. தேற்றம் - தெளிதல்.

6. களித்தல் - மகிழ்தல்.

7. விழித்தல் - கண்ணை அகல விழித்துப் பார்த்தல்.

8. வெதும்பல் - மனம் புழுங்குதல்.

9. சாக்காடு - உணர்ச்சி மரத்துப் போதல்.

10. குரல் சிதைவு - குரல் தழுதழுத்தல்.

என்பனவாம். (நாடக. 229, 230)

வெகுண்டோன் அவிநயம் -

{Entry: Q17a__313}

மடித்த வாயும், விரிந்த புடைத்த மார்பும், துடித்த புருவங் களும், நீண்டு சுட்டும் விரலும், காய்ந்த உள்ளமும், கையுடன் கை புடைத்தலும் என இவை. அடியார்க்குநல்லார் மேற் கோள் காட்டும் 24 வகை அவிநய இலக்கணச் சூத்திரங்களுள் வெகுண்டோன் அவிநயம் கூறும் சூத்திரம் கூறுவன இவை.

(நாடக. 253 உரை)

வெகுளி (1) -

{Entry: Q17a__314}

உறுப்புக்களை வெட்டிக் குறைத்தலும், தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் போன்றவற்றிற்குக் கேடு நினைத்தலும், மன்னனது கொடுங்கோலும் போன்ற அநியாயச் செயல் காரணமாகச், சினம் மிகுந்து, தன் நிலையை மறந்து, கொதித் தெழுந்து கூறும் சொற்களும் செய்யும் செயல்களும் இச்சுவையின் பாற்படும். (நாடக. 481)

வெகுளி (2) -

{Entry: Q17a__315}

எதிரியான மாந்தரிடமும் பிறவற்றிடமும் தோன்றும் மனக் கலக்கமும் வெப்பமும் எழுச்சியும். இது வெகுளிச் சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 44.)

வெகுளி அவிநயம் -

{Entry: Q17a__316}

கைகளைப் பிசைதலும், மெய்குலைதலும், மடித்த வாயும், கடித்த உதடும், சிவந்த கண்ணும், வெம்மையான பெருமூச் சும், வியர்த்தலும் போன்றவை.

வெகுளி, உருத்திரம், கோபம் என்பன ஒரு பொருட் கிளவிகள்.

(நாடக. 247)

வெகுளிக்குறிப்பு நான்கு -

{Entry: Q17a__317}

வெகுளி - வெகுளியைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளைவது.

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற நான்கு குறிப்புப் பற்றியும் வெகுளி பிறக்கும்.

ஊடல் பற்றியும் வெகுளி பிறத்தல் உண்டு.

வெகுளி எப்பொழுதும் பிற பொருள் பற்றியே வரும். ‘தன்னை வெகுண்டான்’ என்றவழி, உடல் வேறு உயிர் வேறாகக் கருதி உயிராகிய தான் உடலாகிய பிறபொருளை வெகுண்டான் என்பது கொள்ளப்படும். (தொ. பொ. 258 பேரா.)

தந்தையும் தாயுமாகிய இருவகைக்குரவரும், அவரைச் சேர்ந்தோரும், தேவர்களும், அரசரும் ஆகிய இவர்களுடைய பெருமைக்கு இழுக்குத் தரும் செயல்கள் நிகழ்ந்துழி வெகுளி தோன்றும் என வெகுளிக்குறிப்பு, தந்தைதாயர் தீங்கு, சுற்றத்தார் தீங்கு, தெய்வத்தீங்கு, மன்னவர் தீங்கு என்னும் இவை குறித்து வரும் என்னும் வீரசோழியவுரை. (கா. 96)

வெப்பமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17a__318}

1) “தாகம் தாகம்” என்று பலகால் நீர் வேண்டல், 2) உடல் நெருப்புப் பற்றி எரிவது போன்ற நினைப்புக் கோடல். 3) வெளியில் சென்று இயங்குவதற்கு அஞ்சுதல், 4) கண்கள் வெப்பத்தால் சிவந்து காணப்படுதல், 5) எப்பொழுதும் தண்ணீர் பருகும் வேட்கை மிகுதல், 6) உடம்பில் பொருத்த மில்லாத எரிச்சல் ஏற்படுதல் முதலியன. (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)

வெயில் தலைப்படடோன் அவிநயம் -

{Entry: Q17a__319}

1. உடம்பிலே துன்பம் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற நிலை எய்துதல், 2. உடம்பு நெருப்புப் போலத் தகித்தல், 3. கண் சிவத்தல், 4. பார்வை மழுங்குதல் முதலியன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன.) (நாடக. 253 உரை)

வெரூஉதல் -

{Entry: Q17a__320}

வெருவுதல் என்பது அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது, திடீரென்று தோன்றி மறையும் குறிப்பாகிய துணுக்கம்.

தலைவி ஊடற்கண் தலைவனிடம், “நின்னைக் காணும் போது வெருவுகின்றேன்” (கலி. 87) என்று கூறும் கூற்றில், அச்சமோ அச்சத்திற்குரிய மெய்ப்பாடோ தோன்றாமல் தலைவனைக் காணாது கண்ட அளவில் திடுக்கிட்டுக் கூறுதல் ஒன்றுமே அமைவது இம்மெய்ப்பாடாம். (தொ. பொ. 256 இள.)

வெருவுதல் என்பது உண்மையான காரணம் எதுவுமின்றி விலங்கும் புள்ளும் திடுக்கிட்டுக் கூச்சலிடுவது போலத் துணுக்குறும் உள்ளநிகழ்ச்சி. அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதில் பிறந்துமாறுவதொரு வெறி. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.)

இதனை வடநூலார் சங்கை என்ப.

‘வெறுப்பின் வந்த வெகுளி’ -

{Entry: Q17a__321}

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற நான்கனையும் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்.(தொ.பொ. 254 இள.)

உறுப்பின் ஊறும், சுற்ற நலிவும், அலைத்தலும், கொலையும் வெறுப்பான் விளையும் சினத்தை அடிப்படையாகக் கோடலின் ‘வெறுப்பின் வந்த வெகுளி’ எனப்பட்டது. தீதில்லாத சினம் அறம் ஆதலின், அதனை விலக்கி வெறுப்பிற் குரிய வெகுளி வகையே ஈண்டுக் கூறப்பட்டது. (மெய்ப். 10 பாரதி)

தலைவிக்கு ஊடல் பொருளாக வெகுளி தோன்றத் தலைவன், “என்னிடம் தவறில்லாதஇடத்து நீ எவ்வாறு என்னைக் கோபிப்பாய்?” (கலி. 87) என்று கூறுதற்கண் ஊடல் பொரு ளாகவும் வெகுளி தோன்றும் என்பதும், அதுதான் தலைவிக்கு உரித்து என்பதும் பெறப்படும். வெகுளி பிறன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும். (258 பேரா.)