Section Q17b inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 17 alphabetical subsections

  1. அ section: 25 entries
  2. ஆ section: 5 entries
  3. இ section: 8 entries
  4. ஈ section: 2 entries
  5. உ section: 17 entries
  6. எ section: 2 entries
  7. ஏ section: 1 entries
  8. ஐ section: 1 entries
  9. ஒ section: 3 entries
  10. க section: 28 entries
  11. ச section: 40 entries
  12. த section: 15 entries
  13. ந section: 34 entries
  14. ப section: 51 entries
  15. ம section: 8 entries
  16. ய section: 3 entries
  17. வ section: 40 entries

Q17b

[Version 2l (transitory): latest modification at 11:14 on 20/04/2017, Hamburg]

நாடகம் (283 entries)

[Part 2 of TIPA Volume Q17 (and pages 123-192 in volume printed in 2004)]

அ section: 25 entries

அகக்கூத்து -

{Entry: Q17b__001}

முக்குண சம்பந்தமான கூத்து. (சிலப். 3 : 12)

அகநாடக உரு -

{Entry: Q17b__002}

அக நாடகத்துக்குரிய பாடல்கள். அவை கந்தம் முதல் பிரபந்த உரு ஈறாக உள்ள இருபத்தெட்டு வகைப்படும்.

கந்தம் என்றது, அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தால் புணர்க்கும் இசைப்பாடலை.

பிரபந்தம் என்றது, அடிவரையறை இன்றிப் பல தாளத்தால் புணர்க்கும் இசைப்பாடலை. பிறவும் அன்ன.

(சிலப். 3 : 14 உரை)

அகநாடகம் -

{Entry: Q17b__003}

நாடக வகையுள் ஒன்று. இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணங்களை அடிப்படையாகக் கொண்டு உள் ளத்து எழும் சுவையை வெளிப்படுத்தும் கதை தழுவிவரும் கூத்து. (சிலப். 3 : 14 உரை)

அங்கம், களம் என்பன -

{Entry: Q17b__004}

நாடகத்தின் பெரும்பிரிவிற்கு அங்கம் என்பது பெயர். அதன் உட்பிரிவு களம் எனப்படும். ஓர் அங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட களங்கள் அமையும்.

வடநூலார், ஓர் அங்கம் தொடங்குவதற்கு முன் சில விடங்க ளில் நாடகக்கதையை விளக்கல் வேண்டி, இன்றியமையாத நிகழ்வுகளையும் செய்திகளையும் இழிந்த பாத்திரங்களின் மூலம் கூறுவிப்பதும் உண்டு. இதனைக் `கதை நிறைகளம்‘ என்று கொள்வோம். இது வடமொழியில் `விஷ்கம்பம்‘, `பிரவேசம்‘ எனப்படும்.

களமாவது கதை நிகழிடமாகக் கூறப்பட்ட இடத்தில் நிகழ்ந்திடும் காட்சி ஆதலின், நாடகத்தில் களம் என்பதனைக் காட்சி எனவும் வழங்குதல் உண்டு. களம் முடியும்போது திரை விழும். ஒரே தொடரில் வரும் காட்சிகளை அடுத் தடுத்து அமைத்தல் பொருத்தமின்று. (நாடக. 187-193)

அங்கம், சிறப்பங்கம் -

{Entry: Q17b__005}

இஃது ஓரங்கமே கொண்ட நாடகம். இதனுள் அவலச் சுவையே பெரிதும் இடம்பெறும். கவலைகொண்ட பெண் பாலார் கசிந்து வருந்த, அருகிலிருப்போர் வாய்விட்டுக் கதறிப் புலம்ப, வாக்குவாதமான வாய்ச்சண்டை இதன்கண் இடம் பெறும். மனிதர்களே பாத்திரங்கள். இராமன் போன்ற அவதாரக் கடவுளரை மனிதபாத்திரமாகவே கொள்வதும் உண்டு.

நாடகத்தின் பெரும்பகுதியைக் குறிக்கும் அங்கம் என்ப தற்கும் இந்தவகை நாடகத்திற்கும் வேறுபாடு தெரியும் வகையில் இதனைச் `சிறப்பங்கம்‘ எனப் பெயர் சுட்டுவதும் உண்டு.

(நாடக. 131, 132)

அச்ச அவிநயம் -

{Entry: Q17b__006}

உடம்பு ஒடுங்குவதும், நடுக்கமும், கண்கலக்கமும், மனக்கலக்க மும், ஒளிந்து வருதலும், கைகளால் தனக்கெதிரே எதனை யோ வெருட்டுதல் போலக் கையை உதறுதலும், நாற்புறமும் பார்வையைச் செலுத்திக் கூசுதலும், அச்சத்தை (-பயானக ரஸத்தை) உணர்த்தும் அவிநயங்கள். (நாடக. 251)

அச்சம் (நிலைக்கருத்து) -

{Entry: Q17b__007}

கொடிய விலங்குகளையோ மக்களையோ காண்பதால் “ஆபத்து யாது விளையுமோ?”என்று மனம் கிளர்ச்சியுற்று அஞ்சுவது அச்சம் என்னும் சுவையின் நிலைக்கருத்து. சுவையை `நிலைக்கருத்து’ எனவும் சுட்டுவர். (நாடக. 54.)

அதிபலம் -

{Entry: Q17b__008}

நாடகத்தின் மூன்றாவது சந்தியாகிய கர்ப்பமுகத்தின் பேதம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

வஞ்சனையால் கூற்றினைத் திருப்புவதும், மாறுபட்ட கருத்துக் கொள்வதும், கபடமாகப் பேசுவதும் அதிபலமாம். கலக்கமும் படபடப்புமின்றி உரையாடுவதனை அதிபலம் எனக் கருதுவாரும் உளர்.

வஞ்சனையால் வெல்லுதல் அதிபலம். (ம. சூ. பக். 99)

அநுமானம் -

{Entry: Q17b__009}

அஃதாவது ஒன்றைக் கண்டு மற்றவற்றையும் உய்த்துணர்வால் அறிந்துரைத்தல்; ஐந்து வகைப்படும் சந்தியுள் மூன்றாவதா கிய கர்ப்பமுகத்தின் பேதம் பன்னிரண்டனுள் இதுவும் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

அநுமானமாவது குறிப்பால் உணர்தல். `அனுமானம்‘ காண்க.

அபவாதம் -

{Entry: Q17b__010}

குற்றங்களை எடுத்துரைத்து இகழ்தல்; பிறர் குற்றம் இயம்பல்.

(ம.சூ. பக். 99)

இது நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் (வைரிமுகம்) அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ.சோ. 106 உரை) சூத்திரங்களுள் வழு அமைத்தல் முதலியனவாகிய எய்தியது விலக்கிய சிறப்புவிதி. ‘உற்சர்க்கத்துக்கு அபவாதம் என்னும் நிஷேதவிதியாக மயங்கி’ (பி. வி. 50 உரை)

(பொதுவிதிக்கு மாறாக வரும் சிறப்புவிதியாகிய வழுவமைதி எனக் கோடல், எய்தியதன்மேற் சிறப்புவிதியை எய்தியது விலக்கிய பிறிதுவிதியாக மயங்கிக் கொண்டமை.)

அபூதாகரணம் -

{Entry: Q17b__011}

அஃதாவது வஞ்சம் நிறைந்த கூற்று; வஞ்சித்து மொழிதல். (ம. சூ. பக். 99) இது நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்ப முகத்தின் பேதம் பன்னிரண்டனுள் ஒன்று.(வீ. சோ. 106 உரை.)

அரங்கபூசை -

{Entry: Q17b__012}

1) போர்த் தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.

2) பந்தயவிளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை.

‘சினம் தணிந் தரங்கபூசை செய்வன்’ (வில்லி. வாரணா. 65)

3) நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை (L)

அரங்கு -

{Entry: Q17b__013}

அரங்கம் என்று கூறப்படும் நாடகமேடை நாடகசாலைக்கு முகம் போல்வது. அது சமதலமாய் இருத்தல் வேண்டும். பலவகைக் காட்சிகளைக் காட்டும் அழகுடைய திரைகள் வேண்டும்போது வீழ்த்தும் வகையில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அவை மிக உயரிய ஓவியங்கள் தீட்டப்பட்டன வாதல் வேண்டும். தூக்கவும் வீழ்த்தவும் இயந்திரம் அமைக் கப்பட்டுச் சிக்கல் ஏற்படா வண்ணமும் திரைகள் இருத்தல் வேண்டும். சிறிதும் இருளே தெரியாமல் மிக்க ஒளி வீசும் விளக்குக்கள் மேலே தொங்கவிடப்பட்டிருத்தல் வேண்டும். மேடைக்குக் கீழேயும் அவை அமைந்திருத்தல் வேண்டும். இவ்விளக்குஒளியால் தூண்களின் நிழல் வீழாமல் இருத்தலும் வேண்டும். (நாடக. 266)

அரப்பாயம் -

{Entry: Q17b__014}

இது வீரசோழியம் குறிப்பிடும் நாடகச் சாதியுள் ஒன்று. இதன்கண் இரக்கமற்றவர் தலைவராக இருப்பர்; பெண் பாத் திரம் தவறாது இருக்கும்; வாரம் இருந்தாலும் இருக்கலாம். இஃது அர்ப்பீடம் எனவும்படும். (வீ. சோ. 106 உரை)

அல்லீசம் -

{Entry: Q17b__015}

இந்த உபசாதி நாடகத்தில் தீரோதாத்தன் தலைவனாக இருப்பான். ஆயினும் அவனுடைய செயலும் போக்கும் சற்றே வேறுபட்டிருக்கும். அஃதாவது, அவன் ஆராயாது செயற்படும் குறையுடையவனாய் அமைவான். எழுவர் எண்மர் பதின்மர் வரையுள்ள தலைவியர் பலர் வருவர். பற்பல வகைத் தாளக்கட்டு அமைந்த இன்னிசைப்பாடல்கள் பயிலும். கைசிகிவிருத்தியில் இயற்றப்பெறும் ஓர் அங்கமே யுண்டு. [ தீரோதாத்தான் - பலவகையானும் (இராமபிரான் போன்று) உயர்ந்தவன் ]. (நாடக. 156)

அவலத்து அவிநயம் -

{Entry: Q17b__016}

அவலம் - சோகரசம். கவலையும், கண்ணீரும், வாட்டமும் வருந்திய நடையும், பெருமையை அழிக்கும் துயரமும், பிதற்றலும், புலம்பலும், நெஞ்சத்து நிறையழிதலும், பண்பற்ற சொற்களைப் பேசுதலும், பொறுமை இழத்தலும் போன் றவை அவலச் சுவையினை அறிவிக்கும் அபிநயங்களாம். (நாடக. 250)

அவலம் (1) -

{Entry: Q17b__017}

பிறரால் இகழப்பட்டு எளியவனாகும் இளிவும், தந்தை தாய் சுற்றத்தார் போல்வாரை இழந்து வருந்தும் இழவும், பண்டை நல்ல நிலைகெட்டு வருந்தும் அசைவும், வறுமையும் என்னும் இவை காரணமாகத் துயரம் உண்டானபோது, விம்முதலும் ஏங்குதலும், புலம்பி அரற்றுதலும், கண்ணீர்விட்டு அழுத லும், மயங்கி விழுதலும் அவலச் சுவை என்பர்.

தலைவனைப் பிரிந்து இரங்கும் தலைவியின் துயர் அவலம் ஆகாது. (நாடக. 51, 52)

அவலம் (2) -

{Entry: Q17b__018}

அவலமாவது சோகம். இனிய சுற்றமும் பொருளும் இழந்த தனால் வரும் உள்ளத்தின் உளைவு அவலம் எனப்படும். இஃது அவலச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54)

அவிநயக்கூத்து -

{Entry: Q17b__019}

பாடற் பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து.

(சிலப். 3 : 12 உரை)

அவிநயம் (1) -

{Entry: Q17b__020}

கூத்துக்குச் சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் இன்றியமையாத உறுப்புக்களாம்.

காட்டிற் சென்ற ஒருவன் வேங்கைப் புலியைக் கண்டான். கண்ட மாத்திரத்தே அவன் உள்ளத்தில் அச்சவுணர்வாகிய சுவை தோன்றியது; அவ்வேங்கை தன்னுயிரை வவ்வுமோ என்று அவன் எண்ணியவழி அச்சக்குறிப்புத் தோன்றியது; அவ்வச்சக்குறிப்புத் தோன்றி உடல்நடுக்கமாகிய சத்துவம் தோன்றிற்று. இங்ஙனம் அஞ்சிய மகன் நாடக அரங்கத்தில் பின்னாளில் முன்னர்த் தான் அநுபவித்த சுவைஉணர்வைப் பிறர்க்குப் புலப்படுத்த முயன்ற எல்லையில், பாவகமாகிய அவிநயம் பிறக்கும். ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வை யும் சுவைப்பொருளையும் ஒன்றாக அடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்கி, அவிநயத்தைத் தனித்துக் கூறுவர். அவிநயம், தான் குறிப்பிடும் உணர்வைக் கண்டும் கேட்டும் இருப்பார் மனத்துக் கொணருமாறு ஒருவன் நடிப்பது.

(ம. சூ. பக். 8)

அவிநயம் (2) -

{Entry: Q17b__021}

அவிநயம் - அபிநயம். அஃதாவது சுவையில் தோன்றும் உள்ளக்குறிப்பை வெளியிட்டுக் காட்டுதற்குப் பொருத்த மான முக்கரணங்களின் செய்கை.

1) ஆங்கிதம் - உடம்பால் செய்யும் நடிப்புச் செய்கை. 2) வாசிகம் - பேசும் ஒலி வேறுபாட்டானும் குரல் வேறுபாட் டானும் மொழி வேறுபாட்டானும் நிகழும் நடிப்புச் செய்கை. 3) ஆகாரியம் - உடை முதலியனகொண்டு தரிக்கும் வேடத்தால் நிகழும் நடிப்புச் செய்கை. 4) சாத்துவிகம் - மனவேறுபாட்டால் நிகழ்வன - என இவ்வாறு அவிநயம் நால்வகைப்படும். சத்துவத்தால் பெறப்படுதலின் சாத்துவிகம் எனப்பட்டது. சத்துவமாவது விறல். இம்மன வேறுபாடுகள் உடம்பில் தோன்றுங்கால் முகத்தில் மிக்குத் தோன்றும்; அதனினும் மிகுதியாகக் கண்ணிலும், அதனினும் மிகுதியாகக் கட்கடையிலும் தோன்றும்.

இந்த அவிநயங்கள் ஒன்பது சுவைகளையும் புலப்படுத்தச் செயற்படும் திறத்தைத் தனித்தனித் தலைப்புக்களில் காண்க. (நாடக. 243 - 251)

அவிநய விரி -

{Entry: Q17b__022}

அவிநயங்களாவன கீழ்க்காணும் நிலைகளுக்கு ஏற்ப முகத்தாலும் பிற உறுப்புக்களாலும் பிறவற்றாலும் நடித்தல்.

1) அகந்தையுற்றோன், 2) அழற்பட்டோன், 3) அழுக்கறுப் போன், 4) அழுவோன், 5) ஆலோசிப்போன், 6) இரப்போன், 7) இறந்தோன், 8) இன்பம் எய்தினோன், 9) உடன்பட்டோன், 10) உவந்தோன், 11) எழுதுவோன், 12) ஐயமுற்றோன், 13) கண் நோவுற்றோன், 14) கள்ளுண்டு களித்தோன், 15) கள்வன், 16) கனவு காண்போன், 17) கொலைவினை செய்வோன், 18) கைப்பொருள் இழந்தோன், 19) மயக்கமுற்றோன், 20) அறிவிலி, 21) தண்டிப்போன், 22) தண்டிக்கப்பெற்றோன், 23) தலை நோவுற்றோன், 24) துதிப்போன், 25) துயில்வோன், 26) துயில் உணர்வோன், 27) பொய்யன், 28) தெய்வஆவேச முற்றோன், 29) மழையால் நனைந்தோன், 30) உடல் வருந்துவோன், 31) பசித்தோன், 32) பைத்தியக்காரன், 33) காமுகன், 34) போர் செய்வோன், 35) வெற்றி பெற்றோன், 36) அஞ்சியோடுவோன், 37) பனியால் நனைந்தோன், 38) சோம்பேறி, 39) துன்பமுற்றோன் 40) யோகம் பயில்வோன், 41) கீழே விழுந்தோன், 42) படுவிடமுண்டோன், 43) பரத்தை, 44) தூதுவன், 45) நாணமுற்றோன், 46) வெம்மையுற்றோன், 47) வேட்டையாடுவோன், 48) கவிஞன் - என்ற இவர்கள்தம் அவிநயங்களாம். இவற்றுள், அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டிய முன்னாசிரியர்தம் 24 வகை அபிநயங்களும் அடங்குவதோடு, இந்நூலாசிரியர் கூறிய புதியன சிலவும் வந்தன. (நாடக. 253)

அழல்திறம் பட்டோன் அவிநயம் -

{Entry: Q17b__023}

நிழலிலே இருக்க விரும்பும் விருப்பமுடைமை, நெருப்பு வெயில் விளக்கு இவற்றைக் கண்டு அஞ்சுதல், நிழல் - நீர் - சந்தனச் சேறு - இவற்றையே விரும்புதல், பனி நீரையும் பாதிரிப்பூவையும் விரும்புதல், விரல்நுனியை ஈரமாக வைத் திருக்க விரும்புதல், மனம் துன்புற்று வாடியிருத்தல் - என்னும் இவை போல்வன. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

அழுக்காறுடையோன் அவிநயம் -

{Entry: Q17b__024}

பிறரைக் குறைகூறிப் பேசும் கருத்தும், பேராசையும், கூம்பிய வாயும், நேர்மையற்ற பேச்சும், யாரையும் பரிவுடன் பேணாது கைவிரித்து வெருட்டும் இயல்பும், கொடிய கோபமுடை மையும், மெலிந்த முகமுடைமையும், உடல்மெலிவும், ஓயாத் துன்பமும் என்னும் இவை பொறாமை கொண்டவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டியன.

(நாடக. 253 உரை)

அறம் -

{Entry: Q17b__025}

நல்லொழுக்கத்தை விரிவாக எடுத்துரைத்தலும், நல்லொழுக் கம் உடையார் நன்மை எய்தலும், தீயொழுக்கத்தின் தீமை சாற்றலும், தீயொழுக்கமுடையார் தீமையடைந்து அழிந் தொழிதலும், தீயோர்தம் தீச்செய்கைகளைச் சிறப்பாக உரைத்தபோது நல்லோர் அவர்தம் சொற்செயல்களை வெகுண்டு கழறலும் அறத்தின் பகுதியன. (நாடக. 22)

ஆ section: 5 entries

ஆகேவம் -

{Entry: Q17b__026}

வடமொழியில் ஆக்ஷேபம் எனப்படும் இது, சில நூல்களில் `உத்க்ஷிப்தம்‘ எனப்படும். கதையின் கருவை வெளிப்படையாக் குதல் என்னும் பொருளது அச்சொல். (வீ. சோ. 106 உரை)

ஆக்ஷேபம் - விதை (-கதைக்கரு) கருப்பமாகி முடிகின்ற நிறைவு. (ம. சூ. பக். 99 )

ஆகேவம் என்பது, நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்ப முகத்தின் பேதம் எனப்பட்ட பன்னிரண்டனுள் ஒன்று.

ஆதானம் -

{Entry: Q17b__027}

அஃதாவது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து உணர்ந்து செய்தல்.

ஆதானம் - கருமத்தை மீண்டும் தொடங்குதல்.(ம. சூ. பக். 100)

இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விளைவின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. விளைவு `வைரிமுகம்‘ எனவும்படும். (வீ. சோ. 106 உரை)

ஆபாடணம் -

{Entry: Q17b__028}

ஒருவருக்கொருவர் கலந்து அளவளாவுதல், கருதியது பெற்று அடைந்த மகிழ்ச்சியை எடுத்துக் கூறல். (ம.சூ.பக். 100)

இது நாடக சந்தி ஐந்தனுள் இறுதியாகிய நிருவகணமுகத் தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

ஆரவடி -

{Entry: Q17b__029}

ஆரவடியாவது, அதிகெம்பீரமும் தந்திரமும் வஞ்சனையும் இந்திரசாலமும் கலந்த உபாங்க மாவது. (வீ.சோ. 106 உரை)

ஆரவடியாவது அறமும் இன்பமும் கலவாத பொருளே நாட கத்தின் கருப்பொருளாக, வீரராகிய மானிடர் தலைவராக வருவது. (ம. சூ. பக். 16)

பொருள் ஈட்டுதலே பொருளாக, வீரர் தலைவராக, வலிய பொருள் மிகுந்த சொற்களை உடையதாக, வெகுளிச்சுவை பொலிய வருவது. (நாடக. 170)

இவ்விருத்தி அமைந்த நாடகங்களில், இந்திரசாலம் மந்திர வாதம் போர் வெகுளி அவலம் சிறைப்படல் கொலை முதலியன நிகழும்.

இதனையும் வடநூலார் நால்வகைப்படுத்துவர்.

1. வஸ்தூத் தாபனம் - இந்திரசாலம், மகேந்திரஜாலம், மந்திரம், தந்திரம் முதலியவற்றால் பற்பல தோற்றம் உண்டாக்குதல்.

2. சம்பேடம் - சினம்கொண்டவர்களும் கலக்கம் கொண்ட வர்களும் ஒருவரையொருவர் சந்திப்பது.

3. சம்க்ஷிப்தி - யுக்தியாலோ தந்திரத்தாலோ சில விஷயங் களைச் சுருக்கமாக ஒழுங்குபடுத்துதலும், ஒன்று தன்னி லையில் பிறழ்ந்து நீங்க மற்றொன்றினை அந்நிலையில் பொருத்துதலும்.

4. அவபாதனம் - வஞ்சனை, பயம், உடன்போக்கு, களிப்பு, தப்பியோடுதல் முதலியவற்றால் ஏற்படும் குழப்பம்.

(நாடக. 170 உரை)

ஆனந்தம் (2) -

{Entry: Q17b__030}

ஆனந்தமாவது விழைந்ததன் பேறு; விழைபொருள் பெற்று மகிழ்தல். (ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவாண முகத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

இ section: 8 entries

இடக்கர் -

{Entry: Q17b__031}

இடக்கராவன நாடக அரங்கில் காட்டத் தகாதவை. இதழ் சுவைத்தலும், புணர்தலும், எண்ணெய் தேய்த்து முழுகலும் போன்ற இடக்கர்யாவும் அரங்கில் காட்டத் தகாதன.

(நாடக. 255)

இடப் பொருத்தம் -

{Entry: Q17b__032}

பயனில்லாமல் தன் மனத்திற்குத் தோன்றியபடியெல்லாம் கதை நிகழும் இடத்தை மாற்றாமல், கதையின் போக்கிற்குப் பொருந்த இடத்தை அமைத்தல். அஃதாவது கதையின் நிகழ்ச் சிகள் நடக்கும் காலத்திற்கும் பாத்திரங்களின் செயல்களுக்கும் முரண்பாடு இல்லாவகையில் இடம் அமைத்தல் வேண்டும்.

(நாடக. 62)

இடிமம் -

{Entry: Q17b__033}

நாடகவகைகளில் இடிமம் என்பதொன்று. இதன்கண் நான்கு அங்கங்கள் இருக்கும்; வெகுளிச்சுவையே மிக விளங்கும்; இந்திரசாலம், மந்திரம், தந்திரம் போன்ற மாயவித்தைகள் இடம் பெறும்; கொடிய சினம் மிக்க போரும் கலகங்களும் விரவப்பெறும்; பல தீய நிமித்தங்கள் நேரும்; தேவாசுர கந்தருவர் பாத்திரம் ஆவர். இவ்வகை நாடகத்தே இன்பம், நகை, சமநிலை ஆகிய முச்சுவைகளும் இடம் பெறா; பிற சுவைகள் இடம் பெறுவன. தீய நிமித்தங்களாவன உற்பாதம் எனப்படும் பூகம்பம், பேரிடி வீழ்தல், குருதிமழை பொழிதல், சூரிய சந்திரஒளி மழுங்கித் தோன்றல் முதலாயின.(நாடக. 129)

இணங்கிசைக் கோலம் -

{Entry: Q17b__034}

உல்லாசமாகக் கூடிக் குலவும்போது போலியான கண்டனக் கூற்றுக்களும் எள்ளலும் இயைந்து பாட்டுக்களால் நிகழும் உரையாடல்; வடநூலார் கூறும் `இலாசியம்‘ என்பதன் அங்கமான `உக்தப்பிரத்யுக்தம்‘ என்பது இது.

இஃது இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. (நாடக. 261)

இரட்டிசைக் கோலம் -

{Entry: Q17b__035}

இசைபாடும் கோலங்கள் பத்தனுள் இஃது ஒன்று. ஒருவருக் கொருவர் வாதம் செய்யும் நிலையில் மனஎழுச்சியும் கவர்ச்சி யும் தோன்ற இனிய பாடல்களைப் பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `உத்தமோத்தமகம்‘ இது. (நாடக. 261)

இரதி -

{Entry: Q17b__036}

இஃது உவகைச் சுவையின் நிலைக்கருத்து. உவகை - சிருங் காரம். இரதி என்பதனை அன்பு எனக் கொள்ளலாம். அது கடவுளர் ஐம்பெருங்குரவர் என்போரிடம் தோன்றின் பக்தி யாம்; குழந்தையிடம் தோன்றின் பாசமாகிய வாற்சலியம் (வாத்ஸல்யம்); வறியோர், நோயுற்றோர் போன்ற எளியோர் மாட்டுத் தோன்றின் இரக்கம் (-தயை) ஆம்.

நாடகவியலாசிரியர் இரதி ஒன்றனையே கூறினாரேனும், தொடர்பு பொருத்தங்கள் கருதிப் பிற நிலைக்கருத்துக்களை யும் அவ்வத்தலைப்புள் சுருங்கக் காணலாம். [ உற்சாகம், சிரிப்பு (ஹாஸ்யம்), சமம் (சாந்தி), வெகுளி (குரோதம்), வியப்பு, இழிப்பு, அவலம் (சோகம்), அச்சம், பெருமிதம் ] (நாடக. 58)

இராசகம் -

{Entry: Q17b__037}

இஃது உபசாதி நாடகம். இதன்கண் பாத்திரங்கள் ஐந்தே; அதன் மேலிருத்தல் கூடாது. கற்றோர் வழங்கும் மொழியும், கல்லாத இழிந்தோர் பேசும் மொழியும் இதன்கண் இடம் பெறும். சூத்திரதாரன் வருவதில்லை. பாரதி, கைசிகி என்னும் இரண்டு விருத்திகளிலும் அமைவது இது. தலைவி கற்பனைப் பாத்திரமாயிராமல் உள்ளவளாகவே இருக்கத் தலைவன் ஒரு மூர்க்கனாய் இருப்பான். இதன்கண் ஒன்பான் சுவையும் பயிலும்; அங்கம் ஒன்றுதான் இருக்கும். (நாடக. 148)

இருந்திசைக் கோலம் -

{Entry: Q17b__038}

இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. இருக்கையில் வீற்றிருந்த வண்ணம் யாழின் இன்னிசைக் கிணங்கப் பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `கேய பதம்‘ இது. (நாடக. 261)

ஈ section: 2 entries

ஈகாமிருகம் -

{Entry: Q17b__039}

நாடகச் சாதியுள் ஒன்றாகிய இதனுள், விண்ணுலகப்பெண் ஒருத்தியைக் கவர்ந்துசெல்லுதல் காரணமாக நிகழும் பெரும்போருக்கான செயல்கள் தொடர்ந்து இடம்பெறும். தம்முள் பகைமையுடைய தலைவரிருவர் தலைமைப் பாத்தி ரங்கள் ஆவர். இதன்கண் அங்கங்கள் நான்கு; போர்ச்செய லுள் எதுவும் முற்றுப்பெறாது. இருபுடையும் ஒவ்வாத காமத்தின் விளைவான, உவகைச்சுவையின் இழிவினை விளக்கும் இந் நாடகம். (நாடக. 130)

ஈரைங்கோலம் -

{Entry: Q17b__040}

இசைபாடும் கோலங்கள் பத்து.

1. இருந்திசைக்கோலம், 2. நின்றிசைக் கோலம், 3. வெறுங் கோலம், 4. யாப்பிசைக் கோலம், 5. வெறுப்பிசைக் கோலம், 6. கரந்தாடு கோலம், 7. ஏங்கிசைக் கோலம், 8. இரட்டிசைக் கோலம், 9. சிறந்திசைக் கோலம், 10. இணங்கிசைக் கோலம் என்பன.

வடநூலார் இவற்றை ‘இலாசியம்’ என்பர். அவை ‘கேயபதம்’ முதல் ‘உக்த பிரத்யுக்தம்’ வரையுள்ள பத்தாம். (நாடக. 261, 262.)

உ section: 17 entries

உச்சிரம் - உற்பேதம் -

{Entry: Q17b__041}

இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

உச்சிரம் என்பது உற்பேதம் என்பதாகக் கொள்க. இதன் பொருள் விதை வெடித்து முளை தோன்றுதல். (தலைமை யான கதை தொடக்கத்தில் சுருக்கமாகக் குறிக்கப்படுவது.)

அந்த விதை - கதையின் சிறுதொடக்கம் - பின்னர் வளர வழியாய் முளைத்து வருதல் உற்பேதம் எனப்படும்.

மறைந்ததன் வெளிப்படல். (ம. சூ. பக். 98)

உண்ணாடகம் -

{Entry: Q17b__042}

உள் நாடகம்; ஒரு நாடகத்திற்குள்ளேயே மற்றொரு நாடகம் பொருந்தியிருப்பதும் உண்டு என்பது. (நாடக. 160)

உத்தார மடங்கம் -

{Entry: Q17b__043}

இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று.

இது மக்கள் பலரைத் தலைவராகப் பெற்றது; பொல்லாத போர் பற்றிப் புகழ்வது; பெண்களை இன்றியமையாத பாத்திரங்களாய் உடையது. (வீ.சோ. 106 உரை)

உதாயிருதி -

{Entry: Q17b__044}

உதாஹ்ருதி - உதாஇருதி, உதாகிருதி;

மிக்க உணர்ச்சியுடன் மிகுத்துரைத்தல்.

உதாகிருதி - வரம்பு கடந்து பெருக்கிக் கூறுதல். (ம. சூ. பக்.99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)

உதேகம் -

{Entry: Q17b__045}

உதேகம் - உத்வேகம்; பகைவரால் விளையும் அச்சம். உத் வேகம் - பகைவனைக் கண்டு அஞ்சுதல். (ம.சூ. பக். 99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

உபகூகனம் -

{Entry: Q17b__046}

வியப்பூட்டும் வகையில் விரும்பியதை அடைதல். உபகூகனம் - வந்தடைந்த நிகழ்ச்சியினால் வியப்புறுதல். (ம.சூ.பக். 100)

இது நாடகத்தின் ஐந்தாம் (இறுதிச்) சந்தியாகிய நிருவகணத் தின் (- நிருவாணத்தின்) அங்கம் பதினான்கனுள் ஒன்று.

(வீ. சோ. 100 உரை)

உபசாதி -

{Entry: Q17b__047}

நாடகச் சாதியெனக் கூறப்பட்ட பத்துவகை நாடகங்களையும் போலவே அமையினும் அத்துணைச் சிறப்பின்றி ஒரு சில இலக்கணங்கள் குறைந்து வரும் நாடக வகை.

அவை பதினெட்டு வகைப்படுவன. அவையாவன :

1. நாடிகை, 2. துரோடகம், 3. கோட்டி, 4. சட்டகம், 5. நாட்டியராசகம், 6. பிரத்தானம், 7. உல்லாப்பியம், 8. காவியம், 9. பிரேங்கணம், 10. (இ) ராசகம், 11. சமுலாபகம், 12. திருக்கதிதம், 13. சிற்பகம், 14. விலாசிகை, 15. துன்மல்லிகை, 16. பிரகரணி, 17. அல்லீசம், 18. பாணிகை என்பன. (நாடக. 136, 137)

உபநியாசம் -

{Entry: Q17b__048}

பொருந்தும் வகையில் பொலிவுறக் கூறல். உபந்நியாசம் - சூழ்ச்சி உணர்த்துதல். (ம. சூ. பக். 98)

இது நாடகத்தின் இரண்டாவது சந்தியான பயிர்முக (பிரதிமுக)த்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

உருவம் -

{Entry: Q17b__049}

உருவம் - ரூபம்; வியப்பூட்டும் வகையில் ஓர்ந்துரைத்தல். (வீ. சோ. 106 உரை)

ரூபம்- தன் கருத்தை உரைத்தல். (ம. சூ. பக். 99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று.

உல்லாப்பியம் -

{Entry: Q17b__050}

இவ்வுபசாதி நாடகத்துள் தீரோதாத்தன் தலைவன்; தலைவியர் நால்வர் வருவர். உவகை, நகை, அவலம் என்னும் மூன்று சுவைகளும் அமைந்து விளங்கும். இதில் கீதவுரு, கீர்த்தனம் வரிப்பாட்டு என்னும் மூன்றுவகை இசைப்பாட் டுக்களும் இடம் பெறும். இம்மூன்றுவகை இசைப்பாட்டுக் கள் சிந்து, ஆனந்தக் களிப்பு, கும்மி என்று கொள்வாரும் உளர். இந்நாடகத்துள் போரினைத் தெரிவிக்கும் செயல் களும் தோன்றும் என்றும் கூறுவர். இதன்கண் அங்கம் ஒன்றுதான் இருக்கும்.

நால்வர்தலைவியரைக் கொண்டு, போரும் கட்களிப்பும் விளங்க, மூன்று அங்கங்களாக இஃது அமைவது என்பாரு முளர். (நாடக. 144, 145)

உவகேபம் -

{Entry: Q17b__051}

வடமொழியில் `உபக்ஷேபம்‘; நாடகப்பொருள் சற்றே சுருக்கமாகத் தோன்றச் செய்தல்.

விதையினை (-நாடகக் கதைக் கருவினை) விதைத்தல்.

(ம. சூ. பக். 98)

இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

உவகை -

{Entry: Q17b__052}

அறிவு, செல்வம், புணர்ச்சி, விளையாட்டு, இளமை, அழகு என்னும் ஆறும் காரணமாகக் காமுறும் தலைவனும் தலைவியும் நலமுற்றுக் களித்தல்.

உடன் உறை இன்பம் (- கூட இருந்து இன்புறல்; சம்போக சிருங்காரம்) எனவும், பிரிந்துறை இன்பம் [ பிரிவின்கண் (நினைவால் துயருற்றும் இன்பமே காணும்) இன்பம் ] எனவும் இஃது இருவகைப்படும். இவற்றுள் பிரிந்துறை இன்பம் நான்கு பிரிவுகளையுடையது. அவையாவன :

1. உழுவல் அன்பு - மிகுந்த அன்பு; எழுமையும் தொடர்ந்து வருமன்பு; இதனைப் ‘பூர்வராகம்’ என்ப வடநூலார்;

2. மானம் - ஊடல்;

3. பிரவாசம் - பிரிவு (பொருட் பிரிவு போன்றவை);

4. சோகம் - இரங்கல்; பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தே வாராமை கண்ட தலைவியது துயரம் என்பனவாம். (நாடக. 40-42)

உவகை அவிநயம் -

{Entry: Q17b__053}

கள்ளம் கபடம் அற்ற வடிவமும் செயலும், கண் அழகும், கடைக்கண் வீச்சும், புன்னகையும், முகமலர்ச்சியும், கொஞ்சிக் கெஞ்சும் பேச்சும், இன்ன பிறவும் சிருங்காரத்திற்குரிய அபிநயங்கள். (நாடக. 243)

உவந்தோன் அவிநயம் -

{Entry: Q17b__054}

உயர்ந்து நிமிர்ந்து இனிதாயிருக்கும் கண்மலர்ச்சியும், மனத்தினிமை தோன்றும் நிலையும், சிறிதும் கோபமே இல்லாத புன்முறுவலும், மகிழ்வுடன் வீற்றிருத்தலும், இனிது செல்லும் நடையும், பாட்டும் போன்றவை. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (சிலப். 3:13 உரை) (நாடக. 253 உரை)

உள்வரி -

{Entry: Q17b__055}

கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் வகை எட்டனுள் ஒன்று.

அரசர்மரபினைச் சார்ந்த தலைவனும் தலைவியும் தம் உள்ளத்தே ஊற்றுப் போலப் பொங்கி யெழும் அன்பு காரணமாக வேற்றுருக் கொண்டோ கொள்ளாமலோ ஆடும் கூத்து. (சிலப். 8 : 84 - 89) (நாடக. 209)

உற்சாகம் -

{Entry: Q17b__056}

செயல்களில் மிக்க ஆர்வத்துடனும் விரைவுடனும் ஈடுபடுத லாம் களிப்பு. இஃது உவகைச் சுவையின் நிலைக்கருத்து.

(நாடக. 55)

உறுப்பியல்பு -

{Entry: Q17b__057}

நாடகத்தின்கண் பொருந்திய பகுதிகளின் தன்மை. அப் பகுதிகள்தாம் வாழ்த்து, நடாத்துநர், முன்னுரை, குறிப்பு, அங்கம், களம், கூற்று, கூத்து, பின்னுரை என்பனவும் பிறவும் ஆம். பரத வாக்கியம் (-நாடக இறுதி வாழ்த்து) பின்னுரையில் அடங்கும். (நாடக. 174)

எ section: 2 entries

எடுத்துக்கோள் வரி -

{Entry: Q17b__058}

பிறர் தூக்கியெடுக்கும் வகையில் துயருற்று வீழும் கூத்து. துயரத்தால் கையற்று உண்மையாகவே கீழே வீழ்ந்தவர் களைப் போலவே வீழ்ந்து, அயலார் வந்து தம்மைத் தூக்கி எடுக்கும்வகை துயரத்தை நடித்துக் காட்டல். கூத்து வகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் வகை எட்டனுள் இஃது ஒன்று. (சிலப். 8 : 107, 108) (நாடக. 214)

எழினி -

{Entry: Q17b__059}

நாடக மேடையில் தொங்கும் திரை. அது மூவகைப்படும்.

1. ஒருமுக எழினி - அரங்கின் இடப்புறத்தூணினின்று வலப்புறம் முடிய இழுக்கப்படும் திரை.

2. பொருமுக எழினி - வலம் இடம் இரு தூண்களினின்றும் இடையே வந்து பொருந்துமாறு இழுக்கப்படும் திரை.

3. கரந்துவரல் எழினி - மேலிருந்து கீழே வருமாறு வேண்டும் போது தொங்கவிடும் வகையில் அமையும் திரை.

(சிலப். 3 : 109, 110) (நாடக. 267)

ஏ section: 1 entries

ஏங்கிசைக் கோலம் -

{Entry: Q17b__060}

குறியிடத்திற்குத் தலைவன் குறித்த நேரத்தே வாராது காலம் நீட்டித்தபோது, தலைவி இன்னிசைப் பண்ணை எழுப்பி இனிது பாடுதல். வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `சைந்தவம்‘ இது. இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று. (நாடக. 261.)

ஐ section: 1 entries

ஐயமுற்றோன் அவிநயம் -

{Entry: Q17b__061}

உறுப்புக்களின் வாட்டமும், மயங்கிய பார்வையும், சோர்ந்த புலன்களும், வாய் பேசாமையும், செயலில் தடுமாற்றமும், வhனையும் திசைகளையும் வெறித்துப் பார்த்தலும், ஐயம் உற்ற வனுக்குரிய அவிநயங்களாக அடியார்க்குநல்லார் குறிப்பிட் டுள்ளார். (நாடக. 253 உரை)

ஒ section: 3 entries

ஒத்திக்கை -

{Entry: Q17b__062}

1. ஒப்பு 2. நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை. (L)

ஒளி -

{Entry: Q17b__063}

ஒளியாவது யோனி; அஃதாவது கதாப் பிரகாச வஸ்து. அஃதாவது வெளிப்படையான கதையின் உடல். அது மூன்று வகைத்து. அவையாவன : (1) சத்தி நிருதை (2) அநிருதை (3) சந்தியா நிருதை என்பன. இம்மூன்று நிலையும் இணைந்து ஐந்து வகைப்படும். அவையாவன : (1) உள்ளோன் தலைவ னாக உள்பொருள் புணர்த்தல், (2) உள்ளோன் தலைவனாக மிகைப் பொருள் புணர்த்தல் (கற்பனை கலந்தது மிகைப் பொருள்), (3) உள்ளோன் தலைவனாக இல்பொருள் புணர்த்தல், (4) உள்ளோன் தலைவனாக விரவுப் பொருள் புணர்த்தல், (5) இல்லோன் தலைவனாக இல்பொருள் புணர்த்தல் என்பனவாம். (வீ. சோ. 106 உரை.)

ஒற்றுமை -

{Entry: Q17b__064}

நடிப்பு இயல்பில் ஒன்று. அரங்கில் நடிப்பவன், பாத்திரம் வேறு தான் வேறு என்ற நினைவு சிறிதும் தோன்றாமல், தானே அவனாகி, நடைஉடைபாவனைகளால் முற்றிலும் தான் நடிக்கக் கொண்ட பாத்திரத்துடன் ஒன்றாகிவிடுதல்.

நடிப்பவன் மனம் பாத்திரஇயல்புகளை நன்குணர்ந்து தானே சுவைத்துக் கனியும் நிலையில் அவனும் நாடகத்தைக் காண்பாரைப் போலவே ஈடுபட்டு மனம் இளகுவானா னால்தான் சுவையினைத் தோற்றுவித்தல் இயையும்.

கதாநாயகனோ, பாத்திரங்களை ஏற்று நடிப்பவரின் தலைவ னோ அன்னான் செய்யும் வெறும் நடிப்போ மாத்திரம் சுவை நிலைக்களன் ஆவதில்லை. (நாடக. 233, 234)

க section: 28 entries

கண்கூடுவரி -

{Entry: Q17b__065}

தலைவன் தலைவி இருவருடைய காதல் காரணமாக நேர்வது. கண் கூடு - கண்களின் கூட்டம் - காட்சி - அன்புடையோர்தம் இன்பம் தரும் சந்திப்பு; இடைநின்று ஒருவர் கூட்டிவைக்கா மல், தலைவனோ தலைவியோ ஒருவர் மற்றவரைத் தாமே தனியாகச் சென்றடைந்து கூடி மகிழ்தல்.

இது கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தினது வகை எட்டனுள் ஒன்று. (நாடக. 207)

கதாந்தம் -

{Entry: Q17b__066}

கதையினது முடிவு; அஃது இருவகைப்படும்.

1. நற்பொருள் இறுதி - நற்செய்தியாக முடிவது; நாடகத் தலைவன் தனக்கேற்ற தலைவியைத் திருமணம்செய்து கொள்வதும், முடிசூடுவதும், இன்னோரன்ன பிற மங்கலமான செயலுடன் முடியும் கதை.

2. தீப்பொருள் இறுதி - தீயசெய்தியாக முடிவது; நாடகத் தலைவன் சொல்லொணாக் கொடுந்துயர் உழத்தலும், உயிரிழத்தலும் போன்ற துன்பச் செய்தியுடன் முடியும் கதை. (நாடக. 109-112)

கதையின் முத்திறம் -

{Entry: Q17b__067}

பலவிதமாய்ப் பிரிந்து விரிந்து கிடக்கும் தன்மையுடையதாகிப் பொய்யுரை, மெய்யுரை, புனைந்துரை எனக் கதை முத்திறப் படும். இம்மூன்றனையும் பிறிதொரு சாரார்,

1. ஆக்கம் - உண்டாக்கியது - உத்பாத்யம்,

2. பல்லோர் அறிவு - பலரும் அறிந்தது - பிரக்கியாதம்,

3. முன்னிரண்டும் கலந்தது - (கலப்பு) - மிச்சிரம் - எனக் குறிப்பர்.

பொய்யுரை - புதிதாய் ஒருகதையினைப் படைத்துக் கூறல்.

மெய்யுரை - உண்மையாகவே உலகத்தில் நிகழ்ந்ததும், பலர்க்கும் நன்கு தெரிந்ததுமான கதையைக் கூறல்.

புனைந்துரை - மெய்யுரையுடன் சிறிது வேறுபடுத்திப் புலவன் தனது ஆற்றலால் இல்லதும் சேர்த்து அழகுறச் சொல்லும் கதை. (நாடக. 12-16.)

கரணம் (2) -

{Entry: Q17b__068}

கதையின் நோக்கான காரியத்தின் தொடக்கம். இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

கரணமாவது கருதிய பொருளின் தொடக்கம். (ம. சூ. பக். 98)

கரந்தாடு கோலம் -

{Entry: Q17b__069}

ஆடவர் பெண்டிர்தம் உடையணிந்து மறைந்து நின்று பாடுவது; வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்க மான ‘திரிகூடகம்’ இது.

இசைபாடும் கோலங்கள் பத்தனுள் இஃது ஒன்று. (நாடக. 261)

கரந்துவரல் எழினி -

{Entry: Q17b__070}

மேலே மறைவிடத்தினின்று கீழே யிறங்கிவருதலையுடைய ஒருவகை நாடகத் திரைச்சீலை. ‘ஒருமுக எழினியும் பொரு முகஎழினியும், கரந்துவரல் எழினியும்’ (சிலப். 3 : 109, 110)

கருங்கூத்து -

{Entry: Q17b__071}

இழிவான நாடகம். ‘முதுபார்ப்பான், வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து.’ (கலித். 65 - 29) (L)

கருப்பம் -

{Entry: Q17b__072}

கருப்பமாவது களத்திற் கருவு திரண்டோங்கிக் களைநீங்க அவை குடை போகியவாறு போல நலம் தரும் பொருளைத் திரளச் சொல்லுவது. (வீ.சோ.106 உரை)

நாற்றாகிக் கருமுதிர்ந்துழிக் களை தோன்ற அஃது அகற்றப் பட்டு, கருவின் உள்ளீடு நன்கு அமைந்து தோன்றுவது. இதன்கண் பதின்மூன்று உட்பிரிவுகள் உள. (நாடக. 35)

சந்திகள் ஐந்தனுள், முன்னிரண்டனுக்கும் பின்னிரண்ட னுக்கும் இடையே இருப்பதால் நாடகத்தின் மூன்றாம் சந்தி ‘கர்ப்பம்’ எனப்படும். கதைக்கரு, இடைக்கதை நிகழ்ச்சிக ளாலும் இடையூறுகளாலும் பின்னணியில் மறைந்திருக்கும் நிலையில், மீண்டும் அதனைத் தேடிக் கொண்டுவருவது கர்ப்ப சந்தியாம்.

கருப்பத்தினுள், பயன்விழைவும் (-பிராப்திஆசை) கிளைக் கதையும் (-பதாகை) இணைந்து வருதல் வேண்டும். (ம. சூ. பக்.99)

கவி கூற்று -

{Entry: Q17b__073}

நூலியற்றும் ஆசிரியன் தன் கூற்றாகவே நூலில் பல இடங்களில் செய்யுள் செய்வான். ஆயின் இது நாடக நூலில் பயிலாது; பொருத்தமாய் அமையாது.

ஆயின் நாடகக் காப்பியங்களில் கவி கூற்றுப் பயிலும் என்னும் ஒரு கொள்கை உண்டு.

நாடக ஆசிரியன், நாடகத்தில் இடையிடையே நடிப்போர்க் கெனக் குறிப்பிடுபவை ஏற்றுக் கொள்ளதக்கனவே.

நடிப்போர் குறிப்பு : Stage Directions எனப்படுபவை. (நாடக ஆசிரியன் நடிப்போர்க்கு வழங்கும் விதிமுறை)

(நாடக. 79, 80)

காட்சி நூல் -

{Entry: Q17b__074}

‘திருச்ய காவ்யம்’ என்ப வடநூலார். இது செவிப்புலனுக்கும் கட்புலனுக்கும் இன்பம் தருவதும், உலக அறிவு மாத்திரம் அன்றி உண்மையான மெய்யறிவினைத் தருவதுமான நாடகம். இஃது அகப்புறத்திணையுள் அடங்கும். (நாடக. 10)

காட்சி வரி -

{Entry: Q17b__075}

தலைவி தன் துயரைப் பலருங் காணக் கூறி ஆடுதல்.

தலைவன்பாற் கொண்ட காதலால் துன்புறும் தலைவி, தலைவனுடைய சுற்றத்தாரைக் கண்டு தன் துயரத்தை அவர்கள் கண்டு பரிவு கொள்ளும் வகை அவர்கட்கு எடுத்துக் கூறி ஆடுதல்.

கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்துவகை எட்டன்கண் இஃது ஒன்று. (நாடக. 213)

காண்வரி -

{Entry: Q17b__076}

கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்தின் எண்வகையுள் ஒன்று.

தலைவன் தலைவி எனும் இருவரில் ஒருவர் ‘வருக’ என அழைப்ப வந்து ‘போக’ எனக் கூறப் போகும் இயல்பினை யுடையது இது.

இருவரும் கூடிய பின் இருவர் மனமும் மகிழத்தக்க அனைத் தையும் பரிமாறிக் கொண்டபின் பிரிந்துபோதல்.

(சிலப். 8 : 78 - 83) (நாடக. 208)

காணுநர் இருக்கை -

{Entry: Q17b__077}

நாடகம் காண்போர் அமரும் இடம்.

நாடகம் காண்போர் நாடக அரங்கில் நிகழும் அனைத்தையும் நன்கு காணும் வகையிலும், அக்காண்போர்தம் தகுதிக்கேற்ற வகையிலும் அமரும் இடம் அமைத்தல் வேண்டும்; மேலும் அரசன் போன்றோர் தம் உரிமை மகளிரொடு வீற்றிருந்து காணும் வகை அரங்கின் எதிரே இடம் அமைத்தல் வேண்டும். இஃது அவையம்.

மற்றொரு புறம் மகளிர்க்கென்றே தனித்து அமைந்த இடம் இருத்தல் வேண்டும். இது பரிவமை பள்ளி.

இன்னொரு புறம் கல்விகேள்விகளாற் சிறந்த சான்றோர்க் கான இடம் அமைத்தல் வேண்டும். இது கோட்டி.

நாடக சாலையில் காண்போர் தின்னச் சிற்றுண்டியும் பருகப் பால் போன்றனவும் விற்றலும் உண்டு. (நாடக. 268, 269, 270)

காலப் பொருத்தம் -

{Entry: Q17b__078}

வீணாகக் காலத்தை நீட்டித்தலும், இடையே பயனற்ற இடை யூறுகளை உண்டாக்குதலும் போன்ற காலதாமதம் நிகழாமல் கதையை நடத்திச் செல்வது. (நாடக. 63)

காவியம் -

{Entry: Q17b__079}

உபசாதி நாடகம் பதினெண் வகைகளுள் காவியமும் ஒன்று. இதற்குத் தலைவன் தீரோதாத்தன்; தலைவி சுகுணை. இன்ப நுகர்ச்சி பற்றிய சொற்கள் இதன்கண் மிகுதியாக இடம் பெறும்; இசை வழுவாத பாடல்கள் பாடப்படும்; நகைச்சுவை நிறைந்து விளங்கும். (நாடக. 146)

கிரதனம் -

{Entry: Q17b__080}

தான் கருதிய பொருளை அடைந்துவிட்டது போல் அமைத் துரைத்தல்.

கருதிய பொருளைப் பெற்றுவிட்டது போலுரைத்தல்.

(ம. சூ. பக்.100.)

இது நாடகத்தின் இறுதிச்சந்தியாகிய நிருவகணமுகத்தின் அங்கங்கள் பதின்மூன்றில் ஒன்று. (உரையுள் ‘பிரசனம்’ என் றிருப்பது மிகையாதலின் ஆராயத்தக்கது) (வீ. சோ. 106 உரை)

கிரமம் -

{Entry: Q17b__081}

எதிர்கால நிகழ்வை உற்றறிந்துரைத்தல், நீடு நினைந்த பொருளினைப் பெறுதல். (ம. சூ. பக்.99)

(பிறரது உள்ளக்கருத்தினை உணர்தல் என்பதும் ஆம்.)

இது நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)

கிருதி (2) -

{Entry: Q17b__082}

கதையின் பயன் உறுதிபெறுதல். நன்மைப் பேற்றில் நிலைபெறுதல். (ம. சூ. பக்.100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய (ஐந்தாம்சந்தி) நிருவ கணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

கிளர்வரி -

{Entry: Q17b__083}

கூத்துவகை ஏழனுள் ஒன்று வரிக்கூத்து; அதன் வகை எட்ட னுள் கிளர்வரியும் ஒன்று. அஃதாவது கிளர்ச்சியுடன் புலந்து பிரியும் கூத்து.

தலைவனையும் தலைவியையும் சந்து செய்விக்கும் ஒருவர் உடனழைத்துக்கொண்டு போய்ச் சேர்க்கக் கூடி, இருவருக்கு மிடையே சமாதானம் பேசுவோர் கூறும் சொற்களைக் கேட்டு, அவற்றை இருபொருள்படும் வகையில் மனத்திற் கொண்டு, கிளர்ச்சியுடன் புலந்து பிரிந்துபோகும் கூத்து. (சிலம். 8 : 94 - 101) (நாடக. 211)

குறிப்பு -

{Entry: Q17b__084}

நடிப்புக் குறிப்பினாலோ, அன்றி மொழிக்குறிப்பினாலோ முன்கூட்டியே தெரிவித்தல்.

நாடகக் கதையையோ, விதை (-விந்து) எனப்படும் கதைக் கருவினையோ, நாடகத்தின் தொடக்கமான அரிய செயலி னையோ, தலைவன்தலைவியரது வருகையையோ, அவை நிகழ்வதற்கு முன்பாகவே அவிநயத்தாலோ சொல்லாலோ குறிப்பால் புலனாம் வகையில் சூசனை குறிப்பிடுதல்.

இவ்வாறு நாடகக் குறிப்பினைத் தெரிவிக்காமல் நாடகம் இயற்றலும் உண்டு.

வாழ்த்து, முன்னுரை, நடாத்துநர் என்ற வேறுபாடுகள் இல்லாத நாடகங்களும் உள (நாடக. 184, 185, 186)

கூச்சம் -

{Entry: Q17b__085}

இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடகச் சாதியுள் ஒன்று.

இதன்கண் தலைமக்கள் இருவர் உளர். அவர்கள்கதை தொடர்ந்து வாராமல் இடையிட்டு வரும். இதன்கண் வாரம் உண்டு. (வீ. சோ. 106 உரை)

கூத்த நூல் கூறும் குணங்களும் இழைகளும் -

{Entry: Q17b__086}

கடைச்சங்க காலத்தது என்று கருதப்படும் சாத்தனார் இயற் றிய கூத்தநூல் நாடக நாட்டியச் சுவைக்குரிய குணங்களா கவும் பொருள் இழைகளாகவும் கூறுவன பின் வருமாறு :

குணம் ஒன்பதாவன : அமைதி, ஊக்கம், ஒழுக்கம், இச்சை, சினம், குறுக்கு, மயக்கம், தேக்கம், திணக்கம் என்பன.

இழைகள் நாற்பத்தெட்டு ஆவன : கோபம், இச்சை, சிறுமை, சோர்வு, படபடப்பு, பயப்புறுதல், அகங்காரம், பற் றுடைமை, வெறுப்புறுதல், கொடுமை செய்தல், எடுத் தெறிந்து பேசுதல், பொறாமை, தாழ்மையுணர்வு, பயம், தெவிட்டல், சோம்பல், மகிழ்தல், கையாறு, அமைதி, மயக்கம், களித்தல், வெறித்தல், பிடிவாதம், கவலை, அழுகை, நினைத்தல், நெட்டுயிர்ப்பு, பேதுறல், உறக்கம், கனவு, விழிப்பு, நாணம், தெய்வமுறல், பேய் மயக்கம், நஞ்சுறல், மிதப்பு, காப்பு, விதிர்விதிர்ப்பு, நோக்கி யறிதல், ஒப்புமை, அகநோய், புறநோய், சன்னிவெளி, ஏமாற்றம், கொதிப்புறல், தயக்கம், பசி, தாகம் என்பன.

மேலும் இழைகளாகக் கொள்ளத்தக்கவை என்ற முறையில் கூத்த நூல் கூறுவன உள. அவை சில பண்பு பற்றியும் சில செயல் பற்றியும் அமைந்துள்ளன.

இவையாவும் நாட்டியக் கூத்திற்குரிய சுவைப்பொருள் பற்றியனவாம். (தொ. மெய்ப். 1,2 ச. பால.)

கூத்து -

{Entry: Q17b__087}

குதித்தாடுவது கூத்து; தாள சதிக்குத் தகச் குதித்து ஆடுதல். இதன்கண், பரத நாட்டியம் - குரவை - நகை - வரி - முதற் கூத்து. இடைக்கூத்து - கடைக்கூத்து - என்னும் எழுவகை யுள.

(நாடக. 200)

கூத்த நூல் -

{Entry: Q17b__088}

இடையிடையே கவியின் கூற்றுக்கள் இடம்பெற்றுக் கீழ்மக்கள் நடிக்கும் இயல்புடையதாய்க் கூத்தும் (-நாட்டியம்) பாட்டுமாகக் கலந்தமைந்த நூல்.

அருணாசலக் கவிராயரின் இராமநாடகம் இவ்வகையினது என்பது நாடகவியல் உரையாசிரியரது கருத்து.

குறமும் பள்ளும் கூத்துநூல்களாம். (நாடக. 165)

கூற்று -

{Entry: Q17b__089}

பேச்சு, உரை, அஃதாவது நாடகத்தில் வரும் உரைகளும் உரையாடல்களும். இது நான்கு வகைப்படும். அவையாவன.

1. ‘தற்கூற்று - தானே தன்னுள் பேசிக்கொள்வது. வடநூலார் ‘ஸ்வகதம்’ என்ப; ஆங்கிலத்தில் ‘Soliloquy’ என்ப.

2. புறக்கூற்று - பாத்திரங்களில் சிலர் தமக்குள் (களத்தில் தம்முடன் உள்ளோர் கேளா வகையில்) பேசிக்கொள்வது. வடமொழி ‘அபவாரிதம்’ என்னும்; ஆங்கிலம் ‘Aside Speech’ என்னும்.

3. முன்னிலைக் கூற்று - முன்னிலைப்படுத்திப் பலரும் கேட்பப் பேசுவது. வடமொழி ‘பிரகாசம்’ என்னும்; ஆங்கிலம் Open Speech’ என்னும்.

4. மதங்கசூளாமணியில் இது ‘சொல்’ எனக் கொள்ளப் பட்டு, உட்சொல் புறச்சொல் ஆகாயச் சொல் என மூவகை யாகக் கொள்ளப்படுகிறது. (ம.சூ.பக். 18) (நாடக. 194-198)

கைசிகி -

{Entry: Q17b__090}

காமுகர் தலைவராக, காம விகற்பம் உபாங்கமாவது.

காமம் பொருளாகக் காமுகரான மக்கள் தலைவராக வருவது. (ம. சூ. பக். 16)

ஆடல் பாடல்களும் சிறந்த ஆடையணிகளும் அமைந்து, காமமே தலைமைப் பொருளாய், பெருங்காமுகர் தலைவ ராக, மெல்லிய பொருள் கொண்ட சொற்றொடைகளைக் கொண்டு, உவகைச் சுவையே சுவையாக, அன்பாகக் காதலும் விளங்க, களவு வாயிலாக இன்பம் துய்த்தலை விளக்குவது. (நாடக. 171 உரை)

வடநூலார் இதன்கண்ணும் நால்வகை கொள்வர்.

1. நருமம் - காதலியின் மனத்தை வசீகரிக்கும் வகையில் பரிகாசமாகப் பேசுதல். இது விநோதமான வார்த்தை, சாதுரியமான ஆசைவார்த்தை, சாதுரியமான அச்சுறுத் தும் வார்த்தை என மூவகைத்து.

2. நருமஸ் பஞ்சம் அல்லது நர்மஸ் பூர்ஜம் - தொடக்கத்தில் களிப்பையும் பின்னர்ச் சற்றே அச்சத்தையும் தரும் காதலரின் முதற்சந்திப்பு.

3. நருமஸ்போடம் - காமக்குறிகள் சிறிதே புலப்படச் செய்யும் உரையாடலும் செயலும்.

4. நருமகர்ப்பம் - காமம் மிகுந்த தலைவன் தலைவியினிடம் களவில் இயற்றும் பலவகைச் செயல்கள். (நாடக. 171 உரை)

கைசிகி மிகவும் மென்பொருளுடையது. (நாடக. 172 உரை)

(வீ.சோ. 106 உரை)

கைசிகிவிருத்தி -

{Entry: Q17b__091}

காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை. (வீ. சோ. 106 உரை) விளக்கம் ‘கைசிகி’யுள் காண்க.

கோட்டி -

{Entry: Q17b__092}

ஒரே அங்கத்தில் மிகச்சாமானியரான ஆடவரும் பெண்டிரும் பாத்திரங்களாக வரக் கைசிகி விருத்தியில் அன்புடைக்காமம் கனிந்த உவகைச் சுவையை விரித்துக் காட்டும் உபசாதி நாடகம். (நாடக. 140)

ச section: 40 entries

சங்காரம் -

{Entry: Q17b__093}

உபஸம்ஹாரம், காவ்ய சம்ஹாரம்; வரம் பெறுதலும், காப்பியத்தின் (நாடகத்தின்) முடிவும்.

காவிய சங்காரம் - வரம் பெறுதல். (ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தி (ஐந்தாவது) ஆகிய நிருவ கணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சங்கிரகம் -

{Entry: Q17b__094}

நன்மையாகவும் இனிமையாகவும் பொருள் தருவதாகக் கூறியும், “ஒறுப்பேன்” எனக் கூறியும் வற்புறுத்தல்.

இது சில நூல்களில் ‘பிரார்த்தனை’ எனப்படும்.

சங்கிரகம் -

{Entry: Q17b__095}

கையுறை கொடுத்து நட்புப் பெறுதல். (ம. சூ. பக். 99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சட்டகம் (1) -

{Entry: Q17b__096}

திரை எனப்படும் சவனிகை ஒவ்வோர் அங்கத்தின் முடிவிலும் விழுந்து அரங்கத்தை மறைப்பது. தொடக்கத்தே சுருட்டப் பட்ட திரை மறுபடியும் விழுவதற்குள் ஒவ்வோர் அங்கமும் முற்றுப்பெறும் வகையில் நான்கு அங்கங்களைப் பெற்று வருவது இந்நாடகம். இதன்கண் வியப்புச்சுவையே பெரிதும் இடம் பெறும். தாழ்ந்த மக்களின் மொழிநடையில் இவ்வுப சாதி நாடகம் அமையும்; மற்றபடி நாடிகைவகை நாடகம் போன்றே இருக்கும். இதுவும் இசைக்கப்படும் வகையினதே. (நாடக. 141)

சத்தி -

{Entry: Q17b__097}

சக்தி - பகை ஒடுங்கி ஒழிதல்

சக்தி - விரோதத்தைச் சமப்படுத்துதல் (ம. சூ. பக். 99)

இது நாடகசந்தி ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சந்தி (1) -

{Entry: Q17b__098}

சந்தி - (பீஜம் - விதை) கதைக்கரு மீண்டும் தோற்றுதல்.

(ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தி (ஐந்தாவது) ஆகிய நிருவ கணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சந்தி (2) -

{Entry: Q17b__099}

நாடகக் கதையின் இடையில் வரும் நிகழ்வுகளுடன் தலைமையான பொருள் பொருத்தமுறச் சேர்ந்து தழைத்து வளர்ந்து முற்றுவது நாட்டியக் கட்டுரையாகிய சந்தி எனப்படும்.

ஐவகைச் சந்திகளான முகம் பிரதிமுகம் கருப்பம் விளைவு துய்த்தல் என்பவற்றைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. (நாடக. 32)

சந்தி அங்கம் அறுபத்து நான்கு -

{Entry: Q17b__100}

1. உவகேபம் முதல் கரணபேதம் வரை முகத்தின் அங்கம் 12

2. விலாசம் முதல் வருணசங்காரம் வரை பயிர்முகத்தின் அங்கம் 13

3. அபூதா(க)ரணம் முதல் ஆகேவம் (ஆட்சேபம்) வரை கர்ப்பமுகத்தின் பேதம். 12

4. அபவாதம் முதல் ஆதானம் வரை வைரிமுகத்தின் அங்கங்கள் 13

5. சந்தி முதல் சங்காரம் வரை நிருவகணமுகத்தின் அங்கம் 14 (வீ. சோ. 106 உரை)

இவ்வகையால் சந்தியங்கம் 64 ஆகும். (ம. சூ. பக். 98-100)

தமிழ்மரபு பற்றி இவற்றைத் ‘துறைகள்’ என்னலாம். (ம. சூ.)

சந்தி இருவகை -

{Entry: Q17b__101}

சந்தியாவது சந்தியும் சந்திஅங்கமும் என இருவகைப்படும். முகம் முதலாகச் சந்தி ஐந்தாம். அவை முகம், பிரதிமுகம், கர்ப்பம் விமர்சம், நிருவகணம் என்பன.

1. சந்தி - இணைதல்; ஒரே நிகழ்ச்சித்தொடர்பு பற்றி ஒரு பொருளினொடு மற்றொரு பொருளை இணைத்து நிற்பது. சந்தி ஐவகைப்படும்.

2. அவற்றின் உறுப்புக்கள் ‘சந்தியங்கம்’ என்பன.

1. பீஜம் - விதை. (2) விந்து - விரிநிலை (3) பதாகை - கிளைக்கதை. (4) பிரகரீ - வழி நிகழ்ச்சி. (5) காரியம் - பொருள் முடிவு - என்னும் இவ்வைந்துமே பொருள்மூலம் என்பன. வடநூலார் இதனை ‘அர்த்த பிரகிருதி’ என்பர்.

2. விதை - கதைக்கரு. கதையின் முடிவான பயனைப்பெற விரும்பித் தொடங்கும் செயலாரம்பம்.

2. பிரயத்தனம் - அதற்கான முயற்சி.

3. பிராப்தியாசா - பயனை எதிர்பார்க்கின்ற பயன்விழைவு.

4. நியதாப்தி - பயனைப் பெறுவோம் என்ற உணர்வு.

5. பல யோகம் - பயன் முழுவதையும் பெறுதல்.

இவை ஐந்தும், நாடக நிகழ்ச்சி. (அவஸ்தை) எனப்படும். பொருள் மூலம் ஐந்தும் அவஸ்தைகள் ஐந்தும் இணைந்து நிகழ்கையில் சந்திகள் ஐந்தும் அமைகின்றன. (ம. சூ. பக். 97)

சந்தி ஐந்து

{Entry: Q17b__102}

1. முகம் - பீஜம் - விதை - வித்து

2. பயிர்முகம் - பிரதிமுகம் விரிநிலை முளை

3. கர்ப்பமுகம் கர்ப்பம் கிளைக்கதை சூல்

4. வைரிமுகம் விமர்சம் வழிநிகழ்ச்சி விளைவு

5. நிருவாணம் நிர்வகணம் பொருள்முடிவு துய்த்தல்

முகமாவது ஏழுவகைப்பட்ட உழவினால் சமைக்கப்பட்ட புழுதியுள் இட்டவித்துப் பருவம்செய்து முளைத்து முடிவது போல்வது. பிரதிமுகமாவது, அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்றாய் முடிவது போல்வது.

கருப்பமாவது அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுள் பொருள் பொதிந்து கருப்பம் முற்றி நிற்பது போல்வது.

விளைவாவது, கருப்பம் முதலாய் விரிந்து கதிர் திரண்டு இருண்டு காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது.

துய்த்தலாவது, விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. (ம. சூ. பக். 3,4)

சம்பிரமம் -

{Entry: Q17b__103}

அச்சம் காரணமாக ஏற்படும் ஐயுறவும் நடுக்கமும் ஆம். சில நூல்களில் இது வித்ரவம் எனப்படும்.

சம்பிரமை - பயந்து நடுங்குதல். (ம. சூ. பக். 99)

நாடகத்தின் மூன்றாம் சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்றாகும். (வீ. சோ. 106 உரை)

சம்பேடம் -

{Entry: Q17b__104}

சினம் மிகுந்த உரையாடல்.

சம்பேடம் - அபிமானத்தால் கோபித்து உரைத்தல் (ம.சூ. பக். 99) நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான வைரிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்றாகும். (வீ. சோ. 106. உரை)

சமம் (1) -

{Entry: Q17b__105}

இது சிலநூல்களில் ‘தாபனம்’ எனப்படும். மறுக்கப்பட்ட தால் தோன்றிய தனிமை தணிதல் தாபனம் எனக்கொள்ளின், தான் பெற விழையும் இன்பம் பெறப்படாததால் தோன்றும் நனி பெருந்துயர்.

சமம் - பிரிவினால் வந்த ஆற்றாமையை ஒருவாறு ஆற்றிக் கொள்ளுதல். (ம. சூ. பக். 98)

இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சமம் (2) (சாந்தி) -

{Entry: Q17b__106}

எதன் மீதும் பற்றில்லாது தன்னில் தானே அடங்கி ஒடுங்கிய நிலை; ‘சமநிலைச் சுவை’ நிலைக்கருத்து. (நாடக. 46)

சமயம் -

{Entry: Q17b__107}

துயரம் நீங்கல்; துன்பத்தினின்று விடுபடுதல் (ம.சூ. பக். 100) இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சமவகாரம் -

{Entry: Q17b__108}

தனித்தனியாக வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட தலைவியர் பலரைப் பெற்று, ஒன்பது சுவைகளையும் செவ்வனே கலந்து, வீரச்சுவையினை மிகுதியாக அமைத்து, மூன்று அங்கங்களில் நடக்கும் நாடகச்சாதி. இதன் தொடக் கத்தில் காமஇன்பமும் பின்னர் அறஇன்பமும் பொருளின் பமும் விரிவாக விளங்கும். (நாடக. 128)

சமாதானம் -

{Entry: Q17b__109}

நாடகப் பயன் நோக்கிய (கதையின்) முன்னேற்றம். விதை (நாடகக் கருத்து) நிலைபெற்றுத் தோற்றுதல். (ம. சூ. பக். 98)

இது நாடகத்தின் முதற் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சமுலாபகம் -

{Entry: Q17b__110}

இந்நாடகத்தின் தலைவன் வேதநெறிக்குப் புறம்பான ஒழுக்கமுடைய ஒரு பாடண்டன் (பாஷண்டன்). இந்நாடகம் மூன்று அல்லது நான்கு அங்கங்களைப் பெறும். அவலம் உவகை என்னும் சுவைகளைத் தவிரப் பிறசுவைகள் இதன்கண் நிகழும். உழிஞைப்போர், நிலவறைவழியே தப்பியோடுதல், வீரமின்றிப் புறங்காட்டி ஓடல், போன்ற நிகழ்ச்சிகள் இதன்கண் வரும். ஆரவடி, சாத்துவதி எனும் இருவிருத்திகளிலும் இஃது அமையும். (நாடக. 149)

சல்லாபத்தரு -

{Entry: Q17b__111}

வினாவிடையாக நாடக அரங்கிற் பாடும் பாடல். (W) (L)

சல்லாபம் -

{Entry: Q17b__112}

வீரசோழிய உரை குறிப்பிடும் நாடகச்சாதியுள் ஒன்று. ஒரே பொருள் பற்றிப் பேசும் தலைமக்கள் இதன்கண் இருப்பர். இஃது ஓரங்கமே யுடையது. முதல் நான்கு சந்திகளை யுடையது. (வீ. சோ. 106 உரை)

சலனம் -

{Entry: Q17b__113}

பகைவரை அவமதித்தல்

சில நூல்களில் இது ‘சாதனம்’ எனப்படும்.

சலனம் - எள்ளல் (ம. சூ. பக். 100)

இது நாடக சந்தி ஐந்தனுள் நான்காவதான வைரிமுகத்தின் அங்கம் 13இல் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

சவனிக்கைத் தரு -

{Entry: Q17b__114}

நாடக அரங்கில் நடிகன் ஒருவன் தோன்றும்போது பாடும் பாட்டு. (W) ( L)

சவனிக்கை படித்தல்

{Entry: Q17b__115}

நாடக அரங்கில் கடைசி நடிகன் வரும்போது நிகழும் பாட்டு. (W) (L)

சவனிக்கைப் பாட்டு -

{Entry: Q17b__116}

‘சவனிக்கைத் தரு’ காண்க.

சனாந்திகம் -

{Entry: Q17b__117}

அரங்கிற் புகுந்துள்ள நாடகபாத்திரங்கள் பலருள் இருவர் பிற பாத்திரங்கள் அறியாவகை தம்முட் பேசிக்கொள்ளல். (யாழ். அக.) (L)

சாத்துவதி -

{Entry: Q17b__118}

தலைமக்களில் சிறந்தோரைக் கொண்டு அறம் பொருள் உபாங்கம் ஆவது. (வீ. சோ. 106 உரை)

சாத்துவதி - அறம் பொருளாகத் தெய்வ மானிடர் தலைவ ராக வருவது. (ம. சூ. பக். 15)

அறம் பொருந்திய பொருளாக, கடவுளர் தலைவராக, பொருள் விளங்கும் மெல்லிய சொற்றொடர்களால் அமைந்து, வீரம் வியப்பு என்னும் சுவைகளையுடையதாய் வருவது இது.

இவ்விருத்தியில் அமைந்த நாடகப் பொருள் மிகவும் மென்மையான விடயம்; சௌரியம் (-வீரம்) கருணை பெருமை போன்ற குணங்கள் பொருந்தி வருமே யன்றி, காமச்சுவை சிறிதும் பயிலாது. ஆயினும் களிப்புத் தருவ தாகவே இருக்கும்; வியப்பு இருக்கும். இதனை வடநூலார் உத்தாபகம், சாங்காத்தியம், சல்லாபம், பரிவர்த்தகம் என நான்கு வகையில் கூறுவர். (நாடக. 169 உரை)

1. உத்தாபகம் - பகைவனை வீராவேசம் கொள்ளச் செய்யும் பேச்சு.

2. சாங்காத்தியம் - ஆலோசனை கூறியோ, செல்வப்பேற்றைக் காட்டியோ, விதிவசத்தாலோ நட்பிற்கு இடையூறு விளைத்தல்.

3. சல்லாபம் - பல்வேறு உணர்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டு இயலும் மேம்பட்ட உரையாடல்.

4. பரிவர்த்தகம் - எண்ணிய செயலை விடுத்துப் பிறிதொரு செயலைச் செய்தல். (மேலை உரை)

சாதி -

{Entry: Q17b__119}

நாடக வகை; இவற்றை உருவகம் எனவும் கூறுவர். அஃதாவது உபமானத்தையும் உபமேயத்தையும் வேறுபாடு நீக்கி ஒன்றெனவே ஏற்றிக் கூறும் உருவகஅணியைப் போல, நடிகரிடத்தில் கதைப்பாத்திரங்களின் இயல்பை ஏற்றியுரைத் தலால் உருவகம் என்னும் பெயர் அமைந்தது. இனி, நடிகர் யாவரும் முழு ஈடுபாட்டோடு தம்மினும் வேறான பாத்திரங் களின் உருவங்களை மேற்கொள்வதால் உருவகம் என்னும் பெயர் எய்திற்று என்றலும் உண்டு.

நாடகங்களின் சாதிவகை பத்து. அவையாவன நாடகம் பிரகரணம், பாணம், வியாயோகம், சமவகாரம், (இ) டிமம், ஈகாமிருகம், அங்கம், வீதி, பிரகசனம் என்பன.

வீரசோழிய உரையாசிரியர் கூறும் வீரம் முதலிய பத்தனை யும் தனித்தனித் தலைப்புக்களிற் காண்க. (நாடக. 119-122)

சாதிப் புறநடை -

{Entry: Q17b__120}

நாடகச்சாதி பத்தனுள்ளும் உபசாதி பதினெட்டனுள்ளும் அடங்காதனவும், ஒருவகையது இலக்கணம் மற்றையது ஒன்றன்கண் கலந்துவருவனவும், குறைந்து வருவனவும், கூடிவருவனவும், ஆகிய எவ்வகை நாடகங்களும் ‘நாடகம்’ என்றே பெயர் பெறும். (நாடக. 158)

சாதிவகை -

{Entry: Q17b__121}

நாடக வகையாகிய சாதியினை வீரசோழிய உரைகாரர் பத்தாகப் பகுக்கிறார். அவையாவன வீரம், கூச்சம், அர்ப் பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம், வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என்பன. (வீ. சோ. 106 உரை)

சாந்திக்கூத்து -

{Entry: Q17b__122}

நாயகன் முதலியோர் மனஅமைதி அடைதற்கு ஆடும் கூத்து.

(சிலப். 3 : 12 உரை) (L)

சிரிப்பு -

{Entry: Q17b__123}

இகழ்ச்சி பகைமை அறியாமை போன்றவை காரணமாக இயல்பினின் திரிந்த மொழியும் செயலும் பற்றி மனத்தில் தோன்றும் உணர்வு. வடநூலார் ‘ஹாஸ்யம்’ என்ப. இது நகை என்னும் சுவையாகிய நிலைக்கருத்து. (நாடக. 44)

சிற்பகம் -

{Entry: Q17b__124}

உபசாதி நாடகம். இந்நாடகத்தில் நான்கு அங்கங்கள் இருக்கும். சமநிலையும் நகையுமான சுவை இரண்டனைத் தவிரப் பிறசுவையும் இடம்பெறும். அந்தணன் தலைவன்; உபநாயகன் ஒருவன்; இடுகாட்டின் விரிவான புனைந்துரை இருக்கும். (நாடக. 152)

சிறந்திசைக் கோலம் -

{Entry: Q17b__125}

இன்னிசை பொருந்திய வரிப்பாடல்களை வெகுளிச் சுவையோ இன்பச் சுவையோ வெளிப்படும் வகையில் ஆழ்ந்த கருத்துடனும் பற்பல இசைவேறுபாட்டுடனும், எடுத்த நிலையும் உற்றுணர் நிலையும் ஆகிய இரு நலன்கள் விளங்கப் பாடுதல்; இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று.

எடுத்த நிலை, உற்றுணர் நிலை - இவற்றை ‘நாலேழ் நலன்’ என்ற தலைப்பில் காண்க.

வடநூல் கூறும் ‘இலாசியம்’ என்பதன் அங்கமான ‘உத்தமோத்தமகம்’ இது. (நாடக. 261)

சூத்திரதாரன் -

{Entry: Q17b__126}

நாடகத்தை நடத்துவோன். (L)

சூத்திரதாரி -

{Entry: Q17b__127}

1. பதுமையைச் சூத்திரம் (நூல்) கொண்டு ஆட்டுவோன் (சி. சி. 4.4 சிவாக்.) (L)

2. சூத்திரதாரன் (L)

சூலநட்டம் -

{Entry: Q17b__128}

வரிக்கூத்து வகை தொண்ணூற்று மூன்றனுள் ஒன்று. (அபி. சிந்தா.) (L)

செய்யுள் இயக்கம் -

{Entry: Q17b__129}

நாடக நூல்களில் செய்யுள் இயங்கும் வகை. அவை நான்காவன:

1. முதல் நடை - மிகவும் தாழ்ந்து செல்லும் நடை.

2. வாரம் - சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் ஒருங்கே கொண்ட நடை.

3. கூடை - சொல், இசை ஆகியவற்றின் செறிவினைக் கொண்ட நடை.

4. திரள் - நெருக்கமாய் மிகவும் முடுகிச் செல்லும் திரள்நடை.

இந்நான்கனுடன் கல்வியறிவும் நாகரிகமும் பெறாத இழி மக்கள் இயல்பாகப் பேசும் சொற்கள் அமைந்த பாடலையும் பிழையென நீக்காது ஏற்பதும் ஒன்று. (நாடக. 69,70)

செயற்பொருத்தம் -

{Entry: Q17b__130}

நாடகத்தில் நிகழும் செயல்கள் யாவும் காரணகாரிய முறையின் கட்டுக்கோப்புடன் அமைதல் வேண்டும். நடுவே வரும் சிற்றருவிகள் சேரப் பெரியதோர் ஆறு பெருகி னாற்போல, இடையே வரும் நிகழ்ச்சிகள் பலவும் சேரத் தலைமையான நாடகக் கதைச்செயல் விரிந்து பெருகுதல் வேண்டும். இடைநிகழ்ச்சிகள் வரும் நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் தலைமைப் பொருட்கு உட்பட்டு நடத்தல் வேண்டும். செயல்கள் உலக இயல்புக்கு மாறுபடாமலும், நம்புதலுக்கு உரியவாகவும் இருத்தல் வேண்டும். இவையே செயற் பொருத்தம் எனப்படுவன.

இடம் காலம் செயல் ஆகிய மூன்றன் பொருத்தமும் இன்றி யமையாதனவே எனினும் ஒன்றற்கொன்று முரண்பாடு தோன்றும்போது செயலின் பொருத்தத்தையே முக்கியமாகக் கொள்ளல் ஏற்புடைத்து என்பர். (நாடக. 64)

சேடன் -

{Entry: Q17b__131}

தலைவனுக்குப் பணிபுரிவோன் சேடன் எனப்படும்.

(தலைவிக்குப் பணிபுரிபவள் சேடி எனப்படும்). (நாடக. 100)

சொல்வகை -

{Entry: Q17b__132}

கூற்றுப்போலவே நாடகத்தில் வரும் பேச்சுவகை; பொரு ளழகு மிக்க நாடகச் சொல்வகை. அஃது இருவகைப்படும்:

1. வியப்பு மொழிநிலை

வியப்புச்சுவை பயக்கும் வண்ணம் உரையாடுதல்.

2. நகைமொழி நிலை

நகைச்சுவை பயக்கும் வண்ணம் உரையாடுதல்.

மதங்க சூளாமணி, அடியார்க்குநல்லார் கூறும் சொல்வகை யான சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என நான்கும் கொள்ளும்.

சுண்ணம் நான்கடியால் வருவது; சுரிதகம் எட்டடியால் வருவது; வண்ணம் நானான்கு (16) அடியால் வருவது; வரிதகம் 32 அடியால் வருவது. (நாடக. 199; ம.சூ.பக். 18)

த section: 15 entries

தர்க்கம் -

{Entry: Q17b__133}

வினாவிடையாக நாடக அரங்கில் பாடும் பாடல்.

நிச்சயபுத்தியின்மையாலே பன்முறையும் ஆலோசித்தல் கருதலாகிய ‘தர்க்கம்’ ஆம். (ம. சூ. பக். 119)

தலைத்தாள் -

{Entry: Q17b__134}

1) பெரியவன்; ‘சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன்’ (மணி. 14 - 103)

2) முன்னிலை; ‘மனைவி தலைத்தாள்’ (தொ. பொ 165 நச்.) (L)

தலைமக்கள் -

{Entry: Q17b__135}

கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரினும் சிறப்புடைய தலைமை அமைந்து, ஆயிரக்கணக்கான வலம்புரிச் சங்கு களால் சூழப்பட்டுள்ள சலஞ்சலம் என்னும் சங்கினைப் போலப் பொலிவோர்.

(இடம்புரிச் சங்குகள் ஆயிரம் சூழ இருப்பது ஒரு வலம்புரிச் சங்கு. அத்தகைய வலம்புரிச் சங்குகள் ஆயிரம் சூழ இருப்பது ஒரு சலஞ்சலம் என்னும் சங்கு.) இத்தகைய தலைமையுடைய பாத்திரங்களில் ஆடவரும் உண்டு; பெண்டிரும் உண்டு. நாயகன், நாயகி, கதாநாயகன் கதாநாயகி என்ற வழக்காறும் உண்டு. (நாடக. 83, 84)

தலைவர் -

{Entry: Q17b__136}

ஆடவர், கதாநாயகர் எனவும் கூறப்படுவர்.

நாடகத் தலைவர் - நாடகங்களில் வரும் தலைமையான ஆண்பாத்திரங்கள்.

இவர்கள் தாம் உளராய காலத்தேயே பெறும் புகழாகிய ஒளி பெற்றோராய் இருத்தல் வேண்டும். இவர்கள்பால், எப்பொழுதும் முகமலர்ச்சியோடு இருத்தலும், இன்மொழி பேசி இனியவே செய்யும் இயல்பும், நற்குணங்கள் பலவும், நெடிய மனவுறுதியும், மானமுடைமையும், வாய்மை மொழியும் போன்ற பெரும்பண்புகள் பொருந்தியிருத்தலும் வேண்டும். (நாடக. 85)

இவர்களை நான்கு வகையினராகக் கூறுவர் வடமொழி நாடக நூலோர். அவராவர் (1) தீரோதாத்தன் (2) தீரசாந்தன், (3) தீரோத்ததன் (4) தீரலலிதன் என்பார். (நாடக. 86)

1. தீரோதாத் தன் (தீரனும் மிகஉயர்ந்த இயல்பு உடையோனு மான நாயகன்) வடிவழகும், நல்லொழுக்கமும், பேரறிவும், வீரமும், தீரமும், மேன்மையும், கல்வியும், அன்பும், அருளும், இன்பம் நிறைந்த உள்ளமும் கொண்டு புகழ்மிகவுடைய தலைவன். (நாடக. 87)

இவ்வகைக்கு உதாரணமாவான் இராமபிரான்.

2. தீரசாந்தன் (தீரனும், புலனடக்கமும் மனஒழுக்கமும் உடையோனுமாவான்) - மிகப்பெரும் பொறுமையும் மாசற்ற பண்பும் நிறைந்தவன். (நாடக. 88)

இவ்வகைக்கு இலக்கியமாவான் முனிவருள் வசிட்டன்.

3. தீரோத்ததன் (தீரனும், செருக்கால் நிமிர்ந்து தலை வணங்காதவனும் ஆவான்) அரும்பெருங்குணநலனும் அறிவு நலனும் வாய்க்கப்பெற்றோனாக இருந்தும், நனிபெருவெகுளி யும், அதனால் விளைந்த தன்னையும் மறந்து செயற்படும் மூர்க்ககுணமும் உடையவன். (நாடக. 89)

இவ்வகைக்கு உதாரணமாவான் பாண்டவரிடை வீமன்.

4. தீரலலிதன் - (தீரனே ஆயினும் இன்பவேட்கை மிக்கவன்) வலிமை வீரம் மானம் அருள் முதலிய யாவுமே பெற்று விளங்குபவன்; ஆயினும் இன்ப வேட்கை மிகுந்த இயல்பு கொண்டவன்.

இவ்வகைக்கு இலக்கியமாவான் தேவருள் இந்திரன். (நாடக. 90)

தலைவற்கு உற்றார் -

{Entry: Q17b__137}

நாடகத் தலைவனுக்கு உற்ற உறுப்புக்கள் போன்று வரும். கதாபாத்திரங்கள்; அமைச்சர், ஆசிரியன், குலகுரு, விதூட கன், விடன், சேடன், தண்டத் தலைவன், தூதர் போன்றோர்.

இவர்களைத் தவிர, அரண்மனையிலுள்ள வாயிற்காப்போன் போன்ற காவற்காரர்களும், அந்தப்புரக் காவலரும், போலி மைத்துனர்களும், குறுகிய உடலுடையோரும், நொண்டி போன்றோரும், கூனர்களும் ஆகியோர் மன்னனைச் சூழ இருப்பர்.

தலைவற்கு உற்றோர் எனப்பட்டவர்களுள், முதற்கண் கூறப்பட்ட மூவரும் இன்னோர் என்பது வெளிப்படை. மற்றவர்களைத் தனித்தனித் தலைப்பிற் காண்க.

தண்டத் தலைவன் - சேனாபதி

தூதர் - அரசியல் தூதர்; தலைவிபால் செல்லும் தூதரும் உளர். (நாடக. 94:95)

தலைவியர் -

{Entry: Q17b__138}

இயற்கைநிலை முதலிய இருபத்தெட்டு நலன்களும் நன்கு அமையப் பெற்றுத் தலைவர்க்குச் சொன்ன நற்குணங்களுள் தமக்குப் பொருந்துவன பலவும் பெற்று, அழகும் பருவமும் பொங்கிக் கனிந்து பொலியும் நங்கையரே தலைவியர் ஆவர்.

இயற்கைநிலை முதலிய இருபத்தெட்டனையும் ‘நாலேழ் நலன்’ என்ற தலைப்பில் காண்க.

தலைவியர் நான்கு வகையினர்.

1. சுகுணை - நற்குணங்கள் நிறையப் பெற்று, எல்லா வகையி லும் தீரோதாத்தனை ஒப்பவள்.

2. சாந்தை - பொறுமையுடையாள். அடக்கம் மிக்கவள்; எல்லா வகையிலும் தீரசாந்தனை ஒப்பவள்.

3. அரக்கி - மூர்க்க குணமும், போரில் ஆர்வமும், மிக்க சினமும் உடையாள்; தீரோத்ததனுக்கு ஒப்பானவள்.

4. காமினி - காமம் மிக்கவள்; நாள்தோறும், எத்திறத்த வரையும் கூடி இன்புறும் நாட்டியம் வல்ல பொதுமாதர் போன்று காம விளையாட்டினையே நோன்பு போல் கொண்டொழுகும் இயல்பினள்.

வேறு தலைவியர் வகைகளும் உள.

மடந்தை, தெரிவை, ஆட்டி என்னும் தமக்குரிய மகளிரும்; பிறர் மனைவியும், மகளுமான பிறர்க்குரியோரும்; சேரிப் பரத்தையர், இற்பரத்தையர் எனும் பொதுமகளிரும் ஆகிய எழுவகையினரும் சிலவிடங்களில் தலைவியர் எனப்படுவர்.

வடநூலார், தமக்குரியோரைச் சுவகீயர் என்றும், பிறர்க் குரியோரைப் பரகீயர் என்றும், பொதுமகளிரைச் சாமானியர் என்றும் கூறுப; மடந்தை, தெரிவை, ஆட்டி என்னும் மூவரையும் முறையே முத்தை, மத்தியை, பிரகல்பை என்பர். (நாடக. 103 - 108)

திரவம் -

{Entry: Q17b__139}

குரவரையும் (சினத்தால்) அவமதித்தல்.

பெரியோரை மதியாது நடத்தல். (ம. சூ. பக். 99)

இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதாகிய விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

திருக்கதிதம் -

{Entry: Q17b__140}

உபசாதி நாடகம். வடமொழியில் ஸ்ரீகதிதம் எனப்படும். கதை மெய்யானது; ஓர் அங்கந்தான் உண்டு; உயர்ந்தோர் தலைவ னும் தலைவியும் ஆவர். இது பாரதிவிருத்தியில் அமையும்; செந்தாமரையில் உறையும் திருமகளே நேரில் வந்து அமர்ந்து உயர்ந்த இன்பம் பயக்கும் பாடலைப் பாடுவதாய் அமைவது; சுவைகள் இனிது விளங்குவது; திரு என்ற சொல்லையே பலகாலும் சேர்த்து இசைப்பது. (நாடக. 150, 151)

துடிக் கூத்து -

{Entry: Q17b__141}

பதினொருவகை யாடல்களுள் ஒன்று. கரிய கடலின் நடுவுநின்ற சூரனது வஞ்சனையை அறிந்து அவன்போரைக் கடந்த முருகன் அக்கடலின் நடுவண் திரையே அரங்கமாக நின்று துடிகொட்டி ஆடிய துடிக்கூத்து. (சிலப். 6 : 49 - 51)

சப்த கன்னிகைகளது ஆடல். (பிங். 3650) (L)

துணங்கை -

{Entry: Q17b__142}

முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித் துக் கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து ‘பழுப்புடை இருகை முடக்கி யடித்துத், துடக்கிய நடையது துணங்கை யாகும்’ (முருகு. 56 நச்.)

துதி -

{Entry: Q17b__143}

வட நூலார் ‘த்யுதி’ என்பதனைத் தமிழ் நூலார் துதி எனத் தற்பவம் ஆக்கினர். துதியாவது அச்சுறுத்தி இகழ்ந்துரைத் தல்.

துதி - பிறர் உள்ளத்துக்குத் துன்பம் உண்டாக்கும் வெஞ் சொற் கூறல். (ம. சூ. பக். 100)

இது நாடகசந்தி ‘ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

துரோடகம் -

{Entry: Q17b__144}

ஐந்து ஏழு எட்டு ஒன்பது என்ற அளவில் அங்கங்கள் கொண்டு, மக்கள் தேவர் என்னும் இருவகைப் பாத்திரங்களும் கலந்து, உவகைச் சுவையே தலைமைச் சுவையாகப் பெறும் நாடக வகை; உபசாதி நாடகம். (நாடக. 139)

துன்மல்லிகை -

{Entry: Q17b__145}

உபசாதி நாடகமாகிய இதனுள் நான்கு அங்கங்கள் உள்ளன. முதல் அங்கத்தில் விடனுடைய விளையாட்டுக்களும், இரண்டாம் அங்கத்தில் விதூடகனுடைய வேடிக்கைகளும், மூன்றாம் அங்கத்தில் பீடமர்த்தனுடைய செய்கைகளும், நாலாம் அங்கத்தில் இழிந்த தன்மையைச் சேர்ந்த தலைவ னுடைய செயல்களும் விளையாட்டுக்களும் எடுத்துக் கூறப்படும்; காமம் மிகுந்து பிரிவுத்துயர் உற்றுள்ள மக்கள் ஆவலுடன் வரும் வகையில் அமைவது. கைசிகி, பாரதி ஆகிய இரண்டு விருத்திகளிலும். இந்த நாடகம் இயலும்.(நாடக. 154)

தேர்ச்சிவரி -

{Entry: Q17b__146}

தேர்ந்து உரைத்து ஆடுதல், தலைவி தலைவனை விட்டுப் பிரிந்துறையும்போது பிரிவாற்றாமல், தலைவனுடைய சுற்றத்தாரைக் கண்டு, அவர்களிடம் தான் உற்ற துன்பத்தை நினைத்து நினைத்து உள்ளம் தேர்ந்து உரைத்து ஆடுதல்.

கூத்துவகை ஏழனுள் ஒன்றான வரிக்கூத்துவகை எட்டனுள் ஒன்று. (சிலப். 8 : 102 - 04) (நாடக. 212)

தோடகம் (1) -

{Entry: Q17b__147}

கலக்கத்துடன் விரைந்துரைத்தல்.

தோடகம் - வெகுண்டு உரைகூறல். (ம. சூ. பக். 99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

ந section: 34 entries

நகைக் கூத்து -

{Entry: Q17b__148}

கூத்துவகை ஏழனுள் ஒன்று. யாரேனும் ஒருவரைப் புகழ்ந்தோ பழித்தோ பேச விரும்பி, விதூடகன் அரசவைக்கண் மிகுந்த நகைப்பை விளைவித்த வண்ணம் ஆடும் கூத்து.

இடக்கை தண்ணுமை போன்ற தாளவாத்தியங்களுடன் தாளங்களின் கட்டுக்கள் அமைய ஆடுவது நகைக் கூத்து என்பர் நாட்டிய இலக்கணம் அறிந்தோர். (நாடக. 203)

நடாத்துநர் -

{Entry: Q17b__149}

நாடகத்தை நடத்திக் காட்டுவதற்குத் துணையாய் இருப்ப வர்கள். அவர்கள் சூத்திரதாரனும், அவனைச் சேர்ந்தவர்க ளான நடியும் நடனும் ஆவோர்.

சூத்திரதாரன்-நூலைப் பிடித்திருப்போன் என்பது சொற் பொருள். பண்டைய பொம்மலாட்டம் (பொம்மையாட்டம்) எனப்படும் கூத்தில், பொம்மைகளைப் பிணித்துள்ள கயிறு களைப் பற்றி இழுத்து அவற்றை ஆட்டுவிப்போனுக்குப் பெயராய் வழங்கிய சொல் இது. நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில், எல்லாவற்றிற்கும் முதல்வனாய் நின்று நாடக நிகழ்ச்சிகளை முற்றுவிப்பான் சூத்திரதாரன் எனப்பட்டான். இவனைச் சூத்திரதாரி என்றும் வழங்குவதுண்டு. இவனே நாடகத்தை நல்ல நிலையில் நிகழ்த்தி நிறுவுகின்றான் என்ற காரணத்தால் (ஸ்)தாபகன் என்றும் கூறப்படுவான்.

நடி-சூத்திரதாரனுடைய காதல் மனைவியாயிருப்பவள். இவளும் கல்வியிலும் கலைகளிலும் தேர்ச்சியுடையவ ளாவள்.

நடன்-சூத்திரதாரன்பால் நட்புரிமை வாய்ந்தவனாய் அவன் இயற்றும் வினைக்குத் துணையாயமைபவன். (நாடக. 177-182)

நடிப்பியல்பு -

{Entry: Q17b__150}

மெய்ப்பாடுகளின் இனிய இயல்பு நன்கு புலப்படச் செய்து, தன் உள்ளத்து நிகழும் உணர்வுக்கு ஏற்பத் தோன்றும் விறல்களை நாடகம் பார்ப்போரும் பெறும் வகையில் வெளிக்காட்டி, தான் நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒற் றுமையுடன் ஒன்றி, சுவைக்குத் தக்க அவிநயங்களைச் செய் துணர்த்தி, ஆறுவகை நடிப்பு நிலைகளையும் குற்றமின்றிக் காட்டி, நாடகசாலையை அழகு செய்து நல்ல பாவனை களுடன் நடித்தலே நடிப்பின் இயல்பு எனப்படும். இதுவே நாடகம் காண்போர் மனத்தைக் களிப்பிக்கும்.

1. மெய்ப்பாடு, 2. விறல், 3. ஒற்றுமை, 4. அவிநயம், 5. நிலை, 6. நாடக சாலை என்பவற்றைத் தனித்தனித் தலைப்பில் காண்க. (நாடக. 224)

நடை மூவகை -

{Entry: Q17b__151}

நாடகத்தினது கதையைப் பொருத்தமாகக் கூறும் வகையே நடை எனப்படும். அது வாசகம், செய்யுள், இசைப்பாட்டு என மூவகைத்து.

வாசகம் - பேசும் தமிழில் பிழையின்றிப் பேசும் பாத்திரங் களின் நிலைக்குப் பொருந்திய வேறுபாட்டுடன் அமைவது.

செய்யுள் - எழுவகைத் தாதுக்களால் உயிர்க்கு இடமாக உடம்பு அமைந்துள்ளவாறு போல, பலவகைச் சொற்களால் பொருளுக்கு இடமாக அணிபெற உணர்வு மிக்க கவிஞரால் செய்யப்படுவது.

இசைப்பாட்டு - பண்கலந்து (இராகத்துடன்) பாடப் படுவது. (நாடக. 65-68)

நமதூதி (நமதுதி) -

{Entry: Q17b__152}

நர்மத்யுதி என்னும் ஆரியச்சொல் தற்பவமாகத் திரிந்தது.

ஏளனம் செய்து நகைத்துப் பேசியதால் விளைந்த நகைக் கூற்றினால் இன்புறுதல். (ம. சூ.பக். 98)

இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

நயநிலைப் படலம் (1) -

{Entry: Q17b__153}

ஆன்றோரைத் தலைவராகக் கொண்டு, மெய்ப்பொருளை உணர்த்தும் செயல்களை விளக்கும் நாடகம். இது வீர சோழிய உரையாசிரியராம் பெருந்தேவனாரால், “நயநிலைப் படலமாவது நாடகம்; கூத்தமார்க்கம் என்பதும் அது. அது பெரியோரைத் தலைமக்கள் மேவச் செய்யப்பட்ட மெய்ப் பொருள் பற்றி வருதல்” என்று விளக்கப்படுகிறது.

மெய்ப்பொருள் பற்றி வருதல் என்பதற்கு, மெய்யுரைக் கதை யுடையதாக வருதல் எனப் பொருள் கூறலும் ஏற்புடைத்து. (நாடக. 159)

நயநிலைப் படலம் (2) -

{Entry: Q17b__154}

நாடகம்; கூத்தமார்க்கம் என்பதும் அதுவே. அது பெரியோ ரைத் தலைமக்கள் மேவுமாறு செய்யப்பட்ட மெய்ப்பொருள் பற்றிவருவது; சிறியோரைத் தலைமக்களாக்கி ஒளி(யோனி) யும் விருத்தியும் சாதியும் சந்தியும் சுவையும் முதலாகப் பல விகற்பத்தானும் வரும். (வீ. சோ. 106 உரை)

நாட்டிய ராசகம் -

{Entry: Q17b__155}

இஃது இனிய இசைப்பாட்டுக்கள் மிகுதியும் கொண்டது. தீரோதாத்தன் தலைவன். தன்னை அழகு செய்து கொள்வதி லும் உயர்ந்த உடைகள் அணிவதிலும் மிக்க ஆர்வம் கொண்டவள் தலைவி. துணைத்தலைவராக உபநாயகனும் பீடமர்த்தன் என்பானும் வருவர். இன்பச்சுவையும் நகைச் சுவையும் நிறைந்து விளங்கும் உபசாதி நாடகம் இது. இதன்கண் இசை பாடும் கோலங்கள் எனப்படும் பத்துவகைக் கோலங்களும் இடம் பெறும். இந்தக் கோல வகைகளைத் தனித்தனித் தலைப்பில் காண்க. (நாடக. 142)

நாடகக் காப்பியம் -

{Entry: Q17b__156}

நல்ல இசை பொருந்திய பாடல்களுடன் கூடி, நாடகத்திற் குரிய இலக்கணங்களும் சில சேர்ந்து நூல் முழுவதும் ஆசிரியனுடைய கூற்றாகவே அமைவது.

சிலப்பதிகாரம் இதற்கு உதாரணம் என்பர் நாடகவியல் உரையாசிரியர். (நாடக. 164)

நாடகச் சந்தி -

{Entry: Q17b__157}

முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்ட நாடகக்கதைப் பொருத்து. (சிலப். 3, 13 உரை)

நாடகசாலை -

{Entry: Q17b__158}

பெரிய நகரமொன்றன் நடுவில், பலர் கூடும் சபையாகவும், காவல் காப்பவர் பலரைப் பெற்றதாகவும் இருக்கும் இடமே நாடகசாலை ஆதலுக்குரியது.

அந்த இடத்திற்கு அருகே தேவத்தானமோ, செபம் செய்யு மிடமோ, பறவைகளின் கூடுகள் அமைந்த இடமோ, பாம்புப் புற்றுக்களோ இருத்தல் கூடாது. யானைகுதிரைகள் கட்டும் இடங்களோ, மறவர் போர் பயிலும் இடமோ, மறவர் வாழிடங்களோ அருகில் இருத்தலும் கூடாது.

அந்நிலம் நுண்ணிய மண் சேர்ந்து திண்மையாய் இருத்தல் வேண்டும். இன்சுவையும் மணமும் பெற்ற மண்ணாய் அஃது இருத்தல் வேண்டும்.

நடிகர்கள் வேடம் அணிந்து கொள்ளும் தனியிடமும், நாடக மேடையும், நாடகம் பார்ப்பவர்கள் அமர்ந்திருத்தற்கு வசதியான இடமும் ஆகிய இம்மூன்று நல்ல பகுதிகளை நாடகசாலை பெற்றிருத்தல் வேண்டும். (நாடக. 263)

நாடகத் தமிழ் நூல் -

{Entry: Q17b__159}

நாடகத் தமிழ்நூல் பற்றிய இலக்கணஇலக்கியங்கள். முத்தமிழுள் நாடகம் எனப்படும் கூத்துப் பற்றிய செய்தியை விளக்கும் தமிழ் நாடகத்தமிழாம். பெரும்பான்மையும் கூத்துப் பற்றிய தமிழிலக்கியப் பகுதியே நாடகத் தமிழ்நூல் எனப்படுகிறது. ‘நூல்’ இலக்கணத்தையே பண்டு குறித்து, இன்று இலக்கியத்தையும் குறிக்க வழங்கப்படுகிறது.

நாடக நூல் -

{Entry: Q17b__160}

நாடகத்தின் இயல்புகளை பெற்றிருந்தும், நடித்துக் காட்டக் கூடிய தன்மையில்லாத நூல்.

மனோன்மணீயம் இதற்கு உதாரணமாம் என்பர் நாடகவியல் உரையாசிரியர். (நாடக. 163)

நாடக பாத்திரம் -

{Entry: Q17b__161}

நாடக மேடையில் நடிக்கும் ஆண்பாலரும் பெண்பாலரும்.

நாடகம் -

{Entry: Q17b__162}

ஐந்து அங்கங்களுக்குக் குறையாமல் பெற்று, ஒன்பான் சுவை களும் அமைந்திருப்பினும் இன்பச்சுவை அல்லது பெருமிதச் சுவை நன்கு தெரியும் வகையில் நடந்து, வியப்புச்சுவையுடன் நிறைவுறுவது.

ஒன்பான் சுவைகளுமே இடம்பெற வருவது உயர்ந்த நாடகம் ஆகும்; சில சுவைகள் இடம் பெறாவிடினும் அதன் சிறப்புக் குன்றாது.

நாடகத்தின் பெரிய உறுப்பு அங்கம்; அவ்வங்கத்துள் நிகழும் உறுப்புக் களம் எனப்படும். ஓர் அங்கம் பல களங்களைப் பெற்று வரும். (நாடக. 123, 124)

நாடகம் இயற்றமிழ் ஆமாறு -

{Entry: Q17b__163}

நாடகம் ஒரேவகையான ஆசிரியம் போன்ற பாட்டால் இயல் வதுண்டு; பலதிறப்பட்ட பாட்டு வகைகளாலும் இயல்வ துண்டு; உரைநடையும் பிற மொழிகளும் கலந்தும் இயலும். ஆதலின் இதனை ‘உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று கொள்ப ஆன்றோர். (நாடக. 116)

நாடகவியல் -

{Entry: Q17b__164}

(நாடகஇயல்) நாடகம் பற்றிய ஓர் இலக்கண நூல். இதன் ஆசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், பி.ஏ. நூல் எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 1897. நுண்மாண் நுழை புலம் வாய்ந்த பேரறிஞரான இவர் பல தமிழ்நூல்களையும் வட மொழி நூல்களையும் ஆங்கில நூல்களையும் ஆராய்ந்து எழுதிய நூல் இது. தெய்வ வணக்கம் அவையடக்கம் உள்ளிட்டு, இதன்கண் 272 சூத்திரங்கள் உள. நூல் தொடங் குவது 10 ஆம் எண் தொடங்கியாதலின், 263 நூற்பாக்கள் என்றே கொள்ளப்படும். அவை ஆசிரிய யாப்பின. இந்நூற்கு இவ்வாசிரியரின் மாணாக்கர் ந. பலராமய்யர் என்ற பெயரிய பெரும்பண்டிதர் ஒருவர் விரிவான உரையியற்றி யுள்ளார். இந்நூல் பொதுஇயல்பு, சிறப்புஇயல்பு, உறுப்புஇயல்பு, நடிப்புஇயல்பு என நான்கு பகுதிகளையுடையது. (நூற்பா. 10)

நாடக விருத்தி -

{Entry: Q17b__165}

சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்ற நால்வகை நாடக நடை. (சிலப். 3. 13 உரை) (நாடக. 168)

நாடகாங்கம் -

{Entry: Q17b__166}

அபிநயம். (L)

நாடகீயர் -

{Entry: Q17b__167}

கூத்தர். ‘நாடகர்’ என்னும் பிங்கலந்தை. (824) (திவா.பக்.36)

நாடிகை -

{Entry: Q17b__168}

இது கைசிகி விருத்தியில் அமைவது. இதன்கண் அங்கங்கள் நான்கு. பெண்பாத்திரங்கள் பலர் வருவர். அரசன் தலைவன். அவன் அஞ்சும் அரசியும், அவன் காதலுக்குரியவளும் அவனது ஆட்சிக்கு அடங்கியவளுமாகிய பேரழகியொருத்தி யுமாக இருவர் தலைவியர். இது நாட்டியத்துடனும் இசையுடனும் நிகழும் நாடக வகை. (நாடக. 138)

நாபம் -

{Entry: Q17b__169}

நர்மம் - நருமம். அஃதாவது எள்ளி நகைத்துரைப்பது.

நகைக் கூற்று (ம. சூ. பக். 98)

இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)

நாலேழ் நலன் -

{Entry: Q17b__170}

தலைவியர்க்குரிய இருபத்தெட்டு நலன்கள்.

1. இயற்கை நிலை - சுபாவமான, இயற்கையான நிலை, 2. எடுத்த நிலை - இயல்புக்கும் மேலான உயர்நிலை, 3. உற் றுணர்நிலை - மனவெழுச்சி வெளிப்படும் நிலை, (இம் மூன்றும் உடல் அசைவினால் தோன்றுபவை.) 4. ஒளி, 5. அழகு, 6. தேசு, 7. இனிமை, 8. துணிவு, 9. உதாரம், 10. தீரம் (இவை ஏழும் முயற்சியின்றி இயல்பாகவே உண்டாவன). 11. லீலை, 12. மலர்ச்சி, 13. எளிய உடை, 14. மடம், 15. மகிழ்வு, 16. தன்னையும் அறியாமல் எழுகின்ற காதல் மொழிகள், 17. ஊடல், 18. விப்பிரமம் (-பரபரப்பு), 19. லலிதம், 20. மதம், 21. நிறை, 22. ஏக்கம், 23. வெட்கம், 24. வேறுபாடு, 25.வியப்பு, 26. நகை, 27. நடுக்கம், 28. கேளி - இவை தலைவியர்க்கு அழகுசெய்யும் அணிபோல்வன. (நாடக. 102 உரை.)

நாற்பொருள் -

{Entry: Q17b__171}

நாடகத்திற்குப் பொருளாய் அமைத்தற்குரிய அறம்பொருள் இன்பம் வீடு என்பன. இவற்றையே மக்கட்கு உறுதிபயக்கும் உறுதிப்பயன் என்பர். (நாடக. 20,21 )

நிண்ணயம் -

{Entry: Q17b__172}

தன் செயலையும் அனுபவத்தையும் உரைத்தல்.

அனுபவத்தை உரைத்தல். (ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் (ஐந்தாவதாகிய) இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்கனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

நிருவாணம் -

{Entry: Q17b__173}

வடநூலார் ‘நிர்வஹணம்’ என்ப. மதங்க சூளாமணி இதனைத் துய்த்தல் என்று குறிக்கும்.

கதைக்கூறுகளும் உணர்ச்சிகளும் நிகழ்ச்சிகளும் போன்ற யாவும் ஒருமுகப்பட்டுக் கதையின் முடிவும் பயனும் நிறை வுறுதல் ‘நிர்வஹண சந்தி’ ஆகும். (ம. சூ. பக். 100)

பொருள் முடிவாகிய காரியமும் அதன் முழுப்பயன்பேறும் சேர்வதால் (நிர்வஹணம்) இறுதியாகத் தொகுத்து முடித்தல் என்று கூறப்படும். இச்சந்தியில், கதைநோக்கம் நிறைவேறப் பெற்றுத் தலைமக்கள் பயனைத் துய்க்கும் நிலை இருக்கும். கதிர்களை அறுத்து, நெற்குவியல் செய்து, கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது.

உபஸம்ஹ்ருதி -

{Entry: Q17b__174}

உபசங்கிருதி என்பதும் இதுவே. ‘நிருவாணம்’ எனவும்படும். இது நாடகவியல் கொண்டது. இது 14 வகைப்படும்.

விளைந்த போகம் விதிவகையால் அறுத்துப் படுத்துவைத்துத் துகளும் களைந்துகொண்டு உண்(டு) மகிழ்ந்தாற் போலக் கொள்வது. (வீ. சோ. 106 உரை)

நிரோதம் -

{Entry: Q17b__175}

‘விரோதம்’ என்றிருக்கற்பாலது; பயன் பெறுவதில் நிகழும் தடை.

நன்மை பயத்தற்கு ஏதுவாகிய இடையீடு. (ம.சூ.பக். 98)

இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)

நிரோதனம் -

{Entry: Q17b__176}

‘விரோதனம்’ என்றிருக்கற்பாலது; சினம் முதலியவற்றால் மனம் குழம்பி வீறுகொண்டவர்களை மேலும் சினம் கொள்ளச் செய்தல்.

கோபத்தினால் தன்நிலை இழந்தோன் தனது ஆற்றலை எடுத்துக் கூறுதல். (ம. சூ. பக். 100)

இது நாடகச் சந்திகள் ஐந்தில் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

நிலை (2) -

{Entry: Q17b__177}

பாத்திரங்கள் நாடக அரங்கில் தோன்றும் நிலைகள் (Postures) . அவை ஆறுவகைப்படும். 1. நிற்றல், 2. இயங்கல் (-அங்குமிங்கு மாக நடந்து கொண்டிருத்தல்), 3. கிடத்தல் (-படுத்த நிலை), 4. இருத்தல் (-அமர்ந்திருக்கும் நிலை), 5. வருதல், 6 போதல் என்பன அவை. இவற்றுள் விதூடகன் எல்லா நிலைக்கும் உரியவன். மற்றவர்க்கு அவை அவரவர் நாடகப்பதவிக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு அமையும்.

நிலை என்றதனை ஓவிய நூலோர் தமக்கேற்ப ஒருவிதமாக வகுத்துக் கூறுவர். நாடக இலக்கணம் கூறுவோர் ஐம்பது வகையென்று வரையறை செய்து கூறிய பின் தொகுத்துக் கூறும் முறையில் ஒன்பது என்று அனைத்தையும் அடக்கிக் கூறுவர். அவை பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. (நாடக. 257-260 உரை)

நிலைக்கருத்து -

{Entry: Q17b__178}

நாடகநூலில் ஆசிரியன், பாத்திரங்களின் வாயிலாக நன்கு பொருத்தத்துடன் காட்டும் செய்கையாலும் பேச்சாலும் தம் மனத்தில் தூண்டப்பட்டெழுந்த சம்பந்தத்தின் திண்மை யால், காண்போர் (படிப்போர்) அவற்றைத் தம்முடையனவே என்ற நிலையில் அனுபவித்து உணரும் வகையில் இன்பம் அளிப்பதால் அச்சுவையை (-உணர்வை) நிலைக்கருத்து என்பர். இதுவே வடநூலார் கூறும் ‘ஸ்தாயிபாவம்’ என்பது.

இந்த நிலைக்கருத்துத் தோன்றக் காரணமாக இருப்பது விபாவம் என்பது. துணைக்கருவிகளாவன சஞ்சாரிபாவம் என்பன. இவற்றால் மனத்தில் மலர்ந்து துய்க்கப்படும் சுவை களை வெளிப்படுத்துவன சாத்துவிக பாவங்கள். இவையே அனுபாவம் எனப்படுவன; தமிழில் மெய்ப்பாடு என்றும் விறல் என்றும் கொள்ளப்படும். சஞ்சாரிபாவம் என்பன வியபிசாரிபாவம் என்றும் வழங்கப்படும்.

விபாவங்களால் தோன்றி அனுபாவங்களால் வெளிப்பட்டுச் சஞ்சாரி பாவங்களால் வலுப்பெற்று நிற்கும் ஸ்தாயிபாவமே சுவை எனப்படும். (நாடக. 54)

நின்றாடல் -

{Entry: Q17b__179}

அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுந் தெய்வக் கூத்து. (சிலப். 3 - 14, உரை) (L)

நின்றிசைக்கோலம் -

{Entry: Q17b__180}

இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; நின்ற வண்ண மாகவே இசைத்தல்; வடநூலார் கூறும் ‘இலாசியம்’ என்பதன்கண் அங்கமான ‘ஸ்திதபாட்யம்’. (நாடக. 261)

நேபத்தியம் -

{Entry: Q17b__181}

பொதுவாக நடிகர்கள் வேடம் அணிந்து கொள்ளுமிடம். இஃது அரங்கின் புறத்தே இருத்தல் இன்றியமையாதது. அங்கே, இசைக்கருவிகளும், அவற்றை இசைத்துப் பாடும் இசைவல்லுநர்களும், பாத்திரங்களுக்கு வேண்டிய ஆடை அணிகளும், நடிகர் அமர்ந்துகொள்ள இடங்களும், அவர்கள் மறைந்துகொள்ளும் இடங்களும், கூத்தர்கள் தங்கும் இடங்களும், நாடகக் காட்சிக்கு வேண்டிய அலங்காரப் பொருள்களும் போன்றவை நினைத்தபோது பயன்படும் வகையில் சித்தமாய் இருத்தல் வேண்டும்.

ஆங்கிலத்தில் இதனை ‘Green Room’ என்பதனைக் கொண்டு, பசிய அறை என்னும் பொருளில் ‘பாசறை’ என்பாரும் உளர். (நாடக. 264, 265).

ப section: 51 entries

பதம் -

{Entry: Q17b__182}

பல்லவம், அதனின் இருபங்கு அநுபல்லவம், அதனின் இருபங்காம் சரணம் - எனுமிவை தாளம் தவறாமல் அமைத்துப் பேரின்பம் பெற வழங்கும் நாடகத் தமிழியல்; ‘கீர்த்தனை’ எனவும் ‘பதம்’ எனவும் சொல்லப்பெறும். (நாடகத்தமிழியல்பு. பக் 70, நாடக. 73)

பதாகை நிலை -

{Entry: Q17b__183}

நாடகத்தில் எந்த இடத்திலும் பொருந்தி வருவதாய், நினைத்துத் தாம் எதிர்பார்த்த ஒரு பொருளில் அதே போன்ற வேறொன்று எதிர்பாராமல் வருமாறு அமைப்பது. இது நாடக பாத்திரங்கள்பால் நிகழும்; பின்வரும் வகைகளில் நிகழும்:

1. தாம் நினைத்த வேறோர் எண்ணம் எதிர்பாரா விதத்தில் செவ்விதாகப் பொருந்துவது.

2. பல அடைமொழிகள் சேர்ந்த பல பொருள் கொண்ட சொற்றொடர்களை அமைப்பது.

3. வேறு ஏதோ பொருளில் பிறர் கூறும் சொற்களுக்குத் தன் எண்ணத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளுவது.

4. சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும் அதே சமயம் நாடகத்தின் இறுதியில் நடக்க இருக்கும் பொருளைக் குறிப்பால் உணர்த்துவதாகவும் அமைந்து, ஐயம் விளைக்கும் வகை யில் நாடக ஆசிரியன் சொற்றொடர்களைப் புகுத்துவது. (நாடக. 113, 114)

பயிர்முகம் -

{Entry: Q17b__184}

பயிர்முகம் எனினும் பிரதிமுகம் எனினும் ஒக்கும். விதையி னின்று கிளைத்தெழுந்த முளை மேலும் வளர்ந்து பெரிதா வது போலத் தலைவன்தலைவியரைப் பற்றிய செய்தி நன்கு பொலிவுறும் வண்ணம் விரிவடைதல் என்னும் நாடகத்தின் இரண்டாம் சந்தி. கட்புலன் ஆகாக் களை இதில் குறிப்பிடப் படுவதில்லை. முளை தோன்றியது முதல் இலைகளும் தழைத்து நாற்று நிலையில் இருத்தல்.

முகசந்தியின்கண் குறிப்பாகக் கூறிய கதைக்கரு சற்றே புலப் பட்டும் புலப்படாமலும் இருக்கும். அதனை நன்கு வெளிப் படையாகக் காட்டுவது பிரதிமுக சந்தியாம். விதை முளைத்து வந்த நாற்றுப் போலுதலின் ‘பயிர் முகம்’ எனப்பட்டது போலும். விந்துவும் பிரயத்தனமும் (-விரிநிலையும் முயற்சி யும்) இணைவது பிரதிமுகம் அல்லது பயிர்முகம் ஆம். இது பன்னிரு வகைப்படும். (ம. சூ. பக். 98)

முளைத்த அங்குரம் ஓங்கி மூத்தாற் போலத் தலைமக்கள் பற்றிச் சொன்ன பொருளைப் பொலியுமாற்றால் விரிவால் சொல்வது. (வீ. சோ. 106 உரை)

பரத நாட்டியம் -

{Entry: Q17b__185}

கூத்துவகைகளுள் ஒன்று; உள்ளக் குறிப்பு வெளிப்படத் தோன்றும் வகையில் அவிநயத்துடன் கூடிய பலவகை ஆடல்களும், இராகபாவம் நன்கு அமைந்த இனிய பாடல் களும், காண்போர் நெஞ்சைக் கவர்ந்திடும் வனப்பு மிக்க கூத்து. இது காமக்கணிகையரால் ஆடப்படுவது. (நாடக. 201)

பரதவாக்கியம் -

{Entry: Q17b__186}

நாடகம் முடிந்தபின், நாடகத்தின் தலைவனாக நடித்த நடிகன் அரங்கில் வந்து நின்று, நடித்த நாடகநூலினையும் அதனை இயற்றியவனையும், அவனுடைய ஆசானையும் தமிழ்மொழி யினையும் தமிழ்ப்புலவர்களையும் பாட்டால் வாழ்த்துவது.

பின்னுரையில் கூற வேண்டியவற்றையும் சேர்த்து இதனைச் செய்வதுமுண்டு. (நாடக. 220)

பரிகரம் (1) -

{Entry: Q17b__187}

நாடகப் பொருள் மேலும் விரிவடைதல்.

பரிக்கிரியை: விதையினது-கதைக் கருவினது-அகற்சி.(ம.சூபக். 98)

இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)

பரிசர்ப்பம் -

{Entry: Q17b__188}

விழையும் இன்பம் தரவல்லதாய்த் தான் முன் கண்ட பொருள் மறையப் பின் அதனை நாடிச் சேறல்; கண்டு பின்பு இழந்த பொருளைக் காதலித்துத் தேடல். (ம.சூ.பக். 98).

இது நாடகச் சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106).

பரிநியாசம் -

{Entry: Q17b__189}

நாடகப்பொருளின் பயனை (- முடிவினை) வெளிப்படை யாக்குதல். விதையின் (-கதைக்கருவின்) நிலைபேறு. (ம. சூ. பக். 78.)

பரிபாடணம் -

{Entry: Q17b__190}

சந்தித்து உரையாடல்.

கலந்துரையாடல் (ம.சூ.பக். 100).

இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய நிருவகணத்தின் அங்கம் பதினான்களுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை).

பரிபாவனை -

{Entry: Q17b__191}

ஐவகை நாடகச் சந்தியுள் முதலாவதான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுன் ஒன்று. (வீ. சோ. 106 உரை).

பரிபாவனை - பரிபாவகம் -

{Entry: Q17b__192}

ஆர்வம் நிறைந்த பரபரப்பைத் தரும் செய்தியை வியப்புற்று நோக்குதல். (ம. சூ. பக்.98)

பரியுபாசனம் -

{Entry: Q17b__193}

அணுகி நின்று குறையிரந்து வழிபடுதல்.

நயமொழி. (ம. சூ. பக். 98)

இது நாடக சந்தி ஐந்தனுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106)

பரோட்சம் -

{Entry: Q17b__194}

கண்ணுக்கெட்டாதது; அரங்கிலுள்ளோர் காதில் விழாத படி கூறும் மொழி. புறக்கூற்று நோக்குக. (L)

பறைமை -

{Entry: Q17b__195}

வரிக்கூத்து வகை. (சிலப். 3 : 13 அடியார்க்.)

பனித்தலைப்பட்டோன் அவிநயம் -

{Entry: Q17b__196}

1. உடல் கட்டுக்கடங்காமல் நடுங்குதல், 2. அந்நடுக்கம் பிறர் பரிகசிப்புக்கு இடனாதல், 3. பேசும்போது பனி தாக்கியதால் கம்பீரம் இன்றித் தளர்வொடு பேசுதல், 4. சொல்லத் தெரியா மல் உடல் வேதனைப்படுதல், 5. போர்வையைப் போர்த்திக் கொள்ள விரும்புதல், 6.மனம் வருந்திச் சோர்தல், 7. கண்கள் நீர் சோர்தல் 8. சந்தனம் முதலியன பூசுதலை வெறுத்தல் முதலியன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன). (நாடக. 253 உரை)

பாணம் (1) -

{Entry: Q17b__197}

இதில் ஓரங்கம் மாத்திரமே உண்டு; காமம் வீரம் இரண்டும் விளங்கும். ஒரே பாத்திரம் தன் அனுபவத்தையும் பிறர் அனுபவத்தையும் விரித்துக் கூறிப் பாட்டும் ஆட்டமுமாய் நிகழ்த்துவது. (நாடக. 126)

பாணம் (2) -

{Entry: Q17b__198}

இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று. தூர்த்தனும் தலைவனும் இதன்கண் வருவர். அவர்கள் கூற்று ஐவகைச் சந்தியுள்ளும் வரும். அவர்கள் தாமேயும் பேசுவர்; பிறர் கூற்றை எடுத்து மொழிந்தும் பேசுவர். கடைசியில் சந்திஅங்கம் ஒன்றாகும். (வீ. சோ. 106 உரை)

பாணிகை -

{Entry: Q17b__199}

உபசாதி நாடகம். இந்நாடகத்தின் தலைவன் தகுதியற்றவனா யிருப்பான். ஆயின் தலைவி சுகுணை வகையைச் சார்ந்தவ ளாய் இருப்பாள். உயர்ந்த அழகிய உடைகள் அணிந்த தலைவனும் தலைவியும் காட்டப்படுவார்கள். கைசிகி, பாரதி என்னும் இரண்டு விருத்திகளையும் பெறும் இது ஓர் அங்கமே உடையது. (நாடக. 157)

பாத்திரச் சிறப்பியல்பு -

{Entry: Q17b__200}

பாத்திரங்கள் தம் இயல்பில் முன்னுக்குப் பின் முரண்படும் தன்மை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பாத்திரமும் தனக்கே உரிய ஒரு தனித்தன்மை பெற்றிருத்தல் வேண்டும். நாடக ஆசிரியன், எப்பாத்திரத்தின் வாயிலாக எப்பண்பை உணர்த்த விரும்பினானோ, அது நன்கு வெற்றி பெறுதல் வேண்டும். (நாடக. 115)

பாத்திரம் -

{Entry: Q17b__201}

நாடகக் கதையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் அசுரர், தேவர், அரக்கர், முனிவர், யோகியர், மக்கள் ஆவோர். பாரதி கூத்தனையே தலைவனாகக் கொண்டு இழிப்பும் அச்சமும் பட வருவது. (வீ. சோ. 106 உரை.)

அசுரரைக் கொல்ல அமரர் ஆடிய பதினோராடலும் ஆம். இது ‘தெய்வ விருத்தி’ எனப்படும். (ம. சூ. பக். 16)

முன்னைய விருத்திகள் மூன்றும் (சாத்துவதி, ஆரவடி, கைசிகி போலன்றி, முன்னுரையில் முதன்மை பெற்று, கூத்தன் நாடகத்தலைவனாக, நடிகை நடர்கள் கூறப்படும் பொருளாகக் குறிப்பாகக் காட்டியும் வெளிப்படையாக எடுத்துரைத்தும், சற்றே வலிமை பொருந்திய சொற்றொடை பெற்று இழிப்புச் சுவையும் அச்சச்சுவையும் நிரம்பி வருவது. பாரதி விருத்தி என்பதும் அது. (நாடக. 172 ) (நாடக. 81, 82.)

பாவைக் கூத்து -

{Entry: Q17b__202}

கூத்துப் பதினொன்றனுள் அவுணர் மோகித்து விழும்படி கொல்லிப்பாவை வடிவுகொண்டு திருமகள் ஆடிய ஆடல். (சிலப். 6: 60, 61) (L)

பிரகசனம் -

{Entry: Q17b__203}

நகைச்சுவை மிகுதியாகப் பெற்ற நாடக வகை இது. இதன் பாத்திரங்களிடையே, முனிவர், தேவர், மறையோதிய அந்தணர் போன்றோர் வருவர். இப்படி வரும் பாத்திரங்கள் இழிதகவும் பழியும் பெறும். அஃதாவது அவர்களை இழித் தும் பழித்தும் கதைப்போக்கு அமையும். வெறும்போலிக ளான மக்கட்பதர்கள் நாடகத்தலைவராய் அமைவர். சாத்துவதி, கைசிகி என்னும் விருத்திகளும் அமையும். நகைச் சுவைக்கே இது தலைமை வாய்ந்தது. ஓர் அங்கமோ இரண்டு அங்கங்களோ இதன்கண் இருக்கும்.

சாத்துவதி, கைசிகி என்னும் விருத்திகளின் விளக்கம் தனித் தனித் தலைப்பில் காண்க. (நாடக. 134)

பிரகமனம் -

{Entry: Q17b__204}

கூற்றும் மாற்றமுமாகச் செல்லும் உரையாடல் பிரகமனம். மறுமொழிபெறுதல். (ம. சூ. பக்.98)

இது நாடகச் சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில ஒன்று. (வீ. சோ. 106 உரை)

பிரகரணப் பிரகரணம் -

{Entry: Q17b__205}

அறம் பொருள் இன்பம் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடக வகை. (சிலப். 3 : 13 உரை) (L)

பிரகரணம் -

{Entry: Q17b__206}

அந்தணன் வணிகன் அமைச்சன் ஆகியோருள் ஒருவனைத் தலைவனாகக் கொண்டு, கற்புடைய ஒருத்தியோ பரத்தையோ இருவருமேயோ தலைவியராக, நாடகம் போலவே ஐந்து அங்கங்கள் அளவுக்குக் குறையாமல், உவகைச்சுவை பெரிதும் பெற்றுவருவது இந்நாடகச் சாதி நூலாகும். (நாடக. 125)

பிரகரணி -

{Entry: Q17b__207}

உபசாதி நாடகம். நாடகத்திற்கும் நாடிகைக்கும் இடையே எந்த அளவு வேறுபாடு உண்டோ, அந்த அளவு பிரகரணத் திற்கும் இதற்கும் இடையே வேறுபாடு காணப்படும்.

தலைவனும் தலைவியும் வணிகர்களாக, மற்ற எல்லாவிதத் திலும் நாடிகை போலவே அமைவது. (நாடக. 155)

பிரசங்கம் -

{Entry: Q17b__208}

பெரியோரை நினைத்து விளித்தல், உடனடித் தொடர்பற்ற (அஃதாவது கதைநிகழ்வுடன் இன்றி அதன் கடந்த காலத் தொடு தொடர்புடைய) பொருள்களையோ நிகழ்ச்சிகளை யோ கூறுதல்.

பிரசங்கம்-பெரியோரைப் போற்றுதல். (ம. சூ. பக். 100)

இது நாடக சந்திகள் ஐந்தில் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

பிரசத்தி -

{Entry: Q17b__209}

பிரசஸ்தி; அஃதாவது மங்கலவாழ்த்து.

பிரசத்தி-ஆசிமொழி (ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் இறுதி சந்தியாம் ஐந்தாவதாகவுள்ள நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று.

பிரசனம்

{Entry: Q17b__210}

பூர்வபாவம்; காரியத்தைக் கண்டறிதல்

பூர்வபாவம்-கரும முடிவை எதிர்நோக்குதல். (ம.சூ. 100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தியாம் ஐந்தாவதாகவுள்ள நிருவ கணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ.சோ. 106 உரை)

பிரத்தானம் -

{Entry: Q17b__211}

உபசாதி நாடகம். இது பாரதிவிருத்தியில் அமையும். நாடகத் தின் தலைவனும் தலைவியும் அடிமைத்தொழில் செய்யும் மக்களா யிருப்பர்; உபநாயகனும் உண்டு. இதன்கண் இரண்டு அங்கங்கள் உள; நாடக பாத்திரங்கள் கள் குடித்த களிப்பில் தம் கருத்துக்களைக் கூறுவதும், செய்துமுடிப்பதும் நிகழும். (நாடக. 143 )

பிரதிநாயகன் -

{Entry: Q17b__212}

கதாநாயகனுடைய முதன்மையான பகைவன். (L)

பிரதிமுகம் -

{Entry: Q17b__213}

‘நாடகச் சந்தி ஐந்தனுள், முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவது போல நாடகப் பொருள் நிற்பது’ (சிலப். 3:13 உரை). ‘பயிர்முகம்’ என்னும் வீரசோழிய உரை.

பிரரோசனம் -

{Entry: Q17b__214}

நிகழப்போவதை நிகழ்ந்து விட்டதாகவே உறுதி பற்றி வந்த உணர்வால் வலியுறுத்திக் கூறுதல்.

நன்மைப்பேறு வரும் என்னும் துணிவினால் மேல் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை நோக்குதல். (ம. சூ. பக். 100)

இது நாடகச் சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று (வீ. சோ. 106 உரை)

பிரஸ்தாவனை -

{Entry: Q17b__215}

நாடகம் தொடங்குகையில், அவையோர்க்கு நாடகக் கதையை உணர்த்தும் தோற்றுவாயுறுப்பு. (L)

பிராசனம் -

{Entry: Q17b__216}

நாடக சந்தியுள் ஒன்று.

பிரகசனம், சுத்தமும் சங்கீரணமும் என இரண்டாம். சுத்தம், தக்காரை இகழ்ந்து வருவது; சங்கீரணம், பாஷண்டன் தலைவனாக இருப்பத் தோழியர் கணிகையர் தூதர் அலிகள் பேடியர் என்றிவர்களையுடையது, இறுதிக்கண் சந்தியின்றி அங்கம் ஒன்றாவது. (வீ. சோ. 106 உரை)

பிராத்தி -

{Entry: Q17b__217}

வடமொழியில் ‘ப்ராப்தி’ (-அடைதல்) எனப்படும்; நாடகப் பொருளாகிய பயன் பெறப்படுதல்.

பிராத்தி-சுகத்தினை அடைதல் (ம. சூ. பக். 98)

இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

பிரேங்கணம் -

{Entry: Q17b__218}

உபசாதி நாடகம்; சூத்திரதாரன் கூறும் முன்னுரை பெறாமலும், நாட்டியம் குரவை போன்ற கூத்துக் கலவாம லும், சாத்துவதி ஆரவடி கைசிகி பாரதி என்னும் நான்கு விருத்திகளிலும் அமைந்து, மற்போரும் விற்போரும் நிகழ வருவது. இதன்கண், நாடகத் தலைவன் ஓர் இழிந்த பாத்திர மாகவே அமையும். இதில் ஓரங்கம்தான் உண்டு. (நாடக. 147)

பிற தலைவர் -

{Entry: Q17b__219}

1. தீரோதாத்தன் 2. தீரசாந்தன் 3. தீரோத்ததன் 4. தீரலலிதன் என்னும் நால்வரில் ஒருவன் நாடகத்தலைவனாகும்போது, கதைப் போக்கிற்கேற்ப அ) உபநாயகன் என்பானும் ஆ) பீடமர்த்த நாயகன் என்பானும் வருதல் உண்டு.

அ) உபநாயகன் - உதவித் தலைவன், இலக்குவன் போல; தலைவனை ஒத்த தலைமையியல்புடையோன்.

ஆ) பீடமர்த்த நாயகன் - நாடகத் தலைவனுக்கு உற்ற துணைவன் இவன்; தலைவனைவிடச் சற்றே குறைந்த நிலையுடையவன்; தலைவனுடைய காரியங்கள் பலவற்றிலும் பங்குடையவன், சுக்கிரீவனைப் போல. (நாடக. 91- 93)

பின்னுரை -

{Entry: Q17b__220}

நாடகத்தின் முடிவில் தலைமைப்பாத்திரங்களில் ஒருவன் அரங்கில் தோன்றி நிகழ்ந்த நாடகத்தால் புலப்படும் நீதியை நன்கு விளக்கி நாவன்மை தோன்றப் பேசி, இன்னிசையால் கடவுளை வாழ்த்தியும் அவைக்களத்தோரைப் பாராட்டும் நன்றியுரை தெரிவித்தும் போவது.

சூத்திரதாரனே பின்னுரை கூறுவதும் உண்டு. பின்னுரை கூறாத நாடகங்களும் உள. (நாடக. 217 - 219)

புட்பம் -

{Entry: Q17b__221}

நயம் கூடும் வகையில் ஒருவர் கூற்றை மற்றவர் மேலும் சிறப்புறுத்திக் கூறுதல்.

புட்பம் - நன்னயக் குறிப்பு. (ம.சூ. பக். 98)

இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

புறக்கூற்று -

{Entry: Q17b__222}

நாடக உறுப்பாகிய களம் ஒன்றில் பொருந்திய நாடக பாத்திரங்கள் பலருள்ளும், ஏனையோர் கேளாதவாறு சிலர் தம் முள்ளேயே பேசிக்கொள்ளும் கூற்று. இதனை ஆங்கிலத் தில் (Aside Speech) என்பர். (நாடக. 196)

புறவரி -

{Entry: Q17b__223}

கூத்துவகையேழனுள் ஒன்றான வரிக்கூத்து வகை எட்டனுள் ஒன்று.

வருக என அழைத்தபின் தலைவி வந்து, இன்பமுற விரும்பும் தலைவனோடு இணைந்து கூடாமலேயே, புறத்துநின்று விளையாடுதல். (சிலப். 8 : 90 - 93) (நாடக. 210)

புனைவு முறை -

{Entry: Q17b__224}

நாடகக் கதையைப் புனையும் முறை. நாடக பாத்திரம் இந்தப் பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்ப உரிய முறையில் நன்மையும் தீமையும் அடையும் பொருத்தம் தோன்ற நாடகத்தை இயற்றல் வேண்டும். (நாடக. 222)

பெயரீடு -

{Entry: Q17b__225}

நாடகங்களுக்குப் பெயரிடும் வகை. தலைவன்தலைவிய ருடைய பெயரினையோ, நாடகக் கதையில் மிகச் சிறப்பான செய்தியினையோ சார்த்தி நாடகங்களுக்குப் பெயரிடல் வேண்டும். (நாடக. 221)

பெருமிதத்தின் அவிநயம் -

{Entry: Q17b__226}

புருவம் ஏற்றி வளைத்தலும், கண் சிவத்தலும், வாளைப் பிடித்தலும், பற்களைக் கடித்தலும், உதடுகள் துடித்தலும், அவற்றைக் கடித்தலும், புருவம் நெருங்குதலால் நெற்றித் தோல் சுருங்குதலும், திட்பம் அமைந்த பேச்சும், பகைவரைப் பொருட்படுத்தாமையும், அவர்களை இகழ்தலும், இவ் வுணர்ச்சிகளைக் காட்டும் வேறு நடிப்புச் செயல்களும் ஆம். (நாடக. 244.)

பேடு -

{Entry: Q17b__227}

கூத்துப் பதினொன்றனுள் ஒன்றானதும், வாணனாற் சிறை யிடப்பட்ட தன்மகன் அநிருத்தனைச் சிறை மீட்டுப் பிரத்தியும்நன் ஆடியதுமான கூத்து.

(சிலப். 6 - 56, 57; மணி. 3 : 116 - 125)

பேதம் -

{Entry: Q17b__228}

இணைந்த பல இடையூறுகளை உடைத்துக் களைந்து உற்சாக மூட்டுதல்.

பேதம் - வேதை; மேல் நோக்கும் இயக்கம். ம.சூ.பக். 98 இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)

பேய்க்காரம் -

{Entry: Q17b__229}

இது வீரசோழிய உரையுள் குறிப்பிடப்படும் நாடகச் சாதி யுள் ஒன்று. இதன்கண், தேவசாதி, கந்தருவசாதி பைசாச சாதியைச் சேர்ந்த பதினாறுபேர் வருவர்; பெண்பாத்திரம் ஒருதலையாக நிகழும். வீரம், கூச்சம், அர்ப்பாயம், வியோகம், பாணம், சல்லாபம் இவற்றிற்குரிய கதைச் சுருக்கங்களில் ஒன்றனைப் பெற்று வரும். இஃது ஒரே அங்கமுடையது; ஒரே கண்டமுடையது. இஃது இடிமம் என்ற நாடகச் சாதியோடு ஒருபுடை ஒப்புமையுடையது. (வீ. சோ. 106 உரை)

பொதுவியல்பு -

{Entry: Q17b__230}

நாடகவியலில் முதற்பகுதி; இதன்கண் கீழ்க்கண்டவை கூறப்படுகின்றன;

1) முத்திறக்கதை, 2) நாற்பொருள், 3) ஐந்து சந்தி, 4) ஒன்பான் சுவை, 5) மூன்று வகைப் பொருத்தம், 6) மூன்று விதமான நடை, 7) கவி கூற்று இன்றிப் பாத்திரமே கூறுதல், 8) கதாந்தம் இரண்டு, 9) பாத்திரங்களின் இயல்பு அறியும் செவ்வி, 10) நாடகப் பாத்திரங்களின் சிறப்பியல்புகள் பொலிவுறுதல் என்பன. (நாடக. 11)

பொருத்தம் மூன்று வகை -

{Entry: Q17b__231}

பொருத்தமாவது ஒற்றுமையுடைமை. நாடகத்தில் வரும் இடமும், காலமும், செயலும் நன்கு பொருந்துதல் வேண்டும். இப்பொருத்தமுடைமையை மேலைநாட்டார் ` Unity ’ என்பர்.

1. இடப்பொருத்தம் - (Unity of place)

2. காலப் பொருத்தம் - (Unity of time)

3. செயற்பொருத்தம் - (Unity of action)

இது கிரேக்க நாட்டு நாடக இலக்கணம் கூறும் கருத்து.

(நாடக. 61 உரை)

பொருள் -

{Entry: Q17b__232}

அரசனது செங்கோல் முறையையும், அரசின் அங்கமான வற்றின் தன்மைகளையும் கூறும் பொருட் பகுதி. அரசு அங்கம் ஆறாவன படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. (கு. 381) (நாடக. 23)

ம section: 8 entries

மழைபெய்யப்பட்டோன் அவிநயம் -

{Entry: Q17b__233}

1. பிறர் அருவருத்தும் பழித்தும் நோக்குமாறு உடல்மழை நீரால் நனைந்தும் ஆடைகள் நீரிலும் சேற்றிலும் தோய்ந்தும் காணப்படும் இயல்புடைமை,

2. உடம்பின்கண் ஈரத்தின் குளிர்ச்சியால் ஏற்பட்ட நடுக்கம்,

3. நடுக்கத்தால் கைகளை மார்பொடு பிணித்துக்கொள் ளுதல்,

4. ஈரம்போக உலர்ந்த துணியால் உடம்பை முகம் மறையப் போர்த்திக்கொள்ளுதல்.

5. மனம் சோர்ந்திருத்தல்,

6. கண்ணொளி மழுங்கியிருத்தல்,

7. காற்றொடு கூடிய மழை தாக்கியதால் காதடைத்திருத்தல்,

8. குளிரால் உடம்பு வெட்டிவெட்டி இழுத்தல்,

9. கீழ்வாய் மேல்வாய்ப் பற்கள் ஒன்றோடொன்று தாக்கி ஒலியெழுப்புதல்,

10. கனவில் மழையில் நனைவதாகக் கண்டு திடீரென்று விழித்தெழுதல் முதலியன.

இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை)

மாநாடகம் -

{Entry: Q17b__234}

பதாகை யென்னும் இடைக்கதை; கிளைக்கதைகளின் நான்கு நிலைகளும் நன்கு அமைந்து, நாடகத்தின் பல்வேறு சிறப் பான பகுதிகளும் முழுவதும் வரப்பெற்று, உவகைச்சுவை பெருமிதமாகிய வீரச்சுவை - என்னும் இரண்டையும் மிகவும் மேம்படுத்திக் காட்டி, பத்து அங்கங்களுடன் அமைவது.

`பதாகை நிலை’ என்ற தனித்தலைப்பில் காண்க. (நாடக. 161)

மார்க்கம் -

{Entry: Q17b__235}

உள்ளதை உள்ளவாறே உரைத்தல்.

மார்க்கம் - உண்மைக் கருத்தினைக் குறிப்பிடுதல்.

(ம. சூ. பக். 99)

இது நாடகத்தின் மூன்றாவது சந்தியான கர்ப்பத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 166 உரை)

முகத்துரை -

{Entry: Q17b__236}

தானே நேரில் நின்று பேசுதல். (இ. வி. 563 உரை)

முகம் -

{Entry: Q17b__237}

உழுத புழுதியினின்று முளைத்தாற்போலக் கூத்தின் முகத்தி னுள்ளே பொருள் தோன்றுவது. அஃதாவது விதை முளைத் தாற்போல, நாடகத் தொடக்கத்திலேயே நாடகப் பொருள் தோன்றுவது. (வீ. சோ. 106 உரை)

நாடகக் கதை செவ்வனே தொடங்கி, உழுது சேறான நிலத்தில் இட்ட விதை முளைத்து வெளிப்படுதல் போல்வது. (நாடக. 33)

நாடகக்கதையின் மூலமான கருத்து - பல்வேறு உணர்ச்சி களும் வெளிப்படத் தோன்றும் இடம் - நாடகக் காப்பியத் தொடக்கமாம்.

முகம் - முகசந்தி எனப்படும். கதைக்கரு சிலேடையாகவும் குறிப்பாகவும் வெளியிடப்படுவதும் இதுவே. கதைக் கருவா னது வடநூல்களில் `பீஜம்‘ (- விதை) எனப்படும். இது நாடகத்தின் முதல் சந்தி.

பீஜமும் ஆரம்பமும் சேர்ந்து அமைவது முகம்; பல்வகைப் பொருளுக்கும் சுவைக்கும் முதலாகி நிற்றலாலும், விதையி லிருந்து தோன்றியதாலும் முளை போல்வது. (ம. சூ. பக். 97)

முதல் இடை கடைக் கூத்துக்கள் -

{Entry: Q17b__238}

கூத்து நடாத்துநராகிய சூத்திரதாரன், நடி, நடன் என்ற மூவரும், காலம் இடம் செயல் ஆகிய மூன்றையும் நன்கு வருணித்துக் கூறும் ஆற்றலுடையவர்களாக இருப்பர்; அவருள் ஒருவர், முன்வந்து அரங்கில் நின்று, நாடகத்தின் மூலம் கூறும் நீதிகளை இனிய இசைப்பாட்டுக்களால் நாடகத்தின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் பாடி ஆடும் கூத்துக்கள் இவை.

எவ்வகைக் கூத்தும் நிகழாத நாடகங்களும் உள.

(நாடக. 215, 216)

முந்நாடகம் (Triology) -

{Entry: Q17b__239}

ஒரு பெரிய `விஷயத்தின், (கதையின்) முதல் இடை கடை என்னும் மூன்று நல்ல பகுதிகளையும் தனித்தனியே மூன்று நாடகங்களாக இயற்றி மூன்றையும் தொடர்ச்சியாகத் தொகுத்து வைத்தல். (இது மேனாட்டார் கருத்து.)நாடக. 162.

முன்னுரை -

{Entry: Q17b__240}

நாடகத் தொடக்கத்தில் கூறப்படும் பொருள்; சூத்திரதாரன், அரங்கில் கூடியுள்ள அவையினரை வணங்கி, தன் துணைவர் களான நடியையும் நடனையும் அழைத்து, அவர்களுடன் உரையாடும் வாயிலாக நாடக ஆசிரியனுடைய நல்ல இயல் புகளை எடுத்துரைத்துக் கதை நிகழும் பருவகாலத்தை வருணித்து இனிய இசைபாடச் செய்து, அவையோரை மகிழ்வித்துக் கூறும் தொடக்கவுரை. இதனை வடநூலார், ‘ஆமுதம்’ எனவும், ‘பிரஸ்தாவனை’ எனவும் கூறுப ஆங்கி லத்தில் இது Prologue எனப்படும். (நாடக. 183)

ய section: 3 entries

யாப்பிசைக் கோலம் -

{Entry: Q17b__241}

இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; இசைக் கருவி களின் ஒலிக்கு இணங்க இசை கூட்டிப் பற்பல யாப்பின் விகற் பங்களைத் தெரியக் காட்டிப் பாடி ஆடவரும் பெண்டிரும் தத்தம் இயல்புக்கு மாறாக நடித்தல்.

வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான ‘புஷ்ப கண்டிகா’ இது. (நாடக. 261)

யுக்தி -

{Entry: Q17b__242}

நாடகப் பொருள் நிறைவேறுதற்கான வழிகளை ஆராய்தல். யுக்தி - இது செய்வோம் என நிச்சயித்தல். (ம. சூ. பக். 98)

இது நாடக சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டனுள் ஒன்று. (வீ. சோ. 106)

யோனி நான்காவன -

{Entry: Q17b__243}

1. உள்ளோன் தலைவனாக உள்ள துரைத்தல். 2. இல்லோன் தலைவனாக இல்லது இசைத்தல். 3. உள்ளோன் தலைவனாக இல்ல துரைத்தல். 4. இல்லோன் தலைவனாக உள்ளது இயம்பல் என்பன முதலாவது மெய்யுரை; இரண்டாவது பொய்யுரை; ஏனையிரண்டும் புனைந்துரை.

யோனி ‘ஒளி’ எனவும் படும். (நாடக. 17, 18, 19)

வ section: 40 entries

வச்சிரம் -

{Entry: Q17b__244}

கொடுஞ்சொற் கூறுதல்.

வச்சிரம் - கடுஞ்சொற் கூறுதல். (ம. சூ. பக். 98)

இது நாடகச்சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

வரிக்கூத்து -

{Entry: Q17b__245}

கூத்துவகை ஏழனுள் ஒன்று; நடிப்போர் தாம் விரும்பி நடிக்க மேற்கொண்ட கோலத்திற்கு ஏற்ப, உணர்ச்சியும் செயலும் வெளிப்படுமாறு நடிக்கும் வினோதக் கூத்து.

இக் கூத்துக்குரிய வரி 1. கண் கூடுவரி, 2. காண்வரி, 3. உள்வரி, 4. புறவரி, 5. கிளர்வரி, 6. தேர்ச்சிவரி, 7. காட்சி வரி, 8. எடுத்துக் கோள் வரி என எட்டுவகைப்படும். (நாடக. 205, 206)

வரிப்பாட்டு (1) -

{Entry: Q17b__246}

அகப்பொருள்துறைக் கருத்துடன், உவகைச் சுவையோடு, இராகமும் அதன் உட்பிரிவும் செயன்முறையும் தாளமும் பலவாறு மாறிவரும் வகையில், எட்டும் ஆறுமாகிய தாள விகற்ப இயல்புகளைப் பெற்று, பாடலின் முதலும் இறுதியும் சீர்குறைந்த அடிகளைக் கொண்டோ எல்லா அடிகளும் சீர்குறைந்த அடிகளைக் கொண்டோ எல்லா அடிகளும் சீர்குறைந்த முடப்பாட்டாகவோ முடிந்து, அகப்பொருளில் கூறப்பட்ட சந்தியும் சார்த்துக்களும் பெற்றும் பெறாமலும், தெய்வத்தைக் குறித்தும் மக்களைத் துதித்தும் இனிமையாகப் பாடப்படுவது.

சந்தி - நாடக உறுப்பாக வரும் சந்திகள்;

சார்த்து - பாட்டுடைத் தலைவனுடைய ஊரும் பெயரும் சார்த்திப் பாடுவது; இது முகச் சார்த்து, முரிச் சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைத்து முகச்சார்த்துவரிக்கு மூன்றடிச் சிறுமை, ஆறடிப் பெருமை. ‘வரிப்பாட்டு வகை’ காண்க. (நாடக. 76)

வரிப்பாட்டு (2) : வகைகள் (2) -

{Entry: Q17b__247}

பண்ணும் திறனும் விரவுற்ற தாளமும் என்னுமிவை பொருந்தி, நாற்சீரடி முதலாகப் பலசீரடிகளால், விருத்தம் ஒன்று மூன்று அடுக்கியும் ஈற்றடி குறைந்தும், இடையடி மடக்கடியாயும், தெய்வத்தைச் சுட்டியும் மக்களைப் புகழ்ந்தும் வருவது வரிப்பாட்டாம். பொருளமைவாலே, இஃது ஆற்றுவரி - கானல்வரி - நிலவரி - முரிவரி - திணை நிலைவரி - சார்த்துவரி, மயங்குதிணை நிலைவரி - சாயல்வரி - வேட்டுவவரி எனப் பலவகைப்படும். (தென். இசைப். 10)

வரிப்பாட்டு வகை : விளக்கம் -

{Entry: Q17b__248}

1. ஆற்றுவரி - தடங்கலின்றிச் செல்லும் இழுமென்னும் ஓசை யுடன் தடைப்படாமற் செல்லும் ஒழுகுவண்ணத்துடன், ‘தன்னுள் கையா றெய்திடு கிளவி’ என்ற அகப்பொருள் துறையை ஆற்றின்மேல் வைத்துப் பாடப்படுவது.

2. சார்த்துவரி - அ) முகம் ஆ) முரி இ) கொச்சகம் என்ற மூன்று பகுதியாகத் தனது உள்ளக் கிடக்கையைத் தன்னை ஆட்கொண்ட தலைவனது ஊர்ப்பெயருடன் சார்த்தி இசைக்கப்படுவது.

3. கானல் வரி - கடற்கரைச் சோலையில், காமநோய் மிகுந்தபொழுது தலைவன்தலைவியர் இருவரும் தம்முள் ஒருவர் மற்றவருடைய எழில்நலம் மிக்க உறுப்புக்களை உற்றுநோக்கிக் காதலுறப் பாடப்படுவது.

அ) முகம் - வரிப்பாட்டுக்கு முகமாய் நிற்றலின் இப்பெயர் பெற்றது.

ஆ) முரி - தொடங்கிய இயலையும் இசையையும் அவற்றுள் முரித்துப் பாடுவது.

இ) கொச்சகம் - முகத்தாலும் முரியாலும் தோன்றிய வேறுபட்ட பொருண்மையெல்லாம் தன்னகத்து அடக்கி, ஒரு நெறிப்படுத்தலால் இப்பெயர் பெற்றது.

4. நிலைவரி - முகமும் முரியும் முடிவுபெற நின்று தான் மனத்தில் நினைந்த பொருளே எதிரில் தோன்றித் தன்னை வருத்த, உருவம் மாறி இங்கு வந்து நிலைபெற்றது போல மயங்கி உள்ளம் வருந்தி அப்பொருளின் பெயரை மீண்டும் கூறுவது.

5. முரிவரி - துயரம் தாங்காமல் அஃறிணைப் பொருள்களை விளித்து, தன்னை வருத்தும் பொருள்கள் இன்னவை என்று புலம்பி, (அராகம் தொடுப்பதாகிய) உருட்டு வண்ணப்பாவால் பாடப்படுவது.

6. திணைநிலை வரி - அகப்பொருள் ஐந்திணை கட்கும் அமைந்த உரிப்பொருள்களின் இயல்பை விளக்கிப் பாடப்படுவது.

7. மயங்கு திணைநிலைவரி - ஐந்திணையின் கருப்பொருள்கள் தம்முள் ஒன்றோடொன்று மயங்குதலைக் காட்டி, உரிப்பொருளையும் காட்டிப் பாடப்படுவது.

8. சாயல்வரி - தலைவி, தன் மனத்தில் காதலை விதைத்த தலைவனை நினைந்து, அவனுடைய அழகை நினைவு கூரும் வகையில் ஓரடி இடையில் மடக்கி வரும்படிப் பாடப்படுவது.

9. முகமுடை வரி - மூன்றடிகள் முதல் ஏழடிகள் வரை அமையப் பாடப்பெறுவது; சிந்தடியும் நெடிலடியுமாய்ப் பொருந்தியும் பொருந்தாமலும் வரப்பெறும்; முகம் என்னும் உறுப்பொடு பாடப்படுவது.

10. முகமில் வரி - பிரிவால் வாடி வருந்திய மனநிலையில், பறவைகளுடனும் விலங்குகளுடனும் பேசிப் புலம்பும் தலைவனோ தலைவியோ, ஏனையவருக்குத் தன் துயரத்தைக் கூறுமாறு வேண்டி, மும்முறை அடுக்கிவரப் பாடப்படுவது.

11. படைப்பு வரி - ஒன்றாகவோ, பலவாகவோ, வெண்பா வாலோ ஆசிரியப்பாவாலோ, கொச்சகம் பெற்றோ பெறாமலோ, உறுப்புக்கள் பலவும் பெற்றுவரும் வகையில் பாடப்படுவது.

இவை போன்ற வேறுவகையான வரிப்பாட்டுக்களும் இசை நாடக நூலறிஞர் இனிமை பயக்க அமைப்பதும் உண்டு. (நாடக. 77)

வருணசங்காரம் -

{Entry: Q17b__249}

பிறர் கூறியவற்றைக் குறைகண்டு மறுத்தல்.

எல்லாப் பிரிவினரையும் ஒன்று கூட்டிக் கூறுதலும் இதுவே.

வருணசங்காரம் - நால்வகை வருணத்தாரும் ஓரிடத்தில் ஒருங்கு கூடுதல். (ம. சூ. பக். 98)

இது நாடக சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

வருத்தம் உற்றோன் அவிநயம் -

{Entry: Q17b__250}

பொருத்தமில்லாது துன்பத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளுதல், உடம்பு சோர்தல், தலைமயிர் குலைதல், வியர்வை மிகுதல். அடிக்கடிச் சிறிய கொட்டாவி விடுதலைப் போன்ற சோர்வு தோற்றுதல், உதடுகள் வறண்டுபோதல், உறுப்புக்கள் துவண்டு காணப்படுதல் போல்வன. (இவை அடியார்க்குநல்லார் காட்டுவன) (நாடக. 253 உரை)

வாரம் -

{Entry: Q17b__251}

‘செய்யுள் இயக்கம் காண்க.’

வாழ்த்து -

{Entry: Q17b__252}

இறைவனை வணங்குமுகத்தான் நாடகத் தலைவனையும் தலைவியையும் வணங்குதல். வடநூலார் கூறும் அரங்க வழிபாடான ‘நாந்தி’ என்பது இதுவே.

சூத்திரதாரனே வாழ்த்தினைக் கூறுபவன். (நாடக. 175)

விசலனம் -

{Entry: Q17b__253}

தன் ஆற்றலை வியந்துரைத்தல்.

விசலனம் - தற்புகழ்தல். (ம. சூ. பக். 100)

இது நாடகச்சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. விமரிசம் - வைரிமுகம். (வீ. சோ. 106 உரை)

விட்கம்பம் -

{Entry: Q17b__254}

நாடகத்துள் அங்கங்களுக்கு இடையில் வருதற்குரிய உறுப்பு.

விடன் -

{Entry: Q17b__255}

இவன் நுண்கலைகளில் நல்ல தேர்ச்சியுடன் சுவை காணும் வாழ்வினன்; மிக நயமாகவும் இனிமை பயக்கவும் பேசும் இயல்பினன்; இன்பம் தரும் நடைஉடைபாவனைகளைக் கொண்டவன்; சுவை கண்டு வாழ்வதால் செல்வம் சிறிது குறைந்து நலிவுற்றவன்; ஆயினும் மேலான இயல்பு குறையாதவன். (நாடக. 99)

வித்திரவம் -

{Entry: Q17b__256}

மனக்கலக்கம் - (கொலை, சிறைப்படுதல் போன்றவற்றால் விளைவது)

வித்திரவம் - கொல்லுதல், கட்டுதல் செய்தல் (ம. சூ. பக். 99)

இது நாடகச் சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசத்தின் (வைரிமுகம் என்பதும் அது.) அங்கம் பதின்மூன்றில் ஒன்று (வீ. சோ. 106 உரை)

விதானம் (1) -

{Entry: Q17b__257}

நாடகப் பொருள் பற்றிய இன்பமும் துன்பமும் நிகழ்வு. (கதையின் நிகழ்ச்சி)-

விதானம் இன்பமும் துன்பமும் காரியப்படுதல். (ம. சூ. பக். 98)

இது ‘நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

விதூடகன் -

{Entry: Q17b__258}

நாடகக்கதை நிகழ்ச்சிக்கு இன்றியமையாத பல பயன்களை விளைக்கவல்ல பாத்திரம் ஆவான் விதூடகன். இவன் அரசவையைச் சார்ந்த பெருமையுடையோனாயிருப்பன்; தன் நுண்ணறிவால் எதனையும் ஊகித்தறியவல்லவன். இவ னுடைய பேச்சும் செயலும் இதம் அளிப்பனவாக அமையும். கற்பனையாகப் படைத்துப் பேசும் ஆற்றல் இவனுக்குண்டு. இவனுக்கு உலகியல்பெல்லாம் நன்கு தெரியும். உண்மையை ஆய்ந்தறிவதில் இவன் வல்லுநன்; புதிதுபுதிதாகச் சாதுரியம் மிக்க வசனங்கள் பேசுவோன். நாடக மேடையில் இவன் தோன்றும் போதெல்லாம் நகைச்சுவை மலரும். தானும் விநோதமாகத் தோன்றிப் பிறரையும் விநோதவுணர்வுக்கு உட்படுத்துபவன் இவன்.

சில நாடகங்களில் விதூடகன் என்றொரு தனிப் பாத்திர மின்றியே வேறு பாத்திரங்கள் இவன் செய்வதனைச் செய் வதுண்டு.

விதூடகன் இல்லாத நாடகமும் உண்டு. (நாடக. 96 - 98)

விதூதம் -

{Entry: Q17b__259}

விதூதம் - விதுதம் - வித்ருதம்; இன்பம் வேண்டிச் செய்யும் தன் வழிபாடுகள் மறுக்கப்படுதலும், அதனால் தோன்றும் புலம்பலும்.

பிரிவு காரணமாக இன்ப நுகர்ச்சி எய்தப் பெறாதிருத்தல். (ம. சூ. பக். 98)

இது நாடக சந்திகளுள் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றில் ஒன்று. (வீ. சோ. 106)

விமரிசம் -

{Entry: Q17b__260}

வைரிமுகம் எனினும் இதுவே.

இது அவமர்சம் எனவும்படும்.

மதங்க சூளாமணி இதனை `விளைவு’ எனக் குறிக்கும் (பக். 99) இஃது இயல் கொண்டது.

தோடு முரித்துக் கதிர் போந்தாற் போலவும், மேயது வளைந் தாற் போலவும், நாடகப் பொருள் நன்கு விளக்கப் பயன்படுவது. (வீ. சோ. 106 உரை)

கர்ப்ப சந்தியில் மலர்ந்து விரிந்த நாடகக் கதைக் கரு, அது பற்றி விளைந்த ஆற்றாமை சினம் முதலியவற்றைக் கூறுவ தால், மேலும் மலர்ந்து விரிவடைதல் `விமரிசம்‘ என்பர் ஒருசாரார். (ம. சூ. பக். 99)

மற்றொரு சாரார், முன் மூன்று சந்திகளிலும் சிதறிக் கிடக்கும் தலைமைக் கதையின் கூறுகளை ஆய்ந்து தொகுப்பது விமரிச சந்தி என்ப.

மற்றோர் ஆசிரியர் கூறுவது : நன்கு சமைந்து முற்றி வந்த கதைப்பயன் பற்றி ஏதேனுமொரு காரணத்தால் ஐயம் தேர்ந்து அதனை ஆய்வதும் விமரிசம் ஆகும்.

முதிர்ந்து நின்ற கதிர் திரள அவற்றைக் கவர வரும் புள் விலங்குகளை ஓட்டிக் காத்த பயிர் முதிர்ந்து முற்றித் தாழ்வதைப் போன்றது விமரிசம். (நாடக. 36 உரை.)

இதன்கண் பதின்மூன்று பாகுபாடுகள் உள.

வியப்பு (1) -

{Entry: Q17b__261}

புதுமையுணர்வும் பெருமையும் சிறுமையும் மாறுபாடும் காரணமாக எதிர்பாராதது நிகழ்ந்தபோதும், முயற்சியின்றித் தான் நினைத்த செயல் எதிர்பாரா வகையில் நடந்தபோதும், தான் விரும்பியதற்கு மேலாகவே ஒன்று வாய்த்தபோதும், கருவிகளையும் சாதனங்களையும் தேடிக்கொண்டிருக்கும் போது கருதிய பயனே கிட்டியபோதும் நிகழும் சுவையே வியப்பு ஆவது. (நாடக. 49)

வியப்பு (2) -

{Entry: Q17b__262}

இறும்பூது பயக்கும் நிகழ்ச்சிகளாலோ பொருள்களாலோ உள்ளம் கொள்ளும் விரிவு விஸ்மயம் என்றும் ஆச்சரியம் என்றும் சொல்லப்படும்.

இது வியப்புச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54 உரை)

வியாயோகம் (1) -

{Entry: Q17b__263}

ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக் கூறும் ஓரங்கமுடைய நாடக வகை. (ஆசியம் நகைச்சுவை.) சிலப். பக். 85 அடிக் குறிப்பு. (ஐயர் பதிப்பு)

வியாயோகம் (2) -

{Entry: Q17b__264}

இவ்வகை நாடகத்தில் ஒரே அங்கம்தான் உண்டு. உவகை, நகை, சமநிலை என்ற சுவைகள் இடம் பெறுதல் கூடாது; மற்ற சுவைகளே வருதல் வேண்டும். இது பெண்காரணமாக அல்லாத பெரும்போர் பற்றி அமையும். (நாடக. 127)

இனி, மதங்க சூளாமணி கூறுமாறு :

கருப்பம் விளைவு என்னும் இரண்டொழிந்த மூன்று சந்திகள் பெற்று ஓர் அங்கத்தினால் ஒரு நாளில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டும் வியாயோகமானது பல ஆண்டால், நாடகப் பாத்திரங்களைக் கொண்டு இடிமத்துக்குக் கூறிய சுவைகளை எய்திப் பெண்கள் காரணமல்லாத பிற காரணங்களால் விளைந்த ஒரு போரை நடத்திக் காட்டுவதாக வருவது இது வியாயோகத்தின் இலக்கணம். (பக். 114)

வியாயோகம் (3) -

{Entry: Q17b__265}

நாடக சாதியுள் ஒன்று. இதன்கண் தலைமக்கள் ஒருவரோ, பலரோ இருப்பர்; சந்தி ஐந்தும் இருக்கும்; தலைமைக் கண்டம் ஒன்று இருக்கும். (வீ. சோ. 106 உரை)

விருத்தி (1) -

{Entry: Q17b__266}

சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என நால்வகைப்பட்ட நாடக நூலின்நடை (சிலப். 3 : 13 உரை).

விருத்தி (2) -

{Entry: Q17b__267}

நாடகம் பொலிவுற்றுச் சிறக்கக் காரணமாவதும், உண்மை யான உறுதிப்பொருளைக் காட்டுவதும், தலைமக்கள்இயல்பு இன்னதெனத் தெரிவிப்பதும் நாடகத்தில் அமைந்த சுவையின் பொருத்தத்தை அறிவிக்கும் சொற்றொடர்களைப் பெற்று விளங்குவதும் விருத்தி எனப்படும். (நாடக. 167)

சாத்துவதி, ஆரவடி (ஆரபடி), கைசிகி (கௌசிகி), பாரதி என விருத்தி நால்வகைப் படும். (வீ. சோ. 106 உரை)

இவற்றுள் கைசிகி உவகைச்சுவைக்கும், சாத்துவதி வீரச் சுவைக்கும், ஆரவடி உருத்திரத்திற்கும் இழிப்பிற்கும் பொருந் துவன; ஏனைய பாரதி ஒன்றும் எல்லாச் சுவைக்கும் பொருந்துவது. (தசரூபகம்)

விரோதம் (1) -

{Entry: Q17b__268}

இது `விபோதம்‘ என்று இருத்தற்பாலது; கதைப் பயனுக்கான செயலை நாடுதல்.

விபோதம் - கரும (- காரிய) முடிப்பைத் தேடுதல். (ம. சூ. பக். 100)

இது நாடகத்தின் இறுதிச் சந்தியாகிய (-ஐந்தாவதாகிய) நிருவகணத்தின் அங்கம் பதினான்கில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

விலாசம் (1) -

{Entry: Q17b__269}

இன்பம் துய்க்க விழையும் மனநிலை

விலாசம் - இன்பப்பொருளை விழைதல். (ம. சூ. பக். 98)

இது நாடகச் சந்திகளில் இரண்டாவதான பிரதிமுகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

விலாசம் (2) -

{Entry: Q17b__270}

நாடக நூல். எ-டு : அரிச்சந்திர விலாசம்.

விலாசிகை -

{Entry: Q17b__271}

உபசாதி நாடகம்; இந்நாடகத்தின் உவகைச்சுவை முழுதும் விரிவாக உணர்த்தப்படும்; பத்துவகைக் கோலங்களும் மிக நன்றாக அமைந்திருக்கும். ஒரே அங்கம்தான் உண்டு. விடனும், விதூடகனும் பீடமர்த்தனும், அழகு மிக்க இழிந்த தலைவியும் இடம் பெறுகின்றனர். அங்கத்தின் உட்பிரிவான களங்கள் சுவை பயக்க இயல்வனவாம். (நாடக. 153)

விலோவணம் -

{Entry: Q17b__272}

விலோபநம்; நாடகப் பொருளின் இயல்பைச் சிறப்பித்துக் கூறுதல்.

விலோபநம் - நற்குணங்களை எடுத்தியம்பி உள்ளத்தைக் கவர்தல். (ம. சூ. பக். 98)

இது நாடகச் சந்தியான முகத்தின் அங்கம் பன்னிரண்டில் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

விவசாயம் -

{Entry: Q17b__273}

தன் ஆற்றலை எடுத்தியம்புதல்.

வியவசாயம் - தனது வல்லமையைக் குறிப்பிட்டுரைத்தல்.

(ம. சூ. பக். 100)

இது நாடக சந்திகள் ஐந்தனுள் நான்காவதான விமரிசகத்தின் அங்கம் பதின்மூன்றனுள் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

வீடு -

{Entry: Q17b__274}

விதியின் வலிமையை எடுத்துக் கூறலும் உத்தம பத்தியும் வீட்டின் பகுதி. (நாடக. 26)

வீதி -

{Entry: Q17b__275}

ரூபகம் பத்தனுள், காமவிச்சை மிகுந்த பரத்தையிடத்துக் கொண்ட காதலைக் குறித்து ஒருவர் அல்லது இருவர் நடிப்பதான ஓரங்கமுடைய ரூபகவகை. (சிலப். 3 : 13 பக். 85 அடிக்குறிப்பு)

வீதி (2) -

{Entry: Q17b__276}

நாடக வகைகளுள் ஒன்று; இவ்வகை நாடகங்களில் அங்கமும் ஒன்றே; பாத்திரமும் ஒன்றே. இது முற்றும் கைசிகி விருத்தியையே பெறும். இதன்கண் உவகைச்சுவை நன்கு புலப்படும்; வியப்பு விளைக்கும் மொழிகள் பல பேசப்படும்; அசரீரி வாக்கும் இடையே தோன்றும்.

கைசிகி விருத்தி பற்றிய விளக்கம் தனித்தலைப்பில் காண்க.

அசரீரிவாக்கு - விட்புலக் கூற்று; கண்ணுக்குப் புலனாகாமல் ஆகாயத்திலிருந்து கேட்பதாக நாடகங்களில் அமைக்கப் படும் கூற்றுக்கள். (நாடக. 133)

வீரசோழியம் குறிப்பிடும் நாடகசாதி பத்து -

{Entry: Q17b__277}

வீரம், கூச்சம், அரப்பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம், வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என்பன. இவ்வகை தசரூபகம் முதலிய நூல்களுள் காணப்படவில்லை. இவ்வாறு பகுத்துக் கொண்ட ஒருசார் ஆசிரியர் பண்டு இருந்தனர் போலும். (106 உரை; நாடக. 135)

வீரம் -

{Entry: Q17b__278}

இது வீரசோழியஉரை குறிப்பிடும் நாடக சாதியுள் ஒன்று; இரண்டு முதலாக ஆறு அங்கம் வரை வரப்பெறும்; சந்தி ஐந்தும் உடைத்தாய் வரும்; வாரமும் கண்டமும் பெற்றும் பெறாதும் வரும்; தலைமகன் ஒருவனே இதற்குரியான். (வாரம் இசைப்பாடலையும், கண்டம் வாக்கு வாதத்தையும் குறிக்கும் போலும்.) வாரம், கண்டம் என்பன திரைச்சீலை களின் வகை என்பதும் ஒன்று. (வீ. சோ. 106 உரை)

வீழிணி -

{Entry: Q17b__279}

இது வீரசோழிய உரை குறிப்பிடும் நாடக சாதியில் ஒன்று. இதன்கண் கூத்தன் தலைவன்; அவன் தன் மனைவிக்குத் தான் கண்ட விழாவையும் ஊரையும் பற்றிக் கூறுவான். இஃது ஓரங்கமே நிகழ்வது. இதன்கண் ஐவகைச் சந்தியுள்ளும் கடைச் சந்தி இன்றியமையாது வரும். (வீ. சோ. 106 உரை)

வெண்டுறைப்பாட்டு -

{Entry: Q17b__280}

வெண்டுறைப் பாட்டாவன இலக்கு நாட்டிச் செய்யப்படும் கூத்திற்கு உரியனவாகிய வரியும். குரவையும், மண்டிலமும், சேதமும் முதலியன. (யா. வி. பக். 581)

வெண்டுறை மார்க்கம் -

{Entry: Q17b__281}

ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை பற்றிய ஆடற்கு ஏற்ற நாடகம். (செந்துறை என்பது பாடற்கு ஏற்பது; வெண்டுறை என்பது ஆடற்கு ஏற்பது.) (யா. வி. பக். 579)

`வெண்டுறை மார்க்கமாகிய நாடகம்‘ என்பது தொ.பொ. 82 இல் வரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. எனவே, ஆடற்கேற்ற நாடக இசைப்பாட்டு `வெண்டுறை மார்க்கம்‘ ஆயிற்று.

வெறுங் கோலம் -

{Entry: Q17b__282}

இசைபாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; துயரம் மேலிட்டு அணி முதலியவற்றைக் களைந்துவிட்டு இசைக்கருவிகள் இன்றி ஓரிடத்தில் இருந்து இரங்கி இசைத்தல்.

வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `ஆஸீநம்‘ இது. (நாடக. 261)

வெறுப்பிசைக் கோலம் -

{Entry: Q17b__283}

இசை பாடும் கோலங்கள் பத்தனுள் ஒன்று; தலைவன் மற்றொருத்தியிடம் விருப்பம் கொண்ட செய்தி அறிந்த தலைவி, அவனிடம் தான் கொண்ட அன்பை வெறுத்து, யாழிசைத்து, அதன் ஒலிக்கு இயையக் குரல் எழுப்பி இரங்கிப் பாடுதல்.

வடநூலார் கூறும் இலாசியம் என்பதன் அங்கமான `பிரச்சேதகம்‘ இது. (நாடக. 261)