Section Q17c inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 17 alphabetical subsections

  1. அ section: 79 entries
  2. ஆ section: 10 entries
  3. இ section: 6 entries
  4. உ section: 19 entries
  5. எ section: 3 entries
  6. ஏ section: 5 entries
  7. ஐ section: 2 entries
  8. ஒ section: 4 entries
  9. க section: 53 entries
  10. த section: 37 entries
  11. ந section: 10 entries
  12. ப section: 42 entries
  13. ம section: 8 entries
  14. ய section: 7 entries
  15. ல section: 1 entries
  16. வ section: 23 entries
  17. ஹ section: 2 entries

Q17c

[Version 2l (transitory): latest modification 2017/02/24, 13:58, Pondy time]

அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி (311 entries)

[Part 3 of TIPA Volume Q17 (and pages 193-270 in volume printed in 2004)]

அ section: 79 entries

அகத்தியல் கால் -

{Entry: Q17c__001}

அகத்து இயல் கால் உந்தியிலிருந்து தோன்றும் உதானன் என்னும் காற்று; ‘உந்தி முதலா முந்துவளி’ (தொ.பிறப். 1) என்றார் தொல்காப்பியனார். (யா. வி. 4. உரை மேற். பக். 46)

அகப்படச் சூத்திரித்தல் -

{Entry: Q17c__002}

பொருள் வெளியாகப் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரம் செய்தல். ‘ஆசிரியர்.......... அகப்படச் சூத்திரியார் ஆகலானும், (தொ. சொ. 35. சேனா.)

அகன்றிசைப்பு -

{Entry: Q17c__003}

செய்யுளில் கடியப்படும் ஓசைக்குற்றமாவன அறுத்திசைப்பு, வெறுத்திசைப்பு, அகன்றிசைப்பு என மூன்று. அவற்றுள் அகன்றிசைப்பாவது ஒருபாடலின் முற்பகுதி பாடலாகவும் பிற்பகுதி கட்டுரையாகவும் முற்பகுதியும் பிற்பகுதியும் ஒலியால் வேறுபடுமாறு அமைத்தல்.

எ-டு :

‘கானக நாடன் கருங்கோன் பெருமலைமேல்

ஆனை கிடந்தாற்போல் ஆய பெருங்கற்கள்

தாமே கிடந்தன கொல்லோ! அவையேற்றிப்

பெற்றிப் பிறக்கிவைத் தார்உளர் கொல்லோ!’

இதன்கண், முதல் ஈரடியும் பின்னீரடியும் வேற்றுமைத் தன்மைப்பட்டு அகன்று இசைத்த இவ்வோசைக்குற்றம் யாப்புவழுவுள் அடங்கும். (யா. வி. பக். 425)

அசத் கியாதி -

{Entry: Q17c__004}

இல்பொருளை உண்டென உணரும் அறியாமை (விசார. சந். 333)

‘முயற் கொம்பு’ என்ற தொடர் இல்பொருளுக்கு உவமமாகக் கூறப்படுகிறது. இங்ஙனம் முயற்கொம்பு என்ற சொற்றொடர் இருப்பதனை உட்கொண்டு, முயற்கொம்பினை உள்பொரு ளாக உணருவது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு

அசன் -

{Entry: Q17c__005}

அசன் - இல்லாதது. அசன்னாய் உள்ள உபயதன்ம விகலம் திருட்டாந்தப் போலிகளுள் ஒன்று. உபயதன்ம விகலம், சன்னும் அசன்னும் என்றிருவகையதாம். (மணிமே. 29 : 362) (L)

அசக்ஷுதரிசனா வரணீயம் -

{Entry: Q17c__006}

உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் தரிசனாவரணீயம் என்னும் வினைவகை இது. (மேருமந். 169. உரை) (L)

அசாதாரண அநைகாந்திகம் -

{Entry: Q17c__007}

நிரூபிக்கக் கருதும் பொருளுக்குக் காட்டப்படும் ஏதுவானது, அப்பொருளைத் தவிர, அதன் இணையான பொருள் களுக்கோ, அதனின் வேறுபட்ட இனத்தனவான பொருள் களுக்கோ பொருந்தாது ஒழியுமாறு கூறும் ஏதுப்போலி வகை. இஃது அநைகாந்திகம் என்ற ஏதுப்போலியின் வகை ஆறனுள் ஒன்று.

பக்கம் - ஒலி நிலைபேறுடையது

ஏது - கேட்கப்படுதலான்.

இக்கேட்கப்படுதலான் என்ற ஏது, ஒலி ஒன்றற்கேயுரியது; ஏனைய நிலைபேறுடைய பொருள்களுக்கோ நிலைபேறில் லாப் பொருள்களுக்கோ பொருந்தாது. இங்ஙனம் இணைப் பொருள்களுக்கோ இனத்தன அல்லாப் பொருள்களுக்கோ இல்லாத தொன்றை ஏதுவாகக் கூறுவது, பக்கச் செய்தியை நிறுவுதற்குப் பயன்படாது போதலின் இஃது ஏதுப்போலி யாயிற்று. (மணி. 29 : 223 - 230)

அசாதாரண தருமம் -

{Entry: Q17c__008}

பொதுவாதலன்றிச் சிறப்புடைத்தாகிய தன்மை. பெயர்க்குக் காலம் காட்டாதிருத்தல் என்பது சாதாரண தருமம்; வினையாலணையும் பெயராயின் காலம் காட்டும் என்பது அசாதாரண தருமம். தருமம் - குணம், தன்மை. (L)

அசித்தம் -

{Entry: Q17c__009}

ஏதுப்போலிகளுள் ஒன்று. ஏதுப்போலிகள் அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். இவ்வசித்தம் என்னும் ஏதுப்போலி உபயாசித்தம், அந்நியதராசித்தம், சித்தாசித்தம் ஆசிரியாசித்தம் என நான்காய் விரியும். (மணி. 29: 192)

அசித்தம் - ஏதுவாம் தன்மை இல்லாதது.

அசும லோஷ்டிர நியாயம் -

{Entry: Q17c__010}

அசுமம் - கல்; லோஷ்டிரம் - மண்கட்டி. மண்ணாங்கட்டி பஞ்சினோடு ஒப்பிட்டு நோக்க மிகவும் கடினமானது; ஆனால் அதுவே கருங்கல்லோடு ஒப்பிட்டு நோக்கக் கடினம் இல்லாதது. இங்ஙனம் ஒரு பொருளை மற்றொரு பொருளொடு சீர்தூக்கிச் சிறுமை பெருமை கற்பிக்கும் நெறி அசும லோஷ்டிர நியாயமாம். (L)

அசோகவனிகா நியாயம் -

{Entry: Q17c__011}

அசோகம் - ஒருவகைமரம்; வனிகா - சோலை.

இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான். “ஏன் அவன் அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான்? வேறு ஒரு வனத்தில் சிறை வைத்திருக்கக் கூடாதா?” என்று வினவினால், அசோகவனத்திற்குத் தனிச்சிறப்போ ஏனைய வனங்களுக்குச் சிறப்பின்மையோ இன்று. ஏதோ ஓரிடத்தில் சிறைவைக்க வேண்டும்; அதனால் அசோக வனத்தில் சிறை வைத்தான். வேறொரு வனத்திலும் சிறை வைத்திருக்கலாம். அசோகவனத்தில் சிறை வைத்ததற்குத் தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. இங்ஙனம் ஓரிடத்து ஒன்றன் நிகழ்ச்சிக்குத் தனிப்பட்ட சிறப்புக் காரணம் முடியாது நிற்கும் நெறி இந்நியாயமாம்.

அஞ்சணங்கம் -

{Entry: Q17c__012}

பஞ்ச இலக்கணம் (யாழ். அக.). எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐங்கூற்றதாகிய இயற்றமிழ் இலக்கண மாம்.

அஞ்சணங்கியம் -

{Entry: Q17c__013}

பஞ்ச இலக்கியம் (யாழ். அக.). ஐம்பெருங் காப்பியங்களைக் குறிப்பதுபோலும்.

அடிபிறக்கிடுதல் -

{Entry: Q17c__014}

பின்வாங்குதல்; ‘அடிபிறக்கிட்டோனையும்’ என்றமை காண்க. (தொ. பொ. 65 நச்.) (L)

அணுபரிணாம வாதம் -

{Entry: Q17c__015}

அணுவினின்று எல்லா உலகமும் தோன்றியுள்ளமையைக் கூறும் சித்தாந்தம். ‘சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும் புற்று உரு அமைந்த பெற்றியது என்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின்’ (நன். 58 சங்கர. உரை)

அணுவிலிருந்து எல்லா உலகமும் தோன்றின என்பது ஆசீவகர் சித்தாந்தம். (மணி. 27 : 110 - 150) (L)

அணுமை -

{Entry: Q17c__016}

அனுமானப் பிரமாணம் ‘அணுமை’ எனப்படும். ‘புனைவுசேர் அணுமை’ என்பது நீலகேசி தருமஉரைச். 110 (L)

அனுமானப் பிரமாணமாவது கருதல் அளவையாம்; அஃதாவது புகையைக் கண்டு, “தீ உண்டு” என்று கருதுவது போல்வது.

அத்த வசனம் -

{Entry: Q17c__017}

அஃதாவது நினைத்த பொருளை விளக்கும் சொல்; ‘வைகரி செவியிற் கேட்பதாய் அத்த வசனம் ஆகி’ (சி. சி. 1 : 20) (L)

அத்தியக்கம் -

{Entry: Q17c__018}

அஃதாவது காண்டல் என்னும் அளவை. ‘ஆக்கை விதம். பேதமென அத்தியக்கம் அறிவிக்கும்.’ (சிவதரு. மறைஞானயோ. 19) (L)

இதனொடு ‘பிர’ என்ற முன்இணைவு சேரப் பிரத்தியக்கம் என்பது காண்டல்அளவை; அஃதாவது பொறிகளால் காணும் காட்சிஅளவை.

அந்தகஜ நியாயம் -

{Entry: Q17c__019}

அந்தன் - குருடன்; கஜம் - யானை.

குருடன் யானையை முழுமையாகக் காணஇயலாது, அதன் கால்கள், வால், துதிக்கை, தந்தம் இவற்றுள் ஒன்றனை மட்டும் தொட்டு அறிந்து தான் அறிந்தவாற்றான் யானையின் வடிவினைக் கற்பனை செய்துகொள்வது போல, ஒருபொரு ளின் கூறுபாடுகளை முழுமையாக ஆராயாது, அதன் ஒரு பகுதியை மாத்திரம் கண்ட அறிவினைக் கொண்டு அப் பொருளைப் பற்றி முடிவு செய்யும் நெறி இந்நியாயமாகும்.

அந்தகோலாங்கூல நியாயம் -

{Entry: Q17c__020}

அந்தன் - குருடன்; கோ - பசு; லாங்கூலம் - வால்.

குருடன் ஒருவனை அருகில் நின்ற பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு அது போகும் வழியே போய்த் தான் விரும்பும் இடத்தை அடையுமாறு கூற, அது விரைந்து சென்று குருடனைக் கீழே வீழ்த்தி வருத்தியது போன்று, பொருத்த மில்லா ஒருபொருளின் உதவியை நம்பி ஒரு செயலைத் தொடங்கி அச்செயலை நிறைவேற்ற முடியாமல் வருந்தும் நெறி இந்நியாயமாகும்.

அந்தபங்கு நியாயம் -

{Entry: Q17c__021}

குருடன்தோள்மேல் நொண்டி ஏறிக்கொண்டு வழிகாட்டக் குருடன் நடந்து செல்வது போன்ற நெறி. ஒருவர்க்கொருவர் உபகாரம் செய்துகொண்டு குறைபாடுடைய இருவரும் பயனடையும் திறம் இது.

அந்நியதராசித்தம் -

{Entry: Q17c__022}

அந்நியதர - வாதி, பிரதிவாதி என்ற இருவருள் ஒருவன். அசித்தம் - ஏற்றுக் கொள்ளப்படாதது. இஃது ஏதுப்போலி மூன்றனுள் முதலாவதாகிய அசித்தத்தின் ஐந்து வகைகளுள் ஒன்று.

ஒலி நிலையற்றது செயலிடைத் தோன்றுவதால் எனின், பிரதிவாதியாகிய சாங்கியனுக்குச் செயலிடைத் தோன்றுதல் என்பது மூலப்பகுதி செய்கைக்கண் ஒலியாய்த் தோன்றும் காரியம் என்றே தோன்றுவதால், அவனுக்கு ஒலி நித்தியம் என்பது கருத்து ஆதலின், ஏது பிரதிவாதிக்கும் ஏற்றுக் கொள்ளப்படாததாய் அந்நியதர அசித்தம் என்ற ஏதுப் போலி ஆயிற்று. (மணி. 29 : 198 - 202)

அநந்நுவயம் -

{Entry: Q17c__023}

இயைபின்மை. (L)

அநநுபாடணம் -

{Entry: Q17c__024}

தோல்வித் தானத்து ஒன்று (செந். iii . 13). அநுபாஷணம் - விடை கூறல்; அநநுபாஷணம் - விடை கூறாதிருத்தல். வாதி வினாவும் வினாவுக்கு அவனை எதிர்த்து வாதிட வந்தோன் விடை ஏதும் கூற இயலாது வாளா இருப்பது. இஃது எதிரி தோற்றுவிட்டான் என்று அறிவிக்கும் வாய்ப்புக்களுள் ஒன்று.

அநிர்வசனீயக் கியாதி -

{Entry: Q17c__025}

சத்தெனவும், அசத்தெனவும் நிர்ணயிக்கல் ஆகாத ஒன்றை உணரும் திரிபுணர்வு இது. (L)

அநுகரண உபய ஓசை -

{Entry: Q17c__026}

‘அனுகரண ஓசை’ காண்க.

அநுகரண ஓசை -

{Entry: Q17c__027}

‘அனுகரண ஓசை’ காண்க

அநுகரணம் -

{Entry: Q17c__028}

‘அனுகரணம்’ காண்க

அநுமான விருத்தம் -

{Entry: Q17c__029}

இது பக்கப்போலி ஒன்பதனுள் ஒன்று. கருதல் அளவையால் துணியப்பட்ட ஒன்றைத் தவறாக எடுத்துக் கூறுவது இது.

இஃது அழியும் இயல்புடைய குடத்தை அழியா இயல் புடைய தாகக் கூறுவது போல்வது. விருத்தம் - மாறுபட்டது.

(மணி. 29 : 151, 152.)

அப்பிரசித்த உபயம் -

{Entry: Q17c__030}

பக்கப் போலிகளுள் இதுவும் ஒன்று. வாதி தான் தன் எதிரிமுன் நிறுவுவதற்காக எடுத்துக்கொண்ட பக்கத்தின் எழுவாயாகிய விசேடியமும் பண்பாகிய விசேடணமும் எதிரிக்குத் தெரியாதனவாக, அஃதாவது அவன் கொள்கைக்கு ஒவ்வாதனவாகக் கூறும் குற்றம்.

வைசேடிகனுக்கு ஆன்மாவும் உண்டென்பதும், ஆன்மா வினாலேயே சுகம், துக்கம், இச்சை முதலியனவும் ஏற்படு கின்றன என்பதும் கொள்கை.

பௌத்தனுக்கு ‘ஆன்மா என்ற ஒரு பொருளில்லை; வாழ்வு துன்பமயமானது’ என்பன கொள்கை.

வைசேடிகனாகிய வாதி பௌத்தனாகிய எதிரியிடம், “ஆன்மாவே சுகம் துக்கம் இச்சை முதலியவற்றிற்குக் கார ணம்” என்ற கருத்தை நிறுவ முற்பட்டால், ஆன்மாவாகிய விசேடியமும் சுகம் முதலிய விசேடணமும் அவனுக்கு உடன் பாடில்லை ஆதலின், விசேடணம் விசேடியம் இரண்டும் எதிரிக்கும் உடன்பாடில்லனவற்றைக் கூறி நிறுவ முற்படு தற்கண் வாதிக்கு அப்பிரசித்த உபயம் (உபயம் - இரண்டு - விசேடணமும், விசேடியமும்) கூறிய குற்றம் நிகழும். (மணி. 29 : 152)

அப்பிரசித்த சம்பந்தம் -

{Entry: Q17c__031}

பக்கப் போலிகள் ஒன்பதனுள் இதுவுமொன்று. வாதி தான் எடுத்து நிறுவும் பொருள் எதிரிக்கு முன்னரே இசைவுடைய பொருளாக இருத்தலின், வாதிப்பதால் யாதும் பயனின்றிப் போதல் என்னும் குற்றம் இது.

ஒருவாதி தன் எதிரியாகிய பௌத்தனிடம் ‘ஒலி நிலையற்றது’ என்பதனை நிறுவப்புகின், ‘ஒலி நிலையற்றது’ என்பதே அவனுக்குக் கொள்கையாதலின், வாதத்திற்குத் தேவையே இன்றாய் அமைதலின், அப்பிரசித்த சம்பந்தம் என்ற குற்றம் அமையும் பக்கப் போலியாம். (மணி. 29 : 153)

அப்பிரசித்த விசேடணம் -

{Entry: Q17c__032}

பக்கப் போலி வகைகள் ஒன்பதனுள் இதுவும் ஒன்று. அப் பிரசித்த விசேடணம்ஆவது வாதம் செய்வோன் தன் எதிரிக்குத் தான் நிறுவுதற்கு எடுத்துக்கொண்ட பொருளின் பண்பு அறியப்படாததாகக் கூறுதல். பௌத்தனுக்கு, ‘ஒலி நிலையற்றது’ என்பது கொள்கை. சாங்கியனுக்கு, ‘ஒலி நிலை பேறுடையது’ என்பது கொள்கை. சாங்கியனை நோக்கிப் பௌத்தன் ‘ஒலி நிலையற்றது’ என்பதனை நிறுவ முற்படுவா னாயின், அஃது அவனுக்கு ஒலி நிலைபேறுடையது என்ற அடிப்படைக்கு மாறாக இருத்தலின், வாதி நிறுவுவதற்கு எடுத்துக் கொண்ட பண்பு எதிரிக்கு அறியப்படாத ஒன்றாத லின், அப்பிரசித்த விசேடணம் என்ற பக்கப் போலி வகை அமைந்து குற்றமாகும். ஏனைய விளக்கங்களைப் பக்கப் போலியுள் காண்க. (மணி. 29 : 151.)

விசேடியம் - பண்பி - ஒலி

விசேடணம் - பண்பு - நிலைபேறுடைமை, நிலைபேறின்மை.

அப்பிரசித்த விசேடியம் -

{Entry: Q17c__033}

பக்கப் போலி வகை ஒன்பதனுள் ஒன்று. வாதி தான் கூறும் பக்கச் செய்திக்கு எழுவாயாகிய பொருள் எதிரிக்குத் தெரியாததாக இருக்கவும், தன் வாதத்தை நிறுவுவதற்கு முற்படுதல் என்னும் குற்றம் இது.

‘ஆன்மா என்ற ஒன்று உண்டு’ என்ற கொள்கையுடையன் சாங்கியவாதி. ‘ஆன்மா என்ற ஒன்று இன்று’ என்ற கொள்கை யுடையன் பௌத்தன். சாங்கியனாகிய வாதி எதிரியாகிய பௌத்தன் ஒருவனை நோக்கி ‘ஆன்மா அறிவு மயமானது’ என்ற செய்தியை நிறுவ முற்பட்டால், பௌத்தன் ஆன்மா என்ற ஒன்றில்லை என்ற கருத்துடையவன் ஆதலின், அவன் கருத்தில் இல்லாத ஒன்றிற்குப் பண்பு ஒன்றுகூறி அதனை நிறுவ முற்படும் குற்றம் அப்பிரசித்த விசேடியப் பக்கப்போலி என்று கூறப்படும். (மணி. 29 : 152)

விசேடியம் - பண்பி - ஆன்மா;

விசேடணம் - பண்பு - அறிவுடைமை.

அப்பிரதிபை -

{Entry: Q17c__034}

தோல்வித் தானத்துள் ஒன்று. வாதி சொல்லும் வாதத்திற்கு எதிரி விடை எதுவும் கூற இயலாதவகை மௌனமாக இருப்பது அப்பிரதிபை என்ற தோல்வித்தானமாகும். (செந். iii 13.) (L)

அப்பிரமாண ஐதிகம் -

{Entry: Q17c__035}

காணாத தொன்றனை உளதாகக் கூறும் உலக உரை. இது நினைப்பு எனப்படும் பிரமாண ஆபாசமாகும். ‘நினக்கிவர் தந்தையும் தாயும் ஆவர்’ என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், பிறர் கூறியவற்றையெல்லாம் காரண ஆராய்ச்சியின்றி மேற்கொண்டொழிதலாம். (மணி 27: 75-77 (சி. சி. அளவை.1)

அப்பிரமாணம் -

{Entry: Q17c__036}

பிரமாணம் அல்லாதது. அஃதாவது எல்லைக்கு உட்படாதது. வேதநெறிக்கு மாறுபட்ட சமயங்களாகிய பௌத்தம் சமணம் என்பனவற்றிற்கு வேதங்கள் அப்பிரமாணமாகும்.

அப்பிரமேயம் -

{Entry: Q17c__037}

அளக்க முடியாதது - பேரெண். (L)

அப்பிராத்தகாலம் -

{Entry: Q17c__038}

தோல்வித் தானத்துள் ஒன்று - கருதல்அளவையை விளக்கப். பக்கம், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் என்ற ஐந்து கூறுகள் உள.

பக்கம் - இம்மலை நெருப்புடையது

ஏது - புகை இருப்பதால்

எடுத்துக்காட்டு - அடுக்களை போல

உபநயம் - இம்மலையும் புகையுடையது

நிகமனம் - ஆகவே இம்மலை நெருப்புடையது.

இங்ஙனம் கூறும் முறையை விடுத்துப் பக்கம், ஏது, எடுத்துக் காட்டு, உபநயம், நிகமனம் என்பவற்றை மாற்றிக் கூறுவது அப்பிராத்தகாலம் என்ற குற்றத்தின்பாற்படும். (செந். iii 13 ) (L)

அப்பிராமாணியம் -

{Entry: Q17c__039}

பிரமாணம் ஆகாமை. வேதத்திற்கு மறுதலையான செய்திகள் வைதிகருக்கு அப்பிராமாணியம் ஆகும். (சி.சி. 8-5 ஞானப்) (L)

அபசித்தாந்தம் -

{Entry: Q17c__040}

தோல்வித் தானத்துள் ஒன்று; கொள்கைக்கு மாறுபட்டது. வாதி தன் சித்தாந்தத்திற்கு இணங்காதவற்றைச் சொல்லிச் சித்தாந்தம் சாதிக்க முற்படுதல் அபசித்தாந்தமாகித் தோல்வித் தானத்துள் ஒன்றாகும். தருக்கவாதத்தின்கண் பேசத் தெரியாமை யாகிய தோல்வித் தானங்களுள் இதுவும் ஒன்று. (செந் iii - 13) (L)

அபார்த்தகம் -

{Entry: Q17c__041}

‘தோல்வித்தானத்துள் ஒன்று.’ தான் கொண்ட மேற்கோ ளுக்கு மறுதலைப்படப் பேசுதல். இது தருக்கவாதத்தின்கண் பேசத் தெரியாமையாகிய தோல்வித் தானங்களுள் ஒன்று. (L)

அபாவம் -

{Entry: Q17c__042}

அஃதாவது இன்மை. ஈது ஒரு பிரமாணம்.

உண்மையை நிறுவுதற்குப் பயன்படுத்தப்படும் அளவைகள் பத்தனுள் இது நான்காவதாகக் கூறப்படுகிறது.

‘அளவை காண்டல் கருதல் உரைஅபாவம், பொருள் ஒப்பு ஆறென்பர் // அளவை மேலும், ஒழிபுஉண்மை ஐதிகத்தோடு இயல்பு என நான்கு’

சி. சி. அளவை -1.

அர்த்தாபத்தி -

{Entry: Q17c__043}

அருத்தாபத்தி; “இங்ஙனம் இன்றாயின் இது கூடாது” என்று அறியும் ஓர் அளவை. “பகலுண்ணான் பருத்திருப்பான்” என்று கூறின், “இரவில் உண்ணுதல் இன்றாயின் இவ்வாறு பருத்திருத்தல் இயலாது” ஆதலின், “இவன் இரவில் மறைய இருந்துண்பான்” என அறிவது அருத்தாபத்தி அளவை.

அவ்வளவில் அவன் மகிழ்க எனல் -

{Entry: Q17c__044}

அஃதாவது பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு, எதிராளி மகிழ்க என்று அவன்கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி. போ. 3-6 சிற்)

அவ்வியதிரேகம் -

{Entry: Q17c__045}

திட்டாந்தப் போலியின் இரு கூறுகளாகிய சாதன்மியம், வைதன்மியம் என்னும் இரண்டனுள், வைதன்மியத் திட்டாந் தப் போலியின் ஐவகைகளுள் ஒன்று. அவ்வியதிரேகமாவது பக்கத்தைக் கூறி, ஏதுவை எடுத்துச்சொல்லி வியாப்தியை வியதிரேக முகத்தால் கூறாமல், திட்டாந்தத்தை மட்டும் குறிப்பிடுவதாம்.

எ-டு : பக்கம் - ஒலி நிலைபேறுடையது, ஏது - பண்ணப்படுவ தன்றாகலின்.

வியதிரேக வியாப்தி - யாதொரு பொருள் நிலைபெற்றது அன்றோ, அது பண்ணப்படாமல் இருக்க முடியாது என்பது.

எடுத்துக்காட்டு - குடத்தில் பண்ணப்படுதலும் நிலைபேறின் மையும் காணப்படுகின்றன.

இங்ஙனம் கூறாமல் வியதிரேக வியாப்தியை விடுத்து ஏனைய வற்றைக் கூறின், ‘குடத்தின்கண் நிலைபேறின்மையால் அது பண்ணப்படாமையும் இல்லை’ என்ற விளக்கம் இன்மை யால், எதிரிக்கு மயக்கம் ஏற்படுதலின், வியதிரேக வியாப் தியைக் கூறாமையாகிய அவ்வியதிரேகம் என்ற திட்டாந்தப் போலி நிகழும். வியதிரேகம் எனினும் வெதிரேகம் எனினும் ஒக்கும். (மணி. 29 : 450 - 459)

அவ்வியாப்தி -

{Entry: Q17c__046}

ஒருபொருளுக்கு இலக்கணம் கூறுங்கால், அவ்விலக்கணம் அப்பொருளின் சிலபகுதியில் இருந்து சிலபகுதியில் இரா திருப்பின் அஃது அவ்யாப்தி என்னும் குற்றமாம்.

எ-டு : அலைதாடி, குளம்பு, கொம்பு முதலியவற்றை உடைத்தாயிருப்பதும் கருமைநிறம் உடைத்தாயிருப் பதும், பசு எனின், கருமையல்லாப் பிற நிறமுடைய பசுக்கட்கு அவ்விலக்கணம் செல்லமாட்டாமையின், அஃது இக்குற்றம் பெறுமாறு காண்க. இது குன்றக் கூறல் என்னும் சிதைவாம். இலக்கியத்தின் ஏகதேசத் தில் இலக்கணம் செல்லாதொழியும் தோஷம் என்பது. (தருக்கசங். 5)

அவச்சின்னம் -

{Entry: Q17c__047}

குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.

எ-டு : பசு அலைதாடி யுடையது என்ற பண்பால், ஏனைய விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தப்படுதலின் இஃது அவச்சின்னமாம். (L)

அவச்சேத்தியம் -

{Entry: Q17c__048}

பிரிக்கக் கூடியது.

எ-டு : ஏனைய விலங்குகளிலிருந்து தன்னைப் பிரித்து உணரக்கூடிய பண்பாகிய அலைதாடியுடைமை யாகிய பசுவின் தகுதி அவச்சேத்தியம் ஆகும். (விசாரசந். 321) (L)

அவச்சேதகம் -

{Entry: Q17c__049}

வேறுபடுத்தும் தன்மை

எ-டு : பசுவை ஏனைய விலங்குகளிலிருந்து பிரித்து உணரு மாறு வேறுபடுத்தும் ‘அலைதாடியுடைமை’ அவச் சேதகம். (சி.சி. 2-54 சிவாக்) (L)

அவப்பிரஞ்சம் -

{Entry: Q17c__050}

நாட்டில் வழங்கும் மொழியைச் சங்கிரதம், பாகதம்,. அவப்ரஞ்சம் என மூன்றாகப் பகுப்பர். சங்கிரதம் கற்றுவல்ல சான்றோரிடைப் பயிலும் மொழி எனவும், பாகதம் எல்லா நாட்டிலும் மேன்மக்கள் பேச்சிடைப் பயிலும் மொழி எனவும், அவப்ரஞ்சம் பாமர மக்களாகிய இழிசனர் திரித்துக் கொச்சையாக வழங்கும் மொழி எனவும் கொள்வர். (இ. வி. 635 உரை)

அவாந்தர காரணம் -

{Entry: Q17c__051}

இடையில் வந்த காரணம் (சி.போ.சிற். 1-3) (குடம்வனைந்தான் என்புழி, மண்-முதற்காரணம்; தண்டசக்கரம் முதலியன துணைக்காரணம்; குயவன் - நிமித்தகாரணம்; மண்ணைப் பிசைதல், நீர்விடுதல், உருண்டையாக்கல் முதலிய பிற இடையில் வந்த அவாந்தரகாரணங்களாம்.) (L)

அவாந்தர பேதம் -

{Entry: Q17c__052}

உட்பிரிவு. தொல்காப்பியத்தின் எழுத்து அதிகாரத்தின் அவாந்தர பேதம் நூல்மரபு முதல் குற்றியலுகரப் புணரியல் ஈறான ஒன்பது இயல்களும் ஆகும்.

அவிகாரி -

{Entry: Q17c__053}

விகாரமற்றது. “பொய்ப்பொருள் கற்பிதமாயிற்று அவி காரியாகப் பொருந்தும்“. (வேதா. சூ. 83)

தமிழில் எழுவாய்வேற்றுமை பெயர் தோன்றிய துணையாய் நிற்பதாம். ஏனைய வேற்றுமைகள் பெயர்ப்பின்னர் அவ்வவ் வேற்றுமை உருபேற்று அமைவனவாம். ஆகவே முதல் வேற்றுமை அவிகாரி என்பதும், ஏனைய வேற்றுமை விகாரி என்பதும் புலப்படுகின்றன.

அவிச்சின்னம் -

{Entry: Q17c__054}

இடைவிடாமை (சிவதரு. மறை ஞான. 80) (L)

அவிஞ்ஞாதார்த்தம் -

{Entry: Q17c__055}

தோல்வித் தானங்களுள் ஒன்று (செந் iii- 13). வாதி தான் கூறும் செய்தியை எதிரிக்குத் தெளிவு தோன்றாதவாறு கூறுதல் என்னும் குற்றம். (L)

அவையத்தார் -

{Entry: Q17c__056}

1) பண்டித சபையோர் 2) நியாயம் உரைக்கும் சபையினர் (கலி. 94 : 42) (L)

அழிவுபாட்டபாவம் -

{Entry: Q17c__057}

அஃதாவது அழிந்ததனால் அஃதில்லை என்னும் அபாவம்.

(சி.சி. அளவை. 1 (மறை) சிவஞா.) (L)

அளவை நூல் -

{Entry: Q17c__058}

தருக்க நூல் : ‘அளவைநூல் சொன்னூல் கற்றே கற்க வேண்டு தலின்’ (குறள். 725 - பரிமே.) (L)

அறப்பாடல் -

{Entry: Q17c__059}

கேடு விளைக்கும் சொற்பயிலும் பாடல். (L)

அறம் பாடுதல் -

{Entry: Q17c__060}

தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதலே அறம்பாடுத லாம் என்ப.

அறிகரி -

{Entry: Q17c__061}

‘காட்சியளவையாற் பொருந்தும் சாட்சி’ - ‘அங்கியங்கடவுள் அறிகரியாக’ (142 நச். உரை) (L)

அறுபத்துநாலுகலை -

{Entry: Q17c__062}

காமசூத்திரம் என்ற வடமொழி நூலிலும் பிறவற்றிலும் மகளிரால் சிறப்பாக மேற்கொள்ளப்படுவனவாகக் கூறப்படும் அறிவியலொடு பொருந்திய அறுபத்து நான்கு கலைகள். சதுர்அகராதி அவற்றைப் பின்வருமாறு குறிக்கின்றது; பொருட்டொகை நிகண்டும் இவற்றைச் சுட்டுகிறது (973).

அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம்,நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தரும சாத் திரம், யோகசாத்திரம்,மந்திரசாத்திரம், சகுன சாத்திரம், சிற்ப,வைத்தியசாத்திரங்கள், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம்,மதுரபாடணம், நாடகம், நிருத்தம், சந்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரப் பரீட்சை, கனகபரீட்சை, இரத பரீட்சை, கசபரீட்சை, அசுவ பரீட்சை, இரத்தினபரீட்சை, பூமிபரீட்சை, சங்கிராம இலக்கணம், மல்லயுத்தம், ஆகருடணம், ஆகர்ஷணம், உச்சாடணம், வித்துவேடணம், மதனசாத்திரம், மோகனம், வசீகரணம், ரசவாதம், சுந்தருவவாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம்,காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், அதிருசியம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத் தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், சுட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் - என இவை.

அறுவகை மலைவு -

{Entry: Q17c__063}

செய்யுட் குற்றம் ஆறு. அவையாவன இடம் காலம் கலை உலகம் நியாயம் ஆகமம் என்னும் ஆறுபொருள்களிலும் ஒன்றற் குரியதை மற்றொன்றற்கு ஏற்றிச் சொல்லுதல் போன்ற குற்றங்கள். இவை செய்யுளில் நீக்கத்தக்கன. தனித் தனித் தலைப்பில் விரிவு காண்க. (தண்டி. 99)

அறுவகை மலைவும் ஆம் இடன் -

{Entry: Q17c__064}

இடம், காலம், கலை, உலகம், நியாயம், ஆகமம் என்னும் இவ்வாறு வகையிலும் செய்யுளில் குற்றம் நிகழுங்கால் அவற்றை நீக்குதல் முறை. ஆயின், நாடகவழக்கில் அவை அமையும். ஈண்டு நாடகவழக்கு என்றது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்தே புனைந்துரை வகையால் கூறுதல். அவ்வாறு புகழ்ச்சிக்கண் அவை நீக்கப்படாமல் அலங்காரமாகவே வரும் என்று கொள்ளப்படும். (தண்டி. 125)

அன்னியதராசித்தம் -

{Entry: Q17c__065}

உபய (இரண்டு) வாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள் ளப்பட்டு, மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாகக் கூறுவது. (அனுமான. பக். 19) (L)

அன்னிய தர - இருவரில் ஒருவன்

அசித்தம் - இதற்குமுன் கொள்ளப்பட்டது.

இது வாதி கூறும் ஏது எதிரியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதனம் ஆகாமல்போலும் ஏதுப்போலி வகையாம். இஃது அசித்தம் என்ற ஏதுப்போலியின் வகைகள் நான்கனுள் ஒன்று.

பக்கம் - ஒலி நிலையற்றது

ஏது - செய்கையில் தோன்றுதலால்.

எதிரி சாங்கியனாக இருந்தால், அவனுக்கு, “ஒலி முதலிய யாவும் மூலப்பகுதியின் காரியம்; காரண வடிவில் தோற்றம் இன்மையும் காரியவடிவில் தோற்றம் உடைமையும் பொருட்கு இயல்பு; செயலிடைத் தோன்றுவன யாவும் புதியன அல்ல, மூலப்பகுதியின் காரியமே” என்பது கொள்கை. ஆதலின் அவனுக்குச் செய்கையில் தோன்றுதலால் என்ற ஏது, ஒலி என்ற பொருளின்கண்ணும், அது நிலையற்றது என்ற அப்பொருட்பண்பின்கண்ணும் பொருந்தாது ஒழிதலின், இருவரில் ஒருவருக்குப் பொருந்தாததாகிய ஏது எனப்படும் அன்னியதராசித்தம் ஏதுப்போலியாய்க் குற்றப்படும். (மணி. 29 : 198- 202)

அன்னியதாசித்தம் -

{Entry: Q17c__066}

‘அன்னியதராசித்தம்’ காண்க.

அன்னியோன்னியாச்சிரயம் -

{Entry: Q17c__067}

ஒன்றையொன்று பற்றுதல் என்ற குற்றம். ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொரு பொருளின் தன்மையைக் கொண்டும், பின்பொருளின் இலக்கணத்தை அம் முன்பொரு ளின் தன்மையைக் கொண்டும், கூறின் இக்குற்றமாம்.

எ-டு : உருபேற்றல் பெயரிலக்கணம் என்றும், உருபு பெயரின் ஈற்றில் வரும் என்றும் கூறுதல் எவ்வாறு குற்றமெனில், உருபு ஏற்றதன் பிறகே அச்சொல்லுக்குப் பெயர் என்னும் குறி வரும். ‘அக்குறி’ வந்த பிறகே உருபினை அப்பெயர் ஈற்றில் சேர்த்தல் வேண்டும் என்று நேர்த லின், ஒன்றையொன்று பற்றுதல் காண்க.

உருபும் பொருளும் உடன்தொக்க தொகை அன்மொழித் தொகை போல இடையே உள்ள சொற்களைப் பொருத்தி விரிக்கப்படும். அன்மொழித்தொகை உருபும் பொருளும் உடன்தொக்க தொகை போல இடையே சொற்களைப் பொருத்தி விரிக்கப்படும் என்று கூறுதல், ஒன்றனை ஒன்று பற்றுதல் எனப்படும் இதரேதராசிரயம் என்னும் குற்றமாம். (சூ. வி. பக். 49,50) (அன்னியோன்னியாச்சிரயம், இதரேதராசிர யம் என்பன ஒருபொருள.) (பி. வி. 24 உரை)

அன்னியோன்னியாபாவம் -

{Entry: Q17c__068}

அன்னியோன்ய + அபாவம் = ஒன்று மற்றொன்று ஆகாமை. இப்பி வெள்ளி ஆகாமை போல்வது. (பிரபோத. 42-4) (L)

அன்னுவய அனுமானம் -

{Entry: Q17c__069}

உடன் நிகழ்வதால் கொள்ளும் அனுமானம்.

புகை இருப்பதனால் இவ்விடத்தில் நெருப்புண்டு என்று கொள்வது. புகை இல்லை ஆதலின் நெருப்பு இவ்விடத்தில் இல்லை என்று கொள்ளும் வியதிரேக அனுமானத்திற்கு இது மறுதலையாம். ‘புகையுள இடத்து நெருப்புண் டென்னும் அன்னுவயத்தாலும்’ (மணி. 29 : 87,88)

அன்னுவயம் (1) -

{Entry: Q17c__070}

1) சம்பந்தம்; ‘இவை அன்னுவயமின்றாயிருந்தும்’ மணி. 27 : 39.

2) காரண காரியங்களின் நியத சம்பந்தம் (சி.சி. அளவை.11). அஃதாவது காரணகாரியத் தொடர்பு இடையறவுஇன்றிச் சேர அமைவது.

3) சாதன சாத்தியங்களின் வியாப்தி.

4) கொண்டுகூட்டு.

5) குலம் (கம்பரா. 8874) (L)

அனவத்தை -

{Entry: Q17c__071}

முடிவு பெறாமைக் குற்றம். (வேதா. சூ. 135) (L)

எ-டு : இறைவனுடைய மேதக்க பண்புகளை எண்ணப்புகின், அனவத்தையாம்.

அனன்னியம் -

{Entry: Q17c__072}

பிரிப்பற்ற தன்மை. (சி.சி. 6-6 சிவஞா.) (L)

எ-டு : ‘பார்வதி, பரமேசுவரனோடு அனன்னியமாகக் கலந் துள்ளாள்’ ந + அன்னியம் = அநந்நியம் - அன்னிய மற்ற தன்மை

அனாதிகாரணம் -

{Entry: Q17c__073}

மூலகாரணம். ‘அனாதி காரணமாகிய மாயை’ நன். 58 விருத்தி (L)

அனு -

{Entry: Q17c__074}

1) பிரதிச் செயல் - ‘மற்றிதற்கோர் அனுவே என்ன’ (பாரத. பதினொ. 37)

2) மோனை எழுத்து - ‘ஆகாத அல்ல அனு’ (இ.வி. 748 உரை)

3) வடமொழி உபசருக்கங்களுள் ஒன்று (யா.க.43 உரை)

எ-டு : அனுஜன் - தம்பி (L)

அனுமானித்தல் -

{Entry: Q17c__075}

1) அனுமானப் பிரமாணத்தால் அறிதல். பொறிகளான் உணராது அறிவான் கருதி அறிதல் 2) உத்தேசித்தல் - (எண்ணுதல்) 3) ஐயுறுதல். (L)

அனுமிதி -

{Entry: Q17c__076}

அனுமானத்தால் உண்டாம் ஞானம். தருக். சங். 45 (L)

அனுமேயம் -

{Entry: Q17c__077}

அனுமானத்தால் அறியத்தக்கது. (மணி. 27-26)

எ-டு : மலையின்பால் நெருப்புள்ளது என்பது துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம்.

அனுவிருத்த ஸ்வபாவம் -

{Entry: Q17c__078}

இயற்கைக் குணம்; ஸ்வர்ணம் என்னும் பொருளில், நிறமும் வற்கெனலும் வசஞ்செய்தலும் முதலாயின அனுவிருத்த ஸ்பாவ மாம். (நீலகேசி. 380 உரை)

வற்கெனல் - வல்லென்றிருத்தல்; வசம் செய்தல் - வேண்டிய உருவிற்கு வருமாறு அமைத்தல்.

அனைகாந்திகம் -

{Entry: Q17c__079}

ஏதுப்போலிகளுள் ஒன்று. (மணி. 29 : 192) தவறான காரணம் காட்டும் ஏதுப்போலி அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். அநைகாந்திகம் என்பது சாதாரணம், அசாதாரணம், சபக்க ஏகதேசவிருத்தி விபக்க வியாபி, விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாபி, உபய ஏகதேசவிருத்தி, விருத்த வியபிசாரி என ஆறு உட்பிரிவுகளையுடையது. விளக்கம் தனித் தலைப்புக்களில் காண்க.

ஆ section: 10 entries

ஆகம அளவை (1) -

{Entry: Q17c__080}

உண்மை உணர்வதற்குக் கருவியாகும் அளவைகள் பத்தனுள் நான்காவது. இஃது; உரைஅளவை எனவும்படும்.

விளங்கிய அறிவினை உடைய பெரியோன் கூறியநூல் கருவியாக, “போக நுகர்ச்சிக்கென இந்நிலவுலகத்தின் மேலும் கீழும் உலகங்கள் உண்டு” என மேற்கொள்வது போல்வன.

(மணி. 27 : 43, 44)

அளவையை வடநூலார் ‘பிரமாணம்’ என்ப.

ஆகம அளவை (2) -

{Entry: Q17c__081}

அஃதாவது கருத்தாமொழியாகிய நூற் பிரமாணம் (ஆகம அளவை) (குறள் 242 பரிமே.)

இருவினைப்பயனும் மறுமையும் முதலாயின ஆகமஅளவை யான் அன்றிப் பெரும்பான்மையும் பிற அளவையான் காட்டலாகா; இறைவனதுண்மையும் அது.

ஆகம அனுமானம் -

{Entry: Q17c__082}

தொன்று தொட்டு வந்த மறை, அறநூல் முதலியவற்றால் உய்த்துணர்தல். அனுமானம் - உய்த்துணர்தல்.

ஆகம மலைவு -

{Entry: Q17c__083}

ஆகமம் என்பது மனு முதலானோரும் திருவள்ளுவர் போன்றோரும் அருளிய அறம் முதலியவற்றை அறிவிக்கும் பண்டைப் பதினெண்வகை நூல்களுக்குப் பெயராவது. மலைவு - பொருந்தாமை. அறநெறிகட்கு மாறுபட்ட செய்தி களைக் கூறுவது ஆகம மலைவு என்னும் செய்யுட்குற்றம்.

எ-டு : ‘தெய்வம் விருந்தொக்கல் தென்புலத்தார் தாமென்னும் // ஐவகையும் தம்பொருள்கொண் டாற்றுவார் - மையிலா // முக்கோலும் கல்தோய் முழுமடியும் தாங்கியே // தக்கோர் எனப்படுவார் தாம்’

இப்பாடற்கண், முக்கோலும் காவியுடையும் உடைய தக்கோ ராம் துறவியர் தம் செல்வத்தால் ஐம்புலத்தாறு ஓம்புவார் என்று கூறியுள்ளமை குற்றம். இச்செயல் இல்லறத்தார்க்கே உரியது; இல்லறத்தார்கட்கு முக்கோல் முதலியன தாங்குதல் பொருந்தாது. ஆதலின் இஃது ஆகமவழு உடையதாயிற்று. (தண்டி. 124)

ஆகம மலைவு ஆகும் இடம் -

{Entry: Q17c__084}

சான்றோர் அறநூற் செய்திக்கு மாறுபட்ட செய்தி, புகழ்ச்சி யிடத்து ஏற்கத்தக்கது. (தண்டி. 125 - 6)

எ-டு : ‘காய்கதி ரோனுக்குக் கன்னனைஈன் றும்கன்னி // ஆகிப்பின் மூவரையும் ஈன்றளித்த - தோகை // தலைமைசேர் கற்பினாள் தாள்வணங்கும் முன்னாள் // மலையெடுத்துக் கார்காத்த மால்’

சூரியனுடன் கூடிக் கர்ணனைப் பெற்றும் பின் கன்னியாகிப் பின் தேவர் மூவரொடு கூடி மும்மக்களையும் பெற்ற குந்தியை மேம்பட்ட கற்பினாளாகக் கருதி, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்த திருமால் வணங்கினான் என்னும் இப்பாடலுள், கதிரோனுக்குக் கர்ணனைப் பெற்ற பின் மீண்டும் கன்னியானாள் என்பதும், பின் மூவருக்கு மூவரைப் பயந்தும் கற்புடையாள் என்பதும் சான்றோர் நூற்செய்திக்கு முரண்பட்டன எனினும், திருமா லால் குந்தி வணங்கப்பட்டவள் என்னும் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயின.

ஆகம விருத்தம் -

{Entry: Q17c__085}

பக்கப் போலியின் ஒன்பது வகைகளுள் இது நாலாவது.

பக்கமாவது நிரூபிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொரு ளும் அதன்பண்புமாகும். ஆகம விருத்தமாவது தான் ஆதர வாக மேற்கொள்ளும் நூலுக்கு மாறாகக் கூறுவதாம். வைசே டிக வாதிக்கு, ‘ஒலி நிலையற்றது’ என்பது நூற்கொள்கை. அதனை விடுத்து அவன், ‘ஒலி நிலைபேறுடையது’ என்று நிரூபிப்பதற்கு வருவது போல்வதாம் இது.(மணி. 29 : 164 - 168)

ஆச்சிரயாசித்தம் -

{Entry: Q17c__086}

பக்கத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி. ஏதுப் போலி அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப் படும். அவற்றுள் அசித்தமாவது உபய அசித்தம், அந்நியதர அசித்தம், சித்த அசித்தம், ஆசிரய அசித்தம் என்ற நான்கு உட்பிரிவுகளை உடையது.

ஆசிரயம் - பக்கவசனத்து எழுவாயாகிய பொருள். அசித்தம் - இன்மை. வாதி தன் எதிரிக்கு உடன்பாடு அல்லாத பக்கம் ஒன்றனைச் சொல்லி அதற்கு உரிய ஏதுவைக் கூறிக் காட்டு தல். ஆசீவக வாதிக்கு ஆகாயம் உடன்பாடன்று.

பக்கம் - ஆகாயம் ஒரு பொருளாகும்

ஏது - ஒலியாகிய பண்பினை உடைமையான்

என்று ஆசீவக வாதியிடம் கூறி, ‘ஆகாயம் ஒரு பொருளன்று’ என்ற முடிபுடைய அவனுக்கு ஏதுக் கூறுவதனால் பய னில்லை. இங்ஙனம் எதிரி ஏற்றுக்கொள்ளாத பொருள் ஒன்றனை ஏதுவினால் சாதிக்க முற்படுதல் ஆசிரய அசித்தம் என்ற ஏதுப்போலியாம். இதனை அனுமேய அசித்தம் எனவும் வழங்குப. (மணி. 29 : 203 - 211.)

ஆத்த வாக்கியம் -

{Entry: Q17c__087}

வேதசாத்திரம் முதலியனவாக உண்மை நுவலும் நூல்களாய் ஆகமப் பிரமாணங்களாக உதவுவன.

‘ஆப்த வாக்கியம்’ என்பதும் அது.

ஆனந்த உவமை -

{Entry: Q17c__088}

இஃது இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை எனவும், இறப்ப இழிந்த ஆனந்த உவமை எனவும் இருவகைப்படும். மிக இழிந்த பொருளுக்கு மிக உயர்ந்த பொருளை உவமையாகக் கூறுவதும், மிக உயர்ந்த பொருளுக்கு மிக இழிந்த பொருளை உவமையாகக் கூறுவதும், ஆனந்த உவமையாம். இங்ஙனம் கூறுதல் குற்றமாம். இறந்துபாட்டுவமை ஆனந்தமும் உண்டு.

எ-டு : ‘வேட்டை நாய் போன்ற வீரனுக்குப் பகைவர்களாகிய மான்கூட்டம் தோற்றோடியது’ - இறப்ப இழிந்த ஆனந்த உவமை ‘இந்திரனே போலும் இளஞ்சாத்தன்’ - இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை. ‘மறையும் சூரியன் போன்ற செந்நிற முடையவன் தலைவன் - மறையும் சூரியனை உவமையாகக் கூறியமையின் இறந்து பாட்டுவமை ஆனந்தம்.’ ஆனந்தம் - குற்றம். (யா. வி.பக். 560.)

ஆனந்தக் குற்றம் -

{Entry: Q17c__089}

பிற்காலத்தார், செய்யுளுள் நிகழும் பலவகைச் சொல் சொற் பொருள் பற்றிய குற்றங்களை எழுத்தானந்தம், சொல்லா னந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம் எனப் பலவகையாகப் பகுத்து விளக்குவர். அவற்றைத் தனித்தனித் தலைப்புக்களுள் காண்க.

இ section: 6 entries

இசையாம் அணுக்கந்தம் -

{Entry: Q17c__090}

ஒலி அணுக்களின் தொகுதி. (யா. வி. மேற். பக். 46)

இசையானந்தம் -

{Entry: Q17c__091}

அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகி வரப் புணர்க்கும் நூற்குற்றம். (யா. வி. பக். 564)

இடமலைவு -

{Entry: Q17c__092}

மலை, ஆறு, நாடு போல்வன இடம் எனப்படுவன. அவற்றுள் ஒன்றற்குரியதை மற்றொன்றன்கண் உரைக்கும் பொருந் தாமையே இடமலைவு எனப்படும் செய்யுட் குற்றம். மலைவு - பொருந்தாமை.

எ-டு : ‘தென்மலையின் மான்மதமும் சாமரையும் காமருசீர்ப் // பொன்மலையின் சந்தனமும் ஆரமும் - பன்முறையும் // பொன்னி வளநாடன் முன்றில் பொதுளுமே // மன்னர் திறைகொணர வந்து’

மன்னர் பலரும் கப்பமாகக் கொணர்ந்து தந்த பொதியமலை யின் கத்தூரியும் சாமரையும், மேருமலையின் சந்தனமும் பூமாலையும், சோழனது அரண்மனையின் முற்றத்தில் குவிந்து கிடக்கும் என்ற இப்பாடற்கண், தென்மலைக்குரிய பண்டங்கள் மேருமலைக்கும், மேருமலைக்குரிய பண்டங்கள் தென்மலைக்கும் சார்த்தியுரைக்கப்பட்டமை இடமலைவாம். (தண்டி. 119)

இடமலைவு ஆகும் இடம் -

{Entry: Q17c__093}

(இடமலைவு அமைதி) இடமலைவு இல்பொருளாகிய புகழ்ச்சியிடத்து ஏற்கத் தக்கது.

‘மரகதச் சோதியுடன் மாணிக்கச் சோதி

இருமருங்கும் சேர்ந்தரிவை அம்மான் - உருவம்

மலைக்கும் அகில்சுமந்(து) ஆரத்து வான்கோடு

அலைத்துவரும் பொன்னி ஆறு’

பசிய மரகதச் சோதியுடன் சிவந்த மாணிக்கச் சோதி இரு பாலும் சேர்தலால், அகிலையும் சந்தனமரத்தையும் அடித்து வரும் காவிரியாறு பார்வதிபாகனாகிய சிவனை ஒத்திருக் கிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், பிறநாட்டிற்கும் பிறமலைக்கு முரிய மரகதமும் மாணிக்கமும் அகிலும் சந்தன மும் காவிரியாறு அடித்து வரும் என்றமையான் இடமலை வாய்ப் புகழ்ச்சி இடத்தே அலங்காரம் ஆயிற்று. (தண்டி. 125)

இதரேதராச்சிரயம் -

{Entry: Q17c__094}

அன்னியோன்னியாச்சிரயம். அது காண்க. (தொ. சூ. வி.பக்.50)

இருபத்தெழுவகை ஊனம் -

{Entry: Q17c__095}

1) பிரிபொருள் தொடர்மொழி; 2) முரண்மொழி, (3) ஒருபொருள் மொழி, (4) ஐயமொழி, (5) முறை பிறழ வைப்பு, (6) சொல்வழு, (7) யாப்பின் வழு, (8) நடைவழு, 9) பொருளின்வழு, 10) புணர்ப்பு வழு, 11) கலைமலைவு, 12) காலமலைவு, 13) உலக மலைவு, 14) இடமலைவு, 15) மேற்கோள் மலைவு, 16) ஏதுமலைவு, 17) எடுத்துரை மலைவு, 18) நூல் மலைவு, 19) உய்த்துணர்மொழி, 20) ஒட்டுப் பிரிமொழி, 21) உத்திமறுதலை, 22) பிறிதுபடுமொழி, 23) பிசிபடு மொழி, 24) இடக்கர் இசையன, (25) இடக்கர்ப் பொருளன, 26) இடக்கர்ச்சந்தி இசையன, (27) இன்னா இசையன - என்பன. (யா. வி. பக். 265)

உ section: 19 entries

உண்மை (அளவை) -

{Entry: Q17c__096}

பொருள்களின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச்செல்வதாகிய சம்பவம் என்னும் பிரமாணம் (சி.சி. அளவை - 1.)

இது பத்துவகை அளவைகளுள் உண்மை எனவும், உள்ள நெறி எனவும் வழங்கப்படும் சம்பவ அளவையாம். இஃது இரும்புத்துண்டு அசைவதுகொண்டு அது காந்தத்தின் தொடர்பு உடைய செய்தியை அறிதல் போல்வது. (மணி. 27 : 55, 56)

உத்தேசம் -

{Entry: Q17c__097}

பின்னே விரித்துக் கூறுவதற்காகப் பெயர் மாத்திரையால் பொருளைமாத்திரம் முன்னர்க் குறிப்பிடுதல் உத்தேசமாம். (வேதா. சூ. 20)

உத்தேசியம் -

{Entry: Q17c__098}

எதனைப் பற்றி விதிக்கப்படுவதோ அஃது உத்தேசியமாம். அது வாக்கியத்தில் பெரும்பான்மையும் எழுவாயாகவே யிருக்கும். அஃது இவ்விதியின் முன்னரே அறியப்பட் டிருத்தல் வேண்டும்; என்னையெனில், ஒரு பொருளை இன்னதென்று அறியாமலிருக்க, அதனைப் பற்றி வேறொன்று கூறின், கேட்போனுக்குப் பொருள் விளங்காதுபோம் ஆதலின். (தொ. சொ. குறிப். பக். 7)

உபசார வழக்கு -

{Entry: Q17c__099}

ஒன்றன் தன்மையை மற்றொன்றறன்மேல் ஏற்றிக் கூறுவது. (L)

எ-டு : ‘ஆருயிர்’ (கு. 73) என்னுமிடத்தே, பிறப்பினது அருமை உயிர்மேல் ஏற்றப்பட்டது. (பரிமே.)

உபபத்தி -

{Entry: Q17c__100}

சொல்லும் செய்தியை நிறுவுதற் பொருட்டுக் காட்டும் உத்தி. ‘சச்சி தானந்தம் உபபத்தி அகமும் சீவனுமாய்’ (பிரபோத. 22-17) (L)

உபமிதி -

{Entry: Q17c__101}

உபமானப் பிரமாணத்தினால் வரும் அறிவு. (தருக்கபா. 30)

ஆப் போலும் ஆமா என்ற உபமானப் பிரமாணத்தைக் கொண்டு, காட்டில் செல்லும்போது முன் கண்டறியாத ஆமாவினை இன்ன விலங்கு என்று அறிதல் போல்வன. (மணி. 27 : 41, 42)

உபயதன்ம விகலம் -

{Entry: Q17c__102}

திட்டாந்தத்தில் சாத்திய சாதனம் இரண்டும் குறைந்த திட்டாந்தப் போலிவகை. (மணி. 29 : 359)

உபய தன்ம விகலம் - சாதனதருமம் எனப்படும் ஏதுவின் பண்பும் சாத்திய தருமம் எனப்படும் நிரூபிக்கப்பட வேண்டிய பொருட்பண்பும் நன்கு விளக்கப்படாதொழிதலாகும் திட்டாந்தப் போலிவகை. இஃது ஒரே இனப்பொருளை எடுத்துக்காட்டாகக் கூறும் சாதன்மிய திட்டாந்தத்தின் போலிவகை. இது சன்னா உள்ள உபயதர்ம விகலம், அசன்னா உள்ள உபயதர்ம விகலம் என இருவகைப்படும். அஃதாவது உள்பொருள் உபய தர்ம விகலம், இல்பொருள் உபயதர்ம விகலம் என்பன.

எ-டு : பக்கச்சொல் - ஒலி நிலைபேறுடையது

ஏது - வடிவின்மையால்

சாதன வசனம் - யாதொன்று வடிவற்றதோ அது நிலை பேறுடையது.

எ-டு : எடுத்துக்காட்டு வடிவற்றதாய் என்றும் நிலைபே றுடையதாய் உள்ள பொருளாதல் வேண்டும். அதனை விடுத்து, ‘குடம் போல’ என்று எடுத்துக் காட்டினைக் கூறின், அக்குடத்தின்கண் வடிவின் மையோ, நிலைபேறுடைமையோ இன்மையின், பக்கச்சொல்லின் பண்பாகிய நிலைபேறுடைமையும் ஏதுவாகிய வடிவின்மையையும் விளக்குவதற்கு அவ்வெடுத்துக்காட்டுப் பயன்படாமையால், பொருட்பண்பு, ஏதுப்பண்பு என்ற இரண்டற்கும் இழுக்குத் தரும். உள்பொருளாய் உள்ள எடுத்துக் காட்டுத் தரப்படுதல் உள்பொருள் உபயதர்ம விகலம் என்ற திட்டாந்தப் போலியாகும்.

இல்பொருள் உபயதர்ம விகலமானது வாதி தன் எதிரிக்கு இல்பொருளாம் ஒன்றைக் காட்டுமிடத்து, அதன்கண் பக்கப் பொருளும் ஏதுவும் குறையுடையனவாகக் காட்டுதல். பக்கச்சொல் - ஒலி நிலையற்றது; ஏது - அது வடிவு உடைமை யால்; சாதனவசனம் - யாதொன்று வடிவுடையது அது நிலையற்றது; எடுத்துக்காட்டு - ஆகாயம் போல் எனின், “ஆகாசம் என்பது இல்லை என்ற எதிரிக்கு, அந்நிலையற்ற தன்மையோ, வடிவு உடைமையோ உடன்பாடு அன்மையின், இஃது அசன்னா உள்ள உபயதன்ம விகலம் ஆகும்.” (மணி. 29 : 359 - 84)

உபயாவியாவிருத்தி -

{Entry: Q17c__103}

சாதனம் சாத்தியம் இரண்டும் மீளாதிருக்கும் வைதன்மிய திட்டாந்தப்போலி. (மணி. 29 : 441)

திட்டாந்தப் போலி என்னும் எடுத்துக்காட்டுப்போலி, ஒத்த பொருளின் எடுத்துக்காட்டுப்போலி (-சாதன்மியம்), ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப்போலி (-வைதன்மியம்) என இருவகைத்து. ஒவ்வொரு வகையிலும் ஐயைந்து உட்பிரிவுகள் உள. ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப் போலியின் ஐவகையுள் மூன்றாவது, உபயாவியாவிருத்தி என்பது

உபயம் - இரண்டு; வியாவிருத்தி - வேறுபாடு.

அஃதாவது எடுத்துக்காட்டாகக் கூறப்பட்ட ஒவ்வாப் பொருளைக்கொண்டு தான் சாதிப்பதற்கு மேற்கொண்ட பொருளை எதிர்மறைமுகத்தால் நிரூபிக்கப் புக்க வாதி எடுத்துக்காட்டும் அவ் ஒவ்வாப்பொருள் எடுத்துக்காட்டி லிருந்து பக்கம், ஏது என்ற இரண்டன் பண்புகளும் மறுதலை நிலையில் பொருந்தாதொழிதலாம். இவ்வுபயாவியா விருத்தியானது உண்மை, இன்மை என இரு பிரிவிற்று.

உள்பொருளின் உபயாவியாவிருத்தி -

எ-டு : பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையது

ஏது - வடிவற்ற தாதலின்.

மறுதலைநிலையில் விளக்கம் - யாதொன்று நிலைபேறுடைய தன்றோ, அது வடிவு அற்றதன்று.

எடுத்துக்காட்டு - ஆகாயம் போல.

எடுத்துக்காட்டு ஆகிய ஆகாயம் ஒத்த பொருளின் எடுத்துக் காட்டு. மறுதலைநெறியான் பக்கத் தொடர்ச்சி கூறின், ஒவ்வாப் பொருளாகிய மறுதலைப் பொருளின் எடுத்துக் காட்டினைக் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறாது ஒத்த பொரு ளாகிய ஆகாயத்தை எடுத்துக்காட்டாகக் கூறின் ஆகாயம் நிலைபேறு உடையது அன்று எனவும், வடிவம் உடையது எனவும் பெறப்படுதலின், நிலைபேறுடையதும் வடிவமற்றது மான ஒலிக்கு ஆகாயம் எடுத்துக்காட்டு அன்றாய் முடிதலின், பக்கப்பொருளின் குணமாகிய நிலைபேறுடைமை ஏதுவின் குணமாகிய வடிவற்ற தன்மை இரண்டற்கும் மாறுபாடு உண்டாக்கும் உபயாவியாவிருத்தி, உள்பொருளிடத்தும் கூறிய எடுத்துக்காட்டுப்போலி யாகிறது. ஆகாயம் என்ற பொருளில்லை என்ற எதிரிக்கு, இஃது இல்பொருளின் உபயாவியாவிருத்திக்கு எடுத்துக்காட்டாகிறது.

இல்பொருளின் உபயாவியாவிருத்தி -

எ-டு : பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையதன்று. ஏது - வடிவுடைமையின்; பக்கவசனம் எதிர்மறை நிலையில் - யாதொரு பொருள் நிலைபேறில்லாத தன்றோ (நிலைபேறுடையதோ), அது வடிவுடையதன்று. மறைநிலையில் எடுத்துக்காட்டு - ஆகாயம் போல.

ஆகாயம் என்ற பொருள் ஒன்று இல்லை என்பானுக்குப் பொருட்பண்பாகிய நிலைபேறுஇன்மையும், ஏதுப்பண் பாகிய வடிவுடைமையும், அவற்றிற்கு மாறுபட்ட நிலை பேறும், வடிவின்மையும் ஆகியவற்றுள் ஒன்றும் உடன்பா டின்மையின், எதிரி ஏற்றுக்கொள்ளாத இந்த எடுத்துக்காட் டினைத் தருதல் இல்பொருளிடத்துக் கூறிய உபயாவியா விருத்தி என்ற வைதன்மிய திட்டாந்தப்போலியாம். (மணி. 29 : 429 - 49)

உபலட்சணம் -

{Entry: Q17c__104}

இலட்சியத்தைப் பக்க உதவியைக் கொண்டு உணர்த்தும் லட்சணம் (L)

எ-டு : மரக்கிளையின் நுனி வானிலுள்ள பிறையைக் காண உதவுதல்

உபாதி -

{Entry: Q17c__105}

அவச்சேதகம் நான்கனுள் ஒன்று. (விசார சந். 320)

(ஒரு பொருளைப் பிற பொருளிலிருந்து பிரித்துணர்தற்கு ஏதுவான சிறப்புப்பண்பு அவச்சேதகம்.)

உபாதியாவது சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகம் இல்லாதது. (தருக்க. பா. 18) (L)

பக்கம் - இம்மலையில் புகையுண்டு.

ஏது - ஈரமரங்களில் பற்றிய தீயினால்;

பக்க விளக்கம் - எங்கெங்கு ஈரமரங்களில் பற்றிய தீயுண்டோ, அங்கங்குப் புகை உண்டு.

சாத்தியம் - புகை

சாதனம் - நெருப்பு

உபாதி - ஈரமரங்களில் பற்றிய தீ.

ஈர மரங்களில் பற்றிய தீ என்பது சாத்தியத்தில் வியாபித்தது; அஃதாவது புகையை உண்டாக்குகிறது.

சாதனமாகிய நெருப்பு இருக்கும் இடமெல்லாம் ஈரமரமாக இருக்கவேண்டியதில்லை என்பது சாதனத்தில் வியாபகம் இல்லாததாம்.

உருவியை அருவி ஆக்குதல் -

{Entry: Q17c__106}

உருவி - உருவமுடையவன்; அருவி - உருவமில்லாதவன். உருவியாகிய பாட்டுடைத் தலைவனையே அருவியாகிய கிளவித் தலைவனாகக் கொண்டு கிளவிப்படக் கூறுதல். இதுவும் ஓர் ஆனந்தக் குற்றமாம். (யா. வி. பக். 565)

உரை -

{Entry: Q17c__107}

1. சொல் (திவா. பக். 223)

2. எழுத்தொலி, சொற்பொருள் (பிங். 3203)

3. ஆகமப் பிரமாணம் (சி.சி. அளவை)

4. வியாக்கியானம்; ‘உரையாமோ நூலிற்கு நன்கு’ (நாலடி. 319)

உரை அளவை -

{Entry: Q17c__108}

கருத்தா மொழியாகிய ஆகமப்பிரமாணம். (சி. சி. அளவை.2 சிவ. (மணி. 27 : 43, 44) ( L)

உலகமலைவு -

{Entry: Q17c__109}

செய்யுட் குற்றங்களுள் ஒன்று. ஈண்டு ‘உலகம்’ என்பது உலகியலாகிய ஒழுக்க நெறியைக் குறிக்கும்.

எ-டு : ‘அலைகடல் ஏழும்தூர்த்(து) அந்தரத்தின் ஊடே // மலையனைய மால்யானை ஓட்டிக் - கலவாரை // நீறாக்கி வையம் நெடுங்குடையின் கீழ்வைத்தான் // மாறாச்சீர் மாநிலத்தார் மன்’

வேந்தன் ஒருவன் ஏழு கடல்களையும் தூர்த்து வான்வெளி யில் போர்யானைகளை ஓட்டிப் பகைவரை எரித்துச் சாம்பலாக்கி உலகமுழுதையும் தன் ஒற்றைக்குடை நிழலில் வைத்தாண்டான் என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், உலகியல் நெறிக்கு மாறாகக் கடல் தூர்த்தல் முதலான செயல் களைக் கூறுதல் உலகமலைவு என்னும் குற்றம் ஆயினமை காணப்படும். (தண்டி. 122)

உலக மலைவு ஆம் இடன் -

{Entry: Q17c__110}

உலகியலுக்குப் பொருந்தாத செய்திகள் புகழ்ச்சியிடத்து ஏற்கத்தக்கன.

எ-டு : ‘கடல்நான்கும் வந்தலைக்கும் காலாளும் தேரும் // அடல்செய்(து) இருதுணியாம் அன்றே - உடலொன்றி // அந்தரமே ஏகுவன் காண்மினோ! யானியற்றும் // இந்திர சாலம் இது!’

” நாற்கடலளவும் பரந்துபட்ட காலாட்படையையும் தேர்ப் படையையும் ஒவ்வொன்றும் இவ்விரண்டு துண்டமாமாறு அழித்து இந்த உடலொடு தேவருலகிற் செல்லப்போகிறேன்” என்று கூறுவது உலக மலைவு; இதனை இந்திரசாலம் வல்லவன் செய்துகாட்டக் கூடும் ஆதலின், அவன் இதனைக் கூறும்போது புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆகும். (தண்டி. 125 -4)

உலகியல் சொல் -

{Entry: Q17c__111}

வேத வழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல். (கலித். 1- 1 உரை.)

உலோக விருத்தம் -

{Entry: Q17c__112}

உலகவழக்குக்கு மாறுபட்டது. (மணி. 29 : 162, 163)

ஒரு செய்தியை நிறுவுவதற்குப் பக்கம், ஏது, எடுத்துக்காட்டு என்ற மூன்றும் தேவை. பக்கமாகக் குறிப்பிடப்படும் நிரூபிப்ப தற்கு உரிய பொருளும் அதன் பண்பும் மாறுபட்டிருப்பின், அது பக்கப்போலி எனப்படும். பக்கப்போலி பிரத்தியக்க விருத்தம் முதலாக ஒன்பது வகைப்படும். அவற்றுள் உலோக விருத்தம் என்பது பொதுவாக உலகத்தில் கூறப்பட்டு வரும் செய்திக்கு மாறாகக் கூறுவது.

வானத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் சந்திரனைச் சந்திரன் அன்று என்று கூறுவது, சந்திரனுக்கு மதி என்பது பெயரன்று என்று கூறுவது போல்வன இப் பொருந்தாப் பக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும்.

உவம அளவை -

{Entry: Q17c__113}

ஒப்பளவை (குறள் 253 உரை)

உண்மையைக் கண்டு அறிவதற்குப் பயன்படும் அளவைகள் எனப்படும் பிரமாணங்கள் காண்டல் முதலாகச் சம்பவ அளவை (உண்மைநெறி அளவை) ஈறாகப் பத்து என்பர். அவற்றுள் உவம அளவையாவது ஒன்றோடு ஒன்றனை ஒப்பக் கூறி உணர்த்தும் அளவையாம். ஆமா என்றதொரு விலங் கினை அறியாதானுக்கு, ஆப்போலும் எனப் பசுவைப் போலிருக்கும் என்று சொல்லி, ஆமாவினைக் கண்டபோது அவ்வுவமத்தைக் கொண்டே அதனை அறியச் செய்தல். (மணி. 27 : 41, 42)

உள்ளதன் அபாவம் -

{Entry: Q17c__114}

“ஆனையைப் பந்தியிற் கண்டிலம்” என்றாற் போலும் அபாவம்.

பந்தி - ஆனை கட்டும் இடம். ஆனை அங்குக் காணப்பட வேண்டியது அங்குக் காணப்படாமல் போனது உள்ளதன் அபாவமாம். (சி. சி.அளவை 1, மறைஞான) (L)

எ section: 3 entries

எழுத்தானந்தம் -

{Entry: Q17c__115}

பாடப்படுவோனது பெயரைச் சார்த்தி எழுத்து அளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம்.

எ-டு : ‘ஆழி இழைப்பப் பகல்போம் இரவெல்லாம் // தோழி துணையாத் துயர்தீரும் - வாழி // நறுமாலை தாராய் திரையவோஒ என்னும் // செறுமாலை சென்றடைந்த போது.’

இதன்கண் ‘திரையவோஒ’ என்பது இயற்பெயரைச் சார்ந்து எழுத்து அளபெடுத்தமையால் எழுத்தானந்தம் ஆகிய குற்றமாயிற்று. ‘திரையன்’ என்னும் இயற்பெயர் ‘திரை’ என விளிக்கப்படும். (யா. வி. பக். 557, 558)

எழுத்துக் குற்றம் -

{Entry: Q17c__116}

1. எழுத்திலக்கண வழு 2. நச்செழுத்து வரப் பாடும் குற்றம்

(யாழ். அக)

‘தேமான் இதணத்தேம் நாமாக நம்புனத்தே // வாமான்பின் வந்த மகன்’

இதன்கண் தேமா என்பதே சொல்; ‘தேமான்’ என அதற்கு னகரச் சாரியை கொடுத்துக் கூறியது எழுத்ததிகாரச் செய்தி யொடு மாறுபடுதலின் எழுத்திலக்கண வழுவாம் (யா. வி. பக். 422)

எழுத்து வழு -

{Entry: Q17c__117}

‘எழுத்துக் குற்றம்’ காண்க. (யா. வி. 95 உரை)

ஏ section: 5 entries

ஏத்துவந்தரம் -

{Entry: Q17c__118}

தோல்வித் தானத்துள் ஒன்று. உரிய ஏதுவன்றிப் பிறிதொரு ஏதுக் கூறல். ஹேது + அந்தரம். படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அழியக்கூடியன. இதனை அறிந்திருந்தும், “பக்கப்பொருள் - ஒலி நிலைபேறுடையது; ஏது - உண்டாக் கப்படுதலால்” என்று பொருத்தம் இல்லாத ஏதுவினைக் கூறுதல் ஏத்துவந்தரம். (செந். 3 - 13) (L)

ஏது -

{Entry: Q17c__119}

1. திருஷ்டாந்தம். “ஏதுக்கள் காட்டி முடித்தாள் இணையில்லா நல்லாள்” - (நீலகேசி - 423)

2. சம்பந்தம் - ‘புலி கொண்மார் நிறுத்த வளையுளோர், ஏதுஇல் குறுநரி பட்டற்றால்’ (கலி. 65) (L)

ஏது நிகழ்ச்சி -

{Entry: Q17c__120}

கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத் தற்குத் தோன்றுதல் ‘ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்’ (மணி. 3:4.) (L)

ஏதுப்போலி -

{Entry: Q17c__121}

ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29: 191)

ஏதுவனுமானம் -

{Entry: Q17c__122}

ஏது அனுமானம் ; காரிய நிகழ்ச்சி கண்டு அதற்குக் காரண முண்டு என்று கருதி உரைக்கும் அளவை.

எ-டு : ஆற்றில் பெருகிய வெள்ளத்தைக் கண்டு ஆறு தோன் றுமிடத்தே மழை மிகப் பெய்துள்ளமையை எண்ணி யுரைப்பது.

ஐ section: 2 entries

ஐதுகன் -

{Entry: Q17c__123}

சத்தப் பிரமாணத்தை மறுத்து ஏதுவாதம் செய்வோன். “ஆரணநூல்வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர் வாரணமாய்” (ரஹஸ்ய. 61) ; ஏதுவை அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வோன் ஐதுகன்.

ஐயமொழி -

{Entry: Q17c__124}

செய்யுட் குற்றங்களுள் ஒன்று; பொருள் இன்னதென்று துணியக் கூடாதவாறு தடுமாற்றம் தோன்றக் கூறுவது.

(யா. வி. பக். 565)

ஒ section: 4 entries

ஒட்டுப் பிரிமொழி -

{Entry: Q17c__125}

செய்யுட்கண் வருதல் கூடாது என்று விலக்கப்பட்ட பல வகைக் குற்றங்களுள் ஒன்று.

இணைந்துள்ள சொற்களைப் பிரித்தவிடத்து அமங்கலப் பொருள் தருவது.

எ-டு : ‘வீதிதோறும் மாடஞ் சிறக்க’ ‘மாடஞ் சிறக்க’ என்பது மாடு அஞ்சு இறக்க என்றும் பிரிந்து அமங்கலப் பொருள் தருகிறது. இத்தகையன ‘ஒட்டுப் பிரிமொழி’ என்னும் குற்றமாம். (யா. வி. பக். 565)

ஒருபொருள் மொழி -

{Entry: Q17c__126}

யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரால் பரக்கக் கூறப்பட்ட செய்யுட் குற்றங்களில் ஒன்று. இக்குற்றம் முதலிய 27 ஊனங் களையும் நீக்கிப் பாடவல்லோன் கவிஞன் என்பர். ஒரே செய்தியைப் பலகாலும் குறிப்பிடும் கூறியது கூறல் என்னும் குற்றம் இது. (யா. வி. பக் 565)

ஒவ்வாப் பக்கம் -

{Entry: Q17c__127}

தருக்கத்தில் பொருந்தாத பக்ஷம். பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்றனுள் பக்கம் பொருந்தாது பக்கப்போலியாக அமைதல். அஃது ஒன்பது வகைப்படும். பிரத்தியக்க விருத்தம், 2) அநுமான விருத்தம், 3) சுவசன விருத்தம், 4) உலோக விருத்தம், 5) ஆகம விருத்தம், 6) அப்பிரசித்த விசேடணம், 7) அப்பிரசித்த விசேடியம், 8) அப்பிரசித்த உபயம், 9) அப்பிர சித்த சம்பந்தம் என்பன அவை. இவற்றின் விளக்கம் அவ்வத்தனித் தலைப்புள் காண்க. (மணி. 29 : 147 - 190)

ஒன்றனை ஒன்று பற்றுதல் -

{Entry: Q17c__128}

அந்யோன்னியாச்சிரய தோஷம் என்று வடநூலுள் சொல் லப்படும் குற்றம். இதரேதராச்சிரயம் என்பதும் அது.

குற்றியலுகரம் இடனும் பற்றுக்கோடும் சார்ந்துவரும் என்று கூறிப் பின் இடனும் பற்றுக்கோடும் குற்றியலுகரத்துக்குச் சார்பாய்அல்லது வாரா என்று மீண்டும் கூறுதல் ஒன்றனை ஒன்று பற்றுதல் என்னும் குற்றமாம்.

வேற்றுமைத்தொகை உருபும் பொருளும் உடன் தொக்கவழி அன்மொழித்தொகை போல் இடைப்பதங்கள் விரித்துக் கொள்ளப்படும் எனவும், அன்மொழித்தொகை வேற்றுமைத் தொகைபோலத் இடைப்பதங்கள் விரித்துக்கொள்ளப்படும் எனவும் கூறுவது இதரேதராச்சிரியம் என்னும் ஒன்றனை ஒன்று பற்றுதல் என்னும் குற்றமாம். (சூ. வி. பக். 50)

க section: 53 entries

கட்டிய சொல் -

{Entry: Q17c__129}

‘பொருளில்லாமற் படைத்துக்கொண்ட தொடர்மொழி (பி. வி. 19 உரை)

எ.டு : முயற்கோடு, ஆகாயத்தாமரை

கடசடக நியாயம் -

{Entry: Q17c__130}

கடம் - குடம்; சடகம் - குருவி.

குடத்திற்கு இயல்பாக இல்லாத ஒலியை அதன்உள் நுழைந் திருக்கும் குருவி உண்டாக்குவதுபோல, பிராணவாயு தானே அசையும் ஆற்றல் இல்லாத உடலை உள்ளிருந்து இயக்குவது முதலாக ஒன்று மற்றொன்றினுள் இருந்து காரியப்படுத்து வதை விளக்கும் நெறி இந்நியாயமாகும் (L)

கடம்பகோரக நியாயம் -

{Entry: Q17c__131}

கடம்பு - மர விசேடம்; கோரகம் - அரும்பு

கடம்பமரத்தின் அரும்புகள் ஒரே காலத்தில் பூப்பது போல, ஒரே இடத்திலிருந்து புறப்படும் ஒலி அலைகள் ஒரே காலத் தில் நாற்றிசையிலும் உள்ளவர் செவியில் சென்று சேருதல் முதலாகப் பல செயல்களும் ஒரே காலத்தில் நிகழ்வதனைக் குறிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)

கடம்பமுகுள நியாயம் -

{Entry: Q17c__132}

கடம்பு - மரவிசேடம்; முகுளம் - மொட்டு. கடம்ப கோரக நியா யத்தின் மறுபெயர் இது. அது நோக்குக.

கதானுகதிக நியாயம் -

{Entry: Q17c__133}

கதா - செல்லுதல்; அனுகதி - பின்தொடர்தல்.

சிறிதும் ஆராய்தல் இன்றி, ஒருவர் சென்ற வழியே தனக்கும் பின் பற்றுதற்குரியது என்று கருதிச் செல்லும் நெறி இந் நியாயமாகும். (L)

கபோணிகுள நியாயம் -

{Entry: Q17c__134}

கபோணி - முழங்கை; குளம் - வெல்லம்

முழங்கையிலுள்ள வெல்லத்தை நாவால் சுவைக்கச் சொல் லின் நா முழங்கையை அணுக ஒண்ணாதவாறு போல, தனக்கு அண்மையில் இருந்தும் தன்னால் பெற இயலாத பொருளைப் பெற முயன்று செயலற்றிருக்கும் நெறி இந்நியாயமாகும். (L)

கபோதக நியாயம் -

{Entry: Q17c__135}

கபோதகம் - புறா

ஒரு புறா ஓரிடம் சேர, அதன் இனமான புறாக்கள் எல்லாம் உடனே அதனைப் பின்பற்றி அவ்விடத்தைச் சேர்தல் போல, ஒரு செயல் நிகழ அதன் இனமான பலவும் உடன்நிகழும் நெறி இந்நியாயமாகும். (L)

கலே கபோத நியாயம் -

{Entry: Q17c__136}

புறாக்கள் பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப் பொறுக்க மேல் விழுவது போலும் நெறி.

‘கபோதக நியாயம்’ காண்க.

கலைமலைவு -

{Entry: Q17c__137}

செய்யுட் குற்றங்கள் ஆறனுள் ஒன்று.

இன்பமும் பொருளும் பற்றிய அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றற்கொன்று பொருந்தாதவற்றைச் சொல்லும் குற்றம் இது.

எ-டு : ‘ஐந்தாம் நரம்பாம் பகைவிரவா(து), ஆறாகி

வந்த கிளைகொள்ள நான்காம் - முந்தை

இணைகொண்ட யாழ்எழூஉம் ஏந்திழைதன் ஆவித்

துணைவன் புகழே தொடுத்து.’

யாழினது ஐந்தாம் நரம்பாகிய பகை சாராமல், ஆறாம் நரம்பாய் வந்த கிளையைக் கொள்ள, நான்காம் நரம்பாகிய முதன்மைத் தான இணையைக் கொண்ட யாழினை அப் பெண் தன் உயிர்த்துணைவனது புகழைத் தொடுத்து வாசிப்பாள் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இசைக் கலை மலைவு வந்துள்ளமை பின்வருமாறு :

நின்ற நரம்பிற்கு ஐந்தாவது ‘கிளை’; அஃது இங்குப் ‘பகை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆறாவது நரம்பான ‘பகை’ ஈண்டுக் ‘கிளை’ எனப்பட்டுள்ளது. நான்காவது நரம்பான ‘நட்பு’ ஈண்டு எட்டாம் நரம்பான இணை என்று சுட்டப்பட் டுள்ளது. இவ்வாற்றால் இதன்கண் இசைக்கலை மலைவு காணப் பட்டவாறு. (தண்டி. 121)

கலை மலைவு ஆம் இடம் -

{Entry: Q17c__138}

கலைக்கு மாறாய தவறுகளும் இல்பொருளாய்ப் புகழ்ச்சி யிடத்துப் புனைந்துரையாகிய நாடகவழக்கின்கண் அலங் காரமாய் வரின் ஏற்றுக்கொள்ளப்படும்.

எ-டு : ‘கூடம் விரவிக் குறைநிலத்தா னத்தியன்ற

பாடல் அமுதம் பருகினான் - ஆடுகின்ற

ஊசல் அயல்தோன்றி ஒள்ளிழைக்கு நாண்அளித்த

ஆசில் வடிவே லவன்.’

கூடம் ஆறாம் நரம்பாகிய பகை நரம்பு. அதனொடு கூடிக் குறைந்த நிலமாகிய தானத்தில் மிழற்றப்பட்ட பாடலை அமுதம் போலப் பருகுதல் என்பது கலைமலைவாகும். தலைவி ஊஞ்சலை ஆடிக்கொண்டு பாடும்போது, அவள் அயலில் வந்து தோன்றிய தலைவனுடைய தோற்றம் அவ ளுக்கு நாணம் பயந்தமையால், பாடல் பிறழ்ந்தது; பிறழினும் அவள்பால் கொண்ட காதல் மிகுதியால் அதன்கண் குறை காணாது அவன் அதனை இனிதின் சுவைத்தான் என்பத னால், இக்கலைமலைவு புகழ்ச்சியிடத்து அலங்காரமாய் அமைந்தது. (தண்டி. 125)

கவர்படுபொருள் மொழி (வழு) -

{Entry: Q17c__139}

ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்துவதற்காக வந்த சொல், அப்பொருளை ஐயுறுமாறு பல பொருளையும் குறித்து நிற்கும் வழு; வழு ஒன்பதனுள் ஒன்று.

எ-டு :

‘புயலே புறம்பொதிந்து பூந்தா(து) ஒழுக்கி

மயலே கடவுளர்க்கு வாய்த்துச் - செயலை

எரிமருவு பூந்துணர்த்தாய் யாவரும் ஊ டாடார்

அரிமருவும் சோலை அகம்’.

மேலே மேகங்களால் கவியப்பெற்று, உள்ளே மகரந்தத் தூள்கள் சொரியப்பட்டு, தன் வனப்பு மிகுதியால் தேவர்க்கும் மயக்கம் அளித்து, அசோகின் அழல்போன்ற பூங்கொத் துக்கள் மிகக் கொண்டு, வண்டுகள் (அரி) சூழும் பூஞ் சோலைக்குள் யாரும் புகார் என்ற பொருளமைந்த இப் பாடற்கண், ‘யாரும் உள்ளே புகார்’ என்ற முடிவுடன், வண்டு என்னும் பொருளில் ‘அரி’ என்ற சொல்லை அமைத் திருப்பது, அச்சொற்கு அமைந்த பிற பொருள்களான சிங்கம் நெருப்பு முதலிய பொருளுக்கும் ஏற்றதாய்க் கவர்பட்டு நிற்றலின், இது வழுவாயிற்று.

கவர்படு பொருள்மொழி - வழுவமைதி -

{Entry: Q17c__140}

கவர்படுபொருள் : வழுவமைதியாதல்.

பல பொருள் ஒரு சொல் தெளிவாகப் பொருளுணர்த்து மாயின் அது கொள்ளத்தக்கதாம்.

எ-டு : ‘அரியே அனைத்துலகும் காக்கும் கடவுள்

எரியே மறையோர்க் (கு) இறை.’

என்புழி, ‘அரி’ திருமாலெனவும், ‘எரி’ நெருப்பெனவும் தெளிவுறப் பொருள் பயத்தலின் குற்றமில என்பது. (தண்டி. 107, 108)

காகதாலீய நியாயம் -

{Entry: Q17c__141}

காகம் - காக்கை; தாலீயம் - பனம்பழம்.

காகம் பனைமரத்தில் வந்து தங்கப் பனம்பழம் அப்பொழுது விழுந்ததனைக் காக்கை ஏறியதனால் பனம்பழம் விழுந்தது என்று சொல்வதுபோலத் தற்செயலான நிகழ்ச்சிக்கு ஒரு காரணத்தை ஏற்றி உரைக்கும் நெறி இந்நியாயமாகும். (L)

காகாட்சிகோள நியாயம் -

{Entry: Q17c__142}

காகம் - காக்கை; அட்சி - கண்; கோளம் - கண்மணி.

காகத்திற்கு இருகண்களுக்கும் ஒரே கண்மணி உள்ளது. எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ அந்தக் கண்ணுக்குக் கண்மணியைக் காக்கை உருட்டிக் கொண்டுவந்து சேர்த்துப் பார்க்கும். அதுபோல ஒரே சொல் இரண்டு இடங்களுக்குத் தனித்தனிப் பொருந்திப் பொருள் விளக்கும் நெறி இந் நியாயமாகும். (L)

காட்சி அளவை -

{Entry: Q17c__143}

மெய் முதலிய ஐம்பொறிகளாலும் உணர்வது (குறள் 243 பரிமே.) காட்சிப் பிரமாணம் (சி. போ. சிற். 1, 1. பக்.15) எனவும், பிரத்தியட்சப் பிரமாணம் எனவும் இது கூறப்படும். (L)

இது ‘சுட்டுணர்வு’ எனவும் பெயர் பெறும். இஃது ஒரு பொரு ளின் பொருண்மை மாத்திரம் கண்டு உணரும் உணர்வாம். ஆகவே, காட்சியளவையாவது கண் முதலிய பொறிகளான் வண்ணம் முதலியன பற்றிக் காண்டல் முதலியன செய்து மேம்போக்காக அறியலாம். இத்தகைய மேம்போக்கான அறிவோடு அப்பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டு ணரும் உணர்வே சுட்டுணர்வு எனவும் காட்சியளவை எனவும் கூறப்படும் பிரத்தியக்கப் பிரமாணமாகும் என்று மணிமேகலை கூறுகிறது. (மணி. 29 : 49-51)

காட்சி வாதி -

{Entry: Q17c__144}

பிரத்தியட்சம் தவிர வேறு பிரமாணம் இல்லை என்று வாதிக்கும் உலோகாயதன். (சி. போ. பா. அளவை. பக். 40) ( L)

“கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்; இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே: மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே” என்று குறிப்பிடும் பூதவாதியின் கோட்பாடும் இதுவே. (மணி. 27 : 274-276)

காண்டல் அளவை -

{Entry: Q17c__145}

‘காட்சி அளவை’ காண்க

காரணிகன் -

{Entry: Q17c__146}

நியாய மத்தியஸ்தன். ‘நமக்கோர் காரணிகனைத் தரல் வேண்டும். (இறை.அ.1 உரை) (L)

காரியானுமானம் -

{Entry: Q17c__147}

காரியத்தினின்று காரணத்தை அனுமானித்தல் (மணி. 27: 33, 34 உரை).

எ-டு : ஆற்றுநீர் வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடுவதனைக் கண்டு ஆற்றின் தொடக்கமாகிய மலைப்பகுதியில் பெருமழை பெய்திருத்தல் வேண்டும் என்று, காரியத் தைக் கொண்டு காரணத்தை இங்ஙனம் இருத்தல் வேண்டும் என்று கருதுவது காரிய அனுமானம்.

காலமலைவு -

{Entry: Q17c__148}

செய்யுட் குற்றங்கள் ஆறனுள் ஒன்று. காலம் என்பது செய்யுளுள் இடம் பெறும் சிறுபொழுதும் பெரும்பொழு தும் ஆம். அவற்றுள் ஒருகாலத்திற்குரிய பூவும் புள்ளும் தொழிலும் போல்வனவற்றைப் பிறிதொரு காலத்திற்குப் புணர்த்துரைக்கும் பொருந்தாமையே இது.

எ-டு : ‘செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதம் கண்மலர

எங்குநெடு வான்மீன் இனம்இமைப்பப் - பொங்(கு) உதயத்(து)

ஓர்ஆழித் தேரோன் உகந்தான்; மலர்ந்ததே

நீர்ஆழி சூழ்ந்த நிலம்.’

இதன்கண், தாமரை குவியவும் குமுதம் மலரவும் எங்கும் விண்மீன் இமைக்கவும் சூரியன் உகப்ப உலகம் விழித்து மலர்ந்தது என, தாமரை குவிதல் குமுதம் மலர்தல் விண்மீன் இமைத்தல் ஆகிய மாலைக்குரிய நிகழ்ச்சிகளைக் கூறிச் சூரியன் உதித்தான் என்று கூறியது சிறுபொழுது பற்றிய காலமலைவு.

எ-டு : “காதலர் வாரார்; களிக்கும் மயில்அகவத்

தாதவிழ் பூங்குருந்தின் தண்பணையின் - மீதே

தளவேர் முகைநெகிழத் தண்கொன்றை பூப்ப

இளவேனில் வந்த(து) இதோ.”

“மயில்கள் அகவுகின்றன; குருந்த மரக்கிளைகளில் படர்ந்த முல்லை அரும்புகள் மலர்கின்றன; கொன்றையும் பூத்துவிட் டது; இதோ இளவேனில் வந்தது. ஆயின் என் தலைவர் வந்திலரே!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மயில் அகவுதல் முல்லை மலர்தல் கொன்றை பூத்தல் ஆகிய கார் கால நிகழ்ச்சிகளைக் கூறி, இளவேனில் வந்ததாகக் கூறியது பெரும்பொழுது பற்றிய காலவழு. (தண்டி. 120)

காலமலைவு ஆம் இடம் -

{Entry: Q17c__149}

காலத்தொடு பொருந்தாத வருணனையும், இல்பொருளாகிய புகழ்ச்சியிடத்து ஏற்கத்தக்கது.

எ-டு : மண்டபத்து மாணிக்கச் சோதியான் வாவிவாய்ப்

புண்டரிகம் மாலைப் பொழு(து) அலரும் - தண்தரளத்

தாமம் சொரியும் தகைநிலவான் மெல்லாம்பல்

பூமலரும் காலைப் பொழுது.’

இப்பாடலில் காலையில் மலரும் தாமரை மாலை மலரும் எனவும், மாலையில் மலரும் ஆம்பல் காலை மலரும் எனவும் கூறியது காலமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று. இது சிறுபொழுது . (தண்டி. 125-2)

எ-டு : வஞ்சியர்கோன் வஞ்சி மதவேழ வார்மதத்தால்

வெஞ்சுடர்சூழ் வேனில் வெயில்மறைப்ப - வஞ்சத்

தள(வு)அரும்பப் பூங்கொன்றைத் தண்கொம்(பு) அரும்பக்

களிமயில்கள் ஆர்த்திலகும் காடு.

இப்பாடலில், கார்காலத்துக்குரிய முல்லை அரும்புதல், கொன்றைப் பூத்தல், மயில் ஆடுதல் ஆகியவற்றை வேனிற் காலத்துக் கூறியது காலமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று. இது பெரும்பொழுது. (இ. வி. 708-3)

குணாக்கர நியாயம் -

{Entry: Q17c__150}

குணம் - புழு; அக்கரம் - எழுத்து.

மரம் சுவடி முதலியவற்றில் புழுக்கள் அரித்துத்தின்ற இடங் களது அமைப்புச் சில சமயங்களில் எழுத்துவடிவில் அமைந் திருப்பது போல, தற்செயலாக ஒருசெயல் செய்வோனுடைய உள்ளம் கலவாது நிகழ்வதனைக் குறிக்கும் நெறி இந்நியாய மாகும். (‘ஏரல் எழுத்து’ என்பார் பரிமேலழகர்) (குறள் 404 உரை) (L)

குற்றம் -

{Entry: Q17c__151}

எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பா னந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம், இசையானந்தம் ஆகிய ஆனந்தக் குற்றங்களும்,

பாட்டுடைத் தலைவனையே கிளவிப்படக் கிளவித்தலைவ னாகக் கூறும் குற்றமும், பிரிபொருட்டொடர்மொழி, முரண்மொழி, ஒருபொருண்மொழி, ஐயமொழி, முறை பிறழவைப்பு, சொல்வழு, யாப்பின் வழு, நடைவழு, பொருளின் வழு, புணர்ப்பு வழு - என்னும் வழுக்களும்,

கலைமலைவு, காலமலைவு, உலகமலைவு, இடமலைவு, மேற்கோள்மலைவு, ஏதுமலைவு, எடுத்துரைமலைவு, நூல் மலைவு என்னும் மலைவுகளும் ஆகிய இவை பதினெட்டுக் குற்றங்களும், இன்னா இசையுடையன என்னும் குற்றமும் என ஆனந்தம், வழு, மலைவு முதலாகக் கூறப்பட்டவை செய்யுட் குற்றமாம். (யா. வி. பக். 557, 565)

கேள்வி அருத்தாபத்தி -

{Entry: Q17c__152}

ஒருவன் இல்லத்தில் இல்லை என்பதைக் கேட்டவன், வேறிடத்தில் அவன் இருக்கிறான் என்று ஊகித்துக்கொள் வது போலும் பிரமாணம். ‘அகத்தின் இலை உறு தேவதத்தன் எனில், அவன் வேறோரிடத்திலெனத் தெளிந்தறிதல்.... கேள்வி அருத்தாபத்தி’ (வேதா. சூ. 22) (L)

கைமுதிக நியாயம் -

{Entry: Q17c__153}

கிமுத - அது ஆகப்பட்டது. அது அப்படி ஆயிற்று என்பது கைமுத்யம் அல்லது கைமுதிகம் ஆகும். (L)

“ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் என்றால் இலவம் பஞ்சைப் பற்றிக் கூறுவானேன்” என்பது போல, அதுவே அப்படியானால் மற்றதனைப் பற்றிக் கூறுவானேன் என்னும் வாதம் செய்யும் நெறி இந்நியாயமாகும்.

கோ பலவர்த்த நியாயம் -

{Entry: Q17c__154}

கோ - பசு. பலவர்த்தம் - எருது.

பசுக்கொட்டில் என்று சொல்லப்படும்இடத்தில் அங்குச் சில எருதுகளும் இருக்கலாம். ஆகவே, பசுக்கொட்டில் என்பது தலைமையும் பன்மையும் பற்றிய வழக்கு. இங்ஙனம் தலைமை யும் பன்மையும் பற்றி ஒரு பொருளைக் குறிப்பிடும் நெறி இந்நியாயமாகும்.

சந்தி இசை -

{Entry: Q17c__155}

இடக்கர்ப்பட வரும் சந்தியிசையுடையவை; செய்யுட் குற்றங் களுள் ஒன்றாம். (யா. வி. பக். 565)

சந்திவழுவும், அமைதியும் -

{Entry: Q17c__156}

எழுத்திலக்கணத்தில் கூறப்பட்ட சந்திஇலக்கணம் பிழைபட வருவது. இஃது ஒரு செய்யுள் வழு. இதுவே இரண்டாம் வேற்றுமைக்கண் வரின் வழுவாகாது.

எ-டு : ‘என்பூடு உருக இனைவேன் மனம்கலக்கும்

பொன்பூண் சுமந்த புணர்முலையாள் - மின்பூண்

நுடங்கிடைக்குக் காவலாய் நோக்கம் கவரும்

படங்கிடக்கும் அல்குற் பரப்பு.’

“எலும்புகளும் உருக வருந்தும் எனது மனத்தைக் கலக்கும் பொன் நகைகளை அணிந்துள்ள தனம் இரண்டும் உடை யவளான இவளது மின்னல் போல அசையும் நுண்ணிடைக் குக் காவலாகிப் பாம்பின் படம் போன்ற இவளது அல்குற் பரப்பு என் நோக்கத்தினைக் கவர்கிறது” என்பது பொருள்.

இப்பாடலில் ‘பொற்பூண்’ எனச் சந்தியுடன் வருவதே இலக்கண வழாநிலை; ‘பொன்பூண்’ என நிற்பது வழு.

எ-டு : ‘இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி

விரவு மலர்பொழியும் மேவா - அரை(சுஇரிய

மின்பொழியும் செவ்வேல் வெறியேன் மனம்கவரப்

பொன்பொழியும் செங்கைப் புயல்.’

‘சோழ மன்னனுடைய இரண்டு கால்களும், பகை மன்னர்தம் தலையில் சூடிய மலர்களைச் சொரியப்பெறும்; வேல், பகை மன்னர் தோற்றோட ஒளிவீசும்; என் மனம் விரும்பும் வகை யில் கொடுத்தே சிவந்த அவனுடைய கைகள் பொன்னைச் சொரியும்” என்று பொருள்படும் இப்பாடற்கண், இரண் டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பு புணர்ச்சியும் உண்டு என்பதால், ‘மலர் பொழியும்’, ‘மின் பொழியும்’, ‘பொன் பொழியும்’ என அவை இயல்பாகவே வரினும் வழுவாகா என்று கொள்ளப்படும். (தண்டி. 117, 118)

சப்தபங்கி (1) -

{Entry: Q17c__157}

சமணர் கூறும் எழுவகை வாதமுறை. அவையாவன உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையும் ஆம், சொல்லொணாதது ஆம், உண்டும் ஆம் சொல்லொணாத தும் ஆம், இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம், உண்டும் இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம் - என்பன. (சி. போ. பா. பக். 40). (L)

சபக்கத் தொடர்ச்சி -

{Entry: Q17c__158}

சபக்கத்தினின்று எடுத்துக்காட்டும் வியாத்தி (மணி. 29 : 73,74)

எ-டு : மேற்கோள் - இம்மலை நெருப்புடைத்து எனல்

ஏது - புகை உண்மையால்

எடுத்துக்காட்டு - அடுக்களை போல

சபக்கத் தொடர்ச்சி - யாதொன்று யாதொன்று புகையுடை யது, அது நெருப்புடையது என, இணையான பொருள்களின் பொதுப்பண்பினை விளக்குவது.

சமுத்திரகலச நியாயம் -

{Entry: Q17c__159}

சமுத்திரம் - கடல்; கலசம் - பாத்திரம். சமுத்திரம் பேரளவிற் றாய நீரையுடையதேனும் நீரை முகக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம் தன் கொள்ளளவு நீரையே முகப்பதற்குரிய தகுதி யுடைத்தாவது போல, பரந்து விரிந்த செய்திகளில் அவரவர் தம் புத்தியளவிற்கு எட்டிய அளவே கற்பது போல்வன வற்றைக் குறிப்பிடு நெறி இந்நியாயம் ஆகும். (L)

சரற்காலம் -

{Entry: Q17c__160}

மழைக்குப் புறம்பட்ட கூதிர்க்காலம், மழைத் தூறலையும் வாடைக் காற்றையும் உடையபருவம்; ‘சரத்ருது’ காண்க.

கார்காலத்துக்கு அடுத்த பருவம் இது.

‘துவலைத் தண்துளி பேணார்’ (நெடு. 34)

சாகபசு நியாயம் -

{Entry: Q17c__161}

சாகம் - இலையுணவு; பசு - விலங்கு. பசு என்பது பொதுவாக விலங்குகளைக் குறிக்கும் சொல். சாகபசு என்பது புலால் உண்ணாது இலையை உண்ணும் ஆடு போல்வனவாகிய யாகத்திற்குப் பலியிட உதவுவனவற்றைக் குறிக்கும் சொல் லாம். இங்ஙனம் பொதுவான பொருளை அடைமொழியால் சிறப்பான பொருளைக் குறிப்பதாக ஆக்கும் நெறி இந் நியாயமாகும். (சி.போ. பர். 1,2 - பக். 73) (L )

சாகா சந்திர நியாயம் -

{Entry: Q17c__162}

சாகா - கிளை; சந்திரன் - திங்கள்.

சந்திரன் கிளைக்குமேல் இருப்பதாகக் காட்டி உணர்த்துவது போல, பார்வைக்குத் தொடர்புடையது போல இருக்கும் ஒரு பொருளை அடையாளமாகக் காட்டி அதன் வாயிலாக வேறொரு முக்கியமான பொருளைத் தெரிவிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)

சாத்யா வியாவிருத்தி -

{Entry: Q17c__163}

திட்டாந்தப் போலியானது சாதன்மியம் வைதன்மியம் என இருவகைத்து. ஒவ்வொரு வகையிலும் ஐந்து உட்பிரிவுகள் உள. சாத்யாவியாவிருத்தி என்பது வைதன்மியத் திட்டாந்தப் போலியின் ஐந்து வகைகளுள் முதலாவது. வைதன்மியத் திட்டாந்தமாவது எதிர்மறைமுகத்தால் எடுத்துக்காட்டுத் தருவது. அது சாதனதருமம் மீண்டு நிற்க, சாத்தியப் பொருள்தருமம் மாத்திரம் மீளாது வைதன்மியதிட்டாந் தத்தில் பொருந்தி இருப்பதாம்.

ஒலி நிலைபேறுடையது, வடிவின்மையால் - என்பன, மேற் கோளும் ஏதுவும் ஆகும். இவற்றிற்கு எடுத்துக்காட்டு மறுதலைப் பொருளில் கூறும்போது, வடிவுடையன ஆதலின் நிலைபேறு இலவாகிய எடுத்துக்காட்டுக்கள் தருதல் வேண்டும்.

சாதனம் - வடிவின்மை; சாத்தியம் - நிலைபேறுடைமை. எடுத்துக்காட்டு வடிவுடையதும் நிலைபேறில்லதுமாய் இருத்தலே தக்கது. ‘பரமாணுப்போல’ என்ற எடுத்துக் காட்டுத் தரின், வடிவுடையதும் நிலைபேறில்லாதுமாக அஃது இருத்தல் வேண்டும்; பரமாணு வடிவுடையது; நிலைபேறும் உடையது.

சாதனமாகிய வடிவின்மைக்கு மறுதலையாகிய வடி வுடைமை பரமாணுவிடத்தில் உள்ளது; சாத்திய தருமமாகிய நிலைபேறுடைமைக்கு மறுதலையாகிய நிலைபேறின்மை பரமாணுவிடம் இல்லை. எனவே எடுத்துக்காட்டாகத் தரப்பெற்ற ‘பரமாணு’ சாதன தருமத்துக்கு வைதன்மத் திட்டாந்தம் ஆவது பொருந்துகிறது; சாத்திய தருமத்துக்கு (-நித்தியத்துவம்) வைதன்மிய திட்டாந்தமாதல் பொருந்த வில்லை. ஆகவே இது ‘சாத்தியாவ்யாவிருத்தி’ என்ற எடுத்துக்காட்டுப்போலியாக அமைகிறது. (மணி. 29: 402-412)

சார்வாகம் -

{Entry: Q17c__164}

காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், மறுமை இல்லை என்றும், இன்பமும் பொருளுமே உறுதிப்பொருள் என்றும் சொல்லும் உலோகாயத மதம். (கு. 281 பரிமே. மணி. 27 : 264 - 276)

சித்தாசித்தம் -

{Entry: Q17c__165}

ஐயத்துக்கு இடமான பொருளை ஏதுவாகக் கொண்டு அனுமானம் செய்வதாகிய ஏதுப்போலி வகை. சித்தா சித்தமாவது, ஏது ஐயமாய்ச் சாதித்தல்.

ஏதுப் போலியானது அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் - என மூவகைப்படும். அவற்றுள், அசித்தம் உபயாசித்தம் முதலாக நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று சித்தா சித்தம் என்னும் சித்த அசித்தமாகும்.

சித்தம் - உறுதிப்படுத்துவது. அசித்தம் - உறுதி செய்யப்படா தது. காணப்படும் பொருள் நீராவியோ புகையோ என்று ஐயமாயின இடத்தே அப்பொருளைப் புகையாகவே கொண்டு, புகை உள்ள இடத்தில் நெருப்புண்டு ஆதலின் அங்கு நெருப்பு உண்டு என்று உறுதிப்படுத்துவது, அசித்தத் தைச் சித்தமாகக் கொண்டு முடிவு செய்யும் ஏதுப் போலியாம். (மணி. 29 : 203-206)

சியால சாரமேய நியாயம் -

{Entry: Q17c__166}

சியாலன் - மைத்துனன்; சாரமேயன் - நாய். மைத்துனனுக்கும் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பெயர் ஒன்றாக அமைந்த நிலையில், ‘நாயை விரட்டு’ என்று தலைவன் உத்தரவிட, நாயின் பெயரே மைத்துனனுக்கும் பெயரான பெயர் ஒற்றுமை குறித்து, விரட்டப்பட உத்தரவிடப்பட்டது நாயைக் குறித்தோ மைத்துனனைக் குறித்தோ என்று உறுதியாக அறுதியிடப் படாத நிலையில், மைத்துனனைக் குறித்ததாகப் பிறழ உணர்ந்து மைத்துனனை விரட்டியது போல, கன்று என்ற பொதுப்பெயர் ஆன்கன்று, பூங்கன்று என்பனவற்றுக்குப் பொதுவாதல் அறிந்தும், “ஆன்கன்றுக்கு நீரூட்டுக” என்று கருத்தில் ‘கன்று நீர் ஊட்டுக’ என்று உத்தரவிட, ஏவலன் பூங்கன்றுக்கு நீர்வார்த்தல் இந் நியாயமாம். (L)

சுக்திகா ரஜத நியாயம் -

{Entry: Q17c__167}

சுக்திகா - வெண்ணிறத்ததாகிய இப்பி; ரஜதம் - வெள்ளி. சிப்பியை வெள்ளியாகத் திரிபுணர்ச்சியால் கொள்வது போல, ஒன்றனை மற்றொன்றாகத் திரிபுணர்ச்சியால் கொள்ளும் நெறி இந்நியாயம் ஆகும். (L)

சுந்தோப சுந்த நியாயம் -

{Entry: Q17c__168}

சுந்தன் உபசுந்தன் என்ற சகோதரர் இருவரும் திலோத்தமை யினை விரும்பி அவள்பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற் போல ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றனால் ஒன்று அடிக்கப்பட்டுச் சுந்தோப சுந்த நியாய மாய்க் கெட்டொழியும். (சி. போ. பா. பக். 17) (L)

சுருதிப் பிரமாணம் -

{Entry: Q17c__169}

வேதமாகிய அளவை. இது பத்துவகை அளவைகளுள் ஆகம அளவைக்கண் அடங்கும். இது சத்தப் பிரமாணம் எனவும் படும். (மணி. 27 : 9-13)

சுவசன விருத்தம் -

{Entry: Q17c__170}

தன் சொற்கு மாறுபாடாக இயம்பல் ஆகிய பக்கப் போலி வகை. ‘சுவசன விருத்தம் தன்சொல் மாறி இயம்பல்’ (மணி 29 : 160-161) இது பக்கப்போலி வகை ஒன்பதனுள் மூன்றாவது. சுவசன விருத்தம் ஆவது தான் கூறும் சொற்கள் ஒன்றற் கொன்று மாறுபட உரைத்தல். அஃது என்னைப் பெற்ற தாய் (மகப் பெறாதாளாகிய) மலடி என்று சொல்வது போல்வது.

(மணி. 29 : 160, 161)

சுவாமி பிருத்திய நியாயம் -

{Entry: Q17c__171}

சுவாமி - தலைவன்; பிருத்தியன் - தொண்டன். ஆண்டான் அடிமை இருவரிடையே உள்ள தொடர்பு போல ஒருவன் மற்றவனுக்குத் தன்னலம் விடுத்த தொண்டனாகித் தொழிற் படும் தன்மை கூறும் நெறி இந் நியாயமாகும். (L)

சுவார்த்தானுமானம் -

{Entry: Q17c__172}

தன் காட்சியினின்று தான் ஒன்றை உணருமாறு கொள்ளும் அனுமானம். (சி. சி. அளவை 8. மறைஞா.) (L ) இது பக்கம், ஏது, திட்டாந்தம் என மூன்றனையுடைத்து.

பக்கம் - இம்மலை நெருப்புடைத்து,

ஏது - புகை யுண்மையால்

திட்டாந்தம் - அடுக்களை போல.

அடுக்களை போல யாதொன்று புகையுடையது, அது நெருப்பு உடையது ஆகலின் இம்மலையும் நெருப்புடையது என்று முடிவு செய்வது சுவார்த்தானுபவம்.

சூசிகடாக நியாயம் -

{Entry: Q17c__173}

ஊசி, கடாகம் இரண்டையும் செய்ய நேர்ந்த இடத்துச் சிறியதான ஊசியை முன் செய்து பெரியதான கடாகத்தைப் பின்னர்ச் செய்வது போல, சிறியதை முற்படவும் பெரியதைப் பிற்படவும் இயற்றல் தக்கது எனக் கூறும் நெறி. (L)

செய்யுட் குற்றங்கள் -

{Entry: Q17c__174}

செய்யுளுக்குப் பொருந்தாத நீக்கப்படவேண்டிய சில வழுக் களும் மலைவுகளும்; வழுக்கள் ஒன்பது, மலைவுகள் ஆறு என இவை பதினைந்தும் செய்யுட் குற்றங்களாம்.

பிரிபொருட் சொற்றொடர், மாறுபடு பொருள் மொழி, மொழிந்தது மொழிவு, கவர்படு பொருள்மொழி, நிரல்நிறை வழு, சொல் வழு, யதி வழு, செய்யுள் வழு, சந்தி வழு என இவை ஒன்பதும் வழுக்கள். இடமலைவு, காலமலைவு, கலைமலைவு, உலகமலைவு, நியாயமலைவு, ஆகமமலைவு என இவை ஆறும் மலைவுகள். (தண்டி. 99)

செய்யுள் வழுவும் அதன் அமைதியும் -

{Entry: Q17c__175}

யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தா இயல்புடன் செய்யுள் இயற்றுதல் செய்யுள் வழுவாம். அதுதான், இருடிகளால் உரைக்கப்படுமிடத்தும் அவர் போன்ற ஆற்றல் உடையாரால் புனையப்படுமிடத்தும் வழுவமைதியாம்.

எ-டு : ‘ஆதரம் துயர்தர அயர்தரும் கொடிக்குப்

பூதலம் புகழ்புனை வளவன் - தாதகி

தாங்கரும்பால் அன்றித் தகையுமோ, தாரநங்கன்

பூங்கரும்பால் வந்தடர்ந்த போர்?’

இப்பாடலில் முன்னிரண்டடியும் ஆசிரியப்பா; பின்னடிகள் வெண்பா ஆதலின் இது செய்யுள் வழுவாயிற்று. மருட்பாவில் வெண்பா முன்னும் ஆசிரியப்பாப் பின்னும் வருதல் வேண்டும். இஃது அன்னது அண்மையின் வழு.

எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க

ஒண்செங் குருதியுள் ஓஒ கிடப்பதே - கெண்டிக்

கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள்

அழுதகண் ணீர்துடைத்த கை.’

இது சான்றோர் பாட்டாதலின், இரண்டாமடிக்கண், வெண் பாவுள் வருதல் ஆகா எனக் கடிந்த ஐந்து சீர்கள் வந்தும், வழு வமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு.(தண்டி. 115, 116)

செற்பம் -

{Entry: Q17c__176}

அநுகூலமும் பிரதிகூலமுமான சாதனம் இரண்டுள்ளதன் கண் வெல்லும் வேட்கையுடையோன் கதை. (தருக்க. சங். நீலகண்.205) (L)

சேஷானுமானம் -

{Entry: Q17c__177}

எச்ச அனுமானம் (மணி. 27 : 33 அரும்.); அது காண்க. (L)

சொல்லானந்தம் -

{Entry: Q17c__178}

பாட்டுடைத் தலைவனது இயற்பெயரினை அடுத்த மங்கலம் அழியுமாறு தொழிற்சொல் அமையப் பாடுவது.

எ-டு : ‘என்னிற் பொலிந்த திவள்முகம் என்றெண்ணித்

தன்னிற் குறைபடுப்பான் தண்மதியம் - மின்னி

விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன்

எரிந்திலங்கு வேலின் எழும்’.

இதனுள், மதியை ‘விசயன் வேல்போல் எழும்’ எனப் பாடுமவன் ‘விசயன் எரிந்து’ என அத்தொழில் அவன்மேல் ஏறச் சொன்னமையால் சொல்லானந்தம் என்னும் குற்ற மாயிற்று. (யா. வி. பக். 558)

சொல்வழு -

{Entry: Q17c__179}

சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு மாறு கொள்வது.

எ-டு : ‘அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான்’

இதன்கண், அடிசில் - பொதுப்பெயர்; பருகி - சிறப்புவினை. பொதுச் சொல்லுக்குப் பொதுவினையே கூற வேண்டு மாதலின், அடிசில் உண்டான் என்றோ, அடிசில் கைதொட் டான் என்றோ கூறுதலே வழாநிலை. அடிசில் பருகி எனச் சிறப்புவினையால் கிளத்தல் வழு.

அணி என்பது அணியப்படுவனவற்றுக்கெல்லாம் பொதுப் பெயர். ஆர்த்தல் என்பது சிறப்பு வினை. ‘அணிந்து’ என்ற பொதுவினையால் கூறுதலே வழாநிலை. ‘அணி ஆர்த்து என்பது வழு.

இவை சொல்லிலக்கணத்தொடு மாறுகோடலின் சொல் வழுவாம். (யா. வி. பக். 422)

சொல்வழுவும் அமைதியும் -

{Entry: Q17c__180}

சொல்லிலக்கணத்துக்கு மாறாக வழுவுடைய சொற்களைச் செய்யுளில் தொடுத்தல் வழு. ஆயின் அத்தகைய சொற்கள் வழக்காற்றில் காணப்படுவனவாயின், அவை வழு ஆகா.

எ-டு : ‘யாவகைய தாயர்க்கும் எந்தைக்கும் எங்களுக்கும்

ஆவி இவளே அனைவேமும் - கோவே!

நுனக்(கு)அபயம் இந்த நுழைமருங்குல் மாதர்;

தனக்(கு) இடர்ஒன் றில்லாமல் தாங்கு’

திருமணத்திற்குப் பிறகு தலைவியைத் தலைவனுடன் விடுக்கும்போது செவிலி அவனுக்குச் சொல்லிய ஓம்படை இது.

“ஐவகைத் தாய்மார்க்கும் தந்தைக்கும் தன்னையர்க்கும் எங்களுக்கும் இவள்தான் உயிர். நாங்கள் எல்லோரும் சேர்ந்து இவளை நின்னிடம் ‘அபயம்’ எனக் கூறி ஒப்படைக்கின் றோம். இவட்கு எத்துன்பமும் வாராமல் காப்பாயாக” என்னும் பொருளுடைய இப்பாடற்கண், ‘யாவகைய தாயார்க்கும்’ என்று கூறிய பின்னர், ‘எங்களுக்கும்’ என்றது ஒருவழு, இக்கூற்றிற்கு உரியவளும் தாயொருத்தி ஆதலின். ‘நினக்கு’ என்பதே சொல்; நுனக்கு என்றது ஒரு வழு.

இனி, இன்ன சொற்கள் சான்றோர் வழக்காய் நிகழ்வன வாயின் நீக்கப்படாமல் சொல்வழு அமைதியாகத் தழுவிக் கொள்ளப்படும்.

எ-டு : ‘யாவர் அறிவார்? இவர்ஒருவர் இக்குறிஞ்சிக்

காவலரோ? விஞ்சையர்தம் காவலரோ? - பாவாய்!

அருமந்தன் னார்நம் அகம்புனம்விட் டேகார்

தெருமந் துழலும் திறம்’.

“பாவாய்! ஒப்பற்ற இவர் இக்குறிஞ்சி நிலத்து அரசரோ? வித்தியாதரர்தம் தலைவரோ? அருமருந்து போன்ற அரியராம் இவர் நம் தினைப்புனம் விட்டுப் போகாமல் சுழன்று திரியுமாற்றை யார் அறிந்து சொல்லவல்லார்” என்று தோழி தலைவிக்கு உரைக்கும் கூற்றாக வந்துள்ள இப் பாடற்கண், ‘அருமருந்தன்னார்’ என வரவேண்டுவது ‘அருமந்தன்னார்’ என மரூஉமுடிபாய்ச் சான்றோராட்சியுள் பயின்று வருதலால், இவ்வழு அமைவுடையதாயிற்று. (தண்டி. 111, 112)

சொல்விழுக்காடு -

{Entry: Q17c__181}

பொருளின்றிக் கூட்டும் துணைச்சொல். (சீவக. 1886 உரை) ( L)

த section: 37 entries

தண்டாபூபிகா நியாயம் -

{Entry: Q17c__182}

தண்டம் - கோல்; ஆபூபம் - அப்பம். ஒரு கோலின் ஒரு முனையில் அப்பம் தொங்கவிடப்பட்டிருந்தது; அக்கோலே களவாடப்பட்டு விட்டது என்றால் அதில் இருந்த அப்பமும் களவாடப்பட்டு விடுதல் உணரப்படும். இன்றேல் அக் கோலை எலி கடித்த சுவடு காணப்பட்டால். அதனுடன் இணைத்திருந்த அப்பத்தையும் எலியே கடித்து உண்டிருக்க வேண்டும் என்பது பெறப்படும். தண்டம் அபகரிக்கப்பட்டது என்றால் அதனோடு இணைத்திருந்த அப்பமும் அபகரிக்கப் படுதல் பெறப்படுவது போல, ஒரு செய்தியைக் கூற அதனோடு இணைந்த மற்றொரு பொருளும், தொடர் நிலைச் செய்யுட்பொருட்பேறணி போலப் பெறப்படுவிக் கும் நெறி இந்நியாயமாகும். (L)

தத்துவம் -

{Entry: Q17c__183}

தன்மாத்திரை 5, பூதங்கள் 5, கன்மேந்திரியம் 5, ஞானேந் திரியம் 5, மகத்து, அகங்காரம், மனம், மூலப் பிரகிருதி, ஆன்மாவாகிய புருடன் ஆகிய இருபத்தைந்தும். (குறள். 27) (L)

தருக்கத்தில் எடுத்துக்காட்டும் போலி -

{Entry: Q17c__184}

பிறன்கோட் கூறலாக வீரசோழிய நூலார் குறித்தவற்றுள் ‘முதலாயுள’ என்றதனால் உரையாசிரியர் பெருந்தேவனார் காட்டுவனவற்றுள் ஒன்று இது. தருக்கத்தில் ஒன்றனை விளக்குதற்கு அதனைப் போல்வதனை எடுத்துக் காட்டாக மொழிவது.

‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று’. (குறள் 208)

‘அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருளில்லார்க்(கு)

இவ்வுலகம் இல்லாகி யாங்கு’. (குறள் 247)

பிறர்க்குத் தீவினைகளைச் செய்தவர் தாம் கெடுதல் ஒருகாலும் தவறாமைக்கு, ஒருவனது நிழல் நீங்காமல் அவன் அடிக்கண்ணேயே தங்கிவிடுதல் தவறாமையை எடுத்துக் காட்டாகக் கூறினார்.

உள்ளத்தில் அருள் பிறவாதவர்க்குத் தேவருலக இன்பம் இல்லையாதல் துணிவாம் என்பதற்கு, பொருட் செல்வமில் லாதவர்க்கு இவ்வுலக இன்பம் துணிவாக இல்லையாதலை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

எதிர்வில் நிகழற்பாலவற்றை நிகழ்வில் உள்ளனவற்றை எடுத்துக்காட்டிப் ‘போல இருத்தல்’ தன்மையை விளக்கிய மையின் இவை தர்க்கத்தில் எடுத்துக்காட்டும் போலியாயின. (வீ. சோ. 180 உரை)

தருமி -

{Entry: Q17c__185}

தருமத்தையுடைய திரவியம் (-பொருள்) (சி. போ. சிற். 2. 4)

எ-டு : ஒலி நிலைபேறுடைய தன்று

ஒலி - தருமி

நிலைபேறுடையது அன்மை - அதன் தருமம்.

தன் பொருட்டனுமானம் -

{Entry: Q17c__186}

தன் பொருட்டனுமதிக்குக். காரணமாய் உள்ளது (தருக்க சங். நீலகண். 97) (L)

தன் பொருட்டனுமிதி - ஏது சாத்தியத்தைத் தானே நேரில் பார்த்துக்கொள்ளும் அனுமிதிஞானம்.

இது சுவார்த்தாநுமானம் என வடநூலுள் கூறப்படும். அநுமானம் தன் பொருட்டு எனவும் பிறர் பொருட்டெனவும் முறையே சுவார்த்தம், பரார்த்தம் என எல்லாப் புத்த நூல்களும் கூறியிருப்பவும், மணிமேகலை இப்பகுப்பினைக் கொள்ளவில்லை.

மலையில் புகையுண்மை கண்டு, வீட்டில், அடுக்களையில் புகை உண்மையை ஒப்பிட்டு, அடுக்களையில் நெருப்பு இருப்பதுபோல மலையிலும் நெருப்பிருத்தல் வேண்டும் என்று தான் நேரில் கண்ட பொருள்கண்டு அநுமானிப்பது சுவார்த்தானுமானம். இதற்குப் பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே போதுமானவை; பரார்த்தானு மானத்துக்குப் பக்கம், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் என்ற ஐந்தும் வேண்டும் என்ப.

தன்மச் சொரூப விபரீத சாதனம் -

{Entry: Q17c__187}

விருத்த ஏதுப்போலி நான்களுள் கூறப்பட்ட ஏது; சாத்தியத் தில் ஒருபோதும் இல்லாமல் இருப்பது. (L)

பக்கம், ஏது, எடுத்துக்காட்டு என்ற மூன்றற்கும் போலியுண்டு. அவற்றுள் ஏதுப்போலி, அசித்தம் - அநைகாத்திகம் - விருத்தம் என்ற முப்பிரிவுகளையுடையது. அவற்றுள் விருத்தம் என்ற பிரிவு தன்மச் சொரூப விபரீத சாதனம் முதலிய நான்கு பகுப்பினது.

தன்மச் சொரூப விபரீத சாதனமாவது வாதி தான் கூறும் காரணத்தால் துணியப்பட வேண்டிய பொருளின் சிறப் பியல்பு கெடுமாறு செய்வது.

எ-டு : பக்கப் பொருள் - ஒலி நிலைபேறுடையது;

ஏது : உண்டாக்கப்படுவதால் - என்று கூறின் எப்பொருள் உண்டாக்கப்பட்டாலும் அஃது அழியக் கூடியது என்பது உறுதியாதலின், பண்ணப்படுதல் என்று கூறும் காரணம் ஒலி நிலைபேறுடையது என்ற கருத்தை நிறுவுவதற்கு மாறாக ஒலி நிலையற்றது என்ற கருத்தை நிறுவுவதால், இந்த ஏதுப் போலியாயிற்று. (மணி. 29 : 281)

தன்ம விசேட விபரீத சாதனம் -

{Entry: Q17c__188}

விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத் தன்மையைக் குறிக்காது அதனை வியாபகப் பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது.

தன்ம விசேட விபரீத சாதனமாவது ஏதுப்போலிவகைகளுள் ஒன்றாகிய விருத்தம் என்பதன் நாற்பகுப்புக்களுள் ஒன்று. இதற்கு வாதி கூறும் காரணமாவது துணியப்பட வேண்டிய பொருளிடத்துள்ள சிறப்புப் பண்பு கெடுமாறு செய்வதாம்.

எ-டு : பக்கப் பொருள்- கண் முதலிய ஐம்பொறிகள் தம்மின் வேறாயுள்ள ஆன்மாவுக்குப் பயன்படுவன; ஏது -அவை படுக்கையும் இருக்கையும் போலப் பலவாய்த் தொக்கு நிற்பதனால் - என்று கூறியவழி, படுக்கையும் இருக்கையும் முதலியவை பிறருக்கும் பயன்படுவன ஆதல் போல, கண் முதலிய பொருள்கள் பிறருக்கும் பயன்படுவனவாதல் வேண்டும். படுக்கை இருக்கை முதலியவற்றை உடைமையாக உடையான் ஒருவன் பல உறுப்புக்களையுடைய ஓர் உருவமாகிய உடம்பை உடையவன் ஆதல்போல ஆன்மாவும் பல உறுப்புக் களையுடைய ஓர் உடம்பினது ஆதல் வேண்டும். இங்ஙனம் கூறுவதால் அவயவப் பகுப்பு இல்லாத நுண்பொருளாகிய ஆன்மாவின் சிறப்புப் பண்பு கெட்டுவிடும். ஆகவே இது தன்ம விசேட விபரீத சாதனம் என்ற ஏதுப் போலியாம். (மணி. 29 : 277)

தன்மிச் சொரூப விபரீத சாதனம் -

{Entry: Q17c__189}

விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது,

ஏதுப்போலியின் வகையாகிய விருத்தத்தின் நான்கு பகுப்பினுள் தன்மிச் சொரூப விபரீத சாதனம் என்ற போலி மூன்றாவது. அஃதாவது வாதி தான் கூறப்போகும் பொரு ளின் உண்மை இயல்பை அவன் கூறும் காரணமே மாறு படுத்தி விடுவதாம்.

எ-டு : “பாவம் என்பது திரவியம் குணம் கன்மம் என்பன வற்றுள் ஒன்று அன்று” என்ற பக்கப் பொருளை விளக்குமிடத்து,

“எல்லாப் பொருள் பண்பு தொழில்களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய் உண்மைத் தன்மை உடைமையால் பொதுவும் சிறப்பும் போல” என்று ஏதுக் கூறின்,

பொருள் குணம் தொழில் என ஒருங்கு நின்றவற்றின்கண் உள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாகிய உண்மைத் தன்மை என்பது ஒன்று எங்கும் கிடையாது; பொது இல்வழிச் சிறப்போ, சிறப்பு இல்வழிப் பொதுவோ இருத்தல் இயலாது.

ஏதுவானது பாவம் என்ற பொருள்இயல்பைக் கெடுத்து அதனைஇல்பொருள் ஆக்கிவிடுவதால் இவ்வேது போலி யாயிற்று. (மணி. 29 : 278)

தன்மி விசேட விபரீத சாதனம் -

{Entry: Q17c__190}

விருத்த ஏதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத் தன்மையைக் குறிக்காது, அதனை வியாப்பியப் பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது.(மணி. 29:279)

ஏதுப்போலி வகை மூன்றனுள் ஒன்றாகிய விருத்தம் என்பதன் நான்கு கூறுகளில் தன்மி விசேட விபரீத சாதனம் நான்கா வதாம்.

பக்கப் பொருளை விளக்கக் கூறப்படும் காரணம் அப் பொருளின் சிறப்பியல்பைக் கெடுத்து அப்பொருளையே இல்லாததாக்கிவிடும் ஏதுப்போலி இது.

எ-டு: பாவம், பொருள் பண்பு தொழில் என்பனவற்றுள் ஒன்று அன்று என்பது பக்கம்.

அது பொருள் பண்பு தொழில் என்பனவற்றின் வேறாதலால் என்பது ஏது.

கருத்தாவினுடைய பண்பும் தொழிலுமாகிய பாவத்தைக் கருத்தாவினால் கொள்ளப்படாத பண்பும் தொழிலும் என்று ஏதுவினால் சாதிப்பது சாதிக்கப்படும் பொருளின் சிறப்புக்கே மாறாதலின் இதுவும் ஓர் ஏதுப்போலியாம். பொருளையும் அதன் பண்பையும் கொண்டு உய்த்துணரப் படும் சிறப்பியல்பே தன்மிவிசேடமாகும். பாவமாகிய பொருள், பொருள் பண்பு தொழில் இவையன்று எனவே, பொருள் குணம் தொழில் இவற்றது அன்மையே பாவத்தின் சிறப்பாகிவிடும். விடவே, பாவம் என்பது இல்பொருளாய் அதன் சிறப்பையே கெடுத்தல் காண்க.

தன்மை மிகுத்துரை -

{Entry: Q17c__191}

ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக் கூறுதல்; ஒரு பொருள் அழிந்தது என்றும், தோன்றிற்று என்றும், மூப்புற்றது என்றும் தன்மைகள் மூன்றனுள் ஒரு கூற்றின் தன்மையை மிக்கு எடுத்துரைத்தல். (மணி. 30 : 192)

தன் வேதனை -

{Entry: Q17c__192}

சுபானுபவம்; ‘காண்டல் வாயில் மனம் தன் வேதனையோடு’. ஒரு பொருள்பற்றிக் கூறுகின்றான் தானாக அப்பொருள் பற்றி அனுபவப்பட்ட அனுபவம். (சி. சி. அளவை. 4) (L)

தன் வேதனைக் காட்சி -

{Entry: Q17c__193}

அராகாதி தத்துவங்களாலுண்டாகும் இன்ப துன்பங்களை ஆன்மஅறிவால் அறிகை. ‘அருந்தின்ப துன்ப முள்ளத் தறிவினுக்கு அராகம் ஆதி தரும் தன்வேதனையாம் காட்சி’ (சி. சி. அளவை. 7) (L)

தன்னனுமானம் -

{Entry: Q17c__194}

தன் பொருட்டனுமானம் - சுவார்த்தாநுமானம். பிறருக்கு உரைப்பதன்றித் தான் தனக்குள் கருதி உணர்தல். மலையில் புகையை நோக்கிய அளவில் புகையுடைய அடுக்களையில் தீயிருப்பது போல மலையிலும் தீ இருத்தல் வேண்டும் என்று தனக்குள் கருதல். (சி. சி. அளவை. 4) (L)

தன்னைப் பற்றுதல் -

{Entry: Q17c__195}

‘ஆன்மாச்சிரயம்’ என்னும் குற்றம்; குடத்துக்குக் குடம் காரணம் என்று கூறுவது போல்வன. ஆன்மா தன்னாலே தன்னை உணரும் என்பது தன்னைப் பற்றுதல் என்னும் வழு. (சி. போ. 6-2-3 சிற்.) (L)

தன்னோடு இயைபின்மை நீக்கிய விசேடணம் -

{Entry: Q17c__196}

விசேடியம் வேறுபல பொருளிலும் சொல்லுதலைத் தடுக்காது, செஞ்ஞாயிறு என்பதில் செம்மை போல, அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்க வரும் விசேடணம்.

ஞாயிறு விசேடியம் (-விசேடிக்கப்படுவது); செம்மை விசேடணம் கருஞாயிறு போன்றவை இல்லாமையால், செம்மை என்பது ஞாயிற்றினது இயற்கையடைமொழியாக நின்றவாறு. வெண்தயிர், சுடுதீ, தண்மதியம் என்பவற்றுள், வெண்மை, சுடுதல், தண்மை என்பனவும் அன்ன (நன். 284 விருத்தி.)

தாத்துவிகம் -

{Entry: Q17c__197}

தத்துவ சம்பந்தம் உடையது.

‘தாத்துவிக சகலப் பிரபஞ்சத்தையும்’ (சி. சி. 1-30 ஞானப்.) (L)

தால பீஜநியாயம் -

{Entry: Q17c__198}

தாலம் - பனை; பீஜம் - விதை. பனை முந்தியதோ, விதை முந்தியதோ என்று வாதிடும் நெறி.

ஆன்மா, நல்வினை தீவினைச் செயல்களால், பற்பல உடல் களில் பிறக்கிறது; உடம்பு எடுத்தாலொழிய ஆன்மா நல்வினை தீவினைகளைச் செய்தல் இயலாது - என்ற இரு கருத்துக்களும் தாலபீஜ நியாயமாக விளங்குகின்றன. இவை போல்வன இந்நெறிக்கு எடுத்துக்காட்டாம்.

தாலீ புலாக நியாயம் -

{Entry: Q17c__199}

தாலீ - பாத்திர விசேடம்; புலாகம் - சோற்று அவிழ். ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அவிழை எடுத்துப் பதம் பார்ப்பது போல, ஒருவர் நிகழ்த்தும் பலவகைச் செயல்களுள் ஒன்றனைக் கண்டு அதனைக் கொண்டு அவர் செயல்கள் யாவும் இங்ஙனம் இருக்குமென்று முடிவு செய்யும் நெறி இந்நியாயம் ஆகும். (L)

திட்டாந்த ஆபாசம் -

{Entry: Q17c__200}

திட்டாந்தப் போலி. (மணி. 29 : 326); அது காண்க.

திட்டாந்தப் போலி -

{Entry: Q17c__201}

இயைபில்லாத உதாரணம்: ‘பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆம்’- இது சாதன்மியம், வைதன்மியம் என இரண்டு வகைப்படும். அவை ஒவ்வொன் றும் ஐவைந்து வகைப்படும். விளக்கத்தை அவ்வத் தலைப்புக் களுள் காண்க. (மணி. 29- 146) (L)

திட்டாந்தம் -

{Entry: Q17c__202}

உதாரணம். ‘வகையமை அடுக்களைபோல் திட்டாந்தம்.’ பக்கப் பொருள் - இம்மலையில் நெருப்புளது; ஏது- புகை யுடைமையான்; எடுத்துக்காட்டு - அடுக்களை போல. (மணி. 29 : 6)

திரவியம் -

{Entry: Q17c__203}

தருக்கநூலிற் கூறப்படும் பிருதிவி (-நிலம்) அப்பு (-நீர்), தேயு (-தீ), வாயு (-காற்று), ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப் பொருள்கள். (L)

திருட்டாந்த ஆபாசம் -

{Entry: Q17c__204}

உதாரணம் போலி - பொருத்தமில்லா உதாரணம். இது சாதன்மிய திட்டாந்தப் போலி, வைதன்மிய திட்டாந்தப் போல என இருவகைத்து. ஒவ்வொன்றும் ஐந்து ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. (மணி. 29 : 325 - 339)

திருட்டாந்தம் -

{Entry: Q17c__205}

உதாரணம்; ‘இம்மலையில் புகையுள்ளது, அடுக்களை போல’ என்னுமிடத்தே, அடுக்களை என்பது திருட்டாந்தம் எனப்படும் எடுத்துக்காட்டு. (L)

திருணாரணிமணி நியாயம் -

{Entry: Q17c__206}

த்ருணம் - புல்; அரணி - கட்டை; மணி - சூரியகாந்தக் கல்.

சூரியகாந்தக் கல்லினைக் கொண்டு சூரியனுடைய கிரணங் களைக் குவியச்செய்தும், உலர்ந்த புல்லில் தீப்பற்றச் செய் தும், அரணி மரக்கட்டையினைத் தேய்த்தும் தீயை உண்டாக்க முடியும். சூரிய காந்தக்கல், உலர்ந்தபுல், மரக்கட்டை இம்மூன்றும் தீமூட்டிப் பயன்படுத்த உதவுவன. இவையின்றிச் சில இடங்களில் வேறுவகையிலும் தீப்பற்று வதுண்டு.

நல்லாசிரியரை அடுத்துப் பல சாத்திரங்களையும் தெளிவுறப் பயின்று செய்யுள் இயற்றப் பழகியவரே பொதுவாகக் காவியங்கள் இயற்றும் ஆற்றலைப் பெறுவர். நல்லாசிரியரை அடுத்தோ, சாத்திரங்கள் முறையாகப் பயின்றோ, செய்யுள் இயற்றப் பழகியோ அறியாதவர்கூட ஒரோவழி அழகான காவியங்கள் இயற்றுவதனைக் காண்கிறோம். இங்ஙனம் வழக்கமான காரணம் எதுவுமின்றிக் காரியம் ஒரோவழி நிகழ்வதனை உலர்ந்தபுல் அரணிக்கட்டை சூரியகாந்தக்கல் நெறி என்பது இந்நியாயமாகும்.

தீய ஏது -

{Entry: Q17c__207}

ஏதுப்போலி; ‘தீய ஏது’ (மணி. 29 - 191, 192). பக்கப் பொருளை நிறுவுதற்குக் காட்டும் காரணம் பொருத்தம் அற்றதாக இருப்பது ஏதுப்போலி. இஃது அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூவகைப்படும். அசித்தம் நான்கு உட்பிரிவு களையும், அநைகாந்திகம் ஆறு உட்பிரிவுகளையும், விருத்தம் நான்கு உட்பிரிவுகளையும் உடையது. இவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்புக்களிற் காண்க.

தீய பக்கம் -

{Entry: Q17c__208}

பக்கப் போலி; ‘தீய பக்கமும் தீய ஏதுவும்’ (மணி. 29 : 143 - 153). நிறுவுதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட செய்தி ‘பக்கம்’ எனப்படும். அச்செய்தி தவறானதாக இருந்தால் ‘பக்கப் போலி’ எனப்படும். பக்கப்போலி பிரத்தியக்க விருத்தம் முதலாக அப்பிரசித்த சம்பந்தம் ஈறாக ஒன்பது வகைப்படும். விளக்கம் அவ்வத் தலைப்பினுள் காண்க.

துல்லிய பக்கம் -

{Entry: Q17c__209}

சபக்கம் (-ஒத்த பொருள்) முன்னரே தெரிந்து துணிந்த இடம். (L)

தூக்கானந்தம் -

{Entry: Q17c__210}

கஞ்சத்தாளம் அமைத்த இசையொடு பாடுமிடத்து தலைவ னது இயற்பெயரைப் பிளந்து பாடுதலானும் குரலை உயர்த் துதல் தாழ்த்துதல் செய்தலானும் அப்பெயர் புலனாகாத வாறு அமையும் குற்றம். (யா. வி. பக். 562)

தூணா நிகனன நியாயம் -

{Entry: Q17c__211}

தூணா - தூண்; நிகனனம் - ஆட்டுதல். தூணை நடும்போது அதனை ஆட்டிஆட்டி உறுதிப்படுத்துவதனைப் போல ஒரு செய்தியை, அதன் தொடர்புடையனவற்றையெல்லாம் பலபடியாக அசைத்துப்பார்த்து விளக்கி அச்செய்தியை நிலைநாட்டும் நெறி இந்நியாயம் ஆகும். (L)

தூலாருந்ததி நியாயம் -

{Entry: Q17c__212}

நுண்மையான அருந்ததி நட்சத்திரம் காட்ட அதனருகே யுள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டிக் குறிப்பிடுதல் போல, நுண்பொருளை விளக்க அதன் தொடர்பான பருப்பொரு ளைக் கொண்டு குறிப்பிட்டுணரும் செய்தி. (L)

தேகளீ தீப நியாயம் -

{Entry: Q17c__213}

தேகளி - இடைகழி; தீபம் - விளக்கு. இடைகழியில் வைத்த விளக்கு அதன் வெளிப்புறத்தது ஆகிய வாசல் பகுதியிலும், உட்புறத்ததாகிய உள்வீட்டுப் பகுதியிலும் ஒளி வீசிப் பயன் படுதல் போல, ஒரு பொருள் தான் இடையிலிருந்து முன்னும் பின்னும் பயின்று வரும் நெறி இந்நியாயம் ஆகும். (L )

இது பொருள்கோள் வகையால் தாப்பிசைப் பொருள்கோள் எனவும், அணிவகையால் இடைநிலைத் தீவகம் எனவும் வழங்கும்.

தேச பரிச் சேதம் -

{Entry: Q17c__214}

பரிச்சேதம் மூன்றனுள் (வஸ்து, காலம், தேசம் இவற்றால் அளவிடுதல்) இடத்தால் அளவிடுதல். (L )

தேராது தெளிதல் -

{Entry: Q17c__215}

பிரமாண ஆபாசம் எட்டனுள் ஒன்று; ஆராயாது ஒன்றனை மற்றொன்றாகத் துணிதல். செண்டுவெளியில் நிற்கும் தறியினை மகன் எனத் துணிதல் போல்வது. ‘தேராது தெளிதல் செண்டு வெளியில், ஓராது தறியை மகனென உணர்தல்’ (மணி. 27: 67-68)

தொடர்ச்சி -

{Entry: Q17c__216}

காரணகாரிய சம்பந்தம் அஃதாவது நெல்வித்தின் முளையும், முளையில் தாளும், அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சிகளால் அக்காரண காரியங் களை நெல் என்று வழங்குவதாம். (மணி. 30 : 200, 201).

தொடர்தல் -

{Entry: Q17c__217}

பீசாங்குர நியாயமாக ஒன்றனை யொன்று பின்பற்றுதல். அஃதாவது காரண காரியத் தொடர்ச்சியால் காலம் மூன்றினும் சோர்வறத் தோன்றியும் வளர்ந்தும் கெட்டும் வருதல். (சிவ. சித். பர. 71).

தொடை ஆனந்தம் -

{Entry: Q17c__218}

அளபெடைத் தொடை அமைந்த பாட்டினுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்த்தி அளபெடுப்பத் தொடுப்பது. அத் தலைவன் பெயர்க்கு அடைசார்த்தி அவ்வடை அளபெடை யோடு ஒன்ற வரினும் தொடையானந்தமாம்.

எ-டு : ‘வாஅ வழுதி மதுரை மறுகினிற்

போஒ பகைமுனைப் போர்’.

பாட்டுடைத் தலைவனது (குடிப்) பெயர் அளபெடை சார வந்தது; மிகப்பெரிய தொடை ஆனந்தமாகிய வழு.

‘வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத்

தோஒம் நுவலுமிவ் வூர்.’

இதனுள் வழுதிக்கு அடையாகிய புரவி அளபெடை சார வந்தது; இதுவும் தொடை ஆனந்தமாகிய வழு. (யா. வி. பக். 562,563).

ந section: 10 entries

நாடக வழக்கினுள் நாட்டுதற்குரியன -

{Entry: Q17c__219}

இடமலைவு காலமலைவு கலைமலைவு உலகமலைவு நியாயமலைவு ஆகமமலைவு என்ற அறுவகை மலைவுகளும் பொதுவாக உலகவழக்கினுள் ஏற்கத்தக்கன அல்ல எனினும், நாடக வழக்கில் இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரை வகையால் கூறப்படலாம் என்று வழுவமைக்கப் பட்டுள்ளன. (தண்டி. 125)

நாத்தி -

{Entry: Q17c__220}

நாஸ்தி; ஒன்றற்கு உள்ளதான ஒருபொருள் மற்றொன்றற்கு இல்லாதது ஆதல்; மனைவியான காலத்து மகள் ஆகாமை போல. (L)

நால்வகை வழுக்கள் -

{Entry: Q17c__221}

எழுத்து வழு, சொல் வழு, பொருள் வழு, யாப்பு வழு என்பன

எழுத்து வழு -

எழுத்ததிகாரச் செய்தியொடு மாறுபடுவது.

எ-டு: ‘தேமான் இதணத்தேம் நாமாக நம்புனத்தே

வாமான்பின் வந்த மகன்’

தேமா என்பதே சொல். தேமா என்பதற்கு னகரச்சாரியை கொடுத்துத் ‘தேமான்’ என்று கூறியது எழுத்ததிகாரச் செய்தியொடு மாறுபடுவதால் எழுத்து வழுவாம்.

சொல் வழு -

சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு மாறு கொள்வது.

எ-டு : ‘அடிசில் பருகி அணிஆர்த்துப் போந்தான்’

அடிசில் - பொதுப்பெயர்; பருகி- சிறப்புவினை.

பொதுச்சொல்லுக்குப் பொதுவினையே கூறல் வேண்டு மாதலின், அடிசில் உண்டான் என்றோ, கைதொட்டான் என்றோ கூறுதலே வழாநிலை; ‘அடிசில் பருகி’ என்று சிறப்புவினையை இணைத்தல் வழுவாம்.

அணி என்னும் பொதுப்பெயரை அணிந்து என்னும் பொது வினையால் கூறுதலே வழாநிலை; அணி ஆர்த்து என்று சிறப்புவினையை இணைத்தல் வழுவாம்.

பொருள் வழு -

பொருளதிகாரக் கருத்துக்களொடு மாறுகொள்வது.

தலைவியின் களவொழுக்கம் பற்றித் தான் ஐயுற்ற கருத்தை உறுதிசெய்துகொள்வதற்காக அவளிடம் தோழி,

‘பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுள்

கண்டிக் களிற்றை அறிவன்மன் - திண்டிக்

கதிரன் பழையனூர்க் கார் நீலக் கண்ணாய்!

உதிரம் உடைத்திதன் கோடு’

என்று கூறி ‘நடுங்க நாடு’வது, “தோழி தலைவியை நடுங்க நாடல் கூடாது” என்ற பொருளதிகாரக் கருத்தொடு மாறுபட்ட பொருள் வழுவாம்.

இனி, பொருளற்ற செய்திகளைக் கூறுவதும் பொருள் வழுவாம்.

எ-டு : ‘வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை

கோழிலை வாழைக் கொழுமடல் உறங்கும்

ஊரன் செய்த கேண்மை

தேரை வாயினும் பெரிதா கின்றே’

என இல்லாத - பொருந்தாத - செய்திகளாகிய கொம்புடைய குதிரை, அது வாளை மீனை உண்டல், அது வாழை மடலில் போய்ப் படுத்துறங்கல், தேரைவாய் பெரிதாயிருத்தல் என்பன ஈண்டுக் கூறப்பட்டுள்ளவாறு.

யாப்பு வழு -

யாப்பிலக்கணச் செய்தியொடு மாறுபடுவது.

எ-டு : ‘குமண! வாழி! குமண! உமணர்

உப்பிற் றேய்க, நின் பகையே! யான்சில

பெருமை வேண்டி வந்தேன்

நீ நின் பெருமை வேண்டின் தா.’

இப்பாட்டு முதலில் எடுத்துக்கொண்ட ஓசையிற் கெட்டுப் பின்பகுதி உரைநடை போலப் பரவிக் கட்டுரையால் வந்தமை யின் யாப்புவழுவாயிற்று; ஈற்றடி யிறுதியும் அசையாக நின்றமையும் யாப்புவழுவாம். (யா. வி. பக். 422-424)

நிகமனம் -

{Entry: Q17c__222}

அனுமான உறுப்பு ஐந்தனுள் இறுதியாயது (தருக்க.சங்.); முடிவு என்னும் பொருளது.

பக்கம் - இம்மலையில் நெருப்புள்ளது; ஏது-புகை உண்மை யால்; எடுத்துக்காட்டு அடுக்களை போல; உபநயம்-எங்கெங் கெங்குப் புகையுண்டோ, அங்கங்கு நெருப்புண்டு; நிகமனம்- ஆதலால் இம் மலையிலும் நெருப்பு உண்டு என்பது.

நிகரில் பக்கம் -

{Entry: Q17c__223}

விபக்கம், எதிர்க்கட்சி (சி.சி.அளவை.9)

நியாய நூல் -

{Entry: Q17c__224}

1. தருக்க நூல். 2. சட்ட நூல் (யாழ்.அக.) 3. ஒழுக்க நூல் (L)

நியாய மலைவு -

{Entry: Q17c__225}

சமய நூல்கள் பொருள்பலவற்றையும் துணிந்து கூறும் வகையில், காண்டல் போன்ற அளவைகளைப் பற்றிக் கூறியுள்ள உண்மைகள் நியாயம் எனப்படும். ஒவ்வொரு சமயத்தவரும் தத்தமக்கென ஓர் உண்மையைக் கொண்டு அதன் முடிவைத் துணிந்து கூறுவர். இத்தகைய கொள்கை களில் மாறுபாடு தோன்றச் செய்திகளைக் கூறுதல், நியாய மலைவு என்ற குற்றமாகும்.

எ-டு: ‘ஆய பொருள்கள் கணந்தோ(று) அழியுமெனத்

தூய அசோகின் முனியுரைத்த(து)-ஆய்(வு)அன்றோ?

காதலர் நீங்க எழும்காம வெங்கனல்வாய்

மாதர் உயிர்தாங்கும் ஆறு.’

“அசோகின் முனியான அருகக் கடவுள், “தோன்றும் பொருள் யாவும் கணந்தோறும் அழியும்” என்று கூறியது உண்மையன்றோ? ஏனென்றால், தலைவன் பிரிந்து சென்ற தால் எழும் காமத்தீயில் அழியாமல் தலைவி இன்னும் உயிருடன் இருக்கிறாளே!” - என்று பொருள் படும் இப் பொருட்கண், “கணம்தோறும் பொருள் அழியும்” என்பது போதிமுனி புத்தன் கூறியது; அசோகமுனி அருகன் கூறிய தன்று ஆதலின் இது நியாய மலைவு ஆயிற்று. (தண்டி. 123)

நியாய மலைவு அமையும் இடன் -

{Entry: Q17c__226}

அளவைகளின் கருத்துக்கு மாறுபட்டது புகழ்ச்சியிடத்து ஏற்கத் தக்கது.

எ-டு : ‘வானாகி மண்ணாகி மறிகடலாய் மாருதமாய்த்

தேனாகிப் பாலாம் திருமாலே! - ஆன்ஆயா!

வெண்ணெய் விழுங்க நிறையுமோ மேலொருநாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு’

“வானமும் நிலமும் கடலும் காற்றும் தேனும் பாலுமாகி எனக்கு இன்பம் தரும் திருமாலே! மாடுகளை மேய்த்த ஆயனே! பண்டு அகத்திட்ட உலகங்களை ஊழித்தொடக்கத் தில் வெளிப்படுத்திய உன் வயிறு வெண்ணெயை உண்டத னால் நிறைந்துவிடுமா?” என்று பொருள்படும் இப்பாடற்- கண், ஐம்பூதங்களும் ஆயினான் எனவும், வெண்ணெயை விழுங்கினான் எனவும், மண்ணை உமிழ்ந்தான் எனவும் ஒருவனைப் பற்றிக் கூறுதல் நியாயமலைவாய், எல்லாம் வல்ல இறைவனுடைய புகழாதலின் அலங்காரம் ஆயிற்று. (தண்டி. 125-5)

நிர்விகற்பக் காட்சி -

{Entry: Q17c__227}

பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு. (L)

நிரல்நிறை வழுவும் அமைதியும் -

{Entry: Q17c__228}

ஒரு வரிசையாக முன்னே வைத்தவற்றிற்கு நேர்வகையில் சேரும் வரிசையாகவே பின்னரும் வரிசையை அமைக்காமல் வரிசை பிறழ அமைப்பது ஒரு செய்யுட்குற்றம்; அதுவே உய்த் துணரும் வகையில் பெறப்பட்டால் வழுவாகாது அமையும்.

எ-டு : ‘தெற்கும் குடக்கும் வடக்கும் குணக்குமே

நிற்கும் திறத்(து) உலகை நீ(டு)அளிக்கும்-பொற்பினார்

ஈரெண் கலையோன், வருணன்; இரவி, யமன்

யாரும் புகழியல்பி னார்.’

இது வழு. தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலு மிருந்து உலகினைக் காக்கும் திசைக்காவலர்கள் சந்திரன், வருணன், சூரியன், இயமன் என்னுமிவர் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், நிரலாக முன் வைத்துள்ள தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்னும் திசைகளிலிருந்து காப்போர் முறையே இயமன், வருணன், சந்திரன், இந்திரன், என இருத்தல் வேண்டும்; அவ்வாறு நிரல்நிறை முறையாக இராமையின் இது வழுவாம்.

‘குடபால் வடபால் குணபால்தென் பாலென்(று)

அடைவே திசைநான்(கு); அவற்றுள்-இடையிரண்டும்

நன்மைபுரி வோர்நயந்(து) நோக்குப; ஏனைய

அன்மைபுரி வோர்க்கே ஆம்.’

இது வழுவில்லாதது. மேற்கு வடக்கு கிழக்கு தெற்கு எனும் நாற்றிசையுள் இடையேயுள்ள வடக்கும் கிழக்கும் நலம் புரிவோர் கொள்வன; ஏனையிரண்டும் தீக்கருமம் புரிவோர் கொள்வன என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘இடை யிரண்டும்’ ‘ஏனைய’ என்னும் சொற்களால் நிரல்நிறை உய்த்தறியும் வகையில் இருப்பதால் இது வழுவாகாதாயிற்று. (தண்டி. 109, 110)

ப section: 42 entries

பக்கத்து மீட்சி -

{Entry: Q17c__229}

யாண்டுத் தீ இல்லை, ஆண்டுப் புகையும் இல்லை என்பது போல, துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை.

செய்தியை எதிர்மறைமுகத்தால் வற்புறுத்தும் வைதன்மிய திட்டாந்த விளக்கமாம். (மணி. 29 : 67 உரை)

பக்க தன்மம் -

{Entry: Q17c__230}

துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தினது தன்மை.

எ-டு : பக்கம்-இம்மலை; பக்க தன்மம்-இம்மலை நெருப் புடையது எனல். (மணி. 29:71 உரை)

பக்கப்போலி -

{Entry: Q17c__231}

தருக்கத்தில் பக்கத்தின் ஆபாசம்; அஃதாவது பக்க தன்மம் பொருந்தாமலிருத்தல். அது பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த சம்பந்தம் ஈறாக ஒன்பது வகைப்படும். (மணி. 29 : 143 - 153)

பக்கம் -

{Entry: Q17c__232}

1. அனுமானத்தின் உறுப்பினுள், மலை நெருப்புடைத்து என்றது போன்ற பிரதிஞ்ஞா வசனம் (மணி. 29 : 59)

2. துணிபொருள் உள்ள இடம் (சி. சி. அளவை. 9)

3. கூறு, ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொ. பொ. 75 நச்.) ( L)

பக்காசித்தம் -

{Entry: Q17c__233}

துணிபொருளுக்குரிய இடமின்மையால் உண்டாம் பிரமாணாபாசம். (சைவப். பக். 25) (L)

பஞ்சாவயவம் -

{Entry: Q17c__234}

பஞ்ச அவயவம்; தருக்க சாத்திரத்தில் வரும் மேற்கோள், ஏது, எடுத்துக் காட்டு, உபநயம், நிகமனம், என்பன. (சி.சி. அளவை. 11 சிவாக்) (L)

பட்சப்போலி (அ) பட்சாபாசம் -

{Entry: Q17c__235}

‘பக்கப் போலி’; அது காண்க. (L)

பதார்த்தம் -

{Entry: Q17c__236}

திரவியம், குணம், கருமம்; சாமானியம், விசேடம், சமவாயம், அபாவம் என நியாய சாத்திரத்தில் வழங்கும் எழுவகைப் பொருள்கள். (L)

பரார்த்தானுமானம் -

{Entry: Q17c__237}

பிறர் உணர்தற் பொருட்டெழுந்த அனுமானம். (தருக்கசங். பக். 106 நீலகண்.) (L)

பரார்த்தானுமிதி -

{Entry: Q17c__238}

பரார்த்தானுமானத்தால் உண்டாம் அறிவு. (L)

பரிமாணம் (2) -

{Entry: Q17c__239}

அளவு (பி. வி. 29).

பாரம்பரிய நியாயம் -

{Entry: Q17c__240}

வேறுகாரணம் கூறும் வாய்ப்பின்றி, ஒருசெயல் தொன்று தொட்டுப் பரம்பரையாக நிகழ்ந்து வருவது. ஒன்றனையே காரணமாகக் கொண்டு, அச்செயலைத் தொடர்ந்து நடத்தும் நெறி இந்நியாயம் ஆகும்.

பாரி சேடப் பிரமாணம் -

{Entry: Q17c__241}

எஞ்சுதலைக் கொள்ளுதலாகிய அளவை. (சி. போ. பா. 110 புதுப்.) (L)

பாரிசேடம் -

{Entry: Q17c__242}

பாரிசேடப் பிரமாணம்; பாரிசேட அனுமானமும் அது.

பிசிபடுமொழி -

{Entry: Q17c__243}

செய்யுட் குற்றங்களுள் ஒன்று. (யா. வி. பக். 565)

பிட்டபேஷண நியாயம் -

{Entry: Q17c__244}

பிட்டம்-மாவு, பேஷணம்-பிசைதல்.

பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசைதலைப் போல முற்கூறப்பட்டதனையே திரும்பத் திரும்பக் கூறும் நெறி இந்நியாயமாகும் (L)

பித்திகா மார்ச்சால நியாயம் -

{Entry: Q17c__245}

பித்திகை-மதில்; மார்ச்சாலம்-பூனை.

மதில்மேல் இருக்கும் பூனை மதிலின் வெளிப்புறம் குதிக்குமா உட்புறம் குதிக்குமா என்பது உறுதியாக முடிவுசெய்ய இயலாத தொன்றாதல் போல, ஒரு செயலின் விளைவு நன்றாக முடியுமா தீதாக முடியுமா என்று உறுதி செய்ய முடியாமல் ஐயுறவாக இருக்கும் நிலையைக் காட்டும் நெறி இந்நியாயமாகும்.

பிபீலிகா கதி நியாயம் -

{Entry: Q17c__246}

பிபீலிகா-எறும்பு; கதி-இயக்கம்.

ஒரு மரத்துச்சியின்மீது ஏறிய எறும்பு, அவ்வுச்சியிலிருக்கும் பழத்தினை, உச்சியில் ஏறியவுடன் எளிமையில் சுவைத்து உண்ண முடிவதில்லை; காற்றில் மரக்கிளை அசைவதால் உச்சியில் ஏறிய தன் இயக்கத்துக்கு இடையூறாகத் தான் கீழே வீசப்படக்கூடும் என்ற அச்சத்தால் மரக்கிளையை இறுகப் பற்றிச் சிறிதுசிறிதாக மிக்க முயற்சியுடன் அக்கிளைஉச்சிப் பழத்தை வலியப் பற்றிக்கொள்ளும் வாய்ப்பினை அறிந்து பற்றிப் பின் கீழே விழும் வாய்ப்பின்றி அப்பழத்தைச் சுவைக்கின்றது. மேம்பட்டவன் வேதபுராண அறநூல்கள் வகுத்த வழியிலே அரிதின் முயன்று வாழ்க்கையைப் பிறழா மல் சோர்வடையாமல் நடத்தினால் அவ்வாழ்க்கையது இறுதியில் அவனுக்கு இறைஅருளாகிய பேரின்பம் கிட்டும் என்பது போல்வனவற்றை விளக்க உதவும் இந்நெறி, சலிப்பின்றி அரிதின் முயன்று நினைத்த பேற்றினை எய்துதலைக் குறிக்கும் நெறியாகும். (L)

பிபீலிகா நியாயம் -

{Entry: Q17c__247}

பிபீலிகா-எறும்பு

எறும்புகள் தொடர்ந்து செல்வது போலக் காரணகாரியங் களைத் தொடர்ந்து முறைப்பட எண்ணிச் செயலைத் தவறாது துணியும் நெறி இந்நியாயமாகும். (L)

பிரத்தியட்சம் -

{Entry: Q17c__248}

காட்சியளவை; கண்முதலிய ஐம்பொறிகளாலும் உணர்ந்து பொருளினது உண்மையைத் துணிவது. அளவை ஆறனுள் ஒன்று. (L)

பிரமாணப் போலி -

{Entry: Q17c__249}

உண்மைப் பிரமாணமன்றிப் போலியாக வருவது. ‘பிரமாண ஆபாசம்’ என்பதும் அது. (L )

பிரமாண வாதம் -

{Entry: Q17c__250}

நியாய அளவைகளால் பொருளை நிச்சயம் செய்தல் வேண்டும் என்னும் கொள்கை. (L)

பிரமேயம் -

{Entry: Q17c__251}

பிரமாணத்தால் அளந்தறியப்படும் பொருள். பிரமேயம் - அளக்கப்படும் பொருள். (வீ.சோ. 86 உரை)

பிரவாகேசுவர நியாயம் -

{Entry: Q17c__252}

பிரவாகம்-வெள்ளநீர்; ஈசுவரம்-இறைத்தன்மை.

(வெள்ளம் ஓடும்போது, முதல் தொகுதி நீர் அப்பாற்பட, அவ்விடத்து அடுத்த தொகுதி இடம் பெறுவது போல, ஒருவரிடத்தை மற்றவர் கொண்டு செயற்படல் இதன் விளக்கமாகும்.)

ஓரான்மா முக்தன் ஆனால் இறைவன் அவனிடம் தன் அதிகாரங்களை ஒப்படைத்துத் தான் பாரம் நீங்கினவனாக, அம்முக்தனும் பின் ஒருவன் முக்தனானால் அவனிடத்தில் தன் அதிகாரத்தை ஒப்படைத்துத் தன் பாரம் நீங்குவது போலத் தந்தை தன்பொறுப்பை மகனிடமும், அவன் தந்தையானால் தன்பொறுப்பை தன்மகனிடமும், ஒப்படைப் பது போன்று அதிகாரங்கள் ஏற்ற காலங்களில் ஒருவரிட மிருந்து மற்றவருக்குக் கிட்டுதலைக் கூறும் நெறி இந்நியாய மாகும். (L )

பிராம்மண வசிட்ட நியாயம் -

{Entry: Q17c__253}

பிராம்மணர்-அந்தணர். வசிட்டர்-அவருள் மேம்பட்ட ஒருவர்.

“பிராமணர் வந்தனர்; வசிட்டனும் வந்தான்” என்றால், வசிட்டன் பிராமணருள் மேம்பட்ட தலைமை உடைமை பற்றிப் பிரித்துத் தனியே விதந்து கூறப்படுதல் போல, ஓரினப் பொருள்களுள் ஒன்றனைத் தலைமை பற்றி வேறாக எடுத்துக் கூறிச் சிறப்பிக்கும் நெறி இந்நியாயமாகும். (L)

பிரிபொருட்சொற்றொடர் -

{Entry: Q17c__254}

ஒன்றாத பொருளையுடைய தொடரால் ஆகிய பா வழு. (இ. வி. 691)

பிரிபொருட் சொற்றொடர் வழுவும் அமைதியும் -

{Entry: Q17c__255}

செய்யுளில் உள்ள சொற்றொடர்கள் ஒன்றனோடு ஒன்று இணையாது பிரிந்து நிற்பது வழு. இதுவே கள்ளுண்டார், பித்தர் குழந்தைகள் கூற்றாய் வரின் வழுவாகாது.

எ-டு : ‘கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்;

தெண்திரைநீ ரெல்லாம் திருமுனியே - உண்டுமிழ்ந்தான்;

வஞ்சியார் கோமான் வரவொழிக; மற்றிவளோர்

பஞ்சியார் செஞ்சீ றடி’

“மேகம் முழங்க இந்திரகோபப் பூச்சிகள் எங்கும் பரவின; கடல் முழுதையும் அகத்தியனே உண்டுமிழ்ந்தான்; வஞ்சியை யுடைய சோழமன்னன் வாராதிருப்பானாக; இவள் செம் பஞ்சிக்குழம்பு ஊட்டிய சிவந்த சிறிய அடிகளையுடையவள்” என்பது பொருள். இப்பாடற்கண், வாக்கியங்கள் தொடர் பின்றிப் பிரிந்து நின்று பொருட்பொருத்தம் இன்மையால் இது வழுவாயிற்று.

எ-டு : ‘காமன் உருவம் கரந்தேன்யான்; காங்கேயன்

வீமன் எதிரே விலங்குமே; - தாமரைமேல்

மால்பொழிய வந்தார் அருகர்; மதுவுடனே

பால்பொழியும் இவ்வூர்ப் பனை.’

“மன்மதனுடைய உருவத்தில் நான் ஒளிந்துகொண்டேன்; வீடுமன் வீமனுக்குத் தோற்றோடுவான்; தாமரைமேல் அருகர் பெருமையுடன் தோன்றினார்; இவ்வூரில் பனைகள் கள்ளொடு பால் பொழிகின்றன” என்று பொருள்படும் இப் பாடற்கண் வரும் வாக்கியங்கள் பொருத்தமும் தொடர்பும் இல்லாதன. ஆயின், இது கள்ளுண்டவன் கூற்றாய் வருதலின் வழுவாகாது. (தண்டி. 101, 102.)

பிறர்பொருட்டனுமானம் -

{Entry: Q17c__256}

பரார்த்தானுமானம். (சி.சி. அளவை. 8. சிவாக்) (L)

பிறர்பொருட்டனுமிதி -

{Entry: Q17c__257}

பரார்த்தானுமிதி.

பிறிது படுமொழி -

{Entry: Q17c__258}

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் உரையில் எடுத்தாண்ட குற்றங்களுள் ஒன்று; சொல் கருதிய பொருளைக் குறிக்காது வேறு பொருள் பயப்பக் கூறுவது. (‘நந்தும் தேயம்’ என்பது வளரும் நாடு என்று பொருள்படுவதனோடு, அழியும் நாடு எனவும் பொருள்படுவது.) (யா. வி. பக். 565)

பின்னின்மை -

{Entry: Q17c__259}

அழிவுபாட்டபாவம்; ‘முன்னின்மையொடு பின் இன்மை யன்றி’ (வேதா. சூ. 35) (L)

பீலுவாதம் -

{Entry: Q17c__260}

அணுபரிணாமவாதம் (யாழ். அக.)

பீஜாங்குர நியாயம் -

{Entry: Q17c__261}

பீஜம் - விதை; அங்குரம் - முளை.

விதை முந்தியதோ முளைந்தியதோ என்பது போல, எது முந்தியது என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நெறி இந் நியாயமாகும்.

புணர்ப்பு வழு -

{Entry: Q17c__262}

யாப்பருங்கல விருத்திஉரைகாரர் சுட்டும் செய்யுட் குற்றங்களுள் ஒன்று; சொற்களிடைச் சந்தியில் தோன்றும் பிழைபாடு. (யா. வி. பக். 565)

புறப்பக்கம் -

{Entry: Q17c__263}

உலகியல் செய்திகளை யொட்டிய அனுமானம்.

பூர்வ(க்) காட்சியனுமானம் -

{Entry: Q17c__264}

முன் அனுபவித் தறிந்ததை அடிப்படையாகக் கொண்டு அறுதியிடுவதாகிய அனுமானம்; மலருண்மையை வாசத் தாலறிதல் போல்வது.

பூர்வானுமானம் -

{Entry: Q17c__265}

பூர்வக் காட்சியனுமானம்; அது காண்க.

(மணி. 27; 36 உரைக்குறிப்பு)

பொதுவனுமானம் -

{Entry: Q17c__266}

ஒன்று உள்ளது கொண்டு அதனொடு காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை. (சி. போ. 1 பாண்டிப்.)

பொருள் ஆனந்தம் -

{Entry: Q17c__267}

பாட்டுடைத் தலைமகன் நாட்டின்கண் யாதானும் ஒன் றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்றவிடத்தே, அத்திணைக் குரிய இறைச்சிப்பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதும்,

புகழ்தலுற்றவிடத்தே, ஆகாத பெற்றியால் மங்கலம் அழியச் சொல்லுவதும், மங்கலமாகிய உவமையால் மங்கல மில்லாத உபமேயத்தை உவமிப்பதும், தலைமகனோடு உவமிக்கப் பட்டதற்கு இடையூறுபடச் சொல்லுவதும் என இவை முதலாக உடையன.

எ-டு : ‘களங்கொள் தோகையின் கதுப்பிகுத்து அசைஇ // விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத் (து) // இலங்குவளை விறலியர் நிற்புறம் சுற்றி’ (மலைபடு 44-46)

கூத்தரை நன்னனிடத்து ஆற்றுப்படுப்பவன்,

“மலைமேல் வழியிற்செல்லும் கூத்தப்பெண்டிர், பீலி விரித்துப் பல மயில் இருந்தாற்போல, வழிவந்து அசைந்த வருத்தத்தால் தத்தம் கேசங்களை எடுத்து முடிக்கமாட்டா ராய் விரித்திருப்பர்” என்று புகழ்தலுற்றான்; பெண்சாதிகள் ஊறுபட்டு அழுகை நிகழ்ந்தவிடத்து மயிர் விரித்திருப்பர்; அவ்வகை மங்கல மில்லாத மயிர் விரியைப் பாட்டுடைத் தலைவன் நாட்டோடும் புகழ்ந்தமையின், இப்பாடற் பகுதி பொருள் ஆனந்தம். (ஆயின், இவ்வாறு சான்றோர் செய் யுட்கு, பிற்காலத்தார் தாமே வகுத்துக்கொண்டனவாகிய இவ்வானந்தக் குற்றங்கள் பொருந்தா என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கருத்து.) (யா. வி. பக். 559)

பொருள்வழு -

{Entry: Q17c__268}

நால்வகை வழுக்கள் - நோக்குக.

பொருளானந்தம் -

{Entry: Q17c__269}

இறைச்சியினும், புகழ்ச்சியினும் உவமையிலும் பிறவற்றிலும் ஊறு பயப்பப் பாடும் ஆனந்தக்குற்றம். (யா. வி. பக். 558, 559)

போதப்பிரகாரம் -

{Entry: Q17c__270}

உத்தேசம், இலக்கணம், பரீக்கை (-பரீட்சை) என்ற தருக்க வாதப்பிரிவு.

ம section: 8 entries

மர்க்கட கிசோர நியாயம் -

{Entry: Q17c__271}

மர்க்கடம் - குரங்கு; கிசோரம் - குட்டி.

குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைத் தன் முயற்சியால் தானே பற்றிக்கொண்டு பிடிநெகிழாமல் அதனுடன் யாண்டும் இயங்குவது போல, ஒருவன் தன் முயற்சியில் நம்பிக்கை யொடு, சான்றோர்களைத் தேடித் துணைக்கொண்டு அவர்களைவிடாது பற்றிக்கொண்டு செயற்படும் நெறி இந்நியாய மாகும்.

இஃது எளியது வலியதைப் பற்றி நிற்கும் நெறியாகும். இது மர்க்கட நியாயம் எனவும்படும்.

மலைவமைதி -

{Entry: Q17c__272}

இடம், காலம், கலை, உலகம், (-உலகியல்), நியாயம், ஆகமம் எனப்பட்ட அறுவகை மலைவுகளும் நாடக வழக்கிற் சில காரணங்களால் பொருந்தும் என்று அமைத்துக் கொள்ளப் படுதல். (தண்டி. 125)

மார்ச்சார கிசோர நியாயம் -

{Entry: Q17c__273}

மார்ச்சாரம் - பூனை, கிசோரம் - குட்டி.

பூனை தன் குட்டிகள் தன்னைப் பற்றிக்கொண்டு தன்னுடன் இயங்கும் ஆற்றல் அற்றனவாயிருப்ப, அவற்றிடத்துக் கொண்ட பரிவால் தானே அவற்றைப் பற்றிச் சென்று காத் தளித்தல் போல, வலியவன் எளியவனிடம் பரிவுகொண்டு தானே சென்று அவனைப் பற்றி அவனைப் பாதுகாத்து அளிக்கும் நெறி இந்நியாயமாகும்.

மாறுபடுபொருள்மொழி வழுவும் அமைதியும் -

{Entry: Q17c__274}

செய்யுட்குப் பொருந்தாத குற்றங்களாக வகுத்த வழுக்கள் ஒன்பதும் மலைவுகள் ஆறும் எடுத்துரைத்து, அவை அமைதி பெறும் இடமும் உண்டென விளக்கும் பதினைந்தனுள் ஒன்று.

முன் சொன்னதற்கு மாறுபடக் கூறுதல் இவ்வழுவாம். ஆயின் அதுவே, காமம் அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் கைம்மிகுந்த மக்களால் கூறப்படுமிடத்தே வழுவாகாது அமைதி பெறும்.

“அரசே! உனக்குப் பகைவனே இல்லை; இந்நாடும் உனதே. ஆகவே நீ பகைவர்களை இயமன்கொள்ளும் வகையால் சினந் தழித்துவிட்டு உலகினை ஆளுவாயாக!” என்ற பொரு ளமைந்த பாடற்கண், முன்னர்ப் பகையே இல்லை என்று கூறிப் பின்னர்ப் பகைவரை அழித்து உலகினை ஆளுமாறு கூறுவது மாறுபடுபொருள்மொழியாகி வழுவாயிற்று.

“என்னொடு போரிடப் பாண்டவர்கள் அஞ்சாரோ? நான் பாஞ்சாலியை விடமாட்டேன். ஐயோ! கூற்றுவனைப் போன்ற வீமன் எதிர்நின்று போரிட என்னால் இயலுமோ?” என்ற பொருளமைந்த பாடற்கண், முன்னடிகளில் போர்க்குத் தான் அஞ்சாமையைக் கூறியவன், பின்னடிகளில் வீமன் போர்க்குத் தான் தோற்கும் நிலையினைக் கூறினமையால் மாறுபடுபொருள் மொழியாம்; ஆயினும் அச்சமிகுதியால் சொன்ன கூற்று ஆதலின், இது வழுவமைதியாயிற்று. (தண்டி. 103, 104)

மானதக் காட்சி -

{Entry: Q17c__275}

ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு. (சி. சி. அளவை 6 மறைஞான.) ( L)

மித்தியா புருஷன் -

{Entry: Q17c__276}

இல்பொருள். எ-டு : யாமை மயிர்க்கம்பலம், முயற்கோடு.

(சித். பிர. பக். 82)

மேற்கோள் மலைவு -

{Entry: Q17c__277}

தருக்க சாத்திரத்தில் சொல்லப்படும் ஒரு குற்றம்; முற்கூறிய தற்கு மாறுபடக் கூறுதல். (தொ. சொ. 1 சேனா.)

செய்யுட்கு விலக்கப்பட்ட குற்றங்களுள் ஒன்று. (யா. வி. பக். 565.) (L)

மொழிந்தது மொழிவு (வழுவு)ம், அதன் அமைதியும் -

{Entry: Q17c__278}

இது செய்யுட் குற்றங்களுள் ஒன்று; பொருட் சிறப்பின்றியே கூறியதை மீண்டும் கூறுதலாகிய வழு. இவ்வழுவும், விரைவு பற்றியோ, வேறு பொருட்சிறப்புப் பற்றியோ வருமாயின், வழுவாகாது அமைத்துக் கொள்ளப்பெறும்.

எ-டு : ‘அங்கம் இலாத அநங்கன் அமர்புரியும்

வெங்கணையும் காக்குங்கொல், வேல்வேந்தர் - தங்கோன்,

நிலைஆர்த் தொடைதந்தோன், நேரிழைக்காய் முன்ஓர்

மலையால் கடல்கடைந்த மால்?’

எனக்குத் தன்பால் காதல் மீதூர எனக்குத் தன் ஆத்தி மாலையை அணியத் தந்தவனும், திருமகளுக்காகப் பாற்கட லினையே கடைந்த திருமாலின் அம்சமும் மன்னர் மன்னனும் ஆன சோழமன்னன், உறுப்புக்களே இல்லாத மன்மதன் என்மீது எய்யும் கொடிய அம்புகளையும் அவை என்னைக் கொடுமை செய்யாதவாறு காப்பானோ? என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், ‘அங்கம் இல்லாத’ என்று அடை கொடுத்துப் பின் ‘அநங்கன்’ அப்பொருளையே யுடைய சொல்லை யமைத்தது இவ்வழுவாம்.

இனி, அச்சமும் விரைவும் பற்றி வந்தமையால், வழுவமைதி ஆமாறு:

எ-டு : ‘ஒருவர் ஒருவர் வடநாட் டரசர்

அருவர் அருவர்வர(வு) அஞ்சித் - தெருமந்து

தீத்தீத் தீ என்றயர்வர், சென்னி படைவீரர்

போய்க்கலிங்கர் நாடழித்த போது.

சோழநாட்டுப் படைவீரர் படையெடுத்துச் சென்று கலிங்க நாட்டை அழித்தபோது, வடநாட்டரசர் ஒவ்வொருவரும், “அருவர் (-தமிழர்) அருவர்” என்று அவர்களது வருகைக்கு அஞ்சி, மனமும் கலங்கித் “தீ, தீ, தீ” என்று சொல்லிக் கொண்டு தளர்ச்சியடைவர் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், “அருவர் அருவர்” “தீத்தீத்தீ” என்று வந்தவை விரைவு பற்றி வந்தமையின் அமைதியாயின.

தெலுங்குமொழியில் தீ என்ற சொல்லுக்கும் ஒதுங்குக என்று பொருள் இருப்பது தெரிவதால், தீத்தீத்தீ என்னும் அடுக்குத் தொடர்க்கு, ஒதுங்குக என்று பொருள்படும் சொல் மும் முறை அடுக்கி வந்தவாறு பொருள் கொள்க. (தண்டி. 105, 106).

ய section: 7 entries

யதிப்ரஷ்டம், யதிபங்கம் -

{Entry: Q17c__279}

யதி வழு; அது காண்க.

யதி வழு -

{Entry: Q17c__280}

செய்யுட் குற்றம் ஒன்பதனுள் ஒன்று; ஓசை கொண்டு தளையறுக்குமிடத்தே அறுத்தற்கு அரியதாய் வேறுபட வரும் தன்மைத்து இவ்வழு.

எ-டு : ‘மாடு பயிலும் வரைஆளி மால்யானைக்

கோடுபுய்த்(து) உண்டுழலும் கொள்கைத்தாம் - காடு

அரிதாம் இயல்பிற்(று); அரையிருட்கண் வாரல்;

பெரிதாகும் ஐய பிழை.’

தலைவ! மலையின் நாற்புறமும் சுற்றி ஏறி யாளி, பெரிய யானைகளுடைய கொம்புகளைப் பறித்து ஊனைத் தின்று திரியும் இயல்பினையுடைய காடு கடந்து வரற்கு மிக அரிது; இத்தகு காட்டில் நள்ளிரவில் வரவேண்டா; வரின் பேரேதம் விளையக் கூடும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், இரண்டாமடி ஈற்றுச்சீர் ‘காடு’ என்றிருப்பது யதிவழு. சந்தி சேர்த்தால் ‘காடரிதாம்’ என ஆகித் தனிச்சொல் சீராக நிரம்பாமல் ‘கா’ எனவே நிற்கும்.

யதிவழு அமைதி -

{Entry: Q17c__281}

வகையுளியாகப் பிரித்துக் கூறுமிடத்தே, யதிவழு அமைக்கப் படும்.

எ-டு : ‘மேவிவாழ் வார்மேல் அருள்நீங்கா(து) ஆகு(ம்); மலர்த்

தேவிநீங் காள்செம்பொன் தோள்இணைகள்; - கோவின்நனி

சென்னிவிடா மாலின்அடி; வேலின் நுதி நீலநிறக்

கன்னிவிடாள்; ஈகைவிடா கை!’

குடிமக்கள்மீது மன்னன் அருள் நீங்காது; திருமகள் அரசனுடைய தோள்களை விட்டு நீங்காள்; அவன் தலையும் திருமாலினைப் பணிவதை விடாது; கொற்றவை அவனுடைய வேல்நுனியை விட்டு நீங்காள்; அவன் கைகள் ஈகையை ஒருபோதும் விடா என்ற இப்பாடற்கண், ‘மேவி வாழ்வார்,’ ‘தேவி நீங்காள்’ என்று சீர்பிரிப்பின் வெண்டளை கெட்டு ஓசை சிதையுமாதலின், ‘மேவிவாழ் வார்மேல்,’ ‘தேவிநீங் காள்செம்பொன்’ என்று வகையுளி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு யதிவழு வகையுளியால் அமைக்கப்பட்டது. (தண்டி. 114.)

யாப்பானந்தம் -

{Entry: Q17c__282}

முன் தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப் பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ, அதன்பின்னே சிறப்புடைமொழி நிறீஇ, சிறப்பிக்கப்படுவதனை இவ்வாறு இடர்ப்படுத்துக் கூறுவது.

எ-டு : ‘ஊகத்தினான் மல்கு சோலை உளியன் உயர்வரைவாய்’

என்று தொடங்கும் பாடற்கண், இம்முதலடியில் ‘உளியன்’ எனப் பாட்டுடைத் தலைவன் பெயர் நடுவே வந்து இடர்ப் படுத்தியவாறு. “கருங்குரங்குகளால் நிறைந்த சோலைகளை யுடைய (உளியினது) உயர்ந்த மலையிடத்தில்” என்னும் இவ் வடிக்கண், ‘சோலைகளை யுடைய மலை’ என முடிக்கப்படு வதன் இடையே தலைவன் பெயர் வந்து மயக்குறுத்தியமை காண்க. (யா. வி. பக். 561, 562)

யாப்பு வழு -

{Entry: Q17c__283}

நால்வகை வழு - நோக்குக.

யுத்தி யுத்தர் -

{Entry: Q17c__284}

தார்க்கிகர்; தருக்கம் வல்லுநர்.

யுத்தி வாதம் -

{Entry: Q17c__285}

சாத்திர ஆதாரங்களை ஏற்காமல் தன் அறிவாற்றல் கொண்டு ஒருவன் வாதம் செய்தல்.

ல section: 1 entries

லீடாலீட நியாயம் -

{Entry: Q17c__286}

லீட் - நக்குதல்.

நக்கியதனையே திரும்பவும் நக்குவதுபோல் ஒரே முறையி லேயே பலகாலும் செயற்படும் நெறி இந்நியாயமாகும்.

வ section: 23 entries

வரகோஷ்டி நியாயம் -

{Entry: Q17c__287}

ஒரு சங்கத்துள் ஒருவர்தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்துகொள்ளுதல் போலும் நெறி. (சி. சி. 3, 4 சிவாக்.)

வழு ஒன்பது -

{Entry: Q17c__288}

பிரிபொருள் சொற்றொடர் (-ஒன்றாத பொருளையுடைய செய்யுள்), மாறுபடுபொருள்மொழி - (முன்மொழிந்ததற்கு மாறுபடத் தோன்றி வரும் மொழியுடைய செய்யுள்), மொழிந்தது மொழிதல் (-கூறியது கூறி அதனால் வேறுபட ஒரு பொருளை விளக்காத செய்யுள்), கவர்படு பொருள் மொழி (- ஒரு பொருளைத் தெளிவுற உணர்த்துதற்குப் பொருந் திய சொல் அதனை ஐயுறுமாறு பலபொருள் மேலும் நிற்பது), நிரல்நிறைவழு (-ஒருவரிசை முன்வைத்து, பின்வருவது அதற்கு மாறுபட வைப்பது), சொல்வழு (-சொல்லிலக்கணத் தொடு மாறுபட்டு வழுவி வரும் சொற்களைப் புணர்ப்பது), யதிவழு (-(ஓசை கொண்டு தளை அறுக்குமிடத்து அறுத்தற்கு அரிதாய் வேறுபட வருவது), செய்யுள்வழு (-செய்யுளிலக் கணத்தொடு பொருந்தாத இயல்பிற்றாக வருவது), சந்திவழு (-(எழுத்திலக்கணத்திற் கூறிய சந்தியொடு மாறுபட்ட இயல்பிற்றாக வருவது) என்பன (இ. வி. 691)

வழு, மலைவு இவற்றிடை வேற்றுமை -

{Entry: Q17c__289}

பிரிபொருள் சொற்றொடர் முதலிய வழு ஒன்பதும் பெரும்பான்மையும் குற்றமாகச் சிறுபான்மை ஓரோவிடத் துக் குணமாதலும், இடமலைவு முதலிய ஆறும் ஒருதலை யாகவே குற்றமாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகப் புணர்க்கவல்ல புலவரால் சிறுபான்மை மொழியப்படுதலு மாகிய வேறுபாடு நோக்கி ஒன்பதுவகை வழுவும் ஆறுவகை மலைவும் தனித்தனியே கூறப்பட்டன. (இ. வி. 691 உரை.)

வன்னி தூம நியாயம் -

{Entry: Q17c__290}

‘புகையுள்ள இடத்துத் தீயுண்டு’ என்பது போலப் பொருள் களின் பிரிவின்மையைக் குறிக்கும் நியாயம். (அபி.சிந்.)

விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாப்தி -

{Entry: Q17c__291}

இஃது ஏதுப் போலியின் மூவகையில் அநைகாந்திக ஏதுப் போலியின் ஆறு கூறுகளுள் நான்காவதாகும். அஃதாவது கூறப்படும் ஏதுவானது மாறுபட்டுள்ள பொருள்களில் ஒன்றில் பொருந்தி, ஒத்த பொருள் எல்லாவற்றிலும் பொருந்தி இருக்கை.

எ-டு : பக்கச்சொல் - ஒரு செயலிடைத் தோன்றுவது ஏது - நிலைபேறு இன்மையின்

விளக்கமும் எடுத்துக்காட்டும் - எவ்வெப் பொருள் செய லிடைத் தோன்றுமோ அவ்வப் பொருள் நிலைபேறுடைய தன்று, குடம்போல. இதற்கு மறுதலை விளக்கம் - எவ்வெப் பொருள்கள் செயலிடைத் தோன்றுவன அல்லவோ, அவைநிலைபேறுடையன, ஆகாயமும் மின்னலும் போல என்று கூறின்,

ஆகாயம் நிலைபேறுடையதாயும் மின்னல் நிலைபேறு அற்றதாயும் உள்ளமையின், செயலிடைத் தோன்றாத மின்னலுக்கும் நிலைபேறு உண்மை உணரப்படுதலின்,

செயலிடைத்தோன்றுவது என்பது நிலைபேறில்லா எல்லாப் பொருள்களுக்கும், நிலைபேறுடைய பொருள்களுள் ஒன்றற்கும் பொருந்துவதால்,

‘மின்னல்போல் நிலைபேறின்றாய்ச் செயலிடைத்தோன் றாதோ, குடம் போல நிலைபேறு இன்றாய்ச் செயலிடைத் தோன்றுமோ’ என்ற ஐயப்படுதலின்,

இஃது ஏதுப்போலி ஆயிற்று.

விபக்கம் - இனம் அல்லாப் பொருள்; ஏகதேசம்- ஒரு பகுதி; விருத்தி - இருத்தல்; சபக்கம் - ஒத்த இனமான பொருள்; வியாப்தி - வியாபித்திருத்தல். (மணி. 29: 243 - 253)

விபக்கம் -

{Entry: Q17c__292}

அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம். (மணிமே. 29 : 124)

விபரீத அந்நுவயம்-

{Entry: Q17c__293}

இது திட்டாந்தப் போலிவகைகளாகிய சாதன்மிய திட்டாந்த ஆபாசம், வைதன்மிய திட்டாந்த ஆபாசம் என்ற இரண்ட னுள் முதல் வகையின் கூறுகள் ஐந்தனுள் இறுதியாகும்.

அந்நுவயம் - கூட்டம், உடன் நிகழ்ச்சி. விபரீதம் - மாறுபடுதல்.

நெருப்பும் புகையும் ஆகிய இரண்டனுள் நெருப்பில் புகை அடங்கியிருத்தலின் நெருப்பு வியாபகம். புகை வியாப்பியம் ஒன்றின் ஒன்று அடங்கி உடன் நிகழும் பொருள்களுள் அடங்கிக் குறைவற உடன்நிகழ்வது வியாப்பியம். அடங்காது மற்றதை அகத்திட்டு மிக்கு இருப்பது வியாபகம். வியாப்பிய மாகிய புகை வியாபகமாகிய நெருப்பு இருப்பதைக் காட்டும். ஆனால் வியாபகமாகிய நெருப்பு இருப்பதால் வியாப்பிய மாகிய புகை இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நெருப்பு உண்டு; ஆனால் புகை இல்லை. வியாபகத்தின் அந்நுவயத்தால் வியாப்பிய மாகிய பொருளைத் துணிவது விபரீத அந்நுவயமாகும்.

“இவ்விடத்தில் நெருப்பு உண்டு, புகை இருப்பதனால்” என்று கூறுவதே முறையானது.

“இவ்விடத்தில் புகை உண்டு. நெருப்பு இருப்பதனால்” என்று கூறுவது மாறுபட்டதாய் விபரீத அந்நுவயமாகும்.

“யாதொரு பொருள் பண்ணப்படுவதோ, அது நிலைபேறு இல்லாதது” என்று கூறுவதே முறை. அதை விடுத்து யாதொரு பொருள் நிலைபேறு இல்லாததோ, அது பண்ணப்படுவது” என்று கூறின், பண்ணப்படாத பொருள்க ளாகிய மின்னல் முதலியவற்றில் நிலைபேறின்மை காணப் படுதலின், அது முறை யன்று, இம்முறையன்மையே விபரீத அந்நுவயம் எனப்பட்ட திட்டாந்தப் போலியாம். (மணி. 29 : 393 - 401; அனுமா. 43)

விபரீத வியதிரேகம் -

{Entry: Q17c__294}

இது திட்டாந்தப் போலிவகை இரண்டனுள் வைதன்மிய திட்டாந்தப் போலியின் கூறுகள் ஐந்தனுள் இறுதியாகும்.

இஃது ஒத்த பக்கம் அல்லாத ஒவ்வாப் பக்கத்து விளக்கத் தொடரினைத் தலைதடுமாறச் சொல்லுதலாம்.

எ-டு : ஒலி நிலைபேறுடையது, வடிவு உடைமையால்.

“யாதொரு பொருள் நிலைபேறுடையது, அது வடிவுடையது” என்பது பக்க விளக்கம். இதற்கு ஒவ்வாப் பக்க விளக்கமாக,

யாதொரு பொருள் நிலைபேறுடையதன்று, அது வடிவும் உடையதன்று என்று கூறவேண்டும்; அதனை விடுத்து யாதொரு பொருளிடத்து வடிவு இல்லையோ, அது நிலை பேறும் உடைத்தன்று என்று மாற்றிச் சொல்லுவது, ஒவ்வாப் பக்கச் செய்தியை மாறுபடுத்திக் கூறுவதால் விபரீத வியதி ரேகமாம். வியதிரேகம் - ஒவ்வாப் பொருள்; விபரீதம் - மாறுபடுத்தல். (மணி. 29 : 466 - 468)

விபரீத வெதிரேகம் -

{Entry: Q17c__295}

வைதன்மிய திட்டாந்தப் போலி ஐந்தனுள், வெதிரேக வாக்கியத்தை மாறுபடச் சொல்லுதல்.

(மணிமே. 29 : 460 அனுமா. 47.)

‘வைதன்மிய திட்டாந்தப் போலி’ காண்க.

விம்பப் பிரதிவிம்ப நியாயம் -

{Entry: Q17c__296}

விம்பம் - பிம்பம். பிரதிவிம்பம் - கண்ணாடி முதலியவற்றில் காணும் அதன் நிழல். ஒரு பொருளின் நிழல் கண்ணாடி முதலியவற்றில் பல திறப்பட்டுக் காணப்படுவது போல, ஒரே மூலப்பொருள் பலவாகக் காட்சி வழங்கும் திறத்தைக் கூறும் நெறி இந்நியாயமாகும். (L)

விம்பப் பிரதிவிம்ப பாவம் -

{Entry: Q17c__297}

ஓர் உருவமும் அதன் பிரதிபிம்பமும் போல வேற்றுமைப் பட்டிருந்தும் ஒன்றியிருக்குந் தன்மை. (L)

வியதிரேகம் -

{Entry: Q17c__298}

உடன் நில்லாத நிலை; அஃதாவது வேற்றுமை.

வியபிசரித்தல் -

{Entry: Q17c__299}

சாத்தியம் இல்லாத இடத்து ஏது இருப்பதாகத் தருக்கமுறை மாறுபடக் கூறுதல். வியபிசாரம் என்பதும் அது.

எ-டு : பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நெருப்பு இருப்பதால் புகை உண்டு என்றல். (L)

விருத்தம் -

{Entry: Q17c__300}

ஏதுப்போலிகளுள் ஒன்று.

ஏதுப்போலியின் மூவகைகளுள் மூன்றாவது விருத்தம் எனப்படும். இவ்விருத்த ஏதுப்போலி தர்ம சொரூப விபரீத சாதனம், தர்மி சொரூப விபரீத சாதனம், தர்ம விசேட விபரீத சாதனம், தர்மி விசேட விபரீத சாதனம் என நால்வகைப்படும். அவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்பில் காண்க. (மணி. 29 : 275 - 80)

விருத்த வியபிசாரி -

{Entry: Q17c__301}

ஏதுப்போலியின் அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என்ற மூவகையில் அநைகாந்திகத்தின் உட்பிரிவு ஆறனுள் ஆறாவதாகிய ஏதுப்போலி இது. இது திருந்திய ஏது அன்றாய் மாறுபட்ட ஏதுவுக்கும் இடம் கொடுப்பதாகும்.

வைசேடிகன் ஒருவன், “ஒலி நிலையற்றது, செயற்பாட்டால் தோன்றுதலின், பானை சட்டி இவற்றைப் போல” - என்று குறித்தவிடத்து,

அவனை மறுத்து வாதிக்கும் மீமாஞ்சகன் ஒருவன், “ஒலி நிலை பேறுடையது, கேட்கப்படுதலின், சத்ததத்துவம் போல” என்று குறிப்பிட்டால்,

கேட்கப்படுதல் என்ற ஏது சத்ததத்துவம் ஒன்றனைத்தவிர ஏனைய இணையான பொருள் எதனிடத்தும் இன்மையா னும், செயற்பாட்டால் தோன்றும் குடம் முதலிய பல பொருள்களிடத்தும் நிலைபேறின்மை காணப்படுதலானும்,

மீமாஞ்சகன் கூறும் திருந்தா ஏது ஒன்று, வைசேடிகன் கூறும் திருந்திய ஏதுவும் உடன் இருக்க அமைவதாய், ‘ஒலி நிலைபேறுடையது’ என்பதனைக் காரணமும் எடுத்துக்காட் டும் தந்து நிறுவ இயலாததாய் உள்ள நிலையில்,

வைசேடிகன் கூறும் ‘ஒலி நிலையற்றது’ என்ற பொருளைச் சாதித்து, வாதியாகிய மீமாஞ்சகன் கூறும் ‘ஒலி நிலை பேறுடையது’ என்ற பொருளைச் சாதியாமையின்,

மாறுபட்ட காரணமாய், இருதிறத்தும் உதவுதலின் விருத்த வியபிசாரி என்ற ஏதுப்போலியாயிற்று. விருத்தம் - மாறுபாடு. வியபிசாரி - உரிய இடத்தை விடுத்துப் பிறிதோரிடமும் சுட்டுதல். (மணி. 29: 267 - 274)

விஷகிருமி நியாயம் -

{Entry: Q17c__302}

விஷம் - நஞ்சு; கிருமி - அதில் உண்டாகும் புழு.

நஞ்சினில் தோன்றிய புழு, அதனைத் தனக்கு நஞ்சு என்று கருதாது உணவாக உட்கொண்டு உயிர் வாழ்வது போல, தீயவற்றிலேயே பலகாலும் பழகியவர்களுக்கு அவை தீமை பயப்பனவாகத் தோன்றாமல், தமக்கு இயல்பானவையாகவே தோன்றும் நெறி இந்நியாயமாகும். (L)

விஷவிருக்க நியாயம் -

{Entry: Q17c__303}

விஷம் - நஞ்சு; விருக்கம் - விருட்சம் - மரம்.

தான் வளர்த்த நச்சு மாமரத்தை அது தனக்கும் மற்றவருக்கும் தீமைதருவது ஒன்று என்று அறிந்திருந்தும், அதை வெட்டி அழிக்கத் தனக்கு முழுஉரிமை இருந்தும், தான் அதனை அழிக்க விரும்பாதவாறு போல, தான் ஆக்கிய ஒன்று தனக்கும் மற்றவருக்கும் தீமை பயப்பது வெளிப்படையாக அறியப்பட்டபோதிலும் தான் அதனை அழிக்கக் கூடாது என்று கொள்ளும் கொள்கையை எடுத்து இயம்பும் நெறி இந்நியாயமாகும். (L)

‘தாம் வளர்த்ததோர், நச்சு மாமரம் ஆயினும் கொலார்’

(திருவா. 5 : 96)

வீச விருக்க நியாயம் -

{Entry: Q17c__304}

வீசம் - பீஜம் ; விருக்கம் - மரம்.

பீஜவிருக்ஷ நியாயம் என்ப.

வித்து முந்தியதோ மரம் முந்தியதோ என்று விவாதிப்பது போல முடிவற்ற விவாதம் பற்றிக் கூறும் நெறி இந்நியாய மாகும். (L )

வீசீ தரங்க நியாயம் -

{Entry: Q17c__305}

வீசி - அலை; தரங்கம் - கடல்.

கடல்அலைகள் ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வருதலைப் போலச் செய்திகள் ஒன்றன்பின் ஒன்று இடைவிடாது தொடர்ந்து கூறும் நெறி இந்நியாயமாகும் (இலக். அக.) (கடல்அலைகள் போல ஒலிஅலைகள் இடைவிடாது தொடர்ந்து வருவது முதலியவற்றைக் கொள்க.)

வேதப்பிரமாணம் -

{Entry: Q17c__306}

வேதமாகிய ஆகமஅளவை. (L )

வைதன்மிய திட்டாந்த ஆபாசம் -

{Entry: Q17c__307}

சாத்தியாவியாவிருத்தி, சாதனாவியாவிருத்தி, உபயாவியா விருத்தி, அவ்வெதிரேகம், விபரீத வெதிரேகம் என ஐவகைப் பட்ட போலியான வைதன்மிய திட்டாந்தம். (ஆபாசம் - போலி.) (மணி. 29 : 334 , 345)

வைதன்மிய திட்டாந்தப் போலி -

{Entry: Q17c__308}

இஃது எடுத்துக்காட்டுப் போலிவகை. இரண்டாகிய ஒத்த இணையான பொருளின் எடுத்துக்காட்டுப்போலி, ஒவ்வாப் பொருளின் எடுத்துக்காட்டுப்போலி என்பவற்றுள் ஒவ்வாப் பக்க எடுத்துக்காட்டுப் போலியாகும். இதன் உட்பிரிவுகள் சாத்தியாவியாவிருத்தி, சாதனாவியாவிருத்தி, உபயாவியா விருத்தி, அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகம் என்ற ஐந்தாம். அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க.

வைதன்மியம் - ஒவ்வாமை.

வைதன்மியதிட்டாந்தம் - ஒவ்வாப் பொருளை எடுத்துக் காட்டாகத் தருதல். இதனை ‘வைதன்மிய திட்டாந்த ஆபாசம்’ எனவும் வழங்குப. (மணி. 29 : 331 - 335)

வைதன்மிய திட்டாந்தம் -

{Entry: Q17c__309}

சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மையைக் குறிக்கும் திட்டாந்தம். (மணி. 29 : 140)

ஹ section: 2 entries

ஹேமாரவிந்த பரிமள நியாயம் -

{Entry: Q17c__310}

ஹேமம் - பொன்; அரவிந்தம் - தாமரை; பரிமளம் - மணம்.

பொன்னால் செய்யப்பட்டதால் விலையுயர்ந்த தாமரை மலர், இயல்பான தாமரைமலரின் மணத்தையும் பெற்றால் பெரிதும் சிறப்புறுதல் போலச் சிறந்ததொருபொருள் வேறொரு பொருளால் சிறப்புறுதல். நன்கு கற்றவன் சொல்வன்மையும் பெற்றாற் போல்வனவற்றை உணர்த்தும் நெறி இந்நியாயமாகும். (L)

ஹோளாதிகரண நியாயம் -

{Entry: Q17c__311}

ஹோள - ஹோளிப்பண்டிகை; அதிகரணம் - ஆதாரம்.

ஹோளிப் பண்டிகையைக் கொண்டாடச் சாத்திரவிதி ஏதும் இல்லை எனினும் பல காலமாக அது கொண்டாடப்பட்டு வருவதனால் சம்பிரதாயத்தை ஒட்டி அதனை ஏற்பது போல, பாவைநோன்பு நோற்க வேதவிதியின்று எனினும் அதனைக் கொண்டாடுதல் போல, சிஷ்டாசாரத்துக்கு முதலிடம் கொடுத்துப் பின்பற்றும் நெறி இந்நியாயமாகும். (L)